நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 8 அகநானூறு நித்திலக் கோவை உரையாசிரியர்கள் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கவியரசு இரா.வேங்கடாசலம் பிள்ளை பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 8 உரையாசிரியர்கள் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கவியரசு இரா.வேங்கடாசலம் பிள்ளை பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம், பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 208 = 224 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 140/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற் காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரிய வர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர் களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்வி களிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921 -இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல் களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக்கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர் களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங் களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மை யாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக் கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும் போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு... , செயல் செய்வாய் தமிழுக்கு...... ,ஊழியஞ் செய் தமிழுக்கு ......., பணி செய்வாய்! தமிழுக்கு ........, இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.”எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங் களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலனார் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற் குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடு வதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப் புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகு குரு. செயத்துங்கன், பேரா.கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெரு மக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iii பதிப்புரை x அகநானூறு மூலமும் உரையும் நித்திலக் கோவை 1 பாட்டு முதற்குறிப்பு அகரவரிசை 201 ஆசிரியர் பெயர் அகர வரிசை 203 அகநானூறு நித்திலக் கோவை அகநானூறு மூலமும் உரையும் நித்திலக் கோவை 301. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது.) வறனுறு செய்யின் வாடுபு வருந்திப் படர்மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல் சிறுநனி யான்றிகம் என்றி தோழி நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம் 5. ஒடிவை யின்றி ஓம்பா துண்டு நீர்வாழ் முதலை ஆவித் தன்ன ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து ஊரிஃ தென்னா வூறில் வாழ்க்கைச் சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டிப் 10. பாடின் றெண்கிணை கறங்கக் காண்வரக் குவியிண ரெருக்கின் ததர்பூங் கண்ணி ஆடூஉச் சென்னி தகைப்ப மகடூஉ முளரித் தீயின் முழங்கழல் விளக்கத்துக் களரி யாவிரைக் கிளர்பூங் கோதை 15. வண்ண மார்பின் வனமுலைத் துயல்வரச் செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக் குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந் திசைப்பக் கார்வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும் தேரை யொலியின் மானச் சீரமைத்துச் 20. சில்லரி கறங்குஞ் சிறுபல் லியத்தொடு பல்லூர் பெயர்வன ராடி ஒல்லெனத் தலைப்புணர்த் தசைத்த பஃறொகைக் கலப்பையர் இரும்பே ரொக்கற் கோடிய ரிறந்த புன்றலை மன்றங் காணின் வழிநாள் 25. அழுங்கன் மூதூர்க் கின்னா தாகும் அதுவே மருவினம் மாலை யதனாற் காதலர் செய்த காதல் நீடின்று மறத்தல் கூடுமோ மற்றே. -அதியன் விண்ணத்தனார். (சொ-ள்) 1-3. தோழி-, வறன் உறு செய்யின் - வற்கட காலத்தே நீர் வறண்ட விளைபுலம் போல, வாடுபு வருந்தி - வாடி வருந்தி, படர் மிக - துன்பம் மிக, பிரிந்தோர் உள்ளுபு நினைதல் - நம்மைப் பிரிந்த தலைவரைப் பலகாலும் நினைந்து வருந்துதலை, சிறு நனி ஆன்றிகம் என்றி - சிறிது மிக அமைந்திருப்பாம் என்று கூறுகின்றனை; 4-5. நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம் - கொடையாளர் எஞ்சாது கொடுத்த பரிசில் ஆகிய சிறிய உணவினை, ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு - இடையறவின்றிப் பொருளைப் பாதுகாவாது உண்டு. 6-8. நீர் வாழ் முதலை ஆவித் தன்ன - நீரில் வாழும் முதலை அங்காந்தாற்போன்ற, ஆரை வேய்ந்த - பாயால் வேயப்பெற்ற, அறை வாய்ச் சகடத்து - ஒலியினைச் செய்யும் வாயினையுடைய வண்டியில் செல்லும், இஃது ஊர் என்னா - இஃது எமது ஊர் என்று சொல்லுதற்கில்லாத, ஊறு இல் வாழ்க்கை - இடையூறு இல்லாத வாழ்க்கையராய், 9-15. சுரம் முதல் வருத்தம் மரம் முதல் வீட்டி - சுரத்திடத்தே வந்த வெம்மையாலாய வருத்தத்தை மரத்தடியில் தங்கிப் போக்கி, பாடு இன் தெண்கிணை கறங்க - இனிய ஒலியினையுடைய தெள்ளிய கிணைப்பறை ஒலிக்க, காண்வர - அழகு பொருந்த, குவி இணர் எருக்கின் ததர் பூங் கண்ணி - குவிந்த கொத்துக்களையுடைய எருக்கினது நெருங்கிய பூக்களாலாய கண்ணி, ஆடூஉச் சென்னி தகைப்ப - ஆடவர் சென்னியை அழகுறுத்த, முளரித் தீயின் - காட்டுத்தீயிலெழுந்த, முழங்கு அழல் விளக்கத்து - ஒலிக்கும் தீயின் ஒளியில், களரி ஆவிரைக் கிளர் பூங் கோதை - காட்டிலுள்ள ஆவிரைச் செடியின் விளங்கும் பூக்களாலாய மாலை, மகடூஉ வண்ணம் மார்பின் வன முலைத் துயல்வர - மகளிரது அழகிய மார்பின் கண்ணவாய பெரிய முலைகளிற் கிடந்தசைய, 16-23. செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந் தென்ன - செறிந்த நடையினையுடைய பெண் யானையின் உயிர்ப்பு ஒலியுடன் களிற்றின் உயிர்ப்பொலி கூறினாற்போலும், குறு நெடு தூம்பொடு - சிறுவங்கியம் பெருவங்கியங்களின் ஒலியோடு, முழவு புணர்ந்து இசைப்ப - தண்ணுமை ஓசை பொருந்தி ஒலிக்க, கார்வான் முழக்கின் - கரிய மேகம் இடிக்குங்கால், நீர்மிசைத் தெவுட்டும் - நீரின்கண் ஒலிக்கும், தேரை ஒலியின் மாண சீர் அமைத்து - தேரை ஒலியினை யொக்கத் தாளம் அமைத்து, சில்லரி கறங்கும் சிறு பல்லியத்தொடு - சிலவாகிய அரிகள் ஒலிக்கும் சிறிய பல வாச்சியங்களோடு, பல் ஊர் பெயர்வனர் - பல ஊர்க்கும் சென்று, ஆடி - கூத்தியற்றி, ஒல் என - விரைவாக, தலை புணர்த்து அசைத்த பல் தொகை கலப்பையர் - தலையினைச் சேர்த்துக் கட்டிய பல தொகையாகிய வாச்சியங் களையுடைய பையினராகிய, இரும் பேர் ஒக்கல் கோடியர்- மிகப் பெரிய சுற்றத்தினையுடைய கூத்தர், 23-25. இறந்த புன் தலை மன்றம் வழிநாள் காணின் - போய் விட்ட பொலிவற்ற இடத்தினையுடைய மன்றினைப் பின்னாளிற் காணின் அக்காட்சி, அழுங்கல் மூதூர்க்கு - ஆரவாரங் கொண்டிருந்த முதிய ஊரார்க்கு, இன்னாது ஆகும் - துன்பம் உண்டாகும்; 26-28. அதுவே - அத்தகைய துன்பத்தையே, மாலை மருவினம்- இம் மாலைக்கண் அடைந்துள்ளேம், அதனால் -, காதலர் செய்த காதல் - நம் காதலர் செய்த காதலினை, நீடு இன்று மறத்தல் கூடுமோ- தாழாது மறத்தல் ஒல்லுமோ, மற்று - ஒல்லாதன்றே. (முடிபு) தோழி! பிரிந்தோர் உள்ளுபு நினைதல் சிறுநனி ஆன்றிகம் என்றி; கோடியர் இறந்த புன்றலை மன்றங் காணின் வழிநாள் மூதூர்க்கு இன்னாதாகும்; அதுவே மருவினம் மாலை; அதனால் காதலர் செய்த காதல் நீடின்று மறத்தல் கூடுமோ. சில்பதம் உண்டு, வருத்தம் வீட்டி, கண்ணி தகைப்ப, கோதை துயல்வர, தூம்பொடு முழவு புணர்ந்து இசைப்ப, சிறு பல்லியத்தொடு, பல்லூர் பெயர்வனர் ஆடி, தலைப்புணர்ந்து அசைத்த கலப்பையராய கோடியர் என்க. (வி-ரை) செய்யின் - செய்யிலுள்ள பயிர்போல என்க. ஓம்புதல்- பிறர்க்கு வழங்காமலும் பின் தமக்கு வேண்டுமென்று கருதியும் பொருளைப் பாதுகாத்தல். முதலை ஆவித்தன்ன - முதலை கொட்டாவி விடுதற்கு வாய் அங்காந்தாலொத்த வடிவினையுடைய என்க. ஆவித்தாற் போலும் ஒலிக்கின்ற சகடம் என்றுமாம். 1ஆரை - தொத்துளிப்பாய் என்பர் நச்சினார்க்கினியர். சகடத்து - சகடத்துச் செல்லும் என விரித்துச் செல்லும் வாழ்க்கையராய் என இயைக்க. வங்கியத்தின் ஓசை, யானையின் உயிர்ப்பு ஓசைபோலும் என்பது, `ஒய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை, தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்'2 எனவும், `கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்'3 எனவும், `கண்விடு தூம்பிற் களிற்றுயிர்'4 எனவும் வருவனவற்றால் அறிக. குறு நெடுந் தூம்பு - குறுந்தூம்பும் நெடுந்தூம்பும் என்க. சில்லரி - சிலவாகிய அரித்தெழும் ஓசை என்க. 302. குறிஞ்சி (பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.) சிலம்பிற் போகிய செம்முக வாழை அலங்கல் அந்தோ டசைவளி யுறுதொறும் பள்ளி யானைப் பரூஉப்புறந் தைவரும் நல்வரை நாடனொ டருவி யாடியும் 5. பல்லிதழ் நீலம் படுசுனைக் குற்றும் நறுவீ வேங்கை இனவண் டார்க்கும் வெறிகமழ் சோலை நயந்துவிளை யாடலும் அரிய போலுங் காதலந் தோழி இருங்கல் அடுக்கத் தென்னையர் உழுத 10. கரும்பெனக் கவினிய பெருங்குரல் ஏனல் கிளிபட விளைந்தமை யறிந்துஞ் செல்கென நம்மவண் விடுநள் போலாள் கைம்மிகச் சில்சுணங் கணிந்த செறிந்துவீங் கிளமுலை மெல்லியல் ஒலிவருங் கதுப்பொடு 15. பல்கால் நோக்கும் அறனில் யாயே. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார். (சொ-ள்) 1-8. காதல் அம் தோழி - அன்புடைய தோழியே! சிலம்பில் போகிய செம்முக வாழை - மலையில் நீண்டு வளர்ந்த செவ்வாழையின், அலங்கல் அம் தோடு - அசையும் அழகிய இலைகள், அசைவளி உறுதொறும் - அசையும் காற்று மோதுந்தோறும், பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும் - துயில்கொள்ளும் யானையின் பரிய உடம்பினைத் தடவும், நல்வரை நாடனொடு - நல்ல மலை நாட்டினையுடைய நம் தலைவனுடன், அருவி ஆடியும் - அருவி நீராடியும், படுசுனை பல் இதழ் நீலம் குற்றும் - பொருந்திய சுனையிலுள்ள பல இதழ்களையுடைய நீலப் பூக்களைப் பறித்தும், நறுவீ வேங்கை - நறிய பூக்களையுடைய வேங்கையின்கண், இனம் வண்டு ஆர்க்கும் - தொகுதியாய வண்டுகள் ஒலிக்கும், வெறி கமழ் சோலை - மணம் வீசும் சோலைக்கண், நயந்து விளையாடலும் - விரும்பி விளையாடலும், அரியபோலும் - அரியனவாகும் போலும்; 9-15. இரு கல் அடுக்கத்து - பெரிய கற்களையுடைய பக்க மலையில், என் ஐயர் உழுத - என் தமையன்மார் உழுதவிடத்தே, கரும்பு எனக் கவினிய பெரு குரல் ஏனல் - கரும்பு போலத் திரண்டு அழகுற்ற பெரிய கதிரினையுடைய தினை, கிளிபட விளைந்தமை அறிந்தும் - கிளிகள் வந்து வீழ விளைந்ததை அறிந்து வைத்தும், அறன் இல் யாய்- அறவுணர்ச்சியில்லாத தாய், செல்க என நம் அவண் விடுநள் போலாள் - செல்வீராக என நம்மை அங்குப் போக்குவாள் போன்றிலாளாய், கைம்மிக - அழகு மிக, சில் சுணங்கு அணிந்த - சிலவாய தேமலை அணிந்த, செறிந்து வீங்கு இளமுலை - நெருங்கிப் பெருத்த இள முலைகளை, மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு - மென்மைத் தன்மையுடன் தழைத்தல் கூடிய கூந்தலொடு, பல்கால் நோக்கும் - பன் முறையும் நோக்காநிற்கும். (முடிபு) காதல் அம் தோழி! அறன் இல் யாய், இளமுலை கதுப்பொடு பல்கால் நோக்கும்; ஆகலின் ஏனல் கிளிபட விளைந்தமை அறிந்தும் செல்கென நம் அவண் விடுநள் போலாள்; (இனி, நாம்) நாடனொடு அருவி யாடியும் சுனைக்குற்றும் சோலை நயந்து விளையாடலும் அரிய போலும். (வி-ரை) ஆடியும் குற்றும் சோலை விளையாடல் என்க. ஈண்டு அருவியாடுதல் பொழில் விளையாட்டில் அடக்கப்பட்டது. விளையாடலாவது `யாறுங் குளனுங் காவும் ஆடிப் பதியிகந்து'1 வருதல்; `செல்வம் புலனே புணர்வு விளையாட்டு'2 என்னுஞ் சூத்திர உரை காண்க. உழுத ஏனல் பெருங்குரல் ஏனல் எனத் தனித்தனி இயையும். உழுத ஏனல் என்றது `பகடு நடந்த கூழ்'3 என்புழிப் போலப் பெயரெச்சம் காரணப் பொருட்டாய் நின்றது. யாய் பல்கால் நோக்கும், நம் அவண் விடுநள் போலாள் என்பன இற்செறிப்பு நிகழுமாற்றைத் தலைவனுக்குத் தோழி அறிவித்தபடியாம். 303. பாலை (தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) இடைபிற ரறித லஞ்சி மறைகரந்து பேஎய் கண்ட கனவிற் பன்மாண் நுண்ணிதின் இயைந்த காமம் வென்வேல் மறமிகு தானைப் பசும்பூட் பொறையன் 5. கார்புகன் றெடுத்த சூர்புகல் நனந்தலை மாயிருங் கொல்லி யுச்சித் தாஅய்த் ததைந்துசெல் லருவியின் அலரெழப் பிரிந்தோர் புலங்கந் தாக இரவலர் செலினே வரைபுரை களிற்றொடு நன்கலன் ஈயும் 10. உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின் நிரைபறைக் குரீஇயினங் காலைப் போகி முடங்குபுறச் செந்நெற் றரீஇயர் ஒராங்கு இரைதேர் கொட்பின வாகிப் பொழுதுபடப் படர்கொண் மாலைப் படர்தந் தாங்கு 15. வருவரென் றுணர்ந்த மடங்கெழு நெஞ்சம் ஐயந் தெளியரோ நீயே பலவுடன் வறன்மரம் பொருந்திய சிள்வீ டுமணர் கணநிரை மணியி னார்க்குஞ் சுரனிறந்து 1அழிநீர் மீன்பெயர்ந் தாங்கவர் 20. வழிநடைச் சேறல் வலித்திசின் யானே. - ஒளவையார். (சொ-ள்) 1-3. இடை பிறர் அறிதல் அஞ்சி - நம்மிடை நிகழ்ந்தனவற்றைப் பிறர் அறிதலை அஞ்சி, பேஎய் கண்ட கனவின் - பேய் தான் கண்ட கனவினைக் கூறாதது போன்று, மறை கரந்து - மறையினை வெளிப்படுத்தாது அடக்குதலால், பல்மாண் நுண்ணிதின் இயைந்த - பல மாண்புடன் கூடி நுட்பமாகப் பொருந்திய, காமம் - நம் காதலானது, 3-7. வென் வேல் - வென்றி பொருந்திய வேலினையும், மறம் மிகு தானை - வீரம் மிக்க சேனையினையும் உடைய, பசும்பூட் பொறையன் - பசும்பூண்களையுடைய பொறையனது, கார் புகன்று எடுத்த - மேகம் விரும்பி மழை பெய்த, சூர்புகல் நனந்தலை - தெய்வம் விரும்பி யுறையும் அகன்ற இடத்தினையுடைய, மா இரு கொல்லி உச்சித் தாஅய் - மிகப் பெரிய கொல்லி மலையின் உச்சியில் பரவி, ததைந்து செல் அருவியின் - மிக்குச் செல்லும் அருவியின் ஒலி போன்று, அலர் எழ - அலராகி வெளிப்பட, பிரிந்தோர் - நம்மைப் பிரிந்து சென்ற நம் தலைவர், 8-14. புலம் கந்து ஆக - தம் அறிவு பற்றுக்கோடு ஆக, இரவலர் செலினே - இரப்போர் வரின், வரைபுரை களிற்றொடு நல்கலன் ஈயும் - அவர்கட்கு மலைபோலும் களிறுகளுடன் நல்ல அணிகளையும் அளிக்கும், உரைசால் வண்புகழ் - உரைத்தல் அமைந்த வளவிய புகழினையுடைய, பாரி பறம்பில் - பாரியினது பறம்பு அரணில், நிரைபறைக் குரீஇனம் - வரிசையாகப் பறத்தலையுடைய குருவியின் கூட்டம், காலைப்போகி - காலையில் புறம்போய், முடங்குபுறச் செந்நெல் தரீஇயர் - வளைந்த புறத்தினையுடைய சிவந்த நெற்கதிர்களைக் கொணர்ந்து தருமாறு, ஓராங்கு இரைதேர் கொட்பினவாகி - ஒருங்கே அந் நெற்கதிருள்ள இடத்தை ஆராய்ந்து திரிதலையுடையனவாகி, பொழுதுபட - ஞாயிறு மறைய, படர்கொள் மாலைப் படர்தந்தாங்கு - துன்பத்தைத் தரும் மாலைப் பொழுதில் மீண்டு வந்தாற் போல, 15-16. வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம் - மீண்டு வருவர் என்று எண்ணிய அறியாமை பொருந்திய நெஞ்சமே, ஐயம் தெளி நீ - நீ ஐயம் நீங்கித் தெளிவுறுவாயாக. 16-20. வறன் மரம் பொருந்திய சிள்வீடு - வற்றல் மரத்தினைப் பொருந்திய சிள்வீடு என்னும் வண்டுகள், பல உடன் - பலவும் ஒருங்கு சேர்ந்து, உமணர் கணம் நிரை மணியின் ஆர்க்கும் - உப்பு வாணிகரது கூட்டமாய எருதுகளின் மணியொலிபோல ஒலிக்கும், சுரன் இறந்து - சுரத்தினைக் கடந்து, அழிநீர் மீன் பெயர்ந்தாங்கு - நீர் வற்றும்பொழுது அதிலுள்ள மீன் நீர்உள்ள இடத்திற்கு மீண்டு சென்றாற்போல, யான் அவர் வழிநடைச் சேறல் வலித்திசின் - யான் அவர் சென்ற வழியே செல்லுதலைத் துணிந்துளேன். (முடிபு) மறை கரந்து நுண்ணிதின் இயைந்த காமம் அலர் எழப் பிரிந்தோர் வருவர் என்று உணர்ந்த நெஞ்சம்! நீ ஐயம் தெளியரோ; சுரன் இறந்து அவர் வழிநடைச் சேறல் யான் வலித்திசின். (வி-ரை) இடை- இடம்; இடத்து நிகழ்ச்சி. கரந்து, கரத்தலால் எனத் திரிக்க. பசும் பூண் - பசும் பொன்னாலாய பூண். பொறையன் - சேரன். குரீஇ இனம் - கிளிகளின் கூட்டம். பாரியின் பறம்பு அரணை மூவேந்தரும் முற்றியிருந்த பொழுது, அகத்திருப்பார் உணவின்றி வருந்தாவாறு, கபிலர் என்னும் நல்லிசைப் புலவர் கிளிகளை வளர்த்து வெளியிலிருந்து கதிர்களைக் கொண்டுவரச் செய்தனர் என்பது வரலாறு. இதனை `உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை, வாய் மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று, செழுஞ்செய் நெல்லின் விளைகதிர் கொண்டு...... வேந்தர் ஓட்டிய கடும்பரிப் புரவிக் கைவண்பாரி' என்பதனாலும், `கபிலன் சூழ என்றது, பாரியை அரசர் மூவரும் வளைத்திருப்ப அகப்பட்டிருந்து உணவில்லாமைக் கிளிகளை வளர்த்து கதிர் கொண்டுவர விட்ட கதை' என்ற அதன் பழைய உரையினாலும் அறிக. குரீஇ இனம் மாலைப் படர்தந்தாங்கு என்ற உவமையால், தலைவர் பொருளீட்டிக் கொண்டு குறித்த பொழுதில் தவறாது வருவர் என்னும் பொருள் பெறப்படும். 304. முல்லை (1பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) இருவிசும் பிவர்ந்த கருவி மாமழை நீர்செறி நுங்கின் கண்2சிதர்ந் தவைபோற் சூர்பனிப் பன்ன தண்வரல் ஆலியொடு பரூஉப்பெயல் அழிதுளி தலைஇ வானவின்று 5. குரூஉத்துளி பொழிந்த பெரும்புலர் வைகறை செய்துவிட் டன்ன செந்நில மருங்கிற் செறித்துநிறுத் தன்ன தெள்ளறல் பருகிச் சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு 10. அலங்குசினைக் குருந்தின் அல்குநிழல் வதியச் சுரும்பிமிர் பூதப் பிடவுத்தளை யவிழ 3அரும்பொறி மஞ்ஞை யால 4வரிமணல் மணிமிடை பவளம் போல அணிமிகக் காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன் 15. ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்பப் புலனணி கொண்ட காரெதிர் காலை ஏந்துகோட் டியானை வேந்தன் பாசறை வினையொடு வேறுபுலத் தல்கி நன்றும் அறவ ரல்லர்நம் அருளா தோரென 20. நந்நோய் தன்வயின் அறியாள் எந்நொந்து புலக்குங்கொல் மாஅ யோளே. - இடைக்காடனார். (சொ-ள்) 1-5. (நெஞ்சே!) இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை - பெரிய வானில் எழுந்த தொகுதியாய கரிய மேகம், நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல் - (பனங்காயின்) நீர் நிறைந்த நுங்காகிய கண் சிதறி விழுந்தவைபோலும், சூர் பனிப்பு அன்ன தண்வரல் ஆலியொடு - தெய்வம் நடுக்கஞ் செய்தல் போன்ற குளிர்ச்சி பொருந்திய பனிக்கட்டியோடு, பரூஉப் பெயல் அழி துளி தலைஇ - பருத்த பெயலாய மிக்க துளிகளைப் பொருந்தி, வான் நவின்று - வானிடத்தே பயின்று, குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை - விளக்கம் வாய்ந்த அத் துளிகளைச் சொரிந்த இருள் மிகப் புலர்ந்த விடியற்காலத்தே, 6-10. செய்து விட்டன்ன செந் நில மருங்கின் - செவ் வண்ணம் தீட்டி வைத்தாற் போன்ற சிவந்த நிலத்திடத்தே, செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி - தேக்கி வைத்தாற் போன்ற தெளிந்த அறல் பட்ட நீரைக் குடித்து, சிறு மறி தழீ இய தெறிநடை மடப் பிணை - சிறிய குட்டியைத் தழுவிக்கொண்ட துள்ளிய நடையினையுடைய இளைய பெண்மான், வலம் திரி மருப்பின் அண்ணல் இரலை யொடு - வலமாகத் திரிந்த கொம்பினையுடைய தலைமையுடைய கலைமானொடு, அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய - அசையும் கிளை யினையுடைய குருந்த மரத்தின் பொருந்திய நிழலில் தங்கியிருக்க, 11-12. சுரும்பு இமிர்பு ஊதப் பிடவுத் தளை அவிழ - வண்டு ஒலித்து ஊதப் பிடாவினது அரும்புகள் மலர, அரும் பொறி மஞ்ஞை ஆல - அரிய புள்ளிகளையுடைய மயில் ஆட, 12-15. வரி மணல் - வரிப்பட்ட மணலில், மணி மிடை பவளம் போல - நீல மணியுடன் கலந்த செம்பவளம் போல, அணி மிக - அழகு மிக, காயாஞ் செம்மல் - காயாவின் வாடற்பூவும், ஈயல் மூதாய் - தம்பலப் பூச்சியும், பல உடன் தாஅய் - பலவும் சேரப் பரந்து, ஈர்ம் புறம் வரிப்ப - நிலத்தில் ஈரம்பட்ட இடத்தை அழகு செய்ய, 16. புலன் அணி கொண்ட கார் எதிர் காலை- (இங்ஙனம்) காடாகிய நிலம் அழகு பெற்ற கார்காலம் தோன்றிய பொழுதில், 17-21. மாயோள் - மாமை நிறத்தினையுடைய நம் தலைவி, ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை - நிமிர்ந்த கொம்பினையுடைய யானையையுடைய அரசனது பாசறைக்கண்ணே, வினையொடு வேறு புலத்து அல்கி - அவன் ஏவி விட்ட வினையினால் வேற்று நாட்டில் தங்கி, நம் அருளாதோர் நன்றும் அறவர் அல்லர் என - நமக்கு அருள் செய்யாதோர் பெரிதும் அறத்தினை யுடையர் அல்லர் என்று, நம் நோய் தன்வயின் அறியாள் - அவளைக் கருதி நாம் அடையும் நோயினை அறியாளாய், எம் நொந்து புலக்கும் கொல் - எம்மை நொந்து வெறுப்பாளோ. (முடிபு) நெஞ்சே! கார் எதிர்காலை மாஅயோள், வேந்தன் பாசறை வினையொடு வேறு புலத்து அல்கி, நம் அருளாதோர், அறவர் அல்லரென எம் நொந்து புலக்குங்கொல். மழை பொலிந்த வைகறை, வதிய, ஊத, அவிழ, வரிப்ப, புலன் அணி கொண்ட கார் எதிர் காலை என்க. (வி-ரை) நுங்கின்கண் - நுங்காகிய கண்; கண் போறலின் கண் எனப்பட்டது. இனி, நுங்கு என்றது பனங்காயை உணர்த்திற்றுமாம். நுங்கின்கண் ஆலிக்கு வடிவும் உருவும் பற்றிய உவமையாகும். சூர் பனிப்பு அன்ன என்றது ஆலியின் தட்ப மிகுதியை உணர்த்தியபடி. மழையால் மேடு பள்ளம் நிரவப் பெற்றுச் சமமாக இருத்தலின், செய்து விட்டன்ன செந்நிலம் எனப்பட்டது என்றலுமாம். செய்து வைத்தாற் போல இயல்பில் அமைந்த (செந்நில மருங்கிற்) பொய்கை என்றலுமாம். அல்கு நிழல் - பிற்பகலின் நிழல் என்றுமாம். மணி மிடை பவளம் போலக் காயாஞ் செம்மலும் மூதாயும் வரிக்கும் என்னும் இது, 1`அரக்கத்தன்ன செந்நிலப் பெருவழிக், காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன், ஈயல் மூதாய் வரிப்பப் பவளமொடு, மணி மிடைந்தன்ன குன்றம்' என முன் வந்ததனொடு சொல்லாலும் பொருளாலும் ஒத்திருத்தல் அறிந்து மகிழ்தற் குரியது. 305. பாலை (பிரிவுணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதுமாம்.) பகலினும் அகலா தாகி 2யாமம் தவலில் நீத்தமொ டையெனக் கழியத் தளிமழை பொழிந்த தண்வரல் வாடையொடு பனிமீக் கூரும் பைதற் பானாள் 5. பல்படை நிவந்த வறுமையில் சேக்கைப் பருகு வன்ன காதலொடு திருகி மெய்புகு வன்ன கைகவர் முயக்கத்து ஓருயிர் மாக்களும் புலம்புவர் மாதோ அருளி லாளர் பொருள்வயி னகல 10. எவ்வந் தாங்கிய இடும்பை நெஞ்சத்து யானெவன் உளனோ தோழி தானே பராரைப் பெண்ணைச் சேக்குங் கூர்வாய் ஒருதனி அன்றில் உயவுக்குரல் கடைஇய உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக் 15. கனையெரி பிறப்ப ஊதும் நினையா மாக்கள் தீங்குழல் கேட்டே. -3 வடமவண்ணக்கன் பேரிசாத்தனார். (சொ-ள்) 11. தோழி-, 1-4. பகலினும் அகலாதாகி - பகற் காலத்தும் நீங்காதாகிப் பெய்து, யாமம் தவல் இல் நீத்தமொடு - இரவினும் நீங்குதல் இல்லாத வெள்ளத்துடன், ஐ எனக் கழிய - மெல்லெனக் கழிய, தளி மழை பொழிந்த - மேகம் மழையைச் சொரிந்தமையால், தண் வரல் வாடையொடு பனிமீக்கூரும் - குளிர்ந்து வருதலையுடைய வாடைக் காற்றால் நடுக்கம் மிகும், பைதல் பால் நாள் - வருத்தத்தையுடைய பாதியிரவில், 5-8. பல் படை நிவந்த வறுமைஇல் சேக்கை - பல அடுக்கு மெத்தைகளால் உயர்ந்த வளம் மிக்க படுக்கையின்கண், பருகு அன்ன காதலொடு - பருகுதலை யொத்த காதலுடன், திருகி மெய் புகுவு அன்ன கைகவர் முயக்கத்து - மாறி ஒருவர் மெய்யில் ஒருவர் மெய் புகுவது போலும் கை விரும்பும் முயக்கத்தால், ஓர் உயிர் மாக்களும் புலம்புவர் - ஈருடம்பிற்கு ஓர் உயிரெனத் தகும் காதலர்களும் வருந்தா நிற்பரன்றோ; 9. அருள் இலாளர் பொருள்வயின் அகல - அருள் இல்லாத நம் தலைவர் பொருள் ஈட்டும் வினைக்குச் செல்ல. 10-11. எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து யான் - துன்பத்தைச் சுமந்த வருத்தமுற்ற நெஞ்சுடையேனாகிய யான், 12-16. பரு அரைப் பெண்ணை ஒரு தனி சேக்கும் - பரிய அடியினை யுடைய பனை மரத்தில் துணையின்றித் தனியே தங்கியிருக்கும், கூர்வாய் அன்றில் உயவு குரல் கடைஇய - கூரிய வாயினையுடைய அன்றிலின் வருத்தத்தையுடைய குரல் மூட்டுதலால், உள்ளே கனலும் உள்ளம் - அகத்தே கொதிக்கின்ற உள்ளத்திடத்தே, கனை எரி பிறப்ப - மிக்க தீ உண்டாக, நினையா மாக்கள் மெல்லென ஊதும் தீங்குழல் கேட்டு - சூழ்ச்சியில்லாத மாக்கள் மெல்லென ஊதும் இனிய குழல் ஓசையைக் கேட்டு, 11. எவன் உளன் - எங்ஙனம் ஆற்றியிருப்பேன். (முடிபு) தோழி! வாடையொடு பனி மீக்கூரும் பைதற் பானாள், கைகவர் முயக்கத்து ஓருயிர் மாக்களும் புலம்புவர்; அருளிலாளர் பொருள்வயின் அகல, எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து யான், உள்ளம் எரி பிறப்ப ஊதும் குழல்கேட்டு, எவன் உளனோ. (வி-ரை) தளி - மேகம். பொழிந்த என்னும் பெயரெச்சமும், அகல என்னும் வினையெச்சமும் காரணப் பொருளன. பருகு: முதனிலைத் தொழிற்பெயர். பருகு வன்ன காதல் என்றது, காதல் மிகுதியை உணர்த்தியபடி. 1`பருகுவார் போலினும்', 2`பருகு வன்ன அருகா நோக்கமொடு' என்பன காண்க. அன்பால் செறிய முயங்கும் முயக்கம், இவ்வாறே மெய்புகு வன்ன கைகவர் முயக்கம் என, இந்நூலில் முன்னரும் (11) பின்னரும் (379) வந்துள்ளமையுங் காண்க. ஓருயிர் மாக்களும் புலம்புவர் என்றது, வாடையின் கொடுமை மிகுதியை உணர்த்தியபடியாம். எவ்வமும் இடும்பையும் தாங்கிய நெஞ்சம் என்றலுமாம். எவ்வம், அருளின்றித் தலைவர் பிரிந்ததனா லாகிய துன்பமும், இடும்பை வாடையால் வருந்தும் வருத்தமும் ஆகக் கொள்க. குழலோசை, துணைவரைப் பிரிந்திருக்கும் நம் உள்ளத்தில் துன்பமாகிய நெருப்பினை மூட்டுவதாகவும், அதனைச் சிறிதும் ஓராது தமக்கு ஒரு விளையாட்டாகக் குழல் ஊதுகின்றனர் என்பாள் கனை யெரி பிறப்ப ஊதும், நினையா மாக்கள் தீங்குழல் என்றாள் என்க. அருளிலாளர் பொருள்வயின் அகல, தீங்குழல் கேட்டு எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து யான் ஓருயிர் மாக்களும் புலம்புதற்கு ஏதுவாகிய வாடையால் எவன் உளனோ என முடித்தலும் ஆம். (மே-ள்) 1`உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே' என்னுஞ் சூத்திரத்து, `இப்பாட்டினுள் பெருமண லுலகத்துப் பாலை வந்தது' என்றனர் நச். 306. மருதம் (தோழி தலைமகற்கு வாயின் மறுத்தது.) பெரும்பெயர் மகிழ்ந பேணா தகன்மோ பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய முட்கொம் பீங்கைத் துய்த்தலைப் புதுவீ ஈன்ற மாத்தின் இளந்தளிர் வருட 5. ஆர்குரு குறங்கும் நீர்சூழ் 2வளவயற் கழனிக் கரும்பின் சாய்ப்புறம் ஊர்ந்து பழன யாமை பசுவெயிற் கொள்ளும் நெல்லுடை மறுகின் நன்னர் ஊர இதுவோ மற்றுநின் செம்மல் மாண்ட 10. மதியேர் ஒண்ணுதல் வயங்கிழை யொருத்தி இகழ்ந்த சொல்லுஞ் சொல்லிச் சிவந்த ஆயிதழ் மழைக்கண் நோயுற நோக்கித் தண்ணறுங் கமழ்தார் 3பரீஇயினள் நும்மொடு ஊடினள் சிறுதுனி செய்தெம் 15. மணன்மலி மறுகின் இறந்திசி னோளே. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். (சொ-ள்) 1. பெரும் பெயர் மகிழ்ந - பெரிய புகழையுடைய தலைவனே! 2-8. பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய - அகன்ற பொய்கைக் கண்ணதாய பிரம்பினொடு கூடி நீண்டு வளர்ந்த, முள் கொம்பு ஈங்கை - முள்ளையுடைய கொம்பினையுடைய ஈங்கையின், துய் தலை புதுவீ - பஞ்சு போன்ற உச்சியினையுடைய புதிய பூவும், ஈன்ற மாத்தின் இளம் தளிர் - ஈனப்பட்ட மாமரத்தின் இளம் தளிரும், வருட - தன்னைத் தடவுதலின், ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வளவயல் - மீனை யுண்ட நாரை துயிலும் நீர் சூழ்ந்த வளம் பொருந்திய வயலிடத்தே யுள்ள, கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து - நன்செய்க் கரும்பின் செறும்பினையுடைய புறத்தே ஊர்ந்து சென்று, பழன யாமை பசு வெயில் கொள்ளும் - பொய்கையிலுள்ள யாமை இளவெயிற் காயும், நெல் உடை மறுகின் நன்னர் ஊர - நெற்களையுடைய தெருவினையுடைய நல்ல வளம் வாய்ந்த ஊரனே! 9-15. மாண்ட மதி ஏர் ஒள் நுதல் - மாட்சிமையுற்ற திங்களை யொத்த ஒளி பொருந்திய நெற்றியினையும், வயங்கு இழை - விளங் கும் அணியினையும் உடைய, ஒருத்தி - நின் பரத்தையாய ஒருத்தி, இகழ்ந்த சொல்லும் சொல்லி - நின்னை இகழ்ந்து கூறும் சொல்லும் கூறி, சிவந்த ஆய் இதழ் மழைக்கண் நோய் உற நோக்கி - சிவந்த அழகிய இதழினையுடைய குளிர்ந்த கண்ணால் வருத்தம் மிகப் பார்த்து, தண் நறு கமழ் தார் பரீஇயினள் - நினது தண்ணிய நறிய மணம் கமழும் மாலையினை அறுத்து, நும்மொடு ஊடினள் சிறு துனி செய்து - நும்முடன் ஊடிச் சிறு கலாம் செய்து, எம் மணல் மலி மறுகின் இறந்திசினோள் - எமது மணல் நிறைந்த தெருவழியே சென்றாளன்றே; 9. இதுவோ நின் செம்மல் - இதுதான் நினது தலைமையோ; 1. பேணாது அகன்மோ - எம்மைப் போற்றாது அகன்று செல்வாயாக. (முடிபு) பெரும் பெயர் மகிழ்ந! வயங்கிழை ஒருத்தி, இகழ்ந்த சொல்லும் சொல்லி, நோயுற நோக்கி, தார் பரீஇயினள், நும்மொடு ஊடினள், சிறுதுனி செய்து, எம்மறுகின் இறந்திசி னோள்; இதுவோ நின் செம்மல்; பேணாது அகன்மோ. (வி-ரை) பெரும் பெயர் மகிழ்ந என்றது இகழ்ச்சிக் குறிப்பு. பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், தனது தலைமை தோன்றப் பரத்தையரை இழித்துரைத்துத் தலைவியைப் பாராட்டி, வாயில் வேண்டி நின்றானாக, இன்ன தன்மையாள் ஒருத்தி, நும்மை இகழ்ந்துரைத்துத் தாரினைப் பரிந்து ஊடிச் சிறு துனி செய்து எம் மறுகின் இறந்திசினோள் ஆதலின் அதுதான் நும் தலைமையோ, எம்மைப் பேணுதலை ஒழிவீராக என்று கூறித் தோழி வாயில் மறுத்தாள் என்க. (உ-றை) ஈங்கைப் புதுவீயும் மாத்தின் இளந்தளிரும் வருட ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வளவயல் என்றது, தலைவன் குறியாத இன்பத்தினையும் எளிதின் எய்துவான் என்றபடி. 307. பாலை (பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது.) சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய் அகலெழில் அல்குல் அவ்வரி வாடப் பகலுங் கங்குலும் மயங்கிப் பையெனப் பெயலுறு மலரிற் கண்பனி வார 5. ஈங்கிவள் உழக்கும் என்னாது வினைநயந்து நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை அடுமுரண் தொலைத்த நெடுநல் யானை மையலங் கடாஅஞ் செருக்கி மதஞ்சிறந்து இயங்குநர்ச் செகுக்கும் எய்படு நனந்தலைப் 10. பெருங்கை எண்கினம் குரும்பி தேரும் புற்றுடைச் சுவர புதலிவர் பொதியிற் கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து உடனுறை பழைமையிற் றுறத்தல் செல்லாது இரும்புறாப் பெடையொடு பயிரும் 15. பெருங்கல் வைப்பின் மலைமுத லாறே. - மதுரை ஈழத்துப் பூதன் தேவனார். (சொ-ள்) 6. ஐய - ஐயனே! 6-15. வேங்கை அடு முரண் தொலைத்த - வேங்கையின் அடுகின்ற மாறுபாட்டை ஒழித்த, நெடு நல் யானை - நீண்ட நல்ல யானை, மையல் கடாஅம் செருக்கி - மயக்கத்தைத் தரும் மதத்தால் செருக்குற்று, மதம் சிறந்து - வலிமிக்கு, இயங்குநர்ச் செகுக்கும் - வழிப்போவாரைக் கொல்லும், எய் படு நனந்தலை - முள்ளம் பன்றி பொருந்திய அகன்ற காட்டின் இடத்தையும், பெரு கை எண்கு இனம் - பெரிய கையினையுடைய கரடிக் கூட்டம், குரும்பி தேரும் - புற்றாம் பழஞ் சோற்றினை ஆராயும். புற்று உடைச் சுவர - புற்றுக்களையுடைய சுவரினையுடைய, புதல் இவர்- புதர்கள் படரப் பெற்ற, பொதியில் - பொதியிலிடத்தே, கடவுள் போகிய கரு தாள் கந்தத்து - தெய்வம் போய்விட்ட வலிய தாளினையுடைய தூணில், உடன் உறை பழைமையில் - நெடுங்காலம் கூடியிருந்த பழைமை பற்றி, துறத்தல் செல்லாது - விட்டு நீங்காமல், இரு புறா பெடையொடு பயிரும் - பெரிய புறாக்கள் பெட்டைகளோடு கூடி ஒலிக்கும், பெரு கல் வைப்பின் மலை முதல் ஆறு - பெரிய கற்கள் பொருந்திய ஊர்களையுமுடைய மலையடியிலுள்ள நெறியில், 1-6. சிறுநுதல் பசந்து - சிறிய நெற்றி பசப்புற்று, பெருதோள் சாஅய் - பெரிய தோள் மெலிந்து, அகல் எழில் அல்குல் அவ்வரி வாட - அகன்ற எழிலுடைய அல்குலின் அழகிய வரிகள் வாட, பகலும் கங்குலும் மயங்கி - பகலும் இரவும் மயங்குதலுற்று, பை என - மெல்லென, பெயல் உறு மலரில் கண்பனி வார - மழை பெய்தலை ஏற்ற மலரைப் போலக் கண்ணில் நீர்பெருகி வழிய, ஈங்கு இவள் உழக்கும் என்னாது - இங்கே இவள் தனித்துத் துயரால் வருந்துவள் என்று எண்ணாது, வினை நயந்து - பொருளீட்டும் வினையை விரும்பி, நீங்கல் ஒல்லுமோ - நீ பிரிந்து செல்லுதல் பொருந்துவதாமோ? (முடிபு) ஐய! நனந்தலையினையும் பெருங்கல் வைப்பினை யும் உடைய மலை முதல் ஆற்றில், இவள் உழக்கும் என்னாது, வினை நயந்து நீங்கல் ஒல்லுமோ? (வி-ரை) பசந்து, சாஅய் என்பன சினைவினையாகலின் உழக்கும் என்பதனோடு முடியும். இயங்குநர்ச் செகுக்கும் நனந்தலை எனவும் எய்படு நனந்தலை எனவும் தனித்தனி கூட்டுக. புதல் இவர் பொதியில் கடவுள் போகிய கருந்தாட் கந்தம் என்றது, ஊர் பாழாயினமையைப் புலப்படுத்தும். மலை முதல் ஆறு, இவள் உழக்கும் என்னாது நீங்கல் ஒல்லுமோ என்றதனால், நின்னைப் பிரிதலாலும் நீ இத்தகைய ஏதம் மிக்க கொடிய நெறியிற் செல்லுவை என்றதனாலும் தலைவி வருந்துவள் எனக் கூறித் தோழி செலவு விலக்கினாள் என்க. 308. குறிஞ்சி (இரவு வருவானைப் பகல் வருகென்றது.) உழுவையொ டுழந்த உயங்குநடை யொருத்தல் நெடுவகிர் விழுப்புண் கழாஅக் கங்குல் ஆலி யழிதுளி பொழிந்த வைகறை வால்வெள் ளருவிப் புனன்மலிந் தொழுகலின் 5. இலங்குமலை புதயை வெண்மழை கவைஇக் கலஞ்சுடு புகையிற் றோன்றும் நாட இரவின் வருதல் எவனோ பகல்வரின் தொலையா வேலின் வண்மகி ழெந்தை களிறணந் தெய்தாக் கன்முகை இதணத்துச் 10. சிறுதினைப் படுகிளி யெம்மொ டோப்பி மல்ல லறைய மலிர்சுனைக் குவளைத் தேம்பா யொண்பூ நறும்பல அடைச்சிய கூந்தல் மெல்லணைத் துஞ்சிப் பொழுதுபடக் காவலர்க் கரந்து கடிபுனந் துழைஇய 15. பெருங்களிற் றொருத்தலிற் 1பெயர்குவை கருங்கோற் குறிஞ்சிநும் உறைவி னூர்க்கே. - பிசிராந்தையார். (சொ-ள்) 5-6. இலங்கும் மலை புதைய வெண்மழை கவைஇ - விளங்கும் மலை மறையுமாறு வெள்ளிய மேகம் சூழ்ந்து, கலம் சுடு புகையில் தோன்றும் நாட - மட்கலம் சுடும் சூளையிற் புகை போலத் தோன்றும் நாடனே! 1-7. உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் - புலியோடு பொருதுழந்த வருந்திய நடையினையுடைய களிற்றியானையின், நெடு வகிர் விழுப் புண் கழாஅ - நீண்ட பிளப்பாகிய மத்தகப் புண்ணைக் கழுவி, கங்குல் ஆலி அழி துளி பொழிந்த - இரவில் முகில்கள் ஆலங் கட்டியுடன் கூடிய மிக்க பெயலைப் பொழிந் தமையால், வைகறை - விடியற் காலத்தே, வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின் - மிக்க வெண்மையையுடைய அருவியின் நீர் மிக்குப் பெருகி வருதலின், இரவில் வருதல் எவனோ - இத்தகைய இரவில் நீ வருதல் என்னையோ; 7-13. பகல் வரின் - பகற் கண்ணே வரின், தொலையா வேலின் வண் மகிழ் எந்தை - தொலைதல் இல்லாத வேலினையுடைய வளவிய மகிழ்ச்சியையுடைய எம் தந்தை அமைத்த, களிறு அணந்து எய்தா - ஆண் யானை மேல் நிமிர்ந்து பற்றலாகாத, கல் முகை இதணத்து - மலைக் குகையின் மேலதாகிய பரணில், சிறுதினைப் படு கிளி எம் மொடு ஓப்பி - சிறிய தினையிற் படியும் கிளியினைப் எம்முடனிருந்து ஓட்டியும், மல்லல் அறைய மலிர் சுனைக் குவளை- வளமுடைய பாறையின் இடத்தவாய பெருகிய நீரினையுடைய சுனையிலுள்ள குவளையின், தேம்பாய் ஓண்பூ நறும் பல அடைச்சிய - தேன் பாயும் ஒள்ளிய நறிய பல பூக்களைச் சூடிய, கூந்தல் மெல் அணை துஞ்சி - கூந்தலாய மெல்லிய அணையில் துயின்றும், பொழுதுபட - இவ்வாறு பகற்பொழுது இனிது கழிய, 14-16. கரு கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கு - கரிய கிளைகளையுடைய குறிஞ்சி மரங்களையுடைய இருத்தற்கு இனிமையுடைய நும் ஊர்க்கு, காவலர் கரந்து கடி புனம் துழைஇய - காவலாளர்க்கு மறைந்து காவல் கொண்ட புனத்தை வளைத் துண்ட, பெரு களிற்று ஒருத்தலின் - பெரிய களிற்றியானையைப் போல, பெயர்குவை - செல்வாய். (முடிபு) நாட! அருவி புனல் மலிந்து ஒழுகலின் இரவில் வருதல் எவனோ; பகல் வரின், கிளி எம்மொடு ஓப்பி, கூந்தல் மெல்லணைத் துஞ்சி, பொழுதுபட, நும் உறைவு இன் ஊர்க்குக் களிற்று ஒருத்தலிற் பெயர்குவை. (வி-ரை) வெண் மழை என்றது, பெய்துவிட்ட மழை யென்றபடி. அணந்து - அண்ணாந்து, நிமிர்ந்து. இரவில் புனத்தினை மேய வரும் களிறு பரணின் மீதிருந்து கவண் முதலியவற்றால் தன்னை ஓட்டுவாரைக் கோறற்கு முயறல் உண்டாகலின், அதற்கு எட்டாத சேய்மையில் பரண் இடப்பெற்றிருக்கும் என்பது களிறு அணந் தெய்தாக் கன் முகை இதணத்து என்பதனாற் பெறப்படும். 309. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) வயவாள் எறிந்து வில்லின் நீக்கிப் பயநிரை தழீஇய கடுங்கண் 1 மழவர் அம்புசேட் படுத்து வன்புலத் துய்த்தெனத் தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற் 5. கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப் புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக் களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து அரலை வெண்காழ் ஆலியில் தாஅம் காடுமிக நெடிய என்னார் கோடியர் 10. 2பெரும்படைக் குதிரை நற்போர் வானவன் திருந்துகழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு நாஞ்செலின் எவனோ தோழி காம்பின் 3வனைகழை யுடைந்த கவண்விசைக் கடியிடிக் கனைசுடர் அமையத்து வழங்கல் செல்லாது 15. இரவுப்புனம் மேய்ந்த உரவுச்சின வேழம் தண்பெரும் படாஅர் வெரூஉம் குன்றுவிலங் கியவினவர் சென்ற நாட்டே. -4கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார். (சொ-ள்) 1-11. பயம் நிரை தழீஇய கடு கண் மழவர் - பாலினை யுடைய பசுவினத்தைப் பற்றிக் கொண்ட அஞ்சாமையுடைய வெட்சி வீரர், வய வாள் எறிந்து அம்பு வில்லின் நீக்கி - (தம்மொடு பொருத கரந்தையாரை) வெற்றி பொருந்திய வாளால் வீசியும் அம்பினை வில்லினின்று விடுத்தும், சேண் படுத்து - நெடுந்தூரம் போக்கிவிட்டு, வன்புலத்து உய்த்தென - வலிய காட்டு நிலத்தே செலுத்தினார்களாக, தெய்வம் சேர்ந்த பரு அரை வேம்பின் - தெய்வம் தங்கிய பரிய அரையினையுடைய வேப்ப மரத்தடியில், கொழுப்பு ஆ எறிந்து - கொழுப்பினையுடைய பசுவினைத் தடிந்து, குருதி தூஉய் - உதிரத்தைத் தூவிப் பலியிட்டு, புலவுப் புழுக்கு உண்ட - அதன் புலாலைப் புழுக்கி உண்ட இடமாய, வான் கண் அகல் அறை - உயரிய இடம் அகன்ற பாறையில், களிறு புறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து - களிறு தன் புறத்தினை உரசிக்கொண்ட கரிய அடியினையுடைய இலவ மரத்தின், அரலை வெண்காழ் - விதையாய வெள்ளிய கொட்டை, ஆலியில் தாஅம் காடு - ஆலங்கட்டி போலப் பரவிக் கிடக்கும் காடுகள், மிக நெடிய என்னார் - மிகச் சேய என் றெண்ணாராய், கோடியர் - கூத்தர், பெரும்படை குதிரை - பெரிய குதிரைப் படையினையுடைய, நல் போர் வானவன் - நல்ல போர்த்திறன் வாய்ந்த சேரனது, திருந்து கழல் சேவடி - திருந்திய வீரக்கழலையணிந்த சிவந்த அடியினை, நசைஇ படர்ந்தாங்கு - விரும்பிச் சென்றாற்போல, 12-17. தோழி-, காம்பின் வனை கழை உடைந்த - மூங்கிலின் அழகிய தண்டு உடைதற்கு ஏதுவாய, கவண் விசை கடி இடி - கவண் கல்லின் வேகந் தங்கிய கடிய தாக்குதலை உடைய, கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது - வெப்பமிக்க கதிர்களையுடைய பகற் பொழுதில் இயங்குதல் இன்றி, இரவு புனம் மேய்ந்த உரவு சின வேழம் - இரவின்கண் தினைப் புனத்தை மேய்ந்த வலிய சினம் கொண்ட யானை, தண் பெரும் படாஅர் வெரூஉம் - குளிர்ந்த பெரிய தூற்றினை அஞ்சும், குன்று விலங்கு இயவின் அவர் சென்ற நாட்டு - குன்றுகள் குறுக்கிடும் நெறிகளையுடைய நம் தலைவர் சென்ற நாட்டின்கண், நாம் செலின் எவனோ - நாம் சென்றால் என்னையோ? (முடிபு) தோழி! கோடியர், வானவன் திருந்துகழற் சேவடி நசைஇக் காடு மிக நெடிய என்னார் படர்தந்தாங்கு, நாம் குன்று விலங்கு இயவின் அவர் சென்ற நாட்டுச் செலின் எவனோ? (வி-ரை) அம்பு வில்லின் நீக்கி எனக் கொண்டு கூட்டுக. பயம்- பால்; பய நிரை - கறவை இனம் என்றபடி. வான் கண்: கண் அசை. மழவர் கொழுப்பா எறிந்து புழுக்குண்ட அகல் அறையில் இலவத்து வெண் காழ் ஆலியில் தாஅம் காடு என்க. பெரும் படை; படை - குதிரைக் கலணையுமாம். படாஅர் - தூறு; பாந்தளின் இயல்பின தாகிய தூறு ஒன்று உண்டாகலின் அதனைக் கண்டு வேழம் அஞ்சும் என்க. `அகல்வாய்ப் பாந்தட் படாஅர்' (68) என முன் வந்திருப்பதுங் காண்க. கோடியர் காடு மிக நெடிய என்னார் வானவன் சேவடி நசைஇப் படர்தந்தாங்கு என்ற உவமையால் செல்லும் நெறி நெடிய என்னாது நாமும் தலைவரை நச்சி அவர் நாட்டுச் செல்லின் எவனோ என்று தலைவி உரைத்தாளாகக் கொள்க. இனி, காடு மிக நெடிய என்னார் குன்ற விலங்கு இயவின் அவர் சென்ற நாட்டு என இயைத்து உரைத்தலுமாம். 310. நெய்தல் (தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி சொல்லியது.) கடுந்தே ரிளையரொடு நீக்கி நின்ற நெடுந்தகை நீர்மையை யன்றி நீயும் தொழுதகு மெய்யை அழிவுமுந் துறுத்துப் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றலின் 5. குவளை யுண்கண் கலுழ நின்மாட்டு இவளும் பெரும்பே துற்றன ளோருந் 1தாயுடை நெடுநகர்த் தமர்பா ராட்டக் காதலின் வளர்ந்த மாத ராகலின் பெருமட 2 முடையரோ சிறிதே யதனாற் 10. குன்றிற் றோன்றுங் குவவுமணற் சேர்ப்ப இன்றிவண் விரும்பா தீமோ 3சென்றப் பூவிரி புன்னை மீதுதோன்று பெண்ணைக் கூஉங்க ணஃதே தெய்ய ஆங்கண் உப்பொய் உமணர் ஒழுகையொடு வந்த 15. இளைப்படு பேடை யிரியக் குரைத்தெழுந்து உருமிசைப் புணரி யுடைதரும் பெருநீர் வேலியெஞ் சிறுநல் லூரே. - நக்கீரனார். (சொ-ள்) 10. குன்றில் தோன்றும் குவவு மணல் சேர்ப்ப - குன்று போலத் தோன்றும் திரண்ட மணலையுடைய கடற்கரைத் தலைவனே! 1-4. கடுந்தேர் இளையரொடு நீக்கி நின்ற - விரைந்து செல்லும் தேரினை ஏவலாளருடன் சேய்மைக்கண் நிறுத்தி இங்கு வந்து நிற்கும், நெடுந்தகை நீர்மையை - பெருந்தன்மையாகிய இனிய குணத்தினை யுடையை ஆகின்றாய், அன்றி - அதுவே யன்றி, தொழுதகு மெய்யை - பிறர் வணங்கத் தக்க தோற்றத்தினையுடையை, நீயும் - இத்தகைய நீயும், அழிவு முந்துறுத்து - மனச் சிதைவை மேற்கொண்டு, பல் நாள் வந்து - பல நாளும் வந்து, பணி மொழி பயிற்றலின் - பணிந்த மொழிகளைப் பலகாற் கூறலின், 5-6. இவளும் -, குவளை உண்கண் கலுழ - கருங் குவளை மலர் போன்ற மையுண்ட கண் கலங்க, நின்மாட்டு பெரும் பேது உற்றனள் - நின்னிடத்துப் பெரிய மயக்கத்தினை எய்தியுளாள்; 7-9. தாய் உடை நெடு நகர் தமர் பாராட்ட - தாய்மார் உள்ள பெரிய மனையில் சுற்றத்தார் பாராட்ட, காதலின் வளர்ந்த மாதர் ஆகலின் - காதலொடு வளர்ந்த பெண்டிர் ஆதலான் (இவளைப் போன்றார்), சிறிது பெருமடம் உடையர் - சில காலத்திற்கு மிக்க நாணினையுடையர் ஆவர், அதனால் - ஆகையால், 11-17. இன்று இவண் விரும்பாதீ - இன்று இவ்விடத்திருத்தலை விரும்பற்க; உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு ஆங்கண் வந்த - உப்பினைச் செலுத்தி வரும் உப்பு வாணிகரது வண்டியுடன் அவ்விடத்தே வந்த, இளைபடு பேடை இரிய - பாதுகாவல் எய்திய பேடை அஞ்சியோட, உரும் இசைப் புணரி - இடிபோலும் ஒலியினையுடைய அலை, குரைத்து எழுந்து உடைதரும் - ஒலித்து எழுந்து சிதறிவிழும், பெருநீர் வேலி எம் சிறு நல் ஊர் - கடலை எல்லையாகவுடைய எமது சிறிய நல்ல ஊர், சென்று - சிறிது சென்ற வழி, அ பூ விரி புன்னை மீது தோன்றும் - அந்தப் பூக்கள் விரிந்த புன்னையின் மேலே தோன்றுகின்ற, பெண்ணை - பனை மரத் தினின்றும், கூஉம் கண்ணஃதே - கூப்பிடு தூரத்தே யுள்ளதேயாம். (முடிபு) சேர்ப்ப! நெடுந்தகை நீர்மையை; அன்றித் தொழுதகு மெய்யை; நீயும் அழிவு முந்துறுத்துப் பன்னாள் வந்து பனிமொழி பயிற்றலின், இவளும் நின்மாட்டுப் பெரும்பேது உற்றனள்; காதலின் வளர்ந்த மாதராகலின், சிறிது பெருமடம் உடையர்; அதனால் இன்று இவண் விரும்பாதீமோ; எம் சிறு நல்லூர் பெண்ணைக் கூஉங் கண்ணது, (அவண் வருக.) (வி-ரை) புரவலன் போலும் தோற்ற முடைய நீ இரவலன் போல் வந்து பலகால் பணிமொழி கூறினை என்பாள் "கடுந்தே ரிளையரொடு நீக்கி நின்ற, நெடுந்தகை நீர்மையை யன்றி நீயும், தொழுதகு மெய்யை...... பன்னாள் வந்து பணிமொழி பயிற்றலின் என்றாள். நின்மாட்டு இவளும் பெரும்பேது உற்றனள் என்றது, நீ எய்திய துன்பத்திற்குத் தானும் வருந்தி நின்னையே நினைந்து அறிவுநிலை கலங்குவாளாயினள் என்றபடி. ஓரும், ஓ தெய்ய - அசைநிலை. மோ - முன்னிலையசை. கூஉங் கண்ணஃது - ஆய்தம் விரித்தல். பெண்ணைக்கு ஊங்கண்ணஃது எனப் பிரித்து, பெண்ணைக்கு அப்பாலாய இடத்தது என உரைத்தலுமாம். 311. பாலை (பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) இரும்பிடிப் பரிசிலர் போலக் கடைநின்று அருங்கடிக் காப்பின் அகனகர் ஒருசிறை எழுதி யன்ன திண்ணிலைக் கதவம் 1கழுதுவழங் கரைநாள் காவலர் மடிந்தெனத் 5. திறந்துநப் புணர்ந்து நம்மிற் சிறந்தோர் இம்மை யுலகத் தில்லெனப் பன்னாள் பொம்மல் ஓதி நீவிய காதலொடு 2பயந்தலை பெயர்ந்து மாதிரம் வெம்ப வருவழி வம்பலர்ப் பேணிக் கோவலர் 10. மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி செவியடை தீரத் தேக்கிலைப் பகுக்கும் புல்லி நன்னாட் டும்பர்ச் செல்லருஞ் சுரமிறந் தேகினும் நீடலர் அருண்மொழித் தேற்றிநம் அகன்றிசி னோரே. - மாமூலனார். (சொ-ள்) 1-7. இரு பிடி பரிசிலர் போல - பெரிய பெண் யானையினைப் பரிசில் பெறும் பாணர் போல, கடை நின்று - நமது மனையின் கடையில் நின்று (பின்), அரு கடி காப்பின் அகல் நகர் - அரிய காவலையுடைய மதில் சூழ்ந்த அகன்ற மனையின், ஒரு சிறை - ஒரு பாலுள்ள, எழுதி அன்ன திண் நிலைக் கதவம் - எழுதினாற் போன்ற செறிந்த நிலையினை யுடைய கதவினை, கழுது வழங்கு அரை நாள் - பேய் வழங்கும் பாதியிரவில், காவலர் மடிய - காவலர்கள் சோர்ந்திருக்கும் செவ்வி பார்த்து, திறந்து - திறந்து வந்து, நம் புணர்ந்து - நம்மைக் கூடி, நம்மிற் சிறந்தோர் இம்மை உலகத்து இல் என - நம்மைப் போன்று அன்பிற் சிறந்தோர் இவ்வுலகத்தே யாரும் இல்லை என்று கூறி, பல் நாள் - பல காலம், பொம்மல் ஓதி நீவிய காதலொடு - பொலிவு பெற்ற கூந்தலைத் தடவி அளிசெய்த காதலொடு, 14. அருள் மொழித் தேற்றி நம் அகன்றிசினோர் - இரக்கம் தோன்றும் மொழியால் நம்மைத் தெளிவித்து அகன்று சென்றோர், 1-13. பயம் தலை பெயர்ந்து மாதிரம் வெம்ப - நீர் அற்று ஒழியத் திசையெல்லாம் கொதிக்க, வம்பலர் வருவழி பேணி - புதிய வழிப்போக்கர் வருங்கால் அவர்களைப் போற்றி, கோவலர் - ஆயர்கள், மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி - இளைய எருதுகளின் கழுத்திற் கட்டியுள்ள மூங்கிற் குழாயிலுள்ள இனிய புளிச் சோற்றை, செவி அடை தீர -அப் புதியரின் காதடைப்பு நீங்க, தேக்கு இலை பகுக்கும் - தேக்கின் இலையில் பகிர்ந்து அளிக்கும், புல்லி நல் நாட்டு உம்பர் - புல்லி என்பானது வேங்கட நன்னாட்டிற்கு அப்பாலுள்ள, செல் அரும் சுரம் இறந்து ஏகினும் - கடத்தற் கரிய சுரநெறியைக் கடந்து சென்றிருப்பினும், நீடலர் - தாழ்க்காது விரைவில் வருவர். (முடிபு) தோழி! நப்புணர்ந்து காதலொடு அருண் மொழித் தேற்றி நம் அகன்றிசினோர், புல்லி நன்னாட்டும்பர்ச் செல்லரும் சுரம் இறந்தேகினும் நீடலர். (வி-ரை) பெண் யானையைப் பரிசில் பெறும் அகவலர் முதலாயினார், மனை வாயிலில் ஒதுங்கி நிற்ப ராகலின், இரும்பிடிப் பரிசிலர் போலக் கடைநின்று என்றாள். பரிசிலர் வாயிலில் நிற்றல் `பரிசில் கடைஇய கடைக் கூட்டு நிலை'1 எனப்படும். மடிய - மடிந்திருக்கும் பொழுது என்க. செவியடை - பசியாற் காது கேளாத நிலையை அடைதல். 312. குறிஞ்சி (தலைமகன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. தலைமகள் சொல்லியதுமாம்.) நெஞ்சுடம் படுதலின் ஒன்றுபுரிந் தடங்கி இரவின் வரூஉம் 2இடும்பை நீங்க வரையக் கருதும் ஆயின் பெரிதுவந்து ஓங்குவரை யிழிதரும் வீங்குபெயல் நீத்தம் 5. காந்தளஞ் சிறுகுடிக் கௌவை பேணாது அரிமதர் மழைக்கண் 3சிவப்ப நாளைப் பெருமலை நாடன் மார்புபுணை யாக ஆடுகம் வம்மோ காதலந் தோழி வேய்பயில் அடுக்கம் புதையக் கால்வீழ்த்து 10. இன்னிசை முரசின் இரங்கி ஒன்னார் ஓடுபுறங் கண்ட தாடோய் தடக்கை வெல்போர் வழுதி செல்சமத் துயர்த்த அடுபுகழ் எஃகம் போலக் கொடிபட மின்னிப் பாயின்றால் மழையே. - மதுரை மருதன் இளநாகனார். (சொ-ள்) 8. காதல் அம் தோழி - காதல் மிக்க தோழியே, 7. பெருமலை நாடன் - பெரிய மலை நாட்டினனாகிய நம் தலைவன், 1-3. நெஞ்சு உடம்படுதலின் - இருவர் நெஞ்சும் ஒன்று படுதலின், ஒன்று புரிந்து அடங்கி - வரைந்து கோடலாய அதனையே விரும்பி யமைந்து, இரவின் வரூஉம் இடும்பை நீங்க - இரவில் வருதலாய துன்பம் அகல, வரையக் கருதும் ஆயின் - வரைந்து கொள்ளலை எண்ணும் ஆகலின், 3-8. காந்தள் சிறுகுடிக் கௌவை பேணாது - காந்தட் பூக்களை யுடைய இச்சீறூரின் அலரினைப் போற்றாது, ஓங்குவரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம் - உயர்ந்த மலையினின்றும் வீழும் மிக்க மழையாலாய அருவி நீரில், மார்பு புணையாக - (நம் தலைவன்) மார்பு தெப்பம் ஆக, அரி மதர் மழை கண் சிவப்ப - செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் சிவந்திட, நாளை பெரிது உவந்து ஆடுகம்- நாம் நாளை மிகவும் மகிழ்ந்து விளையாடுவேம், வம்மோ - வருவாயாக; 9-14. வேய் பயில் அடுக்கம் புதைய - மூங்கில் நெருங்கிய பக்கமலை மறைய, கால் வீழ்த்து - கால் இறங்கி, இன் இசை முரசின் இரங்கி - இனிய இசை பொருந்திய முரசம் போல ஒலித்து, ஒன்னார் ஓடு புறங் கண்ட - பகைவர் ஓடும் புறக் கொடையினைக் கண்ட, தாள் தோய் தட கை - முழந்தாளினைப் பொருந்தும் பெரிய கையினை யுடைய, வெல் போர் வழுதி - போர் வெல்லும் பாண்டியன், செல் சமத்து உயர்த்த - வென்று செல்லும் போரில் தூக்கிய, அடு புகழ் எஃகம் போல - கொல்லும் புகழ் வாய்ந்த வேல் போல, கொடி பட மின்னி - ஒழுங்கு பட மின்னி, மழை பாயின்று - மழை பரவி யுள்ளது; (காண்பாயாக) (முடிபு) காதலம் தோழி! பெருமலை நாடன் வரையக் கருதும் ஆயின், வீங்கு பெயல் நீத்தம் மார்பு புணையாக ஆடுகம் வம்மோ; மழை பாயின்றால். (வி-ரை) கருதும் ஆயின் - கருதும் ஆகலின், நீத்தம் கண் சிவப்ப மார்பு புணையாக ஆடுகம் எனவும், கௌவை பேணாது மார்பு புணையாக ஆடுகம் எனவும் தனித் தனி கூட்டுக. பேணாது - ஒரு பொருளாகக் கொள்ளாமல். முரசின் இரங்கி எஃகம் போல மின்னி என்புழிப் பொருள் உவமை யாயின; `பொருளே யுவமம் செய்தனர் மொழியினும், மருளறு சிறப்பினஃ துவமை யாகும்'1 என்பது விதியாகலான். 313. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.) இனிப்பிறி துண்டோ அஞ்சல் ஓம்பென அணிக்கவின் வளர முயங்கி நெஞ்சம் பிணித்தோர் சென்ற ஆறுநினைந் தல்கலுங் குளித்துப்பொரு கயலிற் கண்பனி மல்க 5. ஐய வாக வெய்ய வுயிரா இரவும் எல்லையும் படரட வருந்தி அரவுநுங்கு மதியின் நுதலொளி கரப்பத் தம்மல தில்லா நம்மிவண் ஒழியப் பொருள்புரிந் தகன்றன ராயினும் அருள்புரிந்து 10. வருவர் வாழி தோழி பெரிய நிதியஞ் சொரிந்த நீவி போலப் பாம்பூன் தேம்பும் வறங்கூர் கடத்திடை நீங்கா வம்பலர் கணையிடத் தொலைந்தோர் வசிபடு புண்ணின் குருதி மாந்தி 15. ஒற்றுச்செல் மாக்களின் ஒடுங்கிய குரல இல்வழிப் படூஉங் காக்கைக் கல்லுயர் பிறங்கல் மலையிறந் தோரே. - பாலைபாடிய பெருங்கடுங்கோ. (சொ-ள்) 10. தோழி-, வாழி-, 1-3. இனி பிறிது உண்டோ - இனி நீ வருந்தற் குரிய தொன்று உண்டோ, அஞ்சல் ஓம்பு என - அஞ்சுதலை ஒழிவாயாக என்று கூறி, அணி கவின் வளர முயங்கி - அழகிய ஒளி பெருகத் தழுவி, நெஞ்சம் பிணித்தோர் - நம் உள்ளத்தைக் கவர்ந்தோராகிய நம் தலைவர், 3-9. சென்ற ஆறு நினைந்து - தாம் சென்ற சுர நெறியை நாம் நினைந்து, அல்கலும் - நாடோறும், குளித்துப் பொரு கயலில் கண் பனி மல்க - நீரில் மூழ்கிப் பொரும் கயல்களைப் போலக் கண்களில் நீர் பெருக, ஐய ஆக வெய்ய உயிரா - மென்மையாக வெவ்விய உயிர்ப்பினை உயிர்த்து, இரவும் எல்லையும் படர் அட வருந்தி - இரவும் பகலும் துன்பம் நலிய வருந்தி, அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப - அரா விழுங்கிய திங்களென நெற்றி ஒளியினை இழந்திட, தம் அலது இல்லா நம் இவண் ஒழிய - தம்மை யல்லாது வேறு களைகண் இல்லா நாம் இங்கே தங்கி யிருக்க, பொருள் புரிந்து அகன்றனர் ஆயினும் - பொருளை விரும்பிச் சென்றன ராயினும், 10-17. பெரிய நிதியம் சொரிந்த நீவி போல - மிக்க நிதியினை சொரிந்து விட்ட உள்ளீடில்லாத துணிப்பை போல, பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை - பாம்பு உடல் வாடிக் கிடக்கும் வறட்சி மிக்க காட்டிடத்தே, கணை இட - ஆறலைப்போர் அம்பினை எய்தலால், தொலைந்தோர் - இறந்து பட்டோராய, நீங்கா வம்பலர் - ஒழியாத புதியோரது, வசிபடு புண்ணின் குருதி மாந்தி - பிளந்த புண்ணினின் றிழியும் செந்நீரைக் குடித்து, காக்கை - காகங்கள், ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல - ஒற்றராகச் செல்லும் மக்களைப் போல உள்ளடங்கிய குரலினவாய், இல் வழிப் படுஉம் - மனையிடத்தே வந்து தங்கும் இடமாய, கல்உயர் பிறங்கல்மலை இறந்தோர் - கற்கள் உயர்ந்த பக்கமலைகளையுடைய மலையைக் கடந்து சென்றோராய அவர், 9-10. அருள் புரிந்து வருவர் - நம்பால் அருள் செய்து வருவர். (முடிபு) தோழி! வாழி! நெஞ்சம் பிணித்தோர், தம்மலதில்லா நம் இவண் ஒழியப் பொருள் புரிந்து அகன்றன ராயினும், மலையிறந்தோராய அவர், அருள்புரிந்து வருவர். (வி-ரை) இனிப் பிறிது உண்டோ என்றது, இனி நமக்குப் பிரிவென்பது இல்லை எனக் குறிப்பித்தபடி; இனிப் பிரியுமாறு இல்லையெனத் தன் நெஞ்சம் ஒருப்படத் தெருட்டிய தலைவர், பிரிந்து சென்றாராகலின், தலைவி கண் பனிமல்க வெய்ய உயிரா வருந்தி யிருந்தனள் என்க. பொருகயல் - ஒன்றோ டொன்று எதிர்த்துப் பொரும்கயல் என கண்ணின் வடிவு புலப்படக் கூறிய வாறாம். நம் இவண் ஒழிய - நாம் இவண் ஒழிய என்க. அருள் புரிந்து - அருளை விரும்புதலுடையர் ஆகலால் என ஏதுப் பொருண்மை குறிப்பினாற் கொள்ளப்படும். நீவி - மடிச்சீலை; மடியிற் சுற்றிக் கட்டிக் கொள்ளும் நீண்ட வடிவுடைய பணப்பை. பாம்பு ஊன் தேம்பும் கடம் என்றது காட்டின் வெம்மை மிகுதி கூறியபடி. நீங்கா வம்பலர் - இடையறாது சென்று கொண்டிருக்கும் புதியர். கணையிட - ஆறலைப்போர் கணையிடலால் என வருவித்துரைக்க. (மே-ள்) `அவைதாம், அன்ன ஏய்ப்ப'1 என்னும் சூத்திரத்து `குளித்துப் பொரு கயலிற் கண்பனி மல்க' என்பது உவம உருபின்றி இன்னுருபு தன் பொருட் கண்ணும் வந்தது என்றனர் நச். 314. முல்லை (வினைமுற்றிப் புகுந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.) நீலத் தன்ன நீர்பொதி கருவின் 2மாவிசும் பதிர முழங்கி ஆலியின் நிலந்தண் ணென்று கானங் குழைப்ப இனந்தேர் உழவர் இன்குர லியம்ப 5. மறியுடை மடப்பிணை தழீஇப் புறவில் திரிமருப் பிரலை பைம்பயிர் உகள 1ஆர்பெயல் உதவிய கார்செய் காலை நூனெறி நுணங்கிய கானவில் புரவிக் கல்லெனக் கறங்குமணி யியம்ப வல்லோன் 10. வாய்ச்செல வணக்கிய தாப்பரி நெடுந்தேர் ஈர்ம்புற இயங்குவழி யறுப்பத் தீந்தொடைப் பையுள் நல்யாழ் செவ்வழி 2 பிறப்ப இந்நிலை வாரா ராயின் தந்நிலை எவன்கொல் பாண உரைத்திசிற் சிறிதெனக் 15. கடவுட் கற்பின் மடவோள் கூறச் செய்வினை யழிந்த மையல் நெஞ்சில் துனிகொள் பருவரல் தீர வந்தோய் இனிதுசெய் தனையால் வாழ்கநின் கண்ணி வேலி சுற்றிய வால்வீ முல்லைப் 20. 3பெருந்தார் கமழும் விருந்தொலி கதுப்பின் இன்னகை யிளையோள் கவவ மன்னுக பெருமநின் மலர்ந்த மார்பே. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார். (சொ-ள்) 1-7. நீலத்து அன்ன நீர் பொதி கருவின் - நீலமணியை யொத்த நீர் பொதிந்த சூலினைக் கொண்டு, மா விசும்பு அதிர முழங்கி - கரிய வானினிடத்தே அதிர இடித்து, ஆலியின் - பெய்த நீரினால், நிலம் தண்ணென்று - நிலம் தட்ப முற்று, கானம் குழைப்ப - காடு தழைத்திட, இனம் தேர் உழவர் - இனத்தை ஆராயும் உழவர், இன்குரல் இயம்ப - இனிய குரல் ஒலிக்க, மறியுடை மடப்பிணை தழீஇ - குட்டியினையுடைய இளைய பெண் மானைத் தழுவிக் கொண்டு, புறவில் - காட்டில், திரி மருப்பு இரலை - முறுக்கிய கோட்டினையுடைய கலைமான், பை பயிர் உகள - பசிய பயிரிலே துள்ளித் திரிய, ஆர் பெயல் உதவிய கார் செய் காலை- மேகம் மிக்க பெயலைத் தந்த கார்ப்பருவத்தைச் செய்யும் காலத்தே, 8-15. பாண - பாணனே, நூல் நெறி நுணங்கிய - புரவி நூல் கூறும் முறைப்படி நுண்ணிதின் அமைந்த, கால் நவில் புரவி - வேகத்தாற் காற்றெனக் கூறத் தகும் குதிரை, கல் எனக் கறங்கும் மணி இயம்ப - கல்லென்று ஒலிக்கும் மணி (இடையறாது) ஒலிக்க, வாய்ச் செல - வாவிச் செல்ல, வல்லோன் வணக்கிய தா பரி நெடுந்தேர்- வன்மையுடைய பாகனால் அடக்கி விடப்படும் தாவும் செலவினையுடைய நீண்ட தேர், ஈர் புற இயங்கு வழி அறுப்ப - ஈரம் பொருந்திய இடங்களில் தான் செல்லும் வழியினை அறுத்துச் செல்ல, தீம் தொடை பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப - இனிய நரம்புத் தொடையினையுடைய நல்ல யாழில் வருத்தத்தைத் தரும் செவ்வழிப் பண் தோன்ற, இ நிலை வாரார் ஆயின் - இத்தகைய மாலைப் போழ்தில் வந்து சேராராயின், தம் நிலை எவன்கொல் - அவர்தம் நிலை யாதாகுமோ, உரைத்திசின் சிறிது என - சிறிது உரைப்பாயாக என்று, கடவுள் கற்பின் மடவோள் கூற - தெய்வக் கற்பினையுடைய மடப்பம் வாய்ந்தவளாகிய எம் தலைவி கூற, 16-22. பெரும-, செய்வினை அழிந்த மையல் நெஞ்சில் - செய்யப்படும் வினைகள் அழிதற் கேதுவாய மயக்கம் பொருந்திய நெஞ்சில், துனி கொள் பருவரல் தீர - வெறுப்புத் தரும் துன்பம் அகல, வந்தோய் - நீ வந்துற்றனை அதனால், இனிது செய்தனை - எம் தலைவிக்கு இனிய தொன்றினைச் செய்தாய் ஆவாய்; வாழ்க நின் கண்ணி - நின் கண்ணி வாழ்வதாக; நின் மலர்ந்த மார்பு - நினது அகன்ற மார்பு, வேலி சுற்றிய வால் வீ முல்லை - மனையின் வேலியாகச் சூழ்ந்த வெள்ளிய முல்லை மலர்களாகிய, பெரு தார் கமழும் - பெரிய மாலை கமழும், விருந்து ஒலி கதுப்பின் - புதுமையுறத் தழைத்த கூந்தலையுடைய, இன் நகை இளையோள் கவவ - இனிய நகையையுடைய இளையோளாகிய இவள் தழுவிக் கொள்ள, மன்னுக - நிலை பெறுவதாக. (முடிபு) கார் செய் காலை, புரவி வாய்ச் செல வல்லோன் வணக்கிய தாப்பரி நெடுந்தேர் இயங்கு வழி யறுப்ப, யாழ் செவ்வழி பிறப்ப, தலைவர் இந்நிலை வாராராயின், தம் நிலை எவன்கொல், பாண, சிறிது உரைத்திசின் என மடவோள் கூற, அவளது மையல் நெஞ்சிற் பருவரல் தீர வந்தோய்; பெரும! இனிது செய்தனை; நின் கண்ணி வாழ்க; இளையோள் கவவ நின் மலர்ந்த மார்பு மன்னுக. கானங் குழைப்ப, உழவர் இன்குரல் இயம்ப, இரலை உகளப் பெயல் உதவிய கார்செய் காலை என்க. (வி-ரை) ஆலி - ஈண்டு நீரினைக் குறித்தது. இனம் தேர்தல் - தமது உழு தொழிற்கு இனமாவாரைத் தேர்தலும், எருது முதலிய இனத்தினைத் தேர்தலும் ஆம். குரல் - உழுதல் வித்துதல் முதலியன செய்வுழி எழும் குரல்; பாடப்படும் குரலுமாம். மகிழ்ச்சியுடன் கூடியதாகலின் இன்குரல் ஆயிற்று. கார் ஆர் பெயல் உதவிய கார் செய் காலை எனக் கார் என்பதனை முன்னும் கூட்டி யுரைக்க. நுணங்கிய புரவி, கால் நவில் புரவி எனத் தனித் தனியே கூட்டுக. வாய் - வாவி. வாச் செல என்னும் பாடத்திற்கு வாவுதலாகச் செல்ல என்க. புரவி செல்ல, வல்லோன் வணக்கிய நெடுந்தேர் இயங்குவழி யறுப்ப வாராராயின் எனக் கூட்டுக. பையுள் நல்யாழ் செவ்வழி பிறப்ப, இந்நிலை வாராராயின் என்றது பிரிந்தார்க்கு வருத்தத்தைச் செய்யும் செவ்வழிப் பண் தோன்றும் இத்தகைய மாலைப் பொழுதில் வாராராயின் என்றபடி. தம் நிலை, அவருடைய வாய்மை. கூற - கூறிய காலை என்க. செய்வினை - உண்டியும் ஒப்பனையும் முதலாயின. இளையோள் கவவ மார்பு மன்னுக என்றது. மார்பு தலைவியின் அகத்தீடு இடையீடில்லையாகப் பொருந்துக என்றபடி. (மே-ள்) `பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த'1 என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுள் தோழி, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறும் தலைவற்குக் கூறியது என்றனர் நச். 315. பாலை (மகட் போக்கிய தாய் சொல்லியது.) கூழையுங் குறுநெறிக் கொண்டன முலையும் சூழி மென்முகஞ் செப்புடன் எதிரின பெண்டுணை சான்றனள் இவளெனப் பன்மாண் கண்டுணை யாக நோக்கி நெருநையும் 5. அயிர்த்தன்று மன்னே நெஞ்சம் பெயர்த்தும் அறியா மையிற் செறியேன் யானே பெரும்பெயர் வழுதி கூடல் அன்னதன் அருங்கடி வியனகர்ச் சிலம்புங் கழியாள் சேணுறச் சென்று வறுஞ்சுனைக் கொல்கிப் 10. புறவுக்குயின் றுண்ட புன்காய் நெல்லிக் கோடை யுதிர்த்த குவிகட் பசுங்காய் அறுநூற் பளிங்கின் துளைக்காசு கடுப்ப 2வறுநிலத் துதிரும் அத்தம் கதுமெனக் கூர்வேல் விடலை பொய்ப்பப் போகிச் 3. சேக்குவள் கொல்லோ தானே தேக்கின் அகலிலை 3 குவித்த புதல்போல் குரம்பை ஊன்புழுக் கயரும் முன்றிற் கான்கெழு வாழ்நர் சிறுகுடி யானே. - குடவாயிற் கீரத்தனார். (சொ-ள்) 1-6. கூழையும் குறுநெறி கொண்டன - தலை மயிரும் குறுகிய நெறிப்பினைக் கொண்டன, முலையும் சூழி மெல்முகம் செப்புடன் எதிரின - முலைகளும் உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழினுடன் மாறுபட்டன, இவள் பெண் துணை சான்றனள் - இவள் பெண் எனும் இயல்பினை அமைந்தனள், என - என்று, கண் துணை ஆகப் பல்மாண் நோக்கி - என் கண்களே துணையாகப் பலமுறை பார்த்து, நெருநையும் அயிர்த்தன்று மன்னே நெஞ்சம் - எனது நெஞ்சமானது நேற்றும் மிகவும் ஐயுற்றது, பெயர்த்தும் அறியாமையின் செறியேன் யானே - அதன்பின்னும் எனது அறியாமையால் யான் என் மகளை இற்செறியா தொழிந்தேன்; 7-14. பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன - பெரிய புகழினை யுடைய பாண்டியனது மதுரையை யொத்த, தன் அருங்கடி வியன்நகர் சிலம்பும் கழியாள் - தனது அரிய காவல்பொருந்திய பெரிய மனையில் சிலம்புகழி நோன்பும் செய்யப் பெறாளாய், சேண் உறச் சென்று - நெடுந்தூரம் சென்று, வறு சுனைக்கு ஒல்கி - நீரற்ற சுனைக்கண் நீர்பெறாது தளர்ந்து, புறவு குயின்று உண்ட - புறா துளைத்து உண்டமையின், புல்காய் நெல்லி - புல்லிய காய் களையுடைய நெல்லியின்கண், கோடை உதிர்த்த குவி கண் பசுகாய் - மேல் காற்று உதிர்த்திட்ட குவிந்த கண்ணினை யுடைய பசிய காய்கள், அறுநூல் பளிங்கின் துளை காசு கடுப்ப - நூல் அற்று உதிர்ந்த துளையினையுடைய பளிங்குக் காசுகளை யொப்ப, வறு நிலத்து உதிரும் அத்தம் - வறிய நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் காட்டு நெறியில், கூர்வேல் விடலை பொய்ப்ப கதுமெனப் போகி - கூரிய வேலினையுடைய தன் தலைவன் பொய்கூறி அழைத்துச் செல்ல விரைந்து சென்று, 15-18. புதல்போல் குரம்பை முன்றில் - புதர்போலும் குடிசையின் முன்றிலில், தேக்கின் அகல் இலை குவித்த - தேக்க மரத்தின் அகன்ற இலையில் குவிக்கப்பெற்ற, ஊன் புழுக்கு அயரும்- புழுக்கிய ஊனினை உண்ணும், கான்கெழு வாழ்நர் - காட்டில் பொருந்திய வாழ்க்கையினை யுடையாரது, சிறு குடியான் - சீறூரின்கண், தான் சேக்குவள் கொல் - அவள் தங்கியிருப்பளோ. (முடிபு) பெண்துணை சான்றனள் இவள் என நோக்கி நெருநையும் நெஞ்சம் அயிர்த்தன்று; பெயர்த்தும் அறியாமையின் யான் செறியேன்; தான், தன் வியன் நகர் சிலம்பும் கழியாள், அத்தம் விடலை பொய்ப்பப் போகி, சிறுகுடியான் சேக்குவள் கொல். (வி-ரை) குழி மென்முகம் - படாம் அணிந்த மெல்லிய முகம் என்றுமாம். பெண்துணை சான்றனள் - `பெண்மை யடுத்த மகனென் கிளவி'1 என்பதனால் புறத்துப் போய் விளையாடும் சிறுமி பெண்மகன் எனப்படுதலுண்டாகலின், அங்ஙனம் அல்லாத பருவ முற்றனள் என்பது போதரப் பெண்துணை சான்றனள் என்றாள். பன் மாண், கண்துணையாக நோக்கி நெருநையும் அயிர்த்தன்று மன்னே நெஞ்சம் என்றது, அங்ஙனமாகவும் இற்செறியாமையாகிய தவறு செய்துவிட்டேனே எனக் கழிவிரக்கம் தோன்றக் கூறியபடியாம். தன் வியனகர் சிலம்பும் கழியாள் என்றது, தன் மனையின்கண் சிலம்பு கழித்தலாகிய நோன்பும் செய்யப் பெறாளாய் என்றபடி. சிலம்பு கழித்தல், கல்யாணத்திற்கு முன்பு செய்யப்படுவதொரு நோன்பு என்பது, `நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும், எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச், சொல்லின் எவனோ'1 என்பதனானும் `உடன் கொண்டுபோன தலைமகன் மீண்டு தலைவியைத் தன் இல்லத்துக் கொண்டு புக்குழி, அவன் தாய் அவட்குச் சிலம்புகழி நோன்பு செய்கின்றாள் எனக் கேட்ட நற்றாய் ஆண்டு நின்றும் வந்தார்க்குச் சொல்லியது' என்னும் அதன் பழைய உரைக் கருத்தாலும் அறியப்படும். மற்றும் `சிறுவன் கண்ணி சிலம்புகழீஇ, அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே'2 `சிலம்பு கழீஇய செல்வம், பிறருணக் கழிந்தவென் னாயிழை யடியே'3 என்பனவும் அதனைக் குறித்தல் காண்க. சுனைக்கு, வேற்றுமை மயக்கம். 316. மருதம் (தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது.) துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்துத் தூங்குசேற் றள்ளல் துஞ்சிப் பொழுதுபடப் 5. பைந்நிண வராஅல் குறையப் 4பெயர்தந்து 5குரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப் 6போர்ச்செறி மள்ளரிற் புகுதரு மூரன் தேர்தர வந்த தெரியிழை 7 நெகிழ்தோள் ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தரப் 10. பரத்தைமை தாங்கலோ விலனென வறிதுநீ புலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை அதுபுலந் துறைதல் வல்லி யோரே செய்யோள் நீங்கச் சில்பதங் கொழித்துத் தாமட் டுண்டு தமிய ராகித் 15. தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப வைகுந ராகுதல் அறிந்தும் அறியா ரம்மவஃ துடலு மோரே. - ஓரம்போகியார். (சொ-ள்) 1-7. துறை மீன் வழங்கும் பெருநீர் பொய்கை - துறையின்கண் மீன்கள் இயங்கும் பெரிய நீர் நிறைந்த பொய்கைக் கண், அரிமலர் ஆம்பல் மேய்ந்த - விளங்கும் ஆம்பல் மலரை மேய்ந்த, நெறி மருப்பு ஈர் தண் சுவல்படு முது எருமைப் போத்து - நெறித்த கோட்டினையும் மிக்க குளிர்ச்சியுற்ற முதுகினையுமுடைய முதிய எருமைக்கடா, தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி - மிக்க சேற்றின் குழம்பிலே கிடந்து இரவெல்லாம் துயின்று, பொழுது பட - ஞாயிறு தோன்றிய காலையில், பை நிண வரால் குறையப் பெயர் தந்து - பசிய நிணத்தினையுடைய வரால் மீன்கள் மிதிபட்டு அழிய வெளிப்பட்டு, குரூஉ கொடி பகன்றை சூடி - வெள்ளிய பூக்களையுடைய பகன்றைக் கொடியினைச் சூடிக்கொண்டு, முது ஊர் - பழமையான ஊரின் கண், போர்ச்செறி மள்ளரில் புகுதரும் ஊரன் - போரில் வென்றி எய்திய வீரர் வருமாறு புகும் ஊரினையுடைய நம் தலைவன், 8-11. தேர்தர வந்த - தனது தேரிற் கொணர்தலால் வந்த, தெரி இழை நெகிழ்தோள் - விளங்கும் அணி நெகிழ்ந்த தோள்களை யுடைய, ஊர் கொள்கல்லா மகளிர் - ஊர் தாங்காத பரத்தையர், பரத்தமை தரத்தர - பரத்தமையை மேன்மேலும் தன்பால் எய்து விக்க, தாங்கலோ இலன் என - அதனைத் தாங்க லாற்றாதவனாக வுள்ளான் என்று, மனை கெழு மடந்தை - மனை வாழ்க்கை மேவிய கற்புடைய மடந்தையாகிய நீ, வறிது புலத்தல் ஒல்லுமோ - பயனின்றி அவன்பால் ஊடுதல் பொருந்துமோ? 12-17.அது புலந்து உறைதல் வல்லியோரே - தலைவன் பரத்தமையைப் புலந்து பிரிந்துறையும் வன்மையுடையோர், செய்யோள் நீங்க - தம்மிடத்து நின்றும் திருமகள் நீங்க, சில் பதம் கொழித்து - சிறிய அரிசியைப் புடைத்து, தாம் அட்டு உண்டு தமியர் ஆகி - தாமே சமைத்துண்டு தனித்தோர் ஆகி, தேம் மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப - தேன்போலும் இனிய மொழியினையுடைய மக்கள் பால் இன்றிச் சுருங்கிய முலையினைச் சுவைத்துப் பார்க்க, வைகுநர் ஆகுதல் அறிந்தும் - எளிமையுடன் தங்குவார் ஆதலை அறிந்துவைத்தும், அஃது உடலுமோர் - தலைவன் பரத்தமை குறித்து மாறுபாடுறுவோர், அறியார் - அறிவிலா ராவர். (முடிபு) ஊரன் தேர்தர வந்த மகளிர் தரத்தரப் பரத்தமை தாங்கலோ இலன் என, மனை கெழு மடந்தை நீ புலத்தல் ஒல்லுமோ? அது புலந்துறைதல் வல்லியோர், செய்யோள் நீங்கச் சில்பதம் அட்டு உண்டு தமியராகி, புதல்வர் திரங்கு முலை சுவைப்ப, வைகுநர் ஆதல் அறிந்தும், அது உடலுமோர் அறியார். (வி-ரை) பொழுது படுதல் - ஞாயிறு தோன்றுதல். குறைய - அஞ்சி இரிய என்றுமாம். போர்ச் செறி மள்ளர் - போருக்குச் சென்று வெற்றிபெற்ற வீரர். பகன்றைக் கொடியை அறுத்துக் கொம்பிலே ஏறட்டுக் கொண்டமை, அதனைச் சூடினமை போன்றிருத்தலால், பகன்றை சூடி எனப்பட்டது. கண்ணி சூடுதலானும் ஊருக்குப் பெருமிதத்துடன் சேறலானும் மள்ளர் உவமையாயிற்று. எருமை முதுபோத்து புகுதரும் ஊரன் என இயையும். புகுதரும் என்னும் பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது. தலைவன் பரத்தையரைத் தேரேற்றி வருபவனாதலின், தேர்தர வந்தான் என்றாள். தெரியிழை நெகிழ்தோள் என்றது, புணர்ச்சிக்கு முன் நிகழ்வதோர் மெய்ப்பாடு; இதனை, `கூழை விரித்தல்'1 என்னுஞ் சூத்திரத்து, `ஊழணி தைவரல்' என்பதனாலும், அதற்குக் காட்டிய `நிழலணி மணிப்பூண் நெஞ்சொடு கழல' என்ற மேற்கோளானும் அறிக. ஊர்கொள் கல்லா என்றது, ஊர் இடமில்லை யாம்படி நிறைந்த என்றபடி; அன்றி, ஊரை யெல்லாம் இடமாகக்கொண்ட கல்வியில்லாத மகளிர் என்றுமாம். தேர்தர வந்த மகளிர் மேன்மேலும் தருதலால் பரத்தமை தாங்கலாற்றானாயினன் என, மனைகெழு மடந்தையாகிய நீ புலத்தல் கூடுமோ எனவும், புலந்துறைதல் வல்லியோர். புதல்வர் திரங்கு முலை சுவைப்ப வறியராய் வைகுநராதல் அறிந்தும், அஃது உடலுமோர் அறியா தாராகுவர் எனவும் தோழி தலைவியைச் சினந்து கூறினாள் என்க. (உ-றை) பொய்கை ஆம்பல் மேய்ந்த எருமைப் போத்து அள்ளல் துஞ்சிப் பொழுதுபட வரால் குறையப் பகன்றை சூடி மூதூர் மள்ளரிற் புகுதரும் ஊரன் என்றது, தலைவன் பரத்தையர் சேரிக்கண்ணே அப்பரத்தையரை நுகர்ந்து இரவெல்லாம் அவ் விழிந்த இன்பத்திலே மயங்கிக் கிடந்து, காலையில், தன் பெருமை குறையவும் அலர் மிகவும் நாணின்றிப் போந்தான் என்றபடி. (மே-ள்) `பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின்'2 என்னுஞ் சூத்திரத்து, `உணர்ப்புவயின் வாரா ஊடலுற் றோள்வயின், உணர்த்தல் வேண்டிய கிழவோன் பானின்று, தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும்' என்னும் பகுதிக்கண், இச் செய்யுளைக் காட்டி, இது, தோழி தலைவியை வெகுண்டு ஆக்கியவாறு காண்க என்றும், `வருத்த மிகுதி சுட்டுங்காலை'3 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளுள், `அது புலந் துறைதல் வல்லியோரே' எனப் புலவியால் நின் இல்வாழ்க்கை குறைபடுமெனத் தோழி கூறியவாறு காண்க என்றும் கூறினர் நச். 317. பாலை (தலைமகன் வரவுணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது.) மாக விசும்பின் மழைதொழில் உலந்தெனப் பாஅய் அன்ன பகலிருள் பரப்பிப் புகைநிற உருவின் அற்சிரம் நீங்கக் குவிமுகை முருக்கின் கூர்நுனை வையெயிற்று 5. நகைமுக மகளிர் ஊட்டுகிர் கடுக்கும் முதிராப் பல்லிதழ் உதிரப் பாய்ந்துடன் மலருண் வேட்கையின் சிதர்சிதர்ந் துகுப்பப் பொன்செய் கன்னம் பொலிய வெள்ளி நுண்கோல் அறைகுறைந் துதிர்வன போல 10. அரவ வண்டினம் ஊதுதொறுங் குரவத்து ஓங்குசினை நறுவீ கோங்கலர் உறைப்பத் துவைத்தெழு தும்பித் தவிரிசை விளரி உதைத்துவிடு நரம்பின் இம்மென இமிரும் 1மானே முற்ற காமர் வேனில் 15. வெயிலவிர் புரையும் வீததை மராஅத்துக் குயிலிடு பூசல் எம்மொடு கேட்ப வருவே மென்ற பருவம் ஆண்டை இல்லை கொல்லென மெல்ல நோக்கி நினைந்தன மிருந்தன மாகநயந் தாங்கு 20. உள்ளிய மருங்கின் உள்ளம் போல வந்துநின் றனரே காதலர் 2நந்துறந்து என்னுழி யதுகொல் தானே பன்னாள் அன்னையும் அறிவுற அணங்கி நன்னுதற் பாஅய பசலை நோயே. - வடமோதங்கிழார். (சொ-ள்) 1-14. மாக விசும்பின் மழை தொழில் உலந்தென - வானின் கண்ணே மழை பெய்து முடிந்ததாக, பாஅய் அன்ன இருள் பகல் பரப்பி - பரப்பி வைத்தாற்போன்ற இருளினைப் பகலினும் விரித்து, புகைநிற உருவின் அற்சிரம் நீங்க - புகையின் நிறம் போலும் உருவினையுடைய பனிக்காலம் நீங்க, வை எயிற்று நகைமுக மகளிர்- கூரிய பற்களையும் ஒள்ளிய முகத்தினையுமுடைய பெண்டிரது, ஊட்டு உகிர் கடுக்கும் - பஞ்சி ஊட்டிய நகத்தினை யொக்கும், குவிமுகை முருக்கின் - குவிந்த அரும்புகளையுடைய முருக்க மரத்தினது, கூர்நுனை முதிராப் பல் இதழ் - கூரிய முனையினை யுடைய முற்றாத பல பூ விதழ்கள், உதிர - உதிருமாறு, மலர் உண் வேட்கையின் சிதர் உடன் பாய்ந்து சிதர்ந்து உகுப்ப - மலர்த் தேனை உண்ணும் விருப்பினால் வண்டுகள் ஒருங்குகூடிப் பாய்ந்து கிண்டி உதிர்த்திடவும், பொன் செய் கன்னம் பொலிய - பொன்னானியன்ற கன்னத்தட்டு பொலிந்திட, வெள்ளி நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல - வெள்ளியின் மெல்லிய கம்பி அறுத்தலால் குறைந்து உதிர்வனவற்றைப்போல, அரவ வண்டு இனம் ஊது தொறும் - ஒலியினையுடைய வண்டின் கூட்டம் ஊதுந்தோறும், கோங்கு அலர் - கோங்கின் பூவகத்தே, குரவத்து ஓங்கு சினை நறுவீ - குரவமரத்தின் உயர்ந்த சினையிலுள்ள நறிய மலர்கள், உறைப்ப - குறைந்து உதிரவும், துவைத்து எழு தும்பித் தவிர் இசை - ஒலித்து எழுகின்ற வண்டின் விட்டிசைக்கும் ஒலி, உதைத்துவிடு - தெறித்து விடும், விளரி நரம்பின் - விளரி நரம்பின் ஒலிபோல, இம் என இமிரும் - இம்மென ஒலிக்கும், மான் ஏமுற்ற காமர் வேனில் - மானினங்கள் இன்பமுற்ற அழகிய வேனிலில், 15-19. வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்து - வெயிலின் விளக்கத்தை யொக்கும் மலர்கள் செறிந்த மராமரத்திலிருந்து, குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப - குயில் செய்யும் ஆரவாரத்தினை நம்முடனிருந்து கேட்க, வருவேம் என்ற பருவம் - யாம் வருதும் என்று நம் தலைவர் குறித்த இவ்விளவேனிற் பருவம், ஆண்டை இல்லை கொல் என - அவரிருக்குமிடத்தில் இல்லையோ என, மெல்ல நோக்கி நினைந்தனம் இருந்தன மாக - மெல்லென ஆராய்ந்து சிந்தித்து இருந்தேமாக; 19-21. நயந்து உள்ளிய மருங்கின் உள்ளம்போல - (திண்மை யுடையோர்) ஒன்றை விரும்பி நினைத்தவிடத்து உள்ளத்தில் நினைந்தவை வந்து சேர்வதுபோல, காதலர் வந்து நின்றனர் - நம் காதலர் வந்து நின்றார்; 21-24. பல்நாள் அன்னையும் அறிவுற அணங்கி - பலநாளாக நம் அன்னையும் அறிந்திட நம்மை வருத்தி, நல் நுதல் பாய பசலை நோய் - நம் நல்ல நெற்றியில் பரவிய பசலை நோய், நம் துறந்து - நம்மைப் பிரிந்து, என் உழியதுகொல் - எவ்விடத்துச் சென்றதோ. (முடிபு) காமர் வேனில் மராஅத்துக் குயிலிடு பூசல் எம்மொடு கேட்ப, (தலைவர் தாம்) வருவேம் என்ற பருவம் ஆண்டை இல்லைகொல் லென மெல்ல நோக்கி நினைந்தனம் இருந்தனமாக, காதலர் வந்து நின்றனர்; நன்னுதற் பாய பசலை நோய் நம் துறந்து என்னுழியதுகொல். (வி-ரை) மாக விசும்பு - மாகமாகிய விசும்பு என இருபெய ரொட்டு. மழை தொழில் உலந்தென என்றது கூதிர்க்காலத்தின் கழிவையும், அற்சிரம் நீங்க என்றது பனிக்காலத்தின் கழிவையும், மான் ஏமுற்ற காமர்வேனில் என்றது, இளவேனிற் பருவத்தின் வருகையையும் குறிப்பன என்க. முருக்கின் கூர்நுனை இதழெனவும் உகிர் கடுக்கும் இதழ் எனவும் கூட்டுக. சிதர் - வண்டு. சிதர்ந்து - கிண்டி. சிதர் உகுத்தலால் இதழ் உதிர என்றுரைத்தலுமாம். கன்னம் - பொற்கொல்லரது சிறிய தராசுத்தட்டு. கோங்கலர்க்குக் கன்னமும், குராவின் மலர் அற்று உதிர்வதற்கு வெள்ளிக் கம்பி அற்று உதிர்வனவும் உவமையாம். உகுப்ப, உறைப்ப, இமிரும் வேனில் என இயையும். பருவம் ஆண்டை இல்லை கொல் என என்றது, இருப்பின் நம்மை நோக்கி வராதிரார் என்னும் கருத்தாலாம் என்க. நோக்கி நினைந்தனம் இருந்தனமாக என்பதற்குத் தலைவன் உருவை அகத்தே நோக்கி அவரது வருகையை நினைந்து இருந்தேமாக என்றுரைத் தலுமாம். நயந்தாங்கு - ஆங்கு அசை. உள்ளம்போல - உள்ளத்து உள்ளிய பொருள் வருதல்போல. பசலை ஒழியும் என்னும் துணிவால், என்னுழியதுகொல் என்றாள். 318. குறிஞ்சி (இரவுக்குறி வந்த தலைமகனை வரவு விலக்கி வரைவுகடாயது.) கான மானதர் யானையும் வழங்கும் வான மீமிசை உருமுநனி உரறும் அரவும் புலியும் அஞ்சுதக வுடைய 1இரவுச் சிறுநெறி தமியை வருதி 5. வரையிழி யருவிப் பாட்டொடு பிரசம் 2முழவுச்சேர் நரம்பின் இம்மென இமிரும் பழவிறல் நனந்தலைப் பயமலை நாட மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ இன்றுதலை யாக வாரல் வரினே 10. 3ஏமுறு துயரம் யாமிவண் ஒழிய எற்கண்டு பெயருங் காலை யாழநின் கற்கெழு சிறுகுடி எய்திய பின்றை ஊதல் வேண்டுமாற் சிறிதே வேட்டொடு வேய்பயி லழுவத்துப் பிரிந்தநின் 15. நாய்பயிர் குறிநிலை கொண்ட கோடே. - கபிலர். (சொ-ள்) 5-7. வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம் - மலையினின்றும் வீழும் அருவியொலியுடன் வண்டின்ஒலி கூடி, முழவுச்சேர் நரம்பின் இம் என இமிரும் - தண்ணுமை யொலியுடன் கூடிய யாழ் நரம்பின் ஒலிபோல இம்மென்று ஒலிக்கும், பழ விறல் நனந்தலை பயம் மலை நாட - பழைமையான வெற்றியினையும் அகன்ற இடத்தினையும் உடைய பயன்பொருந்திய மலையை யுடைய நாட்டிற்குத் தலைவனே! 1-4. கானம் மான் அதர் யானையும் வழங்கும் - காட்டிலுள்ள விலங்குகள் செல்லும் நெறியில் யானைகளும் இயங்கும், வானம்மீ மிசை உருமும் நனி உரறும் - வானத்தில் மிக உயர்ந்த இடத்தே இடியும் மிகவும் முழங்கும், அரவும் புலியும் அஞ்ச தகவு உடைய - மேலும் அந் நெறிகள் பாம்பினையும் புலியினையும் யாவரும் அஞ்சுமாறு உடையன, சிறுநெறி - இத்தகைய ஒடுங்கிய நெறியில், இரவு - இரவிலே, தமியை வருதி - நீ துணையின்றி வருகின்றனை; 8. மன்றல் வேண்டினும் பெறுகுவை - நீ வரைந்து கோடலை விரும்பினும் பெறுவாய், (ஆகவே) 8-15. ஒன்று -, இன்று தலையாக வாரல் - இன்று முதலாக அங்ஙனம் வாராதே (அன்றி), வரினே - நீ வருதியேல், ஏம் உறு துயரம் யாம் இவண் ஒழிய - யாங்கள் இவ்விடத்தில் மயக்கமுறும் துயரத்தின் நீங்குமாறு, என் கண்டு பெயரும் காலை- என்னைக் கண்டு நீங்கும் காலத்து, நின் கல் கெழு சிறு குடி எய்திய பின்றை - நினது மலைகள் பொருந்திய சீறூரை அடைந்த பின்னர், வேய் பயில் அழுவத்து பிரிந்த நின் வேட்டொடு நாய் - வேட்டமாடுங்கால் மூங்கில் மிக்க காட்டில் பிரிந்த நின் வேட்டுவர்களொடு நாய்களை, பயிர் குறி நிலை கொண்ட கோடு - அழைக்கும் குறிப்பினைக் கொண்டுள்ள ஊது கொம்பினை, சிறிது ஊதல் வேண்டும் - சிறிது ஊதுதல் வேண்டும். (முடிபு) பயமலை நாட! யானையும் வழங்கும்; உருமும் உரறும்; புலியும் அஞ்சுதகவுடைய; சிறு நெறி இரவில் தமியை வருதி; மன்றல் வேண்டினும் பெறுகுவை; இன்று தலையாக வாரல்; வரினே, ஏமுறு துயரம் யாம் இவண் ஒழிய, எற் கண்டு பெயருங்காலை நின் சிறுகுடி எய்திய பின்றை அழுவத்துப் பிரிந்த வேட்டொடு நாய் பயிர் கோடு சிறிது ஊதல் வேண்டும். (வி-ரை) யானை முதலியன இரவில் வழங்கும் சிறுநெறி எனவும், நீ இரவில் தமியை வருதி எனவும் இரவினை ஈரிடத்தும் கூட்டிப் பொருள் கொள்க. அருவிப்பாடு : பாடு - ஓசை. பிரசம் - வண்டின் இசை. அருவியோசையோடு கூடிய வண்டின் இசை முழவொலியோடு கூடிய நரம்பின் ஒலிபோல ஒலிக்கும் என்க; அருவிக்கு முழவும் பிரசத்திற்கு நரம்பும் உவமம். நீ இரவில் வரும் நெறி ஏதம் மிக்கதாகலானும், நீ மன்றலை விரும்பின் எமர் வரை வெதிர்கொள்வர் ஆகலானும், இன்று முதலாக இரவுக்குறிக்கண் வாரற்க என்றாள். பின்னும் அவன் வரின் தாம் எய்தும் கலக்கத்தை அறிவுறுப்பாளாய், ஏமுறு துயரம் யாமிவண் ஒழிய நின் கோட்டினைச் சிறு குடி எய்திய பின்றை ஊதல் வேண்டும் என்றாள் என்க. ஒன்று : உறழ்ச்சிப் பொருளில் வந்துளது; அது, வாரற்க, ஊதல் வேண்டும் என்பவற்றோடு தனித்தனி சென்றியையும். (மே-ள்) `நாற்றமும் தோற்றமும்'1 என்னுஞ் சூத்திரத்து, ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும் என்னும் பகுதிக்கண், கலக்கம் எனப் பொதுப் படக்கூறிய அதனால், ஆற்றிடை ஏதமின்றிச் சென்றமை தோன்ற ஆண்டு ஓர் குறி செய் எனக் கூறுவனவுங் கொள்க என்றுரைத்து, இச்செய்யுளைக் காட்டி, இதனுள், `வரினே ஏமுறு துயரம் நாமிவண் ஒழிய நின் நாய் பயிர் குறிநிலை கொண்ட கோட்டை ஊதல் வேண்டுமாற் சிறிது' என்றவாறு காண்க என்றார் நச். 319. பாலை (செலவுணர்த்திய தலைமகற்குத் தோழி செலவழுங்கச் சொல்லியது.) மணிவாய்க் காக்கை 2மாநிறப் பெருங்கிளை பிணிவீழ் ஆலத் தலங்குசினை யேறிக் கொடுவில் எயினர் குறும்பிற் கூக்குங் கடுவினை மறவர் வில்லிடத் தொலைந்தோர் 5. படுபிணங் கவரும் பாழ்படு நனந்தலை அணங்கென உருத்த நோக்கின் ஐயென நுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமைப் பொன்வீ வேங்கைப் புதுமலர் 3புரைய நன்னிறத் தெழுந்த சுணங்கணி வனமுலைச் 10. சுரும்பார் கூந்தற் பெருந்தோள் இவள்வயிற் பிரிந்தனிர் அகறல் சூழின் அரும்பொருள் எய்துக மாதோ நுமக்கே கொய்குழைத் 4தளிரேர் அன்ன தாங்கரும் மதுகையள் மெல்லியள் இளையள் நனிபேர் அன்பினள் 15. செல்வேம் என்னும் நும்மெதிர் 5ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே. - எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார். (சொ-ள்) 1-5. மணி வாய் காக்கை - கருமணி போன்ற வாயினை யுடைய காக்கையின், மா நிற பெரு கிளை - கரிய நிறத்தினையுடைய பெரிய சுற்றம், பிணிவீழ் - பிணிப்புற்ற விழுதுகளையுடைய, ஆலத்து அலங்கு சினை ஏறி - ஆலமரத்தின் அசையும் கிளைகளில் ஏறியிருந்து, கொடு வில் எயினர் - வளைந்த வில்லையுடைய எயின ராகிய, குறும்பிற்கு ஊக்கும் - குறும்பினின்றும் ஊக்கி எழும், கடுவினை மறவர் - கொடுந் தொழிலையுடைய மறவர், வில்லிடத் தொலைந் தோர் - வில்லால் எய்தலால் இறந்துபட்டோருடைய, படுபிணம் கவரும் - விழுந்து கிடக்கும் பிணங்களைக் கவர்ந்து உண்ணும், பாழ்படு நனந்தலை - பாழ்பட்ட அகன்ற பாலையிடத்தே, 6-11. அணங்கு என உருத்த நோக்கின் - தெய்வம் என்னுமாறு வடிவுகொண்ட கண்களையும், ஐ என நுணங்கிய நுசுப்பின் - அழகிதாக மெலிந்த இடையினையும், நுண் கேழ் மாமை - நுண்ணிய மாமை நிறத்தினையும், பொன் வீ வேங்கைப் புதுமலர் புரைய - பொன் போலும் பூக்களையுடைய வேங்கையின் புதிய மலரை யொப்ப, சுணங்கு அணி - தேமலை யணிந்த, நல் நிறத்து எழுந்த வனமுலை - நல்ல மார்பின்கண் எழுந்த அழகிய முலையினையும், சுரும்பு ஆர் கூந்தல் - வண்டு மொய்க்கும் கூந்தலையும், பெருந்தோள் - பெரிய தோளினையுமுடைய, இவள் வயின் பிரிந்தனிர் அகறல் சூழின் - இவளிடத்தினின்றும் பிரிந்து அகன்று போதலை எண்ணுதிராயின், 11-16. நுமக்கு அரும் பொருள் எய்துக - உமக்கு அரிய பொருள் வந்துறுவதாக, கொய் குழைத் தளிர் ஏர் அன்ன - கொய்யப்பட்ட குழையாகிய அழகிய தளிரினை யொத்த, தாங்கரும் மதுகையள் - பிரிதற் றுன்பினைத் தாங்குதற்கரிய வலியினளும், மெல்லியள் இளையள் - மென்மைத் தன்மையினளும் இளையளும், நனிபேர் அன்பினள் - நும்பால் மிகப் பெரிய அன்பினளுமாகிய இவள், செல்வேம் என்னும் நும் எதிர் - யாம் பிரிந்து செல்வேம் எனும் நுமது எதிரில் நின்று, ஒழிவேம் என்னும் ஒண்மை - பிரிந்து ஆற்றியிருப்பேம் என்று கூறும் அறிவுடைமை, இலள் - இல்லாதவள் ஆவள்; (என் செய்வேன்). (முடிபு) பாழ்படு நனந்தலை, இவள்வயிற் பிரிந்தனிர் அகறல் சூழின் நுமக்கு அரும்பொருள் எய்துக; தாங்கரும் மதுகையள், மெல்லியள், இளையள், நனி பேரன்பினள் ஆகிய இவள், செல்வேம் என்னும் நும் எதிர், ஒழிவேம் என்னும் ஒண்மை இலள் (என் செய்வேன்.) (வி-ரை) கிளை - கூட்டம். காக்கை இனத்துடன் கூடி உண்ணும் இயல்பினதாகலின் காக்கைப் பெருங்கிளை கவரும் எனப்பட்டது. ஆலத்து - அத்து, சாரியை. எயினரது குறும்பினைக் கொள்ளுதற்கு ஊக்கி எழும் மறவர் என்றலுமாம். குறும்பு - சிற்றரண். அரும் பொருள் எய்துக என்றது, அதற்கு இடையூறு உண்டாதலும் கூடும் எனக் குறிப்பித்தவாறு. தாங்கரும் மதுகையள் என்பது, தாங்கும் மதுகையில்லாதவள் என்றபடி. இனி இவள் என்னும் பெயருடன் தாங்கரும் மதுகையள், இளையள், அன்பினள், ஒண்மையிலள் என்பனவற்றைத் தனித்தனி பயனிலையாக்கி முடித்தலுமாம். 320. நெய்தல் (பகற் குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி வரைவுகடாயது.) ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇத் திமிலோன் தந்த கடுங்கண் வயமீன் தழையணி யல்குற் செல்வத் தங்கையர் விழவயர் மறுகின் விலையெனப் பகருங் 5. கானலஞ் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப மலரேர் உண்கணெந் தோழி எவ்வம் அலர்வாய் நீங்கநீ அருளாய் பொய்ப்பினும் நெடுங்கழி துழைஇய குறுங்கால் அன்னம் அடும்பமர் எக்கர் அஞ்சிறை உளரும் 10. தடவுநிலைப் புன்னைத் தாதணி பெருந்துறை நடுங்கயிர் போழ்ந்த கொடிஞ்சி நெடுந்தேர் வண்டற் பாவை சிதைய வந்துநீ தோள்புதி துண்ட ஞான்றைச் சூளும் பொய்யோ கடலறி கரியே. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். (சொ-ள்) 1-5. ஓங்கு திரைப் பரப்பின் - உயர்ந்த அலைகளை யுடைய கடலில், வாங்கு விசை கொளீஇ - வலையினை விசைத்து இழுத்தலாற் பற்றி, திமிலோன் தந்த - மீன் பிடிக்கும் படகினன் ஆய தமையன் கொண்டுவந்த, கடு கண் வயமீன் - தறுகண்மையுடைய வலிய மீன்களை, தழை அணி அல்குல் செல்வத் தங்கையர் - தழை அணியினை அணிந்த அல்குலையுடைய செல்வமிக்க தங்கைமார், விழவு அயர் மறுகின் - விழாச் செய்யும் தெருக்களில், விலை என பகரும் - இன்ன விலையின என்று கூறி விற்கும், கானல் அம் சிறுகுடி- கடற்கரைச் சோலை சூழ்ந்த சீறூர்களையுடைய, பெருநீர்ச் சேர்ப்ப- கடற்கரையையுடைய தலைவனே! 6-7. மலர் ஏர் உண் கண் எம் தோழி எவ்வம் - மலரினை ஒத்த மையுண்ட கண்ணினையுடைய எமது தோழியின் துன்பமும், அலர்வாய் - ஊரார் வாயின் அலரும், நீங்க - நீங்கும்படி, நீ அருளாய் பொய்ப்பினும் - நீ அருள் செய்யாது பொய்த்தாலும், 8-14. நெடு கழி துழைஇய குறுகால் அன்னம் - நீண்ட உப்பங்கழியைத் துழவி மீன் பிடித்துண்ணும் குறிய காலினையுடைய அன்னம், அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் - அடும்பங்கொடி பொருந்திய மணல்மேட்டிலிருந்து தனது அழகிய சிறகினைக் கோதி உலர்த்தும், தடவு நிலை புன்னை தாது அணி பெருதுறை - வளைந்த நிலையினையுடைய புன்னை மரத்தின் பூம்பொடி அழகு செய்யும் பெரிய துறைக்கண், நடுங்கு அயிர் போழ்ந்த கொடிஞ்சி நெடுதேர் - நெகிழும் நுண்மணலைப் பிளந்துகொண்டு வந்த கொடிஞ்சியை யுடைய நீண்ட தேரினை, வண்டல் பாவை சிதைய வந்து - யாங்கள் புனைந்து விளையாடிய வண்டற்பாவை அழிந்திடச் செலுத்திவந்து, நீ தோள் புதிது உண்ட ஞான்றை - நீ இவள் தோளின் நலத்தினைப் புதுவதாக நுகர்ந்த நாளில், கடல் அறி கரி - கடலானது அறியும் சான்றாக, சூளும் பொய்யோ - நீ கூறிய சூளும் பொய்யோ. (முடிபு) சேர்ப்ப! எம் தோழி எவ்வம் அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும், நெடுந்தேர் வண்டற்பாவை சிதைய வந்து நீ இவள்தோள் புதிதுண்ட ஞான்றைக் கூறிய சூளும் பொய்யோ. (வி-ரை) வலையினை விசைத்து இழுத்தலால் என ஒரு சொல் வருவித்து உரைக்க. செல்வத் தங்கையர் என்றமையான், திமிலோன் தமையன் ஆயிற்று. விலை எனப்பகரும் - இதற்கு இது விலை எனக் கூறி விற்கும் என்று விரித்து உரைத்துக்கொள்க. எவ்வமும் அலரும் எனும் எண்ணும்மை தொக்கன. நீ அருளாய் பொய்ப்பினும் என்றது, நீ வரைந்து கொண்டு இவளைப் பிரியாதிருக்கின்றிலை என்ற படியாயிற்று. சூளாவது இயற்கைப் புணர்ச்சிக் காலத்து யான் நின்னை வரைந்துகொண்டு இல்லறம் நிகழ்த்துவேன் எனக் கடற் றெய்வம் சான்றாகக் கூறிய சொல். சூள் பிழைத்தல் தகுதியன்றாகலின் அது பிழையாது இவளை வரைந்துகொள் எனத் தோழி வரைவு கடாயினா ளாயிற்று. 321. பாலை (மகட் போக்கிய செவிலி சொல்லியது.) பசித்த யானைப் பழங்கண் அன்ன வறுஞ்சுனை முகந்த கோடைத் தெள்விளி விசித்துவாங்கு பறையின் விடரகத் தியம்பக் கதிர்க்கால் அம்பிணை உணீஇய புகலேறு 5. குதிர்க்கால் இருப்பை வெண்பூ உண்ணாது ஆண்குரல் விளிக்கும் சேண்பால் 1 வியன்சுரைப் படுமணி இனநிரை உணீஇய கோவலர் விடுநிலம் உடைத்த கலுழ்2கட் கூவல் கன்றுடை மடப்பிடி களிறொடு தடவரும் 10. புன்றலை மன்றத் தங்குடி சீறூர்த் துணையொடு துச்சில் இருக்குங் கொல்லோ கணையோர் அஞ்சாக் கடுங்கட் காளையொடு எல்லி முன்னுறச் செல்லுங் கொல்லோ எவ்வினை செயுங்கொல் நோகோ யானே 15. அரிபெய்து பொதிந்த தெரிசிலம்பு கழீஇ 3யாயறி வுறுதல் அஞ்சி வேயுயர் பிறங்கல் மலையிறந் தோளே. - கயமனார். (சொ-ள்) 15-17. அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ - பரலினையிட்டு மூடிய ஆராய்ந்து கொண்ட சிலம்பினை நீக்கி, யாய் அறிவுறுதல் அஞ்சி - தன் தாய் அறிதலை அஞ்சி, வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோள் - மூங்கில் உயர்ந்த பக்க மலையை யுடைய மலையைத் தன் தலைவனுடன் கடந்துசென்ற என் மகள், 1-6. பசித்த யானைப் பழங்கண் அன்ன - பசியுற்ற யானையின் பொலிவற்ற கண்போன்ற, வறு சுனை முகந்த கோடைத் தெள்விளி- நீரற்ற சுனையுட் புகுந்துவரும் மேல் காற்றின் தெளிந்த ஒலி, விசித்து வாங்கு பறையின் விடர் அகத்து இயம்ப - தோலினை இழுத்துக் கட்டிய பறையொலிபோல மலைப்பிளப்பில் ஒலிக்க, கதிர்கால் அம்பிணை உணீஇய - மெலிந்து நீண்ட காலினையுடைய அழகிய பெண்மான் உண்ணுதற்கு, புகல் ஏறு - அதன்பால் விருப்பம் மிக்க கலைமான், குதிர்கால் இருப்பை வெண் பூ உண்ணாது - குதிர் போன்ற அடிமரத்தினையுடைய இருப்பை மரத்தின் வெள்ளிய பூவினைத் தான் உண்ணாது, ஆண் குரல் விளிக்கும் - தனது ஆண்குரல் தோன்ற அதனை அழைக்கும், சேண்பால் - சேய்மைக் கண்ணுள்ள, 6-10. வியன் சுரை படுமணி இனம் நிரை உணீஇய - பெரிய மடியினையும் ஒலிக்கும் மணியினையுமுடைய கூட்டமாய ஆனிரை கள் பருக, கோவலர் - ஆயர், விடுநிலம் உடைத்த கலுழ்கண் கூவல் - தரிசு நிலத்தே கற்களை உடைத்து இயற்றிய பில்கும் ஊற்றுக் கண்ணினையுடைய கிணற்றினை, கன்று உடை மடப்பிடி களிறொடு தடவரும் - கன்றினையுடைய இளைய பிடி தன் களிற்றுடன் கூடித் தடவிப் பார்க்கும், புன்தலை மன்றத்து அம் குடி சீறூர் - பொலிவற்ற இடத்தினையுடைய மன்றினையும், அழகிய குடியிருப்பினையும் உடைய சீறூரின் கண்ணே, 11-14. எல்லி துணையொடு துச்சில் இருக்குங்கொல் -இரவில் தன் துணைவனுடன் ஓர் ஒதுக்கிடத்தே தங்கியிருப்பளோ (அன்றி அவ்விரவில்), கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு - அம்பினை எய்யும் ஆறலைப் போரை அஞ்சாத தறுகண்மையை யுடைய காளையாய தன் தலைவனுடன், முன் உறச் செல்லும்கொல் - அவன் முன்னே நடந்து செல்லுவாளோ? எ வினை செயும் கொல் - என்ன காரியத்தினைச் செய்வளோ? யான் நோகு - யான் நோவேனா கின்றேன். (முடிபு) யாய் அறிவுறுதலஞ்சி சிலம்பு கழீஇ மலையிறந் தோள், சேண்பால் சீறூர் எல்லி துணையொடு துச்சில் இருக்குங்கொல், காளையொடு முன்னுறச் செல்லுங்கொல், எவ்வினை செயுங்கொல்? யான் நோகு. (வி-ரை) பசியால் வாடிய யானையின் கண் குழிந்து பசையின்றி யிருத்தலின் அதனை வறுஞ்சுனைக்கு உவமை கூறினார். விசித்து வாங்கு பறை - கடிப்பினை இழுத்து ஒலிப்பிக்கும் இழுகு பறை என்றுமாம். இருப்பையின் பூ, பிணையும் தானும் உண்பதற்குப் போதிய தன்றாகலின், பிணையை மாத்திரம் உண்பிக்க வேண்டிய கலைமான், தான் அதனை உண்ணாமலே பிணையை விளிக்கும் என்றார். ஆண்குரல் விளிக்கும் என்றது, பிணை ஏதமின்றெனத் துணிந்து வருதற்குத் தனது ஆண்மைத் தன்மையுடைய குரலால் விளிக்கும் என்றபடி. சேண்பாலுள்ள சீறூர் எனக் கூட்டுக. வியன் சுவல் என்பது பாடமாயின் பெரிய கழுத்தின் கண் (பொருந்திய மணி) என்றுரைக்க. விடுநிலம் - பயிர் செய்யாது விடப்பட்ட நிலம். கன்றுடை மடப்பிடி களிறொடு தடவரும் என்றதனால், அவற்றுள் ஒன்றேனும் உண்பதற்கு நீரில்லாமை பெற்றாம். துச்சில் - பிறர் மனையில் உள்ள ஒதுக்கிடம். இத்தகைய காட்டின்கண் ணுள்ள சீறூரில் இராப்பொழுது துணைவ னொடு துச்சில் இருத்தல், அன்றி அவனுடன் நடந்து செல்லுதல் ஆய இரண்டும் துன்பம் விளைப்பனவே என்பாள் எவ்வினை செயுங் கொல் நோகோ யானே என்றாள். 322. குறிஞ்சி (அல்லகுறிப்பட்டுப் போகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) வயங்குவெயில் ஞெமியப் பாஅய் மின் னுவசிபு மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல் ஆராக் காமம் அடூஉநின் றலைப்ப இறுவரை வீழ்நரின் நடுங்கித் தெறுவரப் 5. பாம்பெறி கோலிற் றமியை வைகித் தேம்புதி கொல்லோ நெஞ்சே உருமிசைக் களிறுகண் கூடிய வாண்மயங்கு ஞாட்பின் ஒளிறுவேற் றானைக் கடுந்தேர்த் திதியன் வருபுனல் இழிதரு மரம்பயில் இறும்பிற் 10. பிறையுறழ் மருப்பிற் கடுங்கட் 1 பன்றிக் குறையார் கொடுவரி குழுமுஞ் சாரல் அறையுறு தீந்தேன் குறவர் அறுப்ப முயலுநர் முற்றா ஏற்றரு நெடுஞ்சிமைப் புகலரும் பொதியில் 2போலப் 15. பெறலருங் குரையணம் அணங்கி யோளே. - பரணர். (சொ-ள்) 6. நெஞ்சே! 15. நம் அணங்கியோள் - நம்மை இங்ஙனம் வருத்திய நம் காதலி, 6-15. உரும் இசை களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின் - இடிபோன்ற முழக்கினையுடைய ஆண் யானைகள் திரண்ட வாட்கள் பின்னிய போர்க்கண்ணே, ஒளிறு வேல் தானை கடும்தேர் திதியன் - விளங்கும் வேலினையுடைய சேனையினையும் கடிய தேரினையும் உடைய திதியன் என்பானது, வருபுனல் இழிதரு மரம் பயில் இறும்பில் - மலையினின்று வரும் அருவி விழும் மரங்கள் நெருங்கிய காட்டில், பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி - பிறைமதியினை யொத்த கோட்டினையும் அஞ்சாமையினையு முடைய பன்றியினது, குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல் - இறைச்சித் துண்டினைத் தின்ற புலிகள் கூடி முழங்கும் பக்க மலையினையும், அறை உறு தீம் தேன் அறுப்ப முயலுநர் குறவர் - உச்சிப்பாறையில் உள்ள இனிய தேனை அறுத்தெடுக்க முயலும் குறவர்களும், முற்றா - எய்தியறியாத, ஏற்று அரு நெடு சிமை - ஏறுதல் அரிய நீண்ட உச்சிமலையினையு முடைய, புகல் அரும் பொதியில் போல் - புகுதற் கரிய பொதியில் மலையினைப் போல, பெறல் அருங் குரையள் - பெறுதற்கு அருமை யாயவள் அன்றே! (அதனை உணராது), 1-6. வயங்கு வெயில் ஞெமிய பாஅய் - விளங்கும் வெயில் மறையவே (மேகம்) பரந்து, மின்னு வசிபு- மின்னல் பிளந்திட, மயங்கு துளி பொழிந்த - மிக்க மழையைச் சொரிந்த, பானாட் கங்குல் - நடு இரவில், ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப - அமையாத காமம் வருத்தா நின்று அலைத்திட, இறு வரை வீழ்நரின் - மலை முகட்டினின்று வீழ்ந்திறப்பார் போல, தெறு வர நடுங்கி - அச்சம் உண்டாக நடுங்கி, பாம்பு எறி கோலில் - கோலால் அடிக்கப்பட்ட பாம்பு போல், தமியை வைகி - வேறு துணையின்றி யிருந்து, தேம்புதி கொல்லோ - வாடுவையோ. (முடிபு) நெஞ்சே! எம் அணங்கியோள், பொதியில் போலப் பெறலருங் குரையள்; (அதனை உணராது) பானாட் கங்குல் ஆராக் காமம் அடூஉ நின் றலைப்ப, நடுங்கி, கோலெறி பாம்பின் தேம்புதி கொல்லோ. (வி-ரை) மேகம் பாஅய் என வருவித்துரைக்க. வசிபு - வசிய எனத் திரிக்க. காமம் அடூஉ நின்று அலைப்ப என்பதனை இரட்டுற மொழிதலாகக் கொண்டு, அலைத்தலால் வீழ்நர் போல எனவும் அலைத்தலால் நடுங்கி எனவும் கொள்க. இறு வரை - மலையின் இறுவாய். பாம்பெறி கோலின் என்பதனைக் கோல் எறி பாம்பின் என மாறுக. அடியுண்ட பாம்பு செயலற்றுக் கிடப்பது போல, நீயும் செயலற்றுக் கிடத்தியோ என்பான் பாம்பு எறி கோலில் தேம்புதி கொல்லோ என்றான். களிறு கண் கூடிய: கண், அசை. திதியனது பொதியில் எனவும், சாரலினையும் சிமையினையு முடைய பொதியில் எனவும் கூட்டுக. பன்றிக்குறை - பன்றியின் தசை. ஆர்தல் - உண்டல். பன்றி குறையாக் கொடுவரி என்பது பாடமாயின் பன்றியைக் கொன்று புலி (முழங்கும்) என்க. தீந்தேன் அறுப்ப முயலுநர் குறவர் முற்றா எனக் கொண்டு கூட்டுக. குறவரும் முற்றா எனச் சிறப்பும்மை தொக்கதாகக் கொள்க. 323. பாலை (பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.) இம்மென் பேரலர் இவ்வூர் நம்வயிற் செய்வோர் ஏச்சொல் வாடக் காதலர் வருவர் என்பது 1வாய்வ தாகல் ஐய செய்ய மதனில சிறியநின் 5. அடிநிலன் உறுதல் அஞ்சிப் பையத் தடவரல் ஒதுக்கந் தகைகொள இயலிக் காணிய வம்மோ கற்புமேம் படுவி பலவுப்பல தடைஇய வேய்பயி லடுக்கத்து யானைச் செல்லினம் கடுப்ப வானத்து 10. வயங்குகதிர் மழுங்கப் பாஅய்ப் பாம்பின் பைபட இடிக்குங் கடுங்குரல் ஏற்றொடு ஆலி யழிதுளி தலைஇக் கால்வீழ்த் தன்றுநின் கதுப்புறம் புயலே. - பறநாட்டுப் பெருங் கொற்றனார். (சொ-ள்) 7. கற்பு மேம்படுவி - கற்பினால் மேம்பட்ட தலைவியே, 8-13. பலவு பல தடைஇய - பலா மரங்கள் பல திரண்டுள்ள வேய்பயில் அடுக்கத்து - மூங்கில் நெருங்கிய பக்க மலையில், யானை செல்இனம் கடுப்ப - செல்லுகின்ற யானைக் கூட்டத்தினைப் போல, வானத்து - வானின்கண், வயங்கு கதிர் மழுங்க பாஅய் - விளங்கும் ஞாயிறு மழுங்குமாறு பரவி, பாம்பின் பை பட இடிக்கும் கடு குரல் ஏற்றொடு - பாம்பினது படம் அழிய இடிக்கும் கடிய குரலினையுடைய இடியேற்றுடன், ஆலி அழி துளி தலைஇ - நீர்க்கட்டியுடன் கூடிய மிக்க துளிகளைப் பெய்து, நின் கதுப்பு உறழ் புயல் - நின் கூந்தலை யொத்த மேகம், கால் வீழ்த்தன்று - கால் இறக்கியது; 1-3. இம் என் பேர் அலர் - இம்மென்று எழும் பெரிய அலரினை, இஊர் - இவ்வூரின்கண், நம்வயின் செய்வோர் - நம்பாற் செய்வோரது, ஏ சொல் வாட - செருக்குற்ற சொல் அழிய, காதலர் வருவர் என்பது - நம் காதலர் வந்து விடுவர் என்பது, வாய்வது ஆகல்- உண்மை யாதலை, 4-7. நின் - நினது, ஐய செய்ய மதன் இல சிறிய அடி - அழகிய சிவந்த வலியற்ற சிறிய அடிகள், நிலன் உறுதல் அஞ்சி - நிலத்திற் பொருந்துதலை அஞ்சி, பைய - மெல்லென, தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலி - உடல் வளைந்து நடக்கும் நடை அழகு பெற நடந்து, காணிய வம்மோ - காணுதற்க வருவாயாக. (முடிபு) கற்பு மேம்படுவி, புயல் கால் வீழ்த்தன்று; பேர் அலர் நம்வயிற் செய்வோர், ஏச்சொல் வாடக் காதலர் வருவரென்பது வாய்வதாகல், தகைகொள இயலி, காணிய வம்மோ. (வி-ரை) இம்மென் பேரலர் - இடைவிடாத பெரிய அலர் என்க. ஏச் சொல் - ஏக்கழுத்தமுடைய சொல், தருக்குடைய சொல். வாடுதல் - ஒழிதல். வாய்வதாகல் காணிய வம்மோ எனவும் தகை கொள இயலி வம்மோ எனவும் கூட்டுக. தடவரல் - வளைவு. ஒதுக்கம் - நடை. வானத்து வயங்கு கதிர் எனவும், வானத்துப் பாஅய் எனவும் வானம் என்பது ஈரிடத்தும் சென்று இயையும். புயல் கால் வீழ்த் தன்று ஆகலால், இனி, கார்காலத் தொடக்கத்தே காதலர் வருதல் உண்மை என வேனிலின் இறுதிக்கண் தோழி தலைவியை வற்புறுத் தினாள் என்க. 324. முல்லை (வினை முற்றிய தலைமகன் கருத்துணர்ந்து உழையர் சொல்லியது.) விருந்தும் பெறுகுநள் போலுந் திருந்திழைத் தடமென் பணைத்தோள் மடமொழி யரிவை தளிரியற் கிள்ளை இனிதின் எடுத்த 1வளராப் பிள்ளைத் தூவி யன்ன 5. 2வார்பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவிற் பறைக்கண் அன்ன நிறைச்சுனை தோறுந் துளிபடு மொக்குள் துள்ளுவன சாலத் தொளிபொரு பொகுட்டுத் தோன்றுவன மாய வளிசினை யுதிர்த்தலின் வெறிகொள்பு தாஅய்ச் 10. சிரற்சிற கேய்ப்ப அறற்கண் வரித்த வண்டுண் நறுவீ துமித்த நேமி தண்ணில மருங்கிற் போழ்ந்த வழியுள் நிரைசெல் பாம்பின் விரைபுநீர் முடுகச் செல்லும் நெடுந்தகை தேரே 15. முல்லை மாலை நகர்புகல் ஆய்ந்தே. - ஒக்கூர் மாசாத்தியார். (சொ-ள்) 3-15. தளிர் இயல் கிள்ளை - தளிரின் இயல் வாய்ந்த கிளி, இனிதின் எடுத்த - இனிது வளர்த்த, வளராப் பிள்ளை தூவி அன்ன - இளைய பார்ப்பின் சிறகினை யொத்த, வார் பெயல் வளர்த்த பை பயிர் புறவில் - பெய்யும் மழை வளர்த்த பசிய பயிரினையுடைய காட்டில், பறை கண் அன்ன நிறைச் சுனை தோறும், பறையின் கண் போன்ற நிறைதலையுடைய சுனைகள் தோறும் துளிபடு மொக்குள் துள்ளுவன சால - மழை பெய்தலால் உண்டாகிய குமிழிகள் குதிப்பனவற்றை யொப்ப, தொளி பொரு பொகுட்டு தோன்றுவன மாய - சேற்றின் கண்ணே பொருதலால் எழும் குமிழிகள் தோன்றி மறைய, வளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய் - சினையினின்றும் காற்று உதிர்த்தலால் மணம் கொண்டு பரந்து, சிரல் சிறகு ஏய்ப்ப அறல் கண் வரித்த - சிச்சிலிப் பறவையின் சிறகினை யொப்ப அறலினிடத்துக் கோலம் செய்த, வண்டு உண் நறுவீ துமித்த நேமி - வண்டுகள் தேன் உண்ணும் நறிய பூக்களை அறுத்து ஏகிய தேருருள், தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள் - குளிர்ந்த நிலத்திடத்தே பிளந்து சென்ற சுவட்டில், நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக - ஒன்றன் பின் ஒன்றாக வரிசை யுற்றுச் செல்லும் பாம்பு போல விரைந்து நீர் முடுகிச் செல்ல, முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்து - முல்லை மலரும் மாலைக் காலத்தே நகரின்கண் புகுதலை ஆய்ந்துணர்ந்து, நெடுந்தகை தேர் செல்லும் - பெருந்தகையாய தலைவன் தேர் செல்லாநிற்கும்; 1-2. திருந்து இழை தட மெல் பணை தோள் மட மொழி அரிவை - திருந்திய அணியினையும் பெரிய மென்மை வாய்ந்த மூங்கில் போலும் தோளினையும் மடப்பம் வாய்ந்த மொழியினையு முடைய தலைவி, விருந்தும் பெறுகுநள் போலும் - இன்று விருந்தயர்தலும் பெறுவாள் போலும். (முடிபு) நெடுந்தகை தேர், புறவில், தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய, நேமி போழ்ந்த வழியுள் நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக, மாலை, நகர் புகல் ஆய்ந்து செல்லும்; அரிவை விருந்தும் பெறுகுநள் போலும். (வி-ரை) அரிவை விருந்தும் பெறுகுநள் போலும் என்க. விருந்தும், உம்மை சிறப்பு. வளர் இளம் பிள்ளை என்னும் பாடத்திற்கு வளர்தற்குரிய இளம் பிள்ளை என்க. சால - ஒப்ப என்னும் பொருட்டு. தொளி - சேறு. பொகுட்டு - கலங்கல் நீரில் எழும் குமிழி. தலைவன் தேர் ஏறிச் செல்வன் என்றதனை, தலைவனது தேர் செல்லும் என்றார். செல்லும் ஆகலின் விருந்தும் பெறுகுநள் போலும் என இயைத்துரைக்க. (மே-ள்) `ஆற்றது பண்பும்'1 என்னுஞ் சூத்திரத்து, தலைவன் மீளுங் கால் விருந்து பெறுகுவள் கொல்லென இளையோர் தலைவி நிலையுரைத்தலுக்கு இச்செய்யுளைக் காட்டினர் நச். 325. பாலை (2கொண்டு நீங்கக் கருதி யொழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) அம்ம வாழி தோழி காதலர் வெண்மணல் நிவந்த பொலங்கடை நெடுநகர் நளியிருங் கங்குற் புணர்குறி வாய்த்த களவுங் கைம்மிக 3வளர்ந்தன் றன்னையும் 5. உட்கொண் டோவாள் காக்கும் பிற்பெரிது இவணுறை வெவனோ அளியளென் றருளி ஆடுநடைப் பொலிந்த புகற்சியின் 4நாடுகோள் அள்ளனைப் பணித்த அதியன் பின்றை வள்ளுயிர் மாக்கிணை 5கண்ணவிந் தாங்கு 10. மலைகவின் அழிந்த கனைகடற் றருஞ்சுரம் வெய்ய மன்றநின் வையெயி றுணீஇய தண்மழை யொருநாள் தலைஇயிய ஒண்ணுதல் ஒல்கியல் அரிவை நின்னொடு செல்கஞ் சின்னாள் ஆன்றனை யாகெனப் பன்னாள். 15. உலைவில் உள்ளமொடு வினைவலி 6யுறீஇ எல்லாம் பெரும்பிறி தாக வடாஅது 7நல்வேற் பாணன் நன்னாட் டுள்ளதை வாட்கண் வானத் தென்றூழ் நீளிடை ஆட்கொல் யானை அதர்பார்த் தல்கும் 20. சோலை அத்தம் மாலைப் போகி ஒழியச் சென்றோர் மன்ற பழியெவன் ஆங்கொல் நோய்தரு பாலே. - மாமூலனார். (சொ-ள்) 1-6. தோழி-, வாழி-, அம்ம - யான் கூறுவதனைக் கேட்பாயாக, காதலர் - நம் காதலர், வெண்மணல் நிவந்த - வெள்ளிய மணல் உயர்ந்த, பொலன் கடை நெடு நகர் - பொலிவு பெற்ற வாயிலையுடைய பெரிய மனையின்கண், நளி இரு கங்குல் - இருள் செறிந்த நீண்ட இரவில், புணர் குறி வாய்த்த - புணரும் குறி அமைந்த, களவும் - களவொழுக்கமும், கைமிக வளர்ந்தன்று - வரம்பி கந்து நீண்டது, அன்னையும் -, உட் கொண்டு - இக்களவினை உள்ளத்திற் கொண்டு, ஓவாள் காக்கும் - நீங்காதவளாகிக் காவல் செய்திருக்கும், பின் பெரிது இவண் உறைவு எவன் - பின்னர் மிகவும் இங்குத் தங்கியிருத்தல் எங்ஙனம் இயல்வதாகும், அளியள் - இரங்கத்தக்காள், என்று அருளி - என்று இரக்கமுற்று, 7-14. ஆடு நடைப் பொலிந்த புகற்சியின் - வென்றி யொழுக்கத் தால் மேம்பட்ட விருப்பத்தினால், அள்ளனை நாடுகோள் பணித்த- அள்ளன் என்பானை நாட்டினைக் கொள்ளுமாறு பணித்த, அதியன் பின்றை - அதியன் என்பான் துஞ்சிய பின்பு, வள் உயிர் மா கிணை கண் அவிந்தாங்கு - சிறந்த ஒலியினையுடைய பெரிய கிணையானது ஒலி அடங்கினாற்போல, மலை கவின் அழிந்த கனை கடற்று அரு சுரம் - மலையின் அழகு ஒழிந்த செறிந்த காடாகிய அரிய பாலை வழிகள், வெய்யமன்ற - ஒரு தலையாகக் கொடியன, நின் வை எயிறு உணீஇய - நின் கூரிய பற்கள் நீர் பருகுமாறு, தண் மழை ஒரு நாள் தலைஇயிய - குளிர்ந்த மழை ஒருநாள் பெய்வதாக, ஒள் நுதல் ஒல்கு இயல் அரிவை - ஒளி பொருந்திய நெற்றியினையும், தளரும் இயலினையுமுடைய அரிவையே, நின்னொடு செல்கம் - பின் நின்னுடன் செல்வேம், சிலநாள் ஆன்றனை ஆக என - சில நாள் அமைந்திருப்பாயாக என்று, 14-16. பல் நாள் உலைவு இல் உள்ளமொடு - பலகாலம் தளர் தலில்லாத ஊக்கத்துடன், வினை வலி யுறீஇ - கொண்டுதலைக் கழிதலாகிய வினையை வற்புறுத் துரைத்து, எல்லாம் பெரும் பிறிதாக - அவையெல்லாம் அழிந்துபோக, 16-21. வடாஅது - வடக்கின்கண், நல் வேல் பாணன் நல்நாட் டுள்ளதை - நல்ல வேலையுடைய பாணனது சிறந்த நாட்டின்கண் உள்ளதாய, வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை - ஒளி பொருந்திய வானின் கண்ணாகிய ஞாயிற்றின் வெம்மை மிக்க நீண்ட சுரத்திலே, ஆள் கொல் யானை - நெறிச் செல்வோர்களைக் கொன்றிடும் யானை, அதர் பார்த்து அல்கும் - வழியினைப் பார்த்துத் தங்கியிருக்கும், சோலை அத்தம் மாலை போகி - சோலைகளை யுடைய காட்டு நெறியில் மாலைக்காலத்தேபோய், ஒழிய சென்றோர் - நாம் இவண் ஒழிந்திருக்கச் சென்றார் ஆதலின், 21-22. நோய் தரு பால் - நோயினைச் செய்யும் பகுதியால், மன்ற- ஒருதலையாக, பழி எவன் ஆம் கொல் - யாது பழி உண்டாகுமோ. (முடிபு) தோழி! வாழி! காதலர், களவுங் கைம்மிக வளர்ந்தன்று; அன்னையும் உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின்பெரிது இவண் உறைவு எவனோ; அளியள்; என்றருளி, அருஞ்சுரம், வெய்ய நின்எயிறு உணீஇய மழை ஒருநாள் தலை இயிய; அரிவை ! நின்னொடு செல்கம்; சின்னாள் ஆன்றனை யாகென வினைவலி யுறீஇ, எல்லாம் பெரும்பிறிதாக, என்றூழ் நீளிடை அத்தம் மாலைப் போகி, ஒழியச் சென்றோர்; நோய்தருபால் மன்ற பழி எவன் ஆங்கொல். (வி-ரை) கங்குற் புணர் குறி வாய்த்த என்றது, இரவுக் குறிக்கண் புணர்தல் அமைந்த என்றபடி. `ஆடுநடை...... அதியன்' என்பதிலிருந்து, அள்ளன் என்பான் தனக்கு வெற்றியை அளித்தான் என்ற மகிழ்ச்சியால், அதியன் என்பவன் அவனுக்குப் பரிசிலாக நாடு நல்கினன் போலும் எனக் கருதப்படுகின்றது. அதியன் துஞ்சிய பின்பு என்பது கிணை கண்ணவிந்தாங்கு என்பதனாற் பெற்றாம். கண் - கிணையின் அடிக்கப்படும் இடம். கண் அவிதல் - அடிபடா தொழிதல். கிணைகண்ணவிந்தாங்கு மலைகவினழிந்த என்க. எயிறு- வாய்க்கு ஆகுபெயர். பெரும்பிறிதாக - அழிந்தொழிய. வாட்கண் வானத்து, ஒளி பொருந்திய வானின்கண் என்க. வான்கண் - ஞாயிறு; `வான்கண் விழியா வைகறை யாமத்து'1 என்பது காண்க. நமக்கு நோயைச் செய்யும் பகுதியால் அவருக்கு யாது பழியுண்டாகுமோ என்று தலைவி தோழிக்குக் கூறினாள் என்க. நமக்கு வரும் பழி என்னை என்றாளும் ஆம். 326. மருதம் (தோழி தலைமகனை வாயில் மறுத்தது.) 2ஊரல் அவ்வாய் உருத்த தித்திப் பேரமர் மழைக்கட் பெருந்தோட் சிறுநுதல் நல்லள் அம்ம குறுமகள் செல்வர் கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் 5. நெடுங்கொடி நுடங்கும் அட்ட வாயில் இருங்கதிர்க் கழனிப் பெருங்கவின் அன்ன நலம்பா ராட்டி நடையெழிற் பொலிந்து விழவிற் செலீஇயர் வேண்டும் வென்வேல் இழையணி யானைச் சோழன் மறவன் 10. கழையளந் தறியாக் காவிரிப் படப்பைப் 3புனன்மலி புதவிற் போஓர் கிழவோன் பழையன் ஓக்கிய வேல்போற் பிழையல கண்ணவள் நோக்கியோர் திறத்தே. - பரணர். (சொ-ள்) 1-3. ஊரல் அ வாய் உருத்த தித்தி - ஊரலாகிய அழகு வாய்ந்த உருப்பெற்ற தேமலையும், பேர் அமர் மழை கண் - பெரிய அமர் செய்யும் குளிர்ந்த கண்களையும், பெரு தோள் சிறு நுதல் - பெரிய தோளினையும் சிறிய நெற்றியினையும் உடைய, குறுமகள் - நின் இளைய பரத்தை, நல்லள் அம்ம - அழகிற் சிறந்தாளாவள் (ஆகலின், தலைவ!) 8-13. வென் வேல் இழை அணி யானை சோழன் மறவன் - வெற்றி பொருந்திய வேலையும் அணிகலன் அணிந்த யானையையு முடைய சோழனது படைத்தலைவனும், கழை அளந்து அறியா காவிரி படப்பை - ஓடக் கோலால் ஆழம் அளந்தறியப் படாத காவிரியின் கரையினைச் சார்ந்த தோட்டங்களையும், புனல்மலி புதவின் - நீர் நிறைந்து ஓடும் மதகுகளையும் உடைய, போஓர் கிழவோன் - போர் என்னும் ஊருக்குத் தலைவனுமாகிய, பழையன் - பழையன் என்பான், ஓக்கிய வேல் போல் - பகைவர்மீது செலுத்திய வேல் போல, அவள் நோக்கியோர் திறத்து - அவளாற் பார்க்கப் பெற்றார் பக்கல், கண் பிழையல - அவள் கண்கள் தைத்தல் தப்பா; 3-8. செல்வர் கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் - செல்வர் களது விரைந்து செல்லும் தேர் குழித்த தெருக்களிடத்தே, நெடு கொடி நுடங்கும் அட்டவாயில் - நீண்ட கொடிகள் அசையும் அட்ட வாயில் என்னும் ஊரிடத்தேயுள்ள, இரு கதிர் கழனி பெருகவின் அன்ன - நீண்ட கதிர்களையுடைய வயல்களின் பெரிய அழகினை யொத்த, நலம் பாராட்டி - அவளது அழகினைப் பாராட்டி, நடை எழில் பொலிந்து - அழகிய நடையால் விளக்க முற்று, விழவில் செலீஇயர் வேண்டும் - அவளுடன் புனல் விழாவின்கண் செல்லுதல் நினக்குத் தகுவதாகும். (முடிபு) தலைவ! குறுமகள் நல்லள் அம்ம; போஓர் கிழவோன் பழையன் ஓக்கிய வேல்போல, அவள் நோக்கியோர் திறத்துக் கண் பிழையல; அவள் நலம் பாராட்டி, நடைஎழிற் பொலிந்து, விழவிற் செலீஇயர் வேண்டும். (வி-ரை) ஊரல் - தேமல் வகை. ஊரலாகிய தித்தி என்க. அம்ம- அசை. குறுமகள் நல்லள் என்றமையால், யாம் முதுமையும் அழகின்மையும் உடையேம் எனப் புலந்து கூறியவாறு. நுடங்கும் மட்டவாயில் எனப் பிரித்தற்கும் இடம் உண்டு. நடை எழிற் பொலிந்து என்றது, பெருமிதத்துடன் இருவரும் ஒருங்கு நடக்கும் நடையில் விளக்கமுற்று என்றபடி. செலீஇயர் - தொழிற் பெயர். பழையன் பகைவரிடத்து ஓக்கிய வேல் பிழையாமை `போஓர் கிழவோன், பழையன் வேல்வாய்த் தன்னநின், பிழையா நன்மொழி'1 எனப் பிறாண்டும் வருதல் காண்க. பிழையல கண் என்றது, நீ அவளை விட்டு நீங்குதல் அரிது என்றபடி. 327. பாலை (பொருள் கடைக் கூட்டிய 1நெஞ்சினைக் கழறியது.) இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் நன்பகல் அமையமும் இரவும் போல வேறுவே றியல ஆகி மாறெதிர்ந்து உளவென உணர்ந்தனை யாயின் ஒரூஉம் 5. இன்னா வெஞ்சுரம் நன்னசை துரப்பத் துன்னலுந் தகுமோ துணிவில் நெஞ்சே நீசெல வலித்தனை யாயின் யாவதும் 2நினைதலுஞ் செய்தியோ எம்மே கனைகதிர் ஆவி அவ்வரி நீரென 3நசைஇ 10. மாதவப் பரிக்கும் மரல்திரங்கு நனந்தலைக் களர்கால் யாத்த கண்ணகன் பரப்பிற் செவ்வரைக் கொழிநீர் கடுப்ப அரவின் அவ்வரி யுரிவை அணவரு மருங்கிற் புற்றரை யாத்த புலர்சினை மரத்த 15. மைந்நிற உருவின் மணிக்கட் காக்கை பைந்நிணங் கவரும் படுபிணக் கவலைச் சென்றோர் செல்புறத் திரங்கார் கொன்றோர் கோல்கழிபு இரங்கும் அதர வேய்பயில் அழுவம் இறந்த பின்னே. - மருங்கூர்ப்பாகைச் சாத்தன் பூதனார். (சொ-ள்) 6. துணிவு இல் நெஞ்சே - உறுதி யற்ற நெஞ்சமே! 1-6. இன்பமும் இடும்பையும் - இன்பமும் துன்பமும், புணர்வும் பிரிவும் - புணர்தலும் பிரிதலும், நன் பகல் அமையமும் இரவும் போல - நல்ல பகற் பொழுதும் இராப்பொழுதும் போல, வேறு வேறு இயல ஆகி - வேறு வேறு தன்மையினவாகி, மாறு எதிர்ந்து உள என - மாறாக எதிர்ப்பட்டு நிற்பன என, உணர்ந்தனை ஆயின் - நீ உணர்ந்துளா யாயின், ஒரூஉம் இன்னா வெம் சுரம் - இவளை நீங்கிச் செல்லும் இன்னாமையை யுடைய கொடிய சுரநெறியில், நல் நசை துரப்ப - நல்ல பொருள் வேட்கை செலுத்த, துன்னலும் தகுமோ - நீ சென்று சேர்தலும் தகுவதாமா? 7. நீ செல வலித்தனை யாயின் - நீ செல்லுதற்கே துணிந்து விட்டாயாயின், 8-19. கனை கதிர் ஆவி அவ் வரி - ஞாயிற்றினது மிக்க கதிரால் தோன்றும் ஆவியாய அவற்றின் அலைகளை, நீர் என நசைஇ - நீர் என்று எண்ணி விரும்பி, மா தவ பரிக்கும் - விலங்குகள் மிக ஓடி அலையும், மரல் திரங்கு நனந்தலை - மரற்செடி வாடும் அகன்ற இடத்தினையும், களர் கால் யாத்த கண் அகன் பரப்பின் - களர் பரந்த இடமகன்ற பரப்பினையும், செவ்வரைக் கொழிநீர் கடுப்ப - செங்குத்தாய மலையினின்றும் கொழித்து வரும் அருவி நீர் போல, அரவின் அ வரி உரிவை அணவரும் மருங்கின் - பாம்பினது அழகிய வரிகளையுடைய உரிக்கப் பெற்ற தோல்கள் பொருந்தும் பாறை இடங்களையும் உடைய, புற்று அரை யாத்த - புற்றுக்கள் அடிமரத்தில் கட்டப் பெற்றுள, புலர் சினை மரத்த - காய்ந்த கிளைகளையுடைய மரத்திடத்தவாய, மை நிற உருவின் மணிக் கண் காக்கை - பெய்யும் மேகத்தின் நிறம் போலும் உருவினையும் நீல மணி போலும் கண்ணினையுமுடைய காக்கைகள், பை நிணம் கவரும் படு பிண கவலை - பசிய கொழுப்பினைக் கவர்ந்துண்ணும் இடமாய மிக்க பிணங்கள் கிடக்கும் கவர்த்த நெறிகளாகிய, சென்றோர் செல் புறத்து இரங்கார் கொன்றோர் - வழிச் செல்லும் வணிகர்கள் போகும் இடங்களின் பின்னே யிருந்து இரக்கமுறாது அவர்களைக் கொன்ற ஆறலைப்போர், கோல் கழிபு இரங்கும் அதர - தங்கள் அம்புகள் கழிந்ததன் பொருட்டே இரங்கும் நெறிகளையுடைய, வேய் பயில் அழுவம் இறந்த பின் - மூங்கில் நெருங்கிய காட்டினைக் கடந்த பின், 7-8. எம்மே யாவதும் நினைதலும் செய்தியோ - எங்களைச் சிறிதேனும் நினைத்தலும் செய்வாயோ. (முடிபு) துணிவில் நெஞ்சே! இன்பமும் துன்பமும் புணர்வும் பிரிவும் வேறுவே றியலவாகி மாறெதிர்ந்து உள என உணர்ந்தனையாயின் வெஞ்சுரம் துன்னலும் தகுமோ; நீ செலவலித்தனையாயின் வேய்பயில் அழுவம் இறந்த பின்னே எம்மை யாவதும் நினைதலும் செய்தியோ. நனந்தலையினையும் பரப்பினையும் மருங்கினையும் உடைய அழுவம் எனவும் கவலையாகிய அதர்களையுடைய அழுவம் எனவும் தனித்தனி கூட்டுக. (வி-ரை) இன்பமும் இடும்பையும் மாறு எதிர்ந்துள, புணர்வும் பிரிவும் மாறு எதிர்ந்துள என்க. இதனைப் புணர்வும் அதனாலாய இன்பமும், பிரிவும், அதனாலாய இடும்பையும் என உரைத்தலுமாம். இன்பமும் இடும்பையும் பகலும் இரவும் போல என நிரனிறையாகக் கொள்க. தலைவியைப் புணர்ந்து இன்பம் துய்க்கும் நீ, பிரியின் துன்பமே யுள என்றதனை அறிந்தாயாயின் பொருள் நசையால் தலைவியைப் பிரிந்து வெஞ்சுரம் துன்னுதல் தகாது என்றான். துணிவு - தெளிவுமாம். நீ செல வலித்தனையாயின் - துன்பமாதலை அறிந்துவைத்தும் நீ செல்லுதலைத் துணிந்தாயாயின் என்க. அழுவம் இறந்தபின் எம்மை நினைதலும் செய்தியோ என்றது, யாம் நின்னுடன் வருவேம் அல்லேம் எனக்கூறிச் செலவழுங்குவித்த படியாம். கால்யாத்தல் - பரத்தல்; ஒரு சொல். பாம்பின் உரி அருவி நீர் போல்வதாதல், `பாம்பின், தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவி'1 என்பதனாலும் பெறப்படும். 328. குறிஞ்சி (இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லெடுப்பத் 2தலைமகள் சொல்லியது.) வழையமல் அடுக்கத்து வலனேர்பு வயிரியர் முழவதிர்ந் தன்ன முழக்கத்து ஏறோடு உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து அரவின் பைந்தலை இடறிப் பானாள் 5. இரவின் வந்தெம் 3இடைமுலை பொருந்தித் துனிகண் அகல வளைஇக் கங்குலின் இனிதின் இயைந்த நண்பவர் 4முனிதல் தெற்றா குதனற் கறிந்தன மாயின் இலங்குவளை நெகிழப் பரந்துபடர் அலைப்பயாம் 10. முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்துகொண்டு அடக்குவம் மன்னோ தோழி மடப்பிடி மழைதவழ் சிலம்பிற் கடுஞ்சூல் ஈன்று கழைதின் யாக்கை விழைகளிறு தைவர வாழையஞ் சிலம்பிற் றுஞ்சுஞ் 15. சாரல் நாடன் சாயன் மார்பே. - மதுரைப் பண்டவாணிகன் 5இளந்தேவனார். (சொ-ள்) 11. தோழி-, 1-9. வழை அமல் அடுக்கத்து - சுரபுன்னை மரங்கள் நிறைந்த மலைச்சாரலில், வலன் ஏர்பு - (மேகமானது) வலமாக எழுந்து, வயிரியர் முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறொடு - கூத்தரது முழவம் அதிர்ந்தாற் போன்ற முழக்கத்தினை யுடைய இடியேறுகளுடன் கூடி, உரவு பெயல் பொழிந்த நள் என் யாமத்து - மிக்க பெயலைச் சொரிந்த நள்ளென்னும் ஒலியினையுடைய நடு இரவில், அரவின் பை தலை இடரி - பாம்பினது பசிய தலையை இடறிக் கொண்டு, பால் நாள் இரவின் வந்து - அந்தப் பாதி இரவில் வந்து, எம் இடைமுலை பொருந்தி - எம் முலையிடையே பொருந்தி, துனி கண் அகல - தமது வருத்தம் தம்மிடத்து நின்றும் நீங்க, வளைஇ - ஆகத்தைத் தழுவி, கங்குலின் - இரவெலாம், இனிதின் இயைந்த நண்பு - இங்ஙனம் இனிமையாகப் பொருந்திய நண்பினை, இலங்குவளை நெகிழ - விளங்கும் வளை நெகிழவும், படர் பரந்து அலைப்ப - நமது துன்பம் பரவி வருத்தவும், அவர் முனிதல் தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின் - அவர் பின் வெறுத்தல் தெளிவாதலை நாம் நன்கு உணர்வோமாயின், 11-15. மழை தவழ் சிலம்பில் - மேகம் தவழும் பக்கமலையில், மட பிடி - இளைய பெண் யானை, கடுஞ் சூல் ஈன்று - தனது முதற் சூலினை ஈன்று, கழை தின் யாக்கை - மூங்கிலைத் தின்னும் தன் யாக்கையினை, விழை களிறு தைவர - தன்பால் விருப்ப மிக்க தனது ஆண் யானை தடவிக் கொண்டிருக்க, வாழை அம் சிலம்பில் துஞ்சும் - வாழைகளையுடைய அழகிய அப் பக்க மலையில் துயிலும், சாரல் நாடன் - சாரலையுடைய மலைநாடானாய அத் தலைவனது, சாயல் மார்பு - மென்மையை யுடைய மார்பினை, 9-11. யாம் - நாம், முயங்குதொறும் முயங்குதொறும் - அவர் முயங்குந்தோறும் முயங்குந்தோறும், உயங்க முகந்துகொண்டு அடக்குவம் - வருந்த முகந்துகொண்டு நம் மார்பின்கண்ணே அடக்கியிருப்பேம், மன் - அது கழிந்ததே. (முடிபு) தோழி! பானாள் இரவின் வந்து கங்குலின் இயைந்த நண்பு வளை நெகிழப் படர் அலைப்ப அவர் முனிதல் தெற்றாகுதல் நற்கு அறிந்தனமாயின், சாரல் நாடன் மார்பு, முயங்குதொறும் உயங்க முகந்துகொண்டு அடக்குவம் மன். (வி-ரை) மேகம் என வருவித்து, மேகம் ஏர்பு பொழிந்த யாமம் என முடிக்க. அரவின் பைந்தலை இடறி என்பது இருளின் செறிவை உணர்த்தியபடி. எனவே இரவுக் குறியின் ஏதம் அஞ்சாது வந்து என்பதாயிற்று. பைந்தலை, பைத்தலை என்பதன் விகாரம் எனக் கொண்டு படத்தினையுடைய தலை என்றலுமாம். அகல அளைஇ எனப் பிரித்துரைத்தலுமாம். நண்பினை முனிதலாவது நாம் வருந்த நம்மைப் பிரிந்திருத்தல். உயங்க முகந்து கொண்டு - வருந்தும்படி இறுகப் பற்றிக்கொண்டு என்றவாறு. முயங்குதொறும் முயங்க எனப் பிரித்து மேலும் இடைவிடாது முயங்க என்றுரைத்தலுமாம். தோழி சொல்லெடுப்பத் தலைமகள் சொல்லியது என்னும் துறைக் கேற்ப, நற்கு அறிந்தனமாயின் என்று தொடங்கித் தோழி கூறி முடிக்குமுன், நாடன் மார்பினை அவன் முயங்குதோறும் முகந்து கொண்டு அடக்குவம் எனத் தலைவி கூறினாள் என்று கொள்க. (உ-றை) மடப்பிடி மழை தவழ் சிலம்பில் சூழ் ஈன்று யாக்கை களிறு தைவர சிலம்பில் துஞ்சும் என்றது, தலைவி, தலைவனுடைய செல்வமிக்க மனையில் மகப்பெற்று, தலைவன் அன்பு பாராட்ட இல்லறம் நடத்துதலை விரும்புவள் என்றபடி. (மே-ள்) `ஒருதலை யுரிமை வேண்டியும்’1 என்னுஞ் சூத்திரத்து, `வழையமல் அடுக்கத்து' என்பதனுள், முகந்துகொண்டடக்குவம் என இடைவிடாது இன்பம் நுகர விரும்பியவாறும், உள்ளுறையான், இல்லறம் நிகழ்த்த விரும்பியவாறும் காண்க என்றார் நச். 329. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉமாம்.) பூங்கணும் நுதலும் பசப்ப நோய் கூர்ந்து ஈங்கியான் வருந்தவும் நீங்குதல் துணிந்து வாழ்தல் வல்லுந ராயிற் 2காதலர் குவிந்த குரம்பை அங்குடிச் சீறூர்ப் 5. படுமணி யியம்பப் பகலியைந்து உமணர் கொடுநுகம் பிணித்த செங்கயிற் றொழுகைப் பகடயாக் கொள்ளும் வெம்முனைத் துகடொகுத்து எறிவளி சுழற்றும் அத்தஞ் சிறிதசைந்து ஏகுவர் கொல்லோ தாமே பாய்கொள்பு 10. 3உறுவெரிந் ஒடிக்குஞ் சிறுவரிக் குருளை நெடுநல் யானை நீர்நசைக் கிட்ட கைகறித் துரறும் மைதூங்கு இறும்பில் புலிபுக்கு ஈனும் வறுஞ்சுனைப் பனிபடு சிமையப் பன்மலை யிறந்தே. - உறையூர் 4முதுகூத்தனார். (சொ-ள்) தோழி-, 1-3. காதலர் - நம் காதலர், பூ கணும் நுதலும் பசப்ப - எனது அழகிய கண்ணும் நெற்றியும் பசலையுற, நோய் கூர்ந்து ஈங்கு யான் வருந்தவும் - துன்பம் மிக்கு இங்கே யான் வருந்தாநிற்கவும், நீங்குதல் துணிந்து - நம்மைப் பிரிதலைத் துணிந்து, வாழ்தல் வல்லுநர் ஆயின் - தனித்து வாழ வன்மை யுடைய ராயின், 4-8. குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர் - தலை கூம்பிய குடிசைகளாகிய அழகிய குடியிருப்புக்களை யுடைய சிற்றூரின்கண், படு மணி இயம்ப - பொருந்திய மணி ஒலிக்க, பகல் இயைந்து - பகுத்தல் பொருந்தி, உமணர் கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப் பகடு - உப்பு வாணிகர் வளைந்த நுகத்திலே செவ்விய கயிற்றினால் பிணிக்கப்பெற்ற வண்டி யிழுக்கும் பகடுகள், அயாக் கொள்ளும் - வருந்தி யிழுக்கும், வெம்முனை - கொடிய இடங்களில் எழும், துகள் - தொகுத்து - புழுதியைத் திரட்டி, எறி வளி சுழற்றும் அத்தம் - வீசும் காற்றுச் சுழற்றும் சுர நெறியில், சிறிது அசைந்து - சிறிது தங்கி யிருந்து (பின்பு), 9-14. பாய் கொள்பு உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குருளை - பாய்தல் கொண்டு நேர்மை பொருந்திய முதுகினை நெளிக்கும் குறுகிய வரிகளையுடைய புலிக் குட்டி, நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட கை கறித்து உரறும் - நீண்டுயர்ந்த நல்ல யானை நீர் வேட்கையால் சுனையின்பால் இட்ட கையினைக் கடித்து முழங்கும் இடமாய, மை தூங்கு இறும்பில் - மேகம் துஞ்சும் காட்டில், புலிபுக்கு ஈனும் வறு சுனை - புலி (நீரின்மையின்) புகுந்து குட்டியை ஈனும் வறிய சுனையினையுடைய, பனி படு சிமையப் பல் மலை இறந்து - பனி உறைந்த உச்சியினையுடைய பல மலைகளையும் கடந்து, தாம் ஏகுவர் கொல்லோ - அவர் போவரோ. (முடிபு) தோழி! காதலர் ஈங்கு யான் வருந்தவும் நீங்குதல் துணிந்து வாழ்தல் வல்லுநராயின் வெம்முனைத் துகள் தொகுத்து எறிவளி சுழற்றும் அத்தம் சிறிது அசைந்து பன்மலை யிறந்து ஏகுவர் கொல்லோ. (வி-ரை) பூங்கண் - பூப் போலும் கண்ணும் ஆம். பகல் இயைந்து பிணித்த பகடு எனவும், மணி இயம்பப் பகடு அயாக் கொள்ளும் எனவும் கூட்டுக. பகல் இயைதலாவது நுகத்தின் இரு புறத்தும் தம்மின் ஒத்தனவாய பகடுகளைத் தேர்ந்து கொள்ளல். பகல்- பகற் பொழு தெனக் கொண்டு பகலிலே பொருந்தி அயாக் கொள்ளும் என்றலுமாம். எறி வளி - சூறாவளி. சிறிது அசைந்து - அக் காற்று நிற்குமளவும் தங்கி யிருந்து. பாய் கொள்பு - உடலை நெடிதாக்கல். நசைக்கு - நசையால்; வேற்றுமை மயக்கம். 330. நெய்தல் (தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறைநயப்பக் கூறியது.) கழிப்பூக் குற்றுங் கானல் அல்கியும் வண்டற் பாவை வரிமணல் அயர்ந்தும் இன்புறப் புணர்ந்தும் இளிவரப் பணிந்தும் தன்றுயர் 1வெளிப்படத் தவறில் நந்துயர் 5. அறியா மையின் அயர்ந்த நெஞ்சமொடு செல்லும் அன்னோ மெல்லம் புலம்பன் செல்வோன் 1பெயர்புறத் திரங்கி முன்னின்று தகைஇய சென்றவென் நிறையில் நெஞ்சம் எய்தின்று கொல்லோ தானே எய்தியும் 10. காமஞ் செப்ப நாணின்று கொல்லோ உதுவ காணவர் ஊர்ந்த தேரே குப்பை வெண்மணற் குவவுமிசை யானும் எக்கர்த் தாழை மடல்வயி னானும் ஆய்கொடிப் பாசடும்பு அரிய ஊர்பிழிபு 15. சிறுகுடிப் பரதவர் பெருங்கடன் மடுத்த கடுஞ்செலற் கொடுந்திமில் போல நிவந்துபடு தோற்றமொ டிகந்துமா யும்மே. - உலோச்சனார். (சொ-ள்) தோழி! 6. மெல் அம் புலம்பன் - மென்னிலமாகிய நெய்தலையுடைய நம் தலைவன், 1-6. கழி பூ குற்றும் - கழியிலுள்ள பூக்களைப் பறித்தும், கானல் அல்கியும் - கடற்கரைச் சோலையில் தங்கியிருந்தும், வண்டல் பாவை வரிமணல் அயர்ந்தும் - வரிப்பட்ட மணலில் வண்டற் பாவை செய்து விளையாடியும், இன்பு உற புணர்ந்தும் - இன்பம் உறப் பல கால் வந்து கூடியும், இளிவர பணிந்தும் - சிறுமை தோன்றப் பணி தலைச் செய்தும், தவறு இல் நம் துயர் அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு - குற்றமில்லாத நமது துயரை அறியாமையால் சோர்ந்த நெஞ்சுடன், தன் துயர் வெளிப்படச் செல்லும் - தனது துயரம் வெளிப்பட்டுத் தோன்றச் செல்லாநிற்பன், அன்னோ - அந்தோ! 7-10. செல்வோன் பெயர்புறத்து - அங்ஙனம் செல்கின்றவன் போகிய திசையில், இரங்கி - இரக்கமுற்று, முன்நின்று தகைஇய - முன்னே நின்று செல்லற்க எனத் தடைசெய, சென்ற என் நிறை இல் நெஞ்சம் - சென்றதாய எனது உறுதியற்ற நெஞ்சமானது, எய்தின்று கொல்லோ - அத் தலைவனைச் சென்று சார்ந்ததின்றோ, எய்தியும் - சார்ந்தும், காமம் செப்ப நாணின்று கொல்லோ - நம் காமத்தினைக் கூற நாணியதோ; 11-17. அவர் ஊர்ந்த தேர் உதுவ காண் - அவர் ஏறிச்சென்ற தேர் உங்கே தோன்றலைக் காண்பாயாக, குப்பை வெண் மணல் குவவு மிசையானும் - வெள்ளிய மணல் திரண்ட குவியல்களின் மேலும், எக்கர் தாழை மடல்வயினானும் - மணல் மேட்டிடத்துள்ள தாழை மடல்களினிடத்தும், ஆய் கொடி பசு அடும்பு அரிய ஊர்பு இழிபு - அழகிய அடும்பின் பசிய கொடிகள் அரிபட ஏறியும் இறங்கியும், சிறு கடிப் பரதவர் பெரு கடல் மடுத்த - சிறிய குடி வாழ்க்கையை யுடைய நெய்தல் மாக்கள் பெரிய கடலிற் செலுத்திய, குடு செலல் கொடுதிமில் போல - விரைந்து செல்லுதலையுடைய வளைந்த மீன் படகுபோல, நிவந்துபடு தோற்றமொடு - உயர்ந்து தோன்றும் தோற்றத் துடன், இகந்து மாயும் - சென்று அப்பால் மறையா நிற்கின்றது. (முடிபு) தோழி! புலம்பன் அல்கியும் அயர்ந்தும் புணர்ந்தும் பணிந்தும் தவறுஇல் நம்துயர் அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு செல்லும்; செல்வோன் புறத்து இரங்கித் தகைஇய சென்ற என் நெஞ்சம் எய்தின்று கொல்லோ; எய்தியும் காமம் செப்ப நாணின்று கொல்லோ; அவர் ஊர்ந்த தேர் பரதவர் கடல் மடுத்த திமில்போல நிவந்துபடு தோற்றமொடு இகந்து மாயும்; உதுவ காண். (வி-ரை) தன் துயர் வெளிப்படச் செல்லும் எனவும், அயர்ந்த, நெஞ்சமொடு செல்லும் எனவும் தனித்தனி கூட்டுக. மன் ஓ எனப் பிரித்து அசைநிலை என்றலுமாம். புலம்பன் - நெய்தற் றலைவன். நெய்தல் மென்னிலமாகலின் நெய்தல்நிலத் தலைவனை மெல்லம் புலம்பன் என்பது வழக்காறு. எய்தின்று - எதிர்மறைச் சொல். `புக்கில் அமைந்தின்று கொல்லோ'1 என்புழிப் போல தலைவன் ஏறிய தேர் அண்மையில் நிவந்த தோற்றமுடையதாயிருந்து சேய்மையிற் செல்லுந்தோறும் மறைதலுக்கு அவ்வாறு சென்று மறையும் திமில் உவமையாயிற்று. இப்பாட்டினைத் தலைவி கூற்றாகக்கொண்டு, தலைவி தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் வெளிப் படக் கூறியதென்பர் நச்சினார்க்கினியர். களவுக் காலத்தில், தலைவன் பால் பரத்தைமையின்றாகவும் காதல் மிகுதியால் உளதாகக் கொண்டு தலைவி ஊடுதல் உண்டு என்பதும் அது புலவிப் போலியா மென்பதும் அவர் கருத்தாகும். (மே-ள்) `மறைந்தவற் காண்டல்'2 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் காட்டி, இதனுள், `அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு' என்பது தன்வயின் உரிமை, இகந்து மாயும் என்பது அவன்வயிற் பரத்தைமை' என்று கூறினர் நச். 331. பாலை (தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) நீடுநிலை அரைய செங்குழை இருப்பைக் கோடுகடைந் தன்ன கொள்ளை வான்பூ ஆடுபரந் தன்ன ஈனல் எண்கின் 3சேடுசினை யுரீஇ உண்ட மிச்சில் 5. பைங்குழைத் தழையர் பழையர் மகளிர் கண்டிரள் நீளமைக் கடிப்பிற் றொகுத்துக் குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகுமஞ் சீறூர் நாடு பலபிறக் கொழியச் சென்றோர் அன்பிலர் தோழி என்றும் 10. அருந்துறை முற்றிய கருங்கோட்டுச் சீறியாழ்ப் பாணர் ஆர்ப்பப் பலகலம் உதவி நாளவை யிருந்த நனைமகிழ் திதியன் வேளிரொடு `1பொரீஇய கழித்த வாள்வாய் அன்ன 2வறுஞ்சுரம் இறந்தே. - மாமூலனார். (சொ-ள்) 9. தோழி-, 1-8. நீடு நிலை அரைய செம் குழை இருப்பை - நீண்ட நிலையாகிய அடிமரத்தினையுடைய சிவந்த தளிர்களையுடைய இருப்பை மரங்களின், கோடு கடைந்தன்ன கொள்ளை வான் பூ - தந்தத்தினைக் கடைந்தாற் போன்ற மிகுதியான வெள்ளிய பூக்களில், ஆடு பரந்த அன்ன - ஆடுகள் பரந்தால் ஒத்த, ஈனல் எண்கின் சேடு - ஈன்ற பெண் கரடிகளின் திரட்சி, சினை உரீஇ உண்ட மிச்சில் - கிளைகளில் பரந்து சென்று உண்ட மிச்சிலாயவற்றை, பை குழை தழையர் பழையர் மகளிர் - பசிய தளிர்களாலாய தழையுடையராகிய எயினர் மகளிர், கண் திரள் நீள் அமைக் கடிப்பில் தொகுத்து - கணுக்கள் திரண்டு நீண்ட மூங்கிற் குழாயில் திரட்டி, குன்றகம் சிறு குடி மறுகுதொறும் மறுகும் - குன்றின் கண்ணவாகிய சீறூரின் தெருக்கடோறும் சுழன்று விற்றுத் திரியும், அம் சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய - அழகிய சிறிய ஊர்களையுடைய பல நாடுகள் பின்னே கழிய, 9-14. என்றும் - எஞ்ஞான்றும், அரு துறை முற்றிய கரு கோட்டு சிறு யாழ்ப் பாணர் ஆர்ப்ப - அரிய இசைத் துறைகளை முற்ற உணர்ந்த கரிய தண்டினையுடைய சிறிய யாழினையுடைய பாணர்கள் ஆரவாரம் செய்ய, பல கலம் உதவி - பல அணிகலன் களை அளித்து, நாளவை இருந்த நனை மகிழ் திதியன் - நாளோலக்கம் கொண்டிருந்த கள்ளின் மகிழ்வினை யுடைய திதியன் என்பான், வேளிரொடு பொரீஇய கழித்த - வெளிரொடு போர் செயற்கு உருவிய, வாள் வாய் அன்ன வறும் சுரம் இறந்து - வாளின் வாயினை யொத்த கொடுமையை யுடைய வறண்ட சுரத்தினைக் கடந்து, 9. சென்றோர் அன்பு இலர் - சென்றவராய நம் தலைவர் நம் பால் அன்பிலாதார் ஆவர் (என் செய்வாம்.) (முடிபு) தோழி! சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய, வறுஞ்சுரம் இறந்து சென்றோர் அன்பிலர் (என் செய்வாம்.) (வி-ரை) இருப்பை வான் பூ என்க. ஆடு பரந்தன்ன என்றது எண்கின் மிகுதியை உணர்த்தியபடி. சேடு - திரட்சி, கூட்டம் என்றபடி. உரீஇ - உருவி என்றுமாம். உண்ட மிச்சிலாகிய பூக்களை என்க. பழையர் - கள் விற்போர், எயினர். கடிப்பு - மூங்கிற் குழாயை உணர்த்திற்று. மறுகும் - திரியும்; விற்றுத்திரியும் என்றபடி. அன்பிலாராய்ச் சென்றார் என்றுமாம். அருந்துறை - பண்ணும் திறமும் ஆகிய இசையின் கூறுபாடுகள். ஆர்ப்ப - மகிழ்ச்சியால் ஆரவாரிக்க. வாள் வாய் அன்ன கொடுமை யுடைய என விரித்துரைக்க. 332. குறிஞ்சி (இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழிக்குத் 1தலைமகள் இயற்பட மொழிந்தது.) 2முளைவளர் முதல மூங்கில் முருக்கிக் கிளையொடு மேய்ந்த கேழ்கிளர் யானை நீர்நசை மருங்கின் 3நிறம்பார்த் தொடுங்கிய பொருமுரண் உழுவை தொலைச்சிக் கூர்நுனைக் 5. குருதிச் 4செங்கோட் டழிதுளி கழாஅக் 5கன்முகை அடுக்கத்து மென்மெல இயலிச் செறுபகை 6வாட்டிய செம்மலொ டறுகால் யாழிசைப் பறவை இமிரப் பிடிபுணர்ந்து வாழையஞ் சிலம்பிற் றுஞ்சும் நாடன் 10. நின்புரைத் தக்க சாயலன் எனநீ அன்புரைத் தடங்கக் கூறிய இன்சொல் வாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்கு அமிழ்தத் தன்ன கமழ்தார் மார்பின் வண்டிடைப் படாஅ முயக்கமும் 15. தண்டாக் காதலும் தலை7நாள் போன்மே. - கபிலர். (சொ-ள்) 12. தோழி-, வாழி-, 1-9. முளை வளர் முதல மூங்கில் முருக்கி - முளைகள் வளரும் தூறுகளிலுள்ள மூங்கில்களை ஒடித்து, கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை - தன் இனத்துடன் தின்ற நிறம் விளங்கிய களிறு, நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய - நீர்வேட்டுச் செல்லும் துறையருகே தன் உருவினைப் பார்த்துத் தாக்கற்குப் பதுங்கிய, பொரு முரண் உழுவை தொலைச்சி - போர் செயும் மாறு பாட்டினைக் கொண்ட புலியைப் பொருது கொன்று, கூர் நுனை குருதிச் செம் கோட்டு அழி துளி கழாஅ - கூரிய முனையில் குருதி தோய்ந்த சிவந்த கொம்பினை மிக்க மழையால் கழுவிக்கொண்டு. கல்முகை அடுக்கத்து மெல்மெல இயலி - கல்முனைகளை யுடைய பக்க மலையில் மெல்ல மெல்லச் சென்று, செறு பகை வாட்டிய செம்மலொடு - செற்றங் கொண்ட தன் பகையைத் தொலைத்த செருக்குடன், அறு கால் யாழ் இசை பறவை இமிர - யாழ் போன்ற இசையினையுடைய ஆறு கால்களையுடைய வண்டுகள் ஒலிக்கும் படி சென்று, பிடி புணர்ந்து - தன் பிடியினைக் கூடி, வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன் - வாழை மரங்களையுடைய மலையில் துயிலும் நாட்டையுடைய தலைவன்; 10-15. நின் புரை தக்க சாயலன் என - நினது உயர்வுக்கு ஏற்ற மென்மைத் தன்மையன் என, நீ-, அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன்சொல் - அன்பால் உரைத்து என் மனம் அமைதியுறக் கூறிய இன்சொற்க ளெல்லாம், வாய்த்தன - வாய்மையாய் முடிந்தன, வேட்டோர்க்கு - தன்னை விரும்பியவர்க்கு, அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் - அமிழ்தம் போன்ற இனிய நறிய தாரினையுடைய தன் மார்பின்கண்ணே, வண்டு இடைப்படாஅ முயக்கமும் - வண்டு இடையிற் பொருந்தலாகாத செறிந்த முயக்கமும், தண்டாக் காதலும் - நீங்காத காதலும், தலை நாள் போன்ம் - முதலிற் கண்ணுற்ற ஞான்றே போலச் சிறவாநின்றன. (முடிபு) தோழி! வாழி! நாடன் நின் புரைத் தக்க சாயலன் என நீ அன்புரைத்து அடங்கக் கூறிய இன்சொல் வாய்த்தன; அவன் மார்பின் முயக்கமும், காதலும் தலைநாள் போன்ம். யானை உழுவை தொலைச்சிச் செங்கோடு கழாஅ இயலிப் பிடிபுணர்ந்து சிலம்பில் துஞ்சும் நாடன் என்க. (வி-ரை) நிறம் - வடிவு; மார்புமாம். செம்மலொடு பிடி புணர்ந்து என்க. புரை - உயர்ச்சி; புரைத்தக்க - உயர்ச்சிக்குத் தக்க. வாய்த்தன - வாய் ஆயின. அமிழ்தத் தன்ன மார்பு என்க. கமழ் தார் மார்பாகலின் வண்டு உளதாதல் பெறப்படும். இடைப் படா முயக்கம் என்றது அவ் வண்டு நீங்குமாறு செறிந்த முயக்கம் என்றவாறு. (உ-றை) யானை உழுவை தொலைச்சிக் குருதிச் செங்கோடு அழி துளி கழாஅச் செறு பகை வாட்டிய செம்மலொடு யாழிசைப் பறவை இமிரப் பிடி புணர்ந்து வாழையஞ் சிலம்பில் துஞ்சும் என்றது, தலைவன் அலர் கூறுவார் வாயை அடக்கி, களவினாலாகும் மாசு தீரத், தலைவியை மணந்து சுற்றத்தாரும் பாணர் முதலாயினாரும் கொண்டாட வளம் மிக்க மனையில் இன்பம் துய்த்திருப்பன் என்றவாறு. 333. பாலை (பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) யாஅ ஒண்டளிர் அரக்குவிதிர்த் தன்னநின் ஆக மேனி அம்பசப் பூர அழிவுபெரி துடையை யாகி அவர்வயின் பழிதலைத் தருதல் வேண்டுதி மொழிகொண்டு 5. தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்குநின் எவ்வம் பெருமை உரைப்பின் செய்பொருள் வயங்கா தாயினும் பயங்கெடத் தூக்கி நீடலர் வாழி தோழி கோடையிற் குருத்திறுபு உக்க வருத்தம் சொலாது 10. தூம்புடைத் துய்த்தலைக் கூம்புபு திரங்கிய வேனில் வெளிற்றுப்பனை போலக் கையெடுத்து யானைப் பெருநிரை வானம் பயிரும் மலைச்சேண் இகந்தனர் ஆயினும் நிலைபெயர்ந்து நாளிடைப் படாது வருவர் நமரெனப் 15. பயந்தரு கொள்கையின் நயந்தலை 1திரியாது நின்வாய் இன்மொழி நன்வா யாக வருவர் ஆயினோ நன்றே வாராது அவணர் காதலர் ஆயினும் இவணம் பசலை மாய்தல் எளிதுமற் றில்ல 20. சென்ற தேஎத்துச் செய்வினை முற்றி மறுதரல் உள்ளத்தர் எனினும் குறுகுபெரு நசையொடு தூதுவரப் பெறினே. - கல்லாடனார். (சொ-ள்) 8. தோழி-, வாழி-, 1-8. யாஅ ஒள் தளிர் அரக்கு விதிர்த்தன்ன - யாமரத்தின் ஒள்ளிய தளிரில் அரக்குப் பொடியினைச் சிதறினாற்போன்ற, நின் ஆகம் மேனி அம் பசப்பு ஊர - நின் உடம்பினது மேனியின்கண் அழகிய பசலை பரக்க, அழிவு பெரிது உடையை ஆகி - வருத்தம் மிகுதியும் உடையை யாகி, அவர்வயின் பழி தலைத் தருதல் வேண்டுதி - அவரிடத்தே பழியைச் சேர்த்தலை விரும்புகின்றனை, ஆங்கு நின் எவ்வம் பெருமை உரைப்பின் - அங்கே நினது துன்ப மிகுதியை யாரேனும் சென்று உரைப்பின், மொழி கொண்டு தாங்கல் ஒல்லுமோ - அம் மொழிகளைக் கேட்டு அவரால் துன்பம் தாங்கி யிருத்தல் இயலுமோ, செய் பொருள் வயங்காதாயினும் - செய்யப்படும் பொருள் முற்றாதாயினும், பயம் கெட தூக்கி - இன்பப் பயன் கெடுமாறு அதனையே பெரிதாக ஆய்ந்து, நீடலர் - அங்கே தாழ்த்து விடார்; 8-14. வேனில் - வேனிற் காலத்தில், கோடையில் குருத்து இறுபு உக்க - மேல்காற்றால் குருத்து இற்று உதிர்ந்த, வருத்தம் சொலாது - வருத்தம் நீங்காது, தூம்பு உடை துய் தலை கூம்புபு திரங்கிய - துளையுடைய துய்யை யுடைய உச்சி கூம்பி வற்றிய, வெளிற்றுப் பனை போல் - இளம் பனை போல, கை எடுத்து யானை பெரு நிரை வானம் பயிரும் - கையை உயர்த்தி யானையின் பெருங் கூட்டம் மேகத்தை நோக்கிக் கதறும், மலை சேண் இகந்தனர் ஆயினும் - மலையைக் கடந்து சேய்மைக்கண் சென்றனராயினும், நிலை பெயர்ந்து நாள் இடைப் படாது நமர் வருவர் - தாம் கூறிய கால எல்லை பெயர்ந்திட நாட்கள் இடைப்படாமல் நம் தலைவர் வருவர்; 14-17. என - என்றிங்ஙனம், பயம் தரு கொள்கையின் நயம் தலை திரியாது - பயனை உண்டாக்கும் கொள்கையோடு இனிமை நீங்காது கூறும், நின் வாய் இன் மொழி நன் வாயாக - நின் வாயின் இனிய மொழிகள், நல்ல உண்மையாக, வருவர் ஆயின் நன்றே - வந்திடுவராயின் அது மிகவும் நல்லதே (அன்றி), 17-22. வாராது அவணர் காதலர் ஆயினும் - அங்ஙனம் வாராமல் நம் காதலர் அவ்விடத்தில் தங்குவாராயினும், சென்ற தேஎத்து - தாம் சென்றுள தேயத்தே, செய்வினை முற்றி - தாம் செய்யும் தொழிலை முடித்துக்கொண்டு, மறுதரல் உள்ளத்தர் எனினும் - மீளும் எண்ணமுடைய ராயினும், குறுகு பெரு நசை யொடு - அங்ஙனம் மீண்டு வரும் பெரு விருப்புடன் விடுக்கும், தூது வரப்பெறின் - தூது வரப் பெறுவேமாயின், இவண் நம் பசலை மாய்தல் எளிது - இவ்விடத்து நமது பசலை மறைதல் எளிதாகும். (முடிபு) தோழி! வாழி! நின்மேனி பசப்பூர, அழிவுபெரி துடையையாகி, அவர்வயின் பழிதலைத்தருதல் வேண்டுதி; நின் எவ்வம் பெருமை உரைப்பின் மொழிகொண்டு தாங்கல் ஒல்லுமோ; செய்பொருள் வயங்காதாயினும் நீடலர்; மலைச்சேண் இகந்தனர் ஆயினும் நாளிடைப்படாது நமர் வருவர் எனக் கூறும் நின் வாய் இன்மொழி நன்வாயாக வருவர் ஆயின் நன்றே; காதலர் வாராது அவணர் ஆயினும், செய்வினை முற்றி மறுதரல் உள்ளத்தர் எனினும் தூது வரப் பெறினே இவண் நம் பசலைமாய்தல் எளிது. (வி-ரை) தளிர் அரக்கு விதிர்த்தன்ன என்பது உரு உவமம். ஆகமேனி; இருபெயரொட்டு. தலைத்தருதல், ஒரு சொல். மற்று, வினைமாற்று. எவ்வம் - பெருமை: மெலித்தல் விகாரம். சொலாது - நீங்காது. சருச்சரையுடையதாய்க் கரிதாய் நீண்டிருத்தலின் யானைக் கைக்குப் பனை உவமையாகும். ஈண்டு யானையின் துளைக்கை வெம்மையால் திரங்கி மேல் நிவந்திருத்தலின் அதற்குக் குருத்து இற்று வாடிய துளையுடைய வெளிற்றுப் பனை உவமையாயிற்று. நிலை பெயர்ந்து - அவ்விடத்தினின்றும் பெயர்ந்து என்றலுமாம். மன், தில்ல அசைகள், மறுதரல் - மீட்சி. 334. முல்லை (வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.) ஓடா நல்லேற் றுரிவை தைஇய ஆடுகொண் முரசம் இழுமென முழங்க நாடுதிறை கொண்டன மாயின் பாக பாடிமிழ் கடலின் எழுந்த சும்மையொடு 5. பெருங்களிற்றுத் தடக்கை புரையக் கால்வீழ்த்து இரும்பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ வணங்கிறை மகளிர் 1அயர்ந்தனர் ஆடும் கழங்குறழ் ஆலியொடு கதழுறை சிதறிப் பெயறொடங் கின்றால் வானம் வானின் 10. வயங்குசிறை அன்னத்து நிரைபறை கடுப்ப நால்குடன் பூண்ட கானவில் புரவிக் கொடிஞ்சி நெடுந்தேர் கடும்பரி தவிராது இனமயில் அகவுங் கார்கொள் வியன்புனத்து நோன்சூட் டாழி ஈர்நிலம் துமிப்ப 15. ஈண்டே காணக் கடவுமதி பூங்கேழ்ப் பொலிவன அமர்த்த உண்கண் ஒலிபல் கூந்தல் ஆய்சிறு நுதலே. - 2மதுரைக் கூத்தனார். (சொ-ள்) 3-9. பாக - பாகனே, வானம் - மேகமானது, பாடு இமிழ் கடலின் - ஒலி முழங்கும் கடலின்கண், எழுந்த சும்மையொடு - நீரை முகந்தெழுந்ததாலாய முழக்கினொடு, இரு பிடி தொழுதியின் ஈண்டுவன குழீஇ - கரிய பிடிகளின் கூட்டம் போன்று சேர்ந்து திரண்டு, பெரு களிற்று தட கை புரைய கால் வீழ்த்து - பெரிய களிற்றின் பருத்த கை போலக் கால் இறக்கி, வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் கழங்கு உறழ் ஆலியொடு - வளைந்த முன் கையினையுடைய மகளிர் விரும்பி விளையாடும் கழங்கினை யொத்த பனிக் கட்டி யுடன், கதழ் உறை சிதறி - விரையும் துளிகளைச் சிதறி, பெயல் தொடங்கின்று - பெய்தலைத் தொடங்கிவிட்டது; (மேலும்), 1-3. ஓடா நல் ஏற்று உரிவை தைஇய - பிறக்கிடாது வெல்லும் நல்ல வீரம் மிக்க ஏற்றினது தோலாற் போர்த்த, ஆடு கொள் முரசம் இழும் என முழங்க - வெற்றி கொண்ட முரசமானது இழுமென ஒலிக்க, நாடு திறை கொண்டனம் ஆயின் - பகைவர் நாட்டினைத் திறையாகக் கொண்டோம் ஆகலின், 15-17. பூ கேழ் பொலிவன அமர்த்த உண்கண் - அழகிய நிறத்தினாற் பொலிவனவாய் மாறுபட்ட மையுண்ட கண்களையும், ஒலி பல் கூந்தல் - தழைத்த பலவாய கூந்தலையும், ஆய் சிறு நுதல் - அழகிய சிறிய நெற்றியினையுமுடைய நம் தலைவியை, ஈண்டே காண - இப்பொழுதே காண்டற்கு, 9-15. வானின் வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப - வானத்தின்கண் விளங்கும் சிறகினையுடைய அன்னத்தின் கூட்டம் பறந்து செல்லலை யொப்ப (விரைந்து செல்லும்), நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவி - வேகத்தாற் காற்றெனக் கூறப்பெறும் குதிரைகள் நான்கு ஒருசேரப் பூட்டப்பெற்ற, கொடிஞ்சி நெடு தேர் கடும் பரி தவிராது - கொடுஞ்சியையுடைய நீண்ட - தேரின் மிக்க வேகம் தளராது, இன மயில் அகவும் கார்கொள் வியன் புனத்து - கூட்டமாய மயில்கள் ஆடும் கார் காலத்தின் தன்மையுடைய பெரிய முல்லை நிலத்தே, நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப - வலிய வட்டகையினையுடைய உருள்கள் ஈரமாய நிலத்தினைக் கிழித்துச் செல்ல, கடவுமதி - செலுத்துவாயாக. (முடிபு) பாக! வானம் பெயல் தொடங்கின்று; முரசம் முழங்க நாடு திறை கொண்டனம் ஆயின், ஆய் சிறு நுதலை ஈண்டே காண, புரவி நால்குடன் பூண்ட நெடுந்தேர் கடும்பரி தவிராது வியன் புனத்து ஆழி நிலம் துமிப்பக் கடவுமதி. (வி-ரை) ஓடா நல்லேற்று உரிவை - புலியொடு பொருது வென்ற கொல்லேற்றின் தோல் என்பதும், அதனால் வீரமுரசம் போர்க்கப்படுதலும், `புனைமருப் பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற, கனைகுர லுருமுச் சீற்றக் கதழ்விடை யுரிவை போர்த்த, துனைகுரல் முரசம்'1 என்பதனாலும், `கொல்லேற்றுப் பசுந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரசம்' என்பதனாலும் அறிக. நாடு திறைகொண்டனமாயின் என்றதனால் தலைவன் அரசர் மரபினனாதல் பெற்றாம். அன்னத்து நிரை பறை கடுப்ப என்றமை யால் புரவிகள் வெண்ணிற முடையவாதல் பெற்றாம். நால்கு - நான்கு; இதனைப் பெயர்த் திரிசொல் என்பர் நச்சினார்க் கினியர். வெண்ணிறமுடைய குதிரைகள் சிறந்தனவாதலும், அவை நான்கு பூட்டப் பெறுதலும் `நிரைபறை அன்னத் தன்ன விரைபரிப் புல்லுளைக் கலிமா'2 `பால்புரை புரவி நால்குடன் பூட்டி'1 என்பவற்றானும் அறியப்படும். ஈண்டு - பொழுதினை உணர்த்திற்று. சிறுநுதல் - சிறிய நுதலையுடையாட்கு ஆயிற்று. 335. பாலை (தலைமகன் பொருள்கடைக் கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவழுங்கியது.) இருள்படு நெஞ்சத் திடும்பை தீர்க்கும் அருணன் குடைய ராயினு மீதல் பொருளில் லோர்க்கஃ தியையா தாகுதல் யானு மறிவென் மன்னே யானைதன் 5. 2கொன்மருப் பொடியக் குத்திச் சினஞ்சிறந்து இன்னா வேனில் இன்றுணை யார முளிசினை 3யாஅத்துப் பொளிபிளந் தூட்டப் புலம்புவீற் றிருந்த நிலம்பகு வெஞ்சுரம் அரிய 4வல்லமன் னமக்கே விரிதார் 10. ஆடுகொள் முரசின் அடுபோர்ச் செழியன் மாட மூதூர் மதிற்புறந் தழீஇ நீடுவெயில் உழந்த குறியிறைக் கணைக்கால் 5தொடையமை பல்மலர்த் தோடுபொதிந் தியாத்த குடையோ ரன்ன கோளமை யெருத்திற் 15. பாளை பற்றிழிந் தொழியப் புறஞ்சேர்பு வாள்வடித் தன்ன வயிறுடை பொதிய நாளுறத் தோன்றிய நயவரு வனப்பின் ஆரத் தன்ன அணிகிளர் புதுப்பூ வாருறு கவரியின் வண்டுண விரிய 20. முத்தின் அன்ன வெள்வீ தாஅய் அலகின் அன்ன அரிநிறத் தாலி நகைநனி வளர்க்குஞ் சிறப்பிற் றகைமிகப் பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய் நீரினு மினிய வாகிக் கூரெயிற்று 25. அமிழ்தம் ஊறுஞ் செவ்வாய் ஒண்டொடிக் குறுமகட் கொண்டனம் செலினே. - மதுரைத் தத்தங் கண்ணனார். (சொ-ள்) நெஞ்சே-, 1-4. இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் - வறுமையால் மயக்கங் கொண்ட நெஞ்சின் வருத்தத்தைப் போக்குகின்ற, அருள் நன்கு உடையர் ஆயினும் - அருளினை மிக உடையராயினும், பொருள் இல்லோர்க்கு - கைப் பொருள் இல்லார்க்கு, ஈதல் அஃது இயையாது ஆகுதல் - ஈதலாகிய அச் சிறப்பு இயலாததாதலை, யானும் அறிவென் - யானும் அறிவேன், மன் - அதனாற் பெற்றதென்? 9-26. விரி தார் ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன் - விரிந்த மலர்த் தாரினையும் வெற்றி பொருந்திய முரசினையும் வெல்லும் போரினையுமுடைய பாண்டியனது, மாடம் மூதூர் மதில் புறம் தழீஇ - மாடங்களையுடைய முதிய ஊராய மதுரையின் மதிற் புறத்தினைத் தழுவி, நீடு வெயில் உழந்த - நீண்ட வெப்பத்தால் வருந்திய, குறி இறை கணை கால் - குறிய இறைகளையுடைய திரண்ட அடியினையுடைய கமுகமரத்தின், தொடை அமை பல்மலர் தோடு பொதிந்து யாத்த குடை ஓரன்ன - தொடுத்தல் அமைந்த பல மலர்களின் தொகுதியை மூடிக் கட்டிய குடையினை யொத்த, கோள் அமை எருத்தில் - காய்த்தல் பொருந்திய எருத்தி னிடத்துள்ள, பாளை பற்று இழிந்து ஒழிய - பாளை பற்று நீங்கி ஒழிய, புறம் சேர்பு - புறத்தை அடைந்து, வாள் வடித்தன்ன வயிறு உடைப் பொதிய - வாளை வடித்துவைத்தாற் போன்ற வயிற்றினை யுடைய பொதியின் கண்ணவாய, நாள் உற தோன்றிய நயவரு வனப்பின் - பருவம் உற்றவிடத்து வெளிப்பட்ட இனிமை பொருந்திய அழகினையுடைய, ஆரத்து அன்ன அணி கிளர் புதுப்பூ - ஆரம் போலும் அழகு விளங்கும் புதிய பூக்கள், வார் உறு கவரியின் வண்டு உண விரிய - நீட்சி பொருந்திய கவரியின் கண்ணே வண்டு தேன் உண்ணுமாறு விரிய, முத்தின் அன்ன வெள்வீ தாஅய் - முத்துக் களைப் போன்ற வெள்ளிய பூக்கள் பரந்து, அலகின் அன்ன அரி நிறத்து ஆலி - பலகறையை ஒத்த ஒள்ளிய நிறத்தையுடைய ஆலங்கட்டி போல, நகை நனி வளர்க்கும் சிறப்பின் - மகிழ்ச்சியை மிகுதியும் உண்டாக்கும் சிறப்புடன், தகைமிக - அழகுமிக, பூவொடு வளர்ந்த மூவாப் பசு காய் - பூவொடு வளர்தலுற்ற முற்றாத இளங்காயினது, நீரினும் இனிய ஆகி - நீரைக் காட்டினும் இனிமையுடையவாகி, கூர் எயிற்று அமிழ்தம் ஊறும் செவ்வாய் - கூரிய பற்களிடத்தே அமிழ்தம் ஊறும் சிவந்த வாயினையும், ஒள் தொடி -ஒளி பொருந்திய வளையினையும் உடைய, குறுமகள் கொண்டனம் செலினே - இளையளாய தலைவியை நாம் உடன் கொண்டு செல்லின், 4-9. யானை - களிற்றியானை, தன் கொல் மருப்பு ஓடியக் குத்தி- தனது கொல்லும் கோடு ஒடிந்திடப் பாய்ந்து, சினம் சிறந்து - சினம் மிக்கு, இன்னா வேனில் இன் துணை ஆர - கொடிய வேனிலில் தனது இனிய துணையாய பிடி உண்ணும்படி, முளி சினை யாஅத்து பொளி பிளந்து ஊட்ட - பட்ட கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையைக் கிழித்து ஊட்ட, புலம்பு வீற்றிருந்த - வருத்தம் குடிகொண்டுள்ள, நிலம் பகு வெம் சுரம் - நிலம் பிளந்த வெவ்விய சுரங்களும், நமக்கு அரிய அல்ல - நமக்குச் செல்லற்கு அரியன வல்ல. (முடிபு) நெஞ்சே! ஈதல் பொருளில்லோர்க்கு இயையா தாகுதல் யானும் அறிவேன், மன்; மூவாப் பசுங்காய் நீரினும் இனியவாகிக் கூர் எயிற்று அமிழ்தம் ஊறும் செவ்வாய் ஒண்டொடிக் குறுமகள் கொண்டனம் செலினே, வெம்சுரம் அரிய அல்லமன் நமக்கே. (வி-ரை) இருள் - மயக்கம். புலம்பு வீற்றிருந்த என்பது வேறிடத்தி லில்லாதவாறு துன்பம் மிக்கிருந்த என்றவாறு. கணைக் கால் - திரண்ட காலையுடைய கமுக மரம்; ஆகுபெயர். கமுகின் கோளமை எருத்து எனவும், குடை ஓரன்ன பாளை எனவும் கூட்டுக. தோடு - மிகுதி; தாழை மடலுமாம். கமுகம் பாளை அகத்தே தொடுத்த மாலை போலும் பூக்களை யுடைமையின் தொடையமை பன்மலர்த் தோடுபொதிந் தியாத்த குடையோ ரன்ன பாளை என உவமை கூறப்பட்டது. பாளை, பற்றிழிந்தொழிய என்றது கமுகம் பாளையின் புற மடல் பற்று நீங்கி ஒழிய என்றபடி. பொதி - பீள், கரு; அது புறமடலின் உள்ளே வாள்போலும் வடிவினை யுடையதா யிருத்தலின் வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதி எனப்பட்டது. பொதிய புதுப்பூ எனவும் வனப்பின் புதுப்பூ எனவும் அணிகிளர் புதுப்பூ எனவும் தனித்தனி கூட்டுக. பூவின் கொத்து கவரி போல்வதாகலின் கவரி எனப்பட்டது. புதுப்பூ விரிய என்க. தாஅய் - பரக்க எனத் திரிக்க. பசுங்காய் - தட்ப மிகுதியால் ஆலிபோல் மகிழ்ச்சி விளைக்கும் என்க. கமுகின் முற்றாத பசுங்காயின் நீர் இனிமை மிக்குடையது என்பது, `அங்கருங் காலி சீவி யூறவைத் தமைக்கப் பட்ட செங்களி விராய காயுஞ் செம்பழுக் காயும் தீந்தேன் எங்கணுங் குளிர்த்த இன்னீர் இளம்பசுங் காயும் மூன்றும் தங்களி செய்யக் கூட்டித் தையலார் கைசெய் தாரே.'1 என்பதனால் அறிக. இச் செய்யுளிற் கூறிய பாக்கின் மூன்று நிலையும் மூவேறு பொழுதிற்கு உரியனவாம் என்பது, `பைங்கருங் காலிச் செங்களி அளைஇ நன்பகற் கமைந்த அந்துவர்க் காயும் இருங்கண் மாலைக்குப் பெரும்பழுக் காயும் வைகறைக் கமையக் கைபுனைந் தியற்றிய இன்றேன் அளைஇய இளம்பசுங் காயும்'2 என்னும் பெருங்கதைப் பகுதியாற் பெறப்படும். குறுமகளைக் கொண்டனம் செலின் வெஞ்சுரம் நமக்கு அரிய அல்லமன் என்றமையால், பொருளீட்டுதற் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்வது என்னால் இயல்வதன்று; நீ எங்ஙனம் செல்லுதியோ? எனத் தலைமகன் நெஞ்சினைக் கழறிக் கூறினான் என்க. 336. மருதம் (நயப்புப் பரத்தை இற் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.) குழற்காற் சேம்பின் கொழுமடல் அகலிலைப் பாசிப் பரப்பிற் பறழொடு வதிந்த உண்ணாப் பிணவின் உயக்கஞ் சொலிய நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய் 5. வாளையோ டுழப்பத் துறைகலுழ்ந் தமையின் தெண்கட் டேறல் மாந்தி மகளிர் நுண்செயல் அங்குடம் இரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி யவிழிணர்க் காஞ்சி நீழற் குரவை யயருந் 10. தீம்பெரும் பொய்கைத் துறைகேழ் ஊரன் தேர்தர வந்த நேரிழை மகளிர் ஏசுப என்பவென் நலனே அதுவே பாகன் நெடிதுயிர் வாழ்தல் காய்சினக் கொல்களிற் றியானை நல்கல் மாறே 15. தாமும் பிறரும் உளர்போற் சேறல் முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின் யானவண் வாரா மாறே 1வரினே சுடரொடு திரிதரு நெருஞ்சி போல என்னொடு திரியேன் ஆயின் வென்வேல் 20. மாரி யம்பின் மழைத்தோற் சோழர் வில்லீண்டு குறும்பின் 2 வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின் உடைகவென் நேரிறை முன்கை வீங்கிய வளையே. - பாவைக் கொட்டிலார். (சொ-ள்) 1-12. குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலை- துளை பொருந்திய தண்டினையுடைய சேம்பினது கொழுவிய மடலிலுள்ள அகன்ற இலையுடன் கூடிய, பாசிப் பரப்பில் - பாசியினையுடைய நீர்ப் பரப்பில், பறழொடு வதிந்த உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய - குட்டியுடன் கூடியிருக்கும் உண்ணாமையால் வருந்திய பெண் நாயின் வருத்தத்தை நீக்குதற்கு, நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய் - காலைப் பொழுதிலே இரையினைக் கொணர்தற்கு எழுந்த நீர் நாய், வாளையோடு உழப்ப- வாளையைப் பற்றிப் போர் செய்தலின், துறை கலுழ்ந்தமையின் - நீர்த்துறை கலங்கினமையால், தெண் கள் தேறல் மாந்தி - தெளிந்த கள்ளினைக் குடித்து, மகளிர் - பெண்கள், நுண் செயல் அம் குடம் இரீஇ - நுண்ணிய தொழில் நலம் வாய்ந்த அழகிய குடத்தினை வைத்துவிட்டு, மகிழ்நன் பண்பு இல் பரத்தைமை பாடி - தம் கணவரது நற்பண் பில்லாத பரத்தைமைகளைப் பாடி, அவிழ் இணர் காஞ்சி நீழல் குரவை அயரும் - விரிந்த பூங்கொத்துக்களை யுடைய காஞ்சி மரத்தின் நிழலில் குரவை ஆடுதலைச் செய்யும், தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன் - இனிய பெரிய பொய்கையின் துறை பொருந்திய ஊரையுடைய தலைவனுடைய, தேர் தர வந்த நேர் இழை மகளிர் - தேர்கொண்டு வர வந்த பரத்தையராய நேரிய அணிகளை யணிந்த மகளிர், என்நலன் ஏசுப என்ப - என் அழகினை ஏசுகின்றனர் என்பர்; 12-14. அது - அச்செயல், பாகன் நெடிது உயிர் வாழ்தல் - பாகன் நெடுங்காலம் உயிருடன் வாழ்தல், காய் சினக் கொல் களிற்று யானை நல்கல் மாறே - மிக்க சினத்தினையுடைய கொல்லும் களிற்றியானை அவனைக் கொல்லாது அருள் செய்தலால் ஆவது போலும்; 15-17. தாமும் பிறரும் உளர் போல் சேறல் - அப் பெண்டிரும் பிறரும் சிறப்புளார் போலச் செல்லுதல், முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவில் - முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்து ஆடும் விழாக் காலத்தே, யான் அவண் வாரா மாறே - யான் அவ்விடத்து வாராமையால் ஆயதே; 17-23. வரின் - யான் அவ்விடத்து வரின், சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல - ஞாயிற்றின் செல்கையை நோக்கிச் சுழலும் நெருஞ்சிப் பூப் போல, என்னொடு திரியேன் ஆயின் - அவர்களை யான் செல்லுமிட மெல்லாம் என்னொடு திரியச் செய்வேன், அங்ஙனம் செய்யேன் ஆயின், வென் வேல் மாரி அம்பின் மழைத் தோல் சோழர் - வெற்றி பொருந்திய வேலினையும் மழை போன்ற அம்பினையும் மேகம் போன்ற தோற்கிடுகினையு முடைய சோழரது, வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை - விற்படை நெருங்கிய அரணையுடைய வல்லத்துப் புறத்தேயுள்ள காவற் காட்டின்கண் வந்தடைந்த, ஆரியர் படையின் - ஆரியரது படைபோல, என் நேர் இறை முன்கை வீங்கிய வளை - எனது நேரிய சந்தினையுடைய முன் கையில் திரண்ட வளைகள், உடைக - சிதைந்தொழிவனவாக. (முடிபு) ஊரன் தேர்தரவந்த மகளிர், என் நலன் ஏசுப என்ப; அதுவே பாகன் நெடிதுயிர் வாழ்தல், களிற்றியானை நல்கல்மாறே, தாமும் பிறரும் உளர் போற் சேறல், விழவின் யான் அவண் வாராமாறே; வரினே சுடரொடு திரிதரு நெருஞ்சி போல என்னொடு (திரியச் செய்வேன்) திரியேனாயின், என் முன்கை வீங்கிய வளை சோழர் வல்லத்துப் புற மிளை ஆரியர் படையின் உடைக. (வி-ரை) கட்டேறல் - கள்ளாகிய தேறல் என்க. பண்பின் - பண்பினாலே; முறையாலே என்றுரைத்தலுமாம். `அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்'1 இயல்பினதாகிய யானை, அவனைக் கொல்லாது விட்டிருத்தலே அவன் நெடிது உயிர் வாழ்தற்குக் காரணமாதல் போல, விழவில் யான் அவண் வாராமையே தாமும் பிறரும் உளர்போற் சேறற்குக் காரணமாயிற்று என்றாள். வரின் திரியச் செய்வேன், அங்ஙனம் திரியச் செய்யேனாயின் என விரித் துரைக்க. இற்பரத்தை முதலாயினாரை என்னொடு திரியச் செய்வேன் என்றாளென்க. சோழர் வல்லத்துப் புற மிளை என்க. வல்லத்துப் புற மிளை ஆரியர் படையின் உடைக என்றதனால், சோணாட்டின் கண்ண தாகிய வல்லத்தின் புறத்தே ஒருகால் ஆரியர் படையெடுத்து வந்து தோற்றோடினர் என்னும் வரலாறு பெறப்படுகின்றது. வளை உடைக என்றாளேனும் வளையை உடைப்பேன் என்றாளாகக் கொள்க. (மே-ள்) `புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்'2 என்னுஞ் சூத்திரத்து, மனையோள் ஒத்தலில் தன்னோ ரன்னோர், மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும் என்னும் பகுதிக்கு இச் செய்யுளைக் காட்டி, இதனுள் யானவண் வாரா மாறே எனத் தான் மனையோளைப் போல் இல்லுறைதல் கூறி, ஆண்டுச் செல்லிற் சுடரோடு திரியும் நெருஞ்சி போல ஏனை மகளிரை யான் செல்வுழிச் செல்லும் சேடியர் போலத் திரியும்படி பண்ணிக்கொள்வல் எனக் கூறியவாறு காண்க என்பர் நச். `உயர்ந்ததன் மேற்றேயுள்ளுங் காலை'3 என்னுஞ் சூத்திரத்து, உவமம் உயர்ந்ததாக வேண்டும் எனற்கு, இதனுள் மாரியம்பின் மழைத் தோற் சோழர் என்பதனையும் காட்டி, உவமை யுயர்ச்சி யானே உவமிக்கப்படும் பொருட்குச் சிறப்பு எய்துவித்தவாறு கண்டு கொள்க என்றார் பேரா. 337. பாலை (முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்துவந்த தலைமகன் பின்னும் பொருள் கடை கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.) சாரல் யாஅத்து உயர்சினை குழைத்த மாரி ஈர்ந்தளி ரன்ன மேனிப் பேரமர் மழைக்கண் புலம்புகொண் டொழிய ஈங்குப்பிரிந் துறைதல் இனிதன் றாகலின் 5. அவண தாக பொருளென் றுமணர் கணநிரை யன்ன பல்காற் குறும்பொறைத் தூதொய் பார்ப்பான் மடிவெள் ளோலை படையுடைக் 1கையர் வருதொடர் நோக்கி உண்ணா மருங்குல் இன்னோன் கையது 10. பொன்னா குதலும் உண்டெனக் கொன்னே தடிந்துடன் வீழ்த்த கடுங்கண் மழவர் திறனில் சிதாஅர் வறுமை நோக்கிச் செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக் கொடிவிடு குருதித் தூங்குகுடர் 2கறீஇ 15. வரிமரல் இயவின் ஒருநரி யேற்றை வெண்பரல் இமைக்கும் கண்பறி கவலைக் கள்ளி நீழற் கதறுபு வதிய மழைக்கண் மாறிய வெங்காட் டாரிடை எமியங் கழிதந் தோயே பனியிருட் 20. பெருங்கலி வானந் தலைஇய இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே. - பாலை பாடிய பெருங்கடுங்கோ. (சொ-ள்) 1-5. நெஞ்சே! சாரல் யாஅத்த உயர் சினை மாரி குழைத்த - பக்க மலையின்கண் யா மரத்தின் உயர்ந்த கிளையில் மாரிக் காலத்தே தளிர்த்த, ஈர் தளிர் அன்ன மேனி - குளிர்ந்த தளிரையொத்த மேனியினையும், பேர் அமர் மழை கண் - பெரிய அமரிய குளிர்ந்த கண்களையும் உடைய தலைவி, புலம்பு கொண்டு ஒழிய- தனிமை யுற்றுப் பிரிந்திருக்க, ஈங்குப் பிரிந்து உறைதல் - இவ்விடத்துப் பிரிந்து தங்கியிருத்தல், இனிது அன்று ஆகலின் - இனிய தன்று ஆகலான், அவணது ஆக பொருள் - அவளுள்ள விடத்து இருப்பதே பொருள் ஆவதாக என்றும், 19-21. பனி இருள் பெரு கலி வானம் தலைஇய - நடுக்கத் தைத்தரும் இருளில் பெரிய ஆரவாரமுடைய மழை பெய்தமையால், இரு குளிர் வாடையொடு வருந்துவள் எனவே - பெரிய குளிர் கொண்ட வாடையால் அவள் வருந்துவள் என்றும் கூறி, 5-19. உமணர் கணம் நிரை யன்ன குறும்பொறை - உப்பு வாணிகரது கூட்டமாகச் செல்லும் கழுதை நிரை போன்ற பாறைகளின் வழியே, பல்கால் தூது ஒய் பார்ப்பான் - பலகாலும் தூது செல்லும் பார்ப்பான், மடி வெள் ஓலை - வெள்ளிய ஓலைச்சுருளுடன், வரு திறம் நோக்கி - வருகின்ற இயல்பினை நோக்கி, உண்ணா மருங்குல் இன்னோன் கையது - உண்ணாமையால் வாடிய விலாவினையுடைய இவன் கையில் உள்ளது, பொன் ஆகுதலும் உண்டு என - பொன்னாதலும் கூடும் எனக் கருதி, கொன்னே தடிந்து உடன் வீழ்த்த படையுடைக்கையர் கடுங்கண் மழவர் - பயனின்றி அப்போதே கொன்று வீழ்த்திய கையிற் படையினையுடைய கொடுமையையுடைய மறவர், திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி - உடுக்கும் கூறுபாடு இல்லாத கந்தையை உடுத்திருக்கும் வறுமையைப் பார்த்து, செங்கோல் அம்பினர் கை நொடியா பெயர - குருதியாற் சிவந்த கோலாகிய அம்பினையுடைய அவர்கள் கையை நொடித்துப் புறம் போக, கொடி விடு குருதி தூங்கு குடர் கறீஇ - நீள ஒழுகிய குருதியுடன் தொங்கிக் கிடந்த குடலைக் கடித்து, வரி மரல் இயவில் ஒரு நரி ஏற்றை - வரிகளையுடைய மரலுள்ள நெறியில் ஓர் ஆண் நரி, வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை- வெள்ளிய பரற் கற்கள் மின்னும் கண் ஒளியைக் கவரும் கவர்த்த நெறியின்கண், கள்ளி நீழல் கதறுபு வதிய - கள்ளி நீழற் கண்ணே கூக்குரலிட்டுத் தங்கி யிருக்க, மழை கண் மாறிய வெம் காட்டு ஆர் இடை - மழை பெய்யா தொழிந்த வெப்பமிக்க காட்டு நெறியாய அரிய இடத்தே, எமியம் கழிதந்தோயே - (முன்பு ஒருகால்) யாம் தமியேமாக நீ மீண்டுவந்தா யன்றே. (முடிபு) நெஞ்சே! மழைக்கண் புலம்புகொண் டொழிய ஈங்குப் பிரிந்துறைதல் இனிதன்றாகலின், அவணதாக பொருளெனவும், இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவும் கூறி, மழை கண் மாறிய வெங்காட்டு ஆர் இடை முன்பு ஒருகால் எமியம் கழிதந்தோய். (வி-ரை) தலைவியைப் பிரியாது உறைதலே பொருளாகும் என்னும் கருத்து, `வடமீன்போற் றொழுதேத்த வயங்கிய கற்பினாள், தடமென்றோள் பிரியாமை பொருளாயி னல்லதை'1 என்பதனால் அறியப்படும். அவணதாக பொருள் என்றும், வாடையொடு வருந்துவள் என்றும் கூறிக் கழிதந்தோய் எனக் கூட்டுக. பல்கால் குறும் பொறை - பல கால்கள் போலும் கற்களையுடைய பாறை என்றுமாம். பார்ப்பான் ஓலையுடன் வருதிறம் நோக்கி எனவும், படையுடைக் கையராகிய கடுங்கண் மழவர் எனவும் கூட்டுக. உண்ணா மருங்குல் என்றது பார்ப்பானது இயல்பு கூறியபடி. தம் செய்கையின் பயனின்மையைக் கருதிக் கையை நொடித்துப் பெயர்ந்தனர் என்க. நெஞ்சே! முன்பு அங்ஙனம் வந்தாயாகலின், இப்போது மீட்டும் நின் சொல்லைத் தெளிந்து நின்னுடன் போதரு மாறு எங்ஙனம் எனத் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறினான் என்க. 338. குறிஞ்சி (அல்ல குறிப்பிட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) குன்றோங்கு வைப்பின் நாடுமீக் கூறும் மறங்கெழு தானை அரச ருள்ளும் அறங்கடைப் பிடித்த செங்கோ லுடனமர் மறஞ்சாய்த் தெழுந்த வலனுயர் திணிதோட் 5. பலர்புகழ் திருவிற் பசும்பூட் பாண்டியன் அணங்குடை உயர்நிலைப் பொருப்பிற் கவாஅன் சினையொண் காந்தள் நாறும் நறுநுதல் துணையீர் ஓதி மாஅ யோள்வயின் நுண்கோல் அவிர்தொடி 1வண்புறஞ் சுற்ற 10. முயங்கல் இயையா தாயினும் என்றும் வயவுறு நெஞ்சத் துயவுத்துணை யாக ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும் துன்னரும் துப்பின் வென்வேற் பொறையன் அகலிருங் கானத்துக் கொல்லி போலத் 15. தவாஅ லியரோ நட்பே அவள்வயின் அறாஅ லியரோ தூதே பொறாஅர் 2விண்பெறக் கழித்த திண்பிடி யொள்வாட் புனிற்றான் தரவின் இளையர் பெருமகன் தொகுபோர்ச் சோழன் பொருண்மலி பாக்கத்து 20. வழங்க லானாப் பெருந்துறை முழங்கிரு முந்நீர்த் திரையினும் பலவே. - மதுரைக் கணக்காயனார். (சொ-ள்) நெஞ்சே! 1-10. குன்று ஓங்கு வைப்பின் மீக் கூறும் நாடு - மலைகள் உயர்ந்த இவ்வுலகில் சிறப்பித்துக் கூறும் நாட்டினை யுடைய, மறம்கெழு தானை அரசருள்ளும் - வீரம் மிக்க படை களையுடைய பேரரசர்களுள்ளும், அறம் கடைப் பிடித்த செங் கோலுடன் - அறத்தினைக் கைக் கொண்ட செங்கோ லாட்சியுடன், அமர் மறம் சாய்த்து எழுந்த - பகைவரது போர் செய்யும் தறு கண்மையைக் கெடுத்து வளர்ந்த, வலன் உயர் திணி தோள் - வெற்றி மிக்க திண்ணிய தோளையும், பலர் புகழ் திருவின் - பலராலும் புகழப்படும் திருவினையு முடையோனாகிய, பசும் பூட் பாண்டியன்- பசும் பூட் பாண்டியனுடைய, அணங்கு உடை உயர்நிலைப் பொருப்பின் கவா அன் - தெய்வத்தையுடைய உயர்ந்த நிலையினைப் பொருந்திய பொதியிலின் பக்க மலையிலுள்ள, சினை ஒள் காந்தள் நாறும் - கிளைத்த ஒளி பொருந்திய காந்தட்பூப் போல மணக்கும், நறு நுதல் துணை ஈர் ஓதி மாஅயோள்வயின் - நல்ல நெற்றியினையும் அளவொத்த நீண்ட கூந்தலையுமுடைய மாமை நிறத்தினளாய தலைவியிடத்து, நுண்கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற முயங்கல் - அவளது நுண்ணிய திரண்ட விளங்கும் வளை நமது வளமை பொருந்திய முதுகினைச் சுற்றிக் கொள்ள முயங்குதல், இயையாது ஆயினும் - நமக்குக் கிட்டாதாயினும், 12-14. ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும் - பகைவரது தேயம் பாழ்பட அழிக்கும், துன் அரும் துப்பின் வென்வேல் பொறையன் - பகைவரால் கிட்டுதற்கு அரிய வலியினையுடைய வென்றி பொருந்திய வேலினையுடைய சேரனது, அகல் இரு கானத்துக் கொல்லி போல - அகன்ற கரிய காட்டினையுடைய கொல்லி மலைபோல, 10-11. என்றும் வயவு உறு நெஞ்சத்து உயவு துணையாக - எஞ்ஞான்றும் வேட்கையுற்ற நெஞ்சிற்கு ஓர் உசாத் துணையாக, 15. நட்பு தவா அலியர் - நட்பு கெடாது நிலை பெறுவதாக; 16-21. பொறாஅர் விண் பெற கழித்த திண் பிடி ஒள் வாள் - பகைவர் விண்ணுலகை எய்துமாறு உருவிய திண்ணிய பிடி யினையுடைய ஒளிபொருந்திய வாளையுடைய, புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன் - ஈன்ற அணிமையுடைய பசுக்களைக் கவர்ந்து வரும் வெட்சி வீரர்களுக்குத் தலைவனான, தொகு போர்ச் சோழன் - திரண்ட போரினை மேற்கொண்டு வெல்லும் சோழனது, பொருள் மலி பாக்கத்து வழங்கல் ஆனா - பண்டங்கள் நிறைந்த பாக்கத்தின் கண் சென்று மீளல் அமையாத, முழங்கு இரு முந்நீர் பெருந்துறை திரையினும் பல - முழங்கும் பெரிய கடலின் பெரிய துறையிடத் துள்ளே அலைகளினும் பலவாக, 15-16. அவள் வயின் தூது அறாஅலியர் - அவளிடத்து விடும் தூது ஒழியாது செல்வதாக. (முடிபு) நெஞ்சே! மாயோள்வயின் முயங்கல் இயையா தாயினும் கொல்லி போல நட்புத் தவாலியரோ; முந்நீர்ப் பெருந்துறைத் திரையினும் பல தூது அறாஅலியர். (வி-ரை) எழுந்த தோள் என்க. செங்கோலுடன் திணி தோளையும் திருவினையுமுடைய பாண்டியன் எனக் கூட்டுக. பசும்பூட் பாண்டியன், பெயர். பூணினையும் உடைய பாண்டியன் என்றுமாம். பொருப்பு என்றது பொதியிலை. முயங்கல் இயையாதாயினும் என்றமையால், தலைவன் அல்லகுறிப்பட்டா னென்பது பெற்றாம். நட்பு, நமக்கு அவளொடு உளதாய நட்பு என்க. நெஞ்சத்து உயவுத் துணையாக என்றமையால், அந் நட்பினை நெஞ்சில் நினைதல் மாத்திரையேனும் இன்புறுவேம் என்றும், தூது அறா அலியர் என்றமையால், பலகாலும் தூது செல்லின் ஒரோவழி அவளை முயங்குதலும் இயைவதாம் என்றும் தலைவன் நெஞ்சிற்குக் கூறினான் என்க. மதுரைக் கணக்காயனார் பாடிய இப்பாட்டில் மூவேந்தரும் கூறப்படுவது போலவே, இவர் மகனாராகிய நக்கீரனார் பாடிய `கேள்கே டூன்றவும்' (93) என்னும் அகப்பாட்டில் மூவேந்தரும் கூறப்பட்டிருத்தல் அறிந்து இன்புறற்குரியது. 339. பாலை (போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) வீங்குவிசைப் பிணித்த விரைபரி நெடுந்தேர் நோன்கதிர் சுமந்த ஆழியாழ் மருங்கிற் பாம்பென முடுகுநீர் ஓடக் கூம்பிப் பற்றுவிடு விரலிற் பயறுகாய் ஊழ்ப்ப 5. அற்சிரம் நின்றன்றாற் பொழுதே முற்பட ஆள்வினைக் கெழுந்த அசைவில் உள்ளத்து ஆண்மை வாங்கக் காமந் தட்பக் கவைபடு நெஞ்சங் கட்கண் அகைய இருதலைக் கொள்ளி யிடைநின்று வருந்தி 10. ஒருதலைப் படாஅ உறவி போன்றனம் நோங்கொல் அளியள் தானே யாக்கைக்கு 1உயிரியைந் தன்ன நட்பின் அவ்வுயிர் வாழ்தல் அன்ன காதல் சாதல் அன்ன பிரிவரி யோளே. - 2நரைமுடி நெட்டையார். (சொ-ள்) 1-5. விரைபரி பிணித்த வீங்கு விசை நெடு தேர் - விரைந்த குதிரைகள் பூட்டப் பெற்ற மிக்க விசையையுடைய நெடிய தேரின், நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில் - வலிய ஆரினைக் கொண்ட உருளை ஆழ்ந்து செல்லும் சுவட்டில், பாம்பு என முடுகு நீர் ஓட - பாம்பு போல வேகமாகச் செல்லும் நீர் ஓடவும், கூம்பி பற்று விடு விரலில் பயறு காய் ஊழ்ப்ப - குவிந்து பற்று நீங்கின விரல்கள் போல் பயற்றுச் செடியில் காய்கள் முற்றவும், பொழுது அற்சிரம் நின்றன்று - பொழுது பனிப்பருவமாகப் பொருந்தியது; 5-10. ஆள்வினைக்கு எழுந்த அசைவில் உள்ளத்து ஆண்மை முற்பட வாங்க - தாளாண்மை பற்றி எழுந்த தளர்தலில்லாத நெஞ்சின்கண்ணுள்ள ஆண்மை முன்னே இழுக்கவும், காமம் தட்ப - காமமானது பின்னே நின்று தடுக்கவும், கவைபடு நெஞ்சம் - அவற்றால் இருபாற்பட்ட நெஞ்சமே நாம், கண்கண் அகைய - கணுக்களில் தீப்பற்றி எரிதலின், இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி - இருதலையும் கொள்ளியினை யுடைய ஒரு புழற் றட்டையின் உள்ளே நின்று வருந்தி, ஒருதலைப் படாஅ உறவி போன்றனம் - ஒரு பக்கத்தும் செல்ல இயலாது தடுமாறும் எறும்பினை ஒத்துளேம்; 11-14. யாக்கைக்கு உயிர் இயைந்தன்ன நட்பின் - உடலொடு உயிர் ஒன்றினா லொத்த நட்பினையும், அ உயிர் வாழ்தல் அன்ன காதல் - அவ்வுயிர் இன்புற்று வாழ்தல் போலும் காதலையும் உடைய, சாதல் அன்ன பிரிவு அரியோள் - அதற்குச் சாதல்போலும் துன்பினைத் தரும் பிரிதல் அருமையை உடைய நம் தலைவி, நோம்கொல் - வருந்தி யிருப்பாளோ, அளியள் - மிகவும் இரங்கத்தக்காள். (முடிபு) பொழுது அற்சிரம் நின்றன்றால்; ஆள்வினைக்கு எழுந்த உள்ளத்து ஆண்மை வாங்க, காமம் தட்ப, கவைபடு நெஞ்சமே! இருதலைக் கொள்ளி யிடை நின்று வருந்தி ஒருதலைப் படாஅ உறவி போன்றனம்; நட்பினையும் காதலையும் பிரிதற்கு அருமையையும் உடைய நம் தலைவி நோங்கொல்? அளியள். (வி-ரை) தேர் உருள் கிழித்துச் சென்ற சுவட்டில் பாம்பு போல் நீர் ஓடும் என்ற இக் கருத்து, `நேமி, தண்ணில மருங்கிற் போழ்ந்த வழியுள், நிரைசெல் பாம்பின் விரைபு நீர்முடுக' (324) என முன்னரும் வந்துள்ளமை காண்க. நீர் ஓடப், பயறுகாய் ஊழ்ப்பப் பொழுது அற்சிரம் நின்றன்று என்க. ஆண்மை முற்பட வாங்க என்றமையின் காமம் பின்னின்று தட்ப என்க. செல்லுதல் தவிர்தல் என்ற இரண்டில் ஒன்றிற்படாமையின், கவைபடு நெஞ்சமாயிற்று. நெஞ்சம், விளி. உறவி - எறும்பு. யாக்கைக்கு உயிர் இயைந்தன்ன நட்பு என்றது, ஒருவரை யொருவர் இன்றியமையாத நட்பு என்றபடி. `சாதலின் இன்னாத தில்லை'1 என்பவாகலின் சாதல் அன்ன பிரிவு என்றது சாதல்போலும் இன்னாமையுடைய பிரிவு என்பதாயிற்று. எனவே அவ்வுயிர் வாழ்தல் அன்ன காதல் என்பதற்கு, அவ்வுயிர் இன்புற்று வாழ்தல் போலும் இன்பத்தை நல்கும் காதல் எனப் பொருள் கொள்க. 340. நெய்தல் (பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது.) பன்னாள் எவ்வந் தீரப் பகல்வந்து புன்னையம் பொதும்பின் இன்னிழற் கழிப்பி மாலை மால்கொள நோக்கிப் பண்ணாய்ந்து வலவன் வண்டேர் இயக்க நீயும் 5. செலவுவிருப் புறுதல் ஒழிகதில் அம்ம செல்லா நல்லிசைப் பொலம்பூட் டிரையன் பல்பூங் கானற் பவத்திரி அனவிவள் 1நல்லெழில் இளநலம் தொலைய ஒல்லெனக் கழியே ஓதம் மல்கின்று வழியே 10. வள்ளெயிற் றரவொடு வயமீன் கொட்கும் சென்றோர் மன்ற மான்றின்று பொழுதென நின்றிறத் தவலம் வீட இன்றிவண் சேப்பின் எவனோ பூக்கேழ் புலம்ப பசுமீன் நொடுத்த 2வெண்ணெல்மாத் தயிர்மிதி 15. 3மிதவை மாவார் குநவே நினக்கே வடவர் தந்த வான்கேழ் வட்டம் குடபுல உறுப்பிற் கூட்டுபு நிகழ்த்திய வண்டிமிர் 4நறுஞ்சாந் தணிகுவம் திண்டிமில் எல்லுத்தொழின் மடுத்த வல்வினைப் பரதவர் 20. கூர்வளிக் 5கடுவிசை மண்டலிற் பாய்ந்துடன் கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை தண்கடல் அசைவளி எறிதொறும் வினைவிட்டு முன்றிற் றாழைத் தூங்கும் தெண்கடற் பரப்பினெம் உறைவின் ஊர்க்கே. - நக்கீரர். (சொ-ள்) 13. பூ கேழ் புலம்ப - பூக்கள் பொருந்திய கடற் கரையை யுடைய தலைவனே, 6-12. செல்லா நல்இசை பொலம் பூண் திரையன் - என்றும் கெடாத நல்ல சீர்த்தியினையும் பொற்பூணினையுமுடைய திரையன் என்பானது, பல் பூ கானல் பவத்திரி அன இவள் - பல பூக்களை யுடைய சோலையினையுடைய பவத்திரி எனும் ஊர் போன்ற இவள், நல் எழில் இள நலம் தொலைய - தனது நல்ல அழகு வாய்ந்த இளமைச் செவ்வி தொலையுமாறு, வழி - வழியானது, கழி ஒல் என ஓதம் மல்கின்று - கழி ஒல்லெனும் ஒலியுடன் நீர் பெருகப் பெற்றுளது, வள் எயிற்று அரவொடு வயமீன் கொட்கும் - மேலும் கூரிய பற்களையுடைய பாம்பினொடு சுறாமீன் திரியப்பெறும், பொழுது மன்ற மான்றின்று - பொழுது ஒருதலையாக மயங்கியது, சென்றோர் - இங்ஙனமாகவும் நம் தலைவர் சென்று விட்டனரே, என - என்று கூறி, நின்திறத்து அவலம் வீட - நின்னிடத்துக் கொள்ளும் துன்பம் ஒழிய, 18-24. திண் திமில் எல்லு தொழில் மடுத்த வல் வினை பரதவர் - திண்ணிய படகுடன் சென்று பகலிலே மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட வலிய செயலையுடைய மீன் பிடிப்போர், கூர் வளி கடு விசை மண்டலின் - கடிய காற்றின் மிக்க விசையுடன் செல்லுதற் கண், கோள் சுறா பாய்ந்து உடன் கிழித்த கொடுமுடி நெடுவலை - கொலைத் தொழிலையுடைய சுறா மீன்கள் ஒருங்கே பாய்ந்து கிழித்த வளைந்த முடிகளைக் கொண்ட நீண்ட வலைகள், வினைவிட்டு - தொழில் ஒழிந்து, தண் கடல் அசைவளி எறிதொறும் - குளிர்ந்த கடலினின்று அசைந்துவரும் காற்று வீசுந்தோறும், முன்றில் தாழை தூங்கும் - மனை முற்றங்களிலுள்ள தாழை மரத்தின் மீது கிடந்து அசையா நிற்கும், தெள்கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கு - தெளிந்த கடற் பரப்பினையுடைய எமது உறைதற்கினிய ஊரின்கண், 12-13. இன்று இவண் சேப்பின் எவனோ - நீ இன்று எம்மிடத்தே தங்கிச் செல்லின் வரும் குறை யாது? 14-18. பசு மீன் நொடுத்த வெண் நெல் மா தயிர் மிதி மிதவை - பசிய மீனை விற்று மாற்றிய வெண்ணெல்லின் மாவைத் தயிரிட்டுப் பிசைந்த கூழினை, மா ஆர்குந் - குதிரைகள் உண்பனவாகும், நினக்கு, வடவர் தந்த வான் கேழ் வட்டம் - வட நாட்டிலுள்ளார் கொணர்ந்த வெள்ளிய நிறத்தையுடைய வட்டக் கல்லில், குட புல உறுப்பில் கூட்டுபு நிகழ்த்திய - குடமலையாய பொதியிற் சந்தனக் கட்டையால் பிற மணப் பொருள்களையும் கூட்டி யுண்டாக்கிய, வண்டு இமிர் நறு சாந்து அணிகுவம் - வண்டுகள் ஒலிக்கும் நறிய சாந்தினை அணிவிப்பேம்; 1-5. பல் நாள் எவ்வம் தீர பகல் வந்து - பல நாளும் நினது வருத்தம் நீங்கப் பகற் பொழுதிலே வந்து, புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி - புன்னை மரங்களையுடைய அழகிய சோலையின் இனிய நிழலில் பொழுதைக் கழித்து, மாலை மால் கொள நோக்கி - மாலைப் போழ்து வர அதனை மயக்கம் தோன்றப் பார்த்து, வலவன் பண் ஆய்ந்து வண் தேர் இயக்க - நின் பாகன் தேரினைப் பூட்டுதலை ஆராய்ந்து அழகிய அத் தேரினைச் செலுத்த, நீயும் செலவு விருப்புறுதல் ஒழிக - நீயும் செல்லுதற்கு விரும்புதலை ஒழிவாயாக. (முடிபு) புலம்ப! இவள், தன் நலம் தொலைய, வழியே கழி ஓதம் மல்கின்று; அரவொடு வயமீன் கொட்கும்; பொழுது மன்ற மான்றின்று; சென்றோர்; என நின் திறத்துக் கொள்ளும் அவலம் வீட, எம் உறைவு இன் ஊர்க் கண் இவண் இன்று சேப்பின் எவனோ? மா மிதவை ஆர்குந; நினக்கு நறுஞ் சாந்து அணிகுவம்; ஆதலால் நீயும் செலவு விருப்புறுதல் ஒழிகதில். (வி-ரை) ஒழிகதில்: தில் விழைவின்கண் வந்தது. அம்ம, அசை. இவள் இள நலம் தொலைய நின் திறத்துக் கொள்ளும் அவலம் என விரித்துரைக்க. பசுமீன் நொடுத்த வெண்ணெல் - மீனைக் கொடுத்து அதற்கு மாறாகப்பெற்ற நெல் என்க. வடவர் தந்த வட்டம் - வடவர் வடமலையினின்றும் கொண்டுவந்த வட்டக் கல் என்க. வடமலை யில் உண்டாகிய கல்லும் தென்மலையில் உண்டாகிய சந்தனக் கட்டையும் சிறந்தனவாகப் பண்டையோர் கொண்டிருந்தனர் என்பது, `வடவர் தந் வான்கேழ் வட்டம், தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்ப'1 `வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத், தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக'2 என்பன வற்றான் அறியப்படும். பொதியின்மலை குடமலை எனவும் படுமாகலின், அதனைக் குடபுலம் எனக்கொண்டு அதனிலுண்டாகிய கட்டையை உறுப்பு என்றார். அன்றி, குடபுல உறுப்பு என்பதற்கு யவன தேயத்திலுண் டாகிய விரைக்கு உறுப்பாம் பொருள்கள் என்றலுமாம். `குடதிசை மருங்கின் வெள்ளயிர்'3 என வருவது காண்க. (மே-ள்) `நாற்றமும் தோற்றமும்'4 என்னும் சூத்திரத்து, வேளாண் பெருநெறி வேண்டிய விடத்து என்னும் பகுதிக்கு, இச் செய்யுளைக் காட்டி, இதனுள் தனக்கும் புரவிக்கும் கொடுப்பன கூறித் தடுத்த வாறு காண்க என்பர் நச். 341. பாலை (பிரிவின் கட் டோழிக்குத் தலைமகள் சொல்லியது.) உய்தகை யின்றால் தோழி பைபயக் கோங்குங் கொய்குழை யுற்றன குயிலும் தேம்பாய் மாஅத் தோங்குசினை விளிக்கும் நாடார் காவிரிக் கோடுதோய் மலிர்நிறைத் 5. கழையழி நீத்தம் சாஅய வழிநாள் மழைகழிந் தன்ன மாக்கால் மயங்கறல் பதவுமேயல் அருந்து துளங்கிமில் நல்லேறும் மதவுநடை நாக்கொ டசைவீடப் பருகிக் குறுங்காற் காஞ்சிக் கோதை மெல்லிணர்ப் 10. பொற்றகை நுண்டாது உறைப்பத் தொக்குடன் குப்பை வார்மணல் எக்கர்த் துஞ்சும் யாணர் வேனில் மன்னிது மாணலம் நுகருந் துணையுடை யோர்க்கே. - ஆவூர் மூலங்கிழார். (சொ-ள்) 1-3. தோழி-, கோங்கும் பை பய கொய் குழை உற்றன- கோங்கும் மெல்ல மெல்லக் கொய்யப்படும் தளிர்களை எய்தின, குயிலும் தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும் - குயிலும் தேன் பெருகும் மாமரத்தில் உயர்ந்த கிளையிலிருந்து கூவும்; 4-11. நாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறை - நாடுகள் நிறைதற் கேதுவாய காவிரியின் கரையைப் பொருந்திய மிக்க பெருக்காகிய, கழை அழி நீத்தம் - ஓடக்கோல் மறையும் வெள்ளம், சாஅய வழிநாள் - வற்றிய பின்னாளில், மழை கழிந்தன்ன மா கால் மயங்கு அறல் - மழை பெய்து கழிந்தா லொத்த பெரிய வாய்க்கால் களிற் றங்கிய நீரினை, பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறும் - அறுகம் புல்லாய உணவினைத் தின்ற அசையும் கொண்டையினை யுடைய நல்ல ஏறுகளும், மதவு உடை நா கொடு அசை வீட பருகி - வலிமையுடைய நாவினால் தளர்ச்சி நீங்கக் குடித்து, குறுகால் காஞ்சி கோதை மெல் இணர் பொன் தகை நுண் தாது உறைப்ப - குறிய அடியினையுடைய காஞ்சி மரத்தின் மாலை போன்ற மெல்லிய பூங் கொத்துக்களினின்று உதிரும் பொன்னின் அழகுடைய நுண்ணிய பொடிகள் மேலே உதிர்ந்திட, தொக்கு உடன் குப்பை வார் மணல் எக்கர் துஞ்சும் - ஒருங்கு கூடி நெடிய மணலின் குப்பையாகிய மேட்டிலே துயிலும், 12-13. இது - இங்ஙனமாய இக்காலம்; மாண் நலம் நுகரும் துணையுடையோர்க்கு - சிறந்த இன்பத்தை நுகரும் துணையினைப் பக்கலில் உடையார்க்கு, யாணர் வேனில் - அழகிய வேனிற் பருவமாகும், மன் - அதனாற் பெற்ற தென்? 1. உய்தகை இன்று - துணையைப் பிரிந்துள்ள நாம் உய்யுமாறு இல்லையே. (முடிபு) தோழி! கோங்கும் கொய் குழை யுற்றன; குயிலும் விளிக்கும்; நல்லேறும் அறல் பருகி நுண்தாது உறைப்ப எக்கர்த் துஞ்சும்; இது துணையுடையோர்க்கு யாணர் வேனில் மன்; நாம் உய்தகை இன்று. (வி-ரை) அறல் பருகி எனக் கூட்டுக. நா கொடு - நாவினைக் கொண்டு; நாவினால். துஞ்சும் என்பதனைப் பெயரெச்சமாகக் கொண்டு துஞ்சும் இது என்றுரைத்தலுமாம். யாணர் வேனில் - இன்பத்தைத் தரும் வேனில் என்க. 342. குறிஞ்சி (அல்ல குறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை புணர்ந்தோர் போலப் போற்றுமதி நினக்கியான் கிளைஞன் அல்லனோ நெஞ்சே தெனாஅது வெல்போர்க் கவுரியர் நன்னாட் டுள்ளதை 5. மண்கொள் புற்றத் தருப்புழை திறப்பின் ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன் ஏவல் இளையர் தலைவன் மேவார் அருங்குறும் பெறிந்த ஆற்றலொடு பருந்துபடப் பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கைக் 10. கெடாஅ நல்லிசைத் தென்னன் தொடாஅ நீரிழி மருங்கிற் கல்லளைக் கரந்தவவ் வரையர மகளிரின் அரியள் அவ்வரி அல்குல் அணையாக் காலே. - மதுரைக் கணக்காயனார். (சொ-ள்) 3-4. நெஞ்சே-, தெனாஅது - தெற்கின் கண்ணே யுள்ளதாகிய, வெல் போர் கவுரியர் நல் நாட்டு உள்ளது - போர் வெல்லும் பாண்டியரது நல்ல நாட்டிலுள்ளதாய, 5-13. மண் கொள் புற்றத்து - மண்ணாலாய புற்றினையுடைய, அருப்பு உழை திறப்பின் - காட்டரணின் இடத்தைத் திறத்தலோடு, ஆ கொள் மூதூர் கள்வர் பெருமகன் - பகைவர் ஆக்களைக் கவர்ந்து கொள்ளும் பழைய ஊரினராய கள்வர்கட்கு முதல்வனும், ஏவல் இளையர் தலைவன் - ஏவுதலைச் செய்யும் வீரர்கட்குத் தலைவனும், மேவார் அரு குறும்பு எறிந்த ஆற்றலொடு - பகைவரது அரிய அரண்களை அழித்த வலிமையுடன், பருந்துபட பல் செரு கடந்த - பருந்துகள் வந்து கூடப் பகைவரது பல போரையும் வென்ற, செல் உறழ் தட கை - இடியுடன் மாறுபடும் பெரிய கையினையும், கெடாஅ நல் இசை - என்றும் கெடாத நல்ல சீர்த்தியினையுமுடை யானும் ஆகிய, தென்னன் - பாண்டியனது, தொடாஅ நீர் இழி மருங்கில் - தோண்டப்படாத அருவி விழும் பொய்கையினை யுடைய, கல்அளை - மலையின் குகையில், கரந்த - மறைந்த, வரையர மகளிரின் - வரையர மகளிர்போல, அரியள் - அரியளாய, அ வரி அல்குல் - அழகிய வரிகளையுடையளாய தலைவி, அணையாக்கால் - நம்மை அணையப் பெறாதவிடத்து, 1-3. ஒறுப்ப ஓவலை - உன்னை வன் சொற் கூறி ஒறுக்கவும் ஒழிவாய் அல்லை, நிறுப்ப நில்லலை - இன்சொற் கூறி நிறுத்தவும் நிற்பாய் அல்லை, நினக்கு யான் கிளைஞன் அல்லனோ - உனக்கு யான் உறவினன் அல்லனோ, புணர்ந்தோர்போல போற்றுமதி - உள்ளம் ஒன்றிய நண்பரைப்போல யான் கூறுவதனைப் போற்று வாயாக. (முடிபு) நெஞ்சே! வரையர மகளிரின் அரியள் அவ்வரி அல்குல் அணையாக்கால், ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை; நினக்கு யான் கிளைஞன் அல்லனோ; புணர்ந்தோர்போலப் போற்றுமதி. கள்வர் பெருமகனும் இளைஞர் தலைவனும் தடக்கையும் நல்லிசையும் உடையோனுமாகிய தென்னன் என்க. (வி-ரை) ஒறுத்தல் - வன்சொற் கூறிக் கழறுதல். மேல் ஒறுப்ப என்றமையால் நிறுப்ப என்பதற்கு இன்சொற் கூறி நிறுத்தவும் என்க. இவ்விருதிறத்தானும் அறிவுறுத்தல் கிளைஞர் செயலாதலின், நினக்கு யான் கிளைஞன் அல்லனோ என்றான். அல்ல குறிப்பட்ட தலைமகன் தலைவி பெறுதற்கரியள் ஆகலின் ஆண்டுச் செல்லுதல் ஒழிக ஈங்கே நில் என்று உரைத்தும் நெஞ்சு கேளாது செல்லுதலின் அதனை நோக்கி இங்ஙனம் கூறினான் என்க. தெனாஅது - குறிப்புமுற்று எச்சமாகியது. உள்ளதை - ஐ சாரியை. நன்னாட்டு உள்ளதாகிய கல் அளை என்று கூட்டுக. அருப்பம் - அருப்பு என்றாயது. அருப்பம் - காட்டரண். மேவார் - வேளிரும் வேந்தருமாகிய பகைவர். வேளிரது குறும்பு எறிந்த என்றும், வேந்தரது பல் செருக் கடந்த என்றும் கொள்க. வேளிர் - குறுநில மன்னர். தொடா மருங்கு - தோண்டப்படாத இடம்; இயற்கையாய நீர்நிலை; இது பொய்கை எனப்படும். 343. பாலை (தலைமகன் இடைச்சுரத்து மீளக் கருதிய நெஞ்சினைக் கழறிப் போயது.) வாங்கமை புரையும் வீங்கிறைப் பணைத்தோள் சில்சுணங் கணிந்த பல்பூண் மென்முலை நல்லெழில் ஆகம் புல்லுதல் நயந்து 1மரங்கோள் உமண்மகன் பெயரும் பருதிப் 5. புன்றலை சிதைத்த வன்றலை நடுகற் கண்ணி வாடிய மண்ணா மருங்குற் கூருளி குயின்ற கோடுமாய் எழுத்தவ் ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும் கண்பொரி கவலைய கானத் தாங்கண் 10. நனந்தலை யாஅத் தந்தளிர்ப் பெருஞ்சினை இல்போல் நீழற் செல்வெயில் ஒழிமார் நெடுஞ்செவிக் கழுதைக் குறுங்கால் ஏற்றைப் புறநிறை பண்டத்துப் பொறையசாஅக் 2களைந்த பெயர்படை கொள்ளார்க் குயவுத்துணை யாகி 15. உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்துநின்று உள்ளினை வாழியென் நெஞ்சே கள்ளின் மகிழின் மகிழ்ந்த அரிமதர் மழைக்கண் சின்மொழிப் பொலிந்த 1துவர்வாய்ப் பன்மாண் பேதையிற் 2பிரிந்த நீயே. - மதுரை மருத னிளநாகனார். (சொ-ள்) 16-19. என் நெஞ்சே வாழி-, கள்ளின் மகிழின் மகிழ்ந்த- கள்ளால் ஆகிய மகிழ்வுபோல மகிழ்தற்கு ஏதுவாகிய, அரி மதர் மழைகண் - செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்களையும், சில் மொழிப் பொலிந்த துவர் வாய் - சிலவாய மொழிகளாற் பொலிவுற்ற பவளம்போன்ற வாயினையும், பல் மாண் - பலவாய மாண்பு களையும் உடைய, பேதையின் பிரிந்த நீ - நம் தலைவியைப் பிரிந்துவந்த நீ, 4-15. மரம் கோள் உமண் மகன் பெயரும் பருதி - வண்டியினைக் கொண்ட உப்பு வாணிகனது பெயர்ந்து செல்லும் உருளின், புன் தலை - பொலிவில்லாத பூண், சிதைத்த வன் தலை நடுகல் - சிதையச் செய்த வலிய பாறையிலுள்ள நடுகல்லின், கண்ணி வாடிய மண்ணா மருங்குல் - இடப்பெற்ற கண்ணி வாடப்பெற்றதும் நீராட்டப் பெறாததுமாகிய இடத்தில், கூர் உளி குயின்ற கோடுமாய் எழுத்து - கூரிய உளியால் இயற்றப்பெற்ற கீற்றுக்கள் மறைந்த எழுத்துக்கள், அ ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் - அவ் வழியிலே செல்லும் புதியர்க்கு வேறு பொருளினவாகப் பிறழ்ந்து காணப்படும், கண் பொரி கவலைய கானத்து ஆங்கண் - இடங்கள் பொரிந்த கவர்த்த நெறிகளையுடைய காடாகிய அங்குள்ள, நனந்தலை யாஅத்து அம் தளிர் பெரு சினை - அகன்ற இடத்தின்கண்ணே யா மரத்தின் அழகிய தளிர்களையுடைய பெரிய கிளைகளின், இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார் - இல்லின் கண் இருப்பது போன்ற நிழலில் தாம் வந்த வெயிலின் வெப்பம் ஒழிதற்கு, நெடு செவி கழுதை குறுகால் ஏற்றை - நீண்ட செவியினையும் குறிய காலினையுமுடைய ஆண் கழுதையின், புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த - புறத்தே நிறைந்துள்ள பண்டங்களின் பாரத்தாலாய தளர்வினைப் போக்கியவராகி, பெயர்படை கொள்ளார்க்கு - மீண்டும் புறப்பாடு செய்யாதிருந்தார்க்கு, உயவு துணையாகி - உசாவியிருக்கும் வழித்துணையாகி, உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் - மிக்க முயற்சியினை விரும்பி நின்றனை, (ஆயினும் இப்போது), 1-3. வாங்கு அமை புரையும் வீங்கு இறை பணை தோள் - வளைந்த மூங்கிலை ஒக்கும் மிக்க இறையினையுடைய பெருத்த தோளிளையும், சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை - சிலவாய தேமலை அணிந்த பல பூண்களையுடைய மெத்தென்ற முலையினையுமுடைய தலைவியின், நல் எழில் ஆகம் புல்லுதல் நயந்து - நல்ல அழகிய ஆகத்தினைத் தழுவுதலை விரும்பி, 15-16. பெயர்ந்து நின்று உள்ளினை - மீண்டு நின்று இம்முயற்சியினைக் கைவிட நினைத்துளாய்; இது தகுமா? (முடிபு) என் நெஞ்சே! வாழி! பேதையிற் பிரிந்த நீ கானத்து ஆங்கண் உயர்ந்த ஆள்வினைபுரிந்தோய் ஆயினும், இப்போது, மென்முலை ஆகம் புல்லுதல் நயந்து பெயர்ந்து நின்று உள்ளினை; இது தகுமா? (வி-ரை) மரம் கோள் : மரம் என்பது அதனாலாய வண்டியைக் குறித்தது; மரக்கலத்தைக் குறித்தல்போல. அது மரக் கலத்தைக் குறித்தல். `பெருங் கடல் நீந்திய மரம் வலியுறுக்கும்'1 `மரத்தாரிம் மாணாக் குடிப் பிறந்தார்'2 `இல்லை மரம் போக்கிக் கூலி கொண்டார்'3 என்பவற்றான் அறியப்படும். பருதி - வண்டியின் உருள். பயம் - பொருள். பெயர்படை - பெயர்பு அடை; பெயர் தலைப் பொருந்தல். தலைவி உசாத்துணை யின்றி வருந்த அவளைப் பிரிந்து, சுரத்திலே செல்லும் பண்ட வாணிகர்க்கு உசாத் துணையாகிப் பெரிய முயற்சியை மேற்கொண்ட நீ இப்பொழுது இடைச் சுரத்தே மீண்டு நின்று தலைவியை நினைப்பது என்னை? எனத் தலைவன் நெஞ்சினைக் கழறினான் என்க. 344. முல்லை (வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.) வளமழை பொழிந்த வானிறக் களரி உளர்தரு தண்வளி உறுதொறும் நிலவெனத் தொகுமுகை விரிந்த முடக்காற் பிடவின் வையேர் வாலெயிற் றொண்ணுதல் மகளிர் 5. கைமாண் தோளி கடுப்பப் பையென மயிலினம் பயிலும் மரம்பயில் கானம் எல்லிடை யுறாஅ வளவை வல்லே 4கழலொலி நாவில் தெண்மணி கறங்க 5நிழலொலிப் பன்ன நிமிர்பரிப் புரவி 10. வயக்குறு கொடிஞ்சி பொலிய வள்பாய்ந்து இயக்குமதி வாழியோ கையுடை வலவ பசப்புறு படரட வருந்திய நயப்பின் காதலி நகைமுகம் பெறவே. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் 1 மள்ளனார். (சொ-ள்) 11-13. கை உடை வலவ - தேர் ஊர்தலில் கை தேர்ந்த பாகனே! வாழி-!, பசப்பு உறு படர் அட வருந்திய - பசலை உற்ற துன்பம் வருத்த வருந்திய, நயப்பு இன் காதலி - அன்பு மிக்க இனிய காதலியின், நகை முகம் பெற - நகையுடன் கூடிய முகத்தினை அடைய, 1-6. வள மழை பொழிந்த - வளந்தரும் மழை சொரிந்த, வால் நிற களரி - வெள்ளிய நிறத்தினையுடைய களர் நிலமாகிய காட்டில், உளர்தரு தண் வளி உறுதொறும் - வீசும் குளிர்ந்த காற்று மிகுந் தொறும், நிலவு என தொகு முகை விரிந்த முட கால் பிடவின் - நிலவொளி என்னுமாறு தொக்க அரும்புகள் விரிந்த வளைந்த அடியினையுடைய பிடா மரத்தின் கண்ணே, வை ஏர் வால் எயிற்று ஒள் நுதல் மகளிர் கை மாண் தோளி கடுப்ப - கூரிய அழகிய வெள்ளிய பற்களையும் ஒளி தங்கிய நெற்றியினையுமுடைய மகளிரது ஒழுங்கு மாட்சிமைப்பட்ட தோளி என்னும் விளை யாட்டை யொப்ப, பை என மயில் இனம் பயிலும் மரம் பயில் கானம் - மெல்லென மயிற் கூட்டங்கள் இயலும் மரங்கள் அடர்ந்த காட்டு நெறியில், 7. எல் இடை உறா அளவை - இருள் இடைப்படா முன்னரே, 7-11. வல்லே - விரைந்து, கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க - கழலாகிய ஒலிக்கும் நாவினையுடைய தெளிந்த மணி ஒலிக்க, நிழல் ஒலிப்பு அன்ன நிமிர் பரிப் புரவி - ஒளியின் தழைத்தலை யொத்த நிமிர்ந்த செலவினையுடைய குதிரைகளை, வள்பு ஆய்ந்து - கடிவாளத்தினை ஆய்ந்து செலுத்தி, வயக்கு உறு கொடிஞ்சி பொலிய - விளக்கமுறும் கொடிஞ்சி பொலிவுற்றுக் காண இவர்ந்து, இயக்குமதி - தேரினைச் செலுத்துவாயாக. (முடிபு) வலவ! வாழி! காதலி நகைமுகம் பெற, கானம் எல் இடை உறா அளவை, புரவி வள்பு ஆய்ந்து கொடிஞ்சி பொலிய (இவர்ந்து தேரினை) இயக்குமதி. (வி-ரை) களரி - களர் நிலம், பிடவின் கண் மயிலினம் பயிலும் கானம் என்க. தோளி மகளிர் விளையாட்டுள் ஒன்று. இது பல்வரிக் கூத்துள் ஒன்றாதலைச் சிலப்பதிகார அரங்கேற்று காதை உரையான் அறிக. தோளை வீசி ஆடுதலின் தோளி எனப்பட்டது. கை மாண் - கை வீசுதல் மாட்சியுற்ற என்றுமாம். திருவாசகத்திற் கூறப்பட்ட தோணோக்கம் என்பதும் இதுவேபோலும். கார்காலத்தில் பிடவின் மீது மயில்கள் உவகையுடன் உலாவுதலுக்கு ஒண்ணுதல் மகளிரது தோள் வீச்சு உவமம் ஆயிற்று. 345. பாலை (தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) விசும்புதளி பொழிந்து வெம்மை 1நீங்கித் தண்பதம் படுதல் செல்கெனப் பன்மாண் நாஞ்செல விழைந்தன மாக ஓங்குபுகழ்க் கானமர் செல்வி அருளலின் வெண்காற் 5. பல்படைப் புரவி எய்திய தொல்லிசை நுணங்குநுண் பனுவற் புலவன் பாடிய இனமழை தவழும் ஏழிற் குன்றத்துக் கருங்கால் வேங்கைச் செம்பூம் பிணையல் ஐதேந் தல்குல் யாமணிந் துவக்குஞ் 10. சின்னாள் கழிக என்று முன்னாள் நம்மொடு பொய்த்தனர் ஆயினுந் தம்மொடு திருந்துவேல் இளையர் சுரும்புண மலைமார் மாமுறி ஈன்று மரக்கொம் பகைப்ப உறைகழிந் துலந்த பின்றைப் பொறைய 15. சிறுவெள் ளருவித் துவலையின் மலர்ந்த கருங்கால் நுணவின் பெருஞ்சினை வான்பூச் செம்மணற் சிறுநெறி கம்மென வரிப்பக் காடுகவின் பெறுக தோழி ஆடுவளிக்கு ஒல்குநிலை இற்றி ஒருதனி நெடுவீழ் 20. கல்கண் சீக்கும் அத்தம் அல்குவெயில் நீழல் அசைந்தனர் செலவே. - குடவாயிற் கீரத்தனார். (சொ-ள்) 18. தோழி-, 1-3. விசும்பு தளி பொழிந்து - வானம் துளியைச் சொரிந்து, வெம்மை நீங்கி - வெப்பம் கழிந்து, தண் பதம் படுதல் - குளிர்ந்த நிலைமை எய்துதலின், செல்க என - எம்மையும் உடன்கொண்டு செல்வாயாக என்று கூறி, நாம் பல் மாண் செலவிழைந்தனம் ஆக - நாம் பலமுறையும் உடன் செல்ல விரும்பி வேண்டினேமாக, 3-11. ஓங்கு புகழ் கான் அமர் செல்வி - மிக்க புகழ் வாய்ந்த கொற்றவை, அருளலின் - அருள் கூர்ந்து அளித்தலின், வெண்கால் பல் படை புரவி எய்திய - வெள்ளிய காலினையும் பல படையினை யும் உடைய குதிரைகளை அடைந்த, தொல் இசை நுணங்கு நுண் பனுவல் புலவன் பாடிய - பழமையான புகழினையுடைய மிக நுண்ணிய செய்யுட்களை இயற்றிய புலவனாற் பாடப்பெற்ற, இனம் மழை தவழும் ஏழில் குன்றத்து - கூட்டமாய மேகங்கள் தவழும் ஏழில் எனும் குன்றத்தின்கண்ணுள்ள, கரு கால் வேங்கை செம் பூ பிணையல் - கரிய அடியினையுடைய வேங்கை மரத்தின் சிவந்த பூக்களாலாய மாலையை, ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் - அழகியதாய உயர்ந்த அல்குலில் யாம் அணிந்து மகிழும் பருவமாய, சில் நாள் கழிக என்று - சில நாள் கழிவதாக என்று, முன் நாள் நம்மொடு பொய்த்தனர் ஆயினும் - முற்காலத்தே நம்பால் பொய் கூறிச் சென்றுவிட்டாராயினும், 18-21. ஆடு வளிக்கு ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் - அசையும் காற்றினால் தளரும் நிலை வாய்ந்த இற்றி மரத்தின் ஒன்றாகித் தனித்த நீண்ட விழுது, கல் கண் சீக்கும் அத்தம் - மலையின் இடத்தினைத் துடைக்கும் சுர நெறியில், அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செல - பொருந்திய வெயிற்காக நிழலின்கண் தங்கின ராகிச் செலற்கு, 11-18. தம்மொடு திருந்து வேல் இளையர் - தம்முடனே திருந்திய வேலினையுடைய ஏவலாளரும், சுரும்பு உண மலைமார் - வண்டுகள் உண்ணும்படி தரித்துக்கோடற்கு, மா முறி ஈன்று மரக்கொம்பு அகைப்ப - சிறந்த தளிர்களை ஈன்று மரத்தின் கொம்புகள் தளிர்க்கு மாறு, உறை கழிந்து உலந்த பின்றை - மழை பெய்து நீங்கிய பின்பு, பொறைய சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த - குன்றுகளினிடத் தவாய சிறிய வெள்ளிய அருவிகளின் நீர்த் துளியால் மலர்ந்த, கரு கால் நுணவின் பெரு சினை வான் பூ - கரிய அடியினையுடைய நுணா மரத்தின் பெரிய கிளைகளிற் பூத்த வெள்ளிய பூக்கள், செம்மணல் சிறு நெறி கம் என வரிப்ப - சிவந்த மணலையுடைய சிறிய வழிகளிலே கம் மென்று மணக்குமாறு உதிர்ந்து அழகு செய, காடு கவின் பெறுக - காடு அழகு பெறுவதாக. (முடிபு) தோழி! பன் மாண் நாம் செல விழைந்தனமாக, வேங்கைப் பூம் பிணையல் யாம் அணிந்து உவக்கும் சின்னாள் கழிக என்று முன்னாள் பொய்த்தனராயினும், அத்தம் நிழல் அசைந்தனர் செல, மா முறி ஈன்று மரக்கொம்பு அகைப்ப, நுணவின் வான்பூ சிறு நெறி கம்மென வரிப்பக், காடு கவின் பெறுக. (வி-ரை) படுதலின் உடன் கொண்டு செல்கென விரித்துரைக்க. `கானமர் செல்வி அருளலின்..... புரவி எய்திய..... புலவன் பாடிய ஏழிற் குன்றம்' என்பதனால், ஏழிற் குன்றத்தைப் பாடிய சிறந்த புலவன் ஒருவனுக்குக் கானமர் செல்வி குதிரை அளித்ததொரு வரலாறு பெறப்படுகின்றது. படை - குதிரைக்கலனை, ஏழிற் குன்றம் - நன்னன் என்பானது; மேல் கடற் பக்கத்தது. தம்மொடு இளையர் மலைமார் - தாமும் இளையரும் மலைதற்கு என்க. தலைவர் இப்பொழுது நம்மைப் பொய்த்து அகன்றனராயினும் பன்னாளும் நமக்கு இன்பம் விளைத்தவராகலின், அவர் செல்லும் நெறி நிழலில் இளைப்பாறிச் செல்லுதற்குக் காடு கவின் பெறுவதாக எனத் தோழியை நோக்கித் தலைவி கூறினாள் என்க. 346. மருதம் (தோழி தலைமகற்கு வாயின் மறுத்தது.) நகைநன் றம்ம தானே இறைமிசை மாரிச் சுதையின் ஈர்ம்புறத் தன்ன கூரற் கொக்கின் குறும்பறைச் சேவல் வெள்ளி வெண்டோ டன்ன கயல்குறித்துக் 5. கள்ளார் உவகைக் கலிமகிழ் உழவர் காஞ்சியங் குறுந்தறி குத்தித் தீஞ்சுவை மென்கழைக் கரும்பின் நன்பல மிடைந்து பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி வருந்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை 10. மீதழி கடுநீர் நோக்கிப் பைப்பயப் பார்வல் இருக்கும் பயங்கேழ் ஊர யாமது பேணின்றோ இலமே நீநின் பண்ணமை நல்யாழ்ப் பாணனொடு விசிபிணி மண்ணார் முழவின் கண்ணதிர்ந் தியம்ப 15. மகிழ்துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி எம்மனை வாரா யாகி முன்னாள் நும்மனைச் சேர்ந்த ஞான்றை யம்மனைக் குறுந்தொடி மடந்தை உவந்தனள் நெடுந்தேர் இழையணி யானைப் பழையன் மாறன் 20. மாடமலி மறுகிற் கூடல் ஆங்கண் வெள்ளத் தானையொடு 1வேறுபுலத் திறுத்த கிள்ளி வளவன் நல்லமர் சாஅய்க் கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி ஏதின் மன்னர் ஊர்கொளக் 25. கோதை மார்பன் உவகையிற் பெரிதே. - நக்கீரர். (சொ-ள்) 1-11. மாரி சுதையின் இறைமிசை ஈர் புறத்து அன்ன - மாரிக்காலத்தே இறப்பின் மேலுள்ள சுதை பூசிய குளிர்ந்த மேலிடத்தையொத்த, கூரல் குறும் பறை கொக்கின் சேவல் - இறகினையுடைய குறுகக் குறுகப் பறக்கும் கொக்கின் சேவலானது, வெள்ளி வெண் தோடு அன்ன கயல் குறித்து - வெள்ளியாலாய வெள்ளிய இதழ் போன்ற கயல் மீனைப் பெறல் கருதி, கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர் - கள்ளினையுண்ட மகிழ்வாலாய மிக்க செருக்கினைக் கொண்ட உழவர், காஞ்சி குறு தறி குத்தி - காஞ்சி மரத்தின் குறிய துண்டுகளை நட்டு, தீம் சுவை மெல் கழை கரும்பின் நல் பல மிடைந்து - இனிய சுவையுடைய மெல்லிய தண்டினை யுடைய கரும்பின் சிறந்த பல கழிகளைக் கட்டிக் குறுக்கே வைத்து அடைத்து, பெரு செய் நெல்லின் பசு அவல் பொத்தி - பெரிய நெற்பயிரையுடைய செய்யாகிய பசிய பள்ளங்களில் நீரைத் தேக்கி, வருந்திக் கொண்ட வல்வாய்க் கொடு சிறை - வருத்தமுற்று இயற்றிய வலிய இடத்தினையுடைய வளைந்த அணையின், மீது அழி கடு நீர் நோக்கி - மேலே தேங்கி வழியும் கடிய நீரினைப் பார்த்து, பை பய பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர - மெல்லமெல்லச் சென்று நோக்கியிருக்கும் பயன் பொருந்திய ஊரினை யுடையவனே, 12-17. நீ நின் பண் அமை நல்யாழ் பாணனொடு - நீ நினது பண்ணின் திறம் அமைந்த நல்ல யாழினையுடைய பாணனுடன், விசிபிணி மண்ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப - இறுகிய கட்டினையுடைய மார்ச்சனை அமைந்த முழவின் கண்கள் முழங்கி ஒலிக்க, மகிழ்துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி - மகிழ்ச்சியுற்ற நினக்குத் துணையாகிய சுற்றத்துடன் கள்ளுண்டு, எம் மனை வாராய் ஆகி - எமது மனையின்கண் வாரா தொழிந்து, முன் நாள் - முன்னை நாளில், நும் மனை சேர்ந்த ஞான்றை - நுமது மனையாய அப் பரத்தை இல்லின் கண் சேர்ந்திருந்த போழ்து, 17-25. அம் மனை குறு தொடி மடந்தை - அம்மனையிலுள்ள சிறிய தொடியினையணிந்த நின் பரத்தை, நெடு தேர் இழைஅணி யானை பழையன் மாறன் - நீண்ட தேரினையும் இழையை அணிந்த யானையினையுமுடைய பழையன் மாறன் என்பானை, மாடம் மலி மறுகின் கூடல் ஆங்கண் - மாடங்கள் மிக்க தெருக்களையுடைய கூடலாகிய அங்கே, வெள்ளம் தானையொடு வேறுபுலத்து இறுத்த - மிக்க சேனையுடன் வேற்றுப்புலத்தே போர் செய வந்து தங்கியிருந்த, கிள்ளி வளவன் நல் அமர் சாஅய் - கிள்ளி வளவன் நல்ல போரின்கண் சாய்த்து, கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி - கடிய செலவினையுடைய குதிரைகளுடன் பல யானைகளையும் பற்றிக் கொண்டு, ஏதில் மன்னர் ஊர் கொள - பகை மன்னரது ஊரினைப் பற்றிக் கொள்ள, கோதை மார்பன் உவகையின் பெரிது - கோதை மார்பன் என்னும் சேரன் எய்திய மகிழ்வினும் பெரிதாக, உவந்தனள் - மகிழ்ந்தனள் அன்றோ. 12. யாம் அது பேணின்றோ இலம் - யாங்கள் அதனைக் கருதியது இலம்; 1. நகை நன்று அம்ம - அங்ஙனமாகவும் நீ மறுப்பது மிக்க நகையை உண்டாக்குவதாகும். (முடிபு) பயம் கேழ் ஊர! நீ நின் பாணனொடு முழவின் கண் இயம்ப மகிழ்துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி எம் மனை வாராயாகி நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம்மனைக் குறுந்தொடி மடந்தை, கோதைமார்பன் உவகையிற் பெரிது உவந்தன ளன்றோ! யாம் அதனைப் பேணின்றோ இலம். நகை நன்று அம்ம. (வி-ரை) கூரல் - சிறகு. சேவல் கயல் குறித்துக் கொடுஞ் சிறை மீதழி கடுநீர் நோக்கிப் பார்வலிருக்கும் என்க. பார்வல் இருத்தல் - பதுங்கிப் பார்த்திருத்தல். கரும்பினை மிடைந்து என்றது மருத நிலத்தின் வளமிகுதி கூறியவாறு. நெல்லின் செய்யாகிய அவல் என்க. சிறைமீது வழியும் நீரில் கயல் மீன்கள் ஏறி வருமாகலின், கொக்கின் சேவல் அதனை நோக்கியிருக்கும் என்க. பழையன் மாறன் - மோகூரிலிருந்த ஒரு குறுநில மன்னன்; பாண்டியன் படைத் தலைவன் கிள்ளி வளவன் பழையன் மாறனைக் கூடற்கண்ணே அமரில் சாய்த்துப் புரவியொடு களிறு பல வவ்வி ஊர்கொள என்க. இப் பழையன் மாறனைக் கூடலையாண்ட பேரரசனாகக் கருது வாரும் உளர். (இராகவையங்கார் `தமிழ் வரலாறு' பக்கம் (51) காண்க.) குறுந்தொடி மடந்தை உவந்தனள், யாம் அது பேணின்று இலம், அங்ஙனமாகவும், யாம் வேறு யாரையும் அறியேம் என நீ கூறுதல் பெரிதும் நகை விளைவிக்கின்றது எனத் தோழி தலைவனை மிகக் கழறித் தலைவியின் ஊடல் நீங்குமாறு கூறினாளென்க. (மே-ள்) `பெறற்கரும் பெரும் பொருள் முடிந்தபின் வந்த' 1 என்னுஞ் சூத்திரத்து, `பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி, இழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும்' என்னும் பகுதிக்கண், `பரத்தையர் மனைக்கண் தங்கி வந்து அகனகர் புகுதாது புறத்திருந்த தலைவனை மிகக் கழறிச் சில மொழிகளைக் கூறி, இதனானே தலைவி மனத்தின்கண் ஊடல் நீங்கும் தன்மை உளதாக்கிக் கூட்டும்' என்றுரைத்து அதற்கு இச் செய்யுளைக் காட்டினர் நச். (உ-றை) கொக்கின் சேவல் கயல் குறித்துப் பார்வல் இருக்கும் என்றது தலைவன் பரத்தையரை நோக்கியிருப்பன் என்றபடி. 347. பாலை (தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) தோளுந் தொல்கவின் தொலைய நாளும் நலங்கவர் பசலை நல்கின்று நலியச் சால்பெருந் தானைச் சேர லாதன் மால்கடல் ஓட்டிக் கடம்பறுத் தியற்றிய 5. பண்ணமை முரசின் கண்ணதிர்ந் தன்ன கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி அம்பல் மூதூர் அலர்நமக் கொழியச் சென்றன ராயினுஞ் செய்வினை அவர்க்கே வாய்க்கதில் வாழி தோழி வாயாது 10. மழைகரந் தொளித்த கழைதிரங் கடுக்கத்து ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் குவவடி வெண்கோட் டியானை முழக்கிசை வெரீஇக் கன்றொழித் தோடிய புன்றலை மடப்பிடி கைதலை வைத்த மையல் விதுப்பொடு 15. கெடுமகப் பெண்டிரிற் றேரும் நெடுமர மருங்கின் மலையிறந் தோரே. - மாமூலனார். (சொ-ள்) 9-16. தோழி-, வாழி-, வாயாது மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து - மழை பெய்யாது மறைந்து ஒளித்தமையால் மூங்கில்கள் வாடிய பக்க மலையில், ஒள்கேழ் வய புலி பாய்ந்தென - ஒள்ளிய நிறமுடைய வலிய புலி பாய்ந்ததாக, குவவு அடி வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ - திரண்ட அடியினையும் வெள்ளிய கொம்பினையும் உடைய களிறு முழக்கிய ஒலியினைக் கேட்டு அஞ்சி, கன்று ஒழித்து ஓடிய புல் தலை மட பிடி - தன் கன்றினை விட்டு ஓடிய புல்லென்ற தலையினையுடைய இளைய பிடியானை, கை தலை வைத்த மையல் விதுப்பொடு - கையைத் தலைமீது வைத்துக்கொண்ட மயக்கம் தங்கிய விரைவுடன், கெடு மக பெண்டிரின் தேரும் - தம் மகவினைக் காணா தொழிந்த பெண்டிர் போல அக் கன்றினைத் தேடித் திரியும், நெடு மர மருங்கின் மலை இறந்தோர் - நீண்ட மரங்களையுடைய பக்கத்தினையுடைய மலையைக் கடந்து சென்றவராய நம் தலைவர், 1-2. தோளும் தொல் கவின் தொலைய - தோள்கள் பழைய அழகு கெடவும், நாளும் நலம் கவர் பசலை நல்கு இன்று நலிய - ஒவ்வொரு நாளும் அழகினைக் கவர்ந்துகொள்ளும் பசலையானது அருளுதலின்றி வருத்தவும், 3-8. சால் பெரு தானைச் சேரலாதன் - நிறைந்த பெரிய சேனையினையுடைய நெடுஞ்சேரலாதன் என்பான், மால் கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய - பெரிய கடலின்கண் பகைவர் களை ஓட்டி அவர்தம் காவன் மரமாய கடம்பினை அறுத்துச் செய்த, பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன - பண்ணுதல் அமைந்த முரசினது கண் முழங்கினாற்போன்ற, மூதூர் கௌவை தூற்றும் வெவ்வாய்ச் சேரி அம்பல் அலர் - மூதூரின்கண் பழியினைத் தூற்றும் கொடிய வாயினையுடைய சேரிப் பெண்டிருடைய அம்பலும் அலரும், நமக்கு ஒழிய - நம்மிடத்தே தங்கியிருக்கவும், சென்றனர் ஆயினும் - நம்மைப் பிரிந்து சென்றார் ஆயினும், 8-9. அவர்க்குச் செய்வினை வாய்க்க - அவர்க்குச் செய்யும் வினை கை கூடுவதாக. (முடிபு) தோழி! நெடு மர மருங்கின் மலையிறந்தோர், தோள் கவின் தொலைய, பசலை நலிய, அம்பல் அலர் நமக்கு ஒழியச் சென்றனராயினும், அவர்க்குச் செய்வினை வாய்க்க தில். (வி-ரை) தோளும் என்பதிலுள்ள உம்மையைத் தொலையவும் என மாறியும். நலிய, ஒழிய என்புழி உம்மை விரித்தும் உரைக்க. சேரலாதன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் அரசன். அவன் மேல்கடற்கண்ணே பகைவரை ஓட்டி அவரது கடம்பினைத் தடிந்து முரசியற்றினான் என்பது பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்தால் அறியப்படும். இந்நூலுள்ளே. `வலம்படு முரசிற் சேரலாதன், முந்நீ ரோட்டிக் கடம்பறுத்து'1 என முன் வந்திருத்தலும் காண்க. கவ்வை தூற்றுதலே இயல்பாகவுடைய வெவ்வாய் என்க. அம்பலும் அலரும் என்க. அம்பலாகிய அலர் என்றுமாம். வாய்க்க தில்; தில் விழைவின்கண் வந்தது. 348. குறிஞ்சி (தலைமகன் 2சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லெடுப்பத் தலைமகள் சொல்லியது.) என்னா வதுகொல் தானே முன்றில் தேன்தேர் சுவைய திரளரை மாஅத்துக் கோடைக் கூழ்த்த கமழ்நறுந் தீங்கனி பயிர்ப்புறு பலவின் எதிர்ச்சுளை யளைஇ 5. இறாலொடு கலந்த வண்டுமூ சரியல் நெடுங்கண் ஆடமைப் பழுநிக் கடுந்திறற் பாப்புக்கடுப் பன்ன தோப்பி வான்கோட்டுக் கடவுள் ஓங்குவரைக் கோக்கிக் குறுவர் முறித்தழை மகளிர் மடுப்ப மாந்தி 10. அடுக்கல் ஏனல் இரும்புனம் மறந்துழி யானை வவ்வின 1தினையென நோனாது இளையரும் முதியருங் கிளையுடன் குழீஇச் சிலையாய்ந்து திரிதரும் நாடன் நிலையா நன்மொழி தேறிய நெஞ்சே. - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார். (சொ-ள்) 1-10. முன்றில் - முன்றிலின்கண்ணுள்ள, தேன் தேர் சுவைய - தேன் எனத்தகும் சுவையினவாகிய, திரள் அரை மாத்துக் கோடைக்கு ஊழ்த்த கமழ் நறு தீம் கனி - திரண்ட அடியினையு டைய மாமரத்தின் கோடைக்காலத்தே முதிர்ந்த நன் மணங் கமழும் இனிய கனிகளுடன், பயிர்ப்பு உறு பலவின் எதிர் சுளை அளைஇ - பிசினையுற்ற பலவினது ஒளி பொருந்திய சுளைகளையிட்டு, இறாலொடு கலந்த - தேனுடன் கூட்டியாக்கிய, வண்டு மூசு அரியல் - வண்டு மொய்க்கும் அரியலாகிய, நெடு கண் ஆடு அமை பழுநி - அசையும் மூங்கிலின் நீண்ட கணுவிடையுள்ள குழாயில் நெடி திருந்து முதிர்தலின், கடுதிறல் பாப்பு கடுப்பு அன்ன தோப்பி - கடிய வேகம் கொண்ட பாம்பினது வெகுட்சியையொத்த கள்ளினை, வான் கோட்டுக் கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி - உயர்ந்த சிமையத்தை யுடைய தெய்வம் உறையும் உயர்ந்த மலைக்குப் படைத்துப் பின், முறித் தழை மகளிர் மடுப்ப - தளிராலாய தழையுடை யணிந்த மகளிர் உண்பிக்க, குறவர் மாந்தி - புனங் காக்கும் குறவர் அதனை உண்டு, அடுக்கல் ஏனல் இரும்புனம் மறந்துழி - பக்க மலையிலுள்ள பெரிய தினைப்புனங்காவலை மறந்தவிடத்து. 11-14. யானை தினை வவ்வின என - யானைகள் தினைப் புனத்தைக் கவர்ந்துண்டனவாக, நோனாது - அதனைப் பொறாது, இளையரும் முதியரும் கிளைஉடன் குழீஇ - இளையரும் முதியருமாய சுற்றமெலாம் ஒருங்கே கூடி, சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் - வில்லை ஆராய்ந்து கொண்டு திரியும் நாட்டை யுடையோனாகிய நம் தலைவனது, நிலையா நல்மொழி தேறிய நெஞ்சே - உறுதியல்லாத இனிய சொல்லை மெய்யெனத் தெளிந்த நெஞ்சமே, 1. என் ஆவது கொல் - இனி நமக்கு என்ன தீங்கு உறுமோ. (முடிபு) நாடன் நிலையா நன்மொழி தேறிய நெஞ்சே! என் ஆவது கொல். தோப்பி மகளிர் மடுப்பக் குறவர் மாந்திப் புனம் மறந்துழி, தினை யானை வவ்வின என, கிளையுடன் குழீஇச் சிலை ஆய்ந்து திரிதரும் நாடு என்க. (வி-ரை) தேன் தேர் சுவை - தேனோ என ஆராயும் சுவை. எதிர்ச்சுளை - சுவை மிக்க சுளை என்றுமாம். மதுவின் களிப்பு மிகுதிக்குப் பாம்பின் வெகுளியையும், பாம்பு தேள் என்பவற்றின் நஞ்சின் வேகத்தையும் உவமை கூறுவர், `பாம்பு வெகுண் டன்ன தேறல்'1 `தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்'2 என்பன காண்க. அரியலாகிய தோப்பி என்க. மாந்தி அம் மயக்கத்தால் மறந்துழி என விரித்துரைக்க. 349. பாலை (தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) அரம்போழ் அவ்வளை செறிந்த முன்கை வரைந்துதாம் பிணித்த தொல்கவின் தொலைய எவனாய்ந் தனர்கொல் தோழி ஞெமன்ன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி 5. உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே உரன்மலி உள்ளமொடு முனைபாழ் ஆக அருங்குறும் பெறிந்த பெருங்கல வெறுக்கை சூழாது சுரக்கும் நன்னன் நன்னாட்டு ஏழிற் குன்றத்துக் கவாஅற் 3கேழ்கொளத் 10. திருந்தரை நிவந்த கருங்கால் வேங்கை எரிமருள் கவளம் மாந்திக் களிறுதன் வரிநுதல் வைத்த வலிதேம்பு தடக்கை கல்லூர் பாம்பிற் றோன்றுஞ் சொல்பெயர் தேஎத்த சுரனிறந் தோரே. - மாமூலனார். (சொ-ள்) 3-14. தோழி-, ஞெமன்ன் தெரிகோல் அன்ன - பொருளின் அளவை அறியும் கருவியாய துலாக்கோலையொத்த, செயிர்தீர் செம்மொழி - குற்றமற்ற மெய்ம்மொழியினையுடைய னாகிய, உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே - வறுமையால் அழிந்த சுற்றத்துடன் பாணர் முதலியோர் செல்லின், உரன் மலி உள்ளமொடு - ஊக்கம் மிக்க நெஞ்சத்துடன், முனைபாழ் ஆக - மாற்றார் போர்முனை பாழ்பட, அரு குறும்பு எறிந்த - அவரது அரிய அரணைத் தொலைத்துக் கொண்ட, பெரு கல வெறுக்கை - விலை மிக்க அணிகலன் முதலாய செல்வங்களை, சூழாது சுரக்கும் - அப்பாடுநர் தகுதி முதலிய ஆராயாது மிக அளிக்கும், நன்னன் நல் நாட்டு - நன்னன் என்பானது நல்ல நாட்டின்கண்ணுள்ள, ஏழில் குன்றத்துக் கவாஅன் - ஏழில் என்னும் மலைச்சாரலில், கேழ்கொள - நன்னிறம் பொருந்த, திருந்து அரை நிவந்த - செவ்விதாய அடிமரம் உயர்ந்த, கருங்கால் வேங்கை - கரிய அடியினையுடைய வேங்கை மரத்தின், எரி மருள் கவளம் மாந்தி - தீயை யொத்த பூக்களாய உணவினை உண்டு, களிறு - ஆண் யானை, தன் வரிநுதல் வைத்த வலி தேம்பு தட கை - தனது வரிகள் தங்கிய நெற்றியில் வைத்த வலிமை குன்றிய பெரிய கை, கல் ஊர் பாம்பில் தோன்றும் - குன்றத்தே ஏறும் பாம்பு போலத் தோன்றும், சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோர் - மொழி வேறுபட்ட தேயத்திடத்தவாகிய சுரநெறியைக் கடந்து சென்றோர், 1-3. அரம் போழ் அ வளை செறிந்த முன் கை - அரத்தாற் பிளக்கப்பெற்ற அழகிய வளைகள் செறிந்த முன் கையினை, தாம் வரைந்து பிணித்த - தாம் வரைந்துகொண்டு பற்றியதாலாய, தொல் கவின் தொலைய - பழைய அழகுகெட, எவன் ஆய்ந்தனர் - என்ன பொருளைக் கருதினரோ? (முடிபு) தோழி! சுரன் இறந்தோர், தொல் கவின் தொலைய எவன் ஆய்ந்தனர்? (வி-ரை) பிணித்த - பற்றிய. முன் கையைப் பற்றி வரைந்த என மாறுக. வரைந்த தொல்கவின் - மணந்தமையால் அஞ்ஞான்று எய்திய அழகு. கைப்பற்றி வரையும் வழக்கினை, `நேரிறை முன்கை பற்றி நுமர்தர, நாடறி நன்மணம் அயர்கம்'1 என்பதனால் அறிக. ஞெமன்கோல் எனக் கூட்டுக. தெரிதல் - பொருள்களை ஆராய்ந்து அறிதல். செம்மொழியையுடைய நன்னன் எனவும், சூழாது சுரக்கும் நன்னன் எனவும் தனித்தனி இயையும். களிறு சுரத்தில், வேறு தக்க கவளம் கிடைக்கப் பெறாமையால், வேங்கைப் பூவை உண்டு பசி தணியாது வலி குன்றியிருக்கும் என்க. 350. நெய்தல் (பகற்குறி வந்து நீங்குந் தலைமகற்குத் தோழி சொல்லியது.) கழியே, சிறுகுர னெய்தலொடு காவி கூம்ப எறிதிரை யோதந் தரலா னாதே துறையே, மருங்கிற் போகிய மாக்கவை மருப்பின் இருஞ்சேற் றீரளை அலவன் நிவப்ப 5. வழங்குநர் இன்மையிற் பாடான் றன்றே கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி வடிமணி நெடுந்தேர் பூண ஏவாது ஏந்தெழின் மழைக்கண் இவள்குறை யாகச் சேர்ந்தனை சென்மோ பெருநீர்ச் சேர்ப்ப 10. இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான்றிமிற் பரதவர் ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதருங் குவவுமணல் நெடுங்கோட் டாங்கண் 15. உவக்காண் தோன்றுமெஞ் சிறுநல் லூரே. - சேந்தன் கண்ணனார். (சொ-ள்) 9. பெரு நீர்ச் சேர்ப்ப - பெரிய கடற்கரையையுடைய தலைவனே! 1-5. கழியே சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப - கழியிடத்தே சிறிய பூங்கொத்துக்களையுடைய நெய்தற் பூவும் கருங்குவளைப் பூவும் குவிய, ஓதம் எறி திரை தரல் ஆனாது - கடல் வீசும் திரையைத் தருதல் அமையாது, துறையே - துறை, மருங்கில் போகிய மா கவை மருப்பின் - பக்கத்தே நீண்ட பெரிய கவர்த்த கோட்டினையுடைய, இரு சேற்று ஈர் அளை அலவன் - கரிய சேற்றின்கண் ணுள்ள ஈரமுடைய வளையிலிருக்கும் ஞெண்டு, நிவப்ப - மேலே வெளிப்பட, வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்று - செல்வோர் இல்லாமையால் ஒலி அடங்கியது, 10-15. இலங்கு இரு பரப்பின் - விளங்கும் பெரிய கடற் பரப்பில், எறி சுறா நீக்கி - எறியும் சுறா மீனை ஒதுக்கி, வலம்புரி மூழ்கிய - வலம்புரியின் முத்தினை மூழ்கியெடுத்த, வான் திமில் பரதவர் - பெரிய படகினையுடைய பரதவர், ஒலி தலைப் பணிலம் கல் என ஆர்ப்ப - ஒலியைத் தன்னிடத்தேயுடைய சங்குகள் கல்லென ஆர்க்கும்படி, கலிகெழு கொற்கை எதிர்கொள - ஆரவார மிக்க கொற்கையோர் எதிர்கொள்ளுமாறு, இழிதரும் - படகினின்று இறங்கும், குவவு மணல் நெடு கோட்டு ஆங்கண் - திரண்ட மணலை யுடைய நீண்ட கரையாய அவ்விடத்தே, எம் சிறு நல் ஊர் உவக் காண் தோன்றும் - எமது சிறிய நல்ல ஊர் உங்கே தோன்றாநிற்கும், காண்பாயாக; 6-9. கொடு நுகம் நுழைந்த கணை கால் அத்திரி - வளைந்த நுகத்திற் பூட்டப் புக்க திரண்ட காலினையுடைய கோவேறு கழுதையை, வடி மணி நெடு தேர் பூண ஏவாது - வடித்த மணியினையுடைய நீண்ட தேரினிற் பூணும்படி நின் பாகற்கு ஆணை செய்யாது, ஏந்து எழில் மழை கண் இவள் குறையாக - மிக்க அழகு பொருந்திய குளிர்ந்த கண்ணினையுடைய இவள் காரியமாகச், சேர்ந்தனை சென்மோ - இன்றிரவு இவ்வூரில் தங்கிச் செல்வாயாக. (முடிபு) சேர்ப்ப! கழியே திரை ஓதம் தரல் ஆனாது, துறையே வழங்குநர் இன்மையின் பாடான்றன்று, எம் சிறு நல் ஊர் உவக்காண் தோன்றும். அத்திரி நெடுந்தேர் பூண ஏவாது இவள் குறையாகச் சேர்ந்தனை சென்மோ. (வி-ரை) கழியிலே திரை ஓதம் தரல் ஆனாது, துறை பாடான்றன்று என்பன, பகற்பொழுது கழிந்தமையை உணர்த்துவ ஆயின. நெய்தல் நிலத்துப் போதரும் தலைவன் அத்திரி ஊர்ந்து வருதல் உண்டென்பது, `கழிச்சுறா எறிந்த புட்டாள் அத்திரி, நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ'1 என்பதனாற் பெறப்படும். ஈண்டு, அத்திரி பூண்ட தேர் ஊர்தல் கூறப்பட்டது. அத்திரி தேர் பூணப் பாகனை ஏவாது என விரித்துரைக்க. குறை - முடிக்கப்படும் காரியம். வலம்புரி மூழ்கிய - வலம்புரிச் சங்கினை மூழ்கி எடுத்த என்றுமாம். பரதவர் ஆர்ப்ப இழிதரும் நெடுங்கோட் டாங்கண் ஊர் தோன்றும் என்க. 351. பாலை (பொருண்முற்றி மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) வேற்றுநாட் டுறையுள் விருப்புறப் பேணிப் பெறலருங் கேளிர் பின்வந்து விடுப்பப் பொருளகப் படுத்த புகன்மலி நெஞ்சமொடு குறைவினை முடித்த நிறைவின் இயக்கம் 5. அறிவுறூஉங் கொல்லோ தானே கதிர்தெறக் கழலிலை யுகுத்த கால்பொரு தாழ்சினை அழலகைந் தன்ன அங்குழைப் பொதும்பிற் புழல்வீ யிருப்பைப் புன்காட் டத்தம் மறுதர லுள்ளமொடு குறுகத் தோற்றிய 10. செய்குறி ஆழி வைகறோ றெண்ணி எழுதுசுவர் 2நனைந்த அழுதுவார் மழைக்கண் விலங்கிவீழ் அரிப்பனி பொலங்குழைத் தெறிப்பத் திருந்திழை முன்கை அணலசைத் தூன்றி இருந்தணை மீது 3பொருந்துழிக் கிடக்கை 15. வருந்துதோட் பூசல் களையு மருந்தென உள்ளுதொறு படூஉம் பல்லி புள்ளுத்தொழு துறைவி செவிமுத லானே. - பொருந்தில் இளங்கீரனார். (சொ-ள்) நெஞ்சே! 1-4. வேற்றுநாட்டு உறையுள் விருப்பு உற பேணி - வேறு நாட்டிற் சென்று தங்குதலை விருப்பம் மிகக் குறிக்கொண்டு, பெறல் அரும் கேளிர் பின்வந்து விடுப்ப- பெறுதற் கரிய சுற்றத்தார் பின் வந்து விடைதரப் போந்து, பொருள் அகப் படுத்த புகல்மலி நெஞ்சமொடு - பொருளை ஈட்டிய விருப்புமிக்க நெஞ்சினுடன், குறைவினை முடித்த நிறைவுஇன் இயக்கம் - முடிக்கப்படும் வினையைச் செய்து முடித்தமையால் ஆகிய நிறைவுடன் கூடிய இனிய செலவினை, 5-9. கதிர் தெற - ஞாயிற்றின் கதிர் வெதுப்ப, கழல்இலை உகுத்த கால்பொரு தாழ்சினை - கழன்ற இலைகளை உதிர்த்த காற்று அலைக்கும் தாழ்ந்த கிளைகளில், அழல் அகைந்தன்ன அம் குழை பொதும்பில் - தீ கப்பு விட்டாலொத்த அழகிய தளிர்களையுடைய மரச் செறிவில், புழல் வீ இருப்பை புல் காட்டு அத்தம் - உட்டுளை பொருந்திய பூக்களையுடைய பொலிவற்ற இருப்பை மரங்களை யுடைய காட்டு நெறியில், மறுதரல் உள்ளமொடு குறுக - யான் மீளும் எண்ணமுடையேனாகி வந்து கொண்டிருக்கவும், 9-17. தோற்றிய செய்குறி ஆழி - சுழித்த செய்குறியாய வட்டத்தை, வைகல்தோறு எண்ணி - நாள்தோறும் எண்ணி, எழுது சுவர் - அவை எழுதப்பட்ட சுவர், நனைந்த - நனைதற்கு ஏதுவாய, அழுது வார் மழைக்கண் விலங்கி வீழ் அரிப் பனி - அழுதலால் நீண்ட குளிர்ந்த கண்களிலிருந்து விலகி விழும் ஐதாகிய நீரானது, பொலம் குழை தெறிப்ப - காதிலணிந்த பொற் குழையிற் றெறித்துவிழ, திருந்து இழை முன்கை அணல் அசைத்து ஊன்றி - திருந்திய அணி களையுடைய முன்கையைக் கவுளில் பொருந்தவைத்து, அணைமீது இருந்து - அணையின்மீது இருந்து, கிடக்கை பொருந்துழி - பின் படுக்கையிற் கிடத்தல் பொருந்திய விடத்து, வருந்து தோள் பூசல் களையும் மருந்து என - வருந்தும் தோளின் வருத்தத்தைப் போக்கும் மருந்து இதுஎன, உள்ளுதொறு படூஉம் பல்லி - நினைக்குந்தோறும் ஒலிக்கும் பல்லியானது, புள்ளுத் தொழுது உறைவி - நிமித்தத்தைப் பரவியிருக்கும் தலைவியின், செவிமுதலான - காதின் அகத்தே, 5. அறிவுறூஉம் கொல்லோ - அறிவுறுத்துமோ. (முடிபு) நெஞ்சே! குறைவினை முடித்த நிறைவு இன் இயக்கத்தினை, புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே, பல்லி, பூசல் களையும் மருந்தென அறிவு றூஉங் கொல்லோ. (வி-ரை) கேளிர் - தோழி முதலாயினார். அகப்படுத்த, முடித்த என்னும் பெயரெச்சங்கள் காரணப் பொருளன. குறை - முடிக்கப் படும் பொருள். இதனைப் `பயக்குறை யில்லைத் தாம் வாழும் நாளே'1 என்பதன் உரையால் அறிக. நிறைவு - உள்ள நிறைவு. அறிவுறூ உங்கொல் - அறிவுறுத்துங்கொல், பிறவினை மறுதரல் உள்ளமொடு குறுகத் தோற்றிய - மீளும் உள்ளத்துடன் குறுகுதலைத் தெரிவித்தற்கு என்றுமாம்; இதற்குத் தோற்றிய என்பது செய்யிய என்னும் வினையெச்சமாகும். அணைமீது இருந்து கிடக்கை பொருந்துழி என மாறுக. உள்ளுதொறு படூஉம் பல்லி என்றது, பல்லியின் இயற்கை கூறியபடி. புள்ளுத் தொழுது உறைவி, சுட்டு; அவள் என்றபடி. 352. குறிஞ்சி (வரைந்து எய்திய பின்றை மணமனைக்கட் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉமாம்.) 1முடவுமுதிர் பலவின் குடமருள் பெரும்பழம் பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன் பாடிமிழ் அருவிப் பாறை மருங்கின் ஆடுமயில் முன்ன தாகக் கோடியர் 5. விழவுகொள் மூதூர் விறலி பின்றை முழவன் போல அகப்படத் தழீஇ இன்றுணைப் பயிருங் குன்ற நாடன் குடிநன்கு உடையன் கூடுநர்ப் பிரியலன் கெடுநா மொழியலன் அன்பினன் எனநீ 10. வல்ல கூறி வாய்வதிற் புணர்த்தோய் நல்லை காணில் காதலந் 2தோழி கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி நல்லிசை நிறுத்த நயவரு பனுவல் தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன் 15. எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும் புதுவது புனைந்த திறத்தினும் வதுவை நாளினும் இனியனால் எமக்கே. - 3அஞ்சியத்தை மகள் நாகையார். (சொ-ள்) 11. காதல் அம் தோழி - காதல் மிக்க அழகிய தோழியே, காணில் நல்லை - ஆராயுமிடத்து நீ மிகவும் நன்மையையுடையை; 1-7. முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரு பழம் - வளைதல் மிக்க பலாமரத்தின் குடம் போன்ற பெரிய பழத்தினை, பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன் - பல சுற்றத்திற்குத் தலைவனாகிய கல்லாத ஆண்குரங்கு, பாடு இமிழ் அருவி பாறை மருங்கின் - மிக ஒலிக்கும் அருவியையுடைய கற்பாறை யிடத்தே, ஆடும் மயில் முன்னது ஆக- ஆடுகின்ற மயில் ஒன்று தனக்கு முன்னே நிற்க, கோடியர் விழவு கொள் மூதூர் விறலி பின்றை - கூத்தர் விழாவினைக் கொண்டாடும் முதிய ஊரில் விறலியின் பின்பு நிற்கும், முழவன் போல அகப்படத் தழீஇ - முழவு இயம்புவோன் போலத் தன்னகத்தே பொருந்தத் தழுவிக்கொண்டு, இன் துணை பயிரும் குன்ற நாடன் - இனிய துணையாய பெண் குரங்கினை அழைக்கும் மலைநாட்டையுடைய நம் தலைவன், 8-10. குடி நன்கு உடையன் - உயர் குடிப்பிறப்பு உடையவன், கூடுநர் பிரியலன் - தன்னுடன் கூடுகின்றவர்களைப் பிரியான், நா கெடு மொழியலன் -நாவால் கெடுமொழிகளைக் கூறுவானல்லன், அன்பினன் - அன்பு உடையவன், என நீ வல்ல கூறி வாய்வதிற் புணர்த்தோய் - என்று நீ அவன் சிறப்புக்களைக் கூறிப் பொருத்த முறக் கூட்டிவைத்தனை, அங்ஙனமே, 12-17. கடும் பரி புரவி நெடு தேர் அஞ்சி - கடிய வேகத்தினை யுடைய குதிரைகள் பூண்ட நீண்ட தேரினையுடைய அதியமானஞ்சி யின், தொல் இசை நிறீஇய உரைசால் பாண் மகன் - பழைய புகழை நிலைபெறச் செய்த புகழ்சான்ற பாண் மகனானவன், நல் இசை நிறுத்த நயவரு பனுவல் - நல்ல இசைகளை வரையறை செய்த இனிமை மிக்க நூலின், எண்ணு முறை நிறுத்த - எண்ணின் முறைப்படி இயற்றிய, பண்ணினுள்ளும் - பண்ணைக் காட்டினும், புதுவது புனைந்த திறத்தினும் - அவன் புதுமையாக இயற்றிய திறத்தைக் காட்டினும், வதுவை நாளினும் - வதுவை செய்த நாளினும், எமக்கு இனியன் - நமக்கு இனியனாக வுள்ளான். (முடிபு) காதல்அம் தோழி! குன்றநாடன் குடிநன்கு உடையன், கூடுநர்ப் பிரியலன், கெடுநா மொழியலன், அன்பினன் எனநீ வல்ல கூறிப் புணர்த்தோய். ஆகலின், நல்லை. அஞ்சியின் பாண்மகன் பண்ணினுள்ளும் திறத்தினும் வதுவை நாளினும் எமக்கு இனியன். (வி-ரை) கடுவன் பலவின் பெரும் பழத்தை முழவன் போலத் தழுவிக்கொண்டு துணையை அழைக்கும் குன்றம் என்க. ஆடுகின்ற மயிலின் பின்னே கடுவன் பலாப் பழத்தைத் தழுவி நிற்பது, ஆடுகின்ற விறலியின் பின்பு முழவினையுடையவன் நிற்பது போலும் என உவமை கொள்க. விறலி - விறல்பட ஆடுபவள். குடிப்பிறந்தார் இயல்பிலே பல நலங்களும் உடையராவர் ஆகலின், குடிநன்குடையன் என அதனை முற்கூறினாள். கெடு மொழி - பொய்ம்மொழி. அஞ்சியைப் பாடி அவனது தொல் இசையை நிறுத்திய பாண்மகன் என்க. நயவரு பனுவல் என்றது இசைத் தமிழ் நூலை. எண்ணுமுறை நிறுத்த - அலகு முறைப்படி அமைத்த. அலகு - சுருதி. பண்களுள்ளே எழு நரம்பான் இயன்றது பண் எனவும், ஆறு, ஐந்து, நான்கு எனக் குறைந்த நரம்புகளான் இயன்றது திறம் எனவும் படும் என்பது, `நிறை நரம்பிற்றே பண்ணெனலாகும்' `குறை நரம்பிற்றே திறமெனப்படுமே' என்னும் நூற்பாக்களான் அறியப்படும். இனி புதுவது புனைந்த திறத்தினும் என்றதற்கு, நின் புதுமையுறக் கை செய்த வகையினும் என்றுரைத்தலும் ஆம். (உ-றை) பல்கிளைத் தலைவனாகிய கடுவன் பலாப் பழத்தைத் தழுவித் துணையை அழைக்கும் குன்றநாடன் என்றது, தலைவன் பல சுற்றத்தையும் பேணித், தலைவிபால் மிக்க அன்புடையனாக இருப்பன் என்பது உணர்த்தியவாறு. (மே-ள்) `அவனறி வாற்ற வறியு மாகலின்'1 என்னும் தலைவி கூற் றில், நிறுத்தற்கண்ணும் என்னும் பகுதியில், தலைவனது பண்பினைத் தோழி கூறியவாற்றால் தான் நிறுத்துக் கூறுதற் கண்ணும் என்றுரைத்து, இச் செய்யுளைக் காட்டினர் இளம். 353. பாலை (முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருண்முற்றி வந்திருந்த காலத்து மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது.) ஆள்வினைப் பிரிதலும் உண்டோ பிரியினும் கேளினி வாழிய நெஞ்சே நாளும் கனவுக் கழிந்தனைய வாகி நனவின் நாளது செலவும் மூப்பினது வரவும் 5. அரிதுபெறு சிறப்பிற் காமத் தியற்கையும் இந்நிலை அறியா யாயினுஞ் செந்நிலை அமையா டங்கழை தீண்டிக் கல்லென ஞெமையிலை உதிர்த்த எரிவாய்க் கோடை நெடுவெண் களரி நீறுமுகந்து சுழலக் 10. கடுவெயில் திருகிய வேனில் வெங்காட்டு உயங்குநடை மடப்பிணை தழீஇய வயங்குபொறி அறுகோட் டெழிற்கலை அறுகயம் நோக்கித் தெண்ணீர் வேட்ட சிறுமையிற் றழைமறந்து உண்ணீர் இன்மையின் ஒல்குவன தளர 15. மரநிழல் அற்ற இயவிற் சுரனிறந்து உள்ளுவை யல்லையோ மற்றே உள்ளிய விருந்தொழி வறியாப் பெருந்தண் பந்தர் வருந்தி வருநர் ஓம்பித் தண்ணெனத் தாதுதுகள் உதிர்த்த தாழையங் கூந்தல் 20. வீழிதழ் அலரி மெல்லகஞ் சேர்த்தி மகிழணி முறுவல் மாண்ட சேக்கை நம்மொடு நன்மொழி நவிலும் பொம்மல் ஓதிப் புனையிழை குணனே. - மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் 2 மள்ளனார். (சொ-ள்) 1-2. நெஞ்சே-, வாழிய-, ஆள்வினைப் பிரிதலும் உண்டோ - பொருளீட்டும் முயற்சியால் நாம் இனிப் பிரிதலும் கூடுமோ, பிரியினும் இனி கேள் - அன்றிப் பிரிவதாயினும் இப்பொழுது யான் கூறுவதனைக் கேள்; 2-6. நாளும் கனவு கழிந்தனைய வாகி - நாடோறும் கனவிலே பொருள்கள் தோன்றி மறைந்த அத் தன்மையவாகி, நனவின் - நனவின் கண்ணே, நாளது செலவும் - நாளின் கழிதலும், மூப்பினது வரவும் - மூப்பின் வருகையும், அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும் - அரிதாகப் பெறும் சிறப்பினையுடைய காமத்தின் தன்மையும் ஆய இவற்றை, இ நிலை அறியாய் ஆயினும் - இப்பொழுது அறிந்திலாயாயினும், 6-15. செந்நிலை அமை ஆடு, அம் கழை தீண்டி - செவ்விய நிலையினையுடைய மூங்கிலின் அசையும் தண்டினைத் தாக்கி, கல் என ஞெமை இலை உதிர்த்த எரிவாய்க் கோடை - கல்லென்னும் ஒலியுண்டாக ஞெமை மரத்தின் இலைகளை உதிர்த்த வெப்பம் பொருந்திய கோடைக் காற்று, நெடு வெண் களரி நீறு முகந்து சுழல- நீண்ட வெள்ளிய களர் நிலத்துள்ள புழுதியை முகந்துகொண்டு சுழன்றிட, கடுவெயில் திருகிய வேனில் வெம் காட்டு - கொடிய வெய்யில் முறுகிய வேனிற்காலத்து வெவ்விய காட்டில், உயங்கு நடை மட பிணை தழீஇய - வருந்திய நடையினையுடைய இளைய பிணையை உடன்கொண்ட, வயங்கு பொறி அறு கோட்டு எழில் கலை- விளங்கும் புள்ளிகளையும் அறல்பட்ட கொம்பினையும் உடைய அழகிய கலைமான், தெள் நீர் வேட்ட சிறுமையின் - தெளிந்த நீர் வேட்ட துன்பத்தால், தழை மறந்து - தழை உண்டலைக் கைவிட்டு, அறு கயம் நோக்கி - நீர் அற்ற குளத்தினை நோக்கிச் சென்று, உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர - ஆங்கு உண்ணும் நீர் இன்மையின் மெலிந்து தளர, மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து - மரங்கள் நிழல் அற்றனவாயுள நெறியினையுடைய பாலையைக் கடந்து, 16-23. உள்ளிய விருந்து ஒழிவு அறியா பெரு தண் பந்தர் - விரும்பி வரும் விருந்தினர் ஒழிதல் அறியாத பெரிய குளிர்ந்த பந்தரின்கண், வருந்தி வருநர் ஓம்பி - வறுமையால் வருந்தி வருவோரைப் பாதுகாத்து, தண் என - குளிர்ச்சியாக, தாழை - தாழையின், தாது துகள் உதிர்த்த - தாதாகிய பொடியை அப்பிய, கூந்தல் - கூந்தலின், மெல் அகம் - மெல்லிய பின்னலில், வீழ் இதழ் அலரி சேர்த்தி - விரும்பப்படும் பூவின் இதழை வைத்துப் பின்னி, மகிழ் அணி முறுவல் - மகிழ்ச்சியினை அணிபெறக் கொண்ட புன்னகையுடன், மாண்ட சேக்கை - மாண்புற்ற பள்ளியின்கண் ணிருந்து, நம்மொடு நன்மொழி நவிலும் - நம்முடன் நல்ல மொழிகளைக் கூறும், பொம்மல் ஓதி புனை இழை குணன் - பொலிவு பெற்ற கூந்தலையும் அழகிய அணிகளையும் உடைய நம் தலைவியின் குணங்களை, 16. உள்ளுவை அல்லையோ - நினைத்து மயங்குவாய் அல்லையோ. (முடிபு) நெஞ்சே! வாழிய! பிரிதலும் உண்டோ? நாளது செலவும் மூப்பினது வரவும் காமத்தியற்கையும் இந்நிலை அறியாயாயினும், சுரன் இறந்து புனையிழை குணன் உள்ளுவை அல்லையோ. (வி-ரை) கனவிலே பொருள்கள் தோன்றிக் கழிதலாவது தோற்ற மாத்திரையானே மறைதல். அதுபோல் நாட்கள் விரைந்து செல்வன என்றான். நாளது செலவும் மூப்பினது வரவும் காமத்து இயற்கையும் அறியாய் என்றது. `நாளது சின்மையும் இளமைய தருமையும் ...... அன்பின தகலமும்'1 ஒன்றாமை கூறிப் பொருள்வயிற் செல்லுதலை விலக்கியவாறு. `இளமையுங் காமமும் நின்பாணி நில்லா'2 எனவும், `இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார், வளமை விழைதக்க துண்டோ'3 எனவும் போந்தன ஈண்டு ஒப்பு நோக்கற் பாலன. கோடை சுழல, கலை ஒல்குவன தளர, மர நிழலற்ற இயவிற் சுரன் என்க. விருந்தோம்புதலும் வறியார்க்கு ஈதலும் முதலாய இல்லறம் புரிதலாகிய தலைவியின் செய்கையும், கூந்தல் அலரி சேர்த்தி முறுவல் மாண்ட அவளது மேனி வனப்பும் சேக்கையில் நம்மொடு நன்மொழி நவிலுதலாகிய மொழியின் இனிமையும் பேரின்பம் விளைப்பன வாகலின், துன்பம் தரும் கொடிய காட்டிடைச் செல்வுழி, அவ் வின்பத்தை நினைத்து மீள்வை என்பான் `சுரன் இறந்து உள்ளுவை அல்லையோ...... புனையிழை குணனே' என்றான் என்க. 354. முல்லை (வினைமுற்றிய தலைமகற்கு உழையர் சொல்லியது.) மதவலி யானை மறலிய பாசறை 4இடியுமிழ் முரசம் பொருகளத் தியம்ப வென்றுகொடி யெடுத்தனன் வேந்தனும் கன்றொடு 5கறவைப் பல்லினம் புறவுதொ றுகளக் 5. குழல்வாய் வைத்தனர் கோவலர் வல்விரைந்து இளையர் ஏகுவனர் பரிய விரியுளைக் கடுநடைப் புரவி வழிவாய் ஓட வலவன் வள்புவலி யுறுப்பப் புலவர் புகழ்குறி கொண்ட பொலந்தார் அகலத்துத் 10. தண்கமழ் சாந்தம் நுண்டுகள் அணிய வென்றிகொ ளுவகையொடு புகுதல் வேண்டின் யாண்டுறை வதுகொல் தானே மாண்ட போதுறழ் கொண்ட உண்கண் தீதி லாட்டி திருநுதற் பசப்பே. - மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார். (சொ-ள்) 1-5. தலைவ! மதவலி யானை மறலிய பாசறை - மிக்க வலியையுடைய யானை போர் வேட்டு மாறுபடும் பாசறைக் கண்ணே, இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப - இடியென ஒலிக்கும் வென்றி முரசம் போர்க்களத்தே ஒலிக்க, வேந்தனும் வென்று கொடி எடுத்தனன் - அரசனும் போர் வென்று கொடியை உயர்த்தினன், பல் கறவை இனம் கன்றொடு புறவு தொறு உகள - பலவாகிய கறக்கும் ஆனினங்கள் கன்றொடு காடுதோறும் தாவி வர, கோவலர் வாய் குழல் வைத்தனர் - ஆயர்கள் தம் வாயிற் குழல் வைத்து ஊதுவாராயினர்; 5-11. இளையர் வல் விரைந்து ஏகுவனர் பரிய - நின் ஏவலர் மிக விரைந்து ஏகுவாராய் முன்செல்ல, விரி உளை கடு நடை புரவி வழிவாய் ஓட - விரிந்த பிடரி மயிரினையும் கடிய நடையினையும் உடைய குதிரை நெறியின்கண்ணே ஓடுமாறு, வலவன் வள்பு வலி உறுப்ப -பாகன் கடிவாளத்தினை வலிந்து பிடித்துச் செலுத்த, புலவர் புகழ் குறி கொண்ட - புலவர் புகழும் படையின் குறியாய விழுப்புண் கொண்ட, பொலம் தார் அகலத்து - அழகிய மாலையினைத் தரித்த மார்பில், தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய - தண்ணிய கமழும் சாந்தினொடு நுண்ணிய பொடிகளை அணிய, வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின் - வெற்றி கொண்ட உவகையுடன் நின் மனையிற் புகுதலை நீ விரும்பினமையான், 12-14. மாண்ட போது உறழ் கொண்ட உண்கண் - மாண்புற்ற நீல மலரொடு மாறுபட்ட மையுண்ட கண்ணினையுடைய, தீதிலாட்டி- தீதற்றவளாய தலைவியின், திரு நுதல் பசப்பு - அழகிய நெற்றியிற் படர்ந்த பசலை, யாண்டு உறைவதுகொல் - இனி எங்குத் தங்கும்? (முடிபு) தலைவ! வேந்தனும் வென்று கொடி எடுத்தனன். கோவலர் குழல் வாய்வைத்தனர். வென்றிகொள் உவகையொடு புகுதல் வேண்டின், தீதிலாட்டி திருநுதற் பசப்பு யாண்டு உறைவதுகொல்! (வி-ரை) மத - வலியெனப் பொருள்படும் உரிச்சொல். மதவலி- ஒருபொரு ளிருசொல், மிக்க வலியுடைய என்றபடி. முரசம் இயம்ப வென்று, பாசறைக்கண் கொடி எடுத்தனன் என்க. வேந்தனும் எடுத்தனன் என்றமையால், தலைமகன் வேந்தற்கு உற்றுழிப் பிரிந்தானாயிற்று. குழல் வாய் வைத்தனர் கோவலர் என்றது மீண்டு ஏகற்குரிய மாலைப் பொழுது வந்தமையைக் குறித்தபடி. புரவி ஓடுமாறு வள்பு வலியுறுப்ப எனவும், இளையர் ஏகுவனர் பரியவும் வலவன் வள்பு வலியுறுப்பவும் சாந்தம் நுண்துகள் அணியவும் புகுதல் வேண்டின் எனவும் கூட்டி முடிக்க. புலவர் புகழ் குறி என்றது மார்பிற் பட்ட விழுப்புண். சாந்தம் நுண் துகள் அணிய என்றது எதிர்வு பற்றியது. வேண்டின் - வேண்டினையாகலின். 355. பாலை (பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) மாவும் வண்டளிர் ஈன்றன குயிலும் இன்றீம் பல்குரற் கொம்பர் நுவலும் மூதிலை யொழித்த போதவிழ் பெருஞ்சினை வல்லோன் தைவரும் வள்ளுயிர்ப் பாலை 5. நரம்பார்த் தன்ன வண்டினம் முரலுந் துணிகயந் துன்னிய தூமணல் எக்கர்த் தாதுகு தண்பொழில் அல்கிக் காதலர் செழுமனை மறக்குஞ் செவ்வி வேனில் தானே வந்தன்று ஆயின் ஆனாது 10. இலங்குவளை 1நெகிழ்ந்த எவ்வங் காட்டிப் புலந்தனம் வருகம் 2சென்மோ தோழி யாமே எமியம் ஆக நீயே பொன்னயந் தருளிலை யாகி இன்னை யாகுதல் ஒத்தன்றால் எனவே. -3தங்காற் பொற் கொல்லனார். (சொ-ள்) 11. தோழி-, 1-9. மாவும் வண் தளிர் ஈன்றன - மாமரங்களும் அழகிய தளிர்களை ஈன்றன, குயிலும் கொம்பர் இன் தீம் பல்குரல் நுவலும் - குயிலும் அவற்றின் கொம்புகளிலிருந்து மிக இனிய குரலால் பல காலும் கூவாநிற்கும், முது இலை ஒழித்த போது அவிழ் பெரு சினை- முதிர்ந்த இலைகளை உதிர்த்த மலர்கள் விரிந்த பெரிய கிளைகளில், வல்லோன் தைவரும் நரம்பு வள் உயிர் பாலை ஆர்த்தன்ன - யாழ் வல்லோன் தடவும் நரம்பு இனிய இசைகொண்ட பாலைப் பண்ணை ஒலித்தா லொத்த இசையுடன், வண்டு இனம் முரலும் - வண்டின் கூட்டங்கள் ஒலிக்கும், துணி கயம் துன்னிய - தெளிந்த நீர் நிலையை அடுத்த, தாது உகு தண் பொழில் - பூந்துகள் உதிரும் குளிர்ந்த சோலையில் உள்ள, தூ மணல் எக்கர் - தூய மணல் மேட்டில், அல்கி- தங்கி, காதலர் செழு மனை மறக்கும் - காதலராயினார் தமது வளவிய மனையினை மறந்திருக்கும், செவ்வி வேனில் வந்தன்று - இளவேனிற் காலம் வந்துளது, ஆயின் - ஆதலான், (நாம் தலைவன் பாற் சென்று), 9-14. இலங்கு வளை ஆனாது நெகிழ்ந்த எவ்வம் காட்டி - விளங்கும் வளை பலகாலும் நெகிழ்ந்து வீழும் துன்பினை நம் தலைவற்குக் காட்டி, யாமே எமியம் ஆக - யாம் தமியேம் ஆக, நீயே பொன் நயந்து அருள் இலையாகி - நீ பொருளை விரும்பி அருள் இல்லாய் ஆகி, இன்னை ஆகுதல் ஒத்தன்று - இத் தன்மையை யுடையை ஆதல் நின் தகுதிக்கு ஒத்தது அன்று, என - என்று கூறி, புலந்தனம் வருகம் - அவனை வெறுத்து வருதற்கு, சென்மோ - நாம் செல்லக்கடவேம். (முடிபு) தோழி! காதலர் தண் பொழில் அல்கிச் செழுமனை மறக்கும் இளவேனில் வந்தன்று. ஆதலான், நாம் தலைவன்பாற் சென்று நம் வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டி, யாம் எமியம் ஆக நீ பொன் நயந்து அருளிலை யாகி, இன்னையாகுதல் ஒத்தன்று எனப் புலந்தனம் வருகம் சென்மோ. (வி-ரை) பெருஞ்சினை வண்டினம் முரலும் தண் பொழில் எனவும் துணிகயம் துன்னிய தண்பொழில் எனவும் கூட்டுக. துணிகயம், வினைத்தொகை; நீர் தெளிந்த கயம் என்க. மறக்கும் - மறத்தற்கு ஏதுவாகிய. ஆயின் - ஆதலால் என்க. நெகிழ்ந்த எவ்வம் - நெகிழ்தற்கு ஏதுவாகிய எவ்வம். நெகிழ்த்த எவ்வம் என்னும் பாடத்திற்கு, நெகிழச் செய்த எவ்வம் என்றுரைக்க. சென்மோ என்பது விகாரம். 356. மருதம் (பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பக் கூறியது.) மேற்றுறைக் கொளீஇய கழாலிற் கீழ்த்துறை உகுவார் அருந்தப் பகுவாய் யாமை கம்புள் இயவன் ஆக விசிபிணித் தெண்கட் கிணையிற் பிறழும் ஊரன் 5. இடைநெடுந் தெருவிற் கதுமெனக் கண்டென் பொற்றொடி முன்கை பற்றினன் ஆக அன்னாய் என்றனென் அவன்கைவிட் டனனே தொன்னசை 1காவாமை நன்னன் பறம்பிற் சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய 10. கற்போல் நாவினேன் ஆகி மற்றது செப்பலென் மன்னால் யாய்க்கே நற்றேர்க் கடும்பகட் டியானைச் சோழர் மருகன் நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் 1நல்லடி யுள்ளா னாகவும் 2ஒன்னார் 15. 3கதுவ முயறலும் முயல்ப அதாஅன்று ஒலிபல் கூந்தல் நம்வயின் அருளாது கொன்றனன் ஆயினுங் கொலைபழு தன்றே அருவி யாம்பல் கலித்த முன்றுறை நன்னன் 4ஆய்பறம் பன்ன 20. மின்னீர் ஓதி என்னைநின் குறிப்பே. - பரணர். (சொ-ள்) 18-20. அருவி ஆம்பல் கலித்த முன் துறை - அருவி நீர் பெருகுமிடத்து ஆம்பல் தழைத்துள்ள முன் துறையினையுடைய, நன்னன் ஆய் பறம்பு அன்ன - நன்னனது அழகிய பறம்பு போன்ற, மின் ஈர் ஓதி - மின்னுகின்ற குளிர்ந்த கூந்தலையுடையாளே! 1-4. மேல் துறை கொளீஇய கழாலின் - மேலைத் துறையில் கள்ளினைக் கொண்ட கலங்களைக் கழுவுதலின், கீழ் துறை உகுவார் அருந்த - கீழ்த் துறையின் ஒழுகும் கள்ளின் கலங்கல் நீரை அருந்திட, பகு வாய் யாமை - பிளந்த வாயினையுடைய யாமையானது, கம்புள் இயவன் ஆக - சம்பங்கோழி வாச்சியக்காரன் ஆக, விசி பிணி தெள் கண் கிணையின் பிறழும் ஊரன் - இறுகப் பிணித்த தெளிந்த கண்ணினையுடைய கிணைப் பறை போலப் பிறழும் ஊரையுடையோன், 5-8. இடை நெடு தெருவில் கதுமெனக் கண்டு - நீண்டதெருவின் நடுவே விரைந்து என்னைக் கண்டு, என் பொன் தொடி முன் கை பற்றினன் ஆக - எனது பொன் வளையினை யணிந்த முன் கையைப் பிடித்தானாக, அன்னாய் என்றனென் - அன்னாய் என்று கூவினேன், தொல் நசை காவாமை - நீண்ட நாளாக வரும் விருப்பினை நீக்காமலே, அவன் கைவிட்டனன் - அவன் என் கையை விட்டுவிட்டான்; 8-11. நன்னன் பறம்பில் - நன்னனது பறம்பு மலையில், சிறு காரோடன் - சிறிய பணை செய்வோன், பயினொடு சேர்த்திய கல் போல் - அரக்கொடு சேர்த்து இயற்றிய சாணைக் கல்லினைப் போலும், நாவினேன் ஆகி - வன்மை அமைந்த நாவினேன் ஆகி, அது யாய்க்குச் செப்பலென் - அந் நிகழ்ச்சியை நம் தாய்க்குக் கூறினேன் அல்லேன். (என்னை யெனின்), 11-17. நல் தேர் கடு பகட்டு யானை சோழர் மருகன் - நல்ல தேரினையும் கடிய களிற்றியானைகளையு முடைய சோழரது வழி வந்தோனாகிய, நெடு கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் - நீண்ட நெற் கதிர்களையுடைய வல்லத்தின் தலைவன், நல் அடி உள்ளானாகவும்- நன்மையுள்ளவனாகவும், ஒன்னார் கதுவ முயறலும் முயல்வ - அவன் பகைவர் அவனைப் பற்ற முயல்வதும் செய்வரன்றே, அதாஅன்று - அது கிடக்க, ஒலி பல் கூந்தல் - தழைத்த பலவாய கூந்தலையுடையாய், நம் வயின் அருளாது - நம்பால் அருள் செய்யாது, கொன்றனன் ஆயினும் - துன்புறுத்தினன் ஆயினும், கொலை பழுது அன்று - அது குற்றமுடைத்து ஆகாது; ஆகலின், 20. என்னை நின் குறிப்பே - நின் கருத்து யாதோ கூறுவாயாக. (முடிபு) மின் ஈர் ஓதி! ஊரன், இடைநெடுந் தெருவில் என் முன்கை பற்றினனாக, அன்னாய் என்றனன். நசை காவாமை அவன் கைவிட்டனன். மற்று அது கற்போல் நாவினேன் ஆகி யாய்க்குச் செப்பலன். அவன் நம் வயின் அருளாது கொன்றனன் ஆயினும், கொலை பழுது அன்று, நின் குறிப்பு என்னை? (வி-ரை) கொளீஇய - கொண்ட கலங்கள், வினையாலணையும் பெயர். உகு வார் - சிந்துகின்ற கலங்கல்நீரின் ஒழுக்கு. யாமை இங்ஙனம் கள்ளின் கலங்கலை உண்டல், `வள்ளுகிர் யாமை..... அகன்றுறைப், பகுவாய் நிறைய நுங்கிற் கள்ளின், உகுவார் அருந்தும்......'1 என முன்னரும் போந்துள்ளமை காண்க. அருந்த என்னும் எச்சம் பகு என்பது கொண்டு முடிந்தது. யாமை கிணையிற் பிறழும் ஊர் என்க. யாமையும் கிணையின் கண்ணும் வடிவான் ஒத்திருத்தலின் கிணையின் என்பது மெய்யுவமத்தின்கண் வந்தது. `கயத்துவாழ் யாமை காழ் கோத் தன்ன, நுண்கோற் றகைத்த தெண்கண் மாக்கிணை'2 `ஆமை யகடுபோல் அங்கட் டடாரி'3 என்பன ஈண்டு அறியற்பாலன. காவாமை - வருதலைக் காவாமல், நீக்காமல் என்றபடி. தொன்னசை சாலாமை என்று பாடங் கொள்ளினும் இதுவே பொருளாமென்க. சிறுகா ரோடன் பயினோடு சேர்த்திய கற்போல என்னும் இத்தொடர் இந்நூலின் முதற்செய்யுளிலும் வந்துள்ளமை காண்க. சோழர் மருகனாகிய வல்லங்கிழவோன் என்க. நல்லடி - நன்மை, அது பிறர்க்குத் தீங்கு இயற்றாமை. அதாஅன்று என்பது அது போல்வது இது என எடுத்துக் காட்டுதற்கண் வந்தது. முன்பு கை விட்ட அவன் நம்மை அருளாது துன்புறுத்தினனாயினும், பழங் கண்ணோட்ட முடைய நாம் அதனைத் தீங்காகக் கொள்ளமாட்டோம் என்பாள் கொன்றனனாயினும் கொலை பழுதன்றே என்றாள். என்னை நின் குறிப்பு என்றது அவன் குறையினை விரும்பி ஏற்றுக் கொள்ளலே தக்கது என்று உணர்த்தியபடியாம். 357. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.) கொடுமுள் ஈங்கைச் சூரலொடு மிடைந்த வான்முகை இறும்பின் வயவொடு வதிந்த உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய தடமருப் பியானை வலம்படத் தொலைச்சி 5. வியலறை சிவப்பவாங்கி முணங்கு நிமிர்ந்து புலவுப்புலி புரண்ட புல்சாய் சிறுநெறி பயிலிருங் கானத்து வழங்கல் செல்லாது பெருங்களிற் றினநிரை 1கைதொடூஉப் பெயரும் தீஞ்சுளைப் பலவின் றொழுதி உம்பற் 10. பெருங்கா டிறந்தன ராயினும் யாழநின் திருந்திழைப் பணைத்தோள் வருந்த நீடி உள்ளா தமைதலோ இலரே 2 நல்குவர மிகுபெயல் நிலைஇய தீநீர்ப் பொய்கை அடையிறந் தவிழ்ந்த தண்கமழ் நீலம் 15. காலொடு துயல்வந் தன்னநின் ஆயிதழ் மழைக்கண் அமர்த்த நோக்கே. - எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார். (சொ-ள்) 1-10. (தோழி! நம் தலைவர்) கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த - வளைந்த முள்ளினையுடைய இண்டஞ்செடி பிரம்புடன் செறிந்துள்ள, வால்முகை இறும்பின் - வெள்ளிய அரும்புகளை யுடைய குறுங்காட்டின்கண், வயவொடு வதிந்த - சூல் வேட்கையுடன் கிடந்த, உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய - உண்ணாத பெண்புலியின் வருத்தத்தை நீக்க, தட மருப்பு யானை வலம் பட தொலைச்சி - பெரிய கோட்டினையுடைய யானையை வலப் பக்கத்தே விழக் கொன்று, வியல் அறை சிவப்ப வாங்கி - அகன்ற பாறைகள் குருதியாற் சிவக்கும்படி கிழித் திழுத்துவந்து, முணங்கு நிமிர்ந்து - மூரி நிமிர்ந்து, புலவு புலி புரண்ட - புலால்நாறும் புலி கிடந்துபுரண்டதால், புல்சாய் சிறுநெறி பயில் இரு கானத்து - புற்கள் சாய்ந்து கிடக்கும் சிறிய நெறிகள் மிக்க பெரிய காட்டிலே, வழங்கல் செல்லாது - இயங்குதல் பொருந்தாது, பெரு களிற்று இன நிரை - பெரிய களிற்றின் கூட்டமாய நிரை, கை தொடூஉப் பெயரும் - தம் கைகளாற் றோண்டித் தின்று போகும், தீம் சுளைப் பலவின் தொழுதி - இனிய சுளைகளையுடைய பலா மரத்தின் கூட்டத்தை யுடைய, உம்பல் பெரு காடு இறந்தனர் ஆயினும் - பெரிய உம்பற் காட்டைக் கடந்து சென்றுளாராயினும், 10-11. நின் திருந்து இழை பணை தோள் வருந்த நீடி - நினது திருந்திய அணிகளை யணிந்த மூங்கில் போன்ற பெருத்த தோட்கள் வருந்தி யிளைக்குமாறு தாழ்த்து, 12-16. மிகு பெயல் நிலைஇய தீ நீர் பொய்கை - மிக்க மழை நிலைபெற்றமையால் பெருகிய இனிய நீரினையுடைய பொய்கை யின் கண், அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் - இலைகளை விட்டு மேலெழுந்து விரிந்த தண்ணிய கமழ்கின்ற நீலப்பூ, காலொடு துயல் வந்தன்ன - காற்றினால் அசைந்தாலொத்த, நின் ஆய் இதழ் மழை கண் அமர்த்த நோக்கு - நினது அழகிய இதழ் பொருந்திய குளிர்ந்த கண்களின் அமரிய பார்வையினை, நல்கு வர - அருளுண்டாக, உள்ளாது அமைதல் இலர் - நினையாதிருத்தல் இலராவர். (முடிபு) தோழி! நம் தலைவர், உம்பற் பெருங்காடு இறந்தனராயினும், நின் பணைத் தோள் வருந்த நீடி, நின் மழைக்கண் அமர்த்த நோக்கு, நல்குவர உள்ளாது அமைதல் இலர். (வி-ரை) தீரிய - செய்யிய என்னும் எச்சம். தீரிய தொலைச்சி என்க. பெயரும் காடு எனவும் பலவின் தொழுதியையுடைய காடு எனவும் கூட்டுக. பெயரும் காடு - பெயர்தற்கு இடனாயிருந்த காடு. சேரனாட்டகத்து உம்பற்காடு எனப் பெயரிய இடம் ஒன்று உண்டு என்பது, `உம்பற்காட்டு ஐந்நூறூர்' (இரண்டாம் பத்து) `உம்பற் காட்டைத் தன் கோனிறீஇ' (மூன்றாம் பத்து) `உம்பற்காட்டு வாரியையும்' (ஐந்தாம் பத்து) எனப் பதிற்றுப்பத்தின் பதிகங் களில் வருதலான் அறியப்படும். உம்பற்காடென்பது யானையை மிகுதியாக உடைமையாற் பெற்ற பெயர் போலும். நல்குவர - அருள் உண்டாதல் பொருந்த, நல்குவர் என்பது பாடமாயின், அருள்வர் என முற்றாக்குக. 358. குறிஞ்சி (பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது.) நீலத் தன்ன நிறங்கிளர் எருத்திற் காமர் பீலி ஆய்மயிற் றோகை இன்றீங் குரல துவன்றி மென்சீர் ஆடுதகை எழினலங் கடுப்பக் கூடிக் 5. கண்ணேர் இதழ தண்ணறுங் குவளைக் குறுந்தொடர் அடைச்சிய நறும்பல் கூழை நீடுநீர் நெடுஞ்சுனை ஆயமொ டாடாய் உயங்கிய மனத்தை யாகிப் புலம்புகொண்டு இன்னை யாகிய நின்னிறம் நோக்கி 10. அன்னை 1வினவின ளாயின் அன்னோ என்னென உரைக்கோ யானே 2 துன்னிய பெருவரை இழிதரும் நெடுவெள் ளருவி ஓடை யானை உயர்மிசை யெடுத்த ஆடுகொடி கடுப்பத் தோன்றும் 15. கோடுயர் வெற்பன் உறீஇய நோயே. - 3மதுரை மருதனிள நாகனார். (சொ-ள்) 1-10. தோழி! நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின் - நீல மணியை யொத்த நிறம் விளங்கும் கழுத்தினையும், காமர் பீலி - அழகிய பீலியாகிய, ஆய் மயில் தோகை - சிறந்த தோகையை யுடைய மயில்கள், இன் தீம் குரல துவன்றி - மிக்க இனிய குரலினையுடையவாய் நெருங்கி, மெல் சீர் ஆடுதகை எழில் நலம் கடுப்ப - மெல்லிய தாள அறுதி கொண்டு ஆடும் தகுதியாய அழகின் சிறப்பினை ஒப்ப, கண் நேர் இதழ தண் நறு குவளை - கண்ணை யொத்த இதழ்களையுடைய குளிர்ந்த நறிய குவளை மலரின், குறு தொடர் அடைச்சிய நறு பல் கூழை - குறிய மாலையினைச் செருகிய நறிய பலவாய கூந்தல் பரக்க, நீடு நீர் நெடு சுனை ஆயமொடு கூடி ஆடாய் - ஆழ்ந்த நீரினையுடைய நீண்ட சுனையின் கண் நின் ஆயத்துடன் கூடி ஆடாதே, உயங்கிய மனத்தை ஆகி - வருந்திய மனத்தினையுடையையாகி, புலம்பு கொண்டு - தனிமை கொண்டு, இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி - இத் தன்மையையாகிய நினது மேனி வேறுபாட்டைப் பார்த்து, அன்னை வினவினள் ஆயின் - நம் அன்னை (அதன் காரணத்தைக்) கேட்டனளாயின், 11-15. துன்னிய பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி - பொருந்திய பெரிய மலையினின்றும் ஒழுகும் நீண்ட வெள்ளிய அருவியானது, ஓடை யானை உயர்மிசை எடுத்த ஆடு கொடி கடுப்ப தோன்றும் - நெற்றிப் பட்டத்தினையுடைய யானையின் மீது தூக்கிய அசையும் வெண்துகிற் கொடியினை யொப்பத் தோன்றும், கோடு உயர் வெற்பன் உறீஇய நோய் - சிகரம் உயர்ந்த மலையையுடைய தலைவன் நம்மை அடைவித்த இந்நோயினை, அன்னோ - அந்தோ, யான் என் என உரைக்கு - யான் யாதினான் நிகழ்ந்ததென்று சொல்லுவேன்? (முடிபு) தோழி! அன்னை, உயங்கிய மனத்தையாகிப் புலம்பு கொண்டு இன்னையாகிய நின்னிறம் நோக்கி, வினவினளாயின், வெற்பன் உறீஇய நோய் அன்னோ! யான் என்னென உரைக்கு. (வி-ரை) பீலி ஆகிய தோகையையுடைய மயில் எனக் கூட்டுக. இன்தீம் - ஒரு பொருட் பன்மொழி. மயில் பல கூடி இனிய குரலையுடையவாய்த் தோகையைவிரித்து ஆடுதல்போல நீயும் ஆயத்துடன் கூடிக் கூந்தல் பரக்கச் சுனையில் ஆடுதல் செய்யாய் என உவமையும் பொருளும் ஒத்து நின்று மகிழ்ச்சி விளைத்தல் காண்க. உவமையில் இன்றீங்குரல என்பதற் கேற்பப் பொருளிலும் இனிய குரலுடன் பாடிக்கொண்டு ஆடாய் என விரித்துரைக்க. 359. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) பனிவார் உண்கணும் பசந்த தோளும் நனிபிறர் அறியச் சாஅய நாளுங் கரந்தனம் உறையும் நம்பண் பறியார் நீடினர் மன்னோ காதலர் எனநீ 5. எவன்கை யற்றனை இகுளை அவரே வான வரம்பன் வெளியத் தன்னநம் மாணலந் தம்மொடு கொண்டனர் முனாஅது அருஞ்சுரக் கவலை யசைஇய கோடியர் பெருங்கல் மீமிசை இயமெழுந் தாங்கு 10. வீழ்பிடி கெடுத்த நெடுந்தாள் யானை சூர்புகல் அடுக்கத்து மழைமாறு முழங்கும் பொய்யா நல்லிசை மாவண் புல்லி கவைக்கதிர் வரகின் யாணர்ப் பைந்தாள் முதைச்சுவன் மூழ்கிய கான்சுடு குரூஉப்புகை 15. அருவித் துவலையொடு மயங்கும் பெருவரை அத்தம் இயங்கி யோரே. - மாமூலனார். (சொ-ள்) 1-5. இகுளை - தோழி! பனி வார் உண் கணும் - நீர் ஒழுகும் மையுண் கண்களும், பசந்த தோளும் - பசலையுற்ற தோள்களும், நனி பிறர் அறியச் சாஅய - பிறர் மிகவும் அறியும்படி வாடுதலுற, நாளும் கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார் - நாடோ றும் அவற்றை மறைத்து வதியும் நம் இயல்பினை அறியாராய், காதலர் நீடினர் என - நம் காதலர் வாராது மிகத் தாழ்த்தனர் என்று, நீ எவன் கையற்றனை - நீ செயலற்றது என்னையோ? 7-16. முனாஅது - முன்பு உள்ளதாகிய, அரு சுர கவலை அசைஇய கோடியர் இயம் - அரிய சுரத்தின் கவர்த்த நெறிகளிற் றங்கிய கூத்தரது வாச்சிய ஒலி, பெருங் கல் மீ மிசை எழுந்தாங்கு - பெரிய மலையின் மேலிடத்தே தோன்றினாற் போல, வீழ் பிடி கெடுத்த நெடு தாள் யானை - விரும்பப்படும் பிடியினை இழந்த நீண்ட காலையுடைய களிற்றியானை, சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும் - தெய்வம் விரும்பியுறையும் மலைப்பக்கத்தே இடியொடு மாறுபட முழங்கும் இடமான, பொய்யா நல் இசை மா வண் புல்லி - பரிசிலர்க்குப் பொய்யாத நல்ல புகழினையும் சிறந்த வண்மையையுமுடைய புல்லி என்பானது, கவை கதிர் வரகின் யாணர் பைந் தாள் - கிளைத்த கதிரினையுடைய வரகினது அழகிய பசிய தட்டைகளையுடைய, முதைச் சுவல் மூழ்கிய - பழங் கொல்லை யாகிய மேட்டு நிலத்தைச் சுற்றியுள்ள, கான் சுடு குரூஉப் புகை - காட்டைச் சுடுவதா லெழும் விளங்கும் புகை, அருவித் துவலையொடு மயங்கும் - அருவியின் நுண்ணிய துளிகளுடன் விரவித் தோன்றும், பெரு வரை அத்தம் இயங்கியோர் - பெரிய மலை பொருந்திய காட்டிலே சென்றோர் ஆகிய 5-7. அவர் - நம் தலைவர், வான வரம்பன் வெளியத்து அன்ன - வான வரம்பனது வெளியம் எனுமிடத்தை யொத்த, நம் மாண் நலம் தம்மொடு கொண்டனர் - நமது சிறந்த அழகினைத் தம்முடன் கொண்டு சென்றனர். (முடிபு) இகுளை! காதலர் நம் பண்பு அறியார் நீடினர் மன்னோ என நீ எவன் கையற்றனை? மாவண் புல்லி பெருவரை அத்தம் இயங்கியோர் (ஆகிய) அவர், வான வரம்பன் வெளியத்து அன்ன நம் மாண் நலம் தம்மொடு கொண்டனர். (வி-ரை) நாளும் சாஅய என்றுரைத்தலுமாம். இயங்கியோர் அவர் எனவும் கோடியர் இயம் பெருங்கல் மீமிசை எழுந்தாங்கு எனவும் கொண்டு கூட்டுக. முனாஅது பழையதாகிய என்றுமாம்; பழையதாகிய நமது மாணலம் எனக் கூட்டியுரைத்தலுமாம். இயம் கல் மிசை எழுதல் என்றது, மலையில் எதிரொலி யுண்டாதல். புல்லியின் பெருவரை என்க. மூழ்கிய கான் - சூழ்ந்த காடு. அவர் நம் மாணலம் தம்மொடு கொண்டனர் என்றது, அவர் மீண்டு வருங்கால், நமது நலமும் வந்துவிடும் எனக் கூறி ஆற்றுவித்தவாறாம். 360. நெய்தல் (பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி பகற்குறி மறுத்து இரவுக்குறி நேர்ந்தது.) பல்பூந் தண்பொழிற் பகலுடன் கழிப்பி ஒருகால் ஊர்திப் பருதியஞ் செல்வன் குடவயின் மாமலை மறையக் கொடுங்கழித் தண்சேற் றடைஇய கணைக்கால் நெய்தல் 5. நுண்டா துண்டு வண்டினம் துறப்ப வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து உருவுடன் இயைந்த தோற்றம் பொல அந்தி வானமொடு கடலணி கொளாஅ வந்த மாலை பெயரின் மற்றிவள் 10. பெரும்புலம் பினளே தெய்ய அதனால் பாணி பிழையா மாண்வினைக் கலிமா துஞ்சூர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி நெடுந்தேர் அகல நீக்கிப் பையெனக் குன்றிழி களிற்றிற் குவவுமணல் நீந்தி 15. இரவின் வம்மோ உரவுநீர்ச் சேர்ப்ப இனமீன் அருந்தும் நாரையொடு பனைமிசை அன்றில் சேக்கும் முன்றிற் பொன்னென நன்மலர் நறுவீ தாஅம் புன்னை நறும்பொழிற் செய்தநங் குறியே. - மதுரைக் கண்ணத்தனார். (சொ-ள்) 15. உரவு நீர் சேர்ப்ப - வலிய கடற்கரையையுடைய தலைவனே! 1-10. பல் பூ தண் பொழில் பகல் உடன் கழிப்பி - பல பூக்களை யுடைய குளிர்ந்த பொழிலில் பகல் முழுவதும் போக்கி, ஒரு கால் ஊர்தி பருதி அம் செல்வன் - ஒற்றை உருள் பூண்ட தேரினையுடைய ஞாயிறாகிய அழகிய செல்வன், குடவயின் மா மலை மறைய - மேற்கில் உள்ளதாகிய பெரிய மலையில் மறைய, கொடு கழி தண் சேற்று அடைஇய கணை கால் நெய்தல் - வளைந்த கழியிலுள்ள குளிர்ந்த சேற்றில் பொருந்திய திரண்ட காலினையுடைய நெய்தற் பூவின், நுண் தாது உண்டு வண்டு இனம் துறப்ப - நுண்ணிய பொடியை உண்டு வண்டின் கூட்டம் அதனை விட்டேக, வெருவரு கடு திறல் இரு பெரு தெய்வத்து - அஞ்சத்தகும் மிக்க வலியுடைய இரு பெருந் தெய்வங்களாய சிவனும் திருமாலும் ஆய இவர்களது, உரு உடன் இயைந்த தோற்றம் போல - செந்நிறமும் கருநிறமும் ஒருங்கு பொருந்திய தோற்றத்தைப் போல, அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ - அந்தி வானத்தின் அழகுடன் கடலின் அழகையும் கொண்டு, வந்த மாலை - வந்த மாலைக் காலத்தே, பெயரின் - நீ நீங்கின், இவள் பெரும் புலம்பினள் - இவள் மிக்க தனிமையுற்றனளாகி வருந்துவள், 10-14. அதனால்-, பாணி பிழையா மாண்வினைக் கலிமா - தாளத்தை ஒத்து நடத்தல் தப்பாத மாண்புற்ற வினை வல்ல செருக்குறும் குதிரை, துஞ்சு ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பி - ஊர் துயிலும் யாமத்தில் ஒலித்தலைப் பாதுகாத்து, நெடுதேர் அகல நீக்கி - நீண்ட தேரினைச் சேய்மையில் நீக்கி நிறுத்தி, பை என குன்று இழி களிற்றில் குவவு மணல் நீந்தி - மெல்லெனக் குன்றின் இழிந்து செல்லும் களிறு போலத் திரண்ட மணல் மேட்டினைக் கடந்து, 16-19. இனம் மீன் அருந்தும் நாரையொடு - மீன் இனங்களை உண்ணும் நாரைகளுடன், பனைமிசை - பனைமரத்தின்மீது, அன்றில் சேக்கும் முன்றில் - அன்றில் தங்கியிருக்கும் முற்றத்தே, பொன் என நன் மலர் நறுவீ தாஅம் - பொன் போல நல்ல மலராகிய நறிய பூக்கள் உதிர்ந்து பரவும், புன்னை நறு பொழில் செய்த - புன்னை மரங்களுள்ள நறிய சோலையிற் செய்த, நம் குறி - நமது குறியிடத்திற்கு, 15. இரவின் வம்மோ - இரவின்கண் வருவாயாக. (முடிபு) உரவு நீர்ச் சேர்ப்ப! நீ தண்பொழில் பகல் உடன் கழிப்பி, மாலை பெயரின் மற்று இவள் பெரும் புலம்பினள். அதனால் நெடுந்தேர் அகல நீக்கி, குவவு மணல் நீந்தி, புன்னை நறும் பொழிற்கண் செய்த நம்குறி இரவின் வம்மோ. (வி-ரை) பகல் உடன் கழிப்பி, மாலை பெயரின் என இயையும். பருதி அம் செல்வன் மறைய, நெய்தல் உண்டு வண்டினம் துறப்ப அந்தி வானமொடு கடலணி கொண்டு வந்த மாலை என்க. அந்தி வானம் - அந்திக் காலத்துச் செவ்வானம். தெய்ய - அசைச் சொல். ஊர்துஞ்சு யாமம் என மாறுக. இரவுக் குறிக்கு இடையீடு நேராதபடி வருதல் வேண்டும் என்பாள், குதிரை தெவிட்டல் ஓம்பி, தேர் அகல நீக்கி, பை யென மணல் நீந்தி வருக என்றாள். அன்றில் சேக்கும் நறும் பொழில் எனவும் முன்றில் நறுவீ தாஅம் நறும் பொழில் எனவும் கூட்டுக. 361. பாலை (பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) தூமலர்த் தாமரைப் பூவின் அங்கண் மாயிதழ்க் குவளை மலர்பிணைத் தன்ன திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்கண் 1அணிவளை முன்கை ஆயிதழ் மடந்தை 5. வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும் கவவுப்புலந் துறையுங் கழிபெருங் காமத்து இன்புறு நுகர்ச்சியிற் சிறந்ததொன் றில்லென அன்பால் மொழிந்த என்மொழி கொள்ளாய் பொருள்புரி வுண்ட மருளி நெஞ்சே 10 கரியாப் பூவிற் பெரியோர் ஆர அழலெழு தித்தியம் மடுத்த யாமை நிழலுடை நெடுங்கயம் புகல்வேட் டாஅங்கு 1உள்ளுதல் ஓம்புமதி இனிநீ முள்ளெயிற்றுச் சின்மொழி அரிவை தோளே பன்மலை 15. வெவ்வறை மருங்கின் வியன்சுரம் எவ்வங் கூர இறந்தனம் யாமே. - எயினந்தை மகனார் இளங்கீரனார். (சொ-ள்) 1-9. தூ மலர் தாமரைப் பூவின் அங்கண் - தூய மலராய தாமரைப் பூவிடத்தே, மா இதழ் குவளை மலர் பிணைத் தன்ன - கரிய இதழ்களையுடைய குவளைமலர் இரண்டினைப் பிணைத்து வைத்தாற்போன்ற, திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் - அழகிய முகத்திடத்தே சுழலும் பெரிய மதர்த்த குளிர்ந்த கண்களையும், அணிவளை முன்கை - அழகிய வளைகளையுடைய முன் கையினையும், ஆய் இதழ் மடந்தை - அழகிய வாய் இதழினையு முடைய நம் தலைவியின், வார்முலை முற்றத்து கவவு - வார் அணிந்த முலைப் பரப்பின் முயக்கத்தினை, நூல் இடை விலங்கினும் - ஒரு நூல் இடையே தடுப்பினும், புலந்து உறையும் - அதனை வெறுத்து உறையும், கழி பெருங் காமத்து இன்பு உறு நுகர்ச்சியில் - மிகப் பெரிய காதலொடு இன்பம் துய்க்கும் நுகர்ச்சியைக் காட்டினும், சிறந்தது ஒன்று இல் என - மேம்பட்டதோர் இன்பம் இல்லை என, அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய் - அன்புடன் கூறிய என் மொழியின் ஏற்றுக் கொள்ளாயாகி, பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே - பொருளை விரும்பி வந்த மயக்கத்தினையுடைய நெஞ்சமே, 14-16. பல் மலை வெவ் அறை மருங்கின் வியன் சுரம் - பல மலைகளையும் வெவ்விய பாறைகளையுமுடைய நீண்ட சுரத்தையும், எவ்வங் கூர இறந்தனம் யாம் - துன்பம் மிக யாம் கடந்து வந்துளே மாகலின், 10-12. கரியா பூவில் பெரியோர் ஆர - வாடாத பூவினையுடைய தேவர் உண்டற் பொருட்டு, அழல் எழு தித்தியம் மடுத்த யாமை - அழல் ஓங்கிய வேள்விக் குண்டத்தின்கண் இடப்பெற்ற யாமை, நிழல் உடை நெடு கயம் புகல் வேட்டாங்கு - தான் முன்பிருந்த நிழல் பொருந்திய பெரிய பொய்கையின்கண் போதலை விரும்புவது போல, 13-14. முள் எயிற்று சில்மொழி அரிவை தோள் - முள் போன்ற பற்களையும் சிலவாய மொழிகளையு முடைய நம் தலைவியின் தோளினை, இனி நீ உள்ளுதல் ஓம்புமதி - இப்போது நீ நினைத்தலை ஒழிவாயாக. (முடிபு) கழி பெருங் காமத்து இன்புறு நுகர்ச்சியிற் சிறந்ததொன்றில்லென மொழிந்த என் மொழி கொள்ளாய் ஆகிப் பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே! யாம் பன்மலை வியன் சுரம் எவ்வம் கூர இறந்தனம் (ஆகலின்) தித்தியம் மடுத்த யாமை நெடுங்கயம் புகல் வேட்டாங்கு, அரிவைதோள் இனி நீ உள்ளுதல் ஓம்புமதி. (வி-ரை) முகமும் கண்களும் முறையே தாமரைப் பூவும் குவளை மலரும் போல் விளங்கும் என்னும் இவ்வுவமை `தாமரைப் போதிற் பூத்த தண்ணறுங் குவளைப் பூப்போற், காமரு முகத்திற் பூத்த கருமழைத் தடங்கண்'1 எனத் திருத்தக்க தேவராலும் கூறப்பட்டுளது. நூல் இடை விலங்கினும் என்றது - நூல் இடையே ஊடறுத்து முயக்கத்தை நெகிழ்விப்பதாயினும் என்றபடி. புலந்து உறைதல் - அவ்விடையீட்டை வெறுத்து உறைதல். நெகிழா முயக்கினை விரும்புவார் தலைவன் தலைவி இருவரும் ஆகலின், புலந்துறைதலும் இருவர்க்கும் கொள்க. `வீழும் இருவர்க் கினிதே வளியிடை, போழப் படாஅ முயக்கு'2 என்பது காண்க. சிறந்தது - சிறந்த இன்பம்; பொருள் முதலியனவுமாம். அடுத்த யாமை எனப் பிரித்து வேள்விக் குண்டத்தைச் சார வைக்கப் பெற்றுள்ள யாமை என்றலுமாம். இக்கருத்து, `நெடுமணி யூபத் திட்ட தவழ்நடை யாமை நீணீர்த், தொடுமணிக் குவளைப் பட்டம் துணையொடு நினைப்பதே போல்'3 எனத் தேவராலும் ஆளப் பெற்றுளது. தித்திய மடுத்த யாமை கயம் புகல் வேட்டாங்கு என்ற உவமை, அரிவை தோள் இப்பொழுது கூடுதற்கு அரிது என்பதனை விளக்கியவாறாம். பல மலைகளின் வெவ் வறை மருங்கின் என்றுரைத்தலுமாம். 362. குறிஞ்சி (இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.) பாம்புடை விடர பனிநீர் இட்டுத்துறைத் தேங்கலந் தொழுக யாறுநிறைந் தனவே வெண்கோட் டியானை பொருத புண்கூர்ந்து பைங்கண் வல்லியம் கல்லளைச் செறிய 5. முருக்கரும் பன்ன 4வள்ளுகிர் வயப்பிணவு கடிகொள வழங்கார் ஆறே ஆயிடை எல்லிற் றென்னான் வென்வேல் ஏந்தி நசைதர வந்த நன்ன ராளன் நெஞ்சுபழு தாக வறுவியன் பெயரின் 10. இன்றிப் பொழுதும் யான்வா ழலனே எவன்கொல் வாழி தோழிநம் இடைமுலைச் சுணங்கணி முற்றத் தாரம் போலவுஞ் சிலம்புநீடு சோலைச் சிதர்தூங்கு நளிர்ப்பின் இலங்குவெள் ளருவி போலவும் 15. நிலங்கொண் டனவால் திங்களங் கதிரே. - வெள்ளி வீதியார். (சொ-ள்) 11. தோழி-, வாழி-, 1-2. பாம்பு உடை விடர - பாம்புகளையுடைய மலை விடர் களினின்று வரும், பனிநீர் - குளிர்ந்த நீர், இட்டுத் துறை - ஒடுங்கிய துறைகளின் வழியாக, தேம் கலந்து ஒழுக - தேனுடன் கூடி ஒழுகலின், யாறு நிறைந்தனவே - யாறுகள் நிறைவுற்றன; 3-6. வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து - வெள்ளிய கொம்பினையுடைய யானை பாய்ந்து குத்திய புண் மிகுந்து, பை கண் வல்லியம் கல் அளை செறிய - பசிய கண்ணினையுடைய ஆண் புலி கற்குகையினுள்ளே ஒடுங்கி யிருக்க, முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு கடி கொள - செம்முருக்கின் அரும்பினை யொத்த கூரிய நகத்தினையுடைய வலிய பெண்புலி அதனைக் காவல் செய்திருத்தலின், ஆறு வழங்கார் - (யாவரும்) அந்நெறியில் இயங்கார்; 6-10. ஆயிடை எல்லிற்று என்னான் - அந்நிலையில் இருள் வந்து விட்டது என்று எண்ணாதவனாகி, வென் வேல் ஏந்தி - வெற்றியைத் தரும் வேலினைக் கையிற் கொண்டு, நசை தர வந்த நன்னராளன் - நம்பாலுள்ள காதல் கொண்டு வருதலால் வந்த நன்மையாளனாகிய நம் தலைவன், நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின் - தன் எண்ணம் பயனிலதாக நம்மைக் கூடாது மீளின், இன்று இப்பொழுதும் யான் வாழலன் - இன்று இவ் விரவும் யான் உயிர் தரித்திரேன், 11-15. நம் இடை முலை சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும் - நமது முலையிடமாய சுணங்கு அணிந்த பரப்பில் கிடக்கும் முத்துமாலை போலவும், சிலம்பு நீடு சோலை சிதர் தூங்கு நளிர்ப்பின் இலங்கு வெள் அருவி போலவும் - மலையினிடத்து நீண்ட சோலையில் துளிகள் சிதறும் குளிர்ச்சியினையுடைய விளங்கும் வெள்ளிய அருவி போலவும், திங்கள் அம் கதிர் நிலம் கொண்டன - திங்களின் அழகிய கதிர்கள் மலையிடத்தே பரவின; எவன் கொல் - நாம் செய்வது என்னையோ. (முடிபு) தோழி, வாழி! யாறு நிறைந்தன. வயப் பிணவு கடி கொள ஆறு வழங்கார். ஆயிடை வென் வேல் ஏந்தி நசைதர வந்த நன்னராளன் வறுவியன் பெயரின், இப்பொழுதும் யான் வாழலன் . திங்கள் அம் கதிர் நிலம் கொண்டன. எவன்கொல்? (வி-ரை) பாம்புடை விடர பனிநீர் என்றது நீரினது தீமையையும், இட்டுத் துறை என்றது, துறையினது தீமையையும், யாறு நிறைந்தன என்றது யாற்றினது தீமையையும் உணர்த்தியவாறாம். கடி கொள என்றதனை, கடி கொளாநின்றன என விரித்து, யாறு நிறைந்தன, வயப் பிணவு கடிகொளா நின்றன; ஆகலின் ஆறு வழங்கார் என உரைக்க. திங்களங் கதிர் நிலங் கொண்டன என்றமையான், நிலவு வெளிப்பாடு இரவுக் குறிக் கூட்டத்திற்கு இடையீடாதல் பெற்றாம். வறுவியன் பெயரின் என்பதற்கு ஏதுக் கூறுவாள் திங்களங் கதிர் நிலங் கொண்டன என்றாள். எல்லா வகையானும் நன்மை யுடையானாகிய தலைவன், நம்மேலுள்ள அன்பின் மிகுதியால், வழியருமை நோக்காது இரவுக்குறிக் கண் வந்தானாகலின், அவன் கூட்டம் பெறாது பெயரின் யான் உயிர் வாழ்தற்கு ஒருப்படேன். ஆயின், நிலவு வெளிப் பாட்டினால் கூட்டமும் இயைவதன்று. இதற்கு நான் என்ன செய்வேன் என்பாள் போன்று, தலைவன் விரைவில் வரைந்து கொள்ள வேண்டுமெனத் தோழி சிறைப் புறமாக உணர்த்தினா ளென்க. வாழலன் - அன் விகுதி தன்மைக்கண் வந்தது. 363. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) நிரைசெலல் இவுளி விரைவுடன் கடைஇ அகலிரு விசும்பிற் பகல்செலச் சென்று மழுகுசுடர் மண்டிலம் மாமலை மறைய பொழுதுகழி மலரிற் புனையிழை சாஅய் 5. அணையணைந் தினையை யாகல் கணையரைப் புல்லிலை நெல்லிப் புகரில் பசுங்காய் கல்லதர் மருங்கிற் கடுவளி யுதிர்ப்பப் பொலஞ்செய் காசிற் பொற்பத் தாஅம் அத்தம் நண்ணி அதர்பார்த் திருந்த 10. கொலைவெங் கொள்கைக் கொடுந்தொழின் மறவர் ஆறுசென் மாக்கள் அருநிறத் தெறிந்த எஃகுறு விழுப்புண் கூர்ந்தோர் 1 எய்திய வளைவாய்ப் பருந்தின் வள்ளுகிர்ச் சேவல் கிளைதரு 2தெள்விளி கெழுமுடைப் பயிரும் 15. இன்னா வெஞ்சுரம் இறந்தோர் முன்னிய செய்வினை வலத்த ராகி இவணயந்து எய்தவந் தனரே தோழி மையெழில் துணையேர் எதிர்மலர் உண்கண் பிணையேர் நோக்கம் பெருங்கவின் கொளவே. - மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார். (சொ-ள்) 17. தோழி-, 5-15. கணை அரை புல் இலை நெல்லி புகர் இல் பசு காய் - திரண்ட அரையினையும் சிறிய இலையினையும் உடைய நெல்லியின் வடுவற்ற பசிய காய்கள், கல் அதர் மருங்கின் கடு வளி உதிர்ப்ப - கற்களையுடைய நெறிகளிடத்தே கடிய காற்று உதிர்த்தலின், பொலன் செய் காசில் பொற்பத் தாஅம் - பொன்னாற் செய்த காசு போல் அழகு பெறப் பரவிக்கிடக்கும், அத்தம் நண்ணி அதர்பார்த் திருந்த - காட்டினை அடைந்து அங்கு வழிவருவாரைப் பார்த்துக் கொண்டிருந்த, கொலை வெம் கொள்கை கொடு தொழில் மறவர் - கொலையை விரும்பும் கோட்பாட்டினையும் கொடிய தொழிலையு முடைய மறவர், ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த - வழிச் செல்லும் மக்களது அரிய மார்பிலே எறிந்த, எஃகு உறு விழு புண் கூர்ந்தோர் எய்திய - வேலாலுற்ற சிறந்த புண்ணை மிகக் கொண்டு பட்டோரை அடைந்த, வளை வாய் வள் உகிர் பருந்தின் சேவல் - வளைந்த வாயினையும் கூரிய நகத்தினையும் உடைய பருந்தின் சேவல். கெழு முடை - ஆண்டுப் பொருந்திய ஊன் உண்ணற்கு, கிளை தரு தெள் விளி பயிரும் - தன் கிளையினைத் தருகிற்கும் தெளிந்த குரலால் அழைக்கும், இன்னா வெம் சுரம் இறந்தோர் - இன்னாமையைத் தரும் கொடிய சுரத்தைக் கடந்து சென்ற நம் தலைவர், 15-19. முன்னிய செய்வினை வலத்தர் ஆகி - தாம் கருதிச் சென்ற பொருளீட்டும் தொழிலில் வெற்றியுடையர் ஆகி, மை எழில் துணை ஏர் எதிர் மலர் உண்கண் பிணை ஏர் நோக்கம் - கரிய அழகிய இணை யொத்த எதிர் எதிர் பொருந்திய மலர்களைப் போன்ற மையுண்ட கண்களின் பெண்மானை யொத்த நின் பார்வை, பெரு கவின் கொள - மிக்க அழகினையுற, இவண் நயந்து எய்த வந்தனர் - நம்மை விரும்பி இங்கே வந்து சேர்ந்தனர்; ஆதலின், 1-3. நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ - வரிசையாகச் செல்லும் குதிரைகளை விரைவாகச் செலுத்தி, அகல் இரு விசும்பில் பகல் செல சென்று - அகன்ற பெரிய வானில் பகற் பொழுது கழியச் சென்று, மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய - மழுங்கிய ஒளியினையுடைய ஞாயிறு பெரிய மலையில் மறைந்திட, 4-5. புனை இழை - அழகிய அணியுடையாளே, பொழுது கழி மலரில் சாஅய் - பகற்பொழுது கழியவே குவியும் மலர் போல வாடி, அணை அணைந்து - பள்ளியை அடைந்து, இனையை ஆகல் - இத்தன்மை யுடையை ஆகாதேகொள். (முடிபு) தோழி! இன்னா வெஞ்சுரம் இறந்தோர் முன்னிய செய்வினை வலத்தராகி, நின் பிணையேர் நோக்கம் கவின் கொள இவண் எய்த வந்தனர். மண்டிலம் மாமலை மறைய, மலரிற்சாஅய் அணை அணைந்து இனையை ஆகல். (வி-ரை) பருதியின் தேரிற் பூட்டிய குதிரைகள் ஏழு என்ப ஆகலின், நிரை செலல் இவுளி என்றார். மண்டிலம் கடைஇ விசும்பிற் சென்று மலை மறைய என்க. இனையை ஆகல் - இங்ஙனம் வருந்தாதே என்றபடி. விழுப்புண் கூர்ந்தோர் - விழுப்புண் பட்டு இறந்தோரை என்க. எய்த வந்தனர் - அணுக வந்தனர் என்றுமாம். 364. முல்லை (பருவங் கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) மாதிரம் புதையப் பாஅய்க் கால்வீழ்த்து ஏறுடைப் பெருமழை பொழிந்தென அவறோறு ஆடுகளப் பறையின் வரிநுணல் கறங்க ஆய்பொன் அவிரிழை தூக்கி யன்ன 5. நீடிணர்க் கொன்றை 1கவின்பெறக் காடுடன் சுடர்புரை தோன்றிப் புதறலைக் கொளாஅ முல்லை இல்லமொடு மலரக் கல்ல பகுவாய்ப் பைஞ்சுனை மாவுண மலிரக் கார்தொடங் கின்றே காலை காதலர் 10. வெஞ்சின வேந்தன் வியன்பெரும் பாசறை வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார் 2யாதுசெய் வாங்கொல் தோழி நோதகக் கொலைகுறித் தன்ன மாலை துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே. - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார். (சொ-ள்) 12. தோழி! 1-9. மாதிரம் புதைய பாஅய் கால் வீழ்த்து- திசை யெல்லாம் மறையப் பரவிக் கால் இறங்கி, ஏறு உடை பெரு மழை பொழிந்தென - இடியேற்றினையுடைய பெரிய மழை சொரிந்ததாக, அவல் தோறு ஆடு கள பறையின் வரி நுணல் கறங்க- பள்ளங்க டோறும் ஆடும் களத்தே ஒலிக்கும் பறை போல வரிகளையுடைய தேரை ஒலிக்க, ஆய் பொன் அவிர் இழை தூக்கி அன்ன - சிறந்த பொன்னாலாய விளங்கும் அணிகளைத் தொங்க விட்டாற் போன்ற, நீடு இணர் கொன்றை கவின் பெற - நீண்ட பூங்கொத்துக்களை யுடைய கொன்றை அழகு பெற, காடு உடன் - காடு முழுவதும், சுடர் புரை தோன்றி புதல் தலை கொளாஅ - தோன்றிச் செடி விளக்குப் போன்ற பூக்களைத் தன்னிடத்தே கொள்ள, முல்லை இல்லமொடு மலர - முல்லைப் பூக்களும் தேற்றாவின் பூக்களும் மலரவும், கல்ல பகு வாய் பை சுனை மா உண மலிர - மலையிடத்தனவாகிய அகன்ற வாயினையுடைய அழகிய சுனைகள் விலங்குகள் நீர் உண்ணுமாறு நீர் நிறைய, காலை கார் தொடங்கின்று - (இங்ஙனம்), இக்காலம் கார்ப்பருவத்தைத் தொடங்கியது, 9-14. காதலர் வெம் சின வேந்தன் வியன் பெரும் பாசறை - நம் காதலரோ கொடிய சினத்தினையுடைய அரசனது மிகப் பெரிய பாசறைக்கண்ணே, வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார் - பகைவரை வென்றி கொள்ளும் விருப்பத்தால் நம்மை நினைத்தலும் செய்திலர், நோதக கொலைகுறித் தன்ன மாலை - நாம் வருந்த நம்மைக் கொல்லுதல் கருதி வருவது போன்ற மாலை, துனைதரு போழ்தின் நீந்தலோ அரிது - விரைந்து நம்பால் வருங்கால் அதனைக் கடந்து செல்லல் அரிதாகு மன்றோ, யாது செய்வாம் - யாம் என் செய்வாம். (முடிபு) தோழி! காலை கார் தொடங்கின்று. காதலர் வேந்தன் பாசறை வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார். மாலை துனைதரு போழ்தின், நீந்தலோ அரிது. யாது செய்வாம். (வி-ரை) தேரை யொலிக்கு வாச்சிய ஒலி ஒப்பாதல், `நெடுநீ ரவல பகுவாய்த் தேரை, சிறுபல் லியத்தின் நெடுநெறிக் கறங்க'1 `தேரை யொலியின் மானச் சீர்அமைத்துச், சில்லரி கறங்கும் சிறு பல் லியத்தொடு'2 என முன்னரும் கூறப்பெற்றுள்ளன. காடுடன், என்பதனை இடைநிலை விளக்காகக் கொண்டு, கவின் பெற, தலைக் கொள்ள, மலர என்பவற்றோடுங் கூட்டுக. சுடர் புரை பூ என விரித்துத் தலைக் கொளாஅ என்பதனைத் தலைக்கொள்ள எனத் திரிக்க. காலை என்பது - காலம் என்னும் பொருட்டாதலை. `கழகத்துக் காலை புகின்'3 என்பதனாலும், காதலரைப் பிரிந்தார்க்கு மாலை கொல்வது போல் வரும் என்பதனை, `காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து, ஏதிலர் போல வரும்'4 என்பதனாலும் அறிக. 365. பாலை (தலைமகன் இடைச்சுரத்து நின்று சொல்லியது.) அகல்வாய் வானம் ஆலிருள் பரப்பப் பகலாற்றுப் படுத்த பையென் தோற்றமொடு சினவல் போகிய புன்கண் மாலை அத்தம் நடுகல் ஆளென உதைத்த 5. கான யானைக் கதுவாய் வள்ளுகிர் இரும்பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண் கடுங்கண் ஆடவர் 1ஏமுயல் கிடக்கை வருநர் இன்மையிற் களையுநர்க் காணா என்றூழ் வெஞ்சுரம் தந்த நீயே 10. துயர்செய் தாற்றா யாகிப் பெயர்பாங்கு உள்ளினை 2வாழிய நெஞ்சே வென்வேல் மாவண் கழுவுள் 3காமூர் ஆங்கண் பூதந் தந்த பொரியரை வேங்கைத் தண்கமழ் புதுமலர் நாறும் 15. அஞ்சில் ஓதி ஆய்மடத் தகையே. - மதுரை மருதனிளநாகனார். (சொ-ள்) 11. நெஞ்சே-, வாழிய-, 1-3. அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்ப - அகற்சி வாய்ந்த வானத்தின்கண் மிக்க இருள் பரக்க, பகல் ஆற்றுப்படுத்த - ஞாயிற்றைப் போக்கிய, பை என் தோற்றமொடு - பசிய தோற்றத் துடன், சினவல் போகிய - சினத்தல் மிக்க, புன்கண் மாலை - துன்பத்தைச் செய்யும் மாலைக் காலத்தே, 4-9. அத்தம் நடு கல் ஆள் என உதைத்த - காட்டு நெறியிலுள்ள நடுகல்லை ஆள் என நினைத்து உதைத்த, கான யானை - காட்டு யானையின், கதுவாய் வள் உகிர் - சிதைவுற்ற வளவிய நகம், இருபனை இதக்கையின் ஒடியும் ஆங்கண் - பெரிய பனை நுங்கின் தோடு போல ஒடிந்திடும் அவ்விடத்தே, கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை - வன்கண்மையுடைய ஆறலைப்போர் அம்பு எய்யும் முயற்சியொடு பதுங்கி யிருத்தற்கண், வருநர் இன்மையின் களையுநர் காணா - வழிவருவார் இல்லாமையால் தம் வறுமை களைவோரைக் காணலாகாத இடமாய, என்றூழ் வெம் சுரம் தந்த நீ - வெப்பம் மிக்க கொடிய சுர நெறியில் என்னை அழைத்து வந்த நீ, 10-15. துயர் செய்து ஆற்றாய் ஆகி - எனக்குத் துயரினைச் செய்து நீயும் ஆற்றாயாகி, பெயர்பு - மீண்டு, வென்வேல் மா வண் கழுவுள் - வென்றி வேலினையும் சிறந்த வண்மையினையுமுடைய கழுவுள் என்பானது, காமூர் ஆங்கண் - காமூராகிய அவ்விடத்து, பூதம் தந்த பொரி அரை வேங்கை - பூதத்தால் தரப்பட்ட பொரிந்த அடிமரத்தினையுடைய வேங்கையின், தண் கமழ் புது மலர் நாறும் - தண்ணிதாகி மணக்கும் புது மலர் போல நாறும், அம் சில் ஓதி - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய நம் தலைவியின், ஆய் மடத் தகை - அழகிய மடப்பமாகிய குணத்தினை, உள்ளினை - நினைப்பாய் ஆயினை. (முடிபு) நெஞ்சே! புன்கண்மாலை வெஞ்சுரம் தந்த நீ, துயர்செய்து ஆற்றாயாகி, பெயர்பு, அஞ்சில் ஓதியின் ஆய்மடத் தகையினை உள்ளினை. (வி-ரை) ஆல் இருள் - நிறைந்த இருள், ஆலுதல் - நிறைதல், மால் எனப் பிரித்தலுமாம். பை என் தோற்றம் - பசந்த தோற்றம். போகிய - மிக்க. மாலையில் வெஞ்சுரம் தந்த என்க. இனி, மாலையில் நடுகல் ஆள் என உதைத்த எனவும், மாலையில் துயர் செய்து ஆற்றாயாகி என்றும் முடித்தலுமாம். கதுவாய் - சிதைவு, உதைத்தலால் சிதைவுற்ற உகிர் என்க. இதக்கை - பனை நுங்கின் தோடு. வருநர் இன்மையின் என்றது, காட்டின் கொடுமையால் வருவார் இல்லாமை யால் என்க. சுரத்தின் கொடுமை கருதாது என்னை அழைத்து வந்த நீயே, இடைச் சுரத்தில், மீண்டு நின்று, தலைவியின் நலத்தினை உள்ளி மீளுகின்றனை; நின் அறிவு இருந்தவாறு என்னையோ எனத் தலைவன் நெஞ்சினை நோக்கிக் கழறினான் என்க. 366. மருதம் (பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் வாயில் வேண்டியவிடத்துத் தோழி சொல்லியது.) தாழ்சினை மருதம் தகைபெறக் கவினிய நீர்சூழ் வியன்களம் பொலியப் போர்பழித்துக் கள்ளார் களமர் பகடு1தளை மாற்றிக் கடுங்காற் றெறியப் போகிய துரும்புடன் 5. காயற் சிறுதடி கண்கெடப் பாய்தலின் 2இருநீர்ப் பரப்பிற் பனித்துறைப் பரதவர் தீம்பொழி வெள்ளுப்புச் சிதைதலிற் சினைஇக் கழனி உழவரொடு மாறெதிர்ந்து மயங்கி இருஞ்சேற் றள்ளல் எறிசெருக் கண்டு 10. நரைமூ தாளர் கைபிணி விடுத்து நனைமுதிர் தேறல் நுளையர்க் கீயும் பொலம்பூண் எவ்வி நீழல் அன்ன நலம்பெறு பணைத்தோள் நன்னுதல் அரிவையொடு மணங்கமழ் தண்பொழில் அல்கி நெருநை 15. நீதற் பிழைத்தமை அறிந்து கலுழ்ந்த கண்ணளெம் அணங்கன் னாளே. - குடவாயிற் கீரத்தனார். (சொ-ள்) தலைவ! 1-5. தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய - தாழ்ந்த கிளைகளையுடைய மருத மரம் சிறக்க அழகு பெற்றிருக்கும், நீர் சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து - நீர் சூழ்ந்த அகன்ற களம் பொலிவுறப் போரினைப் பிரித்துக் கடாவிட்டு, கள் ஆர் களமர் - பின் கள்ளுண்டு வந்த உழவர், பகடு தளை மாற்றி - அக் கடாக்களைக் கட்டவிழ்த்து விடுத்து, கடு காற்று எறிய- கடிய காற்றில் நெல்லினைத் தூற்ற, போகிய துரும்பு உடன் - பறந்து போன துரும்புகள் முழுவதும், காயல் சிறு தடி கண் கெட பாய்தலின் - உப்பளத்தி லுள்ள சிறிய பாத்திகளில் இடமில்லாது எங்கும் வீழ்ந்து பரத்தலின், 6-9. இரு நீர் பரப்பின் பனி துறை பரதவர் - பெரிய கடற் பரப்பில் குளிர்ந்த துறைக்கண் ணுள்ள நுளையர்கள், தீம் பொழி வெள் உப்பு சிதைதலின் - இனிமை மிக்க வெள்ளுப்பு கெட்டமையின், சினைஇ - சினந்து, கழனி உழவரொடு மாறு எதிர்ந்து - வயல் உழவரொடு மாறுபட்டு எதிர்த்து, மயங்கி இரு சேற்று அள்ளல் எறிசெரு கண்டு - கைகலந்து மிக்க சேற்றுக் குழம்பினை எறிந்து செய்யும் போரினைக் கண்டு, 10-11. நரை மூதாளர் கை பிணி விடுத்து - நரைத்த முதியோராகிய மருத நில மக்கள் போர் செய்யும் கைப் பிணிப்பினை விடுத்து விலக்கி, நனை முதிர் தேறல் - முற்றிய தேனாகிய கள்ளின் தெளிவை, நுளையர்க்கு ஈயும் - பரதவர்க்கு அளிக்கும் இடமாகிய, 12-16. பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன - பொற் பூண் அணிந்த எவ்வி என்பானது நீழல் என்னும் ஊர்போன்ற, நலம் பெறு பணை தோள் நல்நுதல் அரிவையொடு - அழகு பெற்ற மூங்கில் போலும் தோளும் நல்ல நெற்றியும் உடைய பரத்தையொடு, மணம் கமழ் தண் பொழில் அல்கி - மணம் நாறும் குளிர்ந்த சோலையிலே தங்கி, நெருநை - நேற்று, நீ தன் பிழைத்தமை அறிந்து - நீ தனக்குத் தீங்கு செய்தமையை யுணர்ந்து, எம் அணங்கு அன்னாள் - எம் தெய்வம் போன்றவளாய தலைவி, கலுழ்ந்த கண்ணள் - அழுத கண்ணினை யுடையள் ஆயினாள். (முடிபு) தலைவ! நீ எவ்வி நீழல் அன்ன அரிவையொடு நெருநை தண்பொழில் அல்கி, தற்பிழைத்தமை அறிந்து, எம் அணங்கு அன்னாள் கலுழ்ந்த கண்ணள் ஆயினள்; என் செய்தனை. பரதவர், உழவரொடு மாறெதிர்ந்து மயங்கி, அள்ளல் எறி செருக் கண்டு, நரை மூதாளர், கை பிணி விடுத்து, தேறல் நுளையர்க்கு ஈயும் நீழல் என்க. (வி-ரை) போர்பு - நெற்கதிரின் போர். அள்ளல் எறி செரு - அள்ளலி னின்று தாக்கும் செரு என்றுமாம். நுளையர் பக்கல் தீங்கு இன்மையின், நரை மூதாளர், அவர்க்குத் தேறல் நல்கி அமைதி செய்வாராயினர் என்க. ஈயும் என்னும் பெயரெச்சம் நீழல் என்னும் இடப்பெயர் கொண்டது. பனித்துறைப் பரதவரும் கழனி உழவரும், இங்ஙனம் செருச்செய்தற் கிடமாகிய நீழல் என்றமையால், அவ்வூர் நெய்தலும் மருதமும் மயங்கியதாதல் பெற்றாம். `யாழிசை மறுகின் நீடூர் கிழவோன், வாய்வாள் எவ்வி'1 என முற் போந்தமையின், நீழல் என்பது நீடல் என்பதன் திரிபாதலுங் கூடும். கண்ணள் - கண்ணள் ஆயினள் என ஆக்கச் சொல் விரித்து உரைக்க. 367. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.) இலங்குசுடர் மண்டிலம் புலந்தலை பெயர்ந்து பல்கதிர் மழுகிய கல்சேர் அமையத்து அலந்தலை மூதேறு ஆண்குரல் விளிப்ப மனைவளர் நொச்சி மாசேர்பு வதிய 5. 2முனையுழை யிருந்த அங்குடிச் சீறூர்க் கருங்கால் வேங்கைச் செஞ்சுவல் வரகின் மிகுபதம் நிறைந்த தொகுகூட் டொருசிறைக் குவியடி வெருகின் பைங்கண் ஏற்றை ஊனசைப் 3பிணவின் உயங்குபசி களைஇயர் 10. தளிர்புரை கொடிற்றிற் செறிமயிர் எருத்திற் கதிர்த்த சென்னிக் கவிர்ப்பூ அன்ன நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும் புல்லென் மாலையும் இனிதுமன் றம்ம நல்லக வனமுலை அடையப் புல்லுதொறு 15. உயிர்குழைப் பன்ன சாயற் செய்தீர் இன்றுணைப் புணர்ந்திசி னோர்க்கே. - பரணர். (சொ-ள்) தோழி, 14-16. நல் அகம் வன முலை அடைய புல்லுதொறு - நல்ல மார்பகத்தே யுள்ள அழகிய முலையினைப் பொருந்தப் புல்லுந்தொறும், உயிர் குழைப்பு அன்ன - உயிர் குழைவது போலும், சாயல் - மென்மை வாய்ந்த, செயிர்தீர் இன் துணை - குற்றமற்ற இனிய துணைவரை, புணர்ந்திசினோர்க்கு - கூடியிருப்பவர்கட்கு, 1-13. இலங்கு சுடர் மண்டிலம் - விளங்கும் ஒளி வாய்ந்த ஞாயிறு, புலம் தலை பெயர்ந்து - வானிடத்தினின்றும் நீங்கி, பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து - தனது பலவாகிய கதிர்களும் வெம்மை குறையப் பெற்ற மேற்கு மலையினை அடையும் போழ்தில், அலந்தலை முது ஏறு - கலக்க முற்ற முதிய ஏறு, ஆண்குரல் விளிப்ப - தனது ஆண் குரல் தோன்ற அழைத்திட, மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய - மனையைச் சூழ்ந்து வளரும் நொச்சியின்கண் மான்கள் சேர்ந்து தங்கியிருக்க, முனை உழை இருந்த அம் குடி சிறு ஊர் - காட்டரண்களின் பக்கத்தேயிருந்த அழகிய குடியிருப் புக்களையுடைய சிற்றூரின்கண்ணே, கரு கால் வேங்கை செஞ் சுவல் வரகின் - கரிய அடியினையுடைய வேங்கைமரம் சூழ்ந்த சிவந்த மேட்டு நிலத்தே விளைந்த வரகாகிய, மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை - மிக்க தானியம் நிறைந்த தொகுதியாகவுள்ள கூட்டின் ஒரு பக்கத்தே, குவி அடி பைங் கண் வெருகின் ஏற்றை - குவிந்த அடியினையும் பசிய கண்ணினையு முடைய காட்டுப் பூனையின் ஆண், ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர் - ஊனை விரும்பியுள்ள பெண் பூனையின் வருத்தும் பசியினை நீக்குமாறு, தளிர்புரை கொடிற்றின் - தளிரையொத்த கன்னத் தினையும், செறி மயிர் எருத்தின் - நெருங்கிய மயிரினையுடைய கழுத்தினையும், கதிர்த்த சென்னி - நிமிர்த்த தலையின்கண், கவிர் பூ அன்ன நெற்றி - முருக்கம் பூவினை யொத்த சூட்டினையு முடைய, சேவல் அற்றம் பார்க்கும் - கோழிச் சேவலைப் பற்றும் அமையத்தினைப் பார்த்திருக்கும், புல் என் மாலையும் - பொலிவற்ற இம் மாலைப் போதும், மன்ற இனிது - உறுதியாக இனிதாகும். (முடிபு) தோழி! இன் துணைப் புணர்ந்திசினோர்க்குப் புல்லென் மாலையும் மன்ற இனிது. (வி-ரை) மண்டிலம் பெயர்ந்து கல் சேர் அமையம் எனவும், பல் கதிர் மழுகிய அமையம் எனவும் தனித்தனி கூட்டுக. அலந்தலை- கலக்கம்; முதுமையாலாயது; வேட்டுவராற் பெண்மானுக்குத் தீங்குண்டாகுமோ என்ற கலக்கமுமாம்; அலந்ததலை என்பதன் விகாரமுமாம். ஏறு விளித்தலால் மா சேர்பு வதிய என்க. விளிப்ப என்னும் எச்சம் காரணப் பொருட்டாயது. நொச்சி மா சேர்பு வதிய, வெருகின் ஏற்றை சேவல் அற்றம் பார்க்கும் புல்லென் மாலை என்க. வெருகு மாலைப் பொழுதில் கோழியைப் பற்றி யுண்ணும் இயல்பினது என்பது, `கோழிக் குறுங்காற் பேடை, வேலி வெருகினம் மாலை யுற்றென, புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇப், பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்கு'1 என்றதனாலும் அறியப்படும். மாலையும், என்ற உம்மை இழிவு சிறப்பு. மன்ற என்பதன் ஈறு தொக்கது. புணர்ந்திசினோர்க்கு மாலையும் இனிது என்றதனால், தலைவனைப் பிரிந்துள்ள யான், இத்தகைய மாலைப் பொழுதில் எங்ஙனம் ஆற்றியிருப்பேன் என வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் எதிரழிந்து கூறினாள் என்க. 368. குறிஞ்சி (பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.) தொடுதோற் கானவன் சூடுறு வியன்புனம் கரிபுறங் கழீஇய பெரும்பாட் டீரத்துத் தோடுவளர் பைந்தினை நீடுகுரல் காக்கும் ஒண்டொடி மகளிர்க்கு ஊசல் ஆக 5. ஆடுசினை யொழித்த 1கோடிணர் கஞலிய குறும்பொறை அயலது நெடுந்தாள் வேங்கை மடமயிற் குடுமியிற் றோன்றும் நாடன் உயர்வரை மருங்கிற் காந்தளஞ் சோலைக் குரங்கறி வாரா மரம்பயில் இறும்பிற் 10. கடிசுனைத் தெளிந்த மணிமருள் தீநீர் பிடிபுணர் களிற்றின் எம்மொ டாடிப் 2பன்னாள் உம்பர்ப் பெயர்ந்து 3சின்னாள் கழியா மையே வழிவழிப் பெருகி அம்பணை விளைந்த தேக்கட் டேறல் 15. வண்டுபடு கண்ணியர் மகிழும் சீறூர் எவன்கொல் வாழி தோழி கொங்கர் மணியரை யாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவின் அன்ன அலரா கின்றது பலர்வாய்ப் பட்டே. - மதுரை மருதனிளநாகனார். (சொ-ள்) 16. தோழி-, வாழி-, 1-7. தொடு தோல் கானவன் சூடு உறு வியன் புனம் - காலிலே செருப்பினை அணிந்த வேடன் சுட்டெரித்த அகன்ற கொல்லையில், கரி புறம் கழீஇய பெரும்பாட்டு ஈரத்து - கரிந்த இடங்களைக் கழுவிச் சென்ற மிக்க பெயலாய மழை ஈரத்தில், தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும் - இதழ்கள் வளர்ந்த பசிய தினையின் நீண்ட கதிர்களைக் காத்திருக்கும், ஒள் தொடி மகளிர்க்கு ஊசல் ஆக ஆடு சினை ஒழித்த - ஒளி பொருந்திய வளையலை அணிந்த மகளிர் தமக்கு ஊசல் ஆகக் கொண்டு ஆடும் கிளைகளைப் போக்கிய, கோடு இணர் கஞலிய - கொம்பிலே பூங்கொத்துக்கள் நெருங்கிய, குறும் பொறை அயலது - குன்றின் பக்கத்திலுள்ளதாகிய, நெடு தாள் வேங்கை - நீண்ட அடியினையுடைய வேங்கைமரம், மட மயில் குடுமியில் தோன்றும் நாடன் - இளைய மயிலின் உச்சியிலுள்ள குடுமி போலத் தோன்றும் மலை நாட்டையுடைய நம் தலைவன், 8-13. உயர் வரை மருங்கில் காந்தள் அம் சோலை - உயர்ந்த மலைப் பக்கத்தேயுள்ள காந்தளையுடைய அழகிய சோலையாகிய, குரங்கு அறி வாரா மரம் பயில் இறும்பில் - குரங்குகளும் ஏறி அறிதல் இல்லாத நீண்ட மரங்கள் செறிந்த காட்டில், கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் - விளக்கம் பொருந்திய சுனையில் உள்ள தெளிந்த பளிங்கினை யொத்த இனிய நீரில், பிடி புணர் களிற்றின் எம்மொடு பல்நாள் ஆடி - பிடியுடன் கூடிய களிறு போல நம்முடன் பல நாளும் ஆடி, உம்பர் பெயர்ந்து - நம்மைப் பிரிந்து வேறிடம் சென்று, சின்னாள் கழியாமையே - சில நாள் கழிதற்கு முன்பே, வழிவழி பெருகி - அந் நிகழ்ச்சி முறைமுறையாகப் பெருகி, 14-15. அம் பணை விளைந்த தேன் கள் தேறல் - அழகிய மூங்கிற் குழாயில் முற்றிய தேனாகிய கள்ளின் தெளிவை, வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர் - வண்டு மொய்க்கும் கண்ணியை யுடையாராய் உண்டு மகிழும் சிற்றூரின்கண்ணே, 16-19. பலர் வாய் பட்டு - பலர் வாயிலும் பேசப்பட்டு, கொங்கர் மணி அரை யாத்து மறுகின் ஆடும் - கொங்கு நாட்டினர் மணியினை இடையிற் கட்டிக் கொண்டு தெருவில் ஆடும், உள்ளி விழவின் அன்ன - உள்ளி விழவின் ஆரவாரம் போன்ற, அலர் ஆகின்றது - அலராகா நின்றது; எவன்கொல் - இஃதென்னையோ! (முடிபு) தோழி, வாழி! வேங்கை மடமயிர் குடுமியிற் றோன்றும் நாடன், சுனைத் தீ நீர் பன்னாள் எம்மொடாடி, பெயர்ந்து சின்னாள் கழியாமை, அந்நிகழ்ச்சி, வழிவழிப் பெருகி, பலர் வாய்ப்பட்டு, உள்ளிவிழவின் அன்ன அலராகின்றது எவன்கொல். (வி-ரை) ஆடு சினை, பக்கங்களிற் படிந்த கிளை யென்றும், கோடு, மேலே நிவந்த கொம்பென்றுங் கொள்க. பைந்தினை காக்கும் மகளிர்க்கு ஊசலாக ஆடு சினை யொழித்த என்றது, இனித் தாம் தினைப்புனம் காக்குமாறு இல்லை என்றதனைக் குறிப்பினால் உணர்த்தியபடியாம். இணர் கஞலிய வேங்கை எனவும் குறும் பொறை அயலதாகிய வேங்கை எனவும் தனித்தனி கூட்டுக. சோலையாகிய இறும்பு என்க. அன்றி, சோலைக்கண்ணதாகிய இறும்பு என்றலுமாம். குரங்கும் என்னும் உம்மை தொக்கது. அறிவாரா - அறியலாகாத. அந் நிகழ்ச்சி வழிவழிப் பெருகி யென வருவித்துரைக்க. கொங்கர் - கொங்கு நாட்டினர். தலைவன் கேட்டு வரைந்து கொள்ள வேண்டுமென்னும் கருத்தால் அலராகின்றது எவன்கொல் எனத் தோழி தலைமகட்குச் சொல்லுவாள்போற் கூறினாள் என்க. 369. பாலை (மகட் போக்கிய செவிலி சொல்லியது.) கண்டிசின் 1மகளே கெழீஇ இயைவெனை ஒண்டொடி செறித்த முன்கை ஊழ்கொள்பு மங்கையர் பலபா ராட்டச் செந்தார்க் கிள்ளையுந் தீம்பால் உண்ணா மயிலியற் 5. சேயிழை மகளிர் ஆயமும் அயரா தாழியும் மலர்பல அணியா கேழ்கொள 2காழ்புனைந் தியற்றிய வனப்பமை நோன்சுவர்ப் பாவையும் பலியெனப் பெறாஅ நோய்பொர இவைகண் டினைவதன் தலையும் நினைவிலேன் 10. கொடியோள் முன்னிய துணரேன் தொடியோய் இன்றுநின் ஒலிகுரல் மண்ணல் என்றதற்கு எற்புலந் தழிந்தன ளாகித் தற்றகக் கடலந் தானைக் கைவண் சோழர் கெடலரு நல்லிசை உறந்தை யன்ன 15. நிதியுடை நன்னகர்ப் புதுவது புனைந்து தமர்மணன் அயரவும் ஒல்லாள் கவர்முதல் ஓமை நீடிய உலவை நீளிடை மணியணி பலகை மாக்காழ் நெடுவேல் துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின் 20. அறியாத் தேஎத்து அருஞ்சுரம் மடுத்த சிறியோற் கொத்தவென் பெருமடத் தகுவி சிறப்புஞ் சீரும் இன்றிச் சீறூர் நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை 3ஓரா யாத்த ஒரு தூண் முன்றில் 25. ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ மேயினள் கொல்லென நோவல் யானே. - நக்கீரர். (சொ-ள்) 1. மகளே-, கெழீஇ இயைவெனை - அவளுடன் பொருந்தி இயைந்திருந்தேனுடைய நிலையினை, கண்டிசின் - காண் பாயாக; 2-8. ஒள் தொடி செறித்த முன் கை ஊழ் கொள்பு - ஒளி பொருந்திய வளையலைச் செறித்த முன் கையில் முறையானே கொண்டு, மங்கையர் பல பாராட்ட - சூழ நின்ற மங்கையர் பலவாறாகப் பாராட்ட, செந்தார்க் கிள்ளையும் - சிவந்த இரேகையினை யுடைய கிளிகளும், தீம்பால் உண்ணா - இனிய பாலை உண்கின்றில, மயில் இயல் சேய் இழை மகளிர் ஆயமும் - மயில் போலும் சாயலையுடைய சிவந்த அணிகளை யணிந்த தோழியர் கூட்டங் களும், அயரா - விளையாடுகின்றில, தாழியும் மலர் பல அணியா - பூஞ்செடி யுடைய தாழிகளும் பல மலர்களைக் கொண்டில, கேழ் கொள காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன்சுவர் பாவையும் பலி என பெறாஅ - அழகிய நிறம் பொருந்த முத்துவடம் முதலிய புனைந்து செய்த அழகு அமைந்த வலிய சுவரின்கண் ணுள்ள பாவைகளும் பலி என எதனையும் கொண்டில, 8-9. இவை கண்டு நோய் பொர இனைவதன் தலையும் - இவைகளைக் கண்டு நோய் வருத்த வருந்துவதன் மேலும், 9-12. நினைவிலேன் - சூழ்ச்சி யில்லேனாகிய யான், கொடியோள் முன்னியது உணரேன் - கொடியளாகிய அவள் எண்ணியதை உணரேனாகி, தொடியோய் - தொடியணிந்த மகளே, இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு - இன்று நினது தழைத்த கூந்தலைப் புனைக என்றதற்கு, என் புலந்து அழிந்தனள் ஆகி - என்னை வெறுத்து மனம் உடைந்தவளாகி, 12-16. தன் தக - அவள் தன் செல்வ நிலைக்கேற்ற பரிசு, கடல் தானை கை வண் சோழர் - கடல் போன்ற சேனையினையும் கைவண் மையையும் உடைய சோழரது, கெடல் அரும் நல் இசை உறந்தை அன்ன - நீங்குதல் இல்லாத நல்ல புகழினையுடைய உறையூர் போன்ற, நிதி உடை நல் நகர் புதுவது புனைந்து - செல்வமுடைய நல்ல மனையில் புதுவதாக ஒப்பனை செய்து, தமர் மணன் அயரவும் ஒல்லாள் - தன் தமராவார் மணம் செய்விக்கவும் மனம் பொருந்தாத வளாகி, 16-21. கவர் முதல் ஓமை நீடிய உலவை நீள் இடை - கவர்த்த அடியினையுடைய ஓமை மரங்கள் உயர்ந்துள்ள காடாகிய நீண்ட இடத்தில், மணி அணி பலகை - மணிகள் பதித்த பரிசையினையும், மா காழ் நெடு வேல் - சிறந்த காம்பினையுடைய நீண்ட வேலினை யும், துணிவு உடை உள்ளமொடு - துணிவு தங்கிய நெஞ்சமுடன், துதைந்த முன்பின் - மிக்க மெய் வலியினையும் உடைய, அறியா தேஎத்து அரு சுரம் மடுத்த - அறியப்படாத தேயத்தின்கண் அரிய சுர நெறியில் கொண்டுபோய, சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி - இளையானுக்குப் பொருந்திய பெரிய மடப்பமும் தகுதியுமுடைய என் மகள், 22-26. சிறப்பும் சீரும் இன்றி - நன்கு மதிப்பும் உயர்வும் இல்லாது, சீறூர் நல்கூர் பெண்டின் - சிறிய ஊரில் வறுமையுற்ற பெண்டினது, புல் வேய் குரம்பை - புல் வேய்ந்த குடிலாய, ஓர் ஆ யாத்த - ஒரு பசு கட்டியுள்ள, ஒரு தூண் முன்றில் - ஒற்றைத் தூண் கொண்ட முகப்பினையுடைய, ஏது இல் வறு மனை - இயைபில்லாத வறிய மனையில், சிலம்பு உடன் கழீஇ மேயினள் கொல் என - சிலம்பு கழித்து அவனுடன் மணம் பொருந்தினளோ என்று, யான் நோவல் - யான் வருந்துவேன். (முடிபு) மகளே! கெழீஇ இயைவெனைக் கண்டிசின்; கிள்ளையும் தீம்பால் உண்ணா; ஆயமும் அயரா; தாழியும் மலர் பல அணியா; பாவையும் பலியெனப் பெறாஅ; இவைகண்டு இனைவதன் றலையும், நினைவிலேன் உணரேன், ஒலிகுரல் மண்ணல் என்றதற்கு அழிந்தனளாகி, தமர் மணன் அயரவும் ஒல்லாள், அருஞ் சுரம் மடுத்த சிறியோர்க்கு ஒத்த என் பெரு மடத் தகுவி, சீறூர் ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ மேயினள் கொல் லென யான் நோவல். (வி - ரை) மகளே என்றது தோழியை. கெழீஇ இயைவெனை தலைவியுடன் கெழுதகைமை பூண்டு பொருந்தியிருந்த எனது நிலையினை என்க. பாராட்ட - பாராட்டவும், கிள்ளை பால் உண்ணாமை முதலியன தலைவியின் பிரிவால் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், ஓரறிவு உயிராகிய தாழிப் பூஞ்செடி முதல் தெய்வம் ஈறாகிய அனைத்துயிரும் தலைவியின் பிரிவால் வருந்தினமை உணர்த்திய வாறு காண்க. இவைகண்டு இனைவதன்றலையும், மேயினள் கொல்லென நோவல் எனக் கூட்டுக. தொடியோய் என்றது தலைமகளைச் செவிலி விளித்தது. மண்ணல் - மண்ணுக என வியங்கோள். தற்றகத் தமர் மணம் அயரவும் என்க. நகர்ப் புதுவது புனைந்து - மனையைப் புதுவதாக ஒப்பனை செய்து என்றுமாம். பலகையினையும் வேலினையும் உள்ளமொடு முன்பினையும் உடைய சிறியோன் எனவும் ஒல்லாள் சிறியோற்கு ஒத்த எனவும் கூட்டுக. சிறப்பு - நன்கு மதிப்பு; சீர் - உயர்வு. `சீர்மை சிறப்பொடு- நீங்கும்'1 என்புழிப் பரிமேலழகர் உரைத்தவாறு காண்க. சிலம்புடன் கழீஇ என்பதற்குக் 2`கூட லன்னதன், அருங்கடி வியனகர்ச் சிலம்புங் கழியாள்' என்புழி உரைத்த விளக்கவுரை காண்க. 370. நெய்தல் (பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.) வளைவாய்க் கோதையர் வண்டல் தைஇ இளையோர் செல்ப எல்லும் எல்லின்று அகலிலைப் புன்னைப் புகரில் நீழற் பகலே எம்மொ டாடி இரவே 5. காயல் வேய்ந்த தேயா நல்லில் நோயொடு வைகுதி யாயின் நுந்தை அருங்கடிப் படுவலும் என்றி மற்றுநீ செல்லல் என்றலும் ஆற்றாய் செலினே வாழலென் என்றி யாயின் ஞாழல் 10. வண்டுபடத் ததைந்த கண்ணி நெய்தல் தண்ணரும் பைந்தார் துயல்வர அந்திக் கடல்கெழு செல்வி கரைநின் றாங்கு நீயே கானல் ஒழிய யானே வெறிகொள் பாவையிற் பொலிந்தவென் அணிதுறந்து 15. ஆடுமகள் போலப் பெயர்தல் ஆற்றேன் தெய்ய அலர்கவிவ் வூரே. - அம்மூவனார். (சொ-ள்) தோழி! 1-2. வளை வாய் கோதையர் இளையோர் - வளைவு கொண்ட மாலையை யுடைய இளமகளிர், வண்டல் தைஇ செல்ப - வண்டல் விளையாட்டினைச் செய்து மீண்டு செல்லா நிற்பர், எல்லும் எல்லின்று - பகலும் ஒளி குறைந்தது, 3-7. பகலே - பகற்பொழுதில், அகல் இலை புன்னை புகர் இல் நீழல் - அகன்ற இலைகளையுடைய புன்னையின் புள்ளி யில்லாத நிழலில், எம்மொடு ஆடி - எங்களுடன் விளையாடி, இரவே - இராப் பொழுதில், காயல் வேய்ந்த தேயா நல் இல் - காய்ந்த புல்லால் வேயப் பெற்ற வளங் குன்றாத நல்ல நமது இல்லின்கண், நோயொடு வைகுதி யாயின் - வருத்தத்துடன் பொருந்தி யிருப்பா யாயின், நுந்தை அருங் கடி படுவல் என்றி - உனது தந்தையின் அரிய காவற் படுவேன் என்கின்றனை, 7-9. மற்று நீ செல்லல் என்றலும் ஆற்றாய் - அன்றி நீ இல்லிற்குச் செல்க என்று நான் கூறுதலையும் பொறாயாகி, செலினே வாழலென் என்றி - செல்லின் உயிர் வாழேன் என்கின்றனை, ஆயின் - அங்ஙன மாயின், 9-16. ஞாழல் வண்டு பட ததைந்த கண்ணி - புலிநகக் கொன்றையது வண்டு மொய்க்க மலர்ந்த மலர்க் கண்ணியுடன், நெய்தல் தண் அரும் பைந்தார் துயல்வர - நெய்தலின் தண்ணிய அரிய பசிய மலர்மாலை அசைய, அந்தி - அந்திக்காலத்தே, கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு - கடற் றெய்வம் கரையின்கண் நிற்பதுபோல, நீ கானல் ஒழிய - நீ இக் கடற்கரைச் சோலையில் தனித்து நிற்க, யான், வெறி கொள் பாவையில் பொலிந்த என் அணி துறந்து - வெறியாட்டம் மேவிய மகள் போன்று பொலிவுற்ற எனது அழகினைத் துறந்து, ஆடு மகள் போலப் பெயர்தல் ஆற்றேன் - அவள் பின் வறிதே பெயர்தல் போல நீங்குதல் இயலாதவளாகின்றேன், இ ஊர் அலர்க - இவ்வூர் அலர் கூறினும் கூறுக. (முடிபு) தோழி! புன்னை நீழல் பகல் எம்மொடாடி, இரவு நல் இல் நோயொடு வைகுதியாயின், நுந்தை அருங்கடிப் படுவல் என்றி, மற்று, செலின் வாழலென் என்றி, ஆயின் கடல்கெழு செல்வி கரை நின்றாங்கு நீ கானல் ஒழிய யான் என் அணி துறந்து ஆடுமகள் போலப் பெயர்தல் ஆற்றேன். இவ்வூர் அலர்க. (வி-ரை) கோதையர் ஆய இளையோர் என்க. இளையோர் என்றது ஏனை ஆயத்தாரை. இளையோர் செல்ப, எல்லும் எல்லின்று என்றது நாமும் செல்ல வேண்டும் என்பதற்கு ஏதுக் கூறியபடி. காயல் - காய்ந்த புல்; அல், பெயர் விகுதி. செல்ப; எல்லின்று; ஆகலின் பகல் எம்மொடு ஆடிய நீ இரவு நல்லில் செல்லுதல் வேண்டும் என்று கூறிய தோழிக்கு இரவு இல்லிற் சென்று நோயொடு தங்குவேன் ஆயின், என் தந்தையின் காவலிற் படுவேன் என்று தலைவி கூறினாள் என்க. வைகுவே னாயின் எந்தை அருங்கடிப் படுவல் என்ற தலைவி கூற்றைத் தோழி கொண்டு கூறுகின்றாளாகலின், அதற்கேற்ப வைகுதியாயின் எனவும், நுந்தை எனவும் கூறினாளென்க. படுவலும் - உம்மை அசைநிலை. செல்லல் என்றலும் ஆற்றாய் என்றது, செலின் வாழலென் என்பதற்கு அடையாய் வந்தது. தலைவனைத் தலைப்பெய்யாது செல்லின் உயிர் வாழேன் என்றாளாகக் கொள்க. நீயே, யானே என்பவற்று ஏகாரங்கள் கட்டுரைச் சுவைபட நின்றன, பிரிநிலையுமாம். வெறிகொள் பாவை - வெறியாடும் மகள். ஆடு மகள் - பெயர் மாத்திரையாய் நின்றது. தெய்ய - அசைச்சொல். 371. பாலை (பொருள் வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) அவ்விளிம் புரீஇய விசையமை நோன்சிலைச் செவ்வாய்ப் பகழிச் செயிர்நோக் காடவர் கணையிடக் கழிந்ததன் வீழ்துணை உள்ளிக் குறுநெடுந் துணைய மறிபுடை யாடப் 5. புன்கண் கொண்ட திரிமருப் பிரலை மேய்பதம் மறுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து நெய்தலம் படுவிற் சின்னீர் உண்ணாது எஃகுறு மாந்தரின் இனைந்துகண் படுக்கும் பைதற வெம்பிய பாழ்சேர் அத்தம் 10. 1எமியம் நீந்தும் எம்மினும் பனிவார்ந்து என்ன ஆங்கொல் தாமே தெண்ணீர் ஆய்சுனை நிகர்மலர் போன்மென நசைஇ வீதேர் பறவை விழையும் போதார் கூந்தனங் காதலி கண்ணே. - எயினந்தை மகன் இளங்கீரனார். (சொ-ள்) நெஞ்சே-, 11-14. தெள் நீர் ஆய் சுனை நிகர் மலர் போன்மென - தெளிந்த நீரினையுடைய அழகிய சுனையிலுள்ள ஒளி பொருந்திய மலரைப் போலும் என, நசை இ வீ தேர் பறவை விழையும் - தேனை விரும்பிப் பூக்களை ஆராயும் வண்டுகள் விருப்புறும், போது ஆர் கூந்தல் நம் காதலி கண் - மலர் நிறைந்த கூந்தலையுடைய நம் காதலியின் கண்கள், 1-9. அ விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை - அழகிய விளிம்பினை உருவி நாண் ஏற்றிய விசை அமைந்த வலிய வில்லினை யும், செவ் வாய் பகழி - குருதியாற் சிவந்த வாயினையுடைய அம்பினையும் உடைய, செயிர் நோக்கு ஆடவர் - சினம் தங்கிய பார்வையினை யுடைய மறவர், கணை இட கழிந்த - அம்பினை எய்திடலான் இறந்த, தன் வீழ் துணை உள்ளி - தனது காதல்மிக்க பிணையினை நினைத்து, குறு நெடு துணைய மறி புடை ஆட - குறுமையும் நெடுமையும் ஆகிய அளவினையுடைய தன் குட்டிகள் (ஏதம் உணராமையின்) தன் பக்கலில் விளையாட, புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை - துன்பினையடைந்த முறுக்குண்ட கோட்டினை யுடைய ஆண்மான், மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து - மேயும் உணவினை வெறுத்த துன்பத்துடன் வருத்தம் மிக்கு, நெய்தல் படுவில் - களர் நிலத்திலுள்ள சிறிய குழியில் தங்கிய, சில் நீர் உண்ணாது - சிறிய நீரும் பருகாது, எஃகு உறும் மாந்தரின் இனைந்து கண் படுக்கும் - அம்பு தைக்கப்பெற்ற மக்களைப் போல வருந்திக் கண்ணயர்ந்து கிடக்கும், பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம் - பசுமையறக் கொதித்த பாழ்பட்ட சுர நெறியினை, 10-11. எமியம் நீந்தும் எம்மினும் - தமியேமாய்க் கடந்து செல்லும் நம்மைக் காட்டினும், பனி வார்ந்து - நீர் ஒழுகப் பெற்று, என்ன ஆங்கொல் - எத்தன்மையான துன்பத்தினை எய்தா நிற்குமோ. (முடிபு) நெஞ்சே! நம் காதலி கண்கள் பாழ்சேர் அத்தம் எமியம் நீந்தும் எம்மினும், பனிவார்ந்து என்ன ஆம் கொல். (வி-ரை) மறி புடை ஆட - குட்டிகள் இறந்த பெண்மானின் பக்கத்தே விளையாட என்றுமாம். உள்ளிப் புன்கண் கொண்ட இரலை நோய் கூர்ந்து சின்னீர் உண்ணாது இனைந்து கண்படுக்கும் அத்தம் என்க. தலைவியைப் பிரிந்து கொடிய காட்டினைத் தமியமாய்க் கடந்து செல்லுதலால் நாம் எய்தும் துன்பத்தைக் காட்டிலும் நம்மைப் பிரிந்துறையும் காதலியின் கண்கள் என்ன துன்பத்தினை எய்துமோ எனத் தலைவியைப் பிரிந்து ஏகுதலின் இன்னாமை புலப்படத் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறினான் என்க. 372. குறிஞ்சி (அல்ல குறிப்பட்டுப் போகாநின்ற தலைமகன், தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) 1அருந்தெறன் மரபிற் கடவுள் காப்பப் பெருந்தேன் தூங்கும் நாடுகாண் நனந்தலை அணங்குடை வரைப்பிற் பாழி ஆங்கண் வேண்முது மாக்கள் வியனகர்க் கரந்த 5. அருங்கல வெறுக்கையின் அரியோள் பண்புநினைந்து வருந்தினம் மாதோ எனினுமஃ தொல்லாய் இரும்பணைத் தொடுத்த பலரா டூசல் ஊர்ந்திழி கயிற்றிற் செலவர வருந்தி நெடுநெறிக் குதிரைக் கூர்வேல் அஞ்சி 10. கடுமுனை 2யலைத்த கொடுவி லாடவர் 3ஆகொள் பூசலிற் பாடுசிறந் தெறியும் பெருந்துடி வள்பின் வீங்குபு நெகிழா மேய்மணி யிழந்த பாம்பின் நீநனி தேம்பினை வாழியென் நெஞ்சே வேந்தர் 15. 4கோண்டணி எயிலிற் காப்புச் சிறந்து ஈண்டருங் குரையணம் அணங்கி யோளே. - பரணர். (சொ-ள்) 14. வாழி என் நெஞ்சே - என் நெஞ்சே வாழி! 1-6. அரு தெறல் மரபின் கடவுள் காப்ப - பிறரால் தெறுதற்கு அரிய முறைமையினை யுடைய கடவுள் காத்தலின், பெரு தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை - பெரிய தேன் கூடுகள் தொங்குவதும் நாட்டின் எல்லையினைக் காண்டற்குரிய உயர்ச்சியினையும் அகன்ற இடத்தினையும் உடையதுமாகிய, அணங்கு உடை வரைப்பின் - அச்சம் பொருந்திய பக்கமலையினையுடைய, பாழி ஆங்கண் - பாழிமலையிடத்தே, வேள் முது மாக்கள் வியன் நகர்க் கரந்த - பழைய வேள்குடி மக்கள் தமது அகன்ற ஊரின்கண் மறைத்து வைத்த, அருங்கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து - அரிய அணிகலமாகிய செல்வத்தைப்போலப் பெறுதற்கு அருமையுடையோளது இன்பத்தை நினைந்து, வருந்தினம் எனினும் - நாம் வாளாதே வருந்தியுள்ளோம் என்று யான் கூறவும், அஃது ஒல்லாய் - அதனை நீ கை விடுதற்குப் பொருந்தாயாய், 7-14. இரு பணை தொடுத்த பலர் ஆடு ஊசல் - பெரிய கிளையில் கட்டப் பெற்ற பலரும் ஆடும் ஊசலினது, ஊர்ந்து இழி கயிற்றில் செல வர வருந்தி - ஏறியும் இறங்கியும் ஆடும் கயிற்றினைப் போன்று செல்கையாலும் வருகையாலும் வருந்தி, நெடு நெறி குதிரை கூர் வேல் அஞ்சி - நீண்ட வழியினையுடைய குதிரைமலைக்குத் தலைவனாகிய கூரிய வேலையுடைய அஞ்சி என்பானது, கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் - கடிய பகைப்புலத்தினை வருத்திய வளைந்த வில்லையுடைய வீரர், ஆ கொள் பூசலில் பாடு சிறந்து எறியும் - தம் பகைவர் நிரைகளைக் கவரும் போரில் ஒலி மிக அடிக்கும், பெரு துடி வள்பின் வீங்குபு நெகிழா - பெரிய உடுக்கையின் வாரைப் போலச் செறிந்தும் நெகிழ்ந்தும், மேய் மணி இழந்த பாம்பின்- மேய்தற்பொருட்டு உமிழ்ந்து வைத்த மணியினை இழந்த பாம்பைப் போல, நீ நனி தேம்பினை - நீ மிகவும் வாடுதலுற்றனை, 14-16. நம் அணங்கியோள் - நம்மை வருத்திய காதலி, வேந்தர் கோண் தணி எயிலில் - பகை வேந்தரது மாறுபாடு தணிதற்கு ஏதுவாகிய மதில் போல, காப்பு சிறந்து - காவல்மிக்கு, ஈண்டு அருங்குரையள் - எய்துதற்கு அருமையை யுடையவள் அன்றோ. (முடிபு) என் நெஞ்சே வாழி! அரியோள் பண்பு நினைந்து வருந்தினம் எனினும், அஃது ஒல்லாய், செலவர வருந்தி, வீங்குபு நெகிழா, மணியிழந்த பாம்பின் நீ நனி தேம்பினை, நம் அணங்கியோள் காப்புச் சிறந்து ஈண்டு அருங் குரையள். (வி-ரை) அருந்திறல் என்பது பாடமாயின், அரிய ஆற்றலையுடைய என்க. கடவுள் காத்தலால் பிறராற் கவரப்படாது தேனிறால் தூங்கும் என்க. நாடு காண் நனந்தலை - `தன்மேல் ஏறி நாட்டைக் கண்டு இன்புறுதற்கு ஏதுவாகிய ஓக்க'மும் அகற்சியு முடைய இடம் என்க. `கோடு பல விரிந்த நாடுகாண் நெடுவரை'1 என்பதன் பழைய உரை காண்க. பாழிமலையிடத்ததாய நகரிலே வேள்முதுமாக்கள் கரந்து வைத்த வெறுக்கை என்க. அஃது ஒல்லாய் - அதனைக் கைவிடுதற்குப் பொருந்தாயாய் என விரித்துரைக்க. நெடு நெறிக் குதிரை - உயர்ந்து செல்லும் நெறியையுடைய குதிரை; ஆவது குதிரைமலை; இது வெளிப்படை. கடுமுனை அலைத்த - முன் பல போர்களில் பகைவரை வருத்திய என்க. அஞ்சியின் ஆடவர் மாற்றார் ஆவினைக் கவர்ந்து வரும் பூசலில் எறியும் துடி என்க. பாம்பு மேயுங்கால் மணியினை உமிழும் என்னும் கருத்து, 2`நாமநல் லராக் கதிர்பட உமிழ்ந்த, மேய்மணி விளக்கில்' என முன்னரும் போந்துளது காண்க. 373. பாலை (பிரிந்துபோகாநின்ற தலைமகன் இடைச்சுரத்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) முனைகவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீரெழுந்து மனைபாழ் பட்ட மரைசேர் மன்றத்துப் 1பணைத்தாள் யானை பரூஉப்புற 2முரிஞ்சச் செதுகாழ் சாய்ந்த முதுகாற் பொதியில் 5. அருஞ்சுரம் நீந்திய வருத்தமொடு கையற்றுப் பெரும்புன் மாலை புலம்புவந் துறுதர மீளி உள்ளஞ் செலவுவலி யுறுப்பத் தாள்கை பூட்டிய தனிநிலை யிருக்கையொடு தன்னிலை யுள்ளும் நந்நிலை யுணராள் 10. இரும்பல் கூந்தற் சேயிழை மடந்தை கனையிருள் நடுநாள் அணையொடு பொருந்தி வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொ டைதுயிரா ஆயிதழ் மழைக்கண் மல்க நோய்கூர்ந்து பெருந்தோள் நனைக்குங் கலுழ்ந்துவார் அரிப்பனி 15. மெல்விரல் உகிரிற் றெறியினள் வென்வேல் அண்ணல் யானை அடுபோர் வேந்தர் ஒருங்ககப் படுத்த முரவுவாய் ஞாயில் ஓரெயின் மன்னன் போலத் துயிறுறந் தனள்கொல் அளியள் தானே - பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார். (சொ-ள்) நெஞ்சே! 1-9. முனை கவர்ந்து கொண்டென - போர்முனை அகப்படுத்திக்கொண்டதாக, கலங்கி - கலக்கமுற்று, பீர் எழுந்து - பீர்க்குப் படர்ந்து, மனை பாழ்பட்ட மரை சேர் மன்றத்து - மனைகள் பாழ்பட்டுப் போன மரைமா வந்தடையும் மன்றத்தின்கண் ணுள்ள, பணைதாள் யானை பரூஉப் புறம் உரிஞ்ச- பருத்த காலினை யுடைய யானையின் பரிய முதுகு உரிஞ்சுதலால், செது காழ் சாய்ந்த முது கால் பொதியில் - சோர்ந்த விட்டம் வீழ்ந்த முதிய தூண்களை யுடைய அம்பலத்தே, அரு சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று - அரிய சுரத்தைக் கடந்து வந்த வருத்தத்தால் செயலற்று, பெரு புன் மாலை புலம்பு வந்து உறுதர - பெரிய புற்கென்ற மாலைக் காலத்தே தனிமை வந்தடைய, மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப - திண்மையை யுடைய நம் உள்ளம் மீண்டு செல்லுதலை வற்புறுத்த, தாள் கை பூட்டிய தனிநிலை இருக்கையொடு - முழந்தாள்களைக் கையாற் பூட்டிய தனித்த நிலையினதாகிய இருப்புடன், தன் நிலை உள்ளும் - தனது நிலையினையே எண்ணியிருக்கும், நம் நிலை உணராள் - நமது இயல்பினை அறியாளாகி, 10-19. இரு பல் கூந்தல் சேய் இழை மடந்தை - நீண்ட பலவாய கூந்தலையும் சிவந்த அணியினையுமுடைய நம் தலைவி, கனை இருள் நடு நாள் - செறிந்த இருளையுடைய நடு இரவில், அணையொடு பொருந்தி - அணையின்கண் கிடந்து, வெய்து உற்று புலக்கும் நெஞ்சமொடு - கொதிப்புற்று வெறுக்கும் உள்ளத்துடன், ஐது உயிரா - மெத்தென உயிர்த்து, ஆய் இதழ் மழை கண் - அழகிய பூவிதழ் போன்ற குளிர்ந்த கண்கள், மல்க நோய் கூர்ந்து - நீர் பெருக வருத்த மிக்கு, பெரு தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரி பனி - பெரிய தோளினை நனையச் செய்யுமாறு அழுதலின் ஒழுகும் நீர்த் துளிகளை, மெல் விரல் உகிரின் தெறியினள் - மெல்லிய விரல் நகத்தால் தெறித்து, வென் வேல் அண்ணல் யானை அடு போர் வேந்தர் - வென்றி வேலினையும் தலைமை கொண்ட யானையினை யும் அடும் போரினையும் உடைய அரசர் பலர், ஒருங்கு அகப்படுத்த - ஒருங்கு கூடிச் சூழ்ந்து கொண்டதால், முரவு வாய் ஞாயில் ஓர் எயில் மன்னன் போல - முறிதல் பொருந்திய சூட்டினையுடைய ஒரு மதிலின்கண் அகப்பட்ட அரசனைப் போல, துயில் துறந்தனள் கொல் - துயில் ஒழிந்துளாளோ, அளியள் - இரங்கத்தக்காள். (முடிபு) நெஞ்சே! நாம் அருஞ் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று, பொதியிலின்கண் மாலை புலம்பு வந்துறுதர, உள்ளம் செலவு வலியுறுப்ப, தனி நிலை யிருக்கையொடு தன்னிலை யுள்ளும் நம்நிலை உணராள், மடந்தை, நடுநாள் அணையொடு பொருந்தி உயிரா, நோய் கூர்ந்து, துயில் துறந்தனள்கொல், அளியள். (வி-ரை) முனை கவர்ந்து கொண்டென - பகைவர் ஒருவரோடொருவர் போர் செய்தலால் என்றபடி. கலங்குதல் - முன்நிலை மாறுதல். பீர் எழுந்து - பீர்க்கு முளைத்துப் படர. பாழ்பட்ட மன்றம், மரை சேர் மன்றம் என்க. மன்றத்துப் பொதியிலில் இருக்கையொடு எனக் கூட்டுக. காழ் என்றது ஈண்டு விட்டத்தை; `யானை, வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ வொல்கி, இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென' 1 என முன்னர்ப் போந்தமை காண்க. பெரும் புன் மாலை - பெரிய வருத்தத்தைச் செய்யும் மாலை என்றலுமாம். புலம்பு வந்து உறுதர - தலைவியைப் பிரிந்த தனிமை தோன்றி வருத்துதலால் என்க. தாள் கை பூட்டிய - தாள்களை மடக்கி நிமிர்த்து இரு கையானும் கோத்த என்க. ஆழ்ந்த சிந்தனையிலிருப்பார் அங்ஙனம் தாள்களைக் கையாற் கோத்திருத்தல் மரபு. மடந்தையாகிய அளியள் எனக் கூட்டி யுரைத்தலுமாம். நம் நிலை உணராள் புலக்கும் நெஞ்சமொடு என்க. ஓர் எயில் மன்னன் என்றது, குறு நில மன்னனை. 374. முல்லை (பாசறை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.) மாக்கடன் முகந்து மாதிரத் திருளி மலர்தலை யுலகம் புதைய வலனேர்பு பழங்கண் கொண்ட கொழும்பல் கொண்மூப் போழ்ந்த போலப் பலவுடன் மின்னித் 5. தாழ்ந்த போல 1நணிநணி வந்து சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி இடியும் முழக்கும் இன்றிப் பாணர் வடியுறு நல்யாழ் நரம்பிசைத் தன்ன இன்குரல் அழிதுளி தலைஇ நன்பல 10. பெயல்பெய்து கழிந்த பூநாறு வைகறைச் செறிமணல் நிவந்த களர்தோன்று இயவில் குறுமோட்டு மூதாய் குறுகுறு ஓடி மணிமண்டு பவழம் போலக் காயா அணிமிகு செம்மல் ஒளிப்பன மறையக் 15. கார்கவின் கொண்ட 2காமர் காலைச் செல்க தேரே நல்வலம் பெறுந பெருந்தோள் நுணுகிய நுசுப்பில் திருந்திழை அரிவை விருந்தெதிர் கொளவே. - இடைக்காடனார். (சொ-ள்) 16. நல் வலம் பெறுந - நல்ல திறன் வாய்ந்த பாகனே! 1-10. மா கடல் முகந்து - பெரிய கடல் நீரை முகந்து, மாதிரத்து இருளி - திசைகளிற் சென்று இருண்டு, மலர்தலை உலகம் புதைய வலன் ஏர்பு - அகன்ற இடத்தினை யுடைய உலகம் மறைய வலமாக எழுந்து சென்று, பழங்கண் கொண்ட கொழும்பல் கொண்மூ - பொறையால் வருந்துதலைக் கொண்ட வளவிய பல மேகங்கள், போழ்ந்த போல பல உடன் மின்னி - வானைப் பிளந்தன போலப் பலவும் ஒருங்கே தோன்ற மின்னுதலைச் செய்து, தாழ்ந்த போல நணி நணி வந்து - இறங்குவன போல நெருங்க நெருங்க வந்து, சோர்ந்த போல சொரிவன பயிற்றி - கவிழ்ந்தன போல மிக்குப் பொழிந்து, இடியும் முழக்கும் இன்றி - இடித்தலும் குமுறுதலும் இன்றி, பாணர் வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன - பாணரது வடித்தல் உற்ற நல் யாழ் நரம்பு ஒலிப்பது போன்ற, இன் குரல் அழி துளி தலைஇ - இனிய குரலுடன் மிக்க துளியைப் பொருந்தி, நன் பல பெயல் பெய்து கழிந்த - நன்றாகிய பல மழைகளைப் பெய்து கழிந்த, பூ நாறு வைகறை - பூக்கள் நாறும் விடியற்காலத்தே, 11-15. செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில் - செறிந்த மணல் மேடு பட்டதும் களர்மண் தோன்றுவதுமாகிய நெறியில், குறு மோட்டு மூதாய் - சிறு வயிற்றினை யுடைய தம்பலப் பூச்சி, குறுகுறு ஓடி - குறுகக்குறுகச் சென்று, மணி மண்டு பவழம் போல - நீலமணியுடன் கூடிய பவழம் போல, காயா அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய - காயாவின் அழகு மிக்க வாடற்பூவில் ஒளிந்து மறைய, கார் கவின் கொண்ட காமர் காலை - கார்ப்பருவமானது அழகு பெற்ற விருப்பம் பொருந்திய காலத்தே, 16-18. பெருதோள் நுணுகிய நுசுப்பில் - பெரிய தோளினையும் நுண்ணிய இடையினையும், திருந்து இழை - திருந்திய அணிகளையும் உடைய, அரிவை விருந்து எதிர்கொள - நம் தலைவி விருந்தாக நம்மை ஏற்றுக் கொள்ள, தேர் செல்க - நம் தேர் (விரைந்து) செல்வதாக. (முடிபு) நல் வலம் பெறுந! கார் கவின்கொண்ட காமர் காலை, அரிவை விருந்து எதிர்கொள, தேர் செல்க. (வி-ரை) பழங்கண் - துன்பம்; பொறை ஆற்றாத துன்பம். போழ்ந்த போல, தாழ்ந்த போல, சோர்ந்த போல என்பன தற்குறிப் பின்பாற் படுவன. குறு குறு - குறுகக் குறுக, `குறு குறு நடந்து'1 என்பதன் உரை காண்க. முகந்து, இருளி, ஏர்பு கொண்ட கொண்மூ எனவும்; கொண்மூ மின்னி, வந்து சொரிவன பயிற்றி, அழி துளி தலைஇ, பெய்து கழிந்த வைகறை எனவும்; வைகறை, இயவில், மூதாய், ஓடி, மறைய, கார்கவின் கொண்ட காலை எனவும் கூட்டுக. (மே-ள்) `கரணத்தின் அமைந்து'2 என்னுஞ் சூத்திரத்து `பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்' என்னும் பகுதிக்கண், தலைவன் தான் பெற்ற இன்பத்தைப் பாகற்குக் கூறியது என்பதற்கு, `செல்க தேரே நல்வலம் பெறுந' என்பதனை எடுத்துக் காட்டினர் நச். 375. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) சென்று நீடுநர் அல்லர் அவர்வயின் இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை அம்புதொடை யமைதி காண்மார் வம்பலர் கலனிலர் ஆயினுங் கொன்றுபுள் ளூட்டுங் 5. கல்லா இளையர் கலித்த கவலைக் கணநரி இனனொடு குழீஇ நிணனருந்தும் நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசிவிரல் அத்த எருவைச் சேவல் சேர்ந்த அரைசேர் யாத்த வெண்டிரள் 1வினைவிறல் 10. எழாஅத் திணிதோட் சோழர் பெருமகன் விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி குடிக்கடன் ஆகலிற் குறைவினை முடிமார் செம்புறழ் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக் 15. கொன்ற யானைக் கோட்டிற் றோன்றும் அஞ்சுவரு மரபின் வெஞ்சுரம் இறந்தோர் நோயிலர் பெயர்தல் அறியின் ஆழல மன்னோ தோழியென் கண்ணே. - 2 இடையன் சேந்தங் கொற்றனார். (சொ-ள்) 1-2. இகுளை - தோழியே! சென்று நீடுநர் அல்லர் - நம் தலைவர் பொருள் ஈட்டுதற்குச் சென்று நீட்டிப்பார் அல்லர், அவர்வயின் இனைதல் ஆனாய் - அவர்திறத்து வருந்துதல் அமை வாயாக, என்றிசின் - என்கின்றாய். 3-6. அம்பு தொடை அமைதி காண்மார் - தாம் அம்பு விடுத்தலின் சிறப்பினைக் காணும்பொருட்டு, வம்பலர் கலன் இலர் ஆயினும் - புதியராய் வருவோர் அணிகலன் இல்லாதவ ராயினும், கொன்று புள் ஊட்டும் - அவர்களைக் கொன்று பறவைகட்கு உண்பிக்கும், கல்லா இளையர் - ஆறலைத்தலை யன்றிப் பிறதொழிலை அறியாத இளையர், கலித்த கவலை - செருக்கித் திரியும் கவர்த்த நெறிகளில், கண நரி இனனொடு குழீஇ - கூட்டமாய நரிகளின் இனத்தொடு கூடி, நிணன் அருந்தும் - நிணத்தினை உண்ணும். 7-15. நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல் - குருதி படிந்த வளமுடைய நெருங்கிய விரல்களையுடைய, அத்த எருவைச் சேவல் சேர்ந்த - காட்டிலுள்ள ஆண்பருந்து தங்கியிருக்கும், அரை சேர் யாத்த வெண் திரள் - அடிதிரண்ட யாமரத்தின் வெள்ளிய திரண்ட கொம்பானது, வினை விறல் எழாஅ திணி தோள் - போரின் வெற்றி நீங்காத திண்ணிய தோளினை யுடைய, சோழர் பெருமகன் - சோழர் பெருமானாகிய, விளங்கு புகழ் நிறுத்த இளம் பெரும் சென்னி - என்றும் விளங்கும் புகழினை நிலைநாட்டிய இளம் பெருஞ் சென்னி என்பான், குடிக்கடன் ஆகலின் குறை வினை முடிமார் - தனது குடிக்கு ஆற்றும் கடனாகலின் முடிக்கப்படும் பொருளாய போர்வினையை முடித்தற்கு, செம்பு உறழ் புரிசை பாழி நூறி - செம்பினை ஒத்த மதிலை யுடைய பாழி என்னும் அரணை அழித்து, வம்ப வடுகர் பைந்தலை சவட்டி - புதிய வடுகரது பசிய தலையைத் தறித்து, கொன்ற யானை கோட்டில் தோன்றும் - கொன்ற யானைகளின் கோடுபோலத் தோன்றும், 16-18. அஞ்சு வரு மரபின் வெம் சுரம் இறந்தோர் - அச்சம் வரும் இயல்பினையுடைய கொடிய சுரநெறியைக் கடந்து சென்ற நம் தலைவர், நோய் இலர் பெயர்தல் அறியின் - தீங்கிலராய் மீண்டு வருதலை அறிவேனாயின், தோழி - தோழியே, என் கண் ஆழல - என் கண்கள் அழமாட்டா, (மன் - அறிந்திலனே.) (முடிபு) இகுளை! (நம் தலைவர்) நீடுநர் அல்லர், அவர்வயின் நினைதல் ஆனாய், என்றிசின். வெஞ்சுரம் இறந்தோர் (ஆகிய அவர்) நோயிலர் பெயர்தல் அறியின் என் கண்(கள்) ஆழல. (வி-ரை) கண நரி இனனொடு குழீஇ நிணன் அருந்தும் எருவைச் சேவல் சேர்ந்த யா மரம் என்க. அன்றி, நரி இனனொடு குழீஇ நிணன் அருந்தும் அரைசேர் யா, எருவைச் சேவல் சேர்ந்த யா, எனத் தனித்தனி கூட்டி முடித்தலுமாம். யாத்த - யாமரத்தினுடைய. திரள் - திரண்ட கொம்பு - ஆகு பெயர். விளை விறல் எழூஉத் திணி தோள் என்பது பாடமாயின், வெற்றியுண்டாகும் எழுஉப் போலும் திண்ணியதோள் என்க. எழூஉ - எழு, கணைய மரம். சவட்டி `கடிசொல் லில்லைக் காலத்துப் படினே'1 என்பதனாற் போந்தது. 376. மருதம் (காதற் பரத்தை புலந்து சொல்லியது.) செல்லல் மகிழ்நநிற் செய்கடன் உடையென்மன் கல்லா யானை கடிபுனல் கற்றென மலிபுனல் பொருத மருதோங்கு படப்பை ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்றுறைக் 5. கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத் தண்பதங் கொண்டு தவிர்ந்த இன்னிசை ஒண்பொறிப் புனைகழல் சேவடிப் புரளக் கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று 2இரும்பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்பப் 10. புனனயந் தாடும் அத்தி அணிநயந்து காவிரி கொண்டொளித் தாங்கு மன்னோ நும்வயிற் புலத்தல் செல்லேம் எம்வயின் பசந்தன்று காண்டிசின் நுதலே அசும்பின் அந்தூம்பு வள்ளை அழற்கொடி மயக்கி 15. வண்டோட்டு நெல்லின் வாங்குபீள் விரியத் துய்த்தலை முடங்கிறாத் தெறிக்கும் பொற்புடைக் குரங்குளைப் புரவிக் குட்டுவன் 1மரந்தை அன்னவென் நலந்தந்து சென்மே. - பரணர். (சொ-ள்) 1. மகிழ்ந - தலைவனே! செல்லல் - செல்லாதே, 2-5. கல்லா யானை கடி புனல் கற்றென - பாகனாற் பயிற்றப்படாத யானை காவலை யுடைய நீரில் விளையாடலைக் கற்றதாக, மலிபுனல் பொருத மருது ஓங்கு படப்பை - அதனால் மிக்கெழும் நீர் மோதிய மருத மரங்கள் உயர்ந்த தோட்டத்தினையும், ஒலி கதிர் கழனி - தழைத்த கதிர்களை யுடைய வயல்களையு முடைய, கழாஅர் முன்துறை - கழாஅர் என்னும் பதியின் முன்பு, கலி கொள் சுற்றமொடு கரிகால் காண - ஆரவாரம் பொருந்திய சுற்றத்தினருடன் கரிகால்வளவன் கண்ணுற்று மகிழ. 6-13. தண் பதம் கொண்டு - புனல் விழாக் கொண்டு, தவிர்ந்த இன் இசை - இனிய இசை தங்கிய, ஒள் பொறி புனை கழல் சே அடி புரள - ஒள்ளிய பொறிகளை உடைய அழகிய வீரக்கழல் சிவந்த அடியில் புரள, கரு கச்சு யாத்த காண்பு இன் அ வயிற்று மணியொடு- கரிய கச்சினைக் கட்டிய காட்சி இனிதாகிய அழகிய வயிற்றில் கட்டப்பெற்ற மணியுடன், இரும்பொலம் பாண்டில் தெளிர்ப்ப - பெரிய பொன்னாலாகிய கஞ்ச தாளம் ஒலிக்க, புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து - புனலின்கண் விரும்பி ஆடிய அத்தி என்பானது அழகினை விரும்பி, காவிரி கொண்டு ஒளித்தாங்கு - காவிரி அவனை வௌவிக்கொண்டு கடலில் ஒளித்தாற் போலச் சேரிப் பரத்தை நின்னைக் கவர்ந்துசென்றாளாக, நும் வயின் புலத்தல் செல்லேம் - நும்பால் யாம் வெறுத்தல் இல்லேம், எம் வயின் பசந்தன்று காண்டிசின் நுதல் - அங்ஙனமாகவும் எம்மிடத்து நுதல் பசலை யுற்றது காண்பாயாக, 13-18. அசும்பின் - சேற்றிலுள்ள, அம் தூம்பு வள்ளை அழல் கொடி மயக்கி - அழகிய துளையுடைய வள்ளையாய ஒள்ளிய கொடியைப் பின்னுவித்து, வள் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய - வளம் பொருந்திய இதழினையுடைய நெல்லினது வளைந்த கதிர் விரிந்திட, துய் தலை முடங்கு இறா தெறிக்கும் - துய்யினைத் தலையில் உடைய வளைந்த இறா மீன் பாயும் இடமாய, பொற்பு உடை குரங்கு உளை புரவி குட்டுவன் மரந்தை அன்ன - அழகு பொருந்திய வளைந்த பிடரி மயிரினையுடைய குதிரையை யுடைய குட்டுவனது மரந்தை என்னும் ஊர் போன்ற, என் நலம் தந்து சென்மே - என் அழகினைத் தந்து செல்க. 1. நிற் செய் கடன் உடையென்மன் - நின்பாற் செய்யும் கடமைகளை மிகவும் உடையேன். (முடிபு) மகிழ்ந! செல்லல், கழாஅர் முன்றுறை, கரிகால் காண, புனல் நயந்தாடும் அத்தி அணி நயந்து காவிரி கொண்டொளித்தாங்கு (சேரிப்பரத்தை நின்னைக் கவர்ந்து சென்றாளாக), நும் வயிற் புலத்தல் செல்லேம் எம்வயின் நுதல் பசந்தன்று, காண்டிசின் குட்டுவன் மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே, நிற் செய்கடன் உடையேன், மன். (வி-ரை) யானை கடி புனல் கற்றெனப் புனல் நயந் தாடும் அத்தி எனக் கூட்டி யுரைத்தலுமாம். இப் பொருட்கு யானைக்கும் மணி தெளிர்த்தல் கொள்க. கலி கொள் சுற்றம் - விழவின் ஆரவாரத்தைக் கொண்ட சுற்றம். தவிர்தல் - தங்குதல். தண் பதம் கொண்டு தவிர்ந்த அத்தி, புனல் நயந்தாடும் அத்தி எனக் கூட்டி யுரைத்தலுமாம். இதற்கு, புனலாடும் அத்தி சுற்றத்துடன் ஏகாது, தங்கிவிட்டானாக, அவனது அணி நயந்து காவிரி கொண் டொளித்தாற் போல, என்றுரைத்துக் கொள்க. காவிரி கொண் டொளித்தாங்கு, சேரிப் பரத்தை நின்னைக் கவர்ந்து சென்றாளாக என விரித்துரைத்துக் கொள்க. மன் ஒழியிசைப் பொருட்டுமாம். 377. பாலை (பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.) கோடை நீடலின் 1வாடுபுலத் துக்க சிறுபுல் லுணவு நெறிபட மறுகி நுண்பல் 2 எறும்பு கொண்டளைச் செறித்த வித்தா வல்சி வீங்குசிலை மறவர் 5. 3பல்லூழ் புக்குப் பயனிரை கவரக் கொழுங்குடி போகிய பெரும்பாழ் மன்றத்து நரைமூ தாளர் அதிர்தலை யிறக்கிக் கவைமனத் திருத்தும் வல்லுவனப் பழிய வரிநிறச் சிதலை அரித்தலிற் புல்லென்று 10. பெருநலஞ் சிதைந்த பேஎமுதிர் பொதியில் இன்னா ஒருசிறைத் தங்கி இன்னகைச் சிறுமென் சாயல் பெருநலம் 1 உள்ளி வம்பல ராகியுங் கழிப மன்ற நசைதர வந்தோர் இரந்தவை 15. இசைபடப் பெய்தல் ஆற்று வோரே - 2மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார். (சொ-ள்) நெஞ்சே! 14-15. நசை தர வந்தோர் - பொருள் வேட்கையானது கொண்டு வருதலால் வந்துற்ற இரவலர், இரந்தவை - இரந்த பொருள்களை, இசை படப் பெய்தல் ஆற்றுவோர் - புகழ் உண்டாக அளித்தலைச் செய்ய வேண்டுவோர். 1-6. கோடை நீடலின் - கோடையின் வெம்மை மிக்கமையால் வாடு புலத்து உக்க - வறண்ட நிலத்தே உதிர்ந்த, சிறு புல் உணவு - சிறிய புல்லரிசியை, நுண் பல் எறும்பு - சிறிய பலவாய எறும்புகள், நெறி பட மறுகி - ஒழுங்கு பெறச் சென்று, கொண்டு அளைச் செறித்த - கொண்டு வந்து தம் வளையில் தொகுத்து வைத்தனவாகிய, வித்தா வல்சி - (தாம்) விதைத்து விளைக்காத அவ்வுணவினைக் கொள்ளும், வீங்கு சிலை மறவர் - பெருத்த வில்லையுடைய மறவர்கள், பல் ஊழ் புக்கு பயன் நிரை கவர - பல முறை புகுந்து பாற்பசுக் கூட்டங்களைக் கவர்ந்தமையின், கொழு குடி போகிய பெரு பாழ் மன்றத்து - வளமுற்றிருந்த ஊரின் குடிகள் போய்விட்ட இடமாய பெரிய பாழ்பட்ட மன்றத்தின் கண்ணே. 7-13. நரை மூதாளர் - நரையினை யுடைய முதியோர், அதிர்தலை இறக்கி - நடுங்கும் தமது தலையைக் கவிழ்த்து, கவை மனத்து இருத்தும் - தமது கவர்த்த மனத்திலே இருத்தி வல்லுப் போர் புரியும், வல்லு வனப்பு அழிய - வல்லுத் தரையின் அழகு கெட, வரி நிறச் சிதலை அரித்தலின் - வரிகள் பொருந்திய நிறமுடைய கறையான் அரித்தமையான், புல் என்று - பொலிவற்று, பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில் - பெரிய அழகு கெட்ட அச்சம் மிக்க பொதியிலின், இன்னா ஒரு சிறை தங்கி - இன்னாமை யுடைய ஒரு புறத்தே தங்கி யிருந்து, இன் நகை சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி - இனிய நகையையும் சிறிய மென்மையாகிய சாயலினையும் உடையாளது பேரழகை நினைத்து, வம்பலர் ஆகியும் - ஏதிலர் ஆகியும், கழிப மன்ற - ஒரு தலையாக மேலும் செல்லா நிற்பர். (நீ அங்ஙனம் செல்லுதற்கு வல்லையோ.) (முடிபு) நசைதர வந்தோர் இரந்தவை இசைபடப் பெய்தல் ஆற்றுவோர், பெரும்பாழ் மன்றத்துப் பெருநலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில் இன்னா ஒரு சிறைத் தங்கி, இன்னகைச் சிறுமென் சாயல் பெருநலம் உள்ளி, வம்பல ராகியும் கழிப மன்ற. (நீ அங்ஙனம் செல்லுதற்கு வல்லையோ) (வி-ரை) எறும்பு கொண்டு அளைச் செறித்த வல்சி, வித்தா வல்சி எனத் தனித்தனிக் கூட்டுக. இதனால் மறவர்கள் தம் உணவினை விதைத்து விளைவித்தலின்றிச் சிற்றெறும்புகள் அரிதின் முயன்று அளையிற் செறித்து வைத்தவற்றை அகழ்ந்து எடுத்து உண்ணும் இயல்பினராதல் பெற்றாம். மனத்து இருத்தும் வல்லு - மனத்திலே சூழ்ந்து விளையாடும் வல்லு என்க. வல்லு - சூது கருவி; ஈண்டுச் சூதாடும் இடத்திற்காயிற்று. நரை மூதாளர் பொதியிலின் கண் சூதாடுவார் என்பது, `பலி கண் மாறிய பாழ்படு பொதியில், நரைமூ தாளர் நாயிடக் குழிந்த, வல்லின் நல்லகம்'1 என்பதனாலும் அறியப்படும். ஆற்றுவோர் கழிப என்றது, நீ இடைச்சுரத்தில் தலைவியின் நலத்தினை உள்ளி மீள்வாயெனக் குறிப்பித்தவாறு ஆயிற்று. 378. குறிஞ்சி (இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லெடுப்பத் தலைமகள் சொல்லியது.) நிதியந் துஞ்சும் நிவந்தோங்கு வரைப்பின் வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள வங்கூழ் ஆட்டிய அங்குழை வேங்கை நன்பொன் அன்ன நறுந்தாது உதிரக் 5. காமர் பீலி ஆய்மயிற் றோகை வேறுவே றினத்த வரைவாழ் வருடைக் கோடுமுற் றிளந்தகர் பாடுவிறந் தியல ஆடுகள வயிரின் இனிய ஆலிப் பசும்புற மென்சீர் ஒசிய விசும்புகந்து 10. இருங்கண் ஆடமைத் தயங்க இருக்கும் பெருங்கல் நாடன் பிரிந்த புலம்பும் உடன்ற அன்னை அமரா நோக்கமும் வடந்தை தூக்கும் வருபனி அற்சிரம் சுடர்கெழு மண்டிலம் மழுங்க ஞாயிறு 15. குடகடல் சேரும் படர்கூர் மாலையும் அனைத்தும் அடூஉநின்று 2நலிய நீமற்று யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி நீங்கா வஞ்சினஞ் செய்துநத் துறந்தோர் உள்ளார் ஆயினும் உளனே அவர்நாட்டு 20. அள்ளிலைப் பலவின் கனிகவர் கைய கல்லா மந்தி கடுவனோ டுகளுங் கடுந்திறல் அணங்கின் நெடும்பெருங் குன்றத்துப் பாடின் அருவி சூடி வான்றோய் சிமையம் தோன்ற லானே. - காவட்டனார். (சொ-ள்) 17. தோழி-, 1-11. நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின் - மிக்க பொருள் தங்கும் உயர்ந்தோங்கும் மனையகத்தே, வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள - கலியாணம் செய்த மகளிர்தம் கூந்தல் போல மணம் பொருந்துமாறு, வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை நன் பொன் அன்ன நறு தாது உதிர - காற்று அசைத்தலால் அழகிய தளிர்களை யுடைய வேங்கை மரத்தின் பொன் போன்ற நறிய தாது உதிர்தலால், காமர் பீலி ஆய் மயில்தோகை - விருப்பந் தரும் பீலி பொருந்திய சிறந்த தோகையை யுடைய மயில், வேறு வேறு இனத்த வரை வாழ் வருடை - வேறுவேறு வகையினவாகிய மலையில் வாழும் வருடை களின், கோடு முற்று இள தகர் பாடு விறந்து இயல - கொம்புகள் பொருந்திய இளைய கடாக்கள் ஒலியைக் கேட்டு அஞ்சி இரிய, ஆடு கள வயிரின் இனிய ஆலி - ஆடும் களத்தே யொலிக்கும் கொம்பு போல இனியனவாக ஒலித்து, விசும்பு உகந்து - வானிற் பறந்து சென்று, இரு கண் ஆடு அமை - நீண்ட கணுக்களை யுடைய அசையும் மூங்கிலின் கண், பசு புற மென் சீர் ஒசிய - பசிய புறத்தினையுடைய மெல்லிய அழகிய இடம் வளைய, தயங்க இருக்கும் பெரு கல் நாடன் - விளங்கத் தங்கியிருக்கும் பெரிய மலை பொருந்திய நாட்டை யுடையவனாகிய தலைவன், பிரிந்த புலம்பும் - பிரிந்தமையால் ஆகிய தனிமையும், 12. உடன்ற அன்னை அமரா நோக்கமும் - மாறுபட்ட அன்னையின் பொருந்தாத பார்வையும், 13-15. வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரம் - வாடையால் அசைக்கப் பெறும் பெய்யும் பனிக்காலத்தே, சுடர் கெழு மண்டிலம் மழுங்க - ஒளி பொருந்திய தனது மண்டிலம் மழுங்கிட, ஞாயிறு குட கடல் சேரும் படர் கூர் மாலையும் - ஞாயிறு மேலைக் கடலில் மறையும் துன்பம் மிக்க மாலைப்பொழுதும் ஆய, 16-17. அனைத்தும் அடூஉ நின்று நலிய - யாவும் கூடி நின்று வருத்தவும், நீ யாங்ஙனம் வாழ்தி என்றி - நீ எங்ஙனம் உயிர் வாழ்கின்றாய் என்று வினவுகின்றனை, 18-19. நீங்கா வஞ்சினம் செய்து நம் துறந்தோர் - நீங்காமைக் குரிய சூளுறவு செய்து பின் நம்மைத் துறந்தோராய அவர், உள்ளார் ஆயினும் - நம்மை நினையாராயினும், 19-24. அவர் நாட்டு அள் இலை பலவின் - அவர் நாட்டில் நெருங்கிய இலைகளையுடைய பலாவின், கனி கவர் கைய - பழத்தினைக் கவர்ந்தெடுத்த கைகளையுடைய, கல்லா மந்தி கடுவனோடு உகளும் - அறியாத பெண் குரங்கு ஆண் குரங்கினோடு துள்ளித் திரியும், கடு திறல் அணங்கின் நெடு பெரு குன்றத்து - மிக்க வலியமைந்த தெய்வத்தையுடைய நீண்ட பெரிய மலையகத்து, பாடு இன் அருவி சூடி- ஓசை இனிதாகிய அருவியைக் கொண்டு, வான் தோய் சிமையம் தோன்றலான் - வானை அளாவிய உச்சி மலை காணப் பெறுதலின்; உளன் - உள்ளேன் ஆகா நின்றேன். (முடிபு) தோழி! பெருங்கல் நாடன் பிரிந்த புலம்பும், அன்னை அமரா நோக்கமும், படர்கூர் மாலையும் நலிய, நீ யாங்ஙனம் வாழ்தி என்றி. வஞ்சினம் செய்து துறந்தோர் உள்ளார் ஆயினும், அவர் நாட்டு நெடும் பெருங் குன்றத்து வான்றோய் சிமையம் தோன்றலானே உளன். (வி-ரை) கூந்தல் கமழ் கொள - கூந்தல் போல மணத்தல் செய்ய. கமழ் கொள உதிர என்க. காமர் என்பதற்கு அழகு பொருந்திய என விரித்து, உதிர என்னும் எச்சத்திற்கு முடிபு ஆக்குக. வருடை - மலையில் வாழும் ஒருவகை விலங்கு. இது முதுகில் காலுடையதும் எட்டுக்கால் உடையதும் எனப் பல திறப்படுதலால், வேறு வேறு இனத்த வருடை எனப்பட்டது. `மாவும் மாக்களும்'1 என்னுஞ் சூத்திரத்து, பேராசிரியர் `கிளை யென்பன எண்கால் வருடையும் குரங்கும் போல்வன. எண் கால வாயினும் மா வெனப் படுதலின், வருடை, கிளை ஆயிற்று' என்றுரைத்ததும், `மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள், வரைவாழ் வருடை'2 என்னு மிடத்து, `முதுகிடத்தே கொண்ட, நிலத்தைக் கைக்கொள்ளும் செலவினை யுடைய, வளைந்த காலை யுடைய, வரையிடத்தே வாழும் எண் கால் வருடை' என நச்சினார்க்கினியர் உரைத்ததும் காண்க. விறந்து - அஞ்சி. ஆலி - ஆலித்து, ஒலித்து. புலம்பும் நோக்கமும் மாலையும் நலிய என்க. உஞற்றி என்பது பாடமாயின், அவற்றைப் பொறுத்தலைச் செய்து என்றுரைக்க. நம்மைத் துறந்து சென்ற தலைவர் நம்மை நினைந்து மீண்டில ராயினும் அவரது மலையின் உச்சி தோன்றுதலால் அதனைப் பார்த்து யான் ஆற்றியுளேன் எனத் தலைவி தோழிக்குக் கூறினாள் என்க. தலைவனைப் பிரிந்த தலைவி அவனது மலையைப் பார்த்து ஆற்றி யிருத்தல், `அவர்நாட்டுக், குன்றம் நோக்கினென் றோழி, பண்டை யற்றோ கண்டிசின் நுதலே'3 என்பதனாலும் அறிக. உளனே - அன் விகுதி தன்மைக்கண் வந்தது. 379. பாலை (முன்னொரு காலத்துப் பொருண்முற்றி வந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.) நந்நயந் துறைவி தொன்னலம் அழியத் தெருளா மையின் தீதொடு கெழீஇ அருளற நிமிர்ந்த முன்பொடு பொருள்புரிந்து ஆள்வினைக் கெதிரிய மீளி நெஞ்சே 5. நினையினை யாயின் எனவ கேண்மதி விரிதிரை முந்நீர் மண்டிணி கிடக்கைப் பரிதியஞ் செல்வம் பொதுமை யின்றி நனவின் இயன்ற தாயினுங் கங்குற் கனவி னற்றதன் கழிவே அதனான் 10. விரவுறு பன்மலர் வண்டுசூழ்பு அடைச்சிச் சுவன்மிசை அசைஇய நிலைதயங் குறுமுடி ஈண்டுபன் னாற்றம் வேண்டுவயின் உவப்பச் செய்வுறு விளங்கிழைப் பொலிந்த தோள்சேர்பு எய்திய கனைதுயில் ஏற்றொறுந் திருகி 15. மெய்புகு வன்ன கைகவர் முயக்கின் மிகுதிகண் டன்றோ விலனே நீநின் பல்பொருள் வேட்கையிற் சொல்வரை நீவிச் செலவுவலி யுறுத்தனை யாயிற் காலொடு 1கனையெரி நிகழ்ந்த இலையில் அங்காட்டு 20. உழைப்புறத் தன்ன புள்ளி நீழல் அசைஇய பொழுதிற் பசைஇ வந்திவண் மறப்பரும் பல்குணம் நிறத்துவந் துறுதர ஒருதிறம் நினைத்தல் செல்லாய் திரிபுநின்று உறுபுலி யுழந்த வடுமருப் பொருத்தற்குப் 25. பிடியிடு பூசலின் அடிபடக் குழிந்த நிரம்பா நீளிடைத் தூங்கி இரங்குவை யல்லையோ உரங்கெட மெலிந்தே. - பாலை பாடிய பெருங்கடுங்கோ. (சொ-ள்) 1-5. நம் நயந்து உறைவி - நம்மை விரும்பி இருப்பவளாய நம் தலைவியின், தொல் நலம் அழிய - பழைய அழகு கெட, தெருளாமையின் தீதொடு கெழீஇ - அறிவு தெளியப் பெறாமையின் தீமையுடன் பொருந்தி, அருள் அற - இரக்கம் நீங்க, நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து - மிக்க வன்மையுடன் பொருளை விரும்பி, ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே - அதுபற்றி முயலுதற்கு முற்பட்ட வலிய நெஞ்சமே! நினையினை யாயின் எனவ கேண்மதி - சிந்திப்பாயாயின் யான் கூறுவனவற்றைக் கேட்பாயாக. 6-9. விரி திரை முந்நீர் - விரிந்த அலைகளையுடைய கடல் சூழ்ந்த, மண் திணி கிடக்கை - மண் திணிந்த இவ் வுலக முழுவதும், பொதுமை இன்றி - பிறர்க்குப் பொது இல்லையாக, பருதி அம் செல்வம் - திகிரி யுருட்டும் செல்வமானது, நனவின் இயன்றது ஆயினும் - உண்மையாகவே கை கூடியதாயினும், அதன் கழிவு கங்குல் கனவின் அற்று - அதன் போக்கு இரவில் கனவிற் றோன்றி மறையும் அத்தன்மையது. 9-16. அதனான் - அதனால், விரவு உறு பல் மலர் - கலப்புற்ற பல மலர்களை, வண்டு சூழ்பு அடைச்சி - வண்டு மொய்க்கும்படி சூடி, சுவல் மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி - பிடரின் மீது தங்கிய நிலையினின்றும் அசைந்த பெரிய கூந்தலின், ஈண்டு பல நாற்றம் - செறிந்த பலவாய நாற்றம், வேண்டுவயின் உவப்ப - வேண்டு மிடத்துப் பெற்று மகிழ, செய்வு உறு விளங்கு இழை பொலிந்த தோள் சேர்பு - செய்யப்பெற்ற விளங்கும் அணிகளாற் பொலிவுற்ற தோளை அணைந்து, எய்திய கனை துயில் ஏற்றொறும் - பொருந்திய மிக்க துயிலை ஏற்கும்தொறும், திருகி மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கின் மிகுதி - மாறுபட்டு மெய்யினுள் மெய் புகுதலொத்த கைகளால் விரும்பிக் கொள்ளும் முயக்கத்தினும் மேம்பட்ட பொருளை, கண்டன்றோ இலன் - யான் கண்டதில்லேன். 16-18. நீ நின் பல் பொருள் வேட்கையின் - நீ நின் பல வாய பொருள் விருப்பால், சொல் வரை நீவி - என் சொல்லின் அளவைக் கடந்து, செலவு வலியுறுத்தனையாயின் - செல்லுதலை வற் புறுத்துவை யாயின், 18-27. காலொடு கனை எரி நிகழ்ந்த இலை இல் காட்டு - காற்றினால் மிக்கெழும் தீ மேவியதாய இலையற்ற காட்டில், உழை புறத்து அன்ன புள்ளி நீழல் - மானின் புறத்துள்ள புள்ளிபோன்ற புள்ளிகளை யுடைய மர நிழலில், அசைஇய பொழுதில் - தங்கி யிருக்குங்கால், இவள் மறப்பு அரு பல் குணம் நிறத்து வந்து உறுதர- இவளது மறத்தற்கரிய பல குணங்களும் நின் நெஞ்சத்து வந்துபுக, பசைஇ - விரும்பி, ஒரு திறம் நினைத்தல் செல்லாய் - ஒரு கூற்றினை நினைத்தல் மாட்டாயாய், திரிபு நின்று - வேறுபட்டு நின்று, உரம் கெட மெலிந்து - திட்பம் அற மெலிந்து, உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்கு - பெரிய புலியுடன் போர் செய்து வருந்திய வடுப் பொருந்திய கொம்பினையுடைய களிற்றின் பொருட்டு, பிடி பூசலின் இடு அடிபட குழிந்த - பெண் யானை ஆரவாரத்துடன் இட்டேகும் அடிகள் பதிதலால் பள்ளமாய, நிரம்பா நீள் இடை - சென்று தொலையாத நீண்ட சுரத்தின் இடையே, தூங்கி - தங்கி, இரங்குவை அல்லையோ - வருந்துவாய் அல்லையோ. (முடிபு) பொருள் புரிந்து ஆள்வினைக்கு எதிரிய நெஞ்சே! கேண்மதி, பரிதியஞ் செல்வம் நனவின் இயன்றதாயினும் அதன் கழிவு கனவின் அற்று. அதனால், (தலைவியின்) தோள் சேர்பு, கைகவர் முயக்கின் மிகுதி கண்டன்றோ இலன். நீ பொருள் வேட்கையின் செலவு வலியுறுத்தனையாயின், இவள் பல் குணம் நிறத்து வந்துறுதர, ஒரு திறம் நினைத்தல் செல்லாய் நிரம்பா நீளிடைத் தூங்கி இரங்குவை அல்லையோ. (வி-ரை) பருதி அஞ் செல்வம் - திகிரி யுருட்டும் செல்வம்; என்றது புவி முழுதாளும் செல்வம். நனவின் இயன்றதாயினும் என்றது அதன் அருமையை விளக்கிற்று. கனவின் அற்று என்றது கனவினைப்போல் விரைவிலே தோன்றி மறையும் இயல்பிற்று என்றபடி. சூழ்பு - சூழ எனத் திரிக்க. தயங்குதல் - அசைதல். முடி - கூந்தல். தோளைச் சேர்ந்து துயில் ஏற்குந்தொறும் முயங்கும் முயக்கத்தினும் மேம்பட்ட பொருளைக் கண்டன்றோ இலன் எனத் தலைவன் கூறினான் என்க. `தாம் வீழ்வார் மென்றோட் டுயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு'1 என்பது காண்க. ஒரு திறம் நினைத்தல் செல்லாய் - செல்லுதல், மீளுதல் என்னும் இரு கூற்றினில் ஒன்றினைத் துணியமாட்டாயாய். அடு மருப்பு என்று பிரித்துரைத்தலுமாம். பிடி பூசலின் இடு அடி என மாறுக. 380. நெய்தல் (பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது.) தேர்சேண் நீக்கித் தமியன் வந்துநும் ஊர்யா தென்ன நணிநணி ஒதுங்கி முன்னாட் போகிய துறைவன் நெருநை அகலிலை நாவல் உண்டுறை உதிர்த்த 5. கனிகவின் சிதைய வாங்கிக் கொண்டுதன் தாழை வேரளை வீழ்துணைக் கிடுஉம் அலவற் காட்டி நற்பாற் றிதுவென நினைந்த நெஞ்சமொடு நெடிதுபெயர்ந் தோனே 2உதுக்காண் தோன்றும் தேரே இன்றும் 10. நாமெதிர் கொள்ளா மாயின் தானது துணிகுவன் போலாம் நாணுமிக வுடையன் வெண்மணல் நெடுங்கோட்டு மறைகோ 1 அம்ம தோழி கூறுமதி நீயே. - மதுரை மருதனிளநாகனார். (சொ-ள்) 13. தோழி-, அம்ம - நான் கூறுவதனைக் கேட்பாயாக. 1-3. தேர் சேண் நீக்கி - தனது தேரினைச் சேய்மையில் நிறுத்தி, தமியன் வந்து - தனியனாய் வந்து, நும் ஊர் யாது என்ன - நுமது ஊர் யாதென்று வினவி, நணி நணி ஒதுங்கி - குறுகக் குறுக நடந்து, முன் நாள் போகிய துறைவன் - முன்னாளில் சென்ற துறைவன், 3-8. நெருநை - நேற்று, அகல் இலை நாவல் உண் துறை உதிர்த்த - அகன்ற இலையினையுடைய நாவல் மரம் நீர் உண்ணும் துறைக் கண்ணே சொரிந்த, கனி கவின் சிதைய வாங்கிக்கொண்டு - கனியினை அதன் அழகுகெட இழுத்துக்கொண்டு சென்று, தாழை வேர் அளை தன் வீழ் துணைக்கு இடூஉம் அலவன் காட்டி - தாழையின் வேர்ப்பக்கலுள்ள வளையிலுள்ள தனது அன்பு பொருந்திய பெண் ஞெண்டிற்குத் தரும் ஓர் ஆண் ஞெண்டினைக் காட்டி, நல் பாற்று இது என - இது நல்ல பான்மை யுடையது என்று கூறி, நெடிது நினைந்த நெஞ்சமொடு பெயர்ந்தோன் - நெடிது சிந்தித்த நெஞ்சுடன் மீண்டு சென்றான், 9-11. இன்றும் உது காண் தேர் தோன்றும் - இன்றும் உதோபார் அவனது தேர் தோன்றா நிற்கும், நாம் எதிர் கொள்ளாம் ஆயின் - நாம் அவனை எதிர்கொண்டு ஏற்காமாயின், நாணு மிக உடையன் - மிக்க நாண முடையன் ஆகலான், தான் அது துணிகுவன் போலாம்- அவன் அதனை மெய் யெனத் துணிவான் போலும், 12-13. வெண் மணல் நெடு கோட்டு மறைகோ - நான் வெள்ளிய நெடிய மணற் கரையில் மறைந்து கொள்வேனா, நீ கூறுமதி - நீ உன் கருத்தினைக் கூறுவாயாக. (முடிபு) தோழி! தேர் சேண் நீக்கி வந்து முன்னாட்போகிய துறைவன், நெருநை, அலவற் காட்டி நெடிது நினைந்த நெஞ்சமொடு பெயர்ந்தோன். இன்றும் தேர் உதுக்காண் தோன்றும், நாம் எதிர்கொள்ளாம் ஆயின், தான் அது துணிகுவன் போலாம், நெடுங்கோட்டு மறைகோ, நீ கூறுமதி. (வி-ரை) யாது என்ன - யாது என்று வினவி. நணி நணி ஒதுங்கி- மெல்ல மெல்ல நடந்து என்க. நற்பாற்று - நல்ல பான்மையுடையது; பான்மை - ஊழ். இது போன்று என் காதலியை உண்பித்து இன்புறும் பேற்றினைப் பெற்றிலேனே என்று நெடிது நினைந்த நெஞ்சம் என்க. இன்றும் என்பதனை இடைநிலை விளக்காகக் கொண்டு இன்றும் எதிர்கொள்ளாமாயின் எனவும் கூட்டியுரைக்க. அது துணிகுவன் போலாம் என்றது, நாம் எதிர் கொள்ளாமையின் அவன்பால் அன்பிலேம் என்று துணிந்து ஒழிகுவன் போலும் என்றபடி. நாணம் மிகவுடையன் என்றது, நாண் அழியப் பின்னும் பல்கால் வருவான் அல்லன் என்று கூறியபடியாம். இனி, அது துணிகுவன் போலாம் என்றது மட லேறுதல் முதலியவற்றுள் ஒன்றைத் துணிகுவன் போலும் என்றுரைத் தலுமாம். மறைகோ என்றது, நீ அவனது குறையினை முடிப்பாய் எனக் குறிப்பிற் கூறியது. 1`நீகண் டனையெனின் வாழலை நேரிழை அம்பலத்தான் சேய்கண் டனையன் சென்றாங்கோ ரலவன்றன் சீர்ப்பெடையின் வாய்வண் டனையதோர் நாவற் கனிநனி நல்கக்கண்டு பேய்கண் டனையதொன் றாகிநின் றானப் பெருந்தகையே.' என்னும் செய்யுளில் இதன் கருத்து அமைந்திருத்தல் அறிந்து மகிழ்தற் குரியது. 381. பாலை (தலைமகன் இடைச் சுரத்துத் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.) ஆளி நன்மான் அணங்குடை யொருத்தல் மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப ஏந்தல் வெண்கோடு வாங்கிக் 2குருத்தருந்தும் 3அஞ்சுவரத் தகுந ஆங்கண் மஞ்சுதப 5. அழல்கான்று திரிதரும் அலங்குகதிர் மண்டிலம் நிழல்சூன் றுண்ட நிரம்பா நீளிடைக் கற்றுரிக் குடம்பைக் கதநாய் வடுகர் விற்சினந் தணிந்த வெருவரு கவலைக் குருதி யாடிய புலவு4நா றிருஞ்சிறை 10. எருவைச் சேவல் ஈண்டுகிளைத் தொழுதி பச்சூன் கொள்ளை சாற்றிப் பறைநிவந்து செக்கர் வானின் விசும்பணி கொள்ளும் 5அருஞ்சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார் முனையரண் கடந்த வினைவல் தானைத் 15. தேனிமிர் நறுந்தார் வானவ னுடற்றிய ஒன்னாத் தெவ்வர் மன்னெயில் போலப் பெரும்பாழ் கொண்ட மேனியள் நெடிதுயிர்த்து வருந்துங்கொ லளியள் தானே சுரும்புண நெடுநீர் பயந்த நிரையிதழ்க் குவளை 20. எதிர்மல ரிணைப்போ தன்னதன் அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. - மதுரை இளங்கௌசிகனார். (சொ-ள்) நெஞ்சே! 1-13. ஆளி நல்மான் அணங்கு உடை ஒருத்தல் - ஆளியாகிய நல்ல விலங்கினது வருத்துதலையுடைய ஏறு, மீளிவேழத்து நெடுந்தகை புலம்ப - வலியுடைய யானையின் தலைவனான களிறு வருந்த, ஏந்தல் வெண்கோடு வாங்கி - அதன் நிமிர்ந்த வெள்ளிய கோட்டினைப் பறித்து, குருத்து அருந்தும் - குருத்தினைத் தின்னும், அஞ்சு வரத் தகுந ஆங்கண் - அச்சம் உண்டாகத் தக்க சுரத்திடத்தே, மஞ்சு தப - மேகம் பெய்யாதொழிய, அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் - எரியினைக் கக்கிச் செல்லும் அசையும் கதிர்களையுடைய ஞாயிறு, நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை - நிழலினை அகழ்ந்து உண்ட செல்லத் தொலையாத நீண்ட இடத்திலுள்ள, கற்று உரிக் குடம்பைக் கதநாய் வடுகர் - கன்றின் தோலாலாய கூட்டினையும் சினம் பொருந்திய நாயினையுமுடைய வடுகர், வில் சினம் தணிந்த வெருவரு கவலை - தமது வில்லாற் பொரும் வெகுளி நீங்கிய அச்சம் வரும் கவர்த்த நெறிகளில், குருதி ஆடிய புலவு நாறு இருசிறை எருவைச் சேவல் - குருதி படிந்த புலால் நாறும் பெரிய சிறகினையுடைய ஆண் பருந்தினது, ஈண்டு கிளைத் தொழுதி - கிளையுடன் கூடிய கூட்டம், பசு ஊன் கொள்ளை சாற்றி பறை நிவந்து - பசிய ஊனின் மிகுதியைத் தெரிவித்துப் பறந்தெழுந்து, செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும் - செவ்வானம்போல விசும்பினை அழகு செய்யும், அரும் சுரம் நீந்திய நம்மினும் - அரிய சுரத்தினைக் கடந்து வந்த நம்மைக் காட்டினும், (நம் தலைவி) 13-21. பொருந்தார் முனை அரண் கடந்த வினை வல் தானை - பகைவரது போர் செய்யும் அரணை வென்ற போர்த்தொழில் வல்ல சேனையினையும், தேன் இமிர் நறு தார் - வண்டுகள் ஒலிக்கும் நறிய மாலையினையுமுடைய, வானவன் - சேரன், உடற்றிய - போர் புரிந்து அழித்த, ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல - மாறுபட்ட பகைவரது பொருந்திய மதில்போல, பெரும் பாழ் கொண்ட மேனியள் - மிக்க பாழ்பட்ட மேனியளாகி, சுரும்பு உண நெடுநீர் பயந்த நிரை இதழ் குவளை - வண்டு தேனைப் பருக ஆழமான நீரினால் தரப்பட்ட நிரையாகவுள்ள இதழ்களையுடைய குவளையது, எதிர் மலர் இணை போது அன்ன - புதிய மலராய இரண்டு பூக்களைப் போன்ற, தன் அரிமதர் மழை கண் - தனது செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ந்த கண்கள், தெண் பனி கொள - தெளிந்த நீரைக் கொள்ள, நெடிது உயிர்த்து - பெருமூச்செறிந்து, வருந்தும் கொல் - வருந்தியிருப்பளோ, அளியள் - இரங்கத்தக்காள். (முடிபு) நெஞ்சே! அருஞ்சுரம் நீந்திய நம்மினும் (நம் தலைவி) பெரும் பாழ் கொண்ட மேனியள் (ஆகி) நெடிது உயிர்த்து தன் கண் தெண் பனி கொள வருந்துங்கொல், அளியள். (வி-ரை) ஆளியானது யானைக் கொம்பைப் பறித்து உண்ணும் என்பது, `மூரித்தாள் ஆளியானைத், தலைநிலம் புரளவெண் கோடுண்டதே போன்று'1 என்பதனாலும் அறியப்படும். குருகு என்னும் பாடத்திற்கும் குருத்து என்பதே பொருளாகும். கான்று சூன்று என்பன இலக்கணை வழக்கு. வம்பலர் மடிந்து ஒழிந்தமையின் வடுகர் சினந் தணிந்தார் ஆயிற்று. விற்சினம் - விற்கொண்டு பொரும் சினம். கிளையையுடைய சேவலினது தொழுதி என்க. பச்சூன் கொள்ளை சாற்றுதலாவது தாம் பறத்தலால் ஊன் மிகுதியா யிருத்தலை ஏனோர் அறியச் செய்தல். குருதி படிந்த சிறகுடன் விசும்பிலே வட்டமிடுதலால், எருவைச் சேவலின் தொழுதி செவ் வானம் போல்வதாயிற்று. நீளிடையில் உள்ள கவலையில் குருதியாடிய எருவைச் சேவல் விசும்பு அணி கொள்ளும் அருஞ்சுரம் என்க. எதிர் மலர் - அப்பொழுது அலர்ந்த மலர். 382. குறிஞ்சி (இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது.) பிறருறு விழுமம் பிறரும் நோப தம்முறு விழுமம் தமக்கோ தஞ்சம் கடம்புகொடி யாத்துக் கண்ணி சூட்டி வேறுபல் குரல ஒருதூக் கின்னியம் 5. காடுகெழு நெடுவேட் 2பாடுகொளைக் கேற்ப 3அணங்கயர் வியன்களம் பொலியப் பையத் தூங்குதல் புரிந்தனர் நமரென ஆங்கவற்கு அறியக் கூறல் வேண்டும் தோழி அருவி பாய்ந்த கருவிரல் மந்தி 10. செழுங்கோட் பலவின் பழம்புணை யாகச் சாரற் பேரூர் முன்றுறை இழிதரும் வறனுறல் அறியாச் சோலை விறன்மலை நாடன் சொன்னயந் தோயே. - கபிலர். (சொ-ள்) 8-13. தோழி-, அருவி பாய்ந்த கருவிரல் மந்தி - அருவியின்கட் பாய்ந்த கரிய விரலையுடைய பெண் குரங்கு, செழு கோள் பலவின் பழம் - வளமுறக் காய்த்தலைக் கொள்ளும் பலாவின் பழத்தினை, புணையாக - தெப்பமாகக் கொண்டு, சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும் - பக்க மலையிலுள்ள பெரிய ஊரின் கண் துறை முன்பு வந்திறங்கும், வறன் உறல் அறியாச் சோலை விறல் மலை நாடன் - வறட்சி யுறுதலை அறியாத சோலையையுடைய வெற்றி பொருந்திய மலை நாட்டின் தலைவனது, சொல் நயந்தோய் - சொல்லை விரும்பி ஏற்றனை; 1-2. பிறர் உறு விழுமம் பிறரும் நோப - பிறர்க்கு உறும் துன்பம் காணின் நல்லோர் தாம் பிறரே யாயினும் நோவாநின்று விலக்க முயல்வர், (அன்றி), தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம் - தமக்கு உற்ற துன்பினைத் தமக்குப் பெரிதாகக் கொள்ளாது எளிதாகக் கொள்வர், (இது சான்றோர் இயற்கை.) 3-8. நமர் - நம்மவர், கடம்பு கொடி யாத்து - கடம்பின்கட் கொடியினைக் கட்டி, கண்ணி சூட்டி - மாலை சூட்டி, வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் - பல் வேறு குரலை உடையனவாகிய தாளத்தின் வழிப்படும் ஒரு தூக்கினையுடைய இனிய வாச்சியங் களைக் கொண்டு, காடு கெழு நெடு வேள் பாடு கொளைக்கு ஏற்ப - காட்டிற் பொருந்திய நெடிய முருகனைப் பாடும் பாட்டிற்குப் பொருந்த, அணங்கு அயர் வியன் களம் பொலிய - வெறியாட்டுச் செய்யும் பெரிய களம் சிறப்புற, பைய தூங்குதல் புரிந்தனர் - மெல்ல ஆடுதலை விரும்பினர், என - என்று, ஆங்கு அவற்கு அறியக் கூறல் வேண்டும் - தலைவனைக் காணுமிடத்து அவனுக்கு நீ உணரக் கூறுதல் தக்கது. (முடிபு) தோழி! மலை நாடன் சொல் நயந்தோய், பிறருறு விழுமம் பிறரும் நோப, தம்முறு விழுமம் தமக்கோ தஞ்சம், நமர் நெடுவேட் பாடு கொளைக் கேற்பக் களம் பொலியத் தூங்குதல் புரிந்தனர் என அவற்கு அறியக் கூறல் வேண்டும். (வி-ரை) பிறருற்ற துன்பத்திற்கு வருந்துதலும் தம்மையுற்ற துன்பத்தைப் பொறுத்தலும் சான்றோர் இயல்பாகலால், நம் தலைவர் நாம் உற்ற துன்பத்தை அறியின் விரைந்து அதனைப் போக்குதற்கு முற்படுவர் எனத் தோழி தலைவிக்குக் கூறினாள் என்க. ஒரு தூக்கு இன்னியம் - தாளங்களின் வழிவரும் செந்தூக்கு முதலாகிய எழுவகைத் தூக்கினுள் ஒன்றினைப் பொருந்திய இன்னியம் என்க. காடு என்றது ஈண்டுக் குறிஞ்சியை. தோழி என்றது தலைவியை. 383. பாலை (மகட் போக்கிய தாய் சொல்லியது.) 1தற்புரந் தெடுத்த எற்றுறந் துள்ளாள் ஊருஞ் சேரியும் ஓராங் கலரெழக் 2காடுங் காவும் அவனொடு துணிந்து நாடுந் தேயமும் நனிபல இறந்த 5. சிறுவன் கண்ணிக் கேர்தே றுவரென வாடினை வாழியோ வயலை நாடொறும் 3பல்கிளைக் கொடிக்கொம் பலமர மலர்ந்த அல்குல் 4தழைக்கூட்டு அங்குழை உதவிய வினையமை வரனீர் விழுத்தொடி தத்தக் 10. கமஞ்சூற் பெருநிறை தயங்க முகந்துகொண்டு ஆய்மடக் கண்ணள் தாய்முகம் நோக்கிப் பெய்சிலம் பொலிப்பப் பெயர்வனள் வைகலும் ஆரநீர் ஊட்டிப் புரப்போர் யார்மற்றுப் பெறுகுவை அளியை நீயே. - கயமனார். (சொ-ள்) 1-6. வயலை - வயலைக் கொடியே, வாழியோ - நீ வாழி, தன் புரந்து எடுத்த - தன்னை வளர்த்தெடுத்த, என் துறந்து உள்ளாள் - என்னையும் நினையாளாய்த் துறந்து, ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ - ஊரினும் சேரியினும் ஒரு பெற்றியே அலர் மிக, காடும் காவும் அவனொடு துணிந்து - காடும் சோலையும் அத் தலைவனொடு போகத் துணிந்து, நாடும் தேயமும் நனிபல இறந்த - மிகப் பலவாய நாடுகளையும் தேயங்களையும் கடந்த, சிறு வன் கண்ணிக்கு - இளைய வன்கண்மை யுடையாட்கு, ஏர் தேறுவர் என - அழகு செய்விப்பார் போல, வாடினை - வாடியுள்ளாய்; 6-14. நாள் தொறும் - ஒவ்வொரு நாளும், பல் கிளை கொடி கொம்பு - பலகிளையாய ஒழுகிய கொம்புகள், அலமர - பாரம் தாங்காது சுழல, மலர்ந்த - விரிந்த, அல்குல் தழைக் கூட்டு அம் குழை உதவிய - அல்குலில் தழை யுடைக்குக் கூட்டும் அழகிய தளிர்களை நீ தருமாறு, ஆய் மட கண்ணள் - அழகிய மடப்பம் தோன்றும் கண்களையுடைய என் மகள், விழு தொடி தத்த - சிறந்த வளையல் அசையவும், பெய் சிலம்பு ஒலிப்ப - காலிற் பெய்த சிலம்பு ஒலிக்கவும், வினை அமை வரல் நீர் - தொழிற்பட்ட மூங்கிற் குழாயின் வழியாக வந்து விழும் நீரினை, கமம் சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு- நிறைந்த நீரினைக் கொள்ளும் பெரிய சாலில் அசைய முகந்து எடுத்துக் கொண்டு வந்து ஊற்றி, தாய் முகம் நோக்கி - தாயைப் போல நின் முகத்தினைப் பார்த்து, வைகலும் - நாடோறும், பெயர்வனள் - பெயர்வாளாவள் அன்றோ, (அவள் போல) ஆர நீர் ஊட்டி - நிறைய நீரினை உண்பித்து, புரப்போர் மற்று யார் பெறுகுவை - புரப்பார் யாரை இனி நீ பெறுவாய்; நீ அளியை - நீ இரங்கத் தக்காய். (முடிபு) வயலை வாழி! காடும் காவும் அவனொடு துணிந்து நாடும் தேயமும் இறந்த சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவரென வாடினை. நாடொறும் அம் குழை உதவிய, ஆய்மடக் கண்ணள் அமை வரல் நீர் பெரு நிறை தயங்க முகந்து கொண்டுவந்து ஊற்றித் தாய் முகம் நோக்கிப் பெயர்வனள் அன்றோ. (அவள் போல) இனி நீரூட்டிப் புரப்போர் யார் பெறுகுவை நீ; அளியை. (வி-ரை) சேரி - ஊரின் ஒரு பகுதி. `ஊருஞ் சேரியும் உடனியைந் தலரெழ'1 என்பதன் உரை காண்க. காடும் கானமும் என்பது பாடமாயின் காடும் சுரமும் என்று பொருள் கொள்க. தேயம் - நாடு பல சேர்ந்தது. தேறுவர் - தெளிபவர்; தெளிந்து செய்விப்பவர் என்னும் பொருட்டு. மலர்ந்த குழை உதவிய எனவும், அமைவரல் நீர் நிறை தயங்க முகந்து கொண்டு எனவும் கூட்டுக. உதவிய - உதவுமாறு; செய்யிய என்னும் வினையெச்சம். அமை மூங்கிற் குழாய். நிறை - சால்; நீர்ச்சால் வயிறு புடைத் திருத்தலின் கமஞ் சூற் பெரு நிறை எனப்பட்டது. தயங்கல் - அசைதல். தாய் முகம் நோக்கி - தாய்போல முகம் நோக்கி என விரிந்துரைக்க. ஆர - நிறைய, உண்ண என்றுமாம். மற்று - வினைமாற்றின்கண் வந்தது. 384. முல்லை (வினைமுற்றிய தலைமகன் வரவுகண்டு உழையர் சொல்லியது.) இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப் புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் ஏறிய தறிந்தன் றல்லது வந்தவாறு நனியறிந் தன்றோ இலனே தாஅய் 5. முயற்பறழ் உகளும் முல்லையம் புறவிற் கவைக்கதிர் வரகின் சீறூர் ஆங்கண் மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ 10. மானுரு வாகநின் மனம்பூட் டினையோ உரைமதி வாழியோ வலவ எனத்தன் வரைமருள் மார்பின் நளிப்பனன் முயங்கி மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை விருந்தேர் பெற்றனள் திருந்திழை யோளே. 1ஒக்கூர் மாசாத்தியார். (சொ-ள்) 11. வலவ - பாகனே, வாழி- வாழ்வாயாக. 1-11. இருந்த வேந்தன் - பாசறைக்கண் ணிருந்த நம் அரசன், அரும் தொழில் முடித்தென - அரிய போரினை வென்றி கொண்டு முடித்தானாக, புரிந்த காதலொடு - விரும்பிய காதலொடு, யானும்-, பெரும் தேர் ஏறியது அறிந்தன்று அல்லது - பெரிய தேரின்கண் ஏறியமர்ந்ததை அறிந்ததே யன்றி, வந்தவாறு - இங்கு வந்துற்ற பரிசினை, நனி அறிந்தன்றோ இலன் - நன்கு அறிந்திலேன், முயல் பறழ் தாஅய் உகளும் முல்லை அம் புறவில் - முயற் குட்டிகள் தாவிக் குதிக்கும் முல்லையாய அழகிய காட்டில், கவை கதிர் வரகின் சிறு ஊர் ஆங்கண் - கவர்த்த கதிரினைக் கொண்ட வரகினையுடைய சிறிய ஊரிடத்தே, மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ - மென்மைத் தன்மை வாய்ந்த தலைவியின் இல்லின்கண் தேரினை நிறுத்தி, இழிமின் என்ற நின் மொழி மருண்டிசின் - இறங்குக என்ற நின் சொற்கேட்டு மருட்சியுற்றேன், வான் வழங்கு இயற்கை வளி - வானில் இயங்கும் இயல்பினையுடைய காற்றினை, மான் உருவாக - குதிரையின் வடிவாக, பூட்டினையோ - பூட்டி வந்தனையோ, (அன்றி), நின் மனம் பூட்டினையோ - நினது மனத்தினை (அங்ஙனம்) பூட்டி வந்தனையோ, உரைமதி - கூறுவாயாக, என - என்று கூறி, 13. நெடுந்தகை - பெருந்தகைமையுடைய தலைவன், 11-13. தன் வரை மருள் மார்பின் நளிப்பனன் முயங்கி - தனது மலையை யொத்த மார்பினகத்தே (அவனைச்) செறிப் போனாய்த் தழுவி, மனை கொண்டு புக்கனன் - தன் மனைக்கண் உடன் கொண்டு புகுந்தனன்; 14. திருந்து இழையோள் - திருந்திய அணிகளையுடைய அவன் தலைவி, விருந்து ஏர் பெற்றனள் - விருந்தோம்பும் சிறப்பினைப் பெற்றாள். (முடிபு) வலவ! வாழி! யானும் பெருந்தேர் ஏறியது அறிந்தன்றலது, வந்தவாறு அறிந்தன்றோ இலன், சீறூர் ஆங்கண் இல்வயின் நிறீஇ இழிமின் என்ற நின்மொழி மருண்டிசின், நீதான் வளியினை மானுருவாகப் பூட்டினையோ, அன்றி, நின் மனத்தினை அங்ஙனம் பூட்டினையோ, உரைமதி என நெடுந்தகை தன் மார்பின் முயங்கி மனைக் கொண்டு புக்கனன்; திருந்திழை விருந்து ஏர் பெற்றனள். (வி-ரை) வேந்தன் அருந்தொழில் முடித்து என - வேந் தனுடைய அரிய தொழிலை யான் முடித்தேனாக என்றுரைத்தலும் ஆம். நனி அறிதல் - நன்கு அறிதல், மொழி மருண்டிசின் - மொழியைக் கேட்டு மருண்டேன். வான் வழங் கியற்கை வளிபூட் - டினையோ, மானுருவாக நின் மனம் பூட்டினையோ உரைமதி - என்றது பிறபொருட்கண் தோன்றிய ஆக்கம் பற்றிய வியப்பு. நளிப்பனன் - செறிப்போனாகி, நளி என்னும் உரியடியாகப் பிறந்த வினை. விருந்தோ பெற்றனள் என்று பாடம் கொள்ளுதலுமாம், இதற்கு ஓகாரம் சிறப்பு. (மே-ள்) `புதுமை பெருமை'1 என்னுஞ் சூத்திரத்து, `.......பெருந்தேர்யானும்....... மருண்டிசினே' என்பதனை மருட்கை என்னும் மெய்ப்பாட்டிற்கு எடுத்துக்காட்டினர், இளம். `கரணத்தின் அமைந்து முடிந்த காலை'2 என்னுஞ் சூத்திரத்து, பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும் என்னும் பகுதிக்கண் இச் செய்யுளைக் காட்டி, இதனாற் பாகன் சிறப்புக் கூறியவாறு காண்க என்றும், `வினைவயிற் பிரிந்தோன்'3 என்னும் சூத்திரத்து, இதனுள் `புரிந்த காதலொடு........ மானுருவாக நின் மனம் பூட்டினையோ, உரைமதி வாழியோ வலவ' என `உள்ளம் போல உற்றுழி உதவிற்று எனத் தலைவன் கூறியவாறு காண்க என்றும் கூறினர், நச். 385. பாலை (மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.) தன்னோ ரன்ன ஆயமும் மயிலியல் என்னோ ரன்ன தாயருங் - காணக் கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர் காவிரிப் படப்பை உறந்தை யன்ன 5. பொன்னுடை நெடுநகர்ப் புரையோர் அயர நன்மாண் விழவில் தகரம் மண்ணி 4ஆம்பல புணர்ப்பச் செல்லாள் காம்பொடு நெல்லி நீடிய கல்லறைக் கவாஅன் அத்த ஆலத்து அலந்தலை நெடுவீழ் 10. தித்திக் குறங்கில் திருந்த உரிஞ வளையுடை முன்கை அளைஇக் கிளைய பயிலிரும் பிணையற் பசுங்காழ்க் கோவை அகலமை யல்குல் பற்றிக் கூந்தல் ஆடுமயிற் பீலியிற் பொங்க நன்றும் 15. தானமர் துணைவன் ஊக்க ஊங்கி உள்ளாது கழிந்த முள்ளெயிற்றுத் துவர்வாய்ச் சிறுவன் கண்ணி சிலம்புகழீஇ அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே. - குடவாயிற் கீரத்தனார். (சொ-ள்) 1-7. மயில் இயல் - மயில்போலும் சாயலையுடைய என் மகள், தன் ஓரன்ன ஆயமும் - தன்னை யொத்த தோழிமாரும், என் ஓரன்ன தாயரும் காண - என்னை யொத்த தாய்மாரும் கண்டு மகிழ, கைவல் யானை கடு தேர் சோழர் - வலிய கையினையுடைய யானையையும் கடிய தேரினையுமுடைய சோழரது, காவிரிப் படப்பை உறந்தை அன்ன - காவிரியின் பக்கத்ததாகிய உறையூரை யொத்த, பொன் உடை நெடு நகர் - செல்வம் மிக்க பெரிய மனையில், புரையோர் அயர - மேலோர் வதுவை செய்விக்க (நிகழும்), நல் மாண் விழவில் - நல்ல சிறப்புற்ற மணவிழாவில், தகரம் மண்ணி - அவட்கு மயிர்ச் சாந்தினைப் பூசி, ஆம் பல புணர்ப்ப செல்லாள் - மற்றும் பொருந்திய பல சிறப்புக்களையும் செய்விக்க மணந்து செல்லாளாய், 7-18. காம்பொடு நெல்லி நீடிய கல் அறை கவாஅன் - மூங்கிலுடன் நெல்லிமரம் உயர்ந்த கற்பாறைகளையுடைய பக்க மலையிலே, அத்தம் ஆலத்து அலந்தலை நெடுவீழ் - நெறியிலுள்ள ஆலமரத்தின் வாடி யசைகின்ற நெடிய விழுது, தித்தி குறங்கில் திருந்த உரிஞ - தனது தேமல் பொருந்திய துடையில் நன்கு உராய்ந்திட, கூந்தல் ஆடு மயில் பீலியில் பொங்க - கூந்தலானது ஆடும் மயிலின் தோகை போலப் பொங்கிப் பரக்க, தான் அமர் துணைவன் - தன்னால் விரும்பப்பெற்ற துணைவன், வளையுடை முன்கை அளைஇ - தனது வளை பொருந்திய முன் கையினைப் பற்றியும், கிளைய பயில் இரும் பிணையல் பசு காழ் கோவை - பல கிளையினவாய் நெருங்கிய பெரிய மாலையாய அழகிய வடங்களைக் கொண்ட மேகலை யணிந்த, அகல் அமை அல்குல் பற்றி - அகற்சி யமைந்த அல்குலை அணைத்தும், நன்றும் ஊக்க - ஊங்கி - பெரிதும் ஊக்கமுறுத்த ஊக்கங் கொண்டு, உள்ளாது கழிந்த - வழிவருத்தம் எண்ணாது கழிந்த, முள் எயிற்று துவர் வாய் சிறு வன்கண்ணி - முட்போன்ற கூரிய பற்களையும் பவளம் போன்ற வாயினையு முடைய அஞ்சாமையுடையளாய இளையள், சிலம்பு கழீஇ அறியாத் தேஎத்தள் ஆகுதல் - அறியப்படாத தேயத்திலே சிலம்பு கழித்து வதுவை செய்திருத்தல், கொடிது - இன்னாமையுடையது. (முடிபு) மயிலியல், ஆயமும் தாயரும் காண, உறந்தை யன்ன நெடு நகரிலே, புரையோர் அயர, விழவில், தகரம் மண்ணி, ஆம் பல புணர்ப்பச் செல்லாளாய், கல் அறை கவான், தானமர் துணைவன் ஊக்க ஊங்கிக் கழித்த சிறுவன்கண்ணி, சிலம்பு கழீஇ, அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிது. (வி-ரை) காவிரிப் படப்பை உறந்தை - காவிரியின் தோட்டக் கூறு சூழ்ந்த உறையூர் என்றுமாம். ஆம் பால் புணர்ப்ப என்பது பாடமாயின், ஆகும் ஊழ் புணர்க்க என்று உரைக்க. அலந்தலை - அலந்த தலை என்றதன் விகாரமுமாம். முன் கை கிளைத்தலால் கூந்தல் மயிற்பீலி போலத் தாழ்ந்து அல்குல் பற்றிப் பொங்க என்றுரைத்தலுமாம். ஊக்க ஊங்கி - செலுத்தச் சென்று என்றுமாம். அறியாத் தேஎத்தளாய்ச் சிலம்பு கழீஇ இருத்தல் என மாறுக. 386. மருதம் (தோழி வாயின் மறுத்தது. தலைமகள் தகுதி சொல்லியதூஉமாம்.) பொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்து வாளை நாளிரை தேரும் ஊர நாணினென் பெரும யானே பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி 5. எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் 1நிறைத்திரண் முழவுத்தோள் கையகத் தொழிந்த திறன்வேறு கிடக்கை நோக்கி நற்போர்க் கணையன் நாணி யாங்கு மறையினள் மெல்ல வந்து நல்ல கூறி 10. மையீர் ஓதி மடவோய் யானுநின் சேரி யேனே அயலி லாட்டியேன் நுங்கை யாகுவென் நினக்கெனத் தன்கைத் நொடுமணி மெல்விரல் தண்ணெனத் தைவர நுதலும் கூந்தலும் நீவிப் 15. பகல்வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே. - பரணர். (சொ-ள்) 1-2. பொய்கை புலவு நாறு நீர் நாய் இரும் போத்து - பொய்கைக்கண் ணுள்ள புலால் நாறும் பெரிய நீர் நாயின் ஆண், நாள் இரை வாளை தேரும் ஊர - நாட்காலத்தே வாளையாய இரையினை ஆராயும் ஊரையுடைய தலைவ! 3. பெரும - பெருமானே! 8-15. மறையினள் மெல்ல வந்து - மறைந்து மெல்லென வந்து, நல்ல கூறி - முகமனுரைகள் கூறி, மை ஈர் ஓதி மடவோய் - கரிய பெரிய கூந்தலை யுடைய மடவோளே, யானும் நின் சேரியேனே-யானும் நின் சேரியில் உள்ளவளே, அயல் இல்லாட்டியேன் - அயன் மனைக்கு உரியேன், நினக்கு நுங்கை ஆகுவென் - உனக்குத் தங்கை யாவேன், என - என்று கூறி, தன் கை தொடு மணி மெல் விரல் தண் என தைவர நுதலும் கூந்தலும் நீவி - தன் கையின் மோதிரம் அணிந்த மெல்லிய விரலால் தண்ணென்று பொருந்த நெற்றியினையும் கூந்தலையும் தடவி, பகல் வந்து பெயர்ந்த வாள் நுதல் கண்டு - பகற் போதில் வந்து மீண்ட ஒள்ளிய நெற்றியினை யுடைய நின் பரத்தையைக் கண்டு, 3-8. பாணன் மல் அடு மார்பின் வலி உற வருந்தி - பாணன் என்பானது மற்போர் செய்தலில் வல்ல மார்பினது வலிமை மிகலான் வருந்தி, எதிர் தலைக் கொண்ட - அவனோடு எதிர் நின்று பொருதலை மேற் கொண்ட, ஆரியப் பொருநன் - ஆரியப் பொருநன் என்பானது, நிறை திரண் முழவு தோள் - வலி நிறைதலைக் கொண்ட திரண்ட முழவு போன்ற தோள்கள், கை அகத்து ஒழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி - அப் பாணன் கையகப்பட்டு ஒழியக் கிடந்த வேறு வகையாகிய கிடக்கையைப் பார்த்து, நல் போர் கணையன் நாணியாங்கு- நல்ல போர் வல்ல கணையன் என்பான் நாணியது போல, 3. யான் நாணினென் - யான் நாணமுற்றேன். (முடிபு) ஊர! பெரும! மறையினள் வந்து நல்ல கூறி நுதலும் கூந்தலும் நீவி, பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டு, பாணனொடு பொருத ஆரியப் பொருநன் முழவுத் தோள்கள் அவன் கையகப்பட்டு ஒழியக் கிடந்த கிடக்கையை நோக்கிக் கணையன் நாணியாங்க யான், நாணினென். (வி-ரை) `பாணன்...... கணையன் நாணி யாங்கு' என்னும் பகுதியிற் கூறிய வரலாறு: மற்போரில் வல்ல பாணன் என்பானும் ஆரியப் பொருநன் ஒருவனும் மற்போர் பொருத காலையில், பொருநன் தோள்கள் பாணன் கையகத்து அகப்பட்டு அற்று ஒழிய அவன் இறந்து கிடந்ததனை நோக்கிக் கணையன் என்பான் நாணினான் என்பது. இங்குக் கூறப்பெற்ற கணையன் என்பான் ஆரியப் பொருநனுக்கு நண்பனாகவேனும் அவனே வெல்வான் எனச் சூளுரைத்தவனாக வேனும் இருத்தல் வேண்டும். திறன் வேறு கிடக்கை என்றது, உயிர் நீங்கிக் கிடக்கும் கிடக்கையை. ஒழிந்த கிடக்கை - தோள் ஒழிய உடல் கிடந்த கிடக்கை என்க. தோட்கை யகத்து என்பதொரு பாடம் இருப்பின், பாணனானவன் ஆரியப் பொருநனுடைய கையில் அகப்பட்டு ஒழிந்தான் என்று பொருள் கொள்ளல் தகும். அங்ஙன மாயின் கணையன் பாணனுக்கு நட்பாளன் ஆதல் வேண்டும். மடவோய் என்றது பரத்தை தலைவியை விளித்தது. நுங்கை யாகுவேன் என்றதற்கு நினக்குத் தோழி யாவேன் என நச்சினார்க்கினியர் பொருள் கொள்வர். மணி - மணி பதித்த மோதிரம். தொடுதல் - அணிதல். பகல் வந்து பெயர்ந்த என்றதனால் பரத்தை பலருங் காணக் கூசாது வந்தாள் என்பதும், நுதலும் கூந்தலும் நீவி என்றதனால் அவள் தலைவியைப் பேணாது ஒழுகினாள் என்பதும் கூறி, அதற்குத் தலைவி நாணினாள் என்பாள் நாணினென் யானே என அதனைத் தன் மேல் ஏறட்டுத் தோழி கூறினாள் என்க. (உ-றை) நீர் நாயின் புலவு நாறும் போத்து நாட் காலத்தே வாளை இரை தேரும் ஊர என்றது, தலைவன் தன் புறத்தொழுக்கத்தால் ஊரெல்லாம் அலரெழச் செய்து, விடியலில் தலைவியை நாடி வருகின்றான் என்றபடி. (மே-ள்) `பெறற்கரும் பெரும்பொருண் முடிந்தபின் வந்த'1 என்னுஞ் சூத்திரத்து, பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும் என்னும் பகுதிக்கண், இச் செய்யுளைக் காட்டி, இதனுள் யான் நினக்குத் தோழி யாவேன் எனப் பரத்தை நீவிய பேணா ஒழுக்கத்திற்குத் தலைவி நாணியது கண்டு, தான் நாணினேனென்று தலைவற்குத் தோழி கூறியவாறு காண்க என்றார் நச். 387. பாலை (தலைமகளது குறிப்பறிந்து தோழி தலைமகனைச் செலவழுங்கச் சொல்லியது.) திருந்திழை நெகிழ்ந்து பெருந்தோள் சாஅய் அரிமதர் மழைக்கண் கலுழச் செல்வீர் வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ 2உவருணப் பறைந்த ஊன்றலைச் சிறாஅரொடு 5. அவ்வரிக் கொன்ற கறைசேர் வள்ளுகிர்ப் பசைவிரற் புலைத்தி நெடிதுபிசைந் தூட்டிய பூந்துகில் இமைக்கும் பொலன்காழ் அல்குல் அவ்வரி சிதைய நோக்கி வெவ்வினைப் 3பயிலரிற் கிடந்த வேட்டுவிளி வெரீஇ 10. வரிப்புற இதலின் மணிக்கட் பேடை நுண்பொறி அணிந்த எருத்திற் கூர்முட் செங்காற் சேவற் பயிரும் ஆங்கண் வில்லீண் டருஞ்சமந் ததைய நூறி நல்லிசை நிறுத்த நாணுடை மறவர் 15. நிரைநிலை நடுகற் பொருந்தி இமையாது இரைநசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி சிறிய 4தெற்றுவ தாயிற் பெரிய ஓடை யானை உயர்ந்தோ ராயினும் நின்றாங்குப் பெயருங் கானஞ் 20. சென்றோர் மன்னென இருக்கிற் போர்க்கே. - மதுரை மருதனிளநாகனார். (சொ-ள்) 1-2. திருந்து இழை நெகிழ்ந்து - இவள் திருந்திய அணி நெகிழவும், பெரு தோள் சாஅய் - பெரிய தோள் மெலியவும், அரி மதர் மழை கண் கலுழ - அரி பரந்த மதர்த்த கண்களில் நீரொழுகவும், செல்வீர் - செல்லும் தலைவரே, 4-8. உவர் உண பறைந்த ஊன் தலைச் சிறாஅரொடு - உவர் மண் அரித்தலால் மயிர் கழிந்த ஊன் பொருந்திய தலையினையுடைய சிறுவருடன், அ வரி கொன்ற கறை சேர் வள் உகிர் - ஆடையின் மறுக்களைச் சிதைத்த கறை பொருந்திய கூரிய நகத்தினையும், பசை விரல் புலத்தி - கஞ்சிப் பசை கொண்ட விரலையு முடைய வண்ணாத்தி, நெடிது பிசைந்து ஊட்டிய பூ துகில் இமைக்கும் - நெடும் பொழுது பிசைந்து கஞ்சி ஊட்டிய அழகிய ஆடை ஒளிரும், பொலன் காழ் அல்குல் - பொன் வடம் அணிந்த அல்குலின்கண், அ வரி சிதைய நோக்கி - அழகிய திதலை அழிய அதனைப் பார்த்து, 8-12. வெவ்வினை பயில் அரில் கிடந்த - கொடுந்தொழிலை யுடையரும் பிணக்கம் பொருந்திய காடுகளில் தங்கிக்கிடப் பாரு மாகிய, வேட்டு விளி வெரீஇ - வேட்டுவரது கூப்பீட்டைக் கேட்டு அஞ்சி, வரி புற இதலின் மணி கண் பேடை - புறத்தே வரிகளையுடைய காடையின் நீலமணி போன்ற கண்ணையுடைய பேடை, நுண்பொறி அணிந்த எருத்தின் - நுண்ணிய புள்ளிகளை அணிந்த கழுத்தினையும், கூர்முள் செங்கால் - கூரிய முட்போன்ற விரலைக் கொண்ட சிவந்த காலையுமுடைய, சேவல் பயிரும் ஆங்கண் - தன் சேவலை அழைக்கும் சுரத்தே, 13-20. வில் ஈண்டு அரு சமம் ததைய நூறி - விற்படை நெருங்கிய அரிய போரினை அழியக் கொன்று, நல் இசை நிறுத்த நாண் உடை மறவர் - நல்ல புகழை நிலைநாட்டிப் பட்ட மானம் மிக்க வீரரது, நிரை நிலை நடுகல் பொருந்தி - வரிசையாக நிற்றலையுடைய நடுகல்லைப் பொருந்தி யிருந்து, இமையாது இரை நசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி - கண்ணிமையாது உணவை வேட்டுக் கிடந்த முதுமை வாய்ந்த பல்லி, சிறிய தெற்றுவது ஆயின் - சிற்றளவில் தடைப்படுத்துவதாயின், பெரிய ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் - பெரிய நெற்றிப் பட்டம் அணிந்த யானையிற் செல்லும் அரசராயினும், ஆங்கு நின்று - அவ்விடத்தினின்று மேற் செல்லாது, பெயரும் கானம் சென்றோர் மன் என - மீளும் கானத்தின்கண் நம் தலைவர் சென்றோர் என்று கூறி, 20. இருக்கிற்போர்க்கு - ஆற்றியிருக்க வல்லார்க்கு, 3. வருவீர் ஆகுதல் உரைமின் - நீர் விரைவில் வந்துவிடு வீராதலைக் கூறுமின். (முடிபு) இழை நெகிழ்ந்து தோள் சாஅய் கண் கலுழச் செல்வீர்! இதலின் பேடை வேட்டு விளி வெரீஇ சேவற் பயிரும் ஆங்கண், பல்லி நடுகற் பொருந்தி சிறிய தெற்றுவதாயின் உயர்ந்தோராயினும் பெயரும் கானம் சென்றோர்மன் எனக் கூறி, பூந்துகில் இமைக்கும் அல்குல் அவ்வரி சிதைய நோக்கி இருக்கிற் போர்க்கு, வருவீராகுதல் உரைமின். (வி-ரை) வரி - ஆடையின் மறு. கொன்ற கறை சேர் - போக்குதலால் கறை பொருந்திய. பசை - கஞ்சிப் பசை; `பசை கொல் மெல்விரற் பெருந்தோட் புலைத்தி'1 என முன்வந்தமை காண்க. வில் வில்லையுடைய தானைக்கு ஆகு பெயர். மறவர் - கரந்தை மறவர். தெற்றுவது - கொட்டுவது என்றலுமாம். விரைந்து வருவேனென்று கூறிப் பிரியலுற்ற தலைமகற்கு, `கானஞ் சென்றோர் எனக் கூறி அவ் வரி சிதைய நோக்கி, ஆற்றியிருப் போர்க்கு, நீர் மீண்டு வருவீராதலை உரைமின்' எனத் தோழி கூறிச் செலவழுங்குவித்தாள் என்க. ஆற்றியிரேன் என்பது குறிப்பு. தலைவிக்கும் தனக்கும் வேறுபாடு இன்மையின் இங்ஙனம் கூறினாள். `செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின், வல்வரவு வாழ் வார்க் குரை'2 என்பதும் அதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையும் காண்க. 388. குறிஞ்சி (இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. தோழி தலைமகட்குச் சொல்லியதுமாம்.) அம்ம வாழி தோழி நம்மலை அமையறுத் தியற்றிய வெவ்வாய்த் தட்டையின் நறுவிரை ஆரம் அறவெறிந் துழுத 3உளைக்குரற் சிறுதினை கவர்தலிற் கிளையமல் 5. பெருவரை யடுக்கத்துக் குரீஇ ஓப்பி ஓங்கிருஞ் சிலம்பின் ஒள்ளிணர் நறுவீ வேங்கையங் கவட்டிடை நிவந்த இதணத்துப் பொன்மருள் நறுந்தா தூதும் தும்பி இன்னிசை ஓரா இருந்தனம் ஆக 10. மையீர் ஒதி மடநல் லீரே நொவ்வியற் பகழி பாய்ந்தெனப் புண்கூர்ந்து 4எவ்வமொடு வந்த உயர்மருப் பொருத்தல்நும் புனத்துழிப் போக லுறுமோ மற்றெனச் சினவுக்கொள் ஞமலி செயிர்த்துப்புடை யாடச் 15. சொல்லிக் கழிந்த வல்விற் காளை சாந்தார் அகலமும் தகையும் மிகநயந்து ஈங்குநாம் உழக்கும் எவ்வம் உணராள் நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறியென அன்னை தந்த முதுவாய் வேலன் 20. எம்மிறை அணங்கலின் வந்தன்று இந்நோய் தணிமருந் தறிவல் என்னு மாயின் வினவின் எவனோ மற்றே கனல்சின மையல் வேழம் மெய்யுளம் போக ஊட்டி யன்ன ஊன்புரள் அம்பொடு 25. காட்டுமான் அடிவழி 1ஒற்றி வேட்டஞ் செல்லுமோ நும்மிறை எனவே. - ஊட்டியார். (சொ-ள்) 1. தோழி-, வாழி-, அம்ம - யான் கூறுவதனைக் கேட்பாயாக. 1-9. நம் மலை அமை அறுத்து இயற்றிய வெவ்வாய் தட்டையின் - நமது மலையின் மூங்கிலை அறுத்துச் செய்த வெவ்விய ஓசை பொருந்திய தட்டையால், நறு விரை ஆரம் அற எறிந்து உழுத உளை குரல் சிறு தினை கவர்தலின் - நறிய மணம் கொண்ட சந்தன மரத்தை முழுவதும் வெட்டி உழுது விதைத்த தினையின் துய்யையுடைய சிறு கதிர்களைக் கவர்தலால், கிளை அமல் பெருவரை அடுக்கத்து குரீஇ ஓப்பி - மூங்கில்கள் நெருங்கிய பெரிய மலைச் சாரலின் கண்ணே கிளிகளை ஓட்டி, ஓங்கு இரு சிலம்பின் ஒள் இணர் நறு வீ வேங்கை அம் கவட்டு இடை நிவந்த இதணத்து - ஓங்கிய பெரிய மலையில் ஒளி பொருந்திய கொத்துக்களில் நறிய மலர்களைக் கொண்ட வேங்கை மரத்தின் அழகிய கவையிடத்தே உயரக் கட்டிய பரணில், பொன் மருள் நறு தாது ஊதும் தும்பி - பொன்னை யொத்த நறிய பூம் பொடியினை ஊதும் வண்டின், இன் இசை ஓரா இருந்தனமாக- இனிய இசையைச் செவியுற்று இருந்தேமாக, 10-15. மை ஈர் ஓதி மட நல்லீரே - கரிய நீண்ட கூந்தலையுடைய மடப்பம் வாய்ந்த மங்கையரே, நொவ்வு இயல் பகழி பாய்ந்தென - விரையும் இயலுடைய அம்பு பாய்ந்ததாக, புண் கூர்ந்து - புண்மிக்கு, எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் - துன்பத்துடன் வந்த உயர்ந்த கோட்டினையுடைய களிறு, நும் புனத்துழிப் போகல் உறுமோ - உங்கள் புனத்தின்கண் போதலுற்றதோ, என - என்று, சினவு கொள் ஞமலி செயிர்த்துப் புடையாட - கோபித்தலைக் கொண்ட நாய் கறுவித் தன் பக்கலிலே தொடர, சொல்லி கழிந்த வல் வில் காளை - வினவிச் சென்ற வலிய வில்லையுடைய காளையாய தலைவனது, 16-17. சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து - சாந்தம் பொருந்திய மார்பினையும் அழகினையும் மிக விரும்பி, ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள் - இங்கே நாம் வருந்தும் துன்பினை உணராளாய், 18-19. அன்னை நன்னர் நெஞ்சமொடு மயங்கி - நம் அன்னை நன்றாகிய தன் நெஞ்சத்தில் பிறழ உணர்ந்து, வெறி என தந்த முதுவாய் வேலன் - வெறியாடல் வேண்டுமென அழைத்து வந்த முதுமை வாய்ந்த வேலன், 20-21. எம் இறை அணங்கலின் இ நோய் வந்தன்று - எம் இறைவனான முருகவேள் வருத்தலின் இந்த நோய் வந்துளது, தணி மருந்து அறிவல் என்னும் ஆயின் - இதனைத் தணிவிக்கும் மருந்தினை யான் அறிவேன் என்று கூறுவானாயின், 22-26. நும் இறை - நுமது இறைவனாய முருகவேள், கனல் சின மையல் வேழம் மெய் உளம் போக - கொதிக்கும் சினமும் மத மயக்கமுடைய களிற்றின் உடலினுள் உருவிச் செல்ல, ஊட்டி அன்ன ஊன் புரள் அம்பொடு - செந்நிறம் பூசினாற்போன்ற ஊன் பொருந்திய அம்பினுடன், காட்டு மான் அடி வழி ஒற்றி - காட்டின் விலங்குகள் சென்ற அடிச்சுவட்டினைத் தொடர்ந்து, வேட்டம் செல்லுமோ எனவே - வேட்டையாடற்குச் செல்லுதலும் உண்டோ என்று, வினவின் எவனோ - நாம் வினவின் என்னையோ? (முடிபு) தோழி! வாழி! அம்ம! நம் மலை, சிறு தினை கவர்தலின், பெரு வரை யடுக்கத்து குரீஇ ஓப்பி, இதணத்துத் தும்பி இன்னிசை ஓரா இருந்தனமாக, மட நல்லீரே! எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் புனத்து வழிப் போகலுறுமோ எனச் சொல்லிக் கழிந்த காளை அகலமும் தகையும் நயந்து ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள், அன்னை மயங்கி வெறி எனத் தந்த வேலன் `எம்மிறை அணங்கலின் வந்தன்று இந்நோய், தணி மருந்தறிவல்' என்னுமாயின், நும் இறை வேழம் மெய்யுளம் போக அம்பொடு காட்டு மான் அடி வழி ஒற்றி வேட்டம் செல்லுமோ எனவே வினவின் எவனோ. (வி-ரை) தட்டையின் ஓப்பி என்று இயையும். உழுதல் குரலாகிய காரியத்திற்கு வழி வழிக் காரணம். உழுத குரல் - `பகடு நடந்தகூழ்'1 என்பதுபோல நின்றது. நயந்து உழக்கும் எவ்வம் - நயத்தலால் வருந்தும் துன்பத்தை. நன்னர் நெஞ்சம் - அன்புடைய நெஞ்சம். இந்நோய் வந்தன்று எனவும் இந் நோய் தணி மருந்து எனவும் ஈரிடத்தும் கூட்டுக. மெய் உளம் - மெய்யின் உள்ளிடம். ஊட்டி அன்ன என்பதற்கு, `ஊட்டி யன்ன ஒண்டளிர்ச் செயலை’2 என்புழி உரைத்ததனை நோக்குக. அன்னை நம் எவ்வத்தின் காரணத்தை உணராளாய் வேலனை அழைக்க, அவன் இது தெய்வத்தால் வந்தது, தணி மருந்து அறிவேன் என்பனாயின் என்ற தன் கருத்து, இனி அன்னையால் இற் செறிக்கப்படுவேம் ஆகலின், இனித் தலைவனைக் களவிற்கூடுதல் இயலாதென்பதனைத் தலைவனுக்கு உணர்த்து தலாகும். தலைவன் உணர்ந்து விரைந்து வரைந்து கொள்வானாவது இதன் பயன். 389. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்குந் தோழிக்குச் சொல்லியது.) அறியாய் வாழி தோழி நெறிகுரல் சாந்தார் கூந்தல் உளரிப் போதணிந்து தேங்கமழ் திருநுதல் திலகம் தைஇயும் பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி வேறுபட 5. நல்லிள வனமுலை அல்லியொ டப்பியும் பெருந்தோள் தொய்யில் வரித்தும் சிறுபரட்டு அஞ்செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும் எற்புறந் தந்து நிற்பா ராட்டிப் பல்பூஞ் சேக்கையிற் பகலும் நீங்கார் 10. மனைவயின் இருப்பவர் மன்னே துனைதந்து இரப்போர் ஏந்துகை நிறையப் புரப்போர் புலம்பில் உள்ளமொடு புதுவதந் துவக்கும் அரும்பொருள் வேட்டம் எண்ணிக் கறுத்தோர் சிறுபுன் கிளவிச் செல்லல் பாழ்பட 15. நல்லிசை தம்வயின் நிறுமார் வல்வேல் வான வரம்பன் நன்னாட் டும்பர் வேனில் நீடிய வெங்கடற் றடைமுதல் ஆறுசெல் வம்பலர் வேறுபிரிந் தலறக் கொலைவெம் மையின் நிலைபெயர்ந் துறையும் 20. பெருங்களிறு தொலைச்சிய இருங்கேழ் ஏற்றை செம்புல மருங்கிற் றன்கால் வாங்கி வலம்படு வென்றியொடு சிலம்பகஞ் சிலம்பப் படுமழை உருமின் முழங்கும் நெடுமர மருங்கின் மலையிறந் தோரே. - நக்கீரனார். (சொ-ள்) 1. தோழி-, வாழி-, அறியாய் - நீ அறியாது கூறுகின்றனை, 1-10. நெறி குரல் சாந்து ஆர் கூந்தல் உளரி - நெறிந்த கொத்தாக வுள்ள மயிர்ச்சாந்தணிந்த கூந்தலை ஆற்றி, போது அணிந்து - மலரை அணிந்தும், தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும் - இனிமையுற மணக்கின்ற அழகிய நெற்றியில் பொட்டு அணிந்தும், பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறுபட அல்லியோடு நல் இள வனமுலை அப்பியும் - பல இதழ்களையுடைய புதிய மலர்களைக் கிள்ளி அவ்விதழ் களுடன் நிறம் வேறுபட அவ்வவற்றின் பொடிகளையும் நல்ல இளைய அழகிய முலைகளில் அப்பியும், பெரு தோள் தொய்யில் வரித்தும் - பெரிய தோளில் தொய்யில் எழுதியும், சிறு பரட்டு அம் செம் சிறு அடி பஞ்சி ஊட்டியும் - சிறிய பரட்டினையுடைய அழகிய சிவந்த சிறிய அடியில் செம்பஞ்சுக் குழம்பினைத் தடவியும், என் புறந்தந்து - இவ்வாறெல்லாம் என்னைப் பாதுகாத்தும், நின் பாராட்டி - நின்னைப் பாராட்டிப் பேசியும், பல் பூ சேக்கையில் பகலும் நீங்கார் - பலவாய மலர்களைப் பரப்பிய பள்ளியில் பகற் போழ்தும் நீங்காராகி, மனைவயின் இருப்பவர் - நம் மனைக்கண்ணே தங்கி யிருப்பவராய நம் தலைவர், 10-15. இரப்போர் ஏந்து கை நிறைய - இரப்பவர்களது ஏந்தும் கை நிறைந்திட, புரப்போர் - அவரைப் புரக்கின்ற ஈகையாளர்கள், புலம்பு இல் உள்ளமொடு - வருத்தம் இல்லாத உள்ளத்துடன், துனை தந்து - விரைந்து வந்து, புதுவ தந்து உவக்கும் - புதிய பொருள்களைத் தந்து மகிழுவதற்குரிய, அரும் பொருள் வேட்டம் எண்ணி - அரிய பொருளை ஈட்டிவரலை விரும்பி, கறுத்தோர் - பகைவரது, சிறு புன் கிளவி செல்லல் - சிறிய புல்லிய இழி சொல்லாகிய துன்பம், பாழ்பட - அழியவும், தம் வயின் நல் இசை நிறுமார் - தம்பால் நல்ல புகழினை நிறுத்தவும், 15-24. வல் வேல் வான வரம்பன் நல் நாட்டு உம்பர் - வலிய வேலினையுடைய வானவரம்பனது நல்ல நாட்டின் அப்பாலுள்ள, வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல் - வெப்பம் மிக்க கொடிய காட்டினை அடைந்த இடத்தே, ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற - வழிச் செல்வோராய புதியர் வேறு வேறாகப் பிரிந்து போய் அலற, கொலை வெம்மையின் நிலைபெயர்ந்து உறையும் - கொல்லும் கொடுமை நோக்கித் தன் நிலையை விட்டு வேறிடத்துத் தங்கிய, பெரு களிறு தொலைச்சிய - பெரிய களிற்றினைக் கொன்ற, இரு கேழ் ஏற்றை - பெரிய நிறம் பொருந்திய ஆண் புலி, செம்புல மருங்கில் - குருதியாற் சிவந்த நிலத்திடத்தே, தன் கால் வாங்கி - தன் காலை வளைத்துத் தாவி, வலம் படு வென்றியொடு - வலத்தே வீழ்த்திய வெற்றியால், சிலம்பு அகம் சிலம்ப - வெற்பினிடம் எதிர் ஒலி செய்ய, படு மழை உருமின் முழங்கும் - பொருந்திய மேகத்தினிடத்தே இடிபோல முழங்கும், நெடு மர மருங்கின் மலை இறந்தோரே - நெடிய மரங்களையுடைய மலை வழிகளைக் கடந்து சென்றனரே. (முடிபு) தோழி! வாழி! அறியாய். எற் புறந்தந்து நிற் பாராட்டி பகலும் நீங்கார் மனைவயின் இருப்பவர், கறுத்தோர் கிளவிச் செல்லல் பாழ்பட, தம்வயின் நல்லிசை நிறுமார், இரப்போர் ஏந்துகை நிறையத் தந்துவக்கும் பொருள் வேட்டம் எண்ணி, வானவரம்பன் நன்னாட்டு உம்பர், வெங் கடற்று அடை முதல் களிறு தொலைச்சிய இருங்கேழ் ஏற்றை சிலம்பகம் சிலம்ப உருமின் முழங்கும் மலை இறந்தோர். (வி-ரை) அணிந்து, அணிந்தும் என உம்மை விரிக்க. `எற் புறந்தந்த' என்று பாடமிருப்பின், இவ்வாறெல்லாம் என்னை ஒப்பித்துப் பாதுகாத்த - நின்னை என்றுரைக்க. நின் என்றது தோழியை. புதுவ - தாம் தேடிய புதிய பொருள்கள். புரப்போர் துனைதந்து உவக்கும் எனக் கூட்டுக. தந்து உவக்கும் - பொருளை ஈந்து அதனைப் பெற்றவர் உவப்பது கண்டு உவக்கும் என்க. உவக்கும் அரும் பொருள் - உவத்தற்கு ஏதுவாகிய அரும் பொருள். பகைவர் பொருளின்மைபற்றி இகழ்ந்துரைக்கும் சொல்லைத் தலைமக்கள் பொறார் என்பதை, `கறுத்தோர், எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி'1 என முன்னரும் போந்துளது. வான வரம்பன் - சேரனுக்கு உரியதோர் பெயர் : வானுலகுகாறும் தன் ஆணை செல நின்றவன் என்னும் பொருளதாகும். `வானவரம்பனை நீயோ பெரும'2 `வான வரம்பனெனப் பேரினிது விளக்கி'3 என்பன காண்க. இவ்வாறெல்லாம் என்னைப் புறந்தந்தும் நின்னைப் பாராட்டியும் பகலினும் சேக்கையில் அகலாதிருந்த தலைவர், இப்பொழுது நாம் தனித்திருக்க நம்மைப் பிரிந்து ஏதமிக்க கொடிய காட்டு நெறியிற் சென்றுளாராகலின் யான் ஆற்றியிருப்பது எங்ஙனம் எனத் தன்னை ஆற்றியிருக்குமாறு வற்புறுத்திய தோழிக்குத் தலைவி கூறினாளென்க. 390. நெய்தல் (தலைமகன் பாங்கற்குச் சொல்லியது; நெஞ்சிற்குச் சொல்லியதூஉமாம்.) உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றி 4அதர்படு பூழிய சேட்புலம் படரும் ததர்கோல் உமணர் போகும் நெடுநெறிக் கணநிரை 1வாழ்க்கைதான் நன்று கொல்லோ 5. வணர்சுரி முச்சி முழுதுமற் புரள ஐதகல் அல்குல் கவின்பெறப் புனைந்த பல்குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீ ரோவெனச் 2சேரிதொறும் நுவலும் 10. அவ்வாங் குந்தி அமைத்தோ ளாய்நின் மெய்வாழ் உப்பின் விலையெய் யாமெனச் சிறிய விலங்கின மாகப் பெரியதன் அரிவேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி யாரீ ரோவெம் விலங்கி யீஇரென 15. மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற சின்னிரை வால்வளைப் பொலிந்த 3பன்மாண் பேதைக் கொழிந்தென் நெஞ்சே. - அம்மூவனார். (சொ-ள்) பாங்க! 1-4. உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி- உவர்நிலத்தே விளைந்த உப்பினது விலையைக் கூறி, அதர்படு பூழிய- நெறிகளிற் படும் புழுதியை யுடைய, சேண் புலம் படரும் - நெடிய சேய்மைக்கண் செல்லும், ததர் கோல் உமணர் போகும் - செறிந்த கோல்களைக் கொண்டு செல்லும் உப்புவாணிகர் போவதாகிய, நெடு நெறி - நீண்ட நெறிகளில், கண நிரை வாழ்க்கை - அக் கூட்டத்துடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை, நன்று கொல் - சிறந்தது போலும்; 5-12. வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள - வளைந்து சுரிந்த கூந்தலின் முடி முழுவதும் பெரிதும் அலையக் கொண்டு, ஐது அகல் அல்குல் கவின் பெற புனைந்த பல் குழை தொடலை - மெல்லிய அகன்ற அல்குல் அழகுபெறத் தரித்த பல தளிருடன் கூடிய தழையுடை, ஒல்குவயின் ஒல்கி - அசையுமிடத்து அசைந்து நடந்து, ஊரீர் - ஊரவரே, நெல்லும் உப்பும் நேரே - நெல்லும் உப்பும் விலை ஒப்பாகும், கொள்ளீரோ என - கொள்வீராக என்று, சேரி தொறும் நுவலும் - சேரிகடோறும் கூறி விற்கும், அ வாங்கு உந்தி அமை தோளாய் - அழகிய வளைந்த உந்தியினையும் மூங்கில் போன்ற தோளினையு முடையாய்! நின் மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் என - நினது உடலின்கண் உளதாம் இன்பத்திற்கு விலையினை அறிந்திலமே என்று யாம் கூறி, சிறிய விலங்கினம் ஆக - சிறிது தடைப்படுத்தினே மாக; 12-17. தன் பெரிய அரி வேய் உண் கண் அமர்த்தனள் நோக்கி - தனது பெரிய அரிபடர்ந்த மையுண்ட கண்ணினால் மாறுபட்டனள் போல நோக்கி, எம் விலங்கியீர் ஆரீரோ என - எம்மைத் தடுப்பீர் நீவிர் யாவிரோ என்று கூறி, மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற - இளநகை யுடையாளாய்ச் சிறிது பெயர்ந்து நின்ற, சில் நிரை வால் வளை பொலிந்த - சிலவாய நிரைந்த வெள்ளிய வளைகளாற் பொலிவுற்ற, பல் மாண் பேதைக்கு - பல மாண்புமுடைய பேதையின் பொருட்டு, என் நெஞ்சு ஒழிந்தது - என் நெஞ்சம் தன் வலியினை இழந்துவிட்டது. (முடிபு) பாங்க! உப்பின் கொள்ளை சாற்றிச் சேட்புலம் படரும் உமணர் போகும் நெடு நெறி, கண நிரை வாழ்க்கைதான் நன்றுகொல்! நெல்லும் உப்பும் நேரே, ஊரீர்! கொள்ளீரோ என நுவலும் அமைத் தோளாய்! நின் மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் எனச் சிறிய விலங்கினமாக, யாரீரோ எம் விலங்கியீரென, முறுவலள் பேர்வனள் நின்ற பேதைக்கு என் நெஞ்சு ஒழிந்தது. (வி-ரை) உவர் - களர் நிலம். உப்பின் கொள்ளை சாற்றிச் சேட் புலம் படரும் உமணர் என்க. அன்றி, உமணர்போகும் நெடு நெறிக் கண் உப்பின் கொள்ளை சாற்றிச் சேட் புலம் படரும் கண நிரை வாழ்க்கை என்று இயைத்துரைத்தலுமாம். முச்சி புரள தொடலை ஒல்குவயின் ஒல்கி எனக் கூட்டுக. ஒல்கி - அசைந்து நடந்து. நேர் - சமம். கொள்ளீரோ என - நெல்லைத் தந்து உப்பைக் கொள்வீர் என்று. மெய் வாழ் உப்பு - உடம்பிற் பொருந்தும் இன்பம்; `ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக் - கூடலிற் றோன்றிய உப்பு'1 என்புழி, உப்பு இப் பொருட்டாதல் காண்க. இச் செய்யுள் தலை மகன் பாங்கற்கு உற்றது உரைத்தலாகும்; தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது எனக் கொள்ளின், நெஞ்சே! பேதைக்கு ஒழிந்தது என்? எனக் கூட்டியுரைக்க. 391. பாலை (பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) பார்வல் வெருகின் கூரெயிற் றன்ன வரிமென் முகைய நுண்கொடி யதிரல் 2மல்ககல் வட்டியர் கொள்விடம் பெறாஅர் விலைஞ ரொழித்த தலைவேய் கான்மலர் 5. தேம்பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கித் தண்ணறுங் கதுப்பிற் புணர்ந்தோர் புனைந்தவென் 3பொதிமாண் முச்சி காண்டொறும் பண்டைப் பழவணி யுள்ளப் படுமால் தோழி இன்றொடு சின்னாள் வரினுஞ் சென்றுநனி 10. படாஅ வாகுமெங் கண்ணே கடாஅ வான்மருப் பசைத்தல் செல்லாது யானைதன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை குன்றுபுகு பாம்பிற் றோன்றும் என்றூழ் வைப்பிற் சுரனிறந் தோரோ. - 1காவன் முல்லைப் பூதனார். (சொ-ள்) 8. தோழி-, 1-6. பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன - தன் இரையினைப் பார்த்திருக்கும் காட்டுப் பூனையின் கூரிய பற்களை யொத்த, வரிமெல் முகைய நுண் கொடி அதிரல் - மெல்லிய வரிகளையுடைய அரும்புகளுடன் கூடிய நுண்ணிய கொடியாகிய காட்டு மல்லிகையின் பூக்கள், மல்கு அகல் வட்டியர் விலைஞர் - நிறைந்த அகன்ற வட்டியை யுடையோராகிய பூ விற்போர், கொள்வு இடம் பெறாஅர் ஒழித்த - கொள்ளும் இடம் பெறாராய் விஞ்சியவற்றை ஒழித்துக் கொணர்ந்த, தலை வேய் கான் மலர் - தலையிற் சூடிய மணமுடைய மலர்களை, தேம் பாய் முல்லையொடு - தேன்பாயும் முல்லைப் பூக்களொடு, ஞாங்கர் போக்கி - புறத்தே அகற்றி, தண் நறு கதுப்பில் புணர்ந்தோர் - எனது தண்ணிய நறிய கூந்தலிடத்தே துயின்ற தலைவர், 10-14. கடாஅ யானை - மதக் களிறானது, வான் மருப்பு அசைத்தல் செல்லாது - மண்ணில் ஊன்றிய வெள்ளிய கொம்பினை அசைத்துப் பெயர்க்க இயலாது, தன் வாய் நிறை கொண்ட வலி தேம்பு தட கை - தன் வாயில் நிறையுமாறு புகுத்திய வலி குன்றிய பெரிய கை, குன்று புகு பாம்பில் தோன்றும் - மலை முழைஞ்சினுள் நுழையும் பாம்பு போலத் தோன்றும், என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோர் - வெப்பம் மிக்க இடங்களையுடைய காட்டைக் கடந்து சென்றார், 6-8. புனைந்த என் பொதி மாண் முச்சி காண்தொறும் - அவர் (பண்டு) புனைந்த எனது நிறைந்த மாண்புள்ள கூந்தல் முடியைக் காணுந்தோறும், பண்டைப் பழ அணி உள்ளப்படும் - முன்புள்ள எனது பழைய அழகு நினைக்கப்படுகின்றது, 9-10. சென்று இன்றொடு சின்னாள் வரினும் - அவர் சென்ற பின் இன்றொடு சில நாட்களே வந்தன ஆயினும், எம் கண் நனி படாஅ ஆகும் - எம் கண்கள் மிகவும் துயிலாதனவாகும். (முடிபு) தோழி! தலை வேய் கான் மலர் முல்லையொடு போக்கிக் கதுப்பிற் புணர்ந்தோர் சுரம் இறந்தோர். அவர் புனைந்த என் முச்சி காண்டொறும் பண்டைப் பழ அணி உள்ளப்படும். சென்று சின்னாள் வரினும் எம் கண் படாஅ ஆகும். (வி-ரை) வட்டி - மலர் பெய்யும் செப்பு. வட்டியர் ஒழிந்த கான் மலர் - வட்டியராய் மிகுந்தவற்றை ஒழித்துக் கொணர்ந்த கான் மலர் என்க. எனவே வட்டியிலுள்ள கான் மலர் என்பது பெற்றாம். தலை வேய் என்பதனை முல்லையொடுங் கூட்டித் தலையிற் சூடிய அதிரற் பூவையும் முல்லைப் பூவையும் அகற்றி எனக் கொள்க. புனைந்த என்பது புணர்ச்சியின் பின்னர்ப் புதிது புனைந்த என்க. சின்னாள் வரினும் - சில நாளே ஆயினும் என்றபடி. கடாஅ யானை எனக் கூட்டுக. மருப்பு அசைத்தல் செல்லாது என்றது, சுரத்தின் வெம்மை மிகுதியால் வலி தேம்பிக் கோடு நிலத்திற் பதியுமாறு கவிழ்ந்த யானை தன் கொம்பினை அசைக்கலாற்றாது என்க. குன்று - மலையின் குகை. ஆற்றியிருக்கவேண்டு மென வற்புறுத்திய தோழிக்கு, தலைவர் சுரம் இறந்தார் ஆகலின், அவர் புனைந்த முச்சி காண்டொறும் பழ அணி உள்ளப்படும், எம் கண் படாஅ ஆகும், யான் எங்ஙனம் ஆற்றுவேன் எனத் தலைவி கூறினாள் என்க. 392. குறிஞ்சி (பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது.) தாழ்பெருந் தடக்கை 1தலைஇய கானத்து வீழ்பிடி கெடுத்த வெண்கோட்டு யானை உண்குளகு மறுத்த உயக்கத் தன்ன பண்புடை யாக்கைச் சிதைவுநன்கு அறீஇப் 5. பின்னிலை முனியான் ஆகி நன்றுந் தாதுசெய் பாவை அன்ன தையல் மாதர் மெல்லியல் மடநல் லோள்வயின் தீதின் றாக நீபுணை புகுகென என்னுந் தண்டு மாயின் மற்றவன் 10. அழிதகப் பெயர்தல் நனியின் னாதே ஒல்லினி வாழி தோழி கல்லெனக் கணமழை பொழிந்த கான்மடி யிரவில் தினைமேய் யானை இனனிரிந் தோடக் கல்லுயர் கழுதிற் சேணோன் எறிந்த 15. வல்வாய்க் கவணின் கடுவெடி ஒல்லென மறப்புலி உரற வாரணம் கதற நனவுறு கட்சியின் நன்மயில் ஆல மலையுடன் வெரூஉம் மாக்கல் வெற்பன் பிரியுநன் ஆகலோ அரிதே அதாஅன்று 20. உரிதல் பண்பிற் பிரியுநன் ஆயின் வினைதவப் பெயர்ந்த வென்வேல் வேந்தன் முனைகொல் தானையொடு முன்வந் திறுப்பத் தன்வரம் பாகிய மன்னெயில் இருக்கை 1ஆற்றா மையிற் பிடித்த வேல்வலித் 25. தோற்றம் பிழையாத் தொல்புகழ் பெற்ற விழைதக ஓங்கிய கழைதுஞ்சு மருங்கிற் கானமர் நன்னன் போல யானா குவல்நின் நலன்தரு வேனே. - மோசிகீரனார். (சொ-ள்) 11. தோழி-, வாழி-, ஒல் இனி - இப்பொழுது யான் கூறவதனை மனம் பொருந்திக் கேட்பாயாக. 11-18. கல் என கணம் மழை பொழிந்த கான் மடி இரவில் - கல்லென்னும் ஒலியுடன் கூட்டமாகிய மேகங்கள் மழையைச் சொரிந்த கானமெல்லாம் அடங்கிய இரவில், தினை மேய் யானை இனன் இரிந்து ஓட - தினையை மேய்ந்த யானையின் கூட்டம் நிலை கெட்டு ஓட, கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த - மலையிடத்தே உயர்ந்த பரணிலிருந்து குறவன் வீசி யெறிந்த, வல் வாய் கவணின் கடு வெடி ஒல் என - வலிய விசை வாய்ந்த கவண் கல்லின் கடிய ஓசை ஒல்லென் றொலிக்க, மற புலி உரற - (அது கேட்டுத்) தறு கண்மை யுடைய புலி முழங்க, வாரணம் கதற - யானை கதற, நனவு உறு கட்சியின் நல் மயில் ஆல - அகற்சியுற்ற காட்டிலுள்ள அழகிய மயில் (இடியோசை யென) ஆட, மலை உடன் வெரூஉம் மா கல் வெற்பன் - மலை முழுவதும் அஞ்சும் பெரிய கற்களை யுடைய மலை பொருந்திய நாட்டையுடைய தலைவன், 1-5. கானத்து - காட்டில், வீழ் பிடி கெடுத்த - விரும்பப்படும் பெண் யானையை இழந்த, தாழ் பெரு தட கை தலைஇய - தொங்குகின்ற நீண்ட பெரிய கை பொருந்திய, வெண் கோட்டு யானை - வெள்ளிய கொம்பினையுடைய களிறு, உண் குளகு மறுத்த உயக்கத்து அன்ன - உண்ணும் தழையினை உண்ணாது நீக்கிய வாட்டத்தை ஒத்த, பண்பு உடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇ - அழகுடைய தனது யாக்கையின் மெலிவினை நன்கு அறிந்துவைத்தும், பின்னிலை முனியான் ஆகி - நம்பால் இரந்து பின்னிற்றலை வெறானாகி, 5-10. நன்றும் தாது செய் பாவை அன்ன தையல் - மிகவும் பொன்னாற் செய்த பாவை போன்ற கட்டழகினையும், மாதர் மெல்லியல் - விரும்பப்படும் மென்மைத் தன்மையினையும் உடைய, மட நல்லோள்வயின் - மடப்பம் வாய்ந்த தலைவியின்பால், தீது இன்று ஆக நீ புணை புகுக என - தீங்கு இல்லையாம்படி நீ புணையாகப் புகுவாயாக என்று கூறி, என்னும் தண்டுமாயின் - சிறிதேனும் நீங்குவானாயின், அவன் அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே - அவன் நாம் வருந்தும்படி பெயர்ந்து செல்லுதல் நமக்கு மிகவும் துன்பமாவதே யாகும், 19. பிரியுநன் ஆகலோ அரிது - (ஆனால்) அவன் நம்மைப் பிரிந்து செல்வானாதல் இல்லை. 19-20. அதாஅன்று - அஃதன்றியும், உரிது அல் பண்பில் பிரியுநன் ஆயின் - தனக்கு உரித்தல்லாத பண்பினால், ஒரோவழிப் பிரிவான் ஆயின், 21-28. வினை தவப் பெயர்ந்த வென்வேல் வேந்தன் - போர் ஒழிய நீங்கிய வென்றி வேலினையுடைய பகை யரசன், முனை கொல் தானையொடு முன்வந்து இறுப்ப - போரின்கண் கொல்லு தலையுடைய சேனையுடன் மீளவும் மதிற் புறத்தே வந்து தங்க, தன் வரம்பு ஆகிய மன்எயில் இருக்கை - தன்னைப் பற்றுக் கோடாகவுடைய நிலை பெற்ற மதிலையுடைய அரண், ஆற்றாமை யின் - அப்பகை வேந்தனை எதிர்த்து நிற்றல் ஆற்றாமையான், விழைதக ஓங்கிய மழை துஞ்சு மருங்கின் - கண்டார் விரும்புமாறு உயர்ந்த மூங்கில்கள் செறிந்த மலைப் பக்கத்ததாகிய, கான்அமர் - காட்டில் வதிந்திருந்த, பிடித்த வேல் வலித் தோற்றம் பிழையாத் தொல்புகழ் பெற்ற - கைக் கொண்ட வேலினையுடைய வலியமைந்த தனது தோற்றமானது பிழையாதவாறு (அவ் வேந்தனுடன் பொருது) தன் பழைய புகழை நிலை நிறுத்தியவனாகிய, நன்னன் போல - நன்னனைப் போல, யான் நின் நலம் தருவேன் ஆகுவல் - (அவனைச் சேர்த்து) யான் நினது நலத்தினை மீண்டும் கூட்டி வைப்பேன் ஆவேன். (முடிபு) தோழி! வாழி! மாக்கல் வெற்பன், யாக்கைச் சிதைவு நன்கு அறீஇ, பின்னிலை முனியான் ஆகி, `நல்லோள்வயின் தீதின்றாக நீ புணை புகு' கென என்னும் தண்டும் ஆயின், மற்று அவன் அழிதகப் பெயர்தல் நனி இன்னாது, இனி, ஒல் (அவன்) பிரியுநன் ஆகலோ அரிதே. அதாஅன்று பிரியுநன் ஆயின், நின் நலம் தருவேன் யான் ஆகுவல். யானை உயக்கத்தன்ன யாக்கை எனவும், நன்னன் போல நலந்தருவேன் எனவும் கூட்டுக. (வி-ரை) பிடியைக் கெடுத்தமையால், கோட்டிலே கையை வைத்த யானை யென்க. மறுத்த உயக்கம் - பெயரெச்சம், காரணப் பொருட்டு. பண்பு - ஈண்டு அழகின் மேற்று; இலக்கணத்தால் திருந்துதல் என்றுமாம். அறீஇ - அறிந்து வைத்தும் என்க. தாது - பொன். தீது இன்றாக - யான் பிரிதலாகிய தீங்கு நிகழாமைக்கு. புகுகென - புகுகெனக் கூறி என விரித்துரைக்க. என்னும் - சிறிதும். தண்டுதல் - நீங்குதல். ஒல்லுதல் - பொருந்துதல். சேணோன் - உயர்ந்த இடத்தில் இருப்பவன் - குறவன். வெடி - ஓசை. யானை இரிந்து ஓட எறியும் கவண் கல்லின் ஓசையாலும், புலியின் முழக்கத்தாலும், யானையின் கதறுதலாலும் மலை முழுதும் அஞ்சும் என்க. அவற்றை மேகத்தின் முழக்க மெனக்கொண்டு மயில் ஆலுமென்க. வெற்பன் புகுகெனக் கூறி நீங்குமாயின் அங்ஙனம் நீங்குதல் நனி இன்னாது, ஆயின் அவன் அவ்வாறு பிரிதல் அரிது. அஃதன்றி ஒரோவழிப் பிரியுநன் ஆயின், யான் அவனை நின்பாற் சேர்த்து நினது நலத்தை மீட்டுத் தருவேன் என்று தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறினாளென்க. வினைதவப் பெயர்ந்த என்றது, முன் போர் செய்து ஆற்றாது ஓடிய என்றபடி. விழை தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கிற் கானமர் நன்னன் என்றதனால், காட்சி விருப்பத்தால், நன்னன் ஒரு காட்டில் வதிந்தானாதல் வேண்டும். தொல் புகழ் பெற்ற நன்னன் எனவும் கானமர் நன்னன் எனவும் கூட்டுக. நன்னன் என்பானுக்கு உரிய அரணினை மாற்று வேந்தன் ஒருவன் முற்றிப் பொருது தோற்று ஓடியவன், பின் பெரிய தானையுடன் மீட்டும் வந்து தங்க, அரணிலுள்ளார் அவனுடன் பொருதற்கு ஆற்றாதிருக்க, காட்டி லிருந்த நன்னன் மீள வந்து தனது பழைய புகழ் நிலைபெறும்படி அப் பகைவனை வென்று அரணில் உள்ளாரைப் பாதுகாத்தனன். ஆகலின் அந் நன்னன்போல நின் நலம் தருவேன் என்றாள் என்க. 393. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.) கோடுயர் பிறங்கற் குன்றுபல நீந்தி வேறுபுலம் படர்ந்த வினைதரல் உள்ளத்து ஆறுசெல் வம்பலர் 1காய்பசி தீரிய 2இதைச்சுவற் கலித்த ஈரிலை நெடுந்தோட்டுக் 5. கவைக்கதிர் வரகின் கால்தொகு பொங்கழி கவட்டடிப் பொருத 3பல்சினை உதிர்வை அகன்கட் 4பாறைச் செவ்வயிற் றெறீஇ வரியணி பணைத்தோள் 5வார்செவித் தன்னையர் பண்ணை வெண்பழத் தரிசி ஏய்ப்பச் 10. சுழல்மரஞ் சொலித்த சுளகலை வெண்காழ் தொடிமாண் உலக்கை ஊழிற் போக்கி உரல்முகங் காட்டிய சுரைநிறை கொள்ளை ஆங்கண் இருஞ்சுனை நீரொடு முகவாக் களிபடு குழிசிக் கல்லடுப் பேற்றி 15. இணர்ததை கடுக்கை ஈண்டிய தாதிற் குடவர் புழுக்கிய பொங்கவிழ்ப் புன்கம் மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும் நிரைபல குழீஇய நெடுமொழிப் புல்லி தேன்றூங்கு உயர்வரை நன்னாட் டும்பர் 20. வேங்கடம் இறந்தன ராயினும் ஆண்டவர் நீடலர் வாழி தோழி தோடுகொள் உருகெழு மஞ்ஞை ஒலிசீர் ஏய்ப்பத் தகரம் மண்ணிய தண்ணறு முச்சிப் புகரில் குவளைப் போதொடு 1தெரியிதழ் 25. வேனில் அதிரல் வேய்ந்தநின் ஏமுறு புணர்ச்சி இன்துயில் மறந்தே. - மாமூலனார். (சொ-ள்) 21. தோழி-, வாழி-, (நம் தலைவர்,) 1-2. கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி - சிகரம் உயர்ந்த பாறைகளையுடைய மலைகள் பலவற்றைக் கடந்து, வேறு புலம் படர்ந்த வினைதரல் உள்ளத்து - வேற்று நாட்டை அடைந்த பொருள் தேடும் முயற்சியையுடைய உள்ளத்தால், 3-20. ஆறு செல் வம்பலர் - வழிச் செல்லும் புதியரது, காய் பசி தீரிய - மிக்க பசி ஒழிய, இதை சுவல் கலித்த - புதுக் கொல்லையில் தழைத்த, ஈர் இலை நெடு தோட்டு கவை கதிர்வரகின் கால் தொகு பொங்கழி - ஈரிய இலையின் நீண்ட இதழையுடைய வரகின் கவர்த்த கதிருடன் கூடிய தட்டைகளைத் தொகுத்த பொலியில், கவட்டு அடி பொருத பல்சினை உதிர்வை - மாடுகளின் கவர்த்த குளம்பால் துவைக்கப் பட்ட பல கிளைகளினின்று உதிர்ந்த வரகினை, அகன் கண் பாறை செவ்வயின் தெறீஇ - இடம் அகன்ற பாறையில் செவ்விய இடத்தில் குவித்து, வரி அணி பணை தோள் வார் செவி தன்னையர் - வரிகள் பொருந்திய பருத்த தோள்களையும் நீண்ட செவிகளையு முடைய தாயர், பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப - பண்ணைக் கீரையின் வெள்ளிய பழத்தின் அரிசியை ஒப்ப, சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் - திரிமரம் தேய்த்த சுளகினால் கொழிக்கப்பெற்ற வெள்ளிய அரிசியை, தொடி மாண் உலக்கை ஊழில் போக்கி - பூண் மாட்சிமைப்பட்ட உலக்கையால் முறையாகச் செலுத்தி, உரல் முகம் காட்டிய - உரலிற் பெய்து தீட்டிய, சுரை நிறை கொள்ளை - உரலின் குழி நிறைந்த அவ்வரிசியை, ஆங்கண் இரு சுனை நீரொடு முகவா - அங்குள்ள பெரிய சுனையின் நீரொடு முகந்து, களி படு குழிசி கல் அடுப்பு ஏற்றி - மண்ணாற் செய்த பானையில் கற்களை அடுக்கி யமைத்த அடுப்பில் ஏற்றி, இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதில் - கொத்துக்கள் நிறைந்த கொன்றையின் நிறைந்த பூந் தாது போல, குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம்- இடையர் ஆக்கிய விளங்குகின்ற அவிழாகிய சோற்றை, மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும் - மதர்த்த நல்ல பசுவின் பாலுடன் கூட்டி அளிக்கும் இடமாகிய, நிரை பல குழீஇய - பசு நிரைகளை மிகப் பெற்ற, நெடு மொழி புல்லி - மிக்க புகழுடைய புல்லி என்பானது, தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர் - தேனிறால் தொங்கும் உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாடுகட்கு அப்பாற் பட்ட, வேங்கடம் இறந்தனர் ஆயினும் - வேங்கட மலையைக் கடந்து சென்றுள்ளா ராயினும், 21-26. தோடுகொள் உருகெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப - அழகு பொருந்திய மயிலின் தொகுதி கொண்ட தழைத்த தோகையினை ஒப்ப, தகரம் மண்ணிய தண் நறு முச்சி - மயிர்ச் சாந்து பூசப் பெற்ற தண்ணிய நறிய கூந்தலில், புகர் இல் குவளைப் போதொடு தெரி இதழ் வேனில் அதிரல் வேய்ந்த - குற்றமில்லாத குவளைப் பூவுடன் விளங்கும் இதழ்களையுடைய வேனிலிற் பூக்கும் காட்டு மல்லிகைப் பூவினையும் சூடிய, நின் ஏம் உறு புணர்ச்சி இன் துயில் மறந்து - நினது இன்பம் வாய்ந்த கூட்டமாகிய இனிய துயிலினை மறந்து, 20-21. ஆண்டு அவர் நீடலர் - ஆங்கண் அவர் தாழ்த்திருப்பார் அல்லர். (முடிபு) தோழி! வாழி! நம் தலைவர், குன்று பல நீந்தி, வினை தரல் உள்ளத்தால், வேங்கடம் இறந்தனராயினும், நின் ஏமுறு புணர்ச்சி இன்துயில் மறந்து, ஆண்டு அவர் நீடலர். (வி-ரை) படர்ந்த வினைதரல் உள்ளம் - படர்ந்து பொருள் தருதலையுடைய ஆள்வினையுடைய உள்ளம் என்க. உள்ளத்தால் வேங்கடம் இறந்தனராயினும் எனக் கூட்டுக. உள்ளத்தையுடைய ஆறு செல் வம்பலர் என்றலுமாம். இதைச் சுவல் - காடு திருத்திய மேட்டு நிலமாகிய புதுக் கொல்லை. வரகின் கதிர்களைத் தட்டைகளொடு கொய்து குவித்து வைப்பராகலின், கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி எனப்பட்டது. கால் - தட்டை. பொங்கழி - தூற்றாப் பொலி. கவட்டு அடி - மாடுகளின் கால்களிலுள்ள கவர்த்த குளம்புகள். உதிர்வை - உதிர்ந்த தானிய மணி. தெறீஇ - குவித்து வைத்துக் கொண்டு, பண்ணை - ஒருவகைக் கீரை; அதன் பழம் வெள்ளொளி பொருந்திய கதிராக இருக்கும்; அதன் அரிசியை யொப்பச் சொலித்த வெண்காழ் என்க. சுழல் மரம் - திரி மரம், திரிகை. சொலித்தல் - தேய்த்தல். உலக்கை ஊழிற் போக்கி உரல் முகம் காட்டிய என்றது, உரலிற் பெய்து சிறிது தீட்டிய என்றபடி. சுரை - உரலின் குழி; குழிசியின் உள்ளிடம் என்றலுமாம். குடவர் - ஆயர். வம்பலர் பசி தீரிய தன்னையர் புன்கம் பாலொடு பகுக்கும் என்க. பாலொடு பகுக்கும் நன்னாடு எனவும், நிரை பல குழீஇய நன்னாடு எனவும், புல்லியின் நன்னாடு எனவும் கூட்டுக. நெடுமொழி - வஞ்சினமுமாம். நன்னாட்டும்பர் புல்லியின் வேங்கடம் எனக் கூட்டுதலுமாம். ஒலி சீர் ஏய்ப்ப - தழைத்த தோகையின் அழகினை யொப்ப என்க. 394. முல்லை (இரவுக்குறித் தலைமகளை இடத்துய்த்து வந்து தோழி தலைமகனை வரைவு கடாஅயது.) களவும் புளித்தன விளவும் பழுநின சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர் இதைப்புன வரகின் அவைப்புமாண் அரிசியொடு கார்வாய்த் தொழிந்த ஈர்வாய்ப் புற்றத்து 5. ஈயல்பெய் தட்ட இன்புளி வெஞ்சோறு சேதான் வெண்ணெய் வெம்புறத் துருக இளையர் அருந்தப் பின்றை நீயும் இடுமுள் வேலி முடக்காற் பந்தர்ப் புதுக்கலத் தன்ன செவ்வாய்ச் சிற்றில் 10. புனையிருங் கதுப்பினின் மனையோ ளயரப் பாலுடை அடிசில் தொடீஇய ஒருநாள் மாவண் தோன்றல் வந்தனை சென்மோ காடுறை இடையன் யாடுதலைப் பெயர்க்கும் மடிவிடு வீளை வெரீஇக் குறுமுயல் 15. மன்ற இரும்புதல் ஒளிக்கும் புன்புல வைப்பினெஞ் சிறுநல் லூரே. - நன்பலூர்ச் சிறுமேதாவியார். (சொ-ள்) 12. மாவண் தோன்றல் - மிக்க வண்மையுடைய தலைவனே! 13-16. காடு உறை இடையன் - காட்டில் தங்கும் இடையன், யாடுதலை பெயர்க்கும் - தன் யாட்டினங்களை ஒருவழிக் கூட்டும், மடி விடு வீளை - வாயை மடித்து எழுப்பும் சீழ்க்கை யொலியை, வெரீஇ - கேட்டு அஞ்சி, குறுமுயல் - குறுமுயலானது, மன்ற இரும்புதல் ஒளிக்கும் - மன்றத்தின்கண் ணுள்ள பெரிய புதரில் மறைந்து கொள்ளும், புன்புல வைப்பின் - முல்லை நிலத்து ஊராகிய, எம்சிறு நல் ஊர் எமது சிறிய நல்ல ஊரின்கண், 1. களவும் புளித்தன - களாவும் பழுத்துப் புளிப்புச் சுவையை எய்தின, விளவும் பழுநின - விளாவும் முதிர்ந்து பழுத்தன, 2-11. சிறு தலை துருவின் பழுப்பு உறு விளை தயிர் - சிறிய தலையினையுடைய செம்மறியாட்டினது பழுப்பு நிறம் வாய்ந்த முற்றிய தயிராகிய உலையில், இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு - புதுக் கொல்லையில் விளைந்த வரகினது குத்துதல் மாட்சிமைப்பட்ட அரிசியுடன், கார் வாய்த்து ஈர் வாய்ப் புற்றத்து ஒழிந்த - கார்மழை மிக்கமையால் நனைந்த வாயினையுடைய புற்றிலிருந்து வெளிப்பட் டொழிந்த, ஈயல் பெய்து அட்ட - ஈயலையும் இட்டுச் சமைத்த, இன் புளி வெம் சோறு - இனிய புளிப்பு வாய்ந்த விருப்பம் தரும் சோற்றினை, சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக - சிவந்த பசுவின் வெண்ணெய் வெப்பம் பொருந்திய அச் சோற்றின் மேலே கிடந்து உருக அதன் மேற் பெய்து, இளையர் அருந்த - நின் ஏவலர் முன்பு உண்ண, பின்றை - அதன் பின்பு, நீயும், இடுமுள் வேலி முட கால் பந்தர் - முள்ளிட்டுக் கட்டிய வேலியினகத்தே வளைந்த கால்களையுடைய பந்தரையுடையதும், புதுக்கலத்து அன்ன செவ்வாய் சிற்றில் - புதுக்கலம் போன்ற செம்மண் பூசியதுமாகிய சிறிய இல்லில், புனை இரும் கதுப்பின் நின் மனையோள் அயர - புனைந்த கரிய கூந்தலையுடைய நின் மனைவி விருந்தயர, பால் உடை அடிசில் தொடீஇய - பால் பெய்த உணவினை உண்ணுதற்கு, ஒரு நாள்-, 12. வந்தனை சென்மோ - வந்து செல்வாயாக, (முடிபு) மாவண் தோன்றல்! எம் சிறு நல்லூர், களவும் புளித்தன, விளவும் பழுநின. இன்புளி வெஞ்சோறு வெண்ணெய் புறத்துருக இளையர் அருந்த, பின்பு நீயும் செவ்வாய்ச் சிற்றில், மனையோள் அயர பாலுடை அடிசில் தொடீஇய ஒரு நாள் வந்தனை சென்மோ. (வி-ரை) புளித்தன - புளிச்சுவை எய்தப் பழுத்தன என்றபடி. களாப் பழங்கள் பழுத்தன, விளாம் பழங்கள் முதிர்ந்தன என்றதன் கருத்து, விருந்தயர்தற்கு வேண்டுவன யாவும் உள்ளன என்பதாகும். வெண்ணெய் உருகப் பெய்து என ஒரு சொல் வருவிக்க. செவ்வாய்ச் சிற்றில் என்றதனாலும், புனையிருங் கதுப்பின் நின் மனையோள் அயரப் பாலுடை அடிசில் என்றதனாலும் தலைவியை நீ வரைந்து கொண்டு விருந்துண்டற்கு வருக எனக் குறித்தவாறாயிற்று. 395. பாலை (பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தண்கயம் பயந்த வண்காற் குவளை மாரி மாமலர் பெயற்கேற் றன்ன நீரொடு நிறைந்த பேரமர் மழைக்கண் பனிவார் எவ்வம் தீர இனிவரின் 5. நன்றுமன் வாழி தோழி தெறுகதிர் ஈரம் நைத்த நீரறு நனந்தலை அழன்மேய்ந் துண்ட நிழன்மாய் இயவின் வறன்மரத் தன்ன கவைமருப் பெழிற்கலை அறலவிர்ந் தன்ன தேர்நசை யோடிப் 10. புலம்புவழிப் பட்ட உலமரல் 1உள்ளமொடு மேய்பிணைப் பயிரும் மெலிந்தழி படர்குரல் அருஞ்சுரஞ் செல்லுநர் ஆட்செத் தோர்க்குந் திருந்தரை ஞெமைய பெரும்புனக் குன்றத்து ஆடுகழை இருவெதிர் நரலுங் 15. கோடுகாய் கடற்ற காடிறந் தோரே. - எயினந்தை மகனார் இளங்கீரனார். (சொ-ள்) 5. தோழி-, வாழி-, 5-15. தெறு கதிர் ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை - ஒறுக்கும் ஞாயிற்றின் கதிர் ஈரத்தினைத் தொலைத்தமையான் நீர் அற்ற அகன்ற இடத்திலுள்ள, அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின் - தீ கவர்ந்து உண்டமையால் மரங்களின் நிழலும் ஒழிந்த நெறியில், வறல் மரத்தன்ன கவை மருப்பு எழில் கலை - வற்றிய மரக் கொம்பினை யொத்த கவர்த்த கொம்பினையுடைய அழகிய கலைமான், அறல் அவிர்ந்தன்ன தேர் நசை ஓடி -அறல் விளங்கினா லொத்த பேய்த் தேரினை நீரென விரும்பி யோடி, புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு - தனிமையுற்றமையாலான கலங்கிய உள்ளத்துடன், மேய் பிணை பயிரும் -மேயும் தன் பெண் மானை அழைக்கும், மெலிந்து அழி படர் குரல் - மெலிவுற்று ஒழியும் துன்பினைத் தரும் குரலை, அரும் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும் - அரிய காட்டினிற் செல்லுவோர் ஆளின் குரலென்று கருதி ஆராயும் இடமாகிய, திருந்து அரை ஞெமைய பெரும் புனக் குன்றத்து - செவ்விய அடி பொருந்திய ஞெமை மரங்களையுடைய பெரிய கொல்லைகளையுடைய குன்றில், ஆடு கழை இரு வெதிர் நரலும் - அசையும் தண்டினையுடைய பெரிய மூங்கில்கள் ஒலிக்கும், கோடு காய் கடற்ற காடு இறந்தோர் - சிமையம் வெம்பிய மலைப் பக்கத்திலுள்ளவாகிய காடுகளைக் கடந்து சென்ற நம் தலைவர், 1-5. தண்கயம் பயந்த வண் கால் குவளை - குளிர்ந்த குளத்திற் றோன்றிய வளவிய காம்பினையுடைய குவளையின், மாரி மா மலர் - மழைக்காலத்தே மலர்ந்த கரிய மலர், பெயற்கு ஏற்றன்ன - மழைக்கு எதிர்ப்பட்டா லொத்த, நீரொடு நிறைந்த பேர் அமர் மழை கண் - நீரால் நிறைந்த பெரிய அமர்த்த குளிர்ந்த கண்களினின்று, பனி வார் எவ்வம் தீர - நீர் ஒழுகும் துன்பம் ஒழிய, இனிவரின் நன்று - இப்பொழுது வருவாராயின் நன்றாகும், மன் - வந்திலரே, என் செய்வாம். (முடிபு) தோழி!வாழி! காடிறந்தோர், மழைக்கண் எவ்வம் தீர இனிவரின் நன்று; மன். (வி-ரை) நைத்த - அழித்த `வேலே .... நாடு நைத்தலின்'1 என்புழி நைத்தல் இப் பொருட்டாதல் காண்க. அழல் மேய்ந்து உண்ட - `உண்டற் குரிய வல்லாப் பொருளை, உண்டன போலக் கூறலு மரபே'2 என்பதன்கண் அடங்கும். அறல் - அறல்பட ஒழுகும் சிறிய நீர். நீரறு நனந்தலை இயவின் கலை ஓடி உள்ளமொடு பிணைப் பயிர் குரல் என்க. குரலைச் சுரம் செல்லுநர் ஓர்க்கும் காடு எனவும், குன்றத்து வெதிர் நரலும் கடற்ற காடு எனவும் கூட்டுக. 396. மருதம் (காதற் பரத்தை தலைமகற்குச் சொல்லியது.) தொடுத்தென் மகிழ்ந செல்லல் கொடித்தேர்ப் பொலம்பூண் நன்னன் 3 புனனாடு கடிந்தென யாழிசை மறுகிற் பாழி ஆங்கண் அஞ்சல் என்ற ஆஅய் எயினன் 5. இகலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித் தன்னுயிர் 4கொடுத்தனன் சொல்லிய தமையாது தெறலருங் கடவுள் முன்னர்த் 5தேற்றி மெல்லிறை முன்கை பற்றிய சொல்லிறந்து ஆர்வ நெஞ்சந் தலைத்தலை சிறப்பநின் 10. மார்புதரு கல்லாய் பிறனா யினையே இனியான் விடுக்குவென் அல்லேன் மந்தி பனிவார் கண்ணள் பலபுலந் துறையக் கடுந்திறல் அத்தி ஆடணி நசைஇ நெடுநீர்க் காவிரி கொண்டொளித் தாங்குநின் 15. மனையோள் வவ்வலும் அஞ்சுவல் சினைஇ ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்குவிற் பொறித்து வெஞ்சின வேந்தரைப் 1பிணித்தோன் வஞ்சி அன்னவென் நலந்தந்து சென்மே. - பரணர். (சொ-ள்) 1. மகிழ்ந - தலைவனே! தொடுத்தென் - நின்னை யான் பற்றிக் கொண்டேன், செல்லல் - செல்லாதே; 1-6. கொடி தேர் பொலம் பூண் நன்னன் - கொடியணிந்த தேரினையும் பொன்னாலாய பூண்களையுமுடைய நன்னன் என்பான், புன்னாடு கடிந்தென - புன்னாடென்னும் நாட்டி னுள்ளாரை வெகுண்டெழுந்தானாக, யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண் - யாழின் இசை பொருந்திய தெருக்களையுடைய பாழி என்னும் நகரிடத்தே நின்று, அஞ்சல் என்ற - அஞ்சாதீர் என்று கூறிய, ஆஅய் எயினன் - ஆஅய் எயினன் என்பான், சொல்லியது அமையாது - தான் சொல்லிய சொற் பிழையாது, இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி - போர் வெல்லும் பயிற்சியையுடைய மிஞிலி என்பானொடு பொருது, தன் உயிர் கொடுத்தனன் - தன் உயிரையும் தந்தான்; (நீயோ), 7-11. தெறல் அரு கடவுள் முன்னர் தேற்றி - தெறுதற்கு அரிய தெய்வத்தின் முன் தெளிவித்து, மெல் இறை முன் கை பற்றிய சொல் இறந்து - மெல்லிய சந்தினையுடைய என் முன் கையினைப் பற்றிச் சொல்லிய சொல்லினைக் கடந்து, ஆர்வ நெஞ்சம் தலை தலை சிறப்ப - அன்பு மிக்க உள்ள மேன்மேலும் மகிழ்ந்து சிறக்க, நின் மார்பு தருகல்லாய் - நின் மார்பினைத் தாராயாய், பிறன் ஆயினையே- ஏதிலன் ஆயினையே, இனி யான் விடுக்குவென் அல்லேன் - இனி யான் நின்னை விடுப்பேன் அல்லேன்; 11-15. மந்தி பனி வார் கண்ணள் பல புலந்து உறைய - ஆதிமந்தி என்பாள் நீர் ஒழுகும் கண்ணினையுடையளாய்ப் பலவற்றையும் வெறுத்திருக்க, கடு திறல் அத்தி ஆடு அணி நசைஇ - கடிய திறம் பொருந்திய ஆட்டன் அத்தி என்னும் அவள் காதலன் ஆடும் அழகினை விரும்பி, நெடு நீர்க் காவிரி கொண்டொளித்தாங்கு - நீர்ப் பெருக்கினையுடைய காவிரியாறு கொண்டு மறைந்தாற்போல, நின் மனையோள் வவ்வலும் அஞ்சுவல் - நின் மனையாள் நின்னைப் பற்றிக்கோடலும் அஞ்சாநிற்பேன்; 15-19. சினைஇ - வெகுண்டெழுந்து, ஆரியர் அலறத் தாக்கி - ஆரிய மன்னர்கள் அலறுமாறு அவர்களைத் தாக்கி, பேர் இசை தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து - பெரிய புகழையுடைய பழையதாகிய முதிர்ந்த இமைய மலையின்மீது வளைந்த விற்பொறியைப் பதித்து, வெம் சின வேந்தரைப் பிணித்தோன் - கொடிய சினம் பொருந்திய பகை வேந்தரைப் பிணித்து வந்தோனாகிய சேரனது, வஞ்சி யன்ன - வஞ்சிநகரை யொத்த, என் நலம் தந்து சென்மே - என் அழகினைத் தந்து செல்வாயாக. (முடிபு) மகிழ்ந! தொடுத்தென்; செல்லல். ஆஅய் எயினன் சொல்லியது அமையாது, தன் உயிர் கொடுத்தனன்; (நீயோ) கடவுள் முன்னர்த் தேற்றி முன்கை பற்றிய சொல் இறந்து மார்பு தருகல்லாய் பிறன் ஆயினை. இனி யான் விடுக்குவென் அல்லென். மந்தி பல புலந்து உறைய, அத்தி ஆடணி நசைஇ, காவிரி கொண் டொழித்தாங்கு, நின் மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; வஞ்சி யன்ன என் நலம் தந்து சென்மே. (வி-ரை) தொடுத்தென் - வளைத்தேன், பற்றினேன். புன்னாடு -குட கடற் பக்கத்ததொரு நாடு, புள்ளுநாடு என்பதும் பாடமாகக் காணப்படுதலின், புண்ணாடென்பது புன்னாடெனச் சிதைந்தது எனலுமாம். யாழிசை மறுகு என்றமையால், பாழியின்கண் பரிசில் பெறும் பாணர் முதலாயினார் இடையறாது வருவர் என்பது பெற்றாம். நன்னன் என்பானுக்கு ஆஅய் எயினன் பகைவனும், மிஞிலி நட்பாளனும் ஆவர் என்பதும், ஆஅய் எயினன் பாழியின்கண் மிஞிலியொடு பொருது உயிர் துறந்தனன் என்பதும், முன்னர் `யாம இரவின்'1 என்னும் செய்யுளுட் போந்தமை காண்க. சொல்லியது அமையாது - தான் சொல்லிய சொற் பிழையாது என்னும் பொருட்டு. தேற்றி - தெளிவித்து. தேற்றி முன் கை பற்றிய சொல் என்றதனை, முன் கை பற்றித் தேற்றிய சொல் என மாறுக. கடவுள் முன்னர்ச் சூளுரைத்துத் தேற்றுவது, `முன்றேற்று' எனப்படும் என்பது, `கடியென் கிளவி'2 என்னுஞ் சூத்திரத்து முன்றேற்று என வருவதனாலும், அதற்கு உரையாசிரியர் பலரும் `கடுஞ்சூள் தருகு வென் நினக்கே'3 என்பதனை எடுத்துக்காட்டி யிருத்தலாலும் பெறப்படும். எனவே அகநானூற்றுப் பதிப்புக்களிற் காணப்படும் தோற்றி என்னும் பாடத்தினும் தேற்றி* யென்பதே சிறப்புடைத் தாதல் காண்க. ஆஅய் எயினன், ஒரு கால் சொல்லிய சொற் பிழையாது, ஏதிலார் பொருட்டுத் தன் உயிரையும் கொடுத்தனன்; நீயோ நினக்கு இனியளாகக் கொண்டு எனது நலத்தையும் நுகர்ந்து, பின் கடவுள் முன்னர்ச் சூளுடன் கூறிய உரையையும் தப்பி என்னைக் கை விடுத்துப் பிறன் ஆயினை எனத் தலைவன் கொடுமையை அவன் உணருமாறு காதற் பரத்தை எடுத்துரைத்து, அத்தகைய நின்னை விடுக்குவென் அல்லேன் என்றாள் என்க. மந்தி - ஆதிமந்தி, அத்தி - ஆட்டனத்தி. ஆரியர் அலறத் தாக்கி வட வரையில் விற் பொறித்தவன், இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னன்; இதனை, `இமையம் விற் பொறித்து' எனவும் `பேரிசை மரபின் ஆரியர் வணக்கி' எனவும் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்துப் பதிகத்தில் நெடுஞ்சேரலாதன் கூறப்படுதலான் அறிக. இந் நிகழ்ச்சிகள் அவன் மைந்தனாகிய செங்குட்டுவனாலும் நிகழ்ந்தமை சிலப்பதிகாரத்தால் அறியப்படுதலின், பிணித்தோன் என்றது செங்குட்டுவன் எனலும் பொருந்தும். (மே-ள்) `புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்'1 என்னுஞ் சூத்திரத்து, இச்செய்யுளைக் காட்டி, இது காமக்கிழத்தி என் நலம் தா என்றது என்றனர் நச். 397. பாலை (மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.) என்மகள் பெருமடம் யான்பா ராட்டத் தாய்தன் செம்மல் கண்டுகடன் இறுப்ப முழவுமுகம் புலரா விழவுடை வியனகர் மணனிடை யாகக் கொள்ளான் கல்பகக் 5. கணமழை துறந்த கான்மயங் கழுவம் எளிய வாக ஏந்துகொடி பரந்த பொறிவரி அல்குல் மாஅ யோட்கெனத் தணிந்த பருவஞ் செல்லான் படர்தரத் துணிந்தோன் மன்ற துனைவெங் காளை 10. கடும்பகட் டொருத்தல் நடுங்கக் குத்திப் போழ்புண் படுத்த பொரியரை ஓமைப் பெரும்பொளிச் சேயரை நோக்கி ஊன்செத்துக் கருங்கால் யாத்துப் பருந்துவந் திறுக்கும் சேணுயர்ந் தோங்கிய வானுயர் நெடுங்கோட்டுக் 15. கோடை வெவ்வளிக் குலமரும் புல்லிலை வெதிர நெல்விளை காடே. - கயமனார். (சொ-ள்) 9. துனை வெம் காளை - விரைதலையுடைய வெவ்விய காளை போன்றவன், 1-4. முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர் - முழவின் ஒலி மாறாத விழாவுடைய அகன்ற மனையில், என் மகள் பெரு மடம் யான் பாராட்ட - என் மகளது பெரிய மடப்பத்தினை யான் பாராட்டவும், தாய் - நற்றாய், தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப - தனது தலைமையை அறிந்து தன் கடமைகளைச் செலுத்தவும், மணன் இடையாகக் கொள்ளான் - மணத்தின் வாயிலாகக் கொள்ளாமலும், 4-8. கல் பக கண மழை துறந்த - பாறைகள் பிளவுபடக் கூட்டமாகிய மேகம் பெய்யா தொழிந்த, ஏந்து கொடி பரந்த கான் மயங்கு அழுவம் - உயர்ந்த கொடி பரந்த காடடர்ந்த பரப்புக்கள், பொறி வரி அல்குல் மாயோட்கு - புள்ளிகளும் வரிகளும் பொருந்திய அல்குலையுடைய மாமை நிறத்தினையுடையாட்கு, எளியவாக என - நடத்தற்கு எளிமையுடையனவாக வென்று, தணிந்த பருவம் செல்லான் - வெப்பம் தணிந்த பருவத்தே செல்லாமலும், 10-16. கடும் பகட்டு ஒருத்தல் - கடிய பெருமையையுடைய ஆண் யானை, நடுங்கக் குத்தி - மரம் அசையும்படி குத்தி, போழ் புண் படுத்த - பிளத்தலால் புண் உண்டாக்கிய, பொரி அரை ஓமை - பொரிகள் பொருந்திய அடியினையுடைய ஓமை மரத்தின், பெரும் பொளி சேய் அரை நோக்கி - பெரிய பட்டை யுரிந்த சிவந்த அடி மரத்தினை நோக்கி, ஊன் செத்து - அதனை ஊன் எனக் கருதி, சேண் உயர்ந்து ஓங்கிய - நெடிது உயர்ந்த, கருங் கால் யாத்து - கரிய அடியினையுடைய யா மரத்திலுள்ள, பருந்து வந்து இறுக்கும் - பருந்து வந்து தங்கும், வான் உயர் நெடுங்கோட்டு - வானின்கண் உயர்ந்த நெடிய சிமையங்களிலுள்ள, கோடை வெவ்வளிக்கு உலமரும் - வெவ்விய மேல் காற்றினால் அலையும், புல் இலை வெதிர நெல் விளை காடு - புல்லிய இலைகளையுடைய மூங்கிலின் நெல் விளையும் காட்டின்கண், 8-9. படர்தரத் துணிந்தோன் மன்ற - உடன்கொண்டு செல்ல ஒரு தலையாகத் துணிந்தான். (முடிபு) துனை வெங் காளை, யான் பாராட்ட, தாய் கடன் இறுப்ப வியனகர் மணன் இடையாகக் கொள்ளான், கான்மயங்கு அழுவம் மாயோட்கு எளியவாக எனத் தணிந்த பருவம் செல்லான், நெல் விளை காடு படர்தரத் துணிந்தோன் மன்ற. (வி-ரை) தன் செம்மல் - தலைவனது மாண்பு. முழவு முகம் புலராமையாவது - இடையறாது ஒலித்தல். மணன் இடையாகக் கொள்ளான் - வரைந்து கொள்ளானாய் என்றபடி. ஏந்து கொடி பரந்த என்றதனை அல்குலுக்கு அடையாக்கி, உயர்ந்த கொடிபோற் பரந்த வரிகளையுடைய என்றலுமாம். மாயோட்கு எளியவாக என மாறிக் கூட்டுக. துனைதல் - விரைதல், பொறுமையில்லாமை என்றபடி. யானை உண்டற் பொருட்டுக் குத்திப் புண்படுத்த ஓமையின் அரை என்க. யானை ஓமையை உரித்துத் தின்னுமென்பது `கயந்தலை மடப்பிடி யுயங்கு பசி களைஇயர்; பெருங்களிறு தொலைத்த முடத்தா ளோமை'1 `கான யானை தோனயந் துண்ட பொரிதா ளோமை'2 என்பனவற்றாலும் அறிக. ஓங்கிய யாத்து என்க. இறுக்கும் காடு எனவும், நெடுங்கோட்டு வெதிர காடு எனவும் கூட்டுக. 398. குறிஞ்சி (காமமிக்க கழிபடர் கிளவியால் (வரைவிடத்துக்கண்) தலைமகள் தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது.) 3இழைநிலை நெகிழ்ந்த எவ்வங் கூரப் படர்மலி வருத்தமொடு பலபுலந் தசைஇ மென்றோள் நெகிழச் சாஅய்க் கொன்றை ஊழுறு மலரிற் பாழ்பட முற்றிய 5. பசலை மேனி நோக்கி நுதல்பசந்து இன்னே மாகிய எம்மிவண் அருளான் நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று அலமரல் மழைக்கண் தெண்பனி மல்க நன்று 4புற மாறிஅகறல் யாழநின் 10. குன்றுகெழு நாடற் கென்னெனப் படுமோ கரைபொரு நீத்தம் உரையெனக் கழறி நின்னொடு புலத்தல் அஞ்சி அவர்மலைப் பன்மலர் போர்த்து நாணுமிக ஒடுங்கி மறைந்தனை கழியும் நிற்றந்து செலுத்தி 15. நயனறத் துறத்தல் வல்லி யோரே நொதும லாளர் அதுக ணோடாது அழற்சினை வேங்கை நிழற்றவிர்ந் தசைஇ மாரி புறந்தர நந்தி ஆரியர் பொன்படு நெடுவரை புரையும் எந்தை 20. பல்பூங் கானத் தல்கி இன்றிவண் சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ குயவரி இரும்போத்துப் பொருத புண்கூர்ந்து உயங்குபிடி தழீஇய மதனழி யானை வாங்கமைக் கழையின் நரலுமவர் 25. ஓங்குமலை நாட்டின் வரூஉ வோயே. - இம்மென்கீரனார். (சொ-ள்) 11. கரை பொரு நீத்தம் - கரையைப் பொருது வரும் வெள்ளம் பொருந்திய யாறே! 22-25. குயவரி இருபோத்து பொருத புண் கூர்ந்து - பெரிய ஆண் புலி தாக்கியதாலாகிய புண் மிகுந்து, உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை - வருந்தும் பெண் யானையால் தழுவப்படும் வலி குன்றிய களிற்றியானை, வாங்கு அமை கழையின் நரலும் - வளைந்த மூங்கிலாற் செய்த தூம்பு போல ஒலிக்கும், அவர் ஓங்கு மலை நாட்டின் வரூஉவோய் - எம் தலைவரது உயர்ந்த மலை நாட்டினின்றும் வருவோய்! 1-16. இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர - அணிகள் நிலையினின்றும் நெகிழ்தற்கு ஏதுவாகிய துன்பம் மிக, படர் மலி வருத்தமொடு - நினைவு மிக்க வருத்தத்துடன், பல புலந்து அசைஇ - பலவற்றையும் வெறுத்துக் கூறித்தங்கி, மெல் தோள் நெகிழ - மெல்லிய தோள் மெலிய, சாஅய் - வருந்தி, கொன்றை ஊழ் உறு மலரில் - கொன்றையினது நன்கு மலர்ந்த பூக்களைப்போல, பாழ்பட முற்றிய பசலை மேனி நோக்கி - பாழ்பட நிறைந்த பசலையுற்ற மேனியைப் பார்த்து, நுதல் பசந்து - நெற்றி பசலையுறப்பெற்று, இன்னேம் ஆகிய எம் இவண் அருளான் - இன்ன நிலையினேம் ஆகிய எம்மை இங்கு அருளுதல் செய்யானாய், நும்மோன் செய்த கொடுமைக்கு - நும் தலைவன் செய்த வன்கண்மைக்கு, இம்மென்று அலமரல் மழை கண் தெண் பனி மல்க - கலங்கும் குளிர்ந்த கண்களினின்றும் விரைந்து தெளிந்த நீர் பெருகவும், நன்று புறம் மாறி அகறல் - அறத்தினைக் கைவிட்டு நீங்குதல், நின் குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ - குன்று பொருந்திய நாட்டினையுடைய நின் தலைவனுக்கு யாதெனப்படுமோ, உரை எனக் கழறி - உரைப் பாயாக என்று கூறி, நின்னொடு புலத்தல் அஞ்சி - நின்னொடு யாம் வெறுத்தலை அஞ்சி, அவர் மலை பல மலர் போர்த்து - அவர் மலையிலுள்ள பல மலர்களையும் போர்த்துக் கொண்டு, நாணு மிக ஒடுங்கி - நாணத்தால் மிகவும் ஒடுங்கி, மறைந்தனை கழியும் - மறைந்து நீங்கும், நின் தந்து செலுத்தி - நின்னைக் கொணர்ந்து போக்கி, நொதுமலாளர் - ஏதிலாளராகிய அவர், நயன் அறத் துறத்தல் வல்லியோர் - நீதியின்றிக் கைவிடுதற்கு வன்மையுடையோர் ஆவர், அது கண் ஓடாது - அதனை நோக்காது, 17-21. அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ - தீயினை யொக்கும் பூக்கள் நிறைந்த கிளையையுடைய வேங்கையின் நிழலில் நின் செலவினைத் தவிர்ந்து தங்கி, மாரி புறந்தர நந்தி - பெய்யும் மழை புரத்தலால் பெருக்கமுற்று, ஆரியர் பொன்படு நெடு வரை புரையும் - ஆரியரது பொன் பொருந்திய நீண்ட இமைய மலையை யொக்கும், எந்தை பல்பூங் கானத்து அல்கி - எம் தந்தையது பல பூக்களையுடைய காட்டில் அமர்ந்து, இன்று இவண் சேர்ந்தனை செலினே - இற்றைப் பொழுது இவ்விடத்தே சேர்ந்திருந்து செல்லின், சிதைகுவது உண்டோ - நின் காரியம் ஏதேனும் கெடுவது உண்டோ. (முடிபு) கரை பொரு நீத்தம்! அவர் ஓங்கு மலை நாட்டின் வரூஉவோய்! எவ்வம் கூர, வருத்தமொடு அசைஇ தோள் நெகிழச் சாஅய், பசலை மேனி நோக்கி நுதல் பசந்து இன்னேமாகிய எம் இவண் அருளான் நும்மோன் செய்த கொடுமைக்கு, கண் பனி மல்க, நன்று புறமாறி அகறல், நின் குன்று கெழு நாடற்கு என்னெனப் படுமோ உரை எனக் கழறிப் புலத்தல் அஞ்சி, மலர்போர்த்து ஒடுங்கி மறைந்தனை கழியும் நிற்றந்து செலுத்தி நொதுமலாளர் துறத்தல் வல்லியோர், அது கண் ஓடாது வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ, நந்தி, கானத்து அல்கி, இவண் சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ. (வி-ரை) நெகிழ்ந்த - நெகிழ்தற்கு ஏதுவாகிய. பாழ்பட - வறிதே. நும்மோன் - நுமன், நும் தலைவன். நன்று - அறம். புறம் மாறல் - கை விடுதல். குன்று கெழு நாடற்கு - சுட்டு. என் எனப் படுமோ - யாதாகுமோ என்றபடி. நும்மோன் எனவும் நின் குன்று கெழுநாடன் எனவும் கூறினமையால், கழறுதலும் புலத்தலும் யாற்றின் மேல ஆயின. மறைந்து கழிதலாவது மலர் போர்த்துக் கழிதல். நின்னொடு புலத்தல் அஞ்சி நீ மலர் போர்த்து ஒடுங்கி மறைந்து கழியாநின்றனை, அங்ஙனமாகவும் நொதுமலாளர் நின்னைத் தந்து செலுத்தித் துறத்தல் வல்லியோர் ஆவர் என விரித்து உரைத்துக் கொள்க. கண் ஓடாது - நோக்காது என்னும் பொருட்டு. நந்துதல் - பெருகுதல். இன்று இவண் சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ என்றது, அதனால் நினக்கு வரக்கடவதொரு தீங்கு இல்லாமையொடு அவரது மலைநாட்டினின்றும் வருகின்றா யாகலின் நின்னுடன் ஒரு நாள் தங்கி யாமும் ஆற்றியிருத்தலுமாகும் என்று கழிபடர் தோன்றக் கூறியவாறு. குயவரி - குயம்போலும் வரிகளையுடைய புலி. குயம் - அரிவாள். வலி யழிந்த யானை தூம்புபோல் உயிர்க்கும் என்பது. `ஓய் களி றெடுத்த நோயுடை நெடுங்கை, தொகு சொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்'1 என முற் போந்ததனாலும் அறிக. கழை என்றது ஈண்டுத் தூம்பு என்னும் பொருட்டு. 399. பாலை (தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.) சிமையக் குரல சாந்தருந்தி இருளி இமையக் கானம் நாறுங் கூந்தல் நன்னுதல் அரிவை இன்னுறல் ஆகம் பருகு வன்ன காதல் உள்ளமொடு 5. திருகுபு முயங்கல் இன்றியவண் நீடார் கடற்றடை மருங்கின் கணிச்சியிற் குழித்த உடைக்கண் நீடமை ஊறல் உண்ட பாடின் தெண்மணிப் பயங்கெழு பெருநிரை வாடுபுலம் புக்கெனக் கோடுதுவைத் தகற்றி 10. ஒல்குநிலைக் கடுக்கை அல்குநிழல் அசைஇப் பல்லான் கோவலர் கல்லாது ஊதும் சிறுவெதிர்ந் தீங்குழற் புலம்புகொள் தெள்விளி மையில் பளிங்கின் அன்ன தோற்றப் பல்கோள் நெல்லிப் பைங்காய் அருந்தி 15. மெல்கிடு மடமரை ஓர்க்கும் அத்தம் காய்கதிர் கடுகிய கவினழி பிறங்கல் வேய்கண் உடைந்த சிமைய வாய்படு மருங்கின் மலையிறந் தோரே. - எயினந்தை மகனார் இளங்கீரனார். (சொ-ள்) 1-3. சிமைய குரல சாந்து அருந்தி இருளி - உச்சியிலுள்ள பூங்கொத்துக்களை யுடையனவாய் மயிர்ச்சாந்தினைக் கொண்டு இருண்டு, இமைய கானம் நாறும் - இமைய மலையிலுள்ள கானம் போல நாறும், கூந்தல் - கூந்தலையும், நல்நுதல் - நல்ல நெற்றியினையு முடைய, அரிவை - தலைவியே! 6-18. கடறு அடை மருங்கின் - கற் காட்டினைச் சார்ந்த பக்கத்தில், கணிச்சியில் குழித்த - குந்தாலியால் தோண்டின, உடைக்கண் - குழியிடத்தே, நீடு அமை ஊறல் உண்ட - தாழ்த்தல் பொருந்திய ஊற்று நீரை யுண்ட, பாடு இன் தெள் மணி - இனிய தெளிந்த ஓசையையுடைய மணிகளைப் பூண்ட, பயம் கெழு பெரு நிரை - பயன் மிக்க பெரிய ஆனிரை, வாடு புலம் புக்கென - வறண்ட பாலையிற் புகுந்ததாக, கோடு துவைத்து அகற்றி - ஊது கொம்பினால் ஒலியை யுண்டாக்கி அவற்றை அங்கு நின்றும் விலக்கி, ஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசைஇ - தளர்ந்த நிலையினையுடைய கொன்றையின் குறைந்த நிழலில் தங்குவித்து, பல் ஆன் கோவலர் - பல ஆனினங்களையுடைய ஆயர், கல்லாது ஊதும் - இசையைக் கல்லாமல் ஊதும், சிறு வெதிர் தீம் குழல் - சிறிய மூங்கிலாற் செய்த இனிய குழலினின்றெழும், புலம்பு கொள் தெள் விளி - தனிமை கொண்ட தெளிந்த ஓசையினை, மை இல் பளிங்கின் அன்ன தோற்றப் பல்கோள் நெல்லிப் பைங்காய் அருந்தி - குற்றமற்ற பளிங்கினைப் போன்ற தோற்றத்தையுடைய பலவாகக் காய்த்த நெல்லியின் பசிய காய்களை உண்டு, மெல்கிடு மட மரை - அசையிடுகின்ற இளைய மரைமான், ஓர்க்கும் - கூர்ந்து கேட்கும், அத்தம் - காட்டிலே, காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல் - காயும் ஞாயிறு முடுகிய அழகு ஒழிந்த பாறைகளையும், வேய் கண் உடைந்த சிமையம் - மூங்கில் கணுக்கள் உடைந்த சிகரங் களையும், வாய் படு மருங்கின் - இடமகன்ற பக்க மலையினையு முடைய, மலை இறந்தோர் - மலையினைக் கடந்து சென்ற நம் தலைவர், 3-5. இன் உறல் ஆகம் - நினது இனிமை பொருந்துதலை யுடைய மார்பினை, பருகு அன்ன காதல் உள்ளமொடு - பருகுதல் போலும் காதல் மிக்க உள்ளத்துடன், திருகுபு முயங்கல் இன்றி- பின்னித் தழுவுதல் இன்றி, அவண் நீடார் - அங்குத் தாழ்த்திரார். (முடிபு) நன்னுதல் அரிவை! மலையிறந்தோர், நின் இன் உறல் ஆகம் காதல் உள்ளமொடு முயங்கல் இன்றி, அவண் நீடார். (வி-ரை) சிமையம் - மரம் புதர்களின் உச்சி. குரல் - பூங்கொத்து. குரல்வாய் நாறுங் கூந்தல் என்க. திருகுதல் - ஒருவர் மெய்யுடன் ஒருவர் மெய் பின்னுதல். உடை - உடைத்தெடுத்த கிணற்றினைக் குறிப்ப தாயிற்று. பயம் - பயன், பால். கல்லாது ஊதும் - ஆசிரியனிடத்துக் கற்காமலே இயல்பாக ஊதும் என்க. கோவலர் ஊதும் தீங்குழலின் தெள்விளியை மரை ஓர்க்கும் அத்தத்திலே பிறங்கலும் சிமையமும் மருங்கும் பொருந்திய மலை யிறந்து சென்றோர் என்க. 400. நெய்தல் (தலைமகன் வரைந்தெய்திய பின்றைத் தோழி தலைமகட்குச் சொல்லியது.) நகைநன் றம்ம தானே அவனொடு மனையிறந் தல்கினும் அலரென நயந்து கானல் அல்கிய நங்கள வகலப் பல்புரிந் தியறல் உற்ற நல்வினை 5. 1நூலமை பிறப்பின் நீல உத்திக் கொய்மயிர் எருத்தம் பிணர்படப் பெருகி நெய்ம்மிதி முனைஇய கொழுஞ்சோற் றார்கை நிரலியைந் தொன்றிய செலவிற் செந்தினைக் குரல்வார்ந்த தன்ன 2குலவுத்தலை நன்னான்கு 10. வீங்குசுவல் மொசியத் தாங்கு 3நுகம் தழீஇப் பூம்பொறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி மதியுடை வலவன் ஏவலின் இகுதுறைப் புனல்பாய்ந் தன்ன வாமான் திண்டேர்க் கணைகழிந் தன்ன நோன்கால் வண்பரி 15. பால்கண் டன்ன ஊதை வெண்மணல் கால்கண் டன்ன வழிபடப் போகி அயிர்ச்சேற் றள்ளல் அழுவத் தாங்கண் இருணீர் இட்டுச்சுரம் நீந்தித் துறைகெழு மெல்லம் புலம்பன் வந்த ஞான்றைப் 20. பூமலி இருங்கழித் துயல்வரும் அடையொடு நேமி தந்த நெடுநீர் நெய்தல் விளையா இளங்கள் நாறப் பலவுடன் 1பொதியவிழ் தண்மலர் கண்டு நன்றும் புதுவ தாகின் றம்ம பழவிறற் 25. பாடெழுந் திரங்கும் முந்நீர் நீடிரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே. - உலோச்சனார். (சொ-ள்) 1-4. (தோழி,) மனை இறந்து அல்கினும் - மனையைக் கடந்து தங்கினும், அலர் என - அலராகும் என்று கூறப்படவும், அவனொடு நயந்து கானல் அல்கிய நம் களவு அகல - நம் தலைவனுடன் விரும்பிச் சோலையிலே சென்று தங்கிய நம் களவொழுக்கம் நீங்கும்படி, பல் புரிந்து இயறல் உற்ற நல்வினை - முற் பிறப்பில் பல நன்மைகளும் செய்து பொருந்துதலுற்ற நல்வினையால், 5-19. நூல் அமை பிறப்பின் - புரவி நூல் கூறும் இலக்கணம் அமைந்த பிறப்பினையும், நீல உத்தி - நீல மணியாலாகிய நெற்றிச் சுட்டியினையும், கொய் மயிர் எருத்தம் பிணர்படப் பெருகி - சருச்சரை யுண்டாக அடர்ந்து கொய்யப்பெற்ற மயிர் பொருந்திய பிடரியினையும் உடைய, நெய் மிதி முனைஇய கொழுஞ் சோற்று ஆர்கை - நெய் பெய்து மிதித்தியற்றிய கவளத்தை வெறுத்த கொழுவிய சோற்றை உண்ணுதலையுடைய, நிரல் இயைந்து ஒன்றிய செலவில் - வரிசையாகப் பொருந்தி ஒரு பெற்றியே செல்லும் செலவினையும், செந்தினை குரல் வார்ந்தன்ன குலவு தலை - செவ்விய தினையின் கதிர் நீண்டு வளைந்தாற் போன்ற வளைந்த தலையினையும் உடைய, நல் நான்கு - நன்றாகிய நான்கு குதிரைகளை, தாங்கு நுகம் தழீஇ - தாங்கும் நுகத்தினைப் பொருந்தி, வீங்கு சுவல் மொசிய - பருத்த கழுத்தில் நெருங்க (அணிந்த), பூம் பொறி பல் படை ஒலிப்ப பூட்டி, அழகிய புள்ளிகளையுடைய பல வடங்கள் ஒலிக்கும்படி பூட்டி, மதியுடை வலவன் ஏவலின் - அறிவுடைய பாகன் செலுத்தலின், இகு துறை புனல் பாய்ந்தன்ன - தாழ்ந்த துறையில் நீர் பாய்ந்தாலொத்த, வாம் மான்திண் தேர் - தாவிச் செல்லும் குதிரை பூட்டிய திண்ணிய தேரின், கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரி - அம்பு பாய்ந்தாற் போன்ற வலிய காலின் விரைந்த செலவு, பால் கண்டன்ன ஊதை வெண்மணல் - பாலைக் கண்டாற் போன்ற காற்றால் திரட்டப்பெற்ற வெள்ளிய மணலிடத்தே, கால் கண்டன்ன வழிபட போகி - வாய்க்காலைக் கண்டாற்போன்ற சுவடு உண்டாகப் போக, அயிர் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண் - நுண்ணிய குழம்பாகிய சேற்றின் பரப்பினையுடைய அவ்விடத்தே, இருள் நீர் இட்டு சுரம் நீந்தி - இருண்ட நீரினையுடைய குறுகிய கழியைக் கடந்து, துறை கெழு மெல் அம் புலம்பன் - துறை - பொருந்திய கடற் கரையையுடைய நம் தலைவன், வந்த ஞான்றை - வந்த அன்று, 20-23. பூமலி இரு கழி துயல்வரும் அடையொடு - பூக்கள் நிறைந்த கரிய கழியிடத்தே இலைகளோடு அசையும், நேமி தந்த நெடு நீர் நெய்தல் - ஆழமான நீரையுடைய கடல் தந்த நெய்தலின், விளையா இளங் கள் நாற - முதிராத இளைய கள் நாறும்படி, பொதி அவிழ் தண் மலர் - கட்டு அவிழ்ந்த தண்ணிய மலர்களை, பலவுடன் கண்டு - ஏனைப் பூக்கள் பலவற்றுடன் (சூடி வருதலைக்) கண்டு, 23-26. பழ விறல் பாடு எழுந்து இரங்கும் - பழைய பெருமையுடைய ஆரவாரம் மிக்கு முழங்கும், முந்நீர் - கடற்கரைக் கண்ணுள்ள, நீடு இரு பெண்ணை - நீண்ட பெரிய பனைமரத்தை யுடைய, நம் அழுங்கல் ஊர் - அலர் ஆரவாரம் மிக்க நமது ஊர், நன்றும் புதுவது ஆகின்று- (அந்த அலரினை விடுத்து) மிகவும் புதிய தன்மையினை உடையது ஆகின்றது, 1. நகை நன்று - அது, பெரிதும் நகையினை விளைப்பதாகும். (முடிபு) தோழி! கானல் அல்கிய நம் களவு அகல, நல்வினையால், மெல்லம் புலம்பன் இருள்நீர் இட்டுச் சுரம் நீந்தி வந்த ஞான்றை, அவன் மலர் சூடி வருதலைக் கண்டு, நம் அழுங் கலூர் நன்றும் புதுவதாகின்று, அம்ம! அது நகை நன்று, அம்ம! (வி-ரை) கானல் அல்கிய - மனையின் அளவிலன்றிக் காட்டிலும் சென்று தங்கிய என்க. களவு அகல வந்த ஞான்றை எனவும், நல் வினையால் வந்த ஞான்றை எனவும் கூட்டுக. நெய்ம்மிதி - கொள்ளுடன் நெய் பெய்து அமைத்த கவளம். நான்கு - நான்காகிய குதிரைகள், ஆகுபெயர். பிறப்பினையும் உத்தியினையும் எருத்தத்தினையும் உடைய நான்கு எனவும், ஆர்கையுடைய நான்கு எனவும், செலவினையும் தலையினையும் உடைய நான்கு எனவும் தனித்தனி கூட்டுக. மொசிய அணிந்த பல்படை என்று விரித்துரைக்க. படை என்றது கழுத்து அணிகளை. போகி - போக எனத் திரிக்க. திண்தேர் நோன் கால் வெண்மணல் வழிபடப் போக என்க. வந்த ஞான்றை - வந்து வரைந்த ஞான்றை. அடையொடு துயல்வரும் எனவும் நெடுநீர் நேமி எனவும் மாறிக் கூட்டுக. நெய்தலின் தண் மலரைப் பலவுடன் சூடி வருதல் கண்டு என்க. நாற என்னும் வினையெச்சம் அவிழ் என்னும் வினைகொண்டு முடிந்தது. தலைவன் வரைந் தெய்துதல் கண்டு, ஊர் அலர் கூறுதல் அடங்கிவிட்ட தென்பாள், அழுங்கல் ஊர் புதுவதாகின்று என்றாள். அம்ம இரண்டும் உரையசை இடைச்சொல். எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நெடுந்தொகை யெனப்படும் அகநானூற்றுக்கு நாவலர் பண்டித, ந.மு. வேங்கடசாமி நாட்டாரும், கரந்தைக் கவியரசு, ஆர். வேங்கடாசலம் பிள்ளையும் இயற்றிய "வேங்கட விளக்கு" என்னும் உரை முற்றிற்று. ***** பாயிரம் நின்ற நீதி வென்ற நேமிப் பழுதில் கொள்கை வழுதிய ரவைக்கண் அறிவுவீற் றிருந்த செறிவுடை மனத்து வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ 5. அருந்தமிழ் மூன்றுந் தெரிந்த காலை ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள் நெடிய வாகி யடிநிமிர்ந் தொழுகிய இன்பப் பகுதி யின்பொருட் பாடல் நானூ றெடுத்து நூனவில் புலவர் 10. களித்த மும்மதக் களிற்றி யானைநிரை மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம் மேவிய நித்திலக் கோவை யென்றாங்கு அத்தகு பண்பின் முத்திற மாக முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்குக் 15. கருத்தெனப் பண்பினோ ருரைத்தவை நாடின் அவ்வகைக் கவைதாம் செவ்விய வன்றி அரியவை யாகிய பொருண்மை நோக்கிக் கோட்ட மின்றிப் பாட்டொடு பொருந்தத் தகவொடு சிறந்த அகவல் நடையாற் 20. கருத்தினி தியற்றி யோனே பரித்தேர் வளவர் காக்கும் வளநாட் டுள்ளும் நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பிற் கெடலருஞ் சிறப்பின் இடையள நாட்டுத் தீதில் கொள்கை மூதூ ருள்ளும் 25. ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச் செம்மை சான்ற தேவன் தொன்மை சான்ற நன்மை யோனே. "இத் தொகைக்குக் கருத்து அகவலாற் பாடினான், இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவ தரையன். நெடுந்தொகை நானூறும் கருத்தினொடு முடிந்தன. இவை பாடின கவிகள் நூற்று நாற்பத்தைவர். இத்தொகைப் பாட்டிற் கடியளவு சிறுமை பதின்மூன்று; பெருமை முப்பத்தொன்று. தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. தொகுத்தான் மதுரை உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திரசன்மன் என்பான். `வண்டுபடத் ததைந்த கண்ணி' என்பது முதலாக `நெடுவேண் மார்பின்' என்பது ஈறாகக் கிடந்த பாட்டு நூற்றிருபதும் களிற்றி யானை நிரை யெனப்படும். இப் பெயர் காரணத்தாற் பெற்றது; இது பொருட் காரணமாகக் கொள்க. `நாநகையுடைய நெஞ்சே; என்பது முதலாக `நாள்வலை முகந்த' என்பது ஈறாகக் கிடந்த பாட்டு நூற்றெண்பதும் மணிமிடை பவளம் எனப்படும். இதுவுங் காரணப் பெயர்; என்னை, செய்யுளும் பொருளும் ஒவ்வாமையால். `வறனுறு செய்தி' என்பது முதலாக `நகைநன்றம்ம' என்பது ஈறாகக் கிடந்த பாட்டு நூறும் நித்திலக் கோவை யெனப்படும்; செய்யுளும் பொருளும் ஒக்குமாகலான்.' அகநானூற்றின் தொகுப்பு முறை வியமெல்லாம் வெண்டே ரியக்கம்; கயமலர்ந்த தாமரையா றாகத் தகைபெறீஇக் காமர் நறுமுல்லை நான்காக நாட்டி வெறிமாண்ட எட்டும் இரண்டும் குறிஞ்சியாக் குட்டத்து இவர்திரை பத்தா இயற்பட யாத்தான் தொகையி னெடியதனைத் தோலாச் செவியான் வகையி னெடியதனை வைப்பு. ஒன்று மூன்றைந் தேழொன் பான்பாலை; ஓதாது நின்றவற்றின் நான்கு நெறிமுல்லை; - அன்றியே ஆறாம் மருதம்; அணிநெய்தல் ஐயிரண்டு; கூறாத வைகுறிஞ்சிக் கூற்று. பாலை வியமெல்லாம்; பத்தாம் பனிநெய்தல்; நாலு நளிமுல்லை நாடுங்கால்; - மேலையோர் தேறும் இரண்டெட் டிவைகுறிஞ்சி; செந்தமிழின் ஆறு மருதம் அகம். வியம் - ஒற்றையெண்கள். வெண்டே ரியக்கம் - பாலை. தாமரை- மருதம். குட்டத்து இவர் திரை - நெய்தல். தோலாச் செவியான் - கேள்வியுணர்வு மிக்கவன். அகநானூறு - நித்திலக் கோவை பாட்டு முதற்குறிப்பு அகரவரிசை பாட்டு பாட்டு பக்க எண் எண் அகல்வாய் வானம் 365 124 அம்மவாழி.... காதலர் 325 47 அம்மவாழி..... நம்மலை 388 169 அரம்போழ் அவ்வளை 349 95 அருந்தெறன் மரபிற் 372 138 அவ்விளிம் புரீஇய 371 136 அறியாய் வாழி 389 172 ஆள்வினைப் பிரிதலும் 353 102 ஆளிநன்மான் 381 156 இடைபிறரறிதல் 303 5 இம்மென் பேரலர் 323 44 இருந்த வேந்தன் 384 161 இரும்பிடிப் பரிசிலர் 311 21 இருவிசும்பி வர்ந்த 304 8 இருள்படு நெஞ்சத் 335 66 இலங்குசுடர்மண்டிலம் 367 128 இழைநிலை நெகிழ்ந்த 398 192 இன்பமும் இடும்பையும் 327 51 இனிப்பிறி துண்டோ 313 24 உய்தகை யின்றால் 341 81 உவர்விளை உப்பின் 390 174 உழுவை யொடுழந்த 308 15 ஊரல் அவ்வாய் 326 49 என் மகள் 397 190 என்னா வதுகொல் 348 94 ஒறுப்ப ஓவலை 342 83 ஓங்குதிரைப் பரப்பின் 320 39 ஓடா நல்லேற்று 334 64 கடுந்தே ரிளையரொடு 310 19 கண்டிசின் மகளே 369 131 கழிப்பூக் குற்று 330 57 பாட்டு பாட்டு பக்க எண் எண் கழியே, சிறுகுரல் 350 97 களவும் புளித்தன 394 184 கான மானத 318 35 குழற்காற் சேம்பின் 336 69 குன்றோங்கு வைப்பின் 338 74 கூழையுங் குறுநெறி 315 28 கொடுமுள் ஈங்கை 357 110 கோடுயர் பிறங்கற் 393 181 கோடை நீடலின் 377 147 சாரல் யாஅத்து 337 72 சிமையக்குரல 399 194 சிலம்பிற் போகிய 302 4 சிறுநுதல் பசந்து 307 14 செல்லல் மகிழ்நநின் 376 145 சென்று நீடுநர் 375 143 தண்கயம் பயந்த 395 186 தற்புரந் தெடுத்த 383 159 தன்னோரன்ன 385 163 தாழ்சினை மருதம் 366 126 தாழ்பெருந் தடக்கை 392 178 திருந்திழை நெகிழ்ந்து 387 167 துறைமீன் வழங்கும் 316 30 தூமலர்த் தாமரை 361 117 தேர்சேண் நீக்கி 380 154 தொடுத்தென் 396 187 தொடுதோற் கானவன் 368 129 தோளுந் தொல்கவின் 347 92 நகைநன் றம்ம.... அவனொடு 400 196 நகைநன் றம்ம... இறைமிசை 346 89 நந்நயந் துறைவி 379 151 நிதியந் துஞ்சும் 378 149 பாட்டு பாட்டு பக்க எண் எண் நிரைசெலல் இவுளி 363 121 நீடுநிலை அரை 331 59 நீலத்தன்ன நிறங் 358 112 நீலத் தன்ன நீர் 314 26 நெஞ்சுடம் படுதலின் 312 22 பகலினும் அகலா 305 10 பசித்த யானை 321 40 பல்பூந்தண் பொழிற் 360 115 பன்னாள் எவ்வம் தீர 340 78 பனிவார் உண்கணும் 359 113 பாம்புடை விடர 362 119 பார்வல் வெருகின் 391 176 பிறருறு விழுமம் 382 158 பூங்கணும் நுதலும் 329 56 பெரும்பெயர் மகிழ்ந 306 12 பொய்கைநீர் நாய் 380 165 மணிவாய்க் காக்கை 319 37 மதவலி யானை 354 105 மாக்கடன் முகந்து 374 141 பாட்டு பாட்டு பக்க எண் எண் மாக விசும்பின் 317 33 மாதிரம் புதைய 364 123 மாவும் வண்டளிர் 355 106 முடவு முதிர் பலவின் 352 100 முளைவளர் முதல 332 60 முனைகவர்ந்து கொண்டென 373 139 மேற்றுறைக் கொளீஇய 356 108 யாஅ ஒண்டளிர் 333 62 வயங்குவெயில் 322 42 வயவாள் எறிந்து 309 17 வழையமல் அடுக்கத்து 328 53 வளமழை பொழிந்த 344 86 வளைவாய்க் கோதையர் 370 134 வறனுறு செய்யின் 301 1 வாங்கமை புரையும் 343 84 விசும்புதளி பொழிந்து 345 87 விருந்தும் பெறுகுநள் 324 46 வீங்குவிசைப் பிணித்த 339 76 வேற்றுநாட் டுறையுள் 351 98 ஆசிரியர் பெயர் அகரவரிசை (எண் - செய்யுளெண்) பெயர் பாட்டு எண் அஞ்சியத்தை மகள் நாகையார் 352 அதியன் விண்ணத்தனார் 301 அம்மூவனார் 370, 390 ஆவூர் மூலங்கிழார் 341 இடைக்காடனார் 304, 374 இடையன் சேந்தங்கொற்றனார் 375 இம்மென்கீரனார் 398 உலோச்சனார் 330,400 உறையூர் முதுகூத்தனார் 329 ஊட்டியார் 388 எயினந்தை மகனார் 361, 371 இளங்கீரனார் 395, 399 எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் 319, 357 ஒக்கூர் மாசாத்தியார் 324, 384 ஓரம் போகியார் 316 ஒளவையார் 303 கபிலர் 318, 332, 382 கயமனார் 321, 383, 397 கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் 309 கல்லாடனார் 333 காவட்டனார் 378 காவன் முல்லைப்பூதனார் 391 குடவாயிற் கீரத்தனார் 315, 345, 366,385 சேந்தன் கண்ணனார் 350, தங்காற் பொற்கொல்லனார் 355 பெயர் பாட்டு எண் நக்கீரனார் 310, 340, 346, 369, 389 நரைமுடி நெட்டையார் 339 நன்பலூர்ச் சிறுமேதாவியார் 394 பரணர் 322, 326, 356, 367, 372 376, 386, 396 பறநாட்டுப் பெருங்கொற்றனார் 323 பாண்டியன் ஏனாதி நெடுங் கண்ணனார். 373 பாலைபாடிய பெருங்கடுங்கோ 313, 337, 379 பாவைக் கொட்டிலார் 336 பிசிராந்தையார் 308 பொருந்தில் இளங்கீரனார் 351 மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார் 314 மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 344, 353 மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 302 மதுரை இளங்கௌசி கனார் 381 மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் 348 மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் 307 மதுரைக் கண்ணத்தனார் 360 மதுரைக் கணக் காயனார் 338, 342 மதுரைக் கூத்தனார் 334 பெயர் பாட்டு எண் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் 306, 320 மதுரைத் தத்தங்கண்ணனார் 335 மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவன் மள்ளனார் 354 மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார் 328 மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார் 363 மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் 364 மதுரை மருதன் இளநாகனார் 312, 343, 358, 365, 368, 380, 387 பெயர் பாட்டு எண் மருங்கூர்ப்பாகைச் சாத்தன் பூதனார் 327 மாமூலனார் 311, 325, 331, 347, 349, 359, 393 மாறோக்கத்து காமக்கணி நப்பாலத்தனார் 377 மோசி கீரனார் 392 வடமவண்ணக்கன் பேரி சாத்தனார் 305 வடமோதங்கிழார் 317 வெள்ளி வீதியார் 362 ந.மு.வே.நாட்டார் வாழ்க்கைச் சுவடுகள் பிறப்பு: - நடுக்காவிரி, (12. 3. 1884) திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தந்தை - வீ.முத்துசாமி நாட்டார் தாய் - திருமதி தைலம்மை இளமைக் கல்வி: திண்ணைப்பள்ளி - நடுக்காவிரி தொடக்கப்பள்ளி - 3,4 ஆம் வகுப்புகள் நடுக்காவிரி தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் மதுரைத் தமிழ்ச் சங்கம் 1905 - பிரவேச பண்டிதம் 1906 - பாலபண்டிதம் 1907 - பண்டிதம் ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டியதை மூன்றே ஆண்டுகளில் படித்து முதல் வகுப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற பாராட்டுக்குரியவர். பொற் பதக்கம், தங்கத்தோடா, அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர். ஆசிரியர் பணி 1908 - பிசப் ஈபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. 1909 - தூய மைக்கேல் உயர் நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் 1910-1933 - தமிழ்ப் பேராசிரியர் பணி (22 ஆண்டுகள்) எஸ்.பி.ஜி. கல்லூரி , திருச்சிராப்பள்ளி 1933-1940 - தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் 1940 - சென்னை மாகாண தமிழர் மாநாட்டில் ‘நாவலர்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டவர். 1941-1944 - மதிப்பியல் முதல்வர் கரந்தைப் புலவர் கல்லூரி தஞ்சாவூர் 28.3.1944 - இவ்வுலக வாழ்வில் இருந்து மறைந்தார். குறிப்பு : நாட்டார் தொடர்பான வரலாற்றுச் சுவடுகளின் விரிவான செய்திகளை பதிப்பாசிரியரின் முன்னுரையிலும், நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண். 22 லும் பார்க்க) குறிப்புகள் 1. பத்து. பெரும்பாண்.50 உரை. 2. அகம்.111 3. மலைபடு.6 4. புறம். 152 1. தொல்.கற்.50 2. தொல். மெய்.11 3. நாலடி. 2 (பாடம்) 1. இழிநீர். (பாடம்) 1. பாசறைப் பிரிந்த. 2. சிதர்த்தவைபோல். 3. இரும்பொறி 4. விரிமணல். 1. அகம்.14 (பாடம்) 2. இரவுந் 3. பெருஞ்சாத்தன். 1. குறள். 82:1 2. பத்துப், பொருந. 77. 1. தொல். அகத்.13 (பாடம்) 2. அகல் வயல்-17 3. பரீஇயினள் நம்மொடு. (பாடம்) 1. போகுவை. (பாடம்) 1. மறவர் 2. பசும்படை. 3. விளை கழை. 4. கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார். (பாடம்) 1. தாயுறை வியனகர். 2. உடையள் சிறிதே. 3. சென்றிப். (பாடம்) 1. கழுதுயங் கரைநாள் காவலர் மடிந்தென. 2. மழைதலை. 1. தொல் - புறத் - 36 (பாடம்) 2. இடும்பை தீர (பாடம்) 3. சேப்ப. 1. தொல். உவம. 9 1. தொல். உவம. 11 (பாடம்) 2. அமர் விசும்பு 1. கார்ப் பெயல் 2. மறப்ப 3. பொருந்திதழ் கமழும். 1. தொல். கற்பு. 9 (பாடம்) 2. வறனிலத்து 3. கவித்த. 1. தொல். சொல். 164. 1. ஐங்குறு. 399 2. அகம். 385 3. நற். 279 (பாடம்) 4. போதந்து 5. பரூஉக் கொடி. 6. போர் செறி. 7. நெகிழ்த் தோள். 1. தொல். மெய்ப் : 14 2. தொல். கற் : 9 3. தொல். பொருளியல்: 32 (பாடம்) 1. மரனேமுற்ற. 2. நத்துறந்து. (பாடம்) 1. இர வழங்கு சிறுநெறி 2. முழவு சேர் 3. எம்முறு துயரமொ டியாமிவணொழிய. 1. தொல். கள. 23 (பாடம்) 2. மானிறப் 3. புரையும் 4. கொய்குழை 5. ஒழியோம். (பாடம்) 1. வியன் சுவல் 2. கற்கூவல் 3. யாயறிந் துணர்தல் அஞ்சி. (பாடம்) 1. பன்றி குறையாக் கொடுவரி. 2. போலும். (பாடம்) 1. வாய்வதாக, வைய. (பாடம்) 1. வளரிளம்பிள்ளை (பாடம்) 2. உளர் பெயல் 1. தொல்.கற். 26 (பாடம்) 2. தலைமகன் குறிப்பறிந்த தோழி, தலைமகட்குச் சொல்லியது. 3. வலந்தன்று 4. நாடு, கொள்ளனைப் பணித்த 5. கண்ணவிந்தன்ன 6. உறீஇய 7. பல்வேற் பாணன். 1. சிலப். 10 : 1 (பாடம்) 2. ஊற லவ்வாய். 3. புனன்மலி புறவிற். 1. நற். 10 (பாடம்) 1. நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. 2. நினைதலுந் நினைதியோ. 3. நசைஇய. 1. குறுந்- 235 (பாடம்) 2. தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 3. இடை முலை முயங்கி. 4. முனிதோ, றிற்றா 5. ஈழன் றேவனார். 1. தொல். பொருளியல். 31 (பாடம்) 2. றோழி. 3. புறவெரி. 4. கூற்றனார். (பாடம்) 1. வெளிப்படல் உறீஇ, தவறி நந்துயர். 1. பெயர்புறத் தியங்கி. 1. குறள்: 340 2. தொல். கள.: 20 (பாடம்) 3. தோடு சினை யுரைஇ. 1. பொரீஇக் கழித்த. 2. அருஞ்சுரம். (பாடம்) 1. தலைமகள் சொல்லியது. 2. முழை வளர் 3. நிரம்பா தொடுங்கிய 4. செங்கோடழி 5. கண முகை. 6. ஓட்டிய செம்மல். 7. நாட்போன். (பாடம்) 1. திரியா. (பாடம்) 1. அமர்ந்தனர் 2. மதுரைக் கடாரத்தனார். மதுரைக் கந்தரத்தனார். மதுரைக் கோடரத்தனார். 1. சிந் : 2899. 2. அகம். 234 1. பொருந. 195 (பாடம்) 2. கோண்மருப். 3.மராஅத்து. 4. வல்ல நமக்கே 5. தொடையமை பலமலர் கொடு. 1. சீவக. இலக்கண 2473 2. பெருங் மகத. 14: 81-85 (பாடம்) 1. வரினே, வானிடைச் 2. வல்லத்துக் குறுமிளை. 1. நாலடி. 22:3 2. தொல். கற்.10 3. தொல். உவம. 3 (பாடம்) 1. கையர் தேர. வருதொடர். 2. கதீஇ 1. கலித். பாலை. 1 (பாடம்) 1. வன்பிற் சுற்ற, அன்பிற் சுற்ற. 2. கணம் பொரக் கழித்த. (பாடம்) 1. உயிரிடத்தன்ன 2. நிரைமுடி நெட்டையார். 1. குறள். 230. (பாடம்) 1. நல்லெழி லின்னலம் 2. வெண்ணெல் மாஅத், தயிர்மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே 3. தயிர்மிதி மாஅ ஆர்குவ நினக்கே 4. நறுஞ்சாந் தயர்குவம் 5. கடுவிசை மாட்டலின் பாய்புடன். 1. நெடுநல் : 51-52 2. சிலப். 4: 37-38 3. சிலப். 4: 35 4. தொல். கள. 23 (பாடம்) 1. மரங்கொல். (பாடம்) 2. களைந்த, படைகொளாளர். 1. செவ்வாய் 2. பெயர்ந்த நீயே. 1. பதிற்று. 76 2. நாலடி. 15:5 3. பழமொழி. 1 (பாடம்) 4. சுழ லொலி. 5. நிழலொளிப். நிழலொழிப் 1. அம் மள்ளனார். (பாடம்) 1. நீங்க. (பாடம்) 1. வேண்டுபுலத் திறுத்த. 1. தொல். கற்பு. 9 1. அகம். 127. (பாடம்) 2. சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 1. தினையென னோனாது. 1. சிறுபாண். 237 2.புறம். 392 (பாடம்) 3. கேழ்கிளரத் 1. குறிஞ்சிப் பாட்டு. 231-232. 1. அகம். 120. (பாடம்) 2. நினைந்த 3. பொருந்துவீக் கிடக்கை. 1. புறம் 188 (பாடம்) 1. முடவுமுதற் பலவின் 2. தொழீஇ. 3. அஞ்சிலாந்தை மகள் நாகையார்; அஞ்சிலாந்தை மகனார். 1. தொல். கற்பு. 6 (பாடம்) 2. அம்மள்ளனார். 1. தொல். அகத். 41 2. கலி. பாலை 11 3. கலி. பாலை. 17 (பாடம்) 4. இடிஇமிழ் 5. கறவைப் புல்லினம். (பாடம்) 1. நெகிழ்த்த 2. சென்மா 3. தங்கால் முடக்கொற்றனார். தங்கால் முடக்கோவனார். (பாடம்) 1. சாலாமை. 1.நல்லளி. 2. ஒல்லார். 3. கதவம். 4. ஆய்பிரம்பன்ன. 1. அகம். 256 2. புறம். 70 3. பு-வெ. 186 (பாடம்) 1. கைகொடூஉப் பெயரும் 2. நல்குவர். (பாடம்) 1. வினவுவளாயின். 2. துன்னிப். 3. மதுரை மருதங்கண்ணனார். (பாடம்) 1. அரி மயிர் முன் கை. 1. உள்ளுதல் ஒழிமதி நீயே. 1. சீவக. 2133 2. குறள்,1108 3. சீவக.2878 (பாடம்) 4. வல்லுகிர் (பாடம்) 1. எய்தி. 2. வெள்விளி கெடுமுடை. (பாடம்) 1. கவின் பெறக் காட்ட 2. யாது செய்வர் கொல். 1. அகம். 154 2. அகம். 301 3. குறள். 937 4. குறள். 1224 (பாடம்) 1. ஏவியல் கிடக்கை. 2. வாழியெ னெஞ்சே. 3. காழூர். (பாடம்) 1. தலைமாற்றி. 2. நீணீர்ப் பரப்பிற். 1. அகம். 266 2. முழையுழை 3. பிணவினுணங்கு பசி. 1. குறுந். 139 (பாடம்) 1. கோடிணர் கஞலிக் 2. பலநாள் 3. சிலநாள். (பாடம்) 1. மகளை கேழியலேனை. 2. காழ் புணர்ந்தியற்றிய. (பாடம்) 3. ஓரா வார்த்த. 1. குறள். 195 2. அகம். 315 (பாடம்) 1. தமியம் நீந்தும். (பாடம்) 1. அருந்திறல் 2. மலைத்த தொடுவில் 3. ஆடுகொள் 4. கொண்டணி பெய்விலிற். 1. பதிற்று 85 2.அகம் 72 (பாடம்) 1. பனைத்தாள். 2. முரிஞ்சி. 1. அகம். 167 (பாடம்) 1. நணி அணி வந்து. 2. காமர் மாலை. 1. புறம் 188 2. தொல். கற்பு. 5 (பாடம்) 1. விளை விறல் எழூஉத் திணிதோள். 2. இடையன் செங் கொற்றனார். 1. தொல். எச்சவியல், 56 (பாடம்) 2. அரும்பொலம். 1. மாந்தை. (பாடம்) 1. காடுபுலர்ந் துக்க. 2. எறும்பினம். 3. பல்லூர். 1. உன்னி. 2. மாறோகம். 1. புறம். 52 (பாடம்) 2. நலிய உஞற்றி. 1. தொல். மரபு 32 2. மலைபடு. 502 -503 3. குறுந். 249 (பாடம்) 1. களையெரி திகழ்ந்த. 1. குறள் 1103 (பாடம்) 2. உவக்காண் 1. அம்மா அரிவை, அம்ம வாழி. 1. திருக்கோ. 84 (பாடம்) 2. குருகருந்து. 3. அஞ்சுவரு தகைய. 4. நாறஞ்சிறை 5. அருஞ்சுர முன்னிய. 1. சீவக. 2554. (பாடம்) 2. பாடுகொளைக் கொப்ப. 3. அணங்கமர். (பாடம்) 1. தற்பயந் தெடுத்த எற்றுறந் தருளாள். 2. காடும் கானமும். 3. பல்கிளைக் கொடிக்கொம் பலர்ந்த அல்குல், தழையணிக் கூட்டும் குழை பல உதவிய 4. தலைக் கூட்டு. 1. அகம். 220 (பாடம்) 1. குடவாயிற் கீரத்தனார். 1. தொல். மெய்ப்பாடு. 7. 2. தொல். கற்பு 5. 3. தொல். கற்பு 53 (பாடம்) 4. யாம்பால்....... சொல்லாள்! (பாடம்) 1. நிறைத்தாண் முழவுத்தோள். 1. தொல் கற்பு. 9 (பாடம்) 2. புகருணப் பறைந்த புன்றலை 3. பயிலரிற் கலப்பை 4. தேற்றுவதாயிற். 1. அகம். 34 2. குறள். 1151 (பாடம்) 3. விளைகுரற் சிறுதினை. 4. எவ்வமொடு போந்த. (பாடம்) 1. ஒற்ற 1. நாலடி. 3 : 2 2. அகம். 68 1. அகம். 111 2. புறம். 2 3. பதிற்றுப். 6 ஆம் பத்து, பதிகம் (பாடம்) 4. அதிர்படு வழிய 1. வாழ்க்கைக் கானன்று. 2. சேரி தொறியலும் 3. பன்மாண் கோதை. 1. குறள். 1328. (பாடம்) 2. பல்கல, பல்லகல் 3. பொதிமாண் பன்முடி 1. பூதத்தனார். (பாடம்) 1. தலைஇக் கானம். 1. ஆற்றருமையிற் பிடித்து வேல். (பாடம்) 1. காய் பசி தீர. 2. முதை 3. பல் சினை யுதிர்பவை. 4. பாறை வெவ்வயிற்றெறீஇ 5. வண்செவி 1. ததரிதழ். (பாடம்) 1. உள்ளமொடு ஓய் பிணை. 1. புறம் 97 2. தொல். பொருள். 16 (பாடம்) 3. புள்ளுநாடு. 4. கொடுத்தனனே 5. தோற்றி. 1. பணித்தோன். * சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பில் - தொல், பொருள், 151 ஆம் சூத்திரத்தில் தேற்றிய என்று பாடம் உண்மையும் ஓர்க. 1. அகம் 208 2. தொல். சொல் உரி. 87 3. அகம். 110 1. தொல். கற்பு. 10 1. நற். 137 2. குறுந். 79 (பாடம்) 3. இழைநிலை நெகிழ. 4. புறமாகி. 1. அகம். 111 (பாடம்) 1. நூலமை மரபின், உந்தி. 2. குவவுத்தலை நண்ண. 3.நுகம் தளரா. 1. பொதியவிழ்ந் தலரக் கண்டு,