நூற்றாண்டு நினைவு வெளியீடு புலவர் குழந்தை படைப்புகள் – 15 வள்ளுவர் தமிழ் இலக்கணம் அனைத்து நூல்களும் ஒருசேரத் தொகுத்து, பொருள் வழிப்பிரித்து, கால வரிசையில் ஒரே வீச்சில் வெளிவருகின்றன. ஆசிரியர் புலவர் குழந்தை நூற் குறிப்பு நூற்பெயர் : புலவர் குழந்தை படைப்புகள் - 15 ஆசிரியர் : புலவர் குழந்தை பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 416 = 432 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 270/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906இல் தோன்றி 1973இல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர். தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் பட்ட அவலங்களை எண்ணியெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளை எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு பதிவுகளாக எழுதி வைத்துச் சென்றவர். தமிழ் இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி 1 முதல் 15 படைப்புகளாக ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய முத்து மாலையாகத் தந்துள்ளோம். இவர் நூல்கள் அனைத்தும் தமிழ்மொழி இன நாட்டின் மேன்மைக்கும், வாழ்வுக்கும், வளத்துக்கும் வித்திடுபவை. குறிப்பாக இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிழ் மண்ணில் தன்மானக் கொள்கைகள் நிலைத்து நிற்பதற்கு செயற்கரிய செயல்களைத் தமிழ் இளைஞர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும் எனும் இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்ற தமிழ்ப்பெருமக்களுக்கும், இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும்புலவர் இரா. வடிவேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன் கொள்ளும் வகையில் பிழையற்ற பதிப்பக வெளிவருகின்றது. வாங்கிப் பயனடையுங்கள். (இராவண காவியம் நூலுக்கு மிகச்சிறந்த தெளிவுரை எழுதப்பட்டு வருவதால் இப்படைப்பு வரிசையில் சேர்க்க முடியவில்லை. விரைவில் வெளிவரும்.) கோ. இளவழகன்` புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்கள் கொங்கு நாட்டில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஓலவலசு’ என்னும் சிற்றூரில், பண்ணையக்காரர் என்னும் பழங்குடியில், முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையாருக்கு 1-7-1906இல் பிறந்தார். இவர்தம் பெற்றோருக்கு ஒரே மகனாக வளர்ந்தார். தாம் பிறந்த சிற்றூரில் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார்; தொடர்ந்து படிக்காமல் இடையிடையே விட்டு விட்டுப் படித்தார். மொத்தத்தில் எட்டு மாதங்களே திண்ணைப் பள்ளியில் பயின்றார். கருவிலே திருவுடையவராகிய இவர் பத்தாம் ஆண்டில் இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். யாரேனும் ஒருவர் ஒரு பாட்டைப் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசையில் புதுப்பாட்டு ஒன்றினைப் பாடுவார். எப்போதும் ஏதேனும் ஒருபாட்டை எழுதிக் கொண்டே இருப்பார். பாட்டு எழுதுவது இவருக்குக் கைவந்த கலையாக அமைந்து விட்டது. இவர் காலத்தில் இவர் வாழ்ந்த பகுதியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தானாகவே முயன்று படித்துக் கவிபாடும் திறம் பெற்றிருந்தார். இவர் முதன் முதலில் இசைப்பாடல்களைப் பாடினார். இவர்தம் கல்லாமல் பாடும் கவித்திறனையும், பாடல்களின் சிறப்பினையும் கண்டு வியந்த அறிஞர்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிக்குமாறு தூண்டினர்; ஊக்குவித்தனர். தாம் பிறந்த ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர்கள் எவரும் அக்காலத்தில் இல்லை. ஆகவே இவர் ஆசிரியர் துணையின்றித் தாமாகவே முயன்று இலக்கிய இலக்கணங்களைப் படித்துத் தமிழில் சிறந்த புலமை பெற்றார். மேலும் இவர் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகத் தேர்வு எழுதிப் புலவர் பட்டயம் பெற்றார். இவர் பவானியில் மாவட்டக் கழகப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். 1940வரை தமிழாசிரியராகத் தொண்டாற்றினார். 1941 முதல் 1962ஆம் ஆண்டுவரை தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்கள் வியந்து பாராட்டும்வகையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியினின்று ஓய்வு பெற்ற பின்பும் எழுத்துப் பணியினின்று ஓய்வு பெறவில்லை. வாழ்நாள் முழுமையும் தமிழுக்காகத் தொண்டாற்றினார்; பல நூல்களைப் படைத்தார்; தமது கவிதைகள் வாயிலாகச் சமுதாய உணர்வை - பகுத்தறிவை மக்களிடையே பரப்பினார். இவருக்கு முன் ஓலவலசில் படித்தவர் எவருமில்லை. அவ்வூரில் உள்ளவர்களுக்குக் கையொப்பம் இடவும் தெரியாது. இளமைப் பருவத்திலேயே பொதுத் தொண்டில் -குமுகாயத் தொண்டில் ஆர்வமுடையவராக இருந்தார். தாமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தம் ஊரிலிருந்த தம்மையொத்த அகவையுடைய இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்தார். அவர்கள் மூலமாகப் பெரியவர்களுக்குக் கையொப்பம் போடப் பயிற்சியளிக்கச் செய்தார்; கை நாட்டு போடுவதை அறவே ஒழித்தார். அக்காலத்தில் இவரைவிட மூத்தவர் பலர் இவரிடம் கல்வி கற்றனர். ஓலவலசில் கல்லாமை இருளைப் போக்கினார். வேளாளஇன மக்களிடையே இருந்த பலபிரிவினரையும் ஒன்று சேர்ப்பதற் காகவும், அவ்வின இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்காகவும் 1946 முதல் 1950வரை ‘வேளாளன்’ என்னும் திங்களிதழை நடத்தினார். அவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் அவ்வின இளைஞர்களிடையே புத்துணர்ச்சியை வளர்த்தது. விதவை மணம், கலப்புத் திருமணம், சீர்த்திருத்த மணம் முதலியன செய்யவும் அம்மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். வேளாள சமூகத் தலைவரான திரு. வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் தலைமையில், தகடூர் (தருமபுரி) மாவட்டத்திலுள்ள அரூரில் வேளாள மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் புலவர் குழந்தை அவர்கள் ‘விதவை மணம்’ தீர்மானங் கொண்டு வந்தார்; ஒருமனமாக நிறைவேறச் செய்தார். அதன்படி நூற்றுக்கணக்கான விதவை மணங்களைச் செய்து வைத்தார். இச்செயல்கள் இவர்தம் சமூகத் தொண்டிற்குச் சிறந்த சான்றுகளாகும். இவர், யாப்பிலக்கணம் படிப்பதற்கு முன்னே 1918இல் ‘கன்னியம்மன் சிந்து’ என்னும் கவிதை நூலை வெளியிட்டார். இவர் பாடிய அச்சாகாத பாடல்களும் நூல்களும் பல உள்ளன; சில நூல்கள் அச்சாகி வெளியிடப்பட்டன. யாப்பிலக்கணம் கற்பதற்கு முன்பு பாடிய பாடல்கள் யாப்பிலக்கணப்படி அமைந்துள்ளன. இவர் இதுவரை எழுதியுள்ள நூல்கள் : இராவண காவியம் உள்படச் செய்யுள் நூல்கள்-7, உரைநூல்கள் - 3, இலக்கண நூல்கள் -3, உரைநடை நூல்கள் -16 ஆகமொத்தம் 29 நூல்கள் படைத்துள்ளார். தீரன் சின்னமலை நாடகம் இன்னும் அச்சாகவில்லை. ‘விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர்கம்பன்’ என இதுவரையில் போற்றப்பட்டு வரும் புகழுரைக்கு ஈடாகப் புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் பாடிப் புகழ்பெற்றார். ‘காமஞ்சரி’ என்னும் செய்யுள் நாடக நூல், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் என்னும் நூலுக்குப் பிறகு எழுதப்பட்ட சிறந்த நாடக நூலாகும். ‘நெருஞ்சிப் பழம்’ என்னும் நூல் தமிழில் இதுவரை வெளிவராத கற்பனைக் கருவூலமான காதல் கதையாகும். புலவர் குழந்தை அவர்கள் பெருங்கவிஞர் மட்டுமல்லர். சிறந்த எழுத்தாளர்; கேட்போர் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசும் பெரும் பேச்சாளர். இவருடைய எழுத்துகள் உறுதியும் அஞ்சாமையும் ஆய்வும் செறிந்த புரட்சிக் கனல் தெறிக்கும் இயல்புடையவை. இவருடைய செய்யுள் நடையும் உரைநடையும் எளிய இனிய தனித்தமிழில் அமைந்தவை. இவர் படைத்த நூல்களெல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன. தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இவர் அவ்வியக்கத்தில் சேர்ந்தார்; பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். அன்று முதல் சுயமரியாதை இயக்கம் அதன் மறு பதிப்பான திராவிடர் கழகம், அதன் மறுமலர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுள் இணைந்து தொண்டாற்றியவர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். பள்ளித் தமிழாசிரியராக இருந்துகொண்டே, அத்தொழிலுக்குச் சிறிதும் இடையூறு இல்லாமல், ‘பெரியார் சீடர்’, ‘கருப்புச் சட்டைக்காரர்’ என்று பொது மக்கள் கூறும்படி கட்சித் தொண்டாற்றியவர். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் படைக்கத் தூண்டியது; இவருக்குப் புகழைச் சேர்த்தது. 1948இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திருக்குறளுக்குப் பகுத்தறிவிற்கு ஏற்ப உரை எழுதுவதற்குத் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் ஐவர் கொண்ட குழுவை அமைத்தார். அக்குழுவில் புலவர் குழந்தையும் ஒருவர். இவரே தனிஒருவராக இருந்து திருக்குறளுக்கு உரை எழுதி ‘திருக்குறள்-குழந்தையுரை’ என்று வெளியிட்டார். அவ்வுரையை 28 நாட்களில் எழுதி முடித்த பெருமைக்குரியர். அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்ட இவர்தம் இராவண காவியத்திற்கு, தமிழக அரசால், தமிழ் வாழத் தாம் வாழும் தமிழவேள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் 17-5-1971இல் தடை நீக்கப்பட்டது. அதைக்கண்டு தமிழகமே அகமிக மகிழ்ந்தது; தமிழவேள் கலைஞரை உளமார வாழ்த்தியது. புலவர் குழந்தை ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கொண்டவர். இவர் ஒரு புரட்சிப் புலவரே எனினும் அமைதியும் அடக்கமும் உடையவர்; ஆடம்பரமின்றி எளிய வாழ்வு வாழ்ந்தவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடமை தவறாதவர்; எதிர்க் கட்சியானாலும், மாற்றுக் கருத்து உடையவராலும் நன்கு மதிக்கத் தக்கவர். புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார். கல்வியறிவு பெற வாய்ப்பில்லாதவராயினும் பொது அறிவு நிரம்பப் பெற்றவர்; தன்மானக் கொள்கை யுடையவர்; தம் கணவரின் கொள்கைக்கேற்ப இல்லறத்தை இனிது நடத்தியவர். இவ்விணையருக்குச் சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர். தமிழுக்குத் தொண்டு செய்து வந்த புலவர் பெருந்தகை தமது 68ஆம் அகவையில் 24-9-1973இல் இயற்கை அடைந்தார். மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் புலவர் குழந்தையிடம் அன்பும் மதிப்பும் உடையவர். அவர் மறைந்த பிறகு, அவர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நூல்கள் 8-7-2006 அன்று அரசுடைமை ஆக்கப்பட்டதாக அறிவித்தார். குழந்தை அவர்களின் மகள்கள் இருவருக்கும் தலா ரூ.5 இலட்சம் பரிவுத் தொகை வழங்கினார். நன்றி : நித்திலக் குவியல் (திபி 2037 - டிசம்பர் 2006) மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு. புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல்களையும் அரசுடை மையாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது. பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர். அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது. 4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார். அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார். அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார். “இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3). புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தையானாலும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள்தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழுதினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும். விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார். “புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்து வதற்காக எழுதப்பட்டதேயாகும். நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப்படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார். புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனங் களையெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப்படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளையெல்லாம் சாமியாக்குகின்றான். அதுபோல நமக்காகப் பாடுபடுகின்றவர்களை, தொண்டு செய்கிறவர்களை, எழுதுகிறவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன்வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத்துரைத்தார்கள். சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை 1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடை போட்ட காட்சி கண் கொள்ளாதது. 1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட! எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர். வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது. இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு! கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார். “தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!” நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப்பிட்டதிலிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது. கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள்கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார். “ இனியொரு கம்பனும் வருவானோ? இப்படி யும்கவி தருவானோ? கம்பனே வந்தான்; அப்படிக் கவிதையும் தந்தான் ஆனால், கருத்துதான் மாறுபட்டது” என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது. கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை. தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற்பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இராவண காவிய மாநாடு இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன; முதல் மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டதுண்டு. இத்திசையில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு. தீர்மானங்கள் 28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும். இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும். மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும். இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல் படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005) அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான். மத்திய அரசு தொலைத் தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத் துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005). தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது. கலைஞரின் சாதனை! இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார். வாழ்க அப்பெருமகனார்! (நன்றி : விடுதலை 2.7.2006) நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ஞானாலயா’ கிருட்டிணமூர்த்தி , பல்லடம் மாணிக்கம், சிலம்பொலி செல்லப்பன், அண்ணாஅறிவாலயம் நூலகம், செந்தமிழ் நூலகம், புலவர் தமிழகன், பிரேம் குமார், மா.கந்தசாமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செல்வி ச. அனுராதா மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் கணினிக்கோப்பு குட்வில். செல்வி, கீதா நல்லதம்பி, சு. நித்தியானந், செல்வி சு. ரேகா மெய்ப்பு சுப. இராமநாதன், புலவர். இராசவேலு, கி.குணத்தொகையன், அரு.அபிராமி, --- உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந.இராமசுப்பிரமணிய ராசா, இல.தர்மராசு, ரெ. விஜயகுமார், --- எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் --- இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . பொருளடக்கம் வள்ளுவர் தமிழ் இலக்கணம் பதிப்புரை iii புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு vi மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை viii 1. வள்ளுவர் தமிழ் இலக்கணம் - 1 1-56 2. வள்ளுவர் தமிழ் இலக்கணம் - 2 57-96 3. வள்ளுவர் தமிழ் இலக்கணம் - 3 97-152 4. வள்ளுவர் தமிழ் இலக்கணம் - 4 153-208 5. வள்ளுவர் தமிழ் இலக்கணம் - 5 209 -272 6. வள்ளுவர் தமிழ் இலக்கணம் - 6 273 -416 வள்ளுவர் தமிழ் இலக்கணம் முகவுரை வள்ளுவர் தமிழ் இலக்கணம் என்னும் இந்நூல், இள மாணவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு, மிக எளிய நடையில் எழுதப் பட்டுள்ளது. இதில் வரும் உதாரணங்கள் இள மாணவர்களுக்கு இலக்கண அறிவுடன், தமிழ் இலக்கிய அறிவையும் உண்டாக்க வேண்டும் என்னும் நோக்குடன் முயன்று தொகுக்கப் பட்டுள்ளன. இந்நூலில் இடையே அணி செய்யும் படங்கள் இந்நூலுக்கு ஒரு புதுமைச் சிறப்பினைத் தருவதோடு, இள மாணவர்களுக்கு இந்நூல், இலக்கணப் பாடம் ‘வேம்பு’ என்னும் தப்பான எண்ணத்தைப் போக்கி, இலக்கணப் பாடம் ‘கரும்பு’ எனக் கவர்ச்சியுடன் சுவைத்துக் கற்குமாறு செய்யும் என உறுதியாக நம்புகிறேன். அன்புள்ள, குழந்தை அணிந்துரை - ‘உலகப் பெருந்தமிழர்’, ‘செந்தமிழ் அந்தணர்’ புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் புலவர் குழந்தை, பழுத்த புலமையர்; அழுத்தமான பகுத்தறிவாளர். குழந்தை, இலக்கணம் வல்லார்; இலக்கியம் வல்லார்; உரையும் வல்லார்; பொழிவும் வல்லார். குழந்தை, பன்முகப் படைப்பாளர்; நன்முகப் பண்பாளர்; இன்முக இயல்பாளர்; தன்முகச் சால்பர். குழந்தை, முதுவர்க்கு முதுவர்; இளையர்க்கு இளையர்; அறிவர்க்கு அறிவர்; ஆய்வர்க்கு ஆய்வர்! எவர் இப்படி ஆகமுடியும்? கூடுவிட்டுக் கூடு பாய வல்லார்க்கே ஆகமுடியும்! எப்படி? படைப்பாளியாகும் போது, தாம் படிப்பாளி நிலைக்கு இறங்கி அவர்தம் அறிவும் உணர்வும் உடையவராய்ப் படைப்பார்! வெற்றியும் பெறுவார்! கூடுவிட்டுக் கூடு பாய்தல், நடிப்பா? இல்லை! நயனார்ந்த கடைபிடிப்பு! பெருகப் பேசுதலில் சுருங்கப் பேசுதல் கடினம்! கடிய நடையில் எழுதுதலில் எளிய நடையில் எழுதுதல் கடினம்! ஆய்வு நூல் எழுதுதலில் குழந்தையர் நூல் எழுதுதல் கடினம்! ஆனால் அவற்றில் தோய்ந்தார்க்கு அரியவை எல்லாம் எளிமையாய்ச் செய்யமுடியும். இதற்குக் குழந்தைப் புலவர் இயற்றிய இக் குழந்தையர் இலக்கணம் சான்று. இன்ப அன்புடன், இரா. இளங்குமரன். வள்ளுவர் தமிழ் இலக்கணம் - 1 நூல் அறிமுகம் ‘அ’ முதலாக ‘ன்’ இறுதியாகத் திருக்குறள் செய்தவர் திருவள்ளுவர். அவர் பெயரால் தமிழ் இலக்கணம் அமைந்தது அரிய பொருத்தம். இலக்கணம் மொழிப் பயிற்சிக்குக் கட்டாயத் தேவை. படிப்பவர் படிப்பு வளர்ச்சிக்குத் தகுமாறு நூல்கள் வேண்டும். அவ்வகையில் அமைந்தவை பாடநூல்கள்! பாடநூல்கள் பட நூல்களாகவும் இருப்பது சிறப்பு! மாணவர்க்கு விருப்பு! அவ்வகையில் அமைந்தது இந்நூல். மலைமேல் ஏறவோ - மாடிமேல் ஏறவோ - படிக்கட்டுகள் உண்டு! படி - படியாய் நடந்தால் - பிடித்தால் - படித்தால் - முடியும் பிடியுள் வந்துவிடும்! சொல்: அ-ம்-மா எழுத்துகளைச் சேர்த்தால் ‘அம்மா’! அது சொல்! ஏன்? அம்மா ஆகிய தாயைக் குறிக்கிறது அது. ரு-வி-கு எழுத்துக்களைச் சேர்த்தால் ‘ருவிகு’ இது சொல்லா? இல்லை! ஏன்? பொருள் தரவில்லை, ஆதலால். ஆ - ஓரெழுத்து; பசு எனப் பொருள் தந்ததால் சொல். ஏன்? ஓர் எழுத்தானாலும் பொருள் தந்தால் சொல். சொற்றொடர்: ஆ வந்தது. இரண்டு சொற்கள் கூடி நிற்கின்றன. சொற்கள் கூடிப் பொருள் தந்தால், சொற்றொடர். ஒருமை பன்மை: ஆடு, மாடு - ஒன்றைக் குறிக்கிறது; ஆதலால் ஒருமை. ஆடுகள், மாடுகள் - பலவற்றைக் குறிக்கின்றன; ஆதலால் பன்மை. பெயர்ச் சொல்: ஆடு, மாடு - பெயர்ச்சொல்; பொருட்பெயர் வீடு, காடு - பெயர்ச்சொல்; இடப்பெயர். வினைச்சொல்: படித்தான், எடுத்தாள் - வினைச் சொல்; முற்று ஆதலால் வினைமுற்று; படித்தல், எடுத்தல் - தொழில் அல்லது வினை. சொற்றொடர்: படித்த பையன் - படித்த, பையன் ஆகிய பெயரைத் தழுவும் எச்சம். எடுத்துச் சென்றான் - எடுத்து, சென்றான் ஆகிய வினையைத் தழுவும் எச்சம். எச்சம் முடியாதது. பெயரைத் தழுவும் எச்சம், பெயரெச்சம். வினையைத் தழுவும் எச்சம், வினையெச்சம். எழுத்து: ஓர் எழுத்தை இருக்குமாறே ஒலிக்க முடிந்தால் உயிர் எழுத்து அ, உ, ஒ ஓர் எழுத்தை இருக்குமாறே ஒலிக்க முடியாமல் இ சேர்த்து ஒலித்தால், மெய்எழுத்து; புள்ளி எழுத்து என்பதும் அது. இக், இச், இன். ஃ - இவ்வாறு வரும் மூன்று புள்ளி எழுத்தின் பெயர், ஆய்த எழுத்து. உயிரும் மெய்யும் கூடியது உயிர்மெய் எழுத்து: ம் + ஆ = மா. நிறுத்தக்குறி: நிறுத்திப் பொருள் விளங்கப் படிக்க உதவும் அடையாளம் நிறுத்தக் குறி. சாலையில் எத்தனை அடையாளங்கள்! சாலைக் குறிகளைக் காட்டவில்லையா? புரிந்து படியுங்கள்! எளிதாம் இலக்கணம்! இன்ப அன்புடன், இரா. இளங்குமரன். பாகம் - 1 வள்ளுவர் தமிழ் இலக்கணம் - 1 நூல் அறிமுகம் ‘அ’ முதலாக ‘ன்’ இறுதியாகத் திருக்குறள் செய்தவர் திருவள்ளுவர். அவர் பெயரால் தமிழ் இலக்கணம் அமைந்தது அரிய பொருத்தம். இலக்கணம் மொழிப் பயிற்சிக்குக் கட்டாயத் தேவை. படிப்பவர் படிப்பு வளர்ச்சிக்குத் தகுமாறு நூல்கள் வேண்டும். அவ்வகையில் அமைந்தவை பாடநூல்கள்! பாடநூல்கள் பட நூல்களாகவும் இருப்பது சிறப்பு! மாணவர்க்கு விருப்பு! அவ்வகையில் அமைந்தது இந்நூல். மலைமேல் ஏறவோ - மாடிமேல் ஏறவோ - படிக்கட்டுகள் உண்டு! படி - படியாய் நடந்தால் - பிடித்தால் - படித்தால் - முடியும் பிடியுள் வந்துவிடும்! சொல்: அ-ம்-மா எழுத்துகளைச் சேர்த்தால் ‘அம்மா’! அது சொல்! ஏன்? அம்மா ஆகிய தாயைக் குறிக்கிறது அது. ரு-வி-கு எழுத்துக்களைச் சேர்த்தால் ‘ருவிகு’ இது சொல்லா? இல்லை! ஏன்? பொருள் தரவில்லை, ஆதலால். ஆ - ஓரெழுத்து; பசு எனப் பொருள் தந்ததால் சொல். ஏன்? ஓர் எழுத்தானாலும் பொருள் தந்தால் சொல். சொற்றொடர்: ஆ வந்தது. இரண்டு சொற்கள் கூடி நிற்கின்றன. சொற்கள் கூடிப் பொருள் தந்தால், சொற்றொடர். ஒருமை பன்மை: ஆடு, மாடு - ஒன்றைக் குறிக்கிறது; ஆதலால் ஒருமை. ஆடுகள், மாடுகள் - பலவற்றைக் குறிக்கின்றன; ஆதலால் பன்மை. பெயர்ச் சொல்: ஆடு, மாடு - பெயர்ச்சொல்; பொருட்பெயர் வீடு, காடு - பெயர்ச்சொல்; இடப்பெயர். வினைச்சொல்: படித்தான், எடுத்தாள் - வினைச் சொல்; முற்று ஆதலால் வினைமுற்று; படித்தல், எடுத்தல் - தொழில் அல்லது வினை. சொற்றொடர்: படித்த பையன் - படித்த, பையன் ஆகிய பெயரைத் தழுவும் எச்சம். எடுத்துச் சென்றான் - எடுத்து, சென்றான் ஆகிய வினையைத் தழுவும் எச்சம். எச்சம் முடியாதது. பெயரைத் தழுவும் எச்சம், பெயரெச்சம். வினையைத் தழுவும் எச்சம், வினையெச்சம். எழுத்து: ஓர் எழுத்தை இருக்குமாறே ஒலிக்க முடிந்தால் உயிர் எழுத்து அ, உ, ஒ ஓர் எழுத்தை இருக்குமாறே ஒலிக்க முடியாமல் இ சேர்த்து ஒலித்தால், மெய்எழுத்து; புள்ளி எழுத்து என்பதும் அது. இக், இச், இன். ஃ - இவ்வாறு வரும் மூன்று புள்ளி எழுத்தின் பெயர், ஆய்த எழுத்து. உயிரும் மெய்யும் கூடியது உயிர்மெய் எழுத்து: ம் + ஆ = மா. நிறுத்தக்குறி: நிறுத்திப் பொருள் விளங்கப் படிக்க உதவும் அடையாளம் நிறுத்தக் குறி. சாலையில் எத்தனை அடையாளங்கள்! சாலைக் குறிகளைக் காட்டவில்லையா? புரிந்து படியுங்கள்! எளிதாம் இலக்கணம்! இன்ப அன்புடன், இரா. இளங்குமரன். 1. சொல் ‘கிளி மூக்கு’ என்பதில், ‘கிளி’, ‘மூக்கு’ என்னும் இரண்டு சொற்கள் உள்ளன. கி, ளி, என்னும் இந்த இரண்டு எழுத்துக்களும் சேர்ந்து, ‘கிளி’ என்னும் பொருளைத் தருவதால், ‘கிளி’ என்பது சொல் எனப்படும். ‘மூக்கு’ என்பதற்குப் பொருள் உண்டு. இது மூன்று எழுத்துக்கள் கொண்ட சொல். குரங்கு - நாலெழுத்துச் சொல் மத்தளம் - ஐந்தெழுத்துச் சொல் திருக்குறள் - ஆறெழுத்துச் சொல் தொல்காப்பியம் - ஏழெழுத்துச் சொல் ‘ஈ’ என்னும் ஓரெழுத்தே ஈ என்னும் பொருளை உணர்த்துகிறது. ‘பூ’ என்னும் எழுத்தும் அவ்வாறே பொருளை உணர்த்துகிறது. இவை ஓரெழுத்துச் சொற்கள். நா, நீ, தீ, கை, மை, வா, போ - இவையும் ஓரெழுத்துச் சொற்களே. ஓரெழுத்துத் தனித்து நின்றோ, பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோ ஒரு பொருளைத் தெரிவிப்பது சொல் எனப்படும். மா - ஓரெழுத்துச் சொல் மாடு - இரண்டெழுத்துச் சொல் மரம் - மூன்றெழுத்துச் சொல் பட்டம் - நான்கெழுத்துச் சொல் சக்கரம் - ஐந்தெழுத்துச் சொல் பனிக்கட்டி - ஆறெழுத்துச் சொல் ஓரெழுத்துத் தனித்து நின்றும், இரண்டு முதலிய எழுத்துக்கள் தொடர்ந்து நின்றும் சொற்கள் ஆயினமை காண்க. பயிற்சி 1. கீழ்க்காணும் வரிகளில் உள்ள ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்து, நாலெழுத்து, ஐந்தெழுத்துச் சொற்களை எடுத்துக் காட்டுக: 1. மழை பெய்தால் பயிர் விளையும். 2. பயிர் விளைந்தால் பஞ்சம் இல்லை. 3. காய் முற்றிப் பழம் ஆகும். 4. பழம் தின்று பால் குடி. 5. நான் வருகிறேன், நீ போ. 6. ஈ மொய்த்தால் நோய் மொய்க்கும். 2. கீழுள்ள படங்களின் பெயர்கள் இத்தனை எழுத்துப் பெயர்கள் என்று கூறுக: 1. பெயர்ச்சொல் ‘மணி’ என்பது ஒரு பொருள். ‘மணி’ என்னும் சொல் அப்பொருளைக் குறிப்பதால், அது பெயர்ச்சொல் எனப்படும். ஒரு பொருளைக் குறிக்கும் சொல் பெயர்ச் சொல் எனப்படும். முருகன், யானை, பனை, கல், பெட்டி - இவை பெயர்ச் சொற்கள். பயிற்சி 1. கீழ்க்காணும் வரிகளில் உள்ள பெயர்ச் சொற்களை எடுத்து எழுதுக: 1. காற்று வீசுகிறது. 2. மரம் அசைகிறது. 3. பூ உதிர்கின்றது. 4. பையன் எடுக்கிறான். 5. பெண் கேட்கின்றாள். 6. ஆசிரியர் வருகிறார். 7. தம்பி படிக்கிறான். 8. மலர் மணக்கிறது. 9. பழம் இனிக்கிறது. 10. காய் துவர்க்கிறது. 2. கோடிட்ட இடங்களில் தகுந்த பெயர்ச் சொற்களை எழுதுக: 1. --புல் தின்கிறது. 2. -பால் குடிக்கிறது. 3. -பாடம் படிக்கிறான். 4. -பந்து ஆடுகிறார்கள் 5. --தெருவில் போகிறது. 6. -காட்டில் வாழும். 7. --வீட்டில் இருக்கும். 8.---நீரில் நீந்தும். 9. --மரத்தில் ஏறும். 10. -வானில் பறக்கும். 3. கோடிட்ட இடங்களில் ஏற்ற எழுத்துக்களை இட்டுக் கீழ் வருவனவற்றைப் பெயர்ச் சொற்கள் ஆக்குக: 1. பது 9. தமிகம் 2. பகை 10. தமி டு 3. மரை 11. திரு றள் 4. தென் - 12. வெற் லை 5. பூவ சு 13. கரு பா - 6. மாம்ழம் 14. கட க - 7. பம் ரம் 15. ஈ டு 8. வட் ம் 16. தா ர் இங்ஙனம் பெயர்ச்சொற்கள், 1. பொருட் பெயர் 2. இடப் பெயர் 3. காலப் பெயர் 4. சினைப் பெயர் 5. குணப் பெயர் 6. தொழிற் பெயர் என அறுவகைப்படும். தெரிந்து கொள்க: 1. வள்ளி, மாடு, மயில், வாழை, கல், மண், பெட்டி, சட்டி - இவை பொருட் பெயர்கள். 2. ஊர், வீடு, தமிழ்நாடு, ஈரோடு, மலை, நீலகிரி, கடல், வயல் - இவை இடப் பெயர்கள். 3. நாள், நாழிகை, மணி, காலை, மாதம், மார்கழி, புதன் - இவை காலப் பெயர்கள். 4. தலை, கால், வால், கிளை, வேர்- இவை சினைப் பெயர்கள். (சினை - உறுப்பு) 5. வெண்மை, இனிமை, வட்டம், அரை, நன்மை - இவை குணப் பெயர்கள். (குணம் - பண்பு) 6. வருதல், ஓடல், பொங்கல், கற்றல், கல்வி - இவை தொழிற் பெயர்கள். பயிற்சி 1. உங்கள் பாடத்திலிருந்து வகைக்கு இரண்டு எடுத்துக்காட்டுத் தருக. 2. கீழ்க்காணும் வாக்கியங்களில் உள்ள அறுவகைப் பெயர்களை எடுத்துக் காட்டுக: 1. அதிகாலையில் எழுந்து படித்தல் நல்ல பழக்கம். 2. ஓடியாடி விளையாடல் உடம்புக்கு நல்லது. 3. எங்கள் வீட்டில் இன்று பொங்கல். 4. நான் இன்று சென்னைக்குச் செல்கிறேன். 5. அவன் நல்ல சிவப்பு நிறம். 6. உலகம் உருண்டையாக உள்ளது. 2. ஒருமை - பன்மை. பூனை என்னும் சொல் ஒரு பொருளை, அதாவது, ஒரு பூனையைக் குறிக்கிறது. பூனைகள் என்னும் சொல் பல பொருள்களை அதாவது, பல பூனைகளைக் குறிக்கிறது. ஒரு பொருளைக் குறிக்கும் சொல் ஒருமை எனப்படும். பல பொருள்களைக் குறிக்கும் சொல் பன்மை எனப்படும். ஒருமை பன்மை ஒருமை பன்மை பூ பூக்கள் கால் கால்கள் காய் காய்கள் கை கைகள் பழம் பழங்கள் கண் கண்கள் இலை இலைகள் பல் பற்கள் கிளை கிளைகள் காது காதுகள் வேர் வேர்கள் விரல் விரல்கள் பயிற்சி கீழ்வரும் சொற்களில் ஒருமை பன்மை கூறுக: 1. தாய், 2. தந்தை, 3. அண்ணன், 4. தம்பிமார், 5.மக்கள், 6. நண்பன், 7. மரங்கள், 8. மலர், 9.வேலைக்காரர், 10. மாடுகள், 11. காய்கறி, 12. நாற்காலி, 13. படங்கள், 14. நிலம், 15. ஆறுகள், 16. காடு, 17. மலை, 18..புதர் 2. வினைச் சொல் இதில் ‘நாய்’, ‘ஓடுகிறது’ என இரண்டு சொற்கள் உள்ளன. ‘நாய்’ என்னும் சொல் பெயர்ச்சொல் என்பதை முன்னமே அறிந்தோம். ‘ஓடுகிறது’ என்னும் சொல் எந்தப் பொருளுக்கும் பெயர் அன்று. அது நாய் செய்யும் தொழில் இன்ன தென்று அறிவிக்கிறது. ஒரு பொருளின் தொழிலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். (வினை - தொழில்) “மாடு மேய்கிறது” இதில் “மேய்கிறது” என்னும் சொல் மாட்டின் தொழிலைக் குறிக்கிறது. அதனால், அது வினைச் சொல் எனப்படும். பொருளைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல். பொருளின் தொழிலைக் குறிக்கும் சொல் வினைச் சொல். 1. ஒருமை - பன்மை ‘புறா’ என்னும் பெயர்ச்சொல் ஒரு பொருளைக் குறிப்பதால் ஒருமை எனப்படும். ‘புறாக்கள்’ என்னும் சொல் பல பொருள்களைக் குறிப்பதால் பன்மை எனப்படும். இவ்வாறே வினைச் சொற்களிலும் ஒருமை, பன்மை உண்டு. ‘புறா பறக்கிறது.’ இதில் ‘பறக்கிறது’ என்பது வினைச்சொல். இது ‘புறா’ என்னும் ஒரு பொருளின் தொழிலை உணர்த்துவதால் ஒருமை வினை எனப்படும். ‘புறாக்கள் பறக்கின்றன.’ இதில் ‘பறக்கின்றன’ என்னும் வினைச் சொல் பல பொருள்களின் (புறாக்களின்) தொழிலை உணர்த்துவதால் பன்மை வினை எனப்படும். ஒருமை பன்மை நாய் ஓடுகிறது. நாய்கள் ஓடுகின்றன.. அவன் வந்தான். அவர்கள் வந்தார்கள். பெண் பாடினாள். பெண்கள் பாடினார்கள். சிறுவன் ஓடுகிறான். சிறுவர்கள் ஓடுகிறார்கள். கோழி கூவும் கோழிகள் கூவும். பயிற்சி கீழ்க்காணும் வரிகளில் உள்ள வினைச்சொற்கள் ஒருமையா, பன்மையா எனக் கூறுக: 1. ‘பனம்பழம் விழுந்தது. 2. பரணன் எடுத்தான். 3. எல்லாரும் தின்றார்கள். 4. பசி தணிந்தது. 5. பந்து ஆடினார்கள். 6. மலர்கள் உதிர்ந்தன. 7. வள்ளி எடுத்தாள். 8. மாலை தொடுத்தாள். 9. பொழுது விடிந்தது. 10. பூக்கள் பூத்தன. 2. காலம் மாறன் வந்தான். வள்ளி அதோ வருகிறாள். வடிவேல் இனிமேல் வருவான். ‘வந்தான்’ என்னும் வினைச் சொல் முன்னரே நிகழ்ந்த தொழிலை உணர்த்துகிறது. இஃது இறந்தகால வினைச்சொல் எனப்படும். ‘வருகிறாள்’ என்னும் வினைச்சொல் தற்போது நிகழும் தொழிலை உணர்த்துகிறது. இது நிகழ்கால வினைச்சொல் எனப்படும். ‘வருவான்’ என்னும் வினைச்சொல் இனிமேல் நிகழும் தொழிலை உணர்த்துகிறது. இஃது எதிர்கால வினைச்சொல் எனப்படும். காட்டு: இறந்தகாலம் ஆசிரியர் வந்தார். பட்டம் பறந்தது. பரணன் பாடினான். பந்து உடைந்தது. நான் சொன்னேன். நீ எழுதினாய். அவன் படித்தான். அவள் கேட்டாள். நிகழ்காலம் ஆசிரியர் வருகிறார். பட்டம் பறக்கிறது. பரணன் பாடுகிறான். பந்து உடைகிறது. நான் சொல்கிறேன். நீ எழுதுகிறாய். அவன் படிக்கிறான். அவள் கேட்கிறாள். எதிர்காலம் ஆசிரியர் வருவார். பட்டம் பறக்கும். பரணன் பாடுவான். பந்து உடையும். நான் சொல்வேன். நீ எழுதுவாய். அவன் படிப்பான். அவள் கேட்பாள். இவ்வாறு வினைச்சொல் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக்காலமும் காட்டும். பெயர்ச்சொல் காலங் காட்டாது. பயிற்சி 1. கீழ்க்காணும் வரிகளில் உள்ள வினைச்சொற்களை இறந்தகால வினைச்சொற்கள் ஆக்குக: 1. அவன் எழுதுகிறான். 2. நான் படிப்பேன். 3. நீ விளையாடுகிறாய். 4. அவர்கள் தூங்குவார்கள். 5. தவளை கத்துகிறது. 6. மயில் அகவுகிறது. 7. புறா குடுவுகிறது. 8. கிளி பேசும். 2. கீழ்க்காணும் வரிகளில் உள்ள வினைச்சொற்களை எதிர்கால வினைச்சொற்கள் ஆக்குக: 1. காற்று அடித்தது. 2. மழை பெய்கிறது. 3. நிலம் விளைகிறது. 4. நாடு செழித்தது. 5. மக்கள் மகிழ்ந்தனர். 6. மாணவர் கற்கின்றனர். 7. அறிஞர் நிறைந்தனர். 8. மூடர் குறைந்தனர். 3. கீழ்க்காணும் வரிகளில் உள்ள வினைச்சொற்களை நிகழ்கால வினைச்சொற்கள் ஆக்குக: 1. அவன் போனான். 2. அவள் வருவாள். 3. நீ பாடுவாய். 4. நான் ஆடினேன். 5. பொழுது விழும். 6. நிலாக் கிளம்பும். 7. மல்லிகை மலரும். 8. மணம் கமழ்ந்தது. 2. சொற்றொடர் இதில் , ‘இவன்’ என்பது ஒரு சொல். ‘படிக்கிறான்’ என்பது மற்றொரு சொல். அந்த இரண்டு சொற்களும் ஒன்றையொன்று தொடர்ந்து நிற்பதால், இது சொற் றொடர் எனப்படும். இது வாக்கியம் எனவும் வழங்கும். அவள் பாடம் படிக்கிறாள். இது மூன்று சொற்கள் கொண்ட வாக்கியம். அவள் தமிழ்ப் பாடம் படிக்கிறாள். இது நான்கு சொற்கள் கொண்ட வாக்கியம். அவள் தமிழ் இலக்கணப் பாடம் படிக்கிறாள். இஃது ஐந்து சொற்கள் கொண்ட வாக்கியம். எழுவாய், பயனிலை முருகன் பாடினான். வள்ளி ஆடினாள். இவ்வாக்கியங்களில், ‘பாடுதல்’, ‘ஆடுதல்’ என்னும் தொழில்களைச் செய்யும் பொருள்கள் எழுவாய் எனப்படும். அவை முருகன், வள்ளி என்பன. எழுவாய் பெயர்ச் சொல்லாகவே இருக்கும். இவ்வாக்கியங்களில், ‘பாடினான்’, ‘ஆடினாள்’ என்னும் சொற்கள் எழுவாய் செய்யும் தொழிலைக் குறிக்கின்றன. எனவே, அவை பயனிலை எனப்படும். பயனிலை பெரும்பாலும் வினைச்சொல்லாகவே வரும். எழுவாய் பயனிலை முருகன் பாடினான் வள்ளி ஆடினாள் சில வாக்கியங்களில் பெயர்ச் சொல்லும் வினாப் பெயரும் பயனிலையாக வருவது உண்டு. காட்டு: அவன் பாணன். அவள் பாடகி. அது யானை. பாணன், பாடகி, யானை - பெயர்ப் பயனிலை. அவன் யார்? அது யாது? அவை யாவை? யார், யாது, யாவை - வினாப் பயனிலை. இவ்வாறு வினாப் பெயரும் பயனிலையாக வரும். எனவே, வினைச்சொல், பெயர்ச்சொல், வினாப் பெயர் ஆகிய மூன்றும் பயனிலையாக வரும். வினைச்சொல் பெரும்பான்மையாக வரும். பெயர்ச் சொல்லும், வினாப் பெயரும் சிறுபான்மையாக வரும். பயிற்சி கீழ்க்காணும் வாக்கியங்களில் உள்ள எழுவாய், பயனிலைகளை எடுத்துக் காட்டுக: 1. கிழக்கே நிலாக் கிளம்பிற்று. 2. மேற்கே பொழுது விழுந்தது. 3. திருவள்ளுவர் திருக்குறள் செய்தார். 4. நானும் அவனும் விளையாடினோம். 5. காற்றும் மழையும் வந்தன. 6. பாவை பாட்டுப் பாடினாள். 7. தாயும் தந்தையும் வந்தார்கள். 8. தமிழ் நாட்டை முன்னர்ச் சேர சோழ பாண்டியர் ஆண்டனர். 3. நிறுத்துக் குறிகள் முற்றுப்புள்ளி, காற்புள்ளி, மேற்கோட் குறி. 1. முற்றுப்புள்ளி( . ) வள்ளி துணி துவைக்கிறாள். இஃது ஒரு வாக்கியம். இவ் வாக்கியத்தின் முடிவில் ஒரு புள்ளி இருக்கிறது. இந்த வாக்கியத்தில் கருத்து முடிந்திருப்பதற்கு அறிகுறியாக அந்தப் புள்ளி இடப்பட்டிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி என்பது பெயர். வாக்கிய முடிவில் முற்றுப்புள்ளி இட வேண்டும். ஒளவையார் ஆத்திசூடி பாடினார். திருவள்ளுவர் திருக்குறள் செய்தார். பாண்டியர் தமிழை வளர்த்தனர். இம்மூன்று வாக்கியங்களின் இறுதியிலும் முற்றுப்புள்ளி இடப்பட்டுள்ளது. ஒரு மயில் மழையில் நனைந்தது அது குளிரால். நடுங்கிக் கொண்டு இருந்தது பேகன் என்னும் வள்ளல். அதைக் கண்டான் அவன் இரக்கம் கொண்டான் அவன் தன் போர்வையை எடுத்து. மயிலுக்குப் போர்த்தான். இங்கு முற்றுப்புள்ளி இட்ட முறை தவறு. கருத்து முடியாத இடங்களில் முற்றுப் புள்ளி இடக் கூடாது. இவ்வாறு இட வேண்டும்: ஒரு மயில் மழையில் நனைந்தது. அது குளிரால் நடுங்கிக் கொண்டு இருந்தது. பேகன் என்னும் வள்ளல் அதைக் கண்டான். அவன் இரக்கம் கொண்டான். அவன் தன் போர்வையை எடுத்து மயிலுக்குப் போர்த்தான். பயிற்சி கீழ்வரும் கதையில் ஏற்ற இடங்களில் முற்றுப் புள்ளி இடுக: பாரி என்னும் ஒரு தமிழ் அரசன் இருந்தான் அவன் பறம்பு நாட்டின் தலைவன் அவன் யார் எதைக் கேட்டாலும் இல்லை என்னாமல் கொடுக்கும் வள்ளல் பாரி ஒரு நாள் தேரேறிக்கொண்டு ஒரு காட்டுக்குப் போனான் தேரை ஓர் இடத்தில் நிறுத்திவிட்டுக் காட்டைச் சுற்றிப் பார்த்து வந்தான் ஒரு முல்லைக் கொடி தேரில் படர்ந்து கொண்டது வள்ளல் அதைக் கண்டான் அதன் மேல் இரக்கங் கொண்டான் அவன் தேரை அங்கேயே நிறுத்திவிட்டு அரண்மனைக்குச் சென்றான் முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் பாரி எனத் தமிழ் மக்கள் பாரியைப் புகழ்ந்தனர். 2. காற்புள்ளி (, ) ‘என் தாயார் நேற்றுச் சந்தைக்குப் போய், எனக்குத் தின்பண்டம் வாங்கி வந்தார்’. இஃது ஒரு நீளமான வாக்கியம். வாக்கிய முடிவில் முற்றுப் புள்ளி இருக்கிறது. இடையில் உள்ள ‘போய்’ என்னும் சொல்லை அடுத்து ஒரு குறி இடப் பட்டுள்ளது. இவ்வாக்கியத்தில் ‘என் தாயார் நேற்றுச் சந்தைக்குப் போய்’ என்பது ஒரு தொடராகவும், ‘எனக்குத் தின்பண்டம் வாங்கி வந்தார்’ என்பது ஒரு தொடராகவும் அமைந் துள்ளது. ஆகையால், ‘போய்’ என்னும் சொல்லுக்குப் பிறகு சற்று நிறுத்திப் படிக்கிறோம். அவ்வாறு நிறுத்திப் படிப்பதற்காகவே இந்தக் குறி இடப்பட்டிருக்கிறது. இதற்குக் காற்புள்ளி என்பது பெயர். ‘நேற்றுக் காலை, நான் பள்ளிக்கு வரும் போது, வழியில் ஒரு நாய் கடிக்க வந்தது. பொன்னன் ஓடிவந்து, அந்த நாயைத் துரத்தி என்னைக் காப்பாற்றினான்.’ இங்குக் காற்புள்ளி இட்டுள்ள இடங்களைக் கவனித்துக் காற்புள்ளி இடவேண்டிய இடங்களை அறிந்து கொள்க. பயிற்சி 1. உங்கள் பாடத்தில் காற்புள்ளி இட்டுள்ள இடங்களைக் கண்டறிக. 2. கீழ்வரும் கதைப் பகுதியைக் கவனித்துப் படித்து, ஏற்ற இடங்களில் காற்புள்ளி இடுக: ஒரு காட்டில் இருந்த ஒரு சிங்கம் அக்காட்டில் உள்ள விலங்குகளை எல்லாம் கொன்று தின்று வந்தது. விலங்குகள் எல்லாம் ஒன்றுகூடி அச்சிங்கத்தினிடம் சென்று தினம் ஒவ்வொன்றாக வந்து இரையாவதாக வேண்டிக் கொண்டன. சிங்கம் அதற்கு இசையவே விலங்குகள் முறை வைத்துக் கொண்டு சிங்கத்திற்கு இரையாகி வந்தன. 3. மேற்கோட்குறி (“ ”) முருகன் நேற்று நேரங் கழித்துப் பள்ளிக்கு வந்தான்; நான் கேட்க, “இனிமேல் நான் நேரமே வந்துவிடுகிறேன்,” என்று சொன்னான். இவ்வாக்கியங்களைக் கவனியுங்கள். முதல் வாக்கியம் நான் சொன்னது . “இனி மேல் நான் நேரமே வந்து விடுகிறேன்”, என்பது முருகன் சொன்னது. முருகன் என்னிடம் சொன்னதையே நான் உங்களுக்குச் சொன்னேன். அது பிறர் பேச்சு என்பதைத் தெரிவிப்பதற்கு “ ” இவ்வாறு குறிப்பிட வேண்டும். இது மேற்கோட்குறி எனப்படும். “கற்க கசடறக் கற்பவை” என்று வள்ளுவர் கூறுகிறார். “ஓதுவ தொழியேல்” என்றார் ஒளவையார். இவ்வாறு பிறர் பாடல்களை எடுத்தாளும் போதும் மேற்கோட்குறிஇடவேண்டும். பயிற்சி 1. உங்கள் பாடத்தைப் படிக்கும்போது அதில் இடப்பட்டுள்ள மேற்கோட்குறிகளைக் கவனித்துப் படியுங்கள். கீழ்வரும் வாக்கியங்களில் மேற்கோட்குறி இடுக: 1. ஊக்கமது கைவிடேல் என்பது ஒளவையார் அமுதமொழி. 2. நன்றி மறப்பது நன்றன்று என்றார் வள்ளுவர். 3. கருத்துட.ன் படி என்றார் ஆசிரியர். 4. கருத்துடன் படிக்கிறேன் என்றேன் நான். 5. முருகன், வள்ளி இனிமையாகப் பாடினாள் என்றான். 6. பரணன், நான் நாடோறும் தவறாமல் திருக் குறள் படித்துவருகிறேன் என்று பெருமை யாகக் கூறிக் கொண்டான். 3. 1. முற்றுப்புள்ளி எங்கு இடவேண்டும்? ஏன்? 2. காற்புள்ளி இடும் இடங்கள் எவை? 3. மேற்கோட்குறி எங்கு இட வேண்டும்? 1. எழுத்து ‘அம்மா’ - இச் சொல்லில், ‘அ’, ‘ம்’, ‘மா’ என்னும் மூன்று எழுத்துக்கள் உள்ளன. அ - உயிரெழுத்து ம் - மெய்யெழுத்து மா - உயிர்மெய்யெழுத்து 1. உயிரெழுத்து -12 அவை, அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள என்பன. 1. அ இ உ எ ஒ 2. ஆ ஈ ஊ ஏ ஓ ஐ ஒள இரு வரிசையிலும் உள்ள உயிரெழுத்துக்களை உச்சரித்துப் பாருங்கள். முதல் வரிசையில் உள்ள ஐந்தும் குறுகி ஒலிக்கின்றன. இவ்வைந்தும் குறுகிய ஓசையுடை மையால் குற்றெழுத்துக்கள் எனப்படும். இரண்டாவது வரிசையில் உள்ள ஏழும் நீண்டொலிக்கின்றன. நீண்டு ஒலிப்பதால் இவ்வேழும் நெட்டெழுத்துக்கள் எனப்படும். இவை குறில், நெடில் எனவும் வழங்கும். குற்றெழுத்தையும் நெட்டெழுத்தையும் அதனதன் ஓசைக் கேற்றவாறு உச்சரிக்க வேண்டும். உச்சரித்துப் பாருங்கள் குறில் நெடில் அடி ஆடி இடு ஈடு உடை ஊடை எரி ஏரி ஒட்டு ஓட்டு குறிப்பு : ஐ, ஒள என்னும் நெட்டெழுத்துக் களுக்குக் குற்றெழுத்துக்கள் இல்லை. 2. மெய்யெழுத்து - 18 அவை, க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் என்பன. 3. உயிர்மெய்யெழுத்து - 216 ம் + ஆ = மா ம் - மெய்யெழுத்து ஆ - உயிரெழுத்து ‘ம்’ என்னும் மெய்யெழுத்தோடு ‘ஆ’ என்னும் உயிரெழுத்துச் சேர்ந்து, ‘மா’ என்னும் உயிர்மெய்யெழுத்து உண்டாயிற்று. உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்து உண்டா வதால் இஃது உயிர் மெய்யெழுத்து எனப்பட்டது. இவ்வாறே பதினெட்டு மெய்யெழுத்துக் களோடும் பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் தனித்தனி சேர்வதால் (18 X 12 = 216) இருநூற்றுப் பதினாறு உயிர்மெய் யெழுத்துக்கள் உண்டாகின்றன. 4. ஆய்தவெழுத்து இஃது, அஃது இச்சொற்களின் இடையில் உள்ள மூன்று புள்ளி வடிவான ‘ஃ’ என்பது ஆய்த எழுத்து எனப்படும். 1. உயிரெழுத்து - 12 2. மெய்யெழுத்து - 18 3. உயிர்மெய்யெழுத்து - 216 4. ஆய்தவெழுத்து - 1 ஆகத் தமிழ் எழுத்துக்கள் - 247 பயிற்சி 1. தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? 2. உயிரெழுத்துக்கள் எத்தனை? 3. குறில், நெடில் எவை? 4. உயிர்மெய்யெழுத்து 216; எப்படி? 5. ஆய்த எழுத்து எங்கு வரும்? 2. சொல் கை - ஓரெழுத்துச் சொல் கால் - ஈரெழுத்துச் சொல் மூக்கு - மூன்றெழுத்துச் சொல் கழுத்து - நான்கெழுத்துச் சொல் ஓரெழுத்துத் தனித்து நின்றோ, பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோ ஒரு பொருளைத் தருவது சொல் எனப்படும். ஓரெழுத்துச் சொற்கள் ஆ - மாடு நீ ஈ - ஈ , கொடு பா - பாட்டு கா - சோலை பூ கை பை சா - இற போ சே - எருது மா - மாமரம் தா - கொடு அரிசிமா தீ மீ - மேலே து - உண் மை - மை, எருமை தை - ஒரு மாதம், வா சட்டை தை வை - வைக்கோல், நா - நாக்கு கீழே வை பயிற்சி கோடிட்ட இடங்கள் ஒவ்வொன்றிலும் ஏற்ற எழுத்து ஒவ்வொன்றைச் சேர்த்தால் சொற்கள் ஆகும். அவ்வெழுத்துக் களைக் கண்டு பிடியுங்கள், 1. நா - 9. மிழ் 17. -க்கு 2. வீ - 10. ழுத்து 18. -ண்டி 3. கா - 11. பாட் - 19. து 4. ஏ - 12. ந்து 20. ருப்பு 5. மை 13. ரம் 21. ணவர் 6. சே 14. -லை 22. கல் 7. சோ - 15. ஆ - 23. க -வு 8. கூ - 16. ளை 24. வர் 1. பெயர்ச்சொல் நாய், காக்கை, மரம் ,பெட்டி - இவை பொருள்கள் எனப்படும். அப்பொருள்களைக் குறிக்கும் நாய் முதலிய சொற்கள் நான்கும் பெயர்ச்சொற்கள் எனப்படும். அஃதாவது, ஒரு பொருளைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். சிறுவன் மரம் கட்டில் சிறுமி தென்னை பெட்டி யானை முல்லை பலகை கோழி செடி குடம் பாம்பு கல் பை எறும்பு மண் சட்டை இவை எல்லாம் பெயர்ச்சொற்களே. 1. அறுவகைப் பெயர் இந்தப் படத்தில், ஒரு குழந்தை இரவு நேரத்தில் வானத்தில் காணப்படும் வெண்ணிலாவைப் பந்தென்று பிடிக்கக் கைகளை நீட்டுதலைப் பாருங்கள். இதில், 1. குழந்தை, நிலா, பந்து - பொருட்பெயர் 2. வானம் - இடப்பெயர் 3. இரவு, நேரம் - சினைப் பெயர் 4. கை - சினைப் பெயர் 5. வெண்மை - குணப்பெயர் 6. நீட்டுதல் - தொழிற்பெயர் 1. முருகன், புலி, பருந்து, எறும்பு, மரம், கல், பெட்டி, குடம், கட்டில் - பொருட்பெயர். 2. ஊர், வீடு, நாடு, மலை, கடல், உலகம் - இடப் பெயர். 3. நாள், நாழிகை, மணி, காலை, பகல், தை, வெள்ளி - காலப்பெயர். 4. கை, கால், வால், கிளை, வேர், இறகு - சினைப் பெயர். 5. வெள்ளை, காரம், அரை, வட்டம், நன்மை, பெருமை - குணப் பெயர். (குணம் - பண்பு. வெள்ளை - நிறப் பண்பு. காரம் - சுவைப் பண்பு. அரை - அளவுப் பண்பு. வட்டம் - வடிவப் பண்பு. நன்மை - தன்மைப் பண்பு.) 6. உண்ணல், உறங்கல், கற்றல், கல்வி, வரவு, வருகை - தொழிற்பெயர். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனப் பெயர்ச்சொல் அறுவகைப்படும். பயிற்சி 1. உங்கள் பாடத்திலிருந்து பொருட்பெயர் முதலிய அறுவகைப் பெயர்கட்கும் வகைக்கு இரண்டு எடுத்துக்காட்டுத் தருக. 2. கீழ்வரும் வரிகளில் உள்ள அறுவகைப் பெயர் களையும் எடுத்துக் காட்டுக: 1. காலை எழுந்தவுடன் படிப்பு; பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு. 2. மலையும் ஆறும் நாட்டின் வளத்துக்குக் காரணம். 3. இளமையில் கற்றல் முதுமையில் உதவும். 4. நேற்றும் இன்றும் நல்ல மழை. 5. தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வே.ண்டும். 6. தமிழ்நாடு நமது தாய் நாடு. 2. திணை இதில், ‘அவன்’, ‘குதிரை’, ‘வண்டி’ என்னும் மூன்றும் பெயர்ச் சொற்களே. ஆனால் மூன்றிற்கும் வேறுபாடு உண்டு. ‘அவன்’ என்பது பகுத்தறிவுள்ள மக்களுள் ஒருவனைக் குறிக்கிறது. ‘குதிரை’ என்பது பகுத்தறிவு இல்லாத ஓர் உயிரைக் குறிக்கிறது. ‘வண்டி’ என்பது உயிரில்லாத ஒரு பொருளைக் குறிக்கிறது. மக்கள் உயர்திணை எனப்படுவர். மற்ற உயிருள்ள பொருள்களும், உயிரில்லாத பொருள்களும் அஃறிணை எனப்படும். எனவே, உயர்திணை, அஃறிணை எனத்திணை இருவகைப்படும். (அல்+ திணை = அஃறிணை.) 3. பால் இங்கு மாணவன், மாணவி என்னும் இரண்டும் உயர்திணைப் பெயர்ச்சொற்களே. ஆனால், ‘மாணவன்’ என்பது ஓர் ஆணைக் குறிக்கிறது. ‘மாணவி’ என்பது ஒரு பெண்ணைக் குறிக்கிறது. ஓர் ஆணைக் குறிக்கும் சொல் ஆண்பால் எனப்படும். ஒரு பெண்ணைக் குறிக்கும் சொல் பெண்பால் எனப்படும். (பால் - பிரிவு.) ‘மாணவர்கள்’ என்பதும் உயர்திணைப் பெயர்ச் சொல்லே. இஃது ஒருவனைக் குறிக்காமல் ஆண்கள் பலரைக் குறிப்பதால், இதனை ஆண்பால் என்று சொல்வதில்லை; பலர்பால் என்று சொல்வது வழக்கம். ‘மாணவிகள்’ என்பதும் பெண்கள் பலரைக் குறிப்பதால், பலர்பால் எனப்படும். ‘பாட்டாளர்கள்’ என்பது ஆண் பெண் இரு பாலாரையும் குறிப்பதால் இஃதும் பலர்பால் எனப்படும். ஆண்கள் பலரையும், பெண்கள் பலரையும், ஆண் பெண் பலரையும் குறிப்பது பலர்பால் ஆகும். ‘எலி’ என்பது அஃறிணைப் பெயர்ச்சொல். இஃது ஒரு பொருளைக் குறிப்பதால் ஒன்றன்பால் எனப்படும். ‘எலிகள்’ என்பதும் அஃறிணைப் பெயர்ச் சொல்லே. இது பல பொருள்களைக் குறிப்பதால் பலவின்பால் எனப்படும். அஃறிணையில் ஆண்பால், பெண்பால் கொள்வதில்லை. 1. ஆண்பால் 2. பெண்பால் உயர்திணை 3. பலர் பால் 4. ஒன்றன்பால் 5. பலவின்பால் அஃறிணை பயிற்சி இன்ன பால், திணை என்று கூறுக: 1. முருகன், வள்ளி இருவரும் பாடுகிறார்கள். 2. அங்கே சிறுவர்கள் விளையாடுகிறார்கள். இங்கே சிறுமிகள் விளையாடுகிறார்கள். 3. அங்கே ஆண் பெண் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். 4. ஓர் ஆடும் அதன் குட்டிகளும் மேய்கின்றன. 4. எண் பந்து - ஒரு பொருள். பந்துகள் - பல பொருள். ஒரு பொருளைக் குறிக்கும் பெயர்ச்சொல் ஒருமை எனப்படும். பல பொருள்களைக் குறிக்கும் பெயர்ச்சொல் பன்மை எனப்படும். ஒருமை, பன்மை என எண்ணுவதால் இவை எண் எனப்படும். ஆடு - ஆடுகள் மலை - மலைகள் பெண் - பெண்கள் என ஒருமைப் பெயர் பன்மையாக வரும்போது, ‘கள்’ என்னும் விகுதி பெற்று வரும். சில பெயர்ச் சொற்களில் பன்மை வேறு வகையாகவும் வரும். காட்டு: ஒருமை பன்மை தாய் - தாய்மார் - தாய்மார்கள் நண்பன் - நண்பர் - நண்பர்கள் அவன் - அவர் - அவர்கள் சிறுவன் - சிறுவர் - சிறுவர்கள் நல்லவன் - நல்லவர் - நல்லவர்கள் அது - அவை - அவைகள் பயிற்சி 1. கீழ்வரும் சொற்களுக்குப் பன்மை கூறுக: 1. மாணவன் 5. இலை 2. வேலைக்காரன் 6. மலர் 3. தொழிலாளன் 7. கனி 4. தமிழன் 8. காய் 2. கீழ்வரும் சொற்கள் ஒருமையில் எவ்வாறு வரும்? 1. தோழர்கள் 5. மாணவிகள் 2. கற்கள் 6. உழவர்கள் 3. அவர்கள் 7. விரல்கள் 4. சிறுமியர் 8. நகங்கள் 5. இடம் மேலே உள்ள படத்தைப் பாருங்கள் பேசுகிறவன் தன்னை ‘நான்’ என்கிறான். இது தன்மை, அல்லது தன்மை இடம் எனப் படும். (பேசுவோன் - தன்மை.) இப் படத்தில், தன்மையான் தன் முன்னால் வருகிறவனை ‘நீ’ என்கிறான். அதாவது, பேசுகிறவன் தன் பேச்சைக் கேட்பவனை ‘நீ’ என்கிறான். இது முன்னிலை இடம் எனப்படும். (கேட்போன் - முன்னிலை.) இப் படத்தில், தன்மையான் முன்னிலையானிடம், போகிறவனை ‘அவன்’ என்கிறான். ‘அவன்’ என்பது தன்மை முன்னிலையோரால் பேசப் படுவோனைக் குறிக்கிறது. இது படர்க்கை இடம் எனப்படும். (பேசப்படுவோன் - படர்க்கை.) தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும். பேசுபவன் தன்னோடு மற்றவரையும் சேர்த்துப் பேசும்போது ‘நாம்’ என்கிறான். காட்டு: நாம் படிக்கிறோம். நாம் என்பதும் தன்மைப் பெயரே. நான், யான்; நாம், யாம்; நாங்கள், யாங்கள் ஆகிய இவை ஆறும் தன்மைப் பெயர்ச் சொற்களே. நீ படி. நீர் படித்தீர். நீங்கள் படித்தீர்கள். நீ, நீர், நீங்கள் - இவை முன்னிலைப் பெயர்கள். அவனுடன் செல்லும் அவள்தான் அவர் மகள். அது வர அவை ஓடின. அவன், அவள், அவர், அது, அவை - இவை படர்க்கைப் பெயர்கள். தன்மை, முன்னிலைப் பெயர்கள் அல்லாத மற்ற எல்லாப் பெயர்ச் சொற்களும் படர்க்கையாகும். அவன் முருகன் - ஆண்பால் அவர் வள்ளி - பெண்பால் அவர் மக்கள் - பலர்பால் அது ஆடு - ஒன்றன்பால் அவை ஆடுகள் - பலவின்பால் இவை பத்தும் படர்க்கைப் பெயர்களே. பயிற்சி 1. சொல் எத்தனை வகைப்படும்? 2. பெயர்ச் சொல்லில் அறிய வேண்டியவை யாவை? 3. திணை எத்தனை வகைப்படும்? பால் எத்தனை வகைப்படும்? 4. உயர்திணைக்குரிய பால்கள் எவை? 5. ஒன்றன்பால் எத்திணைக்குரியது? 6. பலர்பால், பலவின்பால் - வேறுபாடு என்ன? 7. தமிழர், மரங்கள் - திணை, பால் கூறுக. 8. எண் எத்தனை வகைப்படும்? 9. நாய், சிறுவர் - இன்ன எண் எனக் கூறுக. 10. இடம் எத்தனை வகைப்படும்? 11. அவள், மரம், நாம், முருகன், நீர், பறவைகள் - இன்ன இடம் என்று கூறுக. 2. வினைச்சொல் ‘கூவுகிறது’ என்பது கோழியின் தொழில். எனவே, அது வினைச்சொல் எனப்படும். ஒரு பொருளின் தொழிலைக் குறிக்கும் சொல் வினைச்சொல். முருகன் பாடம் படித்து வள்ளி கோலம் போட்டு பறவை வானில் பறந்து மாடுகள் புல் மேய்ந்து இவற்றில், ‘படித்து’, ‘போட்டு’, ‘பறந்து’, ‘மேய்ந்து’ என்பவை வினைச் சொற்கள். ஆனால், இவை பொருள் முற்றாமல் குறையாக நிற்கின்றன. முருகன் பாடம் படித்தான். வள்ளி கோலம் போட்டாள். பறவை வானில் பறந்தது. மாடுகள் புல் மேய்ந்தன. இவற்றில், ‘படித்தான்’, ‘போட்டாள்’, ‘பறந்தது’, ‘மேய்ந்தன’ என்னும் வினைச் சொற்கள் பொருள் முற்றி நிற்கின்றன. பொருள் முற்றி நிற்கும் வினை முற்றுவினை அல்லது வினைமுற்று எனப்படும். பொருள் முற்றாத வினை எச்சவினை எனப்படும். (எச்சம் - குறை.) பெயரெச்சம், வினையெச்சம் என எச்சவினை இருவகைப்படும். 1. பெயரெச்சம், வினையெச்சம் பழுத்த பழம். பழம் பழுத்து விழுந்தது. ‘பழுத்த’, ‘பழுத்து’, என்னும் இரண்டும் எச்சவினைகளே. ‘பழுத்த’ என்னும் எச்சம் ‘பழம்’ என்னும் பெயரைக் கொண்டு முடிகிறது. ‘பழுத்து’ என்னும் எச்சம் ‘விழுந்தது’ என்னும் வினையைக் கொண்டு முடிகிறது. பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும். வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும். பெயர் எஞ்சி நிற்பது பெயரெச்சம். வினை எஞ்சி நிற்பது வினையெச்சம். பழுத்த - பெயரெச்சம் பழுத்து - வினையெச்சம் பெயரெச்சம் வினையெச்சம் பழுத்த பழம் பழுத்து விழுந்தது. உண்ட பையன் உண்டு போனான். தூங்கின பெண் தூங்கி எழுந்தாள். ஓடின குதிரை ஓடி விழுந்தது. 2. ஒருமை, பன்மை கொடி படர்ந்தது, கொடிகள் படர்ந்தன. படர்ந்தது - ஒருமை படர்ந்தன - பன்மை ஒரு பொருளின் தொழிலைக் குறிக்கும்போது வினைச்சொல் ஒருமையாக இருக்கும். பல பொருள்களின் தொழிலைக் குறிக்கும்போது வினைச் சொல் பன்மையாக இருக்கும். எடுத்துக் காட்டாக, மாணவன் வந்தான். மாணவர் வந்தார். மாடு மேய்ந்தது. மாடுகள் மேய்ந்தன. என வரும். 3. காலம் உண்டான் உண்கிறான் உண்பான் இவை மூன்றும் வினைச்சொற்களே. மூன்றும் ஒரே தொழிலைஉணர்த்துகின்றன. ஆனால், இவற்றின் பொருளில் வேறுபாடு உண்டு. ‘உண்டான்’ - இது முன்னமே உண்டான் எனப் பொருள்படுவதால் இறந்தகால வினை எனப்படும். ‘உண்கிறான்’ - இஃது இப்பொழுதுதான் உண்கிறான் எனப் பொருள் படுவதால் நிகழ்கால வினை எனப்படும். ‘உண்பான்’ - இஃது இனிமேல் உண்பான் எனப் பொருள்படுவதால் எதிர்கால வினை எனப்படும். 1. இறந்தகாலம், 2. நிகழ்காலம், 3. எதிர்காலம் எனக் காலம் மூன்று வகைப்படும். பயிற்சி 1. கீழ்வரும் வாக்கியங்களில் உள்ள வினைச் சொற்கள் எந்தெந்தக் காலத்தைச் சேர்ந்தவை எனக் கூறுக: 1. முருகன் பள்ளிக்கூடம் போனான். 2. வள்ளி பாடம் எழுதுகிறாள். 3. தாயார் சோறு சமைக்கிறார். 4. தகப்பனார் ஏர் உழுவார். 5. பந்து கிணற்றுக்குள் விழுந்தது.. 6. நான் வானொலியில் பாடுவேன். 7. அக்கை துணி துவைக்கிறாள். 8. அண்ணன் ஆடு மேய்ப்பான். 2. கோடிட்ட இடங்களில் தகுந்த வினைச்சொற்களை எழுதுக: 1. நேற்று நீ எங்கு ? 2. நாளை நான் ஈரோடு . 3. தமிழ் நாட்டில் ஆறுகள் பல . 4. இனிமேல் நான் பொய் . 5. சென்ற வாரந்தான் குழந்தை . 6. அடுத்த மாதம் நான் சென்னைக்குப் . 7. நோய் வந்தவன் மருந்து . 8. மேற்குத் தொடர்ச்சி மலை மிகவும் . 3. கோடிட்ட இடங்களில் ஏற்ற பெயரெச்ச, வினை யெச்சங்களை எழுதுக: 1. நேற்று -காற்றில்--மரம் இது. 2. பூக்கள் கிடக்கின்றன. 3. கிணறு நீர் ஊறும். 4. - பாடத்தைத் பார். 5. - குதிரை பொதி சுமக்கும். 6. வள்ளுவர் குறளை படி. 4. எழுவாய், பயனிலை முருகன் வந்தான். இந்த வாக்கியத்தில், முருகன் - பெயர்ச்சொல், எழுவாய். வந்தான் - வினைச்சொல், பயனிலை. முருகன் - உயர்திணை ஆண்பால் ஒருமைப் படர்க்கைப் பெயர். வந்தான் - உயர்திணை ஆண்பால் ஒருமைப் படர்க்கை வினைமுற்று. இதனால் நாம் அறிவதென்ன? ஒரு வாக்கியத்தில் எழுவாயும், பயனிலையும் திணை, பால், எண் இடங்களில் ஒத்திருக்க வேண்டும் என்பதாம். இவ்வாறு திணை, பால் முதலியன ஒத்துவராத வாக்கியம் வழு ஆகும். (வழு- பிழை, தவறு.) வாக்கியங்கள் பிழை இல்லாமல் இருக்க வேண்டும். 1. அவன் வந்தது. இதில், ‘அவன்’ என்னும் எழுவாய் உயர்திணை. ‘வந்தது’ என்னும் பயனிலை அஃறிணை, இது திணை வழு. 2. அவள் வந்தான். இதில் ‘அவள்’ என்னும் எழுவாய் பெண்பால். ‘வந்தான்’ என்னும் பயனிலை ஆண்பால். இது பால் வழு. 3. பழம் விழுந்தன. இதில், ‘பழம்’ என்னும் எழுவாய் ஒருமை. ‘விழுந்தன’ என்னும் பயனிலை பன்மை. இஃது எண் வழு. 4. நீ வந்தேன். இதில், ‘நீ’ என்னும் எழுவாய் முன்னிலை. ‘வந்தேன்’ என்னும் பயனிலை தன்மை. இஃது இடவழு. மேற்கண்ட வாக்கியங்களை வழுவில்லாமல் திருத்தினால் அவை கீழ்வருமாறு அமையும். 1. அவன் வந்தான் (அல்லது) அது வந்தது. 2. அவள் வந்தாள் (அல்லது) அவன் வந்தான். 3. பழம் விழுந்தது. (அ) பழங்கள் விழுந்தன. 4. நீ வந்தாய். (அல்லது) நான் வந்தேன். திணை, பால், எண், இடம் வழுவாமல் பேசவும், எழுதவும் வேண்டும். பயிற்சி 1. கீழ்வரும் சொற்றொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்துக: 1. கோழி கூவின. 6. அவன் வந்தான். 2. மலர்கள் மலர்ந்தது. 7. யார் பேசுகிறான்? 3. வள்ளி வந்தது. 8. அவர்கள் போனேன். 4. நான் போனார். 9. நாங்கள் உண்டான். 5. முருகன் வந்தான். 10. நீ வருவேன். 2. கோடிட்ட இடங்களில் ஏற்ற வினைச்சொற்களை எழுதுக: 1. முருகன் . 4. பெண்கள் - . 2. வள்ளி --.-- 5. நாய் . 3. மாணவர்கள்- . 6. மாடுகள் . 3. கோடிட்ட இடங்களில் ஏற்ற பெயர்ச்சொற்களை எழுதுக: 1. - படிக்கிறான். 2. விளையாடுகிறாள். 3. வேலை செய்கிறார்கள். 4. பாடுகிறது. 5. பறக்கின்றன. 3. நிறுத்துக் குறிகள் அரைப்புள்ளி, முக்காற் புள்ளி, வியப்புக் குறி, வினாக் குறி. நான் கடைக்குப் போய், காய்கறி வாங்கி வந்தேன். இவ்வாக்கியத்தில் இரண்டு குறிகள் உள்ளன. ஈற்றில் உள்ளது முற்றுப்புள்ளி. இடையில் உள்ளது காற்புள்ளி. படிக்கும்போது நிறுத்திப் படிக்க வேண்டிய இடங்களை அறிவதற்கு இவை இடப்பட்டுள்ளன. 1. அரைப் புள்ளி (;) ஒரே எழுவாய்க்குப் பல பயனிலைகள் வந்தால், அப்பயனிலைகளை அடுத்து அரைப் புள்ளி இட வேண்டும்; ஈற்றில் முற்றுப்புள்ளி இடவேண்டும். காட்டு: வள்ளி மலர் பறித்தாள்; மாலை கட்டினாள்; தலையில் சூடினாள். ‘பறித்தாள், கட்டினாள்’ என்னும் பயனிலை களை அடுத்து அரைப்புள்ளி இட்டிருத்தலை அறிக: மலர் பறித்ததும், மாலை கட்டினதும், தலையில் சூடினதும் வள்ளியே யாவாள். 2. முக்காற்புள்ளி (:) ஒன்றைச் செய்யும்படி குறிப்பிடுதற்கு முக்காற்புள்ளி இடவேண்டும். காட்டு: 1. கோடிட்ட இடங்களைள நிரப்புக: 2. கீழ்வரும் வாக்கியங்களில் உள்ள பெயரெச்ச வினையெச்சங்களை எடுத்துக் காட்டுக: 3. பொருள் கூறுக: 3. வியப்புக் குறி (!) இரக்கம், வியப்பு, விளி ஆகிய இடங்களில் இக்குறி இடவேண்டும். இஃது உணர்ச்சிக் குறி எனவும் வழங்கும். (விளி - கூப்பிடுதல்.) காட்டு: 1. தமிழினம் எவ்வளவு தாழ்நிலையை அடைந்துவிட்டது! (இரக்கம்) 2. இஃது எவ்வளவு அழகான படம்! (வியப்பு) 3. வள்ளி! சாப்பிட வா. (விளி) 4. வினாக் குறி (?) வினா வாக்கியங்களின் ஈற்றில் வினாக்குறி இட வேண்டும். காட்டு: 1. பாவை பள்ளிக்குப் போகிறாளா? 2. திருக்குறள் செய்தவர் யார்? 3. உன் தாய்மொழி எது? 4. இன்னும் ஏன் பள்ளிக்குப் போகவில்லை? 5. இங்கு குப்பையை நீயோ போட்டாய்? 6. உன் பெயர் என்ன? பயிற்சி 1. உங்கள் பாடத்தில் இக்குறிகள் இடப்பட்டுள்ள இடங்களை அறிந்து கொள்ளுங்கள். 2. அரைப்புள்ளி, வினாக்குறி - இவைகளை எங்கே இட வேண்டும்? 3. வியப்புக்குறி இடும் இடங்கள் யாவை? 4. ஒருமை, பன்மைகளை எடுத்துக் காட்டுக - இங்கு எக்குறி இட வேண்டும்? 4. இறுதிப் பயிற்சி 1. சொல். 1. சொல் என்பது யாது? 2. ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்து, நாலெழுத்து, ஐந்தெழுத்துச் சொற்களுள் வகைக்கு இரண்டு எடுத்துக் காட்டுத் தருக. 3. பெயர்ச்சொல் என்பது யாது? 4. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்? வகைக்கு இரண்டு எடுத்துக் காட்டுத் தருக. 5. மரம், தை, கை, பச்சை, சென்னை, ஆட்டம் - இன்ன பெயர் என்று கூறுக. 6. பலகை, மரங்கள், முருகன், வீடுகள், பெண்கள், மலர், மாணவர் - ஒருமை, பன்மைப் பெயர்களை எடுத்துக் காட்டுக. 7. வினைச் சொல் என்பது யாது? 8. உண்டான், விழுந்தது, ஓடுகிறார்கள், படிக்கிறாள், உதிர்ந்தன - ஒருமை பன்மை வினைகளை எடுத்துக்காட்டுக. 9. காலம் எத்தனை வகைப்படும்? 10. படிக்கிறான், பாடுகிறாள், பறக்கும், உண்டேன், போவார்கள், ஓடுகிறாய், மேய்கின்றன, தூங்குவேன் - இன்னகால வினையென்று குறிப்பிடுக. 2. சொற்றொடர் 11. சொற்றொடர் என்பது யாது? 12. எழுவாய் பயனிலை என்பன யாவை? 3. நிறுத்துக் குறிகள் 13. முற்றுப்புள்ளி எங்கே இடவேண்டும்? 14. காற்புள்ளி இடும் இடங்களைக் குறிப்பிடுக. 15. மேற்கோட்குறி இடும் இடங்கள் எவை? 1. எழுத்து 1. எழுத்து எத்தனை வகைப்படும்? 2. குறில், நெடில் எழுத்துக்கள் எவை? 3. கட்டுண்டார் - இதிலுள்ள மெய்யெழுத்துக் களை எடுத்துக் காட்டுக. 4. உயிர்மெய்யெழுத்து என்பது யாது? உயிர் மெய்யெழுத்து 216; எப்படி? 5. ஆய்தவெழுத்து எங்கு வரும்? எடுத்துக் காட்டுத் தருக. 2. சொல் 6. சொல் என்பது யாது? 7. ஓரெழுத்துச் சொற்கள் பத்தினை எடுத்துக் காட்டுக. 8. பெயர்ச்சொல் என்பது யாது? 9. பெயர் எத்தனை வகைப்படும்? 10. காலப் பெயர், சினைப் பெயர்கட்கு நந்நான்கு எடுத்துக்காட்டுத் தருக. 11. சிவப்பு, புளிப்பு, உருண்டை - என்ன பண்புப் பெயர்கள்? 12. உயர்திணை, அஃறிணை என்பன யாவை? 13. பலர்பால் எத்தனை வகைப்படும்? 14. ஒருமை, பன்மை என்பன யாவை? 15. கல், மக்கள், பெண், மலைகள் - ஒருமை, பன்மைப் பெயர்களை எடுத்துக் காட்டுக. 16. இடம் எத்தனை வகைப்படும்? 17. அவன், நான், மாடு, நீங்கள் - இடம் கூறுக. 18. வினைச்சொல் என்பது யாது? 19. வினைச்சொல் எத்தனை வகைப்படும்? 20. உண்டான், உண்ட, உண்டு - இன்ன வினையெனக் கூறுக. 21. பாடுவேன், ஓடினான், உண்கிறாய் - இன்ன காலம் எனக் கூறுக. 22. எழுவாய், பயனிலை என்பன யாவை? 23. எழுவாய், பயனிலை எவ்வாறு வர வேண்டும்? 3. நிறுத்துக் குறிகள் 24. நிறுத்துக் குறிகள் எதற்காக இடவேண்டும்? 25. அரைப்புள்ளி எங்கு இடவேண்டும்? 26. முக்காற்புள்ளி இடும் இடம் எது? 27. வியப்புக்குறி எங்கெங்கு இடவேண்டும்?  பாகம் - 2 வள்ளுவர் தமிழ் இலக்கணம் - 2 நூல் அறிமுகம் எழுத்து: எழுதுவதால் எழுத்து எனப்படுகிறது. அது வரியும் வடிவம். ஆதலால் வரிவடிவம். காற்றை எழுப்புவதால் உண்டாகும் ஒலியும் எழுத்தே. அந்த வடிவம் ஒலிவடிவம். குறில் நெடில்: அ, ஆ - இரண்டும் உயிர் எழுத்துகளே. ஆனால் இரண்டும் ஒலி அளவால் வேறுபடும். முதல் எழுத்தைப் போல் இரண்டு மடங்கு ஒலிக்கும் இரண்டாம் எழுத்து. ஆதலால், முன்னது குறில் (குறுகிய ஒலியுடையது) பின்னது, நெடில் ( நீண்ட ஒலி உடையது) மாத்திரை: கையால் நொடிக்கும் அளவும் கண்ணால் இமைக்கும் அளவும் ஒரு மாத்திரை எனப்படும். குறிலுக்கு அளவு ஒரு மாத்திரை. நெடிலுக்கு அளவு இரண்டு மாத்திரை. புள்ளி எழுத்துக்கு அளவு அரை மாத்திரை. சுட்டு: ஒரு பொருளை அல்லது ஓரிடத்தை அது, இது என்று குறிப்பிட்டுக் காட்டுகிறோம். சுட்டுதற்கு வரும் அ, இ என்பவை சுட்டெழுத்து. வினா: எது, யாது, அதுவா என வினாவுகிறோம். அதற்கு வரும் எ, யா, ஆ முதலியவை வினா எழுத்து. திணை = ஒழுக்கம்: உழவன், மாடு, கல் -இம்மூன்று சொற்களுக்கும் வேறுபாடு உண்டு. உழவன், பகுத்தறிவும் உயர்ந்த ஒழுக்கமும் உடையவன். ஆதலால் உயர்திணை. மாடு, பகுத்தறிவும் உயர்ந்த ஒழுக்கமும் இல்லாதது. ஆதலால் அஃறிணை (அல்திணை) கல் - உயிரும் ஒழுக்கமும் இல்லாதது. அஃறிணை. பால்: பகுக்கப் - பிரிக்கப் - பட்டது. கண்ணன் - ஆண்பால் ( ஆண் பிரிவு) வள்ளி - பெண்பால் ( பெண் பிரிவு) சான்றோர் - பலர்பால் ( பலர் பிரிவு) செடி - ஒன்றன்பால் (ஒன்றின் பிரிவு) மரங்கள் - பலவின்பால்( பலவின் பிரிவு) இடம் : இடம், தன்மை முன்னிலை படர்க்கை என மூவகையாம். தான் அல்லது தாம் இருக்கும் இடம் தன்மை. முன்னால் அமைந்த இடம் முன்னிலை. முன்னிலையைக் கடந்து அப்பால் உள்ள இடம் படர்க்கை. ஒருமை: நான்; நீ ; அவன் பன்மை: நாம்; நீர்; அவர். எழுவாய்: சொற்றொடர் எழும் இடம், எழுவாய். பயனிலை: சொற்றொடர் முடிந்து நிற்கும் இடம், பயன்நிலை. செயப்படுபொருள் : எழுவாயால் செய்யப்படும் செயல். திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். திருவள்ளுவர் - எழுவாய். இயற்றினார் - பயனிலை திருக்குறளை - செயப்படுபொருள் யார் எவர் எது என வினாவ வரும் விடை, எழுவாய். பொருள் முடிவிடம் , பயனிலை. யாரை, எதை என வினாவ வரும் விடை , செயப்படுபொருள். திருக்குறளைத் திருவள்ளுவர் இயற்றினார். இயற்றினார் திருவள்ளுவர் திருக்குறளை. என மாற்றித் தொடரை அமைத்தாலும் பொருளும் தொடரும் குற்றமாகாது - நெறிப்படி எழுவாய் முதலியவை மாறா. இன்ப அன்புடன், இரா. இளங்குமரன். 1. எழுத்து 1. இலக்கணம் என்றால் என்ன? இஃது ஓர் அழகான படம். இதற்கு அழகைச் செய்வது எது? .இப்படம் எவ்வாறு அமைய வேண்டுமோ அவ்வாறு அமைந்துள்ள அமைப்பே இதற்கு அழகைச் செய்கிறது. அதுபோல, ஒரு மொழியின் அமைப்பே அம்மொழிக்கு அழகைச் செய்கிறது. மொழியின் அவ்வமைப்பு இலக்கணம் எனப்படும். தமிழ் மொழியின் அமைப்பு தமிழ் இலக்கணம் எனப்படும். மொழியைப் பிழையில்லாமல் பேசவும் எழுதவும் பயன்படுவது இலக்கணம் ஆகும். தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம் முதலியவை தமிழ் இலக்கண நூல்கள் ஆகும். 2. இலக்கணத்தின் வகை 1. எழுத்திலக்கணம் 2. சொல்லிலக்கணம் 3. பொருளிலக்கணம் 4. யாப்பிலக்கணம் 5. அணியிலக்கணம் என அவ் விலக்கணம் ஐந்து வகைப்படும். தொல் காப்பியத்தில் இவ்வைந்து இலக்கணமும் கூறப்படுகின்றன. எழுத்துக்களைப் பற்றிக் கூறுவது எழுத்திலக்கணம் எனப்படும். சொற்களைப் பற்றிக் கூறுவது சொல்லிலக்கணம் எனப்படும். தமிழ் மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறுவது பொருளிலக்கணம் எனப்படும். சொற்களால் பொருளமைத்துச் செய்யும் செய்யுளைப்பற்றிக் கூறுவது யாப்பிலக்கணம் எனப்படும். (யாப்பு - செய்யுள்.) செய்யுளில் அமையும் அழகைப்பற்றிக் கூறுவது அணியிலக்கணம் எனப்படும். (அணி = அழகு.) 3. ஒலி எழுத்து, வரி எழுத்து சொல் உண்டாவதற்குக் காரணமாய் இருப்பது எழுத்து. அஃது ஒலி எழுத்து, வரி எழுத்து என இருவகைப்படும். ஒலி எழுத்து நாம் பேசும்போது உண்டாகும் ஒலியில் அ, ஆ முதலிய எழுத்துக்களின் வடிவம் இருப்பதை உணர்கிறோம். ஆடி என்பதில் ஆ - ட் - இ என்னும் எழுத்து வடிவங்கள் ஒலிக்கின்றன. எழுத்தின் இவ்வடிவத்திற்கு ஒலி வடிவம் என்பது பெயர். அஃதாவது ,காதினால் கேட்கப்படும் எழுத்து ஒலி எழுத்து எனப்படும். வரி எழுத்து அவ் வெழுத்தொலியைக் கண்ணால் காண்பதற்கு ஏட்டில் எழுதுகிறோம். எழுதுதல் என்பதை வரிதல் என்று சொல்வதும் உண்டு. ஏட்டில் எழுதப்படும் அ, ஆ முதலிய எழுத்துக் களின் வடிவம் வரி வடிவம் எனப் படும். நாம் கண்ணால் பார்த்துப் படிக்கும் எழுத்து வரி எழுத்து எனப்படும். எழுதப்படுவதனால் அஃது எழுத்து எனப் பெயர் பெற்றது. ஊர் என்னும் சொல்லை உச்சரிக்குபோது, ஊ, ர் என்னும் இரண்டும் ஒலி எழுத்து எனப்படும். ஊர் என்று எழுதும்போது ஊ, ர் என்னும் இரண்டும் வரி எழுத்து எனப்படும்.. 4. எழுத்துக்களின் வகை நமது தாய்மொழியாம் தமிழ் மொழியில் 247 எழுத்துக்கள் உள்ளன. அவை, 1. உயிரெழுத்து, 2. மெய்யெழுத்து, 3. உயிர்மெய்யெழுத்து, 4. ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும். காட்டு : அஃதோர் ஆலமரம். அஃதோர் என்னும் சொல்லில், அ - உயிரெழுத்து; ர் - மெய்யெழுத்து; தோ- உயிர்மெய்யெழுத்து; ஃ - ஆய்தவெழுத்து. 5. உயிரெழுத்து, மெய்யெழுத்து நமது உயிர், நமது மெய்யின் (உடம்பின்) உதவியில்லாமல் தானே இயங்க வல்லது போல க், ங் முதலிய மெய்யெழுத்துக்களின் உதவியில்லாமல் தாமே இயங்கவல்ல எழுத்துக்கள் உயிரெழுத்துக்கள் எனப்படும். உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு. அவையாவன: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள என்பனவாம். நமது உடல் உயிரின் உதவியில்லாமல் தானே இயங்காமையால், அ, ஆ முதலிய உயிரெழுத்துக்களின் உதவியில்லாமல் தாமே இயங்க முடியாத எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் எனப்படும். மெய்யெழுத்துக்கள் பதினெட்டு, அவையாவன: க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் என்பனவாம். 6. உயிர்மெய்யெழுத்து க என்னும் எழுத்து, க் என்னும் மெய்யும், அ என்னும் உயிரும் கூடிப் பிறந்ததாகும். (க் + அ = க) இஃது உயிரும் மெய்யும் கூடிப் பிறப்பதால், அல்லது உண்டாவதால், உயிர்மெய்யெழுத்து எனப் பெயர் பெறும். இவ்வாறு 12 உயிரெழுத்துக்களும், 18 மெய் யெழுத்துக்களோடும் தனித்தனியே கூடுவதால் உயிர்மெய் யெழுத்துக்கள் 18 x 12 = 216 ஆகின்றன. அவை க, கா, கி, கீ முதலியனவாம். 7. ஆய்தவெழுத்து அஃது, இஃது, எஃது, அஃறிணை எனச் சொல்லின் இடையில் ஃ இதுபோன்று மூன்று புள்ளி வடிவமாக வரும் எழுத்து ஆய்த எழுத்து எனப்படும். உயிரெழுத்து 12 மெய்யெழுத்து 18 உயிர்மெய்யெழுத்து 216 ஆய்தவெழுத்து 1 ஆகத் தமிழெழுத்துக்கள் 247 8. முதலெழுத்து, சார்பெழுத்து மேற்கூறிய நால்வகை எழுத்துக்களும் முதலெழுத்து, சார்பெழுத்து என இரு வகைப்படும். உயிரெழுத்துப் பன்னிரண்டும், மெய்யெழுத்துப் பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துக்களும் முதலெழுத்து எனப்படும். இவை சார்பெழுத்துக்கள் உண்டாவதற்கு முதலாகும். உயிர்மெய்யெழுத்தும், ஆய்தவெழுத்தும் சார்பெழுத்து எனப்படும். உயிர்மெய்யெழுத்து உயிரும் மெய்யும் சேர்ந்து உண்டாகிறது. இஃது உயிரும் மெய்யும் ஒன்றை யொன்று சார்ந்து உண்டாவதால் சார்பெழுத்து எனப்பட்டது. ஆய்தம் அஃது, இஃது எனச் சொல்லில் அமையும்போது முன்னும் பின்னும் உள்ள எழுத்துக்களைச் சார்ந்து இடையில் வருவதால் சார்பெழுத்து எனப்பட்டது. பயிற்சி 1. இலக்கணம் என்பதன் பொருள் என்ன? 2. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? 3. தமிழிலக்கண நூல்கள் எவை? 4. ஐந்திலக்கணமும் கூறும் நூல் எது? 5. ஒலியெழுத்து, வரியெழுத்து - பெயர்க் காரணம் என்ன? 6. தமிழ் எழுத்து எத்தனை வகைப்படும்? 7. உயிரெழுத்து, மெய்யெழுத்து - இவை எதனால் இப்பெயர் பெற்றன? 8. உயிரெழுத்துக்கள் எத்தனை? மெய்யெழுத்துக்கள் எத்தனை? எழுதிக் காட்டுக. 9. முதலெழுத்து, சார்பெழுத்து என்பவை யாவை? 9. குறில், நெடில் அ, ஆ, முதலிய பன்னிரண்டு எழுத்துக்களையும் உச்சரித்துப் பாருங்கள். சில குறுகிய ஓசை உடையவை யாகவும் உள்ளன. குறுகிய ஓசையுடைய எழுத்து குறில் எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்து நெடில் எனவும் பெயர் பெறும். குறில், குற்றெழுத்து எனவும், நெடில், நெட்டெழுத்து எனவும் வழங்கும். அ இ உ எ ஒ - உயிர்க்குறில். க கி கு கெ கொ - உயிர்மெய்க்குறில். ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள - உயிர்நெடில். கா கீ கூ கே கை கோ கௌ - உயிர்மெய் நெடில். 10. சுட்டெழுத்து, வினாவெழுத்து அது என் பெட்டி. இது உன் பலகை. அது, இது என்னும் சொற்களின் முதலில் உள்ள ‘அ’, ‘இ’ என்னும் எழுத்துக்கள் பொருள்களைச் சுட்டிக் காட்டுகின்றன. எனவே, இவ்வெழுத்துக்கள் சுட்டுப் பொருளில் வரும்போது சுட்டெழுத்து எனப்படும். அவன், இவன், உவன் அவள், இவள், உவள் அவர், இவர், உவர் அது, இது, உது அவை, இவை, உவை என இவை ஐம்பாலிலும் வரும். குறிப்பு : உவன், உவள், உவர், உது, உவை என்பன வழக்கில் இல்லை; செய்யுளில் வரும். சூத்திரம்: “அ இ உம்முதல் தனிவரின் சுட்டே” அது என்ன? மேலே கொடுத்துள்ள எடுத்துக்காட்டில் என்ன என்னும் சொல் ஒன்றை வினாவுகிறது. இதைப் போலவே எது, எவை, எங்கே, எவ்வளவு என்னும் சொற்களும் வினாவுதற்கு உதவுகின்றன. இவற்றின் முதலெழுத்தாகிய ‘எ’ என்பதே வினாவுதலைக் குறிக்கிறது. எனவே, ‘எ’ என்பது வினாவெழுத்து எனப்படும். (வினா = கேள்வி.) எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தெழுத்துக்களும் வினாவெழுத்துக்கள். குறிப்பு: எ, யா, என்பன சொல்லுக்கு முதலிலும், ஆ, ஓ - என்பன சொல்லுக்கு ஈற்றிலும், ஏ என்பது முதல், ஈறு ஆகிய இரண்டு இடங்களிலும் வரும். எவன்? யாவன்? - எ, யா என்பன முதலில் வந்தன. அவனா? அவனோ? - ஆ, ஓ என்பன ஈற்றில் வந்தன. ஏன்? அவனே? - ஏ என்பது முதலிலும் ஈற்றிலும் வந்தது. குறிப்பு: ‘அவனே’ என ஈற்றில் வரும் ஏகார வினா வழக்கில் இல்லை; செய்யுட்களில் அருகிவரும். சூத்திரம்: “எ யா முதலும் ஆ ஓ ஈற்றும் ஏயிரு வழியும் வினாவா கும்மே.” 11. வலி, மெலி, இடை மெய்யெழுத்துக்களுள் சில வன்மையாக ஒலிக்கும்; சில மென்மையாக ஒலிக்கும்; சில வல்லோசையும் மெல்லோசையும் இன்றி இடைத்தரமாக ஒலிக்கும். க் ச் ட் த் ப் ற் இவை ஆறும் வல்லோசை உடையவை. ஆகையால் இவை வல்லெழுத்து, வல்லினம், வல்லினமெய், வலி எனப் பெயர் பெறும். ங் ஞ் ண் ந் ம் ன் இவை ஆறும் மெல்லோசை உடையவை. ஆகையால், இவை மெல்லெழுத்து, மெல்லினம், மெல்லினமெய், மெலி எனப் பெயர் பெறும். வல்லின மெய் ஆறுக்கும் மெல்லின மெய் ஆறும் முறையே இனவெழுத்துக் களாகும். ஆதலால், இவை சொற்களில் அமையும்போது ‘ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற, ’ என வரும். காட்டு : சங்கு பந்து மஞ்சள் தம்பி வண்டு குன்று ய் ர் ல் வ் ழ் ள் இவை ஆறும் வல்லோசையும் மெல்லோசையும் இன்றி, இடைநிகரான ஓசையுடையவை ஆகையால், இவை இடையெழுத்து, இடையினம், இடையின மெய்,இடை எனப் பெயர் பெறும். இடையினமெய் ஆறும் ஒரே இனம். மனப்பாடம் செய்க: வல்லினம் கசட தபற. மெல்லினம் ஙஞண நமன. இடையினம் யரல வழள. பயிற்சி 1. கீழ்வருவனவற்றிலிருந்து உயிர், மெய், குறில், நெடில், சுட்டு, வினா, வலி, மெலி, இடை, உயிர், மெய், ஆய்தம் ஆகியவற்றிற்கு ஒவ்வொரு காட்டுத் தருக: பாரி என்னும் வள்ளல் அஃறிணைப் பொருளான முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்து அழியாப் புகழ் பெற்றான். உலகில் அவனை ஒப்பார் யார்? 2. க, ஆ, ல், அ, ன், தே - இவை ஒவ்வொன்றும் இன்ன எழுத்து என்று கூறுக. நீங்கள் இதுவரை அறிந்துகொண்ட எழுத்துக்களாவன: 1. முதலெழுத்து, 7. குற்றெழுத்து, 2. சார்பெழுத்து, 8. நெட்டெழுத்து 3. உயிரெழுத்து, 9. சுட்டெழுத்து, 4. மெய்யெழுத்து, 10. வினாவெழுத்து 5. உயிர்மெய்யெழுத்து, 11. வல்லெழுத்து, 6. ஆய்தவெழுத்து, 12. மெல்லெழுத்து, 13. இடையெழுத்து - என்பனவாம். குறிப்பு: மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் சொல்லுக்கு முதலில் வாரா. வல்லெழுத்துக்கள் ஆறும் சொல்லுக்கு ஈற்றில் வாரா. உயிர்மெய் எழுத்துக்களுள் ட, ற, ண, ன, ர, ல, ழ, ள என்பவை சொல்லுக்கு முதலில் வாரா. 12. சில எழுத்துக்களின் ஒலி, பொருள் வேறுபாடு கூரிய - கூர்மையான கூறிய - சொன்ன ரி, றி - இவ்வெழுத்துக்கள் ஒலியில் வேறுபடு கின்றன. இவைகளை உள்ளிட்ட சொற்கள் பொருளில் வேறுபடுகின்றன. இவ்வாறே மற்றும் சில எழுத்துக்களும் ஒலியில் வேறுபடும். அவைகளை உள்ளிட்ட சொற்கள் பொருளில் வேறுபடும். சிலர் எழுத்துக்களின் இவ்வேறுபாடு தெரியாமலே பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். அவ்வாறு பேசுதலும் எழுதுதலும் சரியன்று. 1. ர, ற 2. ந, ன, ண 3. ல, ள, ழ இவ்வெழுத்துக்களின் ஒலி வேறுபாட்டையும், பொருள் வேறுபாட்டையும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். ஒலி வேறுபாடு ர - மேல்வாயை நாக்கு நுனி மேல்நோக்கித் தடவ ரகரம் பிறக்கும். ற - மேல்வாயை நாக்கு நுனி மிகப் பொருந்த றகரம் பிறக்கும். ந - மேல்வாய்ப் பல்லினது அடியை நாக்கு நுனி பொருந்த நகரம் பிறக்கும். ன - மேல்வாயை நாக்கு நுனி மிகப் பொருந்த னகரம் பிறக்கும். ண - நாக்கின் கடை (அடிநாக்கு) மேல்வாய்க் கடையைப் பொருந்த ணகரம் பிறக்கும். ல - மேல்வாய்ப் பல்லடியை நாவோரமானது தடித்து நெருங்க லகரம் பிறக்கும். ள - மேல்வாயை நாவோரமானது தடித்துத் தடவ ளகரம் பிறக்கும். ழ - மேல்வாயை நாக்கு நுனி தடவ ழகரம் பிறக்கும். குறிப்பு: இவ்வெழுத்துக்களை ர், ற், ந், ன், ண், ல், ள், ழ் என மெய்யெழுத்துக்களாக உச்சரிக்க வேண்டும். 1. ர, ற - பொருள் வேறுபாடு ர ற அரம் - அராவும் கருவி அறம் - ஒழுக்கம் அரி -துண்டுசெய் அறி - தெரிந்துகொள் இரங்கு - இரக்கங்கொள் இறங்கு - கீழே இறங்கு இரை - தீனி இறை - அரசன் எரி - தீ எறி - வீசு ஏரி - நீர்நிலை ஏறி - மேலே ஏறி கரி - யானை கறி - மிளகு குரவர் - ஆசிரியர் குறவர் - ஓர் இனத்தவர் கூரை - வீட்டுக்கூரை கூறை - ஆடை திரை - அலை திறை - வரி பொருப்பு - மலை பொறுப்பு - கடமை மரம் - ஒரு மரம் மறம் - வீரம் மாரி - மழை மாறி - மாறுபட்டு 2. ல, ள, ழ - பொருள் வேறுபாடு ல ள ழ அலை - கடல் அலை அளை - புற்று அழை - கூப்பிடு கலை - கல்வி களை - நீக்கு கழை - மூங்கில் கிலி - அச்சம் கிளி - ஒரு பறவை. கிழி - துணியைக்கிழி வலி - நோய் வளி - காற்று வழி - தடம் வால் - விலங்குகளின் வால். வாள் - ஒரு கருவி. வாழ் - வாழ்ந்திரு விலை - மதிப்பு. விளை - பயிர்செய் விழை - விரும்பு 3. ந, ன, ண - பொருள் வேறுபாடு ந ன இந்நிலம் - இந்த நிலம் இன்னிலம் - இனிய நிலம் நந்நாள் - நமது நாள் நன்னாள் - நல்ல நாள் நந்நிலை - நமது நிலை நன்னிலை - நல்ல நிலை நந்நூல் - நமது நூல் நன்னூல் - நல்ல நூல் நந்நெறி - நமது வழி நன்னெறி - நல்ல வழி முந்நாள் - மூன்று நாள் முன்னாள் - முற்காலம் ந ண வெந்நீர் - சுடுநீர் வெண்ணீர் - வெண்மையாகிய நீர் ன ண ஆனி - ஒரு மாதம் ஆணி - இரும்பாணி இனைதல் - வருந்துதல் இணைதல் - சேர்தல் ஊன் - புலால் ஊண் - உணவு கனி - பழம் கணி - வேங்கைமரம் தனி - தனிமை தணி - குறைத்துக் கொள் மனம் - உள்ளம் மணம் - வாசனை வன்மை - வலிமை வண்மை - கொடை குறிப்பு : ந என்னும் எழுத்து பந்து, சந்தனம் எனத் தகரத்திற்கு இனமாக வருவதால், இது தந்நகரம் எனப்படும். ன் என்னும் எழுத்து நன்றி, கன்று என றகரத்திற்கு இனமாக வருவதால், இது றன்னகரம் எனப்படும். ண் என்னும் எழுத்து வண்டி, துண்டு என டகரத்திற்கு இனமாக வருவதால், இது டண்ணகரம் எனப்படும். ர - இடையின ரகரம் ற - வல்லின றகரம் இவ்வேறுபாடுகளை நன்கு தெரிந்துகொள்க. பயிற்சி 1. பிழைகளைத் திருத்துக 1. வாழைமீன் நீறிள் னீந்துகிறது. 2. அதியமான் அரம் செய்தான் 3. நான் மணம் மகிள்ந்தேன். 4. குரவர் கூடை பொத்துகிறார். 5. இரும்பை அறத்தால் அராவினான். 6. வாளைமரம் குளை ஈன்றது. 7. இவர் என்னுடைய குறவர். 8. மலர் மனம் வீசுகிறது. 9. நான் என் அரையில் தங்கினேன். 10. அறைப் படி அரிசி வாங்கினேன். கோடிட்ட இடத்தை நிரப்புக 1. பா- வ - டி 2. கா நே - ம் 3. மா -க் கா - ம் 4. மூங்கி - மு - 5. ஆவ - மாதம் 6. மா - க - று 7. கீ ப்பி ளை 8. கூடை மு ம் 2. சொல் 1. சொல்லாவது யாது? காட்டு: நெல், அரிசி நெல் என்னும் இந்த இரண்டு எழுத்துக்களும் சேர்ந்து ‘நெல்’ என்னும் பொருளை உணர்த்துகிறது. இவ்வாறு பொருளை உணர்த்தும் எழுத்துக்களின் தொகுதி சொல் எனப்படும். இஃது இரண்டு எழுத்துக் களாலான சொல். ‘அரிசி’ என்பதற்கும் பொருள் உண்டு. இது மூன்று எழுத்துச் சொல். ஓர் எழுத்தே தனித்து நின்று பொருள் தருவதும் உண்டு. கை, மை, தீ, பூ, வா, போ முதலியவை ஓரெழுத்துச் சொற்கள். எழுத்துத் தனித்து நின்றும், இரண்டு முதலாகத் தொடர்ந்து நின்றும் ஒரு பொருளைத் தரின், அது சொல் எனப்படும். 1. பை - ஓரெழுத்துச் சொல் 2. கால் - ஈரெழுத்துச் சொல் 3. பந்து - மூன்றெழுத்துச் சொல். 4. பட்டம் - நாலெழுத்துச் சொல் 5. விளையாட்டு - ஐந்தெழுத்துச் சொல். 6. திருக்குறள் - ஆறெழுத்துச் சொல். பயிற்சி கீழ் வரும் தொடர்களில் உள்ள ஓரெழுத்து, ஈரெழுத்து, மூன்றெழுத்து, நான்கெழுத்து, ஐந்தெழுத்துச் சொற்களை எடுத்துக் காட்டுக: 1. மல்லிகைப் பூ மணம் மிக்கது. 2. பழம் தின்று பால் குடி. 3. நான் வருகிறேன்; நீ போ. 4. தமிழ் இனிமையான மொழி. 5. வள்ளுவர் திருக்குறள் செய்தார். 6. ஈ மொய்த்தால் நோய் மொய்க்கும். 2. சொல்லின் வகை பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனச் சொல் நான்கு வகைப்படும். 1. பெயர்ச்சொல் காட்டு : மாடு வந்தது. மாடு என்பது ஒரு பொருள். பொருளைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். மாடு, மயில், மரம், வீடு, மலை - இவை பெயர்ச் சொற்கள். 2. வினைச்சொல் வந்தது என்னும் சொல் மாட்டின் தொழிலைக் குறிக்கிறது. பொருளின் தொழிலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். வந்தான், பாடினாள், படித்தார், பறந்தன - இவை வினைச்சொற்கள். 3. இடைச்சொல் அவன் மரத்தைக் கோடரியால் வெட்டினான். மரம் + அத்து + ஐ கோடரி + ஆல் ஐ, ஆல் - வேற்றுமை உருபுகள் அத்து - சாரியை அவன் புலி போலப் பாய்ந்தான். போல - உவம உருபு அவனோ சொன்னான்? அவன் + ஓ ஓ - வினாவெழுத்து. இவ்வாறு பெயர்ச்சொல்லையேனும், வினைச் சொல்லையேனும் அடுத்து வந்து, பெயர்ச்சொற் பொருளையும், வினைச்சொற் பொருளையும் விளக்கும் சொல் இடைச்சொல் எனப்படும். ஐ, ஆல், அத்து, போல, ஓ முதலியன இடைச் சொற்கள். 4. உரிச்சொல் அவன் நனி பேதை. அவன் நனி உண்டான். அவள் சாலப் பேசினாள். நனி, சால - மிகுதி, மிக. நனி என்பது பேதை என்னும் பெயர்ச்சொல்லின் குணத்தையும், உண்டான் என்னும் வினைச்சொல்லின் குணத்தையும் உணர்த்திற்று. சால என்பது பேசினாள் என்னும் வினைச் சொல்லின் குணத்தை உணர்த்திற்று. இவ்வாறு பெயர், வினைகளின் குணத்தை உணர்த்தும் சொல் உரிச்சொல் எனப்படும். சால, உறு, தவ, நனி, கூர், கழி முதலியன உரிச் சொற்கள். பயிற்சி 1. சொல் என்பது யாது? 2. பெயர்ச்சொல், வினைச்சொல் - பொருள் என்ன? 3. இடைச்சொல் என்பது என்ன? நான்கு காட்டுத் தருக. 4. உரிச்சொல் எச் சொற்களின் குணத்தை உணர்த்தும்? எடுத்துக்காட்டுடன் விளக்குக. 5. கீழ்வரும் வாக்கியங்களில் உள்ள பெயர், வினை, இடை, உரிச்சொற்களை எடுத்துக்காட்டுக: 1. தமிழர் தனி நாகரிகம் உடையவர். 2. தமிழர் நாகரிகத்தைப் பழந்தமிழ் நூல்களால் அறியலாம். 3. அந் நாகரிகத்தை அறிந்தால் நீங்கள் கழிபேருவகை எய்துவீர்கள். 3. பொருள்முதல் ஆறு பெயர் 1. முருகன், மாடு, கோழி, மரம், கல், பெட்டி - இவை பொருள்களின் பெயர்கள். 2. வீடு, ஊர், சென்னை, நாடு, மலை, கடல் - இவை இடங்களின் பெயர்கள். 3. நாழிகை, நாள், பகல், மாதம், பருவம், புதன், ஆடி - இவை காலங்களின் பெயர்கள். 4. கை, கால், கிளை, வேர், வால், தலை - இவை சினைகளின் பெயர்கள். (சினை - உறுப்பு). 5. வெண்மை, காரம், உருண்டை, நன்மை - இவை குணங்களின் பெயர்கள். (குணம் - பண்பு). 6. வருதல், கற்றல், நடத்தல், பொங்கல், வரவு, கல்வி - இவை தொழில்களின் பெயர்கள். இவ்வாறு பெயர்ச்சொற்கள், 1. பொருட்பெயர் 4. சினைப்பெயர் 2. இடப்பெயர் 5. குணப்பெயர் 3. காலப்பெயர் 6. தொழிற் பெயர் என அறுவகைப்படும். சூத்திரம்: “பொருளிடம் காலம் சினைகுணம் தொழிலே.” பயிற்சி 1. உங்கள் பாடத்திலிருந்து அறுவகைப் பெயர்களுள் வகைக்கு மூன்று உதாரணந் தருக. 2. கீழ்வரும் வாக்கியங்களில் உள்ள அறுவகைப் பெயர்களையும் எடுத்துக் காட்டுக: 1. விடியற்காலையில் எழுந்து படித்தல் நல்ல பழக்கம். 2. ஓடி விளையாடல் கைகால் உடம்புக்கு நல்லது. 3. எங்கள் வீட்டில் இன்று பொங்கல். 4. இனிமை என்பது தமிழின் பொருள். 5. அம்மரக்கிளையில் பழங்கள் தொங்குதலைப் பார். 6. சென்ற வாரம் நான் சென்னைக்குச் சென்றேன். 7. தமிழ் நாட்டின் வளத்துக்கு மேற்குத் தொடர்ச்சி மலையும் காவிரி யாறுமே காரணமாகும். 8. திருக்குறள் உலகப் பொதுநூல் ஆகும். 4. திணை, பால், எண், இடம் 1. திணை காட்டு: பாணன் பாடினான். மாடு மேய்கிறது. பலகை உடைந்தது. இவற்றுள், பாணன், மாடு, பலகை என்னும் மூன்றும் பெயர்ச் சொற்களே. ஆனால், மூன்றுக்கும் வேறுபாடு உண்டு. பாணன் - மக்களில் ஒருவன். மாடு - உயிருள்ள ஒரு பொருள். பலகை - உயிரில்லாத ஒரு பொருள். மக்கள் உயர்திணை எனப்படுவர். மற்ற உயிருள்ள பொருள்களும், உயிரில்லாப் பொருள்களும் அஃறிணை எனப்படும். முருகன் கண்ணகி உயர்திணை புலவர்கள் மாடு மரங்கள் அஃறிணை 2. பால் காட்டு : பொன்னன் படித்தான். பொன்னி பாடினாள். ‘பொன்னன், பொன்னி’ என்னும் இரண்டும் உயர்திணைப் பெயர்களே. ஆனால், பொன்னன் என்பது ஓர் ஆணைக் குறிக்கிறது. பொன்னி என்பது ஒரு பெண்ணைக் குறிக்கிறது. ஓர் ஆணைக் குறிக்கும் சொல் ஆண்பால் எனப்படும். ஒரு பெண்ணைக் குறிக்கும் சொல் பெண்பால் எனப்படும். காட்டு: மாணவர்கள் ஓடினார்கள். ‘மாணவர்கள்’ என்பதும் உயர்திணைப் பெயரே. ஆனால், இஃது ஒருவனைக் குறிக்காமல் ஆண்கள் பலரைக் குறிப்பதால், பலர் பால் எனப்படும். காட்டு: மக்கள் வந்தனர். ‘மக்கள்’ என்பதும் உயர்திணைப் பெயரே. இது ஆண் மக்களையும் பெண் மக்களையும் பொதுவாகக் குறிக்கிறது. எனவே, இதுவும் பலர்பால் எனப் பெயர் பெறும். ஆண்கள் பலரையும், பெண்கள் பலரையும், ஆண் பெண் பலரையும் குறிப்பது பலர்பால் எனப்படும். காட்டு: நாய் ஓடுகிறது. ‘நாய்’ என்பது அஃறிணைப் பெயர். இஃது ஒரு பொருளைக் குறிப்பதால், ஒன்றன் பால் எனப்படும். காட்டு: நாய்கள் ஓடுகின்றன. ‘நாய்கள்’ என்பதும் அஃறிணைப் பெயரே. இது பல பொருள்களைக் குறிப்பதால் பலவின்பால் எனப்படும். பொன்னன் - ஆண்பால் பொன்னி - பெண்பால் மாணவர்கள் மாணவிகள் பலர்பால் மக்கள் நாய் - ஒன்றன்பால் நாய்கள் - பலவின் பால் ஆண்பால் பெண்பால் உயர்திணை பலர்பால் ஒன்றன் பால் பலவின்பால் அஃறிணை 3. எண்: ஒருமை, பன்மை எறும்பு என்னும் சொல் ஒரு பொருளைக் குறிக்கிறது. எறும்புகள் என்னும் சொல் பல பொருள்களைக் குறிக்கிறது. ஒரு பொருளைக் குறிக்கும் சொல் ஒருமை எனப்படும். பல பொருள்களைக் குறிக்கும் சொல் பன்மை எனப்படும். ஒருமை பன்மை மாணவன் மாணவர் நண்பன் நண்பர் மாணவி மாணவியர் மாடு மாடுகள் பூ பூக்கள் பெட்டி பெட்டிகள் முருகன் - ஆண்பால் அல்லி - பெண்பால் ஒருமை பூனை - ஒன்றன் பால் உழவர்கள் - பலர்பால் யானைகள் - பலவின்பால் பன்மை 4. மூவிடம் : தன்மை, முன்னிலை, படர்க்கை காட்டு: நான் பள்ளிக்கு வந்தபோது நீ வழியில் நீலனிடம் பேசிக்கொண்டிருந்தாய். இதில், பேசுவோன் - நான் கேட்போன் - நீ பேசப்படுவோன் - நீலன் இம்மூவர் இடங்களும் முறையே தன்மை இடம், முன்னிலை இடம், படர்க்கை இடம் எனப்படும். பேசுவோன் - தன்மை கேட்போன்- முன்னிலை பேசப்படுவோன் - படர்க்கை 1. நான், யான் - தன்மை ஒருமை நாம், யாம், நாங்கள், யாங்கள் - தன்மைப் பன்மை 2. நீ - முன்னிலை ஒருமை நீர், நீங்கள், நீவிர் - முன்னிலைப் பன்மை 3. அவன், அவள், அது - படர்க்கை ஒருமை அவர், அவை - படர்க்கைப் பன்மை அவன் செழியன். அவள் பூங்கோதை. அவர் தொழிலாளர். அது மான். அவை மான்கள். என, எல்லாப் பெயர்ச் சொற்களும் படர்க்கை இடத்திற்கு உரியவையாகும். காட்டு: கபிலன் ஒரு நாயைக் கண்டான். அவன் அதைக் கல்லால் எறிந்தான். அது அவனைக் கடித்தது. இங்கே ‘கபிலன்’ என்னும் பெயருக்கு அவன் என்பதும், ‘நாய்’ என்னும் பெயருக்கு அது என்பதும் வந்திருத்தலை அறிக. 5. மூவிடம் : பெயர், வினை பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லும் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடங்களிலும் பொருந்தி வருதல் வேண்டும். காட்டு: 1. வேலன் வந்தான். வேலன் - உயர்திணை ஆண்பால் ஒருமைப் படர்க்கைப் பெயர். வந்தான் - உயர்திணை ஆண்பால் ஒருமைப் படர்க்கை வினைமுற்று. 2. அல்லி பாடினாள். அல்லி - உயர்திணைப் பெண்பால் ஒருமைப் படர்க்கைப் பெயர். பாடினாள் - உயர்திணைப் பெண்பால் ஒருமைப் படர்க்கை வினைமுற்று. 3. உழவர் உழுகிறார். உழவர் - உயர்திணைப் பலர்பால் பன்மைப் படர்க்கைப் பெயர். 4. புறாப் பறக்கிறது. புறா - அஃறிணை ஒன்றன்பால் ஒருமைப் படர்க்கைப் பெயர் பறக்கிறது - அஃறிணை ஒன்றன்பால் ஒருமைப் படர்க்கை வினைமுற்று. 5. புறாக்கள் பறக்கின்றன. புறாக்கள் - அஃறிணைப் பலவின்பால் பன்மைப் படர்க்கைப் பெயர். பறக்கின்றன - அஃறிணைப் பலவின்பால் பன்மைப் படர்க்கை வினைமுற்று. குறிப்பு: எல்லாப் பெயர், வினைகளையும் இவ்வாறு சொல்லிப் பழகுங்கள் 6. நான் எழுதினேன். நான் - தன்மை ஒருமைப் பெயர். எழுதினேன் - தன்மை ஒருமை வினைமுற்று. 7. நாம் பாடுவோம் நாம் - தன்மைப் பன்மைப் பெயர். பாடுவோம் - தன்மைப் பன்மை வினைமுற்று. 8. நீ படிக்கிறாய். நீ - முன்னிலை ஒருமைப் பெயர். படிக்கிறாய் - முன்னிலை ஒருமை வினைமுற்று. 9. நீங்கள் படிக்கிறீர்கள். நீங்கள் - முன்னிலைப் பன்மைப் பெயர். படிக்கிறீர்கள் - முன்னிலைப் பன்மை வினைமுற்று. குறிப்பு: தன்மைக்கும் முன்னிலைக்கும் திணை பால் இல்லை. படர்க்கைக்கே திணை பால் உண்டு. பயிற்சி 1. உயர்திணைக்குரிய பால்கள் எவை? 2. ஒன்றன் பால் எத்திணைக்கு உரியது? 3. பலர்பால், பலவின்பால் - வேறுபாடு என்ன? 4. மரங்கள், தமிழர் - திணை பால் கூறுக. 5. நண்பர், நாம், பறவை - எண் இடங் கூறுக. 6. நாய், சிறுவர், மணிமேகலை - எண் கூறுக. 7. அவள், மரம், யான், குமரன், நீ - இடங்கூறுக. 8. இடப்பெயர்களை எடுத்துக் காட்டுக: 1) அதியமான் தகடூர்த் தலைவன். 2) அதியமான் ஒரு நாள் கஞ்சமலைக்குச் சென்றான். 3) அதியமான் அம்மலைச் சரிவில் ஒரு நெல்லி மரத்தைக் கண்ணுற்றான். 4) அதியமான் அந்நெல்லி மரத்தில் ஒரு பழம் மட்டும் இருக்கக் கண்டான். 5) அதியமான் அங்கிருந்த ஒரு பெரியவரால் அக்கனியின் பெருமையை அறிந்தான். 6) அதியமான் அக்கனியைப் பறித்தான். 7) அதியமான் அக்கனியை ஒளவையாருக்குக் கொடுத்தான். 8) ஒளவையார் அதியமானை வாயார வாழ்த்தினார். 9. நான் தமிழ் இலக்கணம் படிக்கிறேன். ‘நான்’ என்பதற்குப் பதில் நாம், நீ, நீர், அவன், அவள், அவர் என்னும் சொற்களைச் சேர்த்துப் பிழையில்லாமல் இவ்வாக்கியத்தைப் படியுங்கள். 3. சொற்றொடர் 1. சொற்றொடர் என்பது யாது? பழம் பழுத்தது. இதில் பழம் என்பது ஒரு சொல். பழுத்தது என்பது மற்றொரு சொல். இவ்விரண்டு சொற்களும் சேர்ந்து ஒரு கருத்து முடிகிறது. இவ்வாறு இரண்டு முதலிய சொற்கள் சேர்ந்து ஒரு கருத்து முடிவது சொற்றொடர் எனப்படும். சொற்கள் ஒன்றோடொன்று தொடர்வதால், இது சொற்றொடர் எனப் பெயர் பெற்றது. சொற்றொடர் வாக்கியம் எனவும் வழங்கும். நான் பாடம் படித்தேன். இது மூன்று சொற்கள் கொண்ட வாக்கியம். நான் தமிழ்ப் பாடம் படித்தேன். இது நான்கு சொற்கள் கொண்ட வாக்கியம். 2. எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் பூனை பாலைக் குடித்தது. இந்த வாக்கியத்தில் மூன்று சொற்கள் உள்ளன. 1. பயனிலை இவ்வாக்கியத்தில் வினைமுற்று எது? குடித்தது என்பது வினைமுற்று. இது வாக்கியத்தில் பயன் நிற்கும் இடம் ஆகும். அதனால் ,‘குடித்தது’ என்னும் சொல் பயனிலை எனப்படும். 2. எழுவாய் ‘குடித்தது’ என்னும் பயனிலைக்கு முன் எது குடித்தது? என்று வினவினால் வரும் விடையே எழுவாய் எனப்படும். (எழுவாய் - பயன் எழுவதற்கு வாயாக உள்ளது. வாய் - இடம். எழுவாய் - பயன் எழும் இடம்.) எது குடித்தது? பூனை குடித்தது. ‘எது குடித்தது’ என்னும் வினாவுக்கு விடையாகப் பூனை என்பது வருவதால், இந்த வாக்கியத்தில் பூனை என்னும் சொல் எழுவாய். 3. செயப்படுபொருள் பூனை பாலைக் குடித்தது. இந்த வாக்கியத்தில், ‘பூனை எதைக் குடித்தது?’ என்று வினவினால் வரும் விடையே செயப்படு பொருள் எனப்படும். (செயப்படுபொருள் - எழுவாயால் செய்யப்படும் பொருள்.) பூனை எதைக் குடித்தது? பாலைக் குடித்தது. பால் - செயப்படுபொருள் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள், ஆகிய மூன்று சொற்களும் சொற்றொடர் அல்லது வாக்கியத்தின் உறுப்புக்களாகும். பெரும்பாலும் வாக்கியத்தில் எழுவாய் முதலிலும் பயனிலை ஈற்றிலும், செயப்படுபொருள் இடையிலும் நிற்கும். பூனை பாலைக் குடித்தது. இவ்வாக்கியத்தில், பூனை - எழுவாய் முதலிலும், குடித்தது -பயனிலை ஈற்றிலும், பால் - செயப்படுபொருள் இடையிலும் இருத்தலை அறிக. பயிற்சி 1. உங்கள் பாடத்தில் வரும் வாக்கியங்களில் உள்ள எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்களைக் கண்டறிக. 2. கீழ்வரும் வாக்கியங்களில் உள்ள எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்களைக் குறிப்பிடுக: 1. திருவள்ளுவர் திருக்குறளைச் செய்தார். 2. திருக்குறள் தமிழர் ஒழுக்கங் கூறுகிறது. 3. தமிழர் ஒவ்வொருவரும் கட்டாயம் திருக்குறள் படிக்கவேண்டும். 4. திருக்குறள் படித்தால் சிறப்புற வாழலாம். 5. நீங்கள் நாளொன்றுக்கு ஒரு குறளாவது மனப்பாடம் செய்யுங்கள். 6. குறளின் பெருமையை உணருங்கள். 7. குறள் நெறியை உலகம் முழுவதும் பரப்புங்கள். 8. குறள் வழி நடங்கள். 3. கோடிட்ட இடங்களை நிரப்புக: 1. பரணர் பாடினார். 2. பாடம் கற்பிக்கிறார். 3. செல்வன் இலக்கணம் . 4. - பாட்டு எழுதுகிறேன். 5. - பாடுகிறாய். 6. நாம் நிலத்தை -- . 4. கீழ்வரும் பயனிலைகளுக்கு ஏற்ற எழுவாய், செயப்படுபொருளைக் குறிப்பிடுக: கட்டினாள், பறித்தாள், ஊதுகிறேன், கற்கிறான், குடிக்கிறாய், கொத்துகிறது. 3. நிறுத்துக் குறிகள் வேலா! நீ போய், சீலனை அழைத்துவா. இவ்வாக்கியத்தில் மூன்று குறிகள் இடப் பட்டுள்ளன அல்லவா? அவை எதற்காக இடப்பட்டுள்ளன? படிக்கும்போது எந்த இடத்தில் எவ்வளவு நேரம் நிறுத்திப் படிக்க வேண்டும் என்பதை அறிவிக்கும் குறிகள் அவை. எனவே, அவை நிறுத்துக் குறிகள் எனப்படும். நீங்கள் அக்குறிகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, அவற்றிற்கேற்ப நிறுத்தும் இடங்களில் நிறுத்திப் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் படிப்போர்க்கும் கேட்போர்க்கும் பொருள் நன்கு விளங்கும். 1. ( . ) இது முற்றுப்புள்ளி எனப்படும். இது வாக்கியத்தின் முடிவில் இடப்படுவது. இங்கு நான்கு மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும். இது கருத்து முடிந்துவிட்டது என்பதைத் தெரிவிக்கும் குறியாகும். குறிப்பு: நமது கைந்நொடிப் பொழுது அல்லது கண்ணிமைப் பொழுது ஒரு மாத்திரை நேரம் ஆகும். காட்டு: பாவை பாட்டுப் பாடினாள். பரணன் பந்து ஆடினான். 2. (;) இஃது அரைப்புள்ளி எனப்படும். ஒரே எழுவாய்க்குப் பல பயனிலைகள் வந்தால், அப் பயனிலைகளை அடுத்து அரைப்புள்ளி இடவேண்டும். இங்கு இரண்டு மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும். காட்டு: பரணர் பாட்டுப் பாடினார்; பரிசில் பெற்றார்; பைந்தமிழ் வளர்த்தார். ‘பாடினார், பெற்றார்’ என்னும் பயனிலைகளை அடுத்து அரைப்புள்ளி .இட்டிருத்தலை அறிக. பாட்டுப் பாடினதும், பரிசில் பெற்றதும், பைந்தமிழ் வளர்த்ததும் பரணரேயாவார். 3. (,) இது காற்புள்ளி எனப்படும். 1) பெயர்ச்சொற்கள் பல தொடர்ந்து வரும்போதும், 2) நீண்ட வாக்கியங்களில் உள்ள வினை யெச்சங்களை அடுத்தும், 3) ஆகையால், ஆனால், அதனால், எனவே முதலிய சொற்களை அடுத்தும் காற்புள்ளி இட வேண்டும். இங்கு ஒரு மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும். காட்டு: 1) புலவர், கூத்தர், பொருநர், பாணர், விறலியர் என்போர், பண்டு முத்தமிழையும் முறையாக வளர்த்து வந்தனர். புலவர், கூத்தர் முதலிய பெயர்கள் தொடர்ந்து வருதலை அறிக. 2) பரணர் பாட்டுப் பாடி, பரிசில் பெற்று, பைந்தமிழ் வளர்த்து வந்தார். பாடி, பெற்று - வினையெச்சங்கள் 3) எனக்குச் சரியாகப் பசிக்கவில்லை. அதனால் , நான் சாப்பிடவில்லை. அதனால் என்பதை அடுத்துக் காற்புள்ளி இட்டிருத்தலை அறிக. 4) ( ? ) இது வினாக்குறி எனப்படும். வினா வாக்கியங்களின் ஈற்றில் வினாக்குறி இட வேண்டும். இங்கு முற்றுப் புள்ளிக்கு நிறுத்துவது போலவே, நான்கு மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும். காட்டு: 1) நீ திருக்குறள் படிக்கிறாயா? 2) எட்டுத்தொகை நூல்கள் யாவை? 3) தமிழ் என்பதன் பொருள் என்ன? 4) நீ ஏன் நேற்று வரவில்லை? 5) யார் இங்கே குப்பை போட்டவன்? இவ் வினா வாக்கியங்களின் ஈற்றில் வினாக்குறி இட்டிருத்தலை அறிக. 5. ( ! ) இஃது உணர்ச்சிக்குறி எனப்படும். இரக்கம், வியப்பு, விளி ஆகிய இடங்களில் இக்குறி இடவேண்டும். (விளி - கூப்பிடுதல்.) காட்டு: 1) தமிழர்க்குள் ஒற்றுமை இல்லையே! (இரக்கம்) 2) தமிழ் எவ்வளவு இனிமையான மொழி! (வியப்பு) 3) முருகா! பள்ளிக்குப்போ. (விளி) 6. ( ‘ ’ ) இது மேற்கோட்குறி எனப்படும். (“ ”) இவ்வாறு இரட்டையாகவும் மேற்கோட்குறி இடப்படும். தாயார் மகனை எழுப்பி, ‘கண்ணே! போய்ப் பாடம் படி’ என்றார். கண்ணே, படி என்னும் இடத்தில் ‘’ இவ்வாறு குறி இடப்பட்டுள்ளது. பிறர் கூற்றையோ, பழமொழியையோ நாம் எடுத்தாளும்போது, அவற்றிற்கு மேற்கோட்குறி இடவேண்டும். ‘கண்ணே! போய்ப் பாடம் படி’ என்பது தாயார் கூற்று. அஃதாவது, தாயார் கூறினது. அதனால், அதற்கு மேற்கோட்குறி இடப்பட்டது. செய்யுளுக்கு இரட்டை மேற்கோட்குறியும், உரைநடைக்கும் பழமொழிக்கும் ஒற்றை மேற்கோட் குறியும் இட வேண்டும். காட்டு: ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, ‘நீங்கள் ஒருநாளும் படியாமல் இருத்தல் கூடாது. “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா”, என்று கூறுகிறது உலகநீதி. திருக்குறள், நாலடியார் முதலிய சிறந்த நூல்களைக் கற்று அறிவைப் பெற்றால், அடக்கம், பொறுமை முதலிய அருங்குணங்கள் தாமே அமையும். ‘நிறைகுடம் நீர் தளும்பாது’ என்பது பழமொழி’ என்று அறிவுரை கூறினார். இதில், ‘நீங்கள் . . . . பழமொழி’ என்பது ஆசிரியர் கூற்று. இதற்கு ஒற்றை மேற்கோட்குறி இடப்பட்டுள்ளது. ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா என்பது உலகநீதிச் செய்யுள். இதற்கு இரட்டை மேற்கோள்குறி இடப்பட்டுள்ளது. ‘நிறைகுடம் நீர் தளும்பாது’ என்பது பழமொழி. இதற்கும் ஒற்றை மேற்கோட்குறியே இடப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்து கொண்ட குறிகள்: 1. முற்றுப்புள்ளி . 2. அரைப்புள்ளி ; 3. காற்புள்ளி , 4. வினாக்குறி ? 5. உணர்ச்சிக்குறி ! 6. மேற்கோட்குறி ‘ ’ - “ ” என்னும் ஆறு குறிகள். இந்த ஆறு நிறுத்துக் குறி களும் வரும் இடங்கiள நன்கு தெரிந்து கொள்ளுங்கள். பயிற்சி 1. உங்கள் பாடத்தில் இக்குறிகள் இடப்பட்டுள்ள இடங்களை அறிந்து கொள்ளுங்கள். 2. இக் குறிகள் வரும் இடங்களில் நிறுத்த வேண்டிய நேரம் நிறுத்திப் படியுங்கள். 3. பின்வரும் பகுதியில் வேண்டிய இடங்களில் நிறுத்துக் குறிகளை இடுக: ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து மாணவர்களே நான் சொன்னதை நன்கு கவனித்தீர்களா நீங்கள் தாய் மொழியில் சிறந்த அறிவைப் பெறவேண்டும் மொழியின் அமைப்பே இலக்கணம் என்பது ஆகையால் நீங்கள் தமிழ் இலக்கணத்தை விரும்பிக் கற்க வேண்டும் அப்போதுதான் நமது முன்னோர்கள் நமக்காகச் செய்து வைத்துள்ள பத்துப் பாட்டு எட்டுத்தொகை திருக்குறள் நாலடியார் சிலப்பதிகாரம் தொல்காப்பியம் முதலிய பழந்தமிழ் நூல்களைப் படித்து இன்புறலாம். அவ்வரும் பெரும் நூல்களைக் கற்பதில் நம்மவர் கருத்தைச் செலுத்துவதில்லையே நீங்களாவது அவற்றைக் கற்று நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளுங்கள் அறிந்து நல்வாழ்வு வாழுங்கள் தாயினும் சிறந்தது தாய்மொழி என்பது பழமொழி அப்பழமொழியின் கருத்தைக் கடைப்பிடியுங்கள் என்று அறிவுரை கூறினார்.  பாகம் - 3 வள்ளுவர் தமிழ் இலக்கணம் - 3 நூல் அறிமுகம் சுட்டுவகை: அது அவை அவன் அவள் அவர் இது இவை இவன் இவள் இவர் - இச் சொற்களில் நிற்கும் அ, இ ஆகிய இரண்டும் சுட்டிக் காட்ட வந்தவை. ஆதலால் சுட்டெழுத்துக்கள். அவ் வீடு அப் பையன் அம் மாடு இவ் வீடு இப் பெண் இச் சாலை - இவற்றில் அ, இ என்பவை வந்து சுட்டுகின்றன. இரண்டு வகை அ, இ என்பவை சுட்டெழுத்துகளே. ஆயினும் ஒரு வேறுபாடு! அது என்ன? முதலாவதாக நிற்கும் சுட்டெழுத்துகள் ஒரே சொல்லில், சொல்லோடு சேர்ந்து நிற்கின்றன. இரண்டாவதாக நிற்கும் சுட்டெழுத்துகள், முன் நிற்கும் சொல்லோடு சேர்ந்து நில்லாமல், தனியே நிற்கின்றன. சொல்லோடு சேர்ந்து நிற்கும் சுட்டு, அகச்சுட்டு. சொல்லுக்குப் புறம்பே தனித்து நிற்கும் சுட்டு புறச்சுட்டு. இவற்றால் சுட்டு இருவகைப்படும். வினாவகை: இவற்றைப் போலவே எது, எவன், எப்படி என்பவற்றில் வரும் வினா எழுத்தும், எவ் வீடு, எப் பையன், எந் நேரம் என்பவற்றில் வரும் வினா எழுத்தும் ஒன்றாக இருப்பினும் சொல்லோடு சேர்ந்தும் சொல்லுக்குப் புறமாகவும் நிற்கின்றன. அதனால் சுட்டுப் போலவே இவ்வினாவும் அகவினா, புற வினா என இருவகைப்படும். உயிர்மெய் வகை: உயிர் எழுத்து, குறில் நெடில் என இருவகை. மெய் எழுத்து, வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவகை. உயிர்போல உயிர்மெய்க்குறில், உயிர்மெய் நெடில் என இருவகையும், மெய்போல வல்லின உயிர்மெய், மெல்லின உயிர்மெய், இடையின உயிர்மெய் என மூவகையும் ஆக ஐவகையாம். இனம் வகை: மரம் செடி கொடி என்கிறோம்; இவை நிலத் திணை எனப் பொதுவாக இருந்தாலும் தனித்தனி இனங்களே. குறிலும் நெடிலும் இனங்கள். அ, ஆ - ஓரினம். இ, ஈ, எ ஏ ஐ - ஓரினம் உ ஊ ஒ ஓ ஒள - ஓரினம் க ச ட த ப ற - வல்லினம் ; ங ஞ ண ந ம ன - மெல்லினம்; ய ர ல வ ழ ள - இடையினம் வல்லினத்தை அடுத்து வரும் மெல்லினம் - ஓரினம். கங, சஞ, டண - போல இடையினம் ஆறும் ஒரே இனம் இனம் - ஒத்துள்ள தன்மையது. காலவகை: படித்தான் - இறந்தகாலம் (கடந்து போன காலம்) படிக்கிறான் - நிகழ்காலம் (நடைபெறுகின்ற காலம்) படிப்பான் - எதிர்காலம் ( வர உள்ள காலம்) கட்டுரை வகை: அறிக்கை - பிறர் அறியுமாறு வெளியிடும் செய்தி. கட்டுரை - வரம்பு செய்து எழுதும் செய்தி (கட்டு உரை) நடவடிக்கை - நிகழும் நிகழ்ச்சி முறையை உரைப்பது. கதை - புனைந்து உரைக்கும் வரலாறு, இட்டுக் கட்டும் செய்தி. இன்ப அன்புடன், இரா. இளங்குமரன். 1. எழுத்து பூ - என்பது ஓர் எழுத்து. ப, பா, பு, பூ - எனக் காண்க. மல்லிகைப் பூ முல்லைப் பூ அல்லிப் பூ தாமரைப் பூ என்னும் பொழுது பூ என்பது, மல்லிகை முதலியவற்றின் பூவைக் குறிக்கிறது. மல்லிகை, முல்லை, அல்லி, தாமரை என்னும் நான்கினும் உள்ள பூ என்பது ஒரு பொருளாகையால், இங்குப் பூ என்பது சொல் எனப்படும். பூ என்பது, ஒரு பொருளைக் குறிப்பதால், அது பெயர்ச்சொல் எனப்படும். ஒரு பொருளைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். எனவே, 'பூ' என்பது ஓர் எழுத்தாகவும், ஒரு சொல்லாகவும் உள்ளது. பூ என்னும் எழுத்து ஒரு சொல்லையும், அச்சொல் ஒரு பொருளையும் உணர்த்துகின்றன. எனவே, எழுத்து, சொல், பொருள் என்பன பற்றியும், செய்யுள் இயற்றுதல், அதனை அணிசெய்தல் என்பன பற்றியும் அறியவும், பிழையறப் பேசவும், இனிய உரைநடை எழுதவும், அழகிய செய்யுள்கள் இயற்றவும் கற்பிப்பது தமிழ் இலக்கணமாகும். தமிழ் இலக்கணமானது, எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் என ஐவகைப்படும். எழுத்துக்களைப் பற்றிக் கூறுவது எழுத்திலக்கணம் எனப்படும். சொற்களைப் பற்றிக் கூறுவது சொல்லிலக்கணம் எனப்படும். வாழ்க்கை நிலையைப் பற்றிக் கூறுவது பொருள் இலக்கணம் எனப்படும். செய்யுள் இயற்றுவது பற்றிக் கூறுவது யாப்பிலக்கணம் எனப்படும். மொழியினை அணி செய்வது பற்றிக் கூறுவது அணி இலக்கணம் எனப்படும். பொருள், யாப்பு, அணி ஆகிய இலக்கணம் பற்றி மேல் வகுப்புக்களில் படிக்கலாம். எழுத்தும் சொல்லும் பற்றி இங்குப் படிப்போம். உயிரெழுத்து, மெய்யெழுத்து ஆய்தவெழுத்து, உயிர்மெய்யெழுத்து எனத் தமிழ் எழுத்துக்கள் நான்கு வகைப்படும். அஃதென்ன? - என்பதில், அ - உயிரெழுத்து ன் - மெய்யெழுத்து தெ - உயிர்மெய்யெழுத்து ஃ - ஆய்தவெழுத்து இந் நால்வகை எழுத்துக்களும் இன்ன என்பதை நீங்கள் முன்னரே அறிவீர்கள். குறில், நெடில் என, உயிரெழுத்து இரண்டு வகைப்படும். வலி, மெலி, இடை என, மெய்யெழுத்து மூன்று வகைப்படும் என்பது உங்கட்கு முன்னரே தெரியும். 1. சுட்டெழுத்து அது மாடு. அவன் யார்? அவள் எங்கே? என்பதில், அ - என்பது, சுட்டெழுத்து எனப்படும். அது என, ஒரு பொருளைச் சுட்டிக் காட்டுவதால் அ - என்பது சுட்டெழுத்து எனப்பட்டது. அ, இ, உ - இம் மூன்றும் சுட்டெழுத்துக்கள் என்பது உங்கட்கு முன்னரே ஒருவாறு தெரியும். இங்கு விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். அவன் என்னும் சொல்லில் உள்ள அ என்னும் சுட்டெழுத்து அச் சொல்லின் உறுப்பாக உள்ளது. அஃதாவது, அச் சொல்லின் ஓர் எழுத்தாக உள்ளது. எனவே, இது அகச்சுட்டு எனப்படும். அப் பையன் - என்பதில், அ என்னும் சுட்டெழுத்து, பையன் என்னும் சொல்லின் புறத்தே உள்ளது. அதாவது, பையன் என்னும் சொல்லின் எழுத்துக்களுள் ஒன்றாக இல்லாமல், அச்சொல்லின் வேறாக உள்ளது. எனவே, இது புறச்சுட்டு எனப்படும். ஒரு சொல்லின் புறத்தே இருந்து, அச்சொல்லைச் சுட்டிக் காட்டுதல் புறச்சுட்டு ஆகும். அகம் - உள்ளே, சொல்லினுள், புறம் - வெளியே, சொல்லின் வேறாக. அகச்சுட்டு - சுட்டெழுத்து ஒரு சொல்லின் அகத்தே வந்து, அச்சொல்லின் பொருளைச் சுட்டுவது. புறச்சுட்டு - சுட்டெழுத்து ஒரு சொல்லின் புறத்தே வந்து, அஃதாவது அச்சொல்லை அடுத்து வந்து, அச்சொல்லின் பொருளைச் சுட்டுவது. காட்டு: அகச்சுட்டு புறச்சுட்டு அவன் அப்பையன் இவன் இப்பையன் உவன் உப்பையன் - எனக் காண்க. இச் சுட்டெழுத்துக்கள் ஐம்பாலிலும் வரும். காட்டு: அகச்சுட்டு புறச்சுட்டு அவன் அப்பையன் - ஆண்பால் அவள் அப்பெண் - பெண்பால் அவர் அம்மக்கள் - பலர்பால் அது அச்செடி - ஒன்றன்பால் அவை அம்மரங்கள் - பலவின்பால் இ, உ - என்பவற்றையும் இவ்வாறே கொள்க. குறிப்பு: உ - என்னும் சுட்டெழுத்து இப்பொழுது வழக்கில் வருதல் இல்லை; செய்யுளில் வரும். அ - சேய்மையில் உள்ள பொருளையும், இ - அண்மையில் உள்ள பொருளையும், உ - நடுவிலும் மேலும் பின்னும் உள்ள பொருளையும் சுட்டும். சேய்மை - தூரம். அண்மை - பக்கம். 2. வினாவெழுத்து அஃது என்ன? அவன் யார்? அவள் எங்கே? என்பவற்றில் என்ன, யார், எங்கே - என்பன வினாச் சொற்கள். அச்சொற்களின் முதலிலுள்ள எ, யா - என்பன வினா எழுத்துக்கள். எ, ஏ, ஆ, ஓ, யா - என்னும் ஐந்தும் வினாவெழுத்துக்கள் என்பதை முன் வகுப்பில் படித்தீர்கள். சுட்டெழுத்துக்களைப் போலவே, இவ் வினாவெழுத்துக்களும் சொல்லின் அகத்தும், புறத்தும் வரும். அகத்தில் வரும் வினாவெழுத்து - அகவினா எனப்படும். புறத்தில் வரும் வினா வெழுத்து - புறவினா எனப்படும். இவ்வினாவெழுத்துக்கள் ஐந்தனுள் எ, யா - மொழிக்கு முதலில் அகத்தும், புறத்தும் வரும். ஏ - மொழிக்கு முதலில் அகத்தும், ஈற்றில் புறத்தும் வரும். ஆ, ஓ - மொழிக்கு ஈற்றில், புறத்தில் மட்டும் வரும். மொழி - சொல். காட்டு: அகவினா புறவினா எழுத்து எவன்? எப்பையன்? - எ யாவர்? யாங்ஙனம்? - யா ஏன்? ஏது? அவனே? - ஏ அவனா? - ஆ அவனோ? - ஓ குறிப்பு: ஏ - வினா. 'அவனே?' என்பது போல, சொல்லின் ஈற்றில் வருதல் வழக்கில் அருகிவிட்டது. சுட்டெழுத்துக்களைப் போல, இவ்வினா வெழுத்துக்களும் ஐம்பாலிலும் வரும். காட்டு: அகவினா புறவினா எவன்? எப்பையன்? எவள்? எப்பெண்? எவர்? எப்பெண்டிர்? எது? எக்குதிரை? எவை? எச்செடிகள்? எ- ஐம்பாலிலும் வந்தது. யாவன்? யாது? யாவள்? யாவை? யாவர்? யா - ஐம்பாலிலும் அகவினாவாக வந்தது. யா - புறவினாவில் ஐம்பாலிலும் வராது. அவனா? அவனோ? அவளா? அவளோ? அவரா? அவரோ? அதுவா? அதுவோ? அவையா? அவையோ? ஆ, ஓ - ஐம்பாலிலும் புறவினாவாக வந்தன. பயிற்சி 1. சுட்டெழுத்து, வினாவெழுத்து - இலக்கணம் என்ன? 2. அகச்சுட்டு, புறச்சுட்டு - வேறுபாடென்ன? 3. அகத்தும் புறத்தும் வரும் வினாவெழுத்துக்கள் எவை? 4. புறத்து மட்டும் வரும் வினாவெழுத்துக்கள் எவை? 5. உ, ஏ - இவற்றின் சிறப்பு என்ன? 6. சுட்டும் வினாவும் எப்பொருளில் வரும்? 7. உங்கள் பாடத்தில் வந்துள்ள சுட்டு வினாக்களைக் கண்டறிக. 8. அகம் புறம் சுட்டு வினாக்களை எடுத்துக் காட்டுக: 1. அவர் இன்னும் வரவில்லையா? 2. யார் இதை இங்கே வைத்தவர்? 3. சிலப்பதிகாரம் யார் செய்தது? 4. ஏன் அச்செடிக்குத் தண்ணீர் ஊற்றவில்லை? 5. இங்குப் பணம் ஏது? 6. நீ திருக்குறள் படித்து வருகிறாயா? 7. இக்கருத்துடைய குறள் எது? 8. அகம் புறம் சுட்டு வினாக்களை அறிவது யாங்ஙனம்? 9. கோடிட்ட இடங்களில் ஏற்ற சுட்டு வினாச் சொற்களை அமைக்க. 1. மல்லிகைப்பூ - நிறம்? 2. -- வரைந்த படம்-- ? 3. ஊர்- ? 4. - யாருடைய பெட்டி? 5. -- நேற்று --வரவில்லை? 6. நமது தாய் மொழி - ? 7. -- உன்னுடைய - ? 8. திருக்குறள் --- செய்தது? 3. உயிர்மெய்யின் வகை உயிரெழுத்து - 12 அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள. மெய்யெழுத்து - 18 க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன். அங்கு, ஆங்கு அ - குறுகிய ஓசை யுடையது. ஆ - நீண்ட ஓசை யுடையது. குறுகிய ஓசையுடைய எழுத்து - குறில்,அல்லது குற்றெழுத்து எனப்படும். நீண்ட ஓசையுடைய எழுத்து - நெடில் அல்லது நெட்டெழுத்து எனப்படும். உயிரெழுத்துப் பன்னிரண்டனுள், அ, இ, உ, எ, ஒ - குறில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள - நெடில். க் + அ - க அ - உயிரெழுத்து க் - மெய்யெழுத்து க - உயிர்மெய்யெழுத்து குறில், நெடில் என்னும் இவ்விருவகை உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக் களுடன் சேர்ந்தே உயிர்மெய்யெழுத்துக்கள் உண்டாவதால், உயிர்மெய் எழுத்துக்களினும் - குறில், நெடில் என்னும் பிரிவு உண்டு. க் - என்னும் மெய்யெழுத்துடன் - அ, இ, உ, எ, ஒ என்னும் உயிர்க்குறில்கள் சேர்ந்து, க, கி, கு, கெ, கொ என்னும் உயிர்மெய்க் குறில்கள் உண்டாகின்றன. இவ்வாறே, ங் ச் - முதலிய மற்றை 17 மெய் யெழுத்துக்களுடனும் உயிர்க் குறில் ஐந்தும் கூடி, உயிர்மெய்க் குறில்கள் உண்டாகும். மெய் - 18. உயிர்க்குறில் - 5. ஆக, உயிர்மெய்க்குறில் (18 X 5 = 90) தொண்ணூறு. இவ்வாறே, க் என்னும் மெய்யுடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் நெட்டுயிர்கள் கூடிக் கா, கீ, கூ, கே, கை, கோ, கௌ என்னும் உயிர்மெய் நெடில்கள் உண்டாகின்றன. இவ்வாறே, ங், ச் - முதலிய மற்றை மெய்களுடனும், நெட்டுயிர்கள் ஏழும் கூடி, உயிர்மெய் நெடில்கள் உண்டாகும். உயிர்மெய் நெடில் (18 X 7 = 126) -நூற்றிருபத்தாறு. உயிர் - 12 மெய் - 18 உயிர்மெய் எழுத்துக்கள் (18 X 12 = )- 216 உயிர்மெய்க்குறில் (18 X 5 = ) - 90 உயிர்மெய் நெடில் (18 X 7 = ) - 126 உயிர்மெய்யெழுத்து - 216 வள்ளி வண்ணம் தீட்டினாள். தீட்டினாள்: ட் - வல்லிய ஓசையுடையது. வண்ணம்: ண் - மெல்லிய ஓசையுடையது. வள்ளி : ள் - வல்லோசையும் மெல்லோசையும் இன்றி அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை யுடையது. வல்லிய ஓசை உடையது வல்லெழுத்து எனப்படும். மெல்லிய ஓசை உடையது மெல்லெழுத்து எனப்படும். இடைத்தரமான ஓசை உடையது இடை யெழுத்து எனப்படும். வல்லெழுத்து - வல்லினம், வலி எனவும், மெல்லெழுத்து - மெல்லினம், மெலி எனவும், இடையெழுத்து - இடையினம், இடை எனவும் வழங்கும். வல்லினம் - க் ச் ட் த் ப் ற் மெல்லினம் - ங் ஞ் ண் ந் ம் ன் இடையினம் - ய் ர் ல் வ் ழ் ள் இவை, க ச ட த ப ற ங ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள - என்றே வழங்கப்படும். மெய்யெழுத்து மூன்று வகைப்பட்டது போலவே, மெய்யும் உயிரும் கூடி உண்டான உயிர்மெய் எழுத்தும், வல்லின உயிர்மெய் மெல்லின உயிர் மெய் இடையின உயிர்மெய் - என, மூன்று வகைப்படும். வல்லின உயிர் மெய்(6 X 12 = ) - 72 மெல்லின உயிர்மெய்(6 X 12 = ) - 72 இடையின உயிர்மெய் (6 X 12 = ) - 72 ஆக உயிர்மெய் - 216 ஆறு வல்லெழுத்தோடும், பன்னிரண்டு உயிரும் தனித்தனி கூடுதலான, வல்லின உயிர் மெய் (6 X 12 = ) - 72 ஆயின. மெல்லின, இடையின உயிர்மெய்களும் இவ்வாறே. குறில், நெடில் என்னும் உயிர்வகையாலும், வலி, மெலி, இடை என்னும் மெய்வகையாலும், 1. உயிர்மெய்க் குறில் - 90 2, உயிர்மெய் நெடில் - 126 - 216 3. வல்லின உயிர்மெய் - 72 4. மெல்லின உயிர்மெய் - 72 -216 5. இடையின உயிர்மெய் - 72 என, உயிர்மெய் எழுத்துக்கள் ஐந்து வகைப்பட்டன. உயிர்மெய்க் குறில் - குற்றுயிர் மெய் எனவும், உயிர்மெய் நெடில் - நெட்டுயிர் மெய் எனவும் வழங்கப் பெறும். குறிப்பு: இவ்வகை உயிர்மெய்யினையும், க - வல்லின உயிர்மெய்க் குறில் கா - வல்லின உயிர்மெய் நெடில் ங - மெல்லின உயிர்மெய்க் குறில் ஙா - மெல்லின உயிர்மெய் நெடில் ய - இடையின உயிர்மெய்க் குறில் யா - இடையின உயிர்மெய் நெடில் என, அறுவகையாகவும் கொள்ளலாம். பயிற்சி 1. உயிரெழுத்து எத்தனை வகைப்படும்? 2. உயிர் மெய்க் குறில் என்பது யாது? அது எத்தனை? 3. மெய்யெழுத்து எத்தனை வகைப்படும்? 4. வல்லின உயிர்மெய் எத்தனை? எப்படி? 5. உயிர்மெய் ஐந்து வகைப்படும். எங்ஙனம்? 6. உயிர்மெய் அறுவகைப்படும். எங்ஙனம்? 7. உங்கள் பாடத்தில், இவ்வை வகை உயிர்மெய் களையும் கண்டறிக. 8. மாதவி - இச்சொல்லிலிருந்து, ஐவகை உயிர் மெய்கட்கும் எடுத்துக்காட்டுத் தருக. 9. ‘சாதலி னின்னாத தில்லை’ - இதிலிருந்து அறு வகை உயிர்மெய்கட்கும் ஒவ்வோர் எடுத்துக் காட்டுத் தருக. 4. இனவெழுத்து புலியும் பூனையும் ஓரினம். நாயும் நரியும் ஓரினம். தென்னையும் பனையும் ஓரினம். நெல்லும் புல்லும் ஓரினம். என்பது போலவே, எழுத்துக்களும் இரண் டிரண்டு ஓரினமாகும். புலியைப் போன்ற உருவம் உடையது பூனை. நாயைப் போன்ற உடலமைப் புடையது நரி. தென்னை போலக் கிளையின்றி உயர்ந்தோங்கியது பனை. நெற் பயிர்க்குள் முளைக்கும் ஒருவகைப் புல்லும் நெற்பயிர் போலவே இருக்கும். இவ்வாறே, தமிழ் எழுத்துக்களும் - மார்பு, கழுத்து முதலிய பிறக்கும் இடம், இதழ், நா முதலிய பிறக்கும் முயற்சி, மாத்திரை, வடிவம் ஆகியவற்றால், இரண்டிரண்டு ஓரினம் ஆகும். இஃது இனவெழுத்து எனப்படும். உயிர்களுள், குறிலுக்கு - நெடில் இனமாகும். குறிலின் நீண்ட ஓசையே நெடில். குறில் இல்லாத ஐகார ஒளகாரங்கட்கு (ஐ, ஒள) முறையே இகரமும் உகரமும் (இ, உ) இனமாகும். காட்டு: அ ஆ எ ஏ ஐ இ இ ஈ ஒ ஓ ஒள உ உ ஊ - எனக் காண்க. சொல்லில் வரும்போது, ஐகார ஒளகாரங்களைப் போலவே, மற்றவையும் - நெடில் முன்னும், குறில் பின்னுமாக வரும். குறிப்பு: இவ்வாறு, உயிர்கள் - நெடில் முன்னும் குறில் பின்னுமாக அளபெடையில் வரும். காட்டு: ஆ அ ஈ இ ஏ எ ஐஇ ஊ உ ஓ ஒ ஒள உ இவ்வாறே, அளபெடையில், உயிர்மெய் நெடிலுக்கும் அந்தந்த உயிர்க்குறிலே இனமாகும். அளபெடை இன்னவென்பதை ஆசிரியரைக் கேட்டு ஒருவாறு தெரிந்துகொள்க. காட்டு: “ஏரின் உழாஅர் உழவர்” (குறள்) “துப்பாய தூஉ மழை” (குறள்) உழாஅ தூஉ - எனக் காண்க. மெய்களுள், வல்லெழுத்துக்கு மெல்லெழுத்து இனமாகும். இடையெழுத்துக்களுக்கு இனம் இல்லை. வல்லெழுத்தும் மெல்லெழுத்தும் எழுத்து வரிசை யில் உள்ளவாறு: க ங த ந ச ஞ ப ம ட ண ற ன - என வரும். ஆனால், சொல்லில் வரும்போது, எழுத்து வரிசையில் உள்ள முறை மாறி, மெல்லெழுத்து முன்னும் வல்லெழுத்துப் பின்னுமாக வரும். அவ்வாறு வரும்போது, மெல்லெழுத்து மெய்யாகவும் (ங்), வல்லெழுத்து உயிர்மெய்யாகவும் (க) வரும். காட்டு: திங்கள் - ங்க பஞ்சு - ஞ்சு வண்டு - ண்டு பந்து - ந்து கம்பு - ம்பு கன்று - ன்று - என வரும். சூத்திரம்: “குறிலுக்கு நெடிலும் ஐஒளக் குஉவும், வலிக்கு மெலியும் இனமா கும்மே.” பயிற்சி 1. இனம் என்பது யாது? 2. இனம் என்பதற்கு இரண்டு எடுத்துக் காட்டுக்கள் தருக. 3. புலியும் பூனையும், தென்னையும் பனையும் எங்ஙனம் இனமாகும்? 4. ஊ, ஐ, த, ம - இவற்றின் இனவெழுத்துக்கள் யாவை? 5. எழுத்துக்கள் இரண்டு ஓரினம் ஆவதற்குக் காரணங்கள் யாவை? 6. உயிரினமும் மெய்யினமும் - எழுத்து வரிசையிலும், சொற்களிலும் எவ்வாறு நிற்கும்? 7. அஆனா, ஆஅல் - இடங்கூறு. 8. உயிரும் மெய்யும் இனமாக வருதலை, உங்கள் பாடத்தில் கண்டறிக. 5. மாத்திரை அவன் ஆவான். இவ்விரு சொற்களையும் உச்சரித்துப் பாருங்கள். அவன் - குறுகி ஒலிக்கிறது. ஆவான் - நீண்டு ஒலிக்கிறது. அ, வ - குற்றெழுத்துக்கள் ஆ, வா - நெட்டெழுத்துக்கள். அ - உயிர்க்குறில் வ - உயிர்மெய்க் குறில் ஆ - உயிர் நெடில் வா - உயிர்மெய் நெடில் இவ்வாறு குறுகியும் நீண்டும் ஒலிக்கும் எழுத்தொலியின் அளவு - மாத்திரை எனப்படும். கண் இமைப் பொழுது, அல்லது கைந்நொடிப் பொழுது - ஒரு மாத்திரை நேரம் ஆகும். அதாவது, நாம் இயல்பாகக் கண் இமைக்கும் நேரம், அல்லது கைவிரல்களால் நொடிக்கும் நேரம் - ஒரு மாத்திரை நேரம் ஆகும். குறிலுக்கு - மாத்திரை ஒன்று. நெடிலுக்கு - மாத்திரை இரண்டு. மெய்க்கும், ஆய்தத்திற்கும் - மாத்திரை அரை. அதாவது, குறில் - ஒரு மாத்திரை ஒலிக்கும். நெடில் - இரண்டு மாத்திரை ஒலிக்கும். மெய் - அரை மாத்திரை ஒலிக்கும். ஆய்தம் - அரை மாத்திரை ஒலிக்கும் என்பதாம். ஒலித்துப் பாருங்கள்: அ - (குறில்) - ஒரு மாத்திரை. ஆ - (நெடில்) - இரண்டு மாத்திரை. க் - (மெய்) - அரை மாத்திரை. ஃ - (ஆய்தம்) - அரை மாத்திரை. அழகு, ஆடாதே இவ்விரு சொற்களையும் உச்சரித்துப் பாருங்கள். முதற்சொல் - குறுகி ஒலிக்கிறது. இரண்டாவது சொல் - நீண்டொலிக்கிறது. அழகு- மூன்றெழுத்தும் குறில். மூன்றும் ஒரே அளவாக ஒலிக்கின்றன. அ - உயிர்க் குறில். ழ, கு - இரண்டும் உயிர்மெய்க் குறில். ஆடாதே - மூன்றெழுத்தும் நெடில். மூன்றும் ஒரே அளவாக ஒலிக்கின்றன. ஆ - உயிர் நெடில். டா, தே - உயிர்மெய் நெடில். எனவே, உயிர்க்குறிலும் உயிர்மெய்க் குறிலும் ஒரே அளவாக ஒலிக்கின்றன. க் + அ = க க் - மெய் - அரைமாத்திரை. அ - உயிர்க்குறில் - ஒரு மாத்திரை. எனவே, க - ஒன்றரை மாத்திரை ஓலிக்கவேண்டும். ஆனால், க - ஒரு மாத்திரைதான் ஒலிக்கிறது. அஃதாவது, க - என்னும் உயிர்மெய்யில் உள்ள, க் - என்னும் மெய் ஒலிப்பதில்லை. அ - என்னும் உயிர்க் குறில்தான் ஒரு மாத்திரை ஒலிக்கிறது. எனவே, க - ஒரு மாத்திரை ஒலியுடையதாயிற்று. அஃதாவது, உயிர்மெய்க்கு, உயிர்மாத்திரையே மாத்திரையாகும். உயிர்மெய்க் குறிலுக்கு - மாத்திரை ஒன்று. உயிர்மெய் நெடிலுக்கு - மாத்திரை இரண்டு. எனவே, உயிர்க்குறிலுக்கும் உயிர்மெய்க்குறிலுக்கும் - ஒரு மாத்திரை. உயிர் நெடிலுக்கும் உயிர்மெய் நெடிலுக்கும் - இரண்டு மாத்திரை. மெய்க்கும் ஆய்தத்திற்கும் - அரை மாத்திரை. நொடி நொடிக்க இரு விரல்களையும் ஒன்று சேர்த்தல் (உன்னல்) - கால் மாத்திரை நேரம் ஆகும். விரல்களை அழுத்துதல் (உறுத்தல்) - ஒரு கால் மாத்திரை நேரம். அழுத்திய விரல்களை நொடிக்க முறுக்குதல் - ஒரு கால் மாத்திரை நேரம். முறுக்கிய விரல்களை நொடித்தல் - ஒரு கால் மாத்திரை நேரம். எனவே, நொடித்தல் - நாற்கால் - ஒரு மாத்திரை. சூத்திரம்: “உன்னல் காலே, உறுத்தல் அரையே, முறுக்கல் முக்கால், விடுத்தல் ஒன்றே.” மெய்யும் ஆய்தமும் - விரல்களைச் சேர்த்து அழுத்தும் நேரம் ஒலிக்கும் என்பதாம். பயிற்சி 1. உயிர்க்குறிலுக்கு மாத்திரை என்ன? 2. அரைமாத்திரை உடைய எழுத்துக்கள் எவை? 3. மெய் எங்கு ஒலிப்பதில்லை? 4. உயிர்மெய் நெடிலுக்கு மாத்திரை என்ன? 5. அஃதேல் - இச்சொல்லில் உள்ள எழுத்துக்களின் மாத்திரையைக் கூறுக. 6. மாத்திரை என்பது யாது? 7. ஒரு மாத்திரை நேரம் என்பது யாது? 8. அரைமாத்திரை என்பது எது? 9. விரல்களை முறுக்கும்போது மாத்திரை என்ன? 10. ஐங்குறு நூறு - இச்சொல்லின் மாத்திரை என்ன? 2. சொல் 1. பெயர்ச்சொல் மாடு வந்தது மாடு - பெயர்ச்சொல். வந்தது - வினைச்சொல். மாடு - ஒரு பொருள். ஒரு பொருளைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். வந்தது - மாட்டின் தொழில். ஒரு பொருளின் தொழிலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். மரம் விழுந்தது. மரம் - பெயர்ச்சொல். மாடும் மரமும் - உயிருள்ள பொருள். மக்களும் உயிருள்ள பொருளே. பெட்டி உடைந்தது. பெட்டி - பெயர்ச்சொல். பெட்டி - உயிரில்லாத பொருள். உயிருள்ள பொருள், உயிரில்லாத பொருள் ஆகிய எல்லாப் பொருள்களையும் குறிக்கும் சொல்லெல்லாம் பெயர்ச் சொற்களே. பெயர்ச்சொற்கள்: அதியமான் தென்னை ஒளவையார் முல்லை பாணர் மண் யானை கல் புறா கடல் ஈ பெட்டி பாம்பு கால் புழு வேர் 1. திணை பாணன் பாடுகிறான். குதிரை ஓடுகிறது. குடம் உடைந்தது. பாணன் என்பது, பகுத்தறிவுள்ள மக்களுள் ஒருவனைக் குறிக்கிறது. குதிரை என்பது பகுத்தறி வில்லாத ஓர் உயிரைக் குறிக்கிறது. குடம் என்பது உயிரில்லாத ஒரு பொருளைக் குறிக்கிறது. மக்கள் உயர்திணை எனப்படுவர். மற்ற உயிர் உள்ளனவும், உயிர் இல்லனவும் அஃறிணை எனப்படும். திணை- கூட்டம். திணை - ஒழுக்கம் என்பர் தொல்காப்பியர். உயர்திணை - உயர்வாகிய திணை. அஃறிணை - அல்திணை; உயர்வு அல்லாத திணை. “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே.’ - தொல்காப்பியம் “மக்கள் உயர்திணை, மற்றவை அஃறிணை.” - என அறிக. சிவன், திருமால் முதலிய தெய்வப் பெயரும் உயர்திணையைச் சாரும். காட்டு: பொன்னன், பொன்னி, அலுவலர், மக்கள் உயர்திணை. மாடு, கோழி, மரம், மண், கல், வீடு அஃறிணை. 2. பால் பாணன் பாடினான். விறலி ஆடினாள். வள்ளல்கள் வழங்கினர். கோழி கூவுகிறது. இலைகள் உதிர்ந்தன. பாணன், விறலி, வள்ளல்கள் - உயர்திணை. கோழி, இலைகள் - அஃறிணை. பாணன் - ஆணைக் குறிக்கும் சொல் - ஆண்பால். விறலி - பெண்ணைக் குறிக்கும் சொல் - பெண்பால். வள்ளல்கள் - பலரைக் குறிக்கும் சொல் - பலர்பால். கோழி - ஒரு பொருளைக் குறிக்கும் சொல் - ஒன்றன்பால். இலைகள் - பல பொருளைக் குறிக்கும் சொல் - பலவின்பால். ஆண்பால் ஒன்றன்பால் பெண்பால் பலவின்பால் பலர்பால் - எனப் பால் ஐந்து வகைப்படும். பால் - பிரிவு. அதாவது, திணையின் பிரிவு - பால் எனப்படும். ஓர் ஆணைக் குறிக்கும் சொல் ஆண்பால் எனப்படும். ஒரு பெண்ணைக் குறிக்கும் சொல் பெண்பால் எனப்படும். ஆண்கள் பலரையோ, பெண்கள் பலரையோ அல்லது ஆண் பெண் இருவரும் சேர்ந்த பலரையோ குறிக்கும் சொல் பலர்பால் எனப்படும். காட்டு: மாணவர் - ஆண்கள் பலர் மாணவியர் - பெண்கள் பலர் மக்கள், பாட்டாளர் - ஆண் பெண் பலர் அஃறிணைப் பொருள்களில் ஆண்பால், பெண்பால் கொள்ளப்படுவதில்லை. காரணம், உயிரில் லாதவற்றுள் - ஆண் பெண் என்ற இப்பிரிவு இல்லை. உயிருள்ள வற்றிலும் பலவகைக்கு ஆண் பெண் பெயர்கள் இல்லை. எனவே, ஒரு பொருளைக் குறிக்கும் சொல் ஒன்றன்பால் எனவும், பல பொருளைக் குறிக்கும் சொல் பலவின்பால் எனவும் வழங்கப்பெறும். ஆண்பால், பெண்பால், பலர்பால் - இம்மூன்றும் உயர்திணை. ஒன்றன்பால், பலவின்பால் - இவ்விரண்டும் அஃறிணை. சூத்திரம்: “ஆண்பெண் பலரெனும் முப்பால் உயர்திணை ஒன்றே பலவெனும் இருபால் அஃறிணை.” காட்டு: பொன்னன், செல்வன் - ஆண்பால் பொன்னி, செல்வி - பெண்பால் உயர்திணை மாணவர், மக்கள் - பலர்பால் மாடு, மரம், சட்டி - ஒன்றன்பால் மாடுகள், மரங்கள், அஃறிணை சட்டிகள் - பலவின்பால் 3. எண் குயில் கூவுகிறது. மயில்கள் ஆடுகின்றன. குயில் - ஒரு பொருள். மயில்கள் - பல பொருள். ஒரு பொருளைக் குறிக்கும் பெயர் ஒருமைப் பெயர் எனப்படும். பலபொருளைக் குறிக்கும் பெயர் பன்மைப் பெயர் எனப்படும். ஒருமை, பன்மை என்பன, ஒன்று, இரண்டு என எண்ணுவதாகையால், இங்கு எண் எனப்படும். எனவே, ஒருமை பன்மை என, எண் இரு வகைப்படும். ஆண்பால் பெண்பால் - இம்மூன்றும் ஒருமை. ஒன்றன்பால் பலர்பால் பலவின்பால் - இவ்விரண்டும் பன்மை. காட்டு: குமணன், கண்ணகி, மாடு - ஒருமை. வீரர், மகளிர், மக்கள், மாடுகள் - பன்மை. 4. இடம் நான் பள்ளிக்கு வந்த போது நீ பழையனிடம் பேசிக்கொண்டு இருந்தாய். இதில், பேசுவோன் - நான் கேட்போன் - நீ பேசப்படுவோன் - பழையன் இம்மூவர் இடங்களும் முறையே தன்மையிடம், முன்னிலையிடம்,படர்க்கையிடம் எனப்படும். பேசுவோன் - தன்மை கேட்போன் - முன்னிலை பேசப்படுவோன் - படர்க்கை இத் தன்மை, முன்னிலைச் சொற்களும், ஒருமை பன்மை என்னும் எண் பெறும். நான், யான் - தன்மை ஒருமை நாம், யாம், நாங்கள், யாங்கள் - தன்மைப் பன்மை நீ - முன்னிலை ஒருமை நீர், நீங்கள், நீவிர் - முன்னிலைப் பன்மை அவன், அவள், அது - படர்க்கை ஒருமை அவர், அவை - படர்க்கைப் பன்மை மக்களைக் குறிக்கும் பெயர்களும், அதாவது மக்கட்பெயர்களும், மற்ற உயிருள்ளனவும், உயிரில்லனவும் ஆகிய எல்லாப் பொருள்களையும் குறிக்கும் பெயர்களும், அதாவது மற்ற எல்லாப் பொருட்களும் பெயர்களும் படர்க்கைப் பெயர்களே யாகும். நான் முதலிய தன்மைப் பெயர்களும், நீ முதலிய முன்னிலைப் பெயர்களும் அல்லாத, மற்ற எல்லாப் பெயர்களும் படர்க்கைப் பெயர்கள் ஆகும். இவற்றுள், ஆண்பால் பெயர்களெல்லாம் - அவன் எனவும், பெண்பால் பெயர்களெல்லாம் - அவள் எனவும், பலர்பால் பெயர்களெல்லாம் - அவர் எனவும், ஒன்றன்பால் பெயர்களெல்லாம் - அது எனவும், பலவின்பால் பெயர்களெல்லாம் - அவை எனவும் வழங்கப்படும். காட்டு: கண்ணன் ஒரு நாயைக் கண்டான். அவன் அதைக் கல்லால் எறிந்தான். அது அவனைக் கடிக்க வந்தது. இங்கே, ‘கண்ணன்’ என்னும் ஆண்பால் பெயருக்கு அவன் என்பதும், ‘நாய்’ என்னும் ஒன்றன்பால் பெயருக்கு அது என்பதும் வந்தமை காண்க. முருகன், அவன் - ஆண்பால் படர்க்கை. வள்ளி, அவள் - பெண்பால் படர்க்கை. மாணவர், அவர் - பலர்பால் படர்க்கை. மாடு, அது - ஒன்றன்பால் படர்க்கை. மரங்கள், அவை - பலவின்பால் படர்க்கை. அவன், அவள், அவர், அது, அவை - என்பன படர்க்கை இடப்பெயர் எனப்படும். இவ்வாறு சொல்லிப் பழகுங்கள்: பொன்னன் - உயர்திணை ஆண்பால் ஒருமைப் படர்க்கைப் பெயர். பொன்னி - உயர்திணைப் பெண்பால் ஒருமைப் படர்க்கைப் பெயர். உழவர் - உயர்திணைப் பலர்பால் பன்மைப் படர்க்கைப் பெயர். மயில் - அஃறிணை ஒன்றன்பால் ஒருமைப் படர்க்கைப் பெயர். மயில்கள் - அஃறிணைப் பலவின்பால் பன்மைப் படர்க்கைப் பெயர். பயிற்சி 1. பெயர்ச் சொல்லாவது யாது? 2. திணை, பால் - பொருளென்ன? 3. உயர்திணை, அஃறிணை - வேறுபாடென்ன? 4. பலர்பால், பலவின்பால் - வேறுபாடென்ன? 5. உயர்திணை, அஃறிணைக்குரிய பால்கள் எவை? 6. யானை, மலர், கடல், பேகன், தோழியர், பாடல்கள் - எண் கூறுக. 7. யான், மாடு, நீர், அவர் - இடங்கூறுக. 8. திணை பால் எண் இடங் கூறுக: தமிழகம் அவர்கள் மூவேந்தர் இளங்கோ காவிரி பாணர் மலர்கள் ஒளவை வீரர் மதுரை 2. வினைச்சொல் 1. வினைச்சொல்லாவது யாது? மாடு வந்தது மாடு - பெயர்ச்சொல் வந்தது - வினைச்சொல். வந்தது என்பது, மாட்டின் தொழிலைக் குறிக்கிறது. ஒரு பொருளைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் என்பதை முன்பு கண்டோம். ஒரு பொருளின் தொழிலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். வினை - தொழில். பெயர்ச் சொற்கள் - திணை, பால், எண் இடங்களோடு பொருந்திவரும் என்பதை முன்பு கண்டோம். பெயர்ச் சொற்களைப் போலவே, வினைச்சொற்களும் திணை, பால், எண் இடங்களோடு பொருந்திவரும். காட்டு: வந்தான் - ஆண்பால் வந்தாள் - பெண்பால் - உயர்திணை வந்தார்- பலர்பால் வந்தது - ஒன்றன்பால் - அஃறிணை வந்தன - பலவின்பால் இவை, ஐம்பால் படர்க்கை வினைமுற்றுகள். வந்தான் வந்தாள் - படர்க்கை ஒருமை வந்தது வந்தார் வந்தன - படர்க்கைப் பன்மை வந்தேன் - தன்மை ஒருமை வந்தோம் - தன்மை பன்மை வந்தாய் - முன்னிலை ஒருமை வந்தீர் - முன்னிலைப் பன்மை இவ்வினை முற்றுக்களை, அவன் வந்தான் நான் வந்தேன் அவள் வந்தாள் நாங்கள் வந்தோம் அவர் வந்தார் நீ வந்தாய் அது வந்தது நீர் வந்தீர் அவை வந்தன. என, மூவிடப் பெயர்களோடு பொருத்துக. 2. காலம் ஒரு தொழிலைக் குறிக்கும் சொல் வினைச் சொல் எனப்படும் என்பதை முன்பு கண்டோம். ஒரு பொருளின் தொழில் நிகழ்ச்சியே வினைச் சொல் எனப்படும். ஒரு வினைச் சொல்லில், தொழில் நிகழ்ச்சி முன்னமே நிகழ்ந்திருக்கும்; இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும்; இனிமேல் நிகழவிருக்கும். வினைச் சொல்லின் இம் மூன்று தொழில் நிகழ்ச்சியும் முக்காலம் எனப்படும். நேற்று நான் செய்யுள் படித்தேன். இன்று நான் உரைநடை படிக்கிறேன். நாளை நான் இலக்கணம் படிப்பேன். நேற்று என்பது - இறந்தகாலங் குறிக்கும் பெயர். இன்று என்பது - நிகழ்காலங் குறிக்கும் பெயர். நாளை என்பது - எதிர்காலங் குறிக்கும் பெயர். எனவே, படித்தேன் - இறந்தகால வினை. படிக்கிறேன்- நிகழ்கால வினை. படிப்பேன் - எதிர்கால வினை. நேற்றுப் படித்தேன் - தொழில் முடிந்த (இறந்த) காலம் இன்று படிக்கிறேன் - தொழில் நிகழ்கின்ற காலம். நாளை படிப்பேன் - தொழில் தொடங்காத காலம். தொழில் முடிந்த காலம் - இறந்த காலம். தொழில் நிகழ்கின்ற காலம் - நிகழ் காலம். தொழில் தொடங்காத காலம் - எதிர்காலம். எனவே, இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் - எனக் காலம் மூன்று வகைப்படும் என்பதாகும். காட்டு: வள்ளுவர் திருக்குறளைச் செய்தார். நாம் திருக்குறள் படிக்கிறோம். திருக்குறள் படித்தோர் சிறக்க வாழ்வார். வள்ளுவர் திருக்குறளை முன்பு செய்தார். நாம் அதை இப்போது படிக்கிறோம். படித்தோர் இனிமேல் சிறக்க வாழ்வார். எனவே, செய்தார் - இறந்தகால வினைமுற்று. படிக்கிறோம் - நிகழ்கால வினைமுற்று. வாழ்வார் - எதிர்கால வினைமுற்று. குறிப்பு: வினைமுற்றுக்கள் காலங்காட்டும் வகையினை, மேல்வகுப்பில் விரிவாகப் படிக்கலாம். பயிற்சி 1. வினைச் சொல்லாவது யாது? 2. பெயர்ச்சொல், வினைச்சொல் - வேறு பாடென்ன? 3. திணையும் பாலும் கூறுக: நடந்தான் மலர்ந்தன பறந்தது தைத்தாள் எழுந்தார் ஓடுகிறான் 4. எண்ணும் இடமுங் கூறுக: உண்டேன் ஓடிற்று படித்தார் காண்பாய் எழுதினீர் ஆடினோம் 5. உங்கள் பாடத்தில் வந்துள்ள முக்கால வினைச் சொற்களைக் கண்டறிக. 6. காலம் என்பது யாது? 7. இன்ன கால வினைச்சொல் எனக் குறிப்பிடுக: 1. ஒளைவயார் சங்க இறுதிக் காலத்தே இருந்தார். 2. அவர் தமிழ் முழுவதும் ஓதி உணர்ந்தார். 3. அவர் சிறந்த பாடல்கள் பாடினார். 4. பாவை அவற்றை நன்கு படிக்கிறாள். 5. அவள் நல்ல அறிவு பெறுவாள். 6. அவள் தான் கற்றதைப் பிறருக்குச் சொல்வாள். 7. அறிஞரால்தான் உலகம் இனிது நடக்கிறது. 8. நாம் அறிஞரை அன்புடன் போற்றுவோம். 3. முற்று, எச்சம் பாவை படம் எழுதினாள். பாவை படம் எழுதி முடித்தாள். பாவை எழுதின படம் அழகாக இருக்கிறது. எழுதினாள், எழுதி, எழுதின என்பன, பாவையின் தொழிலைக் குறிப்பதால், இவை வினைச் சொற்கள் எனப்படும். (1) வினைமுற்று இவற்றுள், எழுதினாள் என்பது, வினை முற்றி நிற்கும் சொல். எனவே, இது முற்றுவினை அல்லது வினை முற்று எனப்படும். வினைமுதலை உணர்த்தி, பால் முற்றி நிற்கும் வினை - முற்றுவினை எனப்படும். எழுதினாள் என்றதும், அவள் என்னும் வினை முதல் தானே பெறப்படுகிறது. வினைமுதல் - எழுவாய். எழுதினாள் என்பது, பெண்பாலை உணர்த்துகிறது. எனவே, எழுதினாள் என்பது, முற்றுவினை ஆகும். எழுதி, எழுதின என்பன, முற்றாத வினைச் சொற்கள். முற்றாதவினை எச்சவினை எனப்படும். எழுதி, எழுதின என்பவை, பாலுணர்த்த வில்லை. பாலுணர்த்தாத வினைச்சொல் எச்சவினை எனப்படும். (2) வினையெச்சம் எழுதி என்பது, முடித்தாள் என்னும் ஒரு வினையைக் கொண்டு முடிகிறது. ஆகையால், இது வினையெச்சம் எனப்படும். வினை எஞ்சி (குறைந்து) நிற்பது வினையெச்சம். வினையெச்சம் வினையைக் கொண்டு முடியும். காட்டு: முருகன் உண்டு மகிழ்ந்தான். வள்ளி பாடிக் களித்தாள். வீரர் வென்று மீண்டார். குதிரை ஓடி விழுந்தது. கிளைகள் ஒடிந்து விழுந்தன. உண்டு, பாடி, வென்று, ஓடி, ஒடிந்து என்னும் வினையெச்சங்கள், முறையே ‘மகிழ்ந்தான்’ முதலிய வினைச் சொற்களைக் கொண்டு முடிந்தமை காண்க. (3) பெயரெச்சம் எழுதின என்பது, படம் என்னும் பெயரைக் கொண்டு முடிகிறது. எனவே,இது பெயரெச்சம் எனப்படும். பெயரெச்சம் ஒரு பெயரைக் கொண்டு முடியும். பழுத்த பழம் பழுக்கின்ற பழம். பழுக்கும் பழம். எனப் பெயரெச்சம் முக்காலத்திலும் வரும். பழுத்த - இறந்தகாலப் பெயரெச்சம். பழுக்கின்ற -நிகழ்காலப் பெயரெச்சம். பழுக்கும் - எதிர்காலப் பெயரெச்சம். காட்டு: வினைமுற்று வினையெச்சம் பெயரெச்சம் உண்டான் உண்டு உண்ட விழுந்தது விழுந்து விழுந்த சென்றார் சென்று சென்ற ஆடினாள் ஆடி ஆடின போனார் போய் போன பறந்தன பறந்து பறந்த  கட்டுரைப் பகுதி "கற்க கசடற" என்றார் வள்ளுவர். கசடறக் கற்ற கல்வியறிவை எழுத்தின் மூலமே பிறர்க்கு அறிவித்தல் கூடும். கற்பது போல இன்றியமையாததே எழுதுவதும். எனவே, நீங்கள் கற்கும் போது கற்றதை எழுதிப் பழகி, எழுத்து வன்மையும் பெறுதல் வேண்டும். இதுபற்றியே உங்கள் பாடத் திட்டத்தில் கட்டுரைப் பயிற்சியும் சேர்க்கப்பட்டுள்ளது. கட்டுரையில், அதன் அமைப்பு முதன்மையானதாகும். அமைப்பு: 1. முன்னுரை, 2. செய்தி, 3. முடிவுரை என்பன கட்டுரையின் உறுப்புக்களாகும். இவ்வமைப்புடன் எழுதுவதே கட்டுரை எனப்படும். 1. முன்னுரை: செய்தியின் தலைப்பு வருமாறு, அச்செய்தியின் தொடர்பான கருத்துக்களை யுடையது. 2. செய்தி: கட்டுரைத் தலைப்பின் பொருள். கருத்துக்களின் வகைக் கேற்பச் செய்தியைப் பல பகுதியாகப் பகுத்தெழுத வேண்டும். 3. முடிவுரை : செய்தியின் சாரத்தைச் சுருக்கி எழுதுதல். இவ்வமைப்பின்படி, பிழையில்லாமல், சிறு சிறு வாக்கியங்களாக நல்ல தமிழ் நடையில் நன்கு எழுத வேண்டும். 'கடடுரையும் கைப்பழக்கம்' என்பதை நினைவு கூர்க. 1. அறிக்கை 1. பள்ளி ஆண்டு விழா பவானி, 20-2-67 இவ்வூர், அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழா, 18-2-67 பிற்பகல் 3-30 மணிக்குத் தொடங்கிற்று. தலைமை ஆசிரியை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வரவேற்புரையில், பள்ளி ஆண்டு விழாக் கொண்டாடு வதன் இன்றியமையாமையை அவர் எடுத்துரைத்தனர். இவ்வூர் ஊராட்சி ஒன்றிப்புக் கழகத் துணைத்தலைவி, திருவாட்டி க. நல்லம்மையார் அவர்கள் தலைமை தாங்கினர். பள்ளி மாணவியர் தலைவியால் ஆண்டறிக்கை படிக்கப்பட்டது. திருவாட்டி புலவர் பொன்னம்மையார் அவர்கள், 'சிலம்புச் செல்வி' என்பதுபற்றிச் சொற்பொழி வாற்றினர். அவர்தம் சொற்பொழிவில் இளங்கோவடிகளின் சொற் சுவையை வாரி வழங்கினர். பின்னர், மாணவியரின் ஆடல் பாடல்கள் நடைபெற்றன. ஆடல் பாடல்களிலும், பேச்சு, எழுத்து, ஓவியப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவியர்க்குத் தலைவியர் பரிசு வழங்கினர். தலைவியர், முடிவுரையில் மாணவியரின் திறமையினைப் பாராட்டியதோடு, இத்தகைய விழாக்கள் மாணவியரின் முயற்சிக்கும் திறமைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படும் என்றதொடு, பெண் கல்வியின் சிறப்பினையும் எடுத்துரைத்தார். தமிழாசிரியை நன்றி கூற, நாட்டு வாழ்த்துடன், மாலை 7-30மணிக்கு விழா இனிது முடிவுற்றது. குறிப்பு: இவ்வாறே பள்ளி ஆண்டு விளையாட்டு விழா, இலக்கிய மன்றத் தொடக்க விழா முதலியன பற்றி அறிக்கை எழுதிப் பழகுங்கள். 2. பாரதி திருநாள் கடிதம் 10, கம்பன் தெரு, காங்கயம், 18-9-1967 அன்புள்ள தோழி! நலம், 16-9-1967 அன்று, எங்கள் பள்ளியில் பாரதியார் விழாக் கொண்டாடினோம். பூந்தாள்களினால் அணி செய்தும், கோலமிட்டும் பள்ளியை அழகு செய்தோம். முற்பகல் 10-30 மணியிலிருந்தே ஒலிபெருக்கி, பாரதியார் பாடல்களை வாரி வழங்கிக்கொண் டிருந்தது. பிற்பகல் 3-30 மணிக்கு விழாத் தொடங்கிற்று. தலைமை ஆசிரியர் அவர்கள் அனைவரையும் வரவேற்றனர். ஊராட்சி ஒன்றிப்பு அதிகாரி, திரு. அ.செல்லப்பன் அவர்கள் தலைமை தாங்கிப் பாரதியார் போன்ற புலவர்களின் திருநாளைக் கொண்டாட வேண்டியதன் இன்றியமையாச் சிறப்பினை எடுத்தியம்பினர். புலவர், திரு. இளஞ்சேரன் அவர்கள், "பாரதியாரின் பாடல் திறம்" என்பது பற்றிப் பேசினர். அமரர் பாரதியாரின் பாடல்களை இனிய இசையுடன் பாடி, அப்பாடல்களின் சொற்சுவை பொருட்சுவைகளை இனிதெடுத் தியம்பினர். பின்னர், பாரதியார் பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குத் தலைவர் பரிசு வழங்கினர். தலைவர் முடிவுரைக்குப் பின், முதல் உதவி ஆசிரியர் நன்றி கூற, நாட்டு வாழ்த்துடன் மாலை 6-30 மணிக்கு விழா இனிது முடிந்தது. காலையில் பாரதியார் பட ஊர்வலம் வந்தது. உன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன். வராததன் காரணம் தெரியவில்லை. கா. பொன்னரசி அன்புள்ள, 15, பரணன் தெரு, கவிமணி.பவானி. குறிப்பு: மறைமலையடிகள், திரு.வி. க. போன்ற பெரு மக்களின் திருநாட் கொண்டாட்டங்களைப் பற்றி எழுதிப் பழகுங்கள். 2. கட்டுரை 1. வள்ளுவர் திருநாள் குறிப்பு: 1. முன்னுரை, 2. நோக்கம், 3. வள்ளுவர் திருநாள், 4. கொண்டாடும் முறை, 5. முடிவுரை. முன்னுரை பெரியோர்களின் திருநாளைக் கொண்டாடுதல் தொன்று தொட்ட மரபாகும். நம் முன்னோர்கள் - அரசர்கள், புலவர்கள் ஆகியோர் பிறந்த நாட்களைக் கொண்டாடி வந்தனர். அரசர் பிறந்த நாட் கொண்டாட்டம் பெருமங்கலம் எனப்படும். இன்னும் உலகில் எல்லா நாட்டு மக்களும் தத்தம் பெரியோர்கள் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர். தமிழர் கொண்டாடும் பெரியோர் திருநாட்களில், வள்ளுவர் திருநாள் முதன்மையான தாகும். நோக்கம் பெரியோர்கள் திருநாட்களைக் கொண்டாடுவதன் நோக்கம், அவர்தம் கொள்கைகளைப் பரப்புவதற்கும், அவற்றைப் பாதுகாத்தற்குமேயாகும். கிறித்துவர்கள் இயேசுநாதர் திருநாளையும், இசுலாமியர்கள் நபிகள் நாயகம் திருநாளையும் மற்றச் சமயத்தினர் அவரவர் சமயத் தலைவர் திருநாட் களையும் கொண்டாடுதல் இந்நோக்கம் பற்றியே ஆகும். வள்ளுவர் திருநாள் வள்ளுவர் திருநாளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? உலகப் பெருநூலாகிய, வாழ்க்கைச் சட்ட நூலாகிய திருக்குறளைச் செய்து, தமிழர் பெருமையை நிலைநாட்டிய வள்ளுவர் திருநாளைக் கொண்டாடு தல், தமிழ் மக்களின் நீங்காக் கடமையு ளொன்றாகும். கொண்டாடும் முறை தமிழ்ப் பொதுமக்களிடம் குறளைப் பரப்புவதே வள்ளுவர் திருநாள் கொண்டாடுவதன் நோக்கமாக இருத்தல் வேண்டும். ஆண்டுக் கொருமுறை வள்ளுவர் திருநாள் தொடங்கி, அவ்வாரத்தில் ஊர்தோறும் கொண்டாட வேண்டும். குறள் ஊர்வலம் வரவேண்டும். குறள் ஒப்பித்தல் போட்டி, குறள் கட்டுரைப் போட்டி, குறள் ஓவியப் போட்டிகள் நடத்திச் சிறுவர்கட்குக் குறளுணர்ச்சி யுண்டாக்க வேண்டும். குறட் கருத்துக்களைப் பொதுமக்களிடைப் பரப்பவேண்டும். எல்லோரையும் குறள் படிக்கும்படி தூண்ட வேண்டும். மே 24 ஆம் நாள் வள்ளுவர் திருநாள் விடுமுறை யாகும். சூன் மாதத்தில் வள்ளுவர் திருநாள் பள்ளியில் கொண்டாடலாம். முடிவுரை வள்ளுவர் குறட்கருத்துக்களைப் பரப்புவதே வள்ளுவர் திருநாள் கொண்டாட்டத் தின் நோக்கமாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் எல்லோரும் குறள் படிப்பதைக் குறிக்கோளாகக் கொள்ளும்படி செய்ய வேண்டும். வாழ்க வள்ளுவர் குறள்! குறிப்பு: இவ்வாறே, தொல்காப்பியர், இளங்கோவடிகள் முதலிய பெரும்புலவர்கள் திருநாட்கொண்டாட்டத்தைப் பற்றி எழுதிப் பழகுங்கள். 2. விடுதலை விழா குறிப்பு: 1. முன்னுரை, 2. அடிமை வாழ்வு, 3. விடுதலை வேட்கை, 4. விடுதலை விழா, 5. முடிவுரை. முன்னுரை திருநாட்கள் என்றால் சிறுவர்களுக்கே யன்றிப் பெரியவர்களுக்கும் கொண் டாட்டமே. திருநாட்களில் சில உணர்ச்சியுடன் கொண்டாடப்படுகின்றன. அத்தகைய திருநாட்களில் விடுதலைவிழா ஒன்றாகும். அடிமை வாழ்வு இன்று நம் நாட்டை நாமே ஆள்கிறோம். 15-8-1947க்குமுன் நம் நாட்டை அயல் நாட்டினராகிய ஆங்கிலேயர் ஆண்டு வந்தனர். ஆங்கிலேயர் இட்டதே இந்நாட்டின் சட்டமாக இருந்தது. நாம் அயலாரால் அடக்கி ஆளப்பட்டு வந்தோம். விடுதலை வேட்கை இந்நாட்டின் விடுதலைக்காகவே பிறந்த காந்தியடிகள் அடிமை வாழ்வை வெறுத்தனர். இந்நாட்டு மக்களுக்கு உரிமை உணர்ச்சியை ஊட்டினர். இந்நாட்டு மக்கள் விடுதலை வேட்கை கொண்டனர். ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து அறப் போர் புரிந்தனர். 15-8-1947 இல் நாம் விடுதலை அடைந்தோம். விடுதலை விழா அடிமை வாழ்விலிருந்து விடுதலை அடைந்த அந்நாளை நாம் ஆண்டு தோறும் உணர்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம். இக்கொண்டாட்டம் இனி முன்போல ஓர் அயல் நாட்டார்க்கு அடிமைப்படா திருத்தலை நினைவூட்டுவதாகும். முடிவுரை விடுதலை விழா இன்று பள்ளிப் பிள்ளைகளின் அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் திருநாளாக வேண்டும். பொதுமக்கள் ஒருங்கு கூடி இதனைக் கொண்டாட வேண்டும். குறிப்பு: காந்தி திருநாள், நேரு திருநாள் முதலியன பற்றி எழுதிப் பழகுங்கள். 3. பொங்கல் விழா குறிப்பு: 1. முன்னுரை, 2. தைப்பொங்கல், 3.கொண்டாடுங் கருத்து, 4. கொண்டாடும் முறை, 5. முடிவுரை. முன்னுரை பிள்ளையார் பொங்கல், மாரியம்மன் பொங்கல், தைப்பொங்கல் என நாம் பல பொங்கல் திருநாட் களைக் கொண்டாடி வருகிறோம். பொதுவாகப் பொங்கல் என்றால் தைப்பொங்கலையே குறிக்கும். தைப்பொங்கல் தைப்பொங்கல் என்பது, தமிழ் மக்களால் தொன்று தொட்டுக் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். சில ஆண்டுகளாகத் தமிழ் மக்கள், இப்பொங்கல் திருநாளைத் தமிழ்த் திருநாள் எனச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் விழாப் பொதுக்கூட்டங்கள் நடத்துகின்றனர். நண்பர்களுக்குப் பொங்கல் வாழ்த்து அனுப்பும் அத்தகு சிறப்பினை அடைந்துள்ளது இன்று தைப்பொங்கல். கொண்டாடுங் கருத்து தைப்பொங்கல் விழாக் கொண்டாடுவதன் கருத்தென்ன? பருவ மழை நன்கு பெய்து விதைத்த பயிர்கள் தை பிறப்பதற்குள் விளைந்துவிடும். தங்கள் உழைப்பின் பயனாகிய விளைவைக் கண்ட உழவர் பெருமக்கள் உவந்து, மழை பெய்ய உதவும் கதிரவனுக்கும், உழவுத் தொழிலுக்குதவும் மாட்டுக்கும் பொங்கல் வைத்துத் தங்கள் நன்றியறிதலைக் காட்டிக் கொள்வர். இதுவே பொங்கல் விழாக் கொண்டாடு வதன் கருத்தாகும். கொண்டாடும் முறை மார்கழி இறுதி நாள், வீடு, பட்டி முதலிய எங்கும் காப்புக்கட்டுவர், இது பொங்கலின் தொடக்கமும், பொங்கலின் அறிகுறியும் ஆகும். தை முதல் நாள் பகலவன் பொங்கலும், இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலும் வைப்பர். மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு விடுமுறை. மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்குச் சாயம் பூசுவர். புதிய தலைக்கயிறு கட்டுவர். பொங்கல் பொங்கும்போது 'பொங்கலோ பொங்கல்' என்னும் வாழ்த்தொலி வானை முட்டும். பொங்கல் படைப்போடு, கரும்பும் மஞ்சட் கொத்தும் வைத்து வழிபடுவர். மகளிர் கூடிக் கும்மியடித்து மகிழ்வர். ஆடவர் ஏறு தழுவித் தம் வீரத்தைக் காட்டுவர். முடிவுரை தமிழ் மக்களின் செய்ந்நன்றி மறவாச் செம்மைக்கு இப்பொங்கல் விழா ஒன்றே போதும். பொங்கல் பொங்குவதுபோல் மக்கள் உள்ளத்தே உவகை பொங்குக. குறிப்பு: இவ்வாறே, உள்ளூர்ப் பொங்கல் விழா, தேர்த்திருவிழா முதலியவற்றை எழுதிப்பழகுங்கள். 4. குடியரசு நாள் குறிப்பு: 1. முன்னுரை, 2. விடுதலை, 3.மக்களாட்சி, 4. குடியரசு நாள், 5. முடிவுரை முன்னுரை நாட்டு மக்கள் அமைதியாக வாழ்வதற்கு ஏற்பட்டது அரசு அல்லது ஆட்சிமுறை. அவ்வரசு முடியரசு, குடியரசு என இருவகைப் படும். விடுதலை அரசு முறை தோன்றியதிலிருந்து இந்நாட்டில் முடியரசர் அரசாட்சியே நடந்து வந்தது. ஆங்கிலேயர் அம்முடியரசர்களிடமிருந்து இந்நாட்டைக் கைப்பற்றி 150 ஆண்டுகள் ஆண்டு வந்தனர். 15-8-1947இல் இந்நாடு, ஆங்கில ஆட்சியினின்று விடுதலை பெற்றது. மக்களாட்சி ஆங்கில ஆட்சி ஒழிந்தபின் இந்நாட்டில் முடியரசு ஏற்படவில்லை. மக்கள் தங்களைத் தாங்களாகவே ஆண்டு கொள்ளும் மக்களாட்சி அல்லது குடியரசு இந்நாட்டில் ஏற்படுத்தப்பட்டது. 26-1-1950 இல் இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அன்றிருந்து இந்நாட்டில் குடியரசு நடைமுறைக்கு வந்தது. மக்கள் தாங்களே சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர் மூலம் ஆட்சியை நடத்துவதே குடியாட்சியாகும். அதன்படி வயது வந்தவர் எல்லார்க்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. எல்லாரும் இந்நாட்டு மன்னர் ஆயினர். குடியரசு நாள் அடிமை வாழ்வு வாழ்ந்து வந்த மக்கள் அடிமையினின்று நீங்கினதோடு, தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளும் குடியரசும் பெற்றால், அந்நாளைக் கொண்டாடாமலா இருப்பர்? 1950இல் இருந்து ஆண்டுதோறும் சனவரி 26 ஆம் நாள் அன்று நாடெங்கும் குடியரசு நாளைக் கொண்டாடி வருகின்றோம். முடிவுரை குடிமக்கள் தங்களைத் தாங்களே ஆளும் ஆட்சியில், அவர்கள் ஒன்றுபட்டு வாழவேண்டும். அப்போதுதான் குடியாட்சி இனிது நடைபெறும். அவ்வொற்றுமை யுணர்ச்சியை உண்டாக்குவதே குடியரசுநாள் கொண்டாடுவதன் நோக்க மாகும். 3. நடவடிக்கை 1. பள்ளி வாழ்க்கை குறிப்பு: 1. முன்னுரை, 2. அணியும் பணியும், 3. ஆளும் பயிற்சி, 4. படையும் பணியும், 5. முடிவுரை. முன்னுரை சிறார்களாகிய எங்களுக்கு இப்பள்ளி வாழ்க்கை ஓர் இன்பமான வாழ்க்கை யாகும். எதிர்காலக் குடிமக்களாகிய நாங்கள் பள்ளியில் ஏட்டுக் கல்வி கற்பதோடு நில்லாமல், பிற்கால வாழ்க்கைக்கு வேண்டிய படிப்பினைகளையும் பழகி வருகிறோம். அணியும் பணியும் ஊர்மன்றத்தார் ஊரைத் துப்புரவாக வைத்திருத்தல் போல, நாங்கள் எங்கள் பள்ளியை நன்னிலையில் வைத்திருக்கிறோம். அதற்காக, ஒவ்வொரு வகுப்பையும் நந்நான்கு அணிகளாகப் பிரித்துள்ளோம்.அவை, ஆண் பள்ளியில் சேரரணி, சோழரணி, பாண்டியரணி, வேளிரணி என்றும், பெண் பள்ளியில் சேரமாதேவி யணி, சோழ மாதேவியணி, பாண்டிமாதேவியணி, வேண்மாளணி எனவும் வழங்கப் பெறும். இவை முன்னர்த் தமிழ் நாட்டைச் சீருஞ்சிறப்புடன் ஆண்ட அரச மரபினர் பெயரும், அம்மரபு அரசியர் பெயருமே யாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வோரணியும் வகுப்பைத் துப்புரவு செய்தல், தூய்மையாக வைத்திருத்தல், குடிநீர் கொணர்ந்து வைத்தல் முதலிய பணியினைச் செய்துவரும். ஆளும் பயிற்சி சிறுவர்களாகிய நாங்கள் இந்நாட்டின் எதிர்கால ஆள்வோர் ஆவோமல்லவா? அதற்காக, ஊர்மன்றம் முதல் பாராளுமன்றம் வரை நடத்தும் பயிற்சியினை, எங்கள் பள்ளியில் ஒரு பாராளுமன்றம் அமைத்து, அதற்கு அமைச்சர்களையும் தலைவரையும் தேர்ந் தெடுத்து ஆட்சி முறையைப் பழகிவருகிறோம். படையும் பணியும் நம் நாட்டுக்குத் தொண்டு செய்யும் பயிற்சியையும் நாங்கள் பள்ளியிலேயே பெற்று வருகிறோம். பள்ளியில் உள்ள மாணவர் படை (N. C. C) , மாணவர் துணைப் படை (A. C. C), சாரணப்படை இவை அதற்குப் பயன்படுகின்றனர். இம்முப்படையும் மாணவியரிடையும் உண்டு. இப்படையினர் பாதுகாப்பு, பொதுத்தொண்டு, உதவி ஆகியன செய்து வருகின்றனர். முடிவுரை இப்பயிற்சிகளெல்லாம் எதிர்காலத்தில் எங்கட்குப் பெரிதும் பயன்படுமல்லவா? பள்ளி வாழ்க்கை மிக்க பயனுடைய வாழ்க்கை என்பது இப்போது விளங்கு கிறதல்லவா? 2. பொது நலப் பணி குறிப்பு: 1. முன்னுரை, 2. வகுப்பறை, 3. வகுப்புக்கு வெளியே, 4. பள்ளிக்கு வெளியே, 5. முடிவுரை. முன்னுரை பெரியவர்கள் வழியில் முட்கள் கிடந்தால் எடுத்து அப்புறம் எறிந்துவிட்டுச் செல்வர்; சாணம் கிடந்தால் எடுத்துக் காட்டுக்குட் போட்டுச் செல்வர். முள் வழிச் செல்வோர் காலில் ஏறும். சாணம் வீணாகப் போகும். இதுதான் பொதுநலப்பணி என்பது. இவ்வாறு செய்வது மக்களாய்ப் பிறந்த ஒவ்வொரு வரின் கடமை யாகும். பள்ளிப் பருவத்திலேயே இதைச் செய்து பழகுதல் வேண்டும். வகுப்பறை வகுப்பறைக்குள் முதலில் செல்வோர், தம் இருக்கையோடு, பக்கத்தில் உள்ள இருக்கைகளையும் துடைத்துத் துப்புரவு செய்ய வேண்டும். வகுப்பறைக்குள் எழுதுகோலைச் சீவிப் போடுதல், காகிதத்தைக் கிழித்துப்போடுதல், சுவரில் கிறுக்குதல் முதலியன செய்யாமல் இருத்தல்வேண்டும். வகுப்பறையில் கிடக்கும் தூசி தும்புகளை எடுத்துக் குப்பைக் கூடையில் போடவேண்டும். நாடோறும் அதைக் கொண்டுபோய்க் குப்பைத் தொட்டியில் கொட்ட வேண்டும். வகுப்புக்கு வெளியே வகுப்பறைக்கு வெளியே குப்பை போடுதல், எச்சில் துப்புதல், குழிபறித்தல் முதலியன கூடா. விளையாடுமிடத்தில் கற்கள், கண்ணாடித்துண்டுகள், ஆணி முதலியன கிடந்தால் எடுத்தெறிய வேண்டும். பள்ளமான இடத்தில் மழைத் தண்ணீர் தேங்காமல் துப்புரவு செய்ய வேண்டும். பள்ளிக்கு வெளியே பள்ளிக்கு வரும் போதும், வீட்டுக்குச் செல்லும் போதும் வழியில் பழத்தோல், கண்ணாடித்துண்டு, ஆணி முதலியன கிடந்தால் எடுத்தெறிய வேண்டும். வழி தெரியாதவர்க்கு வழிகாட்டவேண்டும். முடிவுரை இவ்வாறு தவறாமல் செய்துவந்தால் அது பழக்கமாகிவிடும். பெரியவர் களானால் அப்பழக்கம் பொதுநலப்பணிக்கு உதவியாக இருக்கும். குறிப்பு: இவ்வாறே, பிற இடங்களில் சென்று செய்யும் பொதுநலப் பணிகளைப் பற்றி எழுதிப் பழகுங்கள். 3. சுற்றுலா 10, கம்பர் தெரு, பெ. மெல்லி அறச்சலூர், ஆறாம் வகுப்பு மாணவி 29-9-1967. அன்புள்ள அல்லி! உன் அஞ்சல் கிடைத்தது. நீ தாரமங்கலம் சிற்ப வேலைத் திறனைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்து இன்புற்றேன். வரலாற்றுச் சிறப்புடைய இடங்களையும், இயற்கைக் காட்சி, தொழிற்சாலை, அணைக்கட்டு முதலியவற்றையும் சென்று பார்ப்பது அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்யும். சென்ற சனிக்கிழமை நாங்கள் மேட்டூர்க்குச் சென்றிருந்தோம். மூன்று ஆசிரியர்களும், நாங்கள் முப்பத்தைந்து பேரும் காலை 6 மணிக்கு ஒரு தனி மோட்டார் வண்டியில் புறப்பட்டோம். போகும்போது, வழி நெடுக வழியின் இருபக்கமும் உள்ள வயல்களில் நெற்பயிர்களின் பச்சைப் பசேலென்ற காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நாங்கள் 7.30 மணிக்கெல்லாம் மேட்டூரை அடைந்தோம்; மேட்டூர் செல்லும் வழியில் உள்ள ஈரோடு, பவானி முதலிய ஊர்களின் சிறப்பினையும் பார்த்துக் கொண்டு சென்றோம். முதலில் நாங்கள் அணைக்கட்டைப் பார்த்தோம். உலகில் உள்ள பெரிய அணைக்கட்டுகளில் ஒன்றல்லவா இது? அணையின் நீளம் 1612 மீட்டர்; அகலம் 6 ½ மீட்டர்; உயரம் 67 மீட்டர். தண்ணீர் 96 சதுர கி. மீ. பரப்பில் சிறு கடல் போல் நின்றது. மதகுகளில் தண்ணீர் தாவிக் குதித்து வரும் காட்சியைக் கண்டு களிக்க இரு கண்கள் போதவில்லை. நாங்கள் மின்சார மெடுக்கும் இடத்தைப் பார்த்துவிட்டு, அக்கரையி லுள்ள இரசாயனத் தொழிற்சாலையைப் (கெமிக்கல்ஸ்) பார்த்தோம்; பின் உணவுண்டு விட்டு, பூங்காவில் சென்று ஓய்வெடுத்துக் கொண்டோம். நாங்கள் பிற்பகல் மூன்று மணிக்கெல்லாம் பெரிய கடைச்சல் பட்டறைக்குச் சென்றோம்; பெரிய இரும்புத் தூண்களையும் எளிதாக விரைவில் அறுத்தல், துளை செய்தல், கடைதல் முதலிய காட்சிகளைக் கண்டு களித்தோம்; பின்னர்ப் பித்தளை, செம்பு முதலியவற்றை உருக்கித் தகடு செய்யும் உருக்குத் தொழிற்சாலையைப் பாத்தோம். கடைசியாக நாங்கள் சந்தனச் சோப்பும் தைலமும் செய்யும் தொழிற்சாலையைச் சென்று பார்த்தோம்; அங்கே ஒரே சந்தன மணம்! ஆளுக்கொரு சோப்பும் தைலப்புட்டியும் வாங்கிக் கொண்டு, ஐந்தரை மணிக்குப் புறப்பட்டு ஏழு மணிக்கெல்லாம் ஊர் வந்து சேர்ந்தோம். உனக்கும் ஒரு சந்தனச் சோப்பும் தைலமும் வாங்கி வந்திருக்கின்றேன். சா. அல்லி அன்புள்ள, 5, வள்ளுவர் தெரு, மெல்லி கோயமுத்தூர். குறிப்பு: இவ்வாறே, நீங்கள் சென்று கண்ட வெவ்வேறு இடங்களைப் பற்றி எழுதிப் பழகுங்கள். 4. கதை 1. காக்கையும் பாம்பும் (1) நரி தன் குட்டிக்குச் சொல்வது “என் செல்வக் குழந்தாய்! அதோ, அந்த மரத்தில் உட்கார்ந்திருக்கும் காக்கை, அந்த மரத்திலேயே கூடு கட்டிக்கொண்டு நெடுநாளாக வாழ்ந்து வருகிறது. அது இடும் முட்டைகளையெல்லாம் அடிமரப் பொந்தில் உள்ள ஒரு பாம்பு குடித்துக் கொண்டே வந்தது. “காக்கை அப்பாம்பு செய்யும் கொடுமையை என்னிடம் சொல்லிக்கொண்டு அழுதது. நான் சொன்னபடி அது, இவ்வூர் இளவரசி தன் முத்து மாலையைக் கழற்றி வைத்துவிட்டுக் குளித்த போது, அம்மாலையை எடுத்துவந்து, இளவரசியின் தோழி பார்க்கும்படி அம் மரப்பொந்துக்குள் போட்டது. “அரண்மனை வேலையாட்கள் வந்து அம்மரப்பொந்தை வெட்டினர்; பாம்பு சீறவே, கோடரியால் அதை வெட்டிக் கொன்றுவிட்டு, முத்தாரத்தை எடுத்துக் கொண்டுபோய் இளவரசியிடம் கொடுத்தனர். அதிலிருந்து அந்தக் காக்கை முட்டை யிட்டுக் குஞ்சு பொரித்துக்கொண்டு நலமாக இருந்து வருகிறது. தந்திரத்தால் யாரையும் வெல்லலாம்,” என்றது நரி. (2) காக்கை தன் குஞ்சுகளுக்குச் சொல்வது “என் அருமைச் செல்வங்களே! அதோ, அந்த நரி இல்லாதிருந்தால் நான் உங்களைக்கண்டு களித்திருக்க முடியாது. நீங்கள் பிறப்பதற்கு முன் நான் இடும் முட்டைகளை யெல்லாம் இவ்வடி மரப் பொந்தில் இருந்த ஒரு பாம்பு வந்து குடித்து விட்டுப் போய்விடும். “நான் ஒருநாள் அந்த நரியிடம் சொன்னேன். அது சொன்னபடி, நம்மூர் இளவரசி குளிக்கும்போது கழற்றிவைத்த முத்தாரத்தை எடுத்துவந்து அப் பாம்பிருந்த பொந்துக்குள் போட்டேன். வேலை யாட்கள் வந்து அந்தப் பொந்தை வெட்ட. அப்பாம்பு சீறவே, அதை அடித்துக் கொன்றுவிட்டு, அந்த ஆரத்தை எடுத்துக் கொண்டு போயினர். அந்த நரி தந்திரஞ் சொல்லியிரா திருந்தால் நான் உங்களை எப்படிப் பெற்று மகிழ்ந்திருக்க முடியும்?” என்றது காக்கை. (3) இளவரசியின் தோழி தன் தோழிக்குச் சொல்வது “நல்லினி! அதோ, அந்த மரத்திலுள்ள காக்கையைப் பார். அது தான் அன்று நம் இளவரசியின் முத்துமாலையை எடுத்துக்கொண்டு போய் அந்த மரப் பொந்தில் போட்டது. அப்போது அதைத் திட்டினோம். ஆனால், முத்தாரத்தை எடுத்து கொண்டு போய் அந்த மரப்பொந்தில் போடாதிருந்திருந்தால் அப்பாழும் பாம்பு தொலைந் திருக்குமா? அதுதானே என் அருமைச் செல்வனைக் கடித்துக் கொன்றது! தொலைந்தது சனியன்! நெடு நாளாய் அந்தக் காக்கை இந்த மரத்திலேதான் கூடுகட்டிக் கொண்டு இருந்து வருகிறது. இதற்கு முன் அந்தக் காக்கை குஞ்சு பொரித்ததையே நான் பார்த்ததில்லை. அது இட்ட முட்டைகளை யெல்லாம் அந்தப் பாழும் பாம்பு குடித்து விட்டது போலும்! அது தொலைந்தபின் முட்டையிட்டுப் பொரித்த குஞ்சுகள்தாம் இவை, ” என்றாள். (4)உரையாடல் காட்சி 1 காக்கை : (தனியாக) ஐயோ! என் முட்டை களைக் காணோமே! அந்தப் பாழும் பாம்புதான் தின்று விட்டது போலும்! ஆ! என் செல்வங்களே! அக்கொடியோன் என்று ஒழிவானோ? நரி : ஏ காக்கைத் தங்கையே1 ஏன் ஒரு வகையாய் உட்கார்ந்திருக்கிறாய்? காக் : ஆ! என் நரி அண்ணா! நான் என்னதான் செய்வேன்! நான் இடும் முட்டைகளை எல்லாம் இந்த அடிமரப் பொந்திலுள்ள பாழும் பாம்பு குடித்து விடுகிறது. அதனால், நான் முட்டையிட்டும் குஞ்சு களைக் கண்டு களிக்க முடியாத படுபாவியானேன். நரி : தங்கச்சி! வருந்தாதே. நான் சொல்கிறபடி செய். காக்: அண்ணா! அது என்ன? நரி : இவ்வூர் இளவரசி குளிக்கும்போது முத்தாரத்தைக் கழற்றி வைத்துவிட்டுக் குளிப்பாள். நீ அந்த ஆரத்தை எடுத்துக்கொண்டு வந்து இளவரசியோ, அவள் தோழியரோ பார்க்கும்படி அப்பாம்பு இருக்கிற பொந்துக்குள் போட்டு விடு. அப்புறம் நடப்பதைப் பார். காக்: அண்ணா! மிக்க நன்றி. அப்படியே செய்கிறேன். வணக்கம். நான் வருகிறேன். காட்சி 2 தோழி: இளவரசி! எழுங்கள். குளித்துக் கொள்ளலாம். இளவரசி : சரி. (முத்தாரத்தைக் கழற்றி வைத்து விட்டுக் குளித்துக் கொள்ளல்) அடீ! செங்கமலம்! அதோ, அந்தக் காக்கையைப் பார்! முத்தாரத்தை எடுத்துக் கொண்டு போகிறது. தோழி: ஐயையோ! அம்மா! என்ன செய்வது? அட! பாழாய்ப்போன காக்கையே! அதோ, அந்த மரத்துக்குக் கொண்டு போகிறது. இள: கழற்றி உன்னிடந்தான் கொடுத்தேனா? எப்போதும் போல் கழற்றி வைத்துவிட்டுக் குளித்தேன். எங்கே போகிறதென்று பார்! தோழி: அதோ, அந்த மரப்பொந்தில் போட்டு விட்டது. யாரங்கே? வேலையாள்: என்னங்கம்மா! தோழி: ஒரு காக்கை இளவரசியின் முத்தாரத்தை எடுத்துக் கொண்டு போய் அந்த மரப்பொந்தில் போட்டு விட்டது. போய் அதை எடுத்து வாருங்கள். வேலை : சரிங்கம்மா, ஒருவன் : பொந்துக்குள் ஆழத்தில் போய் விட்டது. இன்னும் கீழே பிடித்து வெட்டு. மற்றவன் : அடடே! பாம்பைப் பார்! ஒரு : போடு ஒரே போடா. சீறுகிறதைப் பார்! மற் : வாங்க மாப்பிள்ளை! சீறுகிறீர்களா? (பாம்பை அடித்துக் கொன்றுவிட்டு முத்தாரத்தை எடுத்துப் போதல்) காக்: தொலைந்தாயா பாவி! நரியின் தந்திரமே தந்திரம்! இது எனக்கு முன்னரே தெரிந்திருந்தால் எப்போதோ ஒழித்திருப்பேனே! தோழி: அம்மா! அம்மா! அந்த மரப்பொந்தில் ஒரு பாம்பு இருந்தது. அடித்து விட்டார்கள். இள: ஆரம்? தோழி: இதோ! குறிப்பு: வேறு கதைகளை இவ்வாறு எழுதிப் பழகுங்கள். 2. அதியமானும் ஒளவையாரும் குறிப்பைக் கொண்டு கதை எழுதுதல் குறிப்பு: அதியமான் - கடைச்சங்க - குறுநில - வரையாது - வள்ளல் - கொங்கு - தகடூர் - தகடூர்க்கு - உள்ள கஞ்சமலைக்கு - அங்கு - செங்குத்தான - இடுக்கில் - நெல்லிக்கனி - மிகவும் - முயன்று. அவன் - ஒளவைக்கு - உண்டபின் - நெடுநாள் - இருப்பர் - சொன்னான் - தமிழ்ப் பற்றை - பலவாறு. கதை அதியமான் என்பவன் கடைச்சங்க காலத்தே இருந்த ஒரு குறுநில மன்னன். அவன் வரையாது கொடுக்கும் வள்ளல். அதியமான் கொங்கு நாட்டுத் தகடூர் நாட்டை ஆண்டு வந்தான். அவன் ஒருநாள் தகடூர்க்குத் தெற்கில் உள்ள கஞ்சமலைக்குச் சென்றான்; அங்கு ஒரு செங்குத்தான பாறை இடுக்கில் இருந்த நெல்லிக்கனி ஒன்றை மிகவும் அரிதின் முயன்று பறித்தான். அவன் அக்கனியை ஒளவைக்குக் கொடுத்தான். ஒளவை அக்கனியை உண்டபின், அதை உண்டவர் நெடுநாள் உயிரோடு இருப்பர் என்பதை அவன் சொன்னான். ஒளவையார் அதியமானின் தமிழ்ப் பற்றைப் பலவாறு பாராட்டினார். பயிற்சி 1. கீழ்வரும் குறிப்புகளைக் கொண்டு கதை எழுதுக: பேகன் மயிலுக்குப் போர்வை போர்த்தது குறிப்பு : பேகன் - பழந்தமிழ்ச் - இல்லார் - கேட்டாலும் - என்னாது - வள்ளல் - மொழியிடத்து - கடந்து - உடையவன் - தமிழ்ப் - வாரி - வளர்த்து -. ஒருநாள் - பூந்தோட்டத்துக்கு - அங்கு - மயில் - மழைக்காலம் -ஓய்ந்திருந்தது - மயில் - அழகிய - விரித்து - இருந்தது - என்றால் - மகிழ்ச்சி. பேகன் - ஆடுவதை - பெய்திருந்ததால் - நடுங்குவதாக - மீது - கொண்டான் - செய்தான் - போர்வையை - மயில் - போர்த்தினான் - கொடுத்த - என்று - பாராட்டினர் - பேகனது - பார்த்தீர்களா? 2. கீழ்வரும் கதையைப் படித்து , இவ்வாறு குறிப்பு எடுக்கவும்: பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தது கதை பாரி ஒரு பழந்தமிழ்ச் செல்வன். அவன் இரவலர் கேட்பதை இல்லை என்னாமல் கொடுக்கும் இயல்புடையவன். அவ்வாறு கொடுப்போர் வள்ளல் எனப்படுவர். பாரி பறம்பு நாட்டின் தலைவன். பறம்புநாடு முந்நூறு ஊர்களை உடையது. பாரி அம்முந்நூறு ஊர்களையும் இரவலர்க்குக் கொடுத்து மகிழ்ந்தான். பாரி ஒரு நாள் தேரேறிக் கொண்டு ஒரு காட்டின் வழியே சென்றான். மரங்கள் பூங்கொத்துக்களாகிய கைகளால் மணமலர் தூவி வருக வருக என்று அவனை வரவேற்றன. பறவைகள் ஆடியும் பாடியும் மகிழ்வூட்டின. பாரி அக்காட்டின் இயற்கைக் காட்சி களைக் கண்டு களித்துக் கொண்டே சென்றான். வழியில் ஒரு முல்லைக் கொடி இருந்தது. அது படரும் பருவம் உடையது. ஆனால், அது பற்றிப் படரப் பக்கத்தில் ஒன்றும் இல்லை. கொழு கொம்பு இன்றித் தளர்ந்து கிடந்தது அக்கொடி. பாரி அதனைக் கண்டான். “இல்லை, கொடு என்று கேட்க வாய் இல்லாதது. கொழுகொம்பிருந்தால் அது பற்றிப் படர்ந்து பூத்துப் பொலிவுடன் விளங்கு மல்லவா? கொழுகொம்பு இல்லாமையால் வாடி வருந்துகின்றது பாவம்! வாயில்லாப் பொருள் என்ன செய்யும்” எனப் பாரி அதன் நிலைக்கு இரங்கினான். கொடைமடம் பட்ட பாரி என்ன செய்தான்? தான் ஊர்ந்துசென்ற தேரை அக்கொடியின் அருகில் கொண்டுபோய் நிறுத்தினான்; அம்முல்லைக் கொடியை எடுத்து அத் தேரின்மீது படரும்படி விட்டான்; குதிரைகளுடன் ஊரை அடைந்தான். என்னே! பாரியின் கொடைக் குணம்! ‘முல்லைக்குத் தேர்கொடுத்த வள்ளல்’ எனப் புலவர்கள் அவனைப் புகழ்ந்து பாடினர். இறுதிப் பயிற்சி செந்தமிழ்ச் சிறார்களே! படித்ததைப் பயிற்சி செய்வது மிக மிக இன்றியமையாதது. எவ்வளவு நன்கு படித்திருந்தாலும் பயிற்சி செய்யாவிட்டால், படித்தது நன்கு மனத்தில் பதியாது; கேள்விக்குத் தக்க விடை எழுதவும் முடியாது. ஆகையால், கீழ்வரும் கேள்விகளுக்குத் தக்க விடைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். இவ்விறுதிப் பயிற்சியை நன்கு பயின்றால், தெளிவான இலக்கண அறிவைப் பெறலாம் என்பது திண்ணம். 1. எழுத்து 1. தமிழ் எழுத்துக்கள் எத்தனை? அவை எத்தனை வகைப்படும்? 2. உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை? 3. உயிரெழுத்து எத்தனை வகைப்படும்? 4. மெய்யெழுத்து எத்தனை வகைப்படும்? 5. சுட்டெழுத்துக்கள் எவை? 6. அகச்சுட்டு, புறச்சுட்டு - எடுத்துக்காட்டுடன் கூறுக. 7. சுட்டெழுத்துக்கள் ஐம்பாலிலும் வரும். காட்டுத் தருக. 8. வினா வெழுத்துக்கள் எவை? 9. மொழிக்கு முதலில் வரும் வினாவெழுத்துக்கள் எவை? ஈற்றில் வரும் வினா வெழுத்துக்கள் எவை? முதலிலும் ஈற்றிலும் வரும் வினாவெழுத்து எது? 10. அகத்தும் புறத்தும் வரும் வினாவெழுத்துக்கள் எவை? 11. வினாவெழுத்துக்கள் ஐம்பாலிலும் வரும். காட்டுத் தருக. 12. உயிர்மெய்க் குறில் எத்தனை? எப்படி? 13. உயிர்மெய் நெடில் 126 எப்படி? 14. வல்லெழுத்துக்கள் எவை? 15. சந்தனக்கல் - இதில் உள்ள மெய்யெழுத்துக்களை இன்ன மெய் என்று கூறுக. 16. மெல்லின உயிர்மெய் எத்தனை? எப்படி? 17. உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? 18. உயிர்மெய் எழுத்துக்களை அறுவகையாகக் கொள்ளலாம். அவை யாவை? 19. இனவெழுத்து என்பது என்ன? 20. ஓ, ஏ, ஐ - இவற்றின் இனவெழுத்துக்கள் எவை? 21. இ, உ - இவை எவ்வெழுத்துக்களின் இனம்? 22. எழுத்துக்கள் இரண்டு ஓரினம் ஆவதற்குக் காரணங்கள் யாவை? 23. உயிரெழுத்துக்கள் சொல்லில் எவ்வாறு இனமாக வரும்? 24. வா, நீ, வை - இவற்றின் இனவெழுத்துக்கள் எவை? 25. வல்லினமும் மெல்லினமும் சொல்லில் எவ்வாறு இனமாக வரும்? 26. இன மில்லாத எழுத்துக்கள் எவை? 27. பட்டு, பத்து, கற்று - வல்லினங்களை இனமெல்லினம் ஆக்குக. 28. மாத்திரை என்பது என்ன? 29. இரண்டு மாத்திரை உள்ள எழுத்துக்கள் எவை? 30. து, எ, போ, ஓ - மாத்திரை என்ன? 31. மெய்யெழுத்துக்கள் ஒலியாத இடம் எது? 32. உயிர்மெய்க் குறிலுக்கு மாத்திரை என்ன? 33. பாட்டு - இச்சொல்லில் உள்ள எழுத்துக்களின் மாத்திரை என்ன? 34. கால் மாத்திரை என்பது யாது? 35. உறுத்தல், முறுக்கல் - மாத்திரை என்ன? 2. சொல் 1. உயர்திணை, அஃறினை என்பன யாவை? 2. தெய்வப் பெயர் எத்திணையைச் சாரும்? 3. பால் என்பது என்ன? அது எத்தனை வகைப்படும்? 4. உயர்திணைப் பால்கள் எவை? 5. அஃறிணைப் பால்கள் எவை? 6. உயர்திணைப் பால்களுக்கும், அஃறிணைப் பால்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? 7. பலவின்பால், பலர்பால் - திணை கூறுக. 8. எண் என்பது என்ன? அது எத்தனை வகைப்படும்? 9. ஒருமைப் பால்கள், பன்மைப் பால்கள் எவை? 10. திணை, பால், எண் கூறுக: யானை பந்து கூத்தன் கண்ணகி மலைகள் மாணவர் பாணர் வீடு 11. இடம் என்பது யாது? அது எத்தனை வகைப்படும்? 12. இடங்கூறுக: வேலா! முருகன் விளையாடக் கூப்பிடுகிறான். நான் அவனுடன் போகிறேன். நீ வருகிறாயா? 13. வினைச்சொல் என்பது என்ன? 14. பெயர்ச்சொல்லுக்கும் வினைச் சொல்லுக்கும் உள்ள வேறுபாடு என்ன? 15. காலம் எத்தனை வகைப்படும்? 16. வினைச் சொல்லில் காலங்காட்டுவது எது? 17. இறந்தகால இடைநிலைகள் யாவை? 18. வ், இன், கிறு - இவை எக்கால இடைநிலைகள்? 19. இன்ன கால இடைநிலைகள் என எடுத்துக் காட்டுக: ஓடினான் நெய்வார் காண்பான் ஓடுவான் கொய்தாள் பாடுகின்றாள் மேய்கிறது உண்டார் 20. திணை, பால், எண், காலம் கூறுக: படித்தான் உதிர்ந்தன எழுதுகிறார் ஓடுவான் பறக்கிறது பூத்தது தைக்கிறாள் பாடுவாள் 21. முற்றுவினை, எச்சவினை - பொருளென்ன? 22. பெயரெச்சம், வினையெச்சம் - பொருளென்ன? 23. பெயரெச்சம் எத்தனை வகைப்படும்? உண்டான் சாய்ந்தன பாடுகிறாள் படிக்கிறார் பறந்தது பழுத்தது கட்டினார் கொடுத்தான்  பாகம் - 4 வள்ளுவர் தமிழ் இலக்கணம் - 4 நூல் அறிமுகம் மொழி முதல் இறுதி எழுத்துகள்: தமிழ்ச்சொற்களை ஊன்றிப் பார்த்தால் ஓர் உண்மை விளங்கும். " எல்லா எழுத்துகளும் சொல்லின் முதல் எழுத்துகளாக வருவது இல்லை. அவ்வாறே எல்லா எழுத்துகளும் சொல்லின் இறுதி எழுத்து களாக வருவதும் இல்லை" என்பது அது. அப்படி ஏதாவது வரக்கூடாத எழுத்து சொல்லின் முதலாகவோ, இறுதியாகவோ வந்தால் அது தமிழ்ச் சொல் இல்லை என்பதாம். இடுகுறி காரணம்: தமிழ்ச் சொல் எது எனினும் காரணத்துடனேயே வரும். காரணம் இல்லாமல் ஒரு குறியீடாக வந்து வழங்கப்படுவது இல்லை. சில சொற்களுக்குக் காரணம் நமக்குத் தோன்றாமல் இருக்கலாம். அதனால் அதற்குக் காரணம் இல்லை என்பது இல்லை. காரணம் உண்டு. அதனை முயன்று கண்டு பிடிக்க வேண்டும் என்பதே பொருள். ஆகுபெயர்: ஒரு பெயர் அதனையே குறியாமல் அதன் தொடர்பாக அமைந்த மற்றொன்றைக் குறிப்பது உண்டு. ஒன்று மற்றொன்றுக்கு அது ஆகி வருவதால் ஆகுபெயர் எனப்படும். ஆகுபெயர் வகைகள் பல. வினைவகை: ஒரு சொற்றொடரின் முடிவு பயனிலை. அப் பயனிலை இருவகைப்படும். வினைப் பயனிலை; பெயர்ப் பயனிலை என்பவை அவை. வினைப் பயனிலையிலும் இருவகையுண்டு. ஒன்று, வினை என்ன என்பது தெளிவாகத் தெரியும்; மற்றொன்று தெளிவாகத் தெரியாமல் குறிப்பாக அறியுமாறு இருக்கும். தெளிவாகத் தெரியும் வினைமுற்று, தெரிநிலை வினைமுற்று. குறிப்பாகத் தெரியும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று. தெளிவாகத் தெரிவது என்பது, காலம், இடம், செயல் முதலியவை. இடைச்சொல்: பெயர்ச் சொல்லாகவும் இல்லாமல், வினைச் சொல்லாகவும் இல்லாமல் இவற்றின் இடையே வரும் சொல் இடைச்சொல். பெயர் வினைச் சொற்களின் அடையாகவும் இணைப்பாகவும் விளக்கமாகவும் இச் சொல் இருக்கும். தனித்து நின்று சொல்நிலை பெறாது இது. உரிச்சொல்: மக்கள் பேச்சு வழக்கில் பெரிதும் இல்லாத தாகவும், புலவர் செய்யும் நூல் வழக்கில் உள்ளதாகவும் அரும்பொருள் அமைந்ததாகவும் பல சொற்களை உருவாக்கும் சொல்லாகவும் உரிமை கொண்ட சொல் உரிச்சொல். இவற்றை விளக்கி எடுத்துக்காட்டுகள் தரும் சுவடி இது. இன்ப அன்புடன், இரா. இளங்குமரன். 1. எழுத்து உயிரெழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, ஆய்த எழுத்து எனத் தமிழ் எழுத்துக்கள் நான்கு வகைப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். "அஃகம் சுருக்கேல்" - என்பது, 'ஆத்திசூடி'. 'அஃகம்'- என்னும் சொல்லில் உள்ள, அ - உயிரெழுத்து. ம் - மெய்யெழுத்து. க - உயிர்மெய்யெழுத்து. ஃ - ஆய்தவெழுத்து. உயிரெழுத்துக்கள் - அ- ஒள - 12 மெய்யெழுத்துக்கள் - க் - ன் - 18 உயிர்மெய் எழுத்துக்கள் - க - னௌ - 216 ஆய்தவெழுத்து - ஃ - 1 247 ஆகத் தமிழ் எழுத்துக்கள் 247 என்பதை நினைவு கூர்க. இவற்றின் விரிவைத் தமிழ் எழுத்துக்களின் அட்டவணையிற் காண்க. 1. மொழிமுதல் எழுத்துக்கள் மேற்கண்ட இருநூற்று நாற்பத்தேழு (247) தமிழ் எழுத்துக்களும் மொழிக்கு முதலில் வருதல் இல்லை. மொழி - சொல். பன்னிரண்டு உயிரெழுத்துக்களும், க, ச, த, ப - என்னும் வல்லெழுத்துக்கள் நான்கு ங, ஞ, ந, ம - என்னும் மெல்லெழுத்துக்கள் நான்கு ய, வ - என்னும் இடை யெழுத்துக்கள் இரண்டு ஆகிய பத்து மெய்யெழுத்துக்களும் மொழிக்கு முதலில் வரும். காட்டு : அணி உடை ஐந்து ஆடை ஊர் ஒன்று இலை எடு ஓலை ஈயம் ஏடு ஒளவை என, உயிர் பன்னிரண்டும் மொழிக்கு முதலாதல் காண்க. குறிப்பு : மெய்யெழுத்துக்கள் தனித்து மொழிக்கு முதலில் வாரா: உயிரோடு கூடி, உயிர் மெய்யாகவே வரும். மற்ற எட்டு மெய்களும் - ட, ற : ண, ன : ர, ல, ழ, ள - மொழிக்கு முதலில் வாரா. மொழி முதலாகும் பத்து மெய்களுள், 1. வகரமெய் (வ்) - உ, ஊ, ஒ, ஓ - என்னும் நான்கும் அல்லாத மற்ற எட்டு உயிரோடுங்கூடி மொழிக்கு முதலில் வரும் காட்டு : வயல் வெளி வான் வேலை விலை வைகறை வீடு வௌவால் 2. யகரம் (ய்) அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள - என்னும் ஆறும் உயிரோடுங் கூடி மொழிக்கு முதலாக வரும். காட்டு : யவனர் யூகி யானை யோகம் யுகம் யௌவனம் குறிப்பு : இவற்றுள், யானை - என்பதே தமிழ்ச் சொல். யவனர் - தமிழ் ஆக்கச் சொல். மற்றவை - அயல் மொழிச் சொற்கள். 3. ஞகரமெய் (ஞ்) - அ, ஆ, எ, ஒ, என்னும் நான்கும் உயிரோடுங் கூடி மொழி முதலாகும். காட்டு : ஞமலி (நாய்) ஞெகிழி (கொள்ளி) ஞாலம் ஞொள்கிற்று (இளைத்தது, தளர்ந்தது) 'ஞிமிறு' (வண்டு)என, இகரத்தோடு கூடியும் ஞகரம் முதலாகும். 4. ஙகரம் (ங்) - இது, அவ்வாறு உயிரோடு கூடி முதலாதல் இல்லை. மூன்று சுட்டெழுத்துக்களையும். யா, எ - என்னும் இரு வினா வெழுத்துக்களையும் முதலாகக் கொண்டு, அவற்றின் பின்னர் அகர உயிரோடு மட்டும் கூடி ஙகரம் முதலாகும். காட்டு : அங்ஙனம் யாங்ஙனம் இங்ஙனம் எங்ஙனம் உங்ஙனம் என வரும். குறிப்பு : ஙனம் - என்பது இடத்தையும் தன்மையையும் உணர்த்தும் பலபொரு ளொரு சொல். அங்ஙனம் செல் - அவ்விடத்திற்குச் செல். அங்ஙனம் செய் - அவ்வாறு செய். இங்கு எடுத்துக் கூறாத - க, ச, த, ப, ந, ம - என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டு உயிரோடுங் கூடி மொழிக்கு முதலில் வரும். காட்டு : கடல் குடை கை காடு கூடை கொடை கிளி கெடு கோலம் கீரி கேடு கௌவை எனக் ககரமெய் (க்), பன்னிரண்டு உயிரோடுங் கூடி மொழிக்கு முதலாதல் காண்க. மற்ற மெய்களுக்கு எடுத்துக் காட்டு, ஆசிரியரிடம் அறிந்து கொள்க. 2. மொழி இறுதி எழுத்துக்கள் மொழியின் முதலில் எங்ஙனம் எல்லா எழுத்துக்களும் வருதல் இல்லையோ அங்ஙனமே, மொழியின் ஈற்றிலும் எல்லா எழுத்துக்களும் வருதல் இல்லை. பன்னிரண்டு உயிரெழுத்துக்களும், ஞ, ண, ந, ம, ன, - மெல்லெழுத்துக்கள் ஐந்து, ய, ர, ல, வ, ழ, ள - என்னும் இடையெழுத்துக்கள் ஆறு ஆகிய பதினொரு மெய்யெழுத்துக்களும் மொழியின் ஈற்றில் வரும். வல்லெழுத்துக்கள் ஆறும், ஙகரமும் - ஈற்றில் வாரா. குறிப்பு : உயிரெழுத்துக்கள், மொழியிறுதியில் மெய்யோடு கூடி, உயிர்மெய்யாகவே வரும். மெய்யெழுத்துக்கள் தனி மெய்யாக வரும். காட்டு :1. சில சே பலா தை மணி நொ தீ போ கடு வௌ பூ என, உயிர்கள் ஈற்றில் வந்தன. குறிப்பு : எகரம், மெய்யோடு கூடி உயிர்மெய்யாக ஈறாகாது. பேஎ - என,அளபெடையில் தனித்து ஈறாகும். காட்டு : 2 உரிஞ் வேர் மண் வேல் வெரிந் தெவ் மரம் வீழ் பொன் வாள் வேய் என, மெய்கள் ஈறாயின. உரிஞ் - உரிஞுதல், உரிஞ்சுதல் வெரிந் - முதுகு தெவ் - பகை வீழ் - வீழ்து (ஆலம் வீழ்து) நினைவு கூர்க : உயிர் - மொழி முதலில் தனித்தும், ஈற்றில் உயிர்மெய் யாகவும் வரும். மெய் - மொழி முதலில் உயிர்மெய்யாகவும், ஈற்றில் தனித்தும் வரும். உயிர்க்குறில்கள் (அ, இ, உ, எ, ஒ) அளபெடையில் ஈற்றில் தனித்து வரும். காட்டு : அணி (ண் + இ) - உயிர், மொழி முதலில் தனித்தும் ஈற்றில் மெய்யோடு கூடி உயிர்மெய்யாகவும் வந்தமை காண்க. கல் (க் + அ) மெய், மொழியிறுதியில் தனித்தும், முதலில் உயிரோடு கூடி உயிர்மெய்யாகவும் வந்தமை காண்க. அணி - உயிர் முதல், உயிரீற்றுச்சொல். கல் - மெய்முதல், மெய்யீற்றுச்சொல். பயிற்சி 1. தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? ஒவ்வோர் எடுத்துக்காட்டுத் தருக. 2. தமிழ் எழுத்துக்கள் 247. எங்ஙனம்? 3. உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை? எங்ஙனம் அவ்வளவாயின? 4. மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் எவை? 5. மொழிக்கு முதலில் வரும் வல்லெழுத்துக்கள், இடையெழுத்துக்கள் யாவை? 6. மொழிக்கு முதலில் வாரா மெல்லெழுத்துக்கள் எவை? 7. வகரம், எவ்வெவ் வுயிர்களோடு கூடி முதலாகாது? 8. மெய்யெழுத்துக்கள் எவ்வாறு முதலாகும்? 9. ஙகரம் எங்ஙனம் மொழி முதலாகும்? 10. மொழி இறுதியில் வரும், வாரா மெய்யெழுத்துக்கள் எவை? 11. உயிரெழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் ஈற்றில் எவ்வாறு வரும்? 12. மெய்யோடு கூடி ஈறாகாத உயிரெழுத்து எது? 13. மொழிக்கு முதலாகும் எழுத்துக்கள், முதலாகா எழுத்துக் கள், ஈறாகும் எழுத்துக்கள், ஈறாகா எழுத்துக்கள் ஆகிய வற்றின் அட்டவணை ஒன்று தருக. 14. முதலும் ஈறும் ஆகாத எழுத்துக்களை எடுத்துக் காட்டுக. 2. சொல் பூ, காய், பழம், வெற்றிலை, சந்தனம் - இவ்வாறு ஓர் எழுத்துத் தனித்தோ, இரண்டு முதலிய பல எழுத்துக்கள் சேர்ந்தோ ஒரு பொருளை உணர்த்துவது சொல் எனப்படும். பூ - ஓரெழுத்துச் சொல் சந்தனம் - ஐந்தெழுத்துச் சொல். பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் எனத் தமிழ்ச்சொற்கள் நான்கு வகைப்படும் என்பது உங்கட்குத் தெரியும். அவற்றைப்பற்றி இன்னும் விளக்கமாக இனித் தெரிந்துகொள்ளுங்கள். மக்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக வள்ளுவர் திருக்குறளைச் செய்தார். இதில், மக்கள் வள்ளுவர் பெயர்ச்சொற்கள் திருக்குறள் செய்தார் - வினைச்சொல் வாழ்க்கை +கு குறள் + ஐ சொற்கள் கு, ஐ - இடைச்சொற்கள் உறுதுணை : உறு - உரிச்சொல். உறுதுணை - மிக்க துணை. இந்நால்வகைச் சொற்களுள், ஒவ்வொன்றையும் பற்றி இனிப் படிப்போம். 1. பெயர்ச்சொல் மாடு, கோழி, மரம், கல், பெட்டி - இவை எல்லாம் பொருள் எனப்படும். மக்களாகிய நாமும் ஒரு பொருளே. முருகன் வள்ளி யானை புறா மரம் - இவை, உயிருள்ள பொருள் கல் மண் நாற்காலி - இவை, உயிரில்லாத பொருள். ஒரு பொருளைக் குறிக்கும் சொல் - bயர்ச் சொல் எனப்படும். எல்லாப் பெயர்ச்சொற்களும் பொருள் உடையனவே யாகும். "எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே" - என்பது தொல்காப்பியம் இடுகுறிக் காரணப்பெயர் பறப்பது - பறவை. பறக்கும் காரணம் பற்றிப் பருந்து, புறா, காக்கை, குருவி முதலியன - பறவை என்று பெயர் பெற்றன. அதனால் பறவை என்பது காரணப்பெயர் எனப்படும். ஏதாவதொரு காரணம் பற்றி இட்டபெயர் - காரணப்பெயர். இவ்வாறு காரணம் தெரியாத பெயர் - இடுகுறிப்பெயர். 1. இடுகுறிப் பெயர் மரம் - என்னும் சொல்லின் காரணம் நமக்குத் தெரியவில்லை. நம் முன்னோர்கள் எல்லாப் பொருளுக்கும். காரணத்தோடுதான் பெயர் இட்டனர். இது, " எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்னும் தொல்காப்பியர் கூற்றால் பெறப்படும். ஆனால், நாளடைவில் சில பெயர்களின் காரணம் மறக்கப்பட்டது. பின்னர் அப்பெயர்களின் காரணம் தெரியவில்லை. அவ்வாறு காரணம் தெரியாத பெயர் - இடுகுறிப் பெயர் எனப்பட்டது. இடுகுறி - இட்டகுறி. பொருளுக்கு அறிகுறியாக -அடையாளமாக - இட்ட பெயர்- இடுகுறிப்பெயர். மண் தென்னை கல் நாய் மரம் பூனை - இவை இன்ன காரணம் பற்றி இட்ட பெயர் என்பது தெரிய வில்லை. எனவே, இவை இடுகுறிப் பெயர்கள் எனப்பட்டன. 2. காரணப் பெயர் நாற்காலி வளையல் காற்றாடி காவலர் அரிவாள் நடிகர் அணி தொழிலாளர் நாற்காலி - நான்கு கால்களையுடையது. காற்றாடி - காற்றால் ஆடுவது. அரிவாள் - அரியும் வாள். அணி - அணியப்படுவது. வளையல் - வளையமாக உள்ளது. காவலர் - காவல் காப்பவர். நடிகர் - நடிப்பவர். தொழிலாளர் - தொழில் செய்பவர். - இன்ன காரணங்களால், இவை காரணப் பெயர்கள் எனப்பட்டன. பயிற்சி 1. தமிழ்ச் சொற்கள் எத்தனை வகைப்படும்? 2. பெயர்ச் சொல் என்பது யாது? 3. தமிழ்ச் சொற்கள் பற்றிய தொல்காப்பியர் கருத்தென்ன? 4. நமது முன்னோர்கள் பொருள்களுக்கு எவ்வாறு பெயரிட்டனர்? 5. காரணப் பெயர், இடுகுறிப் பெயர் - வேறுபாடென்ன? 6. உங்கள் பாடத்தில் வந்துள்ள இடுகுறிப் பெயர், காரணப் பெயர்களைக் கண்டறிக. 7. இன்ன பெயர் என்று கூறுக : மலர் மீன்கொத்தி கடல் கால் பனை வானூர்தி முள்ளி தலையணை வயல் கரும்பு 8. காரணங் கூறுக: பாட்டாளர் கூத்தர் பாட்டு பஞ்சணை விளக்கு வானொலி திருக்குறள் பொன்னன் வட்டில் 3. சுட்டுப் பெயர் அ, இ, உ, - இம் மூன்று உயிர்க்குற்றெழுத்துக்களும் சுட்டெழுத்துக்கள் எனப்படும். சுட்டெழுத்துக்களைப் பற்றி முன்பு படித்துள்ளோம். இச்சுட்டெழுத்துக்களை முதலில் பெற்றுவரும் பெயர்கள் - சுட்டுப்பெயர் எனப்படும். சுட்டுப் பெயர் ஐம்பாலிலும் வரும். காட்டு : அவன், இவன், உவன் - ஆண்பால் அவள், இவள், உவள் - பெண்பால் அவர், இவர், உவர் - பலர்பால் அது, இது, உது - ஒன்றன் பால் அவை, இவை, உவை - பலவின் பால் குறிப்பு : அகரச்சுட்டு - சேய்மையில் உள்ள பொருளையும், இகரச்சுட்டு - அண்மையில் உள்ள பொருளையும், உகரச் சுட்டு - இடையிலும் பின்னும் உள்ள பொருளையும் சுட்டும். சேய்மை - தொலைவு - தூரம். அண்மை - பக்கம். உகரச்சுட்டு -பேச்சுவழக்கில் இல்லை. அங்கு இங்கு ஆங்கு ஈங்கு ஆண்டு ஈண்டு அந்த இந்த - இவையும் சுட்டுப்பெயர்களேயாம். 4. வினாப் பெயர் சென்ற வகுப்பில், சுட்டெழுத்துக்களைப் பற்றிப் படித்த போது, வினாவெழுத்துக்களைப் பற்றியும் படித்தோம். எ, யா,ஆ, ஓ, ஏ - இவை ஐந்தும் வினாவெழுத்துக்கள் ஆகும். வினாவெழுத்துக்களை முதலிலோ, ஈற்றிலோ பெற்று வரும் பெயர் வினாப்பெயர் எனப்படும். வினாப் பெயர்கள், ஐம்பால் மூவிடத்திலும் வரும். எ, யா, - மொழியின் முதலிலும், ஆ, ஓ - மொழியின் ஈற்றிலும் ஏ - முதல், ஈறு ஆகிய ஈரிடத்திலும் வரும். காட்டு: எவன்? எது? யாவன்? யாது? எவள்? எவை? யாவள்? யாவை? எவர்? யாவர்? யார்? எ, யா, - மொழி முதலில் ஐம்பாலிலும் வந்தன. யார், அவள் யார், அவன் யார், அவர் யார், - உயர்திணை முப்பாற்கும் பொது. அவனா? அவனோ? அவளா? அவளோ? அவரா? அவரோ? அதுவா? அதுவோ? அவையா? அவையோ? ஆ, ஓ, - மொழியீற்றில் படர்க்கை இடப்பெயர்களோடு வந்தன. பேகனா? பாரியோ? ஒளவையா? நப்பசலையோ? வேளிரா? மூவேந்தரோ? காவிரியா? வையையோ? முக்கனியா? முத்தமிழோ? இலக்கியமா? இலக்கணமோ? ஆ,ஓ, படர்க்கைப் பெயர்களோடு வந்தன. குறிப்பு: 'அவன்' - முதலிய ஐந்தும் படர்க்கை இடப்பெயர். 'பேகன்' - முதலியவை படர்க்கைப் பெயர்ச்சொற்கள். இவை இயற்பெயர் எனப்படும். நானா? யானோ? நாங்களா? யாங்களோ? நீயா? நீயோ? நீங்களா? நீங்களோ? நீவிரா? நீவிரோ? ஆ, ஓ - தன்மை முன்னிலையில் வந்தன. நான் யான் - தன்மை நீ நீங்கள் - முன்னிலை ஏன் ? அவனே செய்தான்? குறிப்பு: ஏ - 'ஏன்' என முதலிலும், ' அவனே' என ஈற்றிலும் வந்தது. ஏகார வினா, முதலில் வருதலே பெருவழக்கு. சொல்லின் ஈற்றில் வருதல், வழக்கில் அருகி விட்டது. என்ன? எந்த? என்னை? எங்கு? என்? யாங்கு? ஏன்? யாண்டு? - இவையும் வினாப் பெயர்களே. 5. இடுகுறி காரணப் பெயர் முன்னர் இடுகுறிப் பெயர், காரணப் பெயர்களைப் பற்றிப் படித்தோம். அவற்றை ஒருமுறை திருப்பிப் பாருங்கள். அவ்விடுகுறிப் பெயரும், காரணப் பெயரும் - பல பொருளுக்குப் பொதுப் பெயராகவும், ஒரு பொருளுக்கே சிறப்புப் பெயராகவும் வரும். அவை முறையே, 1. இடுகுறிப் பொதுப்பெயர் 2. இடுகுறிச் சிறப்புப் பெயர் 3. காரணப் பொதுப் பெயர் 4. காரணச் சிறப்புப் பெயர் -என வழங்கப் பெறும். அ. இடுகுறிப் பொதுப் பெயர் மரம் என்பது இடுகுறிப்பெயர். இது, இன்ன மரம் என்று குறியாமல் மா, பலா, வாழை முதலிய மரங்களுக்கெல்லாம் பொதுப்பெயராய் நிற்றலால். இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும். மாமரம், பலா மரம், வாழைமரம் எனப் பொதுவாய் நிற்றல் காண்க. ஆ. இடுகுறிச் சிறப்புப் பெயர் தென்னை - என்பதும் இடுகுறிப் பெயரே. இது, இன்னமரம் எனச் சிறப்பாக ஒருவகை மரத்தைக் குறிப்பதால், இடுகுறிச் சிறப்புப் பெயர் எனப்பட்டது. பனை, வாழை, வேம்பு, தேக்கு முதலிய எல்லா மரப்பெயர்களும் இடுகுறிச் சிறப்புப் பெயர்களே யாகும். இ. காரணப் பொதுப் பெயர். பறவை என்பது - காரணப் பெயர் என்பதை முன்பு கண்டோம். காக்கை, குருவி, புறா, கிளி முதலிய எல்லாப் பறவைகளுக்கும் இது, பொதுப்பெயராய் நிற்றலால், பறவை என்பது, கரணப் பொதுப் பெயர் எனப்படும். அணி என்பது - அணியப்படும் பலவகை அணிகலன்களுக்கும் பொதுப் பெயராய் நிற்கின்றது. அணிகலன் - நகை. உடை என்பது - உடுக்கப்படும் ஆடைகள் பலவற்றுக்கும் பொதுப்பெயராய் நிற்கின்றது. எனவே, அணி, உடை என்பன - காரணப் பொதுப் பெயர்களே யாகும். ஈ. காரணச் சிறப்புப் பெயர் மீன்கொத்திப் பறவை என்பதும், காரணப் பெயரே. இது இன்ன பறவை என ஒருவகைப் பறவையைக் குறித்தலால், காரணச் சிறப்புப் பெயர் எனப்பட்டது. மரங்கொத்திப் பறவை என்பதும் காரணச் சிறப்புப் பெயரே. பயிற்சி 1. பொதுப் பெயர், சிறப்புப் பெயர் -வேறுபாடென்ன? 2. உங்கள் பாடத்தில் உள்ள - இடுகுறிப் பொதுப் பெயர், சிறப்புப் பெயர், காரணப் பொதுப் பெயர், சிறப்புப் பெயர்களைக் கண்டறிக. 3. 'முல்லைக்கொடி' என்பது போல, செடி, கொடி, மரம், புல் - இவை ஒவ்வொன்றிற்கும் நான்கு எடுத்துக்காட்டுத் தருக. 4. இன்ன பொது, சிறப்புப் பெயர் என்று குறிப்பிடுக: வானம்பாடி யானை மாதுளை வேட்டி மலர் வானொலி கெண்டைமீன் பஞ்சணை கருவேல் மீன் பழம் மாம்பழம் பொரி மின்விளக்கு 6. ஆகுபெயர் இது எங்கள் ஊர் - இதில், 'ஊர்' என்பது இடத்தைக் குறிக்கிறது. அதாவது, வீடுகள் அமைந்துள்ள இடத்தைக் குறிக்கிறது. இதில், ஊரின் பெயர் ஊரையே குறிக்கிறது. ஊர் சிரிக்கிறது - இதில், 'ஊர்' என்பது ஊரைக் குறியாது, ஊரில் உள்ள மக்களைக் குறிக்கிறது. சிரிப்பவர் மக்களே யாவர். அதாவது, ஊரின் பெயர், அவ்வூரில் உள்ள மக்களுக்கானது. இவ்வாறு ஒன்றன் பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்கு ஆகிவருவது - ஆகுபெயர் எனப்படும். அக்குளத்தில் தாமரை உள்ளது - இங்கு தாமரை என்பது, தாமரைக் கொடியைக் குறிக்கிறது. தாமரை சூடினாள் - இங்கு, தாமரை என்பது தாமரைக்கொடியைக் குறியாது, அதன் பூவைக் குறிப்பதால் ஆகுபெயர். தாமரை மலரைத்தானே சூடுவர்! ஒரு பொருளின் பெயர், அப்பொருளையே குறிப்பது இயற்பெயர் எனப்படும். ஒரு பொருளின் பெயர், அப்பொருளைக் குறியாது, அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளைக் குறிப்பது ஆகுபெயர் எனப்படும். மயில் ஆடினது. மயில் -இயற்பெயர். ஆடினது மயிலே ஆதலால், மயில் என்னும் பெயர் அம்மயிலையே குறிக்கிறது. அதாவது, அப்பெயர் அம் மயிலுக்கே ஆனது. மயில் ஆடினாள் - மயில் போன்ற சாயலையுடைய பெண் ஆடினாள். இங்கே மயில் என்னும் சொல், மயிலைக் குறியாது, அம்மயில் போன்ற பெண்ணைக் குறிப்பதால், மயில் - ஆகுபெயர். தெருவில் கத்தரிக்காய் விற்பவளை - 'கத்தரிக் காய்' என்று அழைப்பதும், காஞ்சிபுரத்தில் நெய்த பட்டுச் சேலையை - 'காஞ்சிபுரம்' இருக்கிறதா?, என்பதும், 'படி விலை என்ன?' 'நான்கு முழம் கொடு', 'அவனுக்கு இரண்டு கொடு', என்பன வெல்லாம் ஆகுபெயர்களே. பயிற்சி 1. ஆகுபெயர் என்பது யாது? 2. இயற்பெயர், ஆகுபெயர் - வேறுபாடென்ன? 3. உங்கள் பாடத்தில் வந்துள்ள ஆகுபெயர்களைக் கண்டறிக. 4. ஆகுபெயரையும் இயற்பெயரையும் எடுத்துக் காட்டுக: 1. வீட்டுக்கு வெள்ளை அடித்தனர். 2. அரிசி படி என்ன விலை? 3. நடுச்சாலை நாலு வாங்கி வா. 4. சின்னாளப்பட்டி இருக்கிறதா? 5. நேற்று இலங்கையை ஈரோடு வென்றது. 6. அவள் மல்லிகைப்பூப் பறிக்கிறாள். 7. இன்னும் கொஞ்சம் பொங்கல் கொண்டு வா. 8. அவர்கள் வெற்றிலை நடுகிறார்கள். 9. நான் பள்ளிக்குப் போகிறேன். 10. ஓடியோடிக் கால் வலிக்கிறது. 7. வேற்றுமை முருகன் - என்பது பெயர்ச் சொல். இச்சொல் யாதொரு வேறுபாடும் அடையாமல் அப்படியே இருக்கிறது. முருகன் வந்தான் - இதில், முருகன் வருதலாகிய தொழிலைச் செய்பவனாக வேறுபடுகிறான். செய்பவன், எழுவாய் என்பன ஒரு பொருட்சொற்கள். ஒரு தொழிலைச் செய்பவன் - எழுவாய், அல்லது செய்பவன் எனப்படுவான். வேலன் முருகனை வென்றான் - இதில், முருகன் வேலனால் வெல்லப்பட்டவனாக வேறுபடுகிறான். 'முருகன் வந்தான்' என்பதில், முருகன் ஒரு தொழிலைச் செய்பவனாக உள்ளான். 'வேலன் முருகனை வென்றான்' என்பதில் முருகன் வேலனால் செயல்படுபவனாக உள்ளான். வேலன் செய்பவனாக உள்ளான். பிறரால் செயல்படும் பொருள் செயப்படுபொருள் எனப்படும். ஒரு தொழிலைச் செய்யும் பொருள் - எழுவாய் எனப்படும். எழுவாய் செய்யுந் தொழிலால், அல்லது செயலால் செயல்படும் (செயற்படும்) பொருள் செயப்படு பொருள் எனப்படும். எழுவாயின் செயலைக் குறிக்கும் சொல் - பயனிலை எனப்படும். எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்னும் இம்மூன்றும், வாக்கியத்தின் உறுப்புக்கள் ஆகும் என்பதை நினைவுகூர்க. இவ்வாறு பெயர்ச் சொல்லின் பொருள் - எழுவாய், செயப்படுபொருள் முதலியனவாக வேறுபடுதல் வேற்றுமை எனப்படும். அவ்வேற்றுமை எட்டு வகைப்படும். இவ்வேற்றுமை களுக்கு உருபும் பொருளும் உண்டு. அவற்றைச் சுருக்கமாக இங்குத் தெரிந்துகொள்வோம். அடுத்த வகுப்பில் அவற்றை விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். 1. முதல் வேற்றுமை இதற்கு உருபு இல்லை, இதில் எழுவாய், பயனிலை மட்டும் வரும். முருகன் வந்தான். முருகன் - எழுவாய் வந்தான் - பயனிலை காட்டு : எழுவாய் பயனிலை மாலை வந்தது. காற்று அடித்தது. மின்னல் மின்னிற்று. வானம் இருண்டது. மழை பெய்தது. நிலம் விளைந்தது. நாடு செழித்தது. மக்கள் மகிழ்ந்தனர். ஊரார் கூடினர். சிறார் ஆடினர். 2. இரண்டாம் வேற்றுமை இதன் உருபு -ஐ.பொருள் - செயப்படுபொருள். உருபு, செயப்படுபொருளைச் சார்ந்தே வரும். பெரும்பாலும் உருபு தொக்கே (மறைந்தே) வரும். காட்டு: 1. பழையன் பாடம் படித்தான் - பாடத்தை. தையல் சட்டை தைத்தாள் - சட்டையை. மாடு புல் மேய்ந்தது - புல்லை. குழந்தை பால் குடித்தது - பாலை. இவ்வாக்கியங்களில் உருபு தொக்கு வந்தது. பாடம், சட்டை, புல், பால் செயப்படுபொருள்கள். 2. உழவர் வயலை உழுதனர் - வயல் + ஐ நல்லார் நாற்றை நட்டனர் - நாற்று + ஐ ஆடவர் நெல்லை அறுத்தனர் - நெல் + ஐ அம்மா அரிசியை அரித்தனள் - அரிசி + ஐ இவற்றில் உருபு விரிந்து வந்தது. வயல், நாற்று, நெல், அரிசி - செயப்படு பொருள்கள். உழவர் வயலை உழுதனர். உழவர் - எழுவாய் உழுதனர் - பயனிலை வயல் - செயப்படு பொருள் 3. மூன்றாம் வேற்றுமை இதன் உருபு - ஆல், ஓடு முதலியன, கருவிப் பொருள், கருத்தாப்பொருள், உடனிகழ்ச்சிப் பொருள் என்பன - இதன் பொருள். ஒருவன் ஒரு தொழிலைச் செய்வது - முதல் வேற்றுமை. செய்யும் அத்தொழிலால் ஒரு பொருள் அதாவது செய்யப்படுபொருள் தோன்றுவது - இரண்டாம் வேற்றுமை என்று கண்டோம். ஒருவன் ஒரு தொழிலை ஒரு கருவியால் செய்கிறான். அக் கருவியையும், அத்தொழில் செய்பவனாகிய கருத்தாவையும் குறிக்கும் - ஆல் உருபு. ஒருவன் செய்யும் ஒரு தொழிலை இன்னொருவனும் சேர்ந்து செய்யும் உடனிகழ்ச்சியைக் குறிக்கும் - ஓடு உருபு. காட்டு: 1. உழவர் வயலை ஏரால் உழுதனர். நல்லார் நாற்றைக் கையால் நட்டனர். ஆடவர் நெல்லை அரிவாளால் அறுத்தனர். நாம் வானொலிப் பாட்டைக் காதால் கேட்கிறோம்.நாம் வானிற்செல்லும் வானூர்தியைக்கண்ணால் காண்கிறோம். ஏர், கை, அரிவாள், காது, கண் - கருவி 2. உழவரால் வயல் உழப்பட்டது. வள்ளுவரால் திருக்குறள் செய்யப்பட்டது. வீரரால் நமக்கு வெற்றி கிடைத்தது. புலவரால் தமிழ் வளர்க்கப்பட்டது. குழந்தையால் பால் குடிக்கப்பட்டது. உழவர், வள்ளுவர், வீரர், குழந்தை - கருத்தா. கருத்தா, செய்பவன், எழுவாய் - ஒரு பொருட் சொற்கள். 3. குதிரையோடு குட்டி ஓடிற்று. மெல்லியோடு அல்லி பாடினாள். காற்றோடு மழை வந்தது நெல்லோடு புல் வளர்ந்தது. ஆசிரியரோடு மாணவர் சென்றார். குதிரை, மெல்லி, காற்று, நெல், ஆசிரியர் - உட னிகழ்ச்சிப் பொருள். குதிரை ஓடிற்று அதனோடு குட்டியும் ஓடிற்று எனக்கொள்க. 4. நான்காம் வேற்றுமை இதன் - உருபு - கு. பொருள் - கோடற்பொருள். கோடல் - கொள்ளுதல். ஏற்றுக் கொள்ளுதல். பிறர் கொடுக்கும் பொருளை, உதவியை (நன்மை, தீமைகளை) ஏற்றுக் கொள்ளும் பொருள் - கோடற் பொருள் எனப்படும். காட்டு : வள்ளல்கள் புலவர்க்கு வாரி வழங்கினர். புலவர்கள் தமிழுக்குத் தொண்டு செய்தனர். உள்ளவர்கள் இல்லார்க்குப் பொருள் கொடுத்தனர். ஆசிரியர் மாணவர்க்கு அறிவு கொடுத்தனர். உழவர் நெல்லுக்கு நீர் பாய்ச்சினர். நல்லோர்க்குப் பொல்லார் நஞ்சைக் கொடுத்தனர். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தனர் பூவையர் முகத்திற்குப் பொற்சுண்ணம் பூசினர். புலவர், தமிழ், இல்லார், மாணவர், நெல், நல்லோர், வீடு, முகம் - கோடற் பொருள். (5) ஐந்தாம் வேற்றுமை இதன் உருபு - இல், இன், பொருள் - நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுப்பொருள்கள், ஏது - காரணம். காட்டு: 1. அவன் ஊரின் நீங்கினான். ஊர் - நீக்கப் பொருள். ஊரை விட்டுச் சென்றான் என்பது பொருள். மரத்திலிருந்து வீழ்ந்தான் என்பதும் அது. மரம் - நீக்கப் பொருள். 2. தேனின் இனிது தமிழ், தேன் - ஒப்புப் பொருள். 3. ஈரோட்டின் வடக்கு பவானி. ஈரோடு - எல்லைப் பொருள். அல்லியிற் பெரியவள் மெல்லி, பொன்னனில் உயர்ந்தவன் பண்ணன், பகைவரிற் கொடியவர் வஞ்சகர். ஈதலின் நல்லது இரவாமை. - இவையும் எல்லைப் பொருள்களே. 4. அறிவில் சிறந்தவர் ஒளவையார். அறிவு - ஏதுப்பொருள். நஞ்சிற் கொடியது நாகம். தரத்தில் உயர்ந்தது தங்கம் - இவையும் ஏதுப்பொருள்களே. (6) ஆறாம் வேற்றுமை இதன் உருபு - அது, உடைய. பொருள் - உரிமை, அல்லது கிழமைப் பொருள். உரிமை - உரியது - சொந்தம். காட்டு: எனது மாடு, என்னுடைய மாடுகள். (7) ஏழாம் வேற்றுமை இதன் உருபு - கண் முதலியன. பொருள் - இடப்பொருள் காட்டு : மரத்தின்கண் ஏறினான் - கண் பள்ளியில் படிக்கிறான் - இல் அவனிடம் சென்றான் - இடம் மரம், பள்ளி, அவன்- இடப் பொருள். (8) எட்டாம் வேற்றுமை இதற்கு உருபு இல்லை. பொருள் - விளிப்பொருள். விளித்தல் - அழைத்தல், கூப்பிடுதல். முருகன், அல்லி, மாடு, காக்கை முதலிய படர்க்கைப் பெயர்களை, முன்னிலைப் பெயர்களாக்கிக் கூப்பிடுதல். காட்டு: வீரன் - வீர ! வீரா! வீரோ! பொன்னன் - பொன்ன ! பொன்னா! பொன்னோ! தந்தை - தந்தாய்! தந்தையே! தாய் - தாயே! கிளி - கிளியே! நாரை - நாராய்! நாரையே! வான் - வானே! தம்பி - தம்பீ! விளி வேறுபாடுகளைக் கவனியுங்கள். பயிற்சி 1. வேற்றுமை என்பது யாது? 2. இலை - இதை முதல்வேற்றுமை ஆக்குக. இலை என்பது 2, 3, 7- ஆம் வேற்றுமைகளாகக் காட்டுத் தருக. 3. வேற்றுமைகளைக் குறிப்பிடுக: 1. தமிழே தமிழனது உயிர்நாடி. 2. தமிழைத் தாயெனப் போற்றுவோம். 3. உழைப்போர்க்கு உதவு. 4. வானினின்று மழை பெய்தது. 5. பாம்பிற் கொடியவர் உட்பகைவர். 6. உலக அமைதியை உண்டாக்குக. 7. எழுத்தால் இயன்றது சொல். 8. நண்பரிடம் நம்பிக்கை வை. 2. வினைச் சொல் கோழி கூவிற்று. கோழி என்பது - ஒரு பொருள். பொருளைக் குறிக்கும் சொல் - பெயர்ச்சொல் ஆகும் என்பதை முன்பு கண்டோம். கோழி, குதிரை, மரம், கல், பெட்டி, முருகன், வள்ளி - இவை பெயர்ச் சொற்கள். கூவிற்று என்பது - கோழியின் தொழிலைக் குறிக்கிறது. பொருளின் தொழிலைக் குறிக்கும் சொல் - வினைச் சொல் எனப்படும். வினை - தொழில். படித்தான், பாடுகிறாள், வருவார், பறந்தது, உடைந்தன - இவை வினைச் சொற்கள். வினைச் சொற்களைப் பற்றியும் முன் ஒருவாறு அறிந்துள்ளோம். 1. உடன்பாடு, எதிர்மறை பாவை மலர் பறித்தாள். பாவை மலர் பறித்திலள். பறித்தாள் - உடன்பாட்டு வினை. பறித்திலள் - எதிர்மறை வினை. பறித்தாள் என்பது - செயல் நிகழ்வதைக் குறிக்கும் வினைச்சொல், ஆதலால், 'பறித்தாள்' என்பது - உடன்பாட்டு வினை எனப்பட்டது. பறித்திலள் என்பது - செயல் நிகழாததைக் குறிக்கும் வினைச்சொல், ஆதலால், 'பறித்திலள்' என்பது - எதிர்மறை வினை எனப்பட்டது. உடன்பாடு எதிர்மறை பூவை கோலம் போட்டாள் - போட்டிலள். பூவை கோலம் போடுகின்றாள் - போடுகின்றிலள். பூவை கோலம் போடுவாள் - போடாள். உடன்பாட்டு வினை போலவே, எதிர்மறை வினையும் முக்காலத்திலும் வரும். உடன்பாடு எதிர்மறை காலம் போட்டாள் போட்டிலள் இறந்தகாலம் போடுகின்றாள் போடுகின்றிலள் நிகழ்காலம் போடுவாள் போடாள் எதிர்காலம். - இவை படர்க்கை வினைமுற்றுக்கள். உடன்பாடு எதிர்மறை காலம் நான் உண்டேன் உண்டிலேன் இறந்தகாலம் நான் உண்கின்றேன் உண்கின்றிலேன் நிகழ்காலம். நான் உண்பேன் உண்ணேன் எதிர்காலம் இவை தன்மை வினைமுற்றுக்கள். உடன்பாடு எதிர்மறை காலம் நீ பாடினாய் பாடிலாய் இறந்தகாலம் நீ பாடுகின்றாய் பாடுகின்றிலாய் நிகழ்காலம் நீ பாடுவாய் பாடாய் எதிர்காலம் - இவை முன்னிலை வினைமுற்றுக்கள் உடன்பாடு, எதிர்மறை ஆகிய இரு வினை முற்றுக்களும் - முக்காலத்தினும், தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்று இடங்களிலும் வரும் என்பதை அறிக. பயிற்சி 1. உடன்பாடு, எதிர்மறை - என்பவற்றின் பொருள் என்ன? 2. இவ்விருவகை வினைச்சொற்களும் எங்கெங்கு வரும்? 3. உங்கள் பாடத்திலிருந்து உடன்பாட்டு வினை, எதிர்மறை வினைகட்கு நான்கு எடுத்துக் காட்டுத் தருக. 4. எதிர்மறை வினைகளாக்குக : ஆடுகின்றாள் ஓடுகின்றோம் பாடுவார் தின்றாய் பறந்தது பாடுவாய் உதிர்கின்றன உண்பீர் 5. உடன்பாட்டு வினைகளாக்குக : கண்டிலன் உண்ணேன் உடைந்திலது தூங்கிலேம் படிக்கின்றிலள் பாடிலாய் மலர்ந்தில ஆடீர் கொடுத்திலர் காணேன் 2. தன்வினை, பிறவினை முருகன் உண்டான். வள்ளி கண்டாள். முருகன் தானே உண்டான். வள்ளி தானே கண்டாள். இவ்வாறு, எழுவாய் தானே செய்கிற வினை தன்வினை எனப்படும். முருகன், வள்ளி - எழுவாய். முருகன் வேலனை உண்பித்தான். வள்ளி குழந்தைக்கு நிலாவைக் காண்பித்தாள். முருகன் தான் உண்ணாமல், வேலனை உண்ணச் செய்தமையால், உண்பித்தான் என்பது - பிறவினை எனப்படும். பிறவினை - ஒரு வினையை ஒருவன் தான் செய்யாமல், பிறரைச் செய்யும் படி செய்யும் வினை. வள்ளி நிலாவைத் தான் காணாது, குழந்தையைக் காணும் படி செய்ததால், காண்பித்தாள் என்பது பிறவினை ஆயிற்று. தன்வினை பிறவினை பரணன் படித்தான் பரணன் படிப்பித்தான் செல்வி செய்தாள் செல்வி செய்வித்தாள். 'படிப்பித்தான், செய்வித்தாள்' என்னும் பிற வினைகளில் உள்ள - 'பி, வி' என்னும் எழுத்துக்கள் முறையே - 'படித்தான்', 'செய்தாள்' என்னும் தன்வினைகளை – பிறவினை களாக்கின. 'பி, வி' என்னும் எழுத்துக்கள், தன்வினையைப் பிறவினை ஆக்குவதால், இவ்வெழுத்துக்களைப் பிறவினை உருபு எனலாம். தன்வினை பிறவினை காலம் நடந்தான் நடப்பித்தான் இறந்தகாலம் நடக்கின்றான் நடப்பிக்கின்றான் நிகழ்காலம் நடப்பான் நடப்பிப்பான் எதிர்காலம் என, இவை முக்காலத்திலும் வரும். இவை படர்க்கை வினைமுற்றுக்கள். தன்வினை பிறவினை காலம் நடித்தேன் நடிப்பித்தேன் இ.காலம் நடிக்கின்றேன் நடிப்பிக்கின்றேன் நி. காலம் நடிப்பேன் நடிப்பிப்பேன் எ.காலம் இவை தன்மை வினைமுற்றுக்கள். தன்வினை பிறவினை காலம் ஓதினாய் ஓதுவித்தாய் இ.காலம் ஓதுகின்றாய் ஓதுவிக்கின்றாய் நி. காலம் ஒதுவாய் ஓதுவிப்பாய் எ.காலம் இவை முன்னிலை வினைமுற்றுக்கள். எழு - எழுப்பு சுழல் - சுழற்று போ - போக்கு பாய் - பாய்ச்சு உருள் - உருட்டு நட - நடத்து தன் வினைப் பகுதியோடு கு சு டு து பு று - சேர்ந்து பிறவினை ஆனது. தன்வினை பிறவினை பழகு பழக்கு கூடு கூட்டு ஆறு ஆற்று தன்வினைப் பகுதி, வல்லொற்று இரட்டித்துப் பிறவினை ஆனது. தன்வினை பிறவினை திரும்பு திருப்பு அடங்கு அடக்கு வருந்து வருத்து தன்வினைப் பகுதி, மெல்லொற்று வல்லொற்றாகத் திரிந்து, பிறவினை ஆனது. இவ்வாறும் தன்வினை பிறவினையாகும். பயிற்சி 1. தன்வினை, பிறவினை - வேறுபாடென்ன? 2. தன்வினையைப் பிறவினை யாக்கும் உருபுகள் யாவை? 3. தன்வினை பிறவினை யாகும் வேறு வகைகளைக் குறிப்பிடுக. 4. உங்கள் பாடத்தில் வந்துள்ள தன்வினை பிற வினைகளைக் கண்டறிக. 5. பிறவினை ஆக்குக: அடித்தான் மதிப்பாள் வென்றான் கொடுத்தார் தூங்கினார் உணர்வான் அறிந்தேன் எழுந்தாய் பறித்தது பறந்தது. 6. தன்வினை ஆக்குக: செய்வித்தான் தெருட்டு உழுவித்தான் ஓட்டு நெய்வித்தான் கொல்வி 3. செய்வினை, செயப்பாட்டுவினை செங்குட்டுவன் கனகவிசயரை வென்றான். கனகவிசயர் செங்குட்டுவனால் வெல்லப்பட்டார். இவ்விரு வாக்கியங்களையும் கவனியுங்கள். இவ்விரண்டும் செங்குட்டுவன் செயலே. வென்றான் என்பது செங்குட்டுவன் செய்த வினை. ஆதலால், இது செய்வினை எனப்படும். இவ்வாக்கியத்தில், செங்குட்டுவன் - எழுவாய்; வென்றான் - பயனிலை. வெல்லப்பட்டார் என்பதும் செங்குட்டுவன் செய்த வினையே எனினும், அவ்வினை - கனகவிசயர்க்கு உரியது. இது செங்குட்டுவனால் செய்யப்பட்டவினை ஆதலால், செயப் பாட்டுவினை எனப்பட்டது. செய்யப்படுவினை -செயப்படுவினை- செயப்பாட்டுவினை. இவ்வாக்கியத்தில், கனக விசயர் - எழுவாய்; வெல்லப்பட்டார் - பயனிலை. வென்றான் என்னும் செய்வினை வாக்கியத்தில் உள்ள செங்குட்டுவன் என்னும் எழுவாய், வெல்லப்பட்டார் என்னும் செயப்பாட்டுவினை வாக்கியத்தில் 'செங்குட்டுவனால்' என, மூன்றாம் வேற்றுமை ஆல் உருபேற்றது. வென்றான் என்னும் செய்வினை வாக்கியத்தில் செயப்படு பொருளாக இருந்த கனகவிசயர் என்பது, வெல்லப்பட்டார் என்னும் செயப்பாட்டுவினை வாக்கியத்தில் எழுவாயாக வந்துள்ளது. செய்வினை காட்டு : 1. வள்ளி கோலம் போட்டாள். 2. காற்று மலர்களை உதிர்த்தது. 3. மோகூர்ப் பழையன் மோரியரை வென்றான். 4. நாய் திருடனைக் கடித்தது. 5. திருவள்ளுவர் திருக்குறளைச் செய்தார். 6. மூவேந்தர் தமிழகத்தில் முறையுடன் ஆண்டனர். செயப்பாட்டுவினை 1. கோலம் வள்ளியால் போடப்பட்டது. 2. மலர்கள் காற்றினால் உதிர்க்கப்பட்டன. 3. மோரியர் மோகூர்ப் பழையனால் வெல்லப்பட்டனர். 4. திருடன் நாயால் கடிக்கப்பட்டான் 5. திருக்குறள் திருவள்ளுவரால் செய்யப்பட்டது. 6. தமிழகம் மூவேந்தரால் முறையுடன் ஆளப்பட்டது. 'படு' என்னும் துணைவினை, செய்வினையைச் செயப்பாட்டுவினை ஆக்குகிறது. பயிற்சி 1. செய்வினை, செயப்பாட்டுவினை - வேறுபாடென்ன? 2. செய்வினை வாக்கியத்தில் உள்ள எழுவாய் முதலியன செயப்பாட்டு வினை வாக்கியத்தில் எங்ஙனம் மாறுபடுகின்றன? 3. செய்வினையைச் செயப்பாட்டுவினை ஆக்குவது எது? 4. உங்கள் பாடத்தில் வந்துள்ள செய்வினை செயப்பாட்டு வினைகளைக் கண்டறிக. 5. செய்வினைகளைச் செயப்பாட்டு வினைகளாக்குக: 1. பாரி இரவலர்க்குப் பறம்பைக் கொடுத்தான். 2. கண்ணகி நெடுஞ்செழியன் முன் சிலம்பை உடைத்தாள். 3. இளஞ்சேட் சென்னி மோரியரை வென்று துரத்தினான். 4. தொல்காப்பியர் தொல்காப்பியத்தைச் செய்தார். 5. பாண்டியர் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்தனர். 6. யார் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் செய்தனர்? 7. முருகன் பந்தை மேலே அடித்தான். 8. வள்ளி மலர்மாலை கட்டினாள். 6. செயப்பாட்டு வினைகளைச் செய்வினைகளாக்குக: 1. திருக்குறள் திருவள்ளுவரால் செய்யப்பட்டது. 2. தமிழ் வள்ளல்களால் வளர்க்கப்பட்டது. 3. சோழநாடு காவிரியால் வளஞ்செய்யப்பட்டது. 4. பகைவர் வீரரால் வெல்லப்பட்டனர். 5. தமிழகம் மூவேந்தரால் ஆளப்பட்டது. 6. விறகு கயிற்றால் கட்டப்பட்டது. 3. இடைச்சொல் அன்னம் போல நடந்தாள். கத்தியால் அறுத்தான். (கத்தி + ஆல்) அன்னம், கத்தி - பெயர்ச் சொல். நடந்தாள், அறுத்தான் - வினைச் சொல். போல, ஆல் என்பன - இடைச் சொற்கள் ஒரு பொருளைக் குறிக்கும் சொல் -பெயர்ச் சொல். பொருளின் தொழிலைக் குறிக்கும் சொல் - வினைச்சொல் என்பதை முன்பு கண்டோம். பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லையும் சார்ந்து வந்து, அவற்றின் பொருளை விளக்கும் சொல் -இடைச் சொல் எனப்படும். தமிழைப்படி. தமிழ் + ஐ கையால் தொடு. கை + ஆல் தலைக்கு எண்ணெய் தலை + கு கல்வியில் பெரியவன். கல்வி + இல் எனது வீடு என்+ அது மனைக்கண் இரு. மனை + கண் ஐ, ஆல், கு, இல், அது, கண் -வேற்றுமை உருபுகள். இவை இடைச் சொற்களாகும். செய்தான். செய் - பகுதி த் - இடைநிலை ஆன் - விகுதி வினைச் சொல்லின் உறுப்புக்களான - பகுதி, விகுதி, இடைநிலை என்னும் மூன்றனுள் - விகுதியும் இடை நிலையும் இடைச் சொற்களே. புலிபோலப் பாய்ந்தான். மழை நிகர் வண்கை. தேன் அன்ன தீஞ்சொல். போல, நிகர், அன்ன முதலிய உவமை உருபுகள் இடைச் சொற்களே. ஐ முதலிய வேற்றுமை உருபுகள், விகுதியும் இடைநிலையும் ஆகிய வினையுறுப்புக்கள், போல முதலிய உவமை உருபுகள் ஆகியவை இடைச் சொற்கள் ஆகும். 'ஒன்றும் இரண்டும்' என்பவற்றில் உள்ள உம் என்பதும் இடைச் சொல்லே. ஒல்லென ஒலித்தது. ஒல் - ஒலிக்குறிப்பைத் தரும் இடைச் சொல். இம்மென, திடுதிடென, நெறுநெறென, மடமடென- என்பவையும் ஒலிக் குறிப்பிடைச் சொற்களே. இன்னும் பெயரையும் வினையையும் சார்ந்து நின்று பொருளுணர்த்தும் இடைச்சொற்கள் பல உண்டு. அவற்றைப் பற்றி மேல் வகுப்பில் தெரிந்து கொள்ளலாம். பயிற்சி 1. இடைச் சொல் என்பது யாது? அது எவ்வாறு வரும்? 2. உங்கள் பாடத்தில் வந்துள்ள இடைச் சொற்களைக் கண்டறிக. 3. இடைச்சொற்களை எடுத்துக் காட்டுக 1. செய்யுளை மனப்பாடம் செய். 2. அவன் காளைபோல நடக்கிறான். 3. அவள் கலகல வென்று சிரித்தாள். 4. இலக்கியமும் இலக்கணமும் கற்க. 5. ஏணியின் மேல் ஏறினான். 6. உன்னால் முடிந்ததைச் செய். 7. செடிக்குத் தண்ணீர் ஊற்று. 8. தாயன்ன தமிழ். 4. உரிச்சொல் பொருளைக் குறிக்கும் சொல் -பெயர்ச் சொல். பொருளின் தொழிலைக் குறிக்கும் சொல் - வினைச் சொல் என்பதை முன்பு கண்டோம். பொருளின் குணம் அல்லது பண்பைக் குறிக்கும் சொல் - உரிச் சொல் எனப்படும். குணம், பண்பு என்பன ஒரு பொருட் சொற்கள். பச்சை மிளகாய். பச்சை - நிறம் கார மிளகாய் காரம் - சுவை வட்டக் கல் வட்டம் - வடிவம் பத்துப் பாட்டு பத்து -அளவு நன்னூல். நன்மை - தன்மை நிறம், சுவை, வடிவம், அளவு, தன்மை என்னும் ஐந்தும் - பொருளின் குணம், அல்லது பண்பு எனப்படும். இக்குணங்களைக் குறிக்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் - பண்புப் பெயர் எனப்படும். எளிதில் பொருள் விளங்காத சொல் - உரிச் சொல் எனப்படும். இளங் கன்று. இளமை - பண்புப் பெயர். குழக் கன்று குழ - உரிச் சொல் குழக்கன்று - இளங்கன்று, குழ - இளமையைக் குறிக்கும் உரிச்சொல். நனி பேதை - மிகவும் பேதை. சாலப் பேசினான் - மிகப் பேசினான். நனி, சால என்னும் உரிச்சொற்கள் - மிகுதி என்னும் பொருளில் வந்துள்ளன. நனி என்பது - பேதை என்னும் பெயரையும் சால என்பது -பேசினான் என்னும் வினையையும் மிகுதிப்படுத்தின. பெயரைச் சார்ந்து வருவது - பெயருரிச் சொல், வினையைச் சார்ந்து வருவது வினையுரிச் சொல் எனப்படும். நனி பேதை. நனி -பெயருரிச்சொல். சாலப்பேசினான். சால - வினையுரிச் சொல். சால, உறு, தவ, நனி, கூர், கழி - என்பன மிகுதி என்னும் ஒரு குணந் தழுவிய உரிச் சொற்கள். கடிநகர் - காவலையுடைய நகர் கடிவாய் - கூர்மையான வாய். கடி மலர்- மணம் பொருந்திய மலர். கடிமுரசு - ஆர்க்கும் முரசு. கடி என்னும் உரிச்சொல் - காப்பு, கூர்மை, மணம், ஆர்ப்பு என்னும் பல குணங்களை உணர்த்தும் உரிச் சொல். எனவே, ஒரு குணம் தழுவிய உரிச் சொற்கள், பலகுணந்தழுவிய உரிச் சொல் என, உரிச் சொல் இருவகைப்படும். பயிற்சி 1. உரிச் சொல் என்பது என்ன? 2. பண்புப் பெயர், உரிச் சொல் - ஒற்றுமை, வேற்றுமை என்ன? 3. உங்கள் பாடத்தில் வந்துள்ள உரிச் சொற்களைக் கண்டறிக. 4. பெயருரிச் சொல், வினையுரிச் சொற்களைக் குறிப்பிடுக. கூர்வேல் கழிநெடிலடி உறுபசி நனிதின்றான் கடிவயல் தவப்பெரியன். கட்டுரைப் பகுதி "கற்க கசடற" என்றார் வள்ளுவர். கசடறக் கற்ற கல்வியறிவை எழுத்தின் மூலமே பிறர்க்கு அறிவித்தல் கூடும். கற்பது போல இன்றியமையாததே எழுதுவதும். எனவே, நீங்கள் கற்கும் போதே கற்றதை எழுதிப் பழகி, எழுத்து வன்மையும் பெறுதல் வேண்டும். இது குறித்தே உங்கள் பாடத்திட்டத்தில், கட்டுரைப் பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது. கட்டுரைப்பகுதியில் அதன் அமைப்பு முதன்மையான தாகும். அமைப்பு : 1. முன்னுரை, 2, செய்தி, 3. முடிவுரை என்பன, கட்டுரையின் உறுப்புக்களாகும். இவ்வமைப்புடன் எழுதுவதே கட்டுரை எனப்படும். 1.முன்னுரை: செய்தியின் தலைப்பு வருமாறு, அச்செய்தியின் தொடர்பான கருத்துக்களையுடையது. 2. செய்தி:கட்டுரைத் தலைப்பின் பொருள், கருத்துக்களின் வகைக்கேற்ப, செய்தியைப் பல பகுதியாகப் பகுத்து எழுதவேண்டும். அங்ஙனம் பகுத்தெழுதுவதே, பத்தி எனப்படும். 3. முடிவுரை: செய்தியின் சாரத்தைச் சுருக்கி எழுதுதல். இவ்வமைப்பின்படி, பிழையில்லாமல்,சிறு சிறு வாக்கியங்களாக, நல்ல தமிழ் நடையில் நன்கு எழுத வேண்டும். 'கட்டுரையும் கைப்பழக்கமும்' என்பதை நினைவு கூர்க. 1. வகுப்பறைப் பணி குறிப்பு: 1. முன்னுரை, 2. வகுப்புத் தலைவன், 3. தலைவன் பொறுப்பு, 4,வகுப்பணி, 5.அணியும் பணியும், 6, முடிவுரை. முன்னுரை: தெருக்களைத் துப்புரவு செய்தல், தெருக்களில் மின்விளக்குப் போடுதல் முதலிய பொதுப்பணிகளைச் செய்து, ஊர் நலத்தைப் பேணி வருகிறது ஊராட்சி மன்றம். ஊர்நலம் பேண ஊராட்சி மன்றம் அமைந்திருப்பது போல, எங்கள் பள்ளியை நன்முறையில் வைத்திருப்பதற்காக நாங்களும் ஒர் அமைப்பினை ஏற்படுத்தியுள்ளோம். வகுப்புத் தலைவன் : கோடை விடுமுறைக்குப் பின்னர், 2.6.67 அன்று எங்கள் பள்ளி திறக்கப்பட்டது. 12.6.67 அன்று, எங்கள் வகுப்பு மாணவன் தலைவன் தேர்வு நடந்தது. நெடுஞ்செழியன் தலைவனாகவும், இளங்கோ துணைத்தலைவனாகவும் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். கை உயர்த்துதல் மூலம் இத்தேர்தல் நடைபெற்றது. தலைவர் பொறுப்பு: வகுப்புத் தலைவர் தேர்தல் நடந்ததும், வகுப்பு ஆசிரியர் அவர்கள், அவ்வகுப்புத் தலைவர்களின் பொறுப்பினை எடுத்துரைத்தனர். அதாவது, "ஆசிரியர் வகுப்புக்கு வருமுன்னர் வகுப்புத் தலைவன் வகுப்பு அமைதியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர் இல்லாத போது, வகுப்புத் தலைவன் ஏறத்தாழ ஆசிரியர் பொறுப்பில் இருப்பதால், மாணவர்கள் அத்தலைவனுக்கு அடங்கி நடக்க வேண்டும். தலைவன் பள்ளிக்கு வராத நாளில் துணைத்தலைவன் அப்பணியினை ஏற்று நடத்த வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார். வகுப்பணி : பின்னர் ஆசிரியர் எங்கள் வகுப்பில் உள்ள நாற்பத்து நான்கு மாணவர்களையும் சேரரணி, சோழரணி, பாண்டியரணி, வேளிரணி என நான்கு அணிகளாகப் பிரித்தார். அவ்வாறு பிரித்தபின் ஒவ்வோரணிக்கும் ஒவ்வொரு தலைவனை ஏற்படுத்தினார், அணித்தலைவன் என்பது, அத்தலைவன் பெயர். அணியும் பணியும்: சேரரணி: க. முருகன் இவ்வணியின் தலைவன். நாடோறும் வகுப்பறையைத் துப்புரவு செய்து தூய்மையாக வைத்திருப்பது இவ்வணியின் பொறுப்பாகும். சோழரணி : அ. மாறன் இவ்வணியின் தலைவன். நாற்காலி, மணை, சாய்வுமணை, அறுகாலி (பெஞ்சு) முதலியவற்றைத் துடைத்துத் துப்புரவு செய்தல் இவ்வணியின் பணியாகும். பாண்டியரணி : செ. கண்ணன் இவ்வணியின் தலைவன், வகுப்பறைச் சுவர்களைத் துடைத்துத் துப்புரவு செய்தல், வாரத்துக் கொருமுறை தரையைக் கழுவுதல் இவ்வணியின் கடமையாகும். வேளிரணி : மு. குமணன் இவ்வணியின் தலைவன், குடிநீர் கொண்டு வந்து வைத்தல் இவ்வணியின் அலுவலாகும். முடிவுரை: எங்கள் பள்ளியில் உள்ள எல்லா வகுப்புக்களிலும் இத்தகைய அமைப்புக்கள் உண்டு. இவ்வாறு வகுப்பு மாணவர்களை நந்நான்கு அணிகளாக வகுத்து, வகுப்பறைப் பணிகளை நடத்துவதன் மூலம் எங்கள் பள்ளியை நன் முறையில் இருக்குமாறு செய்து வருகிறோம். 2. திட்டமிடல் குறிப்பு : 1. முன்னுரை, 2. அணித்தலைவர் கூட்டம், 3. சுற்றுலாத் திட்டம், 4. முடிவுரை. முன்னுரை : நாம் கற்கும் கல்விக்கு உறுதுணை செய்வது காட்சியாகும். பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆண்டுக்கொரு முறையேனும் சிறப்புடைய சில இடங்கட்குச் சென்று, அங்குள்ள சிறப்பியல்புகளைக் கண்டு களித்து வருதல் இன்றியமையாத தொன்றாகும். இவ்வாறு மாணவர்கள் சென்று சில இடங்களைக் கண்டு களித்து வரும் காட்சி - சுற்றுலா எனப்படும். அணித்தலைவர் கூட்டம் : இவ்வாறு சுற்றுலாச் செல்வதற்குத் திட்டமிடுவதற்காக, பள்ளி இலக்கிய மன்ற மண்டபத்தில் அணித்தலைவர்கள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. எல்லா வகுப்பு அணித்தலைவர்களும், பள்ளி மாணவர் தலைவரும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். குறிப்பிட்ட ஆசிரியர்களும் வந்திருந்தனர். தலைமை ஆசிரியர் அவர்கள் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, சுற்றுலாவின் இன்றியமையாமையை எடுத்தியம்பினர். பின்னர். சுற்றுலாச் செல்வதன் திட்டம் தீட்டப்பட்டது. சுற்றுலாத் திட்டம் : கீழ்பவானி அணைக்கட்டினையும், நீலகிரி மேட்டுப்பாளையத்தில் உள்ள செயற்கைப் பட்டு நூற்பாலையையும் சென்று பார்த்து வருவதெனவும், 6, 7, 8, வகுப்புக்களின் மாணவர்களும், நான்கு ஆசிரியர்களும் செல்வதெனவும், சுற்றுலாச் செல்ல முன் வரும் மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப, இரண்டு அல்லது மூன்று மோட்டார் வண்டிகளை அமர்த்திக் கொள்வதெனவும், அதன் செலவுக்காக ஒவ்வொரு மாணவரும் ரூ. 5 கொடுக்க வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டது. சுற்றுலாச் செல்லும் நாளினைப் பின்னர் தெரிவிப்பதாகத் தலைமை ஆசிரியர் அவர்கள் கூறினர். முடிவுரை: எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு ஒழுங்காகச் செய்வதே ஏற்றமுறையாகும். அவ்வாறே பள்ளி மாணவர்களாகிய நாங்களும் ஒன்று கூடிச் சுற்றுலாச் செல்வதற்குத் திட்டந் தீட்டிக் கொண்டோம். திட்டமிட்டுச் செய்தலே சிறந்த முறையாகும். 3. சுற்றுலா சித்தோடு, 15.8.67 அன்புள்ள அறிவழகன்! வணக்கம். நின் கடிதம் கிடைத்தது. அதில் நீ உங்கள் பள்ளி மாணவர்கள் சுற்றுலாவாகச் சேலங் கருப்பூர் வெள்ளைக்கல் மேட்டிற்குச் சென்று, அங்கு வெள்ளைக்கல் வெட்டி எடுக்கப் படுவதையும் மின்சாரச் சூளைகளில் அக்கற்கள் மாவாக அறைக்கப் படுவதையும் கண்டு களித்து வந்ததாக குறித்திருந்தது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். உங்களைப் போலவே நாங்களும், 12.8.67 சனிக்கிழமை அன்று சுற்றுலாச் சென்று, கீழ் பவானி அணைக்கட்டையும், நீலகிரி மேட்டுப்பாளையத்தில் உள்ள செயற்கைப் பட்டு நூற்பாலையையும் கண்டுகளித்து வந்தோம். அன்று காலை 5.30 மணிக்கெல்லாம், 120 மாணவர்களும், நான்கு ஆசிரியர்களும் இரண்டு மோட்டார் வண்டிகளில் புறப்பட்டோம். வழி நெடுகக் கீழ்பவானி வாய்க்கால் பாயும் வயல்களில் நெற்பயிர் பச்சைப் பசேலென்று விளங்கிய காட்சியைக் கண்டு களித்துக் கொண்டே சென்றோம். கவந்தப்பாடி, கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம் ஆகிய ஊர்களின் வழியாகச் சென்று, 8 மணிக்கெல்லாம் அணைக்கட்டைச் சென்று பார்த்தோம். அணை ஒரு சிறுகடல் போலக் காட்சியளித்தது. அணையிலிருந்து மதகுகளின் வழியாகத் தண்ணீர் விழுங்காட்சி கண்ணைவிட்டகலாக் காட்சியாகும். இந்தியாவிலேயே இது ஒரு பெரிய மண்ணணையாகும். அணையின் கரை 8 கி. மீட்டர் நீளமுடையது. வரலாற்றுச் சிறப்புடைய தணாயக்கன் கோட்டை இவ்வணையில் மூழ்கிவிட்டதாம். இவ்வணை, சத்தியமங்கலத்திற்கு 13 கி. மீட்டர் மேற்கில் பவானியாற்றில் கட்டப்பட்டுள்ளது. இவ்வணையிலிருந்து வெட்டப்பட்டுள்ள வாய்க்கால் நீர், 2,07,000 ஏக்கர் நிலங்களில் பாய்கிறதாம். அணையின் முன்னர் அமைந்துள்ள பூங்கா, அவ்வணைக்குப் பெருமை தரும் வகையில் விளங்குகிறது. பகலுணவுக்குப் பின், 1-30 மணிக்கெல்லாம் மேட்டுப்பாளையத்திற்குப் புறப்பட்டோம். அங்குச் சென்று, மரங்களைக் கூழாக்கி, அக்கூழைப் பஞ்சாக்கி, அப்பஞ்சை நூலாக்கும் செயற்கைப் பட்டு நூற்பாலையைப் பார்த்தோம். அது நம் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஒர் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. அத் தொழிற்சாலையின் பொறுப்பாளர், அங்கு நிகழும் தொழில் நிகழ்ச்சிகளையெல்லாம் கண்டு களிக்கும்படி காட்டினார். மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, 7.30 மணிக் கெல்லாம் ஊர் வந்து சேர்ந்தோம். நான் ஆங்குக் கண்ட காட்சிகள் இரண்டு மூன்று நாள் என் கண்ணைவிட்டகலவில்லை. சுற்றுலாவின் சிறப்பினைச் சொல்லவுங் கூடுமோ! அன்புள்ள, பூங்குன்றன். 4. செய்யுளின் திரண்ட பொருள் நரியின் தந்திரம் 1. கோடுறு சினையிற் காகம் கூடுவைத் தனேக காலம் பேடொடு கூடி வாழும் பெருமரப் பொந்தில் வந்தே ஆடிய கரும்பாம் பொன்றங் கதுபெறும் முட்டை யெல்லாம் நாடியே குடித்துப் போட நலிந்துளம் மெலிந்து வாடி 2. தன்னுயிர்ப் பாங்க னான சம்புகள் அருகு போயிங் கென்னசெய் வன்யான் என்ன இதைக்கொலல் அரிதோ நீபோய் மன்னவன் தேவி யாடும் மஞ்சனச் சாலை புக்குப் பொன்னணி கொண்டு வந்து போடுக பொந்தி லென்ன; 3. காகமப் படியே செய்யக் காவலன் ஏவ லாளர் ஏகிமா மரத்தின் பொந்தை ஈர்ந்தனர் ஈரும் போதில் நாகமங் கிருந்து சீற நறுக்கினர் இருதுண் டாக ஆகையால் உபாயத் தாகா திலையென அறையும் பின்னும். - பஞ்சதந்திரப் பாடல் அருஞ்சொற்பொருள் கோடுறு - வளைந்த. சினை - கிளை. பேடு -பெண் காக்கை. பாங்கன் - நண்பன். சம்புகன் - நரியின் பெயர். மஞ்சனச்சாலை - குளிக்கும் அறை. ஈர்த்தல் - பிளத்தல், வெட்டுதல்; அறைதல் - சொல்லுதல். திரண்டபொருள் 1.ஒரு காக்கை, தன் பெண்காக்கையுடன் ஒரு மரக்கிளையில் கூடுகட்டிக் கொண்டு நெடுங்காலமாக வாழ்ந்து வந்தது. அம் மரப்பொந்தில் இருந்த ஒரு கரும்பாம்பு, அக்காக்கை யிடும் முட்டைகளை யெல்லாம் குடித்து வந்தது. அது கண்ட காக்கை மனம் கலங்கி மிகவும் வருந்தியது. 2. ஒரு நாள் அக்காக்கை தன் நண்பனான சம்புகன் என்னும் நரியிடம் சென்று, தன் குறையைச் சொல்லி, இதற்கு நான் என்ன செய்வேன் என்றது. நரி , "நீ அரசி குளிக்கும் அறைக்குட்சென்று, அவள் குளிக்கும் போது கழற்றிவைக்கும் நகைகளுள் ஒன்றை எடுத்து வந்து, அப்பாம்பு இருக்கும் பொந்தில் போட்டுவிடு," என்றது. 3. காகம் அவ்வாறே செய்தது. அது கண்ட அரசன் ஏவலாளர்கள் சென்று அம் மரப்பொந்தைப் பிளந்தனர். பிளக்கும் போது அங்கிருந்த அப்பாம்பு சீறவே, அவர்கள் அதை இரு துண்டாக வெட்டிக் கொன்றனர். ஆகையால், தந்திரத்தினால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை. குறிப்பு: உங்கள் செய்யுட் பாடத்தில் உள்ள செய்யுட்களுக்கு இவ்வாறு பொருளெழுதிப் பழகுங்கள். 5. விரித்தெழுதுதல் சுருக்கம் முன்பு தமிழகத்தை முடியுடை மூவேந்தர் என்போர் ஆண்டு வந்தனர். சங்ககாலத்தே அம்மூவேந்தர் மரபினரும் முறையாக ஆண்டு வந்ததால், தமிழகம் முப்பெரும் பிரிவாகப் பிரிந்திருந்தது. அம் மூவேந்தர் மரபினருள் சேரன் செங்குட்டுவன், சோழன் கரிகாலன், பாண்டியன் நெடுஞ் செழியன் ஆகிய மூவரும் குறிப்பிடத்தக்க வராவர். விரிவு தமிழகத்தில் ஆட்சிமுறை என்று ஏற்பட்டதோ அன்று தொட்டுத் தமிழகத்தைச் சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர் மரபினர் ஆண்டு வந்தனர். இம் மூவேந்தர் ஆட்சி என்று ஏற்பட்டதென்பது வரையறுத்துக் கூறமுடியாத தொன்றாகும். அத்தகு பழமையுடையது அம்மூவரசர் மரபு. சேர சோழ பாண்டியர் என்னும் இச் செந்தமிழ் வேந்தரை, 'முடியுடை மூவேந்தர்' எனச் சங்ககாலத் தமிழ்ப்புலவர்கள் சிறப்பித்துப் பாடியுள்ளனர். புறநானூறு என்னும் சங்க இலக்கிய நூலில் அன்னார் செங்கோன்மைச் சிறப்பினையும், வீரம், கொடை, புகழ் என்னும் முப்பண்பினையும் பரக்கக் காணலாம். இம்மூவேந்தர் மரபினரும் தொடர்ந்து முறையாக ஆண்டு வந்ததனால், தமிழகம் - சேரநாடு சோழநாடு பாண்டியநாடு என முப்பெரும் பிரிவாகப் பிரிந்திருந்தது. இன்றைய மலையாள நாடே அன்றைய சேரநாடாகும். இதன் தலை நகர் வஞ்சி என்பது. திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் - சோழ நாடு ஆகும். இதன் தலைநகர்கள் - புகாரும், உறையூரும் ஆகும். மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்கள்- பாண்டிய நாடு ஆகும். இதன் தலைநகர் - மதுரை. சேர மன்னர்களுள் சிறந்தவன் செங்குட்டுவன். தமிழ் பழித்த கனகவிசயரை வென்று சிறை பிடித்து, அவர்தம் முடித்தலையில் கண்ணகியின் படிமக்கல் ஏற்றி வந்து, கண்ணகிக்குக் கோயில் அமைத்து விழாக் கொண்டாடினவன் இவனே. கரிகாற் சோழன் என்பான், காவிரிக்குக் கரைகட்டிச் சோழநாட்டை, 'சோழ வளநாடு சோறுடைத்து' என்னும் சிறப்புக்குரிய தாக்கினவனாவன். இவன், இமயம் வரை படையெடுத்துச் சென்று, எதிர்த்த மன்னரை வென்றடக்கி இமயத்தில் புலி பொறித்து மீண்ட புகழாளன். பாண்டியன் நெடுஞ்செழியன் என்பான், ஆராயாது கோவலனைக் கொன்றது குற்றமென அறிந்ததும் உயிரை விட்டுத் தமிழர் செங்கோன்மைத் திறத்தை உலகறியச் செய்தவனாவன். 6. சுருக்கி எழுதுதல் விரிவு தமிழ் மொழியில் உள்ள பழைய நூல்கள் - சங்க இலக்கியம் எனப்படும். இவை சங்க காலச் சான்றோர்களால் செய்யப்பட்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றப் பட்டமையால். 'சங்க இலக்கியம்' எனப் பெயர் பெற்றன. சங்க இலக்கியங்களில் திருக்குறளும் ஒன்றாகும். இது, திருவள்ளுவர் என்னும் செந்நாப்புலவரால் செய்யப்பட்டது. 1330 குறள் வெண்பாக்களால் ஆனது திருக்குறள். தமிழர் வாழ்க்கை முறையை அறம் பொருள் இன்பமென மூன்றாக வகுத்துச் செய்யப்பட்டதால் இது, முப்பால் எனப்பெயர் பெற்றது. முப்பால் - அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்பன. உலக மொழிகளில் திருக்குறள் போன்ற ஒரு நூல் இல்லை எனலாம். இது, தமிழர் வாழ்க்கை முறையே யன்றிப் பொதுவாக மக்கள் வாழ்க்கை முறை கூறுவதால், உலகப் பொது நூல் என, உலகப் பேரறிஞர்கள் பலராலும் பாராட்டப்படுகிறது. உலக மொழிகள் பலவற்றிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறள் ஒரு தனி நீதி நூலாகும். இதில் கூறப்படாத நீதி ஒன்றுமே இல்லை எனலாம். அத்தகு சிறப்புடையது திருக்குறள். சுருக்கம் சங்க இலக்கியங்களில் திருக்குறளும் ஒன்றாகும். இது, 1330 குறள் வெண்பாக்களால் ஆனது; அறம் பொருள் இன்பங்கூறுவது. இது ஒர் உலகப் பொதுநூலாகும். உலக மொழிகளில் திருக்குறள் போன்ற ஒரு நூல் இல்லை எனலாம். திருக்குறளில் இல்லாத பொருள் ஒன்றுமே இல்லை. குறிப்பு: இவ்வாறு, சுருங்கிய பகுதியை விரித்தும், விரிந்த பகுதியைச் சுருக்கியும் எழுதிப் பழகுக. 7. குறிப்புக் கொடுத்துக் கதை எழுதுதல் காக்கையும் நரியும் குறிப்பு மரத்தடியில் -ஒருத்தி - விற்றுக்கொண்டிருந்தாள் - நேரம்பார்த்து - காக்கை - வடையை - உட்கார்ந்தது - நரி - ஏமாற்றி - எண்ணியது - பார்த்து - அழகாக - உருவமே - இனிமை யாக - பாடு - பேச்சை - நம்பிய - காக்கா - விழ - ஓடி விட்டது. கதை ஒரு மரத்தடியில் முதியவள் ஒருத்தி முறுக்கும் வடையும் விற்றுக் கொண்டிருந்தாள். அவள் ஏமாந்திருக்கும் நேரம் பார்த்து ஒரு காக்கை ஒரு வடையை எடுத்துக் கொண்டு போய் ஒரு மரத்தில் உட்கார்ந்தது. அது கண்ட ஒரு நரி, அக்காக்கையை ஏமாற்றி அவ்வடையைத் தின்ன எண்ணியது. நரி அம்மரத்தண்டை போய்க் காக்கையைப் பார்த்து, "ஏ! காக்கையே ! நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்! உன் உருவமே இவ்வளவு அழகாக இருந்தால், உன் குரல் எவ்வளவு இனிமையாக இருக்கும்! எங்கே ஒரு பாட்டுப் பாடு" என்றது. நரியின் வஞ்சகப் பேச்சை உண்மை யென்று நம்பிய காக்கை, தன் வாயைத் திறந்து - 'காக்கா' என்றது. வாயிலிருந்த வடை கீழே விழ, நரி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டது. "நாம் ஒருவரை ஏமாற்றினால் நம்மைப் பிறர் ஏமாற்றுவர்." குறிப்பு : இவ்வாறு, குறிப்பைக் கொண்டு கதைகள் எழுதிப் பழகுங்கள். 8. கதையை முடித்தல் கண்ணகி கதை கதையின் முற்பகுதி சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தில் கோவலன் என்னும் பெருஞ்செல்வன் ஒருவன் இருந்தான். அவன் தீயவழியில் தன் செல்வ முழுவதையும் இழந்து வறுமையுற்றான். அதனால் அவன், தன் மனைவி கண்ணகியின் காற் சிலம்பை விற்று வாணிகஞ்செய்து வாழ எண்ணி, தம் மனைவியுடன் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரைக்குச் சென்றான். அங்கு, மாதரி என்பவள் வீட்டில் கண்ணகியை இருக்கச் செய்து, அவள் காற்சிலம் பொன்றை எடுத்துக்கொண்டு மதுரைக் கடைத் தெருவை நோக்கிச் சென்றான். அரண்மனைச் சிலம்பை ஏமாற்றிய பொற்கொல்லன் ஒருவனால் சிலம்பு திருடிய கள்வனென்று காட்டிக் கொடுக்கப்பட்டு, பாண்டியன் நெடுஞ்செழியனால் கோவலன் கொலை செய்யப்பட்டான். பிற்பகுதி கண்ணகி, கோவலன் கொலையுண்ட செய்தி கேட்டல்; வெட்டுண்டு கிடக்கும் கணவனைக் கண்ணகி காணல்; அரண்மனைக்குச் சென்று அரசனிடம் வழக்குரைத்தல். பாண்டியன் அரசு கட்டிலில் துஞ்சல். குறிப்பு: கதையை ஒழுங்காக எழுதி முடிக்க. 9. செய்தித்தாள் - கட்டுரை செய்தித் தாள்களில் வெளியான செய்திக் குறிப்பைக் கொண்டு கட்டுரை எழுதுதல். குடியாட்சி செய்திகள் 1. நம் நாடு விடுதலை பெற்று இருபது ஆண்டுகள் ஆகின்றன. பத்தொன்பதாவது விடுதலை விழாவை இந்நாடு நாளை கொண்டாடுகிறது. இந்நாடு விடுதலை பெற அருந் தொண்டாற்றிய விடுதலை வீரர்கட்கு நம் வணக்கம் உரித்தாகுக. - 14.8.66 - தமிழ்நாடு 2. இந்தியக் குடியரசு ஏற்பட்டு 16 ஆண்டுகள் ஆகின்றன. நாளை குடியரசு மலராகத் தினமணி வெளி வருகிறது. 25-1-67 - தினமணி குறிப்பு: 1. முன்னுரை, 2. முடியாட்சி, 3. குடியாட்சி, 4. முடிவுரை. முன்னுரை: தந்தை, தாய், மக்கள் என்னும் மூவகை உறுப்பினரைக் கொண்டது - குடும்பம் எனப்படும், குடும்பத்தலைவராகிய தந்தை, பொருளீட்டிக் குடும்பத்தை ஒழுங்காக நடத்தி வருகிறார். பல குடும்பங்கள் ஒருங்கிருந்து வாழ்வது ஊர் எனப்படும். குடும்பத் தலைவரைப் போலவே, ஊராட்சி மன்றத்தார் ஊர்க்கு வேண்டிய நலங்களைச் செய்து ஊரை ஒழுங்காக ஆண்டு வருகின்றனர். ஊர்கள் பல உடையது - நாடு எனப்படும். நாட்டு மக்கள் அமைதியாக வாழ்வதற்கு ஏற்பட்டதே அரசு ஆகும். முடியாட்சி : உலகில் அரசியல் முறை ஏற்பட்டகாலந்தொடங்கி இந்நூற்றாண்டுத் தொடக்கம் வரை உலக நாடுகள்அனைத்திலும் முடியாட்சியே நடந்து வந்தது. உலக நாடுகள் ஒவ்வொன்றையும் வழிவழியாக வந்த அரச மரபினரே ஆண்டு வந்தனர். இவர்கள் முடி மன்னர் எனப்பட்டனர். சென்ற சில நூற்றாண்டுகளில்,உலக நாடுகள் சிலவற்றில் முடியாட்சி ஒழிக்கப்பட்டுக் குடியாட்சி தொடங்கப்பட்டது. இந்நூற்றாண்டில் உலகில் முடியாட்சியே ஒழிந்து விட்டது எனலாம். குடியாட்சி : முன்பு நம் இந்திய நாடு பல சிறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வோர் அரசமரபினர் ஆண்டு வந்தனர். தமிழகத்தைச் சேர சோழ பாண்டியர் என்னும் அரச மரபினர் ஆண்டு வந்தனர். கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தமிழரசு ஒழிந்து அயலரசு ஏற்பட்டது. இந்நாட்டுக்கு வாணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், இந்நாட்டு அரசுகளை ஒழித்து, 150 ஆண்டுகள் இந்நாட்டில் தனியரசு செலுத்தி வந்தனர். 15.8.1947 இல் ஆங்கில ஆட்சி ஒழிந்து. இந்நாட்டின் ஆட்சி நம் கைக்கு வந்தது. 26.1.1950 இல் இந்திய அரசியல் சட்டம் அமைக்கப்பட்டது. அச்சட்டத்தின்படி வயது வந்த ஆண் பெண் எல்லோருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. பொதுத்தேர்தலின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்நாட்டை ஆளத் தொடங்கினர். இந்நாட்டு மக்கள் எல்லாரும் இந்நாட்டு மன்னர் ஆயினர். நாட்டில் குடியாட்சி அல்லது மக்களாட்சி மலர்ந்தது. முடிவுரை : முன்பு நம் நாட்டை முறையாக முடியரசர்கள் ஆண்டுவந்தனர். 150 ஆண்டுகள் இந்நாடு ஆங்கிலேயர்க் கடிமையாகக் கிடந்தது. 15.8.1947 இல் இந்நாடு விடுதலை பெற்றது. 26.1.1950 இல் மக்களாட்சி மலர்ந்து. 1952, 57, 62,67 ஆகிய ஆண்டுகளில் முறையே நான்கு பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. வாழ்க மக்களாட்சி! 10. மேற்கோள் நூல் கட்டுரை நூல்களிலிருந்து மேற்கோட் செய்யுட் கருத்துக்களைக் கொண்டு கட்டுரை எழுதுதல். கல்வி மேற்கோள் 1. முன்னுரை கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் - குறள் 2. கல்வியின் சிறப்பு கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை - குறள் வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக்க சிறப்பின்அரசர் செறின்வவ்வார் எச்ச மெனவொருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற் றல்ல பிற - நாலடி 3. கற்றோர் பெருமை: உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் - குறள் மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத் தன்றேய மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாம் சிறப்பு - மூதுரை 4. கல்லாமை: விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றரோ டேனை யவர் - குறள் 5. முடிவுரை கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே - வெற்றிவேற்கை கட்டுரை முன்னுரை : தம்பெயரை எழுதவும் படிக்கவும் தெரியாதவர் தற்குறி எனப்படுவர். கண்ணிருந்தும் கல்லாதவர் குருடர் போன்றவரே யாவர். அத்தற்குறித் தன்மையைப் போக்குவது கல்வியே யாகும். 'கற்றவரே கண்ணுடையர் எனப்படுவர்; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்ணுடையரே யாவர்; கண்ணுடையராகார்,' என்கின்றார் வள்ளுவர். எனவே மக்கட்குக் கல்வி இன்றியமையாத தொன்றாகும். கல்வியின் சிறப்பு : கல்வியே ஒருவற்கு என்றும் கெடா;பொருளோ அழியுந் தன்மையுடையது. ஒருவன் கற்ற கல்வியை யாரும் பறித்துக் கொள்ள முடியாது. பிறருக்குக் கொடுத்தாலும் கொடுக்கக் கொடுக்கக் குறைவுறாது. பெருங்குற்றம் செய்த ஒருவரின் பொருள்களைப் பறிமுதல் செய்தல் போல, ஆள்வோராலும் பறித்துக் கொள்ளமுடியாது. எனவே, பெற்றோர் மக்கட்குத் தேடிவைக்கும் பொருள் கல்வியே யாகும். இதற்கு மாறான செல்வப் பொருளோ பொருளல்ல - என்னும் வள்ளுவர் வாக்காலும், நாலடியாரின் கூற்றாலும் கல்வியின் சிறப்பு இனிது விளங்குகிறதல்லவா? கற்றோர் பெருமை: கற்றாரொருவர் ஓரூர்க்குச் சென்றால் அவ்வூரினர் அவரை அன்புடன் வரவேற்று அளவளாவி மகிழ்வர். அவர் பிரிந்து செல்லும் போது, இனி என்று இவரைக் கண்டு அளவளாவுவோம் என அவ்வூரினர் அவரைப் பிரிய மனமில்லாது வருந்துவர் - என்கிறார் வள்ளுவர். பெருஞ்செல்வமுடைய அரசனைவிடக் கற்றவரே சிறப்புடையராவர். எங்ஙன மெனில், அரசனுக்குத் தன்னாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றோர்க்கோ எந்த நாட்டுக்குச் சென்றாலும் சிறப்புண்டு. எனவே, அரசனைவிடக் கற்றவரே சிறப்புடையராவர் என்கின்றார் ஒளவையார். கல்லாமை: விலங்குக்கும் மக்களுக்கு முள்ள வேறுபாடு எவ்வளவோ, அவ்வளவே கற்றார்க்கும் கல்லாதவர்க்கு முள்ள வேறுபாடு. எனவே கற்று அறிவைப் பெற்று நன்மக்களாக வாழ்வதே மக்கட் பிறப்பின் பயன் என்பது வள்ளுவர் கருத்து. முடிவுரை: பொருளில்லையே என்று கல்லாமல் இராமல் பிச்சை எடுத்தாகிலும் கற்றுக் கொள்ளுதல் நன்று என்னும் அதிவீரராம பாண்டியனின் அறிவுரையைக் கடைப்பிடித்து, மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் கல்வியைக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும். குறிப்பு: இவ்வாறு, உங்கள் பள்ளி நூலகத்திலுள்ள நூல்களிலிருந்து குறிப்பெடுத்துக் கட்டுரை எழுதிப்பழகுங்கள். 11. பள்ளி ஆண்டு மலர் பள்ளி ஆண்டு மலருக்கு - கவிதை, கதை, கட்டுரை எழுதுதல். 1. கவிதை எங்கள் நாய் எங்கள் நாய் நல்ல நாய் எனது சொல்லைக் கேட்குநாய் தங்கையோடு பழகுநாய் தரையில் படுத்துத் தூங்குநாய் பாலுஞ்சோறும் உண்ணுநாய் பட்டிநாயின் குட்டிநாய் வாலையாட்டி மகிழுநாய் வாடைகண்டு பிடிக்குநாய் பன்னலமும் உடையநாய் பகலில் வேட்டை யாடுநாய் என்னொடுவந் துலவுநாய் இரவில் வீட்டைக் காக்கு நாய் எங்கள் நாய் நல்லநாய். மு. தங்கவேல், ஏழாம் வகுப்பு - ஆ 2. கதை குத்து வெட்டு! ஒரு சிற்றூர். அவ்வூரில் அடிக்கடி திருட்டுப் போனது. அவ்வூரினர் ஒருநாள் ஒன்று கூடி, ஒவ்வோர் இரவும் பத்துப் பேராக ஊரைக் காவல் காத்து வருவதென முடிவு செய்து, அவ்வாறே காவல் காத்து வந்தனர். ஒருநாள் ஒரு வீட்டினுள் 'குத்து'! 'வெட்டு'! என்ற உரத்த ஓசை கேட்டது. அது கேட்ட அக்காவல் காப்போர், அவ்வீட்டை நோக்கிச் சென்றனர். அவர்கள் வீட்டினை அணுக அணுக, குத்து, வெட்டு என்பதோடு, 'கையை வெட்டு! காலைவெட்டு! கழுத்தை வெட்டு!' என்னும் குரல் கேட்டது. அவ்வீட்டினுள் யாரையோ கொலை செய்வதாக எண்ணிய அவ்வூர்க் காவலர், அவ்வீட்டுக் கதவைத் தட்டினார்கள். கதவு தட்டுவது கேட்டு அவ்வீட்டினுள் இருந்தவர் கதவைத் திறந்தனர். கதவு திறக்கப்பட்டதும் அக்காவலாளர்கள் வீட்டினுள் சென்று பார்க்க, ஒரு தையற்காரன் நான்கு சிறுவர்களுக்குத் தையல் தொழில் கற்றுக்கொடுத்ததே அக்குரலோசை என்பதை அறிந்த அவர்கள் வியப்புடன் திரும்பிச் சென்றார்கள். செ.இளங்கிள்ளி, ஏழாம்வகுப்பு -இ 3. கட்டுரை ஒப்புரவு ஒப்புரவறிதல் என்பது, திருக்குறளின் 21ஆம் அதிகாரமாக உள்ளது. அதை அடுத்து ஈகை என்னும் அதிகாரம் உள்ளது. வள்ளுவர் ஒரே கருத்துடைய இரண்டதிகாரங்கள் கூறாராகையால் ஒப்புரவும், ஈகையும் ஒன்றல்ல, வெவ்வேறு பொருளுடையனவேயாம் என்பது விளங்குகிறது. இல்லை என்று வந்து ஒன்றை இரப்பார்க்கு, அவர் வேண்டுவதொன்றைக் கொடுப்பது - ஈகை எனப்படும். 'வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை' என்பது திருக்குறள். 'இல்லை என்று இரப்போர்க் கில்லை யென்று உரையா இதயம் நீ அளித்தருள்' என்பது வில்லி பாரதம். ஆனால், 'ஒப்புரவு' என்பது, இல்லை என்று வந்து இரக்கும் வறியார்க்கு ஒன்றை ஈவதன்று. ஈகை என்பது, தனிப்பட்டவர்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பது. ஒப்புரவு என்பது அங்ஙனமன்றிப் பலர்க்கும் பயன்படும்படியான பொதுநன்மை யொன்றைச் செய்வது. அதாவது, குடிநீர்க் கிணறு வெட்டிவைத்தல், பள்ளிக்கூடம், கல்லூரி, மருத்துவச்சாலை கட்டிவைத்தல் போன்ற பொதுநலஞ் செய்தலே ஒப்புரவு செய்தலாகும். 'ஒப்புரவு செய்வான் செல்வம்,' ஊர்க் கிணறு நீர் நிறைந்தது போன்றது; ஊர்க்குள் பொது விடத்தில் பழமரம் பழுத்தது போன்றது' என்னும் வள்ளுவர் காட்டும் உவமைகளால் இது விளங்கும். விதைத்த நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காகப் பாத்தி கட்டுவர். பாத்தி கட்டுவோர் மேடை வெட்டிப் பள்ளத்தில் போட்டுத் தண்ணீர் சமனாக நிற்கும்படி செய்வர். இது 'ஒப்புரவு செய்தல்' எனப்படும். செல்வம் படைத்தவர்கள் அச்செல்வம் நாட்டு மக்கள் எல்லார்க்கும் பயன் படும்படி செய்து - நாட்டு மக்கள் எல்லோரும் நல்வாழ்வு வாழும்படி செய்வதே ஒப்புரவு செய்தல் எனப்படும். ஒப்புரவு செய்தல் என்பதன் கருத்தை உணர்ந்து, அதன்படி நடந்து கொள்ளுதல் செல்வம் படைத்தவர்களின் கடமையாகும். - கு. பூம்பாவை, ஏழாம் வகுப்பு - அ இறுதிப் பயிற்சி செந்தமிழ்ச் சிறார்களே! படிப்பதைப் பயிற்சி செய்வது மிக மிக இன்றியமையாதது. எவ்வளவு நன்கு படித்திருந்தாலும் பயிற்சி செய்யாவிட்டால், படித்தது நன்கு மனத்தில் பதியாது; கேள்விக்குத் தக்க விடை எழுதவும் முடியாது. ஆகையால் கீழ்வரும் கேள்விக்குத் தக்க விடைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். இவ்விறுதிப் பயிற்சியை நன்கு பயின்றால், தெளிவான இலக்கண அறிவைப் பெறலாம் என்பது திண்ணம். 1. எழுத்து 1. தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் - அவை யாவை? 2. அஃகம் - இச்சொல்லில் உள்ள எழுத்துக்களின் பெயர் கூறுக. 3. தமிழ் எழுத்துக்கள் 247 ஆவது எங்ஙனம்? 4. உயிர்மெய்யெழுத்து - 216. விளக்கம் தருக. 5. மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் எவை? 6. மொழி முதலாகும் வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்துக்கள் யாவை? 7. மொழிக்கு முதலாகா அம்மூவின எழுத்துக்கள் எவை? 8. ஞகரமும், யகரமும் எவ்வெவ்வுயிர்களோடு கூடி முதலாகும்? 9. உ, ஊ, ஒ, ஓ - இவ்வுயிர்களோடு கூடி முதலாகாத மெய்யெழுத்து எது? 10. ஙகரம் எவ்வாறு முதலாகும்? 11. மெய்யெழுத்துக்கள் எவ்வாறு முதலாகும்? 12. மொழியிறுதியில் வரும், வாரா மெய்யெழுத்துக்கள் எவை? 13. மூவினங்களில் எவ்வினம் முழுவதும் ஈறாகும்? எவ் வினம் முழுவதும் ஈறாகா? 14. உயிரெழுத்து எவ்வாறு ஈறாகும்? 15. ஆடி, கால் - இச்சொற்களின் முதல், ஈற்றெழுத்துக்களைக் குறிப்பிடுக. 16. உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் முதலிலும் ஈற்றிலும் எவ்வாறு வரும்? 17. மெய்யோடு கூடி ஈறாகாத உயிரெழுத்து எது? 18. மொழிக்கு முதலும் ஈறும் ஆகும், ஆகா எழுத்துக்களின் அட்டவணை ஒன்று தருக. 19. ட்,ற் - இம்மெய்களின் சிறப்பென்ன? 20. உயிர்முதல் உயிரீறு, மெய்முதல் மெய்யீற்றுச் சொற்களுக்கு ஒவ்வோர் எடுத்துக்காட்டுத் தருக. 2. சொல் 1. சொல்லின் இலக்கணம் என்ன? 2. ஆ, கை - இவ்வெழுத்துக்கள் சொல்லாதல் எங்ஙனம்? 3. தமிழ்ச் சொற்கள் எத்தனை வகைப்படும்? 4. சோற்றை நனி உண்டான் -இதிலுள்ள சொற்களை இன்னின்ன சொல் என்று குறிப்பிடுக. 5. பெயர்ச்சொல் என்பது யாது? 6. தமிழ்ச் சொற்கள் பற்றிய தொல்காப்பியர் கருத்தென்ன? 7. நம் முன்னையோர் பொருள்களுக்கு எவ்வாறு பெயரிட்டனர்? 8. இடுகுறிப்பெயர், காரணப்பெயர், -வேறுபாடென்ன? 9. இடுகுறிப் பொதுப்பெயர், காரணச் சிறப்புப் பெயர் -இவற்றிற்கு ஒவ்வொரு காட்டுத் தருக. 10. இன்ன பெயர் என்று கூறுக: புறா மாடு வானம்பாடி புகைவண்டி மாமரம் வெள்ளி வானொலி கரும்பலகை 11. பெயர்க் காரணங்கள் கூறுக: கரிக்குருவி நடிகர் வானூர்தி தலையணை தட்டம் தொழிலாளர் 12. சுட்டுப்பெயர், வினாப்பெயர் - வேறுபாடென்ன? 13. அ, உ - இவ்விரு சுட்டெழுத்துக்களுக்கு முள்ள வேறுபாடென்ன? 14. சுட்டுப்பெயர்கள் சுட்டும் பொருள் யாது? 15. வினாவெழுத்துக்கள் யாவை? 16. சொல்லின் முதலில் வரும் வினாவெழுத்துக்களையும், ஈற்றில் வரும் வினாவெழுத்துக்களையும் குறிப்பிடுக. 17. ஐம்பாலில் வரும் வினாவெழுத்துக்கள், ஐம்பால் மூவிடங்களிலும் வரும் வினாவெழுத்துக்கள் எவை? 18. ஏகார வினாவின் சிறப்பென்ன? 19. அவளோ, கண்ணகியா - இவ்வினாப் பெயர்களின் வேறுபாடென்ன? 20. ஆகுபெயரின் இலக்கணம் என்ன? 21. இயற்பெயர், ஆகுபெயர் - வேறுபாடென்ன? எடுத்துக்காட்டுடன் கூறுக. 22. இயற்பெயரையும்ஆகுபெயரையும் எடுத்துக்காட்டுக: 1. மகளிர் வெற்றிலை நடுகிறார்; ஆடவர் பறிக்கிறார். 2. நேற்றுச் சென்னை மைசூரைத் தோற்கடித்தது. 3. அல்லி மல்லிகை தொடுக்கிறாள்; பாவை கீரை பறிக்கிறாள். 4. நான் பள்ளிக்குப் போனது இத்தெருவுக்கே தெரியும். 5. ஒன்று அல்லது இரண்டடி கொடு. 6. ஆரணிப் பட்டுச் சேலை இருக்கிறதா? இல்லா விட்டால் காஞ்சிபுரம் கொடு. 23. ஆகுபெயர் ஆக்குக: நகர் கால் படி முல்லை வெள்ளை முழம் 24. வேற்றுமை என்பது யாது? 25. வேற்றுமை எத்தனை வகைப்படும்? 26. இல், அது, கண் - இவை எவ்வேற்றுமை உருபுகள்? 27. செயப்படு பொருள், உடனிகழ்ச்சி, எல்லைப் பொருள், கிழமைப் பொருள் - இவை எவ்வேற்றுமைப் பொருள்கள்? 28. மாடு - முதல் வேற்றுமை ஆக்குக. 29. தலைக்கு, என்னுடைய, மரத்தின்மேல், பழத்தை - இன்ன வேற்றுமை என்று கூறுக. 30. அண்ணன், தாய், கிளி, தங்கை - எட்டாம் வேற்றுமை யாக்குக. 31. வினைச்சொல் என்பது யாது? 32. உடன்பாடு, எதிர்மறை -வேறுபாடென்ன? 33, உடன்பாட்டு வினையும் எதிர்மறை வினையும் எங்கெங்கு வரும்? 34, உண்டான் - இவ்வினைமுற்றை, உடன்பாடு, எதிர்மறை இரண்டிலும், முக்காலத்தும் மூவிடத்தும் வருமாறு எழுதுக. 35. செய்தான், ஓடினான் - எதிர்மறையாக்குக. 36. படித்திலன், கண்டிலன் - உடன்பாடாக்குக. 37. தன்வினை, பிறவினை - இலக்கணம் என்ன? 38. தன்வினை எவ்வெவ் வகையில் பிறவினையாகும்? எடுத்துக்காட்டுத் தந்து விளக்குக. 39. கண்டான், அடித்தான்- பிறவினையாக்குக. 40. போக்கு, நடத்து, திருத்து, உருட்டு - தன்வினையாக்குக. 41. செய்வினை, செயப்பாட்டுவினை -வேறுபாடென்ன? 42. செய்வினை எவ்வாறு செயப்பாட்டு வினையாகும்? எடுத்துக்காட்டுத் தந்து விளக்குக. 43. செய்வினை வாக்கியத்தில் உள்ள எழுவாய் முதலிய வாக்கிய உறுப்புகள், செயப்பாட்டுவினை வாக்கியத்தில் எங்ஙனம் மாறுபடும்? 44. இடைச்சொல் என்பது யாது? 45. இடைச்சொல்லின் வகையினைக் குறிப்பிடுக. 46. உரிச்சொல்லின் இலக்கணம் என்ன? 47. உரிச்சொல் எத்தனை வகைப்படும்? வகைக்கு இரண்டு எடுத்துக்காட்டுத் தருக 48. பண்புப்பெயர், உரிச்சொல் - ஒற்றுமை, வேற்றுமை என்ன?  பாகம் - 5 வள்ளுவர் தமிழ் இலக்கணம் - 5 நூல் அறிமுகம் குற்றியல் இகரம் இகரம் உயிர்வகை எழுத்து. ஒரு மாத்திரை அளவு உடையது. அது சொல்லில் வரும்போது சில இடங்களில் அரைமாத்திரையாகக் குறையும். அதற்குக் குற்றியல் இகரம் என்பது பெயர். குறுமை இயல் இகரம். குற்றியல் உகரம்: உகரம் உயிர்வகை எழுத்து. ஒருமாத்திரை அளவு உடையது. அது சொல்லில் வரும்போது சில இடங்களில் அரை மாத்திரையாகக் குறையும். அதற்குக் குற்றியல் உகரம் என்பது பெயர். குறுமை இயல் உகரம். இவ்வாறே ஆய்த எழுத்து, ஐகார எழுத்து, ஒளகார எழுத்து என்பனவும், 'ம்' என்னும் ஒற்றெழுத்தும் மாத்திரை குறைந்து வரும். நாம் குறைத்து முயன்று ஒலிக்க வேண்டும் என்பது இல்லை. தானாகவே குறைந்து ஒலிக்கும். பகுபதம்: ஒரு சொல்லை முதல் நிலை, இறுதி நிலை, இடைநிலை முதலியவாகப் பிரித்துக் காண முடியும். அச் சொற்களுக்குப் பகுபதம் என்பது பெயர். பதம் = சொல். பகாப்பதம்: முன்னே சொன்னவாறு சில சொற்களை முதல்நிலை இடைநிலை முதலியவாகப் பிரிக்க முடியாது. அச்சொல் பகாப்பதம். முதனிலை = பகுதி; இறுதி நிலை = விகுதி. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்பவை பகுபத உறுப்புகள். வேற்றுமை: முதல் வேற்றுமை அல்லது எழுவாய் வேற்றுமை தொடங்கி, எட்டாம் வேற்றுமை அல்லது விளிவேற்றுமை முடிய எட்டு வேற்றுமைகள் தமிழில் உண்டு. அவ்வேற்றுமையை அறிய அதன் உருபுகள் வெளிப்பட வருதலும் வராமையும் உண்டு. வேற்றுமை உருபு வெளிப்பட வந்தால், வேற்றுமை விரி. வெளிப்பட வராமல் மறைந்திருந்தால், வேற்றுமைத் தொகை. அல்வழி: வேற்றுமை அல்லாத வழியில் வருவது அல்வழி. - அது வினை, பண்பு, உவமை, உம்மை அன்மொழி முதலாக வரும். புணர்ச்சி: ஒரு சொல்லோடு ஒரு சொல் கூடும்போது எந்த வேறுபாடும் இல்லாமல் இருந்தது இருந்தவாறே கூடும். அது இயல்புப் புணர்ச்சி. ஒரு சொல்லோடு ஒரு சொல் கூடும்போது ஓரெழுத்துத் தோன்றுதல், மறைதல், மாறுதல் உண்டாகும். அது வேற்றுமைப் புணர்ச்சி. இவற்றின் விளக்கமும் எடுத்துக் காட்டும் பிறவும் இச்சுவடியில் காணலாம். இன்ப அன்புடன், இரா. இளங்குமரன். 1. எழுத்து நமது தாய் மொழியாம் தமிழ்மொழி, 247 எழுத்துக்களை உடையது. உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து, ஆய்த வெழுத்து என, அத்தமிழ் எழுத்துக்கள் நான்கு வகைப்படும் என்பது, உங்கட்குத் தெரியும். 1. உயிரெழுத்து - 12 2. மெய்யெழுத்து - 18 3. உயிர்மெய்யெழுத்து - 216 4. ஆய்தவெழுத்து - 1 247 1. உயிரெழுத்து - 12 அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள. 2. மெய்யெழுத்து - 18 க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன். 3. உயிர்மெய் யெழுத்து - 216 க - உயிர்மெய்யெழுத்து. க் + அ = க க் - மெய் அ - உயிர் உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் ஒன்று கூடி ஆனதால், இது - உயிர்மெய் யெழுத்து எனப்பெயர் பெற்றது. 18 மெய்களோடும், 12 உயிரும் தனித்தனி கூடுவதால், உயிர்மெய் யெழுத்து (18x12= 216) ஆயின. காட்டு: க, கா, கி, கீ, கு, கூ. கெ, கே கை, கொ, கோ, கௌ மற்ற 17 வகை உயிர்மெய் யெழுத்துக்களையும் தமிழ் எழுத்துக்களின் அட்டவணையில் காண்க. 4. ஆய்தவெழுத்து - 1 அஃது, இஃது, அஃறிணை எனச் சொல்லின் இடையில், ஃ - இவ்வாறு மூன்று புள்ளி வடிவாக வரும் ஆய்தவெழுத்து. இது, சொல்லின் இடையிலன்றி, முதலினும் ஈற்றினும் வராது. குறிப்பு: இவ்வெழுத்துக்கள் நான்கும், முன் வகுப்பில் கற்றறிந்தவையே. இனிக் கற்கப் புகுவனவற்றிற்கு விளக்கந் தருதற் பொருட்டு இங்குச் சுருக்கமாகக் கூறப்பட்டன. 1. முதல் சார்பு உயிரெழுத்து, மெய்யெழுத்து முதலிய, நால்வகைத் தமிழ் எழுத்துக்களும் - முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகைப்படும். 1. முதலெழுத்து உயிர் பன்னிரண்டும், மெய் பதினெட்டும் ஆகிய இவை முப்பது எழுத்தும் - முதலெழுத்து எனப்படும். 2. சார்பெழுத்து உயிர்மெய்யெழுத்தும், ஆய்தவெழுத்தும் - சார் பெழுத்து எனப்படும். சார்பெழுத்தாவது -இரண்டு முதலிய எழுத்துக்கள் ஒன்றையொன்று சார்ந்து ஓரெழுத்தாவது. அதாவது, இரண்டு முதலிய எழுத்துக்கள் ஒன்று கூடி ஓரெழுத்தாவது - சார்பெழுத்து எனப்படும். எழுத்துக்கள் ஒன்றை யொன்று சார்ந்து வருவதால் - சார்பெழுத்து எனப்பட்டது. உயிர்மெய் எழுத்து - உயிரும் மெய்யும் ஆகிய இரண்டெழுத்து ஒன்றையொன்று சார்ந்து வந்தது. உயிர் மெய்யாகிய சார்பெழுத்துக்கு முதலானதால் - உயிரும், மெய்யும் முதலெழுத்து எனப்பட்டன. அஃது, இஃது என, ஆய்தவெழுத்து - முன்னும் பின்னும் ஒவ்வோரெழுத்தைப் பெற்று வருவதால், இது மூன்றெழுத்து ஒன்றையொன்று சார்ந்து வரும் சார்பெழுத்தாகும். அடுத்துக் கற்றுக்கொள்ள விருக்கும் - குற்றியலுகரம், குற்றியலிகரம் என்னும் எழுத்துக்களும் சார்பெழுத்துக்களே யாம். எனவே, உயிர்மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரம் என்னும் இந்நான்கும் சார்பெழுத்துக்கள் ஆகும். குறிப்பு : உயிரளபெடை, ஓற்றளபெடை, ஐகாரக்குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பனவும் சார்பெழுத்துக்களே. அவற்றை மேல் வகுப்புக்களில் தெரிந்து கொள்ளலாம். பயிற்சி 1. தமிழ் எழுத்துக்களின் தொகையும் வகையும் என்ன? 2. முதலெழுத்து, சார்பெழுத்து - பெயர்க்காரணம் என்ன? 3. முதலெழுத்துக்கள் எவை? சார்பெழுத்துக்கள் எவை? 4. சார்பெழுத்துக்கள் எத்தனை? 5. அஃதேல் - இதில், முதலெழுத்து இரண்டும், சார்பெழுத்து இரண்டும் உள்ளன. எடுத்துக் காட்டுக. 2. குற்றியலுகரம் விடு, வீடு - இவற்றை உச்சரித்துப் பாருங்கள். ‘விடு’ என்பதில் உள்ள (டு-ட் +உ) உகரத்தின் ஓசையும், ‘வீடு’ என்பதில் உள்ள உகரத்தின் ஓசையும் ஒரே அளவினவாக இல்லை. முதற் சொல்லிலுள்ள உகரத்தின் ஓசையை விட, இரண்டாம் சொல்லிலுள்ள உகரத்தின் ஓசை குறுகி ஓலிக்கிறது. இவ்வாறு குறுகிய ஓசையை உடைய உகரம் - குற்றியலுகரம் எனப்படும். குறு இயல் உகரம் - குற்றியலுகரம். இயல் - ஓசை. பகு - பாகு முசு - மூசு படு - பாடு பொது - போது தபு - தாபு அறு - ஆறு இரு வரிசையிலும் உள்ள சொற்களை நன்கு உச்சரித்துப் பாருங்கள். ஈற்றுகரங்களின் ஓசை வேறுபாடு நன்கு தெரியும். முதல்வரிசைச் சொற்களின் ஈற்றுகரத்தைவிட, இரண்டாம் வரிசைச் சொற்களின் ஈற்றுகரம் குறுகி ஒலித்தல் எளிதில் புலப்படும். மேல் எடுத்துக் காட்டிய சொற்களின் ஈற்றில் உள்ள - கு, சு, டு, து, பு, று, - என்பன வல்லின உகரம் எனப்படும். க், ச், ட், த், ப், ற்,- என்னும் வல்லின மெய்களோடு உகரம் (உ) கூடிவருவதால் (க் + உ - கு) இவை - ‘கு சு டு து பு று’ வல்லின உகரம் எனப்பட்டன. ‘பகு’ என்பது போலத் தனிக்குறிலை அடுத்து வருவதொழிய, ‘பாகு’ என்பது போலத் தனி நெடிலை அடுத்தும், இரண்டு முதலிய எழுத்துக்கள் கொண்ட சொற்களின் ஈற்றிலும் வரும் ‘கு சு டு து பு று’ வில் உள்ள உகரம் தன்னளவில் குறுகி ஓலிப்பதால் - குற்றியலுகரம் எனப்படும். அதாவது, தனிக்குறிலை அடுத்து வருதல் தவிர, ஒரே நெட்டெழுத்தின் பின்னும், இரண்டு முதலிய எழுத்துக்களுக்குப் பின்னும் வரும் வல்லின மெய்யின் மேல் ஏறிவரும் (கு சு டு து பு று ) உகரமே தன்னளவில் குறுகும். ஒரு மாத்திரை உள்ள உகரம், இவ்வாறு, வல்லின மெய்யை ஊர்ந்து வரும்போது அரைமாத்திரையாக ஒலிக்கும். மாடு பந்து அழகு மார்பு காப்பு அஃது - இவை குற்றியலுகரங்கள் ஈற்றெழுத்துக்கு - ‘கு சு டு து பு று’- வுக்கு முன் உள்ள ஈற்றயல் எழுத்தை நோக்கி, குற்றியலுகரம் அறு வகைப்படும். பந்து - ந் ஈற்றயலெழுத்து. ஈற்றயலெழுத்து என்ன எழுத்தோ, அத்தொடர்க் குற்றுகரம் எனப்பெயர்பெறும். ந் - மெல்லெழுத்து. எனவே, பந்து - மென்றொடர்க் குற்றியலுகரம் எனப்படும். 1. மாடு - வல்லின உகரம் (டு), ஒரே நெட்டெழுத்தைத் தொடர்ந்து வந்தமையால், ‘மாடு’ என்பது நெடிற்றொடர்க் குற்றியலுகரம். 2. அழகு - வல்லின உகரம் (கு), உயிரெழுத்தைத் (ழ. ழ் + அ) தொடர்ந்து வந்தமையால், அழகு - உயிர்த்தொடர்க் குற்றியலுரகம். 3. அஃது-வல்லின உகரம் (து), ஆய்தவெழுத்தைத் தொடர்ந்து வந்தமையால், அஃது -ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம். 4. காப்பு - வல்லின உகரம் (பு) வல்லெழுத்தைத் (ப்) தொடர்ந்து வந்தமையால், காப்பு - வன்றொடர்க் குற்றியலுகரம். 5. பந்து - வல்லின உகரம் (து) மெல்லெழுத்தைத் (ந்) தொடர்ந்து வந்தமையால், பந்து -மென்றொடர்க் குற்றியலுகரம். 6. மார்பு - வல்லின உகரம் (பு) இடையெழுத்தைத் (ர்) தொடர்ந்து வந்தமையால், மார்பு - இடைத் தொடர்க் குற்றியலுகரம். குறிப்பு: நெடிற்றொடர்க் குற்றியலுகரத்திலும், உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்திலும் ஈற்று வல்லின உகரங்கட்கு முன் உயிர் மெய்யெழுத்தே வருகிறது. இரண்டிற்கு முள்ள வேறுபாடு யாதெனில், நெடிற்றொடர்க் குற்றியலுகரத்தில், ஈற்று வல்லின உகரங்கட்கு முன் உயிர் மெய் நெட்டெழுத்தோ அல்லது தனி உயிர் நெட்டெழுத்தோ ஒன்று மட்டும் வரும். காட்டு: ஆடு. ஆ - தனி உயிர் நெடில் மாடு மா - உயிர் மெய் நெடில். உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தின், ஈற்று வல்லின உகரங்கட்கு முன் உயிர்மெய்க் குறிலோ, அல்லது நெடிலோ தொடரெழுத்தாக வரும். அதாவது, அவ் வீற்றயல் உயிர்மெய்யெழுத்துக்கு முன் ஒன்று அல்லது பல எழுத்துக்கள் வரும். தனி உயிரெழுத்து சொல்லுக்கு நடுவில் வராது. காட்டு: அழகு. அழ - ழகரத்தை ஓரெழுத்துத் தொடர்ந்தது. பெரியது. பெரிய - யகரத்தை இரண்டெழுத்துத் தொடர்ந்தன. அடாது. டா - உயிர்மெய் நெடில். நெடிற்றொடர்க் குற்றியலுகரத்தில் ஈற்று வல்லின உகரங்கட்குமுன், உயிர், அல்லது உயிர்மெய் நெட்டெழுத்து ஒன்று மட்டும் வரும். உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தில், ஈற்று வல்லின உகரங்கட்கு முன் உயிர் மெய்க்குறில் அல்லது உயிர்மெய் நெடில் தொடரெழுத்தாக வரும். இவ்வேறு பாட்டினை நன்கு அறிந்து கொள்க. 3. முற்றியலுகரம் பகு, படு - என்னும் தனிக்குறிலை அடுத்துவரும் வல்லின உகரம் (கு,டு) தன்னளவில் குறுகவில்லை என்று முன்பு கண்டோம். இது முற்றியலுகரம் எனப்படும். முற்று இயல் உகரம் - முற்றியலுகரம் - குறுகாத ஓசையை உடைய உகரம். அதாவது தனக்குள்ள மாத்திரையே ஒலிக்கும் உகரம். முற்றியலுகரத்திற்கு மாத்திரை ஒன்று. தனிக்குறிலை அடுத்துவரும் வல்லின உகரமேயன்றி, குற்றியலுகரமே போலவரும் மெல்லின உகரமும் இடையின உகரமும் தன்னளவில் குறுகா. இவையும் முற்றியலுகரம் எனப்படும். காட்டு : 1. பகு, முசு, படு, அது, தபு, பெறு - இவை, தனிக்குறிலை அடுத்துவரும் வல்லின உகரம் பெற்ற முற்றியலுகரம். 2. வேணு, உண்ணு. உருமு - இவை, ஈற்று மெல்லின உகர (ணு,மு) முற்றியலுகரம். 3. ஏழு, எள்ளு, கதவு - இவை, ஈற்று இடையின உகர (ழு, ளு, வு) முற்றியலுகரம். எனவே, தனிக்குறிலை அடுத்த வல்லின உகரம், குற்றியலுகரமே போல் வரும் மெல்லின உகரம், இடையின உகரம் ஆகிய மூன்றும் முற்றியலுகரம் என அறிக. 4. குற்றியலிகரம் மாடு - என்பது, நெடிற்றொடர்க் குற்றியலுகரம் என்பதை அறிந்தோம். மாடு + யாது - மா ட் உ + யாது மா ட் இ + யாது மாடி + யாது மாடியாது இவ்வாறு, குற்றியலுகரத்தின் முன் யகரம் வர, அவ்வுகரம் இகரமாகத் திரியும். குற்றியலுகரம் திரிந்தான இவ்விகரமும், குற்றியலுகரம் போலத் தன்னளவில் குறுகி ஒலிப்பதால், இது - குற்றியலிகரம் எனப்படும். காட்டு: 1. மாடு + யாது - மாடியாது 2. அஃது + யாது - அஃதியாது 3. அழகு + யாது - அழகியாது 4. காப்பு + யாது - காப்பியாது 5. பந்து + யாது - பந்தியாது 6. மார்பு + யாது - மார்பியாது - எனக் காண்க. மியா - என்பது, முன்னிலை யசைச்சொல் ஆகும். இது, கேண்மியா - என, ‘கேள்’ என்னும் முன்னிலை வினையோடு கூடிவரும் போது, ‘மியா’ என்பதன் ‘மி’ என்பதில் உள்ள - இ (ம் + இ) - தன்னளவில் குறுகும். இஃதும் - குற்றியலிகரம் எனப்படும். பயிற்சி 1. குற்றியலுகரம், முற்றியலுகரம் - வேறுபாடென்ன? 2. குற்றியலுகரம் அறுவகைப்படுதல் எங்ஙனம்? 3. நெடிற்றொடர், உயிர்த்தொடர் - வேறுபாடென்ன? 4. படு, பாடு வேறுபாடென்ன? 5. குற்றியலுகரம். குற்றியலிகரம் - வேறுபாடென்ன? 6. முற்றியலுகரம் எத்தனை வகைப்படும் ? வகைக்கோர் காட்டுத் தருக. 7. குற்றியலிகரம் என்பது யாது? 8. குற்றியலிகரம் எத்தனை வகைப்படும்? 9. உங்கள் பாடத்தில் வந்துள்ள - குற்றியலுகரம், முற்றியலுகரம், குற்றிலிகரங்களைக் கண்டறிக. 10. இன்ன தொடர்க் குற்றுகரம் என்று கூறுக. எழுத்து வேறு விருந்து சால்பு எனது பட்டாங்கு 11. குற்றியலிகரங்களாக்குக : முத்து வறியது சங்கு தெள்கு மடக்கு நாடு 5. மாத்திரை அறு - ஆறு ‘அறு’ என்னும் சொல்லின் ஈற்றுகரம் - குறுகவில்லை. அதனால், அது - முற்றியலுகரம் எனப்படும், ‘ஆறு’ என்னும் சொல்லின் ஈற்றுகரம் - தன்னளவில் குறுகி ஒலிக்கிறது. அதனால், அது குற்றியலுகரம் எனப்படும் என்பதை முன்பு கண்டோம். எனவே, தமிழ் எழுத்துக்கள் குறுகியும் நீண்டும் ஒலிக்கும் என்பது பெறப்படும். எழுத்துக்களின் ஒலி - மாத்திரை எனப்படும். இயல்பாகக் கண் இமைக்கும் நேரமும், கை நொடிக்கும் நேரமும் - ஒரு மாத்திரை அளவாகும். இயல்பாக இமைத்தும் நொடித்தும் பாருங்கள். 1. உயிர்நெடிலுக்கும், உயிர்மெய் நெடிலுக்கும் மாத்திரை இரண்டு. 2. உயிர்க்குறிலுக்கும், உயிர்மெய்க் குறிலுக்கும் முற்றியலுகரத்திற்கும் - மாத்திரை ஒன்று. 3. மெய்யெழுத்திற்கும், ஆய்தவெழுத்திற்கும், குற்றியலுகரத் திற்கும், குற்றியலிகரத்திற்கும் - மாத்திரை அரை. ஆ - உயிர்நெடில் கா - உயிர் மெய் நெடில் அ - உயிர்க்குறில் க - உயிர்மெய்க் குறில் கதவு - முற்றியலுகரம் க் - மெய்யெழுத்து நாடு - குற்றியலுகரம் நாடியாது - குற்றியலிகரம் ஃ - ஆய்தவெழுத்து சூத்திரம்: உன்னல் காலே உறுத்தல் அரையே முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே. உன்னல் - நொடிப்பதற்காக விரல்களைக் கூட்டுதல். உறுத்தல் - விரல்களை அழுத்துதல். பயிற்சி 1. மாத்திரை என்பது யாது? 2. கால் மாத்திரை, அரை மாத்திரைகளை அளவிடுதல் எங்ஙனம்? 3. மிகக் குறைந்த மாத்திரையும், மிக மிகுந்த மாத்திரையும் உள்ள எழுத்துக்களில் ஒவ்வொன்று குறிப்பிடுக. 4. அரை மாத்திரை, ஒரு மாத்திரை உள்ள எழுத்துக்கள் யாவை? 5. நெட்டெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்கும், மாத்திரை எவ்வளவு? 6. அஃகஞ் சுருக்கேல் - இதில் உள்ள எழுத்துக்களை எடுத்து மாத்திரை கூறுக. 2. சொல் எழுத்தாலாவது - சொல். அது - பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும் என்பதைச் சென்ற வகுப்பில் கண்டோம். 1. பதமாவது யாது? கை கால் முகம் கழுவுக கை - ஓரெழுத்துச் சொல் கால் - இரண்டெழுத்துச் சொல் முகம் - மூன்றெழுத்துச் சொல் கழுவுக - நாலெழுத்துச் சொல் இவ்வாறு ஓர் எழுத்துத் தனித்தேனும், இரண்டு முதலிய பல எழுத்துக்கள் தொடர்ந்தேனும் ஒரு பொருளை உணர்த்துவது - சொல் எனப்படும். சொல் - பதம் எனவும் வழங்கும். சொல், பதம், மொழி என்பன ஒரு பொருட் சொற்கள். “ எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம்” என்பது நன்னூல். 2. ஓரெழுத் தொருமொழி ஆ - மாடு. இவ்வாறு ஓரெழுத்து நின்று ஒரு பொருளை உணர்த்துவது - ஓரெழுத் தொருமொழி எனப்படும். ஓர் எழுத்து ஒரு மொழி - ஓரெழுத்தே தனித்து நின்று ஒரு பொருளை உணர்த்துவதால் அது ஒரு மொழி ஆனது என்பது. மொழி -சொல். காட்டு : 1. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ 2. மா, மீ, மூ, மே, மை, மோ 3. தா, தீ, தூ, தே, தை 4. நா, நீ, நே, நை, நோ 5. பா, பூ, பே, பை, போ, 6 கா, கூ, கை, கோ 7. வா, வீ, வை, வௌ 8. சா, சீ, சே, சோ 9. நொ, து இவை ஓரெழுத் தொருமொழிகள். ஓரெழுத்து தன்னையும் (எழுத்து) உணர்த்தி, ஒரு பொருளையும் உணர்த்தும். ஓரெழுத்தொரு மொழியின் சிறப்பினை அறிந்து இன்புறுக. இவற்றுள், ஊ - இறைச்சி ஏ - உயர்வு, பெருமை ஐ - வியப்பு ஓ - மதகு நீர்தாங்கும் பலகை மீ - மேன்மை, மேலிடம் மூ - மூப்பு (முதுமை) மே - மேம்பாடு மோ - மோத்தல், முகர்தல் தூ - தூய்மை, வெண்மை, வலிமை தே - தெய்வம் நே - அன்பு நோ - வருத்தம் பே - நுரை கூ - கூவுகை, ஏவல் கோ - அரசன், தந்தை, பெருமை வீ - மலர் வௌ - வௌவுதல், கவர்தல் சோ - மதில் நொ - துன்பப்படு து - உண் இவற்றுள், பெயர்ச்சொல் - வினைச்சொல் ஈ - ஈ(ஈக்கள்) - கொடு தீ - நெருப்பு - தீதல் தை - தைமாதம் - தைத்தல் நீ - நீ - நீத்தல் பா - பாட்டு - பரப்பு கா - சோலை - காத்தல் வீ - மலர் - சாதல் வை - வைக்கோல் - வைத்தல், வைதல் என, இவ்வோரெழுத் தொருமொழிகள் ஒவ்வொன்றும், பெயர்ச் சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் வருதலை அறிந்தின் புறுக. பயிற்சி 1. பதம் என்றால் என்ன? 2. பதம் என்பதன் வேறு பெயர்கள் யாவை? 3. ஓரெழுத்தொரு மொழி என்பது என்ன? 4. பெயர் வினைகட்குப் பொதுவாக வரும் நான்கு ஓரெழுத் தொரு மொழிகளைக் குறிப்பிடுக. 5. மா - இரு பொருள் கூறுக. 3. பகாப்பதம், பகுபதம் பொன், உண் - என்னும் சொற்களைப் பிரிக்க முடியாது; பிரித்தால் பொருள் தாரா. இவ்வாறு பிரிக்க முடியாத சொல், அல்லது பதம் -பகாப்பதம் எனப்படும். பகாப்பதம் -பகுக்க முடியாத பதம். பகுத்தல் - பிரித்தல். பொன் - பெயர்ச்சொல் உண் - வினைச்சொல் பொன்னன், உண்டான் - என்னும் சொற்களை, பொன் + ன் + அன் உண் + ட் + ஆன் எனப் பிரிக்கலாம். பிரித்தால் பொருளும் தருகின்றன. பொன் - பெயர்ச்சொல் உண் - வினைச்சொல் பகுதிகள் அன், ஆன், - ஆண்பால் விகுதிகள். ன், ட் - இடை நிலைகள். இவ்வாறு பகுதி, விகுதி, இடைநிலைகளாகப் பிரிக்கப்படும் சொல் - பகுபதம் எனப்படும். பதம் - சொல். பகுபதம் - பகுதி, விகுதிகளாகப் பிரிக்கப்படும் பதம். அப்பகுபதம் - பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என, இருவகைப்படும். பொன்னன் - பெயர்ப் பகுபதம். உண்டான் - வினைப் பகுபதம். 1.பெயர்ப் பகுபதம் கலைஞன் : கலை + ஞ் + அன் மலையன் : மலை + ய் + அன் நடுவர் : நடு + வ் + அர் கலை, மலை, நடு - பகுதி ஞ், ய், வ் - பெயரிடை நிலை அன், அர் - விகுதி கலைஞன் முதலிய சொற்கள், பெயர்ச்சொற்கள் ஆகையால், இவை பெயர்ப் பகுபதம் எனப்பட்டன. பெயர்ப் பகுபதத்தில் வரும் இடைநிலை-பெயரிடை நிலை எனப்பட்டது. உழவன் : உழவு + அன் அழகன் : அழகு + அன் வேலன் : வேல் + அன் பல்லன் : பல் + அன் கூனி : கூன் + இ கூத்தன் : கூத்து + அன் விறலி : விறல் + இ இவையும் பெயர்ப் பகுபதங்களே. இவற்றில் இடைநிலை இல்லை; பகுதி, விகுதி மட்டும் உள்ளன. எனவே, பெயர்ப் பகுபதங்கள் சில, இடைநிலை பெற்றும், சில இடை நிலை பெறாதும் வரும் என்பதை அறிக. 2. வினைப் பகுபதம் செய்தான் : செய் + த் + ஆன் செய் - பகுதி ஆன் - விகுதி த் - இடைநிலை ‘செய்தான்’ - என்பது, வினைச்சொல் ஆதலால், இது வினைப் பகுபதம் எனப்படும். 3. பகுபத உறுப்புக்கள் பகுதி, விகுதி, இடைநிலை என்னும் இம்மூன்றும் பகுபதங்களின், வினைச்சொற்களின் இன்றியமையா உறுப்புகள் ஆகும். (1) பகுதி உண்டான் : இவ்வினைச்சொல் உணர்த்தும் தொழில் - உண்ணல். இத்தொழிலை, இவ்வினைச் சொல்லின் முதலி லுள்ள ‘உண்’ என்னும் உறுப்பால் உணர்கிறோம். இவ்வாறு வினைச்சொல்லின் முதலில் இருந்து, அவ்வினைச்சொல்லின் தொழிலை உணர்த்தும் உறுப்பு - பகுதி எனப்படும். இது, வினைச் சொல்லின் முதலில் நிற்பதால், முதனிலை எனவும் பெயர்பெறும். முதல் + நிலை - முதனிலை காட்டு : வினைச்சொல் பகுதி நடந்தாள் - நட வந்தனர் - வா செத்தன - சா படித்தாள் - படி நீத்தார் - நீ விட்டேன் - விடு கூவின - கூ வைத்தனர் - வை கண்டனர் - காண் தேய்ந்தன - தேய் பார்க்கிறார் - பார் செல்வான் - செல் வாழ்வான் - வாழ் கேட்கிறார் - கேள் திருந்தினான் - திருந்து இப்பகுதிகளைக் கவனியுங்கள். இவற்றுள் சில பகுதிகள் வினைச் சொல்லில் உள்ளவாறே இல்லை. வந்தனர் ; வா - என்பது போலச் சில பகுதிகள் விகாரப்பட்டு உள்ளன. எனவே, பகுதியை எளிதில் கண்டுபிடிக்கும் வழியைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். உண்டான் - இவ்வினைச் சொல்லின் தொழில் உண்ணல். இத்தொழிலைச் செய்யுமாறு கட்டளையிட்டால், ‘உண்’ என்போம். உண் என்பதனோடு ‘நீ’ என்னும் முன்னிலைப் பெயரைச் சேர்த்து, ‘நீ உண்’ என்பதும் உண்டு. நீ என்பதைச் சேர்த்துக் கட்டளை யிட்டால் ஒரு வினைச்சொல்லின் சரியான பகுதி பெறப்படும். கட்டளை - ஏவல். கட்டளை இடுதல் - ஏவுதல். நட, வா முதலிய பகுதிகளெல்லாம் ஏவற்பகுதிகளே. மேல் எடுத்துக்காட்டிய வினைச்சொற்களை அவ்வாறு கட்டளையிட்டுப் பாருங்கள். (2) விகுதி உண்டான் : இவ்வினைச் சொல்லின் தொழில் - உண்ணல். அதைத் தெரிவிப்பது - ‘உண்’ என்னும் இவ்வினைச் சொல்லின் பகுதியாகும். அத்தொழிலைச் செய்தது யார்? அவன். இது எப்படித் தெரிந்தது? உண்டான் என்னும் வினைச் சொல்லின் இறுதி யுறுப்பான ‘ஆன்’ என்னும் விகுதியால் தெரிந்தது. இவ்வாறு வினைச் சொல்லின் இறுதியில் இருந்து தொழில் செய்தவனை (செய்பவனை) அறிவிப்பது - விகுதி எனப்படும். இது சொல்லின் இறுதியில் இருப்பதால் - இறுதிநிலை என்றும் பெயர் பெறும். ஒரு தொழிலைச் செய்யும் பொருள் - செய்பவன் அல்லது வினைமுதல் எனப்படும். அவ்வினைமுதலை அறிவிப்பது விகுதியே யாகும். செய்பவன், வினைமுதல், எழுவாய் - ஒரு பொருட் சொற்கள். வினைச் சொல் - வினைமுற்று - ஐம்பால் மூவிடத்திலும் வரும். ஐம்பால் மூவிடத்தை உணர்த்துவது - தெரிவிப்பது - விகுதியேயாகும். எனவே, ஐம்பால் மூவிட விகுதிகளையும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். (அ) படர்க்கை வினைமுற்று விகுதிகள் வினைமுற்று - பகுதி - விகுதி உண்டனன் - உண் - அன் உண்டான் - உண் - ஆன் ஆண்பால் பாடினள் - பாடு - அள் பாடினாள் - பாடு - ஆள் பெண்பால் எழுதினர் - எழுது - அர் எழுதினார் - எழுது - ஆர் பலர்பால் ஓடியது - ஓடு - து ஓடிற்று - ஓடு - று ஒன்றன் பால் ஆடின - ஆடு - அ ஆடா - ஆடு - ஆ பலவின்பால் உண்டனன் முதலியன படர்க்கை வினைமுற்றுக்கள். எனவே, அன், ஆன்; அள்,ஆள்; அர், ஆர்; து, று, அ, ஆ, - என்பன படர்க்கை வினைமுற்று விகுதிகள் ஆகும். ஆ- எதிர்மறையில் மட்டும் வரும். (ஆ) தன்மை வினைமுற்று விகுதிகள் வினைமுற்று பகுதி விகுதி படித்தனென் - படி - என் படித்தேன் - படி - ஏன் தன்மை ஒருமை கண்டனன் - காண் - அன் உணர்வல் - உணர் - அல் கற்றனம் - கல் - அம் சென்றாம் - செல் - ஆம் நின்றனெம் - நில் - எம் தன்மைப்பன்மை வென்றேம் - வெல் - ஏம் உண்டோம் - உண் - ஓம் (இ) முன்னிலை வினைமுற்று விகுதிகள் வினைமுற்று - பகுதி - விகுதி செய்தனை - செய் - ஐ வந்தாய் - வா - ஆய் முன்னிலை எண்ணுதி - எண் - இ ஒருமை எய்தினிர் - எய்து - இர் விரும்பினீர் - விரும்பு - ஈர் முன்னிலைப் காண்மின் - காண் - மின் பன்மை நான் படித்தனென் நான் கற்றனம் நீ செய்தனை நீர் செய்தினிர் - எனக் காண்க. (3) இடைநிலை உண்டான் : உண் + ட் + ஆன் உண் - பகுதி ஆன் - விகுதி ட் - இடைநிலை உண்டான் - என்னும் வினைச் சொல்லின் காலம் - இறந்த காலம். அக்காலத்தை இவ்வினைச் சொல்லின் இடைநிலை உணர்த்துகிறது. இது சொல்லின் இடையில், அதாவது -பகுதி, விகுதிகளுக்கு இடையில் நிற்பதால் - இடைநிலை எனப்பட்டது. எனவே, இடைநிலை காலம் காட்டும் என்பது பெறப்படும். அக்காலம் - இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று வகைப்படும். இவற்றைப் பற்றிப் பின்னர்க் காண்போம். (4) சாரியை, சந்தி, விகாரம் உண்டனன்: உண் + ட் + அன் + அன் உண் - பகுதி அன் - விகுதி ட் - இடைநிலை - என்பது உங்கட்குத் தெரியும். விகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் உள்ள ‘அன்’ என்பது - சாரியை எனப்படும். விகுதியினையும் இடைநிலையினையும் சார்ந்து வருவது சாரியை. படித்தான் : படி + த் + த் + ஆன் படி - பகுதி ஆன் - விகுதி த் - இடைநிலை பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் உள்ள ‘த்’ என்பது - சந்தி எனப்படும். பகுதியும் இடைநிலையும் சந்திக்கும் இடத்தில் தோன்றுவது சந்தி. கண்டான் : காண் + ட் + ஆன் ‘காண்’ என்னும் பகுதி, ‘கண்’ என விகாரப்பட்டது. நடந்தான் : நட + த் + த் + ஆன் ‘த்’ என்னும் சந்தி, ‘ந்’ ஆக விகாரப்பட்டது. இவ்வாறு சில சொற்களில் பகுதியும், சந்தியும் விகாரப்படும். எனவே, பகுதி, விகுதி இடைநிலை என்னும் மூன்றுமேயன்றி, சாரியை, சந்தி, விகாரம் என்பனவும் பகுபத உறுப்புக்களாகும். பகுதி, விகுதி, இடைநிலை என்னும் மூன்றும் இன்றியமையாத உறுப்புக்கள். சாரியை முதலிய மூன்றும் சிறுபான்மையாக, சில சொற்களில் மட்டும் வரும் என்பதை அறிக. பயிற்சி 1. பெயர்ப் பகுபதம் வினைப்பகுபதம் - மும் மூன்று காட்டுத் தருக. 2. பகுபதம், பகாப்பதங்களை எடுத்துக் காட்டுக. கடலன் பாடி செல் செவிடன் குடித்தான் நடந்தான் 3. பகுபத உறுப்புக்கள் யாவை? 4. பகுதி என்பது யாது? 5. சரியான பகுதியை எவ்வாறு கண்டறிவது? 6. விகுதி என்பது யாது? 7. இன்ன விகுதி என்று கூறுக. எழுந்தனர் கூடினோம் பெற்றேன் ஓடினர் பறந்தன மேய்ந்தன ஏறினான் நீந்தினர் 8. இடைநிலை என்பது யாது? 9. இடைநிலை எதனைக் காட்டும்? 10. பகுதி விகுதி இடைநிலைகளைப் பிரித்துக் காட்டுக: நின்றான் எழுதுகிறேன் செய்வான் படிக்கிறான் உதிர்ந்தன தின்பான் 11. சாரியை, சந்தி - வேறுபாடென்ன? 12. எவை விகாரப்படும்? 13. பகுதி முதலிய மூன்றற்கும், சாரியை முதலிய மூன்றற்கும் உள்ள வேறுபாடென்ன? 4. காரண இடுகுறிப் பெயர் மரம், தென்னை, பனை - முதலியன இடுகுறிப் பெயர் என்பதையும் காற்றாடி, பறவை - என்பன காரணப்பெயர் என்பதையும் முன் வகுப்பில் அறிந்தீர்கள். காற்றாடி - என்பது காரணம் கருதிய பொழுது காற்றால் ஆடும் (பறக்கும்) எல்லாப் பொருள்களையும் (சருகு, துகள்) குறிக்கும். ஆனால் காரணங் கருதாத பொழுது சிறுவர்கள் காற்றில் பறக்க விட்டுக் கொண்டு விளையாடும் காற்றாடியினையே (பட்டம்) குறிக்கும். இவ்வாறு காரணங் கருதும் பொழுது அக்காரணம் உள்ள பொருள்களையெல்லாம் உணர்த்தி (குறித்து) காரணங் கருதாத பொழுது இடுகுறியளவாய் நின்று குறிப்பிட்ட ஒருபொருளை மட்டும் உணர்த்தும் சொல் - காரண இடுகுறிப் பெயர் எனப்படும். முள்ளி, நாற்காலி என்பன - காரண இடுகுறிப் பெயர்கள். முள்ளி என்பது - காரணங் கருதிய பொழுது முள்ளையுடைய செடிகள் பலவற்றையும் குறிக்கும்; காரணங் கருதாத பொழுது ‘முள்ளி’ என்னும் ஒரு வகைச் செடியினையே குறிக்கும். நாற்காலி என்பது - காரணங் கருதியபொழுது நாலு காலையுடைய ஆடு மாடு முதலிய விலங்குகளை யெல்லாம் குறிக்கும்; காரணங் கருதாதபொழுது நாம் உட்காரும் நாற்காலியை மட்டும் குறிக்கும். பயிற்சி 1. நம் முன்னையோர் சொற்களுக்கு எவ்வாறு பெயரிட்டனர்? 2. இடுகுறிப் பெயர், காரணப் பெயர் - பொருளென்ன? 3. காரணஇடுகுறிப்பெயர் என்பது யாது? 4. பொன்னன், செல்வன் - காரண இடுகுறிப் பெயராக்குக. 5. பண்புப் பெயர் மரம், யானை, புறா - பொருட் பெயர்கள் நாடு, வீடு, கடல் - இடப்பெயர்கள். நாள், நாழிகை, மாதம் - காலப்பெயர்கள். கை, வால், கிளை - சினைப் பெயர்கள். கருமை, வட்டம், இனிமை - குணப்பெயர்கள். வருதல், ஆட்டம், பொங்கல் - தொழிற்பெயர்கள். இவை பொருள் முதலாறு பெயர் எனப்படும். உலகில் காணப்படும் உயிருள்ளன, உயிர் இல்லன எல்லாம் பொருள்களே. அவற்றுள் இடத்தைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும். மரக்கிளை. கிளை- பொருளின் சினை. கடல் அலை. அலை - இடத்தின் சினை. காலை வேளை வேளை - காலத்தின் சினை. எனவே, பொருள், இடம், காலம் என்னும் மூன்றற்கும் சினை உண்டு. சினை - உறுப்பு. செம்பொன். செம்மை - பொருளின் குணம். பெருங்கடல். பெருமை - இடத்தின் குணம். நெடுநேரம். நெடுமை - காலத்தின் குணம். பசுந்தழை. பசுமை - சினையின் குணம். எனவே, பொருள், இடம், காலம், சினை என்னும் நான்கற்கும் குணம் உண்டு. குணம், பண்பு - ஒரு பொருட் சொற்கள். பச்சைமிளகாய். பச்சை - நிறப்பண்பு காரமிளகாய். காரம் - சுவைப்பண்பு குறுமிளகாய். குறுமை - வடிவப்பண்பு. ஒருமிளகாய். ஒன்று - அளவுப்பண்பு புதுமிளகாய். புதுமை - தன்மைப்பண்பு -என, நிறப்பண்பு அளவுப்பண்பு. சுவைப்பண்பு தன்மைப்பண்பு வடிவப்பண்பு - என, பண்பு ஐந்து வகைப்படும். வட்டம், சதுரம், உருண்டை, நீளம், பெரிது - வடிவப் பண்புகள். எண்ணலளவை, எடுத்தலளவை, முகத்த லளவை, நீட்டலளவை - என்னும் நான்கும் அளவைகள். ஒன்று, கால், அரை - எண்ணலளவை, துலாம், பலம் (கிலோ) - எடுத்தலளவை. படி, ஆழாக்கு (லிட்டர்) - முகத்தலளவை, அடி, முழம் (மீட்டர்) - நீட்டலளவை. நன்மை, தீமை, பழமை, புதுமை, இளமை, மென்மை, வன்மை, ஆண்மை, முதலியன - தன்மைப் பண்புகள். நிறம், சுவை, வடிவம், அளவு, தன்மை என்னும் இவ்வகைப் பண்பு குறிக்கும் பெயர்களும் - பண்புப் பெயர் எனப்படும். பயிற்சி 1. பெயர் எத்தனை வகைப்படும்? 2. பண்பு என்பது யாது? 3. பண்பு எத்தனை வகைப்படும்? 4. பண்புப் பெயர்களை எடுத்துக் காட்டுக: 1. அம் மரங்களின் இலையும் காயும் பச்சையாகவும், பூ, வெண்மையாகவும், பழம் சிவப்பாகவும் இருப்பதைப்பார். 2. இக் கரும்பலகையின் அகலமும் நீளமும் என்ன? 3. நான் தொல்காப்பியமும் நன்னூலும் படிக்கிறேன். 4. தேனினும் இனிமையுடையது செந்தமிழ் 5. கோழிமுட்டை நீண்ட உருண்டையாக உள்ளது. 6. பெருங்கதை ஆசிரியர் கொங்குநாட்டைச் சேர்ந்தவர். 5. உங்கள் பாடத்தில் வந்துள்ள பண்புப் பெயர்களைக் கண்டறிக. 6. தொழிற் பெயர் ஆடுதல், ஓடுதல், நடத்தல் என்பன போல, ஒரு தொழிலைக் குறிக்கும் பெயர் - தொழிற்பெயர் எனப்படும். ஆடுதல் : ஆடு - தல் ஆடு - பகுதி தல் - விகுதி ஆடு என்னும் பகுதி வினைச்சொல்லே ஆயினும், ‘ஆடுதல்’ என்பது காலங்குறியாமல், ஒருவன் செய்யும் தொழிலை மட்டும் குறித்தலால், இது -தொழிற்பெயர் எனப்பட்டது. இது, வினைப் பகுதியோடு விகுதி மட்டும் கூடிவரும். காலங் காட்டும் இடைநிலை இதற்கு இல்லை. தொழிற் பெயர் பகுதி விகுதி ஆடுதல் - ஆடு - தல் ஆடல் - ஆடு - அல் ஆட்டம் - ஆடு - அம் கொலை - கொல் - ஐ நடக்கை - நட - கை பார்வை - பார் - வை வாரானை - வா - ஆனை மறதி - மற - தி முயற்சி - முயல் - சி கல்வி - கல் - வி செய்யுள் - செய் - உள் வேக்காடு - வே - காடு கூப்பாடு - கூ - பாடு தோற்றரவு - தோற்று - அரவு வெகுளி - வெகுள் - இ போக்கு - போ - கு படிப்பு - படி - பு செலவு - செல் - உ நடத்தை - நட - தை கொடுக்கல் - கொடு - கல் ஏற்றுமதி - ஏற்று - மதி - எனக்காண்க. இவ்வாறு விகுதி பெறாமல், பெறு - இம் முதனிலை (பகுதி) மட்டும் நின்று பெறுதல் என்னும் பொருளைத் தருவதும் உண்டு. இது - முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும். பெறு - பேறு என, முதனிலைத் திரிந்து -பெறுதல் என்னும் பொருளைத் தருதலும் உண்டு. இது முதனிலைத்திரிந்த தொழிற்பெயர் எனப்படும். எனவே, விகுதி பெற்ற தொழிற்பெயர், முதனிலைத் தொழிற்பெயர். முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் எனத் தொழிற்பெயர் மூன்று வகைப்படும். பெறுதல், விடுதல் - விகுதி பெற்ற தொழிற் பெயர். பெறு, விடு - முதனிலைத் தொழிற்பெயர். பேறு, வீடு - முதனிலைத் திரிந்த தொழிற்பெயர். பயிற்சி 1. தொழிற்பெயர் என்பது யாது? 2. இது எங்ஙனம் தொழிற்பெயர் எனப் பெயர் பெற்றது? 3. வினைமுற்றுக்கும் தொழிற்பெயர்க்கும் உள்ள வேறுபாடென்ன? 4. அம், கை, பாடு, வி, இ, மதி, - இத் தொழிற் பெயர் விகுதிகளைக் கொண்டு, தொழிற்பெயர் ஆக்குக? 5. நோதல், பார்த்தல், விற்றல், பயிலல் - இத்தொழிற் பெயர்களை வேறு விகுதிகளோடு சேர்க்க. 6. உங்கள் பாடத்தில் வந்துள்ள மூவகைத் தொழிற்பெயர்களையும் கண்டறிக. 7. வேற்றுமை முருகன் வந்தான். நான் முருகனைக் கண்டேன். ‘முருகன்’ என்னும் சொல், முதல் வாக்கியத்தில் எழுவாய் ஆகவும், இரண்டாம் வாக்கியத்தில் செயப்படுபொருள் ஆகவும் வேறுபட்டுள்ளது. முருகன் என்னும் சொல்லைச் செயப்படுபொருளாக வேறுபடுத்தியது, ‘ஐ’ என்பதே ஆகும். இவ்வாறு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் உறுப்பு - வேற்றுமை உருபு எனப்படும். ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன வேற்றுமை உருபுகளாகும். இவ்வுருபுகள் பெயர்ச்சொல்லை அடுத்து வந்து, அச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும். தன்னை ஏற்ற பெயர்ப் பொருளை வேறுபடுத்துவதால், ஐ முதலிய உருபுகள் - வேற்றுமை எனப்படும். வேற்றுமை எட்டு வகைப்படும் என்பதையும் அவற்றைப்பற்றிச் சுருக்கமாகவும் ஏழாம் வகுப்பில் படித்தோம். முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை. இரண்டு முதல் ஏழுவரையுள்ள ஆறு வேற்றுமைகட்கே உருபுகள் உண்டு. ஐ முதலிய உருபுகள், தன்னையேற்ற பெயர்ப் பொருளை வேறுபடுத்துவது - வேற்றுமைப் பொருள் எனப்படும். எனவே, வேற்றுமைக்கு - உருபும் பொருளும் உண்டு என்பது பெறப்படும். 1.முதல் வேற்றுமை மாடு வந்தது. ‘மாடு’ என்னும் பொருள், வருதல் என்னும் தொழிலைச் செய்தது.எனவே, ஒரு பொருள் ஒரு தொழிலைச் செய்வதே முதல் வேற்றுமை யாகும். இதில், மாடு - எழுவாய் வந்தது - பயனிலை இயல்பாக நிற்கும் ஒரு பொருள், ஒரு தொழிலைச் செய்யும் எழுவாயாக வேறுபடுதலே முதல் வேற்றுமையாகும். இவ்வெழுவாய் - வினை, பெயர், வினா என்பவற்றைப் பயனிலை களாகப் பெறும். காட்டு: குமணன் வந்தான். வந்தான் - வினைப்பயனிலை குமணன் யார்? யார் - வினாப்பயனிலை குமணன் ஒரு வள்ளல். வள்ளல் - பெயர்ப் பயனிலை 2. இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமையின் உருபு - ஐ. இதன் பொருள் - செயப்படுபொருள், ஐ உருபு, தன்னை யேற்ற பெயர்ப்பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்தும். காட்டு: எழுவாய் செயப்படுபொருள் பயனிலை வள்ளுவர் திருக்குறளைச் செய்தார் மாடு புல்லை மேய்ந்தது. ஒளவையார் தகடூரை அடைந்தார். பாரிமகளிர் தந்தையை இழந்தனர். வள்ளல்கள் மழையை ஒத்தனர் நாம் தமிழ்ச்செல்வத்தை உடையோம். திருக்குறள், புல் முதலியன - செயப்படுபொருள்கள். 3. மூன்றாம் வேற்றுமை இதன் உருபு - ஆல், ஆன், ஓடு, ஒடு என்பன. பொருள் - கருவிப்பொருள், கருத்தாப்பொருள், உடனிகழ்ச்சிப் பொருள் என்பன. ஆல், ஆன் என்பன -கருவிப் பொருளிலும், கருத்தாப் பொருளிலும் வரும். ஓடு, ஒடு என்பன உடனிகழ்ச்சிப் பொருளில் வரும். காட்டு: 1. திருக்குறள் குறள்வெண்பாவால் செய்யப்பட்டது. அச்சேலை பட்டு நூலால் நெய்யப்பட்டது. குறள் வெண்பா பட்டு நூல் கருவி 2. தமிழ்மொழி புலவரால் வளர்க்கப்பட்டது. பகைவர்கள் நம் வீரரால் வெல்லப்பட்டனர். புலவர் வீரர் கருத்தா 3. கவுந்தியடிகளோடு கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் சென்றனர். நெடுஞ்செழியனோடு கோப்பெருந்தேவியும் இறந்தனள். கவுந்தியடிகள் நெடுஞ்செழியன் உடனிகழ்ச்சிப் பொருள் கவுந்தியடிகள் சென்றார். அவரோடு கோவலனும் கண்ணகியும் சென்றனர். நெடுஞ்செழியன் இறந்தான். அவனோடு கோப்பெருந்தேவியும் இறந்தனள்- என்பவை, இவ்வாறு சுருக்கிக் கூறப்பட்டன. வாள் கொண்டு வெட்டினான். வாளால் கண் கொண்டு பார்த்தான். கண்ணால் என, கொண்டு என்பது கருவிப் பொருளில் - ஆல், ஆன் உருபுகளின் சொல்லுருபாக வரும். சொல்லுருபு - உருபுக்குப் பதிலாக வரும் உருபு. தந்தையுடன் மைந்தன் சென்றான். குதிரையுடன் குட்டி ஓடிற்று. என, உடன் என்பது, ஓடு, ஒடு; உருபுகளின் சொல்லுருபாக வரும். 4. நான்காம் வேற்றுமை இதன் உருபு - கு ஒன்றே, பொருள் -கோடற் பொருள். கோடல் - கொள்ளல், கொடுப்பதை ஏற்றுக் கொள்ளுதல். இக்கோடற் பொருள் - கொடை, பகை, நேர்ச்சி, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை என்னும் வகையுடைத்தாகும். நேர்ச்சி - நட்பு. தகவு - தகுதி. காட்டு : பாட்டாளர்க்குப் பணம் கொடு. கொடை எலிக்குப் பகை பூனை பகை ஒளவைக்கு நண்பன் அதியமான் நேர்ச்சி கற்றவர்க்கு உரியது கடப்பாடு. தகவு காப்புக்குப் பொன் கொடு. அதுவாதல் கூலிக்கு வேலை செய்தான் பொருட்டு செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ முறை அதுவாதல் - பொன்னே காப்பாதல், அதாவது காரணமே காரியமாதல். பொன் - காரணம், காப்பு - காரியம். பொருட்டு -ஆக. கூலிக்காக. 5.ஐந்தாம் வேற்றுமை இதன் உருபு - இல், இன் என்பன. பொருள் - நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்பன. ஏது - காரணம். காட்டு : பனையின்வீழ் பழம். (நீங்கல்) பழம் பனையினின்று நீங்கிற்று. பாலின் வெளிது கொக்கு (ஒப்பு) கொக்கு பாலைப்போல வெண்ணிற முடையது. அறிவில் சிறந்தவர் ஒளவையார். (ஏது) ஒளவையாரின் சிறப்புக்கு அறிவு காரணமாகும். பவானியின் வடக்கு மேட்டூர் அணை. அல்லியிற் சிவந்தவள் மெல்லி. இளங்கோவின் மூத்தவன் செங்குட்டுவன். முருகனின் உயர்ந்தவன் வேலன். உட்பகைவரின் நல்லவர் வெளிப்பகைவர். கற்றலின் இனிது கேட்டல். - இவையெல்லாம் எல்லைப் பொருள்களே. மாடியினின்று இறங்கினான் பள்ளியிலிருந்து நீங்கினான். அவனைவிடப் பெரியவன் இவன். இவனைக் காட்டிலும் நல்லவன் அவன். - என, நின்று, இருந்து, விட, காட்டிலும் என்பன, இல், இன்னின் சொல்லுருபுகளாக வரும். 6. ஆறாம் வேற்றுமை இதன் உருபு - அது, அ என்பன. அது - ஒருமையில் வரும். அ- பன்மையில் வரும். அ-செய்யுளில்மட்டும் வரும்; பேச்சு வழக்கில் இன்று வழங்குவதில்லை. செய்யுளில் - ‘அது’ என்பது போல, ஆது என்பதும் ஒருமையுருபாக வரும்; இதன் பொருள் - கிழமைப் பொருள், கிழமை - உரிமை. காட்டு: எனது வீடு (அது) எனாது வீடு (ஆது) என கால்கள்(அ) என்னுடைய வண்டி என்னுடைய வண்டிகள் என, உடைய என்பது ஆறன் ஒருமை, பன்மை இரண்டற்கும் பொதுவான சொல்லுருபாக வரும். இது பெரு வழக்கு. 7. ஏழாம் வேற்றுமை இதன் உருபு-கண், கால், கடை, இடை, உள், இல், மேல், கீழ் முதலியனவாகும். பொருள் - இடப் பொருள். காலின் கண் காப்பு - காப்பு இருத்தற்குக் கால் இடம் ஆதல் காண்க. காட்டு: ஊர்க்கால் உயர்ந்த மரம் (ஊரின் கண்) வேலின் கடை மணி. (வேலின் கண்) மனையிடை இருந்தான் (மனையின் கண்) பெட்டிக்குள் பணம் இருக்கிறது. சட்டியில் சோறு இருக்கிறது. மரத்தின் மேல் காக்கை. மணையின் கீழ்ப் பந்து. இவையெல்லாம் கண் உருபின் பொருளுடையனவே யாம். 8. எட்டாம் வேற்றுமை இதற்கு உருபு இல்லை. பெயர்ச் சொல்லின் ஈறுதிரிதலே இதன் வேறுபாடாகும்.பொருள் - விளித்தற் பொருள். விளித்தல் - அழைத்தல். முருகன், மாடு, மரம், மதி முதலிய படர்க்கைப் பொருள்களை முன்னிலைப் பொருளாக்கி அழைப்பது. முருகன் -ஆண்பால் படர்க்கை முருகா - முன்னிலை ஒருமை. முருகன் அவன் முருகா நீ வா - எனக் காண்க. காட்டு: முருகன் : முருக - ஈறு கெட்டது. முருகா - ஈறுகெட்டு, ஈற்றயல் நீண்டது. தந்தை : தந்தையே - ஈற்றில் ஏகாரம் மிக்கது. தந்தாய் - ஐ ஆய் ஆகத் திரிந்தது. மக்கள் : மக்காள் - ஈற்றயல் நீண்டது. மதி - மதியே கடல் - கடலே ஈற்றில் ஏகாரம் மிக்கது. இவ்வாறே மற்ற பெயர்களையும் விளித்துப் பார்த்து, எச்சொல் எவ்வெவ்வாறு திரிகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள், பயிற்சி 1. வேற்றுமை என்பது யாது? 2. ஐ, ஆல், கு, இன், அது, கண் - எவ்வெவ்வேற்றுமை உருபுகள்? ஐ, அது, கண் -இவற்றின் பொருள் யாவை? 3. உடன், இருந்து, கொண்டு - இவை எவ்வெவ்வேற்றுமைகளின் சொல்லுருபுகள்? 4. கருவிப்பொருள், நீக்கப்பொருள், இடப்பொருள் - இவை எவ்வெவ் வேற்றுமைக்கு உரியவை? 5. அண்ணன், தங்கை, மாமன், சிற்றப்பன், கிளி - இவை விளி வேற்றுமையில், எவ்வாறு திரியும்? 6. வாளால் - ஆல் முருகனது - அது பெட்டியில்- இல் - இவ்வுருபுகள் உள்ள இடத்தில் பொருள் வேறுபடாமல் வேறு உருபுகள் இடுக. 7. கோடிட்ட இடங்களில் ஏற்ற வேற்றுமை உருபுகளை இடுக: 1. அவன்பணம் இருக்கிறது. 2. அவன் பள்ளிவந்தான் 3. இது நூல்நெய்யப்பட்ட துணி 4. தலைஎண்ணெய் தடவு. 5. இது வள்ளி பலகை. 6. அல்லி தாய்தேடுகிறாள். 7. தமிழ் தேன்இனிது 8. தொல்காப்பியம் தொல்காப்பியர் செய்யப்பட்டது. 8. வினைச்சொல் 1. முற்று, எச்சம் பரணன் பாட்டு எழுதினான் பரணன் பாட்டு எழுதி முடித்தான் பரணன் எழுதின பாட்டு நன்றாக இருக்கிறது. எழுதினான், எழுதி, எழுதின - என்பன பரணனது தொழிலைக் குறிப்பதால், இவை வினைச்சொற்கள் ஆகும். வினைமுற்று இவற்றுள், எழுதினான் என்பது வினைமுற்றி (முடிந்து) நிற்கும் சொல். எனவே, இது வினைமுற்று அல்லது முற்றுவினை எனப்படும். பெயர், வினை எச்சம் எழுதி, எழுதின என்பன - பொருள்முடியாத (முற்றுப் பெறாத) வினைச்சொற்கள்; இன்ன பால் எனத் தெரியவில்லை. எனவே, இவை - எச்சவினைகள் எனப்படும். எழுதி என்பது, ‘முடித்தான்’ என்னும் மற்றொரு வினையைக் கொண்டு முடிகிறது. ஆகையால், இது வினையெச்சம் எனப்படும். வினை எஞ்சி (குறைந்து) நிற்பது -வினையெச்சம். எழுதின என்பது, ‘பாட்டு’ என்னும் பெயரைக் கொண்டு முடிவதால், பெயரெச்சம் எனப்படும். பெயர் எஞ்சி நிற்பது - பெயரெச்சம். வினையெச்சம் - வினையைக் கொண்டு முடியும். பெயரெச்சம் - பெயரைக் கொண்டு முடியும். வினைமுற்று -வினைமுதல், அல்லது எழுவாயை உணர்த்தும், வினையெச்சமும் பெயரெச்சமும், குறை வினையாதலால், வினைமுதலை உணர்த்தாமல் காலத்தை மட்டும் காட்டும். வினைமுற்று - வினையெச்சம் - பெயரெச்சம் நடந்தான் - நடந்து - நடந்த பாடினாள் - பாடி - பாடின போனார் - போய் - போன பறந்தது - பறந்து - பறந் உடைந்தன - உடைந்து - உடைந்த கண்டேன் - கண்டு - கண்ட படித்தாய் - படித்து - படித்த நடந்து வந்தான் வருகின்றான் வருவான் - என வினையெச்சம் முக்கால வினையையும் ஏற்கும். நடந்த பையன் நடக்கின்ற பையன் நடக்கும் பையன். - என, பெயரெச்சம் முக்காலத்திலும் வரும். நடந்தான் முதலிய வினைமுற்றுக்களை, அவற்றிற்கேற்ற எழுவாய்களுடன் சேர்த்தெழுதிப் பாருங்கள். ‘நடந்து’ முதலிய வினையெச்சங்களுடன் ஏற்ற வினைமுற்றுக்களையும், ‘நடந்த’ முதலிய பெயரெச்சங்களுடன் ஏற்ற பெயர்களையும் சேர்த்தெழுதிப் பாருங்கள். 2.தெரிநிலைவினை, குறிப்புவினை உண்டான் - இறந்த காலம் வெளிப்படையாகத் தெரிகிறது. பொன்னன் - இதில், காலம் வெளிப்படையாகத் தெரியாவிடினும், பொன்னையுடையவனாய் - இருந்தான், இருக்கின்றான், இருப்பான் என, முக்காலமும் குறிப்பாகத் தெரிகிறது. காலம் வெளிப்படையாகத் தெரியும் வினை தெரிநிலை வினை எனப்படும். தெரிநிலைவினை - காலம் வெளிப்படை யாகத் தெரியும் நிலையில் உள்ள வினை. அது -செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படுபொருள் என்னும் ஆறையும் தரும். இவ்வாறற்கும் நிலைக்களனாகத் தெரிநிலை வினைமுற்று இருக்கும் என்பதாம். காட்டு: உண்டான் : அவன் - செய்பவன் வாய் - கருவி வீடு - நிலம் உண்ணல் - செயல் இறந்தகாலம் - காலம் சோறு - செயப்படு பொருள் குறிப்புவிணை பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறுபெயர்களின் அடியாகப் பிறந்த பெயர்ச்சொற்கள், ஒரு பெயருக்குப் பயனிலையாகவரின், குறிப்பு வினைமுற்று எனப்படும். குறிப்பு வினைமுற்று - காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினைமுற்று. காட்டு: பொருள் : வேல் - வேலன் இடம் : மலை - மலையன் காலம் : தை - தையான் சினை : பல் - பல்லன் குணம் : கருமை - கரியன் தொழில் : நடை - நடையன் வேலன் என்பது, வேலையுடையவன் ஆனான் ” ஆகின்றான் ” ஆவான் - எனக்குறிப்பால் காலங்காட்டிற்று. வேலன் வந்தான் என, ஒரு வினைச்சொல்லைக் கொண்டு முடிந்தால், அதாவது ஒரு வினைமுற்றுக்கு எழுவாயாக வந்தால், வேலன் என்பது - பொருளடியாகப் பிறந்த பெயர்ச்சொல் எனப்படும். அவன் வேலன் என, வேலன் என்பது ஒரு பெயருக்குப் பயனிலை யாகவரின், குறிப்பு வினைமுற்று எனப்படும், இவ்வேறுபாட்டினை நன்கு உணர்க. கரிய குதிரை நல்ல பையன் பெரிய வீடு கரிய, நல்ல, பெரிய - குறிப்புவினைப் பெயரெச்சங்கள். அவனன்றி இல்லை. உணவின்றி வருந்தினான் உணவில்லாமல் வருந்தினான். அன்றி, இன்றி, இல்லாமல் என்பன - குறிப்பு வினை வினையெச்சங்கள். பயிற்சி 1. முற்றுவினை, எச்சவினை - வேறுபாடென்ன? 2. பெயரெச்சம், வினையெச்சம் - வேறுபாடென்ன? 3. உண்டான் - இவ்வினைமுற்றைப் பெயரெச்ச வினையெச்சங்களாக்குக. 4. முற்றுவினை எத்தனை வகைப்படும்? 5. குறிப்புவினைமுற்றின் இலக்கணம் என்ன? 6. உங்கள் பாடத்திலிருந்து - வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சங்கள் வகைக்கு ஐந்து எழுதுக. வினைமுற்று பெயரெச்சம் வினையெச்சம் 1. 2 3 4 5 7. பெயரெச்ச வினையெச்சங்களாக்குக: பாடுகிறான் நெய்கிறான் அறுத்தான் காட்டுகிறார் வெட்டினான் அழுதான் பறிக்கிறாள் எழுதினான் முடித்தார் 8. வினைமுற்று, பெயரெச்ச வினையெச்சங்களைக் குறிப்பிடுக சங்க இறுதிக் காலத்தே கொங்குநாட்டுப் பழனியில் பேகன் என்ற பெருங்கொடைவள்ளல் ஒருவன் இருந்தான். ஒரு நாள் அவன் அரண்மனைப் பூங்காவைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தான். மழை வந்தது. அங்குள்ள மண்டபத்தில் சென்று தங்கினான். மழையில் நனைந்த மயில் ஒன்று குளிரால் நடுங்கக் கண்ட பேகன் பேரிரக்கங் கொண்டான்; தான் போர்த்திருந்த போர்வையை எடுத்து அம்மயிலுக்குப் போர்த்தினான். அதுகண்ட தமிழ்நாடு அவனைப் போற்றிப் புகழ்ந்தது. 3. செயப்படுபொருள் குன்றியவினை, குன்றாவினை முருகன் உண்டான். உண்டான் - எதை உண்டான்? ‘சோற்றை’ உண்டான். சோறு-செயப்படுபொருள். முருகன் ஓடினான் ஓடினான் - எதை ஓடினான்? என்றால் விடை இல்லை. எனவே, இது, செயப்படுபொருள் குன்றியவினை எனப்படும் அதாவது, இவ்வினையில் செயப்படுபொருள் இல்லை என்பதாம். வள்ளி தூங்கினாள். பட்டம் பறக்கிறது. கொடி படர்ந்தது. மழை பெய்கிறது. ஆசிரியர் வந்தார். ‘தூங்கினாள்’ முதலிய ஐந்து வினைகளும் செயப்படுபொருள் குன்றிய வினைகள். ஓர் எழுவாய் தானே இயங்கினால், அவ்வினையில் ஒரு பொருள் தோன்றா தாகையால், அவ்வினை - செயப்படுபொருள் குன்றிய வினை எனப்படும். எழுவாய் ஒரு பொருளை இயக்கினால், அவ்வினையில் செயப்படுபொருள் இருக்கும். ஆகையால், அது செயப்படு பொருள் குன்றாதவினை எனப்படும். வள்ளி படித்தாள். மரம் பூத்தது. ஆசிரியர் கற்பித்தார். மாணவர் எழுதினார்கள். நிலம் விளைந்தது. ‘படித்தாள்’ முதலிய ஐந்து வினைகளும் செயப்படுபொருள் குன்றாத வினைகள். பாடம் படித்தாள். பூப் பூத்தது. பாடம் கற்பித்தார். பாடம் எழுதினார்கள். நெல் விளைந்தது. பாடம், பூ, நெல், - செயப்படுபொருள்கள். பயிற்சி 1. செயப்படுபொருள் குன்றிய, குன்றாதவினை வேறு பாடென்ன? 2. உண்டான், பாடினான், கடித்தது, பூத்தது, மேய்ந்தன - இவை செயப்படுபொருள் குன்றா வினைகள் - செயப்படுபொருளைக் கண்டறிக. 3. பறந்தது, நடந்தான், போகிறார், படுத்திருக்கிறான், விழுந்தன - இவை செயப்படுபொருள் குன்றியவினைகள்.எழுவாயை வருவித்தறிக. 4. செயப்படுபொருள் குன்றிய, குன்றாவினைகளைக் குறிப்பிடுக. விழுந்தது சென்றன முறிந்தன தைத்தாள் கிழித்தாள் மலர்ந்தது 5. உங்கள் பாடத்தில் வந்துள்ள செயப்படுபொருள் குன்றிய, குன்றா வினைகளைக் கண்டறிக. 9. புணர்ச்சி மழை + பெய்தது - மழை பெய்தது ஓடி + போனான் - ஓடிப் போனான் கல் + சட்டி - கற்சட்டி நிலம் + வரி - நிலவரி இவ்வாறு சொற்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வருவது - புணர்ச்சி எனப்படும். புணர்தல் - ஒன்று கூடுதல். மழை பெய்தது. இதில், முதலில் நிற்கும் ‘மழை’ என்பது - நிலை மொழி எனப்படும். அதனுடன் வந்து சேரும் ‘பெய்தது’ என்பது - வருமொழி எனப்படும். நிலை மொழியுடன் வருமொழி சேர்வது, அல்லது கூடுவது - புணர்ச்சி எனப்படும். 1. இயல்பு புணர்ச்சி மழை பெய்தது. இதில், நிலைமொழியும் வருமொழியும் யாதொரு வேறுபாடுமின்றிப் புணர்ந்துள்ளன. இவ்வாறு நிலைமொழியும் வருமொழியும் முன்னிருந்தபடியே புணர்வது - இயல்பு புணர்ச்சி எனப்படும். கழுகு + பறக்கிறது - கழுகு பறக்கிறது. மாடு + போகிறது - மாடு போகிறது. குருவி + பறக்கிறது - குருவி பறக்கிறது. யானை + பிளிறுகிறது - யானை பிளிறுகிறது. கோழி + கூவுகிறது - கோழி கூவுகிறது. இவை எல்லாம் இயல்பாகவே புணர்ந்துள்ளன. பொன் + பூட்டினார் - பொன்பூட்டினார். மண் + குடம் - மண்குடம் கவண் + கல் - கவண்கல் மார்கழி + தை - மார்கழிதை வெற்றிலை + பாக்கு - வெற்றிலைபாக்கு காசு + கொடு - காசுகொடு நாடு + பெரிது - நாடுபெரிது வாய் + கை - வாய்கை வேர் + சிறிது - வேர்சிறிது யார் + பெரிது - யார் பெரிது இவையெல்லாம் இயல்பு புணர்ச்சி 2. விகாரப் புணர்ச்சி 1. ஓடி + போனான் - ஓடிப் போனான். 2. கல் + சட்டி - கற்சட்டி 3. நிலம் + வரி - நிலவரி 1. ஓடிப்போனான் - என்பதில், ‘ஓடிப்’ என, நிலைமொழி ஈற்றில் ‘ப்’ தோன்றியிருக்கிறது. 2. கற்சட்டி - என்பதில், கல் - ‘கற்’ என நிலைமொழி ஈற்று லகரம் (ல்) - றகரமாகத் (ற்) திரிந்திருக்கிறது. 3. நிலவரி - என்பதில், நிலம் - ‘நில’ என, நிலைமொழி ஈற்று மகரம் (ம்) கெட்டுவிட்டது. இவை முறையே தோன்றல், திரிதல்- கெடுதல் -எனப்படும்.தோன்றல் முதலிய மூன்றும் விகாரப் புணர்ச்சி எனப்படும். எனவே, இயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி என, புணர்ச்சி இருவகைப்படும். 1. பலா + பழம் - பலாப்பழம் மணி + கூண்டு - மணிக்கூண்டு தீ + பெட்டி - தீப்பெட்டி மிளகு + கொடி - மிளகுக் கொடி யானை + கூட்டம் - யானைக்கூட்டம் தாய் + பறவை - தாய்ப்பறவை வேர் + கடலை - வேர்க்கடலை யாழ் + தண்டு - யாழ்த்தண்டு இவை தோன்றல் விகாரம், உயிரீற்றின் முன்னும், மெய்யீற்றின் முன்னும், வலி (வல்லெழுத்து) தோன்றிற்று. 2. மண் + குடம் - மட்குடம் பொன் + குடம் - பொற்குடம் கல் + சட்டி - கற்சட்டி முள் + செடி - முட்செடி இவை திரிதல் விகாரம். ண், ன், ல், ள் - திரிந்தன. மனம் + குளிர்ந்தான் - மனங்குளிர்ந்தான் மனம் + சலித்தார் - மனஞ்சலித்தார் பணம் + தேடு - பணந்தேடு நிலைமொழி யீற்று மகரம் (ம்) திரிந்தது. 3. மரம் + நாய் - மர நாய் மனம் + மொழி - மனமொழி மரம் + வண்டி - மரவண்டி இவை கெடுதல் விகாரம். நிலைமொழி யீற்று மகரம் (ம்) கெட்டது. ந, ம, வ, - வரக் கெட்டது. வருமொழி முதலில் - ‘க ச த ப’ வரின் - நிலை மொழி ஈற்றில் தோன்றலும் திரிதலும் உண்டாகும். பயிற்சி 1. புணர்ச்சி என்பது என்ன? எடுத்துக்காட்டுடன் கூறுக. 2. புணர்ச்சி எத்தனை வகைப்படும். 3. தோன்றல் - எந்தப் புணர்ச்சி வகையைச் சேர்ந்தது? 4. வருமொழிமுதலின் எந்த எழுத்து வரின் - தோன்றல், திரிதல் விகாரங்கள் உண்டாகும்? 5. கெடுதல் விகாரத்தில் - கெடும் எழுத்து எது? 6. புணர்த்தெழுதுக: கால் + படி கிளி + பச்சை கலை + கூடம் நாய் + கால் தயிர் +சட்டி பொன் + கொடி கவண் + கல் மண் + குடம் 7. பிரித்தெழுதுக. வட்டக்கல் பனிக்கடல் காய்க்கடை எட்செடி தமிழ்ப்பாட்டு பற்பொடி மயிர்க்கால் மரப்பெட்டி மரவேர் 10. காலம் காட்டும் இடைநிலைகள் முன் வினைச்சொற்கள் காலம் காட்டும் என்பதைக் கண்டோம். பகுதி, விகுதி, இடைநிலை என்னும் முற்றுவினைச் சொல்லின் உறுப்புக்கள் மூன்றனுள், பகுதி - செயலையும், விகுதி - செய்பவனையும் உணர்த்தும் என்பதைக் கண்டோம். அம்மூன்றனுள் ஒன்றான இடைநிலை -காலத்தை உணர்த்தும். இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் - எனக் காலம் மூன்று வகைப்படும். 1. இறந்தகால இடைநிலைகள் வினைமுற்று - பகுதி - இடைநிலை - விகுதி செய்தான் - செய் - த் - ஆன் உண்டான் - உண் - ட் - ஆன் தின்றான் - தின் - ற் - ஆன் பாடினான் - பாடு - இன் - ஆன் த் ட் ற் இன் - இவை நான்கும் - இறந்தகால இடைநிலைகள். இவை, ‘தடறஒற்று இன்’ எனப்படும் 2. நிகழ்கால இடைநிலைகள் வினைமுற்று - பகுதி - இடைநிலை - விகுதி நடவாநின்றான் - நட - ஆநின்று - ஆன் உதிர்கின்றன - உதிர் - கின்று - அ பாடுகிறான் - பாடு - கிறு - ஆன் ஆநின்று, கின்று, கிறு - என்பன , நிகழ்கால இடைநிலைகள். 3. எதிர்கால இடைநிலைகள் வினைமுற்று - பகுதி - இடைநிலை - விகுதி உண்பான் - உண் - ப் - ஆன் நெய்வான் - நெய் - வ் - ஆன் ப், வ்- என்பன , எதிர்கால இடைநிலைகள் பயிற்சி 1. பகுதி, விகுதி, இடைநிலைகள் முறையே எவற்றை உணர்த்தும்? 2. காலம் எத்தனை வகைப்படும்? 3. த், ஆநின்று, வ், இன் - இன்ன கால இடைநிலை என்று கூறுக. 4. இன்ன கால வினைச்சொல் எனக் குறிப்பிடுக. 1. ஒளவையார் கடைச்சங்க காலத்தே இருந்தனர். 2. அவர் தமிழ் முழுதும் ஓதி உணர்ந்தார். 3. அவர் சிறந்த பாடல்கள் பாடினார். 4. பாவை அவற்றை விரும்பிப் படிக்கிறாள். 5. அவள் நல்ல அறிவு பெறுவாள் 6. அவள் தான் கற்றதைப் பிறர்க்குச் சொல்வாள். 7. அறிஞரால்தான் உலகம் இனிது நடக்கிறது. 8. நாம் அறிஞர்களை அன்புடன் போற்றுவோம். 5. காலங்காட்டும் இடைநிலைகளை எடுத்துக்காட்டுக: 1. இளங்கோ நன்கு இலக்கணம் படிப்பான். 2. பாவை நன்கு பாட்டுப் பாடுவாள். 3. உதியன் விரைவாக ஓடாநின்றான். 4. தையல் செடிக்குத் தண்ணீர் ஊற்றினாள். 5. பாவை பூப்பறித்தாள்; கண்ணகி மாலை கட்டுகிறாள். 6. பொன்னி பால் குடிக்கின்றாள்; பூவை பழம் தின்றாள். கட்டுரைப் பகுதி “கற்க கசடற” என்றார், வள்ளுவர். கசடறக் கற்ற கல்வியறிவை எழுத்தின் மூலமே பிறர்க்கு அறிவித்தல் கூடும். கற்பது போல இன்றியமையாததே எழுதுவதும். எனவே, நீங்கள் கற்கும் போதே கற்றதை எழுதிப் பழகி, எழுத்து வன்மையும் பெறுதல் வேண்டும். இது குறித்தே உங்கள் பாடத்திட்டத்தில் கட்டுரைப் பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது. கட்டுரையில் அதன் அமைப்பு முதன்மையானதாகும். அமைப்பு : 1. முன்னுரை 2. செய்தி 3. முடிவுரை என்பன, கட்டுரையின் உறுப்புக்களாகும். இவ்வமைப்புடன் எழுதுவதே கட்டுரை எனப்படும். 1. முன்னுரை - செய்தியின் தலைப்பு வருமாறு, அச்செய்தியின் தொடர்பான கருத்துக்களை யுடையது. 2. செய்தி- கட்டுரைத் தலைப்பின் பொருள், கருத்துக்களின் வகைக்கேற்ப, செய்தியைப் பல பகுதியாகப் பகுத்தெழுத வேண்டும். அங்ஙனம் பகுத்தெழுதுவதே, பத்தி எனப்படும். 3. முடிவுரை - செய்தியின் சாரத்தைச் சுருக்கி எழுதுதல். இவ்வமைப்பின் படி, பிழையில்லாமல், சிறு சிறு வாக்கியங் களாக, நல்ல தமிழ் நடையில் நன்கு எழுத வேண்டும். ‘கட்டுரையும் கைப்பழக்கம்’ என்பதை நினைவு கூர்க. 1. பள்ளிப் பொதுப்பணி குறிப்பு: 1. முன்னுரை, 2, மாணவர் தலைவன், 3. செயற்குழு 4. செயற்குழுப்பணி 5. முடிவுரை முன்னுரை : ஊர்நலம் பேண ஊராட்சி மன்றமும் நகர்நலம் பேண நகராட்சி மன்றமும் அமைந்துள்ளன. அம் மன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒரு தலைவரையும் துணைத்தலைவரையும் தேர்ந்தெடுத்து ஊராட்சியும் நகராட்சியும் நடத்திவருவது போல, எங்கள் பள்ளியின் பொது நலம் பேண நாங்களும் ஓர் அமைப்பினையும், எங்களுக்குள் ஒரு தலைவனையும் துணைத்தலைவனையும் தேர்ந்தெடுத்துப் பள்ளிப் பொதுப்பணி யாற்றி வருகிறோம். மாணவர் தலைவன் : கோடை விடுமுறைக்குப் பின்னர். 2.6.67 அன்று எங்கள் பள்ளி திறக்கப்பட்டது. 5.6.67 அன்று எங்கள் பள்ளி மாணவர் தலைவன் தேர்தல் நடந்தது. மூவர் போட்டியிட்டனர். வாக்குச் சீட்டு வழங்குதல் மூலம் இத் தேர்தல் நடைபெற்றது. விருப்பமானவர் பெயருக்குப் பின் பெருக்கல்குறி இடுமாறு, எங்கள் பள்ளியிலுள்ள எல்லா மாணவர்க்கும் அம்மூவர் பெயர்கள் எழுதப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்பட்டன. இ. செங்குட்டுவன் மாணவர் தலைவனாகவும் நலங்கிள்ளி துணைத்தலைவனாகவும் தேர்ந்தெடுக்கப்பெற்றனர். செயற்குழு : நகர் மன்றத்தார் - கல்வி, நலவழி முதலிய பொதுநலப் பணிகளைச் செய்வதற்காகத் தனித்தனிச் செயற்குழுக்களை அமைத்து அப்பணிகளைச் செய்து வருவது போல், நாங்களும் எங்கள் பள்ளிப் பொதுப் பணிகளைச் செய்வதற்காக பொதுப்பணிக்குழு, நூலகக்குழு, இலக்கியமன்றக் குழு, விளையாட்டுக்குழு, சுற்றுலாக்குழு என ஐந்து குழுக்களை அமைத்துப் பள்ளிப் பொதுப்பணிகளைச் செய்து வருகிறோம். செயற்குழுப்பணி : குப்பை கூளங்களை அகற்றிப் பள்ளியைத் தூய்மையாக வைத்திருப்பது- பொதுப் பணிக்குழுவின் கடமையாகும். பள்ளி நூலகத்திற்கு வேண்டிய நூல்களைத் தேர்ந்தெடுப்பது - நூலகக் குழுவின் பணியாகும். இலக்கியமன்றக் கூட்டங்களை நடத்துவதும், இலக்கிய மன்ற ஆண்டு விழாவை நடத்துவதும் - இலக்கிய மன்றக் குழுவின் பொறுப்பாகும். அயலூர்களில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்வதும் - ஆண்டு விளையாட்டுப் போட்டிவிழா நடத்த ஆவன செய்வதும். விளையாட்டுக் குழுவின் பொறுப்பாகும். சுற்றுலாச் செல்லத் திட்டமிடுவது - சுற்றுலாக் குழுவின் பொறுப்பாகும். மாணவர் தலைவனின் மேற்பார்வையின் கீழ் இப்பணிகள் ஒழுங்காக நடைபெற்று வரும். முடிவுரை: தலைவனையும் துணைத்தலைவனையும் தேர்ந்தெடுத்தும், செயற்குழுக்கள் அமைத்தும் எங்கள் பள்ளியின் பொதுப் பணிகளை ஒழுங்காகச் செய்து வருகின்றோம். நாங்கள் இந்நாட்டின் எதிர்கால அரசர்களல்லரோ! குறிப்பு : இவ்வமைப்பு மகளிர் பள்ளியிலும் உண்டு. 2. வகுப்பறைப் பணி குறிப்பு : 1.முன்னுரை, 2.வகுப்புத்தலைவி, 3. தலைவி பொறுப்பு, 4. வகுப்பணி, 5. அணியும்பணியும் 6. முடிவுரை. முன்னுரை: அதிகாலையில் எழுந்து, வாசலுக்குச் சாணநீர் தெளித்து, வீடுவாசல்களைத் துப்புரவு செய்து, சமையல் செய்வது தாயாரின் பொறுப்பு. வாசலில் கோலம் போட்டு வீட்டை அழகு செய்வது தங்கையின் வேலை. புழங்கத் தண்ணீர் கொண்டுவருவது அக்கையின் அலுவல். இங்ஙனம் தாயும் பிள்ளைகளும் பங்குபோட்டுக் கொண்டு வீட்டு வேலைகளை ஒழுங்காகச் செய்து வருவது போல, நாங்களும் பங்கு போட்டுக் கொண்டு எங்கள் வகுப்பறைப் பணிகளைச் செய்து வருகிறோம். வகுப்புத்தலைவி: கோடை விடுமுறைக்குப்பின் 2.6.67 அன்று எங்கள் பள்ளி திறக்கப்பட்டது. 5.6.67 அன்று எங்கள் வகுப்பு மாணவியர் தலைவி தேர்தல் நடந்தது. கண்ணகி தலைவியாகவும், அல்லி துணைத்தலைவியாகவும் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். கைதூக்குதல் மூலம் இத்தேர்தல் நடந்தது. தலைவி பொறுப்பு: வகுப்புத் தலைவி தேர்தல் நடந்ததும், வகுப்பு ஆசிரியை அவர்கள் அவ்வகுப்புத் தலைவியர்களின் பொறுப்பினை எடுத்துரைத்தனர். அதாவது, “ஆசிரியை வகுப்புக்கு வருமுன் வகுப்புத் தலைவி வகுப்பு அமைதியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஆசிரியை இல்லாதபோது, வகுப்புத்தலைவி பெரும்பாலும் ஆசிரியை பொறுப்பில் இருப்பதால், மாணவிகள் அத்தலைவிக்கு அடங்கி நடக்க வேண்டும். தலைவி பள்ளிக்கு வராத நாளில் துணைத்தலைவி அப்பொறுப்பினை ஏற்று நடத்த வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டனர். வகுப்பணி : பின்னர் ஆசிரியை அவர்கள், எங்கள் வகுப்பில் உள்ள நாற்பது மாணவிகளையும் சேரமாதேவியணி, சோழமாதேவியணி, பாண்டிமாதேவியணி, வேண்மாளணி என, நான்கு அணிகளாகப் பிரித்தனர். ஒவ்வோரணிக்கும் ஒரு தலைவியை ஏற்படுத்தினர். அணித்தலைவி என்பது அத்தலைவி பெயர். அணியும் பணியும்: சேரமாதேவியணி: நல்லினி - இவ்வணியின் தலைவி. நாடோறும் வகுப்பறையைத் துப்பரவு செய்து தூய்மையாக வைத்திருப்பது அவ்வணியின் பொறுப்பாகும். சோழமாதேவியணி : கண்ணகி - இவ்வணியின் தலைவி. வகுப்பறைக்கு முன் கோலமிட்டு அழகு செய்வது அவ்வணியின் பணியாகும். பாண்டிமாதேவியணி : ஐயை - இவ்வணியின் தலைவி. வகுப்பறைச் சுவர்களைத் துடைத்துத் துப்புரவு செய்தல், வாரத்துக்கொருமுறை தரையைக் கழுவி மெழுகுதல் இவ்வணியின் கடமையாகும். வேண்மாளணி: ஒளவை - இவ்வணியின் தலைவி. குடிநீர்கொண்டுவந்து வைத்தல் இவ்வணியின் செயலாகும். முடிவுரை : எங்கள் பள்ளியில் உள்ள எல்லா வகுப்புக்களிலும் இவ்வமைப்புக்கள் உண்டு. இவ்வாறு வகுப்பு மாணவியரை நந்நான்கு அணிகளாக வகுத்து, வகுப்புப் பணிகளைச் செய்வதன் மூலம் எங்கள் பள்ளியை நன்முறையில் இருக்குமாறு செய்து வருகிறோம். ஆண் பள்ளிகளிலும் இவ்வமைப்புக்கள் உண்டு. 3. திட்டமிடல் குறிப்பு : முன்னுரை, 2. அணித்தலைவர் கூட்டம். 3.ஆண்டு விழாத்திட்டம், 4. முடிவுரை. முன்னுரை : விழா என்றால் மக்களுக்குக் கொண்டாட்டம். அதிலும், சிறார்களுக்குத் தனிக் கொண்டாட்டம். பள்ளி விழா வென்றால் சிறுவர்கள் புத்துணர்ச்சி பெற்றுப் புதுநிலையை எய்திவிடுவர். மாணவ மாணவியர் மகிழ்ச்சிப் பெருக்குடன் கொண்டாடும் பள்ளி விழாக்களில் இலக்கியமன்ற ஆண்டு விழாவும் ஒன்றாகும். அணித்தலைவர் கூட்டம்: எங்கள் பள்ளி மன்ற ஆண்டு விழாக் கொண்டாடுவதற்குத் திட்டந் தீட்டுவதற்காகப் பள்ளி இலக்கிய மண்டபத்தில் அணித்தலைவர் கூட்டமொன்றை மாணவர் தலைவன் கூட்டினான். குறிப்பிட்ட சில ஆசிரியர்களும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். தலைமை ஆசிரியர் அவர்கள் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, இலக்கிய மன்ற ஆண்டுவிழாக் கொண்டாடுவதன் இன்றியமையாமையினை எடுத்தியம்பினர். பின்னர் ஆண்டுவிழாக் கொண்டாடுவதற்கான திட்டம் தீட்டப்பட்டது. ஆண்டு விழாத் திட்டம்: 16.2.68 அன்று இலக்கிய மன்ற ஆண்டுவிழா நடத்துவதெனவும், அதற்கு இன்னாரைத் தலைமை தாங்கவும், இன்னாரைப் பேச்சாளராகவும் அழைப்பதெனவும் முடிவு செய்யப்பட்டது. கதை - கட்டுரைப் போட்டி, செய்யுள் ஒப்பித்தல், இசைப்போட்டி, மாற்றுடைப்போட்டி முதலியன நடத்தத் தனித்தனி ஆசிரியர்கள் ஏற்படுத்தப்பட்டனர். அன்று இரவில் மாணவர்களால், ‘நல்வாழ்வு’ என்னும் நாடகம் நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டது. பந்தல் போடவும், பூந்தாள்களால் பள்ளியை அழகு படுத்தவும், நாடக மேடை அமைக்கவும், குடிநீர் கொணர்ந்து வைக்கவும் தனித்தனி மாணவர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றின் மேற்பார்வை மாணவர் தலைவனிடம் ஒப்படைக்கப்பட்டது. முடிவுரை: எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு ஒழுங்காகச் செய்வதே முறையாகும். அவ்வாறே பள்ளி மாணவர்களாகிய நாங்களும் ஒன்று கூடி, இலக்கிய மன்ற ஆண்டு விழா நடத்துவதற்குத் திட்டம் தீட்டிக் கொண்டோம். திட்டமிட்டுச் செய்தலே சிறந்த முறையாகும். 4. சுற்றுலா நாமக்கல், 20.8.67. அன்புள்ள அல்லி! வணக்கம்! நின் கடிதம் கிடைத்தது. அதில் நீ, உங்கள் பள்ளி மாணவியர் சுற்றுலாவாகப் புகலூர்ச் சர்க்கரை ஆலைக்குச் சென்று, அங்குக் கரும்பில் சாறு பிழிவதையும், அச்சாற்றைச் சர்க்கரை யாக்குவதையும் கண்டுகளித்து வந்ததாகக் குறித்திருப்பது கண்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். உங்களைப் போலவே நாங்களும் 15.8.67 அன்று சுற்றுலாச் சென்று, சேலங் கருப்பூர் வெள்ளைக்கல் மேட்டுத் தொழிற்சாலைகளைக் கண்டுகளித்து வந்தோம். அன்று காலை 6 மணிக்கெல்லாம் 115 மாணவியரும், நான்கு ஆசிரியையரும் இரண்டு தனி மோட்டார் வண்டியில் புறப்பட்டோம். வழிநெடுக உள்ள சவ்வரிசித் தொழிற்சாலைகளைப் பார்த்துக் கொண்டே மணி 7.30 க்கெல்லாம் சேலத்தை அடைந்தோம். அங்குச் சிற்றுண்டி அருந்தி விட்டுப் புறப்பட்டோம். சேலம் நகரின் அழகைக் கண்டு களித்துக்கொண்டே, அந்நகரின் வழியாக மேற்கு நோக்கிச் சென்றோம். சேலத்துக்கு 8 கி. மீட்டர் மேற்கில் உள்ள கருப்பூருக்கு அண்மையில் அவ்வெள்ளைக்கல் மேடு இருக்கிறது. நாங்கள் சிறிது தொலைவில் செல்லும் போதே, வெள்ளைக்கல் தொழிற் சாலைகளின் குளைப்புகை ‘இங்கே வாருங்கள், வந்து பாருங்கள்’ என்று எங்களை வரவேற்றது. அவ்வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு சென்று வெள்ளைக் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதையும், அக்கற்களை எந்திரச் சூளைகளின் மூலம் மாவாக்கும் காட்சியினையும் கண்டு களித்தோம். இக்கல்லை வெட்டியெடுத்துச் சூளையிலிட்டு மாவாக்கவும், அம்மாவால் குகை, செங்கல் முதலியன செய்யவும் 1. பர்ன் ஆண்டு கோ, 2. டால்மியா கம்பெனி, 3. மேத்தா கம்பெனி 4. டாட்டாகம்பெனி, 5,சேலம் கம்பெனி என ஐந்து நிறுவனங்கள் உள்ளன. டால்மியா கம்பெனி, ஆசியாவிலேயே பெரிதாகும். இவ்வைந்து நிறுவனங்களிலுமாக 7000 பேர் வேலை செய்கிறார்களாம். நாம் முகத்துக்குப் போடும் முகப்பூச்சுப்பொடி இவ்வெள்ளைக்கல் மாவினால்தான் செய்யப்படுகிறதாம். பின்னர், கருப்பூருக்கு அருகில் கட்டப்பட்டுள்ள அரசினர் பொறியியல் கல்லூரியைச் சென்று பார்த்தோம். அழகான கட்டடங்கள். அதைப்பார்த்து விட்டுச் சேலத்தில் வந்து சாப்பிட்டு விட்டுச் சேலம் நகரைச் சுற்றிப் பார்த்தோம். பிற்பகல் 5 மணிக்குப் புறப்பட்டு 7.30மணிக்கெல்லாம் ஊர் வந்து சேர்ந்தோம். அன்று எனக்குப் பொழுதுபோனதே தெரியவில்லை. சுற்றுலாவின் சிறப்பே சிறப்பு! அன்புள்ள, மெல்லி. 5. செய்யுளின் திரண்ட பொருள் எழுதுதல் வறுமையின் கொடுமை செய்யுள்-1 ஒருமகவுக் களித்திடும்போ தொருமகவு கைநீட்டும் உந்தி மேல்வீழ்ந் திருமகவும் கைநீட்டும் மும்மகவும் கைநீட்டும் என்செய் வாளால் பொருமியொரு மகவழுங்கண் பிசைந்தழுமற் றொருமகவு புரண்டு வீழாப் பெருநிலத்தில் கிடந்தழுமற் றொருமகவெங் ஙனஞ்சகிப்பாள் பெரிதும் பாவம்! செய்யுள்-2 அந்தோவென் வயிற்றெழுந்த பசியடங்கிற் றில்லை யென அழுமால் ஓர்சேய் சிந்தாத கஞ்சிவாக் கிலையெனக்கன் னாயெனப்பொய் செப்பும் ஓர்சேய் முந்தார்வத் தொருசேய்மி சையப்புகும்போ தினிலொருசேய் முடுகி யீர்ப்ப நந்தாமற் றச்சேயும் எதிரீர்ப்பச் சிந்துதற்கு நயக்கும் ஓர்சேய் - குசேலோபாக்கியானம். இவை, மிக்க வறுமையால் வாடிய குசேலன் மனைவியான சுசீலை என்பவள், தன் மக்களுக்குக் கஞ்சி ஊற்றின போது, அப்பிள்ளைகள் பசிக்கொடுமையால் பறந்ததை அப்படியே படம்பிடித்துக் காட்டும் பாடல்களாகும். சுசீலைக்கு 27மக்கள். அருஞ்சொற்பொருள்: உந்தி - தாவி. பொருமி - விம்மி, வீழா - வீழ்ந்து, வீழ்ந்து புரண்டழும். வாத்தல் - ஊற்றுதல். முந்து ஆர்வத்தோடு -முற்பட்ட ஆசையோடு. முற்பட்ட - மிக்க. முடுகி - விரைந்து. நந்தா - விடாது. ஈர்த்தல் - இழுத்தல். நயக்கும் - விரும்பும். திரண்டபொருள் 1. ஒரு பிள்ளைக்குக் கஞ்சி வாத்திடும் போது மற்றொரு பிள்ளை கையை நீட்டும். தாவி மேலே வீழ்ந்து வேறு இரண்டு பிள்ளைகள் கையை நீட்டும். மற்றும் மூன்று பிள்ளைகள் கையை நீட்டும். அவள் என்செய்வாள் பாவம்! பசி தாளாமல் விம்மி விம்மி அழும் ஒரு பிள்ளை. கண்ணைத் தேய்த்துக்கொண்டழும் மற்றொரு பிள்ளை. மற்றொரு பிள்ளை தரையில் வீழ்ந்து புரண்டழும். மக்கள் படும்பாட்டை அவள் எவ்வாறு பொறுப்பாள். பாவம்!. 2. ஒரு பிள்ளை, ‘ஐயோ என் வயிற்றுப் பசி அடங்க வில்லையே, என அழும். மற்றொரு பிள்ளை, ‘அன்னாய்! எனக்குச் சிந்தாமல் கஞ்சி வாக்கவில்லை’, எனப் பொய் பேசும்; அதாவது, ‘எனக்குரிய கஞ்சியைக் கீழே சிந்திவிட்டாய்’ எனும், ஒரு பிள்ளை மிக்க ஆசையோடு குடிக்கப் போகும் போது, மற்றொரு பிள்ளை விரைந்து பிடித்திழுக்க, விடாது அப்பிள்ளையும் எதிரே இழுக்க, அதனால் சிந்துகின்ற கஞ்சியைப் பிடித்துக் குடிக்க ஒரு பிள்ளை விரும்பிக் கையை நீட்டும். பார்த்தீர்களா பசியின் கொடுமையை! குறிப்பு : உங்கள் செய்யுட் பாடத்தில் உள்ள செய்யுட்களுக்கு இவ்வாறு பொருளெழுதிப் பழகுங்கள். 6. விரித்தெழுதுதல் சுருக்கம் குமணன் என்பான் சங்ககாலத் தமிழ் வள்ளல்களிலொருவன். அவனது கொடைமடங் கண்டு பொறாமை கொண்ட அவன் தம்பியான இளங்குமணன் என்பான், அரசைக் கவர்ந்து கொண்டு குமணனைக் காட்டுக்குத் துரத்தி விட்டான். காட்டிலிருந்த போது பாடிச்சென்ற பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர்க்குப் பரிசு கொடுக்கப் பொருளில்லாத குமணன், ‘என் தலையைக் கொண்டுபோய் என் தம்பியிடம் கொடுத்தால் வேண்டியபொருள் கொடுப்பான்’ எனத் தன் வாளைப் புலவரிடம் கொடுத்தான். புலவர் இளங்குமணனிடம் சென்று வாளைக் காட்டி, அவன் மனத்தை மாற்றிக் குமணனைப் பழையபடி அரசனாக்கினார். விரிவு பாரி, காரி, ஓரி, பேகன், அதியன், ஆய், நள்ளி என்னும் சங்க காலத் தமிழ் வள்ளல்கள் எழுவருக்குப்பின் இருந்தவன் குமணன். இவன் தன் தலையையே பரிசாகக் கொடுக்க முற்பட்ட தண் கொடையாளன். இவன் கொங்கு நாட்டுக் குறுநிலமன்னர்களில் ஒருவன். கோவை மாவட்டத்தின் உடுமலைப் பேட்டை வட்டத்தில் உள்ள கொழுமம் என்னும் ஊரிலிருந்து அப்பகுதியை ஆண்டு வந்தான் குமணன். முதிரம் என்பது கொழுமத்தின் பழம் பெயர். கொடுத்துக் கொடுத்துப் பொன்றாப் புகழ் கொண்ட வள்ளல் குமணன் பால் பொறாமை கொண்ட அவன் தம்பி இளங்குமணன் என்பான், அரசைக் கவர்ந்து கொண்டு குமணனைக் காட்டுக்குத் துரத்திவிட்டான். கோவை மாவட்டத்திலுள்ள பவானிக்கு 13 கீ.மீட்டர் மேற்கில் உள்ள பெருந்தலையூரினரான பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர், குமணனைப் பாடிப் பரிசு பெற முதிரஞ் சென்றார். குமணன் காட்டில் இருப்பதைக் கேள்வியுற்ற புலவர், அக்காட்டிற்குச் சென்று குமணனைக் கண்டு பாடினார். புலவர்க்குப் பரிசுகொடுக்கப் பொருளில்லாத குமணன், ‘புலவர் பெருமான்! என் தலையைக் கொண்டு வருவோர்க்கு மிகுந்த பொருள் தருவதாக என் தம்பி வாக்களித்துள்ளான். இதோ இந்த வாளைக்கொண்டு என் தலையை வெட்டிக் கொண்டு போய் என் தம்பியிடம் கொடுத்துப் பெரும் பொருள் பெற்றுச் செல்க’ எனத் தன் வாளைப் புலவரிடம் கொடுத்தான். புலவர் வாளை வாங்கிக் கொண்டு முதிரஞ் சென்று, இளங்குமணனிடம் அவ்வாளைக் காட்டி, குமணனின் பெருங்குணச் சிறப்பினைக் கூறினார். அதனால் மனமாறிய இளங்குமணன், காட்டிற்குச் சென்று, தன் குற்றத்தைப் பொறுத்தருளுமாறு வேண்டி, அண்ணனை நாட்டிற்கழைத்து வந்து பழையபடி புலவர்க்குக் கொடுத்துத் தமிழ் வளர்த்து வருமாறு செய்தான். 7. சுருக்கி எழுதுதல் விரிவு சோழ நாட்டின் பழைய தலைநகர்களில் உறையூர் ஒன்றாகும். இவ்வூர் இன்று திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாக உள்ளது. ‘ஊரெனப் படுவது உறையூர்’ என்னும் சிறப்புடையது இவ்வூர். சங்ககாலத்தே கோப்பெருஞ்சோழன் என்பான் உறையூரிலிருந்து சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். அவன் சிறந்த கொடைக்குணம் உள்ளவன்; சிறந்த தமிழறிவுடையவன். மக்கட் பண்பாடு முழுவதும் வாய்க்கப் பெற்றவன். கோப்பெருஞ்சோழன் செங்கோல் வேந்தனாகத் திகழ்ந்து வந்தான். இவன் காலத்தே, பாண்டிய நாட்டுப் பிசிர் என்னும் ஊரில் ஆந்தையார் என்ற புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அதனால் அவர் பிசிராந்தையார் என அழைக்கப்பட்டு வந்தார். பிசிராந்தையார் பெரும் புலவர்; கோப்பெருஞ் சோழனைப் போலவே மக்கட் பண்பாடு முழுவதும் வாய்க்கப் பெற்றவர். ஒரே வகையான பண்பாடு வாய்க்கப் பெற்ற கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் ஒருமுறை கூட ஒருவரையொருவர் நேரில் பார்த்ததில்லை. அங்ஙனமிருந்தும், ஒருவர் குணச்சிறப்பினை ஒருவர் பிறர் வாயிலாய்க் கேள்விப்பட்டு, இருவரும் நட்புக் கொண்டனர். இது, பழகாநட்பு எனப்படும். இந்நட்புக்குக் காரணம் இருவர் உணர்ச்சியும் ஒன்று பட்டதே யாகலான், இது உணர்ச்சி ஒன்றல் எனப்படும். தன்னோடு மாறுபட்டுப் போர்க்கெழுந்த தன் மைந்தரின் சிறுமை கண்டு வாழ்க்கையை வெறுத்த கோப்பெருஞ் சோழன் உண்ணாதிருந்து உயிர்விட்டான். உணர்ச்சியால் அதனை அறிந்த பிசிராந்தையார், உறையூர் வந்து உடனுயிர் நீத்தனர். சுருக்கம் சங்க காலத்தே கோப்பெருஞ் சோழன் என்பவன் உறையூரிலிருந்து சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். அவன் மிகுந்த குணச்சிறப்புடையவன். அவன் காலத்தே, பாண்டி நாட்டில் பிசிராந்தையார் என்னும் புலவரொருவர் இருந்தார். அவரும் அத்தகைய குணச்சிறப்புடையவராவர். அவ்விருவரும் நேரில் காணாது, பிறர் வாய்மூலம் ஒருவர் குணச் சிறப்பினை ஒருவர் அறிந்து, இருவரும், நட்புக் கொண்டு வாழ்ந்து வந்தனர். தன்னோடு மாறுபட்ட மக்களால் வாழ்வை வெறுத்த கோப்பெருஞ்சோழன் உண்ணாதிருந்து உயிர்விட்டதை உணர்ச்சியால் உணர்ந்த பிசிராந்தையார் உறையூர் வந்து, சோழனோடு உடனுயிர் விட்டார். குறிப்பு: இவ்வாறு சுருங்கிய பகுதியை விரித்தும், விரிந்த பகுதியைச் சுருக்கியும் எழுதிப் பழகுங்கள். 8. குறிப்புக் கொடுத்துக் கதை எழுதுதல் சிங்கமும் சுண்டெலியும் குறிப்பு சிங்கம் - வாழ்ந்து - தூங்கிக் கொண்டு - சுண்டெலி - சிங்கத்தின் - விளையாடிற்று - கலைந்தெழுந்த - பார்த்து - பயலே - ஆணவம் - இன்னானென்று - கெடுத்தனை - உன்னை - ஓங்கிற்று - அஞ்சியலறிய - அறியாது - பொறுத்து - வாழ - மறவேன்- கேட்டது - கொல்லாமல் - பின்னொருநாள் - வலையில் - மீளா - வருத்தத்தினால் - கர்ச்சித்தது - குரலை - சுண்டெலி - பற்களால் - சிங்கத்தை - மீட்டது - மகிழ்ந்தது. கதை ஒரு காட்டில் ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது. ஒருநாள் அச்சிங்கம் ஓரிடத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த சுண்டெலி ஒன்று, தூங்குகின்ற அச்சிங்கத்தின் மேல் ஏறி ஓடியாடி விளையாடிற்று. அதனால், தூக்கங் கலைந்தெழுந்த சிங்கம், அச்சுண்டெலியைப் பார்த்து, “அடா சின்னப்பயலே! உனக்கென்ன இவ்வளவு ஆணவம்! என்னை இன்னானென்று தெரியாமல் என் தூக்கத்தைக் கெடுத்தனை. இதோ உன்னைக் கொல்லுகிறேன் பார்!” என்று முன் காலை ஓங்கிற்று. அது கண்டு அஞ்சியலறிய சுண்டெலி, “ஐயா! நான் அறியாது செய்த இப்பிழையைப் பொறுத்து என்னை வாழவிட்டால் இந்நன்றியை என்றும் மறவேன்” என்று கெஞ்சிக் கேட்டது. சிங்கம் அவ்வாறே அதனைக் கொல்லாமல் விட்டுவிட்டது. சில நாளைக்குப் பின்னொரு நாள், அச்சிங்கம் வேடன் கட்டிய ஒரு வலையில் சிக்கிக் கொண்டது. அதனால் அவ்வலையினின்று மீள முடியவில்லை. வருத்தத்தினால் அது உரக்கக் கர்ச்சித்தது. அச்சிங்கத்தின் குரலைக் கேட்ட அச்சுண்டெலி அங்கு வந்து அவ்வலையைத் தன் கூரிய பற்களால் கடித்துச் சிங்கத்தை அவ்வலையினின்றும் மீட்டது. சிங்கம் மிகவும் மகிழ்ந்தது. குறிப்பு: இவ்வாறு குறிப்பைக்கொண்டு கதைகள் எழுதிப் பழகுங்கள். 9. கதையை முடித்தல் முயலின் தந்திரம் கதையின் முற்பகுதி ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்தது. அது அக்காட்டிலுள்ள விலங்குகளையெல்லாம்கொன்று தின்று வந்தது. அது கண்ட விலங்குகளெல்லாம் ஒரு நாள் ஒன்று கூடிச் சிங்கத்தினிடம் சென்று,“ஐயா! இவ்வாறு தாங்கள் கொன்று வந்தால், சில நாட்களில் இக்காட்டில் விலங்குகளே இல்லாமல் போய் விடும்.அப்புறம் உங்களுக்கு இரையே இல்லாமல் போய்விடும். ஆகையால், நாங்கள் ஒவ்வொரு வகையினரும் ஒவ்வொரு நாளைக்கு வந்து தங்களுக்கு இரையாகிறோம்.” என்றன. சிங்கம் அதற்கு ஒத்துக்கொண்டு அவ்வாறே செய்து வந்தது. ஒருநாள் ஒரு கிழமுயலின் முறை வந்தது. அது, அச்சிங்கத்தை ஒழித்துக்கட்ட ஒரு தந்திரம் செய்தது. அது நேரங்கழித்து அச்சிங்கத்தினிடம் சென்றது. பிற்பகுதி சிங்கம் சினந்து கேட்டல். முயல் மற்றொரு சிங்கத்தை வழியில் கண்டேனெனல். சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு பாழுங் கிணற்றைக் காட்டல். சிங்கம் இறத்தல். குறிப்பு: கதையை ஒழுங்காக எழுதி முடிக்க. 10. செய்தித்தாள் - கட்டுரை செய்தித் தாள்களில் வெளியான செய்திக் குறிப்பைக் கொண்டு கட்டுரை எழுதுதல். பொதுத்தேர்தல் செய்திகள் 1. 1967 பிப்பிரவரியில் நாலாவது பொதுத் தேர்தலை நடத்தலாமெனத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் அறிக்கை கூறுகிறது. - தமிழ்நாடு 2. தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 39 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் 1967 பிப்பிரவரி 15,18,21 நாட்களில் பொதுத் தேர்தல் நடைபெறும். - மித்திரன் 3. எல்லாக் கட்சித் தலைவர்களும் தமிழக முதலமைச்சர் தலைமையில் கூடி, வருகிற பொதுத்தேர்தலை ஒழுங்காக நடத்த வேண்டுமென முடிவு செய்தனர். - முரசொலி 4. தேர்தல் கண்ணோட்டம் சட்டமன்றத்தொகுதி பாராளுமன்றத்தொகுதி 234 39 காங்கிரசு - 50 3 தி.மு.க - 138 25 சுதந்திரா - 20 6 இ.கம் - 11 4 வ.கம் - 2 - மு.லீகு - 3 - 1 பி.சோ - 4 - சோச - 2 - மு. கட்சி - 1 - சுயேச்சை - 3 - 234 39 234 இடங்களுள், 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தி.மு. கழகம் மந்திரி சபை அமைக்கத் தகுதி பெற்றுள்ளது. - - தினமணி 5. சென்னை - 5.3.67: நாளை, தி.மு. கழகத் தலைவர் அண்ணாத்துரை, தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார். அவருடன் ஒன்பது மந்திரிகள் பதவி ஏற்பர். - நவமணி கட்டுரை குறிப்பு : 1.முன்னுரை 2. பொதுத்தேர்தல் 3. நாலாவது பொதுத்தேர்தல் 4. தேர்தல் முடிவு, 5.முடிவுரை முன்னுரை: 15.8.47இல் நம்நாடு விடுதலை பெற்றது. 26. 1.50 இல் இந்திய அரசியல் சட்டம் தீட்டப்பட்டது. அச்சட்டத்தின்படி வயது வந்த இந்நாட்டுக் குடிமக்கள் அனைவரும் வாக்குரிமை பெற்றனர்.பொதுத்தேர்தலின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்றவர் இந்நாட்டை ஆளும் உரிமை பெற்றனர். இந்நாட்டு மக்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர்களாயினர். நாட்டில் குடியரசு அல்லது மக்களாட்சி மலர்ந்தது. பொதுத்தேர்தல் : பொதுத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப் பெற்ற மக்கள் தலைவர்கள் ஐந்தாண்டுக்கு நாடாளும் உரிமையுடையவராவர். மக்களாட்சியில் கட்சியாட்சியே நடைபெறும். பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பெரும்பான்மைக் கட்சி ஆளும் உரிமையுடையதாகும். 1952 இல் இந்நாட்டின் முதல் பொதுத்தேர்தல் நடந்தது. வாக்குரிமையுடைய இந்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் மாநிலச்சட்டமன்ற வேட்பாளருக்கு ஒரு வாக்கும், இந்தியப் பாராளுமன்ற வேட்பாளருக்கு ஒரு வாக்கும் வழங்கினர். வெற்றி பெற்ற பெரும்பான்மை உறுப்பினரைக் கொண்ட கட்சி, மாநிலங்களிலும் மத்தியிலும் அமைச்சரவை அமைத்து நாடாளத் தொடங்கியது. மத்திய ஆட்சிக்கு உட்பட்டது மாநில ஆட்சி. 1957 இல் இரண்டாவது பொதுத் தேர்தலும், 1962 இல் மூன்றாவது பொதுத் தேர்தலும் நடந்தன. நாலாவது பொதுத்தேர்தல்: 1967 பிப்பிரவரியில் நாலாவது பொதுத்தேர்தல் நடந்தது. தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 39 பாராளுமன்றத் தொகுதிகளிலும் 1967 இல் பிப்ரவரி 15,18,21, நாட்களில் தேர்தல் நடந்தது. எல்லாக் கட்சித் தலைவர்களும் கூடி முடிவு செய்தபடி அம்மூன்று நாள் தேர்தலும் ஒழுங்கான முறையில் நடந்தது. தேர்தல் முடிவு: பிப்பிரவரி 22 முதல் 25 முடியத் தேர்தல் முடிவுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன. தேர்தல் முடிவு தெரிந்த 234 இடங்களில், திராவிட முன்னேற்றக் கழகம் 138 இடங்களில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியாகத் தகுதி பெற்றது. 6.3.67 அன்று, அக்கட்சித் தலைவரான அறிஞர் அண்ணா அவர்கள், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடன் ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்றனர். முடிவுரை: நம் நாடு 15.8.47 இல் விடுதலை பெற்றது. 26.1.1950 இல் மக்களாட்சி ஏற்பட்டது. 1952, 57, 62, 67 ஆகிய ஆண்டுகளில் முறையே நான்கு பொதுத்தேர்தல்கள் நடந்தன. 1967 பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மையாக வெற்றி பெற்றுத் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றது. 11. மேற்கோள் நூல் - கட்டுரை நுல்களிலிருந்து மேற்கோட் செய்யுட் கருத்துக்களைக் கொண்டு கட்டுரை எழுதுதல். ஒழுக்கமுடைமை 1.முன்னுரை: ஓதாதார்க் கில்லை உணர்வொடும் ஒழுக்கம். - கொன்றைவேந்தன். 2. இன்றியமையாமை: ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினு மோம்பப் படும். - குறள் 3. ஒழுக்கமுடையோர்: கூர்த்துநாய் கவ்விக் கொளக்கண்டுந் தன்வாயால் போத்துநாய் கௌவினா ரீங்கில்லை -சீர்த்தன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ மேன்மக்கள் தம்வாயால் மீட்டு - நாலடி 4. தீயொழுக்கம்: நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். - குறள் 5. கூடாவொழுக்கம் : புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து - குறள் 6. முடிவுரை : கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. -குறள் கட்டுரை குறிப்பு: 1. முன்னுரை 2. இன்றியமையாமை, 3. ஒழுக்கமுடையோர், 4. தீயொழுக்கம், 5. கூடாவொழுக்கம், 6. முடிவுரை. முன்னுரை : மக்கள் எவ்வாறு நடக்க வேண்டும், எவ்வாறு நடக்கக் கூடாது என்று பெரியோர்களால் வரையறை செய்யப்பட்டது அறம் எனப்படும். அவ்வறத்தின்படி நடப்பது - ஒழுக்கம் எனப்படும். ஒழுக்கம் - நன்னடக்கை. கல்லாதவர்க்கு அறிவும் ஒழுக்கமும் இல்லை என ஒளவையார் அறைவதால், கற்று அறிவைப் பெற்றவர் ஒழுக்கமுடையவராய் இருத்தல் வேண்டும் என்பது பெறப்படும். இன்றியமையாமை: ஒழுக்கமுடையவர்க்கு அவ்வொழுக்கம் பெருமையைத் தருகிறது. ஒழுக்கமுடையவரை மக்கள் நன்கு மதித்து நடப்பர். எனவே, ஒவ்வொருவரும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதி நடந்து கொள்ள வேண்டும். ஒழுக்கத்தை உயிரினும் மேலாகப் பாதுகாக்க வேண்டும். ஒழுக்கமுடையோர்: ஒரு நாய் சினந்து தன்னைக் கடித்தால், அதைத் திருப்பிக் கடிப்போர் இவ்வுலகத்தில் யாருமில்லை. அது மக்கட்பண்புமன்று. அதுபோல, கீழ் மக்கள் சொல்லத்தகாத சொல்லைச் சொன்னால் ஒழுக்கமுடையோர் ஒருக்காலும் அதைத் திருப்பிச் சொல்ல மாட்டார். அவ்வாறு சொல்லுதல் ஒழுக்கமுடையவர்க்கு ஏற்றதன்று. தீயொழுக்கம்: நல்லொழுக்கம் நன்மைக்குக் காரணமாகும். நல்லொழுக்க முடையோர் எப்போதும் நலமாக இருப்பர். ஆனால் தீயொழுக்கமோ, அவ்வொழுக்க முடையோர்க்கு எப்போதும் துன்பத்தைத் தரும். எனவே, எப்போதும் நல்லொழுக்கமுடையவராக நடந்து கொள்ளுதல் வேண்டும். கூடாவொழுக்கம்: குன்றிமணி தோற்றத்தில் செக்கச்சேவே லென்றிருக்கிறது. ஆனால், அதன் மூக்குக் கறுப்பாக இருக்கிறது. அதுபோல, வெளித்தோற்றத்தில் நல்லொழுக்க முடையவராக நடந்துகொண்டு, உள்ளுக்குள் கூடாவொழுக்கமுடையவராக இருத்தல் கூடாது. உள்ளும் புறமும் ஒரே தன்மையுடையவராக இருத்தல் வேண்டும். முடிவுரை: ஒழுக்கம் உயர்வைத் தருகிறது. ஆகையால், உயிர் போல எண்ணிக் கடைப்பிடித்து நடக்க வேண்டும். பிறர் நமக்குத் தீமை செய்யினும் நாம் அவர்க்குத் தீமை செய்யக் கூடாது. வெளிக்கு நல்லவன் போல் நடித்து உள்ளுக்குள் கூடாவொழுக்க முடையவனாக இருத்தல் கூடாது. நூல்களைக் குற்றமறக் கற்று, அவற்றின்படி நடந்து கொள்ளுதல் வேண்டும். குறிப்பு : இவ்வாறு, உங்கள் பள்ளி நூலகத்திலுள்ள நூல்களிலிருந்து குறிப்பெடுத்துக் கட்டுரை எழுதிப் பழகுங்கள். 12. பள்ளி ஆண்டு மலர் பள்ளி ஆண்டு மலருக்குக் கவிதை, கதை, கட்டுரை எழுதுதல். 1. கவிதை மங்கையும் வண்டும் மல்லிகைப் பந்தலிலே - வண்டே மாலையி லூதுவதேன்? அல்லி மலரினிலே - காலையில் ஆடியே பாடுவதேன்? மல்லிகை மாலையிலே - அழகாய் மலரும் பூவாகும். அல்லி மலரதுவும் - காலையில் அலரும் பூவாகும். இன்பத் தமிழ்பாடி மலரை எழிலுறச் செய்வதுமேன்? அன்புற் றிசைகேட்ட - தேனை அள்ளிக் கொடுத்திடுங்காண். மாலையுங் காலையிலும் - போதினை மலர்விக்கும் நீ வாழ்க! மாலை தொடுத்தணிந்து - அழகாய் மங்கையே நீ வாழ்க! - பூங்கோதை, எட்டாம் வகுப்பு - அ 2. கதை முருகன் தந்திரம் ஓருரில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் கண்ணன். கண்ணன் சில கோழிகள் வளர்த்து வந்தான். தீனிபோட்டுத் தண்ணீரும் ஊற்றி வைப்பான். மாலையில் அவற்றைக் கூட்டுக்குள் இட்டு அடைத்து வைப்பான். அவன் வீட்டுக்குப் பின்புறத்தில் சிறிய தோட்டம் இருந்தது. பகலில் அக்கோழிகள் அத்தோட்டத்தில் சென்று குப்பையைப் பறித்துப் புழு பூச்சிகளைத் தின்று கொண்டிருக்கும். கண்ணன் வீட்டுக்குப் பக்கத்து வீடு முருகன் வீடு. முருகன் தன் வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள காலியிடத்தில் காய்கறிச் செடிகள், பூச்செடிகள், கீரை முதலியன பயிர்செய்து வந்தான். கண்ணன் வீட்டுத் தோட்டமும் முருகன் வீட்டுத் தோட்டமும் இணைந்தவையாக இருந்தன. அவற்றின் இடையில் வேலி இல்லை . அதனால் கண்ணன் கோழிகள் முருகன் தோட்டத் திற்குள் சென்று, அவன் அன்பாக வளர்த்து வரும் செடிகளைக் கொத்தியும் பறித்தும் நாசஞ்செய்து வந்தன. “உன் கோழிகள் என் தோட்டத்திற்குள் வந்து செடிகளைப் பறித்துப் பாழ்படுத்துகின்றன. அவற்றை இங்கு வராமல் செய் அல்லது வேலி போட்டு இங்கு வராமல் இருக்கும்படி செய்”. என்று முருகன் எவ்வளவோ சொல்லியும் கண்ணன் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. முருகன் கடையிலிருந்து சில கோழி முட்டைகள் வாங்கி வந்து, தன் தோட்டத்திலுள்ள ஒரு செடியின் கீழ் அவற்றைப் போட்டு வைத்து, கண்ணன் பார்க்கும்படி அம்முட்டைகளை அங்கிருந்து எடுத்துச் சென்றான். அது கண்ட கண்ணன், தன் கோழி அங்குச் சென்று முட்டையிட்டு விடுகிறதென்று எண்ணி, உடனே அவ்விரு தோட்டத்திற்கும் இடையில் வேலி போட்டு, தன் கோழிகள் முருகன் தோட்டத்திற்குள் போகாமலிருக்கும்படி செய்தான். முருகன் தந்திரம் எப்படி! - க. வடிவேல், எட்டாம் வகுப்பு.ஆ 3. கட்டுரை தமிழிசை இயல், இசை, நாடகம் எனத் தமிழ் மூன்று வகைப்படும். இதனாலேயே தமிழ் - முத்தமிழ் எனப்பட்டது. செய்யுளும் உரைநடையும் - இயற்றமிழ் எனப்படும். இயற்றமிழ்ப் பாட்டுக் களை இசையுடன் பாடுதல் - இசைத்தமிழ் எனப்படும். இயற்றமிழ்ப் பாடல்களின் பொருள் எளிதில் விளங்கும்படி இசையுடன் பாடிக்கொண்டு நடித்தல் - நாடகத்தமிழ் எனப்படும். இவற்றுள், தமிழிசை - பாடுவோருள்ளத்தையும் கேட்போருள்ளத்தையும் உருக்கி, அன்னார்க்கு மிக்க மகிழ்ச்சியூட்டும் தன்மையுடையதாகும். ‘ஏதுக்கும் உருகாவேனும் இசைக்குருகாத உண்டோ’ என்கின்றார் ஒரு புலவர். பால் மணம் மாறாப் பச்சிளங்குழந்தையும், தன் தாயார் பாடும் தாலாட்டுப் பாடலின் இசையைக் கேட்டு உளம் மகிழ்ந்து, அழுகையை மறந்து தூங்குகிறதென்றால், தமிழிசையின் பெருமையைச் சொல்லவா வேண்டும்? வானொலிப் பெட்டியின் மூலம் இசைத்தட்டுப பாடலின் இன்னிசையைக் கேட்டு உள்ளத்தைப் பறிகொடுக்கிறோமல்லவா? மகுடிக்குழலின் இன்னிசையைச் செவிமடுத்து இன்புற்றுப் பாம்பும் தன் படத்தை விரித்துக் கொண்டு ஆடுகிறதல்லவா? வெறி கொண்ட யானையும் யாழிசையைக் கேட்டு அவ்வெறி நீங்கி அசைவற்று நிற்குமாம். அசுணமா என்னும் விலங்கு யாழிசையைக் கேட்டுத் தன்னையே மறந்துவிடுமாம். என்னே இசையின் பெருமை! ஏழிசைவல்லி, எட்டாம் வகுப்பு .இ இறுதிப் பயிற்சி செந்தமிழ்ச் சிறார்களே! படித்ததைப் பயிற்சி செய்வது மிகமிக இன்றியமையாதது. எவ்வளவு நன்கு படித்திருந் தாலும் பயிற்சி செய்யாவிட்டால், படித்தது, நன்கு மனத்தில் பதியாது; கேள்விக்குத் தக்க விடை எழுதவும் முடியாது. ஆகையால், கீழ்வரும் கேள்விகளுக்குத் தக்க விடைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். இவ்விறுதிப் பயிற்சியை நன்கு பயின்றால், தெளிவான இலக்கண அறிவைப் பெறலாம் என்பது திண்ணம். 1. எழுத்து 1. தமிழ் எழுத்துக்களின் தொகையும் வகையும் யாவை? 2. முதலெழுத்து, சார்பெழுத்து - பெயர்க் காரணம் என்ன? 3. சார்பெழுத்துக்கள் எவை? 4. அஃகஞ் சுருக்கேல் - இதில் உள்ள முதலெழுத்து, சார்பெழுத்துக்களை எடுத்துக்காட்டு. 5. குற்றியலுகரம் என்பது யாது? 6. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்? வகைக்கொன்று காட்டுக. 7. நெடிற்றொடர், உயிர்த்தொடர்க் குற்றுகரங்களின் வேறுபாடென்ன? 8. முற்றியலுகரம் என்பது யாது? குற்றியலுகரம், முற்றியலுகரம் -வேறுபாடென்ன? 9. வண்டு, எள்ளு, நாடு, கதவு - இன்ன உகரம் என்று கூறுக. 10. குற்றியலிகரம் என்பது யாது? மாடு, பந்து, மார்பு - குற்றியலிகரம் ஆக்குக. 11. மாத்திரை என்பது யாது? 12. கால் மாத்திரை, அரை மாத்திரை - யாவை? 13. இரண்டு மாத்திரை, ஒரு மாத்திரை, அரை மாத்திரை - ஒலிக்கும் எழுத்துக்கள் எவை? 14. பஃறுளி ஆற்றின் தெற்கு - இதிலுள்ள எழுத்துக்களின் மாத்திரை கூறுக. சொல் 1. சொல் என்பது யாது? 2. சொல் எத்தனை வகைப்படும்? வகைக்கொரு காட்டுத் தருக. 3. ஓரெழுத்தொரு மொழிக்கு நான்கு காட்டுத் தருக. 4. ஒரெழுத்தொரு மொழி ஒன்றே பெயர் வினையாக வருவதற்கு இரண்டு எடுத்துக்காட்டுத் தருக. 5. பகாப்பதம், பகுபதம் - இலக்கணம் என்ன? 6. பகுபதம் எத்தனை வகைப்படும்? 7. பகுபத உறுப்புக்கள் யாவை? 8. பகுதி எதனை உணர்த்தும்? பாலுணர்த்தும் பகுபத உறுப்பு எது? 9. சரியான பகுதியை அறிதல் எங்ஙனம்? 10. வினைமுற்று ஐம்பால் மூவிடத்தையும் உணர்த்தும், இதைத் தெரிவிக்கும் உறுப்பு எது? 11. ஆண்பால், பலர்பால், பலவின்பால், தன்மைப் பன்மை, முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள் எவை? 12. உண் - இப்பகுதியை ஐம்பால் மூவிட வினைமுற்றாக்குக. 13. காலம் எத்தனை வகைப்படும்? பகுபத உறுப்புக்களுள் காலங்காட்டுவது எது? 14. பகுபதத்தில் சாரியை? சந்தி வருமிடங்கள் எவை? 15. விகாரம் என்பது யாது? விகாரப்படும் பகுபத உறுப்புக்கள் எவை? 16. காரணவிடுகுறிப் பெயர் என்பது யாது? எடுத்துக்காட்டுத் தந்து விளக்கிக் காட்டுக. 17. பண்புப் பெயர் எத்தனை வகைப்படும்? 18. செந்தாமரை, உருண்டையுலகம், இன்சொல், நன்னூல், அரைப்படி - இன்ன பண்பென்று கூறுக. 19. தொழிற்பெயர் என்பது யாது? 20. தொழிற்பெயர் விகுதிகள் ஆறு குறிப்பிடுக. 21. நடந்தான், முயன்றான், கற்றான் - இவ்வினைமுற்றுக்களைத் தொழிற்பெயர் ஆக்குக. 22. கை, பாடு, தி, வி, வை - இத்தொழிற்பெயர் விகுதிகளைக் கொண்டு தொழிற் பெயர்கள் ஆக்குக. 23. வேற்றுமை என்பது யாது? அது எத்தனை வகைப்படும்? 24. இரண்டாம் மூன்றாம் வேற்றுமைகளின் உருபும் பொருளும் யாவை? 25. இல், ஒடு, கண் - இவை எவ்வேற்றுமை உருபுகள்? இவை உணர்த்தும் பொருள்கள் யாவை? 26. முருகன் - இப்பெயரை எட்டு வேற்றுமையும் ஆக்குக. 27. உருபு இல்லாத வேற்றுமைகள் எவை? 28. அன்னை, தாய், தந்தை, அண்'99ன், தலைவன் - இப்பெயர்கள் எவ்வாறு விளிக்கப்படும்? 29. கொண்டு, உடைய, இருந்து - இவை எந்தெந்த வேற்றுமைச் சொல்லுருபுகள்? 30. வினைச்சொல் என்பது யாது? 31. முற்றுவினை, எச்சவினை - எடுத்துக் காட்டுத் தருக. 32. எச்சவினையின் இலக்கணம் என்ன? 33. பெயரெச்சம்,வினையெச்சம் - பெயர்க் காரணம் என்ன? 34. சென்றான், நடந்தான், - பெயரெச்ச, வினையெச்சங்களாக்குக? 35. பெயரெச்சம் முக்காலத்திலும் வரும் - காட்டுத் தருக. 36. தெரிநிலைவினை, குறிப்புவினை - இலக்கணம் என்ன? 37. வேலன் - குறிப்புவினை ஆக்குக. 38. செயப்படுபொருள் குன்றிய வினை, குன்றாவினை - எடுத்துக்காட்டுடன் கூறுக. 39. உண்டான், நடந்தான், ஓடினாள், பாடினாள் செயப்படுபொருள் குன்றிய, குன்றா வினைகளைக் குறிப்பிடுக. 40. நெய்தான், தைத்தாள், சமைத்தாள், அறிந்தான் - செயப்படு பொருளைக் கண்டறிக. 41. காலம் எத்தனை வகைப்படும்? 42. வினைச்சொல்லில் காலங்காட்டும் உறுப்பு எது? 43. இறந்தகால, எதிர்கால இடைநிலைகளைக் குறிப்பிடுக. 44. ப், இன், கின்று - இவை எக்கால இடைநிலைகளெனக் குறிப்பிடுக. 45. உண்டான் - இது என்ன கால வினை? மற்றக் கால வினை ஆக்குக. 46. புணர்ச்சி என்பது யாது? அது எத்தனை வகைப்படும்? 47. கழுகு பறக்கிறது, ஒடிப்பிடித்தான் - இன்ன புணர்ச்சி எனக் கூறுக. 48. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? ஒவ்வொரு காட்டுத் தருக. 49. மரவேர், கற்சட்டி, வாழைப்பழம் - தோன்றல், திரிதல் - கெடுதல் விகாரங்களைக் குறிப்பிடுக. 50. சோறு + பானை, நிலம் + வரி, இரும்பு + பெட்டி - புணர்த்தெழுதுக.  பாகம் - 6 வள்ளுவர் தமிழ் இலக்கணம் - 6 நூல் அறிமுகம் அளபெடை : அளபு எடை = அளவு மிகுதியாவது. உயிர் எழுத்துகளில் நெடிலும், ஒற்றெழுத்துகளும் சில இடங்களில் தமக்குரிய அளவில் மிகுந்து ஒலிக்கும். அதற்கு அளபெடை என்பது பெயர். உயிரெழுத்து ஒலிமிகுதல், உயிரளபெடை. ஒற்றெழுத்து ஒலிமிகுதல், ஒற்றளபெடை. வினையால் அணையும் பெயர்: ஒருவருக்கு உரிய அல்லது ஒன்றற்குரிய பெயர் ஒன்றாக இருக்கும். அப்பெயரைச் சொல்லாமல் அவர் செய்யும் செயலையே அவர்க்குப் பெயராக்கிக் கூறுவது உண்டு. அவர் செய்யும் செயலால் குறிக்கப்படும் அப்பெயர் வினையால் அணையும் பெயர் எனப்படும். வழக்கு: மக்கள் வழங்கும் மொழிவழக்குகள் வழக்கு எனப்படும். அவை இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இருவகைப்படும். முன்னது மொழி முறை தவறாத இயல்பினது. பின்னது மொழி முறைக்கு மாறாயினும் தக்கோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முன்னதும் மூவகை; பின்னதும் மூவகை. இரட்டைக்கிளவி: கிளவி = சொல். இரட்டைச் சொல் சில மக்கள் வழக்கில் உண்டு. பட பட, சலசல - இச்சொல்லைப் பிரித்தால் பொருள் தராது. ஆதலால் பிரித்துச் சொல்லக் கூடாது. அடுக்குத் தொடர்: சில சொற்கள் அடுக்கி வரும். அச்சொற்களைப் பிரித்தாலும் பொருள் தரும். அடுக்கி வருதல் இரண்டு, மூன்று எனவரும். யாப்பு: யாப்பு என்பது கட்டு; செய்யுள். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, இனம் என்பவற்றைக் கொண்டது யாப்பு. பாட்டு, தூக்கு என்பதும் அது. யாப்பிலக்கணம் எனத் தனிநூல் உண்டு. அணி : செய்யுளின் பொருளை விளக்கவும், சுவை உண்டாக்கவும் புலவர்களால் கொள்ளப்படும் அழகிய அமைப்பு அணி. உவமை, உருவகம் முதலாக அது பலவகைப்படும். அணி இலக்கண நூல் எனத் தனிநூல் உண்டு. வாக்கியம் = சொற்றொடர்: பொருள் வகையால் வாக்கியம் அல்லது சொற்றொடர் பல வகைப்படும். அவ்வாக்கியத்தை அவ்வாறே அன்றி மாற்றியும் அமைத்து அப்பொருளைக் கூறலாம். இத்தகையவற்றை விளக்கமாக அறிந்து கொள்ள இந்நூல் உதவும். இன்ப அன்புடன், இரா. இளங்குமரன். 1. இலக்கணம் ஒரு வயலுக்கு வரப்புப் போன்றது ஒரு மொழிக்கு இலக்கணம். வயலின் அமைப்பே வரப்பு. மொழியின் அமைப்பே இலக்கணம். 'வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்' என, வரப்பினால் வயல் சிறப்புறுவது போல, இலக்கணத்தால் மொழி சிறப்புறும். வரப்பமைவில்லாத வயல்போல, இலக்கண அறிவோடு கூடாத மொழியறிவு சிறப்புறாது. இவ்வுண்மையை மறத்தல் கூடாது. எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம். பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் எனத் தமிழிலக்கணம் ஐந்து வகைப்படும். எழுத்துக்களின் அமைப்பு எழுத்திலக்கணம் எனப்படும். அவ்வெழுத்துக்களால் ஆகிய சொற்களின் அமைப்பு சொல்லிலக்கணம் எனப்படும். அச்சொற்கள் உணர்த்தும் பொருள்களின் அமைப்பு பொருளிலக்கணம் எனப்படும். சொற்களால் பொருளை அமைத்துச் செய்யும் செய்யுட்களின் அமைப்பு யாப்பிலக்கணம் எனப்படும். யாப்பு-செய்யுள். செய்யுளில் சொல்லும் பொருளும் அமைவாங்கு அமைந்த சொல்லழகும் பொருளழகும் அணி யிலக்கணம் எனப்படும். அணி - அழகு. 1. எழுத்து ஒலி வடிவம், வரி வடிவம் எனத் தமிழ் எழுத்துக்கள் இருவகை வடிவங்களை உடையனவாகும். 'அ' என ஒலிப்பது (உச்சரிப்பது) ஒலி வடிவம் எனப்படும். 'அ' என எழுதுவது வரி வடிவம் எனப்படும். இவ்விருவகை வடிவங்களும் ஒரு மொழியின் இரு கண்போன்றனவாகும். 1. எழுத்தின் இலக்கணம் தமிழ் மொழி இச்சொற்றொடரில் இரண்டு சொற்கள் இருக்கின்றன. தமிழ் என்னும் சொல்லில் 'த,மி,ழ்' என்னும் மூன்று ஒலிகளும், மொழி என்னும் சொல்லில் 'மொ, ழி' என்னும் இரண்டு ஒலிகளும் உள்ளன. இவ்வொலிகளே இச்சொற்கள் தோன்றுவதற்கு முதற்காரணமாக உள்ளன. இவ்வொலிகள் ஒவ்வொன்றும் ஒவ்வோரெழுத்தாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வொலிகளே அவ்வெழுத்துக்களின் ஒலி வடிவங்களாகும். நாம் ஏதாவது பேச முயன்றால், உள்ளே நின்றெழுகின்ற அணுக்கூட்டம் வெவ்வேறு எழுத்தொலிகளாய் வெளிப்படுகிறது. எனவே, அவ்வெழுத்தொலி மொழிக்கு முதற்காரணமாகவும், அணுத்திரளின் காரியமாகவும் உள்ளது. அணுத்திரள் - அணுக்கூட்டம். மொழிக்கு முதற்காரணம் எழுத்தும், எழுத்திற்கு முதற்காரணம் அணுக்கூட்டமும் ஆகும் என்பதாம். அதாவது, நாம் பேச முயன்றால், உள்ளே நின்றெழுகின்ற அணுக்களால் எழுத்தொலிகளும், அவ்வெழுத்துக்களால் மொழிகளும் உண்டாகின்றன என்பதாம். மொழி - சொல். அவ்வெழுத்து முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகைபடும். மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே. (நன்னூல் சூத்திரம்) இச்சூத்திரத்தை நன்கு மனப்பாடம் செய்து கொள்க, இனி வரும் சூத்திரங்களையும் அவ்வாறே மனப்பாடம் செய்க. 2. முதல் சார்பு எழுத்துக்கள் முதலெழுத்து - முதலில் தோன்றும் எழுத்து. சார்பெழுத்து - அம்முதலெழுத்து ஒன்றோடொன்று சார்ந்து தோன்றும் எழுத்து. அஃதாவது, அம்முதலெழுத்துக்களின் சார்பினால் உண்டாகும் எழுத்து சார்பெழுத்து எனப்படும். 1. முதலெழுத்து 'அ, ஆ' முதலிய உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் 'க், ங், முதலிய மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் ஆகிய முப்பதும் முதலெழுத்து எனப்படும். 'அ, ஆ, முதலிய உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் நம் உயிர்போல மெய்யெழுத்துக்களுடன் கூடி அவற்றை இயக்குதலான், உயிர் எனப்பட்டன.' 'க், ங், முதலிய மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் நம் உடம்புபோல உயிரெழுத்துக்களுடன் கூடி, அவற்றால் இயக்கப்படுதலின் மெய் எனப்பட்டன. உயிரெழுத்து - ஆவி எனவும், மெய்யெழுத்து உடல், உடம்பு, ஒற்று, புள்ளி எனவும் வழங்கும். 2. சார்பெழுத்து 1. உயிர்மெய் 6. குற்றியலிகரம் 2. ஆய்தம் 7. ஐகாரக் குறுக்கம் 3. உயிரளபெடை 8. ஒளகாரக் குறுக்கம் 4. ஒற்றளபெடை 9. மகரக்குறுக்கம் 5. குற்றியலுகரம் 10. ஆய்தக்குறுக்கம் எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். இவற்றுள் உயிர்மெய்யெழுத்திற்கும் ஆய்த வெழுத்திற்கும் வரி வடிவம் உண்டு. மற்றவைக்கு அவற்றின் முதலெழுத்துக்களின் வடிவே வடிவாகும். உயிர்மெய் 'க, கா' முதலிய உயிர்மெய் எழுத்துக்கள், 'க் + அ = க' என, உயிரும் மெய்யும் கூடி உண்டாவதால் இப்பெயர் பெற்றன. பதினெட்டு மெய்யுடனும் பன்னிரண்டு உயிரும் தனித்தனி கூடுவதால் உயிர்மெய்யெழுத்துக்கள் (18 x 12 =216) இரு நூற்றுப் பதினாறாகும். ஆய்தம் அடுப்புக் கற்கள் போல் மூன்று புள்ளி (ஃ) வடிவம் உடையது ஆய்தவெழுத்து. இது குற்றெழுத்திற்குப் பின்னும், வல்லின உயிர்மெய்க்கு முன்னும் சொல்லின் இடையில் வரும். இது முற்றாய்தம் எனப்படும். காட்டு: எஃகு, கஃசு, அஃது, அஃறிணை. குறிப்பு: உயிரளபெடையும், ஒற்றளபெடையும் பின்னர்க் கூறப்படும். குற்றியலுகரம் தனி நெடிலை யடுத்தும், குறிலிணை, குறினெடில் ஆகிய உயிரையடுத்தும். ஆய்தத்தையும் வலி மெலி இடையின மெய்களை அடுத்தும் சொல்லின் ஈற்றில் வரும் வல்லின உகரம் (கு, சு, டு, து, பு, று) தன்னளவில் குறுகி ஒலிக்கும். இது குற்றியலுகரம் எனப்படும். குறு + இயல் + உகரம். இயல் - மாத்திரை. ஓசை, குறுகிய ஓசையையுடைய உகரம் என்பது. காட்டு : ஆடு - நெடிற்றொடர்க் குற்றியலுகரம் மாடு வரகு - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் வயிறு எஃகு - ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் பத்து - வன்றொடர்க் குற்றியலுகரம் பஞ்சு - மென்றொடர்க் குற்றியலுகரம் மார்பு - இடைத் தொடர்க் குற்றியலுகரம் குற்றியலிகரம் நாடு + யாது = நாடியாது. நாடு என்னும் சொல்லின் ஈற்றிலுள்ள குற்றியலுகரத்தின் முன், ‘யாது’ என யகரம் வர, அவ்வுகரம் (டு) இகரமாகத் (டி) திரிந்தது. இவ்வாறு திரிந்த இகரம் தன்னளவில் குறைந்து ஒலித்தலான் குற்றியலிகரம் எனப்படும். இவ்வாறே ‘மியா’ என்னும் முன்னிலையசைச் சொல்லின் இகரமும் (ம் + இ = மி) குறுகி ஒலிக்கும். காட்டு: ஆடு +யாது = ஆடியாது வரகு + யாது = வரகியாது. எஃகு + யாது = எஃகியாது பாக்கு + யாது = பாக்கியாது கேண்மியா, சென்மியா எனக் காண்க. ஐகாரக் குறுக்கம் ‘ஐ’ என்னும் நெட்டெழுத்தானது தனி எழுத்தாக உச்சரிக்கும் போது தன்னளவில் குறுகாது. ஆனால் சொல்லின் முதல் இடை கடை என்னும் மூன்றிடத்தும் தன்னளவில் குறுகி ஒலிக்கும். காட்டு : ஐந்து, தலைவர், கடலை உச்சரித்துப் பாருங்கள். ஒளகாரக் குறுக்கம் ஒளகாரமும் ஐகாரம் போன்றே எழுத்தாக உச்சரிக்கும்போது குறுகாது; சொல்லின் முதலில் வரும் போது தன்னளவில் குறுகி ஒலிக்கும். ஒளகாரம் சொல்லின் இடையிலும் கடையிலும் வாராது. காட்டு: ஒளவை , வௌவால் மகரக் குறுக்கம் போலும் - போல்ம் - போன்ம் மருளும் - மருள்ம் - மருண்ம் வாழும் வகை இவ்வாறு லகர ளகரங்கள் திரிந்தான னகர ணகரங்களின் (ன், ண்) பின்னும், வகரத்திற்கு முன்னும் வரும் மகரம் (ம்) தன்னளவில் குறுகி ஒலிக்கும். ஆய்தக் குறுக்கம் கல் + தீது = கஃறீது முள் + தீது = முஃடீது எனத் தகரம் வர, லகர ளகரந் திரிந்தான ஆய்தம் தன்னளவில் குறுகும். குறிப்பு: இச்சார்பெழுத்துக்களின் ஒலி அளவுகளை அறிவதற்கு, எழுத்துக்களின் இயல்பான மாத்திரை யினையும், குறுகியும் நீண்டும் ஒலிக்கும் மாத்திரையினையும் தெரிந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும். நெடிலுக்கு மாத்திரை - இரண்டு குறிலுக்கு மாத்திரை - ஒன்று மெய்க்கு மாத்திரை - அரை உயிரளபெடை மாத்திரை - மூன்று உயிர்மெய் நெடில் மாத்திரை - இரண்டு உயிர்மெய்க்குறில் ஒற்றளபெடை மாத்திரை ஒன்று ஐகாரக் குறுக்கம் ஒளகாரக் குறுக்கம் ஆய்தம் குற்றியலுகரம் குற்றியலிகரம் மாத்திரை அரை மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம் மாத்திரை கால் 3. ணமாத்திரை எழுத்துக்களை உச்சரிக்கும் கால அளவிற்கு மாத்திரை என்பது பெயர். மக்களின் இயல்பாக எழுகின்ற கண்ணிமைப் பொழுதும், கைந்நொடிப்பொழுதும் ஒருமாத்திரை நேரமாகும். கைந்நொடி மாத்திரையின் பகுதியை, உன்னல் காலே, உறுத்தல் அரையே, முறுக்கல் முக்கால். விடுத்தல் ஒன்றே. என அறிக. 3. உயிரளபெடை “ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்” (குறள்) “உழா அர்” என்பதில், “ழா” என்னும் உயிர்மெய் நெட்டெழுத்துக்குப் பின் ‘அ’ என்னும் உயிர்க்குறில் வந்துள்ளது. இவ்வாறு வருவது அளபெடை எனப்படும். உயிரளபெடை, ஒற்றளபெடை என அளபெடை இரண்டு வகைப்படும். ‘உழாஅர்’ - உயிரளபெடை உயிரளபெடையாவது, பாட்டில் ஓசை குன்றினால், சொல்லுக்கு முதலிலும் இடையிலும் கடையிலும் உள்ள நெட்டெழுத்துக்கள், அவ்வோசையை நிறைத்தற் பொருட்டுத் தமக்குரிய அளவில் நீண்டொலிக்கும். அவ்வாறு நீண் டொலித்தல் உயிரளபெடை எனப்படும். நெட்டெழுத்திற்குப் பின் அதனதன் இனக் குற்றெழுத்தை எழுதுதல் அளபெடையின் அடையாளம் ஆகும். குன்றுதல் - குறைதல். அளபு - மாத்திரை. அளபு எடை - மாத்திரையை எடுத்துக்கொள்ளுதல். அஃதாவது, இரண்டு மாத்திரையுள்ள நெட்டெழுத்து மூன்று மாத்திரையாக ஒலித்தல். நெடிலுக்கு இரண்டு மாத்திரை. குறிலுக்கு ஒரு மாத்திரை. அவ்விரண்டெழுத்தும் சேர்ந்தான அளபெடைக்கு மூன்று மாத்திரை. நெடில் - உயிர் நெடிலும் உயிர்மெய் நெடிலுமாம். இவ்வாறு நெடில் அளபெடுத்தல் - இசைநிறை அளபெடை எனப்படும். இசை - ஓசை ‘ஓஒதல் வேண்டும்’ ‘ஏரின் உழாஅர்’ ‘நல்ல படாஅ பறை’ ‘ஓஒதல்’ எனச் சொல்லின் முதலிலும் ‘உழாஅர்’ எனச் சொல்லின் இடையிலும், ‘படாஅ’ எனச் சொல்லின் கடையிலும் நெடில் அளபெடுத்தமை காண்க. அளபெடையிலன்றிச் சொல்லின் இடையிலும் கடையிலும் உயிர் தனித்து வாராது; மெய்யோடு கூடி உயிர்மெய்யாகவே வரும். இசைகெடின் மொழிமுதல் இடை கடை நிலைநெடில் அளபெழும் அவற்றவற் றினக் குறில் குறியே. (ந.சூ) இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை இவ்வாறு நெடில் அளபெடுத்தலே யன்றி. ‘எடுப்பதூஉம் எல்லாம் மழை’ ‘மரீஇப் பின்னைப் பிரிவு’ எடுப்பதும் - எடுப்பதும் - எடுப்பதூஉம் எனக் குறில் நெடிலாகி அளபெடுப்பதும், மருவி - மரீ - மரீஇ எனச் சொல் திரிந்து நெடிலாகி அளபெடுப்பதும் உண்டு. குறில் நெடிலாகி அளபெடுத்தல் இன்னிசை அளபெடை எனப்படும். ஒரு மாத்திரையுள்ள குறில் மூன்று மாத்திரை ஒலித்தல் இனிய ஓசை உடைமையால், இஃது இப்பெயர் பெற்றது. சொல் திரிந்து நெடிலாகி அளபெடுத்தல் சொல்லிசையளபெடை எனப்படும். ‘மருவி’ என்பதினும், ‘மரீஇ’ என்பது இனிய ஓசையுடையமையால் இஃது இப்பெயர் பெற்றது. 1. இசைநிறையளபெடை 2. இன்னிசையளபெடை 3. சொல்லிசையளபெடை என உயிரளபெடை மூன்று வகைப்படும். 4. ஒற்றளபெடை எஃஃ கிலங்கிய கையர் ‘எஃஃகு’ என்பது ஒற்றளபெடை. ஒற்றளபெடை யாவது, பாட்டில் ஓசை குன்றினால், ங் ஞ் ண் ந் ம் ன் என்னும் மெல்லொற்றுக்கள் ஆறும், வ் ய் ல் ள் என்னும் இடையொற்றுக்கள் நான்கும், ஆய்தம் ஒன்றும் ஆகிய பதினொன்றும், குற்றொற்றாகவும் குறிலிணையொற்றாகவும் சொல்லுக்குஇடையிலும் கடையிலும் அளபெடுக்கும். அவ்வொற்றுக்கள் இரட்டித்தலே அளபெடையின் அடையாளம் ஆகும். ஒற்றெழுத்துக்கள் சொல்லுக்கு முதலில் வாரா. ஆய்தமும் ஒற்றெனவே படும். ஆய்தம் சொல்லின் கடையில் வாராது. காட்டு: 1. ‘எஃஃ கிலங்கிய கையர்’ 2. ‘பொன்ன் பொலியும்’ 3. ‘இலங்ங்கு வெண்பிறை’ 4. ‘அரண்ண் கடந்த’ ‘எஃஃகு’ எனச் சொல்லுக்கு இடையில் ஆய்தம் குற்றொற்றாகவும், ‘பொன்ன்’ எனச் சொல்லுக்குக் கடையில் னகரம் குற்றொற்றாகவும் ‘இலங்ங்கு’ எனச் சொல்லுக்கு இடையில் ஙகரம் குறிலிணையொற்றாகவும், ‘அரண்ண்’ எனச் சொல்லுக்குக் கடையில் ணகரம் குறிலிணையொற்றாகவும் அளபெடுத்துள்ளமை காண்க. ஙஞண நமன வயலள ஆய்தம் அளபாங் குறிலிணை குறிற்கீ ழிடைகடை மிகலே யவற்றின் குறியாம் வேறே (ந.சூ) குறிப்பு: குற்றொற்று என்பது கல் என்பது போல் தனிக்குறிலுடன் சேர்ந்து வரும் ஒற்றாகும். குறிலிணையொற்று என்பது கடல் என்பது போல இணைந்து வரும் இரு குறில் களுடன் சேர்ந்து வரும் ஒற்றாகும். பயிற்சி 1. இலக்கணத்தின் சிறப்பு யாது? 2. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? 3. ஒலி வடிவம், வரி வடிவம் என்பன யாவை? 4. தமிழெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? 5. முதலெழுத்துக்கள் யாவை? 6. உயிரெழுத்து, மெய்யெழுத்து - பெயர்க்காரணம் என்ன? 7. சார்பெழுத்து எத்தனை வகைப்படும்? 8. உயிர் மெய் என்பது யாது? உயிர்மெய் எழுத்து 216 ஆவது எங்ஙனம்? 9. ஆய்தம் எங்கு வரும்? ஆய்தத்தின் வடிவம் யாது? 10. குற்றியலுகரம் என்பது யாது? குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்? 11. நெடிற்றொடர், உயிர்த்தொடர்க் குற்றுகரங்களின் வேறுபாடென்ன? 12. குற்றியலிகரம் என்பது யாது? 13. ஐகார ஒளகாரங்கள் எங்கே தன்னளவில் குறுகா? ஐகாரக் குறுக்கத்திற்கும் ஒளகாரக் குறுக்கத்திற்கும் உள்ள வேறுபாடென்ன? 14. மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம் - விளக்கந் தருக. 15. முற்றாய்தத்திற்கும், ஆய்தக் குறுக்கத்திற்கும் உள்ள வேறுபாடென்ன? 16. அளபெடை என்பது யாது? அஃது எத்தனை வகைப் படும்? 17. உயிரளபெடை எத்தனை வகைப்படும்? இன்னிசை யளபெடை, சொல்லிசையளபெடை - விளக்கந் தருக - 18. ஒற்றளபெடையின் அளபெடுக்கும் ஒற்றுக்கள் எவை? 19. மாத்திரை என்பது யாது? 20. இரண்டு , ஒன்று, அரை, கால் மாத்திரை உள்ள எழுத்துக் களைக் குறிப்பிடுக? 2. சொல் எழுத்து தனித்து நின்றோ. இரண்டு முதலாகத் தொடர்ந்து நின்றோ ஒரு பொருளைத் தருமாயின் அது சொல் எனப்படும். பெயர்ச் சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என அச்சொல் நான்கு வகைப்படும். 1. பெயர்ச்சொல் பொருளைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப் படும். அப்பெயர்ச் சொற்கள் இடுகுறிப்பெயர், காரணப் பெயர் என இருவகைப்பட்டு, எட்டு வேற்றுமையுஞ் சார்தற்கு இடமாகி, இரு திணை ஐம்பால் மூவிடங்களில் ஒன்றனை ஏற்பனவும் பலவற்றினை ஏற்பனவும் ஆகி, வினையாலணையும் பெயர் அல்லாதன காலங் காட்டாதனவாகிவிடும். அஃதாவது, இடுகுறிப் பெயரும், காரணப் பெயரும் எட்டு வேற்றுமைகளையும் ஏற்பனவாகி, இரு திணை ஐம்பால் மூவிடங்களில் ஒன்றற்குரியனவாகவும், பலவற்றிற்குப் பொதுவாகவும் வரும் என்பதாகும். மரம், பனை - இடுகுறிப் பெயர் பறவை, நாற்காலி - காரணப்பெயர். இடுகுறிப் பெயராவது யாதொரு காரணமும் இன்றித் தொன்றுதொட்டு வழங்கி வரும் பெயர் ஆகும். மரம், பனை என்னும் பெயர்கள் யாதொரு காரணமுமின்றித் தொன்று தொட்டு அப்பொருள்களுக்கு வழங்கி வருகின்றன. எனவே, இவை இடுகுறிப்பெயர்கள் எனப்பட்டன. இட்டகுறி - இடுகுறி. காரணங்கருதிப் பொருள்களுக்கு இட்டபெயர்கள் காரணப் பெயர்கள் எனப்படும். பறப்பது பறவை. பறக்கின்ற காரணத்தால் பறவை எனப்பெயர் பெற்றது. நான்கு கால்களையுடையது நாற்காலி. எனவே, இவை காரணப் பெயர்களாயின. மரத்தை வெட்டினான் (ஐ) பறவைக்கு இரை போடு (கு) பொன்னனது வீடு (அது) என மரம், பறவை, பொன்னன் என்னும் பெயர்கள் வேற்றுமையுரு பேற்றன. அவன், அரசன் - ஆண்பால் அவள், அரசி - பெண்பால் உயர்திணை அவர், மக்கள் - பலர் பால் மாடு, மலை - ஒன்றன் பால் மாடுகள், மலைகள் - பலவின்பால் அஃறிணை தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும். இருதிணை ஐம்பால் பெயர்கள் படர்க்கை யிடத்திற்கே உரியன. அவன் - உயர் திணை ஆண்பால் ஒருமைப் படர்க்கைப் பெயர். மரம் - அஃறிணை ஒன்றன் பால் ஒருமைப் படர்க்கைப் பெயர். நடந்தவனை - இறந்தகாலம் நடக்கின்றவனை - நிகழ்காலம் நடப்பவனை - எதிர்காலம் நடந்தவன் முதலிய வினையாலணையும் பெயர்கள் வேற்றுமை யுருபேற்றதோடு முக்காலமுங் காட்டின. இடுகுறி காரண மரபோ டாக்கந் தொடர்ந்து தொழிலல காலந் தோற்றா வேற்றுமைக் கிடனாத் திணைபா லிடத்தொன் றேற்பவும் பொதுவும் ஆவன பெயரே - (ந.சூ.) இன்னும் இப்பெயர்ச் சொல், மரம், பெட்டி - பொருட் பெயர் நாடு, கடல் - இடப்பெயர் ஆண்டு, பசல் - காலப்பெயர் கை, வேர் - சினைப்பெயர் நன்மை, கருமை - பண்புப் பெயர் ஆடல், கல்வி - தொழிற்பெயர் என அறுவகைப்படுதலுங் கொள்க. 2. ஆகுபெயர் ஊர் சிரிக்கிறது ஊர் என்னும் இடத்தின் பெயர் அவ்வூரில் உள்ள மக்களை உணர்த்துகிறது. சிரிப்பவர் மக்களேயாகலான், இங்கு ஊர் என்னும் இடப்பெயர் அங்கு வாழும் மக்களுக்கு ஆனது. இவ்வாறு ஒன்றன் பெயர் அதனோடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்குத் தொன்றுதொட்டு ஆகிவருவது ஆகு பெயர் எனப்படும். 1. பொருளாகுபெயர் 8. சொல்லாகு பெயர் 2. இடவாகு பெயர் 9. தானியாகு பெயர் 3. காலவாகு பெயர் 10. கருவியாகு பெயர் 4. சினையாகு பெயர் 11. காரியவாகு பெயர் 5. பண்பாகுபெயர் 12. கருத்தாவாகு பெயர் 6. தொழிலாகு பெயர் 13. உவமையாகு பெயர் 7. அளவையாகு பெயர் என, அவ்வாகு பெயர் பல வகைப்படும். 1. பொருளாகு பெயர் மல்லிகை சூடினாள் இங்கு மல்லிகை என்னும் கொடியின் பெயர் அக் கொடியை உணர்த்தாது அதன் பூவை உணர்த்துகிறது. சூடுவது பூவேயாகும். கொடி முதற் பொருள். பூ - சினைப் பொருள். இவ்வாறு ஒரு முதற்பொருளின் பெயர் அதன் சினைப்பொருளை உணர்த்துவது பொருளாகு பெயர் எனப்படும். இது முதலாகு பெயர் எனவும் வழங்கும். 2. இடவாகு பெயர் சென்னை சிரிக்கிறது சென்னை என்னும் இடத்தின் பெயர், அவ்விடத்தில் வாழும் மக்களை உணர்த்துவதால், இஃது இடவாகு பெயர் எனப்படும். அஃதாவது, இடத்தின் பெயர் அவ்விடத்திலுள்ள பொருள்களை உணர்த்துவது இடவாகு பெயர். 3. காலவாகு பெயர் சித்திரை சிரித்தான் சித்திரை என்னும் காலத்தின் பெயர். அக்காலத்தில் பிறந்த மனிதனுக்கு ஆகி வந்தது. இவ்வாறு காலத்தின் பெயர் அக்காலத்திற் பிறந்த ஒருவனுக்கு ஆகி வந்தமையால் இது காலவாகு பெயர் எனப்படும். 4. சினையாகு பெயர் வெற்றிலை நட்டான் வெற்றிலை என்பது வெற்றிலைக் கொடியின் சினை (உறுப்பு). இங்கு வெற்றிலை என்னும் சினையின் பெயர் அதன் முதலாகிய கொடியை உணர்த்துவதால், இது சினையாகு பெயர் எனப்படும். வெற்றிலைக் கொடியைத்தான் நடுவர். முதலாகு பெயர் சினையையும். சினையாகு பெயர் முதலையும் உணர்த்தும். 5. பண்பாகு பெயர் நீலஞ் சூடினாள் நீலம் என்னும் நிறப் பெயர் அந் நிறத்தையுடைய பூவை உணர்த்துவதால், இது பண்பாகு பெயர் எனப்படும். பண்பு - குணம். நிறம், சுவை, வடிவு முதலியன பண்பு எனப்படும். நீலம் - நீல நிறம். 6. தொழிலாகு பெயர் பொங்கல் உண்டாள் பொங்குதல் - பொங்கல். பொங்கல் என்னும் தொழிற்பெயர் பொங்குதல் தொழிலையுடைய சோற்றை உணர்த்துவதால், இது தொழிலாகு பெயர் எனப்படும். 7. அளவையாகு பெயர் எண்ணலளவை, எடுத்தலளவை, முகத்தலளவை, நீட்டலளவை என அளவை நான்கு வகைப்படும். எடுத்தல் - நிறுத்தல். ஒன்று, கால், அரை - எண்ணலளவைப் பெயர் மணங்கு, கிலோ - எடுத்தலளவைப் பெயர் படி, லிட்டர் - முகத்தலளவைப் பெயர் முழம், மீட்டர் - நீட்டலளவைப் பெயர் ஆளுக்கு ஆறு கொடு. கிலோ என்ன விலை? லிட்டர் எழுபது காசு. நான்கு மீட்டர் கிழி. இங்கு ஆறு என்பது ஆறு பொருளையும், கிலோ என்பது கிலோ எடையுள்ள பொருளையும், லிட்டர் என்பது லிட்டர் அளவுள்ள பொருளையும், மீட்டர் என்பது மிட்டர் நீளமுள்ள துணியையும் குறித்தலால் ஆறு முதலியன முறையே எண்ணலளவை யாகுபெயர், எடுத்தலளவை யாகு பெயர், முகத்தலளவையாகுபெயர், நீட்டலளவை யாகுபெயர் ஆதல் காண்க. 8. சொல்லாகு பெயர் குறளுக்கு உரை எழுதினார். உரை என்பது சொல்லைக் குறிக்கும். சொல்லைக் குறிக்கும் அப்பெயர், இங்குச் சொல்லை உணர்த்தாமல் அச்சொல்லால் உணர்த்தப்படும் பொருளை உணர்த்து வதால், இது சொல்லாகு பெயர் எனப்படும். 9. தானியாகு பெயர் கழல் பணிந்தான். கழல் என்பது ஒரு வகைக் காலணி. தானம் - இடம். தானி - இடத்திலுள்ள பொருள். கால் - தானம். காலில் அணியும் பொருளாகிய கழல் - தானி. பணிவது காலை யேயாகலான், கழல் என்னும் தானியின் பெயர் தானமாகிய காலை யுணர்த்துவதால், இது தானியாகு பெயர். 10. கருவியாகு பெயர் குறள் படித்தான். குறள் என்பது ஒருவகை வெண்பாவின் பெயர். திருக்குறள் என்னும் நூல் அக்குறள் வெண்பாவினால் செய்யப்பட்டது. திருக்குறள் செய்ய அது கருவியானது. எனவே, குறள் என்னும் கருவியின் பெயர் அக்கருவியா லான நூலை உணர்த்துவதால், இது கருவியாகு பெயர். 11. காரியவாகு பெயர் புறப்பொருள் படிக்கிறேன். புறப்பொருள் என்னும் காரியத்தின் பெயர் அதனை உணர்தற்குக் கருவியான நூலை உணர்த்தினமையால், இது காரியாவாகுபெயர். கருவி - காரணம். கருவியாகு பெயர் காரியத்தையும், காரியவாகு பெயர் கருவி அல்லது காரணத்தையும் உணர்த்தும். 12. கருத்தாவாகு பெயர். பேராசிரியர் படிக்கிறேன். பேராசிரியர் என்னும் பெயர் அவரால் செய்யப்பட்ட உரையை உணர்த்துவதால், இது கருத்தாவாகு பெயர். கருத்தாவின் பெயர் அவரால் செய்யப்பட்ட உரையாகிய காரியத்தை உணர்த்துகிறது. 13. உவமையாகு பெயர் காளை வந்தான் காளை போன்றவனைக் காளை என்று கூறப்படுகிறது. காளை என்பது உவமைப் பெயர். காளை -உவமை. அவன் - பொருள். காளை என்னும் உவமைப் பெயர் உவமேயமாகிய பொருளை உணர்த்துவதால், இஃது உவமையாகு பெயர். பொருள் முத லாறோ டளவைசொல் தானி கருவி காரியங் கருத்தன் ஆதியுள் ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன்முறை யுரைப்பன ஆகுபெயரே. - (‘ந.சூ’) பயிற்சி 1. சொல் என்பது யாது? 2. தமிழ்ச் சொல் எத்தனை வகைப்படும்? 3. பெயர்ச்சொல்லின் இலக்கணம் என்ன? 4. இடுகுறிப் பெயர், காரணப் பெயர் என்பன யாவை? 5. காலங் காட்டும் பெயர் எது? 6. பெயர்ச் சொல் எதற்கிடனாய் வரும்? 7. ஆகுபெயரின் இலக்கணம் என்ன? 8. ஊர் பெரிது, ஊர் பழிக்கிறது. - இரு ஊர்கட்கும் உள்ள வேறுபாடென்ன? 9. காரியவாகு பெயர், கருவியாகு பெயர், கருத்தாவாகு பெயர் - இம்மூன்றிற்குமுள்ள தொடர்பென்ன? 10. இடவாகு பெயர், தானியாகு பெயர் - இவ்விரண்டற்குமுள்ள தொடர்பென்ன? 11. கீழ்வரும் தொடர்களிலுள்ள ஆகு -பெயர்களை எடுத்துக்காட்டுக: 1. திருக்குறளை உலகமே போற்றுகிறது. 2. மீனுயர்த்த தென்னவன் வீரக்கழல் பாடி. 3. ஆத்திசூடி, கொன்றை வேந்தன். 4. உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம், எண்பது கோடி நினைந் தெண்ணுவன. 5. பாவை பாடினாள்; பசுமயில் ஆடினாள். 6. ஆதிரை கணவன் அறிவு மேம்பட்டான். 3. தொழிற் பெயர் விகுதிகள் ‘ஆடல் ’ என்பது தொழிற் பெயர். இது பெயர்ச் சொல்லின் பிரிவாகிய பொருள் முதல் ஆறு பெயர்களுள் ஒன்று என்பதை முன்பு கண்டோம். ஆடல் - ஆடுதல். ஆடல் என்பது ஆடுதல் என்னும் தொழிலைக் குறிப்பதால், தொழிற்பெயர் எனப்பட்டது. ஆடு + அல் = ஆடல். அல் - விகுதி. 1. விகுதி பெற்ற தொழிற்பெயர் 2. முதனிலைத் தொழிற்பெயர் 3. முதனிலைத் திரிந்த தொழிற் பெயர். எனத் தொழிற் பெயர் மூன்று வகைப்படும். 1. விகுதி பெற்ற தொழிற்பெயர் நட, வா முதலிய வினைப் பகுதிகளுடன் தொழிற் பெயர்க்குரிய விகுதிகள் சேர்ந்து வருவது விகுதி பெற்ற தொழிற் பெயர் எனப்படும். தல் வை வி மதி அல் கு இ அரவு அம் பு உள் ஆனை ஐ உ காடு மை கை தி பாடு து சி அணம் என்பவை தொழிற் பெயர் விகுதிகளாகும். சொல் பகுதி விகுதி படித்தல் படி தல் பாடல் பாடு அல் ஆட்டம் ஆடு அம் கொலை கொல் ஐ செய்கை செய் கை போர்வை போர் வை போக்கு போ கு படிப்பு படி பு வரவு வா உ மறதி மற தி மகிழ்ச்சி மகிழ் சி கல்வி கல் வி வெகுளி வெகுள் இ செய்யுள் செய் உள் சாக்காடு சா காடு கூப்பாடு கூ பாடு கட்டணம் கட்டு அணம் ஏற்றுமதி ஏற்று மதி தோற்றரவு தோற்று அரவு வாரானை வா ஆனை நடவாமை நடவா மை வாழ்த்து வாழ் து கல்வி, கற்றல், கற்கை, கற்பு எனக் ‘கல்’ என்னும் ஒரு பகுதியுடன் வி, தல், கை, பு எனப் பல விகுதிகள் வந்தன. இவ்வாறே பிற பகுதிகளுடனும் ஏற்புடை விகுதிகளைச் சேர்த்தறிக. 2. முதனிலைத் தொழிற் பெயர் முதனிலை எனின், வினைப் பகுதி என்பது பொருள். விடு, கொள், இடு, பெறு - என்னும் வினைப் பகுதிகள் தொழிற் பெயர் விகுதி பெறாமலேயே விடுதல், கொள்ளல், இடுதல், பெறுதல் எனப் பொருள்படின், முதனிலைத் தொழிற் பெயர் எனப்படும். 3. முதனிலைத் திரிந்த தொழிற் பெயர் அறிவறிந்த மக்கட்பேறு பெறு என்னும் முதனிலை ‘பேறு’ எனத் திரிந்து வந்து, ‘பெறுதல்’ என்னும் பொருளை உணர்த்துகிறது. இது முதனிலை திரிந்து வந்ததால், முதனிலைத் திரிந்த தொழிற் பெயர் எனப்படும். காட்டு: முதனிலை திரிந்தது கொள் கோள் விடு வீடு கெடு கேடு உறு ஊறு 4. பண்புப் பெயர் விகுதிகள் பண்பைக் குறித்து வரும் பெயர் பண்புப் பெயர் எனப்படும். இது பொருள் முதல் அறுவகைப் பெயர்களுள் ஒன்றென்பதை முன்பு கண்டோம். செம்மை, கருமை - நிறப்பண்பு காரம், புளிப்பு - சுவைப் பண்பு வட்டம், உருண்டை - வடிவப்பண்பு ஒன்று, அரை கிலோ, மணங்கு அளவுப்பண்பு கலம், லிட்டர் முழம், மீட்டர் அன்பு, நன்மை - தன்மைப்பண்பு என அப்பண்புப் பெயர் ஐந்து வகைப்படும். அன்பு, அழகு, காவி என்பன விகுதி பெறாத பண்புப் பெயர்கள். நன்மை, நன்றி முதலியன விகுதி பெற்ற பண்புப் பெயர்கள். காட்டு : நன்மை - மை நன்று - று தொல்லை - ஐ நலம் - அம் மாட்சி - சி நன்னர் - நர் மாண்பு - பு திட்பம் - பம் மழவு - உ தீது - து நன்கு - கு பருமன் - மன் நன்றி - றி நெடில் - இல் மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், நர், பம், து, மன், இல் - இவை பண்புப் பெயர் விகுதிகள். 5. வினையாலணையும் பெயர் முருகன் கால் இடறி விழுந்தான் விழுந்தானைத் தூக்கி விட்டேன். இவ்விரு தொடரிலும் உள்ள ‘விழுந்தான்’ என்னும் வினைச்சொல்லைக் கவனியுங்கள். முதல் தொடரிலுள்ள ‘விழுந்தான்’ என்பது முருகனுடைய செயலைக் குறிக்கும். முருகன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாக வந்துள்ள வினை முற்று. இரண்டாவது தொடரிலுள்ள ‘விழுந்தானை’ என்பது முருகனைக் குறிக்கும் பெயராக வந்துள்ளது. இவ்வாறு வினைமுற்று வினை செய்பவனைக் குறிப்பது வினையாலணையும் பெயர் எனப்படும். இது, வினைக்குரிய காலங்காட்டுதலையும் பெயர்க்குரிய வேற்றுமையுரு பேற்றலையும் பெற்று வரும். வந்தவனை - இறந்தகாலம் வருகின்றவனை - நிகழ்காலம் வருபவனை - எதிர்காலம் வந்தவன் + ஐ-என, இரண்டன் உருபேற்று வந்துள்ளமை காண்க. 6. தொழிற்பெயர்க்கும் வினையாலணையும் பெயர்க்கும் உள்ள வேறுபாடுகள். தொழிற் பெயர் வினையாலணையும் பெயர் 1. தொழிலுக்குப் தொழில் செய்பவனுக்குப் பெயராய் வரும் பெயராய் வரும். 2. படர்க்கையிடத்திற்கு மூவிடங்கட்கும் மட்டுமே உரியது. உரியது. 3. காலங்காட்டாது முக்காலத்திலும் வரும். பயிற்சி 1. தொழிற் பெயர் என்பது யாது? அது எத்தனை வகைப்படும்? 2. தொழிற் பெயர் விகுதிகள் எவை? 3. நட, ஒடு, உண், செல் - இப்பகுதிகள் ஒவ்வொன்றுடனும் மும்மூன்று தொழிற்பெயர் விகுதிகளைச் சேர்த்தெழுக. 4. தொழிற்பெயரின் மூன்று வகைகள் யாவை? 5. விடு, படு - முதனிலைத் திரிந்த தொழிற்பெயராக்குக. 6. பண்பு எத்தனை வகைப்படும்? 7. பண்புப் பெயர் விகுதிகள் யாவை? 8. வினையாலணையும் பெயரின் இலக்கணம் என்ன? 9. தொழிற்பெயர்க்கும் வினையாலணையும் பெயர்க்கும் உள்ள வேறுபாடு என்ன? 7. வேற்றுமை முருகன் வந்தான் முருகனைக் கண்டேன் முருகனால் எழுதப்பட்டது. ‘முருகன் வந்தான்’ என்பதில், முருகன் என்னும் பெயர்ச்சொல் எழுவாய். ‘முருகனைக் கண்டேன்’ என்பதில், முருகன் என்பது செயப்படுபொருள். ‘முருகனால் எழுதப்பட்டது’ என்பதில், முருகன் என்பது கருத்தா, ஐ, ஆல் என்பன முருகன் என்னும் எழுவாயை முறையே செயப்படுபொருளாகவும், கருத்தாவாகவும் வேறுபடுத்தின. இவ்வாறு ஒரு பெயர்ச்சொல் வேறுபடுவது வேற்றுமை எனப்படும். தாம் சார்ந்த பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் ஐ, ஆல் முதலியன வேற்றுமை உருபு எனப்படும். வேற்றுமைக்கு உருபும் பொருளும் உண்டு. தன்னையேற்ற பெயர்ப் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை எனப்படும். அவ்வேற்றுமை எட்டு வகைப்படும். முதல் வேற்றுமை திரிபில்லாத பெயர்ச்சொல் எழுவாயாக வருவதே முதல் வேற்றுமை எனப்படும். இதன் பொருள் கருத்தாப் பொருள். இது வினையையும் பெயரையும் வினாவையும் பயனிலையாகக் கொண்டு முடியும். காட்டு: முருகன் வந்தான் முருகன் - எழுவாய் வந்தான் - பயனிலை முருகன் வந்தான் - வினைப்பயனிலை அவன் முருகன் - பெயர்ப்பயனிலை அவன் யார்? - வினாப்பயனிலை முதல் வேற்றுமைக்குத் தனியாக உருபு இல்லை. எனினும், அஃது ஆனவன், ஆனவள், ஆனவர், ஆனது, ஆனவை; என்பவன், என்பவள், என்பவர், என்பது, என்பன - என்பவற்றைச் சொல்லுருபுகளாகப் பெற்றுவரும். உருபுக்குப் பதிலாக வரும் சொல், சொல்லுருபு எனப்படும். காட்டு: முருகனானவன் வந்தான். வள்ளியானவள் வந்தாள். அரசரென்பவர் வந்தார். பிறவும் இவ்வாறே. இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமையின் உருபு ‘ஐ’ என்பதாம். இது தன்னையேற்ற பெயர்ப் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்தும். அச்செயப்படுபொருள்-ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை முதலியனவாகும். காட்டு: வீட்டைக் கட்டினான் - ஆக்கல் வீட்டை இடித்தான் - அழித்தல் வீட்டை அடைந்தான் - அடைதல் வீட்டை இழந்தான் - நீத்தல் புலியைப் போன்றான் - ஒத்தல் செல்வத்தை உடையன் - உடைமை மூன்றாம் வேற்றுமை இதன் உருபுகள் ஆல், ஆன், ஓடு, ஒடு என்பன. இவை தம்மையேற்ற பெயர்ப் பொருளைக் கருவி, கருத்தா, உடனிகழ்ச்சிப் பொருளாக வேறுபடுத்தும். இவற்றுள் ஆல், ஆன் உருபுகள் கருவி, கருத்தாப் பொருள்களிலும், ஓடு, ஒடு உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளிலும் வரும். கருவி - முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும். முதற்கருவி காரியமாக மாறி அஃதாகவே இருப்பது. துணைக்கருவி காரியம் செயல்படும் அளவு துணை யாவது. கருவி, காரணம் ஒரு பொருட்சொற்கள். காரியம் - செயப்படுபொருள். காட்டு: நாரால் கயிறு திரித்தான் கையால் கயிறு திரித்தான் கருவிப்பொருள் நார் - முதற்கருவி, கை - துணைக் கருவி. கருத்தாவும் இயற்றுதற்கருத்தா, ஏவுதற்கருத்தா என இருவகைப்படும். இயற்றுதற்கருத்தா தானே ஒரு தொழிலைச் செய்வது. ஏவுதற்கருத்தா தான் செய்யாமல் பிறரை ஏவி ஒரு செயலைச் செய்வது. காட்டு: தொழிலாளரால் கட்டப்பட்ட அணை கருத்தாப் அரசினால் கட்டப்பட்ட அணை பொருள். தொழிலாளர் - இயற்றுதற் கருத்தா. அரசு ஏவுதற்கருத்தா. ஓர் எழுவாயின் செயலுடன் மற்றொன்றனது செயலும் உடனிகழ்வது உடனிகழ்ச்சிப் பொருள் எனப்படும். காட்டு: தந்தையோடு மைந்தன் சென்றான். குதிரையொடு குட்டி ஓடினது. கருவிப் பொருளில் ‘கொண்டு’ என்னும் சொல்லும், உடனிகழ்ச்சிப் பொருளில் ‘உடன்’ என்னும் சொல்லும் சொல்லுருபுகளாக வரும். காட்டு: வாள் கொண்டு வெட்டினான் புறாவுடன் குஞ்சு பறந்தது. நான்காம் வேற்றுமை நான்காம் வேற்றுமை உருபு ‘கு’ என்பதாம். இது தன்னை ஏற்ற பெயர்ப் பொருளைக் கோடற் பொருளாக வேறுபடுத்தும். கோடல் கொள்ளுதல். இது கொடை, பகை, நேர்ச்சி, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பலவகைப் படும். நேர்ச்சி - நட்பு. காட்டு: ஏழைக்குப் பொருள் கொடுத்தான் - கொடை பாம்புக்குப் பகை கருடன் - பகை ஒளவைக்கு நண்பன் அதியமான் - நேர்ச்சி அரசர்க் குரித்து அருங்கலம் - தகவு காப்புக்குப் பொன் - அதுவாதல் கூலிக்கு வேலை செய்தான் - பொருட்டு சாத்தற்கு மகன் கொற்றன் - முறை ஈரோட்டின் வடக்கு பவானி - எல்லை ‘கு’வுக்குப் பதில், பொருட்டு, நிமித்தம் என்பன சொல்லுருபுகளாக வரும். காட்டு: கூலியின் பொருட்டு வேலை செய்தான். வேலையின் நிமித்தம் அயலூர் சென்றான். ‘கு’ வுடன் ‘ஆக’ என்பது சேர்ந்தும் வரும். காட்டு: கூலிக்காக வேலை செய்தான். ஐந்தாம் வேற்றுமை ஐந்தாம் வேற்றுமையின் உருபுகள் இல், இன் என்பன, இவை தம்மை ஏற்ற பெயர்ப் பொருளை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுப் பொருள்களாக வேறுபடுத்தும். காட்டு : மலையின் வீழ் அருவி - நீங்கல் பாலின் வெளிது கொக்கு - ஒப்பு பவானியின் வடக்கு மேட்டூர் - எல்லை அறிவிற் சிறந்தவர் ஒளவையார் - ஏது பாலின் வெளிது - பாலைப் போல வெளிது என்பது. நீங்கல் பொருளில் இல், இன்னின் மேல், நின்று இருந்து என்பன சொல்லுருபுகளாக வரும். காட்டு: மரத்தினின்று வீழ்ந்தான். மரத்திலிருந்து வீழ்ந்தான். ஆறாம் வேற்றுமை ஆறாம் வேற்றுமை உருபுகள் அது, ஆது, அ என்பன. இவை தம்மை ஏற்ற பெயர்ப் பொருளைக் கிழமைப் பொருளாக வேறுபடுத்தும். கிழமை - உரிமை. வருமொழி ஒருமையாக இருப்பின் ‘அது’ வும், ‘ஆது’ வும் பன்மையாக இருப்பின் ‘அ’ வும் உருபாக வரும். ஒருமை, பன்மை இரண்டற்கும் உடைய என்பது சொல்லுருபாக வரும். தற்கிழமை, பிறிதின் கிழமை என அக்கிழமை இருவகைப்படும். பண்புத் தற்கிழமை உறுப்புத் தற்கிழமை ஒன்றன் கூட்டத் தற்கிழமை பலவின் ஈட்டத் தற்கிழமை திரிபின் ஆக்கத் தற்கிழமை எனத் தற்கிழமை ஐந்து வகைப்படும். பொருட் பிறிதின் கிழமை இடப் பிறிதின் கிழமை காலப் பிறிதின் கிழமை எனப் பிறிதின் கிழமை மூன்று வகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் பொருளாதி அறுவகைப் பெயர்களுள் முதன் மூன்றும் பிறிதின் கிழமையிலும், அடுத்த மூன்றும் தற் கிழமையிலும் வரும். தொழில் பண்பில் அடங்கும். காட்டு: தற்கிழமை பயிரினது பசுமை - குணம் மடையினது வரவு - தொழில் பண்புத் தற்கிழமை சாத்தனது கை மரத்தினது கிளை உறுப்புத் தற்கிழமை மக்களது தொகுதி நெல்லினது குப்பை ஒன்றன் கூட்டத் தற்கிழமை படைகளது தொகுதி விலங்கினது கூட்டம் பலவின் ஈட்டத் தற்கிழமை நெல்லினது பொரி திரிபின் ஆக்கத் (ஒன்று மஞ்சளது பொடி திரிந்தொன்றாய்) தற்கிழமை பிறிதின் கிழமை முருகனது மாடு முருகனது பெட்டி பொருட் பிறிதின் கிழமை முருகனது வீடு எங்களது நாடு இடப் பிறிதின் கிழமை சாத்தனது நாள் முருகனது ஆண்டு காலப் பிறிதின் கிழமை எனாது கை - ஆதுருபு என கைகள் - அகரவுருபு முருகனுடைய கை உடைய எனும் சொல்லுருபு முருகனுடைய கைகள் ஏழாம் வேற்றுமை ஏழாம் வேற்றுமை உருபுகள் ‘கண்’ முதலியனவாம். இவை தம்மையேற்ற பெயர்ப் பொருளைத் தற்கிழமை, பிறிதின் கிழமை ஆகிய இரண்டிலும் இடப்பொருளாக வேறுபடுத்தும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறினையும் இடமாகக் கொண்டு வரும். காட்டு: மணியின் கண் ஒளி - தற். பனையின்கண் அன்றில் - பிறி. பொருளிட மாயிற்று ஊரின்கண் இல்லம் - தற். வானின்கண் பறவை - பிறி. இடமிட மாயிற்று நாளின்கண் நாழிகை - தற் வேனிற்கண் பாதிரிமலரும்- பிறி. காலமிட மாயிற்று. கையின் கண் விரல் - தற். கையின்கண் காப்பு - பிறி. சினையிடமாயிற்று. சிவப்பின் கண் அழகு - தற் இளமையின் கண் கல்வி - பிறி. குணமிடமாயிற்று ஆடற்கண் அபிநயம் - தற். தொழில் ஆடற்கண் பாட்டு - பிறி. இடமாயிற்று. கண் முதலிய உருபுகள் கண்கால் கடைஇடை தலைவாய் திசைவயின் முன்சார் வலம் இடம் மேல்கீழ் புடைமுதல் பின்பாடு அளைதேம் உழைவழி உழிஉளி உள்அகம் புறம்இல் இடப்பொருள் உருபே. (ந.சூ.) கண் முதல் இல் ஈறாகிய இருபத்தெட்டும் ஏழாம் வேற்றுமை உருபுகளாகும். இச்சூத்திரத்தை மனப்பாடம் செய்து வையுங்கள், எட்டாம் வேற்றுமை எட்டாம் வேற்றுமைக்குத் தனியே உருபில்லை. படர்க்கை யிடத்தாரை முன்னிலை யிடத்தாராக்கி அழைப்பது இதன் பொருளாகும். அதாவது விளிப் பொருளாகும். விளியேற்கும் போது ஈற்றெழுத்துத் திரிந்தும், ஈற்றெழுத்துக் குன்றியும், ஈற்றில்எழுத்துமிகுந்தும், இயல்பாயும், ஈற்றயலெழுத்துத் திரிந்தும் வரும். காட்டு: அன்னைய் - அன்னாய் தந்தை - தந்தாய் ஈறுதிரிதல் நங்கை - நங்காய் அண்ணன் - அண்ண நண்பன் - நண்ப ஈறுகுன்றல் வீரன் - வீர தாய் - தாயே மகன் - மகனே ஈறுமிகுதல் தம்பி - தம்பி தங்கை - தங்கை இயல்பாதல் மக்கள் - மக்காள் வீரர்கள் - வீரர்காள் ஈற்றயல் திரிதல் இன்னும் ஈறுகெட்டு ஈற்றயல் திரிந்தும், ஈறு கெட்டு ஈற்றயல் திரிந்து ஏ, ஓ மிகுந்தும் அளபெடுத்தும் விளியேற்கும். காட்டு : அண்ணன் - அண்ணா ஈறுகெட்டு முருகன் - முருகா ஈற்றயல்திரிந்தது. வாயிலோன் - வாயிலோயே ஈறுகெட்டு ஈற்றயல் ஐயன் - ஐயாவோ திரிந்து ஏ,ஓ மிக்கது. சிறார் - சிறாஅர் சேய் - சேஎய் அளபெடுத்தது அண்மை விளி, சேய்மை விளி என விளித்தல் இரு வகைப்படும். இயல்பும், ஈற்றெழுத்துக் குன்றலும் அண்மை விளியிலும், ஏனையவை அண்மை விளி, சேய்மை விளி இரண்டிலும் வரும். பயிற்சி 1. வேற்றுமை என்பது யாது? அஃது எத்தனை வகைப் படும்? 2. முதல் வேற்றுமையின் இலக்கணம் யாது? பயனிலை என்பது யாது? 3. இண்டாம் வேற்றுமையின் உருபும் பொருளும் யாவை? 4. மூன்றாம் வேற்றுமையின் உருபுகள் யாவை? அவை எவ்வெப்பொருளில் வரும்? 5. கோடற் பொருள் என்பதன் வகை யாவை? 6. பொருள் முதல் அறுவகைப் பெயர்கள் எவ்வெவ் வேற்றுமைகளில் எவ்வாறு வரும்? 7. தற்கிழமை, பிறிதின் கிழமை எவ்வெவ் வேற்றுமைகளில் வரும்? 8. ஏழாம் வேற்றுமை உருபுகள் யாவை? 9. விளி வேற்றுமை என்பது யாது? சொற்கள் எவ்வாறு விளியேற்கும்? 10. நண்பன், பாவை, தோழி, புலவர், மயில், நாரை - இச்சொற்கள் எவ்வாறு விளியேற்கும்? 8. வினைமுற்று ஒருபொருளைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். ஒரு பொருளின் தொழிலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். வினை - தொழில். வினைச்சொல் வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ காலங்காட்டும். முற்றுவினை, எச்ச வினை என வினைச்சொல் இரண்டு வகைப்படும். பொருள் முற்றி நிற்கும் வினை முற்றுவினையாகும். இது வினைமுற்று எனவும் கூறப்படும். தெரிநிலை வினைமுற்று. குறிப்பு வினைமுற்று என அவ் வினைமுற்று இரண்டு வகைப்படும். செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையுந் தெரிவித்துக் காலத்தை வெளிப்படையாகக் காட்டி நிற்கும் வினைமுற்று தெரிநிலை வினைமுற்று எனப்படும். பொருளாதியறுவகைப் பெயரையும் அடிப்படை யாகக் கொண்டு முன் சொல்லப்பட்ட செய்பவன் முதலாகிய ஆறனுள் கருத்தா ஒன்றை மட்டும் விளக்கிக் காலத்தைக் குறிப்பாகக் காட்டி நிற்கும் வினைமுற்று குறிப்பு வினை முற்று எனப்படும். செய்பொருள் - செயப்படுபொருள். தெரிநிலை வினைமுற்று காட்டு: தைத்தான்: அவன் - செய்பவன் ஊசி நூல் - கருவி கடை - நிலம் தைத்தல் - செயல் தைத்தான் - இறந்த காலம் சட்டை - செயப்படுபொருள் தைத்தான் - இறந்தகாலம் தைக்கிறான் - நிகழ்காலம் தைப்பான் - எதிர்காலம் இவ்வினை முற்றுக்கள் பொருளாதியறுவகைப் பெயரையும் பயனிலையாக ஏற்கும்; மற்றொன்றையும் ஏலா. தெரிநிலை வினைமுற்று காட்டு: வளர்ந்தது மரம் - பொருட்பெயர் கொண்டது. குளிர்ந்தது நிலம் - இடப்பெயர் கொண்டது. வந்தது கார் - காலப்பெயர் கொண்டது. குவிந்தது கை - சினைப்பெயர் கொண்டது. இயைந்தது நன்மை - குணப்பெயர் கொண்டது. ஒழிந்தது செலவு - தொழிற்பெயர் கொண்டது. குறிப்பு வினைமுற்று நல்லவன் அவன் - பொருட் பெயர் கொண்டது. நல்லது நிலம் - இடப்பெயர் கொண்டது. நல்லது கார் - காலப்பெயர் கொண்டது. நல்லது கை - சினைப்பெயர் கொண்டது. நல்லது இளமை - குணப்பெயர் கொண்டது. நல்லது பிறப்பு - தொழிற்பெயர் கொண்டது. பொதுவியல் பாறையுந் தோன்றிப் பொருட்பெயர் முதலறு பெயரல தேற்பில முதற்றே. (ந.சூ) 9. பெயரெச்சம், வினையெச்சம் முற்றுவினை, எச்சவினை, என வினைச்சொல் இரு வகைப்படும். எச்சவினையும் பெயரெச்சம், வினையெச்சம் என இரு வகைப்படும். பரணன், பழுத்த பழத்தைப் பறித்துத் தின்றான். பழுத்த பழும் பறித்துத் தின்றான். இவற்றுள், பழுத்த என்பது பழம் என்னும் பெயரைக் கொண்டு முடிவதால், பெயரெச்சம் எனப்படும். பெயர் எஞ்சி நிற்பது பெயரெச்சம். பறித்து என்பது தின்றான் என்னும் வினையைக் கொண்டு முடிவதால் வினையெச்சம் எனப்படும். வினை எஞ்சி நிற்பது வினையெச்சம். 1. பெயரெச்சம் செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் வாய்பாடுகளிலே, முக்காலத்தையும் செயலையும் வெளிப்படையாகக் காட்டிப் பால்காட்டும் விகுதியோடு, செய்பவன் முதலிய ஆறும் எஞ்ச நிற்பது பெயரெச்சம் எனப்படும். தெரிநிலை வினைப் பெயரெச்சம், குறிப்பு வினைப் பெயரெச்சம் என இப்பெயரெச்சம் இரண்டு வகைப் படும். இவை உடன் பாட்டிலும் எதிர்மறையிலும் வரும். தெரிநிலைவினைப் பெயரெச்சம் காட்டு: இற. நிகழ் எதிர். உண்ட உண்கின்ற உண்ணும் சாத்தன் -சாத்தன் - செய்பவன் -கலம் - கருவி -இடம் - நிலம் -உண்ணுதல் - செயல் -நாள் -காலம் -சோறு - செயப்படுபொருள் இவை உடன்பாடு. உண்ணாத - எதிர்மறை. குறிப்பு வினைப் பெயரெச்சம் நல்ல பையன் - உடன்பாடு. இல்லாத பொருள் - எதிர்மறை. 2. வினையெச்சம் தொழிலையும் காலத்தையும் உணர்த்திப் பால் காட்டும் விகுதியோடு, வினை எஞ்ச நிற்பது வினையெச்சம் ஆகும். இஃதும் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்; உடன்பாடு, எதிர்மறை இரண்டிலும் வரும். விணையெச்சங்கள் - வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம், தொழிற்பெயர், வினையாலணையும் பெயர் ஆகியவற்றைக் கொண்டு முடியும். தெரிநிலை வினையெச்சம் காட்டு: முடிக்குஞ் சொல் உண்டு வந்தான் - வினைமுற்று உண்டு வந்த - பெயரெச்சம் உண்டு வந்து - வினையெச்சம் உண்டு வருதல் - தொழிற்பெயர் உண்டு வந்தவன் - வினையாலணையும் பெயர் உண்ணாது வந்தான் - எதிர்மறை உணவின்றி வருந்தினான் இன்றி - குறிப்பு வினையெச்சம் 10. தெரிநிலைவினை செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் தருவது தெரிநிலைவினை எனப்படும். செய்பவன் - எழுவாய். நிலம் - செயல் நிகழும் இடம். கருவி - காரணம். அது முதற்காரணம், துணைக்காரணம் என இரு வகைப்படும். காட்டு: நெய்தான் - நெய்வோன் - செய்பவன் - நூல் - முதற்காரணம் - தறி - துணைக்காரணம் - நெய்யுமிடம் - நிலம் - நெய்தல் - செயல் - இறந்தகாலம் - காலம் - துணி - செய்பொருள் செய்பவன் கருவி நிலஞ்செயல் காலம் செய்பொருள் ஆறும் தருவது வினையே - ‘ந. சூ.’ அவன் ஓடினான். ‘ஓடினான்’ என்னும் வினையில் செயப்படுபொருள் இல்லை. இது செயப் படுபொருள் குன்றிய வினை எனப்படும். எழுவாய் தானே இயங்கும் வினையில் செயப்படுபொருள் இராது. 11. குறிப்பு வினை பொருளாதியாறனடியாகப் பிறந்த பெயர்ச்சொற்கள் ஓர் எழுவாய்க்குப் பயனிலையாக வரின் குறிப்புவினை எனப்படும். இவை முற்கூறிய செய்பவன் முதலிய ஆறனுள் செய்பவனை மட்டும் உணர்த்தும். இது காலத்தைக் குறிப்பாகக் காட்டும். காட்டு: 1. பொன் -பொருட்பெயர். பொன்னன் - பொருளடியாகப் பிறந்த பெயர். 2. அகம் - இடப்பெயர் அகத்தன் - இடவடியாகப் பிறந்த பெயர். 3. ஆதிரை - காலப்பெயர் ஆதிரையான் - காலவடியாகப் பிறந்த பெயர். 4. பல் - சினைப்பெயர். பல்லன் - சினையடியாகப் பிறந்த பெயர். 5. கருமை - குணப்பெயர். குணம் - பண்பு. கரியன் - குணவடியாகப் பிறந்த பெயர். 6. நடை - தொழிற்பெயர். நடையன் - தொழிலடியாகப் பிறந்த பெயர். பொன்னன் வந்தான். பொன்னன் - எழுவாய். அவன் பொன்னன். பொன்னன் - பயனிலை. அவன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் வந்த ‘பொன்னன்’ என்பதே குறிப்புவினை ஆகும் என்பதை அறியவும். பொன்னையுடையவனாய் இருந்தான், இருக்கின்றான், இருப்பான் எனப் பொன்னன் என்பது முக்காலத்தையும் குறிப்பாக உணர்த்துதலை அறிக. பொருள்முத லாறினுந் தோற்றிமுன் ஆறனுள் வினைமுதல் மாத்திரை விளக்கல்வினைக் குறிப்பே -(ந.சூ) (வினைமுதல் - எழுவாய், செய்பவன். வினைக் குறிப்பு - குறிப்பு வினை). 12. செய்யும் என்னும் வினைமுற்று காட்டு: செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று உயர்தினைப் பலர்பாற் படர்க்கையிலும், தன்மையிலும், முன்னிலையிலும் வராது. எனவே, படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன் பால், பலவின் பால் ஆகிய நான்கு பால்களிலும் வரும் என்பதாம். காட்டு : அவன் உண்ணும் - ஆண்பால் அவள் உண்ணும் - பெண்பால் குயில் பாடும் - ஒன்றன் பால் மயில்கள் ஆடும் - பலவின் பால் ஆகும் - ஆம் போகும் - போம் என, இடையிலுள்ள உயிர் மெய் கெட்டும் செய்யுமென் முற்று வரும். பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற் சொல்லா தாகுஞ் செய்யுமென் முற்றே. (ந.சூ.) பயிற்சி 1. வினைமுற்றின் இலக்கணம் யாது? வினைமுற்று எத்தனை வகைப்படும்? 2. தெரிநிலை வினைமுற்றின் இலக்கணம் யாது? 3. வினைமுற்றுக்கள் எவற்றைக் கொண்டு முடியும்? 4. எச்சம் என்பது யாது? அஃது எத்தனை வகைப்படும்? 5. பெயரெச்சத்தின் இலக்கணம் என்ன? 6. வினையெச்சம் எவற்றைக் கொண்டு முடியும்? 7. தெரிநிலைவினை என்பது யாது? 8. குறிப்புவினையின் இலக்கணம் யாது? 9. செய்யுமென் முற்று எவற்றுக்குப் பயனிலையாக வராது? 10. கீழ்வரும் தொடர்களிலுள்ள வினைமுற்று, பெயரெச்ச வினையெச்சங்களை எடுத்துக்காட்டுக: 1. அதியமான் தான் கண்ட கனிந்த நெல்லிக் கனியை அரிதின் முயன்று பறித்து வந்து ஒளவைக்குக் கொடுத்தான். 2. அரிய செயல்களை அயர்வின்றிச் செய்வோர் சிறந்த செல்வத்துடன் சிறப்புற்று வாழ்வர். 13. இடைச்சொல் பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லையும் அடுத்து வந்து, அவற்றின் பொருளை விளக்கும் சொல் இடைச்சொல் எனப்படும். ஐ முதலிய வேற்றுமை யுருபுகளும், விகுதி, இடைநிலை, சாரியை ஆகிய வினைச் சொல்லின் உறுப்புக்களும், அத்து, இற்று முதலிய சாரியைகளும், போல, புரைய முதலிய உவம உருபுகளும், தத்தம் பொருளை உணர்த்துவனவும், இசை நிறையாகவும் அசைநிலையாகவும் வருவனவும் வெளிப்படையானன்றி ஒலி, அச்சம் முதலியவற்றைக் குறிப்பாலுணர்த்துவனவும் ஆகிய எட்டு வகையினையுடையவாய்ப் பெயர் வினையின் அகத்துறுப்பாகவும் புறத்துறுப்பாகவும் ஒன்றும் பலவும் வரும் அவ்விடைச்சொல். காட்டு: 1. கொடியை - ஐ கொடியால் - ஆல் கொடிக்கு - கு - பெயரின் புறத்துறுப்பாய், ஐ, ஆல், கு என்னும் வேற்றுமையுருபிடைச் சொல் ஒன்று வந்தது. 2. குழையன் - குழை + அன் - பெயரின் அகத் துறுப்பாய் ‘அன்’ என்னும் விகுதியிடைச்சொல் ஒன்று வந்தது. உண்டனன் = உண் + ட் +அன் + அன் - வினையின் அகத்துறுப்பாய் விகுதி, இடைநிலை, சாரியை என இடைச் சொல் பல வந்தன. 3. மரத்தை வெட்டினான். மரம் + அத்து + ஐ - பெயரின் புறத்துறுப்பாய்ச் சாரியை (அத்து), வேற்றுமை யுருபு என இடைச்சொல் பல வந்தன. 4. புலிபோலப் பாய்ந்தான். பெயரின் புறத்துறுப்பாய்ப் போல என்னும் உவமவுருபிடைச் சொல் வந்தது. 5. அவருள் இவனே நல்லவன். ஒரு கூட்டத்தினின்றும் ‘இவனே’ என ஒருவனைப் பிரித்து நிற்றலால் ஏகாரம் பிரிநிலை. அவன் வெல்லினும் வெல்வான். இங்கே துணி யாமையை உணர்த்தலான் உம் - ஐயம். இவை தத்தம் பொருள் தருவன. 6. ஏயே இவளொருத்தி பேடி. ‘ஏஏ’ என்பது வேறு பொருள் இன்றிச் செய்யுளில் இசை நிறைத்து நிற்றலால் இசை நிறை. 7. காணிய வம்மினோ. இங்கே வேறு பொருள் இன்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால், (வம்மின் + ஓ) ஓ - அசைநிலை. 8. அம்மென, ஒல்லென - ஒலிக்குறிப்பு. துண்ணென, திடுக்கென - அச்சக் குறிப்பு. பொள்ளென, கதுமென - விரைவுக் குறிப்பு. வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள் தத்தம் பொருள இசைநிறை அசைநிலை குறிப்பெனெண் பகுதியிற் றனித்திய லின்றிப் பெயரினும் வினையினும் பின்முன் னோரிடத் தொன்றும் பலவும்வந் தொன்றுவ திடைச்சொல் (ந.சூ) 14. ஏ, ஓ, உம், கொல் என்னும் இடைச்சொற்கள் 1. ஏகார இடைச்சொல் பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசை நிறை என்னும் ஆறுபொருளில் வரும் ஏகார இடைச்சொல். காட்டு: 1. அவருள் இவனே நல்லவன் - இவன் + ஏ. ஏகாரம் - பிரிநிலை. 2. நீயே செய்தாய்? இங்கு நீயா செய்தாய் என வினாப் பொருளைத் தருதலால் ஏகாரம் - வினா. 3. நிலமே, நீரே, தீயே - நிலமும் நீரும் தீயும் என எண்ணுவதால் ஏகாரம் - எண். 4. முப்பது முதலே. முதல் + ஏ. ஏ - ஈற்றசை. 5. அவனே செய்தான். அவன்தான் செய்தான் எனத் தெளிவுபடுத்தி நிற்றலால் ஏகாரம் - தேற்றம். 6. ஏயே இவளொருத்தி பேடி. ஏஏ - பொருளின்று இசைநிறைத்தற்பொருட்டு வந்துள்ளமையைhல் இசை நிறை. பிரிநிலை வினாஎண் ஈற்றசை தேற்றம் இசைநிறை எனஆ றேகா ரம்மே. (ந.சூ) 2. ஓகார இடைச்சொல் ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை, கழிவு, அசைநிலை, பிரிநிலை என ஓகார இடைச்சொல் எட்டுப் பொருளில் வரும். காட்டு: 1. படிக்கவோ வந்தாய் - இங்கு, படித்தற்கன்று விளையாட வந்தாய், என ஒழிந்த பொருளைத் தருதலான் ஓகாரம் ஒழியிசை. 2. ஆணோ பெண்ணோ - இங்கு வினாப் பொருளைத் தருதலான் ஓகாரம் வினா. 3. ஓஓ பெரியன் - இங்கே ஒருவனது பெருமையின் உயர்வைச் சிறப்பித்தலான் உயர்வு சிறப்பு. ஓஓ கொடியன் - இங்கே ஒருவனது கொடுமையின் இழிவைச் சிறப்பித்தலான் இழிவு சிறப்பு. 4. அவனோ செய்தான் - அவன் செய்திலன் எனப் பொருள்படுதலான் எதிர்மறை. 5. பாடுவது பாவையோ - பாவை யல்லள் வேறொருத்தி எனத் தெரிவித்து நிற்றலால் தெரிநிலை. 6. ஓஓ கொடிதே புயல் -இங்கே கழிந்ததை எண்ணி இரங்குதலான் கழிவு. 7. காணிய வம்மினோ - இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசைநிலை. 8. இவனோ செய்தான் - இங்கே பலரினின்று ஒருவனைப் பிரித்தலான் பிரிநிலை. ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை கழிவசை நிலைபிரிப் பெனவெட் டோவே. (ந.சூ.) 3. உம் என்னும் இடைச்சொல் உம் என்னும் இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் என்னும் எட்டுப் பொருளில் வரும். காட்டு : 1. மறப்பினும் ஒத்துக் கொளலாகும் - இங்கே மறக்கலாகாது என்னும் பொருளைத் தருதலான் எதிர்மறை. 2. குறவரும் மருளும் குன்றம் - இங்கே குன்றின் உயர்வைச் சிறப்பித்தலான் உயர்வு சிறப்பு. நாயும் விரும்பா நாற்ற உணவு. இங்கே உணவின் இழிவைச் சிறப்பித்தலான் இழிவு சிறப்பு. 3. அவன் வெல்லினும் வெல்வான் - இங்கே துணியாமையை உணர்த்தலால் ஐயம். 4. காற்றும் வந்தது. - இங்கே மழை வந்ததன்றி என்னும் பொருளைத் தந்ததால் இறந்தது தழீஇய எச்சம்; இனி மழையும் வரும் என்னும் பொருளைத் தந்தால் எதிரது தழீஇய எச்சம். 5. எல்லாரும் வந்தார் - இங்கே எஞ்சாப் பொருளைத் தருதலால் முற்று. 6. இரவும் பகலும் - இங்கே எண்ணுதற்கண் வருதலால் எண். (அளவை). 7. ஆணுமன்று பெண்ணுமன்று - இங்கே இன்னதெனத் தெரிவித்து நிற்றலால் தெரிநிலை. 8. பால் மருந்தும் ஆயிற்று - இங்கே அதுவே உணவுமாயிற்று என்னும் பொருளைத் தருதலால் ஆக்கம். எதிர்மறை சிறப்பையம் எச்சமுற் றளவை தெரிநிலை ஆக்கமோ டும்மை யெட்டே (ந.சூ.) 4. கொல் என்னும் இடைச்சொல் கொல் என்னும் இடைச்சொல் ஐயம், அசைநிலை என்னும் இரு பொருளில் வரும். காட்டு: 1. அது பாம்பு கொல் கயிறுகொல் - இங்கே பாம்போ கயிறோ என்னும் ஐயப் பொருளைத் தருதலால் ஐயம். 2. கற்றதனா லாய பயனென்கொல் - இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசைநிலை. கொல்லே ஐயம் அசைநிலைக் கூற்றே. (ந.சூ) 15. உரிச்சொல். பலவகைப் பண்புகளையும் உணர்த்தும் பெயராகி, அவ்வாறு உணர்த்தும் போது பலசொல் ஒரு குணத்தை உணர்த்துவதும், ஒருசொல் பல குணங்களை உணர்த்துவதுமாய்ப் பெயர்ச் சொல்லையும் வினைச்சொல்லையும் விட்டு நீங்காது, செய்யுட்கு உரியனவாய் நிற்பவை உரிச்சொற்கள் எனப்படும். பெயரைச் சார்ந்துவரும் உரிச்சொல் - பெயருரிச் சொல் எனப்படும். வினையைச் சார்ந்துவரும் உரிச் சொல் - வினையுரிச் சொல் எனப்படும். உறுமீன் கடி நகர் பெயருரிச் சொல் நனி தின்றான் சாலப் பேசினான் வினையுரிச்சொல் பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்விணை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல் (ந.சூ) 16. ஒரு குணம் தழுவிய உரிச்சொல் சால, உறு, தவ, நனி, கூர், கழி என்னும் ஆறும் மிகுதி என்னும் ஒரே குணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் ஆகும். எனவே, இவை ஒரு குணம் தழுவிய உரிச்சொற்கள் எனப்படும். காட்டு : சாலச் சிறந்தது நனிதின்றான் உறு புகழ் கூர்முனைப் பகழி தவப் பெரியன் கழிபேருவகை சால உறுதவ நனிகூர் கழிமிகல். (ந.சூ.) 17. பலகுணம் தழுவிய உரிச்சொல் கடி என்னும் உரிச்சொல் காப்பு, கூர்மை, மணம், விளக்கம், அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஆர்த்தல், வரைவு, மன்றல், கரிப்பு என்னும் பல குணங்களை உணர்த்தும். கடிநகர் - காப்பு கடிகாற்று - மிகுதி கடிவாள் - கூர்மை கடிமணம் - புதுமை கடிமலர் - மணம் கடி முரசு - ஆர்த்தல் கடி மார்பன் - விளக்கம் கடி மது - வரைவு கடி மின்னல் - அச்சம் கடி மணம் - மன்றல் கடியரண் - சிறப்பு கடி மிளகு - கரிப்பு கடிவிடுதும் - விரைவு கடியென் கிளவி காப்பே கூர்மை விரையே விளக்கம் அச்சம் சிறப்பே விரைவே மிகுதி புதுமை ஆர்த்தல் வரைவே மன்றல் கரிப்பி னாகும். (ந.சூ.) விரை - மணம். வரைவு - நீக்குதல். கரிப்பு - காரம் பயிற்சி 1. இடைச்சொல்லின் இலக்கணம் யாது? 2. இடைச்சொற்கள் எத்தனை வகைப்படும்? 3. ஏகார இடைச்சொல் என்னென்ன பொருளில் வரும்? 4. இசைநிறை, அசைநிலை, - வேறுபாடென்ன? 5. ஏகார, ஓகார உம்மை இடைச்சொற்களுக்குப் பொதுவாய் வரும் பொருள்கள் யாவை? 6. உரிச்சொல் என்பது யாது? 7. ஒருகுணம், பலகுணம் தழுவல் - விளக்கந் தருக. 8. கீழ்வரும் தொடர்களில் உள்ள இடை, உரிச்சொற்களை எடுத்துக் காட்டுக: 1. கடிமுரசார்ப்பப் படைநனி சென்றது. 2. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். 3. மந்தியும் அறியா மரம்பயில் மாமலை. 4. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ. 5. முருகனும் வந்தான். 3. பொது பெயர், வினை, இடை, உரி என்னும் நான்கு சொற்களுக்கும் பொதுவான இலக்கணங் கூறும் பகுதி. 1. வழக்கு சொற்களை வழங்கும் முறை வழக்கு எனப்படும். அஃது இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இருவகைப்படும். 1. இயல்பு வழக்கு இலக்கண முடையது, இலக்கணப் போலி, மரூஉ என இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். நிலம், நீர், தீ, காற்று, மரம், மலர், இன்சொல்- இவை இலக்கண விதிப்படி அமைந்திருத்தலின், இலக்கணம் உடையவை எனப்படும். இல்முன் - முன்றில் நகர்ப்புறம் - புறநகர் கண்மீ - மீகண் முன்றில் முதலிய சொற்கள் இலக்கண முறைக்கு மாறுபட்டு, முன்பின்னாக மாறி வந்துள்ளமையால், இவை இலக்கணப் போலி என வழங்கப்படும். தஞ்சாவூர் - தஞ்சை கோயமுத்தூர் - கோவை உறையூர் - உறந்தை திருநெல்வேலி - நெல்லை இவ்வாறு சொற்கள் உருவந்திரிந்து வழங்குவது மரூஉ எனப்படும். இலக்கணப் போலியும், மரூஉவும் இலக்கண முறைக்கு மாறுபட்டன வேனும், தொன்று தொட்டுச் சான்றோர்களால் கையாளப்பட்டு வருவதால் இயல்பு வழக்கெனப்பட்டன. 2. தகுதி வழக்கு ஒரு பொருளுக்கு இயல்பாக உரிய சொல்லால் அப்பொருளைச் சொல்லுதல் தகுதியன்றென மற்றொரு சொல்லால் சொல்லுதலால் இது தகுதி வழக்கு எனப்பட்டது. இஃது இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என மூன்று வகைப்படும். இடக்கரடக்கல் - ஓர் அவையில் பேசத்தகாதவற்றை வேறு சொற்களால் சொல்லுதல் இடக்கரடக்கல் எனப்படும். காட்டு : பவ்வீ, பகரவீ - (பீ) கால் கழுவிவந்தேன் - (மலங்கழுவி வந்தேன்) ஒன்றுக்குப் போகிறேன், இரண்டுக்குப் போகிறேன் என்பனவும் அன்ன. மங்கலம்: மங்கல மல்லாத சொற்களை மாற்றி மங்கலச் சொல்லால் கூறுதல் மங்கலம் எனப்படும். காட்டு: அமங்கலம் - மங்கலம் செத்தான் - துஞ்சினான் காராடு - வெள்ளாடு சுடுகாடு - நன்காடு குழூஉக்குறி : ஒரு கூட்டத்தார் தங்களுக்கு மட்டும் புரியும்படி பேசிக்கொள்ளும் ஒருவகை வழக்கு குழூஉக்குறி எனப்படும். காட்டு : பொற்கொல்லர் பொன்னைப் பறி என்பர். வேடர் கள்ளைச் சொல்விளம்பி என்பர். இலக்கண முடைய திலக்கணப் போலி மரூஉவென் றாகும் மூவகை இயல்பும் இடக்க ரடக்கல் மங்கலம் குழூஉக்குறி எனுமுத் தகுதியோ டாறாம் வழக்கியல். (ந.சூ.) 2. தொகை நிலைத் தொடர் சொற்கள் இரண்டு முதலியன தொடர்ந்து நின்று ஒரு பொருள் உணர்த்துவது சொற்றொடர் எனப்படும். பெயர்ச் சொல்லோடு பெயர்ச்சொல்லும் பெயர்ச் சொல்லோடு வினைச் சொல்லும் அங்ஙனம் தொடர்ந்து வரும்போது வேற்றுமை யுருபுகள் முதலியன தொக்கு (மறைந்து) வரும். இங்ஙனம் உருபுகள் தொக்கு நிற்கும் தொடர்கள் தொகை நிலைத்தொடர் மொழிகள எனப்படும். பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை முதலிய பொருளின் அவற்றி னுருபிடை ஒழிய விரண்டு முதலாத் தொடர்ந்தொரு மொழிபோல் நடப்பன தொகைநிலைத் தொடர்ச்சொல் (ந.சூ) 1. வேற்றுமைத் தொகை 2. வினைத்தொகை 3. பண்புத்தொகை 4. உவமைத்தொகை 5. உம்மைத் தொகை 6. அன்மொழித்தொகை என அத்தொகை நிலைத்தொடர் ஆறுவகைப் படும். 1. வேற்றுமைத் தொகை இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை ஈறாகவுள்ள ஆறு வேற்றுமை உருபுகளும் தொக்கு வருவது வேற்றுமைத் தொகை எனப்படும். காட்டு: மரம் வெட்டினான் - இரண்டாம் வேற்றுமைத் தொகை தலை வணங்கினான் - மூன்றாம் வேற்றுமைத் தொகை சாத்தன் மகன் - நாலாம் வேற்றுமைத் தொகை ஊர் நீங்கினான் - ஐந்தாம் வேற்றுமைத் தொகை என் கை - ஆறாம் வேற்றுமைத் தொகை வீடு புகுந்தனர் - ஏழாம் வேற்றுமைத் தொகை இரண்டு முதலாம் இடையா றுருபும் வெளிப்பட லில்லது வேற்றுமைத் தொகையே. (ந.சூ) வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்மொழிகளில் வேற்றுமை உருபோடு அது கொள்ளும் பயனும் தொக்கு வருதலும் உண்டு. அஃது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். காட்டு: நெய்க்குடம் - நெய்யை உடைய குடம் - இரண்டன் உருபும் பயனும் உடன்றொக்க தொகை. பொற்குடம் - பொன்னால் செய்த குடம் - மூன்றன் உருபும் பயனும் உடன்றொக்க தொகை. 2. வினைத்தொகை உண்ட கலம் - பெயரெச்சத் தொடர். இப்பெயரெச்சத் தொடரிலுள்ள ‘உண்ட’ என்னும் பெயரெச்சத்தின் காலங்காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் தொக்கு உண்கலம் என வருவது வினைத்தொகை எனப்படும். காட்டு: உண்கலம் - உண் + (ட் + அ) + கலம் ட் இறந்தகால இடைநிலை. அ - பெயரெச்ச விகுதி. இஃது உண்டகலம், உண்கின்ற கலம், உண்ணும் கலம் என முக்காலத்தும் விரியும். காலங்கரந்த பெயரெச்சம் வினைத்தொகை (ந.சூ.) 3 பண்புத்தொகை பண்புச் சொல்லுக்கும் பண்பிச் சொல்லுக்கும் இடையே ‘ஆகிய’ என்னும் பண்புருபு தொக்கு வருவது பண்புத்தொகை எனப்படும். பண்பையுடையது பண்பி. பச்சை மிளகாய். பச்சை - பண்பு. மிளகாய் - பண்பி. காட்டு : தொகை விரி செந்தாமரை - செம்மையாகிய தாமரை இன்சொல் - இனிமையாகிய சொல் வட்டக்கல் - வட்டமாகிய கல் நன்னூல் - நன்மையாகிய நூல் ஒரு பொருளைக் குறிக்கும் சிறப்புப் பெயருக்கும் பொதுப் பெயருக்கும் இடையில் ‘ஆகிய’ என்னும் உருபு தொக்கு வருவது இருபெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும். காட்டு : தொகை விரி சாரைப் பாம்பு - சாரையாகிய பாம்பு வேழக் கரும்பு - வேழமாகிய கரும்பு தென்னை மரம் - தென்னையாகிய மரம் பண்பை விளக்கும் மொழிதொக் கனவும் ஒருபொருட் கிருபெயர் வந்தவுங் குணத்தொகை . (ந.சூ.) 4. உவமைத்தொகை உவமைக்கும் பொருட்கும் இடையே போல முதலிய உவம உருபுகள் தொக்கு வருவது உவமைத் தொகை எனப்படும். காட்டு: தொகை விரி மதிமுகம் - மதிபோன்ற முகம் பவளவாய் - பவளம் போன்ற வாய் வாட்கண் - வாள்போன்ற கண் உவம உருபில துவமத் தொகையே. (ந.சூ.) 5. உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகை அளவைகள் தொடரும்போது ‘உம்’ என்னும் சொல் தொக்கு வருவது உம்மைத் தொகை எனப்படும். காட்டு: தொகை விரி ஒன்றே கால் - ஒன்றும் காலும் - எண்ணலளவை தொடியே கஃசு - தொடியும் கஃசும் - எடுத்தலளவை நாழியாழாக்கு - நாழியும் ஆழாக்கும் - முகத்தலளவை அடியங்குலம் - அடியும் அங்குலமும் - நீட்டலளவை எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் எனுநான் களவையுள் உம்மில தத்தொகை . (ந.சூ.) சேர சோழ பாண்டியர் புலிவிற் கெண்டை -பன்மொழித் தொடர். 6. அன்மொழித் தொகை வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத்தொகை, உம்மைத் தொகை என்னும் ஐந்து தொகை கட்கும் புறத்தே ஒரு சொல் தொக்குவருவது அன்மொழித் தொகை எனப்படும். ஆறு வேற்றுமைத் தொகையுங்கொள்க. காட்டு: 1. பூங்குழல் வந்தாள் - இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பூவையுடைய குழலினையுடையாள் வந்தாள் என விரியும். ‘வந்தாள்’ என்னும் பெண்பாற் சொல்லோடு சேர்ந்து வரும்போதே, ‘பூங்குழல்’ என்பது அன்மொழித் தொகையாகும். பிறவு மன்ன. பொற்றொடி வந்தாள் - மூன்றாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பொன்னாலாகிய தொடியினையுடையாள் வந்தாள் என விரியும். 2. தாழ் குழல் வந்தாள் - வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது தாழ்ந்த குழலினை யுடையாள் வந்தாள் என விரியும். 3.கருங்குழல் வந்தாள் - பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, இது கருமையாகிய குழலினை யுடையாள் என விரியும். 4. மதிமுகம் வந்தாள் - உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது மதிபோன்ற முகத்தினை யுடையாள் என விரியும். 5. தகர ஞாழல் அணிந்தாள் - உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது தகரமும் ஞாழலுங் கலந்துண்டாகிய சாந்து என விரியும். ஐந்தொகை மொழிமேற் பிறதொகல் அன்மொழி. (ந.சூ.) 3. தொகா நிலைத் தொடர் வேற்றுமை யுருபுகள் முதலியன தொகாமல் விரிந்து வருதல் தொகாநிலைத் தொடர் எனப்படும். இது, 1. வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் 2. எழுவாய்த் தொடர் 3. விளித் தொடர் 4. பெயரெச்சத் தொடர் 5. வினையெச்சத் தொடர் 6. வினைமுற்றுத் தொடர் 7. இடைச் சொற்றொடர் 8. உரிச் சொற்றொடர் 9. அடுக்குத் தொடர் - என ஒன்பது வகைப்படும். காட்டு: 1. பாலைக்குடி - வே. தொகா நிலைத்தொடர் 2. முருகன் வந்தான் - எழுவாய்த்தொடர் 3. முருகா வா - விளித்தொடர் 4. பழுத்த பழம் - பெயரெச்சத் தொடர் 5. தூங்கி எழுந்தான் - வினையெச்சத் தொடர் 6. வந்தான் முருகன் - வினைமுற்றுத் தொடர் 7. மற்றொன்று - இடைச்சொற்றொடர் 8. நனிபேதை - உரிச்சொற்றொடர் 9. பாம்பு பாம்பு - அடுக்குத்தொடர் முற்றீ ரெச்சம் எழுவாய் விளிப்பொருள் ஆறுரு பிடையுரி அடுக்கிவை தொகாநிலை. (ந.சூ.) 4. இரட்டைக் கிளவி, அடுக்குத்தொடர் 1. இரட்டைக் கிளவி மழை சலசலவெனப் பெய்கிறது. குறு குறு நடந்தது. சலசல, குறுகுறு - இவை இரட்டைச் சொற்கள். சல, குறு - எனத் தனியாகப் பிரிக்கின் அப்பொருள் படா; இரட்டித்துக் கூறுதலே மரபு. இவை இரட்டையிலிருந்து பிரிந்து தனித்து ஒலியா. எனவே, இஃது இரட்டைக் கிளவி எனப்பட்டது. கிளவி - சொல். காட்டு: கண்ணகி கலகலவென்று பேசினாள். வானம் கிடுகிடுவென இடறுகிறது. துடிதுடித்துத் துள்ளி வரும். 2. அடுக்குத் தொடர் பாம்பு பாம்பு - இஃது அடுக்குத் தொடர். ஒரு சொல்லே இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வருதலின் இஃது அடுக்குத் தொடர் எனப்பெயர் பெற்றது. அடுக்கி வரும் இச்சொற்கள் தனியாக நிற்பினும் பொருள்படும். இஃது அசை நிலை, விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம், இசை நிறை போன்ற பல பொருள்களில் வரும். காட்டு: 1. அன்றே அன்றே - அசைநிலை 2. போ போ போ - விரைவு 3. எறி எறி எறி - வெகுளி 4. வருக வருக - உவகை 5. பாம்பு பாம்பு - அச்சம் 6. வாழேன் வாழேன் வாழேன் - அவலம் 7. நல்குமே நல்குமே நல்குமே பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ - இசைநிறை இரட்டைக் கிளவிக்கும் அடுக்குத் தொடருக்கும் உள்ள வேறுபாடுகள். இரட்டைக்கிளவி அடுக்குத்தொடர் 1. இரட்டையாகவே இரண்டுக்கு மேலும் வரும். வரும். 2. பிரித்தால் பொருள் தனித்து நின்றும் படாது பொருள்படும். 3. பிரிந்து தனித்து பிரிந்து தனித்து ஒலியாது. ஒலிக்கும் 4. இயல்பாகவே பொருள் வேறுபாடு இரட்டி நிற்கும காரணமாக அடுக்கிவரும். 5. இனங்குறித்தல் வெற்றிலை கொண்டு வா - என்பது அதன் இனமாகிய பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை முதலியவற்றையும் குறிக்கும். இவ்வாறு ஒரு பொருள் அதன் இனத்தைக் குறித்தல் - இனங் குறித்தல் எனப்படும். இஃது இன விலக்கணம் எனவும் வழங்கும். சோறுண்டான் என்பது சோறுண்டான், குழம்புண்டான், சாறுண்டான், மோருண்டான், பொரியலுண்டான் என இனங்குறிக்கும். பயிற்சி 1. வழக்கு என்பது யாது? அஃது எத்தனை வகைப்படும்? 2. தகுதி வழக்கும் என்பது யாது? 3. மரூஉ, மங்கலம், குமூஉக்குறி - விளக்கந்தருக. 4. வெள்ளாடு, கோவை, வாயில் - இவை இன்ன வழக்கெனக் கூறுக. 5. தொகை நிலைத்தொடர், தொகா நிலைத்தொடர் யாவை? 6. தொகை நிலைத்தொடர் எத்தனை வகைப்படும்? 7. வேற்றுமைத் தொகை என்பது யாது? 8. பழந்தின்றான், அவன் வீடு, காற்கட்டு - இன்ன வேற்றுமை எனக் கூறுக. 9. வினைத்தொகையின் இலக்கணம் என்ன? 10. இரு பெயரொட்டுப் பண்புத்தொகை என்பது யாது? 11. அன்மொழித் தொகையின் இலக்கணம் என்ன? 12. பவளவாய் பாடினாள், ஒலிகழல் வந்தான், பட்டாடை வந்தாள் - இன்ன தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனக்கூறுக. 13. தொகா நிலைத்தொடர் என்பது யாது? எத்தனை? 14. எழுவாய்த் தொடர், வினைமுற்றுத் தொடர் - இவற்றின் வேறுபாடென்ன? 15. இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் - இவற்றின் வேறுபாடென்ன? 16. தோய்தயி ரொடு வெண்பால் துடியிடை கொடு சென்று காய்கறி பிறகொண்டு கடுவெயில் படவந்தாள் - இதிலுள்ள தொடர்களை எடுத்துக்காட்டுக. 17. இனங்குறித்தல் என்றால் என்ன? 4. புணர்ச்சி மணி + அடி = மணியடி இங்கு ‘மணி’ என்னும் சொல்லோடு ‘அடி’ என்னும் சொல் வந்து சேர்ந்து ‘மணியடி’என்றாயிற்று. மணி என்னும் சொல் நிலைமொழி எனப்படும். அடி என்னும் சொல் வருமொழி எனப்படும். நிலை மொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் இணைந்து வருவது புணர்ச்சி எனப்படும். மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாக உடைய பகாப்பதம், பகுபதம் என்னும் இரண்டு சொற்களும் தன் னொடு தானும் தன்னொடு பிறிதுமாய், அல்வழிப் பொருளி லேனும் வேற்றுமைப் பொருளிலேனும் பொருந்தும், அவ்வாறு பொருந்தும்போது நிலை மொழியும் வருமொழியும் இயல்பாகவேனும் விகாரமாகவேனும் பொருந்துவது புணர்ச்சி எனப்படும். 1. உயிரீறு, மெய்யீறு மணி + அடி ‘மணி’ என்னும் நிலைமொழியின் ஈற்றெழுத்து (ணி - ண் + இ) உயிரெழுத்தாகும். நிலைமொழியின் ஈற்றில் உயிரெழுத்து இருப்பது உயிரீறு எனப்படும். பால் + குடம் ‘பால்’ என்னும் நிலைமொழியின் ஈற்றெழுத்து (ல்) மெய்யெழுத்தாகும். நிலைமொழியின் ஈற்றில் மெய்யெழுத்து இருப்பது மெய்யீறு எனப்படும். புணர்ச்சியில் நிலைமொழி உயிரீறாகவும் மெய்யீறாகவும் இருக்கும். இனி, முதல் எடுத்துக்காட்டின் வருமொழியான ‘அடி’ என்பதன் முதலெழுத்து (அ) உயிரெழுத்தாகையால், இஃது உயிர்முதல் எனப்படும். இரண்டாவது எடுத்துக்காட்டின் வருமொழியான ‘குடம்’ என்பதன் முதலெழுத்து (கு -க் +உ) மெய்யெழுத்தாகையால், இது மெய்முதல் எனப்படும். தமிழ் - மெய்முதல் மெய்யீறு மொழி - மெய்முதல் உயிரீறு அணி - உயிர்முதல் உயிரீறு அரண் - உயிர்முதல் மெய்யீறு எனச் சொற்கள் நான்கு வகைப்படும். எனவே, உயிர்முன் உயிரும் உயிர்முன் மெய்யும் மெய்முன் மெய்யும் மெய்முன் உயிரும் புணரும் என்பதால், புணர்ச்சியும் நான்கு வகைப்படும். காட்டு: மணி + அடி - உயிர்முன் உயிர் மணி + மாலை - உயிர்முன் மெய் கால் + படி - மெய்முன் மெய் கால் + அணி - மெய்முன் உயிர் குறிப்பு : உயிர் முதலில் தனித்தும். ஈற்றில் உயிர் மெய் யாகவும் வரும். மெய் ஈற்றில் தனித்தும் முதலில் உயிர் மெய் யாகவும் வரும். வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி இந் நால்வகைப் புணர்ச்சியும் வேற்றுமைப் பொருளி லேனும் அல்வழிப் பொருளிலேனும் புணரும். ஐ முதலிய வேற்றுமை உருபுகள் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச் சொற்கள் ஒன்றோடொன்று புணர்வது வேற்றுமைப் புணர்ச்சி எனப்படும். வேற்றுமை அல்லாத வழியிற் புணர்வது அல்வழிப் புணர்ச்சி எனப்படும். காட்டு: வேற்றுமை தொகை விரி 1. பால்குடித்தான் (ஐ) பாலைக் குடித்தான் 2. கல் எறிந்தான் (ஆல்) கல்லால் எறிந்தான் 3. பாரி மகளிர் (கு) பாரிக்கு மகளிர் 4. மலைவீழ் அருவி (இன்) மலையின் வீழ் அருவி 5. என்வீடு (அது) எனது வீடு 6. குன்றக் கூகை (கண்) குன்றத்தின்கண் கூகை அல்வழி தொகை நிலைத்தொடர் 1. தோய்தயிர் - வினைத்தொகை 2. வெண்பால் - பண்புத்தொகை 3. கயல்விழி - உவமைத்தொகை 4. கைகால் - உம்மைத்தொகை 5. சுரிகுழல் (வந்தாள்) - அன்மொழித்தொகை தொகா நிலைத்தொடர் 6. முருகன் வந்தான் - எழுவாய்த் தொடர் 7. முருகா வா - விளித்தொடர் 8. உண்ட சோறு - பெயரெச்சத் தொடர் 9. உண்டு போனான் - வினையெச்சத் தொடர் 10. வந்தான் முருகன் - வினைமுற்றுத் தொடர் 11. மற்றொன்று - இடைச் சொற்றொடர் 12. சாலப் பேசினான் - உரிச் சொற்றொடர் 13. போபோ - அடுக்குத் தொடர். இயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி வேற்றுமைப் பொருளிலும் அல்வழிப் பொருளிலும் நால்வகைப் புணர்ச்சியும் புணரும் போது, வாழை + மரம் - வாழைமரம் தேன் + கூடு - தேன்கூடு என நிலைமொழியீறும் வருமொழி முதலும் யாதொரு விகாரமும் இன்றி இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சி எனப்படும். விகாரப் புணர்ச்சி இங்ஙனமன்றி, நிலைமொழியீறும் வருமொழி முதலும் மாறுபடப் புணர்தல் விகாரப் புணர்ச்சி எனப்படும். அது தோன்றல், திரிதல், கெடுதல் என மூன்றுவகைப்படும். காட்டு: தோன்றல் : மாலை + காலம் - மாலைக் காலம் - வருமொழி முதலில் மெய் (க்) தோன்றிற்று. திரிதல்: கல் + சட்டி - கற்சட்டி - நிலைமொழியீறு திரிந்தது. என் + தாய் - என்றாய் - வருமொழி முதல் திரிந்தது. கல் + தூண் - கற்றூண் - நிலைமொழியீறும் வருமொழி முதலும் திரிந்தன. கெடுதல்: மரம் + நாய் - மரநாய் நிலை மொழி நிலம் + வரி - நிலவரி ஈறுகெட்டது. மெய்யுயிர் முதலீ றாமிரு பதங்களும் தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமைப் பொருளிற் பொருந்துழி நிலைவரு மொழிகள் இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே (ந.சூ.) 2. உடம்படுமெய் மணி + அடி - மணியடி மணி - உயிரீற்று மொழி அடி - உயிர் முதன் மொழி மணி + அடி - மணி +ய் + அடி - மணியடி உயிர்முன் உயிர்வர இடையில் யகரமெய் (ய்) தோன்றிற்று. உயிரும் உயிரும் சேராது. எனவே, அவ்விரண்டு உயிரையும் ஒன்று சேர்க்க வருமொழி முதலுயிர்க்கு உடம்பு போல் ஒரு மெய் தோன்றும். வருமொழி முதலுயிர்க்கு உடம்பு போல் அடுப்பதால் அஃது உடம்படுமெய் எனப்பட்டது. இ,ஈ, ஐ - என்னும் மூன்றுயிர்களின் முன் உயிர்வரின் யகர மெய்யும், ஏனையுயிர்களின் முன் உயிர்வரின் வகர மெய்யும், ஏகாரத்தின் முன் உயிர்வரின் யகரம் வகரம் இரண்டும் உடம்படு மெய்யாக வரும். காட்டு: 1. மணி + அடி - மணியடி தீ + எரிந்தது - தீயெரிந்தது மலை + அரண் - மலையரண் இ, ஈ, ஐ முன் உயிர்வர யகரவுடம்படுமெய் தோன்றிற்று. 2. பல + ஊர் - பலவூர் பலா + இலை - பலாவிலை திரு + அடி - திருவடி பூ + அரசு - பூவரசு கோ + அழகு - கோவழகு ஏனையுயிர் முன் உயிர் வர வகரவுடம்படுமெய் தோன்றிற்று. 3. அவனே + அழகன் - அவனேயழகன் சே + உழுதது - சேவுழுதது ஏகாரத்தின் முன் உயிர்வர யகரமும் வகரமும் தோன்றின. இஈ ஐவழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் விருமையும் உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும். (ந.சூ) 3. மெய்யீற்றின் முன் மெய் ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள் என்னும் பதினொரு மெய்யெழுத்துக்களும் சொல்லுக்கு ஈற்றில் வரும். தன்னை யொழிந்த ஏனைப் பத்து மெய்களின் முன் யகரம் வரின் இகரச்சாரியை (இ) தோன்றும். காட்டு : மண் + யாது - மண்ணியாது கான் + யாது - கானியாது வேள் + யாவன் - வேளியாவன் - எனக் காண்க தன்னொழி மெய்ம்முன் யவ்வரின் இகரந் துன்னு மென்று துணிநரு முளரே. (ந.சூ) ஞ ண ந ம ல வ ள ன என்னும் எட்டு மெய்களையும் ஈறாக உடைய முதனிலைத் தொழிற் பெயர்களும், ஏவல் வினைகளும், யகர மல்லாத மெய்கள் வரின் பெரும் பாலும் உகரச் சாரியை வரப் பெறும். காட்டு: 1. உரிஞ் + கடிது - உரிஞுக்கடிது 2. உண் + கடிது - உண்ணுக் கடிது 3. பொருந் + கடிது - பொருநுக் கடிது 4. திரும் + கடிது - திருமுக் கடிது 5. தின் + கடிது - தின்னுக் கடிது (நீண்டது, வலிது என்பவற்றையும் புணர்க்க.) முதனிலைத் தொழிற் பெயர் உகரம் பெற்றது. 2. உரிஞு கொற்றா திருமு கொற்றா உண்ணு கொற்றா தின்னு கொற்றா பொருநு கொற்றா (நாகா, வளவா) என ஏவல் வினை உகரம் பெற்றது. ஞண நம லவளன வொற்றிறு தொழிற்பெயர் ஏவல் வினைநனி யவ்வல் மெய்வரின் உவ்வுறும் ஏவல் உறாசில சில்வழி. (ந.சூ) 4. உயிர்முன் வல்லினம் இயல்பீறு, விதியீறு என உயிரீறு இரு வகைப்படும்.சொல்லின் ஈற்றில் யாதொரு விகாரமும் இல்லாமல் உயிர் இயல்பாக நிற்றல் இயல்பீறு எனப்படும். மணி, பனை - இயல்பீறு. மரம் + கிளை - மர + கிளை - மரக்கிளை பண்டு + காலம் - பண்டை + காலம் - பண்டைக் காலம் மர, பண்டை - இவை விதியீறு எனப்படும். ஏதாவது விதி பற்றி இயல்பாகிய உயிர் திரிந்து வேறோர் உயிராகவும், மெய் கெட்டு உயிரீறாகவும் நிற்றல் விதியீறாகும். வல்லெழுத்துக்கள் ஆறனுள் ‘க ச த ப’ என்னும் நான்கு மே மொழிக்கு முதலில் வரும். இவை வலி எனப்படும். இயல்பீறாகவும் விதியீறாகவும் நின்ற உயிர்முன் வரும் க ச த ப மிகும். மிகுதல் - இரட்டித்தல். காட்டு : அல்லி + கொடி - அல்லிக்கொடி தீ + சுடர் - தீச்சுடர் தினை + தாள் - தினைத்தாள் ஓலை + பெட்டி - ஓலைப் பெட்டி இயல்பீற்றுயிர் முன் வலி மிக்கது. பணம் + பெட்டி - பண + பெட்டி - பணப் பெட்டி. இரண்டு + தாள் - இரட்டை + தாள் - இரட்டைத்தாள் விதியீற்றின் முன் வலி மிக்கது. இயல்பினும் விதியினும் நின்ற வுயிர்முன் கசதப மிகும்வித வாதன மன்னே. (ந.சூ.) 5. குற்றியலுகரப் புணர்ச்சி குற்றியலுகர ஈற்றுச் சொற்களின் முன் உயிர் வரின், அவ்வுகரம் தானேறி நின்ற மெய்யை விட்டுக் கெடும். கெட நின்ற மெய்யின் மேல் வருமொழி முதலுயிர் ஏறி முடியும். காட்டு: பந்து + ஆடு - பந்த் + ஆடு - பந்தாடு முத்து + ஆரம் - முத்த் + ஆரம் - முத்தாரம் கமுகு + ஓலை - கமுக் + ஓலை - கமுகோலை சங்கு + ஊது - சங்க் + ஊது - சங்கூது 6. குற்றியலிகரப் புணர்ச்சி குற்றியலுகரத்தின் முன் யகரம் வரின் அவ்வுகரம் இகரமாகத் திரியும். இதுவே குற்றியலிகரப் புணர்ச்சி எனப்படும். காட்டு நாடு + யாது - நாட்இ + யாது - நாடியாது பந்து + யாது - பந்த்இ + யாது - பந்தியாது முற்றியலுகரமும் குற்றியலுகர, குற்றியலிகரப் புணர்ச்சி விதிகளையே பெற்று வரும். காட்டு : கதவு + ஓரம் - கதவ் + ஓரம் - கதவோரம் வரவு + யாது - வரவ்இ + யாது - வரவியாது உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் யவ்வரின் இய்யாம் முற்றுமற் றொரோவழி. (ந.சூ) பயிற்சி 1. புணர்ச்சி என்பது யாது? 2. உயிரீறு, மெய்யீறு, நிலைமொழி, வருமொழி விளக்கந் தருக. 3. வேற்றுமை, அல்வழி என்பன யாவை? 4. இயல்பு, விகாரப் புணர்ச்சிகளை எடுத்துக்காட்டுக. 5. உடம்படுமெய் என்பது என்ன? யகர வகர உடம்படு மெய்வரும் இடங்கள் எவை? 6. மீன் + யாது, வாள் + யாது, உண் + கடிது, பொருந் + கொற்றா - இவற்றைப் புணர்க்க. 7. இயல்பீறு, விதியீறு யாவை? உயிரீற்றின் முன் வலிவரின் எவ்வாறு புணரும்? 8. குற்றியலுகர, குற்றியலிகரப் புணர்ச்சி விதி கூறுக. 9. இசையமுது, மணிக்கூண்டு, மாவிலை, எள்ளு சாத்தா, காட்டியானை - பிரித்துப் புணர்ச்சி விதி கூறுக. 5. யாப்பு 1. யாப்பின் உறுப்புக்கள் யாப்பு என்பது செய்யுள். இங்கு அது செய்யுளின் இலக்கணத்தை உணர்த்துகிறது. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன செய்யுளின் உறுப்புக்களாகும். இவற்றுள் அசை, சீர், தளை என்னும் மூன்றையும் இங்குக் கற்போம். 2. அசை, சீர், தளை 1. அசை உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என்னும் 247 தமிழ் எழுத்துக்களும் யாப்பிலக்கணத்தில் குறில், நெடில், ஒற்று என மூன்றாகக் கொள்ளப்படும். உயிரும் உயிர்மெய்யும் குறில், நெடில் எனப்படும். மெய்யும் ஆய்தமும் ஒற்று எனப்படும். வாய்பாடு எழுத்து அசை க - குறில் கல் - குற்றொற்று நேர் கா - நெடில் கால் - நெட்டொற்று கட - குறிலிணை கடல் - குறிலிணையொற்று நிரை கடா - குறினெடில் கடாம் - குறினெடிலொற்று இவற்றை நன்கு மனப்பாடம் செய்து கொள்க. நேரசை, நிரையசை என அசை இரண்டு வகைப்படும். 2. சீர் அசை இரண்டும் மூன்றும் சேர்ந்தது சீர் ஆகும். ஈரசைச்சீர் - 4 நேரசையையும் நிரையசையையும் பெருக்கினால் (2X2 - 4 ) ஈரசைச்சீர் நான்காகும். அசை வாய்பாடு நேர் நேர் - தேமா நிரை நேர் - புளிமா மாச்சீர் நிரை நிரை - கருவிளம் நேர் நிரை - கூவிளம் விளச்சீர் இவை நான்கும் இயற்சீர் எனப்படும். காட்டு: அஞ்சும் x அறியான் x அமைவிலன் x ஈகலான் நேர் நேர் x நிரை நேர் x நிரை நிரை x நேர் நிரை தேமா x புளிமா x கருவிளம் x கூவிளம் இயற்சீர் நான்கும் வந்தமை காண்க. மூவசைச் சீர் - 8 தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் ஈரசைச்சீர் நான்கனோடும் நேரசையையும் நிரையசையையும் தனித்தனி கூட்டினால் மூவசைச்சீர் எட்டாகும். அசை வாய்பாடு நேர் நேர் நேர் - தேமாங்காய் நிரை நேர் நேர் - புளிமாங்காய் நிரை நிரை நேர் - கருவிளங்காய் நேர் நிரை நேர் - கூவிளங்காய் இவை நான்கும் காய்ச்சீர் எனப்படும். இவை வெண்சீர் எனவும் பெயர் பெறும். காட்டு: அசை வாய்பாடு பத்தூர்புக் x கிரந்துண்டு நேர் நேர் நேர் x நிரை நேர் நேர் தேமாங்காய் x புளிமாங்காய் பலபதிகம் x பாடினமே நிரைநிரைநேர் x நேர் நிரை நேர் கருவிளங்காய் x கூவிளங்காய் - காய்ச்சீர் நான்கும் வந்தமை காண்க. அசை வாய்பாடு நேர் நேர் நிரை - தேமாங்கனி நிரை நேர் நிரை - புளிமாங்கனி நிரை நிரை நிரை - கருவிளங்கனி நேர் நிரை நிரை - கூவிளங்கனி - இவை நான்கும் கனிச்சீர் எனப்படும். வஞ்சிச்சீர் எனவும் வழங்கும். பூந்தாமரை x போதலமர நேர் நேர் நிரை x நேர் நிரை நிரை தேமாங்கனி x கூவிளங்கனி வினைக்கம்பலை x மனைச்சிலம்பவும் நிரை நேர் நிரை x நிரை நிரை நிரை புளிமாங்கனி x கருவிளங்கனி - கனிச்சீர் நான்கும் வந்தமை காண்க. 3. தளை சீர்கள் ஒன்றோடொன்று கூடும் கூட்டத்திற்குத்தளை என்பது பெயர். தளைதல் - கட்டுதல். இரண்டு சீர்களை ஒன்றாகத் தளைதல். 1. நேரொன்றாசிரியத் தளை 2. நிரையொன் றாசிரியத் தளை 3. இயற்சீர் வெண்டளை 4. வெண்சீர் வெண்டளை 5. கலித்தளை 6. ஒன்றிய வஞ்சித்தளை 7. ஒன்றாத வஞ்சித் தளை - எனத் தளை எழுவகைப்படும். தளை கொள்ளும் போது, நின்ற சீர் இன்னசீர் என்றும், அதாவது மாச்சீரா, விளச்சீரா, காய்ச்சீரா, கனிச்சீரா என்றும் வருஞ்சீரின் முதலசை நேரசையா, நிரையசையா என்றும் பார்க்க வேண்டும். வருஞ்சீர் இன்ன சீர் என்று பார்க்க வேண்டிய தில்லை. நின்ற சீர் - முதலில் உள்ள சீர். வருஞ்சீர் நின்ற சீரோடு வந்து சேருஞ்சீர். 1.2. ஆசிரியத்தளை மாமுன் நேர் வருவது - நேரொன்றாசிரியத்தளை. விளமுன் நிரை வருவது - நிரையொன்றாசிரியத்தளை. மா - மாச்சீர் . விளம் - விளச்சீர். இருவகை ஆசிரியத் தளையும் ஆசிரியப்பாவுக்குரிய தளைகள். காட்டு: நே .ஆ நி . ஆ கல்வி x கற்றவர் x கருத்து நேர்நேர் x நேர்நிரை x நிரைநேர் தேமா x கூவிளம் x புளிமா நே .ஆ - நேரொன்றாசிரியத் தளை நி .ஆ - நிரையொன்றாசிரியத் தளை இவ்வாறு சீர்களை அசைபிரித்து வாயபாடு கண்டு தளை கொள்ளுதல் அலகிடுதல் எனப்படும். 3. இயற்சீர் வெண்டளை மாமுன் நிரையும் விளமுன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை எனப்படும். இயற்சீர் எனப்படும் ஈரசைச் சீர் நான்கும் நின்ற சீராகையால், இஃது இப்பெயர் பெற்றது. ஆசிரியத் தளைகளின் மாறிவருவது இயற்சிர் வெண்டளை எனக்கொள்க. காட்டு: இ .வெ இ .வெ கற்க x கசடறக் x கற்பவை நேர்நேர் x நிரை நிரை x நேர்நிரை தேமா x கருவிளம் x கூவிளம் இ.வெ - இயற்சீர் வெண்டளை. 4. வெண்சீர் வெண்டளை காய்முன் நேர் வருவது - வெண்சீர் வெண்டளை. இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் வெண்பாவுக்குரிய தளைகள். காட்டு: வெ.வெ வெ.வெ யாமெய்யாக் x கண்டவற்று x ளில்லை நேர்நேர்நேர் x நேர்நிரைநேர் x நேர்நேர் தேமாங்காய் x கூவிளங்காய் x தேமா வெ. வெ - வெண்சீர் வெண்டளை 5. கலித்தளை காய்முன் நிரை வருவது - கலித்தளை, அஃதாவது வெண்சீர் வெண்டளையின் மாறி வருவது. இது கலிப்பாவுக்குரிய தளை. காட்டு: க.த பல்லுயிரும் x பலவுலகும் நேர்நிரைநேர் x நிரைநிரைநேர் கூவிளங்காய் x கருவிளங்காய் க.த - கலித்தளை 6.7 வஞ்சித்தளை கனிமுன் நிரை வருவது - ஒன்றிய வஞ்சித்தளை. கனி முன் நேர் வருவது - ஒனறாத வஞ்சித் தளை. ஒன்றிய - பொருந்திய. இவ்விரண்டும் வஞ்சிப்பாவுக்குரிய தளைகள். காட்டு: ஒன்றிய - வ தண்டாமரைத் x தனிமலர்மிசை நேர்நேர்நிரை x நிரைநிரைநிரை தேமாங்கனி x கருவிளங்கனி வண்டோலிடும் x வண்டமிழகம் நேர்நேர்நிரை x நேர்நிரைநிரை தேமாங்கனி x கூவிளங்கனி இவ்வேழு தளைகளையும் நன்கு மனப்பாடஞ் செய்துகொள்ளுங்கள். பயிற்சி 1. யாப்பு என்பது யாது? 2. யாப்பிலக்கண உறுப்புக்கள் யாவை? 3. அசை என்பது யாது? அஃது எத்தனை வகைப்படும்? 4. பல், பால், மரம், மலை - என்ன அசைகள்? 5, சீர் என்பது யாது? அஃது எத்தனை வகைப்படும்? 6. மாச்சீர், விளச்சீர் - யாவை? 7. காய்ச்சீர் , கனிச்சீர் - வேறுபாடென்ன? 8. சீர்கள் எத்தனை? அவற்றை மாச்சீர் முதலாக வகைப்படுத்திக் கூறுக. 9. தமிழகம், தமிழ்நாடு, திருக்குறள், தொல்காப்பியம், விருந்து, - அசை பிரித்து இன்ன சீரென வாய்பாடு கூறுக. 10. தளை என்பது யாது? அஃது எத்தனை வகைப்படும்? 11. நிரை யொன்றாசிரியத்தளை, ஒன்றிய வஞ்சித்தளை ஒற்றுமை வேற்றுமை என்ன? 12. இயற்சீர் வெண்டளை, கலித்தளை - எத்தளைகளின் மாறுதளை? 13. கீழ்வரும் அடிகளை அலகிடுக! “ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.” “மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும்” விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீமுர ணிய நீரும்.” 6. அணி அணி என்பது செய்யுட்கு அழகு செய்து நிற்பது. அணி -அழகு. சொல்லணி, பொருளணி என அணி இருவகைப்படும். சொல்லணி - செய்யுளில் சொற்கள் அமைந்திருக்கும் அழகு. பொருளணி - செய்யுளில் பொருள் அமைந்திருக்கும் அழகு. உவமையணி, உருவக அணி முதலாக அப்பொருளணி பல வகைப்படும். 1. உவமையணி ஒரு பொருளோடொரு பொருளை ஒப்பிட்டுக் கூறுவது உவமையணி எனப்படும். பவளவாய் - பவளம் போலச் சிவந்த வாய். பவளம் - உவமை வாய் - பொருள் போல - உவமஉருபு செம்மை - பொதுத் தன்மை இங்கு வாய்க்குப் பவளம் ஒப்பிடப்பட்டுள்ளதை அறிக. காட்டு : ‘என்பி லதனை வெயில் போலக் காயுமே அன்பி லதனை யறம்.’ இதில், ‘என்பு இலதனை வெயில் காயும்’ என்பது உவமை; ‘அன்பி லதனை அறம் காயும்’ என்பது பொருள். காய்தல் - பொதுத் தன்மை. போல - உவம உருபு. ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.’ இதில், ‘மணற்கேணி தொட்டனைத்து ஊறும்’ என்பது உவமை. ‘மாந்தர்க்குக் கற்றனைத்து அறிவு ஊறும்’ என்பது பொருள். ஊறுதல் - பொதுத் தன்மை. ‘போல’ என்னும் உவம உருபு தொக்குள்ளது. 2. உருவக அணி ஒரு பொருளோடொரு பொருளை ஒப்பிட்டுக் கூறாமல், இஃதே அஃதென உவமையையும் பொருளையும் ஒன்றெனக் காட்டுதல் உருவக அணி எனப்படும். மதிமுகம் -மதிபோன்ற முகம் - உவமை. முகமதி - முகமாகிய மதி - உருவகம். இங்கு முகத்தை மதியாகவே கூறியிருத்தல் காண்க. காட்டு: ‘இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர் பைங்கூழ்ச் சிறுகாலைச் செய்.’ இங்கு இன்சொல்லை விளைநிலமாகவும், ஈகையை விதையாகவும் வன்சொல்லைக் களையாகவும் வாய்மையை எருவாகவும், அன்பை நீராகவும், அறத்தைக் கதிராகவும், கொடையைப் பயிராகவும் உருவகப்படுத்தியிருத்தலை அறிக. 3. இயல்பு நவிற்சியணி ஒரு பொருளின் இயல்பை உள்ளவாறு கூறுவது இயல்பு நவிற்சியணி எனப்படும். நவிலுதல் - சொல்லுதல். காட்டு: ‘தோயும் வெண்டயிர் மத்தொலி துள்ளவும் ஆய வெள்வளை வாய்விட் டரற்றவும் தேயும் நுண்ணிடை சென்று வணங்கவும் ஆய மங்கையர் அங்கை வருந்துவார்.’ இப்பாடலில், தயிர் கடையும் ஆய மங்கையரின் தன்மையை உள்ளவாறு கூறுதல் காண்க. 4. உயர்வு நவிற்சியணி ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது உயர்வு நவிற்சியணி எனப்படும். காட்டு: ‘அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்.’ இங்கு மகளிர் அடியின் மென்மைத் தன்மையை மிகுத்துக் கூறுதல் காண்க. ‘வானம் முட்டும் போர்’ என்பதும் அது. பயிற்சி 1. அணி என்பது யாது? 2. உவமையணியின் இலக்கணம் என்ன? 3. உவமைக்கும் உருவகத்திற்கும் உள்ள வேறு பாடென்ன? 4. பவளவாய், கயற்கண் -உருவகம் ஆக்குக. 5. கீழ்வரும் அடிகளில் அமைந்துள்ள அணிகளை எடுத்துக்காட்டுக: 1. ‘இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.’ 2. ‘தாமரை புரையுங் காமர் சேவடி’ 3. ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ 4. ‘குணமென்னும் குன்றேறி நின்றார்.’ 2. மொழிப் பயிற்சி 1. வாக்கியம் பாவை பந்து ஆடுகிறாள். இதில் மூன்று சொற்கள் ஒன்றையொன்று தொடர்ந்து நிற்பதால் இது சொற்றொடர் எனப்படும். இச்சொற்றொடரில், பாவை - எழுவாய்; ஆடுகிறாள் - பயனிலை; பந்து - செயப்படுபொருள். இவ்வாறு எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் அமையும் சொற்றொடர் - வாக்கியம் எனப்படும். அது தனி வாக்கியம், தொடர் வாக்கியம், கலவை வாக்கியம் என மூன்று வகைப்படும். 1. தனி வாக்கியம் பாவை பாடம் படித்தாள். இதில் பாவை - எழுவாய்; படித்தாள் - பயனிலை ; பாடம் - செயப்படுபொருள். இங்ஙனம் ஒரே எழுவாயும் பயனிலையும் பெற்று வரும் வாக்கியம் தனி வாக்கியம் எனப்படும். 2. தொடர் வாக்கியம் பாவை பள்ளிக்குச் சென்றாள்; பாடம் படித்தாள். ஓர் எழுவாய்க்குப் பல பயனிலைகள் வருவது தொடர் வாக்கியம் எனப்படும். பாவை பள்ளிக்குச் சென்றாள்; பாவை பாடம் படித்தாள் எனப் பாவை என்னும் எழுவாய்க்குச் சென்றாள், படித்தாள் என இரண்டு பயனிலைகள் வந்திருத்தல் காண்க. 3. கலவை வாக்கியம் வள்ளுவர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறுகிறார். இதில், ‘வள்ளுவர் கூறுகிறார்’ என்பது முதல் வாக்கியம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது துணைவாக்கியம். இவ்விரு வாக்கியமும் கலந்து வந்தமையால், இது கலவை வாக்கியம் எனப்பட்டது. ஒரு முதல் வாக்கியத்துடன் சில துணை வாக்கியங்கள் கலந்து வருவது கலவை வாக்கியம் எனக் கொள்க. 2. வாக்கியப் பொருத்தம் வாக்கியங்களில் எழுவாயும் பயனிலையும் திணை, பால், எண், இடம் முதலியவைகளில் ஒத்திருப்பதே வாக்கியப் பொருத்தம் எனப்படும். 1.திணைப் பொருத்தம் எழுவாய் எத் திணையோ பயனிலையும் அத் திணையாகவே வரவேண்டும். அஃதாவது எழுவாய் உயர்திணையாயின் பயனிலையும் உயர்திணையாக வர வேண்டும். எழுவாய் அஃறிணையாயின் பயனிலையும் அஃறிணையாக வரவேண்டும்.’ காட்டு: அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்தான். பாண்டியர் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்தனர். மரம் அடியோடு சாய்ந்தது பறவைகள் வானத்தில் பறக்கின்றன. இவ்வாக்கியங்களில் உயர்திணை எழுவாய்கள் உயர்திணைப் பயனிலை களையும், அஃறிணை எழுவாய்கள் அஃறிணைப் பயனிலைகளையும் கொண்டு முடிந்திருத்தலை அறிக. 2. எண் பொருத்தம் எழுவாய் ஒருமையாய் இருந்தால் பயனிலையும் ஒருமையாக இருக்க வேண்டும். எழுவாய் பன்மையாய் இருந்தால் பயனிலையும் பன்மையாக இருக்க வேண்டும். காட்டு: பரணன் பாடினான் அல்லி ஆடினாள். நாய் குரைத்தது. நான் படிக்கிறேன். நீ எழுதுகிறாய். இங்கு ஒருமை எழுவாய்கள் ஒருமை வினைகளைக் கொண்டு முடிதலோடு, படர்க்கை ஒருமை எழுவாய்க்குப் படர்க்கை ஒருமை வினைகளும், தன்மை, முன்னிலை, ஒருமை எழுவாய்களுக்குத் தன்மை முன்னிலை ஒருமை வினைகளும் வந்திருத்தலை அறிக. வீரர்கள் பொருதனர். பறவைகள் பறந்தன. நாங்கள் பாடுகிறோம். நீங்கள் ஆடுகிறீர்கள். இங்கு அவ்வாறே பன்மை எழுவாய்களுக்குப் பன்மைப் பயனிலைகள் வந்தன. மேல் எடுத்துக்காட்டியவற்றுள் பாற்பொருத்தமும் அமைந்திருத்தலை அறிக. 3. சிறப்புப் பொருத்தம் 1. உயர்திணை எழுவாயும் அஃறிணை எழுவாயும் கலந்து வரின் சிறப்புக் கருதி அவை உயர்திணைப் பயனிலையைக் கொண்டு முடியும். காட்டு: உழவனும் எருதும் வந்தனர். பாவையும் பூவையும் பாடினர். வள்ளியும் மயிலும் ஆடினர். என வரும் 2. உயர்திணை எழுவாயும் அஃறிணை எழுவாயும் கலந்து வரின், இழிவு கருதின் அஃறிணைப் பயனிலை கொண்டு முடியும். காட்டு: மூர்க்கனும் முதலையுங் கொண்டது விடா. புல்லறிவாளனும் புலியும் வாழ்ந்தன. 3. ஒருமை எழுவாய் எனினும் மரியாதை கருதிப் பன்மை வினைமுற்றுக் கொண்டு முடித்தல் மரியாதைப் பன்மை எனப்படும். காட்டு: தந்தை வந்தார். தாய் சொன்னார். பாட்டி கதை சொல்வார். என வரும், 4. சில ஒருமைப் பெயர்களை மரியாதை கருதிப் பன்மைப் பெயர்கள் போலப் பன்மை வினை கொண்டு முடித்தலுங் கொள்க. காட்டு: வள்ளுவர் குறளைச் செய்தார். கபிலர் பாரிபறம்பைப் பாடினார். காந்தியார் நமக்காக வாழ்ந்தார். ஒளவையார் அருந்தமிழ் வளர்த்தார். வள்ளுவர் முதலியன ஒருமை குறிக்கும் சொற்களே யெனினும் மரியாதையாகப் பன்மைப் பெயர் போலப் பன்மை வினை கொண்டு முடிக்கிறோம். 3. எழுத்துப் பிழைகளும் திருத்தமும் ணகர - னகர - லகர ளகர ழகர - ரகர றகரங்களின் ஓசை வேறுபாட்டைக் கவனித்துச் சரியாக உச்சரிக்காமையால் எழுதும்போது தவறுகள் உண்டாகின்றன. கீழே தரப்பட்டுள்ள சொற்கள் எழுத்து மாற்றத்தால் எங்ஙனம் பொருள் வேறுபடுகின்றன என்பதைக் கவனித்து அத்தகைய பிழைகள் நேராத வண்ணம் திருத்தம் பெறுதல் வேண்டும். ணகர னகர வேறுபாடுகள் அண்ணம் (மேல்வாய்) அன்னம் (ஒரு பறவை) உண் (உண்ணல்) உன் (உனது) மண் (நிலம்) மன் (அரசன்) மணம் (திருமணம்) மனம் (உள்ளம்) எண் (எண்ணிக்கை) என் (எனது) கணி (வேங்கை மரம்) கனி (பழம்) நாண் (கயிறு) நான் (தன்மை ஒருமைப்பெயர்) ஆணி (இருப்பாணி) ஆனி (ஒரு மாதம்) மணை (பலகை) மனை (வீடு) கண்ணி (மாலை) கன்னி (இளம் பெண்) தண் (குளிர்ச்சி) தன் (தனது) லகர ழகர ளகர வேறுபாடுகள் அலகு (பறவை மூக்கு) ஆலி (மழைத்துளி) அழகு(அணி) ஆழி (கடல்) அளகு ( சேவல்) ஆளி (சிங்கம்) அலி (பேடி) அலை (கடலலை) அழி (கெடு) அழை (கூப்பிடு) அளி (கொடு) அளை( புற்று) இலை (தழை) உலை (நீருலை) இழை (நூல்) உழை (கலைமான்) இளை (மெலி) உளை (பிடரிமயிர்) ஒலி (ஓசை) கலை (கல்வி) ஒழி (கெடு) கழை (மூங்கில்) ஒளி (வெளிச்சம்) களை (நீக்கு) கிலி (அச்சம்) தலை (நம் தலை) கிழி (துண்டு செய்) தழை (இலை) கிளி (ஒரு பறவை) தளை (கட்டு) மூலை (கோணம்) விலை (கிரயம்) மூழை (அகப்பை) விழை (விரும்பு) மூளை (நமது மூளை) விளை (உண்டாக்கு) வாலை (இளமை) வால் (நாய்வால்) வாழை (ஒரு மரம்) வாழ் (நீ வாழ்க) வாளை (ஒரு மீன்) வாள் (போர்வாள்) ரகர றகர வேறுபாடுகள் அரம் (ஒரு கருவி) அறம் (நன்னெறி) அரி (அறுத்தல்) அறி (அறிதல்) அரை (பாதி) அறை (வகுப்பறை) இரு (பெரிய) இறு (முறி) இரை (உணவு) இறை (அரசன்) உரி (தோல்) உறி (தூக்கு) உரு (வடிவு) உறு (மிக்க) எரி (நெருப்பு) எறி (வீசு) ஏரி (நீர்நிலை) ஏறி (மேலேறி) கரி (யானை) கறி (மிளகு) கரை (ஓரம்) கறை (களங்கம்) கீரி (ஒரு விலங்கு) கீறி (கோடு கிழித்து) கூரை (முகடு) கூறை (புடைவை) திரை (அலை) திறை (அரசிறை) துரை ( சிறந்தோன்) துறை (நீர்த்துறை) பரி (குதிரை) பறி (பிடுங்கு) பாரை (கடப்பாரை) பாறை (கற்பாறை) பொரி (நெற்பொரி) பொறி (யந்திரம்) மரம் (மரம்) மறம் (வீரம்) மரு (மணம்) மறு (தடு) மரை (மான்) மறை (மூடு) மாரி (மழை) மாறி (மாறுபட்டு) முருக்கு (ஒருமரம்) முறுக்கு (தின்பண்டம்) விரகு (தந்திரம்) விறகு(தீயெரிக்கும் விறகு) விரல் (கைவிரல்) விறல் (வலிமை) வேறு பிழைகள் பிழை திருத்தம் அங்கனம் அங்ஙனம் அப்பறம் அப்புறம் ஆப்பை அகப்பை இங்கனம் இங்ஙனம் எண்ணை எண்ணெய் எலை இலை எழை இழை ஒலக்கை உலக்கை சிலது சில தருசு தரிசு தெர்க்கு தெற்கு பயிர்ச்சி பயிற்சி மானவாரி வானவாரி முன்னூறு முந்நூறு வாழைத்தார் வாழைத்தாறு 4. வாக்கிய முடிவுப் பிழைகளும் திருத்தமும் எழுவாய்க் கேற்பப் பயனிலை அமையாவிடின் வாக்கியம் பிழைபட்டதாகும். எனவே, திணை, பால், எண், இடம், காலம் முதலியவற்றில் எழுவாயும் பயனிலையும் ஒத்திருக்கும் படி, வாக்கியங்களை முடிக்க வேண்டும். பிழை திருத்தம் 1. பெண் வந்தது பெண் வந்தாள் மாடு வந்தான் மாடு வந்தது திணை 2. நங்கை வந்தது நங்கை வந்தாள் அல்லி ஆடினான் அல்லி ஆடினாள் பால் 3. மயில் ஆடின மயில் ஆடினது இலைகள் உதிர்ந்தது இலைகள் உதிர்ந்தன எண் 4. நான் பேசுகிறான் நான் பேசுகிறேன் நீங்கள் வந்தார் நீங்கள் வந்தீர் இடம் அவன் போனேன் அவன் போனான் 5. இன்று வருவான் இன்று வருகிறான் நாளை வருகிறான் நானை வருவான் காலம் 5. வாக்கிய மாற்றம் ஒரு வாக்கியத்தை மற்றொரு வாக்கியமாக மாற்றுதல் வாக்கிய மாற்றம் எனப்படும். இதனால் எழுதுந் திறமை உண்டாகும். 1. அ. தனி வாக்கியத்தைத் தொடர் வாக்கியமாகவும், தொடர் வாக்கியத்தைத் தனி வாக்கியமாகவும் மாற்றுதல். ஆ. தொடர் வாக்கியத்தைக் கலவை வாக்கியமாகவும், கலவை வாக்கியத்தைத் தொடர் வாக்கியமாகவும் மாற்றுதல். இ. தனி வாக்கியங்களைக் கலவை வாக்கியமாகவும், கலவை வாக்கியத்தைத் தனி வாக்கியங்களாகவும் மாற்றுதல். காட்டு: அ. 1. தனி வாக்கியம் : பொன்னன் உடல் நலமின்றி ஓய்வெடுத்துக் கொண்டான். தொடர் வாக்கியம் : பொன்னனுக்கு உடல் நல மில்லை; ஓய்வெடுத்துக் கொண்டான். 2. தொடர் வாக்கியம் : செங்குட்டுவன் படையெடுத்துச் சென்றான்; கனகவிசயரை வென்றான். தனி வாக்கியம் : செங்குட்டுவன் படையெடுத்துச் சென்று கனகவிசயரை வென்றான். தனி வாக்கியத்தின் வினையெச்சம் வினைமுற்றாகவும், தொடர் வாக்கியத்தின் வினைமுற்று வினையெச்சமாகவும் மாற்றப்பட்டன. ஆ. தொடர் வாக்கியம் : கண்ணகி பாண்டியன் அரண்மனைக்குச் சென்றாள்; பாண்டியன் நெடுஞ் செழியனைக் கண்டாள்; அவனிடம் தன் வழக்கை உரைத்தாள்; வெற்றி பெற்றாள். கலவை வாக்கியம் : கண்ணகி பாண்டியன் அரண்மனைக்குச் சென்று, பாண்டியன் நெடுஞ்செழியனைக் கண்டு, அவனிடம் தன் வழக்கை உரைத்து வெற்றி பெற்றாள். தொடர் வாக்கியத்தின் வினை முற்றுக்கள், கலவை வாக்கியத்தில் வினையெச்சங்களாக மாற்றப்பட்டன. இவ்வெடுத்துக்காட்டினையே கலவை வாக்கியத்தைத் தொடர் வாக்கியமாக மாற்றுதலுக்குங் கொள்க. இ. தனி வாக்கியங்கள் : அதியமான் ஒளவையார்க்கு நெல்லிக்கனி கொடுத்தான். ஒளவையார் அவனைப் புகழ்ந்து பாடினார். கலவை வாக்கியம் : அதியமான் ஒளவையார்க்கு நெல்லிக்கனி கொடுத்ததனால் ஒளவையார் அவனைப் புகழ்ந்து பாடினார். இவ்வெடுத்துக்காட்டினையே கலவை வாக்கியத்தைத் தனி வாக்கியங்களாக மாற்றுதற்குங் கொள்க. 2. அ. தன்வினை வாக்கியத்தைப் பிறவினை வாக்கியமாகவும், பிறவினை வாக்கியத்தைத் தன்வினை வாக்கியமாகவும் மாற்றுதல். ஆ. செய்வினை வாக்கியத்தைச் செயப்பாட்டுவினை வாக்கியமாகவும், செயப்பாட்டு வினை வாக்கியத்தைச் செய்வினை வாக்கியமாகவும் மாற்றுதல். இ. உடன்பாட்டு வாக்கியத்தை எதிர்மறை வாக்கியமாகவும், எதிர்மறை வாக்கியத்தை உடன்பாட்டு வாக்கியமாகவும் மாற்றுதல். ஈ. நேர் கூற்று வாக்கியத்தை அயற்கூற்று வாக்கியமாகவும், அயற்கூற்று வாக்கியத்தை நேர் கூற்று வாக்கியமாகவும் மாற்றுதல். காட்டு : அ. தன்வினை வாக்கியம் : பாரி பறம்பு மலை மேல் ஒரு கோட்டை கட்டினான். பிறவினை வாக்கியம்: பாரி பறம்புமலை மேல் ஒரு கோட்டை கட்டுவித்தான். இவ்வெடுத்துக் காட்டினையே பிறவினை வாக்கியத் தைத் தன்வினை வாக்கியமாக மாற்றுதற்குங்கொள்க. மேல் வருவனவற்றுக்கும் இங்ஙனமே கொள்க. ஆ. செய்வினை வாக்கியம் : இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைச் செய்தார். செயப்பாட்டுவினை வாக்கியம் : சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் செய்யப்பட்டது. இ. உடன்பாட்டு வாக்கியம்: பாவை பாட்டுப் பாடினாள். எதிர்மறை வாக்கியம் : பாவை பாட்டுப் பாடிலள். ஈ. நேர்கூற்று வாக்கியம் : ஒளவையார், “நான் அதியமானிடமிருந்து தூது வருகிறேன்” என்று தொண்டைமானிடம் கூறினார். அயற்கூற்று வாக்கியம் : ஒளவையார் தாம் அதியமானிடமிருந்து தூது வருவதாகத் தொண்டைமானிடம் கூறினார். ஒரு வாக்கியத்தை மற்றொரு வாக்கியமாக மாற்றும் போது உண்டாகும் மாறுபாட்டினை நன்கு கவனித்துப் பார்த்து அறிந்து கொள்க. 6. நிறுத்தற் குறிகள் நாம் படிக்கும்போது பொருள் விளக்கத்தின் பொருட்டு நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்திப் படிக்க வேண்டும். அதற்காக இடப்படும் குறிகள் நிறுத்தற் குறிகள் எனப்படும். நிறுத்தற் குறிகளைப் பற்றி முன் வகுப்புக்களில் ஒருவாறு தெரிந்துள்ளீர்கள். இங்கு நன்கு தெரிந்து கொள்ளலாம். . இது முற்றுப்புள்ளி : இது முக்காற் புள்ளி ; இஃது அரைப்பள்ளி , இது காற்புள்ளி ? இது வினாக்குறி ! இஃது உணர்ச்சிக் குறி ‘’“” இவை மேற்கோட் குறிகள் -- இஃது இடைப்பிற வைப்புக் குறி () இது பிறைக்கோடு 1. முற்றுப் புள்ளி (.) வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும். இங்கு நான்கு மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும். காட்டு: பேகன் மயிலுக்குப் போர்வை ஈந்தான். மற்றும், மு. இளங்கோ, 1-72 கோட்டை, ஈரோடு. ஆகிய இடங்களிலும் முற்றுப்புள்ளி இட வேண்டும். 2. முக்காற்புள்ளி (:) ஒன்றை விளக்கிக் கூறும் தலைப்புக்கு முக்காற் புள்ளி இடவேண்டும். இங்கு மூன்று மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும். காட்டு: பேச்சாளர் பின் வருமாறு விளக்கினார்: வழூஉச் சொற்கள்: 3.அரைப்புள்ளி (;) ஒரே எழுவாய்க்குப் பல பயனிலைகள் வரின், ஒவ்வொரு பயனிலையை அடுத்தும் அரைப் புள்ளி இட வேண்டும். இங்கு இரண்டு மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும். காட்டு: பேகன் ஒரு நாள் அரண்மனைப் பூங்காவிற்குச் சென்றான்; அங்கு ஒரு மயில் குளிரால் நடுங்குவதைக் கண்டான்; தன் விலை மிக்க போர்வையை அதற்குப் போர்த்தான். 4. காற்புள்ளி (,) 1. பொருள்களை எண்ணும் போதும். 2. ஓரெழுவாய்க்குப் பல பயனிலைகள் வரும் போதும், 3. நீண்ட வாக்கியங்களில் வரும் வினை யெச்சங்களை அடுத்தும், 4. ஆனால், ஆகையால் முதலிய கூட்டிடைச் சொற்களை அடுத்தும், 5. நேர் கூற்று வாக்கியம் தொடங்குவதற்கு முன்னுள்ள சொல்லையடுத்தும், 6.எழுவாயைப் பற்றிக் கூறுமிடத்து அவ்வெழுவாயை அடுத்தும் காற்புள்ளி இடவேண்டும். இங்கு ஒரு மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும். காட்டு: 1. மெய், வாய், கண், மூக்கு, செவி, எனப்பொறிகள் ஐந்து. 2. நெடுஞ்செழியன் அரசு கட்டிலில் துஞ்சியதைக் கண்ட கோப்பெருந்தேவி அலறினாள், அழுதாள், விழுந்தாள், இறந்தாள். 3. தொல்காப்பியர், தமிழர் வாழ்க்கை முறைகளையும், பழக்க வழக்கங்களையும் ஆராய்ந்து, அவற்றை அகம், புறம் எனப் பகுத்து, தொல்காப்பியம் என்னும் பெருநூலைச் செய்து, தமிழர் நாகரிக நல்வாழ்வை நிலைபெறச் செய்தனர். 4. மானம் இழந்தபின் வாழ்வில்லை. ஆகையால், நாம் உயிரைவிட்டேனும் மானத்தைக் காக்க வேண்டும். 5. ஆசிரியர், ‘நீங்கள் நாடோறும் ஒரு குறளாவது மனப்பாடம் செய்ய வேண்டும்’ , என்று மாணவரிடம் கூறினார். 6. நரி, முடிவில் ஒரு முந்திரிக் குலையைக் கண்டது. 5. வினாக்குறி (?) வினா வாக்கியத்தின் ஈற்றில் வினாக்குறி இடவேண்டும். இங்கு நான்கு மாத்திரை நேரம் நிறுத்த வேண்டும். உணர்ச்சிக் குறிக்கும் இக்கால அளவேயாம். காட்டு: நீ நாடோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறாயா? 6. உணர்ச்சிக்குறி (!) விளி, வியப்பு, வெறுப்பு, இரக்கம் முதலிய இடங்களில் உணர்ச்சிக்குறி இட வேண்டும். காட்டு: எந்தாய்!நான் சென்று வருகிறேன். - விளி தமிழ் எவ்வளவு இனிமையான மொழி ! - வியப்பு சீச்சீ! இப்பழம் புளிக்கும் - வெறுப்பு ஐயோ பாவம்! அடிக்காதே. - இரக்கம். 7. மேற்கோட்குறி (‘’ “”) பிறர் கூற்றை எடுத்துரைக்கும்போது அப்பிறர் கூற்றுக்கும், செய்யுள், பழமொழி முதலியவற்றை எடுத்தாளும் போதும் மேற்கோட் குறியிட வேண்டும். காட்டு: பேச்சாளர் கூட்டத்தினரைப் பார்த்து, “என்னருமைத் தமிழ் மக்களே! வள்ளுவர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனக் கூறியுள்ளார். ஆகையால், நீங்கள் குலவேற்றுமை பாராட்டாதீர்கள்!’’ என்று கூறினார். இங்கே, “என்னருமைத் தமிழ்மக்களே.... பாராட்டாதீர்கள்!” என்னும் நேர் கூற்றின் இடையே வரும், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது மற்றொரு நேர் கூற்று. அவ்வாறு வருவதற்கு ஒற்றை மேற்கோட்குறியிடுதல் வேண்டும். “ஓதுவ தொழியேல்” என்றார் ஒளவையார். கற்றறிந்தவர்கள் அடக்கமாக இருப்பர். ‘நிறைகுடம் நீர் தளும்பாது’ என்பது பழமொழி. 8. இடைப்பிற வைப்புக்குறி ( - -) ஏதாவதொன்றற்கு விளக்கந் தரும்போது, அவ்விளக்கத்தைச் சிறு கோடுகளுக்கிடையே எழுதவேண்டும். காட்டு: தமிழகத்தைத் தொன்றுதொட்டு முடியுடை மூவேந்தர் - சேர சோழ பாண்டியர் - ஆண்டு வந்தனர். இத்தகைய விளக்கங்களைப் பிறைக்கோட்டுக்குள் () எழுதுதலும் உண்டு. 9. பிறைக்கோடு ( ) காட்டு : உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - மனமறிய (ஒருவன்) பொய் பேசாது இருப்பானானால், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - (அவன்) உலகத்தார் எல்லாருடைய மனத்திலும் இருப்பான். பயிற்சி 1. வாக்கியம் என்பது யாது? வாக்கியம் எத்தனை வகைப் படும்? 2. தனி வாக்கியம், தொடர் வாக்கியம் , கலவை வாக்கியம் - இவற்றை விளக்கிக் கூறுக. 3. வாக்கியப் பொருத்தம் என்பது யாது? 4. திணைப் பொருத்தம் - விளக்கந் தருக? 5. எழுத்துப் பிழைகள் என்பன யாவை? 6. வாக்கிய மாற்றம் என்பது என்ன? 7. தனி வாக்கியத்தைத் தொடர் வாக்கியமாகவும் தொடர் வாக்கியத்தைக் கலவை வாக்கியமாகவும் எடுத்துக் காட்டுத் தந்து மாற்றுக. 8. தன்வினை வாக்கியத்தைப் பிறவினை வாக்கிய மாகவும் செய்வினை வாக்கியத்தைச் செயப்பாட்டு வினை வாக்கியமாகவும் மாற்றுக. 9. கீழ்வரும் வாக்கியங்களை இன்ன வாக்கியங்கள் என்று கூறுக: 1. ஆசிரியர் பாடம் கற்பித்தார். 2. தொல்காப்பியம் தொல்காப்பியரால் செய்யப்பட்டது. 3. முருகன் விளையாடிலன். 10. எதற்காக நிறுத்தற் குறிகள் இட வேண்டும்? 11. உணர்ச்சிக்குறி இடும் இடங்கள் யாவை? 12. அரைப்புள்ளி, காற்புள்ளி - இவற்றை எங்கு இட வேண்டும்? 13. உங்கள் உரைநடைப் பாடங்களில் இக்குறிகள் வரும் இடங்களைக் கவனித்துப் படியுங்கள். 7. வல்லெழுத்து மிகும் இடங்களும் மிகா இடங்களும் மொழிக்கு முதலில் வரும் வல்லெழுத்துக்கள் கசதப என்பன. இவற்றைச் சுருக்கமாக வலி எனல் மரபு. மிகுதல் - தோன்றுதல், இரட்டித்தல். 1. வலிமிகும் இடங்கள் 1. எ + பொழுது - எப்பொழுது அ + கடை - அக்கடை இ + சாலை - இச்சாலை உ + தடம் - உத்தடம் என எகரவினா முச்சுட்டின் முன் வலிமிகும். 2. அந்த + காடு - அந்தக் காடு இந்த + சட்டி - இந்தச் சட்டி எந்த + பெட்டி - எந்தப் பெட்டி என அந்த, இந்த என்னும் சுட்டிடைச் சொற்களின் முன்னும், எந்த என்னும் வினாஇடைச் சொல்லின் முன்னும் வலி மிகும். 3. அப்படி + குதித்தான் - அப்படிக் குதித்தான் இப்படி + செய்தான் - இப்படிச் செய்தான் எப்படி + திரித்தான் - எப்படித் திரித்தான் என அப்படி, இப்படி, எப்படி என்னும் சுட்டு, வினா வடியாகப் பிறந்த சொற்களின் முன் வலி மிகும். 4. அங்கு + கண்டேன் - அங்குக் கண்டேன் இங்கு + சென்றான் - இங்குச் சென்றான். ஆங்கு + போனான் - ஆங்குப் போனான். ஈங்கு + தேடினான் - ஈங்குத் தேடினான் ஆண்டு + சென்றான் - ஆண்டுச் சென்றான். ஈண்டு + சென்றான் - ஈண்டுச் சென்றான். என அங்கு முதலிய சொற்களின் முன் வலி மிகும். எங்கு, யாங்கு, யாண்டு என்னும் சொற்களின் முன்னும் வலி மிகும். 5. அவ்வகை + கொடி - அவ்வகைக் கொடி இவ்வகை + செடி - இவ்வகைச் செடி எவ்வகை + பொருள் - எவ்வகைப் பொருள் என அவ்வகை முதலிய சொற்களின் முன் வலி மிகும். 6. வேழ + பூ - வேழப்பூ பலா + சுளை - பலாச்சுளை நரி + குட்டி - நரிக்குட்டி தீ + சுடர் - தீச்சுடர் புது + குடம் - புதுக்குடம் பூ + செடி - பூச்செடி மலை + கோட்டை - மலைக்கோட்டை என அகர முதலிய உயிர்களின் முன் வலி மிகும். 7. ஓட + கண்டேன் - ஓடக்கண்டேன் தேட + சென்றான் - தேடச் சென்றான் பாட + தொடங்கினான் - பாடத் தொடங்கினான் பொள்ளென + பறந்தது - பொள்ளெனப் பறந்தது நன்றாக + பேசினான் - நன்றாகப் பேசினான் என அகரவீற்று வினையெச்சங்களின் முன் வலி மிகும். 8. கூடி + கொண்டார் - கூடிக் கொண்டார். தேடி + சென்றான் - தேடிச் சென்றான் ஓடி + தொட்டான் - ஓடித் தொட்டான். பாடி + பழகினான் - பாடிப் பழகினான் அஃதன்றி + காணேன் - அஃதன்றிக் காணேன் அன்பின்றி + செய்தான் - அன்பின்றிச்செய்தான் என இகர வீற்று வினையெச்சத்தின் முன் வலி மிகும். 9. போய் + காண் - போய்க் காண் நல்லதாய் + செய் - நல்லதாய்ச் செய் என யகர வீற்று வினையெச்சங்களின் முன் வலி மிகும். 10. தீமை + குணம் - தீமைக் குணம் வெள்ளை + சட்டை - வெள்ளைச் சட்டை காவி + துணி - காவித் துணி பச்சை + பாம்பு - பச்சைப் பாம்பு எனப் பண்புத்தொகையில் வலி மிகும். 11. வேழ + கரும்பு - வேழக் கரும்பு துத்தி + செடி - துத்திச் செடி ஆடி + திங்கள் - ஆடித் திங்கள் சாரை + பாம்பு - சாரைப் பாம்பு என இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வலி மிகும். 12. குவளை + கண் - குவளைக் கண் முல்லை + பல் - முல்லைப் பல் என உவமைத் தொகையில் வலி மிகும். 13. இனி + செய்யேன் - இனிச் செய்யேன் மற்றை + திசை - மற்றைத் திசை என இடைச் சொல் முன் வலி மிகும். 14. சால + தின்றான் - சாலத் தின்றான். தவ + பெரியன் - தவப் பெரியன் என உரிச்செல் முன் வலி மிகும். 15. தோலை + சீவினான் - தோலைச் சீவினான் எனக்கு + தந்தான் - எனக்குத் தந்தான் என இரண்டாம், நான்காம் வேற்றுமையுருபுகளின் முன் வலி மிகும். 16. காப்பு + கை - காப்புக் கை பருப்பு + சட்டி - பருப்புச் சட்டி பட்டு + துணி - பட்டுத் துணி பத்து + பாட்டு - பத்துப் பாட்டு என வன்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வலி மிகும். 17. நாய் + குட்டி - நாய்க் குட்டி வேர் + கடலை - வேர்க் கடலை யாழ் + தண்டு - யாழ்த் தண்டு என யரழ மெய்களின் முன் வலி மிகும். 2. வலி மிகா இடங்கள் 1. அது + குறிது - அது குறிது இது + சிறிது - இது சிறிது எது + பெரிது - எது பெரிது என அது, இது, எது என்னும் சுட்டு வினாப்பெயர்களின் முன் வலி மிகாது. 2. யாது + செய்வேன் - யாது செய்வேன் என யாது, எது, அவை, இவை, எவை, யாவை, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்பவற்றின் முன்னும் வலிமிகாது. ஏற்ற சொற்களைச் சேர்த்துப் படிக்க. 3. அவனா + கொண்டான் - அவனா கொண்டான். இவனோ + செய்தான் - இவனோ செய்தான் அவனே + பறித்தான் - அவனே பறித்தான் என, ஆ,ஓ, ஏ, என்னும் வினாவெழுத்துக்களின் முன் வலி மிகாது. 4. கனி + தின்றான் - கனி தின்றான் உளி + செதுக்கினான் - உளி செதுக்கினான் என இரண்டாம், மூன்றாம் வேற்றுமைத்தொகைகளில் வலி மிகாது. 5. அவனொடு + சென்றான் - அவனொடு சென்றான் இவனோடு + போனான் - இவனோடு போனான் எனது + கை - எனது கை என்னுடைய + தலை - என்னுடைய தலை என, ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமை உருபுகளின் முன்னும், அது, உடைய என்னும் ஆறாம் வேற்றுமை உருபுகளின் முன்னும் வலிமிகாது. 6. பன்றி + சிறிது - பன்றி சிறிது யானை + பெரிது - யானை பெரிது என எழுவாய்த் தொடரில் வலி மிகாது 7. முருகா + கொள் - முருகா கொள் தம்பீ + செல் - தம்பீ செல் என விளிப்பெயர் முன் வலி மிகாது. 8. பறந்தது + பறவை - பறந்தது பறவை ஓடின + குதிரைகள் - ஓடின குதிரைகள் என வினைமுற்றுத் தொடரில் வலி மிகாது. 9. உண்ட + கலம் - உண்ட கலம் உண்கின்ற + பையன் - உண்கின்ற பையன் நல்ல + பெண் - நல்ல பெண் உண்ணாத + பையன் - உண்ணாத பையன் எனப் பெயரெச்சத் தொடரில் வலி மிகாது. 10. உண்டு + சென்றான் - உண்டு சென்றான் வந்து + போனான் - வந்து போனான் உண்ணிய + சென்றான் - உண்ணிய சென்றான் உண்ணாது + சென்றான் - உண்ணாது சென்றான். என வினையெச்சத் தொடரில் வலி மிகாது. 11. பிடி + கொற்றா - பிடி கொற்றா பாடு + சாத்தா - பாடு சாத்தா என ஏவலின் முன் வலி மிகாது. 12. ஒரு + கை - ஒரு கை இரு + தொடி - இரு தொடி நான்கு + பணம் - நான்கு பணம் ஏழு + படி - ஏழு படி என எண்ணுப் பெயர்களின் முன் வலி மிகாது. 13. அடு + கலம் - அடுகலம் சுடு + சோறு - சுடுசோறு விடு + தாள் - விடுதாள் உடை + குளம் - உடைகுளம் என வினைத் தொகையில் வலி மிகாது. 14. மாடு + கன்று - மாடு கன்று மார்கழி + தை - மார்கழி தை வெற்றிலை + பாக்கு - வெற்றிலை பாக்கு என உம்மைத் தொகையில் வலி மிகாது. 15. பல + கடை - பல கடை சில + பொருள் - சில பொருள் அம்ம + கொற்றா - அம்ம கொற்றா எனப் பல, சில , அம்ம என்னும் சொற்களின் முன் வலி மிகாது. 16. நாடு + கொடுத்தான் - நாடு கொடுத்தான் விறகு + சுமந்தான் - விறகு சுமந்தான் பந்து + தைத்தான் - பந்து தைத்தான் போழ்து + போக்கினான் - போழ்து போக்கினான் எஃகு + பிடித்தான் - எஃகு பிடித்தான் என வன்றொடரல்லாத மற்றைக் குற்றியலுகரங்களின் முன் வலி மிகாது. 17. பாய் + பின்னினான் - பாய் பின்னினான் மார் + தட்டினான் - மார் தட்டினான் தமிழ் + படித்தான் - தமிழ் படித்தான் என யரழ மெய்யின் முன் வலி மிகாது. 18. நனி + தின்றான் - நனி தின்றான் கடி + கா - கடி கா என உரிச்சொற்களின் முன் வலி மிகாது. பயிற்சி 1. வலிமிகும் இடங்களையும் மிகா இடங்களையும் தனித்தனி வரிசையாக எழுதுங்கள். 2. உங்கள் செய்யுள், உரைநடைப் பாடங்களில் வலி மிகும், மிகா இடங்களைக் கண்டறியுங்கள். 8. பத்தியமைத்தல் உங்கள் பாடநூலில் உரைநடைப் பாடங்கள் ஒவ்வொன்றும் பல பகுதிகளாகப் பிரித்து அச்சிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியும் பத்தி எனப்படும். ஒவ்வொரு வகையான கருத்துக்களை ஒவ்வொரு தனிப்பத்தியாக எழுத வேண்டும். அவ்வாறு பத்திபத்தியாகப் பிரித்து எழுதுதல் கருத்துக்களை வகைப்படுத்தி அறிந்து கொள்ள எளிதாக இருக்கும். காட்டு: உலகம் நீரும் நிலமுமாக இரு கூறுபட அமைந்துள்ளது. நீர்ப்பகுதி கடல் எனப்படும். நிலவுலகம் பல பகுதிகளாகப் பாகுபட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் நாடு எனப்படும். உலகில் பல நாடுகள் உள்ளன. அவற்றுள் நமது தாயகமான தமிழகமும் ஒன்றாகும். உலக நாடுகளில் முதன்மையும் மேம்பாடும் உடையது தமிழ்நாடு. மக்களின் நாகரிக நல்வாழ்வுக்கேற்ற தட்பவெப்பமும் பல வகை வளமும் உடையது தமிழ் நாடு. தமிழ் மொழி பேசும் தமிழர்கள் வாழ்வதால் இந்நாடு தமிழ் நாடு எனப் பெயர் பெற்றது. பழந்தமிழ் மக்கள் மிக்க தாய்மொழிப் பற்றும், தாய்நாட்டுப் பற்றும் உடையவர்களாய்த் திகழ்ந்தனர். தமிழகத்தில் என்று ஆட்சி முறை ஏற்பட்டதோ அன்று தொட்டுத் தமிழகம் சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர்களால் முறை திறம்பாது ஆளப்பட்டு வந்தது. அதனால், பழந்தமிழகம் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என முப்பெரும் பிரிவாகப் பிரிந்திருந்தது. இதில் வெவ்வேறு வகையான கருத்துக்கள் அமைந்துள்ளன. அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்ளுதல் எளிதாக இல்லை. இதைக் கருத்துக்களின் வகைக் கேற்பப் பத்தி பத்தியாகப் பிரித்தெழுதலாம். 1. உலகம் நீரும் நிலமுமாக இரு கூறுபட அமைந்துள்ளது. நீர்ப்பகுதி கடல் எனப்படும். நிலவுலகம் பல பகுதிகளாகப் பாகுபட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் நாடு எனப்படும். உலகில் பல நாடுகள் உள்ளன. அவற்றுள் நமது தாயகமான தமிழகமும் ஒன்றாகும். 2. உலகநாடுகளில் முதன்மையும் மேம்பாடும் உடையது தமிழ்நாடு. மக்களின் நாகரிக நல்வாழ்வுக்கேற்ற தட்பவெப்பமும் பலவகை வளமும் உடையது தமிழ்நாடு. தமிழ் மொழி பேசும் தமிழர்கள் வாழ்வதால் இந்நாடு தமிழ்நாடு எனப்பெயர் பெற்றது. பழந்தமிழ் மக்கள் மிக்க தாய்மொழிப் பற்றும் தாய் நாட்டுப் பற்றும் உடையவர்களாய்த் திகழ்ந்தனர். 3. தமிழகத்தில் என்று ஆட்சிமுறை ஏற்பட்டதோ அன்று தொட்டுத் தமிழகம் சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர்களால் முறை திறம்பாது ஆளப்பட்டு வந்தது. அதனால் பழந்தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டியநாடு, என முப்பெரும் பிரிவாகப் பிரிந்திருந்தது. இப்போது கருத்துக்களின் வகை எளிதில் விளங்குகிறதல்லவா! 3. கட்டுரைப் பகுதி பள்ளிப் பருவத்திலேயே நீங்கள் கல்வியறிவோடு எழுத்து வன்மையும் பெறுதல் வேண்டும். இது பற்றியே உங்கள் பாடத்திட்டத்தில் கட்டுரைப் பயிற்சி சேர்க்கப்பட்டுள்ளது. கட்டுரையில் அதன் அமைப்பு, பொருள் விளக்கம், நடை இவை கவனிக்கப்பட வேண்டும். அமைப்பு : 1. முன்னுரை, 2. செய்தி, 3. முடிவுரை என்பன கட்டுரையின் உறுப்புக்களாகும். இவ்வுறுப்புக் களையுடையதே கட்டுரை எனப்படும். அவற்றுள். முன்னுரை : கட்டுரைச் செய்தியின் தலைப்பு வருமாறு, அச்செய்தியின் தொடர்பான கருத்துக்களையுடையது. செய்தி: கட்டுரைத் தலைப்பின் பொருள். முடிவுரை: செய்தியின் கருத்தைச் சுருக்கி வரைதல். செய்தியைக் கருத்துக்களின் வகைக் கேற்றவாறு பல பகுதிகளாகப் பகுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பகுத்துக் குறிப்பு எழுதி, அக்குறிப்புக்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பத்தியாக எழுத வேண்டும். நல்ல கையெழுத்தில் சொல்லுக்குச் சொல் இடம் விட்டு, இரண்டு பக்கங்களுக்குள் எழுத வேண்டும். எழுத்துப்பிழை, இலக்கணப் பிழை, சந்திப் பிழை முதலியன இன்றி, நிறுத்தற்குறிகளையும், தமிழ்ச் சொற்றொடர், மரபுத்தொடர், உவமைகள், பழமொழிகள் ஆகியவற்றையும் பயன்படுத்திப் பொருள் விளக்கத்துடன் சிறு சிறு வாக்கியங்களாக, நல்ல தமிழ்நடையில் எழுத வேண்டும். இங்குக் காட்டப்பட்டுள்ள கட்டுரைகளை நன்கு கவனித்துப் படித்து நல்ல கட்டுரைகளை எழுதிப் பழகுங்கள் ; சிறந்த எழுத்தாளராகலாம். 1. வருணனைக் கட்டுரை எடுத்துக்கொண்ட பொருளைச் சிறப்பித்து வருணித்து எழுதுதல் வருணனைக் கட்டுரை எனப்படும். காவிரியாறு குறிப்பு : 1. முன்னுரை, 2. தோற்றம், 3. பெருக்கம்,4. பயன்பாடு,5. பெருமை, 6. முடிவுரை. முன்னுரை: ஒரு நாட்டின் சிறப்புக்குக் காரணம் அந்நாட்டின் உழவுத் தொழிலின் சிறப்பேயாகும். உழவுத் தொழிலில் மேம்பாடுடையது நம் நாடு. உழவுத் தொழில் நன்கு நடைபெற நீர்வளம் தேவை. நீர்வளத்திற்கு நாட்டில் பெரிய ஆறுகள் பல அமைந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டின் வளத்திற்குக் காரணமான பேராறுகளுள் காவிரியாறு முதன்மையுடையதாகும். தோற்றம்: ஆறுகளெல்லாம் மலைகளிலிருந்தே தோன்றி வருகின்றன. ஆறுகளின் பிறப்பிடம் மலையேயாகும். மலையே ஆற்றின் நற்றாய் எனலாம். மலையில் மிகுதியாக மழை பெய்கிறது. மாரிக்காலத்தே பெய்த மழை நீரை மலை தன் வயிற்றகத்தே வைத்திருந்து கோடைக்காலத்தே வெளிவிடுகிறது. இஃதே பேராறுகள் எப்போதும் வற்றாமல் ஓடுதற்குக் காரணமாகும். தமிழ்நாட்டின் வளத்திற்குக் காரணமான காவிரியாறு மேற்கு மலைத்தொடரில் தோன்றுகிறது. அம்மலைப் பகுதி குடகு நாட்டில் அமைந்துள்ளது. காவிரிப் பாவை மேற்கு மலை மிசைப் பிறந்து, அம்மலைச் சரிவில் தவழ்ந்து, மலையடி வாரத்தில் நடந்து, நிலமிசையோடியாடி வளர்ந்து மக்களை மகிழ்வித்து முடிவில் குணகடலிடைக் குளிக்கின்றனள். பெருக்கம்: ஆடி முதல் குடகுமலை நாட்டில் நல்ல மழை பெய்யும்; மைசூர் நாட்டு மலைப் பகுதியிலும் நல்ல மழை பெய்யும். எனவே, ஆடி முதல் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு செல்லும். ‘ஆடிப் பெருக்கு’ என்று இது சிறப்பித்துக் கூறப்படுகிறது. மைசூர் நாட்டில் சில சிற்றாறுகள் காவிரியுடன் கலக்கின்றன. பவானி, நொய்யல், அமராவதி ஆகிய கொங்கு நாட்டு ஆறுகளும் காவிரியுடன் கலக்கின்றன. எனவே, காவிரி ஒருபேராறாகப் பெருகிச் செல்கிறது. ‘மாற்றாத காவேரி’ ‘தண்ணீருங் காவிரியே’ எனக் கம்பர் இதன் வற்றாத வளநீர்ப் பெருக்கைச் சிறப்பித்துள்ளார். பயன்பாடு: காவிரியாறு முதலில் மைசூர் நாட்டின் வழியாகத் தமிழ் நாட்டினுள் நுழைகிறது. நுழைந்து, சேலம், கோவை மாவட்டங்களுக்கிடையே தெற்கு நோக்கி ஓடிப் பின்னர்த் தென்கிழக்கு முகமாகத் திருச்சி மாவட்டத்திற்குட் புகுந்து அதனை வளஞ் செய்து கொண்டு, தஞ்சை மாவட்டத்தையடைந்து அதனையும் வளஞ்செய்து கொண்டு, மறைந்த பூம்புகாரிடைக் கடலில் கலக்கிறது. ‘சோழவள நாடு சோறுடைத்து’ என்னும் பெருமைக்குக் காவிரியாறே காரணமாகும். தமிழ் நாட்டில் மேட்டூரணை, மேலணை, கல்லணை எனக் காவிரியாற்றில் மூன்று பேரணைகள் உள்ளன. மற்றும் பல சிற்றணைகளும் உள்ளன. மேட்டூரணையின் மேல்கரை வாய்க்கால், கீழ்க்கரை வாய்க்கால், மற்றும் இராச வாய்க்கால், ஊஞ்சலூர் வாய்க்கால், புகலூர் வாய்க்கால் முதலிய பற்பல வாய்க்கால்களின் வழியாய்க் காவிரியாறு தமிழ் நாட்டை வளஞ்செய்கிறது. பெருமை: காவிரியின் பெரும் பயன்பாட்டினைக் கண்ட பழந் தமிழ்ப் புலவர்கள், இதனைப் பலபடப் புனைந்து பாராட்டியுள்ளனர். ‘கோடாச் செங்கோற் சோழர் தங் குலக்கொடி, கோள் நிலை திரிந்து கோடை நீடினும் தானிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை’ என்பது, மணிமேகலை ஆசிரியரின் வாயுரை. சிலப்பதிகார ஆசிரியர், ‘ஆற்றுவரி’ என்னும் பெயரில் இதன் பெருமையை இனிது பாராட்டியுள்ளார். ‘காவிரி புரக்கும் நாடு கிழவோனே’ என்பது ஒரு சங்கப்புலவர் பாராட்டுரை.‘புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி’ என்பது, காவிரியைப் பழந்தமிழ்ப் புலவர்கள் பாராட்டிய பெருமைக்குச் சான்று பகரும். முடிவுரை: ஒரு நாட்டின் வளத்திற்குப் பேராறுகளே காரணமாகும். தமிழ்நாட்டின் வளத்திற்குக் காவிரியாறே காரணமாக உள்ளது. காவிரியாறு மேற்கு மலைத்தொடரில் தோன்றித் தமிழ் நாட்டை வளஞ் செய்து குணகடலில் கலக்கிறது. காவிரி ஒரு வற்றாத பேராறு. புலவர்களால் புகழ்ந்து பாடப்பெற்ற பெருமையுடையது. - இவ்வாறே மலை, கடல், நாடு, காடு, மாலைக்காலம், ஞாயிறு, திங்கள் முதலிய இயற்கைப் பொருள்களையும், பெருநகர், பொருட்காட்சி, தொழிற்சாலை, அணைக்கட்டு முதலிய செயற்கைப் பொருள்களையும் வருணித்துக் கட்டுரை எழுதிப் பழகுங்கள். 2. விளக்கக் கட்டுரை எடுத்துக்கொண்ட பொருளை விளக்கி எழுதுதல் விளக்கக் கட்டுரை எனப்படும். நட்பு குறிப்பு : 1. முன்னுரை, 2. நட்பின் காரணம், 3. நல்லார் நட்பு, 4. பொல்லார் நட்பு, 5. நட்பின் தன்மை. 6. முடிவுரை முன்னுரை: மக்கள் வாழ்க்கை முறையை அகம், புறம் எனப் பகுத்துக் கூறுகின்றன பழந்தமிழ் இலக்கிய நூல்கள். அவ்விலக்கியங்கண்டு இலக்கணம் செய்துள்ளார் தொல்காப்பியர் என்னும் பழந்தமிழ்ப் பெரியார். அவ்வகப் பொருளையும் புறப் பொருளையுமே அறம், பொருள், இன்பம் என வகுத்துக் கூறுகிறார், திருவள்ளுவர். திருக்குறள் அறத்துப்பாலில் அன்புடைமை, இன்சொல், பொறையுடைமை முதலிய ஒழுக்கங்களும், பொருட்பாலில் நட்பு, பண்புடைமை, நாணுடைமை முதலிய ஒழுக்கங்களும் கூறப்படுகின்றன. அவற்றுள் ‘நட்பு’ என்னும் ஒழுக்கத்தைப் பற்றி ஈங்குக் காண்போம். நட்பின் காரணம்: நட்பு என்பது இருவர் உளங்கலந்து ஒன்றுபட்டு வாழ்வது. எந்நிலையில் உள்ள ஒருவரும் நண்பர்கள் துணையின்றித் தனித்து வாழ முடியாது. இருவர் நட்புக் கொள்வதற்கு வள்ளுவர் மூன்று காரணம் கூறுகிறார். ஒன்று, இருவரும் ஓரூரினர் அல்லது பக்கத்து ஊரினர் ஆதல். இரண்டாவது காரணம், பல கால் இருவரும் கண்டு பழகுதல். அதாவது, ஏதாவது அலுவலின் பொருட்டு அடிக்கடி வெளியூர் செல்வோர் அங்கு உள்ளோரிடம் பழகி நட்புக் கொள்ளுதல். மூன்றாவது காரணம், உணர்ச்சி ஒன்றுதலாகும். அதாவது, இருவரும் ஒருவரையொருவர் நேரில் கண்டு பழகாதிருந்தும், ஒருவர் குணச்சிறப்பினைப் பிறர் வாயிலாய் அறிந்து, இருவர் குணமும் ஒத்திருக்கின் ஒருவரையொருவர் நட்புக் கொள்ளுதல். கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையார் என்னும் புலவரும் கொண்ட இத்தகைய நட்பைப் பற்றிப் புறநானூறு கூறுகிறது. நல்லார் நட்பு : நல்ல குணமுடைய மான் வாழுங்காட்டில் கொலை வெறிகொண்ட பொல்லாப் புலியும் வாழ்தல் போல், மக்களிடையும் நல்லாரும் பொல்லாரும் இருத்தல் இயல்பே, நாம் நல்லாருடனேயே நட்புக் கொள்ளுதல் வேண்டும். நல்லவர் நட்பு உவாவுக்குப் பின் பிறை ஒவ்வொரு நாளும் வளர்வது போல வளர்ந்து கொண்டே வரும். நல்லார் நட்பானது கரும்பை நுனியிலிருந்து தின்பது போலப் போகப் போக இன்பந்தரும். நல்லாருடன் ஒரு நாட் பழகினும் அவர் நட்பு, நிலத்தைப் பிளந்து கொண்டு சென்று மரத்தை நிலை பெறச் செய்யும் வேர் போல நிலைபெறும். எனவே, நல்லார் இருவர் கொண்ட நட்பு அன்னார் பொன்றுந்துணையும் பொன்றாத் துணையாக நின்று நிலவும். பொல்லார் நட்பு: பொல்லாரிடம் கொண்ட நட்பு இதற்கு நேர்மாறானது. முழுமதி ஒவ்வொரு நாளும் தேய்ந்து கொண்டே வந்து முடிவில் மறைந்து விடுதல் போல, பொல்லார் நட்பும் நாளுக்கு நாட் குறைந்து கொண்டே வந்து முடிவில் நீங்கிவிடும். தீயோர் நட்பானது கரும்பை அடியிலிருந்து தின்பது போல, முதலில் இன்பந்தந்து போகப்போக உவர்த்துப் பின் அஃதும் இன்றாகும். மூடரிடம் பல ஆண்டுகள் பழகினாலும் அவர் நட்பு நீர்ப்பாசிபோல் நிலைபெறாது நீங்கிவிடும். ஆகை யால், நாம் பொல்லாரிடம் நட்புக் கொள்ளக் கூடாது. ‘ஏதாவது கொடுத்தேனும் பேதையார் நட்பை நீக்கி விடுக,’ என்கின்றார் வள்ளுவர். நட்பின் தன்மை: ஒருவர்க்கொருவர் உறுதுணையாகக் கொள்வதே நட்பாகும். நாம் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது நமது உடை அவிழ்ந்தால் உடனே நம் கைகள் தாமாகவே சென்று அவ்வுடையை உடுத்து மானங்காப்பது போல, நண்பர்க்கு ஏதாவது இடையூறு நேர்ந்தால், அவர் ‘உதவுக’ என்று கேளாமலே தானாகவே சென்று உதவுவதே சிறந்த நட்பாகும். நமது கை அறியாது நம் கண்ணைக் குத்திவிட்டால் அக்கையை வெட்டி எறிவது இல்லை. அதுபோல, நண்பர்கள் அறியாது செய்த தவற்றைப் பொறுத்துக் கொண்டு அவர் நட்பை விடாமல் இருப்பதே நட்பின் தன்மையாகும். முடிவுரை: நட்பிற்குரிய மூன்று காரணங்களுள் உணர்ச்சி ஒன்றும் நட்பே முதன்மையானதாம். நாம் நல்லாருடனேயே நட்புக் கொள்ள வேண்டும். எக்காரணங் கொண்டும் தீயாருடன் நட்புக் கொள்ளக்கூடாது. நண்பர்கள் அறியாது செய்த தவற்றைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். உற்றவிடத் துதவுவதே நட்பின் தன்மை என்பதை உணரவேண்டும். -இவ்வாறே அடக்கம், பொறை, இன்சொல், விருந்தோம்பல் முதலியன பற்றி விளக்கிக் கட்டுரை எழுதிப் பழகுகங்கள். 3. எடுத்தியம்பும் கட்டுரை ஏதாவது ஒரு பொருளை எடுத்து அதைப்பற்றி எழுதுதல் எடுத்தியம்பும் கட்டுரை எனப்படும். பேகன் - கதை குறிப்பு : 1. முன்னுரை, 2. நாடும் ஊரும், 3. குடிமரபு, 4. கொடைக் குணம், 5. மயிலுக்குப் போர்வை கொடுத்தல், 6. முடிவுரை. முன்னுரை: ‘ஏற்பது இகழ்ச்சி’ எனினும், ஒரு சிலர் இரக்கும் நிலையில் இருப்பதும் இயல்பேயாகும். அத்தகை ‘இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே இரப்போர்க்கு ஈவதும் உடையோர் கடனே’ என்றபடி, இல்லோர்க்கு ஈவது உள்ளோரின் கடமையாகும். உலகில் எங்கும் இல்லோர் நிலைக்கு இரங்கி ஈயும் கொடைக்குணம் உள்ள செல்வர்கள் உண்டு. ஆனால், கொடைமடம் பட்ட செல்வர்களைப் பெற்றெடுத்த பெருமை தமிழகத்திற்கே உரிய ஒரு தனிப் பெருமையாகும். வரையாது கொடுத்து வள்ளல்கள் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற செல்வர்கள் பலர் சங்ககாலத் தமிழகத்தே இருந்து வந்தனர். அவர்களுள் பேகன் என்பவன் ஒருவனாவான். நாடும் ஊரும்: சேலம், கோவை, நீலகிரி மாவட்டங்களும், பழனி, திண்டுக்கல், கரூர், குளித்தலை வட்டங்களும் கொங்கு நாடு எனப்படும். கொங்கு நாடு இருபத்து நான்கு உள் நாடுகளை உடையதாகும். அவற்றுள் வையாபுரிநாடு என்பது ஒன்று. பழனியும் அதைச் சூழ்ந்த பகுதியும் வையாபுரி நாடு ஆகும். இது வைகாவூர் நாடு எனவும் வழங்கும். இந்நாட்டின் தலைநகர் பழனி. குடிமரபு: இவ் வையாபுரி நாட்டை முன்னர் ஆவியர் குடியினர் ஆண்டு வந்தனர். ஆவி என்பவன் அக்குடி முதல்வனாவான். அதனால் பழனிக்கு ஆவிநன்குடி என்னும் பெயரும் வழங்கலானது. ‘ஆவி நன்குடி அசைதலும் உரியன்’ என்பது திருமுருகாற்றுப்படை. ‘ஆவி நன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே’ என்பது அருணகிரிநாதர் திருப்புகழ். இம்மரபினர் வையாவி, வேளாவி எனத் தம் குடி முதல்வன் பெயரைத் தம் பெயர் முன் வைத்துக் கொள்வது வழக்கம். இம்மரபில் வந்தவனே பேகன் என்பவன். வையாவிக் கோப்பெரும் பேகன் என்பது பேகனின் முழுப்பெயர். கொடைக்குணம்: தன்னிடம் வந்து இல்லையென்று இரப்போர்க்கு இல்லை என்னாது கொடுத்தல் கொடைக் குணம் எனப்படும். இதுவே வரையாது கொடுத் தல் என்பதாகும். ஆனால், பேகனது கொடைக்குணம் இவ்வளவிற்பட்டு நிற்கவில்லை. கொடைமடம் பட்டவன் பேகன். ஈயென இரவாமலே கொடுக்கும் அத்தகு பெருங் கொடையாளன் பேகன். புலவர் பெருமக்கள் போற்றிப் புகழ்ந்த பேகனது பெருங்கொடை ஒன்றைக் கேட்கின் நீங்கள் வியப்புறுவீர்கள். ஆம், வியக்கத்தக்க அத்தகு கொடை வள்ளல்தான் பேகன். மயிலுக்குப் போர்வை கொடுத்தல்: பேகன் ஒரு நாள் அரண்மனைப் பூங்காவில் உலாவி வந்தான்; பூங்காவின் இயற்கை எழிலைக் கண்டு களித்தான். அது கார்காலம். குளிர்காற்று வீசியது. துளியும் துளித்தது. அங்கு ஒரு மயில் நின்றது. பேகன் அம்மயிலைக் கண்டான்; தனக்குக் குளிர்வது போல அம்மயிலுக்கும் குளிரும் என்று எண்ணினான்; அதன் பால் இரக்கங்கொண்டான். உடனே தான் போர்த்திருந்த விலையுயர்ந்த போர்வையை எடுத்து அம்மயிலுக்குப் போர்த்தினான். பேகனது இச்செயற்கருஞ்செயலை. “உடாஅ போராஅ ஆகுதல் அறிந்தும் படாஅம் மஞ்ஞைக் கீந்த எங்கோ கடாஅ யானைக் கலிமான் பேகன்” எனப் பரணர் என்னும் புலவர் பெருமான் மனமாரப் பாராட்டினார். முடிவுரை: பார்த்தீர்களா பேகனது கொடைத்திறத்தை! தனக்குக் குளிர்வது போலவே அம்மயிலுக்கும் குளிரும். அஃது அக்குளிரை எப்படிப் பொறுக்கும்? பாவம். என இரக்கங்கொண்டு தன் போர்வையை அதற்குப் போர்த்த பேகனது அருளுள்ளத்தை என்னென்பது! வாழ்க பேகனின் வண்புகழ்! - இவ்வாறே சிறுகதைகள், வரலாற்று நிகழ்ச்சிகள், சுற்றுலா, பொருட்காட்சி போன்றவற்றைப் பற்றி எழுதிப் பழகுங்கள். 4. வாழ்க்கைக் குறிப்புக் கட்டுரை பாரதியார் குறிப்பு: 1. முன்னுரை, 2. பிறப்பு வளர்ப்பு, 3. விடுதலை யுணர்ச்சி , 4. புதுவையில், 5. பாடல்கள், 6. முடிவுரை. முன்னுரை: நாம் இன்று விடுதலை நாட்டில் வாழ்கிறோம். ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேல் நம் நாட்டை அயல் நாட்டினரான ஆங்கிலேயர் ஆண்டு வந்தனர். அவ்வயல் நாடர் நம்மை அடக்கி யாண்டனர். அவ்வயலார் அடக்குமுறைக் கொடுமையை நம் நாட்டுத் தலைவர்கள் வெறுத்தனர்; இந்நாட்டு மக்கட்கு விடுதலை யுணர்ச்சியை ஊட்டி வந்தனர். தமிழ் மக்கட்கு விடுதலை உணர்ச்சியை ஊட்டிய தலைவர்களுள் பாரதியார் அவர்களும் ஒருவராவர். பிறப்பு வளர்ப்பு: பாரதியார் அவர்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் என்னும் ஊரில் 11.12.1882 இல் பிறந்தார். இவர் தம் தந்தையார் சின்னச்சாமி ஐயர்; தாயார் இலட்சுமி அம்மாள். இவரது இளமைப் பெயர் சுப்பிரமணியன் என்பது. இவரது முழுப் பெயர் சி. சுப்பிரமணிய பாரதியார் என்பது. ‘பாரதியார்’ என்பது பட்டப்பெயர். இவர் திருநெல்வேலி இந்துக் கல்லூரிப் பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை படித்தார். இவர் இளமையிலேயே தமிழில் இனிமையான கவிகள் பாடும் ஆற்றலைப் பெற்றார். மதுரைச் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் சில மாதங்கள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர்ச் சென்னையில் ‘சுதேசமித்திரன்’ முதலிய செய்தித்தாள்களில் உதவியாசிரியராகப் பணியாற்றினார். விடுதலையுணர்ச்சி: அக்காலத்தே நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்டு வந்தனர். அவ்வயலாட்சியிலிருந்து விடுதலை பெற இந்நாட்டுத் தலைவர்கள் பொது மக்கட்கு விடுதலை யுணர்ச்சி ஊட்டி வந்தனர். பாரதியார் நாட்டுப் பற்று மிக்கவர்; நம் நாட்டை அயலார் ஆள்வதை, இந்நாட்டு மக்களை அடக்கியாள்வதை வெறுத்தார்; மிக்க விடுதலை வேட்கை கொண்டார்; நாட்டு விடுதலைப் பாடல்கள் பாடிப் பாடித் தமிழ் மக்களுக்கு விடுதலையுணர்ச்சி யூட்டி வந்தார்; தமிழ்நாடு, தமிழ்மொழி ஆகியவற்றின் பெருமையைப் பற்றிப் பாடித் தமிழர்களைத் தட்டி எழுப்பிவந்தார். ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்’, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்பன பாரதியாரின் பாடல்கள் என்பது உங்கட்குத் தெரியும். புதுவையில்: இங்ஙனம் தங்கள் ஆட்சிக் கெதிராகத் தமிழர்களைத் தட்டி எழுப்பி வருவது கண்ட ஆங்கில ஆட்சியாளர் பாரதியாரைச் சிறையிட முயன்றனர். புதுவை என்னும் புதுச்சேரி அன்று பிரெஞ்சுக்காரர் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. எனவே, பாரதியார் புதுவைக்குச் சென்று விட்டார். சென்னையில் நடந்து வந்த ‘இந்தியா’ என்னும் வார இதழும் புதுவை சென்றது. பாரதியார் அவ்விந்தியா வாயிலாய்த் தமிழ் மக்கட்கு விடுதலை யுணர்ச்சி யூட்டி வந்தார். பாரதியார் அவர்கள் புதுச்சேரியில் இருந்த போது தான் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கட்குப் பாரதியாரின் தொடர்பு ஏற்பட்டது. பாரதியாரின் கவித்திறத்தைக் கண்ட பாரதிதாசன் அவர்கள் கனக சுப்புரத்தினம் என்னும் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். பாடல்கள்: பாரதியார் சிறந்த கவியுள்ளங் கொண்ட வராவர். இவர் தம் கவிப் பெருக்கைக் கண்ட தமிழ் மக்கள் இவரைத் தேசிய கவி எனப் பெருமையோடு அழைக்கலாயினர். இவர் பாடிய பாடல்கள் தேசிய கீதங்கள், தோத்திரப்பாடல்கள், பாப்பா பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் என்னும் தொகுப்புக்களும் , தனி நூல்களும் ஆகும். இவை பாரதியார் பாடல்கள் என்னும் நூலாக வெளிவந்துள்ளன. பாரதியார் பாடல்கள் பலவற்றை நீங்கள் படித்து இன்புற்றிருப்பீர்கள். முடிவுரை: பாரதியார் அவர்கள் இளமையிலேயே கவியுள்ளம் வாய்க்கப் பெற்றார்; நாட்டு விடுதலைப் பாடல்கள் பாடித் தமிழ் மக்களுக்கு விடுதலை யுணர்ச்சியூட்டினார். தமிழ் மக்கள் அவரைத் ‘தேசிய கவி’ எனப்பாராட்டினர். பாரதியார் போன்ற கவிஞர்களின் வரலாறு இளைஞர்களுக்குக் கவியுணர்ச்சியை யுண்டாக்கும். இவ்வாறே பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்ற கவிஞர்களின் வரலாறுகளை எழுதிப் பழகுங்கள். 5. (1) சமுதாய இயற் கட்டுரை சீரணி குறிப்பு : 1.முன்னுரை, 2. சீரணியின் தொடக்கம், 3. அமைப்பு, 4. சீரணியின் கடமை, 5. முடிவுரை. முன்னுரை: ‘நாடெங்கும் வாழின் கேடொன்றும் இல்லை’ என்பது பழமொழி. நாட்டு மக்கள் எல்லாரும் யாதொரு குறைபாடும் இன்றி நல்வாழ்வு வாழ்வதே அந்நாட்டின் சிறப்புக்குக் காரணமாகும். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கைக்கு வேண்டியவற்றைச் செய்து வாழ்ந்து வருகிறார்கள். எல்லாருக்கும் பொதுவான தேவைகளும் சில உண்டு. அத்தகைய தேவைகளைப் பொது நல நோக்கம் கொண்ட பெரியார்கள் தனியாகவும், இயக்கங்களின் மூலமாகவும் பண்டுதொட்டே செய்து வந்திருக்கிறார்கள். அங்ஙனம் பொதுநலத் தொண்டு செய்ய ஏற்படுத்தப்பட்டதே சீரணி என்பது. அமைப்பு: பொதுநலத் தொண்டு செய்வதற்காகத் தமிழக முதலமைச்சரான அறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப் பட்ட இச்சீரணியில் இளைஞரும் முதியருமாகிய ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து தொண்டாற்றி வருகிறார்கள். கல்லூரி மாணவ மாணவியரும் இதில் பங்கு கொண்டுள்ளார்கள். பள்ளி ஆசிரியர்களும், அரசியல் அலுவலர்களும் இச் சீரணிப் படையில் சேர்ந்து பொது நலப் பணி செய்து வருகிறார்கள். தமிழக முழுவதும் இச் சீரணிப் படை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைமை அலுவலகம் சென்னை நகரில் உள்ளது. தமிழ் நாடடின் நகரங்கள் தோறும் இதன் கிளைகள் உள்ளன. வட்ட, மாவட்ட அமைப்புக்கள் இதற்கு உண்டு. ஒவ்வோர் அமைப்புக்கும் தலைவரும், செயற்குழுவினரும் உள்ளனர். சீரணியின் கடமை: இங்ஙனம் தமிழக மெங்கும் அமைந்துள்ள இச்சீரணித் தொண்டர்களின் கடமை என்ன? கைம்மாறு கருதாமல் பொதுநலத் தொண்டு செய்வதே அன்னாரின் கடமையாகும். ஓர் ஊருக்கு ஒரு நல்ல பாதை தேவை. அதை ஊரினரெல்லாரும் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டும். ஊரினரெல்லாரும் ஒருமுகப் பட்டு ஒரு பொதுக் காரியம் செய்வதென்பது அவ்வளவு எளிதில் இயலாது. அதற்குப் பணமும் வேண்டும். சீரணித் தொண்டர்கள் செலவில்லாமல் அப்பாதையை அமைத்து விடுகின்றனர். தூர்ந்துபோன குளங்களைப் புதுப்பித்தல், கால்வாய்கள் வெட்டுதல், பள்ளிக் கட்டடங்கள் கட்டுதல், பள்ளிக்கூடம் போன்ற பொதுக் கட்டடங்களுக்கு வெள்ளையடித்தல் போன்ற பொதுநலப் பணிகளை இச்சீரணிப் படையினர் செய்து ஊர்நலம் பேணி வருகின்றனர். சென்ற ஆண்டு இச்சீரணிப் படையினர் ஒரே வாரத்தில் சென்னையில் ஒரு புதிய பள்ளிக் கட்டடத்தைக் கட்டி முடித்தது குறிப்பிடத்தக்க தொன்றாகும். முடிவுரை : தமிழ் மக்கட்குப் பொதுநலப் பணி செய்வதற் கெனச் சீரணி என்னும் நிறுவனம் தொடங்கப் பட்டுள்ளது. அச்சீரணியில் இளைஞரும் முதியருமான ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து பொதுநலத் தொண்டு செய்து வருகின்றனர். அச்சீரணிப் படை தமிழக முழுவதும் அமைந் துள்ளது. பள்ளி மாணவ மாணவியராகிய நீங்களும் அச்சீரணியில் சேர்ந்து பொதுநலத் தொண்டு செய்து பழகுங்கள். இவ்வாறே முதியோர் கல்வி, தீண்டாமை, எளியோர்க் குதவுதல் முதலியன பற்றி எழுதிப் பழகுங்கள். 5. (2) பொருளியற் கட்டுரை குறிப்பு : 1. முன்னுரை, 2. தொழிலின் பெருமை, 3. தொழில் வகை, 4. ஆலைத் தொழில், 5. கைத்தொழில், 6. முடிவுரை. முன்னுரை: எறும்பு முதல் எல்லா உயிர்வகைகளும் தத்தம் உணவைத் தேடும் தொழிலைச் செய்து வருகின்றன. எறும்புகள் இரை தேடுவதும் வளை தோண்டுவதும் வியக்கத்தக்க செயல்களாக உள்ளன. பறவைகள் இரை தேடுந் தொழி லோடு கூடுகட்டிக் கொண்டு வாழ்ந்துவருகின்றன. புலி முதலிய காட்டு விலங்குகள் நாள் முழுவதும் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து இரையைப் பெறுகின்றன. மக்களாகிய நாமும் ஏதாவதொரு தொழில் செய்தே வாழ்ந்துவருகிறோம். தொழிலின் பெருமை: நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்தே வாழ வேண்டும். ஒரு தொழிலும் செய்யாமல் யாரும் சும்மா சோம்பேறியாய் இருத்தல் கூடாது. ஒரு தொழிலும் செய்யாமல் சும்மா இருக்கின் இரந்துண்டு வாழ நேரிடும். இரப்பது இழிவிலும் இழிவாகும். தொழில் செய்வது மன அமைதியைத் தருவதோடு உடல்நலத்திற்கும் ஏதுவாகும். எனவே, பெரும் பணக்காரர்களும் ஏதாவது தொழில் செய்து கொண்டு மனவமைதியோடு வாழ வேண்டும். தொழில் மேம்பாடுடைய நாடே, தொழில் வளமுடைய நாடே நன்னாட்டின் முன்னாட்டும் நாடாகத் திகழ்கின்றது. அமெரிக்கா முதலிய நாடுகள் செல்வ வளமிக்குத் திகழ்வதற்கு அந்நாடுகளின் தொழில் வளமே காரணமாகும். தொழில் வளமில்லாத நாடுகள் ஏழ்மையின் இருப்பிட மாய்ப் பின் தங்கிய நிலையிலேயே இருந்துவரும். தொழில் வகை: உழவு, வாணிகம், கைத்தொழில் என மக்கள் செய்யும் தொழில் முத்திறப்படும். உழவுத் தொழிலில் மேம்பட்ட நாடே உலகில் உயர்வுடைய நாடாகத் திகழும். உழவுத் தொழிலில் பிற்பட்ட நாடு உணவுக்காக அயல் நாடுகளை எதிர்பார்த்து வாழ வேண்டிய நிலையில் இருந்து வரும் . ஒரு நாட்டின் செல்வப் பெருக்குக்குக் காரணமாக இருப்பது வாணிகத் தொழிலே யாகும். ஓரிடத்தில் உள்ள தேவைக்கு மிகுதியான பொருள்களைக் கொண்டு, அவை தேவைப்படும் இடங்களில் விற்று, நாடெங்கும் ஒரு நிகராக வாழும்படி செய்வது வாணிகத் தொழிலே யாகும். மூன்றாவது தொழில் கைத்தொழிலாகும். உணவுப் பொருளல்லாத நம் வாழ்க்கைக்குத் தேவைப்படும் எல்லா வகையான பொருள்களையும் செய்யும் தொழில் கைத்தொழில் எனப்படும். ஆலைத்தொழில் : பழங்காலத்தில் உளி, சுத்தி போன்ற கருவிகளைக் கொண்டு எல்லாத் தொழில்களையும் கையினாலேயே செய்துவந்தனர். கயிறு திரித்தல் போன்ற சில தொழில்களைக் கருவியின்றிக் கையினாலேயே செய்து வந்தனர். வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் மிகுதியாகத் தேவைப்படவே, சில பொருள்களைச் செய்ய ஆலைகள் தோன்றலாயின. இவற்றுள் நூற்பாலை, நெசவாலை, சர்க்கரை யாலை முதலியன குறிப்பிடத் தக்கவையாகும். தமிழ் நாட்டில் 176 நூற்பாலைகள் உள்ளன. இதில் கோவை மாவட்டம் முதலிடம் பெறுகிறது. கோவை நகரில் மட்டும் 54 நூற்பாலைகள் உள்ளன. சில நூற்பாலைகளில் துணியும் நெய்யப்படுகிறது. கைத்தொழில் : கையினால் செய்யப்படும் தொழில் கைத்தொழில் எனப்படும். மரவேலை, இரும்பு வேலை, நகை செய்தல், துணி நெய்தல் முதலிய தொழில்கள் சுத்தி, உளி, தறி, முதலிய கருவிகளைக் கொண்டு செய்யப்படினும், அத் தொழில்களைச் செய்யும் கைத்திறத்தின் சிறப்புப்பற்றி அவை கைத்தொழில்கள் எனப்பட்டன. ஆலைத் தொழிலினின்று வேறுபாடறிய இவை கைத்தொழில் எனப்பட்டன எனினுமாம். நம் நாட்டுக் கைத்தொழில்களுள் முதன்மையும் சிறப்பும் உடையது. நெசவுத் தொழில். ஏராளமான கைத்தறிகளையுடையது தமிழ்நாடு. தமிழ்நாட்டு நெசவுத் தொழிலாளர்கள் வகைவகையான அழகிய ஆடைகள் நெய்வதில் கைதேர்ந்தவர்களாவர். முடிவுரை: தொழில் வளமுடைய நாடு சிறந்த நாடாகத் திகழக்கூடும். உழவு, வாணிகம், கைத்தொழில் எனத் தொழில்கள் மூவகைப்படும். ஒரு நாட்டின் சிறப்புக்கு இம் முத்தொழிலிலும் முந்நாடிகள் போன்றவையாகும். கைத் தொழிலின் ஒரு கூறு ஆலைத் தொழிலாகும். நூற்பாலைத் தொழிலில் தமிழ் நாடு மேம்பட்டு விளங்குகிறது. அங்ஙனமே கைத்தறிநெசவுத் தொழிலில் சிறப்புற்றுத் திகழ்கிறது தமிழ்நாடு. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து வாழ வேண்டும். இவ்வாறே கூட்டுறவுச் சங்கம், கூட்டுறவுப் பண்ணை, வாணிகம் முதலியன பற்றி எழுதப் பழகுங்கள். 5 (3) கல்வியியற் கட்டுரை முதியோர் கல்வி குறிப்பு : 1 . முன்னுரை, 2. கல்வி, 3. கற்கும் பருவம், 4. முதியோர் கல்வி, 5. கல்வியின் இன்றியமை யாமை, 6. முடிவுரை. முன்னுரை: ‘அறிவுடையார் எல்லா முடையார்’ என்பது வள்ளுவர் வாய்மொழி, இயற்கையறிவு, செயற்கையறிவு என அவ்வறிவு இருவகைப்படும். இயற்கையறிவு மக்கள் எல்லார்க்கும் இயல்பாக உள்ள பொது அறிவு. செயற்கையறிவு கற்றறிந்த அறிவு. கல்வியே செயற்கையறிவுக்குக் காரணமாகும். கல்லாதாரினும் கற்றவர் நன்கு மதிக்கப்படுதலே கல்வியின் இன்றியமையாச் சிறப்பினை விளக்கும். அக்கல்வி மக்களாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாகும். கல்வி : கல்வி என்பது கல்லுதல் எனப் பொருள் படும். கல்லுதல் - தோண்டுதல். அஃதாவது, பொருள்களை ஆராய்ந்து அறிதல். கல்லாதவர்க்கு உலகில் நாடோறும் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. ‘கற்றவர் கண்ணுடையர் ஆவர்; கல்லாதவர் முகத்து இரண்டு புண்ணுடையர் ஆவர்.’ என்கிறார் வள்ளுவர். கல்லாதவர்களால் நம் முன்னோர்கள் நமக்காகச் செய்து வைத்துள்ள இலக்கிய இலக்கண நூல் களைப் படித்து இன்புறமுடியாது; நம் முன்னோர் வாழ்க்கை முறையினை அறிந்து பயன் அடையமுடியாது. இன்று அறிஞர்களால் எழுதப்படும் அரிய நூல்களைப் படித்து இன்புற முடியாது; நாளிதழ்களைப் படித்து உலகில் அன்றன்று நடக்கும் செய்திகளை அன்றன்று அறிய முடியாது. எனவே, மக்கட்குக் கல்வி மிகமிக இன்றியமையாத தொன்றாகும். கற்கும் பருவம்: ‘இளமையில் கல்’ என்றார் ஒளவையார். இளமைப் பருவமே கல்வி கற்றற்கு ஏற்ற பருவமாகும். இளமைப் பருவத்தைக் கல்லாமல் கழித்துவிட்டால், முதுமைப் பருவத்தில் கல்வி கற்க முடியாது. இளமைப் பருவம் கழிந்ததும் வாழ்க்கைக்காக ஏதாவது தொழில் செய்ய வேண்டிவரும். அப்போது கல்வி கற்க முடியாது. ஆற்றைக் கடக்கப் பசலில் ஏறுகிறோம். பரசலில் ஏறினதும் பரசற்காரன் கூலியை வாங்கிக் கொள்வான். அவ்வாறு கூலியை வாங்காது அக்கரையில் கொண்டுபோய் இறக்கிவிட்டால், இறங்கினவர் போய்விடுவர். அவர்களிடம் அவன் கூலி வாங்க முடியாது. அதுபோல, இளமைப் பருவத்தே கல்லாது அதை வீணே கழித்தவன் முதுமைப் பருவத்தில் கற்க முடியாது. முதியோர் கல்வி: ஏழ்மையின் காரணமாக இளமைப் பருவத்தில் ஒரு தொழிலில் ஈடுபட்டதனாலோ, வேறு காரணத்தினாலோ இளமைப் பருவத்தில் கல்லாதவர்கள், கற்கத் தவறியவர்கள் கண்ணிருந்தும் குருடர்களைப் போல வாழ்ந்து வருகிறார்கள். அத்தகைய கல்லா முதியோர்களுக்கு ஒருவாறு கல்வியறிவு புகட்ட அரசியலார் முதியோர் கல்வித்திட்டம் என்னும் ஒரு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்; அன்னார்க்குக் கல்வி கற்பிக்க இரவுநேர வகுப்பையும் ஏற்படுத்தியுள்ளனர். அங்கு அம்முதியோர்களுக்கு எழுத்தறிவும், பொது அறிவும் கற்பிக்கப்படுகின்றன. அன்றாடச் செய்தித் தாள்களில் வெளிவரும் இன்றியமையாச் செய்திகள் படித்துக் காட்டப் படுகின்றன. கல்வியின் இன்றியமையாமை: கல்வி மிக மிக இன்றியமையாதது. எழுத்தறிவில்லாதவன் காட்டகத்தே நிற்கும் நல்ல மரத்திற்கு ஒப்பாவான். பெற்றோர் கல்லாதவராக இருந்தால் அவர் தம் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்பதன் இன்றியமையாமையை உணர மாட்டார்கள். கல்லாப் பெற்றோர்களால் தங்கள் குழந்தைகள் சரியாகப் படிக்கிறார்களா என்பதைக் கவனிக்க முடியாது. எனவே, முதியோர் கல்வி மிக மிக இன்றியமையாத தொன்றாகும். முடிவுரை: கல்வி இரு கண்போன்றதாகும். கல்லாதவர்க்கு உலகம் இன்ன தென்பது தெரியாது. இளமைப்பருவமே கல்வி கற்றற்குரிய பருவமாகும். இளமைப் பருவத்தில் ஒவ்வொருவரும் கட்டாயம் கல்வி கற்றுக் கொள்ளவேண்டும். இளமைப் பருவத்தில் கல்வி கற்கத் தவறியவர்களுக்காக அரசினரால் முதியோர் கல்வித் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்லா முதியோர்கள் அம்முதியோர் கல்வி வகுப்பில் சேர்ந்து ஒருவாறு கற்றுத் தம் எழுத்தறியாமையைப் போக்கிக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறே கட்டாயக் கல்வி, தொழிற் கல்வி, பெண்கல்வி, நூல் நிலையம் முதலியனபற்றிக் கட்டுரை எழுதிப் பழகுங்கள். 6(1) இளைஞர் செயல்முறைக் கட்டுரை பொதுநலத் தொண்டு குறிப்பு :1. முன்னுரை, 2. பொதுநலம், 3. பள்ளியில், 4. வெளியில் 5. முடிவுரை. முன்னுரை: ‘வாய்க்குக் கை உதவுவது போல’ என்பது ஓர் உவமைத் தொடர். வாய்க்குக் கை உணவூட்டுகிறது; தின்பண்டம் ஊட்டுகிறது; தண்ணீர் கொடுக்கிறது. அதுபோல, ஒருவர்க்கொருவர் உதவ வேண்டும் என்பதற்குச் சான்றாக இத்தொடரைக் கூறுவதுண்டு. பொருளுதவி மட்டும் உதவியாகாது. உரையாலும் உடலாலும் உதவுதலும் உதவியேயாகும். பழந்தமிழ்ப் புலவர் பெருமக்கள் உரையால் உதவித் தமிழ் மக்களை வாழ்வித்து வந்தனர். தமிழ் மறவர்கள் உடலால் உதவி வந்தனர். இங்ஙனம் பல வகையிலும் ஒருவர்க்கொருவர் உதவுதல் பொதுநலம் எனப்படும். பொதுநலம் : ‘பொது மக்கள்’ என்பது மக்கள் எல்லாரையும் குறிக்கும் ஒரு மரபுச் சொல் ஆகும். மக்கள் எல்லாரும் நல்வாழ்வு வாழும்படி ஒருவர்க்கொருவர் உதவுவது பொதுநலத் தொண்டு எனப்படும். ஒருவர்க்கு ஏதாவது ஒரு தொத்து நோய் உண்டானால் அஃது ஊரெல்லாம் பரவிவிடும். எனவே, ஊரின ரெல்லாரும் ஒன்று பட்டு அந்நோய் பரவாமல் தடுக்க வேண்டும். இது தனக்குத்தானே உதவி செய்து கொள்ளும் ஒருவகைப் பொதுநலமாகும். ஊரில் ஒரு வீட்டில் தீப்பிடித்தால் மற்ற வீட்டுக்காரர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு அவ்வூரைத் தீக்கிரை யாகும்படியா விடுவார்கள்? பள்ளிப் பருவத்திலேயே மாணவமாணவியர் இத்தகைய பொதுநலத் தொண்டு செய்து பழகுதல் வேண்டும். அப்பழக்கம் பிற்காலத்தே அவர்களைச் சிறந்த பொது நலத் தொண்டர்களாக்கும். பள்ளியில்: மாணவ மாணவியர் பள்ளியில் படிப்பது மட்டும் அல்லாமல், நல்ல பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். முதலில் மாணவர்கள் ஒருவர்க்கொருவர் உதவக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். தாள், எழுதுகோல் முதலியவை இல்லாதவர்க்கு அவற்றைக் கொடுத்துதவுதல் வேண்டும். வகுப்பறையைத் துப்புரவாக வைத்துக் கொள்ளுதல், வகுப்பறைக்குள் எழுதுகோலைச் சீவிப் போடாமல் இருத்தல், கண்ட இடத்தில் எச்சில் துப்பாமல் இருத்தல், ஒழுங்காகவும் கட்டுப்பாடாகவும் நடந்து கொள்ளுதல் முதலியன பள்ளியில் செய்யும் பொதுநலத் தொண்டாகும். வெளியில்: மாணவ மாணவியர் வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும் போதும், பள்ளியிலிருந்து வீட்டுக்குச் செல்லும்போதும் தெருவின் இடப்பக்கமாகவே செல்லுதல் வேண்டும். வழியைக் கடக்க நேர்ந்தால் முன்னும் பின்னும் பார்த்து ஒழுங்காகக் கடக்க வேண்டும். நடக்கும் வழியில் கிடக்கும் ஆணி, கண்ணாடித் துண்டு, பழத்தோல் முதலியவற்றை எடுத்தெறிய வேண்டும். ஏதாவது, ஓரிடத்திற்குச் செல்ல வழி தெரியாதவர்க்கு வழி காட்ட வேண்டும். எழுதப் படிக்கத் தெரியாதவர்க்கு நாடோறும் நடக்கும் செய்திகளைச் சொல்ல வேண்டும்; கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும்; மருத்துவமனையில் உள்ள நோயாளிகட்கு வேண்டிய உதவி செய்ய வேண்டும்; ஓய்வு நாட்களில் பலர் ஒன்று கூடிப் பக்கத்து ஊர்களுக்குச் சென்று ஊர்மக்களுக்குப் பொதுநல உணர்ச்சியை உண்டாக்க வேண்டும்; தெருவைத் துப்புரவு செய்தல், வழியிலுள்ள மேடுபள்ளங்களை ஒப்புரவு செய்தல் போன்ற செயல்களால் பொது மக்களுக்குப் பொது நலத் தொண்டின் இன்றியமையாமையை உணர்த்த வேண்டும். முடிவுரை: பொது நலத் தொண்டு செய்த - செய்யும் பெரியார்களெல்லாரும் இங்ஙனம் கண்டு பழகியவர்களே யாவர். இப்பள்ளிப் பருவத்திலேயே பொதுநலத் தொண்டு செய்து பழகினால் அப்பழக்கம் பிற்காலத்தே உங்களைச் சிறந்த பொதுநலத் தொண்டர்களாக்கும். ‘நாடெங்கும் வாழின் கேடொன்றும் இல்லை’ என்னும் மூதுரையை மாணவ மாணவியர் நன்கு கடைப்பிடிக்க வேண்டும். சீரணித் தொண்டர்கள் செய்யும் பொதுநலத் தொண்டிற் பங்கு கொள்ளுதல் ஏற்றதாகும். இவ்வாறே திருவிழாக் காலங்களில் உதவுதல். துப்புரவைப் பற்றிச் சொற்பொழிவாற்றுதல், ஊர் நலம் முதலியன பற்றிக் கட்டுரை எழுதிப் பழகுங்கள். 6 (2) இளைஞர் இயக்கக் கட்டுரை பள்ளி இலக்கிய மன்றம் குறிப்பு : 1. முன்னுரை, 2. இலக்கிய மன்றம்,3. அமைப்பு 4. செயல் முறை, 5. முடிவுரை முன்னுரை : ஊரிலுள்ள சில இளைஞர்கள் ஒன்று கூடி ஏதாவது ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி அதன் வாயிலாய் ஊர்ப் பொதுமக்கட்குப் புத்துணர்ச்சி உண்டாக்கி வருகின்றனர். திருக்குறள் மன்றம், தொல்காப்பியர் கழகம், பாரதி மன்றம், முத்தமிழ் மன்றம் போன்ற ஏதாவதொன்று ஊர்தோறும் இருக்கக் காணலாம். இம்மன்றங்கள் போன்றதே மாணவர் இலக்கிய மன்றமும். இலக்கிய மன்றம்: உயர்நிலைப் பள்ளி ஒவ்வொன்றிலும் மாணவர் இலக்கிய மன்றம் உள்ளது. ஆண், பெண் இருபாற் பள்ளிகளிலும் இம் மன்றம் உண்டு. பள்ளி ஆண்டுத் தொடக்கத்தில் இம் மன்றம் தொடங்கப் பெறும். ஒரு தலைவரைக் கொண்டு இம்மன்றத் தொடக்க விழா நடத்தப்படும். மாணவ மாணவியர் பேச்சாற்றல் பெறவும், பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் இம்மன்றம் பயன்படுகிறது. மாணவ மாணவியர் அறிஞர் பலரின் அறிவுரையைக் கேட்டுப் பயன்பெற இம்மன்றம் பெரிதும் உதவுகிறது. அமைப்பு: ஒரு மன்றம் என்றால் அதற்குத் தலைவரும் செயலாளரும் உறுப்பினர்களும் இருத்தல் வேண்டும். இம்மாணவர் இலக்கிய மன்றத்திற்குப் பள்ளித்தலைமை ஆசிரியர், அல்லது தலைமை ஆசிரியை அவர்களே தலைவராக இருப்பர். தமிழ்ப் பிரிவுக்குத் தமிழாசிரியர் ஒருவரும், ஆங்கிலப் பிரிவுக்கு ஆங்கில ஆசிரியர் ஒருவரும் உறுப்பினராக இருப்பர். ஆசிரியர் ஒருவர் இம்மன்றச் செயலாளராக இருப்பர். நாலைந்து மாணவர்கள் செயற்குழு உறுப்பினராக இருப்பார்கள். பள்ளி மாணவ மாணவியர் எல்லாரும் இம்மன்றத்தின் உறுப்பினராவார்கள். செயல் முறை: இம்மன்றக் கூட்டம் வாரம் ஒரு முறை ஒரு குறிப்பிட்ட நாளில் நடைபெறும். அக்கூட்டத்தில் ஒருவர் தலைமையின் கீழ் மாணவர் பலர் ஒரு குறிப்பிட்ட பொருள்பற்றிப் பேசுவர். இரண்டு மாதங்கட்கொரு முறையாவது வெளியிலிருந்து அறிஞரொருவரை வரவழைத்துச் சிறப்புச் சொற்பொழிவாற்றப்படும். ஆண்டு முடிவில் மன்ற ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படும். அவ்விழாவில் மாணவ மாணவியரிடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, இசைப்போட்டி, ஒப்பித்தல் போட்டி, மாற்றுடைப் போட்டி முதலியன நடைபெறும்; வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு விழாத்தலைவரால் பரிசுகள் வழங்கப்படும். இம்மன்றத்தின் வாயிலாகச் செய்தித் தாள்களும், வார, மாத, இதழ்களும் வரவழைத்து மாணவர்கள் படித்துப் பயன் பெற்று வருகின்றனர். முடிவுரை: ஊரில் நடத்தப் பெறும் மன்றங்கள் போலப் பள்ளியில் மாணவர் மன்றம் உண்டு. இம் மாணவர் மன்றம் மாணவர்கள் பேசிப் பழகவும், அறிஞர் பலரின் அறிவுரையைக் கேட்டின்புறவும் பயன்படுகிறது. மன்ற ஆண்டு விழாவின் போது பெற்றோர்கள் தங்கள் மக்களின் திறமையைக் கண்டு இன்புற இம்மன்றம் ஏதுவாக அமைந்துள்ளது. மாணவ மாணவியர் இம்மன்றத்தின் வாயிலாய் நல்ல பயன் பெறவேண்டும். 7. பிறர் சொற்பொழிவுகளைக் கேட்டுக் குறிப்பு எடுத்தல் அறிஞர்கள் பலர் அடிக்கடி நம் ஊருக்கு வந்து சொற்பொழிவாற்றுகிறார்கள். நாம் அவற்றைக் கேட்கிறோம். பிறர் பேசுவதை நாம் அப்படியே எழுத முடியாது. பேசும்போது நன்கு கவனித்துக் குறிப்பெடுத்துக் கொண்டால் பின்னர் அக்குறிப்பை விரித்தெழுதிக் கொள்ளலாம். நாம் கேட்கும் ஒவ்வொரு பேச்சையும் குறிப்பெடுத்துக் கொள்ளுதல் நல்லது. ஒரு சொற்பொழிவின் ஒரு பகுதிக் குறிப்பு: தைப்பொங்கல் - தொன்றுதொட்டு - விழாவாகும் - சில ஆண்டுகளாக - தமிழ் மக்களால் - கொண்டாடப்பட்டு - மக்கள் - திருநாளை - தமிழ்த் திருநாள் - பெயரில் - கொண்டாடிவருகின்றனர்; விழாப் பொதுக் கூட்டங்கள் பொது மக்களுக்கு - சிறப்பை - எடுத்துரைத்து வருகின்றனர் - கல்லூரிகளிலும் - கொண்டாடப்பட்டு - வாழ்த்து - அத்தகு சிறப்பினை அடைந்துள்ளது - தைப் பொங்கல்! விரித்தெழுதுதல் தைப்பொங்கல் என்பது தமிழ் மக்களால் தொன்று தொட்டுக் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். எனினும், சில ஆண்டுகளாகத் தைப் பொங்கல் விழாத் தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் மக்கள் பொங்கல் திருநாளைத் தமிழ்த் திருநாள் என்னும் பெயரில் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் விழாப் பொதுக்கூட்டங்கள் நடத்திப் பொது மக்களுக்குத் தைப் பொங்கலின் சிறப்பை எடுத்துரைத்து வருகின்றனர். பள்ளிகளிலும் கல்லூரிகளிலுங் கூடப் பொங்கல் விழாக் கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்களுக்குப் பொங்கல் வாழ்த்து அனுப்பும் அத்தகு சிறப்பினை அடைந்துள்ளது. இன்று தைப் பொங்கல். இவ்வாறே பிறர் சொற்பொழிவைக் கேட்டுக் குறிப்பெடுத்து, அதை விரித்தெழுதிப் பழகுங்கள். 8. பிறர் வானொலிப் பேச்சுக் களைக் கேட்டுக் குறிப்பெடுத்தல் நம் வீட்டிலுள்ள வானொலிப் பெட்டி மூலம் பலர் பாடுகின்ற பாடல்களைக் கேட்டு நாம் இன்புறுகிறோம்; அறிஞர்கள் பேசும் அருமையான பேச்சுக்களையும் கேட்டு இன்புறுகிறோம். அப்பேச்சுக்களையும் குறிப்பெடுத்து விரித்தெழுதிக் கொள்ளுதல் மாணவ மாணவியர்க்கு நல்ல பயனைத் தரும் ஒரு வானொலிப் பேச்சின் ஒரு பகுதிக் குறிப்பு பெரியோர்கள் திருநாளை - கொண்டாடுவதன் - என்ன? - நமக்கு - நன்மையின் - அவர்தம் - பரப்புதற் பொருட்டு - இயேசு நாதர் - திருநாள் - முஸ்லிம்கள் - திருநாள் - அவரவர் - தலைவர் - கொண்டாடுதலும் - இது பற்றியே. வள்ளுவர் திருநாள் : திருநாளை - ஏன் கொண்டாட வேண்டும்? - நமக்கு - நன்மை? - உலக - நூலாகிய - உவமை - தனிப் பெரும் - ஆகிய - வாழ்க்கை - நூலாகிய - செய்து - பெருமையை - வள்ளுவர் - கொண்டாடுதல் - நீங்காக் கடமையாகுமன்றோ? விரித்தெழுதுதல் பெரியோர்கள் திருநாளை நாம் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? அவர்கள் நமக்குச் செய்துள்ள நன்மையின் பொருட்டும், அவர்தம் கொள்கையைப் பரப்புதற் பொருட்டுமேயாகும். கிறித்தவர்கள் இயேசு நாதர் திருநாளையும், முஸ்லிம்கள் நபிகள் நாயகம் திருநாளையும், மற்றச் சமயத்தினர் அவரவர் சமயத் தலைவர்கள் திருநாட்களையும் கொண்டாடுதலும் இந்நோக்கம் பற்றியேயாகும். வள்ளுவர் திருநாள் : வள்ளுவர் திருநாளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? அவர் நமக்குச் செய்துள்ள நன்மை என்ன? உலகப் பெரு நூலாகிய, தனக்கு உவமையில்லாத தனிப்பெருந் தமிழ் நூலாகிய, தமிழர் வாழ்க்கைச் சட்ட நூலாகிய திருக்குறளைச் செய்து, தமிழர் பெருமையை நிலை நாட்டிய வள்ளுவர் திருநாளைக் கொண்டாடுதல் தமிழ் மக்களின் நீங்காக் கடமையாகுமன்றோ? இவ்வாறே பிறர் வானொலிப் பேச்சுக்களையும் குறிப்பெடுத்து விரித்தெழுதிப் பழகுங்கள். 9. கொடுத்த தலைப்புக்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதுதல் கட்டுரை வகுப்பில், ஆசிரியர் கொடுத்த தலைப்பைப் பற்றிக் கட்டுரை எழுதப் பழகுதல் எளிதில் கட்டுரை எழுதும் பயிற்சியை உண்டாக்கும். நோயற்ற வாழ்வு குறிப்பு : 1. முன்னுரை, 2. நோயற்ற வாழ்வு, 3. நோயின் காரணம், 4. நோய் வராதிருக்க, 5. முடிவுரை. முன்னுரை : இன்ப வாழ்க்கையினையே எவரும் விரும்புகின்றனர். இன்பத்தை விரும்புவது போலத் துன்பத்தை வெறுப்பது மக்களின் இயல்பாக அமைந் துள்ளது. இன்பம் என்பதன் எதிர்ச்சொல் துன்பம் என்பதை எவரும் உணர்வதில்லை. துன்பத்திற்கு இடங்கொடாமல் வாழ முயல்வதே ஏற்ற வாழ்க்கை முறையாகும். துன்பத்தின் காரணங்களுள் முதன்மையானது நோயேயாகும். நோயற்ற வாழ்வு: செல்வம், கல்வி, அதிகாரம், உடல் நலம் முதலியன இன்பத்தின் காரணங்களாகும். இன்பத்தின் காரணங்களுள் ஒன்றான செல்வம் எவ்வளவு இருக்கினும் நோயாளர்களால் அச்செல்வத்தைக் கொண்டு இன்புற முடியாது. இதுபற்றியே ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்னும் பழமொழி எழுந்தது. துன்பத்தின் காரணங்களுள் ஒன்றான வறுமையை விட நோய் மிகவும் கொடியதாகும். வறுமையிற் பட்டுப் பழகினவரை வறுமைத் துன்பம் அவ்வளவு வருத்தாது. கொடிய நோயினால் கல்வியறிவு குன்றி விடும்; அதிகார இன்பம் அகன்று விடும்; உடல் நலம் குன்றி விடும். ஆகவே, நோயற்ற வாழ்வு வாழ ஒவ்வொருவரும் முயல வேண்டும். நோயின் காரணம்: நோய்வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. உடலுழைப்பின்றி இரவு பகல் எந்நேரமும் சும்மாவே சோம்பேறியாய் இருந்தால் நோய் வரும். வெளியில் செல்லாமல் காற்றோட்டமும் வெளிச்சமும் இல்லாத அறைக்குள் முடங்கிக் கிடந்தால் நோய் வருதல் எளிதாகும். அடிக்கடி உண்பதனாலும், அளவுக்கு மீறி உண்பதனாலும் நோய் உண்டாகும். அடிக்கடி சிற்றுண்டிகளை உண்பது நோய் உண்டாவதற்கேதுவாகிறது. ‘நுண்மை நுகரேல்’ என்றார் ஒளவையார். துப்புரவில்லாத இடத்தில் வாழ்தல், தூய்மையில்லாப் பொருள்களை உண்ணல் முதலியனவும் நோயை உண்டாக்கும். ஓயாத மனக் கவலையாலும் நோயுண்டாகும். ஆகவே நோய்க்கு இடங்கொடுக்கக்கூடாது. நோய் வராதிருக்க : நோய்களால் உண்டாகும் துன்பத்தின் காரணமாக ஒவ்வொருவரும் நோயில்லாதிருக்க விரும்புவது இயல்பு. நோயில்லாதிருக்க, நோய்வராதிருக்க விரும்புவோர், நோய் அணுகாதிருக்கும் வழிகளை அறிந்து அவ்வாறு வாழ முயலவேண்டும். தூய்மையில்லாத பொருள்களை உண்ணக் கூடாது. பகலொளியின் பயனைப் பெறவேண்டும். உடலுக்கு உழைப்புத் தரவேண்டும். மிகுதியாக உண்ண விரும்பக் கூடாது; முன் உண்ட உணவு நன்கு செரித்தபின் அளவாக உண்ணவேண்டும். செரிக்காத பொருள்களை உண்ணக்கூடாது. பசித்தாலன்றி எக்காரணங்கொண்டும் உண்ணக்கூடாது. நன்கு பசித்த பிறகே உண்ணவேண்டும். அடிக்கடி உண்ணக்கூடாது. இம்முறைகளை உறுதியாகக் கடைப்பிடித்து நடந்துவந்தால் நோயணுகாது என்கிறார் வள்ளுவர். ‘மருந்து’ என்னும் அதிகாரம் பார்க்க. முடிவுரை: நோயுள்ளவர் எத்தகைய இன்பமும் பெறமுடியாது. அன்னார் வாழ்க்கை துன்பத்தின் உறைவிடமாகவே இருக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வ மாகும். ஆகையால், ஒவ்வொருவரும் நோயின் காரணங்களையும், நோய் வராதிருக்கும் வழிகளையும் அறிந்து நோயற்ற வாழ்வு வாழ முயல வேண்டும். இவ்வாறே உழைப்பின் உயர்வு, சிக்கன வாழ்வு உடற்பயிற்சி முதலியன பற்றி எழுதிப் பழகுங்கள். 10. கொடுக்கப்பட்ட மேற்கோள் நூல்களிலிருந்து கட்டுரைப் பொருள் திரட்டல் ஒழுக்கமுடைமை மேற்கோள் நூல்கள்: திருக்குறள், பழமொழி நானூறு, நான்மணிக்கடிகை, முதுமொழிக் காஞ்சி, வெற்றிவேற்கை, ஆத்திசூடி, கொன்றை வேந்தன். குறிப்பு: 1. முன்னுரை ‘நூன் முறை தெரிந்து சீலத்தொழுகு’ (கொன்றை.) 2. ஒழுக்கம் “உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும் கல்லா ரறிவிலா தார்” (குறள்) “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.” “ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை” (முதுமொழி) 3. ஒழுக்கத்தின் உயர்வு “ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” (குறள்) “விழுத்தொடையராகி விளங்கித்தொல் வந்தார் ஒழுங்குடைய ராகி யொழுகல் - பழத்தெங்கு செய்த்தலை வீழும் புனலூர! அஃதன்றோ நெய்த்தலைப்பா லுக்கு விடல்.” (பழமொழி) “திருவொக்கும் தீதில் ஒழுக்கம்.” (நான்மணி.) 4. இழுக்கத்தின் இழிவு “அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு” (குறள்) “கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர் வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை முற்றுநீ ராழி வரையகத் தீண்டிய கற்றேயும் தேயாது சொல்” (பழமொழி) “சையெனத் திரியேல்” (ஆத்திசூடி) 5. முடிவுரை “பரிந்தோம்பிக் காக்க வொழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை” (குறள்) “பெருமையும் சிறுமையும் தான்தர வருமே.” (வெற்றி.) கட்டுரை முன்னுரை: தமிழுக்கும் தமிழர்க்கும் பெருமை தரும் பெருநூலாகிய திருக்குறள் ஒரு நீதிநூல் ஆகும். தமிழில் இருபதுக்கும் மேற்பட்ட நீதி நூல்கள் உள்ளன. இவை செய்யத்தக்கவை, இவை செய்யத்தகாதவை எனச் செய்வன தவிர்வன வற்றை வரையறுத்துக் கூறுகின்றன நீதி நூல்கள். அந்நீதிகளுள் ஒழுக்கம் என்பது ஒன்று. நீதி நூல்களிற் கூறப்படும் செய்வன தவிர்வனவற்றை ஆராய்ந்தறிந்து, நல்லொழுக்க முடையவனாக ஒழுகு என்று கூறுகின்றது கொன்றைவேந்தன். ஒழுக்கம்: பல நூல்களைக் கற்றிருந்தும் உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதவர் அறிவில்லாதவர் ஆவர். ‘நல்லொழுக்கம் நன்மைக்குக் காரணமாகும்; தீய ஒழுக்கம் எப்போதும் துன்பம் தரும்,’ என்கின்றார். வள்ளுவர். எனவே, மேன்மக்கள் ஒழுகும் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து நாம் நடக்க வேண்டும். தீய ஒழுக்கம் எப்போதும் துன்பம் தரும். ஆகையால், தீய வழியில் ஒழுகுவதைத் தவிர்த்து நல்ல வழியிலேயே நாம் நடக்க வேண்டும். அப்போதுதான் நாம் வாழ்க்கையில் இன்புற்று வாழலாம். ‘நூல்களைக் கற்றலைக் காட்டிலும் சிறந்தது ஒழுக்கமுடைமை’ என்கின்றது முதுமொழிக் காஞ்சி. அதாவது, நீதிநூல்களைக் கற்று அவை கூறுகின்றபடி நல்லொழுக்க முடையவராக நடக்க வேண்டும் என்பது இதன் கருத்து. ஒழுக்கத்தின் உயர்வு: ‘ஒழுக்கம் சிறப்பைத் தருதலான் அவ்வொழுக்கத்தை உயிரைக் காட்டிலும் மேலாகப் பாதுகாக்க வேண்டும்,’ என்கிறார் வள்ளுவர். ஒருவர்க்கு உயிரைவிடச் சிறந்த பொருள் வேறொன்றும் இல்லை. அவ்வுயிர் வாழ்க்கைக்குச் சிறப்பைத் தருவது ஒழுக்கமே யாகலான், அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகப் பாதுகாக்க வேண்டும் என்பது வள்ளுவரின் கருத்து. ‘சிறந்த ஒழுக்கத் தொடர்ச்சி யுடையவராய் விளங்கிப் பழமையாகிய குடியில் பிறந்தவர் நல்லொழுக்கம் உடையவராக ஒழுகுதல், நல்ல நெய்யின் கண்ணே பால் சிந்தி விடுதலை ஒக்கும்,’ என்கின்றார் பழமொழி ஆசிரியர். நெய்யின்கண் பால் சிந்தினால் எவ்வளவு சிறப்போ அவ்வளவு சிறப்புடையதாகும் நன்மக்களின் தொடர்புடைய பழங்குடியில் பிறந்தவரிடம் நல்லொழுக்கம் பொருந்தியிருத்தல் என்பது கருத்து. “தீமை கலவாத நல்லொழுக்கம் செல்வத்தை ஒக்கும்” என்கின்றது நான்மணிக்கடிகை.’ இழுக்கத்தின் இழிவு: இழுக்கம் - ஒழுக்கமின்மை. பொறாமை உடையவனிடத்துச் செல்வம் இல்லாமை போல, ஒழுக்கம் இல்லாதவனிடத்து உயர்ச்சி இல்லை என்கின்றார் வள்ளுவர். ஒழுக்கமில்லாதவன் மதிக்கப்பட மாட்டான் என்பதாம். ‘உலகத்திலுள்ள மலைகள் தேயும்; ஒருவரைப் பழித்துக் கூறிய சொல்லின் வடு தேயாது. ஆதலால், இவர்க்கு இந்தப் பழியைச் சுமத்தாவிட்டால் யான் கெடுவேன் என்று எண்ணப்பட்ட விடத்தும், அதனால் தனக்கு யாதொரு பழியும் உண்டாகாதவற்றையே செய்ய வேண்டும்.’ என்கின்றார் பழமொழி ஆசிரியர். தான் கெடுவதாயிருந்தாலும் பிறர் பழிக்கத்தக்க செயல்களைச் செய்யக்கூடாது என்பது கருத்து. ‘பெரியோர்கள் ‘சீ’ என்று அருவருத்து இகழும்படி கெட்டவனாக நடக்காதே!, என்கிறார் ஒளவையார். எனவே, இழிவுக்குக் காரணமான தீய ஒழுக்கம் ஒழுகாது நல்லொழுக்க முடையவராகவே நடந்துகொள்ள வேண்டும்.’ முடிவுரை: ‘நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்பவற்றுள், நல்லொழுக்கத்தை வருந்திப் போற்றிக் காக்க வேண்டும். ஆராய்ந்து பார்க்கின் அறங்கள் பலவற்றுள்ளும் அவ்வொழுக்கமே ஒருவனுக்கு உற்ற துணையாகும்’ என்பது வள்ளுவர் கருத்து. ‘உயர்வும் தாழ்வும் ஒருவன் நடக்கையால் அவனுக்கு உண்டாகும்’ என்பது வெற்றிவேற்கை. எனவே, ஒவ்வொருவரும் நல்லொழுக்கத்தை உயிரினும் பெரிதாக ஓம்பி நன்மக்களாக வாழ்வதே மக்கட் பிறப்பின் பயனாகும். இவ்வாறே நட்பு, அன்புடைமை, பண்புடைமை, அடக்கமுடைமை, இன்சொல் லுடைமை முதலியன பற்றிப் பொருள் திரட்டிக் கட்டுரை எழுதிப் பழகுங்கள். 11. கடிதங்கள் எழுதுதல் கு. மலர்க்கொடி, 9, ஆம் வகுப்பு, ‘அ’ பிரிவு, சத்தியமங்கலம், அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி. 15.3.68 அன்புள்ள நண்பி! வணக்கம், இங்கு நாங்கள் யாவரும் நன்னலம், நினது நலத்தை அறிய மிக்க ஆவலுள்ளவளாய் இருக்கின்றனன். எங்கள் நலத்தை அங்குள்ள எல்லார்க்கும் சொல். இக்கடிதம் கண்டதும் உன் அம்மா, அப்பா, அண்ணன் அறிவழகன் , தங்கை பூங்கோதை ஆகிய எல்லார் தம் நலமும் பற்றிக் கடிதம் எழுதுக. வருகிற கோடை விடுமுறையில் விடுமுறை விட்டதும் கட்டாயம் இங்கு வருக. உன்னை இங்கு வருமாறு எழுதச் சொல்லி என் தங்கை அமுது வற்புறுத்திக் கூறினாள். வரும்போது தவறாது உன் தங்கையையும் அழைத்து வருக. எங்கள் பள்ளி இலக்கிய மன்ற ஆண்டு நிறைவு விழாவில் நடந்த பேச்சுப் பேட்டியில் நான் ‘வள்ளுவர் வாய்மொழி’ என்னும் பொருள் பற்றிப் பேசினேன். அதற்கு எனக்கு முதற் பரிசு கிடைத்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அமுது இசைப் போட்டியிலும், குறள் ஒப்பித்தல் போட்டியிலும் முதற் பரிசு பெற்றாள். எங்கள் வெற்றியைக் கண்டு எங்கள் பெற்றோர்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள். மாற்றுடைப் போட்டியில் நான் முதற் பரிசு பெறாவிடினும், விழாத் தலைவியார் அவர்கள் எனது நடிப்புத் திறமையைப் பாராட்டிப் பேசினார்கள். வாரம் இருமுறை, மாலையில் பள்ளி விட்டபின் எங்கள் தமிழாசிரியை அவர்கள் திருக்குறள் வகுப்பு நடத்துகிறார்கள். நான் அதில் சேர்ந்து குறள் படித்து வருகிறேன். நான் நாள் தோறும் தவறாது குறள் படித்து வருகிறேன். காலையில் எழுந்ததும் எனது முதல் வேலை அதுதான். படிப்பதோடு நாளும் ஐந்தைந்து குறள் மனப்பாடம் செய்து வருகிறேன். நீயும் தவறாது குறள் படி. அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டியது போன்ற வள்ளுவர் வான்குறளுக்கு ஒப்பான நூல் ஒன்றுள்ளதோ? வருமுன் தவறாது கடிதம் எழுதுக. அம்மா, அப்பா, அண்ணன் எல்லார்க்கும் எனது வணக்கத்தைக் கூறுக. வணக்கம். அன்புள்ள, கு. மலர்க்கொடி முகவரி : அ. சிலம்புச் செல்வி, 9 ஆம் வகுப்பு, ‘இ’ பிரிவு அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி, ஈரோடு. 12. தன் வரலாற்றுக் கட்டுரை கவிமணி எனது சொந்த ஊர் தேரூர் என்பது. இவ்வூர் தமிழக மாவட்டங்களுள் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரத்தை அடுத்து உள்ளது. இது முன்னர்த் திருவாங்கூர்ச் சிற்றரசைச் சேர்ந்ததாக இருந்தது. நான் பின்னர் நாகர்கோவிலை அடுத்த புத்தேரி என்னும் ஊரில் குடியேறினேன். நான் 1876 ஆம் ஆண்டில் பிறந்தேன். என் தந்தையார் சிவதாணுப் பிள்ளை என்பவர். அவர் நாஞ்சில் நாட்டில் முதன் முதலில் ஆங்கிலம் கற்று உப்பள மேலதிகாரியாக இருந்துவந்தார். என் தாயார் ஆதிலட்சுமியம்மாள் என்பவர். என் தாயாரின் ஊர் நாகப்பட்டினம். என் தாயாரின் தந்தையாராகிய மாணிக்கவாசகம் பிள்ளை என்பார் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கினார். நான் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரியில் சேர்ந்து ஓராண்டு படித்தேன். பின்னர்க் கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டுப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயின்று தேறினேன். கோட்டாறு, நாகர்கோவில், திருவனந்தபுரம் முதலிய இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றினேன். இறுதியில் அரசினர் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்தேன். 1931 இல் ஓய்வு பெற்றேன். திருவாவடுதுறை மடத்தைச் சேர்ந்த தவத்திரு சாந்தலிங்கத் தம்பிரான் அவர்களிடம் நான் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றேன். திரு. தம்பிரான் அவர்களிடம் தமிழ் படிக்குங்காலை அழகம்மை ஆசிரிய விருத்தம், சுசிந்தை மாலை ஆகிய சிறு நூல்களை இயற்றினேன். நான் ஆசிரியராக இருந்தபோது பள்ளிப் பிள்ளைகளுக்கென அவ்வப்போது பாடப்பட்ட பாடல்களை வார மாத இதழ்களில் வெளியிட்டு வந்தேன். சில தனிப்பாடல்களும் அவ்வப்போது பாடியுள்ளேன். அப்பாடல்கள் ‘மலரும் மாலையும்’ என்னும் பெயரில் நூல் வடிவாக வெளிவந்துள்ளது. புத்தர் பெருமான் வரலாறு என் உள்ளத்தைக் கவர்ந்ததால், அவர் வரலாற்று நிகழ்ச்சியின் ஒரு பகுதியை ‘ஆசிய சோதி’ என்னும் பெயரில் பாடல்களாகப் பாடினேன். இவ்வாறு தமிழ்த் தாய்க்கு என்னால் இயன்ற தொண்டினைச் செய்யலானேன். இத்தகைய எனது தமிழ்த் தொண்டைக் கண்ட தமிழன்பர்கள் கவிமணி என்னும் பட்டம் சூட்டி என்னைப் பெருமைப்படுத்தினர். சி. தேசிகவிநாயகம் பிள்ளை என்பது எனது இயற்பெயர். ஆனால் இப்பட்டம் சூட்டின பிறகு தமிழ் மக்கள் என்னைக் கவிமணி என்றே வழங்கி வரலாயினர். இவ்வாறே பாரதியார், பாரதிதாசன் முதலிய கவிஞர்கள் தாமே தம் வரலாற்றைக் கூறுவதாக எழுதிப் பழகுங்கள். 13. ஒரு பொருள் தானே தன் வரலாற்றைக் கூறுவது போன்ற கட்டுரை சட்டை தம்பி! என் பெயர் உனக்குத் தெரியுமா? ‘சட்டை’ என்பது என் பெயர். என் பிறப்பு வளர்ப்பு உனக்குத் தெரியுமா? நான் பருத்திச் செடியிலிருந்து பிறந்தேன். பருத்திச் செடிதான் என் தாய். பருத்திச் செடியாகிய என் தாயின் நற்றாய் நிலமகள் ஆவள். எல்லார்க்கும் வளர்ப்புத் தாயார் உண்டு. ஆனால், என் தாய்க்கு வளர்ப்புத் தாய் இல்லை; வளர்ப்புத் தந்தைதான் உண்டு. ஓர் உழவர்தான் என் தாயின் வளர்ப்புத் தந்தை. பருத்தி விதையிலிருந்து நிலமகள்பால் என் தாய் பிறந்ததும், பருத்திச் செடியாகிய என் தாயை அவ்வுழவர் அன்போடு நீரூட்டிப் பாராட்டிப் போற்றி வளர்த்து வந்தார். என் தாய் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமு மாக வளர்ந்து பருவமுற்றதும் பூத்துக் காய்த்துப் பருத்தியாகிய என்னைப் பெற்றாள். அவ்வுழவர் மனைவி என்னை அன்போடு எடுத்து வீட்டுக்குக் கொண்டுபோனாள். ஒரு பருத்தி வணிகர் வந்து விலை கொடுத்து என்னை வாங்கிச் சென்று ஒரு பஞ்சாலைக்காரருக்கு விற்றார். அவர் என்னை இயந்திரத்தி லிட்டு அறைத்துக் கொட்டை வேறு பஞ்சு வேறாகச் செய்தார். அப்பஞ்சை ஒரு நூற்பாலைக்காரர் வாங்கிச் சென்று நூலாக நூற்றார். அந்நூலை ஒரு நெசவாளி வாங்கி வந்து சாயம் போட்டுக் கஞ்சி தோய்த்துக் கைத்தறியினால் துணியாக நெய்து இவ்வூர்க் கடைக்காரருக்கு விற்றார். நான் கடையில் இருக்கும்போது நீ வந்து என்னை விலை கொடுத்து வாங்கித் தையற்காரரிடம் கொடுத்தாய். அத்தையற்காரர் என்னைத் துண்டு துண்டாகக் கத்தரித்துச் சட்டையாகத் தைத்து உனக்குக் கொடுத்தார். நீ என்னை அணிந்து அழகாக விளங்குகிறாய். எப்படி என் வரலாறு! இவ்வாறே அஞ்சலட்டை, அரிசி, சர்க்கரை, முதலிய அஃறிணைப் பொருள்கள் தம் வரலாற்றைத் தாமே கூறுவது போல் எழுதிப் பழகுங்கள். 14. கூட்டங்கள் பற்றிய அறிக்கையும் நிகழ்ச்சி நிரலும் தாராபுரம் அரசினர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி இலக்கிய மன்ற ஆண்டுவிழா அழைப்பிதழ் அன்புடையீர், 10.3.68 பிற்பகல் 3 மணிக்கு எங்கள் பள்ளி இலக்கிய மன்ற ஆண்டுவிழா நடைபெறும். விழாவுக்குத் தாராபுரம் நகர மன்றத்தலைவர் அவர்கள் தலைமை தாங்கவும், காங்கயம் அரசினர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் புலவர் பொன்னிவளவன் அவர்கள் தமிழிலக்கியம் என்னும் பொருள் பற்றிச் சொற்பொழிவாற்றவும் அன்புடன் இசைந்துள்ளார்கள். விழாவின் போது மாணவர்களின் மாற்றுடைப்போட்டி முதலிய நிகழ்ச்சிகளும் நடைபெறும். தாங்கள் வந்திருந்து விழாவினைச் சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். அன்புள்ள, ஆசிரியர்களும் மாணவர்களும். நிகழ்ச்சி நிரல் இடம் : பள்ளிக் கட்டடம் காலம் : 10.3.68 பிற்பகல் 3 மணி 1. இறை வணக்கம் 2. வரவேற்புரை - தலைமையாசிரியர் 3. ஆண்டு அறிக்கை படித்தல் - மன்றச் செயலாளர் 4. தலைவர் முன்னுரை 5. சொற்பொழிவு : ‘தமிழிலக்கியம்’ - புலவர் பொன்னி வளவன் 6. மாணவர் போட்டி நிகழ்ச்சிகள் 7. தலைவர் முடிவுரை 8. பரிசு வழங்கல் 9. நன்றியுரை - செயலாளர் 10. நாட்டுப்பண். 15. கூட்டங்களின் நிகழ்ச்சிக் குறிப்பு தாராபுரம் அரசினர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி இலக்கிய மன்ற ஆண்டு விழா. நிகழ்ச்சிக் குறிப்பு இவ்விழா 10.3.68 பிற்பகல் மூன்று மணி அளவில் தொடங்கிற்று. ஊர்ப் பொதுமக்களும் அதிகாரிகளும் பெரும்பான்மையாக வந்திருந்தார்கள். பள்ளித் தலைமையாசிரியர் அவர்கள் தலைவர் அவர்களையும், பேச்சாளர் அவர்களையும், விழாவிற்கு வந்திருந்தவர்களையும் வரவேற்றுப் பேசினார். மன்றச் செயலாளரால் ஆண்டறிக்கை படிக்கப்பட்டது. தலைவர் தம் முன்னுரையில் இலக்கிய மன்றத்தின் இன்றியமையாமையினையும், ஆண்டு விழாக் கொண்டாடுவதன் நோக்கத்தையும் எடுத்துரைத்தனர். பேச்சாளர் கேட்போர் தமிழுணர்ச்சி கொள்ளும் வண்ணம் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டுக்கள் தந்து சுவையுறப் பேசினார். பின்னர் மாணவர்களின் பேச்சுப் போட்டி, இசைப் போட்டி, மாற்றுடைப் போட்டி முதலிய போட்டிகள் நடந்தன. மாற்றுடைப்போட்டி மிகச் சிறப்பாக இருந்தது. தலைவர் முடிவுரையில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டிப் பேசி, வெற்றி பெற்றவர்கட்குப் பரிசுகள் வழங்கினார். மன்றச் செயலாளர் நன்றி கூற, நாட்டுப் பண்ணுடன் மாலை 6.30மணிக்குக் கூட்டம் இனிது முடிந்தது. 16. தீர்மானங்களை நல்ல முறையில் எழுதியமைத்தல் 1. தீர்மானங்கள். 1. தமிழ்த்தாயை அரியணையில் அமர்த்தி, முடியுடை மூவேந்தர் ஆட்சிக் காலத்தே இருந்த நிலைக்குக் கொண்டு வர முயன்று வரும் தமிழக அரசை இக்கூட்டம் மனமாரப் பாராட்டுகிறது. 2. தமிழர் வாழ்க்கைச் சட்ட நூலாகிய திருக்குறளைப் பல வழியிலும் தமிழரிடைப் பரப்பி வருந் தமிழக அரசிற்கு இக்கூட்டம் தனது நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. 3. இப்பள்ளிக்கு ஒரு வகுப்பறை கட்டியுதவி இட நெருக்கடியைத் தவிர்த்த இந்நகர்ச் சீரணித் தொண்டர்கட்கு இக்கூட்டம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. 4. 1968 ஆம் ஆண்டுப் பள்ளியிறுதித் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று இப்பள்ளிக்குப் பெருமை தேடித் தந்த இப்பள்ளியின் பழைய மாணவன் பூங்குன்றனை இக்கூட்டம் மனமாரப் பாராட்டுகிறது. 2. எழுதியமைத்தல் 10.3.68 இல் நடந்த தாராபுரம் அரசினர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி இலக்கிய மன்ற ஆண்டு விழாக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன; 1. ‘தமிழ்த்தாயை அரியணையில் அமர்த்தி, முடியுடை மூவேந்தர் ஆட்சிக் காலத்தே இருந்த நிலைக்குக் கொண்டு வர முயன்று வரும் தமிழக அரசை இக்கூட்டம் மனமாரப் பாராட்டுகிறது.’ என்ற தீர்மானத்தை விளக்கிக் கூறி, விழாத்தலைவர் அவர்கள் முன்மொழிந்தார். புலவர் இளவழுதி அவர்கள் வழிமொழிந்தார். தீர்மானம் ஒருமனமாக நிறைவேறியது. 2. இரண்டாவதாக, ஆசிரியர் அன்பரசன் அவர்கள், ‘தமிழர் வாழ்க்கைச் சட்ட நூலாகிய திருக்குறளைப் பல வழியிலும் தமிழரிடைப் பரப்பிவரும் தமிழக அரசிற்கு இக் கூட்டம் தனது நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது’ என்னும் தீர்மானத்தைக் கொண்டு வந்து, தமிழரிடைத் திருக்குறளைப் பரப்ப வேண்டியதன் இன்றியமையாமையை விளக்கிக் கூறி முன்மொழிந்தார். நகர மன்ற உறுப்பினர் திரு. பழனிவேல் அவர்கள் வழிமொழிந்தார். தீர்மானம் ஒருமனமாக நிறைவேறியது. 3. மூன்றாவது தீர்மானம், ‘இப்பள்ளிக்கு ஒரு வகுப்பறை கட்டியுதவி இடநெருக்கடியைத் தவிர்த்த இந்நகர்ச் சீரணித் தொண்டர்கட்கு இக்கூட்டம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது’ என்பது. இதைப் பள்ளித் தலைமையாசிரியர் அவர்கள் முன்மொழிந்தார். உதவித் தலைமையாசிரியர் அவர்கள் வழிமொழிந்தார். தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. 4. ‘1968 ஆம் ஆண்டுப் பள்ளியிறுதித் தேர்வில் முதல்மதிப்பெண் பெற்று இப்பள்ளிக்குப் பெருமை தேடித் தந்த இப்பள்ளியின் பழைய மாணவன் பூங்குன்றனை இக்கூட்டம் மனமாரப் பாராட்டுகிறது’ என்னும் நான் காவது தீர்மானம் மன்றச் செயலாளரால் முன்மொழியப் பட்டுக் கூட்டத்தினரின் மிகுந்த கைதட்டலுடன் ஒருமனமாக நிறைவேறியது. மன்றச் செயலாளரால் இத்தீர்மானங்கள் உரியவர்களுக்கு அனுப்பப்பட்டன. 17. செய்யுளின் திரண்ட பொருளெழுதுதல் ஒரு செய்யுளின் சொற்பொருளைத் திரட்டி யெழுதுதல் பொழிப்புரை எனப்படும். அஃது அச் செய்யுளின் திரண்ட பொருளை அறிதற்கு ஏதுவாகும். “ குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி யழகே அழகு” பொழிப்பு : தலைமயிரின் அழகும், மடிப்பை யுடைய ஆடையினது கரையின் அழகும், மஞ்சள் முதலிய கலவைப்பூச்சின் அழகும் அழகு அன்று. மனத்தின் கண் ‘நாம் நற்குண நற்செய்கை உடையோம்’ என்று எண்ணுகின்ற நடுநிலைமையால் கல்வியால் உண்டாகும் அழகே அழகாகும். செய்யுளின் பொருள் எளிதில் விளங்குகின்றதல்லவா? கொடுமை - வளைவு. இங்கு ஆடையின் மடிப்புக்கு ஆனது. கோடு -வேட்டி, சேலைகளின் கரை. “ தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” பொழிப்பு: ஊற்று தோண்டிய அளவு நீர் சுரக்கும்; (அதுபோல) மக்கட்குக் கற்ற அளவு அறிவு உண்டாகும். தொடுதல் - தோண்டுதல். மணல்கேணி- ஊற்று. உங்கள் செய்யுட் பாடப் பகுதியிலுள்ள செய்யுள்களுக்கு இவ்வாறு பொழிப்புரை எழுதிப் பழங்குங்கள். 18. திருமண வாழ்த்து வரைதல் திருமண வாழ்த்து மணமகன் மணமகள் அ. வடிவேலன் மலர்க்கொடி காலம் : 15.8.68 திங்கட்கிழமை; காலை 6.30 மணி. இடம் : மணமகள் இல்லம்; 25, பழனியாண்டவர் கோவில் தெரு, பவானி. அன்பு கெழுமிய இன்பப் புதுமண மக்காள்! சுற்றமும் நட்பும் சூழ, மங்கலம் பொருந்திய இத் திருமணப் பந்தலில் புது மணம் பொருந்திப் பொலிவுடன் வீற்றிருக்கும் நீவிர் இன்றேபோல் என்றும் இன்புற்று இனிது வாழ்வீராக! உருவமும் பருவமும் ஒருங்கொப்பக் கொண்டு திகழும் உங்களை வாழ்க்கைத் துணைவர்களாக்கிய இந்நாள் நன்னாளாகுக! வடிவேலன் என்னும் பழங்குடி வரு செல்வ! நீர் விரும்பியவாறே அரும்பெறற் செல்வியை வாழ்க்கைத் துணையாகப் பெற்றீர்! ‘மனைக்கு விளக்கம் மடவார்’ என்னும் சான்றோர் தகவுரையை மறவாமல், ‘வாழ்க்கைத் துணைவி’ என்பதன் பொருளை உணர்ந்து, உளமொன்று பட்டு, ‘இல்லாள்’ என்னும் சொல்லின் பொருளை உணர்ந்து, அன்னாளை அச்சொற்பொருட்கு உரிமையுடையவளாக்கி, தமிழ்வாழ, தமிழர் வாழத் தக்கவகையில் தகவுடன் வாழ்வீராக! மலர்க்கொடி என்னும் இலக்கணச் செல்வி! நும் மனத்துக்கினிய வடிவேலனை வாழ்க்கைத்துணைவராகப் பெற்றீர்! இன்று முதல் நீவிர் இருவீரும் வாழ்க்கைத் தேரின் இடம்பூணி வலம் பூணிகளாயினீர் என்பதை உணர்ந்து, ‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்,’ என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து, மனைத்தக்க மாண்புடையாளாகித் தற்கொண்டான் வளத்தக்காளாய் வாழ்வீராக! மனமொன்றுபட்ட வாழ்க்கைத் துணைவீர்! பூவும் மணமும் போல், பொன்னும் ஒளியும் போல், தமிழும் இனிமையும் போல் என்றும் இணைபிரியாமல் இனிது இன்புற்று வாழ்க வாழ்க என மனமார வாழ்த்து கின்றனம். வாழ்க நும் புது வாழ்வு! வளர்க நும் பேரன்பு! அன்புள்ள, க.அறிவழகன் - அறச்செல்வி 19. வாழ்க்கை வசதிகள் வேண்டி ஊரார் எழுதும் கூட்டு விண்ணப்பம் உயர்திரு. ஊராட்சி ஒன்றிப்புத் தலைவர் அவர்களுக்கு, கோவை மாவட்டம். ஈரோடு வட்டம், ஈரோடு ஊராட்சி ஒன்றிப்புக்குட்பட்ட பள்ளக்காட்டூர் ஊர்ப் பொதுமக்கள் எழுதும் விண்ணப்பம். அன்புள்ள ஐயா, எங்கள் ஊரில் நூற்றிருபது வீடுகளுக்கு மேல் உள்ளன. படிக்கும் பருவமுள்ள சிறுவர்கள் ஐம்பதிற்கு மேல் உள்ளனர். எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இல்லை. எங்கள் ஊரிலிருந்து 5.கி மீட்டருக்குள் பள்ளிக்கூடம் எதுவும் இல்லை. இளங் குழந்தைகள் தொலைவில் சென்று படிக்க முடியாமையால், எங்கள் செல்வங்களைக் கல்லாமல் வளர்க்க வேண்டிய நிலையில் உள்ளோம். எங்களூர் மாகாளியம்மன் சாவடி பெரிதாக உள்ளது. இப்போது அச்சாவடியில் பள்ளி நடத்தலாம். விரைவில் புதிய கட்டடம் கட்டித் தந்துவிடுகிறோம். ஆகையால், உடனடியாக எங்களுக்குப் பள்ளிக்கூடம் ஏற்படுத்தித் தரும்படி அன்புடன் வேண்டிக் கொள்கிறோம். மேலும், எங்களூர்க்கு ஊர்ப்பொதுக் குடிநீர்க் கிணறு இல்லை. தோட்டக் கிணறுகளிலிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டியிருக்கிறது. ஆகையால், குடி தண்ணீர்க் கிணறு ஒன்று வெட்டித் தந்துதவுமாறும் வேண்டிக் கொள்கிறோம். மற்றும், எங்களூரிலிருந்து ஒரு கி. மீட்டர்த் தொலைவில் நல்ல பாதை செல்கிறது. அதிலிருந்து எங்களூர் வரை நல்ல பாதை இல்லை. அதனால், வண்டிப் போக்குவரவுக்கு வசதியில்லாமல் இருக்கிறது. வெளியூரிலிருந்து நிலங்கட்குக் குப்பை கொண்டுவர முடிவதில்லை. ஆகையால், அந்த ஒரு கி. மீட்டருக்கு நல்ல பாதை போட்டுத் தரும்படியும் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம். உடனடியாகக் கவனித்து இம்மூன்று உதவிகளையும் செய்து கொடுத்து எங்களை மகிழ்விப்பது தங்கள் கடமையாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு, அ. பெரியதம்பி கவுண்டர் மள்ளக்காட்டூர் மு. நல்லப்ப பிள்ளை. 7.11.1969க. முருகவேல் செட்டியார் மா. வேலப்பக் கவுண்டர் ந. பச்சைமுத்துத் தேவர் இவ்வாறே பாலம், மின்சார வசதி முதலியன வேண்டிய எழுதிப் பழகுங்கள். 20. உரையாடல் காட்சி ஒளவையார் தூது இடம் :தகடூர் அரண்மனை காலம் : காலை (அதியமானும் ஒளவையாரும்) ஒளவையார் : வள்ளல்! ஏன் ஒருவகை முகவாட்டத்துடன் இருக்கிறீர்! அதியமான் : ஒன்றுமில்லை. ஒளவை : ஒன்றுமில்லையா? அடுத்தது காட்டும் பளிங்கு போல் அகத்தில் உள்ளதை முகம் காட்டுகிறதே! அதி : அருந்தமிழன்னாய்! வேறொன்றுமில்லை. அந்தத் தொண்டைமானில்லை? ஒளவை : காஞ்சித் தொண்டைமானா? அதி : ஆம், அவன் செயலைப்பற்றித்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஒளவை : ஏன்? அவன் என்ன செய்தான்? அதி : ஒன்றும் செய்யவில்லை. நம் தகடூர் நாட்டின்மேற் படையெடுக்க அவன் தன் படையைப் பெருக்கிக் கொண்டு வருகிறானாம். ஒளவை : தகடூர்த் தலைவ! பகைவன் படையைப் பெருக்குவதைக் கண்டு அஞ்சுவது உன் போன்ற ஒரு வீரனுக்கழகாகுமா? அதி : அறிவுச் செல்வி! நான் அஞ்சவில்லை. ஒளவை : மழவர் பெரும! இங்கென்ன வீரருக்கா பஞ்சம்? அவன் படையெடுத்து வந்தால் எதிர்த்து அடித்துத் துரத்தினால் போகிறது. அதற்கேன் கவலைப்பட வேண்டும்? அதி : அன்னையே! அவன் படையைப் பெருக்குவதைப்பற்றியோ, படையெடுப்பதைப் பற்றியோ நான் கவலைப்படவில்லை. ஒளவை : கொங்கர் கோமகனே! பின் எது பற்றிக் கவலை? அதி : போருண்டானால் நாட்டில் அமைதி குலையும். நாட்டு மக்கள் நலிவெய்த நேரும் என்பது பற்றியே கவலைப்படுகிறேன். ஒளவை : கவலைப்படுவதால் பயன்? அதி : பயனில்லைதான். எப்படியாவது போருண்டாகாமல் செய்ய வேண்டும் என்றுதான் எண்ணுகிறேன். ஒளவை : அதை அவனன்றோ எண்ணவேண்டும் ? நாம் எண்ணுவதால் பயனென்? அதி : நானும் அதுபற்றித்தான் சிந்தித்தேன். அவனிடம் தூதனுப்பலாம் என்று கருதுகிறேன். ஒளவை : சரி, அப்படியே அனுப்பிப் பார்ப்பது. அதி : யாரை அனுப்புவதென்று உன்னுகிறேன். ஒளவை : ஏன்! நான் அத்தொண்டைமான்பால் தூது சென்று வருகிறேன். அதி : தாங்களா? ஒளவை : ஏன்! நான் ஒரு பெண்பால் என்று எண்ணுகின்றனையா? அதி : இல்லை. ஒளவை : பின்னென்ன? இன்றே நான் காஞ்சிக்குப் புறப்படுகிறேன். அதி : அன்னாய்! மகிழ்ச்சி. காட்சி - 2 இடம் : காஞ்சி அரண்மனை. காலம்: முற்பகல் (தொண்டைமானும் ஒளவையாரும்) வாயிலோன் : (வந்து) மன்னர் பெரும! வணக்கம். தங்களைக் காண ஒளவையார் வந்திருக்கிறார்கள். தொண்டை : ஒளவையாரா! அழைத்து வா. வாயி : அன்னையீர் ! அரசர் அழைத்துவரச் சொன்னார். ஒளவை : சரி. தொண் : (ஒளவையார் வர) அருந்தமிழ் அன்னையே! வருக வருக! இருக்கையில் அமருங்கள். ஒளவை : வாழ்க தொண்டையர் தோன்றால்! தொண் : அன்னையே! தங்கள் வருகை என்னைப் பெருமைப்படுத்தியது. எங்கிருந்து வருகிறீர்கள்? ஒளவை : தகடூரிலிருந்து வருகிறேன். தொண் : தகடூரிலிருந்தா! ஒளவை : ஆம்; தகடூரிலிருந்துதான் வருகிறேன்; அதியமான் தூதாக. தொண் : அதியமான் தூது! தகடூர் நாட்டின் மேற்படையெடுக்காமற் செய்தற் பொருட்டா? ஒளவை : இருக்கலாம். தொண் : அன்னாய்! வாருங்கள்! படைக்கலக் கொட்டிலைப் பார்த்துவிட்டு உணவுண்ணச் செல்லலாம். ஒளவை : சரி. தொண் : (படைக்கலக் கொட்டிலுக்குட் சென்று) இப்படைக்கலங்களைப் பார்த்தீர் களா? ஒளவை : வாள், வேல் முதலிய இப்படைக் கலங்கள் புத்தம் புதியவையாக எண்ணெய் பூசிப் பீலியணியப்பெற்றுப் படைக்கலக் கொட்டிலில் அழகாக அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதியமானின் வேல், வாள் முதலிய படைக்கலங்களோ பகைவரைக் குத்தியும் வெட்டியும் முனைமுறிந்து, வாய் மழுங்கிப் பழுதுபார்ப்பதற்காகக் கொல்லன் உலைக் கூடத்தில் உள்ளன. தொண் : அங்ஙனமெனின், என் படைக்கலங்கள் போர்ச்சுவை அறியாதவை என்பதும், அதியமானின் படைக்கலங்கள் போர்ச்சுவையில் தோய்ந்தவை என்பதும் தங்கள் கருத்தா? ஒளவை : ஆம்; அதியமான் இடைவிடாமல் பல போர்கள் செய்ததனால் அவன் வீரர்கள் போர்த்துறையில் பண்பட்டுள்ளார்கள். உன் வீரர்கள் இனித்தான் போர்க்களச் சுவையினைப் பெறுதல் வேண்டும் அன்றோ! அம்மட்டோ! நீவிர் இருவரும் போரிடுவதால் நாட்டின் அமைதி குன்றி, நாட்டு மக்கள் நலிவெய்துவரன்றோ! வீரர் பலர் வீணில் உயிரிழக்க நேருமன்றோ! சற்று சிந்தித்துப் பார்! தொண் : அன்னையே! அதியமான் ஆற்றலைச் சரிவர உணராது தப்புக்கணக்குப் போட்டுத் தகடூர் நாட்டின்மேற் படையெடுக்க எண்ணிய என் எண்ணத்தை நான் மாற்றிக் கொண்டேன். அதியமானுடன் நட்புக் கொள்ள விரும்புகிறேன். அதற்குத் தாங்களே எனக்குத் தூதாக உதவ வேண்டும். ஒளவை : மகிழ்ச்சி தொண்டையர் கோனே! நும் மன மாற்றத்தைப் பாராட்டுகிறேன். நீரும் அதியமானும் நண்பர்களாக விளங்க ஆவன செய்கிறேன்.