நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 10 திருவிளையாடற் புராணம் மதுரைக் காண்டம் - 2 உரையாசிரியர் நாவலர் ந.மு.வேங்கட சாமி நாட்டார் பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. வி ருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 10 உரையாசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 312 = 328 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 205/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற் காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “ சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரிய வர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர் களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்வி களிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921 -இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல் களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக்கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த் தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர் களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள் கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங் களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மை யாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக் கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும் போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு..., செயல் செய்வாய் தமிழுக்கு......,ஊழியஞ் செய் தமிழுக்கு......., பணி செய்வாய்! தமிழுக்கு........, இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.”எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங் களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலம் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற் குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடு வதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப் புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகு குரு.செயத்துங்கன், பேரா. கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெரு மக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iii பதிப்புரை x 1. இந்திரன் பழிதீர்த்த படலம் 1 2. வெள்ளையானைச் சாயந்தீர்த்த படலம் 62 3. திருநகரங்கண்ட படலம் 80 4. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம் 108 5. திருமணப் படலம் 162 செய்யுள் முதற்குறிப்பு அகர வரிசை 273 திருவிளையாடற்புராணம் மதுரைக் காண்டம் - 2 ஒன்றாவது இந்திரன் பழிதீர்த்த படலம் (அறுசீரடியாசிரிய விருத்தம்) மின்பயில் குலிசப் புத்தேள் விருத்திரா சுரனைக் கொன்ற வன்பழி விடாது பற்றக் கடம்பமா வனத்தி லெய்தி என்பர வாரம் பூண்ட விறைவனை யருச்சித் தேத்திப் பின்பது கழிந்து பெற்ற பேற்றினை யெடுத்துச் சொல்வாம். (இ-ள்.) மின்பயில் - ஒளிதங்கிய, குலிசப்புத்தேள் - வச்சிரப் படையையுடைய இந்திரன், விருத்திராசுரனைக் கொன்ற - விருத்திரன் என்னும் அசுரனைக் கொன்றதனாலாகிய, வன்பழி - வலிய பழியானது, விடாது பற்ற - நீங்காதுபற்ற, மா கடம்பவனத்தில் எய்தி - (அது நீங்கப்) பெரிய கடம்பவனத்தில் வந்து, என்பு அரவு ஆரம் பூண்ட இறைவனை - எலும்பினையும் பாம்பினையும் மாலையாக அணிந்த சிவபெருமானை, அருச்சித்து ஏத்தி - அருச்சித்துத் துதித்து, பின்பு அது கழிந்து - பின் அப்பழியானது நீங்கி, பெற்ற பேற்றினை எடுத்துச் சொல்வாம் - பெற்ற பயனை எடுத்துக் கூறுவாம். எ-று. விருத்திராசுரன்;தீர்க்க சந்தி. கழிந்து - கழிய; எச்சத்திரிபு; அதினீங்கி யெனலுமாம். (1) முன்னதா முகத்தில் வண்டு மூசுமந் தாரநீழற் பொன்னவிர் சுணங்குண் கொங்கைப்புலோமசை மணாளன் பொற்பூண் மின்னவிர்ந் திமைப்பச் சிங்கஞ் சுமந்தமெல் லணைமேன் மேவி அன்னமென் னடையா ராடு மாடன்மே லார்வம் வைத்தான். (இ-ள்.) முன்னது ஆம் உகத்தில் - முற்பட்டதாகிய கிரேதா யுகத்தில், வண்டு மூசும்மந்தார நீழல் -வண்டுகள் மொய்க்கும் மந்தார மரத்தினது நிழலின்கண், சிங்கம்சுமந்த - சிங்கங்களாற்றாங்கப் பெற்ற, மெல் அணை மேல் - மெத்தென்ற ஆதனத்தின் மேல். பொன் அவிர் சுணங்கு உண் கொங்கை - பொற் பிதிர்போல விளங்கும் தேமலைக் கொண்டிருக்கிற கொங்கை களையுடைய, புலோமசை மணாளன் - இந்தி ராணியின் தலைவனாகிய இந்திரன், பொன் பூண்- பொன்னாலாகிய அணிகள், மின் அவிர்ந்து இமைப்ப - மின் போலும் விளங்கி ஒளிவிட, மேவி - விற்றிருந்து, அன்மை மெல் நடையார் ஆடும் - அன்னம் போலும் மெதுவான நடையையுடைய மகளிர் ஆடுகின்ற, ஆடல்மேல் ஆர்வம் வைத்தான் - கூத்தின்மேல் விருப்பம் வைப்பானாயினான் எ-று. யுகம் உகமெனத் திரிந்தது; இது தமிழில் ஊழி- யெனப்படும். எக்காலம் என்னும் வினாவிற்கு விடை கூறுவாராய் ‘முன்னதா முகத்தில்’ என்றார். மர மென்னும் பொதுமைபற்றி வண்டு மொய்த்தல் கூறுவர். மந்தாரம் - ஐந்தருக்களில் ஒன்று; கற்பகம் முதலியவற்றுக்கும் உபலக்கணம். “ உண்டற் குரிய வல்லாப் பொருளை உண்டன போலக் கூறலு மரபே” என்பது இலக்கணமாகலின் உண் கொங்கை என்றார். ஆடலை நோக்குதற்கண். நீழற்கண் அணைமேல் மேவி ஆர்வம் வைத்தான் எனமுடிக்க. (2) மூவகை மலரும் பூத்து வண்டுளே முழங்கத் தெய்வப் பூவலர் கொடிபேர்ந் தன்ன பொன்னனார் கூத்து மன்னார் நாவல ரமுத மன்ன பாடலு நாக நாட்டுக்1 காவலன் கண்டு கேட்டுக் களிமதுக் கடலு ளாழ்ந்தான். (இ-ள்.) தெய்வப்பூ - தெய்வத் தன்மை பொருந்திய தாமரை மலரானது, வண்டு உளே முழங்க - வண்டு உள்ளே ஒலிக்கா நிற்க, மூவகை மலரும் - ஏனைய கோட்டுப்பூ நிலப்பூ கொடிப்பூ என்ற மூவகை மலர்களையும், பூத்து - மலர்வித்து, அலர் - மலரப் பெற்ற, கொடி பேர்ந்து அன்ன - கொடிகள் ஆடினாற் போன்ற, பொன் அனார் கூத்தும் - திருமகளை ஒத்த தேவமகளிரின் கூத்தையும், அன்னார் - அம்மகளிரின், நா அலர் - நாவினின்றும் தோன்றும், அமுதம் அன்ன பாடலும் - அமுதத்தை யொத்த பாடலையும், நாக நாட்டுக் காவலன் - விண்ணுலகிற்குத் தலைவனாகிய இந்திரனானவன், கண்டு கேட்டு - (முறையே) கண்டுமே கேட்டும், களிமதுக்கடலுள் ஆழ்ந்தான் - களிப்பாகிய மதுக்கடலுள் அழுந்தியிருப்பானாயினன் எ-று. தெய்வப்பூ என்றது திருமகள் முதலாயினார்க்கு இருக்கையாய்ச் சிறந்துள்ள தாமரைப்பூவை. நால்வகை மலருள் நீர்ப்பூவாகிய தாமரை ஏனைய மூவகை மலரையும் பூத்துக்கொண்டிருக்கப் பெற்ற கொடி. மகளிர்க்குக் கொடியும், அவர் முகத்திற்கு நீர்ப்பூவாகிய தாமரையும், கண்ணிற்கும் இதழுக்கும் கோட்டுப் பூவாகிய கருவிளை மலரும், முருக்கிதழும், மூக்கிற்கு நிலப்பூவாகிய எட்பூவும், பல்லுக்குக் கொடிப்பூவாகிய முல்லை யரும்பும், பாட்டுக்கு வண்டு உள்ளே முழங்குதலும், ஆட்டத்திற்குக் கொடியின் பெயர்ச்சியும் உவமையாம். பூவலர் என்பதைக் கொடிக்கு அடையாக்கித் தெய்வத் தன்மையுள்ள கொடி ஏனை மூவகை மலரையும் பூத்து என்றுரைப் பாருமுளர்; வண்டு உள்ளே முழங்க என்றமையால் இப்பொருள் சிறவாமை காண்க. பேர்ந்தாலன்ன என்பது விகாரம். கண்டும் கேட்டும் என்னும் உம்மைகள் தொக்கன. தன்னை மறந்தானென்பார், களிமதுக் கடலுளாழ்ந்தான் என்றார். கூத்தும் பாடலும் கண்டு கேட்டு என்றது நிரனிறை. கொடி பேர்ந்தன்ன என்றது இல்பொருளுவமை. (3) பையரா வணிந்த வேணிப் பகவனே யனைய தங்கள் ஐயனாம் வியாழப் புத்தே ளாயிடை யடைந்தா னாகச் செய்யதாள் வழிபா டின்றித் தேவர்கோ னிருந்தா னந்தோ தையலார் மயலிற் பட்டோர் தமக்கொரு மதியுண் டாமோ. (இ-ள்.) பை அரா அணிந்த வேணி - படத்தையுடைய பாம்பு களை அணிந்த சடையையுடைய, பகவனே அனைய - சிவபெரு மானையே ஓத்த, தங்கள் ஐயனாம் - தங்கள் குரவனாகிய, வியாழப்புத் தேள் - வியாழ தேவன், ஆயிடை அடைந்தானாக - அவ்விடத்து வர, செய்யதாள் வழிபாடு இன்றி - (அவனுடைய) சிவந்த திருவடிகளுக்கு வழிபாடு செய்யாமல், தேவர்கோன் இருந்தான் - தேவேந்திரன் வாளாவிருந்தான்; அந்தோ - ஐயோ, தையலார் மயலில் - மகளிரின் மயக்கத்தில், பட்டோர் தமக்கு ஒரு மதி உண்டாமோ - வீழ்ந்தவர் கட்கு நல்லறிவு உண்டாகுமோ (இல்லை என்றபடி) எ-று. பகவன் - ஆறு குணங்களையுடையவன்; சிவன். ஏகாரம்; பிரிநிலை. ஐயன் - ஆசான். வியாழப்புத்தேள் - பொன், பிருகற்பதி. ஆயிடை - சுட்டு நீண்டு யகரம் பெற்றது; எகர வினா என்னும் நன்னூற் சூத்திரத்து தூக்கிற் கூட்டு நீளின் யகரமுந் தோன்றுத னெறியே என்பது காண்க. முற்றுடன் ஆக என்னும் இடைச் சொல் சேர்ந்து செயவெனெச்சமாயிற்று. அந்தோவென்பது இரங்குதற் பொருட்டாய இடைச்சொல். ஒரு; இசை நிறைக்க வந்தது; சிறிது என்னும் பொருட்டுமாம். ஓகாரம்; எதிர்மறை. இருந்தானென்னும் சிறப்புப் பொருளை முடித்தற்கு மதியுண்டாமோ என்னும் பொதுப் பொருள் கூறப்பட்டது. இது வேற்றுப் பொருள் வைப்பு என்னும் அணி. (4) ஒல்லெனக் குரவ னேக வும்பர்கோன் றிருவி னாக்கம் புல்லெனச் சிறிது குன்றப் புரந்தர னறிந்திக் கேடு நல்லதொல் குரவற் பேணா நவையினால் விளைந்த தென்னா அல்லுற் றறிவன் றன்னைத் தேடுவா னாயி னானே. (இ-ள்.) குரவன் ஒல்லென ஏக - (அதனை உணர்ந்த) குரவ னாகிய வியாழன் விரைந்து சென்றுவிட, உம்பர்கோன் திருவின் ஆக்கம் - தேவர்க்கரசனது செல்வத்தின் மிகுதி, புல்லெனச் சிறிது குன்ற - பொலிவின்றிச் சிறிதாகக் குறைதலால், புரந்தரன் அறிந்து - இந்திரன் (அதனை) உணர்ந்து, இக்கேடு - இந்தக் கெடுதியானது, நல்ல தொல்குரவன் - நல்ல தொன்று தொட்ட குரவனாயுள்ளானை, பேணா நவையினால் விளைந்தது என்னா - வழிபாடு செய்யாத குற்றத்தி னால் வந்தது என்று, அல்லல் உற்று - துன்பமுற்று, அறிவன் தன்னைத் தேடுவான் ஆயினான் - குரவனைத் தேடத் தொடங்கினான் எ-று. ஒல்லென; விரைவுக் குறிப்பு. ஆக்கம் - பெருக்கம். புல்லென- பொலிவின்றாக. சிறிது - சிறிதாக வென்க; ஒழுகக் குன்ற வெனலுமாம். புரந்தரன் முதலாகப் பின்வரும் பெயர்களைச் சுட்டு மாத்திரமாகக் கொள்க. (5) அங்கவ னிருக்கை புக்கான் கண்டில னவித்த பாசப் புங்கவ ருலகு மேனோர் பதவியும் புவன மூன்றில் எங்கணுந் துருவிக் காணா னெங்குற்றான் குரவ னென்னுஞ் சங்கைகொண் மனத்த னாகிச் சதுர்முக னிருக்கை சார்ந்தான். (இ-ள்.) அவன் இருக்கை புக்கான் - அக்குரவன் இருப்பிடத்திற் சென்று, அங்கு கண்டிலன் - அங்குக் காணாதவனாய், அவித்த பாசம் புங்கவர் உலகும் - பாசங்களைக் கெடுத்த முனிவர்களுலகத்திலும், ஏனோர் பதவியும் - மற்றையோர் இருப்பிடங் களிலும், புவனம் மூன்றில் எங்கணும் - மூன்று உலகத்துமுள்ள எல்லாவிடங்களிலும், துருவிக்காணான் - தேடியுங் காணாதவனாய், குரவன் எங்கு உற்றான் என்னும் ஆசிரியன் எங்குற்றானே என்னும், சங்கை கொள் மனத்தன் ஆகி - ஐயங்கொண்ட மனத்தை யுடையவனாய், சதுர் முகன் இருக்கை சார்ந்தான் - சதுர்முகன் இருப்பிடமாகிய சத்தியலோகத்தை அடைந்தான் எ-று. புக்கான் முதலியன முற்றெச்சங்கள். அவித்த பாசப் புங்கவர் என்றது. அருங்கேடன் என்பதுபோல நின்றது. (6) துருவின னங்குங் காணான் றிசைமுகற் றொழுது தாழ்ந்து பரவிமுன் பட்ட வெல்லாம் பகர்ந்தனன் பகரக் கேட்டுக் குரவனை யிகழ்ந்த பாவங் கொழுந்துபட் டருந்துஞ் செவ்வி வருவது நோக்கிச் சூழ்ந்து மலர்மக னிதனைச் சொன்னான். (இ-ள்.) அங்கும் துருவினன் காணான் - அங்கும் தேடிக் காணா தவனாய், திசைமுகன் தாழ்ந்து தொழுது பரவி - நான்முகனை வீழ்ந்து வணங்கித் துதித்து, முன்பட்ட எல்லாம் பகர்ந்தனன்- முன் நிகழ்ந்தவற்றை எல்லாம் எஞ்சாது கூறினான்; பகர - கூற, மலர்மகன் கேட்டு - பிரமன் கேட்டு, குரவனை இகழ்ந்த பாவம் கொழுந்து பட்டு - குரவனை இகழ்ந்ததனாலகிய பாவமானது கொழுந்து விட்டோங்கி, அருந்தும் செவ்வி வருவது நோக்கி - அவனை விழுங்குங் காலம் வருதலை யறிந்து, சூழ்ந்து இதனைச் சொன்னான்- ஆராய்ந்து இதனைச் சொல்வானாயினன் எ-று. கொழுந்து படுதல் - கிளைத்தல். அண்ணாத்தல் செய்யா தளறு என்புழிப் போல ஈண்டுப் பாவம் அருந்தும் என்றார்; நுகரப் படும் எனினுமாம். வருவது; தொழிற்பெயர். (7) அனையதொல் குரவற் காணு மளவுநீ துவட்டா வீன்ற தனையன்முச் சென்னி யுள்ளான் றானவர் குலத்தில் வந்தும் வினையினா லறிவான் மேலான் விச்சுவ வுருவ னென்னும் இனையனைக் குருவாக் கோடி யென்னலு மதற்கு நேர்ந்தான். (இ-ள்.) அனைய தொல் குரவன் காணும் அளவும் - அந்தப் பழமையான குரவனைக் காணும் வரையும், நீ துவட்டா ஈன்ற - நீ துவட்டா வானவன் பெற்ற, தனையன் - புதல்வனும், முச்சென்னி உள்ளான் - மூன்றுதலை களையுடையவனும், தானவர் குலத்தில் வந்தும்- அசுரர்குலத்திற் றோன்றியும், வினையினால் அறிவால் மேலான் - தொழிலாலும் அறிவாலும் சிறந்தவனுமாகிய, விச்சுவ உருவண் என்னும் இனையனை - விச்சுவ உருவனென்னும் பெயரையுடைய இவனை, குருவாக் கோடி என்னலும் - குரவனாகக் கொள்வாயாக என்று கூறலும், அதற்கு நேர்ந்தான் - அதற்கு உடன்பட்டவனாய் எ-று. தானவர் - காசிபனுக்குத் தனு என்பாள் வயிற்றில் வந்தவர். உம்மை இழிவு சிறப்பு; எண்ணும்மைவிரிக்க. குருவர் - தொகுத்தல். கோடி - கொள் பகுதி; த் எழுத்துப் பேறு. நேர்ந்தான்; முற்று எச்சமாய் நின்றது. (8) அழலவிர்ந் தனைய செங்கே ழடுக்கிதழ் முளரி வாழ்க்கைத் தொழுதகு செமம் றன்னைத் தொழுதுமீண் டகன்று நீங்கா விழைதகு1 காதல்கூர விச்சுவ வுருவன் றன்னை வழிபடு குருவாக் கொண்டான் மலர்மகன் சூழ்ச்சி தேறான். (இ-ள்.) அழல் அவிர்ந்து அனைய செங்கேழ் - தீயானது ஒளிவிட்டா லொத்த செந்நிறத்தையுடைய, அடுக்கு இதழ் முளரி - அடுக்கிய இதழ்களையுடைய தாமரை மலரில், வாழ்க்கை - வாழ்தலை யுடைய, தொழுக்கு செம்மல் தன்னை - வணங்கத் தக்க பெருமையுடைய பிரமனை, மீண்டு தொழுது அகன்று நீங்கா - மீளவும் வணங்கி (அவணின்றும்) நீங்கிப்போய், மலர் மகன் சூழ்ச்சி தேறான் - பிரமனது உபாயத்தை அறியாதவனாய், விழைதகு கால் கூர - விரும்பத் தக்க அன்பு மிக, விச்சுவ உருவன் தன்னை - விச்சுவ வுருவனை, வழிபடு குருவாக் கொண்டான் - தான் வழிபடும் குரவனாகக் கொண்டான் எ-று. அவிர்ந்தா லனைய என்பது விகாரமாயிற்று. தொழுதல் தகு - விழைதல் தகு. கூர - மிக; கூர்; உரிச்சொல். (9) கைதவக் குரவன் மாயங் கருதிலன் வேள்வி யொன்று செய்திட லடிக ளென்னத் தேவர்கட் காக்கங் கூறி வெய்தழல் வளர்ப்பா னுள்ளம் வேறுபட் டவுணர்க் கெல்லாம் உய்திற நினைந்து வேட்டான் றனக்குமே லுறுவ தோரான். (இ-ள்.) கைதவக் குரவன் மாயம் கருதிலன் - வஞ்சனையை யுடைய குரவனது தீய கருத்தை உணராதவனாய், அடிகள் வேள்வி ஒன்று செய்திடல் என்ன - அடிகளே ஒரு வேள்வி செய்க என்று வேண்ட, தேவர்கட்கு ஆக்கங் கூறி - தேவர்களுக்கு நலன் உண்டாக எனச் சொல்லி, வெய்து அழல் வளர்ப்பான் - வெம்மையாகிய தீயை வளர்க்கின்றவன், தனக்கு மேல் உறுவது ஓரான் - தனக்குமேல் விளைவதை உணராதவனாய், உள்ளம் வேறுபட்டு - மனம் வேறுபட்டு, அவுணர்க்கு எல்லாம் உய்திறம் நினைந்து வேட்டான்- அசுரர்களுக்கெல்லாம் ஆக்கங் கருதி வேள்வி செய்தான் எ-று. தெய்திடல் ; அல்லீற்று வியங்கோள்; மக்கட் பதடியெனல் என்புழிப் போல. அடிகள், குரவர் முதலாயினாரை விளித்தற்குரிய உயர்வுப் பன்மைச்சொல். ஆக்கமுண்டாகவென - உய்திற முண் தலை. (10) வாக்கினான் மனத்தால் வேறாய் மகஞ்செய்வான் செயலை யாக்கை நோக்கினா னோதி தன்னா னோக்கினான் குலிச வேலால் தாக்கினான் றலைகண் மூன்றுந் தனித்தனி பறவை யாகப் போக்கினா னலகை வாயிற் புகட்டினான் புலவுச் சோரி. (இ-ள்.) வாக்கினால் மனத்தால் வேறாய் - சொல்லால் வேறாகவும் நினைப்பால் வேறாகவும் மகம் செய்வான் செயலை - வேள்வி செய்கின்றவன் செய்கையை, ஆக்கை நோக்கினான் - உடலிற் கண்களையுடைய இந்திரனானவன், ஓதி தன்னால் நோக்கினான் - ஞானப் பார்வையால் நோக்கி, குலிச வேலால் தாக்கினான் - வச்சிரப் படையால் மோதி, தலைகள் மூன்றும் - மூன்று தலைகளையும், தனித் தனி பறவையாகப் போக்கினான் - தனித் தனியே வெவ்வேறு பறவைகளாகப் போக்கி, அலகை வாயில்- பேய்களின் வாய்களில், புலவுச் சோரி புகட்டினான் - ஊனோடு கூடிய குருதியைப் புகழ் செய்தான் எ-று. வேறாய் - வேறாக; எச்சத்திரிபு. ஓதி - ஞானம். நோக்கினான் முதலியவற்றை எச்சமாகக் கொள்க. சோமபானஞ் செய்யுமுகம் காடையாகியும், சுராபானஞ் செய்யுமுகம் ஊர்க்குருவி யாகியும், அன்னபானங் கொள்ளுமுகம் சிச்சிலியாகியும் பறந்தனவென வடநூல் கூறுமென்ப. புகட்டினான், புகட்டு: பகுதி; புகவிடு என்பதன் மரூஉ. (11) தெற்றெனப் பிரம பாவஞ் சீறிவந் தமரர் வேந்தைப் பற்றலு மதனைத் தீர்ப்பான் பண்ணவர் மரமேன் மண்மேற் பொற்றொடி யார்மே னீர்மேல் வேண்டினர் புகுத்த லோடும் மற்றவ ரிஃதியாந் தீர்க்கும் வண்ணம்யா தென்ன விண்ணோர். (இ-ள்.) தெற்றென - விரைவாக, பிரமபாவம் - பிரமக் கொலைப் பாவமானது, சீறி வந்து - முனிந்து வந்து, அமரர் வேந்தைப் பற்றலும் - தேவர்க் கரசனைப் பற்றியவுடனே, அதனைத் தீர்ப்பான் - அதனை நீக்கும் பொருட்டு, பண்ணவர் வேண்டினர் - தேவர்கள் விரும்பினவர்களாகி, மரமேல் மண்மேல் பொன் தொடி யார் மேல் நீர்மேல்புகுத்தலோடும் - மரங்களின் மேலும் பூமியின் மேலும் பொன்னாலாகிய வளையலையணிந்த மகளிர்மேலும் நீர்மேலும் கூறுசெய்து புகுத்தியவுடனே, அவர் இஃது யாம் தீர்க்கும் வண்ணம் யாது என்ன - அவர்கள் இதனை யாங்கள் நீக்கும் வகை எவ்வாறு என்று கேட்க, விண்ணோர் - தேவர்கள் எ-று. புகுத்தல் - புகச்செய்தல், இருதிணையும் விரவிச் சிறப்பால் உயர்திணை முடிவு பெற்றன; வழுவமைதி; பிறவற்றைத் தெய்வ மாகக் கருதி உயர்திணையாற் கூறினாரென்னலுமாம். (12) அப்பிடை நுரையாய் மண்ணி லருவருப் புவரா யம்பொற் செப்பிளங் கொங்கை யார்பாற் றீண்டுதற் கரிய பூப்பாய்க் கப்பிணர் மரத்திற் காலும் பயினதாய்க் கழிக வென்றார் இப்பழி சுமந்த வெங்கட் கென்னல மென்றார் பின்னும். (இ-ள்.) அப்பு இடை நுரையாய் - நீரினிடத்து நுரையாகியும், மண்ணில் அருவருப்பு உவராய் - நிலத்தினிடத்து அருவருக்கத் தக்க உவராகியும், அம்பொன் செப்பு இளங் கொங்கையார் பால் - அழகிய பொன்னாலாகிய சிமிழை ஒத்த இளமையான கொங்கை களையுடைய மகளிரிடத்து, தீண்டுதற்கு அரிய பூப்பாய் - தீண்டுதற் காகாத பூப்பாகியும், கப்பு இணர் மரத்தில் - கிளைகளையும் பூங் கொத்துக்களையுமுடைய மரங்களிடத்து, காலும் பயின் ஆய் - கசிந்தொழுகும் பிசினாகியும், கழிக என்றார் - நீங்குக என்று கூறினார்; பின்னும் - மீளவும், இப்பழி சுமந்த எங்கட்கு என் நலம் என்றார் - இப்பழியைத் தாங்கிய எங்களுக்கு என்ன பயன் என்று அந்நால்வரும் வினவினார் எ-று. அருவருப்பு - இழிந்தவற்றாலுளதாகும் மனம் பொருந்தாத் தன்மை. கப்பு, கவர்ப்பு என்பதன் மரூஉ. பயினது, அது; பகுதிப் பொருள் விகுதி. (13) (மேற்படி வேறு) கருவின் மாதர் கருவுயிர்க்கு மளவு முறையாற் கணவர்தோண் மருவி வாழ்க மண்ணகழ்ந்த குழியு மதனால் வடுவொழிக பொருவி னீரு மிறைத்தோறு மூறிப் பொலிக மரங்குறைபட் டொருவி னாலுந் தழைகவென வொழியா நலனு முதவினார். (இ-ள்.) கருவின் மாதர் - சூலினையுடைய மகளிர், கரு உயிர்க்கும் அளவும் - அக்கருப்பத்தை ஈனும் வரையிலும், முறையால் கணவர் தோள் மருவி வாழ்க என - முறைப்படி தங்கணவரின் தோளைச் சேர்ந்து வாழக் கடவர் என்றும், மண் அகழ்ந்த குழியும் - மண்தோண்டிய குழியும், அதனால் வடு ஒழிக என - அம் மண்ணினாலேயே வடு வொழிந்து நிரம்பக் கடவது என்றும், பொருவு இல் நீரும் - ஒப்பில்லாத நீரும், இறைத்தோறும் - இறைக்குந் தோறும், ஊறிப்பொலிக என - ஊறி விளங்கக் கடவது என்றும், மரம் குறைபட்டு ஒருவினாலும் - மரம் வெட்டுண்டு வளங்குன்றினாலும், தழைக என - தழையக் கடவது என்றும், ஒழியா நலனும் உதவினார்- என்றும் நீங்காத பலனையும் அளித்தார்கள் எ-று. கருவுயிர்த்தல் - மகப்பெறுதல் அதனால் - தானே யென்னலு மாம். இறைக்குந்தோறும் என்பது விகாரமாயிற்று. ஒருவுதல் - வெட்டுண்ட துண்டு நீங்குதலுமாம். மூன்று செய்யுளிலும் நான்கும் முறை பிறழக் கூறப்பட்டன; செய்யுளாகலின், இவற்றுட் கூறியன புனைந்துரை வழக்கெனக் கொள்க. (14) மாசிற் கழிந்த மணியேபோல் வந்த பழிதீர்ந் திந்திரனுந் தேசிற் றிகழத் துவட்டாதன் செல்வன் றன்னைத் தேவர்பிரான் வீசிக் குலிசத் துயிருண்ட விழுமங் கேட்டு வெகுண்டுயிர்த்துக் கூசிப் பழிகோள் கருதியொரு கொடிய வேள்வி கடிதமைத்தான். (இ-ள்.) மாசில் கழிந்த மணியேபோல் - குற்றத்தினின்றும் நீங்கிய மாணிக்கத்தைப்போல், வந்த பழி தீர்ந்து இந்திரனும் தேசில்திகழ - அடைந்த பாவமானது நீங்கப்பெற்று இந்திரனும் ஒளியோடு விளங்க, துவட்டா - துவட்டாவானவன், தன் செல்வன் தன்னை - தன் புதல்வனாகிய விச்சுவ உருவனை, தேவர்பிரான் - தேவேந்திரன், குலிசத்து வீசி உயிர் உண்ட விழுமம் கேட்டு - வச்சிரப்படையால் ஓச்சி (அவன்) உயிரைப் பருகிய துன்பச் செய்தியைச் கேட்டு, வெகுண்டு - கோபித்து, உயிர்த்து - பெருமூச் செறிந்து, கூசி - மனங்கூசி, பழி கோள் கருதி - பழிவாங்குதலை யெண்ணி, ஒரு வேள்வி கடிது அமைத்தான் - ஒரு வேள்வியை விரைந்து செய்தான் எ-று. குலிசத்தால் வீசி யென்க. விழுமம் - துன்பம்; ஈண்டு துன்பச் செய்தி. கூசுதல் - பரிபவத்திற்கு நாணுதல். கோள்; முதனிலைதிரிந்த தொழிற்பெயர். (15) அந்தக் குண்டத் தெரிசிகைபோ லழலுங்1 குஞ்சி யண்டமுக டுந்தக் கொடிய தூமம்போ லுயிர்த்துச் செங்கண் சினச்செந்தீச் சிந்தப் பிறைவா ளெயிறதுக்கித் திசைவான் செவிடு படநகைத்து வந்தக் கொடிய விடம்போல வெழுந்தா னொருவாண் மறவீரன். (இ-ள்.)அந்தக் குண்டத்து - அந்த வேள்விக் குண்டத் தினின்றும், எரிசிகைபோல் அழலும் குஞ்சி - எரிகின்ற தீயின் கொழுந்து போலச் செந்நிறத்தால் விளங்கும் முடியானது, அண்டம் முகடு உந்த-அண்டத்தினுச்சியைத் தாக்க, கொடிய தூமம்போல் உயிர்த்து - கொடிய புகைபோல மூச்செறிந்து, செங்கண் - சிவந்த கண்கள், சினச் செந்தீ சிந்த - கொடிய கோபத்தீயைச் சிதற, பிறை வாள் எயிறு அதுக்கி - பிறைபோல் வளைந்த ஒள்ளிய பற்களைக் கடித்து, திசைவான் செவிடுபட நகைத்து - திக்குகளும் வானமும் செவிடுபடும்படி சிரித்து, வந்த அக் கொடிய விடம்போல - கடலினின்றும் தோன்றிய அந்த ஆலால விடம்போல, ஒரு வாள் மற வீரன் - ஒரு வெற்றியையுடைய வாட்படையை யேந்திய வீரன், எழுந்தான் - தோன்றினான் எ-று. அழலல் - ஈண்டு விளங்குதல். வாள் - கொடுமையுமாம். எயிற துக்கி - எயிற்றால் இதழையதுக்கி யென்னலுமாம். வந்த என்னும் பெயரெச்சத்தகரம் தொக்கது. அகரச் சுட்டு மிகுதிமேல் நின்றது. மறவீரம் - மறமாகிய வீரம்; மறத்தையுடைய வீரன் எனக்கொண்டு, வீரன் பெயர்மாத்திரையாய் நின்ற தென்னலுமாம். (16) (கலிவிருத்தம்) ஈங்குவன் விருத்திர னென்ப வாரழற் றூங்குவன் கணைவிடு தூர நீண்டுநீண் டோங்குவ னோங்குதற் கொப்ப வைகலும் 2வீங்குவ னறனிலார் வினையி னென்பவே. (இ-ள்.) ஈங்கு உவன் - இங்குத் தோன்றிய இவனையே, விருத்திரன் என்ப - விருத்திராசுரன் என்று சொல்லுவர், ஆர் அழல் தூங்கு -நிறைந்த தீத்தங்கிய, வன்கணை வீடு தூரம் - வலிய அம்பு விடுகின்ற தூரம் வரை, நீண்டு நீண்டு ஓங்குவன் - (ஒவ்வொரு நாளும்) நீண்டு நீண்டு உயருவான்; ஒங்குதற்கு ஒப்ப - அங்ஙனம் உயருதற்கேற்ப, வைகலும் - நாடோறும், அறன் இலார் வினையின்- அறவினை இல்லாதார் பாவம்போல, வீங்குவன் என்ப - பருப்பான் என்று சொல்லுவர் எ-று. உவன் என்னுஞ் சுட்டுச் சேய்மை அண்மை யிரண்டிடத்தையுங் குறிக்கும்; ஈண்டு அண்மைக் காயிற்று. ஆரழல் - தீண்டுதற்கரிய அழலுமாம். கணை விடு#Vரம் - வில்லினின்றும் விடப்பட்ட கணைசெல்லுந் தூரம். அடுக்கு விரைவு குறித்தது. இறுதியினின்ற என்ப; அசையுமாம். ஏ;ஈற்றசை (17) வீங்குடல் விருத்திரன் றன்னை விண்ணவர் ஏங்குற வருதுவட் டாவெ னும்பெயர்த் தீங்குறு மனத்தினோன் றேவர் கோனுயிர் வாங்குதி பொருதென வரவிட் டானரோ. (இ-ள்.) துவட்டா எனும் பெயர் - துவட்டா என்ற பெயரை யுடைய, தீங்கு உறுமனத்தினோன் - தீமைமிக்க மனத்தினை யுடையவன், விண்ணவர் ஏங்குற வரு - தேவர்கள் வருந்தும்படி தோன்றிய, வீங்கு உடல் விருத்திரன் தன்னை - பருத்த உடலையுடைய விருத்திராசுரனை, தேவர் கோன் உயிர் - தேவேந்திரன் உயிரை, பொருது வாங்குதி என - போர் செய்து வாங்குவாயென்று, வரவிட்டான் - ஏவினான் எ-று. அரோ;அசை. (18) மதித்துணி யெயிற்றினோன் வடவை போற்சினை இக்1 கொதித்தெதிர் குறுகினான் கொண்ட லூர்தியும் எதிர்த்தனன் களிற்றின்மே லிமயத் துச்சிமேல் உதித்ததோர் கருங்கதி ரொக்கு மென்னவே. (இ-ள்.) துணிமதி எயிற்றினோன் - பிறைச் சந்திரனை ஒத்தவளைந்த பற்களையுடைய விருத்திரன், வடவைபோல்சினை இ-வடவைத் தீயைப்போல் வெகுண்டு, கொதித்து - துள்ளி, எதிர் குறுகினான் - போர் முனையில் வந்தான்; கொண்டல் ஊர்தியும் - மேகவாகனனாகிய இந்திரனும், இமயத்து உச்சிமேல் - பனி மலையின் சிகரத்தில், உதித்தது ஓர் கருங் கதிர் ஒக்கும் என்ன - தோன்றியதாகிய ஒரு கரிய ஞாயிறு போலும் என்று சொல்லுமாறு, களிற்றின் மேல் எதிர்த்தனன் - வெள்ளை யானையிமேலேறி எதிர்த்தான் எ-று. வடவை - பெண் குதிரை; கடல் நாப்பண் இருக்கும் ஊழித்தீ பெண் குதிரையின் முகம் போலும் வடிவினதாகலின் வடவா முகாக்கினி யெனப்படும்; இது குறைந்து வடவை யெனவும் நிற்கும். சினை இ - சினந்து ; சொல்லிசை நிறைக்கும் அளபெடை. கொண்டலாகிய ஊர்தியையுடையன் என அன்மொழித் தொகையை விரிக்க. வெள்ளை யானையின் மேலிருக்கும் கரிய நிறமுடைய இந்திரனுக்குப் பனி மலை மேலுதித்த கருஞாயிறு உவமம். இஃது இல்பொருளுவமை யணி. (11) அறத்தொடு பாவநேர்ந் தென்ன வார்த்திரு திறத்தரு மூண்டமர் செய்யக் கற்சிறை குறைத்தவன் றகுவன்மேற் குலிச வேலெடுத் துறைத்திட வீசினா னுடன்று கள்வனும். (இ-ள்.) அறத்தொடு பாவம் நேர்ந்தது என்ன - அறமும் பாவமும் எதிர்ந்தாற்போல, ஆர்த்து - ஆரவாரித்து, இருதிறத்தரும்- இரண்டு பகுதியாரும், மூண்டு அமர் செய்ய - எதிர்ந்து போரினைச் செய்ய, கல்சிறை குறைத்தவன் - மலைகளின் சிறையை அறுத்த வனாகிய இந்திரன், தகுவன்மேல் - அசுரனாகிய விருத்திரன் மேல், குலிசவேல் எடுத்து உறைத்திட வீசினான் - வச்சிரப் படையை எடுத்து உறைக்கும் படி வீசினான்; கள்வனும் உடன்று - விருத் திரனும் சினந்து எ-று. ஒடு; எண்ணொடு; நேர்ந்தது. விகாரமாயிற்று, நேர்ந்தென்பதற் கேற்ப மூண்டு என்பதற்கு எதிர்ந்து எனப்பொருளுரைக்கப்பட்டது; சின மூண்டு என்றுமாம். வானவனும் தானவனும் என்பது தோன்ற இருவரென்னாது இரு திறத்தரும் என்றார்; படைகளை உளப் படுத்தியுமாம். வானவனுக்கு அறமும், தானவனும் என்பது தோன்ற இருவரென்னாது இரு திறத்தரும் என்றார்; படைகளை உளப் படுத்தியுமாம். வானவனுக்கு அறமும், தானவனுக்குப் பாவமும் உவமம். அறமும் பாவமும் உருவெடுத்து எதிர்ந்தாற் போல என்றுமாம். தகுவன் - அசுரன். குலிசவேல்; இருபெயரொட்டு (20) இடித்தனன் கையி1லோடு ரிருப்பு லக்கையைப் பிடித்தனன் வரையெனப் பெயர்ந்து தீயெனத் துடித்தனன் சசிமுலைச் சுவடு தோய்புயத் தடித்தன னிந்திர னவச மாயினான். (இ-ள்.) இடித்தனன் - ஆரவாரித்து, ஓர் உலக்கையை கையில் பிடித்தனன் - ஒரு இருப்புலக்கையைக் கரத்திற்றாங்கி, வரையெனப் பெயர்ந்து - மலைபோல அடிபெயர்ந்து, தீ எனத் துடித்தனன் - தீப்போலத் துள்ளி, சசிமுலைச் சுவடுதோய் புயத்து அடித்தனன். இந்திராணியின் தனச்சுவடு பொருந்திய தோளின்கண் தாக்கினான்; இந்திரன் அவசம் ஆயினான் - இந்திரன் மூர்ச்சையானான் எ-று. இடித்தனன் முதலிய மூன்றும் முற்றெச்சம். வரை பெயர்தல் போலப் பெயர்ந்து என விரிக்க: இல்பொருளுவமை. அடித்தனன் என்பதனுடன் ஆக என்னும் இடைச்சொற் கூட்டி எச்சப்படு தலுமாம். அவசம் - வசமிழத்தல். (21) அண்டரே றனையவ னவச மாறிப்பின் கண்டகன் கைதவ நினைந்திக் கள்வனேர் மண்டம ராற்றுவான் வலியி லோமெனப் புண்டரீ கத்தவ னுலகிற் போயினான். (இ-ள்.) அண்டர் ஏறு அனையவன் - தேவர்களுள் ஆண் சிங்கம் போன்றவனாகிய இந்திரன், அவசம் மாறி - மூர்ச்சை தெளிந்து, பின் கண்டகன் கைதவம் நினைந்து - பின்பு அக் கொடிய வனது வஞ்சனையை உணர்ந்து, இக் கள்வன் நேர்மண்டு அமர் ஆற்றுவான் - இந்தக் கள்வனுக்கு நேர் நின்று மிக்க போரைச் செய்வதற்கு, வலியிலோம் என - வன்மையுடைய மல்லோம் என்று கருதி, புண்டரீகத்தவன் உலகில் போயினான் - தாமரை மலரில் வசிக்கும் பிரமனுலகத்திற் சென்றான் எ-று நேர் நின்று என ஒரு சொல் வருவிக்க. ஆற்றுவான்; வினையெச்சம். (22) தாழ்ந்துதான்2படுதுயர் விளம்பத் தாமரை வாழ்ந்தவன் வலாரியோ டணைந்து மாமகள் வீழ்ந்தமார் பினனடி வீழ்ந்து செப்பமால் சூழ்ந்தவா னாடனை நோக்கிச் சொல்லுவான். (இ-ள்.) தாழ்ந்து - வணங்கி, தான் படுதுயர் விளம்ப - தான் விருத்திரனாற்பட்ட துன்பங்களைக் கூற, தாமரை வாழ்ந்தவன் - தாமரை மலரில் வசிப்பவனாகிய அயன், வலாரியோடு அணைந்து- இந்திரனோடுஞ் சென்று, மாமகள் வீழ்ந்த மார்பினன் அடி - திருமகள் விரும்பி வசிக்கும் மார்பையுடைய திருமாலின் அடிகளில், வீழ்ந்து - வீழ்ந்து வணங்கி, செப்ப - சொல்ல, மால் - திருமால், சூழ்ந்து - ஆலோசித்து, வான் நாடனை நோக்கிச் சொல்லுவான் - இந்திரனைப் பார்த்துக் கூறுவான் எ-று. படுகின்ற துயருமாம். வாழ்ந்தவன்; காலங் கருதிற்றிலது, வலாரி - வலனுக்குப் பகைவன்; நெடிற் சந்தி. மாவாகிய மகள் - வீழ்ந்த - விரும்பிய. (23) ஆற்றவும் பழையதுன் னங்கை வச்சிரம் மாற்றவ ருயிருண வலியின் றாதலால் வேற்றொரு புதியது1 வேண்டு மாலினிச் சாற்றுது மதுபெறுந் தகைமை கேட்டியால். (இ-ள்.) உன் அங்கை வச்சிரம் ஆற்றவும் பழையது - உனது கையிலுள்ள அச்சிரப்படையானது மிகவும் பழையது ; மாற்றவர் உயிர் உண வலி இன்று - (அதனால்) பகைவர்களின் உயிரை உண்ணுதற்கு வலிமையிலாதாயிற்று; ஆதலால் வேறு ஒரு ஒரு புதியது வேண்டும் - ஆகலான் வேறு ஒரு புதிய படைவேண்டும்; இனி அது பெறும் தமைமை சாற்றுதும் கேட்டி - இப்பொழுது அதை யடையுந் தன்மையைச் சொல்லுவேம் கேட்பாயாக எ-று. இன்று - உடையதன்று. வேற்றொரு; றகர வொற்று விரித்தல். ஆல் இரண்டும் அசை. மால் எனப் பிரித்து இந்திரனெனப்பொருள் கொண்டு விளியாக்குவாருமுளர். கேட்டி; ஏவன் முற்று; கேள்; பகுதி. ட்: எழுத்துப்பேறு, இ: விகுதி. (24) தொடையகன் மார்பநாந் தூய பாற்கடல் கடையுநா2 ளசுரருஞ் சுரருங் கையில்வெம் படையொடு மடையன்மின் பழுதென் றப்படை அடையவுந் ததீசிபா லடைவித் தாமரோ. (இ-ள்.) தொடை அகல் மார்ப - மாலையை யணிந்த பரந்த மார்பையுடையவனே, நாம் தூய பால்கடல் கடையும் நாள் - நாம் புனிதமான பாற்கடலைக் கடையுங்காலத்து, அசுரரும் சுரரும் - அசுரர்களும் தேவர்களும், கையில் வெம்படையொடும் அடையன் மின் - கரத்தில்கொடிய படைக்கலங்களோடு வாராதீர்கள்; பழுது என்று - (அங்ஙனம் வருதல்) குற்றமாகும் என்று, அப்படை அடையவும்- அப் படைகள் அனைத்தையும் - ததீசிபால் அடைவித்தாம் - ததீசிமுனிவனிடத்தே சேர்ப்பித்தோம் எ-று. தொடைய, கல் எனப் பிரித்து, மாலையையுடைய மலை போன்ற என்றுரைத்தலுமாம். சுரரும் அசுரரும் என்னும் படர்க்கைப் பெயர்கள் அடையன்மின் என முன்னிலை கொண்டன; இடவழு வமைதி. அங்ஙனம் வருதல் என்பது அவாய் நிலையால் வருகிக்கப் பட்டது. அடையவும் - முழுதும். அடைவித்தாம்; தனித் தன்மைப் பன்மை; இந்திரனை உளப்படுத்திற்றுமாம். அரோ;அசை. (25) சேட்படு நாணனி செல்லத் தேவரா வாட்படை யவுணரா வந்து கேட்டிலர் ஞாட்படை படையெலா ஞான நோக்கினால் வேட்படை வென்றவன் விழுங்கி னானரோ. (இ-ள்.) நனி சேண்படு நாள் செல்ல - மிக நீட்டிப்புடைய நாள்கள் கழியவும், தேவரா - தேவராதல், வாள் படை அவுணராவாட் படைகளையுடைய அவுணராதல், வந்து கேட்டிலர் - வந்துகேட்க வில்லை (அதனால்), ஞான நோக்கினால் - ஞானப்பார்வையோடு கூடிய, வேள்படை வென்றவன் - மன்மதனுடைய அம்புகளை வென்றவனாகிய ததீசி முனிவன், ஞாட்பு அடைபடை எலாம் - போருக்குப் பொருந்திய அப்படைகளை எல்லாம், விழுங்கினான் - விழுங்கினான் எ-று. ஆதல் அல்லது ஆவது என விகற்பப் பொருளில் வரும் இடைச் சொற்கள் ஈறு தொக்கு நின்றன. ஞான நோக்குடன் கூடிய ததீசியென்க. நோக்கினால் அறிந்து விழுங்கினான் எனலுமாம். வேள்படையென்பது எதுகை நோக்கி வேட்படையென விகார மாயிற்று. அரோ ; அசை. (26) விழுங்கி படையெலாம் வேற றத்திரண் டொழுங்கிய தான்முது கந்தண் டொன்றியே எழுங்கதிர்க் குலிசமா மதனை1 யெய்துமுன் வழங்குவன் கருணையோர் வடிவ மாயினான் (இ-ள்.) விழுங்கிய படை எலாம் - (அங்ஙனம்) விழுங்கப்பட்ட படைகள் அனைத்தும், வேறு அறத் திரண்டு - வேறாக இன்றி ஒன்றாகத் திரண்டு, முதுகந் தண்டு, ஒன்றியே - முதுகெலும்பைப் பொருந்தி, ஒழுங்கியது - ஒழுங்குபட்டது; எழும் கதிர் கலிசம் ஆம்- (அஃது) எழுகின்ற ஒளியையுடைய வச்சிரப்படையாகும்; எய்தும் முன் - நீ சென்று கேட்பதற்கு முன்னே, கருணை ஓர் வடிவம் ஆயினான் - கருணையே ஒரு உருவமாகிய அம்முனிவன், அதனை வழங்கும்வன் - அதனைக் கொடுப்பான் எ-று. விழுங்கி; விழங்கப்பட்ட வெனச் செயப்பாட்டு வினை. வேறு அற - ஒன்றாக. முதுகந் தண்டு - முதுகின் நடுவிலுள்ள பெரிய என்பு; இது வீணா தண்டமெனவும்படும். எய்து முன்; உபசாரம். வடிவ மாயினான் ஆகலின் வழங்குவன் என்க. ஆலும் ஏயும் அசை. (27) (மேற்படி வேறு) என்று மாதவ னியம்பு வும்பர்கோன் ஒன்றும் வானவர் தம்மொ டொல்லெனச் சென்று மா'e7çயயின் செயலை நோன்பினால் வென்று மாதவ னிருக்கை மேவினான். (இ-ள்.) என்று மாதவன் இயம்ப - என்று திருமால் கூற, உம்பர் கோன் - தேவேந்திரன், ஒன்றும் வானவர் தம்மொடு - பொருந்திய தேவர்களோடும், ஒல்லெனச் சென்று - விரைந்து சென்று, மாயை யின் செயலை - மாயையின் செய்கைத் திறங்களை, நோன்பினால் வென்ற மாதவன் - தவவலியால் வெற்றி கொண்ட பெரிய தவத்தினையுடைய ததீசிமுனிவனது, இருக்கை மேவினான் - இருப்பிடத்தை அடைந்தான் எ-று. மாதவன் இரண்டனுள் முன்னது இலக்குமிக்கு நாயக் என்னும் பொருளது; பின்னது பெரிய தவத்தினையுடையான் என்னும் பொருளது. (28) (மேற்படி வேறு) அகமலர்ந் தருந்தவ னமரர்க் கன்புகூர்1 முகமலர்ந் தின்னுரை முகமன் கூறிநீர் மிகமெலிந் தெய்தினீர் விளைந்த தியாதது தகமொழிந் திடலென வலாரி சாற்றுவான். (இ-ள்.) அகம் மலர்ந்து அருந்தவன் - மன மகிழ்ந்து அரிய தவத்தினையுடைய முனிவன், அமரர்க்கு அன்பு கூர் முகமலர்ந்து - நோக்கி அன்பு மிகுந்த இன்முகஞ் செய்து, முகமன் இன்உரை கூறி- உபசாரமாக இனிய சொற்களைக் கூறி, நீர் மிக மெலிந்து எய்தீனிர்- நீவிர் மிகவும் வருந்தி வந்தீர்கள்; விளைந்தது யாது - நடந்தது என்ன, அது தகமொழிந்திடல் என - அதைப் பொருந்தச் சொல்லுக என்று கேட்க, வலாரி சாற்றுவான் - இந்திரன் கூறுவான் எ-று. விருந்தோம்புவார்க்கு அகமகிழ்ச்சி, முகமலர்ச்சி, இன்னுரை யென்னும் மூன்றும் வேண்டு மென்பதனை, “ முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானாம் இன்சொ லினதே யறம்” என்னும் தமிழ்மறையானறிக. அன்பினைப் புலப்படும் முகமலர்ச்சி யென்க. முகமன் - உபசாரம்: முகமனாக இன்னுரை கூறி : குற்றியலிகரம். மொழிந்திடல் என்பது வியங்கோளாகலின் நீர் என்னும் பன்மையோடு இயைந்தது. (29) அடிகணீர் மறாததொன் றதனை வேண்டியிம் முடிகொள்வா னவரொடு முந்தி னே1னது செடிகொள்கா ரிருளுட லவுணர்த் தேய்த்தெமர் குடியெலாம் புரப்பதோர் கொள்கைத் தாயது. (இ-ள்.) அடிகள் - அடிகளே, நீர் மறாதது ஒன்று - நீர் மறாதளிப்பதாகிய ஒரு பொருள் உளது, அதனை வேண்டி - அவ் பொருளைப் பெறவிரும்பி, இம்முடிகொள் வானவ ரொடும் முந்தினேன் - இந்த முடியையுடைய தேவர்களோடும் முந்துற வந்தேன்; அது - அப்பொருள் செடி கொள் - முடை நாற்றத்தையுடைய, கார் இருள் உடல் அவுணர் - கரிய இருள்போன்ற உடலினையுடைய அவுணர்களை, தேய்த்து அழித்து, எமர் - எம்மவர்களின், குடி எலாம் புரப்பது - குடிகளையெல்லாம் காப்பதாகிய, ஓர் கொள்கைத்து ஆயது - ஒரு கொள்கையினை உடையதாகியது எ-று. செடி - முடை நாற்றம், குற்றம். புரப்பது;தொழிற் பெயர். ஓர்;இசை நிறைக்க வந்தது. கொள்கை - இயல்பு. (30) யாதெனி னினையதுன் யாக்கை யுள்ளதென் றோதலும் யாவையு முணர்ந்த மாதவன் ஆதவற் கண்டதா மரையி னானனப் போதலர்ந் தின்னன புகல்வ தாயினான். (இ-ள்.) இனையது யாது எனின் - இத்தன்மையுள்ள பொருள் யாதென்றால் உன் யாக்கை உள்ளது என்று ஒதலும் - உனது உடலிலுள்ளது என்று கூறி வளவில், யாவையும் உணர்ந்த மாதவன்- முக்காலங்களிலும் நிகழும்எவற்றையும் அறிந்த பெரிய தவத்தினையுடைய முனிவன், ஆதவன் கண்ட தாமரையின் - சூரியனைக் கண்ட தாமரை யைப்போல, ஆனனப் போது அலர்ந்து- முகமாகிய மலர் விரிந்து இன்னன புகல்வது ஆயினான் - இவைகளைக் கூறுவானாயினன் எ-று. உணர்தற் குரிமையுடைய என்பதனை உணர்ந்த என்றார்; அறிவறிந்தமக்கட்பேறு என்புழிப்போல; எல்லாக்கலைகளையும் உணர்ந்த எனலுமாம். தாமரைப் போதின் ஆனனமலர்ந்து எனப் பிரித்துக் கூட்டலுமாம். புகல்வது: தொழிற் பெயர். (31) நாய்நம தெனநரி நமதெ னப்பிதா தாய்நம தெனநமன் றனதெ னப்பிணி பேய்நம தெனமன மதிக்கும் பெற்றிபோல் ஆய்நம தெனப்படும் யாக்கை யாரதே. (இ-ள்.) நாய் நமது என - நாய்கள் எம்முடையது எனவும், நரி நமது என - நரிகள் எம்முடையது எனவும், பிதா தாய் நமது என - தந்தையும் தாயும் எம்முடையது எனவும், நமன் தனது என - கூற்றுவன் என்னுடையது எனவும், பிணிபேய் நமது என - நோய்களும்பேய்களும் எம்முடையது எனவும், மனம்மதிக்கும் பெற்றிபோல் ஆய் - மனத்தால் கருதுந் தன்மை போலாக, நமது எனப்படும் யாக்கை - நாமும் நம்முடையது எனக் கருதப் படுகின்ற உடல், யாரது - யாருக்கு உரியது எ-று. உயிர் நீங்கிய பொழுதில் தமக்குணவாதல் கருதி நாய் நரிகள் தமதென்னும்; உயிருள்ள பொழுதில் தமக்குப் பயன்படுதல் கருதித் தம்மால் வந்த'd8[னும் உரிமைபற்றித் தந்தை தாயர் தமதென்பர்; வருத்தும் உரிமையால் கூற்றமும், பிணி பேய்களும் தமதென்னா நிற்கும்; யாம் எமதென்பதும் சிறிது நாள் அதில் வசிக்கும் அத்துணையுரிமை கொண்டே; ஆகலின் அதனை எமக்கே யுரிய தெனக் கோடல் அமையாதென்றவாறு. ஆய் - ஆக; எச்சத்திரிபு. ஏ;அசை. (32) விடம்பயி லெயிற்றர வுரியும் வீநுழை குடம்பையுந் தானெனுங்1 கொள்கைத் தேகொலாம் நடம்பயில் கூத்தரி னடிக்கு மைவர்வாழ் உடம்பையும் யானென வுரைக்கற் பாலதோ. (இ-ள்.) நடம்பயில் கூத்தரின் - ஆடுகின்ற கூத்தர்களைப் போல, நடிக்கும் ஐவர்வாழ் - நடிக்கின்ற ஐம்பொறிகள் வாழா நின்ற; உடம்பையும் - உடலையும், யான் என - நான் என்று, உரைக்கற் பாலதோ - (உயிர்) கூறும்பகுதியையுடையதாமோ (அங்ஙனம் கொள்ளின் அது), விடம்பயில் - நஞ்சு தங்கிய, எயிற்று அரவு - பற்களையுடைய பாம்பு, உரியும் - தனது தோலையும், வீ - பறவை, நுழை குடம்பையும்- தான் நுழைகின்ற கூட்டையும், தான் எனும் கொள்கைத்து - தான் என்று கொள்ளும் கொள்கையை யுடையதாம் எ-று. குடம்பை - கூடு. தானெனுங் கொள்கைத்தென்பது அரவோடும் வீயோடும் தனித்தனி யியையும். ஐவர் என்பது உடம்பென்னுங் குறிப்பால் பொறிகளை யுணர்த்திற்று; தொகைக் குறிப்பு: இழித்தற் கண்வந்த திணைவழுவமைதி. உம்மை: இழிவு சிறப்பு. ஐகாரம் சாரியை யெனக்கொண்டு உடம்பும் உரைக்கற்பாலதோ எனினுமாம். ஏ:தேற்றம். கொல், ஆம்: அசை. ஓ:எதிர்மறை.குடம்பை தனித்தொழிய என்னும் குறளும், ஓம்பினேன் கூட்டைவாளா கூட்டமாயைவர் வந்து கொடுந்தொழிற் குணத்த ராகி, ஆடடுவார்க் காற்றகில்லேன் என்னும் திருநேரிசைகளும் இங்கு நோக்கற் பாலன. (33) நடுத்தயா விலார் தமை நலியத் துன்பநோய் அடுத்தயா வருந்திரு வடைய யாக்கையைக் கொடுத்தயா வறம்புகழ் கொள்வ னேயெனின் எடுத்தயாக் கையின்பய னிதனின் யாவதே. (இ-ள்.) ஐயா - இந்திரனே, நடு தயா இலார் - நடுவுநிலைமையும் கருணையும் இல்லாதவர்கள், தமை நலிய - தங்களை வருத்துதலால், துன்ப நோய் அடுத்த யாவரும் - துன்பமாகிய பிணியைப் பொருந்திய அனைவரும், திரு அடைய - (அத்துன்ப நீங்கி) இன்பத்தைப் பெறுமாறு, யாக்கையைக் கொடுத்து - என் உடலை அளித்து, அறம் புகழ் கொள்வனே எனின் - அறத்தையும் புகழையும் பெறுவே னாயின், எடுத்த ஆக்கையின் பயன் - எடுத்த உடம்பினாலடையும் பயன், இதனின்யாவது - இதனினும் வேறு யாதுளது எ-று. தயா தயையெனத் திரிதற்பாலது திரியாது நின்றது. தயாவிலார் அவுணரும், துன்பமுற்றவர் அமரரும் ஆம். ஐயா என்பது போலி யாயிற்று. எனின் அருமை தோன்ற நின்றது; “ நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லா லரிது” என்னும் திருக்குறள் இங்கு நோக்கற்பாலது. யாவது;விரித்தல். (34) (அறுசீரடியாசிரிய விருத்தம்) என்றனன் கரண மொன்றி யெழுகருத் தறிவை யீர்ப்ப நின்றனன் பிரம நாடி நெறிகொடு1 கபாலங் கீண்டு சென்றனன் விமான மேறிச் சேர்ந்தன னுலகை நோன்பால் வென்றவன்2 றுறக்கம் புக்கு விற்றினி திருத்தா னம்மா. (இ-ள்.) என்றனன் - என்று கூறி, உலகை நோன்பால் வென்றவன் - உலக மாயையைத் தவத்தால் வென்ற ததீசிமுனிவன், கரணம் ஒன்றி - கரணங்கள் ஒன்றுபட்டு, எழு கருத்து - ஒன்றா யெழுகின்ற மெய் யுணர்வானது, அறிவை ஈர்ப்ப - விகற்ப அறிவுகளை இழுத்து அடக்கிக் கொள்ள, நின்றனன் - சிவயோக சமாதியின் நின்று, பிரமநாடி நெறி கொடு - சுழுமுனா நாடியின் வழியால், கபாலம் கீண்டு சென்றனன்- கபாலத்தைக் கிழித்துச் சென்று, விமானம் ஏறிச்சேர்ந்ததனன் - வானவூர்தியில் ஏறிப்போய், துறக்கம் புக்கு - சிவலோகத்தை யடைந்து, இனிது விற்றிருந்தான்- இன்பமுடன் வீற்றிருந்தான் எ-று. என்றனன் முதலிய நான்கும் முற்றெச்சங்கள். கரணம் ஒன்று தலாவது உடல் பொறி பிராணன் அந்தக்கரண மெல்லாம் பதைப்பின்றி ஓடுங்கி நிற்றல். ‘எழு கருத்த அறிவை யீர்ப்ப’ என்பதற்கு, ‘நான் என்று எழும் போத விருத்தி மெய்யறிவைப் பற்றிப் பின்செல்ல’ என்று பிறர் பொருள் கூறுவாராயினர்; ஈர்ப்ப என்பதற்குப் பின் செல்ல என்பது பொருளாகாமையால் அது பொருந்தா தென்க. பிரமநாடி - சுழுமுனை நாடி; இதனை, “ கொன்படு நலஞ்சேர் சூழிமுனை நாடி கோதறு மந்தநா டியையே தென்பொலி பிரம நாடியென் றுரைப்பர்” என்று சூதசங்கிதை கூறுதலானறிக. ஆதார யோகத்தாலேனும், நிராதார யோகத்தாலேனும் மீதானத்தை யெய்த லுறுவார்க்கு வழியாயிருப்பது இச்சுழிமுனை நாடி. மீதானம் - பிரமந்திரம். கபாலம் - தலையின் மேலோடு. விமானம் - வலவன் செலுத்தாத வானவூர்தி. துறக்கம் என்றது ஈண்டுச் சிவலோகத்தை. இனிது வீற்றிருந்தான் எனப் பிரிக்க. அம்மா; வியப்பின்கண் வந்த இடைச்சொல். (35) அம்முனி வள்ள லீந்த வடுபடை முதுகந் தண்டைத் தென்முனை யடுபோர் சாய்க்குந் திறல்கெழு குலிசஞ் செய்து கம்மியப் புலவ னாக்கங் கரைந்துகைக் கொடுப்ப வாங்கி மைம்முகி லூர்தி யேந்தி மின்விடு மழைபோ னின்றான். (இ-ள்.) அம்முனிவள்ளல் ஈந்த - அந்த முனியாகிய வள்ளலால் கொடுக்கப்பட்ட, அடுபடை முதுகந் தண்டை - கொல்லுதற் றொழிலையுடைய படைகள் திரண்ட முதுகெலும்பினை, தெவ்முனை- பகைவர் முனைகின்ற, அடுபோர் சாய்க்கும் - கொல்லுகின்ற போரைப் பின்னிடச் செய்யும், திறல் கெழு - வலிபொருந்திய, குலிசம் செய்து - வச்சிரப் படையாகச் செய்து, கம்மியப் புலவன் - தேவதச்சன், ஆக்கம் கரைந்து - ஆக்கங் கூறி; கைக்கொடுப்ப - கையிற் கொடுக்க, வாங்கி - பெற்று, மைமுகில் ஊர்தி - கரிய மேகத்தை ஊர்தியாகவுடைய இந்திரன், ஏந்தி - கையிற்றாங்கி, மின்விடு மழைபோல் நின்றான் - மின்னலை வீசும் முகில் போல் நின்றான் எ-று. ‘அன்புடையார் என்பு முரியார் பிறர்க்கு’ என்னும் முதுமொழிக்கு எடுத்துக் காட்டாகத் தன் அரிய வுடம்பையும் அன்புடனளித்தானாகலின் வள்ளல் என்றார். முனை - போர் செய்யிடமுமாம். ஆக்கங்கரைந்து - ஆக்கமுண்டாக வாழ்த்துக் கூறி. ஆக்கம் - வெற்றி முதலியன; கரைதல் - சொல்லுதல். வச்சிரப் படைக்கு மின்னலும், இந்திரனுக்கு மழையும் உவமம். (36) மறுத்தவா வஞ்சப போரால் வஞ்சித்து வென்று போன கறுத்தவா ளவுணற் கொல்வான் கடும்பரி நெடுந்தேர் நீழல் வெறுத்தமால் யானை மள்ளர் வேலைபுக் கெழுந்து குன்றம் அறுத்தவா னவர்கோ னந்த வவுணர்கோ மகனைச் சூழ்ந்தான். (இ-ள்.) மறுதவா - குற்றத்தினீங்காத, வஞ்சப் போரால் - மாயப் போரினால், வஞ்சித்து வென்று போன - வஞ்சனை செய்து வென்றுபோன, கறுத்தவாள் அவுணன் கொல்வான் - சினத்தினை யுடைய வாளை ஏந்திய விருத்திரனைக் கொல்லும் பொருட்டு, குன்றம் அறுத்த வானவர்கோன் - மலையின் சிறகை அரிந்த தேவேந்திரனானவன், கடும்பரி - கடிய நடையினையுடைய குதிரைகளும், நெடுதேர் - பெரிய தேர்களும், நீழல் வெறுத்த மால்யானை - நிழலை வெகுளுகின்ற மத மயக்கத்தையுடைய யானைகளும், மள்ளர் - வீரர்களுமாகிய, வேலைபுக்கு எழுந்து - நால்வகைச் சேனைக் கடலின் நடுவிற் றோன்றி, அந்த அவுணர்கோ மகனைச் சூழ்ந்தான்- அந்த அவுணர் தலைவனை வளைத்தான் எ-று. தவா - தாவா என்றதன் குறுக்கம்: ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். கறுத்த - வெகுண்ட; “ கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள” என்பது தொல்காப்பியம். யானை மதமயக்கத்தால் தன் நிழலைப் பகையானை யென்று கருதி வெகுளும். ஆகிய என்னுஞ் சொல் வருவிக்கப்பட்டது. (37) வானவர் சேனை மூண்டு வளைத்தலும் வடவைச் செந்தீ யானது வரையி னோங்கி யழன்றுருத் தெழுந்தா லென்னத் தானவர் கோனு மானந் தலைக்கொள வெழுந்து பொங்கிச் சேனையுந் தானு மூண்டு சீறிநின் றடுபோர் செய்வான். (இ-ள்.) வானவர் சேனை மூன்று வளைத்தலும் - தேவர் படை கோபங்கொண்டு சூழ்ந்ததும், தானவர் கோனும் - அசுரர் தலை வனாகிய விருத்திரனும், வடவைச்செந்தீ ஆனது - வடவா முகாக் கினியாது, வரையின் ஓங்கி - மலைபோல உயர்ந்து, அழன்று உருத்து எழுந்தால் என்ன - கொதித்துச் சினந்து எழுந்தாற்போல, மானம் தலைக்கொளமான மீதூர, எழுந்து பொங்கி - எழுந்து கொதித்து, சேனையும் தானும் மூண்டு - சேனையுந் தானுமாகச் சினமூண்டு, சீறி நின்று அடுபோர் செய்வான் - சீறிக் கொல்லுதற்குரிய போர் செய்யத் தொடங்கினான் எ-று. செந்தீ, செம்மை யென்னும் அடை தன்னோ டியைபின்மை மாத்திரை நீக்கியது. ஆனது; எழுவாய்ச் சொல். நின்றென்பது இசை நிறைக்க வந்தது. அடுபோர், ஒரு சொல்லாகக் கொள்ளுலுமாம். தானும் சேனையும் எனத் திணைவிரவிச் செய்வான் என உயர்திணை வினைகொண்டது சிறப்பின் வந்த திணைவழுவமைதி. (38) அடுத்தன ரிடியே றென்ன வார்த்தன ராக்கங் கூறி எடுத்தனர் கையிற் சாப மெறிந்தனர் சிறுநா ணோசை தொடுத்தனர் மீளி1 வாளி தூர்த்தனர் குந்த நேமி விடுத்தனர் வானோர் சேனை வீரர்மே லவுண வீரர். (இ-ள்.) அவுண வீரர் - அசுர வீரர்கள் , வானோர் - தேவர்களின், சேனை வீரர் மேல் - படைவீரர்கள் மேல், அடுத்தனர் - நெருங்கி, இடிஏறு என்ன ஆர்த்தனர் - இடியேற்றைப்போல ஆரவாரித்து, கையில் சாபம் - கையில் வில்லை, ஆக்கம் கூறி எடுத்தனர் - வெற்றி கூறி எடுத்து, சிறு நாண் ஓசை எறிந்தனர் - சிறிய குணத்தொனி யுண்டாமாறு எறிந்து, மீளி வாளி - வலிமையுடைய அம்புகளை, தொடுத்தனர் தூர்த்தனர் - தொடுத்து நிறைத்தார்கள்; குந்தம் நேமி விடுத்னர் - (அவருட்சிலர்) கைவேலையும் திகிரியையும் எறிந் தார்கள். எ-று. எறிதல் - நாணினைத் தெறித்தல். குந்தம் - கைவேல். வானோ ராகிய வீரரென்பதே கருத்து. அடுத்தனர் முதலிய ஐந்தும் எச்சமாய் முன்னைய நான்கும் முறையே ஒன்று ஒன்றனைக்கொண்டு முடிய ஈற்றது தூர்த்தனர் என்னும் வினைகொண்டு முடிந்தது. (39) கிட்டினர் கடகக் கையாற் கிளர்வரை யனைய திண்டோள் கொட்டினர் சாரி மாறிக் குதித்தனர் பலகை நீட்டி முட்டின ரண்டம் விள்ள முழங்கினர் வடிவா ளோச்சி வெட்டின ரவுணச் சேனை2 வீரரை வான வீரர். (இ-ள்.) வானவீரர் - தேவவீரர்கள், அவுணச் சேனை வீரரை - அசுரப்படை வீரர்களை, கிட்டினர் - நெருங்கி, கடகக் கையால் - தொடியணிந்த கைகளால், கிளர்வரை அனைய திண் தோள் கொட்டினர் - விளங்கா நின்ற மலையை ஒத்த வலிய தோள்களைத் தட்டி, சாரிமாறிக் குதித்தனர் - இடசாரி வலசாரியாக மாறிக் குதித்து, பலகை நீட்டி முட்டினர் - கேடகத்தை நீட்டி மோதி, அண்டம் விள்ள முழங்கினர் - அண்டம் பிளக்க ஆரவாரித்து, வடிவாள் ஓச்சி வெட்டினர் - கூரிய வாளை வீசி வெட்டினார்கள் எ-று. கடகம் - வீரவளை. வடிவாள் - வடித்த வாளுமாம். வானவ வீரர் என்பது விகாரமாயிற்று. (40) வீழ்ந்தனர் தோளுந் தாளும் விண்டனர் சோரி வெள்ளத் தாழ்ந்தனர் போருந் தாரு மகன்ற ரகன்ற மார்பம் போழ்ந்தனர் சிரங்க ளெங்கும் புரணன்டர் கூற்றூர் புக்கு வாழ்ந்தன ரடுபோ ராற்றி வஞ்சகன் சேனை மள்ளர். (இ-ள்.) வஞ்சகன் சேனை மள்ளர் - வஞ்சகனாகிய விருத்திரன் படைவீரர்கள், அடுபோர் ஆற்றி - கொல்லுதலையுடைய போரினைச் செய்து, தோளும் தாளும் வீழ்ந்தனர் - தோள்களும் கால்களும் அறுபட்டவர்களும், சோரி விண்டனர் - குருதி சொரிந்தவர்களும், வெள்ளத்து ஆழ்ந்தனர் - அவ் வெள்ளத்தில் மூழ்கினவர்களும், போரும் தாரும் அகன்றனர் - போரினையும் தும்பை மாலையினையும் நீங்கினவர்களும், அகன்ற மார்பம் போழ்ந்தனர் - பரந்த மார்பு பிளக்கப்பட்ட புரளப்பட்டவர்களும், கூற்று ஊர் புக்கு வாழ்ந்தனர்- கூற்றுவனுலகு சென்று வாழ்ந்தவர்களும் (ஆயினார்) எ-று. கீழே விழுந்தனர் தோளும் தாளும் விண்டனர் என்றும், விண்டனர் வீழ்ந்தனரெனக் கூட்டித் தோளும் தாளும் அற்று வீழ்ந்தனர் என்றும் உரைத்தலுமாம். ஆயினார் என ஒரு சொல் வருவித்து முடிக்கப்பட்டது. மள்ளருட் சிலர் வீழ்ந்தனர், சிலர் விண்டனர் என இங்ஙனம் முற்றாகவே யுரைத்தலுமாம். அஃறிணைச் சினைப் பெயர்கள் உயர்திணையோடு சார்த்தப்பட்டு உயர்திணை முடிபு பெற்றன; திணைவழுவமைதி; இதனை, “ உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும் அதனொடு சார்த்தி னத்திணை முடிபின” என்னும் நன்னூற் சூத்திரத்தா னறிக. (41) தாளொடு கழலு மற்றார் தலையொடு முடியு மற்றார் தோளொடு வீர மற்றார் தும்பையோ டமரு மற்றார் வாளொடு கரமு மற்றார் மார்பொடு கவச மற்றார் கோளொடு மாண்மை யற்றார் குறைபடக் குறையா மெய்யர். (இ-ள்.) குறைபட குறையா மெய்யர் - (படைகளால்) குறைக்கப்பட்டினும் குறையாத உடலையுடைய தேவவீரர்களுட் சிலர், தாளொடு கழலும் அற்றார் - கால்களோடு வீரகண்டையும் அறுபட்டார்கள்; தோளொடு வீரம் அற்றார் - சிலர் தோளோடு வீரமும் அறுபட்டார்கள்; தும்பையோடு அமரும் அற்றார் - சிலர் தும்பை மாலையோடு போரும் நீங்கினார்கள்; வாளொடு கரமும் அற்றார் - சிலர் வாட்படையோடு கையும் அறுபட்டார்கள்; மார்பொடு கவசம் அற்றார் - சிலர் மார்போடு கவசமும் பிளக்கப்பட்டார்கள்; கோளொடும் ஆண்மை அற்றார் - சிலர் வலிமையோடு ஆண் தன்மையும் நீங்கினார்கள் எ-று. அமரராகலின் குறையா மெய்யர் என்றார். தாள் முதலியவற்றுக்கு ஏற்ப அற்றார் என்பதற்கு அறுபட்டார் எனவும் நீங்கினார் எனவும் இங்ஙனம் உரைத்துக் கொள்க. கோள் - வலிமை. ஒடு; எண்ணிடைச் சொல், இதுவும் மேலதுபோல் திணை வழுவமைதி. (42) தொக்கன கழுகு சேனஞ் சொரிகுடர் பிடுங்சி யீர்ப்ப உக்கன குருதி மாந்தி யொட்டல்வாய் நெட்டைப் பேய்கள் நக்கன பாடல் செய்ய ஞாட்பினுட் கவந்த மாடப் புக்கன பிணத்தின் குன்றம் புதைத்தபார் சிதைத்த தண்டம். (இ-ள்.) ஞாட்பினுள் - போர்க்களத்தில், கழுகு சேனம் தொக்கன - கழுகுகளும் பருந்துகளும் நிறைந்து, சொரி குடர் பிடுங்கி ஈர்ப்ப - சொரிகின்ற குடலை இழுத்துப் பிடுங்கா நிற்பவும், ஒட்டல் வாய் நெட்டைப் பேய்கள் - ஒட்டிய வாயையுடைய நீண்ட பேய்கள், உக்கன குருதி மாந்தி - சொரிவனவாகிய குருதிகளைக் குடித்து, நக்கனபாடல் செய்ய - சிரித்துப் பாடவும், கவந்தம் ஆடப் புக்கன - தலையிழந்த உடல்கள் ஆடத் தொடங்கின; பார் புதைத்த பிணத்தின் அண்டத்தைச் சிதைவு படுத்தியது எ-று. தொக்கன, நக்கன என்பன வினையெச்சங்களும், உக்கன என்பது பெயரெச்சமும் ஆயின. ஒட்டல்; தொழிற் பெயர். நெட்டை - நெடுமையுடைய. ஒட்டலாகியவாய் எனவும்,நெட்டை யாகியபேய்கள் எனவும் உரைத்தலுமாம். புதைத்தது என்பது விகாரமாயிற்றுமாம். (43) இவ்வகை மயங்கிப் போர்செய் திறந்தவ ரொழியப் பின்னுங் கைவகை யடுபோர் செய்து கரையிறந் தார்கண் மாண்டார் அவ்வகை யறிந்து வானத் தரசனு மவுணர் வேந்துந் தெய்வதப் படைகள் வீசிச் சீறிநின் றடுபோர் செய்வார். (இ-ள்.) இவ்வகை மயங்கி - இங்ஙனம் கலந்து, போர் செய்து, இறந்தவர் ஒழிய - போர் செய்து மாண்டவர்கள் நீங்க, பின்னும் - பின்பும், கைவகை - கைவரிசையின் வகையால், அடுபோர் செய்து- கொல்லுதலையுடைய மற்போரினைச் செய்து, கதை இறந்தார்கள் மாண்டார் - அளவிறந்தவர்கள் இறந்தனர்; அவ்வகை அறிந்து - அவ்வாறு மாண்டதை அறிந்து, வானத்து அரசனும் அவுணர் வேந்தும் - தேவேந்திரனும் அசுரேந்திரனும், தெய்வதப் படைகள் வீசி - தெய்வத் தன்மையுடைய படைகளை விடுத்து, சீறி நின்று அடுபோர் செய்வார்கனன்று நின்று கொல்லுதலையுடைய போரினைச் செய்வாராயினர் எ-று. கை-கைத்திறம். கை வகை - ஒழுங்காகிய படை வகுப்பு என்பாரும் உளர். (44) அனற்படை விடுத்தான் விண்ணோ ராண்டகை யதனைக் கள்வன் புனற்படை விடுத்துச் சீற்றுந் தணித்தனன்1 புனிதன் காற்றின் முனைப்படை விடுத்தான் வெய்யோன் முழங்குகால் விழுங்கு நாகச் சினப்படை தொடுத்து வீசி விலக்கினான் றேவ ரஞ்ச. (இ-ள்.) விண்ணோர் ஆண் தகை - தேவர்கள் தலைவனாகிய இந்திரன், அனல் படை விடுத்தான் - தீக் கணையை விட்டான்; கள்வன் - விருத்திரன், புனல் படை விடுத்து - நீர்க்கணையை விடுத்து, அதனைச் சீற்றம் தணித்தனன் - அதனுடைய வெகுளியைத் தணித்தான்; புனிதன் - தூயவனாகிய இந்திரன், காற்றின் முனைப் படை விடுத்தான் - கூரிய காற்றுக் கணையை விடுத்தான்; வெய்யோன் - கொடியவனாகிய விருத்திரன், முழங்குதால் - ஒலிக்கின்ற காற்றினை, விழுங்கும் உண்ணுகின்ற, நாகச் சினப்படை- கோபத்தையுடைய பாம்புக்கணையை, தொடுத்து வீசி - வில்லிற் பூட்டி விடுத்து, தேவர் அஞ்ச விலக்கினான் - தேவர்கள் அஞ்சும்படி (அக்கணையைக்) தடுத்தான் எ-று. அனற்படை முதலிய ஆக்கினேயாஸ்திரம் முதலிய பெயர் களால் வடமொழியில் வழங்கப்பெறும். ஆண்டகை - அண்மை யாகிய தகுதியை யுடையான்; வீரன்; அன்மொழித் தொகை. அதனை: அதனுடைய; வேற்றுமை மயக்கம்; சீற்றந் தணித்தனன் என்பதனை ஒரு சொல்லாகக் கொண்டு அதனை யென்னும் இரண்டாவதற்கு முடிபாக்கினும் அமையும். (45) நாகமாப் படைவிட் டார்த்தா னாகர்கோ னுவணச் செல்வன் வேகமாப் படையை வீசி விலக்கினான் றகுவர் வேந்தன் மோகமாப் படையைத் தொட்டு முடுக்கினான் முனைவனன்ன தேகமாப் படிறன் ஞானப் படைவிடுத் திருள்போ னின்றான். (இ-ள்.) நாகர்கோன் - தேவர்க்கரசன். நாகம் மாப்படை விட்டு ஆர்த்தான் - பெரிய பாம்புக் கணையை விடுத்துப் பேரொலி செய்தான்; உவணச் செல்வன் - கருடனாகிய செல்வனது, மாவேகப் படையை வீசி- பெரிய வேகத்தையுடைய கணையை விடுத்து, தகுவர் வேந்தன் விலக்கினான் - அசுரர் மன்னன் (அக் கணையை) மாற்றினான்; முனைவன் இந்திரன், மா மோகப்படையைத் தொட்டு முடுக்கினான் - பெரிய மயக்கத்தைத் தருகின்ற கணையை எடுத்து விரைந்து தூண்டினான் மாபடிறன் - பெரிய வஞ்சகனாகிய அசுரன், அன்னது ஏக - அம் மையற் கணை ஒழிய, ஞானப்படை விடுத்து - ஞானக் கணையை விடுத்து, இருள் போல் நின்றான் - இருளைப்போல நின்றான் எ-று. தகுவர் - அசுரர். மோகப்படை - மோகனாஸ்திரம். முனைவன்- முதல்வன். படிறன் ஞானப்படை விடுத்து இருள்போல் நின்றான் என்பதில் விரோதமாகிய அழகு அமைந்திருத்தல் காண்க. இச்செய்யுட்கு, முதலில் அசுரன் என்னுஞ் சொல்லை வருவித்து, அசுரன் நாகமாப் படை விட்டார்த்தான் என் றிம்முறையாற் பொருள் கூறினாருமுளர்; சொற்கிடக்கை முறை அதற்கேலாமை காண்க. (46) மட்டிடு தாரான் விட்ட வானவப் படைக்கு மாறு விட்டுடன் விலக்கி வேறும் விடுத்திடக் கனன்று வஞ்சன் முட்டிட மான வெங்கான் மூட்டிடக் கோபச் செந்தீச் சுட்டிடப் பொறாது பொங்கிச் சுராதிப னிதனைச் செய்தான். (இ-ள்.) மட்டு இடு தாரான் விட்ட - தேனைப் பொழிகின்ற மாலையையுடைய இந்திரன் விடுத்த, வானவப் படைக்கு - தெய்வக் கணைகளுக்கு, மாறுவிட்டு உடன் விலக்கி - பகைக் கணைகளை விடுத்து உடனே விலக்கி, வேறும்விடுத்திட - வேறுகணைகளையும் விடுப்பதற்கு, வஞ்சன் கனன்று முட்டிட - வஞ்சகனாகிய விருத்திரன் சினந்து நெருங்க, சுராதிபன் - தேவேந்திரன் மானவெம் கால் மூட்டிட - மானமாகிய வெவ்விய காற்றானது மூட்டி, கோபச் செந்தீ - கோபமாகிய சிவந்த தீயானது, சுட்டிட - சுடுதலால், பொறாது பொங்கி - ஆற்றாது சீறி, இதனைச் செய்வான் - இதனைச் செய்வானாயினன் எ-று. வேறும் - வேறு கணையும். மானவெங்கால், கோபச் செந்தீ என் பன உருவகம், முட்டிட, சுட்டிட என்பவற்றில் இடு; துணைவினை. சுராதிபன் ; தீர்க்க சந்தி. (47) வீங்கிரு ளொதுங்க மேக மின்விதிர்த் தேன்னக் கையில் ஓங்கிருங் குலிச வேலை யொல்லென விதிர்த்த லோடுந் தீங்குளம் போன்றி ருண்ட திணியுடற் கள்வ னஞ்சி வாங்கிருங் கடலில் வீழ்ந்தான் மறைந்தமை நாக மொத்தான். (இ-ள்.) வீங்கு இருள் ஒதுங்க - மிகுந்த இருள் ஓடுமாறு, மேகம் மின் விதிர்த்து என்ன - முகிலானது மின்னலை வீசினாற்போல, கையில் ஓங்கு இருங் குலிச வேலை - கையிற் றாங்கிய மிகப் பெரி தாகிய வச்சிரப் படையை, ஒல்லென விதிர்த்தலோடும் - விரைவாக அசைத்தவுடனே, தீங்கு உளம்போன்று - தனது தீய உள்ளத்தை போல, இருண்ட திணி உடல் கள்வன் - கருமையுற்ற வலிய உடலையுடைய திருடனாகிய விருத்திரன், அஞ்சி - பயந்து, வாங்கு இருங்கடலில் வீழ்ந்தான் - வளைந்த பெரிய கடலினுள் வீழ்ந்து மறைந்து, மறைந்த மைதான் - வளைந்த பெரிய கடலினுள் வீழ்ந்து மறைந்து, மறைந்த மை நாகம் ஒத்தான் - முன்கடலில் மறைந்த மைநாகமலையை ஒத்தான் எ-று. விதிர்த்தென்ன; விகாரம். ஓங்கிரு; ஒருபொரு ளிருசொல். குலிசவேல்; பண்பொட்டு. உளமும் உடலும் இருண்ட; உளம் கரிதாதலை அகம் குன்றி மூக்கிற் கரியார்’ என்னும் குறளானும், கூழின் மலிமனம் போன்றிரு ளாநின்ற கோகிலமே என்னும் திருக்கோவையானும் அறிக. போன்று - போல; எச்சத்திரிபு. வீழ்ந்தான்: எச்சம்; வீழ்ந்து மறைந்து என்க. கரிய வுருவானும் பெரிய வடிவானும் வச்சிரத்திற் கஞ்சிக் கடலுள் ஒளித்தலானும் மைநாகம் உவமையாயிற்று. மைநாகம் - இந்திரன் வச்சிரத்தால் மலைகளின் சிறகுகளையறுத்த ஞான்று வாயுவின் உதவியாற் கடலுளொளித்த ஓர் மலை. (48) ஒக்கவிந் திரனும் வீழ்ந்தா னுடல்சின வுருமே றன்னான் புக்கிடந் தேடிக் காணான் புண்ணிய முளரி யண்ணல் பக்கம்வந் தனைய செய்தி பகர்ந்தனன் பதகன் மாளத் தக்கதோர் சூழ்ச்சி முன்னிச் சராசர மீன்ற தாதை. (இ-ள்.) ஒக்க - அவனோடு கூட, இந்திரனும் வீழ்ந்தான். இந்திரனும் விழுந்து, உடல் சினம் - மாறுபடும் சினத்தையுடைய, உரும் ஏறு அன்னான் புக்க இடம் தேடிக் காணான் - இடியேற்றை ஒத்த விருத்திரன் புகுந்து ஒளித்த இடத்தைத் தேடிக் காணாமல், புண்ணியம் முளரி அண்ணல் பக்கம் வந்து - தூய்மையாகிய தாமரை மலரில் வசிக்கும் பிரமனிடம் வந்து, அனைய செய்தி பகர்ந்தனன் - அந்தச் செய்தியைக் கூறினன்; சராசரம் ஈன்ற தாதை - இயங்குவனவும் நிற்பனவுமாகிய எல்லாவற்றையும் தந்தருளிய தந்தையாகிய பிரமனானவன், பதகன் மாளத்தக்கது ஓர் சூழ்ச்சி முன்னி - பாதகனாகிய அசுரன் மாளத் தகுந்ததாகிய ஒருபாயத்தை எண்ணி எ-று. ஒக்க - உடனாக. உடல் சினம் பொருபோர் என்பதுபோல நின்றது; உடலுதல் - சினத்தல். புக்கவிடம் புக்கிடமென விகாரமாயிற்று. புண்ணியம் - தூய்மை. அனைய; சுட்டு. தாதை - பிரமன்; பெயர். (49) விந்தவெற் படக்கி னாற்கீ துரையென விடுப்ப மீண்டு சந்தவெற் படைந்தான் வானோர் தலைவனை முகமன் கூறிப் பந்தவெற் பறுத்தான் வந்த தெவனெனப் பறைக ளெல்லாஞ்1 சிந்தவெற் பறுத்தான் வந்த செயலெலா முறையாற் செப்பி.2 (இ-ள்.) விந்த வெற்பு அடக்கினாற்கு - விந்தமலையை அடக்கிய அகத்திய முனிவனுக்கு, ஈது உரை என விடுப்ப - இச் செய்தியைக் கூறுவாயென அனுப்ப, மீண்டு- திரும்பி, சந்தவெற்பு அடைந்தான் - சந்தன மரங்களையுடைய பொதியின் மலையை யெய்தினான் ; பந்தவெற்பு அறுத்தான் - பாச பந்தமாகிய மலையைத் தொலைத்த அம்முனிவன், வானோர் தலைவனை முகமன் கூறி வந்த காரணம் யாதென்றுவினவ, வெற்பு பறைகள் எல்லாம் சிந்த அறுத்தான் - மலைகளின்சிறகுகளெல்லாம் சிதற அறுத்த இந்திரன், வந்த செயல் எல்லாம் முறையால் செப்பி - வந்த காரணம். எவன் - யாது. எ-று. பொதியிலிற் சந்தனமர மிக்கிருத்தலின் அது சந்த வெற்பு எனப்பட்டது; பொதியிலே விளைகின்ற சந்தனம் என்றார் நாட்டுச் சிறப்பிலும். வந்தது - வந்த காரணம். எவன் - யாது. பறை - சிறகு. (50) யாவையு முணர்ந்த வெந்தைக் கியானெடுத் துணர்த்து கின்ற தாவதென் னமருக் காற்றா தாழிபுக் கொளித்த னாவி வீவது மவனால் வந்த விழுமநோ யெல்லா மின்று போவதுங் கருதி நும்பாற் புகுந்தன மடிக ளென்றான். (இ-ள்.) யாவையும் உணர்ந்த எந்தைக்கு - அனைத்தையுமறிந்த எம் தந்தையாகிய நுமக்கு, யான் எடுத்து உணர்த்துகின்றதாவது என் - யான் எடுத்துத் தெரிவிப்பது யாது, அமருக்கு ஆற்றாது - போருக்கு ஆற்றாமல், ஆழி புக்கு ஒளித்தான் ஆவி வீவதும் - கடலிற் புகுந்து மறைந்த விருத்திரனுடைய உயிர் நீங்குவதும், அவனால் வந்த விழுமநோய் எல்லாம் - அவனால் நேர்ந்த துன்ப நோயனைத்தும், இன்று போவதும் கருதி - இன்றே நீங்குவதும் குறித்து, அடிகள் நும்பால் புகுந்தனம் என்றான் - அடிகளே நும்மிடத்து வந்தோம் என்றான் எ-று. ஆவது;இடைச்சொல். வீவது, போவது என்பன தொழிற் பெயர்கள். இன்று புகுந்தனம் எனினுமாம். ஏனைத் தேவரையும் உளப்படுத்திப் புகுந்தனம் எனப் பன்மையாற் கூறினான். (51) என்றவ னிடுக்கண் டீர்ப்பா னிகல்புரி புலன்க ளைந்தும் வென்றவ னெடியோன் றன்னை விடையவன் வடிவமாக்கி நின்றவ னறிவா னந்த மெய்ம்மையாய் நிறைந்த வெள்ளி மன்றவ னூழிச் செந்தீ வடிவினை மனத்துட் கொண்டான். (இ-ள்.) என்றவன் - என்று கூறின இந்திரனுடைய, இடுக்கண் தீர்ப்பான் - துன்பத்தை நீக்கும் பொருட்டு, இகல் புரி புலன்கள் ஐந்தும் வென்றவன் - பகை செய்கின்ற ஐம்புலன்களையும் வென்றவனும், நெடியோன் தன்னை - திருமாலின் வடிவத்தை, விடையவன் வடிவம் ஆக்கி நின்றவன் - சிவபிரான் திருவுருவமாகச் செய்து நின்றவனுமாகிய அகத்திய முனிவன், மெய்ம்மை அறிவு ஆனந்தமாய் - உண்மை அறிவு ஆனந்த வடிவாய், நிறைந்த - வியாபித்த, வெள்ளி மன்றவன் - வெள்ளியம்பல வாணனின், ஊழிச் செந்தீ வடிவினை - சிவந்த ஊழித்தீயை யொத்த திருவுருவை, மனத்துள் கொண்டான்- உள்ளத்திற் சிந்தித்தான் எ-று. புலன்கள் இகல் புரிதலை, “ கூட்டமா யைவர் வந்து கொடுந்தொழிற் குணத்த ராகி ஆட்டுவார்க் காற்ற கில்லே னாடர வசைத்த கோவே” என்னும் திருநேரிசையிற் காண்க. கடல் நீர் சுவறக் கருதினமையின் ஊழிச் செந்தீ வடிவினை மனத்துட் கொண்டான் என்றார். திருமாலைச் சிவனுருவாக்கிய வரலாறு;- அகத்தியர் வடக் கினின்றும் புறப்பட்டுப் பொதியிக்குச் செல்லுங்கால் திருக்குற்றாலத்தை யடைய அங்குள்ள வேதியர்கள் அவரது சைவ தவடேப் பொலிவை நோக்கி உள்ளம் பொறாதவர்களாய் இகழ்ந்து அவ்விடத்தை விட்டுப் போகுமாறு கூற, அவர் அங்ஙனமே திரும்பிச் சென்று அம் மறை யோரின் அகந்தையைப் போக்கக் கருதித் திருமாலடியார் கோலங் கொண்டு மீண்டு வந்து அவர்களால் உபசரிக்கப் பெற்றுத் திருமால் கோயிலை யடைந்து மாயோனது திருமுடிமேல் தமது திருக்கையை வைத்துச் சிவலிங்கப் பெருமான் வடிவமாக்கினர் என்பது; இதனை, “ அறுகுமதி நதிபுனையுஞ் செஞ்சடையெம் பெருமானை யகத்துட் கொண்டு சிறுகுமுரு வுடையமுனி நாரணனார் திருமுடிமேற் செங்கை யோச்சிக் குறுகுகுறு கெனவிருத்தி யொள்ளரக்கிற் புனைபாவைக் கோலமீது மறுகுதழ லுற்றென்னக் குழைவித்தோர் சிவலிங்க வடிவஞ் செய்தான்” என்னும் கந்தபுராணச் செய்யுளானறிக. (52) கைதவன் கரந்து வைகுங் கடலைவெற் படக்குங் கையிற் பெய்துழுந் தெல்லைத் தாக்கிப் பருகினான் பிறைசேர் சென்னி ஐயன தருளைப் பெற்றார்க் கதிசய மிதென்கொன் மூன்று வையமுத் தொழிலுஞ் செய்ய வல்லவ ரவ'bc யன்றோ. (இ-ள்.) கைதவன் - வஞ்சகனாகிய விருத்திரன், கரந்துவைகும் கடலை - மறைந்துறையும் கடலை, வெற்பு அடக்கும் கையில் பெய்து - விந்தமலையை அடக்கிய கையிற் கொண்டு, உழுந்து எல்லைத்து ஆக்கி - உழுந்தினளவினதாகச் செய்து, பருகினான் - குடித்தான்; பிறைசேர் சென்னி ஐயனது அருளைப் பெற்றார்க்கு - பிறைமதி பொருந்திய திருமுடியையுடைய சிவபெருமானது திருவருளைப் பெற்ற அடியார்கட்கு, இது அதிசயம் என் - இது அதிசய மென்பதென்னை, மூன்று வையம் - மூன்றுலகத்தும், முத்தொழிலும் செய்ய வல்லவர்- படைத்தல் காத்தல் அழித்தலாகிய மூன்று தொழில்களையும் செய்ய வல்லவர்கள், அவரே அன்றோ - அவ்வடியார்களே அல்லவா எ-று. வைகும், அடக்கும் என்னும் பெயரெச்சங்கள் முறையே இடப்பெயரும், கருவிப் பெயரும் கொண்டன. உழுந்து அமிழுமள வென்க. இதென்; விகாரம். ஈதோரதிசயமாமா என்றவாறு. கொல்;அசை. வையமும் என்னும் உம்மை தொக்கது. இது வேற்றுப் பொருள் வைப்பணி. (53) அறந்துறந் தீட்டு வார்த மரும்பெறற் செல்வம் போல வறந்தன படுநீர்ப் பெளவம் வடவைகட் புலப்பட டாங்கு நிறைந்த செம் மணியு மத்தீ நீண்டெரி சிகைபோ னீண்டு சிறந்தெழு பவளக் காடுந் திணியிருள் விழுங்கிற் றம்மா. (இ-ள்.) அறம் துறந்து ஈட்டுவார்தம் - அறத்தைக் கைவிட்டுத் தேடுபவர்களின், அரும் பெறல் செல்வம்போல் - பெறுதற்கரிய செல்வத்தைப்போல, படு நீர்ப் பெளவம் வறந்தன - ஆழமாகிய நீரினை யுடைய கடல் முழுதும் வற்றின; வடவைகண் புலப்பட்டாங்கு - அங்குள்ள வடவைத் தீ கண்களுக்குத் தோன்றினாற்போல, நிறைந்த செம்மணியும் - மிகுந்த செந்நிறத்தையுடைய மாணிக்கங்களும், அத்தீநீண்டு எரி சிகைபோல் - அந் நெருப்பு உயர்ந்து எரிகின்ற கொழுந்து போல, நீண்டு சிறந்து எழு பவளக்காடும் - ஓங்கிச் சிறப்புற்றெழுந்த பவளக்காடும், திணி இருள் விழுங்கிற்று - மிக்க இருளை விழுங்கின எ-று. அறந்துறந் தீட்டுதல் - பழிபாவங்களான் ஈட்டுதல். பெறலரும் என மாற்றுக. படுநீர் - மிக்க நீர்; ஒலிக்கின்ற நீருமாம். வறந்தன எனப் பன்மையாகக் கூறினமையால் கடலின் எல்லா இடங்களும் என்றாவது எல்லாக் கடல்களும் என்றாவது கொள்க, திணி இருள் செறிந்த இருள். விழுங்கிற்று என்னும் வினையைச் செம்மணி. பவளக்காடு என்பவற்றுடன் தனித்தனிகூட்டுக, அம்மா; வியப் பிடைச்சொல் விழுங்குமன்றே எனப்பாடங்கொண்டாருமுளர்; அவர்பலவிடத்தும் தாமாகவே பாடங்களை மாற்றிக் கொண்டிருத் தலின் அவைகொள்ளற் பாலன வல்லவென்க. (54) பணிகளின் மகுட கோடிப் பரப்பென விளங்கிப் பல்கா சணிகலப் பேழை பேழ்வாய் திறந்தனைத் தாகி யொன்பான் மணிகிடந் திமைக்கு நீரான் மகபதி வேள்விக் காவாய்த் திணியுட லவுணன் பட்ட செங்கள மனைய தன்றே. (இ-ள்.) பணிகளின் மகுடகோடிப் பரப்பு என - (கடலானது, பாதலத்திலுள்ள) பாம்புகளின் மகுட வரிசையின் பரப்பைப்போல, விளங்கி- ஒளி வீசி, பல்காசு அணிகலப் பேழை - பல மணிகள் பதித்த அணிகலன்களை வைத்த பெட்டியின், பேழ்வாய் திறந்து அனைத்து ஆகி - பெரிய வாயைத் திறந்து வைத்ததுபோலாகி, ஒன்பான் மணிகிடந்து இமைக்கு நீரால் - ஒன்பது வகை மணிகளும் தங்கி ஒளிவிடுந் தன்மையால், மகபதி வேள்விக்கு ஆவாய் - இந்திரன் வேள்விக்குப் பசுவாகி, திணி உடல் அவுணன் பட்ட - வலிய உடலை யுடைய வலாசுரன் இறந்துபட்ட, செங்களம் அனையது - போர்க் களம் போன்றது எ-று. பணி - படத்தையுடையது எனக் காரணக்குறி; பணம் - படம். கோடி - வரிசை; மிகுதியுமாம். பல் காசினையும் அணிகலங்களையு முடைய பேழை என்றுமாம். திறந்தனைத்து; தொகுத்தல் விகாரம். ஓன்பான் - ஒன்பது. மகபதி - வேள்விக்குத் தலைவன்; நூறுவேள்விகள் இயற்றியவன். வலனுடைய உடம்பின் குருதி முதலியவெல்லாம் நவமணிகளாயினமையின் செங்கள மனையது என்றார்; இதனை மாணிக்கம் விற்ற படலத்திற் காண்க. செங்களம் - போர்க்களம்; செங்களந் துழவுவோள் என்பது புறப்பாட்டு அன்று, ஏ: அசை. (55) வறந்தநீர் தன்னின் மின்னு வாள்விதிர்த் தென்னப் பன்மீன் எறிந்தன நெறிந்த நாக மிகைத்தன வளையு முத்துஞ் செறிந்தன கரந்த யாமை சேர்ந்தபல் பண்டஞ் சிந்தி முறிந்தன வங்கங் கங்க முக்கின1 சிறுமீ னெல்லாம். (இ-ள்.) வறந்த நீர் தன்னில் - நீர் வற்றிய இடத்தில், மின்னுவாள் விரித்து என்ன - ஒளியினையுடைய வாட்படையை அசைத்தாற் போல, பல்மீன் எறிந்தன - பலமீன்கள் துள்ளின; நாகம் நெளிந்தன - நாகம் நெறிந்த - பாம்புகள் நெளிந்தன; வளையும் முத்தும் இமைத்தன் - சங்கு களும் முத்துக்களும் ஒளித்தன; சேர்ந்த பல் பண்டம் சிந்தி வங்கம் முறிந்தன - பொருந்திய பல பொருள்களையும் சிதறிக் கப்பல்கள் உடைந்தன; கங்கம் சிறுமீன் எல்லாம் முக்கின - பருந்துகள் சிறிய மீன்களையெல்லாம் விழுங்கின எ-று. விதிர்த்தென்ன;விகாரம். நெளிந்த, கரந்த என்பன அன்பெறாத பலவின்பால் முற்றுக்கள். செறிந்தன; முற்றெச்சம். முக்குதல் - வாய் நிறையக் கொண்டுண்ணுதல். (56) செருவினி லுடைந்து போன செங்கண்வா ளவுண னங்கோர் அருவரை முதுகிற் கார்போ லடைந்துவா னாடர் செய்த உருகெழு பாவந் தானோ ருருவெடுத் திருந்து நோற்கும் பரிசென நோற்றா னின்னும்1 பரிபவ விளைவு பாரான். (இ-ள்.) செருவினில் உடைந்துபோன - போரில் தோல்வி யடைந்துபோன, செங்கண் - சிவந்த கண்களையுடைய, வாள் அவுணன் - வாட் படையையுடைய அசுரன், அங்கு ஓர் அருவரை முதுகில் - அவ்விடத்து ஓர் அரிய மலையின் உச்சியில், கார்போல் அடைந்து - முகிலைப்போலச் சென்று தங்கி, வானா செய்த - தேவர் களாற் செய்யப்பட்ட, உருகெழு பாவம்தான் - அஞ்சத்தக்க பாவ மானது, ஓர் உருவு எடுத்து இருந்து நோற்கும் பரிசு என - ஒரு வடிவெடுத்து இருந்து தவஞ் செய்யுந் தன்மைபோல, இன்னும் பரிபவவிளைவு பாரான் நோற்றான் - இன்னமும் மேலே வருகின்ற துன்பத்தைப் பாராதவனாகித் தவஞ் செய்தான் எ-று. இன்; சாரியை. வாள் - கொடுமையுமாம். முதுகு - மலையின் நடுவுமாம். நிறத்தானும் மலையைச் சார்தலானும் கார் உவமம். தேவர்க்குத் துன்பம் விளைதலின் ‘வானாடர் செய்த பாவம்’ என்றார். உரு - அச்சம் ; ‘உருவுட் காகும்’ என்பது தொல்காப்பியம். தான்; அசை. (57) கைதவ நோன்பு நோற்குங் கள்வனைக் கண்டு வானோர் செய்தவ மனையான் யாணர் வச்சிரஞ் சீரிப் பான்போற் பொய்தவன் றலையைக் கொய்தான் புணரிவாய் நிறையச் சோரி பெய்தது வலாரி பிடித்தது பிரமச் சாயை.2 (இ-ள்.) வானோர் செய்தவம் அனையான் - தேவர்கள் செய்த தவத்தினை ஒத்த இந்திரன், கைதவ நோன்பு நோற்கும் கள்வனைக் கண்டு - வஞ்சனையையுடைய தவத்தினைச் செய்யும் கள்வனாகிய விருத்திரனைக் கண்டு, யாணர் வச்சிரம் சீரிப்பான் போல் - புதிய குலிசப் படையைப் பழக்குவான்போல, பொய்தவன் தலையை அறுத்தான்; புணரிவாய் நிறையச் சோரி பெய்தது - கடலினிடம் நிறையுமாறு குருதி பொழிந்தது; வலாரி தன்னைப் பிடித்தது பிரமச் சாயை - இந்திரனைப் பிரமக் கொலைப் பாவம் பற்றியது எ-று. போருக்குடைந்து நோற்பான் போல் ஒளித்திருந்தமையின் கைதவ நோன்பு நோற்கும் என்றார். உயிர்க்குறுகண் செய்யாமை தவத்திற் கிலக்கணமாகவும் வானோர்க்குத் துன்பமுண்டாதல் கருதி நோற்றமையில் என்னலுமாம். நோன்பென வந்தமையின் நோற்றல் செய்தல் என்னும் மாத்திரையாய் நின்றது. யாணர் புதுவருவாய் என்னும் பொருட்டு; புதிது படற்பொருட்டே யாணர்க் கிளவி என்பது தொல்காப்பியம்; பின்னாளில் இது புதுமை, அழகு என்னும் பொருள்களில் வழங்குகிறது. சீரித்தல் - பரீக்கித்தல். பொய்- பொய்த்தலை யுடைய; வினைத்தொகை. உடலினின்றும் சோரி பெய்தது என்றாதல், உடல் சோரியைப் பெய்தது என்றாதல் கொள்க. வேள்வியிற் றோன்றியவனும் தவஞ் செய்வோனும் ஆகியவனைக் கொன்றமையின் பிரமச் சாயை பிடித்தது. (58) உம்மெனு மார்பைத் தட்டு முருத்தெழு மதிர்க்கும் போர்க்கு வம்மெனும் வாய்ம டிக்கும் வாளெயி1 றதுக்கும் வீழுங் கொம்மென வோடு மீளுங் கொதித்தெழுஞ் சிரிக்குஞ் சீறும் இம்மெனு மளவு நீங்கா தென்செய்வா னஞ்சி னானே. (இ-ள்.) இம் எனும் அளவு நீங்காது - (அக்கொலைப் பாவம்) இம் என்று கூறும் அளவும் நீங்காததாய், உம் எனும் - உம் என்று அதட்டும்; மார்பைத் தட்டும் - தனது மார்பைத் தட்டும்; உருத்து எழும் - கோபித்து எழும்; அதிர்க்கும் - பெரொலி செய்யும், போர்க்குவம் எனும் - போருக்கு வாருங்கள் என்னும்; வாள் எயிறு அதுக்கும் - ஒள்ளிய பற்களை அதுக்கும்; வீழும் - குப்புற்று வீழும்; கொம்மென ஓடும் - விரைந்து ஓடும்; மீளும் - திரும்பும்; கொதித்து அழும் - பொங்கி அழும்; சிரிக்கும் - பெருநகை செய்யும்; சீறும் - சீறாநிற்கும்; என்செய்வான் - (ஆதலால்) என்ன செய்வான் இந்திரன், அஞ்சினான் - பயந்தான் எ-று. உம்மெனும்: ஒலிக்குறிப்பு. கொம்மென, இம்மெனும் என்பன விரைவுக் குறிப்புகள். வம்மின் என்பது ஈறு கெட்டு நின்றது. எயிற்றால் அதுக்கு மென்றுமாம். (59) விரைந்தரன் றிசையோர் வாவி வீழ்ந்தொரு கமல நூலுட் கரந்தனன் மகவா னிப்பால் கற்பக நாடு புல்லென் றிருந்ததா லிருக்கு மெல்லை யிம்பரி னகுட னென்போன் அரும்பரி மேத வேள்வி யாற்றினா னாற்று மெல்லை. (இ-ள்.) மகவான் - இந்திரனானவன், அரன் திசை ஓர் வாவி - ஈசான திசையில் உள்ள ஒரு குளத்தில், விழைந்து வீழ்ந்து ஒரு கமல நூலுள் கரந்தனன் - விரைவாகக் குதித்து ஒரு தாமரைத்தண்டின் நூலினுள் மறைந்தான்; இப்பால் கற்பக நாடு புல்லென்று இருந்தது - இப்புறம் தேவவுலகம் பொலிவழிந்திருந்தது; இருக்கும் எல்லை அங்ஙன மிருக்குங் காலத்தில், இம்பரில் நகுடன் என்போன் - நிலவுலகில் நகுடனென்னும் மன்னன், அரும்பரி மேதவேள்வி ஆற்றினான் - அரிய அசுவமேதமாகிய வேள்வியைச் செய்தான்; ஆற்றும் எல்லை - அங்ஙனம் செய்துவரும் பொழுதில் எ-று. அரன் திசை - ஈசான திசை, வடகிழக்கு; ஈசான திசையிலுள்ள உருத்திர வுலகத்தில் என்று சிலர் கூறுவர். தாமரை நாளத்திலுள்ள நூல். ஆல்; அசை. நகுடன் சந்திர வமிசத்து ஆயுவின் மகன், யயாதி முதலானோர்க்குத் தந்தை. (60) அரசிலா வறுமை நோக்கி யவனைவா னாடர் யாரும் விரைசெய்தார் மகுடஞ் சூட்டி வேந்தனாக் கொண்டார் வேந்தாய் வருபவன் சசியை யீண்டுத் தருகென மருங்கு ளார்போய்த் திரைசெய்நீ ரமுத னாட்குச் செப்பவக் கற்பின் மிக்காள். (இ-ள்.) வானாடர் யாரும் - தேவர்களனைவரும், அரசு இலா வறுமை நோக்கி - தங்கட்கு மன்னனில்லாத வறுமையைக் கருதி, அவனை - அந் நகுடனை, விரைசெய்தார் மகுடம் சூட்டி - மணம் வீசும் மாலையையுடைய முடியைச் சூட்டி, வேந்தனாக் கொண்டார் - அரசனாகக் கொண்டார்கள்; வேந்தாய் வருபவன் - அரசனாய் வந்த நகுடன், சசியை ஈண்டுத் தருகென - இந்திராணியை இங்கு அழையுங்கள் என்ன, மருங்குளார் போய் - பக்கத்திலுள்ளவர்கள் போய், திரை செய் நீர் அமுது அன்னாட்கு - அலைகளை வீசுகின்ற கடலிற்றோன்றிய அமுதத்தை யொத்த இந்திராணிக்கு, செப்ப - சொல்ல அக் காப்பின் மிக்காள் அந்தக் கற்பின் - மேம்பட்டவள் எ-று. யாரும் என்பது எஞ்சாமை குறித்தது. மகுடஞ் சூட்டி யென்பதனை ஒரு சொல்லாகக் கொண்டு அவனை யென்னும் இரண்டாவதற்கு முடி பாக்குக. ஆக என்பது ஈறு தொக்கது. ஆய் -ஆகி. தருகென: அகரம் தொகுத்தல். (61) பொன்னுயிர்த் தனைய காட்சிப் புண்ணியக் குரவன் முன்போய் மின்னுயிர்த் தனையா ணின்று விளம்புவா ளிதென்கொல் கெட்டேன் என்னுயிர்த் துணைவ னாங்கே யிருக்கமற் றொருவ னென்னைத் தன்னுயிர்த் துணையாக் கொள்கை தருமமோ வடிக ளென்றாள். (இ-ள்.) மின் உயிர்த்து அனையாள் - மின்னல் ஒரு வடிவு கொண்டதை ஒத்த அவள், பொன் உயிர்த்து அனைய காட்சி - பொன் ஓர் உருப்பெற்றதை ஒத்த தோற்றத்தையுடைய, புண்ணிய குரவன் முன் போய் நின்று விளம்புவாள் - அற வடிவாகிய குரவன் முன்னர்ச் சென்று நின்று கூறுவாள், அடிகள் - அடிகளே, இது என் கொல்கெட்டேன் - இஃது என்ன வியப்பு, என் உயிர்த்துணைவன் ஆங்கே இருக்க - என் உயிர்த்துணைவன் அவ்விடத்து உயிரோடிருக் கவும், மற்றொருவன் - வேறொருவன், என்னைத் தன் உயிர்த் துணையாக் கொள்கை - என்னைத் தன் உயிர்த்துணைவியாகக் கொள்ளுதல், தருமமோ என்றாள் - அறமோ என்று கூறினாள் எ-று. உயிர்த்தல் - உருவுகொள்ளுதல். உயிர்த்தது இரண்டும் விகார மாயின. இதென்; விகாரம். கொல்; அசை நிலை. கெட்டேன் ; வியப்பிடைச் சொல்; அவலமுமாம். என்னுயிர் தன்னுயிர் என்பன உடையதும் உடைமையும் வேறாகத ஒற்றுமைக் கிழமைப் பொருளில் வந்த ஆறாம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்கள், (62) மாதவ ரெழுவர் தாங்க மாமணிச் சிவிகை மீது போதரி னவனே வானோர் புரந்தர னவனே யுன்றன் காதல னாகு மென்றான் கைதொழு ததற்கு நேர்ந்தம் மேதகு சிறப்பா லிங்கு வருகென விடுத்தா டூது (இ-ள்.) மாதவர் எழுவர் தாங்க - முனிவர் எழுவரும் தாங்க, மாமணிச் சிவிகைமீது போதரின் - பெருமை பொருந்திய மணிகள் அழுத்திய சிவிகையின்மேல் வந்தால், அவனே வானோர் புரந்தரன்- அவனே தேவர்களைப் புரக்கின்ற வேந்தனாவான்; அவனே உன்றன் காதலன் ஆகும் என்றான் - அவனே நின் நாயகனுமாவான் என்றான்; கைதொழுது - வணங்கி, அதற்கு நேர்ந்து - அதற்குடன்பட்டு, அம்மேதகு சிறப்பால் இங்கு வருகவென்று, தூது - விடுத்தாள் - தூதினைப் போக்கினாள் எ-று. மாதவர் எழுவர் - சத்தமுனிகள்; அகத்தியன், ஆங்கிரசன், கோதமன், காசிபன், புலத்தியன், மார்க்கண்டன், வசிட்டன் என்போர். தன்; சாரியை. வருகென; தொகுத்தல். (63) மனிதரின் மகவா னாகி வருபவன் சிவிகை தாங்கும் புனிதமா தவரை யெண்ணான் புன்கணோய் விளைவும் பாரான் கனிதரு காமந் துய்க்குங் காதலால் விரையச் செல்வான் இனிதயி ராணி பாற்கொண் டேகுமின் சர்ப்ப வென்றான். (இ-ள்.) மனிதரின் மகவான் ஆகி வருபவன் - மனிதருள் இந்திரனாகி வருகின்ற நகுடன், சிவிகை தாங்கும் - சிவிகையினைச் சுமந்து வருகின்ற, புனிதமாதவரை எண்ணான் - தூய முனிவர்களின் பெருமையை அறியாதவனாயும், புன்கண்நோய் விளைவும் பாரான்- துன்பநோய் மேலே விளைவதையும் பாராதவனாயும், கனிதரு காமம் துய்க்கும் காதலால் - கனிந்த காம இன்பத்தை நுகருமாசை யால், விரையச் செல்வான் - விரைந்து செல்லும் பொருட்டு, இனிது அயிராணி பால்- இனிதாக இந்திராணியிடத்து, கொண்டு ஏகுமின் சர்ப்ப என்றான் - எடுத்துக்கொண்டு செல்லுங்கள் விரைய என்று கூறினான் எ-று. வருபவன்;நிகழ்கால முணர்த்திற்று. மாதவர் பெருமையை என்க. புன்கண் நோய்; ஒரு பொருளிருசொல். எண்ணான், பாரான் என்பன முற்றெச்சங்கள். தரு; துணைவினை. சர்ப்ப; விரைந்து செல்க என ஏவுதற் சொல். (64) சர்ப்பமா கெனமுற் கொம்பு தாங்கிமுன் னடக்குந் தென்றல் வெற்பனா முனிவன் சாபம் விளைத்தனன் விளைத்த லோடும் பொற்பமா சுணமே யாகிப் போயினா னறிவி லாத அற்பரா னவர்க்குச் செல்வ மல்லது பகைவே றுண்டோ. (இ-ள்.) முன்கொம்பு தாங்கி - சிவிகையின் முன் கொம்பைத் தாங்கி, முன் நடக்கும் தென்றல் வெற்பனாம் முனிவன் - முன்னே நடக்கின்ற தென்றலுக்குப் பிறப்பிடமாகிய பொதியின் மலையை யுடைய அகத்தியன், சர்ப்பம் ஆகென - பாம்பாகக் கடவாயென்று, சாபம் விளைத்தனன் - சாபம் கொடுத்தான்; விளைத்தலோடும் - அங்ஙனம் சாபமிட்டவுடனே, பொற்ப மாசுணமே ஆகிப் போயினான்- பொலிவு பெறப் பெரும்பாம்பு வடிவாகிப் போயினான்; அறிவு இலாத அற்பர் ஆனவர்க்கு - அறிவற்ற கீழ்மைக்குண முடையவர் களுக்கு, செல்வம் அல்லது பகை வேறு உண்டோ - செல்வத்தை யன்றி பகையாயுள்ளது மற்றொன்று உண்டோ (இல்லை) எ-று. ஆகென;தொகுத்தல்; ஆகு என ஏவலுமாம். “ குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது ” என்பவாகலின் விளைத்தலோடும் ஆகியென்றார். மாசுணம் - பெரும் பாம்பு. இவ்வரலாறு, “ ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்” என்பதற்கு எடுத்துக் காட்டாதல் காண்க. அறியாமையுடன் கூடிய செல்வக்களிப்பாற் பாம்பாயினமையின் செல்வத்தைப் பகை யென்றார். இது வேற்றுப்பொருள் வைப்பணி. (65) பின்னர்த்தங் குரவ னான பிரானடி பணிந்து வானோர் பொன்னகர் வேந்த னின்றிப் புலம்படை கின்ற தைய என்னலுங் குரவன் போயவ் விலஞ்சியு ளொளித்தாற் கூவித் தன்னுரை யறிந்து போந்த சதமகற் கொண்டு மீண்டான். (இ-ள்.) வானோர் - தேவர்கள், பின்னர் தம் குரவனான பிரான் அடிபணிந்து - பின்பு தம் குரவனாகிய வியாழபகவான் திருவடியைப் பணிந்து, ஐய-ஐயனே, பொன் நகர் - பொன்னுலகமானது, வேந்தன் இன்றி - மன்னனில்லாமல், புலம்பு அடைகின்றது - வருந்துகின்றது. என்னலும் - என்று வேண்டிக் கோடலும், குரவன் போய் - ஆசிரியன் சென்று, இலஞ்சியுள் ஒளித்தான் கூவி - அந்தக் குளத்தில் மறைந்த இந்திரனை அழைத்து, தன் உரை அறிந்து போந்த - தன் சொல்லை அறிந்து வெளிவந்த, சதமகன் கொண்டு மீண்டான் - இந்திரனை உடன் கொண்டு திரும்பினான் எ-று. தன் உரை அறிதல் - ஒலி யியற்கையால் தனது மொழியென அறிதல். ஒளித்தான், சதமகன் என்னும் உயர்திணைப் பெயர்கள் இரண்டாம் வேற்றுமை யாகலின் ஈறு திரிந்தன. (66) கொடும்பழி போட்பட் டான்றன் குரவனை வணங்கி யென்னைச் சுடும்பழி கழிவ தெங்ஙன் சொல்லெனத் தொலைவ தோர்ந்தான் அடும்பழி மண்மே லன்றி யறாதுநீ வேட்டைக் கென்னப் படும்பழி யிதனைத் தீர்ப்பான் பார்மிசை வருதி யென்றான். (இ-ள்.) கொடும்பழி கோட்பட்டான் - கொடிய பாவத்தால் பீடிக்கப்பட்டவனாகிய இந்திரன், தன் குரவனை வணங்கி - தன் குருவைத் தொழுது, என்னைச் சுடும்பழி கழிவது எங்ஙன் சொல் என - என்னை வருத்துகின்ற இப்பாவமானது நீங்குவது எவ்வாறு சொல்லுக என்று கேட்க, தொலைவது ஓர்ந்தான் - தீரும் வழியை அறிந்தவனாகிய அக் குரவன், அடும்பழி மண்மேல் அன்றி அறாது- வருத்தும் பாவமானது நிலவுலகத்தல்லாமல் (வேறு இடத்தில்) நீங்காது, நீ வேட்டைக்கு என்ன - நீ வேட்டையைக் காரணமாகக் கொண்டு, படும்பழி இதனைத் தீர்ப்பான் - உண்டாகிய இப்பாவத்தைத் தீர்க்கும் பொருட்டு, பார்மிசை வருதி என்றான் - பூவுலகின்கண் வருவாய் என்று கூறினான் எ-று. கோட்பட்டான் - கொள்ளப்பட்டான். பழி கோட்பட்டான் என்பது தம்மினாகிய தொழிற்சொல் வந்தமையின் இயல்பாயிற்று. சுடும்பழி, அடும்பழி ஒரு பொருளன. சுடும்பழி முதலியவற்றைச் சுட்டாகக் கொள்க. எங்ஙனம் என்பது குறைந்து நின்றது. அடும்பழி கொலைப் பாவம் என்பாருமுளர். வேட்டையை வியாசமாகக் கொண்டு என்க. படும்; இறந்தகாலத்தில் வந்தது. (67) ஈசனுக் கிழைத்த குற்றந் தேசிக னெண்ணித் தீர்க்குந் தேசிகற் கிழைத்த குற்றங் குரவனே தீர்ப்ப தன்றிப் பேசுவ தெவனோ தன்பாற் பிழைத்தகா ரணத்தால் வந்த வாசவன் பழியைத் தீர்ப்பான் குரவனே வழியுங் கூற. (இ-ள்.) ஈசனுக்கு இழைத்த குற்றம் - கடவுளுக்குச் செய்த குற்றத்தை, தேசிகன் எண்ணித் தீர்க்கும் - குரவன் தீரும் வழியை ஆராய்ந்து தீர்ப்பான்; தேசிகற்கு இழைத்த குற்றம் - குரவனுக்குச் செய்த குற்றத்தை, குரவனே தீர்ப்பது அன்றி - அத்தேசிகனே நீக்குவதல்லாமல், பேசுவது எவன் - வேறு கூறுவது யாது; தன்பால் பிழைத்த காரணத்தால் வந்த - தன்னிடம் தவறு செய்தமையால் வந்த, வாசவன் பழியைத் தீர்ப்பான் - இந்திரன் பழியைத் தீர்ப்பதற்கு, குரவனே வழியும் கூற - அவ்வியாழ பகவானகிய தேசிகனே வழியையும் சொல்ல எ-று. பேசுவது - வேறொருவர் தீர்ப்பரெனக் கூறுவது. ஏ; இரண்டும் பிரிநிலை. ஓ;அசைநிலை. (68) வாம்பரி யுகைத்துத் தன்னால் வழிபடு குரவன் வானோர் தாம்பரி வோடுஞ் சூழத் தராதலத் திழிந்து செம்பொற் காம்பரி தோளி பங்கன் கயிலைமால் வரையுந் தாழ்ந்து தேம்பரி யலங்கன் மார்பன் றென்றிசை நோக்கிச் செல்வான். (இ-ள்.) தேம்பரி அலங்கல் மார்பன் - தேனைத் தாங்கிய மாலையை யணிந்த மார்பினையுடை இந்திரன், வாம்பரி உகைத்து- தாவுகின்ற குதிரையைச்செலுத்தி, தன்னால் வழிபடு குரவன் - தன்னால் வழிபடப்பட்ட குரவனும், வானோர் - தேவர்களும், பரிவோடும் சூழ - அன் போடுஞ் சூழ்ந்துவர, தராதலத்து இழிந்து- நிலவுலகத்தி லிறங்கி, செம்பொன் காம்பு அரிதோளிபங்கன் - சிவத் பொன்போலும் நிறத்தினையுடைய மூங்கிலை ஒத்த தோளை யுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் வைத்த சிவபிரானது, மால் கயிலை வரையும் தாழ்ந்து - பெரிய கயிலை மலையையும் வணங்கி, தென்திசை நோக்கிச் செல்வான் - தென்றிசையை நோக்கிச் செல்வானாயினன் எ-று. வாம்பரி - வாவும் பரி; ஈறு நிற்றலின் வினைத்தொகையன்று. குரவனும் வானோரும் என உம்மை விரிக்க. தரையாகிய தலம். காம்பு அரி என்பன மூங்கில் என்னும் ஒரு பொருளில் வந்த இருசொல்; அரி - துண்டமுமாம். தேம்-தேன். பரிதல் - ஒழுகு தலுமாம். (69) (மேற்படி வேறு) கங்கைமுத லளவிறந்த தீர்த்த மெலாம் போய்ப்படிந்து காசி காஞ்சி அங்கனக கேதார முதற்பதிகள் பலபணிந்து மவுணற் கொன்ற பொங்குபழி விடாதழுங்கி யராவுண்ண மாசுண்டு பொலிவு மாழ்குந் திங்களனை யான்கடம்ப வனத்தெல்லை யணித்தாகச் செல்லு மேல்வை. (இ-ள்.) கங்கைமுதல் அளவு இறந்த தீர்த்தம் எல்லாம் போய் படிந்து - கங்கை முதலிய அளவற்ற தீர்த்தங்கள் அனைத்திலும் சென்று நீராடி, காசி காஞ்சி அம் கனக கேதாரம் முதல் - காசியும் காஞ்சியும் அழகிய பொன்மயமான கேதாரம முதலாகிய, பதிகள் பல பணிந்தும் - பல திருப்பதிகளிற் சென்று வணங்கியும், அவுணன் கொன்ற - அசுரனைக் கொன்றதனால் வந்த, பொங்கு பழி - மிக்க பாவமானது, விடாது - விடப் பெறாமையால், அழுங்கி - வந்து, அரா உண்ண - பாம்பு விழுங்க, மாசுண்டு பொலிவு மாழ்கும் திங்கள் அனையான் - குற்றப்பட்டுப் பொலிவினை யிழக்கும் சந்திரனை ஒத்த இந்திரன், கடம்பவனத்து எல்லை அணித்தாக - கடம்பவனத்து எல்லையின் அருகாக, செல்லும் ஏல்வை - செல்லும் பொழுது எ-று. விடாது - விடாமையால். அணித்து - அணிமை; து: பகுதிப் பொருள் விகுதி; எல்லையானது அணித்தாக என்னலுமாம். அங்கு அனகம் எனப் பிரித்து, அங்கு அசை யென்னலுமாம்; அனகம் - களங்கமின்மை. (70) தொடுத்தபழி வேறாகி விடுத்தகன்ற திந்திரன்றான் சுமந்த பாரம் விடுத்தவனொத் தளவிறந்த மகிழ்வெய்தித் தேசிகன்பால் விளம்பப் பாசங் கெடுத்தவன்மா தலம்புனித தீர்த்தமுள விவணமக்குக் கிடைத்தல் வேண்டும் அடுத்தறிக வெனச்சிலரை விடுத்தவ்வே றாநிலைநின் றப்பாற் செல்வான். (இ-ள்.) தொடுத்த பழிவேறு ஆகி - பற்றிய பழியானது வேறுபட்டு, விடுத்து அகன்றது - விட்டு நீங்கியது; இந்திரன் தான் சுமந்த பாரம் விடுத்தவன் ஒத்து - இந்திரனானவன் தாங்கிய சுமையை இறக்கினவன் போன்று, அளவு இறந்த மகிழ்வு எய்தி - அளவில்லாத களிப்புற்று, தேசிகன்பால் விளம்ப - குரவனிடங் கூறு, பாசம் கெடுத்தவன் - பாசபந்தத்தை அறுத்தவனாகிய அத்தேசிகன், இவண் மாதலம் புனித தீர்த்தம் உள - இங்குச் சிறந்த தலமும் தூய தீர்த்தமும் உள்ளன; நமக்குக் கிடைத்தல் வேண்டும் - அவை நமக்குக் கிட்டுதல் வேண்டும்; அடுத்து அறிக என - சென்று அவற்றைத் தெளிவாயாக என்று கூற, சிலரை விடுத்து - அவற்றைத் தேடச் சிலரை ஏவி, அவ்வேறு ஆம் நிலை நின்று - அந்தப் பழி நீங்கிய இடத்தினின்றும், அப்பால் செல்வான் - அப்புறம் செல்லு கின்ற இந்திரன் எ-று. அகன்ற தென்பதை எச்சமாக்கலுமாம். தான்; அசை. மகிழ்வினை யெய்தியென விரிக்க. தலமும் தீர்த்தமுமென எண்ணும்மை விரிக்க. அவ்வேறா நிலை யென்பதற்குப் பிறர் கூறும் வேறு பொருள்கள் பொருந்தா வென்க. செல்வான்; வினைப்பெயர்; வினைப்பெயர்; பின் இன்ன என்னுஞ் செய்யுளிற் செயனோக்கி என்பதனோடியையும்; எச்சமாக்கியும் முற்றாக்கியும் உரைத்தலுமாம். (71) அருவிபடிந் தருவியெறி மணியெடுத்துப் பாறையிலிட் டருவி நீர்தூய்க் கருவிரல்கொய் தலர்சூட்டிக் கனியூட்டி வழிபடுவ கல்லா மந்தி ஒருதுறையில் யாளிகரி புழைக்கைமுகச் தொன்றற்கொன் றூட்டி யூட்டிப் பருகுவன புலிமுலைப்பால் புல்வாய்க்கன் றருத்தியிடும்1 பசிநோய் தீர2 (இ-ள்.) கல்லா மந்தி - அறிவில்லாத குரங்குகள், அருவி படிந்து - அருவியில் நீராடி, அருவி எறி மணி எடுத்து - அருவி வீசிய மணியை எடுத்து, பாறையில் இட்டு - பாறையில் வைத்து, அருவி நீர் தூய் - அருவி நீரால் ஆட்டி, கருவிரல் கொய்து அலர் சூட்டி - கரிய விரல்களாற் பறித்துப் பூக்களைச் சூட்டி; கனி ஊட்டி வழி படுவ - கனிகளை உண்பித்து வழிபடுவன; ஒரு துறையில் யாளிகரி- ஒரே நீர்த்துறையில் யாளிகளும், யானைகளும், புழைக்கைமுகந்து தொளையுடையகைகளால் நீரை மொண்டு, ஒன்றற்கு ஒன்று ஊட்டி ஊட்டிப் பருகுவன - ஒன்றினுக்கு ஒன்று ஊட்டி ஊட்டிப் பருகாநின்றபன; புலி முலைப்பால் - புலிகள் தங்கள் முலைப் பாலை, புல்வாய்க் கன்று பசி நோய் தீர அருத்தியிடும்-மான் கன்றுகள் பசிப்பிணி நீங்க உண்பிக்கும் எ-று. மணியைச் சிவலிங்கமாகப் பாவித்து வைத்தென்க. வழிபடுதல்- சிவ பூசை செய்தல். கல்லா மந்தியும் வழிபடுவன எனத் தலமேன்மை கூறினார். கல்லாமை, இயற்கை; ஐங்குறுநூற்றின் குரக்குப் பத்தில், கல்லாக் கடுவன், கல்லாமந்தி, கல்லா வன்பார்ப்பு’ என வருதல் காண்க. யாளி -சிங்கம் போல்வதும், யானை போற் கையுடையது மாகிய ஒரு விலங்கு. அடுக்குத் தொழிற் பயில்வு குறித்தது. (72) நெளியராக் குருளைவெயில் வெள்ளிடையிற் கிடந்துயங்கி நெளியப் புள்ளே றொளியறாச் சிறைவிரித்து நிழல்பரப்பப் பறவைநோ யுற்ற தேகொல் அளியவா யச்சோ3வென் றோதியயன் மடமந்தி யருவி யூற்றுந் துளியநீர் வளைத்தசும்பின் முகந்தெடுத்துக் கருங்கையினாற் சொரிவ மாதோ. (இ-ள்.) நெளி அராக் குருளை - நெளிகின்ற பாம்பின் குட்டிகள், வெயில் வெள்ளிடையில் கிடந்து - வெயில் மிக்க வெளியிடங்களிற் கிடந்து, உயங்கி நெளிய - வருந்திநெளிய, புள் ஏறு - பறவை யேறாகிய கருடன், ஒளி அறாச் சிறை விரித்து நிழல் பரப்ப - ஒளி நீங்காத சிதைகளை விரித்து நிழலைப் பரப்ப, அயல் மடமந்தி - பக்கத்திலுள்ள அறியாமையையுடைய குரங்குகள், அளியவாய் - கருணை யுடையனவாய், அச்சோ - ஐயோ, பறவை நோய் உற்றதே கொல் என்று ஓதி - இந்தக்கருடன் வெயிலால் துன்பமடைந்ததோ என்று கூறி, அருவி ஊற்றும் துளிய நீர் - அருவிகள் சொரிகின்ற துளிகளையுடைய நீரை, வளை தசும் பின் - சங்காகிய குடத்தில், கருங்கையினால் முகந்து எடுத்துச் சொரிவ கரிய கையினால் மொண்டு எடுத்துச் சொரியா நிற்பன எ-று. புள் ஏறு - பறவைகளுக் கிறையாய கலுழன், கொல்: ஐயப் பொருட்டு. உற்றதே கொல் என்று கருதி, அச்சோவென் றோதி என்னலுமாம். அச்சோ; இரக்கக் குறிப்பையுணர்த்தும் இடைச் சொல். ‘அளியவா வச்சோ’ என்னும் பாடத்திற்கு அளிய ஆ அச்சோ என்று ஓதி எனப் பிரித்துப் பொருள் கொள்க. இதில் அளியது என்னும் துவ்வீறு குறைந்ததெனல் வேண்டும். மாது, ஓ;அசை. (73) படவரவ மணியீன்று நொச்சிப்பா சிலையன்ன பைந்தாண் மஞ்ஞை பெடைதழுவி மணஞ்செய்ய மணவறையில் விளக்கிடுவ பெருந்தண் கானத் தடர்சிறைமென் குயிலோமென் றார்ப்பமடக் சிள்ளையெழுத் தைந்து மோசைத் தொடர்புபெற வுச்சரிப்பக் குருமொழிகேட் டாங்குவப்ப தொடிக்கட் பூவை. (இ-ள்.) நொச்சி பசு இலை அன்ன - நொச்சியின் பசிய (பிளந்த) இலையை ஒத்த, பைந்தாள் மஞ்ஞை - பசிய (பிளந்த) கால்களையுடைய மயில்கள், பெடை தழுவி மணம் செய்ய - பெண்மயில்களைக் கூடி மணஞ் செய்யா நிற்க, மணஅறையில் - மணஞ்செய்யும் அவ் விடத்தில், பட அரசம் - படத்தினையுடைய பாம்புகள், மணி ஈன்றுவிளக்கு இடுவ - மணிகளை உமிழ்ந்து விளக்கிடுவன; அடர்சிறைமென் குயில் - அடர்ந்த சிறகினை யுடைய மெல்லிய குயில்கள், பெருந்தண் கானத்து - பெரிய குளிர்ந்த காட்டின்கண், ஓம் என்று ஆர்ப்ப - ஒ மென்று ஒலிக்கா நிற்கவும், மடக்கிள்ளை - இளமையுடைகிளிகள், எழுத்து ஐந்தும் - திருவைந் தெழுத்தினையும், ஓசைத் தொடர்பு பெற - ஓசையின் தொடர்ச்சிபெற, உச்சரிப்ப - உச்சரிக்கவும், தொடி கண் பூவை - வளைபோன் வட்டமாகிய கண்களையுடைய நாகணவாய்ப் பறவைகள், குருமொழிகேட்டாங்கு உவப்ப - குரு மொழியைக் கேட்டு மகிழ்வது போல் (அவற்றைக் கேட்டு) மகிழ்வன எ-று. அடர் - தகடுமாம். ஓமென்றார்த்தல் - பிரணவ வொலி செய்தல். திருவைந் தெழுத்தை விதிப்படி உச்சரிக்க என்றவாறு. அவற்றைக் குருவின் உபதேசமாகக் கேட்டு என விரித்து, ஆங்கு என்பதற்கு அவ்விடத்தில் எனப் பொருள் கூறலுமாம். இடுவ, உவப்ப என்பன அன்பெறாத பலவின்பால் முற்றுக்கள். (74) இன்னவிலங் கொடுபுள்ளின் செயற்கரிய செயனோக்கி யிறும்பூ தெய்திப் பொன்னகரான் புளகமுடல் புதைப்பநிறை மகிழ்ச்சியுளம் புதைப்பப் போவான் அன்னபொழு தொற்றுவர்மீண் டடிவணங்கி யின்சுவைப்பா லருந்து வான்முன் பின்னரிய1 தேன்சொரிந்தாங் குவகைமேற் பேருவகை பெருகச் சொல்வார். (இ-ள்.) விலங்கொடு புள்ளின் - மிருகங்களோடு பறவைகளின், இன்ன செயற்கு அரிய செயல் நோக்கி - இத்தன்மையவான செயற்கருஞ் செயல்களைக் கண்டு, இறும்பூது எய்தி - வியப்புற்று, புளகம் உடல் புதைப்ப - புளகமானது உடல் முழுதையும் போர்க்கவும், நிறை மகிழ்ச்சி உளம்புதைப்ப - நிறைந்த களிப்பானது உள்ளத்தை மூடவும், போவான் பொன் நகரான் - செல்கின்ற வனாகிய பொன் நகரத்தையுடைய இந்திரனுக்கு, அன்ன பொழுது- அப்பொழுது -அப்பொழுது, இன் சுவைப்பால் அருந்துவான் முன்- இனிய சுவையையுடைய பாலைப் பருகுகின்றவன் முன்னர், பின் அரிய தேன் சொரிந்தாங்கு - பின்பு கிடைத்தற்கரியதேனைப் பொழிந்ததுபோல, உவகைமேல் பேருவகை பெருக மகிழ்ச்சிமேல் பெரு மகிழ்ச்சி மிக, ஒற்றுவர் மீண்டு அடிவணங்கிச் சொல்வார் - தூதுவர் திரும்பி வந்து அடியில் வணங்கிக் கூறுவாராயினர் எ-று. ஒடு;எண்ணொடு. புளகம் - மயிர் முகிழ்ப்பு. அன்ன பொழுது - அப்பொழுது; சுட்டு. நறிய என்னும் பாடத்திற்கு நன் மணமுள்ள என்று பொருள் கூறிக்கொள்க. (75) எப்புவனத் திலுமென்றுங் கண்டறியா வதிசயமு மெண்ணுக் கெய்தாத் திப்பியமு மிக்கடம்ப வனத்தின்று கண்டுவகை திளைத்தே மங்கண் வைப்பனைய வொருபுனித வாவிமருங் கொருகடம்ப வனத்தி னீழல் ஒப்பிலொளி யாய்முளைத்த சிவலிங்க மொன்றுளதென் றுரைப்பக் கேட்டான். (இ-ள்.) எப்புவனத்திலும் என்றும் கண்டு அறியா அதிசயமும் எந்த உலகத்திலும் எக்காலத்திலும் கண்டறியாத வியப்பும், எண்ணுக்கு எய்தாத் திப்பியமும் - அளவைக்கு எட்டாத சிறப்பும், இக்கடம்ப வனத்து - இக்கடம்ப வனத்தின்கண், இன்று கண்டு உவகை திளைத்தேம் - இன்று பார்த்து மகிழ்ச்சியில் மூழ்கினோம்; (என்னவெனில்), அங்கண் - அவ்விடத்து, வைப்பு அனைய - சேம நிதிபோன்ற, ஒரு புனித வாவி மருங்கு - ஒரு தூய தீர்த்தக் கரையின் பக்கத்தில், ஒரு கடம்ப வனத்தின் நீழல் - ஒரு கடம்ப மரத்தின் நீழலில், ஒப்பு இல்ஒளியாய் முளைத்த - ஒப்பற்ற ஒளிப் பிழம்பாய்த் தோன்றிப், சிவலிங்கம் ஒன்று உளது என்று - சிவலிங்கம் ஒன்று இருக்கிறதென்று, உரைப்பக் கேட்டான் - சொல்லக் கேட்டான் எ-று. எண்ணுக்கு - கருதலுக்கு என்றுமாம். ஒரு கடம்ப வனம் - ஒரு கடம்பமரம்; மரம் என்று பாடமிருத்தல் சிறப்பு. ஒற்றுவர் உரைப்ப இந்திரன் கேட்டானென்க. (76) செவித்தொளையி லமுதொழுக்கு முழையரொடும் வழிக்கொண்டு சென்னி மேற்கை குவித்துளமெய் மொழிகரணங் குணமூன்று மொன்றித்தன் கொடிய பாவம்1 அவித்துளயர் வொழிக்கமுளைத் தருள்குறிமே லன்பீர்ப்ப வடைவான் கானங் கவித்துளபூந் தடம்படிந்து கடம்பவனத் துழைநுழைந்தான் கவலை தீர்வான் (இ-ள்.) செவித் தொளையில் அமுது ஒழுக்கும் உழையரொடும் - (இங்ஙனம்) செவித்தொளையின்கண் அமுதத்தைப் பொழிகின்ற ஒற்றரோடும், வழிக்கொண்டு - சென்று, சென்னிமேல் கைகுவித்து- முடியின்மீது கைகூப்பி, உளம் மெய் மொழி - உளம் உடல் உரை களும், கரணம் - அந்தக் கரணமும், குணம் மூன்றும் - முக்குணங் களும், ஒன்றி - ஒரு வழிப்பட்டு, தன் கொடிய பாவம் அவித்து - தனது கொடிய கொலைப் பாவமாகிய தீயைத் தணித்து, உள் அயர்வு - தனது கொடிய கொலைப் பாவமாகிய தீயைத் தணித்து, உள் அயர்வு ஒழிக்க - மனத்துயரத்தைக் கெடுக்க, முளைத்தருள் குறிமேல் - தோன்றி யருளிய அருட் குறியாகிய சிவலிங்கத்தின் மீது, அன்பு ஈர்ப்ப-அன்பானது இழுக்க, அடைவான் - செல்லும் இந்திரன், கானம் கவித்துள - காட்டினாற் கவியப்பட்டுள்ள, பூந்தடம் படிந்து- பொற்றாமரைத் தீர்த்தத்தில் நீராடி, கடம்பவனத்து உழை நுழைந்தான் - கடம்பவனத்துட் புகுந்து, கவலை தீர்வான் - துன்பம் நீங்குவானாயினன் எ-று. அமுதுபோல் இன்பஞ் செய்யும் மொழிகளை அமுதென்றார். மொழிக்கரணம் என்றிருப்பின் மூன்று என்பதனை அதனொடுங் கூட்டி, உளம் உடல் உரையென்னும் கரண மூன்றும் எனப்பொருள் கொள்ளல் சாலும். அந்தக் கரணம் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பன. முக்குணம் - சாத்துவிகம், இராசதம், தாமதம் என்பன. ஒன்றி - ஒன்ற என்பதன் றிரிபுமாம். அடைவான்; பெயர் கவித்து, கவிந்து என்பது வலித்த தென்னலுமாம். நுழைந்தான்; முற்றெச்சம். (77) அருவாகி யுருவாகி யருவுவருவங் கடந்துண்மை யறிவா னந்த உருவாகி யளவிறந்த வுயிராகி யவ்வுயிர்க்கோ ருணர்வாய்ப் பூவின் மருவாகிச் சராசரங்க ளகிலமுந்தன் னிடையுதித்து மடங்க நின்ற கருவாகி முளைத்தசிவக் கொழுந்தையர் யிரங்கண்ணுங் களிப்பக் கண்டான். (இ-ள்.) அருவு ஆகி - அருவமாகியும், உருவு ஆகி - உருவ மாகியும், அருவுரும் (ஆகி) - அருவுருமாகியும், கடந்து - இவற்றைக் கடந்து, உண்மை அறிவு ஆனந்த உருஆகி - சச்சிதானந்த வடிவாகியும், அளவு இறந்த உயிர் ஆகி - எண்ணிறந்த உயிர்களாகியும், அவ்உயிர்க்கு ஓர் உணர்வு ஆய் - அவ்வுயிர்களின் அறிவுக்கோர் அறிவாகியும் (நிற்றலின்). பூவின் மரு ஆகி - மலரின் மணம்போலாகியும், சராசரங்கள் அகிலமும் - சரமும் அசரமுமாகிய அனைத்தும், தன் இடை உதித்து மடங்க நின்ற கரு ஆகி - தன்னிடத்துத் தோன்றி அடங்க நின்ற மூலகாரணமாகியும், முளைத்த சிவக்கொழுந்தை - தோன்றியருளிய சிவக்கொழுந்தினை, ஆயிரம் கண்ணும் களிப்பக் கண்டான் - ஆயிரங்கண்களும் களிக்கும்படி பார்த்தான் எ-று. அரு, உரு எனப் பிரித்தலுமாம். அருவம் - சிவம், சத்தி, நாதம், விந்து என்பன. உருவம் - மகேசுரன், உருத்திரன், மால், அயன் என்பன. அருவுருவம் - சதாசிவம். ஆகி என்பதனை அருவுருவம் என்பதைனோடும் கூட்டுக. இம் மூன்றும் இறைவற்குத் தடத்த விலக்கணம், இவற்றைக் கடந்து நின்றது சொரூப விலக்கணம்; இவ்வியல்பினை, “ உருமேனி தரித்துக் கொண்ட தென்றலு முருவி றந்த அருமேனி யதுவுங் கண்டோ மருவுரு வான போது திருமேனி யுபயம் பெற்றோஞ் செப்பிய மூன்று நந்நம் கருமேனி கழிக்க வந்த கருணையின் விளைவு காணே”” என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தத்தாலறிக. அளவிறந்த வுயிராகி அவ்வுயிர்க்கோ ருணர்வாய்ப் பூவின் மருவாகி என்றது இறைவன் உயிர்களிடத்து உடலுயிர் கண்ணருக்கன் அறிவொளி போல் நிற்கு முறைமை கூறியவாறு. கரு - காரணம். (78) கண்டுவிழுந் தெழுந்துவிழி துளிப்பவெழு களிப்பென்னுங் கடலி1 லாழ்ந்து விண்டுமொழி தழுதழுப்ப வுடல்பனிப்ப வன்புருவாய் விண்ணோர் வேந்தன் அண்டர்பிரா னருச்சனைக்கு வேண்டுமுப கரணமெலா மகல்வா னெய்திக் கொண்டுவரச் சிலரைவிடுத் தவரேகப் பின்னுமொரு குறைவு தீர்ப்பான். (இ-ள்.) கண்டு விழுந்து எழுந்து - பார்த்துக் கீழே விழுந்து வணங்கி எழுந்து, விழி துளிப்ப - கண்கள் அன்பு நீர் துளிக்க, எழுகளிப்பு என்னும் கடலில் ஆழ்ந்து - (கரையின்றி) எழுகின்ற மகிழ்ச்சியென்னும் கடலில் மூழ்கி, தழு தழுப்ப மொழி விண்டு - நாத் தழு தழுக்கத் துதிகள் கூறி, உடல் பனிப்ப அன்பு உருவாய் - உடல் நடுங்க அன்பு வடிவாகி, விண்ணோர் வேந்தன் - தேவேந்திரன், அண்டர் பிரான் அருச்சனைக்கு, வேண்டும் உபகரணம் எலாம் - வேண்டிய பொருள்களனைத்தும், அகல்வான் எய்திக்கொண்டு வர- அகன்ற விண்ணுலகிற் சென்று கொண்டு வருமாறு, சிலரை விடுத்து - சிலதேவர்களை ஏவி, அவர் ஏக - அவர் செல்ல, பின்னும் ஒரு குறைவு தீர்ப்பான் - பின்பும் ஒரு குறையினை நீக்குவானாய் எ-று. எழு என்பதனை இரட்டுற மொழிதலாக்கி எழுகடல் என இயைத்தலுமாம். விண்டு - கூறி. நாவென்பது வருவிக்க. குறைவு தீர்த்தல் - விமானம் அமைத்தல். (79) தங்குடிமைத் தச்சனையோர் விமானமமைத் திடவிடுத்தத் தடத்தின் பாற்போய் அங்கணனைக் கடிதருச்சித் திடநறிய மலர்கிடையா தயர்வானந்தச் சங்கெறிதண் டிரைத்தடத்தி லரனருளாற் பலபரிதி சலதி யொன்றிற் பொங்குகதிர் பரப்பிமுளைத் தாலென்னப் பொற்கமலம் பூப்பக் கண்டான். (இ-ள்.) தம் குடிமைத் தச்சனை - தமது குடிக்குரிய தேவதச் சனை, ஓர்விமானம் அமைத்திட விடுத்து - ஓர் விமானம் படைக்கு மாறு ஏவி, அ தடத்தின்பால் போய் - அந்தத் தீர்த்தத்தின் பக்கத்திற் சென்று, அங்கணனை - அழகிய அருட்பார்வையுடைய இறைவனை, கடிது அருச்சித்திட-விரைந்து அருச்சிப்பதற்கு, நறிய மலர் கிடையாது அயர்வான் - நல்ல மலர்கள் கிடைக்கப் பெறாமல் வருந்துகின்றவன், சங்கு எறி - சங்குகளை வீசுகின்ற, தண் திரை - குளிர்ந்த அலைகளை யுடைய, அந்தத் தடத்தில் - அந்தத் தீர்த்தத்தில், அரன் அருளால் - சிவபெருமான் திருவருளால், பல பரிதி - பலசூரியர்கள், சலதி ஒன்றில் - ஒரு கடலில், பொங்கு கதிர் பரப்பி முளைத்தால் என்ன - நிறைந்த ஒளியை வீசிக்கொண்டு தோன்றினாற்போல, பொன் கமலம் பூப்பக் கண்டான் - பொற்றாமரைகள் மலரப் பார்த்தான் எ-று. குடிமை, மை; பகுதிப் பொருள் விகுதி; குடியாந் தன்மையை யுடைய தச்சன் எனலுமாம். கிடையாது - கைவரப் பெறாது. அயர்வான்; பெயர். அயர்வான் கண்டான் என முடிக்க. (80) அன்புதலை சிறப்பமகிழ்ந்த தாடினான் காரணத்தா லதற்கு நாமம்1 என்பதுபொற் றாமரையென் றேழுலகும் பொலிகவென விசைத்துப் பின்னும் மின்பதுமத் தடங்குடைந்து பொற்கமலங் கொய்கெடுத்து மீண்டு நீங்காத் தன்பிணிநோய் தணியமுளைத் தெழுந்தமுழு முதன்மருந்தின் றன்பால் வந்து. (இ-ள்.) அன்புதலை சிறப்ப மகிழ்ந்து - அன்பானது ஓங்கக் களித்து, ஆடினான் - நீராடினான்;காரணத்தால் - (பொற்றாமரை மலர்ந்த) ஏதுவினால், அதற்கு நாமம் - அந்தத் தீர்த்தத்திற்குப் பெயர், பொற்றாமரை என்று ஏழ் உலகும் பொலிக என இசைத்து - பொற்றாமரை யென்று ஏழுலகங்களிலும் விளங்குக என்று கூறி, பின்னும் - மீளவும், மின்பதுமத்தடம் குடைந்து - விளங்குகின்ற பொற்றாமரைத் தடத்தில் நீராடி பொன் கமலம் கொய்து எடுத்து - பொற்றாமரை மலர்களைப் பறித்தெடுத்து, மீண்டு - திரும்பி நீங்காத்தன் பிணி நோய் தணிய - நீங்காத தன் பழியாகிய நோய் கெடுமாறு, முளைத்து எழுந்த தோன்றியருளிய, முழுமுதல் மருந்தின் தன் பால் வந்து - முழுமுதலாகிய மருந்திடம் வந்து எ-று. தலை சிறத்தல் - மிகுதல்; ஒரு சொல். ஆடினான் என்பதற்குக் கூத்தாடினான் என்றுரைப்பாருமுளர்; மேல், பின்னுங் குடைந்து எனவருதலின் அது பொருளன்றென்க என்பது இடைச்சொல். மீண்டு நீங்காத என்னலுமாம். பிணி நோய் - ஒருபொரு ளிருசொல். முழுமுதல் - எல்லா முதன்மையுமுடைய முதற் பொருள்; மருந்துச் செடியின் முதலெனவும் பொருள் தோன்றுதல் காண்க. தன்; அசை. (81) மொய்த்தபுனக் காடெறிந்து நிலந்திருத்தி வருமளவின் முளைத்த ஞான வித்தனைய சிவக்கொழுந்தின் றிருமுடியிற் பரிதிகர மெல்லத் தீண்டச் சித்தநெகிழ்ந் திந்திரன்றன் வெண்கவிகைத் திங்கணிழல் செய்வா னுள்ளம் வைத்தனனப் போதிரவி மண்டலம்போ லிழிந்ததொரு மணிவி மானம். (இ-ள்.) மொய்த்த புனக்காடு எறிந்து - நெருங்கிய காடுகளை வெட்டி, நிலம் திருத்தி வரும் அளவில் -நிலத்தைத் திருத்தி வரும் பொழுதில், முளைத்த ஞானவித்து அனைய - தோன்றிய ஞானவித்தை ஒத்த, சிவக்கொழுந்தின் திருமுடிமேல் - சிவக்கொழுந்தினது திருமுடியின்கண், பரிதிகரம் மெல்ல தீண்ட - சூரியனது ஒளி மெல்லப்படுதலால், இந்திரன் சித்தம் நெகிழ்ந்து - இந்திரனானவன் தனது மனம் வருந்தி, தன் திங்கள் வெண்கவிகை நிழல் செய்வான் - தனது சந்திரனை யொத்த வெண் குடையினால் நிழலைச் செய்ய, உள்ளம் வைத்தனன் - கருதினான்; அப்போது இரவி மண்டலம்போல் - அது காலை சூரிய மண்டலம் போல், ஒரு மணி விமானம் இழிந்தது - ஒரு மாணிக்க விமானம் இறங்கியது எ-று. மரங்கள் மொய்த்த வென்க. புனக்காடு - ஒருபொருளிருசொல். புனமென்பதைக் கொல்லையாக்கிப் புனத்தினையுடைய காடென்னலுமாம். வித்தனைய கொழுந்தென்றது பொருள் முரண். கொழுந்தாகலின் தீண்டியதற் காற்றாது சித்தநெகிழ்ந்தான் என்னும் நயந்தோன்றுதல் காண்க. கரம் - கிரணம், கை. கவிகையாகிய திங்களென்னலுமாம். உள்ளம் வைத்தல் - சிந்தித்தல்; ஒரு சொல். திங்கள் இரவி என்னும் முரணுங் காண்க. (82) கிரியெட்டு மெனமழையைக் கிழித்தெட்டும் புழைக்கைமதிக் கீற்றுக் கோட்டுக் கரியெட்டுஞ் சினமடங்க னாலெட்டு மெட்டெட்டுக் கணமுந் தாங்க விரியெட்டுத் திரைபரப்ப மயனிருமித் துதவியவவ் விமானஞ் சாத்தி அரியெட்டுத் திருவுருவப் பரஞ்சுடரை யருச்சிப்பா னாயி னானே.1 (இ-ள்.) எட்டுக் கிரியும் என -எட்டு மலைகளும் என்னும் படி, மழையை கிழித்து எட்டும் - முகிலைக் கிழித்து மேலோங்கும், புழைகை - தொளையினையுடைய துதிக்கையினையும், மதிக்கீற்றுக் க'bcVட்டு - சந்திரனது பிளவுபோன்ற கொம்பினையு முடைய, கரி எட்டும் - எட்டுயானைகளும், நால்எட்டுச் சினம் மடங்கலும் - முப்பத்திரண்டு கோபத்தினையுடைய சிங்கங்களும், எட்டெட்டுக் கணமும் தாங்க - அறுபத்து நான்கு சிவகணங்களும் தாங்க, விரி எட்டுத் திசை பரப்ப - விரிந்த எட்டுத் திக்குகளிலும் பரவி நிற்க, மயன்நிருமித்து உதவிய - தேவதச்சனால் ஆக்கிக் கொடுக்கப்பட்ட, அவ்விமானம் அரி சாத்தி - அந்த விமானத்தை இந்திரனானவன் சாத்தி, எட்டுத் திரு உருவப் பரஞ்சுடரை - எட்டுத் திருவுருவங் களையுடைய பரஞ்சோதியை, அருச்சிப்பான் ஆயினான் - அருச்சனை செய்வானாயினன் எ-று. கிரி எட்டு - குலமலை யெட்டு; அவை முற் கூறப்பட்டன. எட்டுத் திசையும் என்னும் உம்மை தொக்கது. நிருமித்தல் - மனத்தால் நினைந்து செய்தல். சாத்துதல் - இறைவற்கு இருக்கையாக வமைத்தல் அரி - இந்திரன். எட்டுத் திருவுருவம் - அட்ட மூர்த்தம்; ஐம்பூதம் - ஞாயிறு, திங்கள், ஆன்மா என்பன. ஏ;அசை; சொற்பின் வருநிலை. முந்தவம ருலகடைந்து பூசனைக்கு வேண்டுவன முழுதுந் தேர்வார் வந்துதரு வைந்தீன்ற பொன்னாடை மின்னுமிழு மணிப்பூண் வாசச் சந்தனமந் தாகினிமஞ் சனந்தூபந்1 திருப்பள்ளித் தாமந் தீபம் அந்தமிலா னைந்துநறுங் கனிதீந்தேன் றிருவமுத மனைத்துந் தந்தார். (இ-ள்.) முந்த அமர் உலகு அடைந்து - முதலில் தேவருலகிற் சென்று, பூசனைக்கு வேண்டுவன முழுதும் - பூசைக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தும், தேர்வார் - தேடலுற்றவர்கள், வந்து - மீண்டுவந்து, ஐந்து தரு ஈன்ற பொன் ஆடை - ஐந்தருக்களும் கொடுத்த பொன்னாடையும், மின் உமிழும் மணிப்பூண் - ஒளியை வீசும் மணியாலாகிய அணிகலன்களும், வாசச் சந்தனம் - மணம் பொருந்திய சாந்தமும், மந்தாகினி மஞ்சனம் - கங்கை நீராகிய திருமஞ்சனமும், தூபம் - நறும்புகையும், திருப்பள்ளித் தாமம் - திருப்பள்ளித் தாமமும், தீபம் - திருவிளக்கும், அந்தம் இல் ஆன் ஐந்து - அழிவில்லாத பஞ்சகவ்வியமும், நறுகனி - இனிய பழங் களும், தீந்தேன் - மதுரமாகிய தேனும், திருவமுதன் அனைத்தும் தந்தார் - திருவமுதும் ஆகிய இவை அனைத்தையும் கொடுத்தார்கள் எ-று. அமரருலகு என்பது அமருலகு என விகாரமாயிற்று. தருவைந்தும் என்னும் உம்மை தொக்கது. மந்தாகினி - ஆகாய கங்கை. திருப்பள்ளித்தாமம் - மலர் மாலை. (84) தெய்வத்தா மரைமுளைத்த தடம்படிந்து பவந்தொலைக்குந் திருநீ றாடிச் சைவத்தாழ் வடந்தாங்கி யன்புருவா யருளுருவந் தானாய்த் தோன்றும் பைவைத்தா டரவார்த்த பசுபதியை யவனுரைத்த பனுவ லாற்றின் மெய்வைத்தா தரம்பெருக வருச்சனைசெய் தானந்த வெள்ளத் தாழ்ந்தான். (இ-ள்.) தெய்வத் தாமரை முளைத்த தடம் படிந்து - தெய்வத் தன்மை பொருந்திய பொற்றாமரை முளைத்த தடாகத்தில் நீராடி, பவம் தொலைக்கும் திருநீறு ஆடி - பிறவியைப் போக்கும் திருநீறு தரித்து, சைவத் தாழ்வடம் தாங்கி - சைவ வேடத்திற்குரிய உருத்திராக்க மாலையை அணிந்து, அன்பு உருவாய் - அன்பே வடிவாய், அருள் உருவம் தானாய்த் தோன்றும் - அருள்வடிவமாகத் தோன்றுகின்ற, பைவைத்து ஆடு அரவு ஆர்த்த - படமெடுத்து ஆடுகின்ற பாம்பினைக் கட்டிய, பசு பதியை - பசுக்களுக்கெல்லாம் பதியாகிய இறைவனை, அவன் உரைத்த பனுவல் ஆற்றின் - அவன் திருவாய் மலர்ந்தருளிய ஆகம வழியால், மெய் வைத்த ஆதரம் பெருக - உண்மையான அன்பானது பெருக, அருச்சனை செய்து ஆனந்த வெள்ளத்து ஆழ்ந்தான் அருச்சனை புரிந்து இன்ப வெள்ளதில் மூழ்கினான் எ-று. அன்புருவாய் அருச்சனைசெய்து ஆழ்ந்தான் என முடிக்க; அன்புருவாய் என்பதனை இறைவனுக்கேற்றித் தோன்றும் என்பத னோடு முடித்தலுமாம். பனுவல் - ஆகமம். மெய்வைத்த என்பதில் அகரந்தொக்கது. (85) பாரார வட்டாங்க பஞ்சாங்க விதிமுறையாற் பணிந்துள் வாய்மெய் நேரகாச் சூழ்ந்துடலங் கம்பித்துக் கும்பிட்டு நிருத்தஞ் செய்து தாராருந் தொடைமிதப்ப வானந்தக் கண்ணருவி ததும்ப நின்றன் பாராமை மீக்கொள்ள வஞ்சலித்துத் துதிக்கின்றா னமரர் கோமான். (இ-ள்.) அமரர் கோமான் - தேவர்க் கரசனானவன், பார் ஆர நிலந்தோய, அட்டாங்கபஞ்சாங்கவிதிமுறையால் பணிந்து - அட்டாங்க பஞ்சாங்க விதிப்படி வணங்கி, உள் வாய் மெய் - மனம் மொழி மெய் என்னு மூன்றும், நேராக - ஒன்று பட, சூழ்ந்து - வலம் வந்து, உடலம் கம்பித்து - உடல் நடுங்கி, கும்பிட்டு - தொழுது, நிருத்தம் செய்து - கூத்தாடி, தார் ஆரும் தொடை மிதப்ப - மலர் களால் நிறைந்த (மார்பின் மாலையானது மிதக்கும்படி, ஆனந்தக் கண் அருவி ததும்ப - கண்களினின்றும் இன்ப அருவியானது பெருக, நின்று - உருகி நின்று, ஆராமை அன்பு மீக்கொள் - (சிவானந்தம்) தெவிட்டாமையால் அன்பு மேன்மேல் மிக, அஞ்சலித்துத் துதிக் கின்றான் - கைகூப்பித் துதிப்பானாயினான் எ-று. அட்டாங்கம் - எட்டுறுப்பு; பஞ்சாங்கம் - ஐந்துறுப்பு; அவை முற்கூறப்பட்டன. தார் என்பது ஈண்டு மலரைக் குறிக்கின்றது. அன்பும் ஆராமையும் என்னலுமாம். (86) (மேற்படி வேறு) அங்கணா போற்றி வாய்மை யாரணா போற்றி நாக கங்கணா போற்றி மூல காரணா போற்றி நெற்றிச் செங்கணா போற்றி யாதி சிவபரஞ் சுடரே போற்றி எங்கணா யகனே போற்றி யீறிலா முதலே போற்றி. (இ-ள்.) அங்கணா போற்றி - அழகிய கண்களையுடையவனே வணக்கம்; வாய்மை ஆரணா போற்றி - உண்மையாகிய மறைகளை அருளியவனே வணக்கம்; நாககங்கணாபோற்றி - அரவ கங்கண முடையவனே வணக்கம்; நெற்றிச் செங்கணாபோற்றி - நெற்றியில் சிவந்த கண்ணையுடையவனே வணக்கம்; ஆதி சிவ பரஞ்சுடரே போற்றி - (எல்லாவற்றுக்கும்) முதலாயுள்ள சிவமாகிய பரஞ் சோதியே வணக்கம்; எங்கள் நாயகனே போற்றி - எங்கள் தலைவனே வணக்கம்; ஈறு இலா முதலே போற்றி - முடிவு இல்லாத முதற்பொருளே வணக்கம் எ-று. கண்ணுக்கு அழகாவது அருளுடைத்தாதல். போற்றி; வணக்கம் எனப் பொருள்படும் தொழிற் பெயர்; காக்க என்னும் பொருட்டாய வியங்கோளுமாம். காரண மெல்லாவற்றுக்கும் மூலமாகிய காரணமானவன். (87) யாவையும் படைப்பாய் போற்றி யாவையுந் துடைப்பாய் போற்றி யாவையு மானாய் போற்றி யாவையு மல்லாய் போற்றி யாவையு மறிந்தாய் போற்றி யாவையு மறந்தாய் போற்றி யாவையும் புணர்ந்தாய் போற்றி யாவையும் பிரிந்தாய் போற்றி. (இ-ள்.) யாவையும் படைப்பாய் போற்றி - அனைத்தையும் ஆக்குபவனே வணக்கம்; யாவையும் துடைப்பாய் போற்றி - அவையனைத்தையும் அழிப்பவனே வணக்கம்; யாவையும் ஆனாய் போற்றி - எல்லாமுமானவனே வணக்கம்; யாவையும் அல்லாய் போற்றி - அவை முற்றும் அல்லாதவனே வணக்கம்; யாவையும் அறிந்தாய் போற்றி - எல்லாவற்றையும் உணர்ந்தவனே வணக்கம்; யாவையும் மறந்தாய் போற்றி - அவை முற்றவும் அறியதவனே வணக்கம்; யாவையும் புணர்ந்தாய் போற்றி - எல்லாவற்றுள்ளும் கலந்தவனே வணக்கம்; யாவையும் பிரிந்தாய் போற்றி - அவற்றுள் ஒன்றிலும் கலவாதவனே வணக்கம் எ-று. இறைவன் எல்லாமாய் அல்லதுமாய் இருக்குந்தன்மை முற்கூறப்பட்டது; ஆண்டுக் காண்க. (88) இடருறப் பிணித்த விந்தப் பழியினின் றென்னை யீர்த்துன் அடியிணைக் கன்ப னாக்கு மருட்கடல் போற்றி சேற்கண் மடவரல் மணாள போற்றி கடம்பமா வனத்தாய் போற்றி சுடர்விடு விமான மேய சுந்தர விடங்க போற்றி. (இ-ள்.) இடர் உறப்பிணித்த - துன்பத்தை யடையுமாறுபற்றிய, இந்தப் பழியில் நின்று - இந்தக் கொலைப் பாவத்தினின்றும்; என்னை ஈர்த்து - அடியேனை விடுவித்து, உன் அடி இணைக்கு அன்பன் ஆக்கும் - உன் இரண்டு திருவடிகளுக்கும் அன்பனாகச் செய்த, அருள் கடல் போற்றி - கருணைக்கடலே வணக்கம்; சேல் கண் மடவரல் மணாள போற்றி - மீன்போன்ற கண்களையுடைய அங்கயற்கணம்மையின் நாயகனே வணக்கம்; கடம்ப மா வனத்தாய் போற்றி - பெரிய கடம்பவனத்தினையுடையவனே வணக்கம்; சுடர்விடு விமானம் மேய - ஒளி வீசும் விமானத்திற் பொருந்திய, சுந்தர விடங்கபோற்றி - சுந்தர விடங்கனே வணக்கம் எ-று. உற - மிக வென்றுமாம். ஈர்த்து - இழுத்து; ஈர்த்தென்னையாட் கொண்ட என்பது திருவாசகம். மேய - மேவிய என்பதன் விகாரம். விடங்கன் - அழகன்; முன்னர்க் கூறினமை காண்க. சுந்தரனாகிய விடங்கனென்க. (89) பூசையும் பூசைக் கேற்ற பொருள்களும் பூசை செய்யும் நேசனும் பூசை கொண்டு நியதியிற் பேறு1 நல்கும் ஈசனு மாகிப் பூசை யான்செய்தே னெனுமென் போத வாசனை யதுவு மான மறைமுத லடிகள் போற்றி. (இ-ள்.) பூசையும் - பூசனையும், பூசைக்கு ஏற்ற பொருள்களும்- பூசைக்குத் தகுதியான, உபகாரணங்களும், பூசைசெய்யும் நேசனும்- பூசை செய்கின்ற அன்பனும், பூசைகொண்டு - பூசையை ஏற்றுக் கொண்டு, நியதியில் பேறு நல்கும் ஈசனுமாகி - முறைப்படி பயனை அருளுகின்ற இறைவனுமாய், பூசை யான் செய்தேன் எனும் - பூசையான் செய்தேனென்கின்ற, என் போத வாசனை அதுவும் ஆன- என்னுடைய தற்போத வாசனையுமான, மறை முதல் அடிகள் போற்றி - வேதமுதலாகிய இறைவ வணக்கம் எ-று. ‘செய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும்’ இறைவனென்றார்; அவன் ஆன்மாவோடு ஒற்றித்து நின்று செய் வித்துச் செய்தலால்; சிவஞான போதத்தின் பதினொன்றாஞ் சூத்திரக் கருத்து நோக்கியது இது; ‘அவன் அந்நியமின்றிச் செய்பவர் செய்திப்பயன் விளைத்து நிற்றலான்’ என்னும் வார்த்திகமும் காண்க. “ அறிவானுந் தானே யறிவிப்பான் றானே அறிவா யறிகின்றான் றானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பா ராகாசம் அப்பொருளுந் தானே யவன்”” என்னுங் காரைக்காலம்மையார் திருவாக்கும் இக்கருத்தே யுடையது. பூசனை புரிவார் எல்லாவற்றையும் இறைவன்பால் ஒப்புவித்தல் வேண்டுமென்பதும் இதனாற் பெறப்படும். (90) என்னநின் றேத்தி னானை யின்னகை சிறிது தோன்ற முன்னவ னடியா ரெண்ண முடிப்பவ னருட்க ணோக்கால் உன்னது வேட்கை யாதிங் குரையென விரையத் தாழ்ந்து சென்னிமேற் செங்கை கூப்பித் தேவர்கோ னிதனை வேண்டும். (இ-ள்.) என்ன நின்று ஏத்தினானை - என்று சொல்லி நின்று துதித் தவனை நோக்கி, முன்னவன் - யாவருக்கும் முதல்வனும், அடியார் எண்ணம் முடிப்பவன் - அடியார்கள் எண்ணியதை எண்ணிய வண்ணம் முடிப்பவனுமாகிய இறைவன், இன் நகை சிறிது தோன்ற- இனிய புன்னகை தோன்ற, அருட்கண் நோக்கால் - அருள் நோக்கத் தோடு, உன்னது வேட்கை யாது - உன்னுடைய விருப்பம் யாது, இங்கு உரை என - இங்குச் சொல்லுவாயென, தேவர் கோன் - தேவேந்திரன், விரையத் தாழ்ந்து - விரைவில் வணங்கி, சென்னிமேல் செங்கை கூப்பி - முடியின் மேல் சிவந்த கைகளைக் குவித்து, இதனை வேண்டும் - இதனை வேண்டுவானாயினன் எ-று. நோக்கியென ஒரு சொல் வருவிக்க. அருட்க ணோக்கால், கண்; நோக்கிற்கு அடை; ஆல்; ஒடுவின் பொருட்டு. உன்னது; னகரம் விரித்தல். இதனை - பிற்கூறப் படுவதனை. (91) ஐயநின் னிருக்கை யெல்லைக் கணியனா மளவி னீங்கா வெய்யவென் பழியினோடு மேலைநா ளடியேன் செய்த மையல்வல் வினையு மாய்ந்துன் மலரடி வழுத்திப் பூசை செய்யவு முரிய னானேன் சிறந்தபே றிதன்மேல் யாதோ. (இ-ள்.) ஐய - ஐயனே, நின் இருக்கை எல்லைக்கு அணியனாம் அளவில் - உன் இருப்பிடத்தில் எல்லைக்கு அணியனாகிய உடனே, நீங்கா - நீங்காத, வெய்ய - கொடிய, என் பழியினோடு - எனது கொலைப்பாவத்தோடு, மேலை நாள் அடியேன் செய்த - முற்பிறப்புக்களில் அடியேனால் செய்யப்பட்ட, மையல் வல்வினையும் - மயக்கத்தைத் தரும் வலிய தீவினையும், மாய்ந்து - அழிந்து, உன் மலர் அடி வழுத்தி - நின்தாமரை மலர்போலும் திருவடிகளைத் துதித்து, பூசை செய்யவும் உரியனானேன் - பூசனை புரியவும் தகுதி யுடையவனானேன்; இதன் மேல் - இதைவிட, சிறந்த பேறு யாது - பெறத்தக்க சிறந்த பயன்யாதுளது எ-று. நீங்கா, வெய்ய என்னும் பெயரெச்சங்கள் பழியென்பதனோடு தனித்தனி முடியும். மாய்ந்து - மாயப்பெற்று; சினைவினை முதன் மேல் நின்றதுமாம். உம்மை வியப்புணர்த்திற்று. ஓ: அசை. (92) இன்னநின் பாதப் போதே யிவ்வாறே யென்றும் பூசித் துன்னடி யாருள் யானும் மோரடித் தொண்ட னாவேன் அன்னதே யடியேன் வேண்டத் தக்கதென் றடியில் வீழ்ந்த மன்னவன் றனக்கு முக்கண் வரதனுங் கருணை பூத்து. (இ-ள்.) இவ்வாறே - இப்படியே, இன்ன நின் பாதப்போதே - இந்த நின் திருவடித் தாமரைகளையே, என்றும் பூசித்து - எப்பொழுதும் வழிபட்டு, உன் அடியாருள் - நின் தொண்டருள்ளே, யானும் ஓர் அடித்தொண்டன் ஆவேன் - அடியேனும் ஒர் தாழ்ந்த தொண்டனா வேன்; அன்னதே - அதுவே, அடியேன் வேண்டத்தக்கது என்று - அடியேனால் வேண்டத்தகுவது என்று, அடியில் வீழ்ந்த மன்னவன் தனக்கு - திருவடிகளில் வீழ்ந்து வணங்கிய இந்திரனுக்கு, முக்கண் வரதனும் கருணை பூத்து - மூன்று கண்களையுடைய வள்ளலும் அருள்சுரந்து எ-று. அடித்தொண்டன் - தாழ்ந்த தொண்டன்; அருட்பெருந் தீயிலடியோ மடிக்குடில் எனத் திருவாசகத்திலும், அடியேனடி வண்ணான் எனத் திருத்தொண்டர் புராணத்திலும் அடியென்பது தாழ்மையைக் குறித்தல் காண்க. வரதன் - வேண்டியவற்றை வழங்குவோன். (93) (எழுசீரடியாசிரியவிருத்தம்) இருதுவிற் சிறந்த வேனிலு மதியா றிரண்டினிற் சிறந்தவான் றகரும் பொருவிறா ரகையிற் சிறந்தசித் திரையுந் திதியினிற் சிறந்தபூ ரணையும் மருவுசித் திரையிற் சித்திரை தோறும் வந்துவந் தருச்சியோர் வருடந் தெரியுநாண் முந்நூற் றறுபது மைந்துஞ் செய்தவர்ச் சனைப்பய னெய்தும். (இ-ள்.) இருதுவில் சிறந்த வேனிலும் - பருவங்களுள் உயர்ந்த வேனிற் பருவமும், மதி ஆறிரண்டினில் - மாதம் பன்னிரண்டனுள், சிறந்த வான் தகரும் - மிகச்சிறந்த சித்திரை மாதமும், பொருவு இல்தாரகையில் - ஒப்பற்ற நாண்மீன்களுள், சிறந்த சித்திரையும் - உயர்ந்த சித்திரை நாளும், திதியினில் சிறந்த பூரணையும் - திதிகளுள் உயர்ந்த பெளர்ணமியும், மருவு - (ஆகிய இவைகள்) கூடிய, சித்திரையில் சித்திரை தோறும் - சித்திரைத் திங்களின் சித்திரை நாள்தோறும், வந்து வந்து அருச்சி - வந்து வந்து வழிபடுவாயாக; ஓர் வருடம் தெரியும் - ஓர் ஆண்டுக்கு வரையறுத்த, நாள் முந்நூற்று அறுபதும் ஐந்தும் - முந்நூற் றறுபத்தைந்து நாட்களிலும், அர்ச்சனை செய்த பயன் எய்தும் அருச்சனை செய்தலால் வரும் பயன் (உன்னை) அடையும் எ-று. இருது - பருவம்; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பன; ஈண்டுக் கூறியது இளவேனிலை. தகர் - ஆடு; மேடம். தாரகை - அசுவதி முதலிய இருபத்தேழு நட்சத்திரங்கள் சித்திரையிற் சித்திரை யென்றது அநுவாதம். (94) துறக்கநா டணைந்து சுத்தபல் போகந் துய்த்துமேன் மலபரி பாகம் பிறக்கநான் முகன்மான் முதற்பெருந் தேவர் பெரும்பதத் தாசையும் பிறவும் மறக்கநாம் வீடு வழங்குது மென்ன வாய்மலர்ந் தருளிவான் கருணை சிறக்கநால் வேதச் சிகையெழு மனாதி சிவபரஞ் சுடர்விடை கொடுத்தான். (இ-ள்.) துறக்க நாடு அணைந்து - துறக்க வுலகத்தையடைந்து, சுத்த பல்போகம் துய்த்து - தூய பல போகங்களை நுகர்ந்து, மேல் - பின், மல பரிபாகம் பிறக்க - மலபரிபாகம் உண்டாக, நான்முகன் மால் முதல் - பிரமன் திருமால் முதலிய, பெருந் தேவர் பெரும்பதத்து ஆசையும் - பெரிய தேவர்களின் பெரும்பதவியிலுள்ள விருப்பமும், பிறவும் மறக்க - மற்றைய விருப்பமும் ஒழிய, நாம் வீடு வழங்குதும் என்ன வாய்மலர்ந்தருளி, வான் கருணை சிறக்க - சிறந்த அருள் ததும்ப, நால்வேதச் சிகை எழும் - நான்கு மறைகளின் முடிவில் விளங்கும், அனாதி சிவபரஞ் சுடர் - அனாதியாகிய சிவபரஞ்சோதி, விடைகொடுத்தான் - விடைகொடுத் தனுப்பினான் எ-று. மல பரிபாகம் - ஆணவமல நெகிழ்ச்சி; இருவினையொப்பும், சத்தி நிபாதமும் உபலக்கணத்தாற் கொள்க. பிறக்க, காரணப் பொருட்டு மறக்க - மறந்தவளவில். சிகை - முடி; அதர்வசிகை என்பது காண்க. (95) மூடினான் புளகப் போர்வையால் யாக்கை முடிமிசை யஞ்சலிக் கமலஞ் சூடினான் வீழ்ந்தா னெழுந்துகண் ணருவி துளும்பினான் பன்முறை துதிசெய் தாடினா னைய னடிபிரி வாற்றா தஞ்சினா னவனரு ளாணை நாடினான் பிரியா விடைகொடு துறக்க நண்ணினான் விண்ணவர் நாதன். (இ-ள்.) விண்ணவர் நாதன் - தேவேந்திரன், புளகப் போர்வை யால் யாக்கை மூடினான் -புளகமாகிய போர்வையினால் உடல் மூடப்பட்டான்; முடிமிசை - சென்னியின்மேல், அஞ்சலிக் கமலம் சூடினான் - கைத்தாமரைகளைக் கூப்பினான்; வீழ்ந்தான் - கீழேவிழுந்து வணங்கினான்; எழுந்து கண் அருவி துளும்பினான் - எழுந்து கண்களினின்றும் இன்பவருவியை ஒழுக்கினான்; பல்முறை துதிசெய்து ஆடினான் - பலமுறையுந் துதிமொழி கூறிக் கூத்தாடி னான்; ஐயன் அடிபிரிவு ஆற்றாது அஞ்சினான் - இறைவன் திருவடிகளைப் பிரிவதற்கு ஆற்றாமல் அஞ்சினான்; அவன் அருள் ஆணை நாடினான் - அவன் அருளிய ஆணையை நாடி, பிரியா விடைகொடு - உள்ளம் பிரியாத விடை பெற்று, துறக்கம் நண்ணினான் - துறக்க வுலகிற் சென்றான் எ-று. அஞ்சலி - கூப்பிய கை. ஆணை - அருளிப்பாடு. பிரியாவிடை - பிரிதற்கு மனம் பொருந்தாத விடை. (96) (எண்சீரடியாசிரிய விருத்தம்) வந்தரமங் கையர்கவரி மருங்கு வீச மந்தாரங் கற்பகம்பூ மாரி தூற்ற அந்தரநாட் டவர்முடிக ளடிகள் சூட வயிராணி முலைத்தடந்தோய்ந் தகலந் திண்டோள் விந்தமெனச் செம்மாந்து விம்மு காம வெள்ளத்து ளுடலழுந்த வுள்ளஞ் சென்று சுந்தரநா யகன்கருணை வெள்ளத் தாழ்ந்து தொன் முறையின் முறைசெய்தான் றுறக்க நாடன். (இ-ள்.) அரமங்கயைர் மருங்கு வந்து கவரி வீச - தேவமகளிர் பக்கத்தில் வந்து சாமரை இரட்டவும், மந்தாரம் கற்பகம் பூமாரி தூற்ற - மந்தாரமும் கற்பகமும் மலர் மழை பொழியவும், அந்தர நாட்டவர்கள் முடிகள் அடிகள் சூட - துறக்க நாட்டினையுடைய தேவர்களின் முடிகள் அடிகளாகிய (மலரை) அணியவும், அயிராணி முலைத்தடம் தோய்ந்து - இந்திராணியின் பெரிய கொங்கைகளி லழுந்தி, அகலம் திண்தோள் - மார்பும் வலிய தோள்களும், விந்தம் எனச் செம்மாந்து - விந்த மலையைப்போல இறுமாந்து, விம்மு காமவெள்ளத்துள் உடல் அழுந்த - பெருகிய காம வெள்ளத்தினுள் உடலானது அழுந்தி நிற்க, உள்ளம் சென்று - மனமானது சென்று, சுந்தரநாயகன் கருணை வெள்ளத்து ஆழ்ந்து - சோமசுந்தரக் கடவுளின் அருள் வெள்ளதில் அழுந்தி நிற்க, துறக்க நாடன் - தேவ வுலகத்தினையுடைய இந்திரன், தொல் முறையில் பழைய முறைப்படியே, முறை செய்தான் - அரசு புரிந்தான் எ-று. ஐந்தருக்களில் இரண்டு கூறினமையால் ஏனையவுங் கொள்க. செம்மாந்து என்னுஞ் சினைவினை முதன்மேல் நின்றது; செம்மாக்க என்பதன் திரிபுமாம். ஆழ்ந்து; எச்சத்திரிபு. (97) ஆகச் செய்யுள் - 439. வெள்ளையானைச் சாபந்தீர்த்த படலம் (கொச்சகக்கலிப்பா) மட்டவிழுங் கொன்றைச் சடையான் மகவானைத் தொட்ட பழியின் றொடக்கறுத்த வாறீது1 பட்டமத வேழம் பரனைப் பராய்முனிவன் இட்டகொடுஞ் சாபநீத் தேகியவா றோதுவாம். (இ-ள்.) மட்டு அவிழும் கொன்றைச் சடையான் மணத்தொடு மலர்ந்து கொன்றை மலர் மாலையை யணிந்த சடையையுடைய இறைவன், மகவானைத் தொட்ட வழியின் தொடக்கு அறுத்தவாறு ஈது - இந்திரனைப் பற்றிய பழியின்கட்டினை அறுத்த தன்மை இதுவாகும்; பட்டமத வேழம் - (இனி) நெற்றிப் பட்டத்தினையும் மதப்பெருக்கினையுமுடைய வெள்ளை யானையானது, பரனை - அச்சோமசுந்தரக் கடவுளை - பராய் வழிபட்டு, முனிவன் இட்ட - துருவாச முனிவனால் இடப்பட்ட, கொடும் சாபம் நீத்து ஏகியவாறு ஓதுவாம் - கொடிய சாபத்தினை நீக்கிச் சென்ற திருவிளையாடலைக் கூறுவாம் எ-று. மட்டு அவிழும் - மணம் விரியும் என விரித்தலுமாம்; மட்டு - தேனுமாம். அவிழும் மலர் எனச் சினையோடியையும். ஈதென்றது முற்கூறிய வதனை; சுட்டு நீண்டது. பராவி என்பது பராய் எனத் திரிந்தது. இது கூறினாம் இது கூறுவாம் என இங்ஙனமாகத் தொகுத்துச் சுட்டுவது ஆன்றோர் வழக்கமென்பதனைத் திருத் தொண்டர் புராணத்தானும் அறிக. (1) கருவா சனைகழிக்குங் காசிநகர் தன்னில் துருவாச வேதமுனி தொல்லா கமத்தின் பெருவாய்மை யாற்றன் பெயர்விளங்க வீசன் ஒருவா விலிங்க வொளியுருவங் கண்டான். (இ-ள்.) கருவாசனை கழிக்கும் - கருப்ப வாசனையைப் போக்குகின்ற, காசி நகர் தன்னில் - காசிப்பதியில், வேத துருவாச முனி - மறைகளை யுணர்ந்த துருவாச முனிவன், தொல் ஆகமத்தின் பெருவாய்மையால் - பழைய ஆகமத்தின் சிறந்த உண்மையால், தன் பெயர் விளங்க - தனது பெயர் விளங்குமாறு, ஈசன் ஒருவா - இறைவன் நீங்காத, ஒளி இலிங்க உருவம் கண்டான் - ஒளிவடி வாகிய சிவலிங்கத் திருவுருவத்தை நிறுவினான் எ-று. பொன்றக் கெடுக்கு மென்பார் வாசனை கழிக்கும் என்றார். ஆகமங் கூறுமுறைமையா லென்க. வாய்மையாற் கண்டான் என முடிக்க. காணுதல் - பிரதிட்டித்தல். (2) இன்புற் றருச்சனைசெய் தேத்துவா னவ்வேலை அன்புக் கெளிய னருளாற் றிருமுடிமேன் மின்பொற் கடிக்கமலப் போதொன்று வீழ்த்திடலுந்1 தன்பொற் கரகமலப் போதலர்த்தித் தாங்கினான். (இ-ள்.) இன்புற்று - மகிழ்ந்து, அருச்சனை செய்து - அருச்சித்து, ஏத்துவான் - துதிப்பானாகிய முனிவன், அவ்வேலை - அப்போது, அன்புக்கு எளியன் - அடியார்களின் அன்புக்கு எளிவனாகிய இறைவன், அருளால் - தனது திருவருளால், திருமுடிமேல் மின் பொன் கடிகமலப்போது ஒன்று வீழ்த்திடலும் - திருமுடியினின்றும் ஒளியையுடைய பொன்னிறம் வாய்ந்த மணம் பொருந்திய தாமரை மலர் ஒன்றை விழச்செய்த வளவில், தன் பொன் கர கமலப்போது அலர்த்தித் தாங்கினான் - தனது அழகிய தாமரை மலரை விரித்துத் தாங்கினான் எ-று. ஏத்துவான்; பெயர்; தாங்கினான் என்பது கொண்டு முடியும். இறைவன் அன்புக் கெளியனாதலை. “ பத்திவலையிற் படுவோன் காண்க” “ யாவ ராயினு மன்ப ரன்றி யறியொ ணாமலர்ச் சோதியான்” என்னும் மணிவாசகங்களானறிக. வீழ்ந்திடலும் என்பது பாடமாயின், எளியனதருளால் என விரிக்க. கரகமலம்; வடநூன் முடிபு. (3) தாங்கிக்கண் சென்னி தடமார் பணைத்துடலம் வீங்கித் தலைசிறந்த மெய்யுவகை மேற்கொள்ள நீங்கிக் கழிந்த கருணை நிதியனையான் பூங்கற் பகநாட்டிற் போகின்றா னவ்வேலை. (இ-ள்.) தாங்கி - அங்ஙனம் ஏந்தி, கண் சென்னி தடம் மார்பு அணைத்து - கண்களிலும் முடியிலும் பெரிய மார்பிலும் ஒற்றி, உடலம் வீங்கி - மெய் பூரித்து, தலை சிறந்த மெய் உவகை மேற் கொள்ள - மிக ஓங்கிய உண்மை மகிழ்ச்சி மீதூர. நீங்கி - அவ்விடத்தினின்றும் நீங்கி, கழிந்த - சென்ற, கருணை நிதி அனையான் - அருணிதியை ஒத்த துருவாசமுனிவன், பூங்கற்பக நாட்டில் - பொலிவினையுடைய கற்பகத்தருப் பொருந்திய துறக்க நாட்டில், போகின்றான் - செல்வானாயினான்; அவ் வேலை - அப்பொழுது எ-று. தாங்கி யென்பது பணிவைக் குறிப்பிடுகின்றது. உடலம், அம்; சாரியை. வீங்கி என்னும் சினைவினை முதல் வினையோடு முடிந்தது. தலைசிறந்த - மிக்க; ஒரு சொல். கழிந்த -மிக்க எனலுமாம், கருணையையுடைய நிதியனையான் என்னலுமாம். அவ்வேலை என்பதனை வரும் பாட்டுடன் கூட்டுக. (4) சங்கலறச் செங்களத்துத் தானவரைத் தேய்த்துவிறற் கொங்கலர்தார் வேய்ந்தமரர் கோமான்றன் கோநகரிற் செங்க ணமரர்பெருஞ் சேனைக் கடல்கலிப்ப மங்கலப்பல் லாண்டு மறைமுழங்க வந்தணைவான். (இ-ள்.) சங்கு அலற - வெற்றிச் சங்க முழங்க, செங்களத்து - போர்க்களத்தில், தானவரைத் தேய்த்து - அவுணர்களை அழித்து, கொங்கு அலர் - மணம் பரந்த, விறல் தார் வேய்ந்து - வெற்றி மாலைசூடி, அமரர் கோமான் - தேவேந்திரன், தன் கோ நகரில் - தனது தலைநகராகிய அமராவதியில், பெரு செங்கண் அமரர் சேனைக் கடல்கலிப்ப - பெரிய சிவந்த கண்களையுடைய தேவர் சேனையாகிய கடல் (ஒருபால்) ஒலிக்கவும், மங்கலப் பல்லாண்டு மறை முழங்க - மங்கலமாகிய பல்லாண்டும் வேதமும் (ஒருபால்) ஒலிக்கவும், வந்தணைவான் - வருகின்றவன் எ-று. செங்களம் - போர்க்களம்; செங்களந் துழவுவோள் என்பது புறம். கொங்கு - தேனும், பராகமும் ஆம். விறற்றார் எனக் கூட்டுக. வேய்ந்த என்னும் பெயரெச்சத்து அகரம் தொக்க தென்னலுமாம். கோநகர் - தலைநகர், அரசநகர். பல்லாண்டு - பல ஆண்டுகள் வாழ வேண்டுமென வாழ்த்தும் பாட்டு. எண்ணும்மை விரிக்க. (5) எத்திக்குங் கல்லென் றியங்கலிப்ப வேந்திழையார் தித்தித் தமுதொழுக்குங்1 கீதஞ் செவிமடுப்பப் பத்திக் கவரிநிறை தானைப் படுகடலில் தத்திப் புரளுந் திரைபோற் றலைப்பனிப்ப. (இ-ள்.) எத்திக்கும் கல்லென்று - எல்லாத் திசைகளிலும் கல்லென்னும் ஒலியோடு, இயம் கலிப்ப - இயங்கள் ஒலிக்கவும், ஏந்து இழையார் - ஏந்திய அணிகளையுடைய தேவ மகளிரின், தித்தித்து அமுது ஒழுக்கும் - இனிமையுற்று அமுதத்தினைப் பொழியும், கீதம் செவி மடுப்ப - இசைப்பாட்டுச் செவியின் கண்ஏறவும், பத்திக் கவரிநிரை - வரிசையாகிய சாமரைக் கூட்டங்கள், தானைப் படுகடலில் - சேனையாகிய ஆழமுள்ள கடலின்கண், தத்திப் புரளும் திரைபோல் கலைபனிப்ப - தவழ்ந்து புரளுகின்ற அலை களைப்போல அசையவும் எ-று. இயம் - வாச்சியம். தித்தித்த என்பது விகாரமாயிற்றுமாம். இனிமையால் அமுதத்தைப் பொழிந்தா லொக்கு மென்க. (6) அங்கட் கடலி னெடுங்கூம் பகநிமிர்ந்த வங்கத் தலையுய்க்கு மீகான் றனைமானத் திங்கட் குடைநிழற்றத் தீந்தே மதங்கவிழ்க்கும் வெங்கட் களிற்றின் மிசைப்பவனி போந்தணைந்தான். (இ-ள்.) அம்கண் கடலின் - அழகிய இடமகன்ற கடலின்கண், அகம்நெடுங் கூம்பு நிமிர்ந்த - தன்னிடத்து நீண்ட பாய்மரம் உயர்ந்த, வங்கத் தலை உய்க்கும் மீகான் தனை மான - கப்பலின் தலையிலிருந்து அதனைச் செலுத்தும் மாலுமியை ஒக்க, திங்கள் குடை நிழற்ற - சந்திரவட்டக் குடை நிழலைச் செய்ய, தீந்தேம் மதம் கவிழ்க்கும் - மிக இனிய மதத்தினைக் கொட்டுகின்ற, வெங்கண் களிற்றின் மிசை - வெவ்விய கண்களையுடைய வெள்ளை யானையின் மேல், பவனி போந்தணைந்தான் - திருவுலாப் போந்தான் எ-று. களிற்றுக்கு நாவாய் உவமையாதலை மதுரைக்காஞ்சியினும், மணிமேகலையினுங் காண்க. யானைக்கு வங்கமும், குடைக்குக் கூம்பும், யானையின் பிடர்மேலிருப்போனுக்கு வங்கத்தின் மேலிடத் திருக்கும் மீகானும் உவமமாம். மீகான்-இச் சொல் மீயான் எனவும், மீகாமன் உனவும் வழங்குகிறது. தீந்தேம்; ஒரு பொருளிருசொல். வெங்கண் - அஞ்சாமையுமாம். (7) அத்தலைவிண் ணாட ரருகணைந்து வெவ்வேறு தத்த மனக்கிசைந்த கையுறைக டாங்கொடுத்துக் கைத்தலங்கள் கூப்பினார் கண்டான்1 கடவுளரில் உத்தமனை யர்ச்சித்துப் போந்தமுனி யுத்தமனும். (இ-ள்.) அத்தலை - அவ்விடத்து, விண் நாடர் அருகு அணைந்து - தேவர்கள் (இந்திரன்) மருங்கில் வந்து, தத்தம் மனக்கு இசைந்த - தங்கள் தங்கள் மனத்திற்குப் பொருந்திய, வெவ்வேறு கையுறைகள் தாம் கொடுத்து - வேறு வேறு வகையான கையுறை களைக் கொடுத்து, கைத்தலங்கள் கூப்பினார் - கைகளைக் குவித்து வணங்கினார்கள்; கடவுளரில் உத்தமனை - தேவர்களிற் சிறந்த சிவபெருமானை, அர்ச்சித்துப் போந்த- வழிபட்டு வந்த, முனி உத்தமனும் - முனிவருட் சிறந்த துருவாசனும், கண்டான் - அதனைக் கண்டு எ-று. மனக்கு ; சாரியை தொக்கது. கையுறை - காணிக்கை. (8) தீங்கரிய வாசிமொழி செப்பித்தன் செங்கரத்தின் நீங்கரிய தாமரையை நீட்டினான் மற்றதனைத் தாங்கரிய செல்வத் தருக்காலோர் கையோச்சி வாங்கிமத யானையின்மேல் வைத்தான் மதியில்லான். (இ-ள்.) தீங்கு அரிய - குற்றமில்லாத, ஆசி மொழி செப்பி - வாழ்த்து மொழிகளைக் கூறி, தன் செங்கரத்தின் நீங்கு அரிய -தனது சிவந்த கையினின்று நீங்குதலில்லாத, தாமரையை நீட்டினான் - தாமரைமலரைக் கொடுத்தான்; அதனை - அம்மரை, தாங்கு அரிய செல்வத்தருக்கால் - பொறுத்தற்கரிய செல்வச் செருக்கினால், மதி இல்லான் - அறிவு இல்லானாகிய இந்திரன், ஓர் கை ஓச்சி வாங்கி - ஒருகையை நீட்டி வாங்கி, மதயானையின்மேல் வைத்தான் - மதத்தையுடைய தன் யானையின் மேலே வைத்தான் எ-று. அருமை இன்மை குறிப்பது. மற்று; அசை. தாங்கரிய செல்வம் - மிக்க செல்வம். செல்வத்தருக்கு - செல்வத்தாலாய உவகை மிகுதி; களிப்பு. இருகையானும் பணிந்து வாங்கிச் சென்னி மேற் சூடற் பாலதனை ஒரு கை நீட்டி வாங்கி யானைமேல் வைத்தான் என்றார். (9) கீறிக் கிடந்த மதியனைய கிம்புரிக்கோட் டூறிக் கடங்கவிழ்க்கு மால்யானை யுச்சியின்மேல் நாறிக் கிடந்த நறுமலரை வீழ்த்தியுரற் சீறிக் கிடந்நெடுந் தாளாற் சிதைத்தன்றே. (இ-ள்.) கீறிக் கிடந்த மதி அனைய - பிளவுண்டு கிடந்த சந்திரனை ஒத்த, கிம்புரிக் கோட்டு -பூண் அணிந்த கொம்புகளையுடைய, கடம் ஊறி கவிழ்க்கும் - மதத்தைச் சுரந்து கொட்டும், மால் யானை - மயக்கத்தையுடைய அவ்வெள்ளையானை, உச்சியின்மேல் நாறிக் கிடந்த -தன் முடியின் மீது மணம் வீசிக்கிடந்த, நறுமலரை - நறியமலரை, வீழ்த்தி - கீழே தள்ளி, உரல் சீறிக் கிடந்த - உரலொடு மாறுபட்டுக் கிடந்த, நெடுந் தாளால் - நீண்ட காலால், சிதைத்தன்று - தேய்த்தது எ-று. நாறிக்கிடந்த - தோன்றிக் கிடந்த என்னலுமாம். யானைக்கால் உரல்போலுதலின் கறையடி யென்பதும் யானைக்கொருபெயராயிற்று. சிதைத்தன்று - சிதைத்தது; உடன்பாட்டு முற்று. ஏ; அசை; (10) கண்டான் முனிகாமற் காய்ந்தா னுதற்கண்போல் விண்டா ரழல்சிதற நோக்கினான் வெங்கோபங் கொண்டா னமர ரொதுங்கக் கொதித்தாலம் உண்டா னெனநின் றுருத்தா னுரைக்கின்றான். (இ-ள்.) முனிகண்டான் - அதனைத் துருவாச முனிவன் கண்டான்; காமன் காய்ந்தான் நுதல் கண்போல் - மன்மதனை யெரித்த சிவனது நெற்றிக்கண்போல, ஆர் அழல் விண்டு சிதற நோக்கினான் - நிறைந்த நெருப்பு வெளிப்பட்டுச் சிதற நோக்கி, வெங்கோபம் கொண்டான் - கொடிய சினங்கொண்டான்; அமரர் ஒதுங்கக் கொதித்து - தேவர்கள் அஞ்சி ஒதுங்கும்படி பொங்கி, ஆலம் உண்டான் என நின்று - நஞ்சினை உண்ட உருத்திரன்போல நின்று, உருத்தான் உரைக்கின்றான் - மேலும் வெகுண்டு கூறுகின்றான் எ-று. விண்டு-வெளிப்பட்டு. நோக்கினான், உருத்தான் என்பன முற்றெச்சங்கள். (11) புள்ளியதோ லாடை புனைந்தரவப் பூணணிந்த வெள்ளிய செங்கண் விடையா னடிக்கமலம் உள்ளிய மெய்யன் புடையா ரருவருத்துத் தள்ளிய செல்வத் தருக்கினா யென்செய்தாய். (இ-ள்.) புள்ளியதோல் ஆடை புனைந்து - புள்ளிகளையுடைய தோலாடையை உடுத்து, அரவப்பூண் அணிந்த - பாம்பணிகளை அணிந்த செங்கண் - சிவந்த கண்களையுடைய, வெள்ளிய விடையான் - வெண்ணிறம் பொருந்திய ஏற்றையுடைய இறைவனது, அடிக்கமலம் - திருவடித்தாமரையை, உள்ளிய மெய்யன்பு உடையார்- இடையறாது நினைக்கின்ற மெய்யன்புடைய அடியார்கள், அருவருத்துத் தள்ளிய செல்வத்தருக்கினாய் - உவர்த்து ஒதுக்கிய செல்வத் தருக்கினை யுடையவனே, என் செய்தாய் - நீ என்ன காரியஞ் செய்தாய் எ-று. புள்ளிய, அ; அசை. புள்ளித்தோல். வெள்ளிய செங்கண்; முரண். தள்ளிய செல்வம் என வியையும். மெய்யன்புடையார் அருவருத்துத் தள்ளுதலை, “ கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தராதி யின்பமும்” என்னும் மணிவாசகங்களாற் காண்க. செய்தது சிறிதும் அடாதென் பார் என் செய்தாய் என்றார். (12) கதிர்த்தார் முடியமரர் கையுறையே நன்கு மதித்தாயெம் மீசன் மதிமுடிமேற் சாத்தும் பொதித்தா தவிழ்மலரைப் போற்றாது வாங்கி மிதித்தானை சிந்தவதன் மேல்வைத்தாய் பேதாய். (இ-ள்.) பேதாய் - அறிவில்லாதவனே, கதிர் தார் முடி அமரர்- ஒளி பொருந்திய மாலையை யணிந்த முடியினையுடைய தேவர் களின், கையுறையே நன்கு மதித்தாய்; எம் ஈசன் மதி முடிமேல் சாத்தும் - எம் சிவபெருமானின் பிறையினையணிந்த திருமுடிமேற் சாத்தப்பட்ட, பொதிதாது அவிழ்மலரை - நிறைந்த மகரந்தத்தோடு மலர்ந்த மலரை, போற்றாது - பேணாது, வாங்கி - ஒரு கரத்தால் வாங்கி, ஆனை மிதித்து சிந்த - யானை யானது மிதித்துச் சிதைக்குமாறு, அதன்மேல் வைத்தாய் - அந்த யானையின் மேல் வைத்தனை எ-று. நன்கு மதித்தல் - பெரிது மதித்தல்; ஒருசொல். இகழற் பாலதனை மதித்தும் மதிக்கற் பாலதனை யிகழ்ந்தும் போந்தாய் நின் அறிவிருந்தவா றென்னே என்றவாறு. எம்மீசன் என்றது எம்மை யெல்லாம் ஆளாகவுடைய தலைவன் என்றபடி. போற்றாது - குறிக்கொண்டு வழிபடுதலின்றி. (13) வண்டுளருந் தண்டுழாய் மாயோ னிறுமாப்பும் புண்டரிகப் போதுறையும் புத்தே ளிறுமாப்பும் அண்டர் தொழ வாழுன் னிறுமாப்பு மாலாலம் உண்டவனைப் பூசித்த பேறென் றுணர்ந்திலையால். (இ-ள்.) வண்டு உளரும் - வண்டுகள் கிண்டுகின்ற, தண்துழாய் மாயோன் இறுமாப்பும் - குளிர்ந்த துழாய்மாலையையுடைய திருமாலின் களிப்பும், புண்டரிகப் போது உறையும் புத்தேள் இறுமாப்பும் தாமரை மலரில் இருக்கும் பிரமனது களிப்பும், அண்டர் தொழவாழ் உன் இறுமாப்பும் - தேவர்கள் பணிய வாழுகின்ற உனது களிப்பும், ஆலாலம் உண்டவனைப் பூசித்த பேறு என்று உணர்ந்திலை - நஞ்சினை உண்டருளிய இறைவனை வழிபட்டதனாலாகிய பயன் என்று நீ அறியாது போயினாய் எ-று. உளர்தல் - கிண்டுதல். இறுமாப்பு - மிக்க களிப்பு; திருவங்க மாலையுள். “ இறுமாந் திருப்பன் கொலோ” என வருதல் காண்க. ஆலால முண்டவன் என்றது, “ விண்ணோ ரமுதுண்டுஞ் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்யும்” இறைவனுடைய அளவிலாற்றலையும் பேரருளையும் குறிப்பிடற் கென்க. தேவர்கள் சிவபெருமானை வழிபட்டு வாழ்வதனை, “ வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனநின்பாற் றாழ்த்துவதுந் தாமுயர்ந்து தம்மையெல்லாந் தொழவேண்டி” என்னும் திருவாசகத்தானறிக. (14) சேட்டானை வானவநின் சென்னி செழியரிலோர் வாட்டானை வீரன் வளையாற் சிதறுகநின் கோட்டான நாற்கோட்டு1 வெண்ணிறத்த குஞ்சரமுங் காட்டனை யாகவென விட்டான் கடுஞ்சாபம். (இ-ள்.) சேடு ஆனை வானவ - பெரிய வெள்ளை யானையை யுடைய இந்திரனே, நின் சென்னி - உனது முடியானது, செழியரில்- பாண்டியருள், ஓர் வாள் தானை வீரன் வளையால் சிதறுக - ஒரு வாளினையுடைய சேனையையுடைய வீரனது திகிரியினால் சிதறக் கடவது; நின் - உனது, கோள் தானம் நால்கோடு - வலிமையையும் மதத்தையும் நான்கு கொம்புகளையும் உடைய, வெள் நிறத்த குஞ்சரமும் - வெண்மையான நிறத்தினையுடைய யானையும், காட்டு ஆனை ஆக-காட்டானையாகக் கடவது; என - என்று, கடுஞ் சாபம் இட்டான் - கொடிய சாபத்தைக் கொடுத்தான் எ-று. சேடு - பெருமை, யானை ஆனையென மருவிற்று. வட்டமாயிருத் தலின், திகிரி வளையெனப்பட்டது. வீரன் - உக்கிரகுமார பாண்டியன்; ஓர் வீரன் என்க. கோட்ட என்று குறிப்புப் பெயரெச்சமாகப் பாட மோதுவாருமுளர். உம்மை இறந்தது தழீஇயிற்று. (15) சவித்தமுனி பாதந் தலைக்கொண்டு செங்கை குவித்தமரர் தங்கோன் குறையிரப்பா ரைய அவித்தபொறி யாயெம் மரசுங்கா றள்ளுஞ் செவித்தறுகண் வேழமுந் தீங்குடைய ரன்றோ. (இ-ள்.) அமரர் - தேவர்கள், சவித்தமுனி பாதம் தலைக் கொண்டு - சாபமிட்ட துருவாச முனிவனுடைய திருவடிகளை முடியிற் சூடி, செங்கை குவித்து - சிவந்த கைகளைக் கூப்பி, தம் கோன் குறை இரப்பார் - தம் தலைவன் பொருட்டுக் குறையிரந்து வேண்டிக் கொள்வராகி, ஐய - ஐயனே, அவித்த பொறியாய் - ஐம்பொறிகளைக் கெடுத்தவனே, எம் அரசும் - எம் அரசனும், கால் தள்ளும் செவி - காற்றை வீசும் காதுகளையும், தறு கண் - அஞ்சமையையுமுடைய, வேழமும் - வெள்ளையானையும், தீங்கு உடையர் அன்றோ - குற்ற முடையவர்கள் அல்லவா எ-று. சவித்த, சபித்தவென்பது திரிந்து நின்றது. தங்கோனுக்கென்க. குறையிரத்தல்: ஒரு சொல். இரப்பார்; எச்சம்; பெயருமாம். அவித்தல் - அடக்குதல். பொறி அவித்தாய் என விகுதி பிரிந்து சென்றியையும். பொறிகளை யவித்தவனென முனிவன்பால் தீங்கின்மை கூறிற்று. வெகுண்டாரது பொறுதி வேண்டுவார் தம் குற்றத்தை யுடன்படல் வேண்டுமாகலின் தீங்குடைய ரன்றோ என்றார். திணைவிரவிச் சிறப்பால் உயர்திணை முடிபேற்றன. (16) அத்தகைய நீராற் சபித்தீ ரடிகேண்மற் றித்தகைய சாப மினிவிடுமி னென்றிரந்து கைத்தலங்கள் கூப்பிக் கரைந்தார்க் கிரங்கியருள் வைத்த முனிபிறிது சாபம் வகுக்கின்றான். (இ-ள்.) அத்தகைய நீரால் சபித்தீர் - அங்ஙனமாய குற்றத்தால் சாபமிட்டீர், அடிகேள் - அடிகளே, மற்றும் - யாங்கள் வேண்டிக் கோடலினால், இத்தகைய சாபம் - இந்தச் சாபத்தை, இனிவிடுமின் என்று இரந்து - இப்பொழுதே நீக்கியருள வேண்டுமென்று குறையிரந்து, கைத்தலங்கள் கூப்பிக் கரைந்தார்க்கு - கைகளைக் குவித்து முறையிட்ட தேவர்களின் பொருட்டு, இரங்கி அருள் வைத்த முனி - மனம் இரங்கிக் கருணை கூர்ந்த முனிவன், பிறிது சாபம் வகுக்கின்றான் - வேறு சாபமிடுகின்றான் எ-று நீர் - தன்மை; ஈண்டுக் குற்றமாந்தன்மை. மற்று; வினைமாற்று; உயர்த்துக் கூறுதற்குச் சபித்தீர் அடிகேள் விடுமின் எனப் பன்மை யாற் கூறினார். கரைதல் - சொல்லுதல்; முறையிடுதல். பிறிதாகிய சாபமென்க. (17) (அறுசீரடியாசிரிய விருத்தம்) சிந்தனை வாக்கிற் கெட்டாச் சிவனரு ளளித்த சேட நிந்தனை பரிகா ரத்தா னீங்காது தலைமட் டாக வந்தது முடிமட் டாக மத்தமா வனமா வாகி ஐந்திரு பஃதாண் டெல்லை யகன்றபின் பண்டைத் தாக. (இ-ள்.) சிந்தனை வாக்கிற்கு எட்டாசி சிவன் - மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத சிவபெருமான். அருள் அளித்த சேட நிந்தனை - திருவருளா லருளிய சேடத்தை நிந்தித்த குற்றம், பரிகாரத்தால் நீங்காது - கழுவாயினால் அகலாது (ஆதலால்), தலைமட்டாக வந்தது - தலையளவாக வந்தது, முடிமட்டு ஆக -முடியளவாகக் கடவது; மத்தம்மா - மதமயக்கத்தையுடைய வெள்ளையானை, வனம்மா ஆகி - காட்டானையாகி, ஐந்து இருபஃது ஆண்டு எல்லை - நூறாண்டு வரை, அகன்றபின் - கழிந்த பின், பண்டைத்து ஆக - முன்னியல் பினை உடையதாகுக எ-று. சிந்தனைக்கும் வாக்கிற்கும் என விரிக்க. சிவனது திருவருள் என விரித்தலுமாம். சேடம் - பிரசாதம்; சேடங்கொண்டு சிலர் நின்றேத்த எனச் சிலப்பதிகாரத்து வருதலுங் காண்க. பரிகாரம் - பிராயச்சித்தம். வந்தது - வந்ததாகிய அபாயம்; வினைப்பெயர். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு என்னும் உலக வசனமும் இங்கே நினைக்கற் பாலது. மத்தம் - உன் மத்தம்; மத்தகமுமாம். ஆக மூன்றனுள் முன்னது வினையெச்சம்; பின்னையவை வியங்கோள் முற்றுக்கள். (18) என்றனன் பிறிது சாப மிந்திரன் மகுட பங்கம் ஒன்றிய செய்கை பின்ன ருரைத்துமற் றஃது நிற்க நின்றவெள் ளானை வான நீத்தறி விழந்து நீலக் குன்றென வனத்து வேழக் குழாத்தொடு குழீஇய தன்றே. (இ-ள்.) என்றனன் - என்று கூறினன்; பிறிது சாபம் - அவ்வேறு சாபத்தினால், இந்திரன் மகுடபங்கம் ஒன்றிய செய்கை - இந்திரன் மகுட பங்கமுற்ற செய்தியை, பின்னர் உரைத்தும் - பின்பு கூறுவேம் (ஆகலின்); அஃது நிற்க - அது நிற்க, நின்ற வெள்ளானை - சாபம் பெற்று நின்ற வெள்ளானையானது, வானம் நீத்து - தேவ உலகினை அகன்று, அறிவு இழந்து - அறிவு கெட்டு, நீலக்குன்று என - நீல மலைபோலக் (கருநிற முடையதாகி), வனத்து வேழக் குழாத்தொடு குழீஇயது -காட்டானைக் கூட்டத்தோடு கலந்தது எ-று. பிறிது சாபம் என்பதனை என்றனன் என்பதனோடு கூட்டின் கூறியது கூறலாகும். மகுட பங்கம் - முடி சிதறுலாகிய பரிபவம். அஃது - அது; விரித்தல் விகாரம். குழீஇயது, சேர்ந்தது என்னும் பொருட்டு. அன்று, ஏ; அசைகள்; அப்பொழுதே யெனினுமாம். (19) மாவொடு மயங்கிச் செங்கண் மறம்பயில் காடு முல்லைப் பூவொடு வழங்கு நீத்தப் பறவமுங் குறவர் தங்கள் தேவொடு பயிலுங் கல்லுந் திரிந்துநூ றியாண்டுஞ் செல்லக் காவொடு பயிலுந் தெய்வக் கடம்பமா வனம்புக் கன்றே. (இ-ள்.) மாவொடு மயங்கி - (இவ்வாறு) காட்டானைகளோடு கலந்து, செங்கண் மறம்பயில் காடும் - சிவந்த கண்களையுடைய மறவர்கள் தங்கிய பாலை நிலைத்திலும், முல்லைப் பூவொடு வழங்கு நீத்தப் புறவமும் - முல்லைப் பூக்களோடு செல்லா நின்ற காட்டாறுகளையுடைய முல்லை நிலத்திலும், குறவர் தங்கள் தேவொடு பயிலும் கல்லும் - குறவர்கள் தங்கள் கடவுளாகிய முருகவேளோடு பொருந்தியிருக்கும் குறிஞ்சி நிலதிலும், திரிந்து நூறு ஆண்டும் செல்ல - திரிந்து நூறு ஆண்டுகளும் கழிய, காவொடு பயிலும் தெய்வக்கடம்பமா வனம் புக்கன்று - சோலைகளாற் சூழப்பெற்ற தெய்வத் தன்மை பொருந்திய பெரிய கடம்பவனத்திற் புகுந்தது எ-று. மறம் என்னும் பண்புப் பெயர் அதனையுடையார்க்கு ஆகு பெயர்; மறக்குடி எனினுமாம். பூவொடு நீத்தத்தையுடைய வென்க; பூவொடு வழங்குகின்ற எனலுமாம். முருகன் குறிஞ்சித்தெய்வ மாகலின் ஆண்டு வாழும் குறவர்க்குத் தெய்வ மென்றார். கல்- மலை. பாலை, முல்லை, குறிஞ்சி என்னும் மூன்றும் காடெனப்படு மாகலின் அவற்றில் திரிந்தென்றார். புக்கன்று - புக்கது. ஏ; அசை. (20) புக்குரல் வட்டத் திண்காற் பொருவிறே வியலிற் றீர்ந்த மைக்கருங் களிறு முக்கண் மாதவ னருள்வந் தெய்தத் தக்கதோ ரமையஞ் சார மரகதந் தழைத்து மின்னு நக்கபொன் முளரி பூத்த நளிர்கயந் தலைக்கண் டன்றே.1 (இ-ள்.) புக்க - புகுந்த, உரல்வட்டம் - உரல்போலும் வட்ட மாகிய, திண்கால் - வலிய கால்களையுடைய, பொருவு இல் - ஒப்பில்லாத, தே இயலில் தீர்ந்த - தெய்வத் தன்மையினின்று நீங்கிய, மைக்கருங் களிறு - மைபோலுங் கரிய யானையானது, முக்கண் மாதவன் - மூன்று கண்களையுடைய பெரிய தவத்தினையுடைய சிவபெருமானது, அருள் வந்து எய்தத் தக்கது ஓர் அமையம் சார - திருவருள் வந்து கூடப் பெறுவதாகிய ஓர் காலம் பொருந்த, மரகதம் தழைத்து - மரகதம் போலுந் தழைத்து, மின்னு நக்க - மின்போலும் ஒளி விளங்க, பொன்முளரி பூத்த - பொற்றாமரைகள் மலர்ந்த, நளிர் கயம் தலைக்கண்டன்று - குளிர்ந்த தடாகத்தைக் கண்டது எ-று. புக்க என்பதன் அகரந் தொக்கது; புக்கு என வினை யெச்சமுமாம். தெய்வத்தன்மையி னீங்கியபின் கருமை யெய்திய களிறு. சிவபிரான் பெரிய தவத்தினையுடையானென்பது, “ தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே” என்னும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தானு மறியப்படும். மரகதம் போலும் இலை தழைத்து மலர் பூத்த எனத் தாமரையாகிய முதன்மே லேற்றியுரைக்க. நக என்பது நக்கவென விரிந்தது. தலைக் கண்டன்று: ஒரு சொல்; அவ்விடத்துக் கண்டது எனலுமாம். கயந்தலை கண்டன்று என இயல்பாயின் கயந்தலை என்பதற்குக் கயத்தை யென்றுரைக்க. ஏ;அசை. (21) கண்டபோ தறிவு தோன்றக் கயந்தலைக் குடைந்த2போது பண்டை வடிவந் தோன்றப் பரஞ்சுட ரருட்கண் டோன்றக் கொண்டதோர் பரமா னந்தக் குறியெதிர் தோன்றக் கும்பிட் டண்டர்நா யகனைப் பூசை செய்வதற் கன்பு தோன்ற. இ-ள்.) கண்டபோது - (அவ்வாறு) கண்டபோது, அறிவு தோன்ற - முன் அறிவு உண்டாகவும், கயந்தலைக் குடைந்த போது - வாவியில் நீராடியவுடன், பண்டையவடிவுதோன்ற - முன்னைய வடிவந் தோன்றவும், பரஞ்சுடர் அருட் கண் தோன்ற - பின் பரஞ்சோதியின் அருட்பார்வை தோன்றுதலால், பரம ஆனந்தம் கொண்டது ஓர் குறிமேலான ஆனந்தமே வடிவமாகக் கொண்டதாகிய ஒப்பற்ற சிவலிங்கமானது, எதிர் தோன்ற - எதிரே தோன்றாநிற்க, கும்பிட்டு - வணங்கி, அண்டர் நாயகனைப் பூசை செய்வதற்கு அன்பு தோன்ற - தேவர்கட்கு நாயகனாகிய அச் சொக்கலிங்கப் பெருமானைப் பூசிப்பதற்கு அன்பு உண்டாக எ-று. காட்சி அறிவுக்கும், அறிவு குடைதற்கும், குடைதல் வடிவந் தோன்றலுக்கும், அருட்கண் தோன்றல் குறியெதிர் தோன்றுதலுக்கும் காரணங்களாம். அச்சிவலிங்கத்தில் எழுந்தருளியிருக்கின்ற நாயகனை எனலுமாம். அன்பு தன் மனத்திற் றோன்ற வென்க. (22) தூம்புடைக் கையான் மொண்டு மஞ்சனத் தூநீ ராட்டித் தேம்புடை யொழுகப் பள்ளித் தாமமுந் தெரிந்து சாத்திப் பாம்புடைத் தாய வேணிப் பரனையர்ச் சிக்க வுள்ளத் தாம்புடை யறிந்த வெந்தை யானையை நோக்கிக் கூறும். (இ-ள்.) தூம்பு உடை கையில் மொண்டு - தொளையை யுடைய துதிக்கையினால் முகந்து, மஞ்சனத் தூநீர் ஆட்டி - திருமஞ்சனமாகிய தூயநீரால் ஆட்டி, தேம்புடை ஒழுக - தேன் புறத்தில் ஒழுக, பள்ளித் தாமமும் தெரிந்து சாத்தி - திருப்பள்ளித் தாமத்தையும் ஆராய்ந்து சாத்தி, பாம்பு உடைத்து ஆய வேணிப் பரனை - பாம்பினை அணியாக உடையதாகிய சடையினையுடைய இறைவனை, அர்ச்சிக்க - வழிபட, உள்ளத்து ஆம்புடை அறிந்த - உள்ளத்தின்கண் எழுந்த (அன்பின்) திரட்சியை உணர்ந்த, எந்தை - எம் தந்தையாகிய சோம சுந்தரக் கடவுள், ஆனையை நோக்கிக் கூறும் - யானையைப் பார்த்து அருளிச் செய்வான் எ-று. மொண்டு; முகந்து என்பதன் மரூஉ. தேன் தேமெனத் திரிந்தது. தெரிந்து - குற்றமற ஆராய்ந்து. புடை - பக்கம்; அன்பு; எனக் கொள்ளலுமாம். (23) வந்ததை யெவனீ வேண்டும் வரமெவ னுரைத்தி யென்னச் சிந்தையி லன்பு கூர்ந்த தெய்த வேழந் தாழ்ந்து முந்தையில் விளைவும் வந்த முறைமையு முறையாற் கூறி எந்தையை யடையைப் பெற்றேற் கினியொரு குறையுண் டாமோ. (இ-ள்.) நீ வந்தது எவன் - நீ வந்த காரணம் என்னை, வேண்டும் வரம் எவன் நீ விரும்புகின்ற வரம் யாது, உரைத்தி என்ன - கூறுவா யென்ன, சிந்தையில் அன்பு கூர்ந்த - உள்ளத்தில் அன்பு மிகுந்த, தெய்வத் வேழம் - தெய்வத் தன்மை பொருந்திய வெள்ளை யானை, தாழ்ந்து - வணங்கி, முந்தையில் விளைவும்- முற்பொழுதில் நிகழ்ந்த தனையும், வந்த முறைமையும் - வந்த தன்மையையும், முறையால் கூறி - முறைப்படச் சொல்லி, எந்தையை அடையப் பெற்றேற்கு - எம் தந்தையாகிய நின்னை அடையப்பெற்ற எனக்கு, இனி ஒரு குறை உண்டாமோ - மேல் ஒரு குறை உண்டாகுமோ (ஆகாது) எ-று. வந்தது - வந்த காரணம்; ஐ : சாரியை ; திரி சொல்லுமாம். எவன் வினாப்பெயர். முந்தையில் ; காலம் இடமாயிற்று. ஓகாரம்; எதிர்மறை. (24) என்பதா மாரம்1 பூண்ட வெந்தையிக் கரிக ளெட்டோ டொன்பதா யடிய னேனு முன்னடி பிரியா துன்றன் முன்பதா யிவ்வி மான முதுகுறச் சுமப்ப லென்றோர் அன்பதா யென்றென் னுள்ளத் தடுத்தலா லஃதே வேண்டும். (இ-ள்.) என்பு ஆம் ஆரம் பூண்ட எந்தை - என்பாகிய அணியைப் பூண்ட என் தந்தையே, இக்கரிகள் எட்டோடு - (விமானத்தைத் தாங்கும்) இவ் யானைகள் எட்டினோடு, அடியனேனும் ஒன்பது ஆய்அடியேனும் ஒன்பதாவது யானையாகி, உன் அடி பிரியாது - உனது திருவடியை நீங்காது, உன்றன் முன்பு ஆய் - நினது திருமுன் பாகி, இவ்விமானம் - இந்த விமானத்தை, முதுகு உற - முதுகிற் பொருந்த, சுமப்பல் என்று - சுமப்பேன் என்று, ஓர் அன்பு ஒன்று ஆய் - ஒப்பற்ற அன்பொன்றுண்டாகி, என் உள்ளத்து அடுத்தலால்- எனது நெஞ்சின் கண் பொருந்துதலால், அஃதே வேண்டும் - அங்ஙனம் சுமத்தலாகிய ஒன்றுமே எனக்கு வேண்டும்; (என்று) எ-று. என்பது முன்பது அன்பது என்பவற்றில் அது: பகுதிப் பொருள் விகுதிகள். என்பராவாரம் பூண்ட என்பது பாடமாயின் என்பையும் பாம்பையும் ஆரமாகப் பூண்ட வென்க. ஒன்பதாய் - ஒன்பதாவதாய். என் உள்ளத்து அன்பு - ஒன்று ஆய் அடுத்தலால் என இயைக்க. அன்பு - விருப்பம். என்று என ஒரு சொல் வருவிக்க. (25) இடையறா வன்பின் வேழ மிங்ஙனங் கூற விண்ணா டுடையவ னம்பான் மெய்யன் புடையவ னவனைத் தாங்கி அடைவதே நமக்கு வேண்டு மகமகிழ் வென்னாப் பின்னும் விடையவன் வரங்க ணல்கி விடைகொடுத் தருளி னானே. (இ-ள்.) இடையறா அன்பின் வேழம் - நீங்காத அன்பினை யுடைய அவ்வியானையானது, இங்ஙனம் கூற - இவ்வாறு வேண்ட, விண் நாடு உடையவன் - தேவ உலகத்தை உடையவனாகிய இந்திரன், நம்பால் மெய் அன்பு உடையவன் - நம்மிடம் உண்மையன் புடையவன் (ஆதலால்), அவனைத் தாங்கி அடைவதே - அவனைச் சுமந்து செல்வதே, நமக்கு வேண்டும் அகம் மகிழ்வு என்னா - நமக்கு வேண்டிய உள்ளக்களிப்பு என்று கூறி, விடையவன் பின்னும் வரங்கள் நல்கி - இடபவாகனத்தையுடைய இறைவன் பின்னரும் வேண்டியவரங்களைக்கொடுத்து, விடை கொடுத்தருளினான் - விடைகொடுத்தனுப்பினான் எ-று. அன்பினாற் கூற என இயைத்தலுமாம். நாம் விரும்பும் அகமகிழ்ச்சிக் குரியதென்க. (26) (எழுசீரடியாசிரிய விருத்தம்) விடைகொடு வணங்கி யேகும்வெள் ளானை மேற்றிசை யடைந்துதன் பெயரால் தடமுமற் றதன்பா லரனையுங் கணேசன் றன்னையுங் கண்டருச் சனைசெய் திடையறா வன்புந் தானுமங் கிருக்கு மெல்லையிச் செய்திகேட் டருள்கூர் கடவுளர் பெருமா னுழையரை விளித்தெங் களிற்றினைக் கொணர்கென விடுத்தான். (இ-ள்.) விடைகொடு வணங்கி ஏகும் வெள்ளானை - விடை பெற்று வணங்கிச் செல்லும் வெள்ளையானையானது, மேல் திசை அடைந்து - மேற்குத் திக்கினை யடைந்து, தன் பெயரால் - தனது பெய ரால், தடமும் - ஒர் பொய்கையினையும், அதன் பால் அரனையும் கணேசன் தன்னையும் கண்டு - அப்பொய்கையில் சிவபிரானையும் மூத்த பிள்ளையாரையும் பிரதிட்டை செய்து, அருச்சனை செய்து - அருச்சித்து, இடையறா அன்பும் தானும் அங்கு இருக்கும் எல்லை- நீங்காத அன்புந்தானுமாக அங்கிருக்கும் பொழுதில், இச்செய்தி கேட்டு - இச் செய்தியைக் கேள்வியுற்று, அருள்கூர் கடவுளர் பெருமான் - கருணைமிக்க தேவேந்திரன், உழையரை விளித்து - ஏவலாளரை அழைத்து, எம்களிற்றினைக் கொணர்க என விடுத்தான் - எமது யானையைக் கொண்டு வாருமென அனுப்பினான் எ-று. தடத்தையும் என உருபு விரிக்க. அன்பு ஓர் வடிவு கொண்டாற் போல வென்பார் ‘அன்புந்தானும்’ என்றார்; இங்ஙனம் விசேடணம் விசேடியத்துடன் சேர்த்தெண்ணப் படுதலை, “ சிந்தையிடை யறாவன்புந் திருமேனி தனிலசைவும் கந்தைமிகை யாங்கருத்துங் கையுழவா ரப்படையும் வந்திழிகண் ணீர்மழையும் வடிவிற்பொலி திருநீறும் அந்தமிலாத் திருவேடத் தரசுமெதிர் வந்தணைய” என்னும் திருத்தொண்டர்புராணச் செய்யுளானுமறிக. கொணர் கென; அகரம் தொகுத்தல். (27) வல்லைவந் தழைத்தார் தம்மைமுன் போக்கி வருவலென் றெழுந்துகீழ்த் திசையோர் எல்லைவந் தோரூர் தன்பெய ராற்கண்1 டிந்திரேச் சுரனென2 விறைவன் றொல்லைவண் பெயரா லொன்றுகண் டரனைத் தூயபூ சனைசெய்தங் கிருப்பக் கல்லைவன் சிறகு தடிந்தவ னின்னுங் களிறுவந் திலதெனப் பின்னும். (இ-ள்.) வல்லை வந்து அழைத்தார் தம்மை - விரைந்து வந்து அழைத்த வர்களை, வருவல் என்று - வருவேன் என்று கூறி, முன்போக்கி - முன்னே போகச் செய்து, எழுந்து கீழ்த்திசை ஓர் எல்லை வந்து - அவணின்றும் எழுந்து கிழக்குத் திக்கில் ஓர் இடத்தை எய்தி, ஓர் ஊர் தன்பெயரால் கண்டு - ஒரு ஊர் தனது பெயரால் அமைத்து, இறைவன் தொல்லை வண்பெயரால் - தன் தலைவனது பழமையான அழகிய பெயரால், இந்திரேச்சுரன் என ஒன்று கண்டு - இந்திரேச்சுரன் என்று ஓர் சிவலிங்க மமைத்து, அரனைத் தூய பூசனைசெய் அங்கு இருப்ப - அவ்விறைவனைத் தூய்மையான பூசனை செய்து கொண்டு அங்கேயே இருக்க, கல்லைவன் சிறகு தடிந்தவன் - மலைகளைச் சிறகின் கண் வெட்டியவனாகிய இந்திரன், இன்னும் களிறு வந்திலது எனப் பின்னும் - இன்னமும் யானை வரவில்லை என்று மீளவும் எ-று. வருவலென்று முன்போக்கி என மாற்றுக. மலையின் சிறகைத் தடிந்தவன் என்பது கருத்து; சிறகு தடிந்தவன் என்பதனை ஒரு சொல்லாக்கி இரண்டனுருபிற்கு முடிபாக்கலுமாம். (28) மனத்தினுங் கடிய தூதரை விடுப்ப வானடைந் திறைவனை வணங்கிப் புனத்தினுங் கடிய கல்லினும் பன்னாட்டு புன்கணோ யுறவரு சாபங் கனத்தினுங் கரிய கண்டனைக் கண்டு களைந்ததுங் கிளந்துதிக் கயத்தின் இனத்தினுங் கழிந்த தெய்வத வேழ மினிதுவீற் றிருந்தது மாதோ. (இ-ள்.) மனத்தினும் கடிய தூதரை விடுப்ப - மனத்தினைவிட விரைந்து செலவினையுடைய தூதர்களை அனுப்ப (அவர்களோடும்), வான் அடைந்து இறைவனை வணங்கி - விண்ணுலகை எய்தி இந்திரனை வணங்கி, புனத்தினும் கடிய கல்லினும் - காட்டிலும் வலிய மலைகளிலும், பல்நாள் - பலநாட்கள் வரை, புன்கண் நோய் உறவரு சாபம் - தன்ப நோயானது மிக வந்த சாபத்தினை (நுகர்ந்ததும்), கனத்தினும் கரிய கண்டனை - முகிலினுங் கரிய மிடற்றினையுடைய சோமசுந்தரக் கடவுளை, கண்டு - தரிசித்து, களைந்ததும் - (அச்சாபத்தைப்) போக்கியதும், கிளந்து - கூறி, திக்கயத்தின் இனத்தினும் - எண்டிசை யானைகளாகிய இனத்தினும், கழிந்த தெய்வத வேழம் - மிக்க தெய்வத்தன்மை பொருந்திய வெள்ளை யானையானது, இனிது வீற்றிருந்தது - இனிதாக வீற்றிருந்தது எ-று. தூதர் வந்து அழைக்க அவர்களோடும் என்பதனைச் சுருங்கச் சொல்லல் என்னும் அழகுபெறத் தொகுத்துக் கூறினார். புன்கணாகிய நோய் என்க. களைந்ததும் என்னும் எச்சவும்மையால் நுகர்ந்ததும் என்பது வருவிக்கப்பட்டது. இனி சாபத்தைக் களைந்ததும் பிறவும் என்னலு மாம். இனத்தில் பிறவற்றினுமென்க. கழிந்த - மிக்க. மாது ஓ;அசை. (29) குடவயி னயிரா வதப்பெருந் தீர்த்தங் குடைந்தயி ராவத கணேசக் கடவுளைத் தொழுதை ராவதேச் சுரத்துக் கடவுளைப் பணிந்தவர் சாபத் தொடர்பினும் பாவத் தொடர்பினும் கழிவர் சுராதிபன் களிறுசென் னெறிபோய் இடர்கெட வையை படிந்துதென் கரையி லிந்திரேச் சுரனடி பணிவார். (இ-ள்.) குடவயின் - மேற்குத் திசையிலுள்ள, அயிராவதப் பெருந் தீர்த்தம் குடைந்து - பெருமை பொருந்திய அயிராவத தீர்த்தத்தில் நீராடி, அயிராவத கணேசக் கடவுளைத் தொழுது - அயிராவத விநாயகக் கடவுளை வணங்கி, அயிராவ தேச்சுரத்துக் கடவுளைப் பணிந்தவர் - அயிராவதேச்சுரப் பெருமானைத் தொழு தவர்கள், சாபத் தொடர்ச்சியினின்றும், பாவத் தொடர்பினும் - தீவினைத் தொடர்ச்சியி னின்றும், கழிவர் - நீங்குவர்; சுராதிபன் களிறு - தேவேந்திரனது வெள்ளையானது, செல் நெறிபோய் - சென்ற வழியிலே சென்று, இடர்கெட வையை படிந்து - துன்பம் ஒழிய வையையாற்றில் நீராடி, தென்கரையில் இந்திரேச்சுரன் அடிபணிவார் - அதன் தென்கரையி லெழுந்தருளியிருக்கும் இந்திரேச்சுரனுடைய திருவடிகளை வணங்குபவர்கள் எ-று. பணிவார் என்பது வரும்பாட்டுட னியையும். (30) (அறுசீரடியாசிரிய விருத்தம்) இம்மையி லறமுன் மூன்றா லெய்திய பயனை யெய்தி அம்மையின் மகவா னீரே ழரும்பத மளவும் வானில் வெம்மையில் போக மூழ்கி வெறுப்புவந் தடைய வுள்ளச் செம்மையில் விளைபே ரின்பச் சிவகதிச் செல்வ ராவார். (இ-ள்.) இம்மையில் - இப்பிறவியில்,அறம் முன் மூன்றால் எய்திய பயனை எய்தி - அற முதலிய மூன்றானும் வரும்பயனை நுகர்ந்து, அம்மையில் - மறுமையில், ஈர் ஏழ் மகவான் அரும்பதம் அளவும் - பதினான்கு இந்திரர்களின் அரிய காலம் வரையும், வெம்மை இல் போகம் மூழ்கி - வெப்பமில்லாத (குளிர்ந்த) போகத்தில் திளைத்து, வெறுப்பு வந்து அடைய - (பின் அதில்) உவர்ப்புத் தோன்ற, உள்ளச் செம்மையில் விளை - மனத்தூய்மையில் விளைகின்ற, பேர் இன்பச் சிவகதிச் செல்வர் ஆவார் - பேரின்பத்தை யளிக்கும் பரமுத்தியாகிய செல்வததை யுடையவராவார் எ-று. மூன்று - அறம் பொருள் இன்பம் என்பன. பதினான்கு இந்திரப் பட்டங்காறும் இம்மை மறுமை யின்பங்களில் உவர்ப்புண்டாக. உள்ளச் செம்மை - இருவினையொப்பு முதலியன. (31) ஆகச் செய்யுள் - 470. திருநகரங்கண்ட படலம் (கலிநிலைத்துறை) தான வாறிழி புகர்முகத் தடுகரி சாபம் போன வாறுரை செய்து மேற் புதுமதி முடிமேல் வான வாறினன் கடம்பமா வனமுது நகரம் ஆன வாறது தனைச்சிறி தறிந்தவா றறைவாம். (இ-ள்.) தான ஆறு இழி - மதமாகிய ஆறு ஒழுகுகின்ற, புகர் முகத்து அடுகரி - புள்ளிகளையுடைய முகத்தினையுடைய (பகைவர் களைக்) கொல்லும் வெள்ளையானையினது, சாபம் போனவாறு உரை செய்தும் - சாபம் நீங்கிய தன்மையைக் கூறினோம்; மேல் - இனி, புது மதி முடிமேல் - பிறை மதியை அணிந்த திருமுடியின் கண், வான ஆறினன் - கங்கையாற்றினையுடைய இறைவனது, கடம்ப மா வனம் - பெரிய கடம்பவன மானது, முது நகரம் ஆனவா றதுதனை - மிக்க சிறப்பினையுடைய நகரமான தன்மையை, அறிந்தவாறு சிறிது அறைவாம் - தெரிந்தபடி சிறிது கூறுவாம் எ-று. உரைசெய்தும் - உரைத்தாம். பிறை புதுவதாகத் தோன்றுதலின் அதனைப் புதுமதி யென்றார். ஆற்றினன் எனற்பாலது தொக்கது. முதுமை - சிறப்பு மிகுதியை யுணர்த்தும். அது: பகுதிப் பொருள் விகுதி. (1) இன்ன ரம்புள ரேழிசை யெழான்மிடற் றளிகள் கின்ன ரம்பயில் கடம்பமா வனத்தினின் கீழ்சார்த் தென்னர் சேகர னெனுங்குல சேகர னுலக மன்னர் சேகர னரசுசெய் திருப்பது மணவூர். (இ-ள்.) இன் நரம்பு உளர் - இனிய நரம்புகளைத் தடவுதலினுண்டா கின்ற, ஏழ் இசை - ஏழிசைபோலும், மிடற்று ஏழால் அளிகள் - கண்டத்தினின்று முண்டாகும் ஓசையினையுடைய வண்டுகள், கின்னரம் பயில் - இசைபாடுகின்ற, மா கடம்ப வனத்தினின் கீழ்சார்- பெரிய கடம்பவனத்தின் கீழ்ப்பக்கத்தில், உலக மன்னர் சேகரன் - உலகின்கண் உள்ள மன்னர்களுக்கு முடிபோல்பவனும், தென்னர் சேகரன் - பாண்டிய மரபிற்கு மகுடம் என்று சொல்லப்படுபவனு மாகிய, குலசேகரன் அரசுசெய்து இருப்பது மணவூர் - குலசேகர பாண்டியன் ஆட்சி புரிந்திருப்பதற் கிடமாயுள்ளது மணவூராகும் எ-று. எழால் மிடற்றெழு மொலி; யாழெனக்கொண்டு, எழால் நரம்புளர் என இயைத்தலு மொன்று. கின்னரம் - யாழும், இசைபாடும் ஓர் பறவையும்; “ யாழின் பெயருநீர்ப் பறவையுங் கின்னரம்” என்பது பிங்கலம்; இசைக்கு ஆகுபெயர். இன்னுருபிற்கு இன்சாரியை சிறுபான்மை வருமெனக் கொள்க. இது மணலூர் எனப்பழைய திருவிளையாடலிலும், மணலூர் புரம் என வடமொழி வியாச பாரதத்தும் கூறப்பட்டுளது. (2) குலவு மப்பெரும் பதியிளங் கோக்களி லொருவன் நிலவு மாநிதி போலருச் சனைமுத னியதி பலவு மாஞ்சிவ தருமமுந் தேடுவான் பரன்பாற் றலைமை சான்றமெய் யன்பினான் றனஞ்சய னென்பான். (இ-ள்.) குலவும் - விளங்காநின்ற, அப் பெரும்பதி இளங்கோக் களில் ஒருவன் - அந்தப் பெரிய நகரத்திலுள்ள வணிகருள் ஒருவன், நிலவு மா நிதிபோல் - விளங்குகின்ற பெரிய பொருளை யீட்டுவது போலவே, அருச்சனைமுதல் நியதி பலவும் ஆம் - அருச்சனை முதலிய கடமைகள் பலவுமாகிய, சிவதருமமும் தேடுவான் - சிவ புண்ணியங்களையும் ஈட்டுவான்; பரன்பால் - இறைவனிடத்து, தலைமைசான்ற மெய் அன்பினான் - தலைமைபொருந்திய உண்மை யன்பை உடையவன்; தனஞ்சயன் என்பான் - தனஞ்சயன் என்று சொல்லப்படுவான் எ-று. இளங்கோக்கள் - வைசியர் பொதுப்பெயர். ஒருவன்; எழுவாய். தேடுவான் முதலிய பயனிலைகள்; உள்ள என வருவித்து முடித்தலுமாம். (3) செல்வ மாநக ரிருந்துமேற் றிசைப்புலஞ் சென்று மல்லல் வாணிகஞ் செய்துதன் வளம்பதி மீள்வான் தொல்லை யேழ்பவக் கடற்கரை தோற்றுவித் தடியார் அல்ல றீர்ப்பவன் கடம்பமா வனம்புகு மளவில். (இ-ள்.) செல்வம் மாநகர் இருந்து - செல்வம் நிறைந்த பெரிய (தன்) நகரத்தினின்றும், மேல்திசைப் புலம் சென்று - மேற்றிசை யிடங்களிற் சென்று, மல்லல் வாணிகம் செய்து - செல்வமிகும் வாணிபம் புரிந்து, தன்வளம் பதி மீள்வான் - தனது வளப்பமிக்க நகரத்திற்கு மீண்டு வருகின்றவன், தொல்லை ஏழ்பவக் கடல்கரை தோற்றுவித்து - தொன்றுதொட்டு வரும் எழு பிறப்பாகிய கடலின் கரையைத் தோன்றச் செய்து, அடியார் அல்லல் தீர்ப்பவன் - அடியார்களின் பிறவித் துன்பத்தைப் போக்குவோனாகிய சோம சுந்தரக் கடவுள் எழுந்தருளிய, மா கடம்பவனம் புகும் அளவில் பெரிய கடம்பவனத்திற் புகுகின்ற பொழுதில் எ-று. மல்லல் வாணிகமாவது, கொள்வதூஉ மிகை கொளாது கொடு பதூஉங் குறைபடாது தமவும் பிறவு மொப்ப நாடிச் செய்தலால் ஊதியம் மிகும் வாணமாம். ஏழென்பதனைக் கடற்குங் கூட்டுக. ஏழ் பிறப்பும் ஏழ்கடலும் முன் உரைக்கப்பட்டன. கரையென்றது முத்தியை; ஏகதேச வுருவகம். (4) இரவி கண்மறைந் தேழ்பரி யிரதமுந் தானும் உரவு நீர்க்கருங் கடலில்வீழ்ந் தொளித்தனனாக இரவு நீண்மயங்1 கிருள்வயிற் றமியனாய் மெலியும் அரவு நீர்ச்சடை யண்ணலுக் கன்பினோ னங்கண். (இ-ள்.) இரவி - சூரியன், கண் மறைந்து - கண்ணுக்குத் தோன்றாமல், ஏழ் பரி இரதமும் தானும் - ஏழு குதிரைகள் பூட்டிய தேரும்தானும், உரவு நீர்க்கருங்கடலில் - மிக்க நீரினையுடைய கரிய கடலின் கண், வீழ்ந்து ஒளித்தனன் ஆக - விழுந்து மறைந்தானாக, இரவு - இரவினது, நீள் - நீண்ட, மயங்கு - மயங்குதற்குக் காரணமா யுள்ள, இருள்வயின் - இருளினிடத்து, தமியனாய் மெலியும் - ஒருவனாய் வருந்துகின்ற, அரவு நீர்ச்சடை அண்ணலுக்கு அன்பினோன் - பாம்பையும் கங்கையையு முடைய சடையினையுடைய இறைவனுக்கு அன்புடையவனாகிய வணிகன், அங்கண் - அவ்விடத்தில் எ-று. கண் மறைந்து; ஒரு சொல்லுமாம். இரதமும் தானுமெனத்திணை விரவிச் சிறப்பினால் ஒளித்தனனென உயர்திணை முடிபேற்றது; (5) வாங்கு நான்மருப் பேந்திய மதமலை யெருத்தந் தாங்கி யாயிரங் கரங்களாற் றடவியெண் டிசையுந் தூங்கு காரிரு டுத்துசெஞ் சுடரெனச் சூழ்போய் வீங்கு காரிரு ளொதுக்கிய விமானநேர் கண்டான். (இ-ள்.) வாங்கு நால் மருப்பு ஏந்திய - வளைந்து நான்கு கொம்புகளையுடைய, மதமலை எருத்தம் தாங்கி - எட்டு யானை களின் பிடர்களால் தாங்கப்பெற்று, ஆயிரம் கரங்களால் தடவி - ஆயிரங் கிரணங்களாலும் துருவி, எண் திசையும் தூங்கு - எட்டுத் திக்குகளிலும் தங்கியிராநின்ற, கார் இருள் துரத்து செஞ்சுடர் என - கரிய இருளை ஓட்டுகின்ற செஞ்ஞாயிறு போல, சூழ்போய் - திசைதோறும் சுற்றிலும் சென்று வீங்கு கார் இருள் - நிறைந்த கரிய இருளை, ஒதுக்கிய -போக்கிய, விமானம் நேர் கண்டான் - விமானத்தை நேரிற் பார்த்தான் எ-று. தாங்கி; செயப்பாட்டு வினை. தாங்கி ஒதுக்கிய விமானம் என வியையும். கரம் - கிரணம், கை. தூங்கு - செறிந்த வென்னலுமாம். (6) அடுத்த ணைந்தன னவிர்சுடர் விமானமீ தமர்ந்த கடுத்த தும்பிய கண்டனைக் கண்டுதாழ்ந் துவகை மடுத்த நெஞ்சினா னங்ஙனம் வைகிருள் கழிப்பான் எடுத்த சிந்தையி னிருந்தன னிருக்குமவ் விருள்வாய். (இ-ள்.) அடுத்து அணைந்தனன் - பக்கத்தில் நெருங்கி, அவிர் சுடர் விமானம் மீது அமர்ந்த - விளங்குகின்ற ஒளியினையுடைய விமானத்தின்மேல் எழுந்தருளிய, கடு ததும்பியகண்டனைக் கண்டு- நஞ்சக்கறை மிக்கு விளக்கும் திருமிடற்றினையுடைய இறைவனைத் தரிசித்து, தாழ்ந்து - வணங்கி, உவகை மடுத்த நெஞ்சினான் - களிப்பு நிறைந்த உள்ளத்தை யுடையவனாய், வைகு இருள் - தங்கிய இருளை, அங்ஙனம் கழிப்பான் எடுத்த சிந்தையின் - அவ்வகையே (தரிசித்துக்) கழிக்கு மாறு கிளர்ந்த உள்ளத்தோடு, இருந்தனன் - இருந்தான், இருக்கும் அ இருள்வாய் (அங்ஙனம்) இருக்கப்பெற்ற அந்த இருட்பொழுதில் எ-று. சிந்தையின் - சிந்தையோடு. (7) சோம வாரமன் றாதலாற் சுரர்களங் கெய்தி வாம மேகலை மலைமக டலைமகன் மலர்ந்த காமர் சேவடி பணிந்தவன் கங்குல்போற் கருதி யாம நான்கினு மருச்சனை யின்புறப் புரிவார். (இ-ள்.) அன்று சோமவாரம் ஆதலால் - அந்த நாள் திங்கட் கிழமை ஆகலின்; அங்கு சுரர்கள் எய்தி - அங்கே தேவர்கள் வந்து, வாமம் மேகலை மலைமகள் தலைமகன் - ஒளியினையுடைய மேகலையை அணிந்த பார்ப்பதியின் தலைவனாகிய சிவபெரு மானுடைய, மலர்ந்தகாமர் சேவடி பணிந்து - மலர்ந்த அழகிய சிவந்ததிருவடிகளை வணங்கி, அவன் கங்குல் போல் கருதி - அவன் இரவாகிய சிவநிசிபோல எண்ணி, யாமம் நான்கினும் - நான்கு யாமங்களிலும், இன்பு உற அருச்சனை புரிவார் - இன்பம் பொருந்த அருச்சிப்பாராயினார் எ-று. வாமம் - அழகுமாம்; வாமமேகலை மங்கையர் என்றார் பிறரும். தலைமகன் - மணாளன். காமர் - விருப்பம் பொருந்திய வென்றுமாம்; இதற்குக் காமம் மருவென்பன காமர் எனத் தொக்கு ஒரு சொல்லாயின வெனக் கொள்க. அவன் கங்குல் - சிவராத்திரி. (8) அண்டர் வந்தது மருச்சனை புரிவது மனைத்துந் தொண்ட ரன்பினுக் கெளியவன் சுரர்தொழக் கறுத்த கண்ட னின்னருட் கண்ணினாற் கண்டன னுதலிற் புண்ட ரம்பயி லன்புடைப் புண்ணிய வணிகன். (இ-ள்.) அண்டர் வந்ததும் - அமரர்கள் வந்ததும், அருச்சனை புரிவதும் அனைத்தும் - அருச்சனை செய்வதுமாகிய எல்லாச் செயல் களையும், தொண்டர் அன்பினுக்கு எளியவன் - அடியார்களின் அன்புக்கு எளிவருபவனும், சுரர் தொழக் கறுத்த கண்டன் - தேவர்கள் வணங்கி முறையிடக் கறுத்தருளிய திருமிடற்றை யுடையவனுமாகிய இறைவனுடைய, இன் அருள் கண்ணினால் - இனிய அருட் பார்வையால், நுதலில் புண்டரம் பயில் - நெற்றியில் மூன்று கீற்றாகத் தங்கிய திருநீற்றினையுடைய, அன்புடைப் புண்ணிய வணிகன் கண்டனன் - அன்பு நிறைந்த அறத்தினை யுடைய வணிகனாகிய தனஞ்சயன் பார்த்தான் எ-று. நஞ்சுண்ட வென்பதனைக் கறுத்தவெனக் காரியத்தாற் கூறினார். வணிகன் அனைத்தும் கண்டனன் என வியையும். அருளன்றித் தன் கண்ணினாற் காணலாகாமையின் அருட்கண்ணினாற் கண்டனன் என்றார். (9) நான மென்பனி நறும்புன னாயகன் பூசைக் கான நல்விரை வருக்கமு மமரர்கைக் கொடுத்து ஞான வெண்மதிச் சடையவன் கோயிலின் ஞாங்கர்த் தான மர்ந்தருச் சனைசெய்வான் றங்கணா யகனை. (இ-ள்.) மெல் நானம் - மெல்லிய கத்தூரியையும், நறும் பனி புனல் - மணமுடைய பனிநீரையும், நாயகன் பூசைக்கு ஆன நல் விரை வருக்கமும் - இறைவன் பூசைக்குரிய நல்ல கந்தவருக்கங் களையும், அமர'fa கைக்கொடுத்து - தேவ'faகள் கையில் கொடுத்து, ஞானம் - ஞான வடிவாகிய, வெண்மதிச் சடையவன் கோயிலின் ஞாங்க'fa - வெள்ளிய சந்திரனை யணிந்த சடையினை'e7¥டைய சோமசுந்தரக் கடவுளின் விமானத்தின் திருமுன், தான் அம'faந்து - தானிருந்து, தங்கள் நாயகனை அருச்சனை செய்வாள் - தங்கள் இறைவனை அருச்சனை புரிவிப்பானாயினன் எ - று. நானம், புனல் என்பவற்றில் எண்ணும்மை விரிக்க. பனிநீ'fa பன்னீ'fa என இக்காலத்து வழங்கும், ஞாங்க'fa - முன் செய்வித்தலைச் செய்தலாகக் கூறினா'fa. இங்ஙனம் வழங்குமாறுங் காண்க. அவள் குடி முழுதையும் உளப்படுத்தித் தங்கணாயக னென்றா'fa. (10) வள்ள றன்னைமெய் யன்பினா லருச்சிசெய் வானோ'fa உள்ள வல்வினை யீட்டமுங் கங்குலு மொதுங்கக் கள்ள மில்லவன் யாரையுங் கண்டிலன் கண்டான் தள்ள ருஞ்சுட'fa விமானமேற் றனித்துறை தனியை. (இ-ள்.) வள்ளல் தன்னை - சோமசுந்தரக் கடவுளை, மெய் அன்பினால் - உண்மை யன்பினால், அருச்சிசெய் வானோர் (ஈட்டமும்)- அருச்சித்த தேவர்களின் கூட்டமும், உள்ள வல்வினை ஈட்டமும் - தன் மனத்தைப் பற்றிய வலிய வினைக் கூட்டமும், கங்குலும் ஒதுங்க - இரவும் நீங்க, கள்ளம் இல்லவன் - வஞ்சனையில்லாதவனாகிய வணிகன், யாரையும் கண்டிலன் - ஒருவரையுங் காணாதவனாகி, தள் அரும் சுடர் விமானம் மேல் - நீங்காத ஒளியையுடைய விமானத்தின் கண், தனித்து உறைதனியைக் கண்டான் - தனித்து எழுந்தருளி யிருக்கும் சொக்கலிங்கப் பெருமானையே கண்டான் எ-று. அருச்சி, முதனிலைத் தொழிற் பெயர். ஈட்டமும் என்பது வானோர் என்பதனோடுங் கூட்டப்பட்டது; ஓர் என்பதனை அசை யாக்கிச் செய்வானது வினை யீட்டமும் எனலுமாம். அனாதியே யுள்ள வல்வினை என்றுரைத்தலுமாம். கண்டிலன்; முற்றெச்சம். (11) ஆழ்ந்த சிந்தைய னதிசய மடைந்துசே வடிக்கீழ்த் தாழ்ந்தெ ழுந்திரு கைகளுந் தலைமிசைக் கூப்பிச் சூழ்ந்து தன்பதிக் கேகுவா னொருதலை துணிந்து வாழ்ந்த வன்பினான் விடைகொடு வழிக்கொடு வந்தான். (இ-ள்.) ஆழ்ந்த சிந்தையன் - (அன்பில்) அழுந்திய சிந்தையை யுடைய வணிகன், அதிசயம் அடைந்து - வியப்புற்று, சேவடிக்கீழ் தாழ்ந்தெழுந்து - சிவந்த திருவடிக்கீழ் விழுந்து வணங்கி எழுந்து, இருகைகளும் தலைமிசைக் கூப்பி - இரண்டு கைகளையும் தலையின்மேல் குவித்து, சூழ்ந்து - வலம் வந்து, தன் பதிக்கு ஏகுவான் ஒருதலை துணிந்து - தன் நகருக்குப் போக ஒருவாறு துணிந்து, வாழ்ந்த அன்பினான் - அன்பாகிய வாழ்க்கையை யுடையவன், விடை கொடு - விடை பெற்று, வழிக்கொடு வந்தான் - வழிக் கொண்டு வந்தான் எ-று. சூழ்ந்து - ஆலோசித்து என்றுமாம். ஒருதலை துணிந்து என்றது பிரிந்து செல்லுதலருமையால். வாழ்ந்த அன்பினான் - அவனெனச் சுட்டாகக் கொள்க; விகுதி பிரித்துக் கூட்டப்பட்டது. (12) முக்க டம்படு களிற்றினான் முகிறவழ் கோயில் புக்க டங்கலர் சிங்கமன் னானெதிர் புகல்வான் திக்க டங்கலுங் கடந்தவெந் திகிரியாய் நெருநல் அக்க டம்பமா வனத்திலோ ரதிசயங் கண்டேன். (இ-ள்.) முக்கடம்படு களிற்றினான் - மூன்று மதங்களை யுடைய யானைனையுடைய பாண்டி மன்னனது, முகில் தவழ் கோயில் புக்கு - மேகந் தவழுங் கோயிலை அடைந்து, அடங்கலர் சிங்கம் அன்னான் எதிர் - பகைவராகிய யானைகளுக்குச் சிங்கம் போல்பவனது எதிரே நின்று, புகல்வான் - கூறுவான், திக்கு அடங்கலும் கடந்த - எல்லாத் திசைகளையும் வென்ற, வெம் திகிரியாய் - வெவ்விய சக்கரத்தையுடையயவனே, நெருநல் - நேற்று, அக் கடம்ப மா வனத்தில் ஒர் அதிசயம் கண்டேன் - அந்தப் பெரிய கடம்பவளத் தின்கண் ஓர் அதிசயத்தைப் பார்த்தேன் எ-று. திகிரி - ஆணை; சக்கரப்படையுமாம். சுட்டு மேன்மையை உணர்த்துவது. (13) வல்லை வாணிகஞ் செய்துநான் வருவழி மேலைக் கல்ல டைந்தது வெங்கதிர் கங்குலும் பிறப்பும் எல்லை காணிய கண்டன னிரவிமண் டலம்போல் அல்ல டுஞ்சுடர் விமானமு மதிற்சிவக் குறியும். (இ-ள்.) நான் வாணிகம் செய்து வல்லை வரு வழி நான் வியாபாரம் செய்து விரைந்து வரும் பொழுது, வெங்கதிர் மேலைக்கல் அடைந்தது - வெப்பத்தையுடைய ஞாயிறு மேற்கிலுள்ள மலையை அடைந்தது; கங்குலும் பிறப்பும் எல்லை காணிய - இரவின் எல்லையையும் பிறப்பின் எல்லையையுங் காணுமாறு, இரவி மண்டலம் போல் - சூரியமண்டலம் போல, அல் அடுவிரி சுடர் விமானமும் - இருளைக் கொல்லும் ஒளியினையுடைய விமானத்தையும், அதில் சிவக்குறியும் கண்டனன் - அவ்விமானத்தின்கண் உள்ள சிவலிங்கத்தையும் பார்த்தேன் எ-று. மேலைக்கல் - அத்தகிரி. காணிய; செய்யிய வென்னும் வினையெச்சம். கங்குல் எல்லை காணிய கண்டே னென்றது இரவு முடியுங் காறும் இருந்து கண்டே னென்றபடி. இனிப் பிறவியில்லை யென்பான் பிறப்பு எல்லை காணிய கண்டேன் என்றான். அன் விகுதி தன்மையில் வந்தது. அடுதல் - ஈண்டு மாய்த்தல். (14) மாவ லம்புதார் மணிமுடிக் கடவுளர் வந்தத் தேவ தேவனை யிரவெலா மருச்சனை செய்து போவ தாயினார் யானுமப் பொன்னெடுங் கோயின் மேவு மீசனை விடை கொடு மீண்டன னென்றான். (இ-ள்.) மா அலம்பு தார்- வண்டுகள் ஒலிக்கும் மாலையை அணிந்த, மணிமுடிக் கடவுளர் வந்து - மணிகள் அழுத்திய முடிகளையுடைய தேவர்கள் சோமசுந்தரக் கடவுளை, இரவு எலாம் அருச்சனை செய்து போவது ஆயினார் - இரவு முழுதும் அருச்சித்துப் போனார்கள்; யானும் - நானும், அ பொன் நெடுங்கோயில் மேவும் ஈசனை - அந்தப் பொன்னாலாகிய நீண்ட விமானத்தில் எழுந் தருளிய இறைவனிடத்து, விடைகொடு மீண்டனன் என்றான் - விடை பெற்றுக்கொண்டு வந்தேன் என்று கூறினான் எ-று. (15) மூளு மன்பினான் மொழிந்திட முக்கணெம் பெருமான் தாளு மஞ்சலி கரங்களுந் தலையில்வைத் துள்ளம் நீளு மன்புமற் புதமுமே நிரம்பநீர் ஞாலம் ஆளு மன்னவ னிருந்தனன் போயினா னருக்கன். (இ-ள்.) மூளும் அன்பினான் மொழிந்திட - மேன் மேல் வளரும் அன்பினையுடைய தனஞ்சயன் கூற, நீர் ஞாலம் ஆளும் மன்னவன் - கடல் சூழ்ந்த உலகினை ஆளுகின்ற குலசேகர பாண்டியன், முக்கண் எம்பெருமான் தாளும் - மூன்று கண்களையுடைய எம் பெருமானாகிய சோம சுந்தரக் கடவுளின் திருவடிகளையும், அங்சலி கரங்களும் - குவித்த கைகளையும், தலையில் வைத்து - சென்னியில் வைத்து, உள்ளம் - உள்ளத்தில், நீளும் ஓங்குகின்ற, அன்பும் அற்புதமுமே நிரம்ப - அன்பும் அதிசயமுமே நிறைய, இருந்தனன் - இருந்தான்; அருக்கன் போயினான் - சூரியன் மறைந்தான் எ-று. தாளினைக் தலை வைத்தல் பாவனையால். அஞ்சலித்த கரமென விரியும்; வினைத்தொகை. பிறிதோ ரெண்ணமுமின்றி யென்பார், அன்பு மற்புதமுமே நிரம்ப வென்றார். நீர்; கடலுக்கு ஆகுபெயர். (16) ஈட்டு வார்வினை யொத்தபோ திருண்மலங் கருக வாட்டு வாரவர் சென்னிமேன் மலரடிக் கமலஞ் சூட்டு வார்மறை கடந்ததந் தொல்லுரு விளங்கக் காட்டு வாரொரு சித்தராய்த் தோன்றினார் கனவில். (இ-ள்.) ஈட்டுவார் வினை ஒத்தபோது - வினைகளை ஈட்டு கின்றவர்களின் வினை ஒப்புவந்தபோது, இருள் மலம் கருக வாட்டுவார் - (அவர்கள்) ஆணவ மலங் கருகும்படி வாட்டி, அவர் சென்னிமேல் மலர் அடிக்கமலம் சூட்டுவார் - அவர் தலையின்மீது திருவடித்தாமரை மலரைச் சூட்டி, மறைகடந்த தம் தொல் உரு விளங்கக் காட்டுவார் - வேதங்களாலறியப்படாத தமது உண்மை வடிவை விளக்கமாகக் காட்டுகின்ற இறைவர், ஒரு சித்தராய் கனவில் தோன்றினார் - ஒரு சித்தராகி அப்பாண்டியனது கனவின் கண் தோன்றினார் எ-று. வினைகள் உயிர்களால் ஈட்டப்படுதலின் ஈட்டுவார் என்றார்; ஈட்டப்பட்ட மிக்கவினை யென்னலுமாம். வினை யொத்தல் - நல்வினைப் பயனையும் விருப்பு வெறுப்பில்லாமை. இருள் மலம் - ஆணவமலம். கருக வாட்டுதல் - வறுத்த வித்துப்போல் வலிகெடச் செய்தல். இருவினை யொப்புவந்த காலத்தில் இறைவனே ஆசானா யெழுந்தருளிப்பாச நீக்கஞ் செய்து திருவடி சூட்டித் தமதுண்மை யுருவைக் காட்டி யருளுவரென முறையாற் கூறினர். வாட்டுவார், சூட்டுவார் என்பன எச்சங்கள். காட்டுவார்; பெயர். (17) வடிகொள் வேலினாய் கடம்பமா வனத்தினைத் திருந்தக் கடிகொள் காடகழ்ந் தணிநகர் காண்கென வுணர்த்தி அடிக ளேகினார் கவுரிய ராண்டகை கங்குல் விடியும் வேலைகண் விழித்தனன் பரிதியும் விழித்தான். (இ-ள்.) வடிகொள் வேலினாய் - கூர்மையைக் கொண்ட வேற் படையை யுடையவனே, காடு அகழ்ந்து - காட்டினை அழித்து, மா கடம்ப வனத்தினை - பெரிய கடம்ப வனத்தை, திருந்த - திருத்தமாக, கடிகொள் - காவலைக் கொண்ட, அணிநகர் காண்க என - அழகிய நகராகுமாறு செய்வாய் என்று, உணர்த்தி - அறிவித்து, அடிகள் ஏகினார் - சோமசுந்தரக் கடவுள் மறைந்தார்; கவுரியர் ஆண்டகை - பாண்டியர் மரபிலுத்த ஆண்தன்மை மிக்க குலசேகரன், கங்குல் விடியும் வேலை கண் விழித்தனன் - இரவு புலரும் வரையும் உறங்காதவனாயினான்; பரிதியும் விழித்தான் - சூரியனும் உதயமானான் எ-று. வடிகொள் - வடித்தலைகொண்ட எனலுமாம். அகழ்தல் - வேரு உன் போக்குதல். காண்கென; அகரந் தொகுத்தல். வேலையு மென்னும் உம்மை தொக்கது; விடியும் பொழுதில் துயிலொழிந்தான் என்னில் கனவும் அப்பொழுதே நிகழ்ந்த தென்க. சூரியன் உதித்தா னென்பதனை விழித்தானென்றார்; இதனைக் குணவணி யென்பர். (18) கனவிற் றீர்ந்தவ னியதியின் கடன்முடித் தமைச்சர் சினவிற் றீர்ந்தமா தவர்க்குந்தன் கனாத்திறஞ் செப்பி நனவிற் கேட்டதுங் கனவினிற் கண்டது நயப்ப வினவித் தேர்ந்துகொண் டெழுந்தனன் மேற்றிசைச் செல்வான். (இ-ள்.) கனவில் தீர்ந்தவன் - கனவினின்று நீங்கிவிழித்திருந்த பாண்டியன், நியதியின் கடன் முடித்து - செய்தற்குரிய நாட் கடமை களை முடித்து, அமைச்சர் - மந்திரிகட்கும், சினவில் தீர்ந்த மாத வர்க்கும் - வெகுளுதலினின்று நீங்கிய முனிவர்கட்கும், தன் கனாத் திறம் செப்பி - தனது கனவின் வகையைக் கூறி, நனவில் கேட்டதும் - பகலில் வணிகன்பாற் கேட்டதையும்; கனவின் கண்டதும் இரவில் கனவிற் கண்டதையும், நயப்ப வினவி தேர்ந்துகொண்டு - விருப்ப முற உசாவித் தெளிந்து, எழுந்தனன் மேல்திசை செல்வான் - புறப்பட்டு மேற்குத் திசைக்கண் செல்வானாயினான் எ-று. நியதியின் - இன்; சாரியை. அமைச்சர்க்கும் என விரிக்க. சினவு - சினத்தல்; தொழிற் பெயர். பயனை வினவி யென்க. (19) அமைச்ச ரோடுமந் நீபமா வனம்புகுந் தம்பொன் சமைச்ச விழ்ந்த பொற் றாமரைத் தடம்படிந் தொளிவிட் டிமைச்ச லர்ந்தபொன் விமானமீ தினிதுவீற் றிருந்தோர் தமைச்ச ரண்பணிந் தஞ்சலி தலையின்மேன் முகிழ்த்தான். (இ-ள்.) அமைச்சரோடும் - மந்திரிகளோடும், அ நீபம் மாவனம் புகுந்து - பெரிய அக் கடம்பவனத்தினுள் நுழைந்து, அம்பொன் சமைச்சு - அழகிய பொன்னாலியற்றப்பட்டன போலும், அவிழ்ந்த - (மலர்கள்) மலர்ந்த, பொற்றாமரைத் தடம் படிந்து - பொற்றாமரை வாவியில் மூழ்கி, ஒளிவிட்டு - ஒளிவீசி, இமைச்சு அலர்ந்த விளங்கிப் பரந்த, பொன் விமான மீது - பொன்னாலாகிய விமானத்தின் கண், இனிது வீற்றிருந்தோர் சரண்தமை - இனிதாக வீற்றிருக்கும் சோமசுந்தரக் கடவுளின் திருவடிகளை, பணிந்து - வணங்கி, அஞ்சலி தலையின்மேல் முகிழ்த்தான் - அஞ்சலியாகக் கைகளைத் தலையின்மீது கூப்பினான். எ-று. சமைச்சு - சமைக்கப்பட்டாற் போலும். சமைச்சு இமைச்சு என்பவற்றில் தகரத்திற்குச் சகரம் போலி. சரண்தமை என மாற்றுக. சரண்புகுந்து பணிந்து என்னலுமாம். (20) அன்பு பின்றள்ள முன்புவந் தருட்கணீர்த் தேக1 என்பு நெக்கிட வேகிவீழ்ந் திணையடிக் கமலம் பொன் புனைந்ததார் மெளலியிற் புனைந்தெழுந் திறைவன் முன்பு நின்றுசொற் பதங்களாற் றோத்திர மொழிவான். (இ-ள்.) அன்பு பின் தள்ள - அன்பானது பின் நின்று தள்ளவும், அருள் கண் - (இறைவன்) அருட்பார்வையானது, முன்பு வந்து ஈர்த்து ஏக - முன்னே வந்து இழுத்துச் செல்லவும், என்பு நெக்கிட - எலும்புகள் கரைந்துருகுமாறு, ஏகி - சென்று, வீழ்ந்து - கீழே விழுந்து, இணை அடிக்கமலம் - இரண்டு திருவடித்தாமரைகளையும், பொன் புனைந்ததார் மெளலியில் புனைந்து - பொன்னாற் செய்த மாலையை யணிந்த முடியின்மீது சூடி, எழுந்து இறைவன் முன்பு நின்று - எழுந்து சோமசுந்தரக் கடவுளின் திருமுன் நின்று. சொல் பதங்களால் தோத்திரம் மொழிவான் - சிறந்த மொழிகளால் துதிசெய் வானாயினான் எ-று. அவனைவணங்குதற்கு அவனருளும், அதனாலுண்டம் அன்பும் காரணமாதல் தோன்ற அன்பு தள்ள அருட்கண் ஈர்த்தேக என்றார். புனைந்த மெளலியென்க. புனைந்த தார் எனினுமாம். சொற்பதம்: ஒரு பொருளிரு சொல்; “ சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க” என்பது திருவாசகம். (21) சரண மங்கையோர் பங்குறை சங்கர சரணஞ் சரண மங்கல மாகிய தனிமுதல் சரணஞ் சரண மந்திர வடிவமாஞ் சதாசிவ சரணஞ் சரண மும்பர்க ணாயக பசுபதி சரணம். (இ-ள்.) சரணம் - வணக்கம்; மங்கை ஓர் பங்கு உறை சங்கர சரணம்- உமையம்மை ஒருபாதியி லுறைப்பெற்ற சங்கரனே வணக்கம்; சரணம்- வணக்கம்; மங்கலம் ஆகிய தனிமுதல் சரணம் - மங்கல வடிவாகிய ஒப்பற்ற முதற்பொருளே வணக்கம்; சரணம் - வணக்கம்; மந்திர வடிவம் ஆம் சதாசிவ சரணம் - தேவர்கள் தலைவனே வணக்கம்; பசுபதி சரணம் - உயிர்களின் தலைவ வணக்கம் எ-று. சரணம் - அடைக்கலம் என்றுமாம். ஈரிடத்து இரட்டித்துக் கூறினார். இறைவனுக்கு மந்திரம் வடிவமாதலை, “ சுத்தமாம் விந்துத் தன்னிற் றோன்றிய வாத லானுஞ் சத்திதான் பிரேரித் துப்பின் றானதிட் டித்துக் கொண்டே அத்தினாற் புத்தி முத்தி யளித்தலா லரனுக் கென்றே வைத்தவா மந்தி ரங்கள் வடிவென மறைக ளெல்லாம்” என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தத்தாலறிக. (22) ஆழி ஞாலமே லாசையு மமரர்வான் பதமேல் வீழு மாசையும் வெறுத்தவர்க் கன்றிமண் ணாண்டு பீழை மூழ்கிவா னரகொடு பிணிபடச் சுழலும் ஏழை யேங்களுக் காவதோ வெந்தைநின் கருணை. (இ-ள்.) ஆழி ஞாலம் மேல் ஆசையும் - கடலாற் சூழப்பட்ட நில வுலகின் மேலுண்டாகும் இச்சையையும், அமரர் வான் பதம்மேல் வீழும் ஆசையும் - தேவர்களின் உயர்ந்த பதவிகளின்மேல் சென்று பொருந்தும் அவாவையும், வெறுத்தவர்க்கு அன்றி - உவர்த்தவர் களுக்கு எய்துவதே அல்லாமல், மண் ஆண்டு - பூமியை ஆண்டு, பீழை மூழ்கி - துன்பத்தில் அழுந்தி, வான் நரகொடு பிணிபடச் சுழலும் - சுவர்க்கத்திலும் நரகத்திலும் கட்டுண்டு சுழலுகின்ற, ஏழையேங்களுக்கு - அறிவிலேமாகிய எங்களுக்கும், எந்தை எம் தந்தையே, நின் கருணை ஆவதோ - நினது திருவருள் எய்தக் கடவதோ எ-று. ஞாலமே லாசை, பதமேல் வீழு மாசை - அவற்றை ஆளவேண்டு மென்னும் ஆசை; அவற்றிலுள்ள போக விச்சையுமாம். வீழும் - விரும்புமெனினுமாம. வான் நரகொடு புவியிலுஞ் சுழலும் எனவருவித் துரைத்தலுமாம். “ நரகொடு சுவர்க்க நானிலம் புகாமற் பரகதி பாண்டியற் கருளினை போற்றி ” என்னும் திருவாசகமும் காண்க. பட்டு என்பது படவெனத் திரிந்தது. நோயுண்டாக என்னலுமாம். (23) சூள தாமறைச் சென்னியுந் தொடத்தொட நீண்ட நீள னீ 1யுனக் கன்பில மாயினு நீயே மூள வன்புதந் தெங்குடி முழுவதும் பணிகொண் டாள வேகொலிக் கானகத் தமர்ந்தனை யென்னா. (இ-ள்.) சூளது ஆம் மறைச் சென்னியும் - (தொடுவே னென்னும்) சபதத்தையுடையதாகிய வேதத்தின் அந்தமும், தொடத்தொட நீண்ட நீளன் நீ - எட்டுந்தோறும் எட்டுந்தோறும் நீண்ட நீட்சியை யுடையவன் நீ; உனக்கு அன்பிலம் ஆயினும் - உனக்கு யாம் அன்பில்லேம் ஆனாலும், நீயே அன்பு மூள தந்து - நீயே அன்பு பெருகும்படி அருளி, எம் குடிமுழுவதும் பணிகொண்டு ஆளவே கொல் - எமது குடி முழுதையும் ஏவல் கொண்டு ஆளுதற்கோ, இக் கானகத்து அமர்ந்தனை என்னா - இக் காட்டின்கண் எழுந்தருளினை என்று கூறி எ-று. சூள் - வஞ்சினம்; வேதமானது இறைவனைக் காண்டற்கு ஆராய்ச்சி செய்யுமுறையை அவனை எவ்வாற்றாலேனும் தொடு வேனென வஞ்சினங் கூறித் தேடுதல் போலுமென்றார். தொடத் தொட - தொடும்படி நெருங்குந் தோறும். நீளன் - சேய்மையன், ஆளுதற்கே அமர்ந்தனை யாவாயென்க. அவனது; அருமையும், தமது எளிமையுந் தோன்ற நீளன் என்றும், அன்பிலம் என்றுங் கூறி, அரியனாகிய அவன் தமது திறத்தும் எளியனாய் வரும் பெருங் கருணையை அமர்ந்தனை யென்பதனாற் குறிப்பித்த வாறாயிற்று. (24) சுரந்த வன்பிரு கண்வழிச் சொரிவபோற் சொரிந்து பரந்த வாறொடு சிவானந்தப் பரவையுட் படிந்து வரந்த வாதமெய் யன்பினால் வலங்கொடு புறம்போந் தரந்தை தீர்ந்தவ னொரு2 சிறை யமைச்சரோ டிருந்தான். (இ-ள்.) சுரந்த அன்பு - (அகத்தில்) ஊற்றெடுத்த அன்பானது, இரு கண்வழி சொரிவபோல் - இரண்டு கண்களில் வழியாகவும் பொழிவது போல், சொரிந்து பரந்த ஆறொடு - மொழிற்தமையாற் பரந்த ஆனந்தக் கண்ணீராகிய நதியோடு, சிவானந்தப் பரவையுள் படிந்து - சிவானந்தமாகிய கடலுள்ள மூழ்கி, வரம் தவாத மெய் அன்பினால் - மேன்மை குன்றாத உண்மை யன்பினால், வலங்கொடு - வலம் வந்து, அரந்தை தீர்ந்தவன் - துன்ப நீங்கியவனாகிய பாண்டியன், புறம் போந்து அமைச்சரோடு ஒரு சிறை இருந்தான் - புறதே வந்து மந்திரிகளோடு ஒரு பக்கத்தில் இருந்தான் எ-று. சொரிவ ; துவ்வீறு தொக்கது; தொழிற்பெயர். தீர்ந்தவண் என்று பாடமாயின் தீர்ந்து அவண் எனப் பிரிக்க. (25) ஆய வேலையின் மன்னவ னாணையா லமைச்சர் மேய வேலவர் துறைதுறை மேவினர் விடுப்பப் பாய வேலையி னார்த்தனர் வழிக்கொடு படர்ந்தார் சேய காடெறிந் தணிநகர் செய்தொழின் மாக்கள். (இ-ள்.) ஆய வேலையின் - அப்போது, மன்னவன் ஆணை யால் - அரசன் ஆணையினால், அமைச்சர் - மந்திரிகள், மேய ஏவலர் - அங்குள்ள ஏவலாட்களை, துறை துறை மேவினர் விடுப்ப - பல இடங்களிலும் செல்லுமாறு அனுப்ப, சேயகாடு எறிந்து - நீண்ட காட்டினை அழிந்து, அணிநகர் செய் தொழில் மாக்கள் அழகிய நகர மாகுமாறு செய்யும் வினைஞர்கள, பாய வேலையின் ஆர்த்தனர் - பரந்த கடல் போல ஒலித்து, வழிக்கொடு படர்ந்தார் - வழிக் கொண்டு வந்தார்கள் எ-று. ஆய - ஆகிய; சுட்டு. மேய - அருகில் மேவிய. மேவினர் விடுப்ப - மேவினராகுமாறு விடுப்ப; சென்று கொணருமாறு விடுப்ப. அங்ஙனஞ் சென்றவர்களாற் செலுத்தப்பட்டு என்பது தொக்கு நின்றது. சேய - சேய்மையுடைய. (26) வட்ட வாய்மதிப் பிளவின்வெள் வாய்க்குய நவியம் இட்ட தோளினர் யாப்புடைக் கச்சின ரிரும்பின் விட்ட காரொளி மெய்யினர் விசிகொள்வார் வன்றோல் தொட்ட காலினர் வனமெறி தொழிலின ரானார். (இ-ள்.) இரும்பின் கார் ஒளி விட்ட மெய்யினர் - இரும்பின் ஒளிபோலும் கரிய ஒளி வீசும் உடலினையுடைய வினைஞர்கள், வட்ட வாய் - வட்டமாகிய இடத்தினையுடைய, மதிப் பிளவின் - சந்திரனது பிளவு போலும், வெள் வாய்க்குயம் - வெள்ளிய வாயினை யுடைய கொடு வாளையும், நவியம் - கோடரியையும், இட்ட தோளினர் - வைத்த தோளினையுடையவராய், யாப்பு உடைக் கச்சினர் - அரையிற் கட்டிய கச்சினையுடையவராய், வார் விசிகொள் வன் தோல் தொட்ட காலினர் - வாராற் கட்டிய வலிய செருப்புத் தொடுத்த காலினையுடையவராய், வனம் எறி தொழிலினர் ஆனார் - காடு வெட்டும் தொழிலை யுடையவராயினார்கள் எ-று. குயம் - வளைந்த வாள்; யாப்பு - இறுகப் பிணித்தல். வீசி - கட்டுதல்; முதனிலைத் தொழிற்பெயர். தொட்ட - தொடுத்த, தொடுதோல் என்பதுங் காண்க. (27) மறியு மோதைவண் டரற்றிட மரந்தலை பனிப்ப எறியு மோதையு மெறிபவ ரோதையு மிரங்கி முறியு மோதையு முறிந்துவீ ழோதையு முகில்வாய்ச் செறியு மோதையுங் கீழ்ப்பட மேற்படச் செறியும். (இ-ள்.) மறியும் ஓதை வண்டு அரற்றிட - (போய்) மீளும் ஒலியையுடைய வண்டுகள் ஒலிக்கவும், மரம் தலை பனிப்ப - மரங்கள் தலை நடுங்கவும், எறியும் ஓதையும் - வெட்டுகின்ற ஓசையும், எறிபவர் ஒதையும் - வெட்டுகின்றவர்களின் ஓசையும், இரங்கி முறியும் ஓதையும் - ஒலித்து முறிகின்ற ஓதையும், முறிந்து வீழ் ஓதையும் (ஒன்றாகி), முகில் வாய்ச்செறியும் ஓதையும் கீழ்ப்பட- முகிலின் கண் மிக்க இடி ஓசையும் கீழ்ப்பட, மேற்படச் செறியும் - மேற்பட்டு ஒலிக்கும் எ-று. மறியும் ஓதை, வண்டுக்கு அடை. இரங்கி - கலங்கி, மேற்பட - மேற்பட்டு. (28) ஒளிறு தாதொடு போதுசெந் தேனுக வொளித்து வெளிறில் வன்மரஞ் சினையிற் வீழ்வசெங் களத்துப் பிளிறு வாயவாய் நிணத்தொடு குருதிநீர் பெருகக் களிறு கோடிற மாய்ந்துவீழ் காட்சிய வனைய. (இ-ள்.) வெளிறு இல் - வெள்ளடை யில்லாத (சேகு ஏறிய) வல் மரம் - வலிய மரங்கள், ஒளிறு தாதொடு - விளங்கா நின்ற மகரந்தத்தோடு, போது - மலர்களும், செந்தேன் - சிவந்த தேனும், உகசிந்த - ஒலித்துச் சினை இற வீழ்வ - ஒலி செய்து கிளைகள் முறிய வீழ்கின்ற தோற்றம். களிறு - யானைகள். செங்களத்து - போர்க் களத்தில், பிளிறு வாயவாய், நிணத்தொடு குருதிர் பெருக - நிணத் துடன் உதிரம் பெருக, கோடு இற மாய்ந்து வீழ் காட்சிய அனைய- கொம்புகள் முறிய இறந்து வீழும் தோற்றத்தைப் போல்வன எ-று. வெளிறு - வயிர மின்மை; வெள்ளடை யென வழங்கும். வீழ்வ; தொழிற் பெயர். தாதுடன் கூடிய போதுக்கு நிணமும், தேனுக்குக் குருதியும், கிளைக்கு யானைக் கோடும், மரம் ஒலித்தலுக்கு யானை பிளிறுதலும், மரம் வீழ்தலுக்கு யானை வீழ்தலும் உவமம், காட்சிய, அ;அசை. (29) பூவ டைந்தவண் டினமயற் புறவொடும் பழனக் காவ டைந்தன பறவைவான் கற்பக மடைந்த கோவ டைந்திட வொதுங்குறுங் குறும்புபோற் செறிந்து மாவடைந்தன மாடுள வரைகளுங் காடும். (இ-ள்.) பூ அடைந்த வண்டு இனம் - மலர்களிற் பொருந்திய வண்டுக் கூட்டங்கள், அயல் புறவொடும் பழனக் கா அடைந்தன - பக்கத்திலுள்ள முல்லை நிலங்களிலும் மருத நிலங்களின் சோலை களிலும் சென்று சேர்ந்தன; பறவைவான் கற்பகம் அடைந்து - பறவைகள் உயர்ந்த கற்பக மரங்களிற் சென்று தங்கின; கோ அடைந்திட - பெருவேந்தர்கள் வர, ஒதுங்குறும் குறும்பு போல் நீங்குகின்ற குறுநில மன்னரைப் போல, மா மாடு உள வரைகளும் காடும் செறிந்து அடைந்தன - விலங்குகள் பக்கத்திலுள்ள காடு களிலும் மலைகளிலும் நெருங்கிச் சேர்ந்தன எ-று. பறவைகள் கற்பகம் அடைந்தனவென வனத்தின் உயர்ச்சி கூறினார். கோ - பெருவேந்து. குறும்பு - குறுநிலம் ஆளுவது; சொல்லால் அஃறிணை, பொருளால் உயர்திணை; அவர் மலையினும் காட்டினும் வாழ்வ ரென்க. (30) இருணி ரம்பிய வனமெலா மெறிந்துமெய் யுணர்ந்தோர் தெருணி றைந்தசிந் தையின்வெளி செய்துபல் லுயிர்க்கும் அருணி றைந்துபற் றறுத்தர னடிநிழ லடைந்த கருணை யன்பர்தம் பிறப்பென வேரொடுங் களைந்தார்1. (இ-ள்.) இருள் நிரம்பி வனம் எலாம் எறிந்து - இருள் மிகுந்த காடு அனைத்தையும் வெட்டி, மெய் உணர்ந்தோர் - மெய்ப் பொருளை உணர்ந்தவர்களின், தெருள் நிறைந்த சிந்தையின் - தெளிவு நிரம்பிய உள்ளத்தைப்போல, வெளிசெய்து - வெட்ட வெளி யாக்கி, பல் உயிர்க்கும் அருள் நிறைந்து - பல உயிர்களிடத்தும் கருணை நிரம்பி, பற்று அறுத்து - இருவகைப் பற்றையும் போக்கி, அரன் அடி நிழல் அடைந்த - சிவபெருமான் திருவடி நீழலை அடைந்த, கருணை அன்பர் - திருவரு ணெறியினராகிய அடியார்கள், தம் பிறப்பு என - தங்கள் பிறவியை வேரொடுங் களைதல்போல, வேரொடுங் களைந்தார் - (வினை செய்வோர்) மரங்களை வேரோடும் அகழ்ந்தார்கள் எ-று. “ நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை வேரற வகழ்ந்து போக்கித் தூர்வை செய்து” என்று பட்டினத்தடிகள் அருளியாங்கு, மெய்யுணர் வுடையோர் மனமாசு களைந்திருப்பராகலின் அவரது சிந்தைபோல் வெளிசெய்து என்றார். மனம் தூய்மையுற்ற வழி உயிர்களிடத் தருளும், பற்றறுதியும், இறைவன் திருவடியைப் பற்றுதலும், பிறப்பு நீக்கமும்முறையே யுண்டாமாறு குறிப்பிக்கப்பட்டமை காண்க. அன்பரது பிறப்பு வேருடன் ஒழிதல் போல் ஒழியுமாறு களைந்தார் எனலுமாம். (31) களைந்து நீணிலந் திருத்திச்செந் நெறி1படக் கண்டு வளைந்து நன்னக ரெடுப்பதெவ் வாறெனத் தேறல் விளைந்து தாதுகு தார்முடி வேந்தன்மந் திரரோ டளைந்த ளாவிய சிந்தையோ டிருந்தன னங்கண். (இ-ள்.) களைந்து - (இங்ஙனம்) மரங்களை அகழ்வித்து. நீள் நிலம் திருத்தி - நீண்ட நிலத்தைச் செப்பஞ் செய்வித்து, செம் நெறி படக் கண்டு - செவ்வியவழி உண்டாக்குவத்து, தேறல் விளைந்து - தேன் மிகுந்து, தாது உகுதார் முடிவேந்தன் - மகரந்தஞ் சிந்தும் மாலையை யணிந்த முடியினையுடைய பாண்டியன், வளைந்து நல்நகர் எடுப்பது - வளைவாக நல்ல நகராக்குவது, எவ்வாறு என - எங்ஙனமென்று, மந்திர ரோடு அளைந்து அளாவிய - அமைச்சர் களோடு அளவளாவிய, சிந்தையோடு இருந்தனன் - உள்ளத்தோடு இருந்தான்; அங்கண் - அவ்விடத்து எ-று. வளைந்து - வட்டமுற எச்சத்திரிபு. தாதுடன் உகும் என்னலுமாம்; உகுதார் என முதற்பெயர் கொண்டது. அளவளாவிய என்பது அளைந்தளாவிய என நின்றது; அளவளாவுதல் - சிந்தை கலத்தல்; கலந்து சூழ்தல். (32) மெய்ய ரன்புதோய் சேவடி வியனிலந் தீண்டப் பொய்ய கன்றவெண் ணீறணி மேனியர் பூதிப் பையர் நள்ளிருட் கனவில்வந் தருளிய படியே ஐயர் வல்லைவந் தருளினா ரரசுளங் களிப்ப. (இ-ள்.) ஐயர் - முதல்வராகிய சோமசுந்தரக் கடவுள், மெய்யர் அன்பு தோய் சே அடி - உண்மை அடியார்களின் அன்பிலே தோய்ந்த சிவந்த திருவடிகள், வியன் நிலம் தீண்ட - அகன்ற நிலத்திலே பொருந்த, பொய் அகன்ற - உண்மையாகிய, வெள் நீறு அணி மேனியர் - வெள்ளிய திருநீற்றினைப் பூசிய திருமேனியராய், பூதிப்பையர் திருநீற்றுப் பையையுடைவராய், நள் இருள் கனவில் வருந்தருளிய படியே - நடு நிசியில் கனவில் எழுந்தருளியவண்ணமே, அரசு உளம்களிப்ப - மன்னன் மனம் மகிழ்ச்சியடைய, வல்லை வந்தருளி னார் - விரைந்து (நனவில்) தோன்றியருளினார் எ-று. மெய்யர் - சலமில்லாதவர் அடியை நிலந் தீண்டுமாறு என்னலு மாம். சத்தியமாவது நீறு ஆகலின் பொய்யகன்ற வெண்ணீறு என்றார்; பொய்யை யொழிக்கும் எனினுமாம். (33) கனவி லும்பெருங் கடவுளர் காண்பதற் கரியார் நனவி லும்வெளி வந்தவர் தமையெதிர் நண்ணி நினைவி னின்றதா ளிறைஞ்சிநேர் நின்றுநல் வரவு வினவி யாதனங் கொடுத்தனன் மெய்யுணர் வேந்தன். (இ-ள்.) மெய் உணர் வேந்தன் - உண்மைப் பொருளை உணர்ந்த மன்னன், பெருங் கடவுளர் - பெரிய தேவர்களாகிய அரி அயன் முதலி யோர், கனவிலும் காண்பதற்கு அரியார் - கனவிலும் காணுதற்கு அரிய ராய், நனவிலும் வெளிவந்தவர் தமை - தனக்கு நனவிலும் எளியராய் வெளிவந்த சித்திரை, எதிர் நண்ணி - எதிர் சென்று, நினைவில் நின்ற தாள் இறைஞ்சி - மனத்தில் நின்ற திருவடிகளை வணங்கி, நேர் நின்று - திருமுன் நின்று, நல்வரவு வினவி - நல்வரவு கேட்டு, ஆதனம் கொடுத்தனன் - (எழுந்தருள) ஆசனம் கொடுத்தான் எ-று. கடவுளரும் என உம்மை விரிக்க. அரியரா யிருந்தே வெளி வந்தவரென்க. “ கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி நனவிலு நாயேற் கருளினை போற்றி” என்னும் திருவாசகம் சிந்திக்கற் பாலது. தன்னால் இடைவிடாது நினைக்கப்படுகின்ற தாள், கனவிற் றோன்றியது முதல் மனத்தில் நிலைபெற்ற தாள் என்றுமாம். மெய்யுணர் - மெய்யுணர்வு தலைப்பட்ட எனலுமாம். (34) தென்ன ரன்பினி லகப்படு சித்தர்தா முன்னர்ச் சொன்ன வாதிநூல் வழிவரு சார்புநூற் றொடர்பால் நன்ன ராலய மண்டகங் கோபுர நகரம் இன்ன வாறுசெய் யெனவகுத் திம்மென மறைந்தார். (இ-ள்.) தென்னர் அன்பினில் அகப்படு சித்தர் - பாண்டியர் அன்பு வலையில் அகப்படுஞ் சித்த மூர்த்திகள், தாம் முன்னர் சொன்ன ஆதி நூல் - தாம் முன்னே கூறியருளிய முதனூல், வருவழி (நூல்) - அதன்வழி வந்த வழிநூல் சார்புநூல் தொடர்பால் - சார்பு நூல் ஆகிய இவைகளிற் கூறிய முறையால், நன்னர் ஆலயம் மண்டபம் கோபுரம் நகரம் - நன்றாகக் கோயிலும் மண்டபமும் கோபுரமும் நகரமும், இன்னவாறு செய்யென வகுத்து - இவ்வகையாற் செய்வாயாக என்று வகுத்துரைத்து, இம்மென மறைந்தார் - விரைந்து மறைந்தார். எ-று. இறைவன் பத்திவலையிற் படுவோன் என்பது தோன்ற அகப்படு என்றார். ஆதிநூல் - முதனூல்; ஆகமம். வழி நூல் சார்பு நூல் சிற்பநூல் முதலியன. நன்னர் - நன்கு; பண்புப்பெயர். ஆலயம்- கருப்பக் கிருகம். இம்முறையானே செய்ய வேண்டுமென்றார். இம்மென; விரைவுக் குறிப்பு. (35) மறைந்ததெ வற்றினு நிறைந்தவர் மலரடிக் கன்பு நிறைந்த நெஞ்சுடைப் பஞ்சவ னிலத்துமேம் பட்டுச் சிறந்த சிற்பநூற் புலவராற் சிவபரஞ் சுடர்வந் தறைந்து வைத்தவா றாலய மணிநகர் காண்பான். (இ-ள்.) எவற்றினும் மறைந்து நிறைந்தவர் - எல்லாப் பொருளினும் மறைந்து நிறைந்த இறைவனுடைய, மலர் அடிக்கு அன்பு நிறைந்த நெஞ்சு உடைப் பஞ்சவன் - மலர்போன்ற திருவடி களில் அன்பு மிகுந்த உள்ளத்தையுடைய பாண்டியன், நிலத்து மேம்பட்டுச் சிறந்த - நிலவுலகத்தில் உயர்ந்து சிறந்த, சிற்பநூல் புலவரால் - சிற்பநூல் வல்ல அறிவுடையோர்களால், சிவபரஞ்சுடர் வந்து - சிவபரஞ் சோதியார் சித்தராய் எழுந்தருளி, அறைந்து வைத்த வாறு - கூறியருளிய முறைப்படி, ஆலயம் அணிநகர் காண்பான் - திருக்கோயில் திருநகர முதலியன ஆக்கத் தொடங்கினான் எ-று. இறைவன் மறைந்திருத்தலை, “ விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்” என்னுந் தேவாரத்தா லறிக. எள்ளினுள் எண்ணெய்போல் உள்ளும் புறம்பும் வியாபித்திருத்தலின் நிறைந்தவர் என்றார். பஞ்சவன் - பாண்டியன். மண்டப கோபுரம் முதலியவற்றையும் அடக்கி ஈண்டு ஆலயமென்றார். (36) (எழுசீரடியாசிரியவிருத்தம்) மறைபயில் பதும மண்டப மருத்த மண்டப மழைநுழை வளைவாய்ப் பிறைபயில் சிகைமா மண்டப மறுகாற் பீடிகை திசையெலாம் பிளக்கும் பறைபயி னிருத்த மண்டபம் விழாக்கொள் பன்மணி மண்டபம் வேள்வித் துறைபயில் சாலை திருமடைப் பள்ளி சூழுறை தேவர்தங் கோயில். (இ-ள்.) மறைபயில் பதும மண்டபம் - வேதம் ஓதும் பதும மண்டபமும், அருத்த மண்டபம் - அருத்த மண்டபமும், மழை நுழை - முகிலில் நுழைகின்ற, வளைவாய் - வளைந்த வாயினை யுடைய, பிறை பயில் சிகைமா மண்டபம் - பிறைமதி தவழும் முடியினையுடைய மகா மண்டபமும், அறுகால் பீடிகை - அறுகாற் பீடமும், திசை எலாம் பிளக்கும் - திசை அனைத்தையும் பிளக்கின்ற ஒலியையுடைய, பறை பயில் நிருத்த மண்டபம் - இயங்கள் இரட்டு கின்ற நிருத்த மண்டபமும், விழாக்கொள் - இறைவன் திருவிழாக் கோலங்கொண்டருளும், பல் மணி மண்டபம் -பல மணிக ளழுத்திய மண்டபமும், வேள்வித்துறை பயில்சாலை - பல துறைகளை யுடைய வேள்விகள் செய்யும் யாக சாலைகளும், திருமடைப்பள்ளி- திருமடைப்பள்ளியும், சூழ் உறைதேவர் தம் கோயில் - சுற்றிலும் வசிக்கும் பரிவார தெய்வங்களின் கோயில்களும் எ-று. மழை நுழையும்படி உயர்ந்த மண்டபம் எனினுமாம். பிளப்பது போலும் ஒலி. சூழ்-சூழ. தேவர் - கணபதி, கந்தர், சண்டேசர் முதலாயினார். (37) வலவயி னிமய வல்லிபொற் கோயின் மாளிகை யடுக்கிய மதில்வான் நிலவிய கொடிய நெடியசூ ளிகைவா னிலாவிரி தவளமா ளிகைமீன் குலவிய குடுமிக் குன்றிவர் செம்பொற் கோபுரங் கொண்டல்கண் படுக்குஞ் சுலவெயி லகழிக் கிடங்குகம் மியநூற் றொல்வரம் பெல்லைகண் டமைத்தான். (இ-ள்.) வலவயின் - இறைவன் வல்பாகத்தில், இமயவல்லி பொன் கோயில் - இமயக்கொடியாகிய அங்கயற்கண்ணம்மைக்குப் பொன்னாலாகிய திருக்கோயிலும், மாளிகை அடுக்கிய மதில் - திருமாளிகை வரிசையையுடைய திருமதில்களும், வான் நிலவிய கொடி - ஆகாயத்தை அளாவிய கொடிகளையும், நெடிய சூளிகைய - நீண்ட இறப்புக்களையுமுடைய, வால் நிலாவிரி தவள மாளிகை - வெள்ளிய நிலாவை விரிக்கின்ற தவள மாளிகைகளும், மீன் குலவிய குடுமி - வான்மீன்கள் விளங்கும் முடியினையுடைய, குன்று இவர் - மலைபோலும் உயர்ந்த, செம்பொன் கோபுரம் - சிவந்த பொன்னா லாகிய கோபுரங்களும், கொண்டல் கண்படுக்கும் - முகில் உறங்கும், சுலவு எயில் சுற்று மதில்களும், அகழிக் கிடங்கு - அகழ்க் கிடங்குமாகிய இவைகளை, கம்மிய நூல் தொல்வரம்பு எல்லை கண்டு அமைத்தான் - சிற்பநூலின் பழமையான வரம்பினை ஆராய்ந்து செய்தான் எ-று. கொடிய என்பதிலுள்ள அகரம் சூளிகை யென்பதனோடு பிரித்துக் கூட்டப்பட்டது. சூளிகையும் மாளிகையும் என்னலுமாம். தவளமாளிகை - சுதை பூசினமையால் வெண்மையாகிய மாளிகை; நிலவு விரிதலால் வெண்மையாகிய மாளிகை யென்றுமாம். இவர்; உவம வுருபுமாம். அகழிக்கிடங்கு, வரம்பெல்லை யென்பன ஒரு பொருட் பன்மொழிகள். செய்வித்தானைச் செய்தானாகக் கூறினார். இதுகாறும் திருக்கோயி லமைப்புக்கூறி, மேல் நகரமமைப்புக் கூறுகின்றார்; இறுதியிலுள்ள எயில் அகழி என்பவற்றை நகருக் குரியவாக உரைப்பாருமுளர். (38) சித்திர நிரைத்த பீடிகை மறுகு தெற்றிகள் வாணிலாத் தெளிக்கும் நித்தில நிரைத்த விழாவரு வீதி நிழன்மணிச் சாளர வொழுக்குப் பித்திகை மாடப் பெருந்தெருக் கவலை பீடுசால் சதுக்கநற் பொதியில் பத்தியிற் குயின்ற மன்றுசெய் குன்று பருமணி மேடையா டரங்கு. (இ-ள்.) சித்திரம் நிரைத்த பீடிகை மறுகு - சித்திரங்களை வரிசைப்பட எழுதிய கடைவீதிகளும், தெற்றிகள் - தெற்றியம்பலங் களும், வாள் நிலாத் தெளிக்கும் - ஒள்ளிய நிலவினை வீசும், நித்திலம் நிரைத்த - முத்துக்கோவைகளை வரிசைப்படத் தொடுத்த, விழா வரு வீதி - திருவிழாவில் இறைவன் எழுந்தருளுகின்ற வீதிகளும், நிழல் மணி - ஒளியினையுடைய மணிகள் பதித்த, சாளர ஒழுக்கம்- சாளர வரிசைகளையுடைய, பித்திகை மாடப் பெருந்தெரு - சுவர் களையுடைய மாளிகைகள் நெருங்கிய பெரிய வீதிகளும், கவலை - கவர் வழிகளும், பீடுசால் சதுக்கம் - பெருமை நிறைந்த நான்கு தெருக் கூடுமிடங்களும், நல் பொதியில் - நல்ல அம்பலங்களும், பத்தியில் குயின்றமன்று - வரிசைப்பட இயற்றிய மன்றங்களும், செய் குன்று- செய்குன்றுகளும், பருமணி மேடை - பெரிய மணிகளழுத்திய மேடைகளும், ஆடு அரங்கு - கூத்தவைகளும் எ-று. நடுவில் மரமும் சுற்றிலும் வேதிகையுமுடையது தெற்றியம் பலம் எனப்படும். பெருந்தெரு - அரச வீதி. கவலை - கவர் வழி; இரண்டு தெருக்கள் கூடுமிடம். பொதியில் - பொது விடம்; அம்பலம்; நீதிமன்றம் முதலியன. மன்று - காட்சி மன்றம். (39) அருந்தவ ரிருக்கை யந்தண ருறையு ளரசரா வணங்குல வணிகப் பெருந்தெரு நல்வே ளாளர்பே ரறஞ்சால் பெருங்குடி யேனைய கரிதேர் திருந்திய பரிமா நிலைக்களங் கழகந் தீஞ்சுவை யாறுநான் குண்டி இரந்தவர்க் கருத்து நல்லறச் சாலை யினையன பிறவுநன் கமைத்தான். (இ-ள்.) அருந்தவர் இருக்கை - அரிய முனிவர்கள் தங்கும் மடங்களும் அந்தணர் உறையுள் - மறையவர் வசிக்கும் வீடுகளும், அரசர் ஆவணம் - அரசர் வீதிகளும், குல வணிகப் பெருந்தெரு - சிறந்த வணிகரின் பெரிய வீதிகளும், பேர் அறம் சால் - பெரிய அறம் நிறைந்த, நல்வேளாளர் பெருங்குடி - நல்ல வேளாளர்களின் பெரிய குடிகள் நிறைந்த வீதிகளும், ஏனைய - மற்ற, கரி தேர் திருந்திய பரிமா - யானைகள் தேர்கள் இலக்கணமமைந்த குதிரைகள் ஆகிய இவைகளின், நிலைக்களம் - தங்கு மிடங்களும், கழகம் - கல்விச் சாலைகளும், ஆறு தீம் சுவை நான்கு உண்டி - இனிய அறுவகைச் சுவையோடு கூடிய நால்வகை உணவுகளை, இரந்தவர்க்கு அருத்தும் நல்அறச்சாலை - வறியராய் இரந்தவருக்கு ஊட்டும் நல்ல தரும சத்திரங்களும். இனையன பிறவும் - இன்னும் இவை போல்வன பிறவும், நன்கு அமைத்தான் -நன்றாகச் செய்தான் எ-று. அருந்தவர் - துறவோர், சிவனடியார்; ஆவணம், வீதியென்னுந் துணையாய் நின்றது. குடி - குடியிருக்குமிடம். ஏனைய - இவை யொழிந்த. கழகம் - கற்குமிடம்; நூலாராயுமிடம், வாது புரியுமிடம் முதலியன. நான்கு உண்டி - உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன.(40) துணிகயங் கீழ்நீர்க் கூவல்பூ வோடை தொடுகுளம் பொய்கைநந் தவனந் திணிமலர்ச் சோலை துடவையுய் யானந் திருநகர்க் கணிபெறச் செய்து மணிமலர்த் தாரோன் மாளிகை தனக்கம் மாநகர் வடகுண பாற்கண் டணிநகர் சாந்தி செய்வது குறித்தா னண்ணலா ரறிந்திது1 செய்வார். (இ-ள்.) துணிகயம் - தெளிந்த நீரையுடைய சிறு குளங்களும், கீழ் நீர்க் கூவல் - கீழே நீரையுடைய கிணறுகளும், பூ ஒடை - மலரோடைகளும், தொடு குளம் - தோண்டப்பட்ட பெரிய குளங் களும், பொய்கை - பொய்கைகளும், நந்தவனம் - நந்தவனங்களும், திணி மலர்ச்சோலை - நெருங்கிய மலர்களையுடைய சோலைகளும், துடவை - தோட்டங்களும், உய்யானம் - உத்தியானங்களும் ஆகிய இவைகளை, திருநகர்க்கு அணிபெறச் செய்து - செல்வ நிறைந்த நகரத்திற்கு அழகு பொருந்த அமைத்து, மணி மலர்த் தாரோன் - அழகிய மலர்களாலாகிய மாலையை அணிந்த பாண்டியன். தனக்கு மாளிகை அ மாநகர் வடகுணபால் கண்டு - தனக்கு அரண்மலை அந்தத் திருநகருக்கு வட கீழ்த்திசையில் அமைத்து, அணிநகர் சாந்தி செய்வது குறித்தான் - அழகிய அந் நகருக்குச் சாந்தி செய்தலைக் கருதினான்; அண்ணலார் அறிந்து இது செய்வார் - சோமசுந்தரக் கடவுள் அதனை அறிந்து இதனைச் செய்வாராயினார் எ-று. துணி - தெளிந்த; துணிநீர் மெல்லவல் என்னும் மதுரைக் காஞ்சியின் உரையை நோக்குக. கீழ்நீர்க் கூவல் - சுரப்புநீர்க் கேணியுமாம். (41) பொன்மய மான சடைமதிக் கலையின் புத்தமு துகுத்தன ரதுபோய்ச் சின்மய மான தம்மடி யடைந்தார்ச் சிவமய மாக்கிய செயல்போற் றன்மய மாக்கி யந்நகர் முழுதுஞ் சாந்திசெய் ததுவது மதுர நன்மய மான தன்மையான் மதுரா நகரென வுரைத்தனர் நாமம். (இ-ள்.) பொன்மயமான சடைமதிக் கலையின் - பொன்மய மாகிய தமது சடையிலுள்ள சந்திரகலையின், புது அமுது - உகுத்தனர் - புதிய அமுதத்தைச் சிந்தினர்; அதுபோய் - அவ்வமுதஞ் சென்று, சின்மயமான தம் அடி அடைந்தார் - ஞானமயமாகிய அவ்விறைவருடைய திருவடிகள் தம்மை அடைந்தவரை, சிவமயம் ஆக்கிய செயல்போல் - சிவமயமாகச் செய்த செய்கையைப்போல, தன்மயம் ஆக்கி - தனது (அமிர்த) மயமாக்கி, அ நகர் முழுதும் சாந்திசெய்தது - அந்நகர் முழுதையும் தூய்மைசெய்தது; அது நல்மதுரமயம் ஆனதன்மையால் - அவ்வமுயும் தூய்மைசெய்தது; அது நல்மதுரமயம் ஆனதன்மையால் - அவ்வமுத நல்ல மதுரமய மாகிய தன்மையினால் (அந்நகருக்கு), மதுராநகர் என நாமம் உரைத்தனர் - மதுரைமாநகர் எனப்பெயர் கூறினார் எ-று. சந்திரனிடத்து அமிழ்த முண்டென்பர். சின்மயம் - ஞானமயம். அடியை யடைந்தவரை அவர் சிவமயமாக்கிய செயல்போல் எனலுமாம். சாந்திசெய்தல் வாலாமை நீக்கித் தூய்மை செய்தல். (42) கீட்டிசைக் கரிய சாத்தனுந் தென்சார் கீற்றுவெண் பிறை1 நுதற் களிற்றுக் கோட்டிளங் களபக் கொங்கையன் னையருங் குடவயின் மதுமடை புடைக்குந் தோட்டிளந் தண்ணந் துழாயணி மெளலித் தோன்றலும் வடவயிற் றோடு நீட்டிரும் போந்தி னிமிர்குழ லெண்டோ ணீலியுங் காவலா நிறுவி. (இ-ள்.) கீழ்திசை கரிய சாத்தனும் - கிழக்குத்திக்கில் கரிய நிறமுடைய ஐயனாரையும், தென்சார் - தென் திக்கில், கீற்று வெண் பிறை நுதல் - கீற்றாகிய வெள்ளிய பிறையை ஒத்த நெற்றியினையும், களிற்றுக் கோட்டு - யானையின் கொம்பு போன்ற, இளம் களபக் கொங்கை - இளமையாகிய சாந்தணிந்த கொங்கைகளையுமுடைய, அன்னையரும் - சத்த மாதரையும், குடவயின் - மேற்குத் திசையில், மதுமடை உடைக்கும் தோட்டு - தேன் மடை யுடைத்தோடா நின்ற இதழ்களையுடைய, இளந்தண்ணம் துழாய் அணி - பசுமையாகிய குளிர்ந்ததுழாய்மாலையை அணிந்த, மெளலித் தோன்றலும் - முடியினையுடைய திருமாலையும், வடவயின் - வடதிசையில், தோடுநீடு இரும் போந்தின் நிமிர்குழல் - மடல் நீண்ட பெரிய பனையின் மலரணிந்த நிமிர்ந்த கூந்தலையும், எண்தோள் - எட்டுத் தோள்களையு முடைய, நீலியும் - காளியையும், காவலாநிறுவி - நகரத்திற்குக் காவலாக நிறுத்தி எ-று. கீழ்த்திசை கீட்டிசை யென்றாயது மரூஉ. அன்னையர் - எழுமாதர்; பிராமி, நாராயணி, உருத்திராணி, மகேசுவரி, வராகி, கெளமாரி, இந்திராணி என்போர். மடை யுடைந்தாற்போலப் பாயுமென்க. இளமை - பசுமை. தண்ணம், அம்; சாரியை. நீட்டு; விகாரம் ஆகவென்பது குறைந்து நின்றது. (43) கைவரை யெருத்திற் கனவரை கிடந்த காட்சியிற் பொலிந்தொளிர் கோயின் மைவரை மிடற்று மதுரைநா யகரை மரபுளி யருச்சனை புரிவான் பொய்வரை மறையா கமநெறி யொழுகும் புண்ணிய முனிவரை யாதி சைவரைக் காசிப் பதியினிற் கொணர்ந்து தலத்தினிற் றாபனஞ் செய்தான். (இ-ள்.) கைவரை எருத்தில் - யானையின் பிடரியில், கனவரை கிடந்த காட்சியில் - பொன் மலை தங்கிய தோற்றம் போல், பொலிந்து ஒளிர் கோயில் - பொலிவு பெற்று ஒளி வீசும் விமானத்தில் எழுந்தருளிய, மைவரை மிடற்று நாயகரை, மரபுளி அருச்சனை புரிவான் - விதிப்படி பூசிப்பதற்கு, பொய்வரை - பொய்ம்மை நீக்குகின்ற, மறை ஆகமநெறி ஒழுகும் - வேதாகமவழியில் ஒழுகாநின்ற, புண்ணிய முனிவரை ஆதி சைவரை - அறவுருவுடைய முனிவர்களையும் ஆதி சைவர்களையும், காசிப்பதியினில் கொணர்ந்து- காசியென்னும் திருப்பதியினின்றும் நிலைபெறுத்தினான் எ-று. கனம் - கனகம். வரைதல் - கொள்ளலும், நீக்கலுமாம். பொய்வரை - பொய்ம்மைநீங்கிய எனினுமாம். மரபுளி, உளி; மூன்றன் பொருள்படுவதொ ரிடைச்சொல், முனிவராகிய ஆதி சைவருமாம். (44) உத்தம குலத்து நாற்பெருங் குடியு முயர்ந்தவு மிழிந்தவு மயங்க வைத்தவு மான புறக்குடி மூன்று மறைவழுக் காமனு வகுத்த தத்தம நெறிநின் றொழுகவை திகமுஞ் சைவமுந் தருமமுந் தழைப்பப் பைத்தெழு திரைநீர் ஞாலமேற் றிலகம் பதித்தென நகர்வளம் படுத்தான். (இ-ள்.) உத்தம குலத்து நால்பெருங் குடியும் - உத்தம குலமாகிய அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நான்கு பெருங் குடிகளும், உயர்ந்தவும் இழிந்தவும் மயங்க வைத்தவும் ஆன புறக்குடி மூன்றும் - உயர்ந்தனவும் இழிந்தனவும் கலந்தனவுமான மூன்று புறக்குடிகளும், மறை வழுக்கா மனு வகுத்த - வேத விதி வழுவாது மனுவால் வகுக்கப்பெற்ற, தத்தம் நெறி நின்று ஒழுக - தங்கள் தங்களுக்குரியஒழுக்கத்தில் வழுவாதொழுகவும், வைதிகமும் சைவமும் தருமமும் தழைப்ப - வேதநெறியும் சைவநெறியும் அறமும் செழித்தோங்கவும், பைத்து எழுதிரை நீர் ஞாலமேல் - பசுமையுடையதாய்த் தோன்றும் அலைகளையுடைய கடல் சூந்த நிலவுலகத்தில், திலகம் பதித்தென - (பாண்டி நாட்டிற்கு) ஓர் திலகம் பதித்தாற்போல, நகர்வளம் படுத்தான் - நகரை வளப் படுத்தினான் எ-று. குலத்து, அத்து; வேண்டாவழிச் சாரியை. புறக்குடியுள் உயர்ந்தன - நான்கு வருணத்தில் உயர்குல ஆணும் இழிகுலப் பெண்ணும் கூடிப் பிறந்த அநுலோமரின் வகையெனவும், இழிந்தன - உயர்குலப் பெண்ணும் இழிகுல ஆணும் கூடிப் பிறந்த பிரதிலோமரின் வகையெனவும் மயங்கவைத்தன - அநுலோம பிரதிலோம ஆண் பெண் கூடிப் பிறந்த அந்தராளரும் விராத்தியரு மென்போரின் வகையெனவும் கொள்க; இவற்றை விரிவாக அறிய வேண்டுவோர் மிருதிகள் முதலியவற்றுட் காண்க; இவையெல்லாம் ஆராயற்பாலன தத்தம, அ; ஆறனுருபு; தத்தமக்குரிய வென்க. (45) அன்றுதொட் டரச னந்நக ரெய்தி யணிகெழு மங்கல மியம்ப என்றுதொட் டிமைக்கு மனையின்மங் கலநா ளெய்தினா னிருந்துமுப் புரமுங் குன்றுதொட் டெய்தான் கோயின்மூன் றுறுப்புங் குறைவில்பூ சனைவழா தோங்கக் கன்றுதொட் டெறிந்து கனியுகுத் தான்போற் கலிதுரந் தரசுசெய் நாளில். (இ-ள்.) அரசன் அன்று தொட்டு - மன்னன் அன்றுமுதல், அந்நகர் எய்தி - அம்மதுரை நகரை அடைந்து, அணிகெழு மங்கலம் இயம்ப - அழகு பொருந்திய மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, என்று தொட்டு இமைக்கும் மனையில் - சூரியனை அளாவி ஒளி வீசும் அரண்மனையில், மங்கல நாள் எய்தினான் இருந்து - நன்னாளிற் புகுந்து இருந்து, முப்புரமும் குன்று தொட்டு எய்தான் - மூன்று புரங்களையும் பொன்மலையை வில்லாக வளைத்து அழித்த இறைவனது, கோயில் - திருக்கோயிலில், மூன்று உறுப்பும் குறைவு இல் பூசனை - மூன்று அங்கங்களும் குறைவில்லாத பூசனையானது, வழாது ஓங்கு - வழுவாமல் மேலோங்க, கன்று தொட்டு எறிந்து கனி உகுத்தான் போல் - கன்றினைப் பிடித்து வீசி விளாங்கனியை வீழ்த்திய திருமாலைப்போல, கலிதுரந்து அரசுசெய் நாளில் - தீமையை யோட்டி அரசு புரிந்து வரும் நாளில் எ-று. என்று - சூரியன். எய்தினான்; முற்றெச்சம். மூன்றுறுப்பாவன:- நித்தியம், நைமித்திகம், பிராயச்சித்தம் என்பன. கண்ணன் நிரை மேய்க்கின்றபொழுது கஞ்சனுக்கு நண்பனாகிய அசுரனொருவன் அவனைக் கொல்லவென வந்து ஓர் ஆன் கன்றில் ஆவேசித்திருக்கக் கண்ணன் அஃதறிந்து அக்கன்றினைக் குறுந்தடியாகக் கொண்டு விளவின் கனிமீதெறிந்து அவனைக் கொன்றானென்பது வரலாறு; சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில், “ கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்” என வருதலுங் காண்க. உலகம் புரக்கும் அரசன் காத்தற் கடவு ளாகிய திருமாலின் அமிசமென்ப வாகலின் அவன்போல் என்றார்; “ திருவுடை மன்னரைக் காணிற் றிருமாலைக் கண்டேனே யென்னும்” என்கிற ஆழ்வார் வாக்குங் காண்க. (46) பவநெறி கடக்கும் பார்த்திவன் கிரணம் பரப்பிளம் பரிதிபோன் மலயத் துவசனைப் பயந்து மைந்தன்மேன் ஞாலஞ் சுமத்திநாள் பலகழித் தொருநாள் நவவடி விறந்தோனாலயத் தெய்தி நாதனைப் பணிந்துமூ வலஞ்செய் துவமையி லின்ப வருணிழ லெய்தி யொன்றியொன் றாநிலை நின்றான். (இ-ள்.) பவநெறி கடக்கும் பார்த்திவன் - பிறவிக்குக் காரண மாகிய வழியினைக் கடக்கின்ற பாண்டியன், கிரணம் பரப்பு இளம் பரிதிபோல் - ஒளியை விரிக்கின்ற இள ஞாயிறுபோலும், மலயத்து வசனைப் பயந்து - மலயத்துவச னென்பவனைப் பெற்று, மைந்தன் மேல் ஞாலம் சுமத்தி - அப்புதல்வன் மீது அரசபாரத்தைச் சுமத்தி, பல நாள் கழித்து ஒரு நாள் - பல நாட் போக்கி ஒரு நாள், நவவடிவு இறந்தோன் - ஒன்பது வடிவங்களையுங் கடந்த சோம சுந்தரக் கடவுளின், ஆலயத்து எய்தி - திருக்கோயிலுள் சென்று, நாதனைப் பணிந்து - இறைவனை வணங்கி, மூவலம் செய்து - மும்முறை வலம் வந்து, உவமை இல் - ஒப்பில்லாத, இன்ப அருள் நிழல் எய்தி - பேரின்பமயமாகிய திருவருள் நீழலையடைந்து, ஒன்றி ஒன்றா நிலை நின்றான் - சேர்ந்தும் சேராத இரண்டற்ற நிலையில் நின்றான் எ-று. பார்த்திவன் - அரசன்; பிருதிவியை ஆளுபவன் என்பது பொருள். ஞாலம் - பூமி; ஈண்டு அரசபாரம் எனக்கொள்க. கழித்து; கழிய வென்பது திரிந்ததுமாம். நவவடிவு முற்கூறப்பட்டன; நவந்தரு பேத மேக நாதனே நடிப்பன் என்றதனால் இறைவன் அவற்றுக்கு அப்பாற்பட்டவனென்ப துணர்க. ஒன்றி - இரண்டறக் கலந்து, ஒன்றாம் நிலை நின்றான் - அவ்வத்துவித நிலையில் நின்றான் எனப் பொருளுரைத்தலுமாம். (47) ஆகச்செய்யுள் - 517. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம் (கலிவிருத்தம்) கன்னியொரு பங்கினர் கடம்பவன மெல்லாம் நன்னகர மானது நவின்றுமுல கீன்ற அன்னைமக ளாகிமல யத்துவச னாகுந் தென்னனிடை வந்துமுறை செய்ததுரை செய்வாம். (இ-ள்.) கன்னி ஒரு பங்கினர் - உமையவளை யொருபாகத்திலுடைய இறைவரது, கடம்பவனம் எல்லாம் - கடம்பவனம் முழுதும், நல் நகரம் ஆனது நவின்றும் - நல்ல நகரமாகிய தன்மையைக் கூறினோம்; உலகு ஈன்ற அன்னை - உலகங்கள் அனைத்தையும் பெற்ற அன்னையாகிய உமாதேவியார், மலயத்துவசன் ஆகும் சென்னனிடை - மலயத்துவசனென்னும் பாண்டி மன்னனிடத்து, மகளாகி வந்து - புதல்வியாய்த் தோன்றி, முறைசெய்தது உரைசெய்வாம் - செங்கோ லோச்சிய திருவிளையாடலைக் கூறுவாம் எ-று. உலகீன்ற அன்னையாயினும் கன்னி என்றார்; “ பவன்பிரம சாரியாரும் பான்மொழி கன்னியாகும்” என்பது சிவஞானசித்தி. நவின்றும்; தனித் தன்மைப் பன்மை; றும்: விகுதி. உலகீன்ற அன்னை மகளாயினள், ஈதொரு வியப்பிருந்தவா றென்னே யென்க. (1) மனுவற முவந்துதன் வழிச்செல நடத்தும் புனிதன்மல யத்துவசன் வென்றிபுனை பூணான் கனியமுத மன்னகரு ணைக்குறையுள் காட்சிக் கினியன்வட சொற்கட றமிக்கட லிகந்தோன். (இ-ள்.) மலயத்துவசன் - அம் மலயத்துவசனென்பான், மனுஅறம் உவந்து தன்வழி செல நடத்தும் புனிதன் - மனுதருமமானது மகிழ்ந்து தனதுவழி நடக்கும்படி செங்கோலோச்சும் தூய்மையன்; வென்றி புனை பூணான் - வெற்றியையே தான் அணியும் பூணாகவுடையவன்; கனி அமுதம் அன்ன - சுவை முதிர்ந்த அமுதத்தைப் போலும், கருணைக்கு உறையுள் - அருளுக்குத் தங்குமிடமானவன்; காட்சிக்கு இனியன் - (முறைவேண்டினாருக்கும் குறைவேண்டினாருக்கும்) காண்டற்கு எளியனாய் இன்முகத்தை யுடையவன்; வடசொல் கடல் தமிழ்க் கடல் இகந்தோன் - வடமொழிக்கடலையும் தென்மொழிக் கடலையும் நிலைகண்டு கடந்தவன் எ-று. மனு தருமமும் தனது செங்கோலின் வழிப்பட ஆட்சி நடத்து மென இவனது நீதியின் மேன்மை கூறினார்; வழிச்செல என்பதற்கு அதற்குரிய வழியில் நடக்க என்றுரைத்தலுமாம். வென்றியாகிய பூண் உயிர்கள் பசியும் பிணியுமின்றி வாழுமாறு செய்தலால் ‘அமுதளமன்ன கருணை’ யென்றார். காட்சிக் கெளியனாதலும் கடுஞ்சொல்ல னல்லனாதலும் அடங்க இனியன் என்றார்; “ காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல் மீக்கூறு மன்ன னிலம்” என்பது தமிழ்மறை. கடல்போல் அளவிடப் படாதனவாகிய இருமொழிகளையும் முற்றவும் கற்றவனென்றார்; “ தென்சொற் கடந்தான் வடசொற்கடற் கெல்லை தேர்ந்தான்” எனக் கம்பர் இராமனைக் கூறுவது இங்கு நோக்கற் பாலது. (2) வேனில்விறல் வேள்வடிவன் வேட்கைவிளை பூமி ஆனமட வார்கள் பதி னாயிரவ ருள்ளான் வானொழுகு பானுவழி வந்தொழுகு சூர சேனன்மகள் காஞ்சனையை மன்றல்வினை செய்தான். (இ-ள்.) வேனில் விறல் வேள்வடிவன் - வேனிற்காலத்து வெற்றி கொள்ளும் மதவேள் போலும் வடிவத்தையுடையவன்; வேட்கை விளை பூமி ஆன - காமப் பயிர் விளைகின்ற பூமியாகிய, மடவார்கள் பதினாயிரவர் உள்ளான் - காமக் கிழத்தியர்கள் பதினாயிர வரை உடையவன்; வான் ஒழுகு - வானிற் செல்லாநின்ற, பானுவழிவந்து- சூரியன் மரபில் தோன்றி, ஒழுகு சூரசேனன் - அறத்தின் வழி ஒழுகும் சூரசேனனது, மகள் காஞ்சனையை மன்றல் வினைசெய்தான் - புதல்வியாகிய காஞ்சன மாலையை மணஞ்செய்தவன் எ-று. காமுகரை வெல்லுமென்க. வேனிலுக்குரிய வெற்றியையுடைய வேல் என விரித்தலுமாம். வேட்கை - காமம்; “ ஊரவர் கெளவை யெருவாக அன்னைசொல் நீராக நீளுமிந் நோய்”” என்பதனாலும் காமம் பயிராத லுணர்க. இன்பம் விளைகின்ற; ஏகதேசவுருவகம். பானுவழி யென்றமையாற் சோழனென்று கொள்க. (3) கண்ணுதலை முப்பொழுதும் வந்துபணி கற்றோன் எண்ணில்பல நாண்மக விலாவறுமை யெய்திப் பண்ணரிய தானதரு மம்பலவு மாற்றிப் புண்ணிய நிரம்புபரி வேள்விபுரி குற்றான். (இ-ள்.) கண் நுதலை - சோமசுந்தரக் கடவுளை, முப்பொழுதும் வந்து பணி கற்றோன் - மூன்று காலங்களிலும் சென்று வணங்கு தலைக் கற்றவன்; எண் இல் பலநாள் - அளவிறந்த பல நாட்கள் வரை, மகவு இலா வறுமை எய்தி - பிள்ளைப் பேறு இன்மையாம் வறுமையை அடைந்து (அதனையொழிக்க), பண் அரிய தான தருமம் பலவும் ஆற்றி - செய்தற்கு அரிய பல தானங்களையும் தருமங்களையுஞ் செய்து, புண்ணியம் நிரம்பு பரிவேள்வி புரி குற்றான் - அறம் நிரம்பிய அசுவமேதம் செய்யலுற்றான் எ-று. கண்ணுதல்; நுதலில் நாட்ட முடையோ னெனக் காரணக்குறி. பணி - பணிதல்; முதனிலைத் தொழிற்பெயர். நூலறிவிற்குப் பயன்வாலறிவனது நற்றாள் தொழலாகலின் பணிதல் கற்றானென்றார். மகவில்லாமையை வறுமை யென்றார்; “ பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த மக்கட்பே றல்ல பிற”” என்பவாகலின். (4) ஈறின்மறை கூறுமுறை யெண்ணியொரு தொண்ணூற் றாறினொடு மூன்றுமக மாற்றவம ரேசன் நூறுமக மும்புரியி னென்பதனொ டிப்பின் மாறுமென மற்றதனை மாற்றியிது சாற்றும். (இ-ள்.) ஈறு இல் மறை கூறும் முறை - அழிவில்லாத மறைகள் கூறிய முறையை, எண்ணி - ஆராய்ந்து (அதன்படி) ஒரு தொண்ணூற்று ஆறினொடு மூன்று மகம் ஆற்ற - தொண்ணூற்றொன்பது வேள்வி களைச் செய்ய, அமரேசன் - தேவேந்திரனானவன், நூறு மகமும் புரியின் -நூறு வேள்விகளையும் செய்து முடிப்பானாயின், நொடிப்பில் என்பதம் மாறும் என - நொடிப்பொழுதில் எனது பட்டம் மாறுமேயென்று கருதி, மற்று அதனை மாற்றி இது சாற்றும் - அவ் வேள்வியை விலக்கி இதனைக் கூறுகின்றான் எ-று. முறையாலே எண்ணிச் செய்ய எனினுமாம். ஒரு, வழக்கு நோக்கியது. பரிவேள்வி நூறு புரிந்தவன் இந்திரனாவன்; சதமகன் என்னும் பெயரும் அது பற்றியது. நொடிப்பு; தொழிற்பெயர்; நொடித் தற்கண்; நொடியின் பின் என்றுமாம். மற்று; வினைமாற்று. (5) நன்பொருள் விரும்பினை யதற்கிசைய ஞாலம் இன்புறு மகப்பெறு மகத்தினை யியற்றின் அன்புறு மகப்பெறுதி யென்றமரர் நாடன் தன்புல மடைந்திடலு நிம்பநகு தாரான். (இ-ள்.) நன்பொருள் விரும்பினை - நல்ல மகப்பேற்றை விரும் பினாய்; அதற்கு இசைய - அவ்விருப்பத்திற்குப் பொருந்த, ஞாலம் இன்பு உறு மகப் பெறும் மகத்தினை - உலகம் இன்பத்தை யடையும் மகப்பெறுதற் கேதுவாகிய வேள்வியை, இயற்றின் - செய்தாயா னால். அன்பு உறு மகப் பெறுதி என்று - அன்புமிக்க பிள்ளையைப் பெறுவாயென்று கூறி, அமரர் நாடன் - தேவேந்திரன், தன்புலம் அடைந் திடலும் - தனது நாட்டினை யடைந்தவுடனே, நிம்பம் நகுதாரான் - வேப்ப மலர் விளங்கும் மாலையையுடைய பாண்டியன் எ-று. தம்பொரு ளென்பதம் மக்கள் என்பதனால் பிள்ளையைப் பொருளென்றார். சிந்தாமணியில் நன்பொருள்’ என்றும், திருத் தாண்டகத்துள் ஒண்பொருள் என்றும் புதல்வன் கூறப்படுதலுங் காண்க. மாநிலத்து மன்னுயிர்க் கெல்லா மினிது என்பவாகலின், ஞாலமின்புறு மகவென்றார். மகப்பெறு மகம் - புத்திரகாமேஷ்டி. நகுநிம்பத் தாரான் என மாற்றுதலுமாம். (6) மிக்கமக வேள்விசெய் விருப்புடைய னாகி அக்கண மதற்குரிய யாவையு மமைத்துத் தக்கநிய மத்துரிய தேவியொடு சாலை புக்கன னிருந்துமக வேள்விபுரி கிற்பான். (இ-ள்.) மிக்க மக வேள்வி செய் விருப்பு உடையனாகி - நலமிக்க மக வேள்வி செய்யும் விருப்பத்தையுடையவனாய், அக்கணம் அதற்கு உரிய யாவையும் அமைத்து - அப்பொழுதே அவ்வேள்விக்கு வேண்டும் பொருள்களனைத்தையும் சேர்த்து, தக்க நியமத்து - தகுந்த நியமத்துடன், உரிய தேவியொடு சாலை புக்கனன் இருந்து - உரிய மனைவியோடு வேள்விச்சாலையிற் சென்றிருந்து, மகவேள்வி புரிகிற்பான் - மகப்பேற்று வேள்வியைச் செய்யத் தொடங்கினான் எ-று. நியமம் - கடன்; முறைமை. உரியதேவி - யாகபத்தினி யாதற்குரிய மா தேவி. புக்கனன்; முற்றெச்சம். (7) ஆசறு1ம றைப்புலவ ராசிரியர் காட்டும் மாசறுச டங்கின்வழி மந்திரமு தாத்த ஓசையனு தாத்தசொரி தந்தழுவ வோதி வாசவ னிருக்கையி லிருந்2தெரி வளர்ப்பான். (இ-ள்.) ஆசு அறும் மறைப்புலவர் ஆசிரியர் - குற்றமற்ற வேதநூற் புலமையுடையவராகிய குரவர், காட்டும் மாசு அறு சடங்கின் வழி - காட்கின்ற குற்றமற்ற கரணத்தின் வழியே, மந்திரம் - மந்திரங் களை, உதாத்தம் அனுதாத்தம் சொரிதம் ஓசை தழுவ ஓதி - எடுத்தல் படுத்தல் நலிதல் என்னும் ஓசை தழுவும்படி உச்சரித்து, வாசவன் இருக்கையில் இருந்து எரி வளர்ப்பான் - (திருக்கோயிலுக்குக்) கீழ்த்திசையிலிருந்து வேள்வித் தீயை வளர்ப்பானாயினான் எ-று. புலவரும் ஆசிரியரும் என்றுமாம். உதாத்தம் - எடுத்தல், அனுதாத்தம் - படுத்தல், சொரிதம் - நலிதல். இந்திரனுக் கிருப்பிடம் கீழ்த்திசை யாகலின் அதனை வாசவனிருக்கை யென்றார். (8) விசும்புநில னுந்திசையும் வேள்வியடு சாலைப் பசும்புகை படர்ந்தொரு படாமென மறைப்பத் தசும்புபடு நெய்பொரி சமித்தினொடு வானோர்க் கசும்புபடு மின்னமுதி னாகுதி மடுத்தான். (இ-ள்.) வேள்வி அடுசாலைப் பசும் புகை - வேள்விபுரிகின்ற சாலையினின் றெழுந்த பசிய புகையானது, விசும்பும் நிலனும் திசையும் படர்ந்து - வானிலும் நிலத்திலும் திசைகளிலும் பரவி, ஒரு படாம் எனமறைப்ப - ஒரு போர்வைபோல மறைக்க, தசும்பு படு நெய்பொரி சமித்தினொடு - குடத்திலுள்ள நெய் பொரி சமித்துக் களால், வானோர்க்கு அசும்புபடும் இன் அமுதின் - தேவர்களுக்கு ஊற்றெடுக்கும் இனிய அமுதம்போல, ஆகுதி மடுத்தான் - ஆகுதி செய்தான் எ-று. நெய்யாலும் பொரியாலும் சமித்தாலும். ஒடு; கருவிப் பொருட்டு; எண்ணொடுவாக்கி ஐயுருபு விரித்து ஆகுதியாகக் கொடுத்தான் என முடித்தலுமாம். சமித்து - ஓம விறகு; அத்தி, அரசு, பலாசு, வன்னி முதலியன. (9) ஐம்முக னனாதிபர மாத்தனுரை யாற்றால் நெய்ம்முக நிறைத்தழ னிமிர்த்துவரு1 மெல்லை பைம்முக வராவணி பரஞ்சுடர் தனிப்ப மைம்முக நெடுங்கணிம வான்மனைவி நாண. (இ-ள்.) ஐம்முகன் அனாதி பரமாத்தன் - ஐந்து திருமுகங்களை யுடையவனும் அனுதியாயுள்ளவனும் பரமாத்தனுமாகிய சிவபெரு மானுடைய, உரை ஆற்றால் - திருவாக்காகிய மறை வழிப்படி, நெய்முகம் நிறைத்து - நெய்யை வேள்விக் குண்டத்தில் நிறைத்து, அழல் நிமிர்த்து வரும் எல்லை - தீயை வளர்த்து வரும்பொழுது, பைமுக அரா அணி பரஞ்சுடர் தனிப்ப - படத்தைத் தன்னிடத் துடைய பாம்பை அணிந்த சிவபரஞ்சோதி தனிக்கவும், மைமுக நெடுங்கண் இமவான் மனைவி நாண - மை தீட்டிய இடத்தினை யுடைய நீண்ட கண்களை யுடைய மலையரசன் மனைவியாகிய மேனை நாணுறவும் எ-று. ஐந்து முகங்கள் - ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தி யோசாதம் என்பன. ஆத்தன் - உண்மையுரைப்போன், தோழன்; பரம ஆத்தன் - மேலாகிய ஆப்தன்; கடவுள். நிமிர்ந்து என்பது பாடாமாயின் நிறைத்து என்பதை நிறைக்க வெனத் திரித்துரைக்க. இது முதல் பத்துச் செய்யுட்களால் திருவவதாரத்தின் சிறப்பைக் கூறுகின்றார். (10) வள்ளன்மல யத்துவச மீனவன் வலத்தோள் துள்ளமனை காஞ்சனை சுருங்கிய மருங்குல் தள்ளவெழு கொங்கைக டதும்பநிமிர் தீம்பால் வெள்ளமொழு கக்கரிய வேற்கணிட னாட. (இ-ள்.) வள்ளல் மலயத்துவச மீனவன் - வள்ளலாகிய மலயத்துவச பாண்டியனது, வலத்தோள் துள்ள - வலத்தோள் துடிக்கவும், மனை காஞ்சனை சுருங்கிய மருங்குல் தள்ள - (அவன்) மனைவியாகிய காஞ்சனையினது நுண்ணிய இடை ஒசியும்படி, எழு கொங்கைகள் ததும்ப நிமிர் தீம்பால் வெள்ளம் ஒழுக - பருத் தெழுந்த கொங்கைகளினின்றும் தளும்பப் பெருகிய இனிய பால் வெள்ளம் ஒழுகவும், கரியவேல் இடக்கண் ஆட - அவளது வேல்போன்ற கரிய இடதுகண் துடிக்கவும் எ-று. தோள், கண் முதலியவை ஆடவர்க்கு வலமும், பெண்டிர்க்கு இடமும் துடிப்பின் நலமுண்டாகும்; மாறித் துடிப்பின் தீங்குண் டாகும். அன்பினால் கொங்கை பூரித்துப் பால் சுரக்கும் என்க. (11) இவ்வுல மன்றியுல கேழுமகிழ் வெய்தச் சைவமுத லாயின தவத்துறை நிவப்ப ஒளவிய மறங்கெட வறங்குது கலிப்பத் தெய்வமறை துந்துபி திசைப்புல னிசைப்ப. (இ-ள்.) இவ்வுலகம் அன்றி - இந்த நிலவுலகத்திலுள்ளாரே யல்லாமல், ஏழு உலகும் மகிழ்வு எய்த - ஏழு உலகங்களிலுள்ளவர்களும் மகிழ்ச்சியடையவும், தவத்துறை சைவமுதலாயின நிவப்ப - தவநெறி யாகிய சைவமுதலிய அகச் சமயங்கள் மேலோங்கவும், ஒளவியம் மறம் கெட - பொறாமை முதலிய பாவங்கள் ஒழியவும், அறம் குது கலிப்ப - அறமானது களி கூரவும், தெய்வமறை துந்துபி - தெய்வத் தன்மையையுடைய மறைகளும் தேவ துந்துபிகளும்; திசைப்புலன் இசைப்ப - திசையிடங்க ளனைத்திலும் ஒலிக்கவும் எ-று. அகச்சமயம் - சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வைரவம், வாமம் என்பன; பிறவா றுரைத்தல் அமையுமாயினுங் கொள்க. ஒளவியத்தால் விளையும் மறங்கெட எனினுமாம். (12) மைம்மலர் நெடுங்கணர மங்கையர் நடிப்ப மெய்ம்மன மொழிச்செயலின் வேறுபட லின்றி அம்மதுரை மாநகரு ளாரக மகிழ்ச்சி தம்மையறி யாதன தலைத்தலை சிறப்ப. (இ-ள்.) மை மலர் நெடுங்கண் - மை தீட்டிய மலர்போன்ற நெடிய கண்களையுடைய, அரமங்கையர் நடிப்ப - அரம்பையர் கூத்தயரவும், அ மதுரை மாநகர் உளார் - அந்த மதுரையாகிய பெரிய நகரத்திலுள்ளவர்கள், மெய் மனம் மொழி செயலின் வேறுபடலின்றி - உடல் உள்ளம் உரையாகிய மூன்றின் செயலி னாலும் வேறுபடாது, தம்மை அறியாதன - தம்மை அறியாமைக்குக் காரணமாகிய, அகமகிழ்ச்சி - உள்ளக் களிப்பு, தலைத்தலை சிறப்ப- மேலும் மேலும் ஓங்கப் பெறவும் எ-று. மைம்மலர் என்பதற்கு மை பரந்த என்றும், நீலோற்பல பல ரென்றும் பொருள் கூறலுமாம். மெய்மையாகிய மனமொழி செயல் என விரிப்பினும் அமையும்; மூன்று கரணங்களும் ஒற்றுமைப்பட வென்க. நகருளார் மகிழ்ச்சி சிறக்கப் பெற. (13) மாந்தர் பயில் மூவறுசொன் மாநில வரைப்பில் தீந்தமிழ் வழங்குதிரு நாடது சிறப்ப ஆய்ந்ததமிழ் நாடர சளித்துமுறை செய்யும் வேந்தர்களின் மீனவர்1 விழுத்தகைமை யெய்த. (இ-ள்.) மாந்தர் பயில் மூவறு சொல் மாநில வரைப்பில் - மக்கள் வழங்குகின்ற பதினெட்டு மொழிகளுள்ள பெரிய நிலவுலகத்தில், தீந்தமிழ் வழங்கு திருநாடு சிறப்ப - இனிய தமிழ் மொழி வழங்குகின்ற அழகிய நாடு சிறந்து ஓங்கவும், ஆய்ந்த தமிழ் நாடு - சங்கமிருந்து ஆராய்ந்த அத் தமிழ்நாட்டின் மண்டலங்களை, அரசு அளித்து முறை செய்யும் - அரசாண்டு நீதி செலுத்துகின்ற, வேந்தர்களில் - மன்னர்களில், மீனவர் விழுத்தகைமை எய்த - பாண்டியர்கள் சிறந்த பெருமையைப் பெறவும் எ-று. மாந்தர் பயிலாத நிலமு முண்டாகலின் ‘பயில்’ என்றார். பதினெண்மொழி முன்பு உரைக்கப்பட்டன. தமிழகத்திற்குத் திருநாடு என்பதும் ஒரு பெயர் போலும். அது; பகுதிப்பொருள் விகுதி. வேந்தர்கள் - சேர, பாண்டிய, சோழர்கள். திருத்தொண்டர் புராணத்துள் திருஞானசம்பந்தரின் திருவவதாரம் கூறும் வழி திசையனைத்தின் பெருமையெலாம் தென்றிசையே வென்றேற என்பது முதலாகக் கூறியுள்ளன இங்கு நோக்கற் பாலன. (14) நொய்தழ லெரிக்கடவு ணோற்றபய னெய்தக் கொய்தளி ரெனத்தழல் கொழுந்துபடு குண்டத் தைதவி2ழிதழ்க்கமல மப்பொழு தலர்ந்தோர் மொய்தளிர் விரைக்கொடி முளைத்தெழுவ தென்ன. (இ-ள்.) அழல் எரிக் கடவுள் - தீக் கடவுள், நோற்ற பயன் நொய்து எய்த - தவஞ் செய்த பயனை எளிதில் அடையவும், கொய்தளிரென - கொய்யப்பட்ட தளிர்போல், தழல் கொழுந்து படுகுண்டத்து - நெருப்புக் கொழுந்து விட்டெரிகின்ற வேள்விக் குண்டத்தின்கண்; ஐது அவிழ் இதழ் கமலம் - அழகியதாக விரிந்த இதழ்களையுடைய தாமரை மலர், அப்பொழுது அலர்ந்து - அப்போதே விரியப்பெற்று, ஓர் மொய் தளிர் விரைக்கொடி - நெருங்கிய தளிர்களையுடைய மணமுள்ள ஒரு கொடியானது, முளைத்து எழுவது என்ன - தோன்றி மேலெழுவதைப் போலவும் எ-று. நொய்து - விரைய. அழல் எரி, ஒரு பொருளன. கொய்தளிர் குழைவுக்கும் நிறத்துக்கும் உவமை. ஐது - அழகிது; நுண்ணிதுமாம். ஐதவழ் என்னும் பாடத்திற்கு அழகு தவழும் என வுரைக்க. அலர்ந்த என்னும் பெயரெச்சம் ஈறு தொக்கதுமாம். இச்செய்யுளின் மூன்றாமடி முதல் குழவியின் எழிலும் தோற்றமும் கூறுகின்றார். (15) விட்டிலகு சூழியம் விழுங்குசிறு கொண்டை வட்டமதி வாய்க்குறு முயற்கறையை மானக் கட்டியதி னாற்றிய கதிர்த்தரள மாலை சுட்டியதில் விட்டொழுகு சூழ்கிரண மொப்ப. (இ-ள்.) விட்டு இலகு சூழியம் விழுங்கு - ஒளிவிட்டு விளங்கா நின்ற முத்துச் சூழியத்தால் விழுங்கப்பட்ட, சிறு கொண்டை - சிறிய கொண்டையானது, வட்டம் மதிவாய் - வட்டமாகிய சந்திரனிடத் துள்ள, குறுமுயல் கறையை மான - சிறிய முயலாகிய களங்கத்தை ஒக்கவும், அதில் கட்டி நாற்றிய - அச்சூழியத்தில் கட்டித் தொங்க விட்ட, கதிர்த் தரள மாலை - ஒளியினையுடைய முத்துமாலை, சுட்டியதில் - மேல் சுட்டப்பட்ட சந்திரனினின்றும், விட்டு ஒழுகு சூழ் கிரணம் ஒப்ப - விலகி வீழ்கின்ற சூழ்ந்த கிரணத்தை ஒக்கவும் எ-று. சூழியம் - கொண்டையைச் சுற்றியணியும் முத்தானியன்ற அணி. அதனாற் கவரப்பட்டுக் கொண்டை சிறிதே தோன்றிற்று. மதியினிடத்துள்ள கறையை மானென்றும் முயலென்றும் கூறுதல் வழக்கு. சூழியத்திற்கு வட்டமாகிய மதியும், கொண்டைக்கு அதனுட் களங்கமும், முத்துத் தொங்கலுக்குக் கீழ்நோக்கிச் செல்லும் அதன் கிரணமும் உவமைகளாம். சுட்டி யென்பதனை ஓர் அணியாகக் கொண்டுரைப்பாருமுளர்; பொருந்துமேற் கொள்க. (16) தீங்குதலை யின்னமுத மார்பின்வழி சிந்தி யாங்கிள நிலாவொழுகு மாரவட மின்ன வீங்குட லிளம்பரிதி வெஞ்சுடர் விழுங்கி வாங்குகடல் வித்துரும மாலையொளி கால. (இ-ள்.) தீங்குதலை இன் அமுதம் - இனிய குதலையுடன் கூடிய இனிய அமுதமாகது, மார்பின் வழி சிந்தியாங்கு - மார்பின் வழியாகச் சிந்தியதுபோல, இளநிலா ஒழுகும் ஆரவடம் மின்ன - இளநிலவு சிந்தும் முத்துமாலை ஒளிவிடவும், வீங்கு உடல் இளம்பரிதி - ஒளிமிக்க வடிவத்தினையுடைய இளஞாயிற்றின், வெஞ்சுடர் விழுங்கி -வெப்ப மாகிய ஒளியை உண்டு, வாங்குகடல் வித்துருமமாலை ஒளிகால - வளைந்த கடலிற்றோன்றிய பவளத்தின் மாலையானது ஒளி வீசுவும் எ-று. குதலை - பொருளறிய வாராத இளஞ்சொல். அமுதம் - வாயூறல்; பேசும் பொழுது ஊறல் ஒழுகுமாகலின் குதலையின்ன முதம் என்றார். “ கல்லா மழலைக் கனியூறல் கலந்து கொஞ்சும்” என்றும், “ துகிர்வா யூறுநீர் நனைமார்பி னோடு” என்றும் பிறருங் கூறுதல் காண்க. குதலையாகிய அமுதம் என்றுரைப் பாருமுளர். சிந்தப் பெற்று அவ்விடத்து வடம் மின்ன என்றுரைத் தலுமாம். ஆரம் - முத்து. வித்துருமம் - பவளம். (17) சிற்றிடை வளைந்தசிறு மென்றுகில் புறஞ்சூழ் பொற்றிரு மணிச்சிறிய மேகலை புலம்ப விற்றிரு மணிக்குழை விழுங்கி குதம்பை சுற்றிருள் கடிந்துசிறு தோள்வருடி யாட. (இ-ள்.) சிறுஇடை வளைந்த - சிறிய இடையைச் சூழ்ந்த, மென் சிறுதுகில் புறம் சூழ் - மெல்லிய சிற்றாடையின் புறத்தே சூழப்பெற்ற, பொன் திருமணி - பொன்னாலாகிய அழகிய மணிகள் பதித்த, சிறிய மேகலை புலம்ப - சிறிய மேகலை ஒலிக்கவும், வில் திருமணிக் குழை - ஒளி பொருந்திய அழகிய மாணிக்கக் குழையை , விழுங்கிய குதம்பை - தன்னுட்படுத்திய குதம்பைகள், சுற்றுஇருள் கடிந்து - சூழ்ந்த இருளை ஓட்டி, சிறுதோள் வருடி ஆட - சிறிய தோள்களைத் தடவி அசையவும் எ-று. துகிலின் புறமெனல் பொருந்தாமை காண்க. மேகலை - எண்கோவை யுடையது. பொன் மேகலையெனக் கூட்டுக. (18) தெள்ளமுத மென்மழலை சிந்தவிள மூரல் முள்ளெயி றரும்பமுலை மூன்றுடைய தோர்பெண் பிள்ளையென மூவொரு பிராயமொடு நின்றாள் எள்ளரிய பல்லுயிரு மெவ்வுலகு மீன்றாள். (இ-ள்.) தெள் அமுதம் - தெளிந்த அமுதம் போன்ற, மெல்மழலை சிந்த - மெல்லிய மழலைச் சொற்கள் தோன்றவும், இளமூரல்முள் எயிறு அரும்ப - புன்னகையினையுடைய கூரிய பற்கள் வெளிப்படவும், எள் அரும்ப - புன்னகையினையுடைய கூரிய பற்கள் வெளிப் படவும், எள் அரிய - இகழ்தலில்லாத, பல் உயிரும் எ உலகும் ஈன்றாள் - பல வுயிர்களையும் எல்லா வுலகங்களையும் பெற்ற வளாகிய உமையவள், முலை மூன்று உடையது ஓர் பெண்பிள்ளை என - மூன்று முலைகளை யுடையதாகிய ஒருபெண் மகவாக, மூவொரு பிராயமொடு நின்றாள் - மூன்று வயதுடன் நின்றாள் எ-று. அமுதம் என் எனப் பிரித்தலுமாம். உடையதோர் பெண் பிள்ளை; வழக்கு ஒ மூன்று பிராயமென்க. ஈன்றாள்; பெயர். (19) (அறுசீரடி யாசிரிய விருத்தம்) குறுந்தளிர்மெல் லடிக்கிடந்த சிறுமணிநூ புரஞ்சதங்கை குழறி யேங்க நறுந்தளிர்போல லசைந்துதளர் நடையொதுங்கி மழலையிள நகையுந் தோன்றப் பிறந்தபெரும் பயன்பெறுபொன் மாலைமடி யிருந்தொருபெண் பிள்ளை யானாள் அறந்தழுவு நெறிநின்றோர்க் கிகபோகம்1 வீடளிக்கு மம்மை யம்மா. (இ-ள்.) அறம் தழுவும் நெறி நின்றோர்க்கு அறத்தைப் பொருந்திய நன்னெறியில் ஒழுகுவோருக்கு, இகபோகம் வீடு அளிக்கும்- அம்மை - இம்மை மறுமை யின்பங்களையும் வீடு பேற்றையும் அருளும் உமையம்மையார், தளிர் குறுமெல் அடிகிடந்த - தளிர் போன்ற சிறிய மெல்லிய திருவடிகளிற் கிடந்த, சிறுமணி நூபுரம் சதங்கை - சிறிய மணிகளையுடைய சிலம்பும் சதங்கையும், குழறி ஏங்க - கலந்து ஒலிக்கவும், மழலை இளநகையும் தோன்ற - மழலைச் சொற்களும் புன்னகையுந் தோன்றவும், நறுந்தளிர்போல் அசைந்து- நறிய தளிர் அசைவது போல் அசைந்து, தளர்நடை ஒதுங்க - தளர்ந்த நடை நடந்து, பிறந்தபெரும் பயன் பெறு - பிறந்ததனா லாகிய பெரிய பயனைப் பெறுகின்ற. பொன்மாலை மடி - காஞ்சன மாலையின் மடியின்கண், இருந்து ஒரு பெண் பிள்ளை ஆனாள் - ஒரு பெண்ணாக விருந்தாள் எ-று. குழறி யேங்கல் - மயங்கி யொலித்தல். தளர் நடையாக. மழலையென்பதனோடும் உம்மையைக் கூட்டுக. இருந்து ஆனாள் என்பதை ஆகியிருந்தாள் என மாற்றுக. அறம் - அறநூலுமாம். மறுமையின்பம் உபலக்கணத்தாற் கொள்ளப்பட்டது. அம்மா; வியப்பிடைச்சொல். (20) செய்யவாய் வெளிறாது துணைமுலைக்கண் கருகாது சேல்போ னீண்ட மையவாய் மதர்த்தகருங் கண்பசவா தையிரண்டு மதியந் தாங்கா தையவா லிலைவருந்தப் பெறாதுபெறு மகவையெடுத் தணைத்தாண் மோந்தாள் துய்யவாய் முத்தங்கொண் டின்புற்றாள் முன்பெற்ற தோகை யன்னாள். (இ-ள்.) செய்யவாய் வெளிறாது - சிவந்த வாய் விளர்க்கா மலும், துணை முலைக்கண் கருகாது - இரண்டு முலைக்கண்களும் கறுக்காமலும், சேல் போல் நீண்ட - சேல் மீன் போலும் காதளவு நீண்ட, மையவாய் மதர்த்த கருங்கண் பசவாது - மையைடையன வாய் மதர்த்த கரிய கண்கள் பசக்காமலும், ஐயிரண்டு மதியம் தாங்காது - பத்து மாதங்கள் சுமக்காமலும், ஐய ஆல் இலை வருந்தப் பெறாது - நொய்மையாகிய ஆலிலை போலும் வயிறு வருந்தப் பெறாமலும், முன் பெற்ற தோகை அன்னாள் - முன்னே பெற்ற மயில்போலும் மேனையை ஒத்தவளாகிய காஞ்சளை, பெறுமகவை - தான்பெற்ற மகவை, எடுத்து அணைத்தாள் - வாரியெடுத்து மார்போடு அணைத்தாள்; மோந்தாள் - உச்சிமோந்தாள்; துய்யவாய் முத்தங் கொண்டு இன்புற்றாள் - புனிதமான வாயால் முத்தமிட்டு இன்பமிக்காள் எ-று. வாய் விளர்த்தல் முதலியன கருப்பக்குறிகள். வெளிறாது முதலிய எதிர்மறை வினை யெச்சங்கள் பெறும் என்பதும் கொண்டு முடியும். மையை அளாவி என வுரைத்தலுமாம். ஐய - நுண்ணிய. ஆலிலை; வயிற்றுக்கு ஆகுபெயர். துய்ய - தூய. மேனையும் கருவுறாமல் மகளாகப் பெற்றாளாகலின் முன்பெற்ற தோகை யன்னாள் என்றார். உமாதேவியார் சிவபெருமாளை வணங்கித், தக்கனுக்குப் புதல்வியாய் வளர்ந்த இவ்வுடலைச் சுமக்கிலேன் எனச்சொல்லி இறைவனருள் பெற்றுச் சென்று இமயமலையிலுள்ள ஒரு தடாகத்தி லலர்ந்த தாமரை மலர் மீது குழவியாய் அமர்ந்திருக்க, அங்கே தம்மைப் புதல்வியாகப்பெறுதற்குத் தவம்புரிந்து கொண்டிருந்த மலையரசன் அக்குழவியைக் கண்டு ஆராமகிழ்ச்சியுடன் எடுத்துத் தன் மனைவியாகிய மேனையின் கையிற் கொடுக்க அவள் பெரு மகிழ்ச்சியுடன் பெற்றுவளர்த்தாள் என்பது வரலாறு. (21) பரையாதி விருப்பறிவு தொழிலாகி யுலகமெலாம் படைத்துத் காத்து வரையாது துடைத்துமறைத் தருளியவை நின்றுந்தன் வடிவு வேறாய் உரையாதி மறைகடந்த வொருமுதல்வி திருமகளா யுதித்தற் கிந்தத் தரையாளு மன்னவன்செய் தவமிதுவோ வதற்குரிய தவந்தான் மன்னோ. (இ-ள்.) பரை ஆதி விருப்பு அறிவு தொழில் ஆகி - பராசத்தி ஆதிசத்தி இச்சாகத்தி ஞானசத்தி கிரியாசத்தி என்னும் ஐவகைச் சத்திகளாகி, உலகம் எலாம் - எல்லாவுலகங்களையும், படைத்து காத்து வரையாது துடைத்து மறைத்து அருளி - படைத்தல் காத்தல் ஒழிவின்றி அழித்தல் மறைத்தல் அருளல் என்னும் ஐவகைத் தொழில்களைப் புரிந்து, அவை நின்றும் தன்வடிவு வேறு ஆய் - அவ்வைவகைச் சத்திகளினின்றும் தன் உண்மை வடிவு வேறாகி, உரை ஆதி - வாக்கு மனங்களையும், மறை - வேதங்களையும், கடந்த - தாண்டி நிற்கின்ற, ஒரு முதல்வி - ஒப்பற்ற தலைவியானவள், திருமகளாய் உதித்தற்கு -திருமளாய்த் தோன்றுதற்கு, இந்தத் தரை ஆளும் மன்னவன் - இந்நிலத்தின்னை ஆளும் மலயத்துவச பாண்டியன், செய் தவம் இதுவோ - இம்மையிற் செய்த இத்தவமோ அமைவது, அதற்கு உரிய தவம் மன் - அதற்குப் பொருந்திய தவம் பெரிதாகும் எ-று. சிவசத்தி யொன்றே காரிய வேறுபாட்டால் ஐவகைச் சத்தியாகி நிற்றலை. “ ஈறிலாதவ ளொருத்தியே யைந்தொழி லியற்ற வேறு வேறுபேர் பெற்றென” என முன்னுங் கூறினார். ஐந்தொழில் - சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம், அநுக்கிரகம் என வடமொழியிற் பெயர் பெறும். அவற்றினின்றும் என்பது சாரியை தொக்கு அவை நின்றும் என நின்றது. ஆதியென்றதனால் மனம் கொள்ளப் பட்டது; உடலையும் கொள்ளுதலுமாம். தவம் இது வென்றது மகப்பேற்று வேள்வியை மன் - பெரிது; முற்பிறவிகளிற் பெருந்தவம் செய்திருக்க வேண்டு மென்பது. தான், ஓ; இரண்டும் அசைகள். (22) கள்ளமா நெறியொழுகும் பொறிகடந்து கரணமெலாங் கடந்தா னந்த வெள்ளமாம் பரஞான வடிவுடையா டன்னன்பின் வெளிவந் தின்றோர் பிள்ளையா யவதரித்த கருணையுந்தன் மணாட்டிதவப் பேறுந் தேறான் பள்ளமா கடற்றானைப் பஞ்சவர்கோ னெஞ்சத்துட் பரிவு1 கூர்ந்தான். (இ-ள்.) கள்ளம் ஆம்நெறி ஒழுகும் பொறிகடந்து வஞ்சமாகிய வழியில் ஒழுகும் ஐம்பொறி உணர்வையும் கடந்து, கரணம் எலாம் கடந்து - அந்தக்கரண உணர்வனைத்தையுங் கடந்து, ஆனந்த வெள்ளம் ஆம் - பேரின்பப் பெருக்காகிய, பரஞான வடிவு உடையாள் - பரஞானமே திருவுருவாகிய உமையம்மை, தன் அன்பின் - தன் அன்பினாலே, வெளிவந்து - யாவர்க்கும் புலனாகும்படி வந்து, இன்று ஓர் பிள்ளையாய் அவதரித்த கருணையும் - இப்பொழுது ஒரு பெண்மகவாய் அவதரித்த அருளையும், தன் மணாட்டி தவப் பேறும் தேறான் - தனது மனைவியின் தவப்பயனையும் தெளியாத வனாய், பள்ளம் மா கடல்தானை - பள்ளமாகிய பெரிய கடல் போன்ற சேனைகளையுடைய, பஞ்சவர்கோன் - பாண்டி மன்னன், நெங்சத்துள் பரிவு கூர்ந்தான் - மனத்தின்கண் துன்பமிகுந்தான் எ-று. “ சத்திதன் வடிவே தென்னிற் றடையிலா ஞான மாகும்” என்னும் சிவாஞானசித்தியால் சத்தியின் வடிவு ஞானமாதலை யுணர்க. மணவாட்டி யென்பது மணாட்டியென மருவிற்று. மா கடல், மா உரிச்சொல்லாதலின் இயல்பாயிற்று. பரிவு கூர்ந்த வியல்பினை வருஞ் செய்யுளிற் காண்க. (23) மகவின்றிப் பலபகல்யான் வருந்தியருந் தவம்புரிந்தேன் மைந்தற் பேறு தகவிந்த மகஞ்செய்தே னதுவுமொரு பெண்மகவைத் தந்த தந்தோ முகவிந்து நிலவொழுக வருபெண்ணு முலைமூன்றாய் முகிழ்ந்து மாற்றார் நகவந்த தென்னேயோ வென்றுவகை யிலனாகி நலியு மெல்லை. (இ-ள்.) மகவு இன்றி - பிள்ளையில்லாமல், யான் பலபகல் வருந்தி அருந்தவம் புரிந்தேன் - யான் பலகாலம் வருந்தி அரிய தவத்தைச் செய்தேன்; (அதனால் எய்தாமையின் பின்னும்), மைந்தன்பேறு தக இந்த மகம் செய்தேன் - புதல்வற் பேறு பொருந்த இந்த வேள்வி யினைச் செய்தேன்; அதுவும் ஒரு பெண்மகவைத் தந்தது - அந்த வேள்வியும் ஒரு பெண்பிள்ளையைக் கொடுத்தது; அந்தோ - ஐயோ, முக இந்து நிலவு ஒழுக வரு பெண்ணும் - முகமாகிய மதி யின்றும் நிலவொழுகத் தோன்றிய இப்பெண்ணும், முலை மூன்றாய் முகிழ்த்து - முலைகள் மூன்றாக அரும்பப்பெற்று, மாற்றார் நக வந்தது - பகைவர் சிரிக்கத் தோன்றியது; என்னேயோ என்று - இஃது என்னையோவென்று கருதி, உவகை இலனாகி நலியும் எல்லை - மகிழ்ச்சி இல்லாதவனாய் வருந்தும் பொழுதில் எ-று. தக - பொருந்த. மகனை விரும்பிச் செய்ய மகளையளித்தது. அந்தோ; இரக்க விடைச்சொல்; அதனைப் பெண்ணும் என்பதன் பின்னே கூட்டுக. நக - எள்ளி நகும்படி. என்னேயோ - இதற்குக் காரணம் என்னையோ, நான் செய்த தவறு என்னையோ; ஓ; இரக்கத்தில் வந்தது. (24) மன்னவநின் றிருமகட்கு மைந்தர்போற் சடங்கனைத்தும் வழாது வேதஞ் சொன்னமுறை செய்துபெயர் தடாதகையென் றிட்டுமுடி சூட்டு வாயிப் பொன்னனையா டனக்கிறைவன் வரும்பொழுதோர் முலைமறையும் புந்தி மாழ்கேல் என்னவர னருளாலோர் திருவாக்கு விசும்பிடைநின் றெழுந்த தன்றே. (இ-ள்.) மன்னவ - அரசனே, நின் திருமகட்கு - உன்னுடைய திருமகளுக்கு, மைந்தர் போல் - புதல்வருக்குச் செய்வதுபோல், சடங்கு அனைத்தும் வழாது - சடங்குகள் எல்லாம் வழுவாமல், வேதம் சொன்ன முறைசெய்து - மறை கூறியபடி செய்து, தடாதகை என்று பெயர் இட்டு - தடாதகை என்று பெயர் சூட்டி, முடி சூட்டுவாய் - மகுடஞ் சூட்டுவாய்; இப்பொன் அனையாள் தனக்கு இறைவன் வரும் பொழுது - இந்தப் பொன்போலும் வடிவினையுடை யாளுக்குத் தலைவன் வருங்காலை, ஓர் முலை மறையும் - ஒரு கொங்கை மறைந்துவிடும் (ஆதலால்), புந்திமாழ்கேல் என்ன - மனம் வருந்தாதே என்று, அரன் அருளால் ஓர் திருவாக்கு விசும்பிடை நின்று எழுந்தது - சிவபெருமான் திருவருளால் ஒரு திருவாக்கு வானினின்றும் தோன்றியது எ-று. பெயரிட்டு எனக் கூட்டு. மாழ்குதல் - மயங்குதல். அன்று, ஏ; அசைகள். (25) அவ்வாக்குச் செவிநிரம்ப வன்புவகை யகநிரம்ப வகல மெல்லாம் மெய்வாக்கு மனமொன்ற விழிவாக்கும் புனனிரம்ப விமலற் போற்றி நெய்வாக்கு மகநிரப்பி யெழுந்துமனை யொடுஞ்சாலை நீத்தி ரண்டு கைவாக்கு மியங்கலிப்பக் கடிமாட மனைப்புகுந்தான் கழற்கால் வெந்தன். (இ-ள்.) அவ்வாக்குச் செவி நிரம்ப - அந்த வான் வாக்குச் செவியில் நிரம்பியவுடன், அன்பு உவகை அகம் நிரம்ப - அன்பும் மகிழ்ச்சியும் உள்ளத்தில் நிறையவும், மெய்வாக்கு மனம் ஒன்ற - உடல் உரை உள்ளம் மூன்றும் ஒருவழிப்பட, விழிவாக்கும் புனல் அகலம் எல்லாம் நிரம்ப - கண்கள் பொழியும் இன்ப நீர் மார்பு முழுதும் நிறையவும். கழல் கால் வேந்தன் - வீரகண்டை யணிந்த காலினையுடைய மன்னன், விமலன்போற்றி - நின்மலனாகிய இறைவனைத் துதித்து, நெய் வாக்கும் மகம் நிரப்பி - நெய்யினைச் சொரியும் வேள்வியினை முடித்து, எழுந்து மனையொடும் சாலை நீத்து - மனைவியொடும் எழுந்துவேள்விச்சாலையைவிடுத்து, இரண்டுகை வாக்கும் இயம் கலிப்ப - இரண்டுபக்கங்களிலும் இயங்கள் ஒலிக்க, கடிமாட மனைபுகுந்தான் - காவலைக் கொண்ட மாளிகையையுடைய அரமனையை அடைந்தான் எ-று. அன்பும் உவகையும். அகலமெல்லாம் புனல் நிரம்ப வென்க. நெய்வாக்கு என்பதில் வாக்குதல் - வார்த்தல். நிரப்பி - பூரணாகுதி செய்து முடித்து. கைவாக்கு - கைப்பக்கம்; வழக்கு; வாகு எனவும் வழங்கும்; கைகளால் தாக்கப்படும் என்றுரைப்பாரு முளர்; வாக்கும் என்பதற்கு அது பொருளாகாமை யுணர்க. (26) முரசதிர்ப்ப மங்கலங்கொண் டெதிர்வருவார் முகத்துவகை முறுவல் பூப்ப அரசிருக்கு மண்டபம்புக் கினிதமர்ந்து கனகமழை யான்ற கேள்வி விரசிருக்கு மறையவர்கைப் பெய்தெவர்க்கு மம்முறையால் வெறுப்ப நல்கிப் பரசிருக்குங் கரதலத்தெம் பரன்கோயி னனிசிறப்புப் பல்க நல்கா. (இ-ள்.) முரசு அதிர்ப்ப - பேரிகை ஒலிக்கவும், மங்கலம் கொண்டு எதிர் வருவார் - எட்டு மங்கலங்களையும் ஏந்தி எதிர் வருகின்ற மகளிரின், முகத்து உவகை முறுவல் பூப்ப - முகத்தின்கண் மகிழ்ச்சி நகைதோன்றவும், அரசு இருக்கும் மண்டபம் புக்கு இனிது அமர்ந்து - அரசிருக்கை மண்டபத்திற் புகுந்து இனிதாகக் கொலு வீற்றிருந்து, ஆன்ற கேள்வி விரசிருக்கும் மறையவர் கை - நிறைந்த கேள்வி பொருந்தப்பெற்ற மறையவர் கைகளில், கனக மழை பெய்து - பொன் மழையைப் பொழிந்து, எவர்க்கும் அம்முறையால் வெறுப்ப நல்கி - ஏனை யாவர்க்கும் அங்ஙனமே (அவர்) வெறுக்கும் படி கொடுத்து, பரசு இருக்கும் கரதலத்து எம்பரன் கோயில் - மழுப்படை தங்கிய திருக்கரத்தினையுடைய எம் இறைவன் திருக்கோயிலில், நனி சிறப்புப் பல்க நல்கா - மிகவும் திருவிழா முதலிய பெருகும்படி வேண்டியவற்றைக் கொடுத்து எ-று. எட்டுமங்கலம் - சாமரம், நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, கொடி, இணைக்கயல் என்பன. ஆன்ற - நிறைந்த; அகன்ற என்பதன் மரூஉ. விரசியிருக்குமென்பது விகாரமாயிற்று. வெறுத்தல் செறிதலாகலின் வெறுப்ப என்பதற்கு மிக என்றுரைத் தலுமாம். நல்கா - நல்கி; செயப்படுபொருள் வருவிக்க. (27) சிறைவிடுமின் சிறைக்களமுஞ் சீத்திடுமி னேழாண்டு தேயத் தீட்டும் இறைவிடுமி னயல்வேந்தர் திறைவிடுமி னிறைநிதிய மீட்டு மாயத் துறைவிடுமி னறப்புறமு மாலயமும் பெருக்கு மெனத் தொழாரைக் காய்ந்த கறைவிடுமின் னயில்வேலான் வள்ளுவனைக் கூய்முரசங் கறங்கச் சாற்றி. (இ-ள்.) சிதை விடுமின் - சிதைசெய்யப்பட்டவர்களை விட்டுவிடுங்கள்; சிறைக்களமும் சீத்திடுமின் - சிறைச்சாலையையும் தூய்மை செய்யுங்கள்; ஏழு ஆண்டு தேயத்து ஈட்டும் இறைவிடுமின் - ஏழு ஆண்டுவரை நாட்டில் வாங்கும் வரிகளை விட்டு விடுங்கள்; அயல் வேந்தர் திறை விடுமின் - வேற்று நாட்டு மன்னர்களின் திறைகளைவாங்காது விடுங்கள்; நிறை நிதியம் ஈட்டும் ஆயத்துறை விடுமின் - நிறைந்த பொருளைத் தோடும் சுங்கத் துறையை நீக்கி விடுங்கள்; அறப்புறமும் ஆலயமும் பெருக்கும் - அறச்சாலைகளையும் ஆலயங்களையும் ஓங்கச் செய்யுங்கள், என - என்று, தொழாரைக் காய்ந்த கறை - பகைவர்களைக் கொன்ற குருதிக் கறையையுடைய, மின் விடும் அயில் வேலான் - ஒளி வீசும் கூரிய வேற் படையையுடைய பாண்டியன், வள்ளுவனை கூய் - வள்ளுவனை அழைத்து, முரசங் கறங்கச் சாற்றி - பேரிகை சாற்றும்படி ஏவி எ-று. சீத்தல் - துய்மை செய்தல். ஏழாண்டு, பால கிரகாரிட்ட நிவித்தியின் பொருட்டு; பன்னிரண்டும் கொள்வர். அயல்வேந்தர்- பணிந்த மன்னர். திறை - கப்பம். கறை - உதிரம். அயில் - கூர்மை. வள்ளுவன் - முரசறையும் முதுகுடிப் பிறந்தோன். கூவி யென்பது விகாரமாயிற்று. இன்னின்ன செய்கவென மரச மொலிக்கும்படி சொல்லி யென்க. சாற்றி - சாற்றுவித்து எனினுமாம். “ கறைபன் னீராண்டு டுடன்விடுமின் காமர் சாலை தளிநிறுமின்” என்னும் சித்தாமணிச் செய்யுள் இங்கு நோக்கற்பாலது. (28) கல்யாண மணிமெளலி வேந்தரையுங் கால்யாப்புக் கழல நீத்துக் கொல்யானை பரிநெடுந்தே ரரசுரிமை தொன்முறையாற் கொடுத்துப் போக்கிப் பல்லாருங் கொள்கவெனப் பண்டாரந் தலைதிறந்து1 பசும்பொ னாடை வில்லாரு மணிக்கொடும்பூண் வெறுக்கைமுத லெனைப்பலவும் வெறுப்ப வீசி. (இ-ள்.) கல்யாணம் மணி மெளலி வேந்தரையும் - பொன்னாற் செய்த மணிகளழுத்திய முடிகளையுடைய மன்னர்களையும், கால்யாப்பு கழல் நீத்து - (அவர்கள்) கால் விலங்குகளைக் கழற்றி, கொல்யானை பரி நெடுந்தேர் அரசு உரிமை - கொல்லுகின்ற யானைகளையும் குதிரைகளையும் நெடிய தேர்களையும் அரசிய லுரிமையையும், தொல்முறையால் கொடுத்துப் போக்கி - முன்னுள்ள வாறே கொடுத்துப்போக விடுத்து, பல்லாரும் கொள்க. என - பலரும் எளிதிற் கொள்ளக் கடவரென்று, பண்டாரம் தலை திறந்து - பொருள் அறையைத் திறந்து, பசும் பொன் ஆடை - பசிய பொன்னாடை களையும், வில் ஆரும் மணி - ஒளி நிறைந்த மணிகளையும், கொடும் பூண் - வளைந்த அணிகளையும், வெறுக்கை முதல் எனைப் பலவும்- பொருள் முதலிய பலவற்றையும், வெறுப்ப வீசி - (அவர்கள்) வெறுக்கும்படி நிறையக் கொடுத்து எ-று. கல்யாணம் - பொன்னைக் குறிப்பது. வேந்தர் - பகைவராய்ச் சிறைப்பட்டவர். கழல நீத்து; ஒரு சொல்; கழலுமாறு விடுத்துமாம். தொன்முறையாற் பெறுமாறு. பொன்னும் ஆடையும் என்றும், மணியானியன்ற பூண் என்றும், பூண் முதலிய வெறுக்கை என்றும் கூறுதலுமாம். எனைப் பலவும் - எனைத்தும் பலவாகியவும். வீசி-வரைவின்றி வழங்கி. (29) தூமரபின் வருபெருமங் கலகவிகட் கிருநிதியந் துகில்பூண் பாய்மா காமர்கரி பரித்தடந்தேர்1 முதலாய பலபொருளுங் களிப்ப நல்கிக் கோமறுகு களிதூங்கச் கண்ணமொடு மெண்ணெய்விழாக் குளிப்ப நல்கி மாமதுரா நகரன்றி மற்றுமுள நகரெங்கு மகிழ்ச்சி தூங்க. (இ-ள்.) தூமரபில் வரு - தூய மரபில் வருகின்ற, பெரு மங்கல கவிகட்கு - பெரிய மங்கலப் பாடகர்களுக்கு, இருநிதியம் - பெரும் பொருளும், துகில் பூண் - ஆடைகளும் அணிகளும், பாய் மா - தாவுகின்ற குதிரைகளும், காமர் கரி - அழகிய யானைகளும், பரித் தடந்தேர் - குதிரைகள் பூட்டிய பெரியதேர்களும், முதலிய பல பொருளும் - இவைமுதலிய பல பொருள்களையும், களிப்ப நல்கி - (அவர்கள்) மகிழக்கொடுத்து, கோ மறுகு - மன்னர் வீதிகளில், களி தூங்க - மகிழ்ச்சி மிக, சுண்ணமொடும் எண்ணெய் - மணப் பொடியையும் எண்ணெயையும், விழாக் குளிப்ப நல்கி - நெய்யணி விழாக் கொண்டாடுதற்குக் கொடுத்து, மா மதுரா நகர் அன்றி - பெரிய மதுரைப்பதியே அல்லாமல், மற்றும் உள நகர் எங்கும் மகிழ்ச்சி தூங்க - ஏனைய பதிகளும் களிப்பு மீக்கூர எ-று. மங்கல கவி: வடநூன் முடிபு. நிதியம் - பொன். விழா - நெய்யணி விழா; இதனை, “ புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதில் நெய்யணி மயக்கம் புரிந்தோள்” என ஆசிரியர் தொல்காப்பியர் கூறுமாற்றானும் அறிக. (30) இவ்வண்ண நகர்களிப்ப விறைமகனுங் களிப்பெய்தி யிறைவர் சொன்ன அவ்வண்ணஞ் சாதமுதல் வினைநிரப்பித் தடாதகையென் றழைத்துத் தேவி மெய்வண்ண மறையுணரா விறைவிதனை மேனைபோன் மேனா ணோற்ற கைவண்ணத் தளிர்தீண்டி வளர்ப்பவிம வான்போலக் களிக்கு நாளில். (இ-ள்.) இவ்வண்ணம் நகர் களிப்ப - இவ்வாறு நகர மெல்லாம் மகிழ, இறைமகனும் களிப்பு எய்தி -மலையத்துவச பாண்டியனும் மகிழ்ச்சி மிக்கு, இறைவர் சொன்ன அவ்வண்ணம் - இறைவர் அசரீரியாக அருளிச்செய்த அத் திருவாக்கின்படியே, சாதம் முதல் வினை நிரப்பி - சாதகன்ம முதலாகிய சடங்குகளை முடித்து, தடாதகை என்று அழைத்து - தடாதகை என்று பெயர்கூறி, தேவி - தன் தேவியாகிய காஞ்சனமாலை, மெய்வண்ணம் மறை உணரா - உண்மைத் தன்மையையுடைய வேதங்களாலும் அறியப் படாத, இறைவிதனை தடாதகைப் பிராட்டியாரை, மேனைபோல்- மேனையைப்போல், மேல் நாள் நோற்ற - முற்பிறப்பில் தவங் கிடந்த,கைவண்ணத் தளிர் தீண்டி வளர்ப்ப - கைகளாகிய அழகிய தளிர்களால் தொட்டு வளர்க்க, இமவான் போலக் களிக்கும் நாளில் - தான் மலையரையன்போல மகிழுங்காலத்தில் எ-று. சாதம் - பிறப்பு; சாதகன்மம், மறை மெய்வண்ண முணராத என்றுமாம். தேவி வளர்ப்ப இறைமகனும் களிக்கு நாளில். (31) திருந்தாத விளங்குதலை யாயமொடு புறம்போந்து சிறார்க்குச் சிற்றில் விருந்தாக மணற்சிறுசோ றட்டும்வரை யுரங்கிழித்த வேளும் வாய்வைத் தருந்தாத விளமுலைவாய் வைத்தருந்தப் பாவைதனக் களித்தும் போதில் வருந்தாதை யண்டமெலாஞ் சிற்றிலிழைப் பாளாய்க்கு மகிழ்ச்சி செய்தாள். (இ-ள்.) திருந்தாத இளங்குதலை ஆயமொடு - திருத்தம் பெறாத இளமையாகிய மழலைச் சொற்களையுடைய சிறுமிகளின் குழுவொடு, புறம்போந்து - வீதிகளிற் சென்று, சிறு இல் - சிறு வீடு (அமைத்து), சிறார்க்கு விருந்தாக மணல் சிறு சோறு அட்டும் - சிறுவர்களுக்கு விருந்தாகுமாறு மணலால் சிறு சோறு சமைத்தும், வரை உரம் கிழித்த வேளும் - கிரவுஞ்ச மலையின் மார்பைப் பிளந்த முருகக் கடவுளும்; வாய்வைத்து அருந்தாத - வாயினை வைத்து உண்ணப்பெறாத, இள முலை வாய் வைத்து அருந்த - இளமை யாகிய தனத்தில் வாய்வைத்து உண்ணுமாறு, பாவை தனக்கு அளித்தும் - பாவைக்குக் கொடுத்தும், போதில் வரும் தாதை அண்டம் எலாம் - தாமரைமலரில் தோன்றிய பிரமனுடைய அண்டங்களை யெல்லாம், சிற்றில் இழைப்பாள் - (நினைப்பளவில்) சிறுவீடாக இயற்றும் இறைவி, ஆய்க்கு மகிழ்ச்சி செய்தாள் - தன் தாயாகிய காஞ்சன மாலைக்குக் களிப்பை உண்டாக்கினாள் எ-று. வேளும்; உம்மை உயர்வு சிறப்பு. வாய்வைத்தருந்தாமை உண்ணா முலையாள் என்னும் பெயரானுமறிக. சோறடுதல் முதலியன பாவனை. பாவை - மரப்பாவை முதலியன. தாதை - பிரமன்; பெயர். தாதையண்டம் - பிரமாண்டம். சிற்றிலிழைத்தல் போல் அண்டங்களையெல்லாம் எளிதாகச் செய்வாள். ஆய், திரிபு: திசைச் சொல்லுமென்ப; சிறார் என்பதற்குச் சிறுமியர் என்று பொருள் கூறுவாருமுளர்; அது சிறவாமை காண்க. (32) தீட்டுவா ளிரண்டனைய கண்களிப்பத் தோழியர்க்குத் தெரிய வாடிக் காட்டுவா ளெனக்1 கழங்கு பந்துபயின் றம்மனையுங் கற்றுப் பாசம் வீட்டுவான் மேலோடுகீழ் தள்ளவெமையிஷ்ஐள வினைக்கயிறு வீக்கி யூசல் ஆட்டுவாள் காட்டுதல்போ லாடினா ணித்திலத்தாம் பசைத்த வூசல். (இ-ள்.) பாசம் வீட்டுவாள் - அடியார்கள் பாசத்தைப் போக்கு வாளாகிய அம்மை, தீட்டுவாள் இரண்டு அனைய - தீட்டிய வாட்கள் இரண்டனை ஒத்த, கண்களிப்ப - இருகண்களும் களிக்குமாறு, தோழியர்க்கு தெரிய ஆடிக்காட்டுவாள் என - தோழிமார்களுக்கு (அவர்கள்) அறிய ஆடிக் காட்டுவாளைப்போல, கழங்கு பந்து பயின்று - கழங் காடலையும் பந்தாடலையுஞ் செய்து, அம்மனையும் கற்று - அம்மனை யாடலையும் கற்று, மேல் கீழ்தள்ள எமைவினைக்கயிறு வீக்கி - மேலும் கீழும் புகுமாறு எங்களை வினைகளாகிய கயிற்றால் பிணித்து, ஊசல் ஆட்டுவாள் - ஊசலாட்டு கின்ற அவ்வம்மை, காட்டுதல்போல் - (இங்கு அதனைக்) காட்டல் போல, நித்திலத் தாம்பு அசைத்த ஊசல் ஆடினாள் - முத்து வடத்தாற் கட்டிய ஊசலில் ஆடினாள் எ-று. வீட்டுவாள் ; பெயர். மேலொடு கீழ் - துறக்க நிரயம்; ஒடு; எண்ணிடைச் சொல். ஆட்டுவாள்; தொழிற் பெயருமாம். ஊசல் - ஊஞ்சல். (33) இம்முறையாற் றாயர்க்குந் தோழியர்க்கு மகத்துவகை யீந்தா ளாகி அம்முறையாற் றாதைக்கு மகத்துவகை யீவாளா யாத்த வாய்மைச் செம்மறையா ரணமுதனா லீரெட்டுக் கலைமுழுதுந் தெளிந்தா ளந்த மெய்ம்மறையார் கலையனைத்து மேகலையா மருங்கசைத்த விமலை யம்மா. (இ-ள்.) இம்முறையால் - இவ்வகையான விளையாட்டுக்களால், தாயர்க்கும் தோழியர்க்கும் - அன்னைக்கும் தோழிகளுக்கும், அகத்து உவகை ஈந்தாளாகி - உள்ளத்து மகிழ்ச்சியைக் கொடுத்தருளி, அம்முறையால் - அங்ஙனமே, தாதைக்கும் அகத்து உவகை ஈவாளாய் - தந்தைக்கும் மனத்தின்கண் மகிழ்ச்சியைக் கொடுத்தருள, ஆத்த வாய்மைச் செம்மறை ஆரணம் முதல் - கடவுளின் வாய்மொழியாகிய செவ்விய மறையாகிய வேதமுதலாகவுள்ள, நால் ஈரெட்டுக் கலைமுழுதும் தெளிந்தாள் - அறுபத்துநான்கு கலைகளையும் முற்றும் குற்றமறத் தெளிந்தாள்; அந்த மெய் மறை ஆர்கலை அனைத்தும் - அந்த உண்மையாகிய மறைமுதலிய நிறைந்த கலைகளனைத்தையும், மேகலையாமருங்கு அசைத்த விமலை - மேகலையாக அரையிற் கட்டிய அம்மை எ-று. ஈவாளாய்-ஈவாளாக; எச்சத்திரிபு கல்வியால் மகிழ்தல் தந்தையியல்பாகலின் இங்ஙனங் கூறினார். வாய்மை - வாய்மொழி; வாக்கு. மறை ஆரணம், ஒரு பொருளன. அம்மா;வியப்பிடைச் சொல். அறுபத்து நான்கு கலைகள் இவை யென்பதனைச் சுக்கிரநீதி நான்காம் அத்தியாயம் மூன்றாம் பிரகரணத்திற் காண்க. (34) சொல்வாய்மைக் கலைத்தெளிவு முழுமதியைப் பிளந்திருபாற் சொருகி யன்ன பல்வாய்மைக் கடகரிதேர் பரியுகைக்குந் திறனுமழற் பகழி தூர்க்கும் வில்வாள்வச் சிரமுதற்பல் படைத்தொழிலுங் கண்டிளமை விழுங்கு மூப்பிற் செல்வாய்மை திறலரசன் றிருமகட்கு முடிசூட்டுஞ் செய்கை பூண்டான். (இ-ள்.) வாய்மை சொல் கலைத்தெளிவும் - உண்மையைக் கூறும் கலைகளின் தெளிவையும், முழுமதியைப் பிளந்து - நிறைந்த சந்திரனை இருபிளவாக்கி, இருபால் சொருகி அன்ன - இரண்டு பக்கங்களிலும் சொருகி வைத்தாற் போன்ற, பல் வாய் மை கட கரி - தந்தங்கள் அமைந்த கரிய மதத்தினையுடைய யானையையும், தேர்பரி - தேரையும் குதிரையையும் உகைக்கும் திறனும் - செலுத்தும் வகையையும், அழல் பகழி தூர்க்கும் வில் - கொடிய அம்புகளைப் பொழியும்வில்லும், வாள் வச்சிர முதல் பல்படைத்தொழிலும் கண்டு - வாட்படையும் வச்சிரப்படையும் முதலிய பல படைக்கலத் தொழிலின் தேர்ச்சியையும் பார்த்து, இளமை விழுங்கு மூப்பில் செல் - இளமையைப்போக்கிய மூப்புப் பருவத்திற் செல்கின்ற, வாய்மைத் திறல் அரசன் - உண்மையையுடைய வெற்றி பொருந்திய மன்னனாகிய தந்தை, திருமகட்கு முடிசூட்டும் செய்கை பூண்டான் - தன் திருமகளுக்கு மகுடஞ் சூட்டுகின்ற செய்கையில் அமைந்தான் எ-று. தெளிவும் திறனும் தொழிலும் கண்டு. மூப்பிற் செல்லுதல் - முதுமையுற்று நடத்தல். (35) முடிகவிக்கு மங்கலநாள் வரையறுத்துத் திசைதோறு முடங்கல் போக்கிக் கடிகெழுதார் மணிமெளலிக் காவலரை வருவித்துக் காவல் சூழ்ந்த கொடியணிமா நகரரெங்கும் விழாவெடுப்பு வழகமைத்துக் குன்ற மன்ன தொடிகெழுதோட் சுமதிதிரு மணத்தினுக்கு வேண்டுவன சூழ்ந்து செய்தான். (இ-ள்.) குன்றம் அன்ன தொடி கெழுதோள் சுமதி - மலையை ஒத்த வளையணிந்த தோளையுடைய சுமதி என்னும் அமைச்சன், முடிகவிக்கு மங்கல நாள் வரையறுத்து - முடி சூட்டுதற்குரிய மங்கலமாகிய நன்னாளை நிச்சயித்து, திசைதோறும் முடங்கல் போக்கி - திக்குகள் தோறும் ஓலை விடுத்து, கடிகெழுதார் - மணம் பொருந்திய மாலையை யணிந்த, மணிமெளலிக் காவலரை வருவித்து - மணி முடிதரித்த மன்னர்களை வரச்செய்து, காவல்சூழ்ந்த கொடி அணி மா நகர் எங்கும் விழா எடுப்ப - மதில் சூழ்ந்த கொடிகளையுடைய அழகிய பெரிய நகரத்திலுள்ளார் எவ்விடத்தும் சிறப்புச் செய்ய, அழகு அமைத்து - ஒப்பனை செய்வித்து, திருமணத்தினுக்கு வேண்டுவன சூழ்ந்து செய்தான் - அழகிய முடிசூட்டு விழாவுக்கு வேண்டும் பொருள்களை ஆராய்ந்து - திரட்டினான் எ-று. முடங்கல் - திருமுகம்; ஒலையைச் சுருளாக்குதலின் முடங்கல் என்பது பெயராயிற்று. காவல் - மதிலும் பிறவுமாம். கொடிகளையணிந்த எனலுமாம். குன்ற மன்ன தோள். தொடி-வீரவளை. வேண்டுவன - வேண்டுங் காரியங்களுமாம். (36) மங்கலதூ ரியமுழங்க மால்யானை யுச்சிமிசை வந்த பூத கங்கைமுத லொன்பதுதீர்த் தமுநிரப்பிக் கதிர்விடுபொற் கடம்பூ சித்துப் புங்கவரை மந்திரத்தீ வளர்த்தமுத மருத்தியெரி பொன்னாற் செய்த சிங்கமணி யாதனத்தை நேசித்துப் பூசித்துத் தெய்வ மேத்தி. (இ-ள்.) மங்கல தூரியம் முழங்க - மங்கல வாத்தியங்கள் ஓலிக்க - மால் யானை உச்சிமிசை வந்த பூத கங்கைமுதல் - பெரிய யானையின் முடியில் வைத்துக்கொண்டுவந்த தூய்மையான கங்கைமுதலிய, ஒன்பது தீர்த்தமும் நிரப்பி - ஒன்பது தீர்த்தங்களையும் நிரப்பி, கதிர் விடுபொன் கடம் பூசித்து - ஒளி வீசும் பொன்னாற் செய்த குடத்தைப் பூசித்து, மந்திரத்தீ வளர்த்து - மந்திரத்தால் வேள்வித்தீயைவளர்த்து, புங்கவரை அமுது அருத்தி - தேவர்களை அவியுண வுண்பித்து, எரி பொன்னால் செய்த - ஒளி வீசும் பொன்னாற்செய்யப்பட்ட, மணிசிங்க ஆதனத்தை - மணிகள் இமைத்த சிம்மாதனத்தை. நேசித்து பூசித்து தெய்வம் ஏத்தி - அன்போடு பூசித்துத் தெய்வத்தைப் பராவி எ-று. பூதம் - தூய்மை. ஒன்பது தீர்த்தம் - கங்கை, யமுனை, சரச்சுவதி, நருமதை, காவிரி, குமரி, கோதாவரி, துங்கபத்திரி, தாமிரபன்னி என்பன; பிறவாறுங் கூறுப. அமுதம் அருத்தி என்பது ஒரு சொல்லாய்ப் புங்கவரை யென்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. தெய்வம் - ஆதனத்திற்குரிய தெய்வம்; கடவுளுமாம். (37) திருமுடியை மதயானை மிசைவைத்து நகரைவலஞ் செய்து பூசித் தருமணியாற் கடிகையிழைத் தாடகத்தாற் குயிற்றியதோ ரைவாய் நாகம் பெருமணிநீள் படம்பரப்பி மிசைகவிப்ப வச்சிங்க பீடத் தேற்றிக் குருமணிவா ணகைமயிலைக் கும்பத்துப் புண்ணியநீர் குளிர வாட்டி. (இ-ள்.) திருமுடியை மதயானை மிசைவைத்து - அழகிய கிரீடத்தை மதத்தினையுடைய யானையின்மேல் வைத்து, நகரை வலம் செய்து பூசித்து - நகர்வலஞ் செய்வித்துப் பூசித்து, அருமணி யால் சுடிகை இழைத்து - அரிய மணிகளால் சூட்டுச் செய்து, ஆடகத்தால் குயிற்றியது ஓர் ஐவாய் நாகம் - பொன்னாற் செய்யப் பட்டதாகிய ஒரு ஐந்தலை நாகமானது, பெருமணி நீள் படம் - பெரிய மணிகளையுடைய நீண்ட படங்களை, மிசை பரப்பி கவிப்ப - மேலே பரப்பிக் கவிக்குமாறு (செய்த), அச் சிங்க பீடத்து - அந்தச் சிம்மாதனத்தில், குருமணி வள் நகை மயிலை ஏற்றி - நிறம் பொருந்திய முத்துப் போலும் வெள்ளிய பற்களையுடைய மயில் போலும் பிராட்டியாரை ஏற்றி, கும்பத்துப் புண்ணிய நீர் குளிர ஆட்டி - கடத்தில் நிறைந்த புண்ணிய நீரினால் குளிருமாறு திருமஞ்சனஞ் செய்வித்து எ-று. செய்வித்து என்பது செய்து என நின்றது. குயிற்றியது; செயப்பாட்டு வினைப் பெயரெச்சமாயிற்று. கவிப்ப ஏற்றி எனினுமாம். நீரால் ஆட்டி. (38) புங்கவர்மந் தாரமழை பொழியவருந் தவராக்கம் புகலத் தெய்வப் பங்கயமென் கொம்பனையா ராடமுனி பன்னியர்பல் லாண்டு பாட மங்கலதூ ரியமுழங்க மறைதழங்க மாணிக்க மகுடஞ் சூட்டி எங்கருணைப் பெருமாட்டிக் கரசமைச்சர் பணியுந்தன் னிறைமை நல்கா. (இ-ள்.) புங்கவர் மந்தார மழைபொழிய - தேவர்கள் மந்தார மலர் மழையைப் பொழியவும், அருந்தவர் ஆக்கம் புகல - அரிய முனிவர்கள் ஆசி கூறவும், தெய்வப் பங்கய மென் கொம்பு அனையார் ஆட - தெய்வத்தன்மை பொருந்திய தாமரை மலர்ந்த மெல்லிய பூங்கொம் பினை ஒத்த தேவமகளிர்கள் ஆடவும், முனி பன்னியர் பல்லாண்டு பாட - முனிபத்தினிகள் பல்லாண்டு பாடவும், மங்கல தூரியம் முழங்க -மங்கள வாத்தியங்கள் ஒலிக்கவும், மறை தழங்க - வேதம் முழங்கவும், எம் கருணைப் பெருமாட்டிக்கு - எம் பெருங் கருணைப் பிராட்டி யாருக்கு, மாணிக்க மகுடம் சூட்டி - மணிமுடி சூட்டி, அரசு அமைச்சர் பணியும் தன் இறைமை நல்கா - அரசர்களும் அமைச்சர் களும் வணங்கப் பெறும் தன் தலைமையைக் கொடுத்து எ-று. பொழிய என்பது முதலிய செயவெனெச்சங்கள் சூட்டி யென்பதனோடு தனித்தனி முடியும். ஏனை அரசரும் அமைச்சரும் பணியும் தலைமையைப் பெருமாட்டிக்கு நல்கி. (39) பாலனைய மதிக்கவிகை மிசைநிழற்ற மதிகிரணம்1 பரப்பி யன்ன கோலமணிக் கவரிபுடை யிரட்டமலர் மழைதேவர் குழாங்க டூற்றக் காலையிளங் கதிர்கயிலை யுதித்தெனவெண் கடாயானைக் கழுத்தில் வேப்ப மாலைமுடிப் பெண்ணரசசை மங்கலதூ ரியமுழங்க வலஞ்செய் வித்தான். (இ-ள்.) பால் அனைய மதிக் கவிகை மிசை நிழற்ற - பால் போலும் வெண்ணிறமுடைய சந்திரவட்டக் குடையானது மேலே நிழலைச் செய்யவும், மதி கிரணம் பரப்பியன்ன - அந்தச் சந்திரன் தன்கிரணங்களைப் பரப்பினாற்போல, கோல மணிக்கவரி புடை இரட்ட - அழகிய வெண்கவரிகள் இருபக்கங்களிலும் வீசவும், தேவர் குழாங்கள் மலர் மழை தூற்ற - அமரர் கூட்டங்கள் மலர் மாரியைப் பொழியவும், காலை இளங்கதிர் கயிலை உதித்தென - காலையிற் றோன்றும் இளஞாயிறு வெள்ளிமலையில் உதித்தாற் போல, வேப்பம் மாலை முடிப்பெண் அரசை - வேப்பமலர் மாலையை அணிந்த முடியினையுடைய பெண்ணரசாகிய தடாதகைப் பிராட்டியாரை, கடா வெள் யானைக் கழுத்தில் - மதத்தினை யுடைய வெள்ளை யானையின் பிடரியில் (ஏற்றி), மங்கல தூரியம் முழங்க வலஞ் செய்வித்தான் - மங்கல வாச்சியங்கள் ஒலிக்க நகர்வலஞ் செய்வித்தான் எ-று. பரப்பினாலன்ன என்பது பரப்பியன்ன வென்றாயிற்று. கவரிசாமரை. இரட்டுதல் - மாறி வீசுதல். உதித்தென - உதித்ததென, பெண்ணரசு - பெண்களுக்கு அரசும், பெண்ணாகிய அரசுமாம். ஏற்றியென ஒரு சொல் வருவிக்கப்பட்டது. (40) விண்ணாடு மொழிகேட்ட மகிழ்ச்சியினுந் திருமகடன் விளக்க நோக்கி உண்ணாடு பெருங்களிப்புத் தலைசிறப்பச் சிலபகல்சென் றொழிய மேனாட் புண்ணாடு வேன்மங்கை குதுகலித்து நடிப்பத்தன் புயமேல் வைத்த மண்ணாடு மகட்களித்து வானாடு பெற்றானம் மகவு பெற்றான். (இ-ள்.) விண் ஆடு மொழி கேட்ட மகிழ்ச்சியினும் - விண்ணின் கண் தோன்றிய அசரீரியைக் கேட்ட பொழுது உண்டான மகிழ்ச்சியை விட, திருமகள் தன் விளக்கம் நோக்கி - செல்வப் புதல்வியாரின் விளக்கத்தைப் பார்த்து உள்நாடு பெருங்களிப்புத் தலை சிறப்பு உள்ளத்தில் விரும்புகின்ற பெரிய மகிழ்ச்சியானது மிகச்சிறக்குமாறு, சில பகல் சென்று ஒழிய - சின்னாட்கள் கழிந்தொழிய, மேல் நாள் - முன்னாளில், புண் நாடு வேல் மங்கை குதுகலித்து நடிப்ப - (பகைவர்களின்) தசையினை நாடுகின்ற வேலையுடைய வீரமகள் மகிழ்ந்து கூத்தாடுமாறு, தன்புயம் மேல்வைத்த மண்நாடு - தனது தோளில் வைத்தாற்றிய நிலவுலகத்தை, மகட்கு அளித்து - புதல்வியாருக்குக் கொடுத்து, வான் நாடு பெற்றான்- வானுலகத்தை யடைந்தான்; அம்மகவு பெற்றான் - அந்தப் புதல்வியைப் பெற்றவனாகிய மலயத்துவசன் எ-று. கேட்ட மகிழ்ச்சி - கேட்டதனாலாகிய மகிழ்ச்சி. வேல் மங்கை - கொற்றவை; வீரலக்குமி. பகைவென்று ஆண்டமை கூறினார். மண்ணாடு மகட்களித்து வானாடு பெற்றான் என்பது பரிவருத் தனையணி. (41) விரதநெறி யடைந்தீற்றுக் கடன்பிறவுந் தாதைக்கு விதியா லாற்றி அரதனமெல் லணைமேற்கொண் டுலகமெலா மொருகுடைக்கீ ழாள்வா ளானாள் சரதமறை யாய்மறையின் பொருளாயப் பொருண்முடிவு தானாய்த் தேனின் இரதமெனப் பூவின்மண மெனப்பரம னிடம்பிரியா வெம்பி ராட்டி. (இ-ள்.) சரத மறையாய் - உண்மை மறையாயும், மறையின் பொருளாய் - அம்மறையின் பொருளாயும், அப்பொருள் முடிவு தானாய் - அந்தப் பொருளின் முடிவாயும், தேனின் இரதமென - தேனின் சுவை போலவும், பூவின் மணமென - பூவின் மணம் போலவும், பரமனிடம் பிரியா எம்பிராட்டி - இறைவனிடத் தினின்றும் நீங்காத எம் பிராட்டியார், விரத நெறி அடைந்து - விரத நெறியை எய்தி, தாதைக்கு ஈற்றுக்கடன் பிறவும் விதியால் ஆற்றி - தந்தைக்குப் பிற்கடன் முதலிய பிறவற்றையும் முறைப்படிசெய்து, அரதனமெல் அணை மேற்கொண்டு - மணிகளிழைத்த மெல்லிய சிம்மாதனத்தில் வீற்றிருந்து, உலகம் எலாம் ஒரு குடைக்கீழ் ஆள்வாளானாள் - உலக மனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆளலுற்றாள் எ-று. கடனும் பிறவுமென விரிக்க. ஈற்றுக்கடல் அந்தியேட்டி பொது வறப் புரந்தாரென்பார் உலகமெலாம் ஒரு குடைகீழ் ஆள்வாளானாள் என்றார். நீரின் றண்மையால் வெம்மையெனத் தனையகலாதிருந்து என முற்கூறியதுங் காண்க. இடம்பிரியா - இடப்பாகம் பிரியாத என்றுமாம். (42) (வேறு மேற்படி) மண்ணர சிறைஞ்ச ஞால மனுவழி புரந்து மாறன் விண்ணர சிருக்கை யெய்தப் பெற்றபின் விடையோ னுள்ளத் தெண்ணர சன்ன மென்னத் தென்னவ னீன்ற கன்னிப் பெண்ணர சிருந்து நேமி யுருட்டிய பெருமை சொல்வாம். (இ-ள்.) மண் அரசு இறைஞ்சு ஞாலம் மனுவழி புரந்து - நிலவுலகத் தரசரெல்லாம் வணங்குமாறு இம் மண்ணுலகை மனுமுறையால் ஆண்டு, மாறன் விண் அரசு இருக்கை எய்தப் லயபெற்றபின் லயத்துவச பாண்டியன் விண்ணுலகத்தில் இந்திரனது ஆதனத்தை அடையப் பெற்ற பின்பு, விடையோன் உள்ளத்து எண்- இடபவாகனத்தையுடைய இறைவன் திருவுள்ளத்தின்கண் கருது கின்ற, அரசு அன்னமென்ன - அரச அன்னத்தைப்போல, தென்னவன் ஈன்ற கன்னிப்பெண் அரசு -அப்பாண்டியன் பெற்ற கன்னியாகிய பெண்ணரசியார், இருந்து - அரியணையில் வீற்றிருந்து, நேமி உருட்டிய பெருமை சொல்வாம் - ஆணையாகிய திகிரியைச் செலுத்திய பெருமையைக் கூறுவாம் எ-று. இந்திரனது ஆதனமென்பதனை “ அலையத்திரி யட்டவ னாதன நீத்து” எனப் பின் வருதலா னறிக. எண்: வினைத்தொகை. எண்ணும் கன்னி என்ன, ஈன்ற கன்னி எனத் தனித்தனியியையும் மூன்றாமடியிற் சீரெதுகை பயின்றிருத்தல் காண்க. ஆணையைத் திகிரியாகக் கூறுதல் வழக்கு. (43) இன்னிய மியம்பு மாக்க1 ளெழுப்பவா னிரவி தோன்றக் கன்னலைந் தென்னப் பள்ளித் துயிலெழீ இக் கடிநீ ராடித் தன்னிறை மரபுக் கேற்ற நியதிமா தான மன்பு துன்னிய கடவுட் பூசைத் தொழின்முத லனைத்து முற்றா. (இ-ள்.) இன் இயம் இயம்புமாக்கள் எழுப்ப - இனிய இயங்களை ஒலிக்கு மக்கள் (அவ்வொலியால்) எழுப்ப, வான் இரவி தோன்ற - வானின்கண் ஞாயிறு உதிக்க, கன்னல் ஐந்து என்ன - நாழிகை ஐந்து என்று சொல்ல (உள்ள அது போது), பள்ளித்துயில் எழீஇ - படுக்கையினின்றும் துயில் நீத்தெழுந்து, கடி நீர் ஆடி - மணமுள்ள நீரில் மூழ்கி, தன் இறை மரபுக்கு ஏற்ற - தன் மன்னர் மரபுக்குத் தக்க நியதிமா தானம் - கடன்கள் பெரிய தானங்கள், அன்பு துன்னிய கடவுள் பூசைத் தொழில் - அன்பு மிக்க சிவபூசை யாகிய கிரியை, முதல் அனைத்தும் - முதலாகிய யாவற்றையும், முற்றா - செய்து முடித்து எ-று. அன்பு மிக்குச் செய்யும் பூசையினை அன்புமிக்க பூசையென உபசரித்தார்; துன்னிய கடவுள் என்னலுமாம். (44) திடம்படு மறிஞர் சூழச் சிவபிரான் கோயின் முன்னிக் கடம்படி முளைத்த முக்கட் கரும்பினை மறைவண்டார்க்கும் விடம்பொதி கண்டத் தேனை விதிமுறை வணங்கி மீண்டு குடம்பயில் குடுமிச் செம்பொற் குருமணிச் கோயி னண்ணி. (இ-ள்.) திடம்படும் அறிஞர் சூழ - கலங்காத அறிவினை யுடைய அமைச்சர்கள் புடைசூழ, சிவபிரான் கோயில் முன்னி - சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலை யடைந்து, கடம்பு அடி முளைத்த முக்கண் கரும்பினை - கடம்ப மரத்தினடியில் முளைத்த மூன்று கண்களையுடைய கரும்பும், மறைவண்டு ஆர்க்கும் - வேதமாகிய வண்டுகள் ஒலிக்கப்பெறும், விடம்பொதிகண்டத் தேனை - நஞ்சு பொதிந்த திருமிடற்றினையுடைய தேனும் ஆகிய பெருமானை, விதிமுறை வணங்கி மீண்டு - விதிப்படி பணிந்து (அங்கு நின்றும்) திரும்பி, குடம்பயில் குடுமி-கலசங்கள் பொருந்திய முடியினையுடைய, செம்பொன் குருமணிக் கோயில் நண்ணி - சிவந்த பொன்னாலாகிய நிறம் பொருந்திய மணிகள் பதித்த தமது மாளிகையை யடைந்து எ-று. கரும்பென்றும், தேனென்றும் உவமையாற் கூறினார்; இன்பம் விளைத்தலின். கண்-விழியையும் கணுவையுங் குறிக்கும், கண்கள் மூன்றுடையதோர் கரும்பே என்பது திருவிசைப்பா. இறைவனைத் தேனென்றும் மறையினை வண்டென்றும் உருவகித்தல், “ மன்றுளாடுமது வின்னசையாலே மறைச்சுரும்பறை புறத்தின் மருங்கே ” என்னுத் திருத்தொண்டர் புராணச் செய்யுளிலும் காணப்படுமாறறிக. கண்டத்தோனை என்னும் பாடம் சிறவாமை காண்க. (45) அரசிறை கொள்ளுஞ் செம்பொ னத்தாணி யிருக்கை யெய்தி நிரைசெறி மடங்க லாறு முடங்கின நிமிர்ந்து தாங்க விரைசெறி மலர்மீப் பெய்த வியன்மணித் தவிசின் மேவித் திசைசெறி யமுதிற் செய்த பாவையோற் சிறந்து மாதோ. (இ-ள்.)அரசு இறைகொள்ளும் - அரசர்கள் தங்கியிருக்கும். செம்பொன் அத்தாணி யிருக்கை எய்தி - சிவந்த பொன்னாலாகிய அத்தாணி மண்டபத்தை யடைந்து, நிரை செறி ஆறு மடங்கல் முடங்கின நிமிர்ந்து தாங்க - வரிசையாக நெருங்கிய ஆறு சிங்கங்கள் வளைந்தன வாய்க் கழுத்தை நிமிர்த்தித் தாங்குமா றியற்றிய, விரை செறி மலர் மீப்பெய்த - மணம் நிறைந்த மலர்களை மேலே பெய்த, வியன்மணித் தவிசில் மேவி - பெரிய மணியாதனத்தில் வீற்றிருந்து, திரை செறிஅமுதில் செய்த பாவைபோல் சிறந்து - கடலிற்றோன்றிய அமுதத்தாற் செய்த பாவை போலப் பொலிந்து எ-று. இறைகொள்ளல் - தங்கல்; ஒரு சொல்;அரசிறை - பகுதியுமாம். தாங்க வியற்றிய என்க. மீ-மேல். திரை:ஆகுபெயர். தூய்மைக்கும் இனிமைக்கும் அமுது கூறினார். “ ஆதரித் தமுதிற் கோல்தோய்த் தவயவ மழைக்குந் - தன்மை யாதெனத் திகைக்கு மல்லான் மதனற்கு மெழுத வொண்ணா” என்றார் பிறரும், ஓ; அசைகள். (46) அனிந்திதை யமுதின் சாயற் கமலினி யணங்கு காதல் கனிந்தபார் மகளி ராய்வந் தடைப்பைபொற் களாஞ்சி யேந்த இனந்திரி பதுமக் கோயி லிருவரு மனைய ராகிப் புனைந்தவெண் கவரிக் கற்றை யிருபுடை புரட்டி வீச. (இ-ள்.) அனிந்திதை அமுதின் சாயல் கமலினி அணங்கு - (திருக்கயிலாய மலையில் அகம்படித்தொண்டு செய்யும்) அனிந் திதையும் அமுதைப்போலும் மென்மைத் தன்மையையுடைய கமலினியும் ஆகிய தெய்வமகளிர், காதல் கனிந்த பார்மகளிராய் வந்து - அன்பு முதிர்ந்த மானிட மகளிராய்த் தோன்றி, அடைப்பை பொன்களாஞ்சி ஏந்த - அடைப்பையையும் பொன்னாற் செய்த களாஞ்சியையும் ஏந்தவும், இனம்திரி பதுமக் கோயில் இருவரும் - நிறம் மாறுபட்ட தாமரைமலரைக் கோயிலாகவுடைய திருமகளும் கலைமகளும், அனையராகி - அம்மானிட மகளிராகி, புனைந்த வெண் கற்றை கவரி - அலங்கரித்த வெள்ளிய கற்றையாகவுள்ள சாமரைகளை, இருபுடை புரட்டி வீச - இருபுறங்களிலும் புரட்டி வீசவும் எ-று. கமலினி அனிந்திதை யென்னும் இவ்விருவருமே பரவை நாய்ச்சி யாராகவும் சங்கிலி நாய்ச்சியாராகவும் திருவவதாரஞ் செய் தவர்கள். அடைப்பை - இலையமுதிடும் பை. களாஞ்சி - படிக்கம்; தட்டமுமாம். செந்தாமரை வெண்டாமரை யென்பார் இனந் திரிபதுமம் என்றார். (47) செடியுட லெயினச் செல்வன் சென்னிமேற் சுமந்து சாத்துங் கடியவிழ் மலரிற் பொன்னிக் காவலன் குடக்கோ னேனை முடிகெழு வேந்த ருள்ளார் முடிமிசை மிலைந்த தாமம் அடிமிசைச் சாத்தி நங்கை யாணையா றேவல் செய்ய. (இ-ள்.) செடி உடல் எயினச் செல்வன் - முடைநாறும் உடம் பினையுடைய வேடுவக்குலத் தலைவராகிய கண்ணப்பர், சென்னி மேல் கமந்து சாத்தும் - முடியின்மேல் சுமந்து வந்து இடும், கடி அவிழ்மலரின் - மணம் விரிந்த திருப்பள்ளித்தாமம் போல, பொன்னிக் காவலன் - காவிரிக்கரசனாகிய சோழனும், குடக்கோன் - மேற்புல அரசனாகிய சேரனும், ஏனை முடிகெழு வேந்தர் உள்ளார் - மற்றைய முடிசூடிய மன்னராயுள்ளவர்களும், முடிமிசை மிலைந்த தாமம் - (தங்கள்) முடியின்கண் அணிந்த மாலைகளை, அடிமிசைச் சாத்தி - திருவடியின்கண் இட்டு, நங்கை ஆணை ஆறு ஏவல் செய்ய - அம்மையாரின் ஆணைவழி நின்று ஏவல் செய்யவும் எ-று. செடியுடல் என்பதனை முடுகு நாறு குடிலை யாக்கையன் எனவும், சென்னி மேற் சுமந்து சாத்துதலை தன்றலை தங்கிய துவர்ப்பூ வேற்றி எனவும் முறையே, கல்லாடரும் நக்கீரரும் திருக்கண்ணப்பர் திருமறத்துட் கூறுதலா னறிக. பொன்னி பாயும் நாட்டுக்கரசனைப் பொன்னிக் காவலன் என்றார்; நாயகனுமாம்; “ கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்ததெல்லா நின்கணவன் திருந்து செங்கோல் வளையாமை யறிந்தேன்வாழி காவேரி” என்று சிலப்பதிகாரம் கூறுதலுங் காண்க. சேரன் குடக்கோவெனப் படுதலைக் குடக்கோச் சேரல் என வருதலானறிக. வணங்கி என்பதனைப் பிறிதோராற்றாற் கூறினார்; இது பிறிதினவிற்சியணி. (48) வையுடை வாள ராகி மார்புறப் பின்னி யார்த்த கையின ராகி யன்னை யென்றுதன் கருணை நோக்கஞ்1 செய்யுமென் றிமையார் நோக்கி2 நோக்குமேற் செங்கை கூப்பி உய்குந மெனவாய் பொத்தி யுழையர்தம் பணிகேட் டுய்ய. (இ-ள்.) உழையர் - ஏவல் செய்வோர், வை உடை வாளராகி - கூரியவாளை யுடையவராகியும், மார்பு உறப் பின்னி ஆர்த்த கையினர் ஆகி - மார்பிலே பொருந்தப் பின்னிக்கட்டிய கையையுடையவ ராகியும், அன்னை என்று தன் கருணை நோக்கம் செய்யும் என்று - அன்னையார் எப்பொழுது தம் அருட் பார்வையைச் செலுத்து வாரோ என்று, இமையார் நோக்கி - கண்மூடாமல் பார்த்து, நோக்குமேல் - அருணோக்கஞ் செய்வாராகில், செங்கைகூப்பி - சிவந்த கரங்களைக்குவித்து, உய்குநம் என வாய் பொத்தி - பிழைத்தோம் என்று வாய்பொத்தி தம்பணி கேட்டு உய்ய - தமது ஏவலைக் கேட்டு உய்தி பெறவும் எ-று. வை - கூர்மை. இமையார்: முற்றெச்சம். உய்குநம்: எதிர்காலச் சொல், இறந்தகாலங் குறித்தது. (49) ஆங்கவன் மராட வேந்த னவன்கரு நாடர் வேந்தன் ஈங்கிவன் விராடர் வேந்த னிவன்குரு நாடர் வேந்தன் ஊங்குவன் சேரன் சென்னி யுவனெனக் கோலாற் சுட்டிப் பாங்கிரு மருங்குங் காட்டக் கஞ்சுகப் படிவ மாக்கள். (இ-ள்.) கஞ்சுகப் படிவமாக்கள் - சட்டை தரித்த வடிவத்தை யுடைய கஞ்சுக மாக்கள், ஆங்கு அவன் மராடர் வேந்தன் - அங்கு நிற்கின்ற மன்னன் மராட நாட்டினர்க்கு அரசன், அவன் கருநாடர் வேந்தன் - அவ்விடத்து நிற்பவன் கருநாட்டாரரசன்; ஈங்கு இவன் விராடர் வேந்தன் - இங்குநிற்கும் இவன் விராட நாட்டினர் வேந்தன்; இவன் குருநாடர் வேந்தன் - இங்கு நிற்போன் குருநாட்ட வர்க்கு மன்னன்; ஊங்கு உவன் சேரன் - நடுவில் நிற்கும் உவன் சேரன்; உவன் சென்னி என - ஊங்கு நிற்போன் சோழன் என்று, கோலால் சுட்டி பாங்கு இருமருங்கும் காட்ட - பிரப்பங் கோலால் சுட்டி வரிசையாக இரு பக்கங்களிலும் நின்று காட்டவும் எ-று. ஆங்கு முதலியவற்றின் பின்னுள்ள அவன் முதலியன பெயர் மாத்திரை யாய் நின்றன; ஆங்கு முதலியன அசையுமாம். உகரச்சுட்டு நடுவையும் முன்னையும் பின்னையும் குறிக்கும். கஞ்சுமாக்கள் - தூதரெனவும் சட்டையிட்ட பிரதான ரெனவும் கூறுவர்; “ சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற கஞ்சுக முதல்வ ரீரைஞ் ஞற்றுவரும்” என்னும் சிலப்பதிகார வடிகளின் அரும்பதவுரை நோக்குக. (50) செந்தமிழ் வடநூ லெல்லை தெரிந்தவர் மறைநூ லாதி அந்தமி லெண்ணெண் கேள்வி யளந்தவர் சமய மாறும் வந்தவர் துறந்தோர் சைவ மாதவர் போத மாண்ட சிந்தனை யுணர்வான் மாயை வலிகெடச் செற்ற வீரர். (இ-ள்.) செந்தமிழ் வடநூல் எல்லை தெரிந்தவர் - செந்தமிழின் முடிவையும் வடநூலின் முடிவையும் தெரிந்தவர்களும், மறை நூல் ஆதி - வேதநூல் முதலிய, அந்தம் இல் எண் எண் கேள்வி அளந்தவர் - அளவில்லாத அறுபத்து நான்கு கலைகளையும் வரையறுத் துணர்ந் தவர்களும், சமயம் ஆறும் வந்தவர் - அறுவகைச் சமய நூல்களும் கைவந் தவர்களும், துறந்தோர் - பற்றற்றவர்களும், சைவமாதவர் - சிவபிரான் திருத்தொண்டர்களும், போதம் மாண்ட - பசுபோதங் கெட்ட, சிந்தனை உணர்வால் - தியானத்தோடு கூடிய மெய்யுணர்ச்சியால், மாயை வலிகெடச் செற்ற வீரர் - மாயையினது வலிகெடுமாறு வென்ற மெய்ஞ்ஞானிகளாகிய வீரர்களும் எ-று. ஆறு சமயம் முற் கூறப்பட்டன. வருதல் - கைவருதல். மாயை வலிகெடச் செற்றலைத் திருவாசகத்துத் திருப்படை யெழுச்சியுள், “ வானவூர் கொள்வோநா மாயப்படை வாராமே” எனக் கூறுதலா னறிக. (51) முன்னிருந் தினிய தேற்று மூத்தவ ரெண்ணி யெண்ணிப் பன்னுமைந் துறுப்பிற் கால மளந்தறி பனுவன் மாந்தர் பின்னுமுன் னோக்குஞ் சூழ்ச்சிப் பெருந்தகைச் சுமதி யோடும் இன்னமு தனைய கேள்வி மந்திரர் யாருஞ் சூழ. (இ-ள்.)முன் இருந்து இனிய தேற்றும் மூத்தவர் - எதிரிந்து உறுதிப் பொருள்களை அறிவிக்கின்ற பெரியோர்களும், எண்ணி எண்ணிப் பன்னும் - ஆய்ந்தாய்ந்து கூறுகின்ற, ஐந்து உறுப்பில் காலம் அளந்து அறிபனுவல் மாந்தர் - ஐந்து அங்கங்களால் காலங்களை அறியும் சோதிடநூல் உணர்ந்தவர்களும் பின்னும் முன் நோக்கும் சூழ்ச்சிப் பெருந்தகைச் சுமதியோடும் - மேல் வருவன வற்றையும் முன் நிகழ்ந்தனவற்றையும் ஆராய்ந்து காணும் சூழ்ச்சித் திறத்தில் பெரி தகுதியினையுடைய முதல் மந்திரியாகிய சுமதி யோடும், இன் அமுது அனைய கேள்வி மந்திரர் யாரும் சூழ - இனிய அமுதத்தைஒத்த கேள்வி நலமுடைய அமைச்சர் அனைவரும் சூழவும் எ-று. மூத்தவர் - அறிவால் முதிர்ந்தோர்; உறுதி கூறும் புரோகிதர். ஐந்துறுப்பு - பஞ்சாங்கம்; திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்பன. பனுவன் மாந்தர் - கணிகள். முன்னும் என விரிக்க. சுமதி - முதலமைச்சன்; பட்டம். (52) கற்றறி யந்த ணாளர் விருத்திகள் கடவுட் டானத் தற்றமில் பூசைச் செல்வ மறப்புற நடக்கை யேனைச் செற்றமில் குடிகள் மற்று மமைச்சராற் றெளிந்தும் வெவ்வே றொற்றுவிட் டுணர்ந்தும் வேறு குறையுண்டே லொறுத்துத் தீர்த்தும். (இ-ள்.) கற்று அறி அந்தணாளர் விருத்திகள் - (மறை முதலிய நூல்களைக்) கற்றுணர்ந்த அந்தணர்கள் விருத்திகளையும், கடவுள் தானத்து அற்றம்இல் பூசைச்செல்வம் - தேவாலயங்களில் நடக்கும் குற்றமில்லாத பூசனைச் சிறப்புக்களையும், அறப்புறம் நடக்கை - அறச்சாலைகளின் நிகழ்ச்சிகளையும், ஏனைச் செற்றம் இல் குடிகள்- அவை யொழிந்த வெறுப்பு இல்லாத குடிகளின் (வாழ்க்கை களையும்), மற்றும் - பிறவற்றையும், அமைச்சரால் தெளிந்தும் - மந்திரிகளால் உணர்ந்தும், வெவ்வேறு ஒற்றுவிட்டு உணர்ந்தும் - வேறு வேறு ஒற்றர்களை அனுப்பி அறிந்தும், வேறு குறை உண்டேல் ஒறுத்துத் தீர்த்தும் - அவைகளுள் வேறு குறைகள் இருக்குமானால் தண்டித்து அக்குறைகளைப் போக்கியும் எ-று. விருத்திகள் - பிரமதேயமாக விடப்பட்ட மானியம் முதலியன; தொழில்களுமாம். கடவுட்டானம் - திருக்கோயில்; திருமடம் முதலியவு மாம். நடக்கை - நடைபேறு. ஏனை - மற்றும்; இடைச்சொல். செற்ற மின்மை - அன்புடைமை. வெவ்வேறு ஒற்றுவிட வேண்டும் என்பது, “ ஒற்றொற் றுணராமை யாள்க வுடன்மூவர் சொற்றொக்க தேறப் படும்” என்னுத் திருக்குறளாலறிக. வேறுகுறை - மாறாகிய குறை; அதற்குக் காரணமானவரை யொறுத்தென்க. (53) ஆதியுத் தேசத் தானு மிலக்கண வமைதி யானுஞ் சோதனை வகைமை யானுஞ் சொன்னநூ லனுவா தித்து நீதியி னவற்றாற் கண்டித் தவ்வழி நிறுத்தித் தம்மில் வாதிகள் வாதஞ் செய்யுங் கோட்டிமேன் மகிழ்ச்சி கூர்ந்தும். (இ-ள்.) ஆதி உத்தேசத்தானும் - முதலாகிய உத்தேசத்தினாலும், இலக்கண அமைதியானும் - இலக்கண அமைவினாலும், சோதனை வகைமையானும் - சோதனை வகையாலும், சொன்ன நூல் - பிறர் கூறிய நூற் பொருள்களை, அநுவாதித்து - எடுத்து மொழிந்து, நீதியின் - முறைமையினையுடைய, அவற்றால் - தாங் கூறும் உத்தேசம் முதலி வற்றால், கண்டித்து - அவற்றை மறுத்து, அவ்வழி நிறுத்தி - தாம் கூறிய வற்றை அந்நெறியிலே நிலை பெறச் செய்து, வாதிகள் - வாதியராயி னார், தம்மில் வாதம் செய்யும் கோட்டில் மேல் - தம்முள் வாதம் புரியுங் கூற்றினிடத்து, மகிழ்ச்சி கூர்ந்தும் - மகிழ்ச்சிமிக்கும் எ-று. உத்தேசம் - தான் கூறும் பொருளைப் பெயர் மாத்திரையான் எடுத்தோதல்; இலக்கியம். இலக்கணம் - இலக்கியத்தின் சிறப்பியல்பு; அவ்வியாத்தி அதிவியாத்தி அசம்பவம் என்னும் முக்குற்றங்களும் இல்லாத தன்மை. சோதனை - இலக்கியத்தில் இலக்கணமுளதா தலை ஆராய்தல். நூல் என்றது ஈண்டுப் பிறர் கூறிய பொருளை. அநுவாதித்தல் - பிறர் கூறியவற்றை ஒரு பயன் நோக்கித் தான் எடுத்துமொழிதல். நீதியின் - தருக்க முறைமையால். அவற்றால் - அவ்வுத்தேசம் முதுலியவற்றால்; தாம் கூறும் அவற்றாலென்க. நிறுத்தல் . தங்ககொள்கையைத் தாபித்தல். வாதிகள் - பிறர்மத மறுத்துத் தம்மத நிறுத்துவோர். கோட்டி - கூட்டம்; அவை; ஈண்டு வாதஞ் செய்யுங் கூற்று; ‘கோட்டி கொளல்’ என்பதுங் காண்க. பையுள பகுவாய் நாகப் பள்ளியோ னாதி வானோர் கையுள வலியா லட்ட கடலமு தனைத்தும் வாரிப் பொய்யுள மகலக் கற்ற புனிதநூற் புலவர் நாவிற் செய்யுளின் விளைவித் தூட்டத் திருச்செவி தெவிட்ட வுண்டும். (இ-ள்.) பை உள பகுவாய் நாகப் பள்ளியோன் ஆதி வானோர்- படத்தின் கண் உள்ள பிளந்தவாயையுடைய பாம்பாகிய படுக்கை யையுடைய திருமால் முதலிய தேவர்கள், கையுள வலியால் அட்ட கடல் அழுது அனைத்தும் - கைகளில் உள்ள வலிமையால் கடைந்த கடலில் தோன்றிய அமுத மனைத்தையும், வாரி - அள்ளி, பொய் உளம் அகலக்கற்ற புனிதநூல் புலவர் - அறியாமை உளத்தினின்றும் நீங்குமாறு தூய நூல்களைக் கற்றுணர்ந்த புலவர்கள், நாவில் செய்யுளின் விளைவித்து ஊட்ட - நாவன்மையாற் செய்யுளில் விளையச் செய்து உண்பிக்க, திருச்செவி தெவிட்ட உண்டும் - (தமது) திருச்செவிகள் தேக்கிடுமாறு நுகர்ந்தும் எ-று. வாரி விளைத்தூட்ட எனக் கூட்டுக. பொய்ம்மை யொழிதலே புலமைக்குச் சான்றென்பார் பொய்யுள மகலக்கற்ற புலவர் என்றார். விளை வித்தல் - ஒன்பான் சுவைகளையும் உண்டாக்கல். விளைவித் தென்பதற் கேற்பச் செய்யுளின் என்பதற்குச் செய்யின்கண்ணே யெனப் பொருள் தொனித்தலுங் காண்க; இதற்கு நாவாகிய ஏரால் எனவும் விரிக்க. அமிழ்தத்தை முழுதும் பெய்து வைத்தாற்போலச் சுவைமிக்குடைய செய்யுட்கள் என்றார். (55) தொல்லைநான் மறையோர் சைவர் துறந்தவர் யார்க்கு மின்பம் புல்லவா னமுதுங் கைப்பப் பாகநூற் புலவ ரட்ட முல்லைவான் முகையி னன்ன வறுசுவை முரியா மூரல் நல்லவூ ணருத்தி யன்னார் நாவிருந் தமுது செய்தும். (இ-ள்.) தொல்லை நான்மறையோர் - பழைய நான்கு மறைகளையுங் கற்ற அந்தணர்களும், சைவர் துறந்தவர் யார்க்கும் - சைவர்களும் துறவிகளும் ஆகிய அனைவருக்கும், இன்பம் புல்ல - மகிழ்ச்சி பொருந்த, வான் அமுதும் கைப்ப - தேவாமுதமும் கைக்குமாறு, பாக நூல் புலவர் அட்ட - அடுநூல் வல்லவர் சமைத்த, முல்லை வால்முகையின் அன்ன முரியா மூரல் - முல்லையினது வெள்ளிய அரும்பினை ஒத்த முரியாத அன்னமும், அறுசுவை நல்ல ஊண் அருத்தி - அறுசுவையமைந்த கறிகளுமுதலிய நல்ல உணவு களை உண்பித்து, அன்னார் நாவிருந்து அமுதுசெய்தும் - அவர் களின் நாவால் வரும் புகழாகிய விருந்தினைத் தாம் நுகர்ந்தும் எ-று. அட்ட மூரலும் சுவையுமுதலிய ஊண் என்றும், யார்க்கும் அருத்தி என்றும் கூட்டுக. கைப்ப - கைப்பென்னுமாறு. பாக நூல் - பாக சாத்திரம்; மடை நூல். முகையனன்ன மூரலும் அறுசுவையும் என வியையும். அறுசுவை - கறி முதலியவற்றிற் காதலால் அடையடுத்த பண்பாகு பெயர். நாவிருந்து - நாவாற் கூறும் புகழ்மொழியாகிய விருந்து. (56) எல்லவ னுச்சி நீந்து மெல்லையி னான்கு மாறும் வல்லவர் சூத னோதி வகத்தமூ வாறு கேள்வி சொல்லவுண் மலர்ந்து மேனை மனுமுதற் றுறைமாண் கேள்வி நல்லன நயந்து கேட்டு நன்பகற் போது1 நீத்தும் (இ-ள்.) எல்லவன் உச்சி நீந்தும் எல்லையில் - சூரியன் உச்சியினின்றுங் கடந்து செல்லுங் காலத்தில், நான்கும் ஆறும் வல்லவார் - நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் (கற்று) வல்லவர், சூதன் ஓதி வகுத்த மூவாறு கேள்வி சொல்ல - சூதமுனிவன் கூறிப்பாகுபாடு செய்த பதினெண் புராணங்களையுஞ் சொல்ல, உள்மலர்ந்தும் - அகமகிழ்ந்தும், ஏனை மனுமுதல் துறைமாண் கேள்வி நல்லன - மற்றும் மனுநூல் முதலிய நீதியின் மாண்பமைந்த நூல்களுள் நல்லவற்றை, நயந்து கேட்டும் - விரும்பிக் கேட்டும், நல் பகற்போது நீத்தும் - (இங்ஙனம்) நல்ல பகற்பொழுதினைக் கழித்தும் எ-று. உச்சி நீந்தும் எல்லை - பிற்பகல். நான்கு, ஆறு என்னும் எண்ணுப் பெயர்கள் அத்தொகையையுடைய வேதங்களையும் அங்கங்களையும் குறிப்பன வாயின. கேள்வி, கேட்கப்படும் நூலைக் குறித்தது. (57) கலைக்குரை விரிப்பா ரென்ன வறுமையிற் கல்வி போலப் புலப்படா மருங்கு னல்லா ரெந்திரப் புலவன் பூட்டி அலைத்திடு பாவை போனின் றாடல்செய் யாடற் கண்ணும் நலத்தகு பாடற் கண்ணு நல்லரு ணாட்டஞ் செய்தும். (இ-ள்.) வறுமையில் கல்விபோல் - வறுமைக் காலத்திலேகல்வி (விளங்காமை) போல, புலப்படா மருங்குல் நல்லார் - கண்ணுக்குத் தோன்றாத இடையையுடைய பெண்கள், எந்திரப்புலவன் - சூத்திரப்பாவை ஆட்டும் உணர்ச்சியின்மிக்கான் ஒருவனால், பூட்டி அலைத்திடு பாவைபோல் நின்று - அக்கயிற்றிற் பூட்டி ஆட்டப் பெறுகின்ற பாவைபோல் நின்று, கலைக்கு உரை விரிப்பார் என்ன- பரத நூலுக்குப் பொருள் கூறுவார்போன்று, ஆடல் செய் ஆடல் கண்ணும் - ஆடுகின்ற ஆடலின் கண்ணும், நலத்தகு பாடல் கண்ணும் - நலம் நிறைந்த பாடலின் கண்ணும், நல் அருள் நாட்டம் செய்தும் - நல்ல அருட்பார்வை வைத்தும் எ-று. “ நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்” என்பது தமிழ்மறையாகலின் வறுமையிற் கல்விபோலப் புலப்படா என்றார். பாவை யாடலின் வேற்றுமை யின்றென்றார் பொருள்நன்கு விளங்கலின் உரை விரிப்பாரென்ன என்றார்; இவரது ஆடல் கொண்டு அந்நூற் பொருள் தெளியலாகும் என்பதாயிற்று. என்ன ஆடல் செய் எனக் கூட்டுக. (58) இன்னிலை யொழுகுந் தொல்லோ ரியற்றிய தருமம் வேறும் அந்நிலை நிறுத்தும் வேள்வி யறம்பல வாக்கஞ் செய்ய நன்னிதி யளித்தும் வேள்வி நடாத்தியுஞ் செல்வங் கல்வி தன்னிரு கண்க ளாகத் தழைந்திட வளர்க்கு நாளும். (இ-ள்.) இல் நிலை ஒழுகும் தொல்லோர் இயற்றிய தருமம் - இல்லறத்தி லொழுகும் முன்னோர்செய்த அறங்களையும் வேறும் - மற்றும், அந்நிலை நிறுத்தும் வேள்வி - அந்த இல் நிலையை நிலைபெறச் செய்யும் வேள்விகளையும், பல அறம் - பல அறங்களையும், ஆக்கம் செய்ய - விருத்தி செய்தற்பொருட்டு, நல் நிதி அளித்தும் - நல்லபொருள்களைக் கொடுத்தருளியும், வேள்வி நடாத்தியும் - தாம் வேள்விகளைச் செய் தருளியும், செல்வம் கல்வி - செல்வப் பொருளையும் கல்விப்பொருளையும், தன் இரு கண்களாக - தம் இரண்டு விழிகளாகக் (கொண்டு), நாளும் தழைந்திட வளர்க்கும் - நாடோறும் தழைத் தோங்கும்படி அவற்றை வளர்த்தும் வருவார் எ-று. வேறு என்பதற்குப் பிரமசரிய முதலிய ஏனைய நிலைகள் எனப் பொருள் கொள்வாருமுளர். ஆக்கஞ்செய்தல் - வளர்த்தல்; ஒருசொல் நாட்டிற்குச் செல்வமும் கல்வியும் இன்றியமையாதன வென்றார்; “ நற்றவஞ்செய் வார்க்கிடந் தவஞ்செய் வார்க்கு மஃதிடம் நற்பொருள்செய் வார்க்கிடம் பொருள்செய் வார்க்கு மஃதிடம்” என்னும் சிந்தாமணிச் செய்யுள் நினைக்கற் பாலது. வளர்க்கும் என்பதை வளர்த்தும் வருவார் என விரிக்க. இன்னிய மியம்பும் என்னுஞ் செய்யுள் முதல் இதுகாறும் ஒரு தொடர். (59) ஒப்புரு முதலீ றில்லா வொருத்திதன் சத்தி பெற்ற முப்பெருந் தேவ ராலே முத்தொழி னடாத்து மென்று செப்பலும் புகழன் றென்னிற் றென்னவன் கன்னி யாகி இப்புவி மனுவிற் காக்கு மென்பதென் பேதை மைத்தே. (இ-ள்.) ஒப்பு உரு முதல் ஈறு இல்லா ஒருத்தி - ஒப்பும் வடிவமும் முதலும் முடிவுமில்லாத சிவசத்தி, தன் சத்திபெற்ற - தன் சத்திகளாலே பெற்றபட்ட, முப்பெருந் தேவராலே - மூன்று பெரிய தேவர்களாலே, முத்தொழில் நடாத்தும் என்று செப்பலும் - மூன்று தொழில்களையும் நடாத்தாநிற்கும் என்று கூறுதலும். புகழ் அன்று என்னில் - புகழன்று என்றால், தென்னவன் கன்னியாகி - (அவள்) பாண்டியன் மகளாகி, இப்புவி மனுவிற் காக்கும் என்பது என் பேதைமைத்தே - இந்நிலவுலகை மனுமுறையால் ஆளும் என்று கூறுவது என் அறியாமையைக் காரணமாக உடையதே எ-று. தன் சத்தியென்றது மகேசை முதலிய சத்திகளை. முப்பெருந் தேவர் - அயன் அரி, அரன். காக்குமென்பது - காக்கும் மென்பதை ஒரு புகழாகக் கூறுவது. (60) வரைசெய் பூண்முலைத் தடாதகை மடவரற் பிராட்டி விரைசெய் தார்முடி வேய்ந்துதண் குடைமனு வேந்தன் கரைசெய் நூல்வழி கோல்செலக் கன்னியாம் பருவத் தரசு செய்தலாற் கன்னிநா டாயதந் நாடு. (இ-ள்.) வரைசெய் பூண்முலைத் தடாதகை மடவரற் பிராட்டி- மலையை ஒத்த அணிகளை அணிந்த கொங்கைகளையுடை தடாதகை என்னும் பெயருடைய மடவரலாகிப் பிராட்டியார், விரை செய் தார் முடிவேய்ந்து - மணம் வீசுகின்ற மாலையணிந்த முடியினைத் தரித்து, தண்குடை - குளிர்ந்த குடைநிழலில் அமர்ந்து, மனுவேந்தன் கரைசெய் நூல்வழிகோல் செல - மனுவரசனால் வரையாறை செய்யப் பட்ட நூலின் வழியே தனது செங்கோல் செல்லுமாறு, கன்னியாம் பருவத்து அரசு செய்தலால் - கன்னியாகிய பருவத்தில் ஆட்சி புரிந்தமையால், அந்நாடு கன்னிநாடு ஆயது - அப்பாண்டி நாடானது கன்னி நாடு என்னும் பெயரினைப் பெறுவதாயிற்று எ-று. வரைசெய், செய்;உவமச்சொல். மடம் என்னும் குணம் பொருந்து தலையுடைமையால் மடவரல் என்பது பெண்களுக்கு ஒரு பெயர்; மடம் - மகளிர்க்குரிய நாற்குணங்களில் ஒன்று; கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்பர் நச்சினார்க்கினியர். (61) இன்ன வாறுமை யவதரித் திருந்தன ளென்னாப் பொன்ன வாவினர் பெறவெறி பொருனைகால் பொருப்பன் சொன்ன வாய்மைகேட் டகங்களி தூங்கினர் தொழுது மின்னு வார்சடை முனிவரோர் வினாவுரை செய்வார். (இ-ள்.) இன்னவாறு உமை அவதரித்து இருந்தனள் என்னா - இவ்வாறு உமையம்மையார் திருவவதாரஞ் செய்திருந்தனரென்று, பொன் அவாவினர்பெற எறிபொருனை கால் பொருப்பன் - பொன்னை விரும்பினவர்கள் பெறுமாறு வீசுகின்ற தாமிரபன்னி நதியைப் பெற்ற பொதியின் மலையையுடைய குறுமுனிவன், சொன்ன வாய்மை கேட்டு - கூறிய உண்மையைக் கேட்டு, மின்னுவார் சடை முனிவர் - மின்னலைப் போன்ற நீண்ட சடையையுடைய முனிவர்கள், அகங்களி தூங்கினர் - மனங் களிப்புற்றவராய், தொழுது ஓர் வினாவுரை செய்வார் - வணங்கி ஒரு வினாவுரை நிகழ்த்துவார்கள் எ-று. அவாவினர் பெறப் பொன்னை யெறியும் பொருனை என்னும் அடையானது அந்நாட்டினர் விரும்பினோர்க்குப் பொன் வழங்கும் வண்மையர் என்னுங் கருத்தினைக் கொண்டிருக்கிறது. வாய்மை - வாய்மொழி; உண்மை. மின்னு, உ;சாரியை. (62) திருந்து நான்மறைச் சென்னியுந் தீண்டுதற் கரிதாய் இருந்த நாயகி யாவையு மீன்றவெம் பிராட்டி விரிந்த வன்புகூர் தக்கனும் வெற்பனும் பன்னாள் வருந்தி நோற்றலா லவர்க்கொரு மதலையாய் வந்தாள். (இ-ள்.) திருந்தும் நான்மறை சென்னியும் தீண்டுதற்கு அரிதாய் இருந்த நாயகி - திருத்தமாகிய நான்கு மறைகளின் முடிவுந்தொடு தற்கு அருமையாய் இருந்த இறைவியாகிய, யாவையும் ஈன்ற எம்பிராட்டி - அனைத்தையும் பெற்ற எம் பிராட்டியார், விரிந்த அன்புகூர் தக்கனும் வெற்பனும் - அளவில்லாத அன்பு மிகுந்த தக்கனும் மலையரசனும், பன்னாள் வருந்தி நோற்றலால் - பல நாட்கள் வருந்தித் தவஞ் செய்தலால், அவர்க்கு ஒரு மதலையாய் வந்தாள் - அவர்களுக்கு ஒரு மகவாய்த் தோன்றியருளினார் எ-று. சென்னியும் - சென்னியாலும். அரிதென்பது அருமை யென்னும் பண்பு மாத்திரையாய் நின்றது. (63) மனித்த னாகிய பூமியின் மகளென வீங்குத் தனித்த காரணம் யாதெனத் தமனியப் பொதுவிற்1 குனித்த சேவடிக் கன்புடைக் குடமுனி யருள்கூர்ந் தினித்த தோர்கதை கேண்மினென் றெடுத்துரை செய்வான். (இ-ள்.) மனித்தன் ஆகிய பூழியன் மகள் என - மானிடனாகிய பாண்டியனுக்குத் திருமகளாராக, ஈங்கு தனித்த காரணம் யாது என- இந்நிலவுலகில் இறைவனினின்றும் தனித்து வந்த காரணம்யாது என்று வினவ, தமனியப் பொதுவில் - பொன்னம்பலத்தில் - குனித்த சேவடிக்கு - ஆடுகின்ற சிவந்த திருவடிக்கண், அன்பு உடை அன்புடைய, குடமுனி -கும்ப முனிவனாகிய அகத்தியன், அருள் கூர்ந்து - கருணை மிகுந்து, இனித்து ஒர் கதை கேண்மின் என்று - இனிமை யுடையதாகிய ஒரு கதை உண்டு (அதனைக்) கேளுங்கள் என்று, எடுத்து உரை செய்வான் - எடுத்துக் கூறுவான் எ-று. தக்கனும் வெற்பனும் தேவரினத்தைச் சார்ந்தவரென்பார் ‘மனித்தனாகிய பூழியன்’ என்றார். தேவராயுள்ளாரும் பன்னாள் வருந்தி நோற்றமையால் அவர்க்குப் புதல்வியாகிய இறைவி, அங்ஙன மின்றியே ஒருமனிதனுக்குப் புதல்வியாய காரணம் என்னை யென்று வினவ வென்க. மனித்தன்; விரித்தல் விகாரம். அடிக்கு - அடிக்கண். குனித்த சேவடி - ஆடிய திருவடி; சிவபெருமான் திருவடி. ( 64) விச்சு வாவசு வெனுமொரு விச்சையன் பயந்த நச்சு வாள்விழி மடந்தைவிச் சாவதி நாமம் அச்சு வாகத மொழியினா ளம்பிகைக் கன்பு வைச்சு வாழ்வுறு மனத்தினா டாதையை வணங்கா. (இ-ள்.) விச்சுவாவக எனும் ஒரு விச்சையன் பயந்த - விச்சு வாவசு என்ற பெயரினையுடைய ஒரு விஞ்சையன் பெற்ற, நச்சு வாள் விழி மடந்தை - நஞ்சு பூசிய வாளை ஒத்த விழிகளையுடைய பெண் ஒருத்தியிருந்தனள்; நாமம் விச்சாவதி - அவள் பெயர் விச்சாவதி, அச்சுவாகத மொழியினாள் - அந்தக் கிளிபோலும் மொழியினை யுடையாள், அம்பிக்கை அன்பு வைக்க வாழ்வு உறு மனத்தினாள் - உமையவள்பால் அன்பு வைத்து வாழுகின்ற மனத்தையுடைய வளாய், தாதையை வணங்கா - தன் தந்தையை வணங்கி எ-று. விச்சையன் - விஞ்சையன்; வித்தியாதரன் கந்தருவன் என்றுமாம். நச்சு - நஞ்சு; வலித்தல் விகாரம். இருந்தாள் என ஒரு சொல் வருவிக்க. அச்சுவாகதம் - அழகிய கிளி யென்றுமாம். நெடுநல் வாடையுள் அவ்விதழ் என்பதற்கு அழகிய இதழ் என நச்சினார்க்கினியர் பொருள் கூறுதலுங் காண்க. கு:உருபு மயக்கம். வைச்சு: மரூஉ; போலியுமென்ப. (65) ஐய வம்பிகை தன்னையா னன்பினால் வழிபட் டுய்ய வேண்டுமென் றாளவு னுலகெலாம் பயந்த தையன் மந்திரந் தனைமக டனக்குப் தேசஞ் செய்ய வந்நெறி யொழுகுவாள் செப்புவாள் பின்னும். (இ-ள்.) ஐய - தந்தையே, யான் அம்பிகை தன்னை அன்பினால் வழிபட்டு - யான் உமையம்மையை அன்பினாலே வழிபாடு செய்து, உய்யவேண்டும் என்றாள் - பிழைக்க வேண்டுமென்று கூறினாள்; அவன் அவ்விச்சுவாவசு, உலகு எலாம் பயந்து தையம் மந்திரம் தனை - உலகு மனைத்தையும் பெற்ற உமாதேவியின் திருமந்திரத்தை, மகள் தனக்கு உபதேசம் செய்ய - மகளுக்கு உபதேசிக்க, அந்நெறி ஒழுகுவாள் - அவ்வுபதேசவழி நடக்கின்ற அவள், பின்னும் செப்புவாள் - மேலும் தன்தந்தையை நோக்கிக் கூறுகின்றாள் எ-று. ஒழுகுவாள், பெயர். (66) இறைவி தன்னையா தரிப்பதற் கிம்பரிற் சிறந்த குறைவி னன்னகர் யாதெனக் கூறுவான் கேள்வித் துறைவி ளங்கினோர் பயில்வது துவாதச முடிவென் றறைவ ளம்பதி யவனிமேற் சிவபுர மாமால். (இ-ள்.) இறைவி தன்னை ஆதரிப்பதற்கு - அவ்வுமையவளை அன்பினால் வழிபடுதற்கு, இம்பரில் சிறந்த குறைவு இல் நல் நகர் யாது என - இவ்வுலகில் மேலான குறைவில்லாத நல்ல பதியா தென்றுவினவ, கூறுவான் - விச்சுவாவசு சொல்வான்; துவாதச முடிவு என்று அறை வளம்பதி - துவாத சாந்தம் என்று கூறப்படும் வளப்பத்தையுடைய பதியானது கேள்வித்துறை விளங்கினோர் பயில்வது கற்றல் கேட்டல் வழிகளில் வல்லார் வதியப் பெறுவதாய், அவனிமேல் சிவபுரம் ஆம் - பூவுலகில் சிவலோக மாகும் எ-று. செப்புவாளாய் யாதென என மேற்செய்யுளோடு கூட்டிப் பொருள் கொள்க. சிறந்த நகர், குறைவில் நகர் எனத் தனித்தனி முடிக்க கேள்விகல்வியுமாம். பயில்வதாகிய வளம்பதி சிவபுரமாம் என்னலுமாம். ஆம் - ஆகும். ஆல்;அசை. (67) சேடு தாங்குமூ வுலகினுட் சிறந்தன சத்தி பீட மூவிரு பத்துநான் கவற்றின்முற் பீடம் மாட மோங்கிய மதுரையா மற்றது போகம் வீடும் வேண்டிய சித்தியும் விளைப்பதென் றெண்ணா. (இ-ள்.) சேடு தாங்கு மூவுலகினுள் - பெருமையைத் தாங்கிய மூன்று உலகங்களிலும், சிறந்தன சத்திபீடம் மூவிருபத்து நான்கு - மேம் பட்டனவாகிய சத்திபீடங்கள் அறுபத்து நான்காகும்; அவற்றின் முற்பீடம் - அவற்றுள் முதற்பீடமாயுள்ளது, மாடம் ஓங்கிய மதுரையாம் - மாளிகைகள் உயர்ந்த மதுரைப் பதியாகும்; அது - அப்பதி, போகம் வீடும் வேண்டிய சித்தியும் விளைப்பது என்று எண்ணா - போகத்தையும் வீடுபேற்றையும் வேண்டுவார் வேண்டிய சித்திகளையும் அளிக்க வல்லது என்று கருதி எ-று. பெருமையைத் தாங்கிய. சிறந்தன: வினை முற்று பெயரெச்சப் பொருளில் வந்தது. மூவிருபதோடு கூடிய நான்கு என்க. மற்ற அசை. போகமும் என உம்மை விரிக்க. போகம் - இம்மை யின்பம். சத்தீபீடம் அறுபத்து நான்காவன :- கோபாலபுரத்தில் உள்ள இலக்குமி பீடமும், மாதுபுரத்திலுள்ள இரேணுகா பீடமும், துளசாபுர பீடமும், சத்த சிருங்க பீடமும், இங்குலையிலுள்ள சுவாலாமுகிபீடமும், சாகம்பரியிலுள்ள பிராமரி பீடமும், ஸ்ரீரத்த தந்திகையிலுள்ள துர்க்கை பீடமும், விந்தியாசல பீடமும், திருக் காஞ்சியிலுள்ள அன்ன பூரணி பீடமும், விமலையிலுள்ள பீமாதேவி பீடமும், திருச்சந்திரலையிலுள்ள கெளசிகி பீடமும், நீல பருவதத் திலுள்ள நீலாம்பரி பீடமும், திருநகரத்திலுள்ள சாம்புநதேச்சுவரி பீடமும், நேபாளத்திலுள்ள இரகசிய காளி பீடமும், மதுரை யிலுள்ள மீனாட்சி பீடமும், வேதாரணியத்திலுள்ள சுந்தரி பீடமும், ஏகாம்பர பீடமும், மகாலசத்திலுள்ள யோகேச்சுவரி பீடமும், சீனாவிலுள்ள நீல சரச்சுவதி பீடமும், வைத்திய நாதத்திலுள்ள வகலை பீடமும், மணித்தீபத்திலுள்ள புவனேச்சுவரி பீடமும், காமயோனி மண்டல மென்கிற திரிபுர பைரவி பீடமும், புட்கரத் திலுள்ள காயத்திரி பீடமும், அமரேசத்திலுள்ள சண்டிகை பீடமும், பிரபா சத்திலுள்ள புட்கரேட்சணி பீடமும், நைமிசத்திலுள்ள தேவி பீடமும், புட்கராட்சத்திலுள்ள புருகூத பீடமும், ஆசாடத்திலுள்ள இரதி பீடமும், சண்டமுண்டியிலுள்ள தண்டினி பீடமும், பாரபூதி யிலுள்ள பூதிபீடமும், நாகுலத்திலுள்ள நகுலேச்சுவரி பீடமும், அரிச்சந்திரத்திலுள்ள சந்திரிகை பீடமும், திருக்கிரியிலுள்ள சாரதா பீடமும், பஞ்ச நதத்திலுள்ள திரிசூல பீடமும், ஆம்பிராத கேச்சுவரத் திலுள்ள சூக்கும பீடமும்; மகாகாளத்திலுள்ள சாங்கரி பீடமும், மத்திய மாபிதத்திலுள்ள சர்வாணி பீடமும், கேதாரத்திலுள்ள மார்க்க தாயினி பீடமும், வைரவத்திலுள்ள பைரவி பீடமும், கயையிலுள்ள மங்கள பீடமும், குரட்சேத்தி ரத்திலுள்ள தாணுப் பிரியை பீடமும், வியபிநாகுலத்திலுள்ள சவாயம்பு பீடமும், கனகலத்திலுள்ள உக்கிர பீடமும், விமலேச் சுவாத்திலுள்ள விசுவேசை பீடமும், அட்டகாசத்திலுள்ள மகானந்த பீடமும், மகேந்திரத்திலுள்ள மகாந்தகைப் பீடமும், பீமத்திலுள்ள பீம பீடமும், வத்திராபதத்திலுள்ள பவானி பீடமும், அர்த்த கோடிகையிலுள்ள உருத்திராணி பீடமும், அவிமுத்தத்திலுள்ள விசாலாட்சி பீடமும், கைலாயத்திலுள்ள மகாபாகை பீடமும், கோகன்னத்திலுள்ள பத்திரகாளி பீடமும், பத்திரகன்னிகத்திலுள்ள பத்திரை பீடமும், சுவர்னாட்சத்திலுள்ள உற்பலாட்சி பீடமும், தாணுவிலுள்ள தாண்வீசை பீடமும், கமலாலயத்திலுள்ள கமலை பீடமும், சகண்டலத்திலுள்ள பிரசண்டை பீடமும், குரண்டலத்திலுள்ள திரி சந்திரிகை பீடமும், மாகோட்டத்திலுள்ள மருடேச்சுவரி பீடமும், மண்டலேசத்திலுள்ள சாண்டகை பீடமும், காலஞ்சரத்திலுள்ள காளி பீடமும், சங்கு கன்னத்திலுள்ள தூல பீடமும், ஞானிகளிதய கமலத்திலுள்ள தூல பீடமும், ஞானிகளிதயகமலத்திலுள்ள பரமேச்சுவரி பீடமும், இவற்றை வடமொழியிலுள்ள தேவிபாகவதத்தில் காண்க. (68) அல்லு மெல்லும்வா னகர்க்கத வடைப்பின்றிச் சுவர்க்கச் செல்வ ரங்கடைந் துமையருள் சித்தியால் வினையை வெல்லு வாரதான் றெந்தையோ டைவர்கள் வேண்டி நல்வ ரம்பல வடைந்தனர் நமர்களந் நகரில். (இ-ள்.) சுவர்க்கச் செல்வர் - துறக்க வாழ்க்கையாகிய தேவர்கள், அல்லும் எல்லும் - இரவும் பகலும், வான் நகர்க் கதவு அடைப்பு இன்றி- அந்நகரின் கதவு அடைபடுதலில்லாமல், அங்கு அடைந்து மதுரையை யெய்தி, உமை அருள் சித்தியால் - அங்கயற்கண்ணம்மை அருளுகின்ற சித்தியினால், வினையை வெல்லுவார் - வினைப்பகையை வெல்லு வார்கள்; அதான்று - அதுவேயன்றி, எந்தையோடு நமர்கள் ஐவர்கள் வேண்டி - என் தந்தையுடன் நம்மவர்கள் ஐவர் அவ்வுமையை வணங்கி, அந்நகரில் பல நல்வரம் அடைந்தனர் - அந்நகரத்தின்கண் பல நல்ல வரங்களைப் பெற்றனர் எ-று. இடையறாது சென்று மீளுதலின் கதவு அடைப்பின்றி யென்றார். இன்றி - இல்லையாக. அதான்று - அது அன்று; மரூஉ;குறிப்பு வினையெச்சம். கள் : விகுதிமேல் விகுதி. (69) எம்மை யாரையும் யாவையு மீன்றவங் கயற்கண் அம்மை யாவரே யாயினு மன்பினா தரிப்போர் இம்மை யாகிய போகம்வீ டெண்ணியாங் கெய்தச் செம்மை யாகிய வின்னருள் செய்துவீற் றிருக்கும். (இ-ள்.) எம்மை யாரையும் யாவையும் ஈன்ற அங்கயற்கண் அம்மை - எம்மையும் மற்றுள்ள யாவரையும் யாவற்றையும் பெற்ற அங்கயற்கண்ணம்மையார், அன்பின் ஆதரிப்போர் - அன்பினால் வழிபடுவார், யாவரே ஆயினும் - எவராயினும், எண்ணியாங்கு (அவர்கள்) எண்ணிய வண்ணமே, இம்மையாகிய போகம் வீடு - இம்மைப் பயனாகிய போகத்தையும் வீடுபேற்றையும், எய்த - அடையுமாறு, செம்மையாகிய இன் அருள் செய்து வீற்றிருக்கும் - கோட்டமில்லாத இனிய கருணையைப் புரிந்து வீற்றிருப்பார் எ-று. எம்மையும் என உம்மை விரிக்க; தம்மை வேறுபிரித் தோதியது அன்பின் உரிமையால்; என் அம்மை எனலுமாம். உயர்திணையும் அஃறிணையு மென்பார் யாரையும் யாவையும் என்றார். ஆதரித்தல் - ஈண்டு வழிபடுதல். இம்மைப்பயனை, இம்மை யென்றார். செம்மை - சிறப்புமாம். (70) என்ற தாதையை யிறைஞ்சினா ளனுச்சை1 கொண் டெழுந்தாள் மன்றன் மாமலர் வல்லிபோல் வழிக்கொடு கானங் குன்ற மாறுபின் கிடப்பமுன் குறுகினா ளன்பின் நன்ற வாதியெம பரையரு ணிறைந்தவந் நகரில். (இ-ள்.) என்ற தாதையை இறைஞ்சினாள் - என்று கூறிய தந்தையை வணங்கி, அனுச்சை கொண்டு எழுந்தாள் - விடைபெற்று எழுந்து, மன்றல் மாமலர் வல்லிபோல் வழிக்கொடு - மணமும் பெருமையு முடைய பூங்கொடிபோல் நடந்து, கானம் குன்றம் ஆறுபின் கிடப்ப - காடும் மலையும் ஆறும் பிற்பட்ட, அன்பின் நின்ற ஆதி எம்பரை அருள் நிறைந்த அந்நகரில் முன் குறுகினாள் - அடியார்கள் அன்பில் நிலை பெற்றுத் தங்கிய முதல்வாகிய எம் பராசத்தlVரின் திருவருள் நிறைந்த அம் மதுரைப் பதியிற் சேர்ந்தாள் எ-று. அனுச்சை - அநுஞ்ஞை. மா - வண்டுமாம். மலர்வல்லி - திருமகள் என்னலுமாம். எண்ணும்மைகள் விரிக்க. இறைஞ்சினாள், எழுந்தாள்:முற்றெச்சங்கள். (71) அடைந்தி ளம்பிடி யாடல்போ லாடக கமலங் குடைந்து நான்மறைக் கொழுந்திடங் கொண்டுறை குறிபாற்2 படர்ந்த பொன்மலை வல்லியைப் பணிந்துவெங் கதிரோன் தொடர்ந்த வான்சுறா மதியமே யாதியாத் தொடங்கா. (இ-ள்.) அடைந்து இளம்பிடி ஆடல்போல் - அப்பதியை அடைந்து பெண்யானை நீராடுதல்போல, ஆடக கமலம் குடைந்து பொற்றாமரையில் நீராடி, நால்மறைக் கொழுந்து - நான்கு வேதங் களின் கொழுந்தாகிய சிவபெருமான் இடங்கொண்டு உறைகுறிபால் - இடமாகக்கொண்டு எழுந்தருளி யிருக்கின்ற சிவலிங்கத்தின் கண், படர்ந்த பொன்மலை வல்லியை - படர்ந்த இமயவல்லியாகிய அங்கயற்கணம்மையை, பணிந்து - வணங்கி, வெங்கதிரோன் - சூரியன் வான் சுறாத் தொடர்ந்த மதியமே ஆதியாத் தொடங்கா - பெரிய மகரராசியிற் புகுந்த தைத் திங்கள் முதலாகத் தொடங்கி எ-று. குறிப்பால் எனப் பாடங் கொண்டு. கொழுந்தினது இடப்பாகத்தைக் கொண்டுறையும் குறிப்போடு என்று பொருளுரைப்பாருமுளர். இமயம் பொன்மலை யெனப்படுவ துண்டாகலின் பொன்மலைவல்லி என்றார். வானின் கண்ணுள்ள சுறா என்றுமாம். சுறா - மகரம்; மகர ராசியில் ஆதித்தன் சேர்ந்திருக்குங் காலம் தை மாதம். ஆதியாக வென்பது விகாரமாயிற்று. (72) (எழுசீரடியாசிரியவிருத்தம்) பெரும்பக னல்லூண் கங்குலூ ணுதவப் பெற்றவூ ணிலைமுதற் பல்லூண் அரும்பொடி யெள்ளூண் சாந்திரா யணமா னைந்துபா னறியநீர் தருப்பை இரும்புத னுனிநீர் காலிவை நுகர்ந்து மியற்றரும் பட்டினி யுற்றும் வரம்புற விராறு திங்களு நோற்று வாடிமேல் வருஞ்சுறா மதியில். (இ-ள்.) பெரும்பகல் நல் ஊண் நுகர்ந்து - (தொடங்கிய தைத்திங்களில்) பெரிய பகற்காலத்தில் நல்ல உணவை உண்டும். கங்குல் ஊண் நுகர்ந்தும் - (மாசித் திங்களில்) இரவில் உணவு உண்டு, உதவப்பெற்ற ஊண் நுகர்ந்தும் - (பங்குனித் திங்களில்) கொடுக்கப் பெற்ற உணவு உண்டும், இலை முதல் பல் ஊண் நுகர்ந்தும் - (சித்திரைத் திங்களில்) இலை முதலிய பல உணவுகளை உண்டும், எள் அரும்பொடி ஊண் நுகர்ந்தும் - (வைகாசித் திங்களில்) எள்ளினது அரிய பொடியாகிய உணவு உண்டு, சாந்திராயணம் நுகர்ந்தும் - (ஆனித் திங்களில்) சாந்திராயண நோன்பின் உணவு உண்டும், ஆன் ஐந்து நுகர்ந்தும் - (ஆடித் திங்களில்) பஞ்ச கவ்வியமாகிய உணவு உண்டும், பால் நுகர்ந்தும் - (ஆவணித் திங்களில்) பாலை அருந்தியும், நறிய நீர் நுகர்ந்தும் - (புரட்டாசித் திங்களில்) நல்ல நீரைப்பருகியும், தருப்பை இரும்புதல் நுனி நீர் நுகர்ந்தும் - (ஐப்பசித் திங்களில்) தருப்பையாகிய பெரிய புல்லின் நுனியிலுள்ள நீரைப் பருகியும், கால் நுகர்ந்தும் - (கார்த்திகைத் திங்களில்) வாயுவை உண்டு, இயற்றரும் பட்டினி உற்றும் - (மார்கழித் திங்களில்) செய்தற்கரிய பட்டினியாயிருந்தும், இவை வரம்பு உற - இவைகளை வரம்பு பட, இராறு திங்களும் நோற்று - பன்னிரு மதியும் செய்து, வாடி (உடல்) மெலிந்து, மேல் வருஞ் சுறாமதியில் - மேலே வருகின்ற தைத்திங்களில் எ-று. நல்லூண் முதலியவற்றிற்கு ஐயுருபு விரித்து நுகர்ந்து என்பதனைத் தனித்தனி கூட்டுக. தைத்திங்கள் முதல் பன்னிரு திங்கட்கும் நல்லூண் முதலியவற்றில் ஒரோவொன்று முறையானே இயையும். உதவப்பெற்ற வூண் நுகர்தல் - பகல் இரவு என்னு நியதியின்றிப் பிறரளிக்கக் கிடைத்த வுணவினைக் கிடைத்த பொழுதுண்டல். சாந்திராயணம் - மதியின் கலை வளருந்தோறும் ஒவ்வொரு கவளம் உயர்த்தும், குறையுந்தோறும் ஒவ்வொரு கவளம் குறைத்தும் உண்டு நோற்கும் விரதம் முன்னும் உரைக்கப்பட்டது. ஈராறு எனற் பாலது குறுகிற்று: விகாரம். (73) சந்நிதி யடைந்து தாழ்ந்துநின் றிளமாந் தளிரடிக் காஞ்சிசூழ் கிடந்த மின்னிகர் மருங்கு லிடையிடை நுழையா வெம்முலைச் செம்மலர்க் காந்தட் பொன்னிரை வளைக்கை மங்கலக் கழுத்திற் பூரண மதிக்கலை முகத்தின் இன்னிசை யளிசூ ழிருட்குழற் கற்றை யிறைவியை யிம்முறை நினையா. (இ-ள்.) சந்நிதி அடைந்து தாழ்ந்து நின்று - திருமுன் சென்று பணிந்து நின்று, மா இளம் தளிர் அடி - மாவின் இளமையாகிய தளிர் போன்ற திருவடிகளையும், காஞ்சி சூழ் கிடந்த மின் நிகர் மருங்குல் காஞ்சி என்னும் அணி புறஞ்சூழ்ந்து கிடந்த மின்னலை ஒத்த இடையினையும், இழை இடை நுழையா வெம்முலை - நூல் இடையிற்புகுதாவாறு நெருங்கிய விருப்பத்தைத் தருகின்ற திருத்தனங் களையும், செம்பொன் வளை நிரை காந்தள் மலர்க்கை - செம்பொன் னாலாகிய வளையல்களின் வரிசைகளையுடைய காந்தள் மலர் போன்ற திருக்கரங்களையும், மங்கலக் கழுத்தின் - மங்கல நாண் அணிந்த திருக்கழுத்தினையும், பூரணம் கலைமதி முகத்தின் - நிறைந்த கலைகளையுடைய சந்திரன் போன்ற திருமுகத்தினையும், இன் இசை அளி சூழ் இருள் கற்றை குழல் - இனிய இசையையுடைய வண்டுகள் சூழ்ந்த இருள் போன்ற திரளாகிய கூந்தலையுமுடைய, இறைவியை - தேவியை, இம்முறை நினையா - இவ்வாறு பாதாதி கேசமாகத் தியானித்து எ-று. காஞ்சி - இடையிலணியும் அணிவிசேடம்; இருகோவை யுள்ளது. காந்தள் மலர்க்கை எனக் கூட்டுக. இம்முறை - இங்கே கூறியமுறை; பாதம் முதலாகக் கூந்தல் இறுதியாக. இவ்விலக்கணத் தால் நினைத்துமாம். (74) கோலயாழ்த் தெய்வம் பராய்க்கரங் குவித்துக் கொழுஞ்சுடர்ப் பசுங்கதிர் விளக்கம் போலநூற் பொல்லம் பொத்துபொன் னிறத்த போர்வைநீத் தவிழ்கடி முல்லை மாலைமேல் வீக்கிப் பத்தர்பின் கிடப்ப மலர்க்குழ றோய்சுவற் கிடத்திச் சேலைநேர் விழியாண் மாடகந் திரித்துத் தெறித்தனள் பண்ணறிந் திசைப்பாள். (இ-ள்.) சேலை நேர் விழியாள் - சேலை ஒத்த கண்களை யுடைய விச்சாவதி என்பாள், கோல யாழ்த் தெய்வம் பராய் - அழகிய யாழிற்குரிய தெய்வத்தைத் துதித்து, கரம் குவித்து - கை கூப்பி, கொழுஞ்சுடர்ப் பசுங்கதிர் விளக்கம்போல் - கொழுவிய ஒளியையுடைய இளஞாயிற்றின் ஒளிபோல விளங்கும், நூல் பொல்லம் பொத்து பொன்நிறத்த போர்வை நீத்து - நூலால் தைத்த பொன்னின் நிறத்தினையுடைய போர்வையைக் கழற்றி, அவிழ் கடி முல்லை மாலைமேல்வீக்கி - இதழ்விரிந்த மணமுடைய முல்லை மாலையை அதன்மேற் சூட்டி, பத்தர் பின் கிடப்ப மலர்க்குழல் தோய் சுவல் கிடத்தி - பத்தர் பின் புறத்திலிருக்கப் பூவையணிந்த கூந்தல் தோய்ந்த பிடரியிற் சார்த்தி, மாடகம் திரித்து - முறுக்காணியை முறுக்கி, தெறித்தனள் பண் அறிந்து இசைப்பாள் - (நரம்பைத்) தெறித்துப் பண்ணின் வகையை அறிந்து பாடுன்றாள் எ-று. யாழ்த் தெய்வம் - மாதங்கி யென்னுங் தெய்வம் என்பர்; “ அணங்கு மெய்ந் நின்ற வமைவரு காட்சி” என்னும் பொருநராற்றுப்படையுங் காண்க. பொல்லம் பொத்தல் இரண்டு தலையுங் கூட்டித் தைத்தல்: ஒரு சொல். மாடகம் - முறுக்காணி. யாழின் உறுப்புக்களை, “ கோடே பத்த ராணி நரம்பே மாடக மெனவரும் வகையின தாகு ” என்பதனாலறிக. பண் - பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி யென்பனவும், அவற்றின் திறங்களுமாம். “ விளக்கழ லுருவின் விசியுறு பச்சை யெய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற் றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப் பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை ”” எனப் பொருநராற்றுப்படையுள் பொல்லம் பொத்திய போர்வை யினியல்பு கூறியிருப்பது இங்கு நோக்கற் பாலது. (75) (அறுசீரடியாசிரிய விருத்தம்) ஒளியா லுலகீன் றுயிரனைத்து மீன்போற் செவ்வி யுறநோக்கி அளியால் வளர்க்கு மங்கயற்க ணன்னே கன்னி யன்னமே அளியா லிமவான் றிருமகளா யாவியன்ன மயில் பூவை தெளியா மழலைக் கிளிவளர்த்து விளையாட் டயருஞ் செயலென்னே. (இ-ள்.) ஒளியால் உலகு ஈன்று - தனது ஒளியினால் உலகங் களனைத்தையும் பெற்று, உயிர் அனைத்தும் - எல்லாவுயிர் களையும், செவ்வி உற - பக்குவ முறும்படி, மீன்போல் நோக்கி - மீன்போலப் பார்த்து, அளியால் வளர்க்கும் - கருணையுடன் வளர்க்கின்ற, அம் கயல் கண் அன்னே - அழகிய கயல்போன்ற கண்களையுடைய தாயே, கன்னி அன்னமே - அழகிய கயல்போன்ற கண்களையுடைய தாயே, கன்னி அன்னமே - கன்னிப் பருவத் தினையுடைய அன்னமே, அளியால் இமவான் திருமகளாய் - நீ தான் கருணையால் மலையரையன் திருமகளாகிய, ஆவி அன்னம் - தடாகத்தின் கண் உள்ள அன்னங்களையும், மயில் பூவை - மயில்களையும் நாகணவாய்ப் புட்களையும், தெளியா மழலைக் கிளி - பொருள் தெரியாத மழலைச் சொற்களையுடைய கிளிகளையும், வளர்த்து விளையாட்டு அயரும் செயல் என்னே - வளர்த்து விளையாடு கின்ற செய்கை யாது குறித்தோ எ-று. ஒளி - ஞானம், அருளுமாம் மீனானது முட்டையிட்டு அவற்றை நோக்குதலினாலே பக்குவடையச் செய்தல்போல உயிர்களை யெல்லாம் ஈன்று தன் அருணோக்கத்தால் அவற்றிற்குப் பக்குவ முண்டாக்கி வளர்க்குங் வளர்க்குங் காரணத்தால் அங்கயற் கண்ணி யென்பது பெயரென்றற்கு மீன்போற் செவ்வியுற ‘நோக்கி வளர்க்கும் அங்கயற் கணன்னே’ என்று கூறிற்று. மீன்கள் நோக்கு தலால் அவற்றின் முட்டை குஞ்சாகு மென்ப. ஆவியன்னம் - உயிர் போன்ற அன்னம் எனலுமாம்; அன்ன வெனப் பிரித்து, உயிர் போன்ற மயில் முதலியன எனினும் அமையும். எல்லாவுயிர் களையும் வளர்க்கும் அன்னையாகிய நீ அவற்றுட் சிலவற்றை வளர்ப்பதாகக் காட்டுவது நீ கருணையாற் கொண்ட கோலத்திற் கேற்ற விளையாட்டன்றிப் பிறிதில்லை என்பது கருத்து. (76) அண்டக் குவைவெண் மணற்சிறுசோ றாக்கித் தனியே விளையாடுங் கொண்டற் கோதாய் யடியெழுத லாகா வுருவக் கோகிலமே கொண்டற் குடுமி யிமயவரை யருவி கொழிக்குங் குளிர் முத்தால் வண்டற் குதலை மகளிரொடும் விளையாட் டயரும் வனப்பென்னே. (இ-ள்.) அண்டக்குவை - அண்டக் கூட்டங்களை, வென்மணன் சிறுசோறு ஆக்கி - வெள்ளிய மணலாற் சிறு சோறாக்குவதுபோல ஆக்கி, தனியே விளையாடும் கொண்டல் கோதாய் - தனிமையாக விளையாடுகின்ற முகில்போலும் கூந்தலையுடைய அன்னாய், படி எழுதலாகா உருவக் கோகிலமே - ஒப்பு எழுதமுடியாத வடிவத்தினை யுடைய குயிலே, கொண்டல் குடுமி - முகில் தவழும் முடியினை யுடைய, இமயவரை அருவி கொழிக்கும் - இமயமலையின் அருவி ஒதுக்கிய, குளிர்முத்தால் - குளிர்ந்த முத்துக்களால், வண்டல் குதலை மகளிரொடும் - குதலைச் சொல்லையுடைய விளை யாட்டுப் பெண்களோடும் விளையாட்டு அயரும் வனப்பு என்னே- நீ தான் விளையாடுகின்ற அழகுயாது குறித்தோ எ-று. குவை - திரட்சி; கூட்டம். சிறு சோறாக்கி - சிறு சோறாக்குவது போற்செய்து பல்லாயிர கோடி அண்டங்களையும் படைப்பது இறைவிக்கு விளையாட்டு மாத்திரையே என்று கூறிற்று கோதாய்: கோதை யென்பதன் விளி. படி - ஒப்பு; ““ படியெடுத் துரைத்துக் காட்டும் படித்தன்று படிவம்” என்றார் பிறரும்; அதுபோல் எழுதலாகாத உருவமென்க. வண்டல் - மகளிர் விளையாட்டு. (77) வேத முடிமே லானந்த வுருவாய் நிறைந்து விளையாடும் மாத ரரசே முத்தநகை மானே யிமய மடமயிலே மாத ரிமவான் றேவிமணி வடந்தோய் மார்புந் தடந்தோளும் பாத மலர்சேப் புறமிதித்து விளையாட் டயரும் பரிசென்னே. (இ-ள்.) வேதமுடிமேல் ஆனந்த உருவாய் நிறைந்து - மறையின் உச்சியின் இன்ப வடிவாக நிறைந்து, விளையாடும் மாதர் அரசே - விளையாடுகின்ற பெண்ணரசே, முத்தநகை மானே - முத்துப் போலும் பற்களையுடைய மானே, இமய மடமயிலே - இமய மலையிற் றோன்றிய இளமையாகிய மயிலே, மாதர் இமவான் தேவி - அழகிய மலையரசன் தேவியாகிய மேனையின், மணிவடம் தோய் மார்பும் - முத்துமாலை பொருந்திய மார்பிலும், தடம் தோளும் - பருத்த தோள்களிலும், பாதமலர் சேப்பு உற - அடிமலர்கள் சிவக்குமாறு, மிதித்து விளையாட்டு அயரும் பரிசு என்னே - குதித்து விளையாடுகின்ற தன்மை யாது குறித்தோ எ-று. சேப்பு: செம்மை யென்னும் பண்படியாக வந்த தொழிற் பெயர். பரிசு - தன்மை. விளையாட்டு அயரும் - விளையாடுதலைச் செய்யும் : விளையாடும் என்பது விரிந்து நின்றது. இவை மூன்றும் முன்னிலைப் பரவல், கந்தருவ மார்க்கத்தால் இடை மடக்கி வந்தன. (78) (எழுசீரடியாசிரிய விருத்தம்) யாழியன் மொழியா1 லிவ்வழி பாடி யேத்தினா ளாகமெய் யுள்ளத் தாழிய வன்பின் வலைப்படு கருணை யங்கய் கண்மடமானோர் சூழிய நுழைமெல் லிளங்குழற் குதலைத் தொண்டைவா யகவைமூன் றெய்தி வாழிளங் குழவி யாகிய லயத்து வந்துநின் றாள்வரங் கொடுப்பாள். (இ-ள்.) யாழ் இயல் மொழியால் - யாழில் அமைந்த இசைப் பாட்டால், இவ்வழிபாடி ஏத்தினாள் ஆக - இங்ஙனம் பாடித் துதிக்க, மெய் உள்ளத்து ஆழிய அன்பின் வலைப்படு - உண்மை யுடைய உள்ளத்தின் கண் ஆழ்ந்த அன்பாகிய வலையில் அகப்படு கின்ற, கருணை அங்கயற்கண் மடமான் - கருணையுடைய இளமானைப் போன்ற அங்கயற் கண்ணம்மை, ஓர் - ஒரு, சூழியம் நுழை மெல் இளங்குழல் - கொண்டையணி பொருந்திய மெத் தென்ற சிறிய கூந்தலையும், குதலை - மழலைச் சொல்லையும், தொண்டை வாய் - கொவ்வைக் கனிபோன்ற வாயினையும் உடைய, மூன்று அகவை எய்தி - மூன்று ஆண்டினைப் பொருந்திய, வாழ் இளங் குழவியாகி - விளங்குகின்ற இளமையாகிய பெண் மகவாகி, வரம் கொடுப்பாள் ஆலயத்து வந்து நின்றாள் - (விச்சாவதி வேண்டிய) வரத்தை யளித்தற் பொருட்டுத் திருக்கோயிலின் கண் வந்து நின்றருளினாள் எ-று. மொழி : பாட்டிற்கு ஆகு பெயர். ஏத்தினாள் என்னும் வினைமுற்றுடன் ஆக என்னும் இடைச்சொற் சேர்ந்து எச்சப்படுத்தது. ஆழிய - ஆழமாகிய : பெயரெச்சம். வலைப்படு என்றதற் கேற்க மான் எனக் கூறிய நயம் பாராட்டற்பாலது, ஓர் குழவியாகிய யென்க. சூழியம் - குழற்சூட்டு. வாயினையுமுடைய குழவி, எய்திவாழ் இளங்குழவி எனத் தனித்தனி கூட்டுக. கொடுப்பாள் - கொடுக்க: எச்சம். நின்றாள் என்பதனை யெச்சமாக்கலும் ஒன்று. (79) இறைஞ்சியஞ் சலித்தா டன்னையெம் மன்னை யாதுவேண் டினையென வென்று நிறைந்தபே ரன்பு நின்னடிப் போதி னீங்கலா நிலைமைதந் தருளென் றறைந்தன ளின்னும் வேண்டுவ தேதென் றருளவிம் மகவுரு வாகிச் சிறந்துவந் தென்பா லருள்சுரந் திருக்கத் திருவுளஞ் செய்யெனப் பணிந்தாள். (இ-ள்.) இறைஞ்சி அஞ்சலித்தாள் தன்னை - வணங்கிக் கை குவித்து நிற்கும் விச்சாவதியை (நோக்கி), எம் அன்னை - எம் திருத்தாயாகிய மீனாட்சியம்மை, யாது வேண்டினை என - நீ எதனை விரும்பினாய் என்று கேட்க, நின் அடிப் போதில் நிறைந்த பேர் அன்பு என்றும் நீங்கலா நிலைமை தந்தருள் என்று அறைந்தனள் - நினது திருவடி மலரின்கண் நிறைந்த பேரன்பானது எப்பொழுதும் நீங்காத நிலைமையினைத் தந்தருள வேண்டுமென்று வேண்டினள்; இன்னும் வேண்டுவது ஏது என்று அருள - இன்னும் நீ விரும்பியது யாது என்று வினவியருள, இம்மகவு உருவாகி - இக்காட்சி தந்த குழந்தையுருவாய், சிறந்து வந்து என்பால் அருள் சுரந்து இருக்க - சிறப்புடன் என்னிடந் தோன்றிக்கருணை கூர்ந்திருக்குமாறு, திருவுளம் செய்யெனப் பணிந்தாள் - திருவுளஞ் செய்ய வேண்டும் மென்று வணங்கினாள் எ-று. போதின் நிறைந்த வெனக் கூட்டுக. நீங்கலா : எதிர்மறைப் பெயரெச்சம்; அல்: எதிர்மறை யிடைநிலை; ஆ: சாரியை. சிறந்து - சிறக்க. (80) சிவபரம் பரையு மதற்குநேர்ந் தருள்வா டென்னவர் மன்னனாய் மலயத் துவசனென் றொருவன் வருமவன் கற்பின் றுணைவியாய் வருதியப் போதுன் தவமக வாக வருவலென் றன்பு தந்தனள் வந்தவா றிதுவென் றுவமையில் பொதியத் தமிழ்முனி முனிவர்க் கோதினா னுள்ளவா றுணர்ந்தார். (இ-ள்.) சிவபரம்பரையும் அதற்கு நேர்ந்து அருள்வாள் - சிவசத்தியாகிய அங்கயற்கண்ணம்மையும் அவ் வேண்டுகோளுக்கு உடன்பட்டு அருள் செய்கின்றவள், தென்னவர் மன்னனாய் மலயத்துவசன் என்று ஒருவன் வரும் - பாண்டியர் குலத்து மன்னனாகிய மலயத்துவசனென்பான் ஒருவன் இங்கு வந்து தோன்றுவான், அவன் கற்பின் துணைவியாய் வருதி - நீ அவனுடைய கற்பின்மிக்க மனைவியாய் வருவாய், அப்போது உன் தவமகவு ஆக வருவல் என்று அன்பு தந்தனள் - அது காலை உன் தவப்புதல்வியாக வருவேன் என்று கருணைசெய்தாள், வந்தவாறு இது என்று - அம்மை பாண்டியனிடம் புதல்வியாக வந்த முறைமை இது என்று, உவமை இல் பொதியத் தமிழ்முனி - ஒப்பில்லாத பொதியின் மலையையுடைய அகத்திய முனிவன், முனிவர்க்கு ஓதினான் - முனிவர்களுக்கு கூறினான்; உள்ளவாறு உணர்ந்தார் - அவர்களும் உள்ளபடி உணர்ந்தார்கள் எ-று. பரம்பரை - சத்தி. வருதி - வருவாய்: இ எதிர்கால விகுதி; த்: எழுத்துப் பேறு. அன்பு தந்தனள் - அருள் புரிந்தாள். உவமையில் தமிழ் முனியென்க; தமிழ் முனி: பெயர். (81) ஆகச் செய்யுள் - 598. திருமணப்படலம் (அறுசீரடியாசிரிய விருத்தம்) தரைபுகழ் தென்னன் செல்வத் தடாதகைப் பிராட்டி தானே திரைசெய்நீர் ஞாலங் காத்த செயல்சிறி துரைத்தேன் றெய்வ விரைசெய்பூங் கோதை மாதை விடையவன் மணந்துபாராண் டரசுசெய் திருந்த தோற்ற மறிந்தவா றியம்ப லுற்றேன். (இ-ள்.) தரை புகழ் தென்னன் செல்வத் தடாதகைப் பிராட்டி- புவியிலுள்ளார் புகழும் மலயத்துவச பாண்டியன் புதல்வியாராகிய செல்வத்தையுடைய தடாதகைப் பிராட்டியார், தானே - தாம் தனிமையாக, திரைசெய் நீர் ஞாலம் காத்த செயல் சிறிது உரைத்தேன் - அலைகளை வீசும் கடல் சூழ்ந்த நிலவுலகைப் புரந்தருளிய திருவிளை யாடலைச் சிறிது கூறினேன்; தெய்வ விரை செய் பூங்கோதை மாதை - தெய்வ மணம் வீசும் மலரையணிந்த கூந்தலையுடைய அப்பிராட்டி யாரை, விடையவன் மணந்துபார் ஆண்டு - இடபவாகனத்தை யுடைய சிவபெருமான் திருமணஞ் செய்தருளி அந்நிலவுலகை ஆண்டு, அரசுசெய்து இருந்த தோற்றம் அறிந்தவாறு இயம் பலுற்றேன் - அரசியல் நடாத்திய திருவிளையாடலை அறிந்த வண்ணம் கூறுகின்றேன் எ-று. தென்னன் புதல்வியாராகிய என விரித்துக்கொள்க. பெண்ணர சாகவிருந்து ஆண்ட பெருமை தோன்றத் தானே காத்த என்றார். அரசியல் நடாத்து முறைமையிதுவெனக் காட்டுவார் போன்று ஆண்டன ரென்பார் பாராண்டு என அமையாது, அரசு செய்திருந்த தோற்றம் எனவுங் கூறினார். முழுதும் அறியவாரா தென்பார் அறிந்தவாறு என்றார். (1) காயிரும் பரிதிப் புத்தேள் கலியிருள் துமிப்பிச் சோதி பாயிருங் குடைவெண் டிங்கட் படரொளி நீழல் செய்ய மாயிரும் புவன மெல்லா மனுமுறை யுலக மீன்ற தாயிளங் குழவியாகித் தனியர சிருக்கு நாளில்.1 (இ-ள்.) காய் இரும் பரிதிப் புத்தேள் - ஒளிவீசும் பெரியதிகிரி யாகிய சூரியதேவன், கலி இருள் துமிப்ப - துன்பமாகிய இருளைக் கெடுக்கவும், சோதிபாய் இருகுடை வெண் திங்கள் - ஒளிபரந்த பெரிய குடையாகிய வெள்ளிய சந்திரன், படர் ஒளி நீழல் செய்ய - படர்ந்த ஒளியாகிய நிழலைச் செய்யவும், மா இரும் புவனம் எல்லாம் - பெரிய உலகங்களை எல்லாம். மனுமுறை - மனு நூல் வழி, உலகம் ஈன்ற தாய் - அவ் வுலகங்களைப் பெற்றருளிய உமையம்மை, இளங்குழவியாகி - இளமையாகிய கன்னியா யிருந்து, தனி அரசு இருக்கும் நாளில் - தனிமையாக ஆட்சி புரியங்காலத்தில் எ-று. பரிதி - ஆக்கினா சக்கரமும் ஆதித்தனும்: இரட்டுற மொழிதல். சக்கரம் காய்தலாவது, பகைவரையும் கொடியோரையும் ஒறுத்தல். ஒளி - புகழ்; நிழலாகிய ஒளியெனினுமாம். நீழல், நீட்டல். மாயிரு: உரிச்சொல்லாகலின் யகர உடம்படு மெய் வந்தது. அரச பத்தினிகள் தம் கணவரோடு அரியணை யமர்ந்து அரசாளு முரிமையுடையவர்; இவர் அங்ஙனமின்றித் தனியாக விருத்தலைக் கருதித் தனியர சிருக்கும் என்றார். பொதுவின்றி அரசாளுதல் எனினுமாம். (2) மருங்குறேய்ந் தொளிப்பச் செம்பொன் வனமுலை யிறுமாப் பெய்தக் கருங்குழற் கற்றை பானாட் கங்குலை வெளியறு செய்ய இரங்குநல் யாழ்மென் றீஞ்சொ லின்னகை யெம்பி ராட்டிக் கருங்கடி மன்றல் செய்யுஞ் செவ்விவந் தடுத்த தாக. (இ-ள்.) மருங்குல் தேய்ந்து ஒளிப்ப - இடையானது தேய்ந்து மறையுமாறு, செம்பொன் வனம் முலை இறுமாப்பு எய்த - சிவந்த பொன்னிறம் வாய்ந்த அழகிய கொங்கைகள் பணைத்து அண்ணாந் திருக்கவும், கருங் குழல் கற்றை - கரிய கூந்தற்கற்றை, பால் நாள் கங்குலை வெளிறு செய்ய - நள்ளிரவின் கருமையை வெண்ணிறஞ் செய்யவும், இரங்கும் நல்யாழ் மென் தீஞ்சொல் இன் நகை எம்பிராட்டிக்கு - ஒலிக்கின்ற நல்ல யாழின் இசைபோன்ற மெல்லிய இனிய சொல்லையும் இனிய புன்முறுவலையுமுடைய எம் பிராட்டியாருக்கு, அருங்கடி மன்றல் செய்யும் செவ்வி வந்து அடுத்தது ஆக - அரிய திருமணம் செய்யும் பருவமானது வந்து பொருந்த எ-று. ஒளிக்குமாறு இறுமாப் பெய்த. வனம் - தொய்யிலுமாம். கங்குலும் வெளிறென்னுமாறு கரிதாக. யாழ்இரங்குந் தன்மை யுடைய வென்றுமாம். கடிமன்றல்:ஒருபொரு ளிருசொல்: விளக்க மமைந்த மன்றலுமாம். (3) பனிதரு மதிக்கொம் பன்ன பாவையைப் பயந்தா ணோக்கிக் குனிதர நிறையப் பூத்த கொம்பனாயக் கின்னுங் கன்னி கனிதரு செவ்வித் தாயுங் கடிமணப் பேறின் றென்னாத் துனிதரு நீரளாகிச் சொல்லினாள் சொல்லக் கேட்டாள். (இ-ள்.) பனிதரு மதி கொம்பு அன்ன பாவையை - குளிர்ந்த சந்திரனை யேந்திய கொம்பினை ஒத்த பிராட்டியாரை, பயந்தாள் நோக்கி - பெற்ற காஞ்சனமாலை பார்த்து, குனிதர நிறையப் பூத்த கொம்பு அன்னாய்க்கு - வளையுமாறு நிறைய மலர்ந்த பூங்கொம் பினைப் போன்ற உனக்கு, கன்னி கனி தரு செவ்வித்து ஆயும் - கன்னிப் பருவமானது முதிர்ந்த செவ்வியுடையதாகியும், இன்னும் கடிமணப் பேறு இன்று என்னா - இன்னமும் திருமணமாகிய பேறு கூடிற்றில்லையே என்று, துனிதரு நீரளாகிச் சொல்லினாள் - வருந்துந் தன்மையை உடையவளாய்க் கூறினாள்; சொல்லக் கேட்டாள் - பிராட்டியார் அங்ஙனம் கூறுவதைக் கேட்டார் எ-று. எல்லா வுறுப்புக்களும் குறைவின்றி நிறைந்தன வென்னும் குறிப்புத் தோன்ற நிறையப் பூத்த கொம்பு என்றார். கொம்பனாய், பெயர். செவ்வித்து என்பதில் து: பகுதிப்பொருள் விகுதியுமாம். கடி, மணம்; ஒரு பொருளன; கடி மன்றல் போல. கேட்டாள் : பெயருமாம். (4) அன்னைநீ நினைந்த வெண்ண மாம்பொழு தாகும் வேறு பின்னைநீ யிரங்கல் யான்போய்த் திசைகளும் பெருநீர் வைப்பும் என்னது கொற்ற நாட்டி முள்வலிங் கிருத்தி1 யென்னாப் பொன்னவிர் மலர்க்கொம் பன்னாள் பொருக்கென வெழுந்து போனாள். (இ-ள்.) அன்னை - தாயே, நீ நினைந்து - எண்ணம் ஆம் பொழுது ஆகும் - நீ எண்ணிய எண்ணம் முடியுங்காலத்து முடியும்; பின்னை நீ வேறு இரங்கல் - பின்பு நீ பல்வேறாகக் கருதி வருந்தற்க; யான் போய் - நான் சென்று, திசைகளும் - எட்டுத் திக்குகளிலும், பெருநீர் வைப்பும் - கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்திலும், என்னது கொற்றம் நாட்டி மீள்வல் - என்னுடைய வெற்றியை நாட்டி வருவேன்; இங்கு இருத்தி என்னா - நீ இங்கு இருப்பாய் என்று கூறி, பொன் அவிர் மலர்க்கொம்பு அன்னாள் - பொன்போலும் விளங்கும் மலர்களையுடைய கொம்பினை ஒத்த பிராட்டியார், பொருக்கென எழுந்து போனாள் - விரைந்து எழுந்து சென்றார் எ-று. வேறு - பிறிதாக வென்றுமாம். இரங்கல்: எதிர்மறை வியங்கோள்; மகனெனல் என்புழிப்போல. பெருநீர் - கடல்; பெருநீரோச்சுநர், பெருநீர் போகும் இரியன் மாக்கள் எனவுள்ள மேற் கோள்களுங் காண்க. என்னது : னகரம் விரித்தல். பொருக்கென : விரைவுக் குறிப்பு. (5) தேம்பரி கோதை மாதின் றிருவுளச் செய்தி நோக்கி ஆம்பரி சுணர்ந்த வேந்த ரமைச்சரும் பிறரும் போந்தார் வாம்பரி கடாவித் திண்டேர் வலவனுங் கொணர்ந்தான்வையந் தாம்பரி வகல வந்தா ளேறினாள் சங்க மார்ப்ப. (இ-ள்.) தேம்பரி கோதை மாதின் திருவுளச் செய்தி நோக்கி - மணமிக்க மாலையையணிந்த பிராட்டியாரின் திருவுள்ளக் குறிப்பை நோக்கி. ஆம் பரிசு உணர்ந்த வேந்தர் - ஆக்க முண்டாகுந் தன்மையை உணர்ந்த அரசர்களும், அமைச்சரும் பிறரும் போந்தார் - மந்திரி களும் மற்றையோர்களும் வந்தார்கள்; வலவனும் - தேர்ப்பாகனும், வாம்பரி கடாவித் திண் தேர் கொணர்ந்தான் - தாவிச் செல்லுங் குதிரைகளைச் செலுத்தித் திண்ணிய தேரைக்கொண்டு வந்தான்; வையம் பரிவு அகல வந்தாள் - உலகமானது துன்பத்தினின்றும் நீங்க அவதரித்த பிராட்டியார், சங்கம் ஆர்ப்ப ஏறினான் - சங்குகள் ஒலிக்க (அத்தேரில்) ஏறினார் எ-று. கோதை - கூந்தலுமாம். தேம்பரி - தேனொழுகுகின்ற என்னலுமாம். நோக்கி: நோக்கனோக்கம். ஆம் பரிசு என்பதற்குப் போர்க்குரிய தன்மை யென்றும், ஆட்சிக்குப் பொருந்திய தன்மை யென்றும் மேல் விளைவு என்றும் பொருள் கோடலுமாம். வேந்தரும் என உம்மை விரிக்க. பிறர் என்றது படைத்தலைவர் முதலாயினாரை. ஆகும், வாவும் என்பன விகாரமாயின. தாம்; அசை. வந்தான்: பெயர். (6) ஆர்த்தன தடாரி பேரி யார்த்தன முருடு மொந்தை ஆர்த்தன வுடுக்கை தக்கை யார்த்தன படகம் பம்பை ஆர்த்தன முழுவந் தட்டை யார்த்தன சின்னந் தாரை ஆர்த்தன காளந்தாள மார்த்தன திசைக ளெங்கும். (இ-ள்.) தடாரி பேரி ஆர்த்தன - தடாரிகளும் பேரிகளும் ஒலித்தன; முருடு மொந்தை ஆர்த்தன - முருடுகளும் மொந்தை களும் ஒலித்தன்; உடுக்கை தக்கை ஆர்த்தன - உடுக்கைகளும் தக்கைகளும் ஒலித்தன; படகம் பம்பை ஆர்த்தன - படகங்களும் பம்பைகளும் ஒலித்தன; முழவம் தட்டை ஆர்த்தன முழவங்களுந் தட்டைகளும் ஒலித்தன; சின்னம் தாரை ஆர்த்தன - சின்னங்களும் தாரைகளும் ஒலித்தன; காளம் தாளம் ஆர்த்தன - காளங்களும் தாளங்களும் ஒலித்தன; திசைகள் எங்கும் ஆர்த்தன - (இவைகளால்) எட்டுத்திக்குகளும் ஒலித்தன எ-று. தடாரி முதலிய வாத்திய விசேடங்கள். எட்டுத்திசைகளிலும் இவ் வொலிகள் நிறைந்தன வென்பார் ஆர்த்தன திசைகளெங்கும் என்றார்; எதிரொலி செய்தன வென்னலுமாம். (7) வீங்கிய கொங்கை யார்த்த கச்சினர் விழிபோற் றைப்ப வாங்கிய சிலையே றிட்ட கணையினர் வட்டத் தோல்வாள் தாங்கிய கையர் வைவேற் றளிர்க்கையர் யிணாத்தெய் வம்போல் ஓங்கிய வாயத் தாரு மேறினா ருடனத் திணிடேர். (இ-ள்.) வீங்கிய கொங்கை ஆர்த்த கச்சினர் - பருந்த கொங்கை களிற் கட்டியகச்சினையுடையராய், விழிபோல் தைப்ப - (தங்கள்) கண்கள் போலத்தைக்குமாறு, வாங்கிய சிலை ஏறிட்டகணையினர் - வளைந்த வில்லிற்பூட்டிய அம்பினையுடையராயும், வட்டத் தோல் வாள்தாங்கிய கையர் - கேடகத்தையும் வாளையும் ஏந்திய கையையுடையராயும், வைவேல் தளிர்க்கையர் - கூரிய வேலை யுடைய தளிர்போன்ற கையையுடையராயும், பிணாத் தெய்வம் போல் ஓங்கிய - பெண் தெய்வம் போலச் சிறந்த, ஆயத்தாரும் - மகளிர் கூட்டங்களும், உடன் அத்திண் தேர் ஏறினார் - பிராட்டியா ரோடும் அந்தத் திண்ணிய தேரில் ஏறினார்கள் எ-று. ஆயத்தார் - மகளிருள் மெய்க்காவலராயினார். ஆயத்தாருட் சிலர் கணையினரும், சிலர் தாங்கிய கையரும், சிலர் தளிர்க் கையருமாகி உடன் ஏறினாரென்க. கச்சினர் என்பதனை யெல்லா வற்றொடும் ஒட்டுக. வட்டத்தோல் - பரிசை; கேடகம். பிணாத் தெய்வம் - பெண் தெய்வம்; அழகு மிக்கவரென்க; கொற்றவை போன்று வெற்றி மிக்காரென்றுமாம். (8) கிடைப்பன வுருளாற் பாரைக் கீண்டுபா தலத்தி னெல்லை அடைப்பன பரந்த தட்டா லடையவான் றிசைக ளெட்டும் உடைப்பன வண்ட முட்டி யொற்றிவான் கங்கை நீரைத் துடைப்பன கொடியாற் சாரி சுற்றுவ பொற்றிண் டேர்கள். (இ-ள்.) சாரி சுற்றுவ பொன்திண் தேர்கள் - இடசாரி வலசாரியாகச் சுழலும் பொன்னாலாகிய திண்ணிய தேர்கள், கிடைப்பன உருளால் - பூண்டனவாய உருளைகால், பாரைக் கீண்டு பாதலத்தின் எல்லை அடைப்பன - நில வுலகத்தைக் கிழித்துப் பாதலத்தின் எல்லையை அடைப்பனவும், பரந்த தட்டால் - இடம் விரிந்த தட்டினால், வான்திசைகள் எட்டும் அடைய உடைப்பன - பெரிய திக்குகள் எட்டினையும் முற்றும் தகர்ப்பனவும், கொடி களால் அண்டதைப் பெரிதும் மளாவிவான் யாற்றின் நீரை வற்றச் செய்வனவுமாயின எ-று. கிடைப்பன, சுற்றுவ முற்றெச்சங்கள். கீண்டு, கீழ்ந்து என்பதன் மரூஉ. முட்டி, ஒற்றி யென்பன ஒரு பொருளன; அண்டத்தை முட்டி நீரை ஒற்றி யென்றுமாம். தட்டால் அடைப்பன, முட்டி உடைப்பன, ஒற்றித் துடைப்பன என வியைத்தலுமாம். (9) செருவின்மா தண்டந் தாங்கிச் செல்லும்வெங் கூற்ற மென்ன அருவிமா மதநீர் கால வரத்தவெங் குருதிக் கோட்டாற் கருவிவான் வயிறு கீண்டு கவிழுநீர் வாயங் காந்து பருகிமால் வரைபோற் செல்வ பரூஉப்பெருந் தடக்கை யானை. (இ-ள்.) பரூஉப் பெருந் தடக்கை யானை - பருத்தலையுடைய பெரிய கைகளையுடைய யானைகள், அருவி மா மதநீர் கால - அருவிபோலப் பெரிய மதநீர் பொழிய, அரத்தம் குருதி வெம் கோட்டால் - சிவந்த உதிரந்தோய்ந்த கொடிய கொம்புகளால், கருவி வான் வயிறு கீண்டு - தொகுதியுடைய முகிலின் வயிற்றைக் கிழித்து, கவிழும் நீர் வாய் அங்காந்து பருகி - (அதனால்) ஒழுகும் நீரை வாயைத் திறந்து உண்டு, செருவில் மா தண்டம் தாங்கிச் செல்லும் வெம் கூற்றம் என்ன - போரில் பெரிய தண்டினை ஏந்திச் செல்லுகின்ற கொடிய கூற்றுவனைப் போலவும், மால் வரை போல் - பெரிய மலையைப் போலவும், செல்வ - செல்வன வாயின எ-று. குருதிக் கோட்டுடன் கூடிய கொடுந் தோற்றத்தால் கூற்றம் போலவும், மதப் பெருக்குடன் கூடிய உயர்ந்த தோற்றத்தால் மலை போலவும் யானைகள் பொலிந்தன வென்றார். அரத்தம் - ஈண்டுச் செந்நிறம். கருவி: மின் முதலியவற்றின் தொகுதி. செல்வ: அன்பெறாத பலவின்பால் முற்று. பரூஉ - பருத்தல்; “ ழகர வுகர நீடிட னுடைத்தே உகரம் வருத லாவயினான” என்னும் தொல்காப்பியச் சூத்திரத்து ஒன்றென முடித்தலால் ரகரக வுகரம் நீண்டு உகரம் பெற்றதெனக் கொள்க. வரைபோற் செல்வ என்றது இல்பொருளுவமையணி. (10) ஒலியவார் திரையி னன்ன வொழுங்கின யோக மாக்கள் வலியகா லடக்கிச் செல்லு மனமெனக் கதியிற் செல்வ கலியநீர் ஞாலங் காப்பான் கடையுக முடிவிற் றோற்றம் பொலியும்வாம் புரவி யொன்றே போல்வன புரவி வெள்ளம். (இ-ள்.) கலிய நீர் ஞாலம் காப்பான் - ஒலியினையுடைய கடல் சூழ்ந்த வுலகைக் காக்கும் பொருட்டு, கடையுகம் முடிவில் தோற்றம் பொலியும் - கலியுக இறுதியில் தோன்றும், வாம் புரவி ஒன்றே போல்வன புரவி வெள்ளம் - தாவுகின்ற குதிரை உன்றையே ஒத்தனவாய குதிரைக் கூட்டங்கள், ஒலிய வார் திரையின் அன்ன ஒழுங்கின - ஒலியினையுடைய நீண்ட அலைகளை யொத்த ஒழுங்கினை யுடையனவும், யோகமாக்கள் வலிய கால் அடக்கிச் செல்லும் மனம் என - யோகிகள் வலியகாற்றை அடக்கி (ஒருவழிபடச்) செலுத்தச் செல்லும் மனம் போல, கதியில் செல்வ - (பாகர் தம் வசப்படுத்திச் செலுத்த ஒரு வழிப்பட்டு)விரைவிற் செல்வனவுமாயின எ-று. ஒலிய, கலிய என்பவற்றில் அ: அசை. திரையின், இன் : சாரியை. கால் - காற்று; பிராணவாயு. கால் அடக்கல் - பிராணாயாமம் செய்தல். செலுத்த வென ஒரு சொல் வருவிக்கப்பட்டது. கதியிற் செல்லுதல் - நடத்தப்படு நெறியில் விரைந்து செல்லுதல். ஞாலங் காத்தல் - உலகைத் தீமையி னீக்கிக் காத்தல். திருமாலின் கடைசிய வதாரமாகிய குதிரை; கற்கி. (11) காலினுங் கடிது செல்லுஞ் செலவினர் கடுங்கட் கூற்ற மேலினு மிகையுண் டாயின் வெகுண்டுவென் கண்டு மீளும் பாலினர் பகுவாய் நாகப் பல்லினும் பில்கு மால வேலினர் வீயா வென்றி வீக்கிய கழற்கால் வீரர். (இ-ள்.) வீயா வென்றி வீக்கிய கழல் கால் விரர் - கெடாத வெற்றியினையும் கட்டப்பட்ட வீரகண்டையையுடைய காலினையு முடைய வீரர்கள், கடுங்கண் கூற்றம் மேலினும் மிகை உண்டாயின்- தறுகண்மையையுடைய கூற்றுவன்மேலும் குற்றம் உளதாயின், வெகுண்டு வென் கண்டு மீளும் பாலினர் - சினந்து புறங்கண்டு வருந்தன்மையையுடையவரும், பகுவாய் நரகப் பல்லினும் பில்கும் ஆல வேலினர் - பிளந்த வாயினையுடைய பாம்பின் பல்லைவிடச் சிந்தும் நஞ்சினையுடைய வேற்படையையுடையவரும், காலினும் கடிது செல்லும் செலவினர் - காற்றினும் விரைந்து செல்லும் செலவினையுமுடையராயினர் எ-று. காலினும், பல்லினும் என்பவற்றில் இன் உருபு உறாச்சிப் பொருளில் வந்தது. மேலினும், இன் : சாரியை. வென்கண்டு என்றமையால் போர் புரிந்து என விரித்துக் கொள்க. பால் - தன்மை. வென்றியால் வீக்கிய எனலுமாம். ஆயினர் என விரித் துரைத்துக் கொள்க. (12) எண்புதைத் தெழுந்த வீர ரிவுளிதேர் யானை வெள்ள மண்புதைத் தனப தாகை மாலைவெண் கவிகை பீலி விண்புதைத் தனநுண் டூளி வெயில்விடு பரிதிப் புத்தேள் கண்புதைத் தனபே ரோதை கடலொலி புதைத்த தன்றே. (இ-ள்.) எண் புதைத்து எழுந்த - இங்ஙனம் எண்ணின் அளவைக் கடந்து எழுந்த, வீரர் இவுளி தேர்யானை வெள்ளம் - வீரர் குதிரை தேர் யானை என்பவற்றின் கூட்டங்கள்; மண் புதைத்தன - நிலவுலகை மறைத்தன; பதாகை மாலை வெண் கவிகை பீலி - கொடிகளும் மாலையையுடைய வெள்ளிய குடைகளும் மயிற் பீலிகளும், விண் புதைத்தன - வானினை மறைத்தன; நுண் தூளி வெயில் விடு பரிதிப்புத்தேள் கண் பு'e7çதத்தன - நுண்ணிய புழுதிகள் வெயிலை புதைத்தது - (இவற்றாலாய) பெரிய ஒலியானது கடலின் ஒலியை மறைத்தது எ-று. எண் புதைத்து எண்ணினை மறைத்து; இல்லையாக்கி; கடந்ததென்ற படி. வெள்ளம் என்பது வீரர் முதலியவற்றொடும் இயையும். பதாகை - பெருங்கொடி, அன்று, ஏ : அசைகள்; அடுத்த செய்யுளுக்குங் கொள்க. (13) தேரொலி கலினப் பாய்மான்1 செலவொலி கொலைவெண் கோட்டுக் காரொலி வீர ரார்க்குங் கனையொலி புனைதார்க் குஞ்சி வாரொலி கழற்காற் செங்கண் மள்ளர்வன் றிண்டோள் கொட்டும் பேரொலி யண்ட மெல்லாம் பிளந்திடப் பெருத்த வன்றே. (இ-ள்.) தேர் ஒலி - தேர்களின் ஒலியும் கலினப் பாய்மான் செலவு ஒலி - கடிவாளத்தையுடைய குதிரைகள் செல்லுகின்ற ஒலியும், கொலை வெள் கோட்டு கார் ஒலி - கொல்லு தலையுடைய வெள்ளிய கொம்புகளையுடைய முகில் போன்ற யானைகளின் ஒலியும், வீரர் ஆர்க்கும் கனை ஒலி - மள்ளர்கள் ஒலிக்கின்ற மிக்க ஒலியும், தார்புனை குஞ்சி - மாலையை யணிந்த சிகையையும், வார் ஒலி கழல் கால் - மிக்க ஒலியையுடைய வீரகண்டையை யணிந்த கால்களையும், செங்கண் - சிவந்த கண்களையுமுடைய, மள்ளர் - வீரர்கள், வல் திண் தோள் கொட்டும் பேர் ஒலி - வலிமை மிக்க தோள்களைத் தட்டுகின்ற பெரிய ஒலியும் ஆகிய இவைகள், அண்டம் பிளந்திடப் பெருத்த - அண்டங்கள் வெடிக்குமாறு மிக்கன எ-று. பாய்மான் - குதிரை. செலவு - செல்கை. அடைகளால் கார் யானையை உணர்த்திற்று. கனை - செறிவு. வல்திண் : ஒரு பொருட் பன்மொழி. பெருத்த : பண்படியாகப் பிறந்த அன் பெறாத பலவின்பால் வினைமுற்று. (14) பரந்தெழு பூழி போர்ப்பப் பகலவன் மறைந்து முந்நீர்க் கரந்தவன் போன்றா னாகக் கங்குல்வந் திறுத்த தேய்ப்பச் சுரந்திரு ணிறைய முத்தின் சோதிவெண் குடையும் வேந்தர் நிரந்த பூண் வயிர வாளு நிறைநிலா வெறிக்கு மன்னோ. (இ-ள்.) பரந்து எழு பூழி போர்ப்ப - (இவற்றால்) பரவி மேலெழுந்த புழுதி மறைத்தலால், பகலவன் மறைந்து முந்நீர் கரந்தவன் போன்றான் ஆக - சூரியன் மறைந்து கடலில் ஒளித்தவன் போலாக, கங்குல் வந்து இறுத்தது ஏய்ப்ப - (அதனால்) இரவு வந்து தங்கியதை ஒக்க, சுரந்து இருள் நிறைய - மிகுந்து இருளானது நிறை, சோதிமுத்தின் குடையும் - ஒளியினையுடைய முத்துக் குடைகளும், வேந்தர் பூண் நிரந்த வயிரவாளம் - மன்னர்களின் பூண் அமைந்த வயிரத்தாற் செய்த வாட் படைகளும், நிறை நிலா எறிக்கும் - (அவ்விருளைப் போக்க) மிக்க நிலவை வீசும் எ-று. பூழி - புழுதி. முந்நீர் - மூன்று நீர்மையுடையதென்றும், மூன்று நீரினையுடையதென்றும் கூறுப: முன் உரைத்தாம். இறுத்தது - தங்கினமை: தொழிற்பெயர். அணிகலன்களும் வாளும் என்னலுமாம். மின்னும், ஓவும் அசை நிலைகள். (15) தேர்நிரை கலனாய்ச் செல்லப் பரிநிரை திரையாய்த் துள்ள வார்முர சொலியாய்க் கல்ல வாட்கலன் மீனாய்க் கொட்பத் தார்நிரை கவரிக் காடு நுரைகளாய்த் ததும்ப வேழங் கார்நிரை யாகத் தானைக் கடல்வழிக் கொண்ட தன்றே. (இ-ள்.) தேர் நிரை கலனாய்ச் செல்ல - தேரின் வரிசைகள் மரக்கலங் களாய்ச் செல்லவும், பரி நிரை திரையாய்த் துள்ள - குதிரையின் வரிசைகள் அலைகளாய்த் துள்ளவும்; வார் முரசு ஒலியாய்க் கல்ல- வார்க் கட்டினையுடைய முரசின் ஒலி கடலொலியாய் ஒலிக்கவும், வாள் கலன் மீனாய்க் கொட்ப - வாட்படைகள் மீனாய்ச் சுழன்று விளங்கவும், தார் நீரை கவரிக்காடு - (வெண்மலர்) மாலை வரிசை போன்ற சாமரைக் காடு, நுரைகளாய்த்ததும்ப - நுரைகளாய் மேலெழவும், வேழம் நிரைகார் ஆக - யானையின் வரிசைகள் (கடலினீ ருண்ணவரும்) முகில்களாகவும், தானைக் கடல் வழிக்கொண்டது - (இவ்வாறு) சேனைக்கடலானது வழி நடந்தது எ-று. முரசு: அதன் ஒலிக்கு ஆகுபெயர்; கல்ல - ஒலிக்க: கலிக்க என்பதன் விகாரம்; கலி: பகுதி; கல்லென என்பதன் விகாரமுமாம். அவயவ அவயவிகள் முழுதும் உருவகஞ் செய்யப்பட்டமையால் இது முற்றுருவகவணி. (16) கள்ளவிழ் கோதை மாத ரெடுத்தெறி கவரிக் காடு துள்ளவந் தணர்வா யாசி யொருபுறந் துவன்றி யார்ப்பத் தெள்விளி யமுத கீத மொருபுறந் திரண்டு விம்ம வள்ளைவார் குழையெம் மன்னை மணித்திண்டேர் நடந்த தன்றே. (இ-ள்.) கள் அவிழ் கோதை மாதர் - தேனொடு மலர்ந்த மாலையை யணிந்த மகளிர், எடுத்து எறி கவரி காடு துள்ள - எடுத்து வீசுகின்ற கவரிக்காடு (ஒரு பால்) துள்ளவும், அந்தணர் வாய் ஆசி ஒருபுறம் துவன்றி ஆர்ப்ப - மறையவர் வாயாற் கூறும் வாழ்த்து மொழிகள் ஒருபால் மிக்கொலிக்கவும், அமுத தெள்விளி கீதம் ஒருபுறம் திரண்டு விம்ம - அமுதம் போன்ற தெளிந்த ஓசையையுடைய இசைப்பாட்டுக்கள் ஒருபால் திரண்டொலிக்கவும், வள்ளை வார் குழை எம் அன்னை - வள்ளைத்தண்டு போன்ற நீண்ட காதினையுடைய எம் அன்னை யாகிய தடாதகைப் பிராட்டியாரின், மணி திண் தேர் நடந்தது - மணிகள் அழுத்திய வலிய தேரானது சென்றது எ-று. மிகுதியை யுணர்த்தக் காடு என்றார். தெள் விளி - தெளிந்த ஓசை; “ ஆம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற” என்னும் குறிஞ்சிப்பாட் டடிக்கு நச்சினார்க்கினியர் கூறிய உரை காண்க. இவ்விரு செய்யுளிலும் அன்றும், ஏயும் அசைகள். (17) மீனவன் கொடியுங் கான வெம்புலிக் கொடியும் செம்பொன் மானவிற் கொடியும் வண்ண மயிற்றழைக் காடுந் தோட்டுப் பானலங் கருங்கட் செவ்வாய் வெண்ணகைப் பசுந்தோணிம்பத் தேனலம் பலங்கல் வேய்ந்த செல்விதேர் மருங்கிற் செல்ல. (இ-ள்.) வல் மீனக் கொடியும் - வலிய மீனக்கொடியும், கானம் வெம்புலிக் கொடியும் - காட்டிலுள்ள கொடிய புலி எழுதிய கொடியும் செம்பொன் மான வில் கொடியும் - சிவந்த பொன்னா லாகிய பெரிய விற்கொடியும், வண்ணம் மயில் தழைக்காடும் - அழகிய மயிற்பீலிக் (குடைக்) கூட்டமும், தோட்டுப் பானல் அம் கருங்கண் - இதழையுடைய நீலோற்பல மலர்போன்ற அழகிய கரிய கண்களையும், செவ்வாய் சிவந்த வாயையும், வெள் நகை - வெள்ளிய பற்களையும், பசுந்தோள் பசிய தோள்களையுமுடைய, தேன் அலம்பு நிம்ப அலங்கல் வேய்ந்த - வண்டுகள் ஒலிக்கும் வேப்பமலர் மாலையையணிந்த, செல்விதேர் மருங்கில் செல்ல - பிராட்டியாரின் தேரின் பக்கத்திற் செல்லாநிற்கவும் எ-று. மீன் புலி வில்: இவை முறையே பாண்டிய சோழ சேரர்கட்குக் கொடிகள்; மூவேந்தருள் வலியுடைய ஒருவரைக் கூறுங்கால் அவருடைய கொடி முதலியவற்றுடன் ஏனை இருவரின் கொடி முதலிய வற்றையும் அவர்க்குரியவாகச் சேர்த்துக் கூறுதல் மரபு; “ வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம் தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி மண்டலை யேற்ற வரைக வீங்கென” எனச் சிலப்பதிகாரத்து வருதலுங் காண்க. நிம்ப அலங்கல் எனக் கூட்டுக. மூன்றாமடியில் முரண் என்னும் அணியமைந்துள்ளது. (18) மறைபல முகங்கொண்ட டெத்தி வாய்தடு மாறி யெய்ப்ப நிறைபரம் பரைநீ யெங்க ணிருபர்கோன் மகளாய் வையம் முறைசெய்து மாது தீர்ப்பா யடியனேன் முகத்து மாசுங் குறையென நிழற்றுந் திங்கட் கொள்கைபோற் கவிகை காப்ப. (இ-ள்.) மறை பல முகம் கொண்டு ஏத்தி - வேதங்கள் பல முகங் களால் துதித்தம் (காணமாட்டாமையின்), வாய் தடுமாறி எய்ப்ப- வாய் தடுமாறி இளைக்குமாறு, நிறை பரம்பரை நீ - எங்கும் நிறைந்த சிவசத்தியாகிய நீ, எங்கள் நிருபர்கோன் மகளாய் - எம் வழித்தோன்ற லாகிய மன்னர் மன்னனாம் மலயத்துவச பாண்டியனுக்குத் திருமகளாய் வந்து, வையம் முறைசெய்து - பூமியில் செங்கோ லோச்சி, மாசு தீர்ப்பாய் - குற்றத்தைப் போக்குகின்றாய் (அதுபோல), அடியனேன் முகத்து மாசும் குறை என - அடியேனடைய முகத்திலுள்ள களங்கத்தையும் ஒழித்தருள் என்று, நிழற்றும் திங்கள் கொள்கை போல் - நிழலைச் செய்கின்ற சந்திரனது கொள்கை போல, கவிகை காப்ப - வெண் கொற்றக் குடை நிழல் செய்யவும் எ-று. பலமுகம் - பல சாகைகள். எங்கள் என ஒருமையிற் பன்மை கூறினார்: அயன் படைப்பிலும், திருமால் உளத்திலும், அங்கியின் முகத்திலும், அத்திரி விழியிலும், பாற்கடலிலும் தோன்றிய ஐவகை மதியையுங் கருதிச் சொன்னாரெனினுமாம். பாண்டியர் திங்கண் மரபின தாகலின் இங்ஙனங் கூறினார். நிழற்றுவதாகிய கொள்கை: இது தற்குறிப்பேற்றவணி. (19) அங்கய னோக்கி மான்றேர்க் கணித்தொரு தடந்தே ரூர்ந்து வெங்கதிர் வியாழச் சூழ்ச்சி மேம்படு சுமதி யென்போன் நங்கைதன் குறிப்பு நோக் கி நாற்பெரும் படையுஞ் செல்லச் செங்கையிற் பிரம்பு நீட்டிச் சேவகஞ் செலுத்திச் செல்ல. (இ-ள்.) வெம் கதிர் வியாழச் சூழ்ச்சி மேம்படு சுமதி என்போன் - விரும்பும் ஒளியினையுடைய வியாழனது சூழ்ச்சியினும் சிறந்த சூழ்ச்சியினையுடைய சுமதி என்னும் முதலமைச்சன், அம் கயல் நோக்கிமான் தேர்க்கு - அழகிய கயல்போலுங் கண்களையுடைய பிராட்டியாரின் தேருக்கு - அணித்து ஒரு தடம் தேர் ஊர்ந்து - அணித்தாக ஒரு பெரிய தேரினைச் செலுத்தி, நங்கைதன் குறிப்பு நோக்கி - அப்பிராட்டியாரின் குறிப்பினை ஆராய்ந்து, நால் பெரும்படையும் செல்ல - பெரிய நால்வகைச் சேனைகளும் செல்லுமாறு, செம் கையில் பிரம்பு நீட்டி - சிவந்த கையிலுள்ள பிரம்பினாற் சுட்டிக் காட்டி, சேவகம் செலுத்திச் செல்ல - சேவகத்தைச் செலுத்திச் செல்லா நிற்கவும் எ-று. அணித்து - அணியதாக. வெம்மை - விருப்பம். வியாழன் - பிருகற்பதி; தேவர்க்கு அமைச்சுப் பூண்டவ னென்பது பற்றி யெடுத்துக் கூறினார். சூழ்ச்சியினும் என உருபும் உம்மையும் விரிக்க. சேவகம் - வீரமும், பணியுமாம். இங்கே படையினைப் பணி கொள்ளுதலாகிய வீரமும், பிராட்டிக்குப் பணிசெய்தலாகிய தொண்டும் கொள்க. (20) அலகினாற் கருவிச் சேனை யாழ்கட லனைத்துந் தன்போல் மலர்தலை யுலக மன்றி மகபதி யுலக மாதி உலகமும் பிறவுஞ் செல்ல வுலப்பிலா வலிய தாக்கித்1 திலகவா ணுதலாண் மன்னர் திருவெலாங் கவரச் செல்வாள். (இ-ள்.) அலகு இல் - அளவில்லாத, நால் கருவிச் சேனை ஆழ் கடல் அனைத்தும் - நால்வகைப் படையாகிய கடல் முழுதையும், தன் போல் - தன்னைப்போல், மலர்தலை உலகம் அன்றி - பரந்த இடத்தினையுடைய இந்நிலவுலகையல்லாமல், மகபதி உலகம் ஆதி உலகமும் - இந்திரன் உலகம் முதலிய உலகங்களிலும், பிறவும் செல்ல - பிறவிடங்களினும் செல்லுமாறு, உலப்பு இலா வலியது ஆக்கி - அழியாத வலிமையுடையதாகச் செய்து, திலக வாள் நுதலாள் - திலகமணிந்த ஒளிபொருந்திய நெற்றியையுடைய தடாதகைப் பிராட்டியார், மன்னர் திரு எலாம் கவரச் செல்வாள் - அரசர்களின் செல்வங்களனைத்தையும் கொள்ளை கொள்ளப் போவாராயினர் எ-று. சேனையைக் கருவியாக்கிக் கருவிச்சேனை என்றார். தொகுதி யாகிய சேனையுமாம். ஆழ் என்றது கடலுக்கு இயற்கையடை. தன்போல் செல்ல எனக்கூட்டுக. அனைத்தும் என்பதை ஒருமை யாக்கி வலியது என்றார். (21) கயபதி யாதி யாய வடபுலக் காவல் வேந்தர் புலவலி யடங்க வென்று புழைக் கைமான் புரவி மான்றேர் பயன்மதி நுதல்வே லுண்கட் பாவைய ராய மோடு நயமலி திறையுங் கொண்டு திசையின்மே னாட்டம் வைத்தாள். (இ-ள்.) கயபதி ஆதி ஆய - கயபதி முதலாகிய, வடபுலக் காவல் வேந்தர் - வடநாட்டைக் காக்கும் மன்னர்களின், புயவலி அடங்க வென்று - தோள்வலி கெடுமாறு (அவர்களை) வென்று, புழைக்கை மான் - தொளையினையுடைய கையையுடைய யானைகளையும், புரவி - குதிரைகளையும், மான்தேர் - குதிரைகள் பூட்டிய தேர் களையும், பயல் மதி நுதல் - அரைமதியை ஒத்த நெற்றியையும், வேல்உண்கண் - வேலையொத்த மையுண்ட கண்களையுமுடைய, பாவையர் ஆயமோடு மகளிர் கூட்டத்துடன், நயம் மலி திறையும் கொண்டு நலம் நிறைந்த திறைப் பொருளையும் ஏற்றுக்கொண்டு, திசையின்மேல் நாட்டம் வைத்தாள் - திசை காப்பாளர்மேல் போருக்கு எழ எண்ணினார் எ-று. கயபதி - கஜபதிகள்: வடநாட்டி லாண்ட ஓர் அரச வமிசத்தினன் யானைமிக்குடையானென்ப் பொதுப் பெயருமாம். பயல்: பையல் என்பதன் மரூஉவாகக் கொண்டு, குழவி மதியென உரைத்தல் வேண்டும்; அமுதமாகிய பயனுமாம். திறையும் என்றமையால் மேற்சொல்லியன கவர்ந்தவை. (22) வார்கழல் வலவன் றேரை வலியகா லுதைப்ப முந்நீர் ஊர்கல னொப்பத் தூண்ட வும்பர்கோ னனிகத் தெய்திப் போர்விளை யாடு முன்னர்ப் புரந்தரன் மிலைந்த தும்பைத் தார்விழ வாற்றல் சிந்தத் தருக்கழிந் தகன்று போனான். (இ-ள்.) வலிய கால் உதைப்ப - வலிய காற்றானது தள்ள, மந்நீர் ஊர்கலன் ஒப்ப - கடலில் விரைந்து செல்லும் கப்பலை ஒக்க, வார்கழல் வலவன் - நிண்ட வீரகண்டையை யணிந்த தேர்ப்பாகன், தேரைத் தூண்ட - தேரினைச் செலுத்த, உம்பர்கோன் அனிகத்து எய்தி - தேவர்க் கரசனின் படையை அடைந்து, போர் விளையாடு முன்னர் - போரினைத் தொடங்கு முன்னரே, புரந்தரன் - இந்திரனானவன், மிலைந்த தும்பைத்தார் விழ - தான் அணிந்த தும்பை மாலையானது விழவும், ஆற்றல் சிந்த - வலிமை கெடவும், தருக்கு அழிந்து அகன்று போனான் - (போரின் கண் உள்ள) மனவெழுச்சி கெட்டுப் போர்க்களத்தி னின்றும் நீங்கினான் எ-று. விளையாடுதல் என்றார் எளிதாகச் செய்தல் நோக்கி. தும்பை: தம் வலி காட்டுதலே பொருளாகச் சென்றும் எதிர்த்தும் பொருதல்; இதற்குத் தும்பை மாலை சூடுவர். (23) இழையிடை நுழையா வண்ண மிடையிற வீங்கு கொங்கைக் குழையிடை நடந்துமீளுங் கொலைக்கணார் குழுவுந் தான மழைகவிழ் கடாத்து வெள்ளை வாரண மாவுங் கோவுங் தழைகதிர் மணியுந் தெய்வ தருக்களுங் கவர்ந்து மீண்டாள்1. (இ-ள்.) இடை இற - இடைஒடியுமாறு, இழை இடை நுழையா வண்ணம் வீங்கு கொங்கை - நூல் இடையிற் புகாதவண்ணம் பருத்த கொங்கைகளையும், குஐழ இடை நடந்து மீளம் கொலைக்கணார் குழுவும் - செவி வரையிற் சென்று திரும்பும் வருத்துதலையுடைய கண்களையுமுடைய மகளிர் கூட்டமும், மழை தானம் கவிழ் கடாத்து வெள்ளை வாரணம் மாவும் - முகில் போலும் மதத்தைக் கொட்டுகின்ற சுவட்டினையுடைய வெள்ளை யானையும் குதிரையும், கோவும் - காமதேனுவும், தழை கதிர் மணியும் - தழைந்த ஒளியினை யுடைய சிந்தாமணியும், தெய்வ தருக்களும் - தெய்வத் தன்மையை யுடைய கற்பக முதலிய தருக்களுமாகிய இவைகளை, கவர்ந்து மீண்டாள் - பற்றிக் கொண்டு திரும்பினார் எ-று. கொங்கை யென்பது கண்ணார் என்பதன் விகுதியோடியையும். தான மென முன் வந்தமையின் கடாம் என்றதற்குச் சுவடு என உரைக்கப் பட்டது. வாரணமும் என விரித்து, வெள்ளையை மாவோடுங் கூட்டுக. வாரணம்: ஐராவத மென்னும் யானை. மா - உச்சைக் சிரவ மென்னும் குதிரை. (24) (கலிநிலைத்துறை) இவ்வாறு மற்றைத் திசைகாவலர்2யாரை யும்போய்த் தெவ்வாண்மை சிந்தச் செருச்செய்து திரையுங் கைக்கொண் டவ்வாறு வெல்வா ளெனமூன்றர ணட்ட மேருக் கைவார் சிலையான் கயிலைக்கிரி நோக்கிச் செல்வாள். (இ-ள்.) இவ்வாறு - இவ்வண்ணமே, மற்ற திசை காவலர் யாரையும் - ஏனைய திசைகாப்பாளர்களனைவரையும், போய் - அத்திக்குகளிற் சென்று, தெவ் ஆண்மை சிந்த செரு செய்து - பகைவரின் வீரங் கெடுமாறு போர் செய்து, திறையும் கைக்கொண்டு (அவர்கள் பணிந்து தந்த) திறைப் பொருளையும் ஏற்றுக்கொண்டு, அவ்வாறு வெல்வாள் என - அங்ஙனமே வெல்லவென்று, மூன்று அரண் அட்ட வார் மேருச்சிலைக் கையான் - மும் மதிலையும் அழித்த நீண்ட மேருமலையாகிய வில்லைக் கையிலுடைய சிவபெருமானது, கயிலைக்கிரி, நோக்கிச் செல்வாள் - திருக்கயிலாய மலையை நோக்கிச் செல்வாராயினர் எ-று. மற்றைத் திசை காவலர் - அங்கி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்போர். யாரையும் செருச் செய்து எனவும், வார் மேருச்சிலைக் கையான் எனவும் இறைக்க. தெவ் - பகை; தெவ் ஆண்மை - போர் வீரம் எனினுமாம். (25) சலிக்கும் புரவித் தடந்தேருடைத் தம்பி ராட்டி கலிக்கும் பலதூ ரியங்கைவரை தெய்வத் திண்டேர் வலிக்கும் பரிமள் ளர்வழங்கொலி வாங்கி நேரே ஒலிக்கும் படிகிட் டினளூழிதோ றோங்கு மோங்கல். (இ-ள்.) சலிக்கும் புரவித் தடம் தேர் உடைத் தம்பிராட்டி - செல்லுகின்ற குதிரைகள் பூட்டிய பெரிய தேரினையுடைய தடா தகைப் பிராட்டியார், கலிக்கும் பல தூரியம் - ஒலிக்கின்ற பல இயங் களின் ஒலியையும், கைவரை - யானைகளும், தெய்வத் திண்தேர் - தெய்வத் தன்மையையுடைய வலிய தேர்களும், வலிக்கும் பரி - கருத்தறிந்து செல்லும் குதிரைகளம், மள்ளர் - வீரர்களும், வழங்கு ஒலி - செல்கின்ற ஒலியையும், வாங்கி நேரே ஒலிக்கும்படி - ஏற்றுக் கொண்டு எதிரொலி செய்யுமாறு, உழி தோறு ஓங்கும் ஓங்கல் கிட்டினள் - ஊழிக்காலந் தோறும் வளர்கின்ற கயிலை மலையை அடைந்தார் எ-று. தூரியம் அதன் ஒலிக்காயிற்று; தூரியமும் நால்வகைச் சேனையும் ஒலிக்கின்ற வொலி யென்னலுமாம். வலித்தல் - கருதுதல். ஓங்கல்வாங்கி எதிரொலி செய்ய. ஊழி தோறும் ஓங்குதலை. “ ஊழிதோ றூழிமுற்று முயர்பொன் னொடித்தான் மலையே” என்னும் ஆளுடைய நம்பிகள் தேவாரத்தா னறிக; முன்னரும் உரைக்கப்பெற்றது. (26) வானார் கயிலைமலை யான்மக டன்னை நீற்றுப் போனாள்வந் தாளென் றருவிக்கட் புனலுக் கந்நீர் ஆனா வொலியா லனைவாவென் றழைஇத்தன் றேசு தானா நகையாற்1றழீஇயெதி ரேற்பச் சென்றாள். (இ-ள்.) வான் ஆர் கயிலை - வானுலகைப் பொருந்திய திருக் கயிலை மலையானது, மலையான் மகள் தன்னை நீத்துப் போனாள் - மலையரசன் புதல்வியாகிய பார்வதிதேவியார் (அன்று) தன்னை நீங்கிப் போயினவர், வந்தாள் என்று - (இன்று) வந்தனர் என்று, அருவிக்கண் புனல் உக்கு - அருவியாகிய கண்ணீரைச் சிந்தி, அந்நீர் ஆனா ஒலியால் அந்நீரின் நீங்காத ஒலியினால், அனைவா என்று அழைஇ- அன்னையே வா என்று அழைத்து, தன் தேசுதான் ஆம் நகையால் தழீஇ - தனது வெள்ளொளியாகிய புன்முறுவலால் தழுவி, எதிர் ஏற்பச் சென்றாள் - எதிர் கொள்ளுமாறு சென்றருளினார் எ-று. போனாள்: பெயர். அழைத்து, தழுவி யென்னும் வினையெச்சங்கள் விகாரப்பட்டு அளபெடையாயின. இது தற்குறிப்பேற்றவணி. (27) கிட்டிப் பொருப்பைக் கிரியோடு கிரிக டாக்கி முட்டிப் பொருதா லெனவேழ முழங்கிப் பாயப் புட்டிற் புறத்தார் மறத்தார்கணை பூட்டு வில்லார் வட்டித் துருமே றெனவார்த்து வளைந்து கொண்டார். (இ-ள்.)பொருப்பைக் கிட்டி - (இவ்வாறு) திருக்கயிலை மலையை நெருங்கி, கிரியோடு கிரிகள் தாக்கி - மலைகளோடு மலைகள் தாக்கி, முட்டிப் பொருதாலென - போதிப் போர் செய்தாற் போல, வேழம் முழங்கிப் பாய - யானைகள் பிளிறிட்டுப் பாய, மறத் தார் - வீரத்தினையுடையவரும், புட்டில் புறத்தார் - அம்புக்கூடு தாங்கிய முதுகினை யுடையவரும், கணை பூட்டு வில்லார் - கணை பூட்டிய வில்லை யுடையவருமாய்; வட்டித்து - சுழன்று, உரும் ஏறு என - இடியேற்றைப்போல, ஆர்த்து - ஆரவாரித்து, வளைந்து கொண்டார் - (படைவீரர்கள்) சூழ்ந்து கொண்டார்கள் எ-று. புட்டில் - அம்புக்கூடு; துணி; “ கணைப்புட்டிலுங் கட்டமைந்த, வில்லுஞ் சுமக்கப் பிறந்தேன்” என்பது இராமாயணம்; வட்டித்து - சுழன்று; இது சுழற்றியெனப் பிறவினை யாகியும் வரும்; “ மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்து” எனப் புறத்துள் வருதல் காண்க; இதற்கு வஞ்சினங்கூறி யெனப் பொருளுரைப்பாரு முளர். (28) ஓடித் திருமா மலைகாவல ரும்ப ரார்க்கு நாடிப் பணிதற் கரிதாகிய நந்தி பாதங் கூடிப் பணிந்தித் திறங்கூறலுங் கொற்ற வேனந் தேடிக் கிடையா னுளந்தேர்ந்தன னந்தி யெந்தை. (இ-ள்.) மா திருமலை காவலர் ஓடி - பெரிய திருக்கயிலை மலையைக் காப்பவர் ஓடி, உம்பரார்க்கும் - தேவர்களுக்கும், நாடிப் பணிதற்கு அரிது ஆகிய - காலமறிந்து வணங்குதற்கு அருமை யாகிய, நந்தி பாதம் கூடிப் பணிந்து - நந்திதேவர் திருவடிகளை யடைந்து வணங்கி, இத்திறம் கூறலும் - இச்செய்தியைக் கூறிய வுடன், எந்தை நந்தி - எம் தந்தையாகிய திரு நந்திதேவர், கொற்ற ஏனம் தேடிக் கிடையான் - வெற்றி பொருந்திய திருமாலாகிய பன்றி தேடிக் காணப்படாத இறைவனது, உளம்தேர்ந்தனன் - திருவுள்ளக் குறிப்பை ஆராய்ந்தறிந்தார் எ-று. உம்பரானும் என்க. உம்பரார் - தேவர்; உம்பர் - மேலிடம். அரிது, பண்பு மாத்திரையாய் நின்றது; பாதமென்னும் ஒருமைபற்றி அரிதெனக் கூறினா ரெனலுமாம். கொற்றவேனம் தேடிக் கிடையானென்ற கருத்தினை, “ நான்முகன் முதலா வானவர் தொழுதெழ ஈரடி யாலே மூவுல களந்து நாற்றிசை முனிவரு மைம்புலன் மலரப் போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன் றடி முடி யறியு மாதர வதனிற் கடுமுர ணேன மாகி முன்கலந் தேழ்தல முருவ விடந்து பின்னெய்த் தூழி முதல்வ சயசய வென்று வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்” என்னும் திருவாசகத்தா லறிக. முதற்குரு நாதனாகலின் எந்தை என்றார். (29) வென்றிக் கணத்தை விடுத்தான் கனமீது1 பெய்த குன்றிக் கணம்போற் சுழல்கண்ணழல் கொப்ப ளிப்பச் சென்றிக் கனைய மொழியாள்பெருஞ் சேனை யோடும் ஒன்றிக் கடலுங் கடலும்பொரு தொத்த தன்றே. (இ-ள்.) வென்றிக் கணத்தை விடுத்தான் - (அவ்வாறு உணர்ந்த நந்தி தேவர்) வெற்றி பொருந்திய பூதகணங்களை ஏவினார்; கனம்மீது பெய்த - (அவை) முகிலிற் பெய்துவைத்த, குன்றிக் கணம்போல் - குன்றிமணிக் கூட்டம்போல, சுழல்கண் - சுழலுங் கண்களினின்றும், அழல் கொப்பளிப்ப - தீயானது சிந்த, சென்று - போய், இக்கு அனைய மொழியாள் - கரும்பின் சாற்றையொத்த இனிய மொழிகளையுடைய பிராட்டியாரின், பெருஞ் சேனை யோடும் ஒன்றி - பெரிய படைகளோடு கலந்து போர்புரிதலால் (அச்செயல்), கடலும் கடலும் பொருத்து ஒத்தது - கடலுங் கடலும் தம்முட் போர்செய்தலை ஒத்தது எ-று. மேகங்கள் பூதகணங்கட்கும். குன்றிமணிகள் அவற்றின் சுழலும் கண்கட்கும் உவமை. இக்கு - கரும்பு; அதன் சாற்றிற்காயிற்று. ஒன்றிப் போர்புரிய அது என விரித்துக்கொள்க. பொருதது என்பது பொருது என விகார மாயிற்று; பொருதது: தொழிற்பெயர். அன்றும் ஏயும் அசைகள். (30) சூலங் கண்மழுப் படைதோமர நேமி பிண்டி பாலங் கள்கழுக் கடைவாட்படை தண்ட நாஞ்சில் ஆலங் கவிழ்க்கின்ற வயிற்படை வீசி யூழிக் காலங் கலிக்குங் கடல்போன்ற களம ரார்ப்பு. (இ-ள்.) சூலங்கள் - சூலப்படைகளையும், மழுப்படை - மழுவாட் படைகளையும், தோமரம் - பெரிய ஈட்டிகளையும், நேமி - திகிரிப் படைகளையும், பிண்டி பாலங்கள் - எறிபடைகளையும், கழுக்கடை- சிறிய ஈட்டிகளையும், வாட்படை - வாட்படைகளையும், தண்டம் - தண்டங்களையும், நாஞ்சில் - கலப்பைகளையும், ஆலம் கவிழ்க் கின்ற அயில் படை - நஞ்சினைக் கொட்டுகின்ற வேற்படைகளையும், களமர் வீசி ஆர்ப்பு - வீரர்கள் (ஒருவர்மேல் ஒருவர்) வீசி ஆரவாரிக்கும் ஆரவாரங்கள், ஊழிக்காலம் கலிக்கும் கடல்போன்ற - ஊழிக் காலத்தில் ஒலிக்கும் கடலின் ஒலிகளை ஒத்தன எ-று. கடல் அதன் ஒலிக்காயிற்று. போன்றவெனப் பன்மையாற் கூறினமையால் ஆர்ப்புகள் என்க. போன்றது என்பதன் துவ்வீறு கெட்டது என்னலுமாம். (31) எறிகின் றனவோச் சுவவெய்வன வாதியாகச் செறிகின் றனபல் படைசெந்நிறப் புண்ணீர் மூழ்கிப் பறிகின் றனவும் பிழைக்கின்றனவும் பட்டுத் தாக்கி முறிகின் றனவு முயன்றார்வினைப் போக மொத்த. (இ-ள்.) எறிகின்ற - எறியப்படுவனவும், ஓச்சுவ - ஓச்சப்படு வனவும், எய்வன - எய்யப்படுவனவும், ஆதி ஆகச் செறிகின்ற - முதலாகப் பொருந்திய, பல்படை - பலபடைகளும், செந்நிறப்புண்நீர் மூழ்கி - சிவந்த நிறத்தினையுடைய உதிர நீரில் முழுகி, பறி கின்றனவும் - கழன்றோடுவனவும், பிழைக்கின்றனவும் - உடம்பிலே தாக்காது தவறிப்போவனவும், பட்டுத்தாக்கி முறிகின்றனவும் - உடம்பிலே பட்டுட்த தாக்குதலால் முறிவனவுமாய், முயன்றார் வினைப்போகம் ஒத்த - முயன்று செய்தவர்களின் இருவினைக் கீடாகவரும் போகங்களை ஒத்தன எ-று. எறிகின்றன - வேல் முதலியன: ஓச்சுவ - தண்டம் முதலியன; எய்வன - அம்பு முதலியன; ஆதியென்றமையால் வெட்டுவனவாகிய வாள் முதலியன கொள்க. எறிகின்றன முதலியன வினையாலணையும் பெயர்கள்; படுசொற்றொக்கு நின்றன. செறிகின்றன: பெயரெச்ச முற்று. புண்ணீர் மூழ்கி, என்றமையால் உடம்பிற்றைத்து எனக் கொள்க. போகங்கள் பொருந்துதலும் பொருந்தாமையும் ஒருகாற் பொருந்தி யொருகாற் பொருந்தாமையு மாகிய வேறுபாடுடைமை போல இவைகளும் படுதலும் படாமையும் பட்டு அழிவெய்து தலும் ஆகிய வேறுபாடுடையன வென்க. ஆகி என விரிக்க: ஓச்சுவ. ஒத்த என்பவற்றில் அன் சாரியை தொக்கு நின்றது. (32) தெரிசிக்க வந்த சிலதேவர் சிறைப்பு ளூர்தி வெருவிப் பறந்த வொழிந்தோர்விலங் கூர்தி மானங் கருவிப் படையாற் சிதைபட்டன கால னூர்தி குருதிப் புனலுக் கதுகொற்றவை யுண்ட தென்ன. (இ-ள்.) தெரிசிக்க வந்த சில தேவர் - கண்டு வணங்குதற்கு வந்த திருமால் முதலிய சில தேவர்களின், சிறைப்புள் ஊர்தி - கலுழன் முதலிய சிறைகளையுடைய பறவையூர்திகள், வெருவிப் பறந்த - அஞ்சிப் பறந்தன; ஒழிந்தோர் விலங்கு ஊர்தி - மற்றைத் தேவர்களின் விலங்கூர்திகளும், மானம் - விமானங்களும், கருவிப் படையால் சிதைபட்டன - படைக் கலங்களினால் அழிந்தன; கொற்றவை உண்டது என்ன - காளியினால் உயிருண்ணப்பட்ட அசுரனாகிய கடாவானது ஒழுக்கியது போல, காலன் ஊர்தி - கூற்றுவன் ஊர்தியாகிய எருமைக் கடா, குருதிப் புனல் உக்கது - குருதி நீரைக் கக்கியது எ-று. இறைவனைத் தரிசிக்க வந்தவென்க; போரினைக் காணவந்த எனலுமாம். விலங்கு - ஐராவதம் முதலியன. மானம் - விமானம். கருவியாகிய படை; படைக்கலம். கொற்றவை யுண்டதென்றது மகிடாசுரனை, “ ஆனைத்தோல் போர்த்துப் புலியி னுரியுடுத்துக் கானத் தெருமைக் கருந்தலைமே னின்றாயால்” என்றும், “ வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்று” என்றும் சிலப்பதிகாரத்து வேட்டுவ வரியுள் வருதல் காண்க. கடா வென்பது பற்றி உண்டதென அஃறிணையாற் கூறினார். பறந்த, உண்டது என்பவற்றிற்கு மேல் உரைத்தாங் குரைக்க. (33) பொருகின் றதுகண்டு விச்சாதரர் பாகம் வீடு தருகின்றவனைத் தொழுவானெறி சார்ந்து நேரே வருகின் றவாவேறு வழிக்கொடு போவ ரண்புக் குருகின் றளிர்மெல் லடியாரொடு மூற்ற மஞ்சா. (இ-ள்.) போகம் வீடு தருகின்றவனைத் தொழ - போகத்தையும் வீடு பேற்றையும் அளிக்கின்ற இறைவனை வணங்க, வான் நெறி சார்ந்து- வானின் வழியைப் பொருந்தி, நேரே வருகின்றவர் விச்சா தரர் - நேரே வருகின்றவர்களாகிய வித்தியாதரர்கள், பொருகின்றது கண்டு - போர் செய்தலைக் கண்டு, ஊற்றம் அஞ்சா - (தமக்கு வரும) இடையூற்றிற்கு அஞ்சி, அன்புக்கு உருகு இன் தளிர் மெல் அடியாரொடு - அன்பினால் உருககின்ற இனிய தளிர்போலும் மெல்லிய அடிகளையுடைய மாதராருடன், வேறு வழிக்கொடு போவர் - வேறு வழியால் திருக்கைலைக்குச் செல்வார்கள் எ-று. பொருகின்றது : தொழிற் பெயர். வருகின்றவராகிய விச்சாதரர் எனக் கூட்டுக; அன்புக்கு - அன்பால். ஊற்றம் ஊறு; அம்: பகுதிப் பொருள் விகுதி. (34) திங்கட் படைசெங் கதிரோன்படை சீற்ற மேற்ற அங்கிப் படைதீம் புனலான்படை நார சிங்க துங்கப் படைசிம்பு ணெடும்படை சூறைச் செல்வன் வெங்கட் படைபன் னகவெம்படை மாறி விட்டார். (இ-ள்.) திங்கள் படை - சந்திரக் கணைக்கு, செம் கதிரோன் படை - சூரியக் கணையையும், சீற்றம் ஏற்ற அங்கிப் படை - சினத்தைப் பொருந்திய அக்கினிக் கணைக்கு, தீம்புனலான் படை - இனிய வருணக் கணையையும், துங்க நாரசிங்கப் படை - உயர்ச்சி பொருந்திய நரசிம்மக் கணைக்கு, நெடுஞ் சிம்புள் படை - நீண்ட சரபக் கணையையும், வெம்கண் குறைச்செல்வன் படை - கொடிய முனையை யுடைய வாயுக் கணைக்கு, வெம் பன்னகப் படை - கொடிய நாகக் கணையையும், மாறி விட்டார் - மாறிமாறி விடுத்தார்கள் எ-று. திங்கள் முதலியவற்றைத் தெய்வமாகவுடைய அத்திரங்கள் அப்பெயர்களால் வழங்கப்படும். சந்திராத்திரம் முதலியவற்றை அழிக்க வல்லன சூரியாத்திரம் முதலியன வாகலின், அவற்றை மாறித் தொடுத்ததாரென்க. சிம்புள் - சரபம்; சிங்கத்தை யழிக்க வல்லது; இதனை எண்காற்பறவை யென்பர்; பெருங்கதையுள் பல்வலிப் பறவை என்று கூறப்பட்டுள்ளது; இங்கே நாரசிங்கம் என்றதற்கேற்பச் சிவபெருமானாகிய சரபம் என்று கொள்ள வேண்டும். சூறை - கடுங்காற்று. பாம்பு காற்றை யுண்பதாகலின் அதற் கெதிராயிற்று. (35) கொட்புற் றமராடு மிக்கொள்கையர் தம்மி னந்தி நட்புற் றவர்கைப் படைதூட்பட ஞான மூர்த்தி பெட்புற் றருள வருமெங்கள் பிராட்டி வெய்ய கட்புற் றரவின் கணைமாரிகள் தூற்றி நின்றாள். (இ-ள்.) கொட்புற்று அமர் ஆடும்இ கொள்கையர் தம்மில் - சுழன்று போர்செய்யும் இத்தன்மையர் தங்களுள், நந்தி நட்பு உற்றவர் - நந்தியெம் பெருமானிடம் அன்பு பொருந்திய படைவீரர் களின், கைப்படை தூள்பட - கையிலுள்ள படைக்கலங்கள் துகளாகுமாறு, ஞான மூர்த்தி பெட்பு உற்று அருளவரும் எங்கள் பிராட்டி - ஞானவடிவினனாகிய சிவபெருமான் விரும்பியருள வருகின்ற எம் இறைவியாகிய தடாதகைப் பிராட்டியார், புற்று வெய்யகண் அரவின் - புற்றிலுள்ள கொடிய கண்களையுடைய பாம்புகளைப் போலும், கணை மாரிகள் தூற்றி நின்றாள் - அம்பு மழைகளைப் பொழிந்து நின்றார் எ-று. அமராடல் - அமர் செய்தல். தலைவரிடம் அன்புள்ள வீரரென் பார் நட்புற்றவர் என்றார். சந்தத்தின் பொருட்டுத் தூட்பட எனத் திரிந்தது. பெட்புற்று அருள எனவும், பெட்பு உற்றருள எனவும் இரு வகையாகப் பிரித்தலமையும். பற்றினின்று அரவு வெளிப்படுதல் போலத் தூணியினின்று வெளிப்படுதலின் புற்றரவின் என உவமை கூறினார்; கொடுமை மிகுதி தோன்றவுமாம். (36) கையிற் படையிற் றனர்கற்படை தொட்டு வீரர் மெய்யிற் படுகென்று விடுக்குமுன் வீரக் கன்னி பொய்யிற் படுநெஞ் சுடையார்தவம் போல மாய நெய்யிற் படுவச் சிரவேலை நிமிர்த்து வீசி. (இ-ள்.) கையில் படை அற்றனர் - கையிலுள்ள படைக் கலங்கள் அழியப்பெற்றவராகிய சிவகண வீரர்கள், கல்படை தொட்டு - கற்களாகிய படைகளை எடுத்து, வீரர் மெய்யில் படுக என்று விடுக்குமுன் - (பிராட்டியாரின்) படைவீரர்கள் உடம்பில் படுக என்று விடுப்பதற்கு முன் (அவை), பொய்யில் படுநெஞ்சு உடையார் தவம்போல மாய - பொய்யிற் றலைப்பட்ட உள்ளத்தை யுடையவர்கள் செய்யும் தவம் அழிவது போல அழிய, வீரக் கன்னி - விரத்தையுடைய கன்னியாகிய தடாதகைப் பிராட்டியார், நெய்யில் படு வச்சிரவேலை நிமிர்த்து வீசி - நெய் பூசிய வச்சிரப்படையை ஓங்கி வீசி எ-று. கற்களே படையாக, தொட்டு என்பது ஈண்டு எடுத்து என்னும் பொருளது. படுகென்று, அகரம் தொக்கது. பொய்யொன்றுடைய ராயின் அவர் செய்யுந் தவமெல்லாம் பொன்றக்கெடு மென்றார். (37) துண்டம் படவே துணித்தக்கண விரர் தம்மைத் தண்டங் கொடுதாக் கினள்சாய்ந்தவர் சாம்பிப் போனார் அண்டங்கள் சராசரம் யாவையும் தாமே யாக்கிக் கொண்டெங்கு நின்றாள் வலிகூற வரம்பிற் றாமோ. (இ-ள்.) துண்டம் பட துணித்து - துண்டு துண்டாக (அவற்றைத்) துணித்து, அ கணவீரர் தம்மைத் தண்டம் கொடு தாக்கினள் - அந்தக் கணவீரர்களைத் தண்டப்படையா லடித்தார்; அவர் சாம்பிச் சாய்ந்து போனார் - அவர்கள் வலியிழந்து புறங்கொடுத்து ஓடினர்; அண்டங்கள் சராசரம் யா'e7¡யும் - அண்டங்களையும் (அவற்றி லுள்ள) சராசரங்கள் அனைத்தையும், தாமே ஆக்கிக் கொண்டு - தாமே தோற்றுவித்து, எங்கும் நின்றாள் வலி - அவை யெல்லா வற்றுள்ளும் கலந்து நின்ற பராசத்தியினது வலிமை, கூற வரம்பிற்று ஆமோ - கூறுதற்கு ஓரளவினை உடையதாகுமோ (ஆகாது) எ-று. சாய்ந்து - சரிந்து; புறங்கொடுத்து. சாம்பி - கூம்பி; சோர்வுற்று. கொண்டு: இசை நிறைக்க வந்தது; உடைமையாகக்கொண்டு என்றுமாம். கூற - கூறின், ஓகாரம்: எதிர்மறை. (38) படையற்று விமானமும்1 பற்றற வற்றுச் சுற்றுந் தொடையற் றிகன்மூண் டெழுதோள்வலி யற்றுச் செற்றம் இடையற்று விர நகையற்றடலேறு போலும் நடையற் றடைவார் நிலைகண்டன னந்தி யண்ணல். (இ-ள்.) படை அற்று - படைக்கலங்கள் அழிந்தும், விமானமும் பற்று அற அற்று - ஊர்திகளும் சிறிதுமின்றி அழிந்தும், சுற்றும் தொடை அற்று - அணிந்த மாலைகள் அழிந்தும், இகல் மூண்டு எழு தோள்வலி அற்று - போரின்கண் மிக்கெழுகின்ற தோள்வலி அழிந்தும், செற்றம் இடை அற்று - சினம் இடையில் அழிந்தும், வீரநகை அற்று - விரச் சிரிப்பு அழிந்தும், அடல் ஏறு போலும் நடை அற்று - வலிமை பொருந்திய ஆண் சிங்கம் போலும் நடை அழிந்தும், அடைவார் நிலை - வருகின்ற வீரர்களின் நிலைமையை, நந்தி அண்ணல் கண்டனன் - திரு நந்தி தேவர் பார்த்தருளினார் எ-று. விமானமும்: உம்மை உயர்வு சிறப்பு. பற்றற - ஒழிவில்லையாக; முழுதும். செற்றம் அவர்கட்கு இயற்கை யென்பார் இடை யற்று; என்றார். பெருமித முடையானுக்கு ஏறு நடையாலுவமம்; “ ஏறு போற் பீடு நடை” என்றார் வள்ளுவனாரும்; இடபமுமாம். அற்று என்னும் சினை வினைகள் அடைவார் என்னும் முதல்வினையைக் கொண்டன (39) உடையா னடிதாழ்ந் திவையோதலு மோத நீத்தச் சடையா னிளவா ணகைசெய்து தருமச் செங்கண் விடையான் சிலையா னிகல்வென்றி விளக்குந் தெய்வப் படையா னெழுந்தா னமராடிய பாரிற் சென்றான். (இ-ள்.) உடையான் அடி தாழ்ந்து - இறைவன் திருவடியை வணங்கி, இவை ஓதலும் - இந்நிகழ்ச்சிகளைக் கூறுதலும், ஓதம் நீத்தம் சடையான் - அலைகளையுடைய கங்கையைச் சடையிலுள்ள இறைவன், இள வாள் நகைசெய்து - ஒளி பொருந்திய புன்முறு வலைச் செய்து, செம் கண் தருமவிடையான் - சிவந்த கண்களை யுடைய அறவேற்றினை யுடையவனாள், சிலையான் - வில்லை யுடையவனாள், இகல் வென்றி விளைக்கும் - போரில் வெற்றியைத் தரும், தெய்வப்படையான் - தெய்வத்தன்மையுடைய படைகளை யுடையவனாய், எழுந்தான் அமர் ஆடிய பாரில் சென்றான் - எழுந்து போர் செய்யும் களத்திற் சென்றான் எ-று. உடையான் - உலகுயிர்களை யெல்லாம் உடைமையாகவும் அடிமையாகவும் உடையவன். நீத்தம் - வெள்ளம்; கங்கை. அறக்கடவுளாகிய விடை. விடையான் முதலியன முற்றெச்சம். ஆடிய : செய்யிய வென்னும் எச்சமுமாம். (40) அறுசீரடி யாசிரியவிருத்தம் மேவி யாகவப் பாரிடைப் பாரிட வீரரை யமராடி ஓவி லாவலி கவர்ந்தது மன்றினி யுருத்தெவ ரெதிர்ந்தாலுந் தாவி லாவலி கவரவு மடங்கலின் றனிப்பிணா வெனநிற்குந் தேவி யார்திரு வுருவமுஞ் சேவகச் செய்கையு மெதிர்கண்டான். (இ-ள்.) மேவி - சென்று, ஆகவப் பாரிடை - போர்க் களத்தில், பாரிடை வீரரை அமர் ஆடி - பூதகண வீரரோடு போர் புரிந்து (அவர்களின்), ஓவு இலா வலி கவர்ந்ததும் அன்று - நீங்காத வலிமையைக் கொண்டதும் அல்லாமல், இனி உருத்து எவர் எதிர்ந்தாலும் - இனி எவர் சினந்து எதிர்த்தாலும், தாவு இலா வலி கவரவும் - (அவர்களின்) கெடாத வலியைக் கொள்ளவும், தனி மடங்கலின் பிணா என நிற்கும் - ஒப்பற்ற பெண் சிங்கத்தைப் போல நிற்கின்ற, தேவியார் திரு உருவமும் - அம்மையாரின் திருவுருவத்தையும் சேவகச் செய்கையும் எதிர் கண்டான் - விரச் செயல்களையும் நேரிற் கண்டருளினான் எ-று. ஆகவம் - போர். பாரிடம் - பூதம். அன்றியென்னும் வினையெச்சத்திகரம் உகரமாயிற்று. வலியும் கவர என உம்மையை மாற்றினும்மையும். பிணா - பெண். (41) ஒற்றை வார்கழற் சரணமும் பாம்பசைத் துடுத்தவெம் புலித்தோலுங் கொற்ற வாண்மழுக் கரமும்வெண் ணீறணி கோலமுந் நூன்மார்புங் கற்றை வேணியுந் தன்னையே நோக்கிய கருணைசெய் திருநோக்கும் பெற்ற தன்வலப் பாதியைத் தடாதகைப் பிராட்டியு மெதிர்கண்டாள். (இ-ள்.) ஒற்றை வார் கழல் சரணமும் - ஒன்றாகிய நீண்ட வீரகண்டையைத் தரித்த திருவடியையும், பாம்பு அசைத்து உடுத்த வெம்புலித் தோலும் - பாம்பாகிய கச்சினால் இறுகப் பிணித்து உடுத்திய கொடிய புலித்தோலையும், கொற்றவாள் மழுக்கரமும் - வெற்றியையும் ஒளியையுமுடைய மழுப்படை யேந்திய திருக்கரத் தையும், வெள்நீறு அணிகோலம் - வெள்ளிய திருநீறு தரித்த கோலத்தினையுடைய, முந்நூல் மார்பும் - பூbVலணிந்த திரு மார்பையும், கற்றை வேணியும் - திரண்ட சடையையும், தன்னையே நோக்கிய கருணைசெய் திருநோக்கும் - தன்னையே பார்க்கின்ற அருள் புரியும் திருக்கண்களையும், பெற்ற உடைய, தன் வலப் பாதியைத் தடாதகைப் பிராட்டியும் எதிர்கண்டாள் - தன் வலப்பாதியாகிய சிவபெருமானைத் தடாதகைப் பிராட்டி யாரும் நேரே கண்டருளினார் எ-று. வெம்மை: புலிக்கு அடை. வ ாளாகிய மழுவுமாம்: கோலமும் நூன் மார்பும் எனப் பிரித்தலுமாம்; இதற்கு நகரம் விரித்தல். பிராட்டி திருவுருவம் இடப் பாதியாகலின் பெருமான் றிருவுருவை வலப்பாதியென்றார்; “ தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூ தாய் கோத்தும்பீ” என்னும் திருவாசகம் சிந்திக்கற் பாலது. (42) கண்ட வெல்லையி லொருமுலை மறைந்தது கருத்தினாண் மடனச்சங் கொண்ட னமந்திடக் குனிதர மலர்ந்தபூங் கொம்பரி னொசிந்தொல்கிப் பண்டை யன்புவந் திறைகொளக் கருங்குழற் பாரமும் பிடர்தாழக் கெண்டை யுண்கணும் புறவடி நோக்கமண் கிளைத்துமின் னெனநின்றாள். (இ-ள்.) கண்ட எல்லையில் - பார்த்த அளவில், ஒரு முலை மறைந்தது - ஒரு கொங்கை மறைந்தது (அதனால்), கருத்தில் நாண் மடன் அச்சம் கொண்டு அமைந்திட - உள்ளத்தின்கண் நாணமும் மடமும் அச்சமும் இடங்கொண்டு பொருந்திட, குனிதர மலர்ந்த பூங்சொம்பரின் - வளையும்படி பூத்த பூங்கொம்பைப் போல, ஒசிந்து ஒல்கி - வளைந்து துவண்டு, பண்டை அன்பு வந்து இறைகொள - தொல்லை யன்பானது வந்து தங்க, கருங்குழல் பதரமும் பிடர் தாழ- கரிய குழற் கற்றை பிடரியிற் சரியவும், கெண்டை உண்கணும் புற அடி நோக்க - சேல்போன்ற மையுண்ட கண்கள் புறவடியை நோக்கவும், மண்கிளைத்து மின் என நின்றாள் - மண்ணைத் திருவிரலாற் கீறிக் கொண்டு மின்னலை ஒத்து நின்றருளினார் எ-று. “ அச்சமு நாணு மடனு முந்துறுத்த நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப” எனத் தொல்காப்பியனார் கூறியவாறு அவை யென்றும் உளவேனும் ஈண்டு நாயகனெதிர்ப்பாட்டினால் முலை மறைந்தமையின் மிக்கு விளங்கின வென்றார்; அன்றி இதுகாறும் ஆண்டன்மை தோற்றி வந்தமையால் ஈண்டுப் பெண்மை தோன்றிற்று என்றாருமாம். குனிதர மலர்ந்த வென்றது நிறையப் பூத்த என்படி; முன்னரும் குனிதர நிறையப் பூத்த கொம்பு என்றார். கொம்பர்: ஈற்றுப் போலி. பண்டை அன்பு - தொன்று தொட்டுள்ள அன்பு. வருதல் - வெளிப்படுதல். பாதமும், கண்ணும் என்பவற்றிலுள்ள உம்மைகள் முறையே தாழ, நோக்க என்பவற்றுடன் பிரித்துக் கூட்டப்பட்டன. திருவடியின் பெருவிரலால் மண்ணைக் கிளைத்து: தன்மை நவிற்சியணி. (43) நின்ற மென்கொடிக் ககல்விசும் பிடையர னிகழ்த்திய திருமாற்றம் அன்ற றிந்தமூ தறிவனாஞ் சுமதிசீ றடிபணிந்1 தன்னாயிக் கொன்றை யஞ்சடைக் குழகனே நின்மணக் குழகனென் றலுமன்பு துன்ற நின்றவட் பார்த்தருட் சிவபரஞ் சோதிமற் றிதுகூறும். (இ-ள்.) நின்ற மென் கொடிக்கு - (இங்ஙனம்) நின்றமெல்லிய கொடி போல்பவராகிய பிராட்டியாருக்கு, அகல் விசும்பிடை அன்று அரன் நிகழ்த்திய திருமாற்றம் - அகன்ற விசும்பின்கண் முன் இறைவன் அருளிச்செய்த திருவாக்கினை, அறிந்த மூது அறிவனாம் சுமதி - தெரிந்த பேரறிவினை யுடையவனாகிய சுமதியென்பான், சிறு அடிபணிந்து - பிராட்டியாரின் திருவடிகளை வணங்கி, அன்னாய் - தாயே; இ கொன்றை அம் சடைக் குழகனே - இந்தக் கொன்றை மாலையையணிந்த அழகிய சடையையுடைய பேரழகனே, நின்மணக் குழகன் என்றலும் - நின் மணவாளன் என்று கூற, அன்பு துன்ற நின்றவள் பார்த்து - அன்பு நிறைய நிற்கின்ற பிராட்டியாரை நோக்கி, அருள் சிவபரஞ் சோதி இது கூறும் - கருணையையுடைய சிவபரஞ் சுடராகிய இறைவன் இதனைச் சொல்வான் எ-று. கொடிக்கு என்றலும் எனக் கூட்டுக. திருமாற்றம், இப் பொன்னனையாள் தனக்கிறைவன் வரும்பொழுதோர் முலை மறையும் என்பது. குழகன் - அழகன்! மணமகன். மற்று : அசை; வினைமாற்றுமாம். (44) என்று தொட்டுநீ திசையின்மேற் சயங்குறித் தெழுந்துபோந் தனையாமும் அன்று தொட்டுநம் மதுரைவிட் டுனைவிடா தடுத்துவந் தனமுன்னைத் தொன்று தொட்டநான் மறையுரை வழிவரு சோமவா ரத்தோரை நன்று தொட்டநாண் மணஞ்செய வருதுநின் னகர்க்குநீ யேகென்றான். (இ-ள்.) என்று தொட்டு நீ - எந்தக் காலம் முதலாக நீ, திசையின் மேல் சயம் குறித்து எழுந்து போந்தனை - திக்குகளின்மேல் வெற்றியைக் குறித்து எழுந்து போந்தாயோ, அன்று தொட்டு - அந்தக் கால முதல், யாமும் நம் மதுரை விட்டு - யாமும் நம்முடைய மதுரைப் பதியை விட்டு, உனை விடாது அடுத்து வந்தனம் - உன்னை நீங்காது உடன் வந்தோம்; தொன்று தொட்ட நால்மறை உரைவழி - பழைய நான்மறைகளிற் கூறியவாறு, வரு சோமவாரத்து - வருகின்ற திங்கட் கிழமை யன்று, நன்று ஓரை தொட்ட நாள் - நல்ல முழுத்தங் கூடிய பொழுதில், மணம் செய வருதும் - திருமணஞ் செய்ய வருவேம்; நீ நின்நகர்க்கு ஏகு என்றான் - நீ உன் நகரமாகிய மதுரைக்குச் செல்வாயாக என்று கூறியருளினான் எ-று. திசையின்மேற் சயம் - திக்கு விசயம். போந்தனையோ என விரிக்க. தொட்டு - தொடங்கி. நம்மதுரை விட்டு என்றது அதுவே தாம் என்றும் எழுந்தருளியிருக்கும் பழம்பதி என்று குறிப்பித்த வாறு. விடாது அடுத்து வந்தது வென்றி தருதற்கு; காதலாலுமாம். தொன்று தொட்ட - பழமையாகவுள்ள, மறை உரைவழி என்பதனை, மறையினது உரைவழி, மறையானது உரைத்த வழி, மறையாகிய உரைவழி எனப் பலவகையாக விரித்துரைத்தலும் சாலும். சோமவாரமாகிய நாள் என்னலுமாம். ஓரை - முழுத்தம்; “ மறைந்த வொழுக்கத் தோரையு நாளுந் துறந்த வொழுக்கம் கிழவோற் கில்லை” எனத் தொல்காப்பியம் கூறுதலால் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னரே தமிழ்மக்கள் ஓரை முதலியவற்றை அறிந்துளா ராதல் பெறப்படும். (45) என்ற நாதன்மே லன்பையு முயிரையு மிருத்தியா யஞ்சூழக் குன்ற மன்னதேர் மேற்கொடு தூரியங் குரைகட லெனவார்ப்ப நின்ற தெய்வமால் வரைகளும் புண்ணிய நீத்தமு நீத்தேகி மன்றன் மாமது ராபுரி யடைந்தனள் மதிக்குல விளக்கன்னாள். (இ-ள்.) என்ற நாதன்மேல் - என்று கூறியருளிய தலைவனிடத்தில், அன்பையும் உயிரையும் இருத்தி - தம் அன்பையும் ஆவியையும் வைத்து, ஆயம் சூழ - மகளிர் கூட்டம் புறஞ்சூழ, குன்றம் அன்ன தேர் மேற்கொடு - மலையினை ஒத்த தேரின்மேல் ஏறியருளி, தூரியம் குறைகடல் என ஆர்ப்ப - வாத்தியங்கள் ஆர்க்கின்ற கடலினைப்போல ஒலிக்க, நின்ற தெய்வமால் வரைகளும் - உடைநின்ற தெய்வத்தன்மை பொருந்திய பெரியமலைகளையும், புண்ணிய நீத்தமும் நீத்து ஏகி - புண்ணிய நதிகளையுங் கடந்து சென்று, மதிக்குலவிளக்கு அன்னாள் - திங்கள் மரபிற்கு விளக்குப் போல்பவராகிய தடாதகைப் பிராட்டியார், மன்றல் மா மதுராபுரி அடைந்தனள் - மணம் மிக்க பெருமையுடைய மதுரையம்பதியை அடைந்தார் எ-று. மன்றல் - மலர் மணமும், கல்யாணமும் ஆம். குலத்தை விளங்கச் செய்தலின் விளக்கன்னாள் என்றார். (46) மங்கை நாயகி மங்கல மெதிர்கொள வந்து வானிழி செல்வம் பொங்கு மாளிகை புகுந்தன ளாகமேற் புதுமணத் திறந்தீட்டி எங்கு மோலையுய்த் தமைச்சர்மங் கலவினைக் கியைவன வமைக்கின்றார் அங்கண் மாநக ரெங்கணுங் கடிமுர சானைமே லறைவித்தார். (இ-ள்.) மங்கை நாயகி - மங்கையர்க் கரசியாகிய பிராட்டியார், மங்கலம் எதிர்கொள வந்து - எட்டு மங்கலமும் ஏந்தியவர்கள் எதிர் கொள்ள வந்து, வான் இழி செல்வம் பொங்குமாளிகை புகுந்தனள் ஆக - வானுலகத்தி னின்றும் உய்த்த செல்வம் மிக்க திருமாளிகை யிற் புகுந்தருளினார்; மேல் - பின், புதுமணத்திறம் தீட்டி எங்கும் ஓலை உய்த்து - கடிமணச் செயலை எழுதி எவ்விடங்கட்கும் ஓலை அனுப்பி, அமைச்சர் மங்கல வினைக்கு இயைவன அமைக்கின்றார் - மந்திரிகள் மண விழாவுக்குப் பொருந்துவன சமைப்பவர்கள், அம் கண் மா நகர் எங்கணும் - அழகிய இடத்தினையுடைய பெரிய நகர் முழுதும், கடி முரசு ஆனைமேல் அறைவித்தார் - மணமுரசினை யானையின்மேலேற்றிச் சாற்றுவித்தார்கள் எ-று. வான் இழிசெல்வம் - தாம் முன்பு வென்று கைப்பற்றிக் கொணர்ந்த செல்வம். ஆக: ஆசை; தபுகுந்தருள என எச்சமுமாம். அமைக்கின்றாராகிய அமைச்சரென்க. யானை, ஆனையெனத் திரிந்தது. (47) (மேற்படி வேறு) கன்னிதன் மணமுர சறைதலுங் கடிநக ருறைபவர் கரைகெடத் துன்னிய வுவகையர் கடவுளைத் தொழுகைய ருட்ல முகிழ்ப்பெழப் பன்னிய துதியின ரியலெழின் மகளிரை யழகுசெய் பரிசென இன்னிய லெழில்வள நகரெலாஞ் செயல்வினை யணிபெற வெழில்செய்வார். (இ-ள்.) கன்னி தன் மணம் முரசு அறைதலும் - பிராட்டியாரின் திருமண முரசு அறையப் பெற்ற வளவில், கடிநகர் உறைபவர் - காவலையுடைய அம் மதுரைப் பதியில் வசிப்பவர் அனைவரும், கரைகெட துன்னிய உவகையர் - எல்லையில்லாது ஓங்கிய மகிழ்ச்சியை யுடையவராய், கடவுளைத் தொழு கையர் - இறைவனை வணங்கிக் கூப்பிய கையினை யுடையவராய், உடலம் முகிழ்ப்பு எழ - உடல் முழுதும் புளகம் அரும்ப, பன்னிய துதியினர்- பாடிய துதிப்பாட்டுக்களையுடையவராய், இயல் எழில் மகளிரை அழகுசெய் பரிசென - இயற்கையழகுள்ள மகளிரை அணி முதலியவற்றால் செயற்கை யழகு செய்யுந் தன்மை போல, இன் இயல் எழில் வள நகர் எலாம் - இனிய இயற்கையழகும் வளப்பமு முடைய நகர் முழுதையும், செயல்வினை அணிபெற - செய்தலை யுடைய தொழிற் றிறங்களால் அலங்காரம் பெற, எழில் செய்வார்- அழகு செய்யத் தொடங்குவார்கள் எ-று. மணத்தை முரசு அறைதலும் என்றுமாம். தொழுகையர் - தொழுதலை யுடையவர், தொழும் கையினை யுடையவர் என இருவகையாற் பொருள் கூறலாகும். உடலம், அம்: சாரியை. இயல் - இலக்கணமுமாம். இங்கே கூறிய உவமம் பாராட்டற்குரியது. (48) கோதையொ டும்பரி சந்தனக் குப்பை களைந்தனர் வீசுவார் சீதள மென்பனி நீர்கடூய்ச் சிந்தின பூழி யடக்குவார் மாதரு மைந்தரு மிறைமகள் மன்றல் மகிழ்ச்சி மயக்கினாற் காதணி குழைதொடி கண்டிகை கழல்வன தெரிகில தொழில் செய்வார். (இ-ள்.) மாதரும் மைந்தரும் - மகளிரும் ஆடவரும், கோதையொ டும்பரி சந்தனக் குப்பை - மாலையோடும் நீங்கிய சந்தனக் குப்பை களை, களைந்தனர் வீசுவார் - களைந்து (புறத்தே கொண்டுபோய்) எறிவார்கள், சீதளம் மென் பனி நீர்கள் தூய் - குளிர்ந்த மெல்லிய பனிநீரைத் தெளித்து, சிந்தின பூழி அடக்குவார் - சிதறிய புழுதியை அடக்குவார்கள்; இறைமகள் மன்றல் மகிழ்ச்சி மயக்கினால் - அரசகுமாரியாகிய பிராட்டியாரின் திருமணங் காரணமாக எழுந்த மகிழ்ச்சி மயக்கத்தால் காது அணிகுழை - காதில் அணிந்த குழைகளம், தொடி - வளைகளும், கண்டிகை - கண்டிகைகளு மாகிய இவைகள், கழல்வன தெரிகிலர் தொழில் செய்வார் - கழலுதலைத் தெரியாதவர்களாய் அலங்காரம் செய்வார்கள் எ-று. பரி என்பதனைக் கோதைக்குங் கூட்டுக. பரிதல், நீங்குதல் எனத் தன்வினையும், நீக்குதல் எனப் பிறவினையுமாகும். களைந் தனர்கள், தெரிகிலர்: முற்றெச்சங்கள். நீர், கள்: இசைநிறை; விகுதியாயின் நீரின்வகை கருதிற்றாம். இறைமகள் - அரசன் புதல்வியும், அரசியும் ஆம். கண்டிகை - கழுத்தணி. (49) மங்கல மென்றென வினவுவார் வருமதி நாளென வுரைசெய்வார் தங்களை யொல்லை தழீஇக்கொள்வார் தாங்கரு மோகை தலைக்கொள்வார் திங்களி னெல்லையு மாறுநா ளாறுக மென்று செலுத்துவார் நங்கை யருங்கடி காணவோ துடித்தன தோள்க ணமக்கென்பார். (இ-ள்.) மங்கலம் என்று என வினவுவார் - திருமணம் எப்பொழுது என்று (ஒருவரை ஒருவர்) கேட்பார்கள்; வரும் மதிநாள் என - வருகின்ற திங்கட் கிழமை என்று, உரைசெய்வார் தங்களை - கூறுகின்றவர் களை, ஒல்லை தழீஇக்கொள்வார் - விரையத் தழுவிக் கொள்பவர் களாய், தாங்கரும் ஓகை தலைக் கொள்வார் - தாங்குதற்கரிய மகிழ்ச்சி மீக்கொள்வார்கள்; திங்களின் எல்லையும் ஆறுநாள் - அம் மதிநாள் வருமளவு ஆறுநாள் (ஆயினும் அவற்றை), ஆறு உகம் என்று செலுத்துவார் - ஆறு யுகங்களைப்போலக் கழிப்பார்கள்; நங்கை அருங்கடி காணவோ - நம் பிராட்டியாரின் திருமண விழாவைக் காணுதற் பொருட்டோ, நமக்குத் தோள்கள் துடித்தன என்பார் - நமக்குத் தோள்கள் துடித்தன என்று கூறுவார்கள் எ-று. உரை செய்வார்; தாங்கள் ஒருவரை யொருவர் தழுவிக் கொள்வார், எனப் பிரித்துரைத்தலுமாம். ஓகை - உவகை. உடன் காணும் அவாவினால் ஒருநாள் ஒரு யுகம் போலாயிற்று என்றார். தோள் துடித்தல் ஆடவர்க்கு வலமும் மகளிர்க்கு இடமும் ஆம். பிராட்டி இறைவனைச் சந்தித்து மீண்டநாளம் திங்கட்கிழமை யெனக் கொள்க. (50) பித்திகை வெள்ளை புதுக்குவார் பெட்புறு வார்களும் பெட்புறச் சித்திர பந்தி நிறுத்துவார் தெற்றிகள் குங்கும நீவுவார் வித்திய பாலிகை மென்றழை விரிதலை நீர்நிறை பொற்குடம் பத்தியின் வேதி நிரப்புவார் தோரணம் வாயில் பரப்புவார். (இ-ள்.) பித்திகை வெள்ளை புதுக்குவார் - கவர்த்தலங் களைச் சுண்ணத்தாற் புதுப்பிப்பார்கள்; பெட்பு உறுவார்களும் பெட்புற - (யாவரும்) விரும்புகின்ற சிற்பநூல் வல்லாரும் விரும்பு மாறு, சித்திர பந்தி நிறுத்துவார் - சித்திர வரிசைகளை நிற்பிப் பார்கள்; தெற்றிகள் குங்குமம் நீவுவார் - திண்ணைகளைக் குங்குமக் குழம்பால் மெழுகுவார்கள்; வேதி - அத்திண்ணைகளில், வித்திய பாலிகை - முளைத்த பாலிகைகளையும், மென்தழை விரிதலை நீர் நிறை பொன் குடம் - மெல்லிய (மாந்) தழை விரிந்த தலையை யுடைய நீர் நிரம்பிய பொன்னாலாகிய பூரண கும்பங்களையும், பத்தியின் நிரப்புவார் - வரிசைப்பட வைப்பார்கள்; தோரணம் வாயில் பரப்புவார் - தோரணங்களை வாயிலிற் கட்டுவார்கள் எ-று. வித்திய - விதைத்த; முளை தோன்றிய. (51) நீளிடை மணிமறு கெங்கணு நெடுநடைக் காவண நாட்டுவார் பாளைகொள் கமுகு சுவைக்கழை பழுக்குலை வாழை யொழுக்குவார் கோளிறை கொண்டென வாடிகள் கோத்தணி வார்மிசை கொடிநிரை வாளரி யெழுபரி யடிபட மத்திகை நிரையென வைப்பரால். (இ-ள்.) நீள் இடை மணி மறுகு எங்கணும் - நீண்ட இடத்தினை யுடைய அழகிய வீதிகள் முழுதும், நெடு நடைக் காவணம் நாட்டு வார் - நெடிய நடைப் பந்தர் இடுவார்கள்; பாளைகொள் கமுகு - பாளைகளையுடைய பாக்கு மரங்களையும், சுவைக்கழை - சுவை யினையுடைய கரும்புகளையும், பழுக்குலை வாழை - பழுத்த குலையை யுடைய வாழை மரங்களையும், ஒழுக்குவார் - வரிசையாகக் கட்டு வார்கள்; கோள் இறை கொண்டென - ஒன்பது கோள்களும் தங்கி யிருத்தல் போல, ஆடிகள் கோத்து அணிவார் - கண்ணாடிகளைக் கோவையிட்டுக் கட்டுவார்கள்; மிசை - மேலே, வாள் அரி எழு பரி அடிபட - ஒளியையுடைய சூரியனுடைய ஏழு குதிரைகளும் அடிபடு மாறு, மத்திகை நிரை என - சம்மட்டியின் வரிசைபோல, கொடி நிரை வைப்பர் - கொடிகளை வரிசையாக நிறுத்துவார்கள் எ-று. இறைகொள்ளல் - தங்கல்; குடியிருத்தல். கொண்டென - கொண்டாலென. வாளரி, அரி யென்னும் பலபொரு ளொருசொல் அடையானும் சார்பானும் ஞாயிற்றை யுணர்த்திற்று. மத்திகை - குதிரைச் சம்மட்டி. ஆல்: அசை. (52) பூவொடு தண்பனி சிந்துவார் பொரியொடு பொற்சுணம் வீசுவார் பாவை விளக்கு நிறுத்துவார் பைந்தொடை பந்தரி னாற்றுவார் ஆவண மென்ன வயிர்ப்புற வணிமறு கெங்கணு மரதனக் கோவையு மரகத மாலையுங் கோப்பமை யாரமுந் தூக்குவார். (இ-ள்.) பூவொடு தண்பனி சிந்துவார் - மலர்களோடு குளிர்ந்த பனி நீரைத் தெளிப்பார்கள்; பொரியொடு பொற்சுணம் வீசுவார் - பொரி களோடு பொன்னாலாகிய பொடியை இறைப்பார்கள்; பாவை விளக்கு நிறுத்துவார் - பாவை விளக்குக்களை நிற்க வைப்பார்கள்; பைந்தொடை பந்தரில் நாற்றுவார் - பசிய மாலைகளைக் காவணங்களில் கட்டித் தொங்கவிடுவார்கள்; ஆவணம் என்ன அயிர்ப்பு உற - கடை வீதியோ என்னக் (கண்டோர்) ஐயுறுமாறு, அணிமறுகு எங்கணும் - அழகிய வீதிகளெங்கும், அரதனக் கோவையும் - அரதன மாலைகளையும், மரகத மாலையும் - மரகத மாலைகளையும், கோப்பு அமை ஆரமும் - கோவையாக அமைந்த முத்துமாலை களையும், தூக்குவார் - நிரல்படத் தொங்க விடுவார்கள் எ-று. பனி - பனிநீர். சுண்ணம் என்பது தொக்கது. பாவை விளங்ககு- பெண் வடிவாகிய பிரதிமை கையில் விளக்கினை யேந்தி நிற்குமாறு இயற்றப்பட்டது. பந்தர் - போலி. நாற்றுவார்: நால் என்பதன் பிற வினை யாகிய நாற்று பகுதி. ஆவணம் - ஈண்டு அரதன வாணிகம் புரியும் கடைத்தெரு. அரதனம் - இரத்தினம். பொதுப்பெயர். ஆரம் - முத்து; கோப்பமை என்றமையால் முத்துமாலை யென்றாயிற்று.(53) அடுகரி சிந்துர மப்புவா ரழன்மணி யோடை மிலைச்சுவார் கடுநடை யிவுளி கழுத்தணி காலணி கலனை திருத்துவார் சுடர்விடு தேர்பரி பூட்டுவார் தொடையொடு கவரிக டூக்குவார் வடுவறு பொற்கல நவமணி மங்கல தீப மியற்றுவார். (இ-ள்.) அடுகரி சிந்துரம் அப்புவார் - கொல்லுதலையுடைய யானைகளின் (நெற்றியில்) சிந்தூரத் திலகம் சாத்துவார்கள்; அழல் மணி ஓடை மிலைச்சுவார் - நெருப்புப்போலும் மணிகள் பதித்த பட்டத்தைச் சூட்டுவார்கள்; கடு நடை இவுளி - விரைந்த செலவினை யுடைய குதிரைகளின், கழுத்து அணிகால் அணிகலனை திருத்து வார் - கழுத்திலணியும் அணிகளையும் காலில் அணியும் அணி களையும் சேணத்தையும் (அவைகட்குத்) திருத்தமுற அணிவார்கள்; சுடர் விடு தேர் பரி பூட்டுவார் - சுடர்வூசும் தேர்களிற் குதிரைகளைப் பூட்டுவார்கள்; தொடையொடு கவரிகள் தூக்குவார் - மாலை களையும் சாமரைகளையும் (அத்தேர்களிற்) கட்டித் தொங்க விடுவார்கள்; வடு அறு பொன்கலம் - குற்றமற்ற பொன்னாலாகிய தட்டங்களில், நவமணி மங்கல தீபம் இயற்றுவார் - நவரத்தினங் களாலாகிய மங்கல விளக்குகளை வைப்பார்கள் எ-று. அழல்மணி - மாணிக்கம். ஓடை - யானை நெற்றியிலணியும் பட்டம். (54) பழையன கலனை வெறுப்பராற் புதியன பணிகள் பரிப்பராற் குழைபனி நீரளை குங்குமங் குவிமுலை புதைபட மெழுகுவார் மெழுகிய வீரம் புலர்த்துவார் விரைபடு கலவைக ளப்புவார் அழகிய கண்ணடி நோக்குவார் மைந்தரை யாகுல மாக்குவார். (இ-ள்.) பழையன கலனை வெறுப்பர் - (பெண்கள்) பழைய அணிகளை வெறுத்துக் களைவார்கள்; புதியன பணிகள் பரிப்பர் - புதியனவாகிய அணிகளைத் தரிப்பார்கள்; குழை பனிநீர் அளை குங்குமம் - குழைத்த பனிநீர் அளாவிய குங்குமக் குழம்பை, குவிமுலை புதைபட மெழுகுவார் - குவிந்த முலைகள் மறையுமாறு அப்புவார்கள், மெழுகிய ஈரம் புலர்த்துவார் - (அவ்வாறு) மெழுகிய ஈரத்தை (அகிற் புகையால்) புலரவைப்பார்கள்; விரைபடு கலவைகள் அப்புவார் - மணம் பொருந்திய கலவைகளைப் பூசுவார்கள்; அழகிய கண்ணடி நாக்குவார் - அழகிய கண்ணாடியைப் பார்ப்பார்கள்; மைந்தரை ஆகுலம் ஆக்குவார் - இவற்றால் ஆடவரை வருத்துவார்கள் எ-று. பழையன, புதியன பெயரெச்சங்கள். பழைய கலன் - முன் அணிந்தவை. பனிநீர் அளைந்து குழைத்த குங்குமம் என்பது கருத் தாகக் கொள்க. மைந்தர் என்னும் பொதுப்பெயர் ஈண்டுச் சிறப்பாக நாயகரை யுணர்த்தும்; நாயகர்க்குச் சிறப்புப் பெயருமாம்; ஆகுல மாக்கல் - வேட்கை நோயால் மெலியச் செய்தல். வெறுப்பர், மெழுகுவார், அப்புவார் என்பவற்றை வினையெச்சமாக்கலுமாம். ஆல் இரண்டும் அசை. (55) அஞ்சனம் வேல்விழி தீட்டுவா ராடவர் மார்பிடை நாட்டுவார் பஞ்சுகள் பாத மிருத்துவார் பரிபுர மீது திருத்துவார் வஞ்சியர் தேற வருந்துவார் மருங்கு றளாட வருந்துவார் கொஞ்சிய கனிமொழி கழறுவார் குழுவொடு குரவைகள் குழறுவார். (இ-ள்.) வஞ்சியர் - வஞ்சிக் கொடிபோலும் மகளிர்கள், வேல் விழி அஞ்சனம் தீட்டுவார் - வேல் போன்ற கண்களுக்கு மை எழுதுவார்கள்; ஆடவர் மார்பிடை நாட்டுவார். (அவற்றை) ஆடவர்களின் மார்பிலே ஊன்றுவார்கள்; பாதம் பஞ்சுகள் இருத்துவார் - அடிகளில் செம்பஞ்சுக் குழம்பை இடுவார்கள்; மீது பரிபுரம் திருத்துவார் - அவ்வடி களின்மேல் சிலம்பைத் திருந்த அணிவார்கள்; தேறல் அருந்துவார் - மதுவினைக் குடிப்பார்கள்; மருங்குல் தள்ளாட வருந்துவார் - (அம்மயக்கத்தால்) இடைதள்ளாட (நடந்து) வருந்துவார்கள்; கொஞ்சிய கனிமொழி கழறுவார் - (நாயகர்) பாராட்டச் சுவை முதிர்ந்த மொழி களைக் கூறுவார்கள்; குழுவொடு குரவைகள் குழறுவார் - மகளிர் கூட்டத்தோடு குரவைப் பாட்டினைக் குழறிப் பாடுவார்கள் எ-று. தீட்டுவார், இருத்துவார், அருந்துவார் என்பவற்றை எச்ச மாக்கலுமாம். அதள்ளாட என்பது விகாரமாயிற்று. கொஞ்சிய: செய்யிய வென்னும் வினை யெச்சம்; கொஞ்சுதலையுடைய வெனப் பெயரெச்சமுDVம். குரவை - கைகோத்தாடுங் கூத்து; இது காமமும் வென்றியும் பொருளாக வரும்; “ குரவை யென்பது கூறுங் காலைச் செய்தோர் செய்த காமமும் விறலும் எய்த வுரைக்கு மியல்பிற் றென்ப” என்பது காண்க. நான்கடியிலும் மூன்றாஞ் சீரும் ஆறாஞ் சீரும் இயைபுடையவாய்த் திகழ்கின்றன. (56) கின்னர மிதுனமெனச்செல்வார் கிளைகெழு பாணொடு விறலியர் கன்னிய ராசை வணங்குவார் கடிமண மெய்து களிப்பினால் இன்னிசை யாழொடு பாடுவா ரீந்தன துகில்விரித் தேந்துவார் சென்னியின் மீதுகொண்டாடுவார் தேறலை யுண்டு செருக்குவார். (இ-ள்.) விறலியர் - பாண்மகளிர், கிளை கெழு பாணொடு - சுற்ற மாகிய பாணரோடு, கின்னர மிதுனம் எனச் செல்வார் - யாழேந்திய மிதுனராசியைப் போலச் சென்று, கன்னியர் அரசை வணங்குவார் - மங்கையர்க் கரசியான பிராட்டியாரை வணங்குவார்கள், கடமணம் எய்து களிப்பினால் - திருமணம் நிகழும் மகிழ்ச்சியால், இன் இசை யாழொடு பாடுவார் - இனிய இசைப்பாட்டினை யாழொடு (வேறுபடாமல்) பாடுவார்கள்; ஈந்தன துகில் விரித்து ஏந்துவார் - (அவர்) கொடுக்கும் பொருள்களை ஆடையை விரித்து வாங்குவார்கள்; சென்னியின் மீது கொண்டு ஆடுவார் - அவற்றை முடியின்மேற் கொண்டு ஆடுவார்கள்; தேறலை உண்டு செருக்குவார் - மதுவை உண்டு களிப்பார்கள் எ-று. கின்னரம் - விணை. வீணையைக் கையிலேந்திய ஆணும் பெண்ணும் கூடிய வடிவாக விருப்பது மிதுனராசி யென்ப. கின்னர மிதுனம் - ஆணும் பெண்ணுமாகிய இசையறியும் கின்னரப் பறவைகள் என்னலுமாம்; “ பாடுகின்றன கின்னர மிதுனங்கள் பாராய்” என்பது இராமாயணம். கிளை யென்றது கணவரை. பாண் - பாணர். பாணராற்றுப்படையைப் பாணாற்றுப்படை யெனலுங் காண்க. விறலியர் - பாணர், கூத்தர், பொருநர் என்போரின் பெண்பாலால் விறல் பட ஆடுதலின் விறலியர் எனப்பட்டார் விறல் - சத்துவம் மெய்ப்பாடு. இன்னிசை - மிடற்றுப் பாடல். ஈந்தன: பெயர். கிளை கெழு பாணொடு என்பதற்கு விணையின் நரம்பி லெழுந்த இசை யோடு என்று பொருள் கூறுதல் சிறவாமை யுணர்க. (57) மன்னவர் மகளிரு மறையவர் மகளிரும் வந்துபொன் மாலையைத் துன்னினர் சோபனம் வினவுவார் கோதைதன் மணவணி நோக்குவார் கன்னித னேவலர் வீசிய காசறை கர்ப்புர வாசமென் பொன்னருங் கலவையின் மெய்யெலாம் புதைபட வளனொடும் போவரால். (இ-ள்.) மன்னவர் மகளிரும் - அரசர் மகளிரும், மறயவர் மகளிரும் - பார்ப்பன மாதரும், பொன் மாலையை வந்து துன்னினர் - காஞ்சன மாலையை வந்து பொருந்தி, சோபனம் வினவுவார் - திருமண விழாவை உசாவுவார்கள், தோகை தன் மண அணி நோக்குவார் - பிராட்டியாரின் திருமணக் கோலத்தைக் கண்டுகளிப்பார்கள்; கன்னி தன் ஏவலர் வீசிய - அப்பிராட்டியாரின் ஏவலர்கள் வீசிய, காசறை - மயிர்ச்சாந்து, கர்ப்புரவாசம் பென் பொன் நறுங்கலவையின் - பச்சைக் கர்ப்புர மணங்கலந்த மெல்லிய பொன்னிறமுள்ள நறிய கலவை ஆகிய இவைகளால், மெய் எலாம் புதைபட - உடல் முழுதும் மறைய, வளனொடும் போவர் - மகிழ்ச்சியோடும் தங்கள் மனைகட்குச் செல்வார்கள் எ-று. சோபனம் - சுபம்; மங்கலம். வீசிய - சொரிந்த; வழங்கிய, காசறை - மயிர்ச்சாந்து; இன்னுருபை இதனொடுங் கூட்டுக. வளன்: ஈண்டு மகிழ்ச்சி. துன்னினர்: முற்றெச்சம். ஆல்: அசை. (58) அங்கன கஞ்செய் தசும்பின வாடை பொதிந்தன தோடவிழ் தொங்கல் வளைந்தன மங்கையர் துள்ளிய கவரியி னுள்ளன கங்கையும் வாணியும் யமுனையுங்காவிரி யும்பல துறைதொறு மங்கல தூரிய மார்ப்பன மதமலை மேலன வருவன. (இ-ள்.) கங்கையும் - கங்கை நீரும், வாணியும் - வாணி நீரும், யமுனையும் - யமுனைநீரும், காவிரியும் - காவிரி நீரும், பலதுறை தொறும் - பல துறைகளிலுமிருந்து, அம் கனகம்செய் தசும்பின - அழகிய பொன்னாற் செய்த குடத்தில் நிறைக்கப்பெற்றனவாய், ஆடை பொதிந்தன - துகிலாற் போர்க்கப் பெற்றனவாய், தோடு அவிழ் தொங்கல் வளைந்தன - இதழ்கள் விரிந்த மாலைகளால் வளைந் தணியப்பட்டனவாய், மங்கையர் துள்ளிய கவரியின் உள்ளன - மகளிர் வீசும் சாமரையினுள் அடங்கியனவாய், மதமலை மேலன - மதத்தையுடைய மலைபோன்ற யானையின் மத்தகத் திலுள்ளனவாய், மங்கலதூரியம் ஆர்ப்பன வருவன - மங்கல இயங்கள் ஒலிக்கப் பெற்றனவாய் வாரா நிற்பன எ-று. தசும்பின முதலியன முற்றெச்சங்கள். துள்ளுமாறு வீசிய என்பதனைத் துள்ளிய என்றார். வாணி - சரச்சுவதி. யமுனை - காளிந்தி. துறை - தீர்த்தக் கட்டடம். துறைதொறு மிருந்து என விரிக்க. (59) அங்கவர் மனைதொறு மணவினை யணுகிய துழனிய ரெனமறைப் புங்கவ ரினிதுண வறுசுவைப் போனக மடுவினை புரிகுவார் இங்கடு வனபலி யடிகளுக் கெனயதி களையெதிர் பணிகுவார் சங்கர னடியரை யெதிர்கொள்வார் சபரியை விதிமுறை புரிகுவார். (இ-ள்.) அங்கவர் - அந்நகரத்தவர், மனைதொறும் மணவினை அணுகிய துழனியர் என - (தத்தம்) வீடுகள் தோறும் மணச்செயல்கள் வந்த ஆரவாரத்தை யுடையார் போன்று, மறைப்புங்கவர் இனிது உண - வேத உணர்ச்சியையுடைய தூய மறையவர்கள் இனிதாக அருந்துமாறு, அறுசுவைப் போனகம் அடுவினை புரிகுவார் - அறுவகைச் சுவையினையுடைய உண்டிகளைச் சமைப்பார்கள்; அடிகளுக்கு பலி இங்கு அடுவன என - தேவரீருக்குத் திரு அமுதுகள் இங்கே சமைக்கப்படுவன என்று, யதிகளை எதிர் பணிகுவார் - துறவிகளை எதிர் சென்று வணங்குவார்கள்; சங்கரன் அடியரை எதிர் கொள்வார் - சிவனடியார்களை எதிர்கொண்டு, சபதியை விதிமுறை புரிகுவார் - புசனையை விதிப்படி செய்வார்கள் எ-று. அணுகினமையாலான துழனியரென வென்க. அடுவினை புரிகுவார், அடுதலாகிய வினையைப் புரிகுவார் என விரியும். பலி- பிச்சை; துறந்தோர்க்கிடுவது. யதி - துறவி. சபரியை - பூசை. (60) இன்னண நகர்செய லணிசெய விணையிலி மணமகன் மணவினைக் கன்னியு மனையவ ளென்னினிக் கடிநகர் செயுமெழில் வளனையாம் என்னவ ரியநகர் செய்லெழி லிணையென வுரைசெய்வ தெவனிதன் முன்னிறை மகடமர் மணவணி மண்டப வினைசெயு முறைசொல்வாம். (இ-ள்.) இன்னணம் நகர் செயல் அணி செய - இவ்வாறு அப்பதியைச் செயற்கை யழகு செய்யாநிற்க. மணமகன் இணை - இலி - மணவாளனோ ஒப்பற்றவன், மணவினைக் கன்னியும் அனையவள் என்னின் - மணச்செயலுக்குரிய பெண்ணும் அத்தன்மையள் என்றால், இ கடி நகர் செய்யும் எழில் வளனைஇக்காவலையுடைய பதியிற் செய்யப்பட்டிருக்கும் அழகின் மேன்மைக்கு, என்ன அரிய நகர் செயல் எழில் - எப்படிப்பட்ட அரிய நகரின் ஒப்பனை யழகினையும், யாம் இணை என உரை செய்வது எவன் - யாம் ஒப்பு என்று கூறுவது எவ்வாறு; இதன் முன் - இனி, இறை மகள் தமர் - பிராட்டியாரின் சுற்றாத்தார், மண அணி மண்டபம் - அழகிய திருமண மண்டபத்தை வினைசெயும் முறை சொல்வாம் - அலங்காரம் செய்யும் தன்மையைக் கூறுவாம் எ-று. இக்கடிநகர் செயும் எழில் வளனை, சுட்டு. வளனை: வேற்றுமை மயக்கம். அணிசெய் அதனை உரை செய்வது எவன் என வியையும். நகர் என்பதற்கு நகரத்திலுள்ளார் என்று கூறலுமாம். என்னின் என்பது உரைசெய்வது கூடாதென்பதற்கு ஏதுவாய் நின்றது. என்ன - எத்தன்மை யுடைய. செயலெழிலையும் என உம்மை விரிக்க. செயலெழில் - ஒப்பித்த அழகு. முன் என்பது வருவதனையுங் குறிக்கும். இதற்கு முன்னரே தொடங்கி யென உரைத்தலுமாம். (61) (மேற்படி வேறு) கருவி வான்முகி லூர்தியைப் பொருதநாட் கலைமதி மருமாட்டி செருவில் வாங்கிய விமானமா லைகளெனத் தெய்வத வரையெல்லாம் மருவி யந்நகர் வைகிய தம்மிறை மடமக டனைக்காண்பான் துருவி நின்றென நட்டன ரெட்டிவான் றொடுநிலை நெடுந்தேர்கள். (இ-ள்.) கலைமதி மருமாட்டி - கலைகளையுடைய சந்திரனது மரபிற் றோன்றிய பிராட்டியார், கருவிவான் முகில் ஊர்தியை - தொகுதியாக வானின்கண் உள்ள முகிலை ஊர்தியாகவுடைய இந்திரனை, செருவில் பொருத நாள் - போரில் வென்ற காலத்து, வாங்கிய விமான மாலைகள் என - (திறையாக) வாங்கிய விமான வரிசைகள் நின்றாற் போலவும், தெய்வதவரை எல்லாம் மருவி - தெய்வத்தன்மை பொருந்திய மலைகளெல்லாம் வந்து, அ நகர் வைகிய - அத் திருப்பதியில் எழுந்தருளிய, தம் இறை மடமகள் தனைக் காண்பான் - தம் இறைவனாகிய மலையரையனின் புதல்வியாரைக் காண, துருவி நின்றென - தேடி (வரிசைப்பட) நின்றாற் போலவும், எட்டி வான்தொடு நெடு நிலைத்தேர்கள் நட்டனர் - எட்டி வானுலகை அளாவும் நெடிய நிலைத்தேர்களை வரிசையாக நிறுத்தினர் எ-று. பொருத - பொருதுவென்ற. மருமாட்டி - வழித்தோன்றியவள். மருமானுக்குப் பெண்பால். காண்பான்: வினையெச்சம். நின்றென - நின்றாலென: விகாரம். எட்டி - தாவி: தற்குறிப்பேற்றவணி. (62) பளிக்கி னேழுயர் களிறுசெய் தமைத்தபொற் படியது பசுஞ்சோதி தெளிக்கு நீலத்தி னாளிக ணிரைமணித் தெற்றிய துற்றோர்சாய் வெளிக்கு ளாடிய வோவியப் பாவைபோன் மிளிர்பளிங் காற்சோதி தளிர்க்கும் பித்திய திடையிடை மரகதச் ச ாளரத் ததுமாதோ. (இ-ள்.) ஏழு உயர் களிறு - ஏழு முழம் உயர்ந்த யானைகளை, பளிக்கின் செய்து அமைத்த - பளிங்கினாற் செய்து இருபாலும் அமைத்த, பொன் படியது - பொன்னாலாகிய படிகளையுடையதும், பசும்சோதி தெளிக்கும் - பசிய ஒளியை வீசும், நீலத்தின் ஆளிகள் நிரை- நில மணியாற் செய்த ஆளிகளின் வரிசையை யுடைய, மணித் தெற்றியது - மணிகளழுத்திய திண்ணைகளை யுடையதும், உற்றோர் சாய் - நெருங்கினவர்களின் சாயல், வெளிக்குள் ஆடிய ஓவியம் பாவை போல் மிளிர் - வெளிப்புறத்தில் ஆடுகின்ற ஒவியப் பிரதிமைகள் போல விளங்கப்பெற்ற, பளிங்கால், சோதி தளிர்க்கும் பித்தியது - பளிங்கினாலாகிய ஒளி வீசும் சுவர்த்தலங்களை யுடையதும், இடை இடை மரகதச் சாளரத்தது - இடை யிடையே மரகதத்தாலாகிய சாளரங்களையுடையதும் எ-று. ஏழு - ஏழு முழத்திற்காயிற்று; ஏழ் என மெய்யீறாகத் தொல் காப்பியனாரும், ஏழு என உயிரீறாக நன்னூலாரும் கொண்டனர். ஏழு முழ உயரமும் ஒன்பது முழ நீளமும் உடைத்தாதல் அரசயானையின் இலக்கணம் சாய் - சாயல். வெளிக்குள்: உள் ஏழனுருபு. பளிங்கின் தெளிவும் உற்றோரின் எழிலும் புலப்பட வெளிக் குளாடிய ஓவியப் பாவைபோல் என உவமங் கூறினார். மாது ஓ : அசைகள். (63) பல்லுருச் செய்த பவளக்கா லாயிரம் படைத்ததிந் திரநீலக் கல்லு ருத்தலைப் போதிய தாடகக் கவின்கொளுத் தரமேல தல்லு ருக்கிய செம்மணித் துலாத்ததா லமுதுடற் பசுந்திங்கள் வில்லு ருக்குகன் மாடம தாகிய வேள்விமண் டபஞ்செய்தார். (இ-ள்.) பல்உருச் செய்த பவளக்கால் ஆயிரம் படைத்தது - பலவடிவங்களாகச் செய்த ஆயிரம் பவளத் தூண்களை உடையதும், தலை - அவற்றின்மேல், இந்திர நீலக்கல் உருப் போதியது - இந்திர நீலமணிகளால் வடிவு பொருந்தச் செய்த போதிகைகளை உடையதும், ஆடகம் கவின் கொள் உத்தரம் மேலது - பொன்னாற் செய்த அழகிய உத்தரங்களையுடையதும், அல் உருக்கிய - இருளை ஒட்டிய, செம்மணி துலாத்தது - மாணிக்க மணிகளாற்செய்த துலாங் களையுடையதும், அமுது உடல் பசுந்திங்கள் - அமுத வுடம் பினையுடைய குளிர்ந்த மதியினது, வில் உருக்கு கல் மாடமது - கிரணங்களினால் உருக்கப்படுகின்ற சந்திர காந்தக் கல்லாற் செய்த மேனிலையை உடையதும், ஆகிய வேள்வி மண்டபம் செய்தார் - ஆகிய திருமண மண்டபத்தைச் செய்தமைத்தார்கள் எ-று. உரு - செதுக்கியமைத்த வடிவுகள். போதி - தூணின்மேலுள்ள உறுப்பு; போதிகை யெனவும் படும். துலாம் - போதிகையின் இரு பக்கத்தின் கீழே வாழைப் பூ வடிவமாகச் செய்யப்படும் உறுப் பென்பர்; துகிர் துலா மண்டபத் தகிற்புகை கமழ என்னும் பெருக் தையடியின் குறிப்புரை பார்க்க; இது துலா எனவும் வழங்கும்; சிலப்பதிகார அடைக்கலக் காதையில் ஐயவித் துலாம் என்பதற்கு எழுதிய விசேடவுரையும் நோக்கற் பாலது. உருக்கிய - கெடுத்த என்னும் பொருளது. வில் - ஒளி, கிரணம். இரு செய்யுளிலுமுள்ள குறிப்பு முற்றுக்கள் ஆகிய என்பதனோ டியைந்து எச்சமாம். (64) முத்திற் பாளைசெய் தவிர்மர கதத்தினான் மொய்த்தபா சிலைதுப்பின் கொத்திற் றீம்பழம் வெண்பொனாற் கோழரை குயின்றபூ கமுந்துப்பின் றொத்திற் றூங்குபூச் செம்பொனாற் பழுக்குலை தூக்கிப்பொன் னாற்றண்டு வைத்துப் பாசொளி மரகத நெட்டிலை வாயு நிரைவித்தார். (இ-ள்.) முத்தில் பாளை - முத்தினாற் பாளையும், அவிர் மரகதத் தினால் மொய்த்த பசு இலை - விளங்காநின்ற மரகதத்தினால் நெருங்கயி பசிய இலையும், துப்பின் கொத்தில் தீம்பழம் - பவளக் கொத்தினால் இனிய பழங்களும், வெண்பொனால் கோழ் அரை - வெள்ளியினால் வழுவழுப்பான அரையும், செய்து குயின்ற பூகமும்- செய்தமைத்த கமுகுகளையும், துப்பின் தொத்தில் தூங்கும்பூ - பவளக் கொத்தினால் தொங்கும் பூவோடு, செம்பொனாற் பழுக்குலை தூக்கி - சிவந்த பொன்னாற் பழுத்தலுடைய குலையையும் தொங்கவிட்டு, பொன்னால் தண்டு வைத்து - பொன்னால் தண்டு செய்து, பசு ஒளி மரகத நெடு இலை - பசிய ஒளியையுடைய மரகதத்தினால் நெடிய இலையை (அமைத்த), வாழையும் நிரைவித்தார் - கதலிகளையும் (அத்திருமண மண்டபத்தில்) வரிசைப்படக் கட்டினார்கள் எ-று. பாளை முதலியவற்றின் நிறங்களுக்கேற்ப முத்து முதலியவற்றால் இயற்றினார். பாசிலை. கோழரை, பாசொளி என்பன பசுமை கொழுமை யென்பவற்றின் மை விகுதிகெட்டு ஆதிநீண்டு முடிந்தன. நெட்டிலை: நெடு என்பதன் ஒற்றிரட்டிற்று. இலை அமைத்த என லொரு சொல் வருவிக்க. (65) பித்தி மாதவி சண்பகம் பாதிரி பிறவுமண் டபஞ்சூழப் பத்தி யாளவர்த் தளிகள்வாய் திறந்துபண் பாடவின் மதுக்காலத் தத்தி யாய்மணங் கவர்ந்துசா ளரந்தொறுந் தவழ்ந்தொழு கிளந்தென்றல் தித்தி யாநிற்கு மதுத்துளி தெளித்திடச் செய்தன ருய்யானம். (இ-ள்.) பித்தி மாதவி சண்பகம் பாதிரி பிறவும் - சிறுசண்பகம் குருக்கத்தி சண்பகம் பாதிரி என்பனவும் பிறவும், மண்டபம் சூழ - அம்மண்டபத்தைச் சூழ, பத்தியா வளர்த்து - வரிசையாக வளர்த்து, அளிகள் வாய்திறந்து பண்பாட - வண்டுகள் வாயினைத் திறந்து இசை பாடவும், இன்மதுக் கால - (மலர்கள்) இனிய மதுவைச் சிந்தவும், தத்தி ஆய் மணம் கவர்ந்து - (அவற்றுட்) சென்று மென்மையாகிய மணங்களைக் கொள்ளைகொண்டு, சாளரம் தொறும் தவழ்ந்து ஒழுகு - சாளரங்கள் தோறும் தவழ்ந்து செல்லுகின்ற, இளந் தென்றல் - இளந்தென்றற் காற்று, தித்தியா நிற்கு மதுத்துளி தெளித்திட - இனிக்கும் தேன் துளீயைத் தெளிக்கவும், உய்யானம் செய்தனர் - பூங்காவினைச் செய்தமைத்தார்கள் எ-று. பித்தி - பித்திகை; பிச்சி; இதனைச் சிறு சண்பக மென்பர். பாதிரியும் பிறவும் என்க. பத்தியாக, ஆய் - நுண்மை; சிறப்புமாம். உய்யானம் - உத்தியானம்; “ உய்யா னத்திடை யுயர்ந்தோர் செல்லார்” என்பது மணிமேகலை. (66) வேள்விச் சாலையும் வேதியுங் குண்டமு மேகலை யொடுதொன்னூற் கேள்விச் சார்பினாற் கண்டுகண் ணடிவிடை கிளர்சுடர் சீவற்சம் நீள்விற் சாமரம் வலம்புரி சுவத்திக நிறைகுட மெனவெட்டு வாள்விட் டொங்குமங் கலந்தொழில் செய்பொறி வகையினா னிருமித்தார். (இ-ள்.) வேள்விச்சாலையும் வேதியும் குண்டமும் மேகலை யொடு - வேள்விச் சாலைகளையும் வேதிகைகளையும் ஓமகுண்டங் களையும் (அவ்வவற்றின்) வரம்புகளோடு, தொல்நூல் கேள்விச் சார்பினால் - பழைய நூலாகிய வேதத்தின் சார்பினால், கண்டு - செய்து, கண்ணடி விடைகிளர்சுடர் சீவற்சம் நீள் வில் சாமரம் வலம்புரி சுவத்திகம் நிறைகுடம் என - கண்ணாடியும் இடபமும் விளாங்கா நின்ற விளக்கும் சீவற்சமும் மிக்க ஒளியையுடைய சாமரமும் வலம்புரிச் சங்கும் சுவத்திகமும் நிறை குடமும் என்று சொல்லப்பட்ட, வாள்விட்டு ஓங்கும் எட்டு மங்கலம் - ஒளி வீசிச் சிறந்த எட்டு மங்கலங்களையும், தொழில் செய் பொறிவகை யினால் நிருமித்தார் - தொழில் செய்கின்ற இயந்திரவகையினால் அமைத்தார்கள் எ-று. வேதி - மேடை. மேகலை - வரம்பு. கேள்வி யென்பது வேதத்திற்கு ஒரு பெயர்; கேள்வி என்பதற்கு ஆகமமென்றும் சார்பு என்பதற்குச் சார்பு நூலென்றும் கூறினுமாம்; முன் திருநகரங்கண்ட படலத்தில். “ தென்ன ரன்பினி லகப்படு சித்தர்தா முன்னர்ச் சொன்ன வாதிநூல் வழிவரு சார்புநூற் றொடர்பால்” எனக் கூறியிருத்தலுங் காண்க. நீள்வில் - மிக்க ஒளி. சீவற்சம் - திருமகள் வடிவாகிய பாவை. சுவத்திகம் - மண்டப வடிவாகியது, இங்கே கூறிய மங்கலம் எட்டனுள் விடை, சீவற்சம், வலம்புரி, சுவத்திகம் என்ப வற்றை விலக்கி, தோட்டி, முரசு, கொடி, இணைக்கயல் என்பன கூட்டி எட்டெனக் கொள்ளுதலும் உண்டு; மங்கலம் பதினாறெனலு முண்டாகையால் இவையெல்லாம் மங்கலமே யாமென்க; பெருங்கதையில், “ அயின்முளை வாளும் வயிரத் தோட்டியும் கொற்றக் குடையும் பொற்பூங் குடமும் வலம்புரி வட்டமு மிலங்கொளிச் சங்கும் வெண்க ணாடி யுஞ் செஞ்சுடர் விளக்கும் கவரியுங் கயலுந் தவிசுந் திருவும் முரசும் படாகையு மரசிய லாழியும் ஒண்வினைப் பொலிந்த வோமா லிகையுமென் றெண்ணிரண் டாகிய பண்ணமை வனப்பிற் கடிமாண் மங்கலங் கதிர்வளை மகளிர் முடிமிசை யேந்தி முன்னர் நடப்ப ” எனப் பதினாறு மங்கலம் கூறப்பட்டிருத்தல் காண்க. (67) மணங்கொள் சாந்தொடு குங்குமப் போதளாய் மான்மதம் பனிநீர்தோய்த் திணங்கு சேறுசெய் திருநிலந் தடவிவா னிரவிமண் டலநாணப் பணங்கொ ணாகமா மணவிளக் கிருகையும் பாவைக ளெடுத்தேந்தக் கணங்கொ டாரகை யெனநவ மணிகுயில் கம்பலம் விதானித்தார். (இ-ள்.) மணம் கொள் சாந்தொடு - மணங்கொண்ட சந்தனத் தோடு, குங்குமப்போது மான் மதம் அளாய் - குங்குமப்பூவையும் மிருக மதத்தையுங் கலந்து, பனிநீர் தோய்த்து இணங்கு சேறு செய்து- பனி நீரிற் கரைத்து ஒன்றுபட்ட குழம்பு ஆகிக், இருநிலம் தடவி - அதனால் பெரிய நிலத்தை மெழுகி, வான் இரவி மண்டலம் நாண- வானிக்ண் உள்ள சூரிய மண்டலமும் நாணுமாறு, பணம் கொள் நாகம் மாமணி விளக்கு - படத்தைக்கொண்ட பாம்புகளின் பெரிய மணிகளாகிய விளக்குகளை, இரு கையும் பாவைகள் எடுத்து ஏந்த- இரண்டு கைகளிலும் பாவைகள் எடுத்து ஏந்தா நிற்க, கணம் கொள் தாரகை என - கூட்டங் கொண்ட உடுக்களைப்போல,நவமணி குயில் கம்பலம் விதானித்தார் - ஒன்பது வகை மணிகளும் இடையிடை கோவையாக அமைத்த கம்பலங்களை மேலே விரித்துக் கட்டினார்கள் எ-று. இருகையும் - இரண்டு கரங்களிலும், இரண்டு புறங்களிலும். குயிற்றிய எனற்பாலது குயில் எனத் தன்வினைப் பகுதியாய் நின்றது. குயிற்றுதல் - ஈண்டுக் கோவையாக அமைத்தல். விதானித்தார்; விதானம் என்னும் பெயரடியாக வந்தது. (68) செம்பொற் கோயின்முன் சேண்டொடு காவணந் திசையெலாம் விழுங்கச்செய் தம்பொற் பாலிகைப் பாண்டில்வாய் முளைதெளித் தம்புயத் தவனாதி உம்பர்க் கேற்றபொற் கம்பல மேல்விரித் துள்ளுறத் தவிசிட்டுத் தும்பைத் தாழ்சடை யான்றமர்க் காதனஞ் சூழவிட் டதனாப்பண். (இ-ள்.) செம்பொன் கோயில் முன் - செம் பொன்னாலாகிய திருமண மண்டபத்தின் முன், சேண் தொடு காவணம் திசை எலாம் விழுங்கச் செய்து - வானை அளாவிய பந்தரைத் திக்குகளை யெல்லாம் கவருமாறு போடுவித்து, அம் பொன் பாலிகைப் பாண்டல் வாய் - அழகிய பொன்னாலாகிய பாலிகை வட்டில் களில், முளைதெளித்து - முளைகளை வித்தி, அம்புயத்தவன் ஆதி - பிரமன் முதலிய, உம்பர்க்கு ஏற்ற - தேவர்களுக்குத் தகுதியான, பொன் கம்பலம் மேல் விரித்து - பொற்கம்பலத்தை மேலே விரித்து, உள் உறத் தவிசு இட்டு - அதனுள்ளே பொருந்த ஆதனமிட்டு, தும்பை தாழ்சடையான் தமர்க்கு - தும்பைமாலையை அணிந்த நீண்ட சடையையுடைய சிவபெருமான் தமராகிய அடியார்களுக்கு, சூழ ஆதனம் இட்டு - சுற்றிலும் தவிசு அமைத்து. அதன் நாப்பண் - அதன் நடுவில் எ-று. விழுங்கல் - அகப்படுத்தல். பாண்டில்-வட்டம்; வட்டமாகிய கலத்திற்கு ஆயிற்று. ஏற்ற கம்பலம், ஏற்ற தவிசு எனக்கூட்டுக. மேல்விரித்தல் - மேற்கட்டியாக அமைத்தல். அதன் எனச் சாதியொருமையாற் கூறினார். (69) கற்ப கந்தரு வயிரவா ளரிப்பிடர் கதுவப்பொற் குறடேற்றி எற்ப டுந்துகி ராற்குடஞ் சதுரமா வியற்றிய வெருத்தத்தூண் விற்ப டும்பளிக் குத்தரந் துப்பினால் விடங்கமே னிலமூன்றாப் பொற்ப நூல்வழி விமானம்பன் மணிகளாற் பொலியச்செய் துள்ளாக. (இ-ள்.) கற்பகம் தரு வயிரவாள் அரிப்பிடர் கதுவ - கற்பகத் தரு அளித்த வயிரத்தாற்செய்த ஒளி பொருந்திய சிங்கத்தின் பிடரியிற் பொருந்த, பொன்குறடு ஏற்றி - பொற் குறடு எழுப்பி, எற்படும் துகிரால் - ஒளிபொருந்திய பவளத்தாலாகிய, குடம் - குடத்தோடு, சதுரமா இயற்றிய எருத்தத்தூண் - சதுரமாகச் செய்த கழுத்தையுடைய தூண்களை (நிறுத்தி), வில்படும் பளிக்கு உத்தரம்- ஒளி பொருந்திய பளிங்கினால் உத்தரங்களையும். துப்பினால் விடங்கம் - பவளத்தினாற் கொடுங்கைகளையும் (பரப்பி), மேல்நிலம் மூன்றாகப் பொற்ப - (இங்ஙனம்) மேல் நிலம் மூன்றாக அழகு செய்ய, நூல்வழி பல் மணிகளால் விமானம் பொலியச் செய்து - சிற்ப நூன் முறைப்படி பல மணிகளால் விமானத்தை விளங்கச் செய்து, உள்ளாக - அதன் உள்ளிடத்தே எ-று. வாள் கொடுமையெனக் கொண்டு, வாளரி - சிங்கம் எனலுமாம். துகிரால் ஆகிய, துண் நிறுத்தி, உத்தரம் விடங்கம் பரப்பி என ஏற்ற பெற்றி வினைகள் விரிக்கப்பட்டன. விடங்கம் - கொடுங்கை. நிலம் மூன்று - மூன்றடுக்கு. சதுரமா, மூன்றா என்பன விகாரம். (70) அங்க மாறுமே கால்களாய் முதலெழுத் தம்பொற்பீ டிகையாகித் துங்க நான்மறை நூல்களே நித்திலந் தொடுத்தசை தாம்பாகி எங்கணாயக னெம்பெரு மாட்டியோ டிருப்பதற் குருக்கொண்டு தங்கி னாலென நவமணி குயின்றபொற் றவிசது சமைத்திட்டார். (இ-ள்.) எங்கள் நாயகன் - எங்கள் இறைவனாகிய சோம சுந்தரக் கடவுள், எம் பெருமாட்டியோடு இருப்பதற்கு - எம் இறைவி யாகிய தடாதகைப் பிராட்டியோடு வீற்றிருப்பதற்கு, அங்கம் ஆறுமே கால்களாய் - ஆறு அங்கங்களுமே கால்களாகவும், முதல் எழுத்து அம்பொன் பீடிகையாகி - பிரணவம் அழகிய பொற்பீட மாகவும், துங்கம் நால்மறை நூல்களே - உயர்ந்த நான்கு வேதங் களாகிய நூல்களே, நித்திலம் தொடுத்து அசை தாம்பாகி - முத்தினால் தொடுத்து அசைகின்ற தாம்புகளாகவும், உருக் கொண்டு - வடிவங்கொண்டு. தங்கினாலென - தங்கினாற்போல, நவமணி குயின்ற பொன் தவிசு சமைத்திட்டார் - நவரத்தினங்கள் இழைத்த பொற்றவிசு ஒன்றைச் செய்து அமைத்தார்கள் எ-று. முதலெழுத்து - எல்லா வேதங்களுக்கும் மந்திரங்களுக்கும் முதலாகிய பிரணவ எழுத்து. ஆக என்பன ஆய் எனவும் ஆகி எனவும் திரிந்து நின்றன, குயின்ற - இழைக்கப்பட்ட: பிறவினைப் பொருள் பயப்பதுமாம். தவிசது: அது பகுதிப்பொருள் விகுதி. (71) புரந்த ரன்றரு கற்பகம் பொலந்துகில் பூண்முத லியநல்கச் சுரந்த ரும்பெற லமுதமை வகையறு சுவையுணா முதலாகப் பரந்த தெய்வவான் பயப்பச்சிந் தாமணி பற்பல வுஞ்சிந்தித் திரந்து வேண்டுவ தரத்தர வீட்டினா ரிந்திர னகர்நாண. (இ-ள்.) புரந்தரன் தரு கற்பகம் - இந்திரன் திறையாகத் தந்த கற்பகத்தரு, பொலம் துகில் பூண்முதலிய நல்க - பொன்னாடை அணி முதலியவற்றை நல்கவும், தெய்வ ஆன் - காமதேனு, பெறல் அரும் அமுதம் - பெறுதற்கரிய அமுதமும், அறுசுவை ஐவகை உணாமுதலாக - அறுசுவையோடு கூடிய ஐந்து வகை உணவும் முதலாக, பரந்த சுரந்து பயப்ப - மிகக பல்வகை யுணவுகளையும் சுரந்து கொடுக்கவும், சிந்தித்து இரந்து வேண்டுவ - நினைத்து இரந்து கேட்பனவாய, பற்பலவும் - பல பல பொருள்களையும், சிந்தாமணி தரத்தர - சிந்தாமணி தந்துகொண்டிருக்கவும், இந்திரன் நகர் நாண ஈட்டினார் - இந்திரனுலகமும் நாணுமாறு (அவற்றை வாங்கித்) தொகுத்தார்கள் எ-று. பொலம் - பொன்; “ பொன்னென் கிளவி ஈறுகெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரஞ் செய்யுண் மருங்கிற் றொடரிய லான” என்பது தொல்காப்பியம். பொலந்துகில் - பீதாம்பரம். தெய்வ வான் பரந்த சுரந்து பயப்ப வென்க. ஐவகை யுணவு - உண்பன, தின்பன, நக்குவன, பருகுவனவோடு உறிஞ்சுவன என்பர்; ஐவகை அமுதம் 'd8¨ன இயைத்தலுமாம். பரந்த: வினையாலணையும் பெயர். சிந்தாமணி - சிந்தித்தவற்றைத் தருமணி எனக் காரணக் குறி. இரந்து என்றது பொதுவகையாற் கூறியது. (72) தென்னர் சேகரன் றிருமக டிருமணத் திருமுகம் வரவேற்று மன்னர் வந்தெதிர் தொழுதுகைக் கொண்டுதம் மணிமுடி மிசையேற்றி அன்ன வாசகங் கேட்டனர் கொணர்ந்தவர்க் கருங்கலந் துகினல்கி முன்ன ரீர்த்தெழு களிப்புற மனத்தினு முந்தினர் வழிச்செல்வார். (இ-ள்.) தென்னர் சேகரன் திருமகள் - பாண்டியர்களின் முடி போல்பவனாகிய மலயத்துவச பாண்டியன் திருப்புதல்வியாரின், திருமணத் திருமுகம் - திருமணங் குறித்த ஓலையை, வரவேற்று - வரவேற்பாராய், மன்னர் எதிர் வந்து - மன்னர்கள் எதிர்கொண்டு வந்து, தொழுது - வணங்கி, கைக்கொண்டு - கையில் வாங்கி, தம் மணிமுடி மிசை ஏற்றி - தம்முடைய மணிகள் அழுத்திய முடியில் மேல் ஏற்றி, அன்ன வாசகம் கேட்டனர் - அத்திருமுகச் செய்தியைக் கேட்டு, கொணர்ந்தவர்க்கு கொண்டு வந்தவர்களுக்கு, அருங்கலம் துகில் நல்கி - அரிய அணிகளும் ஆடைகளும் அளித்து. முன்னர் ஈர்த்து எழுகளிப்பு உற - முன் இழுத்துச் செல்லும் களிப்பு மிக, மனத்தினும் முந்தினர் வழிச் செல்வார் - மனத்தினும் விரைந்து வழிக்கொண்டு செல்வார்கள் எ-று. வரவேற்றல் - வருகையை உவகையுடன் தழுவுதல்; ஏற்று - ஏற்பாராய்; ஏற்கத்தொடங்கி யென்பது கருத்து. வரவினை மன்னர் வந்து எதிர் ஏற்று எனப் பிரித்தியைப்பாரு முளர். கேட்டல் - திருமுகம் வாசிப்பார் வாசிக்கக் கேட்டல். திருமுக வாசகத்தைத் தூதர்கள் வாயாற் சொல்லக் கேட்டலுமாம். கேட்டனர், முந்தினர்: முற்றெச்சங்கள். (73) கொங்கர் சிங்களர் பல்லவர் வில்லவர் கோசலர் பாஞ்சாலர் வங்கர் சோனகர் சீனர்கள் சாளுவர் மாளவர் காம்போசர் அங்கர் மாகத ராரியர் நேரிய ரவந்தியர் வைதர்ப்பர் கங்கர் கொங்கணர் விராடர்கள் மராடர்கள் கருநடர் குருநாடர். (இ-ள்.) கொங்கர் - கொங்கு நாட்டரசரும், சிங்களர் - சிங்கள நாட்டரசரும், பல்லவர் - பல்லவ நாட்டரசரும், வில்லவர் சேரவர சரும், கோசலர் - கோசல நாட்டரசரும், பாஞ்சாலர் - பாஞ்சால நாட்டரசரும், வங்கர் - வங்க நாட்டரசரும், சோனகர் சோனக நாட்டர சரும், சீனர்கள் - சீன நாட்டரசரும், சாளுவர் - சாளுவ நாட்டர சரும், மாளவர் - மாளவ நாட்டரசரும், காம்போசர் - காம்போச நாட்டரசரும், அங்கர் - அங்க நாட்டரசரும், மகதர் - மகத நாட்டர சரும், ஆரியர் - ஆரிய நாட்டரசரும், நேரியர் - சோழ வரசரும், அவந்தியர் - அவந்தி நாட்டரசரும், வைதர்ப்பர் - விதர்ப்ப நாட்டரசரும், கங்கர் - கங்க நாட்டரசரும், கொங்கணர் - கொங்கண நாட்டரசரும், விராடர்கள் விராட நாட்டரசரும், மராடர்கள் - மராட நாட்டரசரும், கருநடர் - கருநட நாட்டரசரும், குருநாடர் - கரு நாட்டரசரும் எ-று. இவருள் கொங்கர், பல்லவர், வில்லவர், நேரியர் என்போர் தமிழ் மண்டலத்தினர்; சிங்களர், கங்கர், கொங்கணர், கருநடர் என்போர் தமிழ் மண்டலத்தின் சார்பிலுள்ளவர். வில்லவர் - விற்கொடியையுடைய சேரர். நேரியர் - நேரி மலையையுடைய சோழர். மாகதர், வைதர்ப்பர் தத்திதாந்தங்கள்: முதல் திரிந்தன. (74) கலிங்கர் சாவகர் கூவிள ரொட்டியர் கடாரர்கள் காந்தாரர் குலிங்கர் கேகயர் விதேகர்கள் பெளரவர் கொல்லர்கள் கல்யாணர் தெலுங்கர் கூர்ச்சரர்1 மச்சர்கள் மிலேச்சர்கள் செஞ்சையர் முதலேனைப் புலங்கொண் மன்னருந் துறைதொறு மிடைந்துபார் புதைபட வருகின்றார். (இ-ள்.) கலிங்கர் - கலிங்க நாட்டரசரும், சாவகர் - சாவக நாட்டரசரும், கூவிளர் - கூவிள நாட்டரசரும், ஒட்டியர் - ஒட்டிய நாட்டரசரும், கடாரர்கள் - கடார நாட்டரசரும், காந்தாரர் - காந்தார நாட்டரசரும், கலிங்கர் - குலிங்க நாட்டரசரும், கேகயர் - கேகய நாட்டரசரும், விதேகர்கள் - விதேக நாட்டரசரும், பெளரவர் - பூருமரபினரசரும், கொல்லர்கள் - கொல்ல நாட்டரசரும், கல்யாணர் - கலியாண நாட்டரசரும், தெலுங்கர் - தெலுங்க நாட்டர சரும், கூர்ச்சரர் - கூர்ச்சர நாட்டரசரும், மச்சர்கள் - மச்ச நாட்டர சரும், மிலேச்சர்கள் - மிலேச்ச நாட்டரசரும், செஞ்சையர் - செஞ்சை நாட்டரசரும், முதல் - முதலாக, ஏனைப் புலம் கொள் மன்னரும் - பிற நாட்டரசர்களும், துறைதொறும் - வழிகள் தோறும், மிடைந்து - நெருங்கி, பார் புதைபட வருகின்றார் - பூமி மறையும்படி வரு கின்றார்கள் எ-று. கலிங்கம் - வடக்கே கீழ்கடலோரத்திலுள்ளது. சாவகம் - தெற்கிலுள்ள தீவு; ஜாவா. கடாரம் - கிழக்கிலுள்ளது; பர்மாவின் ஒருபகுதி. பெளரவர் - பூருமரபினர்: தத்திதாந்தம். கல்யாணர் - சளுக்கியர். (75) இத்த கைப்பல தேயமன் னவர்களு மெண்ணிடம் பெறாதீண்டிப் பைத்த வாழிபோ னிலமகள் முதுகிறப் பரந்ததா னையராகித் தத்த நாட்டுள பலவகை வளனொடுந் தழீஇப்பல நெறிதோறும் மொய்த்து வந்தனர் செழியர்கோன் திருமகள் முரசதிர் மணமூதூர். (இ-ள்.) இத்தகைப் பல தேய மன்னவர்களும் - இத்தன்மையை யுடைய பல நாட்டு மன்னர்களும், எண் இடம் பெறாது ஈண்டி - எள்ளிடவும் இடமில்லையாக நெருங்கி, பைத்த ஆழிபோல் - பகிய கடலைப் போல, நிலமகள் முதுகு இற - பார்மகளின் முதுகு ஒடியுமாறு, பரந்த தானையராகி - (எங்கும்) பரந்த சேனையையுடைய வராகி, தத்ம் நாட்டு உள - தங்கள் தங்கள் நாட்டிலுள்ள, பலவகை வளனொடும் தழீஇ - பலவகை வளங்களையும் எடுத்துக்கொண்டு, பலநெறி தோறும் - பலவழிகள் தோறும், மொய்த்து - நெருங்கி, செழியர் கோன் திருமகள் - பாண்டியர் மன்னனாகிய மலயத்துவசன் திருமகளாரது, மணம் முரசு அதிர் முதூர் - மணமுரசு முழங்காநின்ற பழமையாகிய மதுரை நகர்க்கு, வந்தனர் - வந்தார்கள் எ-று. எண் எள்; எள் இடுதற்கும். இடம் பெறாது - இடமில்லை யாக. ஆழிபோற் பரந்த தானை யென்க. வளனொடும் - வளத்தையும்; உருபு மயக்கம்; வளனொடும் பொருந்தி யெனின் மயக்கமின்று. (76) வந்த காவல ருழையர்சென் றுணர்த்தினர் வருகென வருகுய்ப்பச் சந்த வாளரிப் பிடரணை மீதறந் தழைத்தருள் பழுத்தோங்குங் கந்த நாண்மலர்க் கொம்பினைக் கண்டுகண் களிப்புற முடித்தாமஞ் சிந்த வீழ்ந்தருள் சுரந்திடத் தொழுதுபோய்த் திருந்துதம் மிடம்புக்கார். (இ-ள்.) வந்த காவலர் - வந்த அரசர்கள்; உழையர் சென்று உணர்த்தினர் - தம் வருகையை வாயில் காப்போர் சென்று பிராட்டி யாருக்கு அறிவித்தவர்களாய், வருவ என - வரக்கடவ ரெனப் பணித்த வளவில், அருகு உய்ப்ப - தம்மை அண்மையிற் செலுத்த, சந்தவாள் அரிப்பிடர் அணைமீது - அழகிய சிங்கத்தின் பிடரியின்கண் உள்ள ஆதனத்தின்மேல், அறம் தழைத்து அருள்பழுத்து ஓங்கும் - தருமந் தழைத்துக் கருணை கனிந்து ஓங்கும், கந்தம் நாள் மலர்க் கொம்பினை மணம் பொருந்திய அன்றலர்ந்த மலர்களையுடைய கொம்புபோன்ற பிராட்டியாரை, கண் களிப்பு உற கண்டு - (தம்) கண்கள் மகிழ்ச்சி மிகக் கண்டு, முடித்தாமம் சிந்த வீழ்ந்து வணங்கி, அருள் சுரந்திடப் போய் - பிராட்டியார் திருவருள் பாலிக்கச் சென்று, தம் திருந்து இடம் புக்கார் - தத்தமக் கமைந்த திருந்திய இடங்களை யடைந்தார்கள் எ-று. உழையர் உய்ப்பக் காவலர் கண்டு வீழ்ந்து தொழுதுபோய்ப் புக்கார் என முடிக்க. வருகென - வருகவென்று பிராட்டியார் கட்டளையிட : அகரந் தொகுத்தல். அறமாகிய தழையெனவும், அருளாகிய பழம் எனவும் விரிக்க: உருவகம். (77) வரைவ ளங்களும் புறவினில் வளங்களு மருதத்தண் பணைவேலித் தரைவ ளங்களும் சலதிவாய் நடைக்கலந் தருவளங் களுமீண்டி உரைவ ரம்பற மங்கலம் பொலிந்ததிவ வூரினி நால்வேதக் கடைக டந்தவன் திருமணஞ் செயவரு காட்சியைப் பகர்கின்றேன். (இ-ள்.) வரை வளங்களும் - மலைபடு பொருள்களும், புறவினில் வளங்களும் - கான்படு பொருள்களும், மருதத் தண்பணை வேலி தரை வளங்களும் - குளிர்ந்த கழனிகளை வேலியாகவுடைய மருத நிலத்துப் பொருள்களும், சலதிவாய் நடைக்கலம் தருவளங்களும் - கடலின்கண் மரக்கலந்தந்த பொருள்களும், ஈண்டி - நிறையப் பெற்று, இவ்வூர் - இம்மதுரை நகரானது, உரை வரம்பு அற - சொல்லின் எல்லையில் அடங்காது, மங்கலம் பொலிந்துது - மங்கலமாக விளங்கியது; இனி - மேல், நால் வேதக்கரை கடந்தவன் - நான்கு மறைகளின் வரம்பைக் கடந்தவனாகிய சிவபெருமான், திருமணம் செய வரு காட்சியைப் பகர்கின்றேன் - திருமணம் செய்ய வருகின்ற அழகினைக் கூறுகின்றேன் எ-று. மருதமாகிய தரை யென்க. நடைக்கலம் - செல்லுதலை யுடைய கலம். ஈண்டி: செயப்பாட்டு வினைப்பொருளது. உரை வரம்பு உற - சொல்லினெல்லை யில்லையாக. (78) ஏக நாயகி மீண்டபின் ஞாட்பிகந் திரசித கிரியெய்தி நாக நாயக மணியணி சுந்தர நாயக னுயிர்க்கெல்லாம் போக நாயக னாகிப்போ கம்புரி புணர்ப்பறிந் தருணந்தி மாக நாயகன் மாலய னுருத்திரர் வரவின்மேன் மனம்வைத்தான். (இ-ள்.) ஏகநாயகி - ஒப்பற்ற தலைவியாகிய தடாதகைப் பிராட்டியார், மீண்டபின் - (மதுரைக்குச்) சென்றபின், நாகம் நாயகம் அணி அணி - பாம்புகளுக்குத் தலைமைபூண்ட அனந்த னாகிய அணியைத் தரித்த, சுந்தர நாயகன் - சோமசுந்தரக் கடவுள், ஞாட்பு இகந்து இரசிதகிரி எய்தி - போர்க்களத்தினீங்கி வெள்ளி யங்கிரியை அடைந்து, போக நாயகனாகி உயிர்க்கு எல்லாம் போகம்புரி புணர்ப்பு - போக நாயகனாகி உயிர்களுக்கெல்லாம் போகத்தை அருள விரும்புகின்ற திருக்குறிப்பை, அருள் நந்தி அறிந்து - கருணையையுடைய நந்தி யெம்பெருமான் உணர்ந்து, மாக நாயகன் மால் அயன் உருத்திரர் வரவின் மேல் மனம் வைத்தான் - வானுலகிற் கிறையாகிய இந்திரன் திருமால் பிரமன் உருத்திரர்கள் ஆகிய இவர்களின் வருகையைக் கருதி எ-று. போக நாயகன் - போகத்தை யளிக்கு நாயகன்; இறைவன் உமையோடு கூடியே உயிர்களுக்குப் போக மளித்தலை, “ பெண்பா லுகந்திலனேற் பேதா யிருநிலத்தோர் விண்பா லியோகெய்தி வீடுவர்காண் சாழலோ” என்னும் திருவாசகத்தானும், கண்ணுத லியோகி ருப்பக் காமனின் றிடவேட் கைக்கு விண்ணுறு தேவ ராதி மெலிந்தமை யோரார் மாறான் எண்ணிவேண் மதனை யேவ வெரிவிழித் திமவான் பெற்ற பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப் பேரின்ப மளித்த தோரார் என்னும் சிவஞான சித்தியாரானும் அறிக. புணர்ப்பு - சூழ்ச்சி, குறிப்பு. (79) சங்கு கன்னனை யாதிய சணாதிபர் தமைவிடுத் தனனன்னார் செங்க ணேற்றவர் மாலயன் முதற்பெருந் தேவர்வான் பதமெய்தி எங்க ணாயகன் திருமணச் சோபன மியம்பினா ரதுகேட்டுப் பொங்கு கின்றபே ரன்புபின் தள்ளுறப் பொள்ளென வருகின்றார். (இ-ள்.) சங்கு கன்னனை ஆதிய கணாதிபர் தமை விடுத்தனன்- சங்கு கன்னனை முதலாகவுடைய கணத்தலைவர்களை விடுத் தான்; அன்னார் - அவர்கள், செங்கண் ஏற்றவர் - சிவந்த கண்களை யுடைய உருத்திரரும், மால் அயன் முதல் - திருமாலும் பிரமனும் முதலாகிய, பெருந்தேவர் வான் பதம் எய்தி - பெரிய தேவர்களின் உயர்ந்த உலகங்களை டைந்து, எங்கள் நாயகன் திருமணச் சோபனம் இயம்பினார் - எங்கள் தலைவனாகிய சிவபெருமானது திருமணத் திருவிழாவைக் கூறினார்கள், அதுகேட்டு - அச்செய்தியைக் கேட்டு, பொங்குகின்ற - மேலெழுகின்ற, பேர்அன்பு பின்தள்ளுற - பெரிய அன்பானது பின்னின்று தள்ள, பொள்ளென வருகின்றார் - விரைந்து வருகின்றார்கள் எ-று. கன்னனை யென்பதில் ஐகாரம் சாரியையுமாம். ஏற்றவர் - பொருந்தியவர்; இடபத்தினையுடைய ரென்னலுமாம். பொள்ளென; விரைவுக் குறிப்பு. (80) அஞ்சு கோடியோ சனைபுகைந் திருமடங் கழன்றவர் தமைப்போலீ ரஞ்சு தீயுருத் திரர்புடை யுடுத்தவ ரழற்கணாற் பூதங்கள் அஞ்சு நூறுருத் திரரண்டத் துச்சிய ரரியயன் முதற்றேவர் அஞ்சு மாணையு மாற்றலும் படைத்தவ ரடுகுறட் படைவீரர். (இ-ள்.) அஞ்சு கோடி யோசனை புகைந்து - அஞ்சு கோடி யோசனை அளவு புகைந்து, இருமடங்கு ழேன்றவர் - பத்துக் கோடி யோசனை அளவு தீக்கொழுந்து விட்டெரியும் காலாக் கினியுருத்திரரும், தமைப்போல் ஈரஞ்சு தீ உருத்திரர் - அவரைப் போல (அவரைச் சுற்றிலுமுள்ள) பத்துக் காலாக்கினியுருத்திரரும், புடை உடுத்தவர் (அவருள் ஒவ்வொருவரையும்) புடை சூழ்ந்து சேவித்து நிற்கும் ஒவ்வொ'eeரு கோடி யுருத்திரர்களும், அழல் கண் நால் பூதங்கள் - நெருப்புப் போலுங் கண்களையுடைய நால்வகைப் பூதங்களும் அண்டத்து உச்சியர் அஞ்சு நூறு உருத்திரர்- அண்டத்து உச்சியிலுள்ளவராகிய (எவரும்) அஞ்சத் தக்க நூறு உருத்திரர்களும், அரி அயன் முதல் தேவர் அஞ்சும் - திருமால் பிரமன் முதலிய தேவர்களும் அஞ்சுதற் கேது வாகிய, ஆணையும் ஆற்றலும் படைத்தவர் - ஆணையையும் வலியையும் படைத்த வராகிய, அடுகுறள் படைவீரர் - (பகைவரைக்) கொல்லும் பூதப் படைவீரர்களும் எ-று. அவர் தமைப்போல் என்க. நாற்பூதங்கள் - வருணப் பூதங்கள். யாவரும் அஞ்சத்தக்க நுறு உருத்திரர் கீழண்ட கடாகத்தில் காலாக்கினி யுருத்திரர் கோடியோசனை யளவுள்ள பொன் மயமான மண்டபத்தில், ஆயிர யோசனை யுயரமும் இரண்டாயிர யோசனை அகலமும் உள்ள சிங்காதனத்தில், தமது திருமேனியின் அழற்கொழுந்துபத்துக் கோடி யோசனையும் புகை ஐந்துகோடி யோசனையும் உடையராய் வீற்றிருப்பர் என்றும், இவரைச் சூழ்ந்து இவரைப்போல் பதின்மர் உருத்திரர் இருப்பர் என்றும் இவருள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கோடி உருத்திரர்கள் பரிவாரமாகச் சூழ்ந்து சேவித்திருப்பார்கள் என்றும் கூறுப; இவற்றைச் சிவதருமோத்தரம் கோபுரவியலில், “ அண்டகடா கக்கனமுண் டொருகோடி யதனடியுட் கண்டிடுக காலாங்கி யுருத்திரர்க்குக் கனகமனை யுண்டதற்குன் னதங்கோடி யோசனையீ ரைங்கோடி மண்டியமெய்த் தழற்கொழுந்தைங் கோடியுறும் வளர்புகையும்” “ யோசனையா யீரமனையு ளரியணையி னுயரந்தான் யோசனையீ ராயிரமென் றதன்விரிவை யுணர்ந்திடுக தேசுடைய காலாங்கி யுருத்திரர்தந் திருமேனி யோசனையு முண்டழலா லயுதமென வுன்னுகவே”” “ தரித்துடையர் வலக்கரத்திற் றயங்கொளிவாள் சரத்தினையும் பரித்துடைய ரிடக்கரத்திற் பலகையினைத் தனுவினையு முருத்திரர்க ளொருபதின்ம ருறைவரவ ருழையவர்போ லுருத்திரர்க ளொவ்வொருவர்க் கொருகோடி பரிச்சிதமே” எனவருஞ் செய்யுள்களா லுணர்க. அண்டத் துச்சியிலுள்ள நூறு உருத்திரராவார் பொன்மயமான அண்டகடாகப் புறம்பே இந்திர திக்கு முதலிய பத்துத் திக்குகளுள் இந்திர திக்கில் - கபாலீசன், அதன், புத்தன், வச்சிர தேவன், பிரமத்தனன், விபூதி, அவ்வியன், சாத்தா, பினாகி, திரிசோதியன், எனப்பதின்மர்; அக்கினி திக்கில் - உருத்திரன், உதாசனன், பிங்கலன், காதகன், அயன், சுவலன், தகனன், வெப்புரு, பிரமாந்தகன், சயாந்தகன் எனப் பதின்மர்; இயம திக்கில் யாமியன், மிருத்தியு, அரன், தாதா விதாதா, கத்திரு, காலன், தன்மன், சங்கியோத்தா, வியோக்கிருதன் எனப் பதின்மர்; நிருதி திக்கில் நிருதி, மாரணன் அரந்தா, குரூரதிருட்டி, பயாந்தகன், ஊர்த்து வகாயன், விருபாட்சன், தூமிரு, லோகிதன், தெங்கிட்டிருணன் எனப் பதின்மர்; வருண திக்கில் - பெலன். அதிபெலன், பால அத்தன் மகாபெலன், சுவேதா, செயபத்திரன், தீர்க்கவாகு, செலாந்தகன், வடவாமுகன்; தீமான் எனப் பதின்மர்; வாயு திக்கில் - சீக்கிரன், லகு, வாயு வேகன், தீட்சணன், சூக்குமன், சயாந்தகன், பஞ்சாந்தகன், பஞ்சசிகன், கபத்தி மேகவாகனன் எனப்பதின்மர்; குபேர திக்கில் - நிதீசன், ரூபவான், தன்னியன், செளமியன், செளமியதேகன், பிரமத்தனன், /சப்பிரகடன், பிரகாசன், இலக்குமிவரன், சோமேசன் எனப்பதின்மர்; ஈசான திக்கில் - வியாத்தியாதீபன் ஞானபுகன், சருவன், வேதபாரகன், மாத்துருவிருத்தன், பிங்கலாட்சன், பூதபாலரன், பெலீப்பிரியன், சருவவித்தியாதிபன், தாதா எனப் பதின்மர்; அண்டகடாக வோட்டுக்குக்கீழே விட்டுணுதிக்கில் - அனந்தன், பாலன், வீரன், பாதாளாதிபதி, விபு, இடபத்துவசன், உக்கிரன், சுப்பிரன், உலோகிதன் சருவன் எனப் பதின்பர்; அண்ட கடாகத்தின்மேலே பிரம திக்கில் - சம்பு, விபு, கெணாத்தியட்சன் திரியட்சன், திரீதேசகவாதகன், சன்வாகன், விவாகன், நபன், லீபசு, விலட்சணன் எனப் பதின்மர்; ஆகிய இவர்களாம். (81) புத்தி யட்டகர் நாலிரு கோடிமேற் புகப்பெய்த நரகங்கள் பத்தி ரட்டியுங் காப்பவர் பாரிடப் படையுடைக கூர்மாண்டர் சத்தி யச்சிவ பரஞ்சுட ருதவிய சதவுருத் திரரன்னார் உய்த்த ளித்தவீ ரைபது கோடிய ருருத்திர கணநாதர். (இ-ள்.) புத்தி அட்டகர் - அட்ட வித்தியேச்சுரர்களும், நாலிரு கோடி மேல் புகப் பெய்த பத்திரட்டி நரகங்களும் காப்பவர் - இருபத்தெட்டுக்கோடி நரகங்களையும் காப்பவர்களாகிய, பாரிடப் படை உடைக் கூர்மாண்டர் - பீதப்படையினையுடைய கூர்மாண்டரும், சத்தியம் - உண்மை வடிவமான, சிவபரஞ் சுடர் உதவிய - சிவபரஞ் சோதி அருளிய, சத உருத்திரர் - நூறு உருத்திரர்களும், அன்னார் உய்த்து அளித்த ஈரைம்பது கோடியர் உருத்திரர் - அவர்கள் தந்தருளிய நூறு கோடியராகிய உருத்திரர்களும், கணநாதர் - கணத்தலைவர்களும் எ-று. நாலிரண்டு மேற் பெய்தபத்திரட்டியாகிய கோடி யென்க. காப்பவராகிய பாரிடப் படையென்க. புத்தியட்டகராவார் - சூக்கும புவனமெட்டின் அதிபதிகளாம்; அவர்கள் - அனந்தர், சூக்குமர், சிவேர்த்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரி மூர்த்தி, சீகண்டர், சிகண்டி என்போர். சூக்கும புவனமாவன - பைசாசம், இராட்சசம், யாட்சம், காந்தர்வம், மாகேந்திரம், செளமியம், பிராசேச்சுவம், பிராமம் என்பன ஆம். நாலிருகோடிமேற் புகப் பெய்த நரகங்களென்றவை - காலாக்கினி உருத்திரதேவ நாயனார் புவனத்திற்கு மேலுள்ளன; அவை அதிபாதகமுதலிய பாவங்களைச் செய்தோர் வகித்தற்கு இருபத் தெட்டுத் தளங்களாகக் கட்டின நிலை மாடங்கள் போல ஓன்றின் மேலொன்றாயிருக்கும்; இதனைச் சிவதரு மோத்தரம் கோபுரவியலில், “ இனையபுரி மிசைநிரய மெழுநான்கு கோடியுறும் நினையினவை யெழுநான்கு நிலைமடமே யெனநிலவுந் துனியுறுவ ரவைதன்னிற் றுரிசரவற் றினக்களவு முனிலிருநூ றாயிரமு முப்பஃது கோடியுமே” எனவருஞ் செய்யுளாலுமறிக. அவற்றைக் காப்போர் - பிரளய காலாக்கினியும், பிரளய காலத்துச் சூரியனும் போன்ற திருவுருவமும் கறுத்த முகமும் மழுவேந்திய கையுமுடைய கூர்மாண்ட தேவநாயனாரைப் புடை சூழ்ந்து அவரைத் துதித்து அவரைப்போலும் உருவாய்ந்த அனேக உருத்திரர்கள்; கூர்மாண்ட தேவநாயனார் அந் நிரயங்களின் மேற்பாகமாகிய கனக பூமியில் அந்நரகங்களுக்கம் அவற்றைக் காப்போருக்கும் அதிபராயுள்ளவர்; இவற்றை மேற்படி இயலில், “ மேலைய கனகவுரி வீற்றிருப்பர் கூர்மாண்டர் காலவழ லிரலியுருக் காளமுக மழுவுங்கை கோலமுறு வட்டபிழி கொண்டுடைய ரவர்தம்மைப் போலுமுருத் திரர்பலரும் புடையடைவர் போற்றிசைத்தே” என வருஞ் செய்யுளானுமுணர்க. சதவுருத்திரராவார் - மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், க'e7çல ஆகிய ஆறத்துவாக்களில் முறையாய் அமர்ந்துள்ளவர். ஈரைம்பது கோடி யுருத்திரர்கள் பிரமாண்ட தர உருத்திரர்களுக்கு உள்ளிட்டவர்கள். (82) பட்ட காரிவா யரவணி பவர்பசு பதியுருத் திரராதி அட்ட மூர்த்திகள் மேருவி னவிர்சுட ராடகர் தோடேந்தும் மட்ட றாமலா மகன்செருக் கடங்கிட மயங்கிய விதிதேற்ற நிட்டை யாலவ னெற்றியிற் றோன்றிய நீலலோ கிதநாதர். (இ-ள்.) காரிபட்டவாய் அரவு அணி - நஞ்சு பொருந்திய வாயினையுடைய பாம்புகளை அணிந்த, பவர் பசுபதி உருத்திரர் ஆதி அட்ட மூர்த்திகள் - பவர் பசுபதி உருத்திரர் முதலான எட்டு மூர்த்திகளும், மேருவின் அவிர் சுடர் ஆடகர் - மேருவைப்போல் விளங்கும் ஒளியினையுடைய ஆடகேச்சுரர்களும், தோடு ஏந்தும் - இதழ்களை ஏந்திய, மட்டு அறா - தேன் நீங்காத, மலர்மகன் செருக்கு அடங்கிட - தாமரை மலரில் வசிக்கும் பிரமனின் தருக்கு அடங்க, மயங்கிய விதி தேற்ற - அவன் மயங்கிய ஆக்கற்றொழிலைத் தெளிவிக்க நிட்டையால் அவன் நெற்றியில் தோன்றிய நீல லோகித நாதர் - நிட்டையினால் அவனது நெற்றியிலுதித்த நீல லோகித உருத்திரரும் எ-று. காரி - நஞ்சு. தோடேந்தும், மட்டறா என்னும் அடைகள் மலருக்குரியன. விதி - விதித்தல்; படைத்தல். பவர் முதலிய அட்ட மூர்த்திகளாவார்:- பவன், சருவன், ஈசானன், பசுபதி, வீமன், மாதேவன், உக்கிரன், உருத்திரன் என்போர். இதனைக் கூர்மபுராணம்அட்டமூர்த்தி யியல்புரைத்த அத்தியாயத்தில், “ எய்து நாமமென் னெனிற்பவன் சருவ னீசானன் வைதி கந்தரு பசுபதி வீமன் மாதேவ னெய்தி ளம்பிறை யணிந்திடு முருத்திர னென்ப மைதி கழ்ந்தொளிர் கண்டனெண் வடிவமும் வகுப்பாம்” எனவருஞ் செய்யுளாலறிக. ஆடகேசுரர் பாதாளத்துக்கு மேலுள்ள புவனத்தில் ஆயிரம் யோசனை உயரமுள்ள பொன்மயமான திருக் கோயிலுள் அசுரரும், நாகரும், அரக்கரும் சேவிக்க வீற்றிருப்பர். இதனைச் சிவதருமோத்தரம் கோபுரவியலில், “ அதன்மேலே நவலக்க மாடகநா யகர்புரிதான் புதுமைதிகழ் மனைபொன்னால் யோசனையா யிரம்புகலிற் கதமுடைய தயித்தியர்கள் கட்டரவர் வெட்டரக்கர் விதிமுறையிற் பதம்பணிய வீற்றிருப்பா ராடகரே” எனவருஞ் செய்யுளாலறிக. முன்னொரு கற்பத்தில் பிரமனானவன் மூன்று உலகங்களையுஞ் சிருட்டித்துத் தானே பரமென் றகங்காரங் கொண்டு சிவபெருமானை மறந்து சராசரங்களைச் சிருட்டிக்க; இவை பெருகாமையால் வருந்தி நிற்கும்போது திருமால்வந்து எம் முதல்வனாகிய சிவபெருமானை மறந்தமையால் அவை பெருக லொழிந்தன ஆதலின், இனியேனும் அவனது திருவருளைப் பெறத் தவம்புரிக என்றனன்; அவ்வாறு தவம்புரிந்தும் சிவபெருமான் வெளிப்படாமையால் வருந்தி அழும்போது கண்ணீர்த் துளிகள் பசாசுகளாய் நெருங்க, அதனைக் கண்டு இறந்தவன் போல மூர்ச்சிக்க, அச்சிவபெருமான் கனவில் வந்தருளி உன்னைப் பர மென்று மதித்தமையால் சிருட்டித் தொழில் உனக்குக் கைகூடாமற் போயிற்று; அது கைகூடும் வண்ணம் நமது பதத்திலுள்ள உருத்திர கணத்தை அனுப்புவோம் என்றருளி மறைந்தனன்; அக்கன வுணர்ந்தெழுந்த பிரமன் நல்லொழுக்கம் பூண்டு பனந்தெளிந்து சிவபெருமானை நிட்டை கூடிச் சிந்திக்க, அப்பொருமான் றிருவருளால் பதினொரு உருத்திரர்கள் அவனெற்றியினின்றும் வெளிப்பட்டு வந்து நின்றனர்; அவர்களைப் பிரமன் பார்த்து என் னெற்றியினின்று நீங்கள் வந்த காரணம் யாதென்று வினவ உன் சிருட்டித் தொழிலை முடித்தற்பொருட்டுச் சிவபெருமான் எங்களை யேவினன் என்றனர்; இதனைக் கந்தபுராணத்து உருத்திரர் கேள்விப் படலத்தாலுணர்க. நீலலோகித நாதராவார் அப்பதினொருவருள் ஒருவர். அவர்களின் பெயர்களை வருஞ் செய்யுளுரையிற்காண்க. (83) பால மேற்றசெந் தழல்விழி யுருத்திரர் பதினொரு பெயர்வாகைச் சூல மேற்றகங் காளக பாலியர் துரகத நெடுங்காரி நீல மேற்றபைங் கஞ்சுகப் போர்வையி னெடியவர் நிருவாணக் கோல மேற்றவ ரெண்மர்ஞா ளிப்புறங் கொண்டகேத் திரபாலர். (இ-ள்.) பாலம் ஏற்ற செந்தழல் விழி உருத்திரர் பதினொரு பெயர் - நெற்றியிற் பொருந்திய சிவந்த அழற் கண்ணையுடைய பதினொரு உருத்திரர்களும், வாகைச் சூலம் ஏற்ற கங்காள கபாலியர்- வெற்றியையுடைய சூலத்தை யேந்திய முழுவெலும்பைத் தரித்தவரும் கபாலத்தைக் கையிலேந்தியவருமான சிவகணத் தலைவர்களும், துரகத நெடுங்காரி - குதிரையையுடைய பெரிய சாத்தனும், நீலம் ஏற்ற பைங்கஞ்சுகப் போர்வையின் நெடியவர் - கரிய நிறம் பொருந்திய பசிய சட்டையைத் தரித்த சிவகணத் தலைவர்களும், நிருவாணக் கோலம் ஏற்றவர் - ஆடையில்லாக் கோலமுடையராய், ஞாளிப்புறம் கொண்ட கேத்திர பாலர் எண்மர் - ஞாளியின் முதுகிற் றங்குதலைக் கொண்ட கேத்திர பாலர் எண்மரும் எ-று. பாலம் - நெற்றி. பெயர் என்பது வழக்கு, ஏற்ற பென்பது கபாலியர் என்பதன் விகுதியைக் கொண்டு முடியும். கங்காளர் - முழுவெலும் பணிந்தவர். ஏற்றவராகிய கேத்திர பாலர் எண்மரென்க, ஞாளி - நாய். கேத்திரம் - மே-த்திரம். உருத்திரர் பதினொருவர்: மாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விசையன், வீமதேவன், பவோற்பவன், கபாலி, செளமியன் என்போர். கேத்திர பாலர் எண்மர்: அசிதாந்தகன், ருரு, சண்டர், குரோதனர், உன்மத்தர், கபாலி, பீடணர், சங்கரர் என்போர். (84) செய்ய தாமரைக் கண்ணுடைக் கரியவன் செம்மலர் மணிப்பீடத் தையன் வாசவ னாதியெண் டிசைப்புலத் தமரரெண் வசுதேவர் மையில் கேள்விசா லேழெழு மருத்துகள் மருத்துவ ரிருவோர்வான் வெய்ய வாள்வழங் காறிரண் டருக்கரோர் வெண்சுடர் மதிச்செல்வன். (இ-ள்.) செய்யதாமரைக் கண் உடை கரியவன் - செந் தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும், செம்மலர் மணிப்பீடத்து ஐயன் - செந்தாமரை மலரை அழகிய பீடமாகக் கொண்ட பிரமனும். வாசவன் ஆதி எண் திசைப் புலத்து அமரர் - இந்திரன் முதலான எட்டுத் திக்குப்பாலர்களும், எண் வசுதேவர் - எட்டு வசுக்களும் மை இல் கேள்வி சால் ஏழெழு மருத்துகள் - குற்றமற்ற நூற் கேள்விமிக்க நாற்பத்தொன்பது மருத்துக்களும், மருத்துவர் இருவோர் - அச்சுவனி தேவரிருவரும், வான் வெய்ய வாள் வழங்கு ஆறிரண்டு அருக்கர் - வானினின்றும் வெப்பமாகிய ஒளியை வீசும் பன்னிரண்டு சூரியர்களும், வெண்சுடர் ஓர் மதிச் செல்வன் - வெள்ளிய ஒளியினையுடைய ஒரு சந்திரனும் எ-று. திசைப்பாலகர் பெயர்கள் முற் கூறப்பட்டன. அட்ட வசுக்கள்: அனலன், அணிலன், ஆபத்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்தியூடன், பிரபாசன் என்போர். மருத்துகள் - காசிபர்க்குத் திதி யிடம் உதித்தவர்கள்; இந்திரனால் கருஏழு கூறாக்கப்பட ஒவ்வொரு கூற்றிலிருந்தும் எவ்வேழு மைந்தர்களாக நாற்பத்தொன்பதின்மர் தோன்றினர்; இவர்கள் காற்றினுருவாய் இயங்குவர். மருத்துவர் இருவர் - சூரியன் புதல்வர். ஆறிரண்டருக்கர் - காசிபருக்கு அதிதியிடம் பிறந்தவர்கள்; தாதை, மித்திரன், அரியமான், சுக்கிரன், வருணன், அஞ்சுமான், பகன், விவச்சுவந்தன், பூடன், சவிதன், துவட்டா, விட்டுணு என்போர். (85) கையுங் கால்களுங் கண்பெற்றுக் கதிபெற்ற கடும்புலி முனிச்செல்வன் பைய ராமுடிப் பதஞ்சலி பாற்கடல் பருகிமா தவன்சென்னி செய்ய தாள்வைத்த சிறுமுனி குறுமுனி சிவமுணர் சனகாதி மெய்யு ணர்ச்சியோர் வாமதே வன்சுகன் வியாதனா ரதன்மன்னோ. (இ-ள்.) கையும் கால்களும் கண்பெற்று - கைகளிலும் கால்களிலும் கண்களைப் பெற்று, கதிபெற்ற கடும்புலி முனிச் செல்வன் - வீடு பேற்றை யடைந்த கடிய தவமாகிய செல்வத்தினை யுடைய புலிக்கால் முனியும், பைமுடி அரா பதஞ்சலி - படத்தைக் கொண்ட முடியினையுடைய பாம்பாகிய பதஞ்சலி முனியும், பால்கடல் பருகி - பாற்கடலைக் குடித்து, மாதவன் சென்னி - திருமாலின் முடியில், செய்ய தாள் வைத்த - சிவந்த அடிகளை வைத்த, சிறுமுனி - உபமன்னியு முனியும், குறுமுனி - அகத்திய முனியும், சிவம் உணர் சனக ஆதி மெய் உணர்ச்சியோர் - சிவத்தை உணர்ந்த சனகர் முதலிய மெய்யுணர்வையுடைய நான்கு முனிவர்களும், வாமதேவன் சுகன் வியாதன் நாரதன் - வாமதேவமுனியும் சுகமுனியும் வியாத முனியும் நாரத முனியும் எ-று. கடுமை தவத்தின்மேற்று; புலியென்பது குறித்துமாம். மன்னம் ஓவும் அசைகள். புலிமுனி - வியாக்கிர பாதர்; இவர் மத்தியந்தன முனிவரின் புதல்வர்; மழமுனிவர் என்னும் பெயருடையவர்; இவர் தில்லைத் திருப்பதியை யடைந்து சிவபெருமானை வணங்கி, அருச்சித் தற்குப் பழுதில்லாத மலர்களை விடியுமுன் மரங்களிலேறிக் கொய்தற் பொருட்டாகப் புலிக்காலும் கையும் அவற்றிற் கண்களும் பெற்றார். பதஞ்சலி - அத்திரி முனியின் பத்தினியாகிய அனசூயை யிடம் தோன்றியவர்; ஆதிசேடன் அவதாரம்; சேடன் சிவசிந்தனை யுடன் அஞ்சலி செய்திருக்கும் அன சூயையின் கையில் விழுந்து பின் பாதத்தில் விழுந்து அக்காரணத்தால் பதஞ்சலியெனப் பெயரெய்தின னென்ப. இவ்விருவரும் தவம்புரிந்து சிதம்பரத்தில் சிவபெருமான் புரியும் ஆனந்தத் தாண்டவத்தைத் தரிசித்துக் கொண்டிருப் போராவர். உபமன்னியு - வியாக்கிர பாதருக்கு வசிட்டரின் தங்கையிடம் உதித்தவர்; குழந்தையாயிருக்கும் பொழுது சிவபெரு மானைக் குறித்துத் தவம் புரிந்து இறைவனால் அளிக்கப்பட்ட பாற்கடலையுண்டவர்; கண்ணனுக்குச் சிவதீக்கை செய்வித்தவர்; இவர் பாற்கடலுண்ட செய்தி, “ பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கடலீந்த பிரான் ” எனத் திருப்பல்லாண்டிலும், “ அத்தர் கந்த வருட்பாற் கடலுண்டு; ” எனத் திருத்தொண்டர் புராணத்திலும், கண்ணனுக்குச் சிவதீக்கை செய்வித்தது, “ யாத வன்றுவ ரைக்கிறை யாகிய மாத வன்முடி மேலடி வைத்தவன்” எனத் திருத்தொண்டர் புராணத்திலும் கூறப்பட்டுள்ளன. இவ் வரலாறுகளைக் கோயிற் புராணத்திலும் பிறவற்றிலுங் காண்க. ஏனையரைப் பற்றிய குறிப்புக்கள் புராண வரலாற்றிற் கூறப் பட்டன. (86) எழுவ ரன்னையர் சித்தர்விச் சாதர ரியக்கர் கின்னரர் வேத முழுவ ரம்புணர் முனிவர்யோ கியர்மணி முடித்தலைப் பலநாகர் வழுவில் வான்றவ வலியுடை நிருதர்வாள் வலியுடை யசுரேசர் குழுவொ டும்பயில் பூதவே தாளர்வெங் கூளிக ளரமாதர். (இ-ள்.) எழுவர் அன்னையர் - ஏழு மாதரும், சித்தர் - சித்தரும், விச்சாதரர் - வித்தியாதரரும், இயக்கர் - இயக்கரும், கின்னரர் - கின்னரரும், வேதவரம்பு முழு உணர் முனிவர் யோகியர் - மறையின் எல்லை முடிய உணர்ந்த முனிவர்களும் யோகிகளும், மணி முடித்தலை பல நாகர் - மணி விளங்கும் உச்சியையுடைய தலையினைகயுடைய பல உரகர்களும், வழு இல் வான் தவ வலி உடை நிருதர் - குற்றமில்லாத சிறந்த வலிமையையுடைய அரக்கர் களும், வாள் வலி உடை அசுரேசர் - வாளின் வலியுடைய அசுரர் தலைவர்களும், குழுவொடும் பயில் பூத வேதாளர் - கூட்டத்தோடு உலாவும் பூத வேதாளர்களும், வெம் கூளிகள் - கொடிய கூளிகளும், அரமாதர் - தேவமகளிரும் எ-று. எழுவராகிய அன்னையர் என்க: சத்தமாதர். (87) ஆண்டி னோடய னம்பரு வந்திங்க ளாறிரண் டிருபக்கம் ஈண்டு மைம்பொழு தியோகங்கள் கரணங்க ளிராப்பக லிவற்றோடும் பூண்ட நாழிகை கணமுதற் காலங்கள் பொருகட னதிதிக்கு நீண்ட மால்வரை திக்கய மேகமின் னிமிர்ந்தவைம் பெரும்பூதம். (இ-ள்.) ஆண்டினோடு அயனம் பருவம் ஆறிரண்டு திங்கள் இருபக்கம் - ஆண்டுகளும் அயனங்களம் பருவங்களும் பன்னிரண்டு மாதங்களும் இரண்டு பக்கங்களும், ஈண்டும் ஐம்பொழுது யோகங்கள் கரணங்கள் இராப்பகல் இவற்றோடும் - நெருங்கிய ஐந்து பொழுதுகளும் யோகங்களும் கரணங்களும் இரவும் பகலுமாகிய இவற்றினோடும், பூண்ட நாழிகை கணம் முதல் காலங்கள் பொருந்திய நாழிகையும் கணமும் முதலிய காலங்களும், பொருகடல் நதி திக்கு - மோதும் கடல்களும் ஆறுகளும் திசை களும், நீண்ட மால்வரை - நெடிய பெரிய மலைகளும், திக்கயம் - திக்கு யானைகளும். மேகம் - மேகங்களும், மின் - மின்னல்களும், நிமிர்ந்த ஐம்பெரும் பூதம் - உயர்ந்த ஐந்து பெரிய பூதங்களும் எ-று. அயனம் - உத்தராயணம், தக்கிணாயனம். பருவம் - கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். இருபக்கம் - முற்பக்கம், பிற்பக்கம்; சுக்கில பக்கம், கிருட்டிண பக்கம். ஐம்பொழுது - மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல். யோகங்கள் - விட்கம்பம் முதலிய இருபத்தேழு. கரணங்கள் - பவம் முதலிய பதினொன்று திக்குவரை யென்னலுமாம். இவையெல்லாம் இவற்றிற்குத் தெய்வங்களுண் டென்னுங் கொள்கையாற் கூறப் பட்டன. (88) மந்தி ரம்புவ னங்கடத் துவங்கலை வன்னங்கள்1 பதம்வேதந் தந்தி ரம்பல சமயநூற் புறந்தழீ இச் சார்ந்தநூ றருமாதி முந்தி ரங்கிய சதுர்விதஞ் சரியையே முதலிய சதுட்பாதம் இந்தி ரங்குநீர் முடியவ ரடியவ ரிச்சியா வெண்சித்தி. (இ-ள்.) மந்திரம் - மந்திரங்களும். புவனங்கள் - புவனங்களும், தத்துவம் - தத்துவங்களும், கலை - கலைகளும். வன்னங்கள் - எழுத்துக் களும், பதம் - பதங்களும், வேதம் - மறைகளும். தந்திரம் - ஆகமங் களும், பல சமயநுல் - பலவகைச் சமய நுல்களும், புறம்தழீஇ சார்ந்த நூல் - இவற்றின் புறமாக இயைந்து பொருந்திய நூல்களும், தருமம் ஆதி முந்து இரங்கிய - அற முதலாக முதன்மையாகச் சொல்லப் பட்ட, சதுர் விதம் - உறுதிப் பொருள் நான்கும், சரியை முதலிய சதுட் பாதம் - சரியை முதலிய நான்கு பாதங்களும், இந்து இரங்கு நிர் முடியவர் அடியவர் இச்சியா எண்சித்தி - சந்திரனையும் ஒலிக்குங் கங்கையினையும் அணிந்த முடியினையுடைய சிவபெருமானுடைய அடியார்கள் விரும்பாத எட்டுச் சித்திகளும் எ-று. மந்திரம் முதலிய ஆறும் அத்துவாக்கள் எனப்படும்; மந்திரம், பதம், வன்னம் என்பன ஒலிவடிவும், கலை, தத்துவம் புவனம் என்பன பொருள் வடிவும் ஆம். புறந்தழுவிய நூல்கள் - பொருbVல், இசை நூல் முதலியன. இரங்கிய - ஒலித்த; ஈண்டுக் கூறப்பட்ட என்னும் பொருளது. சதுட்பாதம்: வடசொல் திரிந்து நின்றது. எண் சித்தி: அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன; சிவனடியார்கள் எட்டுச் சித்தியும் விரும்பாரென்பதனை, “ இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும் வந்துழி வந்துழி மறுத்தன ரொதுங்கி” எனப் பட்டினத்துப் பிள்ளையார் கூறுமாற்றானு மறிக. (89) ஆயி ரங்கட லனையவாய்ப் பரந்தெழு மாயிர மனிகத்துள் ஆயி ரங்கதி ரனையரா யுருத்திர ரந்தரத் தவரண்டம் ஆயி ரந்தகர் பட்டெனத் துந்துபி யாயிரங் கலந்தார்ப்ப ஆயி ரஞ்சத கோடியோ சனைவழி யரைக்கணத் திடைச்செல்வார். (இ-ள்.) ஆயிரம் - கடல் அனையவாய்ப் பரந்து எழும் ஆயிரம் அனிகத்துள் - ஆயிரங்கடல்களை ஒப்பனவாய்ப் பரந்து எழுந்த எல்லை அற்ற சேனைகளுள், ஆயிரம் கதிர் அனையராய் உருத்திரர் அந்தரத்தவர் - அளவற்ற சூரியர்களை ஒத்தவர்களாய் உருத்திரர் களும் தேவர்களும், ஆயிரம் அண்டம் தகர்பட்டென - பல்லாயிர அண்டங்களும் உடைபட்டனவென்ற சொல்லுமாறு, ஆயிரம் துந்துமி கலந்து ஆர்ப்ப - எண்ணிறந்த வாத்தியங்கள் தம்முட் கலந்து ஒலிக்க, ஆயிரம் சதகோடி யோசனை வழி - நூறாயிரங்கோடி யோசனை வழியை, அரைக்கணத் திடைச்செல்வார் - அரைக் கணப்பொழுதிற் சென்று கடப்பாராயினர் எ-று. ஆயிரம் முதலியன அளவின்மை குறிப்பன. பட்டென - பட்டாலென. சதம் - நூறு. சத ஆயிரம் என மாறுக. (90) சித்தந் தேர்முனி வேந்தருந் தேவருஞ் சிவனுருத் தரித்தோருந் தத்தந் தேர்முத லூர்தியர் வார்திகழ் சந்தன மணிக்1கொங்கைக் கொத்தந் தேமலர்க் குழன்மனை யாரொடுங் குளிர்விசும் பாறாச்சென் றத்தந் தேரிடை யாள்பங்க னணிவரைக் கணியராய் வருகின்றார். (இ-ள்.) சித்தம் தேர் மனிவேந்தரும் - மனந்தெளிந்த முனி புங்கவர்களும், தேவரும் - தேவர்களும், சிவன் உரு தரித்தோரும் - உருத்திரர்களும், தத்தம் தேர் முதல் ஊர்தியர் - தங்கள் தங்கள் தேர் முதலிய ஊர்திகளையுடையராய், வார்திகழ் - கக்சு விளங்கம், சந்தனம் - களபமணிந்த, மணிக்கொங்கை - குசுகந்தினையுடைய கொங்கைகளையும், அம் தேம் மலர்க்கொத்து - அழகிய தேனை யுடைய பூங்கொத்தினை யணிந்த, குழல் - கூந்தலையுமுடைய, (தத்தம்) மனையாரொடும் - தங்கள் தங்கள் மனைவியரோடும், குளிர் விசும்பு ஆறாச் சென்று - குளிர்ந்த வான் வழியாகச் சென்று, அ தந்து ஏர் இடையாள் பங்கன் - அந்த நூல் போலும் இடை யினையுடைய உமையவளை ஒரு பாகத்திலுடைய சிவபிரானது, அணிவரைக்கு அணியராய் வருகின்றார் - அழகிய கயிலை மலைக்கு நெருங்கியவராய் வருகின்றார்கள் எ-று. தேர்தல் - ஆராய்தல்; ஈண்டு ஆராய்ந்த தெளிவைக் குறிக்கும். தத்தம் என்பதனை மனையாரொடுங் கூட்டுக. ஆறா - வழியாக: விகாரம். அ: பண்டறி சுட்டு. (91) இழிந்த வூர்தியர் பணிந்தெழும் யாக்கைய ரிறைபுகழ் திருநாமம் மொழிந்த நாவினர் பொடிப்பெழு மெய்யினர் முகிழ்த்தகை முடியேறக் கழிந்த வன்பினர் கண்முதற் புலங்கட்குங் கருணைவான் சுவையூறப் பொழிந்த வானந்தத் தேனுறை திருமலைப் புறத்துவண் டெனமொய்த்தார். (இ-ள்.) இழிந்த ஊர்தியர் - (இங்ஙனம் வந்தவர்கள்) ஊர்திகளினின்றும் இறங்கினவர்களாய், பணிந்து எழும் யாக்கையர்- விழுந்து பணிந்தெழும் உடலையுடையவர்களாய், இறைபுகழ் திருநாமம் மொழிந்த நாவினர் - இறைவன் திருப்புகழ்களையும் திருப்பெயர்களையும் பரவும் நாவினை யுடையவர்களாய், பொடிப்பு எழுமெய்யினர் - புளகங்கொண்ட மெய்யினை யுடையவர்களாய், முகிழ்த்தகை முடிபினையுடையவர்களாய், கண்முதல் புலங்கட்கும் - கண் முதலிய ஐம்பொறிகளுக்கும், கருணைவான் சுவை ஊற - அருளாகிய சிறந்த சுவை சுரக்குமாறு, பொழிந்த ஆனந்தத் தேன் உறை - பொழிந்த ஆனந்தத்தேனாகிய இறைவன் வதியும், திருமலைப் புறத்து - திருமலையின் வெளியில், வண்டு என மொய்த்தார் - வண்டுகள்போல நெருங்கினார்கள் எ-று. இழிந்த வூர்தியர் முதலியவற்றில் விகுதி பிரித்துக் கூட்டுக. கழிந்த - மிக்க: கழியென்னும் உரிச்செல்லடியாக வந்தது. கண் முதற் புலனாற் காட்சியுமில்லோன் ஆகிய இறைவன் அப்புலங்கட்கும் எளி வந்த பெருங் கருணையைக் கூறினார்; “ உணர்வி னேர்பெற வருஞ்சிவ போகத்தை யொழிவின்றி யுருவின்கண் அனையு மைம்பொறி யளவினு மெளிவர வருளினை யெனப்போற்றி” எனத் திருத்தொண்டர் புராணம் கூறுமாறும் காண்க; ஆனந்தத் தேனுறை திருமலை என்பது மிக்க நயமுடைத்து; “ அந்த விடைமருதி லானந்தத் தேனிருந்த பொந்தைப் பரவிநாம் புவல்லி கொய்யாமோ” என்னும் திருவாசகம் இங்கே சிந்திக்கற்பாலது. (92) விரவு வானவர் நெருக்கற வொதுக்குவான் வேத்திரப் படையோச்சி அரவு வார்சடை நந்தியெம் பிரானவரணிமணி முடிதாக்கப் பரவு தூளியிற் புதைபடு கயிலையம் பருப்பதம் பகல்காலும் இரவி மண்டலத் தொடுங்குநா ளொடுங்கிய விந்துமண் டலமானும். (இ-ள்.) விரவு வானவர் நெருக்கு அற ஒதுக்குவான் - நெருங்கிக் கூடிய தேவர்களின் நெருக்கமற ஒதுக்கும்பொருட்டு, அரவுவார் சடை - பாம்பினையணிந்த நீண்ட சடையினையுடைய, எம்பிரான் நந்தி - எம்பிரானாகிய திருநந்தி தேவர். வேத்திரப்படை ஓச்சி - பிரம்புப்படையை வீசி , அவர் அணிமணி முடிதாக்க - அத் தேவர்கள் அணிந்த மணி முடிகளிற்றாக்குதலால், பரவு தூளியில் (சிந்திப்) பரந்தமணித்துகளினுள், புதைபடு கயிலை அம் பருப்பதம்- மறைந்த அழகிய கயிலைமலையானது, பகல் காலும் இரவி மண்டலத்து - ஒளிவீசும் சூரிய மண்டலத்துள், ஒடுங்கு நாள் ஒடுங்கிய - அமைவாசையில் ஒடுங்கிய, இந்து மண்டலம் மானும்- சந்திர மண்டலத்தை ஒக்கும் எ-று. ஒதுக்குவான்; வினையெச்சம். மணித்துகளின் பரப்பு இரவி மண்டலமும், அதனுள் மறைந்த வெள்ளிமலையாகிய திருக்கயிலை சந்திர மண்டலமும் போன்றன வென்றார். ஒடுங்கு நாள் - கலைகள் ஒடுங்கிய நாள்: அமாவாசை. (93) வந்த வானவர் புறநிற்ப நந்தியெம் வள்ளலங் குள்ளெய்தி எந்தை தாள்பணிந் தையவிண் ணவரெலா மீண்டினா ரெனவீண்டுத் தந்தி டென்னவந் தழைத்துவேத் திரத்தினாற் றராதரந் தெரிந்துய்ப்ப முந்தி முந்திவந் திறைஞ்சினார் சேவடி முண்டக முண்டக முடிசூட. (இ-ள்.) வந்த வானவர் புறம் நிற்ப - வந்த தேவர்கள் புறத்தில் நிற்க, எம் வள்ளல் நந்தி அங்கு உள் எய்தி - எம் வள்ளலாகிய திரு நந்தி தேவர் அங்கு உள்ளே சென்று, எந்தை தாள் பணிந்து - எம் அப்பனாகிய இறைவன் திருவடிகளை வணங்கி, ஐய - ஐயனே, விண்ணவர் எலாம் ஈண்டினார் என - தேவர்கள் அனைவரும் வந்திருக்கின்றார்களென்று கூற, ஈண்டு தந்திடு என்ன - (ஆயின்) இங்கு அழைப்பாயென்று கட்டளையிட, வந்து அழைத்து தராதரம் தெரிந்து வேத்திரத்தினால் உய்ப்ப - வந்து அவர்களை அழைத்து அவரவர் தகுதியை யறிந்து பிரப்பங்கோலாற் குறித்துச் செலுத்த, சேவடி முண்டகம் முடிசூட - சிவந்த திருவடிகளாகிய தாமரை மலர்களைத் தங்கள் முடிகள் சூடுமாற, முந்தி முந்தி வந்து இறைஞ்சினார் - முற்பட்டு முற்பட்டு வந்து வணங்கினார்கள் எ-று. தந்திடல் - கொணர்தல். தரம் - தகுதி. தராதரம் - தகுதி வேற்றுமை. பிரம்பாற் குறித்துக்காட்டி உய்ப்ப. (94) தீர்த்தன் முன்பணிந் தேத்துகின் றார்களிற் சிலர்க்குத்தன் றிருவாயின் வார்த்தை நல்கியுஞ் சிலர்க்கருண் முகிழ்நகை வழங்கியுஞ் சிலர்க்குக்கண் பார்த்து நீண்முடி துளக்கியுஞ் சிலர்க்கருட் பரிசிறந் தெழுந்தண்டங் காத்த கண்டனோர் மண்டபத் திடைபுக்குக் கடிமணக் கவின்கொள்வான். (இ-ள்.) தீர்த்தன் - சிவபெருமான், முன்பணிந்து ஏத்து கின்றார்களில் - தமது திருமுன் வணங்கிப் பரவுகின்றார்களில், சிலர்க்கத் தன் திருவாயின் வார்த்தை நல்கியும் - சிலருக்குத் தமது திருவாயால் வார்த்தையருளியும், சிலர்க்கு அருண் முகிழ் நகை வழங்கியும் - சிலருக்கு அருளோடு கூடிய புன்னகை அரும்பியும், சிலர்க்குக் கண் பார்த்தும் - சிலருக்குத் திருநோக்கருளியும், சிலர்க்கு நீண்முடி துளக்கியும் - சிலருக்கு நீண்டமுடியினை அசைத்தும், அருள் பரிசில் தந்து - (இவ்வாறு) அருட்கொடை நல்கி, அண்டம் காத்த கண்டன் எழுந்து - அண்டங்கள் பொன்றாது (நஞ்சினை யுண்டு) காத்தருளிய திருமிடற்றினையுடைய இறைவன் எழுந்து, ஓர் மண்டபத்திடை புக்கு - ஒரு மண்டபத்துட் புகுந்து, கடிமணக் கவின் கொள்வான் - திருமணக் கோலம் கொள்ளுதற்கத் திருவுள்ளங்கொள்ள எ-று. தீர்த்தன் - தூயன். தகுதிக்கேற்ப வார்த்தை முதலியன வழங்கி யருளினன்; அவையெல்லாம் அருட்கொடையே யென்றார். நஞ்சினைத் தரித்ததாகலின் கண்டம் காத்ததென்றார். கொள்வான்- கொள்ளக்கருத. (95) ஆண்ட நாயகன் றிருவுளக் குறிப்புணர்ந் தளகைநா யகனுள்ளம் பூண்ட காதன்மேற் கொண்டெழு மன்புந்தன் புனிதமெய்த் தவப்பேறும் ஈண்ட வாங்கணைந் தெண்ணிலா மறைகளு மிருவரு முனிவோருந் தீண்ட ருந்திரு மேனியைத் தன்கையாற் றீண்டிமங் கலஞ்செய்வான்1. (இ-ள்.) ஆண்டநாயகன் திரு உளக் குறிப்பு உணர்ந்து அளகை நாயகன் - எல்லா உயிர்களையும் ஆண்டருளிய இறைவனது திருவுள்ளக் குறிப்பினை அறிந்து அளகைப் பதியின் தலைவனாகிய குபேரன், உள்ளம்பூண்ட காதல் மேற்கொண்டு - உள்ளத்திலுள்ள விருப்பத்தை மேற்கொண்டு, எழும் அன்பும் - எழுந்த அன்பும், தன் புனித மெய்த் தவப்பேறும் ஈண்ட - தமது தூய உண்மைத் தவப்பயனும் வந்து கைகூட, ஆங்கு அணைந்து - அங்ம மண்டபத்திற் சென்று, எண் இலா மறைகளும் - அளவில்லாத வேதங்களும், இருவரும் - திருமால் அயன் என்னும் இருவரும், முனிவோரும் - முனிவர்களும், தீண்டு அரும் திருமேனியை - தீண்டுதற்கரிய திருமேனியை, தன் கையால் தீண்டி மங்கலம் செய்வான் - தன் கையாற் றொட்டுத் திருமணக் கோலம் செய்யத் தொடங்கினான் எ-று. குபேரன் தோழனாகலின் மணக்கோலஞ் செய்வானாயினான். (96) பூந்து கிற்படாங் கொய்சகத் தானைபின் போக்குகோ வணஞ்சாத்தி ஏந்தி ரட்டைஞாண் பட்டிகை யிறுக்கிவண் டிரைக்குநாண் மலர்க்குஞ்சி வேய்ந்து கற்பகப் புதுமலர்ச் சிகழிகை மிலைந்துநீ றணிமெய்யிற் சாந்த மான்மதந் தண்பனி நீரளாய்த் தடக்கையான் மட்டித்தான். (இ-ள்.) பூந்துகில் படாம் - அழகிய ஆடையை, கொய்சகத் தானை - (முன் புறத்தில்) கொய்சக ஆடையாகவும், பின் - பின்புறத்தில், போக்கு கோவணம் சாத்தி - போக்குகின்ற கோவண மாகவும் சாத்தி, ஏந்து இரட்டை ஞாண் பட்டிகை இறுக்கி - அழகு மிக்க இரட்டையாகிய அரைஞானைப் பட்டிகையோடு இறுக்கி, வண்டு இரைக்கும் நாள் மலர்க் குஞ்சி வேய்ந்து - வண்டுகள் ஒலிக்கும் அன்றலர்ந்த மலர்களை யணிந்த குஞ்சியைக் கொண்டை யாகப் புனைந்து, கற்பகம் புது மலர் கிசழிகை மிலைந்து - கற்பகத்தின் புதிய மலர்களாற் றொடுத்த மாலையை (அக்கொண்டையில்) சூடி, நீறு அணி மெய்யில் - திருநீறு தரித்த திருமேனியில், சாந்தம் மான் மதம் தண் பனிநீர் அளாய் - சந்தனத்தோடு மிருக மதத்தையும் குளிர்ந்த பனி நீரையுங் கலந்து, தடக்கையால் மட்டித்தான் - நீண்ட கையாற் பூசினான் எ-று. துகிலாகிய படாம். கொய்சகம் - அடுக்கடுக்காக மடித்துச் செருகுவது. பட்டிகை - அரைக்கச்சு. குஞ்சியை வேய்ந்து. அளாய்: அளாவியெனபதன் விகாரம். மட்டித்தல் - அப்புதல், பூசுதல். (97) இரண்டு செஞ்சுடர் நுழைந்திருந் தாலென ணிணைமணிக் குழைக்காதிற் சுருண்ட தோடுபொற் குண்டலந் திணியிரு டுரந்துதோட் புறந்துள்ள மருண்ட தேவரைப் பரமென மதிப்பவர் மையல்வல் லிருண்மான1 இருண்ட கண்டமேன் முழுமதி கோத்தென விணைத்தகண் டிகைசாத்தி. (இ-ள்.) இணைமணிக் குழைக்காதில் - இரண்டாகிய அழகிய சங்கக் குழைகள் அணிந்த திருச் செவிகளில், இரண்டு செஞ்சுடர் நுழைந்து இருந்தாலென - இரண்டு சூரியர்கள் குடிபுகுந்து இருந்தாற் போல, சுருண்ட பொன்தோடு குண்டலம் - சுருண்ட பொற்றோடும் பொற் குண்டலமும், திணி இருள் துறந்து தோள் புறம் துள்ள - செறிந்த இருளை ஒட்டித் தோட்புறத்தில் அசைந் தாடத் (தரித்தும்), மருண்ட தேவரை - மயக்கமுற்ற தேவர்களை, பரம் என மதிப்பவர் - பரம் பொருளென்று கருதுபவரின், மையல் வல் இருள்மான இருண்ட - மயக்கமாகிய வலிய இருளையொக்க இருண்ட, கண்டமேல் - திருமிடற்றின்மேல், இணைத்த கண்டிகை சாத்தி - இணைத்துச் செய்த வயிரக் கண்டிகையைத் தரித்தும் எ-று. துள்ளுமாறு தரித்து என வருவித்துரைக்க. மருண்ட தேவர் - பாசத்தாற் கட்டுண்ட தேவர்; மயக்கத்தால் தம்மையே பரமெனக் கருதிய ஏனைத் தேவர்; ஈறிலாதவனாகிய ஈசனையன்றி ஏனைத் தேவரைப் பரமென நினைப்பது அறியாமை யென்றார்; “ சாவமுன் னாட்டக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சமஞ்சி ஆவவெலந் தாயென் றவிதா விடுநம் மவரவரே மூவரென் றேயெம் பிரானொடு மெண்ணிவிண் ணாண்டுமண்மேல் தேவரென் றேயிறு மாந்தென்ன பாவந் திரிதவரே” என்னும் திருவாசகமும் காண்க. கோத்தென: விகாரம். முதலடி: இல்பொருளுவமம். (98) வலங்கி டந்தமுந் நூல்வரை யருவியின் வயங்குமார் பிடைச்சென்னித் தலங்கி டந்தவெண் டிங்களுற் றமுதெனத் தரளமா லிகைசாத்தி இலங்கி டந்தமா லிகைப்பரப் பிடையியைத் திருண்2 முகம் பிளந்தாரங் கலங்கி டந்தபாற் கடல்முளைத் தெழுமிளங் கதிரெனக் கவின்செய்து. (இ-ள்.) வலம் கிடந்த முந்நூல் - வலப்புறங்கிடந்த முந்நூலானது, வரை அருவியின் வயங்கு மார்பிடை - மலையினின்று ஒழுகும் அருவிபோல விளங்கும் திருமார்பின்கண், சென்னித் தலம் கிடந்த வெண் திங்கள் ஊற்று அமுது என - முடியின்கண் தங்கிய வெள்ளிய திங்களால் பொழியப்பெற்ற அமுதத்தைப்போல, தரள மாலிகை சாத்தி - முத்துமாலையைத் தரித்தும், இலங்கிடு அந்த மாலிகைப் பரப்பிடை - விளங்குகின்ற அந்த முத்துமாலைப்பரப்பின் நடுவில், இருள் முகம் பிளந்த ஆரம் - இருள் முகத்தைக் கிழித்த மாணிக்க மாலையை, கலம் கிடந்த பால் கடல் முளைத்து எழும் - மரக் கலங்கள் தங்கிய பாற்கடலின்கண் தோன்றி எழுந்த, இளங்கதிர் என இயைத்து - இளஞ்சூரியனைப்போலத் தரித்து, கவின் செய்து - அழகு செய்தும் எ-று. இலங்கிடு, இடு: துணைவினை. பிளந்த என்னும் பெயரெச் சத்தின் அகரம் தொக்கது. கடலென்னும் பொதுமை பற்றிக் கலம் கூறினார். (99) திசைக டந்தநாற் புயங்களிற் பட்டிகை சேர்த்துவா ளெறிக்குந்தோள் நசைக டந்தநல் லார்மனங் கவர்ந்துயிர் நக்கவங் கதஞ்சாத்தி அசைக டங்கலுழ் வாரண வுரிவைநீத் தணிகொளுத் தரீயம்பெய் திசைக டந்தமந் திரபவித் திரமெடுத் தெழில்விர னுழைவித்து. (இ-ள்.) திசை கடந்த நால் புயங்களில் - திக்குகளைக் கடந்த நான்க திருத்தோள்களிலும், பட்டிகை சேர்த்து - பட்டிகைகளைத் தரித்தும், வாள் எறிக்கும் தோள் - ஒளி வீசும் அத்தோள்களில், நசைகள் தந்த நல்லார் மனம் கவர்ந்து - விருப்ப மிக்க (முனிவர்) பன்னியர்களின் மனத்தைக் கவர்ந்து - உயிர் நக்க - (அவர்கள்) உயிரையுமுண்ட, அங்கதம் சாத்தி - தோளணிகளை அணிந்தும், கடம் கலுழ் - மதத்தைப் பொழியும், அசை - அசைகின்ற, வாரண உரிவை நீத்து - யானையின் தோலை அகற்றி, அணிகொள் உத்தரீயம் பெய்து - அழகிய மேலாடையைச் சாத்தியும், இசை கடந்த மந்திர பவித்திரம் எடுத்து - சொல்லைக் கடந்த மந்திர வடிவமான பவித்திரத்தை எடுத்து, எழில் விரல் நுழைவித்து - அழகிய விரலில் அணிந்தும் எ-று. நக்கிய வென்பது விகாரமாயிற்று; நல்லாரைப் பொதுமையிற் கொண்டு. உயிரைப் பருகுமாறு என்றுரைத்தலுமாம்; விருப்பத் தினீங்கிய நல்லார் என்றுமாம். அங்கதம் - தோள்வளை. அசை வாரணமென்க. இசை - புகழ்ச்சியுமாம். பவித்திரம் - மோதிரம். (100) உடுத்த கோவண மிசைப்பொலந் துகிலசைத் துரகமைந் தலைநால விடுத்த போல்வெயின் மணித்தலைக் கொடுக்குமின் விடவிரு புறந்தூக்கித் தொடுத்த தார்புயந் தூக்கிநூ புரங்கழல் சொற்பதங் கடந்தன்பர்க் கடுத்த தாளிலிட் டிருநிதிக் கோமக னருந்தவப் பயன்பெற்றான். (இ-ள்.) உடுத்த கோவணம் மிசை - உடுத்த கோவணத்தின் மேல், பொலம் துகில் அடைத்து - பொன்னாடையை இறுகக்கட்டி (அதன்மேல்), உரகம் ஐந்தலை நால விடுத்தபோல் - பாம்பு ஐந்து தலைகளையும் தொங்கவிட்டமை போல, வெயில் மணித்தலைக் கொடுக்கு - ஒளி பொருந்திய மாணிக்கத் தலைக்கொடுக்கு, மின்விட -ஒளிவீச, இருபுரம் தூக்கி - இரண்டு பக்கங்களிலும் தொங்க விட்டும், தொடுத்த தார் புயம் தூக்கி - மலர்களாற் றொடுத்த மாலையினைத் திருத்தோளிற் சாத்தியும், சொல்பதம் கடந்து அன்பர்க்க அடுத்த தாளில் - சொல்லின் அளவையுங் கடந்தும் அடியார்களுக்கு அண்மையிற் பொருந்திய திருவடிகளில், நூபுரம் கழல் இட்டு - சிலம்பையும் வீரகண்டையையும் அணிந்தும், இருநிதிக் கோமகன் - சங்கம் பதுமம் என்னும் இரண்டு, நிதி களுக்குந் த'e7çலவனாகிய குபேரன், அருந்தவப் பயன் பெற்றான் - அரிய தவங்களின் பயனை அடைந்தான் எ-று. கொடுக்கு - ஒருவகையணி; கொய்சகமென்பாரு முளர். சொற்பதம் - சொல்லினளவு: சொல்லாகிய பதமுமாம்; “ சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க ” என்பது திருவாசகம்; முன்னும் வந்தது. அன்பர் - அவனருள் வழி நிற்போர். இருநிதி - பெரிய நிதியுமாம். கோமகன் -கோமான்; தலைவன். (101) செங்கண் மாலய னிந்திரன் முதற்பெருந் தேவர்க்கும் யாவர்க்கும் மங்க லந்தரு கடைக்கணா யகனொரு மங்கலம் புனைந்தான்போற் சங்கை கொண்டுகும் போதரன் முதுகின்மேற் சரணம்வைத் தெதிர்போந்த துங்க மால்விடை மேற்கொடு நடந்தனன் சுரர்கள்பூ மழைதூர்த்தார். (இ-ள்.) செங்கண்மால் அயன் இந்திரன் முதல் - சிவந்த கண்களை யுடைய திருமால் பிரமன் இந்திரன் முதலிய, பெருந்தேவர்க்கும் யாவர்க்கும் - பெரிய தேவருக்கும் மற்றியாவருக்கும். கடைக்கண் மங்கலம் தரு நாயகன் - கடைக்கணோக்கத்தால் எல்லா நன்மைகளையும் அளிக்கவல்ல இறைவன், ஒரு மங்கலம் புனைந்தான் போல் சங்கை கொண்டு - (தான்) ஒரு மங்கலக் கோலஞ் செய்து கொண்டவன் போலத் திருவுளங்கொண்டு, கும்போதரன் முதுகின்மேல் சரணம் வைத்து - கும்போதரன் முதுகின்மேல் தனது திருவடியை வைத்து, எதிர் போந்த துங்க மால்விடை மேற்கொடு - எதிரே வந்த உயர்ந்த பெரிய இடபத்திலேறி, நடந்தனன் - நடந்தருளினான்; சுரர்கள் பூமழை தூர்த்தார் - தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர் எ-று. மங்கலம் - சுபம்; நன்மை. தன் கடைக்கணோக்கத்தாலேயே யாவர்க்கும் மங்கலத்தை யருள்பவன் என்றும் எல்லா மங்கலங் கட்கும் உறைவிடமா யிருக்கச் செய்தே புதுவதாக மங்கல மெய்தினான்போல் ஒரு விளையாடல் புரிந்தானென்றார்; “ மானணி நோக்கினார்த மங்கலக் கழத்துக் கெல்லாம் தானணி யானபோது தனக்கணி யாதுமாதோ” என்னும் கம்பராமாயணக் கருத்து ஒருசார் ஒப்புமையுடையது. சங்கை - எண்ணம். கும்ப உதரன் - குடம்போலும் வயிறுடையன்; கணங்களிலொருவன். (102) அந்த ரத்தவ ரந்தர துந்துபி யைந்துமார்த் தனர்சூழ வந்த ரக்கரு மியக்கரும் பூதரு மங்கல வியங்கல்லக் கொந்த லர்க்கருங் குழலர மடந்தையர் கொளைவல்விஞ் சையர்தாளந் தந்த சைத்திட மலர்ந்தபூங் கொம்பர்போற் சாய்ந்தசைந் தனராட. (இ-ள்.) அந்தரத்தவர் அந்தர துந்துபி ஐந்தும் ஆர்த்தனர் சூழ- தேவர்கள் தேவ துந்துபி ஐந்தனையும் முழுக்கிச் சூழவும், அரக்கரும் இயக்கரும் பூதரும் வந்து மங்கல இயம் கல்ல - அரக்கர்களும் இயக்கர்களும் பூதர்களும் வந்து மங்கல இயங்களைக் கல்லென்று முழக்கவும், கொளைவல் விஞ்சையர் தாளம் போட்டு ஆட்டுவிக்க, கொந்து அலர் கருங்குழல் அரமடந்தையர் - கொத்தோடு பூக்களையணிந்த கரிய கூந்தலையுடைய தேவ மகளிர், மலர்ந்த பூங்கொம்பர்போல் சாய்ந்து அசைந்தனர் ஆட - அலர்ந்த பூக்களையுடைய கொம்புபோல் சாய்ந்து அசைந்து ஆடவும் எ-று. கல்ல: கலிக்க வென்பதன் விகாரம்; முன்னும் உரைத்தமை காண்க. கொளை - பாட்டு; “ கொளைவல் பாண்மகனும்” என்பது புறம். கொம்பர்: ஈற்றுப் போலி. ஆர்த்தனர், அசைந்தனர் என்னும் வினைமுற்றுக்கள் எச்சங்களாய் நின்றன. (103) துங்க மாயிரங் கருவியா யிரமலைத் தூங்கிருண் முழைதோறுஞ் சிங்க மாயிரம் வாய்திறந் தார்த்தெனச் சிரங்களா யிரந்திண்டோள் அங்க மாயிர மாயிர முடையவ னாயிர முகந்தோறுஞ் சங்க மாயிர மாயிர மாயிரந் தடக்கையும் பிடித்தூத. (இ-ள்.) துங்கமாய் இரங்கு அருவிமலை - மிகுதியாய் ஒலிக்கும் அருவிகளையுடைய மலையின்கண், இருள் தூங்கு ஆயிரம் முழை தோறும் - இருள் குடிகொண்ட ஆயிரங் குகைகள்தோறும், சிங்கம் ஆயிரம் வாய்திறந்து ஆர்த்தென - ஆயிரம் சிங்கங்கள் வாய் திறந்து ஒலித்தாற்போல, ஆயிரம் சிரங்கள் - ஆயிரந் தலை களையும், ஆயிரம் ஆயிரம் திண் தோள் அங்கம் உடையவன் - இரண்டாயிரம் திண்ணிய தோள்களாகிய உறுப்புக்களையுமுடைய பானுகம்பன், ஆயிரம் முகந்தோறும் - ஆயிரம் வாய்கள்தோறும், ஆயிரம் சங்கம் - ஆயிரம் சங்குகளை வைத்து, ஆயிரம் ஆயிரம் தடக்கையும் பிடித்து ஊத - இரண்டாயிரம் நீண்ட கைகளாலும் பிடித்து ஊதவும் எ-று. தோளாகிய அங்கம். முகம் - வாய். ஒவ்வொன்றிலு மென்பார் தோறுமென்றார். (104) போக்கு மாயவன் புணர்ப்பையு மிருண்மலப் புணர்ப்பையுங் கடந்தெம்மைக் காக்கு நாயக னருச்சனை விடாதருட் கதியடைந்துள வாணன் தூக்கு நேர்பட வாயிரங் கரங்களாற் றொம்மென முகந்தோறுந் தாக்க வேறுவே றெழுகுட முழாவொலி தடங்கட லொலிசாய்ப்ப. (இ-ள்.) போக்கும் மாயவன் புணர்ப்பையும் - போக்கத்தக்க மாயையினது வலிய தொடக்கையும், இருள்மலப் புணர்ப்பையுங் கடந்து - ஆணவ மலத்தின் தொடக்கையும் (இயல்பாகவே) நீங்கி, எம்மைக் காக்கம் நாயகன் - எம்மை ஆளும் சிவபெருமானது, அருச்சனை விடாது - பூசனையை இடையறாது கொண்டு, அருள் கதி அடைந்துள வாணன் - (அவனது) திருவருளால் வீடுபேற்றை யடைந்த வாணனென்பான், தூக்கு நேர்பட - பாடலுக்குப் பொருந்த, ஆயிரம் கரங்களால் - ஆயிரங் கைகளினாலும், முகந்தோறும் தாக்க - வாய்கள் தோறும் மோத, தொம் என வேறு வேறு எழு குட முழா ஒலி - தொம் என்று வேறுவேறாக எழுகின்ற குடமுழவின் ஒலியானது, தடங்கடல் ஒலி சாய்ப்ப - பெரிய கடலின் ஒலியைக் கீழ்ப்படுத்தவும் எ-று. கடந்து கதியடைந்துள என வாணனுக்கேற்றி யுரைத்தலுமாம். தூக்கு - தாளமுமாம். தொம்மென: குறிப்பு. முகம் - கண்; அடிக்குமிடம். (105) முனிவ ரஞ்சலி முகிழ்த்தசெங் கையினர் மொழியுமா சியருள்ளங் கனிவ ரும்பிய வன்பினர் பரவவுட் கருத்தொடு1 வழிக்கொண்டோர் துனிவ ருங்கண நாதர்கொட் டதிர்தரத் துணையினர் மழைபோலப் பனிவ ருங்கண ராடிய தாளினர் பாடுநா வினரேத்த. (இ-ள்.) முனிவர் அஞ்சலி முகிழ்த்த செங்கையினர் - முனிவர்கள் வணங்கிக் கூப்பி சிவந்த கைகளையுடையவர்களாய், மொழியும் ஆசியர் - கூறுகின்ற வாழ்த்து மொழிகளையுடையவராய், உள்ளம் கனிவு அரும்பிய அன்பினர் - உள்ளத்தின்கண் கனிந்து வெளித் தோன்றிய அன்பினையுடையவர்களாய், பரவ - (ஒருபால்) துதித்து வரவும், உள் கருத்தொடு வழிக்கொண்டோர் - ஒன்றிய கருத்துடன் வழிக் கொண்டோராகிய, துனிஅருங் கணநாதர் - துன்பமில்லாத கணத்தலைவர்கள், கொட்டு அதிர்கரத் துணையினர் - கொட்டி அதிர்க்கின்ற இரண்டு கைகளையுடையவர்களாய், மழை போல பனிவரும் கண்ணர் - மழைபோல ஆனந்தவருவி பொழியும் கண்களையுடையவர்களாய், ஆடிய தாளினர் - ஆனந்தக் கூத்து ஆடும் அடிகளையுடையவர்களாய், பாடும் நாவினர் - பாடுகின்ற நாவினையுடையவர்களாய், ஏத்த - (ஒருபால்) பரவி வரவும் எ-று. கையினர், ஆசியர், அன்பினர் என்னும் குறிப்பு முற்றுக்கள் எச்சமாய்ப் பரவ என்பதனையும், துணையினர், கண்ணர், தாளினர் என்னும் குறிப்பு முற்றுக்கள் எச்சமாய் ஏத்த என்பதனையும் கொண்டன. கண்ணர் கணரென விகாரமாயிற்று. (106) இந்தி ரன்மணிக் களாஞ்சிகொண் டொருமருங் கெய்தமெல் லிலைவாசந் தந்தி லங்குபொன் னடைப்பைகொண் டீசனோர் சார்வர மருத்துக்கோ வந்தி ரங்கொலி யாலவட் டம்பணி மாறவா ரழறூபந் தந்து நேரநீர்க் கடவுள்பொற் கோடிகந் தாமரைக் கரந்தூக்க. (இ-ள்.) இந்திரன் மணிக்களாஞ்சி கொண்டு ஒருமருங்கு எய்த- இந்திரன் மணிகள் பதித்த களாஞ்சியைக் கையிலேந்திக் கொண்டு ஒருபால் வரவும், ஈசன் - ஈசானன். மெல்லிலை வாசம் தந்து இலங்கு பொன் அடைப்பை கொண்டு ஓர் சார் வர - வெற்றிலையையும் வாசப் பொருளையுந் தந்து விளங்கா நின்ற பொன்னாலாகிய அடைப்பையை ஏந்தி ஒரு பால் வரவும், மருத்துக்கோ - காற்றுக் கடவுள், வந்து இரங்கு ஒலி ஆலவட்டம் பணிமாற - வந்து ஒலிக்கும் ஒலியினையுடைய ஆலவட்டம் வீசி (ஒருபால் வரவும்), ஆர் அழல் - நிறைந்த தீக்கடவுள், தூபம் தந்து நேர - தூபத்தைத் தந்து (ஒருபால்) வரவும், நீர்க்கடவுள் பொன் கோடிகம் தாமரைக் கரம் தூக்க - வருணதேவன் பொற்பூந் தம்'e7Dத் தாமரை மலர் போன்ற கையில் ஏந்தி (ஒருபால் வரவும்) எ-று. மெல்லிலை - வெற்றிலை: வினைத்தொகை. திருநகரச்சிறப்பில் மெல்லிலைப் பசுங் கொடியினால் என்புழி உரைத்ததனையும் நோக்குக. பணிமாறல், மரபு. கோடிகம் - பூந்தட்டு. (107) நிருதி யாடிகொண் டெதிர்வர வடிக்கடி நிதிமுகந் தளகைக்கோன் கருதி யாயிரஞ் சிதறிடத் தண்டிநன்1 காஞ்சுகர் வினைசெய்யப் பரிதி யாயிரம் பணாடவி யுரகரும் பன்மணி விளக்கேந்தச் சுருதி நாயகன் றிருவடி முடியின்மேற் சுமந்துபின் புறஞ்செல்ல. (இ-ள்.) நிருதி ஆடி கொண்டு எதிர்வர - நிருதியானவன் கண்ணாடியை யேந்தி எதிரே வரவும், அளகைக் கோன் கருதி - அளகைக்கிறையாகிய குபேரன் திருமணச் சிறப்பை எண்ணி, அடிக்கடி ஆயிரம் நிதி முகந்து சிதறிட - அடிக்கடி அளவிறந்த பொருளை மொண்டு வீசவும், தண்டி - தண்டத்தையுடைய கூற்றுவன், நல் காஞ்சுகர் வினை செய்ய - நல்ல கஞ்சுகமாக்கள் செய்தல் போல நெருக்கத்தை விலக்கி வரவும், பரிதி ஆயிரம் பணாடவி உரகரும் - சூரியனைப்போல் விளங்கும் ஆயிரம் பணாடவியையுடைய சேடனும், பல்மணி விளக்கு ஏந்த - பல மாணிக்க விளக்குகளை ஏந்திவரவும், சுருதி - வேதபுருடன், நாயகன் திருவடி - இறைவன் திருவடியை, முடியின்மேல் சுமந்து பின் புறம் செல்ல - தன் முடியின்மேல் தாங்கிப் பின்புறத்தே வரவும் எ-று. காஞ்சுகர் - கஞ்சுகர்: விகாரம்; சட்டையிட்டவர். பணாடவி- பண அடவி: தீர்க்க சந்தி; படத்தின் காடு என்பது பொருள். உரகர், பொதுவுமாம். சுருதி - வேதம், வேதபுருடன். (108) கங்கை காவிரி யாதிய நவநதிக் கன்னியர் குளிர்தூங்கப் பொங்கு வார்திரைக் கொழுந்தெனக் கவரிகள் புரட்டவெண் பிறைக்கீற்றுத் துங்க வாளெயிற் றிருளுடற் குழிவிழிச் சுடரழற் செம்பங்கிச் சங்க வார்குழைக் குறியகுண் டோதரன் றண்மதிக் குடைதாங்க. (இ-ள்.) கங்கை காவிரி ஆதிய நவநதிக் கன்னியர் - கங்கை காவிரி முதலிய ஒன்பது தீர்த்தங்களாகிய மகளிரும், குளிர் தூங்க - குளிர்ச்சி மிக, பொங்குவார் திரைக் கொழுந்து என - மேலெழுகின்ற நீண்ட அலைக் கொழுந்துபோல, கவரிகள் புரட்ட - சாமரைகளைப் புரட்டி வீசவும், வெண்பிறைக் கீற்று துங்க வாள் எயிற்று - வெள்ளிய பிறையின் கீற்றைப்போன்ற உ யர்ந்த ஒளி பொருந்திய பற்களையும், இருள் உடல் - கரிய உடலையும், குழி விழி - குழிந்த கண்களையும், சுடர் அழல் செம்பங்கி - உரியும் தீப்போன்ற சிவந்த மயிரையும், சங்க வார் குழை - சங்காலாகிய நீண்ட குழைகளையுமுடைய, குறிய குண்டோதரன் - குறிய வடிவமுள்ள குண்டோதரன், தண்மதிக் குடை தாங்க - குறிர்ந்த சந்திரவட்டக் குடையினைத் தாங்கி வரவும் எ-று. நவநதி முன் உரைத்தாம்; ஆண்டுக் காண்க. பிறையாகிய கீற்றென்க. பங்கி - மயிர். (109) இடிக்கும் வானுரு மேறுயர் நெடுங்கொடி யெகினவெண் கொடிஞாலம் முடிக்கு மூழிநா ளுளர்கடுங் காலென மூச்செறி விடநாகந் துடிக்க வாய்விடு1 முவணவண் கொடிமுதற் சூழ்ந்துசே வகஞ்செய்யுங் கொடிக்கு ழாத்தினுட் கொயர சாய்விடைக் கொடிபுடை பெயர்ந்தாட. (இ-ள்.) குழ்ந்து சேவகம் செய்யும் - சூழ்ந்து சேவகம் செய்கின்ற, வான் இடிக்கும் உரும்ஏறு உயர் நெடுங்கொடி - வானின்கண் இடிக் கின்ற இடியேறாகிய உயர்ந்த நெடிய கொடியும், வெள் எகினக் கொடி - வெள்ளிய அன்னக் கொடியும், ஞாலம் முடிக்கும் ஊழி நாள் - உலகத்தை அழிக்கும் ஊழிக்காலத்தில், உளர் சுடுங்கால் என - வீசுகின்ற சண்டமாருதத்தைப்போல, மூச்சு எறி விடநாகம் - மூச்சு விடுகின்ற நஞ்சினையுடைய பாம்புகள், துடிக்க வாய்விடும் - துடிக்குமாறு ஆர்க்கின்ற, வள் உவணக் கொடிமுதல் கொடிக் குழாத்தினுள் - வளப்பத்தினையுடைய கலுழக் கொடியும் முதலாகிய கொடிக் கூட்டங்களுள், விடைக் கொடி - இடபக் கொடியானது, கொடி அரசாய் - கொடிகளுக்கரசாய், புடை பெயர்ந்து ஆட - அசைந்தாடவும் எ-று. உயர் நெடும்: ஒருபொருட் சொற்கள். எகினம், அம்: சாரியை. இடயேறு இந்திரனுக்கும், அன்னம் பிரமனுக்கும், உவணம் திருமாலுக்கும் கொடிகளாதலின் அவற்றை யெடுத்தோதினார். நாகந் துடிக்க வாய்விடும் உவணவண் கொடி என்னுங் கருத்தினை, “ கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிற் றழலென வுயிர்க்கு மஞ்சுவரு கடுந்திறற் பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் புள்ளணி நீள்கொடிச் செல்வனும்” என்னும் திருமுருகாற்றுப்படையினுங் காண்க. (110) கண்ணு தற்பிரான் மருங்கிரு கடவுளர் கப்புவிட் டெனத்தோன்றும் வண்ண முத்தலைப் படையெடுத் தொருகுட வயிறுடைப் பெரும்பூதம் பண்ண வப்பதி னெண்படைக் கலமுந்தன் பக்கமாச் சேவிப்ப அண்ணன் முச்சுடர் முளைத்தொரு வரைநடந் தனையதோர் மருங்கெய்த. (இ-ள்.) நுதல் கண் பிரான் - நெற்றியிற் கண்ணையுடைய இறைவனின், மருங்கு - இரண்டு பக்கங்களிலும், இரு கடவுளர் கப்பு விட்டெனத் தோன்றும் அயனும் அரியுமாகிய இரண்டு தேவர்களம் கிளைத்தாற்போலக் காணப்படும், வண்ணம் முத்தலைப்படை - அழகிய மூன்று தலையையுடைய சூலப்படையை, பண்ணவப் பதினெண் படைக்கலமும் - தெய்வத்தன்மையுடைய பதினெட்டுப் படைகளம், தன் பக்கமாய்ச் சேவிப்ப - அதன் பக்கத்தே சேவித்து வர, குட வயிறு உடை ஒரு பெரும்பூதம் - குடம்போலும் வயிறுடைய ஒரு பெரிய பூதமானது, எடுத்து - அதனை யேந்தி, அண்ணல் முச்சுடர் முளைத்து - பெருமை பொருந்திய மூன்று சுடர்களும் உதிக்கப் பெற்று, ஒருவரை நடந்து அனையது ஓர் மருங்கு எய்த - ஒருமலை நடந்ததை யொக்க ஒருபால் வரவும் எ-று. சிவபிரானிடத்தில் ஏனையிருவரும் தோன்றினமையை, “ படைத்தளித் தமிழப்பமும் மூர்த்திக ளாயினை” “ ஒருவனா யுலகேத்த நின்ற நாளோ ஓருருவே மூவுருவ மான நாளோ” என்னும் தேவாரத் திருவாக்குகளிற் காண்க; “ மைந்த நின்னையென் வலப்புறத் துன்றன னறிய பைந்து ழாய்முடிக் கண்ணனை யெனதிடப் பாலில் தந்த ளித்தன னீவிர்வெங் கரிமுகன் றழல்வேற் கந்த னேரெனக் கருணையி னுச்சிமோந் துரைப்பான்” என்று கூர்மபுராணங் கூறுவதும் போக்கற் பாலது. கப்பு - கிளை; கவர்பு என்பது மருவிற்று. பூதம் - கும்போதரன். தன் பக்கம் - சூலத்தின் பக்கம். ஆகவென்பது விகாரம். முளைத்து - முளைக் கட்டு; முளைத்த என்பது விகாரமாயிற்றுமாம். நடந்தது என்பது நடந்து என விகாரமாயிற்று. அனையதாக எய்தவென்க. (111) பந்த நான்மறைப் பொருட்டிரட் டெனவட பாடல்செய் தெதிர்புட்ப தந்த னேன்ததவா னுயிருண வுருத்தெழு தழல்விடத் தெதிர்நோக்கும் அந்த மாதியி லானிழல் வடிவமா யாடியி னிழல்போல வந்த சுந்தரன் சாத்துநீ றொடுதிரு மாலையு மெடுத்தேந்த. (இ-ள்.) பந்தம் நான் மறைப் பொருள் திரட்டு என - தனையினை யுடைய நான்கு வேதங்களின் பொருளைத் திரட்டிக் கூறினாற் போல, வடபாடல் செய்து எதிர் புட்பதந்தன் ஏத்த - வடமொழிப் பாடல்களைக் கூறி எதிரே புட்பதந்தன் துதித்து வரவும், வான் உயிர் உண உருத்து எழுதழல் விடத்து எதிர் நோக்கும் - தேவர்களின் உயிரை உண்ணச் சினந்து எழுந்த தீயைப்போலும் நஞ்சினுக்கு எதிரே செல்லும், அந்தம் ஆதி இலான் நிழல் வடிவமாய் - ஈறும் முதலுமில்லாத இறைவனது சாயையாகிய வடிவமாய், ஆடியின் நிழல் போல வந்த சுந்தரன் - கண்ணாடியின் நிழல்போலத் தோன்றி யருளிய சுந்தரப் பெருமான், சாத்தும் நீறொடு திருமாலையும் எடுத்து ஏந்த - அணியுந் திருநீற்றோடு திருப்பள்ளித் தாமத்தையும் ஏந்தி வரவும் எ-று. பந்தம் - தளை; இசைக்கட்டு. சுந்தரன் - சிவபெருமான் ஒருகால் கண்ணாடியிற் பிரதிவிம்பித்த தமது நிழலை வாவென்றருள வந்தவர்; திருக்கைலையில் சிவபெருமானுக்குத் திருநீறம் திருப் பள்ளித் தாமமும் எடுத்தேந்தும் அணுக்கத் தொண்டராயுள்ளவர்; பாற்கடல் கடைந்த பொழுதுண்டாகிய ஆலால விடத்தைச் சிவபெருமான் பணித்தபடி கொண்டுவந்து ஆலால சுந்தரர் எனப் பெயர் பெற்றவர்; இவரே சைவ சமய குரவராகிய நம்பியாரூர ராகவும் பிறந்தனர்; “ அருளி னீர்மைத் திருத்தொண் டறிவரும் தெருளி னீரிது செப்புதற் காமெனில் வெருளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய பொருளி னாகு மெனப்புகல் வாமன்றே” என்னும் பெரியபுராணச் செய்யுள் இங்கு நோக்கற்பாலது. (112) அன்னத் தேரின னயன்வலப் பாங்கரு மராவலி கவர்சேன வன்னத் தேரினன் மாலிடப் பாங்கரு மலர்க்கரங் குவித்தேத்தப் பொன்னத் தேமலர்க் கொன்றையான் வெள்ளியம் பொருப்பொடு மெழீஇப்போந்தால் என்னத் தேரணி மதுரைமா நகர்ப்புறத் தெய்துவா னவ்வேலை. (இ-ள்.) அன்னத்தேரினன் அயன்வலப் பாங்கரும் - அன்ன மாகிய தேரையுடைய பிரமன் வலப்பக்கத்தினும், அரா வலி கவர் சேன வன்னத் தேரினன் மால் - பாம்பின் வலியைக் கொள்ளை கொள்ளும் கலுழனாகிய அழகிய தேரையுடைய திருமால், இடப்பாங்கரும் - இடப்பக்கத்திலும், மலர்க் கரம் குவித்து ஏத்த - தாமரை மலர் போன்ற கைகளைக் கூப்பிப் பரவவும், பொன் அம் கேம் மலர்க் கொன்றையான் - பொன்போன்ற அழகிய தேனையுடைய கொன்றை மலர் மாலையையுடைய சிவபெருமான், வெள்ளியம் பொருப்பொடும் எழீஇப் போந்தால் என்ன - வெள்ளியங்கிரி யோடும் எழுந்து வந்தாற் போல (இடபத்தின் மேல் எழுந்தருளி), தேர் அணி மாமதுரை நகர்ப் புறத்து எய்துவான் - நிலைத்தேரின் வரிசையையுடைய பெரிய மதுரைப்பதியின் புறத்தே வருகின்றான்; அவ்வேலை - அது போது எ-று. ஊர்தியுட் சிறந்தன தேரும் புரவியும் யானையுமாதலின் ஏனைய வற்றையும் அப்பெயர்களோடு சார்த்திக் கூறு முறைமை பற்றி அன்னத்தேர் சேனத்தேர் என்றார். தேரினன் இரண்டும் எச்சம். பொன்னத்தே மலர்: எதுகை நோக்கி வலித்தது. ந எனப் பிரித்துச் சிறந்த வென்றுரைப்பாரு முளர். (113) தேவர்க டேவன் வந்தான் செங்கண்மால் விடையான் வந்தான் மூவர்கண் முதல்வன் வந்தான் முக்கணெம் பெருமான் வந்தான் பூவல ரயன்மால் காணாப் பூரண புராணன் வந்தான் யாவையும் படைப்பான் வந்தா னென்றுபொற் சின்ன மார்ப்ப. (இ-ள்.) தேவர்கள் தேவன் வந்தான் - தேவர்களுக்கெல்லாம் தேவனா யுள்ளான் வந்தருளினான்; செங்கண்மால் விடையான் வந்தான் - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தையுடையவன் வந்தருளினான்; மூவர்கள் முதல்வன் வந்தான் - மூன்று கடவுளர்க்கும் முதல்வனாயுள்ளவன் வந்தருளினான்; முக்கண் எம்பெருமான் வந்தான் - மூன்று கண்களையுடைய எம் பெருமான் வந்தருளினான்; பூ அலர் அயன் மால் காணா - தாமரை மலரில் வதியும் பிரமனும் திருமாலுங் காணாத, பூரண புராணன் வந்தான் - எங்கும் நிறைந்த பழையோன் வந்தருளினான்; யாவையும் படைப்பான் வந்தான் - எல்லா வற்றையும் ஆக்குவான் வந்தருளினான்; என்று பொன் சின்னம் ஆர்ப்ப - என்று பொன்னாலாகிய சின்னங்கள் ஒலிக்க எ-று. மூவர்கள் - படைத்தல், காத்தல், அழித்தல் புதியும் மும் மூர்த்திகள்; இறைவன் மூவர்ககும் முதல்வனென்பதனை, “ தேவர்கோ வறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை மூவர்கோ னாய்நின்ற முதல்வன்” என்னும் திருவாசகத்தானுமறிக. பூவலர் என்பதற்கு அழகிய அலரென்றம், பூவிற் றோன்றிய வென்றும் உரைத்தலுமாம். ஒருபொருள் மேற் பலபெயர் வந்த விடத்துத் தனித்தனி வினை கொடுக்கப்பட்டது. (114) பெண்ணினுக் கரசி வாயிற் பெருந்தகை யமைச்ச ரேனை மண்ணினுக் கரசர் சேனை மன்னவர் பிறரு மீண்டிக் கண்ணினுக் கினியான் றன்னைக் கண்டெதிர் கொண்டு தாழ விண்ணினக் கரச னூரின் வியத்தகு நகரிற் புக்கான். (இ-ள்.) பெண்ணினுக்கு அரசி வாயில் பெருந்தகை அமைச்சர் - மங்கையர்க்கரசியாகிய பிராட்டியாரின் அரண்மனை வாயிலுள்ள பெரிய தகுதியையுடைய மந்திரிகளும், ஏனை மண்ணினுக்கு அரசர் - ஏனைய நாடுகட்கு அரசரானவர்களும், சேனை மன்னவர் - சேனைத் தலைவர்களும், பிறரும் ஈண்டி - மற்றையோரும் (மதில் வாயிலின்) நெருங்கி, கண்ணினுக்கு இனியான் தன்னை - கட் புலனுக்கினிய கோலங் கொண்டுள்ள இறைவனை, கண்டு - தரிசித்து, எதிர்கொண்டு தாழ - எதிர்கொண்டு வணங்க (அவர் களோடும்), விண்ணினக்கு அரசன் ஊரின் - வானுலகிற்கு அரச னாகிய இந்திரனது நகரத்தினும், வியத்தகும் - வியக்கத்தக்க, நகரில் புக்கான் - நகரத்தினுள் புகுந்தருளினான் எ-று. எண்ணும்மைகள் விரிக்க. ஊரின், இன்: உறழ்; பொருவு. வியக்கத்தகு என்பது வியத்தகு என்றாயிற்று. (115) முகிறவழ் புரிசை மூதூர் முதற்பெரு வாயி1னீந்தி அகிறவழ் மாட வீதி வலம்பட வணைவா னாக நகிறழை பொலங்கொம் பன்ன நன்னகர் மகளி ரம்பொன் துகிறழை மருங்கு லாயத் தொகைபுறந் தழுவச் சூழ்ந்தார். (இ-ள்.) முகில் தவழ் புரிசை மூதூர் - மேகந் தவழுகின்ற மதிலை யுடைய பழைய பதியாகிய மதுரையின், முதல் பெருவாயில் நீந்தி - முதற்பெருங் கோபுர வாயிலைக் கடந்து, அகில்தவழ் மாடவீதி வலம்பட அணைவான் ஆக - அகிற் புகை தவழ்கின்ற மாளிகை களையுடைய வீதியில் வலமாக எழுந்தருள, நல் நகர் - நல்ல அந்நகரிலுள்ள, நகில் தழை பொலம் கொம்பு அன்ன மகளிர் - கொங்கைகளாகிய அரும்புகள் தோன்றிய பொற்கொம்பினை ஒத்த பெண்கள், அம்பொன் துகில் தழை மருங்குல் ஆயத் தொகை - அழகிய பொன்னாடை தழைந்த இடையினையுடைய தோழிகள் கூட்டம், புறம் தழுவச் சூழ்ந்தார் - புறத்தே நெருங்கி வர அங்கே சூழ்ந்தார்கள் எ-று. நகில் - கொங்கை. (116) தமிழ்முதற் பதினெண் டேத்து மகளிருந் தாரு நாட்டின் அமிழ்தமன் னவரு முல்லை யம்புயங் குமுத நீலங் குமிழ்நறுங் கோங்க காந்தள் கோழிண ரசோகம் வாசம் உமிழ்தர மலர்ந்த நந்த வனமென வொருங்கு மொய்த்தார். (இ-ள்.) தமிழ் முதல் பதினெண் தேத்து மகளிரும் - தமிழ் நாடு முதல் பதினெட்டு நாட்டிலுமுள்ள மாதரும், தாருநாட்டின் அமிழ்தம் அன்னவரும் - கற்பக நாட்டிலுள்ள அமுதமொத்த மகளிரும், முல்லை - முல்லையும், அம்புயம் - தாமரையும், குமுதம் - ஆம்பலும், நீலம் - நிலோற்பலமும், குமிழ் - குமிழும், நறுங்கோங்கு - நறிய கோங்கும், காந்தள் - செங்காந்தளும், கோழ் இணர் அசோகம் - கொழுவிய பூங்கொத்துகளையுடைய அசோகமுமாகிய இவைகள், வாசம் உமிழ்தர - மணம் வீச, மலர்ந்த நந்தவனம் என - பூத்த நந்தவனம்போல, ஒருங்கு மொய்த்தார் - ஒருசேர நெருங்கிச் சூழ்ந்தார்கள் எ-று. தேத்து: தேம் என்பது அத்துச்சாரியை பெற்று ஈறு முதலுங் கெட்டு முடிந்தது; தேம் - தேசம். பதினெண்டேயம் முற்கூறப்பட்டன. பல், முகம், வாய், கண், மூக்கு, தனம், கை, மேனி என்பவற்றுக்கு முல்லை முதலியன முறையே உவமமாகலின் அவை மலர்ந்த நந்தவனம் போல என்றார். (117) எம்மைநீர் விடுதி ரேயோ வென்பபோற் கலையுஞ் சங்கும் விம்மநாண் மடனு முங்க ணெஞ்சுடை வெளியா றாக உம்மைநீத் தோடு மந்தோ வுரைத்தன முறைத்தோ மென்று தம்மைநூ புரங்கால் பற்றித் தடுப்பபோ லார்ப்பச் சென்றார். (இ-ள்.) எம்மை நீர் விடுதிரேயோ என்பபோல் - எங்களை நீங்கள் கைவிடுகின்றீர்களோ என்று முறையிடுதல்போல, கலையும் சங்கும் விம்ம - (சோருகின்ற மேகலையும் வளையும் ஒலிக்கவும், நாண்மடனும் - நாணமும் மடமும். உங்கள் உடை நெஞ்சு வெளி ஆறு ஆக - உங்கள் உடைந்த மனவெளியையே வழி ஆகக் கொண்டு, உம்மை நீத்து அந்தோ ஓடும் - உங்களை விட்டு ஐயோ ஓடிவிடும்; உரைத்தனம் உரைத்தோம் என்று - (அதனைச்) சொன்னோம் சொன்னோம் என்று, தம்மை கால் பற்றி தடுப்பபோல் நூபுரம் ஆர்ப்பச் சென்றார் - தங்களைக் காலைப்பிடித்துத் தடுப்பனபோலச் சிலம்புகள் ஒலிக்கவும் சென்றார் எ-று. விடுதிரேயோ, ஏ: அசை. கலை - மேகலை. உடை நெஞ்சு என மாறுக. அடுக்கு இரக்கத்தில் வந்தது. என்ப, தடுப்ப: தொழிற் பெயராய் நின்றன. வேட்கையால் உடல் மெலிந்து கலையும் சங்கும் கழலா நிற்கும். இச்செய்யுள் தற்குறிப்பேற்றவணி. (118) கடியவிழ் கமலக் காடு பூத்ததோர் கருணை வாரி அடிமுதன் முடியீ றாக வலர்விழிக் குவளை சாத்திக் கொடியசெம் பதுமப் போது குழன்மிசைச் சூடு வார்போற் றொடியணி கரங்கள் கூப்பித் துதியென வினைய சொல்வார். (இ-ள்.) கடி அவிழ் கமலக் காடுபூத்தது ஓர் கருணைவாரி - மணம் விரிந்த தாமரைக்காடு பூத்த ஓர்அருட்கடலாகிய இறைவனின், அடி முதல் முடி ஈறாக - திருவடி முதல் திருமுடி முடிய, விழிக் குவளை அலர்சாத்தி - கண்களாகிய நீலமலரைச் சூட்டி, கொடிய செம் பதுமப்போது - கொடியையுடைய செந்தாமரை மலர்களை, குழல் மிசைச் சூடுவார்போல் - (தமது) கூந்தலின் மேலே அணிந்து கொள்வாரைப்போல, தொடி அணி கரங்கள் கூப்பி - வளையல் அணிந்தகைகளைத் தலைமிசைக் குவித்து, துதி என இனைய சொல்வார் - துதி மொழிகள் போல இத்தன்மையவற்றைக் கூறுவார்கள் எ-று. முகம் கண் கை முதலியன செந்தாமரை மலர் போலுதலின் கமலக்காடு பூத்ததென்றார்; “ கருமுகில் தாமரைக் காடுபூத்து” என்றார் கம்பரும்; இறைவன் திருமேனி முழுதும் செந்நிறமாதலின் இங்ஙனம் கூறினாரென்னலுமாம்; “ செந் தாமரைக்கா டனைய மேனித் தனிச்சுடரே” என மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்தமையுங் காண்க. நோக்கினாரென்பார் விழிக்குவளை சாத்தி என்றார். கமலக்காடு பூத்த வாரியில் குவளை சாத்தி யென்ற நயம் போற்றற்பாலது. அங்கையின் மேல் தோள்காறும் நாளம் போறலின் கொடிய செங்கமலப்போது என்றார். (119) நங்கையென் னோற்றாள் கொல்லோ நம்பியைத் திளைத்தற் கென்பார் மங்கையை மணப்பா னென்னோ வள்ளலு நோற்றா னென்பார் அங்கடி மதுரை யென்னோ வாற்றிய தவந்தா னென்பார் இங்கிவபர் வதுவை காண்பா னென்னநா நோற்றோ மென்பார். (இ-ள்.) நங்கை நம்பியைத் திளைத்தற்கு என் நோற்றாள் என்பார் - (நம்) பிராட்டி இந்த நம்பியைக் கூடித் திளைப்பதற்கு என்ன தவஞ்செய்தாளோ என்று (சிலர்) சொல்லுவார்; வள்ளலும் மங்கையை மணப்பான் என் நோற்றான் என்பார் - இந்த வள்ளலும் (நம்) நங்கையைக் கூட என்ன தவஞ் செய்தானோ என்று (சிலர்) சொல்லுவார்; அம் கடி மதுரை ஆற்றிய தவம் தான் என் என்பார் - அழகிய விளக்கமமைந்த இம்மதுரைப் பதியானது செய்த தவந்தான் யாதோ என்று (சிலர்) சொல்லுவார்; இங்கு இவர் வதுவை காண்பான் நாம் என்ன நோற்றோம் என்பார் - இங்கு இவர்களின் திருமணத்தைக் காணுதற்கு நாம் என்ன தவஞ் செய்தோமோ என்று (சிலர்) சொல்லுவார் எ-று. நங்கை - மகளிரிற் சிறந்தாள்; பெருமாட்டி. நம்பி - ஆடவரிற் சிறந்தான்; பெருமான். ஓகாரங்கள் வியப்பின்கண் வந்தன. கொள், தான்: அசை. திளைத்தற்கு, மணப்பான், காண்பான் என்பன - வினையெச்சங்கள். என்ன - எத்தன்மையவான தவங்கள். இராமாயணத்திலுள்ள, “ நம்பியைக் காண நங்கைக் காயிர நயனம் வேண்டும் கொம்பினைக் காணுந் தோறுங் குரிசிற்கு மன்ன தேயாம் தம்பியைக் காண்மி னென்பார் தவமுடைத் துலக மென்பார் இம்பரிந் நகரிற் றந்த முனிவனை யிறைஞ்சு மென்பார்,” என்பது முதலிய செய்யுட்களின் கருத்து நயங்கள் இங்கே ஒத்து நோக்கற்பாலன. (120) தென்னவன் வருந்தி மேனாட் செய்தவப் பேறாப் பெற்ற1 தன்மகள் வதுவை காணத் தவஞ்செய்தா னிவனே யென்பார் கன்னிதன் னழகுக் கேற்ற வழகனிக் காளை யென்பார் மன்னவ னிவனே யன்றி வேறிலை மதுரைக் கென்பார். (இ-ள்.) தென்னவன் - மலயத்துவச பாண்டியன், வருந்தி மேல் நாள் செய் - வருத்தமுற்று முன்னாளிற் செய்த, தவப்பேறாப் பெற்ற- தவப்பயனாகப் பெற்ற, தன் மகள் வதுவை காண - தன் புதல்வி யாரின் திருமணத்தைக் காணுதற்கு, தவம் செய்தானிலனே என்பார்- தவஞ் செய்திலனே என்று(சிலர்) சொல்லுவார்; கன்னி தன் அழகுக்கு ஏற்ற அழகன் இக்காளை என்பார் - பிராட்டியாரின் அழகுக்குப் பொருந்திய பேரழகுடையவன் இத்தோன்றல் என்று (சிலர்) சொல்லுவார்; மதுரைக்கு மன்னவன் இவனே அன்றி வேறு இலை என்பார் - மதுரைமா நகருக்கு மன்னன் இப்பேரழகனே யல்லாமல் மற்றி யாரும் இல்லை என்று (சிலர்) சொல்லுவார் எ-று. (121) நங்கைதன் னலனுக் கேற்ப நம்பியைத் தந்த திந்தத் துங்கமா மதிநூல் வல்ல சுமதிதன் சூழ்ச்சி யென்பார் அங்கவ டவப்பே றென்பா ரன்னைதன் கன்னிக் கன்றி இங்கிவன் மருக னாக வெத்தவ முடைய ளென்பார். (இ-ள்.) நங்கைதன் நலனுக்கு ஏற்ப - மகளிருட் சிறந்த (நம்) பிராட்டியாரின் அழகுக்கப் பொருந்த, நம்பியைத் தந்தது - ஆடவருட் சிறந்த இந் நம்பியைக் கொணர்ந்தது, இந்தத் துங்கம் மா மதி நூல் வல்ல சுமதிதன் சூழ்ச்சி யென்பார் - இந்த உயர்ந்த பெருமை பொருந்திய அறிவு நூலில் வல்ல சுமதியினுடைய சூழ்ச்சித்திறன் என்று (சிலர்) சொல்லுவார்; அங்கு அவள் தவப்பேறு என்பார் - அங்கு அப்பிராட்டியின் தவப்பயன் என்று (சிலர்) சொல்லுவார்; அன்னை தன் கன்னிக்கு அன்றி - தாயாகிய காஞ்சனமாலை பிராட்டியாரை மகளாகப் பெறுதற்குச் செய்த தவமல்லாமல், இங்கு இவன் மருகன் ஆக எத் தவம் உடையாள் என்பாள் - இங்கு இந் நம்பியை மருகனாகப் பெருதற்கு என்ன தவத்தை உடையாளோ என்று (சிலர்) சொல்லுவார் எ-று. மதியையுடைய நூல்வல்ல சுமதி யென்னலுமாம்; “ மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை” என்னுந் திருக்குறளுங் காண்க. கன்னிக்கு - கன்னியைப் பெறுதற் பொருட்டு. (122) பூந்துகி னெகிழ்ப்பர் சூழ்வர் புணர்முலை யலைப்பர் பூசு சாந்தினை யுகுப்பர் நாணந் தலைக்கொண்டார் போலச் சாய்வர் கூந்தலை யவிழ்ப்பர் வாரிக் கூட்டுவர் முடிப்பர் மேனி மாந்தளி ரெங்கு மாரன் வாளிகள் புதையச் சோர்வார். (இ-ள்.) பூந்துகில் நெகிழ்ப்பர், சூழ்வர் - அழகிய ஆடையை நெகிழச் செய்து பின் உடுப்பர்; புணர்முலை அலைப்பர் - நெருங்கிய கொங்கைகளை வருத்துவார்; பூசுசாந்தினை உகுப்பர் - புசிய சந்தனத்தை உதிர்ப்பார்; நாணம் தலைக்கொண்டார்போலச் சாய்வர் - நாண மீக்கொண்டவரைப் போலத் தலைகுனிவர்; கூந்தலை யவிழ்ப்பர் வாரிக் கூட்டுவர் முடிப்பர் - முடிந்த கூந்தலை அவிழ்த்து வாரிச் சேர்த்துப் பின்னும் முடிப்பர்; மேனி மாந்தளிர் எங்கும் - உடலாகிய மாந்தளிர் முழுதும், மாரன் வாளிகள் புதையச் சோர்வார் - மன்மதனுடைய பாணங்கள் தைக்க ஆவி சோர்வார் எ-று. துகில் நெகிழ்த்தல் முதலியன வேட்கை நோயால் நிகழும் மெய்ப்பாடுகள்; “ கூழை விரித்தல் காதொன்று களைதல் ஊழணி தைவரல் உடைபெயர்த்த துடுத்தலோ டூழி நான்கே யிரண்டென மொழிப” என்னும் தொல்காப்பிய மெய்ப்பாட்டியற் சூத்திரம் நோக்குக. (123) தண்ணளி யொழுக்கஞ் சார்ந்த குணத்தினைச் சார்ந்து மிந்த வண்ணமென் மலர்க ளென்னே வாளியாய்த் தைத்த வென்பார் கண்ணறுங் கூந்தல் வேய்ந்த கடியவிழ் நீலத் தாரும் வெண்ணகை யரும்பு முல்லைத் தாமமும் வெறுத்து வீழ்ப்பார். (இ-ள்.) தண் அளி ஒழுக்கம் சார்ந்த - தண்ணிய அருள் ஒழுக்கத்தைப் பொருந்திய, குணத்தினைச் சார்ந்தும் - குணத்தினை அடுத்தும் (தண்ணிய வண்டுகளின் வரிசையாகிய வில்லின் நாணினை அடுத்தும்), இந்த வண்ணம் மெல் மலர்கள் வாளியாய்த் தைத்த என்னே என்பார் - இந்த நிறம் வாய்ந்த மெல்லிய மலர்கள் கணைகளாய்த் தைத்தன இஃது என்ன அதிசய மென்பார்: கள் நறும் கூந்தல் வேய்ந்த - தேன் மணங் கமழும் கூந்தலி லணிந்த, கடி அவிழ் நீலத்தாரும் - மணத்தொடு மலர்ந்த நீலமலர் மாலையையும், வெள் நகை அரும்பு முல்'e7çலத் தாமமும் - தம் வெள்ளிய பற்கள்போல அரும்பிய மல்லை மா'e7çலயையும், வெறுத்து வீழ்ப்பார் - வெறுத்து நீக்குவார்கள் எ-று. அளி - அருள், வண்டு. ஒழுக்கம் - நடை, வரிசை. குணம் - பண்பு, வில்லின் நாண். அருளொழுக்கத்தோடு கூடிய நற்குண முடையார் எப்பொழுதும் யார்க்கும் எத்துணையும் இன்னா செய்யா ரென்ப; இம்மலர்கள் தண்ணளி யொழுக்கஞ் சார்ந்த குணத்தினைச் சார்ந்து வைத்தும் இன்னாமை செய்யும் விரோத மிருந்த வாறென்னே யென்று சிலேடைப் பொருள்கொண்டு கூறினாரென்க. முல்லை மயக்கத்தையும் நீலம் சாக்காட்டையும் விளைக்கும் காம னம்புகளாகலின் அவற்றை வெறுத்து வீழ்த்தன ரென்க. (124) விம்மிச்செம் மாந்த கொங்கை மின்னனார் சிலர்விற் காமன் கைம்மிக்க கணையே றுண்டு கலங்கிய மயக்காற் றங்கள் மைம்மிக்க நெடுங்கண் மூரல் வதனமு மவனம் பென்றே தம்மிற்றம் முகத்தை நோக்கார் தலையிறக் கிட்டுச் செல்வார். (இ-ள்.) விம்மி செம்மாந்த கொங்கை மின் அனார் சிலர் - பருத்து இறுமாந்த கொங்கைகளையுடைய மின்னை ஒத்த மகளிர் சிலர், வில்காமன் கை மிக்க கணை ஏறுண்டு கலங்கிய மயக்கால் - வில்லையுடைய மதவேளின் வலிமிக்க கணைகள் வைத்துக் கலங்கிய மயக்கத்தால், தங்கள் மை மிக்க நெடுங்கண் - தங்களுடைய மை மிகுந்த நீண்ட கண்களும். மூரல் வதனமும் - பற்களும் முகங்களும், அவன் அம்பு என்று - அவ்வேளின் கணைகளென்று கருதி, தம்மில் தம்முகத்தை நோக்கார் - ஒருவருக்கொருவர் முகத்தை நோக்காத வராகி, தலை இறக்கிட்டுச் செல்வார் - தலையை இறங்கச்செய்து செல்வார்கள் எ-று. கைம்மிக்க கணை - கையிகந்த துன்ப மிழைக்குங் கணை. கண்ணை நீல மென்றம், மூரலை முல்லையென்றும், முகத்தைத் தாமரையென்றும் கருதினர். இறக்கி யென்பது இடு என்னும் துணை வினை பெற்று விகாரமாய் இறக்கிட்டு என்றாயது. கண் முதலிய வற்றைக் காமனம்புகளாகிய மலர்களென மயங்கினமையால் இது மயக்கவணி. (125) பற்றிய பைம்பொன் மேனிப் பசப்பது தேறா ரண்ணல் ஒற்றைமால் விடையின் மேற்கொண் டிருந்துநம் முளத்து மேவப் பெற்றன மிதென்கொன் மாயம் பேதைமீர் பெருமா னீண்ட கற்றைவார் சடைப்பூங் கொன்றை யிதுவன்றோ காண்மி னென்பார். (இ-ள்.) பைம்பொன் மேனி பற்றிய பசப்பது தேறார் - பசிய பொன்போல மேனியிற் பற்றிய பசப்பு நிறத்தை அறியாதவராய், அண்ணல் - இறைவன், ஒற்றைமால் விடையின் மேற்கொண்டு இருந்தும் - ஒப்பற்ற பெரிய இடபத்தின்மேல் எழுந்தருளியிருந்தும், நம் உளத்தும் மேவப் பெற்றனம் - நமது உள்ளத்தினும் வந்து பொருந்தப் பெற்றோம்; இத என் மாயம் - இஃது என்ன மாயம்; பேதைமீர் - பெண்காள்; பெருமான் - அச்சிவபெருமானது, நீண்ட கற்றைவார் சடைப்பூங் கொன்றை - திரட்சியான நீண்ட சடையிலுள்ள கொன்றை மலர், இது அன்றோ - நம்முடம்பிற்றோன்றம் இஃதன்றோ, காண்மின் என்பார் - பாருங்களென்று (பசப்பினைக் குறித்துக் காட்டிச்) சொல்லுவார்கள் எ-று. நம் கண்ணெதிரே புறத்திலுள்ளவன் அகத்தினும் மேவப் பெற்றதொரு விசித்திரம் இருந்தவாறென்னே யென்பார், அவன் நம் அகத்தினும் மேவியுள னென்பதற்க அடையாளம் என்னை யென்பார்க்கு, உடம்பின் பசப்பினைக் காட்டி இஃதவன் கொன்றை மாலை யென்பாரென்க. பசப்பு - வேட்கை நோயுற்றார்க்கு மெய்யிலுளதாகும் நிற வேறுபாடு; அது பொன்னினையும் கொன்றைப் பூவையும் நிறத்தாலொப்பது. மேனி பற்றிய வென்க. பசப்பது, அது: பகுதிப்பொருள் விகுதி. தேறார் கொன்றை யிதுவன்றோ என்பார் எனக் கூட்டுக; தேறார்: முற்றெச்சம். இதென்: விகாரம். கொல்: அசை. (126) திங்களென் றெழுந்து நம்மைச் சுடுவதென்1செந்தீ யென்பார் புங்கவன் சென்னி மீதுங் கிடப்பதே போலு மென்பார் அங்கவற் கிந்த வெப்ப மிலைகொலென் றயிர்ப்பா ராற்றக் கங்கைநீர் சுமந்தா னென்பா ரதனையுங் காண்மி னென்பார். (இ-ள்.) செந்தீ - செந் நெருப்பானது, திங்கள் என்று எழுந்து நம்மைச் சுடுவது என் என்பார் - சந்திரன் என்ற பெயரோடு தோன்றி நம்மைச் சுடுவது என்ன காரண மென்பார் (சிலர்); புங்கவன் சென்னி மீதும் கிடப்பதே போலும் என்பார் - இவ்விறைவனது முடியின் கண்ணும் (இது) கிடக்கின்றதே என்பார் (சிலர்); அவற்கு இந்த வெப்பம் இல்லை கொல் என்று அயிர்ப்பார் - அவனுக்கு இந்த வெம்மை இல்லையோ வென ஐயுறுவார் (சிலர்); ஆற்றக் கங்கை நீர் சுமந்தான் என்பார் - அவ் வெப்பத்தை ஆற்றுதற்கே கங்கை நீரை முடியிற் றாங்கினான் என்பார் (சிலர்); அதனையும் காண்மின் என்பார் - அதனையும் பாருங்கள் என்பார் (சிலர்) எ-று. திங்கள் முதலிய தண்ணிய பொருளெல்லாம் விரக நோயுற்றார்க்கு அந்நோயை மிகுவித்து வெம்மையவாய்த் தோன்றுமென்க. போலும்: ஒப்பில் போலி. அங்கு : அசை. கொல்: ஐயப்பொருட்டு. ஆற்ற - மிகவு மென்றுமாம். (127) கலையொடு நாணம் போக்கிக் கருத்தொடு வண்ணம் வேறாய் உலையொடு மெழுகிட் டென்ன வுருகுகண் ணீர ராகிக் கொலையொடு பயில்வேற் கண்ணார் குரிசிறன் பவனி நோக்கி அலையொடு மதியஞ் சூடு மையன்மெய் யன்ப ரொத்தார். (இ-ள்.) கொலையொடு பயில்வேல் கண்ணார் - கொலையிற் பழகும் வேல் போன்ற கண்களையுடைய மகளிர், குரிசில் தன் பவனி நோக்கி - இறைவன் திருவுலாவைக் கண்டு, கலையொடு நாணம் போக்கி - ஆடையோடு நாணினையும் போக விடுத்து, கருத்தொடு வண்ணம் வேறாய் - உள்ளத்தோடு நிறமும் வேறுபட்டு, உலை யொடு மெழுகு இட்டென்ன - உலையில் மெழுகை இட்டாற் போல, உருகு கண்ணீரராகி - உள்ளம் உருகுதலால் ஒழுகுங் கண்ணீரை யுடையராகி, அலையொடு மதியம் சூடும் ஐயன் மெய் அன்பர் ஒத்தார் - கங்கையோடு சந்திரனையு மணிந்த இறைவனுடைய உண்மை யன்பர்களை ஒத்தார்கள் எ-று. கலை - மேகலையுமாம். கலையொடு, கருத்தொடு, அலை யொடு என்பவற்றில் ஒடு எண்ணுதற் பொருளில் வந்தன. உலை யொடு, கொலையொடு: வேற்றுமை மயக்கம். இட்டென்ன - இட்டாலென்ன. அலை: ஆகுபெயர். மதியம், அம்: சாரியை. இறைவனிடத்து மெய்யன்புடையார் கற்பனவும் இனியமையும் என்று நூலறிவைப் போக விடுத்தும், நாணது வொழிந்து நாடவர் பழித்துரை பூணது வாகக் கொண்டும், தந்த துன் றன்னைக் கொண்டதென்றன்னை என்றபடி பசுகரணமெல்லாம் சிவகரணமாக மாறப்பெற்றும், அழல் சேர்ந்த மெழுகே யன்னா ராய்க் கண்ணீர் ததும்பி நிற்பராகலின் அன்பரொத்தார் என்றார். கலை - நிவிர்த்தி முதலிய ஐங்கலையுமாம். (128) நட்டவர்க் கிடுக்க ணெய்த நன்றிகொன் றவர்போற் கையில் வட்டவாய்த் தொடியுஞ் சங்கு மருங்குசூழ் கலையு நீங்க இட்டபொற் சிலம்பிட் டாங்கே நன்றியி னிகவார் போற்கால் ஒட்டியே கிடப்ப நின்றா ருகுத்தபூங் கொம்ப ரன்னார். (இ-ள்.) நட்டவர்க்கு - நண்பினருக்கு, இடுக்கண் எய்த - வறுமை வர, நன்றி கொன்றவர்போல் -அவரை விட்டு நீங்கும் நன்றி கொன்றவர்போல, கையில் வட்டவாய்த் தொடியும் - கையிலணிந்த வட்டமாகிய வாயினையுடைய தொடியும், சங்கும் -வளைகளும், மருங்கு சூழ் கலையும் நீங்க - உடையைச் சூழ்ந்த மேகலையும் நீங்கவும், நன்றியின் இகவார்போல் - நன்றியினின்று நீங்காதவர் போல, இட்ட பொன் சிலம்பு இட்டாங்கே - அணிந்த பொற் சிலம்பு அணிந்தபடியே, கால் ஒட்டியே கிடப்ப - காலில் ஒட்டிக் கிடக்கவும், உகுத்தபூங் கொம்பர் அன்னார் நின்றார் - உதிர்த்த பூக்களையுடைய கொம்பு போன்றவராய் (அம் மகளிர்) நின்றார்கள் எ-று. நீங்க, ஒட்டியே கிடப்ப என்னும் பொருள்களின் றொழிலை உவமைகட்கும் ஏற்றுக. நன்றி கொன்றவரென்றமையால் முன் நன்றி பெற்றவரென்க. நீங்க உகுத்த பூங்கொம்ப ரன்னாராய் நின்றார் என வியையும். பூவுதிர் கொம்பென மகளிர் போயினார் என்று கம்பர் கூறுவது இங்கு ஒத்து நோக்கற்பாலது. இட்டாங்கே: அகரந் தொகுத்தல். (129) மின்னகு வேற்க ணாளோர் விளங்கிழை விடைமே லையன் புன்னகைப் போது நோக்கப் போதுமுப் புரமும் வேனின் மன்னவன் புரமுஞ் சுட்ட வல்லவோ கெட்டேன் வாளா இன்னவை சுடாது போமோ வேழையேன்1 புரமு மென்றாள். (இ-ள்.) மின் நகு வேல்கண்ணாள் ஓர் விளங்கு இழை - மின் போல் விளங்கும் வேல்போன்ற கண்களையுடைய ஓர் விளங்கிய அணிகளையுடையாள், விடைமேல் ஐயன் - இடபத்தின்மேல் அமர்ந் தருளும் இவ்வையனுடைய, புன்னகைப் போதும் - புன்னகையாகிய மலரும், நோக்கப் போதும் - நோக்கமாகிய மலரும் (முறையே), முப்புரமும் வேனில் மன்னவன் புரமும் சுட்ட அல்லவோ - மூன்று புரங்களையும் வேனிற் காலத்திற் குரிய மதவேளின் உடலையும் சுட்டன அல்லவா, கெட்டேன் - ஆ கெட்டேனே, இன்னவை - இவைகள், ஏழையேன் புரமும் சுடாது வாளா போமோ என்றாள் - எளியேனது உடலாகிய புரத்தையும் சுடாமல் வீண்போமோ எ-று. மின்னலைச் சிரிக்கு மெனலுமாம். புரம் - ஊர், உடம்பு. கெட்டேன்: வியப்புப் பொருளில் வந்த இடைச் சொல். ஒகாரங்கள் எதிர்மறை. (130) உழைவிழி யொருத்தி தன்க ணுருவெளி யாகித் தோன்றுங் குழகனை யிரண்டு செம்பொற் கொங்கையு மொன்றாய் வீங்கத் தழுவுவா ளூற்றங் காணா டடமுலை யிரண்டே யாகி இழையிடை கிடக்க நீங்கி யிருக்கைகண் டிடைபோலெய்த்தாள். (இ-ள்.) உழைவிழி ஒருத்தி - மான் போன்ற பார்வையையுடைய ஒரு பெண், தன் கண் - தன் கண்களுக்கு, உருவெளியாகித் தோன்றும் குழகளை - உருவெளியாகிக் காணப்படும் மணவாளக் கோல முடைய இறைவனை, செம்பொன் கொங்கை இரண்டும் ஒன்றாய் வீங்கத்தழுவுவாள் - செம்பொன்னி னிறம் வாய்ந்த இரண்டு கொங்கைகளும் விம்மி ஒன்றாகுமாறு தழுவுகின்றவள், ஊற்றம் காணாள் - பரிசங் காணதவளாய், இழை இடைகிடக்க தடமுலை நீங்கி - நூலிழை இடையேதங்குமாறு பெரிய முலைகள் பிரிந்து, இரண்டேயாகி இருக்கை கண்டு - இரண்டாகி யிருத்தலைக் கண்டு, இடைபோல் எய்த்தாள் - தனது இடை மெலிந்திருப்பதுபோல் மெலிந்தாள் எ-று. உருவெளி - வெளியிற்றோன்றும் பொய்யுருத்தோற்றம்; ஒன்றையிடையறாது சிந்திப்பார்க்கு அது முன்னிற்பதுபோல் தோற்றமுண்டாத லியல்பு. அஃதவன் கண்ணின் குற்றமன்றென்பார் உழைவிழியொருத்தி என அடையடுத்தார். ஊற்றம் - ஊறு; அம்: பகுதிப் பொருள் விகுதி. இழையிடை கிடக்க வென்றமையால் முன் கிடவாமை பெற்றாம். இருக்கை: தொழிற்பெயர். (131) வாரிருங் கொங்கை யாளோர் மாதராள் வானோ ருய்யக் காரிருள் விடமு ண்டன்று கறுத்ததே யன்று கொன்றைத் தாரிருஞ் சடையார் கண்டந் தையன்மீர் தமது நெஞ்சங் காரிரும் பென்றே காட்டக் குறியிட்ட கறுப்பே யென்றாள். (இ-ள்.) வார் இருங் கொங்கையாள் ஓர் மாதராள் - கச்சினை யணிந்த பெரிய கொங்கையையுடைய ஒருபெண், தையன்மீர் - பெண்களே, கொன்றைத்தார் இருஞ் சடையார் கண்டம் - கொன்றை மாலையையணிந்த நீண்ட சடையையுடைய இவர் திருமிடறானது, அன்று வானோர் உய்ய - முன்னொரு காலத்தில் தேவர்கள் உயிர் பிழைக்க, கார் இருள் விடம் உண்டு கறுத்ததே அன்று - கரிய இருள் போன்ற நஞ்சினை உண்டதனால் கறுத்ததே யன்று; (அதிலுள்ள கருமை), தமது நெஞ்சம் - தமது உள்ளம், கார் இரும்பு என்றே காட்ட - கரிய வலிய இரும்பே யென்பதைக் காட்டும் பொருட்டு, குறியிட்ட கறுப்பே என்றாள் - அடையாள மாக இட்ட கறுப்பேயாகும் என்று கூறினாள் எ-று. மாதர் - காதல்; உரிச்சொல்; அதனடியாக மாதராள் என வந்தது. ஏகாரங்கள் தேற்றத்தில் வந்தன. இரும்பே ஏகாரத்தைப் பிரித்ததுக் கூட்டுக. நெஞ்சம் : ஆகுபெயர். (132) பொன்னவிர் சடையான் முன்னே போனதென் னெஞ்சு தூதாய்1 அன்னது தாழ்த்த தென்னென் றழுங்குவா ளொருத்தி கெட்டேன் என்னது நெஞ்சும் போன தென்றன ளொருத்தி கேட்ட மின்னனாள் வேற்கண் சேந்தாள் விளைத்தன ளவளும் பூசல். (இ-ள்.) என் நெஞ்சு தூதாய் - எனது மனம் தூதாக, பொன் அவிர் சடையான் முன்னே போனது - பொன்போல் விளங்கும் சடையையுடைய இறைவனிடத்துச் சென்றது; அன்னது - அது, தாழ்த்தது என் என்று - (என்பால் மீண்டுவரத்) தாமதித்தது என்னையென்று, ஒருத்தி அழுங்குவாள் - ஒருமாது ஒருந்துவாள்; ஒருத்தி - மற்றொருத்தி, கெட்டேன் - ஆ கெட்டேன், என்னது நெஞ்சும் போனது என்றனள் - என்னுடைய நெஞ்சும் (தூதாகப்) போயிற்று என்றாள்; கேட்ட மின் அனாள் வேல்கண் சேந்தாள் - (அதனைக்) கேட்ட மின்போன்ற அப்பெண் (எனக்குரியவரிடத்து நீ காதல்வைத்தது என்னையெனச் சினந்து) வேல்போன்ற கண்கள் சிவந்தாள்; அவளும் பூசல் விளைத்தனள் - மற்றொருத்தியும் அவளோடு அங்ஙனமே போர்விளைத்தாள் எ-று. இறைவனைத் தனித்தனி தமக்குக் காதலனாகக் கருதியிருந்த இருமகளிர் தம்முட் பூசல் விளைத்தமை கூறினார்; கண்கள் செவந்து அவளும் போர்செய்தனள் என ஒருத்திக்கே யேற்றிப் பிறர் கூறிய பொருள் பொருந்தாமை காண்க. என்னது:னகரம் விரித்தல். (133) செப்பிளங் கொங்கை யாளோர் தெரிவைநீர் திருநோக் கெம்பால் வைப்பதென் மதன்போ லெம்மைச் சுடுவதே2மதனுக் காவி அப்பொழு தளித்தாற் போலெம் மாவியு மளித்தா லின்று மெயப்புக ழுமக்குண் டின்றேற் பெண்பழி விளையு மென்றாள். (இ-ள்.) செப்பு இளங்கொங்கையாள் ஓர் தெரிவை - செப்பினை ஒத்த இளமையாகிய கொங்கையையுடைய ஒருபெண், எம்பால் நீர் திருநோக்கு வைப்பது என் - எம்மிடத்து நீர் திருக்கண் பார்வை வைப்பது எற்றுக்கு, மதன்போல் எம்மைச் சுடுவதே - மதவேளை எரித்ததுபோல எம்மையும் சுடுகின்றதே, அப்பொழுது மதனுக்கு ஆவி அளித்தாற்போல் - எரித்த அப்பொழுதே அம்மன் மதனுக்கு உயிரைக்கொடுத்தது போல, எம் ஆவியும் இன்று அளித்தால் - எமது உயிரையும் இப்பொழுதே கொடுப்பீரானால், உமக்கு மெய்ப்புகழ் உண்டு - உமக்கு உண்மையாகிய புகழ் உளது; இன்றேல் - கொடவிடில், பெண்பழி விளையும் என்றாள் - பெண்பழி உண்டாகும் என்று கூறினாள் எ-று. மதனைச் சுட்டதுபோல என விரிக்க. பெண்பழி - பெண்ணைக் கொன்ற பழி; பெண்ணினைக் கொல்லலாகாதென்பது, “ ஆவு மானியற் பாலர்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடையீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென அறத்தாறு நுவலும் பூட்டை.” என்னும் புறப்பாட்டா னறிக. (134) கவனமால் விடையான் றன்னைக் கடைக்கணித் திலனென் றங்கோர் கவணவான் கொடியோ ரோவத் தொழில்வல்லான் குறுக நோக்கி இவனைன் யெழுத்த தநதால் வேண்டுவ வீவ னென்றாள் அவனையா ரெழுத வல்லா ரென்றன னாவி சோர்ந்தாள். (இ-ள்.) ஓர் வான் சுவணக்கொடி - சிறந்த பொற்கொடி போன்ற ஒரு நங்கை, கவனம் மால் விடையான் - விரைந்த செலவினையுடைய திருமாலாகிய இடபத்தையுடைய இறைவன். தன்னைக் கடைக்கணித்திலன் என்று - தன்னைக் கடைக்கணிக்காது செல்கின்றானென்று கருதி, அங்கு ஓர் ஒவத்தொழில் வல்லான் குறுக - அவ்விடம் ஓவியத்துறையில் கைபோய ஒருவன் வர, நோக்கி - (அவனைப்) பார்த்து, இவனை நீ எழுதித்தந்தால் - இங்குச் செல்லும் குழகனை நீ எழுதித்தர வல்லையேல், வேண்டுவ ஈவன் என்றாள் - நீ வேண்டுவனவற்றைக் கொடுப்பேன் என்றாள், யார் அவனை எழுதவல்லார் என்றனன் - யாவர் அவனை எழுதவல்லவர் (ஒருவருமில்லை) என்று அவன் கூறினான்; ஆவிசோர்ந்தாள் - (அதுகேட்டு அவள்) உயிர் சோர்ந்தாள் எ-று. கவனம் - வேகம். கடைக்கணித்தல்: பெயரடியாகவந்த வினை. ஒவம் - ஓவியம்: விகாரம். ஈவன், அன் : தன்மையில் வந்தது. அவன் எனவும், என்றலும் அவள் எனவும் வருவித்துரைக்க. (135) வலத்தயன் வரவு காணாள் மாலிடங் காணாள் விண்ணோர் குலத்தையுங்காணாள் மண்ணோர் குழாத்தையுங் காணாள் ஞானப் புலத்தவர் போலக் கண்ட பொருளெலா மழுமான் செங்கைத் தலத்தவன் வடிவாக் கண்டா ளொருதனித் தையன் மாது. (இ-ள்.) ஒரு தனித் தையல் மாது - ஓர் ஒப்பற்ற அழகியமாது, வலத்து அயன் வரவு காணாள் - வலத்தின்கண் பிரமன் வருதலையும் காணாது, மால் இடம் காணாள் - திருமால் இடத்தின்கண் வருதலையும் காணாது, விண்ணோர் குழாத்தையும் காணாள் - தேவர் கூட்டத்தையும் காணாது, மண்ணோர் குழாத்தையும் காணாள் - மக்கள் கூட்டத் தையும் காணாது, ஞானப் புலத்தவர்போல - மெய்யுணர்வுடைய ஞானியர்போல், கண்டபொருளெலாம் - பார்த்தபொருள் அனைத் தையும், மழுமான் செங்கைத் தலத்தவன் வடிவாக் கண்டாள் - மழுவையும் மானையும் சிவந்த கையிடத்துடைய சிவபெருமானது திருவுருவமாகவே பார்த்தாள் எ-று. மெய்ஞ்ஞானிகட்கு, பிரபஞ்ச பேதமெலாந் தாானாய்த் தோன்றி, என்றபடி எல்லாம் சிவனுருவாய்த்த வர்போலஎன்றார். அவனையன்றி வேறொருவரையும் கண்டிலளென்பது கருத்து. காணாள் என்பன முற்றெச்சங்கள். வடிவா - வடிவாக. (136) முன்பெற்றங் காலிற்செல்ல வண்ணலை முன்போய்க் காண்பான் பின்பற்றி யாசைப் பாசம் பிணித்தெழ வோடு வாளோர் பொன்பெற்ற முலையாள் கொம்ப ருகுமலர் போலத் தாளின் மின்பெற்ற காஞ்சி தட்ப விலங்கொடு நடப்பா ளொத்தாள். (இ-ள்.) பெற்றம் காலின் முன் செல்ல - இடபமானது காற்றைப் போல விரைந்து முன்னே செல்ல, அண்ணலை - இறைவனை, முன் போய்க் காண்பான் - முன்னே சென்று காணுதற்பொருட்டு, பின் பற்றி ஆசைப் பாசம் பிணித்து எழ - பின் றொடர்ந்து ஆசைக் கயிறானது கட்டி இழுத்துச்செல்ல, ஓடுவாள் ஓர் பொன்பெற்ற முலையாள் - ஓடுகின்றவளாகிய ஒரு பொன்போலும் தேமல் பூத்த கொங்கையையுடைய பெண், கொம்பர் உகுமலர் போல மின்பெற்ற காஞ்சி - கொம்பினின்றும் உதிர்கின்ற மலர்போல (இடையினின்றும் நழுவிய) ஒளிமிக்க மேகலையானது, தாளில் தட்ப - தனது காலின்மேல் விழுந்து தடுக்க, விலங்கொடு நடப்பாள் ஒத்தாள் - விலங்கொடு நடக்கும் ஒரு பெண்ணைப் போன்றாள் எ-று. காண்பான்: வினையெச்சம். ஓடுவாள் : பெயரெச்சமாயது. கொம்பர்: போலி. உகுமலர்போல என்றமையால் இடையினின்றும் நழுவிய என வருவிக்கப்பட்டது. தட்ப - தடுக்க; தளை : பகுதி. (137) விதுக்கலை மிலைந்து செங்கண் விடையின்மேல் வருமா னந்த மதுக்கட றனைக்கண் வாயான் முகந்துண்டு மகளி ரெல்லாம் புதுக்கலை சரிவ தோரார் புரிவளை கழல்வ தோரார் முதுக்குறை வகல்வ தோரார் மூழ்கினார் காம வெள்ளம். (இ-ள்.) விதுக்கலை மிலைந்து - சந்திரனது ஒரு கலையை யணிந்து, செங்கண் விடையின் மேல் வரும் - சிவந்த கண்களை யுடைய இடபத்தின்மேல் வருகின்ற, ஆனந்த மதுக் கடல்தனை - பேரின்பமாகிய தேன் கடலை, மகளிர் எல்லாம் - மாத ரனைவரும், கண் வாயால் முகந்து உண்டு - கண்களாகிய வாயால் மொண்டு குடித்து, புதுக்கலை சரிவது ஓரார் - புதிய ஆடை சோர்வதை உணராமலும், புரிவளை கழல்வது ஓரார் - விரும்பியணிந்த கைவளைகள் கழலுவதை உணராமலும், முதுக் குறைவு அகல்வது ஒரார் - பேரறிவு தம்மினின்றும் நீங்குதலை உணராமலும், காம வெள்ளம் மூழ்கினார் - காம வெள்ளத்தில் மூழ்கினார்கள் எ-று. இறைவன் ஆனந்தக் கடலாதலை, “ ஆனந்த மாக்கட லாடுசிற் றம்பலம்” எனவும், “ ஆனந்த வெள்ளத் தறைகழலோன்” எனவும் மாணிக்கவாசகப்பெருமான் திருக்கோவையாருட் கூறுதலானு மறிக; அளவுபடாத ஆனந்தமே வடிவாகவுடையவனென்பது கருத்து. சுவை மிகுதியானும் மயங்கச் செய்தலானும் மதுக்கடல் என்றார்; ஏழுகடலுள் மதுக்கடல் ஒன்றாதலு முணர்க. உண்டற் கருவி வாயாகலின் கண்வாயால் என்றார். அளவுபடாத அதனுள் தாம் உண்ணலாமளவு உண்டனரென்பார் முகந்துண்டு என்றார். மதுவுண்டோர் அம்மயக்கத்தால் கலை முதலியன சோர்தலையும் அறிவு கெடுதலையும் உணராமைபோல இவரும் உணராராயினா ரென்க. சரிவது, கழல்வது, அகல்வது: தொழிற்பெயர்கள். ஓரார் மூன்றும் முற்றெச்சம். (138) பைத்தழ கெறிக்கு மாடப் பந்திமே னின்று காண்பார் கைத்தலங் கூப்பி யாங்கே கண்களு நோக்கி யாங்கே சித்தமுங் குடிபோய்ச் சொல்லுஞ் செயலுமாண் டங்கண் மாண வைத்தமண் பாவை யோடு வடிவுவே றற்று நின்றார். (இ-ள்.) பைத்து எறிக்கும் அழகு மாடப் பந்திமேல் நின்று காண்பார் - பசி ஒளியை வீசும் அழகிய மாட வரிசைகளின்மேல் நின்றுகாணும் பெண்கள், கைத்தலம் கூப்பி யாங்கே - கைகள் கூப்பிய வண்ணமாகவும், கண்களும் நோக்கியாங்கே - கண்களும் பார்த்த வண்ணமாகவும் (நின்று), சித்தமும் குடிபோய் - மனமும் அவரிடம் குடிபோக, சொல்லும் செயலும் மாண்டு - சொல்லுஞ் செயலும் இறக்க, அங்கண்மாண வைத்த - அவ்விடத்தில் மாட்சிமைப் பட வைத்த, மண் பாவையோடு - சுதையாற் செய்த பாவைகளோடு, வடிவு வேறற்று நின்றார் - வடிவு வேறுபாடின்றி நின்றார்கள் எ-று. பைத்து - பசியதாகிய ஒளி : பைத்த என்பதன் அகரந் தொக்கது மாம். கூப்பிய கைகள் கூப்பியபடியும் நோக்கிய கண்கள் நோக்கிய படியும் ஒரு பெற்றியாக நின்றென்க. போக, மாள என்னும் செயவெனெச்சங்கள் செய்தெனெச்சமாய்த் திரிந்து நின்றன; போய், மாண்டு என்னும் சினை வினைகள் நின்றார் என்னும் முதல் வினையோடு முடிந்தன என்னலுமாம். மண் - ஈண்டுச் சுதை; மண்மாண் புனைபாவையற்று என்பதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையை நோக்குக. (139) அன்பட்ட புரமுங் காம னாகமுஞ் சுட்ட தீயிம் மின்பட்ட சடிலத் தண்ணன் மெய்யென்ப தறியார் நோக்கிப் பொன்பட்ட கலனு மெய்யும் பொரிகின்றா ரவனைப் புல்லின் என்பட்டு விடுமோ வைய வேழைய ராவி யம்மா. (இ-ள்.) அன்பு அட்ட புரமும் - அன்பை ஒழித்த திரிபுரத்தாரையும் காமன் ஆகமும் - மதவேளின் உடலையும், சுட்ட தீ - சுட்டெரித்த நெருப்பு, இ மின்பட்ட சடிலத்து அண்ணல் மெய் என்பது அறியார் - இந்த மின்போன்ற சடையையுடைய இறைவனது திருவுருவமே என்பதைச் சிறிதும் அறியாதவராய், ஏழையர் - இம் மகளிர்கள், நோக்கி - (விரும்பிப்) பார்த்து, பொன்பட்ட கலனும் மெய்யும் பொரிகின்றார் - பொன்னாலாகிய அணிகளும் உடலும் பொரியப் பெறுகின்றார்கள்; அவனைப் புல்லின் - அவனைத் தழுவுவாராயின், ஆவி - அவர்கள் உயிர், என் பட்டுவிடுமோ - என்ன பாடுபடுமோ எ-று. அட்ட - கொன்ற; ஒழித்த. புரம், புரத்தை விடாமல் புரத்திலுள்ளாரையும் உணர்த்திற்று: இலக்கணை. மின்பட்ட, பட்ட: உவமவுருபு. நோக்கு மளவன்றிப் புல்லுதலுஞ் செய்வரேல் என்க. என் - என்ன வருத்தம். ஏழையரென்றார், எளிமை தோன்ற. ஐய என்னும் இடைச்சொல் இங்கு இரக்கக் குறிப்பின்மேனின்றது; ஐய - மென்மையுடைய எனினுமாம், அம்மா : அசைச்சொல். (140) கொடிகள்பூத் துதிர்ந்த போதிற் கொம்பனார் கலையுஞ் சங்குந் தொடிகளுஞ் சுண்ணத் தூளுஞ் சுரர்பொழி மலரு நந்தி அடிகள்கைப் பிரம்பு தாக்கச் சிந்திய வண்ட வாணர் முடிகளின் மணியுந் தாருங் குப்பையாய் மொய்த்த வீதி. (இ-ள்.) கொடிகள் பூத்து உதிர்ந்த போதில் - கொடிகளினின்றும் மலர்ந்து சிந்திய மலர்களைப்போல, கொம்பு அனார் கலையும் சங்கும் தொடிகளும் - பூங் கொம்பை ஒத்த மகளிர் பானின்றும் சிந்திய மேகலையும் வளைகளும் தொடிகளும், சுண்ணத் தூளும் - சுண்ணப்பொடியும், சுரர் பொழி மலரும் - தேவர்கள் பொழிந்த மலரும் நந்தி அடிகள் கைப்பிரம்பு தாக்கச் சிந்திய - திருநந்திதேவர் கையிலுள்ள பிரம்பு தாக்குதலால் சிதறிய, அண்டவாணர் முடி களின் மணியும் - தேவர்கள் முடிகளிலுள்ள மாணிக்கங்களும், தாரும் - கற்பகப் பூமாலைகளும் (ஆகிய இவைகள்), வீதி குப்பை யாய் மொய்த்த - வீதியின்கண் குப்பையாய் மிக்கன எ-று. கொடிகளினின்றும் உதிர்ந்தவென்க. உதிர்ந்த வென்பதற் கேற்பக் கலை முதலியவற்றுக்குச் சிந்தியவென்பது வருவிக்கப் பட்டது. அண்டம் - வானுலகம். வாணர், வாழ்நர் என்பதன் மரூஉ. மொய்த்த: அன்பெறாதமுற்று: ஏழனுருபு இறுதிக்கண் தொக்கது; “ ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகா விறுதி யான”” என்றார் ஆசிரியர் தொல்காப்பியனா ராகலின். (141) துன்னிய தருப்பை கூட வரசிலை துழாவித் தோய்த்துப் பொன்னியல் கலச நன்னீர் பூசுரர் வீச வன்னார் பன்னியர் வட்ட மாக வானவிற் பதித்தா லென்ன மின்னிய மணிசெய் நீரா சனக்கலம்1 விதியாற் சுற்ற. (இ-ள்.) பூசுரர் - அந்தணர்கள், பொன் இயல் கலச நல் நீர் - பொன்னாலமைந்த கலசத்திலுள்ள நல்ல நீரில், துன்னிய தருப்பை கூட - நெருங்கிய தருப்பை பொருந்தி யிருக்க (அதில்), அரசிலை துழாவித் தோய்த்து வீச - அரசிலையாற் றுழாவித் தோய்த்து அந்நீரை வீசவும், அன்னார் பன்னியர் - அவர்களுடைய மனை விமார்கள், வான வில் வட்டமாகப் பதித்தால் என்ன - இந்திர வில்லை வட்டமாக வைத்காற் போல, மின்னிய மணிசெய் நீராசனக் கலம் - விளங்கிய மணிகளை வட்டமாக வைத்துச் செய்த நீரஞ்சனத் தட்டினை ஏந்தி, விதியால் சுற்ற - முறைப்படி சுழற்றவும் எ-று. பூசுரர் - புவித்தேவர்; கலைவாணரைத் தேவரென்றல் வழக்கு. பன்னி : பத்நி யென்பதன் றிரிபு. நீராசனம் - ஆலத்தி. (142) கொடிமுர சாடி செம்பொற் குடமணி நெய்யிற் பூத்த கடிமல ரனைய தீப மங்குசங் கவரி யென்னும் படிவமங் கலங்க ளேடடும் மரித்துநேர் பதுமக் கொம்பர் வடிவினார் வந்து காட்ட மாளிகை மருங்கிற் செல்வான். (இ-ள்.) பதுமக் கொம்பர் நேர் வடிவினார் - தாமரை மலரையுடைய பூங் கொம்பை யொத்த வடிவத்தையுடைய மகளிர், கொடி - கொடியும், முரசு - பேரிகையும், ஆடி - கண்ணாடியும், செம்பொன் குடம் - சிவந்த பொன்னாலாகிய குடமும், மணி - மணியும், நெய்யில் பூத்த கடிமலர் அனைய தீபம் - நெய்யிலேற்றிய மணம் பொருந்திய மலர் போன்ற விளக்கும், அங்குசம் - தோட்டியும், கவரி - சரமரையும், என்னும் படிவம் - என்று சொல்லப்படும் இவைகளின் வடிவத்தை யுடைய, மங்கலங்கள் எட்டும் - எட்டு மங்கலங்களையும், பரிந்து வந்துகாட்ட - ஏந்தி வந்து காட்டவும், மாளிகை மருங்கில் செல்வான் - திருமாளிகையின் பக்கத்திற் செல்கின்றான் எ-று. மேல் வேள்விச் சாலையும் என்னுஞ் செய்யுளிற் கூறிய எட்டு மங்கலங்களுள் விடை, சீவற்சம், வலம்புரி, சுவத்திகம் என்பன விலக்கி; கொடி, முரசு, மணி, அங்குசம் என்பன கூட்டியுள்ளமை காண்க; இதனால் இவர் வெவ்வேறான கொள்கைகளையும் மேற்கொண்டிருத்தல் புலனாகும். நெய்யில் முளைத்துப் பூத்த மலர் போலும் என உவமையுமாம். படிவம் - அழகுமாம். பதுமக் கொம்பர் : இல்பொருளுவம்; பதுமத்திலுள்ள கொம்பரென விரித்துத் திருமகள் என்றுரைத்தலுமாம். (143) செப்புரங் கவர்ந்த கொங்கை யரம்பையர் தீபங் காட்டுந் துப்புர வன்பி னார்க்குத் தூயமெய்ஞ் ஞான நல்கும் முப்புரங் கடந்தான் றன்னை மும்முறை யியங்க ளேங்கக் கப்புர விளக்கந் தாங்கி வலஞ்செயக் கருணை பூத்தான். (இ-ள்.) தீபம் காட்டும் துப்புரவு அன்பினார்க்கு - திருவிளக்கிடும் தூய அன்பினையுடைய தொண்டர்களுக்கு, தூய மெய்ஞ்ஞானம் நல்கும் - தூய்மையான மெய்யுணர்வைத் தந்தருளும், முப்புரம் கடந்தான் - மூன்று புரங்களையும் எரித்த இறைவன், செப்பு உரம் கவர்ந்த கொங்கை அரம்பையர் - செப்பினது வலியைப் போக்கிய கொள்கைகளையுடைய தேவமகளிர், கப்புர விளக்கம் தாங்கி - கர்ப்பூர விளக்கினை ஏந்தி, இயங்கள் ஏங்க - வாத்தியங்கள் ஒலிக்க, தன்னை மும்முறை வலஞ்செய - தன்னை மூன்று முறை வலமாக வர, கருணைபூத்தான் - அருள் செய்தான் எ-று. அரம்பையர் வலஞ்செய எனவும், கடந்தான் கருணைபூத்தான் எனவும் இயையும், துப்புரவு - தூய்மை; உறுதியுமாம். நல்கு மென்னும் பெயரெச்சம் கடந்தான் என்பதன் விகுதியைக்கொண்டு முடியும். கப்புரம் : சிதைவு. விளக்கிடுவார்க்கு ஞானம் நல்குதலை, “ விளக்கினார் பெற்றவின்ப மெழுக்கினாற் பதிற்றியாகும் துளக்கினன் மலர்தொடுத்தாற் றூயவிண் ணேறலாகும் விளக்கிட்டார் பேறுசொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானமாகும் அளப்பில கீதஞ்சொன்னார்க் கடிகடா மருளுமாறே” என்னும் ஆளுடைய வரசுகள் தேவாரத்தானறிக. (144) கோயின்முன் குறுக லோடு மைம்புலக் குறும்பு தேய்த்த தூயநால் வேதச்செல்வர் சுவத்திக ளோத நந்தி சேயிருந் தடக்கை பற்றிச் செங்கணே றிழிந்து நேர்ந்து மாயனு மயனு நீட்டு மலர்க்கர மிருபாற் பற்றி. (இ-ள்.) கோயில் முன் குறுகலோடும் - திருக்கோயிலின் முன் சென்றவுடன், ஐம்புலக் குறும்பு தேய்த்த - ஐம்புலன்களாகிய குறுப்புகளை அழித்த, #Vய நால்வேதச் செல்வர் - புனிதமான நான்மறை வாழ்க்கையையுடைய அந்தணர்கள், சுவத்திகள் ஒத - மங்கலங் கூற, நந்தி சேயிருந் தடக்கை பற்றி - திருநந்தி தேவரின் சிவந்த நீண்ட பெரிய கரங்களைப் பிடித்து, செங்கண் ஏறு இழிந்து- சிவந்தகண்களையுடைய இடபத்தினின்றும் இறங்கி, மாயனும் அயனும் இருபால் நேர்ந்து - திருமாலும் பிரமனும் இருபக்கத்தும் வந்து நீட்டு மலர்க்கரம்பற்றி - நீட்டிய மலர் போன்றகைகளைப் பற்றிக்கொண்டு எ-று. குறும்பு - பகையாகிய குறு நிலவரசு; அவமிகும் புலப்பகை கடந்து என்றார் முன்னும். சுவத்தி - நல முண்டாகவெனக் கூறும் மங்கலமொழி. இரு தட : ஒரு பொருட் பன்மொழியுமாம். (145) எதிர்ந்தரு மறைகள் காணா திளைத்தடி சுமந்து காணும் முதிர்ந்தவன் புருவமான பாதுகை முடிமேற் சத்தி பதிந்தவர் தலைமேற் கொண்டு பாசவல் வினைதீர்த் துள்ளம் பொதிந்துபே ரின்பநல்கும் பொன்னடிப் போது சாத்தி. (இ-ள்.) அருமறைகள் எதிர்ந்து காணாது - அரிய வேதங்கள் தேடிக்காண மாட்டாமல், இளைத்து - மெலிந்து, அடி சுமந்து காணும் முதிர்ந்த அன்பு உருவமான - (இனி) திருவடிகளைச் சுமந்ததால் காண வேண்டுமெனக் கருதி முறுகிய அன்புடன் வடிவமாகிய, பாதுகை முடிமேல் - பாதுகையின் முடியின்மேல், சத்தி பதிந்தவர் - சத்திநிபாதம் உற்றவர், தலைமேற்கொண்டு - முடியின்மேற் கொள்ளப்பெற்று, பாச வல்வினை தீர்த்து உள்ளம் பொதிந்து - (அவர்கள்) ஆணவ மாயைகளையும் வலிய வினையையும் போக்கி உள்ளத்தில் நீங்காதுநின்று, பேர் இன்பம் நல்கும் பொன் அடிப்போது சாத்தி - பேரின்பத்தை யருளும் பொன்போன்ற திருவடி மலர்களைச் சாத்தி எ-று. மறைகள் எதிர்ந்து காணாமல் அன்மைச் சொல்லினாற் கூறியிளைக்கு மென்பது முன்னும் கூறப்பட்டது. காணும் அன்பு - காண வேண்டு மென்னும் அன்புடன். பாதுகை முடிமேல் அடிப்போது சாத்தி என வியையும், சத்தி பதிந்தவர் - சத்திநிபாத முற்றவர்; திருவருட் சத்தி பதியப்பெற்றவர். கொண்டு - கொள்ளப் பெற்று; கொள்ள வென்றுமாம். வினையென வேறு வருதலின் பாசமென்றது ஆணவத் ததையும் மாயையும் ஆம்; பாசமாகிய வினையென்று கூறி, ஆணவ மாயைகளை உபலக்கத்தாற் கொள்ளலுமாம். சத்தி பதிந்த பின் பாச நீக்கமும் இன்பப்பேறும் முறையே உண்டாமென்க. இறைவற்கு வேதமே பாதுகை யென்பதனை, “ மறையே நமது பீடிகையா மறையே நமது பாதுகையாம்” என இந்நூலுட் பின் வருவதனாலு முணர்க. முடிமேற் சாத்தி என ஒரு சாரார் கொண்ட பாடம் பொருந்தாமை யுணர்க. (146) பையர வுரியி னன்ன நடைப்படாம் பரப்பிப் பெய்த கொய்யவிழ் போது நீத்தங்1 குரைகழ லடிந னைப்பத் தெய்வமந் தார மாரி திருமுடி நனைப்பத் தென்னர் உய்யவந் தருளு மையன் உள்ளெழுந் தருளுமெல்லை. (இ-ள்.) பை அரவு உரியின் அன்ன நடைப் படாம் பரப்பி - படத்தினையுடைய பாம்பின் களைந்த தோலை யொத்த நடைப் பாவாடையை விரித்து (அதன்மேல்), பெய்த - பரப்பிய, கொய் - காம்பு களைந்த, அவிழ் - இதழ் விரிந்த, போது நீத்தம் - மலர்களின் வெள்ளம், குரைகழல் அடி நனைப்ப - ஒலிக்கும் வீரகண்டையை யணிந்த திருவடிகளை நனைக்கவும், தெய்வ மந்தாரம் மாரி - (தேவர்கள் பொழியும்) தெய்வத்தன்மை பொருந்திய மந்தார மலர் மழை, திருமுடி நனைப்ப - திருமுடியை நனைக்கவும், தென்னர் உய்யவந்தருளும் ஐயன் - பாண்டியர்கள் ஈடேற வந்த தலைவ னாகிய சிவபெருமான், உள் எழுந்தருளும் எல்லை - திருக்கோயிலி னுள்ளே எழுந்தருளம் பொழுது எ-று. மென்மையும் பூத்தொழிலு முடைமையால் படாத்திற்கு அரவுரி உவமம்; “ நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந் தரவுரி யன்ன வறுமை நல்கி” எனப் பொருநராற்றுப்படையுள் வருதல் காண்க. மந்தாரம் ஏனையவற்றிற்கும் உபலக்கணம். (147) மங்கல மகளி ரோடுங் காஞ்சன மாலை வந்து கங்கையின் முகந்து செம்பொற் கரகநீ ரனையார் வாக்கத் திங்களங் கண்ணி வேய்ந்த சிவபரஞ் சோதிபாத பங்கயம் விளக்கி யந்நீர் தலைப்பெய்து பருகி நின்றாள். (இ-ள்.) மங்கல மகளிரோடும் காஞ்சன மாலை வந்து - மங்கல நாண் உடைய பெண்களோடும் காஞ்சனமாலை வந்து, கங்கையின் முகந்த - கங்கையினின்றும் மொண்டு கொண்டு வந்த, செம்பொன் கரகநீர் - சிவந்த பொன்னாலாகிய கரகத்திலுள்ள நீரை, அனையார் வாக்க - அப் பெண்கள் வார்க்க, திங்கள் அம் கண்ணி வேய்ந்த - திங்களாகிய அழகிய மாலையை அணிந்த, சிவபரம் சோதி பாத பங்கயம் விளக்கி - சிவபரஞ் சுடரின் திருவடித் தாமரைகனை விளக்கி, அந்நீர் தலைப்பெய்து பருகி நின்றாள் - அங்ஙனம் விளக்கிய தீர்த்தத்தைச் சென்னியிற் றெளித்து உள்ளும் பருகி நின்று எ-று. மங்கல மகளிர் - சுமங்கலிகள். காஞ்சனமாலை கணவனை யிழந்திருத்தலின் மங்கல மகளிரோடும் வந்து என்றார். நின்றாள்: எச்சம். (148) பாதநாண் மலர்மே லீரம் புலரவெண் பட்டா னீவிச் சீதமென் பனிநீ ராட்டி மான்மதச் சேறு பூசித் தாதவிழ் புதுமந் தாரப் பொன்மலர் சாத்திச் சென்னி மீதிரு கரங்கள் கூப்பி வேறுநின் றிதனைச் சொன்னாள். (இ-ள்.) நாள் மலர் பாதம்மேல் ஈரம் புலர - அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற திருவடிகளிலுள்ள ஈரம் புலருமாறு, வெண்பட்டால் நீவி - வெள்ளிய பட்டாடையால் துடைத்து, சீத மென்பனி நீர் ஆட்டி - குளிர்ந்த மெல்லிய பனிநீரால் திருமஞ்சனம் செய்து, மான்மதச் சேறு பூசி - மிருக மதத்தோடு கலந்த சந்தனக் குழம்பை அப்பி, தாது அவிழ் புது மந்தாரப் பொன் மலர் சாத்தி - மகரந்தத்தோடு விரிந்த புதிய மந்தாரத்தின் பொன்னிறம் வாய்ந்த மலர்களைச் சூட்டி, வேறு நின்று - ஒரு சிறை ஒதுங்கி நின்று, சென்னி மீது இருகரங்கள் கூப்பி - முடியின் மேல் இரண்டு கைகளையும் குவித்து, இதனைச் சொன்னாள் - இதனைக் கூறு கின்றாள் எ-று. நீவுதல் - துடைத்தல். இருகரங்களும் என்னும் உம்மை தொக்கது. வேறு நின்று - ஒதுங்கி நின்று. இதுவென்றது மேல்வருவதனை. (149) அருமையா லடியேன் பெற்ற வணங்கினை வதுவை செய்தித் திருநகர்த் திருவுங் கன்னித் தேயமுங் கைக்கொண் டாள்கென் றுரை செய்தா ளதற்கு நேர்வா ருண்ணகை யுடைய ராகி மருகனா ரியங்க ளார்ப்ப வதுவைமண் டபத்தைச் சார்ந்தார். (இ-ள்.) அருமையால் அடியேன் பெற்ற அணங்கினை - அரிய தவத்தால் அடியாளாகிய யான் பெற்ற தெய்வக் கன்னியை, வதுவை செய்து - திருமணம் செய்து, இ திருநகர்த் திருவும் கன்னித் தேயமும்- இந்த அழகிய நகரின் செல்வ வளத்தையும் கன்னி நாட்டையும், கைக் கொண்டு ஆள்க என்று உரை செய்தாள் - பெற்று ஆள்வீராக என்று கூறி வேண்டினாள்; அதற்கு நேர்வார் மருகனார் - அதற்கு உடன்படுவாராகிய மருமகளார், உள் நகை உடையராகி - புன்னகை உடையவராகி, இயங்கள் ஆர்ப்ப வதுவை மண்டபத்தைச் சார்ந்தார் - இயங்கள் ஒலிக்கத் திருமண மண்டபத்தை அடைந்தார் எ-று. ஆள்கென்று அகரந் தொக்கது. நேர்வாராகிய மருமகனா ரென்க. மருமகனார் நேர்வாராய் என வுரைத்தலுமாம். நேர்தற் குறிப்பைப் புலப்படுத்தினா ரென்பார் உண்ணகை யுடையராகி என்றார். (150) அருத்தநான் மறைக ளார்ப்ப வரிமணித் தவிசி லேறி நிருத்தனாங் கிருந்து சூழ நின்றமா லயனை யேனை உருத்திரா தியரைப் பின்னு மொழிந்தவா னவரைத் தத்தந் திருத்தகு தவிசின் மேவத் திருக்கடை நாட்டம் வைத்தான். (இ-ள்.) நிருத்தன் - இறைவன், அருத்தம் நால் மறைகள் ஆர்ப்ப - பொருளமைந்த நான்கு மறைகளும் ஒலிக்க, மணி அரித்தவிசில் ஏறி ஆங்கு இருந்து - இரத்தின சிங்காதனத்திலேறி வீற்றிருந்து, சூழ நின்ற - சுற்றிலும் நின்ற மால் அயனை - திருமாலையும் பிரமனையும், ஏனை உருத்திர ஆதியரை - மற்றை உருத்திரர் முதலானவரையும், பின்னும் ஒழிந்த வானவரை - மற்றும் எஞ்சிய தேவரையும், தத்தம் திருத்தகு தவிசில் மேவத் திருக்கடை நாட்டம் வைத்தான் - அவரவர்க் கமைந்த அழகு பொருந்திய ஆதனங்களில் இருக்குமாறு திருக்கடைக்கண் செய்தருளினான் எ-று. ஆங்கு: அசை. சிறப்பு நோக்கி உருத்திராதியரை யென்றம், ஒழிந்த வானவரை யென்றும் பிரித்தோதினார். கடைநாட்டம் வைத்தல் - கடைக்கணித்தல். (151) விண்டல வானோ ரேனோர் மிடைதலான் ஞாலச் செல்வி பண்டைய ளன்றி யின்று பரித்தனள் பெளவ மேழும் உண்டவன் றன்னைத் தானின் றுத்தரத் திருத்தி னானோ அண்டர்நா யகன்ற னாணை வலியினோ வறியே மம்மா. (இ-ள்.) விண் தல வானோர் ஏனோர் மிடைதலால் - வானுலகத் தவராய தேவர்களும் ஏனைய உலகத்தவர்களும் நெருங்குதலால், ஞாலச் செல்வி - புவிமகள், பண்டையள் அன்றி இன்று பரித்தனள் - முன்போல ஒருபுறஞ் சாயாது இன்று சம நிலையில் நின்றே தாங்கினள்; பெளவம் ஏழும் உண்டவன் தன்னை - ஏழுகடலையும் பருகிய குறு முனியை, தான் இன்று உத்தரத்து இருத்தினானோ - தான் இப்பொழுது வடதிசையிலிருக்கச் செய்தானோ (அன்றி), அண்டர் நாயகன் தன் ஆணை வலியினோ - தேவர்களுக்கு நாயகனாகிய சிவபெருமானது ஆணை வலிமையினாலோ, அறியேம் - நாம் அறியோம் எ-று. மிடைதலாற் பண்டு எண்திய தன்மையாளன்றி யென்க. முன்மலையரையன் புதல்வியாக விருந்த இறைவியைத் திருமணஞ் செய்யுங் காலத்தில் வானோரும் ஏனோரும் கூடியயிருந்தமையால் புவியின் தெற்கெல்லை உயர்ந்து வடக்கெல்லை தாழ்ந்ததாகலின் பண்டையளன்றி என்றார். அப்பொழுது அகத்தியனைத் தெற்கிலிருத்திப் புவியைச் சமனுறச் செய்தானாகலின் இன்றுத்தரத் திருத்தினானோ, என்றார். தான்: இறைவன். இருத்த அதனானோ அன்றி வலியினானோ என்க. அவனது திருவருளின் பெற்றி உணர்தற் கரிதென்பார் அறியேம் என்றார். அம்மா: வியப்பிடைச்சொல். (152) மாமணித் தவிசில் வைகி மணவினைக் கடுத்த வோரை தாம்வரு மளவும் வானத் தமனிய மலர்க்கொம் பன்னார் காமரு நடன நோக்கிக் கருணைசெய் திருந்தா னிப்பாற் கோமகள் வதுவைக் கோலம் புனைதிறங் கூற லுற்றேன். (இ-ள்.) மாமணித் தவிசில் வைகி - பெரிய மணிகள் பதித்த சிங்காதனத்தில் வீற்றிருந்தருளி, மண வினைக்கு அடுத்த ஓரை வரும் அளவும் - திருமணச் செயலுக்குப் பொருந்திய முழுத்தம் வருங் காறும், வானத் தமனிய மலர்க் கொம்பு அன்னார் - வானுலகத் துள்ள பொற்பூங் கொம்பை யொத்த அரம்பையர் புரியும், காமரு நடனம் நோக்கிக் கருணை செய்து இருந்தான் - அழகிய ஆட்டத்தைப் பார்த்து அருள் செய்து இருந்தான்; இப்பால் - இனி, கோமகள் வதுவைக் கோலம் புனைதிறம் கூறலுற்றேன் - அரச குமாரியாகிய தடாதகைப் பிராட்டியார் திருமணக்கோலம் செய்து கொள்ளும் வகையைச் சொல்லத் தொடங்கினேன் எ-று. அடுத்த - பொருந்திய; ஒரை - இலக்கினம்; முழுத்தம். தாம்: அசை. காமரு, உ: சாரியை; காமம் மரு என்பது காமரு என்றாயிற்று எனலுமாம். (153) மாசறுத் தெமையா னந்த வாரிநீ ராட்டிப் பண்டைத் தேசுரு விளக்க வல்ல சிவபரம் பரையைச் செம்பொன் ஆசனத் திருத்தி நான மணிந்துகுங் குமச்சே றப்பி வாசநீ ராட்டி னார்கண் மதிமுகக் கொம்ப ரன்னார். (இ-ள்.) மாசு அறுத்து எம்மை ஆனந்த வாரி நீர் ஆட்டி - பாசமாகிய குற்றத்தைப்போக்கி எம்மைப் பேரின்ப வெள்ள நீரில் மூழ்குவித்து, பண்டைத் தேசு உரு விளக்க வல்ல சிவ பரம்பரையை - அனாதியேயுள்ள ஒளி யுருவை விளக்க வல்ல சிவசத்தியாகிய பிராட்டியாரை, மதிமுகக் கொம்பர் அன்னார் - சந்திரன் போலு முகத்தை யுடைய பூங்கொம்பு போன்ற மகளிர் செம்பொன் ஆசனத்து இருத்தி - சிவந்த பொற்றவிசி லிருக்கச் செய்து, நானம் அணிந்து குங்குமச் சேறு அப்பி - கத்தூரி திமிர்ந்து குங்குமச் சேற்றைப்பூசி, வாசநீர் ஆட்டி னார்கள் - மணமூட்டிய நீரால் திருமஞ்சனஞ் செய்வித்தார்கள் எ-று. ஆனந்த வாரிநீர் என்பதனை, “ வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும் ஆனந்தங் கா'eeடையா னாறு” எனத் திருவாசகம் திருத்தசாங்கத்துட் கூறுதலானுமறிக. ஆன்மா வானது சொரூபத்தில் கறையற்ற தாகலின் பண்டைத்தேசுரு என்றார்; தேசு - ஒளி; சிவத்துவ மென்னலுமாம்; “ சிவனுளத்தே தோன்றித் துயிரும்பைச் செய்வதுபோற் சீவன் றன்னைப் பந்தனையை யறுத்துத்தா னாக்கித்தன் னுருவப் பரப்பையெலாங் கொடுபுகுந்து பதிப்பனிவன் பாலே ” எனச் சிவஞானசித்தி கூறுவது காண்க. இறைவன் தன் அருட் சத்தியால் ஆன்மாக்களின் பாசத்தை யகற்றிச் சொரூபத்தை விளக்குதல் கூறினார். (154) முரசொடு சங்க மேங்க மூழ்கிநுண் டூசு சாத்தி அரசிய லறத்திற் கேற்ப வந்தணர்க் குரிய தானம் விரைசெறி தளிர்க்கை யார வேண்டுவ வெறுப்பத் தந்து திரைசெய்நீ ரமுத மன்னா டிருமணக் கோலங் கொள்வாள். (இ-ள்.) முரசொடு சங்கம் ஏங்க - பேரிகையும் சங்கமும் ஒலிக்க, மூழ்கி - நீராடி, நுண் தூசு சாத்தி - மெல்லிய ஆடை உடுத்து, அரசியல் அறத்திற்கு ஏற்ப - அரச தருமத்துக்குப் பொருந்த, அந்தணர்க்கு உரிய தானம் - அந்தணர்க்குப் பொருந்திய தானங் களாக, வேண்டுவ வெறுப்ப, அவர்கள் வேண்டும் பொருள்களை வெறுக்குமாறு, விரை செறி தளிர்க்கை ஆரத் தந்து - மண மிக்க தளிர் போன்ற கையால் நிறையக் கொடுத்து, திரைசெய் நீர் அமுதம் அன்னாள் - அனைகளை வீசுகின்ற கடலிற்றோன்றிய அமுதம் போன்ற பிராட்டியார், திருமணக் கோலம் கொள்வாள் - திருமணக் கோலம் செய்து கொள்ளத் தொடங்கினார் எ-று. வேண்டுவ: விணையாலணையும் பெயர். அவாவற என்பார் வெறுப்ப என்றார். (155) செம்மலர்த் திருவும் வெள்ளிச் செழுமலர்த் திருவுந் தங்கள் கைம்மலர்த் தவப்பே றின்று காட்டுவார் போல நங்கை அம்மல ரனிச்ச மஞ்சு மடியிற்செம் பஞ்சு தீட்டி மைம்மலர்க் குழன்மேல் வாசக் காசறை வழியப் பெய்து. ( இ - ள்) செம்மலர்த் திருவும் - செந்தாமரை மலரில் இருக்கும் திருமகளும், வெள்ளைச் செழுமலர்த் திருவும் - செழுமையாகிய வெண்டாமரை மலரில் இருக்குங் கலைமகளும், தங்கள் கைமலர் தவப்பேறு இன்று காட்டுவார்போல் - தங்கள் கைகளாகிய மலர் செய்த தவப்பயனை இன்று காட்டுகின்றவர்போல, நங்கை அம் அனிச்ச மலர் அஞ்சும் அடியில் - பிராட்டியாரின் அழகிய அனிச்சப் பூவை மிதிக்க அஞ்சுகின்ற திருவடிகளில், செம்பஞ்சு தீட்டி - செம்பஞ்சுக்குழம்பை ஊட்டி, மை மலர்க் குழல் மேல் - முகில் போன்ற மலரை யணிந்த கூந்தலில், வாசக்காசறை வழியப் பெய்து - மணமுள்ள மயிர்ச்சாந்தை நிறையப் பூசி எ-று. கல்வியும் செல்வமாகலின் கலைமகளைத் திருவென்றும் பெயராற் கூறினார். மென்மைக்கு ஆற்றாது அனிச்சமும் அஞ்சும் அடியென் னலுமாம். (156) கொங்கையின் முகட்டிற் சாந்தங் குளிர்பனி நீர்தோய்த் தட்டிப் பங்கய மலர்மே லன்னம் பவளச் செவ் வாய்விட்டார்ப்பத் தங்கிய வென்ன வார நூபுரந் ததும்பச் செங்கேழ் அங்கதிர் பாதசாலங் கிண்கிணி யலம்பலத் பெய்து. (இ-ள்.) கொங்கையின் முகட்டில் - கொங்கைகளின் உச்சியில், சாந்தம் குளிர் பனி நீர் தோய்த்து அட்டி - சந்தனத்தைக் குளிர்ந்த பனி நீரில் குழைத்துச் சொரிந்து, பங்கய மலர்மேல் - தாமரை மலரின் மேல், அன்னம் - அன்னங்கள், பவளச் செவ்வாய் விட்டு ஆர்ப்பத் தங்கிய என்ன - (தமது) பவளம் போன்ற சிவந்த வாயைத் திறந்து ஒலிக்கத் தங்கினமைபோல, ஆர - பொருந்த, நூபுரம் ததும்ப - சிலம்பு ஒலிக்கவும், செம் கேழ் அம் கதிர் பாத சாலம் கிண்கிணி அலம்ப - சிவந்த நிறத்தையும் அழகிய ஒளியையுமுடைய பாதசாலமும் கிண்கிணியும் ஒலிக்கவும், பெய்து - அவற்றைத் திருவடிகளில் அணிந்து எ-று. குளிர் பனிநீர் என்புழிப் பனிநீர் பெயர். சிலம்பொலிக்கு அன்னத்தினொலி உவமம். அடிகள் தாமரை மலர் போலுதலின் பங்கய மலர்மேல் அன்னம்........தங்கிய வென்ன என்றார். தங்கிய: தொழிற் பெயர். பாதசாலம் - பரியகம் என்றும் கூறப்படும்; பரியகம் இன்னதென்பதனை, “ பொன்னிதழ் பொதிந்த பன்னிற மணிவடம் பின்னிய தொடரிற் பெருவிரன் மோதிரம் தன்னொடு தொடக்கித் தமனியச் சிலம்பின் புறவாய்ச் சூழ்ந்து புணரவைப் பதுவே”” என்னுஞ் சூத்திரத்தாலறிக. (157) எண்ணிரண் டிரட்டி கோத்த விரிசிகை யிருபத் தொன்றிற் பண்ணிய கலாப மீரேழ் பருமநா லிரண்டிற் செய் வண்ணமே கலையி ரண்டிற் காஞ்சியிவ் வகையோ ரைந்தும் புண்ணியக் கொடிவண் டார்ப்பப் பூத்தபோற் புலம்பப் பூட்டி. (இ-ள்.) எண் இரண்டு இரட்டி கோத்தவிரிசிகை - முப்பத்திரண்டு கோவையாகக் கோத்த விரிசிகையும், இருபத்தொன்றில் பண்ணிய கலாபம் - இருபத்தொரு கோவையாகச் செய்த கலாபமும், ஈர் ஏழ் பருமம் - தினான்கு கோவையாக இயற்றிய பருமமும், நால் இரண்டில் செய்தவண்ணம் மேகலை - எட்டுக் கோவையாகச் செய்த அழகிய மேகலையும் இரண்டில் காஞ்சி - இரண்டு கோவையாகச் செய்த காஞ்சியுமென, இவ்வகை ஓர் ஐந்தும் - இவ் வேறுபாட்டையுடைய ஐந்து அணிகளையும், புண்ணியக் கொடி வண்டு ஆர்ப்பப் பூத்தது போல் - ஒர் அறக்கொடியானது வண்டுகள் ஒலிக்கப் பூத்திருத்தல் போல், புலம்பப் பூட்டி - ஒலிக்கும்படி இடையிலணிந்து எ-று. கோத்த வென்றதனால் கோவையென்பது கொள்க. இருபத் தொன்று முதலியவற்றோடும் கோவை யென்பதனைக் கூட்டி, ஆகவென விரித்துரைக்க. இவையெல்லாம் இடையிலணியும் அணிகள். பூத்த: தொழிற்பெயர் ஈறு தொக்கது. (158) பொன்மணி வண்டு வீழ்ந்த காந்தளம் போது போல மின்மணி யாழி கோத்து மெல்விரற் செங்கைக் கேற்ப வன்மணி வைர யாப்புக் கடகமுந் தொடியும் வானத் தென்மணிக் கரங்கள் கூப்ப விருதடங் தோளி லேற்றி. (இ-ள்.) பொன் மணி வண்டு வீழ்ந்த - பொன்னிறமும் நீலமணியின் நிறமும் வாய்ந்த வண்டுகள் தங்கிய, காந்தள் அம் போதுபோல - அழகிய காந்தள் மலர்போல, மெல் விரல் - மெல்லிய விரல்கள் (தோன்ற), மின் மணி ஆழி கோத்து- (அவற்றில்) ஒளிவிடும் நீலமணி பதித்த பொன் மோதிரத்தை அணிந்தும், செங்கைக்கு ஏற்ப - சிவந்த கைகளுக்குப் பொருந்த, வல் மணி வரை யாப்புக் கடகமும் - வலிய வைரத்தாற் செய்த தலைப்பூட்டையுடைய கடகங்களையும் இருதடம் தோளில் - இரண்டு பிணைத்த தோள்களில், தொடியும்- தொடிகளையும், வானத்து எல் மணி கரங்கள் கூப்ப - வானிலுள்ள சூரியன் - கரங்களைக் குவிக்குமாறு, ஏற்றி - அணிந்து எ-று. மணியாழி - மரகதத்தாள் செறியுமாம்; “ வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி காந்தண் மெல்விரல் கரப்ப வணிந்து”” என்பது சிலப்பதிகாரம். மெல்விரல் தோன்றக் கோத்தென்க. பத்திகளில் வயிரங்களழுத்தப்பட்ட கடகமுமாம்; “ மத்தக மணியொடு வயிரங்கட்டிய சித்திரச் சூடகம்”” என்பது சிலப்பதிகாரம். வானத்திலுள்ள எல்லாகிய மணியென்க; வான்மணி யென்பது சூரியனுக்கு கொரு பெயர். கைகுவித்து வணங்கவெனவும், ஒளி சுருங்கவெனவும் பொருள்படக் கரங்கள் கூப்ப என்றார்; கரம் - கை, கிரணம். (159) மரகத மாலை யம்பொன் மாலைவித் துரும மாலை நிரைபடு1 வான வில்லி னிழல்பட வாரத் தாமம் விரைபடு களபச் சேறு மெழுகிய புளகக் கொங்கை வரைபடு மருவி யன்றி வனப்புநீர் நுரையு மான. (இ-ள்.) விரைபடு கபளச் சேறு மெழுகிய புளகக் கொங்கை - மணம் பொருந்திய களபக்குழம்பால் மெழுகப்பட்ட புளகமரும்பிய கொங்கைகளில், மரகத மாலை அம் பொன் மாலை விருத்துரும மாலை - மரகத மாலையும் அழகிய பொன் மாலையும் பவள மாலையும், நிரைபடுவான வில்லின் நிழல்பட - வரிசைப்பட்ட இந்திர வில்லைப்போல ஒளி வீசவும், ஆரத் தாமம் - முத்துமாலை, வரைபடும் அருவியன்றி - மலையினின்றும் வீழும் அருவியை யொத்திருப்பதன்றி, வனப்பு நீர் நுரையுமான - அழகாகிய நீரின் துரையையும் ஒத்திருக்கவும் எ-று. பன்னிற மாலைகளாதலின் இந்திரவில்லை உவமை கூறினார். வித்துருமம் - பவளம். ஆரம் - முத்து. களபம் -கலவை. வனப்பாகிய நீர் என உருவகம். (160) உருவமுத் துடுவா யம்முத் துடுத்தபல் காசு கோளாய் மருவவக் காசு சூழ்ந்த மாமணி கதிராய்க் கங்குல் வெருவவிட் டிமைக்கு மார மேருவின் புறஞ்சூழ்ந் தாடுந் துருவசக் கரம்போற் கொங்கை துயல்வர விளங்கச் சூட்டி. (இ-ள்.) உருவம் முத்து உடுவாய் - பருத்த முத்துக்கள் விண் மீன் களாகவும், அ முத்து உடுத்த பல்காசு கோளாய் - அம் முத்துக்களைச் சூழ்ந்த பல மணிகள் கோட்களாகவும், அ காசு சூழ்ந்த மாமணி கதிராய் மருவ - அம்மணிகளாற் சூழப்பட்ட பெரிய நடுநாயக மணி சூரியனாகவும் பொருந்தப் (புனைந்த), கங்குல் வெருவவிட்டு இமைக்கும் ஆரம் - இருளஞ்சியோட ஒளிவிட்டு விளங்கும் பதக்கமானது, மேருவின் புறம் சூழ்ந்து ஆடும் துருவ சக்கரம் போல் - மேரு மலையின் புறத்தைச் சூழ்ந்து செல்லும் துருவ சக்கரம் போல, கொங்கை துயல் வர - அக் கொங்கைகளில் அசையவும், விளங்கச் சூட்டி - விளக்கமுற அணிந்து எ-று. கோள் - ஈண்டு ஞாயிறும் இராகு கேதுக்களும் ஒழிந்த ஏனைய கிரகங்கள். ஆய்: செயவெனெச்சத் திரிபு. ஆரம் - பதக்கம். துருவ சக்கரத்தில் கோட்களும் நாட்களும் உடுக்களும் அடங்கியிருத்தலின் அதனை உவமை கூறினார். கொங்கையை மேருவாகக் கொள்க. மேற்பாட்டிலுள்ள நிழல்பட, மான என்னும் எச்சங்களையும், இப்பாட்டிலுள்ள துயல்வர என்னும் எச்சத்தையும் சூட்டியென்ப தனைக் கொண்டு முடிக்க. இச்செய்யுளில் உருவகத்தை அங்க மாகக்கொண்டு உவமையணி வந்தது. (161) கொடிக்கய லினமாய் நின்ற கோட்சுறா வேறும் வீறு தொடிக்கலை மதியுந் தங்கோன் றொல்குல விளக்காய்த் தோன்றும் பிடிக்கிரு காதி னூடு மந்தணம் பேசு மாபோல் வடிக்குழை மகரத்தோடு பரிதிவாண் மழுங்கச் சேர்த்து. (இ-ள்.) கொடி கயல் இனமாய் நின்ற கோள் சுறா ஏறும் - கொடியில் எழுதிய கயலுக்குச் சுற்றமாக நின்ற வலிய மகர வேறும், வீறு கலைதொடி மதியும் - உயரும் கலைகளையுடைய வட்ட மாகிய சந்திரனும், தம் கோன் தொல் குல விளக்காய்த் தோன்றும் பிடிக்கு - தம் தலைவனாகிய மலயத்துவச பாண்டியனுக்குப் பழைய குலவிளக்காய்த் தோன்றியருளிய பெண்யானை போன்ற பிராட்டி யாரின், இருகாதின் ஊடும் மந்தணம் பேசுமா போல் - இரண்டு திருச் செவிகளினும் இரகசியம் பேசுந் தன்மைபோல. வடிக்குழை - வடித்த குழைகளை, மகரத்தோடு - மகர குண்டலங்களோடு, பரிதிவாள் மழுங்கச் சேர்த்து - சூரியன் ஒளி மழுங்குமாறு அணிந்து எ-று. கோள் - வலிமை. தொடி - வட்டம். தங்கோன் என்பதற்குச் சுறவுக்கேற்பத் தம் தலைவன் என்றும், மதிக் கேற்பத் தம் வழியில் வந்த தலைவன் என்றும் பொருள் கொள்க. பாண்டியர் குலம் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வரு வதாகலின் தொல் குலம் என்றார்; பாண்டியர்க்குப் பழையர் என்பது ஒர் பெயராதலும் நோக்குக. மந்தணம் - மறை; மந்தணம் பேசுவார் பிறரறியாவாறு காதிற் பேசுவரென்க; செவிச் சொல்லும் என்றார் வள்ளுவனாரும். மகரம்- மகர குண்டலம்; தோடு எனப் பிரித்தல் பொருந்தாது. (162) மழைக்குமா மதிக்கு நாப்பண் வாணவிற் கிடந்தா லொப்ப இழைக்கமா மணிசூழ் பட்ட மிலம்பக மிலங்கப் பெய்து தழைக்குமா முகிலை மைந்தன் றளையிடல் காட்டு மாபோற் குழைக்குநீர்த் தகர ஞாழற் கோதைமேற் கோதை யார்த்து. (இ-ள்.) மழைக்கும் மாமதிக்கும் நாப்பண் - முகிலுக்கும் நிறை மதிக்கும் நடுவில், வானவில் கிடந்தால் ஒப்ப - இந்திரவில் கிடந்த தாற்போல, இழைக்கும் மாமணி சூழ் பட்டம் - அழுத்திய பெரிய மணிகள் சூழ்ந்த பட்டமும், இலம்பகம் - நுதலணி மாலையும், இலங்கப் பெய்து - விளங்க அணிந்து, தழைக்கு மா முகிலை - செழித்த கரிய முகிலை, மைந்தன் தளையிடல் காட்டுமாபோல் - புதல்வனாகிய உக்கிரகுமார பாண்டியன் (பின்) தளையிடுதலைக் காட்டுதல்போல, நீர் குழைக்கும் தகர ஞாழல் கோதைமேல் - பனிநீரில் குழைத்த மயிர்ச் சாந்தணிந்த கூந்தலின் மேல், கோதை ஆர்த்து - மாலையைச் சூட்டி எ-று. இலம்பகம் - நெற்றிச் சூட்டாகிய மாலை. காட்டுமாறு: ஈறு தொக்கது. தகர ஞாழல்: தகரமும் ஞாழலும் கூடிய சாந்து என அன்மொழித் தொகை. (163) கற்பகங் கொடுத்த விந்தக் காமரு கலன்க ளெல்லாம் பொற்பமெய்ப் படுத்து முக்கட் புனிதனுக் கீறி லாத அற்புத மகிழ்ச்சி தோன்ற வழகுசெய் தமையந் தோன்றச் சொற்கலை யாளும் பூவின் கிழத்தியுந் தொழுது நோக்கி. (இ-ள்.) கற்பகம் கொடுத்த இந்தக் காமரு கலன்கள் எல்லாம் - கற்பகத்தரு அளித்த இந்த அழகிய அணிகளையெல்லாம், பொற்பமெய்ப் படுத்து - அழகுபடத் திருமேனியில் அணிந்து, முக்கண் புனிதனுக்கு - மூன்று கண்களையுடைய சிவபெருமானுக்கு, ஈறு இலாத - முடிவில்லாத, அற்புதம் மகிழ்ச்சி தோன்ற - வியப்பும் மகிழ்வும் உண்டாக, அழுகு செய்து - ஒப்பனை செய்து, அமையம் தோன்ற - நல்லோரை வர, சொல் கலையாளும் பூவின் கிழத்தியும் - கலைமகளும் திருமகளும், தொழுது - வணங்கி, நோக்கி - (அழகைக் கண்குளிரக்) கண்டு எ-று. காமரு என்பதற்கு முன் உரைத்தமை காண்க. அற்புதம் மகிழ்ச்சிக்கு அடையுமாம். சொல் - புகழுமாம். கமலை யென்பது திருமகட்குச் சிறந்த பெயராகலின் பூவின் கிழத்தி என்றார். நோக்கித் தொழுது என மாறி யுரைத்தலும் அமையும். (164) சுந்தர வல்லி தன்னைச் சோபன மென்று வாழ்த்தி வந்திரு கையுந் தங்கண் மாந்தளிக் கைக ணீட்டக் கொந்தவிழ் கோதை மாது மறமெலாங் குடிகொண் டேறும் அந்தளிர்ச் செங்கை பற்றா வெழுந்தனண் மறைக ளார்ப்ப. (இ-ள்.) சுந்தரவல்லி தன்னைச் சோபனம் என்று வாழ்த்தி - சுந்தரவல்லியாகிய தடாதகைப் பிராட்டியாரை மங்கலம் என்று வாழ்த்துப் பாடி, இரு கையும் வந்து - இரு பக்கமும் வந்து, தங்கள் மாந்தளிர்க் கைகள் நீட்ட - தங்களுடைய மாந்தளிர்போன்ற (மெல்லிய) கைகளை நீட்ட (அவைகளை), கொந்து அவிழ் கோதைமாதும் - பூங்கொத்து அலர்ந்த கூந்தலையுடைய பிராட்டி யாரும், அறம் எலாம் குடிகொண்டு ஏறும் - முப்பத்திரண்டு அறங்களும் குடிகொண்டு ஏறிய, அம் தளிர்ச் செங்கை பற்றா - அழகிய தளிர்போன்ற சிவந்த கைகளாற் பற்றிக்கொண்டு, மறைகள் ஆர்ப்ப எழுந்தனள் - வேதங்கள் ஒலிக்க எழுந்தருளினார் எ-று. தன்னை வாழ்த்தியென இயையும். இரு கை - இரு பக்கம். கையால் அறம் வளர்த்தாளாகலின் அறமெலாம் குடிகொண்டேறும் செங்கை யென்றார். கையாற் பற்றி யென்க. (165) (கலி விருத்தம்) அறைந்தன தூரிய மார்த்தன சங்கம் நிறைந்தன வானவர் நீண்மலர் மாரி எறிந்தன சாமரை யேந்திழை யார்வாய்ச் சிந்தன1 மங்கல வாழ்த்தெழு செல்வம். (இ-ள்.) தூரியம் அறைந்தன - திருமண முரசங்கள் ஒலித்தன; சங்கம் ஆர்த்தன - சங்கங்கள் முழங்கின; வானவர் நீண்டுமலர் மாரி நிறைந்தன - தேவர்கள் (பொழியும்) மிக்க மலர் மழை நிறைந்தன; சாமரை எறிந்தன - சாமரைகள் வீசப் பெற்றன; மங்கல வாழ்த்து எழுசெல்வம் - மங்கல வாழ்த்து என எழுகின்ற செல்வங்கள், ஏந்து இழையார் வாய் சிறந்தன - ஏந்திய அணிகளையுடைய மகளிர் வாயினின்றும் தோன்றிச் சிறந்தன எ-று. எறிந்தன: செயப்பாட்டு வினைப் பொருளில் வந்த செய்வினை. மங்கல வாழ்த்தைச் செல்வமென்றார்; “ செல்வன் கழலேத்துஞ் செல்வம் செல்வமே” என்னும் ஆளுடைய பிள்ளையார் திருவாக்கைச் சிந்திக்க. (166) அடுத்தனள் சுந்தரி யம்பொன டைப்பை எடுத்தன ளாடி திலோத்தமை யேந்திப் பிடித்தனள் விந்தை பிடித்தனள் பொற்கோல் உடுத்த நெருக்கை யொதுக்கி நடந்தாள். (இ-ள்.) சுந்தரி அடுத்தனன் அம்பொன் அடைப்பை எடுத்தனன் - இந்திராணி வந்து அழகிய பொன்னாலாகிய அடைப்பையை ஏந்தினாள்; திலோத்தமை ஆடி ஏந்திப் பிடித்தனள் - திலோத்தமை கண்ணாடியை ஏந்திப் பிடித்தாள்; விந்தை பொன்கோல் பிடித்தனள் - வீரமகள் பொற் பிரம்பு கொண்டு, உடுத்த நெருக்கை ஒதுக்கி நடந்தாள்- சூழ்ந்த நெருக்கினை விலக்கி நடந்தாள் எ-று. முற்றுக்களுள் எச்சமாய் வருவன காண்க. (167) கட்டவிழ் கோதை யரம்பை களாஞ்சி தொட்டன ளூர்ப்பசி தூமணி யால வட்ட மசைத்தனள் வன்ன மணிக்கா சிட்டிழை கோடிகை மேனகை கொண்டாள். (இ-ள்.) கட்டு அவிழ் கோதை அரம்பை - முறுக்கு விரிந்து மலர் மாலையை அணிந்த அரம்பை, களாஞ்சி தொட்டனள் - காளாஞ்சியை ஏந்தினள், ஊர்ப்பசி தூமணி ஆலவட்டம் அசைத்தனள்- ஊர்வசி புனிதமான மணிகள் பதித்த ஆலவட்டத்தை அசைத்தனள்; மேனகை வன்னம் மணிக்காசு இட்டு இழை கோடி கை கொண்டாள்- மேனகை நிறமும் அழகும் பெற்ற மணிகள் அழுத்திய பூந்தட்டினை ஏந்தினள் எ-று. ஊர்ப்பசி, ஊர்வசி யென்பதன் றிரிபு; பிரமனது ஊரு விற்றோன்றினமைபற்றி வந்த பெயர்; ஊரு - தடை. ஆலவட்டம் - சரந்தாற்றி. கோடிகை - பூந்தட்டு. (168) கொடிகளெ னக்குளிர் போதொடு சிந்தும் வடிபனி நீரினர் வீசுபொன் வண்ணப் பொடியின ரேந்திய பூம்புகை தீபத் தொடியணி கையினர் தோகையர் சூழ்ந்தார். (இ-ள்.) தோகையர் - பல மகளிர், கொடிகள் என - கொடிகள் போல, குளிர் போதொடு சிந்தும் வடி பனி நீரினர் - குளிர்ந்த மலர் களுடன் சிந்துகின்ற வடித்த பனி நீரை உடையவரும், வீசு பொன் வண்ணப் பொடினியர் - வீசுகின்ற பொன்னிறப் பொடியினை உடையவரும், பூம் புகை தீபம் ஏந்திய தொடி அணி கையினர் - அழகிய தூபத்தையும் தீபத்தையும் ஏந்திய வளையலணிந்த கையினை உடைய வருமாய், சூழ்ந்தார் - மொய்ந்தார்கள் எ-று. கொடிகள் போதும் பனிநீரும் சிந்துமாறு சிந்துவா ரென்க. அழகிய பொற்பொடி யென்னலுமாம். ஏந்தப்பட்ட புகையையும் தீபத்தையும் உடைய கை யென்பதே சொற்றொடருக் கியைந்த பொருள். (169) தோடவி ழோதியர் சோபன கீதம் பாட விரைப்பனி நீரொடு சாந்தம் ஏடவிழ் மென்மல ரிட்ட படத்திற் பாடக மெல்லடி யைப்பையா வையா. (இ-ள்.) தோடு அவிழ் ஓதியர் சோபன கீதம் பாட - இதழ் விரிந்த மலரை யணிந்த கூந்தலையுடைய மகளிர் மங்கலப் பாட்டுப்பாட விரைப்பனி நீரொடு சாந்தம் ஏடு - அவிழ் மெல் மலர் - மணம் பொருந்திய பனி நீருடன் சந்தனத்தையும் இதழ் விரிந்த மெல்லிய மலரையும், இட்ட படத்தில் - இட்ட நடைப்பாவாடையில், பாடகம்மெல் அடியை பையவையா - பாடகமணிந்த மெல்லிய திருவடிகளை மெல்லென வைத்து எ-று. மேல் மூன்று செய்யுளிற் கூறிய முற்றுக்களை எச்சப்படுத் தெண்ணி, இச் செய்யுளிலுள்ள வையா என்பதனுடன் முடிக்க.(170) செம்மல ராளொடு நாமக டேவி கைம்மலர் பற்றின கல்வியொ டாக்கம் இம்மையி லேபெறு வார்க்கிது போதென் றம்மணி நூபுர மார்ப்ப நடந்தாள். (இ-ள்.) செம்மலராளொடு நாமகள் - செந்தாமரை மலரில் வசிக்கும் திருமகளையும் கலைமகளையும், தேவி கை மலர் பற்றின - இறைவியின் கைகளாகிய மலர்கள் பற்றிக்கொண்டன ஆதலின், கல்வியோடு ஆக்கம் இம்மையிலே பெறுவார்க்கு - கல்விப் பொருளையும் செல்வப் பொருளையும் இப்பிறப்பிலே ஒரு சேரப் பெறுவார்க்கு, இது போது என்று அம் மணி நூபுரம் ஆர்ப்ப நடந்தால் இதுவே சமயமென்று அழகிய மணிகள் பதித்த நூபுரங்கள் ஒலிக்க நடந்தருளினார் எ-று. தேவியைப் பணிந்தால் இம்மையிலே செல்வமும் கல்வியும் பெறலாமென்பது குறிப்பிட்டவாறு. போது - செவ்வி. இது தற்குறிப்பேற்றவணி. (171) ஒல்கினண் டுமல்ல வொதுங்கின ளன்பு பில்கி யிருந்த பிரானரு கெய்தி மெல்கி யெருத்த மிசைத்தலை தூக்கிப் புல்கிய காஞ்சி புலம்ப விருந்தாள். (இ-ள்.) ஒல்கினள் மெல்ல ஒதுங்கினள் - அசைந்து மெல்ல ஓதுங்கி, அன்பு பில்கி இருந்த பிரான் அருகு எய்தி - (தம்மேல்) அன்பு நிறைந்திருந்த இறைவன் பக்கலிற் சென்று, மெல்கி - மென்மைக் குணம் நிரம்பி, எருத்த மிசைத்தலை தூக்கி - பிடரின்மேல் தமது திருமுடியை வைத்து, புல்கிய காஞ்சி புலம்ப இருந்தாள் - பொருந்திய காஞ்சி ஒலிக்க அமர்ந்தருளினார் எ-று. ஒதுங்கினள் - நடந்தாள்: அநுவாதம். நாணத்தால் மென்மை யுற்று இருக்கும்பொழுது காஞ்சி யொலித்தல் கூறினார். முன்னுள்ள முற்றுக்கள் எச்சமாயின. (172) (அறுசீரடியாசிரிய விருத்தம்) அற்பக விமைக்குஞ் செம்பொ னரதன பீடத் தும்பர்ப் பொற்க லாத காட்சிப் புனிதனோடு டிருந்த நங்கை எற்பகல் வலங்கொண் டேகு மெரிகதிர் வரையி னுச்சிக் கற்பக மங்கிற் பூத்த காமரு வல்லி யொத்தாள். (இ-ள்.) அல்பக இமைக்கும் செம்பொன் அரதன பீடத்து உம்பர் - இருள்கெட ஒளி வீசும் செம்பொன்னாலாகிய மணிகள் இழைத்த தவிசின்மேல், பொற்பு அகலாத காட்சிப் புனிதனோடு - பொலிவு நீங்காத தோற்றத்தையுடைய தூய இறைவனோடு, இருந்த நங்கை - இருந்தபிராட்டியார், எரி கதிர் - ஒளியினையுடைய சூரியன், எல் பகல் வலம் கொண்டு ஏகும் - இரவும் பகலும் வலமாகப் போகப் பெற்ற, வரையின் உச்சி - மேரு மலையின் உச்சியில். கற்பக மருங்கில் - கற்பகத் தருவின் பக்கத்திலே, பூத்த காமருவல்லி ஒத்தாள் - மலர்ந்த அழகிய கொடியினை ஒத்தார் எ-று. எற்பகல் என்பதற்கு ஒளியையுடைய சூரியன் என்று பொருள் கூறி, எரி கதிர் என்பதனை வரைக்கு அடையாக்கலுமாம். பூத்த - பொலிந்த வென்றுமாம். பொற்பீடத்திற்கு மேருவும், இறைவற்குக் கற்பகமும், இறைவிக்கு வல்லியும் உவமம். காமவல்லி யெனப் பெயருமாம். (173) பண்ணுமின் னிசையு நீருந் தண்மையும் பாலும் பாலில் நண்ணுமின் சுவையும் பூவு நாற்றமு மணியு மங்கேழ் வண்ணமும் வேறு வேறு வடிவுகொண் டிருந்தா லொத்த தண்ணலு முலக மீன்ற வம்மையு மிருந்த தம்மா. (இ-ள்.) அண்ணலும் உலகம் ஈன்ற அம்மையும் இருந்தது - சிவபெருமானும் உலகங்களை யெல்லாம் பெற்றருளிய அன்னை யாகிய பிராட்டியும் வெவ்வேறு வடிவங் கொண்டிருந்தது, பண்ணும் இன் இசையும் - பண்ணும் இனிய இசையும், நீரும் தண்மையும் - நீரும் தட்பமும், பாலும் பாலில் நண்ணும் இன்சுவையும்- பாலும் அப்பாலின்கட் பொருந்திய இனியசுவையும், பூவும் நாற்றமும் - பூவும் மணமும், மணியும் அம் கேழ் வண்ணமும் - மணியும் அழகிய ஒளியும் (ஆகிய இவைகள்), வேறு வேறு வடிவு கொண்டு இருந்தால் ஒத்தது - வேறு வேறாக வடிவங்கொண்டு ஓரிடத்தி லிருந்த தன்மையைப் போன்றது எ-று. நண்ணும் என்பதனைப் பண் முதலியவற்றோடுங் கூட்டி, அதன் கட்பொருந்திய எனப் பொருளுரைத்துக்கொள்க. முழுமுதற் பொருளொன்றே சிவமும் சத்தியுமெனத் தாதான் மியத்தால் இருதிறப்பட்டுப் பிரிப்பின்றி நிற்பதாகலின் அதற்கு அங்ஙனம் பிரிப்பின்றி நிற்கும் பண்ணும் இசையும் போல்வனவற்றை உவமை கூறினார்; தன்னை விளத்குவதூஉம் விடயங்களை விளக்குவதூஉந் தானேயாகிய ஞாயிறொன்றுதானே விடயங்களை விளக்குழிக் கதிரெனவும் தன்னை விளக்குழிக் கதிரோனெனவும் தாதான் மியத்தால் இருதிறப்பட்டியைந்து நிற்றல்போலப் புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரையாய்த் தன்னியல்பி னிற்பதூஉம் புறப்பொருளை நோக்கி நின்றுணர்ந்துவதூஉமாகிய இருதன்மையை யுடைய பேரறிவாய சைதன்னிய மொன்றே அங்ஙனம் புறப்பொருளை நோக்கி நிற்கு நிலையிற் சத்தியெனவும், புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரையாய் நிற்கு நிலையிற்சிவமெனவும் தாதான் மியத்தால் இருதிறப்பட்டியைந்துநிற்குமென வுணர்க என்னும் சிவஞானபோத மாபாடிய வுரை இங்கு நோக்கற்பாலது. இறைவனும் இறைவியும் ஒரு காரணம் பற்றி இங்ஙனம் வெவ்வேறு வடிவு கொண்டிருப்ப தல்லது தம்முள் வேறல்லரென வுணர்க. கேழ் வண்ணம் - நிறம்: ஒரு பொருட் பன்மொழி; ஈண்டு ஒளியை உணர்த்திற்று. அம்மா; வியப்பிடைச் சொல். (174) விண்ணுளார் திசையி னுள்ளார் வேறுளார் பிலத்தி னுள்ளார் மண்ணுளார் பிறரும் வேள்வி மண்டபத் தடங்கி யென்றும் பண்ணுளா ரோசை போலப் பரந்தெங்கு நிறைந்த மூன்று கண்ணுளா ரடியினீழல் கலந்துளார் தம்மை யொத்தார். (இ-ள்.) விண்ணுளார் - துறக்கத்திலுள்ளவர்களும், திசையின் உள்ளார் - திக்குகளிலுள்ளவர்களும், வேறுளார் - ஏனைய இடங் களிலுள்ளவர்களும், பிலத்தின் உள்ளார் - பாதலத்திலுள்ளவர்களும், மண்ணுளார் - நிலவுலகத்திலுள்ளவர்களும், பிறரும் - மற்றை யோரும், வேள்வி மண்டபத்து அடங்கி - திருமண மண்டபத்தின் கண் (தம்முட் பேதமின்றி ஒரு சேர) அடங்கி, என்றும் - எப்பொழுதும், பண்ணுள் ஆர் ஒசை போலப் பரந்து - பண்ணின்கண் நிறைந்த இசைபோலப் பரவி, எங்கு நிறைந்த மூன்று கண்ணுளார் - எங்கும் நிறைந்துநிற்கும் மூன்று கண்களையுடைய சிவபெருமானது, அடியின் நீழல் கலந்துளார் தம்மை ஒத்தார் - திருவடி நீழலிற் கலந்தவரை ஒத்தார் எ-று. திருவடி நீழலிற் கலந்தார் தம்முள் வேற்றுமையின்றி அதன்கண் அடங்கியிருத்தல் போல மண்டபத்துள் விரவினோரும் தம்முள் வேற்றுமையின்றி அதன்கண் அடங்கியிருந்தா ரென்க; மண்டபத்தின் விரிவு கூறியதூஉ மாயிற்று. பண்ணின்கண் ஓசை போல இறைவன் பரந்து நிறைந்து அத்துவிதமா மியல்பினை, “ பண்ணையு மோசையும் போலப் பழமதுவும் எண்ணுஞ் சுவையும்போ லெங்குமாம் - அண்ணல்தாள் அத்துவித மாத லருமறைக ளொன்றென்னா தத்துவித மென்றறையு மாங்கு ” என்னும் சிவஞானபோதத்துள் வரும் திருவெண்பாவானறிக. (175) ஆயபோ தாழி யங்கை யண்ணல்பொற் கரக நீராற் சேயவான் சோதி யாடற் சேவடி விளக்கிச் சாந்தந் தூயபோ தவிழச் சாத்தித் தூபமுஞ் சுடருங் கோட்டி நேயமோ டருச்சித் தைய னிறையருள் பெற்று நின்றான். (இ-ள்.) ஆயபோது - அப்பொழுது, ஆழி அம் கை அண்ணல்- திகிரிப் படையை அழகிய கையிற் கொண்ட திருமால், பொன் கரகநீரால் - பொன்னாலாகிய கரகத்திலுள்ள நீரினால், சேய வான் சோதி - சிவந்த சிறந்த ஒளிப் பிழம்பாகிய இறைவனது, ஆடல் சேவடி விளக்கி - திருக்கூத்தாடும் சிவந்த திருவடிகளை விளக்கி, சாந்தம் தூய போது அவிழச்சாத்தி - சந்தனத்தையும் புனிதமான மலர்களையும் மணம் வீசச் சாத்தி, தூபமும் சுடரும் கோட்டி - தூப தீபங்களை (விதிமுறையாற்) சுழற்றி நேயமோடு அருச்சித்து - அன்போடு அருச்சனை செய்து, ஐயன் நிறை அருள் பெற்று நின்றான் - இறைவனுடைய நிறைந்த அருளைப் பெற்று நின்றான் எ-று. அங்கை - அகங்கையுமாம். சேய - செம்மையாகிய; விகார மில்லாத என்றுரைத்தலுமாம். அவிழ - விரிய; மணமென்பது வருவிக்க. கோட்டி - வளைத்து; சுழற்றி யென்றபடி. (176) விண்டலத் தவரு ளாதி வேதியன் பாத தீர்த்தம் முண்டகத் தவனு மாலு முனிவரும் புரந்த ராதி அண்டரு நந்தி தேவு மடுகணத் தவரு மேனைத் தொண்டரும் புறம்பு முள்ளு நனைத்தனர் சுத்தி செய்தார். (இ-ள்.) விண் தலத்தவருள் ஆதி வேதியன் - தேவர்களில் முதன்மை பெற்ற அந்தணனாகிய இறைவனது, பாத தீர்த்தம் - திருவடித் தீர்த்தத்தால், முண்டகத்தவனும் மாலும் - தாமரை மலரில் வசிக்கும் பிரமனும் திருமாலும், முனிவரும் - முனிவர்களும், புரந்தர ஆதி அண்டரும் - இந்திரன் முதலான தேவர்களும், நந்தி தேவும் - திருநந்தி தேவரும், அடு கணத்தவரும் - அவரை அடுத்த சிவகணங்களும், ஏனைத் தொண்டரும் - மற்றை அடியார்களும், புறம்பும் உற்றும் நனைத்தனர் சுத்தி செய்தார் - தங்கள் புறத்தையும் அகத்தையும் நனைத்துத் தூய்மை யாக்கினார்கள் எ-று. சிவபெருமானைத் தேவர்களுள் அந்தணனென்று மெய்ந் நூல்கள் கூறும். அடு கணம்: அடுத்த கணம் என வினைத்தொகை; இங்ஙனம் அருகியன்றி வாராது. தலையிற் றெளித்து உள்ளும் பருகினாரென்பார் புறம்பும் உள்ளும் நனைத்தனர் என்றார். நனைத்தனர்: முற்றெச்சம். (177) அத்தலை நின்ற மாயோ1 னாதிசெங் கரத்து நங்கை கைத்தலங் கமலப் போது பூத்ததோர் காந்த ளொப்ப வைத்தரு மனுவா யோதக் கரகநீர் மாரி பெய்தான் தொத்தலர் கண்ணி விண்ணோர் தொழுதுபூ மாரி பெய்தார். (இ-ள்.) அத்தலை நின்ற மாயோன் - அங்கு நின்ற திருமால், ஆதி செங்கரத்து - முதல்வனது சிவந்த திருக்கையின்கண், கமலப் போது பூத்தது ஓர் காந்தள் ஒப்ப - தாமரை மலரில் மலர்ந்ததாகிய ஒரு காந்தள்மலரை ஒக்க, நங்கை கைதலம் வைத்து - இறைவியின் திருக்கரத்தை வைத்து, அரு மனு வாய் ஓத - அரிய மந்திரத்தை வாய் கூற, கரக நீர் மாரி பெய்தான் - கரகத்திலுள்ள நீரைப் பொழிந்தான் (தாரை வார்த்தான்); தொத்து அலர் கண்ணி விண்ணோர் - பூங் கொத்தலர்ந்த மாலையையுடைய தேவர்கள், தொழுது பூமாரி பெய்தார் - வணங்கி மலர்மழை பொழிந்தார்கள் எ-று. மலயத்துவச பாண்டியன் இன்மையானும் திருமால் உமைக்கு உடன்பிறப்பா முரிமையுடைய னாகலானும் அவன் தாரைவார்த் தளித்தானென்க; அயனும் மாலும் இத்தகை உரிமையுடைய ரென்பது, “ அறுகெடுப் பாரய னும்மரியு மன்றிமற் றிந்திர னோடமரர் நறுமுறு தேவர்க ணங்க ளெல்லா நம்மிற்பின் பல்ல தெடுக்கவொட்டோம்” என்னும் திருப்பொற் சுண்ணத்தா னறிக. நீரை மிகுதியாகச் சொரிந்தா னென்பார் நீர்மாரி பெய்தான் என்றார்; பின் பூமாரி பெய் தார் என்பதை நோக்க நயமுடைத்தாதலுங் கருதி. கமலப்போது பூத்ததோர் காந்தளொப்ப என்றது இல்பொருளுவமை. (178) ஆடினா ரரம்பை மாதர் விஞ்சைய ரமுத கீதம் பாடினா ரரவென் றார்த்து பரவினார் முனிவர் வானோர் மூடினார் புளகப் போர்வை கணத்தவர் மூடிமேற் செங்கை சூடினார் பலரு மன்றற் றொடுகட லின்பத் தாழ்ந்தார். (இ-ள்.)அரம்பைமாதர் ஆடினார் - அரம்பையர்கள் ஆடினார்கள். விஞ்சையர் அமுத கீதம் பாடினார் - வித்தியாதரர்கள் அமுதம் போன்ற இசைகளைப் பாடினார்கள்; முனிவர் அர என்று ஆர்த்துப் பரவினார் - முனிவர்கள் அரகர வென்று முழங்கித் துதித்தார்கள்; வானோர் புகளப் போர்வை மூடினார் - தேவர்கள் புளகமாகிய போர்வையாற் பொதியப் பெற்றார்கள்; கணத்தவர் முடிமேல் செங்கை சூடினார் - சிவ கணத்தவர்கள் முடியின்மேல் சிவந்த கைகளைக் குவித்தார்கள்; பலரும் மன்றல் இன்பத் தொடு கடல் ஆழ்ந்தார். அனைவரும் திருமண இன்பமாகிய கடலில் அமிழ்ந்தார்கள் எ-று. கடலி னொருபுறம் சகரரால் தோண்டப் பட்டமையின் தொடு கடல் என்றார். (179) புத்தனா ரெறிந்த கல்லும் போதென மிலைந்த வேத வித்தனா ரடிக்கீழ் வீழ விண்ணவர் முனிவ ரேனோர் சுத்தநா வாசிகூறக்1 குங்குமத் தோயந் தோய்ந்த முத்தவா லரிசி வீசி மூழ்கினார் போக வெள்ளம். (இ-ள்.) புத்தனார் எறிந்த கல்லும் - சாக்கிய நாயனார் எறிந்த கல்லையும், போது என மிலைந்த வேத வித்தனார் - மலரைப் போலச் சூடியருளிய வேத காரணராகிய இறைவனது, அடிக்கீழ் விழ - திருவடியின் கீழ் வீழுமாறு, விண்ணவர் முனிவர் ஏனோர் - தேவர்களும் முனிவர்களும் மற்றையரும், சுத்தநா ஆசி கூறி - புனித நாவினால் ஆக்க மொழி கூறி குங்குமத் தோயம் தோய்ந்த - குங்கும நீரில் நனைந்த, முத்தவால் அரிசி வீசி - முத்துப் போன்ற வெள்ளிய அரிசியை வீசி, போக வெள்ளம் மூழ்கினார் - இன்ப வெள்ளத்தில் அழுந்தினார்கள் எ-று. புத்தனார் - சாக்கிய நாயனார்; பெரிய புராணத்திற் கூறப்பட்ட தனி யடியார்களில் ஒருவர்; இவர் ஒருகால் சிவலிங்கப் பெருமானைக் கண்டு அன்பு மீக் கூர்ந்து பதைத்துக் கல்லெறிந்தவர், அது திருவருட் குறிப்பால் நிகழ்ந்ததெனக்கொண்டு பின்புநாடொறும் மறவாதுகல் லெறிதலாகிய திருத்தொண்டினைச் செய்து முத்தி பெற்றார்; இதனை “ வார்கொண்ட வனமுலையா ளுமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியற்கு மடியேன்” என்னுத் திருத்தொண்டத் தொகையா லறிக. இவர் தாம் முன்பிருந்த புத்த சமயக் கோலத்தோடிருந்தே வழிபட்டமையின் சாக்கியரெனப் பட்டார். சாக்கியர் என்பது பெளத்தருக்கொரு பெயர். வேதவித்து- வேதங்களை யறிந்தவனுமாம். அடிக்கீழ் வீழ அரிசி வீசி யென்க. (180) அம்மையோ டப்ப னென்ன வலர்மணம் போலநீங்கார் தம்மருள் விளையாட் டாலே யாற்றநாட் டமியர் போல நம்மனோர் காணத் தோன்றி நன்மணம் புணர ஞாலம் மும்மையு முய்ந்த வென்னாத் தத்தமின் மொழிய லுற்றார். (இ-ள்.) அம்மையோடு அப்பன் என்ன - அம்மையும் அப்பனு மென்று, அலர்மணம் போல நீங்கார் - பூவும் மணமும் போலப் பிரியாதவராகிய பெருமானும் பிராட்டியும், தம் அருள் விளை யாட்டாலே - தமது அருள் விளையாடலினும், ஆற்ற நாள் பிரித்தவர் போல நம்போன்றார் காணுமாறு தோன்றி, நல் மணம் புணர - நல்ல திருமணஞ் செய்தருள, ஞாலம் மும்மையும் உய்ந்த என்னா - மூன்று உலகங்களும் தேறின என்று, தத்தமில் மொழியல் உற்றார் - யாவரும் தங்கள் தங்களுக்குள் கூறி மகிழ்ந்தனர் எ-று. என்ன - என்று, இதனாலும் தாதான்மியத்தான் இருதிறப் பட்டியைந்து நிற்குந் தன்மை கூறினார்; இங்ஙனம் பிரிப்பின்றி யிருந்து அம்மையும் அப்பனும் எனப்படுதலை, “ அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக” என்னும் திருக்களிற்றுப்படியாரா லறிக. ஆற்ற: மீகவெனப்பொருள் படும் உரிச்சொல்; செய வெனெச்சமாகும்; “ ஆற்றவும் பழையதுன் னங்கை வச்சிரம்” என இந்நூலுள்ளும், “ ஆற்றநாள் போக்கினேனே” எனத் தேவாரத் துள்ளும் வருதல் காண்க; மிக நாள் என இமை யாமையின் ஈண்டு மிகவும் பலவாகிய என விரிக்கப்பட்டது. புணர- புணர்தலால். ஞாலம் ஈண்டு உலகப் பொது. மும்மை: மை பகுதிப் பொருள் விகுதி. (181) காமரு சுரபித் தும்பால் கற்பகக் கனிநெய் கன்னல் நாமரு சுவைய வின்ன நறுமது பருக்கஞ் செம்பொன் ஆமணி வட்டத் திண்காற் பாசனத் தமையப் பெய்து தேமரு கொன்றை யானைத் திருக்கைதொட் டருள்க வென்றார். (இ-ள்.) காமரு சுரபித் தீம்பால் - அழகிய காமதேனுவின் இனிய பாலும், கற்பகக் கனி - கற்பகம் அளித்த பழமும், நெய் கன்னல் - நெய்யும் சருக்கரையும் (கலந்த), நாமரு சுவைய இன்ன நறுமது பருக்கம் - நாவிற்குப் பொருந்திய சுவையையுடைய இந்த நறிய மது பருக்கத்தை, செம்பொன் ஆம் மணி வட்டம் திண்கால் பாசனத்து - செம்பொன்னாலகிய மணிகள் இழைத்த வட்டமாகிய வலிய காலையுடைய கலத்தின்கண், அமையப் பெய்து - பொருந்த இட்டு, தேமரு கொன்றையானை - தேன் பொருந்திய கொன்றை மாலையை யணிந்த சிவபெருமானை, திருக்கை தொட்டருள்க என்றார் - திருக்கை தொட்டருள்க என்று வேண்டினர் எ-று. காமரு சுரபி - கற்பகக் காவிற் பொருந்திய சுரபி யென்றுமாம்; கற்பகம் அளித்த கனியென்க. இவற்றை மது பர்க்கம் என்ப. பாசனம் - உண் கலன். திருக்கை தொட்டருள்க - உண்க; மரபு - நாமருவு, தேமருவு என்பன உகரந் தொக்கு நின்றன. (182) அங்கைவைத் தமுது செய்தாங் ககமகிழ்ந் தட்ட மூர்த்தி கொங்கவிழ் குமுதச் செவ்வாய் கோட்டிவாண் முறுவல்பூத்தான் புங்கவர் முனிவர் கற்பின் மகளிரும் போதின் மேய மங்கைய ரிருவ ரோடு மங்கலம் பாட லுற்றார். (இ-ள்.) அட்ட மூர்த்தி - எட்டு மூர்த்தங்களை யுடையவன், அம் கை வைத்து - அழகிய கை யாற் றொட்டருளி, அமுது செய்தாங்கும் அகமகிழ்ந்து - அமுது செய்தருளினாற்போல மன மகிழ்ந்து, கொங்கு அவிழ் குமுதச் செவ்வாய் கோட்டி - மணத்தொடு மலர்ந்த ஆம்பல் போன்ற சிவந்த திருவாயைக் குவித்து, வாள் முறுவல் பூத்தான் - ஒள்ளிய புன்னகை செய்தருளினான்; புங்கவர் முனிவர் கற்பின் மகளிரும் - தவத்தாலுயர்ந்தவராகிய முனிவர்களின் பன்னியர்களும், போதில் மேய மங்கையர் இருவரோடு - தாமரை மலரில் வசிக்கும் திருமகளும் கலைமகளும், மங்கலம் பாடலுற்றார் - மங்கலம் பாடத் தொடங்கினார்கள் எ-று. புங்கவர் - தேவருமாம். (183) மாக்கடி முளரி வாணன் மைந்தரோ டொருங்கி வைகி நாக்களி னடுநா வாரத் துடுவையா னறுநெ யார்த்தி வாக்கிட வார மாந்தி வலஞ்சுழித் தகடு வீங்கித் தேக்கிடு மொலியி னார்த்து நிமிர்ந்தது தெய்வச் செந்தீ. (இ-ள்.) மாக் கடி முளரிவாணன் - பெருமை பொருந்திய மணமுடைய தாமரை மலரில் வசிக்கும் பிரமன், மைந்தரோடு ஒருங்கு வைகி - புதல்வர்களோடு ஒரு சேர இருந்து, நாக்களின் நடுநா ஆர - ஏழு நாக்களில் நடு நாவால் சுவை யறியுமாறு, துடுவையால் நறுநெய் ஆர்த்திவாக்கிட - சுருக்கு சுருவங்களால் நறிய நெய்யை நிரப்பிவார்க்க, தெய்வச் செந்தீ - தெய்வத் தன்மையுடைய சிவந்த தீயானது, ஆரமாந்தி - நிரம்ப உண்டு, வலம் சுழித்து - வலமாகச் சுழித்து, அகடுவீங்கி - வயிறு நிரம்பி, தேக்கிடும் ஒலியின் ஆர்த்து - தேக்நெயிம் ஒலிபோல ஒலித்து, நிமிர்ந்தது - மேலெழுந் தோங்கியது எ-று. வாணன் - வாழ் நன். மைந்தர் இவரென்பது புராண வரலாற்றுள் உரைக்கப்பட்டது. ஆர்த்தி - நிறையச் செய்து. தேக்கெறிதலை இப்பொழுது ஏப்பமிடல் என்பர். செந்தீத் தெய்வம் என மாற்றுதலுமாம். (184) சுற்றுநான் மறைக ளார்ப்பத் தூரியஞ் சங்க மேங்கக் கற்றநான் முகத்தோன் வேள்விச் சடங்குநூல் கரைந்த வாற்றான் முற்றமங் கலநாண் சாத்தி முழுதுல கீன்றாள் செங்கை பற்றினன் பற்றி லார்க்கே வீடருள் பரம யோகி. (இ-ள்.) சுற்றும் நால் மறைகள் ஆர்ப்ப - நான்கு புறத்திலும் நான்கு வேதங்களும் ஒலிக்கவும், தூரியம் சங்கம் ஏங்க - இயங்களும் சங்கங்களும் ஒலிக்கவும், கற்ற நான் முகத்தோன் - வேதங்களை உணர்ந்த பிரமன், நூல் கரைந்த வாற்றால் - வேத சிவாகமம் கூறிய முறையால், வேள்விச் சடங்கு முற்ற - திருமணச் சடங்குகளைக் குறைவின்றி முடிக்க, பற்று இலார்க்கே வீடு அருள் பரமயோகி - இருவகைப் பற்றும் அற்றவர்க்கே வீட்டின்பத்தை அருளும் பரமயோகியாகிய இறைவன், மங்கல நாண் சாத்தி - திருமங்கல நாணைப் பூட்டி, முழுது உலகுஈன்றாள் செங்கை பற்றினன் - எல்லா உலகங்களையும் பெற்றருளிய பிராட்டியாரின் சிவந்த திருக் கரங்களைப் பற்றியருளினான் எ-று. முற்றுவிக்க என்பது முற்ற வென நின்றது. இறைவன் யோகியா யிருத்தல் உயிர்களுக்கு முத்தியளித்தற் பொருட்டன்றித் தனக்கொரு பயன் கருதியன்றென்பார் வீடருள் பரமயோகி என்றார்; “ யோகிய யின்பமுத்தி யுதவுத லதுவு மோரார்” எனச் சிவஞான சித்தியார் கூறுவதுங் காண்க. உலகங்களை யெல்லாம் ஈன்றவளை மணந்தானென்பதும் பற்றற்வர்க்கே அருளும் பரமயோகியாயுள்ளவன் ஒருத்தி செங்கை பற்றின னென்பதும் முரணாகி அணி செய்தல் காண்க. கை பற்றுதல் - பாணிக்கிரகணம். ஏகாரம் பிரிநிலை. (185) இணரெரித் தேவுந் தானே யெரிவளர்ப் பவனுந் தானே உணவுகொள் பவனுந் தானே யாகிய வொருவன் வையம் புணர்வுறு போக மூழ்கப் புருடனும் பெண்ணு மாகி மணவினை முடித்தா னன்னான் புணர்ப்பையார் மதிக்க வல்லார். (இ-ள்.) இணர் எரித்தேவும் தானே - பல சுடரையுடைய தீக்கடவுளுதானே, எரி வளர்ப்பவனும் தானே - அத்தீயை வளர்க்கின்றவனும் தானே, உணவு கொள்பவனும் தானே - அத் தீ முகமாக அவியைக் கொள்ளுபவனும் தானே, ஆகிய ஒருவன் - ஆகிய இறைவன் ஒருவனே, வையம் புணர்வுறு போகம் மூழ்க - உயிர்கள் புணர்தல் பொருந்திய போகத்தில் அழுந்த, புருடனும் பெண்ணுமாகி - ஆணும் பெண்ணுமாகி, மணவினை முடித்தான் - மணச் செயலை முடித்தருளினான்; அன்னான் புணர்ப்பை மதிக்க வல்லார் யார் - அவ்விறைவனது செயலை அளந்தறிய வல்லவர் யாவர் (ஒருவருமில்லை என்றபடி) எ-று. இப்புராணத்தில் முன் வந்துள்ள, “ பூசையும் பூசைக் கேற்ற பொருள்களும் பூசை செய்யு நேசனும் பூசை கொண்டு நியதியிற் பேறு நல்கும் ஈசனு மாகிப் பூசை யான்செய்தே னெனுமென் போத வாசனை யதுவு மான மறைமுத லடிகள் போற்றி”” என்னுஞ் செய்யுட் பொருள் இதனோடு ஒத்து நோக்கற்பாலது. இதன் முன்னிரண்டடியிற் கூறிய பொருள், “ வேதமும் வேள்வியு மாயினார்க்கு” எனத் திருவாசகத்துள் சுருங்க வுரைக்கப்பட்டது. “ வேள்வியுந் தானே வேள்விப் பொருள்களுந் தானே வெய்ய வேள்விவேட் பவனுந்தானே வேள்விகொ ளிறையுந் தானே வேள்வியின் பயனுந் தானே யென்பது விளக்கி யெம்மான் வேள்விசெய் தீக்கை யுற்றான் விளங்கருட் சத்தி யோடும் ” எனக் காஞசிப்புராணத்துள் இது விரித்துரைக்கப்பட்டது. இறைவன் இங்ஙனம் மணம் புரிந்தது உயிர்களுக்குப் போகம் அருளுதற் பொருட்டன்றித் தனக்கொரு பயன் கருதியன் றென்பார் வையம் போக மூழ்க மணவினை முடித்தாஎன்றார். “ போகமா யிருந்துயிர்க்குப் போகத்தைப் புரித லோரார்” எனச் சித்தியார் கூறுவதுங் காண்க. புணர்ப்பு - சூழ்ச்சி. (186) பின்புதன் பன்னி யோடு பிறைமுடிப் பெருமான் கையில் நன்பொரி வாங்கிச் செந்தீ நாமடுத் தெனைத்து மான தன்படி வுணர்ந்த வேத முனிவர்க்குத் தக்க தானம் இன்பகந் ததும்ப நல்கி யெரிவல முறையால் வந்து. (இ-ள்.) பின்பு பிறை முடிப் பெருமான் - பின்பு சந்திரனை யணிந்த முடியினையுடை இறைவன், தன் பன்னியோடு - தன் தேவியாரோடும், கையில் நன்பொரி வாங்கி - திருக்கையில் நல்ல பொரியை வாங்கி, செந்தீ நா மடுத்து - சிவந்த தீயின் நாவிற் பெய்து, எனைத்தும் ஆன தன் படிவு உணர்ந்த - எல்லாமாகிய தனது திருவுருவத்தை யுணர்ந்த, வேத முனிவர்க்கு - வேதங்களை யுணர்ந்த முனிவர்களுக்கு: தக்க தானம் - ஏற்ற தானங்களை, அகம் இன்பு ததும்ப நல்கி - உள்ளத்தில் மகிழ்ச்சி மீக்கூரக் கொடுத்து, முறையால் எரி வலம் வந்து - விதிப்படி தீயை வலமாக வந்து எ-று. நா மடுத்தல் - நாவில் அகப்படச் செய்தல். படிவம் என்பது ஈறு தொக்கது. (187) மங்கலம் புனைந்த செம்பொ னம்மிமேன் மணாட்டி பாத பங்கய மலரைக் கையாற் பரிபுரஞ் வசிட்டன் றேவி புங்கவன் மனுவா லேற்றிப் புண்ணிய வசிட்டன் றேவி எங்கெனச் செங்கை கூப்பி யெதிர்வர வருட்கண் சாத்தி (இ-ள்.) புங்கவன் - இறைவன், மங்கலம் புனைந்த செம்பொன் அம்மிமேல் - மங்கலமாக அலங்கரித்த செம்பொன்னாலாகிய அம்மியின்மேல், மணாட்டி பாத பங்கய மலரை - தேவியாரது திருவடித் தாமரை மலரை, பரிபுரம் சிலம்ப - சிலம்பு ஒலிக்க, கையால் பற்றி - திருக்கையால் பிடித்து, மனுவால் ஏற்றி - மந்திரத்தோடு தூக்கி வைத்து, புண்ணிய வசிட்டன் தேவி எங்கென - அற வடிவாகிய வசிட்டன் மனைவியாகிய அருந்ததி எங்கே என்று கேட்க, செங்கை கூப்பி எதிர் வர - (அவ்வருந்ததி) சிவந்த கைகளைக் கூப்பி எதிரே வர, அருள் கண் சாத்தி - (அவள் மீது) அருட்பார்வையை வைத்து எ-று. மனுவால் - மந்திரத்தோடு. அம்மி மிதிப்பித்தலும் அருந்ததி பார்த்தலும் கூறினார். (188) விதிவழி வழாது வேள்வி வினையெலா நிரம்ப விங்ஙன் அதிர்கட லுலகந் தேற வாற்றிநான் மறைக ளார்ப்பக் கதிர்மணி நகையார் வாழ்த்தக் காமனைக் காய்ந்த நம்பி மதிநுதன் மங்கை யோடு மணவறை தன்னிற் புக்கான். (இ-ள்.) இங்ஙன் - இவ்வாறு, விதி வழி வழாது - விதி முறைசிறிதும் தவறாது, வேள்வி வினையெலாம் நிரம்ப - மணச் சடங்குகளெல்லாம் முற்றுப் பெற, அதிர் கடல் உலகம் தேற ஆற்றி- ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த உலகிலுள்ளோர் தெளிந்துய்யச் செய்து முடித்து, நான் மறைகள் ஆர்ப்ப - நான்கு வேதங்களும் ஒலிக்கவும், கதிர் மணி நகையார் வாழ்த்த - ஒளியினையுடைய முத்துப்போன்ற பற்களையுடைய மகளிர் வாழ்த்தவும், காமனைக் காய்ந்த நம்பி - மன்மதனை யெரித்தருளிய பெருமான், மதி நுதல் மங்கையோடும்- சந்திரனை ஒத்த நெற்றியையுடைய தடாதகைப் பிராட்டியா ரோடும், மணஅறை தன்னில் புக்கான் - திருமண வறையிற் புகுந்தருளினான் எ-று. எல்லாம் முழுமுதன்மையு முடைய இறைவன் இங்ஙனம் சடங்குகளெல்லாம் செய்தது தானியற்றிய வேத நெறியை உயிர் களெல்லாம் உணர்ந்து கடைப்பிடித்து உய்தற் பொருட்டென்பார் உலகந் தேற ஆற்றி என்றார். காமனைக் காய்ந்த நம்பி மங்கையோடு மணவறை தன்னிற் புக்கான் என முரணென்னும் அணி தோன்றக் கூறினார்: இதனால் இறைவன் காம விகார மில்லாதவனென்னுங் கருத்தும், இறைவன் இறைவியைக் கூடியிருந்துழி யல்லது உயிர் கட்கு வேட்கை விளைவிக்குமாற்றலும் காமனுக்கின்றென்னுங் கருத்தும் போதருதல் காண்க. கண்ணுத லியோகி ருப்பக்காமனின் றிடவேட் கைக்கு விண்ணுறு தேவ ராதி மெலிந்தமை யோரார் மால்தான் எண்ணிவேண் மதனை யேவ வெரிவிழித் திமவான் பெற்ற பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப் பேரின்ப மளித்த தோரார் என்னும் சிவஞான சித்தித் திருவித்தமும் நோக்குக. இங்ஙன்: ஈறு தொக்கது. (189) மனிதரு மிமையா தையன் மங்கல வனப்பு நோக்கிப் புனிதவா னவரை யொத்தா ரவர்க்கது புகழோ வெந்தை கனிதரு கருணை நாட்டம் பெற்றவர் கடவு ளோராற் பனிதரு மலரிட் டேத்தி வழிபடற் பால ரன்றோ. (இ-ள்.) மனிதரும் - மக்களும், இமையாது - கண் இமையாமல், ஐயா மங்கல வனப்பு நோக்கி - இறைவனது திருமணக் கோலப் பொலிவினைப் பார்த்து, புனித வானவரை ஒத்தார் - தூய தேவர்களை ஒத்தனர்; அவர்க்கு அது புகழோ - அம் மக்களுக்குத் தேவரை யொத்தன ரென்பது ஒரு புகழாமோ, எந்தை கனிதரு கருணை நாட்டம் பெற்றவர் - எம்பெருமானகிய சோமசுந்தரக் கடவுளின் முதிர்ந்த அருட் பார்வையைப் பெற்ற மக்கள், கடவுளோரால்- தேவர்களால, பனி தரும் மலர் இட்டு ஏத்தி வழிபடற் பாலர் அன்றோ- குளிர்ந்த மலரால் அருச்சித்துத் துதித்து வழிபாடு செய்யப் பெறும் தன்மையை யுடையவர் அல்லவா எ-று. வானவர் இமையா நாட்டமுடையா ராகலின் வானவரை யொத்தார் என்றார், புகழோ என்பதில் ஒகாரம் எதிர்மறை அன்று என்பது உண்டு என்பது போல் திணைபால்களுக்குப் பொதுவாய் நிற்றலின் வழா நிலையென்க; இரண்டு எதிர் மறை ஓர் உடன் பாடாயிற்று. (190) மானிட ரிமையோ ரென்னும் வரம்பில் ராகி வேள்வி தானிட ரகல நோக்கித் தலைத்தலை மயங்கி நின்றார் கானிட நடனஞ் செய்யுங் கண்ணுத லருட்க ணோக்கால் ஊனிட ரகலு நாளி லுயர்ந்தவ ரிழிந்தோ ருண்டோ. (இ-ள்.) மானிடர் இமையோர் என்னும் வரம்பு இலராகி - மக்கள் தேவர் என்னும் வரம்பில்லாதவராய், வேள்வி - திருமணத்தை, இடர் அகல நோக்கி - துன்பம் நீங்குமாறு கண்டு, தலைத்தலை மயங்கி நின்றார் - இடங்கள் தோறும் மயங்குதலுற்று நின்றார்கள்; கான் இடம் நடனம் செய்யும் கண்ணுதல் - புறங் காட்டிலே திருக்கூத்தாடி யருளும் நெற்றிக் கண்ணனாகிய இறைவனது, அள்கண் நோக்கால்- திருவருட் பார்வையால், ஊன் இடர் அகலும் நாளில் உயர்ந்தவர் இழிந்தோர் உண்டோ - பிறவித் துன்பம் நீங்குங் காலத்தில் உயர்ந்தவரென்றும் தாழ்ந்தவரென்றும் வேற்றுமையுண்டோ (இல்லை யென்றபடி) எ-று. தான் : அசை. மயங்கி - கலந்து; களி மயக்குற்று என்றுமாம். ஊன்: ஈண்டுப் பிறவிக்காயிற்று; “ ஊன டைந்த வுடம்பின் பிறவியே ” என்பது திருத்தொண்டர் புராணம். மேல் 175-ஆம் செய்யுளில் ஆடியினீழல் கலந்துளார் தம்மை யொத்தார் என்பதனையும் ஈண்டு நோக்குக. இவ்விரு செய்யுளும் வேற்றுப் பொருள் வைப்பணி. (191) மணவறைத் தவிசினீங்கி மன்றன்மண்டபத்திற் போந்து கணமணிச் சேக்கை மேவிக் கருநெடுங் கண்ணன் வாணி துணைவனே1 முதல்வா னோர்க்குஞ் சூழ்கணத் தொகைக்கு மென்றுந் தணவறு செல்வந் தந்தோன் சாறுசால் சிறப்பு நல்கி. (இ-ள்.) கருநெடுங் கண்ணன் வாணி துணைவனே முதல்வா னோர்க்கும் - கரிய நெடிய திருமால் கலைமகள் தலைவனாகிய பிரமன் முதலிய தேவருக்கும், சூழ்கணத் தொகைக்கும் - சூழ்ந்த சிவகணக் கூட்டத்திற்கும், என்றும் தணவு அறுசெல்வம் தந்தோன் - எப்பொழுதும் நீங்குதலற்ற செல்வத்தை அருளிய இறைவன், மணஅறைத் தவிசின் நீங்கி - திருமண அறையிலுள்ள இருக்கையினின்றும் நீங்கி, மன்றல் மண்டபத்தில் போந்து - திருமண மண்டபத்தில் வந்து, கண மணிச் சேக்கை மேவி - கூட்டமாகிய மணிகள் இழைத்த அரியணையில் வீற்றிருந்து, சாறுசால் சிறப்பு நல்கி - திருமணத்திற்கு அமைந்த வரிசைகளை (அவ்வனைவருக்கும்) கொடுத்தருளி எ-று. கருமையென முன்வந்தமையின் கண்ணன் என்பது பெயர் மாத்திரையாய் நின்றது; கருங்கண் ணனையறி யாமை நின்றோன் என்னும் திருக்கோவையார்ச் செய்யுளுரையில் கண்ண னென்பது பண்பு குறியாது ஈண்டுப் பெயராய் நின்றமையின், கருங் கண்ணனென்றார்; சேற்றிற் பங்கய மென்றாற் போல எனப் பேராசிரியர் விளக்கியிருத்தல் காண்க. ஏகாரம் கண்ணனென் பதனோடும் இயையும். தணவு - தணத்தல்: தொழிற் பெயர். சாறு- விழா. தந்தோன் அவர்க்கு நல்கி யென்க. (192) ஏட்டுவாய் முளரி யான்மா லேனைவா னவருந் தத்தம் நாட்டுவாழ் ப தியிற் செல்ல நல்விடை கொடுத்து வேந்தர்க் காட்டுவா னாடிக் காட்டுந் தன்மைபோ லரசு செய்து காட்டுவா னாகி யையன் றிருவுளக் கருணை பூத்தான். (இ-ள்.) ஏடுவாய் முளரியான் மால் ஏனை வானவரும் - இதழ்கள் வாய்ந்த தாமரைமலரில் வசிப்போனாகிய பிரமனும் திருமாலும் மற்றைத் தேவர்களும், தத்தம் நாட்டு வாழ் பதியில் செல்ல - தங்கள் தங்கள் நாடுகளாகிய செல்வமிக்க பதவிகளிற் செல்லுமாறு, நல்விடை கொடுத்து - அருள் விடை கொடுத்து, வேந்தர்க்கு - மன்னர்களுக்கு, ஆட்டுவான் ஆடிக் காட்டும் தன்மைபோல் - ஆட்டுவிப்பா னொருவன் தான் முன்னர் ஆடிக் காட்டுந் தன்மையைப்போல, அரசு செய்து காட்டுவானாகி - செங்கோலோச்சிக் காட்டுவானாய், ஐயன் - இறைவன், திருவுளக் கருணை பூத்தான் - திருவுளங் கொண்டருளினான் எ-று. ஏடு, நாடு என்பன விரித்தல் விகாரம் பெற்றன. நாட்டிலுள்ள பதியுமாம். நல் விடை - அருள் விடை. நாட்டியம் ஆட்டுவிப்பான் ஆடு முறைமை யுணர்த்துதலன்றித் தான் ஆடிக்காட்டுதலும் இன்றியமையாமைபோல இறைவன் உயிர்களறிந் தொழுகற் பாலவற்றை வேத முதலியவற்றால் உணர்த்தியிருப்பினும் தாமே வந்தொழுகிக் காட்டுதலும் இன்றியமையாத தென்பார் ஆடிக் காட்டுந் தன்மைபோல் அரசு செய்து காட்டுவானாகி என்றார். செய்விப்பான் செய்து காட்டினா னென்க. (193) (எழுசீரடியாசிரிய விருத்தம்) அதிர்விடைக் கொடியங் கயற்கொடி யாக வராக்கலன் பொற்கல னாகப் பொதியவிழ் கடுக்கை வேம்பல ராகப் புலியதள் பொலந்துகி லாக மதிமுடி வைர மணிமுடி யாக மறைகிடந் தலம்புமா மதுரைப் பதியுறை சோம சுந்தரக் கடவுள் பாண்டிய னாகிவீற் றிருந்தான். (இ-ள்.) அதிர்விடைக் கொடி அம் கயல் கொடி ஆக - ஒலிக்கும் இடபக்கொடி அழகிய மீனக் கொடியாகவும், அராக்கலன் பொன் கலன் ஆக - பாம்பணிகள் பொன்னணிகளாகவும், பொதி அவிழ் கடுக்கை வேம்பு அலர் ஆக - இதழ் விரிந்த கொன்றை மலர்மாலை வேப்பம்பூ மாலையாகவும், புலி அதள் பொலம் துகில் ஆக - புலித்தோல் ஆடை கொன்னாடையகவும், மதி முடி வைர மணிமுடி ஆக - சந்திரனை அணிந்த சடாமுடி அழகிய வைரமுடியாகவும், மறை கிடந்து அலம்பும் மாமதுரைப் பதி உறை - வேதங்கள் தங்கி ஒலிக்கின்ற பெரிய மதுரைப் பதியில் வீற்றிருக்கும், சோமசுந்தரக் கடவுள் பாண்டியனாகி வீற்றிருந்தான் - சோமசுந்தரக் கடவுள் சுந்தர பாண்டியனாய் வீற்றிருந்தருளினான் எ-று. சிவபெருமான் பாண்டியனாகக் கோலங் கொண்டதற் கேற்ப அவனுடைய விடைக்கொடி முதலியனவே கயற்கொடி முதலியனவாக உருமாறின என்றார். இறைவன் திருக்கயிலையினின்று வழிக்கொண்டு வந்தானாயினும் அவன் என்றும் மதுரையிலிருப்பவனே யென்பார் மதுரைப் சோமசுந்தரக் கடவுள் என்றார்; மேல் 45-ஆம் செய்யுளில், “ என்று தொட்டுநீ திசையின்மேற் சயங்குறித் தெழுந்து போந்தனை யாமும் அன்று தொட்டுநம் மதுரைவிட் டுனைவிடா தடுத்து வந்தனம்” என இறைவன் பிராட்டிக்குக் கூறினமையும் நோக்குக. (194) (அறுசீரடியாசிரியவிருத்தம்) விண்டவழ் மதியஞ் சூடுஞ் சுந்தர விடங்கப் புத்தேள் கொண்டதோர் வடிவுக் கேற்பக் குருதிகொப் பளிக்குஞ் சூலத் திண்டிறற் சங்கு கன்னன் முதற்கணத் தேவர்1 தாமும் பண்டைய வடிவ மாறிப் பார்த்திவன் பணியி னின்றார். (இ-ள்.) விண் தவழ் மதியம் சூடும் சுந்தர விடங்கப்புத்தேள் - வானின் கண் தவழும் சந்திரனை யணிந்த பேரழகனாகிய சோம சுந்தரக் கடவுள், கொண்டது ஓர் வடிவுக்கு ஏற்ப - கொண்டருளிய ஒப்பற்ற திருக்கோலத்திற்குப் பொருந்த, குருதி கொப்பளிக்கும் சூலம் - உதிரம் கொப்பளிக்கும் சூலப்படையை யுடைய, திண் திறல் சங்கு கன்னன் முதல் கணத்தேவர் தாமும் - மிகுந்த வலியையுடைய சங்கு கன்னன் முதலான சிவகணத்தவர்களும், பண்டைய வடிவம் மாறி - முன் உருவம் நீங்கி (அரசர் பணி செய்தற் கேற்ற உருக்கொண்டு), பாத்திவன் பணியில் நின்றார் - அம்மன்னன் ஏவலில் நின்றார்கள் எ-று. சுந்தர விடங்கம், திண்டிறல் என்பன ஒருபொருட் பன் மொழிகள். கணமாகிய தேவர். (195) தென்னவர் வடிவங் கொண்ட சிவபர னுலகங் காக்கும் மன்னவர் சிவனைப் பூசை செய்வது மறையா றென்று சொன்னது மன்ன ரெல்லாந் துணிவது பொருட்டுத் தானும் அந்நகர் நடுவூ ரென்றோ ரணிநகர் சிறப்பக் கண்டான். (இ-ள்.) உலகம் காக்கும் மன்னவர் - உலகத்தைக் காவல் பூண்ட வேந்தர்கள், சிவனைப் பூசை செய்வது - சிவபெருமானைப் பூசிப்பது, மறை ஆறு என்று சொன்னது - வேத நெறி என்று தான் திருவாய்மலர்ந்தருளியதை, மன்னர் எல்லாம் துணிவது பொருட்டு - அரசனைவரும் துணிந்து மேற்கொள்ளுதற் பொருட்டு, தென்னவர் வடிவம் கொண்ட சிவபரன் தானும் - பாண்டியர் திருக்கோலங்கொண்ட இறைவனும், அ நகர் - அந்நகரில், நடுவூர் என்று ஓர் அணி நகர் சிறப்பக் கண்டான் - நடுவூர் என்று சொல்லப்படும் ஓர் அழகிய நகரை மேன்மைப்பட ஆக்கினான் எ-று. கோலம் பாண்டியரனைவர்க்கும் பொதுவாகலின் தென்னவர் எனப் பன்மை கூறினார். வேத நெறியென்று வேதத்திற் சொன்ன தென்க. செய்வது, துணிவது; தொழிற் பெயர்கள். (196) மெய்ம்மைநூல் வழியே கோயில் விதித்தருட் குறிநி றீஇப்பேர் இம்மையே நன்மை நல்கு மிறையென நிறுவிப் பூசை செம்மையாற் செய்து நீப வனத்துறை சிவனைக் காலம் மும்மையுந் தொழுது வைய முழுவதுங் கோன டாத்தும். (இ-ள்.) மெய்ம்மை நூல் வழியே கோயில் விதித்து - உண்மை நூலின் நெறிப்படியே திருக்கோயிலெடுத்து, அருள் குறி நிறீஇ - அருள் வடிவாகிய சிவலிங்கத்தை நிலை பெறுத்தி, இம்மையே நன்மை நல்கும் இறை எனப் பேர் நிறுவி - இம்மையே பேறு தரும் இறைவன் என்று திருப்பெயர் இட்டு, செம்மையால் பூசை செய்து - முறைப்படி பூசனை புரிந்து, நீப வனத்து உறை சிவனை - கடம்ப வனத்திலுறைகின்ற சோமசுந்தரக் கடவுளை, காலம் மும்மையும் தொழுது - மூன்று காலங்களிலும் வணங்கி, வையம் முழுவதும் கோல் நடாத்தும் - உலக முற்றும் தனது செங்கோலை நடாத் தியருளுவான் எ-று. மெய்ம்மை நூல் - ஆகமமும், அதன் வழிப்பட்ட சிற்ப நூலும். பேர் நிறுவி வழிபட்ட இச்செய்தி, “ முலைமூன் றணைந்த சிலைநுதற் றிருவினை அருமறை விதிக்கத் திருமணம் புணர்ந்து மதிக்குலம் வாய்த்த மன்னவ னாகி மேதினி புரக்கும் விதியுடை நன்னாள் நடுவூர் நகர்செய் தடுபவந் துடைக்கும் அருட்குறி நிறுவி யருச்சனை செய்த தேவர் நாயகன்” எனக் கல்லாடத்துட் கூறப்படுலுங் காண்க. (197) பூவரு மயன்மா லாதிப் புனிதரு முனிவ ரேனோர் யாவருந் தனையே பூசித் திகபர மடைய நின்ற மூவருண் மேலா முக்கண் மூர்த்தியே பூசை செய்த தாவர விலிங்க மேன்மைத் தகுதியா ரளக்க வல்லார். (இ-ள்.) பூவரும் அயன்மால் ஆதிப் புனிதரும் - தாமரை மலரில் வசிக்கும் பிரமன் முதலிய தேவர்களும், முனிவர் ஏனோர் யாவரும் - முனிவரும் மற்றைய அனைவரும், தனையே பூசித்து இகபரம் அடைய நின்ற - தன்னையே வழி பட்டு நின்ற, மூவருள் மேலாம் முக்கண்ணனாகிய இறைவனே, பூசை செய்த தாவர இலிங்க மேன்மைத் தகுதி அளக்க வல்லார்யார் - வழிபட்ட நிலைபெற்ற இலிங்கத்தின் சிறப்புத் தன்மையை அளந்து கூற வல்லவர் யார் (ஒருவருமில்லை யென்றபடி) எ-று. “மூவர் கோனாய் நின்ற முதல்வன்” எனத் திருவாதவூரடிகள் கூறுதல் நோக்கி, மூவருள் மேலாம் என்பதற்கு மூவருக்கும் மேலான என்றுரைக்கப்பட்டது; மூவருள்ளே யெனினும் இழுக்கின் றென்க. தாவரமாகிய இலிங்கமென்க. (198) (மேற்படி வேறு) மனித்த ருக்கர சாகித்தெவ் வேந்தர்க்கு மடங்கலாய் மடநல்லார்க் கினித்த வைங்கணைக் காளையாய் நிலமகட் கிணர்த்துழா யணிமாலாய் அனித்த நித்தமோர்ந் திகபரத் தாசைநீத் தகந்தெளிந் தவர்க்கொன்றாய்த் தனித்த மெய்யறி வானந்த மாம்பர தத்துவமாய் நின்றான். (இ-ள்.) (இங்ஙனம் பாண்டியர் கோலம் பூண்ட இறைவன்) மனித்தருக்கு அரசாகி - மக்களுக்கு மன்னனாகியும், தெவ் வேந்தர்க்கு மடங்கலாய் - பகை மன்னராகிய யானைகளுக்குச் சிங்கமாகியும், மடநல்லார்க்கு இனித்த ஐங்கணைக்காளைாயாய் - மகளிருக்கு கொத்தாகியதுழாய் மாலையை யணிந்த திருமாலாகியும், அனித்தம் நித்தம்ஓர்ந்து - அனித்த நித்தக் கூறுபாடுகளையுணர்ந்து, இகபரத்து ஆசைநீத்து - இம்மை மறுமை யின்பங்களை வெறுத்து, அகம் தெளிந்தவர்க்கு - மனந்தூய்மை யெய்திய மெய்ஞ்ஞானியர்க்கு, ஒன்றாய் - ஒன்றாகி, தனித்த மெய் அறிவு ஆனந்தமாம் பரதத்துவ மாய் நின்றான் - ஒப்பற்ற சச்சி தானந்தமாகிய பரதத்துவப் பொருளாகியும் நின்றருளினான் எ-று. மனித்தர்: விரித்தல். அரசாகி யென்றதனால் குடிகளைத் தாய்போற் புரக்கும் தண்ணளியும் நீதியும் முதலிய வெல்லாங் கொள்ளப்படும். இச்செய்யுளின் முன்னிரண்டடியோடு, “ தருமன் றண்ணளி யாற்றன தீகையால் வருணன் கூற்றுயிர் மாற்றலின் வாமனே அருமை யாலழ கிற்கணை யைந்துடைத் திரும கன்றிரு மாநில மன்னனே” என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளை ஒத்து நோக்குக. நில முழுதையும் தனக்குரிமை யாக்கிக் கோடலின் மாலாய் என்றார்; மால் புவிமகட்குக் கணவனாகலின் அகந்தெளிந்தார்க்குப் பதிப்பொருள் விளங்குதலை, “ திரையற்ற நீர்போற் சிந்தை தெளிந்தார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யானே ” என்னும் திருமந்திரத்தாலு மறிக. பதிப்பொருள் ஒன்றே யாகலின், ஒன்றாய் என்றார்; இதனை, “ ஒன்றென்ற தொன்றேகா ணொன்றே பதி” எனச் சிவஞானபோதத்துள் வரும் திருவெண்பா விளங்க வுணர்த்தும். ஆய் என்னும் செய்தெ னெச்சம் ஆம் என்னும் பெயரெச்சங்கொண்டு முடியும். தத்துவம் - உண்மை; கடவுளைப் பரதத்துவம் எனக் கூறுவது மரபு. பலபடப்புனைவணி. (199) ஆகச் செய்யுள் - 797 செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை அகமலர்ந் தருந்தவ 16 அங்கட் கடலி 65 அங்கணா போற்றி 54 அங்க மாறுமே 207 அங்கய னோக்கி 173 அங்கவர் மனைதொறு 199 அங்கவ னிருக்கை 4 அங்கன கஞ்செய் 198 அங்கைவைத் தமுது 284 அஞ்சனம் வேல்விழி 196 அஞ்சு கோடியோ 214 அடிகணீர் மறாததொன் 17 அடுகரி சிந்துர 195 அடுத்த ணைந்தன 83 அடுத்தன ரிடியே 23 அடுத்தனள் சுந்தரி 275 அடைந்தி ளம்பிடி 153 அண்டக் குவைவெண் 158 அண்டரே றனைய 13 அண்டர் வந்தது 84 அதிர்விடைக் கொடியங் 290 அத்தகைய நீராற் 70 அத்தலை நின்ற 281 அத்தலைவிண் ணாட 66 அந்தக் குண்டத் 10 அந்த ரத்தவ 234 அப்பிடை நுரையாய் 8 அமைச்ச ரோடுமர் 89 அம்முனி வள்ள 21 அம்மையோ டப்ப 283 அரசிலா வறுமை 36 அரசிறை கொள்ளுஞ் 137 அருத்தநான் மறைக 266 அருந்தவ ரிருக்கை 101 அருமையா லடியேன் 265 அருவாகி யுருவாகி 47 அருவிபடிந் தருவியெறி 43 அலகினாற் கருவிச் 174 அல்லு மெல்லும்வா 152 அவ்வாக்குச் செவிநிரம்ப 123 அழலவிர்ந் தனைய 6 அறத்தொடு பாவநேர்ந் 12 அறந்துறந் தீட்டு 32 அறைந்தன தூரிய மார்த் 275 அற்பக லிமைக்குஞ் 278 அனற்படை விடுத்தான் 26 அனிந்திதை யமுதின் 138 அனையதொல் குரவற் 5 அன்பட்ட புரமும் 259 அன்புதலை சிறப்பமகிழ்ந் 50 அன்பு பின்றள்ள 90 அன்றுதொட் டரச 106 அன்னத் தேரின 242 அன்னைநீ நினைந்த 164 ஆங்கவன் மராட 140 ஆசறும றைப்புலவ 112 ஆடினா ரரம்பை மாதர் 282 ஆண்ட நாயகன் 229 ஆண்டி னோடய 223 ஆதியுந் தேசத் தானு 142 ஆயபோ தாழி யங்கை 280 ஆய வேலையின் 93 ஆயி ரங்கட லனைய 225 ஆர்த்தன தடாரி 166 ஆழி ஞாலமே 91 ஆழ்ந்த சிந்தைய 85 ஆற்றவும் பழையதுன் 14 இடருறப் பிணித்த 55 இடிக்கும் வானுரு 239 இடித்தனன் கையிலோ 13 இடையறா வன்பின் 76 இணரெரித் தேவுந் 286 இத்த கைப்பல 211 இந்தி ரன்மணிக் 237 இம் முறையாற் றாயர்க்குந் 129 இம்மையி லறமுன் 79 இரண்டு செஞ்சுடர் 230 இரவி கண் மறைந் 82 இருணி ரம்பிய 95 இருதுவிற் சிறந்த 58 இவ்வகை மயங்கிப் 25 இவ்வண்ண நகர்களிப்ப 127 இவ்வாறு மற்றைத் 176 இவ்வுலக மன்றியுல 114 இழிந்த வூர்தியர் 226 இழையிடை நுழையா 175 இறைஞ்சியஞ் சலித்தா 160 இறைவி தன்னையா 150 இன்புற் றருச்சனைசெய் 63 இன்னண நகர்செய 199 இன்னநின் பாதப் 57 இன்ன ரம்புள 80 இன்ன வாறுமை 147 இன்னவிலங் கொடுபுள்ளின் 45 இன்னிய மியம்பு 136 இன்னிலை யொழுகுந் 145 ஈங்குவன் விருத்திர 10 ஈசனுக் கிழைத்த 40 ஈட்டு வார்வினை 88 ஈறின்மறை கூறுமுறை 110 உடுத்த கோவண 233 உடையா னடிதாழ்ந் 185 உத்தம குலத்து 105 உம்மெனு மார்பைத் 35 உருவமுத் துடுவா 272 உழைவிழி யொருத்தி 254 எண்ணிரண் டிரட்டி 270 எண்புதைத் தெழுந்த 169 எதிர்ந்தரு மறைகள் 263 எத்திக்குங் கல்லென் 65 எப்புவனத் திலுமென்றுங் 46 எம்மை நீர் விடுதி 245 எம்மை யாரையும் 152 எல்லவ னுச்சி நீந்து 144 எழுவ ரன்னையர் 222 எறிகின் றனவோச் 180 என்பதா மாரம் 75 என்ற தாதையை 153 என்ற நாதன்மே 190 என்றவ னிடுக்கண் 30 என்றனன் கரண 20 என்றனன் பிறிது 72 என்று தொட்டுநீ 189 என்று மாதவ 16 என்னநின் றேத்தி 56 ஏக நாயகி மீண்ட 213 ஏட்டுவாய் முளரி 291 ஐம்முக னனாதிபர 113 ஐயநின் னிருக்கை 57 ஐய வம்பிகை 149 ஒக்கவிந் திரனும் 28 ஒப்புரு முதலீ 146 ஒலியவார் திரையி 168 ஒல்கினன் மெல்ல 277 ஒல்லெனக் குரவ 4 ஒளியா லுலகீன் 157 ஒளிறு தாதொடு 94 ஒற்றை வார் கழற் 186 ஓடித் திருமா 178 கங்கை காவிரி 239 கங்கைமுத லளவிறந்த 41 கடியவிழ் கமலக் 246 கட்டவிழ் கோதை 276 கண்டபோ தறிவு 73 கண்டவெல்லையி 187 கண்டான் முனிகாமற் 67 கண்டுவிழுந் தெழுந்துவிழி 48 கண்ணுதலை முப்பொழுதும் 110 கண்ணு தற்பிரான் 240 கதிர்த்தார் முடியமரர் 68 கயபதி யாதி 172 கருவா சனைகழிக்குங் 62 கருவிவான்முகி 200 கருவின் மாதர் 8 கலிங்கர் சாவகர் 210 கலைக்குரை விரிப்பா 145 கலையொடு நாணம் 252 கல்யாண மணிமெளலி 125 கவனமால் விடையான் 256 களைந்த நீணிலந் 96 கள்ளமா நெறியொழுகும் 121 கள்ளவிழ் கோதை 171 கற்பகங் கொடுத்த 274 கற்ப கந்தரு 207 கற்றறியந்த ணாளர் 142 கனவி லும்பெருங் 97 கனவிற் றீர்ந்தவ 89 கன்னிதன் மணமுர 191 கன்னியொரு பங்கினர் 108 காயிரும் பரிதிப் 162 காலினுங் கடிது 168 கிடைப்பன வுருளாற் 167 கிட்டிப் பொருப்பைக் 178 கிட்டினர் கடகக் 23 கிரியெட்டு மெனமழையை 51 கின்னர மிதுனமெ 197 கீட்டிசைக் கரிய 103 கீறிக் கிடந்த 67 குடவயி னயிரா 78 குலவு மப்பெரும் 81 குறுந்தளிர் மெல் 118 கைதவக் குரவன் 6 கைதவ நோன்பு 34 கைதவன் கரந்து 31 கையிற் படையிற் 184 கையுங் கால்களுங் 221 வைவரை யெருத்தி 104 கொங்கர் சிங்களர் 210 கொங்கையின் முகட்டிற் 269 கொடிகளெ னக்குளிர் 276 கொடிகள்பூத் துதிர்ந்த 260 கொடிக்கய லினமாய் 273 கொடிமுர சாடி 261 கொடும்பழி கோட்பட் 39 கொட்புற் றமராடு 183 கோதையொ டும்பரி 192 கோயின்முன் குறுக 262 கோலயாழ்த் தெய்வம் 156 சங்கலறச் செங்களத்துத் 64 சங்கு கன்னனை 214 சந்நிதி யடைந்து 155 சரண மங்கையோர் 91 சர்ப்பமா கெனமுற் 36 சலிக்கும் புரவித் 177 சவித்தமுனி பாதந் 70 சித்தந் தேர்முனி 225 சித்திர நிரைத்த 100 சிந்தனை வாக்கிற் 71 சிவபரம் பரையு 161 சிறைவிடுமின் சிறைக்கள 124 சிற்றிடை வளைந்த சிறு 117 சுந்தர வல்லி 275 சுரந்த வன்பிரு 92 சுற்றுநான் மறைக ளார்ப்பத் 285 சூலங் கண் மழுப் 180 சூள தாமறைச் சென்னி 92 செங்கண் மாலய 234 செடியுட லெயினச் 139 செந்தமிழ் வடநூ 141 செப்பிளங் கொங்கை 255 செப்புரங் கவர்ந்த 262 செம்பொற் கோயின்முன் 206 செம்மல ராளொடு 277 செம்மலர்த் திருவும் 269 செய்ய தாமரைக் 220 செய்யவாய் வெளிறாது 119 செருவினி லுடைந்து 33 செருவின்மா தண்டந் 167 செல்வ மாநக 81 செவித்தொளையி லமுதொ 46 சேடு தாங்குமூ 150 சேட்டானை வானவநின் 69 சேட்படு நாணனி 15 சொல்வாய்மைக் கலைத்தெ 130 சோம வாரமன் 83 தங்குடிமைத் தச்சனையோர் தண்ணளி யொழுக்கஞ் 249 தமிழ்முதற் பதினெண் 245 தாங்கிக்கண் சென்னி 63 தாழ்ந்துதான் படுதுயர் 13 தாளொடு கழலு 24 தான வாறிழி 80 திங்கட் படைசெங் 182 திங்களென் றெழுந்து 251 திசைக டந்தநாற் 232 திடம்படு மறிஞர் 137 திருந்தாத விளங்குதலை 128 திருந்து நான்மறைச் 148 திருமுடியை மதயானை 132 தீங்கரிய வாசிமொழி 66 தீங்குதலை யின்னமுத 116 தீட்டுவா ளிரண்டனைய 128 தீர்த்தன் முன்பணிந் 228 துஙக மாயிரங் 235 துணிகயங் கீழ்நீர்க் 102 துண்டம் படவே 184 துருவின னங்குங் 5 துறக்கநா டணைந்து 59 துன்னிய தருப்பை 261 தூமரபின் வருபெருமங் 126 தூம்புடைக் கையான் 74 தெய்வத்தா மரைமுளைத்த 53 தெய்வ நீறுமைந் தெரிசிக்க வந்த 181 தெள்ளமுத மென்மழலை 117 தெற்றெனப் பிரம 7 தென்ன ரன்பினி 98 தென்னர் சேகரன் 209 தென்னவர் வடிவங் 293 தென்னவன் வருந்தி 247 தேம்பரி கோதை 165 தேரொலி...செலவொலி 170 தேர்நிரை கலனாய்ச் 171 தேவர்க டேவன் 243 தொக்கன கழுகு 25 தொடுத்தபழி வேறாகி 42 தொடையகன் மார்பநாந் 14 தொல்லைநான் மறையோர் 144 தோடவி ழோதியர் 276 நங்கைதன்னலனுக் 248 நங்கையென் னோற்றாள் 246 நடுத்தயா விலார்தமை 19 நட்டவர்க் கிடுக்க 252 நன்பொருள் விரும்பினை 111 நாகமாப் படைவிட் 27 நாய்நம தெனநரி 18 நான மென்பனி 84 நிருதி யாடிகொண் 238 நின்ற மென்கொடிக் 188 நீளிடை மணிமறு 194 நெளியராக் குருளை வெயில் 43 நொய்தழ லெரிக்கடவு 115 படவரவ மணியீன்று 44 படையற்று விமானமும் 185 பட்ட காரிவா 218 பணிகளின் மகுட 32 பண்ணுமின் னிசையு 278 பந்த நான்மறைப் 241 பரந்தெழு பூழி 170 பரையாதி விருப்பறிவு 120 பல்லுருச்செய்த 202 பவநெறி கடக்கும் 107 பழையன கலனை 195 பளிக்கி னேழுயர் 201 பற்றிய பைம்பொன் 250 பனிதரு மதிக்கொம் 164 பாதநாண் மலர்மே 265 பாரார வட்டாங்க 53 பால மேற்றசெந் 219 பாலனைய மதிக்கவிகை 133 பித்திகை வெள்ளை 193 பித்தி மாதவி 203 பின்புதன் பன்னி 287 பின்னர்த்தங் குரவ 39 புக்குரல் வட்டக் 73 புங்கவர்மந் தாரமழை 133 புத்தனா ரெஷூந்த 282 புத்தி யட்டகர் 216 புரந்த ரன்றரு 208 புள்ளியதோ லாடை 67 பூசையும் பூசைக்கேற்ற 56 பூந்து கிற்படாங் 230 பூந்துகி னெகிழ்ப்பர் 248 பூவ டைந்தவண் 95 பூவரு மயன்மா 294 பூவொடு தண்பனி 194 பெண்ணினுக் கரசி 244 பெரும்பக னல்லூண் 154 பைத்தழ கெறிக்கு 259 பையர வுரியி 264 பையரா வணிந்த 3 பையுள பகுவாய் 143 பொருகின் றதுகண்டு 182 பொன்மணி வண்டு 271 பொன்மய மான 102 பொன்னவிர் சடையான் 255 பொன்னுயிர்க் கனைய 36 போக்ரு மாயவன் 236 மகவின்றிப் பலகல்யான் 122 மங்கலதூ ரியமுழங்க 131 மங்கல மகளி 264 மங்கல மென்றென 192 மங்கலம் புனைந்த 288 மங்கை நாயகி 190 மட்டவிழுங் கொன்றைச் 62 மட்டிடு தாரான் 27 மணங்கொள் சாந்தொடு 205 மணவறைத் தவிசினீங்கு 290 மண்ணர சிறைஞ்ச 136 மதித்துணி யெயிற்றினோன் 10 மந்திரம்புவ 224 மரகத மாலையம் 271 மருங்குறேய்ந் தொளிப்பச் 163 மழைக்குமா மதிக்கு 273 மறியு மோதைவண் 93 மறுத்தவா வஞ்சப் 21 மறைந் தெவற்றினு 98 மறைபயில் பதும 99 மறைபல......டேத்தி 173 மனத்தினுங் கடிய 78 மனிதரின் மகவா னாகி 38 மனிதரு மிமையா 289 மனித்த ருக்கர 295 மனித்த னாகிய பூழியன் 148 மனுவற முவந்துதன் 108 மன்னவநின் றிருமகட்கு 122 மன்னவர் மகளிரு 198 மாக்கடி முளரி 285 மாசறுத் தெமையா 268 மாசிற் கழிந்த 9 மாதவ ரெழுவர் 37 மாந்தர்பயில் மூவறுசொன் 115 மாமணித் தவிசில் 267 மாவ லம்புதார் 87 மாவொடு மயங்கிச் 72 மானிட ரிமையோ 289 மிக்கமக வேள்விசெய் 111 மின்பயில் குலிசப் 1 மின்னகு வேற்க 253 மீனவன் கொடியுங் 172 முகிறவழ் புரிசை 244 முக்க டம்படு 86 முடிகவிக்கு மங்கலநாள் 131 முத்திற் பாளை செய் 202 முந்தவம ருலகடைந்து 52 முரசதிர்ப்ப மங்கலங்கொ 124 முரசொடு சங்க 268 முனிவரஞ்சலி 236 முன்பெற்றங் காலிற் 257 முன்னதா முகத்தில் 1 முன்னிருந் தினிய 141 மூடினான் புளகப் 59 மூவகை மலரும் 2 மூளு மன்பினான் 87 மெய்ம்மை நூல்வழி 293 மெய்ய ரன்புதோய் 97 மேவி யாகவப் 186 மைம்மலர் நெடுங்கணர 114 மொய்த்தபுனக் காடெறிந் 50 யாதெனி னியைதுன் 17 யாவையு முணர்ந்த 30 யாவையும் படைப்பாய் 55 யாழியன் மொழியா 159 வடிகொள் வேலினாய் 88 வட்டவாய் மதிப் 93 வண்டுளருந் தண்டுழாய் 69 வந்த காவல ருழையர் 212 வந்ததை யெவனீ 74 வந்தரமங் கையர்கவரி 60 வந்த வானவர் 228 வரைசெய் பூண்முலைத் 147 வரைவ னங்களும் 212 வலங்கி டந்தமுந் 231 வலத்தயன் வரவு 257 வலவயி னிமய 100 வல்லைவந் தழைத்தார் 77 வல்லை வாணிகஞ் 86 வள்ள றன்னை 85 வள்ளன்மல யத்துவச 113 வறந்தநீர் தன்னின் 33 வாக்கினான் மனத்தால் 7 வாங்கு நான்மருப் 82 வாம்பரி யுகைத்துத் 40 வாரிருங் கொங்கை 254 வார்கழல் வலவன் 175 வானவர் சேனை 22 வானார் கயிலை 177 விசும்புநில னுந்திசையும் 112 விச்சு வாவசு 149 விடம்பயி லெயிற்றர 19 விடைகொடு வணங்கி 76 விட்டிலகு சூழியம் 116 விண்டலத் தவரு 281 விண்டல வானோ 266 விண்டவழ் மதியஞ் 292 விண்ணாடு மொழிகேட்ட 134 விண்ணுளார் திசையி 279 விதிவழி வழாது 288 விதுக்கலை மிலைந்து 258 விந்தவெற் படக்கி 29 விம்மிச் செம்மாந்த 250 விரதநெறி யடைந்தீற்றுத் 135 விரவு வானவர் 227 விரைந்தரன் றிசையோர் 35 விழுங்கிய படையெலாம் 15 வீங்கிய கொங்கை 166 வீங்கிரு ளொதுங்க 28 வீங்குடல் விருத்திரன் 11 வீழ்ந்தனர் தோளுந் 24 வென்றிக் கணத்தை 179 வேத முடிமேலானந்த 158 வேள்விச் சாலையும் 204 வேனில்விறிறல் 109 வையுடைய வாள 139 ந.மு.வே.நாட்டார் வாழ்க்கைச் சுவடுகள் பிறப்பு: - நடுக்காவிரி, 12. 3. 1884 திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தந்தை - வீ.முத்துசாமி நாட்டார் தாய் - திருமதி தைலம்மை இளமைக் கல்வி: திண்ணைப்பள்ளி - நடுக்காவிரி தொடக்கப்பள்ளி - 3,4 ஆம் வகுப்புகள் நடுக்காவிரி தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் மதுரைத் தமிழ்ச் சங்கம் 1905 - பிரவேச பண்டிதம் 1906 - பாலபண்டிதம் 1907 - பண்டிதம் ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டியதை மூன்றே ஆண்டுகளில் படித்து முதல் வகுப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற பாராட்டுக்குரியவர். பொற் பதக்கம், தங்கத்தோடா, அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர். ஆசிரியர் பணி 1908 - பிசப் ஈபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. 1909 - தூய மைக்கேல் உயர் நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் 1910-1933 - தமிழ்ப் பேராசிரியர் பணி (22 ஆண்டுகள்) எஸ்.பி.ஜி. கல்லூரி , திருச்சிராப்பள்ளி 1933-1940 - தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் 1940 - சென்னை மாகாண தமிழர் மாநாட்டில் ‘நாவலர்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டவர். 1941-1944 - மதிப்பியல் முதல்வர் கரந்தைப் புலவர் கல்லூரி தஞ்சாவூர் 28.3.1944 - இவ்வுலக வாழ்வில் இருந்து மறைந்தார். குறிப்பு : நாட்டார் தொடர்பான வரலாற்றுச் சுவடுகளின் விரிவான செய்திகளை பதிப்பாசிரியர் உரையிலும், நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண். 22 லும் பார்க்க) L L L நாவலர் ந.மு.வே நாட்டார் எழுதிய நூல்கள் / உரைகள் நூல்கள் 1915 - வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 1919 - நக்கீரர் 1921 - கபிலர் 1923 - கள்ளர் சரித்திரம் 1926 - கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் 1928 - சோழர் சரித்திரம் உரைகள் 1925 - இன்னாநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, உலகநீதி, நல்வழி, நன்னெறி திரிகடுகம் - கையெழுத்துப் படியாகக் கிடைத்து முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண் : 20 இல் பார்க்க. 1925 - 1932 - திருவிளையாடற்புராணம் 1940 - சிலப்பதிகாரம் 1942 - மணிமேகலை 1940 - 42 - கட்டுரைத்திரட்டு (இரண்டு தொகுதிகள்) 1944 - அகநானூறு உரைத்திருத்தம் : 1940 - தண்டியலங்காரப் பழைய உரை யாப்பருங்கலக்காரிகை அகத்தியர் தேவாரத்திரட்டு 1930 - பிப்ரவரி 11,12,13,14 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளை சார்பாக தொல்காப்பிய ஆராய்ச்சி சொற்பொழிவு. (இந்த சொற்பொழிவு இதுவரை வெளிவராதவை கையெழுத்துப் படியாகக் கிடைத்தது. முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ்உரைகள் தொகுதி எண் - 17 இல் 15-வது கட்டுரையில் பார்க்க .) நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் நூல்கள் / கட்டுரைகள் 24 தொகுதிகளாக வெளிவருகின்றன. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் சிலப்பதிகாரம் தொகுதி 1 1) புகார்க் காண்டம் தொகுதி 2 2) மதுரைக் காண்டம் தொகுதி 3 3) வஞ்சிக் காண்டம் மணிமேகலை தொகுதி 4 4) மணிமேகலை 1 தொகுதி 5 5) மணிமேகலை 2 அகநானூறு தொகுதி 6 6) களிற்றியானைநிரை தொகுதி 7 7) மணிமிடை பவளம் தொகுதி 8 8) நித்திலக் கோவை திருவிளையாடற்புராணம் தொகுதி 9 9) மதுரைக் காண்டம்-1 தொகுதி 10 10) மதுரைக் காண்டம்-2 தொகுதி 11 11) மதுரைக் காண்டம்-3 தொகுதி 12 12) கூடற் காண்டம் -1 தொகுதி 13 13) கூடற் காண்டம் -2 தொகுதி 14 14) திருவாலவாய்க்காண்டம் -1 தொகுதி 15 15) திருவாலவாய்க்காண்டம் -2 தொகுதி 16 16) இலக்கியக் கட்டுரைகள் 17) இலக்கணக் கட்டுரைகள் தொகுதி 17 18) சொற்பொழிவுக் கட்டுரைகள் 19) வரலாற்றுக் கட்டுரைகள் தொகுதி 18 20) வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 21) சோழர் சரித்திரம் 22) கள்ளர் சரித்திரம் தொகுதி 19 23) நக்கீரர் 24) கபிலர் 25) அகத்தியர் 26) இளம்பூரணம் நீதிநூல்கள் + பதிணென்கீழ்க் கணக்கு நூல்கள் தொகுதி 20 27) ஆத்திசூடி 28) கொன்றைவேந்தன் 29) மூதுரை 30) நன்னெறி 31) நல்வழி 32) உலகநீதி 33) நறுந்தொகை 34) இன்னா நாற்பது 35) களவழி நாற்பது 36) கார்நாற்பது 37) திரிகடுகம் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 21 38) நாட்டார் நாட் குறிப்பு -1 - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 22 39) நாட்டார் நாட் குறிப்பு -2 மற்றும் வாழ்க்கை வரலாறு - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 23 40) கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 24 41) நாட்டார் புலமையும் பண்பும் L L L ` குறிப்புகள் குறிப்புகள் (பா-ம்) 1. நாக நாடு (பா-ம்) 1. விழைதரு (பா-ம்) 1. சிகை நின்றழலும் (பா-ம்) 2. வீங்குவன்றனிலரா; றனிலறா (பா-ம்) 1. வடவை போற்றின்ன (பா-ம்) 1. எடுத்தனன் கையில் (பா-ம்) 2. தாழ்ந்து தன் (பா-ம்) 1. புதியதா (பா-ம்) 2. கடையுநர், (பா-ம்) 1. இதனை (பா-ம்) 1. அன்பினால் (பா-ம்) 1. முன்னினேன் (பா-ம்) 1. நானெனும் (பா-ம்) 1. நெறிக்கொடு (பா-ம்) 2. வென்றனன் (பா-ம்) 1. மீள (பா-ம்) 2. அவுணர்சேனை (பா-ம்) 1. சிந்தித் துணிந்தனன் (பா-ம்) 1. பகைகளெல்லாம் (பா-ம்) 2. செப்ப; சொல்வான். (பா-ம்) 1. கங்க மூக்கின (பா-ம்) 1. இன்னம் (பா-ம்) 2. பிரமசாயை (பா-ம்) 1. வாலெயிறு (பா-ம்) 1. அருந்தியிடும் (பா-ம்) 2. பசிகடீர (பா-ம்) 3. அளியவாவச்சோ (பா-ம்) 1. பின்னறிய (பா-ம்) 1. கொடிய பாசம் (பா-ம்) 1. களியென்னுங் கடலில். (பா-ம்) 1. இதற்கு நாமம். (பா-ம்) 1. அருச்சிப்பதாயினான் (பா-ம்) 1. தூமம் (பா-ம்) 1. நியதியின் பேறு. (பா-ம்) 1. தொடக்கறுத்த வாறோதி. (பா-ம்) 1. வீழ்ந்திடலும், வீழ்த்திடவும் (பா-ம்) 1. அமுதொழுகும் (பா-ம்) 1. கண்டார் (பா-ம்) 1. நாற்கோட்ட (பா-ம்) 1. தலைகண்டன்றே (பா-ம்) 2. கயந்தலை குடைந்த (பா-ம்) 1. என்பராவாரம். (பா-ம்) 1. தனது பேராற்கண்டு (பா-ம்) 2. இந்திரேச்சரமென; சுரமென (பா-ம்) 1. விரவுநீல் மயங்கு (பா-ம்) 1. அருட்கணீர் தேங்க (பா-ம்) 1. நீள நீ. 2. அரந்தை தீர்ந்தவ ணொரு (பா-ம்) 1. களைந்தான் (பா-ம்) 1. சென்னெறி (பா-ம்) 1. அறிந்தது (பா-ம்) 1. கீற்றிளம் பிறை. (பா-ம்) 1. ஆசற (பா-ம்) 2. இருக்கையினிருந்து (பா-ம்) 1. நிமிர்ந்து வரும். (பா-ம்) 1. மீனவன். (பா-ம்) 2. ஐதவழ் (பா-ம்) 1. இகம்போகம் (பா-ம்) 1. நெஞ்சகத்துப் பிரிவு (பா-ம்) 1. தனைத்திறந்து (பா-ம்) 1. பரிநெடுந்தேர். (பா-ம்) 1. காட்டுவாள்போல் (பா-ம்) 1. மதிக்கிரணம் (பா-ம்) 1. இயக்குமாக்கள் (பா-ம்) 1. கருணைநாட்டம். (பா-ம்) 2. இமையா நோக்கி (பா-ம்) 1. நண்பகற்போது. (பா-ம்) 1. தபனியப் பொதுவில். (பா-ம்) 1. அநுஞை. (பா-ம்) 2. குறிப்பால். (பா-ம்) 1. மொழியாள். (பா-ம்) 1. தனியரசளிக்கு நாளில் (பா-ம்) 1. நாட்டியீண்டுவ லிருத்தி. (பா-ம்) 1. பாய்மா (பா-ம்) 1. வலியவாக்கித் (பா-ம்) 1. கொண்டுமீண்டாள். (பா-ம்) 2. திசைக்காவலர் (பா-ம்) 1. தானானகையால். (பா-ம்) 1. கனன்மீது (பா-ம்) 1. படையற்றபிமானமும். (பா-ம்) 1. சுமதி சென்றடி பணிந்து. (பா-ம்) 1. குர்ச்சரர். (பா-ம்) 1. வருணங்கள் (பா-ம்) 1. சந்தனமணி கொங்கை: (பா-ம்) 1. செய்தான். (பா-ம்) 1. மாள (பா-ம்) 1. இமைத்திருள். (பா-ம்) 1. கருத்தொரு (பா-ம்) 1. தண்டினன். (பா-ம்) 1. வாயிடு (பா-ம்) 1. முகப்பெருவாயில். (பா-ம்) 1. தவப்பேறாற்பெற்ற (பா-ம்) 1. சுடுவதே (பா-ம்) 1. ஏழையேம் (பா-ம்) 1. நெஞ்சந்தூதாய். (பா-ம்) 2. சுடுவதென் (பா-ம்) 1. நீராஞ்சனக் கலம். (பா-ம்) 1. போதினீத்தம். (பா-ம்) 1. நிரைபட (பா-ம்) 1. செறிந்தன (பா-ம்) 1. அனாதி (பா-ம்) 1. ஆசி கூற. (பா-ம்) 1. துணைவனை. (பா-ம்) 1. கணதேவர்.