நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 7 அகநானூறு மணிமிடை பவளம் உரையாசிரியர்கள் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கவியரசு இரா.வேங்கடாசலம் பிள்ளை பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 7 உரையாசிரியர்கள் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கவியரசு இரா.வேங்கடாசலம் பிள்ளை பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம், பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 376 = 392 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 245/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற் காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “ சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரிய வர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர் களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்வி களிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921 -இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல் களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25 . நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக் கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த் தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர் களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள் கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங் களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மை யாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக் கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும் போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு... , செயல் செய்வாய் தமிழுக்கு...... ,ஊழியஞ் செய் தமிழுக்கு ......., பணி செய்வாய்! தமிழுக்கு ........, இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.”எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங் களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலனார் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற் குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடு வதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப் புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகு குரு. செயத்துங்கன், பேரா.கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெரு மக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iii பதிப்புரை x அகநானூறு மூலமும் உரையும் மணிமிடை பவளம் 1 பாட்டு முதற்குறிப்பு அகரவரிசை 368 ஆசிரியர் பெயர் அகர வரிசை 371 அகநானூறு மணிமிடை பவளம் அகநானூறு மூலமும் உரையும் மணிமிடை பவளம் 121. பாலை (தோழியால் தலைமகளை உடன்வருமெனக் கேட்ட தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது.) 1நாம்நகை யுடையம் நெஞ்சே கடுந்தெறல் வேனில் நீடிய வானுயர் வழிநாள் வறுமை கூரிய மண்ணீர்ச் சிறுகுளத் தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல் 5. கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணிச் சேறுகொண் டாடிய வேறுபடு வயக்களிறு செங்கோல் வாலிணர் தயங்கத் தீண்டிச் சொரிபுறம் உரிஞிய நெறியயல் மராஅத்து அல்குறு வரிநிழல் அசைஇ நம்மொடு 10. தான்வரும் என்ப தடமென் தோளி 2உறுகண் மழவர் உருள்கீண் டிட்ட ஆறுசெல் மாக்கள் சோறுபொதி வெண்குடைக் 3கனைவிசைக் கடுவளி யெடுத்தலின் துணைசெத்து வெருளேறு பயிரும் ஆங்கண் 15. கருமுக முசுவின் கானத் தானே. - மதுரை மருதனிளநாகனார். (சொல் பொருள்.) 1. நெஞ்சே-, 11-15. உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட - வழிச் செல்வார்க்குத் துன்பத்தைச் செய்யும் மழவரது சாகாடு கிழித்துச் சென்ற சுவடாகிய, ஆறுசெல் மாக்கள் - நெறியிலே செல்லும் சாத்தரது, சோறு பொதி வெண் குடை - சோறு பொதிந்த வெள்ளிய பனை ஓலையாலாய குடை யினை, கனைவிசைக் கடுவளி எடுத்தலின் - மிக்க விசையினையுடைய சூறாவளி தூக்கலின் எழுந்த ஒலியினை, துணை செத்து - தனது பிணையினது குரலென எண்ணி, வெருள் ஏறு - அஞ்சிய மானேறு, பயிரும் ஆங்கண் - அப்பிணையை அழைத்திடும் இடங்களை யுடைய, கருமுக முசுவின் கானத்தான் - கரிய முகத்தினையுடைய முசுக்களையுடைய காட்டின் கண்ணே; 1-10. கடுதெறல் வேனில் நீடிய வான் உயர் வழி - மிக்க காய் தலை யுடைய கோடை நீண்ட மிக உயர்ந்த நெறியில், நாள் வறுமை கூரிய - நாளும் தன் வறுமை மிக, மண்நீர்ச் சிறுகுளத் தொடுகுழி மருங்கில் - குளிக்கும் நீராகிய சிறு குளத்தில் தோண்டப் பெற்ற குழியின் கண், துவ்வாக் கலங்கல் - உண்ணற் காகாத கலங்கிய நீரால், கன்று உடை மடப்பிடிக் கயந்தலை மண்ணி - கன்றினையுடைய இளமை வாய்ந்த பிடியின் மெல்லிய தலையை முதலிற் கழுவி, சேறுகொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு - பின் எஞ்சிய சேற்றினைக் கொண்டு அளைந்து கொண்ட நிறம் வேறுபட்ட வலிய ஆண்யானை; செங்கோல் வால்இணர் தயங்கத் தீண்டி - சிவந்த காம்பினையுடைய வெள்ளிய கொத்துக்கள் அசையத் தனது துதிக்கையால் பற்றி, சொரிபுறம் உரிஞிய - தினவு பொருந்திய தன் முதுகினை உராய்ந்து கொண்டதாய, நெறி அயல் மராஅத்து - வழியின் பக்கத்துள்ள வெண்கடம்பின், அல்குறு வரி நிழல் அசைஇ - சுருங்கிய வரி வரியாகவுள்ள நிழலிலே தங்கி, நம்மொடு தடமென்தோளி வரும் என்ப - நம்முடன் பெரிய மென்மை வாய்ந்த தோளையுடைய தலைவி வரும் என்பர், நாம் நகை யுடையம் - ஆகலின் நாம் நகையுடையேமாயிரா நின்றேம். (முடிபு) நெஞ்சே! முசுவின் கானத்தான், தடமென்தோளி வரி நிழலசைஇ நம்மொடு வரும்மென்ப; நாம் நகையுடையம். (விளக்க உரை) `நாள் நகை' யென்பது பாடமாயின் நாளும் நகையுடையேம் என்க. வானுயர் வழிநாள் என்று கொண்டு மேகம் கால் வீழ்த்துப் பெய்யாது உயர்ந்த பிற்காலத்து என்றுரைத்தலுமாம். மண் நீர் - கழுவும் நீர்; மண் கலந்த நீருமாம். வேறு படு களிறு - சேறு காய்ந்திடத் தன்னுடல் வெண்ணிறம் ஆயினமையின் வேறுபடு களிறென்றார். தான் வரு மென்ப: தான், அசை. உறு கண மழவர் என்பது பாடமாயின், மிக்க கூட்டமாகிய மழவர் என்க. கணைவிசை யென்னும் பாடத்திற்கு அம்பு போலும் விசை என்க. (உள்ளுறை) களிறு துவ்வாக் கலங்கலால் முதற்கண் பிடியின் தலையை மண்ணிப் பின்பு சேற்றினைக் கொண்டு தான் ஆடியது என்றது, தலைவன் தலைவியைத் தலையளி செய்வன் என்றவாறாம். (மேற்கோள்) `கரணத்தினமைந்து'1 என்னுஞ் சூத்திரத்து, உடன் சேறல் செய்கையொ டன்ன பிறவும், மடம்பட வந்த தோழிக் கண்ணும்' என்னும் பகுதியில், தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறியதற்கு இச் செய்யுளைக் காட்டினர், நச். `எள்ளல் இளமை'1 என்னுஞ் சூத்திரத்து, `நாம்நகையுடையம் நெஞ்சே நம்மொடு, தான் வருமென்ப தடமென்தோளி' என்பது பிறர் மடம் பொருளாக, நகை தோன்றியது என்றனர், பேராசிரியர். 122. குறிஞ்சி (தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொற்றது. தோழி சொல்லெடுப்பத் தலைமகள் சொல்லியதூஉமாம்.) 2இரும்பிழி மாரி அழுங்கல் மூதூர் விழவின் றாயினுந் துஞ்சா தாகும் மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின் வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள் 5. பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின் துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர் இலங்குவேல் இளையர் துஞ்சின் வையெயிற்று வலஞ்சுரித் தோகை ஞாளி 3மகிழும் அரவவாய் ஞமலி 4மகிழாது மடியின் 10. பகலுரு 5உறழ நிலவுக்கான்று விசும்பின் அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே திங்கள் கல்சேர்பு கனையிருள் மடியின் இல்எலி வல்சி வல்வாய்க் கூகை கழுதுவழங் கியாமத் தழிதகக் குழறும் 15. வளைக்கட் சேவல் வாளாது மடியின் மனைச்செறி கோழி மாண்குரல் இயம்பும் எல்லாம் மடிந்த காலை யொருநாள் நில்லா நெஞ்சத் தவர்வா ரலரே. அதனால் அரிபெய் புட்டில் ஆர்ப்பப் பரிசிறந்து 20. ஆதி போகிய பாய்பரி நன்மான் நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் கல்முதிர் புறங்காட் டன்ன பல்முட் டின்றால் தோழிநங் களவே. - பரணர். (சொ-ள்.) 23. தோழி-, 1-18. மாரி இரும்பிழி இவ்அழுங்கல் மூதூர் - மழையை ஒத்தமிக்க கள்ளினையும் ஆரவாத்தினையுமுடைய இந்த முதிய ஊரானது, விழவு இன்று ஆயினும் - விழா இல்லையாயினும், துஞ்சாது ஆகும் - துயிலப் பெறாதாகும், மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின் - வளஞ் சான்ற கடைத் தெருவும் ஏனைய தெருக் களும் ஒருங்கே உறங்கி ஒலியடங்கினும், வல் உரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள் - வலிய ஒலியுடன் கூடிய கொடிய சொற்களை யுடைய அன்னை உறங்காள், பிணி கோள் அரும்சிறை அன்னை துஞ்சின் - பிணித்தலைக் கொண்ட அரிய சிறையினைப் போன்ற அன்னை உறங்கினும், துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர் - துயிலாத கண்களை யுடையராய் ஊர்காவலர் விரைந்து சுழல்வர், இலங்குவேல் இளையர் துஞ்சின் - விளங்கும் வேலினராய அக் காவலர் துஞ்சினும், வைஎயிற்று வலம் சுரித்தோகை ஞாளி மகிழும் - கூரிய பல்லினையும் வலமாகச் சுரிதலுடைய வாலினையுமுடைய நாய் குரைக்கும், அரவ வாய் ஞமலி மகிழாது மடியின் - ஒலிமிக்க வாயினையுடைய நாய் குரையாது உறங்கினும், பகல் உரு உறழ நிலவுக் கான்று - பகலின் ஒளியினை யொக்க நிலவினைத் தந்து, விசும்பின் அகல்வாய் மண்டிலம் நின்று விரியும் - வானின்கண் அகற்சி வாய்ந்த மதியம் விளங்கிப் பரவும், திங்கள் கல் சேர்பு கனையிருள் மடியின் - திங்கள் மேற்குமலையினை அடைந்து மிக்க இருள் தங்கின், இல் எலி வல்சி வல் வாய்க்கூகை - இல்லிலுள்ள எலியை இரையாகக் கொண்ட வலிய வாயினதான கூகையின் சேவல், கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும் - பேய்கள் திரியும் நள்ளிரவில் அழிவு உண்டாகக் குழறும், வளைக்கண் சேவல் வாளாது மடியின் - பொந்தில் வாழும் அச் சேவல் வறிதே உறங்கின், மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும் - மனையிற்றங்கிய கோழிச்சேவல் மாண்புற்ற குரலை எழுப்பிக் கூவும், எல்லாம் மடிந்த காலை ஒருநாள் - ஒருநாள் இவை யெல்லாம் ஒழிந்த காலத்தும், நில்லா நெஞ்சத்து அவர் வாரலர் - நிலைபெறாத நெஞ்சினையுடைய நம் தலைவர் வருதலிலர்; 18-23. அதனால்-, நம் களவு - நமது இந்தக் களவொழுக்கம், அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து - பரல் பெய்துள்ள கெச்சை ஒலிக்க வேகத்தால் சிறந்து, ஆதி போகிய - ஆதி யெனும் கதியிலே தேர்ச்சி யுற்ற, பாய்பரி நன்மா - பாயும் செலவினையுடைய நல்ல குதிரைகளை யுடைய, தித்தன் - தித்தன் என்பானது, நொச்சிவேலி - மதிலாகிய வேலியையுடைய, உறந்தை - உறையூரைச் சூழ்ந்துள, கல்முதிர் புறங்காடு அன்ன - கற்கள் நிறைந்த காவற் புறங்காடு போன்ற, பல் முட்டின்று - பல தடைகளையுடையதாகின்றது. (முடிபு) தோழி! மூதூர் துஞ்சாதாகும்; ஆவணம் மறுகு மடியின் அன்னை துஞ்சாள்; அன்னை துஞ்சில் காவலர் கடுகுவர்; இளையர் துஞ்சின் ஞாளிமகிழும்; ஞமலி மடியின் மண்டிலம் விரியும்; திங்கள் மடியின் கூகை குழறும்; சேவல் மடியின் கோழி குரலியம்பும்; எல்லாம் மடிந்த காலை அவர் வாரலர். அதனால் நம் களவு தித்தன் உறந்தைப் புறங்காட்டன்ன பல் முட்டின்று. (வி-ரை) கள்ளின் மிகுதியைக் குறித்தற்கு "சேறுசெய் மாரியி னளிக்குநின், சாறுபடு திருவி னனைமகி ழானே"1 எனப் பிறரும் மாரியை உவமை கூறியுள்ளா ராகலின், `இரும்பிழி மாரி' எனப் பாடங் கொள்ளப்பட்டது. `மகாஅர்' என்னும் பாடத்திற்கு, மாக்கள் என நலிந்து பொருள் கொள்ளல் வேண்டும். கள்ளுண் பாரை மிகவுடைமையின் ஆரவாரமுடைய ஊர் என்க. விழவின் றாயினும் என்றதனால் விழா நிகழ்தலில் துஞ்சாமையும் பெறப் பட்டது. ஆவணமும் மறுகு மென்க. ஈன்று புறந்தந்த அன்னையையும் `வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை,' யென வெறுத்துரைக்குமாறு செய்யும் காதலின் பெற்றியை யாரே அறியவல்லர்! தோகை யென்றது ஈண்டு வாலினைக் குறித்தது. மகிழ்தல் - மகிழ்ந்து குரைத்தல். இருள் மடியின் - இருள் தங்கின். யாமத்து மென்னும் உம்மை தொக்கது. வளை - பொந்து. புட்டில் - சதங்கை; கெச்சை : "அரிபுனை புட்டிலும்"2, "நூபுரப் புட்டில்" என்னுமிடங்களில் நச்சினார்க்கினிய ருரைத்தமை காண்க. ஆதி - குதிரையின் நேரோட்டம் : `ஆதிக்கொளீஇ'3 என்புழி, `ஆதிமாதி யென்பவற்றுள் ஆதி - நெடுஞ்செலவு' என்றார் நச்சினார்க்கினியர். (மே-ள்) `குடையும் வாளும்'4 என்னுஞ் சூத்திரத்து, நொச்சி யாவது - காவல் ..... அது மதிலைக் காத்தலும் உள்ளத்தைக் காத்தலுமென இருவர்க்குமாயிற்று. இக் கருத்தானே, `நொச்சிவேலித் தித்தன் உறந்தை' என்றார் சான்றோரும் என்றும், `இருவகைக் குறிபிழைப்பாகிய விடத்தும்'5 என்னுஞ் சூத்திரத்து, `காணா வகையிற் பொழுது நனி யிகப்பினும்' என்னும் பகுதியில் இப்பாட்டினைக் காட்டி, `என்றது தாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, காவலர் கடுகுதல், நிலவு வெளிப்படுதல், நாய் துஞ்சாமை போல்வனவற்றால் தலைவன் குறியின்கண் தலைவி வரப்பெறாமல் நீட்டித்தலாம்' என்றும் உரைத்தனர், நச். இறையனார் களவிய லுரையாசிரியர் "காம மிக்க"6 என்னுஞ் சூத்திரத்துக் `காப்புச் சிறை மிக்க கையறு கிளவியும்' என்னும் பகுதியில் இப்பாட்டினை யெடுத்துக் காட்டி, இதனைச் சிறை காவல் எல்லாம் வந்த செய்யுள் என்றனர். `முட்டு வயிற் கழறல்'7 என்னுஞ் சூத்திரத்து, முட்டு வயிற் கழறல் என்னும் மெய்ப் பாட்டிற்கு `நொச்சி வேலி..... தோழி நங்களவே' என்ற அடிகளை எடுத்துக்காட்டி, இது தலைமகன் கேட்பக் கழறி யுரைத்தது என்று உரைத்தனர், பேரா. 123. பாலை (தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) உண்ணா மையின் 1உயங்கிய மருங்கின் ஆடாப் படிவத் தான்றோர் போல வரைசெறி சிறுநெறி நிரைபுடன் செல்லுங் கான யானை கவினழி குன்றம் 5. இறந்துபொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த சில்லைங் கூந்தல் நல்லகம் பொருந்தி ஒழியின் வறுமை யஞ்சுதி அழிதக 2உடைமதி வாழிய நெஞ்சே நிலவென நெய்கனி நெடுவேல் எஃகிலை யிமைக்கும் 10. மழைமருள் பஃறோல் மாவண் சோழர் கழைமாய் காவிரிக் கடல்மண்டு பெருந்துறை இறவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங்கட லோதம் போல 3ஒன்றில் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். (சொ-ள்) 8. நெஞ்சே வாழிய-, 1-5. உண்ணாமையின் உயங்கிய மருங்கின் - உண்ணாமையாலே வாடிய வயிற்றினையும், ஆடாப் படிவத்து ஆன்றோர் போல - நீராடாத விரதத்தினையுமுடைய தவத்தினர்போல, வரை செறி சிறுநெறி நிரைபு உடன் செல்லும் - மலைகள் செறிந்த சிறிய நெறிகளிலே நிரைந்து சேரச் செல்லும், கான யானை கவின் அழி குன்றம் - காட்டு யானைகள் அழகு அழியும் இடமாய குன்றத்தினை, இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் - கடந்து பொருள் ஈட்டி வருதலும் செய்திலை; 5-3. சிறந்த சில் ஐங்கூந்தல் நல் அகம் பொருந்தி - சிறப்புற்ற சிலவாகிய ஐம் பகுதியையுடைய கூந்தலையுடைய நம் தலைவியின் நல்ல ஆகத்திற் பொருந்தி ஒழியின் - மனையில் தங்கிவிடினும், வறுமை அஞ்சுதி - வறுமையை அஞ்சாநின்றாய்; 8-14. சென்று தரு பொருட்கு - சுர நெறிகளிற் சென்று ஈட்டிவரும் பொருட்காக, நிலவு என - நிலவுபோல், எஃகு இலை இமைக்கும் - கூரிய இலை விளங்கும், நெய்கனி நெடுவேல் - நெய்மிக்க நெடிய வேலினையும், மழை மருள் பல்தோல் - கரிய மேகம் போன்ற நிறமுடைய பல கிடுகுகளையுமுடைய, மாவண் சோழர் - பெரிய வண்மை வாய்ந்த சோழருடைய, கழைமாய் காவிரிக் கடல் மண்டு பெருந்துறை - ஓடக் கோலும் மறையும் நீத்தத்தையுடைய காவிரி கடலில் மண்டும் பெருந்துறையின் கண்ணே, இறவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங் கடல் ஓதம்போல - இறா மீனொடு வந்து மாலையோடு மீளும் பெரிய கடல் நீர்போல, ஒன்றில் கொள்ளாய் - போதல் ஒழிதல் எனும் இரண்டினொன்றில் உறுதி கொண்டிலை; 7-8. அழிதகவு உடைமதி - நீ வருந்துதலை உடையை யாவாய். (முடிபு) நெஞ்சே! குன்றம் இறந்து பொருள்தருதலும் ஆற்றாய்; சில்லைங் கூந்தல் நல்லகம் பொருந்தி ஒழியின் வறுமை யஞ்சுதி; சோழர் காவிரிக் கடன்மண்டு பெருந்துறை ஓதம் போலச் சென்று தருபொருட்கு ஒன்றில் கொள்ளாய்; அழிதக உடைமதி. (வி-ரை) "உண்ணாமையின் உயங்கிய மருங்கின், ஆடாப்படிவத் தான்றோர்போல...... கானயானை கவினழி" என்னும் இவ்வுவமை, "உண்ணா நோன்பொ டுயவல் யானையின், மண்ணா மேனியன் வருவோன்"1 என, மணிமேகலையில் எதிர்நிலையாக வந்திருத்தல் காண்க. அகம் - ஆகம். உடைமதி - உடையை யாகுதி. எஃகிலை இமைக்கும் வேல் என மாறுக. கழை - மூங்கில் : ஓடக் கோல். மாய் - மறைக்கு மெனலுமாம். கோதை - நீராடுவார் களைந்திட்டவை. ஓதம் - அலையுமாம். நெஞ்சு செல்லுதல் ஒழிதல் என்னும் இரண்டனுள் ஒன்றைத் துணியாது பொருளை யுள்ளிச் செலவயர்தலும் தலைவியது ஆகத்தையுள்ளிச் செலவொழிதலுமாக உழலுதற்கு ஓதம் இறவொடு வருதலும் பின்பு அதனை விடுத்துக் கோதையொடு பெயர்தலும் உவமமாயின. (மே-ள்) `கரணத்தி னமைந்து முடிந்த காலை'2 என்னுஞ் சூத்திரத்து, `வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்' என்னும் பகுதி யில், அஃதாவது, பிரிவு ஒருப்பட்ட பின்பு போவேமோ தவிர்வேமோ எனச் சொல்லும் மன நிகழ்ச்சி என்றுரைத்து, அதற்கு இச் செய்யுளை உதாரணமாகக் காட்டினர், இளம்பூரணர். அச் சூத்திரத்து அப் பகுதியில் இச் செய்யுளைக் காட்டி, இது போவேமோ தவிர்வேமோ என்றது என்றும், `நோயும் இன்பமும்'3 என்னுஞ் சூத்திரத்து, உண்ணாமையின் என்னும் அகப்பாட்டினுள் `இறவொடு வந்து கோதையொடு பெயரும், பெருங்கட லோதம் போல, ஒன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே' என்றவழி, `அழிதக வுடைமதி வாழிய நெஞ்சே' என்றதனான், நிலையின்றா குதியென நெஞ்சினை உறுப்புடையது போலக் கழறி நன்குரைத்த வாறும், ஓதத்தையும் நெஞ்சையும் உயர்திணையாக்கி உவம வாயிற் படுத்தவாறும் காண்க என்றும் உரைத்தனர், நச். 124. முல்லை (தலைமகன் தேர்ப்பாகற் குரைத்தது.) நன்கலங் களிற்றொடு நண்ணார் ஏந்தி வந்துதிறை கொடுத்து வணங்கினர் வழிமொழி சென்றீ கென்ப வாயின் வேந்தனும் நிலம் 1வருத் துறாஅ ஈண்டிய தானையொடு 5. இன்றே புகுதல் வாய்வது நன்றே மாட 2மாணகர்ப் பாடமை சேக்கைத் துனிதீர் கொள்கைநங் காதலி இனிதுறப் பாசறை வருத்தம் வீட நீயும் மின்னுநிமிர்ந் தன்ன பொன்னியற் புனைபடைக் 10. கொய்சுவல் புரவிக் கைகவர் வயங்குபரி வண்பெயற்கு அவிழ்ந்த பைங்கொடி முல்லை வீகமழ் நெடுவழி ஊதுவண் டிரியக் காலை யெய்தக் கடவுமதி மாலை அந்திக் கோவலர் அம்பணை யிமிழிசை 15. அரமிய வியலகத் தியம்பும் நிரைநிலை ஞாயில் நெடுமதில் ஊரே. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார். (சொ-ள்) 1-5. நண்ணார் நன்கலம் ஏந்தி வந்து - பகைவர் நல்ல அணி களைக் கொண்டு வந்து, களிற்றொடு திறை கொடுத்து வணங்கினர்- அவற்றைக் களிற்றொடு திறையாகக் கொடுத்து வணங்கி, வழி மொழிந்து சென்றீக என்ப ஆயின் - பணிமொழி கூறிச் சென்றருள்க என்பாராயின், வேந்தனும் நிலம் வருத்துறாஅ ஈண்டிய தானையோடு - நம் அரசனும் பார மிகுதியாற் புவியினை வருத்துதல் செய்து திரண்ட சேனையுடன், இன்றே புகுதல் நன்றே வாய்வது - இன்றே தன் ஊர்க்கேகல் பெரிதும் உண்மையாகும்; 6-8. மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கை - மாடங்களால் மாண்புற்ற நமது மாளிகையில் பெருமை அமைந்த படுக்கையின் கண்ணுள்ள, துனி தீர் கொள்கை நம் காதலி இனிது உற - வெறுப்பற்ற கொள்கையினையுடைய நம் தலைவி இனிமை உறவும், பாசறை வருத்தம் வீட - நமக்குப் பாசறைக்கண் மேவிய வருத்தங்கள் ஒழியவும்; 8-10. (பாகனே) நீயும், மின்னு நிமிர்ந்த அன்ன - மின்னல் பரந்து விளங்கினாலொத்த ஒளியினையுடைய, பொன் இயல் புனைபடை - பொன்னாலியன்றி அலங்கரிக்கப்பட்ட கலனையையும், கொய் சுவல் - கொய்யப்பெற்ற பிடரி மயிரினையும், கைகவர் வயங்குபரி - செலுத்தும் கை விரும்பும் விளக்கம் அமைந்த செலவினையும் உடைய, புரவி - குதிரையை; 11-13. காலை - செலுத்துங் காலத்தே, வண்பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை - வளம் மிக்க மழையால் மலர்ந்த பசிய முல்லைக் கொடியின், வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய - மலர் மணக்கும் நெடிய வழியில் ஊதும் வண்டுகள் இரிந்தோட; 13-16. அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை - அந்திக் காலத்தே இடையரது அழகிய குழலின் ஒலிக்கும் இசை, அரமியவியல் அகத்து இயம்பும் - நிலாமுற்றமாய அகன்றவிடத்தே வந்து ஒலிக்கும், நிரைநிலை ஞாயில் நெடு மதில் ஊர் - வரிசையாக நிற்கும் சூட்டுக் களையுடைய நீண்ட மதில் சூழ்ந்த ஊரின்கண், மாலை எய்தக் கடவுமதி - மாலைப் போழ்தில் நாம் எய்திடச் செலுத்துவாயாக. (முடிபு) நண்ணார் திறைகொடுத்துச் சென்றீக என்பராயின், வேந்தனும் தானையொடு இன்றே புகுவது வாய்வது; ஆதலின், பாகனே நீயும் காதலி இனிது உறவும், வருத்தம் வீடவும், புரவியை, வண்டுஇரிய, நெடுமதில் ஊர் மாலை எய்தக் கடவுமதி. (வி-ரை) சென்றீக - செல்லுக. `என் போர்யானை வந்தீக'1 `வினை கலந்து வென்றீக வேந்தன்'2 என்னுமிடங்களிற்போல வியங்கோள். சென்றீ கென்ப - அகரம் தொக்கது. வருத்துறாஅ - தான் கைப்பற்றிய நாட்டிலுள்ளாரை வருத்துறாமல் என்றுமாம். வகுத்துறா என்பது பாடமாயின், நிலத்தை வகுத்துக் கொண்டு என்க. சேக்கைத் துனிதீர் கொள்கை நம் காதலி என்றதனால், தலைவனைப் பிரிந்த வருத்தத்தை, அவன் கூறிய சொற் பிழையாத கற்பினால் மாற்றியிருப்பவள் என்பது பெறப்பட்டது. `மின்னுநிமிர்ந் தன்ன வயங்குபரி' என இயைத்து உரைத்தலுமாம். பெயற்கு அவிழ்ந்த, வேற்றுமை மயக்கம். காலை - பொழுது; `கழகத்துக் காலை புகின்'3 என்புழிப்போல. அந்திக் காவலர் அம்பணை என்னும் பாடத்திற்கு, அந்திப் பொழுதில் காத்தல் செய்யும் காவலரது அழகிய முரசு எனப் பொருள் கொள்க. அரமியம் : வடசொற் சிதைவு. ஞாயில் - சூட்டு; ஏவறை. (மே-ள்) `மேலோர் முறைமை'4 என்னுஞ் சூத்திரத்து `நன்கலங் களிற்றொடு நண்ணா ரேந்தி, வந்துதிறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து' என்புழி, நன்கலந் திறைகொடுத்தோ ரென்றலிற் பகைவயிற் பிரிவே பொருள் வருவாயாயிற்று என்றனர், நச். 125. பாலை (1தலைமகன் வினைமுற்றி மீண்டமை யுணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது.) அரம்போழ் அவ்வளை தோள்நிலை நெகிழ நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி இரங்காழ் அன்ன அரும்புமுதிர் ஈங்கை ஆலி அன்ன வால்வீ தாஅய் 5. வைவால் ஓதி மையணல் ஏய்ப்பத் தாதுறு குவளைப் போதுபிணி அவிழப் படாஅப் பைங்கண் பாவடிக் கயவாய்க் கடாஅம் மாறிய யானை போலப் பெய்துவறி தாகிய பொங்குசெலற் கொண்மூ 10. மைதோய் விசும்பின் மாதிரத்து உழிதரப் பனியடூஉ நின்ற பானாள் கங்குல் தமியோர் மதுகை தூக்காய் தண்ணென முனிய அலைத்தி முரணில் காலைக் கைதொழு மரபில் கடவுள் சான்ற 15. செய்வினை மருங்கில் சென்றோர் வல்வரின் விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான் வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார் சூடா வாகைப் பறந்தலை ஆடுபெற 20. ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த பீடில் மன்னர் போல ஓடுவை மன்னால் வாடைநீ யெமக்கே. - பரணர். (சொ-ள்) 3-13. இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை ஆலி அன்ன வால் வீ தாஅய் - இரவம் வித்தினை ஒக்கும் அரும்பு முதிர்ந்த ஈங்கையினது ஆலங்கட்டி போலும் வெள்ளிய பூக்கள் தாவ, வை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப தாதுஉறு குவளைப் போது பிணி அவிழ - கூரிய வாலினையுடைய ஓந்தியின் கரிய தாடியைப் ஒத்திடத் தாதுமிக்க குவளையின்போது பிணிப்பு நெகிழவும், படாஅப் பைங்கண் பா அடிக் கய வாய் கடாஅம் மாறிய யானை போல - உறங்காத பசிய கண்ணினையும் பரந்த அடியினையும் பெரிய வாயினையும் உடைய மதம் ஓய்ந்த யானையைப் போல, பெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்மூ - நீரினைப் பெய்து வறுமை எய்திய பொங்கிய செலவினையுடைய மேகம், மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர - கருமை பொருந்திய வானின் திசைகளில் திரியவும், பனி அடூஉ நின்ற பால் நாள் கங்குல் - பனி நலிகின்ற நடு இரவின் இருளில், தமியோர் மதுகை தூக்காய் - தனிமை எய்தியவர் பொறுக்கும் வலியளவை ஆராயாது, முரண் இல் காலை - மாறுபாடு இல்லாத காலத்தும், தண்ணென முனிய அலைத்தி - வெறுக்கும்படி தண்ணென்று வீசி அலைக்கின்றாய்; 1-2. நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி - முற்றுப் பெறாத இல்வாழ்க்கையை முற்றுவிக்க வேண்டி, அரம் போழ் அ வளைதோள் நிலை நெகிழ - அரத்தாற் பிளக்கப்பட்ட அழகிய வளைகள் எம் தோளில் நிற்றலினின்று நெகிழ்ந்தும்வீழ; 14-15. கைதொழு மரபில் கடவுள் சான்ற - கையாற்றொழும் மரபினையுடைய கடவுட்டன்மை நிரம்பிய, செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின் - ஓதல் வினையிடத்துச் சென்ற தலைவர் விரைந்து வருவரேல்; 16-22. வாடை - வாடையே, விரி உளை பொலிந்த பரி உடை நல்மான் - விரிந்த தலையாட்டத்தாற் சிறந்த விரைந்த செலவினை யுடைய நல்ல குதிரைப் படையுடன் கூடிய, வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த - பகைவர்க்கு அச்சந் தரும் சேனையுடன் தான் விரும்பும் புலத்தில் தங்கிய, பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார் - பெரிய வளத்தையுடைய கரிகால் வளவன் முன்னிற்றலை ஆற்றாராய், சூடா வாகைப் பறந்தலை - வாகைப் பறந்தலை எனும் போர்க்களத்தின்கண், ஆடுபெற - அவன் வெற்றி பெற, ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த - தமது ஒன்பது குடைகளையும் நன்றாகிய பகலிற் போகட்டுச் சென்ற, பீடு இல் மன்னர் போல - பெருமை யில்லாத மன்னர் ஒன்பதின்மரையும் போல, நீ எமக்கு ஓடுவை மன் - நீ எமக்குத் தோற்று மிகவும் விரைந்து ஓடுவை. (முடிபு) வாடை! நீ குவளைப்போது அவிழ, மேகம் உழிதர, பானாட் கங்குல் முனிய அலைத்தி; செய்வினை மருங்கின் சென்றோர், வரின், கரிகால் வளவன் வாகைப் பறந்தலை ஆடுபெற, ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த பீடில் மன்னர்போல, நீ எமக்குத் தோற்று விரைந்து ஓடுவை. (வி-ரை) நிரம்பா வாழ்க்கையாவது, துறவு பூண்டு மெய்யுணர்ந்து வீடுபெறுதல் இல்லறத்தின் பயனாகலின், அவை நிகழாவழி நிரம்புதல் இல்லாத வாழ்க்கை என்பது நச்சினார்க்கினியர் கருத்து. இர - ஒரு மரம்; இஃது, இரா, இரவு, இரவம் எனவும் வழங்கும். தாஅய். தாவ எனத் திரிக்க. ஓதி - இடைக்குறை. பொங்கு செலல் : பொங்குதல் - விளங்கிப் பரத்தல்; உயர்தலுமாம். தமியோர் - தன்மையிற் படர்க்கை. கடவுட் சான்ற செய்வினை என்றமையால், வினை ஓதலாயிற்று. சூடாவாகை - வாகைப் பறந்தலைக்கு வெளிப்படை. (மே-ள்) `மேவிய சிறப்பின்'1 என்னுஞ் சூத்திரத்து, இச்செய்யுளைக் கூறி, இது தேவர் காரணமாகப் பிரியும் பிரிவு என்றனர், இளம். `பனியெதிர் பருவமும்'2 என்னுஞ் சூத்திரத்து, `உரித்து என்றதனாற் கூதிர் பெற்ற யாமமும் முன்பனி பெற்று வரும்' என்று கூறி, `பனியடூஉ நின்ற பானாட் கங்குல்..... முரணில் காலை' என்பதைக் காட்டி, முன் பனியாமம் குறிஞ்சிக்கண் வந்தது என்றும், `அவற்றுள் ஓதலுந் தூதும்'3 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் காட்டி, இதனுட் பலருங் கை தொழும் மரபினையுடைய கடவுட்டன்மை யமைந்த செய்வினை யெனவே, ஓதற் பிரிவென்பது பெற்றாம் என்றும், மேலும், `சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே'4 என்பதனாற் கிழவனுங் கிழத்தியும் இல்லறத்திற் சிறந்தது பயிற்றாக்கால் இறந்ததனாற் பயனின்றாதலின், இல்லறம் நிரம்பா தென்றற்கு, நிரம்பா வாழ்க்கை' என்றார் என்றும், `வேண்டிய கல்வி'5 என்னுஞ் சூத்திரத்து, ஓதற் பிரிவிற்குக் கால வரையறை யின்றென்று கூறி, அரம்போ ழவ்வளை' என்னும் பாட்டினுள், பானாட் கங்குல்...... முனிய வலைத்தி'... கடவுட் சான்ற; செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின், ஓடுவை' என்றது, இராப்பொழுது அகலாது நீட்டித்தற்கு ஆற்றளாய்க் கூறினாள் என்று உணர்க என்றும் கூறுவர். நச். 126. மருதம் ( 1. உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. (1). அல்ல குறிப்பட் டழிந்ததுமாம். (2). தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதுமாம்.) நினவாய் செத்து நீபல உள்ளிப் பெரும்புன் பைதலை வருந்தல் அன்றியும் மலைமிசைத் தொடுத்த மலிந்துசெலல் நீத்தம் தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் 5. கடற்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாற்று 6அறல்வார் நெடுங்கயத்து அருநிலை கலங்க மாலிருள் நடுநாள் போகித் தன்ஐயர் காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்கு அவ்வாங்கு உந்தி அஞ்சொல் பாண்மகள் 10. நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில் பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள் கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம் பயங்கெழு வைப்பிற் பல்வேல் எவ்வி நயம்புரி நன்மொழி அடக்கவும் அடங்கான் 15. பொன்னிணர் நறுமலர்ப் புன்னை வெஃகித் திதியனொடு பொருத அன்னி போல விளிகுவை கொல்லோ நீயே கிளியெனச் சிறிய மிழற்றுஞ் செவ்வாய்ப் பெரிய கயலென அமர்த்த உண்கண் புயலெனப் 20. புறந்தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் மின்னேர் மருங்குல் குறுமகள் பின்னிலை விடாஅ மடங்கெழு நெஞ்சே. - நக்கீரர். (சொ-ள்) 17-22. கிளி எனச் சிறிய மிழற்றும் செவ்வாய் - கிளி போல மென் சொற்களைக் கூறும் சிவந்த வாயினையும், பெரிய கயல் என அமர்த்த உண்கண் - பெரிய கயல்மீன் என்னுமாறு ஒன்றையொன்று பொருத மையுண்ட கண்களையும், புயல் என புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் - மேகம் என்னும் படி முதுகில் தாழ்ந்து இருண்டு விளங்கும் கொத்தாய ஐந்து பகுப்பை யுடைய கூந்தலையும், மின் நேர் மருங்குல் - மின்னலை யொத்த இடையினையும் உடைய, குறுமகள் பின் நிலை விடாஅ மடம்கெழு நெஞ்சே - இளைய தலைவியின் பின்னே தாழ்ந்து நிற்றலை விடாத அறியாமை மிக்க நெஞ்சே! 1-2. நீ நின வாய் செத்து - நீ நின் எண்ணங்களை உண்மையானவை எனக் கருதி, பல உள்ளி - பலவும் எண்ணி, பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும் - மிகப் பெரிய துன்பத்தினையுடையையாய் வருந்துதல் அன்றியும்; 3-13. மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம் - மலை உச்சியினின்று தொடர்புற்று வீழ்ந்த மிக்குச் செல்லுதலையுடைய வெள்ளத்தால், தலைநாள் மாமலர் தண் துறை தயங்க - முதல் நாட் பூத்த சிறந்த மலர் தண்ணிய துறைகளில் விளங்க, கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேர் யாற்று - கடற்கரையினைக் கரைத்திடும் காவிரியாய பெரிய ஆற்றினது, அறல்வார் நெடுங்கயத்து அருநிலை கலங்க - கரு மணல் ஒழுகும் நீண்ட மடுவின் நிலைக்கொள்ளாத நீர் கலங்குமாறு, மால் இருள் நடுநாள் போகி - கரிய இருளினையுடைய நடு இரவில் சென்று, தன் ஐயர் காலை தந்த கணைக் கோட்டு வாளைக்கு - தன் தமையன்மார் விடியலிற்கொணர்ந்த திரண்ட கோடுகளையுடைய வாளை மீனுக்கு விலையாக, அவ் வாங்கு உந்தி அம்சொல் பாண்மகள் - அழகிய வளைந்த உந்தியினையும் அழகிய சொற்களையுமுடைய பாண்மகள், நெடுங்கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் - நீண்ட கொடிகள் அசையும் கள் மிக்க தெருவில், பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள் - பழைய செந்நெல்லை முகந்து தருதலைக் கொள்ளாளாகி, கழங்கு உறழ் முத்தமொடு நல்கலன் பெறூஉம் - கழங்கினை ஒத்த பெரிய முத்துக்களுடன் சிறந்த அணிகளையும் பெறும், பயம்கெழு வைப்பில் - வளம் மிக்க ஊர்களையுடைய, பல்வேல் எவ்வி - பல வேற் படைகளையுடைய எவ்வியென்பான்; 14-17. நயம்புரி நன்மொழி அடக்கவும் அடங்கான் - நீதியை உட்கொண்ட சிறந்த மொழிகளைக் கூறித் தணிக்கவும் தணியானாகி, பொன் இணர் நறுமலர் புன்னை வெஃகி - பொன் போலும் கொத்துக் களாகிய நறிய மலர்களையுடைய (காவன் மரமாய) புன்னையைக் குறைக்க விரும்பி, திதியனொடு பொருத அன்னிபோல, திதியன் என்பானொடு போரிட்டிறந்த அன்னி என்பானைப்போல, நீ விளிகுவை கொல்லோ - நீ இறந்து படுவை போலும். (முடிபு) குறுமகள் பின்னிலை விடா நெஞ்சே! நீ பெரும் புன் பைதலையாய் வருந்தலன்றியும், புன்னை வெஃகித் திதியனொடு பொருத அன்னிபோல விளிகுவை கொல்லோ! தன் ஐயர் தந்த வாளைக்குப் பாண்மகள் நெல்லின் முகவை கொள்ளாள் முத்தமொடு நன்கலன் பெறூஉம் வைப்பின் எவ்வி என்க. (வி-ரை) நின - நின்னுடையன; குறிப்புவினைப்பெயர். புன்மை - துன்பம். புன் பைதலை ஒரு பொருட்பன்மொழி. தயங்க - அசைய என்றுமாம். வாளை துஞ்சுங் காலத்துப் பற்றுதற் பொருட்டு மாலிருள் நடுநாட் போயினர் என்க. `கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து'1 என வருதலுங் காண்க. நெடுங்கொடி - கள் விற்குமிடத்தில் எடுத்தவை. முகவை - முகந்து அளக்கப்பட்டவை. நன்மொழி கூறி என ஒரு சொல் வருவிக்க. விளிகுவை கொல்லோ - விளிகுதலுஞ் செய்வையோ என உம்மை விரித்துரைக்க. மின் ஏர் எனப் பிரித்து மின் போலும் அழகிய என்றுரைத்தலுமாம். `உணர்ப்புவரை யிறப்பினும் செய்குறி பிழைப்பினும், புலத்தலும் ஊடலும் கிழவோற்குரிய'2 என்னுஞ் சூத்திரத்தாற் கற்பின்கண் தலைவற்கும் ஊடல் நிகழும் எனக்கொள்க. பின் இரண்டு துறைகளுமாயின், மருதத்துக் களவு நிகழ்ந்ததென்று கொள்க. இது திணை மயக்கம். (மே-ள்) `மெய்தொட்டுப் பயிறல்'3 என்னுஞ் சூத்திரத்து. `மற்றைய வழியும்' என்னும் பகுதிக்கு இப்பாட்டினை எடுத்துக் காட்டி, இது நெஞ்சினை இரவு விலக்கியது என்றனர். நச். 127. பாலை (பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.) இலங்குவளை நெகிழச் சாஅய் அல்கலும் கலங்கஞர் உழந்து நாம்இவண் ஒழிய வலம்படு முரசின் சேர லாதன் முந்நீர் ஓட்டிக் கடம்பறுத் திமயத்து 5. முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார் பணிதிறை தந்த பாடுசால் நன்கலம் பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல் ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்றவண் 10. நிலந்தினத் துறந்த நிதியத்து அன்ன ஒருநாள் ஒருபகல் பெறினும் வழிநாள் தங்கலர் வாழி தோழி செங்கோல் கருங்கால் மராத்து வாஅல் மெல்இணர் சுரிந்துவணர் பித்தை பொலியச் சூடிக் 15. கல்லா மழவர் வில்லிடந் தழீஇ வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை மொழிபெயர் தேஏத்த ராயினும் பழிதீர் காதலர் சென்ற நாட்டே. - மா மூலனார். (சொ-ள்) 12. தோழி வாழி-, 1-2. இலங்கு வளை நெகிழச் சாஅய் - விளங்கும் கைவளை கழல மெலிந்து, அல்கலும் கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய - நாளும் கலங்கும் துன்பத்தால் வருந்தி நாம் இங்கே தனித்திருக்க; 12-17. செங்கோல் கருங்கால் மராஅத்து வால்மெல் இணர்- சிவந்த கொம்புகளையும் கரிய அடியினையுமுடைய வெண் கடம்பின் வெள்ளிய மெல்லிய பூங்கொத்தினை, சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி - சுரிந்து வளைந்த தலைமயிர் அழகுபெறச் சூடி, கல்லா மழவர் வில் இடம் தழீஇ - அறிவில்லாத மழவர் வில்லினை இடப் பக்கத்தே தழுவிக் கொண்டு, வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை - வழி வருவோரைப் பார்த்திருக்கும் அச்சம் வரும் கவர்த்த வழிகளை யுடைய, மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் - மொழி வேறுபட்ட தேயத்தில் உள்ளார் ஆயினும்; 3-11. வலம்படு முரசின் சேரலாதன் - வெற்றி தங்கிய முரசினை யுடைய சேரலாதன் என்னும் அரசன், முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து - கடல் நாப்பணுள்ள பகைவர்களைப் புறக்கிடச் செய்து அவர் காவன் மரமாகிய கடம்பினை வெட்டி, இமயத்து - இமையமலையில், முன்னோர் மருள வணங்குவில் பொறித்து, தமது முன்னோரை யொப்ப வளைந்த வில்இலச்சினையைப் பொறித்து, மாந்தை நல்நகர் முற்றத்து - மாந்தை எனும் ஊரிலுள்ள தனது நல்ல மனையின் முற்றத்து, ஒன்னார் பணி திறை தந்த - பகைவர் பணிந்து திறையாகத் தந்த, பாடு சால் நன்கலம் - பெருமை சான்ற நல்ல அணிகலங்களுடன், பொன் செய் பாவை வயிரமொடு - பொன்னானியன்ற பாவையினையும் வயிரங்களையும், ஆம்பல் ஒன்று வாய் நிறையக் குவைஇ - ஆம்பல் எனும் எண்ணளவு இடம் நிறையக் குவித்து, அன்று அவண் நிலம் தினத்துறந்த நிதியத்தன்ன - அக்காலத்தே அவ்விடத்தே நிலம் தின்னும் படி விட்டொழித்த நிதியம் போன்ற பொருளை, ஒரு நாள் ஒரு பகல் பெறினும் - ஒரு நாளில் ஒரு பகற் பொழுதிற் பெற்றாலும்; 18. பழிதீர் காதலர் - குற்றமற்ற நம் காதலர், சென்ற நாட்டு - தாம் சென்றுள்ள அந்நாட்டில்; 11-12. வழி நாள் தங்கலர் - பிற்றை ஞான்ற தங்காது வருவர். (முடிபு) தோழி! வாழி! நாம் இவண் ஒழிய, நம் தலைவர், மொழி பெயர் தேஎத்தர் ஆயினும் சேரலாதன் குவைஇ நிலம் தினத் துறந்த நிதியத்தன்ன பொருளினை ஒரு நாள் ஒரு பகல் பெறினும் அவர் தாம் சென்ற நாட்டு, வழிநாள் தங்கலராகி மீள்வர். (வி-ரை) முந்நீரோட்டி என்பதற்குக் கடலின்கண் நாவாயைச் செலுத்தியென்று உரைத்தலுமாம். கடம்பறுத்தியற்றிய வலம்படு முரசு எனக் கூட்டி யுரைத்தலுமாம்; என்னை? `சேரலாதன், மால் கடலோட்டிக் கடம்பறுத் தியற்றிய, பண்ணமை முரசு'1 என வருதலின். பணிதிறை - பணிதலாற் றிறையாகத் தந்த என்க. `ஐயம் பல்லென வரூஉ மிறுதி, அல்பெய ரெண்ணினு மாயியல் நிலையும்'2 என்னுஞ் சூத்திரத் தால், ஆம்பல் - ஒரு பேரெண்ணாம் என்க. நிலம் தின என்றது `உண்டற் குரிய வல்லாப் பொருளை, யுண்டன போலக் கூறலும் மரபே'3 என்னுஞ் சூத்திரத்து உம்மையாற் கொள்ளப்படும். நிதியத்தன்ன பொருளென விரித்துரைக்க. 128. குறிஞ்சி (இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.) மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே கொன்றோர் அன்ன கொடுமையோ டின்றே யாமங் 4கொளவரின் கனைஇக் காமங் கடலினும் உரைஇக் கரைபொழி யும்மே 5. எவன்கொல் வாழி தோழி மயங்கி இன்ன மாகவும் நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடுஞ் சூழாது கைம்மிக்கு இறும்புபட் டிருளிய இட்டருஞ் சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் 10. கான நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரி வானந் தலைஇ நீர்வார்பு இட்டருங் கண்ண படுகுழி இயவின் இருளிடை மிதிப்புழி நோக்கியவர் 15. தளரடி தாங்கிய சென்ற தின்றே. - கபிலர். (சொ-ள்) 5. தோழி வாழி-, 1-4. மன்றுபாடு அவிந்து மனை மடிந்தன்று - அம்பலம் ஒலி யடங்க மனைகளும் துயின்றன, கொன்றோர் அன்ன கொடுமை யோடு - கொன்றாலொத்த கொடுமையுடன், இன்று யாமம் கொளவரின் - இன்று நடுயாமம் பொருந்தவரின், காமம் கனைஇ - காமம் செறிந்து, கடலினும் உரைஇ - கடலைக் காட்டினும் பரவி, கரை பொழியும் - கரை கடந்து செல்லும்; 5-7. இன்னம் - ஆகவும் - யாம் இந்நிலையினம் ஆகவும், நன்னர் நெஞ்சம் - நமது நல்ல நெஞ்சம், மயங்கி - மயங்கலுற்று, என்னொடும் நின்னொடும் சூழாது - என்னையும் நின்னையும் உசாவியுணராது, கை மிக்கு - கை கடந்து; 8-11. இறும்புபட் டிருளிய இட்டு அரும் சிலம்பில் - சிறு காடாய் இருண்ட சிறிய செல்லற்கரிய பக்கமலையின்கண் உள்ள, குறும் சுனைக்குவளை வண்டுபடச் சூடி - குறிய சுனையிற் பூத்த குவளைப் பூவினை வண்டு மொய்த்திடச் சூடி, கான நாடன் வரூஉம் - காட்டு நாட்டினையுடைய நம் தலைவன் வருகின்ற, யானைப் புறத்துக் கயிறு அன்ன - யானையின் முதுகிலுள்ள கயிற்றுத் தழும்பை யொத்த, கல்மிசைச் சிறு நெறி - மலை மீதுள்ள சிறிய வழியாகிய; 12-15. மாரி வானம் தலைஇ நீர் வார்பு - மேகம் மழை பெய்த லால் நீர் ஒழுகா நிற்க, இட்டு அரும் கண்ண - செல்லுதற்கரிய சிறிய இடங்களிலுள்ள, படுகுழி இயவில் - படுகுழிகளைக் கொண்ட நெறியில், இருளிடை மிதிப்புழி நோக்கி - இருளின்கண் மிதிக்குமிடத்துப் பார்த்து, அவர் தளர் அடி - அவரது தளராநின்ற அடியை, தாங்கிய இன்று சென்றது - தாங்கும் பொருட்டு இன்று சென்றுவிட்டது; 5. எவன் கொல் - இஃதென்னையோ! (முடிபு) தோழி! வாழி! மன்று பாடவிந்து மனை மடிந்தன்று; காமம் கரை பொழியும்; நாம் இன்னம் ஆகவும் நெஞ்சம் இன்று கான நாடன் வருஉம் நெறிக்கட் படுகுழி இயவின் இருளிடை மிதிப்புழி நோக்கி அவர் தளரடி தாங்கிய சென்றது; இஃது எவன் கொல். (வி-ரை) அவிந்து - அவிய. மனை: ஆகுபெயர். கரைபு ஒழியும் எனப் பிரித்து, முழங்கி யொழியும் என்றலுமாம். ஒழியும், ஈண்டு விடும் என்பதுபோலத் துணிபுப் பொருட்டாய துணைவினை. சிலம்பில் கானநாடன் வரூஉம் சிறு நெறியாகிய படுகுழி யியவின் என்க. யானையும் அதன் புறத்துக் கயிற்றுத் தழும்பும் கல்லிற்கும் அதன் மேலுள்ள சிறு நெறிக்கும் உவமை. கயிற்றை யொத்த சிறு நெறி என்றலுமாம். தலைஇ, வார்பு என்னும் எச்சங்களைத் திரிக்க. நெஞ்சம் தளரடி தாங்கிய சென்றது என்பது, இரவுக் குறிக்கண் தலைவன் வரும் நெறியின் ஏதத்தை வருந்துதல் புலப்படுத்தியவாறு. (மே-ள்) `மறைந்தவற் காண்டல்'1 என்னுஞ் சூத்திரத்து, `பொழுதும் ஆறும் புரைவ தன்மையின், அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும்' என்ற பகுதியில், இச் செய்யுளைக் காட்டி, காமம் கரை பொழியா நிற்கவும், என்ன நன்றி கருதி, இருவரொடுஞ் சூழாது சென்றது நெஞ்சென இரண்டும் (பொழுதும் ஆறும்) கூறினாள். மனைமடிந் தன்றென்பது பொழுது; சிறு நெறி யென்பது ஆறின்னாமை என்றும், `நோயு மின்பமும்'2 என்னும் சூத்திரத்து, `நெஞ்சம்....... தளரடி தாங்கிய சென்றது இன்றே' என்பது, நெஞ்சினை உறுப்புடையது போல் அழுகைபற்றிக் கூறியது என்றும், `பொழுதும் ஆறும்'3 என்னுஞ் சூத்திரத்து, `மன்று பாடவிந்து' என்பது, பொழுது வழுவுதலிற் குற்றங்காட்டியது என்றும் கூறுவர், நச். `முட்டுவயிற் கழறல்'4 என்னுஞ் சூத்திரத்து, அச்சத்தின் அகறல் என்னும் மெய்ப்பாட்டிற்கு, இப் பாட்டினைக் காட்டி, இதன் கருத்தாவது, `நாம் அவர் இருளிடை வருதல் ஏத மஞ்சி அகன்று அவலித்திருப்பவும் என்னையும் நின்னையும் கேளாது என் நெஞ்சு போவானேன் என்றவாறாயிற்று' என்பர், பேரா. 129. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்னென நள்ளென் கங்குல் நடுங்குதுணை யாயவர் நின்மறந் துறைதல் யாவது 5புல்மறந்து அலங்கல் வான்கழை உதிர்நெல் நோக்கிக் 5. கலைபிணை விளிக்குங் கானத் தாங்கண் கல்சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத் தாழிமுதல் கலித்த கோழிலைப் பருத்திப் பொதிவயிற்று இளங்காய் பேடை ஊட்டிப் போகில்பிளந் திட்ட 1பொங்கல் வெண்காழ் 10. நல்கூர் பெண்டிர் 2அல்கல் கூட்டும் கலங்குமுனைச் சீறூர் கைதலை வைப்பக் கொழுப்பா தின்ற கூர்ம்படை மழவர் செருப்புடை அடியர் தெண்சுனை மண்டும் அருஞ்சுரம் அரிய வல்ல வார்கோல் 15. திருந்திழைப் பணைத்தோள் தேன்நாறு கதுப்பின் குவளை உண்கண் இவளொடு செலற்கென நெஞ்சுவாய் அவிழ்ந்தனர் காதலர் அஞ்சில் ஓதி ஆயிழை நமக்கே. - குடவாயிற்கீரத்தனார். (சொ-ள்) 18. அம் சில் ஓதி ஆய் இழை - அழகிய சிலவாகிய கூந்தலையும் ஆராய்ந்த அணிகளையும் உடைய தலைவியே! 1-2. ஒழிந்தபின் - இவளைப் பிரிந்து சென்றபின், உள்ளல் வேண்டும் என - இவளை எண்ணி நாம் இரங்கல் வேண்டிவரும் என்று நினைத்து, நள் என் கங்குல் நடுங்கு துணையாயவர் - நள்ளென்னும் ஒலியினையுடைய நடு இரவில் நடுங்கும் துணையினரான; 17. காதலர் - நம் தலைவர்; 3-14. புல் மறந்து - புல்லைத் தின்னுதலை மறந்து, அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கி - அசையும் நெடிய மூங்கிலினின்று உதிர்ந்த நெல்லைப்பார்த்து, கலைபிணை விளிக்கும் கானத்து ஆங்கண் - கலைமான் தன் பிணையினை அழைக்கும் காட்டிடத்தே, கல்சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பை - பாறையைச் சேர்ந்திருந்த சிதைவுற்ற குடிலில், தாழி முதற் கலித்த கோழ் இலைப் பருத்தி - தாழியிடத்தே தழைத்த கொழுவிய இலையையுடைய பருத்திச் செடியின், பொதி வயிற்று இளங்காய் பேடை ஊட்டி - பருத்த வயிற்றினை யுடைய இளங்காயைப் பேடைகட்கு அருத்தி, போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் - ஆண் பறவைகள் பிளந்து போகட்ட பஞ்சினையுடைய வெள்ளிய கொட்டையை, நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும் - வறுமையுற்ற மகளிர் வைத்துண்ணும் உணவாகச் சேர்க்கும், கலங்கு முனைச் சீறூர் கை தலை வைப்ப - கலங்குதற்கு ஏதுவாய போர் நிகழும் இடங்களையுடைய சீறூரிலுள்ளார் கையைத் தலைமீது வைத்து அலற, கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர் - அவர்களுடைய கொழுத்த ஆக்களைக் கவர்ந்துசென்று கொன்று தின்ற கூரிய படை களை யுடைய மழவர்கள், செருப்பு உடை அடியர் - செருப்பினைப் பூண்ட அடியராகி, தெண்சுனை மண்டும் - தெளிந்த சுனை நீரை மிகுதியாகப் பருகும், அரும் சுரம் - அரிய சுரநெறிகள்; 14-18. வார் கோல் திருந்து இழை பணைத் தோள் தேன்நாறு கதுப்பின் குவளை உண்கண் - நீண்ட கோல்தொழிலமைந்த வளையலையும் திருந்திய அணிகளையும் மூங்கில் போன்ற தோளினையும் தேன் மணக்கும் கூந்தலினையும் கருங்குவளை போன்ற மையுண்ட கண்களையும் உடைய, இவளொடு செலற்கு அரியவல்ல என - இவளுடன் செல்லுதற்கு அருமையுடையன அல்லவென, நமக்கு நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் - நமக்குத் தமது உள்ளக் கருத்தை வாய்விட்டு மொழிந்தனர்; 3. நின் மறந்து உறைதல் யாவது - ஆகலின் நின்னை மறந்து வேற்று நாட்டுத் தங்குதல் எங்ஙனம் கூடும்? (முடிபு) ஆயிழை, நடுங்கு துணை யாயவர், காதலர், நமக்கு அருஞ்சுரம் இவளொடு செலற்கு அரியவல்ல என நெஞ்சு வாய் அவிழ்ந்தனர்; ஆகலின் நின் மறந்து உறைதல் யாவது? கானத் தாங்கண் சீறூர் கை தலைவைப்பக் கொழுப்பா தின்ற மழவர் சுனை மண்டும் அருஞ்சுரம் என்க. (வி-ரை) முதலிலே பிரிவிற்கு அஞ்சி நடுங்கிய காதலர், அதன் மேலும் இவளொடு செலற்கு அருஞ்சுரம் அரியவல்ல எனக் கூறினா ராதலின், நின்னை மறந்து வேற்று நாட்டின்கண் நீட்டித்திருப்பா ரல்லர் என்று தோழி தலைவியை ஆற்றுவித்தாள் என்க. விரைந்து வந்து நின்னை, உடன் கொண்டு செல்வார் என்றாளாயிற்று. புல் கரிந்து போயினமையின் மான் அதனை உண்ணுதலை மறந்ததென்க. புல் மறைந்து என்னும் பாடத்திற்கு புல் அற்றொழிந்தமையால் என்று பொருள் கொள்க. போகில் - பறவைப் பொதுப்பெயர். பொங்கர் என்பது பாடமாயின், சிறு கோட்டிலுள்ள என்க. அல்குற் கூட்டும் என்பது பாடமாயின், இடைமருங்கிலுள்ள மடியிற் சேர்க்கும் என்க. மண்டுதல் - மிக்குப் பருகுதல். பருகுதற்கு விரைதல் என்றுமாம். 130. நெய்தல் (கழறிய பாங்கற்குத் தலைமகன் கழற்றெதிர் மறுத்தது.) அம்ம வாழி கேளிர் முன்நின்று கண்டனி ராயிற் கழறலிர் மன்னோ நுண்தாது பொதிந்த செங்கால் 1கொழுமுகை முண்டகங் கெழீஇய மோட்டுமணல் அடைகரைப் 5. பேஎய்த் தலைய பிணர்அரைத் தாழை எயிறுடை நெடுந்தோடு காப்பப் பலவுடன் வயிறுடைப் போது வாலிதின் 1விரீஇப் புலவுப்பொரு தழித்த பூநாறு பரப்பின் இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம் 10. 2கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும் நற்றேர் வழுதி கொற்கை முன்துறை வண்டுவாய் திறந்த வாங்குகழி நெய்தல் போதுபுறங் கொடுத்த உண்கண் மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே. -வெண்கண்ணனார். (சொ-ள்) 1. கேளிர் அம்ம வாழி - பாங்கீர், யான் கூறுவதனைக் கேட்பீராக; வாழி! 3-8. நுண் தாது பொதிந்த செங் கால் கொழு முகை - நுண்ணிய பூந்துகளால் மூடப்பட்ட சிவந்த தண்டினையும் கொழுவிய மொட்டினையுமுடைய, முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடை கரை - கழிமுள்ளி பொருந்திய உயர்ந்த மணல் அடைந்த கரையிடத்தே, பேஎய்த்தலைய பிணர் அரைத் தாழை - பேய் போலும் தலையினை யுடைய சருச்சரை வாய்ந்த அரையினையுடைய தாழையின், எயிறு உடை நெடுந்தோடு பல உடன் காப்ப - முள்ளாகிய பற்களை யுடைய நீண்ட புற இதழ்கள் பலவும் ஒருங்கு காவா நிற்ப, வயிறு உடைப் போது வாலிதின் விரீஇ - அதன் அகட்டினை இடமாகவுடைய பூதூய்தாக விரிந்து, புலவுப் பொருது அளித்த பூ நாறு பரப்பின் - புலால் நாற்றத்தைத் தாக்கி ஒழித்த மலர் நாற்றம் கமழும் இடத்தின்கண்; 9-11. இவர் திரைதந்த ஈர்ங் கதிர் முத்தம் - பரக்கும் அலைகள் கொணர்ந்து வீசிய குளிர்ந்த ஒளியினையுடைய முத்துக்கள், கவர் நடைப் புரவிக் கால் வடுத் தபுக்கும் - விரும்பும் நடையினையுடைய குதிரையது காலினை வடுச்செய்து அதன் செலவினைக் கெடுக்கும், நல் தேர் வழுதி கொற்கை முன் துறை - நல்ல தேரையுடைய பாண்டியனது கொற்கையென்னும் பதியின் கடற்றுறைக் கண்ணுள்ள; 12-14. வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தற்போது - வண்டினால் வாய் திறக்கப்பெற்ற வளைந்த கழியிடத்தி லுள்ள நெய்தல் பூவானது, புறங்கொடுத்த மாதர் வாள்முக உண்கண் - புறங் கொடுத்த அழகிய ஒளி பொருந்திய முகத்தின் கண்ணுள்ள மையுண்ட கண்களது; மதைஇய நோக்கு - செருக்கிய பார்வையினை; 1-2. முன் நின்று கண்டனிர் ஆயின் கழறலிர் - முன்னே நின்று கண்டீராயின் இங்ஙனம் கழறிக் கூறீர். (முடிபு) கேளிர், வாழி, கொற்கை முன்றுறையின் நின்ற அவள் உண்கண் நோக்குமுன் நின்று கண்டனிராயின் கழறலிர், கண்டிலீர். (வி-ரை) அம்ம : கேட்பித்தற் பொருளில் வரும் இடைச்சொல். கழறுதல் - இடித்துரைத்தல். மன் - கழிபு. வடுத் தபுக்கும் - காலை வடுச் செய்து முடமாக்கும் என்றலுமாம்; வடுச் செய்து என ஒரு சொல் வருவிக்க. தபுக்கும் முன்துறை; பெயரெச்சம் இடப் பெயர் கொண்டது. மாதர் - காதலுமாம். (உ-றை) முண்டகமுகை கெழீஇய தாழையின்போது எயிறுடை நெடுந்தோடு பல காப்ப இருந்து விரீஇப் புலவுப் பொரு தழித்த தென்பது, காதற்றோழியுடன் கூடி ஆயவெள்ளம் புடை சூழநின்ற தலைவியின் இயல், நீ கூறிய உறுதி மொழிகளை யெல்லாம் அழித்தது என்ற படி. 131. பாலை (பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.) விசும்புற நிவந்த மாத்தாள் 1இகணைப் பசுங்கேழ் மெல்லிலை அருகுநெறித் தன்ன வண்டுபடுபு இருளிய தாழிருங் கூந்தல் சுரும்புண விரிந்த பெருந்தண் கோதை 5. இவளினுஞ் சிறந்தன்று 2ஈதல் நமக்கென வீளை அம்பின் விழுத்தொடை மழவர் நாளா உய்த்த நாமவெஞ் சுரத்து நடைமெலிந் தொழிந்த சேட்படர் கன்றின் கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர் 10. பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும் வெருவரு தகுந கானம் நம்மொடு வருக என்னுதி யாயின் 15. வாரேன் நெஞ்சம் வாய்க்க நின்வினையே. - மதுரை மருதனிளநாகனார். (சொ-ள்) 15. நெஞ்சம் - நெஞ்சமே! 1-5. விசும்பு உற நிவந்த மா தாள் இகணை - வானை அளாவ உயர்ந்த கரிய அடியினை உடைய இகணை மரத்தினது, பசுகேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன - பசியநிறமுடைய மெல்லிய இலைகளை நெருங்கச் செறித்து வைத்தால் ஒத்த, வண்டு படுபு இருளிய தாழ் இருங்கூந்தல் - வண்டு மொய்த்து இருண்ட தாழ்ந்த பெரிய கூந்தலையும், சுரும்பு உண விரிந்த பெரும் தண் கோதை - வண்டுகள் தேன் உண்ணும் படி மலர்ந்த பூக்களாலாய பெரிய குளிர்ந்த மாலையையும் உடைய, இவளினும் நமக்கு ஈதல் சிறந்தன்று என - இத்தலைவியினும் நமக்கு ஈதலே சிறந்தது என்று; 6-13. வீளை அம்பின் விழுத்தொடை மழவர் - சீழ்க்கை போலும் ஒலியுடன் செல்லும் அம்பினது தப்பாத தொடையினை யுடைய வெட்சி மறவர், நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து - விடியற் காலையில் ஆக்களைக் கவர்ந்து கொண்டுபோன அச்சம் தரும் கொடிய சுர நெறியிலே, சேண்படர் நடை மெலிந்து ஒழிந்த கன்றின் - நெடுந் தூரம் கடந்து வருதலின் நடை ஓய்ந்து நின்றுவிட்ட கன்றினது, கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர் - கடைக்கண்ணினின்றும் ஒழுகும் நீரைத் துடைத்த கரந்தையோரது, பெயரும் பீடும் எழுதிப் பீலி சூட்டிய பிறங்கு நிலைநடுகல் - பெயரும் சிறப்பும் பொறித்து மயில் தோகையினைச் சூட்டிய விளங்கும் நிலையினையுடைய நடுகல்லின் முன், ஊன்று வேல் பலகை - ஊன்றிய வேலும் அதன்கட் சார்த்திய கேடகமும், அதர்தொறும் வேற்றுமுனை கடுக்கும் - செல்லும் வழிதோறும் பகைவர் போர்முனையிருப்பை ஒக்கும், வெரு வரு தகுந கானம் - அச்சம் வரும் இயல்பினவாய காட்டில்; 13-15. நம்மொடு வருக என்னுதியாயின் - எம்மோடு வருக என்பை யாயின், வாரேன் - யான் வருவேனல்லேன்; நின்வினை வாய்க்க - மேற்கொண்ட வினை வாய்ப்பதாக. (முடிபு) நெஞ்சம், இவளினும் ஈதல் சிறந்தன்றென கானம் நம்மொடு வருக என்னுதியாயின், வாரேன்; நின் வினை வாய்க்க. (வி-ரை) இகணை - ஒருமரம்; இது செழுமையுடன் அடர்ந் திருக்கும் தழைகளைத் தலையில் உடையதாகும் என்பது, 1`துன்னிய, ஈர நெஞ்சத் தார்வ லாளர், பாரந் தாங்கும் பழமை போல, இலைக் கொடிச் செல்வமொடு தலைப்பரந் தோங்கிய, கணைக்கால் இகணை' என்னும் பெருங்கதையாற் பெறப்படும். இதணை எனப் பாடம் கொள்வாருமுளர். இவளினும் சிறந்தன்றீதல் - ஈதலால் வரும் இன்பம் இவளால் வரும் இன்பத்தினும் சிறந்தது என்றபடி. வீளையினையும் அம்பின் தொடை யினையுமுடைய மழவர் என்னலுமாம். வீளை - சீழ்க்கை யொலி. விழு - இடும்பை என்னலுமாம். கடைமணி யுகுநீர், இவ்வாறே `ஆவின் கடைமணி யுகுநீர்'2 என வருதலுங் காண்க. உகுநீர் துடைத்த என்றது, ஆநிரையை மீட்டமையால் அதன் துயரைப் போக்கிய என்றபடி. துடைத்த ஆடவர் நடுகல் என்றமையால், நிரைமீட்ட கரந்தையார் பொருதுபட்டமை பெற்றாம். வாய்க்க நின்வினை என்றது இகழ்ச்சி. (மே-ள்) `வெறியறி சிறப்பின்'1 என்னும் சூத்திரத்து, `ஆ பெயர்த்துத் தருதலும்' என்னும் பகுதிக்கு, இச் செய்யுளையும் காட்டி, இதனுள் `மறவர் நாள்ஆ உய்த்த' என வேந்துறு தொழில் அல்லாத வெட்சித்திணையும் பொதுவியல் கரந்தைக்கண்ணே கொள்க; இஃது ஏழற்கும் பொதுவாகலின் என்றும், இச் சூத்திரம் `பெயரும் பீடும் எழுதி அதர்தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்' என அகத்திற்கும் வருதலிற் பொதுவியலாயிற்று என்றும், `நோயு மின்பமும்'2 என்னுஞ் சூத்திரத்து, `வருக வென்னுதியாயின், வாரேன் நெஞ்சம் வாய்க்கநின் வினையே' என்பது `மறுத்துரைப்பது போல் தறுகண்மை பற்றிய பெருமிதங் கூறிற்று' என்றுங் கூறினார், நச். 132. குறிஞ்சி (தோழி தலைமகளை இடத்துய்த்துவந்து தலைமகனை எதிர்ப்பட்டு நின்று வரைவுகடாயது.) ஏனலும் இறங்குகுரல் இறுத்தன நோய்மலிந்து ஆய்கவின் தொலைந்தஇவள் நுதலும் நோக்கி ஏதில மொழியும்இவ் வூரு மாகலிற் களிற்றுமுகந் திறந்த கவுளுடைப் பகழி 5. வால்நிணப் புகவிற் கானவர் தங்கை அம்பணை மென்தோள் ஆயிதழ் மழைக்கண் ஒல்கியல் கொடிச்சியை நல்கினை யாயிற் கொண்டனை சென்மோ நுண்பூண் மார்ப துளிதலைத் தலைஇய சாரல் நளிசுனைக் 10. கூம்புமுகை அவிழ்த்த குறுஞ்சிறைப் பறவை வேங்கை விரியிணர் ஊதிக் காந்தள் தேனுடைக் குவிகுலைத் துஞ்சி யானை இருங்கவுள் கடாஅம் கனவும் பெருங்கல் வேலிநும் உறைவின் ஊர்க்கே. - தாயங் கண்ணனார். (சொ-ள்) 8. நுண் பூண் மார்ப - நுண்ணிய தொழிற்றிற மமைந்த பூணணிந்த மார்பனே! 1-3. ஏனலும் இறங்கு குரல் இறுத்தன - தினையும் முதிர்ந்து வளைந்த கதிர் அறுக்கப் பெற்றன, இவள் நுதலும் நோய்மலிந்து ஆய் கவின் தொலைந்த - இவள் நெற்றியும் காமநோய் மிக்கமையால் ஒள்ளிய அழகு தொலையப் பெற்றது, இவ்வூரும் - இவ்வூராரும், நோக்கி - அதனை நோக்கி, ஏதில மொழியும் - இயைபில்லாதன கூறுவர், ஆகலின் - ஆதலால்; 4-7. களிற்று கவுள் உடை முகம் திறந்த பகழி - களிற்றி யானையின் மதம் பொருந்திய கன்னத்தையுடைய முகத்தைக் கிழித்த அம்பினையும், வால் நிணப் புகவின் - வெள்ளிய நிணத்துடன்கூடிய உணவினையும் உடைய, கானவர் தங்கை - வேடர்களது தங்கையும், அம்பணை மெல் தோள் - அழகிய மூங்கிலை யொத்த மெல்லிய தோளினையும், ஆய் இதழ் மழைக்கண் - அழகிய இமையுடன் கூடிய குளிர்ந்த கண்ணினையும், ஒல்கு இயல் - அசையும் இயலினையும் உடைய, கொடிச்சியை நல்கினை ஆயின் - கொடிச்சியுமாகிய இவளை அருள் செய்தாய் ஆயின்; 9-14. துளி தலைத் தலைஇய சாரல் - வானம் மழைத்துளியை முதற்கண்ணே பெய்த பக்க மலையிலே, நளிசுனைக் கூம்பு முகை அவிழ்த்த குறுஞ்சிறைப் பறவை - பெரிய சுனைக்கண்ணே குவிந்த அரும்பினை விரித்த குறுகிய சிறையினவாய வண்டுகள், வேங்கை விரி இணர் ஊதி - வேங்கையின் விரிந்த பூங்கொத்துக்களில் தாதினை ஊதி, காந்தள் தேன் உடைக் குவிகுலை துஞ்சி - காந்தளின் தேன் பொருந்திய குவிந்த குலையில் உறங்கி, யானை இரு கவுள் கடாஅம் கனவும் - யானையின் பெரிய கன்னத்தில் ஒழுகும் மதத்தினை உண்ப தாகக் கனாக் காணும், பெருங்கல் வேலி - பெரிய மலையைச் சூழக்கொண்ட, உறைவு இன் நும் ஊர்க்கு - உறைதற்கு இனிய நுமது ஊர்க்கு; 8. கொண்டனை சென்மோ - வரைந்துகொண்டு செல்வாயாக. (முடிபு) நுண்பூண் மார்ப! ஏனல் குரல் இறுத்தன; நுதலும் கவின் தொலைந்த; இவ்வூரும் ஏதில மொழியும்; கொடிச்சியை நல்கினையாயின், நும் ஊர்க்கு (வரைந்து) கொண்டனை சென்மோ. (வி-ரை) ஏனலுங் குரல் இறுத்தன, இவ்வூரும் கவின் தொலைந்த இவள் நுதல் நோக்கி ஏதில மொழியும் ஆகலின் என்றுரைத்தலுமாம். இதற்கு நுதலும் என்பதிலுள்ள உம்மை இசை நிறை; நுதலும் பிறவுமென எச்சவும்மையுமாம். (உ-றை) முகையவிழ்த்த வண்டு வேங்கை மலரையூதி, காந்தட் குலையிலே துஞ்சி யானையின் கடாத்தினைக் கனவும் என்றது, தலைவியின் நாண் முதலிய தளைகளை நெகிழ்த்த தலைவன் அவளை நுகர்ந்து, அக் களவொழுக்கத்திலே அழுந்தி, மேலும் பகற்குறி இரவுக் குறிகளால், அடைதற்கரிய அவளைப் பெறுதற்கு நினைக்கின்றான் என்றபடி. (மே-ள்) `ஆயர் வேட்டுவர்'1 என்னுஞ் சூத்திரத்து ஆயர் வேட்டுவர் என்னும் இரண்டு பெயரேயன்றி, ஒன்றென முடித்தலாற் கொள்ளப்படும் தலைவரும் தலைவியரும் உளர் என்றுரைத்து, `வானிணப் புகவிற்கானவர் தங்கை' என வருவனவுங் கொள்க என்றனர், நச். 133. பாலை (பிரிவிடை யாற்றாளாயினாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றுவலென்பதுபடச் சொல்லியது.) குன்றி அன்ன கண்ண குரூஉமயிர்ப் புன்தாள் வெள்எலி மோவாய் ஏற்றை செம்பரல் முரம்பில் சிதர்ந்த பூழி நல்நாள் வேங்கைவீ நன்களம் வரிப்பத் 5. கார்தலை மணந்த பைம்புதல் புறவின் வில்லெறி பஞ்சியின் வெண்மழை தவழும் கொல்லை இதைய குறும்பொறை மருங்கில் கரிபரந் தன்ன காயாஞ் செம்மலொடு எரிபரந் தன்ன இலமலர் விரைஇப் 10. பூங்கலுழ் சுமந்த தீம்புனல் கான்யாற்று வான்கொள் தூவல் வளிதர உண்கும் எம்மொடு வருதல் வல்லையோ மற்றெனக் கொன்ஒன்று வினவினர் மன்னே தோழி இதல்முள் ஒப்பின் முகைமுதிர் வெட்சி 15. கொல்புனக் குருந்தொடு கல்லறைத் தாஅம் 2மிளைநாட்டு அத்தத்து ஈர்ஞ்சுவல் கலித்த வரிமரல் கறிக்கும் மடப்பிணைத் திரிமருப்பு இரலைய காடிறந் தோரே. - உறையூர் மருத்துவன் தாமோதரனார். (சொ-ள்) 13. தோழி -, 14-18. இதல் முள் ஒப்பின் - சிவலின் காலிலுள்ள முள்ளை ஒத்த, முகை முதிர் வெட்சி - அரும்பு முதிர்ந்த வெட்சிப் பூக்கள், கொல் புனக் குருந்தொடு - வெட்டித்திருத்திய கொல்லை நிலத்திலுள்ள குருந்த மலர்களோடு, கல்அறைத் தாஅம் - கற்பாறையிலே பரந்து கிடக்கும், மிளை நாட்டு அத்தத்து - மிளை என்னும் நாட்டின் பாலை நெறியில், ஈர் சுவல் கலித்த - ஈரமுடைய மோட்டு நிலத்தே தழைத்த, வரி மரல் கறிக்கும் - வரிகளையுடைய மரலைக் கடித்துண்ணும், மடப்பிணை திரி மருப்பு இரலைய - மடப்பத்தையுடைய பெண் மானுடன் கூடிய முறுக்குண்ட கொம்பினையுடைய ஆண்மான்களை யுடைய, காடு இறந்தோர் - காட்டினைக் கடந்து சென்ற நம் தலைவர்; 1-4. குன்றி அன்ன கண்ண - குன்றிமணி போன்ற கண்களை யுடைய, குரூஉ மயிர் - நல்ல நிறம் வாய்ந்த மயிரையும், புல் தாள் - மெல்லிய கால்களையும், மோவாய் - தாடியினையுமுடைய, வெள் எலி ஏற்றை - ஆண் வெள்ளெலி; செம்பரல் முரம்பில் சிதர்ந்த பூழி - சிவந்த பரல்கள் மிக்க வன்னிலத்தில் கிளறிப் போகட்ட புழுதியில், நல் நாள் வேங்கை வீகளம்வரிப்ப - மணநாளை அறிவிக்கும் இயல்புடைய வேங்கைப் பூக்கள் உதிர்ந்து சிறந்த வெறியாடு களம் போல அழகு செய்ய; 5-7. கார்தலை மணந்த பைம்புதல் புறவின் - கார்காலம் கூடிய தால் பசிய புதல்களையுடைய முல்லை நிலத்தே, வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் - வில்லினால் அடிக்கப்பெற்ற பஞ்சுபோல வெள்ளிய மேகம் தவழ்ந்திடும், கொல்லை இதைய குறும்பொறை மருங்கில் - புதுக் கொல்லைகளையுடைய சிறிய மலையின் பக்கலில்; 8-13. கரி பரந்தன்ன காயா செம்மலொடு - கரி பரந்தாலொத்த காயாவின் வாடற் பூக்களொடு, எரி பரந்தன்ன இலமலர் விரைஇ - நெருப்புப் பரந்தா லொத்த இலவமலர் கலக்க, பூ கலுழ் சுமந்த தீம்புனல் - அப் பூக்களின் ஒழுகுதலைச் சுமந்துவரும் இனிய புனலையுடைய, கான்யாற்று - காட்டாற்றின்கண்ணே, வளிதர வான் கொள் தூவல் - காற்று எழுப்புதலின் மேலே எழும் துளிகளையே, உண்கும் - உண்பேமாகிய, எம்மொடு வருதல் வல்லையோ என - எம்முடன் வருதற்கு வன்மையுடையையோ வென்று, கொன் ஒன்று வினவினர் - பெருமை தங்கிய ஒரு மொழியினைக் கூறி வினவினர். (முடிபு) தோழி! மிளைநாட்டு அத்தத்துக் காடிறந்தோர் ஆய நம் தலைவர், குறும்பொறை மருங்கில் கான்யாற்றுத் தூவல் உண்கும் எம்மொடு வருதல் வல்லையோவெனக் கொன் ஒன்று வினவினர்! (ஆதலின் விரைந்து வந்து உடன்கொண்டு செல்லுதலும் கூடும்.) (வி-ரை) இதை - புதுப்புனம். இலவ மலர் - இலமலரென விகாரமாயிற்று. விரைஇ - விரவ எனத்திரிக்க. கலுழ் - வண்டலுமாம். உண்கும் - உண்பேமாக என்னலுமாம். மற்று, அசை. மன், ஒழியிசை. மிளைக் கந்தன், மிளைகிழான் நல்வேட்டன், மிளைவேள் தித்தன் எனவரும் புலவர் பெயர்களால் மிளையென்பது நாட்டின் பெயராதல் அமையும்; இளைநா டெனப் பிரித்தலுமாம். தலைவர் அங்ஙனம் வினவினராதலின் உடன்கொண்டு செல்லுதலும் கூடுமென எண்ணினாளென்க. நச்சினார்க்கினியர் கருத்தின்படி, தலைவர் வினவினதன்றி அங்ஙனம் செய்திலரே என்று தலைவி இரங்கினாள் எனக் கொள்ளல்வேண்டும். (மே-ள்) 1`கொண்டு தலைக் கழியினும்' என்னுஞ் சூத்திரத்து, இது பாலைக்கண் இரங்கல் நிகழ்ந்ததென்றனர், நச். 134. முல்லை (வினைமுற்றி மீண்ட தலைமகன் பாகற் குரைத்தது.) வானம் வாய்ப்பக் கவினிக் கானம் கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச் செம்புற மூதாய் பரத்தலின் நன்பல 5. முல்லை வீகழல் தாஅய் வல்லோன் செய்கை அன்ன செந்நிலப் புறவின் வாஅப் பாணி வயங்குதொழிற் கலிமாத் தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க இடிமறந் தேமதி வலவ குவிமுகை 10. வாழை வான்பூ ஊழுறு புதிர்ந்த ஒழிகுலை யன்ன திரிமருப் பேற்றொடு கணைக்கால் அம்பிணைக் காமர் புணர்நிலை கடுமான் தேரொலி கேட்பின் நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே. - சீத்தலைச் சாத்தனார். (சொ-ள்) 9-14. வலவ - பாகனே! கடுமான் தேர் ஒலி கேட்பின் - நமது விரைந்த குதிரைபூண்ட தேரின் ஒலியினைக் கேட்டால், வாழை வான் பூ ஊழ் உறுபு உதிர்ந்த குவிமுகை ஒழிகுலை அன்ன - வாழையின் பெரிய பூ மடல்கள் முறையாக முற்றி உதிர எஞ்சிய குவிந்த மொட்டும் ஒழிந்த குலையை ஒத்த, திரி மருப்பு ஏற்றொடு - முறுக்கிய கொம்பினை யுடைய மானேற்றுடன், கணைக்கால் அம் பிணைக் காமர் புணர்நிலை - திரண்ட காலினையுடைய அழகிய பெண் மானினது விருப்பம் பொருந்தும் நிலையினதாகிய, நடுநாள் கூட்டம் - நள்ளிரவின் கூட்டம், ஆகலும் உண்டே - நிகழ்தலும் கூடுமோ? (கூடாதாகலின்,) 1-6. கமம் சூல் மாமழை - நிறைந்த சூலினையுடைய கரிய மேகங்கள், கார் பயந்து இறுத்தென - கார் காலத்தினைத் தந்து தங்கிற்றாக, வானம் வாய்ப்ப - மழை தப்பாது பெய்தலால், கானம் கவினி - காடு அழகுபெற்று, மணி மருள் பூவை அணிமலர் இடை இடை - நீல மணியை ஒக்கும் காயாவின் அழகிய மலர்களின் இடை யிடையே, செம்புற மூதாய் பரத்தலின் - சிவந்த புறத்தினையுடைய இந்திரகோபப்பூச்சி பரத்தலோடு, முல்லை கழல் நன்பல வீ தாஅய் - முல்லையின் நின்றும் உதிர்ந்த நன்றாகிய பல பூக்களும் பரந்து கிடத்தலால், வல்லோன் செய்கை அன்ன - ஓவியம் வல்லோன் செய்த ஓவியம் போன்ற, செம்நிலப் புறவின் - சிறந்த நிலமாகிய முல்லை நிலத்தே; 7-9. வாஅ பாணி வயங்கு தொழிற் கலிமா - தாவிச் செல்லும் தாளச்சீர் விளங்கும் நடை வாய்ந்த செருக்கிய குதிரையின், தாஅதாள் இணை மெல்ல ஒதுங்க - தாவிச் செல்லும் இணையொத்த கால்கள் மெல்லென நடக்கும்படி, இடிமறந்து - தாற்றுக் கோலால் குத்து தலை மறந்து, ஏமதி - செலுத்துவாயாக. (முடிபு) வலவ! தேரொலி கேட்பின் ஏற்றொடு பிணையின் நடு நாள் கூட்டம் ஆகலுமுண்டோ? (ஆகாதாகலின்) புறவின்கண் கலிமாத் தாளிணை மெல்ல வொதுங்க இடிமறந்து ஏமதி. (வி-ரை) வீகழல் - கழல்வீ என மாறுக. தாஅய் - தாவ எனத் திரிக்க. வாவும், தாவும் என்பன விகாரப்பட்டன இடி: முதனிலைத் தொழிற் பெயர். இடித்தல் - கசையால் அடித்தலுமாம். ஏவுமதி என்பது ஏமதி என்றாயிற்று. காமம் - காமர் என ஈறு திரிந்தது. தலைவியைக் கூட வருகின்ற பெருங்காதலுடைய னாகலின், மானினங்களின் அத்தகைய கூட்டத்திற்கு இடையூறு விளைத்தல் ஆகாதென அஞ்சினானென்க. 135. பாலை (தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது.) திதலை மாமை தளிர்வனப்பு அழுங்கப் புதலிவர் பீரின் எதிர்மலர் கடுப்பப் பசலை பாய்ந்த நுதலேன் ஆகி எழுதெழில் மழைக்கண் கலுழ நோய்கூர்ந்து 5. ஆதி மந்தியின் அறிவுபிறி தாகிப் பேதுற் றிசினே காதலம் தோழி காய்கதிர் திருகலின் கனைந்துகால் கடுகி ஆடுதளிர் இருப்பைக் கூடுகுவி வான்பூக் கோடுகடை கழங்கின் அறைமிசைத் தாஅம் 10. காடிறந் தனரே காதலர் அடுபோர் வீயா விழுப்புகழ் விண்தோய் வியன்குடை ஈரெழு வேளிர் இயைந்தொருங் கெறிந்த கழுவுள் காமூர் போலக் கலங்கின்று மாதவர்த் தெளிந்தஎன் னெஞ்சே. - பரணர். (சொ-ள்) 6. காதல் அம் தோழி - காதலையுடைய அழகிய தோழியே! 7-10. காதலர் - நம் காதலர், காய் கதிர் திருகலின் - காயும் ஞாயிறு தாக்குதலால், ஆடு தளிர் இருப்பை - அசையும் தளிரினையுடைய இருப்பை மரத்தின், கூடு குவி வான் பூ - இதழ் குவிந்த வெள்ளிய பூக்கள், கோடு கடை கழங்கின் - யானை மருப்பினாற் கடைந்து செய்த கழங்கினைப் போன்று, அறைமிசைத் தாஅம் - பாறைமீது பரவிக் கிடக்கும், காடு இறந்தனரே - காடு கடந்து சென்றனர் ஆதலின்; 10-14. அவர் தெளிந்த எஞ்நெஞ்சு - அவரைப் பிரியாரென்று தெளிவுற்றிருந்த என் மனம், அடுபோர் வீயா விழுப்புகழ் - அடும் போரினையும் நீங்காத சிறந்த புகழினையும், விண் தோய் வியன் குடை - வானை அளாவிய பெரிய குடையினையுமுடைய; கழுவுள் - கழுவுள் என்பானுடையதும், ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த - பதினான்கு வேளிர் ஒருங்குகூடித் தாக்கியதுமாகிய, காமூர் போல - காமூரைப்போல, கலங்கின்று - கலங்காநின்றது; 1-6. திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க - தேமலுடன் கூடிய எனது மாமை நிறமும் தளிர்போலும் அழகும் கெட்டொழிய, புதல் இவர் பீரின் எதிர்மலர் கடுப்ப - புதர்களிற் படர்ந்த பீர்க்கினது புதிய மலரை யொக்க, பசலை பாய்ந்த நுதலேன் ஆகி - பசலை பரந்த நெற்றியை யுடையேன் ஆகி, எழுது எழில் மழைக்கண் கலுழ - ஓவியம் வல்லார் பார்த்து எழுதுதற்குரிய அழகிய குளிர்ந்த கண் அழ, நோய் கூர்ந்து - துன்பம் பெருகி, ஆதிமந்தியின் அறிவு பிறிதாகி - ஆதிமந்தி போல அறிவு திரிந்து, பேதுற்றிசின் - யான் மயங்கியுள்ளேன். (முடிபு) தோழி காதலர் காடிறந்தனர் ஆகலின், நெஞ்சு காமூர் போலக் கலங்கின்று; (அவர் இன்னும் வந்திலாமையால்) வனப்பு அழுங்க, பசலை பாய்ந்த நுதலேன் ஆகி மழைக்கண் கலுழ நோய் கூர்ந்து, ஆதிமந்திபோல அறிவு பிறிதாகிப் பேதுற்றிசின். (வி-ரை) ஆதிமந்தி - கரிகால் வளவன் மகள். இவள் தன் காதலனைக் கெடுத்து வருந்தினாளென்பது, அகம் 45, 76, 222- ஆம் செய்யுட்களாலும் அறியப்படும். இருப்பையின் பூவிற்கு யானைக் கொம்பினாற் கடைந்தவை உவமையாதலை, மேல் இருப்பை, மருப்புக் கடைந்தன்ன கொள்ளை வான்பூ1 `இருப்பைக், கோடு கடைந்தன்ன கொள்ளை வான்பூ'2 என வருவனவற்றாலும் அறிக. கலங்கின்று மாது : மாது, அசை. 136. மருதம் (உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) மைப்பறப் 3புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப் புள்ளுப்புணர்ந் தினிய வாகத் தெள்ளொளி அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள் 5. 1சகட மண்டிய துகள்தீர் கூட்டத்துக் கடிநகர் புனைந்து கடவுள் பேணிப் படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ வதுவை மண்ணிய மகளிர் 2விதுப்புற்றுப் பூக்கணும் இமையார் நோக்குபு மறைய 10. மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத் தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற மண்ணுமணி அன்ன மாஇதழ்ப் பாவைத் தண்நறு முகையொடு வெண்நூல் சூட்டித் 15. தூவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி மழைபட் டன்ன மணன்மலி பந்தர் இழையணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றித் தமர்நமக் கீத்த தலைநாள் இரவின் உவர்நீங்கு கற்பின்எம் உயிருடம்பு அடுவி 20. முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப் பெரும்புழுக்கு உற்றநின் பிறை 3நுதல் பொறிவியர் உறுவளி ஆற்றச் சிறுவரை திறவென ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் உறைகழி வாளின் உருவுபெயர்ந் திமைப்ப 25. மறைதிறன் அறியா ளாகி ஒய்யென நாணினள் இறைஞ்சி யோளே பேணிப் பரூஉப்பகை ஆம்பல் குரூஉத்தொடை நீவிச் சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே. - விற்றூற்று மூதெயினனார். (சொ-ள்) 1-9. நெஞ்சே-, மைப்பு அற - குற்றம் நீங்க, புழுக்கின்- இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய, நெய்க்கனி - நெய் மிக்க, வெண் சோறு - வெள்ளிய சோற்றை, வரையா வண்மையொடு - வரைதலில்லாத வள்ளன்மையுடன், புரையோர்ப் பேணி - உயர்ந்த சுற்றத்தார் முதலாயினாரை உண்பித்து, புள் இனியவாகப் புணர்ந்து - புள் நிமித்தம் இனிதாகக் கூட, தெள் ஒளி அம் கண் இரு விசும்பு விளங்க- தெள்ளிய ஒளியையுடைய அழகிய இடமகன்ற பெரிய வானம் களங்க மற விளங்குதலுற, திங்கள் சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்து - திங்களை உரோகிணி கூடிய குற்றமற்ற நன்னாள் சேர்கையில், கடிநகர் புனைந்து - மண மனையை அழகுறுத்தி, கடவுள் பேணி - கடவுளை வழிபட்டு, படுமண முழவொடு - ஒலிக்கும் மணமுழவுடன், பரூஉப் பணை இமிழ - பெரிய முரசம் ஒலிக்க, வதுவை மண்ணிய மகளிர் - தலைவிக்கு மணநீராட்டிய மகளிர், பூக்கணும் இமையார் நோக்குபு - தமது கூரிய கண்களாலும் இமையாராய் நோக்கி, விதுப்புற்று மறைய - விரைந்து மறைந்திட; 10-18. மென்பூ வாகைப் புல்புறக் கவட்டு இலை - மெல்லிய பூவை யுடைய வாகையின் புல்லிய புறத்தினையுடைய கவர்த்த இலையை, பழங்கன்று கறித்த - முதிய கன்று கறித்த, பயம்பு அமல் - பள்ளத்திற் படர்ந்த, அறுகை - அறுகினது, தழங்கு குரல் வானின் தலைப் பெயற்கு ஈன்ற - ஒலிக்கும் குரலையுடைய மேகத்தின் முதற்பெயலால் ஈன்ற, மண்ணுமணி அன்ன - கழுவிய நீலமணியை ஒத்த, மா இதழ் - கரிய இதழையுடைய, பாவை - பாவைபோலுங் கிழங்கிடத்துள்ள, தண் நறு முகையொடு - தண்ணிய நறிய அரும்புடன் (சேரக்கட்டிய), வெண் நூல் சூட்டி - வெள்ளிய நூலைச் சூட்டி, தூஉடைப் பொலிந்து- தூய உடையாற் பொலியச் செய்து, மேவரத் துவன்றி - விருப்பம் உண்டாக நெருங்கி, மழைபட்டன்ன மணன்மலி பந்தர் - மேகம் ஒலித்தா லொத்த மணவொலி மிக்க பந்தலிலே, இழை அணி சிறப்பின் - அணிகளை அணிவித்த சிறப்பினொடு, பெயர் வியர்ப்பு ஆற்றி - தோன்றிய வியர்வையை ஆற்றி, தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின் - சுற்றத்தார் நமக்குத் தந்த முதல் நாள் இரவில்; 19-29. உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்பு அடுவி - வெறுப்பு நீங்கிய கற்பினையுடைய என் உயிர்க்கு உடம்பாக அடுத்தவள், முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ - கசங்காத புத்துடையால் உடல் முழுவதும் போர்த்தியதால், பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர் - மிக்க புழுக்கத்தை எய்திய நினது பிறைபோன்ற நெற்றியில் அரும்பிய வியர்வை, உறுவளி ஆற்ற சிறுவரை திற என - மிக்க காற்றுப் போக்கிடச் சிறுபொழுது திறவாய் என்று கூறி, ஆர்வம் நெஞ்சமொடு போர்வை வவ்வலின் - அன்பு மிக்க நெஞ்சமொடு போர்வையைக் கவர்தலின், உறைகழி வாளின் - உறையினின்றும் எடுத்த வாளைப் போல, உருவு பெயர்ந்து இமைப்ப - அவள் உருவம் வெளிப் பட்டு விளங்க, மறை திறன் அறியாள் ஆகி - மறையும் வகை அறியாதவள் ஆகி, பரூஉப்பகை ஆம்பல் குரூஉத்தொடை நீவி - ஆம் ரபற்பூவின் முறிக்கப்பட்ட இதழ்களால் ஆய பருத்த நிறம் பொருந்திய மாலையை நீக்கி, சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த - வண்டுகள் ஒலிக்கும் ஆராய்ந்த மலரினைச் சூடிய, இரும் பல் கூந்தல் இருள் - பெரிய பலவாய கூந்தலின் இருளால், மறை ஒளித்து - மறைத்தற்குரிய உறுப்புக்களை மறைத்து, ஒய்யென நாணினள் பேணி இறைஞ்சியோள் - விரைவாக நாணி விருப்புற்று இறைஞ்சினாள்; (அத்தகையாள், இன்று நாம் பல கூறி உணர்த்தவும், உணராது ஊடுகின்றாள்; இவள் என்ன உறவினள் நமக்கு!) (முடிபு) நெஞ்சே! சோற்றைப் புரையோரைப் பேணி, கடிநகர் புனைந்து கடவுட்பேணி, வதுவை மண்ணிய மகளிர் நோக்குபு மறைய, தமர் வெண்ணூல் சூட்டி உடையாற் பொலி வித்து மணன்மலி பந்தரிடத்து வியர்ப்பாற்றி நமக்கு ஈத்த தலைநாளிரவின் கண், எம் உயிருடம் படுவி, கலிங்கம் வளைஇப் புழுக்குற்ற வியரை வளிஆற்றத் திறவெனயாம் போர்வை வவ்வலின், உரு இமைப்ப மறைதிறனறியாளாகி, கூந்தல் இருள் மறையொளித்து, ஒய்யென நாணினள் பேணி இறைஞ்சி யோளாயினள்; (அத்தகையாள் இன்று நாம் பல கூறி உணர்த்தவும் உணராது ஊடுகின்றாள் ஆகலின், இவள் நமக்கு என்ன உறவினளோ!) (வி-ரை) புள்ளு - புள் நிமித்தம். சகடம் - உரோகிணி. பழந்தமிழ் மக்கள் உரோகிணியைத் திருமணத்திற்குச் சிறந்த நாளாகக் கொண்டிருந்தனர்; உரோகிணியுடன் கூடிய சந்திரன் உச்சன் ஆகலின் எவ்வகைத் தீங்கும் நீங்கும் என்னுங் கருத்தினர் போலும்; `வானூர் மதியம் சகடணைய வானத்துச், சாலி யொருமீன் தகையாளைக், கோவலன்.... தீவலம் செய்வது'1 என்பது காண்க. சகடம் வேண்டிய என்பதும் பாடம். கடவுட் பேணி என்பதனால், திருமணத்தின் தொடக்கத்தில், கடவுளை வழிபடும் வழக்கம் பண்டும் உளதென்பது பெற்றாம். 2`பூக்கண் : பூ - கூர்மை : பூவாட் கோவலர்' என்புழி பூ இப்பொருட்டாதல் காண்க. மகளிர் விதுப்புற்றுப் பூக்கண்ணும் இமையார் நோக்குபு என்றதனால், தலைவி மகளிரும் விரும்பும் பேரழகினள் என்பது பெறப்படும். `கஞ்சத்துக் களிக்குமின்றேன்..... மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனமென்ப தொன்றே யன்றோ!'3 `நெய்விலை பசும் பொற்றோடு...... செய்தவர் சிறுபுன் கோலம் தொறுத்தியர் திகைத்து நின்றார்'4 என்பன ஈண்டு அறியற்பாலன. விதுப்புற்று மறைதல் கண் எச்சில் படாமைப் பொருட்டு. அறுகை - அறுகு. பெயற்கு - பெயலால்; வேற்றுமை மயக்கம். அறுகின் கிழங்கினைப் பாவை என்றல் மரபு. மாயிதழ் முகை எனக் கூட்டுக. மணன்மலி : மணம், மணன் எனப் போலியாயிற்று. மணல் மலிந்த என்றலுமாம். பரூஉப்பகை யாம்பற் குரூஉத் தொடை நீவி - பாரத்தாற் பகையாயிருக்கிற பருத்த ஆம்பற் பூவாலாகிய தொடையினை நீக்கி என்றலுமாம். (மே-ள்) `பொய்யும் வழுவும்'5 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள், களவின்வழி நிகழ்ந்த கற்புங்கோடற்கு உதாரணமாகும் என்றார், நச். `புகுமுகம் புரிதல்'1 என்னுஞ் சூத்திரத்து `பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர், உறுவளி யாற்றச் சிறுவரை திறவென' என்பது பொறிநுதல் வியர்த்தல் எனும் மெய்ப்பாடும் ஆகும் என்றும், இம் மெய்ப்பாடு தலைமகட்கே யுரித்து தலைமகற்கு உரித்தன்று, உட்கும் நாணும் அவற்கு இன்மையின் என்றும் கூறினர், பேரா. 137. பாலை (தலைமகன் பிரியுமெனக் கருதி வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத்து உண்ட சிறுபல் கேணி பிடியடி நசைஇக் களிறுதொடூஉக் கடக்குங் கான்யாற்று அத்தஞ் சென்றுசேர்பு ஒல்லா ராயினும் நினக்கே. 5. வென்றெறி முரசின் விறல்போர்ச் சோழர் இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண் வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழில் பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள் 10. வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில் தீயில் அடுப்பின் அரங்கம் போலப் பெரும்பாழ் கொண்டன்று நுதலே தோளும் தோளா முத்தின் தெண்கடல் பொருநன் திண்தேர்ச் செழியன் பொருப்பின் கவாச் அன் 15. நல்லெழில் நெடுவேய் புரையும் தொல்கவின் தொலைந்தன நோகோ யானே. - 2உறையூர் முதுகூத்தனார். (சொ-ள்) 1-4. ஆறுசெல் வம்பலர் - சுரநெறியிற் செல்லும் புதியர், சேறு கிளைத்து உண்ட சிறு பல் கேணி - சேற்றைக் கிண்டி ஊறிய நீரை உண்ட சிறிய பலவாய கேணிகளை, பிடிஅடி நசைஇ - தன் பிடியின் அடிச் சுவடென விரும்பி, களிறு தொடூஉக் கடக்கும் - களிறுகள் தொட்டுப் பார்த்துக் கடந்து செல்லும், கான் யாற்று அத்தம் - காட்டாற்றினையுடைய அச் சுரநெறியில், சென்று சேர்பு ஒல்லார் ஆயினும் - சென்று சேர்தலை நம் தலைவர் இசையார் ஆயினும்; 4-12. வென்று எறி முரசின் விறல்போர்ச் சோழர் - பகைவரை வென்று அடிக்கும் முரசினையும் போர் வென்றியையும் உடைய சோழரது, இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண் - இனிய கடுப்பு மிக்க கள்ளினையுடைய உறையூரிடத்து, வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேர் யாற்று - வரும்நீர் உடைத்திடும் கரைந்து மெலிந்த கரையினையுடைய பெரிய யாறாகிய காவிரியின், உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில் - அழகிய வெண்மணல் நிறைந்த தேன் நாறும் தண்ணிய பொழிலில், பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள் - பங்குனி விழாக் கழிந்த பிற்றை நாளில், வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில் - பூக்களுடன் கூடிய இலைகள் நிறைந்த மரங்கள் அடர்ந்த சிறு காட்டில், தீஇல் அடுப்பின் அரங்கம்போல - அடுதல் இன்மையின் தீ இல்லையாகிய வெற்றடுப்புக்களையுடைய விழாக்களம் போல, நினக்கு நுதல் பெரும்பாழ் கொண்டன்று - உனக்கு நெற்றி பெரிதும் பொலிவற்ற நிலையினைக் கொண்டது; 12-16. தோளா முத்தின் தெண்கடல் பொருநன் - துளையிடாத புதிய முத்துக்கள் விளையும் தெளிந்த கடலையுடைய வீரனாகிய, திண்தேர்ச் செழியன் - திண்ணிய தேரினையுடைய பாண்டியனது, பொருப்பின் கவாஅன் - பொதியிலின் பக்க மலையிலுள்ள, நல் எழில் நெடுவேய் புரையும் தோளும் - நல்ல அழகிய நெடிய மூங்கிலை ஒக்கும் நின்தோளும், தொல்கவின் தொலைந்தன - பழைய அழகு கெட்டன; நோகோ யானே - யான் நோவேன். (முடிபு) நம் தலைவர் அத்தம் சேர்பு ஒல்லார் ஆயினும் நினக்கு நுதல் பெரும்பாழ் கொண்டன்று; தோளும் தொல் கவின் தொலைந்தன; யான் நோகோ. (வி-ரை) கேணியை என இரண்டனுருபு விரிக்க. அடிநசைஇ- அடியென நசைஇ. முயக்கம் - கூட்டம்; உத்தரமும் நிறைமதியும் கூடிய கூட்டம் பங்குனித் திங்களில் உத்தரமும் நிறைமதியுங் கூடிய நாள் நன்னாளாகும். அந்நாளில் உறையூரில் பங்குனி உத்தர விழாச் சிறப்புற்றிருந்த தென்பது, `களவினுட் டவிர்ச்சி'1 என்னும் இறை யனார் அகப்பொருட் சூத்திர உரையில் `இனி, ஊர் துஞ்சாமை என்பது, ஊர் கொண்ட பெருவிழா நாளாய்க் கண்பாடில்லை யாமாகவும் இடையீடாம் என்பது; அவை மதுரை ஆவணி யவிட்டமே, உறையூர்ப் பங்குனி யுத்தரமே, கருவூர் உள்ளி விழாவே என இவையும், இவை போல்வன பிறவும் எல்லாம் அப் பெற்றியான பொழுது இடையீடாம் என்பது' என வருதலான் அறியப்படும். தீயில் அடுப்பின் அரங்கம்போல என்பதை தீயில் அடுப்பினர் அங்கம்போல எனக் கண்ணழித்து, விறலியர் உறுப்புப்போல என நலிந்துரை கூறுதல் சிறப்பின்றாம் என்க. 138. குறிஞ்சி (தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.) இகுளை கேட்டிசின் காதலம் தோழி குவளை உண்கண் தெண்பனி மல்க வறிதியான் வருந்திய செல்லற்கு அன்னை பிறிதொன்று கடுத்தன ளாகி வேம்பின் 5. வெறிகொள் பாசிலை நீலமொடு சூடி உடலுநர்க் கடந்த கடலம் தானைத் திருந்திலை நெடுவேல் தென்னவன் பொதியில் அருஞ்சிமை இழிதரும் ஆர்த்துவரல் அருவியில் ததும்புசீர் இன்னியங் கறங்கக் கைதொழுது 10. உருகெழு சிறப்பின் முருகுமனைத் தரீஇக் கடம்புங் களிறும் பாடி நுடங்குபு தோடுந் தொடலையுங் 1கைக்கொண்டு அல்கலும் ஆடின ராதல் நன்றோ நீடு நின்னொடு தெளித்த நன்மலை நாடன் 15. குறிவரல் அரைநாள் குன்றத் துச்சி நெறிகெட வீழ்ந்த துன்னருங் கூரிருள் திருமணி உமிழ்ந்த நாகங் காந்தள் கொழுமடற் புதுப்பூ ஊதுந் தும்பி நல்நிறம் மருளும் அருவிடர் 20. இன்னா நீளிடை நினையுமென் னெஞ்சே. - எழூஉப்பன்றி நாகன் குமரனார். (சொ-ள்) 1. இகுளை - இகுளையே! காதல் தோழி - காதலையுடைய தோழியே! கேட்டிசின் - கேட்பாயாக; 13-20. நீடு நின்னொடு தெளித்த நல்மலை நாடன் - நெடுநாளாக நின்னொடு கடிதுவரைந்து கொள்வல் எனத் தெளிவித்து வந்த நல்ல மலை நாடனாகிய நம் தலைவன், குறிவரல் அரை நாள் - இரவுக்குறி வரும் நடு இரவில், குன்றத்து உச்சி - அவர் வரும் குன்றின் உச்சியில், நெறி கெட வீழ்ந்த துன் அரும் கூர்இருள் - வழி தவறுமாறு செறிந்த அணுகற்கரிய மிக்க இருளிலே, திருமணி உமிழ்ந்த நாகம் - தனது அழகிய முடிமணியை உமிழ்ந்த நாகமானது, காந்தள் கொழு மடல் புதுப்பூ ஊதும் தும்பி - காந்தளது கொழுவிய மடலையுடைய புதிய பூவினை ஊதித் தாதினை அளைந்த வண்டின், நல்நிறம் மருளும் - நல்ல நிறத்தினைக் கண்டு தன் மணி என மயங்கும், அரு விடர் இன்னா நீள் இடை - அரிய பிளப்புக்களையுடைய இன்னாத நெடிய வழியை, என் நெஞ்சு நினையும் - என்மனம் நினைந்து கவலும்; 2-4. குவளை உண்கண் தெண் பனி மல்க - (அதனால்) குவளைப் பூவை ஒத்த எனது மையுண்ட கண்களில் தெளிந்த நீர் ததும்ப, வறிதுயான் வருந்திய செல்லற்கு - யான் சிறிது வருந்திய துன்பத்தினைக் கண்டு, அன்னை - நம் அன்னையானவள், பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி - இது தெய்வத்தால் ஆயதோ எனும் வேறோர் ஐயமுற்றனளாக; 4-13. வேம்பின் வெறிகொள் பசுஇலை நீலமொடு சூடி - கட்டு விச்சியும் வேலனும் வேம்பினது நாற்றமுடைய பசிய இலையுடன் நீலப் பூக்களைச் சூடி, உடலுநர்க் கடந்த கடல் தானை - மாறுபட்ட பகைவரை வென்ற கடல்போலும் சேனைகளையும், திருந்து இலை நெடு வேல் - திருந்திய இலையினைக் கொண்ட நெடிய வேலையு முடைய, தென்னவன் பொதியில் அரும் சிமை இழிதரும் ஆர்த்துவரல் அருவியில் - பாண்டியனது பொதியில்மலையில் அடைதற்கரிய உச்சியினின்றும் இழியும் ஆரவாரித்து வருதலையுடைய அருவி ஒலிபோல, ததும்பு சீர் இன்னியம் கறங்க - ஒலிக்கும் சீரையுடைய இனிய வாச்சியங்கள் ஒலிக்க, கைதொழுது - கையால் வணங்கி, உருகெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ - அச்சம் தோன்றும் தலைமையை யுடைய முருகனை மனைக்கண் வருவித்து, கடம்பும் களிறும்பாடி- அவனது கடம்பினையும் களிற்றினையும் பாடி, தோடும் தொடலையும் கைக்கொண்டு - பனந்தோட்டினையும் கடப்ப மாலையையும் கையிற் கொண் டணிந்து, நுடங்குபு - அசைந்தசைந்து, அல்கலும் - இரவெல்லாம், ஆடினர் ஆதல் நன்றோ - ஆடுதல் நன்றாகுமோ! (முடிபு) தோழி, நன்மலை நாடன் குறிவரல் அரைநாட் கூரிருள் இன்னா நீளிடை என் நெஞ்சு நினையும்; அதனால் உண்கண் பனிமல்க வருந்திய செல்லற்கு, அன்னை பிறிதொன்று கடுத்தனளாக, கட்டுவிச்சியும் வேலனும் முருகுமனைத் தரீஇ ஆடினராதல் நன்றோ? (வி-ரை) கடுத்தனளாகி: ஆக எனத் திரிக்க: கட்டுவிச்சியும் வேலனும் கட்டினானும் கழங்கினானும் குறி பார்த்து, பாசிலை நீலமொடு சூடி என விரித்துரைக்க. காதல் அம் தோழி, கடல்அம் தானை என்ற இடங்களில் `அம்' அசை. பனந்தோடுங் கடப்பமாலையும் அணிந்து ஆடுதல், மேல் `வெண்போழ் கடம்பொடு சூடீ'1 என வந்தமையால் அறிக. தொடலை காந்தள் மாலையுமாம். ஆடினர் எனப் பன்மை கூறினமையின், கட்டுவிச்சியும் வேலனும் என்க. `வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன், வெறியாட் டயர்ந்த காந்தளும்'2 என்பதற்கு, `செவ்வேள் வேலைத்தான் ஏந்தி நிற்றலின், `வேலன்' என்றார்; காந்தள் சூடி ஆடுதலிற் காந்தள் என்றார்; வேலனைக் கூறினமையிற் கணி காரிகையுங் கொள்க. காந்தளை யுடைமையானும், பனந்தோடுடைமையானும் மகளிரை வருத்து தலானும், வேலன் வெறியாட்டயர்ந்த என்றதனானும், வேலன் ஆடுதலே பெரும்பான்மை; ஒழிந்தோர் ஆடுதல் சிறுபான்மை யென்றுணர்க,' என நச்சினார்க்கினியர் உரைத்தது ஈண்டு அறிதற் பாலது. காந்தட்பூவை யூதுந்தும்பி நாகத்தின் மணிபோலும் என்னுங் கருத்து, `காந்தள் அணிமலர் நறுந்தா தூதுந் தும்பி, கையாடு வட்டிற் றோன்றும்'1 என்பதனோடு ஒத்திருத்தல் அறிந்து மகிழற்பாலது. (உ-றை) திருமணி யுமிழ்ந்த நாகம், காந்தட் புதுப்பூவை நுகர்ந்த தனால் நன்னிறம்பெற்ற தும்பியைக் கண்டு, ஐயுற்று மயங்குதல் போல, நம் அன்னை தலைவனோடு இன்பந் துய்த்ததனாற் புதுச் செவ்வியுற்ற என்னைக் கண்டு மயங்குகின்றாள் என்றவாறு. (மே-ள்) `களவல ராயினும்'2 என்னுஞ் சூத்திரத்து. `கட்டினுங் கழங்கினும்..... செய்திக் கண்ணும்' என்ற துறைக்கு இச் செய்யுளைக் காட்டி, இதன்கண் கட்டென்றாயினும் கழங்கென்றாயினும் விதந்து கூறாமையின் இரண்டும் ஒருங்கு வந்தன' என்றும், `பொழுதும் ஆறும்' என்னுஞ் சூத்திரத்து, அன்னவை பிறவும் என்னும் பகுதியில், `கடம் புங்களிறும்.... ஆதல் நன்றோ'3 என்பது, தலைவற்கு வெறியாட்டு உணர்த்தியது என்றும் கூறினர், நச். 139. பாலை (பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) துஞ்சுவது போல இருளி விண்பக இமைப்பது போல மின்னி உறைக்கொண்டு ஏறுவது போலப் பாடுசிறந் துரைஇ நிலம்நெஞ்சு உட்க ஓவாது சிலைத்தாங்கு 5. ஆர்தளி பொழிந்த வார்பெயல் கடைநாள் ஈன்றுநாள் உலந்த வாலா வெண்மழை வான்தோய் உயர்வரை ஆடும் வைகறைப் 4புதலொளி சிறந்த காண்பின் காலைத் தண்ணறும் படுநீர் மாந்திப் பதவருந்து 10. வெண்புறக் குடைய திரிமருப்பு இரலை வார்மணல் ஒருசிறைப் பிடவவிழ் கொழுநிழற் காமர் 5துணையொடு ஏமுற வதிய அரக்குநிற உருவின் ஈயல் மூதாய் பரப்பி யவைபோல் பாஅய்ப் பலவுடன் 15. நீர்வார் மருங்கின் ஈரணி திகழ இன்னும் வாரா ராயின் நன்னுதல் யாதுகொல் மற்றவர் நிலையே காதலர் கருவிக் காரிடி இரீஇய 1பருவ மன்அவர் வருதுமென் றதுவே. - இடைக்காடனார். (சொ-ள்) 16. நன்னுதல் - நல்ல நெற்றியையுடைய தோழியே! 1-8. துஞ்சுவதுபோல இருளி - மேகம் உறங்குவது போல இருண்டு, இமைப்பதுபோல விண்பக மின்னி - கண் இமைப்பது போல விண்பிளக்க மின்னி, உறைக்கொண்டு ஏறுவதுபோல பாடு சிறந்து உரைஇ - நீரைக்கொண்டு மேலேறுவதுபோல ஒலிமிக்குப் பரந்து, நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து - நிலத்தின் நெஞ்சு துணுக்குற ஒழியாது இடித்து, ஆர் தளி பொழிந்த வார்பெயல் கடைநாள் - மிக்க நீரைச் சொரிந்த நீண்ட பெயலைக் கொண்ட கார்காலத்தின் கடைநாளில், ஈண்டு நாள் உலந்த வாலா வெண் மழை - பெய்து நாள் கழிந்த தூய்மையில்லாத வெளிய மேகம், வான்தோய் உயர்வரை ஆடும் வைகறை - வானை அளாவிய உயர்ந்த மலையில் தவழும் வைகறையாகிய, புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை - புதல்கள் ஒளியாற் சிறந்த காண்டற்கு இனியவாகும் காலத்தே; 9-15. தண் நறும் படுநீர் மாந்தி - குளிர்ந்த நறிய குளத்தின் நீரை நிறைய உண்டு, பதவு அருந்து - அறுகம்புல்லை மேயும், வெண்புறக்கு உடைய திரிமருப்பு இரலை - வெள்ளிய புறத்தினையுடைய திரிந்த கொம்பினையுடைய ஆண்மான், வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல் - நீண்ட மணலின் ஒரு பக்கத்தே மலர் விரிந்த பிடவினது கொழுவிய நிழலிலே; காமர் துணையொடு ஏம் உற வதிய - அழகிய தன் பிணையுடன் இன்பம் பொருந்தத் தங்க, அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் - செவ்வரக்கு அனைய நிறத்தையும் அழகினையுமுடைய தம்பலப் பூச்சிகள், பரப்பியவைபோல் பாஅய்ப் பலவுடன் - பரப்பி வைத்தாற் போலப் பலவும் ஒருங்கே பரந்து, நீர்வார் ஈர் மருங்கின் அணி திகழ - நீர் ஒழுகிய ஈர முடைய இடத்தில் அழகுடன் விளங்க; 16-17. இன்னும் காதலர் வாரார் ஆயின் - இன்னும் நம் காதலர் வந்திலரேல், அவர் நிலை யாது கொல் - அவரது நிலை என்னையோ; 18-19. அவர் வருதும் என்றது - அவர் மீண்டு வருவேம் என்று கூறியது, கருவிக் கார் இடி இரீஇய பருவம் மன் - தொகுதியை யுடைய மேகங்கள் இடிகளைக் கொண்ட இந்தப் பருவம் அன்றோ! (முடிபு) மேகம் தளி பொழிந்த கடைநாள் வெண்மழை ஆடும் வைகறையாகிய காலை, இரலை துணையொடு ஏமுற வதிய, ஈயன் மூதாய் அணி திகழ, காதலர் இன்னும் வாராராயின், அவர் நிலை யாது கொல். அவர் வருதும் என்றது கார் ஆகிய பருவம் மன். (வி-ரை) சிலைத்தாங்கு: ஆங்கு, ஆசை. ஆம் கார் எனப் பிரித்து நீரையுடைய மேகம் என்பாரும் உளர்; வைகறையாகிய காலை என்க. படு - குளம். புறக்கு - புறம்; உடலின் வெளிப்புறம். இரலை வதியவும், ஈயன் மூதாய் திகழவும் இக்காலத்தும் வந்திலராயின் என்க. பருவ மன்றவர் என்பது பாடமாயின், மன்ற என்றதன் அகரம் தொக்க தாகக் கொள்க. இப்பாட்டு உரிப்பொருளாற் பாலை யாயிற்று. (மே-ள்) `திணைமயக்கு உறுதலும்'1 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுட்கண், பாலைக்கண் முன்பனியும் வைகறையும் ஒருங்கு வந்தன என்றும், `வேந்துறு தொழிலே யாண்டின தகமே'2 என்னுஞ் சூத்திரத்து, `கருவி காரிடி யிரீஇய, பருவ மன் அவர் வருதுமென் றதுவே (என்னும்) இது, கார் குறித்து வருவரென்றலின், அறுதிங்கள் இடையிட்டது' என்றும் கூறினர், நச். 140. நெய்தல் (இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்குந் தலைமகன் பாங்கற் குரைத்தது.) பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி என்றூழ் விடர குன்றம் போகும் 5. கதழ்கோல் உமணர் காதல் மடமகள் சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச் சேரி விலைமாறு கூறலின் மனைய விளியறி ஞமலி குரைப்ப வெரீஇய 10. மதர்கயல் மலைப்பின் அன்னகண் எமக்கு இதைமுயல் புனவன் புகைநிழல் கடுக்கும் மாமூ தள்ளல் அழுந்திய சாகாட்டு எவ்வந் தீர வாங்குந் தந்தை கைபூண் பகட்டின் வருந்தி. 15. வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே - அம்மூவனார். (சொ-ள்) 1-5. பெருங் கடல் வேட்டத்து - பெரிய கடலில் மீன் வேட்டை செய்யும், சிறுகுடிப் பரதவர் - சிறு குடியில் வாழும் பரதவர், இருகழி செறுவில் - பெரிய உப்பங்கழியாய செய்யில், உழாஅது செய்த வெண்கல் உப்பின் - உழாமலே விளைவித்த வெள்ளிய கல் உப்பின், கொள்ளை சாற்றி - விலை கூறி, என்றூழ் விடர குன்றம் போகும் - ஞாயிற்றின் வெம்மையாலாய பிளப்புக்களை யுடைய குன்றங்களைக் கடந்துபோகும், கதழ்கோல் உமணர் காதல் மடமகள் - கடாவினை விரையத் தூண்டும் கோலினையுடைய உப்பு வாணிகரது காதலையுடைய இளைய மகள்; 9-10. சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி - சிலவாகிய திரண்ட இலங்கும் வளைகள் ஒலிக்க வீசி, நெல்லின் நேரே வெண் கல் உப்பு என - நெல்லுக்கு ஒத்த அளவினதே வெள்ளிய கல்லுப்பு என்று, சேரி விலைமாறு கூறலின் - சேரியில் பண்ட மாற்றாகிய விலை கூறலின், விளி அறி மனைய ஞமலி குரைப்ப - ஒலி வேற்றுமை அறியும் மனையிலுள்ள நாய் வேற்றுக் குரலென்று குரைத்துவர, வெரீஇய மதர் கயல் மலைப் பின் அன்ன கண் - அதற்கு அஞ்சிய மதர்த்த கயல் இரண்டு எதிர்த்துப் பொருவது போன்ற அவள் கண்கள்; 10. எமக்கு - எமக்கு, இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும் - புதுக்கொல்லை ஆக்க முயலும் குறவன் மரங்களைச் சுட்டெரிக்கும் தீயின் புகை நிழலை ஓக்கும், மாமூது அள்ளல் - கரிய பழஞ் சேற்றிலே, அழுந்திய சாகாட்டு எவ்வம் தீர - அழுந்திய பண்டியின் இடையூறு நீங்க, வாங்கும் - வருந்தி இழுக்கும், தந்தை கைபூண் பகட்டின் வருந்தி - அவள் தந்தை கையிற் பற்றிய பகடுபோல் வருந்தி- வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்று - வெய்யவாக உயிர்த்தலைச் செய்யும் நோய் ஆகின்றது. (முடிபு) உமணர் காதல் மடமகள் சேரிக்கண் விலை மாறு கூறலின், ஞமலி குரைப்ப, வெரீஇய கண், எமக்கு நோய் ஆகின்று. (வி-ரை) பகடு - கடா; எருதுமாம். கண்ணால் நோயாகின்றது என்றலுமாம். 141. பாலை (பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தியுரைத்தது.) அம்ம வாழி தோழி கைம்மிகக் கனவுங் கங்குல்தோ றினிய நனவும் புனைவினை நல்இல் புள்ளும் பாங்கின நெஞ்சு நனிபுகன் றுறையும் எஞ்சாது 5. உலகுதொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி மழைகால் நீங்கிய மாக விசும்பில் குறுமுயல் மறுநிறங் கிளர மதிநிறைந்து அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப் 10. பழவிறல் மூதூர்ப் பலருடன் 1துவன்றிய விழவுடன அயா வருகதில் அம்ம துவரப் புலர்ந்து தூமலர் கஞலித் தகரம் நாறுந் தண்நறுங் கதுப்பின் புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப் 15 பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇக் கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர் பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப் பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக் கடிதிடி 2வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு 20. தீங்குலை வாழை ஓங்குமடல் இராது நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றுஞ் செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால் வெல்போர்ச் சோழன் இடையாற் றன்ன நல்லிசை வெறுக்கை தருமார் பல்பொறிப் 25. புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை நரந்த நறும்பூ நாண்மலர் உதிரக் கலைபாய்ந்து உகளுங் கல்சேர் வேங்கைத் தேங்கமழ் நெடுவரைப் பிறங்கிய வேங்கட வைப்பிற் சுரன்இறந் தோரே. - நக்கீரர். (சொ-ள்) 1-4. அம்ம வாழி தோழி - தோழியே! நான் கூறுவதனைக் கேட்பாயாக; கங்குல்தோறு கனவும் கைம்மிக இனிய - இரவுதோறும் கனவும் மிகவும் இனியவாகின்றன. நனவும் புனைவினை நல் இல் புள்ளும் பாங்கின - நனவிலும் புனையப் பெற்ற தொழில்களை யுடைய நல்ல மனையிலே புள் நிமித்தங்கள் நல்லனவாகின்றன, நெஞ்சும் எஞ்சாது நனி புகன்று உறையும் - என் நெஞ்சும் சுருங்காது மிகவும் விருப்பம்மேவி அமைதியுற்றிருக்கும்; 12-24. துவரப் புலர்ந்து - முற்ற உலர்ந்து, தூமலர் கஞலி - தூய மலர்கள் நெருங்கப்பெற்று, தகரம் நாறும் - மயிர்ச்சாந்து மணக்கும், தண்நறும் கதுப்பின் - தண்ணிய நறிய கூந்தலையுடைய, புதுமண மகடூஉ - புதிய மணமகள், அயினிய - உணவு மிக்க, கடிநகர் -மண மனையில், பல்கோட்டு அடுப்பில் - பல புடைகளையுடைய அடுப்பில், பால் உலை இரீஇ - பாலை உலையாக வார்த்து, கூழைக் கூந்தல் குறு தொடி மகளிர் - கூழையாகிய கூந்தலையும் சிறிய வளையலையும் உடைய இள மகளிருடன், பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்து - பெரிய வயலில் விளைந்த நெல்லின் வளைந்த கதிரினை முறித்து, பசு அவல் இடிக்கும் -பசிய அவலாகக் குற்றும், இரும் காழ் உலக்கைக் கடிது இடி வெரீஇய-கரிய வயிரமாய உலக்கையின் விரைந்த இடிக்கு அஞ்சிய, கமம் சூல் வெண் குருகு - நிறைந்த சூலினையுடைய வெள்ளிய பறவை, தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது - இனிய குலையினையுடைய வாழையின் உயர்ந்த மடலிலிராது, நெடுகால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும் - நெடிய காலையுடைய மாமரத்தின்கண் குறுகப் பறந்து செல்லும் பதியாய, செல்குடி நிறுத்த பெரும் பெயர் - கெட்ட குடிகளைத் தாங்கிய பெரும் புகழையும், வெல் போர் - வெல்லும் போரையுமுடைய, கரிகால் சோழன் -கரிகால் வளவனது, இடையாறு அன்ன - இடையாற்றினை ஒத்த, நல் இசை வெறுக்கை தருமார் - நல்ல புகழ் வாய்ந்த செல்வத்தை ஈட்டிவர; 24-26. கல்சேர் வேங்கை - மலையிடத்துள்ள வேங்கைமரத்தின், பல்பொறிப் புலிக் கேழ் உற்ற பூ இடை - பல புள்ளிகளையுடைய புலியின் நிறத்தினைப் பொருந்திய பூக்களிடையே, பெருஞ்சினை நரந்தம் நறும் பூ நாள்மலர் உதிர - பெரிய கிளையினையுடைய நாரத்தை மரத்தின் நறிய அழகிய புதிய மலர்கள் உதிர, கலை பாய்ந்து உகளும் - முசுக்கலை பாய்ந்து தாவும், தேம் கமழ் நெடுவரைப் பிறங்கிய - தேன் நாறும் நீண்ட சிமையங்களால் விளங்கிய, வேங்கடவைப்பின் சுரன் இறந்தோர் - வேங்கட மலையைச் சார்ந்த ஊர்களையுடைய சுரநெறியைக் கடந்து சென்றோர்; 5-11. நாஞ்சில் துஞ்சி - கலப்பைகள் மடிந்து, உலகு தொழில் உலந்து - உலகின்கண் உழுதொழில் முடிந்துவிட, மழை கால் நீங்கிய மாக விசும்பில் - மழை பெய்தல் ஒழிந்த வானின் கண்ணே, குறு முயல் மறுநிறம் கிளர - குறிய முயலாகிய மறுவின் நிறம் விளங்க, மதி நிறைந்து - மதி நிறைவுற்று, அறுமீன் சேரும் இருள் அகல் நடுநாள் - கார்த்திகையைச் சேரும் இருள் அகன்ற நடு இரவில், மறுகு விளக்கு உறுத்து - தெருக்களில் விளக்குகளை நிரல்பட ஏற்றி, மாலை தூக்கி - மாலைகளைத் தொங்கவிட்டு, பழவிறல் முது ஊர் பலர் உடன் துவன்றிய - பழமையான வென்றியுடைய முதிய ஊரின்கண் பலரும் ஒருங்கு சேர்ந்த, விழவு உடன் அயர - விழவினை நம்முடன் கொண்டாட, வருக - வருவாராக. (முடிபு) தோழி! வாழி! கனவும் இனிய; நனவும் புள்ளும் பாங்கின; நெஞ்சும் எஞ்சாது புகன்று உறையும்; கரிகால் இடை யாற்றன்ன வெறுக்கை தருமார் வேங்கட வைப்பின் சுரம் இறந்தோர்; (ஆய நம் தலைவர்); பழவிறல் மூதூர் மதி நிறைந்து அறுமீன் சேரும் நடுநாள் விழவு நம்முடன் அயர வருகதில். (வி-ரை) கனவும் நனவும் என்பவற்றின் உம்மை எச்சவும்மை. புள் - புள்நிமித்தம். உலந்து - உலக்க எனத் திரிக்க. மாகவிசும்பு: இரு பெயரொட்டு. அறுமீன் - கார்த்திகை. கார்த்திகைத் திங்களின், கார்த்திகை நாளில், மறுகுகளில் நிரைநிரையாக விளக்கு ஏற்றி விழாக் கொண்டாடும் வழக்கம் பண்டுதொட்டுள்ள தென்பது, இதனாலும், பிறாண்டு வருவனவற்றானும் அறியப்படும். இலையில மலர்ந்த முகையி லிலவம், கலிகொ ளாய மலிபு தொகு பெடுத்த, அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி,1 `கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்குப் போன்றனவே'2 என்பன காண்க. தில், விழைவு. அம்ம, அசை. உலையிற் பெய்தற் பொருட்டு அவல் இடிப்பர் என்க. இடி வெரீஇய - இடியாலாய ஓசையை வெருவிய என்க. இடையாறு - இடையாற்று மங்கலம் என்னும் ஊர். கனவு முதலியவற்றால் தலைவர் விரைந்து வருவர் எனத் துணிந்து, ஆற்றுவல் என்பதுபடத் தலைமகள் தோழிக்குக் கூறினாள். 142. குறிஞ்சி (இரவுக்குறி வந்து நீங்குந் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) இலமலர் அன்ன அஞ்செந் நாவிற் புலமீக் கூறும் புரையோர் ஏத்தப் பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல் நிறையருந் தானை வெல்போர் மாந்தரம் 5. பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற குறையோர் கொள்கலம் போல நன்றும் உவவினி வாழிய நெஞ்சே காதலி முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற கறையடி யானை நன்னன் பாழி 10. ஊட்டரு மரபின் அஞ்சுவரு பேஎய்க் கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி புள்ளிற் கேம மாகிய பெரும்பெயர் வெள்ளத் தானை 3அதிகற் கொன்றுவந்து ஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பிற் 15. பலரறி வுறுதல் அஞ்சிப் பைப்பைய நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச் சூர்ப்புறு கோல்வளை செறித்த முன்கைக் குறையறல் அன்ன இரும்பல் கூந்தல் இடனில் சிறுபுறத் திழையொடு துயல்வரக் 20. கடல்மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை இயல்கற் றன்ன ஒதுக்கினள் வந்து 1பெயலலைக் கலங்கிய மலைப்பூங் கோதை இயலெறி பொன்னிற் கொங்குசோர்பு உறைப்பத் 25. தொடிக்கண் வடுக்கொள முயங்கினள் வடிப்புறு நரம்பில் தீவிய மொழிந்தே. - பரணர். (சொ-ள்) 7. நெஞ்சே-, வாழிய-, காதலி - நம் காதலியானவள்; 8-15. முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற - நீதி முறையின் வழுவாமல் கடமையினைச் செய்து பெற்ற, கறை யடி யானை நன்னன் பாழி - உரல்போலும் அடியினையுடைய யானையையுடைய நன்னனது பாழியிலுள்ள, ஊட்டு அரும் மரபின் அஞ்சுவரு பேய்க்கு - பலியிடற்கு அரிய தன்மையையுடைய அஞ்சத்தக்க பேய்க்கு, ஊட்டு எதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி - ஊட்டுதலை ஏற்றுக் கொண்ட வாய்மை பொருந்திய மிஞிலி என்பான், புள்ளிற்கு ஏமம் ஆகிய - புட்களுக்குப் பாதுகாவல் ஆகிய, பெரும் பெயர் - பெரும் புகழினையுடைய, வெள்ளத் தானை அதிகன் கொன்று உவந்து - வெள்ளம் போன்ற சேனையினையுடைய அதிகன் என்பானைக் கொன்று மகிழ்ந்து, ஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பின் - `ஒள்வாள் அமலை' எனும் வென்றிக்கூத்தை ஆடிய போர்க்களப் பூசலைப் போல, பலர் அறிவுறுதல் அஞ்சி - பலரும் அறிந்து அலர் கூறலை அஞ்சி; 15-22. நீர்த் திரள் கடுக்கும் - நீரின் திரட்சியை ஒக்கும், மாசு இல் வெள்ளி - குற்றமற்ற வெள்ளியினாலாய, சூர்ப்பு உறு கோல் வளை - வளைவு பொருந்திய திரண்ட வளைகள், செறித்த முன் கை - செறிக்கப் பெற்ற முன் கையளாய், குறை அறல் அன்ன இரும்பல் கூந்தல் - நீர் கறைந்த அறலை ஒத்த கரிய பலவாய கூந்தல், இடன் இல் சிறுபுறுத்து இழையொடு துயல்வர - அகற்சியில்லாத பிடரியின் பாலுள்ள அணியோடு கூடி அசைய, கடல்மீன் துஞ்சும் நள்என் யாமத்து - கடல் மீன்கள் துயிலும் நள்ளென்று ஒலிக்கும் இடையாமத்தில், உருவு கிளர் ஏர்வினை பொலிந்த பாவை - அழகு கிளர்ந்த பொலிவினை யுடைய செய்தொழிலாற் சிறந்தபாவை, இயல் கற்றன்ன ஒதுக்கினள் - நடை கற்றாற்போன்ற நடையினளாய், பைப்பைய வந்து - மெல்ல மெல்ல வந்து; 23-26. பெயல் அலை கலங்கிய - மழையின் அலைத்தலாற் கலங்கிய, மலை பூ கோதை - மலைப் பூக்களாலாய மாலை யினின்றும், எறி இயல் பொன்னில் - உலைக்களத்து அடிக்குங்கால் தெறித்து விழும் பொற்றூள்போல், கொங்கு சோர்பு உறைப்ப - தேன் துளித்து விழ, வடிப்பு உறு நரம்பில் தீவிய மொழிந்து - வடித்தல் அமைந்த யாழ் நரம்பின் ஒலி போல இனிய மொழிகளைக்கூறி, தொடிக்கண் வடுக்கொள முயங்கினள் - வட்டமாய முலைக் கண்ணின் வடுவுண்டாகத் தழுவினாள்; 1-7. இலமலர் அன்ன அம்செம் நாவின் - இலவமலர் போன்ற அழகிய சிவந்த நாவினால், புலம் மீக் கூறும் புரையோர் ஏத்த - புலமையால் உயர்த்திக் கூறப்பெறும் மேலோர் புகழ, பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல் - பலரினும் மேம்பட்ட கொடுத்தலாற் கவிந்த கையினையுடைய வள்ளலாய, நிறை அருந் தானை - நிறுத்து தற்கரிய சேனையினையுடைய, வெல்போர் - போர் வெல்லும், மாந்தரம் பொறையன் கடுங்கோ -மாந்தரம் பொறையன் கடுங்கோ என்னும் சேர மன்னனை, பாடிச் சென்ற குறையோர் கொள்கலம் போல - பாடிச் சென்ற வறியோரது பிச்சை ஏற்கும் கலம்போல, நன்றும் உவ இனி - இனிப் பெரிதும் நிறைவுற்று மகிழ்வாயாக. (முடிபு) நெஞ்சே! வாழிய! காதலி, மிஞிலி அதிகற்கொன்று ஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பின் பலர் அறிவுறுதல் அஞ்சி; நள்ளென் யாமத்து வந்து; தீவிய மொழிந்து; தொடிக்கண் வடுக் கொள முயங்கினள்; மாந்தரம் பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற குறையோர் கொள்கலம் போல இனி உவப்பாயாக. நன்னன் பாழிப் பேய்க்கு ஊட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி என்க. காதலி கூந்தல் துயல் வர வந்து தீவிய மொழிந்து தொடிக் கண் வடுக்கொள முயங்கினள் என்க. (வி-ரை) இலவ மலர்; இலமலர், விகாரம். கறையடி - குருதிக் கறை பொருந்திய அடி எனலுமாம். ஊட்டு எதிர் கொண்ட - உண்பித்தலை ஏற்றுக் கொண்ட; களவேள்வியாற் பேய்க்கு ஊட்டிய என்றபடி. புள்ளிற்கு ஏமமாயினான் என்பது, `துன்னருங் கானம்'1 `யாம இரவின்'2 என்னுஞ் செய்யுட்களானும் அறியப்படுகின்றது. அதிகன் என்பது, ஆய் எயினனுக்குரிய வேறு பெயர் போலும். எயினன் என்றே பிறாண்டு வந்திருத்தலின்; அன்றி எயினற்கொன்று வந்து என்று பாடங் கொள்ளுதலுமாம். ஒள்வாள் அமலை யென்பது தும்பைத் திணையின் ஓர் துறை; வாள்வீரர் தம் தலைவனுடன் ஆடுதல் அதன் இலக்கணம். சூர்ப்பு - வளைவு. தொடி - வட்டம். தொடிக்கண் - வளையாலாய என்றுரைத்தலுமாம்; ஈண்டுக் கண் வேற்றுமை மயக்கம். (மே-ள்) `செல்வம் புலனே'3 என்னுஞ் சூத்திரத்து; `தொடிக் கண் வடுக்கொள முயங்கினள், வடிப்புறு நரம்பிற் றீவிய மொழிந்தே' என்பது, புணர்ச்சி பற்றிய உவகை யென்றும், 1`வினைபயன் மெய்யுரு' என்னுஞ் சூத்திரத்து, உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை, இயல் கற்றன்ன ஒதுக்கினள்' என்பது வடிவு பற்றிய உவமம் என்றும் கூறினர், பேரா. 143. பாலை (பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனைத் தோழி தலைமகளது ஆற்றாமை கண்டு செலவழுங்குவித்தது.) செய்வினைப் பிரிதல் எண்ணிக் கைம்மிகக் காடு 2கவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின் நீடுசினை வறிய வாக ஒல்லென 3வாடுபல் அகலிலை கோடைக்கு ஒய்யும் 5. தேக்கமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கெழுபு முளிஅரில் பிறந்த வளிவளர் கூர்எரிச் சுடர்நிமிர் நெடுங்கொடி விடர்முகை முழங்கும் 4வெம்மலை அருஞ்சுரம் ந்தி ஐய சேறும் என்ற சிறுசொற் கிவட்கே 10. வசையில் வெம்போர் வானவன் மறவன் நசையின் வாழ்நர்க்கு நன்கலஞ் சுரக்கும் பொய்யா வாய்வாள் புனைகழல் பிட்டன் மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன் அகலறை நெடுஞ்சுனைத் துவலையின் மலர்ந்த 15. தண்கமழ் லுலம் போலக் கண்பனி கலுழ்ந்தன நோகோ யானே. - ஆலம்பேரி சாத்தனார். (சொ-ள்) 1-9. ஐய - ஐயனே! செய்வினைப் பிரிதல் எண்ணி - பொருள் ஈட்டும் வினைக்கண் பிரிதலை எண்ணி, காடு கவின் ஒழிய - காடு அழகுகெட, கடும் கதிர் கைம்மிகத் தெறுதலின் - ஞாயிற்றின் கடிய கதிர் அளவு கடந்து காய்தலின், நீடுசினை வறிய ஆக - நீண்ட கிளைகள் வறியன ஆக, ஒல்லென வாடு பல் அகல் இலை - ஒல்லெனும் ஒலியுடன் வாடிய பல அகன்ற இலைகள், கோடைக்கு ஒய்யும் - மேல் காற்றால் உதிர்க்கப்பெறும், தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் - தேக்க மரங்கள் நிறைந்த பக்கமலைகளாய அவ்விடத்து, முளி அரில் பிறந்த வளிவளர் கூர் எரி - காய்ந்த தூறுகளிற் பிறந்ததும் காற்றினால் வளர்ந்தோங்கியதுமான மிக்க தீயின், சுடர் நிமிர் நெடும் கொடி - ஒளி மிக்க நீண்ட ஒழுங்கு, மேக்கு எழுபு விடர்முகை முழங்கும் - மேலே எழுந்து மலைப்பிளப்பாகிய குகைகளில் முழங்கும், வெம்மலை அரும் சுரம் நீந்தி - வெப்பம் மிக்க மலையைச் சார்ந்த அரிய சுரத்தினைக் கடந்து, சேறும் என்ற சிறு சொற்கு - நாம் போவேம் என்று கூறிய நுமது சிலவாய சொல்லைக் கேட்டதற்கே; 9-16. இவட்கு - இத்தலைவிக்கு, வசைஇல் வெம்போர் வானவன் மறவன் - பழியில்லாத கொடிய போர் வல்ல சேரன் படைத் தலைவனான, நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும் - பரிசில் விருப்புடன் வாழ்வார்க்கு நல்ல அணிகலன்களை அளிக்கும், பொய்யா வாய்வாள் புனைகழல் பிட்டன் - தப்பாது வென்றி வாய்க்கும் வாளினையும் புனைந்த கழலினையும் உடைய பிட்டன் என்பானது, மைதவழ் உயர் சிமை குதிரைக் கவான்- மேகம் தவழும் உயர்ந்த உச்சி யினையுடைய குதிரை மலையின் பக்க வரையில், அகல் அறை நெடும் சுனைத் துவலையின் மலர்ந்த - அகன்ற பாறையிலுள்ள நெடிய சுனையிடத்து மழைத் துவலையால் மலர்ந்த, தண் கமழ் நீலம் போல - குளிர்ந்த மணம் கமழ்கின்ற நீலமலர் நீர் ஒழுகுவது போல, கண் பனி கலுழ்ந்தன - கண்கள் நீரைச் சொரிந்தன, யான் நோகு - யான் அது கண்டு நோவேன் ஆயினன். (முடிபு) ஐய! நீ செய்வினைப் பிரிதல் எண்ணி, வெம்மலை அருஞ்சுரம் நீந்திச் சேறும் என்ற சிறு சொற்கு, இவட்கு, பிட்டன் குதிரைக் கவான் சுனை நீலம்போலக் கண் பனி கலுழ்ந்தன; யான் நோகோ. அடுக்கத்து ஆங்கண் கூரெரி நெடுங்கொடி விடர்முகை முழங்கும் வெம்மலை அருஞ்சுரம் என்க. (வி-ரை) ஒல்லென ஆடு எனப் பிரித்து, ஒல்லென்னும் ஒலி யுண்டாக அசையும் என்றலுமாம். கோடைக்கு - கோடையால், ஒய்தல் - செலுத்தல். மேக்கு - மேலிடம், கொடி - ஒழுங்கு விடராகிய முகை என்க. சிறு சொல் - நன்மை யல்லாத சொல்லுமாம். பொய்யாத பிட்டன் எனவும், பொய்யாது சுரக்கும் பிட்டன் எனவும் கூட்டி யுரைத் தலுமாம். துவலையின் மலர்ந்த - துவலையொடு மலர்ந்த என்றுமாம். 144. முல்லை (வினைமுற்றிய தலைமகன் தன்னெஞ்சிற்கு உரைப்பானாய்ப் பாகற்குச் சொல்லியது.) 1வருதும் என்ற நாளும் பொய்த்தன 2அரியேர் உண்கண் நீரும் நில்லா தண்கார்க்கு ஈன்ற பைங்கொடி முல்லை வைவாய் வான்முகை அவிழ்ந்த கோதை 5. பெய்வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார் அருள்கண் மாறலோ மாறுக அந்தில் அறனஞ் சலரே ஆயிழை நமரெனச் சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும் பனிபடு நறுந்தார் குழைய நம்மொடு 10. துனிதீர் முயக்கம் பெற்றோள் போல உவக்குவள் வாழிய நெஞ்சே விசும்பின் ஏறெழுந்து முழங்கினும் மாறெழுந்து சிலைக்கும் கடாஅ யானை கொட்கும் பாசறைப் போர்வேட்டு எழுந்த மள்ளர் 1கையதை 15. கூர்வாள் குவிமுகஞ் சிதைய நூறி மானடி மருங்கில் பெயர்த்த குருதி வான மீனின் வயின்வயின் இமைப்ப 2அமரோர்த்து அட்ட செல்வம் தமர்விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே. - மதுரை அளக்கர்ஞாழலார் மகனார் மள்ளனார். (சொ-ள்) 11. நெஞ்சே-, வாழிய-, 1-8. (நம் தலைவி தன் தோழியை நோக்கி) ஆயிழை - தோழியே! நமர் - நம் தலைவர், வருதும் என்ற நாளும் பொய்த்தன - தாம் வருவேம் என்று கூறிய நாட்களும் பொய்யாயின; அரி ஏர் உண் கண் நீரும் நில்லா - செவ்வரி பரந்த அழகிய மையுண்ட கண்களினின்று நிரும் நில்லா தொழுகுகின்றன; தண் கார்க்கு ஈன்ற பைங்கொடி முல்லை வைவாய் வான்முகை அவிழ்ந்த - குளிர்ந்த மழையால் அரும்பிய பசிய முல்லைக்கொடியினது கூரிய முனைவாய்ந்த வெள்ளிய அரும்புகள் மலர்ந்தன; கோதை பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார் - மாலையைத் தரிக்கும் அழகினை இழந்த கூந்தலையும் நினையார் ஆயினர், அறன் அஞ்சலர் - அறத்திற்கும் அஞ்சுகின்றிலர், அந்தில் அருள்கண் மாறலோ மாறுக - இங்ஙனமெல்லாம் ஆகலின் அவரிடத்தினின்றும் அருள்மாறினும் மாறுக என, சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும் - சிறியவாகச் சொல்லிப் பெரியவாக வருத்தமுறுவாளாயினும்; 11-19. விசும்பின் ஏறு எழுந்து முழங்கினும் - வானில் இடியேறு எழுந்து முழங்கினும், மாறு எழுந்து சிலைக்கும் - அதற்கு எதிராக எழுந்து தானும் முழங்கும், கடாஅ யானை கொட்கும் பாசறை - மதம் பொருந்திய களிறு சுழலும் பாசறைக்கண், போர்வேட்டு எழுந்த மள்ளர் கையதை - போர் விரும்பிக் கிளர்ந்தெழும் வீரர்தம் கையிடத்ததாகிய, கூர்வாள் குவிமுகம் சிதைய நூறி - கூரிய வாளின் குவிந்த முனை சிதைந்திட மாற்றார் படையை வீசிக் கொன்று, மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி - மான் அடிபதிந்த பள்ளங்களிலே பாய்ச்சிய உதிரம், வான மீனின் வயின்வயின் இமைப்ப - வானின்கண் மீன்போல இடந்தோறும் இடந்தோறும் மின்ன, ஓர்த்து அமர் அட்ட செல்வம் - அறிய வேண்டுவனவற்றையெல்லாம் ஆராய்ந்து அறிந்து போரினை வென்ற செல்வத்தை, தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்று - நம் சுற்றத்தார் விரைந்து சென்று உரைக்கக் கேட்கும்பொழுது; 9-11. பனிபடு நறுந்தார் குழைய - குளிர்ச்சி பொருந்திய நறிய மாலை குழைந்திட, நம்மொடு துனிதீர் முயக்கம் பெற்றோள்போல- நம்முடன் வெறுப்பு ஒழிந்த கூட்டம் பெற்றவளைப்போல, உவக்குவள் - மகிழ்வள் அன்றோ? (முடிபு) நெஞ்சே! வாழிய! (நம் தலைவி தன் தோழியை நோக்கி), ஆயிழை! நமர் அருள்கண் மாறலோ மாறுக எனச் சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும், அமரோர்த்து அட்ட செல்வம் தமர் விரைந்துரைப்பக் கேட்கும் ஞான்று, நம்மோடு துனிதீர் முயக்கம் பெற்றோள் போல உவக்குவள். நாளும் பொய்த்தன; நீரும் நில்லா; முகை அவிழ்ந்த; கதுப்பும் உள்ளார்; அறன் அஞ்சலர் மாறலோ மாறுக; எனச் சிறிய சொல்லி என்க. (வி-ரை) வரி ஏர் எனப் பிரித்துரைத்தலுமாம். கண்மாறல், ஒரு சொல். அந்தில் - அசையுமாம். புலப்பினும் என்ற பாடத்திற்கு வெறுப்பினும் என்றுரைக்க. கையதை, ஐ சாரியை. மான் - விலங்கு என்றுமாம். செல்வம் - வெற்றியாகிய செல்வம். அட்டதனாற் பெற்ற பொருளாகிய செல்வம் என்றுமாம். கேட்கும் ஞான்று உவக்குவள் என்றதனால் நீ தேரினை விரையக் கடவுதி எனத் தலைவன் பாகற்குக் குறிப்பினாற் கூறினானாயிற்று. (மே-ள்) `ஏவன் மரபின்'1 என்னுஞ் சூத்திரத்து, இப் பாட்டினுள், வேந்தன் தலைவனாயினவாறும், தான் அமரகத்து அட்ட செல்வத்தையே மிக்க செல்வமாகக் கருதுதற்குரியாள் அரச வருணத்திற்றலைவியே என்பதூஉம் உணர்க' என்றனர். நச். `இன்பத்தை வெறுத்தல்'2 என்னுஞ் சூத்திரத்து, பொய்யாகக் கோடல் என்ற துறைக்கு மெய்யைப் பொய்யாக் கோடல் என்றுரைத்து, `வருது மென்ற நாளும் பொய்த்தன, வரியே ருண்கண்ணீரு நில்லா' எனவரும் என்றார்' பேரா. 145. பாலை (மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.) வேர்முழுது உலறி நின்ற புழல்கால் தேர்மணி இசையில் சிள்வீடு ஆர்க்கும் வற்றல் மரத்த பொன்தலை ஓதி வெயில்கவின் இழந்த வைப்பில் பையுள்கொள 5. நுண்ணிதின் நிவக்கும் வெண்ஞெமை வியன்காட்டு ஆளில் அத்தத்து 1அளியள் அவனொடு வாள்வரி பொருத புண்கூர் யானை புகர்சிதை முகத்த குருதி வார உயர்சிமை நெடுங்கோட்டு உருமென முழங்கும் 10. அருஞ்சுரம் இறந்தனள் என்ப பெருஞ்சீர் அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன் தொன்னிலை முழுமுதல் துமியப் பண்ணிய நன்னர் மெல்லிணர்ப் புன்னை போலக் கடுநவைப் படீஇயர் மாதோ களிமயில் 15. குஞ்சரக் குரல குருகோடு ஆலும் துஞ்சா முழவின் 2துய்த்தியல் வாழ்க்கைக் கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின் ஊழடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால் சிறுபல் கூந்தல் போதுபிடித் தருளாது 20. எறிகோல் சிதைய நூறவுஞ் சிறுபுறம் எனக்குரித் தென்னான் நின்றஎன் அமர்க்கண் அஞ்ஞையை அலைத்த கையே. - கயமனார். (சொ-ள்) 1-10. வேர் முழுது உலறி நின்ற புழல்கால் - வேர் முதல் முழு மரமும் வற்றி நின்ற துளைபட்ட அடியினை யுடையதும், தேர்மணி இசையில் சிள்வீடு ஆர்க்கும் - தேரின் மணி ஒலிபோலச் சிள் வீடு எனும் வண்டுகள் ஒலிப்பதும் ஆகிய, வற்றல் மரத்த - வற்றல் என்னும் மரத்தினிடத்தவாகிய, பொன் தலை ஓதி - பொன்னிறம் வாய்ந்த தலையையுடைய ஓந்தி, வெயில் கவின் இழந்த வைப்பில் - வெய்யிலால் அழகு ஒழிந்த ஊர்களில், பையுள் கொள நுண்ணிதின் நிவக்கும் - வருத்தங் கொள்ளுதலின் மெல்லெனத் தாவும், வெண் ஞெமை வியன்காட்டு - வெள்ளிய ஞெமை மரங்களையுடைய அகன்ற காட்டகத்தே, ஆள் இல் அத்தத்து - ஆட்கள் வழங்காத அரிய நெறியாய, வாள்வரி பொருத புண்கூர் யானை - வாள்போலும் வரியினை யுடைய புலியுடன் போர் செய்தமையால் புண்மிக்க யானைகள், புகர் சிதை முகத்த - புள்ளிகள் சிதைந்த முகத்தினவாய், குருதி வார - உதிரம் ஒழுக, உயர்சிமை நெடும் கோட்டு உரும் என முழங்கும் - உயர்ந்த உச்சியினையுடைய நெடிய சிகரத்தில் இடிக்கும் இடிபோல முழங்குகின்ற, அரும் சுரம் - அரிய பாலைநிலத்திலே, அளியள் - இரங்கத் தக்களாய என் மகள், அவனொடு - அத்தலைவனுடன், இறந்தனள் என்ப - சென்றாள் என்று கண்டார் கூறுவர்; 14-22. களி மயில் - களிக்கும் மயில்கள், குஞ்சரக் குரல குரு கோடு ஆலும் - யானைபோலும் குரலுடைமையான் யானையங் குருகு எனப் பெயர்பெறும் பறவைகளுடன் சேர்ந்து ஒலிக்கும், துஞ்சா முழவின் - இடையறாது ஒலிக்கும் முழவினையும், துய்த்து இயல் வாழ்க்கை - செல்வம் நுகர்ந்து வாழும் வாழ்க்கையினையும் உடைய, கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பில் - நெல் மிக்க தந்தையின் அகன்ற இடமுடைய மாளிகையில், ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் - முறையாக அடியிட்டு நடக்கினும் வருந்தும் (என் அமர்க்கண் அஞ்ஞையை), ஐம்பால் சிறுபல் கூந்தல்போது பிடித்து - ஐம்பகுதி யான சிறிய பலவாய கூந்தலை வேய்ந்த மாலையுடன் கையாற்பற்றி, அருளாது - இரங்காது, எறிகோல் சிதைய நூறவும் - அடிக்குங்கோல் சிதையும் பரிசு (முதுகில்) அடிக்கவும், சிறுபுறம் எனக்கு உரித்து என்னாள் நின்ற - என் முதுகு எனக்கு உரியது என்று கருதாது நின்ற, அமர்க் கண் என் அஞ்ஞையை - அமர்த்த கண்களையுடைய எனது மகளை, அலைத்த கை - துன்புறுத்திய கைகள்; 10-14. பெருஞ்சீர் அன்னி - பெரிய புகழையுடைய அன்னியானவன், குறுக்கைப் பறந்தலை - குறுக்கைப் பறந்தலை என்னும் போர்க் களத்திலே, திதியன் - திதியன் என்பானது, தொல்நிலை முழுமுதல் - பழைமை பொருந்திய பரிய அடியுடன், துமியப் பண்ணிய - துணித் திட்ட, நன்னர் மெல் இணர் - நன்றாகிய மெல்லிய பூங்கொத்துக்களை யுடைய, புன்னைபோல - புன்னை மரம்போல, கடு நவைப் படீஇயர் - பெரிய துன்பத்தை அடைவனவாக. (முடிபு) அளியள் வியன்காட்டு ஆளில் அத்தத்து அருஞ் சுரம் அவனொடு இறந்தனள் என்ப; அமர்க்கண் அஞ்ஞையை அலைத்த கைகள் அன்னி துமியப் பண்ணிய திதியன் புன்னை போலக் கடு நவைப்படீஇயர். (வி-ரை) வற்றல் - ஒருவகை மரம். ஓதி - இடைக்குறை. வாள் வரி - ஆகுபெயர். திதியனது புன்னை அன்னி என்பவனாற் குறைக்கப் பட்ட தென்பது, `அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன்..... புன்னை குறைத்த ஞான்றை' (45) என முன் வந்தமையா லறிக. இதற்கு, திதியன் புன்னையை முதல் துமியப்பண்ணிய அன்னிபோலக் கடு நவைப் படீஇயர் எனக் கொண்டு கூட்டிப் பொருளுரைத்தலும் ஆம். என்னை? `பொன்னிணர் நறுமலர்ப் புன்னை வெஃகித், திதியனொடு பொருத அன்னிபோல, விளிகுவை கொல்லோ (126) என்றதனால், அன்னி துஞ்சினான் என்பது பெறப்படுதலின் என்க. குஞ்சரக் குரல குருகு - யானைபோலும் குரலுடைமையான் யானையங்குருகு எனப்படும் பறவை; இது, `யானையங் குருகின் பெருந்தோடு'1 எனவும், `யானையங் குருகின் சேவலொடு'2 எனவும் பிறாண்டும் வந்துள்ளமை காண்க. இதற்கு வண்டாங்குருகு எனவும் பெயருண் டென்பது நச்சினார்க்கினியர் உரையால் அறியப்படுவது. அஞ்ஞை- அன்னை. (மே-ள்) `கொண்டு தலைக் கழியினும்'3 என்னுஞ் சூத்திரத்து, `கூழுடைத் தந்தை யிடனுடை வரைப்பின், ஊழடி யொதுங்கினு முயங்கும்' என நெல்லுடைமை கூறிய அதனானே, வேளாண் வருணமென்பது பெற்றாம்;' என்றனர், நச். 146. மருதம் (வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.) வலிமிகு முன்பின் அண்ணல் ஏஎறு பனிமலர்ப் பொய்கைப் பகல்செல மறுகி மடக்கண் எருமை மாண்நாகு தழீஇப் 4படப்பை நண்ணிப் பழனத் தல்கும் 5. கலிமகிழ் ஊரன் ஒலிமணி நெடுந்தேர் ஒள்ளிழை மகளிர் சேரிப் பன்னாள் இயங்கல் ஆனாது ஆயின் வயங்கிழை யார்கொல் அளியள் தானே எம்போல் மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி 10. வளிபொரத் துயல்வருந் தளிபொழி மலரில் கண்பனி ஆகத்து உறைப்பக் கண்பசந்து ஆயமும் அயலும் மருளத் தாயோம்பு ஆய்நலம் வேண்டா தோளே. - உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார். (சொ-ள்) 1-7. வலிமிகு முன்பின் அண்ணல் ஏறு - வலி மிக்க திண்மையையும் தலைமையையுமுடைய எருமைக்கடா, பனி மலர்ப் பொய்கை பகல் செல மறுகி - குளிர்ந்த மலர்களையுடைய பொய் கையில் பகலெல்லாம் கழியச் சுழன்று, மடக்கண் எருமை மாண் நாகு தழீஇ - மடப்பம் வாய்ந்த கண்ணினையுடைய மாண்புற்ற பெண் எருமையினை அணைந்து, படப்பை நண்ணி - தோட்டங் களில் பொருந்தி மேய்ந்து, பழனத்து அல்கும் - வயல்களிற்றங்கும், கலிமகிழ் ஊரன் - ஆரவாரம் பொருந்திய மகிழ்ச்சியையுடைய ஊரனது, ஒலி மணி நெடுந்தேர் - ஒலிக்கும் மணி பொருந்திய நெடிய தேரானது, ஒள்இழை மகளிர் சேரி - ஒளி பொருந்திய அணிகளை யுடைய பரத்தையர் சேரியின்கண், பல்நாள் இயங்கல் ஆனாது ஆயின் - பல நாளும் இயங்குதல் அமையாதாயின்; 7-13. மாயப் பரத்தன் வாய்மொழி எம்போல் நம்பி - மாயம் செய்யும் பரத்தமைத் தொழிலுடைய அவனது வாய்மை போலும் மொழியினை எம்மைப்போல மெய்யென விரும்பி, வளிபொரத் துயல் வரும் தளி பொழி மலரில் - காற்று மோதுதலின் அசையும் மழை பெய்யப்பட்ட மலரைப்போல, கண் பனி ஆகத்து உறைப்ப - கண்கள் நீரினை மார்பிலே சொரிய, கண் பசந்து -கண்கள் கலங்கி, ஆயமும் அயலும் மருள - ஆயத்தாரும் அயலாரும் மயங்க, தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோள் - தன் தாயார் பாதுகாத்து வளர்த்த அழகிய நலத்தினை வேண்டாது இழப்பாள் ஆகிய, வயங்கு இழை - விளங்கும் அணியினை யுடையாள், யார்கொல் - யாவளோ, அளியள் - அவள் இரங்கத் தக்காள். (முடிபு) ஊரன் நெடுந்தேர் சேரிப் பன்னாள் இயங்கல் ஆனாதாயின், பரத்தன் வாய்மொழி நம்பி கண்பனி யுறைப்பப் பசந்து, தாய் ஒம்பு நலம் வேண்டாதோள் யார்கொல்! அளியள். (வி-ரை) முன்பு - வலிமை. வலிமிகு முன்பு - மிக்க பெருவலி யுடைய என்க. ஏறு என்பது எருமைக்கும் உரித்தென்பது `எருமையும் மரையும் பெற்றமும் அன்ன'1 என்பதனாற் பெறப்படும். `எருமையும் மரையும் பெற்றமும் நாகே'2 என்றதனால் எருமை நாகு எனப்பட்டது. பரத்தன் - புறத்தொழுக்க முடையவன். வாய்மொழி - வாய் என்பதனை வேண்டா கூறலாக்கி உள்ளத்தொடு கூடாத மொழி என்றலுமாம். துயல் வரும் மலர் எனக் கூட்டுக. மருள வேண்டா தோள் என்க. மருள - வியக்க எனக்கொண்டு, மருள ஓம்பிய நலம் என்றுரைத் தலுமாம். நலம் வேண்டாதோளாகிய வயங்கிழை அளியள் என்றமை யால், நீ அவள்பால் வாயில்வேண்டிச் சென்று அவளது ஊடலைத் தீர்ப்பாயாக எனத் தலைவி பாணனுக்கு வாயின் மறுத்தாளென்க. (உ-றை) எருமை ஏறு பொய்கையிற் பகல்செல மறுகி, எருமை நாகு தழீஇப் படப்பை நண்ணிப் பழனத்தல்கும் என்றது, தலைவன் பரத்தையர் சேரியிற்றிரிந்து அவர்களை நுகர்ந்து, பின்பு இளையளாய பரத்தையொடும் சோலையில் விளையாடி, சேற்றினையுடைய பழனம் போலும் எம் இல்லில் தங்குதல் மாத்திரைக்கு இப்பொழுது வந்துளான் என்றவாறு. 147. பாலை (செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன ஊன்பொதி அவிழாக் கோட்டுகிர்க் குருளை மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்த 5. துறுகல் விடரளைப் பிணவுப்பசி கூர்ந்தெனப் பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை அறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஓர்க்கும் நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் 10. செலவயர்ந் திசினால் யானே பலபுலந்து உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சாஅய்த் தோளும் தொல்கவின் தொலைய நாளும் பிரிந்தோர் பெயர்வுக் கிரங்கி மருந்துபிறி தின்மையின் இருந்துவினை இலனே. - ஒளவையார். (சொ-ள்) 10-14. (தோழியே, நம் தலைவன் பிரிதலால்,) பல புலந்து உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சாஅய் - பலவற்றையும் வெறுத்து உண்ணாத வருத்தத்தால் உயிர் மெலிந்து ஒழுகிக் கெடவும், தோளும் தொல்கவின் தொலைய - தோளும் பழைய அழகு கெடவும், நாளும் - நாடோறும், பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கியிருந்து - நம்மைப் பிரிந்த தலைவரது நீக்கத்திற்கு இரங்கி யிருந்தும், மருந்து பிறிது இன்மையின் - அதனைப் போக்கும் மருந்து பிறிதொன்று இல்லாமை யால், வினையிலன் - வேறு செயலில்லேன் ஆயினேன் ஆகலின்; 1-10. ஓங்குமலைச் சிலம்பில் - உயர்ந்த மலைச்சாரலில், பிடவுடன் மலர்ந்த வேங்கை வெறிதழை - பிடவுடன் சேர மலர்ந்த வேங்கையின் வெறி கமழும் பூவுடன் கூடிய தழையை, வேறு வகுத்தன்ன - வேறு வேறாக வகுத்து வைத்தாற்போன்ற, ஊன்பொதி அவிழாக் கோட்டு உகிர் குருளை மூன்று உடன் ஈன்ற - தசையின் மறைப்பு நீங்காத வளைந்த நகத்தினையுடைய குட்டிகள் மூன்றை ஒரு சேரப் பெற்றதும், முடங்கர் - முடக்கமான இடத்திலே, துறுகல் விடர் அளை - பாறையின் பிளப்பாகிய குகையிலுள்ளதுமாகிய, நிழத்த பிணவு பசி கூர்ந்தென - ஓய்ந்த பெண் புலி பசி மிக்கதாக, பொறி கிளர் போழ்வாய் உழுவை ஏற்றை - புள்ளிகள் விளங்கும் பிளந்த வாயையுடைய ஆண்புலி, அறுகோட்டு உழைமான் ஆண் குரல் ஓர்க்கும் - அறல்பட்ட கொம்பினையுடைய ஆண் மானினது குரலினை உற்றுக் கேட்கும், கவலை நெறிபடு நிரம்பா நீள் இடை - கவர்த்த நெறிகள் பொருந்திய செல்லத் தொலையாத நீண்ட காட்டிலே, வெள்ளி வீதியைப் போல - தன் கணவனைத் தேடிச் சென்ற வெள்ளி வீதி என்பாளைப் போன்று, நன்றும் செலவு அயர்ந்திசின் - செல்லுதலைப் பெரிதும் விரும்பியுள்ளேன். (முடிபு) தோழி! தலைவர் பிரிதலால், யான் உயிர் செல்லவும் தோளும் கவின் தொலையவும், பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி யிருந்தும் மருந்து பிறிதின்மையால், வேறு வினையிலேன் ஆயினேன் ஆகலின், உழுவை யேற்றை உழைமான் குரல் ஓர்க்கும் கவலை நெறிபடு நிரம்பா நீளிடையில் வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவயர்ந்திசின். (வி-ரை) வேறு வகுத்தன்ன குருளை எனவும், கோட்டுகிர்க் குருளை எனவும் தனித்தனி கூட்டுக. அவிழா உகிர் என்க. முடங்கர் - முடக்கமான இடம். நிழத்தல் - மெலிதல், வெள்ளிவீதியைப் போலும் என்ற உவமையான் அவள் கணவனைப் பிரிந்து பலவிடத்தும் தேடித் திரிந்தாளாதல் பெற்றாம். இலன் என அன்விகுதி தன்மைக்கண் வந்தது. செலவயர்ந்திசின் என்பதனை எச்சப்படுத்தி வினையில னாயினன் என முடிப்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும். (மே-ள்) `கொண்டு தலைக் கழியினும்'1 என்னுஞ் சூத்திரத்து, `தலைவி பிரிந்திருந்து மிகவும் இரங்குதலின், இரங்கினும் எனச் சூத்திரஞ் செய்து அதனானே பாலைப் பொருட்கண் இரங்கற் பொருள் நிகழுமென்றார். உதாரணம் - ஓங்குமலைச் சிலம்பிற்..... வினை இலனே (என்பது) இதனுள் வெள்ளி வீதியைப் போலச் செல்லத் துணிந்து, `யான் பலவற்றிற்கும் புலந்திருந்து, பிரிந்தோரிடத் தினின்றும் பிரிந்த பெயர்வுக்குத் தோள் நலந் தொலைய உயிர்செலச் சாஅய், இரங்கிப் பிறிது மருந்தின்மையிற் செயலற்றேனென மிகவும் இரங்கியவாறு மெய்ப்பாடுபற்றி யுணர்க' என்றும், `மக்கள் நுதலிய'2 என்னுஞ் சூத்திரத்து `வெள்ளி வீதியைப் போல நன்றும், செலவயர்ந்தி சினால் யானே' என்பதன்கண் பெயர் அகத்திணைக்கட் சார்த்து வகையான் வந்ததன்றித் தலைமை வகையாக வந்திலது என்றும், கூறினர், நச். 148. குறிஞ்சி (பகல் வருவானை இரவு வருகென்றது.) பனைத்திரள் அன்ன பரேர்எறுழ்த் தடக்கைக் கொலைச்சினந் தவிரா மதனுடை முன்பின் வண்டுபடு கடாஅத்து உயர்மருப்பு யானை தண்கமழ் சிலம்பின் மரம்படத் தொலைச்சி 5. உறுபுலி உரறக் குத்தி விறல்கடிந்து சிறுதினைப் பெரும்புனம் வவ்வும் நாட கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன் நெடுந்தேர் மிஞிலியொடு பொருதுகளம் பட்டெனக் காணிய செல்லாக் கூகை நாணிக் 10. கடும்பகல் வழங்கா தாஅங்கு இடும்பை பெரிதால் அம்ம இவட்கே அதனால் மாலை வருதல் வேண்டும் சோலை முளைமேய் பெருங்களிறு வழங்கும் மலைமுதல் அடுக்கத்த சிறுகல் ஆறே. - பரணர். (சொ-ள்) 1-6. திரள் பனை அன்ன பரு ஏர் எறுழ்த் தடக்கை - திரண்ட பனையை யொத்த பருத்த அழகிய வலிய வளைந்த கையையும், கொலைச் சினம் தவிரா மதன் உடை முன்பின் - கொல்லும் சினம் நீங்காத செருக்குப் பொருந்திய வலிமையினையும், வண்டுபடு கடாஅத்து - வண்டு மொய்க்கும் மதத்தினையும், உயர் மருப்பு யானை - நிமிர்ந்த கோட்டினையும் உடைய யானை, தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி - குளிர்ந்த மணம் கமழ்கின்ற பக்கமலையி லுள்ள மரம் வீழ ஒடித்துத்தள்ளி, உறுபுலி உரறக் குத்தி விறல் கடிந்து - மாறுபாடுற்ற புலியினைக் கதறுமாறு குத்தி அதன் வெற்றி யினைத் தொலைத்து, சிறுதினைப் பெரும்புனம் வவ்வும் நாட - சிறிய தினை விளைந்த பெரிய புனத்தினைக் கவர்ந்து கொள்ளும் நாடனே! 7-11. கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் - கடிய செலவினை யுடைய குதிரையையுடைய ஆய் எயினன் என்பான், நெடும் தேர் மிஞிலியொடு பொருது களம் பட்டென - நெடிய தேரையுடைய மிஞிலி என்பானொடு போர்புரிந்து களத்தில் இறந்தனனாக, காணிய செல்லாக் கூகை நாணி - (புள்ளின் பாதுகாவலனாகிய அவனை ஏனைப் பறவைகளைப் போலச் சென்று) காணவியலாத பகற்குருடாகிய கூகையானது நாணுதலுற்று, கடும்பகல் வழங்காதாங்கு - கடிய பகலிலே இயங்காது இடும்பை யுற்றாற்போல, இவட்கு இடும்பை பெரிது - இவளுக்குப் பகற் குறிக்கட் செல்லாத துன்பம் பெரிதாயிற்று; 11-14. அதனால்-, சோலை முளைமேய் பெருங்களிறு வழங்கும் - சோலையின்கண் மூங்கிற் குருத்தினைத் தின்னும் பெரிய களிறு இயங்குகின்ற, மலைமுதல் அடுக்கத்து - மலைச்சாரலிலுள்ள, சிறுகல் ஆறு - சிறிய பாறைகள் செறிந்த நெறியில், மாலை வருதல் வேண்டும் - நீ மாலைக் காலத்தே வருதல் வேண்டும். (முடிபு) நாட! இவட்குப் பகற்குறிக்கண் இடும்பை பெரிது; அதனால் சிறு கல் ஆறு மாலை வருதல் வேண்டும். (வி-ரை) பனைத்திரள் என ஐகாரங் கெடாது வல்லெழுத்துப் பெற்று முடிந்தது, `கொடிமுன் வரினே யையவ ணிற்பக், கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி'1 என்ற சூத்திரத்து இலேசாற் கொள்ளப் படும். பரேர் என்றது மரூஉ முடிபு. ஆஅய் எயினன் என்பான் புட்களுக்குப் பாதுகாவலனாக இருந்தான் என்பதும், அதனால் அவன் களத்திற் பொருது வீழ்ந்தபோது புட்களெல்லாம் வானிலே நெருங்கி வட்டமிட்டு, அவன்மீது வெயிற்படாது மறைத்தன என்பதும் வேறு சில2 செய்யுட்களாற் பெறப்படுகின்றன. ஏனைப் பறவை களெல்லாம் செல்லவும் பகலிலே தான் செல்லலாற்றாமையின் 3 கூகை நாணி வருந்தியிருந்த தென்றார். அகம் 208-ஆம் பாட்டில் `எயினன்.... பாழிப் பறந்தலை.... மிஞிலியொடு நண்பகலுற்ற செருவிற் புண்கூர்ந், தொள்வாண் மயங்கமர் வீழ்ந்தெனப் புள்ளொருங்கு, அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று, ஒண்கதிர் தெறாமைச் சிறகரிற் கோலி, நிழல் செய் துழறல் காணேன் யானெனப், படுகளங் காண்டல் செல்லான் சினஞ் சிறந்து, உருவினை நன்னன் அருளான் கரப்ப' என வரும். நன்னன் என்பானே பகலிற் செல்லா ஒப்புமைபற்றி இச் செய்யுளிற் 4`கூகையென வழங்கப்பட்டானாவன்' எனக் கருதுவாருமுளர். 149. பாலை (தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.) சிறுபுன் சிதலை சேண்முயன் றெடுத்த நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையில் புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப் பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும் 5. அத்தம் நீளிடைப் போகி நன்றும் அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும் வாரேன் வாழியென் நெஞ்சே சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் 10. பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ 5அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய நெடுநல் யானை அடுபோர்ச் செழியன் கொடிநுடங்கு மறுகில் கூடல் குடாஅது 15. பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. - 1எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார். (சொ-ள்) 7. என் நெஞ்சே - எனது நெஞ்சமே! 1-7. பெரும் கை எண்கின் இரும் கிளை - பெரிய கையினை யுடைய கரடியின் பெரிய கூட்டம், சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த - சிறிய புல்லிய கறையான் நெடிது முயன்று ஆக்கிய, நெடும் செம்புற்றத்து - உயர்ந்த சிவந்த புற்றில், ஒடுங்கு இரைமுனையில் - மறைந்து கிடந்த புற்றாம் பழஞ்சோற்றைத் தின்று வெறுப்பின், புல் அரை இருப்பை - புற்கென்ற அரையினையுடைய இருப்பை மரத்தின், தொள்ளை வான்பூ கவரும் - தொளை பொருந்திய வெள்ளிய பூவைக் கவர்ந்து உண்ணும், அத்தம் நீள் இடைப்போகி - சுரத்தின் நீண்டவழியே சென்று, நன்றும் அரிது செய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும் - பெரிதும் அரிதாக ஈட்டும் சிறந்த பொருளை எளிதாகப் பெறுவதாயினும்; 7-19. சேரலர் சுள்ளிஅம் பேர்யாற்று வெண் நுரை கலங்க - சேர அரசரது சுள்ளியாகிய பேர் யாற்றினது வெள்ளிய நுரை சிதற, யவனர் தந்த வினைமாண் நல்கலம் - யவனர்கள் கொண்டு வந்த தொழில் மாட்சிமைப்பட்ட நல்ல மரக்கலம், பொன்னொடு வந்து கறியொடு பெயரும் - பொன்னுடன் வந்து மிளகொடு மீளும், வளம்கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ - வளம் பொருந்திய முசிறி என்னும் பட்டினத்தை ஆரவாரம் மிக வளைத்து, அரும் சமம் கடந்து படிமம் வவ்விய - அரிய போரை வென்று அங்குள்ள பொற்பாவை யினைக் கவர்ந்து கொண்ட, நெடு நல் யானை அடுபோர்ச் செழியன்- நெடிய நல்ல யானைகளையும் வெல்லும் போரினையுமுடைய செழியனது, கொடி நுடங்கு மறுகில் கூடல் குடாஅது - கொடி அசையும் தெருவினையுடைய கூடலின் மேல்பாலுள்ள, பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய - பல பொறிகளையுடைய வெல்லும் மயிற் கொடியினை உயர்த்த, ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து- இடையறாத விழவினையுடைய முருகனது திருப்பரங்குன்றத்தே, வண்டுபட நீடிய குண்டு சுனை நீலத்து - வண்டுவீழ நீண்ட ஆழமான சுனையிற் பூத்த நீலப்பூவின், எதிர்மலர்ப் பிணையல் அன்ன - புதிய மலர் இரண்டின் சேர்க்கை போன்ற, இவள் அரிமதர் மழைக் கண் தெண்பனிகொள - இவளது செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் தெளிந்த நீரினைக் கொள்ள, வாரேன் - வாரேன், வாழி- (முடிபு) நெஞ்சே! அத்த நீளிடைப்போகி, அரிதுசெய் விழுப் பொருள் எளிதிற் பெறினும், இவள் அரிமதர் மழைக் கண் தெண்பனிகொள வாரேன்; வாழி! (வி-ரை) சுள்ளி, பேரியாறு என்பன சேரநாட்டு முசிறி மருங்கு கடலிற் கலக்கும் ஓர் யாற்றின் பெயர்கள். யவனர் என்பார் எகிப்து `கிரேக்கம் முதலிய புறநாட்டினர். மரக்கலம் பொன்னோடு வந்து கறியொடு பெயரும் என்றது, பொன்னைக் கொண்டுவந்து விலை யாகக் கொடுத்து மிளகை ஏற்றிச் செல்லும் என்றபடி. எனவே அந்நாளில் சேரர்நாட்டு வாணிபம் சிறந்திருந்தமை பெற்றாம். படிமம் என்றது முசிறியி லிருந்ததோர் தெய்வ விம்பம்போலும். கூடலின் குடக்கின் கண்ணதாகிய குன்றம் என்க. வாரேன் என்றதனால் நீ வேண்டிற் செல்லுதி என்றானாம். 150. நெய்தல் (பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி தலைமகளை இடத்துய்த்து வந்து, செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.) பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன்னென ஆகத் தரும்பிய சுணங்கும் 1வம்புவிடக் கண்ணுருத் தெழுதரும் முலையும் நோக்கி எல்லினை பெரிதெனப் பன்மாண் கூறிப் 5. பெருந்தோள் அடைய முயங்கி நீடுநினைந்து அருங்கடிப் படுத்தனள் யாயே கடுஞ்செலல் வாள்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறைக் கனைத்த நெய்தற் கண்போன் மாமலர் நனைத்த செருந்திப் போதுவாய் அவிழ 10. மாலை மணியிதழ் கூம்பக் கழலைக் கள்நாறு காவியொடு தண்ணென மலருங் கழியுங் கானலுங் காண்தொறும் பலபுலந்து வாரார் கொல்லெனப் பருவரும் தாரார் மார்பநீ தணந்த ஞான்றே. - குறுவழுதியார். (சொ-ள்) 6-14. தார் ஆர்மார்ப - மாலை பொருந்திய மார்பனே, நீ தணந்த ஞான்று - நீ பிரிந்தகாலை, கடும் செலல் வாள் சுறா வழங்கும் - விரைந்த செலவினையும் வாள் போன்ற கொம்பினையுமுடைய சுறா மீன் இயங்கும், வளைமேய் பெரும்துறை - சங்குகள் மேயும் பெரிய துறையையுடைய, கனைத்த நெய்தல் கண்போல் மாமலர் - இதழ் செறிந்த நெய்தலது கண்போலும் பெரிய மலர், மாலை மணி இதழ் கூம்ப - மாலைப் போதில் அழகிய இதழ்கள் குவிய, காலை- விடியலில், நனைத்த செருந்திப் போதுவாய் அவிழ - அரும்பிய செருந்தியின் போதுகள் இதழ் விரிய, கள் நாறு காவியொடு - தேன் நாறுகின்ற குவளையுடன், தண் என மலரும் - தட்பம் உற மலருகின்ற, கழியும் கானலும் காண் தொறும் - கழியையும் சோலையினையும் காணுந் தோறும், பல புலந்து - பலவும் எண்ணி வெறுத்து; வாரார்கொல் எனப் பருவரும் - நம் தலைவர் வாராரோ எனத் தலைவி வருந்துவள், அதன்மேலும்; 1-6. யாய் - அன்னையானவள், பின்னு விட நெறித்த கூந்தலும்- பின்னும்படி (வளர்ந்து) நெளிந்த கூந்தலையும், பொன் என ஆகத்து அரும்பிய சுணங்கும் - பொன் போல மார்பிலே தோன்றிய தேமலையும், வம்பு விடக் கண் உருத்து எழுதரும் முலையும் - கச்ச அறக் கண்ணுடன் உருப்பெற்று எழுந்த முலையினையும், நோக்கி - பார்த்து, பெரிது எல்லினை என - பெரிதும் அழகுடையை என்று, பல் மாண் கூறி - பல முறையும் கூறி, பெரும் தோள் அடைய முயங்கி - பெரிய தோளை முழுவதும் முயங்கி, நீடு நினைந்து - நெடிது நினைந்து, அருங்கடிப் படுத்தனள் - (தலைவியை) அரிய காவலில் வைத்தனள். (முடிபு) தாரார் மார்ப! தலைவி, நீ தணந்த ஞான்று கழியுங் கானலுங் காண்டொறும் வாரார்கொல் லெனப் பருவரும்; (அதன் மேலும்) யாய் கூந்தலும் சுணங்கும் முலையும் நோக்கி; எல்லினை எனக் கூறி, முயங்கி அருங் கடிப்படுத்தனள். (வி-ரை) உருத்து - வெகுண்டு என்றுமாம். வாட்சுறா வழங்கும் கழியெனவும், பெருந்துறையையுடைய கழியெனவும் இயையும். செருந்தியும் நெய்தலுங் காவியும் காலையில் மலரும் என்க. கழியுங் கானலும் இயற்கைப்புணர்ச்சிக் காலத்துத் தலைவன் சூளுற்ற இடமாகலின் அவற்றைக் காண்டொறும் வெறுத்தாள் என்றலுமாம். (மே-ள்) `களவலராயினும்'1 என்னும் (செவிலி கூற்று நிகழு மாறு கூறும்) சூத்திரத்து, அளவு மிகத் தோன்றினும் என்னும் துறைக்கண், இச் செய்யுள் தோழி செவிலி கூறியதைக் கொண்டு கூறியது என்று கூறினர், நச். `இன்பத்தை வெறுத்தல்'2 என்னுஞ் சூத்திரத்து `ஏதம் ஆய்தல்' என்னும் மெய்ப்பாட்டிற்கு, கூட்டத்திற்கு வரும் இடையூறு உண்டென்று பலவும் ஆராய்தல். அது, நொதுமலர் வரையக் கருதுவர் கொல் லெனவும், பிரிந்தோர் மறந்து இனி வாரார்கொல் லெனவும் தோன்றும் உள்ள நிகழ்ச்சி என்று உரைத்து, அது, `வாரார் கொல்லெனப் பருவரும், தாரார் மார்ப நீ தணந்த ஞான்றே' என வரும் என்று கூறினர், பேரா. 151. பாலை (தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.) தம்நயந்து உறைவோர்த் தாங்கித் தாம்நயந்து இன்னமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ நகுதல் ஆற்றார் நல்கூர்ந் தோரென மிகுபொருள் நினையும் நெஞ்சமொடு அருள்பிறிது 5. ஆபமன் வாழி தோழி கால்விரிபு உருவளி எறிதொறுங் கலங்கிய பொறிவரிக் கலைமான் தலையின் முதன்முதல் கவர்த்த கோடலங் கவட்ட குறுங்கால் உழிஞ்சில் தாறுசினை விளைந்த நெற்றம் ஆடுமகள் 10. அரிக்கோற் பறையின் ஐயென வொலிக்கும் பதுக்கைத் தாய செதுக்கை நீழற் கள்ளி முள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க்கு உறுவது கூறுஞ் சிறுசெந் நாவின் மணியோர்த் தன்ன தெண்குரல் 15. கணிவாய்ப் பல்லிய காடிறந் தோரே. - 1காவன் முல்லைப் பூதரத்தனார். (சொ-ள்) 5-15. தோழி-, வாழி-, கால் விரிபு உறுவளி எறிதொறும் - இடமெலாம் விரிந்து மிக்க காற்று வீசுந்தொறும், கலங்கிய - கலங்கியதும், பொறிவரிக் கலைமான் தலையில் - புள்ளிகளையும் வரிகளையுமுடைய கலைமானின் தலையின், முதன்முதல் கவர்த்த - அடியிடத்திற் கப்புவிட்ட, கோடு கவட்ட குறுங்கால் உழிஞ்சில் - கொம்பு போன்ற கவட்டினையுடைய குறிய காலினையுடைய வாகைமரத்தின், சினை விளைந்த - கிளையில் விளைந்ததும் ஆகிய, தாறுநெற்றம் - நெற்றின் குலை, ஆடுமகள் அரிகோல் பறையின் - ஆடும் கூத்தியரது கோலால் அரித்தெழும் ஒலியுண்டாக்கும் பறைபோல, ஐயென ஒலிக்கும் - வியப்புண்டாக ஒலிக்கும், பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல் - பதுக்கையினையுடையதாய குறைந்த நிழலையுடைய, கள்ளிமுள் அரைபொருந்தி - கள்ளியின் முட் பொருந்திய அடியில் தங்கி, செல்லுநர்க்கு உறுவது கூறும் - வழிச் செல்வார்க்கு உண்டாகும் நிகழ்ச்சிகளைக் கூறும், சிறு செந்நாவின் - சிறிய செவ்விய நாவினது, மணி ஓர்த்தன்ன - மணியொலி கேட்டாற் போலும், தெண் குரல் - தெளிந்த குரலைக் கொண்ட, கணிவாய்ப் பல்லிய காடு இறந்தோர் - சோதிடம் கூறும் வாயையுடைய பல்லிகளையுடைய காட்டைக் கடந்து சென்ற நம் தலைவர்; 1-5. தம் நயந்து உறைவோர்த் தாங்கி - தம்மை விரும்பி யிருப் போரைப் புரந்து, தாம் நயந்த இன் அமர் கேளிரொடு ஏம் உறக் கெழீஇ - தாம் விரும்பிய இனிமை பொருந்திய நட்டாரொடு இன்பம் மிக இயைந்து, நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என - மகிழ்ந்திருத்தலை மாட்டாராவர் வறுமை யுற்றோர் என்று கூறி, மிகுபொருள் நினையும் நெஞ்சமொடு - மிக்க பொருளை ஈட்ட நினையும் நெஞ்சத்தால், மன் அருள் பிறிது ஆப - நம்பால் மிகவும் அருளுடையவர் அல்லர் ஆவர். (முடிபு) தோழி! வாழி! காடிறந்தோர், தாங்கி, கெழீஇ, நகுதல் ஆற்றார் எனப் பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிதாப: என் செய்வாம். (வி-ரை) தம் நயந் துறைவோர் - தம் குடிக்கண் இளையாரும் பணியாளரும் பாணர் முதலாயினாருமாம். தாம் நயந்த என்னும் பெயரெச்சத்து அகரம் தொக்கது. கேளிர் - நட்டார். நெஞ்சமொடு - நெஞ்சத்தால் பொருளையே காதலிப்பவர் அருளைக் கைவிடுவர் என்னும் கருத்தினை, `பொருளே காதலர் காதல், அருளே காதலர் என்றி நீயே'1 என்றதனான் அறிக. கால் விரிபு என்புழிக் கால் இடமென்னும் பொருட்டு. கலங்கிய நெற்றம் எனவும், சினை விளைந்த நெற்றம் எனவும் தனித்தனி இயையும் - முதல் இரண்டனுள் முன்னது அடி, பின்னது இடம் என்னும் பொருளன: கோடலங்கவட்ட; அல்லும் அம்மும் சாரியைகள். நெற்றம் : அம், அசை. பகுதிப்பொருள் விகுதி என்றலுமாம். செந்நாவின் குரல் எனவும் மணியோர்த்தன்ன குரல் எனவும் இயையும். உறுவது கூறும் சிறு செந்நாவின் என்றமையால், கணிவாய் என்றது பல்லிக்கு இயற்கையடை. 152. குறிஞ்சி (இரவுக்குறி வந்து நீங்குந் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) நெஞ்சுநடுங் கரும்படர் தீர வந்து குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண் செலீஇய பெயர்வோள் வணர்சுரி ஐம்பால் நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச் 5. சினங்கெழு தானைத் தித்தன் வெளியன் இரங்குநீர்ப் பரப்பில் கானலம் பெருந்துறைத் தனந்தரும் நன்கலஞ் சிதையத் தாக்கும் சிறுவெள் இறவின் குப்பை யன்ன உறுபகை தரூஉம் மொய்ம்மூசு 2பிண்டன் 10. முனைமுரண் உடையக் கடந்த வென்வேல் இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்ப் பாரத்துத் தலைவன் ஆர நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற் களிமயில் கலாவத்து அன்ன தோளே 15. வல்வில் இளையர் பெருமகன் நள்ளி சோலை யடுக்கத்துச் சுரும்புண விரிந்த கடவுள் காந்தள் உள்ளும் பலவுடன் இறும்பூது கஞலிய வாய்மலர் நாறி வல்லினும் வல்லா ராயினுஞ் சென்றோர்க்குச் 20. சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும் மாஅல் யானை யாஅய் கானத்துத் தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல் வேயமைக் கண்ணிடை புரைஇச் சேய ஆயினும் நடுங்குதுயர் தருமே. - பரணர். (சொ-ள்) நெஞ்சே. 1-3. நெஞ்சு நடுங்கு அரும்படர் தீர வந்து - நம் நெஞ்சம் நடுங்குதற்குக் காரணமான பிறிதொன்றால் தீர்தற்கரிய துன்பமானது தீர வந்து கூடி, குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண் செலீஇய பெயர்வோள் - குன்றிடத்துப் பொருந்திய தனது சிறிய ஊர்க்குச் செல்ல மீள்வோளாய நம் தலைவியின், வணர் சுரி ஐம்பால் - வளைந்து சுருண்ட கூந்தல்கள்; 4-14. நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேரிசை - நுண்ணிய கோலையுடைய பாணரைப் புரந்த பெரிய புகழையும், சினம் கெழுதானை - சினம் மிக்க படையினையுமுடைய, தித்தன் வெளியன் - தித்தன் வெளியன் என்பானது, இரங்கும் நீர்ப் பரப்பின் கானல் அம் பெருந்துறை - ஒலிக்கும் நீர்ப்பரப்பினையுடைய கானலம் பெருந் துறை என்னும் பட்டினத்தே, தனம் தரு நன்கலம் சிதையத் தாக்கும் - பொன்னைக் கொண்டுவரும் நல்ல மரக்கலம் சிதையுமாறு தாக்குகின்ற, சிறு வெள் இறவின் குப்பை அன்ன - சிறிய வெள்ளிய இறாமீனின் தொகுதி போன்ற, உறுபகை தரூஉம் மொய் மூசு பிண்டன் - மிக்க பகையைத்தரும் வலிமிக்க பிண்டன் என்பானது, முனை முரண் உடையக் கடந்த வென்வேல் - போர்செய்யும் மாறுபாடு சிதைய வென்ற வெற்றி வேலையும், இசைநல ஈகைக் களிறு வீசு வண்மகிழ் - புகழ் மேவிய நல்ல ஈகையினையும் களிறுகளை வழங்கும் வண்மையானாகிய களிப்பினையும் உடைய, பாரத்துத் தலைவன் ஆரம் நன்னன் - பாரம் என்னும் ஊர்க்குத் தலைவனாகிய ஆரம்பூண்ட நன்னன் என்பானது, ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பில் - ஏழில் என்னும் நிண்ட மலையின் பாழி யென்னும் பக்கமலையிடத்துள்ள, களிமயில் கலாவத்து அன்ன - களிக்கும் மயிலின் தோகையை ஒத்தன: 14-24. தோளே - இவள் தோள்கள், வல்வில் இளையர் பெரு மகன் நள்ளி - வலிய வில்லையுடைய வீரர்கட்குத் தலைவனான நள்ளி என்பானது, சோலை அடுக்கத்து - சோலைகள் மிக்க பக்க மலையிடத்தே, சுரும்பு உண விரிந்த கடவுள் காந்தள் உள்ளும் - வண்டு உண்ண விரிந்த கடவுள் சூடுதற்குரிய காந்தட் பூவுள்ளும், இறும்பூது கஞலிய ஆய்மலர் பல உடன் நாறி - வியப்பு மிக்க அழகிய மலர் பலவும் ஒருங்கு நாறுவது போல நாறி, வல்லினும் வல்லா ராயினும் சென்றோர்க்கு - பரிசில் கருதி வந்தார்க்கு அவர் கல்வியில் வல்லுநராயினும் அல்லாராயினும், சால் அவிழ் - மிடாச் சோற்றை, நெடுங்குழி நிறைய வீசும் - மண்டையின் நெடிய குழி நிறையும் படியாக அளிக்கும், மாஅல் யானை ஆஅய் கானத்து - பெரிய யானை களையுடைய ஆய் என்பானது காட்டினையுடைய, தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல் - தலையாறு என்னுமிடத்து நிலை பெற்ற மிக உயர்ந்த மலையிடத்துள்ள, வேய் அமைகண் இடைபுரைஇ- மூங்கிலிற் பொருந்திய கணுக்களின் நடுவிடத்தை ஒத்து, சேய ஆயினும் நடுங்கு துயர் தரும் - சேய்மைக்கண் உள்ளனவாயினும் நாம் நடுங்கத்தக்க துயரினைத் தரும். (முடிபு) நெஞ்சே! சீறூராங்கட் செலீஇய பெயர்வோள் ஐம்பால் நன்னன் பாழிச் சிலம்பின் மயிற் கலாவத்தன்ன; தோள் நள்ளி அடுக்கத்து ஆய்மலர் நாறி, ஆஅய் கானத்துப் பிறங்கல் வேயமைக் கண்ணிடை புரைஇ, நடுங்குதுயர் தரும். தித்தன் வெளியன் பெருந்துறை நன்கலம் சிதையத் தாக்கும் இறவின் குப்பையன்ன உறுபகை தரூஉம் பிண்டனது முரண் உடையக் கடந்த நன்னன் என்க. (வி-ரை) நடுங்குதுயர் தருமே என்பதனை முன்னுங் கூட்டி ஐம்பால் கலாவத்தன்னவாய் நடுங்குதுயர் தரும் என்று உரைத்துக் கொள்க. சால் - மிடா. சாலவிழ் நிறைய வீசும் எனவும், நெடுங்குழி மாஅல் யானை யெனவுங் கூட்டி யுரைத்தலுமாம்; குழி - ஈண்டு யானையை அகப்படுத்தும் பயம்பு. யானையையுடைய ஆஅய் என்க; ஆஅய் கானம் என்றலுமாம். என்னை? `.....அண்டிரன், குன்றம் பாடின கொல்லோ, களிறுமிக வுடைய இக் கவின்பெறு காடே' 1 என்பவாகலின். 153. பாலை (மகட் போக்கிய செவிலித்தாய் சொற்றது.) நோகோ யானே நோதகும் உள்ளம் அம்தீங் கிளவி ஆயமொடு கெழீஇப் பந்துவழிப் படர்குவள் ஆயினும் நொந்துநனி வெம்புமன் அளியள் தானே இனியே 5. வன்க ணாளன் மார்புற வளைஇ இன்சொற் பிணிப்ப நம்பி நம்கண் உறுதரு விழுமம் உள்ளாள் ஒய்யெனத் தெறுகதிர் உலைஇய வேனில் வெம்காட்டு உறுவளி ஒலிகழைக் கண்ணுறுபு தீண்டலின் 10. பொறிபிதிர்பு எடுத்த பொங்கெழு கூரெரிப் பைதறு சிமையப் பயநீங்கு ஆரிடை நல்லடிக்கு அமைந்த அல்ல மெல்லியல் வல்லுநள் கொல்லோ தானே எல்லி ஓங்குவரை அடுக்கத்து உயர்ந்த சென்னி 15. மீனொடு பொலிந்த வானில் தோன்றித் தேம்பாய்ந்து ஆர்க்குந் தெரியிணர்க் கோங்கின் காலுறக் கழன்ற கண்கமழ் புதுமலர் கைவிடு சுடரில் தோன்றும் மைபடு மாமலை விலங்கிய சுரனே. - சேரமான் இளங்குட்டுவன் (சொ-ள்) 2-4. அளியள் - இரங்கத்தக்காளாய என் மகள், அம்தீம் கிளவி ஆயமொடு கெழீஇ - அழகிய இனிய சொற்களை யுடைய ஆயத்தாருடன் பொருந்தி, பந்துவழிப் படர்குவள் ஆயினும் - பந்தாடுமிடத்துச் சிறிது சென்று வருவாளாயினும், நனி நொந்து வெம்பும் மன் - மிகவும் நொந்து பெரிதும் வருந்துவாள்; 13-19. ஓங்கு வரை அடுக்கத்து - உயர்ந்த மலைச் சாரலிலுள்ள, தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க கோங்கின் - வண்டுகள் பாய்ந்து ஆரவாரிக்கும் விளக்கமுற்ற கொத்துக்களையுடைய கோங்கினது, உயர்ந்த சென்னி - உயர்ந்த உச்சியில், எல்லி - இரவின்கண், மீனொடு பொலிந்த வானில் தோன்றி - மீனொடு விளங்கும் வானெனத் தோன்றிப் (பின்), கால் உறக் கழன்ற கண் கமழ் புது மலர் - காற்று அடித்தலின் கழன்று விழும் இடனெல்லாம் கமழும் புதிய மலர், கைவிடு சுடரில் தோன்றும் - கையினால் விடப்பெறும் சுடர்ப்பொறி போலத் தோன்றும், மை படு மாமலை விலங்கிய சுரன் - மேகம் பொருந்திய பெரிய மலை குறுக்கிட்ட சுரநெறியில்; 4-13. வேனில் தெறு கதிர் உலைஇய - வேனிற்காலத்துக் காய்கின்ற ஞாயிற்றின் கதிர் கெடுத்த, வெம் காட்டு - வெப்பம் மிக்க காட்டிலே, உறு வளி - விரைந்து அடிக்கும் மிக்க காற்று, ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின் - தழைத்த மூங்கிலின் கணுக்களைப் பொருந்தித் தாக்கலின், எடுத்த - எழுப்பப்பட்ட, பொங்கு - விளங்குகின்ற, பொறி பிதிர்பு எழு கூர் எரி - பொறியைச் சிதறி எழுகின்ற மிக்க நெருப்பினால், பைது அறு சிமையம் பயம் நீங்கு - பசுமையற்ற உச்சியையுடைய பயன் ஒழிந்தவும், நல் அடிக்கு அமைந்த அல்ல - தன் நல்ல அடிகட்கு ஏற்றன அல்லவுமாகிய, ஆர் இடை - அரிய வழிகளை, இனி - இப்பொழுது, மெல்லிய - மென்மைத்தன்மை யுடைய அவள், வன்கணாளன் மார்பு உற வளைஇ - கொடுமை யுடைய தலைவன் தன் மார்பினாலே முற்ற வளைத்து, இன் சொல் பிணிப்ப - இனிய சொல்லாலே கட்டிவிட, நம்பி - அதனை விரும்பி, நம் கண் உறுதரு விழுமம் உள்ளாள் - நம்மிடத்தே உறும் துன்பத்தினை நினையாளாகி, ஒய்யென வல்லுநள் கொல்லோ - விரையச் செல்ல வல்லமையுடையள் ஆவளோ; 1. நோதகும் உள்ளம் - என் உள்ளம் அதனை நினைந்து வருந்துகின்றது; நோகு - யானும் நோகின்றேன். (முடிபு) அளியள் பந்துவழிப் படர்குவள் ஆயினும் நனிநொந்து வெம்பும்மன்; இனி மெல்லியள், மலை விளங்கிய சுரனில், வேனில் வெங்காட்டு பயம் நீங்கு ஆரிடையில் ஒய்யெனச் செல்ல வல்லுநள் கொல்லோ! உள்ளம் நோதகும்; யான்நோகு. (வி-ரை) நோகோ- ஓ : அசைநிலை. ஒழியிசையாகக்கொண்டு உரைத்தலுமாம். பந்துவழி - பந்துவிளையாடுமிடம். வெம்பும்மன்; மன் மிகுதிப் பொருட்டு; கழிவுமாம். ஒய்யெனச் செல்ல என விரித்துரைக்க. கைவிடு சுடர் - பரணின்மீதுள்ள கானவர் கையி னின்றும் விடுத்த பந்தம். 154. முல்லை (வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.) படுமழை பொழிந்த பயமிகு புறவின் நெடுநீர் அவல பகுவாய்த் தேரை சிறுபல் இயத்தின் நெடுநெறிக் கறங்கக் குறும்புதல் விடவின் நெடுங்கால் அலரி 5. செந்நில மருங்கின் நுண்அயிர் வரிப்ப வெஞ்சின அரவின் 1பைஅணந் தன்ன தண் கமழ் கோடல் தாதுபிணி அவிழத் திரிமருப்பு இரலை தெள்ளறல் பருகிக் 2காமர் துணையொடு ஏமுற வதியக் 10 காடுகவின் பெற்ற தண்பதப் பெருவழி ஓடுபரி மெலியாக் கொய்சுவல் புரவித் 1தாள்தாழ் தார்மணி தயங்குபு இயம்ப ஊர்மதி வலவ தேரே சீர்மிகுபு நம்வயிற் புரிந்த கொள்கை 15. அம்மா அரிவையைத் துன்னுகம் விரைந்தே. - பொதும்பிற் புல்லாளங் கண்ணியார். (சொ-ள்) 13. வலவ - பாகனே! 1-10. படுமழை பொழிந்த பயம் மிகு புறவின் - மிக்க மழை சொரிந்தமையால் பயன் மிக்க முல்லைநிலத்தே, நெடுநீர் அவல பகுவாய்த் தேரை - ஆழமாகிய நீரினையுடைய பள்ளங்களிலுள்ள பிளந்த வாயினையுடைய தேரைகள், நெடு நெறி - நீண்ட வழி யெலாம், சிறு பல்லியத்தின் கறங்க - சிறிய பலவாகிய வாச்சியங்களைப் போல ஒலிக்கவும், குறும்புதல் பிடவின் நெடுங் கால் அலரி - குறிய புதராகிய பிடவின் நீண்ட காம்பினையுடைய மலர்கள், செம்நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப - செம்மண்ணாகிய நிலத்திடத்து நுண்ணிய மணலில் உதிர்ந்து கோலம் செய்யவும், வெம்சின அரவின் பை அணந்தன்ன - கொடிய சினமுடைய பாம்பின் படம் மேலே நிவந்தால் போன்ற, தண் கமழ் கோடல் தாதுபிணி அவிழ - தண்ணென மணக்கின்ற காந்தட் பூவின் தாது கட்டவிழ்ந்து விரியவும், திரிமருப்பு இரலை தெள்அறல் பருகி - முறுக்கிய கொம்பினையுடைய ஆண் மான் தெளிந்த நீரைக் குடித்து, காமர் துணையொடு ஏம்உற வதிய - விருப்பம் வாய்ந்த பிணையுடன் இன்பம் மிகத் தங்கவும், காடு கவின் பெற்ற தண்பதப் பெருவழி - காடு அழகுபெற்ற தண்ணிய செவ்வி வாய்ந்த பெரிய வழியிலே; 11-13. ஓடுபரி மெலியாக் கொய்சுவல் புரவி - ஓடும் வேகம் குறையாத கொய்யப்பட்ட பிடரி மயிரினையுடைய குதிரையின், தாள் தாழ் தார்மணி தயங்குபு இயம்ப - தாளின் அளவு தாழ்ந்த மாலையிடத்து மணி விளங்கி ஒலிக்க, தேர் ஊர்மதி - தேரை ஓட்டுவாயாக; 13-15. சீர்மிகுபு - சீர்மிக்கு, நம் வயின் புரிந்த கொள்கை - நம்மிடத்து விரும்பிய கொள்கையினையுடைய, அம் மா அரிவையை - அழகிய மாமை நிறத்தையுடைய நம் தலைவியை, விரைந்து துன்னுகம் - விரைந்து சென்று அடைவோம். (முடிபு) வலவ! தேரை கறங்க, அலரி வரிப்பக் காந்தட்பூ தாது பிணி அவிழ இரலை ஏமுறக் காடு கவின்பெற்ற பெருவழி, புரவித் தார் மணி இயம்பு தேர் ஊர்மதி, அரிவையை விரைந்து துன்னுகம். (வி-ரை) தேரையின் ஒலியும் சிறு பல்லியத்தின் ஒலியும் ஒரு தன்மையாவாதல், `தேரை யொலியின் மானச் சீரமைத்துச் சில்லரி கறங்கும் சிறுபல் இயத்தோடு'1 எனப் பின்வருவதனாலும் அறியப் படும். `அரவின் பை அணந்தன்ன தண்கமழ் கோடல் தாது பிணி அவிழ' என்னும் இக்கருத்து, `அரவின் அணங்குடை அருந்தலை பைவிரிப்பவைபோல்....... பஃறுடுப் பெடுத்த அலங்குகுலைக் காந்தள்'2 என முன்னரும் வந்துள்ளமை காண்க. அரிவையைத் துன்னுதற் பொருட்டுத் தேர் விரைந்து ஊர்மதி என்று உரைத்தலுமாம். தோடார் தார்மணி என்பது பாடமாயின், தொகுதி கொண்ட தார்மணி என்க. தார் - குதிரையின் கழுத்திற் கட்டும் மாலை. 155. பாலை (தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.) அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும் பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும் பொருளின் ஆகும் புனையிழை என்றுநம் இருளேர் ஐம்பால் நீவி யோரே 5. நோய்நாம் உழக்குவ மாயினுந் தாந்தம் செய்வினை முடிக்க தோழி பல்வயின் பயநிரை சேர்ந்த பாணாட் டாங்கண் நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய கொடுவாய்ப் பத்தல் வார்ந்துகு சிறுகுழி 10. நீர்காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது பெருங்களிறு மிதித்த அடியகத்து இரும்புலி ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர்வழி செயிர்தீர் நாவின் வயிரியர் பின்றை மண்ணார் முழவின் கண்ணகத்து அசைத்த 15. விரலூன்று வடுவில் தோன்றும் மரல்வாடு மருங்கின் மலையிறந் தோரே. - பாலைபாடிய பெருங் கடுங்கோ. (சொ-ள்) 6. தோழி-, 1-14. புனை யிழை - அழகிய அணியுடையாளே! என்றும் அறன் கடைப் படாஅ வாழ்க்கையும் - பாவநெறியிற் செல்லாத வாழ்க்கையும், பிறன்கடைச் செலாஅச் செல்வமும் - பிறன் மனைவாயிலிற் சென்று நில்லாத மேம்பாடும் ஆய, இரண்டும் - இவ்விரண்டும், பொருளின் ஆகும் என்று - பொருளானே யாகும் என்று கூறி, நம் இருள் ஏர் ஐம்பால் நீவியோர் - நமது இருண்ட அழகிய கூந்தலைத் தடவிய தலைவர்; 6-12. பல் வயின் பயம் நிரை சேர்ந்த பாணாட்டாங்கண் - பலவிடத்தும் பாற்பசுக்கூட்டம் சேர்ந்துள பாணாடென்னும் அவ்விடத்தே, நெடு விளிக் கோவலர் தோண்டிய கூவல் - நீண்ட சீழ்க்கை யொலியையுடைய கோவலர் தோண்டிய கிணற்றினின்றும் முகந்த, கொடு வாய்ப்பத்தல் நீர் வார்ந்து உகு சிறுகுழி - வளைந்த வாயினையுiடய பத்தலினின்று நீர் வடிந்து செல்லும் சிறிய குழி, காய் வருத்தமொடு - நீரின்றிக் காய்ந்ததனாலாய வருத்தத்துடன், சேர்வு இடம் பெறாது - நீர் வேட்கை தணித்தற்குச் சேரத்தக்க வேறிடம் பெறாமல், பெருங்களிறு மிதித்த அடியகத்து - பெரிய களிறு மிதித்தேகிய அடிச்சுவட்டில், இரும்புலி ஒதுங்குவன கழிந்த - பெரிய புலிகள் அடிவைத்து நடந்து சென்ற, செதும்பல் ஈர்வழி - சேற்று நிலமாய ஈரமுடைய வழிகள்; 13-16. செயிர் தீர் நாவின் வயிரியர் - குற்றமற்ற நாவினையுடைய கூத்தர், பின்றை அசைத்த - தோளின் பின்னே கட்டிய, மண் ஆர் முழவின் கண்அகத்து - மார்ச்சனை அமைந்த மத்தளத்தின் கண்ணிடத்தே, விரல் ஊன்று வடுவில் தோன்றும் - விரலால் எறிந்த வடுக்கள் போலத் தோன்றும், மரல் வாடு மருங்கின் மலை இறந்தோர் - மரல்கள் வாடிய இடங்களையுடைய மலையைக் கடந்து சென்றார்; 5-6. நோய் நாம் உழக்குவம் ஆயினும் - அவரது பிரிவால் நாம் நோயுழப்போம் ஆயினும், தாம் தம் செய்வினை முடிக்க - அவர் தமது பொருள் ஈட்டு வினையினை முடித்து வருவாராக. (முடிபு) தோழி, வாழ்க்கையும் செல்வமும் இரண்டும் பொருளினாகும் என்று கூறி நம் ஐம்பால் நீவியோர், மரல் வாடு மருங்கின் மலையிறந்தோர்; நாம் நோயுழக்குவம் ஆயினும், தாம் தம் செய்வினை முடிக்க. (வி-ரை) அறன்கடை - பாவம்; அறத்தின் நீக்கப்பட்டமையின் அறன்கடையாயிற்று என்பது 1பரிமேலழகர் உரை. பாவமாவது இரந்தோர்க்கு இல்லை என்றல். அறன்கடைப் படா வாழ்க்கை - இரந்தார்க்கு ஈதலும், பிறன்கடைப் படாஅச் செல்வம் - பிறர்பாற் சென்று இரவாமையும் ஆம் என்க. என்றும் என்பதனை இரண்டிடத்தும் கூட்டுக. செல்வம் - வீறு, மேம்பாடு. இருள் ஏர் - இருளை யொத்த என்றுமாம். ஐம்பால் நீவியோர் என்றது, பிரிவு கருதித் தலையளி செய்தோர் என்றவாறு. பாணாடு - பாணன் நாடென்க; `பாணன் நன்னாட்டும்பர்', (113) `வடாஅது, நல்வேற் பாணன் நன்னாட்டுள்ளதை' (325) எனப் பிறாண்டு வருதல் காண்க. பாணன் நாட்டில் ஆனிரைகள் திரண்டிருந்தனவென்றும், அவற்றிற்கு நீரூட்டற்குக் கோவலர் தாம் தோண்டிய கூவலினின்றும் பத்தலால் நீர் இறைத்துப் பல சிறு குழிகளில் நிரப்புவர் என்றும், வேனில் வெம்மையால் கூவல் நீர் வற்றினமையின் நீர் இறைக்கப் பெறாது அக்குழிகள் காய்ந்திருந்தன வென்றும், அவற்றின்கண் நீருண்ண வந்த களிறுகள் நீரில்லாமையாலாய வருத்தத்தோடு அவற்றை மிதித்து நடந்து சென்றன என்றும், பின் ஆண்டுச் சென்ற புலிகள் அக் களிறுகளின் அடிச்சுவட்டிலே கால் வைத்து நடந்து சென்றன என்றும், அக் களிற்றின் அடிச்சுவட்டிற் பதிந்த புலியின் கால் விரற் சுவடு, முழவின் கண்ணிலே விரலூன்றிய வடுப்போலத் தோன்றின என்றும் கொள்க. களிறு குழியில் அடி வைத்து ஏகியதும், புலி, அக் களிற்றடியில் மிதித்துச் சென்றதும் அவ்வுழிச் சிறிது ஈரம் இருந்தமையால் என்க. செதும்பு - சேறு; அல், பகுதிப்பொருள் விகுதி. நாம் நோயுழத்தலால் தலைவர் கருதிய வினை முடியாது ஒழியுங்கொல் என்னும் கருத்தினால், தாம் தம் செய்வினை முடிக்கவென ஓம்படை கூறினாளென்க. (உ-றை) யானை யடியகத்துப் புலி யடிவைத்துச் சென்ற சுவடு - முழவின் கண்ணிலே விரலூன்றிய வடுப்போலத் தோன்றும் வழியிற் சென்றார் என்பது, தலைவர் பொருளீட்டுதற்கண் எய்தும் துன்பத்தையே இன்பமாகக் கருதிச் சென்றார் என்றபடி. 156. மருதம் (தலைமகளை இடத்துய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.) முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டு மூட்டுறு கவரி தூக்கி அன்ன செழுஞ்செய் நெல்லின் 1 சேயரிப் புனிற்றுக்கதிர் மூதா தின்றல் அஞ்சிக் காவலர் 5. பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇக் காஞ்சியின் அகத்துக் கரும்பருத்தி 2ஆக்குந் தீம்புனல் ஊர திறவி தாகக் குவளை உண்கண் இவளும் யானும் 3கழுநீர் ஆம்பல் முழுநெறிப் பைந்தழை 10. 4காயா ஞாயிற் றாகத் தலைப்பப் பொய்தல் ஆடிப் பொலிகென வந்து நின்நகாப் பிழைத்த தவறோ பெரும கள்ளுங் கண்ணியுங் கையுறை யாக நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் 15. நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட வோச்சித் தணிமருங்க அறியாள் யாய்அழ மணிமருள் மேனி பொன்னிறங் கொளலே. - ஆவூர் மூலங்கிழார். (சொ-ள்) 1-7. முரசு உடைச் செல்வர் புரவிச்சூட்டு - முரசங்களையுடைய செல்வரது குதிரையது தலையின் உச்சியிடத்து, மூட்டுறு கவரி தூக்கி அன்ன - இணைத்துத் தைத்த கவரியை நிமிர்த்து வைத்தாலொத்த, செழும் செய் நெல்லின் சேய்அரி புனிற்றுக் கதிர் - செழுமை வாய்ந்த வயலிலுள்ள நெல்லின் சிவந்த அரிகளையுடைய இளங்கதிரை, முதுஆ தின்றல் அஞ்சி - முதிய பசு தின்பதைக் கண்டு அஞ்சி, காவலர் - வயற்காவலர், கரும்பு அருத்தி - கரும்பினை உண்பித்து, பாகல் ஆய்கொடி பகன்றையொடு பரீஇ - பாகலின் சிறந்த கொடியைப் பகன்றையின் கொடியுடன் அறுத்து (அவற்றால்), காஞ்சியின் அகத்து யாக்கும் - காஞ்சிமரத்திடத்துக் கட்டிவைக்கும், தீம்புனல் ஊர - நீர்வளம் பொருந்திய ஊரையுடைய தலைவனே! 12. பெரும - பெருமானே! 13-17. யாய் - எம் அன்னை, நிலைத்துறைக் கடவுட்கு - துறையினிடத்து நிலைபெற்ற தெய்வத்திற்கு, கையுறையாக - கையுறைப் பொருளாக, கள்ளும் கண்ணியும் - கள்ளினையும் மாலையையும், நிலைக் கோட்டு நால்செவி வெள்ளைக் கிடாஅய் ஓச்சி - நிமிர்ந்த கொம்பினையும் தொங்கும் காதினையுமுடைய வெள்ளாட்டுக் கிடாய் உட்படச் செலுத்தியும், தணிமருங்கு அறியாள் அழ - தன் மகளுக்கு உற்ற நோய், தணியும் உபாயம் அறியாளாய் அழ, மணிமருள் மேனி - இத்தலைவியின் நீலமணி போன்ற மேனி, பொன் நிறம் கொளல் - பசலையால் பொன் நிறத்தினை யடைதல்; 7-12. குவளை உண்கண் இவளும் யானும் - நீலப்பூப்போலும் மையுண்ட கண்ணினையுடைய இத்தலைவியும் யானும், திறவிது ஆக - செவ்விதாக, கழுநீர் ஆம்பல் முழுநெறிப் பைந்தழை - கழுநீர் ஆம்பல் இவற்றின் இதழ் ஒடியாத பூக்களுடன் கூடிய பசிய தழையுடை, ஆகத்து அலைப்ப - ஆகத்தின்கண் அலைத்திட, காயா ஞாயிற்று - ஞாயிறு காய்தலில்லாத காலைப்பொழுதில், பொய்தல் ஆடி - விளையாடி, பொலிக என வந்து - (பின்பு) நீ வாழ்வாயாக எனக் கூறி வந்து, நின் நகாப் பிழைத்த தவறோ - நின்னுடன் நகையாடிப் பிழைத்த குற்றத்தாலாய தொன்றோ. (முடிபு) தீம் புனலூர! பெரும! யாய், நிலைத்துறைக் கடவுட்குக் கள்ளும் கண்ணியும் கிடாயும் உட்பட ஓச்சித் தணிமருங்கு அறியாள் அழ, இவள் மேனி பொன்னிறங் கொளல், இவளும் யானும் பொய்தல் ஆடி நீ பொலிகென வந்து நின் நகாப் பிழைத்த தவறோ! (வி-ரை) மூதா - முதிய எருமையுமாம். முழுநெறி - இதழ் ஒடிக்கப்படாத முழுப் பூ. புனிற்றாக் கதிர்முதல் தின்றல் அஞ்சி என்னும் பாடத்திற்கு, ஈன்றணிமையுடைய பசு நெல்லின் கதிரையுடைய முதலினைத் தின்றலை அஞ்சி என்க. பொய்தல் ஆடிப் பொலிகென வந்து - நீவிர் பொய்தல் ஆடிப் பொலிக எனத் தாய் விடுக்க வந்து என்றுரைத்தலு மாம். நிலைக்கோடு - அறாது நிற்கும் கொம்பு என்றலுமாம். (உ-றை) விளைந்த பின் பெரிது பயன்படும் இளங்கதிரை ஆ தின்றலை அஞ்சிக் கரும்பருத்திக் கட்டிப் பயன் கொள்வார்போல, பின்னே பெரும்பயன் தரும் களவினை அழித்துப் பயன்தராது செய்யும் அலர் கூறுவார் வாயடங்கி யொழிய வரைந்து கொள்வாயாக என்றவாறு. 157. பாலை (பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) அரியற் பெண்டிர் அல்குல் கொண்ட 1பகுவாய்ப் பானைக் குவிமுனை சுரந்த அரிநிறக் கலுழி ஆர மாந்திச் செருவேட்டுச் சிலைக்குஞ் செங்கண் ஆடவர் 5. வில்லிட வீழ்ந்தோர் பதுக்கைக் கோங்கின் எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல் பெரும்புலர் வைகறை அரும்பொடு வாங்கிக் கான யானை கவளங் கொள்ளும் அஞ்சுவரு நெறியிடைத் தமியர் சென்மார் 10. நெஞ்சுண மொழிப மன்னே தோழி முனைபுலம் பெயர்த்த புல்லென் மன்றத்துப் பெயலுற நெகிழ்ந்து வெளிலுறச் சாஅய் வினையழி பாவையின் உலறி மனையொழிந் 2திருத்தல் வல்லு வோர்க்கே. - வேம்பற்றூர்க் குமரனார். (சொ-ள்) 10-14. தோழி-, முனைபுலம் பெயர்த்த புல் என்மன்றத்து - போர் நிகழ்ச்சி குடிகளை இடத்தினின்றும் பெயரச் செய்தமையின் பொலிவற்றிருக்கும் மன்றிடத்தே, பெயல் உற நெகிழ்ந்து வெயில் உறச் சாஅய் - மழை பெய்தலால் இளகியும் வெயில் உறுதலால் காய்ந்து நுணுகியும், வினை அழி பாவையின் - வண்ணம் முதலிய வேலைப்பாடுகள் அழிந்த பாவையைப்போல; உலறி - மேனி வாடி, மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கு - மனையின்கண் தலைவரைப் பிரிந்து தனித் திருத்தலை வல்லார்க்கு; 1-9. அரியல் பெண்டிர் அல்குல் கொண்ட - கள் விற்கும் மகளிர் இடையிற் சுமந்துவந்த, பகுவாய்ப் பானை குவிமுனை சுரந்த - விரிந்த வாயையுடைய பானையின் குவிந்த முனை சொரிந்த, அரி நிறக்கலுழி ஆரமாந்தி - அரிக்கப்பெற்ற நிறமுடைய கள்ளின் வண்டலை நிறையக் குடித்து, செருவேட்டுச் சிலைக்கும் செம் கண் ஆடவர் - போரினை விரும்பி ஆரவாரிக்கும் சிவந்த கண்ணையுடைய வீரர், வில் இட வீழ்ந்தோர் பதுக்கைக் கோங்கின் - வில்லால் எய்ய வீழ்ந்தோரது கற்குவியலின் அயலதாய கோங்கின் மீது படர்ந்து, எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல் - இரவில் மலர்ந்த பசிய அதிரற் கொடியை, கான யானை - காட்டு யானைகள், பெரும்புலர் வைகறை: பெரிய இருள் புலர்கின்ற விடியலில், அரும்பொடு வாங்கி - அரும்புடன் இழுத்து, கவளம் கொள்ளும் அஞ்சுவரு நெறிஇடை - கவளமாக உண்ணும் அச்சம் வருகின்ற சுரநெறியில்; 9-10. தமியர் சென்மார் நெஞ்சு உண மொழிப - தனியராகச் செல்லும் தலைவர் அதனை அவர் தம் மனம் விரும்பி ஏற்றுக் கொள்ளும்படி சொல்லுவர்; மன் - யான் அவ்வாறு தனித்திருத்தலை மாட்டுகிலேன். (முடிபு) தோழி! அஞ்சுவரு நெறியிடைத் தமியர் சென்மார் வினையழி பாவையின் உளறி மனை ஒழிந்திருத்தல் வல்லு வோர்க்கு அவர் நெஞ்சுண மொழிப; மன். (வி-ரை) அல்குல் - மருங்குல். அல்கில் என்பது பாடமாயின், தங்கி இல்லில் என்க. குவிமுனை - கள்ளினைச் சொரிவதற்கும் மூக்குப் போல் குவிந்திருக்கும் வாய். அரி - பன்னாடையால் அரிக்கப்பட்ட என்க. செங்கண் - கள்ளுண்டலாலும் சினத்தாலும் சிவந்த கண். மன், ஒழியிசை. 158. குறிஞ்சி (தலைமகன் சிறைப்புறத்தானாக தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது.) உருமுரறு கருவிய பெருமழை தலைஇப் பெயலான்று அவிந்த தூங்கிருள் நடுநாள் 1மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை யிமைப்பப் பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள் 5. வரையிழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி மிடையூர்பு இழியக் கண்டனென் இவளென அலையல் வாழிவேண்டு அன்னைநம் படப்பைச் சூருடைச் சிலம்பில் சுடர்ப்பூ வேய்ந்து தாம்வேண்டு உருவின் அணங்குமார் வருமே 10. நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் கனவாண்டு மருட்டலும் உண்டே இவள்தான் சுடரின்று தமியளும் பனிக்கும் வெருவர 1மன்ற மராஅத்த கூகை குழறினும் நெஞ்சழிந்து அரணஞ் சேரும் அதன்றலைப் 15. புலிக்கணத்து அன்ன நாய்தொடர் விட்டு 2முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல் எந்தையும் இல்லன் ஆக அஞ்சுவள் அல்லளோ 3இவளிது செயலே. - கபிலர். (சொ-ள்) 7. அன்னை-, வாழி-, 1-7. உரும் உரறு கருவிய பெருமழை தலைஇ - இடி முழங்கும் தொகுதியவாய மிக்க மழை பெய்துவிட்டு, பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடு நாள் - இப் பெயல் நீங்கி ஒலியடங்கிய செறிந்த இருளையுடைய நள்ளிரவில், இவள் - இவள், மின்னு நிமிர்ந்தன்ன கனம் குழை இமைப்ப - மின்னல் நிமிர்ந்தாலொத்தவாய்க் கனத்த குழைகள் ஒளிவிட, பின்னு விடுநெறியில் கிளைஇய கூந்தலள் - பின்னல் நெகிழ்ந்தமையின் நெறிப்புடன் அகன்ற கூந்தலையுடை யளாய், வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி - மலையினின்று இறங்கும் மயிலைப்போலத் தளர்ந்து நடந்து, மிடை ஊர்பு இழியக் கண்டனென் என அலையல் - பரணில் ஏறி இறங்கி வரக்கண்டேன் என்று கூறி இவளை வருத்தாதே, வேண்டு - நான் கூறுவதனை விரும்பிக் கேட்பாயாக; 7-11. சூர் உடைச் சிலம்பில் - தெய்வங்களையுடைய மலையை யடுத்த, நம் படப்பை - நம் தோட்டத்தின்கண், அணங்கு - ஒரு தெய்வம், சுடர்ப் பூ வேய்ந்து - ஒளி தங்கிய பூவைச் சூடி, தாம் வேண்டு உருவின் வரும் - தாம் அவ்வப்போது விரும்பிய உருவங்கொண்டு வரும்; (அன்றியும்), நனவின் வாயே போல - நனவினது உண்மைத் தோற்றம் போலவே, துஞ்சுநர் ஆண்டு கனவு மருட்டலும் உண்டு - துயில் வோரைக் கனவு அவ்விடத்து மயக்கலும் உண்டு; 11-14. இவள் தான் - இவளோ, சுடர் இன்று தமியளும் பனிக் கும் - விளக்கு இல்லாமல் தனியளாக இருத்தற்கும் நடுங்குவள்; வெருவர - அச்சம் தோன்ற, மன்ற மராஅத்த கூகை குழறினும் - மன்றத்தின் கண்ணுள்ள மராமரத்திலுள்ள கூகை குழறினாலும், நெஞ்சு அழிந்து அரணம் சேரும் - மனம் நடுங்கிப் பாதுகாப்பான இடத்திற்கு வந்துவிடுவள்; 14-18. அதன்தலை - அதன்மேலும், புலிக்கணத்து அன்ன நாய் தொடர்விட்டும் - புலிக்கூட்டத்தை ஒத்த நாய்கள் தொடர்தல் நீங்கினவாயினும், முருகன் அன்ன சீற்றத்துக் கடும் திறல் - முருகனை யொத்த சினத்தினையும் கடிய வலியினையும் உடைய, எந்தையும் இல்லன் ஆக - எம் தந்தை இல்லிடத்தானாகவும், இவள் - இத்தலைவி, இது செயல் - இங்ஙனம் படப்பை சென்று வரல், அஞ்சுவள் அல்லளோ - அஞ்சுவாள் ஆகாளோ. (முடிபு) அன்னை! வாழி! இவள் தூங்கிருள் நடுநாள். கனங்குழை இமைப்ப, கூந்தலள், மயிலின் ஒதுங்கி மிடையூர்பு இழியக் கண்டனென் என அலையல்; வேண்டு; நம் படப்பை, தாம் வேண்டுருவின் அணங்கும் வரும்; கனவு மருட்டலும் உண்டு; இவள்தான் சுடரின்று தமியளும் பனிக்கும்; கூகை குழறினும் அரணம்சேரும்; அதன்றலை, நாய் தொடர்விட்டும் எந்தையும் இல்லன் ஆக இவள் இது செயல் அஞ்சுவள் அல்லளோ? (வி-ரை) மிடை - பரண். அணங்குமார்: மார் அசை; அவ்வணங்கு துஞ்சுநரைக் கனவின் மருட்டலும் உண்டு எனலுமாம். இன்று - இன்றி; இல்லையாக. தமியளும் - தனியே யிருத்தற்கும் என்க. குழறினும் உம்மை இழிவு சிறப்பு. நாய் தொடர்தலாலும் இவள் அஞ்சுவள்; அவை அங்ஙனம் தொடராதுவிடினும் என விரித்துரைக்க. இதற்கு நாய் தொடர்தல்விட, வேட்டம் ஒழிந்து எந்தையும் இல்லனாக என்றுரைத் தலுமாம். எந்தை இல்லன் ஆகவும் என உம்மையை மாறுதலுமாம். (மே-ள்) `நாற்றமும் தோற்றமும்'1 என்னுஞ் சூத்திர உரையில் இச்செய்யுளைக் காட்டி, இது மிடையை ஏறி இழிந்தாள் என்றது காரணமாக ஐயுற்ற தாயைக் கனவு மருட்டலும் உண்டென்றது முதலாகப் பொய்யென மாற்றி அணங்கும் வருமென மெய்வழிக் கொடுத்தது, இது சிறைப்புறமாகக் கூறி வரைவு கடாயது என்றும், `களவலராயினும்'2 என்னுஞ் சூத்திரத்து உரையில், இப் பாட்டினுள் `மிடையூர்பு இழியக் கண்டனென் இவளென, அலையல் வாழி வேண் டன்னை' என்றது தலைவி புறத்துப்போகக் கண்டு செவிலி கூறியதனைத் தோழி கொண்டு கூறினாள் என்றும் கூறினர், நச். 159. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.) தெண்கழி விளைந்த வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிய கொடுநுக ஒழுகை உரனுடைச் சுவல பகடுபல பரப்பி உமண்உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின் 5. வடியுறு பகழிக் கொடுவில் ஆடவர் அணங்குடை நோன்சிலை வணங்க வாங்கிப் பல்ஆன் நெடுநிரை தழீஇக் கல்லென வருமுனை அலைத்த பெரும்புகல் வலத்தர் கனைகுரல் கடுந்துடிப் பாணி தூங்கி 10. உவலைக் கண்ணியர் ஊன்புழுக்கு அயரும் 1கவலைக் காதலர் இறந்தனர் எனநனி அவலங் கொள்ளன்மா காதலந் தோழி விசும்பின் நல்லேறு சிலைக்குஞ் சேண்சிமை நறும்பூஞ் சாரல் குறும்பொறைக் குணாஅது 15. வில்கெழு தடக்கை வெல்போர் வானவன் மிஞிறுமூசு கவுள சிறுகண் யானைத் தொடியுடைத் தடமருப்பு ஒடிய நூறிக் கொடுமுடி காக்குங் குருஉக்கண் நெடுமதில் சேண்விளங்கு சிறப்பின் ஆ மூர்எய்தினும் 20. ஆண்டமைந்து உறையுநர் அல்லர்நின் பூண்தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே. -ஆமூர்க் கவுதமன் சாதேவனார். (சொ-ள்) 12. காதல் அம் தோழி - காதலையுடைய தோழியே! 1-4. தெண் கழி விளைந்த வெண்கல் உப்பின் - தெளிந்த கழியின்கண் விளைந்த வெள்ளிய கல் உப்பினது, கொள்ளை சாற்றிய - விலையைக் கூறி விற்ற, உமண் - உப்பு வாணிகர், கொடுநுக ஒழுகை- வளைந்த நுகத்தையுடைய வண்டிகளிற் பூட்டிய, உரன் உடைச் சுவல பகடு பல பரப்பி - வலிபொருந்திய பிடரியினையுடைய எருதுகள் பலவற்றையும் மேயும்படி அவிழ்த்துவிட்டு. உயிர்த்து இறந்த - (உண்டு) இளைப்பாறி விடுத்துச் சென்ற, ஒழிகல் அடுப்பின்- ஒழிந்துகிடந்த கல்லாகிய அடுப்பிலே; 5-12. வடிஉறு பகழிக் கொடுவில் ஆடவர் - வடித்தல் உற்ற அம்பினையும் வளைந்த வில்லினையும் உடைய கரந்தை வீரர், அணங்கு உடை நோன்சிலை வணங்க வாங்கி - மாற்றார்க்கு வருத்தத்தை விளைக்கும் வலிய வில்லினை மிக வளைத்து, பல் ஆன் நெடு நிரை தழீஇ - பல பசுக்களையுடைய நீண்ட நிரையினைக் கவர்ந்து கொண்டு, கல் என - கல்லெனும் ஒலியுடன், வரும் முனை அலைத்த பெரும்புகல் வலத்தர் - வரும் வெட்சி மறவர் போரினை அலைத்து ஓட்டிய பெரிய செருக்கினையும் வெற்றியையும் உடையராய், கனை குரல் கடும் துடிப் பாணி தூங்கி - மிக்க குரலையுடைய கடிய துடியின் ஒலிக்கொத்த தாளத்தொடு ஆடி, உவலைக் கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் - தழையுடன் கட்டிய கண்ணியைச் சூடினராய் ஊனைப்புழுக்கி உண்ணும், கவலை- கவர்த்த நெறிகளிலே, காதலர் இறந்தனர் என - நம் காதலர் சென்றனரென்று, நனி அவலம் கொள்ளல் - மிகவும் துன்புறாதே; 13-21. விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை - வானிடத்தே சிறந்த இடி ஒலிக்கும் நெடிய உச்சியை யுடையதும், நறும் பூ சாரல் - நறிய பூக்களையுடைய சாரல்களையுடையதுமான, குறும் பொறைக் குணாஅது - குறும்பொறை என்னும் மலைக்குக் கிழக்கின்கண் உள்ளதும், வில்கெழு தட கை வெல்போர் வானவன் - விற்பொருந்திய பெரிய கையினையுடைய போர் வெல்லும் சேரனது, மிஞிறு மூசுகவுள சிறு கண் யானை - வண்டுகள் மொய்க்கும் (மதம் வழியும்) கன்னத் தினையுடைய சிறிய கண்ணினையுடைய யானையின், தொடி உடை தட மருப்பு ஒடிய நூறி - பூண் பூண்ட பெரிய கோட்டினை ஒடியும் படி அழித்து, கொடுமுடி காக்கும் - கொடுமுடி என்பான் காத்து வருகின்ற, குரூஉக்கண் நெடுமதில் - விளங்கிய இடத்தையுடைய நெடிய மதில் சூழ்ந்த, சேண் விளங்கு சிறப்பின் - நெடுந்தூரம் சென்று விளங்கும் சிறப்பினையுடைய, ஆமூர் எய்தினும் - ஆமூரையே அடை வதாயினும், நின் பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்து - நினது பூண் சுமந்த மார்பினைப் பொருந்துதலை மறந்து, ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர் - அங்கே மனம் பொருந்தித் தங்கிவிடுவா ரல்லர். (முடிபு) காதலம் தோழி! உமண் உயிர்த்திறந்த ஒழிகல் அடுப்பின் கொடு வில்லாடவர் ஊன்புழுக்கயரும் கவலையைக் காதலர் இறந்தனரென அவலங்கொள்ளல்; (அவர்) ஆமூர் எய்தினும் நின் ஆகம் பொருந்துதல் மறந்து, ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர். (வி-ரை) அருமுனை அலைத்த எனப் பிரித்துரைத்தலுமாம். கொள்ளன்மா: மா, அசை. குறும்பொறை - ஒரு மலையின் பெயர். கொடுமுடி - ஆமூர்க்கண்ணிருந்த ஒரு தலைவன். 160. நெய்தல் (தோழி வரைவு மலிந்து சொல்லியது.) ஒடுங்கீர் ஓதி நினக்கும் அற்றோ நடுங்கின் றளித்தென் நிறையில் நெஞ்சம் அடும்புகொடி சிதைய வாங்கிக் கொடுங்கழிக் குப்பை வெண்மணல் பக்கஞ் சேர்த்தி 5. நிறைச்சூல் யாமை மறைத்தீன்று புதைத்த கோட்டுவட் டுருவின் புலவுநாறு முட்டைப் பார்ப்பிட னாகும் அளவைப் பகுவாய்க் கணவ னோம்புங் கானலஞ் சேர்ப்பன் முள்ளுறில் சிறத்தல் அஞ்சி மெல்ல 10. வாவுடை மையின் வள்பிற் காட்டி ஏத்தொழில் நவின்ற எழில்நடைப் புரவி செழுநீர்த் தண்கழி நீந்தலின் ஆழி நுதிமுகங் குறைந்த பொதிமுகிழ் நெய்தல் 1பாம்புயர் தலையிற் சாம்புவன நிவப்ப 15. இரவந் தன்றால் திண்டேர் கரவாது ஒல்லென வொலிக்கும் இளையரொடு வல்வாய் அரவச் சீறூர் காணப் பகல்வந் தன்றாற் பாய்பரி சிறந்தே. - குமுழி ஞாழலார் நப்பசலையார். (சொ-ள்) 3-8. நிறைச் சூல் யாமை - நிறைவாய சூலுற்ற யாமை, அடும்பு கொடி சிதைய வாங்கி - அடும்பினைக் கொடி சிதைய இழுத்து, கொடும் கழி குப்பை வெண்மணல் பக்கம் சேர்த்தி - வளைந்த கழியிடத்து வெள்ளிய மணல் மேட்டின் பக்கத்தே சேர்த்து (அதன் கண்), மறைத்து ஈன்று புதைத்த - மறைய ஈன்று புதைத்த, கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை - யானைக் கொம்பினாற் செய்த வட்டின் வடிவமுடைய புலால் நாறும் முட்டையை, பகுவாய்க் கணவன் - பிளந்த வாயினையுடைய ஆண் யாமை, பார்ப்பு இடன் ஆகும் அளவை - அதனிடத்தினின்று குஞ்சு வெளிப்படும் அளவு, ஓம்பும் - பாதுகாத்திருக்கும், கானல் அம் சேர்ப்பன் - சோலையை யுடைய கடற்கரைத் தலைவனது; 9-15. திண்தேர் - வலிய தேரானது, ஏ தொழில் நவின்ற எழில்நடை புரவி - அம்பின் வேகம்போலச் செல்லுதலைப் பழகிய அழகிய நடையினையுடைய குதிரைகள், முள் உறில் சிறத்தல் அஞ்சி - தாற்றினால் குத்தப்பெறின் வேகம் அளவு கடத்தலை அஞ்சி, வள்பிற்காட்டி - கடிவாளத்தினால் குறிப்பிக்க, மெல்ல வரவு உடைமையின் - மெல்லத் தாவிச் செல்லுதல் கொண்டமையின், செழுநீர் தண் கழி நீந்தலின் - செழுமை வாய்ந்த நீரினையுடைய குளிர்ந்த கழியினைக் கடக்குங்கால், ஆழி நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல் - அத்தேர் உருளையின் கூரிய முனையால் அறுக்கப் பெற்ற பொதிந்த அரும்புகளையுடைய நெய்தல், பாம்பு உயர் தலையில் சாம்புவன நிவப்ப - பாம்பின் மேலே தூக்கிய தலையைப் போல வாடி மேலெழ, இரவந்தன்று - இதுகாறும் இராக்காலங் களில் வந்து கொண்டிருந்தது; 16-19. பாய்பரி சிறந்து - (இன்று அத்தேர்) பாயும் குதிரை வேகத்தாற் சிறப்புற்று, கரவாது - மறையாமல், ஒல் என ஒலிக்கும் இளையரொடு - ஒல்லென ஆரவாரம் செய்யும் ஏவல் இளையரொடு, வல்வாய் அரவச் சிறு ஊர் காண - வலிய வாயினாலே அலராகிய ஒலியைச் செய்யும் சிறிய ஊர்ப் பெண்டிர் காண, பகல் வந்தன்று - பகலிலே வந்தது; (அதனால்); 1-2. என் நிறை இல் நெஞ்சம் நடுங்கின்று - எனது நிறையில்லாத நெஞ்சம் நடுங்கியது, அளித்து - அது இரங்கத்தக்கது, ஒடுங்கு ஈர் ஓதி - ஒடுங்கிய கரிய கூந்தலையுடைய தோழியே! நினக்கும் அற்றோ- நினக்கும் அவ்வாறு நெஞ்சம் நடுங்கியதோ? (முடிபு) கானலஞ் சேர்ப்பன் தேர் இதுகாறும் இரவின்கண் வந்தன்று; இப்பொழுது பகல் வந்தன்று; என் நெஞ்சம் நடுங்கின்று; அளித்து! ஒடுங்கு ஈர் ஓதி! நினக்கும் அற்றோ? (வி-ரை) யாமையானது முட்டையை மறைவிடத்தில் ஈன்று புதைத்துப் போகுமெனவும், ஆண் யாமையானது அம் முட்டையைக் குஞ்சு வெளிப்படும் அளவு பாதுகாக்கும் எனவும் கொள்க. இவ்வுண்மை, `தாயின் முட்டை போல உட்கிடந்து, சாயி னல்லது பிறிதெவ னுடைத் தோ, யாமைப் பார்ப்பின் அன்ன, காமம் காதலர் கையறவிடினே.1' `தீம்பெரும் பொய்கை யாமையிளம் பார்ப்பு, தாய்முக நோக்கி வளர்ந்திசி னாங்கு'2 என்னுஞ் செய்யுட்களானும் உணர்க. முள்-தாறு. காட்டி - காட்ட எனத் திரிக்க. முன்பெல்லாம் இரவந்தன்று எனவும் இப்பொழுது பகல் வந்தன்று எனவும் விரித்துரைக்க. இப்பொழுது கரவாது இளையரொடு சீறூர் காணப் பரிசிறந்து பகல் வந்தன்று என்றமையால், முன்பெல்லாம் கரவிலே இளையரின்றிச் சீறூர் காணாமலும், பரிசிறவாமலும் இரவில் வந்ததென்க. இப்பொழுது தேர் இங்ஙனம் வந்தது என்றது வரைவு வேண்டி வந்ததென்றபடி, என் நெஞ்சம் நடுங்கின்று; ஒடுங்கீரோதி! நினக்கும் அற்றோ என்றது தலைவியை நோக்கி, வரைவு மலிந்து நகையாடிச் சொல்லியது. (உ-றை) `நிறைச்சூல் யாமையைக் காமம் நிறைந்த தலைவி யாகவும், அது அடும்பங் கொடியை யறுத்து அதனை வெண்மணற் பக்கத்தே சேர்த்தது, தலைவி தன் தாயர் தன்னையர் பாலுள்ள அற்புத் தளையையறுத்து அவ்வன்பைத் தலைவன் பக்கலிலே சேர்த்த தன்மையாகவும், அது தான் ஈன்ற முட்டையை மறைத்துப் புதைத்தது, தலைவி தான் ஒழுகிய களவொழுக்கத்தைப் புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துவைத்த தன்மையாகவும், அம்முட்டை புலவு நாறியது, அக் களவு வெளிப்பட்டு அலரெழும் தன்மையாகவும், அம் முட்டையைக் கணவன் பார்ப்பாகுமளவும் ஓம்பியது, அக் களவொழுக்கத்தைத் தலைமகன் வரையவந்து மாட்சிமைப் படுத்தும் துணையும் இடையீடின்றிக் குறிவழி யொழுகித் தலைமகளை ஓம்பின தன்மையாகவும் உள்ளுறையுவமம் கொள்க' என்பர், இராசகோபால ஐயங்கார். 161. பாலை (பிரிவுணர்த்திய தோழி, தலைமகளது வேறுபாடு கண்டு முன்னமே உணர்ந்தாள் நம் பெருமாட்டியென்று தலைமகனைச் செலவு விலக்கியது.) வினைவயின் பிரிதல் யாவது வணர்சுரி வடியாப் பித்தை வன்கண் ஆடவர் அடியமை பகழி ஆர வாங்கி வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலைப் 5. படுமுடை 1நசைஇய வாழ்க்கைச் செஞ்செவி எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும் வெருவரு கானம் நீந்திப் பொருள் புரிந்து இறப்ப 2எண்ணினிர் என்பது சிறப்பக் கேட்டனள் கொல்லோ தானே தோட்டுஆழ்பு 10. சுரும்புண ஒலிவரும் இரும்பல் கூந்தல் அம்மா மேனி ஆயிழைக் குறுமகள் சுணங்குசூழ் ஆகத்து அணங்கென உருத்த நல்வரல் இளமுலை நனையப் 3பல்லிதழ் உண்கண் பரந்தன பனியே. - மதுரை புல்லங் கண்ணனார். (சொ-ள்) 9-14. (தலைவ!) சுரும்பு தோட்டு ஆழ்பு உண - வண்டுகள் மலரி தழுட்புக்குத் தேனையுண்ண, ஒலிவரும் இரும் பல் கூந்தல் - தழைத்த கரிய பலவாய கூந்தலையும், அம் மா மேனி - அழகிய மாமை நிறமுடைய மேனியையும், ஆய் இழை - ஆய்ந்த அணிகளையுமுடைய, குறுமகள் - இளையளாய தலைவியின், சுணங்கு சூழ் ஆகத்து - திதலை படர்ந்த மார்பின்கண், அணங்கு என உருத்த - வீற்றுத் தெய்வமென உருக்கொண்ட, நல் வரல் இளமுலை நனைய - நல்ல வளர்ச்சியையுடைய இளைய முலைகள் நனைய, பல் இதழ் உண்கண் - பல இதழையுடைய நீலப் பூப்போன்ற மையுண்ட கண்கள், பனி பரந்தன - நீர் பரந்தொழுகின; 1-9. வணர் சுரி வடியாப் பித்தை வன்கண் ஆடவர் - வளைந்து சுருண்ட கோதப்பெறாத மயிரினையுடைய கொடிய மறவர், அடி அமைபகழி ஆர வாங்கி - குதை யமைந்த அம்பினை முழுதும் இழுத்து விடுத்து, வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை - வழிச் செல்லும் புதியரைக் கொன்ற அச்சம் தோன்றும் கவர்த்த நெறியில், படுமுடை நசைஇய வாழ்க்கைச் செம் செவி எருவைச் சேவல் - பொருந்தும் முடை நாறும் புலாலை விரும்பியுண்ணும் வாழ்க்கை யினையுடைய சிவந்த செவியையுடைய பருந்தின் சேவல், ஈண்டு கிளை பயிரும் - நெருங்கிய தன் சுற்றத்தினை அழைக்கும், வெருவரு கானம் - அச்சம் தோன்றும் கானத்தை, பொருள் புரிந்து - பொருளை விரும்பி, நீந்தி இறப்ப எண்ணினிர் என்பது - கடந்து செல்ல எண்ணினீர் என்பதை, தான் சிறப்பக் கேட்டனள் கொல் - அவள் முன்னரே நன்கு கேட்டுளாளோ? (ஆயின்); 1. வினைவயிற் பிரிதல் யாவது - நீர் எண்ணியாங்கு பொருளீட்டும் வினையின்கண் அவளைப் பிரிந்து செல்லுதல் யாங்ஙனம் இயல்வ தாகும்? இயலாதுகாண். (முடிபு) குறுமகள் ஆகத்து முலை நனைய கண் பனி பரந்தன; வெருவரு கானம் பொருள் புரிந்து இறப்ப எண்ணினிர் என்பது, தான் சிறப்பக் கேட்டனள் கொல்லோ? (ஆயின்) வினைவயிற் பிரிதல் யாவது? (வி-ரை) சேவல் முடையை உண்டற்குக் கிளையைப் பயிரும் என்க. அணங்கு - வீற்றுத் தெய்வம். அது முலையிடத்திருக்கு மென்பது `ஆமணங்கு குடியிருந் தஞ்சுணங்கு பரந்தனவே'1 என்பதனாற் பெறப்படும் கண் பனி பரந்தன என்பது, இடத்தினிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. 162. குறிஞ்சி (இரவுக்குறிக்கண் தலைமகளைக் கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) கொளக்குறை படாஅக் கோடுவளர் குட்டத்து அளப்பரி தாகிய குவையிருந் தோன்றல கடல்கண் டன்ன மாக விசும்பின் அழற்கொடி யன்ன மின்னுவசிபு நுடங்கக் 5. கடிதிடி உருமொடு கதழுறை சிதறி விளிவிடன் அறியா வானுமிழ் நடுநாள் அருங்கடிக் காவலர் இகழ்பதம் நோக்கிப் பனிமயங்கு அசைவளி அலைப்பத் தந்தை நெடுநகர் ஒருசிறை நின்றனெ னாக 10. அறலென அவிர்வருங் கூந்தல் மலரென வாண்முகத்து அலமரும் ஆயிதழ் மழைக்கண் முகைநிரைத் தன்ன மாவீழ் வெண்பல் நகைமாண் டிலங்கு நலங்கெழு துவர்வாய்க் கோலமை விழுத்தொடி விளங்க வீசிக் 15. காலுறு தளிரின் நடுங்கி ஆனாது நோயசா வீட முயங்கினள் வாய்மொழி நல்லிசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய நசைபிழைப் பறியாக் கழல்தொடி 1அதிகன் கோளறவு அறியாப் பயங்கெழு பலவின் 20. வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய வில்கெழு தானைப் பசும்பூண் பாண்டியன் களிறணி வெல்கொடி கடுப்பக் காண்வர ஒளிறுவன இழிதரும் உயர்ந்துதோன் றருவி நேர்கொள் நெடுவரைக் கவாஅன் 25. சூரர மகளிரிற் பெறற்கரி யோளே. - பரணர். (சொ-ள்) நெஞ்சே-, 1-6. கொளக் குறைபடா - கொள்ளக் கொள்ளக் குறை படாததும், கோடு வளர் குட்டத்து - சங்குகள் பெருகும் ஆழத்தினையுடைமையால், அளப்பு அரிதாகிய - அளத்தற்கு அரிதாகியதும், குவை இரு தோன்றல - திரண்ட கரிய தோற்றத்தினை யுடையதும் ஆகிய, கடல் கண்டன்ன - கடலைக் கண்டாலொத்த, மாக விசும்பின் - வானில், அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க- தீயின் கொடியை யொத்த மின்னல் மேகத்தைப் பிளந்து கொண்டு அசைந்து செல்ல, கடிது இடி உருமொடு - கடுமையாக இடிக்கும் இடியுடன், கதழ் உறை சிதறி - விரைந்த நீரைச் சிதறி, விளிவு இடன் அறியா - முடிவிடம் அறியாவாறு, வான் உமிழ் நடு நாள் - மேகம் பெய்தலைச் செய்யும் நடு இரவில்; 7-9. அருங் கடிக் காவலர் இகழ் பதம் நோக்கி - அரிய காத்தற்றொழிலையுடைய காவலர் நெகிழ்ந்திருந்த செவ்வியை நோக்கி, பனி மயங்கு அசை வளி அலைப்ப - குளிர் பொருந்திய அசைந்து வரும் வாடைக்காற்று வருத்த, தந்தை நெடுநகர் ஒரு சிறை நின்றனென் ஆக - தன் தந்தையின் நீண்ட மாளிகையின் ஒரு புறத்தே நின்று கொண்டிருந்தேனாக. 16-25. வாய்மொழி - வாய்மைச் சொல்லினையும், நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய நகை பிழைப்பு அறியா - நல்ல கீர்த்தியினை அடைவிக்கும் இரவலர்க்கு அவர் எண்ணிய விருப்பம் பிழைத்தல் அறியப்படாத ஈகையினையும் உடைய, கழல் தொடி அதிகன் - கழலும் வீர வளையும் அணிந்த அதிகன் என்பானது, கோளறவு அறியாப் பயம் கெழு பலவின் - காய்த்தல் இல்லை யாதலை அறியாத பயனுடைய பலாமரத்தினோடு, வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய - வேங்கைமரமும் பொருந்தியுள்ள மலையிடம் பொலிவுற, வில் கெழு தானை பசும்பூண் பாண்டியன் - வில்லையுடைய சேனையையுடைய பசும்பூண் பாண்டியனது, களிறு அணி வெல் கொடி கடுப்ப - களிற்றின் மீது எடுத்த வெல்லும் கொடியை யொப்ப, காண்வர ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி - அழகுபெற மிளிர்வனவாய் இழியும் உயர்ந்து காணப்பெறும் அருவிகளையுடைய, நேர் கொள் நெடுவரைக் கவான் - நேரான நெடிய மலையின் சாரலிலுள்ள, சூர் அர மகளிரில் பெறற்கு அரியோள் - அச்சம் தரும் தெய்வப்பெண்களைப் போலப் பெறுதற்கு அரியளாகிய நம் தலைவி; 10-16. அறல் என அவிர்வரும் கூந்தல் - அறல்போல் விளங்கும் கூந்தலினையும், மலர் என வாள் முகத்து அலமரும் ஆய் இதழ் மழைக்கண் - நீலமலரென ஒளிபொருந்திய முகத்தில் சுழலும் அழகிய இதழினையுடைய குளிர்ந்த கண்ணினையும், மாவீழ் முகை நிரைத்தன்ன வெண் பல் - வண்டுகள் விரும்பும் முல்லை அரும்பினை வரிசையாக நிறுத்தினாலொத்த வெண் பல்லினையும், நகை மாண்டு இலங்கு நலம்கெழு துவர்வாய் - புன்னகையால் மாண்புற்று விளங்கும் நன்மை வாய்ந்த பவளம் போன்ற வாயினையும் உடையளாய், கோல் அமை விழுத்தொடி விளங்க வீசி - அழகு வாய்ந்த சிறந்த வளையல் விளங்கக் கையை வீசி, கால் உறு தளிரின் நடுங்கி - காற்று வீசப்பெற்ற தளிரென நுடங்கி வந்து, நோய் அசா வீட ஆனாது முயங்கினள் - நமது நோயாகிய வருத்தம் நீங்க அமையாது முயங்கினள். (முடிபு) நெஞ்சே! வான் உமிழ் நடுநாள் தந்தை நெடுநகர் ஒரு சிறை நின்றனெனாக, சூரர மகளிரிற் பெறற் கரியோள் வீசி நடுங்கி வந்து நோயசா வீட முயங்கினள், விசும்பின் மின்னு வசிபு நுடங்க, வானம் உருமொடு உறைசிதறிப் பெயலுமிழ் நடுநாள் எனவும், வெற்பகம் பொலிய வெல்கொடி கடுப்ப உயர்ந்து தோன்று அருவி நெடு வரைக் கவானிலுள்ள சூரர மகளிர் எனவும் கொள்க. (வி-ரை) கோடு - கரையுமாம். மாக விசும்பு - இருபெயரொட்டு. கருமையும் பரப்பும் பற்றிக் கடல் கண்டன்ன என்றார். விளி விடன் - தங்கு மிடமுமாம். அருங்கடி என்றதனாற் காவலின் அருமை கூறப்பட்டது. வளி அசைப்ப ஒரு சிறை நின்றனென் என்றதனால், தலைவிபாலுள்ள வேட்கை மிகுதியால் தலைவன் இரவுக்குறிக்கண் நின்ற அருமை குறிக்கப்பட்டது. கோலம் - கோல் எனக் குறைந்து நின்றது; கோல்- திரட்சியுமாம். நடுங்கி - அச்சத்தால் நடுங்கி என்றலுமாம். பிழைப்பரிய ஈகையினையுமுடைய என விரித்துரைக்க. கோளறவு அறியா என்றது, எஞ்ஞான்றும் காய்த்தலையுடைய என்றபடி. பசும்பூட் பாண்டியன், பெயர். நெடுவரைக்கவான் - நீண்ட மூங்கிலையுடைய பக்க மலையுமாம். 163. பாலை (பிரிவின்கண் வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது.) விண்ணதிர்பு தலைஇய விரவுமலர் குழையத் தண்மழை பொழிந்த தாழ்பெயல் கடைநாள் எமியம் ஆகத் துனியுளங் கூரச் சென்றோர் உள்ளிச் சில்வளை நெகிழப் 5. 1பெருநசை உள்ளமொடு வருதிசை நோக்கி 2விளியும் எவ்வமொடு அளியள் என்னாது களிறுயிர்த் தன்ன கண்ணழி துவலை முளரி கரியும் முன்பனிப் பால்நாள் குன் றுநெகிழ்ப் பன்ன குளிர்கொள் வாடை 10. எனக்கே வந்தனை போறி புனல்கால் அயிரிடு குப்பையின் நெஞ்சுநெகிழ்ந் தவிழக் கொடியோர் சென்ற தேஎத்து மடியாது இனையை யாகிச் சென்மதி வினைவிதுப் புறுநர் உள்ளலும் உண்டே. - கழார்க்கீர னெயிற்றியார். (சொ-ள்) 1-6. விரவு மலர் குழைய - பலவகையாய மலர்களும் குழைந்திட, விண் அதிர்பு தலைஇய - வானின்கண் முழங்கிக் கூடிய, தண்மழை பொழிந்த தாழ்பெயல் கடைநாள் - குளிர்ந்த மேகம் சொரிந்துபோன குறைந்த பெயலைக்கொண்ட கூதிரின் கடை நாளில், துனி உளம்கூர - மனத்தே வெறுப்பு மிக, எமியமாகச் சென்றோர் உள்ளி - யாம் தமியேமாகப் பிரிந்து சென்ற தலைவரை எண்ணி, சில்வளை நெகிழ - எஞ்சிய சிலவாய வளைகளும் கழன்று போக, பெருநசை உள்ளமொடு வருதிசை நோக்கி - பெரிய ஆர்வம் கொண்ட உள்ளத்தோடு அவர் மீண்டுவரும் திசையை நோக்கி (வருந்தி), விளியும் எவ்வமொடு அளியள் என்னாது - இறத்தற்கேதுவாய துன்பத்தோடு கூடியிருத்தலின் அளிக்கத்தக்காள் இவள் என்று நினையாது; 7-10. களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை - யானை (நீரைப் பருகி) உயிர்ப்பது போலும் இடம் மறைய வீசும் பனித்துளியால், முளரி கரியும் முன்பனிப் பால்நாள் - தாமரைமலர். கரிந்திடும் முன்பனிக் காலத்துப் பாதியிரவில், குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர்கொள் வாடை - மலையையும் நடுங்கச் செய்வது போன்ற குளிரைக் கொண்ட வாடைக்காற்றே, எனக்கே வந்தனை போறி - நீ என்பாலே நலிய வந்தனை போல்கின்றாய்; 10-14. புனல் கால் அயிர்இடு குப்பையின் - நீர் ஓடு காலிடத் துள்ள நுண்மணலாலாய மேடு கரைந்திடல்போல, நெஞ்சு நெகிழ்ந்து அவிழ - நெஞ்சம் கரைந்து இளக, கொடியோர் சென்ற தேஎத்து - கொடியராய அத் தலைவர் சென்ற திசையில், மடியாது இனையை ஆகிச் சென்மதி - அயராது இன்ன தன்மையினை ஆகிச் செல் வாயாக; (செல்லின்), வினை விதுப்பு உறுநர் உள்ளலும் உண்டு - பொருளீட்டும் தொழிலிற் பெருவேட்கை யுடையார் என்னை நினைத்து வருதலும் உண்டு. (முடிபு) தாழ்பெயற் கடைநாள்; சென்றோர் உள்ளி எவ்வமொடு (இருத்தலின்) அளியள் என்னாது, குளிர்கொள் வாடையே! எனக்கே வந்தனை போறி; கொடியோர் சென்ற தேஎத்துச் சென்மதி; வினை விதுப்புறுநர் உள்ளலு முண்டு: (வி-ரை) விளியும் எவ்வமொடு என்பதற்குத் துன்பத்தால் இறந்து படுவள் என்றுரைத்தலுமாம். விளியா எவ்வமொடு என்பது பாடமாயின் கெடாத துன்பத்தினொடு (இருத்தலின்) என்றுரைக்க. என்னாது வந்தனை எனக் கூட்டுக. 164. முல்லை (பாசறைக்கண் இருந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) கதிர்கை யாக வாங்கி ஞாயிறு பைதறத் தெறுதலிற் பயங்கரந்து மாறி விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம் காடுகவின் எதிரக் கனைபெயல் பொழிதலின் 5. பொறிவரி யினவண் டார்ப்பப் பலவுடன் நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற 1வெறியேன் றன்றே வீகமழ் கானம் எவன்கொல் மற்றவர் நிலையென மயங்கி இகுபனி உறைக்குங் கண்ணொடு 2இனைபாங்கு 10. இன்னா துறைவி தொன்னலம் பெறூஉம் இதுநற் காலங் காண்டிசின் பகைவர் மதில்முகம் முருக்கிய தொடிசிதை மருப்பில் கந்துகால் ஒசிக்கும் யானை வெஞ்சின வேந்தன் வினைவிடப் பெறினே. - மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்றேவனார். (சொ-ள்) நெஞ்சே! 11-14. பகைவர் மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின் - பகைவரது மதிற்கதவினைச் சிதைத்த பூண்சிதைந்த கோட்டினையும், கந்து ஒசிக்கும் கால் யானை - கட்டுத் தறியினை ஒடிக்கும் காலினையுமுடைய யானைகளையுடைய, வெம் சின வேந்தன் வினைவிடப் பெறின் - கொடிய சினத்தினையுடைய நம் வேந்தன் இப் போரினை முடிக்கப் பெறின்; 1-7. ஞாயிறு கதிர் கையாக வாங்கி - ஞாயிறு தன் கதிரே கையாக ஈரத்தினைக் கவர்ந்து, பைது அற தெறுதலின் - பசுமையறக் காய்தலின், பயம் கரந்து மாறி - நீர் இல்லையாகி ஒழிய, விடு வாய்ப்பட்ட - பிளத்தல் பொருந்திய, வியன் கண் மாநிலம் - மிக்க இடம் வாய்ந்த பெரிய புவியிலே, காடு கவின் எதிர - காடு (பண்டை) அழகினை எய்த, கனை பெயல் பொழிதலின் - மிக்க மழை பொழிந் தமையால், பொறிவரி இனவண்டு ஆர்ப்ப - பொறிகளையும் வரிகளையும் உடைய கூட்டமாய வண்டுகள் ஆரவாரம் செய்ய, நறுவீ முல்லையொடு தோன்றி பல உடன் தோன்ற - நறிய முல்லைப் பூவுடன் செங்காந்தள் பூவும் வேறு பல பூக்களும் ஒருங்கு மலர, கானம் வீ கமழ் வெறி ஏன்றன்று - காடு மலர் நாறும் நாற்றம் பொருந்தியது; 8-11. அவர்நிலை எவன்கொல் என மயங்கி - நம் தலைவர் நிலை என்னாயிற்றோ என மயங்கி, இகு பனி உறைக்கும் கண்ணொடு - தாழும் நீரினைச் சிந்தா நிற்கும் கண்களுடன், ஆங்கு இனைபு இன்னாது உறைவி - மனையின்கண் வருந்தி இன்னாமையுடன் வதிவாளாய தலைவி, தொல் நலம் பெறூஉம் நல்காலம் இது காண்டிசின் - (நம்மைக் கண்டு) பழைய நலத்தினை அடையும் நல்ல காலம் இதுவாகும் காண்பாயாக. (முடிபு) நெஞ்சே! வெஞ்சின வேந்தன் வினைவிடப் பெறின், மாநிலம் காடு கவின் எதிரப் பெயல் பொழிதலின் கானம் வெறி ஏன்றன்று; அவர் நிலை யாதோ என மயங்கி இனைபு ஆங்கு இன்னாது உறைவி தொன்னலம் பெறூஉம் நற்காலம் இதுகாண். (வி-ரை) பயம் - வளமுமாம். விடுவாய் - பிளப்பு. நலம் பெறூஉம் நற்காலம் இது என மாறுக. வெஞ்சின வேந்தன் வினைவிடப் பெறின் என்றமையால், வேந்தன் வெற்றி யெய்தியும் சின மிகுதியாற் சந்திற்கு ஒருப்படாதுளன் என்பது போதரும். (மே-ள்) `ஏனோர் மருங்கினும்'1 என்னுஞ் சூத்திரத்து, (இச் செய்யுள்) பிரிதற் பகுதியாகிய பாசறைப் புலம்பல் எனினும் நிலம் பற்றி முல்லையாயிற்று என்றுரைத்தனர், இளம். 165. பாலை (மகட்போக்கிய தாயது நிலைமை கண்டார் சொல்லியது.) கயந்தலை மடப்பிடி பயம்பிற் பட்டெனக் களிறுவிளிப் படுத்த கம்பலை வெரீஇ ஒய்யென எழுந்த செவ்வாய்க் குழவி தாதெரு மறுகின் மூதூர் ஆங்கண் 5. எருமை நல்ஆன் பெறுமுலை மாந்தும் நாடுபல இறந்த நன்ன ராட்டிக்கு ஆயமும் அணியிழந்து அழுங்கின்று தாயும் 1இன்தோள் தாராய் இறீஇயரென் உயிரெனக் கண்ணும் நுதலும் நீவித் தண்ணெனத் 10. தடவுநிலை நொச்சி வரிநிழல் அசைஇத் தாழிக் குவளை வாடுமலர் 2சூட்டித் தருமணற் கிடந்த பாவையென் 3அருமக ளேயென முயங்கினள் அழுமே. ........................... (சொ-ள்) 1-6. கயந்தலை மடப் பிடி பயம்பிற் பட்டென. மெல்லிய தலையையுடைய இளைய பெண்யானை குழியில் அகப் பட்டதாக, களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ - களிற்றுயானை கூப்பீடு செய்த ஆரவாரத்திற்கு அஞ்சி, ஒய்யென எழுந்த செவ்வாய்க் குழவி - விரைந்தெழுந்த சிவந்த வாயினதாய அதன் கன்று, தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண் - தாதாகிய எருவினையுடைய தெருக் களையுடைய பழைய ஊராய அவ்விடத்து, எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் - எருமையாய நல்ல மாட்டினின்றும் பெறுகின்ற முலைப்பாலை உண்ணும் இடமாய, நாடு பல இறந்த நன்ன ராட்டிக்கு - பல நாடுகளைக் கடந்து சென்ற நன்மையை யுடையாள் பொருட்டு; 7. ஆயமும் அணி இழந்து அழுங்கின்று - ஆயமும் பொலி விழந்து வருந்துகின்றது; 7-13. தாயும் - தாயும், இறீஇயர் என் உயிர் என - என் உயிர் கெடு வதாக என்று நொந்து கூறி, தருமணல் கிடந்த பாவை - கொணர்ந்து பரப்பிய மணலில் கிடந்த மகளது பாவையை எடுத்து, கண்ணும் நுதலும் நீவி - அதன் கண்ணையும் நெற்றியையும் தடவி, தடவு நிலை நொச்சி வரி நிழல் தண் என அசைஇ - வளைந்த நிலையினையுடைய நொச்சியின் வரிவரியாகவுள்ள நிழலில் தட்பமுறக் கிடத்தி, தாழிக் குவளை வாடுமலர் சூட்டி - தாழிக்கண்ணே யுள்ள குவளையின் வாடிய மலரைச் சூட்டி, என் அருமகளே - என் அரிய மகளே, இன் தோள் தாராய் என முயங்கினள் அழும் - நினது இனிய தோளைத் தருவாயாக என்று கூறித் தழுவி அழாநிற்பள். (முடிபு) நாடு - பல இறந்த நன்னராட்டிக்கு ஆயமும் அழுங்கின்று; தாயும், இறீஇயர் என் உயிர் எனக் கூறி, பாவையைக் கண்ணும் நுதலும் நீவி, நிழல் அசைஇ, மலர் சூட்டி, என் அருமகளே இன்தோள் தாராய் என முயங்கினள் அழும் (வி-ரை) கற்புக்கடன் பூண்டு கணவனுடன் சென்றாளாகலின்- `நன்னராட்டி' என்றார். ஆயமும் அணியிழந் தழுங்கின்று என்றத னால் தாயது நிலைமையோடு ஆயத்தின் நிலைமையையும் கண்டார் சொல்லினர் என்று கொள்க. ஆயமும் தாயும் என்னும் உம்மைகள் எச்சப்பொருளன. ஈன்றோட்டாராய் என்பது பாடமாயின், தாய் பாவையை நோக்கி, நின்னை ஈன்றவளாகிய என் மகளைக் காட்டு வாயாக என்று கூறினாளெனக் கொள்ளல் வேண்டும். தண்ணென முயங்கினள் என்ற இயைத்தலுமாம். தலைவி யிருந்து நீர் வார்க்கப் பெறாமையால், தாழிக் குவளையின் மலர் வாடுவதாயிற்று. (மே-ள்) `தன்னும் அவனும் அவளும் சுட்டி'1 என்னுஞ் சூத்திரத்து (இச்செய்யுள்) `தாய் நிலையும் ஆயத்து நிலையும் கண்டோர் கூறியவாறுணர்க' என்றும் `பால்கெழு கிளவி நால்வர்க்கு முரித்தே'2 என்னுஞ் சூத்திரத்து, `தருமணற் கிடந்த பாவையென், அருமகளேயென முயங்கினள் அழுமே' `இது நற்றாய் மணற் பாவையைப் பெண் பாலாகக் கூறித் தழீஇக் கொண்டழுதலிற் பால்கெழு கிளவியாயிற்று' என்றும், கூறினர் நச். 166. மருதம் (பரத்தையோடு புனல் ஆடிய தலைமகன் தலைமகளிடைப் புக்கு யான் ஆடிற்றிலன் என்று சூளுற்றான் என்பது கேட்ட 3பரத்தை தன் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.) நல்மரங் குழீஇய நனைமுதிர் சாடி பல்நாள் அரித்த கோஒய் உடைப்பின் மயங்குமழைத் துவலையின் மறுகுடன் பனிக்கும் பழம்பல் நெல்லின் வேளூர் வாயில் 5. நறுவிரை தெளித்த நாறிணர் மாலைப் பொறிவரி இனவண்டு ஊதல கழியும் உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம் புனையிருங் கதுப்பின் 4நீகடுத் தோள்வயின் அனையேன் ஆயின் அணங்குக என்னென 10. மனையோள் தேற்றும் மகிழ்ந னாயின் யார்கொல் வாழி தோழி நெருநல் தார்பூண் களிற்றில் தலைப்புணை தழீஇ வதுவை ஈரணிப் பொலிந்த நம்மொடு புதுவது வந்த காவிரிக் 15. 1கோடுதோய் மலிர்நிறை ஆடி யோரே. - இடையன் நெடுங்கீரனார். (சொ-ள்) 11. தோழி-, வாழி-, 1-4. நல்மரம் குழீஇய - நல்ல மரங்கள் சூழ்ந்த (கள் விற்கும் இல்லில் உள்ள), பல் நாள் அரித்த நனைமுதிர் சாடி - பலநாளும் வடிக்கப்பெற்ற கள் நிறைந்த சாடியை, கோஒய் உடைப்பின் - முகக்கும் கலம் உடைத்திடின், மயங்கு மழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும் - விரவிய மழைத்துளி போலத் தெருவெலாம் துளிக்கும் (ஊராய), பழம் பல் நெல்லின் வேளூர் வாயில் - பழைய பலவகை நெற்களையும் உடைய வேளூரின் வாயிலிடத்து; 5-7. நறுவிரை தெளித்த நாறு இணர் மாலை - நறுமண நீர் தெளிக்கப் பெற்ற நாறும் கொத்துக்களாலாய பூமாலையை, பொறிவரி இன வண்டு ஊதல கழியும் - புள்ளிகளையும் வரிகளையு முடைய கூட்டமாய வண்டு அஞ்சி ஊதாது ஒழிவதற்கு ஏதுவான, உயர் பலி பெறூஉம் - உயர்ந்த பலிகளையே பெறும், உருகெழு தெய்வம் - அச்சம் தரும் தெய்வம்; 8-9. புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்வயின் - அணிந்த கரிய கூந்தலையுடையளாய நின்னால் ஐயுறப் பெற்றாளுடன், அனையேன் ஆயின் அணங்குக என் என - யான் புனலாடி வந்தேனாயின் என்னை வருத்துவதாக என்று; 10. மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின் - தன் மனைவியை அவள் கணவன் சூளுரைத்துத் தெளியவைப்பானாயின்; 11-15. நெருநல் - நேற்று, புதுவது வந்த காவிரிக் கோடுதோய் மலிர் நிறை - புதிதாக வந்த காவிரியின் கரை யுச்சியினைத் தோய்ந்து வரும் மிக்க வெள்ளத்தில், தார்பூண் களிற்றில் தலைப்புணை தழீஇ - தாரணிந்த களிற்றினைப் போன்ற புணையின் தலையிடத்தைத் தழுவியிருந்து, வதுவை ஈர் அணிப் பொலிந்த - கூட்டத்திற்குரிய பெரிய அணியாற் பொலிவுற்ற, நம்மொடு ஆடியோர் - நம்மொடு கூடிப் புனலாடினோர்; யார்கொல் - யாரோதான்? (முடிபு) வேளூர் வாயிலில் உயர்பலி பெறும் உரு கெழு தெய்வம், நீ கடுத்தோள் வயின் அனையேனாயின் என் அணுங்குக என மகிழ்நன் மனையோளைத் தேற்றுமாயின், நெருநல், காவிரி மலிர் நிறை நம்மோடு ஆடியோர் யார்கொல்? (வி-ரை) நன்மரங்குழீஇய என்பதன்பின் கள் விற்கும் இல் என்பது வருவிக்கப்பட்டது. நனை - கள். கோஒய் - கள் விற்கும் கலம். கள்ளும் நெல்லும் மிகுதியாகவுடைய வேளூர் என்றபடி. நறுவிரை - பனிநீரும், சந்தன முதலியவற்றின் கலவையுமாம். பலிபெறூஉம் தெய்வம் உருகெழு தெய்வம் என இயையும். கடுத்தல் - ஐயுறல். என் - என்னை. தேற்றுமாயின் எனக் கூட்டுக. புணை - மிதக்கும் கட்டையா லாகிய தெப்பம்; வேழக் கோலைச் சேர்த்துக் கட்டியதுமாம். தலைப்புணை - புணையின் முற்பகுதி; மைந்து மலி களிற்றின் தலைப்புணை தழீஇ' (266) எனப் பின்னரும் இவ்வாறு வருதல் காண்க. ஈரணி - நீராட்டிற்குரிய அணியுமாம். பொலிந்து என்பது பாடமாயின் பொலிந்து ஆடியோர் என்க. `தோடுதோய்'1 என்பது பேராசிரியர் கொண்ட பாடம். (மே-ள்) `புல்லுதல் மயக்கும்'2 என்னுஞ் சூத்திரத்து, இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும் என்னும் பகுதிக்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இது, `இளையோர் கூற்று' என்றும், `கிழவோன் விளையாட் டாங்கும் அற்றே'3 என்னுஞ் சூத்திரத்து, `கோடுதோய் மலிர்நிறை ஆடி யோரே' எனப் பரத்தை பிறர் அலர் கூறிய வழிக் காமஞ் சிறந்து புலந்தவாறு காண்க என்றும் கூறினர், நச். 167. பாலை (தலைமகன் பொருள்கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.) வயங்குமணி பொருத வகையமை வனப்பின் பசுங்காழ் அல்குல் மாஅ யோளொடு வினைவனப் பெய்திய புனைபூஞ் சேக்கை விண்பொரு நெடுநகர்த் தங்கி இன்றே 5. இனிதுடன் கழிந்தன்று மன்னே நாளைப் பொருந்தாக் கண்ணேம் புலம்புவந் துறுதரச் சேக்குவங் கொல்லோ நெஞ்சே சாத்தெறிந்து அதர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக் கொடுவில் ஆடவர் படுபகை வெரீஇ 10. ஊரெழுந்து உலறிய பீரெழு முதுபாழ் முருங்கை மேய்ந்த பெருங்கை யானை வெரிந்ஓங்கு சிறுபுறம் 4உரிஞ ஒல்கி இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் 5 மாடத்து 15. எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்திணைப் 1பால்நாய் துன்னிய பறைக்கண் சிற்றில் குயில்காழ் சிதைய மண்டி அயில்வாய்க் கூர்முகச் சிதலை வேய்ந்த 20. போர்மடி நல்லிறைப் பொதியி லானே. - கடியலூர் உருத்திரங்கண்ணனார். (சொ-ள்) 7. நெஞ்சே-, 1-5. வயங்கு மணி பொருத - பளிங்கு மணியினை யொத்த, வகை அமை வனப்பின் - கூறுபாடமைந்த அழகினையுடைய, பசு காழ் அல்குல் மாஅயோளொடு - பசிய சரத்தாலாய மேகலையை அணிந்த அல்குலையுடைய மாமை நிறத்தினளாய நம் தலைவியுடன், விண் பொரு நெடுநகர் - வானை அளாவும் நீண்ட மாளிகையில், வினை வனப்பு எய்திய புனை பூ சேக்கை தங்கி - அழகிய வேலைப்பாடு அமைந்த புனையப்பெற்ற பூக்களையுடைய பள்ளியின்கண் தங்குதலானே, இன்று - இன்றைப் போழ்து, இனிது உடன் கழிந்தன்று - முழுதும் இனி தாகக் கழிந்தது; 7-20. சாத்து எறிந்து அதர் கூட்டுண்ணும் - வழிச் செல்லும் வாணிகச் சாத்தினைக் கொன்று அவர் பொருளைக் கொள்ளை கொண்டு உண்ணும், அணங்கு உடை பகழி - வருத்தத்தைச் செய்யும் அம்பினையும், கொடுவில் - வளைந்த வில்லையும் உடைய, ஆடவர் படு பகை வெரீஇ - மறவரது மிக்க பகையை அஞ்சி, ஊர் எழுந்து உலறிய - குடி போகப் பெற்றமையின் வளன் அற்ற, பீர் எழு முதுபாழ் - பீர்க்குப் படர்ந்த பெரிய பாழ் இடத்தில், முருங்கை மேய்ந்த பெருங்கை யானை - முருங்கையினைத் தின்ற பெரிய கையினை யுடைய யானையின், வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ - முதுகினின் றுயர்ந்த பிடரி உராய்தலின், ஒல்கி இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென - தளர்ந்து செங்கல்லாலாய நீண்ட சுவரிலுள்ள விட்ட மரம் வீழ்ந்ததாக, மணிப்புறாத் துறந்த மரம்சோர் மாடத்து - மணிப்புறா விட்டொழிந்த மரம் சோர்ந்த மாடத்தினையும், எழுது அணி கடவுள் போகலின் - எழுதப்பெற்ற அழகிய கடவுள் புறத்தே போய்விட்டமையின், புல் என்று - பொலிவற்று, ஒழுகு பலி மறந்த - இடையறாது நிகழும் பலி மறக்கப் பெற்ற, மெழுகாப் புன் திணை - மெழுகப்படாத புல்லிய திண்ணையில், பால் நாய் துன்னிய பறைக்கண் சிறு இல் - ஈன்றணிமையுடைய நாய் தங்கிய பறிந்த இடத்தையுடைய சிற்றிலையும், அவ்விடத்தே குயில் காழ் சிதைய மண்டி - இயற்றப்பட்ட கைம் மரங்கள் சிதையுமாறு பரவி, அயில்வாய் கூர்முக சிதலை வேய்ந்த - வேலின் முனைபோன்ற கூரிய முகத்தினையுடைய கறையான் மூடிக் கொள்ளுதலின், போர் மடி நல்ல இறை பொதியில் ஆன் - கூரைமடிந்த நல்ல இறப்பினையு முடைய அம்பலத்தின் கண்; 5-7. புலம்பு வந்து உறுதரப் பொருந்தாக் கண்ணேம் - தனிமை வந்தடையத் துயிலாத கண்களை யுடையேமாய், நாளை - நாளைப் போழ்தில், சேக்குவம் கொல் - தங்கி இருப்பேமோ (அஃது இயலாதன்றே.) (முடிபு) நெஞ்சே! இன்று, நெடுநகர், சேக்கைக்கண் மாயோ ளொடு இனிதுடன் கழிந்தன்று மன்னே; நாளை, பொதியிலின் கண் பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்துறுதரச் சேக்குவங் கொல்லோ? மாடத்தினையும் சிற்றிலையும் இறப்பினையு முடை பொதியில் என்க. (வி-ரை) வயங்கு மணி - பளிங்கு, கண்ணாடி. `வயங்கலுள் துப்பெறிந்தவை போல'1 என்புழி வயங்கல் இப் பொருட்டாதல் உணர்க. மன் - மிகுதிப் பொருட்டு. ஊர் - ஊரினுள்ளார்க்கு ஆகுபெயர். எழுந்து - எழுதலால். முருங்கை - முருங்கையை; முருங்கை - தொடை நோக்கித் திரியாது நின்றது: இட்டிகை - செங்கல். பால்நாய் - பாலினையுடைய நாய்; ஈன்றணிமையுடைய நாய் என்றபடி. குயிலுதல் - இயற்றுதல். (மே-ள்) `கரணத்தினமைந்து'2 என்னுஞ் சூத்திரத்து `தான் அவட்பிழைத்த நிலையின் கண்ணும்' என்னும் பகுதியில் இச்செய்யுள் நெஞ்சினாற் பிரியக் கருதி வருந்திக் கூறியது என்றார், நச். 168. குறிஞ்சி (இரவுக்குறி வந்த தலைமகனை இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது.) யாமம் நும்மொடு கழிப்பி நோய்மிகப் பனிவார் கண்ணேம் வைகுதும் இனியே ஆன்றல் வேண்டும் வான்தோய் வெற்ப 3பல்லான் குன்றிற் படுநிழற் சேர்ந்த 5. நல்ஆன் பரப்பிற் குழுமூர் ஆங்கண் கொடைக்கடன் ஏன்ற கோடா நெஞ்சின் உதியன் அட்டில் போல ஒலியெழுந்து அருவி ஆர்க்கும் பெருவரைச் சிலம்பின் ஈன்றணி இரும்பிடி தழீஇக் களிறுதன் 10. தூங்குநடைக் குழவி துயில்புறங் காப்ப ஒடுங்களை புலம்பப் போகிக் கடுங்கண் வாள்வரி வயப்புலி கன்முழை உரறக் கானவர் மடிந்த கங்குல் மானதர்ச் சிறுநெறி வருதல் நீயே. - கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான். (சொ-ள்) 3. வான் தோய் வெற்ப - வானை அளாவிய மலையையுடைய தலைவனே! 1-2. யாமம் நும்மோடு கழிப்பி - இராப்பொழுதை நும் முடன் கூடிக் கழித்து, நோய் மிக - பின்பு இரவுக்குறியின் ஏதம் அஞ்சித் துன்பம் மிகுதலால், பனிவார் கண்ணேம் வைகுதும் - நீர் ஒழுகுங் கண்களையுடையேமாய் வருந்தி யிருக்கின்றேம் ஆகலின்; 3-14. பல்லான் குன்றில் படுநிழல் சேர்ந்த - பல்லான் குன்று என்னும் மலையிற் பொருந்தும் நிழலின்கட் சேர்ந்த, நல்ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் - நல்ல ஆனிரையின் பரப்பினைக் கொண்ட குழுமூரிடத்தே, கொடைக் கடன் என்ற கோடா நெஞ்சின் - ஈகையாய கடனை ஏற்றுக் கொண்ட கோட்டமில்லாத நெஞ்சினை யுடைய, உதியன் அட்டில் போல - உதியன் என்பானது அடுக்களை போல, ஒலி எழுந்து அருவி ஆர்க்கும் பெருவரைச் சிலம்பின் - ஒலிமிக்கு அருவிகள் ஆரவாரித்து இழியும் பெரிய வரையினது பக்க மலையில், களிறு ஈன்றணி இருபிடி தழீஇ - களிறு ஈன்ற அணிமை யுடைய பெரிய பிடியினைத் தழுவிக்கொண்டு, தன் தூங்கு நடைக் குழவி துயில் புறம் காப்ப - தனது அசைந்த நடையினையுடைய குழவி உறங்குகின்ற இடத்தைக் காத்திருக்க, கடுங்கண் வாள் வரி வயப்புலி - தறுகண்மையுடைய வாள் போன்ற வரியினையுடைய வலிய புலி, ஒடுங்கு அளை புலம்ப போகி - ஒடுங்கிய முழை தனித்திடப் புறம் போய், கல் முழை உரற - மலையின் குகையிடத்தில் முழங்க, கானவர் மடிந்த கங்குல் - வேட்டுவரும் துயிலும் நள்ளிரவில், மான் அதர்ச் சிறு நெறி - விலங்குகள் செல்லும் வழியாகிய சிறுநெறியில், நீ வருதல் - நீ வருதலை, இனி ஆன்றல் வேண்டும் - இனி ஒழிதல் வேண்டும். (முடிபு) வெற்ப! யாமம் நும்மொடு கழிப்பி, பனிவார் கண்ணேம் வைகுதும் ஆகலின், சிலம்பில், களிறு காப்ப, புலி உரற கானவர் மடிந்த கங்குலில் சிறு நெறிக்கண் நீ வருதலை இனி ஆன்றல் வேண்டும். (வி-ரை) இராப் பொழுதை நும்முடன் கழிக்கும் நாளெல்லாம் அப்பொழுது இன்பமாயினும் நீ வரும் வழியின் ஏதத்தை நினைந்து பெரிதும் துன்புறுகின்றோம். ஆகலின், இனி நீ அவ்வாறு வருதலை ஒழிதல் வேண்டும் என்று கூறி, இரவுக்குறி விலக்கி வரைவுகடாயினா ளென்க. ஆன்றல் - அமைதல்; ஒழிதல். பல்லான் குன்று - ஒரு மலையின் பெயர் போலும்; வல்லாண் குன்று என்பது பாடமாயின் வல்லாண்மைக்கு இடமாகிய குன்று என்க. அட்டில்போல - அட்டிலில் ஒலி யெழுதல்போல. ஒலி; உண்ணவருவாராலாவது. ஈன்றணி - ஈன்ற அணிமை. ஒடுங்கு அளை - புலி துயின்ற இட்டிய முழை எனவும், கன்முழை - பெரிய மலையின் குகை எனவும் கொள்க. களிறு காக்குமாறு புலி உரற என்க. இக் கருத்து `இலங்கு மருப்பி யானை, குறும்பொறை மருங்கின் அமர்துணை தழீஇக், கொடுவரி இரும்புலி காக்கும்'1 என்னும் செய்யுளில் அமைந் திருத்தலுங் காண்க. மானதர்ச் சிறுநெறி என்றமையால் மக்கள் இயங்குதற்காகாத இடுகிய நெறி என்பது பெற்றாம். 169. பாலை (தலைமகன், இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) மரந்தலை கரிந்து நிலம்பயம் வாட 2அலங்குகதிர் வேய்ந்த அழல்திகழ் நனந்தலைப் புலிதொலைத் துண்ட பெருங்களிற்று ஒழிஊன் கலிகெழு மறவர் காழ்க்கோத் தொழிந்ததை 5. ஞெலிகோல் சிறுதீ மாட்டி ஒலிதிரைக் கடல்விளை அமிழ்தின் கணஞ்சால் உமணர் சுனைகொள் தீநீர்ச் சோற்றுலைக் கூட்டுஞ் சுரம்பல கடந்த நம்வயிற் படர்ந்துநனி பசலை பாய்ந்த மேனியள் நெடிதுநினைந்து 10. செல்கதில் 3மழுகிய புலம்புகொள் மாலை மெல்விரல் சேர்த்திய நுதலள் மல்கிக் கயலுமிழ் நீரிற் கண்பனி வாரப் பெருந்தோள் 4 நெகிழ்ந்த செல்லலொடு வருந்துமால் அளியள் திருந்திழை தானே. - தொண்டி ஆமூர்ச் சாத்தனார். (சொ-ள்) நெஞ்சே! 1-8. மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட - மரங்கள் உச்சி கரியவும் நிலம் வளம் குன்றவும், அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனந்தலை - அசைகின்ற ஞாயிற்றின் கதிர் சூழப்பெற்ற வெம்மை விளங்கும் அகன்ற பாலை நிலத்தே, புலி தொலைத்து உண்ட பெரும் களிற்று ஒழி ஊன் - புலியாற் கொன்று தின்னப்பெற்ற பெரிய யானையினது எஞ்சிக்கிடந்த ஊனில், கலிகெழு மறவர் காழ்கோத்து ஒழிந்ததை - ஆரவாரம் பொருந்திய ஆறலைப்போர் கோலிற் கோத்துக் (கொண்டேகியது போக) எஞ்சியதை, ஒலிதிரை கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர் - ஒலிக்கும் அலை பொருந்திய கடலில் விளையும் உப்பினைக் கொணரும் கூட்டம் மிக்க உப்பு வாணிகர், ஞெலிகோல் சிறு தீ மாட்டி - தீக்கடை கோலாலாக்கிய சிறு தீயில் வதக்கி, சுனை கொள் தீ நீர் சோற்று உலை கூட்டும் -சுனையிற் கொண்ட இனிய நீராலாய சோற்றின் உலையில் கூட்டி ஆக்கும், சுரம்பல கடந்த நம் வயின் - பல சுரநெறிகளையும் கடந்து வந்துள நம்மிடத்து, படர்ந்து - தன் உள்ளம் படர்தலால்; 8-14. திருந்து இழை - திருந்திய அணிகளையுடைய நம் தலைவி, செல்கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை - மறையும் கதிர் மங்கிய தனிமை கொண்ட மாலையில், நனி பசலை பாய்ந்த மேனியள் - பசலை மிகவும் பரந்த, மேனியளாகி, நெடிது நினைந்து - நீள நினைந்து, மெல் விரல் சேர்த்திய நுதலள் - மெல்லிய விரல்களைச் சேர்த்த நெற்றியினளாய், கயல் உமிழ் நீரில் கண் பனி மல்கி வார - கயல்மீன் உமிழும் நீர்போலக் கண்களில் நீர் நிறைந்து ஒழுக, பெரும் தோள் நெகிழ்ந்த செல்லலொடு - பெரிய தோள் மெலிந்ததா லாய துன்பத்துடன், வருந்தும் - வருந்துவள், அளியள் - இரங்கத்தக்காள். (முடிபு) நெஞ்சே! சுரம்பல கடந்த நம்வயின் தன் உள்ளம் படர்தலின், திருந்திழை, மாலையிலே நெடிது நினைந்து பசலை பாய்ந்த மேனியளாய், விரல் சேர்த்திய நுதலளாய், கண்பனி வாரச் செல்லலொடு வருந்தும்; அளியள். (வி-ரை) கரிந்து - கரிய எனத் திரிக்க. பயம் - ஏனை வளங்கள். காழ் - இருப்புச் சலாகை. கடல்விளை அமிழ்து - உப்பு. கணம் சால் உமணர் என்றமையின் உமணர் கூட்டமாகவே வருவர் என்பது பெற்றாம். சினைகொள் தீ நீர் என்றமையால் சுரத்தில் நீர் இன்மை பெறப்படும். படர்ந்து - படர்தலால். 170. நெய்தல் (தலைமகள், காமமிக்க கழிபடர்கிளவியாற் சொற்றது.) கானலுங் கழறாது கழியுங் கூறாது தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது 1ஒருநின் அல்லது பிறிதியாதும் இலனே இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல் 5. கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத் தண்தாது ஊதிய வண்டினம் களிசிறந்து 2பறைஇய 3தளருந் துறைவனை நீயே சொல்லல் 4வேண்டுமால் அலவ பல்கால் கைதையம் படுசினை எவ்வமொடு அசாஅம் 10. கடற்சிறு காக்கை காமர் பெடையொடு கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின் வெள்இறாக் கனவும் நள்ளென் யாமத்து நின்னுறு விழுமம் களைந்தோள் தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே. - மதுரைக் கள்ளிற் கடையத்தான் வெண்ணாகனார். (சொ-ள்) 8. அலவ - நண்டே! 4-7. இரு கழி மலர்ந்த - கரிய நீரோடையில் மலர்ந்த, கண்போல் நெய்தல் கமழ் இதழ் நாற்றம் - கண்ணைப்போலும் நெய்தற் பூவின் கமழும் இதழ் நாற்றத்தினை, அமிழ்து என நசைஇ - அமிழ்தம் போலும் என விரும்பிச் சென்று, தண் தாது ஊதிய - குளிர்ந்த தாதினை உண்ட, வண்டு இனம் களி சிறந்து - வண்டின் கூட்டம் களிப்புமிக்கு, பறைஇய தளரும் துறைவனை - பறத்தற்கு இயலாது சோரும் துறையையுடைய தலைவனுக்கு; 1-2. கானலும் கழறாது - கடற்கரைச் சோலையும் சென்று தூது கூறாது, கழியும் கூறாது - உப்பங்கழியும் இயம்பாது, தேன் இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது - வண்டுகள் ஒலிக்கும் நறிய மலரினையுடைய புன்னையும் மொழியாது; 3. ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலன் - நின்னையே யன்றி வேறு எத்துணையும் இல்லேன்; 8-14. கைதைஅம் படு சினை - தாழை மரத்தின் தாழ்ந்த கிளையில், காமர் பெடையொடு எவ்வமொடு அசாஅம் - விருப்பம் மிக்க பெடையுடன் வருத்தமுடன் தளர்ந்திருக்கும், கடல் சிறு காக்கை - சிறிய கடற் காக்கை, கோட்டு மீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் - சுறாமீன் இயங்கும் வேட்டையாடுதல் நீங்கிய இடத்திலுள்ள, வெள் இறா கனவும் - வெள்ளிய இறாமீனைப் பற்றி யுண்பதாகக் கனவு காணும், நள் என் யாமத்து - இருள் செறிந்த நடுஇரவில் வந்து, பல்கால் நின் உறு விழுமம் களைந்தோள் - பல நாளும் நினது மிக்க துயரினை நீக்கியோள், தன் உறு விழுமம் நீந்துமோ எனவே - நின் பிரிவால் எய்திய தனது மிக்க துயரினைக் கடக்க வல்லளோ என்று; 7-8. நீயே சொல்லல் வேண்டும் - அத் தலைவன்பாற் சென்று நீயே கூறுதல் வேண்டும். (முடிபு) அலவ! துறைவனுக்குக் கானலுங்கழறாது; கழியுங் கூறாது; புன்னையும் மொழியாது; ஒரு நின்னல்லது பிறிது யாதும் இலன்; நள்ளென் யாமத்து வந்து பல்நாளும் நின்னுறு விழுமம் களைந்தோள், தன்னுறு விழுமம் நீந்துமோ என நீயே சொல்லல் வேண்டும். (வி-ரை) கானல், கழி, புன்னை என்பன சான்றாகத் தலைவர் என்னைக் கலந்து சென்றாராயினும், அவை யெல்லாம் தலைவனைப் பிரிந்து எய்தும் வருத்தத்தை உணரவல்லன அன்மையானும், ஒருகால் உணரினும் சென்று கூறமாட்டாதன ஆகலானும் நீயே துறைவனுக்குச் சொல்லல்வேண்டும் எனத் தலைவி அலவனை நோக்கிக் கூறினாளென்க. கண்போல் நெய்தல் என்றது, `பொருளே உவமம் செய்தனர் மொழியினும்'1 என்பதனால் அமைந்தது. துறைவனை - துறைவனுக்கு. காக்கை பெடையொடு வெள் இறாக் கனவும் யாமம் என்க. கோட்டு மீன் வழங்கும் பரப்பு எனவும், வேட்டமடி பரப்பு எனவும் இயையும். நின்னுறு விழுமம் களைந் தோள் என்றமையால் நீ அவளது விழுமத்தைக் களையாதிருத்தல் நன்றி கோறலாம் என்பது பட நின்றது. இனி, பறைஇய தளரும் என்பதனை முற்றாக்கிக் கானல் முதலியன போலாது வண்டு சென்று கூறுதற்கு உரியதேனும், அது தேனையுண்ட களிப்பால் சோர்ந்து கிடக்கும் ஆகலின் நீயே சொல்லல் வேண்டும் என்றாள் எனலுமாம். காமம் மிக்க கழிபடர் கிளவியாவது தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி, தனது வேட்கை மிகுதியால், கேளாதனவற்றைக் கேட்பனவாக விளித்து, தலைவனிடத்துச் சென்று என் துன்பத்தை மொழியீரோ என்று கூறுதலாம். நீந்துமோ என்றதனால் விழுமம் கடல் என்று குறித்த வாறாம். (உ-றை) தாதினை உண்ட வண்டினம் களிசிறந்து பறக்க மாட்டாது தளரும் துறைவன் என்றது, தான் பெற்ற வேறு இன்பத்தில் மயங்கித் தலைவியை மறந்திருக்கும் தலைவன் என்றவாறு. காக்கை பெடையொடு யாமத்து இறாக் கனவும் என்றது, தலைவி தலைவனுடன் கூடியிருந்து முன்புபெற்ற இன்பத்தை நினைந்து வருந்துகின்றாள் என்றவாறு. (மே-ள்) `நோயு மின்பமும்'2 என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுள், `சொல்லா மரபின சொல்லுவனவாக அழுகை பற்றிக் கூறியது, இவை உயர்திணையுமாயின்' என்றார், நச். `இன்பத்தை வெறுத்தல்'3 என்னுஞ் சூத்திரத்து `நின்னுறு விழுமங் களைந்தோள், தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே' என்பது துன்பத்துப் புலம்பல் என்னும் மெய்ப்பாடு ஆகுமென்றும், `முட்டு வயிற் கழறல்'4 என்னுஞ் சூத்திரத்து, `கானலுங் கழறாது.... நீயே, சொல்லல் வேண்டுமால் அலவ' என்பது, தூதுமுனி வின்மை என்னும் மெய்ப்பாடு ஆகுமென்றும் கூறினர், பேரா. 171. பாலை (தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.) நுதலும் நுண்பசப்பு இவரும் தோளும் அகன்மலை இறும்பின் ஆய்ந்துகொண் டறுத்த பணையெழில் அழிய வாடும் நாளும் நினைவல் மாதவர் பண்பென்று ஓவாது 5. இனையல் வாழி தோழி புணர்வர் இலங்குகோல் ஆய்தொடி நெகிழப் பொருள்புரிந்து அலந்தலை ஞெமையத்து அதரடைந் திருந்த மால்வரைச் சீறூர் மருள்பன் மாக்கள் கோள்வல் ஏற்றை ஓசை ஓர்மார் 10. திருத்திக் கொண்ட அம்பினர் நோன்சிலை எருத்தத்து இரீஇ இடந்தொறும் படர்தலின் கீழ்ப்படு தாரம் உண்ணா மேற்சினைப் பழம்போல் சேற்ற தீம்புழல் உணீஇய கருங்கோட்டு இருப்பை ஊரும் 15. பெருங்கை எண்கின் சுரனிறந் தோரே. - கல்லாடனார். (சொ-ள்) 5. தோழி-, வாழி-, 6. பொருள் புரிந்து - பொருள் ஈட்டிவர விரும்பி, இலங்கு கோல் ஆய்தொடி நெகிழ - விளங்கும் திரட்சி பொருந்திய அழகிய நின் தொடி கழன்று விழ; 7-15. அலந் தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த - வாடிய உச்சியினையுடைய ஞெமை மரங்களையுடைய வழியைச் சார்ந்திருந்த, மால்வரைச் சீறூர் - பெரிய மலையடி வாரத்துள்ள சிறிய ஊரில், மருள் பல் மாக்கள் - மருண்ட மக்களாய பலர், கோள்வல் ஏற்றை ஓசை ஓர் மார் - கொல்லுதல் வல்ல கரடி ஏற்றின் ஒலியினை உணர்வாராய், திருத்திக் கொண்ட அம்பினர் - செப்பம் செய்து கொண்ட அம்பின ராய், நோன்சிலை எருத்தத்து இரீஇ - வலிய வில்லைத் தோளிற் கொண்டு, இடம்தோறும் படர்தலின் - இடமெலாம் பரவி வருதலின், கீழ்ப் படுதாரம் உண்ணா - தரையிற் கிடக்கும் உணவினை உண்ணாவாய், மேல் சினை பழம்போல் சேற்ற தீம் புழல் உணீஇய - மேலிடத்தே கிளைகளிலுள்ள பழங்களைப் போல இனிக்கும் சாற்றினையுடைய இனிய துளையையுடைய பூக்களை உண்ண, கரும்கோட்டு இருப்பை ஊரும் - கரிய கொம்பினையுடைய இருப்பை மரத்தின் மேல் ஏறும், பெரும் கை எண்கின் சுரம் இறந்தோர் - பெரிய கையினையுடைய கரடிகளை யுடைய சுரநெறியைக் கடந்து சென்றார். 5. புணர்வர் - விரைவில் வருவர் ஆதலால்; 1-5. நுதலும் நுண் பசப்பு இவரும் - நெற்றியும் நுண்ணிய பசலைபரக்கப்பெறும், தோளும் அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த பணை எழில் அழியவாடும் - தோளும் அகன்ற மலையிலுள்ள காட்டில் ஆராய்ந்துகொண்டு அறுத்த மூங்கில் துண்டையொத்த அழகு ஒழிய வாட்டமுறும், நாளும் நினைவல் அவர் பண்பு என்று - நாடோறும் அவர் அருட்பண்பினை யான் நினைவேன் என்று கூறி, ஓவாது இனையல் - ஒழியாது வருந்தாதே கொள். (முடிபு) தோழி! வாழி! பொருள் புரிந்து, தொடி நெகிழச் சுரன் இறந்தோர் புணர்வர்; ஆதலின், நுதலும் பசப்பு இவரும், தோளும் வாடும், நாளும் நினைவல் என இனையல். மாக்கள் ஓசையோர்மார் சிலை இரீஇப் படர்தலின், எண்கு கீழ்ப்படுதாரம் உண்ணா, புழல் உணீஇய இருப்பையூரும் சுரம் என்க. (வி-ரை) நினைவல் மாது: மாது, அசை, அலந்தலை, விகாரம். ஞெமையத்து: அத்து, சாரியை. மருள் - கரடியின் ஓசையை முதலில் இன்னதென்றறியாது மருண்ட என்க. தாரம் - பண்டம் (உணவுப் பொருள்) புழல், ஆகு பெயர். கரடியும் மரத்தின் கோட்டில் இயங்க வல்லதாதல் அறியற்பாற்று: 172. குறிஞ்சி (தோழி தலைமகளை இடத்து உய்த்துவந்து தலைமகனை வரைவு கடாயது.) வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் பிரசமொடு விரைஇய வயங்குவெள் அருவி இன்னிசை இமிழியங் கடுப்ப இம்மெனக் கல்முகை விடரகஞ் சிலம்ப வீழுங் 5. காம்புதலை மணந்த ஓங்குமலைச் சாரல் இரும்புவடித் தன்ன கருங்கைக் கானவன் விரிமலர் மராஅம் பொருந்திக் கோல்தெரிந்து 1வரிநுதல் யானை அருநிறத் தழுத்தி இகலடு முன்பின் வெண்கோடு கொண்டுதன் 10. 2புல்வேய் குரம்பை புலர ஊன்றி முன்றில் நீடிய 3முழவுறழ் பலவின் பிழிமகிழ் உவகையன் கிளையொடு கலிசிறந்து சாந்த ஞெகிழியின் ஊன்புழுக் கயருங் குன்ற நாடன் அன்பிலை யாகுதல் 15. அறியேன் யானஃது அறிந்தனென் ஆயின் அணியிழை உண்கண் ஆயிதழ்க் குறுமகள் மணியேர் மாண்நலம் சிதையப் பொன்னேர் 1பசலை பாவின்று மன்னே. - மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார். (சொ-ள்) 1-5. வாரணம் உரறும் நீர்திகழ் சிலம்பில் - யானை முழங்கும் தன்மை வாய்ந்த பக்க மலையில், பிரசமொடு விரை இயவயங்கு வெள் அருவி - தேனுடன் கலந்துவரும் விளக்க முற்ற வெள்ளிய அருவி, இன்இசை இமிழ் இயம் கடுப்ப - இன்னொலியுடன் முழங்கும் மத்தளத்தை யொப்ப, இம் என கல்முகை விடர் அகம் சிலம்ப வீழும் - இம்மெனும் ஒலியுடன் மலையின் குகைகளும் பிளப்பிடங்களும் ஒலிக்க விழும், காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல் - மூங்கில் நெருங்கிய உயர்ந்த மலைச்சாரலில் உள்ள; 6-14. இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன் - இரும்பினை வார்த்துச் செய்தாற் போன்ற வலிய கையினையுடைய வேட்டுவன், விரி மலர் மராஅம் பொருந்தி - விரிந்த மலரினையுடைய வெண் கடம்பினைச் சார்ந்து நின்று, கோல் தெரிந்து - அம்பினை ஆய்ந்து கொண்டு, வரிநுதல் யானை அரு நிறத்து அழுத்தி - வரி பொருந்திய நெற்றியினையுடைய களிற்றின் அரிய மார்பிற் செலுத்தி, இகல் அடு முன்பின் வெண்கோடு கொண்டு - பகையினைக் கொல்லும் வலி யினையுடைய அதன் வெள்ளிய கொம்பினைக் கொண்டுவந்து, தன் புல்வேய் குரம்பை புலர ஊன்றி - தனது ஊகம் புல்லால் வேய்ந்த குடிசையில் புலால் நாற்றம் வீச ஊன்றுதல் செய்து, முன்றில் நீடிய முழவு உறழ் பலவின் பிழி மகிழ் உவகையன் - அக் குடிசை முன்றிலில் உயர்ந்த முழவு போலும் பலாக் கனியினின்று பிழிந்தெடுத்த மதுவினை உண்ட களிப்பினனாகி, கிளையொடு கலி சிறந்து - சுற்றத்துடன் ஆரவாரம்மிக்கு, சாந்த ஞெகிழியின் ஊன்புழுக்கு அயரும் - சந்தன விறகாலாய தீயில் ஊனுடன் கூடிய சோற்றை அட்டுண்ணும் இடமாகிய, குன்ற நாட - குன்றம் பொருந்திய நாட்டையுடைய தலைவனே! 14-18. நீ அன்பிலை ஆகுதல் அறியேன் யான் - நீ அன்பிலாய் ஆதலை யான் முன்பு அறிந்திலேன், அஃது அறிந்தனென் ஆயின்- அதனை யான் அறிந்துளேனாயின், அணி இழை ஆய் இதழ் உண்கண் குறுமகள் - அழகிய அணிகலனையும் அழகிய இதழினையுடைய மையுண்ட கண்களையும் உடைய இளையளாய என் தலைவியின், மணி ஏர் மாண் நலம் சிதைய - நீலமணி போலும் சிறந்த அழகுகெட, பொன் நேர் பசலை பாஇன்று மன்-பொன்னை ஒத்த பசலை பெரிதும் பரத்தல் இல்லையாகும். (முடிபு) குன்ற நாட! நீ அன்பிலை யாகுதல் அறியேன்: அஃது அறிந்தனென் ஆயின் குறுமகள் மாணலம் சிதைய பசலை மன் பாஇன்று. அருவி இம்மென வீழும் சாரலில் கானவன் யானைக்கோடு கொண்டு குரம்பை ஊன்றிச் சாந்த ஞெகிழியின் ஊன்புழுக்கு அயரும் குன்றம் என்க. (வி-ரை) நீர் - சுனை நீருமாம். முகையாகிய வியர் என்றலுமாம். அருவி வீழும் மலைச்சாரல் எனவும், காம்பு தலைமணந்த மலைச் சாரல் எனவும் தனித்தனி கூட்டுக. யானையைக் கொன்று அதன் கோடு கொள்ளும் வலிய கை யென்பது தோன்ற இரும்பு வடித்தன்ன கருங்கை எனப்பட்டது. மராஅம் பொருந்துதல், யானை தன் இருப்பையறிந்து இரியாதவாறு பதுங்கி நிற்றல். இரவுக்குறியின் ஏதம் அஞ்சித் தலைவி வருந்துதலையும், ஊரில் அலர் எழுதலையும் கருதி விரைந்து வரைந்து கொள்ளாது களவொழுக்கத்திலேயே தாழ்ந் திருத்தல் பற்றித் தலைவனை `அன்பிலை' என்றும், நீ இவ்வாறு ஒழுகுதி என்பதனை முன்னர் அறிந்திருப்பேனாயின், யான் கூட்டத்திற்கு உடன்பட்டிரே னாகலின், வரைவு நீட்டித்தல் காரணமாகத் தலைவி நலன்சிதையப் பசலை படர்தல் இல்லையாகும் என்றும் தோழி கூறினாள் என்க. (உ-றை) பிரசமொடு விரைஇய அருவி விடரகம் சிலம்ப வீழும் என்றது, தலைவியுடன் கூடிய தலைவனது களவொழுக்கம் ஊரெங்கும் அலருண்டாக நிகழ்கின்றது என்றவாறு. யானை வெண்கோடுகொண்டு கானவன் குரம்பை புலர ஊன்றி உவகையன் கலிசிறந்து சாந்த ஞெகிழியின் ஊன்புழுக் கயரும் என்றது, தலைவன் அரியளாய தலைவியை எளியள் என மதித்துக் களவொழுக்கமாகிய இன்பத்திலே தருக்கியிருத்தல் என்றவாறு: 173. பாலை (தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.) அறந்தலைப் பிரியாது ஒழுகலுஞ் சிறந்த கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும் வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்லெனச் செய்வினை புரிந்த நெஞ்சினர் நறுநுதல் 5. மையீர் ஓதி அரும்படர் உழத்தல் சில்நாள் தாங்கல் வேண்டும் என்றுநின் நல்மாண் எல்வளை திருத்தின ராயின் வருவர் வாழி தோழி பலபுரி வார்கயிற் றொழுகை நோன்சுவல் கொளீஇப் 10. பகடுதுறை ஏற்றத்து உமண்விளி வெரீஇ உழைமான் அம்பிணை இனனிரிந் தோடக் காடுகவின் அழிய உரைஇக் கோடை நின்றுதின விளிந்த அம்பணை நெடுவேய்க் கண்விடத் தெறிக்கும் மண்ணா முத்தம் 15. கழங்குறழ் தோன்றல பழங்குழித் தாஅம் இன்களி நறவின் இயல்தேர் நன்னன் விண்பொரு நெடுவரைக் கவாஅன் பொன்படு மருங்கின் மலைஇறந் தோரே. - 1முள்ளியூர்ப் பூதியார். (சொ-ள்) 8. தோழி-, வாழி-, 1-4. அறம் தலைப்பிரியாது ஒழுகலும் - அறநெறியினின்றும் நீங்காது இல்வாழ்க்கை நடத்தலும், சிறந்த கேளிர் கேடு பல ஊன்றலும் - சிறப்புற்ற சுற்றத்தாரது பலவகையான துன்பங்களையும் தாங்கலும், நாளும் வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் என - எஞ் ஞான்றும் (முயற்சியால்) மெய் வருந்தாமைக்கு ஏதுவாய (ஊக்க மில்லாத) உள்ளமொடு இருந்தோர்க்கு இல்லையாகும் என்று, செய்வினை புரிந்த நெஞ்சினர் - பொருள் ஈட்டும் வினையை விரும்பிய நெஞ்சினராய நந் தலைவர்; 8-18. பலபுரி வார் கயிற்று ஒழுகை - பல புரிகளாலாய நீண்ட கயிற்றாற் பிணித்த வண்டியினை, பகடு நோன் சுவல் கொளீஇ - பகடுகளின் வலிய பிடரியில் பூட்டி, துறை ஏற்றத்து - ஏற்றமான துறைகளில் ஓட்டுமிடத்து, உமண் விளி வெரீஇ - உப்பு வாணிகர் அவற்றை உரப்பும் ஓசையைக் கேட்டு அஞ்சி, உழைமான் அம்பிணை இனன் இரிந்து ஒட - ஆண்மானும் பெண்மானும் ஆகிய இனங்கள் கெட்டு ஓடவும், காடு கவின் அழிய - காடுகள் அழகு கெடவும், கோடை உரைஇ - கோடை பரவி, நின்று தின விளிந்த அம் பணை நெடுவேய் - நிலைபெற்று நீரினை உறிஞ்சுதலால் வற்றிய அழகிய பெரிய நெடிய மூங்கிலின், கண்விடத் தெறிக்கும் மண்ணாமுத்தம் - கணுக்கள் பிளக்கத் தெறித்து விழும் கழுவப் பெறாத முத்துக்கள், கழங்கு உறழ் தோன்றல - கழங்கினை யொத்த தோற்றம் உடையனவாகி, பழங்குழி தாஅம் - (அங்குள்ளார் கழங்காடிய) பழைய குழியிலே விழும் (இடமாகிய), இன் களி நறவின் இயல்தேர் நன்னன் - இனிய களிப்பைத் தரும் கள்ளினையும் இயற்றப்பட்ட தேரினையுமுடைய நன்னனது, விண்பொரு நெடுவரைக் கவான் - வானை அளாவிய நீண்ட மூங்கிலையுடைய பக்க மலையினையும், பொன்படு மருங்கின் மலை இறந்தோர் - பொன் பொருந்திய இடங்களையுமுடைய மலையினைக் கடந்து சென்றோராய நம் தலைவர்; 4-8. நறுநுதல் மை ஈர் ஓதி - நறிய நெற்றியையும் கரிய பெரிய கூந்தலையும் உடையாளே, அரும்படர் உழத்தல் - அரிய துன்பத்தால் வருந்துதலை, சில்நாள் தாங்கல் வேண்டும் என்று - சிலகாலம் பொறுத்துக் கோடல் வேண்டும் என்று கூறி, நின் நல் மாண் எல்வளை திருத்தினராயின் - நினது நல்ல மாண்புற்ற ஒளி பொருந்திய வளை யினைத் திருத்தித் தலையளி செய்தனராதலால், வருவர் - விரைவில் வந்துறுவர். (முடிபு) தோழி! வாழி! செய்வினை புரிந்த நெஞ்சினராய், மலையிறந்தோராகிய நம் தலைவர், அரும்படர் உழத்தல் சின்னாள் தாங்கல் வேண்டும் என்று நின் எல்வளை திருத்தின ராதலின், (விரைவில்) வருவர். (வி-ரை) நறுநுதல், ஓதி என்பவற்றிற்கு, நுதலை நீவுதலும் ஓதியைக் கோதுதலும் செய்தனர் எனக் குறிப்பிற் பொருள் கொள்ளலுமாம். `வலி முன்பின்'1 என்ற பாலைக்கலியில், தாழ் கதுப்பு அணிகுவர் காதலர் `ஒள்ளிழை திருத்துவர் காதலர், ஒண்ணுதல் நீவுவர் காதலர்' என வருதல் காண்க. திருத்தினராயின் - திருத்தினராதலின் என்க. சின்னாள் தாங்கல் வேண்டுமென்று கூறி இங்ஙனம் தலையளி செய்து அகன்றாராதலின், அவர் நின்னை நினைந்து விரைவில் வாரா திருப்பா ரல்லர், நீ வருந்தாதேகொள் என்று, தலைவியைத் தோழி வற்புறுத் தினாள் என்க. உமண் - உமணர்; ஆகுபெயர். கோடைதின என்பது, `உண்டற்குரிய வல்லாப்பொருளை, யுண்டன போலக் கூறலு மரபே'2 என்னுஞ் சூத்திரத்து, உம்மையால் அமைக்கப்பெறும். முத்தம் தாஅம் கவான் என இயையும். கழங்கு உறழ் தோன்றல என்றது முத்தின் பருமை குறித்தபடி. 174. முல்லை (பாசறைக்கண் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.) இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத்து ஒருபடை கொண்டு வருபடை பெயர்க்குஞ் செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறலெனப் பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கிச் 5. செல்வேம் ஆதல் அறியாள் முல்லை நேர்கால் முதுகொடி குழைப்பநீர் சொரிந்து காலை வானத்துக் கடுங்குரல் கொண்மூ முழங்குதொறுங் 3கையற்று ஒடுங்கிநப் புலந்து பழங்கண் கொண்ட பசலை மேனியள் 10. யாங்கா குவள்கொல் தானே வேங்கை 4ஊழுறு நறுவீ கடுப்பக் கேழ்கொள ஆகத் தரும்பிய மாசறு சுணங்கினள் நன்மணல் வியலிடை நடந்த சில்மெல் ஒதுக்கின் மாஅ யோளே. - மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார். (சொ-ள்) 1-5. இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து- பேரரசர் இருவர் மாறுபாடு கொண்டு பொரும் பெரிய போர்க்களத்தே, ஒரு படை கொண்டு வருபடை பெயர்க்கும் - தமது ஒப்பற்ற படைக்கலத்தைக்கொண்டு எதிர் வரும் படைகளைப் பிறக்கிடச் செய்யும், செல்வம் உடையோர்க்கு விறல் நின்றன்று என - வெற்றியாகிய செல்வம் உடையோர்க்கு இப்பெருமை நிலைபெற்றது என்று கூறி, பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கி - தண்ணுமை முழக்குடன் பொருந்த அரசன் அளிக்கும் பூக்கோளினையும் ஏலாது தவிர்த்து, செல்வேம் ஆதல் அறியாள் - நாம் தன்பால் விரைந்து செல்லுதலை அறியாளாய்; 10-14. வேங்கை ஊழ் உறு நறுவீ கடுப்பக் கேழ் கொள - வேங்கையின் மலர்தலுற்ற நறிய மலரை ஒப்ப நன்னிறம் கொள்ள, ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள் - மேனியிற் றோன்றிய குற்றமற்ற தேமலையுடையளாய, நல் மணல் வியலிடை நடந்த - நல்ல மணலையுடைய அகன்றவிடத்தே நடந்த, சில்மெல் ஒதுக்கின் மாஅயோள் - சிலவாய மெல்லிய நடையினையுடைய மாமை நிறத்தினையுடைய நம் தலைவி; 5-10. நேர் கால் முல்லை முதுகொடி குழைப்ப - நிரம்பிய கால்களிற் படர்ந்த முதிய முல்லைக்கொடி தளிர்க்க, காலை வானத்துக் கடுங்குரல் கொண்மூ - கீழ்த்திசையில் வானத்தெழுந்த கடிய குரலையுடைய மேகம், நீர் சொரிந்து முழங்குதொறும் - நீரைப் பெய்து முழங்குந்தோறும், நப்புலந்து கையற்று ஒடுங்கி - நம்மை வெறுத்துச் செயலற்று ஒடுங்கி, பழங்கண் கொண்ட பசலை மேனியள் - துன்பினை எய்திய பசலை பாய்ந்த மேனியளாய், யாங்கு ஆகுவள் கொல் - எந்நிலையினை அடைவாளோ? (முடிபு) நெஞ்சே! நாம் பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கிச் செல்வேமாதலை அறியாளாய மாயோள், கொண்மூ நீர் சொரிந்து முழங்கு தொறும் கையற்று ஒடுங்கி நம்மைப் புலந்து பசலை மேனியளாகி யாங்காகுவள் கொல்லோ! (வி-ரை) வருபடை பெயர்க்கும் செல்வம் என்றமையால் செல்வமென்பது வெற்றியை உணர்த்திற்று. விறல் - மேன்மை. மாற்றாரை வென்ற வெற்றி வீரர்க்கு அரசன் பொற்பூ அளித்துச் சிறப்புச் செய்வன்; அப்பூவினைப் பெறுதல் பூக்கோளாகும். தண்ணுமை ஏய பூக்கோள் என மாறுக. பகையை வென்று அரசன் அளிக்கும் சிறப்பினைப் பெறுதற்கும் தாழ்த்து நில்லாது நாம் செல்வே மாயினும் குறித்த பருவம் வந்தமையின் தலைவி எங்ஙனம் ஆகுவளோ என்று தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு விதுப்புறுகின்றான் என்க. காலை வானம் - ஞாயிறு தோன்றும் கீழ்த்திசை வானம் என்க. தான் அவளைப் பிரியும் ஞான்று மணற்பரப்பிலே அவள் குறுக அடியிட்டு நடந்த மென்னடை அவன் நெஞ்சம் விட்டகன்றில தாகலின், `நன்மணல் வியலிடை நடந்த, சின்மெல் லொதுக்கின் மாஅயோள்' என்றான். (மே-ள்) `ஏவன் மரபின்'1 என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுள் மீள்வான் தன் நெஞ்சிற்கு உரைத்தது என்றும், இதனுள் பூக்கோளேய தண்ணுமை விலக்கிச் செல்வேம் என்றலின், அரசனாற் சிறப்புப் பெற்ற தலைவனாயிற்று என்றும், `ஒன்றாத் தமரினும்'2 என்னுஞ் சூத்திரத்து, ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் என்னுந் துறைக்கு, தனக்கு ஆக்கம் சிறந்த நட்புடையோராகித் தோன்றும் நட்புடையோர்க்கு உற்றுழி யுதவச் சேறற்கண்ணும் என்று பொருள் கூறி, இச் செய்யுள் அதற்கு உதாரணமாகும் என்றும் கூறினர், நச். 175. பாலை (பிரிவின்கண் வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றதூஉமாம். வீங்குவிளிம்பு உரீஇய விசையமை நோன்சிலை வாங்குதொடை பிழையா வன்கண் ஆடவர் விடுதொறும் விளிக்கும் வெவ்வாய் வாளி ஆறுசெல் வம்பலர் உயிர்செலப் பெயர்ப்பின் 5. பா றுகிளை பயிர்ந்து படுமுடை கவரும் வெஞ்சுரம் இறந்த காதலர் நெஞ்சுணர அரிய வஞ்சினஞ் சொல்லியும் பன்மாண் தெரிவளை முன்கை பற்றியும் வினைமுடித்து வருதும் என்றனர் அன்றே தோழி 10. கால்இயல் நெடுந்தேர்க் கைவண் செழியன் ஆலங் கானத்து அமர்கடந் துயர்த்த வேலினும் பல்ஊழ் மின்னி முரசென மாஇரு விசும்பில் கடியிடி பயிற்றி நேர்கதிர் 3நிரைத்த நேமியஞ் செல்வன் 15. போரடங்கு அகலம் பொருந்திய தார்போல் திருவில் தேஎத்துக் குலைஇ உருகெழு மண்பயம் பூப்பப் பாஅய்த் தண்பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே. - ஆலம்பேரி சாத்தனார். (சொ-ள்) 9. தோழி-, 1-8. வீங்கு விளிம்பு உரீஇய - தமது தடித்த தோளின் விளிம்பினை உரசிய, விசை அமை நோன் சிலை - வேகம் அமைந்த வலிய வில்லில் வைத்து, வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர் - இழுத்து விடும் அம்பு குறி தப்புதல் இல்லாத தறுகண்மையை யுடைய மறவர், விடுதொறும் விளிக்கும் வெவ்வாய் வாளி - எய்யுந்தோறும் ஒலித்துச் செல்லும் கொடிய வாயினையுடைய அம்பு, ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின் - வழிச்செல்லும் புதியரது உயிர்கெடப் போக்குதலால், பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும் -பருந்து தன் கிளையினை அழைத்து மிக்க புலாலை உண்ணும், வெம் சுரம் இறந்த காதலர் - கொடிய சுர நெறியைக் கடந்து சென்ற நம் காதலர், நெஞ்சு உணர - தமது நெஞ்சு உணர, அரிய வஞ்சினம் சொல்லியும் - கடிய சூள் உரைத்தும், பல்மாண் தெரிவளை முன்கை பற்றியும் - பன்முறை ஆராய்ந்த வளையினையுடைய எனது முன் கையினைப் பற்றித் தலையளி செய்தும்; 10-18. தண் பெயல் எழிலி - தண்ணிய மழையைப் பெய்யும் மேகம், கால் இயல் நெடு தேர் கைவண் செழியன் - காற்றுப்போல இயலும் நெடிய தேரினையும் கைவண்மையினையுமுடைய பாண்டியன் நெடுஞ்செழியன், ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த - தலையாலங் கானத்துப் போரை வென்று உயர்த்த, வேலினும் பல் ஊழ் மின்னி - வேற்படைகளைக் காட்டில் பன்முறை மின்னி, முரசு என மாஇரு விசும்பில் கடிஇடி பயிற்றி - கரிய பெரிய வானின்கண் (அவனது வென்று எறி) முரசம் எனக் கடிய இடியினைப் பலகாலும் தோற்றுவித்து, நேர் கதிர் நிரைத்த நேமி அம் செல்வன் - நிரம்பிய கதிர்களின் ஒழுங்கினைக் கொண்ட ஆழியையுடைய திருமாலின், போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல் - பகைவர் போர் ஒழிதற்குக்காரணமாய மார்பினிடத்தே தங்கிய மாலைபோல, உருகெழு திருவில் தேஎத்துக் குலைஇ - பன்னிறம் வாய்ந்த அழகிய வில்லை அவ்விசும்பினிடத்தே வளைத்து; மண் பயம் பூப்பப் பாஅய் - நிலம் பயனைத்தரப் பரவி, தாழ்ந்த போழ்து - இறங்கிப் பெய்யுங் காலத்து; 8-9. வினை முடித்து வருதும் என்றனர் அன்றே - தாம் செல்லும் வினையை முடித்துக்கொண்டு மீண்டும் வருவேம் என்றாரன்றோ? (அங்ஙனம் வந்திலரே; என் செய்வல்!) (முடிபு) வெஞ்சுரம் இறந்த காதலர், வஞ்சினம் சொல்லியும், முன்கை பற்றியும், தண்பெயல் எழிலி தாழ்ந்த போழ்து வருதும் என்றனரே? (அங்ஙனம் வந்திலரே; என் செய்வல்!) (வி-ரை) விளிம்பு - தோலின் மேற்புறம். பெயர்ப்பின் - பெயர்த்தலால். அவர் கூறிய வஞ்சினத்திற்கு அவர் நெஞ்சே சான்றாக அமையும் என்பாள், `நெஞ்சுணர' என்றாள்; `நெஞ்சத்துக்குறுகிய கரியில்லை'1 எனப் பிறசான்றோர் கூறுதலும் காண்க. முன்கை பற்றி யென்பதனை வேறு பிரித்து வஞ்சினம் சொல்லி என்பதனோடு கூட்டி யுரைத்தலுமாம். முன்கை பற்றி வஞ்சினம் கூறும் வழக்குண்மை, `நேரிறை முன்கை பற்றிச், சூரர மகளிரொ டுற்ற சூளே'2 என்பதனால் அறியப்படும். கரிய வானுக்கு நேமியஞ் செல்வனது அகலமும், அவ்வானிற் றோன்றிய வில்லுக்கு அவ்வகலத்திற் பொருந்திய தாரும் உவமம். தேஎம் - இடம், வானின் இடம். கார்ப்பருவத் தொடக்கத்து வருதும் என்றவர் வாராமையால், யான் என்செய்வேன் எனத் தோழிக்குத் தலைமகள் கூறினாள். 176. மருதம் (தோழி, தலைமகனை வாயின் மறுத்தது.) கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பின் நிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கின் கழைகண் டன்ன தூம்புடைத் திரள்கால் களிற்றுச்செவி யன்ன பாசடை மருங்கில் 5. கழுநிவந் தன்ன கொழுமுகை இடைஇடை முறுவல் முகத்திற் பன்மலர் தயங்கப் பூத்த தாமரைப் புள்ளிமிழ் பழனத்து வேப்புநனை யன்ன நெடுங்கண் நீர்ஞெண்டு இரைதேர் வெண்குருகு அஞ்சி அயலது 10. ஒலித்த பகன்றை இருஞ்சேற்று அள்ளல் திதலையின் வரிப்ப ஓடி விரைந்துதன் ஈர்மலி மண்ணளைச் செறியும் ஊர 3மனைநகு வயலை மரன்இவர் கொழுங்கொடி அரிமலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ 15. விழவாடு மகளிரொடு தழூஉ அணிப்பொலிந்து மலர்ஏர் உண்கண் மாணிழை முன்கைக் குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தது உடன்றனள் போலுநின் காதலி எம்போல் புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து 20. நெல்லுடை நெடுநகர் நின்இன்று உறைய என்ன கடத்தளோ மற்றே தன்முகத்து எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி வடித்தென உருத்த தித்திப் பல்ஊழ் நொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு 25. கூர்நுனை மழுகிய எயிற்றள் ஊர்முழுதும் நுவலுநிற் காணிய சென்மே. - மருதம்பாடிய இளங்கடுங்கோ. (சொ-ள்) 1-12. கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின் - கடலைக் கண்டாற் போன்ற இடமகன்ற நீர்ப்பரப்பில், நிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கின் - நிலம் பிளக்குமாறு இறங்கிய வேரில் முதிர்ந்த கிழங்கினையும், கழை கண்டன்ன தூம்பு உடை திரள் கால் - மூங்கிலைக் கண்டாலொத்த துளையுடைய திரண்ட தண்டினையும், களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில் - களிற்றின் செவிபோன்ற பசிய இலையிடத்தே, கழு நிவந்தன்ன கொழுமுகை இடைஇடை - கழு உயர்ந்து தோன்றலை யொத்த செழித்த மொட்டுக்களின் இடையிடையே, முறுவல் முகத்தில் தயங்கப் பூத்த பன்மலர் - புன்சிரிப்பினையுடைய முகம் போல விளங்கப் பூத்த பல மலர் களையுமுடைய, தாமரை புள் இமிழ் பழனத்து - தாமரையினை யுடைய புட்கள் ஒலிக்கும் வயலில் உள்ள, வேப்பு நனை அன்ன நெடுகண் நீர் ஞெண்டு - வேம்பின் அரும்பினை யொத்த நீண்ட கண்ணினையுடைய நீர் ஞெண்டானது (பரத்தமைக்குப் பிரிந்து போயது). இரை தேர் வெண் குருகு அஞ்சி - இரையினை ஆய்ந்து பார்த்திருந்த வெள்ளிய நாரையினைக் கண்டு அஞ்சி, அயலது ஒலித்த பகன்றை இரு சேற்று அள்ளல் - அயலிலுள்ள தழைத்த சிவதையினையுடைய கரிய சேற்றுப் பிழம்பில், திதலையின் வரிப்ப ஓடி - தேமல்போல வரியுண்டாக ஓடிச்சென்று, விரைந்து தன் ஈர்மலி மண் அளைச் செறியும் ஊர - விரைந்து தனது ஈரம் மிக்க மண் அளையுட் பதுங்கும் ஊரனே! 13-18. மனைநகு மரன் இவர் வயலை கொழுங்கொடி - மனையின் கண் விளங்கும் மரத்திற் படரும் வயலையாகிய கொழுவிய கொடி யினை, அரிமலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ - விளங்கும் மலர்களை யுடைய ஆம்பலொடு சேர்த்துக் கட்டிய தழையுடையை உடுத்து, விழவு ஆடு மகளிரொடு தழூஉஅணி பொலிந்து - விழாவின்கண் ஆடும் மகளிரொடு தழுவி ஆடும் அணியாற் பொலிவுற்று, மலர் ஏர் உண்கண் மாண் இழை குறுந்தொடி முன்கை துடக்கிய - மலரை யொத்த மையுண்ட கண்ணினையும் மாண்புற்ற அணியினையும் உடைய நின் பரத்தை தனது குறிய வளையணிந்த முன்கையினால் பணித்த, நெடு தொடர் விடுத்தது - நெடிய பிணிப்பினை விடுத்துச் சென்ற அளவிற்கே, உடன்றனள் - வெகுண்டனளாய்; 21-26. தன் முகத்து எழுது எழில் சிதைய - தன் முகத்தினது எழுதுவதற்கு ஏதுவாகிய அழகு கெட, அழுதனள் ஏங்கி - அழுது ஏக்க முற்று, வடித்து என உருத்த தித்தி - பொன்னை உருக்கி வார்த்தாலொப்ப உருக்கொண்ட தேமலையும், பல் ஊழ் நொடித்தென சிவந்த மெல்விரல் - பன்முறை முறித்துக் கொள்ளலின் சிவந்த மெல்லிய விரலினையும், திருகுபு கூர்நுனை மழுகிய எயிற்றள் - திருகிக் கடித்தலான் கூரிய முனை மழுங்கிய எயிற்றையு முடையளாய், ஊர் முழுதும் நுவலும் நின் காணிய சென்மே - ஊர் எங்கும் அலர் கூறப்படும் நின்னைக் காண்டற்குத் தேடிச் செல்வாள் (ஆகலின்); 18-21. நின் காதலி - நின் காதலியாகிய அவள், எம்போல் புல் உளைக் குடுமிப் புதல்வன் பயந்து - எம்மைப் போலப் புல்லிய உளை போலும் குடுமியையுடைய புதல்வனைப் பெற்று, நெல் உடை நெடுநகர் நின் இன்று உறைய - நெல்லுடைய நீண்ட மனையில் நின்னைப் பிரிந்து தங்க, என்ன கடத்தளோ - என்ன கடப்பாடு உடையவளோ? (முடிபு) ஊர! மாணிழை தன் முன்கை தொடக்கிய நெடுந் தொடர் விடுத்தது உடன்றனளாய் அழுதனள் ஏங்கி, ஊர் முழுதும் நுவலும் நின்னைக் காணிய சென்மே; ஆகலின் நின் காதலியாய அவள் எம்போற் புதல்வற் பயந்து நெடுநகர் நின்இன்று உறைய என்ன கடத்தளோ? (வி-ரை) கடல் கண்டன்ன என்பதனாலும், தாமரையின் கிழங்கு, தண்டு, இலை, முகை, மலர் என்ற இவற்றிக்குக் கூறிய உவமைகளாலும் மருதநிலத்தின் கொழுமையும் நீர் மிகுதியும் குறிக்கப்பட்டன. நெடுங்கண் - நெடிதாய் நிவந்து தோன்றும் கண். வயலைக் கொடி மனையின்கண் வைத்து வளர்க்கப்படுதலால், மனைநகு வயலை எனப்பட்டது. உண் கண்ணினையும் மாணிழையினையுமுடைய நின் காதலியெனக் கூட்டியுரைத்தலுமாம். போலும் : ஒப்பில் போலி. மற்று, வினைமாற்று. எழுது எழில் - ஓவியர் பார்த்து எழுதுதற்கு ஏதுவாகிய அழகு. விரல்களைப் பலமுறை நொடித்தலும், எயிற்றினைத் திருகுதலும் சினத்தினால் நிகழ்ந்தன. அவள் கைப்பிணிப்பினைச் சிறிது விடுத்த அளவிற்கே உடன்று நின்னைத் தேடித் திரிவாள் என்றமையின், அவளது பொறுமையின்மையையும், யாம் மனையின்கண் நின்னை யின்றியே உறைகின்றோம் என்றதனால், தமது பொறுமையையும் தலைவி புலப்படுத்தினாள் என்க. நெல்லுடை நெடுநகர் எனவிருந்தோம் பற்கு இன்றியமையாத நெல்லுடைமை கூறிய அதனானே, யாம் புதல்வற் பயந்தும் விருந்தோம்பியும் நினக்கு இருமைக்கும் ஏதுவாகிய மனையறத்தின் வழுவா தொழுகுகின்றேம் என்று தலைவி குறித்தாளாம். புதல்வற் பயந்து என்றது, முதுமையை எள்ளிப் பரத்தையிற் பிரிந்தான் எனப் புலப்படுத்தபடியுமாம். ஊர் முழுதும் நுவலும் என்றமையால், பிறர் கூறும் பழி கருதி இப்பொழுது ஈண்டு வருகின்றாயன்றி அன்பினால் வருகின்றாயல்லை என்று கூறித் தோழி வாயில் மறுத்தாளாம். சென்மே - செல்லும்; ஈற்றுமிசையுகரம் மெய்யொடுங் கெட்டது. தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒருமைப்பாட்டினால் தோழி, எம்போல் எனத் தலைவியைக் கூறினாள். இதனைத் தலைவி கூற்றாகவே கொள்வது நச்சினார்க்கினியர்க்கும் பேராசிரியர்க்கும் கருத்தாதல் தொல்காப்பிய உரையால் அறியப்படும். (உ-றை) புள்இமிழ் பழனத்து ஞெண்டு குருகஞ்சி இருஞ் சேற்றள்ளல் திதலையின் வரிப்ப ஓடி மண்ணளைச் செறியும் என்றது, பரத்தையர் சேரிக்கண் அவர் நலத்தினை நுகர்ந்திருந்த தலைவன் அலர் எழுதலை அஞ்சி அப்பரத்தையர் செய்த குறி, தன் மார்பிலே கிடப்பத் தன் மனைக்கண் விரைந்து வரலாயினன் என்றபடி. (மே-ள்) `அவனறி வாற்ற அறியு மாகலின்'1 என்னும் சூத்திரத்து, `புகன்ற உள்ளமொடு..... ஈரத்து மருங்கினும்' என்னும் துறைக்கண், இச் செய்யுளை உதாரணமாகக் காட்டி, மறுப்பாள்போல நயந்தாளாயிற்று என்று கூறினர், நச். `இளிவே யிழவே..... அழுகை நான்கே'2 என்னுஞ் சூத்திரத்து எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி...... நிற்காணிய சென்மே' என்பது, தன்கட்டோன்றிய இளிவரல் பொருளாக அவலச்சுவை பிறந்தது என்றும், `தெய்வம் அஞ்சல்'3 என்னும் சூத்திரத்து, `வேம்பு நனையன்ன... செறியும் ஊர' என்பது, தலைமகன் வாயில் வேண்டச் சென்றானைப் பிறர் கூறும் பழிக்கு வந்தாய் என்றமையின், இஃது உள்ள துவர்த்தல் (எனும் மெய்ப்பாடு) ஆயிற்று என்றும் கூறினர், பேரா. 177. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.) தொல்நலம் சிதையச் சாஅய் அல்கலும் இன்னும் வாரார் இனியெவன் செய்கெனப் பெரும்புலம்பு உறுதல் ஓம்புமதி சிறுகண் இரும்பிடித் தடக்கை மான நெய்அருந்து 5. ஒருங்குபிணித் தியன்ற வெறிகொள் ஐம்பால் தேங்கமழ் வெளிமலர் பெய்ம்மார் காண்பின் கழைஅமல் சிலம்பின் வழைதலை வாடக் கதிர்கதங் கற்ற ஏகல் நெறியிடைப் பைங்கொடிப் பாகல் செங்கனி நசைஇக் 10. கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை அயிரியாற்று அடைகரை வயிரின் நரலுங் காடிறந் தகன்றோர் நீடின ராயினும் வல்லே வருவர் போலும் வென்வேல் இலைநிறம் பெயர ஓச்சி மாற்றோர் 15. மலைமருள் யானை மண்டமர் ஒழித்த கழல்கால் பண்ணன் காவிரி வடவயின் நிழல்கயம் தழீஇய நெடுங்கால் மாவின் தளிர்ஏர் ஆகம் தகைபெற முகைந்த அணங்குடை வனமுலைத் தாஅயநின் 20. 1சுணங்கிடை வரித்தல் தொய்யிலை நினைந்தே. - 2 செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார். (சொ-ள்) 6-12. தோழி-, காண்பு இன் கழை அமல் சிலம்பின் வழை தலைவாட - காண்டற்கு இனிய மூங்கில் நிறைந்த பக்கமலையி லுள்ள சுரபுன்னையின் உச்சி வாடும்படி, கதிர் கதம் கற்ற - ஞாயிற்றின் கதிர் சினத்தைப் பயின்ற, ஏ கல் நெறியிடை - பெருகிய கற்கள் பொருந்திய சுரநெறியில், பைங்கொடிப் பாகல் செங்கனி நசைஇ - பசிய பாகற்கொடியின் சிவந்த பழத்தினை விரும்பி, கான மஞ்ஞை கமம் சூல் மா பெடை - காட்டிலுள்ள மயிலின் நிறைந்த கருவினைக் கொண்ட கரிய பெடை, அயிரி யாற்று அடைகரை வயிரின் நரலும், அயிரியாற்றினது அடைகரையின்கண் ஊதுகொம்பென ஒலிக்கும், காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும் - காட்டினைத் தாண்டிச் சென்ற தலைவர் (குறித்த பருவங் கடந்து) தாழ்த்து வாரா திருப்பினும்; 3-6. சிறுகண் இரு பிடி தட கை மான - சிறிய கண்ணினை யுடைய பெரிய பெண்யானையின் பெரிய கையினை ஒப்ப, ஒருங்கு பிணித்து இயன்ற நெய் அருந்து வெளிகொள் ஐம்பால் - சேரக்கட்டி விட்ட நெய் பூசப்பெறும் நறுநாற்றமுடைய கூந்தற்கண்ணே, தேம் கமழ் வெறிமலர் பெய்ம்மார் - தேன் மணக்கும் நறிய மலரைப் பெய்தலையும்; 13-20. வென்வேல் இலைநிறம் பெயர ஓச்சி - வென்றி வேலை இலைமுனை நிறம் மாறிச் செந்நிறமடையச் செலுத்தி, மாற்றோர் மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த - பகைவருடைய மலை போலும் யானைகளை மிக்க போரின்கண் அழித்த, கழல்கால் பண்ணன்- வீரக்கழல் தரித்த காலினையுடைய பண்ணனது, காவிரி வடவயின் - காவிரியின் வடபாலுள்ள, நிழல் கயம் தழீஇய நெடுகால் மாவின் - குளிர்ந்த குளத்தினை யடுத்துள நெடிய அடி மரத்தினையுடைய மாமரத்தின், தளிர் ஏர் ஆகம் தகைபெற முகைந்த- தளிரை யொத்த ஆகத்தில் அழகுபெற அரும்பிய, அணங்கு உடை நின் வனமுலை தாய - வருத்தும் இயல்புடைய நின் அழகிய முலையிற் பரந்த, சுணங்கிடை தொய்யிலை வரித்தல் நினைந்தே - சுணங்கினிடையே தொய்யில் எழுதுதலையும் நினைந்து; 13. வல்லே வருவர் - விரைந்து வந்தருள்வர் ஆதலின்; 1-3. தொல்நலம் சிதையச் சாஅய் - பழைய அழகு சிதைந்திட வருந்தி, அல்கலும் - நாடோறும், இன்னும் வாரார் - இன்னும் வந்திலர், இனி எவன் செய்கு என - இனி என்ன செய்வேன் என்று, பெரும் புலம்பு உறுதல் ஓம்புமதி - மிக்க வருத்தம் அடைதலைப் பரிகரிப்பாயாக: (முடிபு) தோழி! காடிறந்தகன்றோர் நீடினர் ஆயினும், நினது ஐம்பால் வெறிமலர் பெய்தலையும், நின் வனமுலைத் தாஅய சுணங்கிடைத் தொய்யில் எழுதுதலையும் நினைந்து வல்லே வருவர்: ஆதலின், நலம் சிதையச் சாஅய், அல்கலும் பெரும் புலம்பு உறுதல் ஓம்புமதி. (வி-ரை) தடக்கை மானப் பிணித்தியன்ற ஐம்பால் என்க. அருந்தி என்பது அருந்து எனத் திரிந்ததெனக் கொண்டு, அருந்தி வெறிகொள் என்றலுமாம். கதம் கற்ற - வெம்மை முறுகிய என்றபடி. ஏ கல் நெறி : ஏ - பெருக்க மாதலை, `ஏ பெற்றாகும்'1 என்பதன் உரையால் அறிக; ஏகல் நெறி - உயர்ச்சியையுடைய நெறியென்றுமாம். `ஏகல் வெற்பன்'2 என்பது காண்க. பெடை வயிரின் நரலுங் காடு என்க. அயிரியாறு தமிழ்நாட்டின் வடக்கண்ணுள்ளதோர் யாறு என்பது `வடுகர் பெருமகன், பேரிசை யெருமை நன்னாட் டுள்ளதை, அயிரியா றிறந்தனர் ஆயினும்'3 என்பதனால் அறியப்படும். போலும் : ஒப்பில் போலி, மலைமருள் : மருள், உவமச் சொல். காவிரி வடவயின் சிறுகுடி என்னும் ஊரிலுள்ள மாவின் தளிர் என விரித்துரைக்க. பண்ணனது ஊர் சிறுகுடி என்பது, `தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன், பண்ணன் சிறுகுடிப் படப்பை'4 என்பதனால் அறியப்படும். 178. குறிஞ்சி (தோழி வரைவு மலிந்து சொல்லியது.) வயிரத்து அன்ன வையேந்து மருப்பின் வெதிர்வேர் அன்ன பரூஉமயிர்ப் பன்றி பறைக்கண் அன்ன நிறைச்சுனை பருகி நீலத்து அன்ன அகலிலைச் சேம்பின் 5. பிண்டம் அன்ன கொழுங்கிழங்கு மாந்திப் பிடிமடிந் தன்ன கன்மிசை ஊழ்இழிபு யாறுசேர்ந் தன்ன ஊறுநீர்ப் படாஅர்ப் பைம்புதல் நளிசினைக் குருகிருந் தன்ன வண்பிணி அவிழ்ந்த வெண்கூ தாளத்து 10. அலங்குகுலை யலரி தீண்டித் தாதுகப் பொன்னுரை கட்டளை கடுப்பக் காண்வரக் கிளைஅமல் சிறுதினை விளைகுரல் மேய்ந்து கண்இனிது படுக்கும் நன்மலை நாடனொடு உணர்ந்தனை புணர்ந்த நீயும் நின்தோள் 15. பணைக்கவின் அழியாது துணைப்புணர்ந் தென்றும் தவலில் உலகத்து உறைஇயரோ தோழி எல்லையும் இரவும் என்னாது கல்லெனக் கொண்டல் வான்மழை பொழிந்த வைகறைத் தண்பனி அற்சிரம் தமியோர்க் கரிதெனக் 20. கனவினும் 1பிரிவறி யலனே அதன்தலை முன்தான் கண்ட ஞான்றினும் பின்பெரிது அளிக்குந்தன் பண்பி னானே. - பரணர். (சொ-ள்) 16. தோழி-, 1-13. வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின் - வயிரத்தை ஒத்த கூரிய மேனோக்கிய கோட்டினையும், வெதிர்வேர் அன்ன பரூஉ மயிர்ப்பன்றி - மூங்கில் வேரினை ஒத்த பருத்த மயிரினையுமுடைய பன்றியானது, பறைக்கண் அன்ன நிறைச் சுனை பருகி - பறையின் கண்ணினை ஒத்த நிறைந்த சனை நீரைக் குடித்து, நீலத்து அன்ன அகல் இலைச் சேம்பின் - நீலமணியை யொத்த நிறத்தினையுடைய அகன்ற இலையினையுடைய சேம்பின், பிண்டம் அன்ன கொழு கிழங்கு மாந்தி - பிண்டித்து வைத்தாற்போன்ற வளவிய கிழங்கினை நிறையத் தின்று, பிடி மடிந்தன்ன கல்மிசை - பெண்யானை கிடந் தாலொத்த கல்லின்மீது, ஊழ் இழிபு - வருத்தமின்றி முறையாக இறங்கி வந்து, யாறு சேர்ந்தன்ன ஊறுநீர் படா அர் - யாற்றினை அடுத்திருப்பது போன்ற நீர் ஊறும் இடத்திலுள்ள சிறுதூறாகிய, பைம் புதல் நளிசினை குருகு இருந்தன்ன - பசிய புதரிலுள்ள செறிந்த கிளைகளில் வெண்ணாரையிருந்தாலொத்த, வண்பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து அலங்கு குலை அலரி தீண்டி - வெள்ளிய கூதளஞ் செடியின் அசையும் கொத்திலுள்ள வளம்பொருந்திய முகை விரிந்த மலரினைப் பொருந்தி, தாது உக - அதன் பூம்பொடி மேலே உதிர்தலால், பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வர - பொன் உரைத்து மாற்று அறியும் கட்டளைக் கல்லினை ஒப்ப அழகுபெறத் தோன்றி, கிளை அமல் சிறுதினை விளைகுரல் மேய்ந்து - கிளைத்தல் மிக்க சிறிய தினையின் விளைந்த கதிரினை மேய்ந்து, கண் இனிது படுக்கும் நல்மலை நாடனொடு - இனிது கண்ணுறங்கும் இடமாகிய நல்ல மலை நாட்டையுடையானொடு; 14-16. உணர்ந்தனை புணர்ந்த நீயும் - ஊடிப் பின் அவ்வூடலை நீங்கிப் புணர்ந்திடும் நீயும், நின் தோள் பணைக்கவின் அழியாது - நினது தோளின் மூங்கில்போலும் அழகு ஒழியாது, என்றும் துணை புணர்ந்து - நின் தலைவனுடன் என்றும் சேர்ந்து வாழ்ந்து பின், தவல் இல் உலகத்து உறைஇயர் - என்றுங் கெடாத மறுமை யுலகத்துத் தங்கிவாழ் வீராக; 17-20. எல்லையும் இரவும் என்னாது - பகலும் இரவும் என்றில்லாது, கல் என கொண்டல் வான் மழை பொழிந்த வைகறை - கல்லெனும் ஒலியுடன் மேகம் பெரிய மழையைச் சொரிந்த விடியற் காலத்தே, தண்பனி அற்சிரம் - குளிர்ந்த பணியையுடைய அற்சிரக் காலம், தமியோர்க்கு அரிது என - தனித்திருப்போர்க்குத் தாங்கற்கரி தாகுமெனவுணர்ந்து, கனவினும் பிரிவு அறியலன் - கனவின் கண்ணும் பிரிதலை அறியான்; 20-22. அதன் தலை - அதன்மேலும், தன் பண்பினான் - தனது நற்குணத்தினால், முன் தான்கண்ட ஞான்றினும், முதன்முதல் தான் கண்ட நாளினும், பின் பெரிது அளிக்கும் - பின் எந்த நாளினும் மிகவும் அருள் செய்வானாவன். (முடிபு) தோழி! பன்றி கண் இனிது படுக்கும் நன்மலை நாடனொடு, என்றும் புணர்ந்து உறைஇயரோ; அற்சிரம் தமியோர்க்கு அரிதெனக் கனவினும் பிரிவு அறியலன்; அதன்தலை தன் பண்பினாலே, முன் கண்ட ஞான்றினும் பின் பெரிது அளிக்கும். (வி-ரை) வயிரத்தன்ன மருப்பு, வை மருப்பு, ஏந்து மருப்பு, எனத் தனித்தனி இயையும். குழிந்து வட்டமாயிருத்தல் பற்றிச் சுனைக்குப் பறைக்கண் உவமை கூறப்பட்டது. படாஅர் - சிறு தூறு: படுகர் என்றுமாம். படுகர் - நீர்நிலை. கருநிறமுடைய பன்றியின் உடம்பில் கூதளத்தின் பொன்னிறப் பூம்பொடி படிந்திருத்தல், பொன்னின் மாற்றறியும் கரிய கட்டளைக் கல்லிற் பொன் உரைத்தாற் போலும் என உவமமும் பொருளும் ஒத்து விளங்குதல் காண்க. தலைவன் மாட்டுத் தவறில்லையாயினும் அவன்பால் இருப்பதாக ஏறட்டுக் கொண்டு, களவுக் காலத்தும் சிறுபான்மை ஊடுதலும், பின்னர் அவ்வூடல் நீங்கிக் கூடுதலும் தலைவி மாட்டுண்மையின், `உணர்ந்தனை புணர்ந்த' என்றாள். உணர்தல் - ஊடல் நீங்குதல். இனி, இயற்கைப் புணர்ச்சி முதலிய கூட்டங்களால், தலைவனுடைய பண்பினை இனிதுணர்ந்த நீயும் என்றுரைத்தலுமாம். நீயும் என்ற உம்மையால் தலைவனும் என்பது பெறப்படும். தவல் இல் உலகம் - கெடுதலில்லாத இன்பத்தையுடைய மறுமையுலகம். இவ்வுலகிலே தணவாக் காதலுடன் கூடி இல்லறம் இனிது நடாத்தி, நன்மகப் பெற்றுவாழ்ந்தோர், மறுமையிலும் பிரிவின்றி இன்பம் துய்ப்பர் என்னுங் கருத்தினளாதலின், என்றும் தவலில் உலகத்து உறைஇயர் என்று கூறினாளென்க; `இம்மை மாறி மறுமையாயினும், நீயா கியரென் கணவனை, யானா கியர்நின் னெஞ்சு நேர்பவளே'1 `இம்மை யுலகத் திசையொடும் விளங்கி, மறுமை யுலகமும் மறுவின் றெய்துப, செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச், சிறுவர்ப் பயந்த செம்மலோரென'2 என்பன காண்க. இவ்வாற்றால், தலைவன் வரைய வருதலை யுணர்ந்து தோழி வரைவுமலிந்து கூறினாள் என்பது பெற்றாம். அங்ஙனம் தலைவன் வரைதல் ஒருதலை என வற்புறுத்து தற்குக் கனவினும் பிரிவு அறியலன் என்றும், முன் தான் கண்ட ஞான்றினும் பின் பெரிதளிக்கும் என்றும் கூறினாள். இயற்கைப் புணர்ச்சி தொடங்கி ஒருகாலைக் கொருகால் தலைவி மாட்டு அன்பு பெருகித் தலையளி செய்து வருதலைக் கண்டுளாள் ஆகலின், தன் பண்பினானே அளிக்கும் என்றனள். (உ-றை) பன்றி சுனை பருகிக் கிழங்கு மாந்தித் தினை விளை குரல் மேய்ந்து இனிது கண்படுக்கும் நாடன் என்றது, தலைவன் தான் கருதிய பொருளெலாம் பெற்றுத் தலைவியை மணந்து இன்பந் துய்த்து இனிது வாழ்வான் என்றபடியாம். 179. பாலை (பிரிவுணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது.) விண்டோய் சிமைய விறல்வரைக் கவாஅன் வெண்தேர் ஓடுங் கடங்காய் மருங்கில் துனையெரி பரந்த துன்னரும் வியன்காட்டுச் சிறுகண் யானை நெடுங்கை நீட்டி 5. 3வான்வாய் திறந்தும் வண்புனல் பெறாஅது கான்புலந்து கழியுங் கண்ணகன் பரப்பின் விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர் நல்நிலை பொறித்த கல்நிலை அதர 4அரம்புகொள் பூசல் களையுநர்க் காணாச் 10. சுரஞ்செல விரும்பினி ராயின் இன்னகை முருந்தெனத் திரண்ட முன்எயிற்றுத் துவர்வாய்க் குவளை நாள்மலர் புரையும் உண்கண்இம் மதியேர் 5வாள்நுதல் புலம்பப் பதிபெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே. - கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார். (சொ-ள்) 1-10. தலைவ-, விண்தோய் சிமைய விறல் வரைக் கவான் - வானை அளாவிய உச்சியினையுடைய பெருமை தங்கிய மலையினது பக்கமலைக்கண்ணே, வெண்தேர் ஓடும் காய் கட மருங்கில் - பேய்த் தேர் ஓடாநிற்கும் காய்ந்த கற்காட்டின் பக்கத்தே, துனை எரி பரந்த துன் அரும் வியன்காட்டுச் சிறுகண் யானை - விரைந்த நெருப்புப் பரவிய கிட்டுதற்கரிய பெரிய காட்டிலுள்ள சிறிய கண்ணினை யுடைய யானை, நெடு கை நீட்டி வான் வாய் திறந்தும் - அப் பேய்த் தேரின்பால் தன் நெடிய கையினை நீட்டியும் பெரிய வாயினைத் திறந்தும், வண்புனல் பெறாஅது கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின் - வளவிய நீரினைப் பெறாமல் காட்டை வெறுத்துக் கழிந்துபோம் இடம் அகன்ற பாலைநிலத்தின் கண், விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர் - விடுதல் வாய்ந்த சிவந்த அம்பினை யுடைய வளைந்த வில்லைக்கொண்ட மறவரது, நல்நிலை பொறித்த கல்நிலை அதர - நல்ல வெற்றி நிலையை எழுதிய நடுகற்கள் நிலை கொண்ட வழிகளையுடையவாய, அரம்பு கொள் பூசல் களையுநர் காணாச் சுரம்செல விரும்பினிர் ஆயின் - குறும்பர்கள் செய்யும் பூசலை நீக்குநரைக் காணாத சுரநெறியைக் கடந்து செல்ல விரும்பினீர் ஆயின்; 10-14. இன் நகை முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய் - இனிய நகையினையும் மயிலிறகின் அடியெனத் திரண்ட முட்போலும் கூரிய பற்களையும் சிவந்த வாயினையும், குவளை நாள் மலர் புரையும் உண்கண் - குவளையின் புதிய மலரை யொக்கும் மையுண்ட கண்ணினையும் உடைய, இ மதி ஏர் வாள் நுதல் புலம்ப - இந்த மதியினை யொத்த ஒளிபொருந்திய நெற்றியினை யுடையாள் வருந்த, பதி பெயர்ந்து உறைதல் நுமக்கு ஒல்லுமோ - இப்பதியை நீங்கிப் போய்த் தங்குதல் உமக்குப் பொருந்துவதாமோ? (முடிபு) தலைவ! சுரம்செல விரும்பினிராயின், வாள்நுதல் புலம்பப் பதிபெயர்ந்து உறைதல் நுமக்கு ஒல்லுமோ! வெண்தேர் ஓடும் வியன் காட்டில், யானை, கைந் நீட்டியும் வாய் திறந்தும் புனல் பெறாது புலந்து கழிவதும் கொடுவில் லாடவர் நடுகல் நிலைபெற்ற அதர்களையுடையதும் அரம்பு கொள் பூசல் களையுநர் இல்லாததும் ஆகிய சுரம் என்க. (வி-ரை) கொடுவில் ஆடவர், கரந்தை மறவர் என்க. அரம்பு - குறும்பர், காட்டுத் தலைவர். `இன்னகை...... வாணுதல் புலம்ப' என்றது, தலைவியின் இனிய நகையும் கூரிய பல்லும் துவர் வாயும் உண்கண்ணும் வாணுதலும் ஆய இவை, நும்முன் தோன்றி நும்மை அழுங் குவிப்பனவாகலின், நீர்பிரிந்துறைதல் ஒல்லாதென்றாள் என்றபடி. 180. நெய்தல் (இரந்து பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலை மகளைக் குறைநயப்பக் கூறியது. தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியதூ உ மாம்.) நகைநனி யுடைத்தால் தோழி தகைமிகக் கோதை ஆயமொடு குவவுமணல் ஏறி வீததை கானல் வண்டல் அயரக் கதழ்பரித் திண்தேர் கடைஇ வந்து 5. தண்கயத்து அமன்ற ஒண்பூங் குவளை அரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி பின்னுப்புறந் தாழக் கொன்னே சூட்டி நல்வரல் இளமுலை நோக்கி நெடிதுநினைந்து நில்லாது பெயர்ந்தனன் ஒருவன் அதற்கே 10. புலவுநா றிருங்கழி துழைஇப் பலவுடன் புள்இறை கொண்ட முள்ளுடை நெடுந்தோட்டுத் தாழை மணந்து ஞாழலொடு கெழீஇப் படப்பை நின்ற முடத்தாட் புன்னைப் பொன்னேர் நுண்தாது நோக்கி 15. என்னும் நோக்குமிவ் வழுங்கல் ஊரே. - 1கருவூர்க் கண்ணம்பாளனார். (சொ-ள்) 1-9. தோழி-, தகை மிக கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி - அழகு மிக மாலையையுடைய ஆயத்தாருடன் (நான்) திரண்ட மணல் மேட்டில் ஏறி, வீ ததை கானல் வண்டல் அயர - மலர் நெருங்கிய சோலையில் விளையாடல் செய்யாநிற்க, ஒருவன் - ஒரு தலைவன், கதழ்பரி திண்தேர் கடைஇ வந்து - விரைந்த குதிரையையுடைய வலிய தேரினைச் செலுத்தி வந்து, தண் கயத்து அமன்ற ஒள்பூ குவளை - தண்ணிய குளத்தே நிறைந்த ஒள்ளிய பூக்களையுடைய குவளையின், அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி - அரும்பினை விரித்துக் கட்டிய வண்டுகள் மொய்க்கும் கண்ணியினை, பின்னுப்புறம் தாழக் கொன்னே சூட்டி - எனது பின்னலைக் கொண்ட முதுகின்பால் தாழ்ந்திட யான் வேண்டாதே தலையிற் சூட்டி, நல்வரல் இளமுலை நோக்கி - நல்ல வளர்ச்சியையுடைய இளைய முலையைப் பார்த்து, நெடிது நினைந்து நில்லாது பெயர்ந்தனன் - ஏதோ நீள நினைந்து பின் தாழ்க்காது போயினன்; 9-15. அதற்கே - அவ்வளவிற்கே, இ அழுங்கல் ஊர் - இந்த ஆரவாரமிக்க ஊர், புலவு நாறு இருகழி துறைஇ பல உடன் புள் இறை கொண்ட - புலால் வீசும் பெரிய கழியினைத் துழாவிப் பலவகைப் புட்களும் ஒருங்கே தங்கியிருக்கும், முள் உடை நெடு தோட்டுத் தாழை மணந்து - முள்ளுடைய நிண்ட இதழையுடைய தாழையைச் சார்ந்து, ஞாழலொடு கெழீஇ - புலிநகக் கொன்றை யொடு பொருந்தி, படப்பை நின்ற முடத்தாள் புன்னைப் பொன் நேர் நுண்தாது நோக்கி - தோட்டத்தில் நிற்கும் வளைந்த தாளினை யுடைய புன்னையது பொன்னை யொத்த நுண்ணிய தாதினைப் பார்த்து, என்னும் நோக்கும் - என்னையும் நோக்கா நிற்கும்; 1. நகை நனி உடைத்து - இது மிகவும் நகையினைத் தருவ தொன்றாகும். (முடிபு) தோழி! நான் ஆயமொடு வண்டல் அயர, ஒருவன் தேர் கடைஇ வந்து, கண்ணியினைப் பின்னுப்புறம் தாழக் கொன்னே சூட்டி இளமுலை நோக்கி, நெடிது நினைந்து பெயர்ந்தனன்: அதற்கே இந்த அழுங்கலூர் புன்னைத் தாது நோக்கி என்னும் நோக்கும்; இது நகை நனியுடைத்து. (வி-ரை) யான் விரும்பாதிருக்கச் செய்தே சூட்டினான் என்பாள், `கொன்னே சூட்டி' யென்றாள். பின் அவனோடு தனக்கு யாதொரு தொடர்பும் இன்றென்பாள், நில்லாது பெயர்ந்தனன் என்றாள். இவ்வூர் புன்னையின் தாது நோக்கி என்னையும் நோக்கும் என்றது, என் மேனி புன்னையின் தாது போலும் பசலை படர்ந்த தெனக் கருதுகின்றது என்றபடி; இது குறிப்பு நுட்பமாம். தோழியானவள் தலைவி குறை நயப்பக் கருதி, இங்ஙனம் படைத்து மொழியால் கூறவே, இக் கானலின்கண் இங்ஙனம் வந்து செல்வான் தலைவனே யாவான் என்னுங் கருத்தினளாய்க் குறை நேர்வாளாம் என்க. இரண்டாவது துறையின் கருத்து தலைவியானவள் தலைவன் வரையாது பிரிந்திருத்தலால், தன் மேனி பசலை பூத்தலையும் அதனால் ஊரின்கண் அலர் எழுதலையும் தலைமகன் கேட்பத் தோழிக்குச் சொல்லினாளாம் என்பது. 181. பாலை (இடைச்சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லியது.) துன்னருங் கானமுந் துணிதல் ஆற்றாய் பின்நின்று பெயரச் சூழ்ந்தனை யாயின் என்நிலை யுரைமோ நெஞ்சே ஒன்னார் ஓம்பரண் கடந்த வீங்குபெருந் தானை 5. அடுபோர் மிஞிலி செருவிற்கு உடைஇ முருகுறழ் முன்பொடு பொருதுகளஞ் சிவப்ப ஆஅய் 1எயினன் வீழ்ந்தென ஞாயிற்று ஒண்கதிர் உருப்பம் புதைய ஓராங்கு வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு 10. விசும்பிடை தூர ஆடி மொசிந்துடன் பூவிரி அகன்துறைக் கனைவிசைக் கடுநீர்க் காவிரிப் பேரியாற்றி 2அயிர்கொண்டு ஈண்டி எக்கர் இட்ட குப்பை வெண்மணல் வைப்பின் யாணர் வளங்கெழு வேந்தர் 15. ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசை நான்மறை முதுநூல் முக்கண் செல்வன் ஆல முற்றம் கவின்பெறத் 3தைஇய பொய்கை சூழ்ந்த 4பொழின்மனை மகளிர் கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும் 20. மகர நெற்றி வான்தோய் புரிசைச் சிகரந் தோன்றாச் சேணுயர் நல்லில் 5புகாஅர் நன்னாட் டதுவே பகாஅர் பண்டம் நாறும் 6வண்டடர் ஐம்பால் பணைத்தகைத் தடைஇய காண்பின் மென்தோள் 25. அணங்குசால் அரிவை இருந்த மணங்கமழ் மறுகின் மணல்பெருங் குன்றே. - பரணர். (சொ-ள்) 23. நெஞ்சே-, 22-26. பகாஅர் பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால் - விற்பாரது நறுமணப் பண்டங்கள் நாறுகின்ற வண்டுகள் மொய்க்கும் ஐம்பகுதியாய கூந்தலினையும், பனைத்தகை தடைஇய காண்பு இன்மெல் தோள் - மூங்கிலின் தகுதியையுடையதாய் வளைந்த காண்டற்கு இனிய மெல்லிய தோளினையுமுடைய, அணங்குசால் அரிவை இருந்த - அழகு மிக்க நம் தலைவியிருந்த, மணம் கமழ் மறுகின் மணல் பெரும் குன்று - மணம் நாறும் தெருக்களையுடைய மணலையுடைய பெரிய குன்றம்; 3-7. ஆஅய் எயினன் - ஆய் எயினன் என்பான், முருகு உறழ் முன்பொடு - முருகனை ஒத்த வலிமையொடு நின்று, ஒன்னார் ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரும் தானை - பகைவர் பாதுகாக்கும் அரண்களை வென்று கடந்த மிக்க பெரிய சேனைகளையுடைய, அடுபோர் மிஞிலி செருவிற்கு - போர் அடுதல்வல்ல மிஞிலி என்பான் செருவின் கண், களம் சிவப்பப் பொருது - குருதியால் களம் சிவப்புறப் பொருது பின், உடைஇ வீழ்ந்தென - தோற்று வீழ்ந்தனனாக; 7-10. ஞாயிற்று ஒள்கதிர் உருப்பம் புதைய - ஞாயிற்றின் ஒள்ளிய கதிர்களின் வெப்பம் (அவன் உடலிற்படாது) மறைய, ஒராங்கு - ஒரு பெற்றியே, வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு - புதிய புட்களின் ஒலி பொருந்திய பெரிய கூட்டம், விசும்பிடை தூர ஆடி - விசும்பிடம் மறைய வட்டமிட்டுப் பின்பு, உடன் மொசிந்து - ஒருங்குகூடி; 11-19. பூவிரி அகல் துறை - பூக்கள் விரிந்த அகன்ற துறையினை யுடைய, காவிரிப் பேர் யாற்று - காவிரியாய பெரிய ஆற்றின், கனை விசைக் கடுநீர் - மிக்க விசையுடன் கடுகிவரும் நீரானது, அயிர் கொண்டு ஈண்டி - நுண்மணலைக் கொண்டு திரளும்படி, எக்கர் இட்ட குப்பை வெண்மணல் - மேடாக்கிய வெள்ளிய மணற் குவியலையும், யாணர் வைப்பின் - புது வருவாயையுமுடைய ஊர்களை யுடைய, வளம் கெழு வேந்தர் - செல்வம் மிக்க சோழவேந்தராற் புரக்கப் படும், ஞாலம் நாறும் நலம்கெழு நல்இசை - உலகமெல்லாம் பரவும் நன்மை பொருந்திய நற்புகழையுடைய, நால்மறை முதுநூல் முக்கண் செல்வன் - நான்கு வேதங்களாய பழைய நூலை அருளிய முக்கண்ணை யுடைய பரமனது, ஆலமுற்றம் - ஆலமுற்றம் என்னுமிடத்து, கவின்பெற தைஇய - அழகுபெற இயற்றப் பெற்ற, பொய்கை சூழ்ந்த பொழில் - பொய்கையைச் சூழ்ந்துள பொழிலின்கண்ணே, மனைமகளிர் - சிற்றிலிழைத்து விளையாடும் சிறுமிகளது, கைசெய் பாவைத் துறைக்கண் - அழகுறச் செய்யப்பெற்ற பாவைகளை யுடைய துறையின் கண்ணே, இறுக்கும் - வந்து தங்குவதும்; 20-22. மகர நெற்றி வான்தோய் புரிசை - மகரக் கொடியினை உச்சியிற் கொண்ட வானைத்தோயும் மதிலையும், சிகரம் தோன்றாச் சேண் உயர் நல்இல் - முடி அறியப்படாதவாறு சேணின்கண் உயர்ந்த நல்ல மாடங்களையுடையதும் ஆகிய, புகாஅர் நல் நாட்டதுவே - காவிரிப் பூம் பட்டினத்தையுடைய நல்ல சோழநாட்டின் கண்ணதாகும்; 1-3. துன் அரும் கானமும் துணிதல் ஆற்றாய் - செல்லுதற்கு அரிய காட்டைக் கடக்கவும் துணிவுறல் செய்யாயாய், பின் நின்ற பெயரச் சூழ்ந்தனை ஆயின் - பின்னே நின்று பெயர்ந்து மீண்டிடக் கருதினையாயின், என்நிலை உரைமோ - எனது இந்நிலையினை ஆண்டுச் சென்று அவட்கு உரைப்பாயாக. (முடிபு) நெஞ்சே! அரிவை இருந்த மணற்பெருங் குன்று புகாஅர் நன்னாட்டது; நீ கானம் துணிதல் ஆற்றாய்; பின் நின்று பெயரச் சூழ்ந்தனையாயின், என்நிலை ஆண்டுச் சென்று, அவட்கு உரைப்பாயாக. (வி-ரை) கானமும் - காட்டினைக் கடக்கவும்; உம்மை எச்சப் பொருட்டு; அசை நிலையுமாம். ஒன்னார், ஓம்பரண் கடந்த வீங்கு பெருந்தானை என்பதனால் மிஞிலியின் தானைப் பெருக்கமும், முருகுறழ் முன்பொடு பொருது என்பதனால் எயினனது போர் வலியும் பெறப்பட்டன. களஞ் சிவப்பப் பொருது என்றமையால், பகைவர் தானையையெல்லாம் கொன்று பின் வீழ்ந்தமை பெற்றாம். களஞ் சிவப்ப வீழ்ந்தனன் எனக் கொண்டு, பகைவனது வேலால் தாக்குண்டு வீழ்ந்தான் என்றுரைத்தலுமாம். எயினன் புள்ளின் பாதுகாவலனாகலின், இவன் வீழ்ந்த போழ்து பறவைகளெல்லாம் இவன்மேல் ஞாயிற்றின் கதிர்படாது மறைத்தன என்பது, `புள்ளிற்கு ஏம மாகிய பெரும்பெயர், வெள்ளத்தானை அதிகற் (எயினற்) கொன்று'1 என்பதனாலும், `வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்.... மிஞிலியொடு, நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந், தொள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப், புள்ளொருங்கு அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிறு, ஒண்கதிர் தெறாமைச் சிறகரில் கோலி, நிழல் செய்து உழறல்'2 என்பதனாலும் அறியப்படும். `அகவுநர் வேண்டின் வெண் கோட்டு, அண்ணல் யானை ஈயும் வண்மகிழ், வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்' என்று இவன் கூறப் பெறுதலின் ஈண்டு `வண்மை எயினன்' என்று காணப்படும் பாடமும் பொருத்த முடைத்தே. எயினன் வீழ்ந்தென, உருப்பம் புதைய, புள்ளின் பெருந்தோடு ஆடி, மொசிந்து, துறைக்கண் இறுக்கும் புகார் நன்னாடு என்க. முக்கட் செல்வனது ஆலமுற்றத்திடத்தே தைஇய பொய்கை சூழ்ந்த பொழிலில் மகளிர் கைசெய் பாவைகளையுடைய துறையென்று இயையும். வளங்கெழு வேந்தரால் புரக்கப்படும் புகார் நன்னாடு என்க; ஆலமுற்றம் எனலுமாம். ஈண்டி, ஈண்டவெனத் திரிக்க. இறைவன் புகழே மெய்யாய புகழ் ஆகலானும், அதுவே உலகெங்கும் பரத்தற்குரியதாகலானும் `ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசை முக்கட் செல்வன்' என்றார். நான்மறை முக்கண் செல்வனது வாய்மொழியாம் என்பது, ‘நன்றாய்ந்த நீணிமிர் சடை, முது முதல்வன் வாய்போகா, தொன்று புரிந்த ஈரிரண்டின், ஆறுணர்ந்த ஒரு முதுநூல்'3 என்ற தனால் அறியப்படும். ஆலமுற்றம் - சிவபிரான் எழுந்தருளியுள்ள தோர் இடமாகும். இறுக்கும் புகார் எனவும் புரிசையினையும் நல் இல்லினையுமுடைய புகார் எனவும் தனித்தனி கூட்டுக. பகர்வார் என்பது பகாஅர் எனத் திரிந்துநின்றது. பண்டம் - பூவும் சாந்தும் முதலாயின. அணங்கு சால் அரிவை - வருத்துதலையுடைய அரிவை என்றாதல், தெய்வம் போலும் அரிவை என்றாதல் கூறுதலுமாம். குன்றம் நன்னாட்டது; சூழ்ந்தனையாயின் ஆண்டுச் சென்று என் நிலை உரையென விரித்துரைக்க. 182. குறிஞ்சி (தோழி இரா வருவானைப் பகல் வா என்றது.) பூங்கண் வேங்கைப் பொன்னிணர் 1மிலைந்து வாங்கமை நோன்சிலை எருத்தத் திரீஇத் தீம்பழப் பலவின் சுளைவிளை தேறல் வீளை அம்பின் இளையரொடு மாந்தி 5. ஓட்டியல் பிழையா வயநாய் பிற்பட வேட்டம் போகிய குறவன் காட்ட குளவித் தண்புதல் குருதியொடு துயல்வர முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட அரவெறி யுருமோ டொன்றிக் கால்வீழ்த்து 10. உரவுமழை பொழிந்த பானாட் கங்குல் தனியை வந்த வாறுநினைந் தல்கலும் பனியொடு கலுழுமிவள் கண்ணே அதனால் கடும்பகல் வருதல் வேண்டும் தெய்ய அதிர்குரல் முதுகலை கறிமுறி முனைஇ 15. உயர்சிமை நெடுங்கோட் டுகள உக்க கமழிதழ் அலரி தாஅய் வேலன் வெறியயர் வியன்களம் கடுக்கும் பெருவரை நண்ணிய சார லானே. - கபிலர். (சொ-ள்) 1-8. பூ கண் வேங்கை பொன் இணர் மிலைந்து - அழகிய இடத்தினையுடைய வேங்கை மரத்தின் பொன்போலும் பூங் கொத்துக்களைச் சூடி, வாங்கு அமை நோன்சிலை எருத்தத்து இரீஇ - வளைந்த மூங்கிலாலாய வலிய வில்லைத் தோளில் இருத்தி, தீம் பழப் பலவின் சுளைவிளை தேறல் - இனிய பலாப்பழத்தின் சுளையினின்றும் விளைந்த தேனை, வீளை அம்பின் இளையரொடு மாந்தி - சீழ்க்கை யொலியுடன் செல்லும் அம்பினையுடைய ஏவலிளையருடன் நிறையக் குடித்து, ஓட்டு இயல் பிழையா வயநாய் பிற்பட - விலங்குகளைத் துரத்திப் பற்றும் இயல்பு தப்புதலில்லாத வலிய நாய் பின்னேவர, வேட்டம் போகிய குறவன் - வேட்டைக்குச் சென்ற குறவன், காட்ட குளவித் தண்புதல் குருதியொடு துயல்வர - காட்டிலுள்ள மல்லிகையாய தண்ணிய புதர் உதிரத்தொடு அசைந்திட, முழவு மா தொலைச்சும் குன்ற நாட - முள்ளம் பன்றியைக் கொன்று வீழ்த்தும் குன்றுகளையுடைய நாட்டின் தலைவனே! 9-12. உரவு மழை அரவு எறி உருமோடு ஒன்றி கால் வீழ்த்து - வலிய மேகம் அரவினை எறிந்து கொல்லும் இடியுடன் கூடிக் காலிறக்கங் கொண்டு, பொழிந்த பால் நாள் கங்குல் - நீரினைச் சொரிந்த அரை நாளாகிய இரவில், தனியை வந்த ஆறு நினைந்து - நீ தனியையாகி வந்த வழியேதத்தினை நினைந்து - அல்கலும் பனியொடு கலுழும் இவள் கண்ணே - இவள் கண் எப்பொழுதும் நீர் கொண்டு அழாநிற்கும்; 12-18. அதனால்-, அதிர் குரல் முதுகலை கறிமுறி முனைஇ - அதிரும் குரலினையுடைய முதிய முசுக்கலை மிளகின் தளிரை உண்டு வெறுத்து, உயர் சிமை நெடு கோட்டு உகள - உயர்ந்த உச்சியினையுடைய நீண்ட சிகரங்களிலே தாவுதலால், உக்க - உதிர்ந்த, கமழ் இதழ் அலரி தாஅய் - மணம் நாறும் இதழினையுடைய பூக்கள் பரந்து, வேலன் வெறி அயர் வியன் களம் கடுக்கும் - வேலன் வெறியாடும் பெரிய களத்தினை ஒக்கும்; பெருவரை நண்ணிய சாரலான் - பெரிய மலையை அடுத்துள்ள சாரற் கண்ணே, கடும் பகல் வருதல் வேண்டும் - கடிய பகற் கண்ணே நீ வருதல் வேண்டும். (முடிபு) நாட! பானாட் கங்குல் தனியை வந்தவாறு நினைந்து, இவள்கண் அல்கலும் பனியொடு கலுழும்; அதனால் பெருவரை நண்ணிய சாரற்கண்ணே நீ கடும்பகல் வருதல் வேண்டும். (வி-ரை) புதரிடத்தே பதுங்கியிருந்த முளவுமாவைக் கொல்லு தலின் புதல் குருதியொடு துயல் வருதலாயிற்று. இடியொலி கேட்டு அரவு உட்குமென்னும் வழக்குப்பற்றி அரவெறியுரும் எனப்பட்டது. உருமின் கடுமை கூறிய படியுமாம். உருமோடொன்றி என்றதனால் ஆற்றினது ஏதம் குறித்தாள். துணையொடும் வருதற்கரிய ஏதப் பாடுடைய வழியில் நள்ளிருளில் தனியையாய்த் தன்பொருட்டு வருகின்றாய் என்பதுணர்ந்து, இவள் ஆற்றாமை பெரிதுடையளா கின்றாள் என்பாள், `தனியை வந்த ஆறு நினைந் தல்கலும் பனியொடு கலுழு மிவள் கண்ணே' என்றாள். கடும் பகல் - நண்பகல் என்றபடி. தெய்ய: - அசை. (உ-றை) குறவன் முளவுமாவைக் கொல்ல அதற்கு இடமாகிய புதல் குருதியொடு அசைந்து தோன்றியதென்பது, தலைவன் தலைவியொடு களவொழுக்கத்தில் ஒழுக, அவ்வொழுக்கம் தலைவியின் மேனி வேறுபாட்டால் தாய் முதலியோருக்குப் புலனாயிற்று என்றவாறாம். 183. பாலை (தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) குவளை உண்கண் கலுழவுந் திருந்திழைத் திதலை அல்குல் அவ்வரி வாடவும் அத்தமார் அழுவம் நத்துறந் தருளார் சென்றுசே ணிடையர் ஆயினும் நன்றும் 5. நீடலர் என்றி தோழி பாடான்று பனித்துறைப் பெருங்கடல் 1இறந்துநீர் பருகிக் குவவுத்திரை அருந்து கொள்ளைய குடக்கேர்பு வயவுப்பிடி யினத்தின் வயின்வயின் தோன்றி இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றிக் 10. காலை வந்தன்றால் காரே மாலைக் குளிர்கொள் பிடவின் கூர்முக அலரி வண்டுவாய் திறக்கும் தண்டா நாற்றம் கூதிர் அற்சிரத்து ஊதை தூற்றப் பனியலைக் கலங்கிய நெஞ்சமொடு 15. வருந்துவம் அல்லமோ பிரிந்திசினோர் திறத்தே. - கருவூர்க் கலிங்கத்தார். (சொ-ள்) 1-5. தோழி-, குவளை உண்கண் கலுழவும் - எனது குவளை மலர் போன்ற மையுண்ட கண்கள் அழவும், திருந்து இழை திதலை அல்குல் அவ்வரி வாடவும் - திருந்திய அணியையும் தேமலையு முடைய அல்குலின் அழகிய வரி வாட்டமுறவும், அருளார் நத்துறந்து - அருள் செய்யாராய் நம்மைப் பிரிந்து, அத்தம் ஆர் அழுவம் சென்று - அருநெறிகளையுடைய பரந்த பாலையைக் கடந்து சென்று, சேணிடையர் ஆயினும் - சேய்மைக்கண் உள்ளார் ஆயினும், நன்றும் நீடலர் என்றி - மிகவும் தாழ்க்காது வருவர் என்கின்றாய்; 5-10. இருங் கிளைக் கொண்மூ - பெரிய கூட்டமாய மேகங்கள், குவவு திரை - வளைந்த அலைகளையும், பனித்துறை - குளிர்ந்த துறையினையு முடைய, பெருங்கடல் இறந்து - பெரிய கடலிலே மிக்குச் சென்று, நீர் பருகி அருந்து கொள்ளைய - நீரினைப் பருகியுண்ட மிகுதியை யுடையனவாய், குடக்கு ஏர்பு - மேற்கே எழுந்து, வயவு பிடி இனத்தின் - சூலுற்ற பெண்யானைக் கூட்டம்போல, வயின் வயின் தோன்றி - இடந்தோறும் தோன்றி, பாடு ஆன்று - ஒலிமிக்கு, ஒருங்கு உடன் துவன்றி - பெய்தற்கு ஒரு சேர நெருங்க, கார் காலை வந்தன்று - கார்காலம் காலையே வந்தது எனினும்; 10-15. மாலை - மாலைப் பொழுதில், குளிர்கொள் பிடவின் கூர்முகை அலரி - குளிர்ச்சி பொருந்திய பிடாவினது கூரிய அரும்பு அலர்தற்குரியதனை, வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் - வண்டு வாயினை நெகிழ்த்தலால் எழும் அமையாத மணத்தினை, கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற - கூதிர் முன்பனிக் காலங்கட்கு உரிய வாடைக் காற்றானது தூற்றா நிற்க, பனி அலை கலங்கிய நெஞ்சமொடு - பனி அலைத்தலால் கலங்கிய நெஞ்சமுடன், பிரிந்திசினோர் திறத்து - பிரிந்து சென்றாராய தலைவரின் பொருட்டு, வருந்துவம் அல்லமோ - நம் வருந்துதற்குரியோம் அல்லேமோ. (முடிபு) தோழி! தலைவர் நத்துறந்து சேணிடையராயினும் நீடலர் என்றி; கார் காலை வந்தன்று; மாலை, பிடவினது அலரியின் நாற்றத்தை ஊதை தூற்ற பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு நாம் வருந்துவம் அல்லமோ? (வி-ரை) இழை - மேகலை. நம் துறந்து - நத்துறந்து என விகாரமாயிற்று. துவன்றி - துவன்ற எனத் திரிக்க. கார்ப் பருவம் வந்த தாகலின், தலைவர் நீடாது வந்துவிடுவர் என்று கூறி ஆற்றுவித்த தோழிக்கு, அவர் வருந்துணையும் நாம் எங்ஙனம் ஆற்றியிருக்கற் பாலம் என்பாள், `கார்காலை வந்தது எனினும் மாலை கூதிர் அற்சிரத்து ஊதை தூற்றப் பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு வருந்துவம் அல்லமோ' என்று தலைவி கூறினாள். கார்காலை வந்ததெனினும் மாலை கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற என்றது, அப் பருவங்கள் அடுத்தடுத்து விரைந்து வரும் என்பதை உணர்த்தியவாறு. கார்ப்பருவம் குறித்துச் சென்ற தலைவர், அப்பருவம் வந்தும் இன்னும் வந்திலாமையின், அடுத்து வரும் கூதிர் அற்சிரப் பருவங்களிற்றான் அவர் வருதல் எங்ஙனம் தெளியப்படும் என்றாளு மாயிற்று. 184. முல்லை (தலைமகன் வினைவயிற் பிரிந்து வந்து எய்தியவிடத்துத் தோழி புல்லு மகிழ்வு உரைத்தது.) கடவுட் கற்பொடு குடிக்குவிளக் காகிய புதல்வன் பயந்த புகழ்மிகு சிறப்பின் நன்ன ராட்டிக் கன்றியும் எனக்கும் இனிதா கின்றால் சிறக்கநின் ஆயுள் 5. அருந்தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு சுரும்பிமிர் மலர கானம் பிற்பட வெண்பிடவு அவிழ்ந்த வீகமழ் புறவில் குண்டைக் கோட்ட குறுமுள் கள்ளிப் புன்தலை புதைத்த கொழுங்கொடி முல்லை 10. ஆர்கழல் புதுப்பூ உயிர்ப்பின் நீக்கித் தெள்ளறல் பருகிய திரிமருப்பு எழிற்கலை புள்ளியம் பிணையொடு வதியும் ஆங்கண் 1கோடுடைக் கையர் துளர்எறி வினைஞர் அரியல் ஆர்கையர் விளைமகிழ் தூங்கச் 15. செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் செக்கர் வானஞ் சென்ற பொழுதில் கற்பால் அருவியின் ஒலிக்கும் நற்றேர்த் தார்மணி பலவுடன் இயம்பச் சீர்மிகு குரிசில்நீ வந்துநின் றதுவே. - மதுரை மருதன் இளநாகனார். (சொ-ள்) 19. சீர்மிகு குரிசில் - சிறப்புமிக்க தலைவனே! 5-19. வெண்பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் - வெள்ளிய பிடவ மரத்தின் விரிந்த மலர் மணக்கும் முல்லை நிலத்தே, குண்டைக் கோட்ட குறுமுள் கள்ளி - குறிய கிளைகளையும் குறிய முட்களையு முடைய கள்ளியின், புன் தலை புதைத்த கொழு கொடி முல்லை - புல்லிய உச்சியினை மூடிய வளவிய முல்லைக்கொடியின், ஆர் கழல் புது பூ உயிர்ப்பின் நீக்கி - ஆர்க்குக் கழன்ற புதிய பூக்களை மூச்செறி தலால் ஒதுக்கி, தெள் அறல் பருகிய திரி மருப்பு எழில் கலை - தெளிந்த நீரைக் குடித்த முறுக்குண்ட கோட்டினையுடைய அழகிய மான் கலை, புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண் - புள்ளிகளையுடைய அழகிய பிணையுடன் தங்கும் அவ்விடத்தே, கோடு உடைக் கையர்- களைக் கொட்டினையுடைய கையினராய், துளர் எறி வினைஞர் களையினை வெட்டி எறியும் தொழிலையுடையவர்கள், அரியல் ஆர்கையர் விளை மகிழ் தூங்க - கள்ளினை நிறைய உண்டு அதனாலாய களிப்பு மிக்குற, செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்று - செல்லும் கதிர் வெம்மை குறைந்த செந்நிறத்தினதாய ஞாயிற்றையுடைய, செக்கர் வானம் சென்ற பொழுதில் - செவ்வானம் பரவிய காலத்தே, கல்பால் அருவியின் ஒலிக்கும் நற்றேர் - மலையின்பால் வீழும் அருவியைப் போல ஒலிக்கும் நல்ல தேரிலுள்ள, தார்மணி பல உடன் இயம்ப - மாலையாகிய மணிகள் பலவும் ஒருங்கே ஒலிக்க, சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட - வண்டுகள் ஒலிக்கும் மலர்களையுடைய காடு பின்னேபோக, அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு - அரிய வினையை முடித்த தலைமை மேவிய ஊக்கத்துடன், நீ வந்து நின்றது - நீ இங்கு வந்து நின்றது. 1-4. கடவுட் கற்பொடு - தெய்வக் கற்புடன், குடிக்கு விளக்கு ஆகிய - குடிக்கு விளக்கம் ஆகிய, புதல்வன் பயந்த புகழ்மிகு சிறப்பின் நன்னராட்டிக்கு அன்றியும் - மகனைப் பெற்ற புகழ் மிக்க சிறப்பினை யுடைய நன்மையையுடைய தலைவிக்கே யல்லாமலும், எனக்கும் இனிது ஆகின்று - எனக்கும் இனிமையைத் தருவதாகின்றது; நின் ஆயுள் சிறக்க - நின் ஆயுள் சிறந்திடுவதாக. (முடிபு) சீர்மிகு குரிசில்! செக்கர் வானம் சென்ற பொழுதில், நற்றேர் மணி இயம்ப, கானம் பிற்பட, செம்மல் உள்ளமொடு நீ வந்து நின்றது, நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும் இனிதா கின்று; நின் ஆயுள் சிறக்க. (வி-ரை) கடவுட் கற்பு - தெய்வத்தன்மையையுடைய கற்பு. கற்புடை மகளிர் வேண்டுங்கால் மழையும் பெய்விப்பாராகலின் அவரது கற்பு தெய்வத்தன்மை யுடையதாயிற்று. `கற்புக் கடம்பூண்ட இத்தெய்வமல்லது, பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால், வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது, நீணில வேந்தர் கொற்றம் சிதையாது, பத்தினிப் பெண்டி ரிருந்த நாடு'1 என்பதுங் காண்க. கடவுட் கற்பொடு புதல்வன் பயந்த சிறப்பினையுடைய நன்னராட்டி என்று இயையும். புதல்வன் குடியை விளங்கச் செய்பவன் ஆகலின், குடிக்கு விளக்காகிய புதல்வன் என்றாள். மனைவாழ்க்கை மகளிர்க்குக் கற்பொழுக்கமும், நன்மக்கட்பேறும் இன்றியமையாதன என்பது, `மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் - நன்கலம் நன்மக்கட் பேறு'2 என்னும் பொய்யா மொழியானும் அறியப்படும். `மனைக்கு விளக்கம் மடவார்' 3 என்பது பற்றிக் குடிக்கு விளக்காகிய என்பதனைத் தலைவிக்கு ஏற்றியுரைத்தலுமாம். நன்னராட்டி - மனைமாட்சியாய நன்மையெல்லாம் உடையவள். கணவன் கூறிய சொற்பிழையாது ஆற்றியிருந்த அருமைப்பாடு தோன்றத் தலைவி இங்ஙனம் சிறப்பித்துக் கூறப் பெற்றாள். பிரிவாற்றாது தலைவி வருந்துந்தோறும் தானும் உடன் வருந்தி, அரிதின் ஆற்றுவித்துக் கொண்டிருந்தவள் ஆகலின், நீ வந்து நின்றது எனக்கும் இனிதாகின்றது என்று தோழி கூறினாள். பிரிந்த தலைவன் மீண்டு வந்ததேயன்றி அவன் அரிய வினையை முடித்த பெருமிதத் துடன் தேரின் மணி ஒலிக்கவந்து நின்ற தோற்றம், தலைவனது ஆக்கத்தை விரும்பும் தலைவிக்குக் கழிபேரின்பம் பயப்பதாகலின், செம்மலுள்ளமொடு மணி இயம்ப நீ வந்து நின்றது இனிதாகின்று என்றாள். தலைவன் தேர் வந்த விரைவு தோன்றக் கானம் பிற்பட என்றாள். செல்கதிர் - மேற்றிசைக்கட்சென்று மறையும் கதிர். துளர் - களை. தார் மணி - மாலையாகக் கோத்த மணிகள். தலைவன் போந்த காட்டின்கண் முல்லை, கள்ளியின் புன் தலையை மறைந்திருப்பது, தலைவி தன் பிரிவாலுளதாகிய வருத்தம் புறந் தோன்றாமல் கற்பினால் ஆற்றியிருத்தலையும், மறைத்த பூவை உயிர்ப்பினால் நீக்கி நீரினைப் பருகிய கலை பிணையொடு வதிதல், தான் தலைவியின் மெலிவினை நீக்கி அவளுடன் இன்புற்று வதியப் போவதையும் அவனுக்குப் புலப்படுத்தி மனவெழுச்சி தருவன என்க. 185. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) எல்வளை ஞெகிழச் சாஅய் ஆயிழை நல்லெழிற் பணைத்தோள் இருங்கவின் அழியப் பெருங்கை அற்ற நெஞ்சமொடு நத்துறந்து இரும்பின் இன்னுயிர் உடையோர் போல 5. 1வலித்து வல்லினர் காதலர் வாடல் ஒலிகழை நிவந்த நெல்லுடை நெடுவெதிர் கலிகொள் மள்ளர்வில் விசையின் உடையப் பைதற வெம்பிய கல்பொரு பரப்பின் வேனில் அத்தத் தாங்கண் வானுலந்து 10. அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில் பெருவிழா விளக்கம் போலப் பலவுடன் இலைஇல மலர்ந்த இலவமொடு நிலையுயர் பிறங்கல் மலைஇறந் தோரே. - பாலைபாடிய பெருங்கடுங்கோ. (சொ-ள்) 5-13. வாடல் ஒலி கழை நிவந்த நெல் உடை நெடு வெதிர் - வாடுதலுற்ற ஒலிக்கின்ற மேல்நோக்கி எழுந்த தண்டினையும் நெற்களையுமுடைய நீண்ட மூங்கில், கலிகொள் மள்ளர் வில் விசையின் உடைய - ஆரவாரம் கொண்ட மறவரது வில்லினின் றெழும் அம்பின் விசையாற் பிளந்திட, பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின் - பசுமை அறக் காய்ந்த பருக்கைகள் பொருகின்ற இடத்தினையுடைய, வேனில் அத்தத்து ஆங்கண் - வேனிலான் உழந்த காட்டிடத்தே, வான் உலந்து அருவி ஆன்ற உயர் சிமை மருங்கின் - மேகம் பெய்யா தொழிதலின் அருவிகள் இல்லையாகிய உயர்ந்த சிகரங்களில், பெருவிழா விளக்கம் போல - பெரிய கார்த்திகை விழாவிற்கு இடும் விளக்குகளைப் போல, பல உடன் இலை இல மலர்ந்த இலவமொடு - இலையே இல்லனவாய்ப் பலவும் ஒருங்கே மலர்ந்த இலவ மரங்களைக் கொண்டு, நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோர் - உயர்ந்த நிலையையுடைய பக்க மலையினை யுடைய பெருமலையினைத் தாண்டிச் சென்றோராய நம் தலைவர்; 1-5. ஆய் இழை நல் எழில் பணைத்தோள் - ஆய்ந்தெடுத்த அணிகளையும் நல்ல அழகினையுமுடைய மூங்கில் போலும் நமது தோள், எல்வளைஞெகிழச் சாஅய் - ஒளிபொருந்திய வளை நெகிழும்படி மெலிந்து, இருங்கவின் அழிய - பெரிய அழகு கெடுமாறு, பெரு கை அற்ற நெஞ்சமொடு நம் துறந்து - பெரிய செயலற்ற நெஞ்ச மோடிருக்கும் நம்மைக் கைவிட்டு, இரும்பின் இன் உயிர் உடையோர் போல - இரும்பினால் இயன்ற இனிய உயிரை உடையார்போல, வலித்து வல்லினர் - வலித்திருக்க வன்மையுடை யோராயினர். (முடிபு) மலையிறந்தோர் ஆய நம் காதலர், நம் பணைத்தோள் சாஅய்க் கவின் அழிய நத்துறந்து இரும்பின் இன்னுயிர் உடையோர் போல வலித்து வல்லினர். (வி-ரை) நெஞ்சமொடு இருக்க என ஒருசொல் விரித்துரைக்க. தாம் எய்தும் துன்பம் கருதி இரங்கித் தலைவர் வாராதிருத்தலின் இரும்பின் இன்னுயிர் உடையோர்போல வலித்து வல்லினர் என்றாள். நம்மை இரும்பாலியன்ற உயிருடையார்போலக் கருதி வாராதிருக் கின்றார் என்றுரைத்தலுமாம். 186. மருதம் (தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப இல்லிடைப் பரத்தை சொல்லி நெருங்கியது.) வானம் வேண்டா வறனில் வாழ்க்கை நோன்ஞாண் வினைஞர் கோளறிந்து ஈர்க்கும் மீன்முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை நீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகலிலை 5. 1இருங்கயம் துளங்கக் காலுறு தோறும் பெருங்களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு எழுந்த கௌவையோ பெரிதே நட்பே கொழுங்கோல் வேழத்துப் புணைதுணை யாகப் புனலாடு கேண்மை அனைத்தே அவனே 10. ஒண்டொடி மகளிர் 2பண்டையாழ் பாட ஈர்ந்தண் முழவின் எறிகுணில் விதிர்ப்பத் தண்நறுஞ் சாந்தம் கமழும் தோள்மணந்து இன்னும் பிறள்வயி னானே மனையோள் எம்மொடு புலக்கும் என்ப 3வென்வேல் 15. மாரி அம்பின் மழைத்தோல் பழையன் காவிரி வைப்பிற் போஒர் அன்னஎன் செறிவளை யுடைத்தலோ இலனே 4உரிதினின் யாந்தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர் திருநுதல் பசப்ப நீங்கும் 20. கொழுநனுஞ் சாலுந்தன் உடனுறை பகையே. - பரணர். (சொ-ள்) 1-7. வானம் வேண்டா வறன் இல் வாழ்க்கை - மழைபெய்தலை வேண்டாத வறுமையுறுத லில்லாத வாழ்க்கை யினையுடைய, நோன் ஞாண் வினைஞர் - வலிய தூண்டிற் கயிற்றினை யுடைய மீன் பிடிப்போர், கோள் அறிந்து ஈர்க்கும் - (மீன் இரை கோத்த முள்ளினைப்) பற்றியது உணர்ந்து இழுக்கும், மீன் முதிர் இலஞ்சி - மீன் மிக்க நீர்நிலையில், கலித்த தாமரை நீர் மிசை நிவந்த நெடு தாள் அகல் இலை - தழைத்த தாமரையின் நீர்மீது உயர்ந்த நெடிய காம்பினையுடைய அகன்ற இலையை, இருகயம் துளங்க கால் உறுதோறும் - பெரிய குளம் அலையக் காற்று அடிக்குந்தோறும், பெரு களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு - பெரிய களிற்றி யானையின் காதுபோல அசைவிக்கும் ஊரனால், எழுந்த கௌவையோ பெரிதே - எனக்கு உண்டாய அலரோ பெரிதாகும் ஆயினும்; 7-9. நட்பு - அவன் நட்போ, கொழு கோல் வேழத்துப் புணை துணை ஆக - செழித்த கொறுக்கங்கழியாலாய புணையினைத் துணையாகக்கொண்டு, புனல் ஆடு கேண்மை அனைத்தே - புனல் விளையாடும் நட்பின் அளவினதே; 9-13. அவனே - அத் தலைவன்றான், ஒள் தொடி மகளிர் பண்டையாழ் பாட - ஒள்ளிய தொடியினையுடைய மகளிர் பழைய யாழினைப் பாடவும், ஈர் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப - மிக்க தண்மை வாய்ந்த முழவினைக் குறுந்தடியால் அடிக்கவும், தண் நறும் சாந்தம் கமழும் தோள் மணந்து - தண்ணிய நறிய சந்தனம் நாறும் தோளைக் கூடி, இன்னும் பிறள் வயினான் - இன்னும் பிறளிடத்தேயுள்ளான் ஆவன்; அங்ஙனமாகவும்; 13-14. மனையோள் எம்மொடு புலக்கும் என்ப - அவன் மனைவி எம்முடன் வெறுக்கின்றாள் என்பர்; 14-17. வென் வேல் மாரி அம்பின் மழைத் தோல் பழையன் - வெற்றி பொருந்திய வேலையும் மழைத்துளி போன்ற மிக்க அம்பினையும் மேகம்போலும் கரிய கேடகத்தினையும் உடைய பழையன் என்பானது, காவிரி வைப்பின் போஓர் அன்ன - காவிரி நாட்டிலுள்ள போர் என்னும் ஊரினை ஒத்த, என் செறி வளை உரிதினின் உடைத்தலோ இலன் - எனது நெருங்கிய வளைகளை உரிமையால் உடைத்த லொன்றுஞ் செய்திலேன்; எனவே, 18-20. யாம் தன் பகையேம் அல்லேம் - யாம் அவளுக்குப் பகையாவேம் அல்லேம், சேர்ந்தோர் திருநுதல் பசப்ப நீங்கும் - தன்னைச் சேர்ந்தோரது அழகிய நெற்றி பசந்திட அவர்களை ஒழித்து நீங்கும், கொழுநனும் - அவள் கணவன், தன் உடன் உறைபகை சாலும் - தன்னுடன் கூடியுறையும் பகைவனாதற்குப் பொருந்து வானாவன். (முடிபு) ஊரனொடு எனக்கு எழுந்த கௌவையோ பெரிதே; நட்பே வேழத்துப் புணை துணையாகப் புனலாடு கேண்மை அனைத்தே; அவனே இன்னும் பிறள் வயினானே; மனையோள் எம்மொடு புலக்கும் என்ப; செறிவளை உடைத்தலோ இலேன்; யாம் தன் பகையேம் அல்லேம்; கொழுநன் தன் உடனுறை பகை சாலும். (வி-ரை) மீன் பிடிக்கும் வினைஞர் உழவினால் நெல் முதலியன விளைத்தல் இலராகலின் அவரது வாழ்க்கை வானம் வேண்டா வாழ்க்கை எனவும், அன்னராயினும் அவர் பிடிக்கும் மீனே அவருக்குப் பெரியதொரு வருவாயாகலின், வறனில் வாழ்க்கை எனவும் கூறப் பட்டது. நோன்ஞாண் - தூண்டிலின் வலிய கயிறு; அதுகொண்டு வினை செய்தலின் அவர் நோன்ஞாண் வினைஞர் எனப்பட்டார். கோள் - இரும்பிற்கோத்த இரையைப் பற்றுகை. இனி, வலிய கயிற்றையுடைய வலையெனக் கொண்டு, அஃது அகப்படுத்தமை அறிந்து ஈர்க்கும் என்றுரைத்தலுமாம். புணை துணையாக நீராடுவார் நீராட்டு முடிந்தவுடன் அப் புணையை விடுத்து அகறல் போல, தலைவன் என்பால் வந்து அகன்றனன் என்பாள், நட்பு கேண்மை அனைத்து என்றாள். கேண்மை - புணையினிடத்துளதாய கேண்மை; குறிப்பு மொழி. இனி, நட்பு ஒரு நாள் புணைதுணையாகப் புனலாடிய அவ்வளவிற்றே என்று ரைத்தலுமாம்; "நீ வெய்யோளொடு வேழவெண் புணை தழீஇ ....... நெருநலாடினை புனலே"1 என முன் வந்தமையுங் காண்க. ஒண்டொடி மகளிர் - விறலியர்; பரத்தையருமாம். தலைவன் சேரிப்பரத்தையொடு கூடி யொழுகுதலை பரத்தையர் சேரியினின் றெழும் யாழொலியும் முழவோசையுமே யாவருமறியப் புலப் படுத்தும்; அங்ஙனமாகவும் தலைவி எம்மொடு புலத்தல் பொருந்தா தென்பது தோன்ற, பாடவிதிர்ப்பத் தோள் மணந்து பிறள்வயினான் எனவும், எம்மொடு புலக்கு மென்ப எனவும் இற்பரத்தை கூறினா ளென்க. மற்றும், தலைவன் தலைவியையும் என்னையும் கையகன்று சேரிப்பரத்தையர்மாட்டு மருவி யொழுகுதலால் எனக்குளதாய வெறுப்பினை என் வளையை உடைத்துக் காட்டிற்றிலேன்; அது கொண்டே அவன் என்னுடன் உளனாகத் தலைவி கருதினாள்போலு மென்பாள், "செறிவளை யுடைத்தலோ இலனே" என்றாள்; குல மகளிரல்லாத அலவற் பெண்டிர் முதலாயினார் வெறுப்பினால் வளையுடைத்தல் செய்வரென்பது, "என்னோடு திரியேனாயின்..... உடைகவென், நேரிறை முன்கை வீங்கிய வளையே"2 என்பதனாலறிக. இலன்: அன் விகுதி தன்மைக்கண் வந்தது. கொழுநனும்: உம் : அசை நிலை. இனி, சேரிப்பரத்தையரையும் விடுத்துத் தலைவியுடன் சென்று உறைவானென்பது தோன்றத் `தன் உடனுறை பகை' என்றாள்; உடனுறைந்த கொழுநன் பகையாதல் சாலும் எனக் கூட்டியுரைத்தலுமாம். 187. பாலை (பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉமாம்.) தோள்புலம் பகலத் துஞ்சி நம்மொடு நாள்பல நீடிய கரந்துறை புணர்ச்சி நாணுடை மையின் நீங்கிச் சேய்நாட்டு அரும்பொருள் வலித்த நெஞ்சமோ டேகி 5. நம்முயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி வார்கழல் பொலிந்த வன்கண் மழவர் பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம் 10. புலம்புறுங் கொல்லோ தோழி 1சேணோங்கு அலந்தலை ஞெமையத் தாளில் ஆங்கண் 2கல்சேர்பு இருந்த சில்குடிப் பாக்கத்து எல்விருந்து அயர ஏமத்து அல்கி மனையுறை கோழி அணல்தாழ்பு அன்ன 15. கவையொண் தளிர கருங்கால் யாஅத்து 3வேனில் வெற்பில் கானங் காய முனையெழுந் தோடிய 4கெடுநாட் டாரிடைப் பனைவெளிறு அருந்து பைங்கண் யானை ஒண்சுடர் முதிரா 5இளங்கதிர் அமையத்துக் 20. கண்படு பாயல் கையொடுங்கு அசைநிலை வாள்வாய்ச் சுறவின் பனித்துறை நீந்தி நாள்வேட்டு எழுந்த நயனில் பரதவர் வைகுகடல் அம்பியில் தோன்றும் மைபடு மாமலை விலங்கிய சுரனே. - மாமூலனார். (சொ-ள்) 10. தோழி-, 1-4. தோள் புலம்பு அகல நம்மொடு துஞ்சி - நமது தோள் தனிமை யகல நம்முடன் துயின்று, நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி - பலநாள் நீட்டித்த களவுப்புணர்ச்சியை, நாண் உடைமையின் நீங்கி - வினையின்றி யிருத்தற்கு நாணுதல் உடைமையானே நீங்கி, சேய் நாட்டு அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு - தூர நாட்டிலே அரிய பொருளை ஈட்டத் துணிந்த நெஞ்சத்துடன்; 14-24. மனை உறை கோழி - மனையில் வதியுங் கோழியின், அணல் தாழ்பு அன்ன - தொங்குகின்ற தாடியை யொத்த, கவை ஒண்தளிர கருங்கால்யாஅத்து - கவர்ந்த ஒள்ளிய தளிரினையும் கரிய அடியினையும் உடைய யா மரங்களையுடைய, வேனில் வெற்பில் கானம் காய - வேனில் வெப்பம் வாய்ந்த மலையை யடுத்த காடு காய்ந்திட, முனை எழுந்து ஓடிய கெடுநாட்டு ஆர் இடை - காட்டரணிலுள்ளார் குடியெழுந்தோடிய பாழ் நாட்டின் அரிய இடத்தே, பனை வெளிறு அருந்து பைங் கண் யானை - பனங்குருத்தைத் தின்னும் பசிய கண்ணினையுடைய யானை, ஒள் சுடர் முதிரா இளம் கதிர் அமையத்து - ஒள்ளிய சுடர் முதிராத இளைய ஞாயிற்றையுடைய காலையிலே, கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை - துயிலுமிடத்தே செயலொடுங்கி அசைந்து கொண்டிருக்கும் நிலையானது, வாள் வாய்ச் சுறவின் பனி துறை நீந்தி - வாள் போலும் வாயினையுடைய சுறா மீன்களுள்ள குளிர்ந்த துறைகளை நீந்திச் சென்று, நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் - நாட்காலத்தே மீன் வேட்டை குறித்து எழுந்த நயமற்ற பரதவருடைய, வைகு கடல் அம்பியில் தோன்றும் - கடலிடத்தே பொருந்திய தோணி போலத் தோன்றாநிற்கும், மை படு மா மலை விலங்கிய சுரன் - மேகம் பொருந்திய பெரிய மலை குறுக்கிட்ட பாலையின் கண்ணே; 10-13. சேண் ஓங்கு அலந்தலை ஞெமையத்து - நெடுந்தூரம் உயர்ந்த காய்ந்த உச்சியினையுடைய ஞெமை மரங்களையுடைய, ஆள் இல் ஆங்கண் - ஆள் வழக்கற்ற இடங்களில், கல் சேர்பு இருந்த சில்குடி பாக்கத்து - மலையைச் சார்ந்திருந்த சில குடிகளையுடைய பாக்கத்தே, எல் விருந்து அயர - இரவில் விருந்து செய்ய, ஏமத்து அல்கி - பாதுகாவலாகத் தங்கி; 4-5. ஏகி - தொடர்ந்து சென்று, நம் உயர்வு உள்ளினர் - நமது உயர்ச்சியைக் கருதினர்; (அதனால்), 5-10. கறுத்தோர் - சினந்தெழுந்த பகைவரது, தெவ்முனை சிதைத்த கடும்பரிப் புரவி - பகைப்புலம் தொலைத்த கடிய செல வினை யுடைய குதிரைகளையுடைய, வார்கழல் பொலிந்த - நீண்ட கழலாற் பொலிவுற்ற, வன்கண் மழவர் - தறுகண்மையினை யுடைய மழவர் செய்யும், பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன - பூந்தொடை விழா என்னும் விழாவின் முதல்நாளை யொத்த பொலிவினை யுடைய, தரு மணல் ஞெமிரிய திருநகர் முற்றம் - கொணர்ந்திட்ட மணல் பரந்த அழகிய மனையின் முற்றம், புலம்புறும் கொல்லோ - தனிமை யுறுமோ? (முடிபு) தோழி! காதலர், நம்மொடு நீடிய கரந்துறை புணர்ச்சியை நாணுடைமையின் நீங்கி, அரும்பொருள் வலித்த நெஞ்சமொடு, மலை விலங்கிய சுரத்தின்கண்ணே, பாக்கத்தே எல்விருந்து அயர ஏமத்து அல்கி, ஏகி நம் உயர்வு உள்ளினர்; அதனால் திருநகர் முற்றம் புலம்புறுங் கொல்லோ? (வி-ரை) தோள் புலம்பு அகலத் துஞ்சி என்றது, தோளிலே துயின்று என்றபடி. நாணுடைமை - போகம் வேண்டி ஆடவர்க்கு உயிராகிய வினையை யொழிந்திருத்தற்கு நாணுதலுடைமை. சேய் நாட்டு அரும் பொருள் - சேய்நாட்டிற் சென்று தேடும் அரிய பொருள். நம் உயர்வு - வறியோர்க்கு அளித்தல், விருந்து புறந்தருதல் முதலிய இல்லறம் புரிந்து நாம் மேம்படுத்தல்; அதற்குப் பொருள் இன்றியமையாதாகலின், பொருள்வயிற் பிரிந்தாரை நம் உயர்வு உள்ளினர் என்றாள். ஏகி உள்ளினர் என்பதனை உள்ளி ஏகினர் என மாறுக. பூந்தொடை விழவு, படைக்கலம் பயின்ற இளைய வீரரை அரங்கேற்றுவிக்கும் விழா. தொடை - அம்பு தொடுத்தல். தலை நாளன்ன பொலிவினையுடைய முற்றமென விரித்துரைக்க. தலைவர் பிரிவிற்குளதாம் வருத்தத்தை முற்றம் தனிமை யுறுதலால் வருந்து வாள்போற் கூறினாள். அலந்தலை - அலந்த தலை; விகாரம். ஞெமையத்து; அத்து, சாரியை. சுரத்தைக் கடந்து ஏகுங்கால், பாக்கத்து எல்விருந்தயர ஏமத்து அல்கி ஏகுவார் என்றாள். கானங்கோழியின் வேறுபடுக்க, மனையுறை கோழி எனப்பட்டது. முனை - காட்டரண்; வேட்டுவர் ஊர். கெடு நாடு - வாழ்வா ரொழிந்து பாழ்பட்ட நாடு. வாள்வாய்ச் சுறவின் பனித்துறை நீந்தி என்றது, பரதவரின் அஞ்சாமையைப் புலப்படுத்தியவாறாம். பனை வெளிறு அருந்து என்றது, வேறு உணவின்மை குறித்தபடியாம். யானை அசை நிலை கடல் அம்பியிற் றோன்றும் சுரம் எனவும், மலை விலங்கிய சுரம் எனவும் தனித்தனி இயையும். 188. குறிஞ்சி (இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.) பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ இருண்டுயர் விசும்பின் வலனேர்பு வளைஇப் போர்ப்புறு முரசின் இரங்கி முறைபுரிந்து அறனெறி பிழையாத் திறனறி மன்னர் 5. அருஞ்சமத் தெதிர்ந்த பெருஞ்செய் ஆடவர் கழித்தெறி வாளின் நளிப்பன விளங்கும் மின்னுடைக் கருவியை ஆகி நாளும் கொன்னே செய்தியோ அரவம் பொன்னென மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சிப் 10. பொலிந்த ஆயமொடு காண்டக இயலித் தழலை வாங்கியும் தட்டை 1யோப்பியும் அழலேர் செயலை அந்தழை 2அசைஇயும் குறமகள் காக்கும் ஏனல் புறமும் தருதியோ வாழிய மழையே. - வீரை வெளியன் தித்தனார். (சொ-ள்) 1. பெருங் கடல் முகந்த இரு கிளை கொண்மூ - பெரிய கடல் நீரை முகந்துகொண்ட பெரிய கூட்டமாகிய மேகமே நீதான்; 2-8. இருண்டு - இருட்சியுற்று, உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ - உயர்ந்த வானில் வலமாக எழுந்து சுற்றி, போர்ப்பு உறு முரசின் இரங்கி - தோற்போர்வையுற்ற முரசுபோல முழங்கி, முறை புரிந்து அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர் - செங்கோன்மை மேற்கொண்டு அறநெறி வழுவாத செய்யுள் கூறுபாட்டினை அறிந்த மன்னரது, அரும் சமத்து எதிர்ந்த பெரும் செய் ஆடவர் - அரிய போரில் மாற்றாருடன் எதிர்த்துப் போர் செய்யும் பேராண்மைச் செய்கையையுடைய விரர்கள், கழித்து எறி வாளின் நளிப்பன விளங்கும் - உறையினின்றும் உருவி வீசும் வாளைப் போலச் செறிவனவாய் விளங்கும், மின் உடைக் கருவியை ஆகி - மின்னின் தொகுதியை உடையை ஆகி, நாளும் அரவம் கொன்னே செய்தியோ - நாடோறும் பயனின்றி ஆரவாரம் செய்து ஒழிதியோ? அன்றி; 8-14. பொன் என மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி - பொன்போல மலர்ந்த வேங்கைப் பூக்களாலாய நிறைந்த மாலையைத் தரித்து, பொலிந்த ஆயமொடு காண்தக இயலி - பொலிவுற்ற ஆயத்தாருடன் அழகு பொருந்த நடந்து, தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும் - தழலினைச் சுற்றியும் தட்டையினைத் தட்டியும், அழல் ஏர் செயலை அம்தழை அசைஇயும் - தீயின் கொழுந்தினை ஒத்த அசோகினது அழகிய தழையாலாய உடையினை யுடுத்தும், குறமகள் காக்கும் - குறமகளாய எம் தலைவி காக்கும், ஏனல் புறமும் மழை தருதியோ தினையினிடத்து மழையும் பொழிவையோ! வாழிய. (முடிபு) கொண்மூவே! நீதான் இருண்டு ஏர்பு வளைஇ இரங்கி விளங்கும் மின்னுடைக் கருவியை ஆகி, அரவம் கொன்னே செய்தியோ; குறமகள் காக்கும் ஏனல்புறம் மழையும் தருதியோ வாழிய! (வி-ரை) முறை புரிந்து பிழையா மன்னர் எனவும், திறன் அறி மன்னர் எனவும் தனித்தனி கூட்டுக. இறைமாட்சி யாவும் அடங்கத் திறன் அறி மன்னர் என்றனள். சமம் - அம் மன்னர் தம் மாற்றாருடன் செய்யும் போர். பெருஞ் செய் ஆடவர் - வஞ்சினங் கூறிப் போர் செய்யும் பேராண்மைச் செய்கையுடைய வீரர். மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சி என்றதனால் தினை விளையுங் காலம் பெறப்பட்டது. தழல் - பிரம்பு போல்வனவற்றாற் பின்னிச் சுற்றி ஒலியுண்டாக்கிக் கிளியை ஓட்டுவதோர் கருவி. தட்டை - மூங்கிற் றுண்டைப் பிளந்து தட்டி ஒலியுண்டாக்கிக் கிளி கடிவதொரு கருவி. இவற்றைத் `தழலும் தட்டையுங் குளிரும் பிறவும், கிளிகடி மரபின ஊழூழ் வாங்கி'1 என்பதன் உரையால் அறிக. தழை - தழை உடை. ஏனல் புறம் மழையுந் தருதியோ என உம்மையை மாறுக. உம்மையை அசையாக்கியும் மழையை விளியாக்கியும் ஏனலைப் புறந்தருதியோ என்றுரைத்தலுமாம். இதற்குக் கொண்மூ ஆகிய மழையே என்க. இரவிற் சிறைப்புறமாகவுள்ள தலைவனைத் தோழி இங்ஙனம் மழையாகக் கொண்டு குறிப்பினாலே நீ இங்ஙனம் வந்து ஒழுகுதலாற் பயனின்றி அலர் விளைக்கின்றாயோ? அன்றி வரைந்து கொள்வையோ? எனக் கூறி வரைவு கடாயினாள் என்க. (மே-ள்) `உடனுறை யுவமஞ் சுட்டுநகை சிறப்பெனக், கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே'1 என்னுஞ் சூத்திரத்துச் சுட்டு என்னும் உள்ளுறைக்கு இச்செய்யுளை எடுத்துக் காட்டி, `இதனுள் கொன்னே செய்தியோ அரவம் என்பதனால் பயனின்றி அலர் விளைத்தியோ எனவும் கூறி, ஏனற் புறமும் தருதியோ என்பதனால், வரைந்து கொள்வையோ எனவும் கூறித் தலைமகனை மழைமேல் வைத்துக் கூறலின் சுட்டாயிற்று. கொன்னே செய்தியோ என்றதனால் வழுவாயினும் வரைதல் வேட்கையாற் கூறினமையின் அமைந்தது' என்பர், நச். 189. பாலை (மகட் போக்கிய செவிலி சொல்லியது.) பசும்பழப் பலவின் கானம் வெம்பி விசும்புகண் அழிய வேனில் நீடிக் கயங்கண் அற்ற கல்லோங்கு வைப்பின் நாறுயிர் மடப்பிடி தழீஇ வேறு நாட்டு 5. விழவுப்படர் மள்ளரின் முழவெடுத் துயரிக் களிறதர்ப் படுத்த கல்லுயர் கவாஅன் வெவ்வரை அத்தஞ் சுட்டிப் பையென வயலையம் பிணையல் வார்ந்த கவாஅன் திதலை அல்குற் குறுமகள் அவனொடு 10. சென்று பிறளாகிய அளவை என்றும் படர்மலி 2எவ்வமொடு மாதிரம் துழைஇ மனைமருண் டிருந்த என்னினும் நனைமகிழ் நன்ன ராளர் கூடுகொள் இன்னியம் தேரூர் தெருவில் ததும்பும் 15. ஊரிழந் தன்றுதன் வீழ்வுறு பொருளே. - கயமனார். (சொ-ள்) 1-7. பசு பழம் பலவின் கானம் வெம்பி - செவ்வி வாய்ந்த பழத்தினைக் கொண்ட பலாமரங்களையுடைய காடு வெதும்ப, விசும்பு கண் அழிய வேனில் நீடி - மேகம் வானிடத்தினின் றொழிதலின் வேனில் வெப்பம் மிக, கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் - குளங்கள் தம்மிடத்தே நீரற்றிருக்கும் கற்கள் உயர்ந்த இடங்களில், நாறு உயிர் மட பிடி தழீஇ - பெருமூச்சுத் தோன்றும் இளைய பிடியைத் தழுவி, களிறு - களிறுகள், முழவு எடுத்து உயரி வேறு நாட்டு விழவுப் படர்மள்ளரின் - தங்கள் முழவுகளை எடுத்து உயர்த்துக்கொண்டு வேற்றுநாட்டில் நிகழும் விழாவினை நினைத்துச் செல்லும் மள்ளர்களைப் போல, அதர்ப்படுத்த - நெறிப்படுத்திச் சென்ற, கல் உயர் - கற்கள் உயர்ந்த, வெவ்வரை கவா அன் அத்தம் சுட்டி - கொடிய பக்க மலையைச் சார்ந்த சுரத்தினைச் செல்லத் துணிந்து; 8-15. வயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன் - வயலைக் கொடியாலாகிய அழகிய தழையுடை தாழ்ந்த துடையினையும், திதலை அல்குல் - தேமல் படர்ந்த அல்குலினையும் உடைய, குறுமகள் - இளையளாய என் மகள், பை யென அவனொடு சென்ற - மெல்லெனத் தன் தலைவனொடு சென்று, பிறள் ஆகிய அளவை - எங்கட்குப் பிறள் ஒருத்தி ஆகியபோது, என்றும் படர் மலி எவ்வமொடு - எக்காலத்தும் நினைவு மிக்க துன்பமொடு, மாதிரம் துழைஇ - திசையெல்லாம் தேடிவந்து, மனைமருண்டு இருந்த என்னினும் - மனையின்கண் மயங்கியிருந்த என்னைக் காட்டிலும், நனை மகிழ் நன்னராளர் கூடுகொள் இன்னியம் - கள்ளின் களிப்பினையுடைய நல்ல பாணர்களது ஒன்றுகூடி யொலிக்கும் வாச்சியங்கள், தேர் ஊர் தெருவில் ததும்பும் - தேர் ஓடும் பெருந் தெருக்களில் அறாது ஒலிக்கும், ஊர் - இவ் வூரானது, தன் வீழ்வு உறு பொருள் - தனது விருப்பம் மிக்கதொரு பொருளை, இழந்தன்று - இழந்ததாயிற்று. (முடிபு) கவாஅன் அத்தம் சுட்டி, குறுமகள், அவனொடு சென்று எமக்குப் பிறளாகிய அளவை, என்னினும் ஊர் தன் வீழ்வுறு பொருள் இழந்தன்று. (வி-ரை) வெம்பி, நீடி என்பவற்றை வெம்ப, நீட எனத் திரிக்க, கயம் - சுனையுமாம். மள்ளர் என்றது ஈண்டுக் கூத்தரை. முழவெடுத் துயரி வேறுநாட்டு விழவுப்படர் மள்ளர் என மாறுக. பொருளின் கண் மடப்பிடி தழுவி என்பதனை உவமையுடன் கூட்டி விறலியருடன் செல்லும் கூத்தர் எனவும், உவமையின்கண் முழவெடுத் துயரி என்பதனைப் பொருளுடன் கூட்டி முழவு போலும் பலாப் பழத்தினை ஏந்திச் செல்லுங் களிறு எனவும் உரைக்க. பிறந்த நாட்டொட்டுப் பேணி வளர்த்த எம்மைக் கையகன்று ஏதிலானொடு சென்றாள் என்பாள், `அவனொடு சென்று பிறள் ஆகிய அளவை, என்றாள். அவள் அன்னள் ஆயினும் அவள் பிரிவால் யான் எய்தும் துன்பம் இறப்பவும் பெரிது என்பாள், `என்றும் படர்மலி எவ்வமொடு மாதிரந்துழைஇ மனைமருண் டிருந்த என்னினும் என்றும், தான் எய்துந் துன்பத்தினும் நற்றாயும் ஆயத்தாரும் முதலியோர் அவளை இழந்து எய்தும் துன்பம் பெரிதென்பாள், `என்னினும், ஊரிழந்தன்றுதன் வீழ்வுறு பொருளே' என்றும் கூறினாள். ஊர் என்றது ஈண்டு, நற்றாய் ஆயத்தார் முதலியோரைக் குறித்து நின்றது. 190. நெய்தல் (தோழி, செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.) திரையுழந் தசைஇய நிரைவளை ஆயமொடு உப்பின் குப்பை ஏறி எற்பட வருதிமில் எண்ணும் துறைவனொடு ஊரே ஒருதன் கொடுமையின் அலர்பா டும்மே 5. அலமரல் மழைக்கண் அமர்ந்து நோக்காள் அலையல் வாழிவேண் டன்னை உயர்சிமைப் பொதும்பில் புன்னைச் சினைசேர்பு இருந்த வம்ப நாரை இரிய ஒருநாள் பொங்குவரல் ஊதையொடு புணரி அலைப்பவும் 10. உழைக்கடல் வழங்கலும் உரியன் அதன்தலை இருங்கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி வயற்சுறா எறிந்தென வலவன் அழிப்ப எழில்பயங் குன்றிய சிறையழி தொழில நிரைமணிப் புரவி விரைநடை தவிர 15. இழுமென் கானல் விழுமணல் அசைஇ ஆய்ந்த பரியன் வந்திவண் மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே. - உலோச்சனார். (சொ-ள்) 6. அன்னை - தாயே, வாழி-, வேண்டு - நான் கூறுவதனை விரும்பிக் கேட்பாயாக; 6-10. உயர் சிமை பொதும்பில் - உயர்ந்த உச்சியையுடைய சோலையில், புன்னை சினை சேர்பு இருந்த - புன்னை மரத்தின் கிளையைச் சேர்ந்திருந்த, வம்ப நாரை இரிய - புதிய நாரை ஒழிந்திட, ஒரு நாள் - முன்பு ஒரு நாள், பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும் - பொங்குதலுடன் வரும் வடகாற்றுடன் அலைகள் அலைத்துக் கொண்டிருக்கவும், உழை கடல் வழங்கலும் உரியன் - ஒரு தலைவன் கடலோரத்தே தேரில் வருதற்கும் உரியன் ஆயினன்; 10-17. அதன் தலை - அதன்மேலும், இரு கழிப் புகாஅர் - பெரிய கழியினையுடைய துறைமுகத்தே, வயச்சுறா பொருந்தத் தாக்கி எறிந்தென - வலிய சுறாமீன் தம் உடம்பிற் பொருந்தத் தாக்கி எறிந்ததாக, வலவன் அழிப்ப - தேர்ப்பாகன் செலவினை நிறுத்தலால், எழில் பயம் குன்றிய - எழுச்சியும் பயனும் குன்றியனவும், சிறை அழி தொழில - பூட்டு அழிந்த செய்கையை யுடையனவுமாகிய, நிரை மணிப் புரவி - நிரைத்த மணிமாலை பூண்ட குதிரைகள், விரை நடை தவிர - விரைந்து செல்லும் செலவு ஒழிந்து தங்கினவாக, இழும் என் கானல் - இழுமென்னும் ஒலியையுடைய கானலிடத்தே, விழுமணல் அசைஇ - சிறந்த மணலில் தங்கி, ஆய்ந்த பரியன் இவண் வந்து - வேறு சிறந்த புரவியுடன் இங்கு வந்து, மான்ற மாலை சேர்ந்தன்று இலன் - மயங்கிய மாலைப் பொழுதில் தங்கியதும் இலன்; 5. அலமரல் மழைக்கண் அமர்ந்தும் நோக்காள் - அவனைச் சுழல்கின்ற குளிர்ந்த கண்களையுடைய நின் மகள் நோக்கினாளும் அல்லள்; அங்ஙனமாகவும்; 1-4. திரை உழந்து அசைஇய - திரையின் விளையாடி உழந்தமை யால் தளர்ச்சியுற்ற, நிரைவளை ஆயமொடு - நிரைத்த வளையினை யுடைய மகளிர் கூட்டத்துடன், (மைந்தர்கள்) உப்பின் குப்பை ஏறி - உப்பு மேட்டில் ஏறி நின்று, எல்பட - இருள்வர, வரு திமில் எண்ணும் துறைவனொடு - கரைக்கு மீண்டு வரும் படகுகளை எண்ணும் துறையையுடைய அத் தலைவனொடு நின் மகளைச் சார்த்தி, ஊர் - இந்த ஊரானது, ஒரு தன் கொடுமையின் - ஒப்பற்ற தனது கொடுமை யால், அலர் பாடும் - அலர் கூறா நிற்கும்; 6. அலையல் - ஆதலால் நீ அவளை வருத்தாதே கொள். (முடிபு) அன்னை! வாழி! வேண்டு; ஒரு தலைவன், ஒருநாள் ஊதையொடு புணரி அலைப்பவும் உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன் தலை வயச்சுறா எறிந்தென, வலவன் அழிப்ப, புரவிகள் விரைநடை தவிர, அசைஇய ஆய்ந்த பரியினன், மாலை இவண் சேர்ந்தன்றோ இலன்; மழைக்கண் நின்மகள் அவனை அமர்ந்து நோக்கினாளல்லள்; அங்ஙனமாகவும் நின்மகளை அத் துறைவனொடு சார்த்தி, இவ்வூர் தன் கொடுமையின் அலர் பாடும்; ஆதலின் நீ இவளை அலையல். (வி-ரை) ஆயமொடு என்றமையால், மைந்தர் என்பது வருவிக்கப் பட்டது. எண்ணும் என்னும் பெயரெச்சம், துறை என்னும் இடப் பெயர் கொண்டது. துறையையுடைய தலைவனொடு சார்த்தி என விரித்துரைக்க. ஊர் என்பது - கௌவைப் பெண்டிரை. மழைக்கண்: ஆகுபெயர். வழங்கலும் என்ற உம்மை வருதலருமையை விளக்கி நின்றது. அதன்தலை என்றது; ஊதையொடு புணரி அலைத்தலே அன்றி அதன்மேலும் என்றபடி. வயச் சுறா எறிந்தென வலவன் அழிப்ப என்றதனால், குதிரை புண்பட்டமை பெற்றாம். புண்பட்டமை யால் வலவன் பூட்டவிழ்த்து விட்ட குதிரை நடைதவிர்ந்திருக்க, அவன் மணலில் ஓரிடத்தே தங்கியிருந்ததன்றி வேறு குதிரை பூண்ட தேருடன் யாங்கள் இருக்குமிடத்திற்கு வந்து இருண்ட மாலைப் பொழுதில் தங்கினானல்லன் என்றும், தலைவியும் அவனை விரும்பி நோக்கினாளல்லள் என்றும் கூறி, அங்ஙனமாகலின் ஊர் வாளாது அலர் கூறுவது பற்றி நீ தலைவியை வருத்தாதே என்று கூறுவாள் போல், தலைவன் எதிர்ப்பாட்டைக் குறிப்பிற் புலப்படுத்தித் தோழி, செவிலிக்கு அறத்தொடு நின்றாள் என்க. 191. பாலை (தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.) அத்தப் பாதிரித் துய்த்தலைப் புதுவீ எரியிதழ் அலரியொடு இடைபட விரைஇ 1வெண்தோட்டுத் தொடுத்த வண்டுபடு கண்ணித் தோல்புதை சிரற்றடிக் கோலுடை உமணர் 5. ஊர்கண் டன்ன ஆரம் வாங்கி அருஞ்சுரம் இவர்ந்த அசைவில் நோன்தாள் திருந்துபகட் டியம்பும் கொடுமணி புரிந்தவர் மடிவிடு வீளையொடு கடிதெதி ரோடி ஓமையம் பெருங்காட்டு வரூஉம் வம்பலர்க்கு 10. ஏமஞ் செப்பும் என்றூழ் நீளிடை அரும்பொருள் நசைஇப் பிரிந்துறை 2வல்லி சென்றுவினை எண்ணுதி யாயின் நன்றும் 3உரைத்திசின் வாழிஎன் நெஞ்சே நிரைமுகை முல்லை அருந்தும் மெல்லிய வாகி 15. அறலென விரிந்த உறலின் சாயல் ஒலியிருங் கூந்தல் தேறுமென வலிய கூறவும் வல்லையோ மற்றே. - 4ஒரோடோகத்துக் கந்தரத்தனார். (சொ-ள்) 13. என் நெஞ்சே வாழி-, 1-12. அத்தப் பாதிரி துய் தலை புது வீ - பாலையிலுள்ள துய்யினை உச்சியிற் கொண்ட புதிய பாதிரிப் பூவை, எரி இதழ் அலரியொடு இடை பட விரைஇ - நெருப்புப் போன்ற இதழினை யுடைய அலரிப்பூவுடன் இடையிடையே கலந்து, வெண்தோட்டுத் தொடுத்த வண்டுபடு கண்ணி - வெண்மை பொருந்திய தாழம்பூவின் தோட்டில் வைத்துக் கட்டிய வண்டு பொருந்தும் கண்ணியினைத் தரித்த, தோல் புதை சிரற்று அடி - பொதிந்த செருப்பு ஒலிக்கும் அடியினையும், கோல் - கோலினையுமுடைய, உமணர் - உப்பு வாணிகருடைய, ஊர் கண்டன்ன - ஊர் திரண்டுவந்தாலொத்த, ஆரம் வாங்கி - வண்டிகளை இழுத்து, அரும் சுரம் இவர்ந்த - ஏறுதற்கு அரிய மேடுகளையுடைய காட்டில் ஏறி வந்த, அசைவு இல் நோன் தாள் திருந்து பகட்டு இயம்பும் கொடுமணி - தளர்வில்லாத வலிய தாளினையுடைய செவ்விய எருதுகளின் ஒலிக்கும் வளைந்த மணிகளின் ஒலி, புரிந்து அவர் மடி விடு வீளையொடு - அவர்கள் விரும்பி வாயினை மடித்து எழுப்பும் சீழ்க்கை யொலியொடு, கடிது எதிர் ஓடி - விரைந்து எதிரே சென்று, ஓமை அம் பெருங்காட்டு வரூஉம் வம்பலர்க்கு - ஓமை மரங்களையுடைய பெரிய காட்டில் வரும் புதியராய வழிச்செல்வார்க்கு, ஏமம் செப்பும் - பாதுகாவலைக் கூறும், என்றூழ் நீள் இடை - வெப்பம் மிக்க நெடிய காட்டிலே, அரும்பொருள் நசைஇ - அரிது ஈட்டும் பொருளை விரும்பி, பிரிந்து உறை வல்லி - நம் தலைவியைப் பிரிந்து உறையும் வன்மை யுடையை யாய், சென்று வினை எண்ணுதியாயின் - சென்று பொருள் ஈட்டும் வினையை எண்ணுவையானால்; 13-17. உறல் இன் சாயல் - உறுதற்கினிய மென்மைத்தன் மையையும், நிரை முகை முல்லை அருந்து - முல்லையின் நிரைத்த அரும்புகளை நிறையச் சூடி, மெல்லியவாகி - மென்மைத் தன்மையுடைய வாகி, அறல் என விரிந்த ஒலி இரும் கூந்தல் - கருமணல்போல விரிந்த தழைத்த கரிய கூந்தலையுமுடைய நம் தலைவி, தேறும் என - தெளிந்திருப்பாள் என்று, வலிய கூறவும் வல்லையோ - பிரிவுணர்த்தும் வலிய சொற்களைக் கூறவும் வன்மை யுடையையோ? வல்லையாயின்; 12-13. நன்றும் உரைத்திசின் - அவளிடத்தே சென்று பெரிதும் கூறி அவளைத் தேற்றுவாயாக. (முடிபு) உமணரது ஊர்கண்டன்ன ஆரம் வாங்கிச் சுரம் இவர்ந்த பகட்டு இயம்பும் கொடுமணி, அவர் வீளையொடு எதிர் ஓடி வம்பலர்க்கு ஏமம் செப்பும் என்றூழ் நீளிடைப் பொருள் நசைஇச் சென்று வினை எண்ணுதியாயின், இன்சாயலும் கூந்தலு முடைய இவள் தேறும் என வலிய கூறவும் வல்லையோ? வல்லை யாயின் நன்றும் உரைத்திசின். (வி-ரை) தோடு - தாழம்பூவின் இதழ். சிரற்று தோல் எனக் கொண்டு சிதறிய செருப்பு என்றலுமாம். கோல் - பகடு ஓட்டுங் கோல். ஆரம் - வண்டியின் உறுப்பு; வண்டிக்கு ஆகுபெயர். மிகப் பலவாகிய வண்டிகளுடன் உமணர் திரண்டு செல்லுந் தோற்றம் ஊர் எழுந்து செல்லுவது போலுமாகலின், உமணர் ஊர் கண்டன்ன ஆரம் என்றார். பகட்டின் மணி யோசையையும் உமணர் வீளை யொலியையும் செவியேற்ற வம்பலர் இக் காட்டில் ஏதம் இல்லை யென்று உணர்வ ராகலின், அவ்வொலிகள் வம்பலர்க்கு ஏமம் செப்பும் எனப்பட்டன. வல்லி - வலியையாய் என்னும் பொருட்டு; வவ்வி என்பது பாட மாயின், பிரிந் துறைதலை மனத்திற் கொண்டு என்க. பொருள் நசைஇ நீளிடைச் சென்று வினை எண்ணுதியாயின் எனக் கூட்டுக. அருந்து - ஆர்ந்து என்பதன் விகாரம். தேறு மென என்றதனால், வலிய என்றது, பொருளீட்டி விரைந்து வருவேம் என்னுஞ் சொற் களாதல் வேண்டும். கூறவும் வல்லையோ என்றது கூறுதற்கு அருமையை விளக்கி நின்றது. மற்று வல்லையல்லை என்னும் பொருள் தருதலின் வினைமாற்று; அசையுமாம். 192. குறிஞ்சி (தோழி, தலைமகனைச் 1செறிப்பு அறிவுறீஇ இரவுக்குறி மறுத்தது.) 2மதியரும் பன்ன மாசறு சுடர்நுதல் பொன்நேர் வண்ணம் கொண்டன்று அன்னோ யாங்கா குவள்கொல் தானே விசும்பின் எய்யா வரிவில் அன்ன பைந்தார்ச் 5. செவ்வாய்ச் சிறுகிளி சிதைய வாங்கிப் பொறைமெலிந் திட்ட புன்புறப் பெருங்குரல் வளைசிறை வாரணங் கிளையொடு கவர ஏனலும் 3இறக்குபொறை உயிர்த்தன பால்நாள் நீவந் தளிக்குவை யெனினே மால்வரை 10. மைபடு 4விடரகந் துழைஇ ஒய்யென அருவி தந்த அரவுமிழ் திருமணி பெருவரைச் சிறுகுடி மறுகுவிளக் குறுத்தலின் இரவும் இழந்தனள் அளியள் உரவுப்பெயல் உருமிறை கொண்ட உயர்சிமைப் 15. பெருமலை நாடநின் மலர்ந்த மார்பே. - 5பொதும்பில் கிழான் வெண்கண்ணனார். (சொ-ள்) 13-15. உரவுப் பெயல் உரும் இறைகொண்ட - வலிய மழையுடன் இடி தங்குதல் கொண்ட, உயர்சிமை பெருமலை நாட - உயர்ந்த உச்சியையுடைய பெரிய மலைநாட்டையுடைய தலைவனே; 3-8. விசும்பின் எய்யா வரிவில் அன்ன பைந்தார் செவ்வாய் சிறு கிளி - வானிலுள்ள எய்யப் பெறாத அழகிய வில்லை ஒத்த பசிய மாலையினையும் சிவந்த வாயினையும் உடைய சிறிய கிளி, சிதைய வாங்கி - தினை சிதையும்படி கொய்து, பொறை மெலிந்திட்ட புல்புறப் பெருகுரல் - சுமக்கலாற்றாது போகட்ட புல்லிய புறத்தினை யுடைய பெரிய கதிரினை, வளை சிறை வாரணம் கிளையொடு கவர- வளைந்த சிறகுகளையுடைய கானங்கோழி தன் இனத்துடன் கவர்ந்துண்ணுமாறு, ஏனலும் இறங்கு பொறை உயிர்த்தன - தினையும் வளைந்த கதிர்களை ஈன்றன (ஆகலின் எம் தலைவி இனி இற்செறிக்கப்படுவள்); 8-12. பால்நாள் நீ வந்து அளிக்குவை எனினே - பாதி இரவில் நீ வந்து அளிப்பாய் என்று கூறின், மால் வரை மை படு விடரகம் துழைஇ - பெரிய மலையின் இருள் பொருந்திய குகையின் இடங் களைத் துழாவி, ஒய் என அருவிதந்த அரவு உமிழ் திருமணி - விரைய அருவி கொண்டு வந்த பாம்பு உமிழ்ந்த அழகிய மணி, பெருவரை சிறு குடி மறுகு விளக்குறுத்தலின் - பெரிய மலையிலுள்ள எமது சீறூரின் தெருவினை இருளகற்றி விளங்கச் செய்தலாலே, 15. நின் மலர்ந்த மார்பு - நின் அகன்ற மார்பின் கூட்டத்தினை; 13. இரவும் இழந்தனள் - இரவினும் இழந்தாள் ஆவள்; 1-3. மதி அரும்பு அன்ன - இளைய மதியினை யொத்த, மாசு அறு சுடர் நுதல்- இவளது குற்றமற்ற ஒள்ளிய நெற்றி, பொன் நேர் வண்ணம் கொண்டன்று - பொன்னை யொத்த நிறத்தினைக் கொண்டது; அன்னோ - அந்தோ, யாங்கு ஆகுவள் கொல் - எங்ஙனம் ஆகுவளோ; 13. அளியள் - இரங்கத்தக்காள். (முடிபு) பெருமலை நாட! ஏனல் பொறை உயிர்த்தன; (ஆகலின் எம் தலைவி இனி இற்செறிக்கப்படுவாள்;) நீ பால்நாள் வந்து அளிக்குவை எனினே, அரவுமிழ் திருமணி மறுகு விளக்குறுத்தலின், நின் மார்பினை இரவும் இழந்தனள்; சுடர்நுதல் பொன் நேர் வண்ணம் கொண்டன்று; அன்னோ யாங்காகுவள் கொல்; அளியள். (வி-ரை) நுதல் பொன்நேர் வண்ணம் கொண்டன்று என்றது பசலை பூத்தது என்றபடி. விசும்பின் வில் என்க. எய்யா வில் என்றது வான வில்லிற்கு வெளிப்படை. வரி - அழகு. ஏனல் பொறை உயிர்த்தன என்றது, தினையறுக்குங் காலமாகலின் தலைவி இற்செறிக்கப் படுவள் என்பது கூறி, அதனால் பகற்குறி அரிதென்று உணர்த்திய வாறாம். திருமணி மறுகு விளக்குறுத்தலின் என்பதனால் இரவுக்குறி யிடையீடு உணர்த்தி, அதனால் அஃதும் அரிதென உணர்த்துவாள் நின் மார்பினை இரவும் இழந்தனள் என்றாள். இரவும் என்னும் உம்மை எச்சப் பொருட்டு. தானே என்பது கட்டுரைச் சுவைபட நின்றது. 193. பாலை (பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லித் தலைமகன் செலவு அழுங்கியது.) கானுயர் மருங்கில் கவலை யல்லது வானம் வேண்டா வில்லேர் உழவர் பெருநாள் வேட்டம் கிளையெழ வாய்த்த பொருகளத்து ஒழிந்த குருதிச் செவ்வாய்ப் 5. பொறித்த போலும் வானிற எருத்தின் அணிந்த போலுஞ் செஞ்செவி எருவை குறும்பொறை எழுந்த நெடுந்தாள் யாஅத்து அருங்கவட் டுயர்சினைப் பிள்ளை யூட்ட விரைந்துவாய் வழுக்கிய கொழுங்கண் ஊன்தடி 10. 1தொல்பசி முதுநரி வல்சி யாகும் சுரனமக் கெளிய மன்னே நன்மனைப் பன்மாண் தங்கிய சாயல் இன்மொழி முருந்தேர் முறுவல் இளையோள் பெருந்தோள் இன்துயில் கைவிடு கலனே. - மதுரை மருதனிளநாகனார். (சொ-ள்) 1-11. நெஞ்சே-, கான் உயர் மருங்கில் கவலை அல்லது- உயர்ந்த காட்டினிடத்தேயுள்ள கவர்த்த நெறிகளை யன்றி, வானம் வேண்டா வில் ஏர் உழவர் - மழையை வேண்டுதலில்லாத வில்லாகிய ஏரால் உழுதலைச் செய்யும் ஆறலைப்போர், கிளை எழ வாய்த்த - தம் கிளைஞருடன் எழாநிற்கக் கிடைத்த, பெருநாள் வேட்டம் - நன்னாள் வேட்டத்தில், பொரு களத்து ஒழிந்த - அவர்கள் பொருத களத்தில் ஆறு செல்வார் உடம்பினின்றும் உக்க, குருதி செவ்வாய் - குருதியினை உண்டமையால் சிவந்த வாயினையும், பொறித்த போலும் வால் நிற எருத்தின் - பொறித்து வைத்தாற்போலும் வெண்ணிறம் வாய்ந்த கழுத்தினையும், அணிந்த போலும் செஞ்செவி எருவை - செய்து சூட்டியது போலும் சிவந்த செவியினையுமுடைய கழுகு, குறும்பொறை எழுந்த நெடுந்தாள் யாஅத்து - குறிய மலையிடத்தே வளர்ந்த நெடிய அடியினையுடைய யா மரத்தின், அருங் கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட - அரிய கவட்டின்நின் றெழுந்த உயர்ந்த கிளைகளிலுள்ள தன் குஞ்சினை உண்பிக்க, விரைந்து வாய் வழுக்கிய கொழு கண் ஊன் தடி - விரைதலினாலே அக் குஞ்சின் வாயினின்றும் தவறி வீழ்ந்த கொழுமையுற்ற கண்ணாகிய ஊனின் துண்டு, தொல்பசி முதுநரி வல்சி ஆகும் சுரன் - பழைய பசியினையுடைய முதிய நரிக்கு உணவாகும் காடுகள், நமக்கு எளிய மன் - நாம் செல்லுதற்கு மிகவும் எளியனவே. ஆயினும்; 11-14. நல் மனை - நமது நல்ல மனையின் கண்ணுள்ள, பல் மாண் தங்கிய - பல மாண்பும் உற்ற, சாயல் - மென்மைத் தன்மையினையும், இன்மொழி - இனிய மொழியினையும், முருந்து ஏர் முறுவல் - மயிலிறகின் அடியினை ஒத்த பற்களையுமுடைய, இளையோள் - இளையோளாய நம் தலைவியின், பெருதோள் இன் துயில் - பெரிய தோளின்பா லெய்தும் இனிய துயிலினை. கைவிடுகலன் - கை விடுதலை ஆற்றேன். (முடிபு) நெஞ்சே! சுரன் நமக்கு எளியமன்; ஆயினும், இளையோள் பெருந்தோள் இன்துயில் கைவிடுகலன். (வி-ரை) உழுதொழில் செய்வார்க்கு மழை துணைக் காரணமாம் என்பது, `ஏரி னுழாஅர் உழவர் புயலென்னும், வாரி வளங்குன்றிக் கால்'1 என்பதனாற் பெற்றாம்; ஆயின், ஆறலைப்பாராகிய வில்லேர் உழவர்க்குக் காட்டின் கவர்நெறி யல்லது மழை துணையாதல் இல்லையாகலின், `கவலை யல்லது வானம் வேண்டா வில்லேர் உழவர்' என்றார். அவர்க்கு வேட்டை பெரிதும் வாய்த்த நாள் சிறந்த நாள் ஆகலின், அது பெருநாள் எனப்பட்டது. கிளையெழ என்பதற்கு ஆறு செல்வார் கிளையுடன் புறப்பட்டு வர என்றுரைத்தலுமாம். குருதிச் செவ்வாய் - குருதியை யுண்டமையாற் சிவந்த வாய் என விரித்துரைக்க. அணிந்தபோலும் செஞ்செவி என்ற கருத்து, `ஊன் பதித்தன்ன வெருவரு செஞ்செவி, எருவைச் சேவல்'2 என முன்னர்ப் போந்தமையுங் காண்க. யாமரத்தின் உயர்ச்சி மிகுதி கூறுவார் நெடுந்தாள் யாஅத்து என்றும், அருங்கவட்டு உயர் சினை என்றும் கூறினார். விரைந்து ஊட்ட என்று கூட்டி யுரைத்தலுமாம். எருவை குஞ்சிற்குக் கண்ணினைக் கொணர்ந்து உணவாகக் கொடுப்பது, `கண்ணுமிழ் கழுகின் கானம்'3 எனபதனாலும் அறியப் படும். தொல் பசி - பல்நாள் உணவின்மையால் எய்திய பசி. கொல் பசி என்னும் பாடத்திற்கு வருத்தும் பசி யென்றுரைக்க. தலைவன் சுரத்திற் செல்லுதற்கு அஞ்சுகின்றிலேன் என்பான், `சுரன் நமக்கு எளிய மன்' என்றும், எனினும் தலைவியின் தோளிற் பெறும் இனிய துயிலைக் கைவிட்டுப் போதல் இயலா தென்பான் `இளையோள் பெருந்தோள் இன்றுயில் கைவிடுகலனே' என்றும் கூறினான். அவள் கைவிடற்கு அரியாள் என்பதனைப் `பன் மாண் தங்கிய சாயல் இன்மொழி முருந்தேர் முறுவல் இளையோள்' என்பதனாற் கூறினான். 194. முல்லை (பருவங் கண்டு ஆற்றாமை மீதூரத் தலைமகள் சொல்லியது.) பேருறை தலைஇய பெரும்புலர் வைகறை ஏரிடம் படுத்த இருமறுப் பூழிப் புறமாறு பெற்ற பூவல் ஈரத்து ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால் 5. வித்திய மருங்கின் விதைபல நாறி இரலை நன்மான் இனம்பரந் தவைபோல் கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர் கறங்குபறைச் சீரின் 1இறங்க வாங்கிக் களைகால் கழீஇய பெரும்புன வரகின் 10. கவைக்கதிர் இரும்புறங் கதூஉ உண்ட குடுமி நெற்றி நெடுமாத் தோகை காமர் கலவம் பரப்பி ஏமுறக் கொல்லை யுழவர் 2கூழ்நிழல் ஒழித்த வல்இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து 15. கிளிகடி மகளிரின் விளிபடப் பயிரும் 3கார்மன் இதுவால் தோழி போர்மிகக் கொடுஞ்சி நெடுந்தேர் பூண்ட கடும்பரி விரியுளை நன்மான் கடைஇ வருதும் என்றவர் தெளித்த போழ்தே. - இடைக்காடனார். (சொ-ள்) 16-19. தோழி-, போர் மிக - போர்மிக்கு மூண்டதாக, கொடுஞ்சி நெடுதேர் பூண்ட - கொடுஞ்சி யென்னும் உறுப்பினை யுடைய நெடிய தேரிற் பூட்டப்பெற்ற, கடும்பரி விரி உளை நல்மான் கடைஇ - விரைந்த செலவினையும் விரிந்த பிடரி மயிரினையும் உடைய நல்ல குதிரையைச் செலுத்தி, வருதும் என்று அவர் தெளித்த போழ்து - இன்ன போழ்தில் வருவேம் என்று நம் தலைவர் தெரிவித்த காலம்; 1-11. பேர் உறை தலைஇய - பெரிய மழைபெய்த, பெரும் புலர் வைகறை - இருள் பெரிதும் புலர்ந்த காலைப் பொழுதிலே, ஏர் இடம் படுத்த இருமறு - ஏர்களால் இடமுண்டாக உழப்பெற்ற பெரிய வடுவினையுடைய, பூழி புறம் மாறுபெற்ற - கீழ் மேலாகப் புரண்ட புழுதியையுடைய, பூவல் ஈரத்து - செம்மண்நிலத்தின் ஈரம்பட்ட செவ்வியில், ஊன் கிழித்தன்ன செம் சுவல் நெடுசால் - ஊனைக் கிழித்தாலொத்த செவ்விய மேட்டுநிலத்தைப் பிளந்து சென்ற நெடிய படைச்சாலினிடத்து, வித்திய மருங்கில் - விதைத்த இடங்களில், விதை பல நாறி - விதைகள் பலவும் முளைத்து வளர, இரலை நல்மான் இனம் பரந்தவைபோல் - நல்ல கலைமானின் கூட்டம் பரந்தனபோல, கோடு உடை தலைக்குடை சூடிய வினைஞர் - கோட்டினையுடைய ஓலைக் குடையைத் தலையிற் சூடிய கொல்லை உழவர், கறங்கு பறைச் சீரின் - ஒலிக்கும் பறையின் ஒலியொடு, இறங்க வாங்கி களை கால் கழீஇய - பயிர்கள் வளையும்படி ஒதுக்கிக் களையைப் பறித்துத் தூய்மை செய்த, பெரும் புன வரகின் - பெரிய கொல்லையில் விளைந்த வரகின், கவை கதிர் இருபுறம் கதூஉ உண்ட -கவைத்த கதிர்களின் கரிய புறத்தினைப் பற்றி உண்ட, குடுமி நெற்றி நெடு மா தோகை - குடுமி பொருந்திய தலையினையுடைய நீண்ட கரிய மயில், காமர் கலவம் பரப்பி - அழகிய தோகையினை விரித்து, ஏம் உற - இன்பம் உற, கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த - கொல்லையை உழு;ம் வினைஞர்கள் கூழ் உண்டற்கு நிழலாக விட்டு வைத்த, வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து - வலிய இலையினையுடைய குருந்தமரத்தின் வளைந்த கிளையிலிருந்து, கிளிகடி மகளிரின் விளிபட பயிரும் - கிளிகளை ஓட்டும் மகளிர் போல ஒலியுண்டாக அகவும், கார் இது - கார் காலம் ஆகிய இதுவேயாகும், மன் - அங்ஙனமாகவும் அவர் இன்னும் வந்திலரே. (முடிபு) தோழி! நம் தலைவர் வருதும் என்று தெளித்த போழ்து கார் இதுமன்; வரகின் கதிர் உண்ட தோகை கலவம் பரப்பிக் குருந்தின் சினையிருந்து கிளிகடி மகளிரின் விளிபடப் பயிரும் கார் என்க. (வி-ரை) ஏரிடம் படுத்த இருமறுப் பூழிப் புறமாறு பெற்ற பூவல் என்றது, புழுதி கீழ்மேலாகப் புரண்டு நன்கு புலருமாறு பன்முறை உழுத செம்மண்நிலம் என்றபடி; `தொடிப்புழுதி கஃசா உணக்கிற் பிடித்தெருவும் - வேண்டாது சாலப் படும்'1 என, வள்ளுவர் கூறுவதுங் காண்க. அங்ஙனம் உணக்கிய புழுதியில் மழைபெய்து ஈரம் பட்ட செவ்வி பார்த்து மீட்டும் உழுது விதைதெளிப்பர் என்பது, `பூவல் ஈரத்து, ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால், வித்திய, என்பதனாற் பெற்றாம். ஈரமுடைய செம்மண் நிலத்தே உழுபடை கிழித்த வடுவின் தோற்றம், ஊனினைக் கிழித்து வைத்தாற் போலும் என்றார். நாறி - நாற எனத் திரிக்க; நாற - முளைத்து வளர என்க. மழைக்குத் தடையாக வினைஞர் தலையிற் சூடிய ஓலைக் குடையின் இரு முனையும் நீண்டு உயர்ந்திருக்கு மாகலின் அதனை யுடைய வினைஞர்கள் இரலையினம் போல்வாராயினர் என்க. கறங்கு பறைச் சீரின் என்றதனால், அவர்கள் களைபறிக்குங்கால், பறையை ஒலிப்பிப்பர் என்பது பெற்றாம். களைகால் கழீஇய - களையை அடியுடன் கழித்த என்றுமாம். தோகை - மயில். காரினைக் கண்ட மயில் களிப்புற்று அகவுதல் இயல்பாகலின், தோகை கலவம் பரப்பி ஏமுறப் பயிரும் என்றார். மயில் குருந்தின் சினையிலிருந்து அகவுவது கிளிகடியும் மகளிர், மரத்தின் கிளைமீதிருந்து ஒலிப்பது போலும் என்க. அவர் தெளித்த போழ்து இதுவாகவும் இன்னும் வந்திலரே என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசையாகும். 195. பாலை (மகட் போக்கிய நற்றாய் சொல்லியது.) அருஞ்சுரம் இறந்தஎன் பெருந்தோள் குறுமகள் திருந்துவேல் விடலையொடு வருமெனத் தாயே புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி மனைமணல் அடுத்து மாலை நாற்றி 5. உவந்தினிது அயரும் என்ப யானும் மான்பிணை நோக்கின் மடநல் லாளை ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும் இன்னகை முறுவல் ஏழையைப் பன்னாட் கூந்தல் வாரி நுசுப்பிவர்ந் தோம்பிய 10. 1நலம்புனை உதவியும் உடையன் மன்னே 2அஃதறி கிற்பினோ நன்றுமற் றில்ல அறுவை தோயும் ஒருபெருங் குடுமிச் சிறுபை நாற்றிய பஃறலைக் கொடுங்கோல் ஆகுவ தறியும் முதுவாய் வேல 15. கூறுக மாதோநின் கழங்கின் திட்பம் மாறா வருபனி கலுழுங் கங்குலின் ஆனாது துயருமெங் கண்ணினிது படீஇயர் எம்மனை முந்துறத் தருமோ தன்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே. - கயமனார். (சொ-ள்) 1-5. அரும் சுரம் இறந்த என் பெரும் தோள் குறு மகள் - அரிய சுரநெறியைக் கடந்து சென்ற என் பெரிய தோளினையுடைய இளையளாய மகள், திருந்து வேல் விடலை யொடு வரும் என - திருந்திய வேலினையுடைய தலைவனுடன் வரும் என்று, தாய் - அவள் தாய், புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி - புனைதல் மாட்சிமைப்பட்ட மாண்புற்ற புறச்சுவரில் செம்மண் பூசி, மனை மணல் அடுத்து - மனையின் முற்றத்தே மணலைப் பெய்து, மாலை நாற்றி - மாலைகளைத் தொங்க விட்டு, உவந்து இனிது அயரும் என்ப - மகிழ்ந்து இனிதே (மனையின் கண் கோலம்) செய்யும் என்ப; 5-10. யானும் -, மான் பிணை நோக்கின் மடநல்லாளை - பெண் மான் போலும் பார்வையையுடைய மடப்பம் வாய்ந்த அவளை, ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும் - ஈன்றாள் என்னும் அன்பு பற்றி என்பால் அருள் செய்யானாயினும், இன் நகை முறுவல் ஏழையை - இனிய நகையுடன் கூடிய பற்களையுடைய அவளை, பல் நாள் கூந்தல் வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பிய - பலநாளும் கூந்தலை வாரிமுடித்து மருங்கிலே ஏற்றிப் பாதுகாத்த, நலம்புனை உதவியும் மன் உடையன் - நன்மை பொருந்திய உதவியும் பெரிதும் உடையள் ஆவேன்; 11. அஃது அறிகிற்பினோ நன்று - அவன் அதனை அறியின் நன்றாம்; 12-14. அறுவை தோயும் ஒரு பெருங்குடுமி - ஆடை சூழ்ந்த ஒரு பெரிய உச்சியினையும், சிறு பை நாற்றிய பல் தலை கொடு கோல்- சிறிய பை தொங்கவிடப்பெற்ற பல தலையையுடைய வளைந்த கோலினையும் உடையனாய், ஆகுவது அறியும் முதுவாய் வேல - மேல் நிகழ்வதனை அறிந்து கூறும் அறிவு வாய்ந்த வேலனே! 15-19. கங்குலின் ஆனாது துயரும் -இரவில் அமையாது துயருறும், எம் - எம்முடைய, மாறா வருபனி கலுழும் கண் -இடையறாது வரும் நீருடன் கலங்கி அழும் கண்கள், இனிது படீஇயர் - இனிது துயிலும் பொருட்டு, எம் மனை முந்துறத் தருமோ - எனது மனையின் கண்முற்படக் கொணர்ந்து தருமோ, (அன்றி) தன் மனை உய்க்குமோ - தன் மனையின்கண் முற்படக் கொண்டு செல்வானோ, யாது அவன் குறிப்பு - அத் தலைமகன் உட்கோள் யாதோ, கழங்கின் திட்பம் - கழங்கின் திண்ணிய குறியை, கூறுக - கூறுவாயாக. (முடிபு) குறுமகள் விடலையொடு வருமெனத் தாய், ஊட்டி, அடுத்து நாற்றி அயரும் என்ப: யானும் ஓம்பிய உதவியும் உடையன்; அஃதறிகிற்பினோ நன்று; வேல! எம்மனை முந்துறத் தருமோ, தன்மனை முந்துற உய்க்குமோ, அவன் குறிப்பு யாது? நின் கழங்கின் திட்பம் கூறுக. (வி-ரை) இஞ்சி- மனையை அடுத்துப் புறத்தே சூழ்ந்த மதில் போலும் சுவர். அயர்தல் - கொண்டாடுதலுமாம். யானும் என்ற உம்மை, தாய் என்றதனைக் கருதி நிற்றலின் எச்சவும்மையாகும். உதவியும் என்ற உம்மையும், எச்ச வும்மையே. அஃது அறிகிற்பின் - உதவியாகிய அதனை அறியின் ஈன்ற நட்பிற்கு அருளானாயினும் அஃதறிகிற்பினோ நன்று என்க. அறிகிற்பினோ நன்று என்றது, அறிந்து என்மனைக்கட் கொண்டுவரின் நன்று என்றபடி. அறுவை தோயும் ஒரு பெருங்குடுமி என்றது, தலையிலே மயிர்க்கட்டாகச் சுற்றி ஒரு புறத்தே தொங்கவிட்ட ஆடை தோய்ந்த குடுமி என்றவாறு. குடுமியினையும் கோலினையும் உடைய வேல என்க. திட்பம் என்றது, பிழையாத குறி என்னும் பொருட்டு. மன், தில்ல, மாது, ஓ : அசைகள். (மே-ள்) `தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி'1 என்னுஞ் சூத்திரத்து, இப்பாட்டினைக் கூறி, இது தெய்வத்தொடு படுத்துப் புலம்பியது என்றும், `களவல ராயினும் காமமெய்ப் படுப்பினும்' என்னுஞ் சூத்திரத்து, `போக்குடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக், கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்ணும்'1 என்னும் துறைக்கு `எம்மனை முந்துறத் தருமோ, தன்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே' என்ற பகுதியை உதாரணமாகக் காட்டி, (இது) `கற்பினாக் கத்துக் கருத்து நிகழ்தல்' என்றும் `வெளிப்பட வரைதல் படாமை வரைதல்'2 என்னுஞ் சூத்திரத்து, `எம்மனை....... யாதவன் குறிப்பே' (இது) `போல்வன வெளிப்படுவதன் முன்னர்க்கொண்டு தலைக் கழிந்துழிக் கொடுப்போர் இன்றியும் கரணம் நிகழ்ந்தமை யின் அதுவும் வெளிப்படாமல் வரைந்ததாம்' என்றும், `கொடுப்போ ரின்றியும் கரணமுண்டே'3 என்னுஞ் சூத்திரத்து, இச்செய்யுள் கொடுப்போ ரின்றிக் கரணம் நிகழ்ந்தது என்றும் கூறுவர், நச். `மறைவெளிப் படுதலும்'4 என்னுஞ் சூத்திரத்து `எம்மனை.... யாதவன் குறிப்பே' என்பது மறை வெளிப்பாடு என்றனர், பேரா. 196. மருதம் (பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகற்குக் கிழத்தி சொல்லியது.) நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி பாக்கத்து நாள்துறைப் பட்ட மோட்டிரு வராஅல் துடிக்கட் கொழுங்குறை நொடுத்துண்டு ஆடி வேட்டம்மறந்து துஞ்சுங் கொழுநர்க்குப் பாட்டி 5. ஆம்பல் அகலிலை அமலைவெஞ் சோறு தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து விடியல் வைகறை இடூஉம் ஊர தொடுகலம் குறுக வாரல் தந்தை கண்கவின் அழித்ததன் தப்பல் தெறுவர 10. ஒன்றுமொழிக் கோசர்க் கொன்றுமுரண் போகிய கடுந்தேர்த் திதியன் அழுந்தைக் கொடுங்குழை அன்னி மிஞிலியின் இயலும் நின்னலத் தகுவியை முயங்கிய மார்பே. - பரணர். (சொ-ள்) 1-7. நெடு கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து - நெடிய கொடிகள் அசையும் கள் மலிந்த பாக்கத்திலே, நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் - விடியற்காலை வேட்டத்துத் துறைக்கண் அகப்பட்ட பெரிய அகட்டினையுடைய வரால் மீனின், துடிகண் கொழுகுறை நொடுத்து - துடியின் கண்போன்ற அகன்ற வளவிய துண்டத்தினை விற்று, உண்டு ஆடி - கள்ளுண்டு ஆடி, வேட்டம் மறந்து - மீண்டும் வேட்டம் போதலை மறந்து, துஞ்சும் கொழுநர்க்கு - உறங்கிக் கிடக்கும் கணவன்மார்க்கு, பாட்டி- (அவரவர் மனைவியராய) பாண் மகளிர், ஆம்பல் அகல் இலை - ஆம்பலது அகன்ற இலையில், அமலை வெம்சோறு - திரண்ட விருப்பந்தரும் சோற்றை, தீம்புளி பிரம்பின் திரள் கனி பெய்து - பிரம்பின் இனிப்புடன் கூடிய புளிப்பினையுடைய திரண்ட பழத்தினைப் பெய்து, விடியல் வைகறை இடூஉம் ஊர - இருள் புலரும் விடியற் காலத்தே இடும் ஊரனே! 8-13. தந்தை கண்கவின் அழித்ததன் தப்பல் - தன் தந்தையின் கண்ணின் எழிலைக் கெடுத்ததாகிய தவற்றிற்காக, ஒன்று மொழிக் கோசர் - நெடுமொழியினையுடைய கோசர்களை, கடுதேர் திதியன் - விரைந்த தேரினையுடைய திதியனது, அழுந்தை - அழுந்தூர் என்னுமிடத்து, தெறுவரக்கொன்று முரண் போகிய - அச்சம் உண்டாகக் கொல்வித்து மாறுபாடு தீர்ந்த, கொடுங்குழை அன்னி மிஞிலியின் - வளைந்த குழையினை அணிந்த அன்னி மிஞிலி என்பாளைப் போல, இயலும் - களிப்புற்று நடக்கும், நின்நல தகுவியை - நின் நலத்திற்குத் தக்காளாய பரத்தையை, முயங்கிய மார்பு - தழுவிய மார்பினை, தொடுகலம் - தீண்டேன், குறுக வாரல் - எம்மை அணுக வாரற்க. (முடிபு) ஊர! அன்னி மிஞிலியின் இயலும் நின்நலத் தகுவியை முயங்கிய மார்பினைத் தொடுகலம்; குறுகவாரல்; வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி அமலை வெஞ்சோறு பிரம்பின் கனிபெய்து வைகறை இடூஉம் ஊர என்க. (வி-ரை) நொடுத்து - விற்று. பாட்டி - பாண்மகள்; பாணன் மனைவி. பாட்டியர் எனப் பன்மையாகக் கொள்க. விடியல் வைகறை - விடியற்கு முன்னர்த்தாகிய வைகறை என்பர், நச். 1`தப்பல் - தப்பற்கு என நான்கனுருபு விரிக்க. கோசர் என்பார், தன் தந்தையை அருளின்றிக் கண் களைந்தமையின், அன்னி மிஞிலி என்பாள் சினம் கொண்டு, குறும்பியன் திதியன் என்பவர்களால் அக் கோசரைக் கொல்வித்து மாறுபாடு தீர்ந்து களிப்புற்றாள் என்பது, `வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து அருளாது, ஊர்முது கோசர் நவைத்த சிறுமையில், கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள், சினத்தின் கொண்ட படிவம் மாறாள், மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன், செருவியல் நன்மான் திதியற் குரைத்தவர், இன்னுயிர் செகுப்பக் கண்டுசின மாறிய, அன்னி மிஞிலி,2 என்பதனாற் போதரும். கொன்று - கொல்வித்து எனப் பிறவினையாகக் கொள்க. இங்ஙனம் நிகழ்ந்தது' அழுந்தூரில் என்பது, திதியன் அழுந்தை என்பதனாற் பெற்றாம். நின் பிரிவால் யானும் இற்பரத்தை முதலாயினாரும் வருந்தும்படி செய்து, சேரிப் பரத்தையானவள் பெருமிதங் கொண்டிருக்கிறாள் என்பாள், அன்னி மிஞிலியின் இயலும் நின்னலத் தகுவியை எனத் தலைமகள், கூறினாள். நின் நலத்தை நுகர்வதற்குத் தக்கவளாகிய அப் பரத்தையை முயங்கிய மார்பை யாம் தீண்டுதலும் தகாதென்பாள் தொடுகலம் என்றும், குறுகவாரல் என்றும் கூறினாள். (உ-றை) `வராஅற் கொழுங்குறை நொடுத்து உண்டு ஆடிவேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டியர் அமலை வெஞ்சோறு வைகறை இடூஉம் ஊர' என்றது, தலைவன் இரவெல்லாம் பரத்தைக்குத் தன் மார்பினை நல்கி அவள் தரும் இன்பத்தை நுகர்ந்து, தலைவியை மறந்தொழுகி, விடியலில் தலைவியை நினைந்து வருகின்றான் என்றபடி. 197. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.) மாமலர் வண்ணம் இழந்த கண்ணும் பூநெகிழ் அணையிற் சாஅய தோளும் நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த தொல்நலம் இழந்த துயரமொடு என்னதூஉம் 5. இனையல் வாழி தோழி முனையெழ 1முன்னுவர் ஓட்டிய முரண்மிகு திருவின் 2மறமிகு தானைக் கண்ணன் எழினி 3தேமுது குன்றம் இறந்தன ராயினம் நீடலர் யாழநின் நிரைவளை நெகிழத் 10. தோள்தாழ்பு இருளிய குவையிருங் கூந்தல் மடவோள் தழீஇய விறலோன் மார்பில் புன்தலைப் புதல்வன் ஊர்பிழிந் தாங்குக் கடுஞ்சூல் மடப்பிடி தழீஇய வெண்கோட்டு இனஞ்சால் வேழங் கன்றூர்பு இழிதரப் 15. பள்ளி கொள்ளும் பனிச்சுரம் நீந்தி ஒள்ளிணர்க் கொன்றை ஓங்குமலை அத்தம் வினைவலி யுறூஉம் நெஞ்சமொடு இனைய ராகிநப் பிரிந்திசி னோரே. - மாமூலனார். (சொ-ள்) 1-5. தோழி-, வாழி-, மாமலர் வண்ணம் இழந்த கண்ணும் - கரிய குவளை மலரின் அழகினை இழந்த கண்களும், பூ நெகிழ் அணையில் சாஅய தோளும் - அழகு நெகிழ்ந்து திரைந்த அணைபோன்ற மெலிந்த தோள்களும் (கொண்டு), நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த தொல் நலம் இழந்த துயரமொடு - நன்மையுடைய ஆய மக்கள் விரும்பி ஆராயும் பழைய நலத்தினை இழந்ததனாலாய துயரத்துடன், என்னதூஉம் இனையல் - சிறிதும் வருந்தாதே; 10-17. தோள் தாழ்பு இருளிய குவை இரு கூந்தல் - தோள்களில் தாழ்ந்து இருண்ட திரண்ட பெரிய கூந்தலையுடைய, மடவோள் தழீஇய விறலோன் மார்பில் - மடப்பத்தையுடைய மனைவியைத் தழுவியுள்ள மேம்பட்ட தலைவன் மார்பில், புன்தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு - புல்லிய தலையினையுடைய புதல்வன் ஏறி இறங்குவது போன்று, கடுசூல் மடப்பிடி தழீஇய வெண்கோட்டு இனம் சால் வேழம் - நிறைந்த சூலினையுடைய இளைய பிடியினைத் தழுவிக்கிடந்த வெள்ளிய கோட்டினையுடைய இனத்துடன் கூடிய களிறு, கன்று ஊர்பு இழிதர - கன்று தம்மீது ஏறி இறங்க, பள்ளி கொள்ளும் பனிச்சுரம் நீந்தி - படுத்திருக்கும் நடுக்கத்தினைத் தரும் சுரநெறியைக் கடந்து, ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம் - ஒள்ளிய பூங்கொத்துக்களையுடைய கொன்றை மரங்களையுடைய ஓங்கிய மலையயடுத்த நெறியில், வினைவலி யுறூஉம் நெஞ்சமொடு - பொருளீட்டும் வினையை வற்புறுக்கும் நெஞ்சத்தால்; 9. நின் நிரை வளை நெகிழ - நினது நிரைத்த வளைகள் நெகிழும் படி; 18. இனையர் ஆகி நம்பிரிந்திசினோர் - இங்ஙனம் அருளி லராகி நம்மைப் பிரிந்து சென்ற தலைவர்; 5-9. முனை எழ முன்னுவர் ஓட்டிய - போர் செய்ய முற் பட்டோரை ஓட்டிய, முரண்மிகு திருவின் - வலிமிக்க வீரச் செல்வத் தினையும், மறமிகு தானை - வீரமிக்க படையினையுமுடைய, கண்ணன் எழினி - கண்ணன் எழினி என்பானது, தேம் முதுகுன்றம் இறந்தன ராயினும் - தேன்மிக்க முதுகுன்றத்தினைக் கடந்துளா ராயினும், நீடலர் - நீட்டித் திராது வல்லே வந்துறுவர். (முடிபு) தோழி! வாழி! தொன்னலமிழந்த துயரமொடு இனையல்; பனிச்சுரம் நீந்தி. ஓங்குமலை அத்தம் வினைவலியுறூஉம் நெஞ்சமொடு, நின் நிரைவளை நெகிழ இனையராகி நப் பிரிந்திசினோர், கண்ணன் எழினி முதுகுன்றம் இறந்தனராயினும் நீடலர். (வி-ரை) பூநெகிழ் அணை - நெகிழ்ச்சியுற்ற மலரணை என்றுமாம். அணை - தலையணை. கண்ணும் தோளும் கொண்டு என ஒருசொல் வருவித்துரைக்க. விழைவனர் ஆய்ந்த என்றது, தலைவியின் நலத்தை ஆராய்தல் அவர்க்கு ஓர் விளையாட்டு என்றபடி. யாழ, அசை. மடப்பிடிக்கு மடவோளும் அதனைத் தழுவிய வேழத்திற்கு விறலோனும் அதன்மீது ஏறி இறங்கும் கன்றுக்குப் புதல்வனும் உவமம். கடுஞ்சூல் மடப்பிடி என்றமையால் சூலுற்ற மடவோள் என்று கொள்க. கடுஞ்சூல் முதற் சூலுமாம். 198. குறிஞ்சி (புணர்ந்து நீங்கிய தலைமகளது போக்கு நோக்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) கூறுவங் கொல்லோ கூறலங் கொல்லெனக் கரந்த காமங் கைந்நிறுக் கல்லாது நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி அரைநாள் யாமத்து விழுமழை கரந்து 5. 1கார்விரை கமழுங் கூந்தல் தூவினை நுண்நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின் 2இளமழை சூழ்ந்த மடமயில் போல வண்டுவழிப் படரத் தண்மலர் வேய்ந்து வில்வகுப் புற்ற நல்வாங்கு குடச்சூல் 10. அஞ்சிலம் பொடுக்கி அஞ்சினள் வந்து துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள் ஆன்ற கற்பில் சான்ற 3பெரிய அம்மா அரிவையோ அல்லள் தெனாஅது ஆஅய் நன்நாட்டு அணங்குடைச் சிலம்பில் 15. கவிரம் பெயரிய உருகெழு கவாஅன் நேர்மலர் நிறைசுனை உறையுஞ் சூர்மகள் மாதோ என்னும்என் னெஞ்சே. - பரணர். (சொ-ள்) 17. என் நெஞ்சே-, 1-11. கரந்த காமம் - நம்முள் மறைந்துறையும் காமத்தினை, கூறுவம் கொல்லோ கூறலம் கொல் என - இவட்குக் கூறுவேமோ அன்றிக் கூறாது விடுவேமோ என்று இங்ஙனம் எண்ணி எண்ணி, கை நிறுக்கல்லாது - (முடிவில்) அடக்க இயலாது, நயந்து நாம் விட்ட நன் மொழி நம்பி - விரும்பி நாம் வெளியிட்டிரந்த இனிய மொழியை விரும்பி, அரை நாள் யாமத்து - பாதியிரவில், விழுமழை கரந்து - பெய்யும் மிக்க மழையில் மறைந்து, கார் விரை கமழும் கூந்தல் - கார் காலத்து மணம் கமழும் கூந்தலுடன், தூ வினை நுண் நூல் ஆகம் பொருந்தினள் - தூய தொழிற்பாடமைந்த நுண்ணிய நூலாலாகிய ஆடை தன் உடம்பின் கண்ணே பொருந்தப் பெற்ற வளாய், வெற்பின் இளமழை சூழ்ந்த மடமயில்போல - மலையிடத் துள்ள இளமுகில் சூழ்ந்த மடப்பத்தையுடைய மயில்போல, வண்டு வழிப் படர தண் மலர் வேய்ந்து - வண்டுகள் பின்னே தொடரக் குளிர்ந்த மலர்களைச் சூடி, வில் வகுப்பு உற்ற நல்வாங்கு குடச்சூல் - வில்லினைப் போலும் வகையமைந்த நன்மைபொருந்திய குடச்சூல் ஆகிய, அம் சிலம்பு ஒடுக்கி - அழகிய சிலம்பினை ஒலியாது அடக்கி, அஞ்சினள் வந்து - அச்சத்துடன் வந்து, ஊர் துஞ்சு யாமத்து - ஊர்முழுதும் துயிலும் யாமத்திலே, முயங்கினள் பெயர்வோள் - நம்மைத் தழுவி மீள்வோள்; 12-13. ஆன்ற கற்பில் சான்ற பெரிய அம் மா அரிவையோ அல்லள் - நிறைந்த கற்பினால் உயர்ந்த பெருமையுற்ற அழகிய மாமை நிறமுடைய பெண்ணோ அல்லள்; 13-17. தெனாஅது ஆஅய்நல்நாட்டு அணங்கு உடை சிலம்பில் - தெற்கின்கண் உள்ளதாகிய ஆய் என்பானது நல்ல நாட்டில் தெய்வத்தையுடைய மலையில், கவிரம் பெயரிய உருகெழு கவான் - கவிரம் எனும் பெயரையுடைய அச்சம் பொருந்திய பக்கமலையில், நேர்மலர் நிறை சுனை உறையும் - மெல்லிய மலர்களையுடைய நிறைந்த சுனையில் உறையும், சூர்மகள் என்னும் - சூரரமகளே யாவள் என்பேம். (முடிபு) என் நெஞ்சே! நாம் விட்ட நன்மொழி நம்பி, தண் மலர் வேய்ந்து அஞ்சிலம் பொடுக்கி, மடமயில்போல அஞ்சினள் வந்து யாமத்து முயங்கினள் பெயர்வோள் அரிவையோ அல்லள்; சுனையுறையும் சூர்மகள் என்னும். (வி-ரை) கூந்தலும் நுண்நூலாடையும், உடம்பின் பின்னும் முன்னும் பொருந்தியுள்ள தலைவியின் தோற்றம், இளமேகம் சூழ்ந்த மயில் போல்வதாயிற் றென்க. குடச்சூல் - சூலுற்றதுபோல் புடைப் பட்டிருக்கும் சிலம்பு. குடச்சூல் ஆகிய சிலம்பு என இருபெய ரொட்டாகக் கொள்க. குடைச்சூல் எனப் பாடங் கொள்ளலுமாம்; `பசும்பொன் குடைச்சூல் சித்திரச் சிலம்பு'1 என்பது காண்க. `வெளிப்பாட்டிற்கு அஞ்சிக் கரந்து சிலம்பொடுக்கி ஊர் துஞ்சு யாமத்து வந்து முயங்கிப் பெயர்வாள் ஆயினள்; அங்ஙனம் வந்து செல்வோளை ஓர் அரிவையென்று கூறுதற்கு எளியள் அல்லள்; ஆகலின் அவளைச் சுனையுறையும் தெய்வம் என்பேம்; என்று தலைவன் தன் நெஞ்சிற்கு வியந்து கூறினான் என்க. துஞ்சு ஊர் யாமம் என்பதனை ஊர் துஞ்சு யாமம் என மாறுக. ஏர் மலர் எனக்கொண்டு அழகிய மலர் என்றலுமாம். என்னும் - என்பேம் என்னும் பொருட்டு. (மே-ள்) `பண்பில் பெயர்ப்பினும்'1 என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுளைக் காட்டி, இது இரவுக் குறிக்கண் அவட்பெற்று மலிந்தது என்றும், `இரவுக் குறியே இல்லகத் துள்ளும், மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே'2 என்னுஞ் சூத்திரத்து, `அஞ்சிலம் பொடுக்கி யஞ்சினள் வந்து, துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்' என வருவது `மனையோர் கிளவி கேட்கும் வழியது' என்றும் கூறினர், நச். 199. பாலை (பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.) கரைபாய் வெண்திரை கடுப்பப் பலவுடன் நிரைகால் ஒற்றலின் கல்சேர்பு உதிரும் வரைசேர் மராஅத்து ஊழ்மலர் பெயல்செத்து உயங்கல் யானை நீர்நசைக்கு அலமரச் 5. சிலம்பி வலந்த வறுஞ்சினை வற்றல் அலங்கல் உலவை அரிநிழல் அசைஇத் திரங்குமரல் கவ்விய கையறு 3தொகுநிலை அரந்தின் ஊசித் திரள்நுதி அன்ன திண்நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின் 10. வளிமுனைப் பூளையின் 4ஒய்யென்று அலறிய கெடுமான் இனநிரை 5தரீஇய கலையே கதிர்மாய் மாலை ஆண்குரல் விளிக்குங் கடல்போல் கானம் பிற்படப் பிறர்போல் செல்வேம் ஆயின்எம் செலவுநன் றென்னும் 15. ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப நீசெலற்கு உரியை நெஞ்சே வேய்போல் தடையின மன்னுந் தண்ணிய திரண்ட பெருந்தோள் அரிவை ஒழியக் குடாஅது இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் 20. பொலம்பூண் நன்னன் பொருது 6களத் தொழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இழந்த நாடுதந் தன்ன வளம்பெரிது பெறினும் வாரலென் யானே. - கல்லாடனார். (சொ-ள்) 16. நெஞ்சே-, 1-13. கரை பாய் வெண் திரை கடுப்ப - கரைக்கண்ணே பாயும் வெள்ளிய அலையை ஒப்ப, நிரை கால் ஒற்றலின் - வரிசையாக வரும் காற்று மோதுதலின், பல உடன் சேர்பு கல் உதிரும் - பலவும் ஒருங்கே சேர்ந்து பாறையில் உதிர்கின்ற, வரை சேர் மராஅத்து ஊழ் மலர் - மலையின்கண் பொருந்திய வெண்கடம்பின் முற்றிய மலரை, பெயல் செத்து - மழையென்று கருதி, உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர- நீர் வேட்கையால் வருந்துதலையுடைய யானை அதனைத் தணித் தற்குச் சென்று சுழல, சிலம்பி வலந்த வறுசினை வற்றல் - சிலம்பி நூல் பின்னப்பெற்ற வறிய சினையினையுடைய வற்றல் ஆகிய, அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ - அசைகின்ற மரங்களின் அறல்பட்ட நிழலில் தங்கி, திரங்கு மரல் கவ்விய கையறு தொகுநிலை - வாடிய மரலைக் கவ்விய செயலற்ற கூட்டத்தில் (புகுந்து), அரம் தின் ஊசி திரள் நுதி அன்ன - அரத்தால் அராவப்பட்ட ஊசியின் திரண்ட முனையை யொத்த, திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின் - உறுதி பொருந்திய பற்களையுடைய செந்நாய் தாக்குதலின், வளி முனைப் பூளையின் ஒய் என்று அலறிய - காற்றின்முன் பூளைப் பூவென விரைந்து அலறி யோடிய, கெடுமான் இனநிரை தரீஇய - காணாதொழிந்த தன் இனமாகிய மான்கூட்டத்தைக் கூட்டற்கு, கலை - கலைமான், கதிர்மாய் மாலை - ஞாயிறு மறைந்த மாலைப் போழ்தில், ஆண் குரல் விளிக்கும் - தனது ஆண் குரல் தோன்ற அழைக்கும், கடல் போல் கானம் பிற்பட - கடல்போல் அகன்ற காடு பின்னே போக; 13-16. பிறர்போல் - ஏதிலரைப்போல, செல்வேம் ஆயின் எம் செலவு நன்று என்னும் - நம் தலைவியைப் பிரிந்து போவேமாயின் எமது போக்கு நன்றாகும் என்றெண்ணும், ஆசை உள்ளம் அசைவு இன்று துரப்ப - பொருளாசையுற்ற நின் உள்ளம் தளர்தலின்றிச் செலுத்த, நீ செலற்கு உரியை - நீ செல்லுதற்கு உரியை ஆவாய்; 16-24. யானே - யானோ, வேய்போல் தடையின மன்னும் - மூங்கிலைப் போல வளைந்தனவாகிப் பொருந்தும். தண்ணிய திரண்ட பெரு தோள் அரிவை ஒழிய - குளிர்ந்த திரண்ட பெரிய தோளினையுடைய நம் தலைவி (இவண் தனித்து) ஒழிய, வலம்படு கொற்றம் தந்த வாய் வாள் - வென்ற வெற்றியினைத் தந்த வாய்த்த வாளினையுடைய, களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் - களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னன், குடாஅது இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் - மேற்கின் கண்ணதாகிய பெரிய பொன்னினையுடைய வாகை மரம் நிற்கும் பெருந்துறை என்னு மிடத்து நிகழ்ந்த போரில், பொலம்பூண் நன்னன் - பொற்பூண் அணிந்த நன்னன் என்பவன், பொருது களத்து ஒழிய - போர் செய்து களத்தில் மடிய, இழந்த நாடு தந்தன்ன - தான் முன்பு இழந்த நாட்டைப் பெற்றாலொத்த, வளம்பெரிது பெறினும் - பெரிய செல்வத்தைப் பெறுவதாயினும். வாரலென் - வருவேன் அல்லேன். (முடிபு) நெஞ்சே! பிறர்போல் (தலைவியைப் பிரிந்து) செல்வேமாயின் எம் செலவு நன்றென்னும் ஆசையுள்ளம் துரப்ப, கடல்போல் கானம் பிற்பட நீ செலற்குரியை; யான் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் வாகைப் பெருந்துறைச் செருவில் நன்னனானவன் பொருது களத்து ஒழிந்தமையால், தான் இழந்த நாடு தந்தன்ன வளம் பெரிது பெறினும் பெருந்தோள் அரிவை ஒழிய வாரலென். (வி-ரை) நிரை நிரையாக மராமரத்தின்மேற் பாய்ந்து கலக்கும் காற்றிற்கு முறை முறையாகக் கரையிற் பாயும் திரை உவமையாகும். மராஅத்து உதிரும் மலர் எனக் கூட்டுக. நீர் நசைக்கு - நீர் நசையால். வறுஞ்சினை - தழையற்ற கிளை. வற்றல் - வற்றிய மரங்கள். உலவை - மரச்செறிவு. காட்டின் விரிவு தோன்றக் கடல்போல் கானம் என்றார். அன்புடையார் பிரியக் கருதாராகலின் பிறர்போல் செல்வோமாயின் என்றான். பிறர்போல் நீ செலற்கு உரியை என்று இயைத் துரைத்தலுமாம். வாகைமரம் நிற்றலின், பெருந்துறையானது வாகைப் பறந்தலை எனவும் படும்; இவ்வாகையானது நன்னன் காவல்மரம் என்பதும், அதனை நார்முடிச்சேரல் தடிந்தான் என்பதும், `பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன், சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த, தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்'1 என்பதனால் அறியப்படும் `உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை, நிலைச் செருவின் ஆற்றலை யறுத்தவன், பொன்படுவாகை முழுமுதல் தடிந்து'2 என்பதனால் கடம்பின் பெருவாயில் என்பதும் வாகைப் பெருந்துறை என்பதும் ஓரிடத்தையே குறிப்பனபோலும். கடம்பின் பெருவாயில் நன்னன் ஊர் என்பர் பதிற்றுப்பத்து உரையாசிரியர். களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்னும் பெயர்க்குக் காரணம் கூறுவாராய்ப் பதிற்றுப்பத்து உரையாசிரியர் `களங்காய்க் கண்ணி நார்முடி என்றது, களங்காயாற் செய்த கண்ணியும் நாராற் செய்த முடியும் என்றவாறு'3 எனவும், `தான் முடி சூடுகின்ற காலத்து ஒரு காரணத்தால் முடித்தற்குத் தக்க கண்ணியும் முடியும் உதவாமையிற் களங்காயால் கண்ணியும் நாரால் முடியும் செய்து கொள்ளப்பட்டன என்றவாறு' எனவும் உரைத்தார். இழந்தநாடு தந்தன்ன என்றதனால், முன் நன்னன்பால் இழந்த நாட்டை மீளப் பெற்றனன் என்பது போதரும். நாடு தந்தன்ன வளம் என்றிருப்பினும் தந்த நாடு போலும் வளம் என்பது கருத்தாகக் கொள்க. (மே-ள்) `செலவிடை அழுங்கல் செல்லாமை யன்றே'4 என்னுஞ் சூத்திரத்து, `களங்காய்க்கண்ணி..... வாரலென் யானே' என்னும் அடிகளைக் காட்டி, இவை வன்புறை குறித்துச் செலவழுங்குதலின் பாலையாயிற்று என்றார், நச். 200. நெய்தல் (தலைமகள் குறிப்பறிந்த தோழி தலைமகற்குக் குறைநயப்பக் கூறியது.) நிலாவின் இலங்கு மணல்மலி மறுகின் புலாவஞ் சேரிப் புல்வேய் குரம்பை ஊரென வுணராச் சிறுமையொடு நீருடுத்து இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம் 5. ஒருநாள் உறைந்திசி னோர்க்கும் வழிநாள் தம்பதி மறக்கும் பண்பின் எம்பதி வந்தனை சென்மோ வளைமேய் பரப்ப பொம்மற் படுதிரை கம்மென உடைதரும் மரனோங்கு ஒருசிறைப் பலபா ராட்டி 10. எல்லை எம்மொடு கழிப்பி எல்லுற நல்தேர் பூட்டலும் உரியீர் அற்றன்று சேர்ந்தனிர் செல்குவி ராயின் யாமும் எம்வரை அளவையிற் பெட்குவம் நும்ஒப் பதுவோ உரைத்திசின் எமக்கே. - 1 உலோச்சனார். (சொ-ள்) 7. வளைமேய் பரப்ப - சங்குகள் மேயும் கடற் பரப்பினையுடைய தலைவனே! 1-7. நிலாவின் இலங்கு மணல் மலி மறுகின் - நிலாவைப் போல விளங்கும் மணல் மிக்க தெருவிலுள்ள, புல்வேய் குரம்பை - புல்லால் வேயப்பெற்ற குடிசைகளையுடைய, புலால் அம் சேரி - புலால் நாறும் சேரியாகிய எம் பதி, ஊர் என உணராச் சிறுமையொடு - ஓர் ஊர் என்று உணரலாகாத சிறுமையினதாய், நீர் உடுத்து - நீர் சூழப்பெற்று, இன்னா உறையுட்டு ஆயினும் - பொலிவற்ற உறையுளையுடைய தாயினும், இன்பம் - இன்பம் தருமாற்றால், ஒருநாள் உறைந்திசினோர்க்கும் - ஒருநாள் தங்கியிருந்தார்க்கும், வழி நாள் - பிற்றை நாள், தம்பதி மறக்கும் பண்பின் - தம்முடைய பதியினையே மறந்திடச் செய்யும் பண்பினையுடைமையால், எம் பதி - எமது அப்பதிக்கு, வந்தனை சென்மோ - வந்து செல்வாயாக; 8-14. பொம்மல் படுதிரை கம் என உடைதரும் - பொலிவுற்ற ஒலிக்கும் அலை விரைந்து சிதர்ந்திடும், மரன் ஓங்கு ஒரு சிறை - மரம் ஓங்கிய ஒரு பக்கத்தே, பல பாராட்டி - பலவாய நின் குணங்களை யாங்கள் பாராட்ட, எல்லை எம்மொடு கழிப்பி - பகற்பொழுதினை எம்முடனிருந்து கழித்து, எல் உற - இரவு உறுங்கால், நல்தேர் பூட்டலும் உரியீர் - நுமது நல்ல தேரினைப் பூட்டிச் செல்லுதற்கும் உரியீராவிர்; அற்றன்று - அதுவேயுமன்றி, சேர்ந்தனிர் செல்குவிர் ஆயின் - இரவில் எம் பதியில் தங்கிச் செல்லுவீராயின், யாமும் எம்வரை அளவையில் பெட்குவம் - யாங்களும் எங்களுக்கு இயன்ற அளவில் பேணுதல் செய்வேம்; நும் ஒப்பதுவோ - (இது) நும் கருத்திற்கிசைவதாமோ? எமக்கு உரைத்திசின் - எமக்குக் கூறுவீராக. (முடிபு) எம் சேரி இன்னா உறையுட்டு ஆயினும், இன்பம் ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழிநாள் தம்பதி மறக்கும் பண்பினையுடைமையால், எம்பதி வந்தனை சென்மோ; எல்லை எம்மொடு கழிப்பி எல்லுற நல்தேர் பூட்டலும் உரியீர்; அற்றன்று, சேர்ந்தனிர் செல்குவிர் ஆயின், யாமும் எம் வரை அளவையிற் பெட்குவம்; நும் ஒப்பதுவோ எமக்கு உரைத்திசின். (வி-ரை) புல்வேய் குரம்பை: புல் - பனைமட்டை முதலியன. புலால் நாறுதலானும், புல்வேய் குரம்பை யுடைமையானும், நீர் உடுத்தலானும், சேரி இன்னா உறையுட்டு ஆயிற்று. அன்னதாயினும் அன்புடையாருடன் கூடி நுகரும் இன்பம் பெரிதுடையது என்பாள், `இன்பம், ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழிநாள், தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி' என்றாள். ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் என்பதனால், பல நாள் உறைவார் பெறும் இன்பம் கூறவேண்டா தாயிற்று. பாராட்டி - பாராட்ட எனத் திரிக்க. நல்தேர் பூட்டலும் என்றது, அதன் காரியமாகிய செல்கையை உணர்த்திற்று. அற்றன்று - அஃதன்றி வந்து செல்லுதல் என்னும் பொதுமை கருதி, இரண்டினையும் ஒப்பதுவோ என ஒருமையாற் கூறினாள். 201. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) அம்ம வாழி தோழி பொன்னின் அவிரெழில் நுடங்கும் அணிகிளர் ஓடை வினைநவில் யானை விறல்போர்ப் பாண்டியன் புகழ்மலி சிறப்பிற் கொற்கை முன்துறை 5. அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து தழையணிப் பொலிந்த கோடேந்து அல்குல் பழையர் மகளிர் பனித்துறைப் பரவப் பகலோன் மறைந்த அந்தி ஆரிடை உருகெழு பெருங்கடல் உவவுக்கிளர்ந் தாங்கு 10. அலரும் மன்றுபட் டன்றே அன்னையும் பொருந்தாக் கண்ணள் வெய்ய உயிர்க்குமென்று எவன்கை அற்றனை இகுளை சோழர் வெண்ணெல் வைப்பின் நல்நாடு பெறினும் ஆண்டமைந்து உறைநர் அல்லர் முனாஅது 15. வான்புகு தலைய குன்றத்துக் கவாஅன் பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை இருள்துணிந் தன்ன குவவுமயிர்க் குருளை தோன்முலைப் பிணவொடு திளைக்கும் வேனில் நீடிய சுரன்இறந் தோரே. - மாமூலனார். (சொ-ள்) 1-12. தோழி-, வாழி,- அம்ம - நான் கூறுவதனைக் கேட்பாயாக; பொன்னின் அவிர் எழில் நுடங்கும் - பொன்னினா லாகிய விட்டு விளங்கும் அழகிய ஒளி அசையும், அணிகிளர் ஓடை - அழகுமிக்க நெற்றிப் பட்டத்தினையுடைய, வினை நவில் யானை - போர்ச் செயலிற் பயின்ற யானைகளையுடைய, விறல்போர்ப் பாண்டியன் - போரில் வெற்றிகொள்ளும் பாண்டியனது, புகழ்மலி சிறப்பின் கொற்கை முன் துறை - புகழ்மிக்க சிறப்பினையுடைய கொற்கைப் பதியின் கடற்றுறையிலே, அவர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து - விளங்கும் ஒளியினையுடைய முத்துக்களுடன் வலம்புரிச் சங்கினையும் சொரிந்து, தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல் பழையர் மகளிர் - தழையுடை அணிதலாற் பொலி வுற்ற பக்கம் உயர்ந்த அல்குலினையுடைய பழையரது பெண்டிர், பனித்துறை பரவ - குளிர்ந்த துறைக்கண் தெய்வத்தினைப் பரவா நிற்க, பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை- ஞாயிறு மறைந்த அந்தியாகிய அரிய போழ்திலே, உருகெழு பெருங் கடல் உவவுக் கிளர்ந்தாங்கு - அச்சம் பொருந்திய பெரிய கடலானது நிறைமதி நாளில் ஆரவாரித் தெழுந்தாற்போல, அலரும் மன்று பட்டன்று, (ஊரார் கூறும்) அலரும் மன்றின்கண் பரவியது, அன்னையும் பொருந்தாக் கண்ணள் வெய்ய உயிர்க்கும் - தாயும் கண்துயிலாளாய் வெம்மையுடையனவாக மூச்செறியும், என்று - என்று இங்ஙனம் கூறி, எவன் கையற்றனை - ஏன் செயலற்றனை? 12. இகுளை- தோழியே! 14-19. முனாஅது - பழையதாகிய, வான் புகு தலைய குன்றத்துக் கவாஅன் - வானில் ஓங்கிய உச்சியினையுடைய மலையின் சாரற் கண்ணே, பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை - பெரிய கையினையும் பிளந்த வாயினையுமுடைய ஆண் கரடி, இருள் துணிந்தன்ன குவவு மயிர்க் குருளை - இருளைத் துணித்து வைத்தாற்போன்ற திரண்ட மயிரினையுடைய குட்டியுடனும், தோல் முலைப் பிணவொடு - திரங்கிய முலையினையுடைய பெண் கரடியுடனும், திளைக்கும் - மகிழ்ந்திருக்கும், வேனில் நீடிய சுரன் இறந்தோர் - வெம்மைமிக்க பாலைநிலத்தைக் கடந்து சென்ற நம் தலைவர்; 12-14. சோழர் வெண்நெல் வைப்பின் நல்நாடு பெறினும் - சோழ மன்னரது வெண்ணெல் விளையும் ஊர்களையுடைய நல்ல நாட்டினையே பெறுவதாயினும், ஆண்டு அமைந்து உறைநர் அல்லர் - அங்கே மனமுவந்து தங்கிவிடுவர் ரல்லர். (முடிபு) தோழி! வாழி! அம்ம: `பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு அலரும் மன்று பட்டன்று; அன்னையும் வெய்ய உயிர்க்கும்' என்று எவன் கையற்றனை; இகுளை! சுரனிறந்தோர், சோழர் நல்நாடு பெறினும், ஆண்டு அமைந்து உறைநர் அல்லர். (வி-ரை) முத்தமொடு வலம்புரி சொரிந்து என்றமையால், அவற்றைப் பெறுதற்கிடனாகிய கொற்கைத் துறையின் சிறப்புக் கூறியவாறாயிற்று. பழையர் - நெய்தல் நில மாக்கள் : கள் விற்பவர். பழையர் மகளிர் உவாநாளிலே முத்தையும் வலம்புரியையுஞ் சொரிந்து கடற் றெய்வத்தைப் பரவுவாரென்க. உவா நாளிற் கடல் பொங்கி எழுமாகலின் பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு என்றார். உவவு: குறியதன் இறுதிச் சினை கெட்டு உகரம் பெற்று முடிந்தது. அலரும், அன்னையும் எச்சவும்மைகள். சோழரது நல்நாடு போலும் பொருளை ஆண்டுப் பெறுவதாயினும் என்பது கருத்தாகக் கொள்க. எண்கின் ஏற்றை குருளையொடும் பிணவொடும் திளைக்கும் என்றது, அன்புறு தகுநவாகிய அவற்றைக் கண்டு, தலைவர் விரைவில் மீள்வர் என்று குறித்தவாறாகும். 202. குறிஞ்சி (இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது.) வயங்குவெள் ளருவிய குன்றத்துக் கவாஅன் கயந்தலை மடப்பிடி இனனே மார்ப்பப் புலிப்பகை வென்ற புண்கூர் யானை கல்லகச் சிலம்பிற் கையெடுத் துயிர்ப்பின் 5. நல்லிணர் வேங்கை நறுவீ கொல்லன் குருகு ஊது மிதியுலைப் பிதிர்விற் பொங்கிச் சிறுபன் மின்மினி போலப் பலவுடன் மணிநிற இரும்புதல் தாவும் நாட யாமே அன்றியும் உளர்கொல் பானாள் 10. உத்தி அரவின் பைத்தலை துமிய உரவுரு முரறும் உட்குவரு நனந்தலைத் தவிர்வில் உள்ளமொடு எஃகு துணையாகக் கனையிருள் பரந்த கல்லதர்ச் சிறுநெறி தேராது வரூஉம் நின்வயின் 15. ஆரஞர் அரும்படர் நீந்து வோரே. - 1ஆவூர்கிழார் மகனார் கண்ணனார். (சொ-ள்) 1-8. வயங்கு வெள் அருவிய குன்றத்து கவான் - விளங்கும் வெள்ளிய அருவியினையுடைய மலையின் சாரற் கண்ணே, கயம் தலை மடப்பிடி இனன் ஏம் ஆர்ப்ப - மெல்லிய தலையினை யுடைய இளைய பிடி இனத்துடன் இன்பமடைய, புலி பகை வென்ற புண்கூர் யானை - புலியாகிய பகையைவென்ற புண் மிக்க ஆண் யானை, கல் அகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின் - கற்களை இடத்தே கொண்ட பக்க மலையில் கையை யுயர்த்திப் பெருமூச் செறிதலால், நல்இணர் வேங்கை நறுவீ - வேங்கைமரத்தினது நல்ல கொத்துக் களிலுள்ள நறுமணமுடைய பூக்கள், கொல்லன் குருகு ஊது மிதிஉலைப் பிதிர்வில் பொங்கி - கொல்லன் துருத்தியை மிதித்து ஊதும் உலையிற் பிதிர்ந்து எழும் தீப்பொறி போலப் பொங்கி எழுந்து, சிறு பல் மின்மினி போல - சிறிய பலவாய மின்மினிப் பூச்சிகளைப் போல, பலவுடன் மணி நிற இரும்புதல் தாவும் - பலவும் ஒருங்கே நீலமணியின் நிறத்தினை ஒத்த பெரிய புதரில் பரவி விழும், நாட - நாட்டையுடைய தலைவனே! 9-15. பானாள் - நடு இரவில், அரவின் உத்தி பை தலைதுமிய - பாம்பினது புள்ளிகளையுடைய படம் பொருந்திய தலை துணிபட, உரவு உருமு உரறும் உட்குவரு நனந்தலை - வலிய இடியானது முழங்கும் அச்சம் வரும் அகன்ற இடத்தே, தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக - ஊக்கம் குன்றுதலில்லாத உள்ளத்துடன் வேலே துணையாக, கனை இருள் பரந்த கல்அதர் சிறுநெறி - செறிந்த இருள் பரவிய கற்களையுடைய வழியாகிய ஒடுங்கிய நெறியில், தேராது வரூஉம் நின்வயின் - ஏதத்தை ஆராயாது வரும் நின்னிடத்து, ஆர் அஞர் அரும் படர் நீந்துவோர் - பொறுத்தற்கரிய துன்பமாகிய அரிய நினைவினை நீந்துவோர், யாமே அன்றியும் உளர்கொல் - எம்மையன்றிப் பிறரும் உளரோ? (முடிபு) நாட! சிறுநெறி தேராது வரும் நின்வயின், ஆர்அஞர் அரும்படர் நீந்துவோர் யாமே அன்றியும் உளரோ? யானை உயிர்ப்பின் வேங்கை நறுவீ பொங்கி மின்மினி போலப் புதல் தாவும் நாட என்க. (வி-ரை) உயிர்ப்பின் - உயிர்த்தலால். பிதிர்வு - பிதிர்கின்ற தீப்பொறி. படர் - துயர் நினைவு. நீந்துவோர் என்றதனால் நினைவாகிய வெள்ளம் என்பது பெற்றாம். நீ இரவுக் குறிக்கண் வருதலால் யாம் துன்புறுதல் போலத் துன்புறுவார் பிறர் இலர் என்பாள், நீந்துவோர் யாமே யன்றியும் உளர்கொல் என்றாள்; அதனால், எமது துன்பம் நீங்க விரைவில் வரைந்து கொள்க என வரைவு கடாயினாளாம். (உ-றை) புலிப்பகை வென்ற யானை யுயிர்ப்பின் வேங்கைவீ மின்மினிபோலப் புதல் தாவும் என்றது, தலைவன் இடையீட்டினைக் கடந்து இரவுக் குறிக்கண் வருதலால் ஊரெங்கும் அலர் எழுகின்றது என்றபடி. 203. பாலை (மகட் போக்கிய 1தாய் சொல்லியது.) உவக்குந ளாயினும் உடலுந ளாயினும் யாயறிந் துணர என்னார் தீவாய் அலர்வினை மேவல் அம்பல் பெண்டிர் இன்னள் இனையள்நின் மகளெனப் பன்னாள் 5. எனக்குவந் துரைப்பவுந் தனக்குரைப் பறியேன் நாணுவள் இவளென நனிகரந் துறையும் யானிவ் வறுமனை யொழியத் தானே அன்னை யறியின் இவணுறை வாழ்க்கை எனக்கெளி தாகல் இல்லெனக் கழற்கால் 10. மின்னொளிர் நெடுவேல் இளையோன் முன்னுறப் பன்மலை யருஞ்சுரம் போகிய தனக்கியான் அன்னேன் அன்மை நன்வா யாக மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி வெய்திடை யுறாஅ தெய்தி முன்னர்ப் 15. புல்லென் மாமலைப் புலம்புகொள் சீறூர்க் செல்விருந் தாற்றித் துச்சி லிருத்த நுனைகுழைத் தலமரு நொச்சி மனைகெழு பெண்டியான் ஆகுக மன்னே. - கபிலர். (சொ-ள்) 1-5. உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும் - உவப்பு அடைவாள் ஆயினும் மாறுபடுவாள் ஆயினும், யாய் அறிந்து உணர என்னார் - தாய் ஆய்ந்து உணர்க என்று கருதாராய், அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர் - கொடிய வாயால் அலர் கூறுந் தொழிலையே விரும்புதலுடைய புறங்கூறும் பெண்டிர்கள், நின்மகள் இன்னள் இனையள் என - நின் மகள் இன்ன தன்மையள் இனைய தன்மையள் என்று, பல் நாள் எனக்கு வந்து உரைப்பவும் - பல நாளும் என்பால் வந்து கூறவும்; 5-7. நாணுவள் இவள் என - இவள் நாணுவாள் என்று எண்ணி, தனக்கு உரைப்பு அறியேன்; அவளுக்கு உரைத்தல் செய்யேனாய், நனிகரந்து உறையும் - மிகவும் மறைத்து ஒழுகும், யான்இவ் வறுமனை ஒழிய - யான் இந்த வறிய மனையில் ஒழிந்திட; 7-11. தான் - என் மகள், அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை - என் அன்னை அறியின் இங்கு தலைவனுடன் களவிற் கூடியுறையும் வாழ்க்கை, எனக்கு எளிதாகல்இல் என - எனக்கு எளிய தொன்றதால் இல்லை என்று எண்ணினமையால், கழல்கால் மின் ஒளிர் நெடுவேல் இளையோன் முன்உற- கழலினைத் தரித்த காலையும் மின் போல ஒளிவிடும் நிண்ட வேலையுமுடைய இளமைப் பருவமுடைய தன் தலைவன் முன்னே ஏக, பல் மலை அரு சுரம் போகிய தனக்கு - பல மலைகளையுடைய அரிய காட்டினைக் கடந்து சென்ற அவளுக்கு; 11-16. யான் அன்னேன் அன்மை நன் வாயாக - யான் அத்தன் மையினேன் அல்லாமை மிக்க உண்மையாதல் தோன்ற, மான் அதர் மயங்கிய மலைமுதல் சிறுநெறி - விலங்குகள் செல்லும் நெறிகள் பின்னிக் கிடக்கும் மலையடியிற் சிறிய நெறிகளில், வெய்து இடையுறாது முன்னர் எய்தி - இடையே தீங்கு உண்டாகாதவாறு அவர்கட்கு முன்னரே சென்று சேர்ந்து, புல் என் மா மலை புலம்பு கொள் சீறூர் - பொலிவற்றிருக்கும் பெரிய மலையைச்சார்ந்த தனிமை கொண்ட சிறிய ஊரில், செல் விருந்து ஆற்றி - வரும் விருந்தாக ஏற்று அவர் களை உண்பித்து, துச்சில் இருத்த - தங்குமிடத்தில் இருக்கச் செய்ய; 17-18. நுனை குழைத்து அலமரும் நொச்சி - முனைகள் தளிர்க்கப் பெற்று அசைந்திடும் நொச்சி சூழ்ந்த, மனைகெழு பெண்டு யான் ஆகுக - மனைக்குரிய பெண்டாக யான் ஆவேனாக. (முடிபு) அம்பல் பெண்டிர் இன்னள் நின் மகளெனப் பன்னாள் எனக்கு வந்து உரைப்பவும் (அவள்) தனக்கு உரைப்பறியேன் கரந்துறையும் யான் வறுமனை ஒழிய, இளையோன் முன்னுற அருஞ்சுரம் போகிய தனக்கு, யான் அன்னேன் அன்மை வாயாக, சிறுநெறி எய்திச் சீறூர்ச் செல் விருந்தாற்றித் துச்சிலிருத்த, மனைகெழு பெண்டு யானாகுக. (வி-ரை) இன்னள் இனையள்: ஒரு பொருள் குறித்த சொன்னடை. அம்பற் பெண்டிரது கொடுமை கூறுவாள், அவர் புறத்தே உரைத் தலன்றிப் பன்னாள் என்பால் வந்து, நின்மகள் இனையளென உரைத் தார் என்றும், அதனைக் கேட்டும் தன் மகள் நாணால் வருந்தாத படி, அவளுக்கு உரையாமையே யன்றி எவ்வாற்றானும் அது புலப் படாமல் தான் மறைத்தலும் செய்த அருமை தோன்றத், `தனக் குரைப்பறியேன் நாணுவள் இவளென நனிகரந் துறையும் யான்' என்றும் கூறினாள். தன் மகள் நீங்கிய மனை சிறிதும் பொலிவின்றி வறுவிய மனையாகத் தோன்றலின், யான் இவ் வறுமனை யொழிய என்றாள். அருஞ்சுரம் போயினாள், அங்ஙனம் போகிய தனக்கு என வேறு அறுத்து உரைக்க. அவள் தலைவனொடு நுகரும் இன்பத்தை உணர்ந்த நான் வெறாமையே யன்றி உவத்தலும் செய்தல் முழு உண்மையாதலை, இவ்வாறன்றி வெளிப்படுத்தல் அரிதென்பாள், `யான் அன்னேனன்மை நன்வாயாகச், சீறூர்ச் செல்விருந் தாற்றிச் துச்சிலிருத்த மனைகெழு பெண்டிர் யானாகுக' என்றாள். மன் : அசைநிலை; ஒழியிசையுமாம். 204. முல்லை (வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்கச் சொல்லியது.) உலகுடன் நிழற்றிய தொலையா வெண்குடைக் கடல்போல் தானைக் கலிமா வழுதி வென்றமர் உழந்த வியன்பெரும் பாசறைச் சென்றுவினை முடித்தன மாயின் இன்றே 5. கார்ப்பெயற்கு எதிரிய காண்டகு புறவில் கணங்கொள் வண்டின் அஞ்சிறைத் தொழுதி மணங்கமழ் முல்லை மாலை ஆர்ப்ப உதுக்காண் வந்தன்று பொழுதே வல்விரைந்து செல்க பாகநின் நல்வினை நெடுந்தேர் 10. வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும் காய்நெற் படப்பை 1 வாணன் சிறுகுடித் தண்டலை கமழுங் கூந்தல் ஒண்தொடி மடந்தை தோளிணை பெறவே. - மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார். (சொ-ள்) 9. பாக - பாகனே! 1-4. உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை - உலக முழுவதும் நிழல் செய்த கெடாத வெண்கொற்றக் குடையினையும், கடல்போல் தானை - கடல்போன்ற சேனையினையும், கலி மா - செருக்கிய குதிரையினையுமுடைய, வழுதி - பாண்டியன், வென்று அமர் உழந்த வியன் பெரு பாசறைச் சென்று - போரில் முயன்று வென்ற அகன்ற பெரிய பாசறைக்கண்ணே சென்று, வினை முடித்தனம் ஆயின் - வினையை வெற்றிபெற முடித்தோம் ஆதலானும்; 5-8. கார் பெயற்கு எதிரிய காண்தகு புறவில் - கார்காலத்தின் மழையை ஏற்றுக்கொண்டு (தழைத்த) காண்டற்கு இனிய காட்டில், கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி - கூட்டம் கூட்டமாக வரும் அழகிய சிறையினையுடைய வண்டின் தொகுதி, மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப - மணம் வீசும் முல்லைமலரில் மாலைக் காலத்தே ஆரவாரிக்க, பொழுது உதுக்காண் வந்தன்று - உதோ, கார் காலம் வந்து விட்டது (ஆதலானும்); 10-14. வெண்நெல் அரிநர் - வெண்ணெல்லை அரிவோர் (அடிக்கும்), மடிவாய் தண்ணுமை - தோல் மடங்கிய வாயினை யுடைய கிணையின் ஒலி, பல் மலர்ப் பொய்கை படுபுள் ஓப்பும் - பல மலர்களையுடைய பொய்கையில் பொருந்திய பறவைகளை ஓட்டும், காய் நெல் படப்பை - விளைந்த நெற்களையுடைய வயல்களையு டைய, வாணன் சிறுகுடித் தண்டலை கமழும் கூந்தல்- வாணனது சிறுகுடியிலுள்ள சோலை என மணக்கும் கூந்தலையும், ஒள் தொடி- ஒளி பொருந்திய வளையலையும் உடைய, மடந்தை தோள் இணைபெற - தலைவியின் தோளிணையை முயங்குதற்கு; 4. இன்றே - இப்பொழுதே; 8-9. நின் நல் வினை நெடு தேர் - நினது நல்ல தொழிற் றிறம் அமைந்த நீண்ட தேர், வல் விரைந்து செல்க - மிக விரைந்து செல்லுவதாக. (முடிபு) பாக! வழுதி பாசறை வினை முடித்தனம் ஆதலானும், உதோ பொழுது வந்தன்று (ஆதலானும்), மடந்தை தோளிணை பெற, நெடுந்தேர் விரைந்து செல்க. (வி-ரை) அரசனது வெற்றியைக் குடைக்கு ஏற்றி, கொற்றக் குடை என்பவாகலின் தொலையா வெண்குடை என்றார். வென்று அமர் உழந்த - அமர் உழந்து வென்ற என மாறுக. முடித்தனம் ஆயின் - முடித்தனம் ஆதலால் என்க. ஆதலால் என்பதனைப் பின்னுங் கூட்டி, முடித்தனம் ஆதலானும், பொழுது வந்தன்று ஆதலானும் என உரைத்துக் கொள்க. வண்டாகிய தொழுதி என்க. உதுக்காண் - உதோ. தேர் வல் விரைந்து செல்க என்றது, செல்லுமாறு செலுத்துக என்றபடி. 205. பாலை (தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.) உயிர்கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பில் செயிர்தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போலத் தையல் நின்வயின் பிரியலம் யாமெனப் பொய்வல் உள்ளமொடு புரிவுணக் கூறித் 5. துணிவில் கொள்கைய ராகி இனியே நோய்மலி வருத்தமொடு நுதல்பசப் பூர நாம்அழத் துறந்தனர் ஆயினுந் தாமே வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி 10. நிலங்கொள வெஃகிய பொலம்பூண் கிள்ளி பூவிரி நெடுங்கழி நாப்பண் பெரும்பெயர்க் காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன செழுநகர் நல்விருந் தயர்மார் ஏமுற விழுநிதி எளிதினின் எய்துக தில்ல 15. மழைகால் அற்சிரத்து மாலிருள் நீங்கி நீடமை நிவந்த நிழல்படு சிலம்பிற் கடாஅ யானைக் கவுண்மருங் குறழ ஆமூர்பு இழிதரு காமர் சென்னிப் புலியுரி வரியதள் கடுப்பக் கலிசிறந்து 20. நாட்பூ வேங்கை நறுமலர் உதிர மேக்கெழு பெருஞ்சினை யேறிக் கணக்கலை கூப்பிடூஉ உகளுங் குன்றகச் சிறுநெறிக் கற்பிறங்கு ஆரிடை விலங்கிய சொற்பெயர் தேஎத்த சுரனிறந் தோரே. - நக்கீரர். (சொ-ள்) 1-7. (தோழி!), தாம் - நம் தலைவர், உயிர் கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பில் - உயிருடன் கலந்து பொருந்திய பல பிறவிகளினும் தொடர்ந்து வரும் நட்பினால், செயிர்தீர் நெஞ்ச மொடு செறிந்தோர்போல - குற்றமற்ற நெஞ்சத்தால் கலந்தோர் போல, தையல் - பெண்ணே, நின்வயின் பிரியலம் யாம் என - நின்னிடத்தினின்றும் யாம் என்றும் பிரியேம் என்று, பொய் வல் உள்ளமொடு புரிவுணக் கூறி - பொய்மிக்க உள்ளத்தால் யாம் விரும்பு மாறு கூறி, துணிவு இல் கொள்கையராகி - உறுதியில்லாத கொள்கையின ராகி, இனி - இப்பொழுது, நோய்மலி வருத்தமொடு நுதல் பசப்பு ஊர - துன்பம் மிக்க வருத்தத்தால் நமது நெற்றியிற் பசலை பரக்கவும், நாம் அழ - நாம் அழவும், துறந்தனராயினும் - நம்மைப் பிரிந்து சென்றாராயினும்; 15-24. மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி - மழை யென்னப் பெய்யும் முன்பனிப் பருவத்து மயக்கத்தினைத் தரும் இருள் நீங்க, நீடு அமை நிவந்த நிழல்படு சிலம்பில் - நீண்ட மூங்கில் உயர்ந்த நிழல் பொருந்திய பக்க மலையில், கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ - மதக்களிற்றினது கவுளின் பக்கத்தினை யொப்ப, ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி - நீர் ஊர்ந்து இறங்கும் அழகிய உச்சி மலையில், புலி உரி வரி அதள் கடுப்ப - புலியின் உரியாகிய வரிகளையுடைய தோலையொப்ப, நாள்பூ வேங்கை நறுமலர் உதிர - மணநாளைக் காட்டும் பூக்களாய வேங்கையின் நறிய பூக்கள் உதிர்ந்திட, கலிசிறந்து மேக்கு எழு பெரு சினை ஏறி - செருக்கு மிக்கு அவ்வேங்கையின் மேனோக்கியெழுந்த பெரிய கிளையில் ஏறி, கண கலை - கூட்டமாய ஆண் குரங்குகள், கூப்பிடூஉ உகளும் - தம் இனங்களைக் கூப்பிட்டுத் தாவும், குன்றகச் சிறுநெறி - குன்றிடையே செல்லும் சிறிய நெறியாகிய, கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய - கற்கள் விளங்கிய அரிய இடங்கள் குறுக்கிட்ட, சொல்பெயர் தேஎத்த சுரன் இறந்தோர் - மொழி வேறுபட்ட தேயங்களிலுள்ள பாலையைக் கடந்து சென்ற அவர்; 8-14. வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை - உண்மை நிலைபெற்ற நெடுந்தூரத்து விளங்கும் நல்ல புகழினை யுடைய, வளம்கெழு கோசர் - செல்வம் மிக்க கோசர்களது, விளங்கு படை நூறி - விளக்கமுற்ற படையினை அழித்து, நிலம்கொள வெஃகிய பொலம்பூண் கிள்ளி - அவர்கள் நிலத்தைக் கைக்கொள்ள விரும்பிய பொற்பூணையுடைய சோழனது, பூவிரி நெடுங்கழி நாப்பண் - பூக்கள் விரிந்த நீண்ட கழியின் நடுவே, படப்பை - தோட்டங்களை யுடைய, பெரும் பெயர்க் காவிரிப் பட்டினத்து அன்ன - பெரிய புகழையுடைய காவிரிப்பூம்பட்டினத்தை யொத்த, செழுநகர் - வளவிய நம்இல்லில், நல்விருந்து அயர்மார் - நல்ல விருந்தாற்றுதற்கு, ஏம் உற - இன்பம் உண்டாக, விழுநிதி எளிதினின் எய்துக - சிறந்த பொருளை எளிதினில் அடைவாராக. (முடிபு) தோழி! நம் தலைவர், `தையல்! நின் வயிற் பிரியலம்யாம்' எனக்கூறி, நுதல் பசப்பூர நாம் அழத் துறந்தன ராயினும், சொற்பெயர் தேஎத்த சுரன் இறந்தோராய அவர், காவிரிப் பட்டினத்தன்ன செழு நகர் நல்விருந் தயர்மார் ஏமுற விழுநிதி எளிதினின் எய்துக; சிலம்பில் ஆமூர்பு இழிதரு சென்னியில் வேங்கை மலர் உதிர, பெருஞ்சினை ஏறிக் கணக்கலை உகளும் குன்றகச் சிறுநெறியாய ஆரிடை விலங்கிய சுரன் என்க. (வி-ரை) தொன்றுபடு நட்பு - பழமை பொருந்திய நட்பு; பல பிறவிகளினும் தொடர்ந்துவரும் நட்பு என்றபடி. கழிநாப்பண் படப்பையையுடைய காவிரிப்பட்டினம் என்க. தில்ல: விழைவுப் பொருட்டு. அற்சிரத்து மாலிருள் நீங்கி எனவே பின்பனியும் வேனிலும் போந்தமை பெற்றாம். நீங்கி - நீங்க எனத் திரிக்க. அருவி நீரொழுகும் மலையின் சென்னிக்கு மதஞ் சிந்தும் யானையின் கவுள் உவமையாகக் கூறப்பட்டது; ‘மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்ப’1 என்னும் தொடரும், அதன் சிறப்பால் கூத்தராற்றுப்படை மலைபடுகடாம் எனப் பெயர் எய்தியதும் ஈண்டு அறியற்பாலன. நாட்பூ - புதியபூ என்றுமாம். 206. மருதம் (வாயில் வேண்டிச் சென்ற விறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது.) என்னெனப் படுங்கொல் தோழி நன்மகிழ்ப் பேடிப் பெண்கொண் டாடுகை கடுப்ப 1நகுவரப் பணைத்த திரிமருப் பெருமை மயிர்க்கவின் கொண்ட மாத்தோல் இரும்புறம் 5. சிறுதொழில் மகாஅர் ஏறிச் சேணோர்க்குத் துறுகல் மந்தியில் தோன்றும் ஊரன் மாரி ஈங்கை மாத்தளி ரன்ன அம்மா மேனி ஆயிழை மகளிர் ஆரந் தாங்கிய அலர்முலை ஆகத்து 10. ஆராக் காதலொடு தாரிடைக் குழைய முழவுமுகம் புலரா விழவுடை வியனகர் வதுவை மேவல னாகலின் அதுபுலந்து அடுபோர் வேளிர் வீரை முன்துறை நெடுவெள் ளுப்பின் நிரம்பாக் குப்பை 15. பெரும்பெயற்கு உருகி யாஅங்குத் திருந்திழை நெகிழ்ந்தன தடமென் றோளே. - மதுரை மருதனிள நாகனார். (சொ-ள்) 1-6. தோழி-, நல் மகிழ் - நல்ல களிப்புடன், பேடிப் பெண் கொண்டு - பேடியாகிய பெண்ணின் உருவம் பூண்டு. ஆடு கை கடுப்ப - ஆடுவானது பின்சென்று மேல்வளைந்த கையையொப்ப, நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை - விளங்குதலுறப் பெருத்த முறுக்குண்ட கொம்பினையுடைய எருமையின், மயிர்க்கவின் கொண்ட மாதோல் இரு புறம் - மயிரால் அழகுபெற்ற கரிய தோலினையுடைய பெரிய முதுகில், சிறுதொழில் மகாஅர் ஏறி - குறுந்தொழில்களைச் செய்யும் சிறுவர்கள் ஏறி, சேணோர்க்கு துறு கல் மந்தியில் தோன்றும் ஊரன் - சேய்மையிலுள்ளார்க்கு உருண்டைக் கல்லின் மீதுள்ள மந்திபோலக் காணப்படும் ஊரனாகிய நம் தலைவன்; 7-12. மாரி ஈங்கை மா தளிர் அன்ன - மாரிக் காலத்து ஈங்கைச் செடியிற் றோன்றும் சிறந்த தளிரினை ஒத்த, அம் மா மேனி ஆய் இழை மகளிர் - அழகிய மாமை நிறத்தினையுடைய மேனியினையும் ஆய்ந்த அணியினையுமுடைய பரத்தையரது, ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து - முத்துமாலையை ஏந்திய பரந்த முலையினையுடைய மார்பகத்தே, ஆராக் காதலொடு தார் இடை குழைய - அமையாத காதலுடன் பூமாலை இடைப்பட்டுக் குழைய, முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர் - முழவின் ஒலி ஓய்தலில்லாத விழாவினை யுடைய பெரிய மனையில், வதுவை மேவலன் ஆகலின் - மணத்தினைப் பொருந்து தலுடையனாதலின்; 12-16. அது புலந்து - அச் செயலினை வெறுத்து, அடுபோர் வேளிர் வீரை முன்துறை - வெல்லும் போரினை வல்ல வேளிர்கட்கு உரிய வீரை என்னும் இடத்திலுள்ள துறையின் முன்னிடத்தே, நெடுவெள் உப்பின் நிரம்பாக் குப்பை - நீண்டு கிடக்கும் வெள்ளை யுப்பின் அளவிலடங்காத குவியல், பெரும் பெயற்கு உருகியாங்கு - மிக்க மழையால் உருகினாற்போல, தட மெல் தோள் - எனது பெரிய மெல்லிய தோள்கள் மெலிந்து, திருந்து இழை நெகிழ்ந்தன - திருந்திய வளைகள் நெகிழப் பெற்றன; 1. என் எனப்படும் கொல் - இவ்வாறாகவும் இவ் விறலியின் கூற்று யாதெனப்படும். (முடிபு) தோழி! ஊரன் வதுவை மேவலன் ஆகலின், மென் தோள் இழை நெகிழ்ந்தன; (இவ்வாறாகவும் இவ்விறலியின் கூற்று) என் எனப்படும்! (வி-ரை) பேடிப்பெண் - பேடியாகிய பெண்ணென இரு பெயரொட்டு. பெண்கொண்டு - பெண்ணினது உருவு கொண்டு. ஆடு கைகடுப்ப என்றமையாற் பின்சென்று மேல் வளைந்த மருப்பு என்க. எருமையின் புறத்திற்குத் துறுகல்லும் மகாஅருக்கு மந்தியும் உவமம். தார் இடை குழைய மேவலன் - எனவும், அது புலந்து தோள் இழை நெகிழ்ந்தன எனவும் கூட்டுக. முழவு முகம் புலரா விழவுடை வியனகர் வதுவை மேவலன் என்றமையால், அவன் பரத்தையர் இல்லில் வதுவை அயர்தலை அவ் வாரவாரமே புலப்படுத்தும் என்றாளாயிற்று. உப்பின் குப்பை பெயற்கு உருகியாங்கு என்ற கருத்து, `கடல்விளை யமுதம் பெயற்கேற்றாஅங் குருகி யுகுதல்'1 `உப்பியல் பாவை யுறையுற் றதுபோல, உக்கு விடுமென் னுயிர்'2 `உப்பொய் சகடம், பெரும்பெய றலைய வீந்தாங்கு'3 எனப் பலவிடத்தும் வருதல் காண்க. 207. பாலை (மகட் போக்கிய 4தாய் சொல்லியது.) அணங்குடை முந்நீர் பரந்த செறுவின் உணங்குதிறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம் குடபுல மருங்கின் உய்ம்மார் புள்ளோர்த்துப் படையமைத் தெழுந்த பெருஞ்செய் ஆடவர் 5. நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதைக் குறைக்குளம்பு உதைத்த கற்பிறழ் இயவின் வெஞ்சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை மிஞிறார் கடாஅங் கரந்துவிடு கவுள வெயில்தின வருந்திய நீடுமருப்பு ஒருத்தல் 10. பிணரழி பெருங்கை புரண்ட கூவல் தெண்கண் உவரிக் குறைக்குட முகவை அறனி லாளன் தோண்ட வெய்துயிர்த்துப் பிறைநுதல் வெயர்ப்ப உண்டனள் கொல்லோ தேங்கலந் தளைஇய தீம்பால் ஏந்திக் 15. கூழை உளர்ந்து 1மோழைமை கூறவும் மறுத்த சொல்லள் ஆகி வெறுத்த உள்ளமொடு உண்ணா தோளே. - மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார். (சொ-ள்) 1-7. அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின் - தெய்வத்தையுடைய கடலின்நீர் பரவிய உப்பு விளையும் வயலில், உணங்கு திறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம் - நீர் காய்ந்த தன்மையால் வேறாகிய வெள்ளிய உப்பாகிய அமிழ்தினை, குடபுல மருங்கின் உய்ம்மார் - மேற்குத் திசையிலுள்ள இடங்களுக்குச் செலுத்தும் பொருட்டு, புள் ஓர்த்து - நிமித்தம் பார்த்து, படை அமைத்து எழுந்த பெருஞ்செய் ஆடவர் - படைக்கலங்களை அமைத்துக் கொண்டெழுந்த பெரிய வீரச் செயல்களைப் புரியும் ஆடவர், நிரை பரப்பொறைய நரை புறக் கழுதை - அடுக்கிய உப்புப் பொதியாய சுமையினையுடைய வெள்ளிய புறத்தினையுடைய கழுதைகளின், குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின் - தேய்ந்த குளம்பு உதைத்தலால் பரற்கற்கள் பிறழ்ந்து கிடக்கும் வழியாய, வெம் சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை - கொடிய பாலையினை ஊடறுத்துச் செல்லும் அச்சந்தோன்றும் கவர்த்த நெறிகளில்; 8-12. மிஞிறு ஆர் கடாஅம் கரந்துவிடு கவுள - வண்டுகள் பொருந்தும் மதம் கரந்தொழிந்த கன்னத்தினையுடைய, வெயில் தின வருந்திய நீடு மருப்பு ஒருத்தல் - வெயில் நலிதலால் வருந்திய நீண்ட கொம்பினையுடைய களிற்றின், பிணர் அழி பெருங்கை புரண்ட கூவல் - சருச்சரை அழிந்த பெரிய கை நீர் வேண்டித் துழாவிப் பார்த்த கிணற்றினை, அறன் இலாளன் தோண்ட - அறம் இல்லா னாகிய தன் தலைவன் தோண்டுதலால் ஊறிய, தெள் உவரி குறைக் குட முகவை - தெளிந்த உவரையுடையதாகிய குறைக்குட மாக முகக்கப்பட்ட நீரை; 14-17. தேம் கலந்து அளைஇய தீம்பால் ஏந்தி - தேனைப் பெய்து நன்கு கலந்த இனிய பாலை ஏந்திக் கொண்டு, கூழை உளர்ந்து மோழைமை கூறவும் - கூந்தலைக் கோதி நயமொழிகளைக் கூறவும், மறுத்த சொல்லள் ஆகி - மறுத்துரைப்பாள் ஆகி, வெறுத்த உள்ளமொடு உண்ணாதோள் - வெறுப்புற்ற உள்ளத்துடன் அதனை உண்ணா தோளாகிய என்மகள்; 12-13. வெய்து உயிர்த்து - வெப்பத்துடன் மூச்செறிந்து, பிறை நுதல் வியர்ப்ப உண்டனள் கொல்- பிறைமதி போன்ற நெற்றி, வியர்த்திடப் பருகினளோ! (முடிபு) அஞ்சுவரு கவலையில், கூவலை அறனிலாளன் தோண்ட, குறைக்குட முகவை நீரை, தேம்கலந்து அளைஇய தீம்பாலை ஏந்தி உளர்ந்து மோழைமை கூறவும் உண்ணாதோள், வெய்துயிர்த்து நுதல் வியர்ப்ப உண்டனள் கொல். (வி-ரை) குடபுல மருங்கின் உய்ம்மார் என்றமையால், உப்பு விளைந்தது குணகடற் செறுவில் என்பது போதரும். படை - சேனையுமாம். செய் - வீரச்செய்கை; முதனிலைத் தொழிற்பெயர். கவுளவாகிய ஒருத்தல் எனவும், உவரியாகிய முகவை எனவும் இயையும். முகவை - முகந்த நீர். தெண்கண் : கண் அசை. `மீன்கண் அற்றதன் சுனையே'1 என்புழிப்போல. தலைவிபால் மிக்க அன்புடைய னாயினும் தமரிற் பிரித்துக் கொண்டு சென்றமையின் அறனிலாளன் என்றாள். மோழைமை - தாழ்ந்த மொழி. 208. குறிஞ்சி (புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) யாம இரவின் நெடுங்கடை நின்று தேமுதிர் சிமையக் குன்றம் பாடும் நுண்கோல் அகவுநர் வேண்டின் வெண்கோட்டு அண்ணல் யானை ஈயும் வண்மகிழ் 5. வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை இழையணி யானை யியல்தேர் மிஞிலியொடு நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப் புள்ளொருங்கு 10. அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று ஒண்கதிர் தெறாமைச் சிறகரில் கோலி நிழல்செய்து உழறல் காணேன் யானெனப் படுகளங் காண்டல் செல்லான் சினஞ்சிறந்து உருவினை நன்னன் அருளான் கரப்பப் 15. பெருவிதுப் புற்ற பல்வேள் மகளிர் குரூஉப்பூம் பைந்தார் அருக்கிய பூசல் வசைவிடக் கடக்கும் வயங்குபெருந் தானை அகுதை களைதந் தாங்கு மிகுபெயல் உப்புச்சிறை நில்லா வெள்ளம் போல 20. நாணுவரை நில்லாக் காம நண்ணி நல்கினள் வாழியர் வந்தே ஓரி பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லிக் கார்மலர் கடுப்ப நாறும் ஏர்நுண் ஓதி மாஅ யோளே. - பரணர். (சொ-ள்) 1-9. (நெஞ்சே!) யாம இரவின் நெடுகடை நின்று - இரவின் கடையாமத்தே நீண்ட கடை வாயிலில் நின்று, தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும் - தேன் நிறைந்த உச்சியினையுடைய தனது குன்றினைப் பாடுகின்ற, நுண்கோல் அகவுநர் வேண்டின் - சிறிய பிரப்பங் கோலைக் கொண்ட பாடுநர் விரும்பின், வெண்கோட்டு அண்ணல் யானை ஈயும் - வெள்ளிய கொம்பினையும் தலைமையையு முடைய யானையை வழங்கும், வண்மகிழ் - வண்மையாலாகிய மகிழ்ச்சியினையும், அளி இயல் வாழ்க்கை - அருள் பொருந்தும் வாழ்க்கையினையுமுடைய, வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் - வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் என்பான், பாழி பறந்தலை - பாழி என்னும் ஊரின் கண்ணதாகிய போர்க்களத்தே, இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு - ஓடையை அணிந்த யானை யினையும் இயன்ற தேரினையும் உடைய மிஞிலி என்பானொடு, நண்பகல் உற்ற செருவில் - நண்பகற் பொழுதிலே செய்த போரின் கண், ஒள்வாள் மயங்கு அமர் புண் கூர்ந்து வீழ்ந்தென - ஒள்ளிய வாட்படை மயங்கிய போரினாலே புண்மிக்கு வீழ்ந்தனனாக; 9-14. அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று - அழகிய இடத்தையுடைய வானில் விளங்கிய ஞாயிற்றினது, ஒள் கதிர் தெறாமை - ஒள்ளிய கதிர் அவன் உடலைக் காய்தல் செய்யாது, புள் ஒருங்கு சிறகரிற் கோலி - புட்கள் பலவும் கூடித் தம் சிறகுகளால் பந்தரிட்டு, நிழல் செய்து உழறல் காணேன் யானென - நிழலைச் செய்து சுழன்று கொண்டிருத்தலை யான் காணேனென்று, படுகளம் காண்டல் செல்லான் - அவன் பட்ட களத்தைக் காண்டற்குச் செல்லானாய், சினம் சிறந்து - கோபம் மிக்கு, உருவினை நன்னன் அருளான் கரப்ப - அச்சம் தரும் போர்ச் செயலினைக் கொண்ட நன்னன் அருளின்றி மறைந்து கொள்ள; 15-18. பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர் - மிக்க விரைவு கொண்டு வந்த பல வேளிர் மகளிர், குரூஉபூ பைந்தார் அருக்கிய பூசல் - விளங்கும் பூக்களாலாய அழகிய மாலைகளை அழித்து விட்டுச் செய்த அழுகை ஆரவாரத்தினை, வசைவிடக் கடக்கும் வயங்கு பெருதானை - பழிநீங்க மாற்றார் படையினை வெல்லும் விளங்குகின்ற பெரிய சேனையினையுடைய, அகுதை களைதந் தாங்கு - அகுதை என்பான் நீக்கினாற் போல; 18-24. ஓரி - ஓரி என்பானது, பல் பழப் பலவின் பயம்கெழு கொல்லி - பல பழங்களையுடைய பலா மரங்களையுடைய பயன் மிக்க கொல்லி மலையின், கார் மலர் கடுப்ப நாறும் - கார்காலத்துப் பூக்கும் மலரினை யொப்ப நாறும், ஏர் நுண் ஓதி - அழகும் மென்மையும் பொருந்திய கூந்தலையுடைய, மாயோள் - மாமை நிறத்தினளாய நம் தலைவி, உப்புச்சிறை நில்லா மிகுபெயல் வெள்ளம் போல - உப்பினாலாகிய அணையில் தடைப்பட்டு நில்லாத மிக்க மழையால் எழுந்த வெள்ளத்தைப்போல, நாணு வரை நில்லாக் காமம் நண்ணி - நாணத்தின் எல்லையில் அடங்காத காமம் பொருந்தப் பெற்று, வந்து நல்கினள் - வந்து நம் துன்பினை நீக்கி அருள் செய்தனள், வாழியர் - வாழ்வாளாக. (முடிபு) (நெஞ்சே!) ஆஅய் எயினன் மிஞிலியொடு உற்ற செருவில் வீழ்ந்தெனப் புள் ஒருங்கு ஞாயிற்று ஒண்கதிர் தெறாமைச் சிறகரிற் கோலி நிழல் செய்துழறல் காணேன் யானெனப் படுகளங் காண்டல் செல்லான் நன்னன் அருளான் கரப்ப, மகளிர் பூசல் அகுதை களைதந்தாங்கு, மாயோள் காமம் நண்ணி வந்து நல்கினள்; வாழியர்! (வி-ரை) யாம இரவு! நள்ளிரவென்றே கொண்டு, நெடுங்கடை நின்று குன்றம் பாடும் அகவுநர் யாம இரவின் வேண்டினும் யானை ஈயும் எயினன் என்றலுமாம். வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் எனவும், பல்வேள் மகளிர் எனவும் கூறப்பட்டிருத்தலின், ஆஅய் எயினன் என்பான் வேளிர் குடியினன் என்பது பெறப்படும். வெளியன் வேண்மானுக்கு மகனாகிய ஆய் எயினன் என்றாதல், வெளியன் வேண்மான் ஆகிய ஆய் எயினன் என்றாதல் கொள்க. முன்னதற்கு வெளியன் என்பது தந்தையின் பெயரும், பின்னதற்கு எயினனது மற்றொரு பெயரும் ஆகும். அளியியல் வாழ்க்கை எயினன் எனக் கூட்டுக. மிஞிலி யென்பான் நன்னனுக்குத் துணையாயவன். நன்னன் புன்னாடு என்னும் நாட்டினைக் கடிந்த காலத்து, ஆய் எயினன் அஞ்சலிர் என்று கூறி அந்நாட்டினரைப் பாதுகாத்தலின், அவனுக்கும் நன்னனுக்கும் பகைமை விளைந்த தென்பதும், பாழிப் பறந்தலையில் நன்னனுக்குத் துணையாக வந்தெதிர்த்த மிஞிலியொடு பொருது எயினன் தான் கூறிய சொற் பிழையாது உயிர் கொடுத்தனன் என்பதும், `பொலம்பூ ணன்னன் புன்னாடு கடிந்தென, யாழிசை மறுகிற் பாழியாங்கண், அஞ்சல் என்ற ஆஅய் எயினன், இகலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித் தன்னுயிர் கொடுத்தனன் சொல்லிய தமையாது' 1என்பதனால் அறியப்படும். எயினன் புள்ளின் பாதுகாவலன் ஆகலின், பறவைகள் ஒருங்குகூடி நிழல் செய்தனவென்க. அவன் அன்னனாதலை அகம் (142,181) ஆகிய பாட்டுக்களானும் அறிக. புள் ஒருங்கு கூடி என ஒரு சொல் வருவித்துரைக்க. தனக்குத் துணையாகிய மிஞிலி பகைவனைக் கொன்ற களத்தினைத் தான் சென்று காண்டலும், தன் பகைவனது அருள் மேம்பாட்டை அஃறிணையாகிய பறவைகள் தாமும் வெளிப்படுத்தலைக் கண்டு சினந்தவிர்ந்து இரங்கலும் முறை யாகவும், நாணினாலும் அழுக்காற்றினாலும் அங்ஙனம் நன்னன் செய்திலன் என்பார், `புள்ளொருங்கு..... நிழல் செய்துழறல் காணேன் யானெனப், படுகளங் காண்டல் செல்லான் சினஞ் சிறந்து, உருவினை நன்னன் அருளான் கரப்ப' என்றார். மகளிர் பூசலை அகுதை களைந்தாற்போல மாயோள் வந்து என் துயர் களைந்து நல்கினள் என்றான் என்க. `உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல' என்னுங் கருத்துப் பலவிடத்து வந்திருத்தலை `என்னெனப் படுங்கொல் தோழி'2 என்னுஞ் செய்யுளுரையிற் காண்க. 209. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.) தோளுந் தொல்கவின் தொலைந்தன நாளும் அன்னையும் அருந்துயர் உற்றனள் அலரே பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் கோமான் எழுவுறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன் 5. நேரா எழுவர் அடிப்படக் கடந்த ஆலங் கானத்து ஆர்ப்பினும் பெரிதென ஆழல் வாழி தோழி அவரே மாஅல் யானை மறப்போர்ப் புல்லி காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர் 10. அறையிரந் தகன்றனர் ஆயினும் நிறையிறந்து உள்ளா ராதலோ அரிதே செவ்வேல் முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி செல்லா நல்லிசை நிறுத்த வல்வில் ஓரிக் கொன்று 3சேரலர்க் கீத்த 15. செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி நிலைபெறு கடவு ளாக்கிய பலர்புகழ் பாவை யன்னநின் னலனே. - கல்லாடனார். (சொ-ள்) 1-7. தோழி-, வாழி-, தோளும் தொல்கவின் தொலைந்தன- என் தோள்களும் பழைய அழகு கெட்டன, நாளும் அன்னையும் அரு துயர் உற்றனள் - நாடோறும் அன்னையும் அரிய துயரினை மேவினள், அலரே - ஊரில் எழும் அலர்தான், பொன் அணி நெடுதேர் தென்னர் கோமான் - பொன்னால் அணியப்பெற்ற நீண்ட தேரினையுடைய பாண்டியர் பெருமானாகிய, எழு உறழ் திணிதோள் இயல்தேர் செழியன் - கணையமரத்தை மாறுபடும் திண்ணிய தோளினையும் நன்கு இயன்ற தேரினையுமுடைய பாண்டியன் நெடுஞ்செழியன், நேரா எழுவர் அடிபடக் கடந்த - பகைத்த எழுவரையும் முற்ற வென்ற, ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என - தலையாலங்கானத்து எழுந்த வெற்றி யாரவாரத்தினும் பெரிது என்று கூறி, ஆழல் - துயரில் அழுந்தாதே; 7-10. அவர் - நம் தலைவர், மால் யானை மறப் போர்ப் புல்லி - பெரிய யானையையும் வீரத்துடன் புரியும் போரினையுமுடைய புல்லி என்பானது, காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர் - மூங்கில்களையுடைய நீண்ட சாரல் பொருந்திய வேங்கடமலையின் அப்பாலுள்ள, அறை இறந்து அகன்றனர் ஆயினும் - குன்றுகளைக் கடந்து சென்றுளாராயினும்; 10-17. முள்ளூர் மன்னன் செவ்வேல் கழல் தொடி காரி - சிவந்த வேலினையும் கழல் இடப்பட்ட தொடியினையுமுடைய முள்ளூர்க்குத் தலைவனாகிய காரி என்பான், செல்லா நல்இசை நிறுத்த வல்வில் ஓரிக் கொன்று - கெடாத நல்ல புகழினை நிலைநாட்டிய வல்வில் ஓரியைக் கொன்று, சேரலர்க்கு ஈத்த - சேர மன்னர்க்கு உரிமை யாக்கிய, செவ்வேர்ப் பலவின் பயம்கெழு கொல்லி - சிவந்த வேர்ப் பலாமரத்தின் பழம் மிக்க கொல்லி மலையில், நிலைபெறு - நிலை பெற்ற, கடவுள் ஆக்கிய - தெய்வத் தச்சனா லியற்றப்பட்ட, பலர் புகழ் பாவை அன்ன நின் நலன் - பலரும் புகழும் கொல்லிப் பாவையை யொத்த நினது அழகை, நிறையிறந்து - நெஞ்சை நிறுத்துந் தன்மை மிக்கு, உள்ளார் ஆதல் அரிது - நினையாராதல் இல்லை. (முடிபு) தோழி! வாழி! அலர்ஆர்ப்பினும் பெரிதென ஆழல்; அவர் வேங்கடத்து உம்பர் அறையிறந் தகன்றன ராயினும், கொல்லி நிலைபெறு பாவையன்ன நின் நலன் நிறையிறந்து உள்ளாராதல் அரிது. (வி-ரை) செழியனால் வெல்லப்பட்ட பகைவர் எழுவர் இவர் என்பதனை `செழியன், ஆலங்கானத்து அகன்தலை சிவப்பச், சேரல் செம்பியன் சினங்கெழு திதியன், போர்வல் யானை பொலம்பூண் எழினி, நாரரி நறவின் எருமையூரன், தேங்கம ழகலத்துப் புலர்ந்த சாந்தின், இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநனென், றெழுவர்'1 என்பதனால் அறிக. நிறை - நிறுத்தல்; நெஞ்சை நிறுத்துந் தன்மை. இறத்தல் - மிகுதல். கழறொடி - கழலும் தொடியுமாம். காரி - கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய மலைமான் திருமுடிக் காரி. செல்லா நல்லிசை நிறுத்த - தன் வள்ளன்மையால் அழியாத நல்ல புகழை நிலை நிறுத்திய என்க. ஓரி என்பானும் கடையெழு வள்ளல்களில் ஒருவனே. இவன் வல்வில்லோரி என்ற வழங்கப்படு தலின், சிறந்த படையாண்மையும் உடையன் என்பது போதரும். ஓரிக்கொன்று: இரண்டனுருபு உயர்திணை மருங்கின் ஒழிந்து வந்தது, உடம்பொடு புணர்த்தலாற் கொள்ளப்படும். கொல்லி நிலைபெறு பாவை எனக் கூட்டுக. (மே-ள்) `நாற்றமும் தோற்றமும்'2 என்னுஞ் சூத்திரத்து, `என்பு நெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ, அன்புதலையெடுத்த வன்புறைக் கண்ணும்' என்னும் பகுதிக்கண் இயற்பட மொழிந்து வற்புறுத்தற்கு இச் செய்யுளைக் காட்டினர், நச். 210. நெய்தல் (தோழி, தலைமகன் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.) குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர் எறியுளி பொருத ஏமுறு பெருமீன் புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட விசும்பணி வில்லிற் போகிப் பசும்பிசிர்த் 5. திரைபயில் அழுவம் உழக்கி உரனழிந்து நிரைதிமில் மருங்கில் 3 படர்தருந் துறைவன் பானாள் இரவில்நம் பணைத்தோள் உள்ளித் தானிவண் வந்த காலை நம்மூர்க் கானலம் பெருந்துறைக் கவின்பா ராட்டி 10. ஆனாது புகழ்ந்திசி னோனே இனித்தன் சாயல் மார்பிற் பாயல் மாற்றிக் கைதையம் படுசினை கடுந்தேர் விலங்கச் செலவரி தென்னும் என்பது பலகேட் டனமால் தோழி நாமே. - உலோச்சனார். (சொ-ள்) 14. தோழி-, 1-6. குறி இறைக் குரம்பை கொலை வெம் பரதவர் - குறிய இறப்பினையுடைய குடிசையில் வாழும் கொலைத் தொழிலை யுடைய கொடிய பரதவரால், எறி உளி பொருத ஏம் உறு பெருமீன் - எறியப்பட்ட உளி தாக்கிய களிப்புப் பொருந்திய பெரிய மீன், விசும்பு அணி வில்லில் போகி - விசும்பினை அணிசெயும் வில்லைப் போலத் தாவிச் சென்று, புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட - தன் புண்ணினின்றும் ஒழுகிய உதிரத்தால் புலால் நாறும் கடல் நீரின் நிறம் மாறுபட, பசும் பிசிர்த் திரை பயில் அழுவம் உழக்கி - பசிய திவலைகளையுடைய அலை நெருங்கிய கடற்பரப்பைக் கலக்கி, உரன் அழிந்து - வலி குன்றி, நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன் - வரிசையாகவுள்ள படகின் பக்கலில் வந்து சேரும் துறையினையுடைய நம் தலைவன்; 7-10. பால் நாள் இரவில் நம் பணைத்தோள் உள்ளி - நடு இரவில் நம் மூங்கிலையொத்த தோளினை நினைத்து, இவண் வந்த காலை - இங்கு வந்தபோது, நம் ஊர்க் கானல் பெருந்துறைக் கவின்பாராட்டி - நம்மூரின் கண்ணே சோலையையுடைய பெரிய துறையின் அழகினைப் பாராட்டி, ஆனாது புகழ்ந்திசினோன் - அமையாது புகழ்ந்தனன்; 10-14. இனி - இப்பொழுதோ, தன் சாயல் மார்பில் பாயல் மாற்றி - தனது மென்மை வாய்ந்த மார்பில் யாம் கண்துயிலலை அகற்றி, கைதை படுசினைக் கடுந்தேர் விலங்க - தாழையின் தாழ்ந்த கிளைகளால் தனது கடிய தேர் தடைப்படுதலால், செலவு அரிது என்னும் என்பது - செல்லுதல் அரிது என்று கூறுவன் என்பதனை, நாம் பல கேட்டனம் - நாம் பலமுறை கேட்டேம் அல்லேமோ. (முடிபு) தோழி! துறைவன் நம் பணைத்தோள் உள்ளி வந்த காலை, நம்மூர்க் கானலம் பெருந்துறைக் கவின் பாராட்டிப் புகழ்ந்திசினோன்; இனி, தன் மார்பிற் பாயல் மாற்றிக் கடுந்தேர் விலங்கச் செலவரிது என்னும் என்பது நாம் பல கேட்டனம். (வி-ரை) வேட்டம் சென்று மீன்களைக் கொல்பவராகலின் கொலை வெம் பரதவர் எனப்பட்டார். எறி உளி - பெருமீன்களை வெட்டுவதொரு வாள். விசும்பு அணி வில் - விசும்பானது அணிந்த வில் என்றுமாம். வில்லிற் போகி - விற்போலப் பன்னிறமுடையதாய் வளைந்து தோன்றுமாறு சென்று என்க. கானலம் பெருந்துறைக் கவின் பாராட்டி, ஆனாது, புகழ்ந்திசினோன் என்பதனால், முன்பு இத் துறையை விடுத்துச் செல்லுதற்கு விருப்பின்றி யிருந்தான் என்பதும், `கடுந்தேர் விலங்கச் செலவரி தென்னும்' என்பதனால், இப்போது அதன்கண் வருவதற்கும் விருப்பின்றி யுள்ளான் என்பதும் பெறப்படும். (உ-றை) உளிபொருத பெருமீன் கடல் மறுப்படப் போகி அழுவம் உழக்கி உரனழிந்து திமில் மருங்கிற் படரும் என்றது, அவனால் நலன் நுகரப்பட்டு வேறுபாடுற்ற நாம் இற்பழியாக்கி, ஊர் அலர் தூற்ற வலியழிந்து இறந்துபடுவதே பயனாயிற்று என்றவாறு. 211. பாலை (பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது.) கேளாய் எல்ல தோழி வாலிய சுதைவிரிந் தன்ன பல்பூ மராஅம் பறைகண் டன்ன பாவடி நோன்தாள் திண்ணிலை மருப்பின் வயக்களிறு உரிஞுதொறும் 5. தண்மழை ஆலியில் தாஅய் உழவர் வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும் பனிபடு சோலை வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர் குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெருநிரை 10. பிடிபடு பூசலின் எய்தா தொழியக் கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி நெடுஞ்சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட கல்லா எழினி பல்லெறிந் தழுத்திய 1வன்கண் கதவின் வெண்மணி வாயில் 15. மத்தி நாட்டிய கல்கெழு பனித்துறை நீரொலித் தன்ன பேஎர் அலர்நமக் கொழிய அழப்பிரிந் தோரே. - மாமூலனார். (சொ-ள்) 1. எல்ல தோழி கேளாய் - ஏடி, தோழி! நான் கூறுவதனைக் கேட்பாயாக; 9-17. குழியிடை கொண்ட - பள்ளத்தில் அகப்படுத்திய, கன்று உடை பெரு நிரை பிடி படு பூசலின் - கன்றுகளையும் பிடிகளையு முடைய பெரிய யானையினங்களை அகப்படுத்தும் பூசற்கண்ணே, எய்தாது ஒழிய - (எழினி என்பான்) வாராது ஒழிய, கடுசின வேந்தன் ஏவலின் எய்தி - அதனால் மிக்க சினங்கொண்ட சோழமன்னனது ஏவலாற் சென்று, மத்தி - மத்தி என்பான், நெடு சேண் நாட்டில் - நெடுஞ் சேய்மைக்கண்ணதாகிய நாட்டில், தலைத் தார்ப்பட்ட - முதற்படையில் அகப்பட்டுக் கொண்ட, கல்லா எழினி - கல்லாத அவ்வெழினியின், பல் எறிந்து அழுத்திய - பல்லைப் பறித்து வந்து பதித்த, வன்கண் கதவின் - வன்மை பொருந்திய கதவினையுடைய, வெண்மணி வாயில் - வெண்மணி என்னும் ஊரின் வாயிலிடத்தே, நாட்டிய - அம் மத்தி என்பவனால் நாட்டப்பட்ட, கல் கெழு - கல் பொருந்திய, பனித்துறை - குளிர்ந்த துறைமுகத்தே, நீர் ஒலித்தன்ன - நீர் மோதி ஒலிப்பது போன்ற, பேஎர் அலர் நமக்கு ஒழிய - பெரிய அலர் நம்பால் எஞ்சியிருக்கவும், அழப் பிரிந்தோர் - நாம் அழவும் பிரிந்த நம் தலைவர்; 1-8. மராஅம் - வெண் கடப்பமரத்தை, பறை கண்டன்ன பாவு அடி நோன் தாள் - பறையினையொத்த வட்டமாகிய பரந்த அடியினையுடைய வலிய தாளினையும், திண் நிலை மருப்பின் - திண்ணிய நிலை வாய்ந்த கோட்டினையுமுடைய, வய களிறு உரிஞுதொறும் - வலிய களிறு உரிஞ்சுதொறும். வாலிய சுதை விரிந்தன்ன பல்பூ - வெள்ளிய சுண்ணாம்பு பரந்திருந்தாலொத்த, அதன் பலவாய பூக்கள், தண் மழை ஆலியில் தாஅய் - தண்ணிய மழையொடு விழும் பனிக்கட்டிபோல உதிர்ந்து பரவி, உழவர் வெண் நெல் வித்தின் அறை மிசை உணங்கும் - உழவரது வெண்ணெல்லின் விதைபோலப் பாறையின்மீது காய்ந்து கிடக்கும், பனிபடு சோலை வேங்கடத்து உம்பர் - குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய வேங்கட மலையின் அப்பாலுள்ள, மொழி பெயர் தேஎத்தர் ஆயினும் - வேற்றுமொழி வழங்கும் நாட்டின் கண்ணராயினும், நல்குவர் - விரைந்து வந்து அருள் செய்வர். (முடிபு) தோழி கேளாய்! அலர் நமக்கொழிய, (நாம்) அழப் பிரிந்தோர், வேங்கடத்தும்பர் மொழி பெயர் தேஎத்த ராயினும் நல்குவர். (வி-ரை) கன்று பிடியுடைப் பெருநிரை என மாறுக. பூசல் - வேட்டம். யானைகளை அகப்படுத்தும் வேட்டைக்கு எழினி என் பான் வாராமையால், சினங்கொண்ட சோழ மன்னன், மத்தி என்னும் படைத் தலைவனை ஏவ, அவன் சென்று அவ் வெழினியைப் போரிலே அகப்படுத்து, அவன் பல்லைப் பறித்து வந்து வெண்மணி யென்னும் ஊரினது வாயிற் கதவிலே பதித்தனன் என்பதும், அவ்வெற்றிக்கு அடையாளமாக ஆங்குள்ள நீர்த்துறையில் கல் நாட்டினான் என்பதும் இச் செய்யுளில் அறியப்படும் வரலாறு களாகும். மத்தி என்பான் பரதவக் குடியினன் என்பதும், கழாஅர் என்னும் ஊருக்கு உரியவன் என்பதும், பரதவர் கோமான் பல்வேல் மத்தி, கழாஅர் முன்துறை (அகம் 126) என்பதனால் அறியப்படும். இனிப் பூசலின் எய்தா தொழிய என்பதற்கு, வேட்டையிற் சென்றிருந்தா னாகலின் தன் ஆணையின்படி வாராதொழிய என்றுரைத்தலு மாம். 212. குறிஞ்சி (அல்லகுறிப்பட்டு நீங்குந் தலைமகன் தன் நெஞ்சினை 1நெருங்கிச் சொல்லியது.) தாவில் நன்பொன் தைஇய பாவை விண்தவழ் இளவெயில் கொண்டுநின் றன்ன மிகுகவின் எய்திய தொகுகுரல் ஐம்பால் கிளையரில் நாணல் கிழங்குமணற் கீன்ற 5. முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய் நயவன் தைவருஞ் செவ்வழி நல்யாழ் இசையோர்த் தன்ன இன்தீங் கிளவி அணங்குசால் அரிவையை நசைஇப் பெருங்களிற்று இனம்படி நீரில் கலங்கிய பொழுதில் 10. பெறலருங் குரைய ளென்னாய் வைகலும் இன்னா அருஞ்சுரம் நீந்தி நீயே என்னை யின்னற் படுத்தனை மின்னுவசிபு உரவுக்கார் கடுப்ப மறலி மைந்துற்று 1விரவுமொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇப் 15. படைநிலா இலங்குங் கடல்மருள் தானை மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன் பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்து செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி ஓங்குதிரைப் பௌவம் நீங்க வோட்டிய 20. நீர்மாண் எஃகம் நிறத்துச்சென் றழுந்தக் கூர்மதன் அழியரோ நெஞ்சே ஆனாது எளிய ளல்லோள் கருதி விளியா எவ்வந் தலைத்தந் தோயே. - பரணர். (சொ-ள்) 21. நெஞ்சே-, 1-12. தாஇல் நன் பொன் தைஇய பாவை - வலியற்ற மாற்று யர்ந்த பொன்னாற் செய்யப்பெற்ற பாவை, விண் தவழ் இளவெயில் கொண்டு நின்றன்ன - வானில் பரவும் இளவெயிலைத் தன்மேற் கொண்டு ஒளிதிகழ நின்றாலொத்த, மிகு கவின் எய்திய - மிக்க அழகு பொருந்தியவளும், தொகு குரல் ஐம்பால் - திரண்ட கொத்தாகிய கூந்தலையும், கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற - கிளைத்த தூறாகிய நாணற் கிழங்கு மணலிடத்தே ஈன்ற, முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய் - முளையை ஒத்த (வெள்ளிய) கூரிய பற்களை யுடைய சிவந்த வாயினையும், நயவன் தைவரும் நல்யாழ் செவ்வழி இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி - யாழ் வல்லோன் இயக்கும் நல்ல யாழின் செவ்வழிப் பண்ணின் இசையைக் கேட்டாற்போலும் மிக இனிய சொல்லினையும் உடைவளுமாகிய, அணங்கு சால் அரிவையை நசைஇ - தெய்வத்தின் இயல்பினை யுடைய மகளை விரும்பி, பெரு களிற்று இனம் படி நீரில் கலங்கிய பொழுதில் - பெரிய களிற்றி யானைக் கூட்டம் படிந்து கலக்கிய நீரைப்போல நீ கலக்கமுற்ற பொழுது, பெறல் அருங்குரையள் என்னாய் - இவள் பெறுதற்கு அரியள் என்று எண்ணாயாகி, வைகலும் இன்னா அருஞ்சுரம் நீந்தி - நாடோறும் இன்னாமை யுடைய அரிய சுரநெறியைக் கடந்து, நீ என்னை இன்னல் படுத்தனை - நீ என்னைத் துன்பத்தின்கண் செலுத்தினை; 21-23. ஆனாது எளியள் அல்லோள் கருதி - எளியள் அல்லளாய அவளை அமையாது எண்ணி, விளியா எவ்வம் தலைத் தந்தோய் - நீங்காத துன்பத்தினை என்பாற் சேர்த்தியுள்ள நீதான்; 12-21. படை நிலா இலங்கும் கடல் மருள் தானை - படைக் கலன்களின் ஒளி வீசும் கடலையொத்த தானையினையுடைய, மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன் - தேன் ஒழுகும் மாலையினை யுடைய தறுகண்மையுடன் போர்செய்தல்வல்ல குட்டுவன், மின்னு விசிபு உரவுக்கார் கடுப்ப மறலி மைந்து உற்று - மின்னலால் வானைப் பிளந்து வலிமை கொண்டெழும் மேகத்தையொப்பப் பகைத்து வலிமை கொண்டு, விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ - பல மொழியும் கலந்த பாசறையைத் தான் வேண்டுமிடங்களில் அமைத்து, பொரு முரண் பெறாது - தன்னுடன் பொரும் பகையை நில எல்லைக்குள் காணாமையின், விலங்கு சினம் சிறந்து - பொங்கி எழும் சினம் மிக்கு, செரு செய் முன்பொடு முந்நீர் முற்றி - போர் புரியும் வலியால் கடலை வளைந்து, ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய - உயர்ந்த அலைகளையுடைய கடலைப் பிறக்கிடும்படி ஓட்டிய, நீர் மாண் எஃகம் - மாண்புற்ற நீர்மையுடைய வேல், நிறத்துச் சென்று அழுந்த - நின் மார்பிலே தைத்து அழுந்திட, கூர் மதன் அழியரோ - நினது மிக்க செருக்கு அழியப் பெறுவாயாக. (முடிபு) நெஞ்சே! என்னை இன்னற்படுத்தனை; விளியா எவ்வம் தலைத்தந்த நீதான் குட்டுவன் எஃகம் நிறுத்துச் சென்றழுந்த மதன் அழியரோ. (வி-ரை) தா - வலி; போக்கற்ற பொன் நெகிழ்ச்சி யுடையதா யிருத்தலின் தாவில் நன்பொன் எனப்பட்டது. கவின் எய்திய அரிவை எனவும், ஐம்பாலையும் முள்ளெயிற்றுத் துவர்வாயினையும், தீங்கிளவி யினையுமுடைய அரிவை எனவும் கூட்டுக. மணற்கு ஈன்ற : வேற்றுமை மயக்கம். நயவன் - இசைநயம் தெரிந்து பாடுபவன். அணங்கு - தெய்வத்தன்மை. பெறுதற்கரியள் என்பது தோன்ற அணங்குசால் அரிவை என்றான். கலங்கிய நெஞ்சிற்குச் செய்வதும் தவிர்வதும் தோன்றாவாகலின், `கலங்கிய பொழுதில்........ என்னை யின்னற் படுத்தனை' என்றான். மறலுதல் - மாறுபடுதல், பகைத்தல். படைஞருள்ளே பலமொழி பேசுவாரும் உளராதலின், விரவு மொழிக் கட்டூர் என்றார். முந்நீர் முற்றி, ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய என்றது, கடல் நாப்பண் பகைவர் உறையும் தீவைச் சூழ்ந்து, அவர்க்கு அரணாகவுள்ள கடல் வலி கெடப் போக்கிய என்றவாறு. ‘பதிற்றுப் பத்தில், `உடை திரைப் பரப்பிற் படுகட லோட்டிய'1 (46) என்புழி கடலோட்டிய என்றது : `தன்னுள் வாழ்வார்க்கு அரணாகிய கடல் வலியை அழித்த என்றவாறு' என அதன் பழைய உரைகாரர் கூறியிருப்பது காண்க; அதனாலே கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்' எனக் குட்டுவன் கூறப்படுவான் ஆயினன். இனி, ஓட்டிய என்பதற்குப் பகைவரை ஓட்டிய என்றலுமாம். நிறம் - மார்பு; நிறத்துச் சென்றழுந்த என, நெஞ்சை உறுப்புடையது போல் கூறியது, `உறுப்புடை யதுபோல்........ நெஞ்சொடு புணர்த்து'2 என்பதனால் அமையும். 213. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.) வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு ஓங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர்க் கொய்குழை யதிரல் வைகுபுலர் அலரி 5. சுரியிரும் பித்தை சுரும்புபடச் சூடி இகல்முனைத் தரீஇய ஏறுடைப் பெருநிரை நனைமுதிர் நறவின் நாட்பலி கொடுக்கும் வால்நிணப் புகவின் வடுகர் தேஎத்து நிழற்கவி னிழந்த நீரில் நீளிடை 10. அழலவிர் அருஞ்சுரம் நெடிய வென்னாது அகற லாய்ந்தன ராயினும் பகல்செலப் பல்கதிர் வாங்கிய படுசுடர் அமையத்துப் பெருமரங் கொன்ற கால்புகு வியன்புனத்து 3எரிமருள் கதிர திருமணி யிமைக்கும் 15. வெல்போர் வானவன் கொல்லிக் குடவரை வேயொழுக் கன்ன சாயிறைப் பணைத்தோள் பெருங்கவின் சிதைய நீங்கி ஆன்றோர் அரும்பெறல் உலகம் அமிழ்தொடு பெறினுஞ் சென்றுதாம் நீடலோ இலரே யென்றுங் 20. கலம்பெயக் கவிழ்ந்த கலத்தொடித் தடக்கை வலம்படு வென்றி வாய்வாட் சோழர் இலங்குநீர்க் காவிரி யிழிபுனல் வரித்த அறலென நெறிந்த கூந்தல் உறலின் சாயலொடு ஒன்றுதல் மறந்தே. - 4தாயங் கண்ணனார். (சொ-ள்) 1-11. (தோழி! நம் தலைவர்,) வினை நவில் யானை விறல் போர் தொண்டையர் - போர்த்தொழில் பயின்ற யானைகளை யுடைய வலிய போர் வல்ல தொண்டையரது; இனம் மழை தவழும் ஏற்று அருநெடு கோட்டு - கூட்டமாய மேகங்கள் தவழும் ஏறுதற்கு அரிய நெடிய உச்சியினின்று இழியும், ஓங்கு வெள் அருவி - உயர்ந்து தோன்றும் வெள்ளிய அருவிகளையுடைய, வேங்கடத்து உம்பர் - வேங்கட மலைக்கு அப்பாலுள்ளதும், கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி - கொய்யப்பெற்ற தழைகளையுடைய காட்டு மல்லிகையின் வைகறையில் அலரும் பூவினை, சுரி இரு பித்தை சுரும்பு பட சூடி - சுருண்ட கரிய மயிரில் வண்டு மொய்க்கச் சூடி, இகல் முனை தழீஇய ஏறு உடை பெரு நிரை - பகைவர் போர்முனையில் வென்று கொண்ட ஏறுகளையுடைய பெரிய ஆனிரைக்காக, நனைமுதிர் நறவின் நாள் பலி கொடுக்கும் - முதிர்ந்த கள்ளாகிய நறவினை விடியற்காலத்தே பலியாகச் செலுத்தும், வால்நிண புகவின் வடுகர் தேஎத்து - வெள்ளிய நிணச் சோற்றினை யுடைய வடுகரது தேயத்தே யுள்ள, நிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடை - நிழலின் அழகை இழந்த நீர் இல்லாத நீண்ட இடத்தினை யுடைய, அழல் அவிர் அரு சுரம் நெடிய என்னாது - தீயின் வெப்பம் விளங்கும் அரிய காடுகள் நீண்டன என்று கருதாமல், அகறல் ஆய்ந்தனர் ஆயினும் - நம்மைப் பிரிந்து போதலைத் துணிந்தனராயினும்; 19-24. என்றும் கலம் பெயக் கவிழ்ந்த கழல்தொடித் தடக் கை - எஞ்ஞான்றும் அணிகளைப் பெய்தற்குக் கவிழ்ந்துள கழலும் தொடியினை அணிந்த பெரிய கையின்கண், வலம் படு வென்றி வாய் வாள் சோழர் - வலிமையான் எய்திய வென்றிபொருந்திய தப்பாத வாளினைக் கொண்ட சோழரது, இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த - விளங்கும் நீரினையுடைய காவிரியினது வடிந்த நீர் வரி வரியாகச் செய்திட்ட, அறல் என நெறிந்த கூந்தல் - கருமணல் போல வளைந்த கூந்தலையும், உறல் இன்சாயலொடு ஒன்றுதல் மறந்து - உறுதற்கு இனிய மென்மையையும் பொருந்துதலை மறந்து; 11-17. பகல் செல பல் கதிர் வாங்கிய படுசுடர் அமையத்து - பகற்பொழுது நீங்க ஞாயிறு தனது பல கதிர்களையும் சுருக்கிய ஒளி மழுங்கும் நேரத்தே, பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து - பெரிய மரத்தினை வெட்டித் தள்ளியதால் காற்றுப் புகலாகும் பெரிய கொல்லையில். எரி மருள் கதிர் திருமணி இமைக்கும் - தீப்போன்ற கதிர்களையுடைய அழகிய மணி மிளிரும், வெல்போர் வானவன் கொல்லிக் குடவரை - வெல்லும் போரினையுடைய சேரனது கொல்லி மலையின் மேற்குப் பக்கத்தேயுள்ள, வேய் ஒழுக்கு அன்ன சாய் இறைப்பணைத் தோள் - மூங்கிலின் நேரிய பகுதியை ஒத்த வளைந்த முன்கையுடன் கூடிய பருத்த தோளின், பெரு கவின் சிதைய நீங்கிச் சென்று - பெரிய அழகு சிதைந்திட நீங்கிப் போய்; 17-19. ஆன்றோர் அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்- தேவரது பெறலரும் விண்ணுலகை ஆண்டுள்ள அமிழ்தத்துடன் பெறுவாராயினும், தாம் நீடலோ இலர் - அவர் தாழ்ந்திருத்தல் இலராவர். (முடிபு) தோழி! நம் தலைவர், வேங்கடத்தும்பர் வடுகர் தேத்து அருஞ்சுரம் அகறல் ஆய்ந்தனராயினும், நின் கூந்தல் உறலின் சாயலொடு ஒன்றுதல் மறந்து பெருங் கவின் சிதைய நீங்கிச் சென்று அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும் நீடலோ இலர். (வி-ரை) தொண்டையர் வேங்கடம் என்க, தொண்டையர் - தொண்டை நாட்டிலுள்ள பழங்குடியினர். நிரையினையும் நறவினையம் பலிகொடுக்கும் என்றலுமாம். ஆய்ந்தனராயினும் - ஆய்ந்து துணிந்தன ராயினும். ஆன்றோர் உலகம் - தேவருலகம். 214. முல்லை (பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) அகலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப் பகலுடன் கரந்த பல்கதிர் வானம் இருங்களிற்று இனநிரை குளிர்ப்ப வீசிப் பெரும்பெயல் அழிதுளி பொழித லானாது 5. வேந்தனும் வெம்பகை முரணி யேந்திலை விடுகதிர் நெடுவேல் இமைக்கும் பாசறை அடுபுகழ் மேவலொடு கண்படை யிலனே. அமரும் நம்வயின் அதுவே நமரென நம்மறிவு 1 தெளிந்த பொம்மல் ஓதி 10. யாங்கா குவள்கொல் தானே ஓங்குவிடைப் படுசுவல் கொண்ட பகுவாய்த் தெண்மணி ஆபெயர் கோவலர் ஆம்பலொ டளைஇப் பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப ஆருயிர் அணங்குந் தெள்ளிசை 15. மாரி மாலையுந் தமியள் கேட்டே. - வடமவண்ணக்கன் பேரி சாத்தனார். (சொ-ள்) 1-4. (நெஞ்சே!) அகல் இரு விசும்பு அகம் புதைய பாஅய் - அகன்ற பெரிய வானிடமெல்லாம் மறையப் பரந்து, பல் கதிர் பகல் உடன் கரந்த வானம் - பல கதிர்களையுடைய ஞாயிற்றை முழுவதும் மறைத்த மேகம், இரு களிற்று இன நிரை குளிர்ப்ப - பெரிய களிற்றின் பிடியுடன் கூடிய தொகுதி குளிர்ந்திட, பெரும் பெயல் அழி துளி வீசி பொழிதல் ஆனாது - பெரும் பெயலாகிய மிக்க துளிகளை வீசிச் சொரிதலை அமையாது; 5-7. வேந்தனும் வெம்பகை முரணி - அரசனும் மிக்க பகை யொடு மாறுபட்டு, ஏந்து இலை விடுகதிர் நெடுவேல் இமைக்கும் பாசறை - நிமிர்ந்த இலையினையுடைய ஒளிவிடுகின்ற நீண்ட வேல் மின்னும் பாசறைக் கண்ணேயிருந்து, அடுபுகழ் மேவலொடு கண்படை இலனே - பகையை வெல்லுதலால் எய்தும் புகழினை விரும்பித் துயிலுதல் செய்திலன்; 8. அமரும் நம்வயி னதுவே - போரின் பொறை நம்மைச் சார்ந்துளது; 8-9. நமர் என - நம்கேளிர் என்று, நம் - நம்மை, அறிவு தெளிந்த - தன் அறிவினால் தெருண்ட, பொம்மல் ஓதி - பொலிவுற்ற கூந்தலையுடைய நம் தலைவி; 10-15. ஓங்கு விடை படுசுவல் கொண்ட பகுவாய்த் தெள்மணி - உயர்ந்த ஏற்றின் பொருந்திய பிடரிற் கட்டிய பெரிய வாயினை யுடைய தெளிந்த ஒலியினதாகிய மணியின் ஓசையையும், ஆபெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ - ஆக்களை மீட்டுவரும் கோவலர் புல்லாங்குழலுடன் பொருந்த, பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப - பிரிந்தார்க்குத் துன்பினைத் தரும் நல்ல யாழின் கண்ணே செவ்வழிப் பண்ணைப் பாட, ஆர் உயிர் அணங்கும் தெள் இசை - அரிய உயிர் களை வருத்தும் அத் தெள்ளிய ஓசையையும், மாரி மாலையும் தமியள் கேட்டு - மாரிக்காலத்து மாலையிலும் தனியளாயிருந்து கேட்டலின், யாங்கு ஆகுவள் கொல்லோ எந்நிலையினை அடைவாளோ? (முடிபு) நெஞ்சே! வானம் பெரும்பெயல் வீசி அழிதுளி பொழிதல் ஆனாது; வேந்தனும் பாசறை புகழ் மேவலொடு கண்படையிலன்; நமரென நம்மைத் தெளிந்த பொம்மள் ஓதி, மணியின் ஓசையையும் தெள்ளிசையையும் மாரி மாலையிலும் தமியள் கேட்டு யாங்காகுவள் கொல்லோ. (வி-ரை) வேந்தனும் வெம்பகை முரணிப் புகழ் மேவலொடு கண் படையிலன் என்றமையால், மாற்றார் பணிந்து திறை கொடுக்கவும், புகர் விருப்பினால் அரசன் மேலும் போர் புரியக் கருதியுள்ளான் என்பதும், அமரும் நம்வயினது என்றமையால், அப்போரினை நடத்தும் கடப்பாடு தனக்கு உளதென்றும் கூறினானாம். நாம் இங்கே இவ்வாறிருக்க, அவட்கு வருவேம் எனக்குறித்த கார் வந்து விட்டமையாலும், ஏற்றின் கழுத்திற் கட்டிய மணியோசையும் குழலுடன் கூடிய யாழிசையும் மாலைப் பொழுதிலே தமியளாய்க் கேட்டலாலும் நம் காதலி எத்தகைய துன்பமுறுவளோ எனத் தலைமகன் தன் நெஞ்சிற்கு இரங்கிக் கூறினானென்க. அமரும் நம் வயினது என்றமையால், தலைவன் அரசனுக்குப் படைத்தலைவனோ அன்றி நட்பாளனோ ஆதல் வேண்டும். நமர் எனத் தெளிந்த ஓதி என்க. அறிவு - தன் அறிவினாலே; நாம் கூறித் தெளிவித்த உரைகளால் என்றுமாம். ஆம்பல் என்றது குழல். (மே-ள்) `ஏவன் மரபின் ஏனோரு முரியர்'1 என்னுஞ் சூத்திரத்து, இவ்வகப்பாட்டும் பொருணோக்கினால் தூதுகண்டு வருந்திக் கூறியது என்பர், நச். 215. பாலை (செலவுணர்த்திய தோழி தலைமகள் குறிப்பறிந்து தலைமகனைச் செலவழுங்குவித்தது.) விலங்கிருஞ் சிமையக் குன்றத் தும்பர் வேறுபன் மொழிய தேஎம் முன்னி வினைநசைஇப் பரிக்கும் உரன்மிகு நெஞ்சமொடு புனைமாண் எஃகம் வலவயின் ஏந்திச் 5. செலன்மாண்பு உற்ற நும்வயின் வல்லே வலனாகு என்றலும் நன்றுமற் றில்ல கடுத்தது பிழைக்குவ தாயின் தொடுத்த கைவிரல் கவ்வுங் கல்லாக் காட்சிக் கொடுமரம் பிடித்த கோடா வண்கண் 10. வடிநவில் அம்பின் ஏவ லாடவர் ஆளழித் துயர்த்த அஞ்சுவரு பதுக்கைக் கூர்நுதிச் செவ்வாய் எருவைச் சேவல் படுபிணப் பைந்தலை தொடுவன குழீஇ மல்லன் மொசிவிரல் ஒற்றி மணிகொண்டு 15. வல்வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண் கழிந்தோர்க்கு இரங்கு நெஞ்சமொடு ஒழிந்திவண் உறைத லாற்று வோர்க்கே. - இறங்குகுடிக் குன்ற நாடன். (சொ-ள்) 7-17. கடுத்தது பிழைக்குவதாயின் - குறித்த இலக்குத் தப்புவதாயின், தொடுத்த கைவிரல் கவ்வும் - அம்பினைத் தொடுத்த கைவிரலை வாயாற் கவ்விக்கெள்ளும், கல்லாக் காட்சி - கல்லாத அறிவினையும், கொடுமரம் பிடித்த கோடா வன்கண் - வில்லை ஏந்திய மாறாத கொடுமையையும், வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர் - வடித்தல் செய்த அம்பினையுமுடைய ஏவலராய மறவர், ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை - வழிப்போகும் ஆட்களைக் கொன்று அவர்களை யிட்டு மூடிய கண்டார்க்கு அச்சம் வரும் கற்குவியல்களில், கூர்நுதிச் செவ்வாய் எருவைச் சேவல் - கூரிய அலகினைக் கொண்ட சிவந்த வாயினையுடைய ஆண் பருந்துகள், படுபிணப் பைந்தலை தொடுவன குழீஇ - இறந்துபட்ட பிணங்களின் பசிய தலையினைத் தோண்டு வனவாகிக் கூடி, மல்லல் மொசிவிரல் ஒற்றி - வலிய நெருங்கிய விரலால் தோண்டி, மணி கொண்டு - கண்மணியைப் பெயர்த்துக்கொண்டு, வல்வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண் - வலிய வாயினையுடைய தம் பேடைகட்குச் சொரியும் அவ்விடத்தே, கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு - பிரிந்து சென்றார்க்கு இரங்கியொழியும் நெஞ்சத்துடன், ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கு - அவர் தம்மைப் பிரிந்து இங்கே தங்குதல் வல்லார்க்கு; 1-5. (தலைவ!) விலங்கு இரு சிமையக் குன்றத்து உம்பர் - குறுக்காகவுள்ள பெரிய உச்சியினையுடைய மலைக்கு அப்பாலுள்ள, வேறு பல்மொழிய தேஎம் முன்னி - வேறுபட்ட பல மொழிகள் வழங்கும் தேயத்தைக் கொள்ளக்கருதி, வினை நசைஇப் பரிக்கும் உரன்மிகு நெஞ்சமொடு - போர்த்தொழிலை விரும்பிச் செலுத்தும் துணிவுமிக்க உள்ளத்துடன், புனைமாண் எஃகம் வல்வயின் ஏந்தி - அழகிய மாண்புற்ற வேலை வலக்கையின் ஏந்தி, செலல் மாண்பு உற்ற நும்வயின் - செல்லுதல் மாட்சியுற்ற நும்மிடத்தே; 5-6. வல்லே வலன் ஆக என்றலும் நன்று - விரைந்து வெற்றி மேவுக என்று கூறி விடுத்தலும் நன்றாகும்; மன் - யாம் அங்ஙனம் பிரிந்துறைதல் ஆற்றுவேம்; அல்லேம்; என் செய்வேம். (முடிபு) (தலைவ), எருவைச்சேவல் மணிகொண்டு பேடைக்குச் சொரியும் ஆங்கண் கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு இவண் உறைதல் ஆற்றுவோர்க்கு, குன்றத்து உம்பர் தேஎம் முன்னி வினை நசைஇப்பரிக்கும் நெஞ்சமொடு செலன் மாண்புற்ற நும்வயின், வலனா கென்றலும் நன்று; யாம் அங்ஙனம் பிரிந்துறைதல் ஆற்றுவேம் அல்லேம்; என் செய்வேம். (வி-ரை) தேஎம் முன்னி - தேயத்தைக் கொள்ளக் கருதியென்க. பரிக்கும் - செலுத்தும். வலனாக என்றலும் - வெற்றி உண்டாக என்று கூறி விடுத்தலும் என விரித்துரைக்க. ஆக, ஈறு தொக்கது. மன், ஒழியிசை. தில்ல, அசைச் சொல் ஈறு திரிந்தது. கடுத்தது - குறித்த இலக்கு; வினைப்பெயர். மணி - விழி. (மே-ள்) `வேந்து வினையியற்கை'1 என்னுஞ் சூத்திரத்து, முடியுடை வேந்தர்க்குரிய தொழிலாகிய இலக்கணங்கள்.............. குறுநில மன்னரிடத்தும் பொருந்தும் இடனுடையது என்றுரைத்து, அதற்கு உதாரணமாக `விலங்கிருஞ் சிமையக் குன்றத் தும்பர்............ செலன் மாண்புற்ற' என்ற அடிகளைக் காட்டி, `வேறுபன் மொழிய தேஎத்தைக் கொள்ளக் கருதிப் போர்த் தொழிலைச் செலுத்தும் உரன்மிக்க நெஞ்ச மென்றலின், இது குறுநில மன்னன் தன் பகைவயின் நாடு கொள்ளச் சென்றதாம், வேந்தன் எனப் பெயர் கூறாமையின்' என்றார், நச். 216. மருதம் (தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது.) நாண்கொள் நுண் கோலின் மீன்கொள் பாண்மகள் 1தான்புன லடைகரைப் படுத்த வராஅல் நாரரி நறவுண் டிருந்த தந்தைக்கு வஞ்சி விறகிற் சுட்டுவா யுறுக்குந் 5. தண்டுறை ஊரன் பெண்டிர் எம்மைப் பெட்டாங்கு மொழிப என்ப அவ்வலர்ப் பட்டன மாயின் இனியெவ னாகியர் கடலாடு மகளிர் கொய்த ஞாழலுங் கழனி யுழவர் குற்ற குவளையுங் 10. கடிமிளைப் புறவிற் பூத்த முல்லையொடு பல்லிளங் கோசர் கண்ணி அயரும் மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் எறிவிடத் துலையாச் செறிசுரை வெள்வேல் ஆதன் எழினி யருநிறத் தழுத்திய 15. பெருங்களிற்று எவ்வம் போல வருந்துவர் மாதவர் சேரியாஞ் செலினே. - ஐயூர் முடவனார். (சொ-ள்) 1-6. நாண் கொள் நுண்கோலின் மீன்கொள்பாண் மகள்- கயிற்றினைக் கொண்ட நுண்ணிய தூண்டிற் கோலால் மீனைப் பிடிக்கும் பாணரது மகள், புனல் அடைகரைப்படுத்த வராஅல் - புனலை அடுத்த கரையில் அகப்படுத்திய வரால்மீனை, நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு - பன்னாடையால் அரிக்கப்பெற்ற கள்ளையுண்டு களித்திருந்த தன் தந்தைக்கு, வஞ்சி விறகில் சுட்டு - வஞ்சிமரத்தின் விறகினாற் சுட்டு, வாய் உறுக்கும் - வாயில் உண்பிக்கும், தண்துறை ஊரன் பெண்டிர் - குளிர்ந்த துறையினை யுடைய ஊரனது பெண்டிர்கள், எம்மைப் பெட்டாங்கு மொழிப என்ப - எம்மைத் தம் மனம் விரும்பியபடி யெல்லாம் இகழ்ந்துரைப்பர் என்பார்கள்; 6-7. அ அலர் பட்டனமாயின் - அந்த அலர் மேவப்பெற்றே மாயின், இனி எவன் ஆகியர் - இப்பொழுது யாதேனும் ஆக; 8-16. அவர் சேரி யாம் செலினே - அவர்தம் சேரிக்கண் யாம் செல்வேமாயின், கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும் - கடலாடும் பெண்டிர் கொய்துவந்த புலிநகக் கொன்றைப் பூவினையும், கழனி உழவர் குற்ற குவளையும் - வயலில் உழுவோர் பறித்து வந்த குவளைப் பூவினையும், கடிமிளைப் புறவில் பூத்த முல்லையொடு - காவற் காட்டினையுடைய முல்லை நிலத்தே பூத்த முல்லைப் பூவுடன் சேர்த்து, பல் இளம் கோசர் கண்ணி அயரும் - பல இளைய கோசர்கள் கண்ணியாகக் கட்டி விளையாடும், மல்லல்யாணர் செல்லிக் கோமான் - மிக்க வளம் பொருந்திய செல்லூர் மன்னனாகிய, ஆதன் எழினி - ஆதன் எழினி என்பான், எறிவிடத்து உலையா செறி சுரை வெள் வேல் - மாற்றார்மீது எறியுமிடத்துச் சிதையாத சுரைசெறிந்த வெள்ளிய வேலை, அரு நிறத்து அழுத்திய பெருகளிற்று எவ்வம் போல - தனது அரிய மார்பில் பாய்ச்சப் பெற்ற பெரிய களிற்றின் துன்பம் போல, வருந்துவர் - வருத்தமுறுவர். (முடிபு) தண்டுறை யூரன் பெண்டிர் எம்மைப் பெட்டாங்கு மொழிப என்ப; அவ்வலர் பட்டனமாயின் இனி யாதேனும் ஆக; அவர் சேரி யாம் செலினே, ஆதன் எழினி வேல் நிறத்து அழுத்திய களிற்றின் எவ்வம்போல் வருந்துவர். (வி-ரை) பெண்டிர் - தலைமகளும் அவள் தோழியரும். ஞாழலும் குவளையும் முல்லையொடு கண்ணி அயரும் என நெய்தற்கும் முல்லைக்கும் உரிய பூக்கள் மருதத்தின்கண் வந்தமை எந்நில மருங்கிற் பூவும் புள்ளும், அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும், வந்த நிலத்தின் பயத்த வாகும்'1 என்பதனால் அமையும். செல்லிக் கோமானாய ஆதன் எழினி வெள்வேல் அழுத்திய பெருங் களிற்று எவ்வம் என்க. தனக்குப் பாங்காயினாரை உளப்படுத்தி, யாம் செலின் என்றாள். தான், மாது என்பன அசைகள். 217. பாலை (பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமைமீதூரச் சொல்லியது.) 2பெய்துபுலம் திறந்த பொங்கல் வெண்மழை எஃகுறு பஞ்சித் துய்ப்பட் டன்ன துவலை தூவல் கழிய அகல்வயல் நீடுகழைக் கரும்பின் கணைக்கால் வான்பூக் 5. கோடைப் பூளையின் வாடையொடு துயல்வரப் பாசிலைப் பொதுளிய புதல்தொறும் பகன்றை நீலுண் பச்சை நிறமறைத்து அடைச்சிய தோலெறி பாண்டிலின் வாலிய மலரக் கோழிலை அவரைக் 1கொழுமுகை அவிழ 10. ஊழுறு தோன்றி ஓண்பூத் தளைவிடப் புலந்தொறுங் 2குருகினம் நரலக் கல்லென அகன்றுறை மகளிர் அணிதுறந்து நடுங்க அற்சிரம் வந்தன் றமைந்தன் றிதுவென எப்பொருள் பெறினும் பிரியன்மி னோவெனச் 15. செப்புவல் வாழியோ துணையுடை 3யீர்க்கென நல்காக் காதலர் நலனுண்டு துறந்த பாழ்படு மேனி நோக்கி நோய்பொர இணரிறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வுவேட்டு எயிறுதீப் பிறப்பத் திருகி 20. நடுங்குதும் பிரியின்யாங் கடும்பனி உழந்தே. - கழார்க் கீரனெயிற்றியார். (சொ-ள்) 1-13. (தோழி!) பெய்து புலம் திறந்த பொங்கல் வெண்மழை - பெய்து பின் திசைகளை வெளியாக்கிய பொங்கிய வெண்மேகம், எஃகுறு பஞ்சி துய் பட்டன்ன - கடையப்பெற்ற பஞ்சானது மென்மையுற்றாற் போன்ற, துவலை தூவல் கழிய - சிறிய துளியைத் தூவுதலையும் ஒழிய, அகல் வயல்நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூ - அகன்ற வயலிலுள்ள நீண்ட தண்டினை யுடைய கரும்பின் திரண்ட காம்புடைய பெரிய பூக்கள், கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர - கோடைக் காலத்துப் பூளைப் பூப்போல வாடைக்காற்றால் அசைந்திட, பசு இலை பொதுளிய புதல்தொறும் பகன்றை - பசிய இலை நெருங்கிய புதல்தோறும் பகன்றையானது, நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய - நீலம் ஊட்டப்பெற்ற தோலினது நிறம் மறையும்படி பதித்த, தோல் எறி பாண்டிலின் - கிடுகிற் பதித்த வட்டக் கண்ணாடி போல, வாலிய மலர - வெள்ளியனவாக மலர, கோழ்இலை அவரை கொழுமுகை அவிழ - கொழுத்த இலையினையுடைய அவரையின் வளவிய அரும்புகள் விரிய, ஊழ் உறு தோன்றி ஒண்பூ தளைவிட - முறையாக முற்றிய தோன்றியின் ஒள்ளிய பூக்கள் பிணிப்பு விட, புலம் தொறும் குருகு இனம் கல் என நரல - புலங்கள் தோறும் பறவைகளின் கூட்டம் கல்லென்று ஒலிக்க, அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க - தம் தலைவரைப் பிரிந்து தங்கிய மகளிர் அழகிழந்து நடுங்க, அற்சிரம் வந்தன்று - பனிப்பருவம் வந்துவிட்டது (ஆதலால்); 13-15. அமைந்தன்று இது என - இப் பருவம் பொருள் வயிற் பிரிவார்க்கு ஏற்ற தொன்றென எண்ணி, எப்பொருள் பெறினும் பிரியன்மின் என - எத்துணைச் சிறந்த பொருளைப் பெறுவதாயினும் பிரியாதீர் என்று, துணையுடையீர்க்குச் செப்புவல் - எங்கட்குத் துணையாக வுள்ள நுமக்குச் செப்புவேன், என - என்று நீ நம் தலைவர்க்குக் கூறவும்; 16-20. நல்காக் காதலர் - அருள் செய்யாத காதலர், பிரியின் - நம்மைப் பிரிந்து செல்வரேல், யாம் - நாம், நலன் உண்டு துறந்த பாழ்படு மேனி நோக்கி - (அவர்) நமது நலத்தினை நுகர்ந்து கைவிட்ட பாழ்பட்ட மேனியைக் கண்டு, நோய் பொர - நோய் வருத்த, இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு - மதுகை இற்று உடையும் நெஞ்சத் துடன், புணர்வு வேட்டு - அவர் புணர்தலை விரும்பி, கடும்பனி உழந்து - கடிய பனியால் வருந்தி, எயிறு தீ பிறப்பத் திருகி - பற்களைத் தீயுண்டாகச் கடித்து, நடுங்குதும் - நடுங்குவேம். (முடிபு) (தோழி!) நீ, அற்சிரம் வந்தன்று; இது அமைந்தன் றென எப்பொருள் பெறினும் பிரியன்மினோ எனத் துணையுடை யீர்க்குச் செப்புவல் என நல்காக் காதலர் பிரியின், யாம் மேனி நோக்கி உடையும் நெஞ்சமொடு புணர்வுவேட்டுக் கடும்பனி யுழந்து, திருகி, நடுங்குதும். தூவல் கழிய, வான் பூ வாடையொடு துயல்வர, பகன்றை வாலிய மலர, அவரை முகை யவிழ, தோன்றிப் பூ தளைவிட, குருகினம் நரல, மகளிர் நடுங்க, அற்சிரம் வந்தன்று என்க. (வி-ரை) பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை இடையிடையே மலர்ந்திருப்பது, நீலநிறமுடைய தோற்கிடுகில் இடையிடை பதித்த கண்ணாடி போலும் என்க. பச்சை - தோல். பாண்டில் - கண்ணாடி. தோல் - தோலால் ஆகிய கிடுகு. `பாண்டில் நிரை தோல்'1 என்பதன் உரை காண்க. அற்சிரம் என்றது ஈண்டுப் பின்பனிக் காலத்தை. துணை யுடையீர்க்குப் பிரியன்மினோ, எனச் செப்புவல் எனவும் என்று இயையும். `துணையுடையீர்க் கென' என்று பழைய பதிப்பிற் காணப்பட்ட பாடத்தினைக் கொண்டு, எனவும் என உம்மை விரித்து உரைக்கப்பட்டது; `துணை யுடை யீர்க்கே' என்னும் பாடத்திற்குப் பிரியன்மின் என்று தலைவர்க்கு நீ சொல்லுமாறு எனக்குத் துணையாகவுள்ள நினக்கு யான் செப்புவல் என்று தலைவி தோழிக்குக் கூறினாளாகக் கொள்க. 218. குறிஞ்சி (தோழி தலைமகளை இடத்துய்த்து வந்து பகற்குறிநேர்ந்த வாய்பாட்டால் தலைமகனை வரைவுகடாயது.) கிளைபா ராட்டுங் கடுநடை வயக்களிறு முளைதரு பூட்டி வேண்டு 2குள கருத்த வாள்நிற உருவின் ஒளிறுபு மின்னிப் பரூஉவுறைப் பஃறுளி சிதறிவான் நவின்று 5. பெருவரை நளிர்சிமை அதிர வட்டித்துப் புயலேறு உரைஇய வியலிருள் நடுநாள் விறலிழைப் பொலிந்த காண்பின் சாயல் தடைஇத் திரண்டநின் தோள்சேர்பு அல்லதைப் படாஅ வாகுமெங் கண்ணென நீயும் 10. இருண்மயங் கியாமத் தியவுக்கெட விலங்கி வரிவயங் கிரும்புலி வழங்குநர்ப் பார்க்கும் பெருமலை விடரகம் 1வரலரி தென்னாய் வரவெளி தாக எண்ணுதி அதனான் நுண்ணிதிற் கூட்டிய படுமாண் ஆரந் 15. தண்ணிது கமழும் நின்மார்பு ஒருநாள் அடைய முயங்கே மாயின் யாமும் விறலிழை நெகிழச் சாஅய்தும் அதுவே அன்னை யறியினும் அறிக அலர்வாய் அம்பல் மூதூர் கேட்பினுங் கேட்க 20. வண்டிறை கொண்ட எரிமருள் தோன்றியொடு ஒண்பூ வேங்கை கமழுந் தண்பெருஞ் சாரல் பகல்வந் தீமே. - கபிலர். (சொ-ள்) 1-6. (தலைவ!) கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு - தன் இனங்கள் பாராட்டும் கடிய செலவினையுடைய வலிய களிறு, முளை தருபு ஊட்டி வேண்டு குளகு அருத்த - மூங்கில் முளைகளைத் தந்து அவற்றிற்கு உண்பித்து வேண்டும் தழை களையும் உண்பிக்க, வாள்நிற உருவின் ஒளிறுபு மின்னி - வாளின் நிறம் போலும் உருவுடன் ஒளிருமாறு மின்னி, பரூஉ உறைப் பல் துளி சிதறி - பரிய பலவாகிய மழைத்துளிகளைச் சிதறி, வான் நவின்று - வானிலே பயின்று, பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து - பெரிய மலையின் குளிர்ந்த உச்சி அதிரச் சூழ்ந்துகொண்டு, புயல் - மேக மானது, ஏறு உரைஇய வியல் இருள் நடுநாள் - இடியேற்றுடன் பரந்த மிக்க இருள் கொண்ட நடு இரவில்; 7-9. விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல் - மேம்பட்ட அணிகளாற் பொலிவுற்ற காண்டற்கினிய மென்மைத்தன்மை யினதாய், தடைஇ திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை - வளைந்து திரண்ட நின் தோளைச் சேர்ந்தாலல்லது, படாஅ ஆகும் எம் கண் என - எம் கண்கள் துயிலாவாகும் என்று கூறி; 9-13. நீயும் இருள் மயங்கு யாமத்து - நீயும் இருள் செறிந்த நடு யாமத்தே, இயவு கெட விலங்கி - நெறி தடுமாறலான் விலகி, வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும் - வரிகள் விளங்கும் பெரிய புலி வழிவருவாரைப் பார்த்திருக்கும், பெருமலை விடர் அகம் வர அரிது என்னாய் - பெரிய மலையின் பிளப்பினையுடைய இடத்தில் வருதல் அரிதென்று நினையாயாய், வர எளிதாக எண்ணுதி - வரற்கு எளிதென்று எண்ணுகின்றனை; 14-17. நுண்ணிதில் கூட்டிய படு மாண் ஆரம் - நுண்மையாக அறிந்து பல மணங்களைக் கலந்த மாண்பு பொருந்திய சந்தனம், தண்ணிது கமழும் நின் மார்பு - தண்ணெனக் கமழும் நின் மார்பினை, ஒருநாள் - ஒருநாளேனும், அடைய முயங்கேம் ஆயின் - பொருந்தத் தழுவேமானால், யாமும் - யாங்களும், விறல் இழை நெகிழச் சாஅய்தும் - மேம்பட்ட அணி நெகிழ்ந்து விழ மெலிவோம். 13. அதனால்-, 17-22. அதுவே - அதனை, அன்னை அறியினும் அறிக - எம் அன்னை அறிந்திடினும் அறிந்திடுக, அலர் வாய் அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க - அலர் கூறும் பெண்டிரது வாயினின்று வரும் பழிச் சொற்களை முதிய எம்மூர் கேட்பினும் கேட்பதாக, வண்டு இறை கொண்ட எரிமருள் தோன்றியொடு - வண்டுகள் தங்குதல் கொண்ட தீயினை ஒத்த தோன்றிப் பூவுடன், ஒண்பூ வேங்கை கமழும் - ஒள்ளிய வேங்கைப் பூ நாறும், தண் பெரும் சாரல் - தண்ணிய பெரிய மலைச் சாரலில், பகல் வந்தீமே - பகலில் வருவீராக. (முடிபு) தலைவ! புயல் ஏறுடன் உரைஇய நடுநாள் நீயும் நின் தோள் சேர்பு அல்லதை எம்கண் படாஅவாகும் என, விடரகம் வர எண்ணுதி; யாமும் நின்மார்பு ஒருநாள் முயங்கேம் ஆயின் இழை நெகிழச் சாய்தும்; அதனால், அதுவே அன்னை அறியினும் அறிக; மூதூர் கேட்பினும் கேட்க; தோன்றியொடு வேங்கை கமழும் சாரல் பகல் வந்தீமே. (வி-ரை) கிளை பாராட்டும் - கிளையினைப் பாராட்டும் என்றுமாம். ஒளிறுபு - ஒளிர என்க. தடைஇ - பருத்து என்றுமாம். சேர்பு- சேர்ந்தால் என்னும் பொருட்டு. நீயும் என்னாய் எண்ணுதி என இயையும். அடைய - முழுதும் என்றுமாம். எண்ணுதி, சாய்தும் அதனால் பகல் வந்தீமே எனக் கொண்டுகூட்டி யுரைக்க. அதுவே என்றது, பகல் வருதலை. அன்னை அறியினும் அறிக, அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க என்றது, பகற் குறிக்கும் இடையீடு உளதாதல் புலப்படுத்தியவாறு. (உ-றை) "கிளைபாராட்டும் கடுநடை வயக்களிறு, முளைதரு பூட்டி வேண்டுகுள கருத்த" என்றது, நீயும் தலைவியை வரைந்து கொண்டு இல்லறம் நிகழ்த்திச் சுற்றஞ்சூழ வாழவேண்டும் என்றவாறு. (மே-ள்) `முதல்கரு உரிப்பொருள்'1 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளை இத் துறைக்கே கொண்டு, இது குறிஞ்சிக்கு முதலுங் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது என்றார், நச். 219. பாலை (மகட் போக்கிய தாய் சொல்லியது.) சீர்கெழு வியனகர்ச் சிலம்புநக வியலி ஓரை யாயமொடு பந்துசிறி தெறியினும் வாரா யோவென் றேத்திப் பேரிலைப் பகன்றை வான்மலர் பனிநிறைந் ததுபோல் 5. பால்பெய் வள்ளஞ் சால்கை பற்றி என்பா டுண்டனை யாயின் ஒருகால் நுந்தை பாடும் உண்ணென் றூட்டிப் 2பிறந்ததற் கொண்டும் சிறந்தவை செய்தியான் நலம்புனைந் தெடுத்தவென் பொலந்தொடிக் குறுமகள் 10. அறனி லாளனோ டிறந்தனள் இனியென மறந்தமைந் திரா அ நெஞ்சம் நோவேன் பொன்வார்ந் தன்ன வைவால் எயிற்றுச் செந்நாய் வெரீஇய புகருழை யொருத்தல் பொறியரை விளவின் புன்புற விளைபுழல் 15. அழலெறி கோடை தூக்கலிற் கோவலர் குழலென நினையும் நீரில் நீளிடை மடத்தகை மெலியச் சாஅய் நடக்குங் கொல்லென நோவல் யானே. - கயமனார். (சொ-ள்) 1-9. சீர் கெழு வியன் நகர் சிலம்பு நக இயலி - சிறப்புப்பொருந்திய பெரிய மனையின்கண் தன் சிலம்பு ஒலித்து விளங்க நடந்து, ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும் - விளையாடும் ஆய மகளிருடன் பந்தினைச் சிறிது எறிந்தாலும், வாராயோ என்று ஏத்தி - இங்கு வருவாயாக என்று அழைத்துப் பாராட்டி, பேர் இலைப் பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல் - பெரிய இலையினையுடைய பகன்றையின் வெள்ளிய பூ பனிநீர் நிறையப்பெற்றதுபோல, பால் பெய் வள்ளம் சால்கை பற்றி - பால் பெய்யப்பெற்ற கிண்ணம் நிறைந்ததனைப் பற்றிக்கொண்டு, என்பாடு உண்டனையாயின் - என் பகுதிக்கு இதனை உண்டாயானால் (இனி), ஒருகால் நுந்தை பாடும் உண் என்று ஊட்டி - ஒரு முறை உன் தந்தையின் பகுதிக்கும் உண்பாயாக என்று கூறி யான் உண்பித்து, பிறந்ததற் கொண்டும் சிறந்தவை செய்து - அவள் பிறந்தநாள் தொட்டும் சிறப்புக் களைச் செய்து, யான் நலம் புனைந்து எடுத்த என்பொலம் தொடிக் குறுமகள் - நான் இங்ஙனம் நலம் பாராட்டி வளர்த்த பொன் வளையல் அணிந்த எனது சிறிய மகள்; 10-11. அறன் இலாளனொடு இறந்தனள் இனி என - அற நெறி யில்லாதவனொடு இப்பொழுது கடந்து சென்றாள் என்று, மறந்து அமைந்து இரா நெஞ்சம் நோவேன் - சிறிதும் மறந்திருத்த லில்லாத நெஞ்சத்தால் வருந்துவேன் அல்லேன்; 12-18. பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்று - பொற் கம்பியிழுத்தா லொத்த கூரிய வெள்ளிய பற்களையுடைய, செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் - செந்நாயினை அஞ்சிய புள்ளி களையுடைய கலைமான், பொறி அரை விளவின் புல் புற விளை புழல் - பொறிகள் பொருந்திய அரையினையுடைய விளவின்கனியின் புல்லிய ஓட்டில் தோன்றிய துளையில், அழல் எறி கோடை தூக்கலின் - வெப்பத்தைக் கொண்டு வீசும் மேல்காற்று நுழைந்து இசைத்தலின், கோவலர் குழல் என நினையும் - கோவலரது குழலோசை என நினைந்து (பாதுகாவலாக) ஆங்குச் செல்லும், நீர் இல் நீள் இடை - நீர் இல்லாத நீண்ட நெறியில், மடத் தகை மெலியச் சாஅய் - தனது மடப்பத்தையுடைய அழகு கெட மெலிந்து, நடக்கும் கொல் என யான் நோவல் - நடப்பளோ எனவே யான் நோகின்றேன். (முடிபு) யான் நலம் புனைந்தெடுத்த குறுமகள், அறனிலாளனொடு இனி இறந்தனள் என நெஞ்சம் நோவேன்; நீரில் நீளிடை மெலியச் சாஅய் நடக்கும் கொல்லென யான் நோவல். (வி-ரை) மனையிலே இயலிப் பந்து சிறி தெறியினும் வாராயோ என்று அழைத்தாள் என்பது தலைவியின் மென்மைத் தன்மை யினையும், பால் பெய் வள்ளம் பற்றி, என்பாடுண்டனை யாயின் ஒருகால் நுந்தை பாடும் உண்ணென் றூட்டினா ளென்பது, அவளது செல்வக் களிப்பையும் உணர்த்தியபடியாம். பாடு - கூறு, பங்கு. செல்வக் குடியிற் பிறந்து உணவு விருப்பின்றி யிருக்கும் சிறுவர் சிறுமியரைத் தாய்மார் இவ்வாறெல்லாம் கூறி உண்பித்தல் இயல்பு. செந்நாய் வெரீஇய உழை ஒருத்தல், குழல் என நினைந்து பாதுகாவலாகச் செல்லும் என்க. 220. நெய்தல் (இரவுக்குறிவந்து நீங்குந் தலைமகனை யெதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது.) ஊருஞ் சேரியும் உடனியைந் தலரெழத் தேரொடு மறுகியும் பணிமொழி பயிற்றியும் கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்க் கடாஅ யானைக் 1குழூஉச்சமந் ததைய 5. மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் முன்முயன் றரிதினின் முடித்த வேள்விக் கயிறரை யாத்த காண்டகு வனப்பின் அருங்கடி நெடுந்தூண் போல யாவருங் காண லாகா மாணெழி லாகம் 10. உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே நெடும்புற 2நிலையினை வருந்தினை யாயின் முழங்குகட லோதங் காலைக் கொட்கும் பழம்பல் நெல்லின் ஊணூ ராங்கண் நோலா 3இரும்புள் போல நெஞ்சமர்ந்து 15. காதன் மாறாக் காமர் புணர்ச்சியின் இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை முடங்குபுற இறவோ டினமீன் செறிக்கும் நெடுங்கதிர்க் கழனித் தண்சாய்க் கானத்து யாணர்த் தண்பணை யுறுமெனக் கானல் 20. ஆய மாய்ந்த சாயிறைப் பணைத்தோள் நல்லெழில் சிதையா வேமஞ் சொல்லினித் தெய்யயாந் தெளியு மாறே. - மதுரை மருதனிளநாகனார். (சொ-ள்) 1-2. ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ - ஊரின்கண்ணும் சேரியின்கண்ணும் ஒருங்கே சேர்ந்து அலர் எழா நிற்க, தேரொடு மறுகியும் பணிமொழி பயிற்றியும் - தேரொடு வந்து திரிந்தும் பணிந்த மொழிகளைப் பலகாற் கூறியும்; 3-11. கெடாத் தீயின் உருகெழு செல்லூர் - என்றும் நீங்காத வேள்வித் தீயினையுடைய அழகு விளங்கும் செல்லூரின்கண், கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய - மதம்பொருந்திய யானையின் கூட்டம் போர்முனையில் அழிய, மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் - மன்னர் வழியை அழித்த பரசுராமன், முன் முயன்று அரிதினில் முடித்த வேள்வி - முன்பு அரிதினில் முயன்று முடித்த வேள்விக்கண், கயிறு அரையாத்த காண்டகு வனப்பின் - கயிற்றினை அரையிற் சுற்றிய காணத்தக்க அழகினையுடைய, அரும் கடி நெடுதூண் போல - அரிய காவலைக் கொண்ட நீண்ட வேள்வித்தூண் போல, யாவரும் காணல் ஆகா மாண் எழில் ஆகம் - யாவரும் காணுதல் இயலாத மாண்புற்ற அழகினையுடைய எம் தலைவியின் மார்பினை, உள்ளு தொறும் பனிக்கும் நெஞ்சினையாகி - நினையுந்தொறும் நடுங்கும் நெஞ்சினையுடையையாகி, நீயே நெடும்புற நிலையினை வருந்தினை யாயின் - நீதான் புறத்திலே நெடிது நிற்றலை யுடையையாகி வருந்தினை யாதலின்; 12-15. முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும் - முழங்கும் கடலின் திரைகள் காலையில் அலையும், பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண் - மிகுதியான பழைய நெல்லையுடைய ஊணு ரிடத்து, நோலா இரும் புள்போல - ஒன்றையொன்று பிரிந்திருத் தலைப் பொறாத பெரிய பறவையாய மகன்றிலைப்போல, நெஞ்சு அமர்ந்து - ஒருவர் நெஞ்சிலே ஒருவர் பொருந்தி, காதல் மாறா காமர் புணர்ச்சியின் - காதல் நீங்காத அழகிய புணர்ச்சியினாலே; 16-22. இரு கழி முகந்த செங்கோல் அவ்வலை - பெரிய கழியைத் துழவி முகந்த நேரிய கோல்களையுடைய அழகிய வலை, முடங்கு புற இறவோடு இன மீன் செறிக்கும் - வளைந்த புறத்தினை யுடைய இறா மீனுடன் ஏனைமீன் இனங்களையும் குவிக்கும், நெடு கதிர்க் கழனி தண் சாய்க்கானத்து - நீண்ட கதிர்களையுடைய வயல்களையுடைய தண்ணிய சாய்க்கானம் என்னும் ஊரிடத்துள்ள, யாணர் தண்பணை உறும் என - அழகிய குளிர்ந்த மூங்கிலை ஒக்கும் என்று, கானல் ஆயம் ஆய்ந்த - கடற் சோலையில் தோழிமார் ஆய்ந்து பாராட்டிய, சாய் இறைப் பணைத்தோள் - வளைந்த முன் கையினை யுடைய பருத்த இவள் தோள்கள், நல் எழில் சிதையா ஏமம் - நல்ல அழகு கெடாமைக்கு ஏதுவாய பாதுகாவலை, யாம் தெளியுமாறு இனிச் சொல் - யாம் தெளிய உணருமாறு இப்பொழுது நீ கூறுவாயாக. (முடிபு) தலைவ! நீயே தேரொடு மறுகியும் பணிமொழி பயிற்றியும், நெடியோன் முடித்த வேள்வி நெடுந்தூண் போலக் காணலாகா எழில் ஆகம் உள்ளுதொறும் பனிக்கு நெஞ்சினை யாகி, நெடும்புற நிலையினை வருந்தினை யாதலான், நோலா இரும்புள் போலக் காமர் புணர்ச்சியினால், இவள் பணைத் தோள் எழில் சிதையா ஏமம் யாம் தெளியுமாறு சொல். (வி-ரை) சேரி - ஊரின் ஒரு பகுதி, தெரு. `ஓரூர் வாழினுஞ் சேரி வாரார்'1 என்பது காண்க. கெடாத்தீ - நீங்காத வேள்வித் தீ. உருகெழு- உட்குப் பொருந்திய என்றுமாம். மருங்கு - வழி. மழுவாள் - மழுவாகிய வாளென இருபெயரொட்டு. மழு - பரசு. பரசுராமன் நெடுமாலின் தோற்றமாகலின் நெடியோன் என்றார். செல்லூர்க்கண் நெடியோன் முடித்த வேள்வித்தூண்போலக் காணலாகா ஆகம் என்க. வருந்தினையாயின் - வருந்தினை யாதலின் என்க. இரும்புள் - காதலிற் சிறந்த மகன்றில்; மகன்றிற் பறவைகள். ஆணும் பெண்ணும் சிறிதும் பிரிந்திருக்கப்பெறாதன என்பது `பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன, நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவரிதாகிய தண்டாக் காமம்'1 என்பதனால் அறிக. சாய்க்கானம் - திருச் சாய்க்காடு என்னும் பதி. தெய்ய, அசைச் சொல். நீ தேரொடு வந்து திரிந்தும் குறையிரந்தும் செல்லுதலால், ஊரும் சேரியும் அலர் உண்டாக, அதனால், தலைவி இற்செறிக்கப்பட்டு நின்னாற் காண்டற்கு அரியளாக இருத்தலின், நீ அவள் ஆகத்தை நினையுந்தோறும் நடுங்கும் நெஞ்சுடன் பலகாலும் வந்து புறத்தே நின்று வருந்தி வறிது மீள்கின்றனை; அதனால், தலைவியின் தோளும் எழில் சிதைகின்றது; இனி அவ்வாறு சிதை யாமைக்கு ஏதுவாகிய ஏமம் இன்னதென யாம் தெளிந்திலே மாகலின், அதனைத் தெளியுமாறு நீ கூறுக என்பாள் போன்று, நீ தலைவியை வரைந்து கொள்ளுதலே பாதுகாவலாகும் எனக் குறிப்பிற் புலப் படுத்தித், தோழி தலைவனை வரைவு கடாயினாள் என்க. 221. பாலை (தலைமகற்குப் போக்குடன்பட்ட தோழி, தலைமகட்குப் போக்குடன்படச் சொல்லியது.) நனைவிளை நறவின் தேறல் மாந்திப் புனைவினை நல்லில் தருமணற் குவைஇப் பொம்மல் ஓதி எம்மகள் மணனென வதுவை அயர்ந்தனர் நமரே அதனால் 5. புதுவதுவை புனைந்த சேயிலை 2வெள்வேல் மதியுடம் பட்ட மையணற் காளை 3வாங்குசினை மலிந்த திரளரை மராஅத்துத் தேம்பாய் மெல்லிணர் தளிரொடு கொண்டுநின் தண்ணறும் முச்சி புனைய அவனொடு 10. கழைகவின் போகிய மழையுயர் நனந்தலைக் களிற்றிரை பிழைத்தலிற் கயவாய் வேங்கை காய்சினஞ் சிறந்து குழுமலின் வெரீஇ இரும்பிடி யிரியுஞ் சோலை அருஞ்சுரம் சேறல் அயர்ந்தனென் யானே. - கயமனார். (சொ-ள்) 1-4. நனை விளை நறவின் தேறல் மாந்தி - அரும்பி னின்றும் உண்டாகிய கள்ளின் தெளிவைப் பருகி, புனைவினை நல் இல் தருமணல் குவைஇ - புனையப்பட்ட வினைத்திறம் அமைந்த நல்ல மனையிலே கொணர்ந்த மணலைக் குவித்துப் பரப்பி, பொம்மல் ஓதி எம் மகள் மணன் என - பொலிவுற்ற கூந்தலை யுடைய எம் மகளுக்கு மணம் என்று கூறி, வதுவை அயர்ந்தனர் நமர் - நம்தாய் தந்தையர் மணத்திற்கு ஆவன செய்துளார்; 4-14. அதனால்-, புதுவது புனைந்த சேய் இலை வெள் வேல் - புதிதாகச் செய்யப்பட்ட செவ்விய இலைபொருந்திய வெள்ளிய வேலையுடைய, மதி உடம்பட்ட - உடன் போக்கிற்கு இயைந்த அறிவினை யுடைய, மை அணல் காளை - கரிய தாடியினையுடைய காளை போன்ற நம் தலைவன், வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து - வளைந்த கிளைகள் மிக்க திரண்ட அரையினையுடைய வெண் கடப்ப மரத்தின், தேம்பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு - தேன் பாயும் மெல்லிய பூங்கொத்துக்களைத் தளிருடன் கொண்டுவந்து, நின் தண் நறும் முச்சி புனைய - நினது தண்ணிய நல்ல மயிர் முடியிற்சூட, அவனொடு - அத் தலைவனுடன், கழைகவின் போகிய மழை உயர் நனந்தலை - மூங்கில்கள் அழகிழந்த மழைபெய்யாது மேலேசென்ற அகன்ற பாலையிடத்தே, களிறு இரை பிழைத்தலின் கயவாய் வேங்கை - களிறாகிய இரை தப்பி விட்டமையின் பெரிய வாயினையுடைய வேங்கை, காய் சினம் சிறந்து குழுமலின் வெரீஇ - கொதிக்கும் சினம் மிக்கு முழங்குதலின் அஞ்சி, இரும்பிடி இரியும் சோலை அரும் சுரம் சேறல் - கரிய பெண்யானைகள் நிலைகெட்டு ஓடும் காட்டினையுடைய அரிய சுரநெறியிற் செல்லுதலை, யான் அயர்ந்தனென் - யான் விரும்பி ஏற்றுக் கொண்டேன். (முடிபு) நமர் எம்மகள் மணன் என வதுவை அயர்ந்தனர்! அதனால், மதியுடம்பட்ட காளை மெல்லிணர் தளிரொடு கொண்டு நின் முச்சிபுனைய அவனொடு நீ அரும் சுரம் சேறல், யான் அயர்ந்தனென். (வி-ரை) வதுவை அயர்ந்தனர் நமர் என்றது, நமர் வேற்று வரைவினை உடன்பட்டார் என்றபடி அருஞ்சுரம் சேறல் அயர்ந்தனென் என்றது தலைவனுடன் போக்குடன்பட்டேன் என்றவாறு. புதுவது புனைந்த சேயிலை வெள்வேற் காளை என்றமையால், அவன், காட்டிடையே எத்துணையும் ஏதமின்றிக் காக்கவல்லன் என்பதும், மெல்லிணர் தளிரொடுகொண்டு நின் முச்சி புனைய என்றமையால், சுரத்திலே நடந்து செல்லும் வருத்தம் தோன்றாவாறு அன்பினால் நின்னைப் பாராட்டி அழைத்தேகுவன் என்பதும் கூறியவாறாம். 222. குறிஞ்சி (தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது.) வானுற நிவந்த நீல்நிறப் பெருமலைக் கான நாடன் உறீஇய 1 நோய்க்குன் மேனி ஆய்நலந் தொலைதலின் மொழிவென் முழவுமுகம் புலராக் கலிகொள் ஆங்கண் 5. கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும் ஈட்டெழில் பொலிந்த ஏந்துகுவவு மொய்ம்பின் ஆட்ட னத்தி நலனயந் துரைஇத் தாழிருங் கதுப்பின் காவிரி வவ்வலின் மாதிரந் துழைஇ மதிமருண் டலந்த 10. ஆதி மந்தி காதலற் காட்டிப் படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின் மருதி யன்ன மாண்புகழ் பெறீஇயர் சென்மோ வாழி தோழி பன்னாள் உரவுரும் ஏறொடு மயங்கி 15. இரவுப்பெயல் பொழிந்த ஈர்ந்தண் ஆறே. - பரணர். (சொ-ள்) 13. தோழி-, வாழி-, 1-3. வான் உற நிவந்த நீல் நிறப் பெருமலைக் கான நாடன் - வானில் மிக உயர்ந்த நீல நிறம் பொருந்திய பெருமலையினை அடுத்துள்ள காட்டுநாட்டினையுடைய தலைவன், உறீஇய நோய்க்கு உன்மேனி ஆய் நலம் தொலைதலின் மொழிவென் - அடைவித்த நோயால் நினது மேனியின் ஆய்ந்த அழகு ஒழிதலின் யான் இதனைக் கூறுவேன், கேட்பாயாக; 4-8. முழவு முகம் புலரா கலிகொள் ஆங்கண் - முழவின் ஒலி மாறாத ஆரவாரம் நிகழும் இடமாகிய, கழாஅர்பெரும் துறை விழவின் ஆடும் - கழார் என்னுமிடத்துள்ள பெரிய துறையிடத்து விழாவில் ஆடிய, ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின் - திரண்ட அழகாற் பொலிவுற்ற நிமிர்ந்த திரண்ட தோளினையுடைய, ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇ - ஆட்டனத்தி என்பான் அழகினை விரும்பிப் பரந்துவந்து, தாழ் இரு கதுப்பின் காவிரி வவ்வலின் - தாழ்ந்து தொங்கும் கரிய கூந்தலையுடைய காவிரி கவர்ந்து கொண்டமையின்; 9-12. மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதி மந்தி - திசையெல்லாம் தன் கணவனைத் தேடி மதிமயங்கி வாடிய அவன் மனையாள் ஆகிய ஆதிமந்திக்கு, காதலன் காட்டி - அவள் காதலனைக் காட்டி, படுகடல் புக்க பாடல் சால் சிறப்பின் மருதி அன்ன - ஒலிக்கும் கடலிற் புக்கு மறைந்த பாடுதல் அமைந்த சிறப்பினையுடைய மருதியையொத்த, மாண்புகழ் பெறீஇயர் - சிறந்த புகழைப் பெறும் பொருட்டு; 13-15. பல் நாள் உரவு உரும் ஏறொடு மயங்கி - பல நாளும் வலிய இடியேற்றுடன் கூடி, இரவு பெயல் பொழிந்த ஈர் தண் ஆறு- இரவெல்லாம் மழை சொரிதலின் ஈரம் மிக்க சேற்று நெறியில் (நம் தலைவனைத் தேடி), சென்மோ - செல்வோமாக. (முடிபு) தோழி வாழி, நின் மேனி நலம் தொலைதலின் மொழிவென்: ஆட்டனத்தி நலம் நயந்து காவிரி வவ்வலின், அவனை ஆதிமந்திக்குக் காட்டிக் கடலிற் புக்க மருதி யன்ன புகழ் பெறீஇயர், ஈர்ந்தண் ஆறு சென்மோ. (வி-ரை) நோய்க்கென்மேனி என்பது பாடமாயின் `தாயத்தி னடையா'1 என்னுஞ் சூத்திர விதியால், தோழி தலைவி உறுப்பைத் தன்னுறுப்பாகக் கொண்டு கூறினாளென்க. ஆதிமந்தி காதலற் கெடுத்து அலமந்த செய்தி இந்நூலுள் வேறு செய்யுட் களிலும் கூறப்பட்டுள்ளது; `வாடல் உழிஞ்சில்'2 என்னும் செய்யுளின் உரையிற் காண்க. ஆட்டனத்தியைக் காவிரி வவ்விச் சென்றதனை அவனது நலம் நயந்து கவர்ந்து சென்றதாகத் தற்குறிப்பேற்ற வகையாற் கூறினார். காவிரியைப் பெண்ணாக உருவகித்தமைக்கேற்ப, தாழிருங் கதுப்பின் என அடை கொடுக்கப்பட்டது. காதலற் காட்டிப் படுகடல் புக்க மருதி என்றமையால், மருதி யென்பாள் தன்னுயிர்க்கு அஞ்சாது கடலிற் சென்று, ஆதிமந்திக்கு அவள் கணவனைக் காட்டித் தான் உயிர் விடுத்தாள் என்பது போதரும். அதனால் அவள் புகழ் மிகச் சிறந்ததாயினமையின், `மருதி யன்ன மாண்புகழ்' எனப்பட்டது. `மருதி யன்ன மாண்புகழ் பெறீஇயர் சென்மோ' என்று தோழி கூறியது நாமும் தலைவனைத் தேடிச் சென்று அவனைக் காணமாட்டாது உயிர்துறந்தே மாயினும் அதனால் விழுப்புகழ் எய்துவேம் என்பாள் போன்று தலைமகனை வரைவு கடாயினவா றென்க. செல்கம் என்பது சென்மோ என விகாரமாயிற்று. 223. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.) பிரிதல் வல்லியர் இதுநத் துறந்தோர் மறந்தும் அமைகுவர் கொல்லென் றெண்ணி ஆழல் வாழி தோழி கேழல் வளைமருப்பு உறழும் உளை 3நெடும் பெருங்காய் 5. நனைமுதிர் முருக்கின் சினைசேர் பெருங்கல் காய்சினக் கடுவளி எடுத்தலின் 4வெங்காட்டு அழல்பொழி யானையின் ஐயெனத் தோன்றும் நிழலில் ஓமை நீரில் நீளிடை இறந்தன ராயினும் காதலர் நம்வயின் 10. மறந்துகண் படுதல் யாவது புறந்தாழ்பு அம்பணை நெடுந்தோள் தங்கித் தும்பி அரியினங் கடுக்குஞ் சுரிவணர் ஐம்பால் 1நுண்கே ழடங்க வாரிப் பையுள்கெட நன்முகை அதிரற் போதொடு குவளைத் 15. தண்நறுங் கமழ்தொடை வேய்ந்தநின் மண்ணார் கூந்தல் மரீஇய துயிலே. - பாலைபாடிய பெருங்கடுங்கோ. (சொ-ள்) 1-3. தோழி-, வாழி-, பிரிதல் வல்லியர் நத்துறந்தோர் - நம்மைப் பிரிதற்கு மனவலி எய்தினாராகி அங்ஙனம் நம்மைப் பிரிந்து சென்றார், மறந்தும் அமைகுவர் கொல் என்று இது எண்ணி - நம்மை மறந்து தங்குதலும் செய்வரோ என்று இதனை எண்ணி, ஆழல் - துயரில் அழுந்தாதே; 3-9. கேழல் வளை மருப்பு உறழும் உளை நெடு பெரும் காய் - பன்றியின் வளைந்த கொம்பினை ஒத்த ஆர்க்கினையுடைய நெடிய பெரிய காயினையுடைய, நனை முதிர் முருக்கின் சினைசேர் பெருங்கல் - அரும்பு முதிர்ந்த முருக்க மரத்தின் கிளை பொருந்திய பெரிய கல்லானது, காய்சின கடு வளி எடுத்தலின் - மிக்க வேக முடைய கடிய காற்று மூட்டுதலின், வெம் காட்டு அழல் பொழி யானையின்ஐ எனத் தோன்றும் - வெம்மை மிக்க காட்டில் அழலால் மூடப்பெற்ற யானையைப்போன்று வியப்புறத் தோன்றும், நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை - நிழலற்ற ஓமை மரத்தினையுடைய நீர் இல்லாத நீண்ட சுரத்தை, இறந்தனர் ஆயினும் - கடந்து சென்றனராயினும், காதலர் - நமது காதலர்; 9-16. புறம் தாழ்பு - புறத்தில் தாழ்ந்து, அம்பணை நெடுதோள் தங்கி - அழகிய மூங்கில் போன்ற நீண்ட தோளில் படிந்து, தும்பி அரி இனம் கடுக்கும் - தும்பி வண்டின் கூட்டத்தை ஒக்கும், சுரிவணர் நுண் கேழ் ஐம்பால் - சுரிந்து வளைந்த நுண்ணிய கருநிறம் வாய்ந்த கூந்தலை, பையுள் கெட அடங்க வாரி - வருத்தம் ஒழிய முழுவதும் வாரி, நல்முகை அறல் போதொடு - காட்டுமல்லிகையின் நல்ல அரும்புடன் கூடிய மலரொடு, தண் நறும் குவளை கமழ் தொடை வேய்ந்த - தண்ணிய நறிய குவளைமலரை வைத்துத் தொடுத்த நாறும் மாலையைச் சூட்டிய, நின் மண் ஆர் கூந்தல் மரீஇய துயில் - நினது மண்ணுதல் அமைந்த கூந்தலிற் பொருந்திய துயிலை, நம் வயின் - நம்மிடத்தே தங்கிப் பெறுதலை, மறந்து கண்படுதல் யாவது - மறந்து ஆங்குத் துயிலுதல் எங்ஙனம் இயல்வது? (முடிபு) தோழி, வாழி, நத்துறந்தோர், மறந்தும் அமைகுவர் கொல் என்று இது எண்ணி ஆழல்; நம் காதலர், நீரில் நீளிடை இறந்தனராயினும், நின் மண்ணார் கூந்தல் மரீஇய துயில் மறந்து கண்படுதல் யாவது? (வி-ரை) முருக்கின் செந்நிறப் பூக்களாற் சூழப்பெற்ற கல், காட்டிலே அழலாற் சூழப்பெற்ற யானைபோலத் தோன்று மென்றார். காய்சினக் கடு வளி எடுத்தலின் என்றது, காட்டிலே அழல் சூழுதற்கு ஏதுக் கூறியபடியாம். அழல் பொதி யானை யெனப் பாடம் கொள்ளலுமாம். தோன்றும் நீளிடை எனவும், ஓமை நீள் இடை எனவும், நீரில் நீளிடை எனவும் தனித்தனி கூட்டுக. மண் - கழுவுதல்; முதனிலைத் தொழிற்பெயர் - காதலர் கூந்தல் மரீஇய துயிலை மறந்து ஆண்டுக் கண்துயில் செய்யாராதலின், விரைந்து வருவர் எனக் கூறித், தோழி தலைமகளை ஆற்றுவித்தா ளென்க. 224. முல்லை (வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.) செல்க பாக எல்லின்று பொழுதே வல்லோன் அடங்குகயி றமைப்பக் கொல்லன் விசைத்துவாங்கு துருத்தியின் வெய்ய உயிராக் கொடுநுகத் தியாத்த தலைய கடுநடைக் 5. காற்கடுப் பன்ன கடுஞ்செலல் இவுளி பால்கடை நுரையின் பரூஉமிதப் பன்ன வால்வெண் தெவிட்டல் வழிவார் நுணக்கஞ் சிலம்பி நூலின் உணங்குவன பாறிச் சாந்துபுலர் அகலம் மறுப்பக் காண்டகப் 10. புதுநலம் பெற்ற வெய்துநீங்கு புறவில் தெறிநடை மரைக்கணம் இரிய மனையோள் ஐதுணங்க வல்சி பெய்துமுறுக் குறுத்த திரிமரக் குரலிசை கடுப்ப வரிமணல் அலங்குகதிர்த் திகிரி ஆழி போழ 15. வருங்கொல் தோழிநம் இன்னுயிர்த் துணையெனச் சில்கொல் எல்வளை யொடுக்கிப் பல்கால் அருங்கடி வியனகர் நோக்கி வருந்துமால் அளியள் திருந்திழை தானே. - 1 ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார். (சொ-ள்) 15. தோழி-, 2-15. வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப - வல்லோனாகிய பாகன் அடங்கிச் செல்வதற்கு உரிய கடிவாளக் கயிற்றினைப் பூட்ட, கொல்லன் விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா - கொல்லன் வலித்து இழுக்கும் துருத்தியினைப்போல வெப்பமாகப் பெருமூச்சு விட்டு, கொடு நுகத்து யாத்த தலைய - வளைந்த நுகத்திடத்தே கட்டப் பெற்ற தலையினவாகிய, கடு நடை கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி - கடிய நடையினையும் காற்றின் வேகத்தை யொத்த விரைந்த ஓட்டத்தினையுமுடைய குதிரைகளின், பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன - பால் கடையுங்கால் எழும் வெண்ணெயின் பெரிய மிதப்பினை யொத்த, வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம் - மிக வெள்ளியதான வாயின் தெவிட்டலாய பின்னே வழிந்திடும் மெல்லிய நுரை, சிலம்பி நூலின் நுணங்குவன பாறி- சிலம்பியின் நூல்போல நுணுகுவனவாய்ச் சிதறி, சாந்து புலர் அகலம் மறுப்ப - சந்தனம் பூசிப் புலர்ந்த மார்பில் மறுச் செய்யவும், காண்தக புதுநலம் பெற்ற வெய்து நீங்கு புறவில் - அழகு பெறப் புதுநலத்தினைப் பெற்ற வெம்மை நீங்கிய காட்டில், தெறி நடை மரைக்கணம் இரிய - குதித்துச் செல்லும் மரையினங்கள் அஞ்சி யோடவும், மனையோள் ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த - மனைவி பதமாகக் காய்ந்த அரிசியைப் பெய்து சுற்றுதல் செய்த, திரிமரக் குரலிசை கடுப்ப - சுழலும் திரிகையின் குரலொலி ஒக்க, வரி மணல் - வரிப்பட்ட மணலில், அலங்கு கதிர் திகிரி ஆழி போழ - சுழலும் கதிரினையுடைய வட்ட ஆழி அறுத்துக் கொண்டு செல்லவும், நம் இன் உயிர்த்துணை வரும் கொல் என - நமது இனிய உயிர்த்துணைவராய காதலர் வருவர் கொல் என்று; 16-18. சில் கோல் எல் வளை ஒடுக்கி - சிலவாய திரண்ட ஒளி பொருந்திய வளையினை யொடுக்கி, பல் கால் அருங்கடி வியன் நகர் நோக்கி - பலமுறை அரிய காவலுடைய பெரிய மனையின் புறத்தே வந்து பார்த்து, அளியள் திருந்து இழை - இரங்கத்தக்காளாகிய திருந்திய அணியினையுடைய நம் காதலி, வருந்தும் - வருந்துவாள்; 1. எல்லின்று பொழுதே - பொழுதும் இரவாயிற்று ஆதலின், செல்க பாக - பாகனே விரைந்து நம் தேர் செல்வதாக. (முடிபு) `தோழி! இன்னுயிர்த்துணை வருங்கொல்' எனப் பல்கால் வியனகர் நோக்கி அளியள் திருந்திழை வருந்தும்; பொழுதும் எல்லின்று; பாக, (தேர்) செல்க. (வி-ரை) செல்க - செலுத்துக எனப் பிறவினைப் பொருட்டாக் கலுமாம். இவுளியின் தெவிட்டல் என்க. தெவிட்டல் - வாய் குதட்டுதலால் உண்டாகும் விலாழிநீர். மறுப்ப - மறுச்செய்ய. `காண்டகப் புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில்' என்றமையால், கார்ப்பருவம் வந்தமை பெற்றாம். முறுக்குறுத்த - சுழற்றிவிட்ட. திரிமரம் - இது திரிகை என வழங்கும். திகிரியாய ஆழி என இருபெயரொட்டுமாம். சுழலும் வளைகளைச் செறித்து என்பான், எல்வளை ஒடுக்கி என்றான். 225. பாலை (பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.) அன்பும் மடனுஞ் சாயலும் இயல்பும் என்பும் நெகிழ்க்குங் கிளவியும் பிறவும் ஒன் றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி இன்றே யிவண மாகி நாளைப் 5. புதலிவர் ஆடமைத் தும்பி குயின்ற அகலா அந்துளை கோடை முகத்தலின் நீர்க்கியங் கினநிரைப் பின்றை வார்கோல் ஆய்க்குழற் பாணியின் ஐதுவந் திசைக்குந் தேக்கமல் சோலைக் கடறோங் கருஞ்சுரத்து 10. யாத்த தூணித் தலைதிறந் தவைபோற் பூத்த இருப்பைக் குழைபொதி குவியிணர் கழல்துளை முத்திற் செந்நிலத்து உதிர மழைதுளி மறந்த அங்குடிச் சீறூர்ச் சேக்குவங் கொல்லோ நெஞ்சே பூப்புனை 15. புயலென ஒலிவருந் தாழிருங் கூந்தல் செறிதொடி முன்கைநங் காதலி அறிவஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே. - எயினந்தை மகனார் இளங்கீரனார். (சொ-ள்) 14. நெஞ்சே-, 1-4. அன்பும் மடனும் சாயலும் இயல்பும் - அன்பும் மடனும் மென்மையும் ஒழுக்கமும், என்பும் நெகிழ்க்கும் கிளவியும் - என்பையும் நெகிழ்விக்கும் சொல்லும், பிறவும் - ஏனையவும், ஒன்றுபடு கொள்கையொடு - தலைவியுடன் ஒன்றுபட்டுள்ள நற்கொள்கையுடையேமாய், ஓராங்கு முயங்கி - ஒரு பெற்றியே தழுவி; இன்று இவணம் ஆகி - இன்று இவ்விடத்தேம் ஆகி; 4-13. நாளை - நாளைப் போழ்தில், புதல் இவர் ஆடு அமை - புதல்கள் பரந்த இடத்தேயுள்ள அசையும் மூங்கிற்கண்ணே, தும்பி குயின்ற அகலா அம் துளை - வண்டு துளைத்த குறுகிய அழகிய துளை வழியே, கோடை முகத்தலின் - மேல்காற்றுப் புகுந்து வருதலின் (எழும் ஒலி), நீர்க்கு இயங்கு இன நிரைப்பின்றை - நீர்பருகச் செல்லும் கூட்டமாய ஆனிரைக்குப் பின்னே வரும், வார்கோல் ஆய்க்குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும் - நீண்ட கோலினையுடைய ஆயர்தம் குழலின் இசையென அழகிதாக வந்து ஒலிக்கும், தேக்கு அமல் சோலை கடறு ஓங்கு அருசுரத்து - தேக்குமரங்கள் நிறைந்த சோலையினையுடைய காடு உயர்ந்த அரிய பாலைவழியிலுள்ள, யாத்த தூணி தலை திறந்தவை போல் - அம்புகளைத் தொகுத்த புட்டில்கள் மூடி திறக்கப் பெற்றன போற் காணப்பெறும், பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர் - பூத்துள இருப்பையின் தளிர் பொதியப் பெற்ற குவிந்த (துளையுடைய) பூங்கொத்துக்கள், கழல் துளை முத்தில் செந்நிலத்து உதிர - நூலினின்று கழன்று விழும் துளை பொருந்திய முத்தைப்போல சிவந்த நிலத்தே உதிர, மழை துளி மறந்த - மழைபெய்தலை மறந்த இடமாய, அம் குடி சீறூர் - அழகிய குடிகளையுடைய சிறிய ஊரின் கண்ணே; 14-17. பூ புனை புயல் என ஒலிவரும் தாழ் இரு கூந்தல் - பூவாற் புனையப்பெற்ற மேகம்போலத் தழைத்த தாழ்ந்த கரிய கூந்தலினையும், செறி தொடி முன்கை - நெருங்கிய வளைகளை யுடைய முன் கையினையும் உடைய, நம் காதலி அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்து - நம் காதலியின் அறிவு கலங்கிய பார்வையினையும் புலவியினையும் நினைந்து, சேக்குவம் கொல்லோ - (தனித்துத்) தங்கியிருப்போமோ? (முடிபு) நெஞ்சே! தலைவியுடன் ஓராங்கு முயங்கி இன்றே இவணமாகி, நாளை, அருஞ்சுரத்துச் சீறூர், காதலி நோக்கமும் புலவியும் நினைந்து சேக்குவம் கொல்லோ? (வி-ரை) அன்பு - ஒருவரை யொருவர் இன்றியமையாமைக் கேதுவாகிய காதல், மடன் - ஒருவர் குற்றம் ஒருவர் அறியாமை. சாயல் - மென்மைத் தன்மை. இயல்பு - ஒழுக்கம். `சால்பும் வியப்பும் இயல்பும்'1 என்பதின் உரை காண்க. பிற என்றது செறிவு, நிறை, அறிவு முதலாயினவற்றை. ஒன்றுபடு கொள்கை என்றமையால் இவை யெல்லாம் தலைவனுக்கும் தலைவிக்கும் ஒத்திருத்தல் வேண்டும் என்றவாறாயிற்று. இனி, தலைவி, அன்பு முதலிய யாவும் ஒன்றிய கொள்கையை யுடைமையினாலே அவளுடன் ஓராங்கு முயங்கி என்றலுமாம். கடறு - கற்காடு. இருப்பையின் அரும்பு அம்புக்குப்பி போலுமாகலின், தூணித்தலை திறந்தவைபோல் இருப்பைக்குழை பொதி குவியிணர் என்றார். `வில்லோர் தூணி வீங்கப் பெய்த, அப்பு நுனை யேய்ப்ப அரும்பிய இருப்பை'2 என முன் வந்தமையுங் காண்க. இருப்பையின் குவியிணர் முத்துப் போற் செந்நிலத் துதிர்ந்து கிடத்தலால் அழகு பெற்ற குடியிருப்பினை யுடைய சீறூர் என்க. இன்று நம்மாற் பாராட்டப் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கும் நம் காதலி, நாளை நம்மைப் பிரிந்து ஒப்பனை செய்யாத கூந்தலும், தொடி நெகிழும் கையும், கலங்கிய நோக்கமும், அதனால் வெறுப்பும் உடையள் ஆதலை நினைந்து சீறூரில் தங்கி யிருப்போம்போலும் என்றான் என்க. 226. மருதம் (தலைமகற்குத் தோழி வாயின் மறுத்தது.) உணர்குவென் அல்லென் உரையல்நின் மாயம் நாணிலை மன்ற யாணர் ஊர அகலுள் ஆங்கண் அம்பகை மடிவைக் குறுந்தொடி மகளிர் குரூஉப்புனல் முனையின் 5. பழனப் பைஞ்சாய் கொழுதிக் கழனிக் கரந்தையஞ் செறுவின் வெண்குருகு ஓப்பும் வல்வில் எறுழ்தோட் பரதவர் கோமான் பல்வேல் மத்தி கழாஅர் முன்துறை நெடுவெண் மருதொடு வஞ்சி சாஅய் 10. விடியல் வந்த பெருநீர்க் காவிரித் தொடியணி முன்கை நீவெய் யோளொடு முன்னா ளாடிய கவ்வை இந்நாள் வலமிகு முன்பிற் பாணனொடு மலிதார்த் தித்தன் வெளியன் உறந்தை நாளவைப் 15. பாடின் தெண்கிணைப் பாடுகேட் டஞ்சிப் போரடு தானைக் கட்டி பொராஅ தோடிய ஆர்ப்பினும் பெரிதே. -பரணர். (சொ-ள்) 1-2 யாணர் ஊர - புது வருவாயையுடைய ஊரனே! நின் மாயம் உரையல் - நின் வஞ்சனை பொதிந்த சொற்களைக் கூறாதே, உணர்குவென் அல்லென் - யான் அவற்றை மெய்ம்மையாகக் கொள்வேன் அல்லேன், நாண் இலை மன்ற - நீ தேற்றமாக நாணம் உடையை யல்லை; 3-12. அகலுள் ஆங்கண் - அகன்ற ஊரிடத்தே, அம் பகை மடிவை - அழகிய பகுப்பையுடைய தழையுடையினையும், குறு தொடி - குறிய வளையலையுமுடைய மகளிர், குரூஉ புனல் முனையின் - விளங்கும் புனல் விளையாட்டை வெறுப்பின், பழனம் பைஞ்சாய் கொழுதி - பொய்கையிலுள்ள கோரைகளைக் கோதி, கழனிக் கரந்தை செறுவில் வெண் குருகு ஓப்பும் - கழனியாகிய கரந்தையை யுடைய செய்யின் கண்ணுள்ள வெள்ளிய நாரையை ஓட்டும் (இடமாய), வல்வில் எறுழ் தோள் பரதவர் கோமான் - வலிய வில்லைத்தாங்கிய வலிமை பொருந்திய தோள்களையுடைய பரதவர்கட்குத் தலைவ னாகிய, பல்வேல் மத்தி - பல வேற் படைகளையுடைய மத்தி என்பானது, கழாஅர் - கழார் என்னும் பதியின், முன் துறை - துறையின் முற்றத்தே, நெடு வெள் மருதொடு வஞ்சி சாஅய் - நீண்ட வெள்ளிய மருத மரத்துடன் வஞ்சிமரத்தையும் சாய்த்து, விடியல் வந்த பெருநீர்க் காவிரி - நாட்காலையில் வந்த மிக்க வெள்ளத்தையுடைய காவிரி யிடத்தே, தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு - வளையல் அணிந்த முன்கையினையுடைய உன்னால் விரும்பப்பெற்ற பரத்தை யொடு, முன்னாள் ஆடிய கவ்வை - நீ நேற்று விளையாடிய தாலெழுந்த அலர்; 12-17. இந் நாள் - இன்று, வலிமிகு முன்பின் பாணனொடு - ஆற்றல் மிக்க வலிமையுடைய பாணன் என்பானொடு கூடி, போர் அடுதானை கட்டி - போர் அடுதலில்வல்ல தானையையுடைய கட்டி யென்பான் (போர்செய்தற்கு வந்து), மலி தார் தித்தன் வெளியன் உறந்தை நாள் அவை - தார் மலிந்த தித்தன் வெளியன் என்பானது உறையூரின்கண்ணுள்ள நாளோலக்கத்தின்கண்ணே எழுந்த, பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி - ஓசை இனிய தெளிந்த கிணையினது ஒலியைக் கேட்டு அவனது பெருமையை யுணர்ந்து அஞ்சி, பொரா அது ஓடிய ஆர்ப்பினும் பெரிது - போர் செய்யாது ஓடியபோது உண்டாய ஆரவாரத்தினும் பெரிதாகும். (முடிபு) ஊர! மாயம் உரையல்; யான் அவற்றை உணர்குவென் அல்லென்; நாணிலை; காவிரியில் கழாஅர் முன்துறைக்கண்ணே நீ வெய்யோளொடு முன்னாள் ஆடிய கவ்வை, இந்நாள் கட்டி யென்பான் பாணன் என்பானொடு கூடிப் போர் செய்தற்கு வந்து வெளியன் உறந்தை நாளவைக் கண்ணே கிணை யொலிகேட்டு அஞ்சிப் பொராது ஓடிய போதுண்டாய ஆரவாரத்தினும் பெரிதாகும். (வி-ரை) மாயம் - பரத்தையை அறியேன் என்னும் பொய்ம் மொழி. பகை - பகுப்பு. ஒன்றற்கொன்று முரண் என்றுமாம். பல நிறமுடைய பூக்களாலும் தழையாலும் செய்யப்படுதலின் பகை மடிவை என்றார். மடிவை - தழையுடை. குறுந்தொடி மகளிர் என்றது, மருத நிலத்து உழவர் மகளிரை. மகளிர் புனலாடுதலில் வெறுப்புறின் செறுவில் குருகினை யோட்டி விளையாடுவர் என்க. விளை செறுவில் கரந்தை உளதாதல், `காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல்'1 எனப் பிறாண்டும் கூறப்படுதல் காண்க. `பல்வேல் மத்தி கழாஅர்'2 என இவ்வாசிரியர் முன்னரும் கூறியுள்ளமை அறியற் பாற்று. கிணை - ஈண்டு முரசு. பாணனும் கட்டியும் மிக்க மெய் வலியும் படைவலியும் உடையராகியும் தித்தன் வெளியனது நாளவைக்கண் ஒலிக்கும் கிணையொலி கேட்டல் மாத்திரையானே அஞ்சியோடினமையின் எள்ளல் பற்றிய நகை யாரவாரம் பெரிதாயிற் றென்க, ஓடிய ஆர்ப்பினும்: பெயரெச்சம் காரணப் பொருட்டு. 227. பாலை (தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. பிரிவின்கண் வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉமாம்.) நுதல்பசந் தன்றே தோள்சா யினவே திதலை யல்குல் வரியும் வாடின என்னா குவள்கொல் இவளெனப் 1பன்மாண் நீர்மலி கண்ணொடு நெடிதுநினைந் தொற்றி 5. இனையல் வாழி தோழி நனைகவுள் காய்சினஞ் சிறந்த வாய்புகு கடாத்தொடு முன்னிலை பொறாஅது முரணிப் பொன்னிணர்ப் புலிக்கேழ் வேங்கைப் பூஞ்சினை புலம்ப முதல்பாய்ந் திட்ட முழுவலி யொருத்தல் 10. செந்நிலப் படுநீ றாடிச் செருமலைந்து களங்கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் பலஇறந்து அகன்றன ராயினும் நிலைஇ நோயில ராகநங் காதலர் வாய்வாள் தமிழகப் படுத்த இமிழிசை முரசின் 15. வருநர் வரையாப் பெருநா ளிருக்கைத் தூங்கல் பாடிய ஓங்குபெரு நல்லிசைப் 2பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன் கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர் விழுநிதி துஞ்சும் 3வீறுபெறு திருநகர் 20. இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து எல்லுமிழ் ஆவணத்து அன்ன கல்லென் கம்பலை செய்தகன் றோரே. - நக்கீரர். (சொ-ள்) 1-5. தோழி-, வாழி-, நுதல் பசந்தன்று - நுதல் பசந்துளது, தோள் சாயின - தோள்கள் மெலிந்துவிட்டன, திதலை அல்குல் வரியும் வாடின - தேமல் பரந்த அல்குலின் வரிகளும் வாடிப்போயின, என் ஆகுவள் கொல் இவள் என - இனி இவள் எந்நிலை யடைவளோ என்று, பல்மாண் நீர்மலி கண்ணொடு - பலபடியாக நீர் நிறைந்த கண்ணொடு, நெடிது நினைந்து - நெடிது எண்ணி, ஒற்றி - ஆராய்ந்து, இனையல் - வருந்தாதே; 5-12. காய் சினம் சிறந்த - காயும் சினம் மிக்கமையால், நனைகவுள் வாய்புகு கடாத்தொடு - நனைந்த கன்னத்தினின்றும் வாயிற் புகும் மதநீரொடு, முன் நிலை பொறா அது - தன் முன்னே நிற்றலைக் காணப் பொறாமல், முரணி - பகைத்து, பொன் இணர் புலி கேழ் வேங்கை - பொன்னிறமான கொத்துக்களையுடைய புலியின் நிறத்தினைக்கொண்ட வேங்கை மரத்தினது, பூ சினை புலம்ப - பூங்கொம்புகள் பூக்கள் உதிர்தலால் தனிமையுற, முதல் பாய்ந்திட்ட - அவ்வேங்கையின் அடிமரத்தில் பாய்ந்திட்ட, முழுவலி ஒருத்தல் - மிக்க வலியினையுடைய களிறு, செந்நிலப் படு நீறு ஆடி- செம்மண் நிலத்திற் பொருந்திய புழுதியை அளைந்து, செரு மலைந்து களம் கொள் மள்ளரின் - போர் புரிந்து களத்தில் வெற்றிகொண்ட விரர்போல், முழங்கும் அத்தம் - முழங்குகின்ற சுரநெறிகள், பல இறந்து அகன்றனர் ஆயினும் - பலவற்றைக் கடந்து அகன்று போயினராயினும்; 12-22. வாய் வாள் - தப்பாத வாளினையும், தமிழ் அகப்படுத்த- தமிழ்நாடு முழுதினையும் அகப்படுத்தி, இமிழ் இசை முரசின் - ஒலிக்கும் புகழமைந்த முரசினையும், வருநர் வரையா பெருநாளிருக்கை- பாடி வருநர்க்கு வரையாத பெரிய நாளோலக்க இருக்கையினையும் உடைய, தூங்கல் பாடிய - தூங்கல் எனும் புலவராற் பாடப்பெற்ற, ஓங்கு பெரு நல்இசை - மிக உயர்ந்த நல்ல புகழ் வாய்ந்த, பிடி மிதி - பிடி மிதித்தமையால் ஆகிய, வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன் - வழுதுணங்காய் போலும் தழும்பினை உடைமையால் வழுதுணைத் தழும்பன் என்னும் சிறந்த பெயரினை யுடையானது, கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர் - காவல் பொருந்திய மதில் எல்லையை யுடைய ஊணூர்க்கு அப்பாலுள்ள, விழுநிதி துஞ்சும் வீறு பெறு திருநகர் - மிக்க பொருள் நிலைபெற் றிருக்கும் பெருமை கொண்ட அழகிய நகராகிய, இருகழி படப்பை மருங்கூர் பட்டினத்து - பெரிய உப்பங்கழிப் பக்கங்களையுடைய மருங்கூர்ப் பட்டினத்து, எல் உமிழ் ஆவணத்து அன்ன - ஒளி வீசும் கடைத்தெருவைப் போன்ற, கல் என் கம்பலை செய்து அகன்றோர் - கல்லென்னும் அலரை இவ்வூரில் எழச்செய்து பிரிந்தகன்றோராகிய, நம் காதலர் - நம் காதலர், நிலைஇ நோயிலராக - நோயில்லாதவராகி நிலை பெற்று வாழ்வாராக. (முடிபு) தோழி! வாழி! இவள் என்னாகுவள் என இனையல்; அத்தம் இறந்தகன்றனராயினும் மருங்கூர்ப் பட்டினத்து ஆவணத்தன்ன கம்பலை செய்து அகன்றோர் ஆய நம் காதலர் நிலைஇ நோயிலராக. (வி-ரை) இனையல் எனத் தலைவி தோழிக்குக் கூறினாள் என்க. நீர்மலி கண்ணொடு நெடிது நினைந்தொற்றுதல் தோழியிடத் துண்டாய வேறுபாடாகும். எனவே, இச்செய்யுள், இரண்டாவதாகக் குறிக்கப்பட்டுள்ள தலைவி கூற்றாதற்குப் பெரிதும் பொருத்தமாம். நோயிலராக நம் காதலர் எனத் தலைவி தோழியை உளப்படுத்திக் கூறலின், தலைவியும் தோழியும் தலைவனை வாழ்த்தினாரெனக் கொள்ளுதலும் அமையும். சிறந்த என்னும் பெயரெச்சம் காரணப் பொருட்டு. ஒருத்தல் செந்நிலப் படுநீ றாடியது என்றதற் கேற்ப மள்ளர் குருதியால் உடல் சிவந்தமை கொள்க. ஒருத்தல் பகையை ஒழித்த பெருமிதத்துடன் முழங்குதலின் களங்கொள் மள்ளரின் முழங்கும் என்றார். நிலைஇ நோயிலராக - நோயிலராய் நிலை பெற்று வாழ்க என விகுதி பிரித்துக்கூட்டி யுரைக்க. முரசு - வீரமுரசும், கொடை முரசுமாம். அவனது வீரமும் வண்மையும் தமிழ் நாடு முழுதும் பரந்திருந்தமையின் தமிழகப்படுத்த இசை முரசு என்றார். வாளினையும் முரசினையும் இருக்கையினையும் உடைய தழும்பன் எனவும், தூங்கல் பாடிய நல்லிசைத் தழும்பன் எனவும் கூட்டுக. தூங்கல் - தூங்கல் ஓரியார் என்னும் புலவர். அவர் தழும்பனைப் பாடிய பாட்டுக் கிடைத்திலது. பிடிமிதித்த புண்ணின் தழும்பு என்க. வழுதுணைத் தழும்பன் என்னும் பெயர் தழும்பன் என்றே வழங்கலுமுண்டு. `பெரும்புண், ஏஎர் தழும்பன் ஊணூர்'1 என வருதலுங் காண்க. கழிப்படப்பை - உப்பு விளையும் செறு. `மங்கல மொழியும்’2 என்னுஞ் சூத்திரத்து மங்கலமொழி என்றதற்குத் `தலைவற்குத் தீங்கு வருமென்று உட்கொண்டு தோழியும் தலைவியும் அதற்கஞ்சி அவனை வழுத்துதலும்' என்று பொருள் கூறி, அதற்கு, `நோயிலராக நங் காதலர்' என்னும் இதனை எடுத்துக் காட்டினர், நச். 228. குறிஞ்சி (தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.) பிரசப் பல்கிளை யார்ப்பக் கல்லென வரையிழி யருவி யாரந் தீண்டித் தண்ணென நனைக்கும் நளிமலைச் சிலம்பிற் கண்ணென மலர்ந்த மாயிதழ்க் குவளைக் 5. கன்முகை நெடுஞ்சுனை நம்மொ டாடிப் பகலே யினிதுடன் கழிப்பி யிரவே செல்வ ராயினும் நன்றுமற் றில்ல வான்கண் விரிந்த பகல்மருள் நிலவில் சூரல் 3மிளைய சாரல் ஆராற்,று 10. ஓங்கல் மிசைய வேங்கை யொள்வீப் புலிப்பொறி கடுப்பத் தோன்றலிற் கயவாய் இரும்பிடி இரியுஞ் சோலைப் பெருங்கல் யாணர்த்தஞ் சிறு குடியானே. - அண்டர்மகன் குறுவழுதியார். (சொ-ள்) தோழி-, 1-6. பிரசப் பல்கிளை ஆர்ப்ப - தேனை உண்ணும் பலவாய வண்டின் இனங்களும் ஆரவாரிக்க, கல் என வரை இழி அருவி - கல்லென்னும் ஒலியுடன் வரையினின்றும் இறங்கும் அருவியானது. ஆரம் தீண்டி தண் என நனைக்கும் - சந்தன மரத்தில் வீழ்ந்து அதனைத் தண்ணியதாக நனைத்திடும், நளிமலை சிலம்பில் - செறிந்த பக்க மலையில் உள்ள, கண் என மலர்ந்த மா இதழ் குவளை - கண் போல் மலர்ந்த கரிய இதழினையுடைய குவளை மலர்களை யுடைய, கல்முகை நெடு சுனை - மலை முழைஞ்சிலுள்ள நெடிய சுனையில், நம்மொடு ஆடி - தலைவர் நம் முடன் விளையாடி, பகல் இனிது உடன் கழிப்பி - பகற் பொழுதை இனிதாக நம்முடனிருந்து கழித்து; 8-13. வான்கண் விரிந்த பகல் மருள் நிலவில் - வானிடத்தே விரிந்த பகலை யொத்த நிலவொளியில், சூரல் மிளைய சாரல் ஆர் ஆற்று - பிரப்பங்காட்டினையுடைய சாரல் பொருந்திய நெறியிலே, ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ - மலையின் மேலுள்ளவாகிய வேங்கை மரத்தின் ஒளி பொருந்திய மலர்கள், புலிப் பொறி கடுப்பத் தோன்றலின் - புலியின் உடம்பிலுள்ள புள்ளிகளைப்போலத் தோன்றுதலின், கயவாய் இருபிடி இரியும் சோலை - பெரிய வாயினையுடைய கரிய பெண் யானைகள் அஞ்சியோடும் சோலையினை யுடைய, பெரு கல் யாணர் தம் சிறு குடியான் - பெரிய மலையில் உள்ள அழகிய தமது சிறு குடியாய ஊர்க்கு; 6-7. இரவே செல்வர் ஆயினும் நன்று - இரவினிற் செல்வா ராயினும் மிக நன்றாகும். (முடிபு) தோழி! நம் தலைவர் நெடுஞ்சுனை நம்மோடாடிப் பகலே இனிது கழிப்பி, பெருங்கல் யாணர்த் தம் சிறுகுடியான் இரவு செல்வராயினும் நன்றுமன். (வி-ரை) பிரசம் என்னும் அடையால், கிளை வண்டிற் காயிற்று. ஆர்ப்ப இழி அருவி என்க; வண்டுகள் ஒலித்தலாலும், அருவி நறிய சந்தன மரத்தைத் தீண்டி வந்து தட்பமுற நனைத்தலாலும், குவளைகள் கண்ணென மலர்தலாலும், செவி முதலிய பொறிகளுக்கு இன்பம் விளைக்கும் சுனையெனச் சுனையின் சிறப்பைக் கூறினாளென்க. பகலினும் இரவினும் தலைவனைப் பிரியாதிருத்தலே தம் விருப்பமா யினும், இரவில் நிலவு வெளிப்பாடு முதலியவற்றால் கூட்டத்திற்கு இடையீடு உண்டாகலானும், பகலில் மலையிடத்துள்ள சுனையில் ஆடுதற்கண் அன்னதோர் இடையீடு இன்மையானும், `பகலே யினிதுடன் கழிப்பி இரவே, செல்வ ராயினும் நன்றுமன்' என்றாள். தில் என்னும் இடைச் சொல் தில்ல எனத் திரிந்தது. தில் - விழைவுப் பொருட்டு. நிலவு வானிடமெல்லாம் விரிந்தமையான் மலைமீதுள்ள வேங்கைமரத்தின் பூக்கள் சாரற்கண்ணுள்ள பெண் யானைகட்கு இரவிலே புலிப்பொறி யொப்பத் தோன்றின என்க. 229. பாலை (தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் வன்புறை யெதிரழிந்து சொல்லியது.) பகல்செய் பல்கதிர்ப் பருதியஞ் செல்வன் அகல்வாய் வானத் தாழி போழ்ந்தென நீரற வறந்த நிரம்பா நீளிடைக் கயந்தலைக் குழவிக் கவியுகிர் மடப்பிடி 5. குளகுமறுத் துயங்கிய மருங்குல் பலவுடன் பாழூர்க் குரம்பையில் தோன்றும் ஆங்கண் நெடுஞ்சேண் இடைய குன்றம் போகிய பொய்வ லாளர் முயன்றுசெய் பெரும்பொருள் நம்மின் றாயினும் முடிக வல்லெனப் 10. பெருந்துனி மேவல் நல்கூர் குறுமகள் நோய்மலிந் துகுத்த நொசிவரற் சின்னீர் பல்லிதழ் மழைக்கட் பாவை மாய்ப்பப் பொன்னேர் பசலை ஊர்தரப் பொறிவரி நன்மா மேனி தொலைதல் நோக்கி 15. இனையல் என்றி தோழி சினைய பாசரும்பு ஈன்ற செம்முகை முருக்கினப் போதவிழ் அலரி கொழுதித் தாதருந்து அந்தளிர் மாஅத்து அலங்கன் மீமிசைச் செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம் 20. இன்னிள வேனிலும் வாரார் இன்னே வருதும் எனத்தெளித் தோரே. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். (சொ-ள்) 10. நல்கூர் குறுமகள் - மகட்கு நல் கூர்ந்தாரது செல்வ மகளாகிய இளைய தலைவியே! 1-10. பகல் செய் பல்கதிர் பருதி அம் செல்வன் - பகலைத் தோற்றுவிக்கும் பல கதிர்களையுடைய ஞாயிறாகிய அழகிய செல்வனது, அகல் வாய் வானத்து ஆழி - அகன்ற இடமாகிய வானின் கண்ணுள்ள ஆணையாய ஆழி, போழ்ந்தென - உலகைக் கிழித்துச் சென்றதாக, நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை - நீரில்லையாக வறந்திட்ட செல்லத் தொலையாத நீண்ட நெறியிடத்தே, கயம் தலை குழவிக் கவிஉகிர் மடப்பிடி - மெல்லிய தலையினையுடைய கன்றினையும் கவிந்த நகத்தினையுமுடைய இளைய யானை, குளகு மறுத்து உயங்கிய - தன் கன்றுண்ண வேண்டித் தான் தழை உணவை உண்ணாது மறுத்தமையின் வாடிய, மருங்குல் பலவுடன் - உடம்பின் உறுப்புக்கள் பலவற்றுடன், பாழ் ஊர் குரம்பையில் தோன்றும் ஆங்கண் - பாழ்பட்ட ஊரிலுள்ள குடிசைகள் போலத் தோன்றும் அவ் விடங்களையுடைய, நெடு சேண் இடைய குன்றம் போகிய - நெடிய சேய்மையிலுள்ள குன்றங்களைத் தாண்டிச் சென்ற, பொய் வலாளர் - பொய் மிக்காராய நம் தலைவர், முயன்று செய் பெரும் பொருள் - முயன்று ஈட்டும் பெரிய பொருள், நம் இன்று ஆயினும் வல் முடிக - நாம் இல்லையாயினும் விரைந்து கைகூடுக என்று, பெரு துனி மேவல் - பெரிய வெறுப்பு மேவற்க; 11-15. நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சின்னீர் - வருத்த மிக்கு உதிர்ந்த நுண்ணிதாக வரும் சிறிதளவாய கண்ணீர், பல் இதழ் மழை கண் பாவை மாய்ப்ப - பலவாய இதழ்களையுடைய தாமரை மலர் போன்ற குளிர்ந்த கண்ணில் உள்ள கருமணியை மறைத்திட, பொன் ஏர் பசலை ஊர்தர - பொன்னை யொத்த பசலை பரந்திட, பொறி வரி நன் மா மேனி தொலைதல் நோக்கி - புள்ளிகளாய தேமலை யுடைய நல்ல சிறந்த எனது மேனியின் அழகு தொலை தலைப் பார்த்து, இனையல் என்றி - வருந்தாதே என்கிறாய்; 15-21. தோழி-, பசு அரும்பு ஈன்ற சினைய - அழகிய அரும்பு களை ஈன்ற கிளைகளையுடைய, செம்முகை முருக்கின் அ போது அவிழ் அலரி கொழுதி - சிவந்த அரும்புகளையுடைய முருக்க மரத்தின் அழகிய போதுகள் விரிந்த மலர்களைக் கிண்டி, தாது அருந்து - அவற்றிலுள்ள பொடிகளை உண்டு, அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை - அழகிய தளிர்களையுடைய மாமரத்தின் அசையும் கிளைகளின் உச்சியிலிருக்கும், செம் கண் இரு குயில் - சிவந்த கண்ணினையுடைய கரிய குயில், நயவர கூஉம் இன் இள வேனிலும் - இனிமை தோன்றக் கூவும் இனிய இளவேனிற் காலத் திலும், இன்னே வருதும் எனத் தெளித்தோர் - இப்பொழுதே வருவேம் எனத் தெரிவித்துச் சென்றவர், வாரார் - வந்திலரே; என் செய்வேன். (முடிபு) `நல்கூர் குறுமகள்! குன்றம் போகிய பொய்வலாளர் முயன்று செய்பொருள் நம்மின்றாயினும் முடிக எனப் பெருந் துனி மேவல்; மேனி தொலைதல் நோக்கி, இனையல்' என்றி; தோழி! இன்னே வருதும் எனத் தெளித்தோர் இன்னிள வேனிலும் வாரார்; என்செய்வேன். (வி-ரை) முதுவேனிற் காலத்தின் ஞாயிற்றின் கதிர் முறுகு தலால் காட்டின் இடமெல்லாம் நீர் அற வறண்டமையைப், பருதியஞ் செல்வனுடைய ஆழி போழ்ந்தமையால் வறந்த தென்றார். ஆழி - ஆணை. குழவியை ஈன்றமையாலும் உணவு பெறாமையாலும் என்பு தோன்ற வற்றிய உடம்பினையுடைமையான், பிடிகள் கூரைசிதைந்த குரம்பைபோலத் தோன்றும் என்க. பெரும்பொருள், நம்மின்றாயினும் முடிக என்றது, நாம் இறந்துபடினும் அவர் அப் பெரும் பொருளைப் பெற்று வாழ்வாராக எனத் தலைவி துனிபற்றிக் கூறியதாகும். தோழியானவள் தலைவியை நோக்கி, நீ அங்ஙனம் கூறித் துனியுறாதே எனவும், மேனி தொலைதல் நோக்கி இனையல் எனவும் வற்புறுத் தினாளாக, தலைவி நீ அங்ஙனம் வற்புறுத்தலாற் பயனென்ன? இன்னே வருதும் எனத் தெளிவித்துச் சென்றவர், இளவேனிற் பருவம் வந்தும் வந்திலராகலின், யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேன் எனத் தோழிக்கு எதிரழிந்து கூறினாளென்க. பல் இதழ் - பல இதழ்களை யுடைய தாமரைப் பூ. செம்முகை என்றது முருக்கிற்கு இயல்பாய அடை. அருந்து - அருந்தி எனத் திரிக்க. அருந்து குயில் எனக் கூட்டி யுரைத்தலுமாம். முதுவேனிற் காலத்தே பிரிதலுற்ற தலைமகன் அடுத்துள்ள கார்ப்பருவத்தின் தொடக்கத்தே வருவேன் எனக் காலம் குறித்துச் சென்றனனாகலின், அதனை இன்னே வருதும் எனத் தெளித் தோர் என்றாள். கார்ப்பருவத்து வாராமையேயன்றிக் கூதிர் முதலிய இடையிட்ட பருவங்களையும் கடந்து இளவேனில் வந்தும் அவர் இன்னும் வந்திலர் என்றாள். இளவேனிலில் மாமரத்தின்மீது குயிலிருந்து கூவுவது கூடியிருப்பார்க்கு இன்பம் விளைப்பதாகலின், குயில் நயவரக் கூவும் இன்னிளவேனில் என்றாள் என்க. 230. நெய்தல் (தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) உறுகழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த சிறுகரு நெய்தற் கண்போன் மாமலர்ப் பெருந்தண் மாத்தழை யிருந்த அல்குல் ஐய அரும்பிய சுணங்கின் வையெயிற்று 5. மையீ ரோதி வாணுதற் குறுமகள் விளையாட் டாயமொடு வெண்மணல் உதிர்த்த புன்னை நுண்தாது பொன்னின் நொண்டு மனைபுறந் தருதி யாயின் எனையதூஉம் இம்மனைக் கிழமை யெம்மொடு புணரில் 10. தீது முண்டோ மாத ராயெனக் கடும்பரி நன்மான் கொடிஞ்சி நெடுந்தேர் கைவல் பாகன் பையென இயக்க யாந்தற் குறுகின மாக ஏந்தெழில் அரிவேய் உண்கண் பனிவரல் ஒடுக்கிச் 15. சிறிய இறைஞ்சினள் தலையே பெரிய எவ்வம் யாமிவண் உறவே. - மதுரை அறுவைவாணிகன் இளவேட்டனார். (சொ-ள்) 1-5. உறுகழி மருங்கின் - பெரிய உப்பங்கழியின் பக்கலிலே, ஓதமொடு மலர்ந்த - கடல் நீரால் மலர்ந்த, கண்போல் சிறு கரு நெய்தல் மா மலர் - கண்ணைப்போன்ற சிறிய கரிய நெய்தலது பெரிய மலருடன் கூடிய, பெரு தண் மா தழை இருந்த அல்குல் - பெரிய குளிர்ந்த சிறந்த தழையுடை பொருந்திய அல்குலினையும், ஐய அரும்பிய சுணங்கின் - மென்மையவாகிய அரும்பிய தேமலையும், வை எயிற்று மை ஈர் ஓதி வாள் நுதல் - கூரிய எயிற்றினையும் கரிய நெடிய கூந்தலையும் ஒளி பொருந்திய நெற்றியினையுமுடைய, குறுமகள் - இளைய மகளே; 6-10. மாதராய் - பெண்ணே, விளையாட்டு ஆயமொடு - நீ கூடி விளையாடும் நின் ஆயத்தாருடன், புன்னை வெண்மணல் உதிர்த்த நுண் தாது - புன்னைமரம் வெள்ளிய மணலில் உதிர்த்த நுண்ணிய பொடியினை, பொன்னின் நொண்டு - பொன்னாகக் கொண்டு முகந்து, மனை புறந் தருதி யாயின் - இல்லறம் நடாத்துவாயாயின், இ மனைக்கிழமை எம்மொடு எனையதூஉம் புணரின் - இந்த இல்லறக்கிழமை சிறிதேனும் எம்முடன் பொருந்துவதாயின், தீதும் உண்டோ - வரக்கடவதொரு தீங்கும் உண்டோ, என - என்று கூறி; 11-13. கடும் பரி நல் மான் கொடிஞ்சி நெடுந் தேர் - கடிய செலவினையுடைய நல்ல குதிரை பூண்ட கொடிஞ்சியினையுடைய உயர்ந்த தேரினை, கைவல் பாகன் பை என இயக்க - செலுத்துந் திறமை மிக்க பாகன் மெல்லெனச் செலுத்த, யாம் தன் குறுகினம் ஆக - நாம் அவளை அணுகினமாக; 13-16. பெரிய எவ்வம் யாம் இவண் உற - யாம் இங்கே பெரிய வருத்தத்தை அடைய, ஏந்து எழில் அரி வேய் உண் கண் - அவள் அழகு மிக்க செவ்வரி பரந்த மையுண்ட கண்களில், பனி வரல் ஒடுக்கி - உவகைக் கண்ணீர் வருதலை மறைத்து, தலை சிறிய இறைஞ்சினள் - தன் தலையினைச் சிறிய அளவில் கவிழ்ந்தனள். (முடிபு) குறுமகள்! மாதராய்! நீ மனைபுறந்தருதியாயின், இம் மனைக்கிழமை எம்மொடு புணரில் தீதுமுண்டோ என, நெஞ்சே யாம் தற்குறுகினமாக, யாம் பெரிய எவ்வம் உற, அவள், கண்பனிவரல் ஒடுங்கி, தலை சிறிய இறைஞ்சினள். (வி-ரை) கண்போல் மா மலர் என்பது, `பொருளே யுவமம் செய்தனர் மொழியினும்'1 என்பதனால் அமையும். ஐய, பெயரெச்சக் குறிப்பு; வினையெச்சக் குறிப்பாக்கி, மென்மையவாக அரும்பிய என்றுரைத்தலுமாம். குறுமகள் என்பதனை, எழுவாயாகக்கொண்டு குறுமகள் இறைஞ்சினள் என முடித்தலுமாம், நொண்டு - முகந்து என்ப தன் மரூஉ. மனை புறந்தருதலாவது, மனையில் வாழ்வாரைப் பேணுதலும் அறஞ்செய்தலுமாம். இம் மனைக்கிழமை எம்மொடு புணரின் என்பது நீ என்னுடன் கூடி மனையறம் புரிதியாயின் என்னுங் கருத்திற்று. தேரிற்பூட்டிய குதிரை மிக விரைந்து செல்வ தாகவும், அம் மகளிர் அஞ்சி யகலாது தன் குறிப்பறிந்து மெல்லெனச் செலுத்தினமையின், கைவல் பாகன் என்றான். தலைவன் அணுகிய வழி தனக்கு உண்டாகிய வேட்கையை அதனால் எழும் கண்ணீர் புலப்படுத்திற்றாகலின், தலைவி நாணினால் அதனை மறைத்துத் தலை சிறிது இறைஞ்சினாள் என்க. அவள் அங்ஙனம் நாணி நின்ற நிலையானது அவள் வேட்கையைப் புலப்படுத்தி அவளைப் பிரிந்து செல்லும் தன் உள்ளத்தில் பெரிய துன்பத்தை விளைத்தலின் பெரிய எவ்வம் யாம் இவண் உறவே என்றான். (மே-ள்) `மறைந்தவற் காண்டல்'2 என்னுஞ் சூத்திரத்துக் `கைப்பட்டுக் கலங்கினும்' என்னுந் துறைக்கு இதனைக் காட்டி, இது தலைவன் கூறியது என்றனர், நச். 231. பாலை (தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) செறுவோர் செம்மல் வாட்டலுஞ் சேர்ந்தோர்க்கு உறுமிடத்து உய்க்கும் உதவி ஆண்மையும் இல்லிருந் தமைவோர்க் கில்லென் றெண்ணி நல்லிசை வலித்த நாணுடை மனத்தர் 5. கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர் படுகளத் துயர்த்த மயிர்த்தலைப் பதுக்கை கள்ளியம் பறந்தலைக் களர்தொறுங் குழீஇ உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கருங் கடத்திடை வெஞ்சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சுருக 10. வருவர் வாழி தோழி பொருவர் செல்சமங் கடந்த செல்லா நல்லிசை விசும்பிவர் வெண்குடைப் பசும்பூண் பாண்டியன் பாடுபெறு சிறப்பிற் கூடல் அன்னநின் ஆடுவண் டரற்றும் உச்சித் 15. தோடார் கூந்தன் மரீஇ யோரே. - மதுரை ஈழத்துப் பூதன்றேவனார். (சொ-ள்) 10. தோழி-, வாழி-, 1-4. செறுவோர் செம்மல் வாட்டலும் - தம் பகைவர் செருக் கினை ஒழித்தலும், சேர்ந்தோர்க்கு உறுமிடத்து உய்க்கும் உதவி ஆண்மையும் - தம்மைச் சேர்ந்தோர்க்கு ஓர் ஊறு எய்துமிடத்து உதவி செய்தலாய ஆண்மையும், இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி - இல்லின்கண்ணே வாளாவிருந்து மடியால் அமைந்திருப்போர்க்கு இல்லை என்று எண்ணி, நல் இசை வலித்த நாண் உடை மனத்தார் - நல்ல புகழைக் கருதிய நாண் உடைய மனத்தராய நம் தலைவர்; 5-9. கொடு வில் கானவர் கணை இடத் தொலைந்தோர் - கொடிய வில்லையுடைய வேடர் தமது அம்பினை விடுதலாற் பட்டோர், படுகளத்து உயர்த்த மயிர்தலைப் பதுக்கை - விழுந்து கிடக்கும் களத்தில் உயர்த்திய மயிரினையுடைய தலைகளையுடைய கற்குவியல்கள், கள்ளி பறந்தலை களர் தொறும் குழீஇ - கள்ளியினை யுடைய பாழிடமாகிய களர்நிலந் தோறும் திரண்டு, உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்திடை - நினைப்போரையும் நடுங்கச் செய்தலின் யாரும் செல்லத்துணியாத காட்டிடையே உள்ள, வெம் சுரம் இறந்தனராயினும் - கொடிய சுரத்தைக் கடந்தனர் ஆயினும்; 10-15. பொருவர் செல் சமம் கடந்த செல்லா நல்இசை - பகைவரது எதிர்ந்த போரினை ஒழித்த கெடாத நல்ல புகழினையும், விசும்பு இவர் வெண்குடை - வானிடத்தே ஓங்கிய வெண்குடை யினையும் உடைய, பசும்பூண் பாண்டியன் - பசும்பூட் பாண்டியன் என்பானது, பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் - பெருமை யமைந்த சிறப்பினையுடைய மதுரையை யொத்த நினது, ஆடு வண்டு அரற்றும் உச்சி - அசையும் வண்டு ஒலிக்கும் உச்சியினையுடைய, தோடு ஆர் கூந்தல் மரீஇயோர் - பூவிதழ் பொருந்திய கூந்தற் கண்ணே பொருந்தித் துயின்றோர் ஆய அவர்; 9-10. நெஞ்சு உருக வருவர் - அதனை நினைந்து தம் நெஞ்சம் உருகுதலால் விரைந்து வருவர்; ஆகலின் வருந்தாதேகொள். (முடிபு) தோழி! வாழி! நல்லிசை வலித்த நாணுடை மனத்தர், வெஞ்சுரம் இறந்தனராயினும், நின் கூந்தல் மரீஇயோர் ஆய அவர் நெஞ்சுருக, வருவர். ஆகலின் வருந்தாதே கொள். (வி-ரை) பகைவரை அழித்தற்கும் நட்டாரை ஆக்கற்கும் பொருள் இன்றியமையாததாகலின், பொருளீட்டும் முயற்சியின்றி இல்லில் இருப்போர்க்கு அவை இல்லை என்றார். பொருள் பகைவரை அழித்தற்குக் கருவியாகுமென்பதை, `செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும், எஃகதனிற் கூரிய தில்'1 என்பதனால் அறிக. அது நட்டாரை ஆக்குதற்க உரியதென்பது, ஆசிரியர் நக்கீரனார் பாடிய `கேள்கே டூன்றவுங் கிளைஞராரவும்'2 என்னும் பாட்டினாற் பெறப்படும் `அரிதாய அறனெய்தி அருளியோர்க்களித்தலும், பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்...... தருமெனப்..... பொருள் வயிற் சென்ற நங்காதலர்'3 என்பதுங் காண்க. செம்மல் - தலைமை; ஈண்டுச் செருக்கின்மேற்று. உதவி உய்க்கும் ஆண்மை என்க. உவக்கும் என்பது பாடமாயின், சேர்ந்தோர் உவத்தற்கு ஏதுவாய உதவியை ஆளுந்தன்மை என்று பொருள் கொள்க. நாண் - பழிக்கு அஞ்சும் குணம். தொலைந்தோர் தலைகளை யுடைமையின் நினைப்போரை நடுங்கச் செய்யும் கடம் என்க. நம் நெஞ்சு நெகிழு மாறு வருவர் என்றுரைத்தலுமாம். கடந்த பாண்டியன் என்க; பெயரெச்சத்தினைக் காரணப் பொருட்டாகக் கொண்டு, கடந்த நல்லிசை என்றலுமாம். அரற்றும் முச்சி எனப் பிரித்தலுமாம். 232. குறிஞ்சி (தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.) காணினி வாழி தோழி பானாள் மழைமுழங்கு அரவங் கேட்ட கழைதின் மாஅல் யானை புலிசெத்து வெரீஇ இருங்கல் விடரகஞ் சிலம்பப் பெயரும் 5. பெருங்கல் நாடன் கேண்மை இனியே குன்ற வேலிச் சிறுகுடி யாங்கண் மன்ற வேங்கை மணநாள் பூத்த மணியேர் அரும்பின் பொன்வீ தாஅய் வியலறை வரிக்கும் முன்றில் குறவர் 10. மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும் ஆர்கலி விழவுக்களங் கடுப்ப நாளும் விரவுப்பூம் பலியொடு விரைஇ அன்னை கடியுடை வியனகர்க் காவல் கண்ணி முருகென வேலன் தரூஉம் 15. பருவ மாகப் பயந்தன்றால் நமக்கே, - கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார். (சொ-ள்) 1. தோழி-, வாழி-, இனி காண் - இப்பொழுது யான் கூறுவதனை உணர்வாயாக; 1-5. பால் நாள் - நடு இரவில், மழை முழங்கு அரவம் கேட்ட - மேகம் முழங்கும் இடியொலியினைக் கேட்ட, கழை தின் மாஅல் யானை - மூங்கிலைத் தின்னும் பெரிய யானையானது, புலி செத்து வெரீஇ - அவ் வொலியினைப் புலியின் ஒலி எனக் கருதி அஞ்சி, இரு கல் விடர் அகம் சிலம்ப பெயரும் - பெரிய மலையின் முழைஞ் சிடம் எதிரொலி செய்யக் கதறிப் பெயர்ந்தோடும், பெரு கல் நாடன் கேண்மை - பெரிய மலை பொருந்திய நாட்டினையுடைய தலைவனது நட்பு; 5-11. இனி - இக்காலத்து, குன்றவேலி சிறு குடி ஆங்கண் - குன்றங் களாய வேலியினையுடைய சீறூரிடத்தே, மன்ற வேங்கை மணம் நாள் பூத்த - மன்றத்தின் கண்ணுள்ள வேங்கை மரங்கள் மணநாளாகிய காலத்தே பூத்த, மணி ஏர் அரும்பின் பொன்வீ தாஅய் - மணியை யொத்த அரும்பு மலர்ந்த பொன்போன்ற பூக்கள் பரந்து, வியல் அறை வரிக்கும் முன்றில் - அகன்ற பாறைகளை அழகுறுத்தும் முற்றத்திலே, குறவர் - குறவர்கள், மனை - மனைக்கண்ணுள்ள, முதிர் மகளிரொடு குரவை தூங்கும் - ஆடுதல் வல்ல மகளிரொடு குரவை ஆடும், ஆர்கலி விழவுக் களம் கடுப்ப - ஆரவாரமிக்க விழாக்களத்தை யொப்ப; 11-15. அன்னை-, நாளும் - நாடொறும், விரவு பூ பலியொடு விரைஇ - விரவிய பலவகைப் பூக்களாய பலியொடு பொருந்தி, கடிஉடை வியன் நகர் காவல் கண்ணி - காவல் பொருந்திய அகன்ற மலையின்கண் காத்தலைக் கருதி, முருகு என - நமது வேறுபாடு முருகனால் உண்டாயதென்று, வேலன் தரூஉம் - வேலனை அழைக்கும், பருவம் ஆக நமக்கு பயந்தன்று - காலமாக நமக்கு விளைந்தது. (முடிபு) தோழி! வாழி! காண்; நாடன் கேண்மை, இனி அன்னை முருகென (எண்ணி) காவல் கண்ணி, பலியொடு விரைஇ, வேலனைத் தரூஉம் பருவமாக நமக்குப் பயந்தன்று. சிறுகுடியாங்கண் வேங்கையின் பொன்வீ தாஅய் அறைவரிக்கும் முன்றிலில் குறவர் மகளிரொடு குரவை தூங்கும் களங்கடுப்பப் பூம் பலியொடு விரைஇ என்க. (வி-ரை) மணி - முத்து. முத்துக்களில் பொன்மை செம்மை யுடையவும் உளவென்பது, `சந்திர குருவே அங்கா ரகனென, வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்'1 என்பதனாற் பெற்றாம். அரும்புடன் வீ தாஅய் என்றலுமாம். காவல் கண்ணி என்பதற்கு, நம்மை இற் செறித்தலைக் கருதி என்றும், நமக்குத் தீங்குண்டாகாமல் முருகன் காத்தலைக் கருதி யென்றும், இருவகையாகக் கோடலும் பொருந்தும். விழவுக் களம் கடுப்ப என்னும் உவமையால், வேலன் வெறியாடு மிடத்திற்கு மலர் சிதறிக்கிடத்தலுடன் குரவை ஆடுதல் கோடலுமாம். 233. பாலை (பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) அலமரல் மழைக்கண் மல்குபனி வாரநின் அலர்முலை நனைய அழாஅல் தோழி எரிகவர்பு உண்ட கரிபுறப் பெருநிலம் பீடுகெழு மருங்கின் ஓடுமழை துறந்தென 5. ஊனில் யானை உயங்கும் வேனில் மறப்படைக் குதிரை மாறா மைந்தின் துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ் சேரல் பெருங்சோறு கொடுத்த ஞான்றை இரும்பல் 10. கூளிச் சுற்றம் குழீஇயிருந் தாங்குக் குறியவும் நெடியவுங் குன்றுதலை மணந்த சுரனிறந் தகன்றன ராயினும் மிகநனி மடங்கா உள்ளமொடு மதிமயக் குறாஅப் பொருள்வயின் நீடலோ இலர்நின் 15. இருளைங் கூந்தல் இன்துயின் மறந்தே. - மாமூலனார். (சொ-ள்) 1-2. தோழி-, அலமரல் மழை கண் மல்கு பனி வார - கலங்குகின்ற குளிர்ந்த கண்ணினின்றும் நிறைந்த நீர் ஒழுகலின், நின் அலர்முலை நனைய அழாஅல் - நின் பரந்த முலை நனைய அழாதே; 3-5. எரி கவர்பு உண்ட - நெருப்புச் சூழ்ந்து எரித்திட்ட, கரி புறம் பெரு நிலம் - கரிந்த இடங்களையுடைய பெரிய நிலத்தை, பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென - வளம் பொருந்திய வேறு இடங்கட்கு ஓடும் மழை துறந்திட்டதாக, ஊன் இல் யானை உயங்கும் வேனில் - தசை யொழிந்த யானை வருந்தும் வேனிற்கண்; 6-10. மறப் படைக் குதிரை மாறா மைந்தின் - வீரம் பொருந்திய குதிரைப் படைகளுடன் புறக்கிடாத வலியையுடைய, துறக்கம் எய்திய தொய்யா நல் இசை - துறக்கத்தினை யடைந்த கெடாத நல்ல புகழினையுடைய, முதியர் பேணிய உதியன் சேரல் - முன்னோர் கட்குத் தென்புலக் கடன் ஆற்றிய உதியன் சேரலாதன் எனும் மன்னன், பெரு சோறு கொடுத்த ஞான்றை - அவர்கட்குப் பலியாகப் பெருஞ்சோறு படைத்திட்ட காலத்தே, இரு பல் கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு - கரிய பலவாய பேய்ச்சுற்றங்கள் அதனை உண்பதற்குக் கூடியிருந்தாற் போல; 11-14. குறியவும் நெடியவும் குன்று தலை மணந்த - குறியனவும் நெடியனவுமாய குன்றுகள் இடந்தொறுமுள்ள, சுரன் இறந்து - சுரத்தினைக் கடந்து, மிக நனி மடங்கா உள்ளமொடு - மிகப் பெரிதும் அடங்காத உள்ளமுடையராய், மதிமயக்குறாஅ - அறிவுமயங்கு தலுற்று, பொருள்வயின் அகன்றனர் ஆயினும் - பொருள் ஈட்டு தலைக் கருதிச் சென்றாராயினும்; 14-15. நின் இருள் ஐங் கூந்தல் இன் துயில் மறந்து - நினது கரிய ஐம் பகுப்பாய கூந்தலிற் பெறும் இனிய துயிலை மறந்து, நீடல் இலர் - தாழ்த்திருத்தல் இலராவர்; விரைந்து வருவர். (முடிபு) தோழி அழாஅல்; வேனிற்கண் குறியவும் நெடியவும் குன்று தலை மணந்த சுரன் இறந்து பொருள்வயின் அகன்றன ராயினும் நின் கூந்தல் இன்றுயில் மறந்து, நீடலோ இலர். (வி-ரை) பெரு நிலத்தின்கண் யானை உயங்கும் வேனில் எனவும், குதிரைப்படையினையும் மைந்தினையுமுடைய உதியன் சேரல் எனவும் கூட்டுக. இனிக் குதிரைப் படையினையும் மைந்தினையும் உடைய முதியர் என்றுரைத்தலுமாம். உதியன் சேரல் துறக்கமெய்திய தன் முன்னோர்க்குப் பிண்டம் ஈதலாகிய கடன் ஆற்றியபோது, பெருஞ் சோறு அளித்தனன் என்க. இனி, பெருஞ்சோறு கொடுத்த ஞான்று என்பதனைப் பாரதப் போரில் இருதிறப் படைக்கும் சோறளித்த ஞான்று என்றுரைப்பாருமுளர். உதியஞ் சேரலாதன் என்பான் பாரதப் போரில் சோறளித்தமை, `அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ.......... ஈரைம் பதின்மரும் பொருது களத்தொழியப், பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்'1 `ஓரைவ ரீரைம் பதின்மர் உடன் றெழுந்த, போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த, சேரன்'2 என்பவற்றாற் பெறப்படுமாயினும், ஈண்டுப் பாரதப்போரைச் சுட்டும் குறிப்பு யாது மின்மையின், இவ்வுதியன் சேரன் அவனின் வேறாயினான் எனக் கொள்ளல் வேண்டும். தொய்யா - கெடாத. கூளிச் சுற்றம் - குறியவும் பெரியவுமாகிய பேய் களின் சுற்றம். 234. முல்லை (தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.) கார்பயம் பொழிந்த நீர்திகழ் காலை நுண்ணயிர் பரந்த தண்ணயம் மருங்கில் நிரைபறை அன்னத்து அன்ன விரைபரிப் புல்லுளைக் கலிமா மெல்லிதிற் 3கொளீஇய 5. வள்பொருங் கமையப் பற்றி 4முள்கிய பல்கதி ராழி மெல்வழி யறுப்பக் காலென மருள ஏறி நூலியற் 1கண்ணோக்கு ஒழிக்கும் பண்ணமை நெடுந்தேர் வல்விரைந் தூர்மதி நல்வலம் பெறுந 10. 2ததர்தழை முனைஇய தெறிநடை மடப்பிணை ஏறுபுணர் உவகைய ஊறில உகள அஞ்சிறை வண்டின் மென்பறைத் தொழுதி முல்லை நறுமலர்த் தாதுநயந் தூத எல்லை போகிய புல்லென் மாலைப் 15. புறவடைந் திருந்த உறைவின் நல்லூர்க் கழிபட ருழந்த பனிவா ருண்கண் நன்னிறம் பரந்த பசலையள் மின்னேர் ஓதிப் பின்னுப்பிணி விடவே. - 3பேயனார். (சொ-ள்) 9. நல்வலம் பெறுந - தேர் செலுத்துதலில் நல்ல வெற்றியுடைய பாக! 1-8. கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை - மேகம் நீரைப் பொழிந்த தாலாய வெள்ளம் விளங்கும் காலத்தே, நுண் அயிர் பரந்த தண் அயம் மருங்கின் - நுண்ணிய மணல் பரவிய குளிர்ந்த நீர்நிலை யிடத்தே, நிரை பறை அன்னத்து அன்ன - வரிசையாகப் பறத்தலை யுடைய அன்னப் பறவையை ஒத்த, விரை பரி புல்உளை கலிமா - விரைந்த செலவினையுடைய புல்லிய பிடரிமயிரினை யுடைய செருக்கு வாய்ந்த குதிரைகளை, மெல்லிதின் கொளீஇய வள்பு ஒருங்கு அமையப் பற்றி - மென்மையுறப் பூட்டிய கடிவாள வாரினை ஒரு பெற்றியமையப் பற்றி, முள்கிய பல்கதிர் ஆழி மெல் வழி அறுப்ப - நிலத்தே பதிந்த பல ஆரங்களையுடைய உருளை மென்னில வழியை அறுத்தேக, கால் என மருள - வேகத்தாற் காற்றென வியக்க, ஏறி - ஏறியமர்ந்து, நூல் இயல் கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந்தேர் - நூல் நெறிப்படி இயன்றதும் வேகத்தாற் கண்ணின் பார்வையினைத் தவிர்ப்பதும் பண்ணுதல் அமைந்ததுமாய நெடிய தேரினை; 10-15. ததர் தழை முனைஇய தெறிநடை மடப்பிணை - நெருங்கிய தழையினை மிகத்தின்று வெறுத்த துள்ளிச் செல்லும் நடையினை யுடைய இளைய பெண்மான், ஏறு புணர் உவகைய ஊறு இல உகள - ஆண்மானுடன் கூடிய மகிழ்ச்சியை யுடையவாய் இடையூறின்றித் துள்ளித்திரிய, அம் சிறைவண்டின் மென்பறைத் தொழுதி - அழகிய சிறையினையுடைய வண்டின் மெல்லிய பறத்தலை யுடைய கூட்டம், முல்லைநறு மலர் தாது நயந்து ஊத - நறிய முல்லை மலரில் உள்ள பூம்பொடியினை விரும்பி ஊத, எல்லை போகிய புல் என் மாலை - பகற்பொழுது கழிந்த பொலிவற்ற மாலைக்காலத்தே, புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர் - முல்லைநிலத்தைச் சார்ந்திருந்த உறைதற்கு இனிதாகிய நல்ல ஊரின் கண்ணே; 16-18. கழி படர் உழந்த பனிவார் உண்கண் - மிக்க துன்பத்தால் வருந்திய நீர்வாரும் மையுண்ட கண்களையும், நல் நிறம் பரந்த பசலையள் - நல்ல மேனியின்கண் பரவிய பசலையையும் உடைய நம் தலைவி, மின் நேர் ஓதி - தனது மின்னலையொத்த கூந்தலின், பின்னுப் பிணி விடவே - பின்னலாய பிணிப்பு நீங்க; 9. வல் விரைந்து ஊர்மதி - மிக விரைந்து செலுத்துவாயாக. (முடிபு) நல்வலம் பெறுந! நல்லூர்க்கண் மாலையில் கழி படர் உழந்த பசலையள் ஓதியின் பின்னுப் பிணிவிட நெடுந் தேர் வல்விரைந்து ஊர்மதி. (வி-ரை) கார்பயம் பொழிந்த என்றதனால், தலைவன் குறித்த கார்ப்பருவம் வந்தமை பெற்றாம். நுண்மணல் பரந்த நீர்நிலைகளின் பக்கத்தே தாழவிரைந்து பறக்கும் அன்னம், அங்ஙனம் பறப்பது போல் விரைந்து தாவிச் செல்லும் குதிரைக்குத் தொழில் பற்றி உவமமாகும். தொல்காப்பியனார், `வினைவயிற் பிரிந்தோன் மீண்டுவரு காலை, இடைச்சுர மருங்கிற் றவிர்த லில்லை, உள்ளம் போல உற்றுழி யுதவும், புள்ளியற் கலிமா வுடைமை யான'1 எனக் கூறுதலுங் காண்க. தூய வெண்ணிற முடைமை பற்றிப் பண்புவமை விரவிவந்த தெனலுமாம். குதிரைக்கு வெண்ணிறம் சிறந்ததால், `பால்புரை புரவி நால்குடன் பூட்டி' 2 என்பதனால் அறிக. வள்பு - வார். மழையால் நிலம் நெகிழ்ந்திருத்தலின் மெல்வழி எனப்பட்டது. கட்புலன் கதுவலாகாத விரைவுடைமையின், காலென மருள எனவும், கண்ணோக் கொழிக்கும் எனவும் கூறினார். தம் பிரிவால் பசலை பரந்த மேனியளாய் ஒப்பனை செய்யாது பிணிப்புற்றிருக்கும் கூந்தலையுடையளாய்ப் படருழக்கும் தலைவியின் துன்பத்தைப் போக்குதற்கு மிக விரைந்து சேறல் வேண்டுமென்பான், `காலென மருள வல்விரைந்து ஊர்மதி' என்றான். பாகன் அங்ஙனம் செலுத்தும் ஆற்றல் உடையன் என்பது புலப்பட, `நல்வலம் பெறுந' என, விளித்தான். கார்ப்பருவம் வந்துற்றமையால் முல்லை நிலத்துள்ள மானினங் களும் வண்டுகளும் நறிய உணவினையுண்டும், துணையுடன் கூடியும் மகிழ்ந்திருக்க, அந்நிலத்தின் கண்ணதாகிய உறைதற்கினிய ஊரிலிருக்கும் தலைவி அவற்றைக் காணுந்தொறும் ஆற்றாமை மீதூர்ந்து படருழப்பள் என்பது தோன்ற, மடப்பிணை உவகை உகள, வண்டின் தொகுதி தாது நயந்தூத, கழிபடருழந்த பசலையள் என்றான் என்க. பின்னுப் பிணி விட என்றது, தன் வருகையால் மகிழ்ச்சியுற்றுக் கூந்தலை ஒப்பனை செய்து கொள்ள என்றபடி. 235. பாலை (தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் ஆற்றாமை மீதூரத் தோழிக்குச் சொல்லியது.) அம்ம வாழி தோழி பொருள்புரிந்து உள்ளார் கொல்லோ காதல ருள்ளியுஞ் சிறந்த செய்தியின் மறந்தனர் கொல்லோ பயனிலங் குழைய வீசிப் பெயல்முனிந்து 5. விண்டு முன்னிய கொண்டல் மாமழை மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப வாடையொடு நிவந்த ஆயிதழ்த் தோன்றி சுடர்கொள் அகலில் சுருங்குபிணி யவிழச் சுரிமுகிழ் முசுண்டைப் பொதியவிழ் வான்பூ 10. விசும்பணி மீனிற் பசும்புத லணியக் 1கள்வன் மண்ணளைச் செறிய அகல்வயற் கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான்பூ மாரியங் குருகின் ஈரிய குரங்க நனிகடுஞ் சிவப்பொடு நாமந் தோற்றிப் 15. பனிகடி கொண்ட பண்பில் வாடை மருளின் மாலையொ 2டருளின்றி நலிய நுதலிறை கொண்ட அயலறி பசலையொடு தொன்னலஞ் சிதையச் சாஅய் என்னள்கொல் அளியள் என்னா தோரே. - கழார்க் கீரனெயிற்றியார். (சொ-ள்) 1. தோழி-, வாழி-, அம்ம - கேட்பாயாக; 4-16. பயன் நிலம் குழைய வீசி - பயன் தரும் நிலங்கள் நெகிழப் பெய்து, பெயல் முனிந்து - பின் பெய்தலை வெறுத்து, விண்டு முன்னிய கொண்டல் மா மழை - மலையைச் சேர்ந்த கொண்ட லாகிய கரியமேகம் - மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப - மீண்டும் இரவில் தங்குதலுற்றுப் பொங்கித் துளிக்க, வாடையொடு நிவந்த ஆய் இதழ் தோன்றி - வாடைக்காற்றால் உயர்ந்த அழகிய இதழினையுடைய செங்காந்தள், சுடர் கொள் அகலில் சுருங்கு பிணி அவிழ- சுடரினைக் கொண்ட அகல்போலச் சுருங்கிய அரும்பு விரிய, சுரி முகிழ் முசுண்டை பொதி அவிழ் வான்பூ - சுரிந்த அரும்பினை யுடைய முசுண்டையின் கட்டவிழ்ந்த பெரிய பூ, விசும்பு அணி மீனில் பசும் புதல் அணிய - வானை அழகுறுத்தும் மீன்களைப் போலப் பசிய புதர்களை அழகுறுத்த, கள்வன் மண் அளை செறிய - நண்டு தனது மண் வளையுட் செறிந்திட, அகல் வயல் கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான் பூ - அகன்ற வயலில் கிளைத்து விரிந்த கரும்பினது திரண்ட காம்பினையுடைய பெரிய பூ, மாரி அம் குருகின் ஈரிய குரங்க - மழையில் நனைந்த நாரையைப் போல ஈரம் கொண்டனவாய் வளைந்திருக்க, நனி கடும் சிவப்பொடு நாமம் தோற்றி - மிக்க கடிய சினத்தினால் அச்சத்தை உண்டாக்கி, பனி கடி கொண்ட பண்பில் வாடை - பனி தங்கிய நற்பண்பில்லாத வாடைக் காற்றானது, மருளின் மாலையொடு அருளின்றி நலிய - மயங்குதலை யுடைய மாலைப் பொழுதுடன் கூடி இரக்கமின்றி நலிந்திட; 17-19. நுதல் இறை கொண்ட அயல் அறி பசலையொடு - நுதற் கண்ணே தங்குதல்கொண்ட அயலோரால் அறியப்படும் பசலை யுடன், தொல் நலம் சிதையச் சாஅய் - பழைய மேனி நலம்கெட மெலிந்து, என்னள்கொல் அளியள் என்னாதோர் - என்ன நிலையின வாயினளோ இரங்கத்தக்காள் என்று உசாவி யறியாராதலின்; 1-3. காதலர் - நம் தலைவர், பொருள் புரிந்து உள்ளார் கொல்லோ- பொருள் தேடுதலையே விரும்பி நம்மை நினைந்திலரோ, உள்ளியும் - நினைந்தும், சிறந்த செய்தியின் - செய்யும் வினையின் மிகுதியால், மறந்தனர் கொல்லோ - உசாவுதலை மறந்துவிட்டனரோ? (முடிபு) தோழி! வாழி! பண்பில் வாடை மாலையொடு அருளின்றி நலிய, என்னள்கொல் அளியள் என்னாதோர் ஆதலின், நம் காதலர் நம்மை உள்ளார் கொல்லோ, உள்ளியும் சிறந்த செய்தியின் மறந்தனர் கொல்லோ? மழை பொங்குபு துளிப்ப, தோன்றி பிணி அவிழ, முசுண்டை வான்பூ புதல் அழிய, கள்வன் அளைச் செறிய, கரும்பின் பூ ஈரிய குரங்க, சிவப்பொடு நாமம் தோற்றிப் பனிகடி கொண்ட வாடை என்க. (வி-ரை) குழைய - தளிர்க்க என்றுமாம். பெயல் முனிந்து என்றமையாலும், பொங்குபு துளிப்ப என்றமையாலும், பனிகடி கொண்ட வாடை என்றமையாலும், கூதிரின் பின்னர்த்தாகிய பனிப் பொழுது என்பது போதரும். மங்குல் - விசும்பு என்றுமாம். அற்கம் - தங்குதல்; தொழிற் பெயர். கூதிர்ப் பருவத்தே மேகம் பெயலை வெறுத்து வானிலிருந்து துளிக்கும் இயல்பினது என்பது, `பெயலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை, அகலிரு விசும்பிற் றுவலை கற்ப'1 என்பதனாலும் அறியப்படும். குரங்குதல் - வளைதல். சிவப்பு - வெகுளி. நாம் என்னும் உரிச் சொல் ஈறு திரிந்தது. தலைவனைப் பிரிந்து தலைவி வருந்துதலை ஏனோர்க்கு அறிவிப்பது பசலை யாகலின், `அயலறி பசலை' எனப்பட்டது. 236. மருதம் (ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) மணிமருள் மலர முள்ளி அமன்ற துணிநீர் இலஞ்சிக் கொண்ட பெருமீன் அரிநிறக் கொழுங்குறை 1வௌவினர் மாந்தி வெண்ணெ லரிநர் பெயர்நிலைப் பின்றை 5. 2இடனில நெரிதரு நெடுங்கதிர்ப் பல்சூட்டு பனிபடு சாய்ப்புறம் பரிப்பக் கழனிக் கருங்கோட்டு 3மாஅத்து அலங்குசினைப் புதுப்பூ மயங்குமழைத் துவலையில் தாஅம் ஊரன் காமம் பெருமை யறியேன் நன்றும் 10. உயர்ந்தனென் வாழி தோழி யல்கல் அணிகிளர் சாந்தின் அம்பட் டிமைப்பக் கொடுங்குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை அறியா மையின் அழுந்த நெஞ்சின் ஏற்றியல் எழினடைப் பொலிந்த மொய்ம்பின் 15. தோட்டிருஞ் சுரியல் மணந்த பித்தை ஆட்டன் அத்தியைக் காணீ ரோவென நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் கடல்கொண் டன்றெனப் புனலொளித் தன்றெனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த 20. ஆதி மந்தி போல ஏதஞ் சொல்லிப் பேதுபெரி துறலே. - பரணர். (சொ-ள்) 1-6. தோழி-, வாழி-, வெண் நெல் அரிநர் - வெள்ளிய நெல்லை அறுப்போர், மணி மருள் மலர - நீல மணியினை யொத்த மலர்களையுடைய, முள்ளி - அமன்ற - நீர் முள்ளி நிறைந்த, துணி நீர் இலஞ்சி கொண்ட - தெளிந்த நீரினையுடைய மடுவிற் கவர்ந்த, பெரு மீன் அரி நிறம் கொழு குறை - பெரிய மீனின் வரிகள் பொருந்திய நிறத்தினையுடைய வளவிய துண்டினை, வௌவினர் மாந்தி - கௌவியுண்டு, பெயர் நிலைப் பின்றை - எழுந்த பின்னர்க் (கொண்டு போய்ப் போகட்ட, இடன் இல நெறிதரு நெடும் கதிர் பல் சூட்டு - களத்தே வெற்றிடம் அறச் செறிந்துள நீண்ட கதிரினை யுடைய பல நெற்கட்டுகளை யுடைய, பனிபடு சாய்ப்புறம் பரிப்ப - பனிதங்கிய கோரையையுடைய களனெலாம் சூழ, கழனி - வயற் புறத்தேயுள்ள, கருங் கோட்டு மாஅத்து - கரிய கவரினையுடைய மாமரத்தின், அலங்கு சினைப் புது பூ - அசையும் கொம்புகளிலுள்ள புதிய பூக்கள், மயங்கும் மழைத் துவலையில் தாஅம் ஊரன் - கலந்து சொரியும் மழைத்துளி போல உதிர்ந்து பரந்து கிடக்கும் ஊரனாகிய நம் தலைவனது, காமம் பெருமை அறியேன் - காமம் பெருமை இவற்றினை அறியாதேன்; 10-13. அல்கல் - இரவில், அணிகிளர் சாந்தின் அம்பட்டு இமைப்ப - அழகு விளங்கும் சாந்தினுடன் அழகிய பட்டாடை ஒளி செய, கொடு குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை - வளைந்த குழையணிந்த மகளிரைப்போல நம்தலைவன் நாணியிருந்த இருக்கை யினைக் கண்டு, அறியாமையின் அழிந்த நெஞ்சின் - மடமையால் உருகப்பெற்ற நெஞ்சினேன் ஆயினமையின்; 14-21. காதலற்கெடுத்த - தன் கணவனை இழந்தமையின், கலுழ்ந்த கண்ணள் - அழுத கண்ணினளாகிய, ஆதிமந்தி போல - ஆதி மந்தியைப்போல, ஏற்று இயல் எழில் நடை - ஏற்றின் தன்மை யுடைய எழுச்சி பொருந்திய நடையினையும், பொலிந்த மொய்ம்பின் - பொலிவுற்ற தோளினையும், தோடு இரு சுரியல் மணந்த பித்தை - தொகுதி கொண்ட கரிய சுருளைப் பொருந்திய தலைமயிரினையு முடைய, ஆட்டன் அத்தியைக் காணீரோ என - ஆட்டன் அத்தியாய என் தலைவனைக் கண்டீரல்லீரோ என்று, நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் - நாடு தோறும் ஊர்தோறும் சென்று, கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று என - என் தலைவனைக் கடல் கொண்டது போலும் புனல்கொண்டொளித்தது போலுமெனக் கூறி, ஏதம் சொல்லிப் பேது பெரிது உறல் - துன்பத்i சொல்லிப் பெரிதும் மயங்குதலினின்றும்; 9-10. நன்றும் உயர்ந்தனென் - பெரிதும் தப்பினேன். (முடிபு) தோழி! வாழி ஊரன் காமம் பெருமை அறியேன், அல்கல் மகளிரின் ஒடுங்கிய அவளது இருக்கை கண்டு அழிந்த நெஞ்சின் காதலற் கெடுத்த ஆதிமந்திபோல ஏதம் சொல்லிப் பேதுறல் நன்றும் உய்ந்தனன். (வி-ரை) பின்றைக் கொண்டு போகட்ட என வருவித்துரைக்க. காமம் பெருமை: எண்ணும்மை விகாரத்தாற் றொக்கன. சாந்தி னொடு பட்டிமைப்ப என்றமையால், பரத்தையிற் பிரிந்து வந்தான் என்பது பெற்றாம். நாணாலும் அச்சத்தாலும் ஒடுங்கிய இருக்கை என்க. இருக்கை கண்டு என ஒரு சொல் வருவிக்கப் பட்டது. நெஞ்சின் - நெஞ்சினேனாகலின் என விரித்துரைக்க. ஆதிமந்தி, தன் காதலனாகிய ஆட்டன் அத்தியுடன் நீராடியபொழுது அத்தியைக் காவிரி வவ்விச் சென்றமையின், அவள் அவனைப் பலவிடங்களிலும் தேடியுழந்த வரலாறு முன்னர் `வானுற நிவந்த'1 என்னும் அகப் பாட்டிலும் பரணராற் கூறப்பட்டமை அறிக. நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் என்னும் அடுக்குகள் பன்மை குறித்தன. கொண்டன்று, ஒளித்தன்று என்னும் இடங்களில் ஐயப்பொருட்டாகிய இடைச் சொல் விரித்துரைத்துக் கொள்க. (மே-ள்) `அணங்கே விலங்கே'2 என்னும் சூத்திரத்தே, புலவி பொருளாக அச்சம் வருதற்கு இப்பாட்டின் `அணிகிளர் சாந்தின் அம் பட்டிமைப்பக், கொடுங்குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை' என்ற அடிகளைக் காட்டினர், பேரா. 237. பாலை (தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.) புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வீ நுண்கொடி அதிரலொடு நுணங்கறல் வரிப்ப அரவெயிற்று அன்ன அரும்புமுதிர் குரவின் தேனிமிர் நறுஞ்சினைத் தென்றல் போழக் 5. குயில்குரல் கற்ற வேனிலுந் துயில்துறந்து இன்னா கழியுங் கங்கு லென்றுநின் நன்மா மேனி அணிநலம் புலம்ப இனைதல் ஆன்றிசின் ஆயிழை கனைதிறல் செந்தீ அணங்கிய செழுநிணக் கொழுங்குறை 10. மென்றினைப் 3புன்கம் உதிர்த்த மண்டையொடு இருங்கதிர் அலமருங் கழனிக் கரும்பின் விளைகழை பிழிந்த அந்தீஞ் சேற்றொடு பால்பெய் செந்நெற் பாசவல் பகுக்கும் புனல்பொரு புதவின் உறந்தை யெய்தினும் 15. வினைபொரு ளாகத் 4தவிர்விலர் கடைசிவந்து ஐய அமர்த்த உண்கணின் வையேர் வாலெயிறு ஊறிய நீரே. - தாயங் கண்ணனார். (சொ-ள்) 1-8. ஆயிழை - அழகிய அணிகளையுடைய தலைவியே, புன் கால் பாதிரி அரி நிற திரள் வீ - புல்லிய காம்பினையுடைய பாதிரியின் வரிகள் பொருந்திய நிறமுடைய திரண்ட மலர், நுண் கொடி அதிரலொடு - மெல்லிய கொடியாகிய புனலியின் மலரொடு, நுணங்கு அறல் வரிப்ப - நுண்ணிய மணலிடத்தே கோலஞ் செய்ய, அரவு எயிறு அன்ன அரும்பு முதிர் குரவின் - பாம்பின் பல் அனைய அரும்புகள் முதிர்ந்த குராவினது, தேன் இமிர் நறு சினை தென்றல் போழ - வண்டுகள் ஒலிக்கும் நறிய கிளையில் தென்றல் ஊடறுத்துச் செல்ல, குயில் குரல் கற்ற வேனிலும் - குயில் கூவுதலைப் பயின்ற வேனிற்காலத்தும், கங்குல் - இராப் பொழுதானது, துயில் துறந்து இன்னா கழியும் என்று - துயிலின்றி வருந்தும்படி இன்னாதாய்க் கழியா நிற்கும் என்று கூறி, நின் நல் மா மேனி அணி நலம் புலம்ப - நினது நல்ல மாமை நிறத்தையுடைய மேனியின் சிறந்த அழகு ஒழிய, இனைதல் ஆன்றிசின் - வருந்துதல் ஒழிவாயாக; 8-14. கனை திறல் செந்தீ அணங்கிய செழு நிண கொழு குறை - செறிந்த வலிய செந்தீயில் சுட்ட வளம் பொருந்திய நிணத்தில் கொழுவிய துண்டுகளை, மென் தினை புன்கம் உதிர்த்த மண்டை யொடு - மெல்லிய தினைச் சோற்றிலே சொரிந்த கலத்துடன், இருங் கதிர் அலமரும் கழனி - பெரிய நெற்கதிர்கள் சுழல்கின்ற வயலிடத்து, கரும்பின் விளைகழை பிழிந்த - முற்றிய கரும்பின் தண்டினைப் பிழிந்த, அம் தீம் சேற்றொடு - அழகிய இனிய சாறு அட்டபாகுடன், பால் பெய் - பாலினையும் பெய்து அளைந்த, செந்நெல் பாசவல் - செந்நெல்லாலாகிய பசிய அவலை, பகுக்கும் - பாணர் முதலாயி னார்க்குப் பகுத்துக் கொடுக்கும், புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும் - நீர் மோதுகின்ற வாய்த்தலை களையுடைய உறையூரையே அடைவதாயினும்; 15-17. கடை சிவந்து ஐய அமர்த்த உண்கண் நின் - கடை சிவப்புற்று வியக்குமாறு பொருந்திய மையுண்ட கண்களையுடைய நினது, வை ஏர் வால் எயிறு ஊறிய நீர் - அழகு பொருந்திய கூரிய வெள்ளிய எயிற்றின்கண் ஊறிய நீரினை, வினை பொருளாக - (நம் தலைவர்) பொருளீட்டும் வினை காரணமாக, தவிர்விலர் - உண்ணாது தவிர்ந்திருப்பாரல்லர். (முடிபு) ஆயிழை! வேனிலும் கங்குல் இன்னா கழியும் என்று நின் மேனி நலம் புலம்ப இனைதல் ஆன்றிசின்; நம் தலைவர் உறந்தை எய்தினும் நின்பால் எயிறு ஊறிய நீரினை வினைபொருளாகத் தவிர்விலர். (வி-ரை) புன்கால் வீ எனக் கூட்டுக. அரி - ஒண்மையுமாம். `புன்கால்...... குயில் குரல்கற்ற' என்றதனால் ஈண்டுக் குறித்தது இளவேனில் ஆகும். பாதிரி முதலிய பூக்கள் நீர் வற்றிய கருமணலிற் சிதறி அழகு செய்தலும், தென்றல் பூத்த குரா முதலியவற்றை ஊடறுத்து வந்து வீசுதலும், வண்டுகள் ஒலித்தலும், குயில் கூவுதலும் உடைய இளவேனிற் போது, கூடியிருப்பார்க்கு மிக்க இன்பத் தினைச் செய்வதாகலின், வேனிலும் என்னும் உம்மை உயர்வு சிறப்பு. அணங்குதல் - வருத்துதல்; ஈண்டுச் சுடுதல் என்றபடி. மண்டை - பாணருடைய உண்கலம். புன்கம் உதிர்த்த மண்டை யொடு என்றாரேனும். மண்டையின்கண் சொரிந்த புன்கத்தினையும் பாசவலினையும் பகுக்கும் எனக் கொள்க; இனி, புன்கத்தை ஒழித்த மண்டையின்கண் பாசவற் பகுக்கும் என்னலுமாம்; இதற்கு மண்டை யொடு என்பது வேற்றுமை மயக்கம். விளை கரும்பின் கழை என மாறுக. சேறு - சாறு காய்ச்சிய பாகு. சாறு என்னலுமாம். பகுக்கும் உறந்தை என்றது, பகுத்தளிக்கும் வண்மையுடையார் வாழும் செல்வம் மிக்க உறந்தை என்றபடி. பொருளாக - காரணமாக. ஊறிய நீர் தவிர்விலர் என்றது, அதனை உண்ணும் வேட்கையால் விரைந்து வருவர் என்று குறிப்பித்த வாறாயிற்று. 238. குறிஞ்சி (இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.) மான்றமை யறியா மரம்பயில் இறும்பின் ஈன்றிளைப் பட்ட வயவுப்பிணப் பசித்தென மடமான் வல்சி தரீஇய நடுநாள் இருண்முகைச் சிலம்பின் இரைவேட் டெழுந்த 5. 1பனைமருள் எருத்திற் பல்வரி இரும்போத்து மடக்கண் ஆமான் மாதிரத்து அலறத் தடக்கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு நனந்தலைக் கானத்து வலம்படத் தொலைச்சி இருங்கல் வியலறை சிவப்ப ஈர்க்கும் 10. பெருங்கல் நாட பிரிதி யாயின் மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு இழையணி நெடுந்தேர் களிறொடு என்றும் மழைசுரந் தன்ன ஈகை வண்மகிழ்க் கழல்தொடித் தடக்கைக் 2கலிமான் நள்ளி 15. நளிமுகை யுடைந்த நறுங்கா ரடுக்கத்துப் போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள் மென்பிணி முகையவிழ்ந் தலர்ந்த தண்கமழ் புதுமலர் நாறுநறு நுதற்கே. - கபிலர். (சொ-ள்) 1-10. மான்றமை அறியா மரம் பயில் இறும்பின் - மரங்கள் ஒன்றோடொன்று பின்னியிருத்தல் அறியப்படாதவாறு நெருங்கி யுள்ள காட்டின்கண், ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித் தென - ஈன்று காவற்பட்ட வேட்கையினையுடைய பெண்புலி பசியுற்றதாக, மடமான் வல்சி தரீஇய - அதற்கு இளைய மானாகிய உணவைக் கொணர்ந்துதர, நடுநாள் இருள்முகைச் சிலம்பின் இரைவேட்டு எழுந்த - நடுஇரவில் இருண்ட குகைகளையுடைய பக்க மலையில் இரை கொள்ளுதலை விரும்பிப் புறப்பட்ட, பனைமருள் எருத்தின் பல் வரி இரு போத்து - பனந்துண்டினைப் போன்ற பிடரியினை யுடைய பல வரிகளையுடைய பெரிய ஆண்புலி, மடகண் ஆமான் மாதிரத்து அலற - மடப்பம் பொருந்திய கண்ணினையுடைய காட்டுப்பசு சேய்மைக்கண் நின்று அலற, தட கோட்டு ஆமான் அண்ணல் ஏறு - வளைந்த கோட்டினையுடைய தலைமை பொருந்திய அக் காட்டுப் பசுவின் ஏற்றினை, நனதலைக் கானத்து வலம்பட தொலைச்சி - அகன்ற இடத்தினையுடைய காட்டில் வலப்பக்கம் வீழக் கொன்று, இரு கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும் - பெரிய மலையை யடுத்த அகன்ற பாறைகள் குருதியால் சிவந்திட இழுத்தேகும், பெரு கல் நாட - பெரிய மலை பொருந்திய நாட்டையுடையவனே! பிரிதியாயின் - நீ இவளைப் பிரிந்து செல்வாயாயின், 11-18. இரப்போர்க்கு - பாணர் முதலிய இரவலர்க்கு, இழை அணி நெடு தேர் - அணிகள் அணிந்த நெடிய தேரை, களிறோடு - களிற்றுடன், என்றும் மழை சுரந்தன்ன ஈகை- எஞ்ஞான்றும் வானம் சுரந்தளிப்பது போன்று தரும் ஈகையினையும், வண் மகிழ் - மிக்க மகிழ்ச்சியினையும், கழல் தொடி - கழலவிட்ட தொடியணிந்த, தடகை - பெரிய கையினையும், கலிமான் - செருக்குற்ற குதிரைகளை யுமுடைய, நள்ளி - நள்ளி என்பானது, நளி முகை உடைந்த நறு கார் அடுக்கத்து - செறிந்த அரும்புகள் மலர்ந்த நறிய கரிய பக்கமலை களில், போந்தை முழுமுதல் நிலைஇய - பனையின் பெரிய அடிப் பக்கத்தே நிலைபெற்றுள்ள, காந்தள் மெல் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த - காந்தளது மெல்லிய பிணிக்கப் பெற்ற அரும்புகள் இதழ் விரிந்து மலர்ந்த, தண் கமழ் புதுமலர் நாறும் நறு நுதற்கு - தண்ணிதாகிக் கமழும் புதிய மலர் போல நாறும் நறிய நெற்றியுடை யாளை (இறவாது காத்தற்கு); 11. மருந்தும் உடையையோ - மருந்தினையும் உடையையோ? மற்று - உடையை யல்லையாகலின் பிரியற்க. (முடிபு) பெருங்கல் நாட! நீ இவளைப் பிரிதியாயின், நறு நுதலையுடையாளை (இறவாது காத்தற்கு) மருந்தும் உடையையோ! மற்று. (வி-ரை) மான்றமை - மயங்கினமை. வயவு - சூல் முதிர்ந்த விடத்தும் ஈன்றவிடத்தும் உணவு முதலிய பற்றி யுண்டாம் ஆசைப் பெருக்கம். பணை மருள் என்பது பாடமாயின், பட்டடை போலும் என்க. பட்டடை - கொல்லன் உலைக்களத்து அடைகல். பல்வரி என்னும் அடையால், போத்து, புலிக்காயிற்று. புலியானது பசியால் உயிர் வருந்துவதாயினும் இடப்பக்கத்தில் வீழ்ந்த விலங்கினை உண்ணாமையும், வலப்பக்கத்தே வீழ்த்தி உண்ணுதலும் ஆகிய இயல்பினையுடையதென்பது `கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென, அன்றவண் உண்ணாதாகி வழிநாள்....... இருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும், புலிபசித்தன்ன'1 என்பதனால் அறிக. `தொடங்கு வினை தவிரா அசைவில் நோன்றாள், கிடந்துயிர் மறுகுவதாயினும் இடம்படின், வீழ்களிறு மிசையாப் புலியினும்'2 என இந்நூலுள் முன்னர்ப் போந்தமையும் அறியற்பாற்று. மற்று, வினைமாற்று. தேர் களிறொடு ஈயும் என ஒரு சொல் விரித்துரைக்க. வண்மகிழ் - வண்மையாலாகிய மகிழ்ச்சியுமாம். நளிமுகையுடைந்த - பூக்களின் செறிந்த முகையுடைந்த என்க. நறு நுதற்கு - நறு நுதலையுடை யாளை இறவாது காத்தற்கு என விரித்துரைக்க. மருந்தும் உடையை யோ என்றது, நீ பிரியின் இறந்துபடுவள் என்றபடியாம்; என்றும் பிரியாதிருக்க வரைந்து கொள்க என்பது கருத்து. 239. பாலை (பொருள்வயிற் பிரிந்துபோகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) 3அளிதோ தானே எவனா வதுகொல் மன்றுந் தோன்றாது மரனும் மாயும் புலியென உலம்புஞ் செங்கண் ஆடவர் ஞெலியொடு பிடித்த வார்கோல் அம்பினர் 5. எல்லூர் எறிந்து பல்ஆத் தழீஇய விளிபடு பூசல் வெஞ்சுரத்து இரட்டும் வேறுபல் தேஎத்து ஆறுபல நீந்திப் புள்ளித் தொய்யில் பொறிபடு சுணங்கின் ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம் 10. புல்லென் மாலை யாமிவண் ஒழிய ஈட்டருங் குரைய பொருள்வயின் செலினே நீட்டுவிர் அல்லிரோ நெடுந்தகை யீரெனக் குறுநெடும் புலவி கூறி நம்மொடு 4நெருநலுந் தீம்பல மொழிந்த 3. சிறுநல் ஒருத்தி பெருநல் லூரே. - எயினந்தை மக னிளங்கீரனார். (சொ-ள்) 12. நெடுந் தகையீர் - பெருந் தன்மையுடையீரே! 3-7. புலி என உலம்பும் செங்கண் ஆடவர் - புலிபோல முழங்கும் சிவந்த கண்ணையுடைய மறவர், ஞெலியொடு பிடித்த வார்கோல் அம்பினர் - தீக் கொள்ளியுடன் பிடித்துள்ள நீண்ட திரண்ட அம்பின ராகிச் சென்று, எல் ஊர் எறிந்து - இரவில் மாற்றார் ஊரினைப் போரிற்றொலைத்து, பல் ஆ தழீஇய விளிபடு பூசல் - பல ஆனினங் களைக் கவர்ந்தமையால் உண்டாகிய ஒலித்தல் மிக்க ஆரவாரம், வெம் சுரத்து இரட்டும் - கொடிய சுரத்தே மாறி யொலிக்கும், வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி - வேறுபட்ட மொழி வழங்கும் பல தேயங்களின் நெறிகள் பலவற்றைக் கடந்து சென்று; 8-12. புள்ளித் தொய்யில் - புள்ளி வடிவினதாக எழுதப்பட்ட கோலத்தினையும், பொறிபடு சுணங்கின் - பொறிகள் பொருந்திய தேமலையும் உடைய, ஒள் இழை மகளிர் - ஒள்ளிய அணிகளை யணிந்த மங்கையர், உயர் பிறை தொழூஉம் புல் என் மாலை - உயர்ந்த பிறையினை வணங்கும் பொலிவற்ற மாலைக்காலத்தே, யாம் இவண் ஒழிய - நாம் இங்கே தனித்திருக்க, ஈட்டு அரும் குரைய - ஈட்டுதற்கு அருமையாய, பொருள் வயின் செலினே - பொருளீட்டும் வினைக்கண் செல்லின், நீட்டுவிர் அல்லிரோ என - காலம் தாழ்ப்பீர் அல்லீரோ என்று; 13-15. குறுநெடு புலவி கூறி - குறியனவும் நெடியனவுமாகிய ஊடலுரைகளைக் கூறி, நெருநலும் நம்மொடு தீம்பல மொழிந்த - நேற்றும் நம்முடன் இனிய பலவற்றை உரைத்த, சிறு நல் ஒருத்தி பெருநல் ஊர் - இளமை பொருந்திய நல்லளாய நம் தலைவியது பெரிய நல்ல ஊரானது; 1-2. மன்றும் தோன்றாது - மன்றும் தோன்றப் பெறாது; மரனும் மாயும் - மரங்களும் மறையப்பெறும்; எவன் ஆவது கொல் - இனி எத்தன்மையது ஆகுமோ? அளிது - இரங்கத்தக்கது. (முடிபு) நெடுந் தகையீர்! வேறு பல் தேயத்து ஆறு பல நீந்தி, யாம் இவண்ஒழிய, பொருள் வயிற் செலினே, நீட்டுவிர் அல்லிரோ என நெருநலும் நம்மொடு புலவிகூறித் தீம்பல மொழிந்த ஒருத்தி பெருநல் ஊர்மன்றும் தோன்றாது; மரனும் மாயும்; எவனாவது கொல்? அளிது. (வி-ரை) செங்கண் ஆடவர் என்றது, வெட்சி மறவரை. மாற்றார் ஊரினைத் தீக்கொளுவுதற்கு ஞெலியும், பகைவரைக் கோறற்கு அம்புங் கொண்டு சென்றாராகலின், `ஞெலியொடு பிடித்த வார்கோலசம்பினர்' எனப்பட்டார். இரவிலே சென்று ஊரினை அழிப்பராகலின் `எல் ஊரெறிந்து' என்றார்; `அரவூர் மதியிற் கரிதூர ஏம - இரவூ ரெரிகொளீஇக் கொன்று'1 என வருதல் காண்க. விளிபடு பூசல் - வெட்சியாருங் கரந்தையாரும் போர்செய்தலால் எழும் ஆரவாரம். `எல்லூரெறிந்து பல்லாத் தழீஇய, விளிபடு பூசல்' என்பதன்கண், ஊர்கொலை, ஆ கோள், பூசல் மாற்று என்னும் வெட்சித்திணையின் துறைகள் அமைந்திருத்தல் அறியற்பாற்று. இரட்டும் ஆறு எனவும் தேஎத்து ஆறு எனவும் இயையும். தொய்யில் - சந்தனக்குழம்பு முதலியவற்றால் மகளிர் மார்பிலும் தோளிலும் செய்யும் கோலம். உயர்பிறை - மேல் வளர்தற்குரிய பிறை என்றுமாம். வதுவையாகாத கன்னியர் பிறை தொழுதல் மரபு என்க. இளமையும் எழிலும் வாய்ந்த தலைவியின் ஊடலுரையும் தலைவனுக்கு மிக்க இன்பம் விளைத்தனவாகலின், `புலவிகூறி நம்மொடு தீம்பல மொழிந்த, சிறுநல் லொருத்தி' என்றான். தலைவியைப் பிரிந்த பிற்றைஞான்று, இடைச்சுரத்தே தன் நெஞ்சிற்குக் கூறுகின்றானாகலின், நெருநலும் என்றான். பெருநல்லூர் - அவள் பிறத்தலாற் பெருமையும் நன்மையும் வாய்ந்த ஊர் என்க. ஊரின்கண் மன்றும் தோன்றாது மரனும் மாயும் என்றுமாம். தலைவியைப் பிரிந்து அவ்வூரை விடுத்துச் செல்லுந் தலைவன், தலைவிபாலுள்ள காதல் மிகுதியால் அவ்வூரினை நோக்கியவண்ணம் செல்வானாகலின், அங்ஙனம் செல்லுங்கால் முதலில் மன்று மறையவும், பின் உயர்ச்சியுடைய மரங்களும் மறையலுற்றன; அதனால் ஆற்றாமை எய்திய தலைவன் இனியும் எனக்கு எத்தன்மையதாகுங்கொல் என்றான் என்க. 240. நெய்தல் (தோழி, இரவுக்குறிவந்த தலைமகற்குப் பகற்குறி நேர்ந்தது.) செவ்வீ ஞாழல் 1கருங்கோட் டிருஞ்சினைத் தனிப்பார்ப்பு உள்ளிய தண்பறை நாரை மணிப்பூ நெய்தல் மாக்கழி நிவப்ப இனிப்புலம் பின்றே கானலும் நளிகடல் 5. திரைச்சுரம் உழந்த திண்திமில் விளக்கிற் பன்மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய எந்தையுஞ் செல்லுமார் இரவே அந்தில் அணங்குடைப் பனித்துறை கைதொழு தேத்தி யாயும் ஆயமோ டயரும் நீயுந் 10 தேம்பாய் ஓதி திருநுதல் நீவிக் கோங்குமுகைத் தன்ன குவிமுலை யாகத்து இன்றுயில் அமர்ந்தனை யாயின் வண்டுபட விரிந்த செருந்தி வெண்மணன் முடுக்கர்ப் பூவேய் புன்னையந் தண்பொழில் 15. வாவே தெய்ய மணந்தனை செலற்கே. - எழூஉப்பன்றி நாகன் குமரனார். (சொ-ள்) 1-4. செவ் வீ ஞாழல் கரு கோட்டு இரு சினை - சிவந்த பூவினையுடைய புலிநகக் கொன்றையின் கரிய கொம்பின் பெரிய கிளையில், தனி பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை - தனியேயிருக்கும் தன் குஞ்சினை நினைத்த தணியப் பறத்தலையுடைய நாரை, மணி பூ நெய்தல் மா கழி நிவப்ப - நீலமணி போலும் நெய்தற் பூக்களையுடைய கரியகழியினின்றும் மேலே எழுந்து பறந்திட, கானலும் இனி புலம் பின்று - கடற்கரைச்சோலையும் இப்பொழுது தனிமையுற்றது; 4-7. நளி கடல் திரை சுரம் உழந்த திண் திமில் விளக்கில் - செறிந்த கடலாகிய திரையையுடைய சுரத்தில் திரிந்து வருந்திய திண்ணிய படகின் விளக்கொளியில், பல் மீன் கூட்டம் என் ஐயர்க் காட்டிய - தான் அகப்படுத்த பலவாய மீன் கூட்டங்களை என் அண்ணன்மார்க்குக் காட்டுதற்கு, எந்தையும் இரவு செல்லும் - என் தந்தையும் இரவில் மனைக்கண் போதரும்; 7-9. யாயும் ஆயமோடு - என் தாயும் ஆயத்தாருடன், அணங்கு உடை பனி துறை அந்தில் கை தொழுது ஏத்தி அயரும் - தெய்வ முடைய குளிர்ந்த துறையாய ஆங்கே (அத்தெய்வத்தைக்) கையால் வணங்கித் துதித்து அதற்குச் சிறப்புச் செய்யும்; 9-15. நீயும் -, தேம் பாய் ஓதி - தேன் ஒழுகும் கூந்தலையுடைய தலைவியது, திரு நுதல் நீவி - அழகிய நெற்றியைத் தடவி, கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து - கோங்கு அரும்பினா லொத்த குவிந்த முலையினையுடைய மார்பகத்தே, இன் துயில் அமர்ந்தனை யாயின் - இனிய துயிலை விரும்பினாயாயின், மணந்தனை செலற்கு - அங்ஙனம் அவளைக் கூடிச் செல்லுதற்கு, வண்டுபட விரிந்த செருந்தி - வண்டு மொய்க்க விரிந்த பூக்களை யுடைய செருந்திமரம் பொருந்திய, வெண்மணல் முடுக்கர் - வெள்ளிய மணல் பரந்த முடுக்கில், பூவேய் புன்னை அம் தண் பொழில் - பூக்கள் பொருந்திய புன்னை மரங்களையுடைய அழகிய தண்ணிய சோலைக்கண், வா - வருவாயாக. (முடிபு) (தலைவ!) நாரையும் நிவப்பக் கானல் புலம்பின்று; எந்தையும் இரவு (மனைக்கட்) செல்லும்; யாயும் ஆயமொடு அயரும்; நீயும் ஓதி ஆகத்து இன்றுயில் அமர்ந்தனையாயின் மணந்தனை செலற்குப் புன்னையந் தண்பொழில் வா. (வி-ரை) தண் பறை - மெல்லப் பறத்தல். நிவப்ப - உயர்ந்து பறந்து செல்ல என்றபடி. நாரை நிவப்பக் கானல் புலம்பின்று என்றது, கடலில் அகப்படுத்த மீன்களைக் கரையிற்போகட்டுச் செல்லுதற்கு இடையூறின்மை கூறியபடி. நாரை நிவப்ப என்றாரேனும் இனம்பற்றிப் பிற பறவைகளும் கொள்ளப்படும். வேட்டம் ஆடுவார் சுரத்திலே செல்லும் வழக்கு வலியால் கடலைச் சுரமாக உருவகித் தார். எந்தை இரவில் மனைக்கட் செல்லும் என்பதும், யாய் அணங் கிற்குச் சிறப்பயரும் என்பதும், இரவுக்குறியின் இடையீடு கூறிய வாறு. அணங்கு - நெய்தற் றெய்வமாகிய வருணன். `வண்டு பட விரிந்த.......... தண்பொழில்' என்றது பகற்குறிக்குச் சிறந்த களம் சுட்டியவாறு. தெய்ய, அசை. அந்திலும் அசை யென்னலுமாம். (மே-ள்) `மாயோன் மேய'1 என்னுஞ் சூத்திரத்து `அணங்குடை........... அயரும்' என்பது, நெய்தன்மகளிர் கிளையுடன் குழீஇ வருணற்குப் பரவுக்கடன் கொடுப்பது என்றும், `தோழியின் முடியும் இடனுமா ருண்டே'2 என்னுஞ் சூத்திரத்து `பூவேய் புன்னையந் தண்பொழில் நீவா' என்பதனை இது தோழி களஞ் சுட்டியது என்றும், `பகற் புணர் களனே'3 என்னும் சூத்திரத்து, இது தோழி பகற்குறி உரைத்தது என்றும், `பொழுதும் ஆறும்'4 என்னும் சூத்திரத்து, இது, பகல் நீ வா என்றல் வழுவமைதி என்றும் கூறினர், நச். 241. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகள், வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது.) துனியின் றியைந்த துவரா நட்பின் இனியர் அம்ம அவரென முனியாது நல்குவர் நல்ல கூறினும் அல்கலும் பிரியாக் காதலொடு உழைய ராகிய 5. நமர்மன் வாழி தோழி யுயர்மிசை மூங்கில் இளமுளை திரங்கக் காம்பின் கழைநரல் வியலகம் வெம்ப மழைமறந்து அருவி யான்ற வெருவரு நனந்தலைப் பேஎய் வெண்தேர்ப் பெயல்செத் தோடித் 10. தாஅம் பட்ட தனிமுதிர் பெருங்கலை புலம்பெயர்ந் துறைதல் செல்லா 5தலங்குதலை விருந்தின் வெங்காட்டு வருந்தி வைகும் அத்த நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய் வட்டக் கழங்கில் தாஅய்த் துய்த்தலைச் 15. செம்முக மந்தி ஆடும் 6நன்மர மருங்கின் மலையிறந் தோரே. - காவன் முல்லைப் பூதனார். 5. தோழி-, வாழி-, (சொ-ள்) 1-5. முனியாது நல்குவர் - என்னை வெறாது அருளுவார் ஒருவர், துனி இன்று இயைந்த துவரா நட்பின் - வெறுப்பின்றி ஒன்றிய என்றும் பிளவுபடாத நட்பினையுடைய, இனியர் - இனிய குணங்களை யுடையர், அவர் என - நம் தலைவர் என, நல்ல கூறினும் - அவரது நற்குணங்களைப் பாராட்டிக் கூறினும், அல்கலும் - என்றும், பிரியாக் காதலொடு - நம்மை விட்டுப் பிரியாத காதலுடன், உழையர் ஆகிய - நம் பக்கலில் உள்ளார் ஆகிய, நமர் - நம் காதலர் (இப்பொழுது), 5-16. உயர் மிசை - மலையின் உச்சிக்கண்ணே யுள்ள, மூங்கில் இளமுளை திரங்க - மூங்கிலின் இளைய முளை வதங்கவும், காம்பின் கழை நரல் வியல் அகம் வெம்ப - மூங்கில் தண்டு ஒலிக்கும் பெரிய பாறையின் இடங்கள் வெம்பவும், மழை மறந்து - மழை பெய்யாது மறந்து போதலின், அருவி ஆன்ற - அருவி இல்லையாகிய, வெருவரு நனந்தலை - அச்சம் வரும் அகன்ற இடத்தே தோன்றிய, பேஎய் வெண் தேர்பெயல் செத்து ஓடி - வெள்ளிய பேய்த்தேரை மழையென்று கருதி ஓடி, தாஅம் பட்ட தனி முதிர் பெரு கலை - தாகம்பட்ட தனித்த முதிர்ந்த பெரிய கலைமான், புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது-அவ்விடத்தினின்றும் மீண்டு உறைதல் மாட்டாது, அலங்கு தலை விருந்தின் வெம் காட்டு - அப் பேய்த்தேர் அசையும் இடமாய புதிய வெவ்விய காட்டின் கண்ணே, வருந்தி வைகும் - வருத்தமுற்றுத் தங்கிக் கிடக்கும், அத்தம் நெல்லி தீம் சுவை திரள் காய் - பாலைநில வழியில் உள்ள நெல்லியின் இனிய சுவை பொருந்திய திரண்ட காய்கள் ஆகிய, வட்ட கழங்கில் - வட்டமான கழங்குகளைக் கொண்டு, துய் தலை செம்முக மந்தி தாஅய் ஆடும் - பஞ்சு போன்ற மயிரையுடைய தலை யினையும் சிவந்த முகத்தையுமுடைய மந்தி தாவி விளையாடும், நல்மர மருங்கின் மலையிறந்தோர் - நல்ல மரங்கள் பொருந்திய பக்கத்தை யுடைய மலையினைக் கடந்து சென்றார் ஆதலின் ஆற்றகில்லேன். (முடிபு) தோழி! வாழி! முனியாது நல்குவார் ஒருவர், `நட்பின் இனியர் நம் தலைவர்' என நல்ல கூறினும், பிரியாக் காதலொடு உழையர் ஆகிய நமர், மலையிறந்தோர்; (ஆதலின் ஆற்றகில்லேன் என்றாள்). (வி-ரை) முனியாது நல்குவர் என்றது, தோழியைப் பிறர் போற் கூறியதாகும். இனி அவர் நட்பின் இனியர், நல்குவர் என நீ முனியாது நல்ல கூறினும் என்றுரைத்தலுமாம். மறந்து - மறத்தலால். பேஎய்த் தேர் - வெண்டேர் எனவும்படும். தாகம் என்றது தாஅம் என விகாரமாயிற்று. புலம் - வேறு நற்புலம் என்றுமாம். அலங்குதலை - வருந்துதற் கேதுவாகிய இடமுமாம். 242. குறிஞ்சி (தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.) அரும்புமுதிர் வேங்கை அலங்கல் மென்சினைச் சுரும்புவாய் திறந்த பொன்புரை நுண்தாது மணிமருள் கலவத் துறைப்ப அணிமிக்கு அவிர்பொறி மஞ்ஞை யாடுஞ் சோலைப் 5. பைந்தாட் செந்தினைக் கொடுங்குரல் வியன்புனம் செந்தார்க் கிள்ளை நம்மொடு கடிந்தோன் பண்புதர வந்தமை அறியாள் நுண்கேழ் முறிபுரை யெழினலத் தென்மகள் துயர்மருங்கு அறிதல் வேண்டுமெனப் பல்பிரப் பிரீஇ 10. அறியா வேலன் தரீஇ அன்னை வெறியயர் வியன்களம் பொலிய ஏத்தி மறியுயிர் வழங்கா அளவைச் சென்றியாம் செலவரத் துணிந்த சேண்விளங்கு எல்வளை நெகிழ்ந்த முன்கை நேரிறைப் பணைத்தோள் 15. நல்லெழில் அழிவில் தொல்கவின் பெறீஇய முகிழ்த்துவரல் இளமுலை மூழ்கப் பல்லூழ் முயங்கல் இயைவது மன்னோ தோழி நறைகால் யாத்த 1நளிர்முகைச் சிலம்பின் பெருமலை விடரகம் நீடிய சிறியிலைச் 20. சாந்த மென்சினை தீண்டி மேவது பிரசந் தூங்கு சேட்சிமை வரையக வெற்பன் 2மணந்த மார்பே. - பேரி சாத்தனார். (சொ-ள்) 17. தோழி-, 1-7. அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மெல் சினை - அரும்புகள் முதிர்ந்த வேங்கைமரத்தின் அசையும் மெல்லிய கிளைகளில், சுரும்பு வாய் திறந்த பொன்புரை நுண் தாது - வண்டுகள் பூவின் வாயைத் திறத்தலால் பொன்னை யொத்த நுண்ணிய பொடிகள், மணி மருள் கலவத்து உறைப்ப - நீலமணியை யொத்த தோகையில் உதிர்ந்திட, அணி மிக்கு - அழகு மிகுந்து, அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை - விளங்கும் பொறிகளையுடைய மயில் ஆடும் சோலையின் பக்கத்தே, பைந்தாள் செந்தினை கொடுங் குரல் - பசிய தாளினையுடைய சிவந்த தினையின் வளைந்த கதிர்களையுடைய, வியன் புனம் - பெரிய கொல்லையில் வரும், செந்தார்க்கிள்ளை நம்மொடு கடிந்தோன் - சிவந்த இரேகையை யுடைய கிளிகளை நம்முடனிருந்து ஓட்டிய நம் தலைவனது, பண்பு தர வந்தமை அறியாள் - நல்லியல்புகள் தருதலால் வந்த வருத்தத்தை அறியாதவளாகி; 7-12. அன்னை - நம் அன்னை, நுண் கேழ் முறி புரை எழில் நலத்து என் மகள் - நுண்ணிய நிறம் பொருந்திய தளிரை யொத்த எழுச்சி வாய்ந்த அழகினையுடைய என் மகளது, துயர் மருங்கு அறிதல் வேண்டும் என - துயர்வந்த பரிசினை அறிதல் வேண்டும் என்று, பல் பிரப்பு இரீஇ - பல பிரப்பினைப் பலியாகவைத்து, அறியா வேலன் தரீஇ - உண்மை உணரமாட்டாத வேலனை அழைத்து, வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி - வெறியாடும் பெரிய களம் பொலிவுறுமாறு துதித்து, மறி உயிர் வழங்கா அளவை - ஆட்டுக்குட்டியின் உயிரைப் பலியிடா முன்னரே; 12-15. செலவரத் துணிந்த - ஏறி இறங்கும் அளவில் எண்ணிச் சேர்த்த, சேண் விளங்கு எல்வளை - சேய்மைக்கண் சென்று விளங்கும் ஒளியினையுடைய வளை, நெகிழ்ந்த முன் கை - கழன்ற முன் கையும், நேர் இறை - நேரிய சந்தினையுடைய, பணை தோள் - பெரிய தோளும், நல் எழில் அழிவில் - நல்ல அழகு ஒழிவினின்றும் நீங்கி, தொல்கவின் பெறீஇய - பழைய அழகினைப் பெறுமாறு, யாம் சென்று - யாம் சென்று; 18-22. நறை கால் யாத்த நளிர் முகை சிலம்பின் - தேன் கூடுகள் நிரம்பிய குளிர்ந்த குகைகளையுடைய பக்க மலைகளைக் கொண்ட, பெருமலை விடர் அகம் - பெரிய மலையின் பிளப்புக்களிடத்தே, நீடிய சிறி இலை சாந்த மெல் சினை தீண்டி - நீண்டு வளர்ந்த சிறிய இலைகளையுடைய சந்தனமரத்தின் மெல்லிய கிளைகள் தீண்ட, மேலது பிரசம் தூங்கும் - மேலிடத்ததாகிய தேனிறால் தொங்கும், சேண் சிமை வரையக வெற்பன் - நெடிய உச்சியினையுடைய மூங்கிலைத் தன்னகத்தே கொண்ட மலை நாடனது, மணந்த மார்பு- முன்பு கூடிய மார்பினை; 16-17. முகிழ்த்து வரல் இள முலை மூழ்க - அரும்பி வருதலுடைய இளைய முலை மூழ்கிட, பல் ஊழ் முயங்கல் இயைவது - பலமுறை தழுவுதல் தக்கது. (முடிபு) தோழி! (நமது இடும்பை) கிள்ளை நம்மொடு கடிந்தோன் பண்பு தர வந்தமை அறியாள், அன்னை துயர்மருங்கு அறிதல் வேண்டுமென வேலன் தரீஇ, பிரப்பு இரீஇ, களம் பொலிய ஏத்தி, மறியுயிர் வழங்கா அளவை, யாம் சென்று வெற்பன் மணந்த மார்பு முலை மூழ்க முயங்கல் இயைவது. (வி-ரை) வாய் திறந்த - பூவின் வாயைத் திறந்த என விரித்துக் கொள்க. திறந்த என்னும் பெயரெச்சம் காரணப்பொருட்டு. கிள்ளை நம்மொடு கடிந்தோன் என்றது, எளியனாய் நம்முடனிருந்து கிளியை ஓட்டி உதவிபுரிந்த நன்மையாளன் என்றபடி. பண்பு தர வந்தது என்றது, அவனது உயர்ந்த குண வொழுக்கங்களால் தலைவிக்கு மெலிவுண்டாயிற்று என்று கூறும் வாயிலாகத் தலைவி அவனைக் காதலித்தது தகவுடையதே என்றும், அவனுடன் இடையறாது கூடியிருக்கப் பெறாமையால் மெலிவுறுகின்றாள் என்றும் தோழி கூறியபடியாம். இவ்வுண்மையை அறியாத அன்னை தன் மகளுற்ற மெலிவு அணங்கு முதலியவற்றால் உண்டாயதோ என ஐயுற்று, அதனை அறிந்து களைதற்கு வேலனை யழைத்து வெறியாட் டெடுத்து மறியைப் பலியிட முந்துகின்றாளாகலின், அவள் அங்ஙனம் செய்தற்கு முன் நமது மேனி பழைய அழகினைப் பெறும்படி, தலைவனைப் பல்லூழ் முயங்கல் வேண்டுமென்று, தலைமகன் சிறைப்புறத்தினின்று கேட்பத், தோழி தலைமகட்குக் கூறினா ளென்க. அதனைத் தலைமகன் கேட்டு விரைய வரைந்து கொள்வா னாதல் பயன். அறியா வேலன் என்றது உண்மையை அறியாமலே, எதனையும் தெய்வத்தால் வந்ததென்று கூறுபவன் என்றபடி. முன்கையும் பணைத்தோளும் தொல்கவின் பெறீஇய என்றுரைத் தாளேனும், மேனி தொல்கவின் பெறீஇய என்பது கருத்தாகக் கொள்க. `பழைய கவின் பெற்றமையைக் காணின், அன்னை வெறியாட்டெடுத்தலை நிறுத்துவள் என்க.' செலவற (13) என்று பாடம் கொள்ளின் வளை கழலாவாறு என்றும், மலர்ந்த மார்பு என்பது பாடமாயின் பரந்த மார்பு என்றும் பொருள் கொள்க. (உ-றை) வேங்கை நுண்தாது கலவத்து உறைப்ப, மஞ்ஞை அணிமிக்கு ஆடும் என்றது, தலைவனது மார்பின் சாந்தம் நம் ஆகத்திற் பொருந்துமாறு முயங்குதல் கூடின், நாம் எழில் சிறந்து மகிழ்ச்சியுறுவேம் என்றவாறு. உயர்ந்த சந்தனத்தின் கிளை தீண்டத் தேனிறால் தொங்கும் என்றது, பல்லாற்றானும் ஒப்புமையுடைய உயர்ந்த தலைவனும் தலைவியும் கூடி இல்லறம் புரிதல் யாவர்க்கும் இன்பம் பயப்பதாம் என்றபடி. 243. பாலை (தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் ஆற்றேன் என்பதுபடச் சொல்லியது.) அவரை ஆய்மலர் உதிரத் துவரின வாங்குதுளைத் துகிரின் ஈங்கை பூப்ப இறங்குபோ தவிழ்ந்த ஈர்ம்புதல் பகன்றை கறங்குநுண் துவலையின் ஊருழை யணியப் 5. பெயல்நீர் புதுவரல் தவிரச் சினைநேர்பு பீள்விரிந் திறைஞ்சிய பிறங்குகதிர்க் கழனி நெல்லொலி பாசவல் துழைஇக் கல்லெனக் கடிதுவந் திறுத்த கண்ணில் வாடை நெடுதுவந் தனையென 1 நில்லா தேகிப் 10. பலபுலந் துறையுந் துணையில் வாழ்க்கை நம் 2வலந் தன்மை கூறி அவர் நிலை 3அறியும் ஆயின் நன்றுமன் தில்ல பனிவார் கண்ணே மாகி இனியது நமக்கே எவ்வம் ஆகின்று 15. அனைத்தால் தோழிநந் தொல்வினைப் பயனே. - 4 கொடியூர்கிழார் மகனார் நெய்தற்றத்தனார். (சொ-ள்) 15. தோழி-, 1-9. அவரை ஆய் மலர் உதிர - அவரையின் அழகிய மலர் உதிரவும், துவரின வாங்கு துளை துகிரின் - சிவந்த வளைந்த துளையினை யுடைய பவளம்போல, ஈங்கை பூப்ப - இண்டையானது பூக்கவும், இறங்கு போது அவிழ்ந்த ஈர் புதல் பகன்றை - ஞாயிறு தாழும் பொழுது விரிந்த குளிர்ந்த புதலாகிய பகன்றை, கறங்கு நுண் துவலையின் ஊர் உழை அணிய - ஒலிக்கும் வாடையுடன் வரும் நுண்ணிய மழைத்துளியால் ஊரின் அருகே அழகுபெற மலரவும், பெயல் நீர் புது வரல் தவிர - மழையாகிய நீர் புதுவதாக வருதல் ஒழியவும், சினை நேர்பு பீள் விரிந்து இறைஞ்சிய - கிளைத்தல் பொருந்திக் கருவிரிந்து எழுந்து வளைந்த, பிறங்கு கதிர் கழனி நெல் ஒலி பசு அவல் துழைஇ - விளங்கும் கதிர்களையுடைய வயலின் நெல் ஒலி செய்யும் பசிய பள்ளங்களைத் துழாவி, கல் என கடிது வந்து இறுத்த கண்இல் வாடை - கல்லென்ற ஒலியுடன் விரைந்துவந்து தங்கிய இரக்கமற்ற வாடையானது, நில்லாது ஏகி - தாழ்க்காது தலைவரிடத்தே விரைந்து சென்று, நெடிது வந்தனை என - நீ வந்து நெடுங்காலம் தாழ்த்தனை என்று; 10-12. பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை - பலவற்றையும் வெறுத்து உறையும் துணைவருடன் கூடியிராத வாழ்க்கையினை யுடைய, நம் வலத்தன்மை கூறி - நமது வலித்தன்மையைக் கூறி, அவர் நிலை அறியும் ஆயின் நன்று மன் - அவர்தம் நிலையினைத் தேருமாயின் பெரிதும் நன்றாகும்; 13-15. இனி அது - இப்பொழுது அவ் வாடையானது, பனிவார் கண்ணேம் ஆகி - நாம் நீர் ஓழுகும் கண்களை யுடையேம் ஆக, நமக்கே எவ்வம் ஆகின்று - நமக்கே துன்பம் தருவதாக ஆகின்றது, நம் தொல்வினைப் பயன் அனைத்து - நமது பழைய தீ வினையின் பயன் அத்தன்மைத்துப் போலும். (முடிபு) தோழி! வாடை நில்லாது தலைவரிடத்தே ஏகி, நீ நெடிது வந்தனையெனக்கூறி, பல புலந்து உறையும் துணையில் வாழ்க்கை நம் வலத்தன்மை கூறி, அவர் நிலை அறியுமாயின் நன்று; இனி அது பனிவார் கண்ணேம் ஆக, நமக்கே எவ்வம் ஆகின்று; நம் தொல்வினைப்பயன் அனைத்து. உதிர, பூப்ப, அணிய, தவிர, துழைஇ, கல்லென இறுத்த வாடை என்க. (வி-ரை) முன்னரே, தலைவனைப் பிரிந்து வருந்தும் நம்பாற் சிறிதும் இரக்கமின்றி, வாடை நம்மை மேலும் வருத்துகின்றது என்பாள், `கண்ணில் வாடை' என்றாள். கண் - கண்ணோட்டம், இரக்கம்; அது வரக் கடவதாகிய காலத்தினும் முன்னரே நம்மை வருத்துதற் பொருட்டு வந்து நிலைபெற்றளது என்பாள், `கடிது வந்திறுத்த' என்றாள். வலத் தன்மையாவது, இன்னலைப் பொறுத்து உயிர் தாங்கியிருக்கும் வலித்தன்மையாகும். அவர் நிலை அறியு மாயின் நன்று மன் என்றது, நம்மிடத்தே தங்கி இன்னல் விளைக்கும் இவ்வாடை, தலைவர் உறையுமிடத்தும் இருப்பதாயின் அவர் அதற்கு ஆற்றாது வருவர் என்னும் கருத்திற்று. அன்றி, வாடை யானது தலைவர்பால் தூதாகச் சென்று அவரைப் பிரிந்து நாம் எய்தும் துன்பநிலையினை அவர்க்கு உரைத்து அவர் கருத்தினை அறிந்துவந்து உரைக்குமாயின் நன்று என்று உரைத்தலுமாம். தில்ல - இடைச்சொல் : ஈறு திரிந்தது. ஆகி - ஆக எனத் திரிக்க. 244. முல்லை (வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.) 1பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை பகலுறை முதுமரம் புலம்பப் போகி முகைவாய் திறந்த நகைவாய் முல்லை 5. கடிமகள் கதுப்பின் நாறிக் கொடிமிசை வண்டினந் தவிர்க்குந் தண்பதக் காலை வரினும் வாரா ராயினும் ஆண்டவர்க்கு இனிதுகொல் வாழி தோழி யெனத்தன் பல்லிதழ் மழைக்கண் நல்லகஞ் சிவப்ப 10. அருந்துய 1ருடையள் அவளென விரும்பிப் பாணன் வந்தனன் தூதே நீயும் புல்லார் புரவி வல்விரைந்து பூட்டி 2நெடுந்தேர் ஊர்மதி வலவ முடிந்தன்று அம்மநாம் முன்னிய வினையே. - மதுரை...... மள்ளனார். (சொ-ள்) 13. வலவ - பாகனே; 1-6. பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன மா சிறை பறவை - பசை பொருந்திய தோலை நெய்யிற்றோய்த்தாற் போன்ற கரிய சிறகினையுடைய வாவல், பகல் உறை சேய் உயர் சினைய முதுமரம் புலம்பப் போகி - பகலில் தங்கியிருந்த மிக உயர்ந்த கிளைகளை யுடைய முதிர்ந்த மரம் தனித்திடப்போக, கொடி மிசை முகைவாய் திறந்த நகைவாய் முல்லை - கொடியின்மீது அரும்புகள் வாய்திறந்து மலர்ந்த ஒளி பொருந்திய முல்லை, கடிமகள் கதுப்பின் நாறி - மணமகள் கூந்தலைப்போல மணந்து, வண்டினம் தவிர்க்கும் - வண்டின் தொகுதிகளைச் செல்லவொட்டாது தடுக்கும், தண்பதக் காலை - குளிர்ந்த செவ்வியையுடைய கார்காலத்தே; 7-11. தோழி - தோழியே! வரினும் வாரார் ஆயினும் - நம் தலைவர் ஈண்டு வரினும் வாராதிருப்பினும், ஆண்டு அவர்க்கு இனிது கொல் - அவர் சென்ற இடம் அவர்க்கு இனியதுபோலும், வாழி-, என - என்று கூறி, தன் பல் இதழ் மழைக் கண் - தனது பல இதழையுடைய தாமரை மலர்போன்ற குளிர்ந்த கண்ணின், நல் அகம் சிவப்ப - நல்ல உள்ளிட மெல்லாம் சிவக்க, அரும் துயர் உடையள் - பொறுத்தற்கரிய துயரினை யுடையவளாயினள், அவள் என - நின் தலைவி என்று, பாணன் - பாணன், விரும்பித் தூது வந்தனன் - விருப்பமுற்றுத் தூதாக வந்தனன்; 14. நாம் முன்னிய வினை முடிந்தன்று - நாம் எண்ணி முயன்ற வினையும் முடிவுற்றது; 11-13. நீயும் புல் ஆர் புரவி பூட்டி - நீயும் புல்லினைத் தின்ற குதிரையைப் பூட்டி, நெடு தேர் வல்விரைந்து ஊர்மதி - நீண்ட தேரினை மிக விரைந்து செலுத்துவாயாக. (முடிபு) `தோழி, தண்பதக் காலை, நம் காதலர் வரினும் வாராராயினும் ஆண்டு அவர்க்கு இனிதுகொல்' என்று கூறித் தன் கண் சிவப்ப அருந்துயருடையாள் நின் தலைவி என்று பாணன் தூது வந்தனன்; வலவ! வினையும் முடிந்தன்று; நீயும் தேர் விரைந்து ஊர்மதி. (வி-ரை) போகி - போக எனத்திரிக்க. மாச்சிறைப் பறவை போக, முல்லை வண்டினம் தவிர்க்கும் தண் பதக் காலை என்க. போக என்பது நிகழ்வு உணர்த்திற்று. தண்பதக்காலை - கார்காலம். பறவை போதல் கார்காலத்து மாலை எனக் கொள்க. என்னை, `நெடுநீ ராம் பல் அடைப்புறத் தன்ன, கொடுமென் சிறைய கூருகிர் பறவை,....... பகலுறை முதுமரம் புலம்பப் போகும், சிறு புன் மாலை' என வருதலின், `வரினும் வாரா ராயினும் ஆண்டவர்க்கு, இனிது கொல், என்றது, அவர் வந்து நமது துன்பத்தைப் போக்காதொழியினும், அவர் உறையுமிடம் அவர்க்கு இன்பம் விளைப்பதாயின் நன்றாம், அவ்வாறு விளைக்குங் கொல்லோ என்று தலைவி துயருற்று மொழிந்தாள் என்க. அதனைக் கூறிப் பாணன் தூது வந்தமையானும், வினை முடிந்தமையானும் விரைந்து தேரினை ஊர்மதி என்று தலைவன் கூறினான் என்க. (மே-ள்) `வேந்து வினையியற்கை'1 என்னுஞ் சூத்திரத்து `முடிந்தன்று அம்மநாம் முன்னிய வினையே' என்றலின், தானே குறுநில மன்னன் சென்றதாம் என்றனர், நச். 245. பாலை (பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறித் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.) உயிரினுஞ் சிறந்த ஒண்பொருள் தருமார் நன் றுபுரி காட்சியர் சென்றனர் அவரென மனைவலித் தொழியும் மதுகைய ளாதல் நீநன்கு அறிந்தனை யாயின் நீங்கி 5. மழைபெயல் மறந்த கழைதிரங்கு இயவில் செல்சாத்து எறியும் 2பண்பில் வாழ்க்கை வல்வில் இளையர் தலைவர் எல்லுற வரிகிளர் பணைத்தோள் வயிறணி திதலை அரிய லாட்டியர் அல்குமனை வரைப்பின் 10. மகிழ்நொடை பெறாஅ ராகி நனைகவுள் கான யானை வெண்கோடு சுட்டி மன்றோடு புதல்வன் புன்தலை நீவும் அருமுனைப் பாக்கத்து அல்கி வைகுற நிழல்படக் கவின்ற நீளறை இலவத்து 15. அழலகைந் தன்ன அலங்குசினை யொண்பூக் குழலிசைத் தும்பி யார்க்கும் ஆங்கண் குறும்பொறை யுணங்குந் ததர்வெள் என்பு கடுங்கால் ஒட்டகத் தல்குபசி தீர்க்கும் கல்நெடுங் கவலைய கானம் நீந்தி 20. அம்மா அரிவை யொழியச் சென்மோ நெஞ்சம் வாரலென் யானே. - மதுரை மருதனிள நாகனார். (சொ-ள்) 21. நெஞ்சம் - நெஞ்சே! 1-4. நன்று புரி காட்சியர் அவர் - நன்மையினை விரும்பிய அறிவினையுடையராகிய தலைவர், உயிரினும் சிறந்த ஒள்பொருள் தருமார் - உயிரைக் காட்டினும் சிறந்த ஒள்ளிய பொருளைத் தருதல் வேண்டி, சென்றனர் என வலித்து - சென்றனர் என்று துணிந்து, மனை ஒழியும் மதுகையள் ஆதல் - மனையின்கண் தங்கியிருக்கும் வலியுடையள் ஆதலை, நீ நன்கு அறிந்தனையாயின் - நீ நன்றாக அறிந்துளாயாயின், நீங்கி - இவளின் நீங்கி; 5-21. மழை பெயல் மறந்த - மழை பெய்தலை மறந்தமையால், கழைதிரங்கு இயவில் - மூங்கில்கள் வற்றிய நெறியில், செல் சாத்து எறியும் - செல்லும் வணிகர் திரளை அலைத்திடும், பண்பு இல் வாழ்க்கை - அன்பில்லாத வாழ்க்கையினையுடைய, வல் வில் இளையர் தலைவர் - வலிய வில்லினைக் கொண்ட மறவர் தலைவர், எல் உற - இருள் வர, வரி கிளர் பணை தோள் திதலை அணிவயிறு - வரி விளங்கும் பருத்த தோளினையும் தேமல் அணிந்த வயிற்றினையு முடைய, அரியலாட்டியர் அல்குமனை வரைப்பின் - கள்விற்போர் பொருந்திய மனையகத்தே, மகிழ் நொடை பெறாஅர் ஆகி - கள்ளிற்கு உரிய விலைப்பொருள் எய்தப் பெறாராகி, நனை கவுள் கான யானை வெண்கோடு சுட்டி - மதத்தால் நனைந்த கன்னத்தினை யுடைய யானையின் வெள்ளிய கொம்பினை எடுத்து வருதல் குறித்து, மன்று ஓடு புதல்வன் - மன்றின்கண் ஓடி விளையாடும் புதல்வனுடைய, புன் தலை நீவும் - புல்லிய தலையைத் தடவி ஏவும், அருமுனை பாக்கத்து அல்கி - அரிய போர்முனைகளையுடைய பாக்கத்திடத்தே தங்கி, வைகு உற - இருள் கழியும் விடியல் தோன்ற, நிழல்படக் கவின்ற நீள் அரை - நிழல்பொருந்த அழகுபெற்ற நீண்ட அரையினையுடைய, இலவத்து - இலவமரத்தினது, அலங்கு சினை - அசையுங் கிளைகளிலுள்ள, அழல் அகைந்தன்ன ஓள்பூ - எரி தளிர்த்தாலொத்த ஒள்ளிய பூக்களில், குழல் இசைத்தும்பி ஆர்க்கும் ஆங்கண் - குழல்போலும் இசையையுடைய வண்டுகள் ஒலிக்கும் இடமாகிய, குறும்பொறை உணங்கும் - பாறையிடத்தே காய்ந்து கிடக்கும், ததர் வெள் என்பு - சுள்ளிபோலும் வெள்ளிய எலும்புகள், கடும் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் - வேகம் வாய்ந்த கால் களையுடைய ஒட்டகத்தின் மிக்க பசியினைப் போக்கும், கல் நெடும் கவலைய கானம் நீந்தி - கற்கள் பொருந்திய நீண்ட கவர் வழிகளை யுடைய காட்டினைக் கடந்து, அம் மா அரிவை ஒழியச் சென்மோ - அழகிய மாமை நிறத்தையுடைய நம் தலைவி தனித்திருக்க நீ செல் வாயாக, யான் வாரலென் - யான் அவளைப் பிரிந்து நின்னுடன் வாரேன். (முடிபு) நெஞ்சம்! மனை வலித்தொழியும் மதுகையா ளாதல் நீ நன்கு அறிந்தனையாயின், நீங்கி, அருமுனைப் பாக்கத்து அல்கி, வைகுற, கானம் நீந்தி, அரிவை ஒழியச் சென்மோ; யான் வாரலென். (வி-ரை) `உயிரினுஞ் சிறந்த......... சென்றனரவர்' என என்பது தலைவியின் கூற்றைத் தலைவன் கொண்டு கூறியது. தலைவன் பொருள் வயிற் பிரியின், தன் உயிர்க்கு ஊறுபாடும் அக் காரணத்தால் தலைவன் உயிர்க்கு ஏதமும் உண்டாகும் என்பது தோன்ற, `உயிரினும் சிறந்த' எனப் பொதுப்படக் கூறினாள். அறனும் இன்பமும் பயவாமையே யன்றி, உயிர்க்கும் ஊறு விளைக்கும் பொருளைத் தேடுதற் பொருட்டுச் செல்பவர் அதனை உயிரினும் சிறந்ததெனக் கருதினா ராவர் எனவும், அதனால் அவர் நன்று புரி காட்சியர் அல்லர் எனவும் கொள்வள் என்பதும், அந்நீரதாகிய நமது பிரிவினால் அவள் மனையின்கண் தனித்து ஆற்றியிருக்கும் வலியுடையள் அல்லள் என்பதும் நீ அறிந்திலை என்பான், `உயிரினும் சிறந்த ஒண்பொருள்' எனவும், `நன்றுபுரி காட்சியர்' எனவும், `மதுகையள்' எனவும் குறிப்புமொழியாற் கூறினான் என்க. கள்விற்கும் மகளிர் தம் மனையின்கண் வைத்து விற்பராகலின், `அரிய லாட்டியர் அல்கு மனை வரைப்பின்' என்றார். பெறா அராகி என்றது, வேறு பொருள் பெறாமையால், என்க. வெண்கோடு சுட்டிப் புதல்வன் புன்றலை நீவும் என்றது தம் மனையின் கண்ணுள்ள, யானையின் கோட்டினைக் கள் விலையாகத் தருதற்கு, அதனைக் கொணருமாறு புதல்வனை ஏவுவர் என்றபடி. தலையை நீவுதல் அவற்கு மனவெழுச்சி யுண்டாக்கு தற்பொருட்டாம். தலைவர் ஒவ்வொருவரும் தம் புதல்வன் புன்றலை நீவுவர் எனக் கொள்க. கானவர்கள் விலையாக யானைக்கோடு கொடுத்தலை, `வேட்டுவர்....... மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு, பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்'1, `வேந்தூர் யானை வெண் கோடுகொண்டு, கட்கொடி நுடங்கு மாவணம் புக்கு, அருங்கள் நொடைமை தீர்ந்தபின் மகிழ்சிறந்து'2 என்பவற்றானறிக. அத்தகைய கொடிய பாக்கத்திலே, நீ இரவிலே தங்கி இருள் கழிந்த பின் கானம் நீந்திச் செல் என்றான். வெள்ளென்பு ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் என்றது, அதற்கும் வேறு உணவு கிட்டாமை கூறியபடி. ஒட்டகம் பாலையிலும் விரைந்து செல்லும் இயல்பின தென்பது தோன்றக், `கடுங்கால் ஒட்டகம்' என்றும், பலநாள் உணவுபெறாத பசியைப் பொறுத்திருக்கும் இயல்பினது என்பது தோன்ற, `ஒட்டகத்து அல்குபசி' என்றும் கூறப்பட்டது. 246. மருதம் (தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது.) பிணர்மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை கதிர்மூக்கு ஆரல் 1கள்வ னாக நெடுநீர்ப் பொய்கைத் துணையொடு புணரும் மலிநீர் அகல்வயல் யாணர் ஊர 5. போதார் கூந்தல் நீவெய் யோளொடு தாதார் காஞ்சித் தண்பொழில் அகல்யாறு ஆடினை யென்ப நெருநை அலரே 2காய்சின மொய்ம்பிற் பெரும்பெயர்க் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணி வாயில் 10. சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின் இமிழிசை முரசம் பொருகளத் தொழியப் பதினொரு வேளிரொடு வேந்தர் சாய மொய்வலி யறுத்த ஞான்றைத் தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே. - பரணர். (சொ-ள்) 1-4. பிணர் மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை - சருச்சரை பொருந்திய வயிற்றினையும் பிளந்த வாயினையுமுடைய ஆண் சங்கு, கதிர் மூக்கு ஆரல் கள்வனாக - கூரிய மூக்கினையுடைய ஆரல் மீன் கரி கூறுவோனாக, நெடு நீர்ப் பொய்கை - ஆழ்ந்த நீரையுடைய பொய் கையில், துணையொடு புணரும் - பெண் சங்கினொடு மணம் புணரும், மலி நீர் அகல் வயல் யாணர் ஊர - நீர் நிறைந்த அகன்ற வயல்களையுடைய புது வருவாய் மிக்க ஊரனே! 5-7. போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு - பூக்கள் நிறைந்த கூந்தலையுடைய நின்னால் விரும்பப்பெற்ற பரத்தையொடு, தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு - பூந்துகள் நிறைந்த குளிர்ந்த காஞ்சி மரச்சோலை சூழ்ந்த அகன்ற ஆற்றின்கண்ணே. நெருநை ஆடினை என்ப - நேற்று நீர்விளையாட்டயர்ந்தனை யெனப் பலரும் கூறாநிற்பர்; 7-14. அலரே - அதனாலெழுந்த அலர், காய் சின மொய்ம்பின்- மிக்க சினமும் வலியுமுடைய, பெரும் பெயர்க் கரிகால் - பெரிய புகழினைக் கொண்ட கரிகால் வளவன், ஆர்கலி நறவின் வெண்ணி வாயில் - ஆரவார மிக்க கள் வளமுடைய வெண்ணிவாயில் என்னுமிடத்தே, சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பில் - சிறப்புவாய்ந்த பகையரசர் மாறுபட்டெழுந்த போரின்கண், இமிழ் இசை முரசம் பொருகளத்து ஒழிய - மிக்க ஓசையையுடைய வீர முரசம் போர்க் களத்தே ஒழிந்து கிடக்க, பதினொரு வேளிரொடு வேந்தர் சாய - வேளிர் பதினொருவருடன் இரு பெரு வேந்தரும் நிலைகெட, மொய் வலி அறுத்த ஞான்றை - அவர்தம் மிக்க வலியைக் கெடுத்த நாளில், தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் - அழுந்தூர்க்கண் எழுந்த குறையாத ஆரவாரத்தினும், பெரிது - பெரிதாயது. (முடிபு) யாணர் ஊர! நெருநை நீ வெய்யோளொடு காஞ்சித் தண்பொழில் அகல் யாறு ஆடினை என்ப; அலர் பெரும் பெயர்க் கரிகால் வளவன், வெண்ணி வாயிலின்கண், ஞாட்பில், முரசம் பொருகளத்தொழிய வேளிரொடு வேந்தர் சாய அவர்தம் மெய்வலி அறுத்த ஞான்றை, அழுந்தூரிலெழுந்த ஆர்ப்பினும் பெரிது. (வி-ரை) கள்வன் - கரி கூறுபவன்; பிறர் அறிய வெளிப்படுத்து பவன் என்றபடி. இச்சொல்லின் உருவம் களவன் என்றும் காணப்படு கின்றது. பொழிலிலும் யாற்றிலும் விளையாடினையென்ப என்றுரைத் தலுமாம். கரிகால் - கரிகால்வளவன். வேளிர் குறுநில மன்னராகலின், சீர்கெழு மன்னர் என்றது, வேளிரும் வேந்தருமாகிய இருதிறத் தார்க்கும் பொது. வேந்தர் என்றது, சேர பாண்டியரை. கெடாத அழுந்தூர் என்றலுமாம். நெருநை ஆடினை, அலர் அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிது என்றது, அவ் வலர் விரைந்து பரவுதலை உணர்த்தியபடி. (உ-றை) நந்தின் ஏற்றை ஆரல் கள்வனாகத் துணையொடு புணரும் என்றது, நீ அலர் கூறுவோர் அறியும்படி நினக்குத் துணையாகிய பரத்தையொடு கூடி விளையாடினை என்றபடி. (மே-ள்) `ஆற்றலொடு புணர்ந்த'1 என்னுஞ் சூத்திரத்து, ஏற்றை என வருதற்கு, `பிணர்மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை' என்பதனை எடுத்துக் காட்டினர், பேரா. 247. பாலை (தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) மண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலை நன்மாண் ஆகம் புலம்பத் துறந்தோர் அருளிலர் வாழி தோழி பொருள்புரிந்து இருங்கிளை எண்கின் அழல்வாய் ஏற்றை 5. கருங்கோட்டு இருப்பை வெண்பூ முனையின் பெருஞ்செம் புற்றின் இருந்தலை யிடக்கும் அரிய கானம் என்னார் பகைபட முனைபாழ் பட்ட ஆங்கண் நாட்பார்த்துக் கொலைவல் யானை சுரங்கடி கொள்ளும் 10. ஊறுபடு கவலைய ஆறுபல நீந்திப் படுமுடை நசைஇய பறைநெடுங் கழுத்திற் பாறுகிளை சேக்குஞ் சேட்சிமைக் கோடுயர் பிறங்கல் மலையிறந் தோரே. - 1மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார். (சொ-ள்) 3. தோழி-, வாழி-, 3-13. பொருள் புரிந்து - பொருளை விரும்பி, இரு கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை - பெரிய சுற்றத்தினையுடைய வெப்பம் பொருந்திய வாயினையுடைய ஆண் கரடி, கரு கோட்டு இருப்பை வெண் பூ முனையின் - கரிய கிளைகளையுடைய இருப்பை மரத்தின் வெள்ளிய பூவினை வெறுத்தால், பெரு செம் புற்றின் இரு தலை இடக்கும் - பெரிய செம்மண் புற்றினது பெரிய உச்சியினைப் பெயர்த்திடும், அரிய கானம் என்னார் - செல்லுதற்கு அரிய கானம் என்று நினையாராய், பகைபட முனை பாழ்பட்ட ஆங்கண் - மாறுகொண்டு போர்செய்தலால் சீறூர் பாழாகிய அவ்விடத்தே, ஆள் பார்த்து கொலைவல் யானை சுரம் கடி கொள்ளும் - ஆட்களின் வருகையை எதிர்நோக்கிக் கொல்லுதல் வல்ல யானை சுரநெறியைக் காவல் கொண்டிருத்தலின், ஊறுபடு கவலைய ஆறு பல நீந்தி - இடையூறு மிக்க கவர்த்தனவாகிய பல நெறிகளையும் கடந்து, படுமுடை நசைஇய பறை நெடு கழுத்தின் - மிக்க புலால் நாற்றத்தினை விரும்பிச்செல்லும் பறத்தலையுடைய நீண்ட கழுத்தினையுடைய, பாறு கிளை சேக்கும் - பருந்து மரக்கிளைகளிற் றங்கியிருக்கும், சேண் சிமை கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோர் - நீண்ட உச்சியினையும் சிகரம் உயர்ந்த பக்க மலைகளையும் உடைய மலையைக் கடந்து சென்றோர் ஆகிய நம் தலைவர்; 1-3. மண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலை - கழுவாத முத்தமாய கண்ணீர் ஒழுகவிடப்பெற்ற அழகிய முலையினையுடைய, நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர் - நல்ல மாண்புற்ற மார்பு தனித்து வருந்தத் துறந்து சென்றோர் ஆகலின், அருள் இலர் - அருள் அற்றவரே யாவர்; என் செய்வாம். (முடிபு) தோழி! வாழி! பொருள் புரிந்து, அரிய கானம் என்னார், ஆறு பல நீந்தி, மலை யிறந்தோர் ஆகிய நம் தலைவர் ஆகம் புலம்பத் துறந்தோராகலின் அருள் இலர். (வி-ரை) மண்ணுதல் - கழுவுதல். முத்தம் கழுவப்படுவதாகலின், மண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலை என்புழி, மண்ணா முத்தம் என்றது கண்ணீர்த் துளிகளை; இது வெளிப்படை எனப்படும். பகை பட - மாறுபட்டுப் போர்செய்தலால் என்றபடி. முனை - வேட்டுவர் ஊர். சேட்சிமையை யுடைய மலையெனவும், பிறங்கல் மலை யெனவும் கூட்டுக. 248. குறிஞ்சி (இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பத் தோழி சொல்லியது.) நகைநீ கேளாய் தோழி அல்கல் வயநாய் எறிந்து வன்பறழ் தழீஇ இளையர் எய்துதன் 1மடக்கிக் கிளையொடு நான்முலைப் பிணவல் சொலியக் கானொழிந்து 5. அரும்புழை முடுக்கர் ஆட்குறித்து நின்ற தறுகட் பன்றி நோக்கிக் கானவன் குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி மடைசெலன் முன்பில்தன் படைசெலச் செல்லாது அருவழி விலக்குமெம் பெருவிறல் போன்மென 10. எய்யாது பெயருங் குன்ற நாடன் செறியரில் துடக்கலிற் பரீஇப் புரியவிழ்ந்து ஏந்துகுவவு மொய்ம்பிற் பூச்சோர் மாலை ஏற்றமில் கயிற்றின் எழில்வந்து துயல்வர இல்வந்து நின்றோற் கண்டனள் அன்னை 15. வல்லே யென்முகம் நோக்கி நல்லை மன்னென நகூஉப்பெயர்ந் தோளே. - கபிலர். (சொ-ள்) 1. தோழி-, அல்கல் நகை நீ கேளாய் - (நேற்று) இரவு நிகழ்ந்து நகைக்கிடனாய செய்தியொன்றைக் கேட்பாயாக; 2-10. வய நாய் எறிந்து - வலிய வேட்டமாடும் நாயைக் கடிந்து விலக்கி, இளையர் எய்துதல் மடக்கி - வேட்டுவர் நெருங்குதலைத் தடுத்து, வன்பறழ் தழீஇ - வலியமைந்த குட்டிகளை அணைத்தக் கொண்டு, கிளையொடு நான்முலைப் பிணவல் சொலிய - தொங்கும் முலையினையுடைய பெண்பன்றி கிளையுடன் பெயர, கான் ஒழிந்து - காட்டினின்றும் வெளிவந்து, அரும்புழை முடுக்கர் - அரிய வாயிலாய முடுக்கிலே, ஆள் குறித்து நின்ற - வேட்டம் செய்யும் ஆட் களை எதிர்நோக்கி நின்ற, தறுகண் பன்றி - அஞ்சாமையையுடைய பன்றியினை, கானவன் - வேட்டுவன், குறுகினன் நோக்கி - அணிமை யிற் சென்று நோக்கி, தொடுத்த கூர்வாய் பகழி - தன் வில்லிற்கோத்த கூரிய முனையையுடைய அம்பினை, மடை செலல் முன்பின் தன் படை செல - மடுத்தல் அமைந்த வலியையுடைய தன் படை இரியவும், செல்லாது - தான் பெயராது நின்று, அரு வழி விலக்கும் - பகைவர் வரும் அரிய வழியில் அவரைத் தடுத்து நிற்கும், எம் பெரு விறல் போன்ம் என - எம்முடைய பெரிய வல்லாளனைப் போலும் இது வென (வியந்து), எய்யாது பெயரும் குன்றநாடன் - அப் பன்றியின்மேல் எய்யாது மீளும் இடமாய மலை பொருந்திய நாட்டினையுடைய நம் தலைவன் ஆகிய; 11-14. செறி அரில் துடக்கலின் - நெருங்கிய தூறுகள் பற்றியிழுத்த லால், பரீஇ புரி அவிழ்ந்து - அறுபட்டுப் புரிகள் அவிழ்ந்து வீழ்தலின், ஏந்து குவவு மொய்ம்பில் - உயர்ந்து திரண்ட தோளி டத்தே, பூ சோர் மாலை - பூக்கள் உதிரப்பெறும் மாலையானது, ஏற்று இமில் கயிற்றின் எழில் வந்து துயல்வர - எருதின் திமிலின்கட் கிடக்கும் கயிற்றைப்போன்று அழகு பெற அசைந்திட, இல் வந்து நின்றோன்- நம் இல்லின்கண் வந்து நின்றவனை; 14-16. அன்னை கண்டனள் - நம் அன்னை கண்டனளாகி, வல்லே என் முகம் நோக்கி - விரைய என் முகத்தினைப்பார்த்து, நல்லை மன் என - நீ மிகவும் நல்லவள் என்று, நகூஉ பெயர்ந்தோள் - நகா நின்று புறம் போயினள், என்செய்வாம். (முடிபு) தோழி! அல்கல் நகை நீ கேளாய்; கானவன் தறுகட் பன்றியை நோக்கி எம் பெருவிறல் போன்மெனப் பகழி எய்யாது பெயரும் குன்ற நாடன் இல் வந்து நின்றோனைக் கண்டனளாகி, அன்னை என்முகம் நோக்கி நல்லை மன்னென நகூஉப் பெயர்ந்தோள். (வி-ரை) வயநாய் எறிந்து இளையர் எய்துதலை மடக்கிக் கான் ஒழிந்து ஆட்குறித்து நின்ற பன்றி என்க. பன்றியை நோக்கிய கானவன் அதனது தறுகண்மையை வியந்து, தான் வில்நாணிற் றொடுத்த அம்பினை அதன்மீது எய்யாது அவ்விடத்து நின்று பெயர் வான் என்க. தன் படை செலச் செல்லாது அருவழி விலக்கும் என்றது, `வருவிசைப் புனலைக் கற்சிறைபோல, ஒருவன் தாங்கிய பெருமை'1 என்னும் வஞ்சித் திணையின் துறைப்பொருள் அமைந்தது. மொய்ம்பிற்கு ஏற்றின் இமிலும், பூச்சோர் மாலைக்குக் கயிறும் உவமையாம். இல் வந்து நின்றோன் என்பதனால் இரவுக்குறி வந்து நின்றான் என்பது பெற்றாம். அன்னை நின்றோனைக் கண்டு என் முகம் நோக்கி நல்லைமன் எனக் கூறி நக்குச் சென்றாள் என்றது, அவன் வருகைக்கு யான் வாயிலாதல் கருதித் தீங்குடையை யென இழித்துக் கூறி வெகுண்டு சென்றாள் என்றபடியாம். நல்லைமன் என்றது குறிப்பு மொழி. நச்சினார்க்கினியரும் பேராசிரியரும் இச் செய்யுளைத் தலைவி கூற்றாகக் கொண்டனர். (உ- றை) பன்றியானது தனது பிணவல் முதலியவற்றிற்கு உண்டாய ஊறுபாட்டை நீக்கிக் காத்து நின்றது என்பது, தலைவன் இற் செறித்தலால் தலைவிக்கு உண்டாகும் ஏதத்தை நீக்கிக் காக்க வேண்டும் என்றபடி. (மே-ள்) `வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்'1 என்னுஞ் சூத்திரத்தே, தலைவி கூற்றிற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இது வந்தோன் செவிலியை எதிர்ந்துழிக் கூறியது என்றனர், நச். `எள்ளல் இளமை'2 என்னுஞ் சூத்திரத்தே `நகை நீ கேளாய் தோழி' என்பது தன் பேதைமை பொருளாக நகை பிறந்தது; என்னை? தான் செய்த தவற்றிற்குத் தாய் தன்னை வெகுண்டது தனக்கு நகையாகக் கொண்டமையின் என்றும், `நல்லை மன்னென நகூஉப் பெயர்ந்தோளே; என்பது பிறர் எள்ளியது பொருளாகத் தன்கண் நகை பிறந்தது; என்னை? தன் மகள் தன்னை மதியாது இகழ்ந்தாளென நக்கவாறு; இது வெகுளிப் பொருளாக நக்க தன்றோ வெனின், அது வீரர்க்கே உரித்தாகல்வேண்டும், இவள் அவளை வெகுண்டு தண்டம் செய்வாள் அல்லள் அதற்கே உவப்பின் அல்லது என்றும் கூறினர், பேரா. 249. பாலை (தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) அம்ம வாழி தோழி பன்னாள் இவ்வூர் அம்பல் எவனோ வள்வார் விசிபிணித் தியாத்த அரிகோல் தெண்கிணை இன்குரல் அகவுநர் இரப்பின் நாடொறும் 5. பொன்கோட்டுச் செறித்துப் பொலந்தார் பூட்டிச் சாந்தம் புதைத்த 3ஏந்துதுளங் கெழிலிமில் ஏறுமுந் துறுத்துச் சால்பதங் குவைஇ நெடுந்தேர் களிற்றொடு சுரக்குங் கொடும்பூட் பல்வேல் முசுண்டை வேம்பி யன்னவென் 10. நல்லெழில் இளநலந் தொலையினும் நல்கார் பல்பூங் கானத்து அல்குநிழல் அசைஇத் தோகைத் தூவித் தொடைத்தார் மழவர் நாகா வீழ்த்துத் திற்றி தின்ற புலவுக்களந் துழைஇய துகள்வாய்க் கோடை 15. நீள்வரைச் சிலம்பின் இரைவேட் டெழுந்த வாள்வரி வயப்புலி தீண்டிய விளிசெத்து வேறுவேறு கவலைய ஆறுபரிந் தலறி உழைமான் இனநிரை யோடுங் கழைமாய் பிறங்கன் மலையிறந் தோரே. - நக்கீரனார். (சொ-ள்) 1. தோழி-, வாழி-, அம்ம - நான் கூறுவதனைக் கேட்பாயாக; 11-14. தோகை தூவி தொடை தார் மழவர் - மயிலின் சிறகாற் றொடுத்தலையுடைய மாலையை அணிந்த மழவர், பல்பூ கானத்து அல்கு நிழல் அசைஇ - பல பூக்களையுடைய காட்டில் சுருங்கிய நிழலில் தங்கி, நாகு ஆ வீழ்த்து - இளைய பசுவினைக் கொன்று, திற்றி தின்ற - அதன் ஊனைத் தின்ற இடமாய, புலவு களம் துழைஇய - புலால் வீசும் இடத்தினைத் துழாவிய, துகள்வாய்க் கோடை - புழுதியைத் தன்னிடத்தே கொண்ட மேல் காற்றின் ஒலியினை; 15-19. உழை மான் இனம் நிரை - ஆண்மானுடன் கூடிய கூட்டமாய மானினம், நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த -நீண்ட மூங்கிலையுடைய பக்க மலையில் இரையினைக் கொள்ளு தற்கு விரும்பி எழுந்த, வாள் வரி வய புலி தீண்டிய விளி செத்து - ஒளி பொருந்திய வரிகளையுடைய வலிய புலி (மானைப்) பற்றியதால் எழும் ஒலியாகக் கருதி, வேறு வேறு கவலைய ஆறு பரிந்து அலறி ஓடும் - வேறு வேறாய கவர்த்த நெறிகளில் வருந்தி அலறி ஓடாநிற்கும், கழை மாய் பிறங்கல் மலை இறந்தோர் - மூங்கிலால் மறையும் உயர்ந்த தோற்றமுடைய மலையைக் கடந்து சென்ற நம் தலைவர்; 2-10. வள் வார் விசி பிணித்து யாத்த - வளம் பொருந்திய வாரினால் இறுகப் பிணித்துக் கட்டிய, அரிகோல் தெண்கிணை இன்குரல் அகவுநர் - இழுத்து அடிக்கும் கோலினையுடைய தெளிந்த ஒலியின தாகிய கிணைப் பறையின் இனிய குரலை எழுப்பிப் பாடும் பாணர், இரப்பின் - இரந்து வேண்டின், நாடொறும் - நாள்தோறும், பொன் கோட்டுச் செறித்து - பொற் பூணினைக் கொம்பில் நெருங்கச் சேர்த்து, பொலம் தார் பூட்டி - பொன்னரி மாலையினைக் கழுத்தில் அணிவித்து, சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில் - சந்தனம் பூசிய உயர்ந்து அசையும் அழகிய திமிலினையுடைய, ஏறு முந்துறுத்து - ஏற்றினை முன்னர் நிறுத்தி, சால்பதம் குவைஇ - மிக்க உணவினைக் குவித்து, நெடு தேர் களிற்றொடு சுரக்கும் - நீண்ட தேரினை யானை யுடன் சேர அளிக்கும், கொடும் பூண் பல்வேல் முசுண்டை - வளைந்த பூணையும் பல வேற்படையையுமுடைய முசுண்டை என்பானது, வேம்பி அன்ன - வேம்பி எனும் ஊர் போன்ற, என் நல் எழில் இளநலம் தொலையினும் - எனது நல்ல அழகிய இளமைச் செவ்வி தொலைந்த வழியும், நல்கார் - வந்து அருள் செய்கின்றிலர்; (அங்ஙனமாகவும்); 1-2. பல்நாள் இ ஊர் அம்பல் எவனோ - பல நாளாக இவ்வூரார் செய்யும் அம்பல் என்னையோ? (முடிபு) தோழி! வாழி! மலை யிறந்தோர், முசுண்டை என்பானது வேம்பி அன்ன என் நலம் தொலையினும் நல்கார்; (அங்ஙனமாகவும்) பன்னாள் இவ்வூர் அம்பல் எவனோ? (வி-ரை) அரிகோல் - அரித்தெழும் ஓசையைச் செய்யும் கோல். பொன் - பொன்னாற் செய்த குப்பிக்கு ஆகுபெயர். சால் பதம் குவைஇ ஏறு முந்துறுத்து நெடுந்தேர் களிற்றொடு சுரக்கும் என மாறுக. கோடை - மேல் காற்று; ஈண்டு அதன் ஒலிக்கு ஆயிற்று. வயப்புலி தீண்டிய - வயப்புலி மானைத் தீண்டிய என ஒரு சொல் வருவித்துரைக்க. தீண்டிய என்னும் பெயரெச்சம் காரியப் பெயர் கொண்டது. (உ-றை) கோடையானது புலால் நாறும் களத்தைத் துழாவிப் புழுதியைத் தன்னிடத்துக் கொண்டதென்பது, அம்பற் பெண்டிர் பிறர் பழியாயவற்றையே ஆராய்ந்து தங்கண் கொள்ளுகின்றனர் என்றபடி. கோடையின் ஒலியை வயப்புலி மானைத் தீண்டிய ஒலியாகக் கருதி மானினம் அஞ்சுமென்றது, தலைவனாலாய மெய்வேறுபாட்டைத் தெய்வத்தால் ஆயதென்ற அன்னை அஞ்சுகின்றாள் என்றபடி. 250. நெய்தல் (தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகட்குக் குறைநயப்பக் கூறியது.) எவன்கொல் வாழி தோழி மயங்குபிசிர் மல்குதிரை யுழந்த ஒல்குநிலைப் புன்னை வண்டிமிர் இணர நுண்டாது வரிப்ப மணங்கமழ் இளமணல் எக்கர்க் காண்வரக் 5. கணங்கொள் ஆயமொடு புணர்ந்துவிளை யாடக் கொடுஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீக்கித் தாரன் கண்ணியன் சேரவந் தொருவன் வரிமனை புகழ்ந்த கிளவியன் யாவதும் மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன் அதற்கொண்டு 10. அரும்படர் எவ்வமொடு பெருந்தோள் சாஅய் அவ்வலைப் பரதவர் கானலஞ் சிறுகுடி வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வையில் கலங்கி இறைவளை நெகிழ்ந்த நம்மொடு துறையுந் துஞ்சாது கங்கு லானே. - செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார். (சொ-ள்) 1-5. தோழி-, வாழி-, மயங்கு பிசிர் மல்கு திரை உழந்த - நெருங்கிய துளிகள் மிக்க அலைகளால் வருந்திய, ஒல்கு நிலை புன்னை - அசையும் நிலையினையுடைய புன்னை மரத்தின், வண்டு இமிர் இணர நுண்தாது வரிப்ப - வண்டுகள் ஒலிக்கின்ற பூங்கொத்துக் களின் நுண்ணிய பூம்பொடிகள் உதிர்ந்து அழகு செய்ய, மணம் கமழ் இள மணல் எக்கர் - மணம் நாறும் மெத்தென்ற மணல் மேட்டில், காண்வர கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட - யாம் அழகு பொருந்தக் கூட்டம் கொண்ட ஆயத்தாரொடு கலந்து விளையாடாநிற்க (அப்பொழுது); 6-9. கொடுஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீக்கி - மொட்டினை யுடைய நீண்ட தேரினைத் தன் ஏவலாளரொடு நீக்கி நிறுத்தி, தாரன் கண்ணியன் - தாரினையும் கண்ணியையும் உடையன் ஆகி, சேரவந்து - அணுக வந்து, ஒருவன் - ஒரு தலைவன், வரி மனை புகழ்ந்த கிளவியன் - யாம் இயற்றிய வண்டல் மனையைப் பாராட்டிய சொல்லையுடையனாகி, யாவதும் மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன் - யாதொன்றும் மறுமொழி பெறாது மீண்டு சென்றனன்; 9-14. அதற்கொண்டு - அது முதல், அரும் படர் எவ்வமொடு - அரிய நினைவாலாய துன்பத்தால், பெரும் தோள் சாஅய் - பெரிய தோள் மெலிய, அ வலை பரதவர் கானல் அம் சிறுகுடி - அழகிய வலைகளையுடைய பரதவரது கடற்கரையிலுள்ள அழகிய சிற்றூரிலுள்ள, வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வையில் கலங்கி - கொடிய வாயினையுடைய பெண்டிர் தூற்றும் அலரால் உள்ளம் கலங்க, இறை வளை நெகிழ்ந்த நம்மொடு - முன்கையிடத்து வளை நெகிழப்பெற்ற நம்முடன், கங்குலான் - இராப்பொழுதிலே, துறையும் துஞ்சாது - கடற்றுறையும் துஞ்சு நின்றிலது; 1. எவன் கொல் - இதற்குக் காரணம் என்னையோ? (முடிபு) தோழி! வாழி! நாம் இள மணல் எக்கரிலே ஆயமொடு புணர்ந்து விளையாட, ஒருவன் தேரினை இளையரொடு நீக்கி அணுக வந்து, வரிமனை புகழ்ந்த கிளவியனாய் மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு பெருந்தோள் சாஅய், கவ்வையிற் கலங்கி, வளை நெகிழ்ந்த நம்மொடு கங்குலான் துறையும் துஞ்சாது; (இஃது) எவன் கொல்? (வி-ரை) மணம் - புன்னைப் பூவின் மணம். விளையாட என்னும் எச்சம், காலத்தையும் இடத்தையும் குறித்துநின்றது. தார், கண்ணி என்பவற்றின் பொருளைக் கடவுள்வாழ்த்துச் செய்யுளுரையிற் காண்க. `வரிமனை புகழ்ந்த கிளவியன் யாவதும், மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன்' என்றது, நம்பாலுள்ள அன்புமிகுதியால் நம் வாய்ச் சொல்லைக்கேட்க விரும்பி அவன் நம் வண்டல் மனையைப் புகழ்ந்தானாகவும், நாம் மறுமொழி யொன்றுங் கூறாது வன்கண்மையுடையேம் ஆயினமையின், வாளா பெயர்ந்து சென்றனன் என்றபடி. அதற்கொண்டு எவ்வமொடு தோள் சாஅய்க் கவ்வையிற் கலங்கி இறைவளை நெகிழ்ந்த நம்மொடு என்றமையால், நாம் உற்ற நோய்க்குக் காரணம், நம் உள்ளம் அவன் கண்ணதாக நாம் அவனைப் பிரிந்திருத்தலேயாம் என்பதும், நம்மொடு கங்குலானே துறையும் துஞ்சாது என்றமையால், அவனைப் பிரிந்த வருத்தத்தால் நாம் இரவிலே துயிலின்றியே வருந்துகின்றோம் என்பதும் கூறினாளாம். துறையும் துஞ்சாது என்றது, இரவிலே துயிலின்றியே விழித்திருக்கும் தமக்கு அக்கடலொலி இடையறாது தோன்றி மிக வருத்துதலின், நம்மைப் போல் இக்கடலும் துஞ்சு கின்றிலதே; இஃதென்னை என்றும் கூறினாளாம். எனவே, நாம் உற்ற நோயும் வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வையும் ஒழிய வேண்டின், அப் பெருந்தகையின் குறையினை நயந்து ஏற்றுக் கோடல் வேண்டும் எனத் தோழி குறைநயப்பக் கூறினாளாம் என்க. சாஅய், கலங்கி என்னும் எச்சங்களைச் சாஅய, கலங்க எனத் திரிக்க; திரியாது தோள் சாஅய், உள்ளங் கலங்கி, வளை நெகிழ்ந்த நம்மொடு எனச் சினைகளின் வினையை முதலொடு சார்த்தி யுரைத்தலுமாம். 251. பாலை (தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது.) தூதும் சென்றன தோளுஞ் செற்றும் ஓதி யொண்ணுதல் பசலையும் மாயும் வீங்கிழை நெகிழச் சாஅய்ச் செல்லலொடு நாம்படர் கூரும் அருந்துயர் கேட்பின் 5. 1நந்தன் வெறுக்கை யெய்தினும் மற்றவண் தங்கலர் வாழி தோழி வெல்கொடித் துணைகா லன்ன புனைதேர்க் கோசர் தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் 10. தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி யுருளிய குறைத்த இலங்குவெள் ளருவிய 2அறைவா யும்பர் 15. மாசில் வெண்கோட்டு அண்ணல் யானை வாயுள் தப்பிய அருங்கேழ் வயப்புலி மாநிலம் நெளியக் 1குத்திப் புகலொடு காப்பில வைகுந் தேக்கமல் சோலை நிரம்பா நீளிடைப் போகி 20. அரம்போழ் அவ்வளை நிலைநெகிழ்த் தோரே. - மாமூலனார். (சொ-ள்) 6. தோழி-, வாழி-, 1. தூதும் சென்றன - நாம் தலைவர்பாற் செலுத்திய தூதர்களும் சென்றுள்ளார்கள்; 3-4. வீங்கு இழை நெகிழச் சாஅய் - செறிந்த அணிகள் நெகிழ்ந்து விழ மெலிந்து, செல்லலொடு நாம் படர்கூரும் அருந்துயர் கேட்பின் - நாம் வருத்தத்துடன் நினைவு மிகும் அரிய துயரினை அத்தூதுவர் கூறக் கேட்பின்; 6-14. வெல்கொடி துனை கால் அன்ன புனை தேர்க் கோசர் - வெல்லும் கொடியினையுடைய விரையும் காற்றையொத்த அணி செயப்பெற்ற தேரினையுடைய கோசர் என்பார், தொல் முது ஆலத்து அரும்பணைப் பொதியில் - மிக்க தொன்மை வாய்ந்த ஆலமரத்தின் அரிய கிளைகளை யுடைய மன்றத்தே, இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க - இனிய ஓசையையுடைய முரசம் குறுந்தடியால் அடிக்கப் பெற்று ஒலிக்க, தெவ்முனை சிதைத்த ஞான்றை - பகைவரது போர் முனையை அழித்தகாலத்தே, மோகூர் பணியாமையின் - மோகூர் என்பான் பணிந்து வாராமையின், பகை தலைவந்த மா கெழு தானை வம்ப மோரியர் - அவன்பாற் பகை ஏறட்டுக் கொண்டவராகிய குதிரைகள் பொருந்திய சேனையினை யுடைய புதிய மோரியர் என்பார், புனை தேர் நேமி உருளிய குறைத்த - புனையப்பெற்ற தேர் உருளை தடையின்றிச் செல்லுதற்பொருட்டு உடைத்து வழியாக்கிய, இலங்கு வெள் அருவிய அறைவாய் உம்பர் - விளங்கும் வெள்ளிய அருவிகளையுடைய மலைநெறிக்கு அப்பாற்பட்ட; 15-19. மாசு இல் வெண்கோட்டு அண்ணல் யானை - குற்றமற்ற வெள்ளிய கொம்பினையுடைய பெருமை வாய்ந்த யானையானது, வாயுள் தப்பிய அருங்கேழ் வய புலி - தன் வாயினின்றும் தப்பிய அரிய நிறத்தையுடைய வலிய புலியை, மாநிலம் நெளியக் குத்தி - பெரிய நிலம் குழியக் குத்திக்கொன்று, புகலொடு காப்பில வைகும் தேக்கு அமல் சோலை - செருக்குடன் பாதுகாவல் இன்றித் தங்கி யிருக்கும் தேக்கு மரங்கள் நிறைந்த காடாகிய, நிரம்பா நீள் இடைப்போகி - தொலையாத நீண்ட இடத்திலே சென்று; 20. அரம் போழ் அவ்வளை நிலை நெகிழ்த்தோர் - அரத்தால் அறுத்து இயற்றப்பட்ட அழகிய வளையினை நிலையினின்றும் நெகிழச் செய்தோராகிய நம் தலைவர்; 5-6. நந்தன் வெறுக்கை எய்தினும் - நந்தன் என்பான் தொகுத்து வைத்த செல்வத்தையே எய்துவதாயினும், மற்று அவண் தங்கலர் - இனி அங்குத் தங்கியிரார் (விரைந்து வந்துறுவார்); 1-2. தோளும் செற்றும் - இனி நாம் தோளும் வளை செறியப் பெறுவேம், ஓதி ஒள் நுதல் பசலையும் மாயும் - நம் கூந்தல் சூழ்ந்த ஒளி தங்கிய நெற்றியின்கண் உள்ள பசலையும் மறைந்தொழியும். (முடிபு) தோழி! வாழி! தூதும் சென்றன, நீளிடைப் போகி நிலைநெகிழ்த்தோராகிய நம் தலைவர், நாம்படர் கூரும் அருந்துயர் கேட்பின் நந்தன் வெறுக்கை எய்தினும் அவண் தங்கலர்; அதனால் நாம் தோளும் செற்றும், நந்நுதற் பசலையும் மாயும். (வி-ரை) செற்றும் - செறியப்பெறும் என்றபடி; வளை செறியப் பெறும் என விரித்துரைக்க. செல்லல் - உடற்றுன்பமும், படர் கூர்தல் உளத்துன்பமும் ஆம். பாடலிபுரத்தை யாண்ட நந்த அரசர்களில் ஒருவன் மகாபதுமம் எனும் பேரெண் அளவு நிதியம் படைத்து அதனால் மகாபதும நந்தன் எனப் பெயர் சிறந்து விளங்கினா னென்று வட நூல்களால் அறியப்படுதலின், அவனது செல்வத்தைக் குறித்து, `நந்தன் வெறுக்கை எய்தினும்' என்றாள்: நந்தன் வெறுக்கை போல் வதோர் செல்வத்தை எய்தினும் என்றலுமாம். மோகூர் - மோகூர்க்கு மன்னனாகிய பழையன்; ஆகுபெயர். `மோகூர், வலம்படு குழூஉநிலை யதிர மண்டி'1 என்புழியும் ஆகுபெயராதல் காண்க. கோசர் என்பார் பழையனுடைய மோகூரில் வஞ்சினம் கூறிப் பொருதனர் என்பது, `பழையன் மோகூர் அவையகம் விளங்க, நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன'2 என்பதன் உரையால் அறியப் படும். மோகூர் மன்னன் கோசர்க்குப் பணியாமையினாலே கோசர்க்குத் துணையாய் வந்த மோரியர் என்க. மோரியர் தேர்நேமி யுருளும்படி மலையையறுத்து வழி செய்தமையை `ஆய்நலம் தொலைந்த மேனியும்'3 என்னும் அகப்பாட்டின் உரையிற் காண்க. வாயுள் தப்பிய - வாயினின்றும் தப்பிய; உருபு மயக்கம். 252. குறிஞ்சி (தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.) இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து வாள்வரி நடுங்கப் புகல்வந்து ஆளி உயர் நுதல் யானைப் புகர்முகத் தொற்றி வெண்கோடு புய்க்குந் தண்கமழ் சோலைப் 5. பெருவரை யடுக்கத்து ஒருவேல் ஏந்திக் தனியன் வருதல் அவனும் அஞ்சான் பனிவார் கண்ணேன் ஆகி நோயட எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன் யாங்குச் செய்வாங்கொல் தோழி ஈங்கைத் 10. துய்யவிழ் பனிமலர் உதிர வீசித் 1தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல் எறிதிரைத் திவலை தூஉஞ் சிறுகோட்டுப் பெருங்குளங் காவலன் போல அருங்கடி அன்னையுந் துயின்மறந் தனளே. - 2நக்கண்ணையார். (சொ-ள்) 9. தோழி-, 1-5. இடம் படுபு அறியா வலம்படு வேட்டத்து - தான் வீழ்த்தும் விலங்குகள் இடது பக்கத்தே வீழ்தலை அறியாத வெற்றி பொருந்திய வேட்டத்தினுடைய, வாள் வரி நடுங்க புகல்வந்து - புலி நடுங்கிட விருப்பங்கொண்டு (பாய்ந்து), ஆளி - ஆளியானது, உயர் நுதல் யானை புகர் முகத்து ஒற்றி - உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, வெண்கோடு புய்க்கும் - அதன் வெள்ளிய தந்தத்தினைப் பறிக்கும் (இடமாய), தண் கமழ் சோலை பெருவரை அடுக்கத்து - தண்ணெனக் கமழும் சோலையினை யுடைய பெரிய மலையின் சாரலின்கண்; 5-6. ஒரு வேல் ஏந்தி தனியன் வருதல் அவனும் அஞ்சான் - வேல் ஒன்றினையே கொண்டு தனியனாகி வருதலைத் தலைவனும் அஞ்சு கின்றிலன்; 7-8. பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட - நீர் ஒழுகும் கண்ணினேன் ஆகிப் பிரிதற்றுன்பம் வருத்த, எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன் - தனித்து இருத்தலை யானும் ஆற்றுகிலேன்; 9-14. அரு கடி அன்னையும் - கடிய காவல்கொண்ட நம் அன்னையும், ஈங்கை துய் அவிழ் பனி மலர் உதிர - இண்டையின் ஆர்க்கு விரிந்த குளிர்ந்த மலர் உதிருமாறு, வீசி தொழில் மழை பொழிந்த பானாள் கங்குல் - பெய்தற் றொழிலையுடைய மேகம் நீரினை வீசிச் சொரிந்த நடுநாள் இரவில், எறி திரைதிவலை தூஉம் - வீசும் அலைகளின் துளிகள் பரக்கும், சிறு கோட்டுப் பெருங் குளம் காவலன் போல - சிறிய கரையினையுடைய பெரிய குளத்தைக் காத்தல் செய்பவன்போலக் (காவல் செய்து), துயில் மறந்தனள் - தூங்குதலை மறந்துவிட்டனள்; யாங்குச் செய்வாம் - யாம் என் செய்வாம். (முடிபு) தோழி! பெருவரை யடுக்கத்து அவனும் தனியன் வருதல் அஞ்சான்; யானும் நோயட எமியேன் இருத்தலை ஆற்றேன்; அருங்கடி அன்னையும் பெருங்குளம் காவலன் போலத் துயில் மறந்தனள்; யாங்குச் செய்வாம். (வி-ரை) இடம்படுபு அறியா என்றமையால், புலி எப்பொழுதும் ஏனை விலங்குகளை வலப்பக்கத்தே வீழ்த்தி உண்ணும் இயல்பினது என்பது பெற்றாம். முன்னர், புலியின் சிறப்புக் கூறினமையால், வாள் வரியும் என்னும் சிறப்பும்மை தொக்கதெனக் கோடலுமாம். புகல் வரல் - விரும்புதல். ஆளி - யாளி. சிங்கம் புய்க்கும் அடுக்கம் எனவும் சோலை அடுக்கம் எனவும் கூட்டுக. புய்க்கும் என்னும் பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது: எமியேன் - தமியேன். தனியன் வருதல் அவனும் அஞ்சான், எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன் என்றமையால், யான் அவனது கூட்டத்தையே விரும்புதலுடையேன்; எனினும் ஏதம் மிக்க வரையடுக்கத்து அவன் தனியனாய் வருதலை அஞ்சுகின்றேன் என்றாளாம். தொழில் மழை - உழுதொழிற்கு உதவும் மழை என்றலுமாம். `மழைதொழி லுதவ'1 என்புழி நச்சினார்க்கினியர் இவ்விரு பொருளும் கொண்டமையுங் காண்க. தெழி மழை என்னும் பாடத்திற்கு - கனைக்கின்ற மழை யென்க. மலர் உதிர வீசிப் பொழிந்த என்றமையால், பெரும்பெயல் என்பது பெறப்படும். நள்ளிரவில் மழை பொழிய, அதனால் நீர் நிரம்பிய அலை மோதா நிற்க, அதன் துளிகள் கரையின் மேலிட மெங்கும் பரத்தலின் மெலிந்த கரையினையுடைய அப்பெரிய குளத்தைக் காப்பவன், அதன் கரை உடையாதபடி துயிலென்பது சிறிதுமின்றி அதனைச் சூழ்வந்து காப்பன் ஆகலின், அவ்வாறு நள்ளிரவிலும் துயிலாது தன்னைப் பல்காலும் நோக்குதலுடைய அன்னைக்குக் குளங் காவலனை உவமை கூறினாள். காவலன் துயிலின்றிக் குளத்தைக் காத்தல்போல, அன்னையும் துயிலின்றி என்னைக் காக்கின்றனள் எனத் தொழில் உவமம் கொள்க. எறி திரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப் பெருங்குளம் என்றமையால், தலைவியானவள் காமவெள்ளம் மிகுதலால், தனது நாண் நுணுகி நின்ற நிலையைக் குறித்தாளாம். `மிகுபெயல், உப்புச்சிறை நில்லா வெள்ளம் போல, நாணு வரை நில்லாக் காமம் நண்ணி'1 என்பது ஈண்டு அறியற்பாலது. அவனும் யானும், அன்னையும் என்னும் உம்மைகள் கட்டுரைச் சுவைபட நின்றன; எண்ணும்மையுமாம். கொல் - அசை. 253. பாலை (தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) வைகல் தோறும் பசலை பாயவென் மெய்யும் பெரும்பிறி தாகின்று ஒய்யென அன்னையும் அமரா முகத்தினள் அலரே வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி 5. நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன் பொன்மலி 1நெடுநகர்க் கூடல் ஆடிய இன்னிசை யார்ப்பினும் பெரிதே ஈங்கியான் சிலநாள் உய்யலென் போன்மெனப் பலநினைந்து ஆழல் வாழி தோழி வடாஅது 10. ஆரிருள் நடுநாள் 2ஏரா ஒய்யப் பகைமுனை யறுத்துப் பல்லினஞ் சாஅய்க் கணஞ்சால் கோவலர் நெடுவிளிப் பயிரறிந்து இனந்தலைத் தரூஉந் துளங்கிமில் நல்லேற்றுத் தழூஉப்பிணர் எருத்தந் தாழப் பூட்டிய 15. அந்தூம் பகலமைக் கமஞ்செலப் பெய்த துறுகாழ் வல்சியர் தொழுவறை வௌவிக் கன்றுடைப் பெருநிரை மன்றுநிறை தரூஉம் நேரா வன்தோள் வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாட் டுள்ளதை 20. அயிரியாறு இறந்தன ராயினும் மயரிறந்து உள்ளுப தில்ல தாமே பணைத்தோட் குரும்பை மென்முலை அரும்பிய சுணங்கின் நுசுப்பழித் தொலிவருந் தாழிருங் கூந்தல் மாக விசும்பில் திலகமொடு பதித்த 25. திங்கள் அன்னநின் திருமுகத்து ஒண்சூட்டு அவிர்குழை மலைந்த நோக்கே. - நக்கீரர். (சொ-ள்) 1-9. தோழி-, வாழி-, வைகல் தோறும் பசலை பாய - நாடோறும் பசலையானது படர்தலின், என் மெய்யும் ஒய் எனப் பெரும் பிறிது ஆகின்று - என் உடம்பும் விரைய இறப்பினை எய்தி வருகின்றது, அன்னையும் அமரா முகத்தினள் - அன்னையும் வெறுத்த முகத்தினள் ஆகின்றாள், அலரே - ஊர்க்கண் எழும் அலர்தான், வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி - பொற்பூவினை அணிந்த கொங்கரை அகற்றி, நாடு பல தந்த பசும் பூண் பாண்டியன்- அவர் தம் நாடு பலவற்றையும் கைப்பற்றிய பசும்பூண் பாண்டியன் என்பான், பொன் மலி நெடு நகர்க் கூடல் - பொன்மிக்க பெரிய நகரமாகிய கூடற்கண், ஆடிய இன் இசை ஆர்ப்பினும் பெரிது - அவ்வெற்றிக் களிப்பினால் ஆடிய இனிய ஒலியையுடைய ஆரவாரத் தினும் மிக்கதாகின்றது, ஈங்கு யான் சிலநாள் உய்யலென் போலும் என - இவ்விடத்தேயான் இனிச் சிலநாளும் உயிர் தரித்திரேன் போலும் என்று, பல நினைந்து ஆழல் - பலவும் எண்ணித் துயரில் அழுந்தாதே; 9-11. வடாஅது - வடக்கின்கண்ணதாகிய, ஆர் இருள் நடு நாள்- இயங்குதற்கரிய நள்ளிரவில், ஏர் ஆ ஒய்ய - அழகிய பசுக்களைக் கவர்ந்து வருதற்கு, பகை முனை அறுத்து - பகைப் புலத்தைக் கெடுத்து, பல் இனம் சாஅய் - பல இனங்களையும் ஓட்டியும், 12-20. நெடு விளி பயிர் அறிந்து - தங்கள் நெடிய கூப்பீட் டொலியை அறிந்து, இனம் தலைத் தரும் - பசுவினத்தைத் தம்மிடத்து அணைத்துக் கொடுவரும், துளங்கு இமில் நல் ஏற்று - அசையும் முசுப்பினையுடைய நல்ல ஏறுகளின், தழூஉப் பிணர் எருத்தம் - சருச்சரை கொண்ட கழுத்தில், தாழப் பூட்டிய - தொங்கப் பூட்டியுள்ள, அம் தூம்பு அகல் அமை கமம் செல பெய்த - அழகிய உட்டொளையினை யுடைய அகன்ற மூங்கிற் குழாயில் நிறைவு எய்துமாறு பெய்த, துறு காழ் வல்சியர் - செறிவுமிக்க உணவினராகிய, கணம் சால் கோவலர்- கூட்டம் மிக்க கோவலரது, தொழு அறை வௌவி - தொழுவாகிய அறையினைக் கவர்ந்தும், கன்று உடை பெருநிரை மன்று நிறை தரூஉம் - கன்றுகளையுடைய ஆனிரையை மன்றுகள் நிறையுமாறு கொணரும், நேரா வன்தோள் வடுகர் பெருமகன் - ஒப்பில்லாத வலிய தோளினையுடைய வடுகர் தலைவனாகிய, பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை - பெரிய புகழினையுடைய எருமை என்பானது நல்ல நாட்டின்கண் உள்ளதாகிய, அயிரியாறு இறந்தனர் ஆயினும் - அயிரி என்னும் யாற்றினைக் கடந்து (நம் தலைவர்) சென்றனர் ஆயினும்; 21-26. பணை தோள் - மூங்கில்போன்ற தோளினையும், குரும்பை மெல் முலை - குரும்பை போன்ற மெல்லிய முலையினையும், அரும்பிய சுணங்கின் - அரும்பிய சுணங்கினையும், நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் - இடையினை வருத்தித் தழைத்த தாழ்ந்த கரிய கூந்தலையும் உடைய, நின் - நினது, மாக விசும்பில் திலகமொடு பதித்த திங்கள் அன்ன திருமுகத்து - மாகமாகிய வானில் உள்ள இடையே திலகம் பதித்த திங்கள் போன்ற அழகிய முகத்தி லுள்ள, ஒண்சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கு - ஒள்ளிய மத்தக மணி யமைந்த விளங்குகின்ற காதணியாகிய குழையொடு பொருத பார்வையினை; 20-21. தாம் மயர் இறந்து உள்ளுப - அவர் மறவியற்று என்றும் நினையாநிற்பர். (முடிபு) தோழி! வாழி! மெய்யும் பெரும் பிறிது ஆகின்று; அன்னையும் அமரா முகத்தினள்; அலர் பசும்பூண் பாண்டியன் கூடல் ஆடிய ஆர்ப்பினும் பெரிது; யான் உய்யலென் போலும் என நினைந்து ஆழல்; (நம் தலைவர்) வடாஅது எருமை நன்னாட்டு உள்ளதாகிய அயிரியாறு இறந்தனராயினும், நின் திருமுகத்து அவிர்குழை மலைந்த நோக்குத் தாம் மயர் இறந்து உள்ளுவர். சாய், வௌவிப் பெருநிரை தரூஉம் எருமை என்க. (வி-ரை) வாடாப்பூ - பொன்னானியன்ற பூவிற்கு வெளிப் படை. பூவென்றது வெட்சி முதலிய போர்ப்பூவினை. ஆடிய - வெற்றிக் களிப்பால் ஆடிய என்க. ஆடிய ஆர்ப்பு - ஆடியகாலை எழுந்த ஆர்ப்பு. இன் இசை -இனிய இயங்களின் ஓசையுமாம். போன்ம் - போலும்; ஒப்பில் போலி. வடாஅது நன்னாடு எனக் கூட்டுக. பகை முனை என்றது, கரந்தையாரது போர் முனை. பல்இனம் என்புழிப் பன்மை, மிகுதியை உணர்த்திற்று. தழூஉப் பிணர் - பிணர் தழூஉ என மாறுக; தழுவுதல்; பொருந்துதல். வல்சியராகிய கோவலரது தொழு அறை என்றியைக்க. கோவலர் எருத்தின் கழுத்தில் மூங்கிற்குழாயில் உணவினைப் பெய்து பூட்டியிருப்பர் என்பது `கோவலர், மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி, செவியடை தீரத் தேக்கிலைப் பகுக்கும், புல்லி நன்னாடு'1 எனப் பிறாண்டும் கூறப்பட்டது. நிறை - நிறைய. உள்ளதை - ஐ பகுதிப்பொருள் விகுதி. மாக விசும்பு - இருபெயரொட்டு. திலகமொடு பதித்த திங்கள் அன்ன என்றது, இல்பொருள் உவமை. திலகமொடு - வேற்றுமை மயக்கம். சூடு - குழையிற் பதித்த மத்தக மணி. 254. முல்லை (வினைமுற்றி வந்தெய்திய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.) நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற் செம்முது செவிலியர் 2பலபா ராட்டப் பொலன்செய் கிண்கிணி நலம்பெறு சேவடி மணன்மலி முற்றத்து நிலம்வடுக் கொளாஅ 5. மனையுறை புறவின் செங்கால் சேவல் துணையொடு குறும்பறை பயிற்றி மேற்செல விளையாடு ஆயத் திளையோர்க் காண்டொறும் நம்வயின் நினையும் நன்னுத லரிவை புலம்பொடு வதியும் கலங்கஞர் அகல 10. வேந்துறு தொழிலொடு வேறுபுலத்து அல்கி வந்துவினை முடித்தன மாயின் நீயும் பணைநிலை முனைஇய வினைநவில் புரவி இழையணி நெடுந்தேர் ஆழி யுறுப்ப நுண்கொடி மின்னிற் பைம்பயிர் துமியத் 15. தளவம் 1முல்லையொடு தலைஇத் தண்ணென வெறிகமழ் கொண்ட வீததை புறவின் நெடியிடை பின்படக் கடவுமதி என்றியான் சொல்லிய 2அளவை நீடாது வல்லெனத் தார்மணி மாவறி வுறாஅ 20. ஊர்நணித் தந்தனை உவகையாம் பெறவே. - 3மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார். (சொ-ள்) 1-9. (பாக!), நரை விராவுற்ற நறுமெல் கூந்தல் - நரைமயிர் கலப்புற்ற நறிய மெல்லிய கூந்தலையுடைய, செம்முது செவிலியர் - செவ்விய முதிய செவிலித் தாயர், பல பாராட்ட - தன்னைப் பலவாறு பாராட்டிக் கூற, பொலன் செய் கிண்கிணி நலம்பெறு சே அடி - பொன்னாற் செய்யப்பெற்ற சதங்கையை அணிந்த அழகிய அடியால், மணல் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாஅ - மணல் பரந்த முற்றத்தே நிலம் வடுக்கொள்ளுமாறு செய்து, மனை உறை புறவின் செங்கால் சேவல் - மனையிற் றங்கி யுறையும் சிவந்த காலினையுடைய புறவின் சேவல், துணையொடு குறும் பறை பயிற்றி - தன் பெடையொடு குறுகக் குறுகப் பறத்தலைச் செய்து, மேல்செல - பின்பு மேலே எழுந்திட, விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும் - விளையாடும் தன் தோழியராய இளையரைக் காணுந்தொறும், நம்வயின் நினையும் - நம்பால் நினைவு கொள்ளும், நல் நுதல் அரிவை - அழகிய நெற்றியினை யுடைய நம் தலைவி, புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல - தனிமையொடு தங்கியிருக்கும் மிக்க துன்பம் நீங்குமாறு; 10-11. வேந்து உறு தொழிலொடு - வேந்தற்கு உற்றுழி உதவும் வினையினால், வேறு புலத்துவந்து அல்கி - இவ் வேற்று நாட்டின் கண் வந்து தங்கி, வினைமுடித்தனம் ஆயின் - மேற்கொண்ட வினையினை முடித்துளோம் ஆகலின்; 11-18. நீயும், பணை நிலை முனைஇய வினைநவில் புரவி - பந்தியில் நிற்றலை வெறுத்த போர்த்தொழிலிற் பயின்ற குதிரை பூட்டிய, இழை அணி நெடு தேர் ஆழி - முத்தாரம் முதலியன அணிந்த நீண்ட தேர் உருளை, நுண் கொடி மின்னில் உறுப்ப - நுண்ணிய மின்னுக் கொடி போன்று செலுத்தப் பெறுதலின், பைம் பயிர் துமிய - வழியிலுள்ள பசிய பயிர்கள் அறுபட்டு விலக, தளவம் முல்லையொடு தலைஇ - செம்முல்லை வெண்முல்லையுடன் கூடி, தண் என வெறி கமழ்கொண்ட வீ ததை புறவின் - தண்ணென்று நறுமணம் கமழும் மலர் செறிந்த காட்டினது, நெடிஇடை பின்படக் கடவுமதி என்று - நீண்டவழி பின்னுறச் செலுத்துவாய் என்று, யான் சொல்லிய அளவை - யான் கூறிய மாத்திரையானே; 18-20. நீடாது - தாழ்க்காது, உவகை யாம் பெற - யாம் மகிழ்வு பெறும் பரிசு, தார் மணி மா அறிவுறாஅ - மணிமாலை யணிந்த குதிரையின் உள்ளம் அறிந்து, வல் என - விரைய, ஊர் நணி தந்தனை - ஊர்க்கு அணித்தாகத் தேரினைக் கொண்டு வந்தனை; (வாழியர்.) (முடிபு) பாக! வந்து வினை முடித்தனமாயின், அரிவை புலம் பொடு வதியும் கலங்கஞர் அகல, நெடுந்தேரினைப் புறவின் நெடியிடை பின்படக் கடவுமதி என்று யான் சொல்லிய அளவை யாம் உவகை பெற வல்லென ஊர் நணித்தந்தனை (வாழியர்.) (வி-ரை) கிண்கிணி நலம்பெறு சேவடி - கிண்கிணியானது அழகு பெறுதற்கு ஏதுவாகிய சேவடி என்றுமாம் `குழைக்கு விளக்காகிய ஒண்ணுதல் பொன்னின், இழைக்கு விளக்காகிய........ மகளிர்'1 என்பது காண்க. வடுக்கொளாஅ - வடுக்கொள்ள என்பது திரிந்து நின்றது; வடுச்செய்து என்றுமாம். பாராட்ட விளையாடும், நிலம்வடுக்கொள விளையாடும், மேற்செல விளையாடும் எனத் தனித்தனி கூட்டுக. மணல் முற்றத்தே இளையோர் ஓடி விளையாடு தலின் அங்குள்ள சேவலும் பெடையும் மேலெழுந்து செல்வ வாயின. அங்ஙனம். புறாக்கள் சேவலும் பெடையுமாக மேற்செல்ல, இளம் பருவமுடைய மகாரும் மகளிரும் விளையாடும் மகிழ்ச்சிமிக்க விளையாட்டு, கூடியிருப்பவர்க்கே இன்பம் விளைக்குமாகலின், நாம் தலைவருடன் கூடி இவ்வின்பினை நுகரப் பெற்றிலேமென்று தலைவி நம்மை நினைந்து வருந்துவள் எனக் கருதி, அவ் வருத்தம் நீங்க நீ தேரினை விரைந்து கடவுதி என்று தலைவன் பாகற்குக் கூறினான் என்க. வினை நவில் புரவி - குறிப்பறிந்து செல்லும் தொழில் பயின்ற புரவி என்றுமாம். பணை நிலை முனைஇய என்றதனால், அதுவும் விரைந்து சேறற்கண் மனவெழுச்சியுடையதாதல் கூறிய வாறாயிற்று. உறுப்ப - ஊடறுத்துச் செல்ல. நெடிய இடை என்பது நெடியிடை என விகாரமாயிற்று. மா - குதிரையின் உள்ளம். அறிவுறாஅ - அறிந்து தந்தனையாகலின், வாழி என விரித்துரைக்க. 255. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகள் ஆற்றாமை மீதூரத் தோழிக்குச் சொல்லியது.) உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம் புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ இரவும் எல்லையும் அசைவின் றாகி விரைசெலல் இயற்கை வங்கூ ழாட்டக் 5. கோடுயர் திணிமணல் அகன்துறை நீகான் மாட வொள்ளெரி மருங்கறிந் தொய்ய ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல கழியா மையே அழிபட ரகல வருவர் மன்னால் தோழி தண்பணைப் 10. பொருபுனல் வைப்பின் நம்மூ ராங்கண் கருவிளை முரணிய தண்புதற் பகன்றைப் பெருவள மலர அல்லி தீண்டிப் பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல் கூதள மூதிலைக் கொடிநிரைத் தூங்க 15. அறனின் றலைக்கும் ஆனா வாடை கடிமனை மாடத்துக் கங்குல் வீசித் திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய நிரைவளை யூருந் தோளென உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே. - மதுரை மருதனிளநாகனார். (சொ-ள்) 9. தோழி-, 1-7. உலகு கிளர்ந்தன்ன - உலகு புடைபெயர்ந்தா லொத்த, உருகெழு வங்கம் - அச்சம் தோன்றும் நாவாய், புலவு திரை பெருங் கடல் நீர் இடைப்போழ - புலால் வீசும் அலைகளையுடைய பெரிய கடலின் நீரை இடையே பிளந்து செல்ல, இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி -இரவும் பகலும் ஓரிடத்தும் தங்குதல் இன்றி, விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட - விரைந்து செல்லும் இயற்கையினதாய காற்று அசைத்துச் செலுத்த, நீகான் - நாவாய் ஓட்டுவான், கோடு உயர் திணி மணல் அகன் துறை - கரை உயர்ந்த செறிந்த மணலையுடைய அகன்ற துறைக்கண், மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய - மாடத்தின் மீதுள்ள ஒள்ளிய விளக்கினால் இடம் அறிந்து செலுத்த, ஆள்வினைப் பிரிந்த காதலர் - பொருளீட்டும் முயற்சிபற்றி நம்மைப் பிரிந்து சென்ற நம் தலைவர்; 9-19. தண் பணைப் பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்- குளிர்ந்த மருத நிலமாய நீர்மோதும் நாட்டிலுள்ள நமது ஊரிடத்தே, கருவிளை முரணிய தண் புதல் பகன்றை - கருவிளையின் பூவினொடு மாறுபட்ட குளிர்ந்த பகன்றைச் செடியின், பெருவளம் மலர அல்லி தீண்டி - மிக்க செழுமையுடைய மலர்களின் அகவிதழை அசைத்து, பலவுக் காய்ப்புறத்த பசும் பழப் பாகல் - பலாக்காய் போலும் புறத்தினையுடைய அழகிய பழத்தினையுடைய பாகற்கொடிகள், கூதள முதுஇலைக் கொடி நிரை தூங்க - கூதாளியின் முதிய இலைகளையுடைய கொடிகளின் கூட்டத்திற்கிடந்து அசையும்படி செய்து, அறன் இன்று அலைக்கும் ஆனாவாடை - நம்மை அறமில்லாது வருத்தும் நீங்காத வாடை, கடி மனை மாடத்துக் கங்குல் வீசி - காவல் பொருந்திய மாடமாய மனையில் இரவெல்லாம் வீசலின், திருந்து இழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய - திருந்திய அணிகள் சோரப் பெரிய அழகு கெட, நிரை வளை ஊரும் தோள் என - தோளானது வரிசையாகவுள்ள வளைகள் நெகிழ்ந்து விழப்பெறும் என்னும், உரையொடு செல்லும் அன்பினர் பெறின் - உரை கொண்டு தூது செல்லும் அன்புடையாரை நாம்பெறுவோமாயின்; 7-9. அழிபடர் அகல - நமது மிக்க துன்பம் நீங்க, நாள் பல கழியாமை - பலநாள் தாழ்க்காது, வருவர் - விரைந்து வந்துறுவர், மன் - அங்ஙனம் சென்றுரைப்பார் இலரே; (என் செய்வாம்.) (முடிபு) தோழி! ஆள்வினைப் பிரிந்த நங் காதலர், வாடை, கடிமனை மாடத்துக் கங்குல் வீச, இழை நெகிழ்ந்து கவின் சாய, தோள் வளையூரும் என உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறின், நாள் பல கழியாமையே, அழிபடர் அகல வருவர் மன். (வி-ரை) உலகு கிளர்ந்தன்ன வங்கம் என்பது வங்கத்தின் பெருமை கூறியபடி; உலகு புடை பெயர்வது போலும் புடை பெயர்ச்சியையுடைய வங்கம் என்க. வங்கூழ் - காற்று. மாட ஒள்ளெரி. கலங்கள் துறையறிந்து வருதற் பொருட்டு உயரிய மாடத்தின்மீது அமைக்கப்பெற்ற ஒள்ளிய விளக்கு. இது கலங்கரை விளக்கம் எனவும்படும். வங்கம் நீகான் ஒய்ய ஆள்வினைப் பிரிந்த காதலர் என்றமையான், பொருளீட்டுதற்குக் கலத்திற் பிரிந்த தலைவன் என்பதாயிற்று. பகன்றையின் மலர் வெண்ணிறமுடைய தாகலின் கருவிளை முரணிய பகன்றை மலர் எனப்பட்டது. பகன்றை - சிவதை. தூங்க - தூங்கச் செய்து என விரித்துரைக்க. வீசி, வீச என்பதன் திரிபு. வீச என்னும் பாடமே கொள்ளுதலும் ஆம். என உரையொடு - எனவுரைக்கும் உரையொடு என விரித்துரைக்க. உரையொடு செல்லும் அன்பினர் என்பது, சென்று உரைக்கும் அன்பினர் என்றபடி. செல்லும் அன்பினர்ப் பெறினே என்றது தோழி அங்ஙனம் செய்திலள் என்பதனைக் குறிப்பிற் கூறியவாறாம். (மே-ள்) `முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை'1 என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுள் கலத்திற் பிரிவு தலைமகளை யொழியப் பிரிந்தமைக்கு உதாரணமென்றனர், இளம். `இருவகைப் பிரிவும்'1 என்னுஞ் சூத்திரத்து, இச்செய்யுள் தூது விடுவது காரணமாக உரைத்தது எனவும், இம் மணிமிடை பவளத்துப் பின்பனி வந்தவாறும் நண்பகல் கூறாமையும் அவர் குறித்த காலம் இதுவென்பது தோன்றியவாறும் காண்க எனவும், `ஏவன் மரபின்'2 என்னுஞ் சூத்திரத்து, இப் பாட்டுள் வணிகன் தலைவனாகவும் கொள்ளக் கிடத்தலின், தலைவியும் அவ்வருணத் தலைவியாமென் றுணர்க எனவும் கூறினர், நச். 256. மருதம் (தோழி தலைமகற்கு வாயின் மறுத்தது.) பிணங்கரில் வள்ளை நீடிலைப் பொதும்பின் மடிதுயின் முனைஇய வள்ளுகிர் யாமை நொடிவிடு கல்லிற் போகி அகன்றுறைப் பகுவாய் நிறைய நுங்கிற் கள்ளின் 5. 3உகுவா ரருந்து மகிழ்பியங்கு நடையொடு தீம்பெரும் பழன முழக்கி அயலது ஆம்பன் மெல்லடை யொடுங்கும் ஊர 4பொய்யால் அறிவெனின் மாய மதுவே கையகப் பட்டமை யறியாய் நெருநை 10. மையெழில் உண்கண் மடந்தையொடு வையை ஏர்தரு புதுப்புனல் உரிதினி நுகர்ந்து பரத்தை யாயங் கரப்பவும் ஒல்லாது கவ்வையா கின்றாற் பெரிதே காண்டகத் தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக் 15. கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த் திருநுதற் குறுமக ளணிநலம் வவ்விய அறனி லாளன் அறியே னென்ற திறனில் வெஞ்சூ ளறிகரி கடாஅய் முறியார் பெருங்கிளை செறியப் பற்றி 20. நீறுதலைப் பெய்த ஞான்றை வீறுசா லவையத்து ஆர்ப்பினும் பெரிதே. - மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார். (சொ-ள்) 1-7. பிணங்கு அரில் வள்ளை நீடு இலை பொதும் பில் - பின்னிய தூறுகளையுடைய வள்ளைக்கொடியின் நீண்ட இலைச் செறிவில், மடிதுயில் முனைஇய வள் உகிர் யாமை - மடிந்து கிடக்கும் துயிலை வெறுத்த வலிய நகத்தினையுடைய யாமை, நொடி விடு கல்லில் போகி - ஒலித்தல் செய்கின்ற பரல்களின் வழியே சென்று, அகன் துறை - அகன்ற நீர்த்துறைக்கண்ணே, பகுவாய் நிறைய - பிளந்த வாய் நிறைந்திட, நுங்கின் கள்ளின் உகுவார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு - பனங்கள்ளின் அருந்துங்கால் சிந்திய ஒழுக்கினை உண்ட களிப்புடன் செல்லும் நடையொடு, தீம்பெரும் பழனம் உழக்கி - இனிய பெரிய வயல்களைக் கலக்கி, அயலது ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர - அதன் அயலதாகிய ஆம்பலின் மெல்லிய இலைகட்குள்ளே ஒடுங்கிக் கிடக்கும் ஊரனே! 8-13. பொய்யால் - நீ பொய் கூறாதே, நின் மாயம் அறிவென் - நின் வஞ்சனையை அறிவேன், அது கையகப்பட்டமை அறியாய் - நின் பரத்தமை வெளிப்பட்டமையை நீ அறிந்திலை, நெருநை - நேற்று, மை உண் எழில் கண் மடந்தையொடு - மையுண்ட அழகிய கண்களையுடைய பரத்தையுடன், வையை ஏர்தரு புதுப்புனல் - வையையின் அழகு பொருந்திய புதிய புனலில், உரிதினில் நுகர்ந்து - உரிமையுடன் இன்பம் நுகர்ந்திட, பரத்தை ஆயம் கரப்பவும் - அதனைப் பரத்தையர் கூட்டம் ஊரார் அறியாமல் மறைக்கவும், ஒல்லாது கவ்வை ஆகின்று பெரிது - மறைக்க முடியாமல் மிகவும் அலர் எழுகின்றது; (அவ் வலர்தான்) 13-15. காண்தக தொல் புகழ் நிறைந்த - அழகு விளங்க பழைமை யான புகழ் மிக்க, பல் பூ கழனி - பலவகையான பூக்கள் நிறைந்த வயல்களையும், கரும்பு அமல் படப்பை - கரும்பு மிக்க தோட்டங் களையுமுடைய, பெரும் பெயர்க் கள்ளூர் - மிக்க சிறப்பு வாய்ந்த கள்ளூர் என்னும் ஊரின்கண்; 16-21. திரு நுதல் குறுமகள் அணிநலம் வவ்விய - அழகிய நெற்றியினையுடைய இளையாள் ஒருத்தியின் அழகிய நலத்தினைக் கவர்ந்துண்ட, அறன் இலாளன் அறியேன் என்ற திறன் இல் வெம்சூள் -அற நெறி நில்லா னொருவன் பின்பு தான் அவளை அறியேன் என்று கூறிய நீதியில்லாத கொடிய சூளினை, அறிகரி கடாஅய் - அவர்தம் கூட்டம் உணர்ந்த சான்றாவாரை வினவி உணர்ந்து, (அவனை), முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி - (அவையத்தார்) தளிர்கள் பொருந்திய பெரிய மரத்தின் கிளையில் இறுகப்பிணித்து, நீறு தலைப் பெய்த ஞான்றை - நீற்றினை அவன் தலையிற் பெய்த காலத்தே, வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிது - சிறப்பு மிக்க அவையின்கண் எழுந்த ஆரவாரத்தினும் பெரிதாயிற்று. (முடிபு) ஊர! பொய்யால்! அறிவன் நின் மாயம்! அதுவே கையகப்பட்டமை அறியாய்! நெருநை மடந்தையொடு வையைப் புனல் உரிதினில் நுகர்ந்து; பரத்தை ஆயம் கரப்பவும் ஒல்லாது கவ்வையாகின்று; அது கள்ளூர் அறனிலாளனை, வெஞ்சூள் அறிகரி கடாஅய், கிளைபற்றி; நீறுதலைப் பெய்த ஞான்றை அவையத்து ஆர்ப்பினும் பெரிது. (வி-ரை) நொடி விடுதல் - வெடித்தல்; நொடிவிடு கல்லிற் போகி என்பதற்குச் சிறார்கள் நீரிலே தத்திச் செல்லுமாறு விடுகின்ற வட்டக்கல்போலச் சென்று என்றலுமாம். நுங்கிற்கள் - பனங்கள் - உகுவார் - கள் சிதறுண்டு ஒழுகுவது, `மேற்றுறைக் கொளீஇய கழாலிற் கீழ்த்துறை, உகுவார் அருந்தப் பகுவா யாமை'1 எனப் பின் வருவதுங் காண்க. நிறைய அருந்தும் எனக் கூட்டுக. அருந்தும் என்னும் பெயரெச்சம் காரணப்பொருட்டு. கையகப் பட்டமை என்றது தெளிய அறியப்பட்டமையை உணர்த்திற்று. குறுமகள் அணிநலம் வவ்விய அறனிலாளன் அறியேன் என்ற திறனில் வெஞ்சூள் என்றமையால் தீவினையாளன் ஒருவன் ஓர் இளமகளின் நலத்தை நுகர்ந்து பின் அவளைக் கைவிடுத்து, அவளது முறையீட்டினைக் கேட்டு அவனை உசாவிய சான்றோர் முன், யான் அவளை அறிந்திலேன் எனப் பொய்ச் சூள் கூறினான் என்றவாறாயிற்று. வெஞ் சூள் அறிகரி கடாஅய்ச் செறியப் பற்றி, நீறு தலைப் பெய்த என்றமையால், சான்றோர்கள் கரியாவார் கூற்றினாலே உண்மை தெளிந்து அவனை அவ்வாறு ஒறுத்தனர் என்பதாயிற்று. மூன்று கவராய கிளைகளின் நடுவே வைத்துப் பிணித்தலும் நீறுதலைப் பெய்தலும் அஞ்ஞான்று குற்றத்திற்கு விதிக்கும் தண்டங்களாம் என்க. (உ-றை) வள்ளை நீடிலைப் பொதும்பில் துயில்முனைஇய யாமை, கள்ளின் உகுவார் அருந்து மகிழ்பியங்கு நடையொடு பழனம் உழக்கி, அயல ஆம்பல் மெல்லடை ஒடுங்கும் ஊர என்றது, நின் மனையிடத்துத் துயிறலை வெறுத்துச் சென்று, பரத்தையர் சேரியில் அவர் இன்பம் நுகர்ந்த பெருமிதத்தோடு, இற்பரத்தைபாற் சென்று தங்குவை என்றவாறாம். 257. பாலை (உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது.) வேனிற் பாதிரிக் கூனி மாமலர் நறைவாய் வாடல் நாறும் நாள்சுரம் அரியார் சிலம்பின் சீறடி சிவப்ப எம்மொ டொராறு படீஇயர் யாழநின் 5. பொம்மல் ஓதி பொதுள வாரி அரும்பற மலர்ந்த ஆய்பூ மராஅத்துச் சுரும்புசூழ் அலரி தைஇ வேய்ந்தநின் தேம்பாய் கூந்தல் குறும்பல மொசிக்கும் வண்டுகடிந் தோம்பல் தேற்றாய் அணிகொள 10. நுண்கோல் எல்வளை தெளிர்க்கும் முன்கை மெல்லிறைப் பணைத்தோள் விளங்க வீசி வல்லுவை மன்னால் நடையே கள்வர் பகைமிகு கவலைச் சென்னெறி காண்மார் மிசைமரஞ் சேர்த்திய கவைமுறி யாஅத்து 15. நாரரை மருங்கின் நீர்வரப் பொளித்துக் களிறுசுவைத் திட்ட கோதுடைத் ததரல் கல்லா உமணர்க்குத் தீமூட் டாகும் துன்புறு தகுந ஆங்கண் புன்கோட்டு அரிலிவர் புற்றத்து அல்கிரை நசைஇ 20. வெள்ளரா மிளிர வாங்கும் பிள்ளை எண்கின் மலைவயி னானே. - உறையூர் மருத்துவன் தாமோதரனார். (சொ-ள்) 12-21. (குறுமகள்) கள்வர் பகை மிகு கவலை செல்நெறி காண்மார் - ஆறலை கள்வர்களுடைய பகை மிக்க கவர்த்த நெறிகளில் வம்பலர் தாம் செல்லுதற்குரிய நெறியிதுவெனக் காணும் பொருட்டு, மிசைமரம் சேர்த்திய கவை முறி யாஅத்து - மேலிடத்தே ஏணி சார்த்தப்பெற்ற கவர்த்த தளிர்களையுடைய யா மரத்தின், நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து - நாரினையுடைய அடிமரத்தில் நீர் வரும்படி உரித்து, களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல் - களிற்றியானை சுவைத்துப் போகட்ட சக்கையாகிய சுள்ளிகள், கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும் - கல்லாத உப்பு வாணிகர்க்குத் தீமூட்டுத் துரும்பு ஆகும், துன்பு உறு தகுந ஆங்கண் - துன்பம் உறத்தகுவன ஆகிய அவ்விடங்களில், புன் கோட்டு அரில் இவர் புற்றத்து- புல்லிய புடைகளையுடைய சிறு தூறுகள் படர்ந்த புற்றின்கண், அல்கு இரை நசைஇ - இராப்பொழுதில் உண்ணும் இரையினை விரும்பி, வெள்அரா மிளிர வாங்கும் - வெள்ளிய பாம்புகள் பிறழும்படி கையால் வவ்வும், பிள்ளை எண்கின் மலைவயின் ஆன - குட்டிக் கரடிகளையுடைய மலையினிடத்தே; 1-12. பாதிரி நறைவாய் கூனி மாமலர் வாடல் நாறும் - பாதிரியின் தேன் பொருந்திய வளைவையுடைய சிறந்த பூக்களின் வாடல் நாறுகின்ற, வேனில் நாள் - வேனிற்காலத்தின் பகற்பொழுதில், சுரம் - சுரத்தின் கண்ணே, அரி ஆர் சிலம்பின் சிறு அடி சிவப்ப - பரற்கல் பொருந்திய சிலம்பினை அணிந்த நின் சிறிய அடிகள் சிவக்க, எம்மொடு ஓர் ஆறு படீஇயர் - எம்முடன் ஒரு நெறியில் பொருந்தி வரற்கு, பொம்மல் ஓதி பொதுள வாரி- பொலிவுற்ற கூந்தலை நெருங்க வாரி, அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச் சுரும்பு சூழ் அலரி - அரும்பு இல்லையாக மலர்ந்த அழகி பூக்களையுடைய வெண்கடம்பின் வண்டுகள் சூழ்ந்த மலர்களை, தைஇ வேய்ந்த - தொடுத்துச் சூடிய, நின் தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும் வண்டு - நினது தேன் பொருந்திய கூந்தலில் குறியனவாய்ப் பலவாக மொய்க்கும் வண்டுகளை, கடிந்து ஓம்பல் தேற்றாய் - கடிந்து பாதுகாத்தலையும் அறியாயாய், அணிகொள - அழகு பொருந்த, நுண்கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை - நுண்ணிய திரண்ட ஒளி பொருந்தியவளை ஒலிக்கும் முன் கையையுடைய, மெல் இறை பணைதோள் விளங்க வீசி - மெல்லிய சந்தினையுடைய மூங்கில் போலும் தோள்களை விளக்கமுற வீசி, நடை வல்லுவை மன் - பெரிதும் நடத்தல் வன்மையுடையை ஆகின்றாய். (முடிபு) (குறுமகள்!) வேனில் நாள் சுரம் சீறடி சிவப்ப எம்மொடு ஓராறு படீஇயர், ஓதி பொதுள வாரி அலரி தைஇ வேய்ந்த நின் கூந்தல் மொசிக்கும் வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய்; பணைத்தோள் விளங்க வீசி நடைவல்லுவை மன். (வி-ரை) கொடுமை மிக்க மலையின் கண்ணதாகிய சுரத்திலே வெம்மை மிக்க வேனில் நாளில் எம்முடன் ஒருபெற்றியே செல்லுதலே விரும்பிச் சீறடி சிவப்ப வண்டு கடிந்தோம்புதல் தேற்றாய்; பணைத் தோள் விளங்க வீசி நடத்தல் வன்மையை யுடையையாயினாய்; குறுமகளே! நின் அன்பிருந்தவாறு என்னே! என்று தலைவன் தலைவியின் நடையை வியந்து பாராட்டினான் என்க. கூந்தலை வாரி மலர்களைத் தொடுத்துச் சூடினாள் என்பது, தலைவனுடன் சேறற்கண் தலைவிக்குள்ள ஆர்வ மிகுதியைப் புலப்படுத்தியபடியாம். ஓம்பல் - தன்னைக் காத்தலும் வண்டு மீட்டும் வாராமற் காத்தலுமாம். மிசைமரம் - மரத்தின் மேற் பகுதி. கோடு - புற்றின் புடைப்பு. (மே-ள்) `கொண்டு தலைக் கழியினும்'1 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள் கொண்டுதலைக் கழிதற்கண் தலைவன், நடையை வியந்தது என்றார், நச். 258. குறிஞ்சி (அல்ல 2குறிப்பட்டுப் பதிப்பெயர்ந்த தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.) நன்னன் உதியன் அருங்கடிப் பாழித் தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த பொன்னினும் அருமைநன் கறிந்தும் அன்னோள் துன்னல மாதோ எனினுமஃ தொல்லாய் 5. தண்மழை தவழுந் தாழ்நீர் நனந்தலைக் கடுங்காற் றெடுக்கும் நெடும்பெருங் குன்றத்து மாய இருளளை மாய்கற் போல மாய்கதில் 1வாழிய நெஞ்சே நாளும் மெல்லியற் குறுமகள் நல்லகம் நசைஇ 10. அரவிரை தேரும் அஞ்சுவரு சிறுநெறி இரவின் எய்தியும் பெறாஅய் அருள்வரப் புல்லென் கண்ணை புலம்புகொண் டுலகத்து உள்ளோர்க் கெல்லாம் பெருநகை யாகக் காமம் கைம்மிக வுறுதர 15. ஆனா அரும்படர் தலைத்தந் தோயே. - பரணர். (சொ-ள்) 8. நெஞ்சே-, வாழிய-, 1-4. நன்னன் உதியன் அரு கடிப் பாழி - நன்னன் உதியன் என் பானது அரிய காவலையுடைய பாழிச் சிலம்பில், தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த - பழமை மிக்க வேளிர்கள் பாதுகாவல் செய்துவைத்த, பொன்னினும் அருமை நன்கு அறிந்தும் - பொன்னைக் காட்டினும் எய்துதற்கு அரியளாதலை நன்கு அறிந்தும், அன்னோள் துன்னலம் எனினும் - அவளை யாம் நெருங்குவேம் அல்லேம் என யான் கூறினும், அஃது ஒல்லாய் - அங்ஙனம் என் கூற்றிற் பொருந் தாயாய்; 8-15. நாளும் - நாடோறும், மெல் இயல் குறுமகள் நல் அகம் நசைஇ - மென்மைத்தன்மை வாய்ந்த இளைய தலைவியை நின் நல்ல அகத்தில் விரும்பி, அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறுநெறி - பாம்புகள் இரைதேடித் திரியும் அச்சம் தோன்றும் ஒடுங்கிய நெறியில், இரவின் எய்தியும் பெறா அய் - இராப்போதில் சென்றும் பெறாயாகி, அருள் வரப் புல் என் கண்ணை புலம்புகொண்டு - கண்டார்க்கு அருள் உண்டாக புல் என்ற கண்ணை யுடையையாய்த் தனிமை மேவி, உலகத்து உள்ளோர்க்கெல்லாம் பெரு நகை ஆக - உலகின்கண்ணுள்ள யாவர்க்கும் பெரிய இகழ்ச்சி தோன்ற, காமம் கைம்மிக உறுதர - காமம் அளவுகடந்து மிகலான், ஆனா அரும் படர் தலைத் தந்தோய் - அமையாத அரிய துன்பினை நம்பால் எய்துவித்தனை; 5-8. தண் மழை தவழும் தாழ்நீர் நனந்தலை - குளிர்ந்த மேகங்கள் தவழும் வீழும் அருவி நீரினையுடைய அகன்ற விடத்தினையுடைய, கடும் காற்று எடுக்கும் நெடு பெரு குன்றத்து - கடிய காற்றுச் சுழலும் நீண்ட பெரிய குன்றின்கண்ணே, மாய இருள் அளை மாய் கல் போல - மயக்கத்தினைத் தரும் இருளுடைய குகையில் ஒளியின்றி மறையும் மணிகள் போல, மாய்கதில் - நீ ஒளியிழந் தொழிவாயாக. (முடிபு) நெஞ்சே! வாழிய! பொன்னினும் அருமை நன்கறிந்தும், அன்னோள் துன்னலம் எனினும், அஃது ஒல்லாய், குறுமகள் நல்லகம் நசைஇ, அஞ்சுவரு சிறுநெறி இரவின் எய்தியும் பெறாஅய், புலம்பு கொண்டு உலகத்துள்ளோர்க் கெல்லாம் பெருநகை யாக, காமம் கைம்மிக உறுதர ஆனா அரும் படர் தலைத் தந்தோய்; நெடும் பெருங் குன்றத்து இருள் அளைமாய் கற்போல மாய்க தில். (வி-ரை) நன்னன் உதியன் என்பதனால், நன்னனுக்குச் சேர மன்னர் சார்பினால் உதியன் என்பதோர் பெயர் எய்திற்றுப் போலும். அருங்கடிப் பாழி - அரிய அரண்வலியுடைய பாழிச் சிலம்பு; அச்சிலம்பிலுள்ள நகருமாம். பாழியில் வேளிர் ஓம்பினர் வைத்த பொன்னினும் அருமை நன்கறிந்தும் என்றது, தலைவியைத் தாயர் முதலியோர், பிறர் அணுகாவாறு அருங்கடிப் படுத்துள்ளார் என்பதனை அறிந்தும் என்றபடி. குறுமகள் நல்லகம் நசைஇ என்பதற்குத் தலைவியது நல்ல மனையின்கண் அவளைக்கூட விரும்பி என்றுரைத்தலுமாம். தலைவியை இரவுக்குறியில் எய்த விரும்பி ஏதமிக்க நெறியிடை இராப்போதில் பலகாலுஞ் சென்று அவளைக் கூடப்பெறாது மீண்டும் வருந்துதல் கண்டார்க்கு இரக்கத்தையும், அவளைக் கூடப்பெறாமையால் காமம் கைமிக்கு எழுந்து வருத்துதல் உலகத்தோர்க்கெல்லாம் பெரிய இகழ்ச்சியை யும் தருவனவாயின என்று தலைவன் நெஞ்சிற்குக் கூறி, நீ இன்ன தீமையையுடைய ஆதலின், இருள் அளையில் ஒளி மாழ்கிக் கிடக்கும் மணிபோல மறைந்தொழிக என்றான் என்க. இதனால் தலைவன் இரவுக்குறியிற் சென்று அல்லகுறிப்பட்டு மீண்டமை பெற்றாம். (மே-ள்) `மெய்தொட்டுப் பயிறல்'1 என்னுஞ் சூத்திரத்து, இப்பாட்டு நெஞ்சினை இரவு விலக்கியது என்பர், நச். 259. பாலை (உடன்போக்கு நேர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது.) வேலும் விளங்கின வினைஞரு மியன்றனர் தாருந் தையின தழையுந் தொடுத்தன நிலநீர் அற்ற வெம்மை நீங்கப் பெயல்நீர் தலைஇ உலவையிலை நீத்துக் 5. குறுமுறி யீன்றன மரனே நறுமலர் வேய்ந்தன போலத் தோன்றிப் பலவுடன் தேம்படப் பொதுளின பொழிலே கானமும் நனிநன் றாகிய பனிநீங்கு வழிநாள் பாலெனப் பரத்தரு நிலவின் மாலைப் 10. போதுவந் தன்று தூதே நீயும் கலங்கா மனத்தை யாகி யென்சொல் நயந்தனை கொண்மோ நெஞ்சமர் தகுவி தெற்றி உலறினும் வயலை வாடினும் நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும் 15. நின்னினும் மடவள் நனிநின் நயந்த அன்னை அல்லல் தாங்கிநின் ஐயர் புலிமருள் செம்மல் நோக்கி வலியாய் இன்னுந் தோய்கநின் முலையே. - கயமனார். (சொ-ள்) 12. நெஞ்சு அமர் தகுவி - என் உள்ளம் விரும்பும் தகுதியை யுடையாய்! 1-2. வேலும் விளங்கின - வேல்களும் நெய் பூசபெற்று விளக்க முற்றன, வினைஞரும் இயன்றனர் - ஏவலாளரும் புறப்பட்டனர், தாரும் தையின - மாலைகளும் கட்டப்பெற்றன, தழையும் தொடுத்தன - தழையுடைகளும் தொடுக்கப்பட்டன; 3-10. நிலம் நீர் அற்ற வெம்மை நீங்க - நிலமானது நீர் ஒழிந்த தாலாய வெப்பம் நீங்க, பெயல் நீர் தலைஇ - மழைநீர் பொருந்து தலின், உலவை இலை நீத்து குறுமுறி ஈன்றன மரன் - மரங்கள் கிளைகளிலுள்ள முதிர்இலைகளை உதிர்த்துக் குறிய தளிர்களை ஈன்றன; பொழில் - பொழிலின்கண், நறுமலர் - நறிய மலர்கள், வேய்ந்தன போலத் தோன்றி - புனையப்பட்டன போலத் தோன்றி, பல உடன் தேம்படப் பொதுளின - பலவும் ஒருங்கே தேன் பொருந்தச் செறிந்தன; கானமும் நனி நன்று ஆகிய - காடுகளும் மிகவும் நல்லன ஆயின; (இங்ஙனமெல்லாம் சிறக்க,) பனிநீங்கு வழிநாள் - பனிக்காலம் கழிந்த பின்னாளாகிய இளவேனிற்கண், பால் எனப் பரத்தரு நிலவின் மாலைப்போது - பால் என்னப் பரவிய நிலாவினைக் கொண்ட மாலைப் பொழுதானது, தூது வந்தன்று - தூதாக வந்தது; 13-17. தெற்றி உலறினும் - மேடையிலுள்ள பூஞ்செடிகள் காய்ந் தாலும், வயலை வாடினும் - வயலைக்கொடி வாடுதலுற்றாலும், நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும் - நொச்சியின் மெல்லிய கிளைகளிலுள்ள வளைந்த கதிர்கள் வாடிக் கவிழ்ந்தாலும் அவை கருதியும், நின்னிலும் மடவள் - நின்னைக் காட்டிலும் மடப்பத்தை யுடையாளாகி, நனி நின் நயந்த அன்னை அல்லல் தாங்கி -நின்னை மிக விரும்பிய அன்னை எய்தும் துன்பத்தை உளத்திற்கொண்டும், நின் ஐயர் புலிமருள் செம்மல் நோக்கி - நின் தமையன்மாரது புலியை யொத்த அச்சம் தரும் தலைமையை நோக்கியும்; 10-12. நீயும் கலங்கா மனத்தையாகி - நீதான் கலங்காத மனத்தினை யுடையையாகி, என் சொல் நயந்தனை கொண்மோ - என் சொல்லை விரும்பி ஏற்றுக் கொள்வாயாக; 18. வலியாய் - உடன் போக்கினைத் துணிவாயாக; இன்னும் தோய்க நின் முலையே - இன்னும் நின் முலை என் மார்பிலே பொருந்த முயல்வாயாக. (முடிபு) நெஞ்சமர் தகுவி! வேலும் விளங்கின, வினைஞரும் இயன்றனர், தாரும் தையின, தழையுந் தொடுத்தன; மரம்குறுமுறி ஈன்றன; பொழிலில் நறுமலர் பொதுளின; கானமும் நனி நன்றாகிய; மாலைப் போது தூது வந்தன்று; நீயும் உலறினும் வாடினும் சாயினும் அவை கருதியும், அன்னை அல்லல் தாங்கியும், நின்னையர் செல்லல் நோக்கியும் கலங்கா மனத்தை யாகி என் சொல் நயந்தனை கொண்மோ; வலியாய்; இன்னும் நின்முலை தோய்க. (வி-ரை) வேலும் விளங்கின வினைஞரும் இயன்றனர் என்பது, தலைவன் புறப்படுவதற்கும் தாரும் தையின தழையும் தொடுத்தன என்பது, தலைவி புறப்படுவதற்கும், ஏற்ற கருவிகள் அமைந்தமை கூறியபடியாம். மரன் குறுமுறி ஈன்றன, பொழிலில் நறுமலர் பொதுளின, கானமும் நனி நன்றாகிய என்பன, செல்லும் நெறிகள் ஏதம் விளைக்காது இன்பம் விளைத்தற்குரியவாதல் கூறியபடி. பனி நீங்கு வழிநாள் பாலெனப் பரத்தரு நிலவின் மாலைப்போது என்பது செல்லுதற்குரிய பொழுதும் இன்பம் பயப்பதாதல் தெரிவித்தபடி. போது தூது வந்தன்று என்பது, இக்காலத்தே நீவிர் ஒருங்கு வருவீராயின் பேரின்பம் துய்ப்பீர் என்று அழைப்பது போன்ற தாயிற்று என்றவாறு. இங்ஙனம் யாவும் இன்பம் பயப்பனவாக அமைந்திருத்தலின், தெற்றி உலறுதல் முதலியவற்றையும் அன்னை அல்லலையும் நின்னையர் செம்மலையும் நோக்கி உள்ளம் கலங்கி உடன்போக்கால் எய்தும் பேரின்பத்தை இழத்தல் தகவன்று என்பாள், `நீயும் கலங்கா மனத்தையாகி என் சொல் நயந்தனை கொண்மோ' எனக்கூறி, உடன் போக்கிற்கு ஒருப்படுத்துவாள் ஆயினாள் என்க. இளையரும் என்னும் பாடத்திற்கும் ஏவலாளர் என்பதே பொருள். வலிமா என்பது பாடமாயின், மா அசை. அல மரல் என்னும் பாடத்திற்கு, நோக்கி மனங் கலங்காதே என்று உரைக்க. இன்னும் தோய்க நின் முலை என்றது தோழி தலைவியை முயங்கியபடி கூறிற்று. (மே-ள்) `தலைவரும் விழும நிலையெடுத் துரைப்பினும்'1 என்னுஞ் சூத்திரத்து, இவ் வகப்பாட்டு போக்குதற்கண் முயங்கிக் கூறியது என்றனர், நச். 260. நெய்தல் (இரவுக் குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியது.) மண்டிலம் மழுக மலைநிறங் கிளர வண்டினம் 1மலர்பாய்ந்து ஊத மீமிசைக் கண்டற் கானற் குருகினம் ஒலிப்பக் கரையா டலவன் அளைவயிற் செறியத் 5. திரைபா டவியத் திமில்தொழில் மறப்பச் செக்கர் தோன்றத் துணைபுணர் அன்றில் எக்கர்ப் பெண்ணை அகமடல் சேரக் கழிமலர் கமழ்முகங் கரப்பப் பொழின்மனைப் புன்னை நறுவீ பொன்னிறங் கொளாஅ 10. எல்லை பைப்பயக் கழிப்பி எல்லுற 2யாங்கா குவள்கொல் தானே நீங்காது முதுமரத்து உறையும் முரவுவாய் முதுபுள் கதுமெனக் குழறுங் கழுதுவழங் கரைநாள் நெஞ்சுநெகிழ் பருவரல் செய்த 15. அன்பி லாளன் அறிவுநயந் தேனே. - மோசிக் கரையனார். (சொ-ள்) 1-11. மலைநிறம் கிளர - மலைகள் செக்கர் வானால் ஒளி பெறவும், வண்டு இனம் மலர் பாய்ந்து ஊத - வண்டின் கூட்டம் மலர்களிற் பாய்ந்து ஊதவும், மீ மிசை கண்டல் கானம் குருகு இனம் ஒலிப்ப - தாழைகளையுடைய சோலையின் மேலேயிருந்து நாரை யினங்கள் ஒலிக்கவும். கரை ஆடு அலவன் அளைவயின் செறிய - கடற் கரையில் விளையாடிய ஞெண்டு வளையகத்தே செல்லவும், திரைபாடு அவிய - அலைகள் ஒலித்தல் இல்லையாகவும், திமில் தொழில் மறப்ப - மீன் படகுகள் வேட்டமாடலை நீங்கவும், செக்கர் தோன்ற - செவ்வானம் தோன்றாநிற்க, துணை புணர் அன்றில் - தன் துணையைப் பிரியாது சேர்ந்திருக்கும் அன்றிற் பறவை, எக்கர் பெண்ணை அகமடல் சேர - மணல்மேட்டிலுள்ள பனைமரத்தின் உள் மடலில் சேர்ந்து தங்கவும், கழிமலர் கமழ் முகம் கரப்ப - கழியிடத்து மலர்கள் மணக்கும் இதழ்கள் குவியப்பெறவும், பொழில் மனை புன்னை நறுவீ - பொழில் சூழ்ந்த மனைக்கண் உள்ள புன்னையின் நறிய மலர், பொன் நிறம் கொளாஅ - பொன்னின் நிறத்தினைக் கொண்டு விரியவும், எல்லை பை பய கழிப்பி - பகற்பொழுதை மெல்ல மெல்லப் போக்கி, மண்டிலம் மழுக - ஞாயிற்று மண்டிலம் வெம்மை குறைய, எல்உற - இரவு வந்தக் கால், யாங்கு ஆகுவள் கொல்தான் - இவள் எந்நிலையினை அடைவாளோ (என்று தோழி உரைப்ப); 11-15. நீங்காது முதுமரத்து உறையும் முரவுவாய் முது புள் - முதிய மரத்தின்கண் எப்பொழுதும் நீங்காது தங்கும் முழங்கும் வாயினையுடைய பேராந்தை, கதுமெனக் குழறும் - விரைந்து குழறி யொலிப்பதும், கழுது வழங்கு அரை நாள் - பேய் இயங்குவதுமாகிய பாதியிரவில், நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த - மனம் உருகும் துன்பினைச் செய்த, அன்பு இலாளன் அறிவு நயந்தேன் - அன்பில்லாத வனது அறிவுடை மொழியை மெய்ம்மை என விரும்பினேன் என்று தலைவி கூறினாள் என்க. (முடிபு) மலைநிறங் கிளர, வண்டினம் மலர்பாய்ந்து ஊத, குரு கினம் ஒலிப்ப, அலவன் அளைவயிற் செறிய, திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப, செக்கர் தோன்ற, அன்றில் பெண்ணை அகமடல் சேர, மலர் முகங் கரப்ப, புன்னை நறு வீ பொன்னிறம் கொள்ள, எல்லை பை பயக் கழிப்பி மண்டிலம் மழுக எல்லுற, தான் யாங்காகுவள்கொல் (என்று தோழி உரைப்ப,) கழுது வழங்கு அரைநாள் பருவரல் செய்த அன்பிலாளன் அறிவு நயந்தேன்; (எனத் தலைவி கூறினாள்.) (வி-ரை) மலை நிறங்கிளர்தல் முதல் புன்னை வீ பொன்னிறங் கொள்ளல் ஈறாக வுள்ளவை எற்பாட்டின் நிகழ்ச்சிகளாம். கொளாஅ - கொள்ள எனத் திரிக்க. மண்டிலம் எல்லை கழுப்பி மழுக எனக் கூட்டுக. மண்டிலம் மழுக என்பதனைக் கொண்டு கூட்டாது கிடந்தாங்கு நிறீஇ, எல்லானது எல்லை கழிப்பி உற என்று உரைத்தலுமாம். தலைவி எய்தும் ஆற்றாமைக்கு இரங்கி, யாங்காகுவள் கொல் தானே எனத் தோழி கூற, அவள் தான் கொண்ட கருத்தினைக் கூறி முடிக்கு முன், அன்பிலாளன் அறிவு நயந்தேன் என்று தலைமகள் கூறினாள் என்க. எனவே, எனது அறியாமையால் யான் எய்தும் துன்பத்திற்கு நீ வருந்துவதனாற் பயன் என்னை என்றாளாம். இச் செய்யுளில் திரைபாடவிய என்னும் ஐந்தாவது அடி, நான் காவதாகவும், கரையாடலவன் என்னும் நான்காவது அடி, ஐந்தாவ தாகவும் பழைய பதிப்புக்களில் காணப்படினும், `அடிதொறும் தலையெழுத் தொப்பது மோனை'1 என்னுஞ் சூத்திர உரைக்கண் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் `கண்டற்கானல்' `கரையாடலவன்' என்னும் அடிகளை அடிமோனைத் தொடைக்கு உதாரணமாகக் காட்டியிருத்தலின், இங்ஙனம் பாடங் கொள்ளலே பொருத்தமாம். பொருளதிகாரத்தைப் பின்னர் அச்சிட்டவர்கள் இவ்வடிகள் அடிமோனைத் தொடைக்கு உதாரணமாதலைக் கருதாமலும் தாமோதரம் பிள்ளையவர்கள் பதிப்பை நோக்கா மலும் அகநானூற்றின் பழைய பதிப்புக்களை நோக்கித் தவறாகப் பதிப்பித்துள்ளனர் என்க. (மே-ள்) `எழுத்துமுதலா ஈண்டிய அடியில்'1 என்னுஞ் சூத்திரத்து, எழுத்து முதலா ஈண்டிய அடியில் குறித்த பொருளை முடிய நாட்டுதல் என்பதற்கு உதாரணம் காட்டுமிடத்தே, `மண்டிலம் மழுக ......... குருகினம் ஒலிப்ப' என்னும் பகுதியை எடுத்துக் காட்டி, இது இருசீரானும் முச்சீரானும் நாற்சீரானும் குறித்த பொருளை முடிய, நாட்டினவாறு கண்டுகொள்க என்றார், பேரா. `அடிதொறும் தலையெழுத் தொப்பது மோனை'3 என்னுஞ் சூத்திரத்தில் `கண்டற்........ ஒலிப்ப, கரையா டலவன்..... செறிய' என்பது அடிதொறும் முதுலெழுத்தொன்றி மோனைத் தொடை வந்தவாறு என்றார், பேரா. அச் சூத்திரத்தில், அதற்கு இவ்வடிகளைக் காட்டி, இது சீர்வகையடி தொடுத்தது என்றார், நச். 261. பாலை (புணர்ந்துடன் போயினகாலை இடைச்சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது.) கானப் பாதிரிக் கருந்தகட்டு ஒள்வீ வேனில் அதிரலொடு விரைஇக் காண்வரச் சில்லைங் கூந்தல் அழுத்தி மெல்லிணர்த் தேம்பாய் மராஅம் அடைச்சி வான்கோல் 5. இலங்குவளை தெளிர்ப்ப வீசிச் சிலம்புநகச் சின்மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலிநின் அணிமாண் சிறுபுறங் காண்கம் சிறுநனி ஏகென ஏகல் நாணி ஒய்யென மாகொள் நோக்கமொடு மடங்கொளச் சாஅய் 10. நின்றுதலை யிறைஞ்சி யோளே அதுகண்டு யாமுந் துறுதல் செல்லேம் ஆயிடை அருஞ்சுரத் தல்கி யேமே இரும்புலி களிறட்டுக் குழுமும் ஓசையுங் களிபட்டு வில்லோர் குறும்பில் ததும்பும் 15. வல்வாய்க் கடுந்துடிப் பாணியுங் கேட்டே. - பாலைபாடிய பெருங்கடுங்கோ. (சொ-ள்) 12-15. (தோழி!) இரும்புலி களிறு அட்டு குழுமும் ஓசையும் - பெரிய புலியானது களிற்றினைக் கொன்று முழங்கும் ஓசையினையும், வில்லோர் குறும்பில் களிபட்டு ததும்பும் - வில்லினை யுடைய கானவரது சீறூரில் (அவர் தாம் கள்ளுண்டு) களிப்புறலால் ஒலிக்கும், வல்வாய் கடு துடி பாணியும் கேட்டு - வலிய முகத்தினை யுடைய கடிய துடியின் ஒலியினையும் யாம் கேட்டமையின் (தலைவி அஞ்சுவாளென உட்கொண்டு); 1-8. வேனில் கானப் பாதிரி கரு தகட்டு ஒள் வீ - இவ்வேனிலிற் பூத்துள காட்டிலுள்ள பாதிரியின் கரிய புறவிதழையுடைய ஒளி பொருந்திய மலர்களை, அதிரலொடு விரைஇ - புனலி மலரொடு கலந்து, காண்வர - அழகு பொருந்த, சில் ஐங் கூந்தல் அழுத்தி - சில வாய ஐவகைப்படும் கூந்தலிற் செருவி, மெல் இணர் தேம் பாய் மராஅம் அடைச்சி - மெல்லிய கொத்துக்களிலுள்ள தேன் பாயும் மரா மரத்தின் மலர்களைச்சூடி, வான் கோல் இலங்க வளை தெளிர்ப்ப வீசி - பெரிய திரண்ட ஒளிபொருந்திய வளைகள் ஒலிக்கக் கையைவீசி - சிலம்பு நக சில்மெல் ஒதுக்கமொடு மெல் மெல இயலி - சிலம்பொலி விளங்க சிலவாய மெல்லிய நடை கொண்டு மெல்ல மெல்லச் சென்று, நின் அணிமான் சிறுபுறம் காண்கம் - நினது அழகு மாண்புற்ற முதுகினை யாம் காண்பேமாக, சிறு நனி ஏக என - சிறிதுதூரம் முன் நடக்கவென யாம் கூற; 8-10. ஏகல் நாணி - அங்ஙனம் முன்னே செல்லுதலை அவள் நாணி, ஒய்யென - விரைவாக, மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய் நின்று - மானை ஒத்த நோக்கத்தோடு மடப்பம் பொருந்த விலகி நின்று, தலை இறைஞ்சியோள் - தலை வணங்கினள்; 10-12. அதுகண்டு, யாம் முந்துறுதல் செல்லேன் - யாம் முன்னே செல்லுதலும் இல்லேமாய், ஆயிடை அரும் சுரத்து அல்கி யேம் - அரிய சுரமாய அவ்விடத்தே யாங்கள் தங்குவேம் ஆயினேம். (முடிபு) புலி களிறட்டுக் குழுமும் ஓசையும் வில்லோர் குறும்பில் ததும்பும் கடுந்துடிப் பாணியும் கேட்டு, தலைவி அஞ்சுவாளென உட்கொண்டு, `நின் அணி மாண் சிறு புறம் காண்கம்; சிறு நனி ஏக' என, ஏகல் நாணி ஒய்யென மாகொள் நோக்கமொடு மடங் கொளச் சாஅய் நின்று தலை இறைஞ்சியோள்; அது கண்டு யாம் முந்துறுதல் செல்லேம். ஆயிடை அருஞ்சுரத்து அல்கியேம். (வி-ரை) காண்கம் - யாம் காண்டற்கு. ஏகென - முன்னர் ஏகென்று உரைக்க என்க. காட்டிலே களிற்றைக்கொன்று புலி முழங்கும் ஓசையையும் கானவரது துடி ஓசையையும் கேட்ட தலைவன் தனக்குப் பின்னே வரும் தலைவி அவற்றால் அஞ்சுவள் என உட்கொண்டு, அதனைப் புலப்படுத்தாமல், வேறோராற்றால் தலைவியை முன் நடக்கும்படி கூறக் கருதி, நினது மென்னடை யினையும் அணிமாண் சிறுபுறத்தினையும் யாம் கண்டு மகிழுமாறு சிறிது முற்படச் செல்க என்றான்; தலைவன் தன்னை இங்ஙனம் பாராட்டுவதைக் கேட்ட தலைவி நாண்சிறந்து தலை இறைஞ்சி நின்றாள்; அந்நிலையில் தலைவன் வேறு செய்தல் கூடாமையின் இடைச்சுரத்தே தலைவியுடன் சிறிது பொழுது தங்குவானாயினன்; இங்ஙனம் நிகழ்ந்ததனை மீண்டு வந்தகாலை தோழிக்குத் தலைவன் கூறினான் என்க. வளைதெளிர்ப்ப வீசிச் சிலம்பு நக சின்மெல் லொதுக்கமொடு மென்மெல இயலி என்றதனால், தலைவியது நடையின் அழகும், கூந்தல் அழுத்தி, மராஅம் அடைச்சி என்பதனாலும், அணி மாண் சிறு புறம் என்பதனாலும் தலைவியது பிற்பக்கத்து அழகும் பெற்றாம். காண்கம் சிறுநனி ஏக என்றமையால், காண்டற்கு ஏற்ற அணிமையில் முன்னர்ச் செல்லுக என்றானாயிற்று. மாகொள் நோக்கம் - மாவடுவையொத்த கண்ணின் பார்வை யென்றுமாம். (மே-ள்) `மரபுநிலை திரியா மாட்சிய வாகி' 1 என்னுஞ் சூத்திரத்து, இச்செய்யுள் மீண்டு வந்தோன் தோழிக்கு உரைத்தது என்றார், நச். 262. குறிஞ்சி (இரவுக்குறிக்கண் தலைமகளைப் புணர்ந்து நீங்குந் தலைமகன் தன் னெஞ்சிற்குச் சொல்லியது.) முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப் பகடுபல பூண்ட உழவுறு செஞ்செய் இடுமுறை நிரம்பி ஆகுவினைக் கலித்துப் பாசிலை அமன்ற பயறுஆ புக்கென 5. வாய்மொழித் தந்தையைக் கண்களைந் தருளாது ஊர்முது கோசர் நவைத்த சிறுமையிற் கலத்து முண்ணாள் வாலிது முடாஅள் சினத்திற் கொண்ட படிவம் மாறாள் மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன் 10. செருவியல் நன்மான் திதியற் குரைத்தவர் இன்னுயிர் செகுப்பக் கண்டுசின் மாறிய அன்னி மிஞிலி போலமெய்ம் மலிந்து ஆனா வுவகையே மாயினெம் பூமலிந்து அருவி யார்க்கும் அயந்திகழ் சிலம்பில் 15. நுண்பல் துவலை புதன்மிசை நனைக்கும் வண்படு நறவின் வண்மகிழ்ப் பேகன் 2கொண்டன் மாமலை நாறி அந்தீங் கிளவி வந்த மாறே. - பரணர். (சொ-ள்) 13-18. பூ மலிந்து அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பில் - பூக்களை நிறையக்கொண்டு அருவி ஒலித்து விழும் சுனைகள் விளங்கும் பக்கமலையில் (எழும்), நுண் பல் துவலை - நுண்ணிய பலவாய துளிகள், மிசை புதல் நனைக்கும் - அம் மலை மீதுள்ள புதல்களையெல்லாம் நனைக்கும், வண்டுபடு நறவின் - வண்டு பொருந்தும் மதுவினையும், வண் மகிழ்ப் பேகன் - வண்மையால் எய்தும் மகிழ்ச்சியையும் உடைய பேகன் என்பானது, கொண்டல் மாமலை நாறி - மேகம் தவழும் பெரிய மலைபோலும் நாற்றம் உடையளாய், அம் தீம் கிளவி வந்தமாறே - அழகிய இனிய சொல்லையுடைய நம் தலைவி வந்து புணர்ந்தமையால்; 1-4. முதை படு பசுங் காட்டு - பழமை மேவிய பசிய காட்டிலே, அரில் பவர் மயக்கி - பின்னிய கொடிகளை உழக்கி, பகடு பல பூண்ட உழவு உறு செஞ் செய் - எருதுகள் பூண்ட பல ஏரால் உழவினைப் பொருந்திய சிவந்த புன்செய் நிலத்தில், இடு முறை நிரம்பி - இடப் பெறுவன முறையே நிரம்ப இடப்பெற்று, ஆக வினைக் கலித்து - பொருந்திய வினையுடைமையால் தழைத்து, பசு இலை அமன்ற பயறு - பசிய இலைகள் நிறைந்த பயற்றில், ஆ புக்கென - பசு புகுந்து மேய்ந்ததாக (அதன்பொருட்டு); 5-6. ஊர் முது கோசர் - பழமை வாய்ந்த ஊரிலுள்ள கோசராவார், வாய் மொழித் தந்தையை அருளாது கண் களைந்து - வாய்மை மிக்க தன்தந்தையை அருளாமல் கண்ணைப் பிடுங்கி, நவைத்த சிறுமையின் - துன்புறுத்திய கொடுமைபற்றி; 7-8. கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள் - கலத்திலிட்டு உண்ணாமலும் தூயதாய உடையினை உடாமலும், சினத்தில் கொண்ட படிவம் மாறாள் - சினத்தினால் மேற்கொண்ட நோன்பிற் குரிய வடிவம் மாறாமலும் இருந்து; 9-13. மறம்கெழு தானை கொற்றக் குறும்பியன் - வீரம் பொருந்திய படையினைக் கொண்ட வெற்றி பொருந்திய குறும்பிய னாகிய, செரு இயல் நல்மான் திதியற்கு உரைத்து - போர்த்திறம் வாய்ந்த நல்ல குதிரையையுடைய திதியன் என்பானுக்குக் கூறி, அவர் இன் உயிர் செகுப்பக் கண்டு - அக் கோசரது இனிய உயிர்களைப் போக்கக் கண்டு, சினம் மாறிய அன்னி மிஞிலிபோல - சினம் ஒழியப்பெற்று மகிழ்ந்த அன்னி மிஞிலி என்பாளைப் போல, மெய் மலிந்து ஆனா உவகையேம் ஆயினெம் - உடல் பூரிக்கப்பெற்று அமையாத மகிழ்ச்சி உடையேம் ஆயினம். (முடிபு) சிலம்பில் பேகன் மாமலை நாறி அந்தீங்கிளவி வந்த மாறே, அன்னி மிஞிலி போல மெய்ம்மலிந்து ஆனா உவகையேம் ஆயினெம். பயறு ஆ புக்கெனத் தந்தையைக் கண் களைந்து அருளாது முதுகோசர் நவைத்த சிறுமையின், உண்ணாள், உடாஅள், படிவம் மாறாள், திதியற்கு உரைத்து, அவர் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய அன்னி மிஞிலி போல என்க. (வி-ரை) பசுங் காடு என்றமையால் மழை பெய்து புல் முதலாயின தழைத்த காடு என்றபடியாம். அரில் பவர் மயக்கி என்றது, கொடி முதலாயின மண்ணிற் புதைந்து மடியுமாறு செய்து என்றபடி. பல - பல ஏர். இடு முறை நிரம்புதலாவது - பொருந்திய எருக்களை நிரம்ப இடுதல். ஆகு வினை - களை கட்டல், நீர்ப்பாய்ச்ச லாகிய தொழில். பயறு - கூலப்பொருள்களுள் ஒன்று. வாய் மொழித் தந்தை என்றதனால், தன் பசு புகுந்து மேய்ந்ததனை மறையாது உண்மையுரைத்தனன் என்பது பெற்றாம். கண் களைந்து அருளாது என்றதனை, அருளாது கண்களைந்து என்று மாறுக. பயற்றிலே ஆ புகுந்த சிறு பிழைக்காக உண்மையுரைத்த தந்தையை. அருளின்றிக் கண் களைதளாகிய கொடுஞ் செயலைச் செய்தமையால், அன்னி மிஞிலி அதனைப்பொறுக்கலாற்றாது, அன்னோரைக் கொல் வித்தன்றிக் கலத்தினும் உண்ணேன், வாலிதும் உடேன் என வஞ்சினம் கூறித் தவக்கோலம் தாங்கி நின்று, திதியன் என்பானுக்கு உரைத்து, அவனால் அக் கோசர் உயிரைக் கொல்வித்துக் சினம் மாறினாள் என்க. சினம் மாறிய என்றது, சினம் நீங்கி உவகை எய்திய என்றபடி. அந்தீங் கிளவி - ஆகுபெயர். `நிரம்பியாகு' என்பது `நிரம்பிய வரகு' என்றிருக்க வேண்டும் என ஒருசாரார் கூறியது பொருந்துவதன் றென்க. 263. பாலை (மகட் போக்கிய தாய் சொல்லியது.) தயங்குதிரைப் பெருங்கடல் உலகுதொழத் தோன்றி வயங்குகதிர் விரிந்த உருகெழு மண்டிலம் கயங்கண் வறப்பப் பாஅய் நன்னிலம் பயங்கெடத் திருகிய பைதறு காலை 5. வேறுபல் கவலைய வெருவரு வியன்காட்டு ஆறுசெல் வம்பலர் வருதிறம் காண்மார் வில்வல் ஆடவர் 1 மேலான் ஒற்றி நீடுநிலை 2யாஅத்துக் கோடுகொள் அருஞ்சுரம் கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு 10. அவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோ ஒளிறுவேல் கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சி யன்னவென் வளநகர் விளங்க இனிதினிற் புணர்க்குவென் மன்னோ துனியின்று திருநுதற் பொலிந்தவென் பேதை 15. வருமுலை முற்றத் தேமுறு துயிலே. - கருவூர்க் கண்ணம்பாளனார். (சொ-ள்) 1-4. தயங்கு திரைப் பெரு கடல் உலகு தொழத் தோன்றி - அசையும் அலைகளையுடைய பெரிய கடலில் உயர்ந்தோர் தன்னை வணங்கத் தோன்றி, வயங்கு கதிர் விரிந்த உருகெழு மண்டிலம் - விளங்கும் கதிர்கள் விரியப்பெற்ற உட்குப்பொருந்திய ஞாயிற்று மண்டிலம், கயம் கண் வறப்பப் பாஅய் - குளங்கள் தம்மிடத்துள்ள நீர் வற்றிடப் பரந்து, நல் நிலம் பயம் கெடத் திருகிய பைது அறு காலை - நல்ல நிலங்களின் வளம் கெடுமாறு முரணிய பசுமையற்ற வேனிற் காலத்தே; 5-8. வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு - வேறுபட்ட பலவாய கவர்த்த நெறிகளையுடைய அச்சம் தரும் பெரிய காட்டகத்தே, ஆறு செல் வம்பலர் வருதிறம் காண்மார் - வழிச்செல்லும் புதியர் வரும் இயல்பினைக் காணும்பொருட்டு, வில்வல் ஆடவர் - வில் வன்மை யுடைய ஆறலைப்போராய ஆடவர், மேல் ஆன் ஒற்றி - மேலிடத்தே மறைந்து, நீடுநிலை யாஅத்துக் கோடுகொள் அருஞ் சுரம் - நீண்ட நிலை வாய்ந்த யா மரத்தினது கோட்டினை இடமாகக் கொள்ளும் அரிய சுரத்தே; 9-10. கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு - என்மகளை உடன்கொண்டு போன திண்ணியனாகிய காளையிடத்தே, அவள் துணிவு அறிந்தெனென் ஆயின் - அவள் கொண்டுள்ள அன்பின் உறுதியை யான் அறிந்தேன் ஆயின், அன்னோ - ஐயோ! 11-15. ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சி அன்ன - ஒளிவீசும் வேலையுடைய சேரன் பாதுகாத்து ஆளும் வஞ்சிபோன்ற, என் வளநகர் விளங்க - எனது வளம் பொருந்திய மனை சிறப்புற்று விளங்க, துனியின்று - வெறுப்பின்றி, திரு நுதல் பொலிந்த என் பேதை வரு முலை முற்றத்து - அழகிய நெற்றியாற் பொலிவுற்ற என் மகளது வளரும் முலைப்பரப்பில், ஏம் உறு துயில் - அவள் தலைவன் இன்புற்றுத் துயிலும் துயிலினை, இனிதினிற் புணர்க்குவென் - (வதுவை நெறியால்) இனிமையுறக் கூட்டிவைத்திருப்பேன், அன்னோ - அந்தோ! மன் - அது கழிந்ததே! (முடிபு) உருகெழு மண்டிலம் திருகிய பைது அறு காலை; வெருவரு வியன்காட்டு அருஞ்சுரம் கொண்டனன் கழிந்த காளைக்கு அவள் துணிவு அறிந்தனென் ஆயின், அன்னோ! என் வளநகர் விளங்க, துனியின்றி, என்பேதை வருமுலை முற்றத்து ஏமுறு துயில் இனிதினிற் புணர்க்குவென் மன். (வி-ரை) கயம் கண் : கண் அசையுமாம்; `மீன்க ணற்றதண் சுனையே'1, என்புழிப்போல. ஒற்றிக் கோடுகொள் என்பதற்குக் கோட்டினை இடமாகக் கொண்டு மறைந்து அறியும் என்பது கருத்தாகக் கொள்க. வன்கண் - கலங்காமை; `வன்கண் குடிகாத்தல்'2 என்புழி அப்பொருட்டாதல் காண்க. காளைக்க - காளை திறத்தில்; வேற்றுமை மயக்கம். அன்னோ - இரங்கற் பொருள்தரும் இடைச் சொல். ஓம்பிக் காக்கும் என்றது - குறிக்கொண்டு காக்கும் என்றலுமாம். குறிக்கொண்டு காத்தலாவது, `வறிஞன் ஓம்புமோர் செய்யெனக் காத்தல்.'3 264. முல்லை (பருவங் கண்டு வன்புறை யெதிரழிந்து தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதுமாம்.) மழையில் வானம் மீனணிந் தன்ன குழையமன் முசுண்டை வாலிய மலர வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப் பெரிய சூடிய கவர்கோற் கோவலர் 5. எல்லுப்பெயல் உழந்த பல்லான் நிரையொடு நீர்திகழ் கண்ணியர் ஊர்வயின் பெயர்தர நனிசேண் பட்ட மாரி தளிசிறந்து ஏர்தரு கடுநீர் தெருவுதொறு ஒழுகப் பேரிசை முழக்கமொடு சிறந்துநனி மயங்கிக் 10. கூதிர்நின் றன்றாற் பொழுதே காதலர் நம்நிலை அறியா ராயினுந் தம்நிலை அறிந்தனர் கொல்லோ தாமே ஓங்குநடைக் காய்சின யானை கங்குல் சூழ அஞ்சுவர இறுத்த தானை 15. வெஞ்சின வேந்தன் பாசறை யோரே. - உம்பாற்காட்டு இளங்கண்ணனார். (சொ-ள்) 1-10. மழை இல் வானம் மீன் அணிந்தன்ன - மேகம் இல்லாத வானம் விண் மீன்களை அணிந்து விளங்கினாற்போல, குழை அமல் முசுண்டை வாலிய மலர - தழை நிறைந்த முசுண்டை யின் பூக்கள் வெள்ளியவாக மலரவும், வரி வெண்கோடல் வாங்கு குலை வான்பூ - வரிகளையுடைய வெண்காந்தளின் வளைந்த குலையிலுள்ள சிறந்த பூக்களை, பெரிய சூடிய கவர்கோல் கோவல- மிகுதியாகச் சூடிக்கொண்ட கவர்த்த கோலினைக் கொண்ட ஆயர்கள், எல்லு பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு - பகற் பொழுதில் மழையால் வருந்திய பல பசுத்திரளொடு, நீர் திகழ் கண்ணியர் ஊர்வயின் பெயர்தர - நீர் விளங்கும் மாலையராய் ஊரிடத்தே மீண்டு வரவும், நனி சேண்பட்ட மாரி - மிகவும் சேணிடைப்பரந்த மேகங்கள், பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி - பெரிய இடிமுழக்கத்தோடு மேம்பட்டு மிகவும் ஒன்றோ டொன்று கலந்து, தளி சிறந்து ஏர்தரு கடுநீர் தெருவு தொறு ஒழுக - துளிகள் மிக்குப் பெய்தலால் எழுச்சி பொருந்திய விரைந்த நீர் தெருக்கடோறும் செல்லவும், கூதிர் நின்றன்று பொழுது - கூதிர்ப் பொழுது நிலைபெற்றது; 11-15. ஓங்கு நடை காய் சின யானை கங்குல் சூழ - உயர்ந்த நடையினையும் காயும் சினத்தினையும் உடைய யானைகள் இராக் காலத்தே சூழ்ந்து நிற்க, அஞ்சு வர இறுத்த தானை - பகைவர்க்கு அச்சம் உண்டாகத் தங்கிய சேனையையுடைய, வெம்சின வேந்தன் பாசறையோர் காதலர் - கொடிய சினத்தினையுடைய அரசனது பாசறைக்கண்ணுள்ளாராய நம் தலைவர், நம் நிலை அறியார் ஆயினும் - நமது துன்ப நிலையினை அறியாராயினும், தம் நிலை அறிந்தனர்கொல் - தாம் உறும் நிலையினையாதல் அறிந் துளாராவரோ? (முடிபு) முசுண்டை வாலிய மலர, கோவலர் பல்லான் நிரை யொடு ஊர்வயிற் பெயர்தர, மாரி தளி சிறந்து பெய்த கடுநீர் தெருவு தொறும் ஒழுகக் கூதிர்ப்பொழுது நின்றன்று; வேந்தன் பாசறையோர் ஆகிய காதலர் நம் நிலை அறியாராயினும் தம் நிலை அறிந்தனர் கொல்லோ? (வி-ரை) முகில் மறைப்பில்லாத நீலநிற விசும்பில் மீன்கள் நன்கு விளங்கினாற்போல, பசுமை மிக்க முசுண்டையில் அதன் வெள்ளிய பூக்கள் மலர்ந்து விளங்கின என்க. பெரிய சூடிய - பெரிய கண்ணிகளாகக் கட்டிச் சூடிய என்றுமாம். எல் - ஈண்டுப் பகல். பேரிசை முழக்கமொடு சிறந்து கார்ப்பருவத்துடன் மயங்கிக் கூதிர்ப்பொழுது நின்றன்று என்றுரைத்தலுமாம். தலைவர் வந்துவிடுவர் என்று வற்புறுத்திய தோழிக்கு, அவர் குறித்த கார்ப்பருவம் போய், கூதிர்வந்தும் அவர் இன்னும் வந்திலர்; இப் பருவத்தில் யாம் எய்தும் துன்பத்தினை அவர் அறியாராயினும் பின் தாம் எய்தும் நிலையையும் ஓர்ந்திலர் போலும் என்று தலைவி எதிரழிந்து கூறினாள் என்க. தம் நிலை என்றது, நாம் இறந்துபடின் பின் அவர் எய்தும் துன்பம் என்க. இன்ன காலத்து வருவேன் என்று உரைத்த சொல் தவறலாகாது என்னும் இயல்பு என்றுமாம். (மே-ள்) `திணைமயக்குறுதலும்'1 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள் தோழிக்குத் தலைவி கூறியது, இதன்கண் முல்லையுட் கூதிர் வந்தது என்றும், `நிகழ்ந்து கூறி நிலையலும் திணையே'2 என்னும் சூத்திரத்து, இது தலைவன் பாசறைப் புலம்பினவை கூறக்கேட்ட தலைவி, நந்நிலையறியாராயினும் எனக் கூறினாள் என்றும் கூறினார், நச். 265. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகள் ஆற்றாமை மீதூரத் தோழிக்குச் சொல்லியது.) புகையிற் பொங்கி வியல்விசும்பு உகந்து பனியூர் அழற்கொடி கடுப்பத் தோன்றும் இமயச் செவ்வரை மானுங் கொல்லோ பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் 5. சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ எவன்கொல் வாழி தோழி வயங்கொளி நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல் குழல்குரல் பாவை இரங்க நத்துறந்து 10. ஒண்டொடி நெகிழச் சாஅய்ச் செல்லலொடு கண்பனி கலுழ்ந்தியாம் ஒழியப் பொறையடைந்து இன்சிலை எழிலேறு கெண்டிப் புரைய நிணம்பொதி விழுத்தடி நெருப்பின் வைத்தெடுத்து அணங்கரு மரபிற் பேஎய் போல 15. விளரூன் தின்ற வேட்கை நீங்கத் துகளற விளைந்த தோப்பி பருகிக் குலாஅ வல்வில் கொடுநோக்கு ஆடவர் 3புலாஅற் கையர் பூசா வாயர் ஓரா உருட்டுங் குடுமிக் குராலொடு 20. மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும் செந்நுதல் யானை வேங்கடந் தழீஇ வெம்முனை அருஞ்சுரம் இறந்தோர் நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே. - மாமூலனார். (சொ-ள்) 7-11. தோழி-, வாழி-, வயங்கு ஒளி நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல் - விளங்கும் ஒளி வாய்ந்த நிழற்கண்ணுள்ள அறல்போலக் குழன்ற கூந்தலினையும், குழல் குரல் - குழலோசை போன்ற இனிய குரலினையும் உடைய, பாவை இரங்க - பாவை போன்ற நீ இரங்க, ஒள் தொடி நெகிழ - நமது ஒள்ளிய வளை நெகிழ்ந்து வீழ, சாஅய் செல்லலொடு - மெலிந்து துன்பத்துடன், கண்பனி கலுழ்ந்து யாம் ஒழிய - கண்ணீர் சொரிந்து யாம் இவண் தங்கியிருக்க, நம் துறந்து - நம்மைக் கைவிட்டு; 11-22. குலாஅ வல்வில் கொடு நோக்கு ஆடவர் - வளைந்த வலிய வில்லையும் கொடிய பார்வையினையுமுடைய மறவர்கள், பொறை அடைந்து - குன்றினை அடைந்து, இன்சிலை எழில் ஏறு கெண்டி - இனிய முழக்கம் செய்யும் எழுச்சியுள்ள எருதினைக் கொன்று, புரைய நிணம் பொதி விழு தடி நெருப்பின் வைத்து எடுத்து - உயர்ச்சியுடைய கொழுப்புப்பொதிந்த சிறந்த தசையினை நெருப்பில் வைத்துச் சுட்டு எடுத்து, அணங்கு அரும் மரபின் பேஎய் போல - கண்டாரை வருத்தும் அரிய திறலுடைய பேய்களைப் போல, விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க - வெளுத்த அவ் வூனைத் தின்றதாலாய நீர்வேட்கை நீங்க, துகள் அற விளைந்த தோப்பி பருகி - குற்றமற முதிர்ந்த தோப்பிக்கள்ளைக் குடித்து, புலாஅல் கையர் பூசாவாயர் - புலால் நீங்காத கையினராய்க் கழுவாத வாயினராய், ஒராஅ உருட்டும் குடுமிக் குராலொடு - இடையறாது விட்டுவிட்டு ஒலிக்கும் குடுமியினையுடைய கோட்டான் ஒலியொடு கூடி, மராஅம் சீறூர் மருங்கில் தூங்கும் - வெண்கடப்ப மரங்களை யுடைய சிறிய ஊர்ப்பக்கத்தே கூத்தாடும், செம் நுதல் யானை வேங்கடம் தழீஇ - சிவந்த நெற்றியினையுடைய யானைகளை யுடைய வேங்கட மலையைப் பொருந்தியுள்ள, வெம்முனை அரும் சுரம் இறந்தோர் - வெவ்விய முனையிருப்புக்களையுடைய அரிய சுரத்தினைத் தாண்டிச் சென்ற நம் தலைவர்; 23. நம்மினும் வலிதா தூக்கிய பொருள் - நம்மைக் காட்டினும் உறுதியுடைத்தாக ஆராய்ந்து துணிந்த பொருள்; 1-7. வியல் விசும்பு உகந்து - அகன்ற வானில் உயர்ந்து, புகையிற் பொங்கி - புகைபோலப் பொலிவுற்று, பனி ஊர் - பனி தவழும், அழல் கொடி கடுப்பத் தோன்றும் - தீச்சுடரை ஒப்பத் தோன்றும், இமயச் செவ்வரை மானுங்கொல் - இமயமாய செவ்விய மலையினை ஒக்குமோ? அன்றி, பல் புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் - பல்வகைப் புகழும் மிக்க போர்வெல்லும் நந்தர் என்பாரது, சீர் மிகு பாடலி - சிறப்புமிக்க பாடலிபுரத்திலே, குழீஇ - திரண்டிருந்து (பின்பு), கங்கை நீர் முதல் கரந்த நிதியம் கொல் - கங்கையின் நீர் அடியில் மறைவுற்ற செல்வமோ, எவன்கொல் - அவ்விரண்டும் அன்றாயின் அவர் நம்மை விட்டுப் பிரிந்தது என்னை கொல்லோ? (முடிபு) தோழி! வாழி! பாவை இரங்க, நத்துறந்து, கண்பனி கலுழ்ந்து யாம் ஒழிய வேங்கடம் தழீஇய சுரம் இறந்தோர் நம்மினும் வலிதாத் தூக்கிய பொருள் இமயச் செவ்வரை மானும் கொல்லோ! நந்தர் பாடலிக் குழீஇப் பின்பு கங்கைநீர் முதற்கரந்த நிதியங் கொல்லோ! எவன்கொல்! கொடு நோக்கு ஆடவர் பேஎய் போல ஊன்தின்ற வேட்கை நீங்கத் தோப்பி பருகி, புலாற்கையராய் பூசா வாயராய் குராலோடு சீறூர் மருங்கில் தூங்கும் வேங்கடம் என்க. (வி-ரை) உகந்து - உயர்ந்து; `உகப்பே உயர்தல்'1 என்பது உரியியல். இமயம் பனிமலை யாகலானும், அது பொன்மலை எனவும் படுதலானும் பனியூர் `அழற்கொடி கடுப்பத் தோன்றும் இமயச் செவ்வரை' என்றாள். உகந்து தோன்றும் இமயச் செவ்வரை என்க. மானும் கொல்லோ என்றது, அத்துணைப் பெரியதொன்றோ என்றபடி. நந்தர், பாடலியை ஆண்ட அரசருள் ஒரு பிரிவினர். நந்தரது பாடலி என்க. நந்தருள் ஒருவனால் ஈட்டப்பட்டுப் பாடலியில் திரண்டிருந்த பெரும்பொருள், பின்னர் மாற்றார் படையெடுப்பினால் அழியாவண்ணம் அன்னோர், கங்கையாற்றின் அடியில் சுருங்கை செய்து மறைத்து வைக்க, அப்பொருள் மறைந்து ஒழிந்தது என்னும் வரலாறு இங்கே குறிக்கப்பட்டது என்க. குழீஇக் கரந்த நிதியம் என்க. `நந்தன் வெறுக்கை' (251) என முன் இவ்வாசிரியராற் சுட்டப் பெற்றதும் இதுவே. இமயச் செவ்வரை ஒப்பது ஒன்று இன்மை யானும், நீர் முதற் கரந்த நிதியம் பெறுதற்கு அரிதாகலானும், நம் தலைவர் அவை நோக்கிப் பிரிந்தவர் ஆகார். அவையன்றி அவர் கொண்டுவரத் துணிந்த பொருள், நம்மினும் பார்க்கில் அவர்க்கு அறமும் இன்பமும் பயவாதன்றே, அவ்வாறாகவும் பிரிவுப் துன்பத்தால் நாம் வருந்த அவர் நம்மைப் பிரிந்து சென்றது என்னையோ எனத் தலைமகள் ஆற்றாமை மீதூரத் தோழிக்குச் சொல்லினாள் என்க. பாவை என்றது தோழியை. யாம் ஒழியச் சுரம் இறந்தோர் எனக் கூட்டுக. அணங்கு அரும் மரபிற் பேஎய் - பிறரால் வருத்துதற்கரிய தன்மையையுடைய பேய் என்றுமாம். ஒராஅ - ஒருவாது; ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். குராலின் ஓசை கடிப்பு உருண்டு ஒலிப்பிக்கும் துடியின் ஓசை போல்வதாகலின் உருட்டும் எனப்பட்டது. `உருள் துடி மகுளியின்..... இசைக்கும்' (19) என முன் வந்திருப்பதுங் காண்க. தூங்கும் என்னும் பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது. தூங்கும் வேங்கடம் எனவும் யானையையுடைய வேங்கடம் எனவும் தனித்தனி கூட்டுக. தழீஇ - தழீஇய என்னும் பொருட்டு; தழீஇய என்றே பாடம் கோடலுமாம். 266. மருதம் (பரத்தையிற் பிரிந்துவந்து கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது.) கோடுற நிவந்த நீடிரும் 1பரப்பின் அந்தீம் 2பாஅயப் புதுப்புனல் நெருநை மைந்துமலி களிற்றின் தலைப்புணை தழீஇ நரந்தம் நாறுங் குவையிருங் கூந்தல் 5. இளந்துணை மகளிரொடு ஈரணிக் கலைஇ நீர்பெயர்ந்து ஆடிய ஏந்தெழின் மழைக்கண் நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலை யாகிக் காமங் கைம்மிகச் சிறத்தலின் நாணிழந்து ஆடினை என்ப மகிழ்ந அதுவே 10. யாழிசை மறுகின் நீடூர் கிழவோன் வாய்வாள் எவ்வி ஏவல் மேவார் நெடுமிடல் சாய்த்த 3பசும்பூண் பொருந்தலர் அரிமண வாயில் உறத்தூர் ஆங்கண் கள்ளுடைப் பெருஞ்சோற்று எல்லிமிழ் அன்ன 15. கவ்வை ஆகின்றால் பெரிதே யினியஃது அவலம் அன்றுமன் எமக்கே அயல கழனி யுழவர் கலிசிறந் தெடுத்த கறங்கிசை வெரீஇப் பறந்த தோகை அணங்குடை வரைப்பகம் பொலியவந் திறுக்குந் 20. திருமணி விளக்கின் அலைவாய்ச் செருமிகு சேஎயொடு உற்ற சூளே. - பரணர். (சொ-ள்) 1-9. மகிழ்ந - தலைவனே! கோடு உற நிவந்த - கரையின் உச்சியைப் பொருந்துமாறு உயர்ந்த, நீடு இரும் பரப்பின் - நீண்ட பெரிய பரப்பினையுடைய, அம் தீம் பாயப் புதுப்புனல் - அழகிய இனிய மனத்திற்கு விருப்பமான புதுநீர்ப் பெருக்கில், நெருநை - நேற்று, மைந்துமலி களிற்றின் - வலிமை மிக்க களிற்றினைப் போல, தலைப்புணை தழீஇ - புணையின் தலைப் புறத்தினைத் தழுவி, நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல் - நரந்தம்புல் நாறுகின்ற திரண்ட கரிய கூந்தலையுடைய, இளம் துணை மகளிரொடு - நினக்குத் துணையாய இளைய மகளிரொடு, ஈர் அணிக் கலைஇ - நீர் விளையாட்டிற்குரிய அணிகளைக்கொண்டு, நீர் பெயர்ந்து ஆடிய - நீரின்கண் பெயர்ந்து விளையாடிய, ஏந்து எழில் மழைக்கண் - அவர் களுடைய மிக்க அழகினையுடைய குளிர்ந்த கண்கள்; நோக்கு தொறும் நோக்குதொறும் - நின்னைப் பார்க்குந்தோறும் பார்க்குந் தோறும், தவிர்விலையாகி - நீ விருப்பம் தவிராயாகி, காமம் கைம் மிகச் சிறத்தலின் - காமம் அளவு கடந்து மிகுதலினால், நாண் இழந்து - நாணத்தினை இழந்து, ஆடினை யென்ப - நீ அவர்களுடன் நீர் விளையாட்டு நிகழ்த்தினை என்று பலரும் கூறுவர்; 9-15. அதுவே - அச்செயல்தான், யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் - யாழ் ஒலிக்கும் தெருக்களையுடைய நீடூரின் தலைவ னான, வாய் வாள் எவ்வி - வாள்வென்றி வாய்ந்த எவ்வி என்பான், ஏவல் மேவார் - தன் ஏவுதலை ஏற்றுக்கொள்ளாராகிய, பசும்பூண் பொருந்தலர் - பசிய பொன்னணியையுடைய பகைவரது, நெடுமிடல் சாய்த்த - மிக்க வலிமையைக் கெடுத்த, அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண் - அரிமணவாயில் உறத்தூராய அவ்விடத்தே, கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன - அவனுடைய படையாளர்க் களித்த கள்ளுடன் கூடிய பெருஞ்சோற்றினாலே பகலில் எழுந்த ஆரவாரம் போன்று, பெரிது கவ்வை ஆகின்று - மிகவும் அலராகின்றது; 15-21. இனி அஃது அவலம் அன்று எமக்கு - இப்பொழுது அதுதானும் எமக்குத் துன்பந் தருவதன்று (மற்று), அயல கழனி உழவர் கலி சிறந்து எடுத்த - பக்கத்தேயுள்ள வயலில் உழுவோர் செருக்கு மிக்கு எழுப்பிய, கறங்கு இசை வெரீஇ - ஒலிக்கின்ற ஆரவாரத் தினை அஞ்சி, பறந்த தோகை - பறந்துபோய மயில், அணங்கு உடை வரைப்பு அகம் பொலிய வந்து இறுக்கும் - தெய்வத்தையுடைய குன்றிடத்தே பொலிவுற வந்து தங்கும், திருமணி விளக்கின் அலைவாய் - அழகிய மணிவிளக்கு ஒளிரும் திருச் சீரலைவாயமர்ந்த, செருமிகு சேஎயொடு உற்ற சூள் - போர்வன்மை மிக்க முருகனோடு பொருந்திச் செய்த சூளுறவே துன்பம் தருவதாகும். (முடிபு) மகிழ்ந! நெருநை புதுப்புனல் தலைப்புணை தழீஇ இளந்துணை மகளிரொடு ஈரணிக் கலைஇ மழைக்கண் நோக்குந் தொறும் தவிர்விலையாகி நாண் இழந்து ஆடினை என்ப; அதுவே எவ்வி, பொருந்தலர் நெடுமிடல் சாய்த்த அரிமண வாயில் உறத்தூர் ஆங்கண் பெருஞ் சோற்று இமிழ் அன்ன கவ்வை பெரிதாகின்று; இனி அஃது அவலம் அன்று எமக்கே; அலை வாய்ச் சேஎயொடு உற்ற சூளே அவலமாகும். (வி-ரை) பாயம் - விருப்பம்; `பாயம் பாடி'1 என்பதற்கு விருப்ப மானவற்றைப் பாடி என நச்சினார்க்கினியர் உரைத்தமை காண்க. இனி பாஅய புதுப்புனல் என்றாதல் பராஅய புதுப்புனல் என்றாதல் பாடமிருப்பின் பரந்த புதுநீர் என்க. அந்தில் என்பது பாடமாயின் அவ்விடத்தே என்றுரைக்க. தலைப்புணை - புணையின் தலைப்பு; `தார் பூண் களிற்றிற் றலைப்புணை தழீஇ' (166) என முன்னரும் வந்துள்ளமை காண்க. ஈர் அணி - ஈரிய அணி; நீராட்டிற்குரிய அணி என்றபடி. கலைஇ - கலந்து கொண்டு; என்றபடி. ஏவல் மேவாராகிய பொருந்தலர் எனக் கூட்டுக. மேவார் என்பது மேவர எனவும், பொருந்தலர் என்பது பெருந்திறல் எனவும் இருக்க வேண்டும் எனக் கொண்டு, பசும்பூண் பெருந்திறல் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆவான் என்று உரைப்பாரும் உளர் 1`பசும்பூண் பெருந்திறல் என்பது பாண்டியன் நெடுஞ்செழியனையே குறிக்கவேண்டும் என்னும் நியதியின்மையும், எவ்வி என்பான் அவனது ஏவலைப் பொருந்தினான் என்றல் ஏலாமையும், `மேவர,' `பெருந்திறல்' என யாண்டும் பாடமின்மையும் கருதற்பாலன. இமிழ் - ஒலி; ஆரவாரம். கழனி உழவர் கறங்கிசை வெரீஇப் பறந்த தோகை வரைப்பகம் பொலிய வந்திறுக்கும் அலைவாய் என்றமையால், மருதம் குறிஞ்சி நெய்தலாகிய நிலங்கள் கலந்துள்ளமை பெற்றாம். அலைவாய் கடலின் அலை ஓவாது அலைக்கும் செந்தில் என்னும் பதி; `வெண்டலைப் புணரி அலைக்குஞ் செந்தில்'2 எனப் புறப்பாட்டில் வருதல் காண்க. `சூளே அவலமாகின்றது' என விரித்துரைக்க. `பெறற்கரும் பெரும்பொருள் முடிந்த பின்'3 என்னுஞ் சூத்திரத்து, `சூள்நயத் திறத்தாற் சோர்வுகண் டழியினும்' என்னும் பகுதியில் கோடுற நிவந்த என்னும் மணிமிடை பவளத்தைத் தோழி கூற்றாகக் காட்டுவாரும் உளர் என்னும் நச்சினார்க்கினியர் கூற்றால் இதனைத் தோழி கூற்றாகக் கொண்டாரும் உளர் என்பது போதரும். (உ-றை) உழவர் கறங்கு இசை வெருவிப் பறந்த தோகை அணங்குடை வரைப்பகம் பொலியவந் திறுக்கும் என்பது, நீயும் ஊரில் எழுந்த அலருக்கு அஞ்சியே இம் மனை பொலிய வந்துள்ளாய் என்று கூறியபடி. 267. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) 4நெஞ்சு நெகிழ்தகுந கூறி அன்புகலந்து அறாஅ வஞ்சினஞ் செய்தோர் வினைபுரிந்து திறம்வே றாகல் எற்றென்று ஒற்றி 5இனைத லான்றிசின் நீயே சினைபாய்ந்து 5. உதிர்த்த கோடை உட்குவரு கடத்திடை வெருக்கடி யன்ன குவிமுகிழ் இருப்பை மருப்புக் கடைந்தன்ன கொள்ளை வான்பூ மயிர்க்கால் எண்கின் ஈரினங் கவர மைபட் டன்ன மாமுக 6முசுக்கலை 10. பைதறு நெடுங்கழை பாய்தலின் ஒய்யென வெதிர்படு வெண்ணெல் வெவ்வறைத் தாஅய உகிர்நெரி யோசையிற் பொங்குவன பொரியும் ஓங்கல் வெற்பிற் சுரம்பல இறந்தோர் தாம்பழி யுடைய ரல்லர் நாளும் 15. நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா வயங்குவினை வாளேர் எல்வளை 1நெகிழ்த்த தோளே தோழி தவறுடை யவ்வே. - பாலை பாடிய பெருங்கடுங்கோ (சொ-ள்) 17. தோழி-, 1-4. நீயே - நீதான், நெஞ்சு நெகிழ்தகுந கூறி - நம் நெஞ்சம் நெகிழத் தக்கனவற்றைக் கூறி, அன்பு கலந்து - அன்பினால் உள்ளம் கலந்து, அறாஅ வஞ்சினம் செய்தோர் - தாம் என்றும் பிரியாமைக்குரிய சூளுறவு செய்தோராய நம் தலைவர், வினை புரிந்து - பொருளீட்டும் தொழிலை விரும்பி, திறம் வேறு ஆகல் - வேறு தன்மையர் ஆயது, எற்று என்று ஒற்றி - என்னையென்று ஆராய்ந்து, இனைதல் ஆன்றிசின் - வருந்துதல் ஒழிவாயாக; 4-14. உட்கு வரு கடத்திடை - அச்சம் தோன்றும் காட்டிடத்தே, கோடை - கோடைக்காற்று, சினை பாய்ந்து உதிர்த்த - கிளையினை மோதி உதிரச் செய்த, வெருக்கு அடி அன்ன - பூனையின் அடியினை யொத்த, குவி முகிழ் இருப்பை - குவிந்த அரும்பினையுடைய இருப்பையினது, மருப்புக் கடைந்தன்ன கொள்ளை வான் பூ - தந்தத்தினைக் கடைந்தாலொத்த மிகுதியாகவுள்ள வெள்ளிய பூக்களை, மயிர்க்கால் எண்கின் ஈர் இனம் கவர - மயிர் அடர்ந்த காலினை யுடைய கரடியின் பெரிய கூட்டம் கவர்ந்துண்ண, மைபட்டன்ன மாமுக முசுக்கலை - மை பூசினாலொத்த கரிய முகத்தினையுடைய ஆண்குரங்கு, பைது அறு நெடு கழை பாய்தலின் - பசுமையற்ற நீண்ட மூங்கிலிற் பாய்தலினால், ஒய்யென - விரைய, வெதிர்படு வெண் நெல் வெவ் அறை தாஅய் - மூங்கிலில் விளைந்த வெள்ளிய நெற்கள் வெப்பம் மிக்க பாறையில் உதிர்ந்து பரந்து, உகிர் நெரி ஓசையில் பொங்குவன பொரியும் - நகத்தை நெரிப்பது போன்ற ஓசையுடன் பொங்கிப் பொரிந்திடும், ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர் - உயர்ந்த மலைகளையடுத்த காடு பலவற்றையும் கடந்து சென்றவராய அவர், பழியுடையர் அல்லர் - பழியுடையோர் ஆகார்; 14-17. நாளும் - எஞ்ஞான்றும், நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா- தம்மை விரும்பி வந்தாரை விடாது பற்றிக் கொள்ளுதலை அறியா வாய, வயங்கு வினை வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த - விளங்கும் தொழிற்றிறம் வாய்ந்த வாளால் அறுத்து அழகுறுத்தப்பெற்ற ஒளிபொருந்திய வளையலை நெகிழவிட்ட, தோளே தவறுடைய - நம் தோள்களே தவறுடையன. (முடிபு) தோழி! நீ, அறாஅ வஞ்சினம் செய்தோர் வினைபுரிந்து திறம் வேறாதல் எற்றென்று ஒற்றி இனைதல் ஆன்றிசின்; வெற்பின் சுரம் பல இறந்தோர் பழியுடையர் அல்லர்; நாளும் நயந்தோர்ப் பிணித்தல் தேற்றாவாய எல்வளை நெகிழ்த்த தோளே தவறுடைய. இருப்பை வான்பூ எண்கின் ஈரினம் கவர, முசுவினம், கழை பாய்தலின், வெண்ணெல் வெவ்வறைத் தாஅய்ப் பொரியும் சுரம் என்க. (வி-ரை) அன்பு கலந்து கூறி வஞ்சினம் செய்தோர் என்க. அறாஅ வஞ்சினம் - நீங்காமையைப் புலப்படுக்கும் சூளுறவு. எற்று - எவன், என்னை, ஈர் இனம் - கரிய கூட்டமுமாம். முசுவானது `மை பட்டன்ன மாமுக முசுக்கலை'1 என இங்ஙனமே பிறாண்டும் கூறப் பட்டுள்ளது. வஞ்சினம் செய்தோர் திறம் வேறாகல் எற்றென்று தோழி ஆற்றாளாய்க் கூறியபொழுது நீ அங்ஙனமே கூறி வருந்தாதே, கொடிய சுரம் பல கடந்த தலைவர் பழியுடையர் அல்லர், நம்மாட்டு அன்புடைய அவரைப் பிணித்துக் கொள்ள அறியாத நம் தோளே தவறு டையன, ஆகலின் நாம் ஆற்றியிருத்தலே கடன் என உரைத்தாளாம். 268. குறிஞ்சி (குறைவேண்டிப் பின்னின்ற தலைமகனுக்குக் குறைநேர்ந்த தோழி தலைமகட்குக் குறைநயப்பக் கூறியது.) அறியாய் வாழி தோழி பொறிவரிப் பூநுதல் யானையொடு புலிபொரக் குழைந்த குருதிச் செங்களம் புலவற வேங்கை உருகெழு நாற்றங் குளவியொடு விலங்கும் 5. மாமலை நாடனொடு மறுவின் றாகிய காமங் கலந்த காதல் உண்டெனின் நன்றுமன் னதுநீ நாடாய் கூறுதி நாணும் நட்பும் இல்லோர்த் தேரின் யானல தில்லையிவ் வுலகத் தானே 10. இன்னுயிர் அன்ன நின்னொடுஞ் சூழாது முளையணி மூங்கிலிற் கிளையொடு பொலிந்த பெரும்பெயர் எந்தை அருங்கடி நீவிச் செய்துபின் இரங்கா வினையொடு மெய்யல பெரும்பழி எய்தி னேனே. - வடமவண்ணக்கன் பேரிசாத்தனார். (சொ-ள்) 1-7. தோழி-, வாழி-, அறியாய் - யான் கூறுவதனை நீ மனத்தான் ஆராய்ந்து பாராய், பொறி வரி பூ நுதல் யானையொடு - புள்ளிகளையும் வரிகளையுமுடைய பொலிவுற்ற நெற்றியினையுடைய யானையுடன், புலி பொர - புலி பொருதலால், குழைந்த குருதிச் செங்களம் புலவு அற - குருதியால் குழைவுற்ற சிவந்த களம் புலால் நாற்றம் நீங்க, வேங்கை உருகெழு நாற்றம் குளவியொடு விலங்கும் - நிறம் பொருந்திய வேங்கைமலர்களின் நாற்றம் காட்டுமல்லிகை மலர் நாற்றத்தொடு கூடி மாற்றும், மாமலை நாடனொடு - பெரிய மலைநாட்டையுடைய தலைவனொடு, மறு இன்று ஆகிய - குற்றமில்லையாகத் தோன்றிய, காமம் கலந்த காதல் உண்டு எனின் - அன்பு கலந்த கூட்டம் உளதாயின், நன்று மன் - அது மிக நன்றாகும், அது நீ நாடாய் கூறுதி - அதனை நீ ஆராயாமற் கூறுகின்றாய், 10-14. இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது - இனிய உயிரை யொத்த நின்னொடும் கலந்தெண்ணாது, முளை அணி மூங்கிலிற் கிளையொடு பொலிந்த - முளைகளால் அழகுபெற்ற மூங்கிலைப் போலப் பெருஞ் சுற்றத்தாற் சிறப்புற்ற, பெரும் பெயர் எந்தை அரு கடி நீவி - பெரிய புகழ் மேவிய நம் தந்தையின் அரிய காவலைத் தாண்டி, செய்து பின் இரங்கா வினையொடு - செய்துபின் வருந்துதற் கேதுவாகா நல்ல வினையைச் செய்தமையால், மெய் அல பெரும் பழி எய்தினேன் - ஆயுங்கால் உண்மை ஆகாத பெரிய பழிகளை நான் அடைந்துள்ளேன்; ஆகலான். 8-9. இவ்வுலகத்தான் - இவ் வுலகத்தின்கண்ணே, நாணும் நட்பும் இல்லோர்த் தேரின் - நாணும் நட்பும் இலராயினாரை ஆராயின், யான் அலது இல்லை - என்னை யொழிய யாரும் இலராவர். (முடிபு) தோழி! வாழி! மாமலை நாடனொடு காமம் கலந்த காதல் உண்டெனின் நன்றுமன்; நீ அது நாடாய் கூறுதி அறியாய்; இன்னுயிர் அன்ன நின்னொடுஞ் சூழாது எந்தை அருங்கடி நீவிச் செய்து பின் இரங்கா வினை யொடு மெய்யல பெரும்பழி எய்தினேனே; இவ்வுலகத் தானே நாணும் நட்பும் இல்லோர்த்தேரின் யானலதில்லை. (வி-ரை) `அறியாய்' முன்னிலை ஏவல் உடன்பாடு. காதல் ஈண்டுக் கூட்டம் என்னும் பொருட்டு. நாடாய் கூறுதி அறியாய் எனக் கூட்டுக. கூறுதி என்பதனைக் கூறி எனப் பாடங்கொண்டு இகரவீற்று வியங்கோள் என்பர் சிவஞான முனிவர்.1 தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி, தலைவனொடு கூட்டம் உண்டெனின் நன்று; அதனை ஆராய்ந்து பார் என்று தலைவிக்குக் கூறியவழி, அவள் அதற்கு இசையாள் போன்றிருந்தனளாகலின், யான் பெரும் பழி எய்தினேன்; இவ்வுலகில் நாணும் நட்பும் இல்லோர் என்னை யன்றிப் பிறர் இலர் என அவள் குறை நயப்பான்வேண்டி வன்மையாற் கூறினாள் என்க. இன்னுயிரன்ன நின்னொடும் சூழாது என்றது, என்னின் வேறல்லாத நின்னொடும் சூழாதது குற்றம் ஆகாது என்பதும், செய்துபின் இரங்காவினை என்றது, தான் செய்தது பழியாகாத நல்வினையே என்பதும், பெரும்பழி எய்தினேன் என்றது, யான் அங்ஙனம் செய்தும் ஏலாத பழியை எய்தினேன் என்பதும் கூறிய படியாம். தோழி கூறியதற்குத் தலைவி நாணினா ளாதலின், இவ்வுலகில் யானே நாண் இல்லாதவள் என்றும், கெழுதகைமையாற் கேளாது செய்ததற்கு இசைந்து மகிழாமையின் யானே நட்பில்லாதவள் என்றும் வலிதிற் கூறினாளென்க. அதன் பயன் தலைவி குறை நயப்பாளாவது. (உ-றை) குருதிச் செங்களம் புலவுஅற, வேங்கை நாற்றம் குளவியொடு விலங்கும் மாமலை நாடன் என்றது, களவொழுக்கத் தால் பிறர் கூறும் பழியை, வரைந்துகொண்டு இல்லறம் நிகழ்த்து தலால் போக்கி யருள்வன் தலைவன் என்றபடி. (மே-ள்) `செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்'1, ‘செய்யென் கிளவி யாகிடன் உடைத்தே' என்னுஞ் சூத்திரத்து, `அறியாய் வாழி தோழி,......' என்னும் அகப்பாட்டினுள், அறியாய் என்றது, `காமங் கலந்த காதல் உண்டெனின், நன்றுமன் அதுநீ நாடாய் கூறுதி' என்ற தனோடு இயையுங்கால், அவனோடு கூட்டம் உண்டெனின் அது மிக நன்று, அதனை நீ ஆராயாமல் கூறுகின்றாய்; அதனை நின் மனத்தால் ஆராய்ந்து பாராய் என வேண்டிக் கோடற் பொருள் தந்து, முன்னிலை ஏவல் உடன்பாடாய் நின்றவாறுங் காண்க என்றார், நச். 269. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.) தொடிதோள் இவர்க எவ்வமுந் தீர்க நெறியிருங் கதுப்பிற் கோதையும் புனைக ஏறுடை யினநிரை பெயரப் பெயராது செறிசுரை வெள்வேல் மழவர்த் தாங்கிய 5. தறுக ணாளர் நல்லிசை நிறுமார் பிடிமடிந் தன்ன குறும்பொறை மருங்கின் நட்ட போலும் நடாஅ நெடுங்கல் அகலிடங் குயின்ற பல்பெயர் மண்ணி 1நறுவிரை மஞ்சள் ஈர்ம்புறம் பொலிய 10. அம்புகொண் டறுத்த ஆர்நார் உரிவையிற் செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி வரிவண் டார்ப்பச் சூட்டிக் கழற்கால் இளையர்பதிப் பெயரும் அருஞ்சுரம் இறந்தோர் தைஇ நின்ற தண்பெயல் கடைநாள் 15. பொலங்காசு நிரைத்த கோடேந்து அல்குல் நலங்கேழ் மாக்குரல் குழையொடு துயல்வரப் பாடூர்பு எழுதரும் பகுவாய் மண்டிலத்து வயிரிடைப் பட்ட தெள்விளி இயம்ப வண்டற் பாவை உண்டுறைத் தரீஇத் 20. திருநுதன் மகளிர் குரவை அயரும் 2பெருநீர்க் கானல் தழீஇய இருக்கை வாணன் சிறுகுடி வணங்குகதிர் நெல்லின் யாணர்த் தண்பணைப் போதுவா யவிழ்ந்த ஒண்செங் கழுநீர் அன்னநின் 25. கண்பனி துடைமார் வந்தனர் விரைந்தே. - மதுரை மருதனிள நாகனார். (சொ-ள்) 3-13. தோழி, ஏறு உடை இனநிரை பெயர - ஏறுகளுடன் கூடிய பசுவினமாய நிரைகள் மீளவும், பெயராது - மீளாது நின்று, செறி சுரை வெள்வேல் மழவர்த் தாங்கிய - திணிந்த சுரையையுடைய வெள்ளிய வேலையுடைய வெட்சி வீரரைத் தடுத்துப் பொருது பட்ட, தறுகணாளர் நல் இசை நிறுமார் - அஞ்சாமையுடைய கரந்தை வீரரது நல்ல புகழை நிலைநிறுத்து மாறு, பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின் - பெண் யானைகள் கிடந்தாலொத்த குன்றுகளின் பக்கத்தே, நட்டபோலும் நடாஅ நெடுங்கல் - நட்டு வைத்தவை போன்ற இயற்கையிலெழுந்த நீண்ட கற்களின், அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி - அகன்ற இடத்தைச் செதுக்கி இயற்றிய பல வடிவுகளையும் நீராட்டி, நறுவிரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய - நறுமணமுள்ள மஞ்சள் அவற்றின் ஈரிய புறத்தில் விளங்குமாறு பூசி, அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் - அம்பினால் அறுத்தெடுத்த ஆத்தியின் பட்டையாகிய நாரினால், செம்பூ கரந்தை புனைந்த கண்ணி - சிவந்த கரந்தைப் பூவைத் தொடுத்து இயற்றிய கண்ணியை, வரிவண்டு ஆர்ப்பச் சூட்டி - வரிகளையுடைய வண்டுகள் ஒலிக்கச் சூட்டி, கழல் கால் இளையர் பதிப்பெயரும்- கழலினைத் தரித்த காலினையுடைய வீரர்கள் தம் பதிக்கண்ணே மீளும், அரும் சுரம் இறந்தோர் - அரிய காட்டைக் கடந்து சென்றோராய நம் தலைவர்; 14. தைஇ நின்ற தண்பெயல் கடைநாள் - தைத் திங்களில் எஞ்சி நிற்கும் குளிர்ந்த பெயலின் இறுதி நாட்களில்; 15-25. பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் - பொன்னாலாய காசினைத் தொடுத்து அணிந்த பக்கம் உயர்ந்த அல்குலிடத்தே, நலம் கேழ் மா குரல் குழையொடு துயல்வர - நன்னிறம் வாய்ந்த சிறந்த பூங்கொத்துக்கள் தழையுடன் கூடி அசைய, பாடு ஊர்பு எழுதரும் பகுவாய் மண்டிலத்து - ஓசை பரந்து எழும் பெரியவாய் வட்டத்தை யுடைய, வயிரிடைப்பட்ட தெள் விளி இயம்ப - ஊது கொம்பி னிடத்து எழுந்த தெளிந்த இசை ஒலிக்க; வண்டல் பாவை உண் துறை தரீஇ - வண்டல் விளையாட்டுக் குரிய பாவையை நீர் உண்ணும் துறையில் கொணர்ந்து வைத்து, திரு நுதல் மகளிர் குரவை அயரும் - அழகிய நெற்றியினையுடைய பெண்கள் குரவைக் கூத்தாடும், பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை - கடற்கரைச் சோலை சூழ்ந்த ஊராகிய, வாணன் சிறுகுடி - வாணன் என்பானது சிறுகுடியிலுள்ள, வணங்கு கதிர் நெல்லின் யாணர்த் தண்பணை - வளைந்த கதிர்களைக் கொண்ட நெல்லினையுடைய அழகிய நீர்வளஞ்சான்ற வயலில், போது வாய் அவிழ்ந்த ஒள் செங் கழுநீர் அன்ன - அரும்பு வாய்திறந்த ஒள்ளிய செங்கழுநீர் மலர் போன்ற, நின் கண் பனி துடைமார் - நின் கண்ணினின்றுவரும் நீரைத் துடைத்து ஆற்றுவிக்க, விரைந்து வந்தனர் - விரைந்து வந்துள்ளார்; ஆதலான், தோழி! 1-2. தொடி தோள் இவர்க - நின் வளைகள் தோளில் ஏறுவனவாக, எவ்வமும் தீர்க - நின் துன்பமும் தீர்வதாக, நெறி இரும் கதுப்பில் கோதையும் புனைக - நெளிந்த கரிய கூந்தலில் மாலையையும் நீ புனைக. (முடிபு) அருஞ்சுரம் இறந்தோர் நின் கண்பனி துடைமார் விரைந்து வந்தனர்; ஆதலான், நின் தொடி தோள் இவர்க; எவ்வமும் தீர்க; கதுப்பிற் கோதையும் புனைக. (வி-ரை) தொடி தோள் இவர்க என்றதனால், தலைவனைப் பிரிந்த தலைவியின் தோள் மெலிவால் தொடிகள் கழலப்பெற்றன என்பதும், எவ்வமும் தீர்க என்றதனால், தலைவி தீராத வருத்தம் உடையள் ஆயினாள் என்பதும், கதுப்பிற் கோதையும் புனைக என்றதனால், அவ் வருத்தத்தால் தலைவி கோதை புனைதல் முதலிய ஒப்பனையின்றி யிருந்தாள் என்பதும் பெற்றாம். மழவர் என்பார் வெட்சி மறவர்; தறுகணாளர் - கரந்தை மறவர். நிரை கவர்ந்து சென்ற வெட்சி மறவரிடத்தினின்றும் அதனை மீட்ட கரந்தை மறவர், அவ் வெட்சியார் மீட்டும் நிரைமேற் செல்லாது தடுத்து நின்று தறு கண்மையுடன் பொருது பட்டனர் ஆதலின், அவர் புகழை நிறுத்து தற்கு அவரைச் சார்ந்த வீரர்கள் கல்லிலே அவர் படிவத்தை இயற்றி வழிபடுவாராயினர் என்க. `நடாஅ நெடுங்கல் அகலிடம் குயின்ற' - என்றதனால், பல்லவர் காலத்திற்போல இயல்பாய பாறையைக் குடைந்து படிவம் இயற்றும் வழக்கு அஞ்ஞான்றும் இருந்த தென்பது புலனாகின்றது. பல் பெயர் என்புழி, பெயர் என்பது பொருள்; ஆவது படிவம் என்க. தறுகணாளர் நல்லிசை நிறுமார் நெடு கல் குயின்ற பல்பெயர் என்க. பொருதுபட்ட கரந்தையாரது புகழை நிறுத்த வேண்டி நெடுங்கல்லிலே குயின்ற வடிவினை நீராட்டி மஞ்சட்பூசிக் கண்ணி சூட்டி வழிபட்டு இளையர் தம் பதிக்கு ஏகும் அரும் சுரம் என்க. தைஇ நின்ற - தைத் தன்மை நிலை பெற்ற என்றுமாம். கடைநாளில் வண்டற்பாவையை உண் துறைத் தரீஇ மகளிர் குரவை அயருங் கானல் எனவும், கானல் தழீஇய இருக்கைச் சிறுகுடி எனவும் இயையும். துயல்வர இயம்பக் குரவை அயரும் என்க. தைத் திங்களில் கன்னியர் பாவையை நீர்த் துறையில் வைத்து விளையாடும் நோன்புடையர் என்பது, `தளைநெகிழ் பிணி நிவந்த'1 என்னும் குறிஞ்சிக் கலியானும் அறியப்படும். விரைந்து வருவார் என்பதனை வந்தனர் விரைந்து எனத் துணிவுபற்றி ஓதினாள் என்க. 270. நெய்தல் (பகற்குறிக்கண் வந்துநீங்குந் தலைமகனைத் தோழி வரைவுகடாயது.) இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம் புலாஅன் மறுகிற் சிறுகுடிப் பாக்கத்து இனமீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும் மெல்லம் புலம்ப நெகிழ்ந்த தோளே 5. சேயிறாத் துழந்த நுரைபிதிர்ப் படுதிரை பராஅரைப் புன்னை வாங்குசினைத் தோயுங் கானலம் பெருந்துறை நோக்கி யிவளே கொய்சுவல் புரவிக் கைவண் கோமான் நல்தேர்க் குட்டுவன் கழுமலத் தன்ன 10. அம்மா மேனித் 2தொன்னலந் தொலையத் துஞ்சாக் கண்ணள் அலமரும் நீயே கடவுள் மரத்த முள்மிடை குடம்பைச் சேவலொடு புணராச் சிறுகரும் பேடை 3இன்னாது உயங்குங் கங்குலும் 15. 4நும்மூர் உள்ளுதிர் நோகோ யானே. - சாகலாசனார். (சொ-ள்) 1-4. புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து - புலால் நாற்றம் வீசும் தெருவினையுடைய சிறிய குடியிருப்புக்களையுடைய பாக்கத்தில், இன மீன் வேட்டுவர் - கூட்டமாய் மீன் வேட்டம் புரிபவர், இரு கழி மலர்ந்த வள் இதழ் நீலம் - பெரிய உப்பங்கழியில் மலர்ந்த வளம் வாய்ந்த இதழ்களையுடைய நீலப் பூக்களை, ஞாழலொடு மிலையும் - புலிநகக்கொன்றைப் பூக்களுடன் சூடும், மெல் அம் புலம்ப - மென்னிலமாகிய நெய்தற் றலைவனே; 4-11. தோள் நெகிழ்ந்த - இவள் தோள்கள் மெலிந்தன; இவள் - இத் தலைவி, சேய் இறா துழந்த நுரை பிதிர்ப்படு திரை - சிவந்த இறா மீன் கலக்கிய நுரையுடன் கூடிய திவலை பொருந்திய அலைகள், பரு அரைப் புன்னை வாங்கு சினைத் தோயும் - பெரிய அடியினை யுடைய புன்னைமரத்தின் வளைந்த கிளைகளில் பொருந்தும், கானல் அம் பெருந்துறை நோக்கி - சோலையை யடுத்த அழகிய பெரிய துறையை நோக்கி, கொய் சுவல் புரவிக் கைவண் கோமான் - கொய்யப் பெற்ற பிடரிமயிரினையுடைய குதிரைகளையுடைய கைவண்மை மிக்க தலைவனாகிய, நல்தேர் குட்டுவன் - நல்ல தேரினையுடைய குட்டுவனது, கழுமலத்து அன்ன - கழுமலம் என்னும் ஊரினைப் போன்ற, அம்மா மேனி தொல் நலம் தொலைய - அழகிய மாமை நிறம் வாய்ந்த மேனி பழைய அழகு கெட, துஞ்சாக் கண்ணள் அலமரும் - கண் துயிலாளாகி மனம் கலங்குவள்; 11-15. நீயே-, கடவுள் மரத்த முள் மிடை குடம்பை - தெய்வத் தினை யுடைய மரத்திடத்தவாகிய முள்ளால் மிடையப்பெற்ற கூட்டில், சேவலொடு புணராச் சிறு கரும் பேடை - தன் சேவலுடன் கூடப் பெறாத சிறிய கரிய அன்றிற் பேடை, இன்னாது உயங்கும் கங்குலும் - துன்பமுற்று வருந்தும் இரவிலும், நும்ஊர் உள்ளுதிர் - நுமது ஊர்க்கு ஏகிவிட எண்ணுகின்றீர், யான் நோகு - யான் நோகின்றேன். (முடிபு) மெல்லம் புலம்ப! இவள் தோள் மெலிந்த; இவள் கானலம் பெருந்துறை நோக்கி, மேனி தொன்னலம் தொலையத் துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீர்தாம் பேடை இன்னாது உயங்கும் கங்குலும் நும் ஊர் உள்ளுதிர்; யான் நோகு. (வி-ரை) கானலம் பெருந்துறை நோக்கித் துஞ்சாக் கண்ணள் அலமரும் என்றதனால், முன்பு நின்னுடன் தலைப்பெய்து இன்பம் துய்த்த அவ்விடத்திலே, இனிப் பகற்குறிக்கண் கூடுதல் அரிதென்னும் கருத்தினால் தலைவி துயிலாது வருந்துகின்றாள் என்பதும், சேவலொடு புணராப்பேடை இன்னாது உயங்கும் கங்குலும் நும் ஊர் உள்ளுதிர் என்றதனால், நீர்இரவுக் குறிக்கண் வந்தாதல் தலைவியின் வருத்தத்தைப் போக்க நினைக்கின்றிலீர் என்பதும், இவ்வாற்றால் பகற் குறியினும் இரவுக் குறியினும் நும்மைத் தலைப்படுமாறின்றித் தலைவி எய்தும் வருத்தத்தினை நோக்கி, யான் வருந்துகின்றேன் என்பதும் தோழி தலைவனிடத்துக் கூறி, ஒரு ஞான்றும் பிரியாது இன்பம் துய்த்தற்கு இனி நீர் வரைந்து கொள்ளவேண்டுமெனக் குறிப்பித்தாளாம் என்க. பேடை உயங்கும் கங்குலும் நும் ஊர் உள்ளுதிர் என்றது. தனது கூட்டமின்மையால் தலைவி எய்தும் வருத்தத்தைச் சிறிதும் கருதாது தலைவன் செல்லும் கொடுமையை விளக்கியபடியாம். 271. பாலை (1செலவுணர்த்திய தோழி தலைமகளது குறிப்பறிந்து தலைமகனைச் செலவழுங்கச் சொல்லியது.) பொறிவரிப் புறவின் செங்கால் சேவல் சிறுபுன் பெடையொடு சேட்புலம் போகி அரிமணல் இயவிற் பரல்தேர்ந் துண்டு வரிமரல் வாடிய வான்நீங்கு நனந்தலைக் 5. குறும்பொறை மருங்கிற் கோட்சுரம் நீந்தி நெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர் செல்லுயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லிப் பல்காய் அஞ்சினை யகவும் அத்தம் சென்றுநீர் அவணி ராகி நின்றுதரும் 10. நிலையரும் பொருட்பிணி நினைந்தனி ரெனினே 2வல்வ தாகநுஞ் செய்வினை யிவட்கே களிமலி கள்ளில் நற்றே 3ரவியன் ஆடியல் இளமழை சூடித் தோன்றும் பழந்தூங்கு விடரகத் தெழுந்த காம்பின் 15. கண்ணிடை புரையும் நெடுமென் பணைத்தோள் திருந்துகோ லாய்தொடி ஞெகிழின் மருந்து முண்டோ பிரிந்துறை நாட்டே. - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார். (சொ-ள்) 1-11. (தலைவ!) பொறிவரி செங்கால் புறவின் சேவல் - புள்ளிகளையும் வரிகளையும் சிவந்த கால்களையுமுடைய ஆண் புறா, சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி - தனது சிறிய புல்லிய பெடையுடன் சேய்மையாய இடத்திற்குச் சென்று, அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு - விளங்கும் மணல்நெறியில் பரல்கற்களை ஆய்ந்து உண்டு, வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலை - வரிகளையுடைய மரற்செடி வாடியுள்ள மேகம் பெய்யாதொழிந்த அகன்ற இடத்தையுடைய, குறும்பொறை மருங்கில் கோள் சுரம் நீந்தி - குன்றுகளின் பக்கத்திலுள்ள ஊறு பொருந்திய சுரத்தினைக் கடந்து, நெடு சேண் வந்த நீர் நசை வம்பலர் - நெடுந்தூரம் வந்த நீர் வேட்கை மிக்க புதியர்களின், செல் உயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லி - போகும் உயிரைப் போகாது நிறுத்திய சுவையுடைய காய்களைக் கொண்ட நெல்லி மரத்தின், பல்காய் அம் சினை அகவும் அத்தம் - பல காய்களையுடைய அழகிய கிளையி லிருந்து ஒலிக்கும் காட்டுநெறியில், நீர் சென்று - நீர் போய், அவணிர் ஆகி நின்று - அவ்விடத்தீ ராகி நின்று, தரும் - ஈட்டி வரும், நிலை அரும் பொருட்பிணி நினைந்தனிர் எனினே - ஓரிடத்தும் நிற்றலில்லாத பொருளை நினைந்து செல்வீராயின், நும் செய்வினை வல்வதாக - நும் பொருள் ஈட்டும்வினை வலிமை யுறுவதாக; ஆயின்; 11-17. இவட்கு - இத்தலைவிக்கு, களி மலி கள்ளின் நல்தேர் அவியன் - களிப்பு மிக்க கள்ளில் என்ற ஊரினையும் நல்ல தேரினையு முடைய அவியன் என்பானது, ஆடு இயல் இளமழை சூடித் தோன்றும் - அசைதல் பொருந்திய இளமுகிலை அணிந்து தோன்று கின்ற, பழம் தூங்கு விடர் அகத்து - பழங்கள் பொருந்திய மலைப் பிளவிடத்தே, எழுந்த காம்பின் கண்இடை புரையும் - வளர்ந்த மூங்கிலின் இரு கணுக்களின் இடைப் பகுதியை ஒக்கும், நெடு மென் பணைத் தோள் - நீண்ட மெல்லிய பெரிய தோளின் கண்ணுள்ள, திருந்து கோல் ஆய் தொடி - திருந்திய திரண்ட அழகிய வளையல், ஞெகிழின், நெகிழ்ந்து வீழின், பிரிந்து உறை நாட்டு - நீ பிரிந்து தங்கியிருக்கும் நாட்டில், மருந்தும் உண்டோ - அதனை மாற்றும் மருந்து உளதாமோ? உளதாயிற் செல்க. (முடிபு) நீர் அத்தம் சென்று அவணிராகி நின்று தரும் பொருட் பிணி நினைந்தனிர் எனின், நும் செய்வினை வல்வதாக; இவட்குப் பணைத் தோள் ஆய்தொடி ஞெகிழின், பிரிந்துறை நாட்டு மருந்தும் உண்டோ? (வி-ரை) சேவல் பெடையொடு போகிப் பரல் தேர்ந்து உண்டு நெல்லி அஞ்சினையிலிருந்து அகவும் அத்தம் என்க. மரல் வாடிய நனந்தலை. வானீங்கு நனந்தலை எனத் தனித்தனி கூட்டுக. கோட் சுரம் - ஆறலைப் போராலும் கொடு விலங்குகளாலும் உண்டாம் ஊறுபாட்டினை யுடைய சுரம். வந்த நீர் நசை என்புழிப் பெயரெச்சம். காரண காரியப் பொருட்டாய் நின்றது. நீர் நசை வம்பலர் செல்லுயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லி என்றமையால், வம்பலர் நீர் விடாய் தாங்காது உயிர் கழியப் பெறும் எல்லையில் நெல்லிக்காய் அவ்விடாயைப் போக்கி அவர்கள் உயிரை நிறுத்தும் என்பதாயிற்று. நீரற்ற காட்டு நெறிகளில் வழிச் செல்வார் விடாய் தணித்தல் கருதி நெல்லிமரத்தை வைத்து வளர்த்தல் உண்டென்பது `அறந்தலைப் பட்ட நெல்லியம் பசுங்காய்'1 என்பதனாலும் அறியப்படும். களி மலி கள்ளின் எனக் கொண்டு களிப்பு மிக்க மதுவினையுடைய என்றுரைத்தலுமாம். தோள் ஆய் தொடி ஞெகிழின் என்றது, மருந்து முண்டோ என்னும் குறிப்பால் அவள் பிரிவுத்துயரால் மெலிந்து இறந்து படுவள் என்று கூறியவாறாயிற்று. நீர் பிரிந்துறையும் அவ்விடத்திருந்து இவள் உயிரைக் காக்கத் தக்கதொரு மருந்தும் இன்மையால் நீர் செல்லுதல் தவிர்க எனத் தோழி செலவு அழுங்குவித்தாளாம் என்க. 272. குறிஞ்சி (இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.) இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப் புலவுநாறு புகர்நுதல் கழுவக் கங்குல் அருவி தந்த அணங்குடை நெடுங்கோட்டு அஞ்சுவரு விடர்முகை ஆரிருள் அகற்றிய 5. மின்னொளிர் எஃகஞ் செல்நெறி விளக்கத் தனியன் வந்து 1பனியலை முனியான் நீரிழி மருங்கின் ஆரிடத் தமன்ற குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி அசையா நாற்றம் அசைவளி பகரத் 10. துறுகல் நண்ணிய கறியிவர் படப்பைக் குறியிறைக் குரம்பைநம் மனைவயிற் புகுதரும் மெய்ம்மலி யுவகையன் அந்நிலை கண்டு முருகென உணர்ந்து முகமன் கூறி உருவச் செந்தினை நீரொடு தூஉய் 15. நெடுவேட் பரவும் அன்னை அன்னோ என்னா வதுகொல் தானே பொன்னென மலர்ந்த வேங்கை அலங்குசினை பொலிய மணிநிற மஞ்ஞை அகவும் அணிமலை நாடனொடு அமைந்தநந் தொடர்பே. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார். (சொ-ள்) 1-15. (நம் தலைவன்), இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்து - பெரிய புலியை வென்ற பெரிய கையினையுடைய யானையின், புலவு நாறு புணர் நுதல் கழுவ - புலால் நாறும் புள்ளி பொருந்திய நெற்றியினைக் கழுவ, கங்குல் - இரவில், அருவி தந்த - அருவியைத் தந்த, அணங்கு உடை நெடுங்கோட்டு - தெய்வத்தினை யுடைய நெடிய மலையினது, அஞ்சுவரு விடர்முகை - அச்சம் தரும் பிளப்பாகிய குகைகளிலுள்ள, ஆர் இருள் அகற்றிய - அரிய இருளைப் போக்கிய, மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க - மின்போல் விளங்கும் வேல் தான் செல்லும் நெறியினைக் காட்ட, தனியன் வந்து பனி அலை முனியான் - நம் தலைவன் தமியனாய் வந்து பனி அலைத்தலை வெறானாகி, நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற - அருவிநீர் ஒழுகும் பக்கத்தினையுடைய அரிய இடத்தே நெருங்கிய, குளவியொடு மிடைந்த கூதளம் கண்ணி - காட்டு மல்லிகை மலருடன் கூதள மலரையும் சேரத்தொடுத்த கண்ணியின், அசையா நாற்றம் அசைவளி பகர - விட்டு நீங்காத மணத்தினை அசையும் காற்று வெளிப்படுத்த, துறுகல் நண்ணிய கறி இவர் படப்பை - பொற்றைக்கல் பொருந்திய மிளகுக் கொடி படர்ந்த தோட்டத்தை யுடைய, குறி இறை குரம்பை நம் மனைவயின் - குறிய இறப்பினையுடைய குடிசையாய நம் மனையினிடத்தே, மெய்ம்மலி உவகையன் - உடல் பூரிக்கும் மகிழ்ச்சியுடையனாய், புகுதரும் அந்நிலை, - புகும் அந்நிலையை. கண்டு - நோக்கி, அன்னை - நம் அன்னை, முருகு என உணர்ந்து - முருகனே என எண்ணி, முகமன் கூறி - புகழுரை கூறி, உருவச் செந்தினை நீரொடு தூஉய் - நல்ல நிறம் வாய்ந்த செந்தினையை நீரொடு தூவி, நெடுவேள் பரவும் - முருகனைப் பரவாநின்றாள்; 15-16. பொன் என மலர்ந்த வேங்கை - பொன்னிறங் கொண்டு மலர்ந்த வேங்கையின், அலங்கு சினை பொலிய - அசையும் கிளை பொலிவுற, மணிநிற மஞ்ஞை அகவும் - நீலமணியை யொத்த நிறத்தை யுடைய மயில் ஆடும், அணிமலை நாடனொடு அமைந்த நம் தொடர்பு - அழகிய மலைநாட்டையுடையனாய தலைவனொடு பொருந்திய நம் நட்பானது, அன்னோ - , என் ஆகுவது கொல் - என்ன நிலையினை அடையுமோ? (முடிபு) (நம் தலைவன்) எஃகம் செல்நெறி விளக்க, தனியன் வந்து, பனியலை முனியான், கண்ணி நாற்றம் வளிபகர, மெய்ம்மலி யுவகையன் நம் மனைவயிற் புகுதர, புகும் அந்நிலை கண்டு, முருகென உணர்ந்து முகமன் கூறி, செந்தினை நீரொடு தூஉய், அன்னை நெடுவேள் பரவும்; மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பு அன்னோ என்னாவது கொல்? (வி-ரை) நெடுங்கோடு மலைக்கு ஆயிற்று. விடராகிய முகை என்க. பணியலை முனியான் என்பது பாடமாயின், தாழ்ந்து நிற்றலை வெறாது என்று பொருள் உரைத்தல் வேண்டும். இப் பாடம் பொருந்து மேற் கொள்க. நீடுநிலை மாடத்தில் வதியும் இயல்புடைய நம் தலைவன் நமது குறியிறைக் குரம்பையையும் மதித்து உவகை யுடன் புகுவான் ஆயினன் என்று தோழி வியந்து கூறினாள் என்க. புகுதரும் - புகா நிற்க; அங்ஙனம் புகும் என வேறறுத்து உரைக்க. வேல் உடைமையானும் அஞ்சாமையானும் கண்ணி நாற்றத்தானும் தலைவனை முருகென உணர்ந்தாளென்று கொள்க. முருகென உணர்ந்து அன்னை பரவும் என்றமையால், முருகனால் நமக்குத் தீங்கு உண்டாகும் என்று அஞ்சி இனி இற்செறிப்பள் என்பது புலப்படுத்தி, அதனால் தலைவனொடு அமைந்த நம் தொடர்பு இனி யாதாகுமோ எனத் தோழி தலைவிக்குக் கூறினாள் என்க. சிறைப்புறத்தானாகிய தலைவன் கேட்டு வரைந்து கொள்ளுதல் இதன் பயனாம் என்க. (மே-ள்) `களவல ராயினும்'1 என்னும் சூத்திரத்து, இச் செய்யுளைக் கூறி, இம் மணிமிடை பவளத்துத் தலைவனைச் செவிலி கண்டு முருகெனப் பராவினமை தோழி கொண்டு கூறினாள் என்றார், நச். 273. பாலை (பிரிவின்கண் தலைமகள் அறிவுமயங்கிச் சொல்லியது.) விசும்பு 2விசைத் தெறிந்த கூதளங் கோதையிற் பசுங்கால் வெண்குருகு வாப்பறை வளைஇ ஆர்கலி வளவயிற் போதொடு பரப்பப் புலம்புனிறு தீர்ந்த புதுவரல் அற்சிரம் 5. நலங்கவர் பசலை நலியவும் நம்துயர் அறியார் கொல்லோ தாமே அறியினும் நம்மனத் 3தன்ன மென்மை யின்மையின் நம்முடை யுலகம் உள்ளார் கொல்லோ யாங்கென உணர்கோ யானே வீங்குபு 10. 4தலைவரம் பறியாத் தகைவரல் வாடையொடு முலையிடைத் தோன்றிய நோய்வளர் இளமுளை அசைவுடை நெஞ்சத்து உயவுத்திரள் நீடி ஊரோர் எடுத்த அம்பல் அஞ்சினை ஆராக் காதல் அவிர்தளிர் பரப்பிப் 15. புலவர் புகழ்ந்த 5நாணில் பெருமரம் நிலவரை யெல்லாம் நிழற்றி அலரரும்பு ஊழ்ப்பவும் வாரா தோரே. - ஒளவையார். (சொ-ள்) 9-17. வீங்குபு தலை வரம்பு அறியாத் தகை வரல் வாடையொடு - மிகுந்து முடிவெல்லை இதுவென அறியப்பெறாத தன்மையொடு வருதலையுடைய வாடைக் காற்றொடு கூடி, முலை யிடைத் தோன்றிய நோய் வளர் இளமுளை - முலையின்கண்ணே தோன்றிய வேட்கை நோயாகிய வளரும் இளைய முளை, அசைவு உடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி - தளர்ச்சியையுடைய நெஞ்சினிடத்தே வருத்தமாகிய திரண்ட அடியாய் நீண்டு, ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை - ஊரார் எழுப்பிய அம்பலாய அழகிய கிளைகளைக் கொண்டு, ஆராக் காதல் அவிர்தளிர் பரப்பி - அமையாத காதல் என்னும் விளங்கும் தளிர்களைப் பரப்பி, புலவர் புகழ்ந்த நாண் இல் பெருமரம் - புலவராற் புகழப்பெற்ற நாணம் இல்லாத பெரிய மரம் ஆகி, நிலவரை எல்லாம் நிழற்றி - நிலத்தின் எல்லை யெல்லாம் கவிந்து, அலர் அரும்பு ஊழ்ப்பவும் - அலர் ஆகிய மலர்களைச் சொரியவும், வாராதோர் - வாராராயினர்; ஆகலின், அங்ஙனம் வாராத நம் தலைவர்; 1-6. விசும்பு விசைத்து எறிந்த - வானில் வேகங் கொண் டெறிந்த, கூதளம் கோதையில் - கூதாளியின் மாலைபோல, பசு கால் வெண் குருகு - பசிய காலினையுடைய வெள்ளாங் குருகு, வாப் பறை வளைஇ - தாவும் சிறகினை வளைத்து, ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப - வளம் பொருந்திய கடற்பக்கத்தே நாட்காலையில் பரவி அமர, புலம் புனிறு தீர்ந்த புதுவரல் அற்சிரம் - விளைநிலங்கள் கதிர்களை ஈன்ற அணிமை நீங்கிய புதிதாக வந்த பனிக்காலத்தே, நலம் கவர் பசலை நலியவும் - நமது அழகினைக் கவர்ந்த பசலை நம்மை வருத்தவும், நம் துயர் அறியார் கொல்லோ - அதனால் நாம் எய்தும் துயரினை அறிந்திலரோ; 6-9. அறியினும் - அன்றி அறிந்திருப்பினும், நம் மனத்து அன்ன மென்மை இன்மையின் - நம் மனத்தின் மென்மை போன்ற மென்மை தம்மனத்தே யின்மையின், தாம் - அவர், நம்முடை உலகம் உள்ளார் கொல் - நம் பெண்டிர் உலகத்து இயல்பினை நினைந்திலரோ, யான் யாங்கு என உணர்கு - யான் என்னென உணர்வேன்? (முடிபு) வாடையொடு முலையிடைத் தோன்றிய நோய்வளர் இளமுளை, நெஞ்சத்து உயவுத் திரள் நீடி, அம்பல் அஞ்சினை கொண்டு காதல் தளிர் பரப்பி, நாணில் பெரு மரமாகி, நிலவரை யெல்லாம் நிழற்றி, அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோர், அற்சிரம் பசலை நலியவும், நம் துயர் அறியார் கொல்லோ; அறியினும் மென்மையின்மையின், தாம் நம்முடை யுலகம் உள்ளார்கொல்லோ; யான் யாங்கென உணர்கு? (வி-ரை) விரிந்த கூதாளி மலரும் வெண்குருகும் தோற்றத்தான் ஒப்புமையுடையவாதல், `பைம்புதல் நளிசினைக் குருகிருந் தன்ன, வண்பிணி யவிழ்ந்த வெண்கூ தாளத்து, அலங்குகுலை யலரி'1 என்பதனாலும் அறியப்படும். நிலத்திலிருந்து வானிலே விசைத் தெழுந்த வெண்குருகு வானில் விசையுடன் எறியப்பட்ட வெள்ளிய கூதாளி மலர் போல்வதாயிற்று. குருகுபல நிரைந்து சென்றமையின் கூதள மாலைபோல என்றார். போது - காலைப்பொழுது. வாடை யுடன் கூடிய கூதிர்ப்பருவம் தலைவனைப் பிரிந்து வருந்தும் தனக்கு மிக நெடிதாய்த் தோன்றுதலின், `தலைவரம்பு அறியா வாடை' என்றாள். அக்காலத்தே, தலைவி தலைவனை அணையப்பெறாத முலையினை நோக்குழிப் பிரிவுத்துன்பம் தோன்றுதலின், அது முளையாகவும் பின்னும் அதற்கேற்ப, அவ்வருத்தம் மிகுதலும், அதனால் ஊரார் எழுப்பிய அம்பலும், அதுபற்றி மிக்கெழுகின்ற காதலும், காதல் மிக்குழி நாண் அழிதலும், பின் அலர் பரத்தலும் முறையே பராரை, சினை, தளிர், பெருமரம், மலர் என்பனவாகவும் உருவகிக்கப்பெற்றன. இப்பாட்டு உருவகம். அம்பல் - முகிழ் முகிழ்த்தல்; பிறர் பழியினைச் சிலர் கூடிச் செவிச் சொல்லாகப் பேசுதல். காதல் - ஈண்டு வேட்கை நோய். அம்பலால் நோய் வளருமென்பது, `ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல், நீராக நீளுமிந் நோய்'1 என்பதனால் அறிக. மகளிர்க்கு நாண் உயிரினும் சிறந்தது என்று புலவர் பலரானும் போற்றப்படுதலின், `புலவர் புகழ்ந்த நாண்' எனப் பட்டது. நாண் இல் பெருமரம் என்றதனை, நாண் இன்மையாகிய பெரு மரம் எனப் பொருள் கொள்க. அலர் - பலர் அறியப் பேசும் பழிமொழி. இங்ஙனம் உருவகங்களைக் காரண காரிய முறையால் அமைத்திருப்பது ஒளவையாரது நல்லிசைப் புலமையின் எல்லையில் பெருமைக்குச் சான்றாகுமாறு அறிக. வாராதோர் - என்பதனை வாராராயினர் ஆதலின், அங்ஙனம் வாராத நம் தலைவர் என விரித்துரைத்துக் கொள்க. ஆகலின் நம் துயர் அறியார் கொல்லோ என்றியைக்க. தம் பிரிவால் நம்மிடைத் தோன்றிய நோய் இவ்வாறெல்லாம் பெருகி நம்மைத் துன்புறுத்தவும் வந்திலராகலின் நம் துயரினை அறியாரோ எனவும், அறிந்து வைத்தும் நம்போலும் மன நொய்ம்மையின்றித் துன்பத்தைத் தாங்கும் திண்மையுடையராகலின், மகளிராவார் துயர் பொறுக்கலாற்றாது உயிர்விடும் நீரர் என்பதனை நினைந்திலரோ எனவும், அவற்றுள் ஒன்று துணியப்படாமையின் யாங்கென உணர்கோ எனவும் தலைவி அறிவு மயங்கிக் கூறினாள் என்க. 274. முல்லை (தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.) இருவிசும்பு அதிர முழங்கி அரநலிந்து இகுபெயல் அழிதுளி தலைஇ வானம் பருவஞ் செய்த பானாட் கங்குல் ஆடுதலைத் துருவின் தோடே மார்ப்பக் 5. கடைகோல் சிறுதீ அடைய மாட்டித் திண்கால் உறியன் பானையன் அதளன் நுண்பஃ றுவலை யொருதிறம் நனைப்பத் தண்டுகால் ஊன்றிய தனிநிலை யிடையன் மடிவிடு வீளை கடிதுசென் றிசைப்பத் 10. தெறிமறி பார்க்குங் குறுநரி வெரீஇ முள்ளுடைக் குறுந்தூறு 1இரியப் போகுந் தண்ணறும் புறவி னதுவே நறுமலர் முல்லை சான்ற கற்பின் மெல்லியற் குறுமகள் உறைவின் ஊரே. - 2இடைக்காடனார். (சொ-ள்) 12-14. (பாக!) நறுமலர் முல்லை சான்ற - நறுமண முடைய முல்லைமலர் அணிந்த, கற்பின் மெல்லியல் குறுமகள் - கற்பினை யுடைய மென்மைத் தன்மை வாய்ந்த நம் தலைவி, உறைவு இன் ஊர் - உறைவிடமாய இனிய ஊர்; 1-3. வானம் - மேகம், இரு விசும்பு அதிர முழங்கி - பெரிய ஆகாயம் அதிரும்படி முழங்கி, அரநலிந்து - பாம்பினை வருத்தி, இகு பெயல் அழி துளி தலைஇ - சொரியும் பெயலாகிய மிக்க துளியினைப் பொருந்தி, பருவம் செய்த பால் நாள் கங்குல் - கார்ப்பருவத்தினைச் செய்த பாதி இரவில்; 4-12. ஆடு தலைத் துருவின் தோடு ஏம் ஆர்ப்ப - அசையும் தலையினையுடைய செம்மறியாட்டின் தொகுதி பாதுகாவல் அடைய, கடை கோல் சிறு தீ அடைய மாட்டி - கடையும் கோலினின் றெழுந்த சிறு தீயை (அது) வளர்ந்திட விறகிற் சேர்த்து, திண் கால் உறியன் - வலிய தாம்பினையுடைய உறியுடையோனும், பானையன் - பானையையுடை யோனும், அதளன் - தோள்படுக்கை உடையோனும், நுண் பல் துவலை ஒருதிறம் நனைப்ப - நுண்ணிய பலவாய மழைத்துளி தனது ஒரு பக்கத்தை நனைத்திட, தண்டு கால் ஊன்றிய தனி நிலை - கோலினைக் காலுடன் சார்த்தி ஊன்றிய தனியே நிற்றலையுடையோனுமாகிய, இடையன், - மடிவிடு வீளை கடிது சென்று இசைப்ப - வாயை மடித்து எழுப்பும் சீழ்க்கை விரைந்து சென்று ஒலித்தலின், தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ - துள்ளி விளையாடும் குட்டியினைக் கவரப் பார்த்திருக்கும் குள்ள நரி அஞ்சி, முள் உடை குறுதூறு இரியப் போகும் - முட்களையுடைய குறிய தூற்றின்கண் கெட்டு ஓடிப்போகும், தண்நறும் புறவினது - குளிர்ந்த நறிய காட்டின் கண்ணது. (முடிபு) (பாக) குறுமகள் உறைவுஇன் ஊர் தண் நறும் புறவினது. பானாட்கங்குல் தனி நிலை இடையன் மடிவிடு வீளை இசைப்பக் குறு நரி வெரீஇக் குறுந்தூறு இரியப் போகும் புறவு என்க. (வி-ரை) அர, குறியதன் இறுதிச் சினைகெட உகரம் பெறாது வந்தது. அழிதுளி - மிக்க துளி. கற்புடை மகளிர் முல்லை மலரை விரும்பி அணிவாராகலின், நறுமலர் முல்லை சான்ற கற்பின் என்றான். அன்றி, முல்லை சான்ற கற்பு என்பதற்கு இருத்தல் அமைந்த கற்பு எனப் பொருள் கொண்டு, நறுமலர் என்ற அடை முல்லை என்னும் பெயர் நோக்கி வந்தது என்றலுமாம். வானம் பருவம் செய்த என்றமையால், நாம் தலைவிக்கு மீண்டு வருவதாகக் குறித்த பருவம் வந்துவிட்டதென்பதும், குறுமகள் உறைவின் ஊர் தண்ணறும் புறவினது என்றமையால், நாம் செல்லுதற்கு நெறியும் செவ்வியுடைத்தென்பதும், கூறி, ஆண்டுத் தேரைச் செலுத்துக எனத் தலைவன் பாகற்கு உணர்த்தினான் என்க. 275. பாலை (மகட் போக்கிய 1தாய் சொல்லியது.) ஓங்குநிலைத் தாழி மல்கச் சார்த்திக் குடையடை நீரின் மடையினள் எடுத்த பந்தர் வயலைப் பந்தெறிந் தாடி இளமைத் தகைமையை 2 வளமனைக் கிழத்தி 5. பிதிர்வை நீரை பெண்நீறு ஆகென யாந்தன் கழறுங் காலைத் தான்றன் மழலை இன்சொற் கழறல் இன்றி இன்னுயிர் கலப்பக் கூறி நன்னுதல் பெருஞ்சோற் றில்லத் தொருங்கிவண் இராஅள் 10. ஏதி லாளன் காதல் நம்பித் திரளரை யிருப்பைத் தொள்ளை வான்பூக் குருளை 3 யெண்கின் ஈரினங் கவரும் 4வெம்மலை யருஞ்சுரம் நம்மிவண் ஒழிய இருநிலன் உயிர்க்கும் இன்னாக் கானம் 15. நெருநைப் போகிய பெருமடத் தகுவி ஐதகல் அல்குல் தழையணிக் கூட்டும் கூழை நொச்சிக் கீழ தென்மகள் செம்புடைச் சிறுவிரல் வரித்த வண்டலுங் காண்டிரோ கண்ணுடை யீரே. - கயமனார். (சொ-ள்) 1-6. வளமனைக் கிழத்தி - வளம் பொருந்திய மனைக்கு உரியளாகிய செல்வியே! ஓங்கு நிலைத் தாழி - உயர்ந்த நிலையினதாகிய சாடியில், மல்கச் சார்த்தி - நிறைய அடைவித்து, குடை அடை நீரின் - பனங்குடையால் முகந்த நீரினை; மடையினள் எடுத்த - சொரிந்து வளர்த்த, பந்தர் வயலை - வயலைக் கொடி படர்ந்த பந்தரில், பந்து எறிந்து ஆடி - பந்தினை எறிந்து விளையாடி, இளமைத் தகைமையை - இளமைத் தன்மையை உடையையாய், பிதிர்வை நீரை - திரியும் இயல்பினையுடையை ஆகின்றாய்; பெண் நீறு ஆக என - நினது பெண்மை அழிவதாக என்று, யாம் தன் கழறுங்காலை - யாம் அவளைக் கடிந்து கூறுங்காலத்து; 6-8. நல் நுதல் - நல்ல நெற்றியினளாய அவள், தான் கழறல் இன்றி - தான் வன்சொற் கூறுதலின்றி, தன் மழலை இன் சொல் - தனது மழலையாகிய இன் சொல்லால், இன் உயிர் கலப்பக் கூறி - இனிய உயிருடன் பொருந்தும்படி கூறி; 9-19. பெருஞ்சோற்று இல்லத்து - (நாளும்) பெருவிருந்து நிகழும் எம் இல்லில், ஒருங்கு இவண் இராஅள் - எம்முடன் கூடி இங்குத் தங்காளாய், ஏதிலாளன் காதல் நம்பி - அயலானது காதலை விரும்பி, நம் இவண் ஒழிய - நாம் இங்கே பிரிந்திருக்க, திரள் அரை இருப்பை தொள்ளை வான் பூ - திரண்ட அரையினையுடைய இருப்பை மரத்தின் துளையுடைய வெள்ளிய பூக்களை, குருளை எண்கின் ஈர் இனம் கவரும் - குட்டிக் கரடிகளின் பெரிய கூட்டம் கவர்ந்துண்ணும், வெம்மலை அரும் சுரம் - கொடிய மலைகளை யடுத்த அரிய வழியையுடைய, இரு நிலம் உயிர்க்கும் இன்னாக் கானம் - பெரிய உலகம் அஞ்சி உயிர்த்தற்கேதுவாகிய இன்னாமையையுடைய பெரிய காட்டின்கண், நெருநை போகிய - நேற்றுப் போய்விட்ட, பெருமடத் தகுவி - பெரிய மடப் பத்தையுடை யளாகிய, என் மகள் - என் மகள், ஐது அகல் அல்குல் - அழகிதாக அகன்ற அல்குலிடத்தே, தழை அணி கூட்டும் - தழையாகிய அணிக்குக் கொய்யும், கூழை நொச்சிக் கீழது - குறிய நொச்சியின் கீழதாய், செம்புடைச் சிறு விரல் வரித்த - அவளது சிவந்த பக்கத் தினையுடைய சிறுவிரல்களால் இயற்றப் பெற்றதாய, வண்டலும் - வண்டலையும், கண் உடையீர் - கண்ணுடையவர்களே, காண்டிரோ - நீவிர் காண்டிரோ? (முடிபு) யாம் தன் கழறுங்கால் தான் மழலை இன்சொற்கூறி, இவண் இராள், காதல் நம்பிக் கானம் போகிய என் மகள் சிறுவிரல் வரித்த வண்டலும் கண்ணுடையீர் காண்டிரோ? (வி-ரை) நீரின் - சாரியை நிற்க உருபு தொக்கது. மடையினள்- மடுத்தவளாய்ச் சொரிந்து என்றபடி. எடுத்த - வளர்த்த வயலைப் பந்தர் என மாறுக. மனைக்கிழத்தியாகற்குரிய பருவம் எய்திய நீ இளமைத் தன்மையை யுடையையாய்ப் பந்தினை விளையாடிப் புறத்தே திரிகின்றனை யாகலின் நினது பெண்மை நீறாக என்று தாய் கழறினாள் என்க. `பேதை யல்லை மேதையங் குறுமகள், பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென'1 என முன் வந்தமையுங் காண்க. பெண் - பெண்மை, பெண்டன்மை. `கண்ணார்ந்த........ பெண்ணன்று புனையிழாய்'2 என்புழிப் பெண் இப் பொருட்டாதல் காண்க. பெண் ஈறாக எனப் பிரித்துரைத்தலுமாம். கூழை நொச்சி - தழையணியின் பொருட்டுக் கொய்து குறைந்த நொச்சி என்றுமாம். கீழது வண்டலும் என்று இயையும். கண்ணுடையீர் காண்டிரோ என்றது காணில் ஆற்றீர் எனத் தாய் தன் ஆற்றாமை தோன்றக் கூறியபடியாம். (மே-ள்) `ஏமப் பேரூர்'3 என்னுஞ் சூத்திரத்து, `வெம்மலை அருஞ்சுரம்........ கண்ணுடையீரே' என்பதன்கண், வண்டலைக் காணார் தேஎத்து நின்று, காணல் ஆற்றீர் எனக் கூறினமையின், ஆயத்திற்கன்றிப் புறஞ்சென்று சேரியோர்க்கு உரைத்ததாயிற்று என்றார், நச். 276. மருதம் (தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது.) நீளிரும் பொய்கை யிரைவேட் டெழுந்த வாளை வெண்போத்து உணீஇய நாரைதன் அடியறிவு உறுதல் அஞ்சிப் பைப்பயக் கடியிலம் புகூஉங் கள்வன் போலச் 5. சாஅய் ஒதுங்குந் துறைகேழ் ஊரனொடு ஆவ தாக இனிநாண் உண்டோ வருகதில் அம்மஎஞ் சேரி சேர அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத் தாரும் தானையும் பற்றி ஆரியர் 10. பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத் தோள்கந் தாகக் கூந்தலிற் பிணித்தவன் மார்புகடி கொள்ளே னாயின் ஆர்வுற்று இரந்தோர்க் கீயாது ஈட்டியோன் பொருள்போல் பரந்து வெளிப்படா தாகி 15. வருந்துக தில்லயாய் ஓம்பிய நலனே. - பரணர். (சொ-ள்) 1-6. நீள் இரும் பொய்கை - நீண்ட பெரிய பொய்கையில், இரை வேட்டு எழுந்த வாளை வெண் போத்து - இரையை விரும்பிப் புறப்பட்ட வெள்ளிய வாளைப் போத்தினை, உணீஇய - உண்ணும் பொருட்டு, நாரை - நாரையானது, தன் அடி அறிவுறுதல் அஞ்சி - தன் அடியின் ஒலியை அம்மீன் உணர்ந்து கொள்ளலை அஞ்சி, பைப்பய - மெல்ல மெல்ல, கடி இலம் புகூஉம் கள்வன்போல - காவல் பொருந்திய வீட்டிற் புகும் கள்வனைப்போல, சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு - தளர்ந்து நடக்கும் இடமாகிய துறை பொருந்திய ஊரனால், ஆவது ஆக - நமக்கு ஆம்பழி ஆவதாக, இனி நாண் உண்டோ - இனி நமக்கு நாண் என்பதும் உளதாகுமோ? 7-12. எம் சேரி சேர வருக - அவ்வூரன் எம் சேரிக்கண் பொருந்த வருவானாக, அரிவேய் உண்கண் அவன் பெண்டிர் காண - செவ்வரி பொருந்திய மையுண்ட கண்களையுடைய அவன் பெண்கள் காண, தாரும் தானையும் பற்றி - அவன் மாலையையும் ஆடையையும் பிடித்துக் கொண்டு, ஆரியர் பிடி பயின்று தரூஉம் பெரும் களிறு போல - ஆரியர் பழக்கிவைத்துள பெண்யானை தான் பழகிக் கொணர்ந்து தரும் பெரிய ஆண் யானைபோல, தோள் கந்தாகக் கூந்தலில் பிணித்து - தோள் கட்டுந் தறியாக அதன்கண் கூந்தலாற் கட்டி, அவன் மார்பு கடிகொள்ளேன் ஆயின் - அவன் மார்பினைச் சிறை செய்யேனாயின்; 12-15. யாய் ஓம்பிய நலன் - என் தாய் பாதுகாத்து வளர்த்த என் அழகானது, ஆர்வு உற்று - பொருளை விரும்பி, இரந்தோர்க்கு ஈயாது - இரந்தவர்களுக்கு ஈயாமல், ஈட்டியோன் பொருள்போல் - சேர்த்தவன் பொருளைப்போல, பரந்து வெளிப்படாது ஆகி - வெளிப்பட்டுப் பரவாததாகி, வருந்துக - வருந்தி ஒழிவதாக. (முடிபு) ஊரனொடு ஆவது ஆக; இனி நாண் உண்டோ; அவன் எம் சேரி சேர வருக தில்; அவன் பெண்டிர் காணத் தாரும் தானையும் பற்றித் தோள் கந்தாகக் கூந்தலிற் பிணித்து, அவன் மார்பு கடி கொள்ளேன் ஆயின், யாய் ஓம்பிய நலன் பரந்து வெளிப்படாதாகி வருந்துக. (வி-ரை) வாளைப் போத்து - ஆண் வாளை; `நீர் வாழ் சாதியுள் அறுபிறப் புரிய'1 என்பதனால் வாளை போத்து எனப்பட்டது. நாரை கள்வன்போலச் சாஅய் ஒதுங்கும் ஊரன் என்றதனால், தலைவன் மறைவிற் பிறரை நாடுவன் என்பது குறிப்பித்தவாறாயிற்று. நாண் உண்டோ - நாணியிருத்தலாற் பயனுண்டோ என்றபடி. வருகதில் என்புழி வந்தால் இன்னது செய்வல் என்னும் பொருட்டாகலின் தில் ஒழியிசைக் கண் வந்தது. அவன் பெண்டிர் என்றது, தலைமகட்குப் பாங்காயினாரை. ஆர்வு உற்று - விரும்பி, இவறுதலை மேற் கொண்டு; ஆர்வுற்று ஈட்டியோன் என்க. இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள், அறனும் இன்பமும் பயவாமையின், நன்மக்களால் அறியப்படாதாகியிருந்து ஒழிதல்போல, யாய் ஓம்பிய நலன் வெளிப்பாடின்றி இருந்து அழிக எனப் பரத்தை வஞ்சினம் கூறினாள் என்க. இச் செய்யுள் காமக் கிழத்தி சேரிப்பரத்தையைப் புலந்து கூறியதென்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும். (மே-ள்) `புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்'1 என்னுஞ் சூத்திரத்து இச்செய்யுளைக் காட்டி, இதனுட் `பரந்து வெளிப்படா தாகி வருந்துகு என்னலம், என்றமையிற் சேரிப்பரத்தையைப் புலந்து கூறுதல் முதலியனவுங் கொள்க என்றார், நச். `விழைவே காலம்'2 என்னுஞ் சூத்திரத்து, `தில்' ஒழியிசைப் பொருளில் வந்ததற்கு, `வருக தில் அம்ம' என்பதனை எடுத்துக் காட்டி, வந்தக்கால் இன்னது செய்வல் என்பது பொருள் என்றனர், இளம், சேனா, தெய்வச், நச். 277. பாலை (தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குப் பருவங்கண்டழிந்து சொல்லியது.) தண்கதிர் மண்டிலம் அவிரறச் சாஅய்ப் பகலழி தோற்றம் போலப் பையென நுதலொளி கரப்பவும் ஆள்வினை தருமார் தவலில் உள்ளமொடு எஃகுதுணை யாகக் 5. கடையலங் குரல வாள்வரி உழுவை பேழ்வாய்ப் பிணவின் விழுப்பசி நோனாது இரும்பனஞ் 3செறும்பின் அன்ன பரூஉயிர்ச் சிறுகட் பன்றி வருதிறம் பார்க்கும் அத்தமார் அழுவத் தாங்கண் நனந்தலைப் 10. பொத்துடை மரத்த புகர்படு நீழல் ஆறுசெல் வம்பலர் 4அசையுந ரிருக்கும் ஈரமில் வெஞ்சுரம் இறந்தோர் நம்வயின் வாரா அளவை ஆயிழை கூர்வாய் அழலகைந் தன்ன காமர் துதைமயிர் 15. மனையுறை கோழி மறனுடைச் சேவல் போர்புரி யெருத்தம் போலக் கஞலிய 5பொங்கழல் முருக்கின் ஒண்குரல் மாந்திச் சிதர்சிதர்ந் துகுத்த செவ்வி வேனில் வந்தன்று அம்ம தானே 20. வாரார் தோழிநங் காத லோரே. - கருவூர் நன்மார்பனார். (சொ-ள்) 13. ஆய் இழை - ஆய்ந்த அணிகலனுடைய தோழியே! 1-13. தண் கதிர் மண்டிலம் - குளிர்ந்த கதிர்களையுடைய திங்கள் மண்டிலம், அவிர் அற - விளக்கம் அற, சாஅய் - ஒளிகுன்றி, பகல் அழி தோற்றம்போல - பகலில் மறையும் செயல்போல, பை என நுதல் ஒளி கரப்பவும் - மெல்லென நமது நெற்றியின் ஒளி மாழ்கவும், ஆள் வினை தருமார் - முயற்சியால் பொருள் ஈட்டு தற்காக, தவல் இல் உள்ள மொடு - நீங்குதல் இல்லாத ஊக்கத்துடன், எஃகு துணையாக - தமது வேலே உற்ற துணையாகக்கொண்டு, கடையல் அம் குரல - தயிர் கடைவது போன்ற குரலையுடைய, வாள் வரி உழுவை - ஒளிபொருந்திய வரிகளையுடைய வேங்கையானது, பேழ் வாய் பிணவின் விழு பசி நோனாது - பிளந்த வாயினை யுடைய தன் பெண்புலியின் மிக்க பசியினைப் பொறாது (சென்று), இரு பனம் செறும்பின் அன்ன - கரிய பனையின் சிறாம்பினைப் போன்ற, பரூஉ மயிர் - தடித்த மயிரினையும், சிறு கண் - சிறிய கண்ணினையு முடைய, பன்றி வரு திறம் பார்க்கும் - பன்றி வருகிற நெறியினைப் பார்த்திருக்கும், அத்தம் ஆர் அழுவத்து நனந்தலை ஆங்கண் - காட்டின் பரப்பாகிய அகன்ற இடத்திலே, பொத்து உடை மரத்த புகர்படு நீழல் - பொந்தினையுடைய மரங்களின் புள்ளிபட்ட நீழலில், ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும் - வழிச்செல்லும் புதியர் தளர்ந் தனராகித் தங்கியிருக்கும், ஈரம் இல் வெம் சுரம் இறந்தோர் - ஈரம் அற்ற வெவ்விய பாலையைக் கடந்து சென்ற நம் தலைவர், நம் வயின் வாரா அளவை - நம்பால் மீண்டு வாராக் காலத்தே; 13-20. தோழி கூர்வாய் - கூரிய வாயினையும், அழல் அகைந்தன்ன- தீ கொழுந்துவிட் டெரிந்தாற்போலும், காமர் துதை மயிர் - அழகிய செறிந்த மயிர்ச் சிறகினையுடைய, மனை உறை கோழி மறன் உடைச் சேவல் - மனையில் உறையும் கோழியின் தறுகண்மையை உடைய சேவலின், போர் புரி எருத்தம் போல -போர் செய்யுங்கால் கிளர்ந்தெழும் கழுத்தினைப்போல, கஞலிய பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி - நெருங்கிய மிக்க தீப்போலும் நிறம் வாய்ந்த செம் முருக்கினது ஒள்ளிய கொத்திலுள்ள மதுவை ஆர உண்டு, சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில் - வண்டுகள் அத் தேன் சிதறுமாறு உகுத்த இளவேனிற் காலம், வந்தன்று - வந்தது, நம் காதலோர் வாரார் - நம் காதலர் இன்னும் வந்திலர், என் செய்வாம். (முடிபு) ஆய் இழை! நம்நுதல் ஒளி கரப்பவும், ஆள் வினை தருமார் எஃகு துணையாக வெஞ்சுரம் இறந்தோர் நம்வயின் வாரா அளவை, செவ்வி வேனில் வந்தன்று; தோழி! நம் காதலோர் வாரார்; என் செய்வாம். (வி-ரை) பகலில் ஞாயிற்றின் கதிர் முறுகுந்தோறும், திங்கள் மண்டிலம் ஒளி சிறிது சிறிதாகக் குறைந்து மறைதலின் தலைவியின் நுதல் ஒளி சிறிது சிறிதாகக் குன்றி ஒழிதற்கு உவமையாகக் கூறப் பட்டது. நுதலொளி கரப்பவும் ஆள்வினை தருமார் வெஞ்சுரம் இறந்தோர் என்றது, பிரிவுக்குறிப்பு அறிந்து தலைவர் பிரிவர் என்னும் அச்சத்தால் நமது நெற்றியின் ஒளி ஒழுகக் கெடவும், அது நோக்கி யொழியாது முயற்சியை மேற்கொண்டு சென்றவர் என்றபடி. `தவலில் உள்ளமொடு எஃகு துணையாக..... ஈரமில் வெஞ்சுரம் இறந்தோர்' என்றது தலைவனுடைய ஆண்மையையும் அஞ்சாமையையும் கூறியபடியாம். கடையலங்குரல:;கடையல் - தயிர் கடைதல்; அம் - அசை. தயிர் கடையும் ஓசையும் புலியின் முழக்கமும் ஒரு நிகரன என்பது `புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி'1 `கடைதயிர்க் குரல வேங்கை'2 என்பவற்றாலும் அறியப்படும். பொத்து - பொந்து; வலித்தல் விகாரம். வெஞ்சுரம் இறந்தோர் வாரா அளவை செவ்விவேனில் வந்தன்று; காதலோர் வாரார் என்றமையால் இளவேனிற்கு முன் வருவேம் என்று காலம் குறித்துச் சென்ற தலைவர் அது வந்த பின்னும் வந்திலரே எனத் தலைவி பருவங்கண்டழிந்து கூறினாளாயிற்று. துதைமயிர்ச் சேவல் எனக் கூட்டுக. சிதர் - வண்டு. சிதர்ந்து - சிதர்ந்திட. உகுத்த என்னும் பெயரெச்சம் காலப்பெயர் கொண்டது. வண்டு உண்டு எஞ்சிய தேனைச் சிதறும்படி உகுத்த வேனில் என்றது, இன்பம் நுகர் வார்க்குச் சிறந்த இளவேனில் என, அதன் சிறப்புக் கூறியபடி. 278. குறிஞ்சி (இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.) குணகடன் முகந்த கொள்ளை வானம் பணைகெழு வேந்தர் பல்படைத் தானைத் தோல்நிரைத் தனைய வாகி வலனேர்பு கோல்நிமிர் கொடியின் வசிபட மின்னி 5. உருமுரறு அதிர்குரல் தலைஇப் பானாட் 3பெருமலை மீமிசை முற்றின வாயின் வாளிலங் கருவி தாஅய் நாளை இருவெதிர் அம்கழை ஒசியத் தீண்டி வருவது மாதோ வண்பரி யுந்தி 10. நனிபெரும் பரப்பின் நம்மூர் முன்துறைப் பனிபொரு மழைக்கண் 4சிவப்பப் பானாள் முனிபடர் அகல மூழ்குவங் கொல்லோ மணிமருண் மேனி யாய்நலந் தொலையத் தணிவருந் துயரஞ் செய்தோன் 15. அணிகிளிர் நெடுவரை யாடிய நீரே. - கபிலர். (சொ-ள்) தோழி! 1-6. குணகடல் முகந்த கொள்ளை வானம் - கீழ்கடலின் நீரை முகந்த மிகுதியையுடைய மேகங்கள், பணைகெழு வேந்தர் பல்படைத்தானை தோல் நிரைத்த அனையவாகி - முரசு பொருந்திய அரசர்களின் பலவாகிய படைக்கலங்களையுடைய சேனையின் கண்ணே நிரைக்கப் பட்ட யானைகளை ஒப்பனவாகி, வலன் ஏர்பு - வலமாக எழுந்து, கோல் நிமிர் கொடியின் வசிபட மின்னி - கோலின்கண் நிமிர்ந்த கொடிபோல வானம் பிளக்கும்படி மின்னுதலைச் செய்து, உரும் உரறு அதிர் குரல் தலைஇ - இடி இடிக்கின்ற மிக்க முழக்கத்தைப் பொருந்தி, பால் நாள் - நடு இரவில், பெருமலை மீமிசை முற்றின ஆயின் - பெரிய மலையின் உச்சியில் சூழ்ந்தன ஆகலின்; 7-10. நாளை - நாளை, வாள் இலங்கு அருவி தாஅய் - ஒளிவிளங்கும் அருவியானது பரந்து, இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி - பெரிய மூங்கிலின் அழகிய தண்டு முரியும்படி தாக்கி, வண் பரி உந்தி - அழகிய குதிரைமரங்களைச் சாய்த்து, நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை - மிக்க பெரிய பரப்பினையுடைய நம் ஊரின் நீர்த்துறையில், வருவது - வாராநிற்கும் (வந்தால்); 11-15. மணி மருள் மேனி ஆய் நலம் தொலைய - மணியை ஒக்கும் மேனியின் அழகிய நலம் கெடும்படி, தணிவு அரும் துயரம் செய்தோன் - நீங்குதல் இல்லாத துயரத்தைச் செய்தவனுடைய, அணி கிளர் நெடுவரை ஆடிய நீர் - அழகு விளங்குகின்ற நீண்ட மலையிலே தோய்ந்து வருகின்ற நீரின்கண், பனி பொரு மழைக்கண் சிவப்ப - பனியை யொக்கும் குளிர்ந்த கண்கள் சிவக்க, பால் நாள் முனிபடர் அகல - நள்ளிரவில் வெறுக்கும் துன்பம் நீங்க, மூழ்குவம் கொல்லோ- மூழ்குவேமோ? (முடிபு) தோழி! வானம் பெருமலை மீமிசை முற்றின; ஆயின், நாளை அருவி நம் ஊர் முன்றுறை வருவது; வந்தால், துயரஞ் செய்தோன் நெடுவரை ஆடிய நீர் பானாள் படர் அகல மூழ்குவங் கொல்லோ? (வி-ரை) கொள்ளை - நீர்ப் பெருக்கு. நீருண்ட மேகத்திற்கு யானை உவமையாதலை, `ஒளிறுவாட் பொருப்பன் உடல்சமத் திறுத்த, களிறு நிரைத்தவை போற் கொண்மூ'1 `நெய்யணி குஞ்சரம் போல இருங் கொண்மூ, வைகலும் ஏரும் வலம்'2 என்பவற்றாலும் அறிக. இனி, தோல் பரிசை என்றலுமாம்; `நெய்கனி நெடுவேல் எஃகிலையிமைக்கும், மழை மருள் பஃறோல் மாவண் சோழர்'3 `மாரி யம்பின் மழைத்தோற் பழையன்'4 என்பன காண்க. ஆயின் - ஆதலால். பரியாற்றில் அணை கோலுவார் நிறுத்தம் குதிரை மரம்; `பரி நிறுத்துவார்'5 என்பது காண்க. தலைவன் நமது அழகுகெட நம்மைப் பிரிந்து நாம் முயங்குதற்குத் தன் மார்பினைத் தாராது துன்பம் செய்தான் ஆயினும் அவனது மலையினைத் தோய்ந்துவரும் நீரில் நாம் மூழ்குதலால் அவனது மார்பினைத் தோய்ந்தாற் போல் படர் அகலப் பெறுவேம் என்று தனது வேட்கை மிகுதி புலப்படுத்துத் தலைமகட்குக் கூறுவாளாய்த் தோழி தலைமகன் சிறைப்புறமாகக் கூறினாளென்க. தலைவன் இதனைக் கேட்டு விரைந்து வரை வானாதல் பயன். 279. பாலை (பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.) நட்டோர் இன்மையுங் கேளிர் துன்பமும் ஒட்டாது உறையுநர் பெருக்கமுங் காணூஉ ஒருபதி வாழ்தல் ஆற்றுப தில்ல பொன்னவிர் சுணங்கொடு செறிய வீங்கிய 5. மென்முலை முற்றங் கடவா தோரென நள்ளென் கங்குலும் பகலும் இயைந்தியைந்து உள்ளம் பொத்திய உரஞ்சுடு கூரெரி ஆள்வினை மாரியின் அவியா நாளும் கடறுழந்து இவண மாகப் படருழந்து 10. யாங்கா குவள்கொல் தானே தீந்தொடை விளரி நரம்பின் நயவரு சீறியாழ் 1மலிபூம் பொங்கர் மகிழ்குரல் குயிலொடு புணர்துயில் எடுப்பும் புனல்தெளி காலையும் நம்முடை மதுகைய ளாகி யணிநடை 15. அன்னமாண் பெடையின் மென்மெல இயலிக் கையறு நெஞ்சினள் அடைதரும் மையீர் ஓதி மாஅ யோளே. - 2 இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார். (சொ-ள்) நெஞ்சே! 1-9. பொன் அவிர் சுணங்கொடு - பொன்னென விளங்கும் சுணங்கினைக் கொண்டு, செறிய வீங்கிய - நெருங்கப் பணைத்த, மெல்முலை முற்றம் - மெல்லிய முலைப் பரப்பினை, கடவாதோர் - விட்டு நீங்காத நெஞ்சினர், நட்டோர் இன்மையும் - நண்புற்றார் செல்வம் இல்லாதொழிதலும், கேளிர் துன்பமும் - சுற்றத்தார் துன்பம் உறுதலும், ஒட்டாது உறையுநர் பெருக்கமும் - மனம் பொருந்தாது உறைபவர் பெருமிதத் துடனிருத்தலும், காணூஉ - கண்டு வைத்தும், ஒரு பதி வாழ்தல் ஆற்றுப - ஒரே யிடத்தில் மடிந்திருத்தலைப் பொறுத்திருப்பார்கள், என - என்று, நள் என் கங்குலும் பகலும் - நள்ளென்னும் ஓசையையுடைய இரவிலும் பகலிலும், உள்ளம் இயைந்து இயைந்து பொத்திய - உள்ளத்திலே தோன்றித் தோன்றி மூண்ட, உரம் சுடு கூர் எரி - நெஞ்சினைச் சுடுகின்ற கவலையாகிய மிக்க தீயினை, ஆள் வினை மாரியின் அவியா - முயற்சியாகிய மழையால் அவித்து, நாளும் - ஒவ்வொரு நாளும், கடறு உழந்து இவணம் ஆக - இக்காட்டில் வருந்தி நாம் இங்கே பிரிந்திருப்பேம் ஆக; 9-17. தீம் தொடை விளரி நரம்பின் நயவரு சீறியாழ் - இனிய தொடுத்தல் அமைந்த விளரி என்னும் நரம்பினது இனிமை பொருந்திய சிறிய யாழின் இசை, மலி பூங் கொம்பர் மகிழ்குரற் குயிலொடு - மிக்க பூக்களையுடைய கொம்புகளிலிருந்து மகிழ்ந்து கூவும் குயிலின் ஒலியுடன் கூடி, புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும் - பொருந்திய துயிலை எழுப்பும் நீர் தெளிந்து வரும் காலையும், நம்முடை மதுகையள் ஆகி - நம்மையே தன் வலியாகக் கொண்டனளாகி, அணி நடை அன்ன மாண் பெடையின் மெல்மெல இயலி - மாண்புற்ற அன்னப்பெடை போலும் அழகிய நடையால் மெல்லென நடந்து, கையறு நெஞ்சினள் - செயலற்ற நெஞ்சினளாகி, அடைதரும் - நம்மை அணையும், மை ஈர் ஓதி மாயோள் - கரிய நெடிய கூந்தலை யுடைய மாமை நிறத்தினளாய நம் தலைவி, படர் உழந்து யாங்கு ஆகுவள்கொல் - துன்பத்தால் வருந்தி எத்தன்மையள் ஆவளோ? (முடிபு) நெஞ்சே! மென்முலை முற்றம் கடவாதோர், நட்டோரின்மையும் கேளிர் துன்பமும் ஒட்டா துறையுநர் பெருக்கமும் காணுஉ ஒருபதி வாழ்தல் ஆற்றுப; என, உள்ளம் பொத்திய உரஞ்சுடு கூர்எரி, ஆள்வினை மாரியின் அவியா, நாளும் கடறுழந்திவணமாக, மை ஈர் ஓதி மாயோள் யாங்காகுவள் கொல்? (வி-ரை) ஒட்டாது உறையுநர் - ஒட்டார், பகைவர். மென் முலை முற்றம் கடவாதோர் என்றது - போகம் வேண்டி ஆள்வினையாற் பொருள் ஈட்டாதவர் என அதன் காரியத்தை உணர்த்திற்று. பொருள் ஈட்டாதவர் நட்டாரது வறுமையையும், சுற்றத்தாரது துன்பத்தையும் பகைவரது மிகுதியையும் களைதல் ஆற்றார் என்க. நட்டோரும் கேளிரும் துன்பமுறுதலையும் பகைவர் பெருமிதத் தோடு வாழ்தலையும் கண்டு வைத்து அவர்களுடன் ஒரு பதியில் வாழ்தல் என்பது மான முடையார்க்குப் பொறுத்தற்கரியதாகவும், மென்முலை முற்றங் கடவாதோர் அதனையும் பொறுப்பரென அவரது இகழ்ச்சி தோன்றக் கூறியபடி. `செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க், குறுமிடத் துய்க்குமுதவி யாண்மையும், இல்லிருந் தமைவோர்க் கில்லென் றெண்ணி'1 என்பதும். அச் செய்யுளின் உரையும் ஈண்டு அறியற்பாலன. பொத்திய - ஈண்டு மூண்ட என்றபடி. அவியா உழந்து என இயையும். யாழ் குயில் என்பன ஆகுபெயர். சீறியாழ் துயிலெடுப்பும் என்றது, துயிலெடைநிலை பாடுதலைக் குறிப்பித்த வாறு. புனல் தெளி காலை - இளவேனிற் காலம். காலையும்: உம்மை, சிறப்பும்மை. நம்முடைய மதுகையள் ஆகி மென்மெல இயலிக் கையறு நெஞ்சினள் அடைதரும் மாயோள் என்றது - நாம் பிரியும் முன்பே பிரிவேமோ என்னும் அச்சத்தால் கையற்ற நெஞ்சுடன் நம்மை அகலாது அணுகும் இயல்புடையவள் என்றபடி. பிரியாவூங்கே அங்ஙனம் வருந்துபவள் நாம் பிரிந்திருக்கும் இக்காலத்தே ஊடினாரெல்லாம் கூடுதற்குரிய இவ்விளவேனிலில் யாங்காகுவளோ என்று தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லி வருந்தினானென்க. 280. நெய்தல் (தலைமகளைக் கண்ணுற்று நீங்குந் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. அல்லகுறிப்பட்டுப் போகாநின்றவன் சொல்லியதுமாம்.) பொன்னடர்ந் தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப் பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையள் திணிமணல் அடைகரை அலவன் ஆட்டி அசையினள் இருந்த ஆய்தொடிக் குறுமகள் 5. நலஞ்சால் விழுப்பொருள் கலம்நிறை கொடுப்பினும் பெறலருங் குரையள் 1ஆயின் அறந்தெரிந்து நாமுறை தேஎம் மரூஉப்பெயர்ந் தவனொடு இருநீர்ச் சேர்ப்பின் 2உப்புடன் உழந்தும் பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும் 10. படுத்தனம் பணிந்தனம் 3அடுத்தனம் இருப்பில் தருகுவன் கொல்லோ தானே விரிதிரைக் கண்திரள் முத்தங் கொண்டு ஞாங்கர்த் தேன்இமிர் அகன்கரைப் பகுக்குங் கானலம் பெருந்துறைப் 4பரதவன் நமக்கே. - அம்மூவனார். (சொ-ள்) 1-6. (நெஞ்சே!) பொன் அடர்ந்தன்ன - பொற் பூக்கள் நெருங்கி யிருந்தாற்போன்ற, ஒள் இணர் செருந்தி பல் மலர் வேய்ந்த - ஒளிபொருந்திய கொத்துக்களையுடைய செருந்தியின் பல பூக்களைச் சூடிய, நலம் பெறு கோதையள் - அழகு பொருந்திய கூந்தலையுடை யாளாகி, திணி மணல் அடைகரை - செறிந்த மணலையுடைய கடற்கரையில், அலவன் ஆட்டி - ஞெண்டினை ஓட்டி விளையாடி, அசையினள் இருந்த - இளைப்பாறி யிருந்த, ஆய்தொடி குறுமகள் - ஆய்ந்த தொடியினை அணிந்த தலைவி, நலம் சால் விழு பொருள் கலம் நிறை கொடுப்பினும், நன்மை மிக்க சிறந்த பொருளும் அணிகலமும் நிறையக் கொடுப்பினும் - பெறல் அருங் குரையள் ஆயின் - பெறுதற்கு அரியள் ஆனால்; 11-14. விரி திரை கண் திரள் முத்தம் கொண்டு - விரிந்த கடலில் திரண்ட வடிவினையுடைய முத்துக்களைக்கொண்டு, தேன் இமிர் அகன்கரை ஞாங்கர் பகுக்கும் - வண்டுகள் ஒலிக்கும் அகன்ற கரையிடத்தே அவைகளைப் பகுத்துக் கொள்ளும், கானல் அம் பெருந்துறை பரதவன் - சோலையினையுடைய அழகிய பெரிய துறையினையுடைய நெய்தற் றலைவனாகிய அவள் தந்தை, நமக்கு-, 6-11. நாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து - நாம் தங்கும் இந் நாட்டில் பயின்றிருத்தலின் நீங்கி, அவனொடு - அவனுடன் கூடி, இரு நீர் சேர்ப்பின் உப்பு உடன் உழந்தும் - பெரிய கடற்கரையினை யடுத்த உப்புச் செறுவில் உப்புப் பொதியுடன் திரிந்து வருந்தியும், பெரு நீர் குட்டம் புணையொடு புக்கும் - பெரிய கடலின் ஆழத்தில் புணையின் கட் சென்றும், படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின் - அவன் வயமாகியும் பணிந்தும் சார்ந்தும் இருப்பின், அறம் தெரிந்து - அறமாதலை உணர்ந்து, தருகுவன் கொல் - அவளைத் தருவானோ? (முடிபு) நெஞ்சே! விழுப்பொருள் கலம் நிறை கொடுப் பினும் பெறலருங் குரையள் ஆயின், நாம் பெயர்ந்து அவனொடு உடன் உழந்தும், புணையொடு புக்கும் படுத்தனம் பணிந்தனம் அடுத் தனம் இருப்பில், பரதவன் அறந்தெரிந்து நமக்கு (அவளைத்) தருகுவன் கொல்லோ? (வி-ரை) பொன் அடர்ந்தன்ன - பொன் தகடாயினாற்போன்ற (செருந்திமலர்) என்றுரைத்தலுமாம். கடற்கரை யிடங்களில் உள்ள சிறு ஞெண்டுகள் மக்களைக் காண்புழி விரைந்து ஓடி அளையிற் புகுதல் சிறந்த தோர் காட்சியாக இருக்குமாகலின், சிறுவர் சிறுமியர் அவற்றை அங்கும் இங்கும் அலைத்து விளையாடுதல் இற்றைக்கும் கண்கூடு. விழுப்பொருள் - பொன். கலம் - அணிகலம். நிறை - நிறைய. மருவுதல் - பயின்று வதிதல். ஒப்புடன் உழுதும் என்று பாடங் காணப்படினும், இவ்வாசிரியரே, 1`இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த, வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி' என்று கூறியிருத்தலின், ஈண்டு உழுதும் என்ற பாடம் பொருந்தாமை யுணர்க. உப்புடன் உழத்தலாவது உப்பு விற்றுத் திரிந்து வருந்துதல். படுத்தல் - அகப் படுத்தல்; அவன் வயம் ஆக்குதல். அடுத்தல் - சார்ந்திருத்தல். தருகுவன் கொல்லோ என்றமையால். தருவானாயின் அவ்வாறு செய்தும் அவளைப் பெறக்கடவேம் என்று தலைமகன் நெஞ்சிற்குக் கூறினான் என்க. நச்சினார்க்கினியர் இச் செய்யுளைத் தலைவன் பொருள்வயிற் பிரியக் கருதியதாகக் கொண்டு உரைப்பர். (மே-ள்) `வெளிப்படைதானே'1 என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் காட்டி, இதனுள் பொருள் கொடுத்தாற் பெறல் அரியளாயின், தன்னை வழிபட்டால் தந்தை தருவனோ? அது நமக்கு அரிதாகலின், இன்னும் பொருள் நாம் மிகத் தேடி வந்து வரைதும் எனப் பொருள் வயிற் பிரியக் கருதியவாறு காண்க என்பர், நச். 281. பாலை (தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) செய்வது தெரிந்திசின் தோழி அல்கலும் 2அகலுள் ஆங்கண் அச்சறக் கூறிய சொற்பழு தாகும் என்றும் அஞ்சாது ஒல்கியல் மடமயில் ஒழித்த பீலி 5. வான்போழ் வல்வில் சுற்றி நோன்சிலை அவ்வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வியல் கனைகுர லிசைக்கும் விரைசெலற் கடுங்கணை முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு 10. விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத்து ஒண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த அறையிறந் தவரோ சென்றனர் பறையறைந் தன்ன அலர்நமக் கொழித்தே. - மாமூலனார். (சொ-ள்) 1-3. தோழி-, அல்கலும் அகலுள் ஆங்கண் - நாடோறும் ஊரின்கண்ணே யிருந்து, அச்சு அறக் கூறிய சொல் - நமக்கு அச்சம் இன்றாகக் கூறிய சொல், பழுது ஆகும் என்றும் அஞ்சாது - பழுது படும் எனவும் அஞ்சாமல்; 4-12. ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி - நுடங்கும் தன்மை வாய்ந்த இளமை பொருந்திய மயில் கழித்த தோகையை, வான் போழ் வல்வில் சுற்றி - நீண்ட வாரினால் வலிய வில்லில் வைத்துக் கட்டி, நோன் சிலை - அந்த வலிய வில்லின், அவ் வார் விளிம்பிற்கு அமைந்த - அழகிய நெடிய நாணின் விளிம்பிற்குப் பொருந்திய, நொவ்வு இயல்கனை குரல் இசைக்கும் விரை செலல் கடு கணை - விரைவுத்தன்மையுடைய மிக்க ஒலி ஒலிக்கும் விரைந்தசெலவு பொருந்திய கடிய அம்புகளையுடைய, முரண் மிகு வடுகர் முன் உற - மாறுபாடு மிக்க வடுகர் தமக்கு முன்னே துணையாகி வர, மோரியர் தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு - மோரியர் என்பார் தென்றிசை நாடுகளைப் பற்ற எண்ணிப் போந்த வருகைக்கு, விண் உற ஓங்கிய பனி இரு குன்றத்து - வான் அளாவ உயர்ந்த பனியுடைய பெரிய மலையினை, ஒண் கதிர் திகிரி உருளிய - தமது ஒள்ளிய கதிர்களையுடைய ஆழி தடையின்றிச் செல்ல, குறைத்த - போழ்ந்து வழியாக்கிய, அறை இறந்து - பாறைகளைக் கடந்து; 12-13. பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்து - பறை அறைந்தாலொத்த அலரினை நம்பால் விடுத்து, அவரோ சென்றனர் - நம் தலைவர் போய்விட்டார்; 1. செய்வது தெரிந்திசின் - நாம் இனிச் செயற்பாலதனை ஆராய்ந்து காண்பாயாக. (முடிபு) தோழி, அச்சறக் கூறியசொற் பழுதாகு மென்றும் அஞ்சாது, அவர் அறையிறந்து அலர் நமக்கு ஒழித்துச் சென்றனர்; செய்வது தெரிந்திசின். (வி-ரை) அகலுள் - அகன்ற இடத்தையுடைய ஊர்; `அகலுளாங் கண் அறியுநர் வினாயும்'1 என்புழி நச்சினார்க்கினியர் உரைத்தமை காண்க. அச்சம் - அச்சு எனக் குறைந்து நின்றது. கூறிய சொல்லாவது - நின்னிற் பிரியேன் என்று பலகாலும் தெருட்டிய சொல். அஞ்சாது சென்றனர் என்று இயையும், நொவ்வு இயல் கனை குரல் - கணை விரைந்து செல்லுதலால் எழும் ஓசை. பறை அறைந்தன்ன அலர் - பறையறைந்தாற் போல யாண்டும் பரந்து வெளிப்படும் அலர். அலர் நமக்கு ஒழித்து என்றது, அலராகிய துன்பம் ஒன்றையே நமக்கு உரியதாக்கிச் சென்றனர் என்றபடி. 282. குறிஞ்சி (இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியதுமாம்.) பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய செறிமடை யம்பின் வல்விற் கானவன் பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன் 5. கண்பொருது இமைக்குந் திண்மணி 2கிளர்ப்ப வைந்நுதி வான்மருப் பொடிய உக்க தெண்ணீர் ஆலி கடுக்கும் முத்தமொடு மூவேறு தாரமும் 1ஒருங்குடன் கொண்டு சாந்தம் பொறைமர மாக நறைநார் 10. வேங்கைக் கண்ணியன் இழிதரு நாடற்கு இன்தீம் பலவின் ஏர்கெழு செல்வத்து எந்தையும் எதிர்ந்தனன் கொடையே அலர்வாய் அம்பல் ஊரும் அவனொடு மொழியுஞ் சாயிறைத் திரண்ட தோள்பா ராட்டி 15. யாயு மவனே யென்னும் யாமும் வல்லே வருக வரைந்த நாளென நல்லிறை மெல்விரல் கூப்பி இல்லுறை 2 கடவுட்கு ஒக்குதும் பலியே. - தொல் கபிலர். (சொ-ள்) 1-10. தோழி! பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய - பெரிய மலையின் பக்கத்தே வேட்டைக்குச் சென்ற, செறிமடை அம்பின் வல் வில் கானவன் - மூட்டுவாய் செறிந்த அம்பினையும் வலிய வில்லினையுமுடைய வேட்டுவன், பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு - தன்னுடன் போர் செய்துபட்ட யானையின் வெள்ளிய கொம்பினைக் கொண்டு, நீர் திகழ் சிலம்பின் - நீர் விளங்கும் மலையில், நன் பொன் அகழ்வோன் - சிறந்த பொன்னை அகழ்ந்து எடுப்போன், கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப - கண்ணினைப் பொருது விளங்குகின்ற திண்ணிய மணிகள் பொன்னுடன் மீப்போந்து விளங்க அவற்றை, வை நுதி வால் மருப்பு ஒடிய உக்க - கூரிய முனையை யுடைய வெள்ளிய யானைக் கொம்பு ஒடிதலால் உதிர்ந்த, தெள் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு - தெளிந்த நீர்மையையுடைய ஆலங் கட்டியை யொக்கும் முத்துக்களுடன் கூட்டி, மூ வேறு தாரமும் - வெவ்வேறாகிய அம்மூன்று பண்டங்களையும், சாந்தம் பொறை மரம் ஆக ஒருங்கு உடன் கொண்டு - சந்தன மரம் காவு மரமாக அவற்றை ஒரு சேரக் காவிக் கொண்டு, நறை நார் வேங்கைக் கண்ணியன் - நறைக்கொடியாய நாரினால் வேங்கைமலரைத் தொடுத்த கண்ணியை யுடையனாய், இழிதரும் நாடற்கு - அம் மலையினின்றும் இறங்கிவரும் நாட்டையுடைய நம் தலைவனுக்கு; 11-18. இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து எந்தையும் - மிக்க இனிமையுடைய பலாமரங்களையுடைய அழகு மிக்க செல்வத்தை யுடைய நம் தந்தையும், கொடை எதிர்ந்தனன் - நின்னைக் கொடுத்தலை ஏற்றுக் கொண்டான், அலர்வாய் அம்பல் ஊரும் - பழிமொழியினைச் சிலரும் பலரும் அறியக் கூறும் வாயினையுடைய ஊரிலுள்ளாரும், அவனொடு மொழியும் - அவனொடு நின்னைச் சேர்ந்தே கூறுவர், யாயும் - நம் தாயும், சாய் இறை திரண்ட தோள் பாராட்டி - வளைந்த சந்தினையுடைய திரண்ட நின் தோள்களைப் பாராட்டி, அவனே என்னும் - நினக்கு உரியன் அவனே என்று கூறுவள், யாமும் - நாமும், வரைந்த நாள் வல்லே வருக என - நம் மணத்திற்கு வரைந்த நாள் விரைந்து வருவதாக என்று, நல் இறை மெல்விரல் கூப்பி - நல்ல இறையினையுடைய மெல்லிய விரல்களைக் குவித்து, இல்லுறை கடவுட்கு - மனையுறை தெய்வத்திற்கு, பலி ஓக்குதும் - பலி செலுத்துவோமாக. (முடிபு) கானவன் வெண்கோடு கொண்டு பொன் அகழ்வோன் மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு இழிதரும் நாடற்கு, எந்தையும் கொடை எதிர்ந்தனன்; அலர்வாய் அம்பலூரும் அவனொடு மொழியும்; யாயும் அவனே என்னும்; யாமும் நாள் வல்லே வருக என இல்லுறை கடவுட்குப் பலி ஓக்குதும். (வி-ரை) நீர் திகழ் சிலம்பு - நீர் வெளிப்பட்டு விளங்கும் மலை; மாரிக்கண் உண்ட நீரினைக் கோடைக்கண் உமிழும் மலையென்க. கண் பொருது - கண்ணொளியுடன் மாறுபட்டு; கண் வழுக்குற விளங்கும் என்றபடி. பொன்னுடன் மணி கிளர்ப்ப என்க. ஆலி - நீர்த்திரள் என்னும் பொருளது; ஆலம் - நீர். தெண்ணீர் - தெளிந்த நீர் என்றே கொண்டு ஆலி பெயர் மாத்திரையாய் நின்றது என்றலுமாம். அவற்றை முத்தமொடு கூட்டி எனச் சில சொல் வருவித்துரைக்க. ஒருங்குடன் சாற்றி என்னும் பாடத்திற்கு ஒருங்கே விலை கூறி எனப் பொருள் உரைக்க. வேட்டம் போகிய கானவன், யானைக்கோடும் பொன்னும் முத்தும் சந்தனமும் வேங்கை மலரும் பெற்று வருவன் என்றது, அம் மலையின் சிறப்புக்கூறியபடி. அத்தகைய நாட்டினை யுடையவன் நம் தலைவன் என்றமையால், அவன் அரும் பொருள் பலவற்றை வரை பொருளாகக் கொண்டு வந்துளான் என்ற வாறாயிற்று. எந்தை நின்னை அவனுக்குக் கொடுத்தல் ஒருதலை என்பாள் `எதிர்ந்தனன் கொடை' யெனத் துணிவு பற்றிக் கூறினாள். எதிர்ந்தனன் கொடை என்பதற்கு நின் பொருட்டுத் தலைவன் கொண்டுவந்த பொருட்கொடையை ஏற்றுக் கொண்டனன் என்றலுமாம். எந்தை கொடை எதிர்ந்தமையாலும், யாயும் அவனே உரியன் என்றதாலும், ஊரும் அவனொடு சார்த்தியே மொழி தலாலும் நீ தலைவனுக்கே உரியையாதலால் ஒருதலை; எனினும் மணநாள் விரைந்து வருக என்று கடவுட்குப் பலி ஓக்குதும் எனத் தோழி தலைவிக்குக் கூறினாள் என்க. தலைவன் கேட்டு விரைந்து வரைய வருவானாதல் இதன் பயன். `யாயும் அவனே' என்பது தாய் தெய்வத்தைப் பராவுங் குறிப்பினதென்பது நச்சினார்க்கினியர் கருத்து. இச்செய்யுள் தலைமகள் தோழிக்குச் சொல்லியதெனக் கொள்ளின், நின் என்னும் இடங்களில் நம் என உரைத்துக் கொள்க. ஆக்குதும் பலி என்பது பாடமாயின் பலி அமைப்போம் என்று உரைக்க. `சேர்ப்பனை, யானுங் காதலென் யாயுநனி வெய்யள் எந்தையுங் கொடீஇயர்வேண்டும், அம்ப லூரும் அவனொடு மொழிமே'1 என்பது இச்செய்யுட் கருத்தொடு பெரிதும் ஒத்திருத்தல் அறிந்து இன்புறற்பாலது. (மே-ள்) `களவலராயினும்'2 என்னும் சூத்திரத்து, தெய்வம் வாழ்த்தலும் என்னும் பகுதிக்கண் இச்செய்யுளைக் காட்டி, இதனுள் `தோள் பாராட்டி, யாயும் அவனே யென்னும்' என்று யாய் தெய்வம் பராயினாள் என்பதுபடக் கூறி, யாம் அத்தெய்வத்திற்குப் பலி கொடுத்தும் என்றவாறு காண்க என்றனர், நச். 283. பாலை (உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச் சொல்லியது.) நன்னெடுங் கதுப்பொடு பெருந்தோள் 3நீவிய நின்இவண் ஒழிதல் அஞ்சிய என்னினுஞ் செலவுதலைக் கொண்ட பெருவிதுப் புறுவி பல்கவர் மருப்பின் முதுமான் போக்கிச் 5. சில்லுணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் திரிவயின் தெவிட்டுஞ் சேட்புலக் குடிஞைப் பைதல் மென்குரல் ஐதுவந் திசைத்தொறும் போகுநர் புலம்பு மாறே 4ஏகுதற்கு அரிய ஆகுமென் னாமைக் கரிமரங் 10. கண்ணகை இளங்குழை கால்முதல் கவினில் விசும்புடன் இருண்டு வெம்மை நீங்கப் பசுங்கண் வானம் பாய்தளி பொழிந்தெனப் புன்னுகும் பெடுத்த நன்னெடுங் கானத்து ஊட்டு பஞ்சிப் பிசிர்பரந் தன்ன 15. வண்ணம் மூதாய் தண்ணிலம் 5 வரிப்ப இனிய ஆகுக தணிந்தே இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே. - மதுரை மருதனிளநாகனார். (சொ-ள்) 1-3. தலைவ! நல் நெடுங் கதுப்பொடு பெருந்தோள் நீவிய - தலைவியின் நல்ல நீண்ட கூந்தலொடு பெரிய தோளினைத் தடவிய, நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும் - நின்னை ஒழிந்து இங்குத் தங்கியிருத்தலை அஞ்சியுள என்னைக் காட்டிலும், செலவு தலைக் கொண்ட - உடன்போக்கினை மேற்கொண்ட, பெரு விதுப்பு உறுவி - பெரிய விரைவினை யுற்றிருக்கும் தலைவி. 17. இன்னா நீப்பின் நின்னொடு செலற்கு - துன்பத்தைத் தரும் பிரிவின்கண் நின்னுடன் போதற்கு; 4-9. பல் கவர் மருப்பின் முதுமான் போக்கி - பல கிளைகள் பொருந்திய கொம்பினையுடைய முதிய மான்களைத் துரந்து, சில் உணா தந்த - சிறிய உணவுப் பொருளைக் கொண்டுவந்த, சீறூர் பெண்டிர் திரிவயின் - சிறிய ஊர்களிலுள்ள பெண்கள் திரியு மிடத்தே, தெவிட்டும் சேட்புலக் குடிஞை - சேய்மையிடத்தே இருந்து ஒலிக்கும் பேராந்தையின், பைதல் மென் குரல் ஐது வந்து இசைத் தொறும் - வருத்தம் தரும் மெல்லிய குரல் மென்மையாக வந்து ஒலிக்குந் தோறும், போகுநர் புலம்பும் ஆறு - வழிப் போவார் கேட்டு வருந்தும் சுர நெறிகள், ஏகுதற்கு அரிய ஆகும் என்னாமை - செல்லற்கு அரியன ஆகும் என்னாதபடி; 9-16. கரி மரம் கண் அகை இளம் குழை கால் முதல் கவினி - கரிந்த மரங்கள் தம்மிடத்தே கிளைக்கப்பெறும் இளைய தளிர்கள் அடி முதற் கிளைத்து அழகு பெறவும், வெம்மை நீங்க - வெப்பம் ஒழியவும், விசும்பு உடன் இருண்டு - வானில் ஒருங்கே இருட்சியுற்று. பசுங் கண் வானம் பாய் தளி பொழிந்தென - பசுமையைத் தன்பாற் கொண்ட மேகம் பரந்த துளியினைச் சொரிந்ததாக, புல் நுகும்பு எடுத்த நல்நெடுங் கானத்து - புற்கள் குருத்தினை விட்ட நல்ல நீண்ட காட்டில், ஊட்டு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன - செந்நிறம் ஊட்டிய பஞ்சின் பிதிர் பரவியது போன்ற, வண்ணம் மூதாய் தண் நிலம் வரிப்ப - செந்நிறமுடைய தம்பலப் பூச்சிகள் குளிர்ந்த நிலத்தே அழகுறுத்த; தணிந்து இனிய ஆகுக - வெப்பம் தணிந்து இனிமையுடன் ஆகுக. (முடிபு) தலைவ! பெருவிதுப்புறுவி நின்னொடு செலற்கு, ஆறுகள் ஏகுதற்கு அரிய ஆகும் என்னாமை, வானம் தளி பொழிந் தென, நன்னெடுங் கானத்து மூதாய் வரிப்ப, தணிந்து இனிய ஆகுக! (வி-ரை) அஞ்சிய - அஞ்சி உடன்போக்கு வலித்த என்றபடி. கதுப்பும் தோளும் நீவித் தலையளி செய்த பேரன்புடைய நின்னைப் பிரிந்து தலைவி ஆற்றியிருத்தல் அரிதென அஞ்சி யான் உடன்போக்கு வலித்தேனாக, தலைவி என்னினும் முந்துற உடன்போக்கிற்கு விரை கின்றாள் என்பாள், `அஞ்சிய என்னினும், செலவுதலைக் கொண்ட பெருவிதுப்புறுவி' என்றாள். விதுப்புறுதல் - ஆர்வமுடன் விரைதல். சில் உணா - மான் உண்டு எஞ்சிய சிறிய உணவு; தினை முதலியன. சேட்புலத்தினின்று ஒலித்தலால் குடிஞையின் குரல் மென்குரல் எனப்பட்டது. கவினி - கவின எனத் திரிக்க. புல் - புறக்காழனவாகிய பனை முதலியனவுமாம். மழை பெய்த பின்றை நிலத்திலே பரந்துகிடக்கும் தம்பலப் பூச்சிகள் நிலத்தினைக் கோலம் செய்தாற்போல் இனிய காட்சியைப் பயக்குமாகலின் `வண்ணம் மூதாய் தண்ணி லம் வரிப்ப இனிய வாகுக' என்றாள். உடன்போக்கில் தலைவி தலைவனுடன் செல் லினும் தோழி ஆயத்தார் உள்ளிட்டாரையும் பயின்ற இடத்தையும் விடுத்துச் சேறலின் அதனையும் பாலையாகவே கொண்டு புலனெறி வழக்கம் செய்தனர் சான்றோர். உடன்போக்கானது தனக்கும் தாய் முதலாயினார்க்கும் இன்னாமை விளைத்தலின் அதனை - இன்னா நீப்பு என்று தோழி கூறினாள் என்க. 284. முல்லை (வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. தன் நெஞ்சிற்குச் சொல்லியதுமாம்.) சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன குறுவிழிக் கண்ண கூரலங் குறுமுயல் முடந்தை வரகின் வீங்குபீள் அருந்துபு குடந்தையஞ் செவிய கோட்பவர் ஒடுங்கி 5. இன்றுயி லெழுந்து துணையொடு போகி முன்றில் சிறுநிறை நீர்கண் டுண்ணும் புன்புலந் தழீஇய பொறைமுதற் சிறுகுடித் தினைக்கள் ளுண்ட தெறிகோல் மறவர் விசைத்த வில்லர் வேட்டம் போகி 10. முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டுங் காமர் புறவி னதுவே காமம் நம்மினுந் தான்றலை மயங்கிய அம்மா அரிவை உறைவின் ஊரே. - இடைக்காடனார். (சொ-ள்) 11-13. காமம் நம்மினும் தலைமயங்கிய - காமத்தால் நம்மைக் காட்டினும் மிக்க மயக்கமுற்ற, அம் மா அரிவை - அழகிய மாமை நிறமுடைய நம் தலைவி, உறைவு இன் ஊர் - உறைதலுறும் இனிய ஊரானது; 1-11. சிறி இலை நெல்லிக் காய் கண்டன்ன - சிறிய இலைகளை யுடைய நெல்லியின் காயைக் கண்டாலொத்த, குறுவிழிக் கண்ண - குறிய விழிபொருந்திய கண்களையும், கூரல் குறு முயல் - கூரிய மயிரினையுமுடைய கறிய முயல்கள், முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு - வளைந்து கிடக்கும் வரகினது பருத்த குருத்தினைத் தின்ற, குடந்தை அம் செவிய - வளைந்த அழகிய செவியினவாகி, கோள் பவர் ஒடுங்கி - காய்களைக் கொண்ட கொடிகளுட் புகுந்து கிடந்து உறங்கி, இன் துயில் எழுந்து - இனிய துயிலினின்றும் எழுந்து, துணையொடு போகி - தம் துணையொடு போகி, முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் - வீட்டு முற்றத்தேயுள்ள சிறிய சால்களிலுள்ள நீரைக்கண்டு பருகும், புன் புலம் தழீஇய - முல்லை நிலத்து ஊர்கள் சூழ்ந்த, பொறை முதல் சிறுகுடி - குன்றின் அடிகளிலுள்ள சிறிய ஊர் களிடத்தே, தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர் - தினையினா லாக்கிய கள்ளினையுண்ட நாணினைத் தெறித்து விடுக்கும் அம்பினை யுடைய மறவர்கள், விசைத்த வில்லர் - வேகமாக இழுத்து நாண் பூட்டிய வில்லினராய், வேட்டம் போகி - வேட்டையாடி, முல்லைப் படப்பை புல்வாய் கெண்டும் - முல்லைநிலத் தோட்டத்தே மானை அறுத்து உண்ணும், காமர் புறவினது - அழகிய காட்டின்கண்ணது. (முடிபு) காமம் நம்மினும் தலைமயங்கிய அரிவை ஊர் காமர் புறவினது; குறுமுயல் வரகின் பீள் அருந்துபு, பவர் ஒடுங்கி, துயிலெழுந்து, துணையொடு போகி, முன்றில் நிறையின் நீர் கண்டு உண்ணும் புன்புலம் எனவும், சிறு குடி மறவர் வேட்டம் போகிப் புல்வாய் கெண்டும் புறவு எனவும் இயையும். (வி-ரை) கண்ணவாகிய குறுமுயல், கூரலையுடைய குறுமுயல் என்க. கூரல் - மயிர். நிறை - நீர்ச்சால். புன்புலம் - முல்லைநிறம். முன்றில் நிறை நீர் கண்டு உண்ணும் புன்புலம் என்றமையால், முல்லை நிலத்து ஊர்கள் எனப் பொருளுரைக்கப்பட்டது. மருத நிலத்து நெல்லாற், கள் அமைத்தல் போலக் குறிஞ்சி நிலத்துத் தினையால் கள் அமைத்து உண்பராகலின், தினைக்கள் உண்ட மறவர் என்றான். புறவினது ஆகலின் நம் தேரினை ஆண்டு விரைந்து செலுத்துக எனத் தலைமகன் பாகற்குக் கூறினான் என்க. நெஞ்சிற்குக் கூறியதாயின், தலைவியிருக்கும் ஊர் புறவினது; நாம் இன்னும் ஈண்டுளோம்! என்றான் என்க. 285. பாலை (1உடன்போக் குடன்படுவித்த தோழி, தலைமகட்குச் சொல்லியது.) ஒழியச் சென்மார் செல்ப என்றுநாம் அழிபடர் உழக்கும் அவல நெஞ்சத்து எவ்வம் இகந்துசேண் அகல வையெயிற்று ஊனசைப் பிணவின் உறுபசி களைஇயர் 5. காடுதேர் மடப்பிணை யலறக் கலையின் ஓடுகுறங்கு அறுத்த செந்நா யேற்றை வெயில்புலந் திளைக்கும் வெம்மைய பயில்வரி இரும்புலி வேங்கைக் கருந்தோல் அன்ன கல்லெடுத் தெறிந்த பல்கிழி உடுக்கை 10. உலறுகுடை வம்பலர் உயர்மரம் ஏறி ஏறுவேட் டெழுந்த இனந்தீர் எருவை ஆடுசெவி நோக்கும் அத்தம் பணைத்தோள் குவளை யுண்கண் இவளும் நம்மொடு வரூஉம் என்றனரே காதலர் 15. வாராய் தோழி முயங்குகம் பலவே. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். (சொ-ள்) 15. தோழி-, 14. காதலர், - நம் காதலர்; 1-3. ஒழியச் சென்மார் செல்ப என்று - நாம் பிரிந்திருக்கப் பொருளீட்டச் சொல்லுதற்குச் செல்வார் என்று, நாம் அழிபடர் உழக்கும் - நாம் மிக்க துன்பத்தால் எப்பொழுதும் வருந்தும், அவலம் நெஞ்சத்து - ஆற்றாமையுடைய மனத்தின், எவ்வம் இகந்து சேண் அகல - துன்பம் நீங்கிச் சேய்மைக்கண் ஒழியுமாறு; 3-14. வை எயிற்று ஊன் நசைப் பிணவின் உறுபசி களைஇயர் - கூரிய பல்லினையுடைய ஊனை விரும்பும் பெண்நாயின் மிக்க பசியினைப் போக்குதற்கு, காடு தேர் மடப் பிணை அலற - தன் கலையினைக் காட்டில் தேடும் இளைய பெண்மான் கதற, கலையின் ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை - ஆண்மானின் ஓடித் தப்பற் குரிய தொடையினைச் சிதைத்த செந்நாயின் ஆண், வெயில் புலந்து இளைக்கும் - வெய்யிலை வெறுத்து மெலியும், வெம்மைய - வெப்பம் பொருந்தியனவும், பயில் வரி இரும்புலி வேங்கை - வரிகள் பொருந்திய பெரிய வேங்கைப்புலியின், கருந் தோல் அன்ன - விளங்கும் தோலினைப் போன்ற, கல் எடுத்து எறிந்த - ஆறலைப்போர் கல்லை எடுத்து எறிதலின், பல் கிழி உடுக்கை உலறு குடை வம்பலர் - பல கிழிவு களைக் கொண்ட உடையினையும் உலறிய குடையினையுமுடைய புதியராய வழிச்செல்வார், உயர் மரம் ஏறி - உயர்ந்த மரத்தில் ஏறி, ஏறுவேட்டு எழுந்த - உணவை எற்றுதலை விரும்பி எழுந்த, இனம் தீர் எருவை - இனத்திற் பிரிந்து வந்த பருந்து, ஆடு செவி நோக்கும் அத்தம் - வானில் அசையும் செவ்வியை நோக்கியிருப்பனவும் ஆகிய காட்டு நெறிகளில், பணைத்தோள் - பெருத்த தோளினையும், குவளை உண்கண் இவளும் - குவளைமலரைப் போன்ற மையுண்ட கண்களையுமுடைய இவளும், நம்மொடு வரூஉம் என்றனர் - நம்முடன் வாராநிற்பள் என்று கூறினர்; 15. வாராய் முயங்குகம் பலவே - ஆகையால் நாம் பன்முறை முயங்குதற்கு வருவாயாக. (முடிபு) தோழி! காதலர் நாம் அழிபடர் உழக்கும் நெஞ்சத்து எவ்வம் இகந்து சேண் அகல, அத்தம் இவளும் நம்மொடு வரூஉம் என்றனர்; ஆகையால் முயங்குகம் பல; வாராய். (வி-ரை) அகல என்னும் எச்சம் என்றனர் என்பதன் முதனிலை கொண்டு முடியும். காடு தேர் பிணை - காட்டிலே ஆண்மான் இருக்குமிடத்தை ஆராய்ந்து திரியும் பிணை. ஓடு குறங்கு - ஓடுதற்கு ஏதுவாகிய குறங்கு. செந்நாய் ஏற்றை வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய என்றது, காட்டின் வெம்மை மிகுதி கூறியபடி. வெம்மைய அத்தம் எனவும், வம்பலர் மரம் ஏறி எருவை ஆடு செவி நோக்கும் அத்தம் எனவும் இயையும். ஏறு - எறிதல்; `கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித்தொரீஇ'1 என்றதனாலும் இஃது இப் பொருட்டாதல் அறியப்படும். செவ்வி; செவி என்றாயது. உணவு குறித்து எழுந்த பருந்து விசும்பிலே இயங்கும் திசைபற்றி, காட்டின் இயல்பு அறியப்படுமாகலின், வம்பலர் அதனை நோக்குவாராயினர் என்க. 286. மருதம் (வரைந் தெய்துவலென்று நீங்குந் தலைமகன் தலைமகளை ஆற்றுவித்துக் கொண்டிருத்தல் வேண்டுமென்று தோழியைக் கைப்பற்றியது. தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதித் தோழி சொல்லியது.) வெள்ளி விழுத்தொடி மென்கருப் புலக்கை வள்ளி நுண்ணிடை வயின்வயின் நுடங்க மீன்சினை யன்ன வெண்மணற் குவைஇக் காஞ்சி நீழல் தமர்வளம் பாடி 5. ஊர்க்குறு மகளிர் குறுவழி விறந்த இறாஅல் அருந்திய சிறுசிரல் மருதின் தாழ்சினை யுறங்குந் தண்டுறை ஊர விழையா வுள்ளம் விழையும் ஆயினும் என்றுங், கேட்டவை தோட்டி யாக மீட்டாங்கு 10. அறனும் பொருளும் வழாமை நாடித் தற்றக வுடைமை நோக்கி மற்றதன் பின்னா கும்மே முன்னியது முடித்தல் அனைய பெரியோ ரொழுக்க மதனால் அரிய பெரியோர்த் தெரியுங் காலை 15. நும்மோ ரன்னோர் மாட்டும் இன்ன பொய்யொடு மிடைந்தவை தோன்றின் மெய்யாண் டுளதோவிவ் வுலகத் தானே. - ஓரம் போகியார். (சொ-ள்) 1-7. வெள்ளி விழு தொடி - வெள்ளியினாலாகிய சிறந்த பூணையுடைய, மெல் கருப்பு உலக்கை - மெல்லிய கரும் பாகிய உலக்கையால், வள்ளி நுண் இடை - கொடிபோன்ற நுண்ணிய இடை, வயின் வயின் நுடங்க - அங்கும் இங்கும் அசைய, மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ - மீனின் முட்டை போன்ற வெள்ளிய மணலைக் குவித்து, காஞ்சி நீழல் - காஞ்சி மரத்தின் நிழலில், தமர் வளம் பாடி - தம் குடியினர் பெருமைகளைப் பாடி, ஊர்க்குறு மகளிர் குறுவழி - ஊரிலுள்ள இளைய பெண்கள் குற்றுங்கால், விறந்த இறாஅல் அருந்திய சிறு சிரல் - செறிந்த இறால் மீனைத் தின்ற சிறிய சிரற்பறவை, மருதின் தாழ்சினை உறங்கும் தண் துறை ஊர - மருதமரத்தின் தாழ்ந்த கிளையிற் சென்று துயிலும் குளிர்ந்த துறையையுடைய ஊரனே! 8-13. என்றும் விழையா உள்ளம் விழையும் ஆயினும் - அறனல்லவற்றை என்றும் விரும்பா உள்ளம் ஒரோவழி மயங்கி விரும்புமாயினும், கேட்டவை தோட்டியாக - கேட்ட கேள்விகள் அங்குச மாக, மீட்டு - உள்ள மாய யானையை மீட்டு, அறனும் பொருளும் வழாமை நாடி - இல்லறமும் பொருளும் வழுவா வகையை ஆய்ந்து, தன் தகவுடைமை நோக்கி மற்று அதன்பின் - தனது தகுதியுடைமையை உணர்ந்து அதன் பின்னரே, முன்னியது முடித்தல் ஆகும் - தான் கருதியதை முடித்தல் உளதாகும், பெரியோர் ஒழுக்கம் - பெரியோர் ஒழுக்கங்கள், அனைய - அத் தன்மையவாம்; 13-17. அதனால்-, அரிய பெரியோர்த் தெரியுங்காலை- அரியன செய்யும் பெரியோர் செயல்களை ஆராயுமிடத்து, நும் ஓரன்னோர் மாட்டும் - நும்மை யொத்த பெரியோரிடத்தும், இன்ன பொய் யொடு மிடைந்தவை தோன்றின் - இத்தகையன பொய்யொடு கூடிய கூற்றுக்கள் தோன்றின், இவ்வுலகத்தான் - இவ்வுலகின்கண், மெய் யாண்டு உளதோ - மெய் எங்கு உளதாகும்? (முடிபு) தண் துறை ஊர! விழையா வுள்ளம் விழையும் ஆயினும், மீட்டு, நாடி, நோக்கி, அதன் பின்னாகும் முன்னியது முடித்தல்; பெரியோர் ஒழுக்கம் அனைய; அதனால் தெரியுங் காலை நும்மோரன்னோர் மாட்டும் பொய்யொடு மிடைந்தவை தோன்றின் இவ்வுலகத்தான் மெய் யாண்டுளதோ? (வி-ரை) குறுமகளிர் காஞ்சி நிழலில் வெண்மணற் குவைஇ கருப்பு உலக்கையால் இடைநுடங்கத் தமர் வளம்பாடிக் குறுவழி என்க. தமர் என்றது, தம் திணை முதல்வர்களையும் அரசர் முதலா யினாரையும் குறிக்கும். கரும்புலக்கையால் குறுவர் என்றது, மருத நிலத்தின் வளமிகுதி கூறியபடி; தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம், பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர், ஆழிக் கொடித் திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப், பாழித் தடவரைத் தோட் பாடலே பாடல், பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்'1 என்னும் வள்ளைப் பாட்டு ஈண்டு அறிந்து இன்புறற்பாலது. அருந்திய சிறுசிரல் என்றதனால் வராஅல் என்னும் பாடம் பொருந்தாமை அறிக. பாட்டினைக் கேட்டு உறங்கும் என்க. விழையா உள்ளம் என்றது, இயல்பிலே நன்றல்லதனை விரும்பாத உள்ளம் என உள்ளத்தின் தூய்மை கூறியபடி. கேட்டவை தோட்டியாக என்றமை யால், உள்ளமாகிய யானையை என்க. இஃது ஏகதேச உருவகம். உள்ளம் விரும்பிய வழி அதனைச் செல்லவிடாது, விரும்பிய பொருளின் நலம் தீங்கினை ஆராய்ந்து, நன்மையாயின வழிச் செலுத்தவேண்டு மென்பது, `சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ, நன்றின்பால் உய்ப்பது அறிவு'1 என்னும் வாயுறை வாழ்த்தால் அறியப் படும். அங்ஙனம் உள்ளத்தை மீட்டு நல்வழிப்படுத்தற்குச் சான்றோர்பால் தாம் கேட்ட பொருண் மொழிகள் பெரிதும் துணையாவன ஆகலின், கேட்டவை தோட்டியாகக் மீட்டு என்றார். தலைவன் தன்னைக் கைப்பற்றிய அதனைச் சூளுறவாகக் ` கருதிய தோழி, உலகத்துப் பெரியோர் ஒழுக்கம் அத்தன்மைய ஆகலின், நும்மாட்டுப் பொய் தோன்று மாறில்லை என்பதுபட அவனுக்குக் கூறினாள் என்பது இச் செய்யுளின் கருத்தாகும். ஆசிரியர் நக்கீரனாரும் இச் செய்யுளின்கருத்து இதுவேயாகக் கொண்டுள்ளார். நச்சினார்க்கினியர், முன்னியது என்பதற்குப் புறத்தொழுக்கம் என்றும், அரிய பெரியோர்த் தெரியுங்காலை என்ப தற்குப் பெரியோர் ஒழுக்கத்தை ஆராயு மிடத்து அவை அரியவாய் இருந்தன என்றும் பொருள் கொண்டு, தலைமகன் முன்பு சூள் தம்பினான் எனத் தோழி புலந்து கூறு கின்றாளாகக் கருத்துக் கொண்டனர். (மே-ள்) `குறியெனப் படுவது.... மொழிப'2 என்னும் சூத்திரத்துச் `செறிப்பறிவுறுக்கப்பட்ட தலைமகன் தெருள் வானாயின் இந்நாள் வரைவல், அத்துணையும் இவளை ஆற்றுவித்துக் கொண்டிரு; நினக்கு அடைக்கல மெனக் கைப்பற்றும்; கைப்பற்றியதனைத் தோழி சூளுறவாகக் கருதினாள்; உலகத்துச் சூளுறுவார் பசுவையும் பார்ப்பாரையும் பெண்டிரையும் தொட்டுச் சூளுறுவராகலான்; சூளுற வாற்றார் என்பது நினைந்து, நீ வரைவல் என்றதே அமையாதோ? சூளுறல் வேண்டுமோ? பொய்த்தலும் வாய்த்தலும் உடையாரன்றோ சூளுறுவர்? மெய்யல்லது சொல்லாதார்க்குச் சூளுறவு வேண்டுமோ? நின் கண்ணும் பொய்யுண்டாயின் மெய்யென்பது இவ்வுலகத்து நிலைபெற்றவழி இல்லையாகாதே? என்னும்;' என்று உரைத்து அதற்கு உதாரணமாக இச்செய்யுளைக் காட்டினர், நக்கீரர். `கூதிர் வேனில் என்றிரு பாசறை'3 என்னும் சூத்திரத்து, கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும் என்னும் பகுதிக்கு, இச் செய்யுளில் `விழையா வுள்ளம் விழையு மாயினும்...... அரிய பெரியோர்த் தெரியுங் காலை' என்னும் பகுதியை எடுத்துக் காட்டி, இது தொகுத்துக் கூறியது என்றும், `பெறற்கரும் பெரும்பொருள் முடிந்த பின் வந்த'1 என்னம் சூத்திரத்து, பெரியோர் ஒழுக்கம் பெரிது எனக் கிளந்து பெறுதலை யில்லாப் பிழைப்பினும் என்ற பகுதியில் இச்செய்யுளைக் காட்டி, இதனுள் அறன் என்றது, இல்லறத்தை; தற்றகவுடைமை நோக்கி என்றது, தன்னால் அவ்வறனும் பொருளும் தகுதிப்பா டுடையவாம் தன்மை நோக்கி என்றவாறாம்; முன்னியது என்றது, புறத் தொழுக்கத்தை; பெரியோர் ஒழுக்கம் அனைய என்றது, பெரியோர் ஒழுக்கம் பெரிய என்றவாறு, என்று உரைத்து, இது முன்னர் நிகழ்ந்த பொய்ச்சூள் பற்றி, நும்மனோர் மாட்டும் இன்ன பொய்ச்சூள் பிறக்குமாயின் இவ்வுலகத்து மெய்க்சூள் இனி இன்றாம்; அதனால் பெரியோரைத் தமது ஒழுக்கத்தைத் தேருங் காலை அரியவாயிருந்தனவெனத் தலைவனை நோக்கித் தோழி கூறலின், அவனை வழிபாடு தப்பினாளாயிற்று. உள்ளுறை யுவமம் இதற்கு ஏற்குமாறு உணர்க என்றும் கூறினார், நச். 287. பாலை (பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்து நின்று தன்னெஞ்சிற்குச் சொல்லியது.) தொடியணி முன்கைத் தொகுவிரல் குவைஇப் படிவ நெஞ்சமொடு பகல்துணை யாக நோங்கொல் அளியள் தானே தூங்குநிலை மரையேறு சொறிந்த மாத்தாள் கந்தின் 5. சுரையிவர் பொதியில் அங்குடிச் சீறூர் நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகைப் புரிசை மூழ்கிய பொரியரை ஆலத்து ஒருதனி நெடுவீழ் உதைத்த கோடை துணைப்புறா இரிக்குந் தூமழை நனந்தலைக் 10. கணைக்கால் அம்பிணை ஏறும்புறம் நக்க ஒல்குநிலை யாஅத்து ஓங்குசினை பயந்த அல்குறு வரிநிழல் அசையினம் நோக்க அரம்புவந்து அலைக்கும் மாலை நிரம்பா நீளிடை வருந்துதும் யாமே. - குடவாயிற் கீரத்தனார். (சொ-ள்) 3-9. மரை ஏறு சொறிந்த - ஆண் மரை உராய்ந்தமை யால், தூங்கு நிலை - அசையும் நிலையினைப் பொருந்திய, மா தாள் கந்தின் - கரிய அடி பொருந்திய கந்தினையுடைய, சுரை இவர் பொதியில் - சுரைக்கொடி படர்ந்த அம்பலத்தின்கண்ணே, அம் குடி சீறூர் - அழகிய குடியிருப்பினையுடைய சீறூரிலுள்ளார், நாட் பலி மறந்த - விடியற்காலத்தே யிடும் பலியை மறந்தமையால், நரைக்கண்- வெளிதாகிய இடத்தினையுடைய, இட்டிகை - பலிபீடத்தை யடுத்து, புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து - மதில்போற் சூழ்ந்த பொரிகள் பொருந்திய அடியினையுடைய ஆலமரத்தின், ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை - ஒன்றாய்த் தனித்த நீண்ட விழுதினை மோதிய கோடைக் காற்று, துணைப் புறா இரிக்கும் - துணையுடன் மேவியிருந்த புறாக்களை ஓட்டும் இடமாகிய, தூ மழை நனந்தலை - மழை அற்ற அகன்ற இடத்தே; 10-14. கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க - திரண்ட காலினையுடைய அழகிய பிணையினை அதன் கலை முதுகிடத்தே நக்க, ஒல்கு நிலை யாத்து ஓங்கு சினை பயந்த - அசையும் நிலையினையுடைய யாமரத்தின் உயர்ந்த கிளைகளாலாகிய, அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க - சுருங்கிய வரிவரியாய நிழலில் தங்கினேமாய் நோக்க, அரம்பு வந்து அலைக்கும் மாலை- குறும்பாக வந்து வருத்தும் மாலையில், நிரம்பா நீளிடை யாம் வருந்துதும் - இந்தத் தொலையாத நீண்ட நெறியில் யாம் தனித்து வருந்துகின்றேம்; (நம் தலைவி,) 1-3. தொடி அணி முன்கைத் தொகுவிரல் குவைஇ - வளையினை அணிந்த முன்கையில் தொக்க விரலைக் குவித்து, படிவ நெஞ்சமொடு - நம்மைக் காணலாம் விரதம் கொண்ட நெஞ்சத் துடன், பகல் துணையாக நோம்கொல் - பகல் நேரமே தனக்குத் துணையாக வருந்தியிருப்பளோ, அளியள் - இரங்கத்தக்காள். (முடிபு) யாம் யாத்து வரி நிழல் அசையினம் நோக்க, அரம்பு வந்தலைக்கும் மாலை நிரம்பா நீளிடை வருந்துதும்; நம் காதலி படிவ நெஞ்சமொடு பகல் துணையாக நோங்கொல்? அளியள். (வி-ரை) தொகு விரல் குவைஇ என்றது, மகளிர்க்கு வருத்தம் மிக்க வழி நிகழ்வதொரு நிகழ்ச்சி. படிவம் - நோன்பு. வேறு துணையின்றி யென்பான், பகல் துணையாக என்றான். தான் விரைந்து சென்று அவளது வருத்தத்தைப் போக்கமுடியாமை கருதி அளியள் தானே என்றான். கந்து - பொதியிலின்கண் தெய்வம் உறையும் தறி; அதன் அடி கரிதாயிருத்தலின் மாத்தாட்கந்து எனப்பட்டது. அங்குடிச் சீறூர் - முன்பு அழகின் குடியிருப்பினதா யிருந்த சீறூர் என்க. சீறூர் குடி போகப்பட்டமையின், நாட்காலத்தே பலி கொடுப்பாரின்றிப் பொதியில் பாழ்பட்டது என்பான், மரையேறு சொறிந்த தூங்கு நிலைக்கந்து எனவும், சுரை இவர் பொதியில் எனவும் கூறினான். இட்டிகை - செங்கல்; ஈண்டுப் பலிபீடம்; அதன்கண் பலியிடப் பெறாமையின் நரைக்கண் இட்டிகை எனப் பட்டது. `கலிகெழு கடவுள் கந்தங்கை விடப், பலிகண் மாறிய பாழ்படு பொதியில்'1 `கடவுள் போகிய கருந்தாட் கந்தம்'2 என்பன வற்றாலும் பொதியிலில் கந்தின்கண்ணே தெய்வம் உறைதலும், பலியிடுவாரின்றி அது பாழ்படுதலும் அறியப்படும். தூமழை - மழை தூ என மாறுக; தூவுதல் - ஒழிதல்; `கருமஞ் செயவொருவன் கைதூவேன்'3 என்புழித் தூவுதல் ஒழிதல் என்னும் பொருட்டாதல் காண்க. பிணையின் வெப்பத்தைத் தணித்தற்காக ஏறு அதன் புறத்தினை நக்கும் என்க. நோக்க அலைக்கும் மாலை என்க. அரம்பு- குறும்பு. இரு பேரரசர்க்கு இடையே சிறிது பொழுது புகுந்து குடிகளை வருத்திச் செல்லும் குறுநில மன்னர் போலப் பகலுக்கும் இரவுக்கும் நடுவே புகுந்து சிறிது பொழுது நின்று தணந்தாரிடைத் துன்புறுத்திச் செல்வதாகலின், மாலையை அரம்பு என்றான். `புன்கண் மாலைக் குறும்பெறிந்து ஓட்டி'4 என்றார் இளங்கோ வடிகளும். நிரம்பா நீளிடை - செல்லத் தொலையாத நெடிய வழி. 288. குறிஞ்சி (பகற்குறிக்கண் தோழி செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.) சென்மதி சிறக்கநின் உள்ளம் நின்மலை ஆரம் நீவிய அம்பகட்டு மார்பினை சாரல் வேங்கைப் படுசினைப் புதுப்பூ முருகுமுரண் கொள்ளும் உருவக் கண்ணியை 5. எரிதின் கொல்லை யிறைஞ்சிய ஏனல் எவ்வங் கூறிய வைகலும் வருவோய் கனிமுதிர் அடுக்கத்தெம் தனிமை காண்டலின் எண்மை செய்தனை யாகுவை நண்ணிக் கொடியோர் குறுகும் நெடியிருங் குன்றத்து 10. இட்டாறு இரங்கும் விட்டொளிர் அருவி அருவரை யிழிதரும் வெருவரு படாஅர்க் கயந்தலை மந்தி உயங்குபசி களைஇயர் பார்ப்பின் தந்தை பழச்சுளை தொடினும் நனிநோய் ஏய்க்கும் பனிகூர் அடுக்கத்து 15. மகளிர் மாங்காட்டு அற்றே துகளறக் 5கொந்தோ டுதிர்த்த கதுப்பின் அந்தீங் கிளவி தந்தை காப்பே. -6விற்றூற்று மூதெயினனார். (சொ-ள்) 1-6. (தலைவ!) நின் மலை ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை - நினது மலையின் சந்தனம் பூசப்பெற்ற அழகிய விளக்கம் பொருந்திய மார்பினையுடையையாய், சாரல் வேங்கை படுசினை புது பூ - பக்கமலையிலுள்ள வேங்கைமரத்தின் மிக்க கிளைகளிலுள்ள புதிய பூக்களாலாய, முருகு முரண்கொள்ளும் உருவக் கண்ணியை - பிறவற்றின் மணத்துடன் மாறுபடும் அழகிய கண்ணியையுடையையாய், எரிதின் கொல்லை இறைஞ்சிய ஏனல் - தீயானது எரித்த கொல்லையின்கண் விளைந்து கதிர் வளைந்த தினைப்புனத்தே, எவ்வம் கூறிய வைகலும் வருவோய் - நினது துன்பத்தைக் கூறுதற்கு நாடோறும் வருவோய்! 8-15. கொடியோர் நண்ணி குறுகும் நெடி இரு குன்றத்து - ஆறலைப்போர் பொருந்தி நெருங்கியிருக்கும் நீண்ட பெரிய குன்றின், இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி - குறுகிய நெறியில் ஒலிக்கும் இடையிட்டு விளங்கும் அருவியானது, அருவரை இழிதரும் வெருவருபடாஅர் - அரிய மலையினின்று வந்து விழும் இடமாகிய அச்சந்தோன்றும் சிறு தூறுகளிலிருக்கும், கயந்தலை மந்தி உயங்கு பசி களைஇயர் - மெல்லிய தலையினையுடைய மந்தியின் வருத்தும் பசியினை நீக்குமாறு, பார்ப்பின் தந்தை - அதன் குட்டியினது தந்தையாய கடுவன், பழச்சுளை தொடினும் - பலாப் பழத்தின் சுளையினைத் தோண்டினும், நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து - மிக்க துன்பம் வந்து பொருந்தும் நடுக்கம் மிக்க (தெய்வமுடைய) பக்கமலையில் உள்ள, மகளிர் மாங்காட்டு அற்றே- கன்னியர் உறையும் மாங்காடு என்னும் ஊரின் காவலை ஒத்தது; 15-17. துகள் அற - குற்றமற, கொந்தோடு உதிர்த்த - பூங்கொத்துக் களை உதிர்த்து அணிந்த, கதுப்பின் கூந்தலையும், அம் தீம் கிளவி தந்தை காப்பு - அழகிய இனிய சொற்களையுமுடைய இவள் தந்தையின் காவலிடம்; 7-8. (அங்ஙனமாகவும்), கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின் - கனிகள் முதிர்ந்துள இந்தப் பக்கமலையில் நாங்கள் தனிமையுற்றிருத்தலைக் காணுதலின், எண்மை செய்தனை ஆகுவை -நீ எங்கள் அருமையுணராது எளிமை செய்தனை ஆகின்றாய்; 1. நின் உள்ளம் சிறக்க - நின் எண்ணம் சிறப்புறுவதாக; சென்மதி - சென்று வருவாயாக. (முடிபு) தலைவ! மார்பினை, கண்ணியை, ஏனல் எவ்வங்கூறிய வைகலும் வருவோய்! அந்தீங் கிளவி தந்தை காப்பு, பனிகூர் அடுக்கத்து மகளிர் மாங்காட்டு அற்று; (அங்ஙனமாகவும்) எம் தனிமை காண்டலின் எண்மை செய்தனை ஆகுவை; சென்மதி; சிறக்க நின் உள்ளம். (வி-ரை) தோழி, செறிப்பறிவுறுத்தி, தலைவனைப் பகற்குறி விலக்குகின்றாளாகலின், சென்மதி என்றும், தலைவி இற்செறிப்பு உற்றமையால், இனி எய்துதற்கு அரியள் என மனம் மாழ்கியிராது முயன்று வரைந்து கொள்ளுதி என்பாள், சிறக்க நின் உள்ளம் என்றும் கூறினாள். நின் மலை ஆரம் நீவிய என்றதனால், தலைமகன் அம்மலை நாட்டிற்குத் தலைவன் ஆதல் பெற்றாம். புதுப் பூவாலாகிய கண்ணியையுடையை என்று இயையும். முருகு முரண் கொள்ளல், பிற பூக்களின் மணத்துடன் மாறுபடுதல்; முருகனுடன் மாறுபடத் தக்க கண்ணியை யுடையையாய் என்றலுமாம். தீயினால் காட்டினை யெரித்துத் திருத்திய கொல்லையாகலின், எரிதின் கொல்லை எனப்பட்டது. எவ்வங் கூறுதல் - கெடுதி வினாதல் முதலியனவும் ஆம். அடுக்கத்து எம் தனிமை காண்டலின் என்றமையால் பிறவழித் தனித்துக் காண்டல் அரிது என்பதாயிற்று. நெடிய என்பது நெடி என விகாரமாயிற்று. குன்றத்து இரங்கும் அருவி இழிதரும் படாஅர் என்க. இழிதரும் என்னும் பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது. படாஅர் - சிறுதூறு; குறுங்காடு எனலுமாம். குட்டியை ஈன்ற மந்தி என்பது தோன்ற ஆண் குரங்கு பார்ப்பின் தந்தை எனப்பட்டது. ஈன்ற மந்தியின் அழி பசியைப் போக்குதற்கு அதன் கணவனாகிய கடுவன், தமக்கு இயல்பில் உணவாயுள்ள பழச்சுளையைத் தோண்டி எடுத்தல் குற்றமாகா தென்பது தோன்ற, `மந்தி உயங்கு பசி களைஇயர்....... தந்தை பழச்சுளை தொடினும்' எனப்பட்டது. தக்கன தகாதன அறிந்து ஒழுகற்பாலாராய மக்களுட் படாது விலங்கினத்திற்பட்ட குரங்கு, இன்றியமையாக் கடப்பாடுபற்றிப் பழச்சுளை தொட்ட தாயின், ஆண்டுறையும் தெய்வத்தால் அதற்கும் துன்பம் உண்டாகும் என அவ்விடத்தின் இயல்பு கூறியவாறாயிற்று. ஏய்க்கும் - ஏயும் என்றபடி. எனவே, மகளிரே யுறையும் மாங்காடு எனும் பதி, தெய்வத்தின் காப்பு மிக்குடையதென்பது போதரும். கொந்தோடு கொந்துகளை; வேற்றுமை மயக்கம். 289. பாலை (பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) சிலையே றட்ட கணைவீழ் வம்பலர் உயர்பதுக் கிவர்ந்த ததர்கொடி அதிரல் 1நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டுஞ் சுரனிடை விலங்கிய மரனோங் கியவின் 5. வந்துவினை வலித்த நம்வயின் என்றும் தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது நெகிழா மென்பிணி வீங்கிய கைசிறிது அவிழினும் உயவும் ஆய்மடத் தகுவி சேணுறை புலம்பின் நாண்முறை யிழைத்த 10. திண்சுவர் நோக்கி நினைந்து கண்பனி நெகிழ்நூல் முத்தின் முகிழ்முலைத் தெறிப்ப மையற விரிந்த படையமை சேக்கை ஐமென் தூவி அணைசேர் பசைஇ மையல் கொண்ட மதனழி யிருக்கையள் 15. பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி நல்ல கூறென நடுங்கிப் புல்லென் மாலையொடு பொருங்கொல் தானே. - எயினந்தை மகன் இளங்கீரனார். (சொ-ள்) 1-6. சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர் உயர் பதுக்கு - வில்லிற் கோத்த கணையால் வீழ்ந்திறந்த புதியர்களின் உடலை மூடிய உயர்ந்த கற்குவியல்களில், இவர்ந்த - ஏறிப்படர்ந்த, ததர்கொடி அதிரல் - நெருங்கிய கொடியாகிய காட்டு மல்லிகையின் பூக்கள், நெடு நிலை நடுகல் நாள் பலி கூட்டும் - உயர்ந்த நிலையினையுடைய நடுகல்லின் காலைப்பலிக்குக் கூட்டப்பெறும், சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின் - பாலைநிலத்தே குறுக்கே செல்லும் மரங்கள் உயர்ந்துள நெறியில், வந்து வினைவலித்த நம்வயின் - வந்து பொருளீட்டும் தொழிலில் உறுதிகொண்டுள நம்மிடத்தே, என்றும் தெருமரல் உள்ள மொடு வருந்தல் ஆனாது - எப்பொழுதும் நினைந்து சுழலும் உள்ளத்தால் வருந்துதல் அமையாது; 7-8. மென்பிணி வீங்கிய கை நெகிழா சிறிது அவிழினும் - மெத் தென்ற பிணிப்பு மிக்க கை நெகிழ்ந்து சிறிது விலகினும், உயவும் ஆய் மட தகுவி - வருந்தும் அழகிய மடப்பமுடைய நம் தலைவி; 9-14. சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த - நாம் சேய்மைக் கண் உறையும் தனிமையால் நாடோறும் முறை முறையாகக் கோடிட்டு வந்த, திண் சுவர் நோக்கி நினைந்து - திண்ணிய சுவரினைப் பார்த்து உடனுறையப் பெறாமையை நினைந்து, கண்பனி நெகிழ் நூல் முத்தின் முகிழ்முலை தெறிப்ப - கண்ணீர் நூலற்று உதிரும் முத்துக்களைப் போல முகிழ்த்த முலைமீது தெறித்து விழ, மை அற விரிந்த படை அமை சேக்கை - குற்றமற அகன்ற படுத்தல் அமைந்த படுக்கையில், ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ - அழகிய மெல்லிய அன்னத்தின் சிறகாலாய அணையினைச் சேர்ந்து தங்கி, மையல் கொண்ட மதன் அழி இருக்கையள் - மயக்கம் கொண்டமையின் வலியற்ற இருக்கை யளாகி; 15-17. பகு வாய்ப் பல்லி படுதொறும் பரவி - பிளந்த வாயினையுடைய பல்லி ஒலிக்குந்தொறும் தெய்வத்தைத் தொழுது, நல்ல கூறு என - நல்ல மொழியினைக் கூறுவாயாக என அதனை வேண்டி, நடுங்கி - மனம் நடுங்கி, புல் என் மாலையொடு பொரும் கொல் - பொலிவற்ற மாலைக்காலத்தொடு மாறுபடுவளோ? (முடிபு) நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது அவிழினும் உயவும் ஆய் மடத் தகுவி, மரன்ஓங்கு இயவின் வந்து வினை வலித்த நம் வயின் என்றும் வருந்தல் ஆனாது, சேண் உறை புலம்பின், நாண் முறை இழைத்த சுவர் நோக்கி நினைந்து, கண்பனி தெறிப்ப, சேக்கை அணை சேர்பு அசைஇ, மதன் அழி இருக்கையள், பல்லி படுதொறும் பரவி, நடுங்கி, மாலையொடு பொருங்கொல்? (வி-ரை) பதுக்கு - பதுக்கை, வழிச் செல்வார் அதிரலைப் பலிக்குக் கூட்டும் என்க; பலியாகக் கூட்டும் என்றலுமாம். ஆய்மடத் தகுவி வருந்தல் ஆனாது இழைத்த சுவர் நோக்கி நினைந்து என்று இயையும். கை சிறிது அவிழினும் உயவும் ஆய் மடத் தகுவி என்றது அவளது இளமை கூறியபடி. இழைத்த - கோடிட்ட, நோக்கி என்றது, சென்ற நாட்களையும் செல்லக்கடவ நாட்களையும் எண்ணி யறிந்து என்னும் காரியம் தோன்ற நின்றது. சேக்கை அணைசேர்பு அசைஇ மதன் அழி இருக்கையள் என்றது, தலைவி துயிலின்றி வருந்துதலை உணர்த்திய படி. படுதல் - ஒலித்தல். நல்ல என்றது, தலைவன் வரவு என்றபடி. கூறு என - கூறு என்று கூறி, தணந்தார்க்கு மாலைப் பொழுது பல்லாற்றானும் துன்பம் விளைப்பதாகலான், அதனொடு நடுங்கிப் பொருங்கொல் என்றான். மாலையொடு மாறுபடுதலை மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் - வேலைநீ வாழி பொழுது'1` என்பதனால் அறிக. 290. நெய்தல் (இரவுக் குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.) குடுமிக் கொக்கின் பைங்கால் பேடை இருஞ்சேற்று அள்ளல் நாட்புலம் போகிய கொழுமீன் வல்சிப் புன்தலைச் சிறாஅர் நுண்ஞாண் அவ்வலைச் சேவல் பட்டென 5. அல்குறு பொழுதின் மெல்கிரை மிசையாது பைதற் பிள்ளை தழீஇ ஒய்யென அங்கட் பெண்ணை யன்புற நரலுஞ் சிறுபஃ றொல்குடிப் பெருநீர்ச் சேர்ப்பன் கழிசேர் புன்னை யழிபூங் கானல் 10. தணவா நெஞ்சமொடு தமியன் வந்துநம் மணவா முன்னும் எவனோ தோழி வெண்கோட் டியானை விறற்போர்க் குட்டுவன் தெண்டிரைப் பரப்பிற் றொண்டி முன்றுறைச் சுரும்புண மலர்ந்த பெருந்தண் நெய்தல் 15. 1மணியேர் மாணலம் ஒரீஇப் பொன்னேர் வண்ணங் கொண்டவென் கண்ணே. - நக்கீரர். (சொ-ள்) 11. தோழி-, 1-8. இரு சேற்று அள்ளல் - கரிய குழம்பாகிய சேற்றினை யுடைய, புலம் - செய்யின்கண், நாள்போகிய - காலைவேட்டத்திற்குச் சென்ற, கொழுமீன் வல்சிப் புல்தலை சிறாஅர் - கொழுமீனாகிய உணவினையுடைய புற்கென்ற தலையினையுடைய சிறுவர் (இட்ட), நுண் ஞாண் அ வலை சேவல் பட்டென - நுண்ணிய கயிற்றாலாய அழகிய வலையில் சேவல் அகப்பட்டதாக, குடுமிக் கொக்கின் பைங்கால் பேடை - சூட்டினையுடைய அக் கொக்கின் பசிய காலினையுடைய பேடை, அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது - தனித்துத் தங்கியிருக்கும் காலத்தே மெல்லும் இரையினைத் தின்னாது, பைதல் பிள்ளை தழீஇ - துன்புறும் தன் குஞ்சினைத் தழுவி, ஒய் என அம் கண் பெண்ணை அன்பு உற நரலும் - அழகிய இடத்தையுடைய பனைமரத்தின்கண் விரைவாக அன்பு தோன்ற ஒலித்திருக்கும், சிறு பல் தொல்குடி பெருநீர்ச் சேர்ப்பன் - சிறிய பலவாய பழைய குடிகளைக் கொண்ட கடற்கரையையுடைய நம் தலைவன்; 9-11. கழி சேர் புன்னை அழி பூ கானல் - கழியைச் சார்ந்த புன்னையின் மிக்க பூக்களையுடைய சோலையில், தணவா நெஞ்ச மொடு தமியன் வந்து - அன்பு நீங்காத நெஞ்சமுடன் தனியனாகி வந்து, நம் மணவா முன்னும் - நம்மைக் கலத்தற்கு முன்னும்; 11-16. என்கண் - என் கண்கள், வெண்கோட்டு யானை விறல் போர்க் குட்டுவன் - வெள்ளிய தந்தத்தினையுடைய யானையையும் போர் வெற்றியினையுமுடைய குட்டுவனது, தெண்திரைப் பரப்பின் தொண்டி முன்துறை - தெளிந்த அலைகள் பொருந்திய பரப் பினையுடைய தொண்டியின் துறைமுற்றத்தே, சுரும்புண மலர்ந்த பெரு தண் நெய்தல் - வண்டு தேனையுண்ண மலர்ந்த பெரிய தண்ணிய நெய் தற்பூவின், மணி ஏர் மாண்நலம் ஒரீஇ - நீலமணியை நிகர்த்த மாண்புற்ற அழகிய நிறத்தினை நீங்கி, பொன் நேர் வண்ணம் கொண்ட - பொன், போலும் நிறத்தைக் கொண்டன, எவனோ - இஃதென்னையோ? (முடிபு) தோழி! சேர்ப்பன், கானல் தமியன் வந்து நம் மணவா முன்னும் என்கண் குட்டுவன் தொண்டி முன்றுறை நெய்தல் மாண்நலம் ஒரீஇ, பொன் நேர் வண்ணம் கொண்ட; எவன்? (வி-ரை) குடுமி - சூடு; உச்சியின் கண்ணதோர் உறுப்பு. அள்ளற் புலம் நாட்போகிய என மாறுக. போகிய சிறாஅர் அவ்வலைச்சேவல் பட்டென என்று இயையும். அல்குறு பொழுது - தனித்துத் தங்கியிருக்கும் பொழுது. மெல்கு இரை-மென்று தின்னும் இரை; `மெல்குபு பெயரா'1 என்புழி மெல்குதல் இப்பொருட்டாதல் காண்க. பைதற் பிள்ளை - பறக்கலாற்றா வருத்தத்தையுடைய பிள்ளை; பிறவற்றைக் கண்டு அஞ்சும் வருத்தத்தையுடைய பிள்ளை என்றுமாம். அன்பு - சேவலிடத்துள்ள அன்பு. கண்டார்க்கு இரக்கம் தோன்ற ஒலிக்கும் என்றலுமாம். தணவா நெஞ்சம் - காதல் நீங்காத நெஞ்சம். தலைவன் கானலிடத்துத் தனியன் வந்து இரவுக் குறிக்கண் நம்மை மணத்தல் ஒரு தலை என்பாள், `மணவா முன்னும்' என்றாள். இரவுக் குறிக்கண் என்ன இடையீடு நேருங்கொல் என்னும் அச்சத்தால் கண்கள் பசலையுற்றன என்பாள், `மணவா முன்னும் என்கண் பொன் நேர்வண்ணம் கொண்ட' என்றாள். இது பசப்புறு பருவரல். மணவா முன்னும் கண்கள் பசலையுற்றன எவனோ என்றதன் பயன், தலைவி நம்மைப் பிரிந்து சிறிதும் ஆற்றகிலாள் ஆகலின், நாம் விரைந்து வரைதல் வேண்டுமெனத் தலைவன் உணர்தலாம் என்க. 291. பாலை (பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.) வானம் பெயல்வளங் கரப்பக் கானம் உலறி இலையில வாகப் பலவுடன் ஏறுடை ஆயத்து இனம்பசி தெறுப்பக் கயனற வறந்த கோடையொடு நயனறப் 5. பெருவரை நிவந்த மருங்கில் கொடுவரிப் புலியொடு பொருது சினஞ்சிறந்து வலியோடு உரவுக்களிறு ஒதுங்கிய மருங்கிற் பரூஉப்பரல் சிறுபன் மின்மினி கடுப்ப எவ்வாயும் நிறைவன இமைக்கும் நிரம்பா நீளிடை 10. எருவை யிருஞ்சிறை யிரீஇய விரியிணர்த் தாதுண் தும்பி முரலிசை கடுப்பப் பரியின துயிர்க்கும் அம்பினர் வெருவர உவலை சூடிய தலையர் கவலை ஆர்த்துட னரும்பொருள் வவ்வலின் யாவதும் 15. சாத்திடை வழங்காச் சேட்சிமை யதர சிறியிலை நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய் உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வின்று புள்ளி அம்பிணை உணீஇய உள்ளி அறு 1மருப்பு ஒழித்த தலைய தோல்பொதி 20. மறுமருப் பிளங்கோ டதிரக் கூஉஞ் சுடர்தெற வருந்திய அருஞ்சுரம் இறந்தாங்கு உள்ளினை வாழிய நெஞ்சே போதெனப் புலங்கமழ் நாற்றத் திரும்பல் கூந்தல் நல்லெழின் மழைக்கணங் காதலி 25. மெல்லிறைப் பணைத்தோள் விளங்குமாண் கவினே. - பாலைபாடிய பெருங்கடுங்கோ. (சொ-ள்) 22-25. நெஞ்சே-, வாழிய-, போது என புலம் கமழ் நாற்றத்து - மலர் எனப் புலமெலாம் கமழும் நாற்றத்தினையுடைய, இரும்பல் கூந்தல் - கரிய பலவாய கூந்தலையும், நல் எழில் மழைக்கண் - நல்ல அழகிய குளிர்ந்த கண்ணினையும் உடைய, நம் காதலி - நம் காதலியின், மெல் இறைப் பணைத்தோள் - மெல்லிய இறையினை யுடைய பருத்த தோளின், விளங்கும் மாண்கவின் - விளங்கும் மாண்புற்ற அழகினை; 1-9. வானம் பெயல் வளம் கரப்ப - மேகம் பெயலாய வளத்தினைத் தராதொழிய, கானம் உலறி இலையிலவாக - காடுகள் காய்ந்து இலைகளில்லாதனவாக, ஏறு உடை ஆயத்து இனம் பல உடன்பசி தெறுப்ப - ஏறுகளையுடைய ஆயமாகிய ஆனிரைகள் பலவற்றை யும் ஒருங்கே பசி வருத்த, கயன் அற விறந்த கோடையொடு - குளங்கள் நீரறவற்றிய கோடையால், நயன் அற பெருவரை நிவந்த மருங்கில் - வளம் ஒழியப் பெரிய மலை உயர்ந்த பக்கத்தில், கொடு வரிப்புலியொடு சினம் சிறந்து பொருது - வளைந்த வரிகளையுடைய புலியுடன் சினம் மிக்குப் போர் செய்து, வலியோடு உரவுக்களிறு ஒதுங்கிய மருங்கில் - செருக்குடன் வலிய யானை நடந்த இடங்களில், பரூஉப்பரல் - பெரிய பரற்கற்கள், சிறு பல் மின் மினி கடுப்ப - சிறிய பலவாய மின்மினிப் பூச்சிகளைப்போல, எவ்வாயும் நிறைவன இமைக்கும் நிரம்பா நீளிடை - எவ்விடத்தும் நிறைந்து ஒளிவிடும் செல்லத் தொலையாத நீண்ட இடத்தே; 10-15. இரும் சிறை எருவை இரீஇய - பெரிய சிறகினையுடைய பருந்து அஞ்சியோட, விரி இணர் தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப - விரிந்த பூங்கொத்துக்களில் பூந்துகளை உண்ணும் வண்டுகள் ஒலிக்கும் இசையைப்போல, பரியினது உயிர்க்கும் அம்பினர் - விரைந்து செல்வதாய் ஒலிக்கும் அம்பினையுடையவரும், வெருவர உவலை சூடிய தலையர் - கண்டார்க்கு அச்சம் தோன்றத் தழைக் கண்ணி சூடிய தலையினையுடையரும் ஆகிய ஆறலைப் போர், கவலை ஆர்த்து உடன் அரும் பொருள் வவ்வலின் - கவர்த்த நெறிகளில் ஆரவாரித்து ஒருங்கு அரிய பொருள்களைப் பறித்துக் கோடலின், யாவதும் சாத்து இடை வழங்கா - வாணிகச் சாத்தர் சிறிதும் நெறியிடையே இயங்குதல் அற்றதும்; 15-22. சேண் சிமை அதர - உயர்ந்த மலையுச்சிகளை யடுத்த நெறிகளிடத்தவாய, சிறி யிலை நெல்லித் தீம்சுவைத் திரள்காய் - சிறிய இலையினையுடைய நெல்லியின் இனிய சுவை பொருந்திய திரண்ட காய்கள், உதிர்வன தாஅம் அத்தம் - உதிர்ந்து பரந்து கிடக்கும் காட்டில், தவிர்வு இன்று புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி - தவிர்தல் இன்றிப் புள்ளிகளையுடைய அழகிய பிணைமான் உண்ண நினைந்து, அறு மருப்பு ஒழித்த தலைய - அற்று விழும் கொம்பினை ஒழித்த தலையிற் றோன்றுவனவும், தோல் பொதி மறு மருப்பு - தோலாற் பொதியப் பெறுவனவும் ஆகிய பின்னர்த் தோன்றும் கொம்புகளாகிய, இளங்கோடு அதிர - இளைய கொம்புகள் அதிர்ந்திட, கூஉம் - ஆண்மான்கள் கூவி அழைக்கும் இடமாய, சுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து - ஞாயிறு தெறுதலால் வருத்த முற்ற அரிய சுர நெறியைக் கடந்து வந்து, உள்ளினை - நினைத்தனை. (முடிபு) பெருவரை நிவந்த மருங்கில், களிறு ஒதுங்கிய மருங்கில், பரல் இமைக்கும் நீளிடையில், அம்பினர், தலையர் அரும் பொருள் வவ்வலின், சாத்திடை வழங்காத அருஞ்சுரம் இறந்து, நம் காதலியின் மாண்கவினை உள்ளினை. (வி-ரை) பொருது சினஞ் சிறந்து எனக் கிடந்தவாறே உரைத்தலுமாம். வலி - ஈண்டுத் தருக்கு; பெருமிதமுமாம். `பரல் மின்மினி கடுப்ப இமைக்கும்' என்றது, வெயிலின் விளக்க மிகுதி கூறியபடி. இருஞ்சிறை எருவை இரீஇய என மாறுக. பரியினது- விரைந்து செல்வதாய். உயிர்த்தல் - ஒலித்தல். கலைமான் கூஉம் என எழுவாய் வருவித்துரைக்க. முன் முளைத்த கொம்பு கழன்று வேறு கொம்பு தோன்றிய பொழுது, அதனைத் தோல் மூடியிருக்குமாத லானும், அப்பொழுது உரக்க ஒலிப்பின் அவ்விளங் கொம்பு நடுங்கும் ஆதலானும், `அறுமருப் பொழிந்த தலைய தோல் பொதி, மறுமருப் பிளங்கோடு அதிரக் கூஉம்' எனப்பட்டது. வருந்திய சுரம்- ஆண்டுள்ள மாவும் புள்ளும் மரனும் முதலாயினவெல்லாம் வருந்திய சுரம் என்க. கொடிய காட்டினை இத்துணையும் கடந்து வந்து காதலியின் கவினை உள்ளுதலாற் பயன் என்னை என்பான், `நெஞ்சே! அருஞ்சுரம் இறந்து காதலி கவின் உள்ளினை' என்றான். ஆங்கு அசை. 292. குறிஞ்சி (வெளி யச்சுறீஇத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) கூறாய் செய்வது தோழி வேறுணர்ந்து அன்னையும் பொருளுகுத்து அலமரும் மென்முறிச் சிறுகுளகு அருந்து தாய்முலை பெறாஅ மறிகொலைப் படுத்தல் வேண்டி வெறிபுரி 5. ஏதில் வேலன் கோதை துயல்வரத் தூங்கும் ஆயின் அதூஉம் நாணுவல் இலங்குவளை நெகிழ்ந்த செல்லல் புலம்படர்ந்து இரவின் மேயல் மரூஉம் யானைக் கால்வல் இயக்கம் ஒற்றி நடுநாள் 10. வரையிடைக் கழுதின் 1வன்கைக் கானவன் கடுவிசைக் கவணின் எறிந்த சிறுகல் உடுவுறு கணையிற் போகிச் சாரல் வேங்கை விரியினர் சிதறித்தேன் சிதையூஉப் பலவின் பழத்துள் தங்கும் 15. மலைகெழு நாடன் மணவாக் காலே. -கபிலர். (சொ-ள்) 1. தோழி-, 7. இலங்குவளை நெகிழ்ந்த செல்லல் - விளங்கும் வளை நெகிழற்கு ஏதுவாய துன்பத்தினைக் கண்டு; 1-2. அன்னையும் - நம் அன்னையும், வேறு உணர்ந்து - அது பிறி தொன்றானாயதென உணர்ந்து, பொருள் உகுத்து - பொருளைச் சொரிந்து, அலமரும் - மனம் சுழலாநிற்கும்; 2-6. மெல் முறி சிறு குளகு அருந்து - மெல்லிய தளிராய சிறிய தழையுணவைத் தின்னும், தாய் முலை பெறாஅ - தாய் முலையினைப் பெறா தொழியும், மறி கொலைப் படுத்தல் வேண்டி - யாட்டுக் குட்டியினைப் பலிக்காகக் கொல்லுதலை விரும்பி, வெறிபுரி - வெறியாடலைச் செய்யும், ஏதில் வேலன் - யாதும் இயைபில்லாத வேலன், கோதை துயல்வர - மாலை தன் மார்பில் அசைந்திட, தூங்கும் ஆயின் - வெறி ஆடுவானாயின், அதூஉம் நாணுவல் - அதனையும் நாணா நிற்பேன்; 7-15. புலம் படர்ந்து இரவில் மேயல் மரூஉம் யானை - வேற்றுப்புலம் சென்று இரவில் மேய்தலைப் பொருந்தி வரும் யானையின், கால்வல் இயக்கம் ஒற்றி - கால் ஊன்றி நடக்கும் வலிய நடையைக் கூர்த்து அறிந்து, நடு நாள் - நள்ளிரவில், வரையிடைக் கழுதின் வன்கைக் கானவன் - மலையிடத்தே பரண்மீதுள்ள வலிய கையையுடைய வேட்டுவன், கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல் - மிக்க விசையினையுடைய கவணால் எறிந்த சிறுகல், உடு உறு கணையில் போகி - இறகினைப் பொருந்திய அம்பென விரைந்து சென்று, சாரல் வேங்கை விரி இணர் சிதறி - பக்கமலையிலுள்ள வேங்கைமரத்தின் விரிந்த பூங்கொத்துக்களைச் சிதறி, தேன் சிதையூஉ- தேனை அழித்து, பலவின் பழத்துள் தங்கும் - பலாப் பழத்தினுள் தங்கிவிடும், மலைகெழு நாடன் மணவாக்கால் - மலை நாட்டையுடைய நம் தலைவன் நம்மை மணந்து கொள்ளாத வழி; 1. செய்வது கூறாய் - நாம் செய்வதனைக் கூறுவாயாக. (முடிபு) தோழி, வளை நெகிழ்ந்த செல்லல் வேறு உணர்ந்து அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; வெறிபுரி ஏதில் வேலன் தூங்குமாயின் அதூஉம் நாணுவல்; மலைகெழு நாடன் மணவாக்கால், செய்வது கூறாய். (வி-ரை) வேறு உணரல் - தலைவனால் உண்டாகிய செல்லலைப் பிறி தொன்றால் ஆயதென உணர்தல். பொருள் உகுத்து அலமரும் என்றது, கட்டினும் கழங்கினும் குறிகூறுவாரிடத்தும் வேலனி டத்தும் வறிதே பொருளைச் சொரிந்தும் அதனானும் தீராமையால் மனங் கலங்கும் என்றபடி. குளகருந்து மறி, தாய்முலை பெறாஅ மறியெனத் தனித்தனி கூட்டுக; என்றது மிக்க இளமையுடையதோர் மறியென இரங்கிக் கூறியபடியாம். வேலன் வெறியாடலின்பயன் மறியைக் கோறலன்றிப் பிறிதின்றென்பாள், `மறிகொலைப் படுத்தல் வேண்டித் தூங்கும் ஆயின்' என்றாள். அதூஉம் நாணுவல் என்ற உம்மையால், அன்னை அலமரும் அதனையும் நாணுவல் என்றா ளாகும். `பிறர்பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக் - குறைபதி யென்னும் உலகு'1 என்பதனால், அன்னையின் பயனில் செயலும் வேலனது தீச்செயலும் ஆகிய பழிகட்குத் தலைவி நாணுவாள் ஆயினள் என்க. செல்லல் வேறு உணர்ந்து எனக் கூட்டுக. ஒற்றி - மறைய நின்றுணர்ந்து என்றலுமாம். உடு - நாணிற் பொருந்தும் அம்பின் அடியுமாம். மலைகெழு நாடன் மணவாக்கால்யாது செய்வது என அஞ்சுகின்றேன் என்பாள், செய்வது கூறாயெனத் தோழிக்குக் கூறினாள் என்க. `நெடுவரை ஆசினிப் பணவை யேறிக், கடுவிசைக் கவணையிற் கல்கை விடுதலின், இறுவரை வேங்கையின் ஒள்வீ சிதறி, ஆசினி மென்பழம் அளிந்தவை உதிராத், தேன்செய் இறாஅல் துளைபடப் போகி, நறுவடி மாவின் பைந்துணர் உழக்கிக், குலையுடை வாழைக் கொழுமடல் கிழியாப், பலவின் பழத்துட் டங்கும், மலைகெழு வெற்பன்'2 என, இவ்வாசிரியர் பாடிய பிறிதொரு செய்யுளின் பகுதி, `வரையிடை..... மலைகெழு நாடன்' என்னும் இப்பகுதியொடு ஒத்திருத்தல் அறிந்து மகிழ்வதற்குரியது. (உ-றை) கானவன் எறிந்த கல் வேங்கை விரியிணர் சிதறித் தேன் சிதையூஉ பலவின் பழத்துள் தங்கும் என்றது, வெறியாடலால் எழும் அலர், தலைவன் குறியிடத்து வருதலைக் கெடுத்து, நமது இன்பத்தை அழித்து, நமது உள்ளத்திலே தங்குவதாகும் என்றபடி. 293. பாலை (பொருள்வயிற் பிரியக்கருதிய தலைமகன் குறிப்பறிந்து தலைமகள் தோழிக்குச் சொல்லியது. தலைமகனாற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம்.) இலையொழித் துலறிய புன்தலை யுலவை வலைவலந் தனைய வாகப் பலவுடன் சிலம்பி சூழ்ந்த புலங்கெடு வைப்பின் 1துகிலாய் செய்கைப் பாவிரிந் தன்ன 5. வெயிலவிர்பு நுடங்கும் 2வெவ்வெங் களரிக் குயிற்கண் ணன்ன குரூஉக்காய் முற்றி மணிக்கா சன்ன மானிற இருங்கனி உகாஅ மென்சினை உதிர்வன கழியும் வேனில் வெஞ்சுரம் தமியர் தாமே 10. 3செல்ப என்ப தோழி யாமே பண்பில் கோவலர் தாய்பிரித்து யாத்த நெஞ்சமர் குழவி போல நொந்துநொந்து இன்னா மொழிதும் என்ப 4என்மயங் கினர்கொல்நங் காத லோரே. காவன்முல்லைப் பூதனார். (சொ-ள்) 10 தோழி-, 14. நம் காதலோர் - நம் காதலர், 1-3. இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை - இலைகளை உதிர்த்து வற்றிய பொலிவற்ற உச்சியினையுடைய வேல மரத்தில், வலை வலந்தனைய ஆக - வலை கட்டியன போல, சிலம்பி பல உடன் சூழ்ந்த - சிலம்பி நூல் பலவும் ஒருங்கே சூழ்ந்த, புலம் கெடு வைப்பின் - நிலம் பாழ்பட்ட இடங்களையுடைய; 4-5. துகில் ஆய் செய்கை பா விரிந் தன்ன - ஆடை ஆய்ந்து நெய்யுங்கால் பாவானது விரிந்தது போல, வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெங் களரி - வெய்யில் விளங்கி அசையும் மிக்க வெப்பத் தையுடைய காட்டிடத்தே; 6-10. குயில் கண் அன்ன குரூஉக் காய்முற்றி - குயிலின் கண்ணைப் போன்று விளங்கும் காய் முற்றி, மணிக்காசு அன்ன மால் நிற இரு கனி - அழகிய பொற்காசு போன்ற பெருமை பொருந்திய நிறத்தினையுடைய பெரிய கனி, உகாஅ மென்சினை உதிர்வன கழியும் - உகாவின் மெல்லிய கிளைகளினின்றும் உதிர்ந்து ஒழியும், வேனில் வெம் சுரம் தமியர்தாம் செல்ப என்ப - வேனிலால் வெப்பமிக்க சுரத்தில் தனித்து நம் காதலர் செல்லுவார் என்று ஊரார் கூறுகின்றனர்; மற்றும் அவரே; 10-13. பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த - இரக்கம் இல்லாத கோவலர் தாயைப் பிரித்துக் கட்டிய, நெஞ்சு அமர் குழவி போல - நெஞ்சத்து அதனை விரும்பிய கன்றுபோல, நொந்து நொந்து இன்னா மொழிதும் என்ப - யாம் மிக நொந்து இன்னாதவற்றை மொழிந்திருக்கின்றோம் என்று நம்மைப் புறங் கூறுகின்றனர்; 14. என் மயங்கினர் கொல் - அவர் இங்ஙனம் மயங்கியது என்னையோ? (முடிபு) தோழி! (இவ்வூரார்), நம் காதலோர் வேனில் வெஞ்சுரம் தமியர் செல்ப என்ப; மற்றும் அவர், யாம் நொந்து நொந்து இன்னா மொழிதும் என்ப; என் மயங்கினர்கொல்? (வி-ரை) சிலம்பி சூழ்ந்த வைப்பு என்றதனால் மழையின் மையும், பா விரிந்தன்ன வெயில் அவிர்பு நுடங்கும் என்றதனால், வெம்மை மிகுதியும் கூறியபடியாம். விரிந்தன்ன - விரிந்தன்னவாக என வினையெச்சப்படுத்துக. காசு ஈண்டுப் பொற்காசு. உகா - பாலைக் கண்ணுள்ளதோர் மரம்; இது உகாய் எனவும் வழங்கும். குழவி போல - குழவி பலகாலும் வருந்திக் கதறுவதுபோல என விரித்துரைத்துக் கொள்க. தலைவர் கொடிய காட்டிலே தனித்துச் செல்ல, அவரைப் பிரிந்து நாம் வருந்துதல் இயல்பாகவும் அதனை அறிந்து வைத்தும் ஊரார் நம்மைப் புறன் உரைத்தல் என்னென்பாள், `என் மயங்கினர்' என்றாள். 294. முல்லை (பருவ வரவின்கண் வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) மங்குல் மாமழை விண்ணதிர்பு முழங்கித் துள்ளுப்பெயல் 1கழிந்த பின்றைப் புகையுறப் புள்ளிநுண் துவலை பூவகம் நிறையக் காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் 5. நீர்வார் கண்ணிற் கருவிளை மலரத் துய்த்தலைப் பூவின் புதலிவர் ஈங்கை நெய்த்தோய்த் தன்ன நீர்நனை யந்தளிர் 1இருவகிர் ஈருளின் ஈரிய துயல்வர அவரைப் பைம்பூப் பயில அகல்வயற் 10. கதிர்வார் காய்நெல் கட்கினிது இறைஞ்சச் சிதர்சினை தூங்கும் அற்சிர அரைநாள் காய்சின வேந்தன் பாசறை நீடி நந்நோய் அறியா அறனி லாளர் இந்நிலை களைய வருகுவர் கொல்லென 15. ஆனா தெறிதரும் வாடையொடு நோனேன் தோழியென் 2தனிமை யானே. - கழார்க்கீர னெயிற்றியார். (சொ-ள்) தோழி-, 1-3. மங்குல் மா மழை - மிகவும் இருண்ட மேகமானது, விண் அதிர்பு முழங்கி - வானில் அதிர்ந்து முழங்கி, துள்ளு பெயல் கழிந்த பின்றை - குதித்தலாகிய பெய்தலைச் செய்து கழிந்த பின்பு, புகை உற புள்ளி நுண்துவலை - புகையைப் போலப் புள்ளியாய நுண்ணிய பனித் துளிகள், பூ அகம் நிறைய - பூக்களின் உள்ளே நிறையவும்; 4-5. காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் - தம் காதலரைப் பிரிந்துள்ள செயலற்ற மகளிரது; நீர்வார் கண்ணில் கருவிளை மலர- நீர் ஒழுகும் கண்களைப்போலக் காக்கணம் பூ மலரவும்; 6-8. துய் தலை பூவின் புதல் இவர் ஈங்கை - பஞ்சு போன்ற தலையினை யுடைய பூவினையுடையதும் புதர்களிற் படர்வதுமான ஈங்கையது, நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர் - நெய்யிற்றோய்த் தெடுத்தாற்போன்ற நீரால் நனைந்த அழகிய தளிர்கள், இருவகிர் ஈருளின் - இருபிளவாகிய ஈரல் போல, ஈரிய துயல்வர - ஈரமுடையன வாய் அசைந்திட; 9-10. அவரை பைம் பூ பயில - அவரையின் அழகிய பூக்கள் எங்கும் செறிய, அகல் வயல் கதிர்வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச - அகன்ற வயலிடத்தே கதிர்கள் நீண்ட காய்த்த நெல் கண்ணிற்கு இனிமையுறத் தலை வளைந்திட; 11. சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள் - வண்டுகள் கிளைகளில் அசையாநிற்கும் முன்பனிக்காலத்து நள்ளிரவில்; 12-14. காய் சின வேந்தன் பாசறை நீடி - சின மிக்க அரசனது பாசறைக்கண்ணே நெடிது மேவி, நம் நோய் அறியா அறன் இலாளர்- நமது துன்பினை அறியாத அறன் இல்லாத தலைவர், இந்நிலை களைய வருகுவர் கொல் என - நமது இத்துயர் நிலையினை நிக்க வருவரோ என்று எண்ணி; 15-16. ஆனாது எறிதரும் வாடையொடு - அமையாது வீசும் வாடைக்காற்றால், என் தனிமை - எனது தனிமையை, யான் நோனேன் - யாம் பொறேனாகின்றேன். (முடிபு) தோழி! மங்குல் மாமழை பெயல் கழிந்த பின்றை அற்சிர அரைநாள் வேந்தன் பாசறை நீடி, நந்நோய் அறியா; அறனிலாளர் இந்நிலை களைய வருகுவர் கொல் என, வாடையொடு என் தனிமை நோனேன். (வி-ரை) துள்ளுப் பெயல் என்றது, கார்காலத்து, மிக்க மழை என்றபடி. புகையுற என்றமையால், துவலை பனித்துவலையாயிற்று. தலைவி தலைவனைப் பிரிந்த வருத்தத்தால் நீர் ஒழுகும் கண்ணினளா யிருத்தலின், அவ்வாறே காதலரைப் பிரிந்த ஏனை மகளிரும் துன்புறுவர் எனக் கொண்டு; பனிநீர் வார மலர்ந்திருக்கும் கருவிளை மலருக்கு, மகளிர் நீர்வார் கண்ணினை உவமை கூறினாள் என்க. ஈங்கை - இண்டை. நெய்யிற் றோய்த்தெடுத்தா லொத்த நெய்ப்பும் பசுமையும் உடைய இண்டையின் தளிர் இருவகிராக ஈரல் போன்றிருக்கு மாகலின், அதனை இருவகிர் ஈருளின் ஈரிய துயல்வர என்றாள். ஈருள் - ஈரல்; `ஈருட்டடி மூடி'1 என்பதனால் ஈது அறியப்படும். வாடைக் காற்றினால் வண்டுகள் ஓரிடத்தில் நிலையுதலின்றிக் கிளைகளிலே திரிந்துகொண்டிருக்குமாகலின், சிதர்சினை தூங்கும் அற்சிர அரை நாள் என்றாள். தலைவர் வந்துவிடுவர் என வற்புறுக்கும் தோழிக்குத் தாம் குறித்த கார்ப்பருவமேயன்றிக் கூதிரும் முன்பனியும் வந்தும் நாம் எய்தலாகும் துன்பத்தினை அறிந்து, வருதலில்லாத அறனில் லாதவர் இனியும் வருவரோ என ஐயுற்று வாடையால் என் தனிமையைப் பொறுக்கலாற்றேன் ஆகின்றேன் எனத் தலைமகள் வன்புறை எதிரழிந்து கூறினாள் என்க. வருகுவர் கொல் என என்பது வாரார் எனக் கருதி என்றபடி. தான் நோனாமைக்குப் பிறிதும் ஏதுக் கூறுவாள், `வாடையொடு நோனேன்' என்றாள். (மே-ள்) `திணை மயக்குறுதலும்'2 என்னுஞ் சூத்திரத்து, இச்செய்யுளைக் காட்டி, இம் மணிமிடை பவளத்து, முல்லையுள் முன்பனி வந்தது; நிலமும் கருவும் மயங்கிற்று; என்றார், நச். 295. பாலை (பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) நிலநீ ரற்று நீள்சுனை வறப்பக் குன்றுகோ டகையக் கடுங்கதிர் தெறுதலின் என்றூழ் 1நீடிய வேய்படு நனந்தலை நிலவுநிற மருப்பிற் பெருங்கை சேர்த்தி 5. வேங்கை வென்ற வெருவரு பணைத்தோள் ஓங்கல் யானை யுயங்கிமதந் தேம்பிக் பன்மர ஒருசிறை பிடியோடு வதியும் கல்லுடை அதர கானம் நீந்தி கடனீர் உப்பின் கணஞ்சால் உமணர் 10. உயங்குபக டுயிர்ப்ப அசைஇ முரம்பிடித்து அகலிடங் குழித்த அகல்வாய்க் கூவல் ஆறுசெல் வம்பலர் அசைவிட ஊறும் புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து நடையருங் கானம் விலங்கி நோன்சிலைத் 15. தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர் பிழியார் மகிழர் கலிசிறந் தார்க்கும் மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும் பழிதீர் மாணலந் தருகுவர் மாதோ மாரிப் பித்திகத்து ஈரிதழ் புரையும் 20. அம்கலுழ் கொண்ட செங்கடை மழைக்கண் மணங்கமழ் ஐம்பால் மடந்தைநின் அணங்குநிலை பெற்ற தடமென் றோளே. - மாமூலனார். (சொ-ள்) 19-21. மாரி பித்திகத்து ஈர்இதழ் புரையும் - மாரிக் காலத்தே பூக்கும் பிச்சி மலரின் குளிர்ந்த இதழை ஓக்கும், அம் கலுழ் கொண்ட செம் கடை மழைக் கண் - அழகு ஒழுகும் சிவந்த கடை யினை யுடைய குளிர்ந்த கண்ணினையும், மணம் கமழ் ஐம்பால் - மணம் நாறும் கூந்தலையுமுடைய, மடந்தை - மடந்தையே; 9. கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் - கடல் நீரால் விளைந்த உப்புவாணிகரது கூட்டம்; 1-8. நிலம் நீர் அற்று - நிலங்கள் நீர் இல்லையாகி, நீள் சுனை வறப்ப - ஆழ்ந்த சுனைகள் வறளவும், குன்று கோடு அகைய - மலையிலே மரக்கிளைகள் எரியவும், கடு கதிர் தெறுதலின் - ஞாயிற்றின் கடிய கதிர் தெறுதலால், என்றூழ் நீடிய வேய் படு நனந் தலை - வெம்மை மிக்க மூங்கில்கள் தெறிக்கும் அகன்ற இடமாகிய, வேங்கை வென்ற வெருவரு பணை தோள் - வேங்கைப்புலியினை வென்ற அச்சம் வரும் பருத்த கையினையுடைய, ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பி - மலை போன்ற யானை வருந்தி மதம் வாடி, நிலவு நிற மருப்பின் பெருங் கை சேர்த்தி - நிலாப்போலும் நிறத்தினை யுடைய கொம்பிலே பெரிய கையை அணைத்துக் கொண்டு, பல் மர ஒரு சிறை பிடியொடு வதியும் - பல மரங்களை யுடைய ஒரு பக்கத்தே தன் பிடியோடு தங்கிக் கிடக்கும், கல் உடை அதர கானம் நீந்தி - கற்கள் பொருந்திய நெறிகளையுடைய காட்டினைக் கடந்து; 10-12. உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ - உப்புப்பொறையினை ஈர்த்து வருந்திய எருதுகள் இளைப்பாறத் தங்கி, முரம்பு இடித்து அகல் இடம் குழித்த அகல்வாய்க் கூவல் - வன்னிலத்தை இடித்து விரிந்த இடத்திலே தோண்டின அகன்ற வாயினையுடைய கிணறு, ஆறு செல் வம்பலர் அசைவிட ஊறும் - அந்நெறியே செல்லும் புதியர்கள் தளர்ச்சி நீங்க ஊறும் இடமாகிய; 13-17. புடையல் கழல் கால் புல்லி குன்றத்து - ஒலிக்கின்ற வீரக் கழலணிந்த காலையுடைய புல்லி என்பானது வேங்கடமலையைச் சார்ந்த, நடை அரு கானம் விலங்கி - செல்லற்கு அரிய காட்டினைக் கடந்து, நோன் சிலை தொடை அமை பகழி துவன்ற நிலை வடுகர் - வலிய வில்லில் தொடுத்தல் அமைந்த அம்புகளின் செறிவினை யுடைய வடுகர், பிழி ஆர் மகிழர் - கள்ளினையுண்ட மகிழ்ச்சி யுடையராய், கலி சிறந்து ஆர்க்கும் - செருக்கு மிக்கு ஆரவாரிக்கும், மொழி பெயர் தேஎம் இறந்தனர் ஆயினும் - வேற்றுமொழி வழங்கும் தேயத்தைக்கடந்து சென்றுளாராயினும்; 21-22. நின் அணங்கு நிலைபெற்ற தடமென் தோள் - நினது அழகு நிலைபெற்ற பெரிய மெல்லிய தோளின்; 18. பழிதீர் மாண் நலம் தருகுவர் - குற்றமற்ற சிறந்த நலத்தினை வந்து தந்தருள்வர். (முடிபு) மடந்தை! (நம் தலைவர்) புல்லிகுன்றத்துக் கானம் விலங்கி, வடுகர் கலிசிறந்தார்க்கும் மொழி பெயர் தேஎம் இறந்தனர் ஆயினும், நின்தோள் மாண் நலம் தருகுவர். உமணர் கானம் நீந்திப் பகடு உயிர்ப்ப அசைஇக் குழித்த கூவல் வம்பலர் அசைவிட ஊறும் புல்லிகுன்றம் என்க. (வி-ரை) என்றூழ் நீடிய கானம் எனவும், நனந்தலைக் கானம் எனவும், யானை பிடியொடு வதியும் கானம் எனவும் தனித்தனி கூட்டுக. யானை மருப்பிற் கை சேர்த்தி வதியும் என்க. ஓங்கல் - உயர்ச்சியுமாம். அசை - அசைவு; நீர் வேட்கையால் ஆம் தளர்ச்சி. தலைவர் விரைந்து வந்து நின் துன்பத்தைப் போக்கி இன்பம் தருவர் என்பாள் `நின் தோள் மாணலம் தருகுவர்' என்றாள். 296. மருதம் (வாயில்வேண்டிச் சென்ற தலைமகற்கு வாயின்மறுக்குந் தோழி சொல்லியது.) கோதை யிணர குறுங்காற் காஞ்சிப் போதவிழ் நறுந்தா தணிந்த கூந்தல் அரிமதர் மழைக்கண் மாஅ யோளொடு நெருநையுங் கமழ்பொழில் 1துஞ்சி இன்றும் 5. பெருநீர் வையை அவளொடு ஆடிப் புலரா மார்பினை வந்துநின்று எம்வயின் கரத்தல் கூடுமோ மற்றே பரப்பிற் பன்மீன் கொள்பவர் முகந்த இப்பி நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும் 10. பேரிசைக் கொற்கைப் பொருநன் வென்வேல் கடும்பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன் மலைபுரை நெடுநகர்க் 2கூடல் ஆடிய மலிதரு கம்பலை போல அலரா கின்றது பலர்வாய்ப் பட்டே. - மதுரைப் பேராலவாயார். (சொ-ள்) தலைவ!, 1-7. கோதை இணர குறுங்கால் காஞ்சி - மாலை போன்ற கொத்துக்களையுடைய குறிய அடியினையுடைய காஞ்சிமரத்தின், போது அவிழ் நறும் தாது அணிந்த கூந்தல் - மலர் விரிந்த நறிய பொடியினை அணிந்த கூந்தலையும், அரிமதர் மழைக் கண் - செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ந்த கண்ணினையும் உடைய, மா அயோளொடு - மாமை நிறத்தினையுடைய பரத்தையுடன், நெருநையும் கமழ் பொழில் துஞ்சி - நேற்றும் மணம் கமழும் பொழிலில் துயின்று, இன்றும் அவளொடு பெருநீர் வையை ஆடி- இன்றும் அவளுடன் வையை நீர்ப்பெருக்கில் விளையாடி, புலரா மார்பினை - ஈரம் புலராத மார்பினையுடையையாய், எம் வயின் வந்து நின்று - எம்பால் வந்து நின்று, கரத்தல் கூடுமோ - எமக்கு மறைத்தல் இயலுமோ?, மற்று - இயலாதன்றே, (அச்செயல்) 7-14. பரப்பில் - கடல் நீர்ப் பரப்பில், பல் மீன் கொள்பவர் - பல மீன்களையும் பிடிப்போர், முகந்த இப்பி - அவற்றுடன் சேரக் கொண்ட சிப்பிகளை, நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும் - பன்னாடையால் அரிக்கப்பெறும் மகிழ்ச்சி தரும் கள்ளின் விலை யாகச் சேர்க்கும், பேர் இசைக் கொற்கைப் பொருநன் - பெரிய புகழினையுடைய கொற்கைக்குத் தலைவனாகிய, வென் வேல்- வென்றியைத் தரும் வேலையும், கடு பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன் - கடிய பெரிய யானையினையும் நெடிய தேரினையுமுடைய பாண்டியன் நெடுஞ் செழியன், மலைபுரை நெடுநகர் கூடல் - மலையை யொத்த நீண்ட கோயிலையுடைய மதுரைக்கண், ஆடிய - வெற்றிக் களிப்பால் ஆடியதனால் எழுந்த, மலிதரு கம்பலைபோல - நிறைந்த ஆரவாரம்போல, பலர்வாய்ப் பட்டு அலராகின்றது - பலர் வாயாலும் கூறப்பட்டு அலராகின்றது. (முடிபு) தலைவ! மாஅயோளொடு நெருநையும் பொழில் துஞ்சி, இன்றும் வையை அவளொடு ஆடிப் புலரா மார்பினை வந்து நின்று; எம்வயிற் கரத்தல் கூடுமோ? மற்று; அது செழியன் கூடல் ஆடிய கம்பலை போலப் பலர் வாய்ப்பட்டு அலராகின்றது. (வி-ரை) புலரா மார்பினை என்பதனை இரட்டுற மொழித லாகக் கொண்டு, பரத்தை செய்த குறி நீங்காத மார்பினையுடையாய் எனவும் உரைத்துக் கொள்க. பரத்தையிற் பிரிந்து வந்து தலைவியை ஊடல் நீக்கிக் கூட விழைந்து தோழியை வாயில் வேண்டி நிற்பவன், யான் பரத்தையை அறியேன் என்றானாக, நீ நெருநை அவளுடன் துஞ்சி அவள் செய்த குறியோடும் இன்று அவளுடன் நீராடிப் புலராத மார்போடும் வந்து நின்று, நின் புறத் தொழுக்கத்தை மறைத்தல் யாங்ஙனம் என்பாள், `புலரா மார்பினை வந்து நின்று எம்வயிற் கரத்தல் கூடுமோ' என்றாள். மற்று, வினைமாற்று. இப்பி - முத்துக்கு ஆகு பெயருமாம். பாண்டியன் கூடலில் ஆடியபொழுது ஆரவாரம் எழுந்தது, `வாடாப் பூவிற் கொங்கரோட்டி, நாடுபல தந்த பசும்பூட் பாண்டியன், பொன்மலி நெடுநகர்க் கூட லாடிய, இன்னிசை யார்ப்பினும் பெரிதே'1 என முன்னரும் போந்தமை அறியற்பாலது. 297. பாலை (பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) பானாட் கங்குலும் பெரும்புன் மாலையும் ஆனா நோயொடு அழிபடர்க் கலங்கி நம்வயின் நினையும் இடும்பை கைம்மிக என்னை யாகுமோ நெஞ்சே நம்வயின் 5. இருங்கவின் இல்லாப் பெரும்புல் தாடிக் 2கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென 3மருங்குல் நுணுகிய பேஎமுதிர் நடுகல் பெயர்பயம் படரத் 4தோன்று குயிலெழுத்து இயைபுடன் நோக்கல் செல்லா தசைவுடன் 10. ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியுஞ் 1சூர்முத லிருந்த ஓமையம் புறவின் ஈர்முள் வேலிப் புலவுநாறு முன்றில் எழுதி யன்ன கொடிபடு வெருகின் பூளை யன்ன பொங்குமயிர்ப் பிள்ளை 15. மதிசூழ் மீனில் தாய்வழிப் படூஉஞ் சிறுகுடி மறவர் சேக்கோள் தண்ணுமைக்கு எருவைச் சேவல் இருஞ்சிறை பெயர்க்கும் வெருவரு கானம் நம்மொடு வருவல் என்றோள் மகிழ்மட நோக்கே. - மதுரை மருத னிளநாகனார். (சொ-ள்) 4. நெஞ்சே-, 5-11. இரும் கவின் இல்லாப் பெரும் புல் தாடி - மிக்க அழகு இல்லாத பெரிய பொலிவற்ற தாடியினையும், கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென - வன்கண்மையையும் உடைய மறவரது அம்பு தேய்த்த தாக, மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல் - பக்கம் மெலிந்த அச்சம் மிக்க நடு கல்லில், பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து - பெயரும் பீடும் விரியத் தோன்றுமாறு பொறித்த எழுத்துக் களை, இயைபு உடன் நோக்கல் செல்லாது - ஒருங்கு சேர்த்து நோக்குதல் மாட்டாராய். அசைவுடன் - தளர்ச்சியுடன், ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் - வழிச் செல்லும் புதியர் அதனை விடுத்து நீங்கும், சூர் முதல் இருந்த ஓமைப் புறவின் - தெய்வம் அடியிலிருக்கப்பெற்ற ஓமை மரங்களையுடைய காட்டிலுள்ள; 12-16. ஈர்முள் வேலிப் புலவு நாறு முன்றில் - ஈர்கின்ற முள்வேலி யினையுடைய புலால் நாறும் முற்றத்தே, எழுதி யன்ன கொடி படு வெருகின் - ஓவியத்து எழுதினாற் போன்ற மெலிந்து நீண்ட பூனையின், பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை - பூளைப் பூவினை யொத்து விளங்குகின்ற மயிரினையுடைய குட்டிகள், மதிசூழ் மீனில் தாய் வழிப் படூஉம் - திங்களைச் சூழ்ந்துள்ள விண்மீன் போலத் தம் தாயின் பின் சூழ்ந்திருக்கும், சிறு குடி மறவர் - சீறூரிலுள்ள மறவர்களது, சே கோள் தண்ணுமைக்கு - ஏறு கோட் பறை யொலிக்கு, எருவைச் சேவல் இருசிறை பெயர்க்கும் - ஆண் பருந்து தனது பெரிய சிறகினை எழுப்பிப் பறந்தேகும், வெருவரு கானம் - அச்சம் வரும் காட்டிற்கு, நம்மொடு வருவல் என்றோள் - நம்முடன் வருவேன் என்று கூறிய நம் தலைவியின், மகிழ்மட நோக்கு - மகிழ்ச்சியைத் தரும் மடப்பம் வாய்ந்த நோக்கம்; 1-4. பால் நாள் கங்குலும் பெரும் புல் மாலையும் - பாதி நாளாகிய இரவிலும் மிக்க பொலிவற்ற மாலைக்காலத்தும், ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி - அமையாத வருத்தத்துடன் மிக்க துயரத்தாற் கலங்க, நம்வயின் நினையும் இடும்பை - நம்மை நினைதலாலாகும் துன்பம், கை மிக - அளவு கடத்தலின், நம்வயின் என்னை ஆகுமோ - நம்பால் என்ன தீங்கு நிகழுமோ? (முடிபு) நெஞ்சே! சிறுகுடி மறவர் சேக்கோள் தண்ணுமைக்கு எருவைச் சேவல் இருஞ்சிறை பெயர்க்கும் வெருவரு கானம், நம்மொடு வருவல் என்றோள் மடநோக்கு, கங்குலும் மாலையும் கலங்கி, இடும்பை கைம்மிக, நம்வயின் என்னையாகுமோ? (வி-ரை) கலங்கி - கலங்க. நம்வயின் நினையும் - நம்மை நினையும்; வேற்றுமை மயக்கம். நோக்குக் கலங்க, இடும்பை கைம்மிக, நம்வயின் என்னை ஆகுமோ? எனத் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறினான் என்க. என்னை யாகுமோ - யாது துன்பம் நிகழுமோ என்றபடி. மாய்த்தல் - தீட்டுதல், `மாய்த்த போல மழுகுநுனை தோற்றி'1 `கொடுவில் லெயினர் பகழி மாய்க்கும்'2 என்பவற்றில் மாய்த்தல் இப்பொருட்டாதல் காண்க. மறவர் தம் அம்பினைத் தீட்டுதலால், புறம் தேய்ந்து எழுத்துக்கள் இடையிடை மறைந்திருத்தலின், வம்பலர் அவற்றை இயைத்து நோக்கலாற்றாது விடுத்து அகல்வார் என்க. பெயர் பயம் - பெயரும் பீடும் என்க. குயில் எழுத்து - குயிற்றிய எழுத்து. புறவின் முன்றிலில் வெருகின் பிள்ளை தாய்வழிப் படும் சிறுகுடி என்க. வெண்ணிறமுடைய வெருகிற்கு மதியும் அதனைச் சூழும் பிள்ளை கட்கு மதியைச் சூழும் மீன்களும் உவமமாயின. தண்ணுமை ஒலியைக் கேட்ட எருவைச் சேவல், ஆண்டு உணவு உளதாதல் கருதிச் செல்லும் என்பது சிறை பெயர்க்கும் என்பதனாற் குறிக்கப்பட்டது. அஞ்சத்தக்க காட்டிலும் தலைவி உடன்போக்குத் துணிந்து கூறிய காலை அவளது நோக்கம் மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தது, தலைவனது நெஞ்சில் நிலைபெற்றிருந்தமையின் அதனை விதந்து மகிழ்மட நோக்கு என்றான். 298. குறிஞ்சி (இரவுக்குறிக்கண் தலைமகற்குத் தலைமகள் சொல்லியது.) பயங்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு வயங்குதொழில், தரீஇயர் வலனேர்பு விளங்கி மல்குகடல் தோன்றி யாங்கு மல்குபட மணிமருண் மாலை மலர்ந்த வேங்கை 5. ஒண்தளிர் அவிர்வரும் ஒலிகெழு பெருஞ்சினைத் தண்துளி அசைவளி தைவரும் நாட கொன்றுசினந் தணியாது வென்றுமுரண் சாம்பாது இரும்பிடித் தொழுதியின் இனந்தலை மயங்காது பெரும்பெயற் கடாஅஞ் செருக்கி வளமலை 10. இருங்களிறு இயல்வரும் பெருங்காட்டு இயவின் ஆரிருள் துமிய 1வெள்வேல் ஏந்தித் தாழ்பூங் கோதை ஊதுவண்டு இரீஇ மென்பிணி யவிழ்ந்த அரைநாள் இரவிவண் நீவந் ததனினும் இனிதா கின்றே 15. தூவற் கள்ளின் துனைதேர் எந்தை கடியுடை வியனகர் ஓம்பினள் உறையும் யாயறி வுறுதல் அஞ்சிப் பானாட் 2கரவல் நெஞ்சமொடு காமஞ் செப்பேன் யான்நின் கொடுமை கூற நினைபாங்கு 20. இனையல் வாழி தோழிநத் துறந்தவர் நீடல ராகி வருவர் வல்லெனக் கங்குல் உயவுத்துணை யாகிய துஞ்சா துறைவி இவளுவந் ததுவே. - மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார். (சொ-ள்) 1-6. பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு - உலகிற்குப் பயன்மிக்க திருவினைத் தரும் பல கதிர்களையுடைய ஞாயிறு, வயங்கு தொழில் தரீஇயர் - விளங்கும் தொழில்களை அவ்வுலகிற்குத் தருமாறு, வலன் ஏர்பு - வலமாக எழுந்து, விளங்கி - விளக்கமுற்று, மல்கு கடல் தோன்றியாங்கு - பெரிய கடலில் தோன்றினாற் போல, மணி மருள் மாலை - நீல மணியினை யொத்த மாலைக் காலத்தே, மல்கு பட மலர்ந்த வேங்கை - நிறைதல் உண்டாக மலர்ந்துள வேங்கை மரத்தின், ஒள் தளிர் அவிர் வரும் ஒலிகெழு பெருஞ்சினை - ஒளி பொருந்திய தளிர்கள் விளங்கும் தழைத்தல் பொருந்திய பெரிய கிளையிலுள்ள, தண் துளி அசைவளி தைவரும் நாட - தண்ணிய துளிகளை அசைந்துவரும் காற்று மெல்லெனத் தடவி உதிர்க்கும் நாடனே! 7-10. கொன்று சினம் தணியாது - தன் பகையினைக் கொன்று தன் சினத்தினைப் போக்கிக்கொள்ளாமலும், வென்று முரண் சாம்பாது - அன்றி அதனை வென்றோட்டி மாறுபாட்டினை மெலிவிக்காமலும், இரும்பிடித் தொழுதியின் இனம் தலை மயங்காது - பெரிய பெண் யானைகளின் கூட்டமாகிய இனத்துடன் கலவா மலும், பெரும் பெயல் கடாஅம் செருக்கி - பெரும் மழைபோலும் மதத்தால் செருக்குற்று, வள மலை இருங்களிறு - வளமிக்க மலையிடத்ததாய பெரிய களிறு, இயல்வரும் பெருங் காட்டு இயவின் - இயங்கும் பெரிய காட்டு நெறியில்; 11-14. ஆர் இருள் துமிய வெள்வேல் ஏந்தி - அரிய இருள் நீங்க வெள்ளிய வேலைக் கையிற் கொண்டு, மெல் பிணி அவிழ்ந்த - மெல்லிய அரும்பு மலர்ந்த, தாழ் பூ கோதை - தாழ்ந்த பூமாலைக் கண், ஊதுவண்டு இரீஇ - ஊதும் வண்டினை ஓட்டி, அரை நாள் இரவு இவண் நீ வந்த அதனினும் - நடு நாளாய இரவில் இங்கு நீ வந்த வருகையினும்; 14-23. தூவல் கள்ளின் துனை தேர் எந்தை - மழை போன்ற கள்ளையும் விரையும் தேரினையுமுடைய எம் தந்தையின், கடி உடை வியன் நகர் ஓம்பினள் உறையும் - காவலையுடைய பெரிய மனையின் கண் எம்மைப் பாதுகாத்து அகலாதிருக்கும், யாய் அறிவுறுதல் அஞ்சி - எம் தாய் அறிந்திடலை அஞ்சி, பால் நாள் - நடு இரவில், கரவல் நெஞ்சமொடு காமம் செப்பேன் - மறைத்தல் பொருந்திய மனத்தினொடு எனது காமத்தினைச் செப்பாது, யான் -, நின் கொடுமை கூற - நீ வந்திலை என்னும் கொடுமையினை மெல்லெனக் கூற, ஆங்கு நினைபு - அங்கு என் கருத்தினை உணர்ந்து, தோழி-, வாழி-, இனையல் - வருந்தாதே, நம் துறந்தவர் - நம்மைத் துறந்த நம் தலைவர், நீடலர் ஆகி வல் வருவர் என - தாழ்க்காதவராகி விரைந்து வருவர் எனக் கூறி, கங்குல் உயவுத் துணையாகிய - இரவில் உசாத்துணையாதற்கு, துஞ்சாது உறைவி - துயிலாது என்னுடன் கூடியிருந்த என் தோழியாய, இவள் உவந்தது - இவள் மகிழ்ந்தது, இனிது ஆகின்று - எனக்கு இனியதாக வுள்ளது. (முடிபு) நாட! பெருங்காட்டியவின் வேல் ஏந்தி, அரைநாள் இரவு இவண் நி வந்ததனினும், தோழி இனையல், நத்துறந்தவர் நீடலராகி வருவர் எனக் கூறி, கங்குல் உயவுத் துணையாகிய துஞ்சாது உறைவி இவள் உவந்தது இனிது ஆகின்று. (வி-ரை) பயம் கெழு திருவில் பல் கதிர் - பயன் மிக்க வானவில் போலும் பல கதிர்கள் என்றுமாம். வயங்கு தொழில் - உயிர்கள் விளங்குதற்கு ஏதுவாகிய தொழில்கள். ஞாயிறு தோன்றின் அன்றித் தொழில் நிகழாதாகலின், ஞாயிறு தொழில் தரீஇயர் கடற்றோன்றி யாங்கு எனப்பட்டது. மாலைப்பொழுதின் நீலமணி போலும் இருளிற்கும், அதன்கண் மலரொடும் தளிரொடும் சிவந்து விளங்கும் வேங்கைக்கும், நீலநிறமுடைய கடலும் அதன்கண் உதிக்கும் ஞாயிறும் உவமமாயின என்க. வென்று - பகையைத் துரந்து வென்ற என்க. கொன்றும் வென்றும் என உம்மை விரித்துரைத்தலுமாம். களிறு மதச் செருக்கினாலே சினம் தணியாது முரண் சாம்பாது இனம் தலை மயங்காது திரியும் காடு என்க. இரவிற் பூக்கும் `இருள் நாறி' முதலிய பூக்கள், மென் பிணி அவிழ்த்த இரவு என்க. இரவு நீ வந்ததனினும் இனிதாகின்று என்றமையால், தலைவன் வருகை தனக்கு இனிதாயிற்று என்றாளாம். நின் காதல் மிகுதியை அறிந்து வைத்தும் அன்னை அறிதற் கஞ்சிப் பானாள் அதனை மொழியாது, நின் கொடுமை கூறினேனாக, `நீ வருந்தாதே தலைவர் வருவர்' என்று கூறி, இரவெல்லாம் உசாத்துணையாகித் துயிலாதிருந்த தோழி எய்திய மகிழ்ச்சி நீ வந்த மகிழ்ச்சியினும் இனிதாயிற்று எனத் தலைவி தலைவற்குக் கூறினாள் என்க. 299. பாலை (இடைச்சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) 1எல்லையும் இரவும் வினைவயின் பிரிந்த 2உள்ளம் முன்னுறு படைய உள்ளிய பதிமறந்து உறைதல் 3வல்லுநம் ஆயினும் அதுமறந் துறைதல் அரிதாகின்றே 5. கடுவளி யெடுத்த கால்கழி தேக்கிலை நெடுவிளிப் 4பருந்தின் வெளியெழுந் தாங்கு விசும்புகண் புதையப் பாஅய்ப் பலவுடன் 5அகலிடஞ் செல்லுநர் அறிவுகெடத் தாஅய்க் கவலை கரக்குங் 6காடகல் அத்தஞ் 10. செய்பொருண் மருங்கின் செலவுதனக் குரைத்தென வைகுநிலை மதியம் போலப் பையெனப் புலம்புகொள் அவலமொடு புதுக்கவின் இழந்த நலங்கெழு திருமுகம் இறைஞ்சி நிலங்கிளையா நீரொடு பொருத ஈரிதழ் மழைக்கண் 15. இகுதரு தெண்பனி ஆகத்து உறைப்பக் கால்நிலை செல்லாது கழிபடர்க் கலங்கி நாநடுக் குற்ற நவிலாக் கிளவியொடு அறல்மருள் கூந்தலின் மறையினள் திறன்மாண்டு திருந்துக மாதோநும் செலவென வெய்துயிராப் 20. பருவரல் எவ்வமொடு அழிந்த பெருவிதுப் புறுவி பேதுறு நிலையே. - எயினந்தைமகனார் இளங்கீரனார். (சொ-ள்) 1-3. வினைவயின் பிரிந்த உள்ளம் - வினையின் பொருட்டுப் பிரிந்து போந்த உள்ளமே! முன் உறுபு - பண்டு தொட்டு, எல்லையும் இரவும் அடைய உள்ளிய - பகலும் இரவும் முழுதும் நினைக்கப்பட்ட, பதிமறந்து உறைதல் வல்லுநம் ஆயினும்- நம் பதியை மறந்து தங்குதலை மாட்டுவேமாயினும்; 5-9. கடுவளி எடுத்த கால் கழி தேக்கு இலை - கடிய காற்றினாற் பறிக்கப்பெற்ற காம்பு ஒழிந்த தேக்கின் இலைகள், நெடுவிளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு - நீண்ட கூப்பீட்டினைச் செய்யும் பருந்தின் வட்டம் எழுந்ததுபோன்று, விசும்பு கண்புதையப் பாஅய் - விசும்பு இடம் மறையப் பரவி, பல உடன் - பலவும் ஒருங்கே சேர்ந்து, அகல் இடம் செல்லுநர் அறிவுகெடத் தாஅய் - அகன்ற பாலையிடத்தே செல்லுவோரின் அறிவு (சுவடு அறியாது) மயங்கும்படி பரந்து, கவலை கரக்கும் காடு அகல் அத்தம் - கவர்த்த நெறிகளையெல்லாம் மறைத்து விடும் அகன்ற காட்டு நெறியில்; 10. செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென - பொருளீட்டும் வினைக்கட் செல்லுதலை அவளுக்கு உரைத்தேனாக; 11-21. வைகுநிலை மதியம் போல - இரவு புலரும் காலத்து மதியினைப்போல, புலம்புகொள் அவலமொடு - தனிமையுறும் துன்பத்தொடு, பையெனப் புதுக்கவின் இழந்த நலம்கெழு திருமுகம் இறைஞ்சி - புதிய அழகினை மெல்ல இழந்த நலம் பொருந்திய அழகிய முகத்தினைக் கவிழ்த்து, நிலம் கிளையா - கால் விரலால் நிலத்தைக் கிளைத்து, நீரொடு பொருத ஈர் இதழ் மழைக்கண் - நீருடன் கூடிய ஈரம் வாய்ந்த இதழினையுடைய குளிர்ந்த கண், இகுதரு தெண்பனி ஆகத்து உறைப்ப - சொரிகின்ற தெளிந்த நீர் மார்பின்கண் துளித்து விழ, கால்நிலை செல்லாது - கால் ஓரிடத்தில் நிற்றல் ஆற்றாதாக, கழி படர்க்கலங்கி - மிக்க துன்பத்தாற் கலக்க முற்று, அறல் மருள் கூந்தலின் மறைந்தனள் - கருமணலை ஒத்த விரிந்த கூந்தலில் மறைந்து, நாநடுக்குற்ற நவிலாக் கிளவியொடு - நாவானது நடுக்கமுற்று திருந்தாத சொற்களால், நும் செலவு திறன்மாண்டு திருந்துக என - நுமது போக்கானது கூறுபாடு மாட்சியுற்றுச் செப்பமுறுக என்று கூறி, வெய்து உயிரா - வெவ்விதாக உயிர்த்து, பருவரல் எவ்வமொடு அழிந்த - துன்பத்தைத் தரும் வருத்தத்தால் அழிந்த, பெருவிதுப்புறுவி பேது உறு நிலை - மிக்க விரைவினை யுறுவாளாய தலைவி மயக்குற்ற நிலையாய; 4. அது மறந்து உறைதல் அரிதாகின்று - அதனை மறந்து தங்குதல் அரியதாக வுள்ளது. (முடிபு) வினைவயிற் பிரிந்த உள்ளமே! பதிமறந்துறைதல் வல்லுநம் ஆயினும், காடகல் அத்தம் செலவு தனக்கு உரைத்தென, திருமுகம் இறைஞ்ச, நிலம் கிளையா, மழைக்கண் தெண்பனி ஆகத்து உறைப்ப, கால் நிலை செல்லாது, கழிபடர்க் கலங்கி, கூந்தலின் மறையினள், நவிலாக் கிளவியொடு, நும் செலவு திறன் மாண்டு திருந்துக எனக் கூறி அழிந்த பெருவிதுப்புறுவி பேதுறு நிலை அது மறந் துறைதல் அரிதாகின்று. (வி-ரை) பிரிந்த - பிரிந்து என்னுடன் போந்த என்க. உள்ளம், விளி. பிறந்த நாள் தொட்டுப் பகலும் இரவும் பயின்று வதிந்து நினைந்து வந்த பதியை ஒரு காலத்து மறந்துறைதல் என்பது அரிதென்பான், பதி மறந்துறைதல் வல்லுநமாயினும்' என்றான். தேக்கிலை பாஅய்த் தாஅய்க் கவலை கரக்கும் அத்தம் என்க. கடுங்காற்றினால் கவரப்பெற்ற தேக்கிலைகள் முதற்கண் விசும்பிட மெல்லாம் மறையும்படி படர்ந்து, பின் நிலமிசை வீழ்ந்து பரவி வழிகளை மறைக்கும் அத்தம் என்றான். பொருள் வயிற் செலவை உரைத்தது கேட்ட தலைவியின் முகம், முதலில் மெல்லென ஒளி குன்றிக் காட்டிற்று ஆதலின், அதனை விடியற்காலையில் ஒளி குறைந்து தோன்றும் மதியத்தோடு உவமித்தான். பொருத - தடுத்த என்றுமாம். இதழ் - இமை. தான் பொருள்வயிற் பிரிவு உரைப்பக் கேட்டபொழுது, தலைவியின் முகம் ஒளிகுன்றிக் கவிழ்ந்திருக்க, கால்கள் நிலத்தைக் கிளைத்து நிலைபெறாவாக, கண்கள் நீரினைச் சொரிய, உள்ளம் பெருந் துன்பத்தால் கலங்குதலுற, கூந்தல் விரிந்து உடம்பினை மறைக்க, இங்ஙனமாகத் தலைவி எவ்வம் உற்று அழிந்து வெய் துயிர்த்து, உரைத்தற்கு நா எழாது நடுங்க, நும் செலவு திருந்துக எனக் கூறிய வருத்தம் மிக்க நிலை, தலைவன் உள்ளத்தே மாறாது நிலைபெற்றிருந்தமையின், பேதுறு நிலையாகிய அது மறந்துறைதல் அரிதாகின்று எனத் தலைவன் நெஞ்சிற்கு உரைத்தான் என்க. பேது உறு நிலை வருத்தத்தை மிகுவிக்கும் நிலை என்றுமாம். 300. நெய்தல் (பகற்குறி வந்து நீங்குந் தலைமகற்குத் தோழி சொல்லியது.) நாள்வலை முகந்த கோள்வல் பரதவர் நுணங்குமணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார் பறிகொள் கொள்ளையர் மறுக உக்க மீனார் குருகின் கானலம் பெருந்துறை 5. எல்லை தண்பொழிற் சென்றெனச் செலீஇயர் தேர்பூட்டு அயர ஏஎய் வார்கோல் செறிதொடி திருத்திப் பாறுமயிர் நீவிச் செல்லினி மடந்தைநின் தோழியொடு மனையெனச் சொல்லிய அளவை தான்பெரிது கலுழ்ந்து 10. தீங்கா யினளிவ ளாயின் தாங்காது நொதுமலர் போலப் பிரியிற் கதுமெனப் பிறிதொன் றாகலும் அஞ்சுவல் அதனாற் சேணின் வருநர் போலப் பேணாய் 1இருங்கலி யாணரெம் சிறுகுடித் தோன்றின் 15. வல்லெதிர் கொண்டு மெல்லிதின் வினைஇத் துறையும் மான்றின்று பொழுதே சுறவும் 2ஓதம் மல்கலின் மாறா யினவே எல்லின்று தோன்றல் செல்லா தீமென எமர்குறை கூறத் தங்கி ஏமுற 20. இளையரும் புரவியும் இன்புற நீயும் இல்லுறை நல்விருந் தயர்தல் ஒல்லுதும் பெருமநீ நல்குதல் பெறினே. - உலோச்சனார். (சொ-ள்) 22. பெரும - பெருமானே! 1-4. நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் - நாட் காலையில் வலையினால் மீன்களை முகந்துகொண்ட மீன் பிடித்தலில் வல்ல பரதவர்கள், பறிகொள் கொள்ளையர் - பின் பறியால் கொண்ட மிக்க மீனினையுடையராகிய அவற்றை, நுணங்கு மணல் ஆங்கண் - நுண்ணிய மணலிடத்தே, உணங்கப் பெய்ம்மார் - புலரும்படி பெய்வாராய், மறுக உக்க - வருந்துமாறு சொரிந்த, மீன் ஆர் குருகின் - மீன்களைத் தின்னும் பறவைகளையுடைய, கானல் அம் பெருந் துறை - சோலையையுடைய அழகிய பெரிய கடற்றுறையின் கண்; 5-9. தண் பொழில் எல்லை சென்றென - குளிர்ந்த சோலையிற் பகற்பொழுது சென்றதாக, செலீஇயர் - நின் ஊர்க்குச் செல்ல, தேர் பூட்டு அயர ஏஎய் - தேரைப் பூட்டுமாறு ஏவி, வார் கோல் செறி தொடி திருத்தி - இவளது நெடிய திரண்ட நெருங்கிய வளையினைத் திருந்த அணிவித்து, பாறு மயிர் நீவி - சிதறிய கூந்தலைத் தடவி, மடந்தைநின் தோழியொடு இனி மனை செல் என - மடந்தையே நின் மனைக்கு நின் தோழியுடன் இப்போது செல்வாயாக என்று, சொல்லிய அளவை - சொன்ன அளவிலே; 9-12. இவள் பெரிது கலுழ்ந்து தீங்காயினள் ஆயின் - இவள் மிகவும் அழுது வருந்துகின்றாளாதலின், தாங்காது நொதுமலர் போலப் பிரியின் - அதனை எண்ணாது ஏதிலர் போலப் பிரிந்து செல்லின், கதுமெனப் பிறிதொன்றும் ஆகலும் அஞ்சுவல் அதனால்- விரைந்து இவள் வேறு தீங்கு அடையினும் அடைவளென அஞ்சுகின்றேன், அதனால்; 13-22. நீ நல்குதல் பெறினே - யான் கூறுவதனை நீ கேட்டருளுதல் செய்யின், சேணின் வருநர் போல பேணாய் - நீயும் நின் இளையரும் சேய்மையினின்றும் வருவார் போலக் கருதாயாய், இரு கலி யாணர் எம் சிறுகுடித் தோன்றின் - மிக்க ஆரவாரமுடைய அழகிய எமது சீறூரின் கண் வரின், எமர் - எங்கள் மலையினர். வல் எதிர் கொண்டு - விரைய எதிர்கொண்டழைத்து, மெல்லிதின் வினைஇ - மெல்லென வினாவி, பொழுது மான்றின்று - பொழுது மயங்கிவிட்டது, துறையும் ஓதம் மல்கலின் சுறவும் மாறு ஆயினவே - நீர்த்துறையும் அலைபெருகி ஏறலின் சுறாக்களும் பகையாயின, எல்லின்று - இருண்டுவிட்டது, தோன்றல் - தலைவ, செல்லா தீம் என - செல்லற்க என, குறை கூற - குறையிரந்து வேண்ட, ஏம் உறத் தங்கி - அங்கு இன்பமுறத் தங்குதல் செய்து, இளையரும் புரவியும் நீயும் இன்பு உற - நின் ஏவலரும் குதிரையும் நீயும் இன்பம் எய்த, இல் உறை நல் விருந்து அயர்தல் ஒல்லுதும் - எம் இல்லில் தங்கும் நல்ல விருந்தாக ஏற்றுப் பேணுதலைப் பொருந்துவோம். (முடிபு) பெரும! நீ எல்லை சென்றெனச் செலீஇயர் தேர் பூட்டயர ஏஎய், மடந்தை! நின் தோழியொடு இனி மனை செல் எனச் சொல்லிய அளவை இவள் பெரிது தீங்காயினள் ஆயின், நீ பிரியின் பிறிதொன்றாகலும் அஞ்சுவல்; அதனால் நீ நல்குதல் பெறின், எம் சிறுகுடித் தோன்றின், எமர் குறை கூறத் தங்கி, ஏமுற, நல்விருந்தயர்தல் ஒல்லுதும். (வி-ரை) பறி - மீன் படுக்கும் ஓர் கருவி. எல்லை தண் பொழிற் சென்றென என்பது பகற்குறிக்கண் கூட்டம் முடிந்தமை உணர்த்திய வாறாம். செலீஇயர் - ஊர்க்கண் செல்லுதற்கு. ஏஎய் - இளையரை ஏவி என்க. இளையரை ஏவி, தொடி திருத்தி, மயிர் நீவிச் சொல்லிய அளவை என்றியையும். கூட்டத்தால் தொடி பிறழ்ந்தும் மயிர் குலைந்தும் இருந்தவற்றைத் திருத்தியும் நீவியும் செம்மை செய்தான் என்க. தாங்காது - உள்ளத்திற் கொள்ளாது. பிறி தொன்றாகல் - பெரும்பிறி தடைதல்; உயிர்துறத்தல் என்றதனை வெளிப்படக் கூறுதற்கும் ஆற்றாது பிறிதொன்றாகலும் என்றாள்; பிறிதொன்றா கலும் கூடுமோ என அஞ்சுவல் என்றாள் என்க. சேணின் வருநர் போலப் பேணாது என்றது, பழையர் போலக் கருதி என்றபடியாம். அன்றிச் சேய்மைக்கணின்றும் புதியராய் வருவார் போல எம்முடனுள்ள தொடர்பு புலப்படாது சிறுகுடித் தோன்றின் என்றுரைத்தலும் ஆம். பொழுது மான்றின்று துறையும் ஓதம் மல்கலின் சுறவும் மாறாயின எனக் கொண்டு கூட்டுக. குறை கூறுதல் - குறையிரத்தல். ஏமுறத் தங்கி நீ நல்குதல் பெறின் என இயைத்துரைத்தலுமாம். (மே-ள்) `இருவகைக் குறிபிழைப் பாகிய விடத்தும்'1 என்னுஞ் சூத்திரத்து இச்செய்யுளை காட்டி, இதனுள் தான் பெரிது கலுழ்ந்து தீங்காயினள் எனவே அக்குறிப்புத் தலைவன் போகாமற் றடுப்பக் `கூறிய தென்று உணர்ந்து தோழி கூறினாள் என்றும், `நாற்றமும் தோற்றமும்'2 என்னுஞ் சூத்திரத்து, வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும் என்ற பகுதியில், இச்செய்யுளும் அது என்றும் கூறினர், நச். அகநானூறு - மணிமிடைபவளம் பாட்டு முதற்குறிப்பு அகரவரிசை பாட்டு பாட்டு பக்க எண் எண் அகலிரு விசும்பகம் 214 187 அணங்குடை முந்நீர் 207 172 அத்தப் பாதிரித் 191 141 அம்மவாழி..... கேளிர்முன் 130 20 அம்மவாழி..... கைம்மிகக் 141 41 அம்மவாழி..... பன்னாள் 249 256 அம்மவாழி.... பொருள் 235 228 அம்மவாழி.... பொன்னின் 201 161 அரம்போழ் அவ்வளை 125 10 அரியற் பெண்டிர் 157 73 அருஞ்சுரம் இறந்த என் 195 149 அரும்புமுதிர் வேங்கை 242 242 அலமரல் மழைக்கண் 233 224 அவரை ஆய்மலர் 243 244 அறந்தலைப் பிரியாது 173 102 அளிதோ தானே 239 236 அறன்கடைப் படாஅ 155 69 அறியாய் வாழி 268 298 அன்பும் மடனுங் 225 208 ஆறுசெல் வம்பலர் 137 34 இகுளை கேட்டிசின் 138 36 இடம்படுபு அறியா 252 262 இருங்கழி மலர்ந்த 270 303 இருபெரு வேந்தர் 174 104 இரும்பிழி மாரி 122 3 இரும்புலி தொலைத்த 272 307 இருவிசும்பு அதிர 274 311 இலங்குவளை நெகிழச் 127 14 இலமலர் அன்ன 142 44 இலையொழித் துலறிய 293 350 உண்ணா மையின் 123 6 பாட்டு பாட்டு பக்க எண் எண் உணர்குவென் அல்லென் 226 210 உயிர்கலந்து ஒன்றிய 205 168 உயிரினுஞ் சிறந்த 244 246 உருமுரறு கருவிய 158 74 உலகுகிளர்ந் தன்ன 255 269 உலகுடன் நிழற்றிய 204 167 உவக்குந ளாயினும் 203 165 உள்ளல் வேண்டும் 129 18 உறுகழி மருங்கின் 230 218 ஊருஞ் சேரியும் 220 198 எல்லையும் இரவும் 299 362 எல்வளை ஞெகிழச் 185 128 எவன்கொல் வாழி 250 258 என்னெனப் படுங்கொல் 206 171 ஏனலும் இறங்குகுரல் 132 26 ஒடுங்கீர் ஓதி 160 78 ஒழியச் சென்மார் 285 332 ஓங்குநிலைத் தாழி 275 313 ஓங்குமலைச் சிலம்பில் 147 55 கடல்கண் டன்ன 176 108 கடவுட் கற்பொடு 184 126 கதிர்கை யாக 164 86 கயந்தலை மடப்பிடி 165 88 கரைபாய் வெண்திரை 199 157 காணினி வாழி 232 222 கார்பயம் பொழிந்த 234 225 கானப் பாதிரிக் 261 283 கானலுங் கழறாது 170 96 கானுயர் மருங்கில் 193 144 கிளைபா ராட்டுங் 218 194 குடுமிக் கொக்கின் 290 343 பாட்டு பாட்டு பக்க எண் எண் குணகடன் முகந்த 278 319 குவளை உண்கண் 183 124 குறியிறைக் குரம்பைக் 210 179 குன்றி அன்ன 133 24 கூறாய் செய்வது 292 348 கூறுவங் கொல்லோ 198 155 கேளாய் எல்ல 211 181 கொளக்குறை படாஅக் 162 82 கோடுற நிவந்த 266 294 கோதையிணர 296 356 சிலையேறட்ட 289 341 சிறியிலை நெல்லிக் 284 331 சிறுபுன் சிதலை 149 58 சீர்கெழு வியனகர்ச் 219 197 செய்வது தெரிந்திசின் 281 325 செய்வினைப் பிரிதல் 143 47 செல்க பாக 224 206 செவ்வீஞாழல் 240 238 செறுவோர் செம்மல் 231 220 சென்மதி சிறக்கநின் 288 339 தண்கதிர் மண்டிலம் 277 317 தம்நயந்து உறைவோர்த் 151 62 தயங்குதிரைப் பெருங்கடல் 263 287 தாவில் நன்பொன் 212 182 திதலை மாமை 135 29 திரையுழந் தசைஇய 190 139 துஞ்சுவது போல 139 38 துன்னருங் கானமுந் 181 119 துனியின் றியைந்த 241 240 தூதும் சென்ற 251 260 தெண்கழி விளைந்த 159 76 தொடிதோள் இவர்க 269 300 தொடியணி முன்கை 287 337 தொல்நலம் சிதையச் 177 111 தோள்புலம் பகலத் 187 132 தோளுந் தொல்கவின் 209 177 நகைநனி யுடைத்தால் 180 118 நகைநீ கேளாய் 248 254 நட்டோர் இன்மையுங் 279 321 பாட்டு பாட்டு பக்க எண் எண் நரைவிரா வுற்ற 254 267 நல்மரங் குழீஇய 166 89 நன்கலங் களிற்றொடு 124 8 நன்னன் உதியன் 258 276 நன்னெடுங் கதுப்பொடு 283 329 நனைவிளை நறவின் 231 201 நாண்கொள் நுண் 216 191 நாம்நகை யுடையம் 121 1 நாள்வலை முகந்த 300 364 நிலநீ ரற்று 295 354 நிலாவின் இலங்கு 200 160 நினவாய் செத்து 126 12 நீளிரும் பொய்கை 276 315 நுதல்பசந் தன்றே 227 212 நுதலும் நுண்பசப்பு 171 99 நெஞ்சுநடுங் கரும்படர் 152 63 நெஞ்சு நெகிழ்தகுந 267 296 நெடுங்கொடி நுடங்கும் 196 151 நோகோ யானே 153 66 பகல்செய் பல்கதிர்ப் 229 216 பசும்பழப் பலவின் 189 137 பசைபடு பச்சை 244 246 படுமழை பொழிந்த 154 67 பயங்கெழு திருவின் 298 359 பனைத்திரள் அன்ன 148 57 பானாட்கங்குலும் 297 357 பிணங்கரில் வள்ளை 256 272 பிணர்மோட்டு நந்தின் 246 251 பிரசப் பல்கிளை 228 214 பிரிதல் வல்லியர் 223 204 பின்னுவிட நெறித்த 150 60 புகையிற் பொங்கி 265 291 புன்காற் பாதிரி 237 232 பூங்கண் வேங்கைப் 182 123 பெய்துபுலம் திறந்த 217 192 பெருங்கடல் முகந்த 188 135 பெருங்கடல் வேட்டத்துச் 140 40 பெருமலைச் சிலம்பின் 282 326 பேருறை தலைஇய 194 146 பாட்டு பாட்டு பக்க எண் எண் பொறிவரிப் புறவின் 271 305 பொன்னடர்ந்த தன்ன 280 323 மங்குல் மாமழை 294 351 மண்டிலம் மழுக 260 281 மண்ணா முத்தம் 247 252 மணிமருள் மலர 236 230 மதியரும் பன்ன 192 143 மரந்தலை கரிந்து 169 95 மழையில் வானம் 264 289 மன்றுபா டவிந்து 128 16 மாமலர் வண்ணம் 197 153 மான்றமை யறியா 238 234 முதைபடு பசுங்காட்டு 262 285 முரசுடைச் செல்வர் 156 71 மைப்பறப் புழுக்கின் 136 29 யாமம் நும்மொடு 168 93 யாம இரவின் 208 174 வயங்குமணி பொருத 167 91 வயங்குவெள் ளருவிய 202 163 வயிரத்து அன்ன 178 113 பாட்டு பாட்டு பக்க எண் எண் வருதும் என்ற 144 48 வலிமிகு முன்பின் 146 53 வாரணம் உரறும் 172 100 வானம் பெயல்வளங் 291 345 வானம் வாய்ப்பக் 134 28 வானம் வேண்டா 186 130 வானுற நிவந்த 222 202 விசும்பு விசைத்தெறிந்த 273 309 விசும்புற நிவர்ந்த 131 22 விண்டோய் சிமைய 179 116 விண்ணதிர்பு தலைஇய 163 85 விலங்கிருஞ் சிமையக் 215 189 வினைநவில் யானை 213 185 வினைவயின் பிரிதல் 161 81 வீங்குவிளிம்பு உரீஇய 175 106 வெள்ளி விழுத்தொடி 286 334 வேர்முழுது உலறி 145 51 வேலும் விளங்கின 259 278 வேனிற் பாதிரிக் 257 274 வைகல் தோறும் 253 265 ஆசிரியர் பெயர் அகரவரிசை (எண் - செய்யுளெண்) பெயர் பாட்டு எண் அண்டர் மகன் குறு வழுதியார் 228 அம்மூவனார் 140,280 ஆமூர்க்கவுதமன் சாதேவனார் 159 ஆலம்பேரி சாத்தனார் 143, 175 ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் 202 ஆவூர் மூலங்கிழார் 156 ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் 224 இடைக்காடனார் 139, 194, 275, 284 இடையன் நெடுங்கீரனார் 166 இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் 279 இறங்குகுடிக் குன்றநாடன் 215 உம்பற்காட்டு இளங் கண்ணனார் 264 உலோச்சனார் 190, 200, 210, 300 உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் 146 உறையூர் மருத்துவன் தாமோதரனார் 133, 257 உறையூர் முதுகூத்தனார் 137 எயினந்தை மகனார் இளங்கீரனார் 225, 239, 289, 299 எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் 149 எழூஉப்பன்றி நாகன் குமரனார் 138, 140 ஐயூர் முடவனார் 216 ஓரோடோகத்துக் கந்தரத்தனார் 191 ஓரம் போகியார் 286 ஒளவையார் 147, 273 கடியலூர் உருத்திரங் கண்ணனார் 167 கபிலர் 128, 158, 182, 203, 218, 238, 248, 278, 292 கயமனார் 145, 185, 195, 219, 221, 259 கருவூர்க் கண்ணம்பாளனார் 180, 263 கருவூர்க் கலிங்கத்தனார் 183 பெயர் பாட்டு எண் கருவூர் நன்மார்பனார் 277 கல்லாடனார் 171, 199, 209 கழார்கீர னெயிற்றியார் 163, 217, 235, 294 காவன் முல்லைப் பூதரத்தனார் 151 காவன் முல்லைப் பூதனார் 241, 293 காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார். 123, 285 காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார். 271 குடவாயிற் கீரத்தனார் 129, 287 குமுழி ஞாழலார் நப்பசலையார் 160 குறுவழுதியார் 150 கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் 179, 232 கொடியூர் கிழார் மகனார் நெய்தற்றத்தனார் 243 கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் 168 சாகலாசனார் 270 சீத்தலைச்சாத்தனார் 134 செயலூர் இளம்பொன் சாத்தன் கொறறனார் 177 செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார் 250 சேரமான் இளங்குட்டுவன் 153 தாயங்கண்ணனார் 132, 213, 237 தொண்டி ஆமூர்ச் சாத்தனார் 169 தொல் கபிலர் 282 நக்கண்ணையார் 252 நக்கீரர் 126, 141, 205, 227, 249, 253, 290 பரணர் 122, 125, 135, 142, 148, 152, 162, 178, 181, 186, 196, 198, 208, 212, 222, 226, 236, 246, 258, 262, 266, 276, 292 பெயர் பாட்டு எண் பாலை பாடிய பெருங்கடுங்கோ 155, 185, 223, 261, 267, 291 பேயனார் 234 பேரி சாத்தனார் 242 பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் 192 பொதும்பிற் புல்லாளங் கண்ணியார் 154 மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் 144, 174 மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 124, 230, 254, 272 மதுரை ஈழத்துப் பூதன் றேவனார் 231 மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதனார் 207 மதுரைக் கள்ளிற்கடையத்தன் வெண்ணாகனார் 170 மதுரைக் காமக்கண்ணி நப்பாலத்தனார் 204 மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் 229 மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன்றேவனார் 164 பெயர் பாட்டு எண் மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் 256 மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார் 298 மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் 172 மதுரைப் புல்லங்கண்ணனார் 161 மதுரைப் பேராலவாயார் 296 மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் 247 மதுரை மருதனிளநாகனார் 121, 131, 184, 193, 206, 245, 255, 269, 283, 297 மதுரை.... மள்ளனார் 244 மருதம்பாடிய இளங்கடுங்கோ 176 மாமூலனார் 127, 187, 197, 201, 211, 220, 233, 252, 281, 295 முள்ளியூர்ப் பூதியார் 173 மோசிக்கரையனார் 260 வடமவண்ணக்கன் பேரி சாத்தனார் 214, 268 விற்றூற்று மூதெயினனார் 136, 288 வீரை வெளியன் தித்தனார் 188 வெண்கண்ணனார் 130 வேம்பற்றூர்க்குமரனார். 157 ----------------- 165 நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் சிலப்பதிகாரம் தொகுதி 1 1) புகார்க் காண்டம் தொகுதி 2 2) மதுரைக் காண்டம் தொகுதி 3 3) வஞ்சிக் காண்டம் மணிமேகலை தொகுதி 4 4) மணிமேகலை 1 தொகுதி 5 5) மணிமேகலை 2 அகநானூறு தொகுதி 6 6) களிற்றியானைநிரை தொகுதி 7 7) மணிமிடை பவளம் தொகுதி 8 8) நித்திலக் கோவை திருவிளையாடற்புராணம் தொகுதி 9 9) மதுரைக் காண்டம்-1 தொகுதி 10 10) மதுரைக் காண்டம்-2 தொகுதி 11 11) மதுரைக் காண்டம்-3 தொகுதி 12 12) கூடற் காண்டம் -1 தொகுதி 13 13) கூடற் காண்டம் -2 தொகுதி 14 14) திருவாலவாய்க்காண்டம் -1 தொகுதி 15 15) திருவாலவாய்க்காண்டம் -2 தொகுதி 16 16) இலக்கியக் கட்டுரைகள் 17) இலக்கணக் கட்டுரைகள் தொகுதி 17 18) சொற்பொழிவுக் கட்டுரைகள் 19) வரலாற்றுக் கட்டுரைகள் தொகுதி 18 20) வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 21) சோழர் சரித்திரம் 22) கள்ளர் சரித்திரம் தொகுதி 19 23) நக்கீரர் 24) கபிலர் 25) அகத்தியர் 26) இளம்பூரணம் நீதிநூல்கள் + பதிணென்கீழ்க் கணக்கு நூல்கள் தொகுதி 20 27) ஆத்திசூடி 28) கொன்றைவேந்தன் 29) மூதுரை 30) நன்னெறி 31) நல்வழி 32) உலகநீதி 33) நறுந்தொகை 34) இன்னா நாற்பது 35) களவழி நாற்பது 36) கார்நாற்பது 37) திரிகடுகம் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 21 38) நாட்டார் நாட் குறிப்பு -1 - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 22 39) நாட்டார் நாட் குறிப்பு -2 மற்றும் வாழ்க்கை வரலாறு - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 23 40) கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 24 41) நாட்டார் புலமையும் பண்பும் ***** குறிப்புக்கள் (பாடம்) 1. நாள்நகை. 2. உறு கணமழவர். உறுகணை மறவர் ஊறுகணை மழவர். உள் கீண்டிட்ட. 3. கணை விசை. கண் மிசை. 1. தொல். கற்பு : 5 1. தொல். மெய்ப்பாடு : 4 (பாடம்) 2. இரும்பிழி மகாஅரிவ். 3. மருளும் 4. குரையாது 5. உறழ்நிலாக் கான்று. 1. பதிற் : 65 2. கலி. 80 ; 96 3. கலி : 96 4. தொல். புறத் 13 5. தொல். கள : 16 6. இறையனார் அகப் : 30 7. தொல். மெய்ப் : 23 (பாடம்) 1. உறங்கிய 2. உடையை 3. ஒன்றிற் கொல்லாய் 1. மணி : 3 : 90-91 2. தொல். கற் : 5 3. தொல். பொருளி : 2 1. வகுத்துறா 2. மாநகர். 1. கலி : 86 2. குறள் : 1268 3. குறள் : 937 4. தொல். அகத் : 29 (பாடம்) 1. தலைமகன் வினைமுற்றி மீண்டமை தோழி யுணரத் தலைமகள் சொல்லியது. 1. தொல். அகத் : 28 2. தொல். அகத் : 7 3. தொல். அகத் : 26 4. தொல். கற் : 59 5. தொல். கற் : 47 (பாடம்) 6. அறல் வாழ்; 1. அகம் : 142 2. தொல், கற் : 15 3. தொல். களவு : 11 1. அகம்: 347 2. தொல், புள்ளி :98 3. தொல். பொருளி :19 (பாடம்) 4. கோள்வரின் 1. தொல். கள : 20 2. தொல். பொருளி : 2 3. தொல். பொருளி :16 4. தொல். மெய்ப் : 23 (பாடம்) 5. புன்மறைந்து 1. பொங்கர் : 2. அல்குற் கூட்டும். (பாடம்) 1. குறுமுகை. 1. விரைஇப். 2. கவர்பரி. (பாடம்) 1. இதணைப் 2. ஈகை. 1. பெருங் : 3 : 19 34-38 2. சிலப் : 20 : 34 1. தொல். புறத் : 5 2. தொல். பொருளி : 2 1. தொல். அகத் : 21 (பாடம்) 2. இரநாட் டத்தத்து. 1. தொல் - அகத் : 15 1. அகம் : 267 2. அகம் : 331 (பாடம்) 3. புழுக்கி நெய்க்கனி 1. சகடம் வேண்டிய 2. விருப்புற்று. 3. நுதற்குறுவியர். 1. சிலப். : 1.50 - 53 2. புறம் : 224 3. கம்ப. பால. கோலங் காண். 19 4. சீவக. கோவிந்தை : 80 5. தொல். கற்பு. : 4 1. தொல். மெய்ப் : 13 2. முதுகூற்றனார். 1. களவியல். சூத் : 16 (பாடம்) 1. கைக்கொண்டாடின, ளாஅதனன்றோ வன்றே நீடு. 1. அகம் : 98 2. தொல். புறத் : 5 1. அகம் : 108 2. தொல். கள : 24 3. தொல். பொருளி : 16 (பாடம்) 4. புதலே ரணிந்த. 5. துணையோ டமர்துயில் 1. பருவமன்றவர். 1. தொல். அகத் : 12 2. தொல். கற்பு : 48 (பாடம்) 1. துவன்றி 2. வெரீஇ. 1. அகம் : 11 2. களவழி : 17 (பாடம்) 3. அதியற். (பாடம்) 1. பெயலை 1. அகம். : 181 2. அகம். : 208 3. தொல். மெய்ப். : 11 1. தொல். உவம, 1 (பாடம்) 2. கவின் அழிய. 3. ஆடுபல் லகலிலை 4. வெம்முலை. (பாடம்.) 1. வருவேமென்ற. 2. வரியேர் உண்கண், வரியேய் உண் கண். 1. கைய. 2. அமரொறுத்து அட்ட. 1. தொல். அகத் : 24 2. தொல். மெய்ப். 22 (பாடம்) 1. அத்தந்தமியள். 2. துயக்கில் வாழ்க்கை. 1. குறுந் : 34 2. மதுரைக்காஞ்சி : 674 3. தொல். அகத் : 15 (பாடம்) 4. படப்பை நண்ணிய. 1. தொல். மரபு : 39 2. தொல். மரபு : 62 1. தொல். அகத் : 15 2. தொல், அகத் : 54 1. தொல். உயிர்மய. : 83 2. அகம் : 142 3. அகம் : 208 4. பரணர் - பக்கம் 94 (பாடம்) 5. பெருஞ்சமம். 1. ஏர்க்காட்டூர் (பாடம்) 1. வம்புடை 1. தொல். கள : 24 2. தொல். மெய்ப் : 22 (பாடம்) 1. காவன் முல்லை மழுக்கரத்தனார்; காவன்முல்லைப் பூக்கரத்தனார்; காவன் முல்லைப் பூச்சாத்தனார். 1. அகம் . 53 (பாடம்) 2. பிண்டன் உண்முரண். 1. புறம் : 131 (பாடம்) 1. பை அணர்த்தன்ன. 2. காமர் பிணையோடு. (பாடம்) 1. தோடார். 1. அகம் : 301 2. அகம் : 108 1. குறள். 142 (பாடம்) 1. சேயரிப் புனிற்றாக் கதிர்முதல் தின்ற 2. ஆர்க்கும். 3. கழனி யாம்பல். 4. காமர் ஞாயிற் (பாடம்) 1. பகுவாய்ப் பாளைக் குவிமுலை; பகுவாய் யானைக் குவிகுலை. 2. இருத்தலாற்று வோர்க்கே. (பாடம்) 1. மின்னு மிளிர்ந்தன்ன 1. மன்ற மாத்த 2. முருகினன்ன. 3. இவளது செயலே. 1. தொல், களவு, 23 2. தொல். களவு. 24 1. (பாடம்) கவலை காதலர். (பாடம்) 1. பாம்புயிர். 1. குறுந் : 152 2. ஐங்குறு. மருதம். 44 (பாடம்) 1. நசைஇய வாழ்கட் 2. எண்ணினர். (பாடம்) 3. பல்லிதழ் மழைக்கண் 1. சீவக. 171 (பாடம்) 1. அதியன்; அதகன். (பாடம்) 1. வருநசை. 2. விளியா வெவ்வம் ; விளிய வெவ்வம். (பாடம்) 1. வெறி வென்றன்றே. 2. 9-10. இனையா வின்னாது. 1. தொல். அகத் : 24 (பாடம்) 2. ஈன்றோட்டாராய். (பாடம்) 2. சூடி. 3. மருமகள். 1. தொல். அகத் : 36 2. தொல். பொருளி. 5 3. பரத்தை தன் பாங்கிக்கு (பாடம்) 4.நீவெய்யோள் 1. தோடு தோய். 1. தொல். மரபியல், உரை : 87 2. தொல். கற். 10 3. தொல். கற். 23 (பாடம்) 4. உரிஞ்ச : 5. மாடக் கெழுதணி 1. பானாய் துள்ளி பறைகட்சீறில். 1. கலி. 2. தொல். கற்: 5 (பாடம்) 3. வல்லாண் குன்றிற். 1. குறுந் : 215 (பாடம்) 2. வயங்கு கதிர். 3. மழுங்கிய 4. நெகிழ்த்த. (பாடம்) 1. ஒருநீய. 2. பறவை தளரும்; பறைஇ தளரும் 3. கிளரும் 4. வேண்டுமாரலவ. 1. தொல். உவம : 9 2. தொல். பொருளி : 2 3. தொல். மெய்ப். 22 4. தொல். மெய்ப்: 23 (பாடம்) 1. அணிநுதல். 2. புதற்போர் குரம்பை. 3. முழவு முதற்பலவு. 1. பசலை யாயின்று. (பாடம்) 1. முன்னியூர் வழுதியார். 1. பாலைக் 4 2. தொல். பொருளி. 19 (பாடம்) 3. கையற்றிரங்கி; 4. ஊழுறு கிளர்வீ. 1. தொல். அகத் : 24 2. தொல். அகத் : 41 (பாடம்) 3. நிரைந்த. 1. கலி. நெய் : 8 2. குறுந். 53 (பாடம்) 3. மனைநடு. 1. தொல். கற். 6 2. தொல். மெய். 5 3. தொல். மெய். 24 (பாடம்) 1. சுணங்கடை. 2. செல்லூர் இளம்பொன் சாத்தன் கொற்றன்; உறையூர் இளம்பொன் வாணிகன் சாத்தன் கொற்றன். 1. தொல். சொல். 2. குறுந். 265 3. அகம் 253 4. அகம் : 54 (பாடம்) 1. பிரிபறி யலரே. 1. குறுந் 49 2. அகம் :66 (பாடம்) 3. வறள்வாய். 4. இரும்புகொள் 5. வாண்முகம் (பாடம்) 1. கருவூர்க் கண்ணம் பாணனார்; கண்ணன் பரணனார். (பாடம்) 1. வண்மை எயினன். 2. அயிர்கொடீண்டி. 3. தைஇப் 4. பொழின் மணமகளிர் 5. பகர்வர் 6. வண்டாடைம்பால் 1. அகம் . 142 2. அகம் : 208 3. புறம் : 166 (பாடம்) 1. மலைந்து (பாடம்) 1. விரைந்து நீர் (பாடம்) 1. கோடுடைத்தலை. 1. சிலப் : 15, 143-147 2. குறள். 60 3. நான்மணிக் : 103 (பாடம்) 1. வலிது. (பாடம்) 1. இருங்கயந் தயங்க. 2. மண்டை பாழ்பட. 3. வெல்பரி 4.உரிதினினயர்ந்த; உரிதினினார்ந்த 1. அகம் : 6 2. அகம் : 336 (பாடம்) 1. சேய்நாட் டலந்தலை. 2. கலைசேர்பு இருந்த. 3. வேனில் வைப்பிற் கானிலங் காய 4. நெடுநாட்டாரிடை. 5. விலங்கு கதிர். (பாடம்) 1. யோச்சியும். 2. தைஇயும். 1. குறிஞ்சிப் பாட்டு : 43-44 1. தொல். பொருளியல் : 48 (பாடம்) 2. உள்ளமொடு (பாடம்) 1. வண்டோட்டு. 2. வவ்வி 3. உரையினி (பாடம்) 4. உரோடோகக் கவுணியன் சேந்தன். (பாடம்) 1. செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. 2. மதியிருப்பன்ன 3. இறங்கு குரலிறுத்தன; இறங்கு பொறையிறுத்தன. 4.வியலகம் 5. வெங்கண்ணன். (பாடம்) 1. கொல்பசி 1. குறள். வான். 4 2. அகம். 51 3. அகம். 31 (பாடம்) 1. இரங்க. (பாடம்) 2. காடுழவொழித்த 3. கார்ம னிகுளை தோழி. 1. குறள் 10 4-7 (பாடம்) 1 நலம்புனை யுதவியோவுடையன் 2. அஃதறி கற்பினன்று. 1. தொல். அகத். 36 1. தொல். கள. 24 2. தொல். கள. 49 3. தொல், கற். 2 4. தொல். செய். 187 1. தொல். அகத் : 8 2. அகம் : 262 (பாடம்) 1. முன்னுநர். 2. மாமிகு 3. தேமுதிர் - குன்ற. (பாடம்) 1. கார்மலர் கமழும். 2. இனமழை, 3. பெரியள் அம்மா. 1. சிலப். 16 : 118-119 1. தொல். கள. 12 2. தொல். கள.40 (பாடம்) 3. தொகை நிலை 4. ஒய்யென வலறிய 5. தேரிய 6. பொருகளத் தொழிய 1. பதிற்று 40 : 14-16 2. பதிற்று 4 பத்து, பதிகம் : 7-8 3. பதிற்று : 38:4 4. தொல். கற்பு. 44 (பாடம்) 1. நக்கீரர். (பாடம்) 1. ஆவூர் கிழார் மள்ளனாகனார். (பாடம்) 1. செவிலி. (பாடம்) 1. பண்ணன் சிறுகுடி. 1. மலைபடு. 348 (பாடம்) 1. நகுவரப் படைத்த. 1. நற். 88 2. கலி. 138 3. குறுந். 165 (பாடம்) 4. செவிலி 1. மொழிமை. 1. புறம் : 109 1. அகம் : 396 2. அகம் : 206 *(பாடம்) 3 சேரலற்கு. 1. அகம் - 36 2. தொல். கள. 23 (பாடம்) 3. படருந் துறைவன். (பாடம்) 1. அகன்கட் கதவின் (பாடம்) 1. நோக்கிச் சொல்லியது. 1. விரவு மொழித் தகட்டூர். 1. பதிற்று. 5 ஆம் பத்து, பதிகம். 2. தொல். பொருளியல்.2 (பாடம்) 3. எரிமருள் கதிர்மணி யிமைக்கும் அத்தம். 4. தையங் கண்ணனார் ; இதையங் கண்ணனார். பாடபேதம் - 1. தெளித்த. 1. தொல். அகத். 24. 1. தொல். அகத் : 32 (பாடம்) 1. தண்புனல். 1. தொல். அகத். 19 (பாடம்) 2. பெய்துபுறந்தந்த. 1. கொழுமுகையுடைய 2. குயினாநரல 3. யீர்க்கே. 1. புறப்பொருள் வெண்பாமாலை 6-12 (பாடம்) 2. குளகருந்த. 1. வரவரிதென்னாய். 1. தொல். அகத். 3 (பாடம்) 2. பிறந்ததற் கொன்றும் (பாடம்) 1. குரூஉச்சமம். (பாடம்) 2. நிலையின் வருந்தினை 3. இருபுள் 1. குறுந். 231 1. குறுந். 57 (பாடம்) 2. செயலை வெள்வேல் (பாடம்) 3. வாங்கு சினை கொய்த (பாடம்) 1. நோய்க்கென் 1. தொல். பொருளியல். 27 2. அகம். 45 (பாடம்) 3. நெடும்பொங்கர். 4. வெங்கட் 1. நுண்டுகளடங்க. (பாடம்) 1. ஆவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன். 1. குறிஞ்சிப் 15 2. அகம். 9 1. பதிற். 40 2. அகம். 6 (பாடம்) 1. பன்னாணீர்மலி. (பாடம்) 2. பிடிமகிழுறுதுணை. 3. விழவுறு திருநகர். 1. நற். 300 2. தொல். பொருளியல். 244 (பாடம்) 3. மிளைஇய. 1. தொல். உவம. 9 2. தொல். கள. 20 1. குறள். 76 : 9 2. அகம் . 93 3. கலி. 11 : 1-4 1. சிலப். ஊர்காண். 195 - 6. 1. புறம் 2 2. சிலப் - வாழ்த்து, ஊசல்வரி, 6-8 (பாடம்) 3. கொளீஇ. 4. மூழ்கிய 1. கண்ணோக்கு ஒளிக்கும் 2. தகர் நனை. 3. கழார்க் கீரன் எயிற்றியார். 1. தொல். கற். 53 2. பொருந. 165 (பாடம்) 1. களவன் 2. அருளின்று. 1. நெடுநல். 19-20 (பாடம்) 1. வெவ்விளர் 2. இடைநிலம். 3. மாஅத்த அஞ்சினை. 1. அகம். 222 2. தொல். மெய் 8 (பாடம்) 3. புன்கம் உயர்த்த. 4. தவிரலர். (பாடம்) 1. பணை மருள். 2. கடுமான் நள்ளி. 1. புறம் 190 2. அகம். 29 (பாடம்) 3. அணிதோ தானே எவனா குவங்கொல். 4. நெருநையும். 1. தொல். பொருள். புறத். 3 ஆம் சூத்திர மேற்கோள் (பாடம்) 1. கருங்கோட் டஞ்சினை. 1. தொல். அகத். 5 2. தொல். கள. 30 3. தொல். கள. 41 4. தொல். பொருளியல். 16 (பாடம்) 5. அலங்கு நிலை. 6. நீண் மரம். (பாடம்) 1. நளிமுகை. 2. மலர்ந்த மார்பு. (பாடம்) 1. நில்லா தேங்கி 2. வலித்தன்மை. 3. அறியுநமாயின். (பாடம்) 4. குடிக்கிழார் மகனார். (பாடம்) 1. பகைபடு பச்சை 1. வருந்துவள் அவளென 2. நெடுந்தேர் ஏவு மதி. 1. தொல். பொருள் அகத். 32 (பாடம்) 2. அன்பில் வாழ்க்கை 1. பதிற்று 30 2. பதிற்று. 68 (பாடம்) 1. களவன். 2. காய்சின் முன்பின் 1. தொல். மரபு. 49 (பாடம்) 1. மதுரை மருதங்கிழார் மகனார் வெண்ணாகனார். (பாடம்) 1. மடக்கிளையோடு. 1. தொல். புறத். 8 1. தொல். களவியல் 21 2. தொல். மெய்ப் 4 (பாடம்) 3. ஏந்து துளங்கிமிலெழில். (பாடம்) 1. நந்தர் வெறுக்கை (பாடம்) 2. வரைவா யும்பர் 1. குத்திய புகழொடு 1. பதிற்று. 49 2. மதுரைக் 508 - 509 3. அகம் 69 (பாடம்) 1. தெழி மழை. 2. திண்பொற் கோழிக் காவிதி மகன் கண்ணனார்; நக்கணன். 1. மதுரைக்காஞ்சி. 10 2. அகம். 208 (பாடம்) 1. நெடுமதிற் கூடல் 2. ஏராஉய்ய. 1. அகம். 311 (பாடம்) 2. பலர்பா ராட்ட 1. முல்லையொடுதோன்றி தோன்ற. 2. அளவையி னீடாது 3. கபிலர். 1. பதிற்று. 31 1. தொல். பொருள். அகத். 37 1. தொல். அகத். 11 2. தொல். அகத். 24 (பாடம்) 3. நுகர்வார் உந்து. 4. பொய்யா னறிவன். 1. அகம். 356 1. தொல். அகத். 15 (பாடம்) 2. அல்ல குறிப்பட்ட தலைமகன். 1. வாழி யென்னெஞ்சே. 1. தொல். கள. 11 1. தொல். அகத். 39 பாடம்) 1. மலர்பரந்தூத மிசைய 2. யாங்கா குவல்கொல் யானே. 1. தொல். செய். 92 1. தொல் - செய். 78 2. தொல் - செய். 92 1. தொல். அகத். 45 (பாடம்) 2. கொண்டகன் மாமலை. (பாடம்) 1. மேலாள் ஒற்றி. 2. மராஅத்து. 1. புறம் 109 2. குறள் 632 3. கம்ப. பால. அரசியல்: 12 1. தொல். அகத். 12 2. தொல். அகத் 44 (பாடம்) 3. புலராக் கையர். 1. தொல். சொல். 305. (பாடம்) 1. பரப்பினந்தி. 2. பராஅய புது 3. பெரும்பூட் பொருந்திலர்; பசும்பூட் பொருந்திலர். 1. பத்து குறிஞ்சிப் 58 1. பரணர். பக்கம் 54-55 2. புறம் 55 3. தொல். கற்பு 9 (பாடம்) 4. நெஞ்சு நெகிழ்க்குந 5. உளைதல் ஆன்றிசின். 6. முசுவினம். 1. நெகிழ்ந்த. 1. குறுந். 121 1. சிவஞானபாடியம், சூத். 9 உரை. 2. தொல். சொல். எச். 54 (பாடம்) 1. நறுவரை 2. பெருநிழற் கானல். 1. குறிஞ்சிக், 23 (பாடம்) 2. தொன்னலம் சிதைய. 3. இன்னாது உயவும். 4. நும்மூர் உள்ளுவை. (பாடம்) 1. பிரிவுணர்த்திய தோழி-, (பாடம்) 2. வாய்வதாக. 3. அவையன். 1. குறுந். 209 (பாடம்) 1. பணியலை. 1. தொல். கள. 24 (பாடம்) 2. விசைத்தெழுந்த 3. தன்மையன்மையின் 4. நிலைவரம்பு 5. நாரில் பெருமரம். 1. அகம் : 178 1. குறள். அலரறி. 7 (பாடம்) 1. இரியப் பெயரும். 2. கல்லாடனார். (பாடம்) 1. செவிலி சொல்லியது. 2. வளமனை கழிப்பி 3. எண்கின் இருங்கிளை 4. வெம்முன அருஞ்சுரம். 1. அகம் 7 2. கலி. குறிஞ்சி 24 3. தொல். அகத். 37 1. தொல். மரபு 42 1. தொல். கற். 10 2. தொல். இடை 5 (பாடம்) 3. செறும்பினனைய. 4. அசைவின ரிருக்கும். (பாடம்) 5. புன்காய் முருக்கின். 1. பெரும்பாண் 156 2. சிந்தா - 2717 (பாடம்) 3. பெருவரை 4. சிவப்பப் பன்னாள். 1. பரிபாடல் 22:1-2 2. கார்நாற்பது 12 3. அகம் 123 4. அகம் 186 5. திருவிளை. மண்சுமந்த 5 (பாடம்) 1. நறைமலி பொங்கர். 2. இருங்கோக் கண்ணனார். 1. அகம். 231 (பாடம்) 1. ஆயினந்தில். (பாடம்) 2. உப்புடனுழுதும் 3. மடுத்தனம் விரும்பில் 4. பரதவன் மகளே. 1. அகம். 140 1. தொல். கள. 50 (பாடம்) 2. அகலுள் ஆண்மை. 1. குறிஞ்சிப் 4 (பாடம்) 2. கிளர. 1. ஒருங்குடன் சாற்றிச் 2. கடவுட் காக்குதும். 1. குறு 54 2. தொல், கள. 24 (பாடம்) 3. நீவி 4. ஏகுநர்க்கு 5. பரிப்ப. (பாடம்) 1. உடன்போக்கு அமைத்த. 1. புறம் 34 1. சிலப் : வாழ்த்துக். 26 1. குறள் 422 2. இறையனார் களவியல் 18 3. தொல். புறத் 21 1. தொல். கற்பு 9 1. புறம் - 52 2. அகம் 307 3. குறள் 1021 4. சிலப். 4-24 (பாடம்) 5. கொங்கோ டுதிர்த்த. 6. முத்தூற்று மூதெயினனார். (பாடம்) 1. நிரைநிலை. 1. குறள். 123 - 1 (பாடம்) 1. மலரே மாணலம். 1.சிறுபாண். 45 (பாடம்) 1. மருப்பொழிந்த. (பாடம்) 1. வன்கட் கானவன். 1. குறள், 1015 2. குறிஞ்சிக்கலி 5 (பாடம்) 1. துகிலா னெய்கை. 2. வேல்வெங்களரி 3. செல்ப என்னுநர். 4. என்மயங் கினர்நம் (பாடம்) 1. பொழிந்த பின்றை. 1. இருவகிர் இருளின் 2. தனிமையினானே. 1. சிந்தா. 2791 2. தொல். அகத். 12 (பாடம்) 1. நீடியவெயட்டு. (பாடம்) 1. துஞ்சினை இன்றும். 2. கூடல் நீடிய. 1. அகம். 253 (பாடம்) 2. கடுங்கணை மழவர் 3. மருங்கில் நுணுகிய 4. தொன்று குயிலெழுத்து 1. சுரமுதலிருந்த, 1. அகம். 5 2. குறுந். 12 (பாடம்) 1. 11-14. ஏந்தி, மென்பிணி யவிழ்ந்த தாழ்பூங்கோதை, ஊதுவண்டிரிய வழிப்பணை முயங்கிய, நீவந் ததனினும். 2. காவல். (பாடம்) 1. எல்லியும் இரவும். 2. முன்னம் 3. வல்லினமாயினும் 4. பருந்தினம் 5. அகலிடைச் செல்லுநர் 6. காய்கலத் தம் (பாடம்) 1. பெருங்கலி. (பாடம்) 2. ஓதமலி கடலின். 1. தொல்.கள. 16 2. தொல். கள. 23