நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 4 மணிமேகலை 1 - 21 ஆம் காதை வரை உரையாசிரியர்கள் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் வித்துவான் ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 4 உரையாசிரியர்கள் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் வித்துவான் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம், பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 352 = 376 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 235/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் 124 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு வல்லுனர் குழு 1. முனைவர் கு.திருமாறன் 2. முனைவர் இரா.கலியபெருமாள் 3. பேராசிரியர் சண்முக.மாரி ஐயா 4. பேராசிரியர் நா.பெரியசாமி 5. முனைவர் பி.தமிழகன் 6. முனைவர் மு.இளமுருகன் பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற்காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “ சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரியவர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேசபண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்விகளிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல் களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக்கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவ நேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக் குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரண மாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர் களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 அணிந்துரை மணிமேகலை - பதிப்பு வரலாறு மணிமேகலை மூலம் - 1891 மணிமேகலையின் மூலம் 1891 ஆம் ஆண்டில் திருமயிலை சண்முகம் பிள்ளையால் அச்சிடப் பெற்றது என்னும் செய்தியை டாக்டர் சாமிநாதையர் எழுதிய குறிப்புகளால் அறிய முடிகின்றது (என் சரிதம் பக். 1018) அதனைப் பதிப்பிக்கும் காலத்திலேயே அதைப் பற்றி நன்கறிந்த தி.த. கனகசுந்தரம் பிள்ளை 29.3.1891-இல் ஒரு கடிதம் எழுதியுள்ளார். மணிமேகலையில் அச்சிடப் பெற்ற மூன்று படிவங்களைப் பார்த்த பின்னர் அக் கடிதத்தை வரைந்துள்ளார். பின்னர் மணிமேகலைப் பதிப்பை ஐயர் எடுத்துக் கொண்டபோது (1898) “அப்பதிப்பு வெளிவந்து ஏழு வருஷங் களாயினமையின் நான் செய்த ஆராய்ச்சியின் பயனாகப் பலவகைக் குறிப்புகளுடன் மணிமேகலையை வெளியிடுவதில் பிழையில்லை என்று கருதினேன்” என்று குறிப்பிடுகிறார். ஆதலால் 1891-இல் சண்முகம் பிள்ளை மணிமேகலையைப் பதிப்பித்தார் என்பது விளங்குகின்றது. ஆனால் அப்பதிப்பு நூலைக் காண்டற்கு இயலவில்லை. 1894ஆம் ஆண்டில் வெளிவந்த நூலை அறிய முடிகின்றது. அதனை மேலே காண்போம். மணிமேகலை - மூலம் - 1894 கையில் கிடைத்துள்ள அளவில் மணிமேகலையின் முதற்பதிப்பு இதுவேயாகும். புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார் மாணவர் திருமயிலை சண்முகம் பிள்ளை தமக்குக் கிடைத்த சுவடிகளைக் கொண்டு ஆராய்ந்து அச்சு அணியம் செய்தார். கயப்பாக்கம் இரத்தின செட்டியார் மைந்தர் முருகேச செட்டியார் சென்னை ‘ரிப்பன்’ அச்சுக் கூடத்தில் பதிப்பித்தார். வெளியிடப்பெற்ற காலம் ‘விஜயஸ்ரீ தனுர் ரவி’ எனக் குறிப்பிடப் பெற்றுள்ளது. சண்முகம் பிள்ளையின் 1891 ஆம் ஆண்டு மணிமேகலைப் பதிப்பையே முருகேச செட்டியார் பதிப்பாசிரியராக இருந்து மீண்டும் பதிப்பித்திருக்கக் கூடும். இந்நூலின் முற்குறிப்பில் விலை 12 அணா என்றுள்ளது. பிற்குறிப்பில் விலை ரூ.க. என்றுள்ளது. சண்முகனார், மணிமேகலை ஏடுகள் சிலவற்றைக் கொண்டு ஆராய்ந்து மூலத்தை ஒழுங்கு செய்து கொண்டார். பதிகத்திலும். மணிமேகலை முப்பது காதைகளிலுமாகப் பாட வேறுபாடுகள் 21 காட்டியுள்ளார். பின்னேயும் சில சுவடிகள் கிடைத்தன. அச்சுவடிகளால் மேலும் சில திருத்தங்களும் பாட வேறுபாடுகளும் கிடைத்தன. அவ்வகையால் கிடைத்த பாட வேறுபாடுகள் 51 ஆகும். ஆக மொத்தம் 72 பாட வேறுபாடுகள் இவர் பதிப்பில் காட்டப் பெற்றுள்ளன. ஆனால் டாக்டர் சாமிநாதையர் பதிப்பில் 1357 பாட வேறுபாடுகள் காட்டப் பெற்றுள்ளன. இவற்றால் அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும், சுவடிப் பெருக்கமும் இனிதின் விளங்கும். மணிமேகலை - அரும்பதவுரையுடன் - 1898 இது டாக்டர் சாமிநாதையர் பதிப்பாகும். நான்கு ஆண்டுகளின் முன்னே திருமயிலை சண்முகம் பிள்ளையின் மணிமேகலை மூலப்பதிப்பு வந்ததைச் சாமிநாதையர் அறிவார். அதனை ஆராய்ந்து பார்த்தார். அதில் திருத்தம் பெறவேண்டிய பகுதிகள் மிகுதியாக இருப்பதை உணர்ந்தார். அவர் தொகுத்து வைத்திருந்த சுவடிகள் அவர் செய்ய வேண்டிய திருத்தங்களை எடுத்துரைத்தன. அன்றியும் அறிஞர்கள் சிலரும் மணிமேகலைப் பதிப்பு, உரையுடன் வெளிவருதலை மிக விரும்பி வலியுறுத்தினர். குறிப்பாக யாழ்ப்பாணம் தி.த.கனகசுந்தரம் பிள்ளை “ஏட்டுப் பிரதியில் இருக்கின்றபடியே இருக்கின்றது. ஏட்டுப் பிரதியில் இருப்பது இதிலும் நலமென்று சொல்லலாம். ஏட்டில் சொக்கலிங்கம் என்றிருப்பதை ஒருவர் முழுவதும் கலிங்கமென்று பொருள் பண்ணி வாசித்தபோதிலும், மற்றொருவராவது சந்தர்ப்பம் நோக்கிச் சொக்கலிங்கமென்று வாசிப்பார். இவர்கள் அதனைச் சேரக் கலிங்கமென்று அச்சிலிட்ட தன் பின் ஏட்டைக் காணாதவர்களெல்லாம் சேரக் கலிங்கமென்றுதானே படிக்க வேண்டும்? ‘எட்டி குமரன் இருந்தோன் தன்னை’ என்பது ‘எட்டிரு மானிருந்தோன்’ என்றும், ‘ஆறறியந்தணர்‘ என்பது ஆற்றிஅந்தணர் என்றும் அச்சிடப்படுமாயின் அதனால் விளையும் பயன் யாதென்பதைத் தாங்களே அறிந்துகொள்ளவும் (29.3.1891) என்று எழுதியிருந்தார். தம் வேட்கையும் அன்பர்கள் தூண்டுதலும் மணிமேகலைப் பதிப்பை விரைவு படுத்தின. தமிழ் நூல்களில் பௌத்த சமயம் தொடர்பாக வரும் பகுதிகளைத் தேடித் தொகுத்தார். நீலகேசி உரையில் பௌத்த சமயக் கண்டனமாக வரும் இடங்களில் அமைந்த புத்தர் வரலாற்றையும், புத்த சமயக் கொள்கைகளையும் ஆய்ந்து எழுதிக் கொண்டார். வீரசோழியத்தில் புத்ததேவனைப் பற்றி வரும் வாழ்த்துப் பாடல்களை எழுதி ஆய்ந்தார். சிவஞான சித்தியார் -பரபக்கம், ஞானப் பிரகாசர் உரை இவற்றில் வரும் பௌத்த சமயக் கருத்துக்களை இராவ்பகதூர் மளுர் அரங்காசாரியார் வழியாக அறிந்தார். வடமொழித் தொடர்களில் எழுந்த ஐயங்களை, பெருகவாழ்ந்தான் அரங்காசாரியராலும், திருமலை ஈச்சம்பாடி சதாவதானம் சீனிவாசாசாரியராலும் அகற்றிக் கொண்டார். மணிமேகலை இலங்கைக்குச் சென்றது பற்றிய செய்தியைக் கொழும்பு பொ.குமாரசாமி முதலியார் வழியே ஆங்கிருந்த பௌத்த சமய ஆசிரியர் சுமங்களர் என்பவரால் தெளிவு செய்து கொண்டார். இவ்வாறு பல்வேறு அறிஞர்களின் அருந்துணையாலும், தம் அயராமுயற்சியாலும் மணிமேகலை நூல் நுட்பம் கண்டார். அரும்பதவுரை எழுதி அதனுடன் பதிப்பிக்கத் தொடங்கினார். இப்பதிப்பின் செலவை பொ.பாண்டித்துரைத் தேவர் ஏற்றுக்கொண்டார். உடனிருந்து ஆராய்வார்க்குச் சிறுவயல் குறுநிலமன்னர் முத்துராமலிங்கத் தேவர் மாத ஊதியம் வழங்கினார். கொழும்பு பொ.குமாரசாமி முதலியார் அவ்வப்போது தக்க உதவி புரிந்தார். இதன் முதற்பதிப்பு 1898-ஆம் ஆண்டிலும் இரண்டாம் பதிப்பு 1921-ஆம் ஆண்டிலும் வெளியிடப் பெற்றன. இப்பதிப்பு களுக்கு 12 சுவடிகள் ஆராய்வுக்குக் கிடைத்தன. திருவாவடுதுறை ஆதீனத்துச் சுவடி 1 எட்டையபுரம் பெரிய அரண்மனை சுவடி 1 மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர் சுவடி 1 திருநெல்வேலி திருவம்பலத் தின்னமுதம் பிள்ளை சுவடி 1 சேலம் இராமசாமி முதலியார் சுவடி 1 நல்லூர் சிற்.கைலாசபிள்ளை சுவடி 1 ஆறுமுகமங்கலம் சுந்தரமூர்த்திப் பிள்ளை சுவடி 1 திருமயிலை சண்முகம் பிள்ளை சுவடி 1 சென்னை தி.முத்துக்குமாரசாமி முதலியார் சுவடி 1 சென்னை அரசாங்கக் கையெழுத்துப் புத்தக சாலை சுவடி 1 மதுரைத் தமிழ்ச் சங்கப் பாண்டியன் புத்தகசாலை சுவடி 1 சென்னை பார்சுவநாத நயினார் சுவடி 1 வழக்கம் போலவே முதற் பதிப்பினும் பின்வந்த பதிப்பு களில் பலவகைத் திருத்தங்களும், சீரிய அமைப்புகளும் பெற்று வந்தன. ஆராய்ச்சிக்குக் கிடைத்த சுவடிகளில் மிதிலைப்பட்டிச் சுவடியின் சிறப்பு தன்னிகரற்றதாகும். “மிகப் பழமையானதும் பரிசோதனைக்கு இன்றியமையாததாக இருந்ததும் மற்றைப் பிரதிகளில் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் போகிய பாகங்களை யெல்லாம் ஒழுங்குபடச் செய்ததும் கோப்புச் சிதைந்து அழகுகெட்டு மாசுபொதிந்து கிடந்த செந்தமிழ்ச் செல்வியின் மணிமேகலையை அவளணிந்து கொள்ளும் வண்ணம் செப்பஞ் செய்து கொடுத்ததும் மிதிலைப் பட்டிப் பிரதியே” என்று ஐயர் எழுதுவது இதன் சிறப்பை நன்கு உணர்த்துவதாம். இச்சுவடியிலேதான் ‘பதிகம்’ , ‘கதைபொதி பாட்டு’ எனவும், விழாவறை காதை முதலியன ‘விழாவறைந்த பாட்டு’ முதலியன வாகவும் குறிக்கப் பெற்றிருந்தன.இக்குறிப்பால் காதைகளைப் பாட்டு என்று வழங்குவது உண்டு என்பதும், ‘ஆறைம் பாட்டினுள் அறிய வைத்தனன்’ என்னும் பதிகக் குறிப்பு விளக்கமும் புலப்படும். இன்னும் சில காதைகளின் தலைப்பை விரித்து விளக்குமாப் போலவும் இச்சுவடித் தலைப்புகள் இருந்தன. பளிக்கறை புக்ககாதை என்பது மணிமேகலை உதய குமாரனைக் கண்டு பளிக்கறை புக்க காட்டு என்றும் ‘மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய பாட்டு என்றும், சக்கர வாளக் கோட்டமுரைத்த காதை என்பது. மணிமேகலா தெய்வம் சக்கரவாளக் கோட்டமுரைத்து அவளை மணிபல்லவத்துக் கொண்டுபோன பாட்டு என்றும் இவ்வாறே பிறவும் விளக்கம் பெற வந்துள்ளன. பாகனேரி தனவைசிய இளைஞர் தமிழ்ச் சங்க வெளியீடாக வெளிவந்தது மணிமேகலை. முழுதுறும் உரைப்பதிப்பு. உரையாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள். வெளியிட்டவர் வெ.பெரி.பழ.மு.காசிவிசுவநாதன் செட்டியார். விற்பனை உரிமை திருநெல்வேலித் தென்னிந்ததிய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பெற்றிருந்தது. கழக அப்பர் அச்சகத்திலேயே பாகனேரித் தமிழ்ச் சங்க வெளியீடுகளாகிய அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, கலித்தொகை என்னும் பழந்தமிழ் நூல்கள் அச்சீட்டுப் பொறுப்பும், விற்பனை உரிமையும் கழகமே கொண்டிருந்தது. விசுவநாதர் கழகத் தலைவராகவும் நெடுங் காலம் இருந்தார் என்பதும் எண்ணத் தக்கதாம். நாவலர் ந.மு.வே. அவர்கள் தம் உடல்நலம் குன்றிய நிலையில் மணிமேகலைக்கு உரை எழுதினார். அறிவறிந்த தம் அருமை மகளார் சிவ.பார்வதியம்மையார் தக்காங்கு உதவினார். எனினும் மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகளுக்கே உரையெழுதி முடிக்கப்பட்ட நிலையில் புகழ்வாழ்வு பெற்றார். ஆதலால் சிலப்பதிகாரத்திற்கு எழுதிய முன்னுரை ஆய்வுரை அருஞ்சொல் அடைவு என்பவை இடம் பெற்றில. எழுதாமல் நின்றிருந்த சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை (27) கச்சி மாநகர் புக்க காதை (28) தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை (29) பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை (30) என்னும் நான்கு காதைகளுக்கும் உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை அவர்கள் விரிவான உரையெழுதி நூலை நிறைவு செய்தார்கள். இதுகால் பெருமக்கள் அறிவாக்கம் நாட்டுடைமைப் பொருளாக்கப்படுதல் என்னும் நன்னோக்கால், பொதுமை பூத்துப் பொலியும் வளமாக வெளிப்படுகிறது. அவ்வெளிப் பாட்டைச் செய்பவர், தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திருமலி கோ.இளவழகனார். தமிழ்மண், தமிழ்மொழி, தமிழ் இனம் என்னும் முக்காவல் கடனும் முறையாக ஆக்குவதே நோக்காகக் கொண்டவர் இப்பெருமகனார்! நாவலர் தம் முழுதுறு படைப்புகளையும் தமிழுலகம் கூட்டுண்ண வழங்கும் இத்தோன்றல், தொண்டு வழிவழிச் சிறப்பதாக! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன் திருவள்ளுவர் தவச் சாலை திருவளர்குடி (அஞ்சல்) அல்லூர், திருச்சிராப்பள்ளி - 620101 தொ.பே. : 0431 2685328 பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங் களை யெல்லாம் தேடியெடுத்து உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மை யாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக் கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்ட தால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும் போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு....., செயல் செய்வாய் தமிழுக்கு...... ,ஊழியஞ் செய் தமிழுக்கு ......., பணி செய்வாய்! தமிழுக்கு..., இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.” எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங் களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலனார் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற்குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடு வதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப் புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகு குரு. செயத்துங்கன், பேரா.கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெரு மக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iv அணிந்துரை xi பதிப்புரை xvi மணிமேகலை பதிகம் 1 1. விழாவறை காதை 13 2. ஊரலருரைத்த காதை 23 3 மலர்வனம் புக்க காதை 33 4. பளிக்கறை புக்க காதை 55 5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை 71 6. சக்கரவாளக்கோட்ட முரைத்த காதை 89 7. துயிலெழுப்பிய காதை 113 8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை 129 9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை 135 10. மந்திரங் கொடுத்த காதை 144 11. பாத்திரம் பெற்ற காதை 157 12. அறவணர்த் தொழுத காதை 175 13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை 189 14. பாத்திரமரபு கூறிய காதை 203 15. பாத்திரங்கொண்டு பிச்சை புக்க காதை 216 16. ஆதிரை பிச்சையிட்ட காதை 228 17. உலகவறவி புக்க காதை 243 18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை 257 19. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை 278 20. உதயகுமரனை வாளாலெறிந்த காதை 299 21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை 315 அருஞ்சொல் பொருள் அகரவரிசை 336 மணிமேகலை 1 - 21 ஆம் காதை வரை உ கடவுள் துணை மணிமேகலை பதிகம் (கதை பொதி பாட்டு) (சோழர் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்திற்கு அப் பெயரும், சம்பாபதி யென்னும் பெயரும் உண்டானமை புனைந்துரை வகையாற் கூறப்படுகின்றது. ஆதிப்பிரம சிருட்டியிலேயே அப்பதி சம்பாபதி என்னும் பெயருடன் படைக்கப்பட்டதென்பது அதன் எல்லையற்ற பழமையையும் நாவலந் தீவிற்கே அது முதன்மையான பதி என்பதையும் காட்டுவதாகும். காவிரியானது ‘கோடாச் செங்கோற் சோழர்தம் குலக்கொடி,' என்றும், ‘கோள்நிலை திரிந்து கோடை நீடினும், தான் நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை,' என்றும் அருமை பாராட்டிப் புகழப்படுகின்றது. சம்பாபதி யென்னும் தெய்வத்தானும், காவிரியானும் இருபெயரினைப் பெற்ற அம்மூதூரின்கண் இந்திரவிழா அறைந்தது முதலாகக் காஞ்சி நகரின்கண் பவத்திறம் அறுகெனப்பாவை நோற்றது இறுதியாக உள்ள வரலாற்றினை இளங்கோவடிகள் கேட்டருள, கூலவாணிகன் சாத்தன் என்னும் நல்லிசைப்புலவன் மணிமேகலை துறவு என்னும் காப்பியத்தின் முப்பது பாட்டினுள் யாவருமறிய இயற்றியருளினன்.) இளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து விளங்கொளி மேனி விரிசடை யாட்டி பொன்றிகழ் நெடுவரை உச்சித் தோன்றித் தென்றிசைப் பெயர்ந்தவித் தீவத் தெய்வதம் 5 சாகைச் சம்பு தன்கீழ் நின்று மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு வெந்திற லரக்கர்க்கு வெம்பகை நோற்ற சம்பு வென்பாள் சம்பா பதியினள் செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் 10 கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமர முனிவன் அகத்தியன் றனாது கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை செங்குணக் கொழுகியச் சம்பா பதியயல் பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற 15 ஆங்கினி திருந்த அருந்தவ முதியோள் ஓங்குநீர்ப் பாவையை உவந்தெதிர் கொண்டாங்கு ஆணு விசும்பின் ஆகாய கங்கை வேணவாத் தீர்த்த விளக்கே வாவெனப் பின்னிலை முனியாப் பெருந்தவன் கேட்டீங்கு 20 அன்னை கேளிவ் வருந்தவ முதியோள் நின்னால் வணங்குந் தகைமையள் வணங்கெனப் பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி கோள்நிலை திரிந்து கோடை நீடினும் 25 தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை தொழுதனள் நிற்பஅத் தொன்மூ தாட்டி கழுமிய உவகையிற் கவாற்கொண் டிருந்து தெய்வக் கருவுந் திசைமுகக் கருவும் செம்மலர் முதியோன் செய்த அந்நாள் 30 என்பெயர்ப் படுத்தஇவ் விரும்பெயர் மூதூர் நின்பெயர்ப் படுத்தேன் நீவா ழியவென இருபாற் பெயரிய உருகெழு மூதூர் ஒருநூறு வேள்வி உரவோன் றனக்குப் பெருவிழா அறைந்ததும் பெருகிய தலரெனச் 35 சிதைந்த நெஞ்சிற் சித்திரா பதிதான் வயந்த மாலையான் மாதவிக் குரைத்ததும் மணிமே கலைதான் மாமலர் கொய்ய அணிமலர்ப் பூம்பொழில் அகவயிற் சென்றதும் ஆங்கப் பூம்பொழில் அரசிளங் குமரனைப் 40 பாங்கிற் கண்டவள் பளிக்கறை புக்கதும் பளிக்கறை புக்க பாவையைக் கண்டவன் துளக்குறு நெஞ்சில் துயரொடும் போயபின் மணிமே கலாதெய்வம் வந்துதோன் றியதும் மணிமே கலையைமணி பல்லவத் துய்த்ததும் 45 உவவன மருங்கினவ் வுரைசால் தெய்வதம் சுதமதி தன்னைத் துயிலெடுப் பியதூஉம் ஆங்கத் தீவகத் தாயிழை நல்லாள் தான்றுயி லுணர்ந்து தனித்துய ருழந்ததும் உழந்தோ ளாங்கணோர் ஒளிமணிப் பீடிகைப் 50 பழம்பிறப் பெல்லாம் பான்மையி னுணர்ந்ததும் உணர்ந்தோள் முன்னர் உயர்தெய்வந் தோன்றி மனங்கவ லொழிகென மந்திரங் கொடுத்ததும் தீப திலகை செவ்வனந் தோன்றி மாபெரும் பாத்திரம் மடக்கொடிக் களித்ததும் 55 பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு யாப்புறு மாதவத் தறவணர்த் தொழுததும் அறவண வடிகள் ஆபுத் திரன்றிறம் நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும் அங்கைப் பாத்திரம் ஆபுத் திரன்பால் 60 சிந்தா தேவி கொடுத்த வண்ணமும் மற்றப் பாத்திரம் மடக்கொடி யேந்திப் பிச்சைக் கவ்'d2வூர்ப் பெருந்தெரு வடைந்ததும் பிச்சை யேற்ற பெய்வளை கடிஞையிற் பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும் 65 காரிகை நல்லாள் காயசண் டிகைவயிற்று ஆனைத் தீக்கெடுத் தம்பலம் அடைந்ததும் அம்பலம் அடைந்தனள் ஆயிழை யென்றே கொங்கலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும் அம்பல மடைந்த அரசிளங் குமரன்முன் 70 வஞ்ச விஞ்சையன் மகள்வடி வாகி மறஞ்செய் வேலோன் வான்சிறைக் கோட்டம் அறஞ்செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும் காயசண் டிகையென விஞ்சைக் காஞ்சனன் ஆயிழை தன்னை அகலா தணுகலும் 75 வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை மைந்துடை வாளில் தப்பிய வண்ணமும் ஐயரி யுண்கண் அவன்றுயர் பொறாஅள் தெய்வக் கிளவியிற் றெளிந்த வண்ணமும் அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச் 80 சிறைசெய் கென்றதுஞ் சிறைவீடு செய்ததும் நறுமலர்க் கோதைக்கு நல்லற முரைத்தாங்கு ஆய்வளை ஆபுத் திரனா டடைந்ததும் ஆங்கவன் றன்னோ டணியிழை போகி ஓங்கிய மணிபல் லவத்திடை யுற்றதும் 85 உற்றவ ளாங்கோர் உயர்தவன் வடிவாய்ப் பொற்கொடி வஞ்சியிற் பொருந்திய வண்ணமும் நவையறு நன்பொரு ளுரைமி னோவெனச் சமயக் கணக்கர் தந்திறங் கேட்டதும் ஆங்கத் தாயரோ டறவணர்த் தேர்ந்து 90 பூங்கொடி கச்சி மாநகர் புக்கதும் புக்கவள் கொண்ட பொய்யுருக் களைந்து மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும் தவத்திறம் பூண்டு தருமங் கேட்டுப் பவத்திற மறுகெனப் பாவை நோற்றதும் 95 இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப வளங்கெழு கூல வாணிகன் சாத்தன் மாவண் தமிழ்த்திறம் மணிமே கலை துறவு ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென். உரை 1-8. இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து-கதிர்களை யுடைய இளஞாயிற்றின் ஒளியை இகழும் தோற்றமுடைய, விளங்கு ஒளி மேனிவிரிசடையாட்டி-விளங்குகின்ற ஒளி பொருந்திய திருமேனியும் விரிந்த சடையுமுடையாளும், பொன்திகழ் நெடுவரை உச்சித் தோன்றி-விளங்குகின்ற பெரிய பொன்மலையாகிய மேருவின் உச்சியில் தோன்றி, தென்திசைப்பெயர்ந்த இத் தீவத் தெய்வதம்- தென்றிசைக் கண் போந்த நாவலந்தீவின் காவற்றெய்வமும், சாகைச் சம்புதன் கீழ்நின்று-கிளைகளையுடைய நாவன் மரத்தின் கீழிருந்து, மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு-பெருமை பொருந்திய நிலமகட்கு நேரும் துன்பத்தினைக் கேட்டு, வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற-கொடிய வலியினை யுடைய அரக்கர்கட்கு வெவ்விய பகையாக நோற்றவளுமாய, சம்பு என்பாள் சம்பாபதியினள்-சம்பு என்பவள் சம்பாபதி யினிடத்தே இருந்தனள்; எள்ளும்: உவமவுருபுமாம். பகை நோற்ற-பகையாக நோற்ற. சம்பு வென்பாள்: வட சொல்லாகலின் உடம்படுமெய் பெற்றது. சம்பாபதி-காவிரிப்பூம்பட்டினத்தின் வேறு பெயர். சம்பாபதியினள்: முற்று; ஆக என்பது விரித்து எச்சப்படுத்தலுமாம். 9-14. செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட - சிவந்த கதிர்களையுடைய ஞாயிற்றின் வழித் தோன்றினோராகிய சோழர் மரபினை விளக்குமாறுதித்த காந்தன் எனப் பெயரிய மன்னவன் நாட்டில் நீர்ப் பெருக்கினை விரும்பி வேண்டிக்கொள்ள, அமரமுனிவன் அகத்தியன் தனாது கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை - தேவ இருடியாகிய அகத்திய முனிவன் தனது கமண்டல நீரைக் கவிழ்த்தலாற் போந்த காவிரியாகிய பாவை, செங்குணக்கு ஒழுகி - நேர்கிழக்கே ஓடி, அச்சம்பாபதி அயல் - அந்தச் சம்பாபதியின் மருங்கு, பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித்தோன்ற-விளங்குகின்ற கடலொடு கலந்து தோன்ற; திருக்குலம் - சூரிய குலம். விளக்கும் காந்தமன் என்க. காந்தமன்-காந்தனாகிய மன்னன் ; காந்தன் - சோழருள் ஒருவன்;1 "காந்த மன்னவன்" என்பர் பின்னும். கஞ்சம் - நீர். வேட்கையினையுடைய மன் என்றுமாம். கரகம் - குண்டிகை; 2"நீரற வறியாக் கரகத்து" என்பது காண்க. கவிழ்த்த வென்னும் பெயரெச்சம் காரியப் பெயர் கொண்டது; காவிரி முன்னரே யுள்ளதாயின் இடப்பெயர் கொண்டதாம். செங் குணக்கு: செம்மை - நேர்மை. நீர்ப் பரப்பு - விரிநீர்: கடல். 15-21. ஆங்கு இனிது இருந்த அருந்தவ முதியோள் - ஆண்டு இனிது அமர்ந்திருந்த அரிய தவமுதியோளாகிய சம்பாபதி, ஓங்கு நீர்ப் பாவையை உவந்து எதிர்கொண்டு-பெருகுகின்ற காவிரிப் பாவையை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு, ஆணு விசும்பின் ஆகாய கங்கை-வானினை இடமாகக் கொண்ட அன்பினையுடைய ஆகாய கங்கையே, வேணவாத் தீர்த்த விளக்கே வா என - வேட்கையானாகிய அவாவினைத் தீர்த்த விளக்கே வருக என அழைப்ப, பின் நிலை முனியாப் பெருந்தவன் கேட்டு - பின் நிற்றலை வெறுத்தலில்லாத அகத்திய மாமுனிவன் அதனைக் கேட்டு, அன்னை கேள்-அன்னாய் கேட்பாயாக, இவ் அருந்தவ முதியோள் நின்னால் வணங்கும் தகைமையள் - இவ்வரிய தவமூதாட்டி நின்னால் வணங்கப்படும் தகுதியுடையவள், வணங்கு என - ஆகலின் இவளை நீ வணங்குவாய் என்று காவிரியை நோக்கிக் கூற; பின்னிற்றல் - தாழ்ந்து நிற்றல்;1 "பிற்றை நிலை முனியாது" என்பதிற் போல. கொண்டாங்கு, கேட்டீங்கு என்பவற்றில் ஆங்கு, ஈங்கு என்பன அசைகள். ஆணு - அன்பு:2 "ஆணுப் பைங்கிளி" என்பதன் உரை காண்க. விசும்பின் என முன் வந்தமையின், ஆகாய கங்கை என்பது பெயர் மாத்திரையாய் நின்றது. கங்கை வானினின்று வந்ததென்ப ஆகலானும், காவிரி நீர் கங்கை நீர் ஆகலானும் ‘ஆகாய கங்கை' என்றார். "பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்" என்புழி,3 "காவிரி நீர் கங்கை நீராதலிற் கங்கைப் புதல்வரைக் காவிரிப் புதல்வர் என்றார்" என அடியார்க்கு நல்லார் கூறியதும், தொல்காப்பியப் பாயிர வுரையில்4 "கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கி" என நச்சினார்க்கினியர் கூறியதும் ஈண்டு அறியற்பாலன. 22-32. பாடல்சால் சிறப்பிற் பரதத்து ஓங்கிய-பாடுதற்கமைந்த சிறப்பினையுடைய பரத கண்டத்தில் உயர்ச்சி மிக்க, கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி - வளையாத செங்கோலினை யுடைய சோழர்களின் குலமகளாகிய, கோள் நிலை திரிந்து கோடை நீடினும்-கோட்களின் நிலை மாறுபட்டு மழை பெய்யாது கழியுங்காலம் நீட்டிப்பினும், தான் நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை - தான் நிலைதிரியாது எஞ்ஞான்றும் வளங் கொடுக்கும் தண்ணளியுடைய தமிழ்ப் பாவையாங் காவிரி, தொழுதனள் நிற்ப-வணங்கி நிற்க, அத் தொன் மூதாட்டி கழுமிய உவகையில் கவான் கொண்டிருந்து-பழைய தவமுதியோளாகிய அச்சம்பாபதி கலந்த பேரு வகையினோடு காவிரிப் பாவையைத் தன் துடைமீ திருத்திக் கொண்டு, தெய்வக் கருவும் திசைமுகக் கருவும் செம்மலர் முதியோன் செய்த அந்நாள் - தெய்வலோகம் ஆறினுமுள்ள அறுவகைத் தெய்வகண பிண்டங்களையும் பிரமலோகம் இருபதினுமுள்ள இருபது வகைப் பிரமகண பிண்டங் களையும் செந்தாமரை மலரின் மேவிய முதியோனாகிய பிரமன் படைத்த அந்நாளில், என்பெயர்ப் படுத்த இவ்விரும் பெயர் மூதூர் - என் பெயர்ப்படச் செய்த பெரும் புகழை யுடைய இத் தொன்னகரை, நின் பெயர்ப் படுத்தேன் நீ வாழிய என - நின் பெயருடையதாக்கினேன் நீ வாழ்வாயாக என்றுரைத்தலான், இருபாற் பெயரிய உருகெழு மூதூர் - சம்பாபதி காவிரிப்பூம்பட்டினம் என்னும் இருவகைப் பெயரினை யுடையதாய்ப் பகைவர்க்கு அச்சத்தை யுண்டாக்கும் தொல்பதியில்; வேற்று வேந்தர் அணுகாமையாற் சோழர்குலக் கொடியாயுள்ளாள் என்க; கவேரன் புதல்வியாதலிற் சோழர் குலக்கொடியென்றா ரெனலுமாம். கவேரன் புதல்வியாதலை,1"தவாநீர்க் காவிரிப் பாவைதன் றாதை, கவேரனாங் கிருந்த கவேர வனமும்" என மேல் உரைத்தலானறிக. தான் நிலை திரியாமை - என்றும் நீர் வற்றாமை. தமிழ்ப் பாவை யென்றது காவிரியை. தொழுதனள்: முற்றெச்சம். தெய்வலோகம் ஆறு எனவும், பிரமலோகம் இருபது எனவும் புத்த நூல்கள் கூறும். செம் மலர் முதியோன் - பெரும் பிரமன். என் பெயர்ப் படுத்த என்றமையால் சம்பாபதி என்பது சம்புத் தீவத் தெய்வத்திற்கும், காவிரிப்பூம்பட்டினத்திற்கும் உரிய பெயர் என்பது பெற்றாம். உரு - உட்கு, அச்சம். சம்பு என்பாள் சம்பாபதியினள்; அப்பொழுது காவிரிப் பாவை செங்குணக் கொழுகிச் சம்பாபதியின் அயலிற்றோன்ற, ஆங்கிருந்த முதியோள் நீர்ப்பாவையை எதிர்கொண்டு 'வா' என, அதனைப் பெருந்தவன் கேட்டு ‘வணங்கு' என, குலக்கொடி தண்டமிழ்ப் பாவை தொழுது நிற்ப, அம் மூதாட்டி அவளைக் கவானிற் கொண்டிருந்து ‘அந்நாளில் என் பெயர்ப்படுத்த இம்மூதூரை நின்பெயர்ப் படுத்தேன், நீ வாழிய,' என்றமையால் இருபாற் பெயரிய மூதூர் என்க. 33-40. ஒரு நூறு வேள்வி உரவோன் தனக்குப் பெரு விழா அறைந்ததும்- ஒப்பற்ற நூறு வேள்விகளைப் புரிந்த வலியோனாகிய இந்திரனுக்குப் பெரிய விழாக் கொள்ளுமாறு பறை அறைந்ததும், பெருகியது அலர் எனச் சிதைந்த நெஞ்சிற் சித்திராபதிதான் - மாதவி தவத்திறம் பூண்டமையின் நகரில் அலர் பெருகியது என்று அழிந்த உள்ளமுடைய சித்திராபதி, வயந்த மாலையால் மாதவிக்கு உரைத்ததும் - தன் மகளின் தோழி யாகிய வயந்தமாலை வாயிலாக மாதவிக்குக் கூறியதும், மணிமேகலைதான் மாமலர்கொய்ய அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் சென்றதும்-மணிமேகலை மாசற்ற மலர் கொய்யு மாறு அழகிய மலர்களையுடைய பூஞ்சோலையாகிய உவவனத்தின் உள்ளே சென்றதும், ஆங்கு அப் பூம்பொழில் அரசிளங் குமரனை - ஆண்டு அவ்வழகிய சோலையில் இளமைப் பருவமுடைய அரச குமாரனை, பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும் - அண்மையிற் கண்டு மணிமேகலை பளிக்கறையுட் புகுந்ததும்; ஊரில் அலர் பெருகியதென உரைத்ததும் என்க. சித்திராபதி மாதவியின் நற்றாய். வயந்தமாலை - மாதவியின் தோழி; இவள் கூனியென்றும் கூறப்படுவள். மாதவி - மணிமேகலையின் தாய். பூம்பொழில் - உவவனம். அரசிளங்குமரன் - உதயகுமரன். பளிக்கறை - பளிங்காலாகிய அறை. 41-48. பளிக்கறை புக்க பாவையைக் கண்டவன் - பளிங்கறையுட் சென்ற மணிமேகலையைக் கண்ட உதயகுமரன், துளக்குறு நெஞ்சில் துயரொடும் போயபின் - நிலைகலங்கிய உளத்தில் துயருடன் சென்ற பின்னர், மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும் - அங்கு மணிமேகலா தெய்வம் வந்து வெளிப்பட்டதும், மணிமேகலையை மணி பல்லவத்து உய்த்ததும் - அத்தெய்வம் மணிமேலையை மணிபல்லவமென்னுந் தீவிற்கொண்டு சென்றதும், உவவன மருங்கின் அவ்வுரைசால் தெய்வதம் சுதமதி தன்னைத் துயில் எடுப்பியதூஉம் - புகழமைந்த அத்தெய்வம் பின்னர் மணிமேகலையுடன் துணையாக வந்த சுதமதியை உவவனத்தில் துயில் எழுப்பியதும், ஆங்கத் தீவகத்து ஆயிழை நல்லாள்தான்- மணிபல்லவத்தின் கண் மணிமேகலை, துயில் உணர்ந்து தனித்துயர் உழந்ததும்-உறக்கம் நீங்கித் தனியே துன்புற்று வருந்தியதும் ; கண்டு அவன் எனப் பிரித்தலுமாம். மணிமேகலா தெய்வம்-இராக்கதரால் துன்பமுண்டாகாமல் இந்திரன் ஏவலால் சிலதீவுகளைக் காக்குந் தெய்வம் : கோவலனது குல தெய்வம். மணிமேகலை - கோவலனுக்கு நாடகக் கணிகையாகிய மாதவி வயிற்றிற்பிறந்தவள் ; இக்காப்பியத்தின் தலைவி. மணிபல்லவம் - காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தெற்கேயுள்ளதொரு சிறு தீவு. உவவனம் - உபவனம். எடுப்பியது - எழுப்பியது;1 "உரவுநீர்ப் பரப்பி னூர்துயி லெடுப்பி" என்பதும் காண்க. தனித்துயர் - ஒப்பற்ற துயருமாம். 49-58. உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளிமணிப் பீடிகை - அங்ஙனம் வருந்தினவள் அவ்விடத்தில் ஒளிமிக்க மணிகளானாய ஒரு பாத பீடிகையினால், பழம்பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும்- முற்பிறப்பு நிகழ்ச்சியை யெல்லாம் முறையால் அறிந்ததும், உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி மனங்கவல் ஒழிகென மந்திரம் கொடுத்ததும்-அங்ஙனம் அறிந்த மணிமேகலை முன் மணிமேகலா தெய்வம் வெளிப்பட்டு மனம் கவலுதல் ஒழிகவென்று கூறி மந்திரம் அருளியதும், தீப திலகை செவ்வனம் தோன்றி மாபெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அளித்ததும் - தீவதிலகை என்பாள் நன்கு வெளிப்பட்டுப் பெருமை பொருந்திய பாத்திரத்தினை மணிமேகலைக்குக் கொடுத்ததும், பாத்திரம்பெற்ற பைந்தொடி தாயரொடு - அப் பாத்திரத்தினைப்பெற்ற மெல்லியல் தன் தாயராகிய மாதவி சுதமதி என்னும் இருவருடனும், யாப்புறு மாதவத்து அறவணர்த் தொழுததும் - கட்டமைந்த பெருந்தவ முடைய அறவணவடிகளை வணங்கியதும், அறவண அடிகள் ஆபுத்திரன் திறம் - அறவண முனிவர் ஆபுத்திரன் வரலாற்றினை, நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும் - நறிய மலர்மாலை போலும் நங்கைக்கு நன்கு மொழிந்ததும்; கவல் - கவலுதல் : முதனிலைத் தொழிற் பெயர். ஒழிகென-ஒழிக என: அகரந் தொக்கது. மந்திரம் - வேற்றுரு அடைவிப்பதும், விசும்பிலே திரியச் செய்வதும், பசியைப் போக்குவதுமாகிய மந்திரங்கள். தீப திலகை - தீவுக்குத் திலகம் போன்றவள்; மணிபல்லவத்திலே புத்தன் பாத பீடிகையை இந்திரன் ஏவலாற் காவல் செய்பவள் இவள். மாபெரும் பாத்திரம்-அமுதசுரபி எனப் பெயரிய பிச்சைப் பாத்திரம். தாயர் - மாதவியும் அவள் தோழியாகிய சுதமதியும்; இக்காப்பியத்திற்பிறாண்டும் இவ்விருவரும் மணிமேகலையின் தாயரென வழங்கப்பெறுவர். யாப்பு - கட்டு; உறுதி. அறவணர் - ஒரு புத்த முனிவர். 59-68. அங்கைப் பாத்திரம் ஆபுத்திரன்பால் சிந்தாதேவி கொடுத்த வண்ணமும்-அகங்கையிலிருந்த பிச்சைப் பாத்திரத்தை ஆபுத்திரனிடம் கலைமகள் அளித்தவாறும், மற்று அப்பாத்திரம் மடக்கொடி ஏந்திப் பிச்சைக்கு அவ்'d2வூர்ப் பெருந்தெரு அடைந்ததும் - மணிமேகலை பிக்குணிக் கோலத்துடன் அப்பாத்திரத்தைக் கையிலேந்திப் பிச்சை யேற்றற்கு அந்நகரின் பெருந் தெருவினை யடைந்ததும், பிச்சை ஏற்ற பெய்வளை கடிஞையில் பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும் - பிச்சை ஏற்ற மணிமேகலையின் தெய்வக் கடிஞையிற் கற்பிற் சிறந்த ஆதிரைநல்லாள் பலர்க்கும் பகுத்துண்ணும் உணவினை இட்டதும், காரிகை நல்லாள் காய சண்டிகை வயிற்று ஆனைத்தீக் கெடுத்து அம்பலம் அடைந்ததும்- அழகின் மிக்க மணிமேகலை காயசண்டிகை என்னும் விஞ்சை மகளின் வயிற்றிலுள்ள ஆனைத்தீ யென்னும் தீராப் பசி நோயை அழித்து உலகவறவி என்னும் ஊரம்பலத்தை யடைந்ததும், அம்பலம் அடைந்தனள் ஆயிழை என்றே கொங்கு அலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும்-தேன் பொருந்திய நறிய மலர் மாலை யினையுடைய அரச குமரன் மணிமேகலை உலகவறவியை அடைந்தாள் என்று ஆண்டுச் சென்றதும்; ஆங்கப் பாத்திரம் என்பதும் பாடம். ஆபுத்திரன் - ஓரந்தணன்; தன்னைப் பெற்றவுடன் தாய் நீங்கிவிட, ஏழுநாள் வரையில் ஓர் ஆவினாற் பாலூட்டிப் பாதுகாக்கப் பெற்றமையின் இவன் இப் பெயரெய்தினன். சிந்தாதேவி-கலைமகள்; கற்றோர் சிந்தையில் இருப்பவள் என்பது பொருள். மற்று: அசை. மடக்கொடி-இளங் கொடி போல்பவள். பெய்வளை-இடப்பட்ட வளையினையுடையாள். அவ்'d2வூர் - காவிரிப்பூம்பட்டினம். பத்தினிப் பெண்டிர் - ஆதிரை: ஒருமை. கடிஞை - பிச்சைப் பாத்திரம். பாத்தூண் - பகுத்துண்டற் குரிய உணவு. பாத்து - பகுத்து என்பதன் மரூஉ. ஈத்தது: வலித்தல் விகாரம். காயசண்டிகை: ஒரு வித்தியாதர மாது. ஆனைத்தீ - தணியாத பெரும் பசியைச் செய்வதொரு நோய். 69-78. அம்பலம் அடைந்த அரசிளங் குமரன்முன் வஞ்ச விஞ்சையன் மகள் வடிவாகி-அம்பலத்தினை அடைந்த மன்னவன் சிறுவன் முன் மணிமேகலை விஞ்சையன் மனைவி யாகிய காயசண்டிகையினுருவினைக் கொண்டு வஞ்சித்துச் சென்று, மறஞ்செய் வேலோன் வான்சிறைக் கோட்டம் - வென்றிதரும் வேற்படையினையுடைய சோழனது பெரிய சிறைச்சாலையை, அறஞ்செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்-அறச்சாலையாக்கிய திறமும், காயசண்டிகை என விஞ்சைக் காஞ்சனன் - விஞ்சையனாகிய காஞ்சனன் மணிமேகலையைக் காயசண்டிகை என நினைந்து, ஆயிழை தன்னை அகலாது அணுகலும் - உதயகுமரன் அவளை நீங்காது அணுகுதலும், வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை மைந்துடை வாளில் தப்பிய வண்ணமும் - வலிபொருந்திய வாளினால் வஞ்சங் கொண்ட அவ் விஞ்சையன் அரசிளம் புதல்வனை வீழ்த்திய வண்ணமும், ஐயரி யுண்கண் அவன் துயர் பொறாஅள் தெய்வக் கிளவியில் தெளிந்த வண்ணமும் - அழகிய அரி படர்ந்த மையுண்ட கண்களையுடைய மணிமேகலை முற்பிறப்பிற் கணவனாயிருந்த மன்னிளம் புதல்வன் இறந்த துக்கத்தினைப் பொறுக்க இயலாதவளாய்த் தெய்வத்தின் மொழியால் தேறிய வண்ணமும்; விஞ்சையன் மகள் - விஞ்சையன் மனைவி;1 "நினக்கிவன் மகனாத் தோன்றியதூஉம், மனக்கினி யாற்குநீ மகளாயதூஉம்" என்றவிடத்து மகன், மகள் என்பன முறையே கணவன், மனைவி என்ற பொருளில் வந்திருத்தல் காண்க. கருத்து நோக்கி வஞ்சித்துச் சென்றஎன்றுரைக்கப்பட்டது. மன்னவன்சிறுவன் ஆயிழையை அகலா தணுகலும் அவனை என்றியைக்க. வஞ்ச விஞ்சையன் : சுட்டு. உண்கண்: ஆகு பெயர். தெய்வம் - கந்திற் பாவை. 79-90. அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச் சிறை செய் கென்றதும் - ஒலிக்கின்ற வீரக்கழலினை யணிந்த மன்னவன் மணிமேகலையைச் சிறைப்படுத்தியதும், சிறைவீடு செய்ததும் - பின் சிறையினின்று விடுவித்ததும், நறுமலர்க் கோதைக்கு நல்லறம் உரைத்து ஆங்கு - இராசமாதேவிக்குப் புத்த தருமங்களை ஆண்டு எடுத்துரைத்து, ஆய்வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும்-மணிமேகலை ஆபுத்திரனுடைய நாட்டினை அடைந்ததும், ஆங்கவன் தன்னோடு அணியிழை போகி-சிறுமுதுக்குறைவி ஆபுத்திரனோடு சென்று, ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும்-பெருமையுடைய மணி பல்லவத்தின்கண் சேர்ந்ததும், உற்றவள் ஆங்கோர் உயர் தவன் வடிவாய்ப் பொற்கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்-மணிபல்லவமடைந்த மணிமேகலை ஆங்கு ஒரு பெரிய தவத்தினன் வடிவத்தோடு அழகிய கொடிகளை யுடைய வஞ்சி நகரத்திற் சேர்ந்தவாறும், நவை அறு நன் பொருள் உரைமினோ எனச் சமயக் கணக்கர் தந்திறம் கேட்டதும்-குற்றமற்ற நல்ல தத்துவங்களைக் கூறுவீர் என வினாவிச் சமய வாதியர் கூறிய திறங்களைக் கேட்டதும், ஆங்கு அத் தாயரோடு அறவணர்த்தேர்ந்து பூங்கொடி கச்சிமாநகர் புக்கதும் - அங்கே மணிமேகலை தன் தாயருடன் அறவணவடிகளைத் தேடிக் காஞ்சிமாநகரத்தைஅடைந்ததும் வேந்தன் - மாவண்கிள்ளி: உதயகுமரன் தந்தை. செய்கென்றது: அகரந் தொக்கது. அரசன் ஏவும் வினைமுதலாகலின் சிறை செய்ததனைச் சிறை செய்கென்றான் என்றார். வீடு-விடுதல்: முதனிலை திரிந்த தொழிற் பெயர். ஆங்கவன்: ஒரு சொல். வஞ்சி- சேர மன்னர்களின் தலைநகர். நன்பொருள் - தத்துவம்: நன்மையென்பதன் ஈறுகெட்டது- உரைமினோ, ஓ; இசைநிறை. சமயக் கணக்கர்-சமய வாதியர்; 1"சமயக் கணக்கர் மதிவழி கூறாது", "சமயக்கணக்கர் தந்திறங்கடந்து" என்பர் பிற சான்றோரும். திறம்-இயல்பு, கொள்கை. ஆங்கு-வஞ்சிப்பதியில்; வஞ்சியில் தேர்ந்துபின் கச்சி புக்கதுமென்க; தாயரையும் அறவணரையும் தேர்ந்தென்க. "இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்"1 என்னும் விதியால் அறவணர்த் தேர்ந்து என வலி மிக்கது. 91-98. புக்கவள் கொண்ட பொய்யுருக் களைந்து - கச்சியிற் புகுந்த மணிமேகலை தான் கொண்ட பொய் வேடத்தினை நீக்கி, மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும் - அவருடைய அடிகளை வணக்கஞ் செய்தவாறும், தவத்திறம் பூண்டு தருமம் கேட்டு பவத்திறம் அறுக எனப் பாவை நோற்றதும் - தவநெறி பூண்டு அறவுரை கேட்டுப் பிறவியொழிக என்று மணிமேகலை தவம் புரிந்ததும் ஆகியவற்றை, இளங்கோ வேந்தன் அருளிக்கேட்ப - இளங்கோவடிகள் கேட்டருள, வளங்கெழு கூலவாணிகன் சாத்தன் - வளப்பமிக்க கூலவாணி கனாகிய சாத்தன் என்னும் நல்லிசைப் புலவன், மாவண் தமிழ்த்திறம் மனிமேகலை துறவு ஆறைம்பாட்டினுள் அறிய வைத்தனன் என்-பெருமை மிக்க தமிழிலக்கண நெறியால் மணிமேகலை துறவு என்னுந் தொடர்நிலைச் செய்யுளை முப்பது பாட்டினுள்ளே யாவரும் அறியுமாறு செய்து வைத்தனன் என்க. மற்றவர்: மற்று, அசை, அவர் - அறவணர். தருமம் - புத்த தருமம். மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும் என்பதனை நெகிழ விடுத்தும், கேட்டு நோற்றதும் என்பதைக் கேட்டதும் நோற்றதும், என இரண்டாகக் கொண்டும் ஈற்றிலுள்ள இரு காதைகளின் பெயரை முன்னர் யாரோ திரித்து அமைத்துள்ளனர். உம்மை கொடுத்து எண்ணியவற்றுள் ஒன்றை விடுத்தலும் ஒன்றைப் பகுத்தலும் கூடாமையானும், இறுதிக் காதையின் ஈற்றிலும் "தவத்திறம்...பாவை நோற்றனளென்" எனக் கேட்டு நோற்றமை ஒன்றாக உரைத்திருத் தலானும் அங்ஙனம் அமைத்தல் பொருந்தா தென்க. இளங்கோ வேந்தன் - இளங்கோவாகிய வேந்தன்; இளங்கோவடிகள்: இவர் சேரன் செங்குட்டுவனுக்குத் தம்பி; துறவு பூண்டவர்; சிலப்பதிகாரம் இயற்றியவர். அருளிக்கேட்ப-அருள்செய்து கேட்ப என்றுமாம். வளங்கெழு கூலமென்க. கூலம்-நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி என்னும் எண்வகைத் தானியமாம். கூலம் பதினெட்டென்பர் கூத்த நூலார். சாத்தனார் கூலவாணிகன் சாத்தனார் எனவும் சீத்தலைச் சாத்தனார் எனவும் கூறப்படுவர். இக்காப்பியத்திற்கு மணிமேகலை துறவு என்னும் பெயருண்மை இதனாற் பெற்றாம். நோற்றது ஈறாகவுள்ளவற்றை அறிய வைத்தனன் என்க. என்: அசை. பதிகம் முற்றிற்று. 1. விழாவறை காதை பண்டு காவிரிப்பூம்பட்டினத்தின் இயல்பினை மேம்படுத்தக் கருதிய அகத்திய முனிவர் ஆணையின்படி தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் இந்திரனை வேண்டி அவன் உடன் பாடு பெற்று இருபத்தெட்டு நாள் அந்நகரிலேயே நிகழ்த்தியதும், அவன் காலத்திற் போலவே பின்பு அவன் வழியினராகிய சோழர்களால் ஆண்டுதோறும் நிகழ்த்தப்பெற்று வந்ததுமாகிய இந்திர விழாவை நடத்தக் கருதிய சமயக் கணக்கர்களும் ஏனோரும் ஒருங்குகூடி, இந்திரவிழாச் செய்தலை மறப்பின், முசுகுந்தன் துயரைப் போக்கிய நாளங்காடிப்பூதம் இடுக்கண் செய்யும்; நரகரைப் புடைத்துண்ணும் சதுக்கப்பூதமும் பொருந்தாதொழியும் ஆதலின் விழாச்செய்வோமாக' எனத் துணிந்து, அதனை முரசறையும் நீ ; முதுகுடிப் பிறந்தோனுக்கு அறிவித்தனர். அவன் வச்சிரக் கோட்டத்திருந்த முரசை யானையின் பிடரிலேற்றி, நகரையும், மழையையும், அரசனையும் வாழ்த்தி, இந்திரவிழாச் செய்யும் நாட்களில் தேவரனைவரும் பொன்னகர் வறிதாகும்படி இங்கெழுந்தருளுவரென்பது அறிஞர் துணிபாகலின், நகரினுள்ளீர்! வீதி முதலியவற்றை நிறைகுடம், பொற்பாலிகை, பாவைவிளக்கு, கமுகு, வாழை, வஞ்சி, கரும்பு, முத்துமாலை, தோரணம், கொடி முதலிய பலவற்றானும் அணிசெய்ம்மின்; சிவபிரான் முதல் சதுக்கப்பூதம் ஈறாகவுள்ள தெய்வங்கட்குச் செய்யும் வழிபாட்டினை அறிந்தோர் செய்ம்மின்; புண்ணிய நல்லுரை அறிவீர்! பந்தரிலும் அம்பலத்திலுஞ்சென்று அறவுரைகூறுமின்; சமய வாதிகளே! பட்டி மண்டபத்தில் ஏறி முறைமையால் வாது செய்ம்மின்; பகைவருடனாயினும் யாவரும் செற்றமும் கலாமும் செய்யாதொழிமின்,' என்று கூறி விழா வறைந்தனன். உலகந் திரியா ஓங்குயர் விழுச்சீர்ப் பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம் படீஇய ஓங்குயர் மலயத் தருந்தவ னுரைப்பத் தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன் 5 விண்ணவர் தலைவனை வணங்கிமுன் னின்று மண்ணகத் தென்றன் வான்பதி தன்னுள் மேலோர் விழைய விழாக்கோ ளெடுத்த நாலேழ் நாளினும் நன்கினி துறைகென அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது 10 கவராக் கேள்வியோர் கடவா ராகலின் மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும் இத்திறந் தத்தம் இயல்பினிற் காட்டும் சமயக் கணக்கருந் தந்துறை போகிய அமயக் கணக்கரும் அகலா ராகிக் 15 காரந்துரு வெய்திய கடவு ளாளரும் பரந்தொருங் கீண்டிய பாடை மாக்களும் ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும் வந்தொருங்கு குழீஇ வான்பதி தன்னுள் கொடித்தேர்த் தானைக் கொற்றவன் துயரம் 20 விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின் மடித்த செவ்வாய் வல்லெயி றிலங்க இடிக்குரல் முழக்கத் திடும்பை செய்திடும் தொடுத்தபா சத்துத் தொல்பதி நரகரைப் புடைத்துணும் பூதமும் பொருந்தா தாயிடும் 25 மாயிரு ஞாலத் தரசுதலை யீண்டும் ஆயிரங் கண்ணோன் விழாக்கால் கொள்கென வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம் கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி ஏற்றுரி போர்த்த இடியுறு முழக்கின் 30 கூற்றுக்கண் விளிக்குங் குருதி வேட்கை முரசுகடிப் பிடூஉம் முதுகுடிப் பிறந்தோன் திருவிழை மூதூர் வாழ்கென் றேத்தி வான மும்மாரி பொழிக மன்னவன் கோள்நிலை திரியாக் கோலோ னாகுக 35 தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் ஆயிரங் கண்ணோன் தன்னோ டாங்குள நால்வேறு தேவரும் நலத்தகு சிறப்பில் பால்வேறு தேவரும் இப்பதிப் படர்ந்து மன்னன் கரிகால் வளவன் நீங்கியநாள் 40 இந்நகர் போல்வதோர் இயல்பின தாகிப் பொன்னகர் வறிதாப் போதுவ ரென்பது தொன்னிலை யுணர்ந்தோர் துணிபொரு ளாதலின் தோரண வீதியுந் தோமறு கோட்டியும் பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும் 45 பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும் பூக்கொடி வல்லியுங் கரும்பும் நடுமின் பத்தி வேதிகைப் பசும்பொற் றூணத்து முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின் 50 விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும் பழமணல் மாற்றுமின் புதுமணற் பரப்புமின் கதலிகைக் கொடியுங் காழூன்று விலோதமும் மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின் நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப் 55 பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ றாக வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின் தண்மணற் பந்தருந் தாழ்தரு பொதியிலும் புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின் 60 ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் பட்டிமண் டபத்துப் பாங்கறிந் தேறுமின் பற்றா மாக்கள் தம்முட னாயினும் செற்றமுங் கலாமுஞ் செய்யா தகலுமின் வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும் 65 தண்மணல் துருத்தியுங் தாழ்பூந் துறைகளும் தேவரு மக்களும் ஒத்துடன் றிரிதரு நாலேழ் நாளினும் நன்கறிந் தீரென ஒளிறுவாள் மறவருந் தேரும் மாவும் களிறுஞ் சூழ்தரக் கண்முர சியம்பிப் 70 பசியும் பிணியும் பகையும் நீங்கி வகியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென். உரை 1-10. உலகம் திரியா ஓங்குயர் விழுச்சீர் - நன்மக்களது ஒழுக்கம் வேறுபடாத மிக உயர்ந்த சீரிய புகழையுடைய, பலர் புகழ்மூதூர்ப் பண்பு மேம்படீஇய - பல நாட்டினராலும் புகழ்ந்துரைக்கப்படும் பழமை சான்ற புகார்நகரத்தின் தன்மை மேம்படும் பொருட்டு, ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்ப - மிக மேம்பட்ட பொதியின் மலையில் உள்ள அரிய தவத்தையுடைய அகத்திய முனிவர் உரைத்தருள, தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் - வானத்தில் அசைகின்ற மதில்களை அழித்த வீரவளையணிந்த தோள் களை யுடைமையின் தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன் எனப் பெயர்பெற்ற சோழ மன்னவன், விண்ணவர் தலைவனை வணங்கி முன்நின்று - வானவர்க் கரசனாகிய இந்திரனை வணங்கி நின்று, மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள் - நிலவுலகின்கண் என்னுடைய சிறந்த நகரத்தில், மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த - மேலோரும் விழையுமாறு விழாவெடுத்தலை மேற்கொண்ட, நாலேழ் நாளினும் நன்குஇனிது உறைக என - இருபத்தெட்டு நாளினும் ஆண்டு வந்து இனிதே தங்க வேண்டும் என வேண்ட, அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது - வானவர் தலைவன் அதற்கு உடன் பட்டதனை, கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்- தெளிந்த நூற்கேள்வியினை யுடையார் பிழையார் ஆதலினால்; ஓங்குயர் இரண்டும் ஒரு பொருட் பன்மொழிகள். மேம்படீஇய -மேம்படுத்துவதற்கு என்றுமாம். தூங்கெயில் - அசைகின்ற மதில் ; தேவர்க்குப் பகைவராகிய அவுணருடைய மதில். செம்பியன் - சோழருள் ஒருவன். இவன் எயிலழித்த செய்தி, 1"ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறற், றூங்கெயி லெயிந்தநின், னூங்கணோர்." 2"தூங்கெயின் மூன்றெறிந்த சோழன்கா ணம்மானை" என்பன முதலியவற்றானும் அறியப்படும். வான்பதி - சிறந்தபதி. மேலோர்- தேவர் முதலாயினோர். நேர்ந்தது: வினைப்பெயர். கவரா - ஐயுறாத, தெளிந்த. அருந்தவன் உரைப்ப, செம்பியன் வணங்கி நின்று உறைகவென, அமரர் தலைவன் நேர்ந்தது என்க. 11-18. மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும் இத் திறம் - மெய்ப் பொருளுணர்த்துகின்ற நூல்வகை, உலகியல், நல்ல தத்துவப் பொருள், முத்தி என்னும் இவ்வகைகளை, தத்தம் இயல்பினிற் காட்டும் சமயக் கணக்கரும் - அவரவர் இயற்கைக்கேற்ப உணர்த்துகின்ற சமய வாதியரும், தம் துறைபோகிய அமயக் கணக்கரும் - தம்முடைய நெறியிற் கைதேர்ந்த காலங்களை எண்ணிக் கூறும் சோதிடரும், அகலாராகி - இந் நகரை விட்டு நீங்காதவராய், கரந்து உரு எய்திய கடவுளாளரும்-தமது பேரொளியினை மறைத்து மக்கள் கண்களாற் காணுமளவான வடிவினையாக்கிக் கொண்ட தேவரும், பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும் - பலவிடத்து நின்றும் போந்து ஒருங்குகூடிய மொழி வேறுபட்ட மக்களும், ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் - அரசர்க்குரிய அமைச்சராதி ஐந்து பெருங் குழுவினரும் கரணத்தியலவராதி எண்பெருங் கூட்டத்தினரும், வந்து ஒருங்கு குழீஇ - வந்து ஒன்றாகக் கூடி; மெய்த்திறம்-மெய்ந்நூல் வகை; 1"யாமெய்யாக் கண்டவற்றுள்" என்பதில், மெய்-மெய்ந்நூலென்னும் பொருட்டாதல் அறிக. 2"மெய்த்திறம் வழக்கென விளம்புகின்ற, எத்திறத்தினு மிசையா திவருரை" என மேல் வருவதனாலும் இப் பொருள் அறியப்படும். நன்பொருள் வீடு என்பவற்றை ஒன்றாயடக்கி, 3"அருமறை விதியு முலகியல் வழக்கும், கருத்துறை பொருளும் விதிப்பட நினைந்து" என்றார் கல்லாட ஆசிரியர். அகலாராகி எய்திய கடவுளாளர் என்க. வானவ ருருவினை மக்கள் கண்கள் காணப்பொறா வென்பதனை 4"அந்தரத் துள்ளோ ரறியா மரபின், வந்து காண்குறூஉம் வானவன் விழவும்" "அவளுக்குப், பூவந்த வுண்கண் பொறுக்கென்று மேவித்தன், மூவா விளநலங்காட்டி" என்பவற்றானறிக. ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்பவற்றை, 5"அமைச்சர் புரோகிதர் சேனாபதியர், தவாத்தொழிற்றூதுவர் சாரண ரென்றிவர், பார்த்திபர்க் கைம் பெருங் குழுவெனப் படுமே," 6"கரணத் தியலவர் கரும விதிகள், கனகச் சுற்றங் கடைக்காப்பாளர், நகர மாந்தர் நளிபடைத் தலைவர், யானை வீரரிவுளி மறவர், இனைய ரெண்பே ராய மென்ப" என்னுஞ் சூத்திரங்களானறிக. 18-26. வான்பதி தன்னுள் - தேவர் நகரமாகிய அமராபதியில், கொடித் தேர்த் தானைக் கொற்றவன் துயரம் விடுத்த பூதம்-கொடியெடுத்த தேர்ப்படையினையுடைய முசுகுந்த மன்னற்குப் பகைவரால் நேர்ந்த துன்பத்தினை நீக்கிய நாளங் காடிப்பூதம், விழாக்கோள் மறப்பின் - விழாவெடுத்தலை மறந்தால், மடித்த செவ்வாய் வல் எயிறு இலங்க - சினத்தான் மடிக்கப்பெற்ற சிவந்த வாயில் வலிய பற்கள் விளங்க, இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் - இடியொலி போன்ற முழக்கத்துடன் துன்பஞ் செய்யும், தொடுத்த பாசத்துத் தொல்பதி நரகரைப் புடைத்து உணும் பூதமும் பொருந்தா தாயிடும் - இம் முதுநகரில் அல்லவை செய்யும் பாவிகளைக் கையிற்கொண்ட பாசத்தாற் பிணித்துப் புடைத்து உண்ணுஞ் சதுக்கப்பூதமும் பகைமை கொள்ளும்; ஆகலின், மாயிரு ஞாலத்து அரசு தலைஈண்டும் - மிகப்பெரிய புவியின்கண் உள்ள அரசரெல்லாரும் வந்து செறிதற் கேதுவாகிய, ஆயிரங் கண்ணோன் விழா - இந்திரனுக்குச் செய்யும் விழாவினை, கால் கொள்க என - தொடங்குகவென்று சொல்ல; துயரம்-அவுணர் விட்ட இருட்கணையால் உண்டாகிய துன்பம். விடுத்த-முசுகுந்தற்கு ஓர் மந்திரத்தை யருளி அவ்விருளைப் போக்கிய. பூதம்-புகார்நகரின் பட்டினப்பாக்கம் மரு'd2வூர்ப்பாக்கம் இரண்டிற்கும் நடுவாகிய நாளங்காடியிடத்துள்ள பூதம். இவ்வரலாற்றினை, 1"கடுவிசை யவுணர்...இடனுங் காண்கும்" என்பதனாலும், "முன் னாளிந்திரன் ...பூதம்" என்னும் உரை மேற்கோளாலும் அறிக. நரகர்- 2"தவ மறைந் தொழுகுந் தன்மையி லாளர், அவமறைந் தொழுகு மலவற் பெண்டிர், அறைபோ கமைச்சர், பிறர்மனை நயப்போர், பொய்க் கரியாளர், புறங் கூற்றாளர் என்னுமிவர். பூதம்-சதுக்கப்பூதம். பொருந்தாதாயிடும் - நகரை விட்டு நீங்கும் எனினுமாம். கால் கொள்க வென்று சமயக்கணக்கர் முதலாயினோர் கூறவென்க. 27-34. வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்-வச்சிரப்படை நிற்குங் கோயிலின்கணுள்ள விழாமுரசினை, கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றி-கச்சையை யணிந்த யானையின் பிடரினிடம் ஏற்றி, ஏற்று உரி போர்த்த இடியுறு முழக்கிற் கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை-வென்ற நல்லேற்றின் உரியாற் போர்க்க்கப்பட்டதும் இடியை யொத்த முழக்கத்தை யுடையதும் கூற்றுவனை யழைப்பதும் குருதிப்பலிகொள்ளும் விருப்பத்தினை யுடையதுமாகிய, முரசு கடிப்பிடூஉம் முதுகுடிப் பிறந்தோன் - வீர முரசத்தைக் குறுந்தடிகொண்டு அறைகின்ற தொல்குடிப் பிறந்த வள்ளுவன், திரு விழைமூதூர் வாழ்க என்று ஏத்தி-திருமகளும் விழைகின்ற தொன்னகர் வாழ்க என்று துதித்து, வானம் மும்மாரி பொழிக-மேகம் மாதம் மும்முறை மழை பொழிக, மன்னவன் கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக - அரசன் கோள்கள் நிற்கும் நிலை குலையாமைக்குக் காரணமாகிய செங்கோலை யுடையவனாகுக என வாழ்த்தி; கச்சை - அடி வயிற்றிற் கட்டுங் கயிறு. பிடர்த்தலை - பிடரிடம். வீர முரசிற்கு வென்ற ஏற்றின் தோலை மயிர் கழியாது போர்த்தல் மரபு; இதனை' 3"மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின், அண்ணனல்லே றிரண்டுடன் மடுத்து, வென்றதன் பச்சை சீவாது போர்த்த, திண்பிணி முரசம்" என்பதனாலறிக. இடியுறு: உறு - உவமவுருபு. இடியுரும் என்னும் பாடத்திற்கு இடியேறு என்க. கூற்றுக்கண்: கண் - அசை. கடிப்பிகூஉம் என்னும் பாடத்திற்கும், இகூஉம்-அறையுமென்னும் பொருட்டாம்; 1" முரசுகடிப் பிகுப்பவும்" என்பது காண்க. என்று வாழ்த்தியெனவிரித்துரைக்க. மூதூர் வாழ்க மாரிபொழிக கோலோனாகுக என்று ஏத்தி என்னலுமாம்; ஏத்தி-வாழ்த்தி. அரசனது கோல் கோடின் கோட்கள் நிலை திரியும் என்பது, 2"கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும்" 3"கோணிலை திரிந்து...அரசுகோல் கோடி னென்றான்" என்பவற்றாலும் அறியப்படும். முதுகுடிப் பிறந்தோன் முரசம் ஏற்றி ஏத்தி என்றியைக்க. 35-43. தீவகச் சாந்தி செய்தரு நல் நாள் - நாவலந் தீவிற்குச் சாந்தியாகிய இந்திர விழவினைக் கொண்டாடு நாட்களில், ஆயிரங் கண்ணோன் தன்னோடு-ஆயிரங் கண்களையுடைய புரந்தரனோடு, ஆங்குள நால்வேறு தேவரும் நலத்தகு சிறப்பின் பால்வேறு தேவரும் இப்பதிப் படர்ந்து-ஆண்டுள்ள நால்வகையாகப் பிரிக்கப்படும் முப்பத்து மூவராகிய தேவரும் நன்மைசால் சிறப்புடையராகிய பதினெண் கணங்களும் இந்நகரத்தினை நினைந்து, மன்னன் கரிகால் வளவன் நீங்கிய நாள்-கரிகாற் பெருவளத்தான் என்னும் மன்னர் பெருமான் இந்நகரினின்றும் நீங்கி வட திசையிற் போருக்குச் சென்ற ஞான்று, இந்நகர் போல்வதோர் இயல்பினது ஆகி-இப்பதி வறிதாகிய தன்மைபோல, பொன் நகர் வறிதாப் போதுவர் என்பது - பொன்னுலகம் வறிதா குமாறு ஈண்டு அடைவர் என்பது, தொல்நிலை உணர்ந்தோர் துணி பொருள் ஆதலின்-பழமையை அறிந்தோர்களால் துணியப்பட்ட பொருளாகலின்; நாவலந் தீவின் காவற்றெய்வம் முற்காலத்தில் இத்தீவிலுள்ளார்க்கு அவுணரால் வருந்துன்பத்தை ஒழித்தற் பொருட்டாக இந்திரனுக்குச் செய்தமையால் இந்திரவிழா தீவகச்சாந்தி எனப்பட்டது. 4"நாவலோங்கிய மாபெருந் தீவினுட், காவற்றெய்வதந் தேவர் கோற்கெடுத்த, தீவகச் சாந்தி" என மேல் வருதல் காண்க. இனி, இந்நகருக்குளவாகுந் துன்பங்களை யொழித்தற்குச் செய்யப்படும் இவ்விழா தீவிற்குச் செய்வதனை யொக்கு மென்னுங் கருத்தால் தீவகச் சாந்தி யெனப்பட்ட தெனினும் அமையும்; இவ்'d2வூ ரம்பலம் "உலக வறவி" (7:93;17:78,86) என இக்காப்பியத்தும், இவ்'d2வூர் வாயில் 5"உலக விடைகழி" எனச் சிலப்பதிகாரத்தும் கூறப்படுதல் காண்க. நால் வேறு தேவர் - வசுக்கள் எண்மரும் ஆதித்தர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும், மருத்துவர் இருவரும் ஆகிய முப்பத்து மூவர். பால்-பகுதி. படர்ந்து-நினைந்து. கரிகால் வளவன்-புகாரிலிருந்தரசாண்ட பெரு வீரனாகிய ஓர் சோழ மன்னன்; இவன் வடநாட்டின்மீது படையெடுத்துச் சென்ற செய்தி 1"செருவெங் காதலிற் றிருமா வளவன்,...புண்ணியத் திசை முகம் போகிய வந்நாள்" எனச் சிலப்பதிகாரத்து வருதலான் அறியப் படும். வறிதா-வறுமையுடையதாக; தேவர் பலரும் விழாக்காண இந்நகர்க்கு வந்துவிடுதல்பற்றி இவ்வாறு கூறப்பட்டது. 44-45. தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்-தோரணங் களையுடைய வீதிகளிலும் குற்றமற்ற மன்றங்களிலும், பூரணகும்பமும் பொலம்பாலிகைகளும் பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் - நிறைகுடங்களும் பொற்பாலிகை களும் பாவை விளக்குகளுமாகிய மங்கலப் பொருள் பலவற்றையும் ஒருங்கு பரப்புமின்; 46-47. காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்-காய்த்த குலைகளுடன் கூடிய பாக்கு மரமும் வாழை மரமும் வஞ்சி மரமும், பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின் - மலர் களையுடைய கொடியும் கரும்பும் என்னுமிவற்றை நடுவீர்; வஞ்சி - கொடியுமாம். கொடி வல்லி ஒரு பொருளன. 48-49. பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து-வரிசையாகவுள்ள திண்ணைகளிலிருக்கும் பசும் பொன்னாலாகிய தூண்களில், முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின் - முத்துமாலைகளை முறையாகத் தொங்க விடுமின்; தூணம் - தூண். பத்தியாகிய தூண் என்றலுமாம். முறையொடு - முறையால். 50-51. விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் - விழாக்கள் நிறைந்த மூதூரின் வீதிகளிலும் மரத்தடிகளிலும், பழ மணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் - பழைய மணலை நீக்குமின் புதிய மணலைப் பரப்புமின்; மன்றம்-ஊர்க்கு நடுவாய் எல்லாரு மிருக்கும் மரத்தினடி என்பர். 52-53. கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும் மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்-துகிற் கொடிகளையும் காம்பினால் ஊன்றப்படுங் கொடிகளையும் கொடுங்கைகளை யுடைய மாடங்களிலும் வாயில்களிலும் சேர்ப்பீராக; கதலிகைக்கொடி, விலோதம் என்பன துகிற்கொடி வேறு பாடுகள். 54-57. நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக-இமைத்தலில்லாத நெற்றித் திருக்கண்ணையுடைய சிவபெருமான் முதலாக இப்பதியில் வாழ்கின்ற சதுக்கப்பூதம் ஈறாகவுள்ள கடவுளர்கட்கு, வேறு வேறு சிறப்பின் வேறு வேறு செய்வினை - வெவ்வேறு வகைப்பட்ட சிறப்புக்களோடு வெவ்வேறாகிய செய்வினை களை, ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்-செய்யும் நெறியினை அறிந்த முறைமையினையுடைய அறிவுடையோர் செய்ம்மின்; விழிநாட்டம்-இமையா நாட்டம்; 1"நுதல திமையா நாட்டம்" என்பது அகம். 2"நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்" என்பர், இளங்கோவடிகளும். இனி, இறைவி கண் புதைத்த பொழுது நெற்றியிற் புறப்படவிட்டகண் என்றுமாம். விழி-விழித்த. சதுக்கம் - நான்கு தெருக் கூடுமிடம்- சிறப்பு - நைமித் திகமும், செய்வினை - நித்தமுமாம்; வெவ்வேறு சிறப்பினுக்கேற்ற செய்வினையுமாம். ஆறு - வேதத்தின் ஆறங்கமுமாம். அறிந்தோர்: முன்னிலை. 58-59. தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும் - குளிர்ந்த மணலையுடைய பந்தர்களிலும் பலரும் தங்கும் அம்பலங் களிலும், புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின் -நன்றாகிய அறவுரையை அறிவீர் சேருமீன்; மணப்பந்தர் என்னும் பாடத்திற்கு மணத்தையுடைய தண்ணீர்ப் பந்தர் என்க. தாழ்தல் - தங்குதல். புண்ணிய நல்லுரை - தருமபதம். பொருந்துமின் - பொருந்தி உரைமின் என்று கொள்க. 60-61. ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் - தம்தம் சமயத்திற் பொருந்திய பொருள்களைக் குறித்துச் சபதஞ் செய்து வாதிக்கும் சமயவாதிகள், பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்-வித்தியா மண்டபத்தில் உரிய இடங்களில் அமர்வீர்; ஒட்டல்-சபதஞ் செய்தல், பொருள்-தத்துவம். பட்டிமண்டபம்- கலை யாராய்தற்கும், வாது புரிதற்குமுரிய மண்டபம்; 3"பகைப் புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்" 4"பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம்" என்பன காண்க. ஓலக்க மண்டபமென்றும் கூறுவர். 1"பட்டி மண்டப மேற்றினை யேற்றினை" என்பது திருவாசகம். 62-63. பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்-பகைவரோடாயினும், செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின் - சினமும் போரும் செய்யாது நீங்குமின்; செற்றம் - நெடுங்கால நிற்கும் கோபம்; வயிரம். 64-67. வெண்மணற் குன்றமும் - வெள்ளிய மணற் குன்று களிலும், விரிபூஞ் சோலையும் - பரந்த மலர்ப் பொழில்களிலும், தண் மணல் துருத்தியும் - குளிர்ந்த மணலையுடைய யாற்றிடைக் குறைகளிலும், தாழ் பூந்துறைகளும் -ஆழ்ந்த பொலிவினை யுடைய நீர்த் துறைகளிலும், தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும் நாலேழ் நாளினும் - தேவரும் மக்களும் வேற்றுமை யின்றிச் சேர்ந்துலாவும் இருபத்தெட்டு நாட்களிலும், நன்கு அறிந்தீர் என - இவற்றை நன்கு அறிந்தீராய் என்று; அறிந்தீர்: அறிந்தீராகியென வினையெச்சமாக்குக. 68-72. ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும் களிறும் குழ்தர - விளங்குகின்ற வாளினையுடைய வீரரும் தேரும் குதிரையும் யானையும் சூழ்ந்துவர, கண் முரசு இயம்பி-முகத்தையுடைய முரசத்தினை அடித்து, பசியும் பிணியும் பகையும் நீங்கி - மக்கள்பால் பசியும் நோயும் பகைமையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி-நாட்டிலே மழையும் வளமும் பெருகுக என்று வாழ்த்தி, அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கு என் - அகநகரிடத்தே அழகிய விழாவைத் தெரிவித்தனன் என்க. பகை-காமம் முதலிய உட்பகையுமாம். அகநகர்-பட்டினப் பாக்கம். என் : அசை. 2"பசியும் பிணியும் பகையு நீங்கி, வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி" எனச் சிலப்பதிகாரத்தும் இத்தொடர் முழுதும் வந்துள்ளமை காண்க. முதுகுடிப் பிறந்தோன் முரசத்தை ஏற்றி இயம்பி ஏத்திச் சுரக்கென வாழ்த்தித் துணிபொருளாதலின் நாலேழ் நாளினும் நன்கறிந்தீராய்ப் பரப்புமின், நடுமின், நாற்றுமின், மாற்றுமின், பரப்புமின், சேர்த்துமின், செய்யுமின், பொருந்துமின், ஏறுமின், அகலுமின் என அகநகர் மருங்கு விழாவை அறைந்தனன் என்க. விழாவறை காதை முற்றிற்று. 2. ஊரலருரைத்த காதை இந்திரவிழா நடைபெற்றது. அந் நன்னாளில் மாதவியும் மணிமேகலையும் வழக்கப்படி ஆடுதற்கு வாராமையின் மனம் வருந்திய சித்திராபதி மாதவியின் றோழியாகிய வயந்தமாலையை அழைத்து, ‘ஊரார் கூறும் பழிமொழியை மாதவிக்கு உரைப்பாய்' என விடுக்க, அவள் சென்று மாதவியும் மணிமேகலையும் இருந்த மலர்மண்டபத்தை அடைந்து மாதவியின் தவத்தால் வாடிய உடம்பினைக் கண்டு வருந்தி, ‘நாடக மகளிர்க்குரிய கலைகள் பலவும் கற்றுத் துறைபோகிய நீ விழாவிற்கு வாராமலும், மரபிற் கொவ்வாத தவவொழுக்கம் பூண்டுமிருத்தல் பற்றி ஊரார் பலரும் கூடி யுரைக்கும் பழிமொழிகள் நாணுந்தகையன" என்றுரைத்தனள். அதுகேட்ட மாதவி, அவளை நோக்கி, ‘காதலனுற்ற கடுந்துயர் பொறாது, காவலன் பேரூர் கனையெரி யூட்டிய மாபெரும் பத்தினியாகிய கண்ணகியின் மகள் மணிமேகலை தவநெறிச் செல்லுதற் குரியளன்றி, இழிந்த பரத்தமைத் தொழிலுக்குரியளல்லள்; ஆதலின் அவள் அங்கே வாராள்; நான் இங்கு வந்து அறவணவடிகளின் அடிமிசை வீழ்ந்து, காதலனுற்ற கடுந்துயரைக் கூறி வருந்த, அவர், ‘ பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும்பே ரின்பம் பற்றின் வருவது முன்னது பின்னது அற்றோர் உறுவது அறிக’ என்று நால்வகை வாய்மைகளையும் எனக்கு அருளிச்செய்து, பஞ்சசீலத்தையும், அறிவுறுத்தி, இவற்றைக் கடைப்பிடிப்பாய் என்று அருள்செய்தனர்; ஆதலின் நானும் அங்கு வருதற்குரியே னல்லேன்; இச்செய்தியை ஆயத்தார்க்கும், என் நற்றாய் சித்திராபதிக்கும் சொல்,' என்று கூற, வயந்த மாலை பெறுதற்குரிய மாணிக்கத்தைக் கடலில் வீழ்த்தினோர் போன்று செயலற்றுச் சித்திராபதியிடம் மீண்டனள். (இதன்கண் நாடக மகளிர்க்கு உரிய பல கலைவகைகளும், மூவகைப் பத்தினிப் பெண்டி ரியல்புகளும் கூறப்பட்டுள்ளன.) நாவ லோங்கிய மாபெருந் தீவினுள் காவற் றெய்வதந் தேவர்கோற் கெடுத்த தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் மணிமே கலையொடு மாதவி வாராத் 5 தணியாத் துன்பந் தலைத்தலை மேல்வரச் சித்திரா பதிதான் செல்லலுற் றிரங்கித் தத்தரி நெடுங்கட் டன்மக டோழி வயந்த மாலையை வருகெனக் கூஉய்ப் பயங்கெழு மாநக ரலரெடுத் துரையென 10 வயந்த மாலையும் மாதவி துறவிக்கு அயர்ந்துமெய் வாடிய அழிவின ளாதலின் மணிமே கலையொடு மாதவி யிருந்த அணிமலர் மண்டபத் தகவயிற் செலீஇ ஆடிய சாயல் ஆயிழை மடந்தை 15 வாடிய மேனி கண்டுளம் வருந்திப் பொன்னே ரனையாய் புகுந்தது கேளாய் உன்னோ டிவ்வூர் உற்றதொன் றுண்டுகொல் வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்துக் கூத்தும் பாட்டுந் தூக்குந் துணிவும் 20 பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலும் தண்ணுமைக் கருவியுந் தாழ்தீங் குழலும் கந்துகக் கருத்தும் மடைநூற் செய்தியும் சுந்தரச் சுண்ணமுந் தூநீ ராடலும் பாயற் பள்ளியும் பருவத் தொழுக்கமும் 25 காயக் கரணமுங் கண்ணிய துணர்தலும் கட்டுரை வகையுங் கரந்துறை கணக்கும் வட்டிகைச் செய்தியும் மலராய்ந்து தொடுத்தலும் கோலங் கோடலுங் கோவையின் கோப்பும் காலக் கணிதமுங் கலைகளின் றுணிவும் 30 நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரை நூற் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை நற்றவம் புரிந்தது நாணுடைத் தென்றே அலகின் மூதூர் ஆன்றவ ரல்லது 35 பலர்தொகு புரைக்கும் பண்பில் வாய்மொழி நயம்பா டில்லை நாணுடைத் தென்ற வயந்த மாலைக்கு மாதவி யுரைக்கும் காதல னுற்ற கடுந்துயர் கேட்டுப் போதல் செய்யா உயிரொடு நின்றே 40 பொற்கொடி மூதூர்ப் பொருளுரை யிழந்து நற்றொடி நங்காய் நாணுத் துறந்தேன் காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்கா(து) இன்னுயி ரீவர் ஈயா ராயின் 45 நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர் நளியெரி புகாஅ ராயின் அன்பரோ(டு) உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர் பத்தினிப் பெண்டிர் பரபபுநீர் ஞாலத்து அத்திறத் தாளும் அல்லளெம் மாயிழை 50 கணவற் குற்ற கடுந்துயர் பொறாஅள் மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக் கண்ணீ ராடிய கதிரிள வனமுலை திண்ணிதிற் றிருகித் தீயழற் பொத்திக் காவலன் பேரூர் கனையெரி யூட்டிய 55 மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை அருந்தவப் படுத்தல் அல்ல தியாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள் ஆங்ஙன மன்றியும் ஆயிழை கேளாய் ஈங்கிம் மாதவர் உறைவிடம் புகுந்தேன் 60 மறவணம் நீத்த மாசறு கேள்வி அறவண வடிகள் அடிமிசை வீழ்ந்து மாபெருந் துன்பங் கொண்டுள மயங்கிக் காதல னுற்ற கடுந் துயர் கூறப் பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம் 65 பிறவா ருறுவது பெரும்பே ரின்பம் பற்றின் வருவது முன்னது பின்னது அற்றோ ருறுவ தறிகென் றருளி ஐவகைச் சீலத் தமைதியுங் காட்டி உய்வகை இவைகொளென் றுரவோ னருளினன் 70 மைத்தடங் கண்ணார் தமக்குமெற் பயந்த சித்திரா பதிக்குஞ் செப்பு நீயென ஆங்கவ ளுரைகேட் டரும்பெறன் மாமணி ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர் போன்று மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும் 75 கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்தென். உரை 1-9. நாவல் ஓங்கிய மா பெரும் தீவினுள் காவல் தெய்வதம் தேவர் கோற்கு எடுத்த - நாவல் எனப் பெயர் சிறந்த மிகப் பெரிய தீவினுள்ளேஅதன் காவற்றெய்வமாகிய சம்பாபதியால் இந்திர னுக்கு எடுக்கப்பட்ட, தீவகச் சாந்தி செய்தரு நல்நாள் - தீவ சாந்தியாகிய இந்திர விழவினைச் செய்கின்ற நன்னாளில், மணிமேகலையொடு மாதவி வாரா - மணிமேகலையுடன் மாதவியும் வாராமை யாலுண்டான, தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர-ஆறாத்துயர் மேன் மேல் மிகாநிற்க, சித்திராபதிதான் செல்லல் உற்று இரங்கி - சித்திராபதி மிகவுந் துன்பமுற்று வருந்தி, தத்துஅரி நெடுங்கண் தன்மகள் தோழி-செவ்வரி படர்ந்து பாய்கின்ற நீண்ட கண் களையுடைய தன் புதல்வி மாதவியின் தோழியாகிய, வயந்த மாலையை வருக எனக் கூஉய்-வயந்தமாலையை வாவென்று அழைத்து, பயங் கெழு மாநகர் அலர் எடுத்து உரை என-நீ சென்று பயன் சிறந்த பெரிய நகரினுள்ளார் கூறும் அலரை மாதவிக்கு எடுத்துக் கூறுவாயாக என்று உரைப்ப; நாவல் மரம் ஓங்கியுள்ளமையால் அப் பெயர்பெற்ற தீவு என்றுமாம். பெருந் தீவுகளுள் ஒன்றாதலின் இது மாபெருந் தீவு எனப்பட்டது. "நால்வகை மரபின் மாபெருந் தீவும்" (6:195) என்பர். மேலும், பண்டு எடுத்தமையால் தீவகச் சாந்தியெனப் பெயர் பெற்ற இந்திர விழாவைச் செய்யும் இந் நன்னாளில் என விரித் துரைக்க. விழாவிற்கு ஆடல் பாடல் நிகழ்த்த வாராமையால் என்க வாராத்துன்பம் தணியாமல் மேல்வர என்றுமாம். தத்துஅரி-அரி படர்ந்த எனலுமாம். 10-17; வயந்த மாலையும் மாதவி துறவிக்கு அயர்ந்து மெய்வாடிய அழிவினள் ஆதலின் - வயந்த மாலையும் மாதவியினது துறவிற்கு மனந்தளர்ந்து உடல் வாடிய வருத்த முடையவள் ஆகலான், மணிமேகலையோடு மாதவி இருந்த அணி மலர் மண்டபத்து அகவயின் செலீஇ - மணிமேகலையுடன் மாதவியிருந்த அழகிய மலர் மண்டபத்தின் உள்ளே சென்று, ஆடிய சாயல் ஆயிழை மடந்தை வாடிய மேனி கண்டு உளம் வருந்தி - அசை கின்ற மென்மையினையுடைய மாதவியினது தவத்தான் வாட்ட முற்ற யாக்கையைக் கண்டு மனம் வருந்தி, பொன்னேரனையாய்- திருமகள் போல் வாய், புகுந்தது கேளாய் - இப்பொழுது நேர்ந்ததனைக் கேட்பாயாக, உன்னோடு இவ்'d2வூர் உற்றது ஓன்று உண்டுகொல் - நின்னோடு இவ்'d2வூர் உற்றதாகிய பகைமை ஒன்றுண்டோ; துறவி - துறவு; "1துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும்" என்பது காண்க. பொன்-திருமகள். நேரனையாய் - நேரொப்பாய்; உவமச்சொல் இரண்டிணைந்தது. ஊரார் அலர் தூற்றுவது பகைமையாலன்றென்பாள் 'உற்றதொன் றுண்டுகொல்' என்றாள். 18-37. வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்துக் கூத்தும் - வேத்தியலும் பொதுவியலும் என்று இருவகைப்பட்ட கூத்தும், பாட்டும்-இசையும், தூக்கும் - தாளங்களின் வழி வரும் செந்தூக்கு முதலிய ஏழு தூக்குக்களும், துணிவும் - தாள வறுதியும், பண்ணியாழ்க் கரணமும்-பண்ணுடன் பொருந்திய யாழின் செய்கைகளும், பாடைப் பாடலும் - அகநாடகம் புறநாடகம் என்பவற்றிற்கு உரிய உருக்களும், தண்ணுமைக் கருவியும் - உத்தமத் தோற்கருவியாகிய மத்தளமும், தாழ் தீங் குழலும் - இனிமை பொருந்திய வேய்ங் குழலும், கந்துகக் கருத்தும்-பந்தாடும் தொழிலும்.மடைநூற் செய்தியும் - பாக சாத்திர முறைப்படி ஆடுதற் றொழிலும், சுந்தரச் சுண்ணமும்-நிறமமைந்த நறுமணப் பொடியும், தூநீர் ஆடலும்-நன்னீராடலும், பாயற்பள்ளியும் - பாயலிடமும், பருவத்து ஒழுக்கமும்-காலங்கட்கேற்ப ஒழுகும் ஒழுக்கமும், காயக் கரணமும்-காயத்தாற் செய்யும் அறுபத்துநான்கு வகைக் கரணங்களும், கண்ணியது உணர்தலும் - பிறர் கருதியதை அறிந்து கொள்ளுதலும், கட்டுரை வகையும் - தொடுத்துக் கூறும் சொல் வன்மையும் , கரந்துறை கணக்கும் - மறைந்துறையும் வகையும், வட்டிகைச் செய்தியும் - எழுதுகோலினால் எழில்பட வரையும் தொழிலும், மலர் ஆய்ந்து தொடுத்தலும் - பூக்களை ஆராய்ந்தெடுத்துக் கட்டுதலும், கோலம் கோடலும் - அவ்வப் பொழுதிற்கேற்ப ஒப்பனைசெய்து கொள்ளுதலும், கோவையின் கோப்பும் - முத்து முதலியவற்றைக் கோவையாகக் கோத்தலும், காலக்கணிதமும் -சோதிடமும்; கலைகளின் துணிவும் - மற்றுமுள்ள கலைகளின் துணிந்த பொருளும், நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த -நாடகக் கணிகையர்க்கென நன்கு வகுக்கப்பட்ட, ஓவியச் செந்நூல் உரை நூற் கிடக்கையும்- செவ்விய நூலாகிய புகழமைந்த ஓவிய நூலிற் கூறப் பட்டனவும், கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை-கற்று அவைகளிற் கைதேர்ந்த பொன்வளையணிந்த மாதவி, நற்றவம் புரிந்தது நாணுடைத்து என்றே - துறவு பூண்டு நற்றவம் செய்வது நாணமுடைத்தாகும் என்று, அலகில் மூதூர் ஆன்றவர் அல்லது-இம்மூதூரிலுள்ள அறிவானமைந்த அளவற்ற பெரியோர்கள் அல்லாமல், பலர் தொகுபு உரைக்கும் பண்பில் வாய்மொழி-பலருங்கூடிக் கூறும் நலமில்லாத வாய் மொழி, நயம்பாடு இல்லை - இனிதாதல் இல்லை, நாண் உடைத்து என்ற - அதனால் நின்செய்கை நாணுந்தன்மை யுடைத்தாம் என்று கூறிய, வயந்த மாலைக்கு மாதவி உரைக்கும்- தோழியாகிய வயந்தமாலைக்கு மாதவி கூறூவாள்; வேத்தியல் - அரசர்க்காடுங் கூத்து ; பொதுவியல் - எல்லார்க்கும் ஒப்ப ஆடுங் கூத்து ; 1"வேத்தியல் பொதுவிய லென்றிரு திறத்து... ஆடலும்," என்பது காண்க. தூக்கு ஏழினையும், "ஒருசீர்செந்தூக் கிரு சீர் மதலை, முச்சீர் துணிவு நாற்சீர் கோயில், ஐஞ்சீர் நிவப்பே யறுசீர் கழாலே, எழுசீர் நெடுந்தூக் கென்மனார் புலவர்," என்பதனாலறிக. யாழ்க்கரணம் - பண்ணல் முதலிய எட்டும், வார்தல் முதலிய எட்டுமாம்; இவற்றைச் சிலப்பதிகாரத்துக் கானல் வரியிற் காண்க. தாழ்தல் - தங்குதல். பருவம் - கார்முதலியன. காலக் கணிதம் - சோதிட மாதலை, 2"ஆயுள் வேதரும் காலக் கணிதரும்," என்பதனா லறிக. கலைகள் என்றது பரத்தையர்க் குரியவாகக் கூறப்படும் அறுபத்து நான்கு கலைகளுள் ஈண்டுக் கூறாதொழிந் தனவாகும். பரத்தையர்க்குரிய கலைகள் அறுபத்துநான்கு என்பதனை, 3"பண்ணுங் கிளியும் பழித்த தீஞ்சொல், எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும்," 4"எண்ணான் கிரட்டி யிருங்கலை பயின்ற, பண்ணியன் மடந்தையர்," 5"யாழ்முதலாக வறுபத் தொருநான், கேரிள மகளிர்க்கியற்கையென் றெண்ணிக், கலையுற வகுத்த காமக் கேள்வி," என்பவற்றானறிக. நன்கனம் - நன்றாக ; இச்சொல், "நன்கன நீத்து," (3:88) "நன்கன நவிற்றி" (13-24) "நன்கன மறிந்தபின்" (13 : 26) என இக் காப்பியத்துட் பயின்று வந்துளது. வாய்மொழி நாணுடைத் தெனினுமாம். 38-41. காதலன் உற்ற கடுந்துயர் கேட்டு - என் காதலனாகிய கோவலன் அடைந்த கொடிய துன்பத்தினைக் கேள்வியுற்று, போதல் செய்யா உயிரோடு நின்றே - உடலைவிட்டு நீங்காத உயிருடன் நின்று, பொற்கொடி மூதூர்ப் பொருளுரை இழந்து - அழகிய கொடிகளையுடைய இத் தொன்னகரத் தாருடைய புகழுரையை இழந்து, நற்றொடி நங்காய் - நல்ல வளையல்களுடைய வயந்தமாலையே, நாணுத் துறந்தேன் - நாணத்தையும் விட்டேன்; கடுந்துயர் - மிக்க துயர்; என்றது கோவலன் கொலையுண்டது, இக்காதையுள்ளே பின்னரும் (2:50-63) கடுந்துயர் என வருதல் காண்க. மூதூர்:ஆகுபெயர். பொருளுரை-புகழுரை. நங்காய் கேட்டு நின்று இழந்து துறந்தேன் என்றாளென்க. 42-49. காதலர் இறப்பின் - கற்புடை மகளிர்க்கு உயிரினுஞ் சிறந்த கணவன் இறந்தால், கனைஎரி பொத்தி - துயரமாகிய மிக்க நெருப்பு மூளப்பட்டு, ஊது உலைக் குருகின் உயிர்த்து -உலையில் ஊதும் துருத்தி மூக்கினைப்போல் வெய்தாக உயிர்த்து, அகத்து அடங்காது - துன்பம் உள்ளத்தே அடங்கப் பெறாது, இன்னுயிர் ஈவர்-உடன் தமது இனிய உயிரைக் கொடுப்பர்; ஈயார் ஆயின் -அங்ஙனம் கொடாராயின், நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்-நல்ல குளிர்ந்த நீரினையுடையபொய்கையில் ஆடுபவர்போலச் செறிந்த நெருப்பின்கட் புகுவர்; நளிஎரி புகாஅர் ஆயின் -அவ்வாறு தீயிடைக் குளியாராயின், அன்பரோடு உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர்-மறுமைக் கண் தம் அன்பரோடு உடன் உறையும் வாழ்க்கையின் பொருட்டுக் கைம்மை நோன்பினை நோற்று உடம்பினை வருத்துவர்; பத்தினிப் பெண்டிர்-கற்புடை மகளிராவார். பரப்பு நீர் ஞாலத்து - கடல் சூழ்ந்த நிலவுலகிலே, அத்திறத்தாளும் அல்லள் எம் ஆயிழை - எம் கண்ணகியோ அவ்வகையிற் சேர்ந்தவளும் அல்லள்; பொத்தி-மூட்டி; மூளப்பட்டென்க. உயிர் ஈவர் - உடனிறப்பர் என்றபடி; இதனை மூதானந்தம் என்பர்; 1"ஓருயிராக வுணர்க உடன், கலந்தோர்க், கீருயி ரென்ப ரிடைதெரியார்-போரில், விடனேந்தும் வேலோற்கும், வெள்வளையி னாட்கும், உடனே யுலந்த துயிர்," என்பது காண்க; பாண்டியன் நெடுஞ்செழியன் இறப்ப அவன் மனைவியாகிய பெருங்கோப் பெண்டு 'தன்னுயிர் கொண்டவ னுயிர்தே டினள்போல்,' உடனுயிர் நீத்த வரலாறு ஈண்டு அறிதற் குரியது. கணவரை யிழந்த பத்தினிப் பெண்டிர்க்குப் பொய்கையும் தீயும் ஒரு தன்மையின வாதலை, பூதப்பாண்டியன்தேவி தீப்பாய்வாள் கூறிய, 2"பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற, வள்ளித ழவிழ்ந்த தாமரை, நள்ளிரும் பொய்கையுந் தீயுமோரற்றே," என்பதனானும் அறிக. கைம்மை நோன்பின் இயல்பு, 3"வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட, வேளை வெந்தை வல்சி யாகப், பாற்பெய் பள்ளிப் பாயின்று வதியும், உயவற் பெண்டிர்," என்பதனானறியப்படும். அத்திறத்தாளும் அல்லள் - அம்மூன்று திறத்தாருள் அடங்குபவளல்லள்; வேறு சிறப்புடையாள் என்றபடி. ஞாலத்துப் பத்தினிப் பெண்டிர் காதலர் இறப்பின் இன்னுயிரீவர், நளியெரி புகுவர், நோற்றுடம்படுவர்; எம் ஆயிழை அத்திறத்தாளுமல்லள் என்க. 50-57. கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள் - கொழுநனுக்கு நேர்ந்த கொடுந்துயரைப் பொறாதவளாய், மணமலி கூந்தல் சிறு புறம் புதைப்ப - மணம் நிறைந்த கூந்தல் பிடரிடத்தை மறைத்து விரிந்து கிடப்ப, கண்ணீர் ஆடிய கதிர் இள வனமுலை- கண்ணீரால் நனைந்த கதிர்த்த அழகிய இளங்கொங்கையைத் திண்ணிதில் திருகித் தீயழல் பொத்தி-திண்மையுடன் திருகி அழலை மூட்டி, காவலன் பேரூர் கனைஎரி ஊட்டிய - பாண்டியனது பேரூராகிய மதுரையை மிகுந்த நெருப்பினாலுண்பித்த, மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை - மிகச் சிறந்த தெய்வக் கற்பினையுடைய கண்ணகியின் மகளாகிய மணிமேகலை, அருந்தவப் படுத்தல் அல்லது - அரிய தவநெறியிற் சேர்க்கப் படுத லல்லது, யாவதும் - சிறிதும், திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள் - இழிந்த செய்கையையுடைய பரத்தமைத் தொழிலிற் சேர்க்கப்படாள்; சிறுபுறம் - பிடர்; முதுகுமாம். சிறுபுறம் புதைப்ப என்றதனால் கூந்தல் அவிழ்ந்து கிடந்ததென்றவாறாயிற்று. தீயழல் - ஒரு பொருளிரு சொல்: கொடிய அழலுமாம். அவள் மாபெரும் பத்தினியாவள்: அவள் மகள் மணிமேகலை தீத்தொழிற் படாள்; என அறுத்துரைக்க. தன் மகளைக் கண்ணகியின் மகளென்று உரிமை பாராட்டிக் கூறினாள்; அதனால் மணிமேகலையின் மாண்பு தெரித்தல் கருதியுமாம். தீத் தொழிற் படா அள் - தீத்தொழிற் படுத்தற்குரியளல்லள் என்க. 58--69. ஆங்ஙனம் அன்றியும் - அஃதன்றியும், ஆயிழை கேளாய் - வாயந்தமாலையே கேட்பாயாக, ஈங்கு இம்மாதவர் உறைவிடம் புகுந்தேன்-இங்கு இச்சங்கத்தார் உறையுமிடம் புகுந்த யான், மறவணம் நீத்த மாசறு கேள்வி - பாவத் தன்மைகளைத் துறந்த குற்றமற்ற மெய்யறிவுடையரான, அறவண வடிகள் அடிமிசை வீழ்ந்து- அறவணவடிகளின் திருவடிமீது விழுந்து, மாபெருந் துன்பங்கொண்டு உளம் மயங்கி-மிக்க பெருந் துன்பத்துடன் மனங்கலங்கி, காதலன் உற்ற கடுந்துயர் கூற-என் காதலன் அடைந்த கொடிய துயரத்தைக்கூற, பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் - உலகில் பிறந்தவர் அடைவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேரின்பம்-பிறவாதவர் அடைவது மிக்க பேரின்பம், பற்றின்வருவது முன்னது-முதற்கண் கூறப்பட்ட பிறப்புப்பற்றினால் உண்டாவது, பின்னது அற்றோர் உறுவது - பின்னருரைத்த பிறவாமை பற்றினை அற்றோர் அடைதற்குரியது, அறிக என்று அருளி - இவற்றை அறிவாயாகவென்று நால்வகை வாய்மையையும் அருளிச் செய்து, ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி - காமம், கொலை, கள், பொய்,. களவு என்னும் ஐந்தினையும் முற்றத் துறத்தலாகிய ஐவகைச் சீலங்களையும் உணர்த்தி, உய்வகை இவைகொள் என்று-உய்யும் வழி இவையே இவற்றைக் கொள்க என்று, உரவோன் அருளினன்-திண்ணிய அறிவினை யுடைய அவ்வடிகள் அருளினர்; ஆங்ஙனமன்றியும் கேளாய் என்றது மணிமேகலை பரத்தைமைக் குரியளல்லாக் காரணம் அதுவாம்; யாம் இருவேமும் தவநெறி நிற்றற்குரிய காரணத்தையும் கேள் என்றபடி, மாதவர் - பௌத்த சங்கத்தார். பாவங்கள் பத்துவகைப்படு மென்பர். இவற்றின் விரியை இந்நூலின் 24:30-ஆம் காதைகளானறிக. பிறவார்-பிறப்பினீங்கினோர்; வீடுபெற்றோர், 'பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்', என்பது முதலியவற்றால் துக்கம், துக்க நிவாரணம், துக்கோற்பத்தி, துக்க நிவாரண மார்க்கம் என்னும் நான்கு வாய்மையும் முறையே கூறப்பட்டன; 1"துன்பந் தோற்றம் பற்றே காரணம், இன்பம் வீடே பற்றிலி காரணம், ஒன்றிய வுரையே வாய்மை நான்காவது," என்பதுங் காண்க. சீலம் ஐந்தனையும், 2"கள்ளும் பொய்யுங் காமமுங் கொலையுங், உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை" என்பதனானறிக. உய்வகை இவை என்றமையால் வீட்டைவார்க்கு வாய்மையும் சீலமும் இன்றியமையாதன வென்ப தாயிற்று,. உரவோன் அருளினன் ஆதலால் யாம் தவநெறி நிற்றற்கே யுரியம் என விரித்துரைக்க. 70-5. மைத்தடங் கண்ணார் தமக்கும்-மையணிந்த பெரிய கண் களையுடைய நம் ஆயத்தார்க்கும், எற் பயந்த சித்திரா பதிக்கும் செப்புநீ என-என்னைப் பெற்ற சித்திராபதிக்கும் இச்செய்தியை நீ கூறுவாயாக என உரைக்க, ஆங்கவள் உரை கேட்டு-அவள் கூறிய மொழியைக் கேட்டு, அரும்பெறல் மாமணி ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர் போன்று-பெறற்கரிய பெருமை பொருந்திய மாணிக்கத்தை மிகுந்த அலைகளையுடைய பெரிய கடலில் வீழ்த்தியவர்களை ஒத்து, மையல் நெஞ்சமோடு - மயக்கமுற்ற உள்ளத்துடன் வயந்த மாலையும் கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்து-வயந்தமாலையும் மாதவி யிடத்தினின்றும், செயலற்று மீண்டனள் என்க. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையின் துறவைக்குறிக்கு மிடத்து, 1"ஆங்கது கேட்ட வரசனு நகரமும், ஓங்கிய நன்மணி யுறுகடல் வீழ்த்தோர், தம்மிற் றுன்பர் தாநனி யெய்த" என்று கூறியிருப்பது அறியற் பாலது. நன்னாளில் மணிமேகலையொடு மாதவி வாராத் துன்பம் மேல்வரச் சித்திராபதி இரங்கி வயந்தமாலையைக் கூவி அலரினை மாதவிக் குரையென்று கூற, அவன் மாதவியிருந்த மண்டபத்துச் சென்று கண்டு வருந்தி, பண்பில் வாய்மொழி நயம் பாடில்லை, நாணுடைத்து என்ன, அது கேட்ட மாதவி, நாணுத் துறந்தேன்; மணிமேகலை தீத்தொழிற் படாள்; உரவோன் அறிகென் றருளிக் காட்டி, இவற்றைக் கொள்ளென் றருளினன்; இதனை நீ செப்பென்று சொல்ல, வயந்தமாலையும் கேட்டுக் கையற்றுப் பெயர்ந்தனள் என முடிக் க. ஊரலருரைத்த காதை முற்றிற்று. 3. மலர்வனம் புக்க காதை மாதவி வயந்தமாலைக்குக் கூறிய இன்னாவுரையின் வாயிலாக மணிமேகலைக்குப் பரிபாக காலம் (ஏது நிகழ்ச்சி) வந்துற்றது ஆகலின், அவள், தன் தந்தைக்கும் தாயாகிய கண்ணகிக்கும் மதுரையில் நேர்ந்த கொடுந் துன்பம் தன் காதுகளைச் சுடுதலால் அழுது கண்ணீரால் தான் தொடுக்கின்ற மாலையை நனைத்துக் கொண்டிருந்தனள்; மாதவி அது கண்டு அவளது கண்ணீரைத் துடைத்து, அவள் துயரினை ஒருவாறு மாற்றக் கருதி, 'இம்மாலை நின் கண்ணீரால் தூய்மை யொழிந்தது; ஆதலின் வேறு மாலை தொடுத்தற்கு நீயே சென்று நன்மலர் கொணர்வாய்' என்றனள். அப்பொழுது அவளுடன் மலர் தொடுக்கும் சுதமதி அதனைக் கேட்டுத் துயரொடுங் கூறுவாள்: "மணிமேகலையின் கண்ணீரைக் கண்டனனாயின் காமன் தன் படைக்கலத்தை எறிந்து விட்டு நடுங்குவன்; அவளை ஆடவர் புறத்தே காண்பாராயின் விட்டு நீங்குதலுண்டோ? அன்றியும் யான் இந்நகரத்திற்கு வந்த காரணத்தையும் கேட்பாயாக; சண்பை நகரத்துள்ள கௌசிகன் என்னும் அந்தணன் மகளாகிய யான் சோலையில் தனியே மலர் கொய்யும் பொழுது இந்திரவிழாக் காண்டற்கு வந்த மாருதவேகன் என்னும் விஞ்சையன் என்னை எடுத்துச் சென்று தன் வயமாக்கிப் பின்பு இந்நகரிலே என்னை விட்டு நீங்கினன்; மகளிர் தனியே போய் மலர்கொய்தலால் வரும் ஏதம் இத்தகையது; ஆதலால் மணிமேகலை தனியே சென்று பூப்பறித்தல் தவறாகும்; பூக்கொய்ய இலவந்திகைச் சோலைக்குச் சென்றால் அரசன் பக்கத்திலுள்ளவர் ஆங்கிருப்பர்; உய்யானத்திற் சென்று பறிக்கலா மெனில், வானோராலன்றி மக்களால் விரும்பப்படாதனவும் வண்டு மொய்க்காதனவுமாகிய வாடாத மலர் மாலைகளை மரங்கள் தூக்குதலால், கையிற் பாசமுடைய பூதத்தாற்காக்கப்படுவதென்று கருதி, அதன்கண் அறிவுடையோர் செல்லார்; சம்பாதி வனமும், கவேர வனமும் தீண்டி வருத்தும் தெய்வங்களாற் காக்கப் படுதலின் அவற்றின் கண்ணும் அறிவுடையோர் செல்லார்; புத்த தேவன் ஆணையால் பல மரங்களும் எப்பொழுதும் பூக்கும் உவவனம் என்பதொன்றுண்டு; அவ்வனத்தினுள்ளே பளிங்கு மண்டபம் ஒன்றுளது; அதனுள்ளே சில உண்மைகளைத் தெரிவித்தற் பொருட்டு மயனால் நிருமிக்கப்பட்ட தாமரைப் பீடிகை ஒன்றுளது; அவ் வனத்திலன்றி நின்மகள் வேறு வனங்களிற் செல்லுதற்குரியளல்லள்; அவளுடன் யானும் போவேன்;" என்று கூறிச் சுதமதி மணிமேகலையுடன் வீதியிற் செல்லும்பொழுது, உண்ணாநோன்பி யொருவனைத் தொடர்ந்து கள்ளுண்ணுமாறு வற்புறுத்தும் களிமகன் பின்செல்வோரும், பித்தனொருவனுடைய விகாரச் செய்கைகளைக் கண்டு வருந்தி நிற்போரும், பேடு என்னுங் கூத்தினைக் கண்டு நிற்போரும், மாளிகைகளில் எழுதப்பட்டுள்ள கண்கவர் ஓவியங்களைக் கண்டு நிற்போரும், சிறு தேரின்மேலுள்ள யானையின் மீது சிறுவர்களை ஏற்றி 'முருகன்விழாக் காண்மின்' என மகளிர் பாராட்டுதலைக் கண்டு நிற்போரும் ஆகிய பல குழுவினரும் முன்பு விராடன் பேரூரில் பேடியுருக்கொண்டு சென்ற அருச்சுனனைச் சூழ்ந்த கம்பலை மாக்கள் போல் மணிமேகலையைச் சூழ்ந்துகொண்டு, 'இத்துணைப் பேரழகுடைய இவளைத் தவநெறிப்படுத்திய தாய் கொடியளாவள்; இவள் வனத்திற் செல்லின் ஆங்குள்ள அன்னப் பறவை முதலியன இவள் நடை முதலியவற்றைக் கண்டு என்ன துன்பமுறா' என்று இவை போல்வன கூறி, அவளழகைப் பாராட்டி வருந்தி நின்றனர்; மணிமேகலை சுதமதியுடன் பலவகை மலர்களாலும் வித்தரியற்றிய சித்திரப்படாம் போர்த்தது போல் விளங்கிய உவவனத்தின்கண் மலர் கொய்யப் புகுந்தனள். (இதிற் கூறப்பட்டுள்ள களிமகன், பித்தன் என்போருடைய இயல்புகள் படித்து இன்புறற்பாலன. ஒரு நகர வீதியில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சிகளை இடனறிந்து ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ள திறம் பாராட்டற்குரியது. வயந்த மாலைக்கு மாதவி யுரைத்த உயங்குநோய் வருத்தத் துரைமுன் றோன்றி மாமலர் நாற்றம் போன்மணி மேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள தாதலின் 5 தந்தையும் தாயுந் தாநனி யுழந்த வெந்துய ரிடும்பை செவியகம் வெதுப்பக் காதல் நெஞ்சங் கலங்கிக் காரிகை மாதர் செங்கண் வரிவனப் பழித்துப் புலம்புநீ ருருட்டிப் பொதியவிழ் நறுமலர் 10 இலங்கிதழ் மாலையை இட்டுநீ ராட்ட மாதவி மணிமே கலைமுகம் நோக்கித் தாமரை தண்மதி சேர்ந்தது போலக் காமர் செங்கையிற் கண்ணீர் மாற்றித் தூநீர் மாலை தூத்தகை இழந்தது 15 நிகர்மலர் நீயே கொணர்வா யென்றலும் மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும் சுதமதி கேட்டுத் துயரொடுங் கூறும் குரவர்க் குற்ற கொடுந்துயர் கேட்டுத் தணியாத் துன்பந் தலைத்தலை எய்தும் 20 மணிமே கலைதன் மதிமுகந் தன்னுள் அணிதிகழ் நீலத் தாய்மல ரோட்டிய கடைமணி யுகுநீர் கண்டன னாயிற் படையிட்டு நடுங்குங் காமன் பாவையை 25 ஆடவர் கண்டால் அகறலு முண்டோ பேடிய ரன்றோ பெற்றியின் நின்றிடின் ஆங்ஙன மன்றியும் அணியிழை கேளாய் ஈங்கிந் நகரத் தியான்வருங் காரணம் பாரா வாரம் பல்வளம் பழுநிய காராளர் சண்பையிற் கௌசிக னென்போன் 30 இருபிறப் பாளன் ஒருமக ளுள்ளேன் ஒருதனி யஞ்சேன் ஓரா நெஞ்சமோடு ஆரா மத்திடை அலர்கொய் வேன்றனை மாருத வேகனென் பானோர் விஞ்சையன் திருவிழை மூதூர் தேவர்கோற் கெடுத்த 35 பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன் தாரன் மாலையன் றமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர்தொழு படிமையன் எடுத்தனன் எற்கொண் டெழுந்தனன் விசும்பிற் படுத்தன னாங்கவன் பான்மையே னாயினேன் 40 ஆங்கவன் ஈங்கெனை அகன்றுகண் மாறி நீங்கினன் றன்பதி நெட்டிடை யாயினும் மணிப்பூங் கொம்பர் மணிமே கலைதான் தனித்தலர் கொய்யுந் தகைமைய ளல்லள் பன்மல ரடுக்கிய நன்மரப் பந்தர் 45 இலவந் திகையின் எயிற்புறம் போகின் உலக மன்னவன் உழையோர் ஆங்குளர் விண்ணவர் கோமான் விழாக்கொள் நன்னாள் மண்ணவர் விழையார் வானவ ரல்லது பாடுவண் டிமிரா பன்மரம் யாவையும் 50 வாடா மாமலர் மாலைகள் தூக்கலின் கைபெய் பாசத்துப் பூதங் காக்குமென்று உய்யா னத்திடை உணர்ந்தோர் செல்லார் வெங்கதிர் வெம்மையின் விரிசிறை யிழந்த சம்பாதி யிருந்த சம்பாதி வனமும் 55 தவாநீர்க் காவிரிப் பாவைதன் தாதை கவேரனாங் கிருந்த கவேர வனமும் மூப்புடை முதுமைய தாக்கணங் குடைய யாப்புடைத் தாக அறிந்தோ ரெய்தார் அருளும் அன்பும் ஆருயி ரோம்பும் 60 ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பிற் பகவன தாணையிற் பன்மரம் பூக்கும் உவவன மென்பதொன் றுண்டத னுள்ளது விளிப்பறை போகாது மெய்புறத் திடூஉம் பளிக்கறை மண்டப முண்டத னுள்ளது 65 தூநிற மாமணிச் சுடரொளி விரிந்த தாமரைப் பீடிகை தானுண் டாங்கிடின் அரும்பவிழ் செய்யும் அலர்ந்தன வாடா சுரும்பின மூசா தொல்யாண்டு கழியினும் மறந்தேன் அதன்திறம் மாதவி கேளாய் 70 கடம்பூண் டோர்தெய்வங் கருத்திடை வைத்தோர் ஆங்கவ ரடிக்கிடின் அவரடி தானுறும் நீங்கா தியாங்கணும் நினைப்பில ராயிடின் ஈங்கிதன் காரணம் என்னை யென்றியேல் சிந்தை யின்றியுஞ் செய்வினை யுறுமெனும் 75 வெந்திறல் நோன்பிகள் விழுமங் கொள்ளவும் செய்வினை சிந்தை யின்றெனின் யாவதும் எய்தா தென்போர்க் கேது வாகவும் பயங்கெழு மாமல ரிட்டுக் காட்ட மயன்பண் டிழைத்த மரபின ததுதான் 80 அவ்வன மல்ல தணியிழை நின்மகள் செவ்வனஞ் செல்லுஞ் செம்மை தானிலள் மணிமே கலையொடு மாமலர் கொய்ய அணியிழை நல்லாய் யானும் போவலென் றணிப்பூங் கொம்பர் அவளொடுங் கூடி 85 மணித்தேர் வீதியிற் சுதமதி செல்வுழீஇச் சிமிலிக் கரண்டையன் நுழைகோற் பிரம்பினன் தவலருஞ் சிறப்பின் அராந்தா ணத்துளோன் நாணமும் உடையும் நன்கனம் நீத்துக் காணா உயிர்க்குங் கையற் றேங்கி 90 உண்ணா நோன்போ டுயவவி யானையின் மண்ணா மேனியன் வருவோன் றன்னை வந்தீ ரடிகணும் மலரடி தொழுதேன் எந்தம் அடிகள் எம்முரை கேண்மோ அழுக்குடை யாக்கையிற் புகுந்த நும்முயிர் 95 புழுக்கறைப் பட்டோர் போன்றுளம் வருந்தா திம்மையும் மறுமையும் இறுதியி லின்பமும் தன்வயிற் றரூஉமென் தலைமக னுரைத்தது கொலையு முண்டோ கொழுமடற் றெங்கின் விளைபூந் தேறலின் மெய்த்தவத் தீரே 100 உண்டு தெளிந்திவ் யோகத் துறுபயன் கண்டா லெம்மையுங் கையுதிர்க் கொண்மென உண்ணா நோன்பி தன்னொடுஞ் சூளுற் றுண்மென இரக்குமோர் களிமகன் பின்னரும் கணவிரி மாலை கட்டிய திரணையன் 105 குவிமுகி ழெருக்கிற் கோத்த மாலையன் சிதவற் றுணியொடு சேணோங்கு நெடுஞ்சினைத் ததர்வீழ் பொடித்துக் கட்டிய உடையினன் வெண்பலி சாந்த பெய்ம்முழு துறீ இப் பண்பில் கிளவி பலரொடும் உரைத்தாங்கு 110 அழூஉம் விழூஉம் அரற்றுங் கூஉம் தொழூஉம் எழூஉஞ் சுழலலுஞ் சுழலும் ஓடலு மோடும் ஒருசிறை யொதுங்கி நீடலும் நீடும் நிழலொடு மறலும் மைய லுற்ற மகன்பின் வருந்திக் 115 கையறு துன்பங் கண்டுநிற் குநரும் சுரியற் றாடி மருள்படு பூங்குழல் பவளச் செவ்வாய்த் தவள வாள்நகை ஒள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக் கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதல் 120 காந்தளஞ் செங்கை ஏந்திள வனமுலை அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல் இகந்த வட்டுடை எழுதுவரிக் கோலத்து வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி நீணில மளந்தோன் மகன்முன் னாடிய 125 பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும் வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச் சுடும ணோங்கிய நெடுநிலை மனைதொறும் மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி 130 வெண்சுதை விளக்கத்து வித்தக ரியற்றிய கண்கவர் ஓவியங் கண்டுநிற் குநரும் விழவாற்றுப் படுத்த கழிபெரு வீதியிற் பொன்னாண் கோத்த நன்மணிக் கோவை ஐயவி யப்பிய நெய்யணி முச்சி 135 மயிர்ப்புறஞ் சுற்றிய கயிற்கடை முக்காழ் பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழச் செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப அற்றங் காவாச் சுற்றுடைப் பூந்துகில் 140 தொடுத்தமணிக் கோவை உடுப்பொடு துயல்வரத் தளர்நடை தாங்காக் கிளர்பூட் புதல்வரைப் பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத் திலங்குதொடி நல்லார் சிலர்நின் றேற்றி ஆலமர் செல்வன் மகன்விழாக் கால்கோள் 145 காண்மி னோவெனக் கண்டுநிற் குநரும் விராடன் பேரூர் விசயனாம் பேடியைக் காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின் மணிமே கலைதனை வந்துபுறஞ் சுற்றி அணியமை தோற்றத் தருந்தவப் படுத்திய 150 தாயோ கொடியள் தகவிலள் ஈங்கிவள் மாமலர் கொய்ய மலர்வனந் தான்புகின் நல்லிள வன்னம் நாணா தாங்குள வல்லுந கொல்லோ மடந்தை தன்னடை மாமயி லாங்குள வந்துமுன் நிற்பன 155 சாயல்கற் பனகொலோ தையல் தன்னுடன் பைங்கிளி தாமுள பாவைதன் கிளவிக் கெஞ்சல கொல்லோ இசையுந வல்ல என் றிவை சொல்லி யாவரும் இனைந்துகச் செந்தளிர்ச் சேவடி நிலம்வடு வுறாமல் 160 குரவமும் மரவமுங் குருந்துங் கொன்றையும் திலகமும் வகுளமுங் செங்கால் வெட்சியும் நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும் பிடவமுந் தளவமும் முடமுட் டாழையும் குடசமும் வெதிரமுங் கொழுங்கா லசோகமும் 165 செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும் எரிமல ரிலவமும் விரிமலர் பரப்பி வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே ஒப்பத் தோன்றிய உவவனந் தன்னைத் 170 தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு மலர்கொய்யப் புகுந்தனள் மணிமே கலையென். உரை 1-4. வயந்த மாலைக்கு மாதவி உரைத்த - வயந்த மாலையினிடம் மாதவி கூறிய, உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி - பிறரும் வருந்துதற்குக் காரணமாகிய மிக்க துன்பந்தரும் மொழி யினிடமாக உதித்து, மாமலர் நாற்றம்போல்-சிறந்த மலரிடத்து நாற்றம்போல், மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்-மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ப்பட்டதாதலால்; உரைத்த உரை யென்க. ஏது நிகழ்ச்சி-பயனுக்கு ஏதுவாகிய வினையின் நிகழ்ச்சி; வினை பயன்கொடுத்தற்குத் தோன்றுவது என்ற படி; 1"ஏது நிகழ்ச்சி யீங்கின் றாதலின்" 2"ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள" என இந்நூலுள்ளே பின்னரும் இப்பெயர் பயின்று வருகின்றது. மாமலர் நாற்றம்போல் என்ற உவமையால் நல்வினை பயனளித்தற் கெதிர்ந்துள தென்பது பெற்றாம். மலரின்கண் நாற்றம் அடங்கியிருந்து பின் வெளிப்படுதல் போல் கன்மமும் மறைந்திருந்து பயனளிக்குங் காலம் வந்துழி வெளிப்படு மென்க. 5-10. தந்தையும் தாயும் தாம் நனி உழந்த - தன் தந்தை தாயரான கோவலனும் கண்ணகியும் உற்று மிக வருந்திய, வெந்துயர் இடும்பை செவியகம் வெதுப்ப-கொடிய துயரினை விளைக்கும் துன்ப மொழிகள் காதினுள்ளே சுட, காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை - மணிமேகலை அவர்பால் அன்பு மிக்க உள்ளங் கலக்க முற்று, மாதர் செங்கண் வரி வனப்பு அழித்து - அழகிய சிவந்த கண்களில் மை எழுதின அழகினைச் சிதைத்து, புலம்பு நீர் உருட்டி-வருத்தத்தா லுண்டாகிய கண்ணீரை உதிர்த்து, பொதி அவிழ் நறுமலர் இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட - கட்ட விழ்ந்து விளங்குகின்ற இதழ்களையுடைய நறிய மலர் மாலையின் மீது வீழ்த்தி அதனை நீராட்ட; இடும்பை-மாதவி கூறிய துன்ப மொழிகள், மாதர்-காதல்; ஈண்டு அழகு. வரி-மையெழுதிய கீற்று; 1"வரிவனப் புற்ற" என்பது புறம். புலம்புநீர்-தனித்து வீழ்கின்ற நீர்த் துளியுமாம். நீராட்ட - நனைக்க என்றபடி. 11-17. மாதவி மணிமேகலை முகம் நோக்கி-மாதவி மணிமேகலையின் முகத்தினைப் பார்த்து, தாமரை தண்மதி சேர்ந்ததுபோலக் காமர் செங்கையில் கண்ணீர் மாற்றி-செந்தாமரைமலர் குளிர்ச்சி பொருந்திய முழுமதியைச் சேர்ந்ததுபோலத் தன் விருப்பம் பொருந்திய சிவந்தகையினால் மணிமேகலையின் கண்ணினின் றொழுகும் நீரைத் துடைத்து, தூநீர் மாலை தூத்தகை இழந்தது - தூய நீர்மையையுடைய நறுமலர் மாலை கண்ணீரால் நனைந்து தூய தன்மையை இழந்தது ஆகலின், நிகர்மலர் நீயே கொணர்வாய் என்றலும்-வேறு மாலை தொடுத்தற்கு ஒளி பொருந்திய மலர்களை நீயே சென்று கொண்டுவருக என உரைத்தலும், மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும்-தேன்பொருந்திய மலர் களை யணிந்த கூந்தலையுடைய மணிமேகலையுடன் மலர் தொடுத்துக் கொண்டிருக்கும், சுதமதி கேட்டுத் துயரொடும் கூறும் - சுதமதி யென்பவள் அதனைக் கேட்டுத் துயருடன் கூறுகின்றாள்; மாதவி நோக்கி, மாற்றி, கொணர்வாய் என்றலும், சுதமதி கேட்டுக் கூறுமென்க. போல - போலும்படி, தாமரை மலர் மாதவி கைக்கும், மதி மணிமேகலை முகத்திற்கும் உவமை. காமர் - விருப்பம்; உடையாளது விருப்பம் கையின்மேல் ஏற்றப்பட்டது; அழகுமாம். நிகர்-ஒளி; 2"நீர்வார் நிகர் மலர்" 3“அரும்பவிழ் முல்லை நிகர் மலர்" என்பன காண்க. நீயே கொணர்வாய் என்றது கழுவாய் கூறுவது போன்று அவளது துயரினை மாற்றுவதோ ருபாயங் கருதியாம். 18-25. குரவர்க்கு உற்ற கொடுந் துயர் கேட்டு-தாய் தந்தையர்க்கு நேர்ந்த கொடிய துன்பத்தினைக் கேட்டு, தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும்-ஆறாத் துயரினை மேன்மேல் அடையும், மணிமேகலை தன் மதிமுகம் தன்னுள்-மணிமேகலையினது மதிபோலும் முகத்தினுள், அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஓட்டிய-அழகு விளங்குகின்ற மெல்லிய நீலமலரை வென்ற, கடைமணி உகுநீர் கண்டனன் ஆயின் - கண்ணினது கருமணியின் கடையினின்று சிந்துகின்ற நீரைக் கண்டனனாயின், படைஇட்டு நடுங்கும் காமன்-காமன் தன் படையினை எறிந்து நடுங்குவன், பாவையை ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ - பாவையனையாளை ஆடவர் காணின் விட்டு நீங்குதலும் உண்டோ?, பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின் - அங்ஙனம் தம் இயற்கை திரியாமல் நிற்பரேல் அவர்தாம் பேடியர் அல்லரோ; ஆய்-ஆராய்ந்தெடுத்த என்றுமாம். 1"ஆவின் கடைமணி யுகுநீர்" என்பது ஈண்டு அறியற்பாலது. அவளாற் பகைவெல்லக் கருதியிருந்த காமன் இனி வெல்லுதலரிதென்று படையை எறிந்து நடுங்குவா னென்க. உண்டோ, ஓ ; எதிர்மறை. பெற்றி - இயல்பு. பெற்றியில் நிற்றலாவது - இவளை விரும்பாது நிற்றல். ஆடவர் என்றது ஈண்டு இன்பத்துறை நிற்பாரைக் கருதிற்று. பேடியர் - பெண்ணின்பம் துய்க்குந் தகுதியில்லாதவர். 26-27. ஆங்ஙனம் அன்றியும் - அஃதன்றியும், அணியிழை கேளாய் ஈங்கு இந்நகரத்து யான் வருங் காரணம் - இந்நகரத்தின் கண் யான் வந்த காரணத்தை மாதவி கேட்பாயாக; ஆங்ஙனம்: சுட்டு. ஈங்கு: அசை. 28-32. பாராவாரம் பல்வளம் பழுநிய-கடல் தரும் பல வளங் களும் முதிர்ந்த, காராளர் சண்பையில் - காராளருடைய சண்பை நகரத்தில், கௌசிகன் என்போன் இரு பிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்-கௌசிகன் என்னும் அந்தணனுக்கு ஒரே மகளாயுள்ளயான், ஒரு தனி அஞ்சேன் ஓரா நெஞ்சமோடு - தன்னந்தனியே செல்வதனை அஞ்சாமல் ஒன்றையும் ஆராயாத உள்ளத்தோடு, ஆராமத்திடை அலர் கொய்வேன்தனை-உப வனத்திலே மலர் கொய்வேனாயினேன்; அங்ஙனம் கொய்த என்னை; பாராவாரப் பல்வளம் என்பது மெலிந்து நின்றது. காராளர்-ஓர் சாதியார்; வேளாளருமாம். சண்பை - ஒரு நகரம்; சீகாழியுமாம். 33-41. மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன் - மாருதவேகன் என்னும் ஒரு வித்தியாதரன், திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த - திருமகளும் விரும்பும் இக் காவிரிப்பூம்பட்டினம் இந்திரனுக்குச் செய்யலுற்ற, பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன் - பெரிய விழாவினைக் காணும் நினைவுடன் வருகின்றவனாகிய, தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர் தொழு படிமையன் - பூமாலையை யுடையவனும் மணிமாலையையுடையவனும் பொற்பூணினை யுடையவனும் பூமியிலுள்ளோர், காணலாகாத பலருந் தொழும் தெய்வ வடிவினை யுடையவனுமாகிய அவன், எடுத்தனன் எற்கொண்டு எழுந்தனன் விசும்பில் படுத்தனன் - என்னை எடுத்துக் கொண்டு விசும்பில் எழுந்து அகப் படுத்திக் கொண்டான்; ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன் - அப்பொழுது யான் அவனுடைய இன்பத்தின் பகுதியை யுடையேனாயினேன்; ஆங்கவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி நீங்கினன் தன்பதி நெட்டிடை ஆயினும்-அவ்விஞ்சையன் தன் ஊர் சேய்மைக்கண் உள்ளதானாலும் விழித்த கண் இமைக்கும் அளவிலே என்னை இந்நகரில் விட்டு மறைந்து நீங்கினன்; தாரன் மாலையன் பூணினன் படிமையனாய் வருவோனாகிய விஞ்சையன் என்றியைக்க. 1"தாரன் ......படிமையன்," என்னும் இவ்விரண்டடியும் சிலப்பதிகாரத்தும் வந்துள்ளமை அறிக. காணாப் படிமையன் பலர்தொழு படிமையன் என்க. கண்மாறி - கண்ணோட்டமின்றி என்றுமாம். 42-43. மணிப்பூங் கொம்பர் மணிமேகலைதான் - மாணிக்கப் பூங்கொம்பனைய மணிமேகலை, தனித்து அலர்கொய்யும் தகைமையள் அல்லள் - தனியே சென்று மலர் கொய்யும் தகுதி வாய்ந்தவ ளல்லள்; நீங்கினன்; மகளிர்க்கு இங்ஙனம் இடுக்கண் நிகழ்வது உண்டாகலின்தனித் தலர் கொய்யுந் தகைமைய ளல்லள் என விரித்துரைக்க. 44-46. பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் - பல மலர்களை நிரைத்த நல்ல மரநிழலையுடைய, இலவந்திகையின் எயிற்புறம் போகின் - இலவந்திகையின் மதிற்புறத்தே சென்றால், உலக மன்னவன் உழையோர் ஆங்குளர் - சோழ மன்னனது மருங்கிலுள்ளோர் ஆண்டுறைவர் ; மரப் பந்தர் - மரங்களாகிய பந்தர் என்றும், சோலை என்றுமாம். இலவந்திகை - இயந்திர வாவி; 1"நிறைக்குறி னிறைந்து போக்குறிற் போகும், பொறிப்படை யமைந்த பொங்கில வந்திகை," என்பது காண்க, 2"இலவந்திகை-நீராவியைச் சூழ்ந்த வயந்தச் சோலை; அஃது அரசனும் உரிமையுமாடும் காவற்சோலை," என்பர் அடியார்க்கு நல்லார், உழையோர்-உரிமை மகளிர்; காவலாளருமாம். உழையோர் ஆங்குளர் என்றது அதன்கட் போகலாகாது என்றபடியாம். 47-52. விண்ணவர் கோமான் விழாக்கொள் நல்நாள் - இந்திரனுக்கு விழாச்செய்யும் நல்ல நாட்களில், மண்ணவர் விழையார் வானவர் அல்லது - தேவரையன்றி மக்கள் விரும்பார் ஆதலின், பாடு வண்டு இமிரா-பாடுகின்ற வண்டுகள் ஒலிக்காதனவாய், பன்மரம் யாவையும் -ஆண்டுள்ள பல மரங்களும், வாடா மாமலர் மாலைகள் தூக்கலின் - பெருமை பொருந்திய வாடாத பூமாலைகளைத் தொங்க விடுதலினால், கைபெய் பாசத்துப் பூதம் காக்கும் என்று - கையினிடத்துக் கொண்ட பாசத்தினையுடைய பூதம் காக்குமென்று, உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார் - உய்யானத்தின்கண் அறிந்தோர் செல்லமாட்டார்கள்; வானவர் விழைதலன்றி மண்ணவர் விழையார் என்க. வானவர் விரும்புதலால் வண்டு இமிராவாயின; 3"சுரும்பு மூசாச் சுடர்ப்பூங்காந்தள்" என்பது காண்க. வாடாத மலர் மாலைகள் தேவர்களால் நிருமிக்கப்பட்டன. மாலைகள் தூக்கலின் பூதங் காக்குமென்று கருதுவாராவர். உய்யானம் - உத்தியானம் ; அரசர் விளையாடுஞ்சோலை. 53-58. வெங்கதிர் வெம்மையின் விரிசிறை இழந்த-ஞாயிற்றின் கதிர் வெப்பத்தால் விரிந்த சிறகினை இழந்த, சம்பாதி இருந்த சம்பாதி வனமும்-சம்பாதி என்பவன் இருந்த சம்பாதி வனமும், தவா நீர்க் காவிரிப் பாவை தன் தாதை - அழியாத நீர்ப்பெருக் கினையுடைய காவிரி நங்கையின் தந்தையாகிய, கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும் - கவேரன் எனபவன் இருந்த கவேர வனமும், மூப்புடை முதுமைய தாக்கணங்கு உடைய - மிக்க முதுமையுடை யனவாகிய தீண்டி வருத்தும்பெண் தெய்வங்களை உடையனவாதலின், யாப்புடைத்தாக அறிந்தோர் எய்தார் - அறிவுடையோர் அவற்றை உறுதியுடையவாகக் கருதி அவற்றின்கட் செல்லார்; சம்பாதி - கழுகரசன் ; சடாயுவினுடன் பிறந்தவன்; இவன் வானிலே பறந்து ஞாயிற்று மண்டிலத்தின் அணிமையிற் சென்ற காலை ஞாயிற்றின் வெம்மையாற் சிறை தீயப்பெற்றனன் என்பர். சம்பாதி, சடாயு என்னும் இருவரும் இறைவனைப் பூசித்த இடம் திருப்புள் ளிருக்குவேளூர் என்னும் பதியாகும்; 1"தள்ளாய சம்பாதி சடாயென் பார் தாமிருவர், புள்ளானார்க் கரையரிடம் புள்ளிருக்கு வேளூரே," என்பது காண்க. புகார் நகரம் அப்பதிக்கு அணித்தாகலின் சம்பாதி ஆண்டு வந்திருத்தல் இயல்பேயாகும். வேத்து முனியாகிய கவேரன் என்பவன் பிரமனைக் குறித்து அருந்தவம் புரிந்து அவனருளால் விட்டுணு மாயையைப் புதல்வியாகப் பெற்று முத்தி யெய்தினனென்றும், பின்பு அக்கன்னி பிரமன் கட்டளையால் நதி வடிவுற்றமையால் அந்நதி காவேரியெனப் பெயர் பெற்றதென்றும் புராணங் கூறுமென்பர். யாப்புடைத்தாக-இழுக்கில்லனவாக; யாப்புடைத்தாக அணங் குடைய என்றியைத்தலுமாம். 59-62. அருளும் அன்பும் ஆருயிர் ஓம்பும் ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் - கருணையும் நேயமும் ஆருயிர்களைப் பாதுகாக்கும் ஒப்பற்ற பெரிய மேற்கோளும் நீங்காத நோன் பினையுடைய, பகவனது ஆணையின் பல்மரம்பூக்கும் உவவனம் என்பது ஒன்று உண்டு - புத்த தேவனது ஆணையால் பல மரங்களும் இடையறாது பூக்கின்ற உவவனம் என்னும் பெயருள்ள சோலை ஒன்றுண்டு; அருள் - அன்பு காரணமாகத் தோன்றும் அளி. அன்பு - அருட்கு முதலாகி மனத்தில் நிகழும் நேயம். பூட்கை - மேற்கோள். 62-66. அதன் உள்ளது-அச்சோலையின் உள்ளிடத்ததாகிய, விளிப்பு அறை போகாது மெய்புறத்து இடூஉம் பளிக்கறை மண்டபம் உண்டு - ஓசை வெளியே போகாமல் தன்னைச் சார்ந்தாருடம்பை மட்டும் புறத்தே தோற்றுவிக்கும் பளிக்கு மண்டபம் ஒன்று உண்டு; அதன் உள்ளது - அம்மண்டபத்தின் உள்ளிடத்ததாகிய, தூநிற மாமணிச் சுடர்ஒளி விரிந்த தாமரைப்பீடிகை தான் உண்டு- தூய நிறமுடைய மாணிக்கத்தின் மிக்க ஒளிபரந்த பதுமபீடம் ஒன்றுண்டு; அதன் உள்ளதாகிய மண்டபம் என்றும், அதன் உள்ளதாகிய பீடிகை என்றும் ஒட்டுக. அறை போதல்-வெளியே போதல். தன்னுள் எய்தினவரது ஓசையை வெளிப்படுத்தாது, உருவினை மட்டும் வெளிப் படுத்துவதென்று பளிங்கு மண்டபத்தின் இயல்பு கூறியபடி. பளிக்கறை மண்டபம்-பளிங்கறையாகிய மண்டபம்; பளிங்குப் பாறையாலாகிய மண்டபமுமாம். தாமரைப் பீடிகை-புத்தன் பாதபீடம். "புத்தன் பாதத்தை மணிபத்மம் என்றலும், அதனை வழிபடுவோர் அதுபற்றி, ‘ஓம் மணிபத்மே ஹும்' என்ற மந்திரத்தை ஜபித்தலும் பௌத்த சமய மரபு," என்பர். 66-72. ஆங்கு இடின் அரும்பு அவிழ் செய்யும்-அப்பீடத்தில் இட்டால் அரும்புகள் மலரா நிற்கும், அலர்ந்தன வாடா சுரும்பினம் மூசா தொல் யாண்டு கழியினும்-அலர்ந்த மலர்கள் பல ஆண்டுகள் சென்றாலும் வாடமாட்டா, அவற்றின் கண் வண்டினங்களும் மொய்க்கா, மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய் - மாதவி அதன் இயல்பு ஒன்றினை நன்கு மறந்தேன் இப்பொழுது அதனைக் கேட்பாயாக, கடம் பூண்டு-காணிக்கை செலுத்தலை மேற்கொண்டு, ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் - ஒரு தெய்வத்தை மனத்திலே வைத்து, ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி தான் உறும்- அப்பீடத்தின்கண் அவரடியின் பொருட்டு மலரை இட்டால் அம்மலர் அத்தெய்வத்தினடியைச் சென்று சேரும்; நீங்காது யாங்கணும் நினைப் பிலராய் இடின் - நினைப் பொன்றுமின்றி இட்டால் அம்மலர் யாண்டும் செல்லாது அவண் தங்கும்; தொல் யாண்டு-பல் யாண்டு; கழிந்த ஆண்டுகள் தொன்மையவாதலின் 'தொல் யாண்டு', என்றார் - தொல்யாண்டு கழியினும் வாடா மூசா வென்க. மறந்தேன் என்றது உலக வழக்குப் பற்றி. கடம் - கடன்; காணிக்கை. வைத்தோர் ; முற்றெச்சம். மலரை இடின் என்க. 73-79. ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல்-இதற்குரிய காரணம் யாதென வினவுதியாயின், சிந்தை இன்றியும் செய்வினை உறும் எனும்-மனத்தொடு கூடாத வழியும் செய்தவினை பின்வந்து பயன்றரும் என்கின்ற, வெந்திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும் -வலியினையுடைய நோன்பிகள் வருத்தங் கொள்ளவும், செய்வினை சிந்தை இன்றெனில் யாவதும் எய்தாது என்போர்க்கு ஏதுவாகவும்- மனத்தொடு கூடாவிடின் செய்த வினை சிறிதும் வந்து பயனளியாது என்போர்க்குக் கருவியாகவும், பயம்கெழு மா மலர் இட்டுக் காட்ட மயன் பண்டு இழைத்த மரபினது அதுதான் - மலர்களை இட்டுக் காட்டுமாறு மயன் என் போனால் முன்னர்ச் செய்யப்பட்ட பயன் சிறந்த முறைமையை யுடையதாகும் அத்தாமரைப் பீடம்; பயங்கெழு மரபினது எனக் கூட்டுக. மனத்தொடு கூடாவழி வினை பயன்றரா தென்பதனை, 1"இன்னா வெனத்தா ணுணர்ந்தவை துன்னாமை வேண்டும்" 2"மனத்தானாம் மாணா செய்யாமை தலை" என்னுந் திருக்குறள்களானும், அவற்றிற்கு முறையே, "அறமும் பாவமும் உளவாவது மனமுளனாய வழியாகலான் "உணர்ந்தவை என்றார்" எனவும், "ஈண்டு மனத்தா னாகாத வழிப் பாவமில்லை யென்பது பெற்றாம்" எனவும் பரிமேலழகர் கூறிய உரையானும் அறிக. 80-85 அவ்வனம் அல்லது-அச்சோலையின்கணல்லது, அணியிழை - மாதவியே, நின்மகள் செவ்வனம் செல்லும் செம்மைதான் இலள்- நின்மகள் வேறாகச் செல்லும் தகுதியில்லாதவள்; மணிமேகலை யொடு மாமலர் கொய்ய - மணிமேகலையுடன் மலர் கொய்யுமாறு, அணியிழை நல்லாய் யானும் போவல் என்று-அழகிய அணிகலனையுடைய மாதவி, யானும் செல்வேன் என்று, அணிப்பூங் கொம்பர் அவளொடும் கூடி - அழகிய பூங்கொம்பனைய மணிமேகலையுடன் சேர்ந்து, மணித்தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ - மணிகளுடன் கூடிய தேர்கள் செல்லும் வீதியின்கண் சுதமதி செல்லும்பொழுது; செவ்வனம் - வேறாக; 3"திருமக ளிருக்கை செவ்வனங் கழிந்து" என்புழி, செவ்வனம் கழிந்து எனபதற்கு, வேறாகக் கழிந்து என்று அடியார்க்கு நல்லார் பொருளுரைத்துள்ளமை காண்க; நேராக என்றுமாம். செம்மை - ஈண்டுத் தகுதி. 86-103. சிமிலிக் கரண்டையன்-உறியிலே வைத்த குண்டிகையை யுடையவனும், நுழைகோல் பிரம்பினன்-நுண்ணிதாய்த் திரண்ட பிரம்பினை யுடையவனும், தவலரும் சிறப்பின் அராந்தாணத்து உளோன் - கேடில்லாத மேன்மையையுடைய அருகன் கோட்டத்தே யுள்ளவனும், நாணமும் உடையும் நன்கனம் நீத்து - நாணத்தையும் ஆடையையும் அறவே அகற்றி, காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி- கண்களாற் காண வியலாத சிற்றுயிர்க்கும் நடத்தலாதி தன் றொழில்களால் துன்பமுண்டாமோ எனச் செயலற்று ஏங்கி, உண்ணா நோன் போடு - உண்ணா விரதத்துடன், உயவல் யானையின் மண்ணா மேனியன் வருவோன் தன்னை- வருந்து தலையுடைய யானையைப் போல வருவோனுமாகிய கழுவாத உடலை யுடையவனை, வந்தீர் அடிகள் நும் மலரடி தொழுதேன் - வாரும் அடிகேள் நும்முடைய மலர்போலும் திருவடிகளை வணங்கினேன், எந்தம் அடிகள் எம்உரை கேண்மோ- எம்முடைய பெருமானே அடியேன் மொழியைக் கேளும், அழுக்குடை யாக்கையில் புகுந்த நும் உயிர் - அழுக்குச் செறிந்த உடலின்கட் புகுந்த நும்முடைய உயிரானது, புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது - புழுக்கத் தினைத் தரும் அறையில் அகப்பட்டோரைப்போல உள்ளம் வருந்தா வண்ணம், இம்மையும் மறுமையும் இறுதிஇல் இன்பமும் தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது-எம் தலைவருரைத்ததாகிய இம்மையின்பத்தினையும் மறுமை யின்பத்தினையும் முடிவில்லாத முத்தி யின்பத்தினையும் தன்னிடத்திருந்து தருகின்றதான, கொலையும் உண்டோ கொழுமடல் தெங்கின் விளைபூந் தேறலின் - கொழுவிய மடல்களையுடைய தென்னையின் கண் விளைகின்ற இனிய மதுவில் கொலையென்பதும் உண்டோ?, மெய்த் தவத்தீரே - உண்மைத் தவமுடைய அடிகளே, உண்டு தெளிந்து இவ்யோகத்து உறுபயன் கண்டால் - இதனை உண்டு தெளிவு பெற்று இத் தவநெறியில் இதனின் மிக்க பயனைக் கண்டால், எம்மையும் கையுதிர்க் கொண்மென - தேறலையன்றி எம்மையும் அகற்றிவிடும் என்று கூறி, உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று - உண்ணா நோன்பியாகிய சைன முனிவருடன் சபதங் கூறி, உண்ம் என் இரக்கும் ஓர் களிமகன் பின்னரும் - உண்ணும் என்று இரக்கின்ற ஒரு கட்குடியன் பின் நிற்போரும்; சிமிலி-உறி. கரண்டை - கரண்டகம்; குண்டிகை; 1"கல்பொளிந் தன்ன விட்டுவாய்க் கரண்டைப் பல்புரிச் சிமிலி நாற்றி" என்பது காண்க. அராந்தாணம் - அருகத்தானம். வந்தீரடிகள், எந்தமடிகள், மெய்த்தவத்தீர் எனக் களிமகன் பலகாற் கூறுவது இகழ்ச்சி. மண்ணா மேனியன் ஆகலின் அழுக்குடை யாக்கை என்றான். தலைமகன் - ஆசான். கொலையுமுண்டோ என்றது கொலை யொன்றுமே கடியற்பாலதென்பதனை உடன்பட்டபடி. தெங்கின் விளைபூந் தேறல் என்றது தேறலின் தூய்மை கூறியபடியாம். இவ் யோகத்து - நும்முடைய தவத்தில். இதனினும் உறுபயன் என விரிக்க. இனி, யோகம் - தேறலின் சேர்க்கை யென்றுமாம் : இதற்கு, கண்டால் அகற்றும் என்றது கண்டபின் அகற்றகில்லீர் என்னும் குறிப்பிற்று. கையுதிர் கொள்ளுதல்-கையை.அசைத்து விலக்குதல்; சீலமில்லாரைக் காணின் அவருடன் பேசாது அவரைப் போம்படி கையசைத்துக் குறிப்பித்தல் சைன முனிவர்க்கு இயல்பு. உண்ணா நோன்பி - இரண்டுவாவும் அட்டமியும் பட்டினி விட்டுண்ணும் விரதி; 1"பட்டினி நோன்பிகள்' என்பதனுரையும், 2"ஓவா திரண்டுவவு மட்டமியும் பட்டினிவிட்டொழுக்கங் காத்தல், தாவாத்தவ மென்றார்" என்பதும் காண்க. கரண்டையனும் பிரம்பின்னும் ஆகிய ஆராந்தாணத்துள்ளோன் நோன்போடு மேனியனாய் நீத்து ஏங்கி வருபவனை என்றியைத்துலுமாம். தருவதும் உரைத்ததுமாகிய தேறலில் கொலையுமுண்டோ எனக் கூட்டுக. தரூஉம் தலைமகன் எனலுமாம். கொள்ளும், உண்ணும் என்னும் ஏவல் முற்றுக்களில் ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங் கெட்டது. பெருங் கதையிற் களிமகன் இயல்பாகக் கூறப் பட்டுள்ள, 3"துறக்கம் கூடினுந் துறந்திவ ணீங்கும், பிறப்போ வேண்டேன் யானெனக் கூறி, ஆர்த்த யாய னூர்க்களி மூர்க்கன், செவ்வழிக் கீதஞ் சிதையப் பாடி, அவ்வழி வருமோ ரந்தணாளனைச், செல்ல லாணை நில்லிவ ணீயென, எய்தச் சென்று வைதவண் விலக்கி, வழுத்தினே முண்ணுமிவ் வடிநறுந் தேறலைப், பழித்துக் கூறு நின் பார்ப்பனக் கணமது, சொல் லாயாயிற் புல்லுவென் யானெனக், கையலைத் தோடுமோர் களிமகற் காண்மின்" என்பது ஈண்டு அறியற்பாலது. 104-115. கணவிரி மாலை கட்டிய திரணையன்-அலரிப்பூவால் திரணையாகக் கட்டப்பட்ட மாலையை யுடையனாய், குவிமுகிழ் எருக்கில் கோத்த மாலையன்-எருக்கினது குவிந்த முகைகளாற் கோக்கப் பெற்ற தாரினை யுடையனாய், சிதவல் துணியொடு சேண்ஓங்கு நெடுஞ்சினைத் ததர்வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்-சிதரின துணியோடு வானிலே உயர்ந்த பெரிய மரக் கிளைகளிலுள்ள செறிந்த சுள்ளிகளை ஒடித்துக் கட்டிய உடையை யுடையனாய், வெண்பலி சாந்தம் மெய்முழுது உறீஇ-வெண்ணீறுஞ் சந்தனமும் உடல் முழுதும் பூசிக் கொண்டு, பண்பில் கிளவி பலரொடும் உரைத்தாங்கு - பயனில்லாத சொற்களைப் பலரொடுங் கூறிக் கொண்டு, அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்-அழுதும் விழுந்தும் அரற்றியும் கூவியும், தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும் - தொழுதும் எழுந்தும் சுழலுதலைச் செய்தும்,. ஓடலும் ஓடும் - ஓடியும், ஒருசிறை ஒதுங்கி நீடலும் நீடும்-ஒரு பக்கமாக ஒதுங்கி நெடிது நின்றும், நிழலொடு மறலும்-நிழலுடன் பகைமை கொண்டும் நிற்கின்ற, மையலுற்ற மகன்பின் வருந்திக் கையறு துன்பம் கண்டு நிற்குநரும்- பித்துற்றவனது செயலற்ற துன்பத்தினைக் கண்டு வருந்தி அவன் பின்னே நிற்போரும்; கட்டிய திரள் புயன் என்பதும், மெய் முழுதுரீஇ என்பதும் பாடம். உரீஇ-உருவி; பூசி. ததர்-கொத்துமாம்; 1"சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத் ததர்" என்பதும் காண்க. வெண்பலி-வெண் ணீறு; சாம்பல். வெண்பலியாகிய சாந்தமெனக் கொண்டு வல்லொற்று விகாரத்தாற் றொக்க தெனினுமாம். சுழலலும் சுழலும்-சுழலுதலையும் செய்யும்; பின்வருவன வற்றிற்கும் இங்ஙனம் பொருள் கொள்க; 2"இயங்கலு மியங்கு மயங்கலு மயங்கும்" என்பதூஉம் அது. அழூஉம் முதலியவற்றை வினையெச்சப்படுத்து, நிற்கின்ற என ஒரு சொல் விரித்து முடிக்க; இனி, மையலுற்ற மகன் என்பதனை எழுவாயாக்கி, அழூஉம் முதலிய வினைகளோடு தனித்தனி முடித்து, அவன் என ஒரு சொல் வருவித்துரைத்தலுமாம். 116-125. சுரியல் தாடி மருள்படு பூங்குழல் - சுருண்ட தாடியும் இருண்ட அழகிய கூந்தலும், பவளச் செவ்வாய் தவள வாள்நகை-பவளம் போன்ற சிவந்த வாயும் வெண்மை மிக்க ஒள்ளிய பற்களும், ஒள் அரி நெடுங்கண்-ஒளிபொருந்திய அரிபடர்ந்த பெரிய கண்களும், வெள்ளிவெண் தோட்டு-வெள்ளிய சங்கினாற் செய்த காதணியும், கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறை நுதல் - கரியதாய் வளைந்த புருவத்தின் பக்கலில் வளைந்துள்ள பிறை போன்ற நெற்றியும், காந்தள் அம் செங்கை - காந்தள் மலர் போலுஞ் சிவந்தகையும், ஏந்து இள வனமுலை - ஏந்திய அழகிய இளங் கொங்கைகளும், அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல் - பெரிய அல்குலும் அழகிய நுண்ணிய இடையும், இகந்த வட்டுடை - முழந்தாளளவாக உடுக்கப்படும் உடையும், எழுதுவரிக் கோலத்து - தோள் முதலியவற்றில் எழுதப்பட்ட பத்திக் கீற்றும் உடைய, வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி-வாணன் என்னும் அசுரனது பெரிய சோநகரத்தின் வீதியில் நின்று, நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய - நிலமளந்த நெடுமாலின் மகனாகிய காமன் முன்னர் ஆடிய, பேடிக் கோலத்துப் பேடு காண்குநரும்- பேடிக் கோலத்தையுடைய பேடு என்னுங் கூத்தினைக் காண்போரும்: சுரியல் - சுருளல்; தாடி - மோவாய் மயிர். மருள்-இருள். கொடி ஒழுங்குமாம். புருவமும் இரண்டு பக்கத்தும் வளைந்து நுதலும் என்றுரைத்தலும் பொருந்தும். இகந்த-தாள் முழுவதும் இல்லாத. தாடி முதலியவற்றையுடைய கோலம் எனவும், ஆடிய பேடிக் கோலம் எனவும் ஒட்டுக; அன்றி, தாடி முதலிய வற்றையுடைய பேடிக் கோலத்துடன் ஆடிய பேடு என்றுமாம். முன் ஆடிய பேடு இப்பொழுது நடிக்கப்படுவ தனை யென்க. பேடு-பதினோராடலுள் ஒன்று;அப் பதினொன்றையும், அவற்றை நிகழ்த்தியவர்களையும். "கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன், குடைதுடிமால் அல்லியமற் கும்பம் - சுடர் விழியாற், பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம், கொட்டியிவை காண்பதினோர் கூத்து" என்னும் வெண்பாவானறிக. பேடு - உழை காரணமாக வாணனாற் சிறைவைக்கப்பட்ட தன் மகன் அநிருத்தனைச் சிறைமீட்டுக் காமன் சோ நகரத் தாடிய ஆடல்; உழை-வாணன் மகள். 1"ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக், காம னாடிய பேடி யாடலும்" 2"சுருளிடு தாடி மருள்படு பூங்குழல், அரிபரந் தொழுகிய செழுங்கய னெடுங்கண், விரிவெண்டோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச், சூடக வரிவளை யாடமைப் பனைத்தோள், வளரிள வனமுலைத் தளரியன் மின்னிடைப், பாடகச் சீறடி யாரியப் பேடி" என்பன அறியற்பாலன. 126-131. வம்பமாக்கள் கம்பலை மூதூர்-புதியராய் வரும் மக்களின் முழக்கம் மிகுந்த தொன்மையுடைய புகார் நகரில், சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்-செங்கலாற் கட்டப்பட்டு உயர்ந்த பெரிய மாடங்கள்தோறும், மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி- குற்றமற்ற தெய்வ வடிவினையுடைய விண்ணவர் முதலாக எவ்வகைப்பட்ட உயிர்களையும் ஒப்புமை காட்டி, வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய - விளக்கத்தையுடைய வெள்ளிய சுதையினால் கைதேர்ந்த ஓவியக்காரர் செய்த, கண்கவர் ஓவியம் கண்டு நிற்குநரும் - கண்களைக் கவரும் வனப்புடைய ஓவியங்களைக் கண்டு நிற்போரும் ; சுடுமண்-செங்கல்; 3"சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பு" என்பது பெரும்பாண். படிவம் - தெய்வ வடிவம். உவமம்-ஒப்புமை; 4"எவ்வகைச் செய்தியு முவமங் காட்டி, நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற், கண்ணுள் வினைஞரும்," 1"மயனெனக் கொப்பா வகுத்த பாவையின், நீங்கே னியான்" என்பதன காண்க. வித்தகர்-சிற்பாசாரியர்; 2"வித்தக ரியற்றிய" என்பர் பின்னும். 132-145. விழவு ஆற்றுப்படுத்த கழிபெரு வீதியில் - விழவினைக் கொண்டாடிய மிகப்பெரிய வீதியில், பொன் நாண் கோத்த நன் மணிக் கோவை-பொன்னாலாகிய கயிற்றிற் கோத்த நல்ல மணிக் கோவையாகிய, ஐயவி அப்பிய நெய் அணி முச்சி-வெண் சிறு கடுகினை அப்பிய நெய் யணிந்த உச்சியில், மயிர்ப்புறம் சுற்றிய கயிற்கடை முக்காழ்-மயிர்ப்புறத்திற் சுற்றப்பட்ட கொக்கியினையுடைய மூன்று சரங்கள், பொலம் பிறைச் சென்னி நலம்பெறத் தாழ - அழகிய பிறை போன்ற அணியினை யணிந்த சென்னியில் அழகு பெறத் தொங்கவும், செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை - வடிவுதிருந்தாத மழலையாகிய இளஞ் சொல்லை யுடைய சிவந்த வாயினின்றும், சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப-சிறிதாகிய நீர்சிந்தி மார்பிலணிந்த ஐம்படைத் தாலியை நனைக்கவும், அற்றம் காவாச்சுற்றுடைப் பூந்துகில் - அற்றத்தினை மறைக் காமற் சுற்றப்பட்ட அழகிய ஆடை, தொடுத்த மணிக்கோவை உடுப்பொடு துயல்வர - தொடுக்கப்பட்ட மணிகளின் கோவையாகிய உடுப்பொடு அசையவும், தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரை-தளர்ந்த நடையையும் பொறுக்கலாத ஒளி பொருந்திய அணிகலன் அணிந்த புதல்வரை, பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்து- பொற்றேரின் மீதுள்ள புள்ளி பொருந்திய முகத்தினை யுடைய யானையின் மேல், இலங்குதொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி-விளங்குகின்ற வளையல்களை யணிந்த மகளிர் சிலர் நின்று ஏற்றி, ஆல் அமர் செல்வன் மகன் விழாக் கால்கோள் காண்மினோ என்-ஆலின் கீழமர்ந்த சிவபெருமான் திருமைந்தனாகிய முருகவேளின் விழாக் கால் கொள்ளுதலைக் காண்பீராக என்று கூற, கண்டு நிற்குநரும்-அதனைக் கண்டு நிற்போரும்; கோவையாகிய முக்காழ் என்க. பேய் தீண்டாவண்ணம் குழந்தைகளின் முடியில் நெய்யணிந்து வெண்சிறு கடுகை அப்புதல் மரபு; அதனாலே வெண்சிறு கடுகிற்குக் கடிப்பகை என்பதும் பெயராயிற்று; கடி-பேய். கயிற்கடை-கொக்கி ; கொக்கின் வாய்போல்வதாகலின் கொக்கி எனப்பட்டது. பிறைச் சென்னி-பிறைவடுவாகிய அணியின் இரு கோடுகளில் என்றுரைப் பாருமுளர். மெய் - சொல்லின் வடிவு, குதலை- இளஞ்சொல்; 1"குதலைச் செவ்வாய்க் குறுந்தொடி மகளிர், முதியோர் மொழியின் முன்றி னின்றழ" என்பது காண்க. சிறிதாய நீரைச் சின்னீர் என்றல் ஓர் இலக்கணை வழக்கு. ஐம்படை - காத்தற் கடவுளான திருமாலின் சங்கு, சக்கரம், கதை, வாள், வில் என்னும் ஐந்து படைகளின் வடிவாகிய அணி; இது தாலி என்றும் வழங்கும்; இதனைச் சிறுவர்க்கு அணிதல் மரபு; 2"தாலி களைந் தன்று மிலனே பால்விட், டயினியு மின்றயின்றனனே" என்பது காண்க. தேர்மிசை யானையை வைத்து ஊர்தல் 3"பொற்சிறு தேர் மிசைப் பைம்பொற் போதகம், நற்சிறா ரூர்தலின்" என்பதனானும் அறியப்படும் கால்கோள்- தொடக்கம். வீதியில் நல்லார் சிலர், கோவையையும் முச்சியையும் குதலையையும் மழலையையும் பூணையுமுடைய புதல்வரை வேழத்து முக்காழ் தாழச் சின்னீர் நனைப்பத் துகில் துயல்வர ஏற்றி எனக் கூட்டி யுரைப்பாருமுளர் 146-150. விராடன் பேரூர் விசயனாம் பேடியைக் காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்-விராடனது பெரிய நகரத்தின்கண் அருச்சுனனாகிய பேடியைக் காணுமாறு சூழ்ந்த முழக்கத் தினையுடைய மக்களைப் போல, மணிமேகலைதனை வந்து புறம் சுற்றி - வந்து மணிமேகலையைச் சுற்றிலும் சூழ்ந்து, அணி அமை தோற்றத்து அருந்தவப் படுத்திய தாயோ கொடியள் தகவிலள் - எழிலமைந்த நல்லுருவத்தினை அரிய தவநெறியிற் படுத்திய தாயோ கொடியவளும் தகுதியில்லாத வளுமாவள்; பாண்டவர் ஐவரும் பாஞ்சாலியும் விராடனது நகரத்திற் கரந்துறைந்தகாலை அருச்சுனன் பேடியுருக் கொண்டு பிருகந்நளை என்னும் பெயருடன் ஆண்டிருந்தமை பாரதத்தால் அறியலாவது. கம்பலை மாக்கள் - வேறு சில காட்சி கண்டு முழங்கித் திரியுமவர். அணி அமை தோற்றத்து - அணிகள் இல்லாத தோற்றத்துடன் என்றுமாம். சீவக சிந்தாமணியில் 4"உப்பமை காமத்துப்பின்" "நிகரமைந்த முழந்தாளும்" என்னுமிடங்களில் ‘அமை' என்பதற்கு இப்பொருள் கூறப்படுதல் காண்க. 150-158. ஈங்கிவள் மா மலர் கொய்ய மலர்வனம் தான் புகில் - இம் மணிமேகலை சிறந்த மலர் கொய்தற்குப் பூம்பொழிலில் நுழைந்தால், நல் இள அன்னம் நாணாது ஆங்குள வல்லுந கொல்லோ மடந்தை தன் நடை-அங்கேயுள்ள நல்ல இளைய அன்னப் பறவைகள் நாணாமல் இவள் நடைபோல் நடக்க வல்லனவோ, மாமயில் ஆங்குள வந்து முன்நிற்பன சாயல் கற்பன கொலோ தையல் தன்னுடன் - ஆண்டுள்ள அழகிய மயில்கள் இந்நங்கையின் எதிரே வந்து நிற்பனவாகி இவளுடன் சாயலைக் கற்பனவாகுமோ, பைங்கிளி தாம் உள பாவைதன் கிளவிக்கு எஞ்சல கொல்லோ - அங்கிருக்கும் பசிய கிளிகள் இம்மங்கையின் மொழிகட்குத் தோற்பன வல்லவோ, இசையுந அல்ல - இவை யாவும் ஒப்பனவல்ல, என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக-என்று இவைகளைக் கூறி அனைவரும் வருந்திக் கெட, ஆங்குள அன்னம் நாணாது வல்லுந கொல்லோ எனவும், ஆங்குள மாமயில் வந்து முன்னிற்பனவாய்க் கற்பனகொலோ எனவும் இயையும். மயில்கள் கற்றற்குத்தானும் முன்வந்து நிற்கமாட்டா என்றபடி. சாயல் - மென்மை. எஞ்சுதல் - குறைதல்; தோற்றல். 159. செந்தளிர்ச் சேவடிநிலம் வடு உறாமல் - சிவந்த தளிர் போலும் சிவந்த அடிகளால் நிலத்திலே வடுவுண்டாகாமற் சென்று; வடு - சுவடு அடியும் நிலமும் வடுவுறாமல் என்றுமாம். சென்று என ஒரு சொல் வருவிக்க. 160-171. குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் - குராவும் வெண்கடம்பும் குருந்தும் கொன்றையும், திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும் - மஞ்சாடியும் மகிழும் சிவந்த காலையுடைய வெட்சியும், நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும் - நாரத்தையும் சுரபுன்னையும் பரந்து மலர்கின்ற புன்னையும், பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்-பிடவமும் செம்முல்லையும் வளைந்த முள்ளையுடைய தாழையும், குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்- வெட்பாலையும் மூங்கிலும் பருத்த அடியினையுடைய அசோகமும், செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்- செருந்தியும் வேங்கையும் பெரிய சண்பகமும், எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி-நெருப்பைப்போற் சிவந்த பூக்களையுடைய இலவமும் ஆகியவை விரிந்த மலர்களைப் பரப்ப, வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினை - கைத் தொழிலில் மேம்பட்ட வித்தகரால் இயற்றப்பட்ட, சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே ஒப்பத் தோன்றிய-சித்திரத் தொழிலமைந்த துகிர் போர்த்ததுபோலத் தோன்றிய, உவவனம் தன்னை - உவவனத்தை, தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு - தொழுது காட்டிய சுதமதியுடன், மலர் கொய்யப் புகுந்தனள் மணிமேகலை - மணிமேகலை மலர் கொய்தற்கு அடைந்தனள் என்க,. பிடவம்-குட்டிப் பிடவம் என்னும் கொடி; 1"புதன்மிசைத் தளவினிதன்முட் செந்நனை, நெருங்குகுலைப் பிடவமோ டொருங்கு பிணியவிழ" என்பது அகம். பரப்பி - பரப்ப வென்க. புத்தன் பாதபீடிகையுள்ள தாகலின் வனத்தைத் தொழுது காட்டினள் என்க. மாதவி யுரைத்த உரைமுன் றோன்றி மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள தாகலின், அக்காரிகை வெதுப்பக் கலங்கி உருட்டி ஆட்ட, மாதவி நோக்கி மாற்றிக் கொணர்வாய் என்றலும், அதனைக் கேட்டுத் துயரொடு கூறும் சுதமதி, 'கண்ணீரைக் கண்டனனாயின் காமன் நடுங்கும்; ஆடவர் அகறலுமுண்டோ; நின்றிடிற் பேடிய ரன்றோ ; அன்றியும், யான் வருங் காரணம் கேளாய்; கொய்வேனை விஞ்சையன் எடுத்தனன், எழுந்தனன், படுத்தனன்; ஆயினேன்; அவன் அகன்று நீங்கினன்; ஆதலால் மணிமேகலை தன்மையளல்லள்; போகின், உழையோர் ஆங்குளர்; செல்லார்; எய்தார்; உவவனமென்ப தொன்றுண்டு; உண்டு; உண்டு; மரபினது அதுதான்; செம்மை தானிலள்; யானும் போவல்; என்று கூடிச் செல்வுழி, பின்னரும் நிற்குநரும் காண்கு நரும் நிற்குநரும் நிற்குநரும் மணிமேகலையைச் சுற்றி இனைந்துக, மணிமேகலை சுதமதி தன்னொடு மலர் கொய்யப் புகுந்தனள் என முடிக்க. மலர்வனம் புக்க காதை முற்றிற்று. 4. பளிக்கறை புக்க காதை உவவனத்திலும், அதன்கண் உள்ள பொய்கையிலும் நிகழும் இயற்கைக் காட்சிகளைச் சுதமதி காட்ட மணிமேகலை காண்பாளாயினாள். அவள் ஆங்கு அவ்வாறிருக்க, மதவெறியால் வீதிதோறும் கலக்குறுத்துத் திரிந்த காலவேகமென்னும் யானையின் மதத்தை யடக்கித் தேரிலேறித் தானை சூழ வரும் உதயகுமரன் கணிகையர் தெருவில் ஒரு மாடத்தில் மலரணை மேற் காதற்பரத்தை யொருத்தியுடன் மகர யாழின் கோட்டினைத் தழுவிக் கொண்டு மயங்கிப் பாவைபோல் அசைவற்றிருந்த எட்டிகுமரனைச் சாளர வழியாற் கண்டு, ‘நீ இங்ஙனம் மயங்கி யிருக்கும் காரணம் யாது,' என்று வினவினன். அது கேட்டலும் அவன் விரைந்தெழுந்து அருகணைந்து தொழுது, ‘வாடிய அழகுடன் இவ்வீதி வழியே மலர்வனத்திற்குச் செல்லும் மணிமேகலையைக் கண்டேன்; காண்டலும், அவள் தந்தையுற்ற கொடுந்துயர் என் நினைவிலே தோன்றி என் மனவுறுதியை மாற்றி, இவ்வியாழின் பகை நரம்பில் என் கையைச் செலுத்தியது; இதுவே யானுற்ற துன்பம்,' என்றனன். என்றலும் பல நாளாக மணிமேகலையை விரும்பியிருந்த உதயகுமரன் மகிழ்ச்சியுற்று, ‘அவளை என் தேர்மீதேற்றிக்கொண்டு வருவேன்,' என்று அவனுக்குக் கூறிவிட்டுத் தேருடன் சென்று உவவனத்தின் மதில்வாயிலை அடைந்தான். மணிமேகலை அத்தேரொலியைக் கேட்டுச் சுதமதியை நோக்கி, ‘உதயகுமரன் என்பால் மிக்க விருப்ப முடையனென்று முன்பு மாதவிக்கு வயந்தமாலை கூறியதைக் கேட்டுளேன்; இஃது அவன் தேரொலி போலும்; இதற்கியாது செய்வேன்,' என்றாள். அதைக்கேட்ட சுதமதி அவளை ஆங்குள்ள பளிக்கறையிற் புகுத்தி, உள்ளே தாழிட்டுக்கொண்டு இருக்கச் செய்து, தான் அப் பளிக்கறைக்கு ஐந்து விற்கிடை தூரத்தே நின்றாள். அங்ஙனம் நின்றவளைத் தேரை நிறுத்திச் சோலையினூடே வந்த உதயகுமரன் கண்டு, ‘நீ மணிமேகலையுடன் வந்தாய் என்பதனை அறிந்தேன்,' என்று கூறி, மணிமேகலையைக் குறித்துத் தனது வேட்கை புலப்படப் பலவாறு வினாவினன். அப்பொழுது சுதமதி பொதியறைப்பட்டோர் போன்றுளம் வருந்தி, அவனை நோக்கி, "இளமை நாணி முதுமை யெய்தி, உரை முடிவு காட்டிய உரவோன் மருகனாகிய நினக்கு அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் மகளிர் கூறுமாறும் உண்டோ? ஆயினும் ஒன்று கூறுவேன்; மக்கள் யாக்கை இவ்வியல்பினை உடையது; அதனைப் புறமறியாகப் பாராய்," என்று அதன் இழிவினை யெடுத்துரைத்தாள்; அவ்வுரை உதயகுமரன் செவியை அடையுமுன் பளிக்கறையினுள்ளிருந்த மணிமேகலையின் உருவம் அவன் கண்ணெதிர்ப்பட்டது. (இக்காதையின் முதற்கண் உள்ள இயற்கைப் புனைவுகள் இன்பம் விளைப்பன. இறுதிக்கண் உடம்பின் இழி தகைமை நன்கு விளக்கப்பட்டுள்ளது.) பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்கு இருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில் குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய 5 வெயில் நுழை பறியாக் குயில்நுழை பொதும்பர் மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண் மாசறத் தெளிந்த மணிநீ ரிலஞ்சிப் பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின் றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை 10 அரச வன்னம் ஆங்கினி திருப்பக் கரைநின் றாலும் ஒருமயில் தனக்குக் கம்புட் சேவற் கனைகுரன் முழவாக் கொம்ப ரிருங்குயில் விளிப்பது காணாய் இயங்குதேர் வீதி யெழுதுகள் சேர்ந்து 15 வயங்கொளி மழுங்கிய மாதர்நின் முகம்போல் விரைமலர்த் தாமரை கரைநின் றோங்கிய கோடுடைத் தாழைக் கொழுமட லவிழ்ந்த வால்வெண் சுண்ணம் ஆடிய திதுகாண் மாதர் நின்கண் போதெனச் சேர்ந்து 20 தாதுண் வண்டின மீதுகடி செங்கையின் அஞ்சிறை விரிய அலர்ந்த தாமரைச் செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டாங்கு எறிந்தது பெறாஅ திரையிழந்து வருந்தி மறிந்து நீங்கு மணிச்சிரல் காணெனப் 25 பொழிலும் பொய்கையுஞ் சுதமதி காட்ட மணிமே கலையம் மலர்வனங் காண்புழி மதிமருள் வெண்குடை மன்னவன் சிறுவன் உதய குமரன் உருகெழு மீதூர் மீயான் நடுங்க நடுவுநின் றோங்கிய 30 கூம்புமுதன் முறிய வீங்குபிணி யவிழ்ந்து கயிறுகால் பரிய வயிறுபாழ் பட்டாங்கு இதைசிதை தார்ப்பத் திரைபொரு முந்நீர் இயங்குதிசை யறியா தியாங்கணு மோடி மயங்குகால் எடுத்த வங்கம் போலக் 35 காழோர் கையற மேலோ ரின்றிப் பாகின் பிளவையிற் பணைமுகந் துடைத்துக் கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்கலக் குறுத்தாங்கு இருபாற் பெயரிய வுருகெழு மூதூர் 40 ஒருபாற் படாஅ தொருவழித் தங்காது பாகும் பறையும் பருந்தின் பந்தரும் ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப நீல மால்வரை நிலனொடு படர்ந்தெனக் கால வேகங் களிமயக் குற்றென 45 விடுபரிக் குதிரையின் விரைந்துசென் றெய்திக் கடுங்கண் யானையின் கடாத்திற மடக்கி அணித்தேர்த் தானையொ டரசிளங் குமரன் மணித்தேர்க் கொடிஞ்சி கையாற் பற்றிக் காரலர் கடம்பன் அல்ல னென்பது 50 ஆரங் கண்ணியிற் சாற்றினன் வருவோன் நாடக மடந்தையர் நலங்கெழு வீதி ஆடகச் செய்வினை மாடத் தாங்கண் சாளரம் பொளித்த கால்போகு பெருவழி வீதிமருங் கியன்ற பூவணைப் பள்ளித் 55 தகரக் குழலாள் தன்னொடு மயங்கி மகர யாழின் வான்கோடு தழீஇ வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின் எட்டி குமரன் இருந்தோன் றன்னை மாதர் தன்னொடு மயங்கினை யிருந்தோய் 60 யாதுநீ யுற்ற இடுக்கண் என்றலும் ஆங்கது கேட்டு வீங்கிள முலையொடு பாங்கிற் சென்று தன்றொழு தேத்தி மட்டவி ழலங்கன் மன்ன குமரற்கு எட்டி குமரன் எய்திய துரைப்போன் 65 வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போல் தகைநலம் வாடி மலர்வனம் புகூஉம் மாதவி பயந்த மணிமே கலையொடு கோவல னுற்ற கொடுந்துயர் தோன்ற நெஞ்சிறை கொண்ட நீர்மையை நீக்கி 70 வெம்பகை நரம்பின் என்கைச் செலுத்தியது இதுயா னுற்ற இடும்பை யென்றலும் மதுமலர்த் தாரோன் மனமகிழ் வெய்தி ஆங்கவள் தன்னையென் அணித்தே ரேற்றி ஈங்கியான் வருவேன் என்றவற் குரைத்தாங்கு 75 ஓடுமழை கிழியும் மதியம் போல மாட வீதியின் மணித்தேர் கடைஇக் காரணி பூம்பொழிற் கடைமுகங் குறுகவத் தேரொலி மாதர் செவிமுதல் இசைத்தலும் சித்திரா பதியோ டுதய குமரனுற் 80 றென்மேல் வைத்த உள்ளத் தானென வயந்த மாலை மாதவிக் கொருநாள் கிளந்த மாற்றம் கேட்டே னாதலின் ஆங்கவன் தேரொலி போலும் ஆயிழை ஈங்கென் செவிமுதல் இசைத்ததென் செய்கென 85 அமுதுறு தீஞ்சொல் ஆயிழை யுரைத்தலும் சுதமதி கேட்டுத் துளக்குறு மயில்போல் பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுகென் றொளித்தறை தாழ்கோத் துள்ளகத் திரீஇ ஆங்கது தனக்கோர் ஐவிலின் கிடக்கை 90 நீங்காது நின்ற நேரிழை தன்னைக் கல்லென் தானையொடு கடுந்தேர் நிறுத்திப் பன்மலர்ப் பூம்பொழிற் பகன்முளைத் ததுபோல் பூமரச் சோலையும் புடையும் பொங்கரும் தாமரைச் செங்கண் பரப்பினன் வரூஉம் 95 அரசிளங் குமரன் ஆருமில் ஒருசிறை ஒருதனி நின்றாய் உன்றிற மறிந்தேன் வளரிள வனமுலை மடந்தை மெல்லியல் தளரிடை யறியுந் தன்மையள் கொல்லோ விளையா மழலை விளைந்து மெல்லியல் 100 முளையெயி றரும்பி முத்துநிரைத் தனகொல் செங்கயல் நெடுங்கண் செவிமருங் கோடி வெங்கணை நெடுவேள் வியப்புரைக் குங்கொல் மாதவ ருறையிடம் ஒரீஇமணி மேகலை தானே தமியளிங் கெய்திய துரையெனப் 105 பொதியறைப் பட்டோர் போன்றுளம் வருந்தி மதுமலர்க் கூந்தற் சுதமதி யுரைக்கும் இளமை நாணி முதுமை யெய்தி உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு அறிவுஞ் சால்பும் அரசியல் வழக்கும் 110 செறிவளை மகளிர் செப்பலு முண்டோ அனைய தாயினும் யாதொன்று கிளப்பல் வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி வினையின் வந்தது வினைக்குவிளை வாயது புனைவன நீங்கிற் புலால்புறத் திடுவது 115 மூத்துவிளி வுடையது தீப்பிணி இருக்கை பற்றின் பற்றிடங் குற்றக் கொள்கலம் புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை அவலக் கவலை கையா றழுங்கல் தவலா உள்ளந் தன்பா லுடையது 120 மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய் என்றவ ளுரைத்த இசைபடு தீஞ்சொல் சென்றவ னுள்ளஞ் சேரா முன்னர்ப் பளிங்குபுறத் தெறிந்த பவளப் பாவையின் 125 இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன்னென். உரை 1-6. பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்கு - ஆதித்தனது விரிந்த கதிர்களாகிய சேனைக்கு, இருள் வளைப்புண்ட மருள்படு பூம்பொழில்-இருள் முற்றப்பட்டா லொத்த மருட்கையுண்டாகும் அழகிய பொழிலின்கண், குழல்இசை தும்பி கொளுத்திக் காட்ட- தும்பிகள் வேய்ங்குழலினிசையைப் பொருத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய-இளைய வண்டினங்கள் நல்ல யாழினிசையை முரல, வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர்-ஞாயிற்றின் கதிர் தோன்றுங்கால் தொட்டு மறையும் வரை சிறிதும் செல்லுதல் அறியாத குயிலும் நுழைந்து செல்லுமாறு அடர்ந்த இளமரக் காவாகிய, மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பனகாண் - அரங்கில் மயில்கள் ஆடுவதைக் காண்பனவாகிய மந்தி களைக் காண்பாயாக ; பரிதியாகிய செல்வன் என்க. தானைக்கு-தானையால், ஞாயிற்றின் கதிரால் துரத்தப்பட்ட உலகினிருளெல்லாம் புகுந்திருந்தாற் போலும் இருட்சியையுடைய பொழில் என்க. மருள்-மருட்கை; வியப்பு. தும்பி - வண்டின் ஓர் கிளை. 1"கொம்பர்த் தும்பி குழலிசை காட்டப், பொங்கர் வண்டின நல்லியாழ் செய்ய" எனப் பின்னரும் வருதல் காண்க. இலை களின் செறிவாலே குயில்கள் நுழைந்து செல்லும் இளமரக்கா வென்க; 2"வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்" என்பது பெரும்பாண். காண்பன : காண்டல் எனத் தொழிற் பெயருமாம். 7-13. மாசறத் தெளிந்த மணிநீர் இலஞ்சி-மறுவற்றுத் தெளிந்த பளிங்குபோலும் நீரினைடைய பொய்கையில், பாசடைப் பரப்பில் பன்மலர் இடைநின்று-பசிய இலைகளின் பரப்பின் கணுள்ள பல மலர்களினிடையே நின்றும், ஒரு தனி ஓங்கிய விரை மலர்த் தாமரை - தனியே உயர்ந்து விளங்கிய மணம் மிக்க ஒரு தாமரை மலரில், அரச அன்னம் ஆங்கினிது இருப்ப - அன்னப் புள் இனிதாக அரசு வீற்றிருப்ப, கரை நின்று ஆலும் ஒரு மயில் தனக்கு - அவ்விலஞ்சியின் கரையில் நின்று அரசன் முன் ஆடும் மெல்லியல் போல ஆடுகின்ற ஒப்பற்ற அழகினையுடைய மயிலுக்கு, கம்புட் சேவல் கனைகுரல் முழவா - சம்பங் கோழிச் சேவலினது மிக்க குரல் முழவொலியாக, கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய் - கிளையின்கண் உள்ள கரிய குயில் பாடுவதைக் காண் பாயாக; மணி - நீலமணியுமாம். ஒரு தனி - ஒப்பற்ற தனி; தன்னந் தனி; "ஒரு தனி நின்றாய்," "ஒரு தனி யிருந்த, "ஒரு தனி யேறி" (4 : 96 : 16 : 33 ; 17:86.) என இந்நூலுள்ளே ஒரு தனியென்பது பயின்று வருகின்றது. மயில் தனக்கு-மயிலினது ஆட்டத்திற் கியைய. விளித்தல்-பாடுதல்; 1"விளியாதான் கூத்தாட்டு" 2"விளித்தலின்னமிர் துறழ் கீதம்" என்புழி விளித்தல் இப்பொருள்படுதல் காண்க. 14-18, இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து - தேர்கள் சஞ்சரிக்கின்ற வீதியினின்றும் எழுந்த துகள் சேர்ந்து, வயங்கு ஒளிமழுங்கிய மாதர் நின்முகம்போல் - விளங்குகின்ற ஒளி மழுங்கப்பெற்ற நினது அழகிய முகத்தைப்போல, விரை மலர்த்தாமரை கரை நின்று ஓங்கிய கோடு உடைத் தாழைக் கொழுமடல் அவிழ்ந்த வால்வெண் சுண்ணம் ஆடியது இதுகாண் - கரையில் நின்று வளர்ந்த கிளைகளையுடைய தாழையினது கொழுவிய மடலினின்றும் அவிழ்ந்த வெள்ளிய மகரந்தப் பொடி அளைந்த மணம் பொருந்திய இத் தாமரை மலரைக் காண்பாயாக; மாதர் - அழகு. 3"கோடுடைத் தாழை" என்னும் பாடத்திற்குச் சங்கு உடைந்தாற் போலும் தாழையின் மடல் என்க; வால் வெண்: ஒரு பொருளிருசொல்; தூய வெள்ளிய என்றுமாம்; 4"ஊர்தி வால் வெள் ளேறே" என்பது காண்க. இது மலர் எனக் கூட்டி இம் மலர் என உரைக்க. 19-26. மாதர் நின்கண் போது எனச் சேர்ந்து தாது உண் வண்டினம் மீது கடி செங்கையின் - நின்னுடைய அழகிய கண்களை நீலமலரென நினைந்து தாதுண்ணுமாறு அடைந்த வண்டினங்களை அகற்றுகின்ற நின் சிவந்த கையைப்போல, அம் சிறை விரிய அலர்ந்த தாமரைச் செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு எறிந்து - மலர்ந்த தாமரை மலரிலே பாய்ந்து பிறழ்வனவாகிய செங்கயல்களைக் கண்டு அழகிய சிறகு விரியுமாறு அப்பொழுதே பாய்ந்து, அது பெறாஅது இரை இழந்து வருந்தி - அம் மீன்களைப் பெறாமல் இரையை இழந்து வருந்தி, மறிந்து நீங்கு மணிச்சிரல் காண் - மீண்டும் நீங்குகின்ற நீலமணிபோலும் சிச்சிலியைக் காண்பாயாக; என - என்று சொல்லி, பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட - சுதமதி பொழிலையும் பொய்கையையும் காட்டாநிற்க, மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி - மணிமேகலை அப்பூம்பொழிலின் வளத்திளைக் காணும்பொழுது; அஞ்சிறை விரிய எறிந்து எனவியையும். அது, சாதி யொருமை; பிறழ்வனவென மேல் வந்தமையின். இரை இழந்து - பெறாமையால் அவ்விரையை யிழந்தென்க. மணி - நீலமணி; 1"புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்" என்பது காண்க. சிரல் - சிச்சிலிப்புள்; இது மீன் கொத்தி யென்றும் கூறப்படும். முகம் தாமரைக்கும், கண் செங்கயலுக்கும், கை சிரலுக்கும் உவமம்; 2"பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும், மருளறு சிறப்பினஃதுவம மாகும்" என்பதனால் பொருள்கள் உவமமாகக் கூறப்பட்டன. பொய்கை வனத்தின் உறுப்பாகலின், வனங்காண்புழி யென அதிலடக்கிக் கூறினர். 27-28. மதிமருள் வெண்குடை மன்னவன் சிறுவன் உதயகுமரன் - திங்களை யொத்த வெண்குடையையுடைய அரசன் புதல்வனாகிய உதயகுமரன்; மருள் : உவமவுருபு ; 3"மதிமருள் வெண்குடை" என்பது புறம். மன்னவன் - சோழன். 28-34. உருகெழுமீது ஊர் மீயான் நடுங்க - அச்சம் பொருந்திய மேலிடத்தின் ஊர்ந்திருக்கின்ற மாலுமி நடுங்க, நடுவுநின்று ஓங்கிய கூம்பு முதல் முறிய - நடுவில் நின்று ஓங்கிய பாய்மரம் அடியிலே முறிய, வீங்குபிணி அவிழ்ந்து கயிறு கால் பரிய - இறுகின பிணிப்பு அவிழ்ந்து பாய் கட்டின கயிறு அறுபட, வயிறு பாழ்பட்டாங்கு இதை சிதைந்து ஆர்ப்ப - அப்பொழுது நடுவிடம் பாழாகிப் பாய் பீறுண்டு ஒலிப்ப, திரைபொரு முந்நீர் இயங்கு திசை அறியாது - அலைகள் பொருகின்ற கடலின்கண் செல்லுந் திசை அறியாமல், யாங்கணும் ஓடி மயங்கு கால் எடுத்த வங்கம் போல - எவ்விடத்தும் ஓடி மயங்குகின்ற கடுங்காற்றினாலலைக்கப் பட்ட மரக்கலம் போல; மூதூர் என்னும் பாடத்திற்குப் புகாரின்கண் என்றுரைக்க, மீயான் - மாலுமி ; நீயான் என்பதும் பாடம். நடுங்க - முறியப் பரிய ஆர்ப்ப ஓடியென்க : ஓடி மயங்கு வங்கம் என்றியைக்க ; மயங்கு கால் - சுழல் காற்று எனலுமாம் ; இதற்கு, சுழல் காற்றினால் எடுக்கப்பட்டு ஓடிய வங்கம்போல எனப்பிரித்துக் கூட்டுக. 35-44. காழோர் கையற - குத்துக்கோற்காரர் செயலற, மேலோர் இன்றி - பாகரும் இன்றி, பாகின் பிளவையிற் பணைமுகம் துடைத்து - பாகனாற் குத்தப்பட்ட பிளவையினையுடைய பரிய முகத்தைக் கையாற்றுடைத்து, கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்கலக் குறுத்து - அரசர் பெருந்தெருவையும் கொடி யணிந்த தேரோடும் வீதியையும் கடை வீதியையும் பெரிய கலக்க முண்டாக்கி, இருபாற் பெயரிய உருகெழு மூதூர் ஒருபாற்படாது ஒருவழித் தங்காது-இருவகைப் பெயரினையுடையதாய்ப் பகைவர்க்கு அச்சத்தைத் தரும் மூதூரின்கண் ஒரு நெறிப் படாமல் ஓரிடத்திற் றங்காமல், பாகும் பறையும் பருந்தின் பந்தரும் - பாகனும் பறையடிப்போரும் பருந்தின் தொகுதியும், ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப - மிக்க வறுமை யுடையோரும் சுழன்று கூப்பிட, நீல மால்வரை நிலனொடு படர்ந் தெனக் காலவேகம் களிமயக்கு உற்றென - பெரிய நீல மலை நிலத்தின் கண் திரிவதுபோலக் காலவேகம் என்னும் பட்டத்தியானை மத மயக்குற்றுத் திரிந்ததாக; மேலோர் இன்றி-பாகரைவீசி யென்றபடி. பிளவை -அங்குசத் தாற் பிளக்கப்பட்ட புண். பாகின் பிளவை-பாகனுடைய உடற் பிளவு என்றுமாம். இருவகைப் பெயரினை, 1"இருபாற் பெயரிய வுருகெழு மூதூர்" என்பதன் உரையா லறிக. பாகு - பாகன் பறை - பறையடிப் போர்; யானைக்கு முன்பு பறையடிக்கப்படுதல் மரபென்பதனை, 2"நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப். பறையறைந் தல்லது செல்லற்க வென்னா, இறையே தவறுடை யான்" என்பதனாலறிக. ஆதுலமாக்கள் தெருவிலே திரிவராகலின் அவரையுங் கூறினார். பருந்தின் பந்தர் - உணவின்பொருட்டுப் பந்தரிட்டாற்போல் மேலே செல்லும் பருந்தினம், வரை நிலனொடு படர்ந்தென என்பது இல் பொருளுவமம். நிலனொடு - நிலமிசை. களி - மதம். வங்கம்போலக் காழோர் கையறப் பாகன் முதலியோர் அலவுற்று விளிப்ப மூதூரின்கண் மேலோரின்றித் துடைத்துப் பெருங் கலக்குறுத்துப் படாது தங்காது படர்ந்தெனக் காலவேகம் களிமயக்குற்றதாக என முடிக்க; வங்கம்போலக் காலவேகம் களிமயக்குற்றென என வியையும். இவ்வாறே மதுரைக்காஞ்சியில், 3"வீங்குபிணி நோன் கயிறாஇயிதை புடையூக், கூம்புமுதன் முருங்க வெற்றிக் காய்ந்துடன், கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ, நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல, இருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து, கோலோர்க்கொன்று மேலோர் வீசி, மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக், கந்துநீத் துழிதருங் கடாஅ யானையும்" என வந்திருந்தல் காண்க. 45-50. விடுபரிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி-செலுத்து கின்ற விரைந்த செலவினையுடைய குதிரையின்மீது கடிதிற் சென்று சேர்ந்து, கடுங்கண் யானையின் கடாத்திறம் அடக்கி- தறுகண்மையுடைய யானையது மதத்தின் கூறுபாட்டினை அடக்கி, அணித்தேர்த் தானையொடு - அழகிய தேர் முதலிய படையுடன், அரசிளங் குமரன்-, மணித்தேர்க்கொடிஞ்சி கையால்பற்றி - தான் ஏறியுள்ள தேரின்கண் உள்ள அழகிய கொடிஞ்சியைக் கையாற் பிடித்துக்கொண்டு, கார்அலர் கடம்பன் அல்லன் என்பது ஆரங்கண்ணியில் சாற்றினன் வருவோன் - தான் கார்காலத்து மலர்கின்ற கடப்ப மாலையையுடைய முருகவேள் அல்லன் என்பதனைத்தான் அணிந்த ஆத்தி மாலையினால் அறிவித்து வருபவன்; பரி - செலவு, உதயகுமரனாகிய அரசிளங்குமரன் எனக் கூட்டுக. ‘கொடிஞ்சி-தாமரைப்பூ வடிவமாகப் பண்ணித் தேர்த் தட்டின் முன்னே நடுவது,' என்பர் நச்சினார்க்கினியர். 1"கொடிஞ்சி நெடுந்தேர்," என்பதன் உரை காண்க. இது தாமரை மொட்டு வடிவமுள்ளதென்று கூறுவாருமுளர். இச் சொல்லினுருவம் கொடுஞ்சி யெனவும் காணப்படும். அழகு, இளமை, ஆண்மைகளால் இவனை முருகக்கடவுளென்றெண்ணி, கடப்ப மாலையின்மையானும் ஆத்திமாலை யுண்மையானும் இவன் முருகனல்லன், சோழன்மகன் என்று கண்டோர் துணிவரென உதயகுமரனின் அழகு முதலியன சிறப்பிக்கப் பட்டன வென்க. ஆர் - ஆத்தி. 51-58. நாடக மடந்தையர் நலங்கெழு வீதி-நாடகக் கணிகையரது அழகு பொருந்திய வீதியில், ஆடகச் செய்வினை மாடத் தாங்கண் - ஆடகப்பொன்னாற் செய்தொழிலமைந்த மாளிகையின் கண், சாளரம் பொளித்த கால்போகு பெருவழி-காற்று செல்லு கின்ற பெரிய வழியாகியதுளைசெய்யப்பட்ட சாளரத்தினிட மாக, வீதி மருங்கு இயன்ற பூவணைப்பள்ளி - வீதியின் பக்கலில் இயற்றிய மலரணைச் சேக்கையில், தகரக்குழலாள் தன்னோடு மயங்கி - மயிர்ச்சாந்தினை யணிந்த குழலினை யுடைய கணிகையொருத்தியுடன் மயக்கமுற்று, மகரயாழின் வான்கோடு தழீஇ - மகர யாழினது சிறந்த கோட்டைத் தழுவி, வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின் எட்டிகுமரன் இருந்தோன் தன்னை - எழுது கோலினால் எழுதப்பட்ட ஓவியப் பாவை போல அசைவற்று இருந்த எட்டிகுமரனை, ஆடகம்-நால்வகைப் பொன்னுள் ஒன்று.பொளித்த - துளைசெய்த. கால்போகு பெருவழியாகிய பொளித்த சாளரம் என்க. மகரயாழ் - நால்வகை யாழினுளொன்று; பதினேழு நரம்புடையது என்பர். கோடு - யாழ்த்தண்டு. வட்டிகை - எழுதுகோல். எட்டி - வணிகர் பெறும் பட்டப் பெயர்; "எட்டிப் பூப்பெற் றிருமுப் பதிற்றியாண் டொட்டிய செல்வத் துயர்ந்தோ னாயினன்." (22; 113-4) என்பர். பின்னும்; 1"எட்டி காவிதிப் பட்டந் தாங்கி," என்பதுங் காண்க; 2'எட்டி காவிதியென்பன தேய வழக்காகிய சிறப்புப் பெயர்" என்பர் நச்சினார்க்கினியர். 59-64. மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய் யாது நீ உற்ற இடுக்கண் என்றலும் - மாதினோடும் மயக்கமுற்றிருப் போய் நீ அடைந்த துன்பம் யாது என வினவுதலும், ஆங்கது கேட்டு வீங்கிள முலையொடு பாங்கிற்சென்று தான் தொழுது ஏத்தி-அதனைக் கேட்டு அக் காரிகையுடன் அவன் பக்கலிற் சென்று வணங்கித் துதித்து, மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு-தேன் அவிழும் மலர்மாலையினை யுடைய அரச குமரனுக்கு, எட்டி குமரன் எய்தியது உரைப்போன் - தான் உற்ற துன்பத்தின் காரணத்தைக் கூறுகின்ற எட்டி குமரன்; மயங்கினை: எச்சமுற்று. மயங்கி மாதர் தன்னொடும் இருந்தோய் என்க. பாங்கில் - முறைமையால் என்றுமாம். 65-71. வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போல் - திறப்பட அமைந்த செப்பின் உள்ளே வைக்கப்பட்ட நறுமலரைப் போல, தகை நலம் வாடி - மிக்க அழகு வாட்டமுற்று, மலர்வனம் புகூஉம் - பூம்பொழிலுக்குச் செல்லும், மாதவி பயந்த மணிமேகலை யொடு கோவலன் உற்ற கொடுந்துயர் தோன்ற - மாதவி பெற்ற மணிமேகலையைக் கண்டதும் கோவலன் அடைந்த கொடிய துன்பம் நினைவில் வர அஃது, நெஞ்சு இறைகொண்ட நீர்மையை நீக்கி - மனம் தங்குதல் கொண்ட தன்மையை நீக்கி, வெம்பகை நரம்பின் என் கைச் செலுத்தியது, கொடிய பகை நரம்பின் கண் என் கையைச் செலுத்தியது - இது யான் உற்ற இடும்பை என்றலும் - இதுவே யான் அடைந்த துன்பம் என்னலும்; செப்பினுள் வைகிய மலர் புழுக்கத்தால் வாடும்; 3"மடைமாண் செப்பிற்றமிய வைகிய, பெய்யாப் பூவின் மெய் சாயினளே," 4"வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்," 5"வேயாது செப்பினடைத்துத் தமி வைகும் வீயினன்ன, தீயாடி சிற்றம் பலமனையாள்," என்பன காண்க. மணிமேகலையைக் கண்டவுடன் கோவலனுற்ற துன்பம் நினைவிற்கு வந்தமையின், ‘மணிமேகலை யொடு...துயர்தோன்ற,' என்றான் இறைகொண்ட-யாழிலே தங்கிய. பகை நரம்பு-நின்ற நரம்பிற்கு ஆறாவது நரம்பு;ஆறாவதும் மூன்றாவதுமாகிய நரம்புகள் என்று முரைப்பர்; "நின்ற நரம்பிற் காறு மூன்றுஞ், சென்று பெற நிற்பது கூடமாகும்," என்பது காண்க. கோவலன் தன் குலத்தோன்றலாகலின் அவனுற்ற துயரை நினைந்து மயங்கினேனென்றானென்க. 72-76. மதுமலர்த் தாரோன் மனமகிழ்வு எய்தி-தேன் பொருந்திய மலர் மாலையினையுடைய உதயகுமரன் உளமகிழ்ச்சியடைந்து, ஆங்கவள் தன்னை என் அணித்தேர் ஏற்றி - அம் மணிமேகலையை என் அழகிய தேரின்மீதேற்றி, ஈண்டு யான் வருவேன் என்று அவற்கு உரைத்தாங்கு-ஈண்டு யான் வருவேன் என்று எட்டி குமரற்குக்கூறி, ஓடு மழை கிழியும் மதியம்போல - ஓடுகின்ற முகில் கிழிதற்குக் காரணமாகிய மதியம்போல, மாடவீதியில் மணித்தேர் கடைஇ - மாடங்களையுடைய வீதியின்கண் அழகிய தேரைச் செலுத்தி, கார் அணி பூம்பொழிற் கடைமுகம் குறுக - வானளாவிய பூஞ்சோலையின் வாயிலினிடம் அடைய; முனிவர் உறைவிடத்தினீங்கி மலர்வனமடைந்த மணிமேகலையை இனி எளிதினெய்தலாமென மனமகிழ்ந்தானென்க. மாடங்கட்கு மழையும் தேருக்கு மதியமும் உவமை; மதியினை உதயகுமரனுக்கு உவமை யாக்கலுமாம் . கலை நிரம்பினமையின்; இதற்கு மதியம் போலக் குறுக வென்றியைக்க. கார் அணி - மேகத்தை மீது அணிந்த. 77-85. அத் தேர் ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும் - அந்தத் தேர் ஒலியானது மணிமேகலையின் செவியிடம் சென்று இசைத்தலும், சித்திராபதியோடு உதயகுமரன் உற்று என்மேல் வைத்த உள்ளத்தான்என-உதயகுமரன் என்பால் வைத்த மனமுடையான் என்று சித்திராபதியினிடமாக அறிந்து, வயந்தமாலை மாதவிக்கு ஒருநாள் கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின் - வயந்தமாலை மாதவிபால் ஒருநாள் கூறிய மொழியைக் கேட்டிருக்கின்றேனாகலின், ஆங்கவன் தேர்ஒலி போலும் ஆயிழை ஈங்கு என் செவிமுதல் இசைத்தது-சுதமதி அவ் வுதயகுமரனது தேரோசையே போலும் இப்பொழுது என் செவியிடம் ஒலித்தது, என் செய்கு என அமுதுறு தீஞ்சொல் ஆயிழை உரைத்தலும் - இதற்கு என் செய்வேன் என அமுதினு மினிய மொழியினையுடைய மணிமேகலை கூறுதலும்; சித்திராபதியோடு உற்று எனக் கூட்டிச் சித்திராபதியால் அறிந்து என்றுரைக்க; வயந்தமாலை சித்திராபதியுடன் அடைந்து என்றலுமாம். ஆயிழை: விளி. 86-90. சுதமதி கேட்டுத் துளக்குறு மயில்போல் - சுதமதி அது கேட்டுத் தளர்ச்சியுற்ற மயிலைப்போல, பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுக என்று ஒளித்து அறை தாழ்கோத்து உள்ள கத்து இரீஇ-மணிமேகலையைப் பளிக்கறை மண்டபத்தின் உள்ளிடத்தே புகுக என்று கூறி ஒளித்து இருத்தி அறையின் தாழைக் கோத்து, ஆங்கது தனக்கு ஓர் ஐவிலின் கிடக்கை நீங்காது நின்ற நேரிழைதன்னை - அப்பளிக்கு மண்டபத்திற்கு ஐந்து விற்கிடை தூரத்தில் நீங்காமல் நின்ற சுதமதியை; ஒளித்து அறை-ஒளியையுடையதாகிய அறையென்றுமாம். பணியாளர் ஐந்துவிற்கிடை தூரத்தே நிற்றல் மரபு; 1"ஐவிலினகல நின்றாங் கடிதொழு தறைஞ்சினாற்கு," என்பது காண்க. நீங்காது நின்றனள்; அங்ஙனம் நின்ற நேரிழையை என அறுத்துரைத்து, நேரிழையைக் கண்டு என ஒரு சொல் விரித்துரைக்க. 91-96. கல்லென் தானையொடு கடுந்தேர் நிறுத்தி - ஒலியினை யுடைய சேனையொடு விரைந்த செலவினையுடைய தேரையும் நிறுத்தி, பன்மலர்ப் பூம்பொழில் பகல் முளைத்தது போல்-பல மலர்களையுடைய பூஞ்சோலையில் ஞாயிறு தோன்றியது போல, பூமரச்சோலையும் புடையும் பொங்கரும் - பூம்பொழிலிலும் பக்கலிலும் கட்டுமலைகளிலும், தாமரைச் செங்கண் பரப்பினன் வரூஉம் அரசிளங்குமரன் - தாமரை மலர் போன்ற சிவந்த கண்களால் நோக்கிவருகின்ற மன்னிளம் புதல்வன், ஆரும் இல் ஒரு சிறை ஒரு தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் - யாருமில்லாத ஒரு பக்கத்தில் நீ ஒருத்தியாய் நிற்கின்றாய் நின் இயல்பினை அறிந்தேன் ; பொங்கர் - ஈண்டுச் செய்குன்று. அரசிளங்குமரன் சுதமதியைக கண்டு உன் திறம் அறிந்தேன் என்று கூறியென்க. 97-104. வளர்இள வனமுலை மடந்தை மெல்லியல் - வளர் கின்ற வனப்புடைய இளங் கொங்கைகளையும் மென்மைத் தன்மையையும் உடைய மணிமேகலை, தளர் இடை அறியும் தன்மையள் கொல்லோ - ஆடவர் தளர்ந்த சமயத்தை யறியும் தன்மையை யுடையவளோ, விளையா மழலை விளைந்து மெல்லியல் முளை யெயிறு அரும்பி முத்து நிரைத் தனகொல்-முதிராத மழலைமொழி முதிர்ந்து மெல்லியலுக்கு முளை எயிறுகள் அரும்பி முத்துக்களை நிரைத்தன போன்றனவோ, செங்கயல் நெடுங்கண் செவிமருங்கு ஓடி வெங்கணை நெடுவேள் வியப்பு உரைக்கும்கொல்-சிவந்த கயல் மீன் போன்ற நீண்ட கண்கள் செவியின் பக்கத்தே ஓடிக் கொடிய கணைகளையுடைய காமனின் வியப்பினை உரைக் கின்றனவோ, மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை தானே தமியள் இங்கு எய்தியது உரை என-மணிமேகலை சங்கத்தார் உறைகின்ற விடத் தினின்றும் நீங்கித் தானே தனியளாய் இவண் எய்திய காரணத்தை உரைப்பாயாக என; இடை- செல்வி; 1"உடையார் போல இடையின்று குறுகி" என்பது காண்க. முளை எயிறு - முளைபோலும் எயிறு; முளைத்த எயிறுமாம். வெங்கணை-விருப்பத்தைச் செய்யுங் கணையுமாம். வியப்பு- வியக்குஞ் செய்தி. செவிமருங்கோடுதல் - உரைப்பது போலு மென்றானென்க. சங்கத்தை நீங்கினளாதலைத் தமியள் என்றான். 105-110 பொதியறைப் பட்டோர்போன்று உளம் வருந்தி மது மலர்க் கூந்தற் சுதமதி உரைக்கும் - தேன் பொருந்திய மலர் களையணிந்த குழலினையுடைய சுதமதி சாளரமில்லாத நிலவறையிற் பட்டோர் போல மனம் வருந்திக் கூறுகின்றாள், இளமை நாணி முதுமை எய்து உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு இளமைப் பருவத்தை நாணி முதுமைப்பருவத்தை அடைந்து தம்முள் மாறு கொண்டு வந்தார் இருவருடைய சொல்லை ஆராய்ந்து அறிந்து அவர்கட்கு அவற்றின் முடிவை விளக்கிய பேரறிவுடையோனாகிய கரிகாற் பெருவளத்தானது வழித்தோன்றலாகிய நினக்கு, அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ-நல்லறிவினையும் அமைதியையும் அரசியல் நீதியையும் செறிந்த வளையையுமுடைய மகளிர் கூறுமாறும் உண்டோ; கறிகாற் பெருவளத்தான் உரை முடிவு காட்டிய இவ்வரலாறு 2உரை முடிவுகாணா னிளமையோனென்ற, நரைமுது மக்களுவப்ப - நரை முடித்துச் சொல்லான் முறைசெய்தான் சோழன் குல விச்சை, கல்லாமற் பாகம் படும்" என்னும் பழமொழி வெண் பாவாலும், "தம் முள் மறுதலையாயினா ரிருவர் தமக்கு முறை செய்ய வேண்டி வந்து சில சொன்னால் அச் சொன் முடிவு கண்டே ஆராய்ந்து முறை செய்ய அறிவு நிரம்பாத இளமைப் பருவத்தானென்றிகழ்ந்த நரைமுது மக்க ளுவக்கும்வகை நரை முடித்துவந்து, முறைவேண்டிவந்த இருதிறத்தாரும் சொல்லிய சொற்கொண்டே ஆராய்ந்தறிந்து முறைசெய்தான் கரிகாற் பெருவளத்தானென்னுஞ் சோழன்; ஆதலால் தத்தம் குலத்துக்குத் தக்க விச்சைகள் கற்பதற்கு முன்னே செம்பாக முளவாம் என்றவாறு" என்னும் அதன் உரையாலும் அறியப்படும்: பொருநராற் றுப்படையிலும் 1"முதியோ, ரவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவும்" என இது கூறப்பட்டுளது. மருகற்கு முன்னிலையிற் படர்க்கை. 111-125. அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல் வினை விளங்கு தடக்கை விறலோய் கேட்டி - அங்ஙனமாயினும் போரின்கண் விளங்குகின்ற தடந்தோள் வலியுடையாய் யான் ஒன்று கூறுவேன் அதனைக் கேட்பாயாக, வினையின் வந்தது வினைக்கு விளைவாயது - கன்மத்தால் உண்டானது கன்மத்திற்கு விளை நிலமாகவுள்ளது. புனைவன நீங்கில் புலால் புறத்து இடுவது - புனையப் படுவனவாகிய மணப் பொருள்கள் நீங்கப் படுமானால் புலால் நாற்றத்தை வெளிக்குக் காட்டுவது, மூத்து விளிவுடையது - முதுமை யடைந்து சாதலையுடையது, தீப்பிணி இருக்கை - கொடிய நோய்கட்கு இருப்பிடமாகவுள்ளது, பற்றின் பற்றிடம் - பற்றுக்களுக்குப் பற்றும் இடமாயது, குற்றக் கொள்கலம் - குற்றங்கட்குக் கொள்கலமாயுள்ளது, புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை - பாம்பு அடங்கியுள்ள புற்றைப்போலச் செற்றத்திற்குத் தங்குமிடமாயது, அவலக் கவலை கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது-அவலம் முதலிய நான்கும் நீங்காததாகிய உள்ளத்தைத் தன்னிடத் துடையது, மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்கோய் இதனைப் புறமறிப்பாராய் - மேலோனே மக்கள் உடம்பு இத்தகையதென்பதனை அறிந்து இதனைப் புறமறியாகப் பார்ப்பாயாக, என்று அவள் உரைத்த-என்று அவள் கூறிய, இசைப்படு தீஞ்சொல்-புகழினையுண்டாக்குகின்ற இனிய மொழிகள், சென்று அவன் உள்ளம் சேராமுன்னர் - உதயகுமரன் உள்ளத்திற் சென்று அடைவதற்கு முன்னரே, பளிங்கு புறத்து எறிந்த பவளப்பாவையின் - பளிங்கறையின் புறத்தே விளங்குகின்ற பவளப்பாவையைப்போல, இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் - இளமை பொருந்திய கொடியனைய மணிமேகலையின் உருவம் இளங்கோவின் முன்னர்த் தோன்றிய தென்க. யாக்கை வினையின் காரியமாயும், வினைக்குக் காரணமாயும் உள்ள தென்றபடி; "பிறவிப் பெருங்கடல்" "என்பதனுரையில், காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவிப் பெருங்கடலென்றார்" எனப் பரிமேலழகர் கூறியது ஈண்டு அறியற்பாலது. புனைவன - சந்தனம், மலர் முதலியன. மூப்பு என்பதும் பாடம். அரவு அடங்கு புற்றின் என மாறுக. செற்றம் - பகைமை நெடுங்காலம் நிகழ்வதாகிய சினம், அவலம் - வருத் தந்தோன்றி நிற்றல்; கவலை - யாது செய்வலென்றல்; கையாறு - மூர்ச்சித்தல்; அழுங்கல் - வாய்விட் டழுதல்; இது அரற்று எனவும் படும். புறமறிப் பாராய் - புறமறியாகப் பார்ப்பாயாக; என்றது, பையை உள்புறமாக மறித்துப் பார்த்தல் போல் உடம்பையும் பார்க்கவென்றபடி; பார்ப்பின் இதன் தூய்து அன்மை விளங்கும் என்றவாறு; 1"மற்றதனைப் பைம்மறியாப் பார்க்கப்படும்" 2"பைம்மறியா நோக்கப் பருந்தார்க்குந் தகைமைத்து" என்பன காண்க. என்றாள்; என்று அவளுரைத்த சொல் என வேறறுத் துரைக்க. "பளிங்கு......பாவை" என்னுங் கருத்து; 3"பளிக்கறைப் பவழப் பாவை பரிசெனத் திகழுஞ் சாயல்" எனச் சீவக சிந்தா மணியில் வந்துள்ளமை காண்க. சுதமதி காட்ட மணிமேகலை மலர்வனம் காண்புழி, யானையின் கடாத்திறம் அடக்கிவருவோனாகிய உதயகுமரன் எட்டிகுமரனை நோக்கியாது நீ யுற்ற இடுக்கண் என்றலும், அவன் இது யானுற்ற இடும்பை யென்றலும், தாரோன் மகிழ்வெய்திப் பூம்பொழிற் கடைமுகம் குறுக, தேரொலி இசைத்தலும், என்செய்கு என ஆயிழையுரைத்தலும், பாவையை இரீஇ நின்ற, சுதமதியைக் கண்டு அரசிளங்குமரன் மணிமேகலை எய்தியது உரையென, அவள் வருந்தி மக்கள் யாக்கை இது வென உணர்ந்து புறமறிப்பாராய் என்றுரைத்த சொல் அவனுள்ளஞ் சேரா முன்னர் இளங்கொடி இளங்கோமுன் தோன்றும் என முடிக்க. பளிக்கறை புக்க காதை முற்றிற்று. 5. மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை மணிமேகலையின் உருவத்தை ஓவியமெனக் கருதி ஓவியனது கைத்திறத்தை வியந்த உதயகுமரன் பின்பு அதனை அவள் வடிவெனத் துணிந்து, பளிக்கறையுட் புகுதற்கு அதன் வாயில் காணப் படாமையால் பளிக்குச் சுவரினைக் கையாலே தடவிக் கொண்டு வருபவன் சுதமதியை நோக்கி, ‘மணிமேகலை எத்திறத்தினள் ? கூறுதி' என்றான். என்னலும், சுதமதி, ‘அவள் தவவொழுக்கினள்; குற்றம் புரிந்தாரைச் சபிக்கும் ஆற்றலுமுடையவள்; காம விகாரம் இல்லாதவள் ; நீ அவளை விரும்புதல் தக்கதன்று' என்று கூறினள். கூறலும் அவன், ‘சிறையுமுண்டோ செழும்புனல் மிக்குழி, நிறையுமுண்டோ காமம் காழ்க்கொளின்? அவள் எப்படியும் எனக்குரியவளாவள்' என்று சொல்லிக் கொண்டு செல்பவன், சமண முனிவர்களின் இருப்பிடத்தில் ஓர் வித்தியாதரனால் இடப்பட்டவளென்று கூறப்படும் சுதமதி பௌத்த சங்கத்தைச் சார்ந்த மாதவி மகளுடன் வந்த வரலாற்றை அவளை வினாவித் தெரிந்துகொண்டு, ‘மணிமேகலையைச் சித்திராபதியால் இனி அடைதல் கூடும்' என்று சொல்லிப் போயினன். போனவுடன் மணிமேகலை வெளியே வந்து சுதமதியை நோக்கி, அன்பிலள்; தவவுணர்ச்சியில்லாதவள், பொருள் விலையாட்டி,' என்று என்னை இகழ்ந்தனன் என்னாது அவன் பின்னே என் நெஞ்சு செல்லலுற்றது; ‘இதுவோ காமத்தியற்கை ; இதன் தன்மை கெடுவதாக;' என்று சொல்லிக்கொண்டு நின்றாள். அப்பொழுது இந்திர விழாவைக் காணுதலுற்ற மணிமேகலா தெய்வம் அவர்கட்குத் தெரிந்த ஓர் மடந்தை வேடம் பூண்டு அப்பொழிலையடைந்து, பளிக்கறையிலுள்ள பாதபீடிகையை வலங்கொண்டு மேல் எழும்பி நின்று பலவாறு துதித்தது. அப்பொழுது பகற்பொழுது நீங்க அந்திமாலை வந்துற்றது. (இதன்கண் சுதமதி வரலாறு கூறும் வாயிலாகச் சமணரினும் புத்தர்கள் அருளுடையோ ரென்பது வலியுறுத்தப்படுகின்றது. புத்த தேவனைப் பரவுதல் நன்கமைந் துள்ளது. மேற்றிசையில் ஞாயிறு வீழக் கீழ்த்திசையில் நிறை மதி தோன்றுதலை உருவகப்படுத்தி யிருப்பதும், மாலைப்பொழுதின் நிகழ்ச்சிகள் கூறுவதும் கவியின் கற்பனைத் திறத்திற்குச் சிறந்த எடுத்துக் காட்டுக்களாம்.) இளங்கோன் கண்ட இளம்பொற் பூங்கொடி விளங்கொளி மேனி விண்ணவர் வியப்பப் பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்துத் திருவின் செய்யோள் ஆடிய பாவையின் 5 விரைமல ரைங்கணை மீன விலோதனத்து உருவி லாளனொ டுருவம் பெயர்ப்ப ஓவிய னுள்ளத் துள்ளியது வியப்போன் காவியங் கண்ணி யாகுதல் தெளிந்து தாழொளி மண்டபந் தன்கையில் தடைஇச் 10 சூழ்வோன் சுதமதி தன்முக நோக்கிச் சித்திரக் கைவினை திசைதொறுஞ் செறிந்தன எத்திறத் தாள்நின் இளங்கொடி யுரையெனக் குருகுபெயர்க் குன்றங் கொன்றோ னன்னநின் முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால் 15 பருகா ளாயினிப் பைந்தொடி நங்கை ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி காமற் கடந்த வாய்மைய ளென்றே தூமலர்க் கூந்தற் சுதமதி யுரைப்பச் சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழி 20 நிறையு முண்டோ காமங் காழ்க்கொளின் செவ்விய ளாயினென் செவ்விய ளாகென அவ்விய நெஞ்சமோ டகல்வோ னாயிடை அஞ்செஞ் சாய லராந்தா ணத்துளோர் விஞ்சைய னிட்ட விளங்கிழை யென்றே 25 கல்லென் பேரூர்ப் பல்லோ ருரையினை ஆங்கவ ருறைவிடம் நீங்கி யாயிழை ஈங்கிவள் தன்னொ டெய்திய துரையென வார்கழல் வேந்தே வாழ்கநின் கண்ணி தீநெறிப் படரா நெஞ்சினை யாகுமதி 30 ஈங்கிவள் தன்னோ டெய்திய காரணம் வீங்குநீர் ஞால மாள்வோய் கேட்டருள் யாப்புடை யுள்ளத் தெம்மனை யிழந்தோன் பார்ப்பன முதுமகன் படிம வுண்டியன் மழைவளந் தரூஉம் அழலோம் பாளன் 35 பழவினைப் பயத்தால் பிழைமண மெய்திய எற்கெடுத் திரங்கித் தன்தக வுடைமையின் குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறைப் பரந்துசென் மாக்களொடு தேடினன் பெயர்வோன் கடன்மண்டு பெருந்துறைக் காவிரி யாடிய 40 வடமொழி யாளரொடு வருவோன் கண்டீங் கியாங்ஙனம் வந்தனை யென்மக ளென்றே தாங்காக் கண்ணீ ரென்றலை யுதிர்த்தாங் கோத லந்தணர்க் கொவ்வே னாயினும் காதல னாதலிற் கைவிட லீயான் 45 இரந்தூண் தலைக்கொண் டிந்நகர் மருங்கில் பரந்துபடு மனைதொறுந் திரிவோ னொருநாள் புனிற்றாப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன் கணவிரி மாலை கைக்கொண் டென்ன நிணநீடு பெருங்குடர் கையகத் தேந்தி 50 என்மக ளிருந்த இடமென் றெண்ணித் தன்னுறு துன்பந் தாங்காது புகுந்து சமணீர் காள்நுஞ் சரணென் றோனை இவணீ ரல்லவென் றென்னொடும் வெகுண்டு மையறு படிவத்து மாதவர் புறதெமைக் 55 கையுதிர்க் கோடலின் கண்ணிறை நீரேம் அறவோ ருளிரோ ஆருமி லோமெனப் புறவோர் வீதியிற் புலம்பொடு சாற்ற மங்குறோய் மாடம் மனைதொறும் புகூஉம் அங்கையிற் கொண்ட பாத்திர முடையோன் 60 கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன் பொன்னிற் றிகழும் பொலம்பூ வாடையன் என்னுற் றனிரோ என்றெமை நோக்கி அன்புட னளைஇய அருண்மொழி யதனால் அஞ்செவி நிறைத்து நெஞ்சகங் குளிர்ப்பித்துத் 65 தன்கைப் பாத்திர மென்கைத் தந்தாங் கெந்தைக் குற்ற இடும்பை நீங்க எடுத்தனன் றழீஇக் கடுப்பத் தலையேற்றி மாதவ ருறைவிடங் காட்டிய மறையோன் சாதுயர் நீக்கிய தலைவன் றவமுனி 70 சங்க தருமன் தானெமக் கருளிய எங்கோ னியல்குணன் ஏதமில் குணப்பொருள் உலக நோன்பிற் பலகதி உணர்ந்து தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் இன்பச் செவ்வி மன்பதை யெய்த 75 அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின் அறக்கதி ராழி திறப்பட உருட்டிக் காமற் கடந்த வாமன் பாதம் தகைபா ராட்டுத லல்லது யாவதும் மிகைநா வில்லேன் வேந்தே வாழ்கென 80 அஞ்சொ லாழியை நின்திற மறிந்தேன் வஞ்சி நுண்ணிடை மணிமே கலைதனைச் சித்திரா பதியாற் சேர்தலு முண்டென் றப்பொழி லாங்கவன் அயர்ந்து போயபின் பளிக்கறை திறந்து பனிமதி முகத்துக் 85 களிக்கயல் பிறழாக் காட்சிய ளாகிக் கற்புத் தானிலள் நற்றவ உணர்விலள் வருணக் காப்பிலள் பொருள்விலை யாட்டியென் றிகழ்ந்தன னாகி நயந்தோ னென்னாது புதுவோன் பின்றைப் போனதென் னெஞ்சம் 90 இதுவோ அன்னாய் காமத் தியற்கை இதுவே யாயிற் கெடுகதன் றிறமென மதுமலர்க் குழலாள் மணிமே கலைதான் சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள் இந்திர கோடணை விழாவணி விரும்பி 95 வந்து காண்குறுஉ மணிமேகலா தெய்வம் பதியகத் துறையுமோர் பைந்தொடி யாகி மணியறைப் பீடிகை வலங்கொண் டோங்கிப் புலவன் றீர்த்தன் புண்ணியன் புராணன் உலக நோன்பின் உயர்ந்தோ யென்கோ 100 குற்றங் கெடுத்தோய் செற்றஞ் செறுத்தோய் முற்ற உணர்ந்த முதல்வா என்கோ காமற் கடந்தோய் ஏம மாயோய் தீநெறிக் கடும்பகை கடிந்தோய் என்கோ ஆயிர வாரத் தாழியன் றிருந்தடி 105 நாவா யிரமிலேன் ஏத்துவ தெவனென் றெரிமணிப் பூங்கொடி இருநில மருங்குவந் தொருதனி திரிவதொத் தோதியி னொதுங்கி நிலவரை யிறந்தோர் முடங்குநா நீட்டும் புலவரை யிறந்த புகாரெனும் பூங்கொடி 110 பன்மலர் சிறந்த நன்னீ ரகழிப் புள்ளொலி சிறந்த தெள்ளரிச் சிலம்படி ஞாயி லிஞ்சி நகைமணி மேகலை வாயின்மருங் கியன்ற வான்பணைத் தோளி தருநில வச்சிரம் எனஇரு கோட்டம் 115 எதிரெதி ரோங்கிய கதிரிள வனமுலை ஆர்புனை வேந்தற்குப் பேரள வியற்றி ஊழி யெண்ணி நீடுநின் றோங்கிய ஒருபெருங் கோயிற் றிருமுக வாட்டி குணதிசை மருங்கின் நாண்முதிர் மதியமும் 120 குடதிசை மருங்கிற் சென்றுவீழ் கதிரும் வெள்ளிவெண் தோட்டொடு பொற்றோ டாக எள்ளறு திருமுகம் பொலியப் பெய்தலும் அன்னச் சேவல் அயர்ந்துவிளை யாடிய தன்னுறு பெடையைத் தாமரை யடக்கப் 125 பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண் டோங்கிருந் தெங்கின் உயர்மட லேற அன்றிற் பேடை அரிக்குர லழைஇச் சென்றுவீழ் பொழுது சேவற் கிசைப்பப் பவளச் செங்காற் பறவைக் கானத்துக் 130 குவளை மேய்ந்த குடக்கட் சேதா முலைபொழி தீம்பால் எழுதுக ளவிப்பக் கன்றுநினை குரல மன்றுவழிப் படர அந்தி யந்தணர் செந்தீப் பேணப் பைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப 135 யாழோர் மருதத் தின்னரம் புளரக் கோவலர் முல்லை குழன்மேற் கொள்ள அமரக மருங்கிற் கணவனை யிழந்து தமரகம் புகூஉம் ஒருமகள் போலக் கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமோ 140 டந்தி யென்னும் பசலைமெய் யாட்டி வந்திறுத் தனளால் மாநகர் மருங்கென். உரை 1-6. இளங்கோன் கண்ட இளம்பொற் பூங்கொடி-அரசிளங் குமரன் கண்ணுற்ற அழகிய இளம் பூங்கொடியனைய மணிமேகலை, விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப-விளங்குகின்ற பேரொளி பொருந்திய திருமேனியையுடைய வானவர்களும் வியக்குமாறு, பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்து - பளிங்கினாலாய பொருமுக வெழினியை வீழ்த்து, திருவின் செய்யோள் ஆடிய பாவையின் - திருமகளாடிய பாவையைப்போல, விரைமலர் ஐங்கணை மீன விலோதனத்து உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப - மணம் பொருந்திய மலராகிய ஐந்தம்புகளையும் மீனக்கொடியையும் உடைய அநங்கனுடன் தன் உருவத்தை வெளிப்படுத்த; பொற்பூங்கொடி - காமவல்லியுமாம்; இது பொன்னுலகத் துள்ள தென்பர். எழினி - திரைச்சீலை; பொருமுக வெழினி-மூவகைத் திரைச் சீலைகளுள் ஒன்று; அரங்கின் வலத்தூண் இரண்டிலும் உருவு திரை யாய் அமைவது; எழினி மூன்றனையும் 1"ஒருமுக வெழினியும் - பொருமுக வெழினியும்; கரந்துவர லெழினியும் புரிந்துடன் வகுத்து"என் பதனாலறிக. திருவின் செய்யோள் - திருவாகிய செய்யோள்; திருமகள்- இன்: சாரியை. ஆடிய பாவையின் - ஆடுதற்குக் கொண்ட பாவை யுருவைப் போல; கொல்லிப் பாவையுருக்கொண்டு ஆடினமையின் அக் கூத்தும் பாவை யெனப்படும்; அது போர் செய்தற்குச் சமைந்த கோலத்துடன் அவுணர் மோகித்து விழும்படி திருமகளாடியது; பதினோராடலுளொன்று; 2"செருவெங் கோல மவுணர் நீங்கத், திரு வின் செய்யோ ளாடிய பாவையும்' என்பது காண்க. "உருவி லாளனொ டுருவம் பெயர்ப்ப" என்பதன் கருத்து இவளுருவைக் கண்டவுடன் இளங்கோவனுக்குக் காமவுபாதை உண்டாயிற் றென்பதாம். 7-12. ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் - (மணிமேகலையின் உருவத்தை ஓவியம் என நினைந்து) ஓவியக்காரன் அதனை எழுதுமாறு மனதில் அமைத்ததை வியக்கின்றவனாய் உதயகுமரன், காவியங் கண்ணி யாகுதல் தெளிந்து - அவ்வடிவம் நீலமலரனைய கண்களையுடைய மணிமேகலை யாதலைத் தெளிந்து, தாழ் ஒளி மண்டபம் தன் கையில் தடைஇச் சூழ்வோன் - தங்கிய ஒளியுடைய பளிக்கு மண்டபத்தைத் தன் கையாலே தடவிப் பார்த்துச் சுற்றி வருபவன், சுதமதி தன்முகம் நோக்கி - சுதமதியின் முகத்தைப் பார்த்து, சித்திர கைவினை திசைதொறும் செறிந்தன எத்திறத்தாள் நின் இளங்கொடி உரை என - சித்திரக் கைத்தொழில் எப்பக்கமும் நிறைந்திருக்கின்றன நின் இளங்கொடி போல்பவள் எவ்விடத்தாள் கூறுக என; தாழ்தல்-தங்குதல். வாயில் காண்டற்கு மண்டபத்தைத் தடவிச் சூழ்ந்தனனென்க. சூழ்ந்து வருங்கால் மணிமேகலையின் உருவம் எத்திசையினும் வெளிப்பட்டமையின் "சித்திரக் கைவினை திசைதொறுஞ் செறிந்தன" என்றான் ; மண்டபத்திலுள்ள ஓவியப்பாவை பலவற்றுடன் மணிமேகலையின் உருவம் வேறுபாடின்றி யிருந்தமையின் அங்ஙனம் கூறினானெனலுமாம்; 1"மேவிய பளிங்கின் விருந்திற் பாவையிஃ தோவியச் செய்தியென் றொழிவேன் முன்னர்" 2"ஈங்கிம் மண்ணீட்டியாரென வுணர்கேன்" எனப் பின்வருவன காண்க. திறம்-இயல்புமாம். சுதமதி காவற் பெண்டாகலின் 'நின் இளங்கொடி' என்றான். ஓவியன் என்பதற்கு உதயகுமரன் சித்திரம் போன்றவனாய் நின்றென்றுரைத்தல் ஈண்டைக்குப் பொருந்தாமையோர்க. 13-18. குருகு பெயர்க் குன்றங் கொன்றோன் அன்ன நின் முருகச் செவ்வி - கிரவுஞ்ச மலையை எறிந்த முருகவேளை யொத்த நினது இளமை யழகினை, முகந்து தன் கண்ணால் பருகாள் 3ஆயின் பைந்தொடி நங்கை-ஆராயுமிடத்துப் பசிய வளையல்களை யணிந்த மணிமேகலை தன் கண்களால் முகந்து பருகாள், ஊழ்தரு தவத்தள் - முறையாகப் பெற்ற தவத்தினையுடையள், சாபசரத்தி-சாபமாகிய அம்பையுடையவள், காமற் கடந்த வாய்மையள் என்றே - காமனை வென்ற மெய்ம்மையை யுடையவள் என்று, தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப-தூய மலரணிந்த கூந்தலையுடைய சுதமதி கூற; குருகு-அன்றில்; கிரவுஞ்சம்; அதன் பெயர் பெற்ற குன்றமென்க; 4"குருகுபெயர்க்குன்றங் கொன்ற நெடுவேலே" "குருகுபெயர்க்குன் றங்கொன்றான்" என்பன காண்க. முருகு-இளமை; ஈறு திரிந்தது; ஊழ்தரு தவத்தள்- ஊழினாலே தரப் பட்ட தவத்தினள் என்றுமாம்; என்னை? 5தவமுந் தவமுடையார்க் காகும்" என்பவாகலின். சாபசரத்தி - வில்லையும் அம்பையும் உடையாள் என்பதோர் பொருளும் தோன்ற நின்றது; சாபம் - வில். ஆயின், நங்கை பருகாள்; தவத்தள்; சரத்தி; வாய்மையள்; என்று உரைப்பவென்க. 19-27. சிறையும் உண்டோ செழும்புனல் மிக்குழி- வளவிய நீர் மிகுந்த விடத்து அதனைத் தாங்கும் அரணும் உண்டோ, நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்-அவ்வாறே காமம் அடிப்படின் அதனை நிறுத்தும் தன்மையும் உளதாகுமோ, செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆகென - செவ்வியை யுடையளாயின் என்னை? அவள் செவ்வியளாகட்டும் என்று, அவ்விய நெஞ்சமொடு அகல் வோன்-பொறாமை கொண்ட உள்ளத்தோடும் நீங்குவோன், ஆயிடை-அப்பொழுது, அம்செஞ் சாயல் - அழகிய சிவந்தசாயலையுடையாய் அராந்தாணத்துள்-சமணப் பள்ளியில், ஓர் விஞ்சையன் இட்ட விளங்கிழை என்றே-ஒரு விஞ்சையனாலிடப்பட்ட மெல்லியல் என்றே, கல்லென் பேரூர்ப் பல்லோர் உரையினை-கல்லென்னும் ஒலியினையுடைய நகரின்கண் பல்லோராலுங் கூறப்படுவாய், ஆங்கவர் உறைவிடம் நீங்கி ஆயிழை-ஆயிழாய் நீ அச்சமண முனிவர் வாழ்விடத்தை நீங்கி, ஈங்கிவள் தன்னோடு எய்தியது உரை என - இம் மணிமேகலையுடன் ஈண்டு எய்திய காரணத்தைக் கூறுவாயாக என; சிறை-அணை. நிறை-காமத்தை உள்ளேயடக்கி நிறுத்துதல்; மனத்தை நிறுத்தலுமாம்; காழ்க்கொளின்-வைரமேறின் ; முதிர்ந்தால் என்றபடி; 1 "நீர் மிகிற் சிறையுமில்லை" 2"நீர்மிகினில்லை சிறை" 3"சிறையென்ப தில்லைச் செவ்வே செம்புனல் பெருகு மாயின், நிறை யென்ப தில்லைக் காம நேர்நின்று சிறக்குமாயின்" 4"பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே" என்பன ஈண்டு அறியற்பாலன. தவத்தள், சரத்தி, வாய்மையள் என்பவற்றைச் செவ்வியள் என அடக்கிக் கூறினான். ஆகென, விகாரம், அவ்வியம்-பிறர்க் குரியளாதல் கூடா தென்னும் பொறாமை; கோட்டமுமாம். அஞ்செஞ் சாயல், விளி. அராந்தாணம் என்பதற்கு மேல் (3 : 87) உரைத்தமை காண்க. 28-31. வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி - நீண்ட வீரக்கழலை யணிந்த அரசே நின் கண்ணி வாழ்வதாக, தீநெறிப்படரா நெஞ்சினை ஆகுமதி-தீயவழியிற் செல்லாத உள்ளமுடையை ஆவாயாக, ஈங்கிவள் தன்னோடு எய்திய காரணம் வீங்குநீர்ஞாலம் ஆள்வோய் கேட்டருள்-இம் மணிமேகலையுடன் யான் வந்த காரணத்தைக் கடல்சூழ்ந்த நிலவுலகினையாளும் மன்னவனே கேட்டருள் வாயாக; 32-40. யாப்புடை உள்ளத்து எம் அனை இழந்தோன் பார்ப்பன முதுமகன்-என் தாயை இழந்தோனும் உறுதிபொருந்திய உள்ளத்தை யுடைய பார்ப்பன முதியோனும், படிம உண்டியன்-பட்டிணிவிட்டுண்ணும் நோன்பினை யுடையோனும், மழைவளம் தரூஉம் அழல் ஓம்பாளன் - மழைவளத்தைத் தரும் முத்தீயோம்பு வோனுமாகிய எந்தை, பழவினைப் பயத்தால் பிழைமணம் எய்திய எற்கெடுத்து இரங்கி-முன் செய்வினையின் பயனால் மாருத வேகனிடம் அகப்பட்டுப் பிழைமணம் எய்திய என்னைக் காணாமையால் வருந்தி, தன் தகவுடைமையின் - தனது தகுதி யுடைமையால், குரங்குசெய் கடல் குமரியம் பெருந்துறைப் பரந்து செல் மாக்க ளொடு-குரங்கு செய்த குமரிக்கடலின் பெரிய துறைக்கண் நீராடுதற்கு மிக்குச் செல்லும் மக்களோடே, தேடினன் பெயர்வோன் - என்னைத் தேடிச் செல்பவனாய், கடல் மண்டு பெருந்துறைக் காவிரி ஆடிய-இடையே காவிரி கடலிற் கலக்கும் பெரிய சங்க முகத்துறையில் நீராடுதற்கு, வடமொழி யாளரொடு வருவோன்- பார்ப்பனரோடு வருபவன்; மழைவளந் தரூஉம் அழல் என்க; 1"மழைக்கரு வுயிர்க்கு மழற்றிக ழட்டின், மறையோ ராக்கிய வாவுதி நறும்புகை" என்பது காண்க. மாருத வேகனுக்குத் தான் சிலநாள் உரியளானது பற்றி, "பிழைமண மெய்திய" என்றாள். குமரி-கன்னியாகுமரி ; 2"தொடியோள் பௌவமும்" என்பதன் உரை நோக்குக. வடமொழியாளர்-பார்ப்பனர் ; பார்ப்பனியை "வடமொழியாட்டி" (13:73) என்று பின்னர்க் கூறுவர். 40-46. கண்டு ஈங்கு-என்னை இந்நகரத்திற் கண்டு, யாங்ஙனம் வந்தனை என்மகள் என்றே தாங்காக் கண்ணீர் என்றலை உதிர்த் தாங்கு-என் மகளே ஈண்டு எவ்வாறு வந்தாய் என்று கூறிப் பெருகிய கண்ணீரை என்மீது சொரிந்து, ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்-யான் மறையோதும் அந்தணர்களுடனிருத் தற்குத் தகாத வளாயினும், காதலன் ஆதலின் கைவிடலீ யான் - என்மீது மிகுந்த அன்புடையனாதலால் என்னைக் கைவிடானாய், இரந்தூண் தலைக்கொண்டு-இரந்துண்டு வாழ்தலை மேற்கொண்டு, இந்நகர் மருங்கில்-இவ்'d2வூரின் கண், பரந்துபடு மனைதொறும் திரிவோன் - பரந்து தோன்றும் இல்லங்கள் தோறும் சென்று ஏற்போன்; கைவிடலீயான்-கைவிடான்; "காவலன் மகனோ கைவிடலீயான்" (19:32) என்பர் பின்னும்; "காட்டியதாதலிற் கைவிடலீயான்" (13:85) என்பது சிலப்பதிகாரம். 46-52. ஒருநாள் புனிற்றுஆ பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்-ஒரு நாள் ஈன்றணிமையையுடைய பசுவொன்று பாய்ந்தமையால் வயிற்றிலுண்டான புண்ணினை யுடையனாய், கணவிரி மாலை கைக் கொண்டென்ன - அலரிமாலையைக் கையிற் கொண்டாற்போல, நிணம்நீடு பெருங்குடர் கையகத்து ஏந்தி-நிணத்துடன் நீண்ட பெரிய குடரைக் கையில் ஏந்திக் கொண்டு, என்மகள் இருந்த இட மென்று எண்ணி-பண்டு என்மகள் இருந்த இடமாகும் என்று நினைந்து, தன் உறு துன்பம் தாங்காது புகுந்து - தனது மிக்க துன்பத்தினைத் தாங்க வியலாமற் புகுந்து, சமணீர்காள் நும் சரண் என்றோனை - சமணர்களே உம்முடைய அடைக்கலம் என்று கூறியவனை; பாய்ந்த புண்: பெயரெச்சம் காரணப் பொருட்டாயது; ஆறு சென்ற வியர் என்புழிப்போல. 1"நிணவரிக் குறைந்தவதர் தொறுங், கணவிர மாலை யிடூஉக்கழிந் தன்னை, புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்" என உவமங் கூறியிருப்பது அறியற்பாலது. இடமென்று-இட மாகலின் புரந்தருள்வரென்று. 53-57. இவண் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு - இவ் விடத்திற்குரிய தன்மை அன்றென்று கூறி என்னையும் சினந்து, மையறு படிவத்து மாதவர் புறத்து எமைக் கையுதிர்க் கோடலின்- குற்றமற்ற தவவடிவத்தை யுடைய சமண முனிவர்கள் புறத்தே போகுமாறு எம்மைக் கையை அசைத்துக் குறித்தலினால், கண் நிறை நீரேம்-கண்களில் நிறைந்த நீரினையுடையேமாய், அறவோர் உளீரோ ஆரும் இலோம் என - அறம்புரிவீர் இருக்கின்றீரோ பாதுகாப்போர் யாருமில்லாதேம் என்று, புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற - புறத்திலுள்ள ஒரு வீதியில் வருத்தத்துடன் கூற; இவணீரல்ல - இவ்விடத்திற்குரியீரல்லீர் என்றுமாம் ; அல்ல என்பது பால்குறியாது வழக்குப்பற்றி நின்றது. என்னொடும் - என்னையும்; உம்மை: எச்சம்; தந்தையை என்னொடும் என்றுமாம். படிவம் - தவ வேடம். ஓர் புறவீதியி லென்க ; புறவோர் - புறத்திலுள்ளோர் என்றுரைப்பாருமுளர். 58-70. மங்குல் தோய் மாட மனைதொறும் புகூஉம் அங்கையிற் கொண்ட பாத்திரம் உடையோன் - வானளாவிய மாடங்களை யுடைய மனைகள்தோறும் செல்லும் கையிற்கொண்ட பிச்சைப் பாத்திரத்தையுடையவனும், கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன்-ஞாயிறு காயும் நண்பகற் பொழுதில் குளிர்ச்சி பொருந்திய மதிபோலும் முகத்தினை யுடைய வனும், பொன்னில் திகழும் பொலம்பூ ஆடையன்-பொன் போல் விளங்கும் அழகிய ஆடையை உடையவனுமாகி, என் உற்றனிரோ என்று எமை நோக்கி-என்ன துன்பம் எய்தினீர் என்று எங்களை நோக்கி, அன்புடன் அளைஇய அருள் மொழி அதனால் - அன்பொடு கலந்த அருள் மிகுந்த இன் மொழிகளால், அஞ்செவி நிறைத்து நெஞ்சகம் குளிர்ப்பித்து - செவியகத்தை நிறைத்து உள்ளத்தைக் குளிரச்செய்து, தன்கைப் பாத்திரம் என்கைத் தந்து-தன் கையிலுள்ள பாத்திரத்தை என் கையில் கொடுத்துவிட்டு, எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க - என் தந்தைக்கு எய்திய துன்பம் நீங்குமாறு, எடுத்தனன் தழீஇக் கடுப்பத் தலையேற்றி-விரையத் தழுவி எடுத்துத் தன் உடம்பினிடத்தே சுமந்து சென்று, மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்-புத்த முனிவர்கள் உறைவிடத்தைக் காட்டிய மறையவனாகிய, சாதுயர் நீக்கிய தலைவன்-எந்தையின் இறப்புத் துன்பத்தை நீக்கிக் காப்பாற்றிய தலைவன், தவமுனி சங்கதருமன் - சங்கதருமன் என்னும் தவத்தையுடைய முனிவனாவான்; இல்லறத்தோர் யாவரும் உண்டபின் உச்சிப்பொழுதிற் பிச்சைக்குச் செல்வது புத்தமதத் துறவியர் இயல்பாகலின், "கதிர்சுடுமம யத்து" என்றார் ; "வெங்கதி ரமயத்து வியன்பொழி லகவயின், வந்து தோன்றலும்," "வெயில்விளங் கமயத்து விளங்கித் தோன்றிய, சாது சக்கரன் றன்னையானூட்டிய" (10 : 27 - 8 ; 11 : 102 -3) எனப் பின்னர் வருதலுங் காண்க. மருதந் துவரில் தோய்க்கப்பட்டு மஞ்சள் நிறமுள்ளதாகலின் "பொன்னிற் றிகழும பொலம்பூ வாடை" எனப் பட்டது. அன்பும் அருளுமுடைய மொழியா லென்க. கடுப்ப-விரைய. தலை-இடம். ஆடையனாய் நோக்கி நிறைத்துக் குளிர்ப்பித்துத் தந்து ஏற்றிக் காட்டிய மறையோனாகிய தலைவன் சங்கதருமன் ஆவானென்க. 70-79. தான் எமக்கு அருளிய -அவன் எமக்கு அறிவுறுத்த, எங்கோன் இயல்குணன் ஏதமில் குணப்பொருள் - எம்முடைய இறைவன் இயல்பாகவே தோன்றிய குணங்களை யுடையவன் குற்றமற்ற குணங்களின் பொருளாயுள்ளோன், உலக நோன்பின் பலகதி உணர்ந்து தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் - உலகசீலத்துடன் பல பிறப்புக்களிலும் பிறந்து பிறந்து உணர்ந்து உயிர்கட்கு நல்லறிவு புகட்டிய தனக்கென்று உயிர் வாழாத பிறர்க்கே உரிமைபூண்டொழுகுபவன், இன்பச்செவ்வி மன்பதை எய்த-நிருவாணமடைதற்குரிய பருவத்தை உயிர்ப்பன்மைகள் அடைய, அருள் அறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின் - அருளாகிய அறத்தினைப்பூண்ட ஒப்பற்ற பெரிய மேற்கோளினாலே, அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டி-அறமாகிய கதிர்களையுடைய ஆழியை உலகத்திற் பலவகையாக உருட்டி, காமற் கடந்த வாமன் பாதம் - மாரனை வென்ற புத்தனது திருவடிகளை, தகை பாராட்டுதல் அல்லது யாவதும் மிகைநா இல்லேன் - பாராட்டித் துதித்தலையன்றி வேறுபொருள்களைப் பற்றிச் சிறிதும் பேசாத நாவினையுடையேன், வேந்தே வாழ்க என-மன்னவ வாழ்வாயாக என்று சுதமதி கூற; உலக நோன்பு-இல்வாழ்க்கையிலிருந்து செய்யும் நோன்பு, ஒழுக்கம்; அதனால் இல்லறத்தார் உலகநோன்பிகள் எனப்படுவர். கதி- பிறப்பு. புத்தன் அருளாலே பலவகைப் பிறப்பும் எடுத்தானெனப் புத்தசாதகக் கதைகள் கூறாநிற்கும்: 1"எறும்புகடை யயன்முதலா வெண்ணிறந்த வென்றுரைக்கப் பிறந்திறந்த யோனிதொறும் பிரியாது சூழ்போகி, எவ்வுடம்பி லெவ்வுயிர்க்கும் யாதொன்றா லிடரெய்தின், அவ்வுடம்பி லுயிர்க்குயிரா யருள்பொழியுந் திருவுள்ளம்" 2"வானாடும் பரியாயு மரிண மாயும் வன்கேழற் களிறாயு மெண்காற் புண்மான், தானாயும் பணையெருமை யொருத்தலாயுந் தடக்கையிளங் களிறாயுஞ் சடங்க மாயும், மீனாயு முயலாயு மன்ன மாயு மயிலாயும் பிறவாயும் வெல்லுஞ் சிங்க, மானாயுங்கொலை களவு கட்பொய் காமம் வரைந்தவர்தா முறைந்தபதி மானா 'd2வூரே" என்பன காண்க. புத்தன் தனக் கென வாழாப் பிறர்க்குரியாளன் என்ற கருத்து "பிறர்க்கற முயலும் பெரியோய்," "தன்னுயிர்க் கிரங்கான் பிறவுயி ரோம்பு ; மன்னுயிர் முதல்வன்" (11 ; 45 ;55; 114-7) என இந்நூலுள்ளே பின்ன ரும் வந்துள்ளன; 3"இருட்பார வினைநீக்கி யெவ்வுயிர்க்குங் காவலென, அருட்பாரந் தனிசுமந்த வன்றுமுத லின்றளவும், மதுவொன்று மலரடிக்கீழ் வந்தடைந்தோர் யாவர்க்கும், பொதுவன்றி நினக் குரித்தோ புண்ணியநின் றிருமேனி," "தீதியல் புலியது பசிகெடு வகைநின திருவுரு வருளிய திருமலி பெருமையை," என்பனவும் காண்க. சிறுகுடிகிழான் பண்ணன் என்பானைச் சிறப்பிக்கு மிடத்து அகப்பாட்டிலே (54) இத்தொடர் முழுதும் வந்துள்ளது; அருளறம்- அருளாகிய அறம் ; அருளே எல்லா அறங்களிலும் மேலாயது என்பது 1"ஒன்றாக நல்லது கொல்லாமை" "அஹிம்ஸா பரமோதர்ம:" என்ப வற்றான் அறியப்படும். கதிர் - திகிரியின் ஆர். அறத்தை ஆழியென்ற தற்கேற்ப ‘உருட்டி' என்றார் ; பலவகை யாலும் அவன் அறவுபதேசஞ் செய்தமையின் ‘திறம்பட' என்றார்; "ஆதி முதல்வ னறவாழி யாள் வோன்" (10 : 31 என்பார் பின்னும்; இதுபற்றியே புத்தனைத் தரும சக்கரப் பிரவர்த்தனாசாரியன் என்பர். காமன் - மாரன்; அறத்திற்கு மாறான விருப்பங்களை மனத்திலுண்டாக்கும் ஒரு தேவன்; மாபோதி விருக்கத்தின் கீழே நோற்றிருக்கையில் இவன் செய்த இடையூறுகளை யெல்லாம் வென்று விளங்கினமையின் "காமற்கடந்த வாமன்" என்றார். வாமன் - அழகுள்ளவன் ; புத்தன். தகைபாரட்டுதல்-துதித்தல்; ஒரு சொல். மிகை நா - மிகைக்கின்ற நா ; 2"காமனை வென்றோ னாயிரத்தெட்டு, நாம மல்லது நவிலா தென்னா" என்பது அறியற் பாலது. 80-83. அஞ்சொல் ஆயிழை நின்திறம் அறிந்தேன்-அழகிய மொழியையுடைய ஆயிழாய் நின் வரலாற்றினை அறிந்தேன், வஞ்சிநுண் இடை மணிமேகலைதனை - கொடிபோலும் நுண்ணிய இடையையுடைய மணிமேகலையை. சித்திராபதியால் சேர்தலும் உண்டென்று-சித்திராபதியால் அடைதலுங்கூடும் என்று கூறி, அப் பொழில் ஆங்கவன் அயர்ந்து போயபின் - உதயகுமரன் அப் பொழிலினின்றும் காமத்தால் தளர்ச்சி யுடையனாய்ச் சென்ற பின்னர்; 84-93. பளிக்கறை திறந்து-மணிமேகலை பளிக்கு மண்டபத்தைத் திறந்து, பனிமதி முகத்துக் களிக்கயல் பிறழாக் காட்சியள் ஆகி- குளிர்மதி போலும் முகத்திலே மதர்த்த கயல்போலுங் கண்கள் பிறழாத காட்சியையுடையளாய், கற்புத்தான் இலள் நற்றவ உணர்விலள் வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று-கற்பில்லாதவள் நல்ல தவவுணர்ச்சியில்லாதவள் மரபிற்கேற்ற காவலற்றவள் பொருள் கொடுப்பார்க்குத் தன்னை விற்கும் விலைமகள் என்று இவ்வாறாக, இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது-பழித்துரைத் தவனாய் விரும்பினோன் என நினையாமல், புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம் - ஏதிலான் பின்னே என்னுடைய உள்ளம் சென்றது; இதுவோ அன்னாய் காமத்து இயற்கை - அன்னையே இங்ஙன முள்ளதோ காமத்தின் இயல்பு, இதுவே ஆயின் கெடுக தன்திறம் என-இவ்வாறாயின் இதன்வலி கெடுவதாக என்று, மதுமலர்க் குழலாள் மணிமேகலை தான் சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள்-தேனவிழும் மலர்களை யணிந்த கூந்தலையுடைய அவள் சுதமதியோடும் கூறிநின்ற பொழுதில்; சுதமதியை நோக்கிய பார்வை விலகாது நின்றாளென்பர் ‘களிக் கயல் பிறழாக் காட்சியளாகி' என்றார். வருணக் காப்பு - வருண மாகிய காவல் என்றுமாம். மணிமேகலை திறத்து காட்சியளாகிக் கெடுக தன்றிறமென நின்ற வெல்லையுள் என்க. 94-97. இந்திர கோடணை விழாஅணி விரும்பி வந்துகாண்குறூஉம் மணிமேகலாதெய்வம் - இந்திரகோடணையாகிய விழாவின் எழிலைக் காணுதற்கு விரும்பி வந்த மணிமேகலா தெய்வம், பதியகத்து உறையும் ஓர் பைந்தொடியாகி - அப்பதியின் கணிருக்கிற ஒரு பெண் வடிவத்துடன், மணியறைப் பீடிகை வலங்கொண்டு ஓங்கி - பளிக்கறையிலுள்ள பீடிகையை வலம்வந்து விசும்பில் உயர்ந்து; கோடணை - முழக்கம்; பலவகை ஆரவாரங்களை யுடைமையின், இந்திர விழா-இந்திர கோடணை யெனப்பட்டது. "இந்திர கோடணை யிந்நகர்க் காண," "இந்திர கோடணை விழவணி வருநாள்" (7. 17, 17; 59) எனப் பின் வருதல் காண்க. மணி-பளிங்கு, 98-108. புலவன்-மெய்யறி வுடையோனே, தீர்த்தன்-தூயோனே, புண்ணியன் - அறவோனே, புராணன் - பழையோனே, உலக நோன்பின் உயர்ந்தோய்-உலக நோன்பினால் மேம் பட்டவனே, என்கோ - என்பேனோ, குற்றம் கெடுத்தோய் - முக்குற்றங்களையும் அழித்தோய், செற்றம் செறுத்தோய் - கடுஞ்சினத்தைக் கடிந்தோய், முற்ற உணர்ந்த முதல்வா-முழுதும் உணர்ந்த முதன்மை யுடையோய், என்கோ-என்பேனோ, காமற் கடந்தோய் - மாரனை வென்றோய், ஏமம் ஆயோய்-இன்ப மயமாய் உள்ளோய், தீ நெறிக் கடும்பகை கடிந்தோய்-தீய நெறியாகிய கடிய பகையை நீக்கினோய், என்கோ-என்பேனோ, ஆயிரஆரத்து ஆழியன் திருந்தடி- ஆயிரம் ஆரங்களைக் கொண்ட அறவாழியினையுடைய நின்செவ்விய திருவடிகளை, நாஆயிரம் இலேன் ஏத்துவது எவன் என்று - ஆயிரம் நாவில்லா யான் எவ்வாறு துதிக்க வியலும் என்று, எரி மணிப் பூங்கொடி இருநில மருங்குவந்து-சுடர் விடுகின்ற மாணிக்கப் பூங்கொடியானது பெரிய பூமியின் பக்கலில் வந்து, ஒரு தனி திரிவது ஒத்து-தன்னந் தனியே திரிவதுபோல, ஓதியின் ஒதுங்கி- மெய்ஞ்ஞானத் துடன் ஒதுங்கி, நிலவரை இறந்து ஓர் முடங்குநா நீட்டும்-நிலவெல்லையைக் கடந்து தனது வளைந்த நாவை நீட்டு கின்றாள்; குற்றம்-காம வெகுளி மயக்கங்கள். ஏமம் - பாதுகாவலுமாம். ‘ஆழியந் திருந்தடி' என்ற பாடத்திற்கு ஆயிரம் ஆரங்களையுடைய சக்கர ரேகை பொருந்திய திருந்திய அடி என்றுரைக்க. நாவாயிர மிலேன் ஏத்துவ தெவன் என்றது என் ஒரு நாவில் அடங்குவ தன்று என்றபடி. ஓதி - முக்கால உணர்வு. நிலவரை இறந்து - புவியின் மேலே உயர்ந்து. ஓர்: அசை. நாநீட்டும் - சொல்லும். 109-118. புல வரை இறந்த புகார் எனும் பூங்கொடி - அறிவின் எல்லையைக் கடந்த புகார் என்னும பூங்கொடி, பன்மலர் சிறந்த நல்நீர் அகழிப் புள் ஒலி சிறந்த தெள் அரிச் சிலம்பு அடி - பல மலர்களும் சிறந்து விளங்குகின்ற நல்ல நீரினையுடைய புட்களின் ஒலி மிக்க அகழியாகிய சிறந்த தெள்ளிய அரியினையுடைய சிலம் பணிந்த அடியையும், ஞாயில் இஞ்சி நகை மணிமேகலை - ஞாயிலையுடைய மதிலாகிய ஒள்ளிய மணிகளாலாய மேகலையையும், வாயில் மருங்கு இயன்ற வான் பணைத்தோளி - வாயிலின் பக்கலில் அமைந்த பெரிய தோரண கம்பமாகிய தோளையும் உடையாள், தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் எதிர் எதிர் ஓங்கியகதிர் இளவனமுலை-எதிரெதிர் உயர்ந்த கற்பகத் தரு நிற்கும் கோயில் வச்சிரப்படை நிற்கும் கோயில் என்னுமிரண்டு மாகிய ஒளி பொருந்திய இளைய அழகிய கொங்கை களையும், ஆர் புனை வேந்தற்குப் பேரளவு இயற்றி - ஆத்திமாலை சூடும் சோழனுக்குப் பெரிய அளவினதாக இயற்றப்பட்டு; ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய - எண்ணப்படும் பல ஊழிக்காலமாக நிலைபெற்றுயர்ந்த, ஒரு பெரும் கோயில் திருமுக வாட்டி-ஒப்பற்ற கோயிலாகிய திருமுகத்தினையும் உடையாள்: புல வரை - அறிவின் எல்லை; 1"புலவரை யிறந்த புகழ்சால் தோன்றல்" 2"புலவரை யிறந்தோய் போகுதல் பொறேஎன்" என் பன காண்க. மலர் சிலம்பும், புள்ளொளி சிலம்பொலியும், அகழி அடி யுமாம். ஞாயில் - மதிலின் ஓருறுப்பு; ஏப்புழைக்கு நடுவாய் எய்துமறையுஞ் சூட்டென்பர் நச்சினார்க்கினியர்; குருவித் தலையென்பர் அடியார்க்கு நல்லார். பணை - மூங்கில்; ஈண்டுத் தோரண கம்பம். எதிரெதிரோங்கிய இருகோட்டமென்க. வச்சிரலை என விரித்துக் கொள்க. வேந்தற்கேற்பப் பெரிய அளவினதாக இயற்றப்பட்ட கோயில்; 1"பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனை வகுத்து" என்பதுங் காண்க-சிலம்பு, மேகலை என்பவற்றிற்கேற்ப அடைகள் புணர்த்தி யுள்ளார். 119-122. குணதிசை மருங்கில் நாள் முதிர் மதியமும்-கீழ்த்திசையில் நான் நிரம்பிய முழு மதியமும், குடதிசை மருங்கில் சென்று வீழ் கதிரும்-மேற்றிசையில் சென்று படிகின்ற ஞாயிறும், வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடாக-வெள்ளியாலாகிய வெண் தோட்டுடன் பொன்னாலாய தோடுமாக, எள்ளறு திருமுகம் பொலியப் பெய்தலும்-இகழ்தலற்ற அழகிய முகம் பொலியுமாறு அணிதலும்; நாள்-கலை. நிறையுவா நாளில் மதி கீழ்த்திசைக்கண் உதித்தும், பரிதி மேற்றிசையிற் படிந்தும் கோயிலின் இரு மருங்கும் ஒருங்கு தோன்றுதலின், அவற்றைப் புகார்ச் செல்வி கோயிலாகிய முகத்தின் இரு மருங்கும் தோடாக அணிந்தனள்; என்றாள்; எனவே அந்திப் பொழுது வந்தமை பெற்றாம்; இது பரியாயவணி. திருமுகவாட்டி பெய்தலும் என்க. 123-141. அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய தன்னுறு பெடையைத் தாமரை அடக்க - அன்னச் சேவலானது மெய்ம்மறந்து விளையாடிய தனது பேடையைத் தாமரை மலர் குவிந்து தன்னுள் அடக்கிக் கொள்ள பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடை கொண்டு ஓங்கு இருந் தெங்கின் உயர் மடல் ஏற-பூலினது கட்டு அழியுமாறு கிழித்துப் பேட்டினைக் கொண்டு உயர்ந்த பெரிய தென்னையினது வளர்ந்த மடலிற் சேரவும், அன்றில் பேடைஅரிக் குரல் அழைஇச் சென்று வீழ்பொழுது சேவற்கு இசைப்ப-அன்றிலின் பேடு மெல்லிய குரலால் சேவலை அழைத்து ஞாயிறுசென்று மறையும் அந்திப் பொழுதை உரைக்கவும், பவளச் செங்கால் பறவைக் கானத்துக் குவளை மேய்ந்த குடக்கட் சேதா-பவளம்போற் சிவந்த கால்களையுடைய அன்னப்புட்கள் நிறைந்த கானத்தில் குவளை மலரை மேய்ந்த திரண்ட கண்களையுடைய செவ்விய பசுக்கள், முலைபொழி தீம்பால் எழு துகள் அவிப்ப - மடியிலிருந்து பொழிகின்ற இனிய பால் நிலத்தினின்றும் எழுகின்ற புழுதியை அவிப்ப, கன்று நினை குரல மன்று வழிப் படா-கன்றுகளை நினைந்த குரலை யுடையனவாய் மன்றுகளின் வழியே செல்லவும், அந்தி அந்தணர் செந்தீப் பேண - அந்தணர்கள் அந்திச் செந் தீயை வளர்க்கவும், பைந்தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப - பசிய வளையலணிந்த மகளிர் பலர் விளக்குகளை ஏற்றவும், யாழோர் மருதத்து இன்னரம் புளர - யாழினையுடைய பாணர் யாழின் நரம்பினை வருடி இனிய மருதப் பண்ணை யெழுப்பவும், கோவலர் முல்லை குழல் மேற்கொள்ள - கோவலர் முல்லைப் பண்ணை வேய்ங் குழலினிடமாக இசைப்பவும், அமரக மருங்கில் கணவனை இழந்து-போர்க்களத்தில் கணவனை இழந்து, தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல-தம்மவரிடம் செல்லும் ஒரு மங்கையைப்போல, கதிர் ஆற்றுப்படுத்த முதிராத் துன்பமோடு - ஞாயிற்றினைப் போக்கிய முடிவில்லாத துன்பத்துடன், அந்தி என்னும் பசலை மெய்யாட்டி - அந்திப் பொழுது என்கின்ற பசலை போர்த்த மேனியை யுடையாள், வந்து இறுத்தனளால் மாநகர் மருங்கு என் - பெரிய நகரத்தின் மருங்கே வந்து தங்கினள் என்க. அயர்ந்து - விரும்பி என்றுமாம். அடக்க - அடக்கலால். இரவிற் சிறிதும் பிரிந்திருத்தலருமையின் ‘சேவற் கிசைப்ப' என்றார். கானம் - ஈண்டு நீர்நிலை. சேதா - செவ்விப் பசு ; செந்நிறமுடைய பசுவுமாம். கன்றினை நினைந்தமையாற் பால் பொழிவனவாயின. மன்று-ஆனினங்களை அடைத்து வைக்கும் வேலி நடுவணதாய வெளியிடம்; கொட்டிலுமாம். பகலில் மேயச்சென்ற ஆனினங்கள் மாலைப்பொழுதில் கன்றை நினைந்து அழைக்குங் குரலோடு போந்து மன்றிலே புகுதல் இயல்பு; 1''ஆன்கணம், கன்று பயிர்குரல மன்றுநிறை புகுதர,'' 2"மதவு நடை நல்லான், வீங்குமாண் செருத்த றீம்பால் பிலிற்றக், கன்று பயிர் குரல மன்றுநிறை புகுதரு, மாலையும்'' என்பனவுங் காண்க. எடுத்தல் - கொளுத்தல், 'யாழோர்...புளர' - ஈண்டு மருதத்திற்குரிய இயைபு புலப்பட்டிலது; இவ்வடி இடைப்புகுத்துப் போலும். 'முல்லைக் குழல்' என்ற பாடத்திற்கு முல்லையைக் குழலுக்கு அடையாக்குக ; என்னை? 3"முல்லைக் கொடியால் முப்புரியாகத் தெற்றிய வளையை வளைவாய்க் கட்செறித்தூதலின் முல்லைக் குழலாயிற்று" என அடியார்க்கு நல்லார் உரைத்தலின் என்க. தமர்-தந்தை, தமையன் முதலியோர். முதிர்தல் ஈண்டு முடிதல்; மேல் முதிர்தற்கு இடனில்லாத என்றுமாம். கணவனைப் பிரிந்தாட்கு மெய் பசக்குமாகலின் ‘பசலை மெய்யாட்டி' என்றார்; ஈண்டுப் பசலையாவது அந்திப் பொழுதின் புற்கென்ற நிறம். திருமுக வாட்டி தோடாகப் பெய்தலும் பசலை மெய்யாட்டி மாநகர் மருங்கு வந்திறுத்தனள் என்க. பூங்கொடி உருவம் பெயர்ப்ப, சூழ்வோன் சுதமதி முக நோக்கி உரையென, உரைப்ப, அகல்வோன் எய்தியது உரையென, அவள் சங்கதருமன் அருளிய வாமன் பாதத்தைப் பாராட்டு தலல்லது மிகைநா இல்லேன் என, அவன் போயபின், மணிமேகலை சுதமதியோடு நின்ற வெல்லையுள், மணிமேகலா தெய்வம் பைந் தொடியாகிப் பீடிகையை வலங்கொண்டு ஓங்கி ஒதுங்கி நாநீட்டும் ; நீட்டுழி, திருமுகவாட்டி பெய்தலும், பசலை மெய்யாட்டி முதிராத் துன்பமொடு மாநகர் மருங்கு வந்திறுத்தனள் என்று முடிக்க. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை முற்றிற்று. 6. சக்கரவாளக்கோட்ட முரைத்த காதை அந்திமாலை வந்து நீங்கியது. திங்கள்மண்டிலம் வெள்ளிக் குடத்தினின்று பால் சொரிவதுபோல் தண்கதிரை எங்கணும் பொழிந்தது; மணிமேகலா தெய்வம் மீட்டும் புத்த தேவனது பாதபீடிகையை ஏத்தி, அங்கு நின்ற சுதமதியை நோக்கி, 'நீங்கள் இங்கே நிற்றற்குக் காரணம் யாது? என்ன துன்பமுற்றீர்கள்?' என வினவ, அவள் உதயகுமரன் வந்து கூறிச் சென்றதைச் சொல்லினள். சொல்லலும், அத்தெய்வம் அவளை நோக்கி, "உதயகுமரனுக்கு மணிமேகலைபாலுள்ள வேட்கை சிறிதும் தணிந்திலது; அறவோர் வனமென்று இதினின்று அவன் அகன்றனனாயினும், இதனைக் கடந்து செல்லின் புறத்துள்ள வீதியில் இவளை அகப்படுத்துவன்; நீங்கள் இவ்வனத்தைச் சூழ்ந்த மதிலின் மேற்றிசைக்கண்ணதாகிய சிறிய வாயில் வழியே சென்று மாதவர் உறையும் சக்கரவாளக் கோட்டத்தை அடையின் யாதொரு துன்பமும் அணுகாது: ஆகலின் அங்கே சென்மின்." என்றுரைத்தது. உரைத்தலும், சுதமதி, 'யாவரும் அதனைச் சுடுகாட்டுக் கோட்ட மென்று கூறாநிற்பர்; மாருத வேகனும் நீயுமே சக்கரவாளக் கோட்ட மென்று கூறுவீர்; அதற்குக் காரணம் யாது? சொல்லுக.' என்றாள். என்றலும் அத் தெய்வம், காவிரிப்பூம் பட்டினம் தோன்றிய காலத்து உடன்றோன்றியதான அப்புறங்காட்டின் இயல்பனைத்தையும் விளங்கக் கூறி, "தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர், ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர், முதியோர் என்னான் இளையோர் என்னான், கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இவ் அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும், கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டயர்ந்து, மிக்க நல்லறம் விரும்பாது வாழும், மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ?" என அறஞ் செய்யாதார் பொருட்டு இரங்கி, "அத்தன்மையதான சுடுகாட்டில் தனியே சென்று பேய்கோட்பட்டு இறந்த சார்ங்கல னென்னும் பார்ப்பனச் சிறுவன் தாயாகிய கோதமையின் முறையீட்டைக் கேட்டுவந்த சம்பாபதி யென்னும் தெய்வம், "அணங்கும் பேயும் ஆருயிர் கவரா ; நின் மகனது அறியாமையே பற்றுக்கோடாக இழவூழ் அவனுயிரைக் கவர்ந்துசென்றது; நின் உயிரை வாங்கிக்கொண்டு அவனுயிரை அளித்தல் இயல்பன்று ! உயிர் உடம்பினின்று நீங்கின் அது வினைவழியே சென்று வேறு பிறப்படைவதில் ஐயமில்லை; ‘உலக மன்னவர்க்கு உயிர்க்குயிர் ஈவோர் இலரோ, இந்த ஈமப் புறங்காட்டு, அரசர்க் கமைந்தன ஆயிரங்கோட்டம்' அல்லவோ ? இச் சக்கரவாளத் துள்ள தேவர்களில் யாரேனும் நீ கேட்ட வரம் கொடுப்பாருளராயின் யானும் அதனைத் தருதற் குரியேனாவேன்," என்றுரைத்து, பிரம கணங்கள் முதலாகச் சக்கரவாளத்திலுள்ள வரங்கொடுக்கும் ஆற்றலுடைய தேவர்களை யெல்லாம்வருவித்துக் கோதமைக்கு முன்னிறுத்தி, இவளுற்ற துன்பம் இது ; இவளது வருத்தத்தைப் போக்குவீராக, என்று நிகழ்ந்தவற்றைச் சொல்ல, அத்தேவரனைவரும் சம்பாபதிகூறிய வாறே கூறினர்; அதனைக் கேட்டு உண்மை யறிந்து ஒருவாறு வருத்த மொழிந்த கோதமை மகனைப் புறங்காட்டிலிட்டு இறந்து போயினள். பின்பு சம்பாபதியின் ஆற்றலை யாவர்க்கும் புலப்படுத்தல் வேண்டி, எல்லாத் தேவர்களும் கூடியவிடத்து அவர்கள் கூடியதற்கு அறிகுறியாக, உலகின் நடுவேயுள்ள மேருமலையும், அதனைச் சூழ்ந்த எழுவகைக் குன்றங்களும் நான்கு பெருந்தீவுகளும், இரண்டாயிரம் சிறு தீவுகளும், ஏனைய இட வகைகளும் ஆகிய இவற்றைப் புலப்படுத்தி, ஆங்காங்கு வாழும் உயிர்களையும் மண்ணீட்டினால் வகுத்து மயனால் நிருமிக்கப்பட்ட தாகலின் சக்கரவாளக் கோட்டமெனப் பெயர்பெற்றது; இது சுடுகாட்டைச் சூழ்ந்த மதிற் புறத்துள்ளதாகலின் ‘சுடுகாட்டுக்கோட்ட'மென்று யாவரானும் கூறப்படும்; இதன் வரலாறு இதுவாகும்" என்றுரைக்கக் கேட்டுக்கொண்டிருந்த மணிமேகலை ‘மக்கள் வாழ்க்கை இத்தகையது,' என இரங்கிக்கூறி யிருக்கையில், சுதமதி தூங்குதலுற்றனள். அப்பொழுது மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தழுவி யெடுத்து, ஆகாயவழியே முப்பது யோசனை தெற்கே சென்று, கடல்சூழ்ந்த மணி பல்லவம் என்னும் தீவில் அவளை வைத்தகன்றது. (இதில் புகார் நகரின் புறங் காட்டினியல்புகளும், அக்காலத்தில் இறந்தோரை அடக்கஞ் செய்யுமுறைகளும் கூறியிருப்பன சிறப்பாக அறியத் தக்கவை. அந்தி மாலை நீங்கிய பின்னர் வந்து தோன்றிய மலர்கதிர் மண்டிலம் சான்றோர் தங்கண் எய்திய குற்றம் தோன்றுவழி விளங்குந் தோற்றம் போல 5 மாசறு விசும்பின் மறுநிறங் கிளர ஆசற விளங்கிய வந்தீந் தண்கதிர் வெள்ளிவெண் குடத்துப் பால்சொரி வதுபோல் கள்ளவிழ் பூம்பொழில் இடையிடை சொரிய உருவு கொண்ட மின்னே போலத் 10 திருவி லிட்டுத் திகழ்தரு மேனியள் ஆதி முதல்வன் அறவாழி யாள்வோன் பாத பீடிகை பணிந்தன ளேத்திப் பதியகத் துறையுமோர் பைந்தொடி யாகிச் சுதமதி நல்லாள் தன்முகம் நோக்கி 15 ஈங்கு நின்றீர் என்னுற் றீரென ஆங்கவ ளாங்கவன் கூறிய துரைத்தலும் அரசிளங் குமரன் ஆயிழை தன்மேல் தணியா நோக்கந் தவிர்ந்தில னாகி அறத்தோர் வனமென் றகன்றன னாயினும் 20 புறத்தோர் வீதியிற் பொருந்துத லொழியான் பெருந்தெரு வொழித்திப் பெருவனஞ் சூழ்ந்த திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி மிக்க மாதவர் விரும்பின ருறையும் சக்கர வாளக் கோட்டம் புக்கால் 25 கங்குல் கழியினுங் கடுநவை யெய்தாது அங்குநீர் போமென் றருந்தெய்வ முரைப்ப வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும் அஞ்செஞ் சாயல் நீயு மல்லது நெடுநகர் மருங்கின் உள்ளோ ரெல்லாஞ் 30 சுடுகாட்டுக் கோட்ட மென்றல துரையார் சக்கர வாளக் கோட்ட மஃதென மிக்கோய் கூறிய உரைப்பொரு ளறியேன் ஈங்கிதன் காரண மென்னை யோவென ஆங்கதன் காரணம் அறியக் கூறுவன் 35 மாதவி மகளொடு வல்லிருள் வரினும் நீகே ளென்றே நேரிழை கூறுமிந் நாமப் பேரூர் தன்னொடு தோன்றிய ஈமப் புறங்கா டீங்கித னயலது ஊரா நற்றேர் ஓவியப் படுத்துத் 40 தேவர் புகுதரூஉஞ் செழுங்கொடி வாயிலும் நெல்லுங் கரும்பு நீருஞ் சோலையும் நல்வழி யெழுதிய நலங்கிளர் வாயிலும் வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத் துள்ளுரு வெழுதா வெள்ளிடை வாயிலும் 45 மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும் நாற்பெரு வாயிலும் பாற்பட் டோங்கிய காப்புடை யிஞ்சிக் கடிவழங் காரிடை 50 உலையா உள்ளமோ டுயிர்க்கடன் இறுத்தோர் தலைதூங்கு நெடுமரந் தாழ்ந்துபுறஞ் சுற்றிப் பீடிகை யோங்கிய பெரும்பலி முன்றில் காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும் அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும் 55 ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும் நால்வேறு வருணப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த குறியவு நெடியவுங் குன்றுகண் டன்ன சுடும ணோங்கிய நெடுநிலைக் கோட்டமும் 60 அருந்திறற் கடவுட் டிருந்துபலிக் கந்தமும் நிறைக்கற் றெற்றியும் மிறைக்களச் சந்தியும் தண்டு மண்டையும் பிடித்துக் காவலர் உண்டுகண் படுக்கும் உறையுட் குடிகையும் தூமக் கொடியுஞ் சுடர்த்தோ ரணங்களும் 65 ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர் தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர் இரவும் பகலும் இளிவுடன் றரியாது வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் 70 எஞ்சியோர் மருங்கின் ஈமஞ் சாற்றி நெஞ்சு நடுக்குறூஉம் நெய்த லோசையும் துறவோ ரிறந்த தொழுவிளிப் பூசலும் பிறவோ ரிறந்த அழுவிளிப் பூசலும் நீண்முக நரியின் தீவிளிக் கூவும் 75 சாவோர்ப் பயிருங் கூகையின் குரலும் புல'd2வூண் பொருந்திய குராலின் குரலும் ஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும் நன்னீர்ப் புணரி நளிகட லோதையின் இன்னா இசையொலி என்றுநின் றறாது 80 தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலு மோங்கிக் கான்றையுஞ் சூரையுங் கள்ளியு மடர்ந்து காய்பசிக் கடும்பேய் கணங்கொண் டீண்டும் மாலமர் பெருஞ்சினை வாகை மன்றமும் வெண்ணிணந் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து 85 புள்ளிறை கூறும் வெள்ளின் மன்றமும் சுடலை நோன்பிகள் ஒடியா வுள்ளமொடு மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும் விரத யாக்கைய ருடைதலை தொகுத்தாங் கிருந்தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும் 90 பிணந்தின் மாக்கள் நிணம்படு குழிசியில் விருந்தாட் டயரும் வெள்ளிடை மன்றமும் அழற்பெய் குழிசியும் புழற்பெய் மண்டையும் வெள்ளிற் பாடையும் உள்ளீட் டறுவையும் பரிந்த மாலையும் உடைந்த கும்பமும் 95 நெல்லும் பொரியுஞ் சில்பலி யரிசியும் யாங்கணும் பரந்த ஓங்கிரும் பறந்தலை தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர் ஈற்றிளம் பெண்டி ராற்றாப் பாலகர் முதியோ ரென்னான் இளையோ ரென்னான் 100 கொடுந் தொழி லாளன் கொன்றனன் குவிப்பவிவ் அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயர்ந்து மிக்க நல்லறம் விரும்பாது வாழும் மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ 105 ஆங்கது தன்னையோ ரருங்கடி நகரெனச் சார்ங்கல னென்போன் தனிவழிச் சென்றோன் என்புந் தடியு முதிரமு மியாக்கையென் றன்புறு மாக்கட் கறியச் சாற்றி வழுவொடு கிடந்த புழுவூன் பிண்டத்து 110 அலத்தகம் ஊட்டிய அடிநரி வாய்க்கொண் டுலப்பி லின்பமோ டுளைக்கு மோதையும் கலைப்புற அல்குல் கழுகுகுடைந் துண்டு நிலைத்தலை நெடுவிளி யெடுக்கு மோதையும் கடகஞ் செறிந்த கையைத் தீநாய் 115 உடையக் கவ்வி யொடுங்கா வோதையும் சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை காய்ந்தபசி யெருவை கவர்ந்தூ ணோதையும் பண்புகொள் யாக்கையின் வெண்பலி யரங்கத்து மண்கணை முழவ மாக ஆங்கோர் 120 கருந்தலை வாங்கிக் கையகத் தேந்தி இரும்பே ருவகையின் எழுந்தோர் பேய்மகள் புயலோ குழலோ கயலோ கண்ணோ குமிழோ மூக்கோ இதழோ கவிரோ பல்லோ முத்தோ வென்னா திரங்காது 125 கண்டொட் டுண்டு கவையடி பெயர்த்துத் தண்டாக் களிப்பி னாடுங் கூத்துக் கண்டனன் வெரீஇக் கடுநவை யெய்தி விண்டோர் திசையின் விளித்தனன் பெயர்ந்தீங் கெம்மனை காணாய் ஈமச் சுடலையின் 130 வெம்முது பேய்க்கென் உயிர்கொடுத் தேனெனத் தம்மனை தன்முன் வீழ்ந்துமெய் வைத்தலும் பார்ப்பான் றன்னொடு கண்ணிழந் திருந்தவித் தீத்தொழி லாட்டியென் சிறுவன் றன்னை யாருமில் தமியே னென்பது நோக்காது 135 ஆருயி ருண்ட தணங்கோ பேயோ துறையு மன்றமுந் தொல்வலி மானும் உறையுளுங் கோட்டமுங் காப்பாய் காவாய் தகவிலை கொல்லோ சம்பா பதியென மகன்மெய் யாக்கையை மார்புறத் தழீஇ 140 ஈமப் புறங்காட் டெயிற்புற வாயிலில் கோதமை யென்பாள் கொடுந்துயர் சாற்றக் கடிவழங்கு வாயிலிற் கடுந்துய ரெய்தி இடையிருள் யாமத் தென்னையீங் கழைத்தனை என்னுற் றனையோ எனக்குரை யென்றே 145 பொன்னிற் பொலிந்த நிறத்தாள் தோன்ற ஆருமி லாட்டியென் அறியாப் பாலகன் ஈமப் புறங்காட் டெய்தினோன் றன்னை அணங்கோ பேயோ ஆருயி ருண்டது உறங்குவான் போலக் கிடந்தனன் காணென 150 அணங்கும் பேயும் ஆருயி ருண்ணா பிணங்குநூன் மார்பன் பேதுகந் தாக ஊழ்வினை வந்திவன் உயிருண்டு கழிந்தது மாபெருந் துன்பநீ ஒழிவா யென்றலும் என்னுயிர் கொண்டிவன் உயிர்தந் தருளினென் 155 கண்ணில் கணவனை இவன்காத் தோம்பிடும் இவனுயிர் தந்தென் உயிர்வாங் கென்றலும் முதுமூ தாட்டி இரங்கினள் மொழிவோள் ஐய முண்டோ ஆருயிர் போனால் செய்வினை மருங்கிற் சென்றுபிறப் பெய்துதல் 160 ஆங்கது கொணர்ந்துநின் ஆரிடர் நீக்குதல் ஈங்கெனக் காவதொன் றன்றுநீ யிரங்கல் கொலையற மாமெனுங் கொடுந்தொழின் மாக்கள் அவலப் படிற்றுரை யாங்கது மடவாய் உலக மன்னவர்க் குயிர்க்குயி ரீவோர் 165 இலரோ இந்த ஈமப் புறங்காட் டரசர்க் கமைந்தன ஆயிரங் கோட்டம் நிரயக் கொடுமொழி நீயொழி யென்றலும் தேவர் தருவர் வரமென் றொருமுறை நான்மறை யந்தணர் நன்னூ லுரைக்கும் 170 மாபெருந் தெய்வ நீயரு ளாவிடின் யானோ காவேன் என்னுயி ரீங்கென ஊழி முதல்வன் உயிர்தரி னல்லது ஆழித் தாழி யகவரைத் திரிவோர் தாந்தரின் யானுந் தருகுவன் மடவாய் 175 ஈங்கெ னாற்றலுங் காண்பா யென்றே நால்வகை மரபி னரூபப் பிரமரும் நானால் வகையி னுரூபப் பிரமரும் இருவகைச் சுடரும் இருமூ வகையிற் பெருவனப் பெய்திய தெய்வத கணங்களும் 180 பல்வகை யசுரரும் படுதுய ருறூஉம் எண்வகை நரகரும் இருவிசும் பியங்கும் பன்மீ னீட்டமும் நாளுங் கோளும் தன்னகத் தடக்கிய சக்கர வாளத்து வரந்தரற் குரியோர் தமைமுன் நிறுத்தி 185 அரந்தை கெடுமிவ ளருந்துய ரிதுவெனச் சம்பா பதிதான் உரைத்தஅம் முறையே எங்குவாழ் தேவரும் உரைப்பக் கேட்டே கோதமை யுற்ற கொடுந்துயர் நீங்கி ஈமச் சுடலையின் மகனையிட் டிறந்தபின் 190 சம்பா பதிதன் ஆற்றல் தோன்ற எங்குவாழ் தேவருங் கூடிய இடந்தனில் சூழ்கடல் வளைஇய ஆழியங் குன்றத்து நடுவு நின்ற மேருக் குன்றமும் புடையி னின்ற எழுவகைக் குன்றமும் 195 நால்வகை மரபின் மாபெருந் தீவும் ஓரீ ராயிரஞ் சிற்றுடைத் தீவும் பிறவும் ஆங்கதன் இடவகை யுரியன பெறுமுறை மரபின் அறிவுவரக் காட்டி ஆங்குவா ழுயிர்களும் அவ்வுயி ரிடங்களும் 200 பாங்குற மண்ணீட்டிற் பண்புற வகுத்து மிக்க மயனால் இழைக்கப் பட்ட சக்கர வாளக் கோட்டமீங் கிதுகாண் இடுபிணக் கோட்டத் தெயிற்புற மாதலின் சுடுகாட்டுக் கோட்ட மென்றல துரையார் 205 இதன்வர விதுவென் றிருந்தெய்வ முரைக்க மதனின் நெஞ்சமொடு வான்றுய ரெய்திப் பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோ ளுரைப்ப இறந்திருள் கூர்ந்த இடையிருள் யாமத்துத் தூங்குதுயி லெய்திய சுதமதி யொழியப் 210 பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ அந்தரம் ஆறா ஆறைந் தியோசனைத் தென்றிசை மருங்கிற் சென்றுதிரை யுடுத்த மணிபல் லவத்திடை மணிமே கலாதெய்வம் அணியிழை தன்னைவைத் தகன்றது தானென். உரை 1-8. அந்திமாலை நீங்கிய பின்னர் - அந்திப்பொழுதாகிய மாலைக் காலம் கழிந்த பின்னர், வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்- வந்து உதித்த பரந்த கிரணங்களையுடைய திங்கள் மண்டிலம், சான்றோர் தங்கண் எய்திய குற்றம் - உயர்குடித் தோன்றிய மேன்மக்கள்பாலடைந்த குற்றமானது, தோன்றுவழி விளங்கும் தோற்றம்போல - தோன்றுமிடத்து விளங்குமியல் பினைப்போல, மாசு அறு விசும்பில் மறு நிறம் கிளர - விசும்பின்கண் மாசற்ற நிறத்தினிடம் களங்கம் விளங்க, ஆசு அற விளங்கிய அம்தீம் தண் கதிர் - குற்றமற்று விளங்குகின்ற அழகிய தீவிய குளிர்ந்த கதிரினை, வெள்ளி வெண்குடத்துப் பால் சொரிவதுபோல் - வெள்ளிக் குடத் தினின்று பாலைச் சொரிவதுபோல, கள்அவிழ் பூம்பொழில் இடையிடை சொரிய - தேன் அவிழுகின்ற மலர்ச் சோலையில் இடையிடையே பொழிய; அந்திமாலை-அந்தியாகிய மாலை. தோன்றுவழி விளங்கும் என்றது சான்றோர்பால் குற்றம் உண்டாய அப்பொழுதே அது யாவரும் அறிய வெளிப்படும் என்றவாறாம்; அவர் வெளிப்படு மிடத்து அதுவும் வெளிப்படும் என்றுமாம்: திங்கள் தூய்மை உடையதாகலானும் அதன்கண் களங்கம் அதற்கு மாறாக இருத்தலானும் அது விளங்கித் தோன்றிற்று. 1"குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின், மதிக்கண் மறுப்போ லுயர்ந்து" என்பதனாற் சான்றோரிடைக் குற்றம் யாவருமறிய நிற்றல் காண்க. ஈண்டுப் பொருள் உவமமாக்கப் பட்டது; என்னை? 2பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும், மருளறு சிறப்பினஃ துவம மாகும்" என்பவாகலான். சான்றோர் குற்றம் விளங்குந் தோற்றம்போலக் கதிர் மண்டிலம் மறுநிறங் கிளரத் தண் கதிரைப் பால் சொரிவதுபோல் இடையிடைச் சொரிய வென்க. திங்களுக்கு வெள்ளிக்குடமும் தண்கதிர்க்குப் பாலும் உவமை. 9-15. உருவு கொண்ட மின்னே போல-பெண்ணுருவங்கொண்ட மின்னலைப் போலவும், திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் - இந்திர வில்லைப்போலவும் ஒளிவிட்டு விளங்குகின்ற திருமேனியை யுடைய அத்தெய்வம், ஆதிமுதல்வன் அறவாழி ஆள்வோன் பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி - அறவாழியினை உருட்டுகின்ற ஆதி முதல்வனது பாதபீடிகையை வணங்கித் துதித்து, பதியகத்து உறையும் ஓர் பைந்தொடியாகி-அப் பதியிலுறைகின்ற ஒரு பெண் வடிவுகொண்டு, சுதமதி நல்லாள் தன்முகம் நோக்கி - சுதமதியின் முகத்தை நோக்கி, ஈங்கு நின்றீர்என் உற்றீர் என-ஈண்டு நிற்கின்றவர்களே நீவிர் அடைந்த துன்பம் யாது? என வினவ; உருவு கொண்ட மின்:இல்பொருளுவமை. மின்போலவும் திருவில் போலவும் என்க. திருவில் - வானவில். 3திருவி லிட்டுத் திகழ்தரு மேனியன்" என வருதல் காண்க. கடவுளர் இன்ன காலத்து இவ்வாறு தோன்றுவர் என்பது புலப்படாமையான், அங்ஙனம் தோன்றும் வானவில் அவர்க்கு உவமையாயிற்று. திருவில் - அழகிய ஒளியென்றுமாம். ஆதி முதல்வன் - புத்தன். அறவாழி - அறமாகிய திகிரி. பாதபீடிகை- புத்ததேவன் திருவடி யமைந்த பீடம்; உவவனத்திற் பளிக்கறையில் உள்ளது. பணிந்தனள்: முற்றெச்சம். முன்னரும் 1"பதியகத் துறையுமோர் பைந்தொடி யாகி" என வந்தமை காண்க. நின்றீர் : வினைப்பெயர்; அது மணிமேகலையையும் உளப்படுத்திற்று. 16. ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்-அக்காலைச் சுதமதி அவ் வுதயகுமரன் மொழிந்ததனைக் கூறிய வளவில்; அவன் கூறியது - சித்திராபதியாற் சேர்தலு முண்டு என்பது. 17-26. அரசிளங் குமரன் ஆயிழை தன்மேல் தணியாவுள்ளம் தவிர்ந்திலன் ஆகி - மன்னவன் புதல்வன் மணிமேகலையிடத்துக் கொண்ட ஆசை நீங்காத உள்ளத்தினைத் தவிர்ந்திலனாய், அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்-தவத்தோர் களுடைய பொழில் என்று இங்கு நின்றும் நீங்கினனாயினும், புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் - புறத் திலுள்ளவர்களது தெரு வின்கண்ணே சேர்தலை நீங்கான், பெருந்தெரு ஒழித்து இப்பெருவனஞ் சூழ்ந்த - ஆதலால் பெருந் தெருவுகளை விட்டு இந்தப் பெரிய சோலையைச் சூழ்ந்துள்ள, திருந்து எயிற் குடபால் சிறு புழை போகி - திருத்தமுற்ற மதிலின் மேற்றிசையினிடத் தேயுள்ள சிறிய வாயிலின் வழியே சென்று, மிக்க மாதவர் விரும்பினர் உறையும்-தவத்தான் மிக்க முனிவர்கள் விரும்பி யுறையும், சக்கரவாளக் கோட்டம் புக்கால் - சக்கரவாளக் கோட்டத்தை யடைந்தால், கங்குல் கழியினும் கடுநவை எய்தாது - அங்கே இரவினைக் கழிப்பினும் கொடிய துன்ப முண்டாகாது, அங்குநீர் போம் என்று அருந்தெய்வம் உரைப்ப - ஆகலின் நீவிர் அங்கே செல்வீராக என்று அரிய தெய்வம் கூறியருள; அறத்தோர் துறவிகளானமையின், புறத்தோர் என்பதற்கு அவர்க்குப் புறமாகவுள்ள இல்லற நெறியினர் என வுரைத்தலும் அமையும்; புறத்து ஓர் வீதியில் என்றலுமாம். புழை-நுழை வாயில். கழியினும் - கழிப்பினும். இனி, ஆண்டே இராக்காலம் கழிவதாயினும் எனலுமாம் கடுநவை - உதயகுமரனாற் பற்றப்படுதல். 27-33. வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும் அம்செஞ்சாயல் நீயும் அல்லது-வஞ்சமுடைய விஞ்சையனாகிய மாருதவேகன் என்பானும் அழகிய சிவந்த மென்மைத் தன்மையினையுடைய நீயும் அன்றி, நெடுநகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் - இப் பெரிய நகரின்கண் உள்ளோரனை வரும், சுடுகாட்டுக் கோட்டம் என்றலது உரையார் - சுடுகாட்டுக் கோட்டம் என்பதேயன்றி வேறு பெயர் கூறார், சக்கரவாளக் கோட்டம் அஃது என - அதனைச் சக்கர வாளக்கோட்டம் என்று, மிக்கோய் கூறிய உரைப்பொருள் அறியேன் - மேம்பாடுடைய நீ கூறிய மொழியின் பொருளை அறியேன், ஈங்கு இதன் காரணம் என்னையோ என - இங்ஙனம் கூறுவதன் காரணம் யாதோ என்று சுதமதி கேட்ப; வஞ்ச விஞ்சையன் என்றாள், தன்னைக் 1கவர்ந்து சென்று பின்னர்த் தன்னைவிட்டுப் பிரிந்தமையான். நெடுநகர்-காவிரிப் பூம்பட்டினம். 34-36. ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவல் - அஃது அப்பெயர் பெற்றதன் காரணத்தைத் தெளிய உரைப்பேன், மாதவி மகளொடு வல்லிருள் வரினும் நீகேள் என்றே நேரிழை கூறும் - மிகுந்த இருளையுடைய யாமம் வரினும் நீ மாதவி மகளுடன் அதனைக் கேட்பாயாக என்று மணிமேகலா தெய்வம் கூறுகின்றது; 36-38. இந் நாமப் பேரூர் தன்னொடு தோன்றிய - பகைவர்க்கு அச்சத்தை விளைக்கும் இப் பெரிய நகரத்தோடே உண்டாய, ஈமப் புறங்காடு ஈங்கு இதன் அயலது - பிணஞ்சுடும் விறகடுக் கினையுடைய சுடுகாடு இவ் வுவவனத்தின் பக்கத்தது; நாமம் - புகழுமாம். இதன் - இவ் வுவவனத்தின். 39-49. ஊரா நல்தேர் ஓவியப்படுத்து - ஓவியம்போல விமானம் விசும்பின்கண்ணே நிற்குமாறு செய்து, தேவர் புகுதரூஉம் செழுங் கொடி வாயிலும் - விண்ணவர் நுழைந்து செல்லுஞ் செழுங் கொடியினையுடைய வாயிலும், நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி எழுதிய நலங்கிளர் வாயிலும் - நெற்பயிரும் கரும்பும் பொய்கையும் பொழிலும் நன்கன மெழுதிய நலஞ்சிறந்த வாயிலும், வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத்துள் - மிக்க வெண்மை யுடைய சுதையாற் பூசப்பட்ட மாடத்தில், உரு எழுதா வெள்ளிடை வாயிலும்- வடிவங்கள் எழுதப்பெறாத வெளியான இடத்தினையுடைய வாயிலும், மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கில் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து - மடிக்கப்பட்ட சிவந்த வாயையும் சினந்த நோக்கையும் பிறரைத்தொடுத்த பாசத்தையும் கையிற் பிடித்த சூலப்படையையுமுடைய, நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும் - நீண்ட தோற்றத்தையுடைய பூதவடிவம் நிற்கின்ற வாயிலும் ஆகிய, நாற்பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய - நான்கு பெரிய வாயில்களும் பகுதிப்பட்டு உயர்ந்த, காப்புடை இஞ்சிக் கடி வழங்கு ஆரிடை - காவலுடைய மதில் சூழ்ந்த பேய்கள் நடமாடுகின்ற அரிய இடத்தில்; ஊராத் தேர்-பாகராற் செலுத்தப்படாது தானே செல்லுந் தேர், விமானம். விமானத்துடன் தேவர் புகுவதாக ஓவியப்படுத்த வாயில் என்றலுமாம். நீர் - பொய்கை முதலியன. மண்ணீடு - சுதையாற் செய்யப்பட்ட பாவை; "மண்ணீட்டிற் பண்புற வகுத்து," "ஈங்கிம் மண்ணீட்டு" (6: 200; 18 - 156.) என மேல் இந்நூலுள் வருதல் காண்க. கடி - பேய். 50-53. உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர்-தளராத உள்ளத்தோடு உயிராகிய கடனைக் கொடுத்தோர் களின், தலை தூங்கு நெடுமரம் தாழ்ந்து புறஞ்சுற்றி - தலைகள் தொங்குகின்ற நீண்ட மரங்கள் தாழ்ந்து புறத்தே சூழப்பெற்று, பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில் காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்- பெரிய பலிபீடம் ஓங்கிய முன்றிலையுடைய காடுகிழாளின் மிகப் பெரிய கோயிலும்; உயிர்க்கடன் இறுத்தலைச் சிலப்பதிகாரத்து 1இந்திர விழ'd2வூரெடுத்த காதையானும் அறிக. இஃது அவிப்பலி எனப்படும். பலி கொடுப்போர் சிகையை மரத்தில் முடிந்துவிட்டுத் தலையை அரிவராகலின் "தலைதூங்கு நெடுமரம்" என்றார் ; 2"வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறுந் திசைதோறும் விழித்து நின்று, தூங்குதலை, சிரிப்பன கண் டுறங்குதலை மறந்திருக்குஞ் சுழல்கட் சூர்ப்பேய்" என்பது காண்க. காடமர் செல்வி - காடுகிழாள் ; துர்க்கை. 54-59. அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும், ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்-அரிய தவத்தானுயர்ந் தோர்க்கும் அரசர்க்கும் கணவனுடன் ஒருங்கே உயிர்நீத்த கற்புடை மகளிர்க்கும், நால்வேறு வருணப் பால்வேறு காட்டி - நால்வகை மரபின் பகுதி வேறுபாட்டினைக் காட்டி, இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த-இறந்தோர்களின் உடலைப் புதைத்தவிடத்தே அவர்கட்குச் சிறந்தோர் அமைத்த, குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டம்-குறியனவும் நெடியனவும் ஆகிய குன்றுகளைக் கண்டாற்போன்றனவாய்ச் செங்கற்களாற் செய்யப்பட்டு உயர்ந்த கோட்டங்களும்; ஆயினும் என்பது ஓர் எண்ணிடைச்சொல்; 1"பொதியி லாயினும் இமய மாயினும்......புகாரேயாயினும்" என்புழிப்போல. சிறந்தோர் - உரிமையுடையோர். சுடுமண்-செங்கல். கோட்டம்-அறை; கோயிலுமாம். 60-65. அருந்திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும் - அரிய திறலையுடைய கடவுளுடைய திருந்திய பலியிடுதற்குரிய தூண்களும், நிறைகல் தெற்றியும் - நிறுத்தப்பட்ட கல்லாலாகிய திண்ணையும், மிறைக்களச் சந்தியும்-வளைந்த இடத்தினை யுடைய பல வழிகளுஞ் சேர்ந்த சந்துகளும், தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர் உண்டு கண்படுக்கும் உறையுட் குடிகையும் - கையிற் பிடிக்கும் கோலும் உண்ணும் கலமும் பிடித்து ஈமங் காப்போர் உண்டு துயிலும் உறைவிடமாகிய குடில்களும், தூமக்கொடியும் சுடர்த் தோரணங்களும்-புகையொழுங் காகிய கொடியும் சுடராகிய தோரணங்களும், ஈமப்பந்தரும் யாங்கணும் பரந்து - ஈமத்தில் இட்ட பந்தர்களும் எவ்விடத்தும் பரக்கப்பெற்று; கந்தின்கண் தெய்வமுறைதலை 2"கலிகெழு கடவுள் கந்தங் கைவிட" என்பதனானும் அறிக. மிறை - வளைவு ; 3மிறைக்கொளி திருத்தினானே" என்றார் பிறரும். மண்டை-உண்டற்குரிய மண்கலம்; இரக்குங் கலமுமாம்; 4"ஏலாது கவிழ்ந்த என் இரவன் மண்டை" என்பது புறம். குடிகை-குடிசை. சுடர்-தீக்கொழுந்து; விளக்குமாம். 66-69. சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர் - பிணங்களைச் சுடுவோரும் வாளா இட்டுப்போவோரும் தோண்டப்பட்ட குழியிலிடுவோரும், தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர் - தாழ்ந்த இடங்களில் அடைத்து வைப்போரும் தாழியினாலே கவிப்போரும், இரவும் பகலும் இளிவுடன் தரியாது - இரவும் பகலும் அருவருப்புடன் தங்காமல், வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் - வருவோரும் போவோரு மாகியவர்களின் நீங்காத ஒலியும்; தாழ்வயின் - பள்ளமாகிய இடம். தாழியிற் கவித்தலைப் புற நானூற்றின் 227, 237, 255, 363-ஆம் செய்யுட்களால் அறிக. இது முதுமக்கட் டாழி எனப்படும். சுடுவோர் முதலியோராய் வருவோர் பெயர்வோர் என்க. 70-79. எஞ்சியோர் மருங்கின் ஈமஞ்சாற்றி நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்-உயிர் வாழ்ந்திருப்போரிடம் ஈமம் உண்டென்பதைக் கூறி உள்ளம் நடுங்குமாறு புரியும் நெய்தற் பறையின் ஒலியும், துறவோர் இறந்த தொழுவிளிப் பூசலும்-துறவியர் இறந்ததனாற் போந்த துதிமுழக்கமும், பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்-இல்லறத்தோர் இறந்ததனா லாகிய அழுகை யொலியும், நீள்முக நரியின் தீவிளிக்கூவும்-நீண்ட முகத்தையுடைய நரியின் தீய ஒலியினையுடைய கூப்பீடும். சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்-இறப்போரை யழைக்கும் பேராந்தையின் குரலும், புல'd2வூண் பொருந்திய குராலின் குரலும் - புலாலாகிய உணவைப் பொருந்திய கோட்டானின் ஒலியும், ஊண்தலை துற்றிய ஆண்டலைக் குரலும் - உணவாகத் தலை மூளையைக் கடித்துண்ட ஆண்டலைப் பறவையின் முழக்கமும், நன்னீர்ப் புணரி நளிகடல் ஒதையின் இன்னா இசைஒலி என்றும் நின்று அறாது-தூநீர்ச் சேர்க்கை யினையுடைய செறிந்த கடல் ஓசையைப்போல் இன்னாதனவாகிய முழக்கம் என்றும் நின்று நீங்காமல்; நெய்தல் - சாப்பறை ; அஃது ஈமஞ்சாற்றுதலை 1"மணங் கொண்டீண், டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே, தொண்டொண்டொண் ணென்னும் பறை" என்பதனாலுமறிக. முன் துறவோர் என்றமையின் பிறவோர் இல்லறத்தாராயிற்று. தொழுவிளியாகிய பூசல், அழுவிளியாகிய பூசல் என்க ; விளி - ஓசை. பயிர்தல் - அழைத்தல், 2"போழ்வாய்க்கூகை, சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பயிரும், கள்ளியம் பறந்தலை" என்பதனால் பேராந்தை இறந்தோரை அழைக்குமென்பதும் போதரும். ஆண்டலை - ஆண்மகனது தலை போன்ற வடிவ முள்ள ஒருவகைப் பறவை; இதனை, 3"நீண்ட பலி பீடத்திலரிந்து வைத்த நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் னினமென்றெண்ணி, ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ" என்பதனானறிக. நெய்தலோசை முதலிய இன்னா இசையொலி கடலோதையின் என்றும் நின்றறாதென்க. 80-91. தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி - தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் உயர்ந்து, கான்றையும் சூரையுங் கள்ளியும் அடர்ந்து - கான்றையுஞ் சூரையுங் கள்ளியும் செறிந்து, காய்பசிக் கடும்பேய் கணங்கொண்டு ஈண்டும் - காய்கின்ற பசியையுடைய கொடிய பேய்கள் கூட்டமாகத் திரண்டிருக்கும், மால் அமர் பெருஞ்சினை வாகை மன்றமும் - முகில் தங்குகின்ற பெருங் கிளை களையுடைய வாகை மரம் நிற்கும் மன்றமும், வெள் நிணம் தடியொடு மாந்தி மகிழ் சிறந்து - வெள்ளிய நிணத்தினைத் தசையுடன் உண்டு மகிழ்ச்சி மிகுந்து, புள் இறை கூரும் வெள்ளில் மன்றமும்- பறவைகள் தங்குகின்ற விளாமரம் நிற்கும் மன்றமும், சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடைதீயுறுக்கும் வன்னி மன்றமும் - காபாலிகர் தளராத உள்ளத்துடன் சோறடுகின்ற தீயையுடைய வன்னிமரம் நிற்கும் மன்றமும். விரத யாக்கையர் உடைதலை தொகுத்தாங்கு இருந்தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும் - விரதங் காக்கும் உடம்பினை யுடையோர் உடைந்த தலைகளைத் தொகுத்துப் பெரிய மாலைகளாகச் செய்யும் இலந்தைமரம் நிற்கும் மன்றமும், பிணம் தின் மாக்கள் - பிணத்தினைத் தின்னும் மாக்களாயினார், நிணம்படு குழிசியில் விருந்தாட்டு அயரும் - நிணம் பொருந்திய பானையில் விருந்து செய்கின்ற, வெள்ளிடை மன்றமும் - வெளியான இடத்தையுடைய மன்றமும் ஆகிய இவ்விடங்களில்; ஒடுவை-ஒடுமரம். உழிஞ்சில் - வாகை; உன்னமுமாம். தான்றி முதலிய மூன்றும் மரமும், கான்றை முதலிய மூன்றும் செடியுமாம். மால்-மேகம். இறைகூர்தல்-தங்குதல். சுடலை நோன்பிகள்-மயானத்திலிருந்து நோன்பியற்றுவோர்; காபாலிக சமயத்தோர். விரத யாக்கையர் -மாவிரத சமயத்தோர். பலர் கூடுமிடம் மன்ற மெனப்படும்; பண்டை நாளில் மன்றங்கள் பெரும்பாலும் மரத்தடியில் இருந்தன; பேய்கள் கூடுதலின் வாகையடி மன்ற மாயிற்று; இங்ஙனமே ஏனையவும் கொள்க. 92-96. அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் - தீப்பெய்த பானையும், புழல் என்னும் பண்ணியம் இட்ட கலனும், வெள்ளில பாடையும் உள்ளீட்டறுவையும்-வெள்ளிலாகிய பாடையும் உள்ளே பண்டங்கள் இடப் பட்ட உறியும், பரிந்த மாலையும் உடைந்த கும்பமும் -பாடையிற்கட்டி அறுத்தெறிந்த மாலைகளும் உடைந்த குடங்களும், நெல்லும் பொரியும் சில்பலி அரிசியும்-நெல்லும் பொரியும் சிறுபலியாகிய அரிசியும், யாங்கணும் பரந்த ஓங்கிரும் பறந்தலை - எவ்விடத்தும் பரந்து கிடக்கும் மிகப்பெரிய பாழிடத்தில்; புழல்-ஒருவகைச் சிற்றுண்டி. வெள்ளிற்பாடை: இருபெய ரொட்டு. உள்ளீட்டறுவை-உள்ளீட்டையுடைய கிழியுமாம். சில்பலி - சிறுபலி; 1"தூவெள்ளரிசி, சில்பலிச் செய்து" என்பது காண்க. வாகை மன்றம் முதலிய மன்றங்கள் யாங்கணும் குழிசி முதலியன பரந்த பறந்தலை யென்க. 97-104. தவத்துறை மாக்கள் மிகப் பெருஞ் செல்வர்-தவ நெறியிற் செல்லுந் துறவியர் மிக்க பெருஞ் செல்வ முடையோர், ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப்பாலகர் - ஈன்றணிமையை யுடைய இளமகளிர் ஆற்றாத இளஞ்சிறார், முதியோர் என்னான் இளையோர் என்னான் - ஆண்டில் முதிர்ந்தோர் என்னாமலும் இளையோர் என்னாமலும், கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப - கொடுந் தொழிலை யுடைய காலன் கொன்று குவிப்ப, இவ் அழல்வாய்ச் சுடலை தின்னக்கண்டும் - அழல் வாயினையுடைய சுடலை தின்னக் கண்டும், கழிபெருஞ்செல்வக் கள்ளாட்டு அயர்ந்து - மிக்க பெருஞ்செல்வமாகிய கள்ளையுண்டு விளையாடுதலைச் செய்து, மிக்க நல்லறம் விரும்பாது வாழும் - மேன்மை தரும் நல்லறங்களை விரும்பாமல் வாழ்கின்ற, மக்களில் சிறந்த மடவோர் உண்டோ - மக்களிலுஞ் சிறந்த அறிவிலிகள் உளரோ; என்னான் என்பதனைத் தவத்துறைமாக்கள் முதலிய வற்றோடும் ஒட்டுக. கொன்றனன்; முற்றெச்சம். அழலாகிய வாய் என உருவகம். இகரச்சுட்டு அதன் கொடுமையை உணர்த்திற்று. ஆரிடையில் பறந்தலையில் சுடலை (49, 66, 101) என்க. பறந்தலை யாகிய சுடலை யென்னலுமாம். அறிவை மயக்குதலின் செல்வத்தைக் கள் என்றார். ‘தவத் துறைமாக்கள்......மடவோருண்டோ' என்பது தெய்வங் கூறியது ; கவி கூறியதுமாம். 105-106. ஆங்கது தன்னை ஓர் அருங்கடி நகர் என - அங்ஙனமாகிய புறங்காட்டை ஓர் அரிய காப்பமைந்த நகரமென்றெண்ணி, சார்ங்கலன் என்போன் தனிவழிச் சென்றான் - தனிவழியே சென்ற சார்ங்கலன் என்னும் சிறுவன்; 107-109. என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று - என்புந் தசையும் குருதியுமாகியவற்றை உடம்பு என்று, அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி - அன்பு வைக்கின்ற மக்களுக்கு அறியக்கூறி, வழுவொடு கிடந்த புழு'd2வூன் பிண்டத்து - வழுவுடன் கிடந்த புழுக்கள் மலிந்த ஊன் பிண்டமாகிய உடலில்; அன்புறு மாக்கள்-உடம்பினிடத்து அன்புமிக்க மாக்கள்; மாக்கள் என்றார் ஐம்புல வுணர்ச்சியன்றி மனவுணர்ச்சி யில்லாதவர் எனற்கு, வழு - வழும்பு. யாக்கை என்பது என்பு முதலியனவே யென மாக்கட்குச் சாற்றிக்கிடந்த பிண்டம் என்க; 1"குடருங் கொழுவுங் குருதியு மென்பும் தொடரு நரம்பொடு தோலும்--இடையிடையே வைத்த தடியும் வழும்புமா மற்றிவற்றுள் எத்திறத்தா ளீர்ங்கோதை யாள்." என்பது ஒத்து நோக்கற்பாலது. 110-119. அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய்க்கொண்டு - செம் பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற அடிகளை நரி வாயிலே கவ்விக் கொண்டு, உலப்பில் இன்பமோடு உளைக்கும் ஓதையும் - கேடில்லாத இன்பத்துடன் ஊளையிடுகின்ற ஒலியும், கலைப்புற அல்குல் கழுகு குடைந்துண்டு நிலத்தலை நெடுவிளி எடுக்கும் ஓதையும் - கலையை யொழித்த அல்குலைக் கழுகு குடைந்து உண்டு நிலத்தின் கண் பெரிய கூவுதலைச் செய்யும் ஓசையும், கடகம் செறிந்த கையைத் தீ நாய் உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்-கடகமணிந்த கையைத் தீய நாய் உடையுமாறு கவ்விக்கொண்டு இடும் ஒடுங்காத முழக்கமும், சாந்தம் தோய்ந்த ஏந்திள வனமுலை - சந்தனம் பூசப்பெற்ற நிமிர்ந்த இளங் கொங்கையை, காய்ந்த பசி எருவை கவர்ந்தூண் ஓதையும்-மிக்க பசியையுடைய பருந்து கவர்ந்துண்ணுகின்ற ஓசையும், பண்புகொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து- இனிமையுடைய உடல்கள் வெந்த சாம்பற் குவையாகிய அரங்கில், மண்கணை முழவம் ஆக - மார்ச்சனை செறிந்த தண்ணுமை முழக்கமாக; கலை - உடை; மேகலையுமாம். நிலைத்தலை என்பது பாடமாயின் தன்னிடத்து நிலைபெற்ற என்க. தீ நாய் - புறங்காட்டிற் றிரியும் ஒரு வகை நாயுமாம். பண்பு - இனிமை ; அழகுமாம். ஓதை பலவும் முழவமாக வென்க. 119-121. ஆங்கு ஓர் கருந்தலை வாங்கிக் கையகத்து ஏந்தி - அங்குள்ள ஓர் பெண்பிணத்தின் கரிய தலையைப் பறித்துக் கையிலே ஏந்தி, இரும்பேர் உவகையின் எழுந்து ஓர் பேய் மகள்-ஓர் பெண் பேய் மிக்க பெரிய மகிழ்ச்சியுடன் எழுந்து ; 122-126. புயலோ குழலோ-முகிலோ அன்றிக் கூந்தலோ, கயலோ கண்ணோ - கயல் மீனோ அன்றிக் கண்ணோ, குமிழோ மூக்கோ - குமிழம்பூவோ அன்றி மூக்கோ, இதழோ கவிரோ - உதடோ அன்றி முருங்கை மலரோ, பல்லோ முத்தோ - பற்களோ அன்றி முத்துக்களோ, என்னாது இரங்காது-என்று கருதாமலும் இரங்காமலும், கண்தொட்டு உண்டு - கண்களைத் தோண்டி உண்டு, கவை அடி பெயர்த்து - கவைத்த அடிகளைப் பெயர்த்து, தண்டாக் களிப்பின் ஆடும் கூத்து - தணியாத களிப்புடன் ஆடுகின்ற கூத்தினை; என்னாது - என்று கருதி அதிசயிக்காது ; இஃது ஐயவதி சயத்தின் பாற்படும்: 1"கவையடிப் பேய்மகள்" என்றார் பிறரும். 127-131. கண்டனன் வெரீஇ - கண்டு அஞ்சி, கடு நவை எய்தி - அப் பேயாற் பிடிக்கப்பட்டு, விண்டு - அவ்விடத்தின் நீங்கி, ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து - ஓர் திசையிற் கூப்பிட்டுக் கொண்டு சென்று, ஈங்கு எம்மனை காணாய் - எம் அன்னையே இங்கே காண்பாயாக, ஈமச்சுடலையின் - ஈமமாகிய மயானத்தின் கண் உள்ள, வெம்முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என - கொடிய முது பேய்க்கு என் உயிரைக் கொடுத்துவிட்டேன் என்று கூறி, தம் அனை தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும் - தன் தாயின் முன்னே வீழ்ந்து உயிர் துறக்கவும்; சார்ங்கல னென்போன் தனிவழிச் சென்றோன் கண்டனன் வெரீஇ என்க. கடு நவை-மிக்க துன்பம் ; ஆவது-பேய்க் கோட்படுதல். 2"கழல்கட் கூளிக் கடுநவைப் பட்டோர்" என்பதுகாண்க. ஈமச் சுடலை:இருபெயரொட்டு; ஈமத்தையுடைய சுடலையென்றுமாம். ஈமம்- பிணஞ் சுடும் விறகடுக்கு. மெய் வைத்தல் - உடம்பைப் போகடுதல்; இறத்தல். 132-141. பார்ப்பான் தன்னொடு கண் இழந்திருந்த - கணவனோடு கண் இழந்திருந்த, இத் தீத் தொழிலாட்டி என் சிறுவன் தன்னை- இக் கொடுவினையேனுடைய புதல்வனை, யாரும் இல் தமியேன் என்பது நோக்காது - யான் யாருமற்ற ஏழை யென்பதனைக் கருதாமல், ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ - அணங்கோ அன்றிப் பேயோ அரிய உயிரையுண்டது, துறையும் மன்றமும் தொல் வலி மரனும் - நீர்த்துறைகளும் மன்றங்களும் பழைய வலி யுடைய மரங்களும், உறையுளும் கோட்டமும் காப்பாய் - தங்கு மிடங்களும் கோயில்களு மாதியவற்றின்கணிருந்து காத்து வருவோய், காவாய் தகவிலை கொல்லோ சம்பாபதி என-சம்பாபதியே நீ என் மகனுயிரைக் காவாமலிருந்தாய் தகவின்மையை யுடையையோ என அழைத்து, மகன் மெய் யாக்கையை மார்புறத் தழீஇ - மகனது உடலாகிய உயிரற்ற யாக்கையை மார்புடன் தழுவிக்கொண்டு; ஈமப் புறங்காட்டு எயில்புற வாயிலில் - இடு காட்டின் மதிற் புறத்துள்ள வாயிலில் நின்று, கோதமை என்பாள் கொடுந் துயர் சாற்ற - கோதமை என்னும் பார்ப்பனி கொடிய துன்பத்தினைக் கூற; பார்ப்பான் - சார்ங்கலனுடைய தந்தை; அவன் கண்ணிழந் திருந்தமை "கண்ணில் கணவனை" (6:155.) எனப் பின் வருதலானும் துணியப்படும். தீத்தொழிலாட்டி-பார்ப்பனி யென்றுமாம்; 1தீத்திறம் புரிந்தோன்" எனப் பார்ப்பனன் கூறப்படுதல் காண்க; அங்கி காரியம் செய்பவன் என்றபடி. கணவனும் கண்ணிழந் தானாகலின் சிறுவனை யன்றித் தனக்குக் களைகண் இல்லை யென்பாள் ‘யாருமில் தமியேன்' என்றாள். நோக்காது - கருதாது; நோக்கனோக்கம். மன்றம் - பலர்கூடும் வெளியிடம். தகவு இலை கொல்லோ-நின்னிடம் தகவு இல்லையோ என்றுமாம்; தகவு - நடுவு நிலை; எவ்விடத்தும் யாரையுங் காக்குந் தெய்வம் ஈண்டு இவனைக் காவாமையின் ‘தகவிலை கொல்லோ' என்றாள். கோதமை தகவிலை கொல்லோ என மார்புறத் தழீஇ வாயிலிற் சாற்றவென்க. 142-145. கடிவழங்கு வாயிலில் கடுந்துயர் எய்தி இடையிருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை - இருளையுடைய இடை யாமத்தில் பேய்கள் நடமாடுகின்ற இவ் வாயிலின் கணிருந்து கொடிய துக்கத்தினையடைந்து என்னை இப்பொழுது அழைத்தாய், என் உற்றனை எனக்கு உரை என்றே-நீ என்ன துன்பமெய்தினை அதனை எனக்குக் கூறுவாயாக என்று, பொன்னிற் பொலிந்த நிறத்தாள் தோன்ற -பொன்னைப் போல் விளங்கும் நிறத்தினை யுடைய சம்பாபதி தோன்ற ; கடி - பேய். பொன்-சூரியன் என்பது அரும்பதவுரை. தோன்றி உரையென்று கூற என விகுதி பிரித்தொட்டுதலுமாம். 146-149. ஆருமிலாட்டி என் அறியாப் பாலகன் - ஆருமற்ற வளாகிய என்னுடைய அறியாச் சிறுவன். ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை - ஈமத்தினையுடைய புறங்காட்டின் வழியே வந்தோனை, அணங்கோ பேயோ ஆருயிர் உண்டது-அணங்கோ பேயோ அரிய உயிரை உண்டது, உறங்குவான் போலக் கிடந்தனன் காண் என- இதோ உறங்குபவன் போலக் கிடக்கின்றனன் காண்பாயாக என்று பார்ப்பனி உரைத்து வருந்த ; 150-153. அணங்கும் பேயும் ஆருயிர் உண்ணாத் - அணங்கும் பேயும் அரிய வுயிரை உண்ணமாட்டா, பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக -நெருங்கிய முப்புரி நூலை யணிந்த மார்பினையுடையசார்ங்கலனது அறியாமையே பற்றுக் கோடாக, ஊழ்வினை வந்து இவன் உயிருண்டு கழிந்தது - ஊழ்வினையானது வந்து இவனது உயிரை உண்டு நீங்கியது, மாபெருந் துன்பம் நீ ஒழிவாய் என்றலும்-நினது மிகப்பெரிய துயரத்தை நீங்குவாயாக என்று தெய்வமுரைத்தலும்; 154-156. என் உயிர்கொண்டு இவன் உயிர் தந்தருளின்-என்னுடைய உயிரைப் பெற்று என் மகனது உயிரைத் தந்தருள்வாயானால், என் கண்ணில் கணவனை இவன் காத்து ஓம்பிடும்-கண்ணிழந்த என் கணவனை இவன் பாதுகாப்பான் ஆகலின், இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்-இவன் உயிரை அளித்து எனது உயிரை வாங்கு வாயாக என்று கோதமை கூறியவளவில் : காத்து ஓம்பிடும்: ஒருபொருட் பன்மொழி. 157-167. முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள் - சம்பாபதி இரக்கமுற்றுக் கூறுகின்றவள், ஐயம் உண்டோ ஆருயிர் போனால் செய்வினை மருங்கில சென்று பிறப்பு எய்துதல்-அரிய உயிரானது உடம்பை விட்டு நீங்கினால் தான் செய்த வினையின்வழியேசென்று வேறு பிறப்படைதலில் ஐயம் உண்டோ, ஆங்கது கொணர்ந்து நின் ஆரிடர் நீக்குதல்-சென்ற அவனுயிரைக் கொண்டுவந்து நின்னுடைய அரிய துன்பத்தை நீக்குதல், ஈங்கு எனக்கு ஆவ தொன்று அன்று - எனக்கு இயல்வதொரு காரியமன்று, நீ இரங்கல்-நீ வருந்தற்க, கொலை அறம் ஆம் எனும் கொடுந்தொழில் மாக்கள் அவலப்படிற்று உரை ஆங்கது மடவாய் - மடந்தையே நீ கூறிய அது கொலை புரிவதை அறம் என்று கூறும் கொடுந் தொழிலையுடைய மாக்களின் துன்பத்தைத் தரும் பொய்யுரை யாகும், உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் இலரோ - உலகத்தையாள்கின்ற அரசர்கட்கு உயிர்க்கு உயிர் கொடுப் போர் ஒருவருமிலரோ, இந்த ஈமப் புறங்காட்டு அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம் - இந்தச் சுடுகாட்டின்கண் அரசர்களுக்கு அமைந்த கோட்டங்கள் அளவற்றன ஆகலின், நிரயக் கொடு மொழி நீ ஒழி என்றலும்-நிரயத்திற்கேதுவாகிய கொடிய மொழிகளை நீ விடுவாயாக என்று தெய்வம் கூறுதலும்; முது மூதாட்டி-மிக்க முதுமையை உடையாள். மருங்கு - வழி; 1"செய்வினை வழித்தா யுயிர்செலு மென்பது, பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின்" என்பது ஈண்டறியற்பாலது. மன்னவர்க்கு உயிர்க்குயி ரீவோர் - அரசர் உயிருக்கு மாறாகத் தம்முயிரைக் கொடுப்போர். ஆயிரம்-அளவில்லன என்னும்பொருட்டு. கோட்டம்-அறை. 168-171. தேவர் தருவர் வரம் என்று ஒருமுறை நான்மறை அந்தணர் நன்னூல் உரைக்கும் - தேவர்கள் வரந்தருவர் என்று அந்தணர் களது நல்ல நூலாகிய நான்மறை ஒருபெற்றியே கூறா நிற்கும்; அங்ஙனமாகவும், மாபெருந் தெய்வம் நீ அருளாவிடின்- மிகப்பெருந் தெய்வமாகிய நீ அருள்புரியாவிட்டால், யானோ காவேன் என் உயிர் ஈங்கென - யான் என் உயிரை ஈண்டுக் காப்பாற்றாமல் விடுவேன் என்று கோதமை கூற; 172-175. ஊழிமுதல்வன் உயிர்தரின் அல்லது-ஊழிமுதல்வனாகிய இறைவன் உயிரை அளித்தாலல்லது, ஆழித்தாழி அகவரைத் திரிவோர் தாம் தரின்-சக்கரவாளமாகிய தாழியின்கண் திரியுந் தேவர்கள் தர வல்லவராயின், யானும் தருகுவன் மடவாய்- மடவாய் யானும் நின் மகனுயிரைத் தருவேன், ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்று - என்னுடைய ஆற்றலையும் நீ இப்பொழுது காண்பாயாக என்று கூறி; ஊழிமுதல்வன் - உலக முதல்வன்; இவனை மகாப்பிரமா என்பர். தாழிபோற் கவிந்துள தென்பார் தாழி யென்றார். முதல்வன் தரின் அல்லது திரிவோர் தாரார். அவர் தரின் யானுந் தருகுவன் என விரித்துரைக்க. 176-185. நால்வகை மரபின் அரூபப் பிரமரும் - நான்கு வகைப் பட்ட முறைமையினையுடைய அரூபப் பிரமர்களையும், நானால் வகையின் உரூபப் பிரமரும்-பதினாறு வகைப்பட்ட உரூபப் பிரமர்களையும், இருவகைச் சுடரும்-ஞாயிறு திங்கள் களையும், இரு மூவகையில் பெருவனப்பு எய்திய தெய்வத கணங்களும் - ஆறு வகையினையுடைய மிக்க அழகு விளங்கு கின்ற தெய்வ கணங்களையும், பல்வகை அசுரரும் படுதுயர் உறூஉம் எண்வகை நரகரும்- பல திறப்பட்ட அசுரர்களையும் மிக்க துன்பத்தை அனுபவிக்கின்ற எண்வகைப்பட்ட நரகர் களையும், இரு விசும்பு இயங்கும் பன்மீன் ஈட்டமும் நாளும் கோளும்-அகன்ற வானின்கண் திரியும் பல மீன்களின் தொகுதிகளையும் நாட்களையும் கோட்களையும், தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து - தன் உள்ளே அடக்கிக் கொண்டிருக்கும் சக்கரவாளத்தில், வரந் தரற்குரியோர்தமை முன் நிறுத்தி -வரந்தருவதற் குரியவர்களாகிய தேவர்களைக் கோதமைக்கு முன்னே நிறுத்தி, அரந்தை கெடும் இவள் அருந்துயர் இதுவென - இவளுற்ற அரிய துயர் இது இத்துயரினைப் போக்குவீராக என்று சம்பாபதி கூற; உலகம் முப்பத்தொன்று என்றும், அவற்றுள் முதலா வதாகிய நரக லோகத்தின் பகுதிகளாகிய மகாநிரயம், இரௌரவம், காலசூத்திரம், சஞ்சீவனம், மகாவீசி, தபனம், சம்பிரதாபனம், சங்கதம் என்னும் எட்டு நரகங்களிலும் நரகர்கள் வசிப்பரென்றும், ஆறாவது முதலிய அறுவகை உலகங்களிலும் அறுவகைத் தெய்வகணங்கள் வசிப்பரென்றும், பன்னிரண்டாவது முதலிய பதினாறு உலகங்களில் பதினாறுவகை உருவப்பிரமர்களும், இருபத்தெட்டாவது முதலிய நான்கு உலகங்களில் நால்வகை அருவப்பிரமர்களும் வசிப்பரென்றும் கூறுவர். ஒன்று முதல் மேன்மேலுலகங்களில் வசிப்போர் படிப்படியே உயர்ந்தோராவ ரென்பது அறிக. கெடும் : செய்யுமென்னுஞ் சொல்; ஏவலில் வந்தது. 186-189. சம்பாபதி தான் உரைத்த அம்முறையே - காவற்றெய்வ மாகிய சம்பாபதி கூறிய முறைப்படியே, எங்கு வாழ் தேவரும் உரைப்பக் கேட்டே - உலகெங்கணுமுள்ள தேவர்களும் கூறக் கேட்டு, கோதமை உற்ற கொடுந்துயர் நீங்கி - கோதமை தான் அடைந்த கொடிய துன்பத்தினின்றும் நீங்கி, ஈமச்சுடலையில் மகனை இட்டு இறந்தபின் - இடுகாட்டில் அடுக்கப்பட்ட விறகினை யுடைய அழலின்கண் மகனை இட்டுத் தானும் இறந்த பின்னர்; சம்பாபதி கூறியதாவது ஊழி முதல்வன் உயிர்தரினல்லது ஏனோர் தாரார் என்றது. தேவர் என்றது அருவப்பிரமர் இறுதி யாகவுள்ள மேலுலகத்தவர் அனைவர்க்கும் பொதுப்பெயர். 190-202. சம்பாபதி தன் ஆற்றல் தோன்ற - சம்பாபதியினுடைய பேராற்றல் வெளிப்படுமாறு, எங்கு வாழ் தேவரும் கூடிய இடந்தனில்-எங்குமுறைகின்ற தேவர்க ளெல்லோரும் கூடிய அந்த இடத்தில், சூழ்கடல் வளைஇய ஆழியங்குன்றத்து - பெரும்புறக் கடலாற் சூழப்பட்ட சக்கரவாள மலையின் உட்பட்ட இடத்தில், நடுவு நின்ற மேருக்குன்றமும் - நடு விடத்தே நின்றதாகிய மேருமலையும், புடையின்நின்ற எழு வகைக் குன்றமும் அதன் பக்கத்தே சூழ்ந்து நின்ற எழுவகைக் குலமலைகளும், நால்வகை மரபின் மாபெருந்தீவும்-நான்கு வகைப்பட்ட மரபினையுடைய மிகப்பெரிய தீவுகளும், ஓரீ ராயிரம் சிற்றிடைத்தீவும் - அவற்றைச் சூழ்ந்துள்ள இரண்டாயிரம் சிறு தீவுகளும், பிறவும் ஆங்கதன் இடவகை உரியன-பிறவுமாகிய அதன் உரிய இடவகைகளை, பெறு முறை மரபின் அறிவுவரக் காட்டி-அவை அமைந்த முறைப்படி காண்போர்க்கு அறிவுரை அமைத்துக் காட்டி, ஆங்குவாழ் உயிர்களும் அவ்வுயிர் இடங்களும்-ஆங்கே வாழும் உயிர்களையும் அவை வசிக்கும் இடங்களையும், பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து-அழகு பொருந்த மண்ணீடுகளாக இலக்கணப்படி வகுத்து, மிக்க மயனால் இழைக்கப்பட்ட - அறிவின் மேம்பட்ட தெய்வத் தச்சனால் இயற்றப்பட்ட, சக்கரவாளக்கோட்டம் ஈங்கிதுகாண்-சக்கர வாளக்கோட்டம் என்பது இதுவாகும்: தோன்றக்கூடிய இடம் என்க; தோன்ற இழைக்கப்பட்ட என் றியைத்தலும் பொருந்தும். மேருமலை எண்பத்தீராயிரம் யோசனை உயரமும், அதற்குத் தக்க பருமையும் உள்ளதென்றும், அதனைச் சூழக் குலகிரிகள் ஏழும், அவற்றுள் ஒவ்வொன்றனையும் சூழ்ந்து அவ்வக்கிரி யின் உயரவளவுள்ள ஆழமும் அகலமுமுடைய ஏழு கடல்களும் உள்ளனவென்றும், இவையெல்லாவற்றையும் புறஞ் சூழ்ந்துகிடக்கும் பெரும்புறக்கடலில் சம்புத்தீவு முதலிய நான்கு மாபெருந்தீவுகளும், அவைஒவ்வொன்றையும் ஐந்நூறு ஐந்நூறு ஆகச்சூழ்ந்த இரண்டாயிரம் சிறு தீவுகளும் உள்ளன என்றும், சம்புத்தீவு தெற்கிலுள்ளது என்றும் கூறுவர்; இப்பகுதிக்கு டாக்டர் உ.. வே. சாமிநாதையர் எழுதிய அரும்பதவுரை காண்க. சிறு தீவுகள் அந்தரத்தீவுகள் என்றும் கூறப்படும்; "அந்தரத் தீவினும் அகன்பெருந் தீவினும்" (25 : 224) என்று பின்வருதல் காண்க. உயிர்கள் என்றது அவற்றுக்கு நிலைக்களமாகிய உடம்பு களை. இடம் என்றது நீர், நிலம் முதலியவற்றை. மண்ணீடு-சுதையாற் செய்யப்பட்ட பாவை முதலியன. மயன் - அசுரத்தச்சன் என்பாருமுளர். 203-205. இடுபிணக்கோட்டத்து எயிற்புறம் ஆகலின் - பிணங்களை யிடுகின்ற புறங்காட்டின் மதிற் புறத்திலுள்ளது ஆதலால் இதனை, சுடுகாட்டுக்கோட்டம் என்றலது உரையார் - சுடுகாட்டுக் கோட்ட மென்றே கூறுவர், இதன்வரவு இது என்று இருந்தெய்வம் உரைக்க - இதனுடைய வரலாறு இஃது என்று மணிமேகலா தெய்வம் மொழிந்தருள; இடுதல், சுடுதல் இரண்டினையும் ஒன்றாக அடக்கிப் பெயர் கூறினார். 206-214. மதன்இல் நெஞ்சமோடு வான்துயர் எய்தி - வலியற்ற மனத்துடனே மிக்க துன்பத்தையடைந்து, பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப-பூமியிற் பிறந்தோர்களது வாழ்க்கையை மணிமேகலை கூற, இறந்திருள் கூர்ந்த இடையிருள், யாமத்து - மிகவுஞ்செறிந்த இருள் மிகுந்த இடையாமத்தில், தூங்குதுயில் எய்திய சுதமதி ஒழிய - மிக்க உறக்கத்தினையடைந்த சுதமதி அவ்விடத்தில் நீங்க, பூங்கொடிதன்னைப் பொருந்தித் தழீஇ - மணிமேகலையைச் சேரத் தழுவிக்கொண்டு, அந்தரம் ஆறா ஆறைந்து யோசனைத் தென்றிசை மருங்கில் சென்று-விசும்பின் வழியாக முப்பது யோசனை தூரம் தென்றிசைக்கட் சென்று, திரையுடுத்த மணி பல்லவத்திடை - கடலாற் சூழப்பட்ட மணிபல்லவ மென்னும் தீவின்கண், மணிமேகலா தெய்வம் அணியிழை தன்னை வைத்து அகன்றதுதான் - மணிமேகலையை வைத்துவிட்டு மணிமேகலா தெய்வம்தான் நீங்கியது என்க. மதன்-செருக்குமாம். கோட்டத்தினியல்பு கேட்டமையின் நெஞ்சம் மதனழிந்ததென்க. வாழ்க்கை யென்றது அதன் நிலையாமையை. மண்டிலம் சொரிய, மேனியள் ஏதீதி நோக்கி என்னுற்றீரென, அவள் அவன் கூறிய துரைத்தலும்; அருந் தெய்வமுரைப்ப, சுதமதி என்னை யோவென, நேரிழை கூறும் ; அங்ஙனம் கூறுகின்ற தெய்வம் இதன் வரவு இதுவென்றுரைக்க, சிறந்தோளுரைப்ப, தெய்வம் இடை யிருள் யாமத்துச் சுதமதியொழியப் பூங்கொடிதன்னைத் தழீஇச் சென்று மணிபல்லவத்தில் வைத்து அகன்றது என முடிக்க. சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை முற்றிற்று. 7. துயிலெழுப்பிய காதை மணிபல்லவத்தினின்றும் நீங்கிய மணிமேகலா தெய்வம், ‘இரவு கழிந்தால் மணிமேகலை என்கை யகப்படுவாள்' என்று வேட்கை நோயால் துயிலாதிருந்த உதயகுமரன் முன்தோன்றி, "மன்னவன் மகனே, கோல் நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும், கோள்நிலை திரிந்திடின் மாரி வறங்கூரும், மாரி வறங்கூரின் மன்னுயிர் இல்லை, மன்னுயிரெல்லாம் மண்ணாள் வேந்தன் தன்னுயிரென்னும் தகுதியின் றாகும், தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த, அவத்திறம் ஒழிக" என்று அவனுக்கு அறிவுரை கூறிவிட்டு, உவவனஞ் சென்று அங்கே துயிலும் சுதமதியை எழுப்பி, "யான் மணிமேகலா தெய்வம்; இந்திர விழாக் காண்டற்கு வந்தேன் ; நீ-அஞ்சாதே, மணிமேகலைக்குப் புத்தன் அற நெறியிற் செல்லும் நற்பொழுது வந்துற்றதாகலின் அவளை யெடுத்துச் சென்று மணிபல்லவத்தில் வைத்தேன்; அவள் தனது பழம் பிறப்பின் நிகழ்ச்சியையும் அறிந்துகொண்டு இற்றைக்கு ஏழாவது நாளில் இங்கு வந்து சேர்வாள். இந்நகரில் வேறுவடிவம் கொள் வாளாயினும் உனக்கு அவள் ஒளிப்பாளல்லள்; அவள் இப்பதியிற் புகும்நாளில் பல அற்புதங்கள் நிகழும்; நான் வந்ததையும் மணிமேகலை நல்வழியிற் சென்றதையும் மாதவிக்குச் சொல்க: அவள் முன்னரே என்னை யறிவாள்; கோவலன் ‘நமது குல தெய்வத்தின் பெயரை இக்குழந்தைக்கு இடுக' என்று சொல்லி, என் பெயரை இவளுக்கிட்ட நாளின் இரவில் மாதவியின் கனவிற் சென்று, ‘காமன் செயலற்றேங்க மாபெருந் தவக்கொடி யீன்றனை' என்று நனவிற் கூறியதுபோல நான் கூறியதுண்டு; இதனையும் அவளுக்கு நினைப்பூட்டுதி," என்று கூறிப்போயிற்று. பின்பு சுதமதி யெழுந்து மணிமேகலையின் பிரிவால் வருந்தி. அவ்வனத்தைச் சூழ்ந்த மதிலின் மேற்புறத்திலுள்ள சிறிய வாயில் வழியே சென்று, சக்கரவாளக்கோட்டத்தை யடைந்து, ஆங்குள்ள உலகவறவியின் ஒருபுடை யிருந்தாள். அப்பொழுது அவ்விடத்தே கந்தினை இடமாகக்கொண்டுள்ள தெய்வப்பாவையானது சுதமதி மருளும்படி அவளது முற்பிறப்பின் வரலாற்றையும் இப்பிறப்பின் வரலாற்றையும் கூறி விளித்து, ‘மணிமேகலை தனது முற்பிறப்பையும் உனது முற்பிறப்பையும் அறிந்துகொண்டு இற்றைக்கு ஏழாம்நாளிரவில் இந் நகர்க்கண் வருவாள்; அவள் பிரிந்தது பற்றி நீ அஞ்சல்' என்று கூறிற்று. அதனைக் கேட்டு நெஞ்சம்நடுங்கிய சுதமதி, இரவு முழுதும் அவ்விடத்திருந்து, கதிரவன் உதித்தவுடன் எழுந்து வீதிமருங்கிற் சென்று மாதவியை அடைந்து, முதல்நாளிரவு நிகழ்ந்தவற்றைச் சொன்னவுடன் அவள் மாணிக்கத்தை இழந்த நாகம் போன்று மிக்க துயரத் தோடிருந்தாள். சுதமதி மணிமேகலையின் பிரிவால் இன்னுயிரிழந்த யாக்கைபோலச் செயலற்றிருந்தாள். (இதில், இராப்பொழுதின் நிகழ்ச்சிகளும், விடியல் நிகழ்ச்சிகளும் ஆசிரியருடைய உலகியலறிவையும், கற்பனைத்திறத்தையும் புலப்படுத்துகின்றன.) மணிமே கலைதனை மணிபல் லவத்திடை மணிமே கலாதெய்வம் வைத்து நீங்கி மணிமே கலைதனை மலர்ப்பொழிற் கண்ட உதய குமரன் உறுதுய ரெய்திக் 5 கங்குல் கழியிலென் கையகத் தாளெனப் பொங்குமெல் லமளியிற் பொருந்தா திருந்தோன் முன்னர்த் தோன்றி மன்னவன் மகனே கோல்நிலை திரிந்திடிற் கோள்நிலை திரியும் கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும் 10 மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை மன்னுயி ரெல்லாம் மண்ணாள் வேந்தன் தன்னுயி ரென்னுந் தகுதியின் றாகும் தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிகென் றவன்வயி னுரைத்தபின் 15 உவவனம் புகுந்தாங் குறுதுயில் கொள்ளும் சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி இந்திர கோடணை இந்நகர்க் காண வந்தே னஞ்சல் மணிமே கலையான் ஆதிசான் முனிவன் அறவழிப் படுஉம் 20 ஏது முதிர்ந்த திளங்கொடிக் காதலின் விஞ்சையிற் பெயர்த்துநின் விளங்கிழை தன்னையோர் வஞ்சமில் மணிபல் லவத்திடை வைத்தேன் பண்டைப் பிறப்பும் பண்புற உணர்ந்தீங் கின்றேழ் நாளில் இந்நகர் மருங்கே 25 வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள களிப்புமாண் செல்வக் காவற் பேரூர் ஒளித்துரு வெய்தினும் உன்திற மொளியாள் ஆங்கவள் இந்நகர் புகுந்த அந்நாள் ஈங்கு நிகழ்வன ஏதுப் பலவுள 30 மாதவி தனக்கியான் வந்த வண்ணமும் ஏதமில் நெறிமகள் எய்திய வண்ணமும் உரையாய் நீயவள் என்திறம் உணரும் திரையிரும் பௌவத்துத் தெய்வமொன் றுண்டெனக் கோவலன் கூறியிக் கொடியிடை தன்னையென் 35 நாமஞ் செய்த நன்னாள் நள்ளிருள். காமன் கையறக் கடுநவை யறுக்கும் மாபெருந் தவக்கொடி ஈன்றனை யென்றே நனவே போலக் கனவகத் துரைத்தேன் ஈங்கிவ் வண்ணம் ஆங்கவட் குரையென் 40 றந்தரத் தெழுந்தாங் கருந்தெய்வம் போயபின் வெந்துய ரெய்திச் சுதமதி எழுந்தாங் ககன்மனை யரங்கத் தாசிரியர் தம்மொடு வகைதெரி மாக்கட்கு வட்டணை காட்டி ஆடல் புணர்க்கும் அரங்கியன் மகளிரில் 45 கூடிய குயிலுவக் கருவிகண் துயின்று பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்த் தீந்தொடை கொளைவல் லாயமோ டிசைகூட் டுண்டு வளைசேர் செங்கை மெல்விர லுதைத்த வெம்மைவெய் துறாது தன்மையிற் றிரியவும் 50 பண்பில் காதலன் பரத்தமை நோனாது உண்கண் சிவந்தாங்கு ஒல்குகொடி போன்று தெருட்டவுந் தெருளா தூடலொடு துயில்வோர் விரைப்பூம் பள்ளி வீழ்துணை தழுவவும் தளர்நடை யாயமொடு தங்கா தோடி 55 விளையாடு சிறுதேர் ஈர்த்துமெய் வருந்தி அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலிக் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்குக் காவற் பெண்டிர் கடிப்பகை யெறிந்து தூபங் காட்டித் தூங்குதுயில் வதியவும் 60 இறையுறை புறவும் நிறைநீர்ப் புள்ளும் காவுறை பறவையும் நாவு ளழுந்தி விழவுக்களி யடங்கி முழவுக்கண் துயின்று பழவிறன் மூதூர் பாயல்கொள் நடுநாள் கோமகன் கோயிற் குறுநீர்க் கன்னலின் 65 யாமங் கொள்பவர் ஏத்தொலி யரவமும் உறையுணின் றொடுங்கிய உண்ணா உயக்கத்து நிறையழி யானை நெடுங்கூ விளியும் தேர்வழங்கு தெருவுஞ் சிற்றிடை முடுக்கரும் ஊர்காப் பாளர் எறிதுடி ஓதையும் 70 முழங்குநீர் முன்றுறைக் கலம்புணர் கம்மியர் துழந்தடு கள்ளின் றோப்பியுண் டயர்ந்து பழஞ்செருக் குற்ற அனந்தர்ப் பாணியும் அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை விரவிய மகளிர் ஏந்திய தூமத்துப் 75 புதல்வரைப் பயந்த புனிறுநீர் கயக்கம் தீர்வினை மகளிர் குளனா டரவமும் வலித்த நெஞ்சின் ஆடவ ரின்றியும் புலிக்கணத் தன்னோர் பூத சதுக்கத்துக் கொடித்தேர் வேந்தன் கொற்றங் கொள்கென 80 இடிக்குரன் முழக்கத் திடும்பலி யோதையும் ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் கடுஞ்சூன் மகளிர் நெடும்புண் உற்றோர் தந்துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் மன்றப் பேய்மகள் வந்துகைக் கொள்கென 85 நின்றெறி பலியின் நெடுங்குர லோதையும் பல்வே றோதையும் பரந்தொருங் கிசைப்பக் கேட்டுளங் கலங்கி ஊட்டிரு ளழுவத்து முருந்தேர் இளநகை நீங்கிப் பூம்பொழில் திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி 90 மிக்கமா தெய்வம் வியந்தெடுத் துரைத்த சக்கர வாளக் கோட்டத் தாங்கண் பலர்புகழ் திறந்த பகுவாய் வாயில் உலக அறவியின் ஒருபுடை இருத்தலும் கந்துடை நெடுநிலைக் காரணம் காட்டிய 95 அந்தி லெழுதிய அற்புதப் பாவை மைத்தடங் கண்ணாள் மயங்கினள் வெருவத் திப்பிய முரைக்குந் தெய்வக் கிளவியின் இரவி வன்மன் ஒருபெரு மகளே துரகத் தானைத் துச்சயன் றேவி 100 தயங்கிணர்க் கோதை தாரை சாவுற மயங்கி யானைமுன் மன்னுயிர் நீத்தோய் காராளர் சண்பையிற் கௌசிகன் மகளே மாருத வேகனோ டிந்நகர் புகுந்து தாரை தவ்வை தன்னொடு கூடிய 105 வீரை யாகிய சுதமதி கேளாய் இன்றேழ் நாளில் இடையிருள் யாமத்துத் தன்பிறப் பதனோடு நின்பிறப் புணர்ந்தீங்கு இலக்குமி யாகிய நினக்கிளை யாள்வரும் அஞ்சலென் றுரைத்த தவ்வுரை கேட்டு 110 நெஞ்சம் நடுக்குறூஉம் நேரிழை நல்லாள் காவ லாளர் கண்டுயில் கொள்ளத் தூமென் சேக்கைத் துயில்கண் விழிப்ப வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்பப் புலம்புரிச் சங்கம் பொருளோடு முழங்கப் 115 புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்பப் பொறிமயிர் வாரணங் குறுங்கூ. விளிப்பப் பணைநிலைப் புரவி பலவெழுந் தாலப் பணைநிலைப் புள்ளும் பலவெழுந் தாலப் பூம்பொழி லார்கைப் புள்ளொலி சிறப்பப் 120 பூங்கொடி யார்கைப் புள்ளொலி சிறப்பப் கடவுட் பீடிகைப் பூப்பலி கடைகொளக் கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொளக் குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழக் கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ 125 ஊர்துயி லெடுப்ப உரவுநீ ரழுவத்துக் காரிருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும் ஏவுறு மஞ்ஞையின் நினைந்தடி வருந்த மாநகர் வீதி மருங்கிற் போகிப் போய கங்குலிற் புகுந்ததை யெல்லாம் 130 மாதவி தனக்கு வழுவின் றுரைத்தலும் நன்மணி இழந்த நாகம் போன்றவள் தன்மகள் வாராத் தனித்துய ருழப்ப இன்னுயி ரிழந்த யாக்கையி லிருந்தனள் துன்னிய துரைத்த சுதமதி தானென். உரை 1-7. மணிமேகலைதனை மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி-மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத்தின்கண் வைத்து அதனைவிட்டு நீங்க, மணிமேகலைதனை மலர்ப்பொழிற் கண்ட உதயகுமரன் - மணிமேகலையைப் பூஞ்சோலையிற் கண்ட உதயகுமரன், உறுதுயர் எய்தி - மிக்க துன்ப முற்று, கங்குல் கழியில்என் கையகத்தாள் என - இரவு நீங்கினால் மணிமேகலை என் கையினிடத்தே உள்ளாள் என்று, பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் முன்னர்த் தோன்றி- சிறந்த மெல்லிய படுக்கையிடத்துக் கண்டுயிலாது இருக்கின்றவன் முன்னே தோன்றி, மணிமேகலையை எய்தப் பெறாமையான் உறுதுயர் எய்தினான் என்க. பொருந்தாது-கண் பொருந்தாது : உறங்காது. இருந்தோன் முன்னர்த் தோன்றி என்க. 7-14. மன்னவன் மகனே-அரசன் புதல்வனே, கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்-அரசனது கோல் கோடு வதாயின் கோட் களின் நிலை வேறுபடும், கோள்நிலை திரிந்திடின் மாரி வறம்கூரும்- அங்ஙனம் கோட்கள் நிலை தவறினால் மழை பெய்யாமற் கழியுங்காலம் மிகும், மாரி வறங் கூரின் மன்னுயிர் இல்லை - மழை வளங் குறைந்தால் நிலைபெற்ற உயிர்கள் இல்லையாம், மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன் தன்உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்- நிலைபெற்ற உயிர்கள் அனைத்தும் மண்ணுலகத்தை ஆள்கின்ற மன்னவனது உயிர்என்று கூறப்படும் தகைமைஇலதாம் ஆகலின், தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த - தவத்தின் கூறுபாட்டினை மேற்கொண்ட மணிமேகலைபால் வைத்த, அவத்திறம் ஒழி கென்று அவன் வயின் உரைத்தபின்-தீய விருப்பின் தன்மையை ஒழிவாயாக என்று உதயகுமரனிடம் மொழிந்த பின்னர்; கோல்நிலை திரியின் கோள்நிலை திரிதல் முதலியன நிகழுமென் பதனை, 1"கோணிலை திரியாக் கோலோ னாகுக,' 2"கோணிலைதிரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி, நீணில மாரி யின்றி விளைவஃகிப் பசியு நீடிப், பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந் தறங்கண் மாறி, ஆணையிவ் வுலகு கேடா மரசுகோல் கோடி னென்றான்" என்பவற்றானும் அறிக. அவத்திறம் - கேடு செய்யும் தீய விழைவு. 15-22. உவவனம் புகுந்து ஆங்கு உறுதுயில் கொள்ளும்-உவவனத்திற் புகுந்து ஆண்டு மிகுந்த உறக்கத்துடனிருக்கும், சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி - சுதமதியை உறக்கத் தினின்றும் எழுப்பி, இந்திரகோடனை இந்நகர்க் காண வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்-யான் மணிமேகலா தெய்வம் அஞ்சாதே இந்நகரின் இந்திர விழாக்காண வந்தேன், ஆதிசான் முனிவன் அற வழிப்படூஉம்-புத்த தேவனின் அறநெறியிற் செல்லும், ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின்- ஏது நிகழ்ச்சி மணிமேகலைக்கு முற்றியதாகலின் விஞ்சையிற் பெயர்ந்நு நின் விளங்கிழைதன்னை-நின் மெல்லியலை என் வித்தையினாலே பெயர்த்து, ஓர் வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்-ஒரு வகையான வஞ்சனையும் இல்லாத மணி பல்லவத்தின் கண் வைத்துளேன்; துயிலிடை : உருபு மயக்கம், கோடணை - முழக்கம் ; பல்வகை முழக்கத்தினையுடைய விழாவிற்காயிற்று. வினைகள் தம் பயனையூட்ட எதிர்ப்படுவதனை, ஏது நிகழ்ச்சி அல்லது ஏது என்பது பௌத்தநூல் வழக்கு. 23-29. பண்டைப் பிறப்பும் பண்புஉற உணர்ந்து-முற்பிறவியையும் நன்கறிந்து, ஈங்கு இன்று ஏழுநாளில் இந்நகர் மருங்கே- இற்றைக்கு ஏழாம் நாளிலே இவ்விடத்து இந்நகரத்தின்கண், வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள் - மடப்பம் பொருந்திய கொடிபோலும் மணிமேகலை வந்து தோன்றுவள், களிப்பு மாண் செல்வக் காவற் பேரூர் - செல்வக் களிப்பாற் சிறந்த காவலையுடைய இப் பெரிய நகரத்தில். ஒளித்து உருவு எய்தினும் உன் திறன் ஒளியாள்ச் - தன் வடிவத்தை மறைத்து வந்தாலும் நின்னிடம் மறையாள், ஆங்கு அவள் இந்நகர் புகுந்த அந்நாள் - மணிமேகலை இந்நகரத்திற்கு மீளவந்த அந்நாளில், ஈங்கு நிகழ்வன ஏதுப் பலவுள - ஈண்டு நிகழ்வன வாகிய ஏது நிகழ்ச்சிகள் பலவுண்டு; தோன்றும்: முற்று. களிப்புமாண் செல்வம் என்பதற்குக் களிப்பு மாட்சி யுறுதற்குக் காரணமாய செல்வம் என உரைப்பினும் அமையும். புகுந்த என்பது கால வழுவமைதி. 30-40. மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும்-மாதவிக்கு யான் வந்த வகையையும், ஏதம்இல் நெறி மகள் எய்திய வண்ணமும்- மணிமேகலை குற்றமற்ற வழியிற் சேர்ந்த தன்மையையும், உரை யாய் நீ - நீ கூறுவாயாக, அவள் என் திறம் உணரும்-அம் மாதவி என் வரலாற்றை உணருவாள், திரையிரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு எனக் கோவலன் கூறி இக்கொடியிடை தன்னை என் நாமஞ் செய்த நல்நாள் - கோவலன் அலைகளையுடைய பெரிய கடலினிடத்துத் தெய்வம் ஒன்று உண்டென்று கூறி இப் பெண் மகளுக்கு என் பெயரையிட்ட நல்லநாளில், நள்இருள்-இரவின் நடுயாமத்தே, காமன் கையறக் கடுநவை அறுக்கும் - காமன் செயலற்றுப்போகப் பெரிய துன்பங்களை அறுக்கவல்ல, மாபெருந் தவக்கொடி ஈன்றனை என்றே-மிகப் பெரிய தவமுடைய மகளைப் பெற்றனை என்று, நனவேபோலக் கனவகத்து உரைத்தேன் - நேரிற் கூறுவதைப் போலக் கனவின்கண் மொழிந்தேன், ஈங்கு இவ்வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று - இவற்றையெல்லாம் மாதவிக்குக் கூறுவாயாக என்றுரைத்து அந்தரத்து எழுந்து ஆங்கு அருந்தெய்வம் போயபின் - விசும்பில் எழுந்து அவ்வரிய மணிமேகலா தெய்வம் போயின பின்னர்; ஏதம் இல் நெறி எய்தியது என்றது புத்தன் அறவழிப்படுதல் என்க; இதனை விசுத்திமார்க்கம் என்ப. தெய்வம்-என்குல முதல்வனைக் கேட்டினின்றும் நீக்கிப் பாதுகாத்த தெய்வம் என விரித்துரைத்துக் கொள்க. கொடியிடை தன்னை-கொடியிடைக்கு; கொடியிடை: மணிமேகலை. நள்ளிருள் என்பது செறிந்த இருளையுடைய இரவினை யுணர்த்திற்று. கடுநவை - அவா முதலியன. நன்னாள் நள்ளிருட் கனவகத்து உரைத்தேன் என்க. 41. வெந்துயர் எய்திச் சுதமதி எழுந்தாங்கு-சுதமதி கொடிய துன்ப மடைந்து எழுந்து; 42-49. அகல்மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு- அகன்ற வீடாகிய அரங்கின்கண் ஆசிரியன்மாரொடு நின்று, வகை தெரி மாக் கட்கு வட்டணை காட்டி-அவினய முதலிய கூறுபாடுகளையறிகின்ற மக்களுக்குக் கமலவர்த்தனை காட்டி, ஆடல் புணர்க்கும் அரங்கியல் மகளிரில்-ஆடல் புரியும் நாடக மகளிரைப்போல, கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று-ஒருங்கியைந்த குரல்யாழ் முதலிய குயிலுவக் கருவி களெல்லாம் கண்டுயின்று, பண்ணுக் கிளைபயிரும் பண்ணி யாழ்த் தீந்தொடை-பண்ணின் வகைகளை இசைக்கும் யாழின் இனிய நரம்புகள், கொளைவல் ஆயமோடு இசை கூட்டுண்டு- பாட்டில் வல்ல மகளிருடன் இசையைச் சேர்ந்தனுபவித்து, வளை சேர் செங்கை மெல்விரல் உதைத்த-வளைகளுடன் கூடிய சிவந்த கைகளின் மெல்லிய விரல்களால் தெறித்த, வெம்மை வெய்துறாது தன்மையில் திரியவும்- வெம்மை நன்கு உறாமையால் இயல்பி னின்று திரியாநிற்கவும்; ஆசிரியர்-இயலாசிரியன், ஆடலாசிரியன், யாழாசிரியன், இசையா சிரியன், குழலாசிரியன், தண்ணுமை யாசிரியன் என்போர். வட்டணை- வர்த்தனை; கமல. வர்த்தனை; ஆவது கைத்தலங் காட்டல். கிளை-திறமு மாம். தீந்தொடை திரியவும் என்க. 50-53. பண்பில் காதலன் பரத்தமை நோனாது. குணமற்ற காதலனுடைய பரத்தமையைப் பொறாமல், உண் கண் சிவந்தாங்கு ஒல்கு கொடிபோன்று - அசைகின்ற கொடி போல மையுண்ட கண்கள் சிவந்து, தெருட்டவும் தெருளாது ஊடலொடு துயில்வோர்-தெளி விக்கவும் தெளியாமல் ஊடலுடன் துயில்கின்ற மகளிர், விரைப் பூம்பள்ளி வீழ்துணை தழுவவும் - மணம் பொருந்திய மலரணையில் தம்மால் விரும்பப்படுகின்ற கொழுநரைத் தழுவவும்; பண்பு - ஈண்டு அன்பு. பரத்தமை-பரத்தன் தன்மை; பரத்தையை மருவி யொழுகுவோன் பரத்தன்; 1"பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர், நண்ணேன் பரத்தநின் மார்பு" என்பது காண்க. ஊடலொடு துயில்வோர் தாமே துணையைத் தழுவவு மென்க. 54-59. தளர்நடை ஆயமொடு தங்காது ஓடி விளையாடு சிறுதேர் ஈர்த்து மெய்வருந்தி - தளர்நடைச் சிறார்களுடன் ஓரிடத்தில் தங்காமல் ஓடி விளையாடுஞ் சிறு தேரினை இழுத்து உடல்வருந்தி, அமளித் துஞ்சும்-படுக்கையில் உறங்கு கின்ற, ஜம்படைத் தாலிக் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்கு - ஜம்படைத் தாலி யணிந்த மார்பும் மழலைச் செவ்வாயும் தளர்நடையுமுடைய இளம் புதல்வர்க்கு, காவற் பெண்டிர் கடிப்பகை எறிந்து தூபம் காட்டித் தூங்கு துயில் வதியவும் - செவிலித்தாயர் கடிப்பகை வீசிப் புகை காட்டித் தூங்குகின்ற உறக்கத்திற் பொருந்தவும்; ஐம்படை - திருமாலின் பஞ்சாயுத வடிவமுடைய அணிகலன்; "சிந்துபு சின்னீ ரைம்படை நனைப்ப" (3;138) என்புழி உரைத்தமை நோக்குக. கடிப்பகை - பேய்க்குப் பகை; வேம்பும், வெண்சிறு கடுகும்; இக் காதையுள் மேல்வருதல் காண்க. காவற்பெண்டிர் துயில் வதியவும் என்க. 60-63. இறையுறை புறவும் நிறைநீர்ப் புள்ளும் - இறப்புகளில் வாழ் கின்ற புறாக்களும் நிறைந்த நீரிலுள்ள பறவைகளும், கா உறை பறவைகளும நா உள் அழுந்தி-பொழில்களில் உறை கின்ற புட்களும் நா உள்ளே அழுந்தி, விழவுக்களி அடங்கி முழவுக்கண் துயின்று- விழாவினாலுண்டாகிய களிப்பு அடங்கி முழவுகளின் கண் துயின்று, பழவிறல் மூதூர் பாயல் கொள் நடுநாள் - பழைய வலி யினையுடைய தொன்னகரம் துயிலினைக்கொண்ட இடையாமத்தில்; நாவுள்ளழுந்தலாவது : ஒலியாதிருத்தல். அழுந்தி, அடங்கி, துயின்று என்னும் இடத்து நிகழ்பொருளின் றொழில்கள் இடத்தின் மேல் நின்றன; அழுந்தி முதலியவற்றைச் செயவனெச்சமாகத் திரித்தலுமாம். 64-65. கோமகன் கோயில் குறுநீர்க் கன்னலின் - அரசன் மாளிகையில் குறிய நீரினைக் கொண்ட நாழிகை வட்டிலால், யாமம் கொள்பவர் ஏத்துஒலி அரவமும்-நாழிகைக் கணக்கிடு வோர் ஏத்துகின்ற ஒலியாகிய முழக்கமும்; அரசனை ஏத்தி நாழிகை கூறுவராகலின் ‘ஏத்தொலியரவமும்' என்றார். ஒலியாகிய அரவமென்க ; அரவம் தமிழ்ச்சொல்லே. 66-67. உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து-தங்கு மிடத்தில் நின்று ஒடுங்கிய உண்ணாமையா னுண்டாகிய வருத்தத்தினால், நிறை அழியானை நெடுங்கூவிளியும் - நிறையழிந்த யானையினது நெடிய கூப்பீடாகிய முழக்கமும்; 68-69. தேர்வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் - தேர்கள் செல்லுகின்ற பெரியவீதிகளிலும் சிறிய இடங்களையுடைய முடுக் குத் தெருக்களிலும், ஊர்காப்பாளர் எறிதுடி ஓதையும் - ஊர் காவலர் அடிக்கின்ற துடியொலியும்; 70-72. முழங்கு நீர் முன்றுறைக் கலம்புணர் கம்மியர் - ஒலிக் கின்ற நீரினையுடைய கடற்றுறைகளில் மரக்கலத்திற் சேர்ந்து தொழில் புரிவோர், துழந்தடு கள்ளின் தோப்பியுண்டு அயர்ந்து - துழாவிச் சமைத்த கள் வகைகளில் நெல்லாற் சமைத்த கள்ளையுண்டு தம்மை மறந்து, பழஞ்செருக்குற்ற அனந்தர்ப் பாணியும் - பழைய செருக்கினையடைந்த மயக்கத் துடன் பாடும் பாட்டினோசையும்; கள்ளாகிய தோப்பி யென்றுமாம். தோப்பி - நெல்லாற் சமைத்த கள். பழஞ்செருக்கு-முதிர்ந்த களிப்பு. அனந்தர்-கள்ளுண்ட மயக்கம். 73-76. அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை விரவிய மகளிர் ஏந்திய தூமத்து-அரத்தின் வாய்போன்ற வேம்பாகிய கடிப் பகையும் வெண்சிறுகடுகாகிய கடிப்பகையும் கலந்து இடப்பட்டு மகளிரால் ஏந்தப்பட்ட புகையுடன் சென்று, புதல்வரைப் பயந்த புனிறு தீர் கயக்கம் தீர்வினை மகளிர் குளன் ஆடு அரவமும் - புதல்வரைப் பெற்ற புனிறு தீருமாறு கயங்குதல் தீர்கின்ற மகளிர் குளங்களில் நீராடுகின்ற ஒலியும்; கடிப்பகை-பேய்க்குப் பகையென்னும் பொருளது, மகளிர் ஏந்திய அரவாய்க் கடிப்பகையுடனும் ஐயவிக் கடிப்பகை விரவிய தூமத் துடனும் என்றுரைத்தலுமாம். புனிறு தீர்ந்த மகளிர் மயக்கந்தீர்ந்த மகளிர் எனத் தனித்தனி முடித்தலுமாம். புதல்வர்ப் பயந்த புனிறு தீர்ந்த மகளிர் இரவிற்சென்று குளத்தில் நீராடுதல் 1"கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து, பணைத்தேந் திளமுலை யமுதமூறப், புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு, வளமனை மகளிர் குளநீ ரயர" என்பதனாலும் அறியப்படும். பத்தாவது இரவில் நீராடவேண்டும் என்பர். 77-80. வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும் - பகைமையைக் கருதிய உள்ளமுடைய வீரர் இல்லாதிருக்கவும், புலிக்கணத்து அன்னோர்-புலிக்கூட்டத்தினை யொத்த வீரர்கள், பூதசதுக் கத்துக் கொடித்தேர் வேந்தன் கொற்றம் கொள்க என-பூதத்தையுடைய நாற்சந்தியிலே கொடியணிந்த தேரினை யுடைய எம் அரசன் வெற்றிபெறுக என்று, இடிக்குரல் முழக்கத்து இடும்பலி ஓதையும் இடியனைய குரல் முழக்கத் துடன் பலியிடுகின்ற ஓசையும்; வலித்த-போரினைக் கருதிய என்றுமாம். ஆடவர்-ஈண்டுப் பகைவர். 81-85. ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் - ஈன்றணிமையை யுடைய இளமகளிர் ஆற்றாச் சிறுவர், கடுஞ்சூல் மகளிர் நெடும்புண் உற்றோர் - முதற் சூலையுடைய மங்கையர் பெரிய புண்களால் வருந்தினோர், தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் - ஆகிய இவர்களின் துன்பங்களை நீக்குகின்ற மந்திரவாதிகள், மன்றப் பேய் மகள் வந்து கைக்கொள்க என-மன்றத்தின்கணுள்ள பேய்மகள் வந்து பெறுக என்றுகூறி, நின்று எறி பலியின் நெடுங்குரல் ஓதையும்-நின்று பலி எறிகின்ற நீண்ட குரல் முழக்கமும்; கடுஞ்சூல் - முதற்சூல்; 1"கடுஞ்சூன் முண்டகம் கதிர்மணி கழாஅலவும்" என்றார் பிறரும். பலியிடும்பொழுது நெடுங்குர லெடுத்துக்கூப்பிடுவராகலின் ‘பலியினெடுங்குரல்' என்றார்: 86. பல்வேறு ஓதையும் பரந்து ஒருங்கிசைப்ப - ஆகிய பலவேறு வகைப்பட்ட ஓசையும் பரந்து ஒன்றாக முழங்க; 87-93. கேட்டு உளம் கலங்கி ஊட்டிருள் அழுவத்து-அவற்றை யெல்லாங் கேட்டு மனங்கலங்கி ஊட்டினாற்போன்ற இருட் பரப் பிலே, முருந்து ஏர் இளநகை நீங்கிப் பூம்பொழில் - மயிற்பீலியின் முளைபோன்ற அழகிய பற்களையுடைய சுதமதி உவவனத்தினின்றும் நீங்கி, திருந்து எயிற் குடபால் சிறு புழை போகி - திருந்திய மதிலின் மேற்றிசையிலுள்ள சிறிய வாயிலின் வழியே சென்று, மிக்க மாதெய்வம் வியந்து எடுத்து உரைத்த-பெருமைபொருந்திய மணிமேகலாதெய்வம் வியந்து எடுத்துக்கூறிய, சக்கரவாளக் கோட்டத் தாங்கண் - சக்கரவாளக் கோட்டத்திண்கண், பலர் புகத் திறந்த பகுவாய் வாயில்-பலருஞ் செல்லுமாறு திறக்கப் பட்டிருக்கின்ற பெரிய வாய்போலும் வாயிலையுடைய, உலக அறவியின் ஒருபுடை இருத்தலும்-ஊரம்பலத்தில் ஒருபக்கத்தில் இருத்தலும்; ஊட்டுதல் - பூசுதல். அறவி - அம்பலம் சுதமதி எழுந்து பல் வேறு ஓதையும் ஒருங்கிசைப்பக் கேட்டு உளங்கலங்கி நீங்கிப் போகி ஒருபுடை யிருத்தலும் என்க. 94-97. கந்துடை நெடுநிலைக் காரணம் காட்டிய அந்தில் எழுதிய அற்புதப் பாவை - நெடிய தோற்றத்தையுடைய தூணாகிய அவ் விடத்தே பழவினையாகிய காரணத்தை அனைவருக்கும் அறிவிக்கும் பொருட்டு மயன் என்னும் தெய்வத் தச்சனால் எழுதப்பட்டு அனைவருக்கும் வியப்பை யுண்டுபண்ணும் பாவையானது, மைத்தடங் கண்ணாள் மயங்கினள் வெருவ-சுதமதி அஞ்சி மயங்குமாறு, திப்பியம் உரைக்கும் தெய்வக் கிளவியின் - எதிர்காலத்தில் நிகழ் வனவற்றையும் கூறும் திப்பியமாகிய தெய்வக் கிளவியினாலே; நெடுநிலை யுடைக் கந்தாகிய அந்தில் எனக் கூட்டுக. அந்தில்-ஆங்கென்னும் பொருட்டு. காட்டிய : செய்யியவென்னும் வினையெச்சம். வருவதனை உரைப்பது தெய்வத் தன்மையாம் என்று கொண்டு 'திப்பிய முரைக்கும்' என்றார். தெய்வக்கிளவி - தெய்வத்தின் மொழி. 98-105. இரவிவன்மன் ஒரு பெருமகளே - அசோதர நகரத்தரச னாகிய இரவிவன்மனது ஒரு பெருமகளே, துரகத் தானைத் துச்சயன்தேவி - குதிரைச் சேனைகளை யுடையவனும் கச்சய நகரத் தரசனுமாகிய துச்சயனுடைய மனைவியே, தயங்கு இணர்க்கோதை தாரை சாவுற-விளங்குகின்ற பூங்கொத் தினாலாய மாலையையுடைய தாரை இறக்குமாறு, மயங்கி யானைமுன் மன்னுயிர் நீத்தோய்- யானையின் முன்னே மயங்கி உயிர் துறந்தோய், காராளர் சண்பையில் கௌசிகன் மகளே - காராளருடைய சண்பை நகரத்தில் உள்ள கௌசிகன் என்பவனுடைய புதல்வியே, மாருதவேகனோடு இந்நகர் புகுந்து - மாருதவேகன் என்னும் விஞ்சையனுடன் இந் நகரத்திற் சேர்ந்து, தாரை தவ்வை தன்னொடு கூடிய - தமக்கை யாகிய தாரையுடன் கூடிய, வீரையாகிய சுதமதி கேளாய் - வீரை யாகிய சுதமதியே கேட்பாயாக ; இரவிவன்மன் - சுதமதியின் முற்பிறப்பிலே தந்தையாயிருந்தவன். துச்சயன் - சுதமதியின் முற்பிறப்பிற் கணவனாயிருந்தவன். தாரை- சுதமதியின் முற்பிறப்பில் தமக்கையாயிருந்தவள். வீரை யானையால் இறந்தது கேட்டு இவள் இறந்தமையால் ‘தாரை சாவுற' என்றாள் ; சாவுற : எதிர்காலத்தில் வந்தது. காராளர் - வேளாளர் ; சண்பை - சீகாழி ; சண்பை யென்பது அங்கநாட்டிற் கங்கைக் கரையிலுள்ள தாகிய சம்பா நகரம் என்றும், காராளர் என்பது கராளர் என்பதன் திரிபென்றும் கூறுவாருமுளர்; தாரை, வீரை, இலக்குமி என்னும் மூன்று சகோதரிகளுள், தாரை மாதவியாகவும், இலக்குமி மணிமேகலை யாகவும் காவிரிப்பூம் பட்டினத்திற் பிறந் திருத்தலானும், இந்திரவிழாக் காண்டற்கு வந்த மாருதவேகன் என்னும் விஞ்சையன் தான் பூக் கொய்யும்பொழுது தன்னை எடுத்தேகினனென்று மேல் (3:28-39) சுதமதி கூறுதலானும் புகார் நகருக்கு அணித்தாகிய சீகாழியென்று கொள்வதே பொருத்தமாம். கௌசிகன் - சுதமதியின் தந்தை. 106-110. இன்றேழ் நாளில் இடையிருள் யாமத்து - இற்றைக்கு ஏழாவது நாளில் இருளையுடைய இடையாமத்தில்தன் பிறப்பதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு இலக்குமி யாகிய நினக்கு இளையாள் வரும் - தனது முற்பிறப்புடன் நினது முற்பிப்பினையும் அறிந்துகொண்டு நினக்கு இளை யாளும் இலக்குமியும் ஆகிய மணிமேகலை ஈண்டு வருவாள், அஞ்சல் என்று உரைத்தது - நீ அஞ்சாதே என்று கூறியது, அவ்வுரை கேட்டு - அம்மொழி கேட்டு, நெஞ்சம் நடுக்குறூஉம் நேரிழை நல்லாள் - உள்ளம் நடுங்கிய நேரிழையாகிய சுதமதி; பாவை தெய்வக் கிளவியின் உரைத்தது என்க. 111-126. காவலாளர் கண் துயில்கொள்ள - ஊர்காவலருடைய கண்கள் உறக்கத்தைப் பொருந்த, தூமென் சேக்கைத் துயில்கண் விழிப்ப - தூய மெல்லிய படுக்கையில் துயில்கின்ற ஆடவர் மகளிருடைய கண்கள் விழிப்படைய, வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப-வலம்புரியாகிய சங்குகள் பொருளின்றி, முழங்க, புலம் புரிச் சங்கம் பொருளொடு முழங்க-அறிவின்மிக்க புலவர் கூட்டம் பொருளொடும் முழங்க, புகர்முக வாரணம் நெடுங்கூவிளிப்ப - புள்ளி பொருந்திய முகத்தையுடைய யானைகள் நீண்ட கூப்பீட் டினைச் செய்ய, பொறி மயிர் வாரணம் குறுங்கூ விளிப்ப-பொறிப் பொறியாகிய மயிர்களையுடைய கோழிகள் குறிய கூவுதலைச்செய்ய, பணைநிலைப் புரவி பல எழுந்து ஆல - பந்தியில் நிற்றலையுடைய குதிரைகள் பல எழுந்து ஆட, பணை நிலைப் புள்ளும் பல எழுந்து ஆல-கிளைகளிலுள்ள பல புட்களும் எழுந்து ஒலிக்க, பூம்பொழில் ஆர்கைப் புள்ஒலி சிறப்ப-பூஞ்சோலையில் மதுவுண்ணுதலையுடைய வண்டு களின் ஒலிமிக, பூங்கொடியார் கைப்புள் ஒலிசிறப்ப - பூங்கொடி போன்ற மகளிருடைய கையிலணிந்த வளைகளின் ஒலி மிக, கடவுட் பீடிகை பூப்பலி கடைகொள - கடவுளர்க்குரிய பீடங்களிற் கொடுக்கப்படும் பொலிவுபெற்ற பலிகள் முற்றுப் பெற, கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொள-அணிகலங்கள் விற்கப் படுகின்ற ஆவண வீதியில் மலரால் செய்யப்படும் பூசனையைக் கடையிடங்கள் கொள்ள, குயிலுவர் கடை தொறும் பண்இயம் பரந்து எழ-தோற் கருவிகளைப் பயில் வோர் வாயில்தோறும் இசையுடன் கூடிய இயங்களின் ஒலி பரவி மேம்பட, கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்து எழ - கொடையாளர்களுடைய வாயில்தோறும் கொடுத்தற்குரிய பல பண்டங்களும் பரந்து நிறைய, ஊர் துயில் எடுப்ப-ஊரினைத் துயில் எழுப்புமாறு, உரவு நீர் அழுவத்துக் கார்இருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும்-கடற் பரப்பிலே கரிய இருளைக் கெடுத்து ஞாயிறு தோன்றுதலும்; காவலாளர் இரவிடை விழித்தோராகலின் விடியலில் துயில்வா ராவர். புலம்புரியாகிய சங்கமென்க. புகர்முக வாரணம் கவளம் வேண்டிக் கூப்பிடாநிற்கும். புள்-பறவை. வண்டு, வளையல், தெய்வங்கட்கு இரவிற் பலி கொடுப்பாராகலின் அது முடிவுற்ற தென்றார், பூ - பொலிவு. இல்லுறை தெய்வத்தின் பொருட்டுக் காலையில் பூவிடுதல் மரபாகலின் 'கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொள' என்றார் ; கடை வாயிலுமாம்; 1"பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி" என்பது காண்க. பண்இயம்-பண்ணப்பட்ட வாத்தியம் என்றுமாம். 127-134. ஏவுறு மஞ்ஞையின் இனைந்து - அம்பு பட்டுருவிய மயிலைப்போல உள்ளம் நைந்து, அடி வருந்த மாநகர் வீதி மருங்கில் போகி - அடிகள் வருந்தக் கடந்து பெரிய நகரத்தின் வீதிவழியே சென்று, போய கங்குலில் புகுந்ததை எல்லாம்-சென்ற இரவில் நிகழ்ந்தவற்றை எல்லாம், மாதவி தனக்கு வழுவின்று உரைத்தலும்-மாதவிக்கு வழுவாது கூறுதலும், நன்மணி இழந்த நாகம் போன்று அவள்-மாதவி நல்ல மணியை இழந்த அரவினைப்போல, தன்மகள் வாராத் தனித்துயர் உழப்ப - தன் மகள் வாராததால் ஒப்பற்ற துன்பத்தால் வருந்த, இன்உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் துன்னியது உரைத்த சுதமதிதான் என் - அவட்கு நேர்ந்ததைக் கூறிய சுதமதிதான் இனிய உயிரையிழந்த உடலைப்போல் அசை வற்றிருந்தனள் என்க. புகுந்ததையெல்லாம்: ஒருமையிற் பன்மை. ‘நன்மணி யிழந்த நாகம் போன்று' (25; 95) என மேல் இந்நூலுள்ளும், 2"இரு நிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும், அருமணி யிழந்த நாகம் போன்றதும்" எனச் சிலப்பதிகாரத்திலும் மணியிழந்த நாகமும், 3"இன்னுயி ரிழந்த யாக்கை யென்னத், துன்னிய சுற்றம் துயர்க் கடல் வீழ்ந்ததும்" எனச் சிலப்பதிகாரத்தில் உயிரிழந்த யாக்கையும் உவமமாக வருதல் காண்க. மணிமேகலா தெய்வம் நீங்கித் தோன்றி அவன்வயி னுரைத்த பின் புகுந்து நீக்கி உரையென்று போயபின், சுதமதி எழுந்து பல் வேறு ஓதையும் இசைப்பக் கேட்டு உளங்கலங்கி நீங்கிப்போகி ஒரு புடை இருத்தலும், பாவை தெய்வக்கிளவியின் "வரும், அஞ்சல்" என் றுரைத்தது ; அதனைக் கேட்டு நடுக்குறு நல்லாள் கதிரவன் முளைத்தலும் போகி, மாதவிக் குரைத்தலும், அவள் துயருழப்பத் தான் உயிரிழந்த யாக்கைபோல் இருந்தனள் என வினை முடிக்க. துயிலெழுப்பிய காதை முற்றிற்று. 8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை சுதமதி புகாரின்கண் செயலற்றிருக்க, மணிபல்லவத்திற் கடலருகே மணலிற் றுயின்ற மணிமேகலை, துயிலுணர்ந்து தான் முன் பறிந்த பொருள் ஒன்றும் காணப்படாது அறியாத பொருள்களே காணப்படுதலின் வேறிடத்திற் சென்று பிறந்த உயிர் போன்றவளாகித் திகைப்புறும் பொழுது கதிரவன் உதித்தான். உதித்தவுடன் அவள் 'இவ்விடம் உவவனத்தில் முன்னம் கண்டறியாத ஒரு பகுதியோ! இது நனவோ கனவோ என்பதை அறிகின்றிலேன்; மனம் நடுங்கு கின்றது: சுதமதி எங்கொளித்தாய் ? ஓர் மாற்றம் தருகின்றிலை; இருள் கழிந்தது; மாதவி வருந்துவள் ; இது விஞ்சையுடன் தோன்றிய அம் மடந்தை செய்த வஞ்சமோ! ஒன்றும் தெரிய வில்லையே! தனியே இருக்க மிகவும் அஞ்சுகின்றேன்; விரைந்து வருவாயாக,' என்று கூறிக் கொண்டு நீர்த்துறைகளிலும் மணற்குன்று களிலும் எங்கணும் சென்று தேடித் தனக்குப் பாங்காயினார் ஒருவரையும் காணாதவளாகிக் கூவி அழுது வருந்துபவள், தன் தந்தையை நினைந்து 'கோற்றொடி மாத ரொடு வேற்று நாடடைந்து, வைவாள் உழந்த மணிப்பூண் அகலத்து, ஐயாவோ!' என்று அழுதனள் ; அழுபவள் முன்னர், இந்திரனால் இடப்பட்டதும், தரிசித்தோர்க்குப் பழம் பிறப்பைப் புலப்படுத்துவதுமாகிய புத்த பீடிகை தோன்றியது. ஈங்கிவ ளின்னண மாக இருங்கடல் வாங்குதிரை யுடுத்த மணிபல் லவத்திடைத் தத்துவநீ ரடைகரைச் சங்குழு தொடுப்பின் முத்துவிளை கழனி முரிசெம் பவளமொடு 5 விரைமர முருட்டுந் திரையுலாப் பரப்பின் ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பின் ஆம்பலுங் குவளையும் தாம்புணர்ந்து மயங்கி வண்டுண மலர்ந்த குண்டுநீ ரிலஞ்சி முடக்காற் புன்னையும் மடற்பூந் தாழையும் 10 வெயில்வர வொழித்த பயில்பூம் பந்தர் அறல்விளங்கு நிலாமணல் நறுமலர்ப் பள்ளித் துஞ்சுதுயி லெழூஉம் அஞ்சி லோதி காதற் சுற்றம் மறந்து கடைகொள வேறிடத்துப் பிறந்த உயிரே போன்று 15 பண்டறி கிளையொடு பதியுங் காணாள் கண்டறி யாதன கண்ணிற் காணா நீல மாக்கடல் நெட்டிடை யன்றியுங் காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப உவவன மருங்கினில் ஓரிடங் கொல்லிது 20 சுதமதி ஒளித்தாய் துயரஞ் செய்தனை நனவோ கனவோ என்பதை அறியேன் மனநடுக் குறூஉம் மாற்றந் தாராய் வல்லிருள் கழிந்தது மாதவி மயங்கும் எல்வளை வாராய் விட்டகன் றனையோ 25 விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள் வஞ்சஞ் செய்தனள் கொல்லோ அறியேன் ஒருதனி யஞ்சுவென் திருவே வாவெனத் திரைதவழ் பறவையும் விரிசிறைப் பறவையும் எழுந்துவீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும் 30 அன்னச் சேவல் அரச னாகப் பன்னிறப் புள்ளினம் பரந்தொருங் கீண்டிப் பாசறை மன்னர் பாடி போல வீசுநீர்ப் பரப்பின் எதிரெதி ரிருக்கும் துறையுந் துறைசூழ் நெடுமணற் குன்றமும் 35 யாங்கணுந் திரிவோள் பாங்கினங் காணாள் குரற்றலைக் கூந்தல் குலைந்துபின் வீழ அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி வீழ்துய ரெய்திய விழுமக் கிளவியில் தாழ்துய ருறுவோள் தந்தையை உள்ளி 40 எம்மிதிற் படுத்தும் வெவ்வினை யுருப்பக் கோற்றொடி மாதரொடு வேற்றுநா டடைந்து வைவா ளுழந்த மணிப்பூண் அகலத்து ஐயா வோவென் றழுவோள் முன்னர் விரிந்திலங் கவிரொளி சிறந்துகதிர் பரப்பி 45 உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித் திசைதொறும் ஒன்பான் முழநில மகன்று விதிமா ணாடியின் வட்டங் குயின்று பதும சதுர மீமிசை விளங்கி அறவோற் கமைந்த ஆசன மென்றே 50 நறுமல ரல்லது பிறமரஞ் சொரியாது பறவையும் முதிர்சிறை பாங்குசென் றதிராது தேவர்கோ னிட்ட மாமணிப் பீடிகை பிறப்புவிளங் கவிரொளி அறத்தகை யாசனம் கீழ்நில மருங்கின் நாகநா டாளும் 55 இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி எமதீ தென்றே எடுக்க லாற்றார் தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார் செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள் 60 இருஞ்செரு ஒழிமின் எமதீதென்றே பெருந்தவ முனிவன் இருந்தற முரைக்கும் பொருவறு சிறப்பிற் புரையோ ரேத்தும் தரும பீடிகை தோன்றிய தாங்கென் உரை 1-12. ஈங்கு இவள் இன்னணமாக - புகார் நகரிலே சுதமதி இவ்வாறு வருந்த, இருங்கடல் வாங்கு திரை உடுத்த மணி பல்லவத் திடை-பெரிய கடலினது வளைந்த அலைகளாற் சூழப்பட்ட மணிபல்லவத்தின்கண், தத்துநீர் அடைகரைச் சங்கு உழுதொடுப்பின் முத்து விளை கழனி-சங்குகளால் உழுது விதைக்கப்பட்ட முத்துக்கள் விளைகின்ற மோதுநீர் சூழ் அடைகரையாகிய கழனியில், முரி செம்பவளமொடு விரைமரம் உருட்டும் திரை உலாப்பரப்பில்-வளைந்த சிவந்த பவளங்களுடன் சந்தனம் அகில் முதலிய மணம்பொருந்திய மரங்களை உருட்டுகின்ற அலைகள் உலாவும் கடற்கரையில், ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பின்-புலிநகக் கொன்றை உயர்ந்த தாழ்ந்த இடத்தையுடைய சேற்றில், ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி - அல்லியும் குவளையு மாகிய மலர்கள் சேர்ந்து கலந்து, வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி-வண்டுகள் உண்ணுமாறு மலரப்பெற்ற ஆழமாகிய நீரினையுடைய பொய்கைக் கரையில், முடக்கால் புன்னையும் மடற்பூந் தாழையும் - வளைந்த அடியை யுடைய புன்னையும் மடல்களாலாகிய பூவினையுடைய தாழையும், வெயில் வரவு ஒழிந்த பயில் பூம்பந்தர்-வெயிலினது வரவை நீக்கிய அழகிய பந்தரின்கண், அறல் விளங்கு நிலாமணல் நறுமலர்ப் பள்ளி - அறல் விளங்குகின்ற நிலாவைப் போன்ற வெள்ளிய மணலில் நறிய மலர்களாலாகிய படுக்கையி லிருந்து, துஞ்சு துயில் எழூஉம் அஞ்சில் ஓதி - மெய்மறந்த உறக்கத்தினின்றும் எழுந்த அழகிய சிலவாகிய கூந்தலை யுடைய மணிமேகலை; அடைகரைக்கண் கழனியில் என்றுமாம். தொடுப்பு - விதைப்பு; 1"தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய" என்பது காண்க; விளாக் கொண்டு உழுதலுமாம். முரி என்பதற்குச் சிதறிய என்றும், ஒளிவிடு மென்றும் உரைத்தலுமாம். அறல் - நீர் அரித்து ஒழுகுவதால் மணல் அற்று அற்று இருப்பது. மணிபல்லவத் திடைப் பரப்பில் இலஞ்சிக் கரையில் மணலிற் பள்ளியில் துயிலெழுந்த மணிமேகலை யென்க. 13-27. காதற் சுற்றம் மறந்து கடைகொள வேறிடத்துப் பிறந்த உயிரே போன்று - அன்பின் மிக்க சுற்றங்களை மறந்து முடிவு கொள்ள வேறிடத்தில் தோன்றிய உயிரைப்போல, பண்டு அறி கிளையொடு பதியும் காணாள்-முன்னர்த் தன்னாலறியப் பட்ட சுற்றத்துடன் நகரத்தையும் காணாதவளாகி, கண்டு அறியாதன கண்ணிற் காணா - முன் கண்டறியப் படாதன வற்றைக் கண்களாற் கண்டு, நீல மாக் கடல் நெட்டிடை அன்றியும் - நீலநிறமுடைய பெரிய கடலில் அணிமைக்கண், காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப - இளஞாயிறு கதிர்களை விரித்து உதிக்க, உவவன மருங்கில் ஓரிடம் கொல் இது-இஃது உவவனத்தில் ஓரிடமோ, சுதமதி ஒளித்தாய்- சுதமதீ ஒளிந்து கொண்டாயோ, துயரம் செய்தனை - துன்பம் செய்தனை, நனவோ கனவோ என்பதை அறியேன்-இது நனவோ கனவோ என்பதை அறிகின்றிலேன், மனம் நடுக்குறூஉம் மாற்றம் தாராய்-உள்ளம் நடுங்குதலுறுகின்றது மறுமொழி தருவாய், வல்லிருள் கழிந்தது மாதவி மயங்கும்-வலிதாகிய இருள் நீங்கியது மாதவி மயங்குவாள், எல்வளை வாராய்-ஒளி பொருந்திய வளையினை யுடையாய் வருவாயாக, விட்டு அகன்றனையோ - என்னைவிட்டுச் சென்றனையோ, விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள் - விளங்குகின்ற அணிகளுடன் வித்தையினாலே தோன்றியமடந்தை, வஞ்சம் செய்தனன் கொல்லோ அறியேன் - வஞ்சனை செய்தனளோ அறியேனே, ஒரு தனி அஞ்சுவேன் திருவே வா என-ஒப்பற்ற தனிமையை அஞ்சுகின்றேன் திருவனையாய் வருக என்று; கடைகொள - முற்ற; வினைமுடி வெய்த என்றுமாம். நெட்டிடை அன்றியும் - நெடுந்தூரம் அன்றாக; அணிமையில்; உம்: அசை. உவவனம் என்பது முதல் மணிமேகலை கூற்று. ஓரிடங்கொல்-முன் கண்டறியாத ஓரிடமோ வென்க. வாராய் - வருகின்றிலை எனவும், வராது எனவும் உரைத்தலுமாம். மெல்வளை யென்றலுமாம். 28-35. திரை தவழ் பறவையும் விரிசிறைப் பறவையும்-அலையில் தவழ்கின்ற புட்களும் விரிந்த சிறகினையுடைய பறவைகளும், எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும் - எழுந்து வீழ்கின்ற சில்லையும் ஒடுங்கிய சிறகினையுடைய முழுவலும், அன்னச் சேவல் அரசனாகப் பன்னிறப் புள்ளினம் பரந்து ஒருங்கு ஈண்டி - அன்னச்சேவலை அரசனாகக் கொண்டு பல நிறங்களையுடைய பறவை இனங்கள் பரந்து ஒன்றாகக் கூடி, பாசறை மன்னர் பாடி போல - பகையரசர் இருவருடைய படை வீடுகளில் இருவர் படையும் எதிரெதிர் இருத்தல்போல, வீசுநீர்ப் பரப்பின் எதிர் எதிர் இருக்கும் -வீசுகின்ற நீர்ப்பரப்பின் கண்ணே எதிரெதிரே இருக்கின்ற, துறையும் துறைசூழ் நெடுமணற் குன்றமும் - நீர்த் துறைகளும் துறைகளைச் சுற்றிலுமுள்ள பெரிய மணற் குன்றுகளும் ஆகிய,யாங்கணும் திரிவோன்-எவ்விடத்தும் திரிகின்றவள்; திரைதவழ் பறவை - குளுவை முதலியன. விரிசிறைப் பறவை - போதா முதலியன. எழுந்துவீழ் சில்லை - சிரல் முதலியன. திரை தவழ் பறவை முதலிய நான்கும் நீர்வாழ் பறவைகள். பறவையும் பறவையும் சில்லையும் முழுவலுமாகிய பன்னிறப் புள்ளினம் என்க. பாசறை மன்னர் - போர் குறித்துப் பாசறையிற் சென்று தங்கியிருக்கும் மன்னர். பாடிபோல - பாடியிற் படைகள் எதிரெதிர் இருத்தல்போல - 1"கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும், செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும், கானக் கோழியும் நீலநிறக் காக்கையும், உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும், வெல்போர் வேந்தர் முனையிடம் போலப். பல்வேறு குழூஉக்குரல் பரந்த வோதையும்" என்பது ஈண்டு ஒத்து நோக்கற்பாலது. 35-43. பாங்கினம் காணாள்-பக்கத்திலுள்ள இனங்களைக் காணாதவளாய், குரல்தலை கூந்தல் குலைந்து பின் வீழ - பூங்கொத்தை இடத்தேயுடைய குழல் அவிழ்ந்து பின்னே வீழ, அரற்றினள் கூஉய் - கூவிப் புலம்பி, அழுதனள் ஏங்கி - ஏங்கி அழுது, வீழ்துயர் எய்திய விழுமக் கிளவியின் தாழ்துயர் உறுவோள் - ஆழமாகிய துன்பத்தின்கண்ணே பொருந்தினோள் மிக்க துயரமடைந்த துன்பத்தைப் புலப்படுத்தும் மொழிகளால், தந்தையை உள்ளி - தந்தையாகிய கோவலனை நினைந்து, எம் இதில் படுத்தும் வெவ்வினை உருப்ப-எம்மை இவ்வகைத் துன்பத்தின்கண் அகப்படுத்தும் கொடிய தீவினையானது வந்து உருப்ப, கோற்றொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து-திரட்சியாகிய வளையல்களை யணிந்த என் அன்னை கண்ணகி யோடு வேறு நாட்டை அடைந்து, வைவாள் உழந்த மணிப்பூண் அகலத்து ஐயாவோ என்று அழுவோள் முன்னர் - கூரிய வாளினால் வெட்டுண்டு வருந்திய மணிப்பூண் தாங்கிய மார்பினையுடைய ஐயாவோ என்று அழுகின்றவள் முன்னே; குரல் - கூந்தலின் திரட்சியுமாம். அரற்றினள், அழுதனள் என்பன முற்றெச்சம். உறுவோள் விழுமக்கிளவியின் அழுவோள் எனக் கூட்டுக. உருப்ப - முதிர; வெகுள என்றுமாம். ஓகாரம் புலம்பலில் வந்தது. 44-53. விரிந்து இலங்கு அவிர்ஒளி சிறந்து - விரிந்து விளங்கு கின்ற பேரொளி மிக்கு, கதிர்பரப்பி-கிரணங்களை விரித்து, உரை பெறு மும்முழம் நிலமிசை ஓங்கி - புகழமைந்த நிலத்தின் மீது மூன்று முழ அளவினுக்கு உயர்ந்து, திசைதொறும் ஒன்பான் முழநிலம் அகன்று-நாற்றிசையிலும் ஒன்பதுமுழ அளவினையுடைய இடம் அகன்று, விதிமாண் ஆடியின் வட்டம் குயின்று -விதி மாட்சிமைப்பட்ட பளிங்கினால் வட்டஞ் செய்யப்பட்டு, பதும சதுரம் மீமிசை விளங்கி-பதுமத்தையுடைய சதுரம் மேலிடத்தில் விளங்கப்பெற்று, அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே-புத்தனுக்கு அமைந்த ஆகனம் என்று, நறுமலர் அல்லது பிற மரஞ் சொரியாது - மரங்கள் நறுமலர் களை அன்றி வேறொன்றையும் சொரியா, பறவையும் முதிர்சிறை பாங்கு சென்று அதிராது - பறவைகளும் அப்பீடிகையின் பக்கத்திற் சென்று சிறையொலி செய்யா, தேவர்கோன் இட்ட மாமணிப்பீடிகை - இந்திரனாலிடப்பட்ட பெருமை பொருந்திய மணிகளானாய பீடிகை, பிறப்பு விளங்கு அறத்தகை ஆசனம்-காண்போரது பழம் பிறப்பு விளங்குதற்கு ஏதுவாகிய ஒளி பொருந்திய அறத்தினியல்புடைய ஆசனம்; சிறந்து பரப்பி ஓங்கி அகன்று குயின்று விளங்கி அமைந்த ஆசனம் என்க. விதி - செய்கை. பதுமம் - புத்தன் பாதமும் ஆம். மீமிசை, ஒரு பொருட் பன்மொழி. மரம் பிற சொரியாது, பறவை சிறை அதிராது, அவ்வாறாகத் தேவர் கோன் இட்ட பீடிகையென விரிக்க. 54-63. கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் - கீழ்த் திசைக்கண் உள்ள நாக நாட்டினை ஆளும். இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி-மன்னவர் இருவர் ஒருங்கு தோன்றி, எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார் தம் பெரும் பற்று நீங்கலு நீங்கார் - இஃது எம் முடையது எம்முடையது என்று கூறி எடுக்கவும் இயலாதவர்களாய்த் தம்முடைய பெரிய விருப்பம் நீங்கு தலையும் செய்யாதவர்களாய், செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்து-சிவந்த கண்கள் சினத்தாற் சிவந்து மனங்கொதித்து, தம் பெரும் சேனையோடு வெஞ்சமம் புரிநாள்-தம்முடைய பெருஞ் சேனைகளுடம் கொடிய போர் புரியுநாளில், இருஞ்செரு ஒழிமின் எமது ஈது என்றே - நீவீர் நுமது பெரிய போரை நீங்குமின்; இஃது எம்முடையது என்று கூறி, பெருந்தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும் - பெரிய தவமுனி வனாகிய புத்தன் இருந்து அறம் உரைத்த, பொருவறு சிறப்பில் புரையோர் ஏத்தும்-ஒப்பற்ற சிறப்பினையுடைய உயர்ந்தோர்கள் துதிக்கின்ற, தரும பீடிகை தோன்றியது ஆங்கெண் - தரும பீடிகை அவ்விடத்தில் தோன்றியது என்க. நாக இலச்சினை யுடைமையால் நாகரெனப் பெயர்பெற்ற ஒருவகை மக்கள் வாழும் நாடு நாகநாடு என்பர். இந்நாட்டின் பெயர் பின்னரும் இந்நூலிற் பலவிடத்து வந்துளது. தம, அ-ஆறனுருபு. நீங்கலும் நீங்கார் என்னும் அடுக்கினுள் பின்னது பொதுவினையாகும் ; முன்பு, "சுழலலுஞ் சுழலும், ஓடலு மோடும் ஒரு சிறை யொதுங்கி, நீடலும் நீடும்," (3 : 111-3) என வந்தமையுங் காண்க. மாமணிப் பீடிகை, அறத்தகையாசனம், தரும பீடிகை என்பன ஒரு பொருள்மேல் வந்தன. அழுவோள் முன்னர் பீடிகை தோன்றிய தென்க. இவள் இன்னணமாக, மணிபல்லவத்திடைத் துயிலெழும் அஞ்சி லோதி, போன்று காணாளாய்க் கண்டு திருவே வாவென்று அழுவோள் முன்னர்த் தரும பீடிகை ஆங்குத் தோன்றியதென்க. மணிபல்லவத்துத் துயருற்ற காதை முற்றிற்று. 9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை பீடிகையைக் கண்ட மணிமேகலை வியப்பினால் தன்னை யறியாளாயினாள்; அவள் கைகள் தலைமேற் குவிந்தன ; அதனை மும்முறை வலம்வந்து பணிந்து எழுபவள் அதன் காட்சியால் தன் பழம்பிறப்பின் நிகழ்ச்சிகளை யுணர்ந்து, "மாதவ! காயங்கரை யென்னும் நதிக்கரையில் நீ கூறியவெல்லாம் உண்மையாதலை அறிந்தேன்; காந்தார நாட்டின் அரசனாகிய அத்திபதி யென்னும் அரசற்கு மைத்துனனாகிய பிரமதருமனே! நீ அவன்பாற் சென்று அறமுரைக்கையில், ‘இந் நாவலந் தீவில் இற்றைக்கு ஏழாம் நாளிற் பூகம்ப முண்டாகும்; அப்பொழுது இந் நகரும் நாகநாட்டில் நானூறு யோசனைப் பரப்பும் பாதலத்தில் வீழ்ந்து கெட்டொழியும்: ஆதலின் இதினின்றும் நீங்குக,' என்ன, அரசனும் நகரிலுள்ள மக்கட்குப் பறைசாற்றி யறிவித்து இடவயமென்னும் அப்பதியை நீங்கி, வடக்கிலுள்ள அவந்தி நகர்க்குச் செல்வோன் இடையே காயங்கரையின் கரையிற் பாடிசெய்திருப்ப, நீ குறித்த நாளில் அந்நகர் அழிந்தது, அதுகண்ட அரசனும் ஏனையரும் நின்னைச் சூழ்ந்து வணங்க, நீ அவர்கட்கு அருளறத்தைப் போதித்துக் கொண்டிருந்தனை; அப்பொழுது அசோதர நகரத்தரசனாகிய இரவிவன்மன்தேவி அமுதபதி வயிற்றிற் பிறந்து இலக்குமி யென்று பெயரெய்தி, அத்திபதி யென்னும் அரசற்கு நீலபதி யென்பவள்பாற் பிறந்த இராகுலனுக்கு மனைவியாகப் புக்க நான் என் கணவனுடன் வந்து அறங் கேட்டற்கு வணங்கியவுடன், நீ என்னை நோக்கி, "இவ்விராகுலன் இற்றைக்குப் பதினாறாம் நாளில் திட்டிவிடமென்னும் பாம்பால் இறப்பான், நீ இவனுடன் தீயிற்புகுவாய்; பின்பு காவிரிப் பூம்பட்டினத்திற் சென்று பிறப்பாய்; அங்கு நினக்கு ஒரு துன்பம் உண்டாகும்; அப்பொழுது மணிமேகலா தெய்வம் வந்து நள்ளிரவில் உன்னை எடுத்துச்சென்று தென்றிசை மருங்கிலுள்ள தீவு ஒன்றில் வைத்துச்செல்லும்; சென்றபின் ஆங்குள்ள புத்த பீடிகையைக் கண்டு தொழுவாய்; அப்பொழுதே உனது முற்பிறப்பில் நிகழ்ந்த செய்திகளை அறிந்து, இன்று யான் கூறிய உரையினைத் தெளிவாய்,' என்று சொல்ல, "என் காதலன் பிறப்பையும் தெரிவிக்கவேண்டும்" என்று கேட்டேன்; ‘உன்னைக்கொண்டு சென்ற தெய்வம் மீண்டுந் தோன்றி, உனக்கு அவனைப் புலப்படுத்தும்,' என்று கூறினாய்; அத் தெய்வம் வராதோ?" என ஏங்கி அழுதுகொண்டிருந்தனள். ஆங்கது கண்ட ஆயிழை அறியாள் காந்தளஞ் செங்கை தலைமேற் குவிந்தன தலைமேற் குவிந்த கையள் செங்கண் முலைமேற் கலுழ்ந்துமுத் தத்திர ளுகுத்ததின் 5 இடமுறை மும்முறை வலமுறை வாராக் கொடிமின் முகிலொடு நிலஞ்சேர்ந் தென்ன இறுநுசுப் பலச வெறுநிலஞ் சேர்ந்தாங்கு எழுவோள் பிறப்பு வழுவின் றுணர்ந்து தொழுதகை மாதவ துணிபொரு ளுணர்ந்தோய் 10 காயங் கரையினீ யுரைத்ததை யெல்லாம் வாயே யாகுதன் மயக்கற உணர்ந்தேன் காந்தார மென்னுங் கழிபெரு நாட்டுப் பூருவ தேயம் பொறைகெட வாழும் அத்தி பதியெனும் அரசாள் வேந்தன் 15 மைத்துன னாகிய பிரம தருமன் ஆங்கவன் றன்பால் அணைந்தற னுரைப்போய் தீங்கனி நாவல் ஓங்குமித் தீவிடை இன்றேழ் நாளில் இருநில மாக்கள் நின்றுநடுக் கெய்த நீணில வேந்தே 20 பூமி நடுக்குறூஉம் போழ்தத் திந்நகர் நாகநன் னாட்டு நானூறி யோசனை வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும் இதன்பா லொழிகென இருநில வேந்தனும் மாபெரும் பேரூர் மக்கட் கெல்லாம் 25 ஆவும் மாவுங் கொண்டுகழி கென்றே பறையிற் சாற்றி நிறையருந் தானையோ டிடவய மென்னும் இரும்பதி நீங்கி வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன் காயங் கரையெனும் பேரியாற் றடைகரைச் 30 சேயுயர் பூம்பொழிற் பாடிசெய் திருப்ப எங்கோன் நீயாங் குரைத்தவந் நாளிடைத் தங்கா தந்நகர் வீழ்ந்துகே டெய்தலும் மருளறு புலவநின் மலரடி யதனை அரசொடு மக்க ளெல்லாம் ஈண்டிச் 35 சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்துபல ஏத்திய அருளறம் பூண்ட ஒருபே ரின்பத்து உலகுதுயர் கெடுப்ப அருளிய அந்நாள் அரவக் கடலொலி அசோதரம் ஆளும் இரவி வன்மன் ஒருபெருந் தேவி 40 அலத்தகச் சீறடி அமுத பதிவயிற்று இலக்குமி யென்னும் பெயர்பெற்றுப் பிறந்தேன் அத்தி பதியெனும் அரசன் பெருந்தேவி சித்திபுரம் ஆளுஞ் சீதரன் திருமகள் நீல பதியெனும் நேரிழை வயிற்றில் 45 காலை ஞாயிற்றுக் கதிர்போற் றோன்றிய இராகுலன் றனக்குப் புக்கேன் அவனொடு பராவரு மரபினின் பாதம் பணிதலும் எட்டிரு நாளிலிவ் விராகுலன் றன்னைத் திட்டி விடமுணுஞ் செல்லுயிர் போனால் 50 தீயழல் அவனொடு சேயிழை மூழ்குவை ஏது நிகழ்ச்சி ஈங்கின் றாகலின் கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய தவாக்களி மூதூர்ச் சென்றுபிறப் பெய்துதி அணியிழை நினக்கோர் அருந்துயர் வருநாள் 55 மணிமே கலாதெய்வம் வந்து தோன்றி அன்றப் பதியில் ஆரிருள் எடுத்துத் தென்றிசை மருங்கிலோர் தீவிடை வைத்தலும் வேக வெந்திறல் நாகநாட் டரசர் சினமா சொழித்து மனமாசு தீர்த்தாங்கு 60 அறச்செவி திறந்து மறச்செவி யடைத்துப் பிறவிப்பிணி மருத்துவன் இருந்தற முரைக்கும் திருந்தொளி யாசனஞ் சென்றுகை தொழுதி அன்றைப் பகலே உன்பிறப் புணர்ந்தீங்கு இன்றியா னுரைத்த உரைதெளி வாயெனச் 65 சாதுயர் கேட்டுத் தளர்ந்துகு மனத்தேன் காதலன் பிறப்புங் காட்டா யோவென ஆங்குனைக் கொணர்ந்த அரும்பெருந் தெய்வம் பாங்கிற் றோன்றிப் பைந்தொடி கணவனை ஈங்கிவன் என்னும் என்றெடுத் தோதினை 70 ஆங்கத் தெய்வதம் வாரா தோவென ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தானென். உரை 1-8. ஆங்கது கண்ட ஆயிழை அறியாள் - பீடிகையைக் கண்ட மணிமேகலை தன்னை அறியாளாயினாள், காந்தள் அம்செங்கை தலை மேற் குவிந்தன - காந்தள் மலர்போலும் சிவந்த கைகள் தலைமீது குவிந்தன, தலைமேற் குவிந்த கையள் - தலைமீது குவிந்த கையை யுடையவள், செங்கண் முலைமேற் கலுழ்ந்து முத்தத் திரள்உகுத்து-சிவந்த கண்கள் கலக்கிக் கொங்கைகளின் மேலே நீர்த்துளிகளைச் சொரிந்து, அதின் இடமுறை மும்முறை வலமுறை வாரா - அப்பீடிகையின் இடமாக விருந்து மும்முறை வலமாக வந்து, கொடிமின் முகிலொடு நிலம் சேர்ந்தென்ன-மின்னுக்கொடி முகிலுடன் நிலத்தையடைந்தாற்போல, இறு நுசுப்பு அலச வெறுநிலம் சேர்ந்தாங்கு - இறும்படியான நுண்ணிய இடை வருந்துமாறு வெறு நிலத்திற் சேர்ந்து வணங்கி, எழுவோள் - எழுகின்றவள், பிறப்பு வழுவின்று உணர்ந்து-தன் முற்பிறவியைத் தவறின்றி அறிந்து; அறியாள் - தன்னை மறந்தாள்; இது புதுமைபற்றி வந்த மருட்கை யென்னும் மெய்ப்பாடு. முத்தம் என்றது நீர்த்துளியை. செங்கண் கலுழ்ந்து முலைமேல் உகுத்தென மாறுக. கொடிமின்-மின்னுக்கொடி. மின் உருவத்திற்கும், முகில் கூந்தலுக்கும் உவமை. நிலஞ்சேர்ந்து - வணங்கி யென்றபடி. 9-15. தொழுதகை மாதவ - வணங்குவதற்குத் தக்க பெருந்தவ முடையோய், துணிபொருள் உணர்ந்தோய்-மெய்ந்நூல் களால் துணியப்பட்ட மெய்ப்பொருளை உணர்ந்தோய், காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம் - காயங்கரை என்னும் யாற்றங்கரையில் நீ மொழிந்தவை அனைத்தும், வாயே ஆகுதல் மயக்கற உணர்ந்தேன்- மெய்ம்மையாகு தலைத் தெளிவுற அறிந்தேன், காந்தாரம் என்னும் கழிபெரு நாட்டுப் பூருவதேயம்-காந்தாரம் என்னும் மிகப் பெரிய நாட்டில் உள்ள பூருவதேயமானது, பொறைகெட வாழும்-பாவங்களினின்றும் நீங்குமாறு வாழ்ந்த, அத்திபதி என்னும் அரசாள் வேந்தன்-அரசு புரிந்த அத்திபதி எனும் மன்னனுக்கு, மைத்துனன் ஆகிய பிரம தருமன் -மைத்துனனாகிய பிரம தருமனே; "தொழுதகை மாதவ" என்பது முதல் "என்றெடுத் தோதினை" என்பது காறும் உள்ளவை பழம் பிறப்பில் பிரமதருமன் என்னும் முனிவன் தனக்குக் கூறிய வற்றைப் புத்த பீடிகைக் காட்சி யாலறிந்து, மணிமேகலை அவனை எதிர்பெய்து கூறியவை. துணிபொருள் - தெளியப்பட்ட பொருள். உரைத்ததை; ஐ: சாரியை, வாய் - உண்மை. பொறை ஈண்டு பாவச்சுமை. வாழும் வேந்தன் என்க; வாழும் பிரமதருமன் எனினுமாம். பிரமதருமன்: விளி. 16-23. ஆங்கவன் தன்பால் அணைந்து அறன் உரைப்போய் - அம்மன்னவனிடம் வந்து அறங்கூறும் நீ, தீங்கனி நாவல் ஓங்கும் இத்தீவிடை - இனிய கனிகளையுடைய நாவல் ஓங்கிய இத்தீவின்கண், இன்றேழ் நாளில்-இன்றைக்கு ஏழாவது நாளில், இருநில மாக்கள் நின்று நடுக்கெய்த நீள்நில வேந்தே பூமி நடுங்குறூஉம் போழ் தத்து - பெரிய நிலத்தையாளும் அரசனே பெரிய பூமியிலுள்ள மக்கள் நின்று நடுக்க மெய்து மாறு பூமி நடுக்குதலுறும் பொழுது; இந்நகர் நாக நன்னாட்டு நானூறு யோசனை - இந்த நகரும் நன்றாகிய நாக நாட்டின்கண் நானூறு யோசனைப் பரப்பும், வியன்பாதலத்து வீழ்ந்து கேடெய்தும்-அகன்ற பாதலத்தின்கண் விழுந்து அழிவுறும். ஆகலின், இதன்பால் ஒழிகென - இந்நகரத்தைவிட்டு நீங்குக என்று கூற; நாவலோங்குந் தீவு - நாவலந் தீவு; சம்புத் தீவு. உரைக்கும் நீ ‘வேந்தே! கேடெய்தும் ஆகலால் இதன்பால் ஒழிக'வென என்க. 23-30. இருநில வேந்தனும் - அதனைக் கேட்ட பெரிய பூமியை ஆளும் அரசனும், மாபெரும் பேரூர் மக்கட்கு எல்லாம் - மிகப் பெரிய நகரத்தின்கணுள்ள மக்களுக் கெல்லாம், ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே பறையிற் சாற்றி - பசுக்களையும் ஏனைய விலங்குகளையும் கொண்டு நகரத்தைவிட்டு நீங்குக என்று பறையறைந்து தெரிவித்து, நிறை அரும் தானையொடு இடவயம் என்னும் இரும்பதி நீங்கி-பகைமேற் செல்லும் போது நிறுத்தலரிய சேனைகளுடன் இடவயம் என்னும் பெரிய நகரத்தினின்றும் நீங்கி, வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன் - வடதிசையிலுள்ள அவந்தி என்னும் பெரிய நகரத்திற்குச் செல்லுகின்றவன்; காயங்கரை எனும் பேரியாற்று அடைகரைச் சேய்உயர் பூம்பொழில் பாடி செய்திருப்ப - காயங்கரை என்னும் பெரிய யாற்றினது அடைகரைக்கண் மிக உயர்ந்த பூஞ்சோலையிற் பாடி செய்து அமர்ந்திருக்க; இடவயம் - அத்திபதியின் நகரம். பாடி -படைவீடு. வேந்தனும் சாற்றிச் செல்வோன் இருப்ப வென்க. 31-37. எங்கோன் நீ ஆங்கு உரைத்த அந்நாளிடை - எம்பெரு மானாகிய நீ அப்போது கூறிய அந் நாளிலேயே, தங்காது அந் நகர் வீழ்ந்து கேடு எய்தலும்-தாழாமல் அந் நகரம் வீழ்ந்து அழிந்தொழிதலும், மருள் அறு புலவ நின் மலரடி அதனை - மயக்கமற்ற மெய்யறி வினையுடையோய் நின் மலர் போலும் திருவடிகளை, அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டி-அரசனுடன் மக்களனைவரும் கூடி, சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்து பல ஏத்திய - சுற்றியவர்களாய் வணங்கிப் பணிந்து பலவாறாகத் துதிக்க, அருளறம் பூண்ட ஒரு பேர் இன்பத்து உலகு துயர் கெடுப்ப அருளிய அந்நாள் - அருளாகிய அறத்தினைக்கொண்ட ஒப்பற்ற பேரின்பத்தை உலக மக்களின் துயரத்தை நீக்கும் பொருட்டு அருளிச் செய்த அந் நாளில்; நகர் கேடெய்தினமை கூறவே நாகநாட்டு நானூறு யோசனைப் பரப்புக் கேடெய்திய தென்பதும் பெற்றாம். ஏத்திய - ஏத்த; ஏத்திய அந்நாள் அருளிய அந்நாள் எனத் தனித்தனி முடித்தலுமாம். இன்பத்து இன்பத்தை: சாரியை நிற்க உருபு தொக்கது. 38-47. அரவக்கடல் ஒலி அசோதரம் ஆளும்-கடல் ஒலிபோன்ற முழக்கத்தையுடைய அசோதர நகரத்தையாளும், இரவிவன்மன் ஒரு பெருந்தேவி - இரவிவன்மனுடைய ஒப்பற்ற பெருந்தேவி யாகிய, அலத்தகச் சீறடி அமுதபதி வயிற்று-செம்பஞ்சிக் குழம்பு தோய்ந்த சிறிய அடிகளையுடைய அமுதபதி என்பவள் வயிற்றில், இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன்-பிறந்து இலக்குமி என்னும் பெயர் பெற்றேன், அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி -அத்திபதி என்னும் அரசனுடைய பெருந்தேவியும், சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்-சித்திபுரத்தை ஆண்ட சீதரன் என்பவனுடைய அழகிய மகளும் ஆகிய, நீலபதி எனும் நேரிழை வயிற்றில் - நீலபதி என்கின்ற மெல்லியலின் வயிற்றில், காலை ஞாயிற்றுக் கதிர்போல் தோன்றிய-கதிர்களுடைய இளம்பரிதியைப்போல் உதித்த, இராகுலன் தனக்குப் புக்கேன் - இராகுலனுக்கு மனைவியாகப் புகுந்தேன், அவனொடு பராவரு மரபின் நின் பாதம் பணிதலும்-அவ்விராகுலனோடு வழுத்துதற்குரிய நின் அடிகளைப் பணிதலும்; கடல் அரவமென மாறுக. அலத்தகன் - செவ்வரக்கு என்பாருமுளர். பிறந்து பெயர் பெற்றேன் என விகுதி பிரித்துக் கூட்டுக. கதிர் ஞாயிறு என்க. 48-50. எட்டிரு நாளில் இவ்விராகுலன் தன்னைத் திட்டிவிடம் உணும்-பதினாறு நாளில் இந்த இராகுலனைத் திட்டிவிடம் என்னும் பாம்பு உண்ணும், செல்லுயிர் போனால் தீயழல் அவனொடு சேயிழை மூழ்குவை - அவனது உயிர் பிரிந்தால் நீயும் அவனொடு தீயிடைக் குளிப்பாய்; திட்டி - திருஷ்டி; திட்டிவிடம்-கண்ணில் நஞ்சுடைய பாம்பு; அது பார்த்தால் உயிர்கள் சாம் என்பர். இந்நூலின்கண் பின்பு (11; 100 ; 21 ; 11; 21: 40 ; 23 : 69 ; 23 : 84.) பலவிடத்து இது கூறப்பட்டுள்ளமை காண்க. 1"திட்டியின் விட மன்ன கற்பின் செல்வியை" என்றார் கம்பரும். சேயிழை:முன்னிலை. 51-53. ஏது நிகழ்ச்சி ஈங்கு இன்றாதலின்-உயர்நிலை எய்துதற்குரிய ஏது நிகழ்ச்சி இவ்விடத்தில் இல்லையாகலின், கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய-காவிரியின் பெயரொடு விளங்கிய (காவிரிப் பூம்பட்டினம் என்னும்), தவாக்களிமூதூர் சென்று பிறப்பு எய்துதி- அழியாத மகிழ்ச்சியினையுடைய மூதூரின் கண் சென்றுபிறப்பினை யடைவாய்; கவேரகன்னி - காவேரி; அரச இருடியாகிய கவேர ரென்பவர் வீடு பெறுதலை விரும்பிப் பிரமனைக் குறித்து அருந்தவஞ் செய்து, அவனருளால், விண்டுமாயையைத் தம் புதல்வியாக அடைந்து முத்திபெற்றன ரென்றும், பின்பு அக் கன்னி பிரமன் கட்டளைப்படி நதி வடிவு கொண்டு சென்றமையால் அந்நதி கவேர கன்னியென்றும் காவேரி யென்றும் பெயர் பெற்ற தென்றும் ஆக்கினேய புராணத்தின் காவேரி மான்மியத்தால் வெளியாகின்ற தென்பர். 54-57. அணியிழை நினக்கு ஓர் அருந்துயர்வரு நாள் - அழகிய அணிகலன்களையுடையாய் நினக்கு ஓர் அரிய துன்பம் உண்டாகின்ற நாளில், மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி அன்றப் பதியில் ஆரிருள் எடுத்து-அப் பதியின்கண் மணிமேகலா தெய்வம் வந்து வெளிப்பட்டு மிகுந்த இருளில் எடுத்துச் சென்று, தென்றிசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும் - தென்றிசையிலுள்ள ஒரு தீவின்கண் வைத்தலும்; அருந்துயர் உதயகுமரன் அகப்படுத்தக் கருதி வருதல்; அவனால் மணிமேகலைக்குண்டாகிய மனவேறுபாடுமாம். 58-64. வேக வெந்திறல் நாகநாட்டு அரசர்-மிகக் கடிய வலியினை யுடைய நாகநாட்டு மன்னர்களின், சினமாசு ஒழித்து மனமாசு தீர்த்தாங்கு-சினமாகிய குற்றம் நீங்க அவர்கள் உள்ளத்தின் குற்றங்களை ஒழித்து, அறச்செவி திறந்து மறச்செவி அடைத்து-அறத்தைக் கேட்டற்குரிய காதுகளைத் திறந்து பாவத்தைக் கேட்கின்ற காதுகளை அடைத்து, பிறவிப்பிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும்-பிறவியாகிய நோயினைத் தீர்க் கின்ற மருத்துவனாகிய புத்தன் அமர்ந்து அறங் கூறுகின்ற, திருந்துஒளி ஆசனம் சென்று கைதொழுதி - திருந்திய ஒளி யமைந்த ஆதனத்தைச் சென்று கைதொழுவாய், அன்றைப் பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என - அந்நாளிலே நின் முற் பிறவியினையும் அறிந்து ஈண்டு இப்பொழுது யான் உரைத்த; மொழிகளையும் தெளிந்து கொள்வாய் என்று நீ உரைக்க; வேகமும் வெம்மையும் ஒரு பொருளன. மனமாசு - காம மயக்கங்கள். அறச்செவி - அறங்கேட்டற்குரிய செவி. திறந்து என்றார். 1"கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற், றோட்கப் படாத செவி" என்பவாகலின். மறச்செவி அடைத்து-செவி மறவுரையைக் கேளாது அடைத்து. 65-71. சாதுயர் கேட்டுத் தளர்ந்து உகு மனத்தேன் - இராகுலன் இறப்பான் என்ற துன்பத்தைக் கேட்டுத் தளர்ந்து சிந்துகின்ற உள்ளமுடையேன், காதலன் பிறப்பும் காட்டாயோ என - என் கணவனது மறு பிறப்பையும் காட்டாயோ என வேண்ட, ஆங்கு உனைக் கொணர்ந்த அரும்பெரும் தெய்வம் பாங்கில் தோன்றிப் பைந்தொடி கணவனை ஈங்கிவன் என்னும்-அவ்விடத்தில் நின்னைக் கொண்டு சென்ற அரிய பெரிய தெய்வம் பக்கத்தில் தோன்றி நின் கணவனை இன்னான் என்று உரைக்கும், என்று எடுத்து ஓதினை-என எடுத்துரைத் தாய், ஆங்கத் தெய்வம் வாராதோ என ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தான் என் - அத்தெய்வம் இப்பொழும் வாராதோ என்று ஏங்கி அழுது கொண்டிருந்தாள் என்க. சா துயர் - சாகுந் துயர். பைந்தொடி: முன்னிலை. பிறப்பும்; உம்மை இறந்தது தழீஇய எச்சப்பொருளது. அதுகண்ட ஆயிழை தன்னை அறியாளாயினாள்; அப்பொழுது அவள் கைகள் தலைமேற் குவிந்தன. அங்ஙனம் குவிந்த கையினளாய் உகுத்து வந்து சேர்ந்து எழுவோள் பிறப்பை யுணர்ந்து, "மாதவ, உணர்ந்தோய், மயக்கமற உணர்ந்தேன், பிரம தருமனே, உரைப்போய், ‘கேடெய்தும்; இதன்பாலொழிக' என்று சொல்ல, வேந்தனும் சாற்றி நீங்கிச் செல்வோன் இருப்ப, எங்கோன், நீ உரைத்த நாளில் நகர் கேடெய்தலும், நின் மலரடியை எல்லாம் ஏத்த அருளிய அந்நாளில், புக்கேன் அவனோடு நின் பாதன் பணிதலும், ‘மூழ்குவை, எய்துதி, வருநாளில் வைத்தலும், கைதொழுதி, தெளிவாய்; என்று நீ சொல்ல, காட்டாயோ வென்று யான் கேட்ப ஓதினை; அத்தெய்வம் வாராதோ'' என்று இளங்கொடி ஏங்கி அழும் என்க. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை முற்றிற்று. 10. மந்திரங் கொடுத்த காதை மணிமேகலை அழுதுகொண்டிருக்கையில், "புத்த பீடிகைக் காட்சியால் இவள் பழம்பிறப்பை யறிந்தாள்; இவள் இயல்பும் அழகியது" என்றெண்ணி, வானினின்றும் இறங்கிய மணிமேகலா தெய்வம், அவள் கேட்கும்படி, புத்த பீடிகையைப் புத்தராகவே மதித்துத் துதித்து வலம் வந்து வணங்கியது. வணங்கிய தெய்வத்தை மணிமேகலை வணங்கி, "உன் திருவருளால் என் பிறப்புணர்ந்தேன் ; என் கணவன் யாங்குளன்" என்று கேட்டனள்; கேட்டலும் அத்தெய்வம் "இலக்குமி! கேட்பாயாக! நீ ஒரு நாள் ஒரு பொழிலின்கண் இராகுலனோடு ஊடியிருந்தாய்; அவன் ஊடல் தீர்த்தற்கு உன் அடியை வணங்கினான்; வணங்குகையில், இரத்தினத் தீவிற் சென்று தருமசக்கரம் உருட்டி வருவோனாகிய சாதுசக்கரன் என்னும் பௌத்த சாரண முனிவன் நண்பகற் பொழுதில் விசும்பினின்றும் இறங்கி வர, நீ அவனைக் கண்டு மெய்ந் நடுங்கி நாணிப் பணிந்தனை; அதுகண்ட இராகுலன் ‘இங்கு வந்தவன் யார்' என்று வெகுண்டுரைக்க, நீ அவன் வாயைப் பொத்தி, ‘இப் பெரியோனுடைய மலரடியை வணங்கித் துதியாது பிழை செய்தனை, என்றுரைத்து, அவனோடும் அம்முனிவன் அடிகளை வணங்கி, "யாங்கள் நின் தமரல்ல மாயினும் அம் தீந் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்; அமுது செய்தருள்க," என்று வேண்டிக் கொணர்ந்து உண்பித்தாய்; அந்நாள் அவன் உண்டருளிய அவ்வறம் நின் பிறப்பை அறுத்திடும்; அவ் விராகுலனே உதயகுமரன்; அதனாலேதான் அவன் மனம் உன்னை விரும்பியதன்றி உன் மனமும் அவனை மிகப் பற்றியது; அப்பற்று மாற்றி உன்னை நல்வழிப்படுத்த நினைந்து நின்னை இத்தீவிற் கொணர்ந்து வைத்து இப் பீடிகையைக் காட்டினேன். இன்னுங்கேள்; முற்பிறப்பில் உன் தவ்வையராயிருந்த தாரையையும் வீரையையும் அங்க நாட்டிலுள்ள கச்சய நகரத்தரசனாகிய துச்சயனென்பவன் மணஞ் செய்துகொண்டு ஒரு நாள் அவர்களுடன் சென்று மலைவளங்கண்டு கங்கைக்கரையை எய்தி யிருந்தபொழுது, அறவணவடிகள் அங்கே வரக்கண்டு உடன் எழுந்து வணங்கிய அவன், 'இங்கெழுந்தருளிய நீர் யாவிர்' என்று கேட்க., அவர், 'பாத பங்கய மலையைத் தொழுது வணங்க வந்தேன்; முற்காலத்தே புத்ததேவர் அம் மலையின் உச்சியில் நின்று அறமுரைத்த பொழுது அவரது அடிச்சுவடு பொருந்தினமையால் அம் மலை அப் பெயரினதாயிற்று; நீவிரும் அதனைக் கண்டு வழிபடுமின்;' என்று கூறினர். அவர் கூறியவாறு சென்று தொழுதமையால் தாரையும் வீரையும் முறையேமாதவியாகியும் சுதமதியாகியும் வந்து நின்னுடன் கூடினர்; நீ பழம்பிறப்பை யறிந்தாய்; அறத்தினியல்பையும் அறிந்து கொண்டாய்; பிற சமயவாதிகளின் கொள்கைகளையும் இனிக் கேட்பாய்; கேட்குங்கால் உன்னை 'இளம் பிராயமுடைய பெண்' என நினைந்து, அன்னோர் தத்தம் சமயவுண்மைகளைக் கூறார், ஆகலின், அப்பொழுது நீ வேற்றுருக் கொள்ளவேண்டும்' என்று கூறி, வேற்றுரு வெய்துவிப்பதும் வானிலே இயங்கச் செய்வதுமாகிய இரண்டு மந்திரங்களை அவளுக்கு அறிவுறுத்தி, நீ புத்தர் அருளிய திருவறம் எய்துதல் உறுதி யென்றுணர்வாயாக; பீடிகையை வணங்கி நின் பதிக்கண் செல்வாயாக, என்று எழுந்தோங்கி, "யான் மறந்ததும் உண்டு," என்று மீட்டும் இறங்கி, "மக்கள் யாக்கை உணவின் பிண்டம்; இப்பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும்," என்று அதனை அருளிச் செய்து, வானில் எழுந்து சென்றது. அறவோ னாசனத் தாயிழை யறிந்த பிறவிய ளாயினள் பெற்றியு மைதென விரைமல ரேந்தி விசும்பூ டிழிந்து பொருவறு பூங்கொடி பூமியிற் பொலிந்தென 5 வந்து தோன்றிய மணிமே கலாதெய்வம் முந்தைப் பிறப்பெய்தி நின்றோள் கேட்ப உயிர்க ளெல்லாம் உணர்வுபா ழாகிப் பொருள்வழங்கு செவித்துளை தூர்ந்தறி விழந்த வறந்தலை யுலகத் தறம்பாடு சிறக்கச் 10 சுடர்வழக் கற்றுத் தடுமாறு காலையோர் இளவள ஞாயிறு தோன்றிய தென்ன நீயோ தோன்றினை நின்னடி பணிந்தேன் நீயே யாகிநிற் கமைந்த இவ் வாசனம் நரமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன் 15 பூமிசை யேற்றினேன் புலம்பறு கென்றே வலங்கொண் டாசனம் வணங்குவோள் முன்னர்ப் பொலங்கொடி நிலமிசைச் சேர்ந்தெனப் பொருந்தி உன்றிரு வருளால் என்பிறப் புணர்ந்தேன் என்பெருங் கணவன் யாங்குள னென்றலும் 20 இலக்குமி கேளாய் இராகுலன் றன்னொடு புலத்தகை யெய்தினை பூம்பொழி லகவயின் இடங்கழி கமாமொ டடங்கா னாயவன் மடந்தை மெல்லியல் மலரடி வணங்குழிச் சாது சக்கரன் மீவிசும்பு திரிவோன் 25 தெருமர லொழித்தாங் கிரத்தின தீவத்துத் தரும சக்கரம் உருட்டினன் வருவோன். வெங்கதி ரமயத்து வியன்பொழி லகவயின் வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி மெல்லியல் கண்டனை மெய்ந்நடுக் குற்றனை 30 நல்கூர் நுசுப்பினை நாணினை யிறைஞ்ச இராகுலன் வந்தோன் யாரென வெகுளலும் விராமலர்க் கூந்தல் அவன்வாய் புதையா வானூ டிழிந்தோன் மலரடி வணங்காது நாநல் கூர்ந்தனை என்றவன் றன்னொடு 35 பகையறு பாத்தியன் பாதம் பணிந்தாங் கமர கேள்நின் தமரல மாயினும் அந்தீந் தண்ணீர் அமுதொடு கொணர்கேம் உண்டி யாமுன் குறிப்பின மென்றலும் எம்மனை யுண்கேன் ஈங்குக் கொணர்கென 40 அந்நா ளவனுண் டருளிய அவ்வறம் நின்னாங் கொழியாது நின்பிறப் பறுத்திடும் உவவன மருங்கில் உன்பாற் றோன்றிய உதய குமரன் அவனுன் னிராகுலன் ஆங்கவ னன்றியும் அவன்பா லுள்ளம் 45 நீங்காத் தன்மை நினக்குமுண் டாகலின் கந்த சாலியின் கழிபெரு வித்தோர் வெந்துகு வெங்களர் வீழ்வது போன்மென அறத்தின் வித்தாங் காகிய வுன்னையோர் திறப்படற் கேதுவாய்ச் சேயிழை செய்தேன் 50 இன்னுங் கேளாய் இலக்குமி நீநின் தவ்வைய ராவோர் தாரையும் வீரையும் ஆங்கவர் தம்மை யங்கநாட் டகவயின் கச்சய மாளுங் கழற்கால் வேந்தன் துச்சய னென்போன் ஒருவன் கொண்டனன் 55 அவருட னாங்கவன் அகன்மலை யாடிக் கங்கைப் பேரியாற் றடைகரை யிருந்துழி மறவண நீத்த மாசறு கேள்வி அறவண னாங்கவன் பாற்சென் றோனை ஈங்கு வந்தீர் யாரென் றெழுந்தவன் 60 பாங்குளி மாதவன் பாதம் பணிதலும் ஆதி முதல்வன் அறவாழி யாள்வோன் மாதுய ரெவ்வ மக்களை நீக்கி விலங்குந் தம்முள் வெரூஉம்பகை நீக்கி உடங்குயிர் வாழ்கவென் றுள்ளங் கசிந்துகத் 65 தொன்றுகா லத்து நின்றற முரைத்த குன்ற மருங்கிற் குற்றங் கெடுக்கும் பாத பங்கயங் கிடத்தலின் ஈங்கிது பாதபங் கயமலை எனும்பெயர்த் தாயது தொழுது வலங்கொள்ள வந்தேன் ஈங்கிப் 70 பழுதில் காட்சியீர் நீயிருந் தொழுமென அன்றவ னுரைத்த அவ்வுரை பிழையாது சென்றுகை தொழுது சிறப்புச் செய்தலின் மாதவி யாகியுஞ் சுதமதி யாகியும் கோதையஞ் சாயல் நின்னொடு கூடினர் 75 அறிபிறப் புற்றனை அறம்பா டறிந்தனை பிறவற முரைப்போர் பெற்றியுங் கேட்குவை பல்வேறு சமயப் படிற்றுரை யெல்லாம் அல்லியங் கோதை கேட்குறு மந்நாள் இளையள் வளையோ யென்றுனக் கியாவரும் 80 விளைபொரு ளுரையார் வேற்றுரு வெய்தவும் அந்தரந் திரியவும் ஆக்குமிவ் வருந்திறன் மந்திரங் கொள்கென வாய்மையி னோதி மதிநாண் முற்றிய மங்களத் திருநாள் பொதுவறி விகழ்ந்து புலமுறு மாதவன் 85 திருவற மெய்துதல் சித்தமென் றுணர்நீ மன்பெரும் பீடிகை வணங்கினை யேத்தி நின்பதிப் புகுவாய் என்றெழுந் தோங்கி மறந்தது முண்டென மறிந்தாங் கிழிந்து சிறந்த கொள்கைச் சேயிழை கேளாய் 90 மக்கள் யாக்கை உணவின் பிண்டம் இப்பெரு மந்திரம் இரும்பசி யறுக்குமென் றாங்கது கொடுத்தாங் கந்தர மெழுந்து நீங்கிய தாங்கு நெடுந்தெய்வந் தானென் உரை 1-5. அறவோன் ஆசனத்து ஆயிழை அறிந்த பிறவியள் ஆயினள் - மணிமேகலை புத்தனது பாத பீடிகையால் அறியப்பட்ட பிறவியை உடையளாயினாள், பெற்றியும் ஐது என - இவள் பெற்ற பேறும் அழகிது என்று, விரைமலர் ஏந்தி விசும்பூடு இழிந்து - மணம் பொருந்திய மலர்களை ஏந்தி விசும்பினின்றும் இறங்கி, பொருவறு பூங்கொடி பூமியில் பொலிந்தென - ஒப்பற்ற பூங்கொடியானது பூமியின்கண் பொலிவு பெற்றாற்போல, வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம்-; அறிந்த பிறவியள் - முற்பிறப்பை யறிந்தவள் என்க. பெற்றி - பேறு; 1"பிணிப்பறுத் தோர்தம் பெற்றி யெய்தவும்" என்பதிற் போல. பூங்கொடி ஏந்தி இழிந்து பொலிந்தெனத் தோன்றிய தெய்வ மென்க. 6-12. முந்தைப் பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப - முற்பிறப் பினையறிந்து நின்ற மணிமேகலை கேட்க, உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி-உயிர்கள் யாவும் உணர்வு பாழடைந்து, பொருள் வழங்கு செவித்துளை தூர்ந்து-அறம் வழங்கு தற்குரிய செவிகளின் துளை அதனைக் கேளாது தூர்ந்து, அறிவு இழந்த வறுந்தலை உலகத்து - அறிவினை யிழந்த வறுமையைத் தன்னிடத்தே உள்ள உலகின்கண் - அறம் பாடு சிறக்க - அறத்தின் கூறுபாடுகள் சிறப்படையுமாறு, சுடர்வழக்கு அற்றுத் தடுமாறு காலை ஓர் இளவள ஞாயிறு தோன்றியது என்ன - ஒளி வழங்குதலின்றித் தடுமாறுகின்ற பொழுதில் ஓர் அழகிய இளம் பரிதி தோன்றியதுபோல, நீயோ தோன்றினை நின் அடிபணிந்தேன்-நீயோ உதித்தருளினை நின் திருவடி களைப் பணிந்தேன்; பொருள் - உறுதிப்பொருள்; ஈண்டு அறம்; 2"பொருணீங்கிப் பொச்சாந்தார்" என்புழிப் பரிமேலழகர் உரைத்தமை காண்க அறிவிழந்த வறுந்தலை யுலகம் - அறிவின்மையாகிய வறுமையை யுடைய உலகம் என்க. அறம்பாடு என்பதற்கு அறத்தின் தோற்றம் என்றும், சுடர் என்பதற்கு ஞாயிறு என்றும் கூறுதலுமாம். 13-16. நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் வாசனம்-நீயே யாகி நினக்கு அமைந்த இப் பீடிகையை, நாமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன் - நாவாற்றுதித்தேன் தலையால் வணங்கினேன், பூமிசை ஏற்றினேன் - உள்ளத் தாமரையின் மீது இருத்தினேன். புலம்பு அறுக என்று - என் வருத்தம் நீங்குக என்று கூறி, வலங் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர் - பீடிகையை வலங் கொண்டு பணிகின்ற மணிமேகலா தெய்வத்தின் முன்னே; நீயே யாகி நிற்கமைந்த இவ் வாசனம் என்றமையால் பீடிகையின் வழிபாடு புத்த தேவன் வழிபாடே யென்பது போதரும். பூ - நெஞ்சத் தாமரை. 17-19. பொலங்கொடி நிலமிசைச் சேர்ந்துஎனப்பொருந்தி-மணிமேகலை பொற்கொடியானது நிலத்தின் மீது சேர்ந்தாற் போல விழுந்து வணங்கி, உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன்- நின்னுடைய திருவருளினாலே என்னுடைய முற்பிறவியை அறிந்தேன், என்பெருங் கணவன் யாங்குளன் என்றலும்-என் பெருங் கொழுநன் எவ்விடத்துப் பிறந்துளான் என்று கேட்பவும் ; பொலங்கொடி - பொற்கொடி; காமவல்லி 20-28. இலக்குமி கேளாய்-இலக்குமியே கேட்பாயாக; இராகுலன் தன்னொடு புலத்தகை எய்தினைபூம்பொழில் அகவயின் - நீ நின் கணவனாகிய இராகுலனோடு பூச்சோலையின் உள்ளிடத்தே ஊடலுற்றனை, இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன்-அப்பொழுது அவன் வரம்பு கடந்து எழுதற்குக் காரண மாகிய காமத்தொடு அடங்காதவனாய் மடந்தை மெல்லியல் மலரடிவணங்குழி - மெல்லியல் மடந்தையாகிய நின் மலர்போலும் அடிகளை வணங்கும் பொழுது, சாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன்-உயர்ந்த வானின் கண் திரிவோனாகிய சாதுசக்கரன் என்னும் முனிவன், தெருமரல் ஒழிந்தாங்கு இரத்தின தீவத்து - மனக்கவற்சி நீங்கி இரத்தின தீவத்தின் கணிருந்து, தருமசக்கரம் உருட்டினன் வருவோன்-அறவாழியை உருட்டிக்கொண்டு வருகின்றவன், வெங்கதிர் அமயத்து-நண்பகற் பொழுதிலே, வியன்பொழில் அகவயின் வந்து தோன்றலும்-அப் பரந்த சோலையினுள்ளே வந்து தோன்றுதலும்; பழம்பிறப் பெய்தி நின்றாளாகலின் அத்தெய்வம் மணிமேகலையை இலக்குமியென் றழைத்தது. புலத்தை - ஊடற்றன்மை; ஊடற் கூறுமாம். இடங்கழி காமம் - வரம்பு கடந்த காமமுமாம்; இடங்கழி என்பதே காமத்தை யுணர்த்தலுமுண்டு. மெல்லியல் மலர் எனக் கொண்டு, மென்மைத் தன்மையுடைய மலர்போலும் அடி யென்னலுமாம். சாதுசக்கரன் - சாதுக்களின் மண்டலத்திலுள்ளவன் எனப் பொருள்படும் காரணப்பெயர்; ஓம் மணிபத்மேஹும் என்னும் மந்திரம் சுற்றிலும் எழுதப்பட்ட உலோகத்தாலாகிய சக்கரத்தை வலக்கையில் வைத்துச் சுழற்றிக் கொண்டிருத்தல் பௌத்தர்களிற் சிலருடைய வழக்கமென்றும், இவனும் அங்ஙனம் செய்பவனாதல் வேண்டுமென்றும் கூறுவர். இரத்தின தீவம்-இது மணிபல்லவத்திற்கு அயலிலுள்ளதோர் சிறு தீவு ; இத் தீவும், இதிலுள்ள சமந்தமென்னும் மலை முதலியவும் வரும் காதையானறியப்படும். தருமத்தைத் தடையின்றிச் செலுத்தினானென்பார், அதனைச் சக்கரமாக உருவகப்படுத்தி, உருட்டினான் என்றார். முன்பு "அறக்கதி ராழி திறப்பட வுருட்டி" (5.76) என்றமையுங் காண்க. சாதுசக்கரன் திரிவோன் வருவோன் வந்து தோன்றுதலுமென்க. 28-31. மயங்கினை கலங்கி மெல்லியல் கண்டனை மெய் நடுக் குற்றனை - மெல்லியலே நீ அவனைக் கண்டு மயங்கிக் கலக்க முற்று உடல் நடுக்கமடைந்த, நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச- வறுமை யெய்திய இடையினை யுடையையாய் நாணமுற்று வணங்க, இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும் - ஈண்டு வந்தவன் யாவன் என இராகுலன் சினங்கொள்ளலும்; மெலிந்து ஒசிவதனை நல்கூர்ந்ததென்று உபசரித்தார். கணவன் தன் அடியில் வணங்குழிவந்தனனாகலின் நாணு தலுற்றாளென்க. மயங்குதல் முதலியன இறைபொருளாகப் பிறந்த அச்சமென்னும் மெய்ப்பாடு. இராகுலன் வெகுண்டமை குடிகோள் பற்றி வந்த வெகுளி யென்னும் மெய்ப்பாடு. 32-38. விரா மலர்க் கூந்தல் அவன் வாய் புதையா - மணம் பொருந்திய மலர்களை யணிந்த கூந்தலையுடைய நீ அவன் வாயைப் புதைத்து, வானூடு இழிந்தோன் மலர் அடிவணங்காது நா நல்கூர்ந்தனை என்று - விசும்பினின்றும் இறங்கிய பெரியோனின் திருவடி மலர்களைவணங்காமல் நா வறுமையுற்றனை என்று கூறி, அவனொடும் பகையறு பாத்தியன் பாதம் பணிந்தாங்கு-பகைகளையறுத்த புத்ததேவன் திருவடிக்கு அன்பனாகிய அம்முனிவனுடைய அடிகளை அவனோடும் வணக்கஞ் செய்து, அமர கேள் நின் தமரலம்ஆயினும்-தேவனே கேட் பாயாக யாம் நினக்குச் சிறந்த அன்பரல்லே மாயினும், அம் தீந்தண்ணீர் அமுதொடு கொணர்கேம் - இனிய குளிர்ந்த நீரும் உணவும் கொண்டு வருவேம், உண்டி - அவற்றை உண்பாய், யாம் உன் குறிப்பினம் என்றலும்-அடியேங்கள் நின் குறிப்பின்வழி ஒழுகுவேம் என்று நீ உரைத்தலும். வானூடிழிந்தமையே அவனது பெருமையை விளக்குமென்று குறிப்பித்தவாறாயிற்று. நாவானது சாரணனைத் துதித்தலாகிய பயன் கொள்ளாமையின் நா வறுமையுற்றாய் என்றாள். பகை - காம வெகுளி முதலிய உட்பகை. பாத்தியன் - அடியான் என்னும் பொருட்டு; நம்பியாண்டார் நம்பிகள் மாணிக்கவாசகரைத் 'திருவாத'd2வூர்ச் சிவ பாத்தியன்,' என்று கூறினமையுங் காண்க. உண்டி - உண்ணுதி: வேண்டிக்கோடலில் வந்தது. 39-41. எம்மனை உண்கேன் ஈங்கு கொணர்கென - தாயே உண்பேன் இங்கே கொண்டு வருக என்று சொல்லி, அந்நாள் அவன் உண்டருளிய அவ்வறம் - அந்நாளில் அம் முனிவன் உண்டமையாலாகிய அந்த அறமானது, நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும்-நின்னைவிட்டு நீங்காது நினது பிறப்பை அறுத்தவிடும். 42-49. உவவன மருங்கில் உன்பால் தோன்றிய உதயகுமரன் அவன் உன் இராகுலன் - உவவனத்தில் நின்னிடம் வந்த உதயகுமரனாகிய அவனே நின் கணவன் இராகுலன், ஆங்கவன் அன்றியும் அவன்பால் உள்ளம் நீங்காத் தன்மை நினக்கும் உண்டாகலின் - அவ் வுதயகுமரன் நின்பால் நீங்காத விருப்பதைச் செலுத்துவதன்றியும் அவனிடஞ் சென்ற உள்ளம் நீங்காத தன்மை நினக்கும் உள்ளமையால், கந்தசாலியின் கழி பெருவித்து-கந்தசாலி என்னும் நெல்லின் மிகச் சிறந்த விதை, வெந்து உகு வெண்களர் வீழ்வது போன்ம் என - வெந்து உருகுகின்ற வெள்ளிய உப்பு நிலத்தில் வீழ்கின்றதுபோலும் என்று, அறத்தின் வித்தாங்கு ஆகிய உன்னை ஓர் திறப்படற்கு ஏதுவாச் சேயிழை செய்தேன் - சேயிழாய் அறத்தின் விதை யாகிய நின்னை மனம் ஒரு வழிப்படுதற்குக் காரணமாகச் செய்தேன்; குமரனாகிய அவனென்க. அவன் அன்றியும் - அவன் உன்பால் உள்ளம் நீங்காதிருப்பதன்றியும் என விரித்துரைக்க. மணிமேகலை உதயகுமரனை இடைவிடாது நினைத்திருந்தாள் என்பது, அவன் வெட்டுண்டிறந்தபொழுது, 1"உவவன மருங்கி னின்பா லுள்ளம் தவிர்விலேனாதலின்" என்று அவள் அவனைக் குறித்துக் கூறு வதனால் அறியப்படும். சாலி - சிறந்த நெல், கந்தசாலி - மணமுள்ள ஒருவகைச் சிறந்த நெல், அறத்திற்கு மூலமாகிய நீ உதயகுமரனை விரும்பின் நின்னியல்பு கந்தசாலியின் வித்துக் களர் நிலத்து வீழ்ந்ததுபோன்று பயனற்றுப்போம் என்றபடி. மணிமேகலையின் உயர்வுபற்றிக் கந்தசாலியை உவமை கூறினார். போன்ம்: ஈற்று மிசை யுகரங்கெட்டு மயக்க விதியின்மையின் லகரம் திரிந்து வந்தது. 50-56. இன்னும் கேளாய் இலக்குமி நீ-இலக்குமி நீ இன்னும் கேட்பாயாக, நின் தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும்- நின் முற் பிறந்தோர் தாரையும் வீரையும் ஆவர், ஆங்கவர் தம்மை - அவர்களை, அங்கநாட்டு அகவயின் - அங்க நாட்டினுள்ளதாகிய, கச்சயம் ஆளும் கழற்கால் வேந்தன் - கச்சய நகரத்தை ஆண்ட வீரக் கழலணிந்த காலையுடைய வேந்தனாகிய, துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்-துச்சயன் என்னும் பெயருடைய ஒருவன் மணந்தனன், அவருடன் ஆங்கவன் அகன்மலை ஆடி - அம் மன்னவன் அம் மகளிருடன் அகன்ற மலைப்பக்கங்களில் விளையாடி, கங்கைப் பேரியாற்று அடைகரை இருந்துழி - கங்கையாற்றின் அடை கரையில் இருந்தபொழுது; தவ்வை - தமக்கை; 1"செய்யவள், தவ்வையைக் காட்டிவிடும்" என்பது காண்க. 57-60. மறவணம் நீத்த மாசறு கேள்வி அறவணன் ஆங்கவன் பால் சென்றோனை - பாவத்தன்மைகளைத் துறந்த குற்றமற்ற கேள்வியினையுடைய அறவணன் என்னும் மாதவன் துச்சயனிடம் வந்தோனை, ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன்பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும்-துச்சயன் ஈண்டு வந்தீராகிய நீவிர் யார் என எழுந்து அம்முனிவனுடைய இயல்பினை நினைந்து அவன் திருவடிகளை வணங்குதலும். சென்ற அறவணனையென மாறுதலுமாம். "மறவண நீத்த மாசறு கேள்வி, அறவண வடிகள்" (2:60-1.) என முன்பு வந்தமையுங் காண்க. எழுந்தவன்-எழுந்தோன் என்றுமாம், பாங்கு-இயல்பு, சிறப்பு, உளி-உள்ளி. 61-70. ஆதிமுதல்வன் அறவாழி ஆள்வோன்-ஆதிமுதல்வனும் அறமாகிய திகிரியை உருட்டுவோனுமாகிய புத்தன், மாதுயர் எவ்வம் மக்களை நீக்கி-மக்கள் பிறப்பு இறப்புகளாகிய மிக்க துன்பத்தினின்றும் நீக்கி, விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி- விலங்குகளையும் தம்முள்ளே அஞ்சுதற்குக் காரண மாகிய பகைமையை நீங்கச் செய்து, உடங்கு உயிர்வாழ்க என்று உள்ளம் கசிந்து உக - எவ்வுயிரும் தம்முள் ஒற்றுமை யுடையனவாக வாழ்க என்று அருளினாலே உள்ளம் இரங்கி உருக, தொன்று காலத்து நின்று அறம் உரைத்த-முற்காலத்தில் எல்லா உயிர்களும் காணுமாறு நின்று அறங்கூறிய, குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும்பாத பங்கயம் கிடத்தலின் - குன்றத்தின்கண் காமமாதி குற்றங்களை அழிக்கும் திருவடித் தாமரைகள் விளங்கிக் கிடத்தலினால், ஈங்கிது பாதபங்கயமலை எனும் பெயர்த்தாயது - இது பாதபங்கயமலை எனும் பெயரினையுடைத்தாயிற்று, தொழுது வலங்கொள்ள வந்தேன் ஈங்கு - யான் இம்மலையை வலங்கொண்டு வணங்குமாறு ஈண்டு வந்தேன், பழுதில் காட்சியீர் நீயிரும் தொழுமென - குற்றமற்ற அறிவினை யுடைய நீவிரும் வணங்குவீராக என்று கூற; துயர் எவ்வம்: ஒரு பொருட் பன்மொழி. கேட்டோர் உள்ளம் கசிந்து உக என்றுமாம். உரைத்த குன்றமாவது மகததேயத்தின் இராசதானியாகிய இராசக்கிருக நகரின் அருகிலுள்ள கிருத்திர கூடம் என்னும் மலையென்பர். பாதபங்கயம் - புத்தனுடைய பாததாமரை. 71-74. அன்று அவன் உரைத்த அவ்வுரை பிழையாது - அந்நாளில் அறவணவடிகள் கூறிய அம்மொழி தவறாமல், சென்று கை தொழுது சிறப்புச் செய்தலின் - சென்று கைகூப்பித் தொழுது விழாச் செய்தமையால், மாதவியாகியும் சுதமதியாகியும் கோதையஞ் சாயல் நின்னொடு கூடினர் - மலர் மாலையை யுடைய மெல்லியலே அவ்விருவரும் மாதவியும் சுதமதியும் ஆகி நின்னொடுகூடினர்; சிறப்புச் செய்தல் - பூசித்தலுமாம். 75-82. அறிபிறப்புற்றனை அறம்பாடு அறிந்தனை - முற்பிறவியை அறிந்தாய் அறத்தின் தோற்றத்தை உணர்ந்தாய், பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை - பிறசமய உண்மை களைக் கூறுவோர் பேற்றையும் கேட்பாய், பல்வேறு சமயப் படிற்றுரை எல்லாம் அல்லியங்கோதை கேட்குறும் அந்நாள்-பலவேறு சமயங்களின் பொய்யுரைகளை யெல்லாம் நீ கேட்கப் புகும் அந்நாளில், இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் விளைபொருள் உரையார் - இளமைத் தன்மையையுடையாள் வளையணிந்த நங்கை என்று நினக்கு எவரும் தம் சமயங்களின் விளைபொருளைக் கூறார் ஆகலின், வேற்றுரு எய்தவும் அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் வருந்திறல் மந்திரம் கொள்க என - வேற்று வடிவங்கொள்ளவும் விசும்பின் வழியாகச் செல்லவும் செய்யும் அரிய ஆற்றலையுடைய இம் மந்திரத்தைக் கொள்வாயாக என்று, வாய்மையின் ஓதி-நால் வகை வாய்மையுடன் கூறியருளி. அறம்பாடு - அறத்தின் கூறென்றும், அறத்தின் இயல்பென்றும் உரைத்தலுமாம். பிற அறம் என்றது பிற சமயக் கொள்கைகளை. பெற்றி - பேறு; இயல்பென்றுமாம். அல்லியங்கோதை - அகவிதழ்களாலாகிய மாலையை யுடையாள்; ஈண்டு முன்னிலை. வாய்மையின் - உண்மையுடன் என்றுமாம். 83-93. மதிநாள் முற்றிய மங்கலத் திருநாள் - நாள்தோறும் ஒவ்வொரு கலையாக வளர்ந்து முற்றுப்பெற்ற அழகிய நிறையுவா நாளில், பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் - பொதுவாகிய அறிவினை வெறுத்துச் சிறப்பாகிய மெய்யுணர்வினைப் பெற்ற புத்தனுடைய, திருஅறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ - உயர்வாகிய அறத்தை யடைதல் உண்மை என்பதை நீ அறிவாயாக, மன்பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி - மிக்க பெருமையுடைய பீடிகையை வணங்கித் துதித்து, நின்பதிப் புகுவாய் என்று எழுந்து, ஓங்கி-நினது பதியின்கட் செல்வாய் என்று கூறி உயர எழுந்து, மறந்ததும் உண்டென மறித்து ஆங்கு இழிந்து - மீட்டும் அவ்விடத்தே இறங்கி யான் மறந்தது ஒன்று உண்டென்று கூறி, சிறந்த கொள்கைச் சேயிழை கேளாய் - சிறந்த விரதத்தையுடைய சேயிழையே அதனைக் கேட்பாயாக, மக்கள் யாக்கை உணவின் பிண்டம்-மக்களின் உடல் உணவாலாகிய தொகுதி, இப்பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று - இப் பெரிய மந்திரமானது பெரும் பசியை நீக்கவல்லது என்று கூறி, ஆங்கது கொடுத் தாங்கு அந்தரம் எழுந்து நீங்கியது ஆங்கு நெடுந் தெய்வம் தான் என் - அம் மந்திரத்தை அளித்துப் பெருமையுடைய மணி மேகலா தெய்வம் வானிலே எழுந்து நீங்கியது என்க. மங்கலம் - நன்மை. புத்தன் ஞானம்பெற்ற நாள் வைகாசித் தூய நிறைமதி நாள் ஆகலின் அதனை ‘மங்கலத் திருநாள்' என்றார். புத்தன் பிறந்த நாளும் அதுவேயாகும். பொது வறிவு - சிறப்பில்லா அறிவு ; சாமானிய ஞானம் என்பர் வடநூலார். புலம் - மெய்யுணர்வு. நால்வகை வாய்மையும் அறிதற்குரிய சிறப்பறிவு. சித்தம் - உறுதி. கொள்கை- கோட்பாடுமாம். உணவின் பிண்டம்- உணவாலாகிய தொகுதி; 1"உண்டி முதற்றே யுணவின் பிண்டம்" என்றார் பிறரும். ஆயிழை ஆசனத்தால் அறிந்த பிறவியளாயினள்; இவள் பெற்றியும் ஐதென வந்து தோன்றிய தெய்வம், நின்றோள் கேட்ப, ‘நீயோ தோன்றினை; பணிந்தேன்; வைத்தேன்; கொண்டேன்; ஏற்றினேன்; புலம்பு அறுக' என்று வலங்கொண்டு வணங்குவோள் முன்னர்ப் பொருந்தி, என் பிறப்புணர்ந்தேன்; என் கணவன் யாங்குளன் ?' என்று மணிமேகலை கேட்டலும், அத்தெய்வம், "இலக்குமி! கேள். பொழிலில் இராகுலனோடு நீ புலந்தாய்; அப் புலவியை மாற்றவேண்டி அவன் உன்னடியை வணங்கும் பொழுது, சாதுசக்கரன் வந்து தோன்றலும், நீ கண்டு நடுக்குற்று நாணி இறைஞ்ச, இராகுலன் வெகுளலும்; நீ அவன் வாயைப் புதைத்து, ‘நீ வானூடிழிந்தோன் அடியை வணங்காது நாநல் கூந்தனை' என்று சொல்லி, அவனோடு பணிந்து, ‘அமர; கொணர்கேம் ‘உண்டி' என்றலும், அவன் ‘கொணர்க' என்று உண்டருளிய அவ்வறம் பிறப்பை யறுத்திடும்; உதயகுமரன்றான் இராகுலன்; அவன்பால் உள்ளம் நீங்காத் தன்மை நினக்கு முண்டாதலின், எண்ணி ஏதுவாச் செய்தேன்; இன்னுங் கேள்; தாரையும் வீரையும் நின் தவ்வையராவோர்; அவர் தம்மைத் துச்சயன் கொண்டனன். அவன் அவருடன் இருந்துழிச் சென்ற அறவணனை அவன், ‘வந்தீர் யார்?' என்று எழுந்து பாதத்தைப் பணிதலும், அவன், ‘பாத பங்கயத்தைத் தொழுது வலங்கொள்ள வந்தேன்; நீரும் தொழும்' என்ற உரை பிழையாது சென்று தொழுது சிறப்புச் செய்தலின், நின்னொடு கூடினர்: உற்றனை; அறிந்தனை; கேட்குவை; உரையார்; ஆதலால் இம் மந்திரங் கொள்க" என ஓதி, உணர்நீ; புகுவாய்," என்று எழுந்தோங்கி, மறந்ததும் உண்டென இழிந்து, "யாக்கை உணவின் பிண்டம் ; இப்பெரு மந்திரம் இரும் பசி யறுக்கும்" என்று அதனைக் கொடுத்து எழுந்து நீங்கியது என வினைமுடிவு செய்க. மந்திரங் கொடுத்த காதை முற்றிற்று. 11. பாத்திரம் பெற்ற காதை (மணிமேகலா தெய்வம் சென்றபின் மணிமேகலை ஆண்டுள்ள மணற்குன்று முதலியவற்றைப் பார்த்துக்கொண்டு மெல்ல உலாவி வருங்கால் தீவதிலகை யென்பாள் தோன்றி, "கப்பல் கவிழப்பெற்ற மகளிர்போல் இத்தீவிலே தனியே வந்த நீ யார்?" எனக் கேட்டனள். கேட்டலும், மணிமேகலை அவளை நோக்கி, "பூங்கொடி போல் வாய்! ‘யார் நீ?' என்றது எனது எப்பிறப்பினைக் கருதி? யான் சென்ற பிறப்பில் இலக்குமி யென்னும் பெயருடையேன்; இராகுலன் என்னுங் கோமனுக்கு மனைவியாயிருந்தேன்; இப் பிறப்பில் நாடகக் கணிகையாகிய மாதவியின் மகளாவேன்; மணிமேகலை யென்னும் பெயருடையேன்; என் பெயர்த் தெய்வம் ஈங்கென்னைக் கொணர, இப்பீடிகையால் என் பழம் பிறப்பை யுணர்ந்தேன்; இங்கு வந்தமையால் யான் அடைந்த பயன் இது; என் வரலாறும் இதுவே" என்றுரைத்து, 'நீ யார்?' என வினாவலும், அவள், "இத்தீவிற்கு அயலதான இரத்தினத் தீவத்தில் உயர்ந்து விளங்கும் சமந்த மலையின் உச்சியிலுள்ள புத்ததேவர் அடியிணைப் படிமைகளைத் தொழுதுகொண்டு முன்னொரு காலத்தில் இங்குவந்தேன்; வந்தது முதல் இந்திரன் ஏவலால் இப் பீடிகையைக் காத்துக் கொண்டிருக்கின்றேன்; என் பெயர் தீவதிலகை யென்பது; இதனைக் கேட்பாயாக: புத்ததேவர் அருளிய அறநெறியில் ஒழுகுவோரே இதனைக் காண்டற் குரியர்; கண்டவர் பழம் பிறப்புணர்ச்சி கைவரப் பெறுவர்; நீ அங்ஙன மாயினமையின் மிகவும் பெரியை; இப் பீடிகைக்கு முன் கோமுகி யென்னும் பொய்கை யொன்றுளது; அதனுள்ளிருந்து அமுதசுரபி யென்னும் அட்சய பாத்திரம் ஆண்டுதொறும் வைகாசித் தூய நிறைமதி நாளிலே தோன்றும் ; இன்று அந்நாளே; தோன்றும் பொழுதும் இதுவே; இப்பொழுது அது நின் கையில் வரும் போலும்; அதில் இடப்பட்ட அடிசில் கொள்ளக் குறையாது வளர்ந்து கொண்டிருக்கும்; அதன் வரலாற்றை நின்னூரில் அறவணவடிகள்பால் இனிக் கேட்பாய்," என்று கூறினள். கூற, மணிமேகலை அதனை விரும்பி, பீடிகையைத் தொழுது, அவளுடன் சென்று கோமுகியை வலஞ் செய்து வந்து நின்றவுடன், அப்பாத்திரம் பொய்கையினுள்ளிருந்து மணிமேகலையின் கையை அடைந்தது. உடனே அவள் அளவற்ற மகிழ்ச்சியடைந்து நின்று, புத்ததேவரைப் பலவாறு துதித்தாள். அப்பொழுது மணிமேகலைக்குத் தீவதிலகை உயிர்களுக் குண்டாம் பசிப் பிணியின் கொடுமையையும், அதனைத் தீர்ப்போரது பெருமையையும், உரைத்து, ‘இனி நீ உணவளித்து உயிர் கொடுத்தலாகிய அறத்தைச் செய்வாய்,' என்றனள். இது கேட்ட மணிமேகலை, "முற்பிறப்பில் என் கணவன் அரவால் இறந்தது பொறாது யான் தீப் பாய்ந்து உயிர் விடுகையில் முன்பு சாது சக்கர முனிவனை உண்பித்த நினைவுடையே னாயினேன்; அதனாலேயே இப்பாத்திரம் என் கையிற் புகுந்ததுபோலும்; இது நிற்க, ஈன்ற குழவியின் முகங்கண்டிரங்கிப் பால் சுரக்கும் தாய் போலவே, பசியால் வருந்தி, வெயிலென்றும் மழையென்றும் பாராமல் எங்கணும் அலைந்துதிரியும் ஏழைகளின் முகத்தைக் கண்டு இரங்கி, இப் பாத்திரம் அவர்கட்கு மேன்மேலும் அமுது சுரந்தளித்தலைக் காணும் வேட்கை யுடையேன்," என்று கூறித் தீவதிலகையை வணங்கி, புத்த பீடிகையைத் தொழுது வலங் கொண்டு, பாத்திரத்தைக் கையின் ஏந்தி வானிலே யெழுந்து சென்று, புகார்நகரிலே தன்னைக் காணாது வருந்தி வழியை நோக்கின வண்ணம் நிற்கும் சுதமதியையும் மாதவியையும் கண்டு, அவர்கள் வியப்படையும் வண்ணம் அவர்களுடைய முற்பிறப்பை அறிவித்தது, "மக்கள் யாக்கையாற் பெறுதற்குரிய தவ வழியை இனி அறவணவடிகள்பாற் பெறக் கடவீர் ; இஃது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி யென்னும் பாத்திரமாகும் ; இதனைத் தொழுமின்," என்று சொல்லி, அதனை அன்புடன் தொழுத அவர்களோடும் அறவணவடிகளைத் தரிசித்தற்குச் சென்றனள். (இதன்கண் மணிமேகலை புத்ததேவரை வாழ்த்தும் பகுதியும், பசியின் கொடுமையையும், அதனைப் போக்குதலாகிய அறத்தின் மேன்மையையும் உணர்த்தும் பகுதிகளும் நினைவில் இருத்தத்தக்க சிறப்புடையன.) மணிமே கலாதெய்வம் நீங்கிய பின்னர் மணிபல் லவத்திடை மணிமே கலைதான் வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும் தண்மலர்ப் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக் 5 காவதந் திரியக் கடவுட் கோலத்துத் தீவ திலகை செவ்வனந் தோன்றிக், கலங்கவிழ் மகளிரின் வந்தீங் கெய்திய இலங்குதொடி நல்லாய் யார்நீ என்றலும் எப்பிறப் பகத்துள் யார்நீ யென்றது 10 பொற்கொடி யன்னாய் பொருந்திக் கேளாய் போய பிறவியில் பூமியங் கிழவன் இராகுலன் மனையான் இலக்குமி யென்பேர் ஆய பிறவியில் ஆடலங் கணிகை மாதவி யீன்ற மணிமே கலையான் 15 என்பெயர்த் தெய்வம் ஈங்கெனைக் கொணரவிம் மன்பெரும் பீடிகை என்பிறப் புணர்ந்தேன் ஈங்கென் வரவிதீங் கெய்திய பயனிது பூங்கொடி யன்னாய் யார்நீ யென்றலும் ஆயிழை தன்பிறப் பறிந்தமை யறிந்த 20 தீவ திலகை செவ்வனம் உரைக்கும் ஈங்கிதன் அயலகத் திரத்தின தீவத் தோங்குயர் சமந்தத் துச்சி மீமிசை அறவியங் கிழவோன் அடியிணை யாகிய பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் 25 அறவி நாவாய் ஆங்குள தாதலின் தொழுதுவலங் கொண்டு வந்தேன் ஈங்குப் பழுதில் காட்சியிந் நன்மணிப் பீடிகை தேவர்கோன் ஏவலிற் காவல் பூண்டேன் தீவ திலகை என்பெய ரிதுகேள் 30 தரும தலைவன் தலைமையின் உரைத்த பெருமைசால் நல்லறம் பிறழா நோன்பினர் கண்டுகை தொழுவோர் கண்டதற் பின்னர்ப் பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி அரியர் உலகத் தாங்கவர்க் கறமொழி 35 உரிய துலகத் தொருதலை யாக ஆங்ஙன மாகிய அணியிழை இதுகேள் ஈங்கிப் பெரும்பெயர்ப் பீடிகை முன்னது மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய கோமுகி என்னுங் கொழுநீ ரிலஞ்சி 40 இருதிள வேனிலில் எரிகதி ரிடபத் தொருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின் மீனத் திடைநிலை மீனத் தகவையின் போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும் ஆபுத் திரன்கை யமுத சுரபியெனும் 45 மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய் அந்நா ளிந்நாள் அப்பொழு திப்பொழுது நின்னாங்கு வருவது போலும் நேரிழை ஆங்கதிற் பெய்த ஆருயிர் மருந்து வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது 50 தான்தொலை வில்லாத் தகைமைய தாகும் நறுமலர்க் கோதை நின்னூ ராங்கண் அறவணன் தன்பாற் கேட்குவை யிதன்திறம் என்றவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி மன்பெரும் பீடிகை தொழுதனள் வணங்கித் 55 தீவ திலகை தன்னொடுங் கூடிக் கோமுகி வலஞ்செய்து கொள்கையின் நிற்றலும் எழுந்துவலம் புரிந்த இளங்கொடி செங்கையில் தொழுதகை மரபிற் பாத்திரம் புகுதலும் பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள் 60 மாத்திரை யின்றி மனமகிழ் வெய்தி மாரனை வெல்லும் வீர நின்னடி தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்னடி பிற்ர்க்கறம் முயலும் பெரியோய் நின்னடி துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி 65 எண்பிறக் கொழிய இருந்தோய் நின்னடி கண்பிறர்க் களிக்குங் கண்ணோய் நின்னடி தீமொழிக் கடைத்த செவியோய் நின்னடி வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி நரகர் துயர்கெட நடப்போய் நின்னடி 70 உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி வணங்குதல் அல்லது வாழ்த்தலென் நாவிற் கடங்கா தென்ற வாயிழை முன்னர்ப் போதி நீழற் பொருந்தித் தோன்றும் நாதன் பாதம் நவைகெட ஏத்தித் 75 தீவ திலகை சேயிழைக் குரைக்கும் குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் நாணணி களையும் மாணெழில் சிதைக்கும் பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் 80 பசிப்பிணி யென்னும் பாவியது தீர்த்தோர் இசைச்சொல் அளவைக் கென்நா நிமிராது புன்மரம் புகையப் புகையழல் பொங்கி மன்னுயிர் மடிய மழைவளம் கரத்தலின் அரசுதலை நீங்கிய வருமறை யந்தணன் 85 இருநில மருங்கின் யாங்கணுந் திரிவோன் அரும்பசி களைய வாற்றுவது காணான் திருந்தா நாயூன் தின்னுத லுறுவோன் இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர் வந்து தோன்றிய வானவர் பெருந்தகை 90 மழைவளந் தருதலின் மன்னுயி ரோங்கிப் பிழையா விளையுளும் பெருகிய தன்றோ ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்க ளரும்பசி களைவோர் மேற்றே யுலகின் மெய்நெறி வாழ்க்கை 95 மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே உயிர்க்கொடை பூண்ட உரவோ யாகிக் கயக்கறு நல்லறங் கண்டனை யென்றலும் விட்ட பிறப்பில்யான் விரும்பிய காதலன் 100 திட்டி விடமுணச் செல்லுயிர் போவுழி உயிரொடு வேவே னுணர்வொழி காலத்து வெயில்விளங் கமையத்து விளங்கித் தோன்றிய சாது சக்கரன் றனையா னூட்டிய காலம் போல்வதோர் கனாமயக் குற்றேன் 105 ஆங்கதன் பயனே ஆருயிர் மருந்தாய் ஈங்கிப் பாத்திரம் என்கைப் புகுந்தது நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து வித்தி நல்லறம் விளைந்த வதன்பயன் துய்ப்போர் தம்மனைத் துணிச்சித ருடுத்து 110 வயிறுகாய் பெரும்பசி யலைத்தற் கிரங்கி வெயிலென முனியாது புயலென மடியாது புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன் அறங்கடை நில்லா தயர்வோர் பலரால் ஈன்ற குழவி முகங்கண் டிரங்கித் 115 தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத் தகன்சுரைப் பெய்த ஆருயிர் மருந்தவர் முகங்கண்டு சுரத்தல் காண்டல்வேட் கையேன்என மறந்தே னதன்திறம் நீயெடுத் துரைத்தனை 120 அறங்கரி யாக அருள்சுரந் தூட்டும் சிறந்தோர்க் கல்லது செவ்வனஞ் சுரவாது ஆங்ஙன மாயினை அதன்பயன் அறிந்தனை ஈங்குநின் றெழுவாய் என்றவள் உரைப்பத் தீவ திலகை தன்னடி வணங்கி 125 மாபெரும் பாத்திரம் மலர்க்கையில் ஏந்திக் கோமகன் பீடிகை தொழுது வலங்கொண்டு வானூ டெழுந்து மணிமே கலைதான் வழுவறு தெய்வம் வாய்மையின் உரைத்த எழுநாள் வந்த தென்மகள் வாராள் 130 வழுவாய் உண்டென மயங்குவோள் முன்னர் வந்து தோன்றி யவர்மயக் கங்களைந் தந்தில் அவர்க்கோர் அற்புதங் கூறும் இரவி வன்மன் ஒருபெரு மகளே துரகத் தானைத் துச்சயன் தேவி 135 அமுத பதிவயிற் றரிதில் தோன்றித் தவ்வைய ராகிய தாரையும் வீரையும் அவ்வைய ராயினீர் நும்மடி தொழுதேன் வாய்வ தாக மானிட யாக்கையில் தீவினை அறுக்கும் செய்தவம் நுமக்கீங் 140 கறவண அடிகள் தம்பாற் பெறுமின் செறிதொடி நல்லீர் உம்பிறப் பீங்கிஃ தாபுத் திரன்கை அமுத சுரபியெனும் மாபெரும் பாத்திரம் நீயிரும் தொழுமெனத் தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும் 145 பழுதறு மாதவன் பாதம் படர்கேம் எழுகென வெழுந்தெனள் இளங்கொடி தானென உரை 1-5. மணிமேகலா தெய்வம் நீங்கியபின்னர்-மணிமேகலா தெய்வம் மந்திரம் அளித்துச் சென்ற பின்னர், மணிபல்லவத் திடை மணிமேகலைதான்-மணிமேகலை மணிபல்லவத்தின் கண் உள்ள, வெண்மணற் குன்றமும்- வெள்ளிய மணற் குன்றுகளையும், விரிபூஞ் சோலையும்- விரிந்த பூம்பொழில் களையும், தண்மலர்ப் பொய்கையும்- குளிர்ந்த மலர்களை யுடைய பொய்கைகளையும், தாழ்ந்தனள் நோக்கி - மெல்ல நோக்கிக்கொண்டு, காவதம் திரிய - ஒரு காத தூரம் சுற்றிக் கொண்டிருக்க; குன்றம், சோலை, பொய்கை என்பவற்றிற்கு இரண்டனுருபு விரிக்க. பூக்கள் விரிந்த சோலையுமாம். காதம் காவதம் என விரிந்து நின்றது; 1வ, பகுதிப் பொருள் விகுதி யென்பர் அடியார்க்கு நல்லார். 5-8. கடவுட் கோலத்துத் தீவதிலகை செவ்வனம் தோன்றி-தெய்வ வேடமுடைய தீவதிலகை என்பாள் செவ்விதாகத் தோன்றி, கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய - மரக்கலம் கவிழப்பெற்று அதினின்றும் உய்ந்துவந்த மகளிரைப்போல் ஈண்டுவந்து சேர்ந்த, இலங்குதொடி நல்லாய் யார் நீ என்றலும் - விளங்குகின்ற வளையல்களை யணிந்த மெல்லியலே நீ யார் என வினவுதலும்; தீவதிலகை : இந்திரன் ஏவலாற் புத்தன் பாத பீடிகையைப் பாது காத்துக்கொண்டு மணிபல்லவத்தில் இருப்பவள்; தீவுக்குத் திலகம் போன்றவள் என்றது பொருள். தனித்து ஓர் தீவில் வந்திருத்தலின் ‘கலங்கவிழ் மகளிர் போல்' என்றாள். செவ்வனம்-நேரே யென்றுமாம் 9-18. எப்பிறப் பகத்துள் யார் நீ என்றது-யார் நீ யென என்னை வினாவியது எனது எப்பிறப்பின் நிகழ்ச்சி குறித்து, பொற்கொடி அன்னாய் பொருந்திக் கேளாய் - காமவல்லி போல்வாய் யான் கூறுவதனை மனம் பொருந்திக் கேட்பாயாக, போய பிறவியில்- சென்ற பிறவியில், பூமியங் கிழவன் - நிலவுலகினையாண்ட மன்னனாகிய, இராகுலன் மனை யான்-இராகுலனுடைய மனைவியாவேன்யான், இலக்குமி என்பேர் - என்னுடைய பெயர் இலக்குமி என்பது, ஆய பிறவியில்-இப் பிறப்பிலே, ஆடலங்கணிகை மாதவி ஈன்ற மணிமேகலை யான் - நாடகக் கணிகையாகிய மாதவி பெற்ற மணிமேகலை யாவேன் நான், என் பெயர்த் தெய்வம் ஈங்கு எனைக் கொணர - மணிமேகலா தெய்வம் ஈண்டு என்னைக் கொண்டுவர, இம் மன்பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன்- பெருமை பொருந்திய இப் பெரும் பீடிகையால் என் முற்பிறப்பினை அறிந்தேன், ஈங்கு என் வரவு இது-ஈண்டு நான் வந்த வரலாறு இது, ஈங்கு எய்திய பயன் இது - இவ்விடத்தில் யான் அடைந்த பயன் இதுவாகும், பூங்கொடி அன்னாய் யார் நீ என்றலும் - பூங்கொடி போல்வாய் நீதான் யார் எனக் கேட்டலும்; பூமியங் கிழவன் - தரணிபன். ஆய - இப்பொழுது உளதாகிய, பீடிகை-பீடிகையால்; மூன்றனுருபு தொக்கது. எய்திய-வந்தமையாலாகிய என்றுமாம். பயன் இது என்றது பழம்பிறப் புணர்ந்தமையை. 19-29. ஆயிழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த - மணிமேகலை தன் முற்பிறப்பினை அறிந்த தன்மையை உணர்ந்த, தீவதிலகை செவ்வனம் உரைக்கும்-தீவதிலகை செம்மையாகக் கூறுகின்றாள், ஈங்கிதன் அயலகத்து இரத்தின தீவத்து-இம் மணிபல்லவத்தின் அயலிடத்துள்ளதாகிய இரத்தின தீவத்தின்கண், ஓங்குயர் சமந்தத்து உச்சிமீமிசை-மிக உயர்ந்த சமந்தம் என்னும் மலையின் உச்சிமீது, அறவியங் கிழவோன் அடியிணை ஆகிய-அறத்திற்கு உரிமையுடையோனாகிய புத்தனின் இணையடிகள் என்னும், பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் - பிறவியாகிய பெரிய கடலைக் கடத்துவிக்கும், அறவி நாவாய் ஆங்குளது ஆதலின் - அறத்துடன் கூடிய மரக்கலம் அவ்விடத் துள்ளதாகலின், தொழுது வலங் கொண்டு வந்தேன் ஈங்கு-அதனை வலங்கொண்டு பணிந்து ஈண்டு வந்தேன், பழுதில் காட்சி இந் நன் மணிப் பீடிகை - குற்றமற்ற தோற்றத் தினையுடைய நன்றாகிய இந்த மணிப்பீடத்தை, தேவர் கோன் ஏவலின்காவல் பூண்டேன் - இந்திரன் ஏவலாற் காத்தலை மேற்கொண்டேன், தீவதிலகை என் பெயர் - எனது பெயர் தீவதிலகை என்பதாகும் ; ஓங்குயர், மீமிசை என்பன ஒரு பொருட் பன்மொழிகள். சமந்தம் சமனொளி யெனவும் வழங்குமென்பது, "இலங்கா தீவத்துச் சமனொளி யென்னுஞ் சிலம்பினை யெய்தி" (28 : 107-8) என்று பின் வருவதனா லறியப்படும். சமந்தம் என்பதும், சமனொளி என்பதும் இலங்கையிலுள்ள ‘ஆடம்ஸ் பீக்' என ஆங்கில மொழியில் வழங்கும் மலையையே குறிக்குமென்று கருதுவர். அறவி - அறம். காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவியைப் பெருங்கடல் என்றார். அறவி நாவாய் - அறவுருவினதாகிய நாவாய் என்றுமாம். பிறவியாகிய பெருங்கடலைக் கடத்தும் அடியிணையாகிய நாவாய் என்க; 1"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவனடி சேரா தார்" என்பதன் கருத்து இதில் அமைந்துள்ளமை காண்க. 29-35. இது கேள் - இதனைக் கேட்பாயாக, தரும தலைவன் தலைமையின் உரைத்த-தரும வேந்தனாகிய புத்தன் தலைமை யாகக் கூறிய, பெருமைசால் நல்லறம் பிறழா நோன்பினர்-பெருமை மிக்க நல்லறத்தில் வழுவாத நோன்புடையாரே, கண்டு கைதொழுவோர்-இப் பீடிகையைக் கண்டு கைகூப்பி வணங்குதற் குரியோராவர், கண்டதற் பின்னர்-அவ்வாறு இப் பீடிகையைக் கண்டபின்னர், பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி-பைந்தொடியே அவர் முற்பிறப்பை அறிந்தோராவர். அரியர் உலகத்து- அத்தன்மையர் உலகத்திற் பெறுதற்கரியர், ஆங்கவர்க்கு அற மொழி உரியது உலகத்து ஒருதலையாக - அவர்கட்கு உறுதியாக உலகிலே தருமபதம் உரியது; தருமதலைவன்-தருமராசன்; புத்தன் பெயர்களுள் ஒன்று. நோன்பினராய்க் கண்டு தொழுவோர் என்றலுமாம். அவர்க்கு அறமொழி உரியது என்பது அவர் அறமொழி கேட்டற்குரியர் என்றபடி. 36-39. ஆங்ஙனம் ஆகிய அணியிழை இதுகேள் - அத் தன்மையை உடையையாகிய அணியிழையே இதனைக் கேட்பாயாக ஈங்கு இப்பெரும் பெயர்ப் பீடிகை முன்னது-பெரும்புகழுடைய இப் பீடத்தின் முன்னிடத்தாகிய மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய- அழகிய குவளை மலர்களும் நெய்தல் மலர்களும் கலந்து விளங்கு கின்ற, கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி-கோமுகி என்னும் பெயருடைய அழகிய நீரையுடைய பொய்கையின்கண்; ஆங்ஙனமாகிய அணியிழை என்றது அறமொழி கேட்டற்கு உரிமையுடைய என்றபடி பெயர் - புகழ். பெரும் பெயர்ப்பீடிகை - வீடு பயக்கும் பீடிகையுமாம் முன்னதாகிய இலஞ்சியில் என்க. 40-45. இருது இளவேனிலில் எரிகதிர் இடபத்து-இளவேனிற் பரு வத்தில் ஞாயிறு இடபத்தில் உள்ள வைகாசித் திங்களில், ஒருபதின் மேலும் ஒரு மூன்று சென்றபின் மீனத்து இடை நிலை மீனத்து அகவையின் - இருபத்தேழு நாண்மீன்களுள் கார்த்திகையை முதலாகக்கொண்டு எண்ணப்படுகின்ற பதின்மூன்றுநாண்மீன்கள் சென்றபின் இடையில் இருப்ப தாகிய விசாகத்தின்கண், போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும் - புத்தனுடன் பொருந்தித் தோன்றாநிற்கும், ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் - ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி யென்னும் மிக்க பெருமையுடைய பாத்திரம், மடக்கொடி கேளாய் - இளங் கொடியே கேட்பாயாக; இலஞ்சியில் இடபத்து இடைநிலை மீனத் தகவையில் பாத்திரம் பொருந்தித் தோன்றுமென்க. இளவேனிலாகிய இருதுவில் என மாறுக. இளவேனில் - சித்திரைத் திங்களும் வைகாசித் திங்களும் சேர்ந்த பெரும்பொழுது, எரிகதிர்- வெங்கதிர்: ஞாயிறு இடபத்தி லுள்ள திங்கள் என்க. மீனத்து-மீன்களுள். இடைநிலை மீனத் தகவையில்-இடையில் நிற்கும் மீனின்கண் ; அது விசாகமென்பது "மதிநாண் முற்றிய மங்கலத் திருநாள்" (10:83) என முன்புரைத் தமையான் அறியப்படும். புத்தர் பிறந்ததும் ஞானம் பெற்றதும் வைகாசித் தூயநிறைமதி நாளாகலின் அப்பொய்கையில் ஆண்டுதோறும் அந்நாளிற் றோன்றும் அமுதசுரபி 'போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்' எனப்பட்டது. "இருதிள...பொருந்தி" என்பது இவ்வாறே பின்பும் (15:23 - 6) வருதல் காண்க. முன்னொரு காலத்திற் கார்த்திகை முதலாக நாட்கள் எண்ணப்பட்டமையின் இருபத்தேழு நாட்களில் விசாகம் பதினான்காவதாகிய நடுநாளாயிற்று. ஒவ்வோராண்டிலும் பகலும் இரவும் முப்பது முப்பது நாழிகையாகச் சமனுற்ற இரண்டு விழுவ நாட்களுள் சித்திரை விழுவில் ஞாயிற்றுக்கு எந்த நாண்மீனிற் புகுதி ஏற்படுகின்றதோ அதனை நான்மீன்களுள் முதலாக வைத்துக் கூறுவது சோதிடநூற் றுணிபாகலின், முன்னொரு காலத்தில் ஞாயிற்றுக்குக் கார்த்திகையிற் புகுதியிருந்தபொழுது அதனை முதலாகக்கொண்டு எண்ணி வந்தனர். பின்பு, வராகமிகிரர் எனப் பெயர்பெற்ற சோதிட வாசிரியர் தமது காலத்தில் சித்திரை விழுநாளில் ஞாயிற்றுக்கு அச்சுவினியிற் புகுதியுண்டாயிருத்தலை அறிந்து, அச்சுவினி முதலாக எண்ணும் வழக்கத்தை யுண்டாக்கின ரென்பர். போதி - அரசமரம்; போதத்தையுடைய தென்பது பொருள்; போதம்-ஞானம்; இதனடியிலிருந்தபொழுது நால்வகை வாய்மைகளையும் அறிந்து கொள்ளுதற்குரிய ஞானத்தைப் புத்தன் அடைந்தமை யால், இஃது இப் பெயர் பெற்றதென்பர் ; போதியுரவோன், போதித்தலைவன், போதிமாதவன் என்றிங்ஙனம் இந் நூலுட் பல விடத்துப் பின் கூறப்படுதலும்காண்க. அரசு மரங்களுட்சிறந்ததென்பது பகவற்கீதை முதலியவற்றானும் அறியப்படும். போதி என்பது ஞானம் என்ற பொருளில் வருதலும் உண்டு. அமுத சுரபி-அமுதத்தைக் கொடுக்கும் காமதேனுவைப் போன்ற தென்பது பொருள்; சுரபி-பசு; இனி, சுரபி-மணம் எனக் கொண்டு, அமிழ்தம் போன்ற மணமுடைய தென்றும் பொருள் கூறுவர். 46-52. அந்நாள் இந்நாள் அப்பொழுது இப்பொழுது - அந்த நன்னாளும் இந்நாளே அது தோன்றும்பொழுதும் இப்பொழுதே ஆகலின், நின்னாங்கு வருவதுபோலும் நேரிழை-நேரிழாய் அது நின் கையிடத்து வருவதுபோலும், ஆங்கதிற் பெய்த ஆருயிர் மருந்து-அப் பாத்திரத்திலிட்ட அரிய உயிரின் மருந்தாகிய அன்னம், வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது-வாங்குவோர் களுடைய கையிடத்தை வருத்துதல் அன்றி, தான் தொலைவில்லாத் தகைமையது ஆகும்-தான் அழிவில்லாத இயல்பினையுடைய தாகும், நறுமலர்க் கோதை-மணம் மிக்க மலர்மாலையினை யணிந்த நங்காய், நின்னூர் ஆங்கண் - நின் பதியின்கண் அறவணன் தன் பால் கேட்குவை இதன் திறம்-அறவணவடி களிடத்தில் இப்பாத்திரத்தின் வரலாற்றினைக் கேட்பாய்; ஆருயிர்மருந்து-அடிசில்; உயிர்களைப் பாதுகாத்தலின் இங்ஙனம் கூறப்பட்டது; "அகன்சுரைப் பெய்த வாருயிர் மருந்து" (11 : 117) என்பர் பின்னும்; 1"இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்" என்பதனால் சோறும் நீரும் இருமருந்தெனப்படுதல் காண்க. தான் என்றது சோற்றை. 53-60. என்று அவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி-என்று தீவதிலகை மொழிதலும் மணிமேகலை அதனை விரும்பி, மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி-பெருமை மிக்க பீடத்தைக் கும்பிட்டு வணங்கி, தீவதிலகை தன்னொடும் கூடி-தீவதிலகை யொடுஞ் சேர்ந்து, கோமுகி வலஞ்செய்து கொள்கையின் நிற்றலும்-கோமுகிப் பொய்கையை வலம் வந்து நியமத்தோடு நிற்றலும், எழுந்து வலம் புரிந்த இளங் கொடி செங்கையில் தொழும் தகை மரபிற் பாத்திரம் புகுதலும்-அனைவரும் தொழத்தக்க மரபினையுடைய மாபெரும் பாத்திரம் பொய்கையினின்றும் எழுந்து வலம் புரிந்து நின்ற மணிமேகலையின் சிவந்த கைகளிற் புகுதலும், பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள் மாத்திரை இன்றி மனமகிழ்வு எய்தி-பாத்திரத்தைப் பெற்ற மணிமேகலை அளவின்றி மனமகிழ்ச்சி யடைந்து; பாத்திரம் எழுந்து செங்கையிற் புகுதலும் என்க. 61-72. மாரனை வெல்லும் வீர நின் அடி-மாரனை வென்ற வீரனே நின் திருவடிகளை, தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின் அடி-தீய வழிகளாகிய மிக்க பகையை நீக்கினோய் நின் திருவடிகளை, பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின் அடி-ஏனையோர்க்கு அறம் உண்டாதற்கு முயல்கின்ற பெரியோனே நின் திருவடிகளை, துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின் அடி-சுவர்க்க இன்பத்தை வேண்டாத பழையோனே நின் திருவடிகளை, எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி - மக்களுடைய எண்ணங்கள் எட்டாமற் பின்னே கிடக்குமாறு மேற்பட்ட நிலையிற் சென்றோய் நின் திருவடிகளை, கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின் அடி - உயிர்கட்கு ஞானத்தை அளிக்கும் மெய்யுணர்வுடையோய் நின் திருவடி களை, தீமொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி - தீயமொழிகளைக் கேளாதிருக்குமாறு அடைக்கப்பட்ட காதினை யுடையோனே நின் திருவடிகளை, வாய்மொழி சிறந்த நாவோய் நின் அடி - மெய்மொழிகள் சிறந்த நாவினை யுடையோய் நின் திருவடிகளை, நரகர்துயர் கெட நடப்போய் நின் அடி-நிரயத்திலிருப்போர்களின் துன்பம் நீங்குமாறு ஆண்டுச்சென்றோய் நின் திருவடிகளை, உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி - நாகர்களின் துன்பத்தை நீக்குவோய் நின் திருவடிகளை, வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது என்ற ஆயிழை முன்னர்-வணங்குதலேயன்றி வாழ்த்துதல் எனது நாவின்கண் அடங்காது என்று பரவிய மணிமேகலையின் முன்னர்; பாத்திரம் பெற்ற மகிழ்ச்சியாலும் அன்பின் ஆராமையினாலும் ‘நின்னடி’ என்பதனைப் பலகால் அடுக்கிக் கூறினளாயினும், வீர, கடிந்தோய் என்றிங்ஙனம் விளியடுத்த பெயர்களை ஒருசேரக் கூறி, அவற்றினிறுதியில் ‘நின்னடி' என்று கூறுதல் அமையும். மாரன் - அறத்திற்கு மாறாய தீயவிருப்பங்களை மனத்தில் உண்டாக்கும் ஒரு தேவன் ; மாபோதியின்கீழ் தவஞ்செய் திருக்கையில் இவன் செய்த இடையூறுகளை யெல்லாம் புத்தன் வென்று மேம்பட்டு விளங்கினன் என்பர். முயலுத லாவது அறத்தினை அறிவுறுத்தல்; பிறர் பொருட்டு அறத்தினை முயன்று செய்யும் என்றுமாம். அழிவற்ற நிருவாணமே (முத்தியே) அவனால் விரும்பப்பட்டமையின் அழியு மியல்புடைய துறக்கம் வேண்டப் படாதாயிற்று. பிறக்கு-பின்; 1"துறைபிறக் கொழியப் போகி" என்பது காண்க. கண்-ஈண்டு ஞானம்; புத்தன் எடுத்த பல பிறப்புக்களுள் ஒன்றில் வந்து இரந்த இந்திரற்குக் கண்ணைக் கொடுத்ததனை என்று இதற்குப் பொருளாகக் கொள்ளுதல் சிறப்பின்று. தீமொழி-பொய், குறளை, வன்சொல், பயனில்சொல் என்பன. நரகர் சிலரது துன்பந் தணித்தற் பொருட்டுப் புத்தன் ஒரு பிறப்பில் நரகலோகத்திற்குச் சென்றான் என்பர். 2"அருவினை சிலர் கெட வொரு பெரு நரகிடை, எரிசுடர் மரைமல ரெனவிடு மடியினை" என்பது காண்க. கருடனுக்கு அருளறம் போதித்து நாகர் துயரினைப் போக்கினா னென்பதும் வீரசோழியத்து அச் செய்யுளுரை மேற்கோள்களால் அறியப்படும். 73-75. போதிநீழல் பொருந்தித் தோன்றும்-அரசமரத்தின் நீழலில் அமர்ந்து விளங்கும், நாதன் பாதம் நவை கெட ஏத்தி-புத்தன் அடிகளைக் குற்றம் நீங்குமாறு துதித்து, தீவதிலகை சேயிழைக்கு உரைக்கும்-மணிமேகலைக்குத் தீவதிலகை மொழியும்; புத்தனை நாதன் எனப் பின்னரும் வழங்குவர். 76-81. குடிப்பிறப்பு அழிக்கும்-தன்னாற் பற்றப்பட்டாருடைய உயர்குடிப் பிறப்பைக் கெடுக்கும், விழுப்பம்கொல்லும்-சிறப்பினை அழிக்கும், பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம் - பற்றிய கல்வியாகிய பெரிய தெப்பத்தை நீக்கும், நாண் அணி களையும்-நாணாகிய அணிகலனைப் போக்கும், மாண் எழில் சிதைக்கும்-மாட்சிமைப்பட்ட அழகைக் குலைக்கும், பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்-பூண் விளங்குகின்ற கொங்கைகளையுடைய மகளிரொடு பிறர் கடைவாயிலில் நிறுத்தும், பசிப்பிணி என்னும் பாவி-பசி நோய் என்று கூறப்படுகின்ற பாவி, அது தீர்த்தோர்-அத்தகைய பசியை நீக்கினோரது, இசைச்சொல் அளவைக்கு என் நா நிமிராது-புகழை அளந்துரைத்தற்கு எனது நா எழாது; குடிப் பிறந்தார்க் கேலாத இழிசெயல்களை உளவாக்கலின் அதனை அழிக்கும் என்றாள். பிடித்த-பற்றுக் கோடாகக் கொண்ட. விடூஉம்-விடுவிக்கும்: பிறவினை; கல்வியும் அழியும் என்றபடி; அவரது சொல் செல்லா தென்றவாறுமாம்; 3"நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார், சொற்பொருள் சோர்வு படும்" என்பது காண்க. அழகு செய்தலின் நாண் அணியெனப்பட்டது ; 4"அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு" என்றார் வள்ளுவனாரும். ஆணெழில் எனப் பிரித்தலுமாம்; 1"பிறந்த குலமாயும் பேராண்மை மாயும், சிறந்த தங் கல்வியு மாயும்" என்பது அறியற்பாலது. பண்பிற்குப் பண்பு இல்லையேனும் தன்னாற் பற்றப்பட்டாருடைய நலங்களை யெல்லாம் அழித்தற் கொடுமைபற்றி, வேறு பண்புள்ளதுபோல் பசியைப் பாவி யென்றார்; 2"இன்மை யெனவொரு பாவி" என்பதுங் காண்க. நிமிராது-எழாது; பேச முயலாது; புகழ் அளவுபடா தென்றபடி. 82-91. புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி-புல்லும் மரமும் கரியுமாறு புகையையுடைய அழல்போலும் வெப்பம் மிகுந்து, மன்னுயிர் மடிய மழைவளம் கரத்தலின்-நிலைபெற்ற உயிர்கள் அழியுமாறு மழையாகிய செல்வம் மறைந்து போனமையால், அரசுதலை நீங்கிய அருமறை அந்தணன்-அரசுபுரிதலினின்றும் நீங்கிய அரிய மறைகளை யுணர்ந்த அந்தணனாகிய விசுவாமித்திர முனிவன், இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன்-பெரிய பூமியிடத்து யாண்டும் சுற்று கின்றவன், அரும்பசி களைய ஆற்றுவது காணான்-அரிய பசியை நீக்க உதவுவதாகிய உணவு ஒன்றையுங் காணாத வனாய், திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன்-சிறிதும் பொருந்தாத நாயின் ஊனைத் தின்னத் தொடங்குவோன், இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்-உண்ணுமுன் செய்தற் குரிய தேவ பலியினைச் செய்கின்ற பொழுது அவன் முன்னர், வந்து தோன்றியவானவர் பெருந்தகை -வந்து வெளிப்பட்ட அமரர் தலைவன், மழைவளம் தருதலின்-மழைவளத்தை அளித்தலான், மன்னுயிர் ஓங்கி-நிலைபெற்ற உயிர்கள் மிகுந்து, பிழையா விளையுளும் பெருகியது அன்றோ - தப்பாத விளைவும் மிகுந்த தன்றோ; புறவயிரமுடையன புல் எனவும், அகவயிர முடையன மரமெனவும் படுமென்பது தொல்காப்பியத்து மரபியலானறியப் படும்; புல் - அறுகு முதலியனவுமாம். விசுவாமித்திரன் அரசர் மரபிற் பிறந்து புவியை ஆண்டுவருங்கால் வசிட்டருடன் முரணி அவரது தவ ஆற்றலையறிந்து, தானும் அருந்தவம்புரிந்து முனிவனாயினன் என்பது வரலாறு. அவன் பசிக்கொடுமையால் நாயூன் தின்ன முயன்ற செய்தி மனு நூலின் பத்தாம் அத்தியாயத்தினும் கூறப் பட்டுளது. இந்திர சிறப்பு- உண்ணுமுன் செய்யும் பலியீடு; இதனை ‘வைச்சுவதேவம்' என்பர்; பிற தேவர்கட்கும் உரிய தெனினும் தலைமைபற்றி 'இந்திர சிறப்பு' எனப்பட்டது. இது பசியின் கொடுமைக்கு ஒரு வரலாறு காட்டியபடி. 92-98. ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்-பொறுக்கும் வன்மையுடை யோராகிய செல்வர்க்கு அளிக் கின்றவர்கள் அறத்தினை விலை கூறுவோ ரேயாவர், ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை-வறிஞர்களின் தீர்த்தற்கரிய பசியை நீக்குவோரின் கண்ணதே உலகத்தின் உண்மை நெறியாகிய வாழ்க்கை, மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் - அணுக்கள் செறிந்த நிலவுலகில் வாழ்வோர்களில் எல்லாம், உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே - உணவினை அளித்தோரே உயிர்கொடுத்தோராவர், உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகி-உயிரினை அளிக்கும் அறத்தினை மேற்கொண்ட வலிய அறிவினை உடையையாகி, கயக்கறு நல்லறம் கண்டனை என்றலும்-கலங்குதலற்ற நல்லறத்தினை அறிந்தாய் என்று தீவதிலகை உரைத்தலும் ; ஆற்றுநர்க்கு-கைம்மாறு செய்யும் வலியுடையோர்க்கு என்றுமாம். அறவிலை பகர்வோர் - அறமென்னும் பெயரால் வாணிகஞ் செய்வோர் என்றுமாம்; பயன் கருதிச் செய்வோரா கின்றமையின் "அறவிலை பகர்வோர்" என்றாள். 1"இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வாணிகன் ஆஅ யல்லன்" 2"ஏற்றகை மாற்றாமை யென்னானுந் தாம் வரையா, தாற்றாதார்க் கீவதா மாண்கடன்" என்பன ஈண்டு அறியற் பாலன. வாழ்வோர்க்கெல்லாம்- வாழ்வோ ரெல்லாருள்ளும் என்க : வேற்றுமை மயக்கம். 3"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" எனப் புறப்பாட்டில் வந்துள்ளமையும் காண்க. கயக்கு - கயங்குதல்; கலங்குதல்; "கயக்கறுமாக்கள்" (16 : 85) என்பர் பின்னும். 99-106 விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன்-போன பிறவியில் என்னால் விரும்பப்பட்ட கணவன், திட்டிவிடம் உணச் செல் உயிர் போவுழி-திட்டிவிடமெனும் பாம்பு தீண்டப்பெற்று உயிர் நீங்கினவிடத்து, உயிரொடு வேவேன் உணர்வு ஒழிகாலத்து - தீயிற் குளித்து உயிருடன் வேகாநிற்கும் யான் உணர்வு நீங்குந் தறுவாயில், வெயில் விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய - வெயில் விளங்குகின்ற உச்சிப் பொழுதில் விளக்கமுற்றுத் தோன்றிய, சாது சக்கரன் தனை யான் ஊட்டிய காலம் போல்வதோர் கனாமயக்குற்றேன்-சாது சக்கரனை யான் உண்பித்த பொழுதைப் போல்வதாகிய ஒரு கனாவாகிய மயக்கத்தை யடைந்தேன், ஆங்கதன் பயனே - அக் கனாப்போலும் நினைவின் பயனே, ஆருயிர் மருந்தாய் ஈங்கு இப்பாத்திரம் என் கைப்புகுந்தது - அரிய உயிர்களைக் காக்கும் மருந்தாகி இப் பாத்திரம் ஈண்டு என் கையிற்புக்கது ; உயிருடன் தீயிற் குளித்து வெந்தமையின் 'உயிருடன் வேவேன்' என்றாள். வேவேன் : பெயர். முற்பிறப்பிலே கணவன் திட்டி விடத்தாலிறந்ததும், இவள் தீயிற் குளித்ததும் (9:49--50) முன்னரும் போந்தமை யறிக. வேவேன் உணர்வொழி காலத்துக் கனாமயக் குற்றேன் என்க. ‘அதன் பயனே......என்கைப் புகுந்தது' என்னுங் கருத்து உண்மை நூற் றுணிபாதல், 1"பிறப்பென்னும் பேதைமை" என்னுங் குறளுரையில்; "உயிர் உடம்பின் நீங்குங்காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது, அஃது அதுவாய்த் தோன்று மென்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபாகலின்" எனப் பரிமேலழகர் கூறியவாற்றானும் அறியப்படும். புகுந்தது அதன்பயனே யாகுமென்க. 107-118. நாவலொடு பெரிய மாபெருந் தீவத்து-மிகப் பெரிய சம்புத் தீவின்கண். வித்தி நல்லறம் விளைந்த அதன் பயன் - நல்லறத்தை விதைத்து அதன்கண் விளைந்த பயனாகிய செல்வத்தை, துய்ப்போர் தம்மனை - அனுபவிக்கும் செல்வருடைய இல்லத்தில், துணிச் சிதர் உடுத்து - கிழிந்த சீரைகளை உடுத்திக்கொண்டு, வயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி - வயிற்றினைக் காய்கின்ற பெரிய பசி அலைத்தலால் வருந்தி, வெயில் என முனியாது புயல் என மடியாது - மிக்க வெயில் என்று வெறுப் படையாமலும் மழை என்று ஓரிடத்தில் தங்காமலும் சென்று, புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து - தலைவாயிலில் நின்று கொண்டு துன்பமிகுந்து, முன் அறங்கடை - முற்பிறப்பிற் செய்த தீவினையால், நில்லாது அயர்வோர் பலரால்-ஓரிடத்தில் நில்லாமல் அயர்கின்றவர் பலராவர். ஆகலின், ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி-பெற்ற குழவியினது முகத்தைக் கண்டு இரங்கி, தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே - இனிய பாலைச் சுரக்கின்ற தாயின் கொங்கையைப் போல, நெஞ்சுவழிப் படூஉம் விஞ்சைப் பாத்திரத்து - மனத்தின் வழியே ஒழுகும்விஞ்சையையுடைய இப்பாத்திரத்தின்கண், அகன் சுரைப்பெய்த ஆருயிர் மருந்து - அகன்ற உள்ளிடத்திலிட்ட அரியவுயிர் மருந்தாகிய உணவு, அவர் முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என - அவ்வறிஞர் களின் முகத்தைக் கண்டு சுரத்தலைக் காணும் விருப்பமுடையேன் என்று மணிமேகலை கூற ; சிதர் - சிதார் எனவும் வழங்கும். வயிறு காய்-வயிறு உணவின்றிக் காய்ந்தமையாலாகிய எனலுமாம். அலைத்தற்கு-அலைத்தலால். அறத்தின் நீக்கப்பட்டமையின், பாவம் அறங்கடை யெனப் பட்டது; 1"அறன் கடை நின்றாரு ளெல்லாம்" என்பதூஉங் காண்க. 2"அகத்தாரே வாழ்வாரென் றண்ணாந்து நோக்கிப், புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி, மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத் தவத்தாற் றவஞ்செய்யாதார்" என்பது ஈண்டு அறியற்பாலது. மடியாது சென்று என ஒரு சொல்லும், அறங்கடையால் என மூன்றனுருபும் விரித்துரைக்க. சுரை-உட்டுளை; ஈண்டுப் பாத்திரத்தின் குழிந்த உள்ளிடம். 119-123. மறந்தேன் அதன் திறம் நீ எடுத்துரைத்தனை-யான் அதன் இயல் பினை நன்கு மறந்தேன் நீ எடுத்துக் கூறினாய், அறம் கரியாக அருள் சுரந்து ஊட்டும் - அறமே சான்றாக அருட்பெருக்கால் உண்பிக்கும், சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது-சிறப்புடையோர்கட்கு அன்றி ஏனையோர்க்குச் செவ்வனே சுரவாது, ஆங்ஙனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை-அறம் கரியாக அருள் சுரந்தூட்டும் அத்தன்மையை யுடையை யாயினை அங்ஙனம் ஊட்டுவதின் பயனையும் அறிந்தாய் ஆதலின், ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்ப-ஈண்டு நின்று நின் பதிக்கு எழுவாயாக என்று தீவதிலகை மொழிய ; அறம் கரியாக என்றது பிறரறியச் செய்தல் வேண்டா என்ற படி. அரு ளாவது ஒன்றின் துயர் கண்டவழி வேறு காரணமின்றித் தோன்றும் இரக்கம். ‘அவர் முகங்கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன்' என முன்பு கூறியதனால் ‘ஆங்ஙனமாயினை' என்றாள். 124-131. தீவதிலகை தன் அடி வணங்கி-தீவதிலகையினுடைய அடிகளைப் பணிந்து, மாபெரும் பாத்திரம் மலர்க்கையின் ஏந்தி - பெருமை மிக்க அமுதசுரபியை மலர்போலும் கையில் ஏந்தி, கோமகன் பீடிகை தொழுது வலங்கொண்டு-புத்தன் திருவடிப் பீடத்தை வலங்கொண்டு வணக்கஞ்செய்து, வானூடு எழுந்து மணிமேகலைதான் - மணிமேகலை விசும்பின் வழியாக எழுந்து, வழுவறு தெய்வம் வாய்மையின் உரைத்த - வழுவுதலற்ற மணிமேகலா தெய்வம் உறுதியாகக் கூறிய, எழுநாள் வந்தது என் மகள் வாராள் - ஏழாம் நாள் வந்தது என் மகள் வரவில்லை, வழுவாய் உண்டென மயங்குவோள் முன்னர் - தப்புதலும் உண்டு போலும் என்று கலங்குகின்ற மாதவியின்முன், வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து-வந்து தோன்றி அவர்களுடைய கலக்கத்தை நீக்கி; மயங்குவோள் - சுதமதியுமாம். இருவரும் அகப்பட ‘அவர்' என்றார். மணிமேகலை தான் வந்து தோன்றி யென்க. 132-137. அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும் - அவ்விடத்தில் அவர்கட்கு ஓர் அற்புதத்தைக் கூறுவாள், இரவிவன்மன் ஒரு பெருமகளே - இரவிவன்மனுடைய ஒப்பற்ற பெரிய மகளே, துரகத்தானைத் துச்சயன் தேவி-குதிரைச் சேனைகளை யுடைய துச்சயனுடைய மனைவியே, அமுதபதி வயிற்று அரிதில் தோன்றி- அமுதபதியின் வயிற்றின்கண் அரிதாகப் பிறந்து, தவ்வையா ஆகிய தாரையும் வீரையும்-எனக்குத் தமக்கையராகிய தாரையும் வீரையுமாய நீவிர், அவ்வையர் ஆயினீர்-இப்பிறப்பில் எனக்குத் தாயர் ஆயினீர், நும் அடி தொழுதேன் - நும்முடைய அடிகளை வணங்கினேன் ; தேவி - மாதவி ; சுதமதியுமாம். தவ்வையர் - தமக்கைமார். அவ்வையர் - தாய்மார் ; மாதவிக்குத் தோழியாகலின் செவிலி யென்பது பற்றிச் சுதமதியையும் தாய் என்றாள். 138-146. வாய்வதாக மானிடயாக்கையில் தீவினை அறுக்கும் செய் தவம் நுமக்கீங்கு-நுங்கட்கு இப்பொழுது மனித உடலால் தீவினைகளை அறுக்கவல்ல செய்தவம் வாய்ப்புடைத் தாகுக, அறவணவடிகள் தம்பால் பெறுமின் செறிதொடி நல்லீர் உம் பிறப்பு - செறிந்த வளையல்களை யணிந்த மகளிரே உம் பிறப்பினை அறவணவடிகள்பால் அறிந்து கொள்ளுமின், ஈங்கிஃது ஆபுத்திரன் கை அமுத சுரபிஎனும் மாபெரும் பாத்திரம்-இங்கிருக்கின்ற இது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் பெயருடைய பெருமை மிக்க பாத்திரமாகும், நீயிரும் தொழும் என - இதனை நீவிரும் வணங்குவீர் என்று கூற, தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும் - வணங்கித் துதித்த மாதவி சுதமதியுடன், பழுதறு மாதவன் பாதம் படர்கேம் எழுக என எழுந்தனள் இளங்கொடி தான்என்-குற்றமற்ற பெருந்தவமுடைய அறவண வடிகள் திருவடிகளை வணங்குதற்குச் செல்லுவேம் நீவிரும் எழுக எனவுரைத்து மணிமேகலை எழுந்தனள் என்க. செய்தவம் வாய்வதாக எனவும், பிறப்பு பெறுமின் எனவும் கூட்டுக. தொழுமெனக்கூறி எழுகென எழுந்தனளென்க ; மணிபல்லவத்தில் தெய்வம் நீங்கிய பின்னர் மணிமேகலை நோக்கித் திரிய, தீவதிலகை தோன்றி ‘யார் நீ' என்றலும், ‘கேளாய், என் வரவு ஈது; பயன் இது; அன்னாய், நீ யார்?' என்றலும் தீவதிலகை உரைக்கும்; உரைப்பவள், என்றுரைத்தலும், மணிமேகலை விரும்பிப் பீடிகையைத் தொழுது வணங்கிக் கூடி வலஞ்செய்து நிற்றலும், அவள் கையிற் பாத்திரம் புகுந்தது ; புகுதலும் மகிழ் வெய்தி, ‘வாழ்த்தல் என்னாற்கடங்காது' என்றாள்; என்ற ஆயிழை முன்னர்த் தீவதிலகை உரைக்கும்; உரைப்பவள், ‘கண்டனை' என்றலும், மணிமேகலை ‘சுரத்தல் காண்டல் வேட்கையேன்' என, அவளுரைப்ப, மணிமேகலை வணங்கி ஏத்தி வலங்கொண்டு எழுந்து, மயங்குவோள் முன்னர் வந்து தோன்றிக் களைந்து கூறும்; கூறுகின்றவள், தொழுமென, தொழுதேத்திய அவரொடும் இளங்கொடி எழுந்தனள் என வினை முடிவு செய்க. பாத்திரம் பெற்ற காதை முற்றிற்று. 12. அறவணர்த் தொழுத காதை சென்ற மணிமேகலை அறவண வடிகள் இருக்குமிடத்தை அடைந்து, அவர் திருவடியை மும்முறை வணங்கிப் பரவி, தான் உவவனஞ் சென்றதும், உதயகுமரன் ஆங்குவந்து கூறியதும், மணிமேகலா தெய்வம் தன்னை மணிபல்லவத்திற் கொண்டு போய் வைத்ததும், அத் தீவிலே புத்த பீடிகையால் தன் பழம் பிறப்பினை அறிந்ததும் ‘முற்பிறப்பிற் கணவனாயிருந்த இராகுலனே உதயகுமரனாக வந்து பிறந்தான்; அப் பிறப்பில் உனக்குத் தமக்கைய ராக விருந்த தாரையும் வீரையுமே மாதவியும் சுதமதியுமாகத் தோன்றினர்; அவர்கள் வரலாற்றை அறவணவடிகள்பால் அறிந்துகொள்வாய்; என்று மணிமேகலா தெய்வம் கூறி, மூன்று மந்திரங்களை அறிவுறுத்துச் சென்றதும், பின்பு தீவதிலகை வந்ததும், அவளுடன் சென்று கோமுகியில் அமுதசுரபியைப் பெற்றதும், ‘நின்னூரில் அறவணவடிகள்பால் ஆபுத்திரன் வரலாற்றைக் கேள்' என்று அவள் கூறத் தான் போந்ததும் ஆகிய இவற்றையெல்லாம் தெரிவிக்க, அவர் கேட்டு மகிழ்ந்து, முற்பிறப்பிலே துச்சயராசன் மனைவியராயிருந்த தாரையும் வீரையும் இறந்து முறையே மாதவியும் சுதமதியுமான வரலாற்றை அவர்கட்குரைத்து, பின்னும் மணிமேகலையை நோக்கி, 'இவ்வுலகிலே புத்ததேவனருளிய அறங்கள் குறைய மறங்கள் மிகுந்தன ; சலாகை நுழைந்த மணித்துளையினுள்ளே கடல் நீர் ஓடாதாயினும் அத் துளை வழியே உகும் சிறிதாய நீர்போல் மக்கள் செவியில் அறம் சிறிது சிறிது புகுதலுமுண்டென்று கருதி நான் அறஞ் சொல்லுதலுடையேன், சக்கரவாளத்திலுள்ள தேவர்களுடைய வேண்டுகோளால் ஆயிரத்தறுநூற்றுப் பதினாறாம் ஆண்டில் துடிதலோகத்திலுள்ள தேவன் இவ்வுலகிலே தோற்றஞ் செய்வன். பின்பு, யாவர்க்கும் அருளறத்தில் மனஞ் செல்லும் எனவும், புத்தர் தோன்றும் காலத்தில் ஞாயிறு திங்கள் விண்மீன் முதலியவும், உயிர்களும் இன்னின்னவாறு நலமுடன் திகழுமெனவும் கூறி, "இந் நகரிலே உன்னாற்சில நலங்கள் நிகழ்வனவாம்; அவை நிகழ்ந்த பின்பன்றி யான் கூறும் அறவுரை நின் மனத்திற் பொருந்தாது; இவ் விருவரும் முற்பிறப்பிற் பாதபங்கய மலையை வழிபட்டனராதலின் பின்னர் உன்னுடன் கூடிப் புத்தர் திருவடியை வணங்கி வினையினீங்கி வீட்டுநெறிச் செல்வர் ; ஆருயிர் மருந்தாகிய அமுதசுரபியை நீ பெற்றனை ; " மக்கள் தேவர் எனவிரு சார்க்கும், ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன் பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும் தவப்பெரு நல்லறஞ் சாற்றினர்" மணிமேகலையும் உயிர்களின் பசித் துயர்கெடப் பாத்திரத்தை யெடுத்தனள். (இதில் புத்தர் தோன்றுங்காலத்து உலகில் இன்னின்ன நிகழுமெனக் கூறியிருப்பன அறிந்து இன்புறத்தக்கவை. ஆங்கவர் தம்முடன் அறவண அடிகள் யாங்குளர் என்றே இளங்கொடி வினாஅய் நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின் உரைமூ தாளன் உறைவிடம் குறுகி 5 மைம்மலர்க் குழலி மாதவன் திருந்தடி மும்முறை வணங்கி முறையுளி யேத்திப் புதுமலர்ச் சோலை பொருந்திய வண்ணமும் உதய குமரனாங் குற்றுரை செய்ததும் மணிமே கலாதெய்வமும் மணிபல் லவத்திடை 10 அணியிழை தன்னை அகற்றிய வண்ணமும் ஆங்கத் தீவகத் தறவோன் ஆசனம் நீங்கிய பிறப்பு நேரிழைக் களித்ததும் அளித்த பிறப்பின் ஆகிய கணவனைக் களிக்கயல் நெடுங்கட் கடவுளிற் பெற்றதும் 15 தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் வெவ்வினை உருப்ப விளிந்துகே டெய்தி மாதவி யாகியுஞ் சுதமதி யாகியுங் கோதையஞ் சாயல் நின்னொடுங் கூடினர் ஆங்கவர் தந்திறம் அறவணன் தன்பால் 20 பூங்கொடி நல்லாய் கேளென் றுரைத்ததும் உரைந்த பூங்கொடி ஒருமூன்று மந்திரம் தனக்குரை செய்துதான் ஏகிய வண்ணமும் தெய்வம் போயபின் தீவ திலகையும் ஐயெனத் தோன்றி யருளொடும் அடைந்ததும் 25 அடைந்த தெய்வம் ஆபுத் திரன்கை வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் ஆபுத் திரன்திறம் அறவணன் தன்பால் கேளென் றுரைத்தக் கிளரொளி மாதெய்வம் போகென மடந்தை போந்த வண்ணமும் 30 மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும் மணிமே கலையுரை மாதவன் கேட்டுத் தணியா இன்பம் தலைத்தலை மேல்வரப் பொற்றொடி மாதர் நற்றிறஞ் சிறக்க உற்றுணர் வாய்நீ யிவர்திறம் உரைக்கேன் 35 நின்னெடுந் தெய்வம் நினக்கெடுத் துரைத்த அந்நா ளன்றியும் அருவினை கழூஉம் ஆதி முதல்வன் அடியிணை யாகிய பாதபங் கயமலை பரவிச் செல்வேன் கச்சய மாளுங் கழற்கால் வேந்தன் 40 துச்சயன் தன்னையோர் சூழ்பொழிற் கண்டேன் மாபெருந் தானை மன்ன நின்னொடும் தேவியர் தமக்கும் தீதின் றோவென அழிதக வுள்ளமோ டரற்றின னாகி ஒளியிழை மாதர்க் குற்றதை யுரைப்போன் 45 புதுக்கோள் யானைமுன் போற்றாது சென்று மதுக்களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் ஆங்கது கேட்டோ ரரமிய மேறித் தாங்காது வீழ்ந்து தாரைசா வுற்றதூஉம் கழிபெருந் துன்பங் காவலன் உரைப்ப 50 பழவினைப் பயன்நீ பரியலென் றெழுந்தேன் ஆடுங் கூத்தியர் அணியே போல வேற்றோர் அணியொடு வந்தீ ரோவென மணிமே கலைமுன் மடக்கொடி யார்திறம் துணிபொருள் மாதவன் சொல்லியும் அமையான் 55 பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய் தரும தலைவன் தலைமையில் உரைத்த பெருமைசால் நல்லறம் பெருகா தாகி இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி, 60 அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்துகண்ணடைத்தாங்குச் செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்லென்று உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம் உண்டென உணர்தல் அல்லதி யாவதும் 65 கண்டினிது விளங்காக் காட்சி போன்றது சலாகை நுழைந்த மணித்துளை அகவையின் உலாநீர்ப் பெருங்கடல் ஓடா தாயினும் ஆங்கத் துளைவழி உகுநீர் போல ஈங்கு நல்லறம் எய்தலும் உண்டெனச் 70 சொல்லலும் உண்டியான் சொல்லுதல் தேற்றார் மல்லன்மா ஞாலத்து மக்களே யாதலின் சக்கர வாளத்துத் தேவ ரெல்லாம் தொக்கொருங் கீண்டித் துடிதலோ கத்து மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப 75 இருள்பரந்து கிடந்த மலர்தலை யுலகத்து விரிகதிர்ச் செல்வன் தோன்றின னென்ன ஈரெண் ணூற்றோ டீரெட் டாண்டில் பேரறி வாளன் தோன்றுமதற் பிற்பாடு பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி 80 இரும்பெரு நீத்தம் புகுவது போல அளவாச் சிறுசெவி யளப்பரு நல்லறம் உளமலி யுவகையொ டுயிர்கொளப் புகூஉம் கதிரோன் தோன்றுங் காலை ஆங்கவன் அவிரொளி காட்டும் மணியே போன்று 85 மைத்திருள் கூர்ந்த மனமாசு தீரப் புத்த ஞாயிறு தோன்றுங் காலைத் திங்களும் ஞாயிறும் தீங்குறா விளங்கத் தங்கா நாண்மீன் தகைமையின் நடக்கும் வானம் பொய்யாது மாநிலம் வளம்படும் 90 ஊனுடை உயிர்கள் உறுதுயர் காணா வளிவலக் கொட்கும் மாதிரம் வளம்படும் நளியிரு முந்நீர் நலம்பல தரூஉம் கறவைகன் றார்த்திக் கலநிறை பொழியும் பறவை பயன்றுய்த் துறைபதி நீங்கா 95 விலங்கு மக்களும் வரூஉப்பகை நீங்கும் கலங்கஞர் நரகரும் பேயும் கைவிடும் கூனுங் குறளும் ஊமுஞ் செவிடும் மாவும் மருளும் மன்னுயிர் பெறாஅ அந்நாள் பிறந்தவன் அருளறங் கேட்டோர் 100 இன்னாப் பிறவி யிகந்தோர் ஆகலின் போதி மூலம் பொருந்திய சிறப்பின் நாதன் பாதம் நவைகெட ஏத்துதல் பிறவி தோறும் மறவேன் மடக்கொடி மாதர் நின்னால் வருவன இவ்'d2வூர் 105 ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள ஆங்கவை நிகழ்ந்த பின்னர் அல்லது பூங்கொடி மாதர் பொருளுரை பொருந்தாய் ஆதி முதல்வன் அருந்துயர் கெடுக்கும் பாதபங் கயமலை பரசினர் ஆதலின் 110 ஈங்கிவ ரிருவரும் இளங்கொடி நின்னோ டோங்குயர் போதி உரவோன் திருந்தடி தொழுதுவலங் கொண்டு தொடர்வினை நீங்கிப் பழுதில் நன்னெறிப் படர்குவர் காணாய் ஆருயிர் மருந்தாம் அமுத சுரபியெனும் 115 மாபெரும் பாத்திரம் மடக்கொடி பெற்றனை மக்கள் தேவர் எனஇரு சார்க்கும் ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன் பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும் தவப்பெரு நல்லறம் சாற்றினர் ஆதலின் 120 மடுத்ததீக் கொளிய மன்னுயிர்ப் பசிகெட எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தானென். உரை 1-6. ஆங்கவர் தம்முடன் அறவணவடிகள் யாங்குளர் என்றே இளங்கொடி வினாஅய் - மணிமேகலை மாதவியுடனும் சுதமதியுடனும் கூடி அறவணவடிகள் எவ்விடத் திலிருக் கின்றார் என்று வினாவிக் கொண்டு, நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின் உரை மூதாளன் உறைவிடம் குறுகி-நரை முதிர்ந்த உடலையும் நா நடுங்காத மொழிகளையுமுடைய முதியோராகிய அறவணவடிகள் உறைவிடத்தை அடைந்து, மைம்மலர்க் குழலி - மலர்களுடன் கூடிய முகில் போலுங் கூந்தலையுடைய மணிமேகலை, மாதவன் திருந்தடி - அறவண முனிவரது திருந்திய திருவடிகளை, மும்முறை வணங்கி முறையுளி ஏத்தி - மூன்று தரம் பணிந்து முறைப்படி துதித்து; நா நடுங்கா உரையின் என மாறுக. நடுங்காத நாவினையும் முதிர்ந்த உரையினையும் உடையான் எனலுமாம்; நடுங்கா நா - வழுவற்றசொல்; மூதுரை - அறிவு மேம்பட்ட உரை. முறையுளி - முறையால்; உளி: மூன்றனுருபின் பொருட்டு. 7-20. புதுமலர்ச் சோலை பொருந்திய வண்ணமும் - தான் மலர் கொய்யுமாறு உவவனத்தின்கட் சேர்ந்ததனையும், உதயகுமரன் ஆங்கு உற்று உரை செய்ததும் - உதயகுமரன் ஆண்டு வந்து மொழிந்ததனையும், மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை அணியிழை தன்னை அகற்றிய வண்ணமும் - அப்பொழுது மணிமேகலா தெய்வம் தோன்றித் தன்னை மணிபல்லவத்தின்கண் கொண்டு சென்றதனையும், ஆங்கத் தீவகத்து அறவோன் ஆசனம் - அத் தீவின்கணுள்ள புத்தன் பாதபீடம்; நீங்கிய பிறப்பு நேரிழைக் களித்ததும்-சென்ற பிறப்பைத் தனக்கு உணர்த்தி யருளினதையும், அளித்த பிறப்பின் ஆகிய கணவனை - அங்ஙனம் உணர்த்திய பழம் பிறப்பிற் கணவனா யிருந்தோனை, களிக்கயல் நெடுங்கட் கடவுளிற் பெற்றதும் - களிப்பு மிக்க கயல் மீனனைய நீண்ட கண்களையுடைய மணிமேகலா தெய்வத்தான் அறிந்தனையும், தவ்வையராகிய தாரையும் வீரையும் - முன்பிறந்தோராகிய தாரையும் வீரையும், வெவ்வினை உருப்ப விளிந்து கேடு எய்தி - தீவினை உருத்து வந்தூட்டுதலான் இறந்தொழிந்து, மாதவி ஆகியும்சுதமதி ஆகியும் - மாதவியாயும் சுதமதியாயும், கோதை அம்சாயல் நின்னொடுங் கூடினர் - அழகிய கூந்தலையும் மென்மையையுமுடைய நின்னொடும் கூடினர், ஆங்கவர் தம் திறம் அறவணன் தன்பால் - அவர்கள் வரலாற்றினை அறவணவடிகளிடம், பூங்கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும் - பூங்கொடி போலும் நங்கையே கேட் பாயாக என்று கூறியதனையும்; தன்னைப் படர்க்கையில் வைத்து, அணியிழை தன்னை என்றும், நேரிழைக்கு என்றும் கூறினாள். ‘நெடுங்கண்' திரியா திருப்பின், மணி மேகலையெனப் பொருள்படும். ‘தவ்வையராகிய' என்பது முதல் ‘கேள்' என்பது காறும் மணிமேகலா தெய்வத்தின் கூற்றினை மணிமேகலை கொண்டு மொழிந்தது. 21-30. உரைத்த பூங்கொடி-அங்ஙனங் கூறிய பூங்கொடி போலும் மணிமேகலா தெய்வம், ஒரு மூன்று மந்திரம் - மூன்று மந்திரங் களை, தனக்கு உரை செய்து தான் ஏகிய வண்ணமும் - தனக்கு அருளிச் செய்து அத்தெய்வம் சென்ற திறத்தையும், தெய்வம் போயபின் - மணிமேகலா தெய்வஞ் சென்ற பின்னர், தீவதிலகையும் ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும்- தீவதிலகை விரைவாகத் தோன்றி அருளொடும் எய்திய தனையும், அடைந்த தெய்வம்-அடைந்த தெய்வமாகிய தீவதிலகை, ஆபுத்திரன் கை வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் - ஆபுத்திரன் கையிலிருந்த வணங்குதற்குரிய சிறந்த பாத்திரத்தை நால்வகை வாய்மையுடன் அளித்ததனையும், ஆபுத்திரன் திறம் அறவணன் தன்பால் கேள் என்று உரைத்து - ஆபுத்திரனது வரலாற்றை அறவணவடிகளிடம் கேட்பாயாக என்று கூறி, கிளர்ஒளி மாதெய்வம் -விளங்குகின்ற பேரொளியினையுடைய பெருமை பொருந்திய அத்தெய்வம், போகென மடந்தை போந்த வண்ணமும் - நின் பதியிடைப் போவாய் என உரைப்பத் தான் மீண்டுவந்த தன்மையையும், மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும் - அறவண வடிகளை வணங்கி மொழிதலும் ; மூன்று மந்திரம் - வேற்றுரு வெய்தவும், அந்தரய் திரியவும், பசி யொழியவும் செய்யும் மந்திரங்கள் (10 : 80--91:) ஐயென - வியக்குமாறு எனவுமாம். தோன்றி-புலப்பட்டு. வாய்மையின் - வாய்மையோடு. 31-44 மணிமேகலை உரை மாதவன் கேட்டு - அறவணவடிகள் மணிமேகலையின் மொழியைக் கேட்டு, தணியா இன்பம் தலைத்தலை மேல்வர -குறையாத பேரின்பம் மேன்மேல் மிகா நிற்க, பொற்றொடி மாதர் நற்றிடம் சிறக்க-பொன் வளையல் களையணிந்த மாதே நினக்கு நல்ல கூறுபாடுகள் சிறப்பனவாக, உற்றுணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன்-இவர்கள் வரலாற்றைக் கூறுவேன் நீ அதனைக் கேட்டு அறிவாயாக, நின்நெடுந் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த - நின் பெருந் தெய்வம் நினக்கு எடுத்துக் கூறிய, அந்நாள் அன்றியும் - அந் நாளிற் சென்றதல் லாமலும், அருவினை கழூஉம் ஆதி முதல்வன் அடியிணையாகிய - அரிய வினைகளைப் போக்கும் புத்தன் திருவடியிணைகள் பொருந்திய, பாதபங்கயமலை பரவிச் செல்வேன்-பாதபங்கயமலையைப் பணிந்து செல்லுவேன், கச்சயம் ஆளும் கழற்கால் வேந்தன் துச்சயன் தன்னை ஓர் சூழ் பொழிற் கண்டேன் - கச்சய நகரத்தை ஆண்டுவந்த வீரக் கழலணிந்த கால்களையுடைய துச்சயன் என்ற மன்னனை ஒரு பொழிலினிடத்துக் கண்டேன், மாபெருந் தானை மன்ன நின்னொடும் தேவியர் தமக்கும் தீதின்றோ என - மிகப் பெரிய சேனைகளையுடைய அரசே நீயும்நின் தேவியரும் தீதின்றி இருக்கின்றீரோ என வினவ, அழிதகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி - அழிந்த உள்ளத்தோடு புலம்பியவனாய், ஒளியிழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் - ஒள்ளிய அணிகலனை யுடைய மனைவியர்க்கு நேர்ந்ததை உரைக்கின்றவன்; மாதர் : விளி. செல்வேன் பெயர். கண்டேன் - கண்டு : முற்றெச்சம். 45-54 புதுக்கோள் யானைமுன் போற்றாது சென்று மதுக்களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் - புதிதாகப் பிடித்துக் கொண்டு வரப்பட்ட யானையின் முன்னே மதுவுண்ட களிப்பினாலாகிய மயக்கத்தால் தன்னைப் பாதுகாவாது சென்ற வீரை இறந்ததுவும், ஆங்கது கேட்டு ஓர் அரமியம் ஏறி தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம் - அவள் இறந்த செய்தி கேட்டு அத் துன்பத்தைத் தாங்காமல் தாரை ஒரு நிலா முற்றத்தில் ஏறி வீழ்ந்து இறப்பினை யடைந்ததுவும் ஆகிய, கழிபெருந் துன்பம் காவலன் உரைப்ப - மிகப் பெருந் துயரத்தை அம் மன்னவன் மொழிய, பழவினைப் பயன் நீ பரியல்என்று எழுந்தேன் - இது முற்செய்த வினையின் பயனாம் நீ வருந்தாதே என வுரைத்து அங்கு நின்றும் எழுந்தேன், ஆடும்கூத்தியர் அணியேபோல வேற்றோர் அணியொடு வந்தீரோ என - அங்ஙனமாகிய நீவிர் நாடக வரங்கில் நடிக்கும் கூத்தியர் கொள்ளுங்கோலம் போல ஈண்டு வேறு வகையான கோலத் துடன் வந்தீரோ என்று, மணிமேகலைமுன் மடக்கொடியார் திறம் துணிபொருள் மாதவன் சொல்லியும் அமையான் - துணியப் பட்ட பொருளினையுடைய பெருந்தவன் மணிமேகலையின் முன்னர் மாதவி சுதமதிகளின் வரலாற்றினைக் கூறியும் அமையாதவனாய்; வீரை மயக்கத்தால் போற்றாது சென்று மாய்ந்ததும், தாரை ஏறி வீழ்ந்து சாவுற்றதும் என்க. ஆகிய துன்பம் என ஒரு சொல் விரித்துரைக்க. கூத்த ரென்பதும் பாடம்; 1''ஆடுங் கூத்தர்போ லாருயி ரொருவழிக், கூடிய கோலத் தொருங்குநின் றியலாது'' என்பது ஈண்டு அறியற்பாலது. வந்தீரோ என்றது மாதவியையும் சுதமதியையும் நோக்கி. துணிபொருள் மாதவன் - மெய்ப் பொருளைத் துணிந்தவன் என்னும் கருத்தினது. 55-65. பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த-பழம் பிறப்பையும் அறநெறியையும் முன்னை நல்வினையால் அறிந்த, நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய் - நறிய மலர் மாலையணிந்த நங்கையே உவந்து கேட்பாயாக, தரும தலைவன் தலைமையின் உரைத்த - தரும முதல்வனாகிய புத்தன் முதன்மையாகக் கூறிய, பெருமை சால் நல்லறம் பெருகாதாகி - பெருமையமைந்த நல்லறம் வளர்தலின்றி, இறுதிஇல் நற்கதி செல்லும் பெருவழி - அழிவில்லாத நற்கதியாகிய நிருவாணத்திற்குச் செல்லும் பெருநெறி, அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்துகண் அடைத்தாங்கு - அறுகம்புல்லும் நெருஞ்சியுஞ் செறிந்து இடத்தை யடைத்தாற் போல, செயிர் வழங்கு தீக்கதி திறந்து - துன்பத்தையுடைய தீக்கதிக்கண் செல்லும் வழி திறக்கப்பட்டு நெருக்குதலின், கல்லென்று உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது-ஆரவாரத்துடன் உயிர்கள் செல்லும் பொதுநெறியாகிய ஒரு கூற்றிலே பட்டது (ஆகலின் அப்பெரு வழி), தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம் - குளிர்ந்த பனியால் மூடப் பட்ட சிவந்த ஞாயிற்று மண்டிலம், உண்டுஎன உணர்தல் அல்லது- உண்டு என்று அறிகின்ற அளவினை அன்றி, யாவதும் கண்டு இனிது விளங்காக் காட்சி போன்றது-சிறிதும் தெளிவாகக் கண்டறியப்படாத காட்சியைப் போன்றது; நிலமிசை நடந்து செல்லும் வழியை அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து அடைந்தாற்போல் நற்கதி செல்லும் பெருவழியைத் தீக்கதியிற் செல்லும் நெறிகள் திறந்து அடைத்தலால் என்க. பெருவழி ஒரு திறம் பட்டதென்க. உயிர் வழங்கு பெருநெறி என்றது பிறந்திறக்கும் உயிர்கள் செல்லும் பொதுவழி; 1''பெரும்பே ரியாக்கை பெற்ற நல்லுயிர், மலர் தலை யுலகத்துயிர்போகு பொதுநெறி......போகுதல் பொறேஎன்'' எனச் செங்குட்டுவனை நோக்கி மாடலன் கூறிற்றாக வுள்ளது காண்க. ஆகலின் அப் பெருவழியென விரித்துரைக்க. இனி, தீக்கதி திறக்கப் பெருநெறி ஒருதிறம் பட்டமையின் பெருவழி காட்சி போன்றது என முடித்தலுமாம். அறுகை - அறுகு. செயிர் - குற்றமுமாம். காட்சி - தன்மை . 66-71. சலாகை நுழைந்த மணித்துளை அகவயின் - சிறிய நாராசம் நுழைந்த மணிகளின் துளையாகிய உள்ளிடத்தே, உலா நீர்ப் பெருங் கடல் ஓடாதாயினும் - பெரிய கடலில் உலாவுகின்ற நீர் முழுவதும் ஓடாதானாலும், ஆங்கத் துளைவழி உகுநீர்போல - அச் சிறிய துளையின் வழியே சிந்துகின்ற நீரைப்போல, ஈங்கு நல்லறம் எய்தலும் உண்டு எனச் சொல்லலும் உண்டுயான் - இவ்வுலகில் நல்ல அறங்களை அடைதலும் உண்டு என்று யான் மொழிவதும் உண்டு, சொல்லுதல் தேற்றார் மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின் - அங்ஙன முரைப்பதை வளப்பம் மிக்க பெரிய பூமியின்கணுள்ள மக்கள் தெளியார் ஆகலின்; மக்கள் தேற்றாராதலின் என்க. ஏ : அசை; தேற்றமுமாம். ஆதலின் - ஆயினும் என்றுமாம். 72-82. சக்கரவாளத்துத் தேவர் எல்லாம்-சக்கரவாளத்திலுள்ள தேவரனைவரும், தொக்கு ஒருங்கு ஈண்டித் துடிதலோகத்து மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப - சேர்ந்து ஒன்றாகக் கூடித் துடிதலோகத்துள்ள சிறந்த தேவன் திருவடிகளில் விழுந்து இரக்க, இருள் பரந்து கிடந்த மலர்தலை உலகத்து - இருளாற் பரவப்பட்டுக் கிடந்த அகன்ற இடத்தையுடைய பூமியின்கண், விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன - விரிந்த கிரணங்களையுடைய பரிதிவானவன் தோன்றினாற் போல, ஈரெண்ணூற்றொடு ஈரெட்டாண்டில் பேரறிவாளன் தோன்றும் - ஆயிரத்தறுநூற்றுப் பதினாறாம் ஆண்டில் புத்தன் தோன்றுவான், அதன் பிற்பாடு - அதன் பின்பு, பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி - பெரிய குளத் திலுள்ள மதகாகிய சிறிய வழியில், இரும் பெரு நீத்தம் புகுவது போல - மிகப் பெரிய வெள்ளம் புகுவதைப்போல, அளவாச் சிறுசெவி - பேரளவில்லாத சிறிய செவிகளின் வழியே, அளப்பரு நல்லறம் உளம் மலி உவகையொடு உயிர் கொளப் புகூஉம் - அளத்தற்கரிய நல்லறங்கள் உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியோடு உயிர்கள் ஏற்றுக்கொள்ளும்படி புகாநிற்கும்; துடிதலோகம் - உலகம் முப்பத்தொன்றனுள் ஒன்பதாவது; தெய்வலோகம் ஆறனுள் நான்காவது. மிக்கோன்-சிறந்தவன்; இவன் பெயர் பிரபாபாலன் என்பர். ஈண்டுக் குறிக்கப்பட்ட ஆண்டு இன்ன அப்தத்தைச் சேர்ந்ததென்று தெரியவில்லை. வளவா எனப் பிரித்து வளமில்லாத என்றுரைத்தலுமாம். சிறு செவிப் புகூஉம் என்க. . 83-98. கதிரோன் தோன்றும் காலை ஆங்கவன் அவிர் ஒளி காட்டும் மணியே போன்று - ஞாயிறு தோன்றும் பொழுதில் அஞ் ஞாயிற்றினது விளங்குகின்ற ஒளியினைக் காட்டும் சூரிய காந்தம்போல, மைத்து இருள் கூர்ந்த மனமாசு தீர - கறுத்து இருண்மிக்க மனத்தின்கண் உள்ள குற்றம் நீங்க, புத்தஞாயிறு தோன்றும் காலை - புத்தனாகிய ஞாயிறு தோன்றும்பொழுது, திங்களும் ஞாயிறும் தீங்குறா விளங்க - மதியும் பரிதியும் தீமையுறாமல் விளங்க, தங்கா நாண்மீன் தகைமையின் நடக்கும் - ஓரிடத்தில் நிலையுதலில்லாத நாண்மீன்கள் தக்கவாறு நடக்கும், வானம் பொய்யாது - முகில் மழை பெய்வதிற் பொய்படாது, மாநிலம் வளம்படும் - பெரிய பூமி வளஞ்சிறக்கும், ஊன் உடை உயிர்கள் உறுதுயர் காணா - ஊனினையுடைய உயிர்கள் துயரமடைதலைக் காணா, வளிவலம் கொட்கும் - காற்று வலமாகச் சுழலும், மாதிரம் வளம்படும் - திசைகள் செழுமையுறும், நளியிரு முந்நீர் நலம்பல தரூஉம் - செறிந்த நீரினையுடைய பெரிய கடல் முத்து முதலிய பல வளங்களைக் கொடுக்கும், கறவை கன்று ஆர்த்திக் கலநிறைபொழியும் - பசுக்கள் கன்று களைஉண்ணச் செய்து கறவைக்கலம் நிறைந்து வழியுமாறு பால் பொழியும், பறவை பயன் துய்த்து உறைபதி நீங்க - பறவைகள் பயனை நுகர்ந்து தாம் வாழ்விடங்களிலிருந்து நீங்கா, விலங்கும் மக்களும் வெரூஉப்பகை நீங்கும் - விலங்கினமும் மக்களினமும் தம்முள் அஞ்சுதற்குக் காரணமா, கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் மன்னுயிர் பெறா குறள் வடிவும் ஊமையும் செவிடும் விலங்குருவமும் அறிவின்றி மயங்கி யிருத்தலுமாதிய பிறப்புக்களை மக்களுயிர் பெறமாட்ட சூரிய காந்தம் கதிரவன் ஒளியைக் காட்டுதல்போலத் திங்கள் முதலியன புத்தனது தோற்றத்தினைப் புலப்படுத்துமென்க. பொருளுக்கேற்ற உவமையில் புறவிருள் நீங்கக் கதிரோன் தோன்றுங்காலை என விரித்துரைக்க. உறா: ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். தங்கா என்றும் நடக்கும் என்றும் கூறுதலின் நாண்மீன் என்பதற்கு ஈண்டு ஞாயிறு திங்க ளொழிந்த கோட்கள் என்று பொருள் கொள்ளுதல் பொருந்தும் ; நட்சத்திரங்களையே தோற்றம்பற்றி அங்ஙனம் கூறினாரெனலுமாம். ஊனுடையுயிர்கள்-தேவரல்லாத மக்கள் முதலிய உயிர்கள் : 1"ஊனடைந்த வுடம்பின் பிறவியே" என்பது காண்க. ஊன் உடை-உடம்பு மெலிந்த என்பாருமுளர். மாதிரம் - மலையுமாம். 2"வலமா திரத்தான் வளிகொட்ப," "மாதிரங் கொழுக்க என்றார் பிறரும். நிறை - நிறைய: விகாரம்; சால் என்பாருமுளர். விலங்கு முதலியவற்றை அவ்வவ் வினமெனக் கொள்க; அன்றித் திணை விரவி அஃறிணை முடிபுற்றன என்னலுமாம். அஞர் - துன்புறுதலை; துன் புறுத்தலை என்றலுமாம். கூன் முதலிய ஆறனோடு, குருடு, உறுப்பில் பிண்டம் ஆகிய இரண்டுங்கூட்டி எண்வகை எச்சமென்பர்; 1"சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும், கூனுங் குறளு மூமுஞ் செவிடும், மாவு மருளுமுளப்பட வாழ்நர்க், கெண்பே ரெச்ச மென்றிவை யெல்லாம்" என்பது காண்க. 99-107. அந்நாட் பிறந்தவன் அருளறம் கேட்டோர் - அந்நாளில் பிறந்த புத்தனது அருளறத்தைக் கேட்டோர்கள், இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின் - துன்பந்தரும் பிறவியைக் கடந்தவர்கள் ஆகலினால்; போதி மூலம்பொருந்திய சிறப்பின்-அரசமரத்தடியிலமர்ந்த சிறப்பினையுடைய, நாதன் பாதம் நவைகெட ஏத்துதல் - தலைவன் திருவடிகளைக் குற்றம் நீங்குமாறு துதித்தலை, பிறவி தோறும் மறவேன் மடக்கொடி - மடக்கொடியே யான் பிறவி தோறும் மறவேன், மாதர் நின்னால் வருவன இவ்'d2வூர் ஏதுநிகழ்ச்சி யாவும் பலவுள-நங்காய் நின்னால் இவ்'d2வூரில் உண்டாவனவாகிய ஏது நிகழ்ச்சிகள் பல உள்ளன, ஆங்கவை நிகழ்ந்த பின்னர் அல்லது - அவை நிகழ்ந்த பின்பன்றி, பூங்கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்-பூங்கொடிபோலும் மாதே அறவுரை கேளாய்; அருளறம் - தயாதன்மம்; அருளிய அறம் என்றுமாம். மறவேல் எனப் பிரித்துரைத்தலுமாம். ஏது நிகழ்ச்சி என்பதுபற்றி முன்னர் (3 : 4) உரைத்தமை காண்க. மாதர் என்பது விளி. பொருளுரை - மெய்யுரை: ஈண்டு அறவுரை; பொருள்-மெய்மை யாதலை 2"பொய்யில் புலவன் பொருளுரை" 3"பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின்" என்பவற்றானும், 4"பொருள் சேர் புகழ்" என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையானும் அறிக. 108-113. ஆதிமுதல்வன் அருந்துயர் கெடுக்கும் பாதபங்கயமலை பரசினர் ஆதலின்-தீர்த்தற்கரிய துயரத்தை நீக்கும் புத்தனுடைய பாதபங்கய மலையை வணங்கினர் ஆதலின், ஈங்கிவர் இருவரும் இளங்கொடி நின்னோடு-இளங்கொடி போல்வாய இவர் இருவரும் நின்னுடன், ஓங்குயர்போதி உரவோன் திருந்தடி - மிக உயர்ந்த போதியின்கீழ் அமர்ந்த மெய்யறிவுடையோனது திருந்திய அடிகளை, தொழுது வலங்கொண்டு, தொடர் வினை நீங்கி - வலங் கொண்டுதொழுது வினைப்பற்றுக் களினின்றும் நீங்கி, பழுதில் நன்னெறிப் படர்குவர் காணாய் - குற்றமற்ற நல்ல வழியிலே செல்வர் காண்பாய்; உரவோன் - புத்தன் ; உரம் - திண்ணிய அறிவு. பழுதில் நன்னெறி - தூநெறி. 114-121. ஆருயிர் மருந்தாம்-உயிர்களைக் காக்கின்ற அருமருந் தாகிய, அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் மடக்கொடி பெற்றனை - அமுதசுரபி யென்னும் பெருமை பொருந்திய பாத்திரத்தை நீ பெற்றிருக்கின்றாய் ஆகலின், மக்கள் தேவர் என இருசார்க்கும் - மக்கள் தேவர் என்னும் இரு பகுதிகட்கும், ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன் - ஒத்த முடிவினை யுடைய ஓர் அறத்தைக் கூறுகின்றேன், பசிப்பிணி தீர்த்தல் என்றே - அது பசிப்பிணி தீர்த்தலாம் என்று, அவரும் தவப்பெரு நல்லறம் சாற்றினர் ஆகலின்-அறவணவடிகள் மிகப் பெரிய நல்லறத்தைக் கூறினர் ஆதலால், மடுத்த தீக் கொளிய மன்னுயிர்ப் பசிகெட -மிகுந்த தீயினாற் கொளுத்தப் பட்டாற் போன்ற உயிர்களின் பசியானது அழியுமாறு, எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தானென் - மணிமேகலை தெய்வக் கடிஞையைக் கையில் எடுத்தனள் என்க. அவியுணவுடையராகலின் இவ் அறம் தேவர்க்கும் ஒத்த தாயிற்று. அது தீர்த்தலாகும் என விரித்துரைக்க. இளங்கொடி அவர் தம்முடன் அடிகள் யாங்குளரென்று வினாய்க் குறுகி மாதவனடியை வணங்கி ஏத்தி உரைத்தலும் கேட்டு, அவரும் தவப்பெரு நல்லறம் சாற்றினராதலின், இளங்கொடி பாத்திரம் எடுத்தனள் என வினை முடிவு செய்க. அறவணர்த் தொழுத காதை முற்றிற்று. 13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை (அப்பொழுது அறவணவடிகள் மணிமேகலையை நோக்கி, நினக்கு அப்பாத்திரம் அருளிய ஆபுத்திரன் வரலாற்றைக் கூறுவேன்; கேட்பாயாக; வாரணாசிரமத்தில் உள்ள ஆரண உபாத்தியாகிய அபஞ்சிகன் என்னும் அந்தணன் மனைவி சாலியென்பாள் தீயொழுக்கத்தாற் கணவனைப் பிரிந்து குமரியாடச் சென்றவள் சூலால் வருந்தி வழியிடையே ஒரு குழவியை ஈன்று இரக்கமின்றி அக்குழவியை ஒரு தோட்டத்தில் இட்டு நீங்கினள்; நீங்கவே அக்குழவி பசியால் வருந்தியழுதது ; அவ்வழுகை யோசையைக் கேட்ட ஒரு பசு அவ்விடத்து வந்து அதன் வருத்தந் தீரும்படி நாவால் நக்கிப் பாலூட்டி ஏழுநாள் காறும் அப்புறஞ் செல்லாது பாதுகாத்து வந்தது; அங்ஙனம் நிகழுகையில், வயனங்கோடென்னும் ஊரிலுள்ள பூதியென்னும் அந்தணன் பார்ப்பனியோடும் அவ் வழியே வருவோன் அக்குழவியின் அழுகை யொலியைக் கேட்டுச் சென்று, அதனைக் கண்டு மிக்க துன்பத்துடன் கண்ணீர் சொரிந்து, 'இவன் ஆமகனல்லன்; என் மகனே' என்று கூறி எடுத்துச் சென்று ஊரினை அடைந்து மகிழ்வுடன் வளர்த்துத் தன் மரபிற்குரிய கல்விகளைப் பயிற்றி வந்தான்; அவற்றை நன்கனம் பயின்ற அவன் ஒருநாள் அவ்'d2வூரிலுள்ள ஓர் அந்தணன் இல்லிற் புகுந்து, அங்குள்ள வேள்விச் சாலையில் ஓர் ஆன், வேட்டுவர் வலையிற் பட்ட மான் போல் அஞ்சிக் கதறுவதைக் கண்டு உளம் நடுங்கிக் கண்ணீருகுத்து, பகல் முழுவதும் ஒரு பக்கத்தில் மறைந்திருந்து, இரவில் அதனைக் கைப்பற்றி ஊருக்கு வெளியே போய் விட்டான் ; ஆவைக் காணாத அந்தணர் பலர் அதனைத் தேடிச் சென்று வழியிற் பசுவையும் அவனையும் கண்டு அகப்படுத்தி, ''புலைச் சிறுமகனே ! இதனை இரவில் ஏன் கவர்ந்து சென்றனை?'' எனக் கேட்டு, அவனைக் கோலால் ஒறுக்கத் தொடங்கினர். அப்பொழுது அவர்களுள் மிகவும் துன்புறுத்திய உவாத்தியை அப் பசு கொம்பினாற் குத்திக் குடரைப் பறித்துக் காட்டின்கண் விரைந்தோடியது. ஆபுத்திரன் அன்னாரை நோக்கி; ''நோவன செய்யன்மின் ; பயிர் செய்யாது விடப்பட்ட நிலத்தில் தானே முளைத்த புல்லையுண்டு, மக்கள் பிறந்த நாள் தொட்டுத் தன் இனிய பாலை அருள் சுரந்தூட்டும் ஆவினிடத்து நுங்கட்குச் செற்ற முண்டாயது எங்ஙனம்?'' என்று கேட்க, அவர்கள், ''நீ வேதவிதியை அறியாமல் வேள்வியை இகழுகின்றனை; ஆதலின், ஆ மகனாதற்குப் பொருத்தமுடையையே,'' என்றிகழ்ந் துரைத்தலும், ஆபுத்திரன், “ ஆன்மகன் அசலன் ; மான்மகன் சிருங்கி ; புலிமகன் விரிஞ்சி ; புரையோர் போற்றும் நரிமகன் அல்லனோ கேச கம்பளன் ? ஈங்கிவர் நுங்குலத்து இருடி கணங்களென்று ஓங்குயர் பெருஞ்சிறப் புரைத்தலும் உண்டால்; ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ?'' என்று சொல்ல, அவர்களுள்ளே ஓ ரந்தணன் “இவனது பிறப்பினை யான் அறிவேன்," எனக் கூறி, முன்பு குமரியாடப் போந்த சாலியைத் தான் கண்டு வினாவி யறிந்த வரலாற்றை உரைத்து, “தூயனல்லாத இவனைத் தொடுதல் செய்யாதீர்,'' என்ன, “தேவ கணிகையாகிய திலோத்தமை பெற்ற மைந்தர்கள் பெரிய முனிவர்களாக இருத்தல் கேட்டிலிரோ? சாலிக்குத் தவறு கூறத் துணிந்தீர்களே,'' என்று கூறி, ஆபுத்திரன் அவர்களை நோக்கி நகைத்தான்; அவனை வளர்த்த பூதியும் அவனை இழிந்தவனென நீக்கிவிட்டான்; அப்பால் ஆபுத்திரன் பிச்சை யேற்றுண்ணத் தொடங்கிய பொழுது, அந்தணர் பதியிலெல்லாம் அவனை ஆகவர் கள்வனென்றி கழ்ந்து, அவனது கடிஞையிற் கல்லிடலாயினர் ; அதனால், அவன் வேறு புகலின்றித் தென் மதுரையை அடைந்து சிந்தா தேவியின் கோயிலின் முன்புள்ள அம்பலத்தில் இருந்து கொண்டு, கையிற் கடிஞை யேந்தி மனைதோறும் சென்று வாங்கிவந்த உணவை, “ காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணுநர் இல்லோர் பிணிநடுக் குற்றோர் யாவரும் வருக என் றிசைத்துட னூட்டி'' அவர்களுண்டு எஞ்சியதனையே தான் உண்டு, பிச்சை யோட்டையே தலையணையாக வத்துக்கொண்டு அவ்வம்பலத்திலே நாள் தோறும் இரவிற் கண்படை புரிந்து காலங் கழிப்பானாயினன். மாபெரும் பாத்திரம் மடக்கொடிக் கருளிய ஆபுத் திரன் றிறம் அணியிழை கேளாய் வார ணாசியோர் மறையோம் பாளன் ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் 5 பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சித் தென் றிசைக் குமரி யாடிய வருவோள் சூன்முதிர் பருவத்துத் துஞ்சிருள் இயவிடை ஈன்ற குழவிக் கிரங்கா ளாகித் 10 தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்கத் தாயில் தூவாக் குழவி துயர் கேட்டோர் ஆவந் தணைந்தாங் கதன்றுயர் தீர நாவால் நக்கி நன்பா லூட்டிப் போகா தெழுநாட் புறங்காத் தோம்ப 15 வயனங் கோட்டிலோர் மறையோம் பாளன் இயவிடை வருவோன் இளம்பூதி யென்போன் குழவி யேங்கிய கூக்குரல் கேட்டுக் கழுமிய துன்பமொடு கண்ணீ ருகுத்தாங், காமக னல்லன் என்மகன் என்றே 20 காதலி தன்னொடு கைதொழு தெடுத்து நம்பி பிறந்தான் பொலிகநங் கிளையெனத் தம்பதிப் பெயர்ந்து தமரொடுங் கூடி மார்பிடை முந்நூல் வளைனயா முன்னர் நாவிடை நன்னூல் நன்கனம் நவிற்றி 25 ஓத்துடை யந்தணர்க் கொப்பவை யெல்லாம் நாத்தொலை வின்றி நன்கனம் அறிந்தபின் அப்பதி தன்னுளோர் அந்தணன் மனைவயின் புக்கோன் ஆங்குப் புலைசூழ் வேள்வியில் குரூஉத்தொடை மாலை கோட்டிடைச் சுற்றி 30 வெரூஉப்பகை அஞ்சி வெய்துயிர்த்துப் புலம்பிக் கொலைநவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி வலையிடைப் பட்ட மானே போன்றாங் கஞ்சிநின் றழைக்கும் ஆத்துயர் கண்டு நெஞ்சுநடுக் குற்று நெடுங்கணீ ருகுத்துக் 35 கள்ள வினையிற் கடுந்துயர் பாழ்பட நள்ளிருள் கொண்டு நடக்குவன் என்னும் உள்ளம் கரந்தாங் கொருபுடை ஒதுங்கி அல்லிடை யாக்கொண் டப்பதி அகன்றோன் கல்லதர் அத்தம் கடவா நின்றுழி 40 அடர்க்குறு மாக்களொ டந்தண ரெல்லாம் கடத்திடை ஆவொடு கையகப் படுத்தி ஆகொண் டிந்த ஆரிடைக் கழிய நீமகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய் புலைச்சிறு மகனே போக்கப் படுதியென் 45 றலைக்கோ லதனால் அறைந்தனர் கேட்ப ஆட்டிநின் றலைக்கும் அந்தண ருவாத்தியைக் கோட்டினில் குத்திக் குடர்புய்த் துறுத்துக் காட்டிடை நல்ஆக் கதழ்ந்து கிளர்ந்தோட ஆபுத் திரன்தான் ஆங்கவர்க் குரைப்போன் 50 நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின் விடுநில மருங்கின் படுபுல் லார்ந்து நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம் பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால் அறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும் 55 இதனொடு வந்த செற்றம் என்னை முதுமறை அந்தணிர் முன்னிய துரைமோ பொன்னணி நேமி வலங்கொள்ளக் கரக்கை மன்னுயிர் முதல்வன் மகனெமக் கருளிய அருமறை நன்னூல் அறியா திகழ்ந்தனை 60 தெருமரல் உள்ளத்துச் சிறியை நீயவ் ஆமக னாதற் கொத்தனை அறியாய் நீமகன் அல்லாய் கேளென இகழ்தலும் ஆன்மகன் அசலன் மான்மகன் சிருங்கி புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும் 65 நரிமகன் அல்லனோ கேச கம்பளன் ஈங்கிவர் நுங்குலத் திருடி கணங்களென் றோங்குயர் பெருஞ்சிறப் புரைத்தலு முண்டால் ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ நான்மறை மாக்காள் நன்னூ லகத்தென 70 ஆங்கவர் தம்முளோர் அந்தணன் உரைக்கும் ஈங்கிவன் தன்பிறப் பியானறி குவனென நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் வடமொழி யாட்டி மறைமுறை யெய்திக் குமரி பாதங் கொள்கையின் வணங்கித் 75 தமரில் தீர்ந்த சாலியென் போள்தனை யாது நின்னூர் ஈங்கென் வரவென மாமறை யாட்டி வருதிறம் உரைக்கும் வார ணாசியோர் மாமறை முதல்வன் ஆரண உவாத்தி யரும்பெறல் மனைவியான் 80 பார்ப்பார்க் கொவ்வாப் பண்பின் ஒழுகிக் காப்புக் கடைகழிந்து கணவனை 1யிகழ்ந்தேன் 2எற்பயம் உடைமையின் இரியல் மாக்களொடு தெற்கண் குமரி யாடிய வருவேன் பொற்றேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்க் 85 காவதங் கடந்து கோவலர் இருக்கையின் ஈன்ற குழவிக் கிரங்கே னாகித் தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன் செல்கதி யுண்டோ தீவினை யேற்கென் றல்லலுற் றழுத அவள்மகன் ஈங்கிவன் 90 சொல்லுதல் தேற்றேன் சொற்பயம் இன்மையின் புல்லலோம் பன்மின் புலைமகன் இவனென ஆபுத் திரன்பின் பமர்நகை செய்து மாமறை மாக்கள் வருகுலங் கேண்மோ முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய 95 கடவுட் கணிகை காதலஞ் சிறுவர் அருமறை முதல்வர் அந்தணர் இருவரும் புரிநூன் மார்பீர் பொய்யுரை யாமோ சாலிக் குண்டோ தவறென வுரைத்து நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப 100 ஓதல் அந்தணர்க் கொவ்வான் என்றே தாதை பூதியுந் தன்மனை கடிதர ஆகவர் கள்வனென் றந்தணர் உறைதரும் கிராம மெங்கணுங் கடிஞையிற் கல்லிட மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும் 105 தக்கண மதுரை தான்சென் றெய்திச் சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத், தந்தின் முன்றில் அம்பலப் பீடிகைத் தங்கினன் வதிந்தத் தக்கணப் பேரூர் ஐயக் கடிஞை கையின் ஏந்தி 110 மையறு சிறப்பின் மனைதொறு மறுகிக் காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணுந ரில்லோர் பிணிநடுக் குற்றோர் யாவரும் வருகவென் றிசைத்துட னூட்டி உண்டொழி மிச்சிலுண் டோடுதலை மடுத்துக் 115 கண்படை கொள்ளுங் காவலன் றானென். உரை 1-10. மாபெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய - பெருமை மிக்க இவ் வமுதசுரபியை நினக்குக் கொடுத்த, ஆபுத்திரன் திறம் அணியிழை கேளாய் - ஆபுத்திரன் வரலாற்றை அணியிழாய் கேட்பாயாக, வாரணாசி ஓர் மறை ஓம்பாளன் - காசித் திருப்பதியின் கண்ணுள்ள ஓர் அந்தணனும், ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் - மறைகளை ஓதுவிப்போனும் ஆகிய அபஞ்சிகன் என்போனது, பார்ப்பனி சாலி காப்புக் கடைகழிந்து - மனைவியாகிய சாலி என்பவள் காவலின் எல்லையைக் கடந்து, கொண்டோன் பிழைத்த தண்டம் அஞ்சி - கொழுநனுக்குப் பிழைபுரிந்தமையாலுண்டாம் தண்டத்திற்குப் பயந்து, தென்றிசைக் குமரி ஆடிய வருவோள் - தென் திசையிலுள்ள குமரியின்கண் நீராடும் பொருட்டு வருகின்றவள், சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை - அனைவரும் உறங்குவதற்குக் காரணமாகிய இருளில் வழியிடத்திலே சூல் முதிர்ந்த பருவத்தில், ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகி - பெற்ற குழந்தைக்குச் சிறிதும் இரங்காதவளாய், தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க - கட்புலனாகாத ஒரு தோட்டத்திலே இட்டுச் செல்ல; திறம்-வரலாறு. மறை ஓம்பாளன்-வேதத்தைப் பாதுகாப்பவன். உவாத்தி - உபாத் தியாயன் என்பதன் சிதைவு ; இஃது உவாத்தியன் ; உவாத்தியான் எனவும் வழங்கும். பார்ப்பனி - பார்ப்பான் மனைவி; மறையோரிற் கணவனைப் பார்ப்பான் என்றும், மனைவியைப் பார்ப்பனியென்றும் கூறுவர். காப்பு-நிறைக்காவல். காப்புக் கடை கழிந்து - கற்பொழுக்கம் நீங்கி யென்றபடி. தண்டம் - மறுமையில் எய்தலாகும் தண்டனை. குமரி-குமரியாறு; கடலுமாம். 1“தொடியோள் பௌவம்'' என்பதன் உரை காண்க. ஆடிய : செய்யிய வென்னும் வினையெச்சம். முதிர் பருவத்து - முதிர்ந்த பொழுதிலே. தோன்றா - மறைவிடத்துள்ள. துடவை - தோட்டம்; 2“தொய்யாது வித்திய துளர்படு துடவை'' என்பது காண்க. 11-14. தாயில் தூவாக் குழவி துயர் கேட்டு - உண்ணாது பசித் துன்பத்தால் அழுகின்ற தாயற்ற குழந்தை ஒலியைக் கேட்டு, ஓர் ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர்தீர - ஒரு பசு ஆண்டு வந்து சேர்ந்து அக் குழவியின் பசித்துன்பம் நீங்க, நாவால் நக்கி நன்பால் ஊட்டி - நாவினால் நக்குதல் புரிந்து தனது இனிய பாலை உண்பித்து, போகாது எழுநாள் புறம்காத்து ஓம்ப-ஏழு நாள்வரை அக்குழவியை விட்டு நீங்காமல் பாதுகாக்க ; தூவாமை - உண்ணாமை, துயர்-துயரினால் அழுது கூப்பிடும் ஒலி : ஆகுபெயர், 1“தாயில் தூவாக் குழவி போல, ஓவாது கூஉம்நின்னுடற்றியோர் நாடே'' என்பது அறியற்பாலது. குழவித் துயரென்பதும் பாடம். புறங்காத்தல் - பாதுகாத்தல்; 2“வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப'' என்றார் தொல்காப்பியனாரும். புறங்காத்து ஓம்ப : ஒருபொருட் பன்மொழி. ஆவானது பாதுகாத்தமையின் இவனுக்கு ஆபுத்திரன் என்பது பெயராயிற்று. 15-20. வயனங் கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் - வயனங்கோடு என்னும் ஊரிலுள்ள ஒரு மறையவன், இயவிடை வருவோன் இளம்பூதி என்போன்- இளம்பூதி என்னும் பெயருடையவன் வழியிடை வரும்பொழுது, குழவி ஏங்கிய கூக்குரல் கேட்டு-குழந்தை அழுத கூப்பீட்டொலியைக் கேட்டு, கழுமிய துன்ப மொடு கண்ணீர் உகுத்தாங்கு - கலந்த துன்பத்துடன் கண்ணீர் சொரிந்து, ஆமகன் அல்லன் என் மகன் என்றே-இக்குழந்தை பசுவின் மகன் அல்லன் என்னுடைய புதல்வனே என்று கூறி, காதலி தன்னொடு கைதொழுது எடுத்து - தமக்கு மகப் பேற்றினையளித்த கடவுளைக் கைகூப்பி வணங்கி மனைவியுடன் குழந்தையை எடுத்து; பின் காதலி தன்னொடு என்னலால், மனைவியுடன் வருவோன் என்க. இளம்பூதி-இப்பெயர் பூதியெனவே இக் காதையுட் பின்வருகிறது. ஆவானது பாதுகாத்தலைக் கண்டமையின் 'ஆமகனல்லன்' எனக் கூறினான். நாவிடை - நாவினால். நன்னூல்-வேதன் வேதாங்கம் முதலியன. அக் குழவியைத் தனக்களித்தது தெய்வமென்றெண்ணி அத் தெய்வத்தைத் தொழுதன னென்க. 21-26 நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை என-மகன் பிறந்தனன் இனி நம் கிளை பொலிவுறுக என்று, தம் பதிப் பெயர்ந்து தமரொடுங்கூடி - தம் மூரின்கட் சென்று உறவினருடன் கூடி, மார்பிடை முந்நூல் வனையா முன்னர்-மார்பின்கண் முந்நூல் அணிதற்கு முன்னரே, நாவிடை நன்னூல் நன்கணம் நவிற்றி - நாவினால் மறைகளை நன்கு பயிலச் செய்ய, ஓத்துடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் - மறையோதும் அந்தணர் கட்குப் பொருந்துவன அனைத்தையும், நாத்தொலைவின்றி நன்கனம் அறிந்தபின் - சொல்வன்மை குன்றாமல் நன்குணர்ந்த பின்னர் ; முந்நூல் - பூணுநூல், விரைவுபற்றி வனையா முன்னர் என்றார். நாவிடை - நாவால். நவிற்றி - கவிற்ற வென்க. நவிற்றுதல் - அடிப்படப் பயில்வித்தல். நாத் தொலைவின்றி-நாவானது தோற்றல் இல்லையாக; பிறிதோர் சொல் வெல்லுஞ் சொல் இன்மையறிந்து சொல்ல வல்லனாக என்றபடி. 27-34. அப் பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின் புக்கோன்- அவன் அவ்'d2வூரில் ஒரு மறையவன் வீட்டினுட்சென்றவன், ஆங்குப் புலை சூழ் வேள்வியில்-அவ்விடத்தில் ஊனுண்ணு தலைக் கருதுகின்ற வேள்விச் சாலையில், குரூஉத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி-தொடுக்கப்பட்ட நிறமமைந்த மாலை கொம்பின்கண் சுற்றப்பட்டு, வெரூஉப் பகை அஞ்சி வெய் துயிர்த்துப் புலம்பி - அச்சத்தைத் தருகின்ற பகைக்கு அஞ்சி வெவ்விதாக மூச்செறிந்து வருத்தமுற்று, கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி - கொலைத் தொழில் புரியும் வேடருடைய வில்லிற்குப் பயந்து, வலையிடைப்பட்ட மானே போன்று - வலையின்கண் அகப்பட்ட மானைப் போல, ஆங்கு அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு - ஆண்டு அச்சத்துடன் நின்று கூப்பிடும் பசுவின் துன்பத்தைக் கண்டு, நெஞ்சு நடுக்குற்று நெடுங்கணீர் உகுத்து-உள்ளம் நடு நடுங்கிமிக்க கண்ணீரைச் சொரிந்து; புலை-புன்மை; கீழ்மையுடைய ஊன் தின்றலுக்காயிற்று. வேள்வி யென்பதும் வேள்விச்சாலைக்கு ஆகுபெயர். பகையை அஞ்சியென இரண்டாவது விரித்தலுமாம். புலம்பி - வருத்த முற்று. கொடுமரம்- வில்; அம்பெய்தலை யுணர்த்தி நின்றது. 35-39. கள்ளவினையில் கடுந்துயர் பாழ்பட - இப்பசுவினது மிக்க துன்பம் இல்லையாம்படி திருட்டுத்தொழிலால், நல்லிருள் கொண்டு நடக்குவன் என்னும் - செறிந்த இருளின்கண் இதனைக் கொண்டு செல்லுவேன் என்கின்ற, உள்ளம் கரந்து ஆங்கு ஒருபுடை ஒதுங்கி - தன் எண்ணத்தை மறைத்து அவ்விடத்தில் ஒருபக்கம் மறைந்திருந்து, அல்லிடை ஆக்கொண்டு அப்பதி அகன்றோன் - இரவில் பசுவைப்பற்றி அவ்'d2வூரைவிட்டு நீங்கினோன், கல்அதர் அத்தம் கடவா நின்றுழி-பருக்கைக் கற்கள் பொருந்திய சின்னெறியை யுடைய அருவழியைத் தாண்டிச் செல்லும் பொழுது ; நள்ளிருள் - செறிந்தவிருள் ; நளி யென்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. பாழ்பட வினையிற்கொண்டு எனக் கூட்டுக. என்னும் உள்ள முடையனாய் அதனைக் கரந்து என விரித்துரைக்க. 1“கல்லத ரத்தங் கடக்க'' என்றார் இளங்கோவடிகளும். 40-45. அடர்க்குறு மாக்களொடு அந்தனர் எல்லாம்-நெருக்கு தலைச் செய்யும் முழுவலியுடைய மக்களோடு அந்தணர் அனைவரும் கூடி, கடத்திடை ஆவொடு கையகப் படுத்தி - அருநெறியில் அவனைப் பசுவொடு பிடித்துக்கொண்டு, ஆ கொண்டு இந்த ஆரிடைக்கழிய- பசுவைத் திருடிக்கொண்டு இந்த அரிய வழியிலே நீங்குமாறு, நீ மக னல்லாய் நிகழ்ந்ததை உரையாய்-மகனல்லையாகிய நீ நிகழ்ந்த காரணத்தைக் கூறுவாயானால், புலைச் சிறு மகனே போக்கப்படுதி என்று - புலைத் தொழிலையுடைய கீழ்மகனே விலக்கப்படுவாய் என்று, அலைக்கோல் அதனால் அறைந்தனர் கேட்ப-வருத்துதலைச் செய்யும் கோலினால் அடித்துக் கேட்க ; அடர்க்குறு - பகையாயினாரை நெருக்கி வருத்துதலைச் செய்யும். வேள்விப் பசுவைக் கவர்ந்தமையின் புலைச்சிறுமகன் என்றார். உரையாய் உரைப்பின் போக்கப்படுதி யென்க. போக்கப் படுதல்-தண்டத்தினின்றும் அகற்றப்படுதல். மகனல்லாய் - மகனாதற் றன்மை உடையை யல்லாய்; மக்கட்டன்மை யில்லாய்; 2"மகனல்லை மன்ற வினி" 3"மகனல்லான் பெற்ற மகன்" என்பன காண்க. குறுமாக்கள் எனப் பிரித்தலும், நீசமகனல்லாய் எனப் பாடங்கொள்ளலும் ஈண்டைக்குப் பொருந்துவன அல்ல. 46-48. ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை - மிகவும் வருத்திக்கொண்டு நின்ற பார்ப்பன உவாத்தியை, கோட்டினில் குத்திக் குடர் புய்த்துறுத்து - கொம்பினால் குத்திக் குடரைப் பிடுங்கி, காட்டிடை நல் ஆகதழ்ந்து கிளர்ந்துஓட-காட்டின் கண் அந் நல்ல பசுவானது விரைந்தெழுந்து ஓட; ஆட்டி அலைக்கும்: ஒரு பொருட் பன்மொழி. புய்த்துறுத்து -பறித்தலைச் செய்து; 4"புய்த்தெறி கரும்பின் விடுகழை" என்பது காண்க. கதழ்ந்து-விரைந்து; கதழ்வு என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்தது. 49-56. ஆபுத்திரன் தான் ஆங்கவர்க்கு உரைப்போன்-ஆபுத்திரன் அம் மறையோர்க்குக் கூறுகின்றவன், நோவன செய்யன்மின் - வருந்துதற் குரியவற்றைச் செய்யாதீர். நொடிவன கேண்மின்- யான் கூறுவதனைக் கேட்பீராக, விடுநில மருங்கின் படுபுல் ஆர்ந்து- அரசனால் விடப்பட்ட மேய்புலத்தில் தானே உண்டாகிய புற்களை மேய்ந்து, பிறந்தநாள் தொட்டும் சிறந்த தன் தீம்பால் - நாம் பிறந்தநாள் தொடங்கிச் சிறப்புடைய தனது இனிய பாலை, அறம் தரு நெஞ்சோடு அருள்சுரந்து ஊட்டும் - அறம் பொருந்திய உள்ளத்தோடும் அருண்மிகுந்து உண்பிக்கும், இதனொடு வந்த செற்றம் என்னை - இப் பசுவினிடம் நுமக்குண்டாய சினம் யாது, முதுமறை அந்தணிர் முன்னியது உரைமோ - தொன்மறை யுணர்ந்த அந்தணர்கள் நும் எண்ணத்தைக் கூறுவீர் என ; விடுநிலம் - பயிர் செய்யாது விட்ட தரிசுநிலமுமாம். இதனொடு: உருபு மயக்கம். செற்றம் - பகைமை நெடுங்காலம் நிகழ்வது; அதனைக் கோறல் துணிந்தனராகலின் ‘செற்ற மென்னை' என்றான். இதன் பொருட்டு மக்கட்கு எத்துணையும் உழைப்பும் கேடும் இல்லை யென்பான், ‘விடுநில மருங்கிற் படுபுல் லார்ந்து' என்றும், மக்கள் யாவரும் குழவியாய் உதித்த ஞான்றுதொட்டு உயிர் துறக்குங் காறும் என்பான், ‘பிறந்தநாள் தொட்டும்' என்றும், இனிமையினும் உட.ற் குறுதி பயத்தலினும் மேம்பட்டதென்பான் ‘சிறந்த தன் தீம்பால்' என்றும், கைம்மாறு கருதாது இரக்கத்தால் தானே உண்பிப்பதென்பான், ‘அருள் சுரந் தூட்டும்' என்றும், இவ்வாற்றால் தாய் போல்வதாகிய இதனைக் கோறல் கருதிய நும் வன்கண்மை இருந்தவாறென்னென்பான், இதனொடு வந்த செற்ற மென்னை' என்றுங் கூறினான். என வென்று ஒரு சொல் வருவிக்க. 57-62. பொன் அணி நேமி வலங்கொள் சக்கரக் கை-பொன்னா லாகிய அழகிய வட்டத்தினையுடைய சக்கரப் படையை வலக்கையிற் கொண்ட, மன்னுயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய- நிலை பெற்ற உயிர்கட்கு முதல்வனாகிய திருமாலினுடையமகனான நான்முகன் எங்கட்கு அருளிச்செய்த, அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை-அரிய மறைநூற் பொருள்களை அறியாமற் பழித்துரைத்தனை, தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ - சுழலுகின்ற உள்ளத்தையுடைய சிறியோனாகிய நீ, அவ் ஆ மகன் ஆதற்கு ஒத்தனை - அப் பசுவின் புதல்வன் ஆதற்கு ஒத்தனை, அறியா நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும்-மகனல்லையாகிய அறிவில்லாத நீ இதனைக் கேள் என்று இகழ்ந்து கூறுதலும்; வலங்கொள் - வெற்றியைக் கொள்ளும் என்றுமாம். தெரு மரல்-சுழற்சி, கலக்கம். நூற்பொருளை யறியும் அறிவிலா னென்பார், ‘ஆ மகனாதற் கொத்தனை' என்றார். அறியா ஆ எனக் கூட்டுதலுமாம். மகனல்லாய் என்பதற்கு இக் காதையுள்முன் உரைத்தமை காண்க. 63-69. ஆன்மகன் அசலன் - அசலன் என்பவன் பசுவின் மகன், மான் மகன் சிருங்கி-சிருங்கி என்பான் மானின் மகன், புலி மகன் விரிஞ்சி - விரிஞ்சி யென்பவன் புலியின் மகன், புரையோர் போற்றும் நரிமகன் அல்லனோ கேச கம்பளன் -மேலோர் போற்றும் கேசகம்பளன் நரியின் மகன் அல்லனோ, ஈங்கிவர் நும்குலத்து இருடி கணங்கள் என்று - இவர்களெல்லாம் நும் குலத்து வந்த முனிவர் கூட்டம்என்று, ஓங்குயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால் - மிக உயர்ந்த பெருஞ் சிறப்புக் கூறுதலும் உண்டாகலால், ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ நான்மறை மாக்காள் நன்னூல் அகத்து என - நான்மறை யந்தணீர் நும் மறை நூலிடத்து ஆவால் வந்த அழிகுலம் உண்டோ என வினவ;, புரையோர் போற்றும் கேசகம்பளனெனக் கூட்டுக. உண்டால்- உண்டாதலால்; ஆல்: அசையுமாம். ஆவொடு - ஆவால். அழிகுலம் - இழிகுலம். நன்னூலகத்து ஆவினால் அழிகுலமுண்டாயதென்று கூறப்பட்டுள்ளதோ என்றபடி. ‘ஆமகனாதற் கொத்தனை' என அந்தணர் இகழ்ந்தனராதலின், அதனைப் பரிகரித்தற்கு 'ஆவொடு வந்த அழிகுல முண்டோ' என்றான். 70-71. ஆங்கவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் ஈங்கிவன் தன் பிறப்பு யான் அறிகுவன் என - அம் மறையவர்களுள் ஒருவன் இவனுடைய பிறப்பை யான் அறிவேன் என்று கூறுவான்; 72-77. நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்-வழிக்கொண்ட வருத்தத்துடன் இளைத்த உடம்பை யுடையவளாகிய, வடமொழி யாட்டி-பார்ப்பனி, மறை முறைஎய்தி-வேத விதிப்படி சென்று குமரிபாதம் கொள்கையின் வணங்கி - குமரித் தெய்வத்தின் திருவடிகளை முறைமையால் வணக்கஞ் செய்து, தமரில் தீர்ந்த சாலி என்போள்தனை - தனக்குச் சிறந்தோரினின்றும் நீங்கிய சாலி என்பவளை, யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என - நின் ஊர் யாது நீ ஈண்டு வந்த காரணம் என்ன என்று கேட்க, மாமறையாட்டி வருதிறம் உரைக்கும் - அம் மறையவள் தான் வந்த வரலாற்றைக் கூறுபவள்; நடவை - வழி ; வழிச்சேறல். நல்கூர்தல் - ஈண்டு இளைத்தல்; 1''நல்கூர் நுசுப்பினை'' என முன் வந்தமையும் காண்க. குமரி - குமரிக் கடலின் மருங்குள்ள தெய்வம்; கன்னி; பகவதி. கொள்கை - நோன்புமாம். வடமொழியாட்டி - பார்ப்பனி; பார்ப்பனரை ''வடமொழியாளர்'' (6 : 40) என முன் கூறினமையுங் காண்க. தீர்ந்து வணங்கிய என விகுதி பிரித்துக் கூட்டுக. தமரிற் றீர்ந்து வணங்கிய வடமொழியாட்டியாகிய சாலி யென்க. 78-83. வாரணாசி ஓர் மாமறை முதல்வன் ஆரண உவாத்தி அரும் பெறல் மனை யான் - காசிப்பதியிலுள்ள வேதமோ துவிக்கும் உவாத்தியாகிய அந்தணன் ஒருவனது பெறற்கரிய மனைவி யாவேன் யான், பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகி - அந்தணர்க்குத் தகாத இயல்புடன் ஒழுகி, காப்புக் கடை கழிந்து கணவனை இகழ்ந்தேன்-காவலின் எல்லையைக் கடந்து கணவனை அவமதித்தேன், எற்பயம் உடைமையின்-இரவின் அச்சமுடைமையால், இரியல் மாக்களொடு - கெடுதலுற்ற மக்களுடன், தெற்கண் குமரி ஆடிய வருவேன் - தென்றிசைக் குமரியில் நீராடும் பொருட்டு வருவேன்; காப்புக்கடை கழிந்து என்பதற்கு முன்பு (13 : 5) உரைத்தமை காண்க. ‘இழந்தேனெறிபய முடைமையின்' என்றும் பாடம் காணப்படும். இரியல் மாக்கள் என்பதனை இரட்டுறமொழி தலாகக் கொண்டு, விரைந்தேகு மாக்கள் என்றும் உரைத்திடுக 84-91. பொற்றேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்க் காவதம் கடந்து கோவலர் இருக்கையின் - பொற்றேரினை யுடைய பாண்டியனது கொற்கை நகரத்தில் ஒரு காவதம் கடந்த பின்னர் ஆயர்களுடைய இருப்பிடத்தில், ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகி-ஈன்ற சிறு குழவிக்கு இரங்காதவளாய்; தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன் - கண்காணாத தோட்டமொன்றில் இட்டு வந்தேன், செல்கதி உண்டோ தீவினையேற்கு என்று - இத்தகைய தீவினையேனுக்குச் செல்கதியும் உண்டோ என்று, அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கிவன்-துன்பமுற்று அழுத அச் சாலியின் மகன் இவன், சொல்லுதல் தேற்றேன் சொற்பயம் இன்மையின்-இதனைக் கூறாமலிருந்தேன் அங்ஙனம் கூறுவதால் பயன் இல்லாமையின், புல்லல் ஓம்பன்மின் புலைமகன் இவன் என- இவனைத் தீண்டா தொழிவீராக அசுத்தமுள்ள கீழ் மகனிவன் என்று கூற; ஈன்றேன்; அங்ஙனம் ஈன்ற குழவிக்கு எனவும், அழுதாள்; அங்ஙனம் அழுத அவள் மகன் எனவும் அறுத்துரைக்க. செல்கதி-அடையக் கடவதாகிய நற்கதி. அந்தணன் உரைப்பவன் புலைமகன் இவனென்று கூறவென்க. ஓம்பன்மின் - பாதுகாவாதீர்; செய்யாதீர் என்றபடி. 92-99. ஆ புத்திரன் பின்பு அமர் நகை செய்து - ஆபுத்திரன் அதனைக் கேட்ட பின்னர் விருப்பத்துடன் சிரித்து, மாமறை மாக்கள் வருகுலம் கேண்மோ - பெரிய மறைநூலுணர்ந்த அந்தணர்கள் வந்த மரபினைக் கேளும், முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய கடவுட் கணிகை காதலஞ் சிறுவர் - பழமறை முதல்வனாகிய பிரமனுக்குத் தெய்வக் கணிகை யாகிய திலோத்தமை யினிடமாக முன்பு தோன்றிய காதற் சிறுவரல்லரோ, அருமறை முதல்வர் அந்தணர் இருவரும் - அரிய மறை முதல்வர்களாகிய முனிவர் இருவரும், புரிநூன் மார்பீர் பொய்யுரையாமோ-முப்புரி நூலணிந்த மார்பினை யுடையீர் இது பொய் மொழியோ, சாலிக்கு உண்டோ தவறு என உரைத்து - இங்ஙனமிருப்பச் சாலிக்குக் குற்றம் உண்டோ என்று கூறி, நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப - நான்மறை யந்தணரை எள்ளிச் சிரித்து நிற்க ; அமர் நகை-பொருந்திய நகையுமாம். கேண்மோ : கேளும் என்னும் ஏவற்பன்மை உகரங்கெட்டு ஓகாரம் பெற்று வந்தது. அந்தணர் இருவர் - வசிட்டனும் அகத்தியனும் ; பிரமன் திலோத் தமையைக் கண்ட பொழுதில் வசிட்டனும் அகத்தியனும் கலசத்திற் றோன்றின ரென்பர். அந்தண ரிருவரும் காதலஞ் சிறுவர் என்க. 100-108. ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே - மறையோதும் அந்தணர்கட்கு இவன் ஒவ்வாதவன் என்று, தாதை பூதியும் தன் மனை கடிதர - தந்தையாகிய பூதியும் தன் இல்லத் தினின்றும் நீக்க, ஆ கவர் கள்வன் என்று-பசுவைக் கவர்ந்த திருடன் என்று, அந்தணர் உறை தரும் - மறையவர்கள் வாழ்கின்ற, கிராமம் எங்கணும் - ஊர்களிலெல்லாம், கடிஞையில் கல்லிட - இவனது பிச்சைப் பாத்திரத்தில் கற்களை இட, மிக்க செல்வத்து விளங்கி யோர் வாழும் - பெருஞ் செல்வத்தான் விளக்கமுற்றோர் வாழ்கின்ற, தக்கண மதுரை தான் சென்று எய்தி - தெற்கின்கண் உள்ள மதுரையைத் தான் சென்று அடைந்து, சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத்து அந்தில் முன்றில்-சிந்தாதேவியின் அழகிய கோயில் வாயிலிலுள்ள, அம்பலப் பீடிகை தங்கினன் வதிந்து!- அம்பலமாகிய பீடிகையிலே தங்கியிருந்து ; அந்தணர்க்கு-அந்தணருடன் கூடி யிருத்தற்கு. கடிஞை-பிச்சை யேற்கும்கலம். உலகிலே கடிஞையிற் கல்லிடுவார் எஞ்ஞான்றும் இலரென்பர்; அங்ஙனமாகவும் இவர்கள் இட்டனரென இரங்கிய வாறு. யாரும் கடிஞையிற் கல்லிடாரென்பதனை, 1“நினைத்த திதுவென்றந் நீர்மையை நோக்கி, மனத்த தறிந்தீவர் மாண்டார் - புனத்த, குடிஞை யிரட்டுங் குளிர்வரை நாட, கடிஞையிற் கல்லிடுவா ரில்'' என்னும் பழமொழி வெண்பாவானறிக. சிந்தா தேவி - கலைமகள்; அவளுறையுங் கோயிலாகலின் அது கலை நியமம் எனப்பட்டது; நியமம் - கோயில். அந்தில் : அசை. பீடிகையையுடைய அம்பலத்தி லென்றுமாம். 108-115 அத் தக்கணப் பேரூர் - அம் மதுரைமா நகரில், ஐயக் கடிஞை கையின் ஏந்தி - பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்தி, மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி - குற்றமற்ற சிறப்பினை யுடைய மாடங்கள்தோறும் சுழன்று, காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்-குருடர்செவிடர் முடவர் பாதுகாப்போர் அற்றோர் நோயால் துன்புறுவோர் ஆகிய, யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி - அனைவரும் வருக என்று கூறி யழைத்து ஒருங்கு உண்ணச் செய்து, உண்டு ஒழி மிச்சில் உண்டு - அனைவரும் உண்டு எஞ்சிய உணவை யுண்டு, ஓடு தலை மடுத்து - அவ்வோட்டினைத் தலைக்கு அணையாகக் கொண்டு, கண்படை கொள்ளும் காவலன் தான் என்-உறங்குதல் செய்வான் அவ் வாபுத்திரனாகிய காப்போன் என்க. உண்டொழி மிச்சிலுண்டு என்பது 2''விருந்தோம்பி மிச்சின் மிசைவான்'' என்பதன் பொருளைத் தழுவி வந்துளது. தலை மடுத்து-தலையின்கீழ் அகப்படுத்து. காவலன் - காத்தலை யுடையவன். அணியிழை, ஆபுத்திரன் திறம் கேளாய் ; பார்ப்பனி சாலி கழிந்து அஞ்சி வருவோள் இரங்காளாகிக் குழவியை இட்டு நீங்க ஆ கேட்டு அணைந்து நக்கி ஊட்டிப் போகாது ஓம்ப, பூதி யென் போன் கேட்டு உகுத்து என் மகனென்று எடுத்துப் பெயர்ந்து கூடி நவிற்ற, அறிந்த பின் புக்கோன் ஆதுயர் கண்டு உற்று உகுத்து உள்ளங் கரந்து ஒதுங்கி அகன்றோனாய்க் கடவாநின்றுழி, அந்தணரெல்லாம் மாக்களோடு சென்று கையகப்படுத்திக் கேட்ப, நல்லா குத்திப் புய்த்துறுத்து ஓட, ஆபுத்திரன் உரைப் போன், ‘உரைமோ' என, அந்தணர் இகழ்தலும், ஆபுத்திரன், ‘நன்னூலகத்து ஆவொடு வந்த அழிகுல முண்டோ' என, ஓரந்தணன் உரைக்கும் ; உரைப்பவன், ‘புல்லலோம்பன்மின் ; புலை மகன் இவன்' என, ஆபுத்திரன் நகை செய்து, ‘சாலிக்குத் தவ றுண்டோ' என்றுரைத்து நகுவனன் நிற்ப,பூதி ஒவ்வா னென்று கடி தர, கிராம மெங்கணும் கல்லிட, மதுரை சென்றெய்தி வதிந்து ஏந்தி மறுகி இசைத்து ஊட்டி மிச்சிலுண்டு மடுத்துக் காவலன் கண்படை கொள்ளும் என வினைமுடிவு செய்க. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை முற்றிற்று. 14. பாத்திரமரபு கூறிய காதை (ஆபுத்திரன் அங்ஙனமிருக்கையில் ஒரு நாள் அவனுக்கு நிகழ்ந்ததனைக் கூறுவேன் ; கேட்பாயாக : ஒருநாள் நள்ளிரவில் அவன் துயிலும் பொழுது சிலர் வந்து 'வயிறு காய் பெரும்பசி எங்களை வருத்தா நின்றது' என்றனர். அதனைக் கேட்ட அவன் அத் துன்பத்தை மாற்றுதற்கு ஆற்றலின்றி வருத்த முற்றான் ; அப்பொழுது கலை நியமத்துள்ள சிந்தாதேவி வெளிப்பட்டு வந்து, ‘இதனைக் கொள்க ; நாடெல்லாம் வறுமை யுற்றாலும் இவ்வோடு வறுமையுறாது; எவ்வளவு கொடுப்பினும் இதில் உணவு குறையாது வளராநிற்கும்' என்றுரைத்துத் தன் கையினுள்ள அட்சய பாத்திரமொன்றை அவன் கையிற் கொடுத்தனள்; அவன் அதனைப் பெற்று மகிழ்ச்சியுற்று, " சிந்தா தேவி ! செழுங்கலை நியமத்து நந்தா விளக்கே ! நாமிசைப் பாவாய் ! வானோர் தலைவி ! மண்ணோர் முதல்வி ! ஏனோ ருற்ற இடர் களைவாய்" என்று பரவிப் பணிந்து, பசியால் வருந்தி வந்தோரை ஊட்டி மகிழ்வித்து, அன்றுமுதல் எல்லா உயிர்க்கும் உணவளிப் பானாயினன்; உண்பதற்காக மக்கள் பலர் அவனைச் சூழ்ந்துகொண்டனர்; விலங்கு களும் பறவைகளும் அவனைப் பிரிவின்றிச் சூழ்ந்துகொண்டன; அவ்வாறு நிகழும்போது, அவனது அறத்தின் மிகுதியைத் தனது பாண்டு கம்பள நடுக்கத்தால் அறிந்த இந்திரன் ஒரு முதுமறையோன் வடிவுகொண்டு வந்து நின்று, "நான் இந்திரன்; நினது பெரிய தானத்தின்பொருட்டு வரங்கொடுத்தற்கு வந்தேன்; நீவிரும்பியது யாது?" என்று கூற, ஆபுத்திரன் விலாவெலும்பு ஒடியும்படி சிரித்து, " அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர் நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர் யாவரு மில்லாத் தேவர்நன் னாட்டுக் கிறைவ னாகிய பெருவிறல் வேந்தே வருந்தி வந்தோருடைய அரும்பசியைப் போக்கி, அவர்தம் இனிய முகத்தைக் காணுமாறு செய்யும் என் தெய்வக் கடிஞை ஒன்றே சாலும்; நின்பாற் பெறத் தக்கது யாது?" என அவனை மதியா துரைத்தனன் ; உரைக்கவே இந்திரன் வெகுண்டு, உலகிலே பசியால் வருந்துவோ ரில்லையாம்படி செய்வேன் என நினைந்து, எங்கும் மழை பெய்வித்து வளமுண்டாகச் செய்தனன் ; அதனால் பசித்து வருவோர் இலராயினர். அதுகண்டு ஆபுத்திரன் அவ் வம்பலத்தினின்றும் நீங்கி ஊர்தோறுஞ் சென்று, ‘உண்போர் யாரேனும் உண்டோ?' என வினவா நிற்க, அதுகேட்டு யாவரும் செல்வக் களிப்பால் அவனை இகழ்ந்தனர். உண்போரைப் பெறாமையால் அவன் பெருஞ் செல்வத்தை யிழந்தோர் போல வருந்தித் தனியே செல்லுகையில், மரக்கலத்தில் வந்த சிலர் அவனைக் கண்டு, ‘சாவக நாட்டிலே மழை யின்மையால் உயிர்கள் பெரும்பாலும் பசியால் இறந்தன' என்று கூறினர். அது கேட்டலும் அந்நாட்டிற்குச் செல்ல நினைந்து அவன் ஒரு கப்பலில் ஏறினன்; அக்கப்பல் சென்று மணி பல்லவத்தினருகே ஒருநாள் தங்கிற்று: அவன் அத்தீவில் இறங்கினன். இறங்கியவன். ஏறிவிட்டானென எண்ணி, மீகான் இருளில் அக்கப்பலை வேறிடத்திற்குச் செலுத்திப்போயினன். அது தெரிந்து ஆபுத்திரன் மிக்க வருத்தமடைந்து, ‘யாருமில்லாதஇத் தீவில் பலர்க்கு உணவளிக்கும் மாபெரும் பாத்திரத்தை வைத்துக் கொண்டு யான் மட்டும் உயிரோம்பி யிரேன்' என எண்ணி அதனைத் தொழுது, ‘ஆண்டிற்கொரு முறை தோன்றுவாயாக' என்று கூறி அதனைக் கோமுகிப் பொய்கையில் விடுபவன், ‘அருளறம் பூண்டு உயிர்களைப் பாதுகாப்போர் யாரேனும் வரின் அவர் கையிற் புகுக' என்று சொல்லி விட்டுவிட்டு, தான் பட்டினியிருந்து உயிர் துறப்பானாயினான். அப்பொழுது அங்கே சென்ற யான் அதனைக் கண்டு, ‘நீ யாது துன்ப முற்றனை' என்று கேட்க, அவன் நிகழ்ந்தவற்றைச் சொல்லி, மணிபல்லவத்தில் உடம்பை வீழ்த்திவிட்டுப் பல்லுயிர்களையும் பாதுகாக்கும் எண்ணத்துடன் சென்று சாவகநாட் டரசனுடைய ஆனின் வயிற்றிலுதித்தனன். ) ஆங்கவற் கொருநாள் அம்பலப் பீடிகைப், பூங்கொடி நல்லாய் புகுந்தது கேளாய் மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத் தாரிடை உழந்தோர் அம்பல மரீஇத் 5 துயில்வோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி வயிறுகாய் பெரும்பசி மலைக்கும் என்றலும் ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன் ஆற்றுவது காணான் ஆரஞர் எய்தக் கேளிது மாதோ கெடுகநின் தீதென 10 யாவரும் ஏத்தும் இருங்கலை நியமத்துத் தேவி சிந்தா விளக்குத் தோன்றி ஏடா அழியல் எழுந்திது கொள்ளாய் நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது, 15 தான்தொலை வில்லாத் தகைமைய தென்றே தன்கைப் பாத்திரம் அவன்கைக் கொடுத்தலும், சிந்தா தேவி செழுங்கலை நியமத்து நந்தா விளக்கே நாமிசைப் பாவாய் வானோர் தலைவி மண்ணோர் முதல்வி 20 ஏனோர் உற்ற இடர்களை வாயெனத் தான்தொழு தேத்தித் தலைவியை வணங்கி ஆங்கவர் பசிதீர்த் தந்நாள் தொட்டு வாங்குகை வருந்த மன்னுயிர் ஓம்பலின் மக்களும் மாவும் மரஞ்சேர் பறவையும் 25 தொக்குடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ பழுமரத் தீண்டிய பறவையின் எழூஉம் இழுமென் சும்மை இடையின் றொலிப்ப ஈண்டுநீர் ஞாலத் திவன்செயல் இந்திரன் பாண்டு கம்பளந் துளக்கிய தாகலின் 30 தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி வளைந்த யாக்கையோர் மறையோ னாகி மாயிரு ஞாலத்து மன்னுயிர் ஓம்பும் ஆருயிர் முதல்வன் தன்முன் தோன்றி இந்திரன் வந்தேன் யாது நின்கருத்து 35 உன்பெரும் தானத் துறுபயன் கொள்கென வெள்ளை மகன்போல் விலாஇற நக்கீங் கெள்ளினன் போமென் றெடுத்துரை செய்வோன் ஈண்டுச் செய்வினை ஆண்டுநுகர்ந் திருத்தல் காண்தகு சிறப்பின்நும் கடவுள ரல்லது 40 அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர் நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர் யாவரும் இல்லாத் தேவர்நன் னாட்டுக் கிறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர் 45 திருந்துமுகங் காட்டுமென் தெய்வக் கடிஞை உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ, யாவையீங் களிப்பன தேவர்கோன் என்றலும் புரப்போன் பாத்திரம் பொழிந்தூண் சுரந்தீங் 50 கிரப்போர்க் காணா தேமாந் திருப்ப, நிரப்பின் றெய்திய நீணில மடங்கலும் பரப்பு நீரால் பல்வளம் சுரக்கென ஆங்கவன் பொருட்டால் ஆயிரங் கண்ணோன் ஓங்குயர் பெருஞ்சிறப் புலகோர்க் களித்தலும் 55 பன்னீ ராண்டு பாண்டிநன் னாடு மன்னுயிர் மடிய மழைவள மிழந்தது வசித்தொழில் உதவ மாநிலங் கொழுப்பப் பசிப்புயிர் அறியாப் பான்மைத் தாகலின் ஆருயி ரோம்புநன் அம்பலப் பீடிகை 60 ஊணொலி அரவம் ஒடுங்கிய தாகி விடருந் தூர்த்தரும் விட்டேற் றாளரும் நடவை மாக்களும் நகையொடு வைகி வட்டுஞ் சூதும் வம்பக் கோட்டியும் முட்டா வாழ்க்கை முறைமைய தாக 65 ஆபுத் திரன்தான் அம்பலம் நீங்கி ஊரூர் தோறும் உண்போர் வினாஅய் யாரிவன் என்றே யாவரும் இகழ்ந்தாங் கருந்தே மாந்த ஆருயிர் முதல்வனை இருந்தாய் நீயோ என்பார் இன்மையின் 70 திருவின் செல்வம் பெருங்கடல் கொள்ள ஒருதனி வரூஉம் பெருமகன் போலத் தானே தமியன் வருவோன் தன்முன் மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச் சாவக நன்னாட்டுத் தண்பெயல் மறுத்தலின், 75 ஊனுயிர் மடிந்த துரவோய் என்றலும் அமரர்கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது குமரி மூத்தஎன் பாத்திரம் ஏந்தி அங்கந் நாட்டுப் புகுவதென் கருத்தென வங்க மாக்களொடு மகிழ்வுட னேறிக் 80 கால்விசை கடுக்கக் கடல்கலக் குறுதலின் மாலிதை மணிபல் லவத்திடை வீழ்த்துத் தங்கிய தொருநாள் தானாங் கிழிந்தனன் இழிந்தோன் ஏறினன் என்றிதை எடுத்து வழங்குநீர் வங்கம் வல்லிருள் போதலும் 85 வங்கம் போயபின் வருந்து துயர் எய்தி அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின் மன்னுயிர் ஓம்புமிம் மாபெரும் பாத்திரம் என்னுயிர் ஓம்புதல் யானோ பொறேஎன் தவந்தீர் மருங்கில் தனித்துயர் உழந்தேன் 90 சுமந்தென் பாத்திரம் என்றனன் தொழுது கோமுகி என்னுங் கொழுநீர் இலஞ்சியின் ஓரியாண் டொருநாள் தோன்றென விடுவோன் அருளறம் பூண்டாங் காருயி ரோம்புநர் உளரெனில் அவர்கைப் புகுவாய் என்றாங் 95 குண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்ப்புழி அந்நா ளாங்கவன் தன்பாற் சென்றே என்னுற் றனையோ என்றியான் கேட்பத் தன்னுற் றனபல தானெடுத் துரைத்தனன் குணதிசைத் தோன்றிக் காரிருள் சீத்துக் 100 குடதிசைச் சென்ற ஞாயிறு போல மணிபல் லவத்திடை மன்னுடம் பிட்டுத் தணியா மன்னுயிர் தாங்குங் கருத்தொடு சாவக மாளுந் தலைத்தாள் வேந்தன் ஆவயிற் றுதித்தனன் ஆங்கவன் தானென உரை 1-2. ஆங்கவற்கு ஒரு நாள் அம்பலப் பீடிகைப் பூங்கொடி நல்லாய் புகுந்தது கேளாய்-அந்த ஆபுத்திரனுக்கு அம்பலப் பீடிகையினிடம் ஒரு நாள் நேர்ந்ததைப் பூங்கொடியனைய நங்காய் கேட்பாயாக; ஆங்கவன்: ஒரு சொல். நல்லா யென்றது மணிமேகலையை. 2-8. மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து-மழைத்துளி களையுடைய இடையாமத்தில் வலிய இருட்கலப்பிலே, ஆரிடை உழந்தோர் அம்பலம் மரீஇ - அரிய வழியில் வருந்தி வந்தோர் சிலர் அம்பலத்தையடைந்து, துயில்லோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி - உறங்கிக் கொண்டிருந்த ஆபுத்திரனை யெழுப்பி வணங்கித் துதித்து, வயிறுகாய்பெரும்பசி மலைக்கும் என்றலும் - வயிற்றினைக் காய்கின்ற பெரும் பசியானது வருத்தும் என உரைத்தலும், ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன் - இரந்துண்ணும் உணவினையன்றி வேறு உணவில்லாத ஆபுத்திரன், ஆற்றுவது காணான் ஆரஞர் எய்த - உதவுதற் குரிய வழியைக் காணாதவனாய் மிக்க துயரத்தை அடைய ; உழந்தோர் - கூத்தர் முதலியோர் என்றுரைப்பாரு முளர். வயிறு காய் பெரும்பசிக்கு முன் (11: 110) உரைத்தமை காண்க. மலைக்கும் - மாறுபடுத்தும். நல்லிருளாகலின் ஆற்றுவது காணானாயினான். 1-16. கேள் இது மாதோ கெடுக நின் தீது என - இதனைக் கேள் நின் துன்பம் கெடுக என்று, யாவரும் ஏத்தும் இருங்கலை நியமத்து - அனைவரும் துதிக்கும் பெரிய கலை நியமத்தில் உள்ள, தேவி சிந்தா விளக்குத் தோன்றி - தேவியாகிய சிந்தாவிளக்குத் தோன்றி, ஏடா அழியல் எழுந்து இது கொள்ளாய் - ஏடா வருந்தாதே எழுந்து இதனைப் பெறுவாய், நாடு வறங் கூரினும் இவ்வோடு வறம் கூராது - நாட்டின்கண் வற்கடம் மிகினும் இந்த ஓடானது வறுமையுறாது, வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது - உணவினை வாங்குவோர் கைகள் வருந்துதலன்றி, தான் தொலை வில்லாத் தன்மையது என்றே - தான் அழியாத தன்மையையுடைத்தாம் என்று, தன் கைப் பாத்திரம் அவன் கைக் கொடுத்தலும் - தன் கையிலுள்ள ஓட்டினை அவன் கையில் அளித்தலும்; மாது, ஓ: அசைகள். யாவரும்-எச்சமயத்தாரும் என்றுமாம். கலை நியமம் - நாமகள் கோயில். ஏடா: விளி, வறம் - வற்கடம்; பஞ்சம்; 1"ஞாலம் வறந்தீரப் பெய்ய" என்றார் பிறரும். மிகுதியாக அளித்தலின் வாங்குவோர் கை வருந்து மென்றார் ; வருத்துதல் எனப்பாடங்கொள்ளலுமாம். தான் என்றது பாத்திரத்தை. வறங் கூராது - வறுமை யுறாது: முற்று; எச்சமுமாம். 17-21. சிந்தாதேவி - மனத்தின்கண் அமர்ந்திருக்கின்ற மா தெய்வமே, செழுங்கலை நியமத்து - அழகிய கலைக்கோட்டத் தின்கண் மேவிய, நந்தா விளக்கே - அழியாத திருவிளக்கே, நாமிசைப் பாவாய் - நாவின்கண் பொருந்திய நங்கையே, வானோர் தலைவி - விண்ணவர் தலைவியே, மண்ணோர் முதல்வி - மண்ணுள்ளோர் முதல்வியே, ஏனோர் உற்ற இடர் களைவாய் என - ஏனையோரடைந்த துன்பத்தை நீக்குவோய் என்று, தான் தொழுது ஏத்தித் தலைவியை வணங்கி - அஞ்சலி செய்து துதித்துத் தலைவியை வணக்கஞ் செய்து ;, அடுக்கிய விளிகள் சிந்தா தேவிபால் ஆபுத்திரனுக்குள்ள அன்பின் ஆராமையைப் புலப்படுத்துகின்றன. 22-29 ஆங்கவர் பசி தீர்த்து அந்நாள் தொட்டு-அவர்களுடைய பசியைத் தீர்த்துஅந்நாள் தொடங்கி, வாங்கு கை வருந்த மன்னுயிர் ஓம்பலின் - வாங்குகின்ற கை வருந்துமாறு மன்னுயிர் களைப் பாதுகாத்தலினால், மக்களும் மாவும் மரஞ்சேர் பறவையும் தொக்கு உடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ - மக்களும் விலங்குகளும் மரங்களிலுள்ள புட்களும் ஒருமிக்கச் சேர்ந்து திரண்டு சுற்றிக்கொண்டு விடாவாய், பழுமரத்து ஈண்டிய பறவையின் எழூஉம்-பழுத்த மரத்தின்கண் கூடிய பறவைகளைப் போல் எழுப்பும், இழுமென் சும்மை இடை யின்று ஒலிப்ப - இழுமென்னும் ஓசை இடையீடின்றி ஒலித்துக் கொண்டிருப்ப, ஈண்டுநீர் ஞாலத்து இவன் செயல்-மிகுந்த நீரினையுடைய கடல் சூழ்ந்த நிலவுலகில் இவன் புரிந்த அறச்செயல், இந்திரன் பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின்-இந்திரனது வெண்ணிறக் கம்பளமாகிய இருக்கையை நடுங்கச்செய்தமையால் அவன்; மக்களும் மாவும் பறவையும் எனத் திணைவிரவிச் சூழ்ந்தன வென அஃறிணை முடிவு பெற்றன. விடா - விடாவாய் : எச்சம். பழுமரம்-ஆலமரமுமாம். எழூஉம்-எழுப்பும் : பிறவினை. இடை - இடையீடு. இவ்வுலகிலே தானம் சீலம் முதலியவற்றில் மேம்பட்ட பௌத்தர் உளராயினும், அவர்கட்கு ஏதேனும் துன்பம் உளதாயினும் இந்திரனுடைய பாண்டு கம்பளம் நடுங்குமென்றும், அக்குறிப்பால் அவற்றையறிந்து வந்து அவர்கட்கு வேண்டிய வரங்களைக் கொடுத்தலும், துன்பத்தை நீக்குதலும் இந்திரனுடைய கடப்பாடென்றும் தெரிகின்றது. 30-35. தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி-நடை தளர்தலால்தான் பிடித்த தண்டையே காலாக ஊன்றிக்கொண்டு கூனிய உடலை யுடைய ஒரு மறையவனாகி, மாயிரு ஞாலத்து மன்னுயிர் ஓம்பும் - மிகப் பெரிய பூமியில் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கும், ஆருயிர் முதல்வன் தன் முன் தோன்றி - ஆருயிர் முதல்வனாகிய ஆபுத்திரன் முன்னர்த் தோன்றி, இந்திரன் வந்தேன் யாது நின்கருத்து - யான் இந்திரன் ஈண்டு வந்தேன் நின் எண்ணம் யாது, உன் பெரும் தானத்து உறுபயன் கொள்க என - நினது பெரிய தானத்தினாலாகிய மிக்க பயனைக் கொள்வாயாக என்றுரைப்ப; சிலப்பதிகாரத்துள்ளும் இவ்வாறே 1"தளர்ந்த நடையிற் றண்டு காலூன்றி, வளைந்த யாக்கை மறையோன்." என வந்துளது, 2"உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே" என்ப வாகலின் ஆபுத்திரனை ‘ஆருயிர் முதல்வன்' என்றார். எல்லாத் தானத்தினும் அன்னதானம் சிறந்ததாகலின் பெருந்தானம் எனப்பட்டது. 36-48. வெள்ளை மகன்போல் விலா இற நக்கு ஈங்கு எள்ளினன் போம் என்று எடுத்துரை செய்வோன்-விரகில்லா மகனைப் போல விலா வெடிக்குமாறு சிரித்து இகழ்ச்சியுடையனாய்ப் போம் என்று எடுத்துக் கூறுகின்றவன், ஈண்டுச் செய்வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் காண்டகு சிறப்பின் நும் கடவுளர் அல்லது - காணத்தக்க அழகின் சிறப்பினை யுடைய நும் கடவுளர் இவ் வுலகிற்செய்த நல்வினையின் பயனை அவ்வுலகில் நுகர்ந்திருத்தல் அல்லது, அறஞ்செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் - அறம் புரியும் மக்களின் எளிய உயிர் களைப் பாதுகாப்போர், நற்றவம் செய்வோர் பற்று அற முயல்வோர் - நல்ல தவங்களைச் செய்கின்றோர் பற்றுக்களை அறுத்தற்கு முயற்சி செய்வோர் ஆகியவருள், யாவரும் இல்லாத்தேவர் நன்னாட்டுக்கு - ஒருவருமில்லாத விண்ணவருலகிற்கு, இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே - தலைவனாகிய பெருவலியுடைய தேவர்கோனே, வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து அவர் திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிஞை - எனது கடவுட் கடிஞை வருத்தத் துடன் வந்தோரது பொறுத்தற்கரிய பசியை நீக்கி அவர் இனிய முகத்தை யான் காணுமாறு காட்டும், உண்டிகொல்லோ உடுப்பன கொல்லோ-உண்டபனவோ உடுப்பனவோ, பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ - மகளிரோ வேறு விரும்புவோரோ, யாவை ஈங்கு அளிப்பனதேவர் கோன் என்றலும் - விண்ணவர் தலைவனே நீ இப்பொழுது எமக்கு அளிப்பன யாவை என்றுரைத்தலும்; வெள்ளை மகன் - கரவில்லா மகனுமாம். விலாவிற நகுதல் - பெருகச் சிரித்தல்; 3"வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட்டேனே" என்றார் திருநாவுக்கரசரும். போம்: ஏவற்பன்மை. நுங் கடவுளர் என்றான் தனக்கு அவர் அயலென்னுங் கருத்தால் 1"நின்றநின் கார்மயி றன்னையும்" என்புழிப்போல. அறஞ்செய் மாக்கள் முதலியோர் இல்லாவெனவே கடவுளர் அறஞ் செய்தல் முதலியன உடையரல்லர் என்றவாறாயிற்று; நுகர்ந் திருத்தலையுடைய கடவுளரல்லது யாவருமில்லா என்றலுமாம். இக் கருத்து, 2"பொலம் பூங் காவி னன்னாட்டோரும், செய்வினை மருங்கி னெய்த லல்லதை, உடையோ ரீதலு மில்லோ ரிரத்தலும், கடவ தன்மையிற் கையறவுடைத்து" 3"ஈவாருங் கொள்வாரு மில்லாத வானத்து, வாழ்வாரே வன்க ணவர்" என்பவற்றுள் அமைந்துள்ளமை காண்க. நன்னாடு என்பதும், பெருவிறல் வேந்து என்பதும் இகழ்ச்சி. தெய்வம்-தெய்வத்தன்மை. கடிஞை காட்டுமென்க; எனக்கு அதுவே அமையும் என்றவாறாயிற்று. திருந்து முகம் பெற்றோர் உவப்பாலுளதாவது; 4"ஈத்துவக்கு மின்பம்" என்பது காண்க. பேணுநர் - நாட்டார் முதலியோர். திணைவிரவி யாவை என அஃறிணையாயிற்று. ஈங்கு, தன்மை. தேவர் கோன் : விளி. 49-54 புரப்போன் பாத்திரம் பொழிந்தூண் சுரந்தீங்கு - உயிர் களைக் காப்பாற்றுகின்ற ஆபுத்திரனது பாத்திரத்தின்கட் பெய்யப்பட்ட உணவுபெருகி, இரப்போர்க் காணாது ஏமாந்து இருப்ப - அவ் வுணவினை யிடுதற்கு இரப்போரைக் காணாமல் அவன் ஏக்கற்றிருக்குமாறு, நிரப்பின் றெய்திய நீள் நிலம் அடங்கலும் - பெரிய நிலவுலக முழுதிலும் வறுமையின்றாகும் பொருட்டு, பரப்பு நீராற் பல்வளஞ் சுரக்கென - முகில்கள் கடன் முகந்து சொரியும் மழை நீரால் பல வளங்களும் பெருகுக என்று, ஆங்கவன் பொருட்டால் ஆயிரம் கண்ணோன் - ஆபுத்திரன் தன்னை இகழ்ந்தமை காரணமாக ஆயிரங் கண்களையுடைய இந்திரன், ஓங்குயர் பெருஞ் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் - மிக வுயர்ந்த பெருவளங்களை உலகினர்க்கு அளித்தலும்; பொருந்தூண் என்பதும் பாடம். இன்று-இன்மை; இன்று நிரப்புற்ற என்னலுமாம். பரப்பு நீர் என்பதற்குக் கடல் எனவும், அதனை முகந்து பொழியும் நீரெனவும் பொருள் கொள்க. ஆயிரங் கண்ணோன் அவன் பொருட்டால் உலகோர்க்குச் சிறப்பளித்தலு மென்க. ஆபுத்திரன் தன்னை இகழ்ந்தனனெனச் சினந்து இந்திரன் அவனது பாத்திரம் பயனின்றாகுமாறு இங்ஙனம் செய்தானென்க. 55-64. பன்னீராண்டு பாண்டி நன்னாடு மன்னுயிர் மடிய மழை வளம் இழந்தது - மிக்க உயிர்கள் மடியுமாறு பன்னீராண்டு மழை வளம் இழந்திருந்ததாகிய பாண்டி நன்னாடு, வசித் தொழில் உதவ மாநிலம் கொழுப்ப - மழை பெய்தற்றொழிலைப் புரியப் பெரிய பூமிகள் எல்லாம் செழித்து விளையாநிற்க, பசிப்பு உயிர் அறியாப் பான்மைத்து ஆகலின் - உயிர்கள் பசி இன்னதென்று அறியாதவாறு சிறப்பெய்திய தன்மையால், ஆருயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை - அரிய உயிர்களைக் காக்கும் ஆபுத்திரனது அம்பலப் பீடிகை, ஊண் ஒலி அரவம் ஒடுங்கியதாகி - உணவுண்ணுதலானுண்டாகும் ஆரவாரம் குறைந்ததாய், விடரும் தூர்த்தரும் விட்டேற் றாளரும் - காமுகரும் பரத்தரும் சுற்றத்தினீங்கித் திரிவோரும், நடவை மாக்களும் நகையொடு வைகி - வழிச் செல்லும் மக்களும் நகைப்புடன் தங்கி, வட்டும் சூதும் வம்பக் கோட்டியும் - உண்டையுருட்டுதலும் சூதாடுதலும் பயனில் சொற்களைக் கூறுதலுமுடையோர் கூட்டமும், முட்டா வாழ்க்கை முறை மையதாக-குறையாத வாழ்க்கை முறைமையை யுடையதாக; இழந்ததாகிய பாண்டி நன்னாடு பான்மைத்தாகலின் என்க. ஆபுத்திரன் பலநாளிருந்து அறஞ்செய்தற் கிடனாயினமையின் அம்பலம் அவனதாகக் கூறப்பட்டது. ஒலியரவம் :வினைத் தொகை. விட்டேற்றாளர் என்பதற்கு இகழ்ந்து கடுஞ்சொற் கூறுவோர் என்றுரைத்தலுமாம்; 1"விடருந் தூர்த்தரும் விட்டே றுரைப்ப" என்றார் பிறரும். வட்டு-உண்டை யுருட்டுதல்; 2"கல்லாச் சிறா அர் நெல்லிவட் டாடும்" என்பது காண்க. வம்பக்கோட்டி - வீணர் கூட்டம். வட்டு, சூது என்பவற்றை ஆகுபெயராகக் கொண்டு உண்டை யுருட்டுவோரும் சூதாடுவோரும் என்றும், வம்பக்கோட்டியை விடர் முதலியவற்றோடு சேர்த்து, அவர்கள் வட்டாடுதலும் சூதாடுதலும் முட்டாத என்றும் உரைத்தலுமாம். பீடிகை ஒடுங்கியதாகிய முறைமையதாக வென்க. 65-75. ஆபுத்திரன் தான் அம்பலம் நீங்கி-ஆபுத்திரன் அம்பலத் தினின்றும், நீங்கி, ஊரூர் தோறும் உண்போர் வினாஅய்-ஊரூராய் உண்போர் இருக்கின்றனரா என்று வினவிக் கொண்டு, யார் இவன் என்றே யாவரும் இகழ்ந்தாங்கு-இவன் யார் என்று அனைவரும் இகழ்தலால், அருந் தேமாந்த ஆருயிர் முதல்வனை-பிறர் உண்ண ஆவல்கொண்டு ஆபுத்திரனை, இருந்தாய் நீயோ என்பார் இன்மையின் - நீ இருக்கின்றாயோ என்பவர் ஒருவரும் இல்லாமையால், திருவின் செல்வம் பெருங்கடல் கொள்ள - தனது பெருஞ் செல்வத்தைப் பெரிய கடலானது கொள்ள, ஒரு தனி வரூஉம் பெருமகன் போல - தன்னந்தனியே வரும் அரசனைப்போல, தானே தமியன் வருவோன் தன்முன் - தான் மட்டும் தனியனாய் வருகின்றவன் முன்னே, மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி-கடலில் மரக்கலத்திலிருந்து வந்தோர்கள் வணங்கி, சாவக நன்னாட்டுத் தண் பெயல் மறுத்தலின்-சாவக நாட்டின்கண் மழைவள மின்மையால், ஊன் உயிர் மடிந்தது உரவோய் என்றலும் - பெரியோய் உடம்பொடு கூடிய உயிர்கள் பல இறந்தன என்று கூறுதலும்; இகழ்ந்து - இகழ்தலால் ; ஆங்கு : அசை. அருந்த என்பது விகாரமாயிற்று. நீ இருக்கின்றாயோ என நலம் வினவுவார் இன்மையால், இகழ்தலால் இன்மையின் என்க. திருவின் செல்வம் - அரசாட்சிக்குரிய செல்வம் பெருமகன்-அரசன். நாளும் உண்போர் பலரிடையே இருந்தவன் இப்பொழுது மிகத் தனிமையுற்றா னென்பார் 'தானே தமியன் வருவோன்' என ஆசிரியர் இரங்கிக் கூறினர். உயிர் : சாதி யொருமை. 76-82. அமரர்கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது - இந்திரன் ஆணையினால் உண்ணுவோரைப் பெறாமல், குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி - ஒரு கன்னிப்பெண் வறிதே மூத்தாற் போன்ற என் கடிஞையை ஏந்திக்கொண்டு, அங்கு அந் நாட்டுப் புகுவது என் கருத்து என-அச் சாவக நாட்டிற்குச் செல்லுவது என் எண்ணம் என்று, வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி - உவகையுடன் கலத்திற் செல்வோருடன் ஏறி, கால் விசை கடுகக் கடல் கலக்குறுதலின்-காற்றின் வேகம் மிகுதலினால் கடலானது கலக்க மடைந்தமையின், மால் இதை மணிபல்லவத்திடைவீழ்த்து - பெரிய பாயை மணி பல்லவத்தின்கண் இறக்கி, தங்கியது ஒரு நாள் - கப்பல் ஒரு நாள் தங்கியது, தான் ஆங்கு இழிந்தனன் - ஆபுத்திரன் அவ்விடத்தில் இறங்கினான் ; ஆணையின் பெறாது என்க. குமரி மூத்த - ஒரு கன்னி கணவனின்றி மூத்தாற் போன்ற. கொடுப்போரும் கொழுநனுமே யன்றித் தானும் பயனிழந்து கழிந்த குமரியை உவமை கூறினமையின், தானும் ஏற்பாருமே யன்றிப் பாத்திரமும் பயனின்றிக் கழிந்த தென்றவாறாயிற்று; 1"அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிக நலம், பெற்றாள் தமியள்மூத்தற்று" என்பது ஈண்டு அறியற் பாலது. அங்கு அந்நாடு: ஒருசொல் நீர்மைய. மால் - பெரிய. இதை - கப்பற்பாய். கப்பல் ஒரு நாள் இதை வீழ்த்து மணிபல்லவத் திடைத் தங்கியதென்க. வீழ்த்து என்னும் செலுத்துவோன் வினை நாவாய்மேல் ஏற்றிக் கூறப்பட்டது; பின் இதை யெடுத்து என்பதும் இது. 83-90. இழிந்தோன் ஏறினன் என்று - இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் கலத்தில் ஏறினன் என நினைந்து, இதை எடுத்து வழங்கு நீர் வங்கம் வல்லிருள் போதலும் - பாய் உயர்த்தி மரக்கலம் கடலில் இரவிலே செல்லலும், வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி - ஆபுத்திரன் மரக்கலம் சென்ற பின்னர் மிக்க துன்பத்தையடைந்து, அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின் - அம் மணி பல்லவத்தில் வாழ்வோர்கள் ஒருவரும் இல்லாமையால், மன்னுயிர் ஓம்பும் இம் மாபெரும் பாத்திரம் - பல உயிர்களைப் பாதுகாக்கும் இப் பெருமை பொருந்திய கலத்தினை வறிதே வைத்துக் கொண்டு, என் உயிர் ஓம்புதல் யானோ பொறேன் - என்னுயிரைக் காப்பதையான் பொறுக்ககில்லேன், தவம்தீர் மருங்கில் தனித்துயர் உழந்தேன் - இப் பாத்திரத்தைப் பெற்றுப்பல உயிர்களைக் காக்குமாறு முற்செய் தவம் நீங்கியதனால் ஒப்பற்ற துயரத்தால் வருந்துதலுற்றேன், சுமந்து என் பாத்திரம் என்றனன் - ஏற்போரில்லாத இவ்விடத்தில் இப் பாத்திரத்தை யான் சுமத்தலால் வரும் பயன் யாது என்றெண்ணியவனாய்; பாத்திரம் என்னுயிர் மாத்திரை ஓம்புதலை யென்றும், பாத்திரத்தால் ஓம்புதலை யென்றும் உரைத்தலுமாம். 90-95. தொழுது - அதனை வணங்கி, கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியில் - நிறைந்த நீரினையுடைய கோமுகி என்னும் பொய்கையில், ஓரியாண்டு ஒருநாள் தோன்றென விடுவோன் - ஓராண்டிற்கு ஒரு நாள் வெளியே தோன்றுவாயாக என்று கூறி விடுகின்றவன், அருளறம் பூண்டாங்கு ஆருயிர் ஓம்புநர் உளரெனில் - அருளாகிய அறத்தை மேற்கொண்டு அரிய உயிர் களைப் பாதுகாப்போர் உளராயின், அவர்கைப் புகுவாய் என்று - அவர் கைப்புகுவாய் என்று கூறி விடுத்து, ஆங்கு உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்ப்புழி -அவ்விடத்தில் உண்ணா நோன்புடனிருந்து உயிர் விடும்பொழுது ; ஓரியாண் டொருநாளென்றது வைகாசித் தூய நிறைமதி நாளை. அருளறம் - தயாதன்மம் பூண்டாங்கு; ஆங்கு; அசை. நோன்போடு - நோன்பால் என்றுமாம். பதிப்பெயர்ப்புழி-உடலினின்றும் நீக்குங்கால். 96-104 அந்நாள் ஆங்கவன் தன்பாற் சென்றேன் என் உற்றனையோ என்று யான் கேட்ப-அந்நாளில் அவனிடம் சென்றயான் நீ எய்திய துன்பம் யாதென வினவலும், தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன்-தன்னை அடைந்த துன்பங்கள் பலவற்றையும் தான் எடுத்துக் கூறி, குணதிசைத் தோன்றிக் கார் இருள் சீத்துக் கீழ்த்திசையிலே தோன்றிக் கரிய இருளை அழித்து குடதிசைச் சென்ற ஞாயிறுபோல-மேற்றிசையிற் சென்ற கதிரவனைப் போல, மணிபல்லவத்திடை மன்னுடம்பு இட்டுத் தணியா மன்னுயிர் தாங்கும் கருத்தொடு-நிலை பெற்ற உயிர்களைப் பாதுகாக்கும் நீங்காத எண்ணத்துடன் மணிபல்லவத்தில் தன் உடலை இட்டு, சாவகம் ஆளும் தலைத் தாள் வேந்தன் ஆ வயிற்று உதித்தனன் ஆங்கவன் தான் என் - ஆபுத்திரன் சாவக நாட்டினை யாளும்மிக்க முயற்சியை யுடைய அரசனது ஆவின் வயிற்றில் உதித்தனன் என்க. சென்றேன் யான் என்று கேட்ப எனக் கூட்டுக. யான் என்றது அறவணவடிகள். தாங்குங் கருத்தொடு உதித்தனன் என்றலுமாம்; 1"உயிர் உடம்பின் நீங்குங் காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது அஃது அதுவாய்த் தோன்றுமென்பது எல்லா ஆகமங்கட்குந் துணிபாகலின்" என்னும் பரிமேலழகர் உரை ஈண்டு அறியற்பாலது. தணியாக் கருத்தொடு என்க. பசு மண்முகன் என்னும் முனிவனுடைய தாயினும் பூமி சந்திரனது நாட்டகத்தது ஆகலின் 'வேந்தன் ஆ' எனப்பட்டது. அவன் உரைத்தனன் உடம்பிட்டு உதித்தனன் என்றியையும். உழந்தோர் மலைக்குமென்றலும், இல்லோன் அஞரெய்த, சிந்தா விளக்குத் தோன்றிப் பாத்திரங் கொடுத்தலும், ஆபுத்திரன் ஓம்பலின் விடாவாய் ஒலிப்ப, இந்திரன் கொள்கென, உரைசெய் வோன், ‘யாவை யீங்களிப்பன தேவர் கோன்' என்றலும், ஆயிரங் கண்ணோன் உலகோர்க் களித்தலும், பாண்டி நன்னாடு பான்மைத் தாகலின், பீடிகை முறைமையதாக. ஆபுத்திரன் நீங்கி உண்போரை வினாவி, என்பார் இன்மையின் வருவோன் றன்முன், வந்தோர் மடிந்தது என்றலும், வங்கமேறி இழிந்தனன்ச் ; வங்கம் வல்லிருட் போதலும் துயரெய்தி விடுவோன் புகுவாய் என்று உயிர்பதிப் பெயர்ப்புழி, சென்றேன் கேட்ப, அவன் உரைத்தனன் ஆவயிற்றுதித்தனன் என வினைமுடிவு செய்க. பாத்திரமரபு கூறிய காதை முற்றிற்று. 15. பாத்திரங்கொண்டு பிச்சை புக்க காதை ("மணிமேகலை ! முன்பு ஆபுத்திரனுக்கு ஏழுநாள்காறும் பாலூட்டிய ஆவானது அவ் வறத்தின் சிறப்பான் சாவக நாட்டிலே தவள மலையில் தவஞ் செய்யும் மண்முக முனிவனிடத்தே பொன்னிறமான கொம்புகளுங் குளம்புகளுமுடையதாய்ச் சென்று, ஈனுதற்கு முன்பே பால்சுரந்து எல்லா வுயிர்களையும் உண்பித்துக் கொண்டிருந்தது. அது கண்டு மூன்று காலமும் தோன்ற வுணரும் அம்முனிவன் 'இவ் ஆன் வயிற்றில் உயிர் காவலனொருவன். பொன்மயமான முட்டையினிடம் தோன்றுவன்' என்று கூறினன். அறஞ்செய்தற்பொருட்டே மணிபல்லவத்தில் உயிர் துறந்த ஆபுத்திரன் தன்னைக் குழவிப் பருவத்தே காத்தளித்த பசுவை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருந்தவனாதலின், மண்முக முனிவன் கூறியவாறே அதன் வயிற்றிலுதித்தனன். அவன் தோன்றிய காலம் வைகாசித் தூய நிறைமதி நாள் (வைசாக சுத்த பூர்ணிமை). அப்பொழுது சில நன்னிமித்தங்கள் நிகழ்ந்தன. அதனை யறிந்த சக்கரவாளக் கோட்டத்துள்ள முனிவர்கள், ‘புத்தன் அவதரிக்குங் காலத்தில் நிகழும் நிமித்தங்கள் இப்பொழுது நிகழ்வதற்குக் காரணம் என்ன' என வியந்து அதனுண்மையைத் தெரிந்து கோடற்குக் கந்திற் பாவையை அடைந்து வினாவினர். அது, ‘மணிபல்லவத்தில் இறந்த ஓர் அறவோன் உயிர்களைப் புரத்தற்காகச் சாவக நாட்டில் உதித்தனன்; அதனாற்றான் நன்னிமித்தங்கள் நிகழ்ந்தன ; அவன் வரலாற்றை அறவணன்பாற் கேண்மின்' என்று கூறி விடுத்து, எனது நாவை வருத்தியது. மகப்பேறின்றி வருந்தும் அந்நாட்டரசனாகிய பூமிசந்திர னென்பவன் மண்முக முனிவனை வணங்கி ஆவீன்ற அருங் குழந்தையை வாங்கிக்கொண்டு சென்று வளர்த்து வந்தான். அச் சிறுவன் இப்பொழுது அரசுரிமை பெற்று வாழ்கின்றான். இது நிற்க, காவிரியானது மாறாது நீர்பெருகி இந் நாட்டை வளமுறச் செய்தும் எக்காரணத்தாலோ உயிர்கள் வறுமையால் வருந்து கின்றன. ஆதலால் பாற்கடல் தந்த அமிழ்தத்தைப் பயன்படுத்தாது வைத்திருப்பதுபோல மிகப் பயன்படுவதான இவ் வமுதசுரபியை நீ சும்மா வைத்திருத்தல் தகுதியன்று," என்று கூறினர். அதனைக் கேட்ட மணிமேகலை அப்பொழுதே அவரை வணங்கித் துதித்துப் பிக்குணிக் கோலம் பூண்டு அப்பாத்திரத்தைக் கையிலேந்திப் பெருந்தெருவடைந்தாள். அடையவே, உச்சயினி நகரத்தரசனாகிய பிரச்சோதன னென்பவன் உதயணனை வஞ்சித்துச் சிறைப் படுத்திய ஞான்று அவனைச் சிறை மீட்டற்கு அவன்றன் அமைச் சனாகிய யூகியென்பவன் வேற்றுருக் கொண்டு வீதியை யடைந்த பொழுது அவனைக் கண்டு பரிவுற்றுப் பற்பலர் சூழ்ந்தாற்போல மணிமேகலையைப் பலருஞ் சூழ்ந்துகொண்டனர். அப்பொழுது மணிமேகலை "கற்புடைய மாதர் இடும் ஐயத்தையே முதலில் ஏற்பது தகுதி,"யென்று சொல்ல, காய சண்டிகை, "மழை வளந் தரும் கற்புடைய மாதர்களுள் மிக மேம்பட்டவளாகிய ஆதிரையின் மனை இது; நீ இதிற் புகவேண்டும்," என்று அவளுக்குக் கூறினள். இன்னுங் கேளாய் இளங்கொடி மாதே அந்நாள் அவனை ஓம்பிய நல்லாத் தண்ணென் சாவகத் தவள மால்வரை மண்முகன் என்னும் மாமுனி இடவயின் 5 பொன்னின் கோட்டது பொற்குளம் புடையது தன்னலம் பிறர்தொழத் தான்சென் றெய்தி ஈனா முன்னம் இன்னுயிர்க் கெல்லாம் தான்முலை சுரந்து தன்பால் ஊட்டலும் மூன்று காலமும் தோன்றநன் குணர்ந்த 10 ஆன்ற முனிவன் அதன்வயிற் றகத்து மழைவளஞ் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும் உயிர்கா வலன்வந் தொருவன் தோன்றும் குடர்த்தொடர் மாலை பூண்பா னல்லன் அடர்ப்பொன் முட்டை அகவையி னானெனப் 15 பிணிநோய் இன்றியும் பிறந்தறஞ் செய்ய மணிபல் லவத்திடை மன்னுயிர் நீத்தோன் தற்காத் தளித்த தகைஆ அதனை ஒற்கா வுள்ளத் தொழியான் ஆதலின் ஆங்கவ் வாவயிற் றமரர்கணம் உவப்பத் 20 தீங்கனி நாவல் ஓங்குமித் தீவினுக் கொருதா னாகி உலகுதொழத் தோன்றினன் பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள்நீ இருதிள வேனிலில் எரிகதிர் இடபத் தொருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின் 25 மீனத் திடைநிலை மீனத் தகவையின் போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து மண்ணக மெல்லாம் மாரி இன்றியும் புண்ணிய நன்னீர் போதொடு சொரிந்தது போதி மாதவன் பூமியில் தோன்றும் 30 கால மன்றியும் கண்டன சிறப்பெனச் சக்கர வாளக் கோட்டம் வாழும் மிக்க மாதவர் விரும்பினர் வியந்து கந்துடை நெடுநிலைக் கடவுள் எழுதிய அந்திற் பாவை அருளு மாயிடின் 35 அறிகுவம் என்றே செறியிருள் சேறலும் மணிபல் லவத்திடை மன்னுயிர் நீத்தோன் தணியா உயிருயச் சாவகத் துதித்தனன் ஆங்கவன் றன்திறம் அறவணன் அறியுமென் றீங்கென் நாவை வருத்திய திதுகேள் 40 மண்ணாள் வேந்தன் மண்முகன் என்னும் புண்ணிய முதல்வன் திருந்தடி வணங்கி மக்களை யில்லேன் மாதவன் அருளால் பெற்றேன் புதல்வனை என்றவன் வளர்ப்ப அரைசாள் செல்வம் அவன்பால் உண்மையின் 45 நிரைதார் வேந்தன் ஆயினன் அவன்தான் துறக்க வேந்தன் துய்ப்பிலன் கொல்லோம் அறக்கோல் வேந்தன் அருளிலன் கொல்லோ சுரந்து காவிரி புரந்துநீர் பரக்கவும் நலத்தகை இன்றி நல்லுயிர்க் கெல்லாம் 50 அலத்தற் காலை யாகிய தாயிழை வெண்திரை தந்த வமுதை வானோர் உண்டொழி மிச்சிலை யொழித் துவைத் தாங்கு வறனோ டுலகின் வான்துயர் கெடுக்கும் அறனோ டொழித்தல் ஆயிழை தகாதென 55 மாதவ னுரைத்தலும் மணிமே கலைதான் தாயர் தம்மொடு தாழ்ந்துபல ஏத்திக் கைக்கொண் டெடுத்த கடவுட் கடிஞையொடு பிக்குணிக் கோலத்துப் பெருந்தெரு அடைதலும் ஒலித்தொருங் கீண்டிய ஊர்க்குறு மாக்களும் 60 மெலித்துகு நெஞ்சின் விடருந் தூர்த்தரும் கொடிக்கோ சம்பிக் கோமகன் ஆகிய வடித்தேர்த் தானை வத்தவன் தன்னை வஞ்சஞ் செய்துழி வான்தளை விடீஇய உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன் 65 உருவுக் கொவ்வா உறுநோய் கண்டு பரிவுறு மாக்களில் தாம்பரி வெய்தி உதய குமரன் உளங்கொண் டொளித்த மதுமலர்க் குழலாள் வந்து தோன்றிப் பிச்சைப் பாத்திரங் கையினேந் தியது 70 திப்பியம் என்றே சிந்தைநோய் கூர மணமனை மறுகின் மாதவி யீன்ற அணிமலர்ப் பூங்கொம் பகமலி யுவகையில் பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சை யேற்றல் பெருந்தக வுடைத்தெனக் 75 குளனணி தாமரைக் கொழுமலர் நாப்பண் ஒருதனி யோங்கிய திருமலர் போன்று வான்தரு கற்பின் மனையுறை மகளிரில் தான்தனி யோங்கிய தகைமையள் அன்றோ ஆதிரை நல்லாள் அவள்மனை இம்மனை 80 நீபுகல் வேண்டும் நேரிழை என்றனள் வடதிசை விஞ்சை மாநகர்த் தோன்றித் தென்றிசைப் பொதியிலோர் சிற்றியாற் றடைகரை மாதவன் தன்னால் வல்வினை யுருப்பச் சாபம் பட்டுத் தனித்துயர் உறூஉம் 85 வீவில் வெம்பசி வேட்கையொடு திரிதரும் காயசண் டிகையெனும் காரிகை தானென். உரை 1. இன்னும் கேளாய் இளங்கொடி மாதே-இளமை பொருந்திய கொடி போலும் மாதே இன்னும் யான் கூறுவதனைக் கேட்பாயாக ; இன்னும் - மற்றுமென்னும் பொருட்டு: 2-8. அந்நாள் அவனை ஓம்பிய நல்ஆ-சாலி யென்பாள் ஆபுத்திரனை ஈன்று போகட்டுச் சென்ற அந்நாளில் அவனைப் பாதுகாத்த நல்ல பசுவானது, தண்ணென் சாவகத் தவள மால்வரை - குளிர்ச்சி மிக்க சாவக நாட்டிலுள்ள பெரிய தவளமலைக் கண்ணே, மண் முகன் என்னும் மாமுனி இடவயின் - பெருமை பொருந்திய மண் முகன் என்னும் முனிவனிடத்தில், பொன்னின் கோட்டது பொற்குளம்பு உடையது - பொன்னாலாய கொம்பினையுடையதும் பொன்னா லாகிய குளம்பினையுடையதும் ஆகி, தன் நலம் பிறர் தொழத் தான் சென்று எய்தி-தனது நலத்தினைக் கண்டு பிறர் எல்லாம் வணங்கும்படி சென்று அடைந்து, ஈனா முன்னம் இன்உயிர்க்கு எல்லாம் தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும்-தான் ஈனுதற்கு முன்னமே மடி சுரந்து இனிய உயிர்கட்கெல்லாம் தனது பாலை உண்பித்தலும் ; இடவயின் என்பதில் வயின் ஏழனுருபின் பொருட்டு. நலமாவது ஈண்டு அருள் 9-14. மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த ஆன்ற முனிவன்-முக்காலங்களையும் தெளிவுற நன்கறிந்த தவத்தான் அமைந்த மண்முக முனிவன், அதன் வயிற்று அகத்து-அப் பசுவினது வயிற்றின்கண், மழைவளம் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும் உயிர்காவலன் வந்து ஒருவன் தோன்றும் - மழைவளம் பெருகவும் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கவும் உயிர்களைக் காப்பவனாகிய ஒருவன் வந்து உதிப்பன், குடர்த்தொடர் மாலை பூண்பான் அல்லன் - அங்ஙனந் தோன்றுவோன் ஊனானாய குடர் மாலையைப் பூண்பானல்லன், அடர்ப் பொன் முட்டை அகவையினான் என - பொற்றகட்டினாகிய முட்டையின் உள்ளிடத்தானாவன் எனவுரைக்க; மூன்று காலம்-இறப்பு நிகழ்வு எதிர்வு; அவற்றில் நிகழ்வன வற்றை உணர்த்திற்று; 1‘,மறுவில் செய்தி மூவகைக் காலமும், நெறியினாற்றிய வறிவன்" என ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுதலுங் காண்க. தோன்ற - விளங்க; புலப்பட. உயிர் காவலன் ஒருவன் வந்து என மாறுக. குடர்த்தொடர்-குடரின் தொடர்ச்சி. அடர்-தகடு. அகவை - அடங்கியது; உள்ளிடம். "குடர்த்தொடர் மாலை சூழா தாங்கோர், அடர்ப்பொன் முட்டையு ளடங்கிய வண்ணமும்" (25 : 72-3) என்பர் பின்னும். 15-26. பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள் நீ-அப்பெரியோன் பிறந்த வியல்பினை நீ கேட்பாயாக, பிணிநோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய-பிணியானுண்டாகும் வருத்தம் இல்லா திருக்கவும் மீண்டும் உலகின்கண்பிறந்து அறஞ்செய்தற் பொருட்டு,மணிபல்லவத்திடை மன்னுயிர் நீத்தோன் - மணிபல்லவ மென்னுந் தீவின்கண் தன் ஆருயிர் துறந்த வனாகிய ஆபுத்திரன், தற்காத்து அளித்த தகை ஆ அதனை-தன்னைப் பேணிப் பாதுகாத்த அழகிய பசுவினை, ஒற்கா உள்ளத்து ஒழியான் ஆதலின்-தளராத உள்ளத்தின்கண் நீங்காதவனாதலினால், ஆங்கு அவ் ஆ வயிற்று-அம் முனிவன் கூறியவாறே ஆண்டு அப் பசுவின் வயிற்றில், அமரர்கணம் உவப்ப-உம்பர் கூட்டம் உவகை எய்த, தீங்கனி நாவல் ஓங்கும் இத்தீவினுக்கு-இனிய பழங்களையுடைய நாவல் ஓங்கிய இம் மாபெருந் தீவிற்கு, ஒரு தான் ஆகி உலகு தொழத் தோன்றினன்-தான் ஒரு முதல்வனாய் உலகிலுள்ளோர் வணங்கும்படி பிறந்தனன், இருது இளவேனிலில் - இளவேனிற் பருவத்தில், எரிகதிர் இடபத்து - ஞாயிறு இடப விராசியிலிருக்கும் வைகாசித் திங்களில், ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்ற பின் மீனத்து - இருபத்தேழு நாண் மீன்களில் பதின்மூன்று சென்றபின், இடைநிலை மீனத்து அகவையில் - நடுவண தாகிய விசாக நாண்மீனின் அகத்தே, போதித்தலைவனொடு பொருந்திய போழ்தத்து-புத்ததேவனுடன் பொருந்திய பொழுதின் கண்ணே; தகை - தகுதியுமாம் ; ஒல்கா என்பது வலித்தல் பெற்றது. அம் முனிவன் கூறியவாறே என வருவித்து, பொருந்திய போழ்தத்துத் தோன்றினன் என முடிக்க. இருது - பருவம் ; பெரும் பொழுது. இளவேனில் - சித்திரையும் வைகாசியும். எரிகதிர் - ஞாயிறு. எரிகதிர் இடபம் என்பதனை இடபஞாயிறு என வைகாசிக்குப் பெயராக்குதலுமாம்; என்னை? அவ்வாறு சிலையெழுத்துக்களில் வழங்குதலின் என்க. வைகாசித் திங்களில் பதின்மூன்று பாகை சென்றபின் எனக்கொண்டு, இடைநிலை மீனம் என்பதனால் விசாகம் கோடலுமாம்; இப்பொருட்கு மீன்களுள்ளே இடை நிலைமீன் எனக்கொள்ளுதல் வேண்டும் ; பண்டு கார்த்திகை முதலாக எண்ணப்பட்டமையின் விசாகம் நடுமீனாயிற்று; அகவை என்பதனால் விசாகத்தின் இரண்டு மூன்றாங் கால்கள் பெற்றாம். அத்து மூன்றும் சாரியைகள். புத்ததேவன் தோன்றியதும், ஞானம் பெற்றதும் விசாகத்துடன் கூடிய தூய நிறைமதி நாளாகலின் ஆபுத்திரன் பிறந்த அப் பொழுதினைப் போதித் தலைவனொடு பொருந்திய போழ் தென்றார். 27-35. மண்ணகம் எல்லாம் மாரி இன்றியும் புண்ணிய நல்நீர் போதொடு சொரிந்தது - புவிமுழுதும் மழை இல்லாம லிருந்தும் புண்ணியத் தூநீர் மலருடன் பொழிந்தது, போதி மாதவன் பூமியில் தோன்றும் காலம் அன்றியும்-புத்த தேவன் உலகின்கண் தோன்றும் காலமல்லா திருந்தும், கண்டன சிறப்பு என - இத்தகைய சிறப்புக்கள் நிகழ்ந்தன என்று, சக்கரவாளக் கோட்டம் வாழும்-சக்கரவாளக் கோட்டத் திலுறைகின்ற, மிக்க மாதவர் விரும்பினர் வியந்து-மிக்க பெருந்தவமுடைய முனிவர்கள் ஆர்வமுடையராய் வியந்து, கந்துடை நெடுநிலைக் கடவுள் எழுதிய அந்தில்பாவை அருளுமாயிடின் அறிகுவம் என்றே - உயரிய தூணின்கண் கடவுளால் எழுதப்பட்ட பாவை உரைத்தருளுமாயின் அறிவோம் என்று, செறிஇருள் சேறலும்-செறிந்த இருளின்கட் செல்லுதலும்; மாரி - மழை, முகில், போதொடு கூடிய நீர் சொரிந்ததென்க. சொரிதல் - பொழிதல், சோர்தல்; சொரியப்பட்டது என்றுமாம். கண்டன- காணப்பட்டன; 1"செயப்படு பொருளைச் செய்தது போலத்' தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே" என்பதனாற் போந்த வழுவமைதி : சிறப்பு - வியத்தகு நிகழ்ச்சி; நன்னிமித்தம். புத்தன் தோன்றுங்காலத்துளவாம் சிறப்பு நிகழ்ச்சிகள் முன்னர் அறவணர்த்தொழுத காதையிற் கூறப்பட்டமை காண்க. நெடுநிலை யுடைக்கந்து என மாறுக. அந்தில் : அசை; அவ்விடம் என்று கொண்டு, அந்திற்சேறலும் என்றியைத்தலுமாம். 36-39. மனிபல்லவத்திடை மன்னுயிர் நீத்தோன் - மணிபல்லவத் தின்கண் ஆருயிர் துறந்தோனாகிய ஆபுத்திரன், தணியா உயிர் உயச் சாவகத்து உதித்தனன் - குறையாத உயிர்கள் உய்யும்படி சாவக நாட்டில் தோன்றினன், ஆங்கவன் தன்திறம் அறவணன் அறியும் என்று - அவனது வரலாற்றினை அறவண முனிவன் அறிவான் என்று கூறி, ஈங்கு என் நாவை வருத்தியது இதுகேள்-எனது நாவை வருத்தியது இதனைக் கேட்பாயாக; தணியா - குறையாத, நிறைந்த; துன்பம் தணியாத உயிரென்றும் துன்பந் தணிந்து உயிருய்ய வென்றும் உரைத்தலுமாம். பாவை என்று கூறி நாவை வருத்தியதென்க. பாவையின் கூற்றை யுட்கொண்ட மாதவர்கள் தம்பால்வந்து வினாவத் தாம் அவர்கட்கு உரைத்தமை தோன்ற என்நாவை வருத்திய தென்றார்; இதனால் அறவணவடிகள் தாபதப் பக்கத்து வாய்வாளாமையிற் கருத்துடையரென்பதும் தோன்றும். ஆங்கு, ஈங்கு என்பன அசைகள். 40-45. மண்ணாள் வேந்தன் மண்முகன் என்னும் புண்ணிய முதல்வன் திருந்தடி வணங்கி-அந் நாட்டினையாளும் மன்னனாகிய பூமிசந்திரன் மண்முகன் எனப் பெயரிய தவமுதல்வனது செவ்விய திருவடியை வணக்கஞ் செய்து, மக்களை இல்லேன் - மக்கட்பேறு இல்லாதவனாகிய யான், மாதவன் அருளால் பெற்றேன் புதல்வனை என்று - நுமதருளினாலே அரிய புதல்வனை யடைந்தேன் என்று கூறி, அவன் வளர்ப்ப - அவன் வளர்த்து வர, அரைசு ஆள் செல்வம் அவன்பால் உண்மையின் - அரசாளுதலாகிய செல்வம் அவனிடம் உள்ளமையால், நிரைதார் வேந்தன் ஆயினன் அவன்தான் - அந்த ஆபுத்திரன் மலர்கள் இணைந்த மாலையையுடைய மன்னவனாயினன்; மாதவன்: முன்னிலையிற் படர்க்கை. அரைசு: இடைப்போலி. அவன் என்றது பூமிசந்திரனை; அவன் மகனாகிய ஆபுத்திரன் என்று கொண்டு, அரசாளும் பொறியுண்மையால் என்றுரைத் தலுமாம்; ஆபுத்திரனுக்குப் புண்ணியராசன் என்னும் பெயருண் டென்பது பின்னர் அறியப்படும். நிரைதார்: வினைத்தொகை. இதுகாறும் ஆபுத்திரன் வரலாறு உரைக்கப்பட்டது. 46-50. துறக்க வேந்தன் துய்ப்பு இலன் கொல்லோ-வானுலகின் மன்னனாய இந்திரன் அவிநுகர்ச்சி இலனாயினனோ, அறக்கோல் வேந்தன் அருள் இலன் கொல்லோ - அறநெறியிற் செல்லுங்கோலினையுடைய அரசன் அருள் இல்லாத வனாயினனோ, சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் - காவிரியில் நீர் பெருகி உயிர்களைக் காத்துப் பரந்து செல்லவும், நலத்தகை இன்றி நல் உயிர்க்கெல்லாம் அலத்தற்காலை ஆகியது ஆயிழை - ஆயிழையே நன்மையுடைய உயிர் கட்கெல்லாம் இன்பம் இல்லையாக வறுமைக்காலம் உண்டாயிற்று, ஆகலின்; துய்ப்பு - அவியூண். துய்ப்பிலன் கொல்லோ என்றதனால் அதனை ஊட்டுவார் இலராயினரோ என்றவாறாயிற்று. மாதவர் வேள்வியும் அரசன் செங்கோலும் மழைக்குக் காரணமாகலின் துய்ப்பிலன்கொல்லோ அருளிலன் கொல்லோ என்றார்; "செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ,...அலத்தற் காலை யாகியது" (28 : 188 - 91) என மேல் வருவதுங் காண்க. அறக்கோல் வேந்தன் - சோழன். "சுரந்து பரக்கவும்" என்றது காவிரியின் சிறப்புக் கூறியபடி. நல்லுயிர் - மக்களுயிர். 51-55. வெண்டிரை தந்த அமுதை வானோர் உண்டொழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு-வெள்ளிய அலைகளை யுடைய பாற்கடலளித்த அமுதினை உம்பர்கள் தாம் உண்டு கழித்த மிகுதியைப் பயன்படுத்தாது வைத்தாற்போல, வறன் ஓடு உலகின் வான்துயர் கெடுக்கும் - வற்கடம் பரந்த உலகினது பெரிய துன்பத்தைப் போக்கவல்ல, அறன் ஓடு ஒழித்தல் ஆயிழை தகாது என - அறத்தின் பெருக்கினையுடைய திருவோட்டைப் பயன்படுத்தாது வைத்தல் நங்காய் தகுதி யுடைத்தன்றென்று, மாதவன் உரைத்தலும் - அறவண முனிவர் கூறலும்; அமுதில் மிச்சிலாகியதனை என்க. ஒழித்து வைத்தல் - வறிதிருக்கும்படி வைத்தல். வறன் - வறுமை, வறட்காலம். ஓடுதல்- பரத்தல்; 1"வறனோடின் வையகத்து வான்றருங் கற்பினாள்" என்றார் பிறரும். அறன் ஓடு - அறம் பயக்கும் ஓடு; திருவோடு. "வறனோ டுலகின் மழை வளந் தரூஉம், அறனோ டேந்தி யாருயி ரோம்புவை" (21: 157 - 8) எனப் பின்னரும் இங்ஙனம் வருதல் காண்க. 55-58. மணிமேகலைதான் தாயர் தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி - மணிமேகலை தன் தாயராகிய மாதவி சுதமதி என்னும் இருவருடனும் அறவணவடிகளை வணங்கிப் பலவாறாகத் துதித்து, கைக்கொண்டெடுத்த கடவுள் கடிஞையொடு - தன் கையிலெடுத்துக் கொண்டுள்ள கடவுட்டன்மை பொருந்திய பிச்சைப் பாத்திரத்துடன்; பிக்குணிக் கோலத்துப் பெருந் தெரு அடைதலும் - பிக்குணிக் கோலமும் பூண்டு அகன்ற வீதியை அடைதலும்; பௌத்த சமயத் துறவிகளில் ஆடவர் பிக்ஷூக்கள் என்றும், மகளிர் பிக்ஷூணிகள் என்றும் கூறப்படுவர். பிக்குணி: வட மொழிச் சிதைவு. 59-66. ஒலித்து ஒருங்கு ஈண்டிய - ஆரவாரித்து ஒருங்கு கூடிய, ஊர்க்குறு மாக்களும்-அறிவில்லாத ஊர்ச்சிறாரும், மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் - காமத்தால் நைந்து கெடும் மனத்தினையுடைய தீயோரும் பரத்தரும், கொடிக் கோசம்பிக்கோமகன் ஆகிய வடித்தேர்த் தானை வத்தவன் தன்னை-கொடிகளால் அலங்கரிக்கப் பெற்ற கோசம்பி நகரத்தின் அரசனாகிய திருந்திய தேர்ச் சேனைகளையுடைய உதயணனை, வஞ்சம் செய்துழி வான்தளை விடீஇய - உஞ்சை மன்னவன் பிரச்சோதனன் வஞ்சித்துச் சிறைப் படுத்தியவழி அவனை விடுவிக்கும் பொருட்டு, உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன் - உச்சயினி நகரில் வேற்று வேடங் கொண்டு தோன்றிய யூகி யென்னும் அந்தணனது, உருவுக்கு ஒவ்வா உறுநோய் கண்டு பரிவுறு மாக்களில் தாம் பரிவு எய்தி - வடிவிற்கேலாத மிகுந்த நோயைக் கண்டு துன்புற்ற மக்களைப் போலத் தாமும் இரக்கமுற்று ; ஊரிலே திரியு மியல்பின ரென்பார் 'ஊர்க்குறு மாக்கள்' என்றார். மெலித்து: மெலிந்து என்பதன் விகாரம். விடர் தூர்த்தர் என்பவற்றிற்கு முன்னர் (14: 61) உரைத்தமை காண்க. கோசம்பி - வத்த நாட்டின் தலைநகர். கோமகன் - கோமான் ; அரசன் ; அரசன் குமாரன் என்றுமாம். வத்தவன் - வத்த நாடுடைமையின் வந்த பெயர்; வத்தம்: வத்ஸம் என்பதன் திரிபு. வத்த நாட்டின் கோசம்பி நகரத் தரசனாகிய உதயணனை உச்சயினி நகரத் தரசனாகிய பிரச்சோதனன் சாலங்காயன் என்னும் தன் அமைச்சனால் எந்திர யானையைக் காட்டிப் பிடித்துவரச் செய்து சிறைப்படுத்தினன் என்க. விடீஇய - விடுவிக்க; பிறவினை. உஞ்சை - உச்சயினி ; அவந்தி நாட்டின் தலைநகர்; அவந்தி என்றும் கூறப்படும். யூகி-உதயணனுடைய அமைச்சருளொருவன். மிக்க சூழ்ச்சித்திறம் வாய்ந்தவன். அவன் பெரு நோயுற்றவன் போலவும் மருள்கொண்டவன் போலவும் உஞ்சை நகரின் வீதியில் திரிந்த பொழுது நகரத்தின் மாக்கள் பலரும் அவனைச் சூழ்ந்து பரிவுற்றன ரென்பது உதயணன் கதையால் அறியப்படும். 67-70. உதயகுமரன் உளங்கொண்டு ஒளித்த மதுமலர்க் குழலான் வந்து தோன்றி - உதயகுமரனது உள்ளத்தைக் கவர்ந்து மறைந்திருந்த தேன் பொருந்திய மலர்களை யணிந்த கூந்தலையுடைய மணிமேகலை இங்ஙனம் வெளிப்படத் தோன்றி, பிச்சைப் பாத்திரம் கையின் ஏந்தியது திப்பியம் என்றே சிந்தை நோய் கூர - பிச்சைப் பாத்திரமும் கையில் ஏந்தியது வியப்புடைத்தாம் என்று மிகுந்த மனவருத்த மடைய; திப்பியம் - ஈண்டு வியப்பென்னும் பொருட்டு. ஊர்க்குறு மாக்களும் விடரும் தூர்த்தரும், மாக்களிற் பரிவெய்தி, குழலாள் தோன்றி ஏந்தியது திப்பியமென்று நோய்கூர வென்க. 71-74. மணமனை மறுகில்-மங்கல மனைகளையுடைய வீதியில், மாதவி ஈன்ற அணிமலர்ப் பூங்கொம்பு - மாதவிபெற்ற அழகிய மலர்களையுடைய பூங்கொம்பு போலும் மணிமேகலை, அகம் மலி உவகையின் - உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியுடன், பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சை ஏற்றல் பெருந்தக வுடைத்து என - கற்புடை மகளிர் இனிதின் இடும் பிச்சையை முதலில் ஏற்றல் மிகவும் தகுதியுடைத் தென்று ரைக்க ; மாதவி...பூங்கொம்பு' குருக்கத்தி யீன்ற பூங்கொம்பு என்ப தோர் கயந் தோன்ற நின்றது. 75-80. குளன் அணி தாமரைக் கொழுமலர் நாப்பண் ஒரு தனி ஓங்கிய திருமலர் போன்று-குளத்திற்கு அழகு செய்யும் தாமரைச் செழுமலர்களின் நடுவண் ஒன்றாய் ஒப்பற்றுயர்ந்த அழகிய தாமரை மலரைப்போல, வான் தரு கற்பின் மனை உறை மகளிரில் - மழை வேண்டிற் பெய்விக்குஞ் சிறந்த கற்பினையுடைய இல்லில்வாழ் பெண்டிருள், தான்தனி ஓங்கிய தகைமையள் அன்றோ ஆதிரை நல்லாள் - ஆதிரை யென்னும் மெல்லியல் தான் இணையிலாச்சிறப்புடைய தகுதியுடையள் அல்லளோ? அவள்மனை இம்மனை - அவளது திருமனை இதுவாகும், நீ புகல்வேண்டும் நேரிழை என்றனள்- நங்கையே இதன்கண் நீமுதலிற் செல்லவேண்டும் என்று கூறினள்; "பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின், றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை" (4: 8-9) என்றார் முன்னும். திருமலர் போன்று ஆதிரை நல்லாள் ஓங்கிய தகைமையள் என்க. கற்புடை மகளிர் வேண்டும் பொழுது மழை பெய்விக்கும் ஆற்றலுடையரென்பது, "1தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்னும் பொய்யா மொழியானும், "2வறனோடின் வையகத்து வான்றருங் கற்பினாள்" என்னும் பாலைக் கலியானும் அறியப்படும். இக் கருத்து இந் நூலகத்துப் பின்னரும் (16: 49-50; 22: 68-9) வருதல் காண்க. 81-86. வடதிசை விஞ்ஞை மாநகர்த் தோன்றி - வடதிசையி லுள்ள பெரிய வித்தியாதர நகரமாகிய காஞ்சன புரத்தில் உதித்து, தென்றிசைப் பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை - தென்றிசையிலுள்ள பொதியின் மலையில் ஒரு சிற்றாற்று அடைகரையில், மாதவன் தன்னால் வல்வினை உருப்பச் சாபம் பட்டு - தீவினை உருத்து வந்தூட்ட முனிவர் ஒருவரால் சாபமடைந்து, தனித்துயர் உறூஉம்-ஒப்பற்ற துயரினைச் செய்யும், வீவில் வெம்பசி வேட்கையொடு திரிதரும் - அழியாத கொடிய பசியாகிய வேட்கையுடன் சுழலும், காய சண்டிகை எனும் காரிகை தான்என்-காயசண்டிகை என்னும் விஞ்சை மகள் என்க. உருப்ப - அழல என்றுமாம். உறூஉம் - உறுவிக்கும்; பிறவினை; தன் வினையாகக் கொண்டு உறூஉம், திரிதரும் என்பவற்றைக் காரிகை என்பதனுடன் தனித்தனி முடித்தலுமாம். வேட்கை-உணா வேட்கை. காயசண்டிகை யெனுங் காரிகை நீ புகல் வேண்டும் என்றனள் என்க. "மாதே, கேளாய்; நல்லா எய்தி ஊட்டலும், முனிவன், ‘ஒருவன் தோன்றும்; அவன் பொன்முட்டை அகவையினான்' என, நீத்தோன் ஒழியானாதலின், ஒருதானாகிப் போழ்தத்துத் தோன்றினன்; நன்னீர் போதொடு சொரிந்தது; மாதவர் வியந்து அறிகுவமென்று சேறலும், பாவை, ‘அறவணன் அறியும்' என்று என் நாவை வருத்திற்று; இது கேள்; வேந்தன் வணங்கிப் பெற்றே னென்று வளர்ப்ப, உண்மையில் அவன் வேந்தனாயினன்; அலத்தற் காலை ஆகியது; ஒழித்தல் தகாது" என மாதவன் உரைத்தலும், மணிமேகலை தாயரொடு ஏத்திக் கடிஞையொடு கோலத்தோடு பெருந்தெரு வடைதலும், மாக்களும் விடரும் தூர்த்தரும் பரிவெய்தி நோய்கூர, பூங்கொம்பு, பெருந்தக வுடைத்து' என, அது கேட்டுக் காரிகை ‘நீ புகல் வேண்டும்' என்றனள் என வினை முடிவு செய்க. பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை முற்றிற்று. 16. ஆதிரை பிச்சையிட்ட காதை (அங்ஙனங் கூறிய விஞ்சைமகள் மணிமேகலையை நோக்கி, மீட்டும் ஆதிரையது கற்பின் சிறப்பைக் கூறுவாள் : "இவள் கணவன் சாதுவனென்னும் பெயரினன்; அவன் தீய நெறியிலொழுகிப் பொருளையிழந்து வறுமையுற்று, வேற்றுநாடு சென்று பொருள் தேட வெண்ணிச் சில வணிகருடன் கப்பலேறிச் சென்றான்; செல்லுகையில் கடுங்காற்றால் அக்கப்பல் கவிழ்ந்தது ; கவிழவே சாதுவன் ஒடிந்த மரத்துண்டொன்றைப் புணையாகப் பற்றி நீந்திச்சென்று, உடை யின்றித் திரிவோராகிய நாகருடையமலைப்பக்கத்தை அடைந்தான். அவன் அவ்வாறிருக்க, அக் கப்பலினின்றுந் தப்பிக் காவிரிப் பூம்பட்டினம் வந்தோர் ‘கப்பல் உடைய இறந்தவர்களோடு சாதுவனு மிறந்தான்' என்று ஆதிரைக்குக் கூறினர்; அது கேட்டலும் அவள் தானும் இறக்கத் துணிந்து, சுடலைக் கானிற் குழிதோண்டி அதில் விறகினை யடுக்கித் தீயினை மூட்டி, ‘வினைப்பயனால் என் கணவனடைந்த இடத்தை யானும் அடைவேனாக' என்று சொல்லி அதிற் புகுந்தாள் ; புகுந்தவளை அத்தீயானது சுடா தொழிந்தது; அவள் உடுத்த கூறையும் சூடிய மாலையும் பழைய நிறம் மாறாமல் விளங்கின. அவள் 'தீயுஞ் சுடாத பாவியேன் இனி யாது செய்வேன்' என்று ஏங்குகையில், வான் மொழியானது ‘ஆதிரை! உன் கணவன் மரிக்கவில்லை; அவன் பிழைத்துச் சென்று இப்பொழுது நாகர்மலையில் இருக்கின்றான்; அங்கே பல ஆண்டு தங்கான்; சந்திரதத்தனென்னும் வாணிகனது வங்கத்திலேறி வந்து உன்னை யடைவான் நீ வருந்தாதே' என்று கூறிற்று. அது கேட்ட ஆதிரை வருத்த மொழிந்து வீட்டினை யடைந்து, கணவன் விரைந்து வருதல் கருதி இடையறாது அறங்கள் செய்துகொண்டிருந்தாள். "அங்கே நாகர்மலையை யடைந்த சாதுவன் ஒரு மரநிழலைச் சார்ந்து அயர்ந்து துயில்கொள்ள ஆண்டுள்ள நாகர்கள் வந்து பார்த்து, இவ்வுடம்பு நமக்கு நல்ல உணவாகுமென்றெண்ணி அவனை யெழுப்பினர். அவன் அன்னோர் மொழியை நன்கு கற்றவனாதலின் அம் மொழியாலே பேச, அவர்கள் அவனை வருத்துதல் தவிர்த்து, 'ஈங்கு எங்களாசிரியன் இருக்கின்றனன்; நீ அவனிடம் வரல் வேண்டும்' என்று அழைத்துச் சென்றனர். சாதுவன் அவர்களோடும் போய், கள்ளும் புலாலும் மிடைந்துள்ள இருக்கையில் ஆண்கரடி பெண்கரடியோ டிருப்பது போலப் பெண்ணுடனிருந்த அவர்கள் குருமகனைக் கண்டு, அவனோடு அளவளாவி அவனை வயமாக்கிக்கொண்டான்; கொள்ளவே, அக் குரு மகன் ‘நீ இங்கு வந்தது எதன் பொருட்டு?' என்ன, சாதுவன் நிகழ்ந்ததைக் கூறினன். அவன், ‘பசியால் வருந்திய இந் நம்பிக்கு வேண்டியவளவு கள்ளையும் ஊனையுங் கொடுத்துப் பின் இளையளாகிய நங்கையொருத்தியையும் கொடுமின்' என்றுரைத்தான். சாதுவன் அது கேட்டு அவனுடைய அறியாமைக்கு வருந்தி, ‘எனக்கு அவை வேண்டா' என்றனன். அவன், 'பெண்டிரும் உண்டியுமன்றி மாந்தர்க்கு இன்பந் தருவது வேறே யாதுளது? இருந்தாற் சொல்வாய்' என்று சினந்துரைக்க, சாதுவன், உடம்பிற்கு வேறாக உயிருண்டென்பதையும், மறுபிறப்பும் இருவினைப் பயனும் உளவென்பதையும் அறிவுறுத்தி, அவனுக்கேற்றவாறு அறத் தினைப் போதித்து விடைபெற்று, அவன் அளித்த சந்தனம் அகில்துகில் முதலியவற்றைக் கைக்கொண்டு, அங்குவந்த சந்திரதத் தனது வங்கத்திலேறி இந்நகரை யடைந்து இவளோடு வாழ்வானாகிப் பல அறங்களுஞ் செய்தான். அத்தகைய மேம்பாடுடைய இந்த ஆதிரையின் கையால் முதலிற் பிச்சை பெறுக" என்று சொல்ல, மணிமேகலை அவளது மனையிற் புகுந்து வாய்பேசாமல் ஓவியப் பாவைபோல் நின்றாள்; நின்றவுடன், ஆதிரை தொழுது வலங் கொண்டு, அமுதசுரபியின் உள்ளிடம் நிறைய, ‘பாரக மடங்கலும் பசிப்பிணி யறுக' எனக் கூறி ஆருயிர் மருந்தாகிய அன்னத்தை யிட்டனள். ஈங்கிவள் செய்தி கேளென விஞ்சையர் பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள் ஆதிரை கணவன் ஆயிழை கேளாய் சாதுவன் என்போன் தகவிலன் ஆகி 5 அணியிழை தன்னை அகன்றனன் போகிக் கணிகை யொருத்தி கைத்தூண் நல்க வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கிக் கெட்ட பொருளின் கிளைகே டுறுதலின் பேணிய கணிகையும் பிறர்நலங் காட்டிக் 10 காணம் இலியெனக் கையுதிர்க் கோடலும் வங்கம் போகும் வாணிகர் தம்முடன் தங்கா வேட்கையின் தானுஞ் செல்வுழி நளியிரு முந்நீர் வளிகலன் வௌவ ஒடிமரம் பற்றி ஊர்திரை யுதைப்ப 15 நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் பக்கஞ் சார்ந்தவர் பான்மையன் ஆயினன் நாவாய் கேடுற நன்மரம் பற்றிப் போயினன் தன்னோ டுயிருயப் போந்தோர் இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல் 20 உடைகலப் பட்டாங் கொழிந்தோர் தம்முடன் சாதுவன் தானும் சாவுற் றானென ஆதிரை நல்லாள் ஆங்கது தான்கேட்டு ஊரீ ரேயோ ஒள்ளழல் ஈமம் தாரீ ரோவெனச் சாற்றினள் கழறிச் 25 சுடலைக் கானில் தொடுகுழிப் படுத்து முடலை விறகின் முளியெரி பொத்தி மிக்கஎன் கணவன் வினைப்பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன் என்றவன் புகுதலும் படுத்துடன் வைத்த பாயற் பள்ளியும் 30 உடுத்த கூறையும் ஒள்ளெரி யுறாஅது ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் சூடிய மாலையும் தொன்னிறம் வழாது விரைமலர்த் தாமரை ஒருதனி யிருந்த திருவின் செய்யோள் போன்றினி திருப்பத் 35 தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் யாது செய்கேன் என்றவள் ஏங்கலும் ஆதிரை கேளுன் அரும்பெறற் கணவனை ஊர்திரை கொண்டாங் குய்ப்பப் போகி நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் 40 பக்கஞ் சேர்ந்தனன் பல்லியாண் டிராஅன் சந்திர தத்தன் எனுமோர் வாணிகன் வங்கந் தன்னொடும் வந்தனன் தோன்றும் நின்பெருந் துன்பம் ஒழிவாய் நீயென அந்தரந் தோன்றி அசரீரி அறைதலும் 45 ஐயரி யுண்கண் அழுதுயர் நீங்கிப் பொய்கைபுக் காடிப் போதுவாள் போன்று மனங்கவல் வின்றி மனையகம் புகுந்தென் கண்மணி யனையான் கடிதீங் குறுகெனப் புண்ணிய முட்டாள் பொழிமழை தரூஉம் 50 அரும்பெறல் மரபிற் பத்தினிப் பெண்டிரும் விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள் ஆங்கவள் கணவனும் அலைநீர் அடைகரை ஓங்குயர் பிறங்கல் ஒருமர நீழல் மஞ்சுடை மால்கடல் உழந்தநோய் கூர்ந்து 55 துஞ்சுதுயில் கொள்ளஅச் சூர்மலை வாழும் நக்க சாரணர் நயமிலர் தோன்றிப் பக்கஞ் சேர்ந்து பரிபுலம் பினனிவன் தானே தமியன் வந்தனன் அளியன் ஊனுடை இவ்வுடம் புணவென் றெழுப்பலும் 60 மற்றவர் பாடை மயக்கறு மரபிற் கற்றனன் ஆதலின் கடுந்தொழில் மாக்கள் சுற்று நீங்கித் தொழுதுரை யாடி ஆங்கவர் உரைப்போர் அருந்திறல் கேளாய் ஈங்கெங் குருமகன் இருந்தோன் அவன்பால் 65 போந்தருள் நீயென அவருடன் போகிக் கள்ளடு குழிசியுங் கழிமுடை நாற்றமும் வெள்ளென் புணங்கலும் விரவிய இருக்கையில் எண்குதன் பிணவோ டிருந்ததுபோலப் பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கிப் 70 பாடையிற் பிணித்தவன் பான்மைய னாகிக் கோடுயர் மரநிழற் குளிர்ந்த பின்னவன் ஈங்குநீ வந்த காரணம் என்னென ஆங்கவற் கலைகடல் உற்றதை உரைத்தலும் அருந்துதல் இன்றி அலைகடல் உழந்தோன் 75 வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள் நம்பிக் கிளையளோர் நங்கையைக் கொடுத்து வெங்களும் ஊனும் வேண்டுவ கொடுமென அவ்வுரை கேட்ட சாதுவன் அயர்ந்து வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும் 80 பெண்டிரும் உண்டியும் இன்றெனின் மாக்கட்கு உண்டோ ஞாலத் துறுபயன் உண்டெனில் காண்குவம் யாங்களும் காட்டுவா யாகெனத் தூண்டிய சினத்தினன் சொல்லெனச் சொல்லும் மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும் 85 கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின் நல்லறஞ் செய்வோர் நல்லுல கடைதலும் அல்லறஞ் செய்வோர் அருநர கடைதலும் 90 உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர் கண்டனை யாகெனக் கடுநகை எய்தி உடம்புவிட் டோடும் உயிருருக் கொண்டோர் இடம்புகும் என்றே எமக்கீங் குரைத்தாய் அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும் அவ்வகை 95 செவ்வனம் உரையெனச் சினவா திதுகேள் உற்றதை உணரும் உடலுயிர் வாழ்வுழி மற்றைய உடம்பே மன்னுயிர் நீங்கிடில் தடிந்தெரி ஊட்டினுந் தானுண ராதெனின் உடம்பிடைப் போனதொன் றுண்டென உணர்நீ 100 போனார் தமக்கோர் புக்கிலுண் டென்பது யானோ வல்லேன் யாவரும் உணர்குவர் உடம்பீண் டொழிய உயிர்பல காவதம் கடந்துசேண் சேறல் கனவினுங் காண்குவை ஆங்கனம் போகி அவ்வுயிர் செய்வினை 105 பூண்ட யாக்கையின் புகுவது தெளிநீ என்றவன் உரைத்தலும் எரிவிழி நாகனும் நன்றறி செட்டி நல்லடி வீழ்ந்து கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு உள்ளுறை வாழுயிர் ஓம்புதல் ஆற்றேன் 110 தமக்கொழி மரபின் சாவுறு காறும் எமக்கா நல்லறம் எடுத்தரை என்றலும் நன்று சொன்னாய் நன்னெறிப் படர்குவை உன்றனக் கொல்லும் நெறியறம் உரைக்கேன் உடைகல மாக்கள் உயிருய்ந் தீங்குறின் 115 அடுதொழில் ஒழிந்தவர் ஆருயிர் ஓம்பி மூத்துவிளி மாவொழித் தெவ்வுயிர் மாட்டும் தீத்திறம் ஒழிகெனச் சிறுமகன் உரைப்போன் ஈங்கெமக் காகும் இவ்வறம் செய்கேம் ஆங்குனக் காகும் அரும்பொருள் கொள்கெனப் 120 பண்டும் பண்டும் கலங்கவிழ் மாக்களை உண்டோம் அவர்தம் உறுபொருள் ஈங்கிவை விரைமரம் மென்றுகில் விழுநிதிக் குப்பையோ டிவையிவை கொள்கென எடுத்தனன் கொணர்ந்து சந்திர தத்தன் என்னும் வாணிகன் 125 வங்கஞ் சேர்ந்ததில் வந்துடன் ஏறி இந்நகர் புகுந்தீங் கிவளொடு வாழ்ந்து தன்மனை நன்பல தானமும் செய்தனன் ஆங்ஙனம் ஆகிய ஆதிரை கையால் பூங்கொடி நல்லாய் பிச்சை பெறுகென 130 மனையகம் புகுந்து மணிமே கலைதான் புனையா ஓவியம் போல நிற்றலும் தொழுது வலங்கொண்டு துயாறு கிளவியோடு அமுத சுரபியின் அகன்சுரை நிறைதரப் பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென 135 ஆதிரை யிட்டனள் ஆருயிர் மருந்தென். உரை 1-2. ஈங்கிவள் செய்திகேள் என விஞ்சையர் பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள்-இப்பொழுது இவ்வாதிரையின் அருஞ் செயலைக் கேட்பாயாக என்று விஞ்சையர் மகளான காயசண்டிகை ஆதிரைக்கு நேர்ந்ததை மணிமேகலைக்கு உரைப்பவள். ஈங்கிவள்: ஒரு சொல்லுமாம். மாதர்க்கு உரைப்போளென்க. 2-10. ஆதிரை கணவன் ஆயிழை கேளாய் சாதுவன் என்போன் தகவிலன் ஆகி-நங்காய் கேள் ஆதிரையின் கணவனாகிய சாதுவன் என்பவன் நன்னடக்கையிலனாய், அணியிழை தன்னை அகன்றனன் போகி - அழகிய அணிகலன் களையுடைய ஆதிரையை நீங்கிச் சென்று, கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க-பொதுமகளொருத்தி தீயொழுக்கத்தால் வந்தவுணவை அளிக்க அதனை உண்டு, வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கி - வட்டாடுதலினும் சூதாடுதலினும் மிகுந்த பொருளைக் கொடுத்து, கெட்ட பொருளின் கிளை கேடு உறுதலின் - கெடுக்கப்பட்ட பொருளின் பகுதி யெல்லாம் அழிந்தமையின், பேணிய கணிகையும் பிறர் நலங்காட்டி-முன்னர்ப் பேணிய பரத்தையும் பொருளுள்ள பிறருடைய சிறப்பினைக் காட்டி, காணம் இலி எனக் கையுதிர்க்கோடலும்-பொன் இல்லாதவன் என்று கையை யசைத்துப் போக்குதலும்; கைத்தூண் - தீயொழுக்கத்தால் வந்த உணவு; கை - ஒழுக்கம்; 1"கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை" என்பது காண்க. கையகத்தாகிய உணவென்றுமாம். நல்க உண்டு என ஒரு சொல் வருவித்துரைக்க. வட்டு - உண்டையுருட்டுதல்; 2"அரங்கின்றி வட்டாடியற்றே" என்புழிப் பரிமேலழகர் உரைத்தமை காண்க. வான் பொருள்-மிக்க பொருள். கெட்ட பொருள் - தீயபொரு ளென்பாருமுளர். கையுதிர்க் கோடலும் : உம்; உடனிகழ்ச்சி. 11-16. வங்கம் போகும் வாணிகர் தம்முடன் தங்கா வேட்கையின் தானும் செல்வுழி-கலத்திற் செல்லும் வணிகர்களுடன் பல விடத்தும் செல்ல வேண்டுமென்னும் விருப்பத்தால் சாது வனும் செல்கின்ற விடத்து, நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ - அகன்ற பெரிய கடலில் காற்று மரக்கலத்தினைக் கவர, ஒடி மரம் பற்றி ஊர்திரை உதைப்ப - கலத்தினின்றும் ஒடிந்த பாய்மரத் துண்டினைப் பிடித்துக் கொண்டு ஊர் கின்ற அலைகள்செலுத்தச் சென்று, நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் பக்கஞ் சார்ந்து-நக்க சாரணர்களாகிய நாகர் உறைகின்ற மலைப்பக்கத்தை யடைந்து, அவர் பான்மையன் ஆயினன் - அவர்கள் வயத்தினனாயினன்; தங்கா வேட்கை - ஓரிடத்திலே தங்கவிடாத வேட்கை. வளி கலத்தை வௌவுதலாவது-நெறியிற் செல்லவிடாது தடுத்துச் சிதைத்தல். ஒடிமரம் - ஒடியாகிய மரமென்றுமாம். உதைத்தல் - உந்தல்; 3"ஓடுந் திரைகளுதைப்ப வுருண்டுருண்டு" என்பது காண்க. நக்கம் - நக்நம் என்ற வடசொற் சிதைவு. சாரணர்-சரிப்பவர். உடையில்லாமற் சஞ்சரிப்பவராகலின் நாகர், ‘நக்க சாரணர்' எனப்பட்டார். நாகர்-நாக இலச்சினையுடைமையால் அப் பெயர் பெற்றன ரென்பர். சாரணராகிய நாகரென்க. 17-21. நாவாய் கேடுற நன்மரம் பற்றிப் போயினன் தன்னோடு உயிர் உயப் போந்தோர் - மரக்கலம் அழியப் பாய்மரத்தைப் பிடித்துச் சென்ற சாதுவனுடன் உயிர் பிழைக்கப் போந் தவர்கள், இடையிருள் யாமத்து எறிதிரைப் பெருங்கடல் - மிக்க இருளையுடைய நள்ளிரவில் வீசுகின்ற அலைகள் செறிந்த பெருங் கடலில், உடைகலப்பட்டாங்கு ஒழிந்தோர் தம்முடன் - உடைந்த மரக்கலத்திலகப்பட்டு ஆண்டு இறந்தோருடன், சாதுவன் தானும் சாவுற்றான் என - சாதுவனும் இறந்தனன் என்று கூற; சாதுவன் மரத்தைப் பற்றிப் போயினாற்போல் இவர்களும் மரங்களைப் பற்றிக்கொண்டு உயிர் உய்யப் போந்தார் என்க. போந்தார் - காவிரிப்பூம் பட்டினத்திற்கு வந்தவர். இருளையுடைய இடையாமம் என்க. யாமம்-இரவு. 22-28. ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்டு-ஆதிரை நல்லாள் அதனைக் கேட்டு, ஊரீரேயோ ஒள்ளழல் ஈமம் தாரீரோ எனச் சாற்றினள் கழறி-ஊரிலுள்ளோர்களே ஒள்ளிய தழல் பொருந்திய ஈமத்தினைத் தருவீர் என்று கூறிப் புலம்பி, சுடலைக் கானில் தொடு குழிப்படுத்து முடலை விறகின் முளி எரி பொத்தி-சுடுகாட்டில் தோண்டப்பட்ட குழியின்கண் முறுக்குடைய காய்ந்த விறகுகளால் அழலை மூட்டி, மிக்க என் கணவன் வினைப்பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன் என்று அவள் புகுதலும் - தீவினையேனது கணவன் வினைப்பயன் செலுத்தச் சென்றவிடத்து யானும் புகுவேன் என்று அத் தீயிடைப் புகுதலும்; ஈமம் - பிணஞ்சுட அடுக்கிய விறகடுக்கு. தாரீர் - தருவீர்; ஓ: புலம்பல்; தரமாட்டீரோ என்றுமாம். சுடலையாகிய கான் என்க. மிக்க-தீவினை மிகுந்த. மேன்மையுடைய வென்றுமாம். 29-34. படுத்துடன் வைத்த பாயற் பள்ளியும்-அதனுளகப் படுத்தி ஒருசேர வைத்த படுக்கையிடமும், உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது -- உடுத்திய ஆடையும் ஒள்ளிய அழல் பற்றாமல், ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் சூடிய மாலையும் தொல் நிறம் வழாது - பூசிய சாந்தமும் அசைகின்ற குழலிற் சூடிய மாலையும் பழைய நிறம் வழுவாமல், விரை மலர்த் தாமரை ஒருதனி இருந்த திருவின் செய்யோள் போன்று இனிது இருப்ப - மணம் பொருந்திய தாமரை மலரில் ஒப்பின்றி வீற்றிருக்கும் திருமகள்போல இனிதே இருப்ப; படுத்து-அடுக்கியென்றுமாம். பாயல் - படுக்கை. பள்ளி - இடம். திருவின் செய்யோள் - திருவாகிய செய்யோள்; இன் சாரியை அல்வழிக் கண்வந்தது. உறாது வழாது என்னும் எதிர் மறை யெச்சங்கள் இனிதிருப்ப என்னும் பிறவினை கொண்டு முடிந்தன. போன்று - போலுமாறு எனலுமாம். எரியும் ஈமத்திற்குச் செந்தாமரை மலரும், அதில் ஊறின்றியிருக்கும் ஆதிரைக்குத் திருமகளும் உவமை. 35-44. தீயுங் கொல்லாத் தீவினை யாட்டியேன் யாது செய்கேன் என்று அவள் ஏங்கலும்-தீயினாலுங் கொல்லப்படாத தீவினை யேன் இனி யாது செய்வேன் என்று அம் மெல்லியல் ஏங்குதலும், ஆதிரை கேள்-ஆதிரையே கேட்பாயாக, உன் அரும்பெறல் கணவனை - உனது பெறற்கருங் கொழுநனை, ஊர் திரை கொண்டாங்கு உய்ப்பப் போகி - தவழ்கின்ற அலைகள் அவ்விடத்திற் செலுத்த அவன் சென்று, நக்க சாரணர் நாகர் வாழ் மலைப் பக்கம் சேர்ந்தனன் - நக்க சாரணராகிய நாகர்கள் வாழ்கின்ற மலைப் பக்கத்தை யடைந்தனன், பல்லியாண்டு இரான் - அவன் அங்கே பலவாண்டுகள் தங்கான், சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன் - சந்திரதத்தன் என்னும் ஒரு வணிகனது, வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்-மரக்கலத்துடன் வந்து தோன்றுவன், நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீஎன-ஆகலின் நீ நினது பெரிய துயரினின்றும் நீங்குவாய் என்று, அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்-அசரீரி வானிலே தோன்றி மொழிதலும்; அசரீரி - சரீரம் இல்லாதது; அருவமாய் எங்கும் நிறைந்துள்ள கடவுள். இதனை அசரீரி வாக்கு எனவும் ஆகாயவாணி எனவும் கூறுவர். 45-51. ஐ அரி உண்கண் அழுதுயர் நீங்கி - அழகிய செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களையுடைய ஆதிரைநல்லாள் தான் அழுதுகொண்டிருந்த துன்பத்தினின்றும் நீங்கி, பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று-வாவியுட் சென்று நீராடி வருவாள் போல, மனம் கவல்வு இன்றி மனையகம் புகுந்து - மனம் கவலுதலின்றி இல்லுட் சென்று, என் கண்மணி அனையான் கடிது ஈங்கு உறுகென-எனது கண்ணினுள் மணியனைய கணவன் விரைவில் ஈண்டு வருக என்று, புண்ணியம் முட்டாள்-அறம் புரிதல் வழுவா தவளாய், பொழிமழை தரூஉம் அரும்பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும்-பொழிகின்ற மழையைத் தரவல்ல பெறற்கரிய ஒழுக்கத்தினையுடைய கற்பிற் சிறந்த மகளிரும், விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள் - வியந்து விரும்பி வணங்குந் தகுதியளாயினள்; முட்டுதல் - குன்றுதல், வழுவுதல். பெண்டிரும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பு. வியந்து விரும்பினர் தொழுமெனப் பிரித்துக்கூட்டுக; வியப்பு-மேன்மை யெனலுமாம். 52-59. ஆங்கவள் கணவனும் அலைநீர் அடைகரை ஓங்குயர் பிறங்கல் ஒரு மர நீழல்-அவளின் கணவனாகிய சாதுவன் கடற்கரையில் மிக உயர்ந்த மலையின் கண்ணுள்ள ஒரு மர நிழலில், மஞ்சுடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து துஞ்சு துயில்கொள்ள - முகில்களையுடைய பெரிய கடலின்கண் வருந்திய துன்ப மிகுந்து மிக்க உறக்கத்தினையுடைய, அச் சூர்மலை வாழும் நக்க சாரணர் நயமிலர் தோன்றி - அச்சத் தினைத்தரும் அம் மலையிலுறையும் வன்கணாளராகிய நக்கசாரணர்கள் ஆண்டுவந்து, பக்கஞ்சேர்ந்து - சாதுவன் மருங்கடைந்து, பரி புலம்பினன் இவன் - இவன் மிகவும் வருந்தியுள்ளான், தானே தமியன் வந்தனன்-தான் ஒருவனேயாய் ஈண்டு வந்தனன், அளியன் - எளிமையுடையன், ஊனுடை இவ்வுடம்பு உணவு என்று எழுப்பலும் - புலால் பொதிந்த இவனுடம்பு நமக்கு உணவாகும் என்று எழுப்புதலும்; அலைநீர் - கடல் துஞ்சு துயில்-மிக்க துயில். நக்க சாரண ராகிய நாகர் என்க. நயமிலர் - இனிமையில்லாதவர்; வன்கண்மை யுடையர், பரிபுலம்பு - மிக்க வருத்தம்; 1'பக்க நீங்குமின் பரிபுலம் பினரென', என்பது காண்க. 60-71. மற்றவர் பாடை மயக்கறு மரபில் கற்றனன் ஆதலின்-அந்நாகருடைய மொழியைச் சாதுவன் ஐயமறக் கற்றவனா கலின் அவர்களுடன் பேச, கடுந்தொழில் மாக்கள் சுற்று நீங்கித்தொழுது உரையாடி - கொடுந் தொழிலையுடைய அன்னோர் அவனை வருத்தாது மருங்கே விலகிப் பணிமொழி கூறி, ஆங்கவர் உரைப்போர்-அவனுடன் கூறுகின்றவர், அருந் திறல் கேளாய் - அரிய வலியையுடையவனே கேட்பாயாக, ஈங்கு எம் குருமகன் இருந்தோன் - இங்கே எங்களுடைய ஆசிரியன் இருக்கின்றனன், அவன்பால் போந்தருள் நீ என - அவனிடம் நீ வந்தருள் என்ன, அவருடன் போகி - சாதுவன் அவர்களுடன் சென்று, கள் அடு குழிசியும் கழிமுடை நாற்றமும் வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில் கள்ளைக் காய்ச்சுகின்ற பானையும் மிகுந்த புலால் நாற்ற முடைய தசையும் வெள்ளிய என்புகளின் வற்றலும் கலந்துள்ள இருக்கையின் கண்ணே, எண்கு தன் பெட்டையோடு இருத்தல் போல மனைவியுடன் அவன் இருந்த தன்மையைக் கண்டு, பாடையிற் பிணித்து அவன் பான்மையன் ஆகி - நாகர் மொழியாற் பேசுந் திறத்தால் அவனை வயமாக்கி அவன் பக்கத்தினனாகி, கோடு உயர் மரநிழல் குளிர்ந்தபின் - கிளைகள் ஓங்கிய மரத்தின் நிழலில் வெப்பந் தணிந்தபின்பு. கற்றனனாதலின் அவர்களுடன் பேச என விரித்துரைக்க. மாக்களாகிய. ஆங்கவர் என்க. அருந்திறல் ஆகுபெயர். குருமகன்- குரு; தலை மகன். இருந்தோன்: முற்று. நாற்றம்:ஆகுபெயர். இருக்கை - இருப்பிடம்; கட்டிலுமாம். 1"பன்றி புல்வாய்" என்னுஞ் சூத்திரத்து 'ஒன்றிய' என்னும் இலேசால் பிணவு என்பது கரடிக்குங் கொள்ளப்பட்டது. பெண்டு-மனைவி. அவன் பான்மையனாகி - அவன் அன்புக்குரியனாகி என்றுமாம். 71-79. அவன் ஈங்கு நீ வந்த காரணம் என் என - நாகர் தலைவன் சாதுவனை நோக்கி ஈண்டு நீ வந்த காரணம் யாது என வினவ, ஆங்கவற்கு அலைகடல் உற்றதை உரைத்தலும் - வணிகன் அவனுக்குத் தான் அலை செறிந்த கடலிற் பட்டதைக் கூறலும், அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன் வருந்தினன் அளியன் - அலைகின்ற கடலின்கண் துன்பமுற்ற இவன் உணவொன்றும் இன்றி வருந்தியுள்ளான் இரங்கத் தக்கான் ஆகலின், வம்மின் மாக்காள் - வாருங்கள் மக்களே, நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும் என - இவ்வாண்டகைக்கு இளமை பொருந்திய ஒரு நங்கையை அளித்து விருப்பந்தரும் கள்ளும் புலாலும் வேண்டுமளவும் கொடுங்கள் என மொழிய, அவ்வுரை கேட்ட சாதுவன் அயர்ந்து வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும் - அம்மொழி கேட்ட சாதுவன் சோர்ந்து கொடுஞ் சொற்களை என் காதிற் கேட்டேன் யான் அவற்றை வேண்டேன் என்றுரைத்தலும்; வெங்கள் : வெம்மை - விருப்பம்; வெவ்விய கள்ளுமாம். கொடும்: செய்யுமென்னும் வாய்பாட்டு ஏவல். அயர்ந்து-கவலை யுற்று என்றுமாம். 80-83. பெண்டிரும் உண்டியும் இன்றெனில் மாக்கட்கு உண்டோ ஞாலத்து உறுபயன் - மாதரும் உணவும் இல்லையானால் மக்கட்கு உலகத்தில் அடையக்கூடிய பயன் உண்டோ, உண்டெனில் காண்குவம் யாங்களும் காட்டுவாயாக என - அங்ஙன முண்டென்றால் அதனை யாங்களும் காண்போம் காட்டுவாயாக என்று, தூண்டிய சினத்தினன் சொல் என - மிக்க சீற்றமுடையனாய்க் கூறுக என, சொல்லும் - சாது வனுரைக்கும்; இன்று என்பது பொதுவினையாய் நின்றது. உறுபயன்-இன்பம். தூண்டிய சினத்தினன் காட்டுவாயாக சொல்க என்று சொல்ல வென்க. சொல்லென என்பதிலுள்ள என என்பது சொல்ல என்னுந் துணையாய் நின்றது. 84-91. மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்-அறிவை மயக்கும் கள்ளுண்டலையும் நிலைபெற்ற உயிர்களைக் கொல்லு தலையும், கயக்கு அறு மாக்கள் கடிந்தனர்-கலக்கமற்ற அறிவினையுடையோர் விலக்கினர், கேளாய்-கேட்பாயாக, பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்- உலகில் பிறந்தோர்கள் இறத்தலும் இறந்தோர்கள் பிறத்தலும், உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்-உறங்குவதும் உறங்கி விழிப்பதும் போல்வதாக உள்ளமையான், நல்லறஞ் செய்வோர் நல்லுலகு அடைதலும்-நல்ல அறங்களைச் செய்கின்றவர்கள் இன்ப மெய்தற்குரிய மேலுலகங்களை யெய்துதலும், அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும் - தீவினைகளை இயற்று கின்றவர் பொறுத்தற்குரிய துன்பத்தைச் செய்யும் நிரயத்தை அடைதலும், உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர் - உண்மை என்று உணர்தலினால் அறிஞர்கள் அவற்றை நீக்கினர், கண்டனை யாகென - நீ அறிவாயாக என்றுரைக்க; கோறல் - கொன்றுண்டல் என்றுமாம். கயக்கு-கலங்குதல்; ஈண்டுக் கலக்கமாவது அறிவின் திரிபு. சாதலும் பிறத்தலும், உறங்கலும் விழித்தலும் போலுதல் 1"உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி, விழிப்பது போலும் பிறப்பு" என்னும் வாயுறை வாழ்த்தானும் அறியப்படும். சாதல் உறங்கலும் பிறத்தல் விழித்தலு மென நிரனிறை.அல்லறம்-அறமல்லது; பாவம். 91-95. கடு நகை எய்தி - நாகர் குரவன் பெருஞ் சிரிப்புடை யனாய், உடம்புவிட்டு ஓடும் உயிர் உருக்கொண்டு ஓர் இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய்-உடலை விட்டுப் பிரிகின்ற உயிரானது வேறு வடிவு கொண்டு ஓர் இடத்திற் புகும் என்று எமக்கு இப்பொழுது கூறினாய், அவ்வுயிர் எவ்வணம் போய்ப் புகும் அவ்வகை செவ்வனம் உரை என - அவ் வுயிர் எவ்வாறு சென்று புகும் அத்திறத்தினை நன்கு கூறுவாயாக என மொழிய; எள்ளல் பற்றி நகை பிறந்தது. செவ்வனம் - நேரே. 95-106. (அதனைக் கேட்ட சாதுவன்,) சினவாது இது கேள்-சீற்றங் கொள்ளாது இதனைக் கேட்பாயாக, உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி - உயிரானது தன்னிடம் உறைகின்றபொழுது உடல் தன்பால் உறுகின்றதனை உணரும், மற்றைய உடம்பே மன்னுயிர் போனால்-அங்ஙனமாகிய உடலே தன்னிடம் நிலைபெற்ற உயிர் பிரிந்தால், தடிந்து எரி ஊட்டினும் தான் உணராது எனின் - வெட்டித் தீயின்கண் இட்டாலும் தான் அறியாது என்றால், உடம்பிடைப் போனது ஒன்று உண்டென உணர் நீ - அவ்வுடம்பிலிருந்து பிரிந்து சென்றது ஒன்று உண்டு என்பதை நீ அறிவாய், போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது-அங்ஙனம் சென்றோர்க்கு ஒரு புகுமிடம் உண்டு என்பதை, யானோ அல்லேன் யாவரும் உணர்குவர்-யான் மட்டு மன்று எல்லோரும் அறிகுவர். உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் கடந்து சேண் சேறல் - யாக்கை இவ் விடத்தில் நீங்க உயிர் பல காவதங்கள் கடந்து நெடுந்தூரத்திற் செல்லுதல், கனவினும் காண்குவை-கனவின் கண்ணும் காண்பாய், ஆங்ஙனம் போகி அவ்வுயிர் செய்வினை பூண்ட யாக்கையில் புகுவது தெளி நீ - அங்ஙனம் சென்று அவ்வுயிர் தம் வினைப் பயனை நுகர்தற்குரிய உடலின்கண் புகுவதைத் தெளிவாய் நீ, என்று அவன் உரைத்தலும் - என்று சாதுவன் மொழிதலும்; உற்றதை யுணர்தல்-தட்பம் வெப்பம் முதலிய ஊற்றினை யுணர்தல். மற்றைய-முற்கூறிய என்றபடி; மற்றை என்பதனை அசையாக்கி, அவ்வுடம்பு என்னலுமாம். எனின் - ஆதலால் ஓரிடத்தைவிட்டுப் போனவர்க்குப் பிறிதோரிடம் உண்டென உலகியலாற் கூறினான், பூண்ட-ஏற்றுக்கொண்ட; ஏற்று நுகர் தற்குரிய என்றபடி. 106-111. எரி விழி நாகனும்-தீப்போலுங் கண்களையுடைய நாகனும், நன்று அறி செட்டி நல்அடி வீழ்ந்து - அறத் தினையறிந்த வணிகனது நல்ல அடியில் விழுந்து வணங்கி, கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு உள்ளுறைவாழுயிர் ஓம்புதல் ஆற்றேன் - கள்ளையும் புலாலையும் கைவிட்டால் இவ்வுடம்பின்கண் தங்கி வாழ்கின்ற உயிரைப் பாதுகாத்த லறியேன், தமக்கு ஒழி மரபின் சாவுறு காறும் எமக்கு ஆம் நல்லறம் எடுத்துரை என்றலும்-தமக்கு அறுதியிட்ட முறை மையால் இறப்பினை எய்துமளவும் எமக்குப் பொருந்திய நல்ல அறங்களை எடுத்துக் கூறுக என்றலும்; எரி விழி-எஞ்ஞான்றும் சினத்தினாற் சிவந்த கண். நன்று - அறம். செட்டி-செட்டு உடையவன்; சிரேட்டி என்பதன் சிதைவுமாம். உறை- உறைந்து என வினையெச்சமாக்குக. தமக்கு - உயிர்கட்டு. 112-117. நன்று சொன்னாய்-நன்குரைத்தாய், நல் நெறிப் படர்குவை. நல்வழியிலே செல்வாய், உன்றனக்கு ஒல்லும் நெறி அறம் உரைக்கேன்-உனக்கு இயலும் வழியால் அறத் தினைக் கூறுவேன், உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்குறின்-கடலிற் கலமுடையப்பட்ட மக்கள் உயிர் தப்பி ஈண்டுச் சேர்ந்தால், அடுதொழில் ஒழிந்து அவர் ஆருயிர் ஓம்பி-கொல்லுந் தொழிலைவிட்டு அவர்களுடைய அரிய உயிரைக் காத்து, மூத்துவிளி மா ஒழித்து எவ்வுயிர் மாட்டும் தீத்திறம் ஒழிகென - முதுமையுற்று இறக்கும் விலங்குகளைத் தவிர வேறு எந்த உயிரினிடத்தும் கொலைத் தொழிலை நீங்குவாயாக என்று சாதுவனுரைப்ப; முதுமையுற்று இறக்கும் விலங்குகளை மட்டும் உண்ணுக என்றான். தீத்திறம் - கொலை. ஓம்பி ஒழிகவென் றியையும். 117-127. சிறுமகன் உரைப்போன் - கீழோனாகிய நாகன் உரைப்பவன், ஈங்கு எமக்காகும் இவ்வறம் செய்கேம் - ஈண்டு எமக்குப் பொருந்திய இவ்வறத்தினைச் செய்யாநிற்பேம், ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்கென - நினக் கேற்ற அரிய பொருள்களைக் கொண்டு செல்க வென்று, பண்டும் பண்டும் கலங்கவிழ் மாக்களை உண்டேம் - முன்பெல்லாம் மரக்கலங் கவிழ்ந்து வந்த மக்களைக் கொன்று உண்டோம், அவர் தம் உறுபொருள் ஈங்கிவை- அவர் களுடைய மிக்க பொருள்களாகும் இங்குள்ள இவைகள், விரைமரம் மென்துகில் விழுநிதிக் குப்பையோடு இவை இவை கொள்கென - சந்தன மரங்களும் மெல்லிய ஆடை களும் சிறந்த பொருட்குவைகளுமாகிய இவற்றையெல்லாம் கொள்க என்று கூற, எடுத்தனன் கொணர்ந்து - சாதுவன் அவைகளை எடுத்துக் கொணர்ந்து, சந்திரதத்தன் என்னும் வாணிகன் வங்கஞ் சேர்ந்ததில் - சந்திரதத்தன் என்னும் வணிகனது மரக்கலம் வந்ததில், வந்து உடன்ஏறி - உடன் ஏறிவந்து, இந்நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து - இந் நகரத்தை யடைந்து இவ்வாதிரையுடன் வாழ்ந்து, தன் மனை நன் பல தானமும் செய்தனன் - தனது மனையின் கண் பல நல்லறங்களையுஞ் செய்தனன். உரைப்பவன் அரும்பொருள் கொள்கெனப் பொதுவிற் கூறிப் பின்பு அவற்றை விதந்து, இவை யிவை கொள்க வென்றுரைக்க வென்க. விரைமரம் - மணமுடைய சந்தனம் அகில் முதலிய மரங்கள். சேர்ந்ததாகிய வங்கத்திலென்க. 128-135. ஆங்ஙனமாகிய ஆதிரை கையால் - அத் தன்மை யளாகிய ஆதிரையின் கையால், பூங்கொடி நல்லாய் பிச்சை பெறுகென 16. ஆதிரை பிச்சையிட்ட காதை - பூங்கொடியனைய மெல்லியலே நீ பிச்சை பெறுவாயாக வென்று உரைக்க, மனையகம் புகுந்து மணிமேகலைதான் - மணிமேகலை ஆதிரையின் இல்லத்திற் சென்று, புனையா ஓவியம்போல நிற்றலும் - அணி செய்யப்படாத ஓவியப்பாவை போல நிற்றலும், தொழுது வலங்கொண்டு - வலம்வந்து வணங்கி, துயரறு கிளவியோடு - இன்சொற்களோடு, அமுதசுரபியின் அகன்சுரை நிறை தர - மணிமேகலை கையிற் கொண்ட அமுதசுரபியினது அகன்ற உள்ளிடம் நிறையுமாறு, பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்தென் - ஆதிரை நல்லாள் ஆருயிர் மருந்தாகிய அன்னத்தை நிலவுலக முழுவதும் பசி நோய் அறுக என்று கூறி இட்டனள் என்க. பெறுகென - பெறுகவென்று காய சண்டிகை உரைக்க. புனையா ஓவியம் - வண்ணங்களைக் கொண்டெழுதாத வடிவைக் கோட்டின ஓவியம் எனலுமாம்: 1“புனையா வோவியங் கடுப்ப'' என்புழி நச்சினார்க்கினியர் உரைத்தமை காண்க. பிச்சை யேற்கும்பொழுது துறவறத்தினர் மோனமாக நிற்றல்வேண்டு மென்பவாகலின், 'புனையா வோவியம் போல நிற்றலும்' என்றார். துயரறுகிளவி - இன்சொல். ஆதிரை தொழுது கிளவியோடு பசிப்பிணியறுகெனக் கூறி நிறை தர இட்டனளென்க. விஞ்சையர் பூங்கொடி மாதர்க்கு உரைப்போள், ‘ஆங்ஙனமாகிய ஆதிரை கையாற் பிச்சை பெறுக' என்று சொல்ல, மணிமேகலை மனையகம் புகுந்து நிற்றலும், ஆதிரை வலங்கொண்டு ஆருயிர் மருந்து இட்டனள் என முடிக்க. ஆதிரை பிச்சையிட்ட காதை முற்றிற்று. 17. உலகவறவி புக்க காதை (ஆதிரை யளித்த பிச்சையை முதலில் மணிமேகலை ஏற்ற பின்பு, அமுதசுரபியிலுள்ள சோற்றுத் திரளை, அறநெறியி லீட்டிய பொருள் வழங்குந்தோறும் குறையாமல் வளர்வதுபோல எடுக்க எடுக்கக் குறைவின்றி வளர்ந்து ஏற்போர் பசியைப் போக்கி விளங்கிற்று. அது கண்ட காய சண்டிகை வியந்து மணிமேகலையை வணங்கி, 'அன்னையே! எனது தீராப் பசியையும் தீர்த்தருள்க'' என்று வேண்ட, உடனே மணிமேகலை அமுதசுரபியிலிருந்து ஒரு பிடி யமுதையெடுத்து அவள் கையிலிட்டாள். அதனை யுண்டு பசி நோய் தீர்ந்து மகிழ்ந்த காயசண்டிகை “வடதிசைக் கண்ணே விஞ்சைய ருலகிலுள்ள காஞ்சனபுரமென்பது என்னுடைய ஊர்; தென்றிசையிலுள்ள பொதியின் மலையின் வளங்களைக் காண்டற்கு விரும்பிக்கணவனும் யானும் புறப்பட்டுப் போந்து இடையேயுள்ள கான்யாறொன்றின் கரையிலிருந்தோம்; இருக்கையில், விருச்சிகனென்னும் முனிவனொருவன் பாரணஞ் செய்தற்குப் பனங்கனி போன்ற பருத்த நாவற் கனியொன்றைத் தேக்கிலையில் வைத்துவிட்டு நீராடச் சென்றான். அக் கனியின் இயல்பினை யறியாத நான் பழவினையால் அதனைக் காலாற் சிதைத்துக் கெடுத்தேன். நீராடி மீண்டு வந்த முனிவன் அக் கனி என்னாற் சிதைந்தமையை அறிந்து சினந்து, என்னை நோக்கி, 'தெய்வத்தன்மை யுடையதும் பன்னீராண்டிற் கொருமுறை ஒரே கனியைத் தருவதுமாகிய நாவல் மரத்திலுண்டானது இக்கனி; இதனை யுண்டோர் பன்னீராண்டு பசி யொழிந்திருப்பர்; யானோ பன்னிரண்டாண்டு பட்டினியிருந்து ஒருநாளுண்ணும் நோன்புடையேன் ; உண்ணும் நாளும் இந்நாளே; உண்ணக் கருதிய கனியும் இக்கனியே; இதனை நீ யழித்துவிட்டாய்; ஆதலால், நீ வான் வழியே செல்லும் மந்திரத்தை மறந்து, யானைத்தீயென்னும் நோயால் பன்னிரண்டாண்டு தீராப் பசி கொண்டுழந்து, பின்பு இக்கனியை யான் உண்ணும் நாளில் பசியொழியப் பெறுவாய்' என்று கூறி வருந்திப் போயினன். உடனே பெரும் பசி என்னைப் பற்றியது; அதனால் மிக வருந்தினேன்; அது கண்ட என் கணவன் காய் கனி கிழங்கு முதலியவற்றை மிகக் கொணர்ந்து என்னை உண்பிக்கவும் அப்பசி தீராதாயிற்று. அந்தரஞ் செல்லும் மந்திரமும் என் நினைவுக்கு வந்திலது. அதனால் வருந்திய என் கணவன், ‘நீ நடந்து சென்று தமிழ் நாட்டிலே ஆற்றா மாக்கட்கு அருந் துணையாகிச் செல்வர்கள் வாழ்ந்திருக்கும் காவிரிப்பூம்பட்டினத்தை யடைந்து அங்கே தங்குவாயாக' என்று சொல்ல, நான் அவ் வண்ணமே போந்து இங்கிருக்கின்றேன். ஒவ்வோராண்டிலும் இங்கு இந்திரவிழா நடக்கும்பொழுது என் கணவன் வந்து என் வருத்தத்தைப் பார்த்துத் தானும் வருந்திப் பின்வரும் யாண்டினை எண்ணிச் செல்வன். தணியாத வெம்பசியைத் தணித்தனை. யான் என் பதிக்கேகுவேன். இந் நகரிலே முனிவர்கள் பலர் உறையும் சக்கரவாளக் கோட்டம் என்ப தொன்றுண்டு; அதன் கண் பலரும் வந்து புகுதற்காகவே எப்பொழுதும் வாயிற் கதவு திறந்துள்ள உலகவறவி யென்னும் அம்பலம் ஒன்றுண்டு; “ ஊரூ ராங்கண் உறுபசி யுழந்தோர். ஆரு மின்மையி னரும்பிணி யுற்றோர் இடுவோர்த் தேர்ந்தாங் கிருப்போர் பலரால். ஆதலின் அவ்விடத்திற்குச் செல்வாயாக'' என்று கூறிவிட்டு, அவள் தன்னூருக்குச் சென்றனள். பின் மணிமேகலை வீதியின் ஒருபக்கத்தே ஒதுங்கிச் சென்று உலக வறவியை அடைந்து மும்முறை வலம்வந்து பணிந்து, அதிலேறிச் சம்பாபதியையும் கந்திற்பாவையையும் வணங்கி, வெயிலாற் கரிந்த காட்டிலே மழை தோன்றினாற்போலப் பசியால் வருந்திய மக்கட்கு அமுதசுரபி யோடு தோன்றி, “இஃது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி யாகும் ; உண்ணுதற்கு விருப்பமுள்ள யாவரும் வருக'' என்று கூற, பலரும் வந்து உண்பாராயினர் ; ஆதலின் அவ் வம்பலத்தில் உண்ணு மொலி மிகுந்தது. பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற பிச்சைப் பாத்திரப் பெருஞ்சோற் றமலை அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன் திறத்து வழிப்படூஉஞ் செய்கை போல 5 வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்துத் தான்தொலை வில்லாத் தகைமை நோக்கி யானைத் தீநோய் அகவயிற் றடக்கிய காயசண் டிகையெனுங் காரிகை வணங்கி நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி 10 அடலரு முந்நீர் அடைத்த ஞான்று குரங்குகொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம் அணங்குடை யளக்கர் வயிறுபுக் காங்கு இட்ட தாற்றாக் கட்டழற் கடும்பசிப் பட்டேன் என்றன் பழவினைப் பயத்தால் 15 அன்னை கேள்நீ ஆருயிர் மருத்துவி துன்னிய என்னோய் துடைப்பா யென்றலும் எடுத்த பாத்திரத் தேந்திய அமுதம் பிடித்தவள் கையில் பேணினள் பெய்தலும் வயிறுகாய் பெரும்பசி நீங்கி மற்றவள் 20 துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும் மாசில் வாளொளி வடதிசைச் சேடிக் காசில்காஞ் சனபுரக் கடிநக ருள்ளேன் விஞ்சையன் றன்னொடென் வெவ்வினை உருப்பத் தென்றிசைப் பொதியில் காணிய வந்தேன் 25 கடுவர லருவிக் கடும்புனல் கொழித்த இடுமணற் கானியாற் றியைந்தொருங் கிருந்தேன் புரிநூன் மார்பில் திரிபுரி வார்சடை மரவுரி யுடையன் விருச்சிகன் என்போன் பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி யனையதோர் 30 இருங்கனி நாவற் பழமொன் றேந்தித் தேக்கிலை வைத்துச் சேணாறு பரப்பிற் பூக்கமழ் பொய்கை யாடச் சென்றோன் தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் காலா லந்தக் கருங்கனி சிதைத்தேன் 35 உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் கண்டனன் என்னைக் கருங்கனிச் சிதைவுடன் சீர்திகழ் நாவலில் திப்பிய மானது ஈரா றாண்டில் ஒருகனி தருவது அக்கனி யுண்டோர் ஆறீ ராண்டு 40 மக்கள் யாக்கையின் வரும்பசி நீங்குவர் பன்னீ ராண்டில் ஒருநா ளல்லது உண்ணா நோன்பினேன் உண்கனி சிதைத்தாய் அந்தரஞ் செல்லும் மந்திரம் இழந்து தந்தித் தீயால் தனித்துயர் உழந்து 45 முந்நா லாண்டின் முதிர்கனி நானீங்கு உண்ணு நாளுன்உறுபசி களைகென அந்நா ளாங்கவன் இட்ட சாபம் இந்நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை வாடுபசி உழந்து மாமுனி போயபின் 50 பாடிமிழ் அருவிப் பயமலை ஒழிந்தென் அலவலைச் செய்திக் கஞ்சினன் அகன்ற இலகொளி விஞ்சையன் விழுமமோ டெய்தி ஆரணங் காகிய அருந்தவன் தன்னால் காரணம் இன்றியும் கடுநோ யுழந்தனை 55 வானூ டெழுகென மந்திரம் மறந்தேன் ஊனுயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி வயிறுகாய் பெரும்பசி வருத்தும் என்றேற்குத் தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன ஆங்கவன் கொணரவும் ஆற்றே னாக 60 நீங்க லாற்றான் நெடுந்துய ரெய்தி ஆங்கவன் ஆங்கெனக் கருளொடு முரைப்போன் சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் கம்ப மில்லாக் கழிபெருஞ் செல்வர் ஆற்றா மாக்கட் காற்றுந்துணை யாகி 65 நோற்றோர் உறைவதோர் நோனகர் உண்டால் பலநா ளாயினும் நிலனொடு போகி அப்பதிப் புகுகென் றவனருள் செய்ய இப்பதிப் புகுந்தீங் கியானுறை கின்றேன் இந்திர கோடணை விழவணி வருநாள் 70 வந்து தோன்றியிம் மாநகர் மருங்கே என்னுறு பெரும்பசி கண்டனன் இரங்கிப் பின்வரும் யாண்டவன் எண்ணினன் கழியும் தணிவில் வெம்பசி தவிர்த்தனை வணங்கினேன் மணிமே கலையென் வான்பதிப் படர்கேன் 75 துக்கந் துடைக்குந் துகளறு மாதவர் சக்கர வாளக் கோட்டமுண் டாங்கதில் பலர்புகத் திறந்த பகுவாய் வாயில் உலக வறவி ஒன்றுண் டதனிடை ஊரூ ராங்கண் உறுபசி உழந்தோர் 80 ஆரும் இன்மையின் அரும்பிணி யுற்றோர் இடுவோர்த் தேர்ந்தாங் கிருப்போர் பலரால் வடுவாழ் கூந்தல் அதன்பாற் போகென் றாங்கவள் போகிய பின்னர் ஆயிழை ஓங்கிய வீதியின் ஒருபுடை ஒதுங்கி 85 வலமுறை மும்முறை வந்தனை செய்தவ் உலக வறவியின் ஒருதனி யேறிப் பதியோர் தம்மொடு பலர்தொழு தேத்தும் முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கிக் கந்துடை நெடுநிலைக் காரணங் காட்டிய 90 தந்துணைப் பாவையைத் தான்தொழு தேத்தி வெயில்சுட வெம்பிய வேய்கரி கானத்துக் கருவி மாமழை தோன்றிய தென்னப் பசிதின வருந்திய பைதல் மாக்கட்கு அமுத சுரபியோ டாயிழை தோன்றி 95 ஆபுத் திரன்கை அமுத சுரபியிஃது யாவரும் வருக ஏற்போர் தாமென ஊணொலி அரவத் தொலியெழுந் தன்றே யாணர்ப் பேரூர் அம்பல மருங்கென். உரை 1-6. பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற - கற்பிற்சிறந்த ஆதிரை நல்லாளாற் பகுத்துண்ணும் உணவினைப் பெற்ற, பிச்சைப் பாத்திரப் பெருஞ் சோற்று அமலை-அமுதசுரபியிலுள்ள பெரிய சோற்றுத்திரளை, அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் - அறநெறியினாலீட்டப்பட்ட ஒள்ளிய பொருள், அறவோன் திறத்து வழிப்படூஉம் செய்கை போல - அறஞ் செய்வோன் கருத்தின் வழியே சென்று பயன்படுமாறு போல, வாங்கு கை வருந்த மன்னுயிர்க்கு அளித்து- ஏற்கும் கைகள் வருந்துமாறு உயிர்கட்கு மிக அளித்தும், தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி-தான் குறைவுபடாத்தன்மையைக் கண்டு; பாத்து - பகுத்து என்பதன் மரூஉ. பாத்தூண் - இயல்புடைய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துண்டற் குரிய உணவு ; இதனால் ஆதிரையளித்த உணவின் தகுதியும், ஆதிரையின் மனையற மாண்பும் பெறப்பட்டன; 1''பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை, வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்'' என்பது அறியற் பாலது. ஆதிரைபாற் பெற்றதற்கு அறத்தின் ஈட்டியதும், மணிமேகலை கருதியவாறு மன்னுயிர்க்களிக்க அது பயன்படுதற்கு அறவோன் திறத்து வழிப்படுதலும், உவமை யாயின. இனி, அறவோன் என்பதற்குச் சற்பாத்திரம் என்றும், திறத்து வழிப்படும் என்பதற்குப் பெறுவோர் பெருமைக்குத் தக்கபடி பெருகுமென்றும் கருத்துக்கொண்டனர் மகா மகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்; ஈண்டு அது பொருந்து மேற் கொள்க. பிற உயிர்கட்கும் அளிக்கப்படினும் சோறுண்டலை இயல்பாக வுடையர் மக்களாதலின், 'வாங்குகை வருந்த' என்றார். இக் கருத்து முன்னரும் வந்துள்ளமை காண்க. 7-16. யானைத் தீ நோய் அகவயிற்று அடக்கிய காயசண்டிகை எனும் காரிகை வணங்கி - யானைத்தீ என்னும் பெரும்பசி நோயினைத் தன் வயிற்றிற்கொண்ட காயசண்டிகை என்னும் மடந்தை மணிமேகலையை வணங்கி, நெடியோன் மயங்கி நிலமிசை தோன்றி அடலருமுந்நீர் அடைத்த ஞான்று - திருமால் மயக்கத்தால் நிலமிசை இராமனாகத் தோன்றி வெல்லுதற்கரிய கடலை அடைத்த பொழுது, குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்-குரங்குகள் கொண்டுவந்து வீசிய பெரிய மலைகளெல்லாம், அணங்குடை அளக்கர் வயிறு புக்காங்கு - வருத்தந் தரும் கடலின் வயிற்றினுள்ளே புகுந்தாற் போல, இட்டது ஆற்றாக் கட்டழல் கடும்பசி பட்டேன் என்றன் பழவினைப் பயத்தால் - இட்ட உணவுகளால் தணியாத அழல்போன்ற கொடிய பசியை என்னுடைய முன்னை வினைப்பயனால் அடைந்தேன், அன்னைகேள் நீ - தாயே நீ கேட்பாயாக, ஆருயிர் மருத்துவி துன்னிய என்நோய் துடைப்பாய் என்றாலும் - அரிய உயிரைப் பாதுகாக்க வல்ல மருந்தினையுடையாய் நெருங்கிய எனது பசிப்பிணியைக் களைந்தருள்வாய் என வேண்ட; யானைத் தீ நோய் - பெரும்பசியைச் செய்யும் நோய்; பஸ்மக வியாதி எனவும் படும். மயங்கி - அவிச்சையான் மயங்கி; 1‘இருணீங்கி யின்பம் பயக்கும் மருணீங்கி, மாசறு காட்சி யவர்க்கு'' என்பதனால் அவிச்சை பிறப்பிற்குக் காரணமாத லறிக; நெடியோன் தோன்றி மயங்கி என மாற்றி, திருமால் இராமாவதாரத்தில் பருவத முனிவரும் நாரதரும் அம்பரீடனுக் கிட்ட சாபமாகிய இருளைத் தான் ஏற்றுக் கொண்டமையால் அதனால் மூடப்பட்டுத் தன்னை மாயனென் றறியாது மயங்கி யிருந்தனன் என்னும் இலிங்க புராணக் கதையை ஏற்றியுரைப்பாருமுளர். இனி மயங்கி யென்பதற்குச் சீதையைப் பிரிந்து கையா றெய்தி யென் றுரைத்தலுமாம். முந்நீர் - படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று நீர்மையை யுடையது; கடல். மலைகளால் கடலின் வயிறு நிரம்பாமைபோல உணவுகளினால் என் வயிறு நிரம்பிற்றில்லை யெனத் தானுண்ட உணவின் மிகுதியும் பசியின் கொடுமையும் புலப்பட உவமங் கூறினாள். இட்டது: வினைப்பெயர். ஆருயிர் மருந்து- அடிசில், மருத்துவி - மருந்தினையுடையாள். காரிகை நோக்கி வணங்கி, 'என்னோய் துடைப்பா' யென்றலு மென்க. 17-20. எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம் பிடித்து அவள் கையில் பெய்தலும்-மணிமேகலை தான் கையிற் கொண்ட அமுத சுரபியிலுள்ள அன்னத்தை எடுத்துப் பிடியாக அவள் கையில் இட, வயிறுகாய் பெரும்பசி நீங்கி மற்றவள் துயரம் நீங்கித்தொழுதனள் உரைக்கும்-காயசண்டிகை வயிற்றில் எரிகின்ற கொடிய பசி நீங்கத் தன் துயரமும் நீங்கி மணிமேகலையைத் தொழுது கூறுகின்றாள்; ஏந்திய - பொருந்திய; ஏந்திய கையிலெனக் கூட்டுதலுமாம். பசி நீங்கி - பசி நீங்க: எச்சத்திரிபு. 21-26. மாசு இல் வால் ஒளி வடதிசைச் சேடி - வடதிசையில் மாசற்ற வெள்ளிய வொளியினையுடைய விஞ்சையருலகில், காசு இல் காஞ்சனபுரக் கடிநகர் உள்ளேன் - குற்றமற்ற காஞ்சனபுர மென்னுங் காவல் பொருந்திய நகரத்தில்உள்ள யான், விஞ்சையன் தன்னொடு என் வெவ்வினை உருப்ப-எனது கொடுவினையானது தோற்ற என் கணவனோடு, தென்றிசைப் பொதியில் காணிய வந்தேன்-தென்றிசையிலுள்ள பொதியின் மலையின் வளங்காணும் பொருட்டு வந்தேன், கடுவரல் அருவிக் கடும்புனல் கொழித்த - விரைந்த செலவினை யுடைய அருவியினது வேகமுள்ள நீர் தெள்ளிய, இடுமணல் கானியாற்று இயைந்தொருங்கு இருந்தேன்- இடுமணலை யுடைய கான்யாற்றில் என் கணவனுடன் கூடி ஒருங்கிருந்தேன்; சேடி - வித்தியாதர ருலகு; அது வெள்ளி மலையிலுள்ள தாகலின் வாலொளியையுடையதாயிற்று; 1“வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடி'' என்பது காண்க. உருப்ப - அழலவென்றுமாம். காணிய: செய்யிய வென்னும் வினையெச்சம். வந்தேன் : எச்சமுற்றுமாம். இடு மணல் - எக்கர். 27-32. புரிநூல் மார்பில் திரிபுரி வார்சடை மரவுரி உடையன் விருச்சிகன் என்போன் - அப்பொழுது முறுக்கிய பூணூலணிந்த மார்பும் திரித்து முறுக்கிய நீண்ட சடையும் மரவுரி யாடையு முடைய விருச்சிகன் என்னும் முனிவன், பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி அனையதோர் இருங்கனி நாவற்பழம் ஒன்று ஏந்தி - பெரிய குலையையுடைய பனையினது கரிய கனியை யொத்ததாகிய பெருமை பொருந்திய கனிந்த நாவற்பழம் ஒன்றைக் கையிலேந்தி வந்து, தேக்கிலை வைத்துச் சேண் நாறு பரப்பில் பூக்கமழ் பொய்கை ஆடச் சென்றோன் - அதனை ஒரு தேக்கின் இலையில் வைத்துவிட்டு நெடுந்தூரம் நாறுமியல்புடைய பூக்கள் கமழும் பரப்பினையுடைய பொய்கையில் நீராடச் சென்றானாக; பனங்கனி பருமன் பற்றி உவமையாயது. ஓர் : அசை. நாறு பூ எனவும், பரப்பிற் பொய்கை யெனவும் இயையும். விருச்சிக னென்போன் நாவற்பழமொன்றை ஏந்தி வைத்துப் பொய்கையாடச் சென்றானாக என்க. 33-34. தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் - தீவினை யானது பயன் கொடுப்பத் தோற்றுதலின் யான் ஆண்டுத் தருக்கொடு சென்று, காலால் அந்தக் கருங்கனி சிதைத்தேன் - காலினாலே அந்த நாவற்பழத்தைச் சிதைத்தேன்; 35-42. உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் - உண்ணும் வேட்கையுடன் நீராடிப் போந்த விருச்சிக முனிவன், கண்டனன் என்னைக் கருங்கனிச் சிதைவுடன் - அப் பழத்தினைச் சிதைத்த திறத்தினோடு என்னைக் கண்ணுற்றனன், சீர்திகழ் நாவலில் திப்பிய மானது-சிறப்பு விளங்கும் நாவலிலே தெய்வத்தன்மை யுடைய தொன்று, ஈராறு ஆண்டில் ஒரு கனி தருவது - பன்னீராண்டிற்கு ஒரு பழம் கொடுப்பது, அக் கனி உண்டோர் - அப் பழத்தினை யுண்டோர், ஆறீராண்டு மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர்- பன்னீராண்டு மக்களுடலி லுண்டாகும் பசி நீங்கப்பெறுவர், பன்னீராண்டில் ஒரு நாள் அல்லது உண்ணா நோன்பினேன் - யானோ பன்னீராண்டில் ஒருநாள் உண்பதல்லது பிறநாளில் உண்ணாத நோன்பினையுடையேன், உண்கனி சிதைத்தாய்-அவ்வியல்புடைய யான் இன்று உண்டற்குரிய அக் கனியைக் கெடுத்தாய்; சிதைவு-சிதைத்து நின்றநிலை; சிதைந்தகனியோ டென்றுமாம். திப்பியம்-தெய்வலோகத்திலிருந்து உண்டாய தென்றுமாம். உண் கனி - திப்பியமான நாவல் தந்த கனியாகிய யான் உண்டற்குரிய கனியென்க 43-48. அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து-ஆகலின் விண்மீது செல்லும் மந்திரத்தை இழந்து, தந்தித் தீயால் தனித்துயர் உழந்து - யானைத்தீ யென்னும் பசிநோயால் ஒப்பற்ற துன்ப மடைந்து வருந்தி, முந் நாலாண்டில் முதிர்கனி ஈங்கு உண்ணும் நாள் உன் உறுபசி களைக என - இனி வரும் பன்னிரண்டாவ தாண்டில் முதிர்கின்ற நாவற்கனியினை நான் இங்கு உண்ணுகின்ற நாளில் நினது மிக்க பசியைப் போக்குவாய் என்று, அந்நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் - யான் அவ் வருங் கனி சிதைத்த அன்று அவ்விடத்தில் அம் முனிவனிட்ட சாபத்தை, இந்நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை - இளங்கொடி போலும் நீ இன்று கெடுத்தாய்; பன்னீராண்டு தான் பசித்திருக்கச் செய்த தீவினை பற்றி அவ்வகையே துயருழக்குமாறு சாபமிட்டனனென்க. சாபம் கெடுத்தனை யென்றியையும். போலும் : ஒப்பில் போலி. சாப முடிவெல்லையாகிய நாள் இந்நாள் என்றுமாம். 49-55. வாடு பசி உழந்து மாமுனி போயபின் - வாடுதற்கேது வாகிய பசியால் வருந்தி அம் முனிவன் சென்றபின், பாடு இமிழ் அருவிப் பயமலை ஒழிந்து-ஒலி முழங்குகின்ற அருவி களையுடைய பயனுடைய பொதியின் மலையை அடைவதை விடுத்து, என் அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற - மனத்தில் தோன்றியதை ஆராயாது செய்த என் செய்கைக்கு அஞ்சினவனாய் நீங்கிய, இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி-விளங்கும் ஒளியுடைய விஞ்சையன் துன்பமோ டடைந்து, ஆரணங்காகிய அருந்தவன் தன்னால் - அரிய தெய்வத் தன்மையுடைய அருந்தவனால், காரணம் இன்றியும் கடுநோய் உழந்தனை - காரணமில்லாமலும் கடிய நோயால் வருந் தலுற்றனை, வானூடு எழுக என - விசும்பின் மீது எழுவாயாக என்று கூற ; அலவலைச் செய்தி - ஆராயாது செய்த செய்தி; அலமருதலைச் செய்யும்செய்தி யென்றுமாம்; 1"அலவலையுடையை" என்புழி நச்சினார்க்கினியர் உரைத்தமை காண்க. விலகொளி எனப் பிரித்தலுமாம் ; விலகு ஒளி - விட்டு விளங்கும் ஒளி. காரண மின்றியே கனியைச் சிதைத்துக் கடுநோயுழந்தனை என விரித் துரைத்துக்கொள்க. 55-61. மந்திரம் மறந்தேன் - வானிற் செல்லும் மந்திரத்தை மறந்து விட்டேன், ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி - உடம்பினின்றும் உயிர் நீங்குதற்கேதுவாகிய வெப்பத்துடன் தோன்றி, வயிறுகாய் பெரும்பசி வருத்தும் என்றேற்கு - வயிற்றினைக் காய்கின்ற பெரும் பசியானது மிக வருத்தா நின்றது என்று கூறிய என்பொருட்டு, தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன ஆங்கவன் கொணரவும் ஆற்றேனாக-நல்லனவாகிய இனிய பழங்கள் கிழங்குகள் செழிய காய்கள் முதலியவற்றை அவன் கொணர்ந்து தரவும் எனது பசி தணியேனாக, நீங்கல் ஆற்றான் நெடுந்துயர் எய்தி ஆங்கவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன் - என்னைவிட்டு நீங்கலாற்றாதவனாகிய என் கணவன்மிக்க துயரத்தையடைந்து அவ்விடத்தில் எனக்கு அருளொடும் கூறுகின்றவன்; மறந்தேன் எனவும் வருத்தும் எனவும் கூறினேற்கு என்க. நல்லனவென்பதைக் கனி முதலிய ஒவ்வொன்றோடுங் கூட்டுக. ஆற்றேனாக - பசி தணியப்பெறேனாக. 62-68. சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் - நாவலந் தீவினுள் தமிழகத்திலே, கம்பம் இல்லாக் கழிபெருஞ் செல்வர் - நடுக்கமில்லாத மிக்க பெருஞ் செல்வத்தையுடையோர், ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி - வறியோர்கட்கு வேண்டியன கொடுக்கும் துணைவராகி, நோற்றோர் உறைவ தோர் நோன் நகர் உண்டால் - முற்பிறப்பில் தவம்புரிந்தோர் வாழ்கின்ற பெருமையுடைய நகரமொன்று உண்டு, பல நாளாயினும் நிலனொடு போகி - பலநாட்கழியினும் நீ நடந்து சென்று, அப்பதிப் புகுக என்று அவன் அருள் செய்ய-அந் நகரத்திற் சேர்வாய் என்று அவன் கூறியருள, இப் பதிப் புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன்-யான் அவன் சொல் வழியே இக் காவிரிப்பூம்பட்டினத்தை யடைந்து ஈண்டு வதிகின்றேன்; ஆற்றுதல்-கொடுத்தல்; 1"அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம்" என்பது காண்க. நோற்றோர் பெருஞ்செல்வர் துணையாகி உறைவதென்க. நோன்மை-ஈண்டுப் பெருமை, நிலனொடு போதல் - காலால் நடந்து செல்லுதல். 69-74. இந்திரகோடணை விழவணி வருநாள் - இந்திர கோடணை யாகிய அழகிய விழா நடைபெறும் நாளில், வந்து தோன்றி இம்மாநகர் மருங்கே - இப் பெரிய நகரின் மருங்கே அவ் விஞ்சையன் வந்து தோன்றி, என்னுறு பெரும்பசி கண்டனன் இரங்கி-என்னை வருத்துகின்ற பெரும் பசியினைக் கண்ணுற்று இரங்கி, பின்வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும்-பின்னர் எனது சாபம் கழிகின்ற ஆண்டுகளை எண்ணிக்கொண்டு அவன் நீங்குவான், தணிவில் வெம்பசி தவிர்த்தனை - என்னுடைய தணிதலில்லாத கொடிய பசியை நீக்கினாய், வணங்கினேன் - நின்னே வணக்கஞ் செய்தேன், மணிமேகலை என் வான்பதிப் படர்கேன்-மணிமேகலையே இனி எனது சிறந்த பதியின்கட் செல்வேன்; இந்திரகோடணையாகிய விழவு என்க; பல்வகை முழக்க முடைமை பற்றி விழா கோடணை யெனப்பட்டது; "இந்திர கோடணை விழாவணி விரும்பி" (5:94) என முன்னர் வந்தமையுங் காண்க. ஆண்டுதோறும் இந்திரவிழா நடக்கும்நாளில் வந்து கண்டு இரங்கிக் கழியும் என்க. பின்வரும் யாண்டு - சாபம் நிற்கும் பன்னீராண்டில் எஞ்சிய ஆண்டு. மணிமேகலை தவிர்த்தனை வணங்கினேன் படர்கேன் என்றாளென்க. மணிமேகலை: விளி. 75-83. துக்கம் துடைக்கும் துகள்அறு மாதவர் - துக்கத்தைப் போக்கும் குற்றமற்ற பெருந் தவத்தோர்கள் உறைகின்ற, சக்கரவாளக் கோட்டம் உண்டு-சக்கரவாளக் கோட்டம் என்பதொன்றுண்டு, ஆங்கதில் பலர் புகத் திறந்த பகுவாய் வாயில் - அதன்கண் பலரும் செல்லுமாறு திறக்கப்பட்டிருக் கின்ற பிளந்த வாய்போலும் வாயிலினை யுடைய, உலகவறவி ஒன்றுண்டு-உலகவறவி என்னும் ஊரம்பலம் ஒன்று உண்டு, அதனிடை-அதன்கண், ஊரூர் ஆங்கண் உறுபசி உழந்தோர்- ஊர்தோறும் மிக்க பசியால் வருந்தினோரும், ஆரும் இன்மையின் அரும்பிணி உற்றோர் - பாதுகாப்போர் ஒருவரும் இன்மையினால் அரிய நோயுழந்தோருமாய், இடுவோர்த் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் - அன்னமிடுவோரை ஆராய்ந்து இருக்கின்றவர் பலராவர், வடு வாழ் கூந்தல் அதன்பாற் போகென்று - வகிர் பொருந்திய குழலினை யுடையாய் அவ்விடம் செல்வாயாக என்று கூறி, ஆங்கவள் போகிய பின்னர்-அக் காயசண்டிகை சென்ற பின்பு; துக்கம் - பிறவித்துன்பம். ஊரூர் ஆங்கண் - பல ஊர்களிலும், ஆங்கு, ஆல்: அசைகள். வடு-வகிர். கூந்தல்: விளி. 83-90. ஆயிழை - மணிமேகலை, ஓங்கிய வீதியின் ஒருபுடை ஒதுங்கி-மாடங்கள் ஓங்கிய தெருவின்கண்ணே ஒரு புறமாக ஒதுங்கிச் சென்று, வலமுறை மும்முறை வந்தனை செய்து - வல முறையாக மூன்றுமுறை வந்து பணிந்து, அவ் வுலகவறவியின் ஒரு தனி ஏறி - அந்த உலக வறவியின்கண் தான் தனியே சென்று, பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும் - நகரிலுள்ளாருடன் பலரும் துதித்து வணங்கும், முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி-முதியவளாகிய சம்பாபதியின் கோயிலை மனம் மொழி மெய்களால் வணக்கஞ் செய்து, கந்துடை நெடு நிலைக் காரணம் காட்டிய தந்துணைப் பாவையைத் தான் தொழுது ஏத்தி - நெடிய நிலையினையுடைய தூணின் கணிருந்து பழவினையாகிய காரணங் காட்டும் பொருட்டு எழுதப் பட்ட தம் துணையாகிய கந்திற்பாவையை வணங்கித்துதித்து; மும்மையின் வணங்கி-மூன்றுமுறை வணங்கி யென்றுமாம். நெடு நிலையுடைக் கந்து என மாறுக. காட்டுவதற்கு மயனால் எழுதப்பட்டவென விரித்துரைக்க. "கந்துடை நெடுநிலைக் காரணங் காட்டிய, அந்தி லெழுதிய வற்புதப் பாவை" (7:94-5) என்றற் றொடக்கத்தனவாக இந் நூலுட் பிறாண்டு வருவன காண்க. மணிமேகலையுடன் மற்றையோரையும் உளப்படுத்தி, ‘தந்துணைப்பாவை' என்றார். 91-98. வெயில் சுட வெம்பிய வேய்கரி கானத்து - ஞாயிற்றின் கதிராற் சுடப்பட்டு வெம்பிய மூங்கில் கரிந்த காட்டின்கண், கருவி மாமழை தோன்றியது என்ன - தொகுதியாகிய முகில்கள் தோன்றினாற்போல; பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு - பசியானது உடலைத் தின்ன வருந்திய துன்பமுடைய மக்களுக்கு, அமுதசுரபியோடு ஆயிழை தோன்றி - மணிமேகலை அமுதசுரபியோடு தோன்றி, ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது-ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபியாகும் இது, யாவரும் வருக ஏற்போர் தாம் என - ஏற்போர் யாவரும் வருக என்று கூற, ஊண் ஒலி அரவத்துஒலிஎழுந்தன்றே யாணர்ப் பேரூர் அம்பலம் மருங்கென்-உணவுண்ணும் ஆரவாரமாகிய முழக்கம் எழுந்தது புதுவருவா யினையுடைய பேரூரின் அம்பலத்தின்கண் என்க. தின என்றது இலக்கணை வழக்கு. வருகவென அழைத்துச் சொரிய வந்துண்ணும் ஆரவாரம் என விரித்துரைக்க. மழை தோன்றிப் பொழிந்தாற்போல ஆயிழை தோன்றிச் சொரிய வென்க. ஒலியரவம்: ஒருபொரு ளிருசொல். அம்பல மருங்கு ஒலியெழுந்தன்றென்க. காயசண்டிகை யென்னுங் காரிகை, நோக்கி வணங்கி, ‘என்னோய் துடைப்பாய்' என்றலும், மணிமேலலை பெய்தலும், அவள் பசி நீங்கித் தொழுது உரைக்கும்; உரைப்பவள், ‘உலகவறவி யொன்றுண்டு; அதன்பாற் போக' என்று கூறிப் போகிய பின்னர், ஆயிழை ஒதுங்கி வந்து வந்தனை செய்து ஏறி வணங்கித் தொழுது ஏத்தித் தோன்றி, ஏற்போர் யாவரும் வருக' என, அம்பல மருங்கு ஒலியெழுந்தன்று என வினை முடிவு செய்க. உலகவறவி புக்க காதை முற்றிற்று. 18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை மணிமேகலை பிக்குணிக் கோலங்கொண்டு பாத்திரமேந்தி ஐயமேற்று உலக வறவியிற் சென்றாளென்பதைக் கேட்ட சித்திராபதி உளங்கொதித்து வெய்துயிர்த்துக் கலங்கி, "மணிமேகலையின் இச் செய்கையை ஒழிப்பேன்" என்று எண்ணிக்கொண்டு, கூத்தியல் மடந்தைய ரெல்லாரையும் பார்த்து, "கோவலன் இறந்தது கேட்டு மாதவி முனிவர்களின் பள்ளியை அடைந்து தாபதக் கோலம் பூண்டிருத்தல் நகைக்கத் தக்கது; யாம் கணவனுடன் இறக்கும் பத்தினிப் பெண்டிரல்லேம்; பாணன் இறந்தபொழுது அவனுடன் இறவாத யாழினைப் போல்வேம்; மற்றும் தாதினை யுண்டு பூவைத் துறக்கும் வண்டுபோல்குவம்; தாபதக் கோலந் தாங்குவது நமது குல வொழுக்கத்திற்கு ஒத்ததன்று; மாதவி மகள் மணிமேகலையின் பிக்குணிக்கோலத்தை மாற்றி அவள் கையிலேந்திய ஐயக் கடிஞையைப் பிச்சையேற்பார் பிறர் கையிற் போக்கி, அவளைப் பலநாளாக விரும்பியிருக்கும் உதயகுமரனால் அவனது தேரிலேற்று வித்து வருவேன்; அங்ஙனஞ் செய்யேனாயின், குடிக்குற்றப்பட்டு ஏழு செங்கலைத் தலைமேலேற்றிக் கொண்டு நாடக வரங்கைச் சுற்றிவந்து பழியோடிருக்கும் நாடக மகளிர்போல இனி நான் நாடகக் கணிகையர் மனைகட்குச் செல்லேனாகுக" என்று சூளுறவு செய்து, தன்னைச் சிலர் சூழ்ந்துவரச் சென்று உதயகுமரன் இருப்பிடத்தை யடைந்து, பளிங்கு மண்டபத்திலே தூமலர்ப் பள்ளியில் இருந்தோனைக் கண்டு துதித்து, மணிமேகலை உலகவறவியை அடைந்திருக்கிறாள் என்பதனை அவனுக்குக் குறிப்பிக்க, அவன் உவவனத்தில் மணிமேகலையைக் கண்டது முதல் நிகழ்ந்தவற்றைக் கூறி அவள்பாலுள்ள சிறப்புத் தன்மையைப் பாராட்டினன்; சித்திராபதி அவன் மனத்தை வேறுபடுத்தும் மொழிகள் பலவற்றைக் கூறி முயல அவன் உள்ளம் பிறழ்ந்து தேரேறி உலகவறவியை அடைந்து, பலர்க்கும் உணவளித்துக் கொண்டிருக்கும் மணிமேகலையைக் கண்டு அருகிற் சென்று, "நீ தாபதக் கோலம் பூண்டது யாது கருதி?" என்று வினாவினன்; மணிமேகலை "பழம் பிறப்பிற் கணவனாகவிருந்த இவனை வணங்குதல் முறையாகும்" என்று எண்ணி வணங்கி, “ பிறத்தலு மூத்தலும் பிணிப்பட் டிரங்கலும் இறத்தலு முடையது இடும்பைக் கொள்கலம் மக்கள் யாக்கை யிதுவென வுணர்ந்து மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்" என்றுரைத்து, வேற்றுருக்கொள்ள நினைத்து அவனை நீங்கிக் கோயிலினுள்ளே சென்று சம்பாபதியை வணங்கி, முன்பு மணிமேகலா தெய்வம் அருளிச் செய்த மந்திரத்தை யோதிக் காயசண்டிகை வடிவ முற்று அமுதசுரபியை ஏந்தி வெளியே வந்து நின்றாள். அவள் அங்ஙனம் வந்ததை அறியாத உதயகுமரன் "உள்ளே சென்ற மணிமேகலை சம்பாபதி கோயிலினுள்ளே ஒளித்துக்கொண்டாள்" என்று நினைந்து சென்று சம்பாபதியை வணங்கி "பிச்சைப் பாத்திரத்தைக் காயசண்டிகையின் கையிற் கொடுத்துவிட்டு ஒளித்துச் சென்ற மணிமேகலையை இங்குள்ள பாவைகளுள்ளே யான் எவ்வாறுணர்வேன்; நீ அவளை எனக்குக் காட்டாயாயின் பன்னாளாயினும் நான் இவ்விடத்திலேயே பாடு கிடப்பேன்; மணிமேகலையை இங்கே விடுத்து நான்மட்டும் போகேன்; உன் திருவடியைத் தொட்டேன்" என்று சூளுரைத்தான். ஆங்கது கேட்டாங் கரும்புண் அகவயின் தீத்துறு செங்கோல் சென்றுசுட் டாங்குக் கொதித்த உள்ளமொடு குரம்புகொண் டேறி விதுப்புறு நெஞ்சினள் வெய்துயிர்த்துக் கலங்கித் 5 தீர்ப்பலிவ் வறமெனச் சித்திரா பதிதான் கூத்தியன் மடந்தையர்க் கெல்லாங் கூறும் கோவலன் இறந்தபின் கொடுந்துய ரெய்தி மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது நகுதக் கன்றே நன்னெடும் பேரூர் 10 இதுதக் கென்போர்க் கெள்ளுரை யாயது காதலன் வீயக் கடுந்துய ரெய்திப் போதல் செய்யா உயிரொடு புலந்து நளியிரும் பொய்கை யாடுநர் போல முளியெரிப் புகூஉம் முதுகுடிப் பிறந்த 15 பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர்தம் கைத்தூண் வாழ்க்கை கடவிய மன்றே பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையில் யாழினம் போலும் இயல்பினம் அன்றியும் நறுந்தா துண்டு நயனில் காலை 20 வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம் வினையொழி காலைத் திருவின் செல்வி அனையே மாகி ஆடவர்த் துறப்பேம் தாபதக் கோலந் தாங்கின மென்பது யாவரும் நகூஉம் இயல்பின தன்றே 25 மாதவி ஈன்ற மணிமே கலைவல்லி போதவிழ் செல்வி பொருந்துதல் விரும்பிய உதய குமரனாம் உலகாள் வண்டின் சிதையா உள்ளஞ் செவ்விதின் அருந்தக் கைக்கொண் டாங்கவள் ஏந்திய கடிஞையைப் 30 பிச்சை மாக்கள் பிறர்கைக் காட்டி மற்றவன் றன்னால் மணிமே கலைதனைப் பொற்றேர்க் கொண்டு போதே னாகில் சுடுமண் ஏற்றி அரங்குசூழ் போகி வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர் 35 அனையே னாகி அரங்கக் கூத்தியர் மனையகம் புகாஅ மரபின னென்றே வஞ்சினஞ் சாற்றி நெஞ்சுபுகை உயிர்த்து வஞ்சக் கிளவி மாண்பொடு தேர்ந்து செறிவளை நல்லார் சிலர்புறஞ் சூழக் 40 குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள் கடுந்தேர் வீதி காலிற் போகி இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி அரவ வண்டொடு தேனினம் ஆர்க்கும் தருமணன் ஞெமிரிய திருநா றொருசிறைப் 45 பவழத் தூணத்துப் பசும்பொற் செஞ்சுவர்த் திகழொளி நித்திலச் சித்திர விதானத்து விளங்கொளி பரந்த பளிங்குசெய் மண்டபத்துத் துளங்குமா னூர்தித் தூமலர்ப் பள்ளி வெண்டிரை விரிந்த வெண்ணிறச் சாமரை 50 கொண்டிரு மருங்குங் கோதையர் வீச இருந்தோன் திருந்தடி பொருந்திநின் றேத்திப் திருந்தெயி றிலங்கச் செவ்வியி னக்கவன் மாதவி மணிமே கலையுடன் எய்திய தாபதக் கோலந் தவறின் றோவென 55 அரிதுபெறு சிறப்பிற் குருகுகரு உயிர்ப்ப ஒருதனி யோங்கிய திருமணிக் காஞ்சி பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய நாடகம் விரும்ப நன்னலங் கவினிக் காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது 60 உதய குமரனெனும் ஒருவண் டுணீஇய விரைவொடு வந்தேன் வியன்பெரு மூதூர் பாழ்மம் பறந்தலை அம்பலத் தாயது வாழ்கநின் கண்ணி வாய்வாள் வேந்தென ஓங்கிய பௌவத் துடைகலப் பட்டோன் 65 வான்புணை பெற்றென மற்றவட் குரைப்போன் மேவிய பளிங்கின் விருந்திற் பாவையிஃது ஓவியச் செய்தியென் றொழிவேன் முன்னர்க் காந்தளஞ் செங்கை தளைபிணி விடாஅ ஏந்திள வனமுலை இறைநெரித் ததூஉம் 70 ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த முத்துக்கூர்த் தன்ன முள்ளெயிற் றமுதம் அருந்தே மாந்த ஆருயிர் தளிர்ப்ப விருந்தின் மூரல் அரும்பிய தூஉம் மாயிதழ்க் குவளை மலர்புறத் தோட்டிக் 75 காய்வேல் வென்ற கருங்கயல் நெடுங்கண் அறிவுபிறி தாகிய தாயிழை தனக்கெனச் செவியகம் புகூஉச் சென்ற செவ்வியும் பளிங்குபுறத் தெறிந்த பவளப் பாவையென் உளங்கொண் டொளித்தாள் உயிர்க்காப் பிட்டென்று 80 இடையிருள் யாமத் திருந்தேன் முன்னர்ப் பொன்றிகழ் மேனி ஒருத்தி தோன்றிச் செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த அங்கவள் தன்றிறம் அயர்ப்பா யென்றனள் தெய்வங் கொல்லோ திப்பியங் கொல்லோ 85 எய்யா மையலேன் யானென் றவன்சொலச் சித்திரா பதிதான் சிறுநகை எய்தி அத்திறம் விடுவாய் அரசிளங் குரிசில் காமக் கள்ளாட் டிடைமயக் குற்றன தேவர்க் காயினுஞ் சிலவோ செப்பின் 90 மாதவன் மடந்தைக்கு வருந்துதுய ரெய்தி ஆயிரஞ் செங்கண் அமரர்கோன் பெற்றதும் மேருக் குன்றத் தூறுநீர்ச் சரவணத்து அருந்திறன் முனிவர்க் காரணங் காகிய பெரும்பெயர்ப் பெண்டிர் பின்புளம் போக்கிய 95 அங்கி மனையாள் அவரவர் வடிவாய்த் தங்கா வேட்கை தனையவள் தணித்ததூஉம் கேட்டு மறிதியோ வாட்டிறற் குரிசில் கன்னிக் காவலுங் கடியிற் காவலும் தன்னுறு கணவன் சாவுறிற் காவலும் 100 நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப் பெண்டிர்தங் குடியிற் பிறந்தாள் அல்லள் நாடவர் காண நல்லரங் கேறி ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச் 105 சுருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச் செருக்கயல் நெடுங்கட் சுருக்குவலைப் படுத்துக் கண்டோர் நெஞ்சங் கொண்டகம் புக்குப் பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி வண்டிற் றுறக்குங் கொண்டி மகளிரைப் 110 பான்மையிற் பிணித்துப் படிற்றுரை யடக்குதல் கோன்முறை யன்றோ குமரற் கென்றலும் உதய குமரன் உள்ளம் பிறழ்ந்து விரைபரி நெடுந்தேர் மேற்சென் றேறி ஆயிழை யிருந்த அம்பல மெய்திக் 115 காடமர் செல்வி கடிப்பசி களைய ஓடுகைக் கொண்டுநின் றூட்டுநள் போலத் தீப்பசி மாக்கட்குச் செழுஞ்சோ றீத்துப் பாத்திரம் ஏந்திய பாவையைக் காண்டலும் இடங்கழி காமமொ டடங்கா னாகி 120 உடம்போ டென்றன் உள்ளகம் புகுந்தென் நெஞ்சங் கவர்ந்த வஞ்சக் கள்வி நோற்றூண் வாழ்க்கையின் நொசிதவந் தாங்கி ஏற்றூண் விரும்பிய காரணம் என்னெனத் தானே தமியள் நின்றோள் முன்னர் 125 யானே கேட்டல் இயல்பெனச் சென்று நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப என்னமர் காதல னிராகுலன் ஈங்கிவன் தன்னடி தொழுதலும் தகவென வணங்கி 130 அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும் இறைவளை முன்கை ஈங்கிவன் பற்றினும் தொன்று காதலன் சொல்லெதிர் மறுத்தல் நன்றி யன்றென நடுங்கினள் மயங்கிக் கேட்டது மொழிவேன் கேள்வி யாளரில் 135 தோட்ட செவியைநீ யாகுவை யாமெனில் பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட் டிரங்கலும் இறத்தலு முடைய திடும்பைக் கொள்கலம் மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன் 140 மண்டமர் முருக்குங் களிறனை யார்க்குப் பெண்டிர் கூறும் பேரறி வுண்டோ கேட்டனை யாயின் வேட்டது செய்கென வாட்டிறற் குரிசிலை மடக்கொடி நீங்கி முத்தை முதல்வி முதியாள் இருந்த 145 குச்சரக் குடிகை தன்னகம் புக்காங்கு ஆடவர் செய்தி அறிகுநர் யாரெனத் தோடலர் கோதையைத் தொழுதனள் ஏத்தி மாய விஞ்சை மந்திரம் ஓதிக் காயசண் டிகையெனுங் காரிகை வடிவாய் 150 மணிமே கலைதான் வந்து தோன்ற அணிமலர்த் தாரோன் அவள்பாற் புக்குக் குச்சரக் குடிகைக் குமரியை மரீஇப் பிச்சைப் பாத்திரம் பெரும்பசி உழந்த காயசண் டிகைதன் கையிற் காட்டி 155 மாயையின் ஒளித்த மணிமே கலைதனை ஈங்கிம் மண்ணீட் டியாரென உணர்கேன் ஆங்கவள் இவளென் றருளா யாயிடின் பன்னா ளாயினும் பாடு கிடப்பேன் இன்னுங் கேளாய் இமையோர் பாவாய் 160 பவளச் செவ்வாய்த் தவளவாள் நகையும் அஞ்சனஞ் சேராச் செங்கயல் நெடுங்கணும் முறிந்துகடை நெரிய வளைந்தசிலைப் புருவமும் குவிமுட் கருவியும் கோணமும் கூர்நுனைக் கவைமுட் கருவியும் ஆகிக் கடிகொளக் 165 கல்விப் பாகரிற் காப்புவலை யோட்டி வல்வா யாழின் மெல்லிதின் விளங்க முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப் புதுக்கோள் யானை வேட்டம் வாய்த்தென முதியாள் உன்றன் கோட்டம் புகுந்த 170 மதிவாள் முகத்து மணிமே கலைதனை ஒழியப் போகேன் உன்னடி தொட்டேன் இதுகுறை யென்றனன் இறைமகன் றானென். உரை 1-9. ஆங்கது கேட்டு ஆங்கு - மணிமேகலை அறத்தோர் கோலம் பூண்டு பிச்சையேற்று அனைவருக்கும் உணவளிப் பதைக் கேட்டு அப்பொழுதே, அரும்புண் அகவயின் - அரிய புண்ணின் உள்ளே, தீத்துறு செங்கோல் சென்று சுட்டாங்கு - தீயின்கண் பழுக்கக் காய்தலுற்ற செவ்விய கோலானது சென்று சுட்டாற்போல, கொதித்த உள்ளமொடு - கொதிப் புற்ற உள்ளத்துடன், குரம்பு கொண்டு ஏறி - வரம்பு கடந்து எழுந்து, விதுப்புறு நெஞ்சினள் வெய்துயிர்த்துக் கலங்கி - நடுக்க மெய்திய மனத்தளாய்ச் சுடு மூச்செறிந்து மயங்கி, தீர்ப்பல் இவ் அறமெனச் சித்திராதிபதிதான் கூத்தியல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும்-சித்திராபதியானவள் மணிமேகலை கொண்ட இவ்வறத்தினை ஒழித்து விடுவேன் என எண்ணி நாடகக் கணிகையர் அனைவர்க்கும் கூறுவாள்; தீ துறு - தீயானது பற்றிய, கோல் சுட்டாங்குத் துன்பத்தாற் கொதித்த உள்ள மென்க. குரம்பு - வரம்பு; கொண்டு - தாண்டி யென்னும் பொருட்டு; 1"குரம்பெழுந்து குற்றங்கொண் டேறார்" என்பது காண்க. விதுப்பு-விரைவுமாம். மேல் வருவன சித்திராபதி கூற்று. 7-15. கோவலன் இறந்தபின் கொடுந்துயர் எய்தி மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் - மாதவி தன் காதலனாகிய கோவலன் கொலையுண்ட பின்னர்க் கொடிய துன்பத்தையடைந்து அறவணவடிகள் உறைவிடத்தை அடைந்ததும், நகுதக்கன்றே நல்நெடும் பேரூர் - மிகச் சிறந்த பேரூரின்கண் சிரிக்கத் தக்கதாயிற்று, இது தக்கு என்போர்க்கு எள்ளுவரை ஆயது - இவ்வுரை தகுதியுள்ளதென்று கூறும் அறிஞர்கட்கு இகழுரை யாகியது, காதலன் வீயக் கடுந்துயர் எய்தி-கணவனிறக்க மிகுந்த துயரத்தை யடைந்து, போதல் செய்யா உயிரோடு புலந்து - நீங்காத உயிருடன் வெறுப்புக் கொண்டு, நளிஇரும் பொய்கை ஆடுநர்போல - குளிர்ந்த நீரினையுடைய பெரிய குளத்தின்கட் சென்று நீராடுவார் போல, முளி எரி புகூஉம் முதுகுடிப்பிறந்த பத்தினிப் பெண்டிர் அல்லேம்-விளக்க மிக்க தீயிடைக் குளிக்கும் பழங்குடியிற் பிறந்த கற்புடை மகளி ரல்லேம் யாம்; கோவலன் கொலையுண்டமை கேட்டு மாதவி அறவணவடி களை யடைந்து துறவு பூண்டதனை, முன்னர் ஊரலருரைத்த காதையிற் கூறினமையானும், 1"போதியின்கீழ் மாதவர் முன் புண்ணியதானம் புரிந்த, மாதவி தன்றுறவுங் கேட்டாயோ தோழீ" என்பதனாலும் அறிக. பேரூர்-பேரூரில். இது-மணிமேகலை பிக்குணிக் கோலம் பூண்டு பிச்சை யேற்கின்றாள் என்னும் உரை. தக்கு-தக்கது: விகாரம். தக்கென்போர் - தகவுடைமையை அறிந்து கூறும் அறிஞர். முளியெரி - காய்ந்த விறகிற் பற்றிய தீ யென்றுமாம். 15-24. பலர் தம் கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே - பலருடைய கையதாகிய உணவையுண்டு வாழ்தலாகிய உரிமையையுடையேம்; பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மை இல் யாழினம் போலும் இயல்பினம்-பாணனிறந்தவிடத்து உடனிறக்குந்தன்மையில்லாத யாழைப் போன்ற இயல்புடை யோம்: அன்றியும்-அஃதன்றியும், நறுந்தாது உண்டு நயன் இல் காலை-மணமுள்ள மகரந்தத்தை நுகர்ந்து பசையாகிய தேன் இல்லாதபொழுது, வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம் - வறிதாகிய பூவை விட்டு நீங்கும் வண்டினையும் போல்வேம்; வினை ஒழி காலைத் திருவின் செல்வி அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம்-மற்றும் நல்வினை நீங்கும் காலத்துத் திருமகளைப் போன்றேம் ஆகி ஆடவரை விட்டு நீங்குவேம்; தாபதக் கோலம் தாங்கினம் என்பது - பிக்குணிக் கோலம் பூண்டேம் என்பது, யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே - யாவரும் நகைக்கும் இயல்பையுடைய தல்லவோ ; நாடகக் கணிகையாதலின் பாண்மகனையும் யாழையும் உவமை கூறினாளென்க. நயன் இல் காலை - ஆடவரிடத்துச் செல்வமில்லாத காலத்தில் என்றுமாம். "வண்டிற் றுறக்குங் கொண்டி மகளிரை" என இக் காதையிற் பின்பும் கூறப் பட்டுள்ளது; மதுரைக் காஞ்சி யுள்ளும் 1"இளம்பல் செல்வர் வளந்தப வாங்கி, நுண்டா துண்டு வறும்பூத் துறக்கும், மென்சிறை வண்டின மான" என இவ் வுவமை வந்துள்ளமை அறியற்பாலது. வினை - நல்வினை. திருவின் செல்வி-திருவாகிய செல்வி. நல்வினை யுலந்த பொழுது திருமகள் நீங்குவது போலும் என்னும் இவ் வுவமை 2"தவந்தீர் மருங்கிற் றிருமகள் போலப், பயந்தீர் மருங்கிற் பற்றுவிட் டொரீஇ" எனப் பெருங் கதையுள் வருதல்அறிந்து இன்புறற்பாலது. தாபதக்கோலம் - தவக்கோலம். 25-32. மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி - மாதவி பெற்ற மணிமேகலையாகிய பூங்கொடி, போதவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய-பூக்கும் பருவ மடைதலை விரும்பிய, உதயகுமரனாம் உலகாள் வண்டின்-உதயகுமரன் என்னும் உலகினையாள் கின்ற வண்டினது, சிதையா உள்ளம் செவ்விதின் அருந்த-வேறொன்றாலும் அழியாத மனமானது நன்றாக அருந்து மாறு, கைக்கொண்டு - மணிமேகலையைக் கையகப்படுத்து, ஆங்கவள் ஏந்திய கடிஞையை - அவள் கையில் ஏந்திய ஓட்டினை, பிச்சைமாக்கள் பிறர்கைக் காட்டி - ஏற்றுண்போராகிய பிற மக்களின் கையிலே காட்டி, மற்றவன் தன்னால் - அவ்வுதயகுமரனால், மணிமேகலைதனைப் பொற்றேர்க் கொண்டுபோதேன் ஆகில் - அவளைப் பொற்றேரின்மீது ஏற்றிக் கொண்டு வாரேனாயின் ; போதவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய என்பதற்குப் பூக்கும் பருவத்தில் அதனை யடைதற்கு விரும்பிய என்றுரைத் தலுமாம். இக்காதையுட் பின்னரும் உதயகுமரன் வண்டாக உருவகிக்கப்படுகின்றனன். தலைவன் மகளிர் நலத்தை யுண்டு துறத்தற்கு வண்டினை உவமை கூறுதலுமுண்டு; 3"பெண்டிர் நலம்வௌவித் தண்சாரற்றாதுண்ணும், வண்டிற் றுறப்பான் மலை" என்பது காண்க. பிறர் கைக்காட்டி - பிறரிடம் பறித்துக் கொடுத்தென்றபடி. 33-42. சுடுமண் ஏற்றி அரங்கு சூழ்போகி - செங்கற்களைத் தலை மீதேற்றி அரங்கினைச் சுற்றி வந்து, வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோ ரனையேன் ஆகி - குற்றத்துடன் கூடி வாழும் மகளிரைப் போன்றவளாகி, அரங்கக் கூத்தியர் மனையகம் புகாஅ மரபினன் என்றே-அரங்கின்கண் ஆடுகின்ற நாடக மகளிருடைய இல்லத்தின் கண் நுழையாத முறைமை யளாவேன் என்று, வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை உயிர்த்து-வஞ்சினங்கூறி நெஞ்சு புகையெழப் பெருமூச் செறிந்து, வஞ்சக்கிளவி மாண்பொடு தேர்ந்து - வஞ்சம் பொருந்திய சொல்லை நன்கு ஆராய்ந்து, செறிவளை நல்லார் சிலர் புறம் சூழ - நெருங்கிய வளையல்களை யணிந்த பொது மகளிர் சிலர் புறத்தே சூழ, குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள் - சிறு வியர்வைநீர் அரும்பிய அழகு பொருந்திய ஒள்ளிய முகத்தையுடையளாய், கடுந்தேர் வீதி காலிற்போகி- விரைந்த செலவினையுடைய தேர்கள் செல்லும் வீதியில் நடந்து சென்று, இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி - அரசிளங் குமரன் இருப்பிடத்தை அடைந்து; ஏற்றி - ஏற்றப்பட்டு என்றுமாம். பதியிலாரிற் குடிக்குற்றப் பட்டாரை ஏழு செங்கற் சுமத்தி அரங்கு சூழ்வித்துப் புறத்து விடுதல் மரபாகலின், சித்திராபதி இங்ஙனம் வஞ்சினஞ் சாற்றின ளென்க ; 'ய ங்குஞ் சூழ்போகி' எனப் பாடங் கொண்டு, ஊரைச் சுற்றி வந்து என்றுரைத்தலுமாம்; 1"சுடும ணேறா வடுநீங்கு சிறப்பின்" என்பதும் அதன் உரைகளும் காண்க. மடந்தையர் தம்மோர்; ஓர்: அசை. மரபினன்: அன்விகுதி, தன்மைக்கண் வந்தது; 'மரபினளன்றென' என்பதும் பாடம் வஞ்சக்கிளவி - மணிமேகலையை உதயகுமரன் வயமாக்கற்கேற்ற சொல். கோல முகத்து வியர்பொடித்தவளாய் எனப் பிரித்துக் கூட்டுதலுமாம். 43-51. அரவ வண்டொடு தேனினம் ஆர்க்கும்-ஒலிக்கின்ற வண்டுகளுடன் தேனினமும் ஆரவாரிக்கும், தருமணல் ஞெமிரிய திருநாறு ஒரு சிறை - கொண்டுவந்திட்ட மணல் பரந்த முன்றிலையுடைய அழகு தோன்றும் ஒரு பக்கத்தில், பவழத் தூணத்துப் பசும்பொன் செஞ்சுவர்-பவளங்களாற் செய்த தூண்களையும் பசிய பொன்னாலாகிய செவ்விய சுவர்களையும், திகழ் ஒளி நித்திலச் சித்திர விதானத்து - ஒளி விளங்கும் முத்துக்களாகிய மேற்கட்டியையும் உடைய, விளங்கு ஒளிப் பரந்த பளிங்கு செய் மண்டபத்து-விளங்கு கின்ற பேரொளி பரவிய பளிங்கு மண்டபத்தில், துளங்குமான் ஊர்தித் தூமலர்ப் பள்ளி - ஒளி அசைகின்ற அரியணை யாகிய நறு மலர் இருக்கையில், வெண்திரை விரிந்த வெண்ணிறச் சாமரை - வெள்ளிய அலைகள் போல விரிந்த வெண்ணிறமுடைய கவரிகளை, கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச - மகளிர் கொண்டு இரு பக்கமும் வீச, இருந்தோன் திருந்தடி பொருந்தி நின்று ஏத்தி - அமர்ந்திருந்த உதயகுமரனுடைய திருந்திய அடிகளை வணங்கி நின்று ஏத்த; ஆர்க்கும் ஒரு சிறை யென்க; ஆர்க்கும் என்றதனால் மணமுடைமை பெறப்பட்டது. மணல் பரந்த முற்றத்தை யுடையவென விரித்துரைத்துக் கொள்க ; 1"தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து" என்பது காண்க. நாறுதல்-தோன்றுதல். முத்தாலாகிய சல்லியையும் தூக்கினையும் உடைய சித்திர விதானம் என்க; 2"ஓவிய விதானத் துரைபெறு நித்திலத்து, மாலைத் தாமம் வளையுட னாற்றி" என்றார் இளங்கோவடிகளும். மான்-அரிமான். ஊர்தி-ஏறுதற்கிடமாகவுள்ள ஆதனம் என்னும் பொருள் குறித்து நின்றது. மண்டபத்துப் பள்ளியில் இருந்தோன் என்க. ஏத்தி - ஏத்தவெனத் திரிக்க. 52-54. திருந்து எயிறு இலங்கச் செவ்வியின் நக்கு அவன் - உதயகுமரன் அழகிய பற்கள் விளங்குமாறு செவ்வையாகச் சிரித்து, மாதவி மணிமேகலையுடன் எய்திய - மாதவி மணிமேகலையுடன் கொண்ட, தாபதக் கோலம் தவறின்றோ என - தவ வேடம் தவறின்றி யுளதோ வென்று கேட்க ; தாபதக்கோலம்-தவவேடம்; என்றது பிக்குணிக் கோலத்தை. 55-63. அரிது பெறு சிறப்பில் குருகு கரு வுயிர்ப்ப - அரிதிற் பெற்ற சிறப்பினால் பறவைகள் ஈனும் வண்ணம், ஒரு தனி ஓங்கிய திருமணிக் காஞ்சி - ஒப்பற்றுயர்ந்த அழகிய கரிய காஞ்சி மரம், பாடல் சால் சிறப்பில் பரதத்து ஓங்கிய-பாடல் சான்ற சிறப்பினையுடைய பரத கண்டத்தில் உயர்ந்த, நாடகம் விரும்ப நன்னலம் கவினி - நாடுகளினிடம் விரும்புமாறு அழகிய நலங்கள் நிறைந்து. காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது-விரும்பப்படும் செவ்வியையுடைய. நறிய மலர் விரியப் பெற்றது; உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய - அதனை உதயகுமரனாகிய ஒப்பற்ற வண்டு உண்ணும் பொருட்டு, விரை வொடு வந்தேன்-விரைந்து வந்தேன்; வியன்பெரு மூதூர்ப் பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்தாயது - அது மிக்க பெருமையை யுடைய இம் மூதூரின் கண்ணே பாழிடமாகிய புறங் காட்டைச் சார்ந்த உலக வறவியில் உள்ளது ; வாழ்க நின் கண்ணி வாய்வாள் வேந்து என-கூரிய வாய் பொருந்திய வாளினை யுடைய மன்னவ நின் கண்ணி வாழ்வதாக என வுரைப்ப; உதயகுமரன் அவைக் களத்திருந்தா னாகலின் சித்திராபதி தான் கூறுவதனைக் குறிப்பி னுணர்ந்துகொள்ளுமாறு சிலேடையாற் கூறுவாளாயினள். காஞ்சிமரத்தைப் புனைந்துரைப்பது போன்ற இதன்கண், ‘குருகு' என்பது மாதவியையும், 'மணிக்காஞ்சி' என்பது மணிமேகலையையும் குறித்து நின்றன. மாதவிபெற ஓங்கிய மணிமேகலை நாடகம் விரும்பப் பருவ மெய்தினளென்க. குருகு-குருக்கத்தி ; இது மாதவியெனவும் படும். காஞ்சி - மேகலையாதலைத் திவாகரம் முதலியவற்றானறிக, நாடகம் - நாட்டினிடம், நாடகக்கலை. நாடகம் இவளாற் சிறப்பெய்து மாகலின் "நாடகம் விரும்ப" என்றார்; 1"நாடக மேத்து நாடகக் கணிகை" என வருதல் காண்க. நலம் கவினி - நலம் நிறைந்து என்னும் பொருட்டு. காமர்-விருப்பம். ‘உதயகுமரனெனு மொருவண்டு' என்றது முன்னிலைப் புறமொழி. பறந்தலை - புறங்காடு. குருகு கருவுயிர்ப்ப ஓங்கிய காஞ்சி, நலங் கவினிக் கடிமல ரவிழ்ந்தது; அதனை உதயகுமரனாகிய வண்டு உண்ணும் பொருட்டு வந்தேன்; அக் காஞ்சி அம்பலத்தாயது என்க. கண்ணி-தலையிற் சூடும் மாலை. நின் கண்ணி வாழ்க வென்றல் மரபு. 64-65. ஓங்கிய பௌவத்து உடைகலப் பட்டோன் வான்புணை பெற்றென - பெரிய கடலிலே கப்பல் உடையப்பட்டவன் சிறந்த தெப்பத்தைப் பெற்றாற்போலக் கருதி, மற்று அவட்கு உரைப்போன்- சித்திராபதிக்குக் கூறுபவனாய். உடைகலப் பட்டோன் - கலம் உடையப் பட்டோன் என மாறுக. "உடைகலப் பட்டாங் கொழிந்தோர் தம்முடன்" (16:20) என முன் வந்தமையுங் காண்க. 66-73. மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது ஓவியச் செய்தி யென்று ஒழிவேன் முன்னர்-பளிக்கறையின்கண் பொருந்திய புதுமையினை யுடைய பாவையாகிய இது சித்திரச் செய்கை என்று நீங்குவேன் முன்னே, காந்தளஞ் செங்கை தளைபிணி விடாஅ ஏந்து இளவனமுலை இறை நெரித்ததூஉம் - காந்தள் மலர் போன்ற சிவந்த கைகள் பிணித்த பிணிப்பு விடாவாய் ஏந்திய இளைய அழகிய முலையை இறையளவு நெரித்த செய்கையும், ஒத்தொளிர் . பவளத்து உள் ஒளி சிறந்த - பவளத்தை யொத்து ஒளிருகின்ற வாயினுள்ளே ஒளிமிக்க, முத்துக் கூர்த்தன்ன முள்எயிற்று அமுதம் - முத்துக்கள் கூர்மையுற்றாலன்ன கூரிய பற்களின் கண் ஊறுகின்ற அமுதினை, அருந்த ஏமாந்த ஆருயிர் தளிர்ப்ப-அருந்து தற்கு ஆசைப்பட்ட அரிய உயிரானது தளிர்க்குமாறு, விருந்தின் மூரல் அரும்பியதூஉம் - புதிய புன்முறுவல் பூத்ததுவும் ; முன்பு மணிமேகலை தன்னைக் கண்டு அஞ்சிப் பளிக் கறையிற் புகுந்த பொழுது அவளை ஓவியமென்று தான் எண்ணியிருந்தானாக உதயகுமரன் கூறினானென்க. விடா அ:எதிர்மறை வினையெச்சமுற்று. இறை - சிறிது. அருந்த என்னும் பெயரெச்சத் தகரம் தொக்கது; "அருந்தே மாந்த வாருயிர் முதல்வனை" (14 : 68) என முன்னரும் இங்ஙனம் போந்தது. 74-80. மாயிதழ்க் குவளை மலர் புறத்து ஓட்டிக் காய்வேல் வென்ற கருங்கயல் நெடுங்கண் - கரிய இதழ்களையுடைய குவளை மலர்களைப் புறத்தே ஓடச்செய்து காய்கின்ற வேலினை வென்ற கரிய கயல்மீனைப் போன்ற நீண்ட கண்கள், அறிவு பிறிதாகியது ஆயிழை தனக்கெனச் செவியகம் புகூஉச் சென்ற செவ்வியும் - மணிமேகலைக்கு அறிவு வேறுபட்டதென்று அறிவிக்குமாறு காதினிடம் ஓடிச் சென்ற அழகும், பளிங்கு புறத்தெறிந்த பவளப்பாவை என் உளம் கொண்டு ஒளித்தாள் உயிர்க் காப்பிட்டு என்று-ஆகிய இவற்றைக்கொண்டு பளிக்கறையின் புறத்தே தோன்றிய பவளப்பாவை உயிரைக் காத்தல் செய்து என் உளத்தில் ஒளித்தாள் என்று, இடையிருள் யாமத்து இருந்தேன் முன்னர்- இருளையுடைய இடையாமத்தில் துயிலாதிருந் தேன் முன்பு; ஓட்டி வென்ற கண், கயல் நெடுங்கண் என்க. செவியில் உரைக்கப் புக்கதுபோற் சென்ற வென்க. கண்ணின் இயல்பாகிய நீட்சியையோ அல்லது மீட்சியையோ இங்ஙனங் கற்பித்துக் கூறுதலால் இதுதற்குறிப்பேற்றம். கொண்டு - நெரித்ததூஉம் அரும்பியதூஉம் செவ்வியுமாகிய இவற்றைக் கொண்டு, பாவை கொண்டு உயிர்க்காப்பிட்டு என் உளத்து ஒளித்தாள் என்க. இருந்தேன் முன்னர் - துயிலாதிருந்தேனுடைய முன்பு; "பொங்கு மெல்லமளியிற் பொருந்தா திருந்தோன், முன்னர்த் தோன்றி" (7: 6-7) என முன்பு வந்திருத்தல் காண்க. இருந்தேன் ; அங்ஙன மிருந்த என் முன்னர் என வேறறுத்துரைக்க. 81-85. பொன்திகழ் மேனி ஒருத்தி தோன்றி - பொன்போல விளங்குகின்ற திருமேனியையுடையஒருத்திதோன்றி, செங்கோல் காட்டி - செங்கோன்மையை அறிவுறுத்தி, செய்தவம் புரிந்த அங்கவள் தன்திறம் அயர்ப்பாய் என்றனள் - தவநெறியிற் செல்லும் மணிமேகலையின்மீது கொண்ட எண்ணத்தை மறப்பாய் என்று கூறினள், தெய்வங் கொல்லோ திப்பியங் கொல்லோ. எய்யா மையலேன் யான் என்று அவன் சொல-அங்ஙனங் கூறியது ஒரு தெய்வந்தானோ அன்றி வானவர் உலகில் தோன்றிய வேறு பொருளோ இன்னதென அறியாத மயக்கமுடையேன் என்று உதயகுமரன் கூற; ஒருத்தி என்றது மணிமேகலா தெய்வத்தை- எய்யாமை - அறியாமை: உரிச்சொல், திப்பியங் கொல்லோ - வியப்பினை விளைவிக்கும் வேறொன்றோ என்றுமாம். 86-89. சித்திராபதி தான் சிறு நகை எய்தி - சித்திராபதி சிறுநகையடைந்து, அத்திறம் விடுவாய் அரசிளங்குரிசில்-இளவரசர் பெருந்தகையே நின் கனவிற்றோன்றி ஒருத்தி கூறியதனை விடுவாயாக, காமக் கள்ளாட்டிடை மயக்குற்றன தேவர்க்காயினும் சிலவோ செப்பின்-கூறுங்கால் வானவர் களிடத்தும் காமக் கள்ளாட்டின் கண் மயங்கிச் செய்த செய்கைகள் சிலவாமோ; காமக் கள்ளாட்டிடை - காமமாகிய கள்ளை உண்டவழி. அறிவை மயக்குதலானும், வெளிப்படுந்தோறும் விருப்பத்தை யுண்டாக்குதலானும் காமம் கள்ளினை யொப்பதாயிற்று; 1"களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம், வெளிப்படுந் தோறு மினிது" என்பது காண்க. தேவர்களும் மயங்கிச் செய்தன பல வென்றபடி. 90-98. மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி ஆயிரஞ் செங்கண் அமரர்கோன் பெற்றதும் - கௌதம முனிவர் மனைவியாகிய அகலிகையின் மேலுள்ள வேட்கையால் மிக்க துயருழந்து தேவர்க்கரசனாகிய இந்திரன் அம்முனிவரால் ஆயிரஞ் செங்கண் அடைந்த செய்தியும், மேருக் குன்றத்து ஊருநீர்ச் சரவணத்து-இமயமலையிலுள்ள பரந்த நீரினையுடைய சரவணப் பொய்கையில், அருந்திறல் முனிவர்க்கு ஆரணங்காகிய - அரிய வலி பொருந்திய முனிவர் எழுவர்க்கு அரிய அணங்குபோல்வாராகிய, பெரும் பெயர்ப் பெண்டிர் பின்பு உளம் போக்கிய - பெரிய புகழையுடைய அவர் மனைவியர் பின்னே உளத்தைச் செலுத்திய, அங்கி மனையாள் - அக்கினிதேவன் மனைவி, அவரவர் வடிவாய்த் தாங்கா வேட்கைதனை அவண் தணித்ததூஉம் - அம் முனிவர் மனைவியரின் வடிவத்தைத் தனித்தனி கொண்டு அவனது நீங்காத வேட்கையைத் தணித்த செய்தியும், கேட்டும் அறிதியோ வாட்டிறல் குரிசில்- கேட்டும் அறியாயோ வாள்வலியுடைய அரசர் பெருந்தகையே; துயரெய்தி அவளைச் சேர்ந்து அதனாற் பெற்றதும் என விரித்துரைத்துக் கொள்க. இந்திரன் கௌதம முனிவர் மனைவி யாகிய அகலிகையை விரும்பிச் சேர்ந்து அம் முனிவரிட்ட சாபத்தால் ஆயிரங்கண் பெற்றான் என்பது புராணக்கதை. மேரு - இமயம் ; 1"இமையவில் வாங்கிய" என்பது காண்க. ஊர்தல் - பரத்தல். சரவணம் - தருப்பைக் காடு ; அதனை யுடையதொரு பொய்கையை உணர்த்திற்று. முன்னொரு காலத்தில் அங்கிவானவன் எழுமுனிவர் மனைவியரை விரும்பி அவ்வேதனை பொறுக்கலாற்றாது காட்டிற்குச்சென்றபொழுது, அவன் எண்ணத்தை யறிந்த அவன் மனைவியாகிய சுவாகாதேவி எழு முனிவர் மனைவிகளுள் அருந்ததி யொழிந்தோர் வடிவத்தை முறையே எடுத்து, வேறுவேறு காலங்களிற் சேர்ந்து அவன் வேட்கையைத் தணித்தாள் என்பதும் புராணக்கதை. 98-102. கன்னிக் காவலும் கடியிற் காவலும் - கன்னிப் பருவத்திற் காவலும் மணத்தின் பிற்காவலும், தன்உறுகணவன் சாவுறிற் காவலும்-தன்னை அடைந்த கணவன் இறப்பிற் காவலும் ஆகிய இவற்றை, நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது-உளத்தைக் கற்பு நெறியில் நிறுத்தலாற் காத்து அயலாரை நோக்காமல், கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா - கணவனையன்றித் தெய்வத்தையும் தொழாத, பெண்டிர்தம் குடியில் பிறந்தாள் அல்லள் - குலமகளிர்தம் மரபில் தோன்றியவள் அல்லள் ; குலமகளிர் கன்னி முதலிய முந்நிலையிலும் நிறையாற் றம்மைக்காத் தொழுகுவ ரென்றதனால் பொதுமகளிர்க்கு அந் நிலை வேறுபாடும் காத்தலும் இல்லை யென்றவாறாயிற்று. 2"மகளிர், நிறைகாக்குங் காப்பே தலை," "தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்" என்பன காண்க. 103-111. நாடவர் காண நல் அரங் கேறி ஆடலும் பாடலும் அழகும் காட்டி-இலக்கணப்படி அமைத்த நல்ல அரங்கு களில் ஏறி நாட்டினர் பலரும் காணும் வண்ணம் ஆடலையும் பாடலையும் எழிலையும் புலப்படுத்தி, சுருப்பு நாண் கருப்புவில் அருப்புக்கணை தூவ - வண்டுகளாகிய நாணினையுடைய கரும்புவில்லைக்கொண்ட அநங்கன் அரும்புகளாகிய அம்பு களைப் பொழிய, செருக்கயல் நெடுங்கண் சுருக்கு வலைப் படுத்து-போர்செய்யுங் கயல்மீனை யொத்த நீண்ட கண் களாகிய சுருக்கு வலையால் அகப்படுத்தி, கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம்புக்கு - தமதாடல் முதலியவற்றைக் கண்டோருடைய உள்ளத்தைக் கொள்ளைகொண்டு மனையிற் சென்று, பண்தேர் மொழியிற் பயன்பல வாங்கி - பண்போலும் இனிய மொழிகளால் பொன் ஆடை அணி முதலிய பல பொருள்களையும் வாங்கி, வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை - தேனையுண்டு மலரைத் துறக்கும் வண்டினைப் போலப் பொருள் கொடுத்தாரைப் பின்பு துறக்கும் பரத்தையரை, பான்மையில் பிணித்துப் படிற்றுரை அடக்குதல் - தன் வய மாகப் பிணித்து அவர்தம் பொய்யுரைகளை அடக்குதல், கோல்முறை அன்றோ குமரற்கு என்றலும் - இளங்கோவுக்குச் செங்கோன்முறைமை அல்லவோ என உரைத்தலும், நல்லரங்கு-1"எழுகோ லகலத் தெண்கோ னீளத், தொரு கோலுயரத் துறுப்பின தாகி, உத்தரப் பலகையோ டரங்கின் பலகை, வைத்த விடை நிலம் நாற்கோ லாக, ஏற்ற வாயி லிரண்டுடன் பொலியத், தோற்றிய வரங்கு." நாடக மகளிர்க்கு ஆடல் முதலிய மூன்றினொன்றுங் குறையலாகா தென்பது, 2"ஆடலும் பாடலு மழகு மென்றிக், கூறிய மூன்றி னொன்றுகுறை படாமல்" என்பதனா னறிக ; சுரும்பு, கரும்பு, அரும்பு என்பன வலித்தல் பெற்றன. அரும்பு - மொட்டறாமலர். செருக்கயல் - ஒன்றை யொன்று எதிர்ந்து போர் செய்யுங் கயல். கொண்டி மகளிர்-பொருளைக் கொள்ளும் பரத்தையர், கோன்முறை-அரசநீதி என்றுமாம். குமரற்கு:முன்னிலையிற் படர்க்கை. குடியிற் பிறந்தாளல்லள். கொண்டி மகளிருட் பட்டாள். அவளைப் பிணித்து அடக்குதல் கோன்முறை யன்றோ வென்க. 112-118. உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து - உதயகுமரன் மனம் மாறுதலடைந்து, விரைபரி நெடுந்தேர் மேற்சென் றேறி-விரைந்த செலவினையுடைய குதிரைகள் பூட்டப்பெற்ற பெரிய தேரின்மீது ஏறிச் சென்று, ஆயிழை இருந்த அம்பலம் எய்தி - மணிமேகலையிருந்த அம்பலத்தை யடைந்து, காடமர் செல்வி கடிப்பசி களைய ஓடுகைக் கொண்டு நின்று ஊட்டுநள் போல - பேய்களின் பசியை நீக்குதற்கு ஓட்டினைக் கையிற் கொண்டு நின்று ஊட்டுகின்ற காடு கிழாளைப் போல, தீப்பசி மாக்கட்குச் செழுஞ் சோறு ஈத்துப் பாத்திரம் ஏந்திய பாவையைக் காண்டலும் - கொடிய பசியையுடைய மக்களுக்குச் செழுஞ்சோறளித்துக் கடிஞை ஏந்தி நின்ற மணிமேகலையைக் கண்ட வளவில்; கடி - பேய். ஊட்டுநளாகிய செல்வி போல வென்க. 119-127. இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி - வரம்பின்றிப் பெருகிய காமத்தோடு அடங்காதவனாய், உடம்போடு என்றன் உள்ளகம் புகுந்து என் நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி - உடலுடன் என்னுடைய நெஞ்சினுட் புகுந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த வஞ்சக் கள்வியாகிய மணிமேகலை, நோற்றூண் வாழ்க்கையின் நொசிதவம் தாங்கி - விரதங்களாற் பட்டினி விட்டுண்ணும் வாழ்க்கையையுடைய நுண்ணிய தவத்தைத் தாங்கி, ஏற்றூண் விரும்பிய காரணம் என்என - இரந்துண்ணுதலை விரும்பிய காரணம் யாது என்று, தானே தமியள் நின்றோள் முன்னர் - தானே தனியளாய் நின்றோள்முன், யானே கேட்டல் இயல்பு எனச் சென்று - யானே நேரிற் சென்று கேட்பது நன்று எனப் போய், நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப - நங்காய் நீ நற்றவம் செய்ய மேற்கொண்டது என்ன காரணம் அதனைக் கூறுவாயாக என்று துணிந்து கேட்க; இடங்கழி - வரம்பு கடந்த; 1"இடங்கழி நெஞ்சத் திளமை யானை" என்பதன் உரை காண்க, நொசிதவம்-உடல் இளைத்தற் கேதுவாகிய தவமென்றும், மனம் நுண்ணிதாதற் கேதுவாகிய தவமென்றும் ஆம்; 2"நோற்றுணல் யாக்கை நொசிதவத்தீர்'' என்றார் இளங்கோவடிகளும். உதயகுமாரன் அம்பலமெய்திப் பாவையைக் காண்டலும் அடங்கானாகி, யானே கேட்டல் இயல்பெனச் சென்று, ‘புரிந்தது என்கொல் சொல் லாய்' என்று கேட்ப என்க. 128-133. என் அமர் காதலன் இராகுலன் ஈங்கிவன் தன் அடி தொழுதலும் தகவென வணங்கி-இவன் என்னை விரும்பிய கணவனாகிய இராகுலனாகலின் இவனுடைய அடிகளை வணங்குதலும் தகுதியே எனப் பணிந்து, அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணு கினும்-என் உள்ளம் ஓட்டை போய் அவனிடம் கிட்டினும், இறைவளை முன் கை ஈங்கிவன் பற்றினும் - இறையினையுடைய வளை யணிந்த முன் கையை இவன் பற்றினும், தொன்று காதலன்சொல் எதிர் மறுத்தல் - பழம்பிறப்பிற் கணவனுடைய சொல்லை எதிர் மறுத்தல், நன்றி அன்றென நடுங்கினள் மயங்கி-நன்மை யன்று என நடுக்கமுற்று மயங்கியவளாய்; ஈங்கிவன் : ஒரு சொல். அறைபோதல் - கீழறுத்துச் செல்லுதல், அணுகினும் பற்றினும் என்பன எதிர்காலத்தில் வந்தன. மறுத் தலாவது விடைகூறா தொழிதல். 134-139. கேட்டது மொழிவேன் கேள்வியாளரில் தோட்ட செவியை நீ ஆகுவை ஆமெனில்-கேள்வியாளர்போல நீ துளைக்கப் பட்ட செவியுடையை ஆகுவையானால் நீ கேட்ட தற்கு மறுமொழி கூறுவேன்; பிறத்தலும் மூத்தலும் பிணிப் பட்டு இரங்கலும் இறத்தலும் உடையது - பிறத்தலும் முதுமை யெய்தலும் நோய்ப்பட்டு வருந்துதலும் இறத்தலும் உடையது; இடும்பைக் கொள்கலம்- துன்பத்திற்குக் கொள் கலமானது; மக்கள் யாக்கை இது என உணர்ந்து - மக்கள் உடம்பாகிய இது என அறிந்து, மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்-மேன்மையுடைய அருளறத்தினை விரும்பு வேனாயினேன்; ஆகுவை யாமெனில் மொழிவேன் என மாறுக. கேள்வி யாளர் - உண்மைப் பொருளைக் கேட்டுணர்பவர்; 1"கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி'' என்பது ஈண்டு உணர்தற் பாலது. மக்கள் யாக்கையாகிய இது உடையது கொள்கலம் என வுணர்ந்தென்க. நல்லறம்-அருளறம்: தயாதருமம், 2"வினையின் வந்தது வினைக்கு விளைவாவது,......, மக்கள் யாக்கை யிதுவென உணர்ந்து'' என இந்நூலுள் முன்னர் யாக்கையி னிழிபு கூறப்பட்டிருத்தலும் காண்க. 140-142. மண்டமர் முருக்கும் களிறு அனையார்க்குப் பெண்டிர் கூறும் பேரறிவு உண்டோ-மிக்குச் செல்லுகின்ற போரை யழிக்கும் களிற்றினை யொத்த ஆடவர்க்கு மகளிர் கூறும் பேரறிவும் உண்டோ, கேட்டனை ஆயின் வேட்டது செய் கென - இதனைக் கேட்டா யாதலின் இனி நீ விரும்பியதைச் செய்க என்று கூறி; அமரின்கண் பகைவரைக் கொல்லும் என்றுமாம். களிறனை யார்க்கு என்றது முன்னிலைப்புறம். "இளமை நாணி முதுமை யெய்தி ......செறிவளை மகளிர் செப்பலு முண்டோ" (4: 107 - 10) என முன்னர்ச் சுதமதி உதயகுமாரனுக்கு நீதி கூறியவாறுங் காண்க. 143-150. வாள்திறல் குரிசிலை மடக்கொடி நீங்கி -மணிமேகலை வாள் வலியுடைய மன்னவன் புதல்வனை நீங்கி, முத்தை முதல்வி முதியாள் இருந்த-அனைவருக்கும் முற்பட்ட முதல்வி யாகிய சம்பாபதி அமர்ந்திருக்கின்ற, குச்சரக் குடிகைதன் அகம் புக்கு ஆங்கு - சிறிய கோயிலினுள் நுழைந்து அவ் விடத்தில், ஆடவர் செய்தி அறிகுநர் யார் என - ஆண்மக்களின் செயலை அறிவோர் யாவர் என்று எண்ணி, தோடலர் கோதையைத் தொழுதனள் ஏத்தி - இதழ் விரிகின்ற மலர் மாலையை யணிந்த சம்பாபதியை வணங்கித் துதித்து, மாய விஞ்சை மந்திரம் ஓதி - மாயவித்தை யுடைய மந்திரத்தை ஓதி, காயசண்டிகை எனும் காரிகை வடிவாய்- காயசண்டிகை என்னும் விஞ்சை மகளின் வடிவங்கொண்டு, மணி மேகலை தான் வந்து தோன்ற - மணிமேகலை வெளியே வந்து தோன்ற; முத்தை: முந்தை யென்பதன் திரிபு. குச்சரம் - கூர்ச்சர நாடு; குச்சரக் குடிகை - கூர்ச்சர நாட்டுப் பணியமைந்த சிறிய கோயில் என்பர். ஆங்கு:அசை. ஆடவர் செய்கையை அறிகுநர் யார் என்றது மணிமேகலை தன் அறிவுரையைக் கேட்ட பின்னும் உதயகுமரன் காமத்தைக் கடக்கலாற்றாது தன்னைப் பற்றுதலுங் கூடுமென எண்ணினாள் என்னும் குறிப்பிற்று. மாயவிஞ்சை மந்திரம் என்றது மணிமேகலா தெய்வம் அருளிய வேற்றுரு எய்துவிக்கும் மந்திரத்தை. 151-158. அணிமலர்த் தாரோன் அவள்பாற் புக்கு - அழகிய மலர் மாலையினையுடைய உதயகுமரன் காயசண்டிகை யுருக் கொண்ட நங்கையிடஞ் சென்று, குச்சரக் குடிகைக் குமரியை மரீ இ-பின்பு கோயிலின்கண் உள்ள சம்புத்தெய்வத்தைப் பொருந்தி நின்று, பிச்சைப் பாத்திரம் பெரும்பசி உழந்த காயசண்டிகை தன்கையில் காட்டி - தன் கையிலிருந்த திருவோட்டைப் பெரும்பசியால் வருந்திய காயசண்டிகையின் கையிற் கொடுத்து, மாயையின் ஒளித்த மணிமேகலைதனை-மாயையினால் மறைந்த மணிமேகலையை, ஈங்கிம் மண்ணீட்டு யார் என உணர்கேன் - ஈண்டுள்ள இப் பாவைகளுள் யார்என்று அறிவேன், ஆங்கவள் இவள் என்று அருளாய் ஆயிடின் -அம் மணிமேகலை இன்னளென அறிவித் தருளாய் ஆயின்,பல்நாள் ஆயினும் பாடுகிடப்பேன் - பலநாட்களாயினும் ஈண்டு வரங்கிடப்பேன் ; மண்ணீடு-சுதையாற் செய்யப்பட்ட பாவை. "நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும்" (6: 47) என இந்நூலுள் முன்னரும், 1"கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும்" எனச் சிலப்பதிகாரத்தும் வருதல் காண்க. ஆங்கவள்: ஒரு சொல்; 2"தெளிவன் புனற் சென்னி" என்னுஞ் செய்யுளுரையில், "இங்கிவை உங்குவை யென்பன ஒரு சொல்" எனப் பேராசிரியருரைத்தமை காண்க. பாடு கிடத்தல்-வரம் வேண்டிக் கிடத்தல்; கருதியது கைகூடும் வரை எழாது கிடத்தலென்க; 3"பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந் தாளுக்கு" என்பது காண்க. 159-172. இன்னும் கேளாய் இமையோர் பாவாய்-வானோர் தலைவியே இன்னுங் கேட்பாயாக, பவளச் செவ்வாய்த் தவள வாள் நகையும் - பவளம்போற் சிவந்த வாயின்கணுள்ள வெள்ளொளி பொருந்திய பற்களும், அஞ்சனம் சேராச் செங்கயல் நெடுங்கணும்- மையெழுதப்படாத சிவந்த கயல் போலும் நீண்ட கண்களும், முறிந்து கடை நெரிய வரிந்த சிலைப் புருவமும்-கடை நெரியுமாறு வளைந்து வரிந்த வில்லைப் போன்ற புருவங்களும், குவிமுட் கருவியும் கோணமும் கூர்நுனைக் கவைமுட் கருவியும் ஆகிக் கடிகொள களிற்றினை யடக்கும் குவிந்த முள்ளையுடைய கருவியும் தோட்டியும் கூரியமுனையையுடைய கவைத்த முட்களாலாகிய பரிக் கோலுமாகிக் காவல் கொள்ள, கல்விப் பாகரில் காப்புவலை ஓட்டி-கல்வியாகிய பாகரால் காப்பினையுடைய வலையை வீசி, வல்வாய் யாழின் மெல்லிதின் விளங்க - சொல் வன்மையுடைய வாயாகிய யாழினால் இனிதாக விளங்கு மாறு, முதுக்குறை முதுமொழி எடுத்துக்காட்டி - பேரறிவை விளக்கும் முதுமொழிகளை எடுத்துக்காட்டி, புதுக்கோள் யானை வேட்டம் வாய்த்தென - புதிதாகக் கொள்ளப்படும் யானை வேட்டத்தின்கண் அகப்பட்டதென்று, முதியாள் உன்றன் கோட்டம் புகுந்த - சம்பாபதீ நின்னுடைய கோயிலிற் புகுந்த, மதிவாள் முகத்து மணிமேகலைதனை ஒழியப் போகேன் - மதிபோலும் ஒள்ளிய முகத்தினையுடைய மணிமேகலையை ஈண்டு விடுத்துச் செல்லேன் ; உன் அடி தொட்டேன் - நின் திருவடிகளைத் தொட்டுச் சூளுற்றேன் ; இது குறை என்றனன் இறைமகன் தான் என் - எனக்கு வேண்டும் காரியம் இதுவென்று உதயகுமரன் கூறின னென்க. ஈண்டு இமையோர் பாவாய் என்றது போலப் பின்னர் "வானோர் பாவாய்" (25-147) எனச் சிந்தாதேவியை விளித்தலுங் காண்க. பிக்குணியாதலின் கண்ணுக்கு மைதீட்டிற்றில ளென்க. வரிந்த சிலை - கட்டமைந்த வில்; நாணேற்றிய வில்லுமாம். கோணம் - தோட்டியென்னுங் கருவி; கவைமுட் கருவி - கவைத்த முள்ளையுடைய பரிக்கோல்: 1"கோணந் தின்ற வடுவாழ் முகத்த" 2"கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றி" என்பன காண்க. நகை குவிமுட் கருவியும், கண் கோணமும், புருவம் கவைமுட் கருவியுமாகி என நிரனிறையாக்குக. காப்பு என்றது வலைக்கு அடை. கலையாகிய வலையென உருவகம் விரித்துரைக்க. தன் கலைத்திறங்களால் புறம்போகாது தடுத்தாள் என்றபடி. வாயை யாழ் என்றதற்கேற்ப முதுமொழியை இசையென உருவகஞ் செய்க ; யாழோசை போல மெல்லிதின்-விளங்க வாயால் முதுமொழி யெடுத்துக் காட்டி என்றலுமாம் ; யானை யாழிசைக்கு வயமாகுமாதலின் இவ்வாறு கூறினான். 3"காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல், யாழ்வரைத் தங்கி யாங்கு" என்பதனால் யானை யாழுக்கு வயமாத லறிக. முதுமொழி - முதுவோர் மொழி; நீதிமொழி. உதயகுமரன் தன்னை யானை யாகவும், மணிமேகலையின் நகை முதலியவற்றை யானையை அடக்குங் கருவிகளாகவும் உருவகஞ் செய்து, அவளால் தான் பிணிப்புண்டமை கூறினனென்க. சூளுறுவார் அடிதொடுதல் வழக்காதலை 4"அறவ ரடிதொடினும்" 5"கோனடி தொட்டேன்" 6"அடல்வலி யெயினர்நின் அடி தொடு கடனிது" என்பவற்றானு மறிக. சித்திராபதி அது கேட்டு எறி வெய்துயிர்த்துக் கலங்கித் தீர்ப்பலென்று கூத்தியன் மடந்தையர் எல்லார்க்குங் கூறும்; அங்ஙனங் கூறுகின்றவள், வஞ்சினஞ் சாற்றி உயிர்த்துத் தேர்ந்து போகிக் குறுகிப் பொருந்தி நின்று ஏத்த, அவன், ‘தவறின்றோ' என, அவள், ‘வேந்தே! நின் கண்ணி வாழ்க; காஞ்சி அம்பலத் தாயது' என, அது கேட்டு அவட்கு உரைப்போன், ‘எய்யா மையலேன்' என்று சொல்ல, சித்திராபதி சிறுநகை யெய்தி, படிற்றுரை யடக்குதல் கோன்முறை யன்றோ குமரற்கு?' என்றலும், உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து ஏறி எய்திக் காண்டலும் அடங் கானாகிச் சென்று துணிந்து கேட்ப, அவர் வணங்கி நடுங்கி மயங்கி, ‘வேட்டது செய்க' என்று கூறி நீங்கிப் புக்குத்தொழுது ஏத்தி ஓதிக் காயசண்டிகை வடிவாய் வந்து தோன்ற, தாரோன் புக்கு மரீஇ, ‘இது குறை' என்றனன் என, வினை முடிவு செய்க. உதயகுமரன் அம்பலம் புக்க காதை முற்றிற்று. 19. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை உதயகுமரன் சம்பாபதியை வணங்கிஇங்ஙனம் வஞ்சினங் கூறுகையில் அவன் கேட்கும்படி, "நீ எம் பெருமாட்டியின் முன் ஆராய்ந்து பாராமற் சூளுறவு மொழிந்தனை ; அதனால் யாதொரு பயனுமில்லை" என்று ஆங்குள்ள சித்திரங்களுள் ஒன்றைப் பொருந்தியுள்ள தெய்வங் கூறிற்று. அவ்வுரை கேட்டு அவன் மனங் கலங்கி வருந்தி, "மணிமேகலையை மறப்பாயென்று முன்னங்கூறிய தெய்வத்தின் மொழியும் வியப்பைத் தருகின்றது ; தெய்வத்தன்மை யுள்ளதாக இருத்தலின் அவள் ஏந்திய பாத்திரமும் வியப்பைத் தருகின்றது ; இச் சித்திரம் பேசியதும் வியப்பை விளைக்கின்றது ; இவற்றையெல்லாம் மணிமேகலையின் செய்தியை அறிந்துகொண்ட பின்பு அறிவோம்" என்று துணிந்து மீண்டு தன் இருப்பிடத்தை யடைந்தான். மணிமேகலை, "நம் வடிவத்தோடு திரிந்தால் உதயகுமரன் விட்டு நீங்கான் ; ஆகலின் நாம் காயசண்டிகை வடிவங்கொள்ளுதலே நன்று" என்று எண்ணி அவ் வடிவுகொண்டு சம்பாபதியின் கோயிலிலிருந்து அமுதசுரபியைக் கையிலேந்திக் கொண்டு யாங்கணும் சென்று பசித்துவந்த யாவருக்கும் உணவளித்து வருபவள், ஒரு நாள் அந் நகரத்துள்ள சிறைக்கோட்டத்திற் புகுந்து, அங்கே பசியால் வருந்துவோரை அருளுடன் பார்த்து இனிய மொழி கூறி உண்பிப்பாளாயினள். அவள் ஒரு பாத்திரத்திலிருந்தே பலருக்கு உணவளித்தலைக் கண்ட காவலாளர் மிக்க வியப்படைந்து, "இப் பாத்திரத்தின் மேன்மையையும் இவள் செய்கை யையும் அரசனுக்குத் தெரிவிப்பேம்' என நினைந்து சென்று, சீர்த்தி யென்னும் இராசமாதேவியுடன் ஒரு மண்டபத்தில் மிக்க சிறப்புடன் வீற்றிருக்கும் வேந்தனுடைய செவ்வியை நோக்கிச் சேய்மையில் வணங்கி நின்று, "மாவண்கிள்ளி ஊழிதோ றூழி ஒளியொடு வாழி" என்று வாழ்த்தி, "யானைத்தீ யென்னும் நோயால் வருந்தி உடல் மெலிந்து இப் பகுதியிலே திரியும் மடந்தை யொருத்தி சிறைக்கோட்டத்துள்ளே வந்து நின்னை வாழ்த்திக் கையின்கண் பிச்சைப் பாத்திரம் ஒன்றே கொண்டு அங்கு வந்து மொய்க்கின்ற யாவருக்கும் உணவு சுரந்தூட்டு கின்றனள்; இவ் வதிசயத்தைத் தெரிவிக்கவே வந்தோம்" என்றார். அதனைக் கேட்ட அரசன், "அம் மங்கையை இங்கே அழைத்து வருக" என்றனன். உடனே காவலாளர் வந்து அதனைத் தெரிவிக்க, அவள் சென்று அரசனைக் கண்டு வாழ்த்தி நின்றனள். அரசன், "அரிய தவமுடையாய் ; நீ யார் ? கையிலேந்திய பாத்திரம் எங்கே கிடைத்தது?" என்ன, அவள், "அரசே! நெடுங் காலம் வாழ்வாயாக; யான் விஞ்சை மகள்; இப் பகுதியிலே வேற்றுருக் கொண்டு திரிந்தேன்; இது பிச்சைப் பாத்திரம்; இதனை அம்பலத்தேயுள்ள தெய்வமொன்று எனக்கு அருளியது ; இது தெய்வத் தன்மையுடையது; யானைத்தீ யென்னும் தீராப் பசிநோயைத் தீர்த்தது; பசியால் மெலிந்தவர்களுக்கு உயிர் மருந்தாகவுள்ளது" என்று கூறினள். பின், அரசன், "யான் செய்ய வேண்டுவது யாது?" என்று கேட்ப, அவள், "சிறைக்கோட்டத்தை யழித்து அறவோர் வாழுங் கோட்டமாகச் செய்தல் வேண்டும்" என்றாள். அரசன், அவள் விரும்பிய வண்ணமே செய்வித்தனன். (இதன்கண் அரசனது பொழில் விளையாட்டுக் கூறுமிடத்துள்ள இயற்கைப்புனைவு முதலியன மிக்க இன்பம் பயப்பன. முதியாள் திருந்தடி மும்மையின் வணங்கி மதுமலர்த் தாரோன் வஞ்சினங் கூற ஏடவிழ் தாரோய் எங்கோ மகள்முன் நாடாது துணிந்துநா நல்கூர்ந் தனையென. 5 வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திர மொன்று தெய்வங் கூறலும் உதய குமரன் உள்ளங் கலங்கிப் பொதியறைப் பட்டோர் போன்றுமெய் வருந்தி அங்கவள் தன்றிறம் அயர்ப்பா யென்றே 10 செங்கோல் காட்டிய தெய்வமுந் திப்பியம் பையர வல்குல் பலர்பசி களையக் கையி லேந்திய பாத்திரம் திப்பியம் முத்தை முதல்வி அடிபிழைத் தாயெனச் சித்திர முரைத்த இதூஉந் திப்பியம் 15 இந்நிலை யெல்லாம் இளங்கொடி செய்தியின் பின்னறி வாமெனப் பெயர்வோன் றன்னை அகல்வாய் ஞாலம் ஆரிரு ளுண்ணப் பகலர சோட்டிப் பணையெழுந் தார்ப்ப மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு 20 நீல யானை மேலோர் இன்றிக் காமர் செங்கை நீட்டி வண்டுபடு பூநாறு கடாஅஞ் செருக்கிக் கால்கிளர்ந்து நிறையழி தோற்றமொடு தொடர முறைமையின் நகர நம்பியர் வளையோர் தம்முடன் 25 மகர வீணையின் கிளைநரம்பு வடித்த இளிபுண ரின்சீர் எஃகுளங் கிழிப்பப் பொறாஅ நெஞ்சிற் புகையெரி பொத்திப் பறாஅக் குருகின் உயிர்த்தவன் போயபின் உறையுட் குடிகை உள்வரிக் கொண்ட 30 மறுவில் செய்கை மணிமே கலைதான் மாதவி மகளாய் மன்றம் திரிதரின் காவலன் மகனோ கைவிட லீயான் காய்பசி யாட்டி காயசண் டிகையென ஊர்முழு தறியும் உருவங் கொண்டே 35 ஆற்றா மாக்கட் காற்றுந் துணையாகி ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடனவர் மேற்சென் றளித்தல் விழுத்தகைத் தென்றே நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தன ராமென முதியாள் கோட்டத் தகவையின் இருந்த 40 அமுத சுரபியை அங்கையின் வாங்கிப் பதியகந் திரிதரும் பைந்தொடி நங்கை அதிர்கழல் வேந்தன் அடிபிழைத் தாரை ஒறுக்குந் தண்டத் துறுசிறைக் கோட்டம் விருப்பொடும் புகுந்து வெய்துயிர்த்துப் புலம்பி 45 ஆங்குப் பசியுறும் ஆருயிர் மாக்களை வாங்கு கையகம் வருந்தநின் றூட்டலும் ஊட்டிய பாத்திரம் ஒன்றென வியந்து கோட்டங் காவலர் கோமகன் றனக்கிப் பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும் 50 யாப்புடைத் தாக இசைத்துமென் றேகி நெடியோன் குறளுரு வாகி நிமிர்ந்துதன் அடியிற் படியை யடக்கிய அந்நாள் நீரிற் பெய்த மூரி வார்சிலை மாவலி மருமான் சீர்கெழு திருமகள் 55 சீர்த்தி யென்னுந் திருத்தகு தேவியொடு போதவிழ் பூம்பொழில் புகுந்தனன் புக்குக் கொம்பர்த் தும்பி குழலிசை காட்டப் பொங்கர் வண்டினம் நல்லியாழ் செய்ய வரிக்குயில் பாட மாமயில் ஆடும் 60 விரைப்பூம் பந்தர் கண்டுளஞ் சிறந்தும் புணர்துணை நீங்கிய பொய்கை அன்னமொடு மடமயிற் பேடையுந் தோகையுங் கூடி இருசிறை விரித்தாங் கெழுந்துடன் கொட்பன ஒருசிறைக் கண்டாங் குண்மகிழ் வெய்தி 65 மாமணி வண்ணனுந் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவையிஃ தாமென நோக்கியும் கோங்கலர் சேர்ந்த மாங்கனி தன்னைப் பாங்குற விருந்த பல்பொறி மஞ்ஞையைச் செம்பொற் றட்டில் தீம்பா லேந்திப் 70 பைங்கிளி யூட்டுமோர் பாவையா மென்றும் அணிமலர்ப் பூம்பொழில் அகவையி னிருந்த பிணவுக்குரங் கேற்றிப் பெருமதர் மழைக்கண் மடவோர்க் கியற்றிய மாமணி யூசல் கடுவனூக் குவது கண்டுநகை எய்தியும் 75 பாசிலை செறிந்த பசுங்காற் கழையொடு வால்வீச் செறிந்த மராஅங் கண்டு நெடியோன் முன்னொடு நின்றன னாமெனத் தொடிசேர் செங்கையிற் றொழுதுநின் றேத்தியும் ஆடற் கூத்தினோ டவிநயந் தெரிவோர் 80 நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர் பண்ணியாழ் நரம்பிற் பண்ணுமுறை நிறுப்போர் தண்ணுமைக் கருவிக் கண்ணெறி தெரிவோர் குழலொடு கண்டங் கொளச்சீர் நிறுப்போர் 85 ஆரம் பரிந்த முத்தங் கோப்போர் ஈரம் புலர்ந்த சாந்தந் திமிர்வோர் குங்கும வருணங் கொங்கையின் இழைப்போர் அஞ்செங் கழுநீர் ஆயிதழ் பிணிப்போர் நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைவோர் 90 பொன்னின் ஆடியிற் பொருந்துபு நிற்போர் ஆங்கவர் தம்மோ டகலிரு வானத்து வேந்தனிற் சென்று விளையாட் டயர்ந்து குருந்துந் தளவுந் திருந்துமலர்ச் செருந்தியும் முருகுவிரி முல்லையுங் கருவிளம் பொங்கரும் 95 பொருந்துபு நின்று திருந்துநகை செய்து குறுங்கால் நகுலமும் நெடுஞ்செவி முயலும் பிறழ்ந்துபாய் மானும் இறும்பகலா வெறியும் வம்மெனக் கூஉய் மகிழ்துணை யொடுதன் செம்மலர்ச் செங்கை காட்டுபு நின்று 100 மன்னவன் றானும் மலர்க்கணை மைந்தனும் இன்னிள வேனிலும் இளங்காற் செல்வனும் எந்திரக் கிணறும் இடுங்கற் குன்றமும் வந்துவீ ழருவியும் மலர்ப்பூம் பந்தரும் பரப்புநீர்ப் பொய்கையுங் கரப்புநீர்க் கேணியும் 105 ஒளித்துறை யிடங்களும் பளிக்கறைப் பள்ளியும் யாங்கணுந் திரிந்து தாழ்ந்துவிளை யாடி மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடிக் 110 கொண்டினி தியற்றிய கண்கவர் செய்வினைப் பவளத் திரள்காற் பன்மணிப் போதிகைத் தவள நித்திலத் தாமந் தாழ்ந்த கோணச் சந்தி மாண்வினை விதானத்துத் தமனியம் வேய்ந்த வகைபெறு வனப்பிற் 115 பைஞ்சேறு மெழுகாப் பசும்பொன் மண்டபத்து இந்திர திருவன் சென்றினி தேறலும் வாயிலுக் கிசைத்து மன்னவன் அருளால் சேய்நிலத் தன்றியுஞ் செவ்விதின் வணங்கி எஞ்சா மண்ணசைஇ இகலுளந் துரப்ப 120 வஞ்சியி னிருந்து வஞ்சி சூடி முறஞ்செவி யானையுந் தேரும் மாவும் மறங்கெழு நெடுவாள் வயவரு மிடைந்த தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத்தலை வந்தோர் சிலைக்கயல் நெடுங்கொடி செருவேற் றடக்கை 125 ஆர்புனை தெரியல் இளங்கோன் றன்னால் காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி ஒளியொடு வாழி ஊழிதோ றூழி வாழி யெங்கோ மன்னவர் பெருந்தகை 130 கேளிது மன்னோ கெடுகநின் பகைஞர் யானைத் தீநோய்க் கயர்ந்துமெய் வாடியிம் மாநகர்த் திரியுமோர் வம்ப மாதர் அருஞ்சிறைக் கோட்டத் தகவயிற் புகுந்து பெரும்பெயர் மன்ன நின்பெயர் வாழ்த்தி 135 ஐயப் பாத்திரம் ஒன்றுகொண் டாங்கு மொய்கொண் மாக்கண் மொசிக்க'd2வூண் சுரந்தனள் ஊழிதோ றூழி உலகங் காத்து வாழி யெங்கோ மன்னவ என்றலும் வருக வருக மடக்கொடி தானென்று 140 அருள்புரி நெஞ்சமொ டரசன் கூறலின் வாயி லாளரின் மடக்கொடி தான்சென்று ஆய்கழல் வேந்தன் அருள்வா ழியவெனத் தாங்கருந் தன்மைத் தவத்தோய் நீயார் யாங்கா கியதிவ் வேந்திய கடிஞையென்று 145 அரசன் கூறலும் ஆயிழை உரைக்கும் விரைத்தார் வேந்தே நீநீடு வாழி விஞ்சை மகள்யான் விழவணி மூதூர் வஞ்சந் திரிந்தேன் வாழிய பெருந்தகை வானம் வாய்க்க மண்வளம் பெருகுக 150 தீதின் றாக கோமகற் கீங்கீது ஐயக் கடிஞை அம்பல மருங்கோர் தெய்வந் தந்தது திப்பிய மாயது யானைத் தீநோய் அரும்பசி கெடுத்தது ஊனுடை மாக்கட் குயிர்மருந் திதுவென 155 யான்செயற் பாலதென் இளங்கொடிக் கென்று வேந்தன் கூற மெல்லியல் உரைக்கும் சிறையோர் கோட்டஞ் சீத்தருள் நெஞ்சத்து அறவோர்க் காக்கும் அதுவா ழியரென அருஞ்சிறை விட்டாங் காயிழை உரைத்த 160 பெருந்தவர் தம்மாற் பெரும்பொரு ளெய்தக் கறையோ ரில்லாச் சிறையோர் கோட்டம் அறவோர்க் காக்கினன் அரசாள் வேந்தென் உரை 1-6. முதியாள் திருந்தடி மும்மையின் வணங்கி - சம்பாபதியின் திருந்திய அடிகளை மும்முறை வணக்கஞ்செய்து, மதுமலர்த் தாரோன் வஞ்சினம் கூற - தேன் பொருந்திய மலர்மாலை களையுடைய உதயகுமரன் வஞ்சினங் கூறுதலும், ஏடு அவிழ் தாரோய் எங்கோமகள் முன் நாடாது துணிந்து நா நல் கூர்ந்தனை என - இதழ்விரிகின்ற மாலையை யுடையவனே எம் தலைமகள் முன்னர் ஆராயாது துணிவுடன் சூளுறவு செய்து நா வறுமை யுற்றனை என்று, வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும்-கைவல் சிற்பரால் இயற்றப்பட்டு விளங்கிய தொழில் அமைந்த சித்திரம் ஒன்றிற் பொருந்திய தெய்வம் உரைத்தலும் ; மும்மையின் - உளம் உரை உடல் என்னும் முக் கரணங்களால் என்றுமாம் ; முறைமையின் என்பதும் பாடம். நா நல்கூர்தலாவது பயனில மொழிதல். வித்தகர்-சிற்பம் வல்லோர்; "வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச், சித்திரச் செய்கை" (3: 167-8) என முன்னர் வந்தமையுங் காண்க. ஒன்று-பொருந்திய; அதிட்டித்த. 7-16. உதயகுமரன் உள்ளம் கலங்கி - உதயகுமரன் மனக் கலக்க முற்று, பொதியறைப் பட்டோர்போன்று மெய் வருந்தி - சாளரமில்லாத கீழறையில் அகப்பட்டோரைப் போல உடல் வருந்தி, அங்கவள் தன்திறம் அயர்ப்பாய் என்றே - மணிமேகலைமீது கொண்ட எண்ணத்தை மறப்பாய் என்றே, செங்கோல்காட்டிய தெய்வமும் திப்பியம் - செங்கோன் முறையை எடுத்துக் காட்டிய தெய்வங் கூறியதும் வியப்புடைத்து, பையர வல்குல் பலர் பசிகளையக் கையிலேந்திய பாத்திரம் திப்பியம் - மணிமேகலை பலருடைய பசியையும் நீக்குதற்குக் கையில் ஏந்திய கடிஞையும் வியப்புடைத்து, முத்தை முதல்வி அடிபிழைத்தாய் எனச் சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்-எம் தலைவியின் திருவடியில் பிழை புரிந்தாய் என்று இவ் வோவியங் கூறிய இதுவும் வியப்புடைத்து, இந்நிலை எல்லாம் இளங்கொடி செய்தியின் பின் அறிவாம் எனப் பெயர்வோன் தன்னை - இவற்றின் உண்மையை யெல்லாம் மணிமேகலையின் செயலால் பின்பு அறிவோமென எண்ணி அங்குநின்றும் மீண்ட உதயகுமரனை ; பொதியறை - புழுக்கறை: சிறு துவாரமுமின்றி மூடப்பட்ட கீழறை; 1"போதார் பிறவிப் பொதியறையோர்" என்பது காண்க. தெய்வம்-மணிமேகலா தெய்வம். தெய்வம் கூறியதுமென்க. திப்பியம்- ஈண்டு வியப்பென்னும் பொருட்டு; தெய்வத்தன்மையுமாம். அரவின் பை யென மாறுக. பை-படம். பாத்திரமும் என எண்ணும்மை விரிக்க முத்தை : விகாரம். 17-23. அகல்வாய் ஞாலம் ஆரிருள் உண்ண-இடமகன்ற பூமியை நிறைந்த இருளானது உண்ணுமாறு, பகல் அரசு ஓட்டி - கதிரவனாகிய அரசனை ஓட்டி, பணைஎழுந்து ஆர்ப்ப - பறையெழுந்து ஒலிக்க, மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு- அந்திக் காலமாகிய நெற்றியும் வானிலுள்ள பிறையாகிய மருப்பும் உடைய, நீலயானை- கரிய நிறமுடைய இரவாகிய யானை, மேலோர் இன்றி - பாகர் ஒருவரும் இன்றி, காமர் செங்கைநீட்டி-விருப்பமாகிய துதிக்கையை நீட்டி, வண்டுபடு பூ நாறு கடாஅம் செருக்கி - வண்டு மொய்க்கும் பூவின் மணம் பொருந்திய மதநீரைச் சொரிந்து களித்து, கால் கிளர்ந்து நிறையழி தோற்றமொடு தொடர - காற்றைப் போல எழுந்து காவலைக் கடந்த தோற்றத்துடன் தொடர்ந்து வர ; முன்னுள்ள விசேடணங்களால் ‘நீலயானை' என்றது இரவாயிற்று. இராத்திரியை யானையாக உருவகிப்பவர் அதற் கியைபுபடப் பிறவற்றையும் உருவகஞ் செய்கின்றார். "ஞாலம் ஆரிருள் உண்ண' என்பது 1"உண்டற்குரிய வல்லாப் பொருளை, யுண்டன போலக் கூறலுமரபே" என்பதனான் அமைக்கப்படும். கொல்களிற்றின் செல்கையை அறிவித்தற்குப் பறையறைவித் தலுண்மையின் 'பணையெழுந்தார்ப்ப' என்றார். 2"வெரூஉப் பறை நுவலும் பரூஉப் பெருந் தடக்கை, வெருவரு செலவின் வெகுளி வேழம்" என்பது காண்க; வென்றி முரசுங் கொள்க. மேலோரின்றி என்றது பாகரை வீசி யென்றபடி; 3"மேலோர் வீசி" என்றார் பிற சான்றோரும், காமர் - காமம் என்னும் பொருட்டு. கடக்களிறு கைவீசிச் செல்லுமாகலின் ' காமர் செங்கை நீட்டி' என்றார். பூ - வேங்கைப்பூ ; ஏழிலைப் பாலையின் மலருமாம்; யானையின் மதம். அப்பூக்களின் மணமுடையதாதலை, 4"விலக்கருங் கரிமதம் வேங்கை நாறுவ" 5"பாத்த யானையிற் பதங்களிற் படுமத நாறக், காத்த வங்குச நிமிர்ந்திடக் கால்பிடித் தோடிப், பூத்த வேழிலைப் பாலையைப் பொடிப் பொடி யாகக், காத்தி ரங்களாற் றலத் தொடுந் தேய்த்த தோர் களிறு" என்பவற்றானறிக. 6"கால்கிளர்ந் தன்ன வேழமேல் கொண்டு" என்பதனால் யானை காற்றுப்போற் கிளர்ந்தெழு மென்பதறிக. பெயர்வோன்றன்னை நீலயானை தொடர வென்க : இரவு வர என்றவாறாயிற்று. 23-28. முறைமையின் நகர நம்பியர் வளையோர் தம்முடன் - நக ரத்திலுள்ள காதலஞ்செல்வர் மகளிர் தம்மோடு முறைமை யாக, மகர வீணையின் கிளை நரம்பு வடித்த இளிபுணர் இன்சீர் எஃகு உளம் கிழிப்ப - மகரயாழின் கிளைநரம்பு களைத் தெறித்த இசையுடன் சேர்ந்த இனிய தாள வொற்றாகிய வேல் உளத்தைக்கிழிப்ப, பொறாஅ நெஞ்சில் புகைஎரி பொத்தி-பொறுக்கலாற்றாத உள்ளத்தின்கண் புகைகின்ற காமத்தீயானது மூட்டப்பட்டு, பறாஅக் குருகின் உயிர்த்து அவன் போயபின்-கொல்லன் உலை மூக்கினைப் போல வெய்துயிர்த்து இளங்கோ சென்றபின்னர்; வளையோர்-வளையணிந்த மகளிர். நம்பியரும் வளையோரும் வடித்த இளிபுணர் இன்சீர் என்க. மகர வீணை - மகரயாழ்; நால்வகை யாழுளொன்று; பதினேழு நரம்புகளையுடையது. கிளை - ஐந்தாம் நரம்பு; உழை சட்சமாகலின், சட்சக்கிரமத்தில் அதற்கைந்தாவ தாகிய குரல் கிளையாகும்; அங்ஙனமே இளி, துத்தம், விளரி, கைக்கிளை என்பன குரல் முதல் ஒன்றற்கொன்று கிளையாகும்; ஆகலின் இவ்வைந்தனையுமே கிளைநரம் பென்றலுமுண்டு; "கிளையெனப் படுவ கிளக்குங் காலைக், குரலே யிளியே துத்தம் விளரி, கைக்கிளை யெனவைந் தாகு மென்ப" என்னும் பழைய நூற்பாவுங் காண்க. வடித்தல் - நரம்பை உருவுதல்; தெறித்தலுக் காயிற்று. இளியென்பது ஏழுநரம்பினுள் ஒன்றன் பெயராதலன்றி, இசையைக் குறிக்கும் பொதுப் பெயருமாம், சீருடன்கூடிய இளியாகிய எஃகு என்க. பறாஅக் குருகு - கொல்லன் உலைமூக்கு; பூவா வஞ்சி முதலியன போல வெளிப்படையென்னும் இலக்கணத்தது. அவன் - உதயகுமரன். 29-35. உறையுட் குடிகை உள்வரிக் கொண்ட - உறைவிட மாகிய சிறிய கோயிலின்கண் வேற்றுருவ மெய்திய, மறுவில் செய்கை மணிமேகலைதான் - குற்றமற்ற செய்கையையுடைய மணிமேகலை, மாதவி மகளாய் மன்றம் திரிதரின்-மாதவியின் மகளாகவே உலக அறவியிற் சுற்றிக்கொண்டிருந்தால், காவலன் மகனோ கைவிடலீ யான் - மன்னவன் புதல்வன் கைவிடான் என நினைந்து, காய்பசி யாட்டி காயசண்டிகை என ஊர் முழுதறியும் உருவங்கொண்டே - ஊரிலுள்ளோர் அனைவராலும் நன்கறியப்பட்ட யானைத்தீ நோயினையுடைய காயசண்டிகையைப் போல உருவங்கொண்டு, ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி-வறியோர்க்கு உதவிபுரியும் அருந்துணையாகி ; உள்வரி - வேற்றுரு; பொய்வேடம். விடலீயான்: வினைத்திரி சொல். கைவிடேனென நினைந்து என ஒரு சொல் வருவித்துரைக்க. 36-41. ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் - வாங்குதலும் கொடுத்தலும் இரப்போர் கடனாம் ஆகலின், அவர் மேற் சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே - அவர் எவ் விடத்தும் வலிந்து சென்று கொடுத்தல் சிறப்புடையது என்று, நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனராமென-நூற்பொருள்களை அறிந்தோர் ஆராய்ந்துரைத்தனர் என்று கருதி, முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த - சம்பாபதி கோயிலின் உள்ளே இருந்த, அமுதசுரபியை அங்கையின் வாங்கி - அமுதசுரபியை அழகிய கையிற்கொண்டு, பதியகம் திரிதரும் பைந்தொடி நங்கை - நகரத்தின்கண்ணே சுற்றுகின்ற பசிய வளையல்களை யணிந்த மணிமேகலை; மேற்சென்று - வலிதிற் சென்று. நுனித்தல் - நுண்ணிதின் உணர்தல். என - என்று கருதி. பைந்தொடி மடந்தை என்பதும் பாடம். 42-46. அதிர்கழல் வேந்தன் அடிபிழைத்தாரை - ஒலிக்கின்ற வீரக் கழலையுடைய மன்னவன் அடிக்குப் பிழை செய்தாரை, ஒறுக்கும் தண்டத்து உறுசிறைக் கோட்டம் - தண்டிக்கும் தண்டத்தினையுடைய சிறைச் சாலையின்கண், விருப்பொடும் புகுந்து - விருப்பத்துடன் சென்று, வெய்துயிர்த்துப் புலம்பி - வெய்தாக உயிர்த்து வருந்தி, ஆங்குப் பசியுறும் ஆருயிர் மாக்களை-அவ்விடத்திலே பசியுற்றிருக்கும் அரிய உயிரை யுடைய மக்களை, வாங்கு கையகம் வருந்த நின்று ஊட்டலும்- வாங்குகின்ற கையினிடம் வருந்துமாறு நின்று உண்பித்தலும்; இறைவனுக்கும் பெரியார்க்கும் பிழைசெய்தாரைத் திருவடி பிழைத்தாரென்று கூறுதல் மரபு. தண்டத்து உறு - தண்டத் தினைப் பொருந்தி நுகரும். பசியுற்று வெய்துயிர்த்துப் புலம்பும் மாக்களென மாறுக. ஆருயிர் மாக்கள் என்றது, பெறுதற்கரிய மக்களுயிரைப் பெற்றார் இங்ஙனம் வருந்துகின்றனரே யென இரங்கிக் கூறியபடி. ஈண்டுக் கூறியவாறு "வாங்குநர் கையகம் வருத்துத லல்லது" (11 : 49) "வாங்குகை வருந்த மன்னுயி ரோம்பலின்" (14 : 23) "வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்து" (17 : 5) என முன்னர்ப் போந்தமையுங் காண்க. 47-50. ஊட்டிய பாத்திரம் ஒன்றென வியந்து-இங்ஙனம் பலரையும் உண்பித்த பாத்திரம் ஒன்றே என வியப்புற்று, கோட்டங் காவலர் - சிறைக்கோட்டங் காப்பவர், கோமகன் தனக்கு - அரசனுக்கு, இப் பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும் - இப் பாத்திரத்தின் தானச் சிறப்பையும் இதனைக் கொண்ட இளங்கொடியின் செயலையும், யாப்புடைத்தாக இசைத்தும் என்று ஏகி - உறுதி யுடைத்தாகக் கூறுவோம் எனச் சென்று ; கோட்டங் காவலர் வியந்து தானமும் செய்தியும் கோமகனுக்கு இசைத்துமென் றேகி யென்க, 51-56. நெடியோன் குறள் உருவாகி நிமிர்ந்து தன் அடியிற் படியை அடக்கிய-திருமால் வாமன வடிவங்கொண்டு பின் பேருருவமாய்ப் பூமியைத் தன் திருவடியின்கண் அடக்க, அந்நாள்-அற்றைநாளில், நீரிற்பெய்த - பூமியை நீருடன் அளித்த, மூரி வார் சிலை மாவலி மருமான் சீர்கெழு திருமகள்-வலிய பெரிய வில்லையுடைய மாவலியின் வழித்தோன்றலாகிய அரசனுடைய புகழ்மிக்க திருமகளாகிய, சீர்த்தி என்னும் திருத்தகு தேவியொடு - சீர்த்தி என்னும் பெயருடைய செல்வமிக்க தேவியுடன், போது அவிழ்பூம்பொழில் புகுந்தனன்புக்கு - பூக்கள் விரிந்த அழகிய சோலையிற் சென்று புகுந்து ; குறள் - குறிய வடிவமுடைய வாமனன் ; காசிபனுக்கும் அதிதிக்கும் பிறந்தவன் ; திருமாலின் ஐந்தாவது தோற்றமாயவன்; இவன் மாபலியிடத்து மூன்றடிமண் இரந்து பெற்று, புவியையும் வானையும் ஈரடியால் அளந்து, மூன்றாமடியைப் பலியின் தலையில் வைத்து அவனைப் பாதலத்தில் இருத்தினன் என்பது வரலாறு. அடக்கிய-அடக்க: செய்யிய வென்னும் வினையெச்சம்; பெயரெச்சமாக்கோடலுமாம். நீரிற் பெய்த-நீருடன் பெய்த; தாரை வார்த்தளித்த என்றபடி. மாவலி: மாபலியென்பதன் திரிபு. பாண குலத்தரசர்கள் மாவலியின் வழியினரெனக் கூறப்படுவர். இன்னோர் வாணகப்பாடி முதலிய இடங்களிலிருந்து அரசுபுரிந் தோராவர். அக் குலத்தரசருளொருவன் மகளென்க. 57-60. கொம்பர்த் தும்பி குழலிசை காட்ட - கொம்பு களிலுள்ள தும்பிகள் வேய்ங்குழ லோசையைக் காட்ட, பொங்கர் வண்டினம் நல்லியாழ்செய்ய - சோலையிலுள்ள வண்டினங்கள் நல்ல யாழினி சையை முரல, வரிக்குயில் பாட மாமயில் ஆடும் - வரிகளையுடைய குயில்கள் பாட அழகிய மயில்கள் ஆடுகின்ற, விரைப்பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும்-மணம் பொருந்திய மலர்ப்பந்தரைக் கண்டு மனமகிழ்ச்சி மிக்கும்; வரி - கீற்று; வரிப்பாட்டுமாம். பந்தரில் ஆடுதலைக் கண்டு என மாறுதலுமாம். ‘குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய, வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பின், மயிலா டரங்கின்' (4 : 3-6) என முன்னர் வந்திருத்தல் அறியற் பாலது. 61-66. புணர்துணை நீங்கிய பொய்கை அன்னமொடு - தன் துணையாகிய பேட்டினைப் பிரிந்த குளத்தில் வாழும் அன்னப்புள்ளுடன், மடமயிற் பேடையும் தோகையும் கூடி - மடப்பம் பொருந்திய மயிற்பேடையும் ஆண் மயிலும் சேர்ந்து, இருசிறை விரித்தாங்கு. எழுந்துடன் கொட்பன-இரண்டு சிறகுகளையும் விரித்து ஒருங்கே எழுந்து சுழல்வனவற்றை, ஒரு சிறைக் கண்டாங்கு உள்மகிழ்வு எய்தி - ஆண்டு ஒரு பக்கத்திற் கண்டு மனக் களிப்புற்று, மா மணி வண்ணனும் தம் முனும் பிஞ்ஞையும் - நீல மணிபோன்ற நிறமுடைய கண்ணனும் அவன் முன்னவனாகிய பலதேவனும் நப்பின்னையும், ஆடிய குரவை இஃதாமென நோக்கியும் - துவரா பதியில் எருமன்றத்தே ஆடிய குரவையாகும் இஃது என்று நோக்கி வியந்தும்; வெண்ணிற முடைமையால் ஆண் அன்னத்திற்குப் பல தேவனும், கருநிறமுடைமையால் ஆண் மயிலுக்கும் பெண் மயிலுக்கும் முறையே கண்ணனும் நப்பின்னையும் உவமைகள். குரவை - வினோதக் கூத்து ஆறினுள் ஒன்று; காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது. கண்ணன் முதலியோர் குரவையாடியதனை, 1" மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும் கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழுதேத்தத் தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே." என்பதனானறிக. 67-70. கோங்கலர் சேர்ந்த மாங்கனி தன்னைப் பாங்குற இருந்த பல்பொறி மஞ்ஞையை - கோங்கம் பூவினுடன் சேர்ந்திருந்த மாங்கனியின் பக்கத்தில் இருந்த பல பொறிகளையுடைய மயிலை, செம்பொன் தட்டில் தீம்பால் ஏந்தி-சிவந்த பொற்றட்டில் இனிய பாலை ஏந்திக் கொண்டு, பைங்கிளி ஊட்டும் ஓர் பாவையாம் என்றும் - பசிய கிளியை உண்பிக்கும் ஒரு அழகிய பெண்ணாகும் என்றும்; கோங்கலர்க்குப் பாலையுடைய பொற்றட்டும், மாங்கனிக்குக் கிளியும், மயிலுக்குப் பெண்ணும் உவமைகள். மாங்கனிக்குக் கிளி வடிவும் வண்ணமும் பற்றி உவமையாகும் ; 1"வண்டளிர் மா அத்துக், கிளி போல் காய கிளைத்துணர்" என்பதுங் காண்க. மற்றும், மாவடுவிற்குக் கிளி உவமையாதலும், மகடூஉ ஒருத்தி பொன்வள்ளத்திலே பாலையேந்திக் கிளியை உண்பிப்பதுமாகிய கருத்துக்கள் 2"சேடியல் வள்ளத்துப் பெய்தபால் சில காட்டி, ஊடுமென் சிறுகிளி யுணர்ப்பவள் முகம்போல,...கடிகயத் தாமரைக் கமழ்முகை கரைமாவின், வடிதீண்ட வாய்விடூஉம் வயலணி நல்லூர" என்னுஞ் சான்றோர் செய்யுளில் அமைந் திருத்தல் காண்க. 71-74. அணிமலர்ப் பூம்பொழில் அகவயின் இருந்த - அழகிய மலர்களையுடைய பூஞ்சோலையில் உள்ளிடத்திருந்த, பிணவுக் குரங்கு ஏற்றிப் பெருமதர் மழைக்கண் மடவோர்க்கு இயற்றிய மாமணி ஊசல் - மதர்த்த நோக்கமுடைய மழை போலும் பெரிய கண்களையுடைய மகளிருக்குச் செய்யப்பட்ட அழகிய மணிகளானாகிய ஊசலில் பெண் குரங்கினை ஏற்றி, கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும் - ஆண் குரங்கு ஆட்டுவது கண்டு மகிழ்ச்சி யடைந்தும்; பிணவுக் குரங்கு - பெண் குரங்கு; 3"பன்றி புல்வாய் நாயென மூன்றும், ஒன்றிய வென்ப பிணவின் பெயர்க் கொடை" என்னுஞ் சூத்திரத்து, 'ஒன்றிய' என்றதனால், பிணவு என்பது குரங்குக்கும் கொள்ளப்பட்டது. கடுவன் ஊசலில் பிணவுக் குரங்கை யேற்றி ஊக்குவது கண்டு நகையெய்தியும் என்க. 75-78. பாசிலை செறிந்த பசுங்காற் கழையொடு - பசிய இலைகள் நெருங்கிய பசிய தண்டினையுடைய மூங்கிலுடன், வால் வீசெறிந்த மராஅம் கண்டு-வெள்ளிய பூக்கள் நெருங்கிய வெண்கடம்பினைக் கண்ணுற்று, நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம்என - கண்ணன் தன் முன்னோனொடு நிற் கின்றனனாம் என்று, தொடிசேர் செங்கையில் தொழுது நின்று ஏத்தியும்-வீரவளை யணிந்த சிவந்த கைகளாற் கும்பிட்டு நின்று துதித்தும் ; முன் - தமையன் ; பலதேவர். கழைக்குக் கண்ணனும் வெண் கடம்பிற்குப் பலதேவரும் உவமைகள். வெண்கடம்பிற்குப் பலதேவர் உவமையாதல் 1"ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும்" 2நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச், செங்கான் மராஅந் தகைந்தன" என்பவற்றுள்ளும் காணப்படுமாறறிக. 79-92. ஆடற் கூத்தினோடு அவிநயம் தெரிவோர்-கதை தழுவாது ஆடுதலையுடைய கூத்தினோடு பாட்டின் பொருள் தோன்றக் கை காட்டும் அவிநயத்தினை அறிவோரும், நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர் - நாடகக் காப்பியமாகிய நல்ல நூல்களைக் கூர்ந்து ஆராய்வோரும், பண் யாழ் நரம்பில் பண்ணுமுறை நிறுப்போர் - பண்களையுடைய யாழ் நரம்பில் பண்களை முறையே நிறுத்துவோரும், தண்ணுமைக் கருவிக் கண் எறி தெரிவோர் - தோற் கருவியாகிய மத்தளத்தின் முகத்தில் அடித்தலை ஆராய்வோரும், குழலொடு கண்டம் கொளச்சீர் நிறுப்போர்-வேய்ங் குழலுடன் மிடற்றோசையும் பொருந்தும் வண்ணம் தாளவறுதி செய்வோரும், பழு நிய படால் பலரொடு மகிழ்வோர்-முற்றுப் பெற்ற இசைப் பாடல்களைப் பலருடன் பாடி மகிழ்வோரும், ஆரம் பரிந்த முத்தம்கோப் போர்-மாலைகள்அறுபடுதலாற் சிந்திய முத்துக் களைக் கோப்போரும், ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர் - ஈரம் உலர்ந்த சந்தனத்தைத் திமிர்வோரும், குங்கும வருணம் கொங்கையின் இழைப் போர் - சிவந்த தொய்யிற் குழம்பைக் கொங்கைகளில் எழுதுவோரும், அம் செங்கழுநீர் ஆயிதழ் பிணிப்போர்-அழகிய செங்கழுநீர் மலரின் அழகிய இதழ்களைக் கட்டுவோரும், நல்நெடுங் கூந்தல் நறுவிரை குடைவோர் - நல்ல நீண்ட குழலில் நறுமணங்களைப் புகுத்தி அப்புவோரும், பொன்னின் ஆடியிற் பொருந்துபு நிற்போர் -பொன்னாலாகிய சுற்றுவட்டத்தினையுடைய கண்ணாடியிற் பொருந்திக் கண்டு நிற்போரும் ஆகிய, ஆங்கவர் தம்மோடு - அவர்களுடன், அகலிரு வானத்து வேந்தனிற் சென்று விளையாட்டு அயர்ந்து - அகன்ற பெரிய விண்ணுலகத்து வேந்தனாகிய இந்திரனைப் போலச் சென்று விளையாட்டை விரும்பிச் செய்து; நாடகம் - கதை தழுவிவருங் கூத்து. நாடகக் காப்பியமாகிய நன்னூலென்க; இன்பத் துறையில் நிற்பவராகலின் நாடகக் காப்பியங் கூறினார். முன்னின்ற பண் யாழுக்கு அடை. யாழ்-பேரியாழ் முதலிய நால்வகை யாழ். நரம்பு - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. பண் - பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்னும் பெரும்பண்களும், அவற்றின் திறங்களும், அவ்விரு கூற்றின் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் இன வேறுபாடுகளும் ஆகிய பண்கள். எறி: முதனிலைத் தொழிற் பெயர்; 1"பண்ணமை முழவின் கண் ணெறியறிந்து" என்பதுங் காண்க. பழுநிய - இசை முற்றிய. திமிர்தல்-தடவி யுதிர்த்தல்; குடைவோர் - துவரினும் ஓமாலிகையினும் ஊறிய நன்னீரால் கூந்தலை ஆட்டுவோர் என்றுமாம். அவிநயந் தெரிவோர் முதலாகிய அவர்தம்மோடு சென்று விளையாட்ட யர்ந்து என்க. 93-99. குருந்தும் தளவும் திருந்து மலர்ச் செருந்தியும் - குருந்தும் செம்முல்லையும் அழகிய பூக்களையுடைய செருந்தியும், முருகுவிரி முல்லையும் கருவிளம் பொங்கரும் - மணம் விரிகின்ற முல்லையும் கருவிள மரச்செறிவும், பொருந்துபு நின்று திருந்து நகைசெய்து- அமர்ந்திருந்து இன்ப நகை புரிந்து, குறுங்கால் நகுலமும் நெடுஞ்செவி முயலும் - குறிய கால்களையுடைய கீரியையும் நீண்ட காதுகளையுடைய முயலையும், பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும் - துள்ளிக் குதிக்கின்ற மானையும் குறுங்காடுகளினின்று நீங்காத ஆட்டையும், வம்மெனக் கூஉய் மகிழ்துணையொடு தன் செம்மலர்ச் செங்கை காட்டுபு நின்று - வாருமென அழைத்துப் பெருந்தேவியுடன் தன் சிவந்த மலர் போன்ற செவ்விய கையாற் காட்டி நின்று; செருந்தி, கருவிளை யென்பன மர வேறுபாடுகள். பொங்கர்- சோலை; சோலை போலும் மரச் செறிவு. இறும்பு - குறுங்காடு. வெறி- ஆடு. மகிழ்துணை - இராசமாதேவி. மகிழ்துணையொடு பொருந்துபு நின்று நகைசெய்து வம்மெனக் கூஉய்ச் செங்கை காட்டுபு நின்று என்க. 100-106. மன்னவன்தானும் மலர்க்கணை மைந்தனும் - அரசர் பெருமானும் மலராகிய அம்புகளையுடைய காமவேளும், இன்னிள வேனிலும் இளங்காற் செல்வனும் - இன்பம் பயக்கும் இளவேனிலும் தென்றற் காற்றாகிய செல்வனும், எந்திரக் கிணறும் இடுங்கற் குன்றமும் - நீரை நிறைக்க வேண்டுமாயின் நிறைத்துப் போக்க வேண்டுமாயிற் போக்கு தற்குரிய எந்திரம் அமைந்த கிணறும்செய் குன்றும், வந்து வீழ் அருவியும் மலர்ப்பூம்பந்தரும் - வந்து விழுகின்ற அருவியும் மலர்களாகிய அழகிய பந்தரும், பரப்புநீர்ப் பொய்கையும் கரப்பு நீர்க்கேணியும் - நீர்ப்பரப்பினையுடைய வாவியும் மறைந்திருக்கின்ற நீரையுடைய கிணறும், ஒளித்து உறை இடங்களும் பளிக்கறைப் பள்ளியும் - ஒளிந்து வாழ்கின்ற மறைவிடங்களும் பளிக்கறையாகிய இடமும் ஆகிய, யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி- எவ்விடத்தும் திரிந்து தங்கி விளையாடி ; இளவேனில் - சித்திரையும் வைகாசியுமாகிய இரு திங்கள்கள். இளங்கால்-இளந் தென்றற்காற்று, மந்தமாருதம். இளவேனிற் காலத்திலே இளந் தென்றல் வீசாநிற்கக் காமவேட்கை விஞ்ச மன்னவன் விளையாடினான் என்பார், 'மன்னவன்றானும் மைந்தனும் வேனிலும் செல்வனும் விளையாடி' என்றார். 1"அந்தக் கேணியு மெந்திரக் கிணறும், தண்பூங் காவுந் தலைத்தோன் றருவிய, வெண்சுதைக் குன்றொடு வேண்டுவ பிறவும், இளையோர்க் கியற்றிய விளையாட் டிடத்த, சித்திரப் பூமி வித்தக நோக்கி" என வருவது ஈண்டு அறியற்பாலது. 107-116. மகதவினைஞரும் மராட்டக் கம்மரும்-மகத நாட்டிற் பிறந்த மணி வேலைக்காரரும் மகாராட்டிரத்திற் பிறந்த பொற்கம்மியரும், அவந்திக்கொல்லரும் யவனத்தச்சரும்-அவந்திநாட்டுக் கொல்லரும் யவனநாட்டுத் தச்சரும், தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி-தண்ணிய தமிழ்நாட்டுத் தோன்றிய தொழில் வல்லாருடன் கூடி, கொண்டினிது இயற்றிய கண்கவர் செய்வினை-உள்ளங் கொண்டு நன்கு செய்தமைத்த கண்களைக் கவரும் தொழிற் சிறப்பினையுடைய, பவளத் திரள்கால் பன்மணிப் போதிகை - பவளத்தாற் சமைத்த திரட்சியுடைய தூண்களும் பல்வகை மணிகளாலாகிய போதிகைக் கட்டைகளும், தவள நித்திலத் தாமம் தாழ்ந்த-வெள்ளிய முத்துமாலைகள் தொங்கவிடப்பட்ட, கோணச் சந்தி மாண்வினை விதானத்து - கோணமாகிய சந்தினை யுடைய மாட்சிமைப்பட்ட தொழிலமைந்த மேற்கட்டியும் அமைந்த, தமனியம் வேய்ந்த வகைபெறு வனப்பின்-பொன்னால் வேயப்பெற்ற வகையமைந்த அழகினையுடைய, பைஞ்சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபத்து-பசிய சாணத்தான் மெழுகப்படாத பசும் பொன் மண்டபத்தின்கண், இந்திர திருவன் சென்று இனிது ஏறலும் - இந்திரச் செல்வத் தினையுடைய மன்னவன் இனிது சென்று ஏறுதலும் ; மராட்டம் : மகாராட்டிரம் என்பதன் மரூஉ. யவனம் என்பது பரத கண்டத்தின் புறத்ததாகிய ஓர் நாடு. இங்ஙனம் ஒவ்வொரு நாட்டு வினைஞர் ஒவ்வொரு தொழிலிற் சிறந்திருந்தன ரென்பது, 1"யவனத் தச்சருமவந்திக் கொல்லரும், மகதத்துப் பிறந்த மணிவினைக் காரரும், பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும், கோசலத் தியன்ற வோவியத் தொழிலரும், வத்த நாட்டு வண்ணக் கம்மரும்" என்பதனாலும் அறியப்படும். தமிழ் - தமிழ் நாடு; தமிழ் வினைஞர் எனப் பொதுப் படக் கூறினமையின் அவர் பல தொழிலினும் வல்லுநராதல் பெற்றாம். போதிகை-தூணின் மேல் உத்தரம் முதலியவற்றைத் தாங்குங் கட்டை; கோணச் சந்தி - கூடல்வாய். பைஞ்சேறு - கோமயம்; ஆவின்சாணம். 2"பைஞ்சேறு மெழுகிய நன்னகர்" என்றார் பிறரும். பொன் மண்டப மாகையாற் பைஞ்சேற்றால் மெழுகப் படாதாயிற்று; சந்தனத்தால் மெழுகப்பட்ட தென்னலுமாம்; 3"மங்கல வெள்ளை வழித்து முத்தீர்த்தபின்" என வருதல் காண்க. செய்வினையையுடைய மண்டபம், கால் முதலியவற்றையுடைய பொன் மண்டபமென்க. 117-130. வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால் - வாயில் காப் போர்க்கு உரைத்து அரசன் பணியால். சேய்நிலத்தன்றியும் செவ்வியின் வணங்கி - தூரமான இடத்தில் தாம் நின்ற தன்றியும் முறைமையால் வணக்கஞ்செய்து, எஞ்சா மண் நசைஇ இகல்உளம் துரப்ப - குறையாத நிலத்தை விரும்பி மாறுபாடானது உள்ளத்தைச் செலுத்த, வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி-வஞ்சி நகரத்தின் கண்ணிருந்து வஞ்சிமாலை சூடி, முறஞ்செவி யானையும் தேரும் மாவும்-முறம் போன்ற காதுகளையுடைய யானையும் தேரும் குதிரையும், மறங்கெழு நெடுவாள் வயவரும் மிடைந்த-பெரிய வாட்படையைக் கையிற்கொண்ட ஆண்மைமிக்க வீரரும் செறிந்த, தலைத் தார்ச் சேனையொடு-முதன்மையாகிய தூசிப் படையோடு, மலைத்துத் தலைவந்தோர் - பொருதற்குவந்த இருபெரு வேந்தராகிய சேரபாண்டியருடைய, சிலைக்கயல் நெடுங் கொடி - வில்லும் கயலுமாகிய நெடிய கொடிகளை, செரு வேல் தடக்கை ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால் - போர்புரியும் வேற்படையைக் கொண்ட பெரிய கைகளை யுடைய ஆத்திமலரால் தொடுக்கப்பட்ட கண்ணியையுடைய இளங்கோவினால், காரியாற்றுக் கொண்ட - காரி யாற்றின் கண் கைப்பற்றிய’ காவல் வெண்குடை வலிகெழு தடக்கை மாவண்கிள்ளி - உயிர்களைக் காக்கும் வெண் குடை யினையும் வலிமிக்க பெருங் கைகளையும் உடைய மாவண் கிள்ளி, ஒளியொடு வாழி ஊழிதோ றூழி - நீ பல்லூழி காலம் ஒளியுடன் வாழ் வாயாக, வாழி எங்கோ மன்னவர் பெருந்தகை - எம் தலைவனாகிய அரசர் பெருந்தகையே வாழ்வாயாக, கேளிது மன்னோ கெடுகநின் பகைஞர் - நின் பகைஞர் ஒழிக ! அரசே இதனைக் கேட்பாயாக; (48) கோட்டங் காவலர் (50) இசைத்து மென்றேகி, (117) வாயிலுக்கிசைத்து, மன்னவனருளால் (138) மன்னவ என்றலும்என முடியும் ; மன்னவனருளால் வணங்கி யென்றலுமாம். பகைவர் மண்ணினை விரும்பி வஞ்சிசூடிப் போருக்குச் செல்லுதல் வஞ்சித் திணையாகும் இதனை, 1"எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன், அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே" என்பதனானறிக. வஞ்சியினிருந்து வஞ்சி சூடிச் சேனையொடு தலைவந்தோர் என்க. மலைந்து என்பதனை மலையவெனத் திரிக்க. இளங்கோன்-தம்பியாகிய நலங்கிள்ளி. மாவண்கிள்ளி : பெயர்; மிக்க வண்மையை யுடைய கிள்ளி யென்றுமாம்; இவன் கிள்ளிவளவன் எனப்படு பவன். கிள்ளி : விளி. கிள்ளிவளவன் பகைவனாகிய காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியையும், அவனுக்குத் துணையாக வந்தெதிர்த்த சேர பாண்டியர்களையும் தன் தம்பியாகிய நலங்கிள்ளியால் காரியாறு என்னும் யாற்றின் பாங்கர் வென்றன னென்க. காரியாறு ஓர் நதி என்பதனை, 2"செல்கதிமுன் னளிப்பார்தந் திருக்காரிக் கரைபணிந்து" என்பதனானறிக, ஒளி - கடவுட்டன்மை; 3"உறங்கு மாயினு மன்னவன் றன்னொளி, கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்" என்பது காண்க : பரிமேலழகரும் இம் மேற் கோள் கொண்டே 4"இளையரினமுறைய ரென்றிகழார் நின்ற, ஒளியோ டொழுகப் படும்" என்னுங் குறளுரையில் 'ஒளி - உறங்கா நிற்கவும் உலகங் காக்கின்ற அவரது கடவுட்டன்மை,' என்றுரைத்தார். மன்னும் ஓவும் அசைகள். 131-138. யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இம் மாநகர்த் திரியும் ஓர் வம்ப மாதர் - யானைத்தீ என்னும் பசிநோயால் சோர்ந்து உடல் வாட்டமுற்று இப் பெரிய நகரத்தின்கண் சுற்றிக்கொண்டிருந்த ஒரு புதிய மங்கை, அருஞ்சிறைக் கோட்டத்து அகவயிற் புகுந்து - அரிய சிறைச்சாலையின் உள்ளே நுழைந்து, பெரும் பெயர் மன்ன நின்பெயர் வாழ்த்தி - பெரிய புகழுடைய அரசே நினது பெயரை வாழ்த்தி, ஐயப் பாத்திரம் ஒன்றுகொண்டு ஆங்கு மொய்கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் - ஒரே பிச்சைப் பாத்திரத்தைக் கொண்டு அங்கு நெருங்குதலையுடைய மக்கள் அனைவரும் உண்ணுமாறு உணவினைச் சுரந்தளித்தனள், ஊழிதோறூழி உலகம் காத்து வாழி எங்கோ மன்னவ என்றலும்- ஊழியூழியளவும் உலகினைக் காத்து எம் தலைவனாகிய அரசே வாழ்வாயாக என வுரைத்தலும்; நோய்க்கு அயர்ந்து - நோயால் அயர்ந்து. வம்பு - புதுமை; ஈறு திரிந்தது. பெரும்பெயர்-மிக்க புகழ். மொசிக்க-உண்ண; 1"மையூன் மொசித்த வொக்கலொடு" என்பது காண்க. 139-145. வருக வருக மடக்கொடிதான் என்று அருள்புரி நெஞ்ச மொடு அரசன் கூறலின் - அங்ஙனமாயின் அவ் விளங்கொடி ஈண்டு வருக வருக என்று அரசன் அருண்மிகுந்த உளத்தி னோடும் உரைத்தலின், வாயிலாளரின் மடக்கொடிதான் சென்று- வாயில் காவலரால் மணிமேகலை அரசன்முன் சென்று, ஆய்கழல் வேந்தன் அருள் வாழிய என - ஆராய்ந்து வீரக் கழலை யணிந்த மன்னவனது அருள் வாழ்க என்று கூற, தாங்கரும் தன்மைத் தவத்தோய் நீ யார் - பொறுத்தற்கரிய தன்மைகளையுடைய தவத்தினை யுடையோய் நீ யார், யாங் காகியது இவ் வேந்திய கடிஞை என்று - நின் கையிலேந்திய இப் பாத்திரம் யாண்டுக் கிடைத்தது என்று, அரசன் கூறலும் - வேந்தன் வினவுதலும், ஆயிழை உரைக்கும் - அவள் கூறுவாள்; அடுக்கு விரைவு பற்றியது. அழைத்து வருக வென்று வாயிலாளர்க்குக் கூற வென்க. தாங்கருந் தன்மை-பிறராற் பொறுத்தற்கரிய தன்மை. 146-154. விரைத்தார் வேந்தே நீ நீடுவாழி - மணம் பொருந்திய மாலையை யணிந்த மன்னவ! நீ நீடூழி வாழ்வாயாக, விஞ்சை மகள் யான் - யான் ஓர் வித்தியாதர மகள், விழவணி மூதூர் வஞ்சந் திரிந்தேன் - விழாவாலாகிய எழில் நிறைந்த இத் தொன்னகரில் வஞ்சத்தால் திரிந்தேன், வாழிய பெருந்தகை - அரசர் பெருந்தகை வாழ்க, வானம் வாய்க்க - மழை தவறாது பொழிக, மண்வளம் பெருகுக - புவியில் வளம்பெருகுக, தீதின்றாக கோமகற்கு - அரசனுக்குத் தீதீன்றி நன்மை யுண்டாகுக, ஈங்கிது ஐயக் கடிஞை-இஃது ஓர் பிச்சைப் பாத்திரம், அம்பல மருங்கு ஓர் தெய்வம் தந்தது - உலக வறவியிலுள்ள ஒரு தெய்வத்தாற்றரப் பட்டது, திப்பிய மாயது - தெய்வத்தன்மை யுடையது, யானைத்தீ நோய் அரும்பசி கெடுத்தது - யானைத்தீ யென்னும் போக்குதற் கரிய பசிநோயைப் போக்கியது, ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என-இஃது உடம்பு மெலிந்த மக்களுக்கு உயிரை நிறுத்தும் மருந்தாவது என்று கூற ; விஞ்சை மகள் என்பதற்கு மந்திரத்தால் உருமாறிய மகள் என்று மணிமேகலைக் கேற்பப் பொருள்கொள்க. வஞ்சத் திரிந்தேன் என்பதற்கும் எனது தீவினையால் திரிந்தேன் என்றும், வேற்றுருக்கொண்டு திரிந்தேன் என்றும் இருபொருள் கொள்க. உடை: வினைத்தொகை; உடையவென்றுமாம்; பிறிதொன்று மில்லாத வென்றபடி 155-158. யான் செயற்பாலது என்இளங்கொடிக்கு என்று வேந்தன் கூற - அரசன் யான் நினக்குச் செய்யவேண்டியது யாது என வினவ, மெல்லியல் உரைக்கும் - அவள் கூறுவாள், சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து அறவோர்க்கு ஆக்கும் அது வாழியர் என - சிறைச்சாலையை அழித்து அருள் உள்ளமுடைய அறவோர் வாழுங் கோட்டமாக்கும் அச் செயலே வாழ்வாயாக என்றுரைக்க ; இளங்கொடிக்கு முன்னிலையிற் படர்க்கை. ஆக்குமது நீ செயற் பாலதென என்க. 159-162. அருஞ்சிறை விட்டு ஆங்கு ஆயிழை உரைத்த பெருந்தவர் தம்மால் பெரும்பொருள் எய்த - அரிய சிறையிலுள்ளோரை விடுத்து அவ்விடத்தில் மணிமேகலை கூறிய பெருந் தவமுடையோர் களால் பெரும் பொருளை எய்துமாறு, கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம் அறவோர்க்கு ஆக்கினன் அரசாள் வேந்து என்-கறைப்பட்டோரில்லாத சிறைக்கோட்டத்தை அறக்கோட்ட மாக்கினான் அரசுபுரியும் வேந்தன் என்க. பெரும் பொருள் - அறம் ; ஞானமுமாம். கறையோர் - கடமை (இறை) செலுத்த வேண்டியவர்கள். கறையோரில்லா என்றமையால் அரசன் கறை வீடு செய்தமை பெற்றாம். செங்கோல் வேந்தர் கறைவீடு செய்வராதலை. 1"சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதுங், கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்......கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன்" 1"சிறையோர் கோட்டஞ் சீமின் யாங்கணுங், கறைகெழு நாடு கறைவீடு செய்ம்மென" என்பவற்றானறிக. சிறையோர் கோட்டம் - சிறைக் கோட்டம். தாரோன் வணங்கி வஞ்சினங்கூறத் தெய்வங் கூறலும் அவன் உள்ளங் கலங்கி வருந்தி அறிவாமெனப் பெயர்வோன்றன்னை (இரவாகிய) நீலயானை தொடர எஃகு உளங்கிழிப்ப அவன் பொத்தி உயிர்த்துப் போயபின், மணிமேகலை நுனித்தனரென்று கருதி வாங்கிக் கோட்டம் புகுந்து மாக்களை ஊட்டலும், காவலர் வியந்து கோமகனுக்கு இசைத்துமென்றேகி, திருவன் சென்று ஏறலும், வாயிலுக்கிசைத்து வணங்கி, ‘மன்னவ, வம்பமாதர் ஊண் சுரந்தனள்' என்றலும், ‘வருக வருக என்று அரசன் கூறலின், மடக்கொடி வாயிலாளரிற் சென்று, 'நின் அருள் வாழிய' என 'யாங்காகியது" என்று அரசன் கூறலும், ஆயிழை உரைப்பவள் ‘உயிர் மருந்து இது' என, ‘யான் செயற்பாலது என்' என்று வேந்தன் கூற, மெல்லியல் உரைப்பவள், ‘நீ செயற்பாலது அறவோர்க்கு ஆக்குமது' என, வேந்து பெரும்பொரு ளெய்துதற்குக் கோட்டத்தை அறவோர்க்கு ஆக்கினன் என வினை முடிவு செய்க. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை முற்றிற்று. 20. உதயகுமரனை வாளாலெறிந்த காதை (அரசன் பணியால் சிறைச்சாலை பலவகை அறங்களும் நிகழ்தற்குரிய சாலையாய் விளங்கிற்று. உதயகுமரன் இந் நிகழ்ச்சி களைக் கேட்டு, "மணிமேகலை உலகவறவியை நீங்கி வெளியே வந்தபொழுது, அவளைக் கைப்பற்றிக் கொணர்ந்து தேரிலேற்றி, அவள் கற்ற விஞ்சைகளையும் அவள் கூறும் முதுமொழிகளையும் கேட்பேன்" என்று தன்னுள்ளே எண்ணிக்கொண்டு சென்று அவளிருக்கும் உலகவறவியில் ஏறினன். காஞ்சனனென்னும் விஞ்சையன், "காயசண்டிகைக்கு விருச்சிக முனிவன் இட்ட சாபத்தை அவள் நுகர்தற்குரிய பன்னீராண்டும் சென்றன; அவள் இன்னும் வாராமைக்குக் காரணம் யாதோ" என்று மிக்க கவலை யுற்று, தனது பதியை நீங்கி விசும்பின் வழியே வந்து காவிரிப் பூம்பட்டினத்தில் இறங்கிப் பூதசதுக்கம், பூஞ்சோலைகள், மாதவரிடங்கள், மன்றங்கள், பொதியில்கள் ஆகிய இடந்தோறும் சென்று சென்று தேடித் திரிந்து, காயசண்டிகை வேடம் பூண்டு உணவளித்து மாந்தர் பலருடைய பசியையும் மாற்றிக் கொண்டிருக்கும் மணிமேகலையைக் கண்டு, அவளைக் காயசண்டிகை யென்றே துணிந்து அருகிற் சென்று அவளை நோக்கி, "நின் கையில் ஏந்திய பாத்திரம் ஒன்றேயாயினும் உண்போர் பலராக வுள்ளனர் ; உன்னை வருத்திய யானைத் தீயாகிய நோயை ஒழித்தற்குத் தேவர்கள் இதனை அளித்தார் களோ?" என்று கூறிப், பின்பு, பழைய நட்பினைப் புலப்படுத்தும் மொழிகள் பலவற்றைச் சொல்லிப் பாராட்டவும், அவள் அவற்றைச் சிறிதும் மதியாமல் அவனை நீங்கி உதயகுமரனை அடைந்து அவனருகே நின்று, இளமையின் நிலையில்லாமையை அவனுக்கு அறிவுறுத்த நினைந்து, அங்கே இயல்பாக வந்த நரைமூதாட்டி யொருத்தியைக் காட்டி, முன்பு வனப்புடையனவாயிருந்த அவளுடைய உறுப்புக்கள் பலவும் இயல்பு திரிந்து அழகு கெட்டு வெறுக்கத் தக்கனவா யிருத்தலை நன்கு புலப்படுத்தி, " பூவினுஞ் சாந்தினும் புலால்மறைத் தியாத்துத் தூசினு மணியினும் தொல்லோர் வகுத்த வஞ்சந் தெரியாய் மன்னவன் மகனே" என்று கூறினள். அவள் அவ்வாறு கூறுதலைக் கேட்ட காஞ்சனன் "யான் தன்னைப் பாராட்டிக் கூறும் சொற்களின் பொருளை இவள் கொள்கின்றிலள்; என்னைப் பிறன்போல் நோக்குகின்றாள்; அயலான் பின்னே செல்கின்றாள்; காதற் குறிப்புடனே அரசன் மகனுக்கு நீதி யுரைக்கின்றாள்; இவன் காதலனாதலினாலேயே இவள் இங்கே தங்கி விட்டனள் போலும்!" என நினைந்து வெகுண்டு, புற்றிலடங்கும் அரவைப்போல அவ் வுலகவறவியினுள்ளே புகுந்து அற்றம் பார்த்து ஒளித்திருந்தனன். அவன் அங்ஙன மிருத்தலை யறியாத உதயகுமரன், "மணிமேகலைதான் காயசண்டிகை வேடம்பூண்டு கையிலே பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு வந்து நின்று நம்மை மயக்கினள்; அறிந்தவன் போன்று பழமை கூறிப் பாராட்டிய அயலானொருவன் இங்கிருத்தலால் இவள் இன்றிரவில் இவ்விடத்தைவிட்டு நீங்குவாளல்லள்; இவள் செய்தியை இவ்விரவின் இடையாமத்தே வந்து தெரிந்து கொள்வோம்," என்று தன்னுள் எண்ணிக் கொண்டே சென்று தன் இருப்பிட மடைந்தான். மணிமேகலையும் காயசண்டிகை வடிவத்தோடே சம்பாபதி கோயிலை யடைந்து வதிந்தாள். இரவில் எல்லாரும் உறங்கிய பின்பு உதயகுமரன் முன்பு எண்ணிய வாறே செல்லத் துணிந்து தனியே எழுந்து கோயிலை நீங்கி. உலகவறவியை அடைந்து, நச்சரவு கிடந்த புற்றினுள்ளே புகுவான் போல அதனுள்ளே புகுந்தான். உடனே, முன்னம் அவ்விடத்திற் புகுந்து இவன் வரவை நோக்கிக் கொண்டு சினத்துடனிருந்த காஞ்சனன், "இவன் இவள்பாலே வந்தனன்" என்று துணிந்து விரைந் தெழுந்துபோய் அவன் தோளைத் துணித்து வீழ்த்தி விட்டுக், காயசண்டிகையைக் கைப்பற்றிக் கொண்டு செல்வோமென நினைந்து அவளருகே சென்றான். அப்பொழுது அங்குள்ள கந்திற் பாவையானது, "காஞ்சன, செல்லாதே; செல்லாதே; இவள் உன் மனைவியாகிய காயசண்டிகை யல்லள்; இவ் வடிவம் மணிமேகலை கொண்ட வேற்று வடிவம்; காயசண்டிகை கடும்பசி யொழிந்து வானிலே செல்லுகையில் அவளுக்கு நேர்ந்த துன்பத்தைக் கேட்பாயாக; அந்தர சாரிகள் துர்க்கை எழுந்தருளியிருக்கும் விந்தமலைக்கு நேராக மேலே செல்லார்; யாரேனும் அங்ஙனம் செல்லின், அம்மலையைக் காக்கும் 'விந்தாகடிகை' யென்பவள் அன்னோரைச் சாயையினால் இழுத்துத் தன் வயிற்றில் அடக்கிக் கொள்வள்; இதனையறியாத காயசண்டிகை அம் மலைக்கு நேராக மேற்சென்று அவள் வயிற்றில் அடங்கிவிட்டாள். காஞ்சன! இதனையும் கேட்பாயாக; உதயகுமரன் ஊழ்வினையினால் இறந்தானாயினும், நீ ஆராயாது கொன்றமையால் மிக்க தீவினையுடையை ஆயினை; அவ் வினை உன்னை விடாது தொடர்ந்து வருத்தும்," என்றுரைத்தது. அது கேட்டு மனம் கன்றிக் காஞ்சனன் தன் நகரத்திற்குச் சென்றான். அரசன் ஆணையின் ஆயிழை அருளால் நிரயக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம் தீப்பிறப் புழந்தோர் செய்வினைப் பயத்தான் யாப்புடை நற்பிறப் பெய்தினர் போலப் 5 பொருள்புரி நெஞ்சிற் புலவோன் கோயிலும் அருள்புரி நெஞ்சத் தறவோர் பள்ளியும் அட்டிற் சாலையும் அருந்துநர் சாலையும் கட்டுடைச் செல்வக் காப்புடைத் தாக ஆயிழை சென்றதூஉம் ஆங்கவள் தனக்கு 10 வீயா விழுச்சீர் வேந்தன் பணித்ததூஉம் சிறையோர் கோட்டஞ் சீத்தருள் நெஞ்சத்து அறவோர் கோட்ட மாக்கிய வண்ணமும் கேட்டன னாகியத் தோட்டார் குழலியை மதியோ ரெள்ளினும் மன்னவன் காயினும் 15 பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று பற்றினன் கொண்டென் பொற்றே ரேற்றிக் கற்றறி விச்சையுங் கேட்டவள் உரைக்கும் முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே மதுக்கமழ் தாரோன் மனங்கொண் டெழுந்து 20 பலர்பசி களையப் பாவைதான் ஒதுங்கிய உலக வறவியின் ஊடுசென் றேறலும் மழைசூழ் குடுமிப் பொதியிற்குன் றத்துக் கழைவளர் கான்யாற்றுப் பழவினைப் பயத்தான் மாதவன் மாதர்க் கிட்ட சாபம் 25 ஈரா றாண்டு வந்தது வாராள் காயசண் டிகையெனக் கையயுற வெய்திக் காஞ்சன னென்னும் அவள்தன் கணவன் ஓங்கிய மூதூர் உள்வந் திழிந்து பூத சதுக்கமும் பூமரச் சோலையும் 30 மாதவ ரிடங்களும் மன்றமும் பொதியிலும் தேர்ந்தனன் திரிவோன் ஏந்திள வனமுலை மாந்தர் பசிநோய் மாற்றக் கண்டாங்கு இன்றுநின் கையின் ஏந்திய பாத்திரம் ஒன்றே யாயினும் உண்போர் பலரால் 35 ஆனைத் தீநோய் அரும்பசி களைய வான வாழ்க்கையர் அருளினர் கொல்லெனப் பழைமைக் கட்டுரை பலபா ராட்டவும் விழையா உள்ளமொ டவன்பால் நீங்கி உதய குமரன் றன்பாற் சென்று 40 நரைமூ தாட்டி ஒருத்தியைக் காட்டித் தண்ணறல் வண்ணந் திரிந்துவே றாகி வெண்மண லாகிய கூந்தல் காணாய் பிறைநுதல் வண்ணங் காணா யோநீ நரைமையிற் றிரைதோற் றகையின் றாயது 45 விறல்விற் புருவம் இவையுங் காணாய் இறவி னுணங்கல் போன்றுவே றாயின கழுநீர்க் கண்காண் வழுநீர் சுமந்தன குமிழ்மூக் கிவைகாண் உமிழ்சீ யொழுக்குவ நிரைமுத் தனைய நகையுங் காணாய் 50 சுரைவித் தேய்ப்பப் பிறழ்ந்துவே றாயின இலவிதழ்ச் செவ்வாய் காணா யோநீ புலவுப் புண்போற் புலால்புறத் திடுவது வள்ளைத் தாள்போல் வடிகா திவைகாண் உள்ளூன் வாடிய உணங்கல் போன்றன 55 இறும்பூது சான்ற முலையுங் காணாய் வெறும்பை போல வீழ்ந்துவே றாயின தாழ்ந்தொசி தெங்கின் மடல்போற் றிரங்கி வீழ்ந்தன விளவேய்த் தோளுங் காணாய் நரம்பொடு விடுதோ லுகிர்த்தொடர் கழன்று 60 திரங்கிய விரல்க ளிவையுங் காணாய் வாழைத் தண்டே போன்ற குறங்கிணை தாழைத் தண்டின் உணங்கல் காணாய் ஆவக் கணைக்கால் காணா யோநீ மேவிய நரம்போ டென்புபுறங் காட்டுவ 65 தளிரடி வண்ணங் காணோ யோநீ முளிமுதிர் தெங்கின் உதிர்கா யுணங்கல் பூவினுஞ் சாந்தினும் புலான்மறைத் தியாத்துத் தூசினும் மணியினுந் தொல்லோர் வகுத்த வஞ்சந் தெரியாய் மன்னவன் மகனென 70 விஞ்சை மகளாய் மெல்லிய லுரைத்தலும் தற்பா ராட்டுமென் சொற்பயன் கொள்ளாள் பிறன்பின் செல்லும் பிறன்போ னோக்கும் மதுக்கம ழலங்கன் மன்னவன் மகற்கு முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப் 75 பவளக் கடிகையிற் றவளவாள் நகையுங் குவளைச் செங்கணுங் குறிப்பொடு வழாஅள் ஈங்கிவன் காதலன் ஆதலின் ஏந்திழை ஈங்கொழிந் தனளென இகலெரி பொத்தி மற்றவள் இருந்த மன்றப் பொதியினுள் 80 புற்றடங் கரவிற் புக்கொளித் தடங்கினன் காஞ்சன னென்னுங் கதிர்வாள் விஞ்சையன் ஆங்கவ ளுரைத்த அரசிளங் குமரனும் களையா வேட்கை கையுதிர்க் கொள்ளான் வளைசேர் செங்கை மணிமே கலையே 85 காயசண் டிகையாய்க் கடிஞை யேந்தி மாய விஞ்சையின் மனமயக் குறுத்தனள் அம்பல மருங்கில் அயர்ந்தறி வுரைத்தவிவ் வம்பலன் றன்னொடிவ் வைகிரு ளொழியாள் இங்கிவள் செய்தி இடையிருள் யாமத்து 90 வந்தறி குவனென மனங்கொண் டெழுந்து வான்றேர்ப் பாகனை மீன்றிகழ் கொடியனைக் கருப்பு வில்லியை அருப்புக்கணை மைந்தனை உயாவுத் துணையாக வயாவொடும் போகி ஊர்துஞ் சியாமத் தொருதனி யெழுந்து 95 வேழம் வேட்டெழும் வெம்புலி போலக் கோயில் கழிந்து வாயில் நீங்கி ஆயிழை யிருந்த அம்பல மணைந்து வேக வெந்தீ நாகங் கிடந்த போகுயர் புற்றளை புகுவான் போல 100 ஆகந் தோய்ந்த சாந்தல ருறுத்த ஊழடி யீட்டதன் உள்ளகம் புகுதலும் ஆங்குமுன் னிருந்த அலர்தார் விஞ்சையன் ஈங்கிவன் வந்தனன் இவள்பா லென்றே வெஞ்சின அரவ நஞ்செயி றரும்பத் 105 தன்பெரு வெகுளியின் எழுந்துபை விரித்தென இருந்தோன் எழுந்து பெரும்பின் சென்றவன் சுரும்பறை மணித்தோள் துணிய வீசிக் காயசண் டிகையைக் கைக்கொண் டந்தரம் போகுவ லென்றே அவள்பாற் புகுதலும் 110 நெடுநிலைக் கந்தின் இடவயின் விளங்கக் கடவு ளெழுதிய பாவையாங் குரைக்கும் அணுகல் அணுகல் விஞ்சைக் காஞ்சன மணிமே கலையவள் மறைந்துரு வெய்தினள் காயசண் டிகைதன் கடும்பசி நீங்கி 115 வானம் போவுழி வந்தது கேளாய் அந்தரஞ் செல்வோர் அந்தரி இருந்த விந்த மால்வரை மீமிசைப் போகார் போவா ருளரெனிற் பொங்கிய சினத்தள் சாயையின் வாங்கித் தன்வயிற் றிடூஉம் 120 விந்தங் காக்கும் விந்தா கடிகை அம்மலை மிசைப்போய் அவள்வயிற் றடங்கினள் கைம்மை கொள்ளேல் காஞ்சன இதுகேள் ஊழ்வினை வந்திங் குதய குமரனை ஆருயி ருண்ட தாயினும் அறியாய் 125 வெவ்வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன அவ்வினை நின்னையும் அகலா தாங்குறும் என்றிவை தெய்வங் கூறலும் எழுந்து கன்றிய நெஞ்சிற் கடுவினை யுருத்தெழ விஞ்சையன் போயினன் விலங்குவிண் படர்ந்தென். உரை 1-8. அரசன் ஆணையின் ஆயிழை அருளால் - மணிமேகலையின் அருண்மொழியினையேற்ற மன்னவனது ஆணையினாலே, நிரயக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம் - நிரயத் துன்பத்தைத் தரும் கொடிய சிறை நீக்கப்பெற்ற சாலை, தீப்பிறப் புழந்தோர்-தீக்கதியிற் பிறந்து வருந்தினோர், செய்வினைப் பயத்தால்-முன்செய்த நல்வினைப் பயனால், யாப்புடை நற்பிறப்பு எய்தினர்போல - உறுதியுடைய நற்பிறப்பினை அடைந்தமை போல, பொருள்புரி நெஞ்சில் புலவோன் கோயிலும் - வாய்மை நான்கினையும் விரும்பிய உள்ளமுடைய மெய்யறி வினனாகிய புத்தன் கோயிலும், அருள்புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும் - அருளை விரும்பும் மனத்தையுடைய அறவோர் வாழுமிடமும், அட்டிற் சாலையும் அருந்துநர் சாலையும்- மடைப் பள்ளியும் உணவுண்ணு மிடமுமாகி, கட்டுடைச் செல்வக் காப்புடைத்தாக - உறுதியுள்ள செல்வக் காவலை யுடையதாக; சிறை நீக்கிய - சிறையாந் தன்மையைப் போக்கிய. பொருள் - வாய்மை; 1"பொருள் சேர் புகழ்" என்பதிற்போல. புரிதல்-விரும்புதல். ஆகி யென ஒரு சொல் விரித்துரைக்க. செல்வக் காப்பு-இனிய காவல். கோட்டம் காப்புடைத்தாக வென்க. 9--13. ஆயிழை சென்றதூஉம் ஆங்கவள் தனக்கு வீயா விழுச்சீர் வேந்தன் பணித்ததூஉம்-மணிமேகலை அரசன்முன் சென்ற தனையும் அவளுக்கு மாறாத சிறந்த புகழையுடைய அரசன் கூறியதனையும், சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்-சிறைச்சாலையை அழித்து அருள்புரி உள்ளமுடைய முனிவர் வாழும் அறச்சாலையாக்கிய திறத்தையும், கேட்டனன் ஆகி - உதயகுமரன் கேட்டு ; 13-21. அத்தோட்டு ஆர் குழலியை - மலர்களை யணிந்த கூந்தலை யுடைய அம் மணிமேகலையை, மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் - என்னை அறிவுடையோர் இழித்துக் கூறினும் அரசன் சினப்பினும், பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று-அவள் அம்பலத்தினின்றும் வெளிப்படும் போதிற் சென்று, பற்றினன் கொண்டு என் பொற்றேர் ஏற்றி - பிடித்துக் கொண்டு எனது பொற்றேரில் ஏற்றி, கற்றறி விச்சையும் கேட்டு - அவள் கற்றுத் தெளிந்த வித்தையையும் கேட்டு, அவள் உரைக்கும் முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே - அவள் கூறும் பேரறிவுடைய முதுமொழியையும் கேட்பேன் என்று, மதுக்கமழ் தாரோன் மனங்கொண்டு எழுந்து-தேன் கமழும் மாலையையுடைய உதயகுமரன் உள்ளத்திற் கொண்டு எழுந்து, பலர் பசிகளையப் பாவை தான் ஒதுங்கிய- பலருடைய பசியையும் நீக்குமாறு மணிமேகலை ஒதுங்கி யுள்ள, உலக வறவியின் ஊடு சென்று ஏறலும் - உலக வறவியினுள்ளே ஏறிச் செல்லலும்; தோடார் குழலி, தோட்டார் குழலி யென விகாரமாயிற்று. தோடு-இதழ்; பூவுக்கு ஆகுபெயர்; தொகுதி யென்றுமாம். பொதியில்- பொது இல்; பலருக்கும் பொதுவான இடம்; அம்பலம். பொதுவில் எனற்பாலது பொதியில் என மரூஉ வாயிற்று. குழலியைப் பற்றினன் கொண்டு என இயைக்க. பற்றினன் கொண்டு - பற்றிக்கொண்டு. 22-26. மழைசூழ் குடுமிப் பொதியிற் குன்றத்து - முகில் சூழும் முடியையுடைய பொதியின்மலையின் மருங்கே, கழைவளர் கான்யாற்று - மூங்கில் வளர்ந்த கானியாற்றின்கண், பழவினைப் பயத்தால் - முற்செய்த தீவினைப்பயனால், மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் - விருச்சிகன் காயசண்டிகைக்கு இட்ட சாபத்தினது, ஈராறு ஆண்டு வந்தது - பன்னிரண்டாவது ஆண்டு வந்தது' இன்னும் வாராள் காயசண்டிகை எனக் கையறவு எய்தி-காயசண்டிகை இன்னும் வந்திலள் எனத் துன்பமெய்தி; கையறவு - செயலறுதியாகிய துன்பம். 27-32. காஞ்சனன் என்னும் அவள்தன் கணவன் - அவளுடைய கணவனாகிய காஞ்சனன் என்போன், ஓங்கிய மூதூர் ச்உள் வந்து இழிந்து - பெருஞ் சிறப்புடைய இத் தொன்னகரின் உள்ளே வந்திறங்கி, பூத சதுக்கமும் பூமலர்ச் சோலையும்-பூதசதுக்கத்திலும் பொலிவுள்ள மலர்ச்சோலைகளிலும், மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் - தவத்தோர் உறையுமிடங்களிலும் மன்றங்களிலும் அம்பலங்களிலும், தேர்ந்தனன் திரிவோன்-தேடித் திரிகின்றவன், ஏந்திள வனமுலை மாந்தர் பசி நோய் மாற்றக் கண்டாங்கு - மணிமேகலை காய சண்டிகை வடிவத்துடன் மக்களது பசிப்பிணியைக் களையக் கண்டு ; பூத சதுக்கம்-கூடா வொழுக்கினர் முதலிய அறுவகை யோரையும் பாசத்தாற் பிணித்துப் புடைத்துண்ணும் பூதம் நிற்கும் சதுக்கம்; சதுக்கம் - நாற்சந்தி. 1"தவமறைந் தொழுகுந் தன்மையி லாளர், அவமறைந் தொழுகு மலவற் பெண்டிர், அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர். பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென், கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக், காத நான்குங் கடுங்குர லெடுப்பிப், பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும்" எனச் சிலப்பதிகாரத்து வருதல் காண்க. கணவன் வாராள் எனக் கையற வெய்தித் தேர்ந்தனன் திரிவோன் கண்டு என்க. 33-37. இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் ஒன்றே ஆயினும் உண்போர் பலரால்-இப்பொழுது நின் கையில் ஏந்தியுள்ள பாத்திரம் ஒன்றாயிருந்தும் அதன்கணுள்ள உணவினை யுண்போர் பலராகலின், ஆனைத்தீ நோய் அரும்பசி களைய-யானைத்தீ யென்னும் தீர்த்தற்கரிய பசிநோயைத் தீர்க்க, வான வாழ்க்கையர் அருளினர் கொல் என - விசும்பில் வாழும் வானவர் நினக்கு இதனை அளித்தனரோ என்று, பழைமைக் கட்டுரை பல பாராட்டவும் - பழைய கேண்மையைப் புலப்படுத்தும் பல கட்டுரைகளைக் கூறிப் பாராட்டவும் ; அருளினர் கொல் என்றும், கட்டுரை பல கூறியும் பாராட்ட வென்க. 38-39. விழையா உள்ளமொடு அவன் பால் நீங்கி - மணிமேகலை விரும்பாத உள்ளத்துடன் அவனிடமிருந்து நீங்கி, உதயகுமரன் தன்பாற் சென்று - உதயகுமரன் நிற்குமிடத்தை யடைந்து ; 40-70. நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி-நரை மிக்க முதுமையுடையாள் ஒருத்தியைக் காட்டி, தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி வெண்மணல் ஆகிய கூந்தல் காணாய் - குளிர்ந்த கரு மணல் போன்ற நிறம் திரிந்து வேறு பட்டு வெள்ளிய மணலைப் போல் நரைத்த கூந்தலைக் காண்பாய், பிறைநுதல் வண்ணம் காணாயோ நீ - நரைமையில் திரைதோல் தகையின்று ஆயது - வெண்மையுடன் திரைந்த தோலினால் அழகின்றி யிருக்கும் பிறைபோன்ற நுதலின் இயல்பை நீ காணவில்லையோ, விறல் விற்புருவம் இவையும் காணாய் இறவின் உணங்கல் போன்று வேறாயின - வெற்றி பொருந்திய விற்படை போன்ற புருவங்களாகிய இவையும் இறால் மீனின் வற்றல் போல் வேறு பட்டன காண்பாய், கழுநீர்க் கண்காண் வழுநீர் சுமந்தன - கழு நீர் மலரனைய கண்கள் வழுவாகிய நீரைச் சுமந்தன காண். குமிழ்மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ-குமிழம் பூப்போலும் மூக்காகிய இவை உமிழுகின்ற சீயைச் சொரிவனகாண், நிரை முத்தனைய நகையும் காணாய் சுரை வித்து ஏய்ப்பப் பிறழ்ந்து வேறாயின - வரிசைப் படுத்திய முத்துக்களைப் போன்ற பற்களும் சுரைவிதையைப் போலப் பிறழ்ந்து வேறுபட்டன காண்பாய், இலவிதழ்ச் செவ்வாய் காணாயோ நீ புலவுப் புண்போல் புலால் புறத்திடுவது - முருக்கமலர்போன்ற சிவந்த வாய் புலால்நாற்றம் பொருந்திய புண்ணைப்போல் தீநாற்றத்தை வெளியிடுவதை நீ காணோயா, வள்ளைத் தாள்போல் வடிகாது இவை காண்உள்ளூன் வாடிய உணங்கல் போன்றன-வள்ளைத் தண்டுபோல் வடிந்த காதுகளாகிய இவைகள் உள்ளிருந்த ஊன் வாடிய வற்றலைப் போன்றிருப்பன பாராய், இறும்பூது சான்ற முலையும் காணாய் வெறும்பை போல வீழ்ந்து வேறாயின - வியப்பு மிக்க கொங்கைகளும் உள்ளீடில்லாத பையைப் போல வீழ்ந்து வேறுபட்டன காண்பாய், தாழ்ந்து ஒசி தெங்கின் மடல்போல் திரங்கி வீழ்ந்தன இளவேய்த் தோளுங் காணாய் - இளைய மூங்கில் போன்ற தோள்களும் தாழ்ந்து வளைந்த தென்னை மடல் போல் திரைந்து வீழ்ந்தன காணாய், நரம்பொடு விடுதோல் உதிர்தொடர் கழன்று திரங்கிய விரல்கள் இவையும் காணாய்- நரம்புடன் தோலும் நகத்தின் தொடர்ச்சியைக் கழன்று திரைந்த விரல்களாகிய இவற்றையும் காண்பாய், வாழைத் தண்டே போன்ற குறங்கிணை தாழைத் தண்டின் உணங்கல் காணாய் - வாழைத் தண்டு போன்ற துடைகளிரண்டும் தாழைத் தண்டுபோல் வற்றியிருத்தலைக் காண்பாய், ஆவக் கணைக் கால் காணாயோ நீ மேவிய நரம்பொடு என்பு புறங்காட்டுவ- அம்புப் புட்டிலைப் போன்ற கணைக்கால்கள் தம்மிடம் பொருந்திய நரம்பினையும் என்பினையும் வெளியே காட்டுவன வற்றை நீ காணவில்லையோ, தளிரடிவண்ணம் காணாயோ நீ முளி முதிர் தெங்கின் உதிர்காய் உணங்கல்-தளிர்போலும் அடிகளின் வண்ணம் முதிர்ந்த தென்னையில் உலர்ந்து உதிர்ந்த காயின்வற்றல் போன்றிருப்பதை நீ காணாயோ, பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து-மலராலும் சாந்தாலும் புலால் நாற்றத்தை மறைத்து, தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த - ஆடையாலும் அணி கலனாலும் முன்னோர் அமைத்த, வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என - வஞ்சத்தைத் தெரிந்துகொள்வாய் இளங்கோனே என்று, விஞ்சை மகளாய் மெல்லியல் உரைத்தலும்- மணிமேகலை காயசண்டிகை வடிவத்துடன் கூறுதலும்; நரைமை - வெண்மை. தகையின்றாயது-தன்மையதாயது என்றுமாம். மூக்கின்றுளை நோக்கி ‘இவை'யெனப்பட்டன. உமிழ்சீ-வெறுக்கத்தக்க சீயுமாம். இறும்பூது சான்ற-புதுமையும் பெருமையும் பற்றிய வியப்பு விளைத்த வென்க. வாழைத்தண்டு - இளவாழையின் தலை நீங்கிய அடிமரம். தாழைத்தண்டின் - தாழையின் அடிமரம்போல். உணங்கல் போல்வன என விரித்துரைக்க. மறைத்தியாத்தல் - மறைத்தல். "புனைவனை நீங்கிற் புலால் புறத்திடுவது" (4 : 114) என முன்னும் வந்தது. 71-81. தன் பாராட்டும் என் சொற்பயன் கொள்ளாள் - தன்னைப் பாராட்டுகின்ற என்னுடைய சொற்களின் பயனைக் கொள்ளாளாய், பிறன்பின் செல்லும் - அயலான் பின்னே செல்லுகின்றனள், பிறன்போல் நோக்கும் - என்னைப் பிறன் போல நோக்குகின்றனள், மதுக்கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு - தேன் மணக்கும் மாலையினையுடைய அரசன் மகனுக்கு, முதுக்குறை முதுமொழி எடுத்துக்காட்டி - பேரறிவுடைய முதுமொழிகளை எடுத்துக்கூறி, பவளக் கடிகையில் தவள வாள் நகையும் குவளைச் செங்கணும் குறிப்பொடு வழா அள்-பவளத் துண்டத்தின்கணுள்ள வெள்ளிய ஒளி பொருந்திய பற்களின் முறுவலும் குவளை மலர் போலும் சிவந்த கண்களின் நோக்கும் காதற் குறிப்புடன் வழுவா தவளாயினள், ஈங்கிவன் காதலன் ஆதலின் ஏந்திழை ஈங்கொழிந்தனள் என - இவன் இவட்குக் காதலனானமையின் இவள் இவ்விடத்திலேயே தங்கினள் என்று, இகல் எரி பொத்தி - மாறுபாட்டா லுண்டாகிய சினத்தீ மூள, மற்றவள் இருந்த மன்றப் பொதியிலுள் - மணிமேகலை இருந்த மன்றமாகிய பொதியிலின் உள்ளே, புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்த அடங்கினன் - புற்றினுள் அடங்கிய பாம்பைப் போலப் புகுந்து மறைந்திருந்தனன், காஞ்சனன் என்னும் கதிர்கள் விஞ்சையன் - ஒளி பொருந்திய வாட்படையினை யுடைய காஞ்சனன் என்னும் விஞ்சையன் ; பவளக்கடிகை - பவளத்துண்டு போலும் இதழ் ; உதடு. இகல் எரி - பகையாகிய தீ என்றுமாம். மன்றப் பொதியில்: இருபெயரொட்டு. விஞ்சையன் இகலெரி பொத்திப் பொதியிலுட் புக்கொளித் தடங்கினன் என்க. 82-93. ஆங்கவள் உரைத்த அரசிளங்குமரனும் - மணிமேகலை கூறியதைக் கேட்ட மன்னவன் சிறுவனும், களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான் - களையாத விருப்பத்தைக் கை விடானாய்,. வளைசேர் செங்கை மணிமேகலையே-வளைகள் பொருந்திய சிவந்த கைகளையுடைய மணிமேகலையே; காயசண்டிகையாய்க் கடிஞை ஏந்தி - காயசண்டிகையாய்ப் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி, மாய விஞ்சையின் மன மயக் குறுத்தனள் - மாய வித்தையினாலே உள்ளத்தை மயக்கமுறச் செய்தனள், அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த - உலக வறவியின் பக்கலில் வருந்திப் பழமைக் கட்டுரை கூறிய, இவ் வம்பலன் தன்னொடு - இவ் வயலானுடன், இவ் வைகு இருள் ஒழியாள்-இருள் தங்கிய இவ் விரவில் நீங்காள், இங்கிவள் செய்தி இடையிருள் யாமத்து வந்தறிகுவன் எனமனங் கொண்டு எழுந்து - இவளதுசெயலை இருளையுடைய இடையாமத்தில் வந்து அறிவேன் என்று உளத்திற்கொண்டு புறப்பட்டு, வான் தேர்ப்பாகனை மீன் திகழ் கொடியனை கருப்பு வில்லியை அருப்புக் கணை மைந்தனை - வானிலுலாவும் தென்றலந் தேர்ப்பாகனை மீன் விளங்கும் கொடியுடையானைக் கரும்பாகிய வில்லுடையானை அரும்புகளாகிய அம்புகளை யுடையவனை, உயாவுத் துணையாக வயாவொடும் போகி - வினாவுந் துணையாகக்கொண்டு வேட்கை நோயுடன் சென்று ; ஆங்கவள் உரைத்த-மணிமேகலையால் அறிவுறுக்கப் பட்ட. அயர்ந்து-மறந்து என்றுமாம். அறிவுரைத்த - பண்டு அறிந்தவர் போலுரைத்த. வம்பலன் - புதியன் ; ஏதிலான். இவனிருத்தலின் இவ் விரவில் புறம் போகாளெனக் கருதினானென்க. வான்தேர் - வானிலுலாவும் தென்றலாகிய தேர். பாகன் கொடியன் வில்லி மைந்தன் என ஒரு பொருள் மேற் பல பெயர்கள் வந்தன. பாகனும் கொடியனும் வில்லியும் மைந்தனுமாகிய காமனை யென்க. அரும்பு, அருப்பென்றாயது. துணையாக்கொண்டு என விரித் துரைக்க. 94-101. ஊர் துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து-ஊர் முழுவதும் உறங்கும் நள்ளிரவில் தான் மட்டும் தனியாக எழுந்து, வேழம் வேட்டு எழும் வெம்புலிபோல, - யானையை விரும்பிப் புறப்படும் கொடிய புலியைப்போல, கோயில் கழிந்து வாயில் நீங்கி - அரண்மனையை நீங்கி வாயிலைக் கடந்து, ஆயிழை இருந்த அம்பலம் அணைந்து-மணிமேகலை இருந்த ஊரம்பலத்தை அடைந்து, வேக வெந்தீ நாகம் கிடந்த போகுயர் புற்றளை புகுவான் போல - வேகத்தினையுடைய கொடிய நஞ்சினைக் கொண்ட பாம்பு கிடந்த மிக வுயர்ந்த புற்றின் துவாரத்தில் நுழைகின்றவனைப்போல, ஆகம் தோய்ந்து சாந்து அலர் உறுத்த - மார்பிற் பூசப்பெற்ற சாந்த மானது தனது வரவை ஆண்டுள்ளோருக்கு அறிவுறுத்த, ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும்-முறையாக அடியை வைத்து அவ் வம்பலத்தின் உள்ளே புகுதலும் ; வேகம் - விடவேகம். தீ - நஞ்சு. முன்பு ‘புற்றடங் கரவிற் புக் கொளித் தடங்கினன்' என்றதற்கேற்ப, ஈண்டு ‘நாகங்கிடந்த புற்றளை புகுவோன் போல' என்றார். பின் ‘அரவம் பை விரித்தென. எழுந்து' என்பதும் இதுபற்றியே, போகு - நீண்ட; 1"வார்தல் போகல் ஒழுகல் மூன்றும், நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள" என்பது காண்க. அலருறுத்த - பலரறியச் செய்ய. 102-109. ஆங்கு முன் இருந்த அலர்தார் விஞ்சையன்-அங்கே முன்பு மறைந்திருந்த மலர்ந்த மாலையினையுடைய விஞ்சையன், ஈங்கிவன் வந்தனன் இவள்பால் என்றே - இவன் இப்பொழுது இவளிடமே வந்திருக்கின்றனன் என்று கருதி, வெஞ்சின அரவம் நஞ்சு எயிறு அரும்ப-நெடுஞ்சினமுடைய பாம்பு நஞ்சு பொதி பற்கள் தோன்றுமாறு, தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென - தனது மிக்க சீற்றத்துடன் எழுந்து படத்தை விரித்தாற்போல, இருந்தோன் எழுந்து - காஞ்சனன் எழுந்து, பெரும்பின் சென்று அவன் சுரும்பறை மணித்தோள் துணிய வீசி - உதயகுமரனது முதுகின் புறமாகச் சென்று அவனுடைய வண்டுகள் ஒலிக்கும் மாலையை யணிந்த அழகிய தோள்கள் துணிபடுமாறு வாளால் எறிந்து, காயசண்டிகையைக் கைக்கொண்டு அந்தரம் போகுவல் என்றே அவள்பால் புகுதலும் - காயசண்டிகையைக் கைப் பற்றிக் கொண்டு விசும்பிடைச் செல்லுவேன் என நினைந்து கரந்துரு வெய்திய மணிமேகலையிடஞ் செல்லுதலும்; விஞ்சையன் இருந்தோன் எழுந்தென்க. பெரும்பின் சென்று நெடிது பின் சென்று என்றுமாம்.சுரும்பு அறை மணித்தோள்-மலையையொத்த அழகிய தோள் என்பாருமுளர் ; சுரும்பு-மலை; அறை: உவமவுருபு. 110-115. நெடுநிலைக் கந்தின் இடவயின் விளங்க கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும் - நெடிய நிலையாகிய தூணினிடத்தில் விளங்கும் கடவுட் டச்சனாகிய மயனால் எழுதப்பட்ட பாவை அப் பொழுது கூறும், அணுகல் அணுகல் விஞ்சைக் காஞ்சன- விஞ்சையனாகிய காஞ்சனனே அணுகாதே அணுகாதே, மணிமேகலை அவள் மறைந்துரு எய்தினள் - அவள் மணிமேகலை காயசண்டிகையின் வடிவத்தைக் கொண்டுள்ளாள், காயசண்டிகை தன் கடும்பசி நீங்கி - நின் மனைவி தனது கொடிய பசிநோய் நீங்கப் பெற்று, வானம் போவுழி வந்தது கேளாய் - விசும்பின் வழியே செல்லும்பொழுது நிகழ்ந்த துன்பத்தைக் கேள்; கடவுள் - தெய்வத் தச்சன்; 1"மயனெனக் கொப்பா வகுத்த பாவையின், நீங்கேன்" எனப் பின் வருதலுங் காண்க. வந்தது - நிகழ்ந்த துன்பம்; வினைப்பெயர். 116-122. அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த விந்த மால்வரை மீமிசைப் போகார் - வானிலே செல்வோர் துர்க்கை எழுந்தருளியுள்ள பெரிய விந்த மலையின் மேலே செல்லார், போவார் உளரெனில் பொங்கிய சினத்தள் - அங்ஙனம் போவார் உளராயின் மூண்டெழுஞ் சீற்றமுடையளாய், சாயையின் வாங்கித் தன்வயிற்று இடூஉம் - தன் சாயையினால் இழுத்துத் தன் வயிற்றில் அடக்கும். விந்தம் காக்கும் விந்தா கடிகை - விந்த மலையைக் காவல் புரியும் விந்தாகடிகை எனபவள், அம் மலைமிசைப் போய் அவள் வயிற்று அடங்கினள் - காயசண்டிகை அம் மலையின்மீது சென்று அவ் விந்தா கடிகையின் வயிற்றில் அடங்கினள் ஆகலின், கைம்மை கொள்ளேல் காஞ்சன - காஞ்சனனே சிறுமையைக் கொள்ளாதே, இது கேள் - இதனைக் கேட்பாயாக; அந்தரி யென்பதும் விந்தாகடிகை யென்பதும் ஒரு பொருட் பெயர்கள். விந்தமலையைக் காத்தலின் விந்தாகடிகை யென்பதும் காரணப்பெயர். விந்தாகடிகை தன் வயிற்றிடூஉம் என்க. கைம்மை - சிறுமை; தனக்குரியளல்லாதாளை விரும்புதல் ; உதயகுமரன் மணிமேகலைக்குப் பழம் பிறப்பின் நாயகனாதலின் அவன் இறந்ததுபற்றி மணிமேகலையைக் கைம்மையாகக் கருதித் தெய்வங் கூறிற்றெனலுமாம் என்பர், டாக்டர் உ. வே. சாமிநாதையர். 123-129. ஊழ்வினை வந்து இங்கு உதயகுமாரனை ஆருயிர் உண்டதாயினும் - இப்பொழுது ஊழ்வினையானது உருத்து வந்து உதயகுமரன் அரிய உயிரை உண்டதாயினும், அறியாய் வெவ்வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன - விஞ்சை யானாகிய காஞ்சனனே ஆராயாது கொடிய தீவினையைச் செய்தாய், அவ் வினை நின்னையும் அகலாது ஆங்குறும்-அக் கொடுவினை நின்னையும் நீங்காமல் வந்து பற்றும், என்று இவை தெய்வம் கூறலும் - என்று இவைகளைக் கந்திற்கடவுள் உரைத்தலும், எழுந்து கன்றிய நெஞ்சிற் கடுவினை உருத்து எழ விஞ்சையன் போயினன் விலங்கு விண் படர்ந்து என் - காஞ்சனன் துன்புற்ற வுளத்தோடு எழுந்து தான் செய்த கொடிய வினை வெகுண்டெழுந்து பற்ற வானிலே குறுக்காகப் படர்ந்துபோயினன் என்க. கடுவினை - உதயகுமரனைக் கொன்ற தீவினை. உருத்து - உருக்கொண்டு என்றுமாம். கோட்டம் செல்வக் காப்புடைத்தாக, தாரோன் கேட்டு மனங் கொண்டு எழுந்து சென்று ஏறலும், கணவன் கையறவெய்தி வந்து இழிந்து தேர்ந்து திரிவோனாய்க் கண்டு பல பாராட்டவும், நீங்கிச் சென்று காட்டி மெல்லியல் உரைத்தலும், விஞ்சையன் புக்கு ஒளித்து அடங்கினன்; அரசிளங் குமரனும் கொள்ளான் மனங்கொண்டு எழுந்து போகி எழுந்து கழிந்து நீங்கி அணைந்து புகுதலும், விஞ்சையன் எழுந்து சென்று வீசிப் புகுதலும், பாவை உரைக்கும்; அங்ஙனம் உரைப்பது கூறலும், விஞ்சையன் எழுந்து படர்ந்து போயினன் என வினைமுடிவு செய்க. உதயகுமரனை வாளாலெறிந்த காதை முற்றிற்று. 21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை பின்பு, சம்பாபதியின் கோட்டத்திலிருந்த மணிமேகலை, காஞ்சனன் செய்தியையும் உதயகுமரன் வெட்டுண் டிறந்ததையும் காஞ்சனனுக்குக் கந்திற்பாவை கூறிய வியத்தகு மொழியையும் அறிந்து எழுந்து 'இவ்வுருக் கெடுவதாக' என்று தான்கொண்ட வேற்றுருவை யொழித்து. உதயகுமரன் வடிவினை நோக்கி 'முற்பிறப்பிலே திட்டி விடத்தால் உன் உயிர் போன பொழுதில் நின் பிரிவாற்றாது யானும் தீயிற் பாய்ந்து உயிர் துறந்தேன்; உவ வனத்திற் கண்டபொழுது உன் பால் மனஞ் சென்றமையின், மணிமேகலா தெய்வம் என்னை யெடுத்துச் சென்று மணி பல்லவத்தில் வைத்துப் புத்தபீடிகைக் காட்சியால் என் பழம்பிறப்பை எனக்கறிவித்து உனது முற்பிறப்பையும் கூறிற்று; அதனால், நீ முன்பு கணவனாக இருந்ததை அறிந்து யான் உன் பால் அன்பு கொண்டு, " பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும் யான்நினக் குரைத்துநின் இடர்வினை யொழிக்கக் காயசண் டிகைவடி வானேன் ;" காதல, வெவ்வினை உருப்ப விஞ்சையன் வெகுளியால் விளிந்தனையோ, என வெய்துயிர்த்துப் புலம்பி, அவ்வுருவினருகே செல்லலுற்றனள். அப்பொழுது ஆண்டுள்ள கந்திற்பாவைத் தெய்வம், 'நீ இவன்பாற் செல்லாதே; செல்லாதே; உனக்கு இவன் கணவனாகியதும் இவனுக்கு நீ மனைவியாகியதும் சென்றபிறப்பில் மட்டும் அல்ல; அதற்கு முன்னும் எத்தனையோ பிறப்புக்களில் நிகழ்ந்தன. இங்ஙனம் தடுமாறும் பிறவித் துன்பத்தை யொழிப்பதற்கு முயல்வோய்! இவன் இறந்ததுபற்றி நீ துன்ப மெய்தாதே' என்று தன்தெய்வ வாக்கால் உரைத்தது. அது கேட்ட மணிமேகலை, 'இவ்வம்பலத்தில் யாவருக்கும் உண்மையை உரைத்துக் கொண்டிருக்கும் தெய்வம் ஒன்றுண்டென்பர்; அத்தெய்வம் நீ தானோ? நின் திருவடியைத் தொழுகின்றேன்; சென்ற பிறவியில் திட்டிவிடத்தாலும் இப் பிறவியில் விஞ்சையன் வாளாலும் இவன் விளிந்ததன் காரணத்தை நீ அறிவையோ? அறிவையாயின் அதனை எனக்கு உரைத்தருளல் வேண்டும்' என்றாள். என்றலும் அத்தெய்வம், "காயங்கரை யென்னும் ஆற்றங்கரையில் இருந்து கொண்டு புத்ததேவனுடைய வருகையைக் கூறி மன்பதைகளின் மனமாசினைப் போக்கி வரும் பிரம தரும முனிவரை இராகுலனும் நீயும் வழிபட்டு, அவருக்கு அமுது செய்விக்க விரும்பி அவருடன் பாடு பெற்று, விடியற்காலையில் அமுதமைக்குமாறு மடையனுக்குக் கூறினீர். அவன் எக்காரணத்தாலோ சிறிது பொழுது தாழ்த்துவந்து அங்ஙனம் வந்த அச்சத்தால் கால் தளர்ந்து மடைக்கலம் சிதையும்படி வீழ்ந்தான்; வீழ்ந்தவனைக் கண்டும் இரங்காமல், ‘இவன் முனிவர்க்குச் செய்ய வேண்டியதனை விரைந்து வந்து செய்யாது தாழ்த்தனன்' என்று சினந்து, அவன் தோளும் தலையும் வேறாகுமாறு இராகுலன் வாளால் அவனைத் துணித்தான். அவ்வல்வினையே அப் பிறப்பிலே நஞ்சுவிழி யரவாலும், இப்பிறப்பிலே விஞ்சையன் வாளாலும் அவன் பொன்றுமாறு செய்தது. வினை தன் பயனை ஊட்டாமலொழி யாதென்பது திண்ணம்" என்றுரைத்து, மற்றும் மணிமேகலை அரசனாற்சிறை வைக்கப்படுதலும், சிறையினின்று நீங்குதலும். சாவகநாடு சென்று ஆபுத்திரனோடு மணிபல்லவத்தை அடைதலும், வேற்றுருக்கொண்டு வஞ்சிநகரம் புகுந்து ஆண்டுள்ள பல சமயவாதி களின் கொள்கைகளையும் கேட்டலும் ஆகிய பின்னிகழ்ச்சி களையும் தெரிவித்து, "யான் தெய்வகணங்களைச் சார்ந்த ஒருவன்; என் பெயர் துவதிகள் என்பது; இந்தப் பழைய தூணில் மயன் எனக்கு ஒப்பாக அமைத்த இப்படிமத்தைவிட்டு ஒரு பொழுதும் நீங்கேன்' என்று தன் வரலாற்றையும் கூறியது. அவற்றைக்கேட்ட மணிமேகலை, ‘அப்பால் என் இறுதிநாள் காறும் நிகழ்பவைகளை உரைத்தருள்க' என வேண்டவே, 'காஞ்சிப் பதியில் மழையின்மையால் உயிர்கள் பசியால் வருந்துதலையும், மாதவி, சுதமதி என்னும் இருவருடன் அறவணவடிகள் ஆண்டுச் சென்று நின் வரவினை எதிர்நோக்கி யிருத்தலையும் வஞ்சி நகரிலே நீ அறிந்து, உடனே அக் கச்சிமாநகரை அடைந்து உணவளித்து எல்லா உயிர்களையும் பாதுகாப்பாய்; அந்நகரிலே உன்னாற் பற்பல அற்புதங்கள் நிகழும்; பின், வஞ்சிநகரிலே கேட்ட பல சமயவாதிகளின் கொள்கைகளையும் அறவணவடிகட்குத் தெரிவித்து, அவர் அறிவுறுத்த நல்லறங்கள் பலவற்றையும் வழுவாது செய்து, இறந்து, மேல்வரும் பிறப்புக்களை உத்தர மகத நாட்டிலேயே பெறுவாய். அவை யாவும் உனக்கு ஆண் பிறப்பாகவே நிகழும்;அப் பிறப்புக்கள் ஒவ்வொன்றிலும் நீ அருளறத்தினின்று நீங்காயாகி, முடிவிற் புத்த தேவனுக்கு முதல் மாணாக்கனாகிய பெரும்பேறெய்திப் பற்றற்று வீடுபெறுவாய்' என்று அத்தெய்வம் உரைத்தது; கேட்ட மணிமேகலை கவலை யொழிந்து மயக்கம் நீங்கியிருந்தாள்; அவ்வளவிலே கதிரவன் தோன்றினான். கடவு ளெழுதிய நெடுநிலைக் கந்தின் குடவயி னமைந்த நெடுநிலை வாயின் முதியாள் கோட்டத் தக வயிற் கிடந்த மதுமலர்க் குழலி மயங்கின ளெழுந்து 5 விஞ்சையன் செய்தியும் வென்வேல் வேந்தன் மைந்தற் குற்றதும் மன்றப் பொதியிற் கந்துடை நெடுநிலைக் கடவுட் பாவை அங்கவற் குரைத்த அற்புதக் கிளவியும் கேட்டன ளெழுந்து கெடுக இவ் வுருவெனத் 10 தோட்டலர்க் குழலி உள்வரி நீங்கித் திட்டி விடமுண நின்னுயிர் போம்நாள் கட்டழ லீமத் தென்னுயிர் சுட்டேன் உவவன மருங்கில் நின்பா லுள்ளம் தவிர்விலே னாதலின் தலைமகள் தோன்றி 15 மணிபல் லவத்திடை யென்னையாங் குய்த்துப் பிணிப்பறு மாதவன் பீடிகை காட்டி என்பிறப் புணர்ந்த என்முன் தோன்றி உன்பிறப் பெல்லாம் ஒழிவின் றுரைத்தலின பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் 20 அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும் யான்நினக் குரைத்துநின் இடர்வினை யொழிக்கக் காயசன் டிகைவடி வானேன் காதல்! வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின் வெவ்வினை யுருப்ப விளிந்தனை யோவென 25 விழுமக் கிளவியின் வெய்துயிர்த்துப் புலம்பி அழுதன ளேங்கி அயாவுயிர்த் தெழுதலும் செல்லல் செல்லல் சேயரி நெடுங்கண் அல்லியந் தாரோன் தன்பாற் செல்லல் நினக்கிவன் மகனாத் தோன்றி யதூஉம் 30 மனக்கினி யாற்குநீ மகளா யதூஉம் பண்டும் பண்டும் பல்பிறப் புளவால் கண்ட பிறவியே யல்ல காரிகை தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம் விடுமாறு முயல்வோய் விழுமங் கொள்வேல் 35 என்றிவை சொல்லி யிருந்தெய்வ முரைத்தலும் பொன்றிதழ் மேனிப் பூங்கொடி பொருந்திப் பொய்யா நாவொடிப் பொதியிலிற் பொருந்திய தெய்வம் நீயோ திருவடி தொழுதேன் விட்ட பிறப்பின் வெய்துயிர்த் தீங்கிவன் 40 திட்டி விடமுணச் செல்லுயிர் போயதும் நெஞ்சு நடுங்கி நெடுந்துயர் கூரயான் விஞ்சையன் வாளி னிவன்விளிந் ததூஉம் அறிதலு மறிதியோ அறிந்தனை யாயின் பெறுவேன் தில்லநின் பேரரு ளீங்கென 45 ஐயரி நெடுங்கண் ஆயிழை கேளெனத் தெய்வக் கிளவியில் தெய்வங் கூறும் காயங் கரையெனும் பேரியாற் றடைகரை மாயமின் மாதவன் வருபொரு ளுரைத்து மருளுடை மாக்கள் மனமாசு கழூஉம் 50 பிரம தருமனைப் பேணினி ராகி அடிசிற் சிறப்பியா மடிகளுக் காக்குதல் விடியல் வேலை வேண்டின மென்றலும் மாலை நீங்க மனமகிழ் வெய்திக் காலை தோன்ற வேலையின் வரூஉம் 55 நடைத்திறத் திழுக்கி நல்லடி தளர்ந்து மடைக்கலஞ் சிதைய வீழ்ந்த மடையனைச் சீல நீங்காச் செய்தவத் தோர்க்கு வேலை பிழைத்த வெகுளி தோன்றத் தோளுந் தலையுங் துணிந்துவே றாக 60 வாளிற் றப்பிய வல்வினை யன்றே விராமலர்க் கூந்தன் மெல்லியல் நின்னோ டிராகுலன் தன்னை யிட்டக லாதது தலைவன் காக்குந் தம்பொருட் டாகிய அவல வெவ்வினை யென்போ ரறியார் 65 அறஞ்செய் காத லன்பினி னாயினும் மறஞ்செய் துளதெனின் வல்வினை யொழிய தாங்கவ் வினைவந் தணுகுங் காலைத் தீங்குறு முயிரே செய்வினை மருங்கின் மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும் 70 ஆங்கவ் வினைகாண் ஆயிழை கணவனை ஈங்கு வந்திவ் விடர்செய் தொழிந்தது இன்னுங் கேளா யிளங்கொடி நல்லாய் மன்னவன் மகற்கு வருந்துதுய ரெய்தி மாதவ ருணர்த்திய வாய்மொழி கேட்டுக் 75 காவலன் நின்னையும் காவல்செய் தாங்கிடும் இடுசிறை நீக்கி யிராசமா தேவி கூட வைக்குங் கொட்பின ளாகி மாதவி மாதவன் மலரடி வணங்கித் தீது கூற அவள் தன்னொடுஞ் சேர்ந்து 80 மாதவ னுரைத்த வாய்மொழி கேட்டுக் காதலி நின்னையுங் காவல் நீக்குவள் அரசாள் செல்வத் தாபுத் திரன்பால் புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை போனா லவனொடும் பொருளுரை பொருந்தி 85 மாநீர் வங்கத் தவனொடு மெழுந்து மாயமில் செய்தி மணிபல் லவமெனும் தீவகத் தின்னுஞ் சேறலு முண்டால் தீவ திலகையின் தன்திறங் கேட்டுச் சாவக மன்னன் தன்னா டடைந்தபின் 90 ஆங்கத் தீவம்விட் டருந்தவன் வடிவாய்ப் பூங்கொடி வஞ்சி மாநகர் புகுவை ஆங்கந் நகரத் தறிபொருள் வினாவும் ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் இறைவன் எங்கோன் எவ்வுயி ரனைத்தும் 95 முறைமையிற் படைத்த முதல்வனென் போர்களும் தன்னுரு வில்லோன் பிறவுருப் படைப்போன் அன்னோன் இறைவ னாகுமென் போர்களும் துன்ப நோன்பித் தொடர்ப்பா டறுத்தாங் கின்ப வுலகுச்சி யிருத்துமென் போர்களும் 100 பூத விகாரப் புணர்ப்பென் போர்களும் பல்வேறு சமயப் படிற்றுரை யெல்லாம் அல்லியங் கோதை கேட்குறு மந்நாள் இறைவனு மில்லை யிறந்தோர் பிறவார் அறனோ டென்னையென் றறைந்தோன் தன்னைப் 105 பிறவியும் அறவியும் பெற்றியி னுணர்ந்த நறுமலர்க் கோதை எள்ளினை நகுதி எள்ளினை போலும் இவ்வுரை கேட்டிங் கொள்ளிய துரையென உன்பிறப் புணர்த்துவை ஆங்குநிற் கொணர்ந்த அருந்தெய்வம் மயக்கக் 110 காம்பன தோளி கனாமயக் குற்றனை என்றவ னுரைக்கும் இளங்கொடி நல்லாய் அன்றென் றவன்முன் அயர்ந்தொழி வாயலை தீவினை யுறுதலுஞ் செத்தோர் பிறத்தலும் வாயே யென்று மயக்கொழி மடவாய் 115 வழுவறு மரணும் மண்ணுங் கல்லும் எழுதிய பாவையும் பேசா வென்ப தறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ அறியா யாயின் ஆங்கது கேளாய் முடித்தவரு சிறப்பின் மூதூர் யாங்கணும் 120 கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும் முதுமர இடங்களும் முதுநீர்த் துறைகளும் பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடிக் காப்புடை மாநகர்க் காவலுங் கண்ணி யாப்புடைத் தாக அறிந்தோர் வலித்து 125 மண்ணினுங் கல்லினும் மரத்தினுஞ் சுவரினும் கண்ணிய தெய்வதங் காட்டுநர் வகுக்க ஆங்கத் தெய்வதம் அவ்விடம் நீங்கா ஊன்கணி னார்கட் குற்றதை யுரைக்கும் என்திறங் கேட்டியோ இளங்கொடி நல்லாய் 130 மன்பெருங் தெய்வ கணங்களி னுள்ளேன் துவதிக னென்பேன் தொன்றுமுதிர் கந்தின் மயனெனக் கொப்ப வகுத்த பாவையின் நீங்கேன் யான்என் நிலையது கேளாய் மாந்த ரறிவது வானவ ரறியார் 135 ஓவியச் சேனனென் னுறுதுணைத் தோழன் ஆவதை யிந்நகர்க் காருரைத் தனரோ அவனுடன் யான்சென் றாடிட மெல்லாம் உடனுறைந் தார்போ லொழியா தெழுதிப் பூவும் புகையும் பொருந்துபு புணர்த்து 140 நாநனி வருந்தவென் நலம்பா ராட்டலின் மணிமே கலையான் வருபொரு ளெல்லாம் துணிவுட னுரைத்தேன் என்சொல் தேறெனத் தேறே னல்லேன் தெய்வக் கிளவிகள் ஈறுகடை போக எனக்கரு ளென்றலும் 145 துவதிக னுரைக்குஞ் சொல்லலுஞ் சொல்லுவேன் வருவது கேளாய் மடக்கொடி நல்லாய் மன்னுயிர் நீங்க மழைவளங் கரந்து பொன்னெயிற் காஞ்சி நகர்கவி னழிய ஆங்கது கேட்டே ஆருயிர் மருந்தாய் 150 ஈங்கிம் முதியா ளிடவயின் வைத்த தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கித் தையல்நின் பயந்தோர் தம்மோடு போகி அறவணன் தானும் ஆங்குள னாதலின் செறிதொடி காஞ்சி மாநகர் சேர்குவை 155 அறவண னருளால் ஆய்தொடி ஆவ்'d2வூர்ப் பிறவண மொழிந்துநின் பெற்றியை யாகி வறனோ டுலகின் மழைவளந் தரூஉம் அறனோ டேந்தி ஆருயி ரோம்புவை ஆய்தொடிக் கவ்வூர் அறனொடு தோன்றும் 160 ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள பிறவற முரைத்தோர் பெற்றிமை யெல்லாம் அறவணன் றனக்குநீ யுரைத்த அந்நாள் தவமுந் தருமமும் சார்பிற் றோற்றமும் பவமுறு மார்க்கமும் பான்மையி னுரைத்து 165 மறவிரு ளிரிய மன்னுயி ரேமுற அறவெயில் விரித்தாங் களப்பி லிருத்தியொடு புத்த ஞாயிறு தோன்றுங் காறும் செத்தும் பிறந்துஞ் செம்பொருள் காவா இத்தலம் நீங்கேன் இளங்கொடி யானும் 170 தாயரும் நீயுந் தவறின் றாக வாய்வ தாகநின் மனப்பாட் டறமென ஆங்கவ னுரைத்துலும் அவன்மொழி பிழையாய் பாங்கியல் நல்லறம் பலவுஞ் செய்தபின் கச்சிமுற் றத்து நின்னுயிர் கடைகொள 175 உத்தர மகதத் துறுபிறப் பெல்லாம் ஆண்பிறப் பாகி அருளறம் ஒழியாய் மாண்பொடு தோன்றி மயக்கங் களைந்து பிறர்க்கறம் அருளும் பெரியோன் றனக்குத் தலைச்சா வகனாய்ச் சார்பறுத் துய்தி 180 இன்னும் கேட்டியோ நன்னுதல் மடந்தை ஊங்க ணோங்கிய உரவோன் றன்னை வாங்குதிரை யெடுத்த மணிமே கலாதெய்வம் சாது சக்கரற் காரமு தீத்தோய் ஈது நின்பிறப் பென்பது தெளிந்தே 185 உவவன மருங்கில் நின்பால் தோன்றி மணிபல் லவத்திடைக் கொணர்ந்தது கேளெனத் துவதிக னுரைத்துலும் துயர்க்கடல் நீங்கி அவதி யறிந்த அணியிழை நல்லாள் வலையொழி மஞ்ஞையின் மனமயக் கொழிதலும் 190 உலகுதுயி லெழுப்பினன் மலர்கதி ரோனென். உரை 1-4. கடவுள் எழுதிய நெடுநிலைக் கந்தின் - தெய்வத் தன்மையுடைய பாவை எழுதப்பெற்ற நெடிய நிலையாகிய தூணின், குடவயின் அமைத்த நெடுநிலை வாயில் - மேற்றிசைக் கண் அமைக்கப்பட்ட உயர்நிலை பொருந்திய வாயிலையுடைய, முதியாள் கோட்டத்து அகவயின் கிடந்த - சம்பாபதி கோயிலினுள்ளே துயின்ற, மது மலர்க் குழலி மயங்கினள் எழுந்து - மணிமேகலை மயக்கமுற்று எழுந்து ; இரட்டுற மொழிதலால் கடவுளால் எழுதப்பட்ட பாவை யென்றுங் கொள்க; கடவுள் - தெய்வத் தச்சனாகிய மயன். குடவயின் அமைத்த வாயில் என்க: கோட்டமுமாம். அமைந்த என்பது பாடமாயின் பொருந்திய என்க. 5-10. விஞ்சையன் செய்தியும் வென்வேல் வேந்தன் மைந்தற்கு உற்றதும்-காஞ்சனன் செய்தியையும் வென்றி வேலையுடைய மன்னவன் மகனுக்கு நேர்ந்த துன்பத்தையும், மன்றப் பொதியில் கந்துடை நெடுநிலைக் கடவுட்பாவை-மன்றமாகிய ஊரம்பலத்தில் நெடிய நிலையாகிய தூணின்கட் பொருந்திய தெய்வப்பாவை, அங்கவற்கு உரைத்த அற்புதக் கிளவியும்-அவ் விஞ்சையனுக்குக் கூறிய வியப்புடைய மொழிகளையும், கேட்டனள் எழுந்து கெடுக இவ்வுருவெனத் தோட்டலர்க்குழலி உள்வரி நீங்கி - கேட்டவளாய் இவ்வடிவம் கெடுக வென்றெழுந்து அவள் தான் கொண்ட மறைந்த வேடத்தினை ஒழிந்து ; செய்தியும் உற்றதும் அற்புதக் கிளவியும் கேட்டென்றா ரேனும், அற்புதக் கிளவியும் அதனாற் செய்தியும் உற்றதும் கேட்டென்று கொள்க. இவ்வுருவங் காரணமாக உதயகுமாரன் வெட்டுண்டமையின் ‘கெடுக விவ்வுரு' என்றாளென்க. தோட்டலர்க் குழலி ; சுட்டு மாத்திரை. உள் வரி - மறைந்த வுருவம். 11-18. திட்டிவிடம் உண நின் உயிர் போம்நாள் - திட்டிவிடம் என்னும் பாம்பு தீண்ட நின் உயிர் சென்ற முற்பிறவியில், கட்டழல் ஈமத்து என் உயிர் சுட்டேன்-மிக்க நெருப்பினையுடைய ஈமத்தில் எனது உயிரைக் கொளுத்தினேன், உவவன மருங்கில் நின்பால் உள்ளம் தவிர்விலேன் ஆதலின் - உவவனத்தின்கண் நின்னிடம் வைத்த மனந் தவிர்ந்திலேன் ஆதலால், தலைமகள் தோன்றி மணி பல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து-அவ்விடத்து மணிமேகலா தெய்வம் தோன்றி என்னை மணிபல்லவத்தின்கட் செலுத்தி, பிணிப்பறு மாதவன் பீடிகை காட்டி-பற்றற்ற நற்றவனாகிய புத்தனது திருவடிப் பீடிகையைக் காண்பித்து, என் பிறப்பு உணர்ந்த என்முன் தோன்றி - எனது பண்டைப் பிறப்பினை யறிந்த என் முன்னே தோன்றி, உன் பிறப்பு எல்லாம் ஒழிவின்றி உரைத்தலின்-நின் பிறப்பு முதலிய அனைத்தையும் தவறாது கூறியருளினமையின் ; திட்டி: திருஷ்டி என்பதன் சிதைவு; திட்டி விடம் - கண்ணில் நஞ்சுடையதொரு பாம்பு; இந்நூலுட் பலவிடத்து இது கூறப் பெற்றுள்ளது. போம் நாள்-போகும் நாள்: காலவழுவமைதி. போநாள் என்னுயிர் சுட்டேன் என்றது முற்பிறப்பின் செய்தி. உவவனத்திற் கண்டபொழுது உதயகுமரன்பால் மணிமேகலைக்கு வேட்கையிருந்ததென்பதனை, "புதுவோன் பின்றைப் போனதென் னெஞ்சம், இதுவோ வன்னாய் காமத் தியற்கை" (5: 89-90) "அவன்பா லுள்ளம், நீங்காத் தன்மை நினக்குமுண் டாகலின்" (10: 44-5) என முன் வந்துள்ளமையாலறிக. பிணிப்பு - கட்டு: பற்று. பீடிகை காட்டி அதனால் என் பிறப்புணர்ந்த என்முன் தோன்றி யென்க. 19-26. பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் - உலகில் பிறந்தோர்கள் இறப்பதனையும் இறந்தோர்கள் பிறப்ப தனையும், அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும் - அறம் அளிக்கின்ற அமைதியையும் பாவம் கொடுக்கின்ற துன்பத்தையும், யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்கக் காயசண்டிகை வடிவானேன் காதல-நினக்கு எடுத்துக் கூறி நின் தீவினைகளை நீக்கும் பொருட்டுக் காதல யான் கயசண்டிகை வடிவமெய்தினேன், வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின் - கலக்கமுற்ற சீற்றத்தினையுடைய விஞ்சையனது கூரிய வாளினாலே, வெவ்வினை உருப்ப விளிந்தினையோ என - கொடிய ஊழ்வினை உருத்தலான் இறந்தனையோ என்று, விழுமக் கிளவியின் வெய்துயிர்த்துப் புலம்பி - துன்ப மொழிகளால் வெவ்விதாக உயிர்த்துப் புலம்பி, அழுதனள் ஏங்கி அயாவுயிர்த்து எழுதலும்-ஏங்கி யழுவோளாய் நெட்டுயிர்ப்புடன் எழுதலும்; சால்பு - அமைதி; அதனாலுண்டாம் இன்பம். வெகுளியை யுடைய விஞ்சையன் வாளாலென மாறுக. உருப்ப - வெகுள. விழுமம்-துன்பம். 27-35. செல்லல் செல்லல் சேயரி நெடுங்கண் - செவ்வரி படர்ந்த நெடிய கண்களையுடையாய் செல்லாதே செல்லாதே, அல்லியந் தாரோன் தன்பால் செல்லல் - அகவிதழ் பொருந்திய மலர்மாலை யினையுடைய மன்னன் மகனிடம் செல்லாதே, நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம்-இவ்வுதயகுமரன் நினக்குக் கணவனாக விருந்ததுவும், மனக்கினியாற்கு நீ மகளாயதூஉம்-மனத்திற்கினிய இவ்விளங்கோவிற்கு நீ மனைவியாக விருந்ததுவும், பண்டும் பண்டும் பல்பிறப்பு உளவால்-முன்னும் பின்னும் பல பிறப்புகளில் உண்டு, கண்ட பிறவியே அல்ல காரிகை-மணிமேகலை நீ அறிந்துகொண்ட முற்பிறப்பில் மட்டுமல்ல, தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்- துன்பத்தில் அழுந்துதற்கேதுவாகிய தடுமாறும் பிறவியாகிய தோற்றத்தை, விடுமாறு முயல்வோய் விழுமங் கொள்ளேல் - நீக்குமாறு முயல்கின்ற நீ துன்பங் கொள்ளாதே, என்றிவை சொல்லி இருந்தெய்வம் உரைத்துலும்-என்று இவைகளைக் கூறி அப்பெருந் தெய்வம் விளக்குதலும் ; செல்லல்: ஏவன்முற்று; அடுக்கு விரைவு பற்றியது. சேயரி நெடுங்கண்: விளி. மகனா - கணவனாக: 1"நோதக வுண்டோ நும்மகனார்க்கு" என்புழியும் கணவனை மகனார் என்று கூறி யிருத்தல் காண்க. கண்ட பிறவியே அல்ல பல் பிறப்புக்களிலும் உளவென்க. கண்ட - அறிந்துகொண்ட. பிறவியே-பிறவியில் மட்டுமே. தடுமாறுதல் நாற்கதியுள் ஒன்றொன்றில் மாறியும், ஆண் பெண் மாறியும் பிறத்தலும், நரகொடு துறக்கம் நானிலத் திற்சென்று சுழலுதலுமாம். சொல்லி உரைத்தலும் - கூறி விளக்குதலுமென்க. 36-46. பொன்திகழ் மேனிப் பூங்கொடி பொருந்திய-பொன் போல் விளங்குகின்ற திருமேனியையுடைய மணிமேகலை ஆண்டுத் தங்கி, பொய்யா நாவொடு இப்பொதியிலில் பொருந்திய-இவ்வம்பலத்தின் கண் பொய்யாத நாவுடன் அமர்ந்திருக்கின்ற, தெய்வம் நீயோ திருவடி தொழுதேன்-தெய்வமோ நீ நின் திருவடிகளை வணங்கினேன், விட்ட பிறப்பின் வெய்துயிர்த்து ஈங்கிவன் திட்டிவிடம் உணச் செல்லுயிர் போயதும்-முற்பிறப்பில் இவனது உயிரானது திட்டிவிடத்தாலுண்ணப்பட்டு வெவ்வுயிர்ப் பெறிந்து சென்றதும், நெஞ்சு நடுங்கி நெடுந்துயர் கூர யான் விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம் - இப்பிறப்பில் யான் உளம் நடுங்கிப் பெருந்துயர் கூருமாறு இவன் விஞ்சையனுடைய வாளினாலே இறந்ததும் ஆகிய தீவினைகளை, அறிதலும் அறிதியோ அறிந்தனையாயின் - அறியலும் செய்தியோ அங்ஙனம் அறிந்திருப்பையானால், பெறுவேன் தில்ல நின் பேரருள் ஈங்கென - நினது பேரருளை இவ்விடத்துப் பெறுவேன் என்று கூற, ஐஅரி நெடுங்கண் ஆயிழை கேள் என - அழகிய அரி படர்ந்த பெரிய கண்களையுடைய ஆயிழாய் கேட்பாயாக என்று, தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும்-தெய்வ மொழியாலே கந்திற் பாவை உரைக்கும் ; பொருந்தி - செல்லுத லொழிந்து நின்று. செல்லுயிர்-நில்லாது திரியுமியல்புடைய உயிர். போயதும்-போனமைக்குக் காரணமாகிய தீவினையையும். விளிந்ததூஉம் - விளிந்ததற்குக் காரணமாகிய தீவினையையும். அறிதலும் அறிதியோ - அறிதலுஞ் செய்தியோ; இஃது 1"உண்ணலு முண்ணேன் வாழலும் வாழேன்" என்பன போல நின்றது. தில்ல: விழைவுப் பொருட்டு. நல்ல வென்பதும் பாடம். நின் பேரருள் பெறுவேன் என்றது நீ கூறும் விடையைக் கேட்பேன் என்றபடி. தெய்வக் கிளவி - வான் மொழி. தெய்வக் கிளவியிற் றெய்வம் எனக் கொண்டு முக்காலமும் அறிந்துரைக்கும் மொழியினையுடைய தெய்வம் என்றுரைத் தலுமாம்; 47-52. காயங்கரை எனும் பேரியாற்று அடைகரை - காயங்கரை என்னும் பேராற்றின் அடைகரையில், மாயமில் மாதவன் வரு பொருள் உரைத்து-வஞ்சமில் பெருந்தவனாகிய புத்தன் அவதரித்தலைக் கூறி, மருளுடை மாக்கள் மனமாசு கழூஉம் - மயக்கமுற்ற மக்களுடைய மனவழுக்கை நீக்கும், பிரமதருமனைப் பேணினி ராகி-பிரம தருமன் என்னும் முனிவனை வழிபட்டு, அடிசிற்சிறப்புயாம் அடிகளுக்கு ஆக்குதல் விடியல் வேலை வேண்டினம் என்றலும்-யாங்கள் நாள்வெயிற் காலையில் அடிகட்கு அமுதூட்டும் சிறப்புச் செய்தலை வேண்டு கின்றோம் என்றுரைத்து அம்முனிவன் அதற்கிசையலும் நீவிர், மாலை நீங்க மனமகிழ்வு எய்தி - உளத்தில் உவகை யடைந்து இரவு கழிய இருந்து ; மாயம்-மயங்கிய வறிவுமாம். வருபொருள்-தோன்றுதலாகிய செய்தியை; உலகிலே தீவினை மிகுதோறும் அதனைப் போக்கி அருளறத்தை நிலைநிறுத்தி உயிர்களை நிருவாண மடைவித்தற் பொருட்டுப் புத்ததேவன் தோன்றுவனென்பது பௌத்த நூற்றுணிபு; இஃது "ஈரெண் ணூற்றோ டீரெட் டாண்டிற், பேரறி வாளன் றோன்றும்" (12 : 77-8) என்பது முதலாக இந்நூலுட் பலவிடத்தும் வருதல் காண்க. மருள் - காமவெகுளி மயக்கங்கள் என்றலும், நீக்க, தோன்ற என்பவற்றின் பின் வேண்டுஞ் சொற்கள் விரித்துரைக்கப்பட்டன. வேண்டினம் என்றலும்-வேண்டின மென்று மடையனை நோக்கிக் கூறுதலும் என்றுரைத்தலுமாம்; இப்பொருட்கு, மாலை நீங்கக் காலை தோன்ற வரூஉ வீழ்ந்த மடையனை என்றியைத்துரைக்க. மாலை-இரவு. 54-62. காலை தோன்ற வேலையின் வரூஉ நடைத்திறந்து இழுக்கி நல்லடி தளர்ந்து - வைகறைப் பொழுது தோன்ற அப்பொழுது தான் வந்து நடைவகையால் வழுக்கி அடிதளர்ந்து, மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை - சோற்றுப் பாத்திரம் அழியுமாறு வீழ்ந்த அடுந் தொழிலோனை, சீலம் நீங்காச் செய்தவத்தோர்க்கு- ஐவகைச் சீலமும் தவறாத பெருந்தவத் தோர்க்கு, வேலை பிழைத்த வெகுளி தோன்ற - காலந் தவறியதனா லுண்டாகிய சினமானது தோன்ற, தோளும் தலையும் துணிந்து வேறாக-தோளும் தலையும் துணிபட்டு வேறாகுமாறு, வாளில் தப்பிய வல்வினை அன்றே - இராகுலன் வாளால் வெட்டிய தீவினையல்லவோ, விராமலர்க் கூந்தல் மெல்லியல் நின்னோடு - மணம் பொருந்திய மலர்களை யணிந்த கூந்தலையுடைய மெல்லியலே நின்னுடன், இராகுலன் தன்னை இட்டு அகலாதது-இராகுலனையும்விட்டு நீங்காத தாகியது; தோன்று அ வேலை யெனப் பிரித்தலுமாம். வரூஉ-வாரா நின்று. மடையன்-சோறுசமைப்போன். சீலம் - கள், பொய், காமம், கொலை, களவு என்னும் ஐந்தனையும் முற்றத் துறத்தல்; இதனை, 1"ஐவகைச் சீலத் தமைதியுங் காட்டி" 2"கள்ளும் பொய்யும் காமமுங் கொலையும், உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை" எனபவற்றானறிக; இவ்வைந்தும் இல்லறத்தார்க் குரியன வென்றும், இவற்றோடு உயர்ந்த ஆதனத்தில் இருத்தல் கிடத் தலின்மை, சாந்து மாலை முதலியன தரியாமை, பொன் வெள்ளி களைத் தீண்டாமை, பாடலாடல் விரும்பாமை, விடியலுக்குமுன் புசியாமை என்னும் ஐந்துஞ் சேரச் சீலம் பத்து வகைப்படு மென்றும், அவை துறவிகட்குரியன வென்றும் புத்தமத நூல் கூறும். 63-71. தலைவன் காக்கும் தன் பொருட்டு ஆகிய அவல வெவ்வினை என்போர் அறியார்-தம்மாலாகிய துன்பந்தரும் கொடிய வினையை இறைவன் காப்பான் என்போர் அறியா தவராவர், அறஞ்செய் காதல் அன்பினின் ஆயினும் - அறம் புரியும் பெருவிருப் புடனாயினும், மறஞ்செய்துளதெனினும் வல்வினை ஒழியாது-பாவம் செய்யப் பட்டுள்ளதெனின் அது நீங்காது, ஆங்கவ்வினை வந்து அணுகும் காலைத் தீங்குறும் உயிரே-அத்தீவினை வந்து சாரும்பொழுது உயிர் துன்பமுறா நிற்கும், செய்வினை மருங்கின் மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும்-செய்வினை வழித்தாய் மீளவரும் பிறவிகளிலும் அத் தீவினைத் தொடக்கு மீண்டெய்தினும் எய்தும். ஆங்கவ் வினைகாண் ஆயிழை கணவனை ஈங்கு வந்து இவ்விடர் செய்து ஒழிந்தது-முற்பிறப்பில் மடையனை வெட்டிய அத் தீவினையே நின் கணவனுக்கு இப்பிறப்பில் வந்து இத் துன்பத்தைச் செய்து போயது ; காக்கும்-தடுப்பான் என்றபடி. தம்பொருட்டாகிய-தம்மா லாகிய என்க. செய்துளதெனின் - செய்யப்பட்டுள்ள தெனின். வல்வினை: சுட்டு. ஒழியாது - தன் பயனை ஊட்டாது கழியாது. உயிர் தீங்குறும் என்க. மீண்டு வரு பிறப்பு-மேல் வரும் பிறப்புக்கள். வினைப்பயன்பல பிறப்புக்களினும் தொடரும் என்பதனை, 3"எழுமை யெழுபிறப்பும்" என்பதற்குப் பரிமேலழகர் கூறிய உரையானறிக. 72-75. இன்னுங் கேளாய் இளங்கொடி நல்லாய்-இளமை பொருந்திய கொடிபோலும் மெல்லியலே இன்னும் யான் கூறுவதனைக் கேள், மன்னவன் மகற்கு வருந்துதுயர் எய்தி - அரச குமாரன் இறந்தமை குறித்து மிக்க துயரமடைந்து, மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டு - முனிவர்கள் அறிவுறுத்திய மெய்ம்மொழியைக் கேட்டு, காவலன் நின்னையும் காவல் செய்து ஆங்கிடும் - அரசன் நின்னைச் சிறையிலிடுவான்; உணர்த்தியவன் ஒருவனாயினும் உரைக்கவந்தோர் பலராதலின் 'மாதவ ருணர்த்திய' என்றார். 76-81. இடுசிறை நீக்கி இராசமாதேவி-அரசன் பெருந்தேவி நின்னைச் சிறையினின்றும் நீக்கி, கூடவைக்கும் கொட்பினள் ஆகி - தன்னுடன் வைத்துக்கொள்ளும் கொள்கையுடைய வளாய், மாதவி மாதவன் மலரடி வணங்கித் தீது கூற - மாதவி அறவணவடிகள் திருவடி மலர்களை வணங்கி நினக்கு நேர்ந்த தீமையை உரைக்க, அவள் தன்னொடும் சேர்ந்து மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு-அறவணவடிகள் மாதவியுடன் வந்து கூறிய மெய்யுரைகளைக் கேட்டு, காதலி நின்னையும் காவல் நீக்குவள் - அவளது அன்புக்குரியளாய நின்னைக் காவலினின்று நீக்குவாள் ; ஈடுசிறை யென்பது பாடமாயின் சிறையீடு என மாறுக. கொட்பு- கொள்கை; திரிபுணர்ச்சியுமாம். இராசமாதேவி நீக்கிவைக்குங் கொட்பினளாகி வாய்மொழி கேட்டு நின்னைக் காவலினீக்குவள் என்க. 82-87. அரசாள் செல்வத்து ஆபுத்திரன்பால் புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை-அரசாளுஞ் செல்வத்தினை யுடைய ஆபுத்திரனாகிய புண்ணியராசனிடம் அறவணவடி களை வணங்கிச் செல்லுதலுஞ் செய்வை, போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி - அங்ஙனம் சென்றால் ஆபுத்திரனொடும் அறவுரைகளைக் கேட்டு, மாநீர் வங்கத்து அவனொடும்-பெரிய கடலின்கண் கலத்திற் செல்லும் ஆபுத்திரனோடு, எழுந்து-விசும்பின் எழுந்து, மாயமில் செய்தி மணி பல்லவம் என்னும் தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்- வஞ்சமில்லாத செயலினையுடைய மணிபல்லவம் என்னும் தீவின் கண் இன்னும் ஒரு முறை அடைதலும் உண்டு; ஈண்டு ஆபுத்திரன் என்றது நாகபுரத்தரசனாகிய புண்ணிய ராசனை: இது, 1"நாக புரமிது நன்னக ராள்வோன், பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன்" என மேல் வருவதனால் அறியப் படும். பொருளுரை - நாகபுரத்தின் அயலதாகிய சோலையிலுள்ள தருமசாவகன் ஆபுத்திரனுக்குக் கூறும் தத்துவ மொழிகள், மணிமேகலை நாகபுரத்திலிருந்து வான்வழியே போந்து மணிபல்லவத்தை அடைந்தாளென்றும், அரசன் நாவாயிலேறி அத்தீவினை அடைந்தானென்றும் மேல் 25 ஆம் காதையிற் கூறப்படுதலின், ஈண்டு எழுந்து அவனொடும் சேறலுமுண்டு எனக் கூட்டியுரைக்க ; அன்றி, ஒடுவை வேறு வினையுடனிகழ்வாக்கி, அவன் வங்கத்திற் புறப்படத் தான் வானிலே யெழுந்து என்றுரைத்தலுமாம். 88-91. தீவதிலகையின் தன் திறம் கேட்டுச் சாவகமன்னன் தன் நாடு அடைந்த பின் - சாவக நாட்டரசனாகிய ஆபுத்திரன் தீவ திலகையினால் தன்னுடைய வரலாற்றைக்கேட்டுத் தனது நாட்டை அடைந்த பின், ஆங்கத் தீவம் விட்டு அருந்தவன் வடிவாய்ப் பூங்கொடி வஞ்சிமாநகர் புகுவை - பூங்கொடி போலும் நீ அரிய தவமுடைய ஆடவன் வடிவத்துடன் அத்தீவை விட்டு நீங்கி வஞ்சிமா நகரம் சேர்வை ; 92-93. ஆங்கந் நகரத்து அறிபொருள் வினாவும் ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் - அந் நகரத்திலே ஏனோர் அறிந்த மெய்ப் பொருளை வினவுகின்ற சிறந்த கேள்வி மேம்பட்டோர் பலராவர் ; 94-102. இறைவன் எங்கோன் எவ்வுயிர் அனைத்தும் முறைமையில் படைத்த முதல்வன் என்போர்களும்-எத்தகைய உயிர்த் தொகுதிகள் அனைத்தையும் முறைமையாகப் படைத்த முதல்வனே இறைவனாகிய எம் தலைவன் என்று கூறு வோர்களும், தன் உரு இல்லோன் பிற உரு படைப்போன் அன்னோன் இறைவன் ஆகும் என்போர்களும் - தனக்கென உருவமில்லாதோனும் பிற வுருக்களைத் தோற்றுவிப்போனு மாகிய அவனே முதல்வனாவான் என்றுரைப்போர்களும் துன்ப நோன்பு இத் தொடர்ப்பாடு அறுத்தாங்கு இன்பவுலகு உச்சி இருத்தும் என்போர்களும் - துன்பமாகிய கன்மங்கள் இந்தத் தொடக்கினை அறுத்து இன்பவுலகின் உச்சியில் இருத்தும் என மொழிவோர்களும், பூத விகாரப் புணர்ப்பு என்போர்களும் - பூதங்களின் திரிபாலாயது என்று கூறுவோர் களும் ஆகிய, பல்வேறு சமயப் படிற்றுரை எல்லாம் அல்லியங்கோதை கேட்குறும் அந்நாள் - பலவேறு சமயத்தினரின் பொய்யுரைகளை எல்லாம் நறுமலர்க்கோதை கேட்கலுறும் அந்நாளில் ; துன்ப நோன்பு - துன்ப முழந்து செய்யும் கன்மம்; நோன்பு - விரதமுமாம்; 1"விரத மேபர மாகவே தியரும், சரத மாகவே சாத்திரங் காட்டினர்" என்பது காண்க. அல்லியங்கோதை: முன்னிலையிற் படர்க்கை; நீ கேட்குறும் என்க. உயிரனைத்தும் படைத்த முதல்வன் இறைவன் என்போர் சைவவாதி, வைணவவாதி, பிரமவாதி என்னும் மூவருமாவர். தன்னுருவில்லோன் இறைவனாகு மென்போர் அத்துவிதவாதிகள் என்பர் ; சைவவாதிகட்கும் பொருந்தும். நோன்பு இன்ப வுலகுச்சி இருத்து மென்போர் மீமாஞ்சகர். பூதவிகாரப் புணர்ப்பு என்போர் பூதவாதிகள். இவற்றிற் சிலவற்றின் இலக்கணங்களும், வேறு சில மதங்களின் இலக்கணங்களும் சமயக்கணக்கர்தந்திறங்கேட்ட காதையால் அறியப்படும். 103-108. இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் அறனோடு என்னை என்று அறைந்தோன் தன்னை-கடவுளும் இல்லை இறந்தோர் மீண்டும் பிறவார் அறத்தால் வரும்பயன் யாது என மொழிந்தோனை, பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த-மறுபிறப்பு உண்டென்பதனையும் அறநெறியையும் தவப்பேற்றான் அறிந்த, நறுமலர்க் கோதை எள்ளினை நகுதி- நறும்பூங்கோதையாகிய நீ இகழ்ந்து சிரிப்பாய், எள்ளினை போலும் இவ்வுரை கேட்டிங்கு ஒள்ளியது உரை என உன் பிறப்பு உணர்த்துவை - அப்பொழுது அவன் என் இம் மொழிகளைக் கேட்டு இகழ்ந்தனை போலும் ஆயின் சிறந்த பொருளைக் கூறுவாய் என்று அவன் கேட்ப நின் பிறப்பை அவனுக்கு அறிவுறுத்துவை ; அறைந்தோன் - பூதவாதி; உலோகாயதனுக்கும் பொருந்தும். அறவி-அறநெறி; அறத்தின் பயனுமாம். பெற்றியின் - முறைமையால் என்றுமாம். 109-112. ஆங்கு நின் கொணர்ந்த அருந் தெய்வம் மயக்க-மணி பல்லவத்திற்கு நின்னைக் கொண்டு சென்ற மணிமேகலா தெய்வம் மயக்குறுத்த, காம்புஅன தோளி கனா மயக் குற்றனை என்று அவன் உரைக்கும் - மூங்கிலனைய தோள் களையுடையாய் நீ கனவாகிய மயக்கத்தினை யடைந்தாய் என்று அவன்கூற, இளங்கொடி நல்லாய் அன்று என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை - பூங்கொடி நல்லோய் அன்று என அவன் முன்னே மறந்து ஒழியாய்; கனாமயக்கு - கனவுபோலும் மயக்கென்றுமாம். உன் பிறப்பை நீ உணர்ந்ததாகக் கூறியது மயக்குற்றதனால் என்றுரைப்பான் என்க. தெய்வம் மயக்க மயங்கியதனாலோ கனவில் மயங்கியதனாலோ ஆம் என்றுரைப்பான் என விரித்துரைத்தலுமாம்; என்ன? 1"தெய்வ மயக்கினுங் கனாவுறு திறத்தினும், மைய லுறுவார் மனம்வேறாம்வகை, ஐயமன்றி யில்லை யென்றலும்" என மேலுரைத்தலானென்க. மணிமேகலை தான் பிறப்புணர்ந்த வரலாற்றை முன்னர்க் கூறுதலின் தெய்வம் அவளை எடுத்தேகி யதனை அறிந்து, ‘ஆங்கு நின் கொணர்ந்த அருந்தெய்வம் மயக்க' என்ற பூதவாதி உரைப்பானாவன் என்க. அவன் முன் அயர்ந் தொழியாது அன்றென அவன் கூற்றை மறுப்பாய் என்க. 113-114. தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும் வாயே என்று மயக்கு ஒழி மடவாய் - இளையோய் தீவினை செய்யின் அதனாலே துன்புறுதலும் இறந்தோர் மீண்டும் பிறத்தலும் உண்மையே என்று மயக்கத்தினை விடுவாயாக; வாய் - உண்மை. இதனை முன்னர்க்கூட்டி, அயர்ந்தொழியாயாய் வாயே யென்று கூறி அவன் மயக்கத்தை யொழிப்பாய் என்றுரைத் தலுமாம். 115-118. வழுவறு மரனும் மண்ணும் கல்லும்-குற்றமற்ற மரம் மண் கல் என்பனவும், எழுதிய பாவையும் - எழுதப்பட்ட பாவையும், பேசா என்பது - பேசமாட்டா என்பதனை, அறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ-அறிதலும் செய்தியோ அன்றி அறியாயோ, அறியாய் ஆயின் ஆங்கது கேளாய்-அறிகின்றிலையானால் அதனைக் கூறுவேன் கேட்பாயாக ; வழுவறுதலாவது இயற்கையினின்று மாறாமை. கந்திடத் துள்ள பாவையாகிய தான் பேசுதல் கேட்டலின் மரம் மண் கல் பாவையென்பன பேசுமென்னுங் கருத்தினளாதலுங் கூடுமெனக் கொண்டு, அவை பேசுவன வல்லவெனத் தெய்வம் தெருட்டலுற்றதென்க. 119-128. முடித்துவரு சிறப்பின் மூதூர் யாங்கணும்-முடிய வளர்ந்த சிறப்பினையுடைய பழைய நகரெங்கும், கொடித் தேர் வீதியும் தேவர் கோட்டமும்-கொடி யணிந்த தேரோடும் வீதிகளிலும் கடவுளர் கோயில்களிலும், முதுமர இடங்களும் முதுநீர்த்துறைகளும் - பழைய மரங்கள் நிற்கின்ற இடங் களிலும் பழைய நீர்த் துறைகளிலும், பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி-அம்பலங்களிலும் ஊர் நடுவாகிய மரத்தடி களிலும் பொருந்துமாறு ஆராய்ந்து, காப்புடை மாநகர்க் காவலும் கண்ணி - காவலுள்ள பெரிய நகரத்தின் காவலையும் கருதி, யாப்புடைத்தாக அறிந்தோர் வலித்து - அறிஞர்கள் உறுதியுடையதாக எண்ணி, மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்-, கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க - கருதிய தெய்வத்தை நிறுத்துவோர் அமைக்க, ஆங்கத் தெய்வதம் அவ்விடம் நீங்கா - அங்ஙனம் வகுக்கப்பட்ட தெய்வங்கள் அவ்விடத்தை விட்டு நீங்காவாய், ஊன் கணினார்கட்கு உற்றதை உரைக்கும்-ஊன்கணுடைய மானிடர்க்கு நிகழ்ந்தனை உரைக்கும்; முடித்து - முற்றுப்பெற்று; முடியவெனத் திரிக்க; காப்புடை - மதில் முதலியவற்றின் காவலையுடைய. நகர்க்காவல் - நகரில் வாழ்வாரைப் பாதுகாத்தல். அறிந்தோராகிய காட்டுநர் வலித்து வகுக்கவென்க. காட்டுநர் - நிறுவுவோர் ; பிரதிட்டை செய்வோர். நீங்கா- நீங்காவாய்: வினையெச்சமுற்று. ஊன்கணினார் என்பதனால் ஞானக் கண்ணில்லாதவ ரென்பது அருத்தாபத்தியாற் பெற்றாம். உற்றது என்றதனால் இனம்பற்றி உறுவதுங்கொள்க. மக்கட்கு முன் நிகழ்ந்தவற்றையும் பின் நிகழ்வனவற்றையும் உரைக்கு மென்க. எனவே ஆண்டுறையும் தெய்வம் பேசுதலல்லது மரம் முதலியன பேசா வென்பது கடைப்பிடிக்க வென்றவாறாம். 129-142. என் திறம் கேட்டியோ இளங்கொடி நல்லாய் - இளங்கொடி போல்வாய் அங்ஙனமாய எனது வரலாற்றைக் கேட்பாயாக, மன்பெருந் தெய்வகணங்களின் உள்ளேன் துவதிகன் என்பேன் - மிகப்பெரிய தெய்வகணங்களில் உள்ளேனாகிய யான் துவதிகன் என்னும் பெயருடையேன், தொன்றுமுதிர் கந்தில் மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் நீங்கேன் - பழைமை முதிர்ந்த தூணில் மயன் எனக்கு ஒப்பாக அமைத்த பாவையைவிட்டு யான் ஒரு பொழுதும் நீங்கேன், என் நிலையது கேளாய் - எனது நிலைமையைக் கேட்பாயாக, மாந்தர் அறிவது வானவர் அறியார் -மக்களறியு மத்தனை விண்ணவரும் அறியமாட்டார், ஓவியச் சேனன் என் உறுதுணைத் தோழன் ஆவதை - சித்திரசேனன் என்பான் எனக்கு மிக்க - துணை யாகிய தோழனாவதை, இந் நகர்க்கு ஆர் உரைத்தனரோ -இந் நகரத்திலுள்ளோருக்கு யார் கூறினரோ, அவனுடன் யான் சென்று ஆடிடம் எல்லாம் - அவனோடு யான் சென்று விளையாடுமிடங்களிலெல்லாம், உடன் உறைந்தார்போல் ஒழியாது எழுதி - உடன் உறைந்து கண்டவர்போல் விடாமல் எழுதி, பூவும் புகையும் பொருந்துபு புணர்த்து - பூவும் நறும் புகையும் பொருந்துமாறு சேர்த்து, நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் - நா மிகவும் வருந்துமாறு என் சிறப்பினைப் பலவாறு பாராட்டுதலினால், மணிமேகலை யான் வரு பொருள் எல்லாம் துணிவுடன் உரைத்தேன் - மணிமேகலை! யான் வரும்பொருளனைத்தையும் துணிவுடன் கூறி வந்தேன், என் சொல் தேறு என - என் மொழியைத் தெளிவாயாக என்று உரைப்ப ; தானும் சித்திரசேனனும் ஆடிடமெல்லாம் அறிந்தெழுதினமை கண்ட வியப்பினால், ‘மாந்த ரறிவது வானவரறியார்' என்றும், ‘ஆருரைத்தனரோ' என்றும், ‘உடனுறைந்தோர் போல்' என்றும் தெய்வங் கூறிற்று. வானவரும் என்னும் சிறப்பும்மை தொக்கது. பூவினைத் தூவியும் புகையினை யெடுத்தும் என்க. பொருந்துபு: பொருந்த வெனத் திரிக்க. வருபொருளெல்லாம் - மேல் நிகழுங் காரியமெல்லாம். என் நலம் பாராட்டலின் உரைத்தேன் என்றமையால், மக்கள் கொண்டாடு மளவிற்குத் தெய்வத்தின் அருள் வெளிப்படும் என்பது பெற்றாம். 143-144. தேறேன் அல்லேன் தெய்வக்கிளவிகள் - தெய்வ மொழி களை யான் தெளியேனல்லேன், ஈறு கடைபோக எனக்கு அருள் என்றலும் - எனது முடிபு இறுதியாக யாவற்றையும் எனக்கு உரைத்தருள்வாய் என மணிமேகலை கூறலும் ; தேறேன் அல்லேன் - தெளிவேன் என்றபடி. ஈறு - மரணம்; வீடு பேறுமாம். 145-154. துவதிகன் உரைக்கும்-கந்திற்பாவை கூறும், சொல்லலும் சொல்லுவேன் - சொல்லுதலுஞ் செய்வேன், வருவது கேளாய் மடக்கொடி நல்லாய் - இளங்கொடி நல்லாய் மேல் நிகழ்வதைக் கேட்பாயாக, மன்னுயிர் நீங்க மழைவளம் கரந்து - மிகுதியான உயிர்கள் நீங்குமாறு மழைவளம் மறைந்து, பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய - பொன்மதில் சூழ்ந்த காஞ்சிநகர் அழகுகெட, ஆங்கது கேட்டே ஆருயிர் மருந்தாய்ஈங்கு இம்முதியாள் இடவயின் வைத்த - அதனைக் கேள்வியுற்று ஈண்டுச் சம்பாபதி கோயிலுள் வைத்திருக்கின்ற அரிய உயிர் மருந்தாய, தெய்வப் பாத்திரம்செவ் விதின் வாங்கி-கடவுட் கடிஞையைச் செவ்வனே கையிற்கொண்டு, தையல் நிற் பயந்தோர் தம்மொடு போகி அறவணன் தானும் ஆங்குளன் ஆதலின் - நங்காய் நின் அன்னையருடன் சென்று அறவணவடி களும் அந் நகரத்துள்ளமையான், செறிதொடி காஞ்சிமாநகர் சேர்குவை - நீயும் காஞ்சிமாநகரத்தை அடைகுவாய் ; ஆங்கது கேட்டும், அறவணன் ஆங்குளனாதலானும் காஞ்சிமாநகர் சேர்குவை யென்க. 155-158. அறவணன் அருளால் ஆய்தொடி அவ்'d2வூர்ப் பிறவணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி - அறவணவடிகளுடைய அருளினால் அவ் 'd2வூரில் நீ நினது ஆண்வேடத்தை நீங்கி நின் இயல்பினையுடையையாய், வறன் ஓடு உலகின் மழைவளம் தரூஉம் - வற்கடமாகிய காலம் பரந்த உலகின்கண் மழைவளத்தை அளிக்கும், அறன் ஓடு ஏந்தி ஆயிருர் ஓம்புவை - அறவோடாகிய அமுத சுரபியை ஏந்தி அரிய உயிர்களைப் பாதுகாப்பாய் ; பிறவணம் - வேற்றுமதப் பற்றுமாம் வறன் ஓடு : ஓடுதல்- பரத்தல். மழைவளம் - மழையாலுண்டாகும் வளம் ; சோறு. 159-60. ஆய்தொடிக்கு அவ்'d2வூர் அறனொடு தோன்றும் -நினக்கு அவ் 'd2வூரின்கன் அறத்தொடு உண்டாகும், ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள - ஏது நிகழ்ச்சிகள் மிகப் பல உள்ளன; 161-72. பிறவறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் - வஞ்சி நகரில் பிற சமய உண்மைகளைக் கூறினோர் கொள்கைகள் அனைத்தையும், அறவணன் தனக்கு நீ உரைத்த அந்நாள் - அறவணவடிகளுக்கு நீ கூறிய அந்நாளில், தவமும் தருமமும் சார்பில் தோற்றமும் பவம்அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து - தவமும் தன்மமும் சார்பினால் தோன்றும் நிதானம் பன்னிரண்டும் பிறவியறும் நெறியும் ஆகியவற்றை முறையால் உரைத்து - மற இருள் இரிய மன்னுயிர் ஏமுற - பாவமாகிய இருளானது ஓடவும் நிலைபெற்ற உயிர்கள் இன்பமுறவும், அறவெயில் விரித்தாங்கு அளப்பில் இருத்தி யோடு - அறமாகிய ஒளியைப் பரப்பி அளவற்ற சித்தி களுடன், புத்த ஞாயிறு தோன்றும்காறும் - புத்தனாகிய ஞாயிறு உதிக்குமளவும், செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா- இறந்தும் பிறந்தும் அறத்தினைக் காத்து, இத் தலம் நீங்கேன் இளங்கொடி யானும் - இந் நகரத்தை நீங்கேன் யான் இளங்கொடியே, தாயரும் நீயும் தவறின்றாக - நீயும் நின் அன்னையரும் தவறின்றி வாழ்வீராக வாய்வதாக நின் மனப்பாட்டு அறம் என - நின் மனத்தின்கட் டோன்றிய அறம் வாய்ப்புடைத்தாக என்று, ஆங்கவன் உரைத்தலும் - அறவண முனிவன் கூறுதலும் ; சார்பிற்றோற்றம்-பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன்என்னும் பன்னிரண்டுமாம்; இவை பேதைமை சார்பாகச் செய்கையும் செய்கை சார்பாக உணர்வும் இங்ஙனம் ஒன்றை யொன்று சார்ந்து தோன்றுதலின் ‘சார்பிற் றோற்றம்' எனப்பட்டன; இவற்றினியல்பு இந் நூலின் இறுதிக் காதையால் விளக்கமாம். இருத்தி-சித்தி; அணிமா முதலியன. தவம் முதலிய வற்றை உரைத்து, புத்தஞாயிறு தோன்றுங்காறும் யானும் இத்தலம் நீங்கேன், தாயரும் நீயும் தவறின்றாக, அறம் வாய்வதாக என அவன் உரைத்தலுமென்க. 172-179. அவன் மொழி பிழையாய் -அவன் கூறிய சொல்லைத் தப்பாயாய், பாங்கியல் நல்லறம் பலவும் செய்தபின் - இயற்று தற்குரிய நல்லறங்கள் பலவற்றையும் செய்த பின்னர், கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள-காஞ்சிமாநகரின்கண் நினது உயிரானது முடிவெய்த, உத்தர மகதத்து உறுபிறப்பு எல்லாம் - வட மகத நாட்டில் நீ அடையும் பிறப்புக் களனைத்தும், ஆண்பிறப்பாகி அருளறம் ஒழியாய்- ஆண் பிறப்பாகத் தோன்றி அருளறம் நீங்காயாய், மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து - மாட்சியுடன் தோன்றி மக்களின் மயக்கங்களை நீக்கி, பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு - பிறருக்கு அறங்கூறும் புத்தனுக்கு, தலைச் சாவகனாய்ச் சார்பு அறுத்து உய்தி-முதன் மாணாக்கனாய்ப் பற்றுக்களை யறுத்து நிருவாணமடைவாய்; ‘உத்தர மகதத் துறுபிறப் பெல்லாம்' என்றமையால் ஆண்டுப் பல பிறப்புண்டாமென்பது உடம்பொடு புணர்த்தலாற் பெற்றாம். ஆகி ஒழியாய் தோன்றிக் களைந்து சாவகனாய் அறுத்து உய்தி என்க; தோன்றிக் களைந்து அருளும் பெரியோன் எனலுமாம். சாவகன் ஸ்ரீவாகன் என்பதன் சிதைவு; கேட்பவன் என்றபடி. 180-190. இன்னுங் கேட்டியோ நன்னுதல் மடந்தை-நல்ல நெற்றியை யுடைய மடந்தையே இன்னும் கேட்பாயாக. ஊங்கண் ஓங்கிய உரவோன்தன்னை - நின் குலத்தில் முன்னர் அறத்தான் மேம்பாடுற்றிருந்த அறிவுடையோன் ஒருவனை, வாங்குதிரை எடுத்த மணிமேகலா தெய்வம்-கடலின் கணிருந்து எடுத்துக் காப்பாற்றிய மணிமேகலா தெய்வம், சாதுசக்கரற்கு ஆரமுது ஈத்தோய் ஈது நின் பிறப்பு என்பது தெளிந்தே - சாதுசக்கரன் என்னும் முனிவனுக்கு உண வளித்த நினது பிறப்பு இஃது என்பதை உணர்ந்தே, உவவன மருங்கில் உன்பால் தோன்றி - உவவனத்தில் நின்னிடம் தோன்றி, மணிபல்லவத்திடைக் கொணர்ந்தது கேள் என - மணிபல்லவமென்னுந் தீவின்கன் கொண்டுசேர்த்தது கேள் என்று, துவதிகன் உரைத்தலும் - துவதிகன் கூறுதலும், துயர்க்கடல் நீங்கி - துன்பக்கடலினின்றும் நீங்கி, அவதி அறிந்த அணியிழை நல்லாள் - எல்லையை அறிந்த மெல்லிய லாகிய மணிமேகலை, வலையொழி மஞ்ஞையின் மனமயக்கு ஒழிதலும் - வழையினின்றும் நீங்கிய மயிலைப்போல மனக் கவலை நீங்குதலும், உலகுதுயில் எழுப்பினன் மலர் கதிரோன்என் - உலகத்தை உறக்கத்தினின்றும் எழுப்பினன் பரந்த கதிர்களையுடைய பரிதிவானவன் என்க. ஊங்கண்-முன்பு; 1''தூங்கெயி லெறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்'' என்பது காண்க. திரை-கடல்: ஆகுபெயர். முன்னோனொருவனை மணிமேகலா தெய்வம் கடலினின் றெடுத்ததைச் சிலப்பதிகாரத்து அடைக்கலக் காதையில் 2''இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல், உடைகலப் பட்ட வெங்கோன் முன்னாள், புண்ணிய தானம் புரிந்தோ னாகலின்,...... விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த, எங்குல தெய்வம்'' என வருவதனாலறிக. சாதுசக்கரனுக்கு அமுது ஈந்ததனை இந் நூலின் மந்திரங் கொடுத்த காதையில் 3''சாது சக்கரன் மீவிசும்பு திரிவோன்,......அந்நாளவனுண்டருளிய அவ்வறம்'' எனப் போந்தமையா லறிக. கேள் எனப் பின் வந்தது அசை. அவதி - தான் வீடுபெறும் எல்லை. துயிலெழுப்பினன் என்பது பரியாயம்; உதித்தான் என்றபடி. குழலி எழுந்து கேட்டு எழுந்து நீங்கி வெய்துயிர்த்துப் புலம்பி அழுதேங்கி அயாவுயிர்த் தெழுதலும், இருந்தெய்வம் உரைத்தலும், பூங்கொடி பொருந்தி, ‘நின் பேரருள் பெறுவேன்' என, தெய்வங் கூறும் ; அங்ஙனங் கூறுந் தெய்வம். ‘என்சொல் தேறு' என, மணிமேகலை, ‘எனக்கு அருள்' என்றலும் துவதிகன் உரைக்கும்; உரைப்பவன் உரைத்தலும், நல்லாள் நீங்கி மயக்கொழிதலும், கதிரோன் உலகு துயிலெழுப்பினன் என, வினை முடிவு செய்க. கந்திற்பாவை வருவதுரைத்த காதை முற்றிற்று. அருஞ்சொல் பொருள் அகரவரிசை அருஞ்சொல் காதை அடி அகநகர்-உள்நகரம்(நகரில்) 1 72 அகம்மலி உவகை - உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சி 15 72 அகலம்-மார்பு 8 42 அகலம்-மார்பு 19 91 அகல்வாய்-விரிந்த இடம் 19 17 அகவயின் - உள்ளிடம் 2 13 அகவை - உள்ளிடம் 12 66 அகவை - அடங்கியது 15 14 அகன் சுரை-உள்ளிடம் 16 133 அங்கி மனையாள் - அக்கினி தேவன் மனைவி 18 95 அசரீரி - சரீரம் இல்லாதது; உடலுருவற்றது; அருவமாய் எங்கும் நிறைந்துள்ள கடவுள் 16 44 அசும்பு - சேறு 8 6 அஞ்சல் - அஞ்சாதே 7 18 அஞ்சனம் - மை 18 161 அஞ்சில் ஓதி - அழகிய சிலவாகிய கூந்தல்; ஐவகையாக முடிக்கப்படும் சிலவாகிய கூந்தல் 8 12 அடங்கலும்-முழுவதும் 16 134 அடர் - தகடு 15 14 அடர்க்குறு-பகையாயினாரை நெருக்கிவருத்துதலைச் செய்யும் 12 40 அடல்-கொல்லுத் வெல்லுதல் 17 10 அடிதொடுதல் -திருவடி களைத்தொட்டுச் சூளுறுதல் 18 171 அடிபிழைத்தல் - திருவடிக்குப் பிழைசெய்தல் 19 42 அட்டிற்சாலை-மடைப்பள்ளி 20 7 அணங்கு - தீண்டிவருத்தும் தெய்வப்பெண் 6 135 அணங்குடையளக்கர் 17 12 அணிமலர்ப் பூங்கொம்பு 15 72 அணுகல் - நெருங்காதே (எதிர்மறைச்சொல்) 20 112 அதிர்கழல் - ஒலிக்கின்ற வீரக்கழல் 19 42 அத்தம் - அரிய வழி 13 39 அந்தரம் - வானம் 20 108 அந்தரி - துர்க்கை 20 116 அந்தி-மாலைப்பொழுது 5 140 அந்தில் -அவ்விடம் 13 107 அருஞ்சொல் காதை அடி அமயம் - பொழுது 10 27 அமரர் கணம் - உம்பர் கூட்டம்;தேவர்குழு 15 19 அமர் அகம்-போர்க்களம்ளு 5 137 அமர்நகை - பொருந்திய சிரிப்பு; விருப்பத்துடன் சார்ந்த சிரிப்பு 13 92 அமலை - திரளை; சோற்று உருண்டை 17 2 அமளி - படுக்கை 7 6 அமுதசுரபி - அமுதத்தைக் கொடுப்பது 11 44 அம்பலப் பீடிகை - அம்பலமாகிய இடம்; பொது இடம் 13 107 அயர்தல் - மறத்தல் 7 71 அயர்ந்து - வருந்தி 20 87 அயாவுயிர்த்தல் - நெட்டுயிர்ப்பு விடுதல்; நெடுமூச்சு விடுதல் 21 26 அரங்கு-அவை; கூத்து நிகழும் இடம் 4 6 அரங்கு - சபை 18 33 அரந்தை - துயர்; துன்பம் 6 185 அரமியம்-நிலாமுற்றம் 12 47 அரவம் - ஆரவாரம்; பேரொலி 14 60 அரவக்கடல் -ஒலியையுடைய கடல் 9 38 அரவாய் - அரத்தின்வாய்; (அரம் - கருவிகளை அராவும் கருவி) 7 73 அராந்தாணம் சமண்பள்ளி 5 23 அரிக்குரல்-மெல்லியகுரல் 5 127 அருந்த ஏமாந்த-பிறர் உண்ணஆவல்கொண்ட 14 68 அருந்துநர் சாலை - உணவுண்ணுமிடம் 20 7 அருப்புக்கணை: அரும்புக்கணை - மலர் அம்பு 18 105 அலகின் மூதூர் 2 34 அலங்கல்-மாலை; அசைதலை யுடையது என்னும் பொருளது 4 63 அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு 6 110 அலத்தற் காலை - வறுமைக் காலம்; துன்பமுடைய காலம் என்பதுபொருள் 15 50 அலர் உறுத்தல் - பலரறியச் செய்தல் 20 100 அலவலைச் செய்தி - ஆராயாமல் செய்த செயல் 17 51 அருஞ்சொல் காதை அடி அலசுதல் - வருந்துதல் 9 7 அல்லல் - துன்பம் 13 89 அல்லி - அகவிதழ்; மலரின் உள்ளிதழ் 21 28 அவதி - எல்லை 21 188 அவத்திறம் தீயவிருப்புத் தன்மை 7 14 அவலப்படிற்றுரை 6 163 அவலம் - துன்பம் 21 94 அவலம் - வருத்தம் 4 118 அவிநயம் - பாட்டின் பொருள் தோன்றக் கை முதலிய உறுப்புக்களால் குறிப்புக்காட்டி ஆடுங்கூத்து 19 79 அவிர் ஒளி - விளங்குகின்ற ஒளி 12 84 அவிழ்தல் - விரிதல்; மலர்தல் 18 59 அவ்வியம் - பொறாமை 5 22 அவ்வையர் - தாய்மார் 11 137 அழிகுலம் - இழி குலம்: கீழ்ப்பிறப்பு 13 68 அழிதகவுள்ளம் - அழிந்த உள்ளம் 12 43 அழிவு - வருத்தம் 2 11 அழுங்கல் - வாய்விட்டழுதல் 4 181 அழுவம்-பரப்பு; விரிவு 7 125 அழுவிளிப்பூசல்-அழுவோர் முழக்கம் 6 73 அளக்கர் - கடல் 17 12 அளை-துவாரம்; துளை 20 99 அளைஇய - கலந்த 5 63 அறந்தரு நெஞ்சோடு அருள் 13 54 அறம் - தருமம்: துன்பங்களை அறுத்தலையுடைய தென்று பொருள் (பதிகம்) 72 அறல் - மணல்: நீரால் அறுத்து இருப்பது என்பது பொருள் 8 11 அறவி - அறநெறி 21 105 அறவி - அறம் 12 55 அறன் ஒடு - அறவோடாகிய அமுதசுரபி 21 158 அறுகை - அறுகம்புல் 12 60 அறுவை - உறி 6 93 அறைதல்-சொல்லுதல் 16 44 அறைபோதல் - ஓட்டையாதல்; உள்ளம் அழிதல் 18 130 அற்புதக்கிளவி - வியப்புடைய மொழி 21 8 அற்புதப் பாவை 7 95 அற்புதம் - வியப்பு 7 95 அனந்தர்-கள்ளுண்ட மயக்கம் 7 72 ஆ - பசு 14 104 ஆகம் - மார்பு 20 100 ஆடி - கண்ணாடி 19 90 ஆடி - பளிங்கு 8 47 அருஞ்சொல் காதை அடி ஆணு - அன்பு (பதிகம்) 17 ஆண்டலை-ஆண்மகன் தலை போன்ற வடிவுள்ள ஒரு வகைப்பறவை 6 77 ஆண்டு - அவ்விடம்: அவ்வுலகம் 14 38 ஆயம் - கூட்டம் 7 54 ஆயிதழ்-அழகிய இதழ் 19 88 ஆயிரங் கண்ணோன் - இந்திரன் 14 53 ஆரங் கண்ணி-ஆத்திமாலை 4 50 ஆரஞர் - மிக்க துயரம் 14 8 ஆரணங்கு-அரிய தெய்வத்தன்மை 17 53 ஆரணம்-மறை; வேதம் 13 4 ஆரம் - மாலை 19 85 ஆராமம்-பொழில்; சோலை; உவவனம் 3 32 ஆரிடை - அரியவழி 13 42 ஆருயிர் மருந்து - சோறு:நிறைந்த உயிருக்கு மருந்து போல் உதவுவதென்பது பொருள் 16 135 ஆருயிர் மாக்கள் - அரியஉயிரையுடைய மக்கள் 19 45 ஆர் - ஆத்திமாலை 19 125 ஆர் இடர் - மிக்க துன்பம் அரிய துன்பம் 6 160 ஆர்த்தல் - அருத்தல்; உண்ணச் செய்தல் 12 93 ஆலமர் செல்வன் - சிவபெருமான் 3 144 ஆவம்-அம்புப் புட்டில் 20 63 ஆழித்தாழி - சக்கரவாளமா கிய வட்ட வடிவமுள்ள இடம் 6 173 ஆழியங் குன்றம் - சக்கர வாளமலை 6 192 ஆறு அறி மரபு - செய்யும் வழியறிந்த முறைமை 1 57 ஆற்றாப் பாலகர் 7 81 ஆற்றா மாக்கள்-வறியவர் 17 64 ஆற்றுதல்-கொடுத்தல் 17 64 ஆற்றுதல்-உதவுதல் 14 8 ஆற்றுநர் - பொறுக்கும் வன்மையுடையோர் 11 92 ஆற்றுப்படுத்தல் - போக்குதல்;வழிச்செலவிடுதல் 5 139 ஆனைத்தீ - தணியாத பெரும்பசியைச் செய்வதோர்நோய் (பதிகம்) 66 ஆன்ற - அமைந்த; பொருந்திய 15 10 இகல் - மாறுபாடு; பகை 19 119 இசைச்சொல் - புகழ் 11 81 இசையுந-ஒத்திருப்பன 3 157 இஞ்சி - மதில் 5 112 இடங்கழி காமம் -வரம்பு கடந்த காமம் 10 22 இடபம் - இடபராசி 15 23 இடபம் - வைகாசி 11 40 அருஞ்சொல் காதை அடி இடமுறை மும்முறை 9 5 இடர் - துன்பம் 4 20 இடர்வினை - தீவினை 21 21 இடவயின் - இடத்தில் 15 4 இடுக்கண் - துன்பம் 14 26 இடுமணல் - எக்கரடித்த மணல் 17 26 இடும்பை - துன்பமொழி 3 6 இடையிருள் யாமம் 6 208 இணர் - பூங்கொத்து 7 100 இதை - மரக்கலப் பாய் 14 81 இந்திர கோடணை - இந்திர விழா 5 94 இந்திர திருவன் - இந்திரன் போன்ற செல்வத்தையுடைய மன்னன் 19 116 இமிர்தல் - ஒலித்தல் 3 49 இமிழ் - முழக்கம் 17 50 இம்மை - இப்பிறப்பு 3 96 இயவு - வழி; பாதை 13 8 இரங்கல் - இரங்காதே; வருந்தாதே (முன்னிலை) 6 161 இரத்தல்-யாசித்தல்; தாழ்ந்து ஒன்றை வேண்டுதல் 3 103 இரத்தி - இலந்தை 6 89 இரிய - கெட; நீங்க 21 165 இரியல் மாக்கள் - கெடுதலுற்ற மக்கள்; விரைந்தேகுவோர் 13 82 இருக்கை - இருப்பிடம் 4 115 இருக்கை - கட்டில் 16 67 இருங்கடல்-பெரிய கடல் 8 1 இருடி - முனிவன்; ('ரிஷி' என்னும் வடசொல் திரிபு) 13 66 இருள் மயக்கம்-இருட்கலப்பு 14 3 இலவந்திகை - இயந்திரவாவி 3 45 இலவு - இலவம்பூ 20 51 இலி - இல்லாதவன் 16 10 இழிதல் - கீழிறங்குதல் 14 83 இழுக்கி-வழுக்கிவீழ்ந்து 21 55 இழும் என் சும்மை - இழும் என்னும் ஒலி: (இழும் என்பது ஒலிக்குறிப்பு) 14 27 இளங்கதிர் ஞாயிறு: (பதிகம்) 1 இளங்கால் செல்வன்- இளந்தென்றற்காற்று 19 101 இளவள ஞாயிறு 10 11 இளி - இசை 19 26 இளிவு - அருவருப்பு 6 68 இறவு - இறால் என்னும் ஒருவகை மீன் 20 46 இறுதி - முடிவு 3 96 இறுத்தல் - தங்குதல் 5 141 இறுத்தோர்-கொடுத்தோர் 6 50 இறும்பு - குறுங்காடு 19 97 இறும்பூது - வியப்பு; ஆச்சரியம் 20 55 அருஞ்சொல் காதை அடி இறை - சிறிது 18 69 இறை - இறப்பு: வீட்டின் தாழ்வாரம் 7 60 இறை கொள்ளுதல் - தங்குதல் 4 69 இனைதல் - வருந்தல் 3 158 இன்சீர் - இனிய தாளவொற்று 19 26 இன்பம் - முத்தியின்பம் 3 96 இன்னணம் - இவ்வாறு 8 1 இன்னாப்பிறவி இகந்தோர் துன்பந்தரும் பிறவியைக் கடந்தவர்கள் 12 100 ஈண்டுதல்-திரளுதல்; ஒன்றுசேர்தல் 14 25 ஈண்டுநீர்-கடல்; மிக்க நீரை யுடையதென்பது பொருள் 14 28 ஈமம் - பிணஞ்சுட அடுக்கிய விறகடுக்கு 16 23 ஈர்த்தல் - இழுத்தல் 7 55 ஈறுகடை - முடிபின் இறுதி 21 144 உகிர் - நகம் 20 59 உகுத்தல் - சொரிதல் 9 4 உச்சி மீமிசை-மேலிடம் 11 22 உஞ்சை-உச்சயினிநகரம் 15 64 உடங்கு-யாவும்; எல்லாம் 10 64 உடம்புவிட்டோடும்உயிர் 16 92 உணங்கல் - வற்றல் 20 46 உதைத்தல் - உந்துதல்; தள்ளிக்கொண்டு செல்லல் 16 14 உதைத்தல் - தெறித்தல் 7 48 உமிழ்சீ - வெறுக்கத்தக்கசீ (சலம்) 20 48 உயக்கம் - வருத்தம் 7 66 உயங்கு நோய் - மிக்க துன்பம் 3 2 உயவல் - வருந்துதல் 3 90 உயா - வினவல் 20 93 உயிர்த்தல் - பெரு மூச்சவிடுதல் 19 28 உயிர்பதிப் பெயர்ப்பு - உயிரைவிடுதல்: இறத்தல்; உடலினின்று உயிரை நீக்குதல் 14 95 உய்தி - உய்வாய்; மேம்படுவாய் (முன்னிலை யொருமை) 21 179 உய்ப்ப-செலுத்த; கொண்டு செல்ல 16 38 உய்யானம் - அரசர் விளையாடுஞ்சோலை 3 52 உரகர் - நாகர் 11 70 உரவுநீர் - கடல் 7 125 உரவோன் - அறிஞன் 4 108 உரவோன் -அறிவுடையோன் 2 69 உருகெழு-அச்சம் பொருந்திய 4 39 உருப்ப - அழல; வருத்த; முதிர 15 83 உருப்பு - வெப்பம் 17 56 உருவிலாளன் - வடிவமற்றவன்: மன்மதன் 5 6 உருவு - வடிவம் 7 27 உரைசால் தெய்வதம் (பதிகம்) 45 அருஞ்சொல் காதை அடி உரைமுடிவு காட்டிய உரவோன் 4 108 உரைமூதாளன் - அறிவுமேம்பட்ட உரையாளன் 12 4 உலப்பு - கெடுதல் 6 111 உலாநீர்ப் பெருங்கடல் 12 67 உவகை - மகிழ்ச்சி 12 82 உவப்பு - மகிழ்வு 15 19 உவவனம் - உவவனம் என்னும் பூம்பொழில் (பதிகம்) 45 உழந்த - வருந்திய 3 5 உழிஞ்சில் - வாகை; உன்னம் 6 80 உழையோர்-உரிமை மகளிர்: பக்கத்திலிருப்போர் என்பது பொருள் 3 46 உளமலி யுவகை 12 82 உளைத்தல் - ஊளையிடல்:நரியின் கூக்குரல் 6 111 உள்வரி-வேற்றுரு; பொய்வேடம் 19 29 உறைபதி - வாழ்விடம்; தங்கியிருக்குமிடம் 12 94 உறையுள் - இருக்குமிடம் 19 29 ஊக்குதல் - ஆட்டுதல் 19 74 ஊங்கண் - முன்பு 21 181 ஊசல் - ஊஞ்சல் 19 73 ஊடு சென்று ஏறல் - நடு விடத்தில் மேலேறிச்செல்லுதல் 20 21 ஊட்டும் - உண்பிக்கும் 19 70 ஊணொலி யரவம் 17 97 ஊண் - உண்ணல் 6 117 ஊரா நற்றேர் - தானேசெல்லும் வான ஊர்தி 6 39 ஊருநீர் - பரந்தநீர் 18 92 ஊர் காப்பாளர் - ஊரைக் காத்துத்திரியும் வினையாளர் 7 69 ஊர்க் குறுமாக்கள் - ஊரிலுள்ள இளஞ்சிறுவர் 15 59 ஊர்திரை-ஊர்கின்ற அலை; செல்கின்ற அலை 16 14 ஊழ் - முறைமை; நியதி 5 16 ஊழ்தரு தவத்தள் : முறையாகப் பெற்ற தவத்தினையுடையள் 5 16 ஊன்-தசை: உட்பொதிந்துள்ள சதை 20 54 ஊண் - உடல் 12 90 எஃகு - வேல் 19 26 எஞ்சா மண் - குறையாத நிலம் 19 119 எஞ்சுதல் - குறைதல்: தோற்றுப்போதல் 3 157 எடுப்ப - ஏற்ற 5 134 எட்டி-வணிகர் பெறும் பட்டப்பெயர் 4 58 எண்கு - கரடி 16 68 எண்பிறக்கு ஒழிய-எண்ணங்கள் எட்டாமல் நீங்க 11 65 அருஞ்சொல் காதை அடி எண்பேராயம்-எண்வகைப் பெருங்குழு 1 17 எம் அனை - எம் தாய் 10 39 எயில் - மதில் 7 89 எயிறு - பல் 18 52 எய்யா - அறியாத 18 85 எரி ஊட்டுதல் - தீயில் இடுதல் 16 98 எரிகதிர் - ஞாயிறு : சூரியன் 15 23 எரிபொத்தி - அழலைமூட்டி 16 26 எருவை-பருந்து; கழுகு 6 117 எல் - இரவு 13 82 எல்வளை-ஒளி பொருந்திய வளையலையுடையவள் 8 24 எழில் - அழகு 11 78 எழினி - திரைச்சீலை 5 3 எழுதுவரி-பத்திக்கீற்று 13 122 எள்ளினை - இகழ்ந்தாய் (முன்னிலை ஒருமை வினை) 21 106 எள்ளுதல்-இகழ்தல்: இழித்துக் கூறுதல் 20 14 எள்ளுரை - இகழ்ச்சிச் சொல் 18 10 என்கோ - என்பேனோ 5 103 என்பு - எலும்பு 6 107 ஏ - அம்பு 7 127 ஏடு-இதழ்; பூவின் மடல் 19 3 ஏதமில் குணப்பொருள் 5 71 ஏதம் - குற்றம் 7 31 ஏது-பயன்தரும் தன்மை 7 20 ஏத்துதல்-வணங்குதல் 12 102 ஏந்தல் - நிமிர்தல் 6 116 ஏமாந்திருத்தல் - ஏக்கற்று இருத்தல் 14 50 ஏமுற - இன்படைய 21 165 ஏற்றூண் - இரந்துண்ணும் உணவு 14 7 ஐ அரி-அழகிய இரேகை 21 45 ஐ என - விரைவுடன்;வியக்குமாறு 12 24 ஐது - அழகுடையது 10 2 ஐம்படை - ஐம்படைத்தாலியென்னும் குழந்தைகட்கு அணியும் அணி 3 138 ஐம்பெருங்குழு - ஐந்துபெரிய கூட்டம்; அமைச்சர்,புரோகிதர், படைத்தலைவர்,தூதுவர், சாரணர் 1 17 ஐயம் - ஐயப்படுதல்; சந்தேகம் 6 158 ஐயரி-அழகிய செவ்வரி 16 45 ஐயவி - வெண் சிறுகடுகு 7 73 ஐவகைச் சீலம் - காமம், கொலை, கள், பொய், களவு என்னும் ஐந்துவகைப் பாவங்களையும் நீக்கி ஒழுகுவது2 68 ஐவில்-ஐந்துவில்லளவு 4 89 ஒடிமரம் - ஒடிந்த பாய்மரத் துண்டு 16 14 ஒடுவை-ஒருவகைமரம் 6 80 அருஞ்சொல் காதை அடி ஒட்டல்-சூளுரைத்தல் (சபதஞ்செய்தல்) 1 60 ஒத்த முடிவின் ஓரறம் 12 117 ஒரீஇ - ஒருவி : நீங்கி 4 103 ஒருசிறை : ஒரு பக்கம் 19 64 ஒருதலை - உறுதி 11 35 ஒருதனி - தன்னந்தனி 14 71 ஒருதனியோங்கிய திருமலர் 15 76 ஒரு பேரின்பம் - ஒப்பற்ற பெரிய இன்பம் 9 36 ஒல்குதல் - அசைதல் 7 51 ஒளித்தல் - மறைத்தல் 7 27 ஒளிறுவாள்- விளங்குகின்ற வாள் 1 68 ஒளிறுவாள் மறவர் 1 68 ஒளிளியது - சிறப்புடையது 21 108 ஒறுக்கும்-தண்டிக்கும் 19 43 ஒற்கா-ஒல்கா: தளராத 15 18 ஒளிறுதல் - பொருந்துதல்: அதிட்டித்து நிற்றல் 19 6 ஓங்குயர்-மிக உயர்ந்த: (ஒரு பொருட் பன்மொழி) 14 54 ஓங்குயர்-பெருஞ்சிறப்பு 14 54 ஓங்குயர்-விழுச்சீர் 1 1 ஓடுதல்-பரவுதல் 15 53 ஓடுதல்-பரவுதல்: மிகுதியாதல் 21 157 ஓதை - ஓசை: ஒலி 7 69 ஓத்து-மறை:வேதம், உலகியலுக்கு ஏற்ற தன்மையுடையது என்பது பொருள் 13 25 ஒம்புதல்-பாதுகாத்தல் 13 14 ஓம்புவை-பாதுகாப்பாய் 21 158 கங்குல் - இரவு 6 25 கங்கைப்பேரியாறு 10 56 கச்சை - யானை அடிவயிற்றில் கட்டுங் கயிறு 1 28 கஞ்சம் - நீர் (பதிகம்) 10 கடகம் - கைவளை 6 114 கடம் - கடன்:காணிக்கை 3 70 கடம் - அருநெறி: அரியவழி 13 41 கடம்பன் - கடப்பமாலை யணிந்தவன்: முருகவேள் 4 49 கடவுள்-தெய்வத் தச்சன் 20 111 கடாஅம் - மதநீர் 19 22 கடி - காவல்; காப்பு 6 105 கடி - பேய் 6 49 கடிஞை - பிச்சையேற்குங் கலம் (திருவோடு என வழங்குவர்) (பதிகம்) 63 கடிது - விரைவு 16 48 கடிப்பகை-பேய்க்குப்பகை: வேம்பும் வெண் சிறுகடுகும் 7 58 கடியின் காவல்-மணத்தின் பின் பாதுகாப்பு 18 98 அருஞ்சொல் காதை அடி கடுகுதல் - மிகுதல் 14 80 கடுங்கண் - தறுகண்மை: அஞ்சாத தன்மை 4 46 கடுஞ்சூல்-முதற்கருப்பம் 7 82 கடுநவை-கொடியதுன்பம் 6 25 கடுவரல் - விரைந்து செல்லல் 17 25 கடுவன் - ஆண்குரங்கு 19 74 கடைகொள - முடிவெய்த 21 174 கடைமணி - கண் கருமணியின்கடை 3 22 கட்டழற் கடும்பசி கட்டி நெருப்பால் சுடுவது போன்ற கொடும்பசி 17 13 கட்டு - உறுதி 20 8 கட்டு அழல் - தணியாத நெருப்பு 17 13 கணவிரி - அலரிப்பூ 3 104 கணிகை-பொதுமகள் 11 13 கண் எறிதல்-அடித்தல் 19 82 கண்கவர் ஓவியம் 3 131 கண்ட - அறிந்து கொண்ட 21 32 கண்டம்-கழுத்து; கண்டத்தால் பாடுதல்; மிடற்றோசை 19 83 கண்ணடைத்தல்-இடத்தை மறைத்தல் 12 60 கண்ணி - கருதி 21 123 கண்ணி - தலையிற்சூடும் மாலை 18 63 கண்படை - கண்படுதல்;தூங்குதல் 13 115 கண்மணி - கண்ணிடத்துள்ள கருமணி 16 48 கண் மாறுதல்-விழித்த கண்இமைத்தல் 3 40 கண் முரசு - முகத்தையுடைய முரசு 1 69 கதலிகைக் கொடி - துகிற் கொடி 1 52 கதழ்ந்து - விரைந்து 13 48 கதிரோன் - சூரியன் 12 83 கதிர் - ஞாயிறு 5 139 கதிர் - ஒளி 4 1 கந்தசாலி-மணமுள்ள நெல் 10 46 கந்தம் - தூண் 6 60 கந்து - தூண் 15 33 கந்துகக் கருத்து - பந்தாடு தொழில் 2 22 கந்துடை நெடுநிலைக் கடவுள் 15 33 கம்பம் - நடுக்கம் 17 63 கம்பம் - முழக்கம் 3 126 கம்பலைமாக்கள்-வெவ்வேறு காட்சிகள் கண்டு முழங்கித் திரிவோர்; (வேடிக்கை பார்ப்பவர்) 3 147 கயக்கு-கலக்கம் 16 85 கயிற்கடை-கொக்கி; அணிகளைப் பொருத்தும் இடம் 3 135 கரண்டை - கரண்டகம்; குண்டிகை; கரகம் 3 86 கரத்தல் - மறைத்தல் 1 15 அருஞ்சொல் காதை அடி கரந்து-மறைந்து; ஒழிந்து; நீங்கி 21 147 கரப்பு - மறைவு 19 104 கரி - சான்று: சாட்சி 11 120 கருப்புவில் - கரும்பாகியவில் 20 92 கருவி-தொகுதி; சேர்க்கை 17 92 கருவுயிர்த்தல்-ஈனுதல் 18 55 கலக்குறுதல்-கலக்கமடைதல்;கலங்கிப்போதல் 14 80 கலம்-மரக்கலம் 7 70 கலம்-அணிகலம் 7 122 கலாம் - போர் 1 63 கலுழ்தல்-கலங்கல் 9 4 கலை - ஆடை 6 112 கலை நியமம் - நாமகள் கோயில் 14 10 கல்அதர் - பருக்கைக்கல் உடைய குறுவழி 13 39 கவராக் கேள்வி - தெளிந்தநூல்கேள்வி (நற்பொருள்களைக்கேட்டல்) 1 10 கவராக் கேள்வியோர் 1 10 கவல்வு-கவலை; வருத்தம் 16 47 கவான் - துடை (பதிகம்) 27 கவிர் - முள்முருக்கு 6 123 கவின் - அழகு 21 148 கவேர கன்னி - காவிரியாறு 9 52 கவை அடி-கவைத்த அடி; பிளவுள்ள பாதம் 6 125 கழி - மிகுதி 12 49 கழிமுடை நாற்றம்-மிகுந்த புலால் நாற்றம் 16 66 கழுமுதல்-கலத்தல் 13 18 கழூஉம்-போக்கும் 12 36 கழை - மூங்கில் 20 23 களர் - உவர்நிலம் 10 47 களிக்கயல் நெடுங்கண் 12 14 களிறு - ஆண் யானை 18 140 கள் அடு குழிசி - கள்ளைக் காய்ச்சுகின்ற பானை 16 66 கறவை - பசு; ஆ 12 93 கறையோர் - கடமை செலுத்த வேண்டியவர்;அரசருக்கு இறை (வரி)ப் பொருள் கொடுக்க வுரியார் 19 161 கற்குன்றம்-செய்குன்று 19 102 கனாமயக்குறுதல் - கனவினால் மயக்கம் அடைதல் 11 104 கனைஎரி-மிக்க நெருப்பு 2 42 கன்னல்-நாழிகை வட்டில் 7 64 கன்னிக் காவல்-கன்னிப் பருவப்பாதுகாப்பு 18 98 காசு - குற்றம் 17 22 காடமர் செல்வி-காடு கிழாள்; துர்க்கை; காளி 18 115 அருஞ்சொல் காதை அடி காணம்-பொன்: பொருள் 16 10 காண்தகு சிறப்பு - காணத் தக்க அழகு 14 39 காதற் சுற்றம் 8 13 காப்புக் கடை கழிதல்- கற்பொழுக்கம் நீங்குதல் 13 5 காமர் - விருப்பம் 18 59 காமற்கடந்த வாமன் 5 77 காம்பு - மூங்கில் 21 110 காய்தல்-சினத்தல்; வெகுளுதல் 20 14 காராளர் - வேளாளர் 7 102 காரிகை-அழகுடையாள் 21 32 கால் காற்று 14 80 கால் கிளர்தல் - காற்றைப்போல் எழுதல் 19 22 கால்கோள் - தொடக்கம் ; துவங்குதல் 3 144 காவலன் - வேந்தன் 12 49 காவலன் - காத்தல் தொழிலையுடையவன் 13 115 காழோர்-குத்துக்கோற்காரர் 4 35 கிளவி - சொல்;பேச்சு 3 156 கிளைபயிர்தல் - இசை வகைகளை இசைத்தல் 7 46 குங்கும வருணம் - சிவந்த தொய்யிற் குழம்பு 19 87 குச்சரக் குடிகை - சிறிய கோயில் கூர்ச்சர நாட்டுப் பணியமைந்த சிறிய கோயில் 18 145 குடக்கண் - திரண்ட கண் 5 120 குடதிசை - மேற்குத் திசை 5 120 குடபால் - மேல் திசை 4 22 குடர்த்தொடர்மாலை-குடலினால் தொடரப்பட்டமாலை 15 13 குடவயின் - மேற்குத்திசை 21 2 குடிகை - குடிசை 6 63 குடுமி - உச்சி: மலையின் கொடுமுடி 20 22 குடைவோர்-அப்புவோர் 19 89 குணதிசை-கிழக்குத் திசை 5 119 குண்டுநீர்-ஆழமாகிய நீர் 8 8 குப்பை-குவியல் 16 122 குமரி-கன்னியாகுமரி என்னும் யாறு 13 7 குமரி - கன்னி; பகவதி என்னும் தெய்வம் 13 74 குமரி - கன்னிப்பெண் தன்மை 14 77 குமரிமூத்த என்பாத்திரம் - கன்னிப் பெண்மூத்தாற் போன்று பயனற்ற பாத்திரம் 14 77 குமிழ் - குமிழம்பூ 6 123 கும்பம் - குடம் 6 94 அருஞ்சொல் காதை அடி குயிலுவர் - தோற்கருவிகளைப் பயில்வோர் 7 123 குயிற்றல் - செய்தல் 8 47 குரிம்பு-வரம்பு; வரையறை 18 3 குரல் - பூங்கொத்து 8 36 குரவர் - தாய்தந்தையர் 3 18 குரவை - வினோதக் கூத்து ஆறினுள் ஒன்று:காமமும் வெற்றியும் பொருளாகக் குரவைச்செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது 19 66 குரிசில் - பெருமையுடையோன் 18 87 குருகு-துருத்தி மூக்கு; 2 43 குருகு-பறவை; குருக்கத்தி 18 55 குருகு பெயர்க் குன்றம் - கிரவுஞ்சமலை; (இது அன்றிற் பறவை வடிவுடையது.) 5 13 குரூஉ - நிறம் 13 29 குழலி - கூந்தலையுடையாள் 20 13 குழல் - வேய்ங்குழல் 19 83 குழவியேங்கிய கூக்குரல் 13 17 குழிசி - பானை 6 90 குழுவுதல் - கூடுதல் 1 18 குறங்கு - தொடை 20 61 குறள் - குறுகிய வடிவம் 19 51 குறுநடைப் புதல்வர்- தளர் நடையுடைய இளம்புதல்வர் 7 57 குற்றங் கெடுத்தோய் - முக்குற்றங்களையும்அழித்தோய் 5 100 கூக்குரல் - கூப்பீட்டுஒலி 13 17 கூட்டம்-சமவாயம் 27 243 கூட்டுண்ணல் - ஒன்றுபடல்;சேர்ந்து அனுபவித்தல் 7 47 கூம்பு - பாய்மரம் 4 30 கூவிளி - கூப்பீடாகிய முழக்கம் 7 67 கூறை -புடைவை; ஆடை 16 30 கூற்று-கூற்றுவன் (இயமன்) 1 30 கூற்றுக்கண் விளிக்கும் 1 30 கேள்வி - நற்பொருள்களை அறிந்தார்வாய்க் கேட்டல் 21 93 கைத்தூண்-பலரின் கையால் உணவு பெற்று வாழும் வாழ்க்கை 18 16 கைத்தூண்-தீயவொழுக்கத்ச்தால் கிடைத்த உணவு 16 6 கைம்மை-சிறுமை: தனக்கு உரியளல்லாதாளை விரும்புதல் 20 122 கையறவு - செயல்கெடுதல் 20 26 கையறுதல் - செயலறுதல் 3 115 கையாறு - மூர்ச்சித்தல் 4 118 கையுதிர்க்கோடல்-கையை அசைத்துப் போகச் செய்தல் 16 10 அருஞ்சொல் காதை அடி கைவிடலீயான்-கைவிடான் 5 41 கைவினை - கைத்தொழில் 19 5 கொடிஞ்சி - தேர்த்தட்டு 4 48 கொடித்தேர் வேந்தன் - கொடியணிந்த தேர்iயுடைய அரசன் 7 79 கொடுமரம்-வில்: வளைந்த மரம் என்பது பொருள் 13 31 கொட்பன - சுழல்வன; சுற்றுவன 19 63 கொட்பு - கொள்கை; உணர்வு வேறுபடல் 21 77 கொணர்க-கொண்டு வருக 10 39 கொண்டி மகளிர் - பொருளைக் கொள்ளும் பரத்தையர் 18 109 கொம்பர் - கொம்பு; மரக்கிளை 19 57 கொளுத்துதல்-பொருத்துதல் 4 3 கொளை - பாட்டு 7 47 கொள்கை - முறைமை;கோட்பாடு 13 74 கொற்கை-கொற்கை யென்னும் பெயருடைய ஓர் ஊர் 13 84 கோங்கு - கோங்கமரம்: பாலை நிலக்கருப்பொருள்களுள் ஒன்று 19 67 கோசம்பிக் கோமான்-உதயணன்; கோசம்பி நகரத்து மன்னன் என்பது பொருள் 15 61 கோடணை - முழக்கம் 5 94 கோடு-மருப்பு; கொம்பு; 19 19 கிளை 4 17 கோட்டம் காவலர் - சிறையைப் பாதுகாப்போர் 19 48 கோட்டி-மன்றம்; சபை 1 43 கோணச் சந்தி-கூடல்வாய்; வீட்டின் இறப்பு ஒன்றுபடுத்தி இருக்கும் இடம் 19 113 கோணம் - தோட்டி; யானையை அடக்குங் கருவி 18 163 கோயில் -அரண்மனை 20 96 கோலம் - அழகு 18 40 கோல் தொடி - திரட்சியாகிய வளையல் 8 41 கோல்நிலை - செங்கோலின் நிலைமை 7 8 கோல்முறை - செங்கோன் முறைமை; அரசநீதி 18 111 கோவலர்-இடையர் 13 85 கோள் - கிரகம் 6 182 கோள்நிலை - கோட்களின்நிலை (சூரியன் முதலிய ஒன்பதுவகைக் கிரகங்களும் இருக்கும் இருக்கை) (பதிகம்) 24 கோற்றொடி - மாதர் 8 41 சதுக்கத் தெய்வம் - சதுக்கப் பூதம் 1 55 சந்தி-பலவழி ஒன்று சேருமிடம் 6 61 சமயக் கணக்கர் சமய வாதிகள்; மத ஆசிரியர் (பதிகம்) 88 அருஞ்சொல் காதை அடி சம்பாபதி -காவிரிப் பூம்பட்டினம் (பதிகம்) 8 சம்புத்தீவு-நாவலந்தீவு 17 62 சலம் - நீர் 24 47 சலாகை - இரும்புச்சலாகை 12 66 சாகை - கிளை (பதிகம்) 5 சாந்தம் - சந்தனம் 16 31 சாயல் - மென்மை 2 14 சாயை - நிழல்; வலிமை 20 119 சாரணர் - சஞ்சரிப்பவர் 16 15 சார்பு - பற்று 21 179 சார்பு - அமைதி 4 106 சாளரம்-பலகணி; சன்னல் 4 53 சிதவல் - கந்தல்; சிதைந்த தன்மையது 3 106 சித்தம் - உறுதி 10 85 சித்திரம் - உருவம் 19 6 சிந்தாதேவி - மனத்தின்கண் அமர்ந்திருக்கின்ற மாதெய்வம் 14 17 சிந்தாதேவி - கலைமகள் : கற்றோர் நெஞ்சில் இருப்பவள்(பதிகம்) 60 சிந்தாவிளக்கின் செழுங்கலை நியமம் 13 106 சிந்துபு - சிந்தி: கீழே வழிந்து 3 138 சிமிலி - உறி 3 86 சிரல் - மீன்கொத்தி 4 24 சில்பலி - சிறுபலி 6 95 சில்லை - மீன்கொத்திப்பறவை 8 29 சிறுபுழை-சிறிய வாயில் 7 89 சிறுபுறம் - பிடர், முதுகு 2 51 சிறை - பக்கம் 18 44 சிறை - அணை 5 19 சிறைக்கோட்டம் - சிறைச்சாலை (பதிகம்) 71 சிறைவீடு - சிறையினின்று விடுபடுதல் (பதிகம்) 80 சிற்றிடை முடுக்கர் - சிறிய இடமாகிய குறுந்தெரு 7 68 சீத்தல்-அழித்தல், கெடுத்தல் 14 99 சீத்து - அழித்து 20 11 சீர்நிறுப்போர் - தாளவறுதி செய்வோர் 19 83 சுடர் - தீக்கொழுந்து 6 64 சுடலைக்கான் - சுடுகாடு 16 25 சுடுதல் - கொளுத்துதல் 21 12 சுடுமண் - செங்கல் 3 127 சுண்ணம்-மகரந்தப்பொடி; பூந்துகள் 4 18 சுரத்தல் - பெருகுதல் 14 52 சுரியல் - சுருட்டை ; (சுருண்டதன்மையது) 3 116 சுருங்கை - மதகு 12 79 அருஞ்சொல் காதை அடி சுருப்பு: சுரும்பு-வண்டு 18 105 சுரும்பு-மலை; வண்டு 20 107 சுரை வித்து - சுரையின்விதை 20 50 சூது - சூதாடுதல்; ஆயம் உருட்டுதல் 14 63 சூர் - அச்சம் 16 55 சூல் முதிர்தல் கருமுற்றுதல்; கருவளர்தல் 13 8 சூழ்வோன் - சுற்றுவோன் 5 10 செங்கயல் நெடுங்கண்- செவ்வரி படர்ந்த கெண்டைமீன் போன்ற நீண்டகண்கள் 4 101 செங்குணக்கு - நேர் கிழக்கு (பதிகம்) 13 செங்கோல் - செவ்விய கோல் முறை 16 10 செட்டி - செட்டுடையவன் 19 107 செம்பொருள் - செவ்விய பொருள்: அறம் 21 168 செயிர் வழங்கு தீக்கதி - துன்பம் தரும் தீயபிறப்பு 12 61 செய்யோள் - செம்மை நிறமுடையவள் 16 34 செருக்கி - தருக்குக் கொண்டு; திமிர்மிக்கு 19 22 செருவேல் - போர்புரியும் வேற்படை 19 124 செல்கதி - அடையக்கடவதாகிய நற்கதி; நற்பயன் பெறுதல் 13 88 செல்லல் - போகாதே (முன்னிலை எதிர்மறை) ஏவல் 21 27 செல்வக் காவற்பேரூர் - செல்வக்களிப்பும் காவலும் உடைய பெரிய ஊர் 7 26 செவ்வனம் - செம்மை;நேரிய நிலை 11 20 செவ்வனம் - வேறாக;நேராக 3 81 செவ்வனம் - நன்கு (பதிகம்) 53 செவ்வி-சிறந்ததன்மை 5 21 செவ்வி - பருவம் 18 26 செறி இருள்-மிக்க இருள் 15 35 செற்றம் - சினம் 1 63 செற்றம் - சினம்; பகை நெடுங்காலம்நிகழ்வது 13 55 சேடி-வித்தியாதர ருலகு 17 21 சேண் - உயர்வு 3 106 சேண் - நெடுந்தூரம் 17 31 சேதா - செவ்விய பசு 5 130 சேயரி - சிவந்தவரி 21 27 சேய்நிலம் - தூரமான இடம் 19 118 சேறல்-செல்லுதல்: அடைதல் 21 87 சேறல் - செல்லுதல் 16 103 சொரிதல் பொழிதல் 6 8 சோழர்தம் குலக்கொடி(பதிகம்) 23 அருஞ்சொல் காதை அடி ஞாயில்-மதிலின் ஓருறுப்பு; குருவித்தலை 5 112 ஞாயிறு - சூரியன் (பதிகம்) 1 ஞாலம் - பூமி; உலகம் 19 17 ஞாழல் - புலிநகக் கொன்றை 8 6 ஞெமிர்தல் - பரத்தல்;பரந்து கிடத்தல் 18 44 தகரம் - மயிர்ச்சாந்து 4 55 தகை - நலம் 4 66 தக்கு-தக்கது; சிறந்தது 18 10 தடி-தசை; புலால் துண்டு 6 84 தடிந்து - வெட்டி 16 98 தணியா மன்னுயிர் - நீங்காத நிலைபெற்ற உயிர் 14 102 தண்டமிழ்ப் பாவை - குளிர்ந்த தமிழ்ப்பாவை; காவிரி (பதிகம்) 25 தண்டம்-தண்டனை; ஒறுப்பு 13 6 தண்டாக் களிப்பு 6 126 தண்டு-கைத்தடி 14 30 தண்ணுமை-மத்தளம் 19 82 தண்பெயல் - மழைவளம்; குளிர்ந்த மழை பெய்தல் என்பது பொருள் 14 74 ததர் - கொத்து 3 107 தத்துநீ ரடைகரை - கடற்கரை 8 3 தந்தித்தீ - யானைத்தீ என்னும் கடும்பசி நோய் 17 44 தமர் - தமக்குரியோர்; தமக்குச் சிறந்தோர் 13 75 தமர் - அன்பர் 10 36 தமனியம் - பொன் 19 114 தயங்கல் - விளங்குதல் 7 100 தயங்கிணர்க் கோதை - விளங்குகின்ற பூங்கொத்தினாலாயாவை 7 100 தருநிலை - கற்பகத்தரு நிற்குங்கோயில் 5 114 தலைச்சாவகன் - முதல் மாணாக்கன் 21 179 தலைத்தாள் - மிக்க முயற்சி 14 103 தலைமகன் - ஆசான் 3 97 தலைமடுத்தல்-தலையின்கீழ் வைத்தல்; தலைக்குவைத்துப் படுத்தல் 13 114 தவத்திறம் பூண்டோள் 7 13 தவப்பெரு நல்லறம் 13 119 தவளமால்வரை - வெண்ணிறமுள்ள பெரியமலை 15 3 தவளம் - வெண்மை 3 117 தவளம் - வெண்மை 19 112 தவா - அழியாத 3 55 தவா - அழியாத 9 53 தவ்வை - தமக்கை: முன் பிறந்தவள் 7 104 தவ்வையர் - தமக்கைமார் (பன்மை) 11 136 அருஞ்சொல் காதை அடி தளர்நடையாயம் - தளர்ந்த நடையையுடைய சிறுவர் கூட்டம் 7 54 தளவம் - செம்முல்லை 3 163 தளவு - செம்முல்லை 19 93 தளை-கட்டு: கட்டுப்படுத்தும் சிறைச்சாலை 15 63 தலைபிணி - பிணித்த பிணிப்பு; விடாப்பிடி 18 68 தாக்கணங்கு-தீண்டி வருத்தும் பெண் தெய்வம் 3 57 தாடி - மோவாய் மயிர் 3 116 தாது - பூந்துகள் 4 20 தாது - மகரந்தப்பொடி 18 19 தாபதக்கோலம் - தவக்கோலம் 18 23 தாமம் - மாலை 19 112 தாமரைச் செங்கண் 4 94 தார்ச்சேனை 19 123 தாழைத்தண்டு-தாழையின் அடிமரம் 20 62 தாழ்கண் அசும்பு 8 6 தாழ்தரல் - தங்குதல் 1 58 தாழ்தல் - தங்குதல் 5 9 தானம் - ஏழைகட்குக் கொடுக்கும் கொடை 14 35 திசைமுகக் கரு பிரமகண பிண்டம் (பதிகம்) 28 திட்டிவிடம் - கண்ணில் நஞ்சுடைய பாம்பு; அது கண்ணாற் பார்த்தாலும் உயிர்கள் சாகும் என்பர் 9 49 திப்பியம் - வியப்பு: திவ்ய மென்னும் வடசொற் சிதைவு 15 70 திமிர்வோர்-தடவி உதிர்ப்போர் 19 86 திரணை - உருண்ட வடிவம் 3 104 திரிதரல்-சுழலல்; சுற்றித் திரிதல் 15 85 திரி தருதல் - சுற்றிக்கொண்டிருத்தல் 19 31 திரு - அழகு 18 44 திரு - திருமகள் (இலக்குமி) 1 32 திருந்தாச் செய்கை-இழிந்தசெய்கை 2 57 திருந்துமுகம்-இனியமுகம் 14 45 திருமலர் - அழகிய தாமரைப்பூ:திருமகள் இருத்தற்குரிய பூ என்றுமாம் 15 76 திருவில் - வானவில் 6 10 திருவிழை மூதூர் 3 34 திருவிழை - திருமகளும் விரும்பும் 3 34 திருவின் செய்யோள் 5 4 திரை - அலை 8 5 திரைதவழ்பறவை-குளுவை என்னும் பறவை: நீர் அலைகளில் தவழ்ந்து செல்வது என்பது பொருள் 8 28 திரைதோல் - சுருங்கிய தோல் 20 44 திரையிரும் பௌவம் 7 33 திலகம் - மஞ்சாடி 3 161 அருஞ்சொல் காதை அடி திறம் - இயற்கை 4 96 தீஞ்சொல்-இனியமொழி 4 122 தீத்துறு-தீபற்றிய 18 2 தீபதிலகை-தீவுக்குத் திலகம் போன்றவள்: (மணி பல்லவத்தில் புத்தன்பாத பீடிகையை இந்திரன் ஏவலாற் காவல் செய்பவள்) (பதிகம்) 53 தீர்த்தன் - தூயோன் 5 98 தீவகச் சாந்தி - தீவிற்குச் செய்யும் சாந்தி. (இந்திரவிழா) 1 35 தீவகம்-தீவு: கடல்நடுவில் திட்டாகவுள்ள இடம் 21 87 தீவகம்-நாவலந்தீவு (பதிகம்) 4 தீவகம்-தீவு: தீவம்:(அம்சாரியை பெற்றது) 21 90 தீவினை அறுக்கும் செய்தவம் 11 139 தூகள் - புழுதி 5 131 துகில்-மெல்லியஆடை 16 122 துஞ்சுதல் - தூங்குதல் 13 8 துஞ்சு துயில்-மிக்க தூக்கம் 16 55 துடவை - தோட்டம் 13 87 துடி - இடைசுருங்குபறை:உடுக்கு 7 69 துடிதலோகம் - தெய்வலோகம் ஆறனுள் ஒன்று 12 73 துணிச்சிதர் - கிழிந்த ஆடை 11 109 துணிவு - தாள அறுதி (தாளத்தின் முடிவு) 2 19 தும்பி - வணடு 19 57 துயர் அறு கிளவி - இன் சொல் 16 132 துய்ப்பு-நுகர்ச்சி; உண்டல் 15 46 துரகம் - குதிரை 7 99 துரப்ப செலுத்த 19 119 துருத்தி-ஆற்றிடைக்குறை: (துருத்தி வடிவுபோல் இருத்தலின் இப்பெயர்த்தாயிற்று) 1 65 துழத்தல் - துழாவுதல்; கிண்டுதல் 7 71 துளங்கல் - நிலைகலங்கல்(பதிகம்) 42 துளங்கல் - அசைதல் 18 48 துளங்கல் - நடுங்குதல் 4 86 துறக்கம் - மேலுலகஇன்பம் 11 64 துறக்கம் - வானுலகம் 15 46 துறவு - துறவு: துறத்தல் 2 10 துன்னிய - நெருங்கிய ; சார்ந்த 17 16 துன்னுதல் - நேர்தல் 7 134 தூ பற்று: விருப்பத்துக்குக் காரணமாகவுள்ளது 25 92 தூங்கு எயில்-அசைகின்ற மதில் 1 4 தூங்குதல்-தொங்குதல் 6 51 தூசு - துகில் : ஆடை 20 68 தூணம் - தூண் 1 48 தூபம் - நறும்புகை 7 59 அருஞ்சொல் காதை அடி தூர்த்தர்-பரத்தர் : அயல்மனையாள் இன்பந்துய்க்கும் கழி காமுகர் 14 61 தூவாக்குழவி - உண்ணாத குழந்தை 13 11 தெங்கு - தென்னை 3 98 தெய்வக்கரு-தெய்வக்கண பிண்டம் (பதிகம்) 28 தெய்வக்கிளவி - தெய்வத்தின்மொழி 7 97 தெருட்டல் - தெளிவித்தல் 7 52 தெருமரல் - சுழற்சி; கலக்கம் 13 60 தேர்ந்தனன்-தேடுவோன்; ஆராய்ந்தறிவோன் 20 31 தேறல் - மது; கள் 3 99 தேறுதல் - தெளிதல் 21 142 தொக்குதல் - ஒருமிக்கச்சேர்தல்; ஒன்றுபடல் 14 25 தொடர்ப்பாடு - தொடர்பு; ஒன்றுபடுதல் 21 98 தொடுகுழி-தோண்டப்பட்டபள்ளம் 16 25 தொடுப்பு-விதைப்பு 8 3 தொல் - பழமை 16 32 தொல் நிலை - பழமை 1 42 தொல்லோர் - முன்னையோர் 20 68 தொழுதகை மாதவன் 9 9 தொழுதல் - கும்பிடுதல் 19 78 தொழுவிளிப்பூசல் - துதிப்போர் முழக்கம் 6 72 தொன்னிலை யுணர்ந்தோர் 1 42 தொன்று - பழமை ; முற்காலம் 10 65 தோகை - ஆண்மயில் 19 62 தோடு - பூவிதழ் 20 13 தோட்ட - துளைக்கப்பட்ட 18 135 தோட்ட - காதணி 3 118 தோப்பி-நெல்லாற் சமைத்த கள் 7 71 நகர நம்பியர் - ஊரில் சிறந்த காதலஞ் செல்வர் 19 24 நகுலம் - கீரி 19 96 நகை - பல் 20 49 நஞ்சுஎயிறு-நச்சுப்பல்; விட முள்ள பல் 20 104 நடவை-வழி; வழிச்சேறல் 13 72 நடவை மாக்கள் - வழிச் செல்லும் மக்கள் ; (தற்காலம், பிரயாணிகள் என்பர்) 14 62 நடுக்குறுதல்-நடுங்குதல் 7 110 நடுங்காநா-வழுவற்ற சொல் 12 3 நடுநாள் - நடுஇரவு 7 63 நந்தா விளக்கு - அழியாத திருவிளக்கு 14 18 நயந்தோன்-விரும்பினோன் 5 88 நயம்பாடு - இனிமை 2 36 நரந்தம் - நாரத்தை 3 162 அருஞ்சொல் காதை அடி நரைமை - வெண்மை 20 44 நலத்தகை-நன்மைச்சிறப்பு 15 49 நல்கூர் நுசுப்பு 10 30 நல்கூர்தல்-வறுமையுறுதல் 19 4 நல்கூர்மேனி - இளைத்த உடம்பு 13 72 நவையறு நன்பொருள் (பதிகம்) 87 நளி-செறிவு : சேர்க்கை 12 92 நறுவிரை - நன்மணம் 19 89 நனவு - நேரில் நிகழ்வது 7 38 நன்னீர்ப் புணரி 6 78 நா - நாக்கு : வாயின் நடு இடம் என்பது பொருள் 14 18 நா உள்ளழுந்தல்-இரைச்சல் இடாதிருத்தல் 7 61 நாகநாடு - நாகரெனப்பட்ட ஒருவகை மக்கள் வாழும் நாடு 8 54 நாகம்-அரவு; நல்ல பாம்பு 7 131 நாகம் - சுரபுன்னை 3 162 நாகம் - நாகப்பாம்பு 20 98 நாடகம்-கதை தழுவிவருங் கூத்து 19 80 நாடி - ஆராய்ந்து 21 122 நாநல்கூர்தல் - நாவறுமையுறல் 10 34 நால்வேறு தேவர்-முப்பத்து மூவராகிய தேவர் 1 37 நாவாய்-மரக்கலம்; நீரின் நடுவே இடந்தருவது என்பது பொருள் 16 17 நாறுதல்-தோன்றுதல் 18 44 நாற்றம் - நன்மணம் 3 3 நிகர் - ஒளி 3 15 நித்திலம் - முத்து 19 112 நிரப்பின்று எய்திய நீணிலம் 14 51 நிரப்பு - வறுமை 14 51 நிரயக் கொடுமொழி நரகம் செல்வதற்கு ஏதுவான கொடியமொழிகள் 6 167 நிரயம் - நரகம் 6 167 நிரைதார் - இணைந்த மாலை ஒன்று சேர்ந்த மாலை; 15 45 நிறை-மனத்தை அடக்குதல் 5 20 நிறை அழிதல் - காவலைக் கடத்தல் 19 23 நீத்தம் - வெள்ளம் 12 80 நுசுப்பு-இடை; மருங்குல் 9 7 நுழைபு-நுழைந்து; சென்று 4 5 நுனித்தனர்-ஆராய்ந்துரைத்தனர் 19 38 நெடியோன் - திருமால் 19 51 நெடுநிலை - மிகப்பெரிய 3 127 நெடுநிலை மண்ணீடு - நீண்ட தோற்றத்தையுடைய சுதையால் செய்யப்பெற்றபாவை 6 47 நெய்தல் - சாப்பறை 6 71 நெட்டிடை-நெடுந்தூரம் 8 17 நேமி - வட்டம் 13 57 அருஞ்சொல் காதை அடி நொசி தவம் - நுண்ணிய தவம் 18 122 நொடிதல்-சொல்லுதல் 13 50 நோற்றல்-துன்பம் பொறுத்தல் 2 47 நோற்றூண் வாழ்க்கை - விரதங்களாற் பட்டினி விட்டுண்ணும் வாழ்வு 18 122 நோன்பி - நோன்பையுடையவன் ; தவநெறியுள்ளோன் 3 102 நோன்மை-பெருமை 17 65 நோன்றல்-பொறுத்தல் 7 50 பகர்தல் - விற்றல் 11 92 பகல் அரசு - பகற்பொழுதிற்கு அரசு ; கதிரவன் 19 18 பகுவாய்-பிளந்தவாய் 17 77 பசலை-வேறுபட்ட நிறம் 5 140 பசிப்பு - பசி: உணவின்றி வருந்துகின்ற நிலை 14 58 பசுங்கால் - பசியதண்டு 19 75 படர்தல் - செல்லுதல் 11 145 படி - பூமி 19 52 படிமை-வடிவம்; (தெய்வ வடிவம்) 3 37 படிவம்-தெய்வ வடிவம் 3 128 படிறு - பொய்; உண்மை யல்லாதது 18 110 படிறு உரை - பொய்ச்சொல் 21 101 படுத்து - அடக்கி ; உள்ளடக்கி 16 25 பட்டிமண்டபம் - கலையறி நிலையம் (ஆராய்ச்சிக்கூடம்) 1 61 பணை-பந்தி; கிளை 7 117 பணை-பறை; முரசு 19 18 பணைமுகம்-பெரிய முகம் 4 36 பண்டு - முன்பு 21 31 பண்ணியம் - இசைகளின் பண்ணியம் - பவ லகைப்பண்டம் 7 123 பண்ணியாழ்த் தீந்தொடை 7 46 பண்பில் காதலன் - குணமற்ற காதலன் 7 50 பண்பில் கிளவி - பயனற்ற சொல் 3 106 பண்பு-இனிமை; அழகு 6 118 பண்பு-சிறப்பு; தன்மை 1 2 பண்பு-அன்பு 7 50 பண்புகொள் யாக்கை - அன்புடைய உடம்பு 6 118 பதியகம் - நகரிடம் 19 41 பத்தி - வரிசை 1 48 பந்தர்-பந்தல்; காவணம் 19 60 பயந்தோர்-தாயர்; அன்னையர் 21 152 பயம்-பயன் (பிரயோசனம்) 3 78 பயன் - தமக்குவேண்டும் பொருள்கள் 18 108 பயிர்தல்-அழைத்தல் 6 75 பரசினர்-வணங்கினர் 12 109 பரதம்-பரதகண்டம் 18 57 அருஞ்சொல் காதை அடி பரத்தமை-பரத்தன் தன்மை, பரத்தையை மருவி ஒழுகுவோன் 7 50 பரப்புதல் - பார்த்தல் 4 94 பரப்புநீர்- மிக்க நீர்; மிகுதிப்பட்டுப் பரவியுள்ள நீர் 14 52 பரவுதல் - வணங்குதல் 12 38 பராவல் - வழுத்துதல்; வணங்குதல் 9 47 பரி - குதிரை 18 113 பரிதல்-அறுபடுதல் 19 85 பரிதியஞ் செல்வன்-ஆதித்தன்; ஞாயிறு 4 1 பரிபுலம்பினன்-மிக்க வருத்தங் கொண்டான் 16 57 பரியல்-வருந்தாதே: (முன்னிலை ஏவல் ஒருமை) 12 50 பரிவு - இரக்கம் 15 66 பரிவுறு மாக்கள்-துன்புற்ற மக்கள் 15 66 பலர்தொழு படிமையன் - பலரும் தொழும் தெய்வ வடிவினையுடையவன் 3 37 பலிமுன்றில்-பலிபீட முன் இடம் 6 52 பல்வேறு சமயப் படிறு - பல்வேறு சமயங்களின் பொய்யுரை 10 77 பவளக் கடிகை-பவளத் துண்டம் 20 75 பழஞ்செருக்கு - முதிர்ந்த களிப்பு 7 72 பழுதில்காட்சி-குற்றமற்ற அறிவு 10 70 பழுநிய - முதிர்ந்த 3 28 பழுநிய பாடல்-இசை முற்றிய பாட்டு 19 84 பழுமரம்-ஆலமரம்; பழுத்த மரம் 14 26 பளிக்கறை-பளிங்கு மண்டபம் 5 84 பறந்தலை-பரந்து கிடக்கும்பாழிடம் 6 96 பறந்தலை-புறங்காடு; சுடுகாடு 18 62 பறாஅக் குருகு - பறவாத குருகு: கொல்லன் உலைமூக்கு 19 28 பற்றற முயல்வோர்-அகப் பற்று புறப்பற்றுக்கள் கெடும்படி முயற்சி செய்வோர் 14 41 பற்றா மாக்கள்-பகைவர் 1 62 பன்னிறப் புள்ளினம் 8 31 பாகு - யானைப்பாகன் 4 36 பாங்கு - பக்கம் 8 35 பாங்கு - உரிமை 21 173 பாசடை-பசிய இலை 4 8 பாசடைப் பரப்பு 4 8 பாசறை-பாடிவீடு; போர்க்களம் 8 32 பாடு - ஒலி 17 50 பாடுகிடத்தல்-வரம்வேண்டிக் கிடத்தல் 18 158 பாடை - மொழி 16 60 பாடைமாக்கள் - மொழி வேறுபட்ட மக்கள் (பல்வகை மொழி பேசும் பலவேறு நாட்டினர்) 1 16 அருஞ்சொல் காதை அடி பாண்டு கம்பளம் - வெண்ணிறக்கம்பளம் (பாண்டு-வெண்ணிறம்) 14 29 பாத்தியன் புத்தன் 10 35 பாத்திரம்-கடிஞை; பிச்சை ஏற்கும் கலம் 14 77 பாத்தூண்-பகுத்து உண்டற்குரிய உணவு (பதிகம்) 64 பாயல்கொள் நடுநாள் 7 63 பாயல்கொள்ளல்-தூங்குதல் 7 63 பாயற்பள்ளி-படுக்கை இடம் 16 29 பாரகம் அடங்கலும் பசிப் பிணி அறுக 16 134 பார்ப்பார்க் கொல்வாப் பண்பு 13 80 பாலிகை-முளைப்பாலிகை 1 44 பால் - பகுதி 1 38 பாவை - திருமகள் ஆடல்:பதினொரு வகை ஆடல்களுள்ஒன்று 5 4 பாவை விளக்கு - பாவை கையிற்கொண்டுள்ளதாக அமைத்த விளக்கு 1 45 பான்மை-தன்தன்மை 18 110 பான்மை-வயம்; இயற்கை 16 96 பிக்குணிக்கோலம் - பிச்சை கொண்டு உண்ணும்துறவு வடிவம்; (பிக்ஷுணி என்னும் வடசொற் சிதைவு) 15 58 பிஞ்ஞை-நப்பின்னை 19 65 பிடவம் - குட்டிப்பிடவம் என்னும் கொடி 3 163 பிடித்த கல்விப் பெரும்புணை 11 77 பிணங்குதல்-நெருங்குதல் 6 151 பிணங்கு நூல் மார்பன் 6 151 பிணவு-பெண்; பெட்டை 16 68 பிணவுக் குரங்கு - பெண் குரங்கு 19 72 பிணித்தல் - வசப்படுத்துதல் 16 70 பிணிப்பு-பற்று; பாசம் 21 16 பிணிப்போர்-கட்டுவோர் 19 88 பிழையா விளையுள் 11 91 பிறங்கல் - மலை 16 53 பிறர்க்குரியாளன் 5 73 பிறழ்தல்-மாறுபடுதல் 18 112 பிறை - வளைவு 6 61 பின்நிலை - தாழ்ந்து நிற்றல் (பதிகம்) 19 பீடிகை-பீடம் ; ஆசனம் 3 66 புகார்-காவிரிப்பூம்பட்டினம் 5 109 புகூஉம் - நுழைகின்ற 5 58 புகை எரி - புகைகின்ற காமமாகிய தீ 19 27 புக்கில் - புகுமிடம் 16 100 புணரி - சேர்க்கை 6 78 புணர்துணை - புணர்கின்ற துணை: பேட்டன்னம் 19 61 அருஞ்சொல் காதை அடி புணர்த்து-சேர்த்து; ஒன்றுகூட்டி 21 139 புண்ணிய முட்டாள்- அறம் புரிதலில் 16 49 புதுக்கோள் யானை - புதிதாகக் கொள்ளப்படும் யானை 18 168 புய்த்துறுத்தல்-பறித்தலைச்செய்தல் 13 47 புரந்து - பாதுகாத்து 15 48 புராணன்-பழமையோன் 5 98 புரிநூல் - பூணூல் 17 27 புரையோர் உயர்ந்தோர்; சிறந்தவர் 21 83 புலந்து-வெறுப்புக்கொண்டு 18 12 புலத்தல் - ஊடல் 10 21 புலம் - மெய்யுணர்வு 10 84 புலம்பு - வருத்தம் 3 9 புலம்புரிச்சங்கம்-அறிவான் மிக்க புலவர் கூட்டம் 7 114 புலர்தல் - உலர்தல் 19 86 புலவரை - அறிவின் எல்லை 5 109 புலவரை இறந்த புகார் 5 109 புலவு - புலால் நாற்றம் 20 52 புலவோன் - மெய்யறிவை யுடையோன்: புத்தன் 20 5 புலால் - தீ நாற்றம் 4 114 புலிக்கணம்-புலிக்கூட்டம் 7 78 புல்லல்-தீண்டுதல் 13 91 புழுக்கறை-புழுக்கத்தினைத்தரும் அறை (காற்றோட்ட மில்லாத இருட்டறை) 3 95 புழை - வாயில் 6 22 புள் - பறவை, வண்டு 7 118 புள் - வளையல் 7 119 புறங்காடு - சுடுகாடு 6 38 புறம் மறிப்பாராய் - பின் பக்கமாகத் திருப்பிப் பார்ப்பாயாக 4 121 புனிறு - புதல்வரைப் பெற்ற நிலை 7 75 புனிறுதீர் கயக்கம் 7 75 புனிறுஆ-ஈன்றணிமையையுடைய பசு; அண்மையிற் கன்றீன்ற பசு 5 47 புனையா ஒவியம் - அணிசெய்யப்படாத ஓவியப்பாவை 16 131 புன்கண் - துன்பம் 11 112 பூ - பொலிவு, மலர் 7 120 பூட்கை - மேற்கோள் 3 60 பூட்கை - மேற்கோள் 5 75 பூத விகாரப் புணர்ப்பு-ஐம் பெரும் பொருள்களின் வெவ்வேறுபட்ட தன்மையின் சேர்க்கை 21 100 பூருவம் - பழமை 9 13 பெண்ணை - பனை 17 29 பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி 17 29 அருஞ்சொல் காதை அடி பெரும்பேரின்பம் 2 65 பெரும்பொருள் - அறம்: ஞானமும் ஆம் 19 160 பெற்றிமை-தன்மை; இயல்பு 21 161 பேடி - அலி; ஆண் பெண் இயற்கையற்றது 3 125 பேடு-பதினொருவகை ஆடலுள் ஒன்று 3 125 பேடை-பெட்டை;பெண் 19 62 பேது - அறியாமை 6 151 பைஅரவு-படத்தையுடைய நாகப்பாம்பு 19 11 பைஞ்சேறு-பசிய சாணம் 19 115 பைதல்மாக்கள் - துன்பமுடைய மக்கள் 17 93 பொங்கர்-கட்டுமலை; செய் குன்று 4 93 பொங்குநீர் - விளங்குகின்ற கடல் (பதிகம்) 14 பொடித்தல்-அரும்பல் 18 40 பொதியறை - புழுக்கறை; சிறு துவாரமு மின்றி மூடப்பட்ட கீழறை 19 8 பொதியறைப்பட்டோர் - காற்றோட்டம் இல்லாத அறையில் சிறைவைக்கப்பட்டோர் 4 105 பொதியில் - பொதுஇல்: பலருக்கும் பொதுவான இடம்;அம்பலம்: (பொதுவில் என்பது பொதியில் என மருவியது) 20 15 பொதுஇயல் - எல்லோர்க்கும் ஒப்ப ஆடுங்கூத்து 2 18 பொதும்பர் - இளமரக்கா; சோலை 4 5 பொத்துதல்-மூட்டுதல் 2 42 பொய்உரு - பொய்வேடம் (பதிகம்) 91 பொருவறு சிறப்பு - ஒப்பற்ற சிறப்பு 8 62 பொருளுரை - மெய்யுரை; முனிவர் புரிந்து கண்ட பொருளுடன் கூடியவுரை 2 61 பொருள் - தத்துவம் (உண்மைப்பொருள்) 1 60 பொருள் விலையாட்டி - பொருள் தருவார்க்குத் தன்னை விற்கும் விலை மகள் 5 87 பொறி - புள்ளி 19 68 பொறிமயிர் வாரணம் 7 115 பொறை - சுமை; பாரம் 9 13 பொற்றொடி-மாதர் நற்றிறம் 12 33 பொன்வாகை -பொன்னாற் செய்யப்பட்ட வெற்றிமாலை 26 90 பொன்றக்கெடாஅ-முழுதும் கெடாத 30 223 போக்கப்படுதல் - விலக்கப் படுதல் 13 44 போதி - அரச மரம் போதத்தை (அறிவை)த்தருவதென்பது பொருள் 12 101 அருஞ்சொல் காதை அடி போதிகை - தூண் 19 111 போது - மலர் 4 19 போதுவர்-அடைவர்(செல்வார்) 1 41 போந்தோர்-வந்தோர் 16 18 போழ்தத்து-பொழுதின்கண் 15 26 போற்றுதல்-பாதுகாத்தல் 12 45 பௌவம் - கடல் 7 33 மகள் - மனைவி 21 30 மகன் - கணவன் 21 29 மங்கலம் - நன்மை 10 83 மஞ்சு - மேகம் 16 54 மஞ்ஞை - மயில் 19 68 மடல் - இதழ் மட்டை 20 57 மடவோர் - அறிவிலிகள் 6 104 மடிதல் - இறத்தல்; கீழ் விழுதல் 14 75 மடுத்தல் - உட்கொள்ளல்; மிகுதி 12 120 மடை - சோறு 6 87 மடைக்கலம் - சோற்றுப் பாத்திரம் 21 56 மடையன் - சோறுசமைப் போன் 21 56 மட்டு - தேன் 4 63 மணி - பளிங்கு 4 7 மணி - நீலமணி (நீல இரத்தினம்) 4 44 மணிபல்லவம் - காவிரிப்பூம் பட்டினத்துக்குத்தெற்கே யுள்ளதொரு சிறுதீவு(பதிகம்) 44 மண்கணை - மார்ச்சனை: பேரொலி 6 119 மண்டு அமர் - மிக்க போர் 18 140 மண்ணீடு-சுதையாற் செய்யப்பட்ட பாவை 18 156 மண்ணுதல் - கழுவுதல் குளித்தல் 3 91 மதலை - கொடுங்கை 1 53 மதனின் நெஞ்சம் - வலிமையில்லாத நெஞ்சம் 6 206 மதியோர் - அறிஞர் 20 14 மந்தி - குரங்கு 4 6 மயக்கு - கலக்கம் 21 23 மயங்குகால்-சுழல் காற்று; கடுங்காற்று 4 34 மரபு - முறைமை 3 79 மரப்பந்தர் - சோலை 3 44 மரவம் - வெண்கடம்பு 3 160 மராஅம்-வெண்கடம்பு 19 76 மருகன் - வழித்தோன்றல் 4 108 மருத்துவி-மருந்தினையுடையாள் 17 15 மருள் - இருட்சி; இருட்டு நிறம்; கருநிறம் 3 116 மருள் - மருட்கை; வியப்பு 4 2 மருள் - ஒத்த: (உவமவுருபு) 4 27 மருள் - மயக்கம்: அறிவு கெட்ட நிலை 12 98 அருஞ்சொல் காதை அடி மலர்கதிரோன்-பரந்தகதிர் களையுடைய பரிதிவானவன்: சூரியன் 21 190 மலர்கதிர் மண்டிலம் 6 2 மலர்க்கணை மைந்தன்-மன்மதன்: மலர்களை அம்பாகவுடையவன் 19 100 மலர்தலை-அகன்ற இடம் 12 75 மலைக்கும் - வருத்தும் 14 6 மலைத்தல் - போர்செய்தல் 19 123 மழலை வண்டினம் - இளைய வண்டினம் 4 4 மழை - மேகம் 20 22 மறம் - பாவம் 21 20 மறம் - வெற்றி (பதிகம்) 71 மறவணம்-பாவத்தன்மை 2 60 மறித்து - மீட்டும் 10 88 மறுகு - தெரு: வீதி 15 71 மறுமை - மறுபிறப்பு 3 66 மனப்பாடு - மனத்திடம் 21 171 மன்றம் - உலகவறவி என்னும் அம்பலம் 19 31 மன்னுயிர் முதல்வன் மகன் - திருமால் புதல்வன்: நான்முகன் 13 58 மா - கருமை 18 74 மா - விலங்கு 9 25 மா - குதிரை 19 121 மாசு - மறு 4 7 மாதர் - அழகு 3 8 மாதிரம் -திசை 12 91 மாத்திரை - அளவு 11 60 மாநீர் - மிக்க நீர்: கருநிற முடைய நீர்-கடல் 14 73 மாந்தர்-மக்கள்:மனிதர் 20 32 மாந்துதல் - உண்ணல் 6 84 மாபெருந்தெய்வம் 6 170 மாமணி வண்ணன்-நீலமணி போன்ற கருநிறமுடைய கண்ணன் 19 65 மாயவிஞ்சை-மாயத்தைச் செய்யும் வித்தை 18 148 மாயிரு - மிகப்பெரிய 14 32 மாரி நடுநாள் - மழைத்துளி களையுடைய இடையாமம் 14 3 மாருதவேகன்-விஞ்சையன் 6 27 மார்க்கம் - நெறி; வழி 21 164 மாலை-அந்திப்பொழுது 19 19 மால் - பெரிய 14 81 மாவண் தமிழ்த்திறம் (பதிகம்) 97 மாற்றம் - மறுமொழி 8 22 மான்ஊர்தி-அரியணை-சிங் காதனம் 18 48 மிகைநா - மிகுதிப்பட்டுப் பேசும் நாவு 5 79 மிக்க நல்லறம் 6 103 அருஞ்சொல் காதை அடி மிச்சில் - மிகுந்திருப்பது; மிச்சப்பட்டிருப்பது; எச்சம் 15 52 மீயான் - மாலுமி; கப்பல் ஓட்டுவோன் 4 29 மீனத்து இடைநிலை-நடுவண தாகிய விசாக நாள் 15 25 மீன் ஈட்டம் - நட்சத்திரத் தொகுதிகள் 6 182 முக்காழ் - மூன்றுசரம் (சங்கிலி) 3 135 முச்சி-உச்சி; தலை நடுஇடம் 3 134 முடக்கால்-வளைந்த அடி 8 9 முடக்காற் புன்னை 8 9 முடலை - முறுக்கு; கரடு முரடு 16 26 முட்டா வாழ்க்கை - குறைவற்ற வாழ்வு 14 64 முட்டுதல்-குன்றுதல்; வழுவுதல் 16 49 முதல் - அடி இடம் 4 30 முதியாள் கோட்டம்-சம்பாபதி கோயில் 19 39 முதிராத் துன்பம் 5 139 முதிர்தல் - முடிவாதல் 5 139 முதுக்குறை - பேரறிவு: பழைய கொள்கைகள் திருந்திப் புதியவைகளைக் கொள்ளுதல் என்னும்பொருட்டு 18 167 முந்தை - பழமை 18 144 முந்நீர் - கடல்: மூன்று தன்மையுடையது 12 92 மும்மை-மூன்றுமுறை 17 88 முரி-வளைவு;சிதறுதல் 8 4 முருகச்செவ்வி 5 14 முருகு - மணம் 19 94 முருக்குதல்-அழித்தல் 18 140 முருந்து-மயிலிறகின் அடிக்குருத்து 7 88 முல்லைக்குழல் - முல்லை என்னும் பண் 5 136 முழவம்-தண்ணுமை : மத்தளம் 6 119 முளிஎரி - காய்ந்த விறகிற் பற்றிய தீ 18 14 முளிதல் - உலர்தல்; வற்றி வறண்டிருத்தல் 20 66 முள்எயிறு - கூரிய பற்கள் 18 71 முறம் - சுளகு 19 121 முறையுளி-முறையால் 12 6 முற்றவுணர்ந்த முதல்வா 5 101 முன்றில்-வாசல்;முற்றம் 13 107 மூசுதல்-மொய்த்தல் 3 68 மூதுரை-அறிவு மேம்பட்ட சொல் 12 4 மூரி - வலிமை 19 53 மூன்று காலம்-இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலங்கள் 15 9 மெய் - உடல் 19 8 அருஞ்சொல் காதை அடி மெய்பெறாமழலை-வடிவு திருந்தாத இளஞ்சொல் 3 137 மெய்வைத்தல்-உடம்பைப் போகடுதல்; இறத்தல் 6 131 மெலித்தல்-மெலிதல்; நைந்து போதல் 15 60 மை - குற்றம் 3 128 மைத்திரி பாவனை - எல்லா வுயிர்களும் இன்பமுடன் வாழ நினைத்தல் 3 256 மைத்து-கரிய நிறமுடையது 12 85 மைந்துடை வாளில் (பதிகம்) 76 மொசிக்க - உண்ண 19 136 யாக்கை - உடல் 7 133 யாணர் - புதுவருவாய் 17 98 யாப்பு-உறுதி; கட்டுப்பாடு 5 32 யாமம் கொள்வோர்-நாழிகை கணக்கிடுவோர் 7 65 யாவதும் - சிறிதும் 2 56 யாழ்க்கரணம் - யாழின் தொழில் 2 20 யூகி அந்தணன்-யூகி என்னும் பெயருடைய உதயணனுக் குரிய அமைச்சன் 15 64 யோகம் - தவம் 3 100 யோசனை - நூறுகல் தொலைவு 6 211 வகுளம் - மகிழமரம் 3 161 வகைவரிச் செப்பு 4 65 வங்க மாக்கள் - கலத்திற் செல்வோர்: கப்பலில் ஏறிப்போவோர் 14 79 வங்கம்-மரக்கலம்: கப்பல் 1 473 வசி - மழை 1 71 வசித்தொழில்-மழை பெய்தலாகிய தொழில் 14 57 வசியும் வளனும் 1 71 வச்சிரம் - வச்சிரப்படை நிற்குங் கோயில் 5 114 வஞ்சி - வஞ்சிநகர்; வஞ்சி மாலைசூடிப் போருக்குச் செல்லல் 19 120 வஞ்சி - வஞ்சி என்னும் ஒருவகைக்கொடி 5 81 வஞ்சினம்-சூளுரை (சபதம்) 19 2 வடவயின்-வடக்குத்திசை 9 28 வடிகாது - வடிந்த காது : வளர்ந்தமெல்லியகாது 20 53 வடு - வகிர் 17 82 வடு - குற்றம் 18 34 வடு - அடிச்சுவடு 3 159 வட்டணை-வர்த்தனை; கைத் தலங்காட்டல் 7 43 வட்டிகை-எழுதுகோல் 4 57 வட்டு-உண்டை உருட்டுதல் 14 63 வட்டுஉடை - வட்ட ஆடை (முழங்கால் அளவு உடுக்கும்ஆடை) 3 122 அருஞ்சொல் காதை அடி வம்பக்கோட்டி - பயனில் சொற்களைப் பேசும் கூட்டம் 14 63 வம்பம் - புதுமை 3 126 வம்பலன்-அயலான் : புதியவன் என்னலுமாம் 20 88 வயவர் - வீரர் : ஆண்மை யுடையவர் 19 122 வயா - வேட்கை 20 93 வயிறுகாய் பெரும்பசி 11 110 வயின் - இடம் 3 97 வரி-மையெழுதிய கீற்று 3 8 வரிச்செப்பு-அழகியசெப்பு; சிமிழ் 4 65 வலம்புரிச்சங்கம்-வலம்புரியாகிய சங்குகள் : (வலப் புறம் முறுக்குண்டு இருப்பது என்பது பொருள்) 7 113 வலித்து - எண்ணி 21 124 வல்லி - பூங்கொடி 18 25 வல்லிருள்-மயக்கம் 14 3 வழங்குநீர் - கடல்: (போவதும் வருவதுமாகிய அலைகளை யுடைய நீர் என்பது பொருள்) 14 84 வழுநீர் வழுவாகிய நீர் : வழு வழுத்தலையுடைய நீர் 20 47 வழுவுதல் - தப்புதல் 11 130 வளை - வளையல் 18 39 வளையோர்-வளையலணிந்த பெண்கள் 19 24 வள்ளை - வள்ளையென்னும் ஒருவகைக்கொடி 20 53 வறங்கூர்தல் - வளங்குறைதல் 7 9 வறந்தலை - வறுமையுள்ளஇடம் 10 9 வறம் - வற்கடம் ; வறிய நிலையை உலகிற்குத் தருவது ; பஞ்சம் 14 13 வறன் - வற்கடம் ; பஞ்ச காலம் 21 157 வாயில் - வீட்டின் முன்இடம் 20 96 வாயில் - வாயில் காப்பவன் ; காவற்காரன் 19 117 வாய் - உண்மை 21 114 வாய்வது-வாய்ப்புடைத்து 21 171 வாரணம் - யானை ; கோழி 7 115 வாரணாசி-காசித் திருப்பதி 13 3 வார்சிலை-பெரிய வில் 19 53 வால் - வெண்மை 19 76 வால்வெண்-சுண்ணம் 4 18 வாளில் தப்புதல்-வாளால் வெட்டுதல் 21 60 வாள் - ஒளி 3 117 வாள் திறல்-வாளின் வலிமை 18 97 வானவாழ்க்கையர் - விசும்பில் இருப்பவர்: தேவர் 20 36 வான்கோடு-சிறந்த யாழ்த் தண்டு 4 56 அருஞ்சொல் காதை அடி வான் தரு கற்பு - மழை வேண்டிற் பெய்விக்கும் சிறந்த கற்புநெறி 15 77 விசும்பு - வானம் 6 5 விசை - வேகம் 14 80 விஞ்சை - வித்தை 8 25 விடர் - காமுகர் 14 61 விடீஇய - விடுவிக்கும் பொருட்டு ; விடுதலைசெய் தற்கு 15 63 விடுநிலம்-பயிர்செய்யாமல் விடப்பட்ட தரிசு நிலம் 13 51 விட்டேற்று ஆளர்-சுற்றத்தி னீங்கித் திரிவோர ச்; தாம் நினைத்தவாறு திரியும் காலி மக்கள் 14 61 விதானம் - மேற்கட்டி 18 46 விதுப்பு-நடுக்கம்; விரைவு 18 4 வித்தகர்-சிற்பம் வல்லோர் 19 5 விராமலர்-மணமுள்ளபூ 10 32 விரிசிறைப் பறவை - பெருநாரை; போதா 8 28 விரை - மணம் 4 16 விரைமரம் - மணமுள்ள மரம் : சந்தனமரம் 8 5 விரைமலர்த்தாமரை 4 16 விரைமலர்-மணமுள்ள பூ 10 3 விலங்கு-மிருகம்: (குறுக்கே வளர்வதென்பது பொருள்) 12 95 விலங்கு - குறுக்கு 20 129 விலா-விலாப்பக்கம்: விலாஎலும்பு 14 36 விலோதம் - கொடி 1 52 விலோதனம் - கொடி 5 5 விருந்து-புதுமை; புதியதன்மை 18 66 விளங்கொளி மேனி - விளங்குகின்ற பேரொளி பொருந்திய திருமேனி 5 2 விளிந்தனை - இறந்தனை 21 24 விளிப்பு - ஓசை 3 63 விளிவு - சாதல் 4 115 விளையா மழலை 4 99 விளையுள் - விளைவு 11 91 விழவு - திருவிழா 7 62 விழுச்சீர் - சிறந்த புகழ் 20 10 விழுத்தகைத்து - சிறப்புடையது 19 37 விழுநிதி - சிறந்த பொருள் 16 122 விழுப்பம் - சிறப்பு 11 76 விழுமக் கிளவி-துன்பமொழி 21 25 விழுமம் - வருத்தம் 3 75 விழைதல்-விரும்புதல் 20 38 விறல்-வெற்றி 20 45 வினாஅய் - வினாவி ; வினவுதல் - உசாவியறிதல் 14 66 வீ - மலர் : பூ 19 76 வீங்குநீர் - கடல் 5 30 அருஞ்சொல் காதை அடி வீவு - அழிவு; கெடுதி 15 85 வீழ்தல் விரும்புதல் 7 53 வீற்று வீற்றாக - வெவ்வேறாக 30 221 வெஃகல் - விரும்புதல் 30 70 வெகுளல் - சினத்தல் 10 31 வெண்சுதை - வெள்ளிய சுண்ணச் சாந்து 3 108 வெண் திரை - பாற்கடல் 15 51 வெண்பலி - வெண்ணீறு; சாம்பல் 3 108 வெந்திறல் - கடிய வலிமை 9 58 வெந்துகு வெங்களர் 10 47 வெம்மை - சினம் 26 12 வெய்யவன் - சூரியன் 25 30 வெய்யவன் - விரும்பினோன் 26 91 வெய்துயிர்த்தல் - நடுக்க மெய்துதல் 18 4 வெய்துயிர்த்தல் - பெருமூச்சு விடுதல் 19 44 வெரீஇ - வெருவி : அஞ்சி 6 127 வெரூஉ - அச்சம் 13 30 வெவ்வினை-கொடுஞ்செயல் 20 125 வெள்ளில் - விளாமரம் 6 85 வெள்ளைமகன் - விரகில்லாதவன் : வஞ்சமற்ற மகன் 14 36 அருஞ்சொல் காதை அடி வெறி - ஆடு 19 97 வேக வெந்திறல் நாகம் 9 58 வேட்டது-விரும்பியது 18 142 வேட்டல்-விரும்புதல் 20 95 வேட்டம் - வேட்டை 18 168 வேணவா வேட்கை; ஆசை மிகுதி (பதிகம்) 18 வேணவாத் தீர்த்த விளக்கே (பதிகம்) 18 வேதிகை - திண்ணை 1 48 வேத்து இயல் - அரசர்க்கு ஆடுங்கூத்து 2 18 வேய் - மூங்கில் 20 58 வேலை - வேளை : பொழுது ; காலம் 21 54 வேலைபிழைத்தல் - காலந் தவறுதல் 21 58 வேழம் - யானை 20 95 வ - கூர்மை 8 42 வைகுஇருள்-தங்கிய இரவு 20 88 வைவாள் - கூரியவாள் 21 23 வௌவ-கவர ; கொள்ள 16 13 1 மணி. 22 : 27. 2. புறம். கடவுள் வாழ்ந்து. 1. புறம். 183. 2. சீவக. 1002. 3. சிலப். 10-148. 4. தொல். பாயிரவுரை. 1. மணி. 3: 55-6. 1 சிலப். 4 : 79. 1. மணி. 21 : 29-30. 1. கல். 17: 65. 1. தொல், தொகை: 15. 1. புறம். 31 2.சிலப் 29 அம்மானை வரி. 1. குறள். 200. 2. மணி. 27: 106-7. 3. கல். 66. 4. சிலப். 6: 72-3. 5. சிலப். 9: 33-5. து 6. திவாகரம். 1. சிலப். 6: 7-13. 2. சிலப். 5: 128-31. 3. புறம். 287. 1. புறம். 157. 2. மணி. 7: 8. 3. சீவக. 255. 4. மணி. 2 : 1-3. 5. சிலப், 10-27. 1. சிலப். 5 : 60-4. 1. அகம். கடவுள் வாழ்த்து 2. சிலப். 14: 7 3. சிலப். 5 : 102. 4. கம்ப. நகர. 62. 1. திருவாசகம், சதகம், 49. 2. சிலப். 5 ; 723 1. சிலப். 27 : 95. 1. சிலப். 14 : 148-50. 2. சிலப். 5:44. 3.சிலப். 14:164-7. 4. சிலப். 22 - 138-9. 5. பெருங். 1. 35 : 84-6. 1. பு.வெ. 262. 2. புறம். 245. 3. புறம். 246. 1. மணி. 3:186-8. 2. மணி. 24 : 77-8. 1. சிலப். 30:29-31. 1. மணி. 9 : 54. 2. மணி. 12 : 105 ; 21 : 160. 1. புறம். 33. 2. அகம்.11 3. சிலப் 9 : 12 1. சிலப், 20 : 54 1. சிலப். 15, 157-8. 1. பெருங். 1. 40:311-2. 2. சிலப். 10:30-1. 3. முருகு. 43. 1. சம்பந்தர் தேவாரம், 2 : 1. 1. திருக்குறள் 316. 2. திருக்குறள் 317. 3. சிலப். 6 : 127. 1. மதுரை, 482-3. 1. சிலப். 15: 164. 2. சீவக. 1547. 3. பெருங். 1. 40: 88-98. 1. சிறுபாண். 254-5. 2 சிலப். 22-154. 1. சில்ப. 6 : 567. 2. சிலப்.27 :181-6. 3. பெரும்பாண். 405. 4 மதுரை. 516-8. 1. மணி. 21: 132-3 2. மணி. 3 :167. 1. சிலப். 30 ; 114-5. 2. புறம். 77. 3. சீவக. 89. 4 சீவக. 107 ; 175. 1. அகம். 23. 1. மணி - 19 ; 57 - 8. 2. பெரும்பாண். 374. 1. திரிகடுகம். 11 2. சீவக. 1641 3. சூளா- நாடு : 14. 4. புறம், கடவுள் வாழ்த்து. 1. சிறுபாண். 181. 2. தொல். உவம. 9. 3. புறம், 174. 1. மணி. பதிகம். 32 2. கலி. 56. 3. மதுரைக். 376-83. 1. மதுரைக். 752. 1. பெருங். 2. 3: 144. 2. தொல். தொகை. 12. 3. குறுந்.1 4. கலி. 68: 15. 5. திருச். 376. 1. சீவக. 1704. 1 புறம். 54. 2. பழமொழி. 21. 1. பொருந. 187-8. 1. நாலடி. 42. 2. இறை சூ. 1. உரை. 3. சீவக. 192, 1. சிலப். 3 : 109-10. 2. சிலப். 6 : 60-1. 1. மணி. 18 : 69-7. 2. மணி. 18 : 156. 3. பா. வே. ஆயினிப் பைந்தொடீ என்பதும் பாடம். 4. சிலப். 34 : ‘சரவண’ : ஆய்வளை. 5. குறள். 262. 1. புறம். 51. 2. பழ.190. 3. சூளா. கல்யாண. 155. 4. குறுந். 17 1. சிலப். 10 : 143-4. 2. சிலப். 8 : 1. 1. அகம். 31. 1. வீர. யாப்பு, 11 எடுத்துக்காட்டு. 2. நீல. சமய. 3. வீர. யாப்பு. 11. எடுத்துக்காட்டு. 1. குறள். 323. 2.. சிலப். 10; 196 -7. 1. புறம். 21. 2. சிலப், 28: 184. 1.. நெடுநல். 78. 1. குறிஞ்சிப். 217-8. 2. அகம். 14. 3. சிலப். 17:கொல்லை 1. குறள். 957. 2. தொல். பொருளதி. 284. 3. சிலப். 15:156. 1. மணி. 5: 96. 1 மணி. 3; 28 - 41 1. சிலப். 5 : 88-4. 2. கலிங்க. கோயில் 21. 1. சிலப். 1:14-6. 2. புறம். 52. 3. சீவக-284. 4. புறம். 189. 1. நாலடி. 25. 2. புறம். 240. 3. கலிங்க. கோயில். 16. 1. முருகு. 233-4. 1. நாலடி. 46. 1. சிறுபாண். 197. 2. சிலப். 5-225. 1. சிலப். 11 : 57. 1. சிலப். 28 : 167-8. 172-5. 1. மணி. 1 : 34. 2. சீவ. 1 : 255. 1 குறள். 1311. 1 மதுரை, 400-3. 2. சிறுபாண். 148. 1. சிலப். 28:231. 2. சிலப். 13 : 57-8. 3. சிலப். 13: 59-60. 1 மதுரைக். 11. 1. சிலப். 10 : 114-9. 1. கம்ப. கும்பகர்ண. 80. 1 குறள். 418. 1 சில்ப். 15 :100. 2. குறள். 246. 1 மணி. 21: 13-4. 1. குறள். 197. 1 புறம். 18. 1 சிலப். 10 : 36. உரை. 1 குறள். 10. 1 புறம். 70. 1 பெரும்பாண், 351. 2 வீர. யாப்பு. 11. மேற்கோள். 3 குறள். 1049. 4 குறள். 1014. 1. நாலடி. 285. 2. குறள். 1042. 1 புறம். 134. 2 நாலடி. 98. 3 புறம். 18. 1. குறள். 358. 1. குறள். 142 2. நாலடி. 98 1 சிலப். 28 : 165-6. 1. சிலப். 28 ; 172-4. 1. பெரியபு. பாயிரம் 2 2. மதுரை. 5. 10. 1. புறம். 28. 2. மணி. 22:61. 3.சிலப். 28 : 168. 4. குறள். 2: 5. 1 இழந்தேன். 2 எறிபயம். 1 சிலப். 8 : 1. 2 மலைபடு. 122. 1. புறம். 4. 2. தொல். செய்.சூ. 110. 1 சிலப். 14 : 57. 2. கலி. பாலை, 19: 6. 3 கலி. மருதம், 19: 13. 4. புறம்.28 1 மணி. 10 : 30. 1. பழ. 246. 2. குறள். 85. 1 கலி. 82. 1 சிலப். 15 : 44-5. 2 புறம் : 18 3. திருநா. தே. 4. 75:3. 1. திருச்சிற். 76. 2. புறம். 38. 3. குறள். 1055. பரி. மேற். 4. குறள். 228. 1. பெருங். 1. 35 : 226, 2. நற். 3. 1 குறள். 1007. 1 குறள். 358-உரை. 1 தொல். புறட். 20. 1 தொல். வினை. 49. 1 கலி 16. 1 குறள் - 55. 2 கலி. 16. 1. சிலப். 15 : 57. 2. குறள். 401. 3. சீவக. 56. 1 சிலப். 10 : 266. 1. தொல். மரபு. 58. 1 குறள். 339. 1 நெடுநல். 147 1 குறள். 44. 1 குறள். 352. 1 சிலப். 6 : 1. 1 கலி. நெய்தல்: 5. 1. குறள். 1007. 1 நாலடி. 153. 2. சிலப். 26: ‘காதலன்றன்.' 1. மதுரைக். 572-4. 2. பெருங்கதை 1, 35: 137-8. 3. கலி. 40 : 24--5. 1. சிலப். 14 : 146. 1. நெடுநல். 90. 2. சிலப். 3: 111-2. 1 சிலப். பதி. 15. 1. குறள். 1145. 1.. கலி. 38. 2 குறள். 57 : 55. 1. சிலப். 3 : 101-6. 2. சிலப். 3 : 8-9. 1 சிலப். 23 : 37. 2 சிலப். 10 : 223. 1. குறள். 418. 2. மணி. 4 : 112 - 20. 1 சிலப். 5: 30. 2 திருச்சிற். 237. 3 சிலப். 9: 15. 1. மதுரைக். 592. 2. முல்லைப். 35 3. கலி. 226-7. 4. பரி. 8 : 98 5. கலி. 94 : 36 6. சிலப். 12 : ‘சுடரொடு’. 1. சிலப். 10:191. 1. தொல். பொருளியல். 19. 2. பொருந. 171-2. 3. மதுரைக். 381. 4. கம்ப. நகர. 58. 5. கம்ப. வரை. 6. 6. முருகு. 82. 1. சிலப். 17. 1. அகம். 37. 2. கலி. மருதம். 7. 3. தொல். மரபு. 58. 1. கலி. 26. 2. கார். 19. 1. சிலப். 3: 61. 1. பெருங். 1, 33: 3-7. 1. பெருங். 1, 58 : 40 - 4. 2. பெரும்பாண், 218. 3. சீவக. 1414. 1. தொல். புறம், 7. 2. பெரிய. திருநா. 343. 3. சீவக. 248. 4. குறள். 698- 1. புறம். 96. 1. சிலப். 23: 126-31. 1. சிலப். 28: 203-4 1 குறள் : 5. 1 சிலப். 5 : 128-34. 1 தொல். உரி: 19. 1 மணி. 21: 132 - 3. 1. சிலப். 16: 17. 1 கலி. 23, 1 மணி. 2 ; 68 2 மணி. 24 ; 77-8 3. திருக்குறள், 107. 1. மணி. 24 : 169 - 70. 1 திருவாசகம். போற்றி. 50-1. 1 மனி. 27 : 281-3.3 1 புறம். 39. 2. சிலப். 15: 28-37. 3. மணி 10: 24-40.