புலவர் குழந்தை படைப்புகள் – 14 யாப்பதிகாரம் தொடையதிகாரம் ஆசிரியர் புலவர் குழந்தை நூற் குறிப்பு நூற்பெயர் : புலவர் குழந்தை படைப்புகள் - 14 ஆசிரியர் : புலவர் குழந்தை பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 000 = 000 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 000/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in அணிந்துரை யாப்பதிகாரம் புலவர், முனைவர் ஈரோடை இரா. வடிவேலன் 32. தியாகி குமரன் தெரு, ஈரோடை - 638 004. தமிழில் பேசுந்தமிழ் பேச்சு வழக்கு எனவும், எழுதும் தமிழ் ‘இனிய செய்யுள் வழக்கு’ எனவும் பெயர் பெறும். முன்னர் இலக்கணம், இலக்கியம் இரண்டும் செய்யுள் நடையிலேயே செய்யப்பட்டமையால் எழுதும் தமிழ் ‘செய்யுள் வழக்கு’ எனப் பெயர் பெற்றது. செய்யுள் வழக்கு ‘செய்யுள் நடை, உரைநடை என இருவகைப்படும். இவ் விருவகையும் பழங்காலத்திலிருந்தே பயின்று வந்துள்ளன. “பாட்டுரை நுவலே?” என்பது தொல்காப்பியம். உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்பது சிலப்பதிகாரம். இவ்விரு வகையும் ஒரு மொழிக்கு இரு கண்கள் போன்றவை. செய்யுளில்தான் சொல்லணி, பொருளணி எனும் இருவகை அணிநலத்துடன் சுருங்கச் சொல்லல், ஆழ முடைத்தாதல் முதலிய அழகு மிளிர கற்பனைச் செறிவுடன் அமைத்துக் கூற முடியும். செய்யுளில்தான் எளிதில் மனப்பாடம் செய்ய முடியும். வேண்டும்பொழுது பிறர்க்கு எடுத்துரைக்க முடியும். நெடுங்காலம் கல்மேல் எழுத்துப்போல் மனத்தில் நின்றுநிலை பெறவும் ஏற்றது செய்யுளே ஆகும். “பாட்டும் பொருளும், பொருளாற் பொருந்தும் பயனும் என்பால் கூட்டும்” என்பது குமரகுருபரர் கூற்று. நம் முன்னோர் இலக்கணத்தையும் செய்யுள் நடையிலேயே செய்து தந்தனர். இக்காலத்தில் கவி, கவிதை என்னும் பெயர்களில் செய்யுட்கள் செய்து வருகிறார்கள். உரைநடை இலக்கியம் போலச் செய்யுள் இலக்கியமும் வளர்ந்து வர வேண்டும். கவியுள்ளம் இயல்பாகவே அமைவது. அது ஒரு தனிப்பண்பு ஒலியமைப்புத் தெரிந்தவர்கள் யாப்பிலக்கணம் கற்றுக் கொள்ள வேண்டும். கவிபாடிப் பழகுவோர் பெரும்புலவர்கள் செய்துள்ள பலவகைச் செய்யுட்களையும் கற்க வேண்டும். இந்த ‘யாப்பதிகாரம்’ என்னும் இந்நூல் எளிய முறையில் பாடல், கவி இயற்றுவதற்கு வழி வகுக்கும். செய்யுள் செய்து பழகுவோருக்கு யாப்பு அறிவிருந்தால் எளிதில் செய்யுள் செய்ய முடியும். முற்காலத்தில் நத்தத்தனார், நல்லாதனார், அவிநயனார், பல்காயனார், மயேச்சுரர், பேராசிரியர், பரிமாணனார், காப்பியனார், காக்கைபாடினியார் - முதலிய நல்லிசைப் புலவர்கள் தத்தம் பெயரால் யாப்பிலக்கணம் செய்தனர். இற்றைக் காலத்தில் தொல்காப்பியச் செய்யுளியல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்பன வழக்கத்தில் உள்ளன. புலவர் குழந்தையவர்கள் யாப்பிலக்கணத்திற்கு எளிய முறையில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, செய்யுளியல், ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, புதிய செய்யுட்கள், செய்யுளியல், உறுப்பியல் எனப் பகுத்துத் தந்துள்ளார். யாப்பதிகாரத்தைப் படிப்பார்க்கு எளிதில் செய்யுள் செய்யக் கைவரப் பெறும். புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்கள் கொங்கு நாட்டில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஓலவலசு’ என்னும் சிற்றூரில், பண்ணையக்காரர் என்னும் பழங் குடியில், முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையாருக்கு 1-7-1906இல் பிறந்தார். இவர்தம் பெற்றோருக்கு ஒரே மகனாக வளர்ந்தார். தாம் பிறந்த சிற்றூரில் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார்; தொடர்ந்து படிக்காமல் இடையிடையே விட்டு விட்டுப் படித்தார். மொத்தத்தில் எட்டு மாதங்களே திண்ணைப் பள்ளியில் பயின்றார். கருவிலே திருவுடையவராகிய இவர் பத்தாம் ஆண்டில் இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். யாரேனும் ஒருவர் ஒரு பாட்டைப் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசையில் புதுப்பாட்டு ஒன்றினைப் பாடுவார். எப்போதும் ஏதேனும் ஒருபாட்டை எழுதிக் கொண்டே இருப்பார். பாட்டு எழுதுவது இவருக்குக் கைவந்த கலையாக அமைந்து விட்டது. இவர் காலத்தில் இவர் வாழ்ந்த பகுதியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தானாகவே முயன்று படித்துக் கவிபாடும் திறம் பெற்றிருந்தார். இவர் முதன் முதலில் இசைப்பாடல்களைப் பாடினார். இவர்தம் கல்லாமல் பாடும் கவித்திறனையும், பாடல்களின் சிறப்பினையும் கண்டு வியந்த அறிஞர்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிக்குமாறு தூண்டினர்; ஊக்குவித்தனர். தாம் பிறந்த ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர்கள் எவரும் அக்காலத்தில் இல்லை. ஆகவே இவர் ஆசிரியர் துணையின்றித் தாமாகவே முயன்று இலக்கிய இலக்கணங்களைப் படித்துத் தமிழில் சிறந்த புலமை பெற்றார். மேலும் இவர் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகத் தேர்வு எழுதிப் புலவர் பட்டயம் பெற்றார். இவர் பவானியில் மாவட்டக் கழகப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். 1940வரை தமிழாசிரியராகத் தொண்டாற்றினார். 1941 முதல் 1962ஆம் ஆண்டுவரை தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்கள் வியந்து பாராட்டும்வகையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியினின்று ஓய்வு பெற்ற பின்பும் எழுத்துப் பணியினின்று ஓய்வு பெறவில்லை. வாழ்நாள் முழுமையும் தமிழுக்காகத் தொண்டாற்றினார்; பல நூல்களைப் படைத்தார்; தமது கவிதைகள் வாயிலாகச் சமுதாய உணர்வை - பகுத்தறிவை மக்களிடையே பரப்பினார். இவருக்கு முன் ஓலவலசில் படித்தவர் எவருமில்லை. அவ்வூரில் உள்ளவர்களுக்குக் கையொப்பம் இடவும் தெரியாது. இளமைப் பருவத்திலேயே பொதுத் தொண்டில் -குமுகாயத் தொண்டில் ஆர்வமுடையவராக இருந்தார். தாமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தம் ஊரிலிருந்த தம்மையொத்த அகவையுடைய இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்தார். அவர்கள் மூலமாகப் பெரியவர்களுக்குக் கையொப்பம் போடப் பயிற்சியளிக்கச் செய்தார்; கை நாட்டு போடுவதை அறவே ஒழித்தார். அக்காலத்தில் இவரைவிட மூத்தவர் பலர் இவரிடம் கல்வி கற்றனர். ஓலவலசில் கல்லாமை இருளைப் போக்கினார். வேளாளஇன மக்களிடையே இருந்த பலபிரிவினரையும் ஒன்று சேர்ப்பதற்காகவும், அவ்வின இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்காகவும் 1946 முதல் 1950வரை ‘வேளாளன்’ என்னும் திங்களிதழை நடத்தினார். அவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் அவ்வின இளைஞர்களிடையே புத்துணர்ச்சியை வளர்த்தது. விதவை மணம், கலப்புத்திருமணம், சீர்த்திருத்த மணம் முதலியன செய்யவும் அம்மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். வேளாள சமூகத் தலைவரான திரு. வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் தலைமையில், தகடூர் (தருமபுரி) மாவட்டத்திலுள்ள அரூரில் வேளாள மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் புலவர் குழந்தை அவர்கள் ‘விதவை மணம்’ தீர்மானங் கொண்டு வந்தார்; ஒருமனமாக நிறைவேறச் செய்தார். அதன்படி நூற்றுக்கணக்கான விதவை மணங்களைச் செய்து வைத்தார். இச்செயல்கள் இவர்தம் சமூகத் தொண்டிற்குச் சிறந்த சான்றுகளாகும். இவர், யாப்பிலக்கணம் படிப்பதற்கு முன்னே 1918இல் ‘கன்னியம்மன் சிந்து’ என்னும் கவிதை நூலை வெளியிட்டார். இவர் பாடிய அச்சாகாத பாடல்களும் நூல்களும் பல உள்ளன; சில நூல்கள் அச்சாகி வெளியிடப்பட்டன. யாப்பிலக்கணம் கற்பதற்கு முன்பு பாடிய பாடல்கள் யாப்பிலக்கணப்படி அமைந்துள்ளன. இவர் இதுவரை எழுதியுள்ள நூல்கள் : இராவண காவியம் உள்படச் செய்யுள் நூல்கள்-7, உரைநூல்கள் - 3, இலக்கண நூல்கள் -3, உரைநடை நூல்கள் -16 ஆகமொத்தம் 29 நூல்கள் படைத்துள்ளார். தீரன் சின்னமலை நாடகம் இன்னும் அச்சாகவில்லை. ‘விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர்கம்பன்’ என இதுவரையில் போற்றப்பட்டு வரும் புகழுரைக்கு ஈடாகப் புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் பாடிப் புகழ்பெற்றார். ‘காமஞ்சரி’ என்னும் செய்யுள் நாடக நூல், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் என்னும் நூலுக்குப் பிறகு எழுதப்பட்ட சிறந்த நாடக நூலாகும். ‘நெருஞ்சிப் பழம்’ என்னும் நூல் தமிழில் இதுவரை வெளிவராத கற்பனைக் கருவூலமான காதல் கதையாகும். புலவர் குழந்தை அவர்கள் பெருங்கவிஞர் மட்டுமல்லர். சிறந்த எழுத்தாளர்; கேட்போர் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசும் பெரும் பேச்சாளர். இவருடைய எழுத்துகள் உறுதியும் அஞ்சாமையும் ஆய்வும் செறிந்த புரட்சிக் கனல் தெறிக்கும் இயல்புடையவை. இவருடைய செய்யுள் நடையும் உரைநடையும் எளிய இனிய தனித்தமிழில் அமைந்தவை. இவர் படைத்த நூல்களெல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன. தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இவர் அவ்வியக்கத்தில் சேர்ந்தார்; பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். அன்று முதல் சுயமரியாதை இயக்கம் அதன் மறு பதிப்பான திராவிடர் கழகம், அதன் மறுமலர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுள் இணைந்து தொண்டாற்றியவர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். பள்ளித் தமிழாசிரியராக இருந்துகொண்டே, அத்தொழிலுக்குச் சிறிதும் இடையூறு இல்லாமல், ‘பெரியார் சீடர்’, ‘கருப்புச் சட்டைக்காரர்’ என்று பொது மக்கள் கூறும்படி கட்சித் தொண்டாற்றியவர். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் படைக்கத் தூண்டியது; இவருக்குப் புகழைச் சேர்த்தது. 1948இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திருக்குறளுக்குப் பகுத்தறிவிற்கு ஏற்ப உரை எழுதுவதற்குத் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தரபாரதியார் தலைமையில் ஐவர் கொண்ட குழுவை அமைத்தார். அக்குழுவில் புலவர் குழந்தையும் ஒருவர். இவரே தனிஒருவராக இருந்து திருக்குறளுக்கு உரை எழுதி ‘திருக்குறள்-குழந்தையுரை’ என்று வெளியிட்டார். அவ்வுரையை 28 நாட்களில் எழுதி முடித்த பெருமைக்குரியர். அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்ட இவர்தம் இராவண காவியத்திற்கு, தமிழக அரசால், தமிழ் வாழத் தாம் வாழும் தமிழவேள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் 17-5-1971இல் தடை நீக்கப்பட்டது. அதைக்கண்டு தமிழகமே அகமிக மகிழ்ந்தது; தமிழவேள் கலைஞரை உளமார வாழ்த்தியது. புலவர் குழந்தை ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கொண்டவர். இவர் ஒரு புரட்சிப் புலவரே எனினும் அமைதியும் அடக்கமும் உடையவர்; ஆடம்பரமின்றி எளிய வாழ்வு வாழ்ந்தவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடமை தவறாதவர்; எதிர்க் கட்சி யானாலும், மாற்றுக் கருத்து உடையவராலும் நன்கு மதிக்கத் தக்கவர். புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார். கல்வியறிவு பெற வாய்ப்பில்லாதவராயினும் பொது அறிவு நிரம்பப் பெற்றவர்; தன்மானக் கொள்கையுடையவர்; தம் கணவரின் கொள்கைக்கேற்ப இல்லறத்தை இனிது நடத்தியவர். இவ்விணையருக்குச் சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர். தமிழுக்குத் தொண்டு செய்து வந்த புலவர் பெருந்தகை தமது 68ஆம் அகவையில் 24-9-1973இல் இயற்கை அடைந்தார். மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் புலவர் குழந்தையிடம் அன்பும் மதிப்பும் உடையவர். அவர் மறைந்த பிறகு, அவர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நூல்கள் 8-7-2006 அன்று அரசுடைமை ஆக்கப்பட்டதாக அறிவித்தார். குழந்தை அவர்களின் மகள்கள் இருவருக்கும் தலா ரூ.5 இலட்சம் பரிவுத் தொகை வழங்கினார். நன்றி : நித்திலக் குவியல் (திபி 2037 - டிசம்பர் 2006) ‘செந்தமிழ்க் குழந்தை’ பள்ளி சென்று படித்த காலம் 5 ஆண்டு எட்டு மாதம் தான்! ஆனால் திருக்குறளுக்கும், தொல்காப்பியத்துக்கும் உரை எழுதி, பேரிலக்கியம் ஒன்றைப் படைத்து, நாடகக் காப்பியம் உருவாக்கிப் பல இலக்கண நூல்களையும், வரலாற்று நூல்களையும் எழுதியவர் பெரும்புலவர் அ.மு. குழந்தை. ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த ஓல வலசில் 1.7.1906 அன்று முத்துசாமிக் கவுண்டர், சின்னம்மையார் தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர் குழந்தைசாமி; பின்பு தன்னைக் ‘குழந்தை’ என்றே குறிப்பிட்டுக் கொண்டார். ஈரோடு லண்டன் மிஷன் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் “எலிமெண்டரி கிரேடு”, “லோயர் கிரேடு”, ஹையர் கிரேடு” ஆசிரியர் பயிற்சி பெற்ற அவர் திருவையாறு சென்று தேர்வு எழுதி 1934இல் ‘வித்துவான்’ பட்டம் பெற்றார். மொத்தம் 39 ஆண்டுகள் ஆசிரியப் பணிபுரிந்தார். பவானி மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் மட்டும் தொடர்ந்து 21 ஆண்டுகள் பணி புரிந்தார். தொடக்க காலத்தில் கன்னியம்மன் சிந்து, வீரக்குமாரசாமி காவடிச்சிந்து, ரதோற்சவச் சிந்து போன்ற பக்திப் பாடல்களைப் பாடினாலும் 1925க்குப் பின் பெரியாரின் பெருந் தொண்டராகவே விளங்கினார். ‘தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக விளங்கும் நூல்திருக்குறள்; அது மனித வாழ்வின் சட்ட நூல்’ என்ற கொள்கையுடைய குழந்தை 1943, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற திருக்குறள் மாநாடுகளில் பெரும் பங்காற்றினார். தான் எழுதிய பள்ளிப்பாட நூல்களுக்கு ‘வள்ளுவர் வாசகம்’ வள்ளுவர் இலக்கணம்’ என்று பெயரிட்டார். வள்ளுவர் பதிப்பகம் வைத்துப் பல நூல்களை வெளியிட்டார். அவற்றுள் பெரியார் நூல்கள் நான்கு. பள்ளிக்கு வெளியே வந்தவுடன் கருப்புச்சட்டை அணிந்து கடவுள் மறுப்பாளராக விளங்கினாலும் பள்ளிப் பாடங்களில் உள்ள பக்திப் பாடல்களை மிகவும் சுவைபட நடத்துவார். தான் இயற்றிய ‘யாப்பதிகாரம்’ ‘தொடையதிகாரம்’ போன்ற நூல்களில் திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள் பலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அரசியல் அரங்கம், நெருஞ்சிப்பழம், காமஞ்சரி, உலகப் பெரியோன் கென்னடி, திருநணாச் சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல்கள் போன்றவை கவிதை நூல்கள், ‘காமஞ்சரி’ பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மனோண்மனியத்திற்குப் பின் வந்த மிகச் சிறப்பான நாடகக் காப்பியம் ஆகும். தொல்காப்பியர் காலத் தமிழர், திருக்குறளும் பரிமேலழகரும், பூவா முல்லை, கொங்கு நாட்டு வரலாறு, தமிழக வரலாறு, தமிழ் வாழ்க, தீரன் சின்னமலை, கொங்குக் குலமணிகள், கொங்கு நாடும் தமிழும், அருந்தமிழ் அமுது, சங்கத் தமிழ்ச் செல்வம், அண்ணல் காந்தி ஆகியவை உரைநடை நூல்கள். ‘தமிழ் வாழ்க’ நாடகமாக நடிக்கப்பட்டது. தீரன் சின்னமலை பற்றி முதன்முதலில் நூல் எழுதி அவர் வரலாற்றை வெளிக்கொணர்ந்தவர் புலவர் குழந்தை. தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்குப் புதிய எளிய உரை எழுதினார். திருக்குறளுக்குப் புத்துரை எழுதியதுடன் தமிழில் வெளிவந்த அனைத்து நீதி நூல்களையும் தொகுத்து உரையுடன் “நீதிக் களஞ்சியம்” என்ற பெயரில் பெரு நூலாக வெளியிட்டார். தமிழ் அறிந்தவர்கள் அனைவரும் கவிஞராக ‘யாப்பதிகாரம்’, ‘தொடையதிகாரம்’ என்ற யாப்பு நூல்களை எழுதினார். கும்மி, சிந்து ஆகியவற்றிற்கும் யாப்பிலக்கணம் வகுத்துள்ளார். இலக்கணம் கற்க நன்னூல் போல ஒரு நூல் இயற்றி ‘இன்னூல்’ என்று பெயரிட்டார். ‘வேளாளர்’ ‘தமிழோசை’ போன்ற இதழ்களையும் நடத்தினார். வகுப்பில் பாடம் நடத்தும்போது பாடல்களை அதற்குரிய ஓசை நயத்துடன் ஒலிப்பார். உரைநடைபோலத் தமிழாசிரியர்கள் பாடல்களைப் படிக்கக் கூடாது என்பது அவருடைய கருத்தாகும். தமிழைப் பிழையாகப் பேசினாலோ, எழுதினாலோ கண்டிப்பார். ஈரோட்டில் வாழ்ந்த மேனாட்டுத் தமிழறிஞர் ‘பாப்லி’லியுடன் நெருங்கிப் பழகியவர். அவரைப் பற்றிப் ‘பாப்புலி வெண்பா’ என்ற நூலே எழுதியுள்ளார். அவர் படைப்பில் தலையாயது ‘இராவண காவியம்’ ஆகும். பெயரே அதன் பொருளை விளக்கும். 5 காண்டங்கள், 57 படலங்கள், 3100 பாடல்கள். இந்நூல் 1946-ல் வெளிவந்தது. பின் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. தடை நீங்கி 1971-ல் இரண்டாம் பதிப்பும் 1994-ல் மூன்றாம் பதிப்பும் வெளிவந்தது. அண்மையில் நான்காம் பதிப்பை சாரதா பதிப்பகம் (சென்னை - 14)வெளியிட்டுள்ளது. மிகச்சிறந்த நயமுடைய இராவண காவியத்தைக் கம்பனில் முழு ஈடுபாடு கொண்ட அறிஞர்களும் பாராட்டியுள்ளனர். ‘கம்பன் கவிதையில் கட்டுண்டு கிடந்தேன். இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது’ என்று ரா.பி.சேதுப்பிள்ளை கூறினார். கம்பர் அன்பர் ஐயன்பெருமாள் கோனார் ‘இனியொரு கம்பன் வருவானோ? இப்படியும் கவிதை தருவானோ? ஆம், கம்பனே வந்தான்; கவிதையும் தந்தான்’ என்று புலவர் குழந்தையைப் பாராட்டுவார். அறிவியல் தமிழ் அறிஞர் பெ.நா.அப்புசாமி போன்றோரின் துணையுடன் அரிய செய்திகள் சேகரித்துத் ‘திராவிட காவியம்’ பாட முயன்றபோது 24.9.1972 அன்று புலவர் குழந்தை மறைந்தார். பாரதிதாசன் ‘செந்தமிழ்க் குழந்தை’ என்று பாராட்டியது போலத் தமிழாக வாழ்ந்த அவருடைய நூற்றாண்டு நிறைவு நாள் 1.7.2006 ஆகும். புலவர், முனைவர் இரா. வடிவேலனார் பதிப்புரை கொங்குத் தமிழகம் ஈன்றெடுத்த தமிழ்ப்பெரியார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906ல் தோன்றி 1973ல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிழ் மண்ணில் தவழ்ந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர். தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் பட்ட அவலங்களை எண்ணியெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளைப் பதிவுகளாக எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு எழுதி வைத்துச் சென்றவர். தமிழ் இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழ்மொழி இன நாட்டின் மேன்மைக்கும் எழுச்சிக்கும் வித்திடுபவை. குறிப்பாக இவர் எழுதிய இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிழ் மண்ணில் தன்மானக் கொள்கைகள் தழைத்துச் செழிக்கவும், நிலைத்து நின்று செயற்கரிய செயல்களைத் தமிழ் இளைஞர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும் என்ற இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்ற தமிழ்ப்பெருமக்களுக்கும், இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும்புலவர் இரா. வடிவேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ஞானாலயா’ கிருட்டிணமூர்த்தி , பல்லடம் மாணிக்கம், சிலம்பொலி செல்லப்பன், அண்ணாஅறிவாலயம் நூலகம், செந்தமிழ் நூலகம், புலவர் தமிழகன், பிரேம் குமார், மா.கந்தசாமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செல்வி ச. அனுராதா மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் கணினிக்கோப்பு குட்வில். செல்வி, கீதா நல்லதம்பி, சு. நித்தியானந், செல்வி சு. ரேகா மெய்ப்பு சுப. இராமநாதன், புலவர். இராசவேலு, கி.குணத்தொகையன், அரு.அபிராமி, --- உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந.இராமசுப்ரமணிய ராசா, இல.தர்மராசு, ரெ. விஜயகுமார், --- எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் --- இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . பொருளடக்கம் யாப்பதிகாரம் யாப்பதிகாரம் (1959) முகவுரை உலக மொழிகளுள் தமிழ் மொழியே முதன்மையான மொழி யாகும். காரணம், இதன் இயல்பும் எளிமையும் இனிமையுமே யாகும். தமிழ் எழுத்துக்கள் எல்லாம் இயல்பான ஒலியுடையவை. அவ் வெழுத்துக்கள் தனித்தும் சொல்லின் கண்ணும் ஒரே தன்மையாக ஒலிக்கும் இயல்புடையவை. தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்று வகையில் புணர்ந்து, சொன்னயமும் பொருணயமும் ஓசைநயமும் பயக்குந் தன்மை தமிழ் எழுத்துக்களுக்கே உரிய தனித்தன்மை யாகும். இவையே தமிழ்மொழியின் இயல்புக்கும் எளிமைக்கும் இனிமைக்கும் காரணமாகும். பேச எழுதப்படுதல், இலக்கியப் பரப்பும் இலக்கண வரம்பும் உடைமை, பழமையும் இளமையும் உடைமை என்னும் இம் முப்பண்பும் உடைய மொழி உயர்தனிச் செம்மொழி எனப்படும். உலக மொழிகளில் இன்று உயர் மொழிக்குரிய அம் முப்பண்பும் உடைய உயர்தனிச் செம்மொழி தமிழ் ஒன்றேயாகும். தமிழ்மொழி மிக எளிதில் பேசவும் எழுதவும் படுவது. நிரம்பிய இலக்கியச் செல்வ முடையது; முற்ற முடிந்த திண்ணிய இலக்கண வரம்புடையது; கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன்தோன்றி மூத்தது. பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி யிருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாநின் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே - மனோன்மணீயம் என, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் வியக்கும் அத்தகு இளமை நலமுடையது. பேசுந் தமிழ் - பேச்சு வழக்கு எனவும், எழுதுந் தமிழ் - செய்யுள் வழக்கு எனவும் பெயர் பெறும். மக்கள் வாழும் வாழ்க்கை முறையினைச் சிறப்புறப் புனைந்து செய்யப்படுதலின் அது செய்யுள் வழக்கு எனப் பெயர் பெற்றது. முன்னர் இலக்கியம், இலக்கணம் இரண்டும் செய்யுள் நடையிலேயே செய்யப்பட்டமையால் எழுதுந் தமிழ் செய்யுள் வழக்கு எனப் பெயர் பெற்றது எனினுமாம். அச் செய்யுள் வழக்கு - செய்யுள் நடை, உரைநடை என இரு வகைப்படும். பழங்காலத்திலிருந்தே இவ்விரு வகை நடையும் எழுதுந் தமிழில் பயின்று வந்தன. ‘பாட்டுரை நூலே’ என்பது தொல்காப்பியம். ‘உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்பது சிலப்பதிகாரம். இவ்விரு வகை நடையும் ஒருமொழிக்கு இரு கண் போன்றவை. இவ் விருவகை நடையில் சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளை, எண்வகைச் சுவையுந் ததும்ப, சொல்லணி, பொருளணி என்னும் இருவகை அணிநலத்துடன், சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் ஆழமுடைத்தாதல் முதலிய அழகு மிளிர, கருத்தைக் கவ்வுங் கற்பனைச் செறிவுடன் அமைத்துக் கூற ஏற்ற இடம் செய்யுளே யாகும். எளிதில் மனப்பாடம் செய்யவும், வேண்டும்போது பிறர்க் கெடுத்துரைக்கவும், நெடுங்காலம் கல்மேல் எழுத்துப்போல் மனத்தில் நின்று நிலைபெறவும் ஏற்றது செய்யுளே யாகும். மோனை எதுகை முதலிய தொடையழகும் நடையழகும் பொருந்த, இனிய ஓசைநலத்தால் படிப்போர்க்கும் கேட்போர்க்கும் இன்பூட்டி, உள்ளக் கிளர்ச்சியையுண்டாக்கி, கருத்துணர்ச்சியில் கருத்தைத் தோய்விக்க வல்லது செய்யுள் நடையேயாகும். திருப்பித் திருப்பிப் பன்முறை படித்துச் சுவைத்து இன்புறுதற் கேற்றது செய்யுள் நடையே யாகும். “பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால் கூட்டும்” என்பது குமரகுருபரர் கூற்று. இத்தகு சிறப்புடைமை நோக்கியே, நம் முன்னையோர் இலக்கியம் இலக்கணம் என்னும் இருவகை நூல்களையும் செய்யுள் நடையிலேயே செய்துவந்தனர். உரைநடை ‘பாட்டின் உரை’ என்னும் அளவிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், வரவர இந்நிலை மாறத் தலைப்பட்டது ‘உரை’ என்னும் அளவில் இருந்து வந்த உரைநடை தனி நூல் வடிவை அடையத் தொடங்கியது. அதனால், தமிழ்வாணர்க்குத் தமிழ்ப் புலவர் என்னும் பெயர்போய், தமிழ் எழுத்தாளர் என்னும் பெயர் ஏற்படலானது. அன்று செய்யுள் நடை இலக்கியம் முதன்மையுற்று வளர்ந்து வந்தமைபோல, இன்று உரைநடை இலக்கியம் முதன்மை யுற்று வளம்பெற வளர்ந்து வருகிறது. சிறுகதை, தொடர்கதை, ஆராய்ச்சிக் கட்டுரை, நாடகம் முதலியன எழுதித் தனிநூல் வடிவாகவும், வார மாத இதழ்கள், நாளிதழ்களின் வார மலர்கள் வாயிலாகவும் வெளியிட்டுத் தமிழ் எழுத்தாளர்கள் உரைநடை இலக்கியத்தை நன்கு வளர்த்து வருகிறார்கள். அவ்வாறே அன்னார் கவி அல்லது கவிதை என்னும் பெயரில் செய்யுட்கள் செய்து நூல் வடிவாகவும், அவ்விதழ்களின் வாயிலாகவும் வெளியிட்டுச் செய்யுள் நடை இலக்கியத்தை வளர்த்து வருகிறார்கள். தமிழ் மக்களுக்கு யாப்பிலக்கணப் பயிற்சியும், செய்யுள் செய்யுந் திறமும் குன்றி வரும் இக்காலத்தே, கவிதைகள் செய்து செய்யுள் நடை இலக்கியத்தை, வளர்க்க முயன்றுவரும் அன்னார்தம் முயற்சியையும் தாய்மொழிப் பற்றையும் மனமாரப் பாராட்டுகின்றேன். உரைநடை இலக்கியம் போலச் செய்யுள்நடை இலக்கியமும் நன்கு வளரவேண்டும். உரைநடை இலக்கியத்தையும் செய்யுள்நடை இலக்கியத்தையும் சரிநிகராக ஒருங்கு வளர்த்தால்தான் தமிழ்மொழி வளமுற வளரும். இன்று உரைநடை இலக்கியம் வளர்ந்துள்ளமைபோலச் செய்யுள்நடை இலக்கியம் வளம்பெற வளரவில்லை. காரணம், செய்யுள்நடை இலக்கண வரம்புக்குட்பட்டது. யாப்பிலக்கணப் பயிற்சி நன்குடையவர்க்கே உரைநடைபோல் எளிதில் திருத்தமான செய்யுள்நடை எழுத இயலும். இன்று பெரும்பான்மையான தமிழ் எழுத்தாளரிடை இலக்கிய அறிவு வளர்ந்துள்ளமைபோல இலக்கண அறிவு, அதிலும் யாப்பிலக்கண அறிவு நன்கு வளரவில்லை. இதுவே இன்றையக் கவிஞர்கள் கவிகளில் பெரும்பான்மை யாப்பிலக்கணப் படி திருத்தமாக அமையப் பெறாமைக்குக் காரணமாகும். ஒருவிதக் கவிஞர்கள் கவிகளில் கவியின் இரு கண் போன்ற மோனை எதுகையே சரியாக அமையப் பெறுவதில்லை. மோனையும் எதுகையும் கவியின் இரு கண் போன்றவை மட்டுமல்ல; அவை கவியின் உயிர்நாடியேயாம் எனல் மிகை யாகாது. ஒரு பாட்டில் எதுகை மோனை சிறிது தவறினும், ‘இந்தப் பாட்டு எகனை மொகனை இல்லை; இந்தப் பாட்டு ஏனை மோனை இல்லை’ எனக் கல்வியறிவில்லாத மக்களும் குறை கூறும் அத்தகு சிறப்புடையவை மோனையும் எதுகையும். ‘எகனை மொகனை, ஏனை மோனை’ என, அன்னார் எதுகைத் தொடை அமையக் கூறுவதே எதுகை மோனைத் தொடைகளின் இன்றியமையாச் சிறப்பினை வலியுறுத்தும். மோனையும் எதுகையும் நன்கு அமையப் பெறாத பாட்டுக்களை நம் முன்னோர்கள் பாட்டுக் களாகவே கொள்ளவில்லை என்பது மேற்காட்டிய எடுத்துக் காட்டால் விளங்குகிறதல்லவா? மோனை முத்தமிழ் மும்மத மும்பொழி யானை முன்வந் தெதிர்த்தவ னாரடா என்பது ஒட்டக்கூத்தர் உரை. யானையின் பெருமைக்குக் காரணமான மதத்தினைப் பாட்டின் பெருமைக்குக் காரணமான மோனைத் தொடைக்கு உவமை கூறுதலை அறிக. மோனையும் எதுகையும் பாட்டை எளிதில் மனப்பாடம் செய்தற்கு ஏற்ற கருவிகளாகும். மோனையால் ஓர் அடியும், எதுகையால் அடுத்த அடிகளும் நினைவுக்கு வரும். காரிகை நன்னூல் இலக்கணங் கற்றுக் கவிசொலு நாவலர் தங்கள்முனே கல்லாதவ னில்லாதவன் வல்லமையாய்ச் சொல்லும்பிழை கற்றறிந்தோர்கள் பொறுப்பீரே என்னும் முருகர் ஒயிற்கும்மி ஆசிரியரின் அவையடக்கத்தால், கவிஞர்க்கு யாப்பிலக்கண அறிவின் இன்றியமையாச் சிறப்பு இனிது விளங்கும். கவியுள்ளம் இயல்பாக அமைவது. அது ஒரு தனிப்பண்பு. ஒவ்வொரு தொழிற்றிறமும் இவ்வாறு அமைவதே. கவியெழுதும் பழக்கம் உண்டானவர்கள், அதாவது கவியுள்ளம் பெற்றவர்கள் யாப்பிலக்கணம் கற்றுக் கொள்ளவேண்டும். கவிபாடுவதில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்கள் வல்லார்வாய்க் கேட்டு இரண்டே வாரங்களில் பொதுவான யாப்பறிவைப் பெற்றுக் கொள்ளலாம். அதன் பின்னர்த் தாமே முயன்று கற்றுச் சிறந்த யாப்பறிவுடைய ராகலாம். கவிபாடிப் பழகுவோர், பெரும்புலவர்கள் செய்து வைத்துள்ள பல வகையான செய்யுட்களையும் செய்யுளோசையுடன் படித்துப் பழகவேண்டும். அவ்வோசையைக் கடைப்பிடித்து அத்தகைய செய்யுட்கள்செய்து பழக வேண்டும். செய்த செய்யுட்களைப் பெரும்புலவர் ஒருவரிடம் காட்டித் திருத்தித் திருத்தம் பெற வேண்டும். அத்திருத்தங்களைப் பன்முறை ஊன்றிப் பார்த்துப் பின்னர் அத்தகைய குற்றங் குறைகள் நேராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் தாமெழுதிய ஆயிரக்கணக்கான கவிகள் குப்பைத் தொட்டிக்கிரையான பின்னரே தாமெழுதும் கவியைக் கவியெனக் கருதவேண்டும். சங்ககாலப் புலவர்கள் முதல் எல்லாப் பிற்காலப் பெரும் புலவர்களும் இவ்வாறு பாடிப் பழகிப் பயின்று கவித்திறம் பெற்றவர்களே யாவர். பழந்தமிழ்ப் பாண்டிய மன்னர்கள் முதலிடை கடை யென மூன்று தமிழ்ச்சங்கங்கள் நடத்தித் தமிழ் வளர்த்து வந்தார்களல்லவா? முற்கூறியவாறு, பாடிப் பழகிச் சிறந்த கவிஞர்களான பழந்தமிழ்ப் புலவர்கள், தாம் பாடிய பாட்டுக்களை அச் சங்கப் புலவர் முன்னிலையில் படித்துப் பொருள் கூறி, அப் புலவர்கள் கூறும் திருத்தங்களை யேற்றுத் திருத்திக்கொள்வர். இது கவியரங் கேற்றுதல் எனப்படும். அரங்கேற்றிய பாட்டுக்களைத் தொகுத்து நூல்களாக வெளியிடுவர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பெற்றவையே இன்று நாம் சங்க நூல்கள் என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என்னும் நூல்கள். இன்றும் ஒருசில கவிஞர்கள் சில ஆண்டுகளாகத் தாங்கள் பாடிய கவிகளை ஒருவர் தலைமையின்கீழ் அரங்கேற்றி வருகின்றனர்; ஆனால், அக் கவிகளின் குற்றங்குறைகள் எடுத்துக் கூறப்படுவ தில்லை. கவிகளைப் படிப்பதோடு சரி; அரங்கேற்றம் முடிந்து விடுகிறது. பழந்தமிழ்ப் புலவர்கள் அரங்கேற்றினது போல் அரங் கேற்றுதல் வேண்டும். பழைய கவியரங்கத்தை நினைப் பூட்டுவதற்காக எழுதப்பட்டதே கவியரங்கம் என்னும் பகுதி. அதனை நன்கு படித்துப் பயன் பெறுக. இனி, ‘நாங்களாக எப்படி யாப்பிலக்கணங் கற்றுக் கொள்வது? ஓர் இலக்கணப் புலவரை அடுத்துக் கற்றுக் கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லை. தமிழாசிரியர் கூட இல்லாத ஊர்களில் உள்ள நாங்கள் எங்ஙனம் யாப்பிலக்கணங் கற்றுக்கொள்ள முடியும்?’ என்கின்றனர் ஒரு சில இளங்கவிஞர்கள். அன்னாரின் குறை பாட்டை நீக்க எழுந்ததே ‘யாப்பதிகாரம்’ என்னும் இந்நூல். சிறிது முயற்சி எடுத்தால் போதும். தாமாகவே கற்றுச் சிறந்த யாப்பறி வுடையாராகலாம். ஆசிரியரின்றி யாப்பிலக்கணங் கற்றுக் கொள் வதற்காகவே இந்நூல் எழுதப்பட்டதாகும். இனிச் செய்யுள் செய்து பழகுவோர்க்கேயன்றித் தமிழ்ச் செய்யுட்களைப் படிப்போர்க்கும் யாப்பிலக்கண அறிவு இன்றி யமையாததாகும். யாப்பறிவிருந்தால்தான் செய்யுட்களை அதற் குரிய ஓசையுடனும் உணர்ச்சியுடனும் படிக்க முடியும். ஒரு செய்யுளின் பெயரும் தொடை நடை அமைப்பும் தெரியாது அச்செய்யுளைப் படிப்பது குருடனும் செவிடனும் கூத்துப் பார்ப்பது போன்றதேயாகும். எனவே, கவிபாடுவோர், அக்கவியைப் படிப்போர் ஆகிய இருவர்க்கும் யாப்பறிவு வேண்டும். ஒருகாலத்தே யாப்பிலக்கணத்திற்கு இருந்த பெருமையை - மதிப்பை நோக்கினால் இன்றுள்ள இரங்கத்தக்க நிலைக்கு இம்மியளவு தமிழ்ப்பற்றுள்ள ஒரு தமிழனும் வருந்தாமலிருக்க முடியாது. பல புலவர்கள் போட்டி போட்டுக்கொண்டு யாப்பிலக் கணஞ் செய்திருக்கிறார்கள். நத்தத்தனார், நல்லாதனார், அவிநயனார், பல்காயனார், கையனார், மயேச்சுரனார், பேராசிரியர், பரிமாணனார், வாய்ப் பியனார், காக்கைபாடினியார், சிறுகாக்கை பாடினியார் முதலிய நல்லிசைப் புலவர்கள் தத்தம் பெயரால் யாப்பிலக்கணஞ் செய்து செய்யுள் மரபைப் போற்றி வளர்த்து வந்திருக்கின்றனர். இன்னும் சங்க யாப்பு, பெரியபம்மம், நாலடி நாற்பது செயன்முறை, செயிற்றியம் என்பனவும் யாப்பிலக்கணங் கூறும் நூல்களே. அப் பழந்தமிழ் நூல்களையெல்லாம் நாம் பெற முடியாத பெருங்குறையுடையே மாயினேம். இன்றுள்ள யாப்பிலக்கண நூல்கள் - தொல்காப்பியச் செய்யுளியல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்னும் மூன்றுமேயாம். அவற்றின் பயனை இந்நூல் பயக்கும் என்பது எமது நம்பிக்கை. எமது, ‘தொடை யதிகாரம்’ யாப்பிலக்கணத்தின் முடிந்த முடிபாகும். பவானி, அன்புள்ள, 25. 4. 1968 குழந்தை முதற் பாகம் யாப்பதிகாரம் என்பது, ‘யாப்பினது அதிகாரம்’ என, யாப் பிலக்கணம் கூறும் நூலுக்குப் பெயராயிற்று. யாப்பு - செய்யுள். அதிகாரம் - ஆட்சி. யாப்பிலக்கணம், செய்யுளின் இலக்கணம் எனப் பொருள்படும். அது, உறுப்பியல், செய்யுளியல் என இரு வகைப்படும். 1. உறுப்பியல் உறுப்பியலில் செய்யுள் உறுப்புக்களின் இலக்கணமும், செய்யுளியலில் பாவும், பாவினமும் ஆகிய செய்யுட்களின் இலக்கணமும் கூறப்படும். இயல் - இலக்கணம். செய்யுள் உறுப்பு 1. எழுத்து 4. தளை 2. அசை 5. அடி 3. சீர் 6. தொடை எனச் செய்யுள் உறுப்பு அறுவகைப்படும். 1. எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும் செய்யுள் உறுப்பெனச் செப்பினர் புலவர். இச்சூத்திரத்தை நன்கு மனப்பாடம் செய்து கொள்க. இனி வரும் சூத்திரங்களையும் அவ்வாறே மனப்பாடம் செய்து கொள்க. 1. எழுத்து உயிரெழுத்து அ - ஒள 12 மெய்யெழுத்து க் - ன் 18 உயிர்மெய்யெழுத்து க - னௌ 216 ஆய்தவெழுத்து - ஃ 1 247 ஆகத் தமிழ் எழுத்துக்கள் இருநூற்று நாற்பத்தேழு. உயிர் பன்னிரண்டில், அ இ உ எ ஒ - இவை ஐந்தும் குறில் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஓள - இவை ஏழும் நெடில் 18 மெய்யோடும் 5 உயிர்க்குறிலும் தனித்தனி சேர்வதால் (18 x 5 = 90) உயிர்மெய்க்குறில் ஆகும். இத்துடன் 5 உயிர்க் குறிலையும் சேர்த்தால் (90 + 5 = 95) ஆகும். 18 மெய்யோடும் 7 உயிர்நெடிலும் தனித்தனி சேர்வதால் (18 x 7 =) 126 உயிர்மெய்நெடில் ஆகும். இத்துடன் 7 உயிர் நெடிலையும் சேர்த்தால் (126 + 7 =) 133 ஆகும். க கி கு கெ கொ - உயிர்மெய்க் குறில். கா கீ கூ கே கை கோ கௌ - உயிர்மெய் நெடில். மற்ற உயிர்மெய் எழுத்துக்களையும் இவ்வாறே கொள்க. மெய் 18, ஆய்தம் 1, ஆக 19. இப் பத்தொன்பதும் ஒற்று எனப்படும். விளக்கம் : குறில் 95 நெடில் 133 ஒற்று 19 ஆக 247 247 தமிழ் எழுத்துக்களும் யாப்பிலக்கணத்தில் குறில், நெடில், ஒற்று என மூவகையில் அடங்கும். இம் மூவகை எழுத்துக்களின் விளக்கத்தையும் நன்கு அறிந்து கொள்க. 2. அசை முற்கூறிய குறில், நெடில், ஒற்று என்னும் மூவகை எழுத்துக் களால் ஆவது அசை. அவ்வசை நேரசை, நிரையசை என இரு வகைப்படும். வாய்பாடு எழுத்து அசை 1. க - குறில் 2. கல் - குற்றொற்று 3. கா - நெடில் நேர் 4. கால் - நெட்டொற்று 5. கட - குறிலிணை 6. கடல் - குறிலிணையொற்று 7. கடா - குறினெடில் நிரை 8. கடாம் - குறினெடிலொற்று மேற்கூறிய குறில், நெடில், ஒற்று என்னும் மூவகை எழுத்துக் களால் ஆனவை குறில், குற்றொற்று முதலிய இவ் வெட்டெழுத்துக் களும், வாய்பாடு - குறியீடு. க - குறில் 95க்கும் எடுத்துக்காட்டு. கா - நெடில் 133க்கும் எடுத்துக்காட்டு ல் - ஒற்று 19க்கும் எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டு, காட்டு, மேற்கோள், உதாரணம் - ஒரு பொருட் சொற்கள். விளக்கம் புகைவண்டியிலும், மோட்டார் வண்டியிலும் சிறுவர்களுக்கு மதிப்பில்லாமை போல - பணம் இல்லாமல் பயணம் செய்வது போல - யாப்பிலக்கணத்தில் ஒற்றெழுத் துக்கு மதிப்பில்லை. ‘கல்’ என்பதில் உள்ள, ‘ல்’ என்னும் ஒற்று மதிப்புப்பெறாததால், ‘கல்’ என்பதை ஓரெழுத்தாகவே கொள்ளவேண்டும். எனவே, நேரசைக் குரிய ‘க’ முதலிய நான்கும் ஓரெழுத்துக்களாகவும் நிரையசைக் குரிய ‘கட’ முதலிய நான்கும் ஈரெழுத்துக்களாகவும் கொள்ளப்படும். ‘ஈர்க்’ என ஈரொற்று வரினும், ‘கால்’ என்பது போல ‘ஈர்க்’ என்பது நெட்டொற்றே யாகும். ஓரெழுத்தால் ஆகிய அசை - நேரசை ஈரெழுத்தால் ஆகிய அசை - நிரையசை நேர் - தனி. நேரசை - தனியசை நிரை - இணை. நிரையசை - இணையசை 2. குறிலே நெடிலே குறிலிணை குறினெடில் தனித்துமொற் றடுத்தும் வரின்நேர் நிரையெனும் அசையாம்; அவைநாள் மலர்வாய் பாடே. காட்டு அசை வாய்பாடு நேர் - நாள் நிரை - மலர் குறிப்பு நேரசைக்குரிய நான்கெழுத்துக்களையும் நிரையசைக்குரிய நான்கெழுத்துக்களையும் விளக்கத்துடன் நன்கு மனப்பாடம் செய்துகொள்க. காட்டு வா னம் வாழ் க நேர் நேர் நேர் நேர் பலா மரம் நிலாக் குறி நிரை நிரை நிரை நிரை வானம் வாழ்க. பலாமரம் நிலாக்குறி - என்னும் சொற்களை, நேர் நிரை என்னும் அசைகளுக்குரிய எழுத்துக்களாகப் பிரித்துள்ள மையைக் கூர்ந்து நோக்குக. பயிற்சி 1. மேற்காட்டிய எடுத்துக்காட்டிலிருந்து குறில் முதலிய எட்டெழுத்துக்களையும் சொல்லத் தெரிந்து கொள்க. 2. கீழ்வரும் சொற்களை அவ்வாறு அசை பிரித்து எழுதிப் பாருங்கள். திருக்குறள், நாலடியார், நற்றிணை, புறநானூறு, சிலப்பதி காரம், மலைபடுகடாம், தொல்காப்பியம். குறிப்பு : க - என்னும் குறில், நேரசை எனப்படினும் தனிக்குறில் முதலில் நேரசை யாகாது: பின்வரும் குறிலோடு சேர்ந்து குறி லிணையும், நெடிலோடு சேர்ந்து குறினெடிலும் ஆகும். காட்டு பலகை: பல குறிலிணை - நிரை விடாமல்: விடா - குறினெடில் - நிரை அலுவலகம்: அலு வல கம் நிரை நிரை நேர் ‘பலகை’ என்பதில், ‘ப’ என்னும் குறில் ‘ல’ என்னும் குறிலுடன் சேர்ந்து (இணைந்து) குறிலிணையும், ‘விடாமல்’ என்பதில் - ‘வி’ என்னும் குறில், ‘டா’ என்னும் நெடிலுடன் சேர்ந்து குறினெடிலும் ஆயினமை காண்க. நெடிலுக்குப் பின்வரும் தனிக்குறிலும், ஒற்றுக்குப் பின்வரும் தனிக்குறிலும் நேரசை யாகும். காட்டு மாரி வாழ்க: மா ரி வாழ் க நேர் நேர் நேர் நேர் ‘மா’ என்னும் நெடிலுக்குப் பின்னுள்ள ‘ரி’ என்னும் குறிலும், ‘வாழ்’ என்னும் நெட்டொற்றுக்குப் பின்னுள்ள ‘க’ என்னும் குறிலும் நேரசை ஆயினமை காண்க. குறில், குற்றொற்று, நெடில், நெட்டொற்று என்னும் நான் கெழுத்தும் நேரசை: குறிலிணை, குறிலிணையொற்று, குறினெடில், குறினெடிலொற்று என்னும் நான்கெழுத்தும் நிரையசை என்பதை நன்கு அறிந்திருப்பீர்கள். இவற்றின் அறிவு மிகமிக இன்றியமையாத தாகும். இது யாப்பென்னும் அணிமனையின் அடிப்படையதாகும். அசை பிரித்து எழுதிப் பார்க்கும் முன்னர்க் கொடுத்துள்ள சொற்களுக்கு நீங்கள் அசை பிரித்தது சரியா என்பதை ஒப்பு நோக்குங்கள். திருக் குறள் நா லடி யார் நற் றிணை நிரை நிரை நேர் நிரை நேர் நேர் நிரை புற நா னூ று சிலப் பதி கா ரம் நிரை நேர் நேர் நேர் நிரை நிரை நேர் நேர் மலை படு கடாம் தொல் காப் பியம் நிரை நிரை நிரை நேர் நேர் நிரை 3. சீர் அசை இரண்டும் மூன்றும் சேர்ந்தது சீர் எனப்படும். அச் சீர் ஈரசைச் சீர், மூவசைச் சீர் என இரு வகைப்படும். 1. ஈரசைச் சீர் -4 நேர், நிரை என்னும் அசை இரண்டினையும் பெருக்கினால் (2 x 2 = 4) ஈரசைச்சீர் நான்காகும். காட்டு அசை வாய்பாடு சீர் நேர் நேர் - தேமா நிரை நேர் - புளிமா மாச்சீர் நிரை நிரை - கருவிளம் நேர் நிரை - கூவிளம் விளச்சீர் 3. நேர்நேர் தேமா, நிரைநேர் புளிமா நிரைநிரை கருவிளம், நேர்நிரை கூவிளம் எனுமிவை நான்கும் ஈரசைச் சீரே! இதை நன்கு மனப்பாடம் செய்து கொள்க. இவ்வீரசைச்சீர் நான்கும் ஆசிரியப்பாவுக்கு உரியவை. இவை இயற்சீர், ஆசிரியச்சீர் எனவும் பெயர் பெறும். மாச்சீர்-நேரீற்று ஈரசைச்சீர், விளச்சீர் - நிரையீற்று ஈரசைச்சீர். பயிற்சி கல் விக் x கட லின் x கரை யினைக் x காண் குவீர் நேர் நேர் x நிரை நேர் x நிரை நிரை x நேர் நிரை தே மா x புளி மா x கரு விளம் x கூ விளம் முறையே தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் நான்கு ஈரசைச் சீர்களும் வந்தமை காண்க. பின்வரும் அடிகளில் உள்ள சீர்களை இவ்வாறு அசை பிரித்து வாய்பாடு கூறிப் பழகுங்கள். ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்’ ‘செந்தமிழ் கேளாச் செவியாற் பயனில்’ ‘ஒழுக்க முயிரினு மோம்புதல் வேண்டும்’ 2. மூவசைச்சீர்-8 தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் ஈரசைச்சீர் நான்கனோடும் நேரசை நிரையசை இரண்டினையும் தனித் தனி சேர்த்தால் மூவசைச்சீர் (4 x 2=8) எட்டாகும். காட்டு அசை வாய்பாடு நேர்நேர்நேர் - தேமாங்காய் நிரைநேர்நேர் - புளிமாங்காய் நிரைநிரைநேர் - கருவிளங்காய் நேர்நிரைநேர் - கூவிளங்காய் இவை நான்கும் நேரீற்று மூவசைச்சீர். இவை காய்ச்சீர், வெண்சீர் எனப்படும். இவை வெண்பாவுக்குரியவை. அசை வாய்பாடு நேர்நேர்நிரை - தேமாங்கனி நிரைநேர்நிரை - புளிமாங்கனி நிரைநிரைநிரை - கருவிளங்கனி நேர் நிரை நிரை - கூவிளங்கனி இவை நான்கும் நிரையீற்று மூவசைச்சீர். இவை கனிச்சீர், வஞ்சிச்சீர் எனப்படும். இவை வஞ்சிப்பாவுக்குரியவை. 4. மாவிள முன்னர்க் காய்கனி யடையின் வெண்பா வஞ்சி யுரிச்சீ ராமே. பயிற்சி கல் லா ம x லொரு நா ளைக் நேர் நேர் நேர் x நிரை நேர் நேர் தே மாங் காய் x புளி மாங் காய் கழிப் பது வுந் x தீ தறி வீர் நிரை நிரை நேர் x நேர் நிரை நேர் கரு விளங் காய் x கூ விளங் காய் முறையே காய்ச்சீர் நான்கும் வந்தமை காண்க. இல் லா தவர்க் x கிரங் கா தவர் நேர் நேர் நிரை x நிரை நேர் நிரை தே மாங் கனி x புளி மாங் கனி இருந் தென பயன் x இந் நில மதில் நிரை நிரை நிரை x நேர் நிரை நிரை கரு விளங் கனி x கூ விளங் கனி முறையே கனிச்சீர் நான்கும் வந்தமை காண்க. கீழ்வரும் அடிகளில் உள்ள சீர்களை இவ்வாறு அசைபிரித்து, வாய்பாடு கண்டு பழகுங்கள். ‘இல்லாரை யொருநாளும் இகழ்வதியல் பன்றறிவீர்’ ‘அருந்தமிழி லினியாரும் அயற்சொல்லைக் கலவாதீர்’ ‘செந்தமிழ் மொழித் திறமறிந்திலர் தந்தொழில்வழித் தனிமயங்குவர்’ “நல்லோர்வழி நனிநாடிலர் கல்லோர்பழி கடிதீகுவர்” விளக்கம் தேமா புளிமா இவைநான்கும் கருவிளம் ஆசிரியப்பாவுக்குரியவை கூவிளம் தேமாங்காய் புளிமாங்காய் இவை நான்கும் கருவிளங்காய் வெண்பாவுக் குரியவை. கூவிளங்காய் தேமாங்கனி புளிமாங்கனி இவை நான்கும் கருவிளங்கனி வஞ்சிப்பாவுக் குரியவை. கூவிளங்கனி கலிப்பாவுக்குரிய சீர்கள் எவை? கலிப்பாவுக்கெனத் தனியாகச் சீர்கள் இல்லை. மேற்கூறிய சீர்களே கலிப்பாவுக்கும் உரியவையாகும். இன்ன பாவுக்கு இன்ன சீர், இன்ன தளை, இன்ன அடிதான் வரும் என்னும் வரையறை செய்யுளியலில், செய்யுட்களின் இலக்கணங் கூறுமிடத்துக் கூறப்படும். 3. அசைச்சீர்-2 நேர், நிரை என்னும் அசை இரண்டும் வெண்பாவின் ஈற்றில் தனிச் சீராக வரும். அவை அசைச்சீர் எனப்படும். காட்டு அசை வாய்பாடு நேர் - நாள் நிரை - மலர் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். தாய் - நேர் - நாள் கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் தவர் - நிரை - மலர் க கட கல் நேர் கடல் நிரை கா நாள் கடா மலர் கால் கடாம் நேரசை, நிரையசைக்குரிய இவ்வெட்டெழுத்துக்களும் வெண்பாவின் ஈற்றில் வரும். காட்டு ‘கல்லாற் சொற் றேறலொழி க’ ‘ஆரஞ ருற்றன கண்’ ‘இன்சொல் லினிதீனு மே’ ‘துன்னற்க தீவினைப் பால்’ ‘கோடாமை சான்றோர்க் கணி’ ‘இன்சொல் லினதே யறம்’ ‘வஞ்சிப்ப தோரு மவா’ ‘உற்றநாள் உள்ள உளேன்’ இவ்வெண்பா வடிகளின் ஈற்றில் முறையே குறில் முதலிய எட்டெழுத்துக்களும் வந்தமை காண்க. ஈரசைச்சீர் நான்கு, மூவசைச்சீர் எட்டு, ஓரசைச்சீர் இரண்டு ஆகிய இப் பதினான்கும், மாச்சீர் காய்ச்சீர் அசைச்சீர் விளச்சீர் கனிச்சீர் என ஐவகையாக வழங்கப்படும். மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், அசைச்சீர்களைத் திருக்குறளில் கண்டறிக. கனிச்சீர்களைப் பட்டினப்பாலையில் காண்க. வெண்பாவின் ஈற்றில் நாள், மலர் என்னும் அசைச்சீர்களே அன்றி, காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டுச் சீர்களும் வரும். 4. காசு, பிறப்பு தனிக் குறில்(க) ஒழிந்த நேரசை எழுத்துக்கள் மூன்றனோடும் ‘குசுடுதுபுறு’ என்னும் வல்லின உகரம் சேர்தல் காசு எனப்படும். நிரையசை எழுத்துக்கள் நான்கனோடும் கு சு டு து பு று சேர்தல் பிறப்பு எனப்படும். பழந்தமிழ்ப் புலவர்கள் காசு என்னும் நேரசை யுகரத்தை நேர்பு எனவும், பிறப்பு என்னும் நிரையசை யுகரத்தை நிரைபு எனவும் கொண்டனர். நாமும் அவ்வாறு கொள்ளுதலே எளிதும் ஏற்றதுமாகும். நேரசை யுகரம் - நேரசையோடு ‘குசுடுதுபுறு’ என்னும் வல்லின உகரம் சேர்ந்தது. நிரையசை யுகரம் - நிரையசையோடு வல்லின உகரம் சேர்ந்தது. காட்டு கல் - பந்து நேரசையுகரம் கா - மாடு நேர்பு கால் - காப்பு காசு கட - விறகு நிரையசையுகரம் கடல் - வடக்கு நிரைபு கடா - தகாது பிறப்பு கடாம் - நடாத்து குறிப்பு: தனிக் குறிலோடு கு சு டு து பு று சேரின், ‘தகு’ கொசு, மடு, அது, தபு, பெறு’ எனக் குறிலிணையாய் நிரையசையில் அடங்கும். காட்டு ‘தாங்காட்ட யாங்கண் டது’ டது - நிரை - மலர் ட - குறில் து - வல்லின உகரம். நேர், நிரைபு என்பவற்றுள், நேர் - நேரசைக் குரிய (கல், கா, கால்) எழுத்துக்களையும், நிரை-நிரை யசைக்குரிய (கட, கடல், கடா, கடாம்) எழுத்துக்களையும் குறிக்கும். நேர் பு நிரை பு கா சு பிறப் பு காட்டு வற்றல் மரந்தளிர்த் தற்று - நேர்பு நன்கலம் நன்மக்கட் பேறு - நேர்பு காசு தானமிழ்த மென்றுணரற் பாற்று - நேர்பு பசும்புற் றலைகாண் பரிது - நிரைபு வானின் றமையா தொழுக்கு - நிரைபு மறத்திற்கு முண்டோ மலைவு - நிரைபு பிறப்பு வீமன் நகர்க்கே விரைந்து - நிரைபு நேர்பு, நிரைபு என்பன குற்றியலுகர வாய்பாடு. சிறுபான்மை, ‘மலைவு’ என்பது போல் முற்றியலுகரமும் வரும். நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளைத் திருக்குறள், நாலடியார் முதலிய கீழ்க்கணக்கு நூல்கள், நளவெண்பா, வெண்பாமாலை முதலிய வெண்பா நூல்களிற் காண்க. 5. நாள்மலர் காசு பிறப்பெனு நான்கும் வெண்பா வீற்றின் மேவிடுஞ் சீரே. நினைவு கூர்க: நேர்நேர் - தேமா நிரைநேர் - புளிமா மாச்சீர் நிரைநிரை - கருவிளம் நேர்நிரை - கூவிளம் விளச்சீர் நேர்நேர்நேர் - தேமாங்காய் நிரைநேர்நேர் - புளிமாங்காய் நிரைநிரைநேர் - கருவிளங்காய் காய்ச்சீர் நேர்நிரைநேர் - கூவிளங்காய் நேர் நேர் நிரை - தேமாங்கனி நிரை நேர் நிரை - புளிமாங்கனி நிரை நிரை நிரை - கருவிளங்கனி கனிச்சீர் நேர் நிரை நிரை - கூவிளங்கனி நேர் - நாள் நிரை - மலர் அசைச்சீர் நேர்பு - காசு நிரைபு - பிறப்பு வெள்ளீற்றுச் சீர் தே புளி சு உகர மா கரு பு வீறு கூ நேர் விளம் நிரை காய் கனி நாள் மலர் கா பிறப்பு என்பதனை நினைவில் வையுங்கள். குறிப்பு: காசு, பிறப்பு என்னும் சீர்கள், வெண்பாவின் ஈற்றிலன்றிச் செய்யுளின் மற்ற இடங்களில் வரின் தேமா, புளிமா என்னும் வாய்பாடு பெறும். காட்டு ‘ஏறுபோற் பீடு நடை’ ‘வன் சொல் வழங்கு வது’ பீடு - நேர் நேர் - தேமா வழங்கு - நிரைநேர்-புளிமா நாள், மலர் என்பன வெண்பாவின் ஈற்றிலன்றி வேறிடங்களில் வாரா. எழுத்து, அசை, சீர் என்னும் மூன்றுறுப்புக்களையும் நன்கு அறிந்து கொண்டீர்கள். இவை மூன்றும் யாப்பிலக்கணக் கட்டடத்தின் அடிப்படையாகும். அடிப்படை மிகவும் உறுதியாக இருத்தல் வேண்டும். நன்கு உறுதிப் படுத்துங்கள். முன்னர், அசை பிரித்து வாய்பாடு கண்டு பழகும்படி கொடுத்துள்ள அடிகளுக்கு நீங்கள் கண்ட வாய்பாடு சரியா என்பதை ஒப்புநோக்குங்கள். அந்த அடிகள் கற் க x கச டறக் x கற் பவை x கற் றபின் நேர் நேர் x நிரைநிரை x நேர் நிரை x நேர் நிரை தே மா x கரு விளம் x கூ விளம் x கூ விளம் செந் தமிழ் x கேளாச் x செவியாற் x பய னில நேர் நிரை x நேர் நேர் x நிரை நேர் x நிரை நிரை கூ விளம் x தே மா x புளி மா x கரு விளம் ஒழுக் க x முயி ரினு x மோம் புதல் x வேண் டும் நிரை நேர் x நிரை நிரை x நேர் நிரை x நேர் நேர் புளி மா x கரு விளம் x கூ விளம் x தே மா இல் லா ரை x யொரு நா ளும் நேர் நேர் நேர் x நிரை நேர் நேர் தே மாங் காய் x புளி மாங் காய் இகழ் வதி யல் x பன் றறி வீர் நிரை நிரை நேர் x நேர் நிரை நேர் கரு விளங் காய் x கூ விளங் காய் அருந் தமி ழி x லினி யா ரும் நிரை நிரை நேர் x நிரை நேர் நேர் கரு விளங் காய் x புளி மாங் காய் அயற் சொல் லைக் x கல வா தீர் நிரை நேர் நேர் x நிரை நேர் நேர் புளி மாங் காய் x புளி மாங் காய் செந் தமிழ் மொழித் x திற மறிந் திலர் நேர் நிரை நிரை x நிரை நிரை நிரை கூ விளங் கனி x கரு விளங் கனி தந் தொழில் வழித் x தனி மயங் குவர் நேர் நிரை நிரை x நிரை நிரை நிரை கூ விளங் கனி x கரு விளங் கனி நல் லோர் வழி x நனி நா டிலர் நேர் நேர் நிரை x நிரை நேர் நிரை தே மாங் கனி x புளி மாங் கனி கல் லோர் பழி x கடி தீ குவர் நேர் நேர் நிரை x நிரை நேர் நிரை தே மாங் கனி x புளி மாங் கனி பயிற்சி 1. தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும் யாவை? 2.அவை யாப்பிலக்கணத்தில் எவ்வாறு கொள்ளப்படும்? 3.நேரசை, நிரையசைக்குரிய எழுத்துக்கள் யாவை? 4.அசையில் ஒற்றெழுத்தின் நிலை என்ன? 5.தனிக்குறில் எங்கெங்கு எவ்வாறு அசை கொள்ளப்படும்? 6.ஈரசைச் சீர்கள் எத்தனை வகைப்படும்? 7. மூவசைச் சீர்கள் எத்தனை வகைப்படும்? 8. அசைச்சீர் என்பவை யாவை? அவை எங்கே வரும்? எங்கே வாரா? 9. காசு, பிறப்பு என்பவை யாவை? அவை தேமா, புளிமா எனப் பெயர் பெறும் இடம் எது? 10.சீர்களின் தொகையும் வகையும் யாவை? 11.மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர் - இவை எவ்வெப் பாக்களுக்கு உரிய சீர்கள்? 12.தனக்கெனச் சீர் இல்லாத பா எது? அது எங்ஙனம் நடைபெறும்? குறிப்பு: இக்கேள்விகளுக்குச் சரியான விடை தெரிந்து கொண்டு மேற்செல்லுங்கள். 4. தளை-7 சீர்கள் ஒன்றோடொன்று கூடும் கூட்டத்திற்குத் தளை என்பது பெயர். தளைதல் - கட்டுதல் - இரண்டு சீர்களை ஒன்றாகத் தளைதல். கன்று காளைகளின் கால்களைத் தளைதல் காண்க. 1. நேரொன் றாசிரியத்தளை 2. நிரையொன் றாசிரியத்தளை 3. இயற்சீர் வெண்டளை 4. வெண்சீர் வெண்டளை 5. கலித்தளை 6. ஒன்றிய வஞ்சித்தளை 7. ஒன்றாத வஞ்சித்தளை எனத் தளை ஏழு வகைப்படும். தளை கொள்ளும்போது, நின்ற சீர் இன்ன சீர் என்றும், அதாவது மாச்சீரா, விளச்சீரா, காய்ச்சீரா, கனிச்சீரா என்றும், வருஞ்சீரின் முதலசை நேரசையா, நிரையசையா என்றும் பார்க்க வேண்டும். வருஞ்சீர் இன்னசீர் என்று பார்க்க வேண்டியதில்லை. நின்ற சீர் - முதலில் உள்ள சீர். வருஞ்சீர் - அந்நின்ற சீரோடு வந்து சேருஞ் சீர். காட்டு கற்க x கசடற கற்க - நின்றசீர் கசடற - வருஞ்சீர் நின்றசீரின் ஈற்றசையும், வருஞ்சீரின் முதலசையும் ஒன்றுதலும் ஒன்றாமையும் தளை எனப்படும். ஒன்றுதல் - நேருக்கு நேரும், நிரைக்கு நிரையும் வருதல். ஒன்றாமை - நேருக்கு நிரையும், நிரைக்கு நேரும் வருதல். ஒன்றுதல் - பொருந்துதல். ஒன்றாமை - பொருந்தாமை. மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர் என்னும் நின்ற சீர்களின் ஈற்றசையாகிய நேர் நிரையோடு, வருஞ் சீரின் முதலசையாகிய நேரும் நிரையும் ஒன்றுதலும் ஒன்றாமையும் தளை எனப்படும் என்பது கருத்து. 1,2 ஆசிரியத்தளை மாச்சீர்முன் நேர் வருவது - நேரொன்றாசிரியத்தளை விளச்சீர்முன் நிரை வருவது - நிரையொன்றாசிரியத்தளை. 6. மாமுன் நேரும் விளமுன் நிரையும் வருவ தாசிரி யத்தளை யாமே. குறிப்பு: தேமா, புளிமா இரண்டும் நேரீற்று ஈரசைச்சீர் என்பதையும், கருவிளம், கூவிளம் இரண்டும் நிரையீற்று ஈரசைச்சீர் என்பதையும் நினைவு கூர்க. மாமுன்நேர் - நேர்முன் நேர் விளமுன் நிரை - நிரை முன் நிரை காட்டு நே - ஆ நி - ஆ கல் வி x கற் றவர் x கருத்து நேர் நேர் x நேர் நிரை x நிரை நேர் தே மா x கூ விளம் x புளி மா நே -ஆ - நேரொன் றாசிரியத்தளை நி - ஆ - நிரையொன் றாசிரியத்தளை இவ்விரு தளையும் ஆசிரியப்பாவுக் குரியவை. குறிப்பு: இவ்வாறு சீர்களை அசை பிரித்து, வாய்பாடு கண்டு, தளை கொள்ளுதல் அலகிடுதல் எனப்படும். 3. இயற்சீர் வெண்டளை 7. மாமுன் நிரையும் விளமுன் நேரும் வருவ தியற்சீர் வெண்டளை யாகும். அதாவது மேற்கூறிய ஆசிரியத்தளையில் மாறிவருவது இயற்சீர் வெண்டளை எனப்படும். நின்றசீர் இயற்சீரானதால் இயற்சீர் வெண்டளை எனப்பட்டது. வருஞ்சீர் காய்ச்சீராகவும் இருக்கலாம். வருஞ்சீரின் முதலசைதானே நமக்கு வேண்டியது. இயற்சீர் - தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்னும் நான்கு. ஆசிரியத்தளை நேருக்கு நேரும், நிரைக்கு நிரையும் வருவது. இயற்சீர் வெண்டளை நேருக்கு நிரையும் நிரைக்கு நேரும் ஆக, ஆசிரியத் தளையின் மாறிவருவது. ஆசிரியத்தளையின் எதிரிடை இயற்சீர் வெண்டளை என்பது கருத்து. காட்டு இ-வெ இ-வெ கற் க x கச டறக் x கற் பவை நேர் நேர் x நிரை நிரை x நேர் நிரை தே மா x கரு விளம் x கூ விளம் இரு இயற்சீர் வெண்டளையும் வந்தமை காண்க. இ-வெ - இயற்சீர் வெண்டளை. 4. வெண்சீர் வெண்டளை 8. காய்முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை காட்டு வெ-வெ வெ-வெ யா மெய் யாக் x கண் டவற் று x ளில் லை நேர் நேர் நேர் x நேர் நிரை நேர் x நேர் நேர் தே மாங் காய் x கூ விளங் காய் x தே மா வெ-வெ - வெண்சீர் வெண்டளை இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் வெண்பாவுக் குரியவை. 5. கலித்தளை 9. காய்முன் நிரைவரு வதுகலித் தளையே. அதாவது, வெண்சீர் வெண்டளைக்கு மாறாக வருவது கலித்தளையாகும். கலித்தளை கலிப்பாவுக்குரியது. காட்டு க-த பல் லுல கும் x பல வுயி ரும் நேர் நிரை நேர் x நிரை நிரை நேர் கூ விளங் காய் x கரு விளங் காய் க-த - கலித்தளை 6,7 வஞ்சித்தளை 10. கனிமுன் நிரையும் நேரும் வருதல் ஒன்றிய ஒன்றா வஞ்சித் தளையே, கனிச்சீர் - நிரையீற்று மூவசைச்சீர். கனிமுன் நிரை வருதல் - நிரைமுன் நிரை வருதல், கனிமுன் நேர் வருதல் - நிரைமுன் நேர் வருதல். நிரைமுன் நிரை வருதல் - ஒன்றுதல்; நிரைமுன் நேர்வருதல் - ஒன்றாமை. ஒன்றுதல் - பொருந்துதல். ஒன்றாமை - பொருந்தாமை. இவ்விருதளையும் வஞ்சிப்பாவுக் குரியவை. காட்டு ஒன்றிய - வ தண் டா மரைத் x தனி மலர் மி சை நேர் நேர் நிரை x நிரை நிரை நிரை தே மாங் கனி x கரு விளங் கனி ஒன்றாத - வ வண் டோ லிடும் x வண் டமி ழகம் நேர் நேர் நிரை x நேர் நிரை நிரை தே மாங் கனி x கூ விளங் கனி வ-வஞ்சித்தளை பயிற்சி 1. மாமுன் x நேர் - நேரொன் றாசிரியத்தளை. 2. விளமுன் x நிரை - நிரையொன் றாசிரியத்தளை. 3. (1) மாமுன் x நிரை (2) விளமுன் x நேர் - இயற்சீர் வெண்டளை 4. காய்முன் x நேர் - வெண்சீர்வெண்டளை 5. காய் முன் x நிரை - கலித்தளை 6. கனி முன் x நிரை - ஒன்றிய வஞ்சித்தளை 7. கனிமுன் x நேர் - ஒன்றாத வஞ்சித்தளை ஒப்புமை 1-4: நேர் முன் நேர் 2-6: நிரை முன் நிரை 3(1)-5: நேர்முன் நிரை 3(2)-7 நிரை முன் நேர் ஆனால், முன்னவை (1,2,3) நின்றசீர் ஈரசைச்சீர்; பின்னவை (4,5,6,7) நின்றசீர் மூவசைச்சீர். ஏழு தளைகளையும் நன்கு படித்தறிந்து மனப்பாட மானபின், கீழ்வரும் அடிகளை அலகிட்டுப் பாருங்கள். முன் அலகிட்டுக் காட்டியுள்ளபடியே சீர்களைத் தனித் தனியாகவும், அசைகட்கு நேராக வாய்பாடும் ஒழுங்காக எழுதிப் பழகுங்கள்; “ஒண்பூங் காந்தள் வெண்பூஞ் சுள்ளி.” “தண்டமி ழகத்தியல் தமிழர சோங்குக.” “ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்.” “வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கட் பட்ட செருக்கு.” “கொடிபுரையு நுழைநுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்தாள்.” “தனிச்செந்தமிழ் தனைக்கற்றவர் மனக்கண்முன மினிப் பொன்றிடக் கனித்தண்சுவை யெனப் பெய்குவர்.” “தமிழ் கற்றவர் தாமின்புறல் அமிழ்தச்சுவை யாமென்குவர்.” இருவகை ஆசிரியத் தளைகளையும் அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை முதலிய ஆசிரியப் பாக்களிலும் - இருவகை வெண்டளை களையும் திருக்குறள், நாலடியார், நளவெண்பா முதலிய வெண்பாக்களிலும் - கலித் தளையைக் கலித்தொகைக் கலிப்பாக்களிலும் - இருவகை வஞ்சித் தளைகளையும் மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலைகளில் உள்ள வஞ்சியடிகளிலும் அலகிட்டுப் பழகுங்கள். பயிற்சி மிகவும் வேண்டும். விளக்கம்: வெண்பா அடிகளை அலகிடும்போது முதலடியின் ஈற்றுச் சீர்க்கும், அடுத்த அடியின் முதற்சீர்க்கும் தளை கொள்ளுதல் வேண்டும். இது இன்றியமை யாதது. காட்டு இ-வெ வெ-வெ பல் லார் x பகை கொள விற் x நேர் நேர் x நிரை நிரை நேர் x தே மா x கரு விளங் காய் x வெ-வெ வெ-வெ பத் தடுத் த x தீ மைத் தே x நேர் நிரை நேர் x நேர் நேர் நேர் x கூ விளங் காய் x தே மாங் காய் x இ-வெ இ-வெ நல் லார் x தொடர் கை x விடல் நேர் நேர் x நிரை நேர் x நிரை தே மா x புளி மா x மலர் வெ - வெ தீமைத்தே x நல்லார் . . . எனக் காண்க. குறிப்பு: ஓர் அடியை அலகிடும்போது, முதற்சீரை அசை பிரித்து வாய்பாடு கண்டு எழுதியபின், அடுத்த சீரையும் அவ்வாறு எழுதி, அவ்விருசீர்க்குமுள்ள தளையை எழுதிவிட்டு, மூன்றாஞ் சீரையும் அவ்வாறு அலகிட்டு, இரண்டாஞ் சீர்க்கும் மூன்றாஞ் சீர்க்குமுள்ள தளையை எழுதவேண்டும். இவ்வாறே மற்ற சீர்க்கு முள்ள தளையை எழுதவேண்டும். இவ்வாறே மற்ற சீர்களையும் அலகிடவேண்டும். இருசீர்களை அசைபிரித்து வாய்பாடு எழுதியபின், நின்றசீர் இன்னசீர் என்று பார்த்து, அதாவது மாச்சீரா விளச்சீரா காய்ச்சீரா கனிச்சீரா என்று பார்த்து, பின் வருஞ்சீரின் முதலசை நேரசையா நிரையசையா என்று பார்த்துத் தளை கண்டெழுதவேண்டும். காட்டு இ-வெ எண் ணித் x துணி க நேர் நேர் x நிரை நேர் தே மா x புளி மா மாமுன் x நிரை - இயற்சீர் வெண்டளை இவ்வாறு காணவேண்டும். தளை தட்டுதல் இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் அல்லாத வேறு தளைகள் வெண்பாவில் வரக்கூடா என்பது வெண்பாவின் இலக்கணங்கூறுமிடத்துக் கூறப்படும். வெண்பாவில் பிற தளை வருவது தளை தட்டுதல் எனப்படும். தட்டுதல் - தவறுதல் - வேறு தளை வருதல். 1. ஐகாரக் குறுக்கம் ஐகாரம் (ஐ) நெடிலேயாயினும், அவ்வாறு தளை தட்டு மிடத்துத் தனிக் குறிலேபோல் பின் வரும் குறிலினோடும் நெடிலி னோடும் கூடி நிரையசையாகும். இது ஐகாரக் குறுக்கம் எனப்படும். தளைதட்டாத விடத்துத் தனித்து நேரசையாகும். காட்டு புன்னைப் பொழிலருகே பூங்கொம்பர் தன்னையருங் காணத் தளர்ந்து. இவ் வெண்பாவில் ‘தன்னையரும்’ என்னும் சீரை, தன் னைய ரும் நேர் நிரை நேர் கூ விளங் காய் என அலகிட வேண்டும். னைய - குறிலிணை - நிரை இவ்வாறு கொள்ளாக்கால், தன் னை யரும் நேர் நேர் நிரை தே மாங் கனி எனத் ‘தேமாங்கனி’யாகும். கனிச்சீர் வெண்பாவில் வரக் கூடாது. தன் னை யருங் x கா ண நேர் நேர் நிரை x நேர் நேர் தே மாங் கனி x தே மா எனக் கனிமுன்நேர் வந்து ஒன்றாத வஞ்சித்தளையாதலும் காண்க. வெண்பாவில் வஞ்சித்தளை வரக்கூடாது. அன்னையையா னோவ தவமா லணியிழாய் புன்னையையா னோவன் புலந்து. னை யை - குறினெடில் - நிரை இங்ஙனம் கொள்ளாக்கால், அன் னை யை யா நேர் நேர் நேர் நேர் என நாலசை யாதலுங் காண்க. யானையைக் கண்டஞ்சினாள். யா னை யை நேர் நேர் நேர் தே மாங் காய் னை - நேர் யை - நேர். தளை தட்டாதவிடத்து ஐகாரம் நெடிலேபோல் நேரசை யாதல் காண்க. மேல் எடுத்துக்காட்டிய வெள்ளடிகளை அலகிட்டுப் பாருங்கள். ஆய்தம் அலகு பெறுதல்: தளை தட்டுமிடத்து, ஆய்தம் குறிலே போல அலகு பெறும்; தளை தட்டாத விடத்து ஒற்றுப் போலாம். அற்றா ரழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. (குறள்) தீர்த் தல் x அஃ தொரு வன் நேர் நேர் x நேர் நிரை நேர் தே மா x கூ விளங் காய் என, ஆய்தத்தை ஒற்றுப்போல் அலகிடின், மாமுன் நேர் வந்து நேரொன் றாசிரியத் தளை ஆகிறது. வெண்பாவில் ஆசிரியத்தளை வருதல் கூடாது. எனவே, ஆய்தத்தைக் குறிலாகக் கொள்ளின், ‘அ’ஃ என்பது. ‘அகு’ என்பது போலக் குறிலிணையாய் நிரையசையாகி, தீர்த் தல் x அஃ தொரு வன் நேர் நேர் x நிரை நிரை நேர் தே மா x கரு விளங் காய் என மாமுன் நிரை வந்து இயற்சீர் வெண்டளையாகும். 363, 414, 943, 1166 குறள்களில் வரும் ஆய்தங்களையும் இவ்வாறே கொள்க. நடுவின்றி நன்பொருள் வெஃகின். (குறள்) எனத் தளைதட்டாமையான் ஆய்தம் ஒற்றுப் போல நின்றது. 2. ஒற்று நீக்கி அலகிடல் மக்கள்மனம் மாறியுயர் வானமனம் வந்தன்றித் தக்கநலம் வாய்க்குமோ தான். இக்குறள் வெண்பாவில், மக் கள் மனம் x மா றியு யர் நேர் நேர் நிரை x நேர் நிரை நேர் தே மாங் கனி x கூ விளங் காய் ‘மக்கள் மனம்’ என்னும் கனிச்சீரும், ஒன்றாத வஞ்சித்தளையும் வருகின்றன. வெண்பாவில் கனிச்சீரும் வஞ்சித் தளையும் வருதல் கூடா. யாப்பிலக்கணத்தில் ஒற்றெழுத்துக்கு மதிப்பில்லை என்பதை முன்னர் அறிந்துள்ளீர்கள். எனவே, ‘மக்கள் மனம்’ என்னும் சீரில் கனிக்கு (மனம்) முன்னுள்ள ‘ள்’ என்னும் ஒற்றை நீக்கிவிட்டு, வெ-வெ மக் கம னம் x மா றியு யர் நேர் நிரை நேர் x நேர் நிரை நேர் கூ விளங் காய் x கூ விளங் காய் என அலகிட வேண்டும். இவ்வாறு அலகிட, அது கூவிளங் காய்ச் சீராகித் தளை தட்டாமை காண்க. இது ஒற்று நீக்கி அலகிடல் எனப்படும். குறிப்பு: இவ்வாறு வெண்பாவில் கனிச்சீர் வரின், அச்சீர் கனியாகிய நிரையசைக்குமுன் ஒற்றும், அவ்வொற்றுக்குமுன் குறிலும் உடையதாகவே இருக்கும். காட்டு “திங்கள்முகம் கண்டானச் சேய்.” “இறைவா கச்சி ஏகம்பனே.” திங்கள் முகம், ஏகம்பனே - எனக் காண்க. எழுத்து, அசை, சீர், தளை என்னும் செய்யுள் உறுப்புக்கள் நான்கினையும் நன்கு அறிந்துகொண்டீர்கள். அடிக்கடி ஏதாவ தொரு செய்யுளை அலகிட்டுப் பாருங்கள். அலகிடுவதால் எழுத்து, அசை, சீர், தளை என்னும் நான்குறுப்பும் நன்கு பழக்கத்திற்கு வரும். இப்பயிற்சி யாப்பறிவிற்கு மிகமிக இன்றி யமையாத தாகும். முன்னர் அலகிட்டுப் பார்க்கும்படி கொடுத்துள்ள அடிகட்கு நீங்கள் அலகிட்டது சரியா என்பதை ஒப்பு நோக்குங்கள். அவ் வடிகள் நே - ஆ நே - ஆ நே - ஆ நே - ஆ ஒண் பூங் x காந் தள் x வெண் பூஞ் x சுள் ளி நேர் நேர் x நேர் நேர் x நேர் நேர் x நேர் நேர் தே மா x தே மா x தே மா x தே மா நி - ஆ நி - ஆ நி - ஆ நி - ஆ தண் டமி x ழகத் தியல் x தமி ழர x சிலங் குக நேர் நிரை x நிரை நிரை x நிரை நிரை x நிரை நிரை கூ விளம் x கரு விளம் x கரு விளம்x கரு விளம் இ - வெ இ - வெ இ - வெ இ - வெ ஏ முற் x றவ ரினு x மே ழை x தமி யனாய்ப் x நேர் நேர் x நிரை நிரை x நேர் நேர் x நிரை நிரை x தே மா x கரு விளம் x தே மா x கரு விளம் x இ - வெ இ - வெ பல் லார் x பகை கொள் x பவன் நேர் நேர் x நிரை நிரை x நிரை தே மா x புளி மா x மலர் வெ - வெ வெ - வெ வகை யறிந் து x தற் செய் து x நிரை நிரை நேர் x நேர் நேர் நேர் x கரு விளங் காய் x தே மாங் காய் x வெ - வெ இ - வெ தற் காப் ப x மா யும் x நேர் நேர் நேர் x நேர் நேர் x தே மாங் காய் x தே மா x வெ - வெ இ - வெ பகை வர் கட் x பட் ட x செருக்கு நிரை நேர் நேர் x நேர் நேர் x நிரைபு புளி மாங் காய் x தே மா x பிறப்பு க - த க - த கொடி புரை யு x நுழை நுசுப் பிற் x நிரை நிரை நேர் x நிரை நிரை நேர் x கரு விளங் காய் x கரு விளங் காய் x க - த குழைக் கமர்ந் த x திரு முகத் தாள் நிரை நிரை நேர் x நிரை நிரை நேர் கரு விளங் காய் x கரு விளங் காய் ஒன்றிய - வ தனிச் செந் தமிழ் x தனைக் கற் றவர் நிரை நேர் நிரை x நிரை நேர் நிரை புளி மாங் கனி x புளி மாங் கனி ஒன்றிய - வ மனக் கண் முன x மினிப் பொன் றிட நிரை நேர் நிரை x நிரை நேர் நிரை புளி மாங் கனி x புளி மாங் கனி ஒன்றிய - வ கனித் தண் சுவை x யெனப் பெய் குவர் நிரை நேர் நிரை x நிரை நேர் நிரை புளி மாங் கனி x புளி மாங் கனி ஒன்றாத - வ தமிழ் கற் ற வர் x தா மின் புறல் நிரை நேர் நிரை x நேர் நேர் நிரை புளி மாங் கனி x தே மாங் கனி ஒன்றாத - வ அமிழ் தச் சுவை x யா மென் குவர் நிரை நேர் நிரை x நேர் நேர் நிரை புளி மாங் கனி x தே மாங் கனி 5. அடி -5 சீர்கள் இரண்டு முதலாக இணைந்து - தொடர்ந்து நடப்பது அடி எனப்படும். அது, 1. குறளடி 2. சிந்தடி 3. அளவடி 4. நெடிலடி 5. கழிநெடிலடி என ஐந்து வகைப்படும். 11. இருசீர் குறளடி முச்சீர் சிந்தடி நாற்சீர் அளவடி ஐஞ்சீர் நெடிலடி அறுசீர் முதலன கழிநெடி லடியே. அளவடி - நேரடி எனவும் பெயர் பெறும். கழிநெடிலடி அவ்வடியிலுள்ள சீர்களின் தொகைப் பெயரோடு சேர்ந்து அறுசீர்க்கழிநெடிலடி, எழுசீர்க்கழிநெடிலடி என வழங்கும். காட்டு 1. ஒண்பூங் காந்தள் - குறளடி. 2. பல்லார் பகைகொள் பவன் - சிந்தடி. 3. கற்க கசடறக் கற்பவை கற்றபின் - அளவடி. 4. வையம் ஏழுடை மன்னவன் அவ்வுரை வழங்க - நெடிலடி. 5. உலகிடை மொழிக ளெல்லாம் உயர்தமிழ்க் கிணைய வாமோ . -அறுசீர்க்கழிநெடிலடி வஞ்சியே யுனைநான் வஞ்சியேன் தமிழர் வழக்கமும் பழக்கமு மன்றே. - எழுசீர்க்கழிநெடிலடி வெண்ணந் துரறி வயிறுளைந்து வீற்று வீற்றாக் கருவுயிர்த்த வெண்ணித் திலத்தை யரித்தெடுத்து வெள்வாய்க் களமர் கரை குவிக்க. -பன்னிருசீர்க்கழிநெடிலடி. குறிப்பு: செய்யுட்களைப் படிக்கும்போது இவ்வடிகளைப் பார்த்துப் பழகுங்கள். 6. தொடை அடிகளை ஒன்றோடொன்று தொடுப்பது தொடை எனப்படும். இரண்டு அடிகளிலே யன்றி, ஓரடியிலுள்ள சீர்களிலும் இத் தொடை வரும். செய்யுளின் ஓசைக்கும் இனிமைக்கும் சிறப்புக்கும் இத்தொடை யுறுப்பு இன்றியமையாததாகும். “தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்” என்பது பழமொழி. அத் தொடை - முதற்றொடை, உறழ்ச்சித் தொடை என இரு வகைப்படும். அடிகளில் வருவது முதற்றொடை; ஓரடியிலுள்ள சீர்களில் வருவது உறழ்ச்சித் தொடை. 1. முதற்றொடை 1. மோனைத் தொடை2. எதுகைத் தொடை 3. முரண்தொடை 4. இயைபுத் தொடை 5. அளபெடைத் தொடை என, முதற்றொடை ஐந்து வகைப்படும். 12. மோனை யெதுகை முரணியை யளபெடை எனுமிவை யைந்தும் முதற்றொடை யாமே. (1) மோனை இரண்டு அடிகளின் முதற்சீரின் முதலெழுத்து, அல்லது ஓரடியிலுள்ள சீர்களின் முதலெழுத்து ஒன்றே வருதல் மோனை எனப்படும். அடிகளில் மோனை வருதல் அடிமோனை எனவும், சீர்களில் மோனை வருதல் சீர்மோனை எனவும் பெயர் பெறும். ஏனை எதுகை முதலிய தொடைகட்கும் இஃதொக்கும். 13. முதலெழுத் தொன்றுதல் மோனை யாகும். ஒன்றுதல் - ஒரே எழுத்து வருதல். காட்டு செந்தமிழைக் கற்றுத் தெளியா மகனொருவன் செந்தமிழ னாவானா தேமொழீ. இவ்வடிகளின் முதற்சீரின் முதலெழுத்து ‘செ’ ஒன்றே வந்திருத்தல் அடிமோனை யாகும். மக்களை முன் காணா மனநடுங்கா வெய்துயிரா இவ்வடியின் முதற்சீரிலும் மூன்றாஞ்சீரிலும் முதலெழுத்து ‘ம’ ஒன்றே வந்திருத்தல் சீர்மோனை யாகும். (2) எதுகை 14. இரண்டாமெழுத் தொன்றுதல் எதுகை யாகும். காட்டு கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். இவ்வடிகளின் முதற்சீரில் இரண்டாவதெழுத்து ‘ண்’ என்றே வந்திருத்தல் எதுகை. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு இவ்வடியின் நான்கு சீர்களிலும் முதலெழுத்து ‘து’ வந்திருத்தல் மோனை; இரண்டாவதெழுத்து ‘ப்’ வந்திருத்தல் எதுகை. (3) முரண் 15. முரணத் தொடுப்பது முரண்டொடை யாகும். முரணுதல் - மாறுபடுதல். மாறுபட்ட சொற்கள் வருதல் - முரண்தொடை. காட்டு முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். முன் x பின் - முரண். வெண்பற் கருங்குழலார் மேலிருந்து கீழ்நோக்கி. வெண்மை x கருமை மேல் x கீழ்முரண்டொடை (4) இயைபுத் தொடை 16. இறுவா யொத்தல் இயைபெனப் படுமே. இரண்டடிகளின் இறுதி ஒன்றாக வருதல் இயைபுத் தொடையாகும். இறுவாய் - இறுதி - கடைசி. காட்டு வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும். ‘கொஞ்சும் - கெஞ்சும்’ என்பது இயைபுத் தொடை. இத் தொடை பெரும்பாலும் இசைப்பாடல்களில் வரும். (5) அளபெடைத் தொடை 17. அளபெடுத் தொன்றுதல் அளபெடைத் தொடையே. காட்டு ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை ஆஅது மென்னு மவர். “ஓஒ - ஆஅ’ என அளபெடுத்ததால் அது அளபெடைத் தொடை. மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்னும் தொடை ஐந்தில், மோனையும் எதுகையும் மிகவும் இன்றியமையாதன. பயிற்சி கீழ்வரும் அடிகளிலுள்ள மோனை முதலிய தொடைகளைக் கண்டறியுங்கள். 1. “ நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்று மிடும்பை தரும்.” 2. “ இன்னாமை யின்ப மெனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு.” 3. “ கருங்குழலார் செங்கையினால் வெண்கவரிப் பைங்கால்.” 4. “ செந்தேன் மொழியாள் செறியளக பந்தியின் கீழ் இந்து முறியென் றியம்புவார்.” 5. “ பரீஇ யுயிர்செகுக்கம் பாம்பொடு மின்னா மரீஇப் பின்னைப் பிரிவு.” 6. “ இருந்தெ ழுந்து நடந்து திரும்பினான் இல்லை யுண்டெனப் போந்து திரும்பினான்.” தொடைச் சிறப்பு (1) மோனை முதலெழுத்து ஒன்றி வருதலாகிய மோனைக்கு, முதலெழுத்து வந்த எழுத்தே வருதலன்றி, இனவெழுத்தும் வரும். அது இனமோனை அல்லது கிளைமோனை எனப்படும். இனம், கிளை - ஒருபொருட் சொற்கள். இனவெழுத்துக்கள் உயிர்: 1. அ ஆ ஐ ஒள - ஓரினம் 2. இ ஈ எ ஏ - ஓரினம் 3. உ ஊ ஒ ஓ - ஓரினம் மெய் : 1. ஞ் ந் - ஓரினம் 2. ம் வ் - ஓரினம் 3. த் ச் - ஓரினம் அகரமோ டாகாரம் ஐகாரம் ஒளகான் இகரமோ டீகாரம் எ ஏ, - உகரமோ டூகாரம் ஒஓ, ஞநமவ தச்சகரம் தோகாய் கிளையெழுத்தாச் சொல். இவ் வெண்பாவை நன்கு மனப்பாடம் செய்க. மொழிக்கு முதலில் மெய் தனித்து வாராதாகையால், ஞ் ந் ம் வ் த் ச் என்னும் மெய்களை ஞ ஞா ஞி ஞீ முதலிய உயிர்மெய்யாகக் கொள்க. தச்சகரம் - தகரம் சகரம். ஞ ந, ம வ, த ச - என்னும் ஆறும் அல்லாத மற்ற மெய்கள் அதற்கதுவேயும் வரும். மெய்யெழுத்துக்கள் இவ்வாறு இனமாக வருவதோடு, அம் மெய்களின் மேல் ஏறிய உயிர்களும் ‘அ ஆ ஐ ஒள’ என இனமாகவே வரவேண்டும். ‘அ, ஏ, இ, உ’ என மாறி வருதல் கூடா. ‘யா-இ ஈ எ ஏ ஒ’ - ஓரினமாகும். புதியன புகுதலாக, ‘யா -அ ஆ ஐ ஒள’ - ஓரினமாதலுங் கொள்க. கீழ்வரும் எடுத்துக்காட்டுகளை நன்கு கவனித்துப் பார்த்து, மோனை இனமோனைகளைக் கண்டுகொள்க. காட்சி “அன்புக்கு முண்டோ அடைக்குந்தாழ்.” (அ-அ “ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார்கோமான்.” (ஐ-ஆ-அ “இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்.”(இ-எ-இ “உரனென்னும் தோட்டியான் ஓரைந்துங் காப்பான்.” (உ-ஓ “உயிர் தனித்து மோனையாக வந்தது.” (‘அ-அ’-தனி மோனை; மற்றவை இனமோனை) “ஞாலத் துயிர் தளிர்ப்ப நல்குமே.” (ஞா-ந “நீலச் சுனையில் ஞிமிறார்ப்ப.” (நீ-ஞி “மையுற்ற கண்ணருவி வார வளைசோர.” (மை-வா-வ “வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன.” (வெ-மெ “துடியா நெடிதுயிராச் சோர்ந்து.” (து-சோ “சாரு மிடமவற்றுத் தானில்லை.” (சா-தா ஞந, மவ, தச என்பன உயிரோடுகூடி இனமோனையாக வந்தன. “ஞாயிறு போய்ப்பட்ட ஞாட்பினுள்.” (ஞா-ஞா “நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து.” (நி-நி “மங்கல மென்ப மனைமாட்சி.” (ம-ம “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்.” (வை-வா-வா “துன்னியார் குற்றமுந் தூற்று மரபினார்.” (து-தூ “சிறப்பீனும் செல்வமும் ஈனும்.” (சி-செ ஞந, மவ, தச என்பன அதற்கதுவே மோனையாக வந்தன. “பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்.” (ப-ப “குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு.” (கு-கு-கு “கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்.” (கொ-கு பிறமெய்கள் அதற்கதுவே மோனையாக வந்தன. “யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத் தொன்றும்.” (யா-இ-எ-மோனை “யானையொடு வீழ்ந்தான் அவன்.” (யா-அ-மோனை) குறிப்பு: நீங்கள் படிக்கும் செய்யுட்களில் இவ்வின மோனைகளைக் கண்டறிக. (2) எதுகை எதுகைக்கு மெய்யெழுத்து வந்ததே வரவேண்டும். உயிர் மெய் யெழுத்தாயின் வெவ்வேறு உயிரும் வரலாம். இனவெழுத்து வரவேண்டுமென்பதில்லை. ஆனால், நெடிலுக்கு நெடிலும் குறிலுக்குக் குறிலும் வருதல் சிறப்பு. காட்டு குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்ச ளழகும் அழகல்ல. குஞ் - மஞ் - என வந்த மெய்யே வந்தது. பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். பொறி - நெறி - என வந்த உயிரே வந்தது (றி:ற்+இ) “ஆயிடை யின்னணம் வருந்தி யன்புகூர் வேயுறழ் தோளியைப் பிரிந்து வெஞ்சின மாயவெங் கொடுங்கலி வயத்த னாகினான்” ஆயி - வேயு - மாய (யி - யு - ய - எதுகை) குறிப்பு: நீங்கள் படிக்கும் செய்யுட்களில் எதுகைகளைக் கண்டறிக. 2. உறழ்ச்சித் தொடை இரண்டடிகளில் மோனை முதலிய தொடைகள் வருதல் - முதற்றொடை எனப்படும். ஓரடியில் உள்ள சீர்களில் மோனை முதலிய தொடைகள் வருதல் உறழ்ச்சித்தொடை எனப்படும். அவ் வுறழ்ச்சித் தொடை அளவடியிலேயே கொள்ளப்படும். அளவடி - நாற்சீரடி. அடிகளின் முதற்சீரில் மோனை முதலியன வருவது, 1. அடிமோனை 2. அடியெதுகை 3. அடிமுரண் 4. அடியியைபு 5. அடியளபெடை எனப்படும். இயைபுத் தொடை இறுதிச்சீர்களில் கொள்ளப்படும். ஓரடியின் சீர்களில் வரும் உறழ்ச்சித்தொடை, 1. இணை 5. மேற்கதுவாய் 9. கடைக்கூழை 2. பொழிப்பு 6. கீழ்க்கதுவாய் 10. இடைப்புணர் 3. ஒரூஉ 7. முற்று 11. பின் 4. கூழை 8. கடையிணை எனப் பதினொரு வகைப்படும். இப் பதினொன்றையும் மோனை முதலிய முதற்றொடை ஐந்தனோடும் உறழ்ந்தால் (5 x 11 = 55) அவ்வுறழ்ச்சித் தொடை ஐம்பத்தைந்தாகும். உறழ்தல் - பெருக்குதல். வரலாறு இது அளவடிக்கு எடுத்துக்காட்டு. எண்கள் ஓரடியிலுள்ள சீர்களைக் குறிக்கும். 1 2 3 4 - - - - - x- - - - - x- - - - - x- - - - - 1. மோனை 1. இணை மோனை (1, 2) - முதல் இருசீர்களில் மோனை வருவது. 2. பொழிப்பு மோனை (1, 3) - முதற்சீரினும் மூன்றாஞ் சீரினும் மோனை வருவது. 3. ஒரூஉ மோனை (1, 4) - முதற்சீரினும் நான்காஞ் சீரினும் மோனை வருவது. 4. கூழை மோனை (1, 2, 3) - முதல் மூன்று சீர்களில் மோனை வருவது. 5. மேற்கதுவாய் மோனை (1, 3, 4) - இரண்டாஞ்சீரொழிந்த ஏனை மூன்று சீரினும் மோனை வருவது. 6. கீழ்க்கதுவாய் மோனை (1, 2, 4) - மூன்றாஞ்சீரொழிந்த ஏனை மூன்று சீரினும் மோனை வருவது. 7. முற்றுமோனை (1, 2, 3, 4) - நான்கு சீரினும் மோனை வருவது. இவை ஏழும் முதலிலிருந்து எண்ணப்படும். 8. கடையிணை மோனை (3, 4) - கடையிரு சீர்களில் மோனை வருவது. 9. கடைக்கூழை மோனை (2, 3, 4) - முதற்சீரொழிந்த ஏனை மூன்று சீரினும் மோனை வருவது. 10. இடைப்புணர் மோனை (2, 3) - இடையிரு சீரினும் மோனை வருவது. 11. பின்மோனை (2, 4) - இரண்டாஞ்சீரினும் நான்காஞ் சீரினும் மோனை வருவது. இவை நான்கும் இறுதியிலிருந்து எண்ணப்படும். இடைப் புணர் முதலிலிருந்தும் எண்ணலாம். இவ்வாறே ஏனை எதுகை முதலிய நான்கு தொடைகட்குங் கொள்க. 18. முதலிரு சீரிணை முதலிருந் தொன்றிரண் டிடையீடு பொழிப்பொரூஉ ஈறிலி கூழை முதலீ றயலில மேல்கீழ்க் கதுவாய் முழுவது முற்றே கடையிரு சீரிணை கடைமூன்று கூழை இடையிரண் டிடைப்புணர் இரண்டும் நான்கும் பின்னெனப் படுமே. பொழிப்பு - ஒன்றுவிட்டது, ஒரூஉ - இரண்டுவிட்டது. கூழை- குட்டை; அளவில் குறைந்தது. கதுவாய் - பொக்கவாய், வாய் மழுங்கிய அரிவாளை, ‘அரிவாள் கதுவாயாய்க் கிடக்கிறது’ என்பது வழக்கு, இடையீடு - இடையில் இல்லாதது, இடை விட்டது. ஒன்று இடையீடு - ஒன்றுவிட்டது. 8, 9, 11 முறையே 1, 4, 2 தொடைகளைக் கடையிலிருந்து கொண்டனவாகும். 1. இணை (1, 2) - 8. கடையிணை (4, 3) 4. கூழை (1, 2, 3) - 9. கடைக்கூழை (4, 3, 2) 2. பொழிப்பு (1, 3) - 11. பின் (4, 2) இடைப்புணர், இவ்விரண்டு வகையினும் சேராத தனி. பெரும்பாலும் மோனையிலேயே இத்தொடைகள் வரும். சிறுபான்மை முரணில் வரும். இவற்றுள் பொழிப்பு மோனையே சிறந்ததாகும். அடுத்தது ஒரூஉ மோனை. நீங்கள் படிக்கும் செய்யுள டிகளில் இத்தொடை வகைகளைக் கண்டறியுங்கள். இவை அளவடிக் கண்ணே கொள்ளப்படும் என்பதை நினைவில் வையுங்கள். குறிப்பு : மோனை சீர்மோனையாகவே வரும் அதாவது ஓரடியிலுள்ள சீர்களில் மோனை வருதல் - முதலெழுத்தொன்றி வருதல். எதுகை அடியெதுகையாகவே வரும். அதாவது இரண் டடிகளின் முதற்சீரில் - எதுகை வருதல் - இரண்டாமெழுத்தொன்றி வருதல். நேரிசை வெண்பாவின் இரண்டாமடியில் ஒரூஉ வெதுகை வரும். ஏனையடிகளிலும் பாக்களிலும் ஒரூஉ வெதுகை அருகி வரும். அருகி வருதல் - மிகச் சிறுபான்மை வருதல். காட்டு “மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் - மின்னி றத்துச் செய்யதாள் வெள்ளைச் சிறையன்னஞ் செங்கமலப் பொய்கைவாய்ப் போவதே போன்று.” இவ்வெண்பாவின் - முதலடியில் 1, 3, 4 சீர்களில் - ‘ ம, ம, ம,’ - மோனை. இரண்டாமடியில் 1, 3 சீர்களில் ‘பொ, போ’ - மோனை மூன்றாமடியில் 1, 3, 4 சீர்களில் - ‘செ, சி, செ’ - மோனை நான்காமடியில் 1, 2, 3 சீர்களில் - ‘பொ, போ, போ’ - மோனை. குறிப்பு : நான்காமடி சிந்தடி. அதன் மூன்று சீரினும் மோனை வந்திருக்கிறது. அளவடியின் நான்கு சீரினும் மோனை வருவதே முற்று மோனை யாதலான் இது முற்று மோனையுமன்று. அளவடியில் ஈற்றுச் சீரொழிந்த ஏனை மூன்று சீரினும், அதாவது முதன் மூன்று சீரினும் மோனை வருதலான் இது கூழைமோனையு மன்று. பண்பில்சொல் பல்லா ரகத்து. எனச் சிந்தடியில், ‘ப - ப’ என முதலிரு சீரிலும் மோனைவரின் இணைமோனை எனவும், திறனறிந் தாங்கே திரு. ‘தி - தி’ என முதற்சீரிலும் மூன்றாஞ்சீரிலும் மோனைவரின் பொழிப்பு மோனை எனவுங் கொள்ளலாம். 2. எதுகை ‘மன் - பொன்’ எனவும், ‘செய் - பொய்’ - எனவும் அடியெது கைகள் வந்திருத்தல் காண்க. இரண்டாமடியில் ‘பொன்’ - ‘மின்’ ஒரூஉவெதுகை. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து. ‘கொலை - அலை’ என இரண்டாவதடியல்லாத ஏனையடியில் ஒரூஉவெதுகை வந்துள்ளது. அளவடியுள்ள செய்யுட்களில் பொழிப்புமோனை அமையப் படுவதே சிறப்புடைத்தாகும். சிறுபான்மை ஒரூஉமோனை வரலாம். காட்டு “கேட்ட செவிவழியே கேளா துணர்வோட” ‘கே - கே’ பொழிப்புமோனை “வீமன் மடந்தை மணத்தின் விரைதொடுத்த. ‘வீ - வி’ - ஒருஉமோனை. 3. முரண்: முரண்டொடை - அடிமுரண், சீர்முரண் இரண்டுமே வரும். 4. இயைபு: இயைபுத் தொடை பெரும்பாலும் இசைப் பாடல்களுக்கே உரியதாகும். இசைப்பாடல்கள் மோனை எதுகை யோடு, ஈற்றில் இயைபுத் தொடை நன்கு அமையப் பாடவேண்டும். காட்டு மனமே மயங்காதே - மதி - தியங்காதே மனமே மயங்காதே. முனமே அறவோர் முதுநூல் பிறவோர் மொழிதே றுதல்முறையோ - தமிழ் - முதுநெறியோ இல்லறம் என்பதோர் இனிமையின் எல்லை இதைவிட மக்களுக் கின்பமும் இல்லை நல்லறம் பிறவென நவிலுவோர் சொல்லை நம்பிநீ தனிமையை நாடுதல் தொல்லை. இவ்விசைப்பாடலில் மோனை எதுகையோடு. ‘காதே’ அறவோர் - பிறவோர், முறையோ - நெறியோ எல்லை - இல்லை என இயைபுத்தொடை அமைந்திருத்தல் காண்க. 3. செந்தொடை மோனை எதுகை முதலிய முதற்றொடையும் உறழ்ச்சித் தொடையும் பெறாது வருவது செந்தொடை எனப்படும். செந்தொடை - சொற்களை இயல்பாகத் தொடுப்பது. பழந்தமிழ்ப் புலவர்கள் செய்யுட்களில் இச்செந்தொடை இயல்பாக அமைந் துள்ளமை கண்டு இன்புறற்பாலது. சீரிய நடையின்பம் படத் தொடுப்பதே செந்தொடையாகும். இத்தொடை பெரும்பாலும் ஆசிரியப்பாவின் கண்ணே வரும். சீரிய செந்தொடையமையப் பாடுதல் எளிதன்று. காட்டு “பூத்த வேங்கை வியன்சினை யேறி மயிலினம் அகவு நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே.” இந்நேரிசை யாசிரியப்பாவில் மோனை முதலிய தொடைகள் அமையாவிடினும், அகவலோசையுடன் செந்தொடை நன்கு அமைந்திருத்தல் காண்க. முதலடியில் ‘வே - வி’ - என இடைப்புணர்மோனை அமையினும், ஏனை இரண்டடியினும் யாதொரு தொடையும் அமையாமை காண்க. மோனை முதலிய தொடைகளின் சிறப்பினை, எமது ‘தொடையதிகாரம்’ என்னும் நூலிற் காண்க. பயிற்சி 1. முன்னர், தொடைகள் கண்டறியும்படி கொடுத்துள்ள அடிகட்கு நீங்கள் கண்டறிந்த தொடைகள் சரியா என்பதை ஒப்புநோக்குவதோடு உறழ்ச்சித் தொடைகளையும் அறிந்து கொள்ளுங்கள். (பக் - 50) அவ்வடிகளுள், (1) முதலடியில் ‘ந - ந’ - பொழிப்புமோனை. நல்லொழுக்கம் x தீயொழுக்கம் - கடையிணை முரண். இரண்டாமடியில் ‘எ - இ’ இணைமோனை. (2) முதலடியில் ‘இ - இ - எ’ - கூழைமோனை, ‘இன் - இன்’ - இணையெதுகை. (3) முற்றுமுரண். ‘செங் - பைங்’ பின்னெதுகை. (4) முதலடியில் ‘செ - செ’ - பொழிப்புமோனை, ‘செந் x பந் - ஒரூஉ வெதுகை. இரண்டாவதடியில் ‘இ - இ’ - பொழிப்புமோனை. (5) முதலடியில் ‘ப - பா’ - பொழிப்பு மோனை - இரண்டாமடியில் ‘பி - பி’ கடையினை மோனை - எனலாம். ‘மரீஇ - பிரிவு’- பொழிப்புமுரண். இப்பாட்டு அடியளபெடை. (6) முதலடியில் ‘இருந்து x எழுந்து x நடந்து’ முரண்டொடை. இரண்டாமடியில், ‘இல்லை - உண்டு’ முரண்டொடை. இப்பாட்டின் ஈற்றில் அடியியைபுத் தொடை. 1, 2, 4, 5 பாட்டுகள் அடியெதுகை. பயிற்சி 2. கோடிட்ட இடங்களை நிரப்பு: (1) 3, 4 சீர்களில் மோனை வருவது . . . . . . (2) 1, 3, 4 சீர்களில் மோனை வருவது . . . . (3) இடைப்புணர் மோனை . . . . . (4) பொழிப்புமோனை போன்ற தொடைவகை எது?  2. செய்யுளியல் செய்யுள் இயல் என்பது - செய்யுளின் இலக்கணங் கூறுவது என்பது பொருள். உறுப்பியலில் கூறிய எழுத்து, அசை முதலிய அறுவகை உறுப்புக்களினால், சொற்செறிவும் பொருட்செறிவும் பொருந்த, சொல்லணியும் பொருளணியும் அமைய, தொடை யின்பமும் நடையின்பமும் ஒன்ற, ஓசை நலத்துடன் செய்வது செய்யுள் ஆகும். யாப்பிலக்கணத்தில் செய்யுளைப் 'பா' என வழங்குதல் மரபு. பாவும் பாவினமும் எனச் செய்யுள் இருவகைப் படும். இவை பாப்பாவினம் எனப்படும். பா : வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனப் பா நான்கு வகைப்படும். ஆசிரியப்பா அகவற்பா எனவும் பெயர் பெறும். கடைச்சங்க காலத்தும் அச்சங்க முற்காலத்தும் இந்நால்வகைப் பாக்களே பாடலில் பயின்று வந்தன. பாவினம் : தாழிசை , துறை, விருத்தம் எனப் பாவினம் மூன்று வகைப்படும். பா இனம் - பாவினது இனம்; ஆறாம் வேற்றுமைத் தொகை. இவை மூன்றையும் பா நான்குடனும் உறழப் பாவினம் (4 x 3 = 12) பன்னிரண்டாகும். அவையாவன: 1. வெண்டாழிசை 7. கலித்தாழிசை 2. வெண்டுறை 8. கலித்துறை 3. வெளிவிருத்தம் 9. கலிவிருத்தம் 4. ஆசிரியத் தாழிசை 10. வஞ்சித்தாழிசை 5. ஆசிரியத் துறை 11. வஞ்சித்துறை 6. ஆசிரிய விருத்தம் 12. வஞ்சி விருத்தம் குறிப்பு: உறுப்பியலில் கூறிய அறுவகை உறுப்புக்களில் எழுத்து, அசை, தொடை என்னும் மூன்றும் எல்லாப் பாக்களுக்கும் பாவினங்கட்கும் பொது. சீர், தளை, அடி என்னும் மூன்றுறுப் பினைக் கொண்டே பா வேறுபாடு அமைவதாகும். இதனை நன்கு மனத்தில் இருத்துங்கள். ஓசை: பழந்தமிழ்ப் புலவர்கள் ஓசை வேறுபாடு கொண்டே பா வேறுபாடு கண்டனர். செப்பலோசை, அகவலோசை, துள்ள லோசை, தூங்கலோசை எனச் செய்யுளோசை நான்கு வகைப்படும். 1. செப்பலோசை - இருவர் உரையாடல் போன்ற ஓசை. 2. அகவலோசை - ஒருவர் பேசுதல் போன்ற - சொற்பொழிவாற்றுதல் போன்ற ஓசை. 3. துள்ளலோசை - கன்று துள்ளினாற் போலச் சீர் தோறுந் துள்ளிவரு மோசை. அதாவது தாழ்ந்துயர்ந்து வருவது. 4. தூங்கலோசை - சீர்தோறுந்துள்ளாது தூங்கி வருமோசை. தாழ்ந்தே வருவது. வெண்பா - செப்பலோசையுடையது. ஆசிரியப்பா - அகவலோசையுடையது. கலிப்பா - துள்ளலோசை யுடையது. வஞ்சிப்பா - தூங்கலோசை யுடையது. இருவகை வெண்டளையானும் வருவது செப்பலோசை. இருவகை ஆசிரியத் தளையானும் வருவது அகவலோசை. கலித்தளையான் வருவது துள்ளலோசை. இருவகை வஞ்சித்தளையானும் வருவது தூங்கலோசை. 1. வெண்பாவும் அதன் இனமும் வெண்பா 1. குறள் வெண்பா 2. சிந்தியல் வெண்பா 3. அளவியல் வெண்பா 4. பஃறொடை வெண்பா 5. கலி வெண்பா என வெண்பா ஐந்து வகைப்படும். வெண்பாவின் இனம் 1. வெண்டாழிசை 2. வெண்டுறை 3. வெளிவிருத்தம் என வெண்பாவின் இனம் மூன்று வகைப்படும். குறள் வெண்பாவின் இனம் 1. குறட்டாழிசை 2. குறள் வெண்செந்துறை எனக் குறள் வெண்பாவின் இனம் இரண்டு வகைப்படும். வெண்பாவின் இலக்கணம் வெண்பாவில் இயற்சீர் நான்கும் வெண்சீர் நான்கும் வரும்; இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் மட்டும் வரும்: ஈற்றடி சிந்தடியாகவும், ஏனையடி அளவடியாகவும் வரும். வெண்பா - நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டால் இறும். இவ்விலக்கணப்படி அமைவதே வெண்பாவாகும். இறும் - முடியும். வெண்பாவில் கனிச்சீர் நான்கும் வரக்கூடா. இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளையன்றி வேறு தளைகளும் வருதல் கூடா. அளவடி சிந்தடியன்றி வேறுவேறு அடிகளும் வரப்பெறா. நினைவில் வையுங்கள். குறிப்பு: பாவுக்கே இந்த வரையறை. பாவினத்திற்கு இவ் வரையறையில்லை. ஏனைப் பாக்களுக்கும் பாவினங்கட்கும் இஃதொக்கும். வெண்பாவின் வகை 1. ஈரடி வெண்பா - குறள்வெண்பா 2. மூவடி வெண்பா - சிந்தியல்வெண்பா 3. நாலடி வெண்பா - அளவியல் வெண்பா 4. பலவடி வெண்பா - பஃறொடைவெண்பா 5. பன்னீரடியின் மிக்கது - கலிவெண்பா நான்கிற்கு மேற்பட்ட அடிகளையுடைய வெண்பா பஃறொடை வெண்பா. பல் + தொடை = பஃறொடை. பஃறொடை வெண்பாப் பன்னிரண்டடிக்குமேற் போகக் கூடாது. அடி என்பது நாற்சீரடியையே குறிக்கும். “நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே.” என்பது தொல்காப்பியம். நாற்சீரடியான அளவடியில் முக்கால் ஆனதால், சிந்தடி - முக்கால் எனப்படும். எனவே குறள், சிந்து. அளவு, பஃறொடை, கலிவெண்பாக்கள். ஓரடி முக்கால் குறள் வெண் பாவே, ஈரடி முக்கால் சிந்தியல் வெண்பா, மூவடி முக்கால் அளவியல் வெண்பா, பலவடி முக்கால் பஃறொடை வெண்பா, பஃறொடை மிக்கது கலிவெண் பாவே. என வழங்கும். காட்டு : “உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லா முளன்.” இது குறள் வெண்பா. குறள் வெண்பாவைத் திருக்குறளில் கண்டுகொள்க. திருக்குறள் குறள்வெண்பாவால் ஆன நூல். குறிப்பு: வெண்பாவின் அளவடிகளில் பொழிப்பு மோனை வரவேண்டும். சிறுபான்மை ஒரூஉ மோனையும் வரலாம். சிந்தடியாகிய ஈற்றடியிலும் பொழிப்புமோனை வரவேண்டும். அதாவது முச்சீரடியாகிய அதன் முதற் சீரிலும் ஈற்றுச் சீரிலும் மோனை வரவேண்டும். 1. குறள் வெண்பா இரண்டடி அல்லது எழுசீருடையதாகையால், குறள் வெண்பாவின் ஈற்றடியில் பொழிப்பு மோனையமையப்பாடின் பொருட்செறிவு குன்ற ஏதுவாகும். ஆகையால், அவ் வீற்றடியின் முதற்சீரினும் மூன்றாஞ் சீரினும் மோனை அமையாது செந் தொடையாகப் பாடினும் இழுக்கன்று. இதனால், பொழிப்பு மோனையின்றியே பாட வேண்டுமென்பதில்லை. பொருட் செறிவு குன்ற வலிந்து மோனையமைக்க வேண்டியதில்லை என்பதே. ஆனால், வெண்டளை பிழையாது, செப்பலோசையுடன் அமைய வேண்டும். திருக்குறள் வெண்பாக்களில் பெரும்பாலும் இவ்வாறு அமைந்திருத்தல் இக்காரணம் பற்றியே யாகும். காட்டு : “ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.” இது முதலடி ஒரூஉ மோனை பெற்று, ஈற்றடி பொழிப்பு மோனை பெறாது வந்த குறள் வெண்பா. “ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியு மல்ல பல.” இது முதலடி ஒரூஉவெதுகை பெற்று, ஈற்றடி பொழிப்பு மோனை பெறாது வந்த குறள் வெண்பா. “அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி.” இது முதலடி ஒரூஉவெதுகையும், ஈற்றடி பொழிப்பு மோனையும் பெற்று வந்த குறள் வெண்பா. நேரிசை, இன்னிசை வெண்பா நாலடி வெண்பாவில், முதல் இரண்டடியின் எதுகை பெற்ற தனிச்சீரை இரண்டாவதடியின் ஈற்றில் பெற்று வருவது - நேரிசை வெண்பா எனப்படும். அத்தகைய தனிச்சீர் பெறாது வருவது - இன்னிசை வெண்பா எனப்படும். தனிச்சீர் - தனிச்சொல் எனவும் படும். காட்டு : “ஒன்று கரும்பினடி ஓங்குநுனி யேயிரண்டு துன்றுபுளிப் பேமூன்று தோகாய்வேம் - பொன்றதன்மேல் பின்னும் பலபிள்ளைப் பேறுடையா ரின்விருப்புக் கென்னுவமை சொல்வே னினி.” இது இரண்டாமடியின் ஈற்றில் முதல் இரண்டடியின் எதுகை பெற்ற தனிச்சொல் பெற்று வந்ததால் நேரிசை வெண்பா. ஒன்று - துன்று - பொன்ற - எதுகை. இன்னிசை வெண்பா 1. நாலடியும் ஒரே எதுகை பெற்றும், 2. பல எதுகை பெற்றும், 3. அடிதோறும் தனிச்சொற் பெற்றும், 4. இரண்டாமடியிலும் மூன்றாமடியிலும் தனிச்சொற் பெற்றும், 5. மூன்றாமடியில் தனிச்சொற் பெற்றும் இன்னும் பலவகையில் வரும். காட்டு : “துகடீர் பெருஞ்செல்வந் தோன்றியக்காற் றொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க: அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்.” இது நாலடியும் ‘துக - பக - அக - சக’ என ஓரெதுகையாய் வந்த இன்னிசை வெண்பா. “கள்வமென் பார்க்குந் துயிலில்லை; காதலிமாட் டுள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை; ஒண்பொருள் செய்வமென் பார்க்குந் துயிலில்லை; அப்பொருள் காப்பார்க்கு மில்லை துயில்.” இது பலவெதுகையாய் வந்த இன்னிசை வெண்பா. ‘கள் - டுள்’ என முதல் இரண்டடி ஓரெதுகை பெற்று, பின்னிரண்டடி எதுகை பெறாமை காண்க. “இன்னாமை வேண்டின் இரவெழுக - இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு செல்வது வேண்டின் அறஞ்செய்க - வெல்வது வேண்டின் வெகுளி விடல்.” இது அடிதோறும் தனிச்சொற் பெற்று வந்த இன்னிசை வெண்பா. முதல் இரண்டடி ஓரெதுகை. ‘இன் - இந்’ மெல்லின வெதுகை. “கடற்குட்டம் போழ்வர் கலவர் - படைக்குட்டம் பாய்மா வுடையான் உடைக்கிற்கும் - தோமில் தவக்குட்டம் தன்னுடையான் நீந்தும் - அவைக்குட்டம் கற்றான் கடந்து விடும்.” இது அடிதோறும் தனிச்சொற் பெற்று, அடியெதுகையின்றி வந்த இன்னிசை வெண்பா. ‘பாய்மா - தோமில்’ பாய்மா - யகர ஆசெதுகை. பாமா - தோமி - எதுகை. “மலிதேரான் கச்சியும் மாகடலுந் தம்முள் ஒலியும் பெருமையும் ஒக்கும் - மலிதேரான் கச்சி படுவ கடல்படா - கச்சி கடல்படுவ எல்லாம் படும்.” இது இரண்டாமடியிலும் மூன்றாமடியிலும் தனிச்சொற் பெற்று வந்த இன்னிசை வெண்பா. முதல் இரண்டடி ஓரெதுகை. “வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை அளந்தன போகம் அவரவ ராற்றால் விளங்காய் திரட்டினா ரில்லை - களங்கனியைக் காரெனச் செய்தாரு மில்.” இது மூன்றாமடியில் தனிச்சொற் பெற்று வந்த இன்னிசை வெண்பா. முதல் மூன்றடி ஓரெதுகை. இன்னும் வேறுபட வரும் இன்னிசை வெண்பாக்களை நாலடியார், நான்மணிக் கடிகை முதலிய கீழ்க்கணக்கு நூல்களிற் காண்க. நளவெண்பா முற்றும் நேரிசை வெண்பாக்களே. 2. சிந்தியல் வெண்பா சிந்தியல் வெண்பாவும் நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா என இருவகைப்படும். காட்டு : “நல்லார் உறவால் நலம்பெருகும் நாடோறும் அல்லார் உறவால் அறந்தேயும் - பொல்லார் தொடர்விடுதல் மேலாந் துணை.” இது இரண்டாமடியில் தனிச்சொற் பெற்று வந்ததால் நேரிசைச் சிந்தியல் வெண்பா. “அன்புற் றெவர்க்கும் அறனல்ல செய்யாது தென்புற்று நன்குஞற்றுஞ் செம்மைத் திருவுடையார் இன்புற்று வாழ்வ ரினிது.” இது தனிச்சொல் இன்றி மூன்றடியும் ஓரெதுகை பெற்று வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா. 3. பஃறொடை வெண்பா பஃறொடை வெண்பாவும் நேரிசைப் பஃறொடை வெண்பா, இன்னிசைப் பஃறொடை வெண்பா என இருவகைப் படும். காட்டு : “ஆய்ந்தறிந்து கல்லாதான் கல்வியும், ஆறறிவில் தோய்ந்தறிந்து சொல்லாதான் சொற்பெருக்கும் - தீந்தமிழின் சொல்லிருக்க வன்கடுஞ்சொற் சொல்லுவதூஉம் தன் மனையாள் இல்லிருக்க வேறில் லிரப்பதூஉம் - நெல்லிருக்கக் கற்கறித்து மண்டின்று காய்த்துக் களத்தடித்த புற்கறித்து வாழ்வதனைப் போன்ம்.” இது இரண்டடிக் கொருமுறை தனிச்சீர் பெற்று வந்த ஆறடி நேரிசைப் பஃறொடை வெண்பா. “செவ்வரைச் சென்னி யரிமானோ - டவ்வரை ஒல்கி யுருமிற் குடைந்தற்றான் - மல்கிக் கரைகொன் றிழிதரூஉங் காவிரி நாடன் உரைசா லுடம்பிடி மூழ்க - அரசோ டரசுவா ளீழ்த்த களத்து.” இது முதல் இரண்டடியினும் தனிச்சொற் பெற்று வேறெது கையாய், பின் மூன்றடியும் ஓரெதுகையாகி, நான் காமடியில் தனிச்சொற் பெற்று வந்த, ஐந்தடி இன்னிசைப் பஃறொடை வெண்பா. “வையக மெல்லாங் கழனியாய் - வையகத்துச் செய்யகமே நாற்றிசையின் தேயங்கள் - செய்யகத்து வான்கரும்பே தொண்டை வளநாடு - வான்கரும்பின் சாறேயந் நாட்டுத் தலையூர்கள் -சாறட்ட கட்டியே கச்சிப் புறமெல்லாம் - கட்டியுள் தானேற்ற மான சருக்கரை - மாமணியே ஆனேற்றான் கச்சி யகம்.” இது அடிதோறும் தனிச்சொற்பெற்று வந்த ஏழடி இன்னிசைப் பஃறொடை வெண்பா. “அன்றொருநாள் மாலை யழகு நிலவொளியில் சென்றுலவி வீடு திரும்பிவந்து முப்பாலை உண்டு களித்தின்ப மூற்றெடுப்ப வேக்கழுத்தங் கொண்டு பழந்தமிழர் கூம்பாநல் வாழ்வஃதும் மற்றொருகால் நம்மவர்க்கு வாய்க்குமோ வென்றெண்ணிச் சற்றொருகால் அப்படியே தானிருக்க வென்மகவும் வாய்க்கு மெனமகிழ்ந்து வாரியெடுத்து முத்தம் தாய்க்கு மிகக்கொடுத்தேன் தான்.” இது தனிச்சொல் இன்றி, இவ்விரண்டடி ஓர் எதுகை பெற்று வந்த எட்டடி இன்னிசைப் பஃறொடை வெண்பா. குறிப்பு: நேரிசைப் பஃறொடை வெண்பா - இவ்விரண்டடி ஓரெதுகையாய் இரண்டடிக் கொருமுறை அவ்விரண்டின் எதுகை யுடைய தனிச்சொற் பெற்று வரும். இவ்வாறு வராதனவெல்லாம் இன்னிசைப் பஃறொடை வெண்பாவாகும் என அறிக. 4. கலிவெண்பா இதுவும் நேரிசைக் கலிவெண்பா, இன்னிசைக் கலிவெண்பா என இரண்டு வகைப்படும். இது பன்னீரடிக்கு மேல், அகவலே போல் எத்தனை அடி வேண்டுமானாலும் வரலாம். நேரிசைக் கலிவெண்பா : இது பஃறொடை வெண்பாவே போல், இரண்டிரண்டடி ஓரெதுகையாய், அவ்வெதுகை பெற்ற தனிச்சீரை அவ்விரண்டாமடியின் ஈற்றில் பெற்று வரும். அவ்வாறு தனிச்சொற் பெறாது வருவது இன்னிசைக் கலிவெண்பா. இது இன்னிசைப் பஃறொடை வெண்பாப் போன்றது. காட்டு : “உள்ள முவந்தாள் ஒருவனை யன்றொருநாட் கள்ள முவந்த கருங்கண்ணாள் - பள்ள வயல்பாயு நீர்போல மானன்னாள் மைக்கட் கயல்பாயு முள்ளியுட் காயும் - செயல்பாயும் ஃ ஃ ஃ காதற் கருங்குவளை கண்டு மலரவிருள் போதப் புகுந்த புதுமதிபோல் - மேதக்கான் நோயிடைய வேயுதவி நோக்கியெதிர் நின்றாளை ஆயிடைகண் டுள்ளமுவந் தான்.” - நெருஞ்சிப்பழம் இது 86 அடிகளையுடைய நேரிசைக் கலிவெண்பா. தூது, உலா முதலிய தமிழ்ப் பனுவல்கள் நேரிசைக் கலிவெண்பாவால் ஆனவை. படித்தறிக. தமிழ்விடு தூது, மூவருலா முதலியவற்றைப் படித்துப் பயிற்சி பெறுக. “குயில்கூவிக் கொண்டிருக்கும் கோலம் மிகுந்த மயிலாடிக் கொண்டிருக்கும் வாச முடையநற் காற்றுக் குளிர்ந்தடிக்கும் கண்ணாடி போன்றுநீர் ஊற்றுக்கள் உண்டு கனிமரங்கள் மிக்கவுண்டு. ஃ ஃ ஃ அன்பு மிகுந்த அழகிருக்கும் நாயகரே இன்பமும் நாமும் இனி.” - சஞ்சீவி பர்வதத்தின் சாரல். இது தனிச்சொல் இன்றி வருதலால் இன்னிசைக் கலிவெண்பா. இது பல நூறடிகளை யுடையது. இன்னிசைக் கலிவெண்பாக்களைக் கலித்தொகையில் பயின்றறிக. குறிப்பு: இருவகைக் கலிவெண்பாவும்; ஏனை வெண்பாக்கள் போல ஈற்றடி சிந்தடியாகவும் ஏனையடி அளவடியாகவும் வரும். நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டால் இறும் என்பதை நினைவு கூர்க. மேலே எடுத்துக்காட்டிய வெண்பாக்களின் மோனை எதுகைகளையும், இருவகை வெண்டளைகளையும் கண்டறிக. வெண்பாவின் இலக்கணத்தையும் நினைவு கூர்க. 5. குறள் வெண் செந்துறை அளவொத்த இரண்டடி வருவது குறள்வெண் செந்துறை எனப்படும். இது ‘வெண்செந்துறை’ எனவும் வழங்கும். அளவொத்தல் - ஓரடியில் எத்தனை சீர் உளதோ அத்தனை சீரே அடுத்த அடியிலும் இருத்தல். அதாவது அளவடிக்கு அளவடியே வருதல். காட்டு : “ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே.” இது அளவடி இரண்டு வந்த குறள்வெண் செந்துறை. “வாழியநின் மலரடிகள் மவுனதவ முனிவ மனமிரங்கி யருள்புரிந்தோர் வார்த்தையெனக் கீயிற் பாழடவி யிதிற்சுழன்று பாதைவிடுத் தலையும் பாவியொரு வனையளித்த பயனுறுவை பெரிதே.” - மனோன்மணீயம் இது எண்சீர்க் கழிநெடிலடி இரண்டு வந்த குறள்வெண் செந்துறை. பாரதியாரின் கண்ணன் என் சேவகன் முதலிய கண்ணன் பாட்டுக்கள் குறள்வெண் செந்துறைகளேயாகும். இனி, அளவொத்த இரண்டடியேயன்றிப் பொழிப்பு மோனை யுடைய அளவடி தனித்துப் பொருட்டொடர் புடையதாய் வருவதும் குறள்வெண் செந்துறையேயாகும். காட்டு : “தேன்பெருகுஞ் சோலை தென்னன் வளநாடு, வாழை வடக்கீனும் வான்கமுகு தெற்கீனும், கட்டுக் கலங்காணும் கதிருழக்கு நெற்காணும், பஞ்சங் கிடையாது பாண்டி வளநாட்டில் ” -அல்லியரசாணிமாலை அல்லியரசாணிமாலை, பவளக்கொடிமாலை, அபிமன்னன் சுந்தரிமாலை, பஞ்சபாண்டவர் வனவாசம், நல்லதங்காள் கதை முதலிய அம்மானைப் பாடல்கள் தனித்து வந்த குறள் வெண் செந்துறைகளே. “ஆனைகட்டுந் தூராகும் வானமுட்டும் போராகும் எட்டுத்திசைகளையும் கட்டியர சாள்வாளாம்.” என்ற சிறுபான்மை பொழிப்பெதுகை பெற்ற அளவடியும் தனித்து வரும். “ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்.” எனத் தொடங்கும் முதுமொழிக்காஞ்சி அடிகளெல்லாம் தனித்து வந்த குறள்வெண் செந்துறைகளே. இதன் விளக்கத்தைத் தொடை யதிகாரத்திற் காண்க. குறிப்பு : வெண்டாழிசை முதலிய வெண்பாவின் மற்ற இனங்களை இரண்டாம் பாகத்தில் காண்க. பயிற்சி 1. வெண்பாவில் வரும் வாராச் சீர், தளை, அடிகள் யாவை? 2. நேரிசை, இன்னிசை வெண்பா - வேறுபாடென்ன? 3. பஃறொடை வெண்பா, கலிவெண்பா - ஒற்றுமை, வேற்றுமை என்ன? 4. வெண்பா இலக்கணத்தில் குறள்வெண்பாவுக்குரிய விலக்கென்ன? அவ் விலக்குக்குக் காரணம் என்ன? 5. குறள்வெண்செந்துறையின் வகை யாவை? 6. தனிச்சீரின் இலக்கணம் என்ன? தனிச்சீர் வரும் வெண்பாக்கள் யாவை? 7. வெண்பாவால் ஆகிய தமிழ் நூல்கள் பத்தின் பெயர் கூறுக. 8. தூது அல்லது உலா எந்தப் பாவினால் பாட வேண்டும்? 2. ஆசிரியப்பாவும் அதன் இனமும் ஆசிரியப்பா: 1. நேரிசை ஆசிரியப்பா 2. இணைக்குறள் ஆசிரியப்பா 3. நிலைமண்டில ஆசிரியப்பா 4. அடிமறிமண்டில ஆசிரியப்பா என ஆசிரியப்பா நான்கு வகைப்படும். இனம்: 1. ஆசிரியத் தாழிசை 2. ஆசிரியத் துறை 3. ஆசிரிய விருத்தம் என ஆசிரியப்பாவின் இனம் மூன்று வகைப்படும். ஆசிரியப்பாவின் இலக்கணம் ஆசிரியப்பாவில் கனிச்சீர் ஒழிந்த ஏனை எட்டுச் சீரும் வரும். இருவகை வஞ்சித்தளையும் அல்லாத ஏனை ஐந்து தளையும் வரும். நெடிலடியும் கழிநெடிலடியும் அல்லாத ஏனை மூன்றடியும் வரும். ஆசிரியப்பா, ஏகாரத்தால் இறும். காய்ச்சீரும், வெண்சீர் வெண்டளையும், கலித்தளையும் சிறுபான்மை வரும். சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகியவற்றின் ஆசிரியப்பாக்கள் ‘என்’ என்னும் அசையால் முடிகின்றன. ஆசிரியப்பா மூன்றடி முதல் ஆயிரம் அடிகாறும் நடை பெறும். அதற்குமேல் வரினும் இழுக்கின்று. ஆசிரியப்பாவின் வகை 1. நேரிசை யாசிரியப்பா எல்லா அடியும் அளவடியாக வந்து, ஈற்றயலடி சிந்தடியாக வருவது நேரிசை ஆசிரியப்பா; ஈற்றயலடி - ஈற்றடிக்கும் முன்னுள்ள அடி. 2. இணைக்குறளாசிரியப்பா நேரிசை யாசிரியப்பாவின் இடையிடையே குறளடியும் சிந்தடியும் வருவது, நேரிசையாசிரியப்பாவில் சிந்தடி வருகிறது. அதோடு இடையிடையே குறளடி இணைந்து வருவதால் இணைக் குறளாசிரியப்பா எனப் பெயர் பெற்றது. இணைக் குறளாசிரியப் பாவின் முதலடியும் ஈற்றடியும் அளவடியாகவே வரும். 3. நிலைமண்டில ஆசிரியப்பா எல்லா அடியும் அளவடியாக வருவது. 4. அடிமறிமண்டில ஆசிரியப்பா நிலைமண்டில ஆசிரியப்பாவில் எந்த அடியை முதலில் வைத்துப் பொருள் கொள்ளினும் பொருள் மாறுபடாமல் இருப்பது. அதாவது ஒவ்வோரடியிலும் பொருள் முற்றுப் பெறுவது. அடியை முன்னும் பின்னும் மறித்து (மாற்றி)ப் பொருள் கொள்ளுமாறு நிற்றலால் இப் பெயர் பெற்றது. குறிப்பு: ஆசிரியப்பாவில் அளவடிகள் பொழிப்பு மோனை பெறவேண்டும். சிந்தடிகள் முதற்சீரினும் மூன்றாஞ் சீரினும் மோனை பெறுதல் சிறப்புடைத்து. ஆசிரியப்பா அடியெதுகை பெற்று வருதல் சிறப்புடைத்து; தனித்தும் வரலாம். ஒவ்வோரடியும் பொழிப்பெதுகை பெற்றுத் தனித்தனியும் வரலாம். 1. இரண்டடி ஓரெதுகை பெறுதல். 2. ஓரடி பொழிப் பெதுகை பெறுதல். 3. ஓரடி பொழிப்பு மோனை பெறுதல் என மூன்று வகையில் வரும். பொழிப்பெதுகை பெற்றுத் தனித்து வருதலே சிறப்புடைத்து. இவ்வாறு வருதலை, எமது ‘காமஞ்சரி’ என்னும் நாடக நூலிற் காண்க. காட்டு : 1. “பன்னூ லாய்ந்து பழுநிய வளத்து நன்னூற் புலவர் நாளவை யிருத்தலின் உயரிய இன்பம் உண்டெனின் இயலிய முறையில் யாமடை குதுமே.” இது ஈற்றயலடி சிந்தடியாக வந்தமையின் நேரிசை ஆசிரியப்பா. இதில் பொழிப்பு மோனை பெற்ற இரண்டடிகள் ஓரெதுகையாக வந்தன. ‘குதுமே’ என ஏகாரத்தால் முடிந்தது. 2. “நீரின் றண்iமயும் தீயின் வெம்மையும் சாரச் சார்ந்து தீரத் தீரும் சாரல் நாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாதே.” இது இடையிடையே குறளடியும் சிந்தடியும் வந்தமையின் இணைக்குறளாசிரியப்பா. 3. “வள்ளுவன் மொழிந்த வாய்மொழிப் படியாம் உள்ளுவ வுள்ளி உவர்ப்ப வுவர்த்துக் கற்றறிந் தாங்கு முற்றுற நின்றே யாமுறு மின்பம் யாவரு முறவே நன்கினி துரைத்துப் பொன்கனி போல இருநிலம் புகழ இனிதுவாழ் குவமே.” இது எல்லா அடியும் அளவடியாக வந்ததால் நிலை மண்டில ஆசிரியப்பா. இதில் 3, 5 அடிகள் பொழிப்பெதுகை பெற்றன. 4, 6 அடிகள் பொழிப்பு மோனை பெற்றுத் தனித்து வந்தன. 4. “தாய்மொழி வளர்த்தல் தமிழர்தங் கடனே வாய்மொழி புரத்தல் மற்றவர் கடனே காய்மொழி தவிர்த்தல் கற்றவர் கடனே ஆய்மொழி யுரைத்தல் அறிஞர்தங் கடனே.” இது எல்லா அடியும் அளவடியாக வந்து, எவ்வடியை முதலில் வைத்துப் பொருள் கொள்ளினும் பொருள் மாறுபடா தாகையால், அடிமறிமண்டில ஆசிரியப்பா. எல்லா அடியும் அளவடியான் வருதல், அவ்வாறே வந்து பொருள் மாறுபடாமை, ஈற்றயலடி சிந்தடியாக வருதல், இடையிடையே குறளடி வருதல் என்னும் இலக்கணத்தால், 1. நிலைமண்டில ஆசிரியப்பா 2. அடிமறிமண்டில ஆசிரியப்பா 3. நேரிசை ஆசிரியப்பா 4. இணைக்குறளாசிரியப்பா எனலே நேரிய வைப்புமுறை யாகும். பயிற்சி 1. மேற்காட்டிய ஆசிரியப்பாக்களில் உள்ள மோனை எதுகை களையும் தளைகளையும் கண்டறிக. 2. சங்க நூல்களில் உள்ள ஆசிரியப்பாக்களைப் படித்து வகையை உணர்க. ஆசிரியப்பாவின் இனம் 5. ஆசிரிய விருத்தம் கழிநெடிலடி நான்கு கொண்டது ஆசிரிய விருத்தம். நான் கடியும் அளவொத்து வரவேண்டும். காட்டு : “வருமலை யளவிக் கானல் மணலிடை யுலவிக் காற்றிற் சுரிகுழ லுலர்த்துந் தும்பி தொடர்மரை முகத்தர் தோற்றம் இருபெரு விசும்பிற் செல்லும் இளமைதீர் மதியந் தன்னை கருமுகில் தொடர்ந்து செல்லும் காட்சிபோற் றோன்று மாதோ.” இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். முதல் சீரிலும் நான்காஞ்சீரிலும் மோனை அமைந்துள்ளமை காண்க. “உண்ணென்று படைப்பீர்மன் உடுத்தென்று விரிப்பீர்மன்; உடன்றே யுள்ளம் கண்ணின்று காயீர்மன் கல்லென்று சொல்லீர்மன்; கனிதேன் பாகின் விண்ணின்று நாட்பெய்யு மழையென்று வந்தீர்மன்; வெறியே மேங்க மண்ணொன்றி நின்றீர்மன் கல்லொன்றி னெவ்வாறு வாழ்வே மன்னே.” இது முதற்சீரினும் ஐந்தாஞ்சீரினும் மோனை வந்த அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். ஒன்று மூன்று ஐந்து சீர்களில் மோனை வருதலுமாம். முதலடியில் காண்க. “சொற்றொறும் பொருளின் சிறப்புமப் பொருளிற் சொற்பொருந் துறவமை சிறப்பும் சொற்றொட ரமைவின் சிறப்புமத் தொடரின் சொற்பொரு ளமைதியின் சிறப்பும் கற்றொறு முள்ளங் களிக்கவத் தொடரிற் கருத்தமைந் திருக்குநற் சிறப்பும் பெற்றுள தமிழ்த்தாய்க் கினியொரு சிறப்புப் பேசுவ தெனதுபே ரவாவே.” இது முதற்சீரினும் ஐந்தாஞ்சீரினும் மோனை வந்த எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். “செங்கதிரோன் போய்மறையச் செவ்வா னேகத் திங்களிளம் பிறைநுதலைத் தெரியக் காட்டிக் கங்குலெனப் புலவர்சொலும் இரவுப் பெண்ணும் காரிருளாம் குழல்விரித்துக் களிக்கை வீசிப் பொங்கொளிவிண் மீன்களெனும் முத்துப் பற்கள் புறந்தோன்ற வேசிரித்துப் போந்தாள் போத மங்கையவள் புன்னகையால் மயங்கி யிந்த வையகமே ஆழ்துயிலில் வைகிற் றம்மா.” இது முதற்சீரினும் ஐந்தாஞ்சீரினும் மோனை வந்த எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். 1, 3, 5, 7 சீர்களில் மோனை வரின் செவிக்கின்பந் தரும். 1, 4 அடிகளைக் காண்க. “கற்றோரை யினிதுவர வேற்றுமுக மன்செய்து கல்வியை வளர்க்கவேண்டும் கசடறக் கற்பவை கற்றுமே நாடொறும் கற்றபடி நிற்கவேண்டும் பெற்றோரை முதுமையிற் போற்றவேண் டும்பெற்ற பெண்ணையா ண்பிள்ளைபோலப் பெரியோர்கள் மெச்சுவகை பிச்சைபுக் காயினும் பேரறிவி யாக்கவேண்டும் உற்றோரை யொருநாளுங் கைவிடுதல் செய்யாமல் உதவியது செய்யவேண்டும் உலகத்தினோடொட்ட வொழுகவேண் டுஞ்செல்வர் ஒப்புரவு செய்யவேண்டும் அற்றோரை யினிதுவந் தோம்பவேண் டும்பகுத் தறிவினைப் போற்றவேண்டும் ஆராயி னிவையுலக மக்கள்கைக் கொண்டொழுகும் அறமெனத் தெளிகுவீரே.” இது 1, 5, 7, 11 சீர்களில் மோனை வந்த பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். “சாதகப் பறவைக் கிரும்புயற் றுளியுஞ் சகோதரத்தி னுக்கு திக்கும் சந்திரன் விடுங்கரமு மம்புயத் திற்கேழு தாம்பரித் தேரி ரவியும் மேதக வுறுந்தவத் திற்கருளு மவ்வருள் விளக்கத்தினுக்கு ழுவலும் மேவருங் கல்விக்கு நுண்ணறிவும் நுண்ணறிவு வீக்கத்தி னுக்கொ ழுக்கும் நோதகவி லர்தமைந் தங்கருள் வழிச்செலீஇ நோய்ப்பிறவி போக்கு வார்க்கு நோற்றவர் புராணமில் லாதமை தராதாம் நுவன்றெம்மை யாண்ட பெம்மான் தீதக மதித்திடாச் சேவையர் குலாதிபன் சிறுதே ருருட்டி யருளே சிறுகோ லெடுத்தரசு செங்கோல் நிறுத்தினோன் சிறுதே ருருட்டி யருளே.” இது 1, 5, 8, 12 சீர்களில் மோனை வந்த பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். குறிப்பு: பதினான்கு சீர்க் கழிநெடிலடிக்குமேல் வாரா. பன்னிருசீர்க் கழிநெடிலடி யும் பதினான்குசீர்க் கழிநெடிலடியும் அறுசீரடியும் எழுசீரடியும் இரண்டு ஒரு மோனைப்பட வந்த இரண்டடிகளேயாகும். ஒன்பது பத்துசீர்க் கழிநெடிலடிகள் இனிய ஓசை பெறா. மோனைத் தொடை அமைவினைத் தொடையதி காரத்திற் காண்க. காட்டு : “ இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியின் எதிர்ந்த தானையை யிலங்கு மாழியின் விலங்கியாள் முடங்கு வாலுளை மடங்கல் மீமிசை முனைந்து சென்றுடன் முரண்ட ராசனை முருக்கியாள்” இவ்வொன்பதின்சீர்க் கழிநெடிலடிகளில் முடுகோசை தட்டுதல் காண்க. “இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியின் எதிர்ந்த தானையை விலங்கியாள்.” என்பதே சரியான அடி. ‘இலங்கு மாழியின்’ என்னும் இருசீரும் இடைப்பிறவரல் ஆகும். அல்லது, “இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியின் இலங்கு மாழியின் விலங்கியாள்.” எனக்கொளின், ‘எதிர்ந்த தானையை’ என்பது இடைப் பிறவரல். எழுசீரடியுடன் இருசீர் கொண்டதே யாகும் இவ்வடி. “கொங்கு தங்கு கோதை யோதி மாத ரோடு கூடு நீடு மோடை நெற்றி வெங்கண் யானை வேந்தர் போந்து வேத கீத நாத வென்று நின்று தாழ.” இவை பதின்சீர்க் கழிநெடிலடிகள். இவையும் அவ்வாறே ஓசை தட்டுதலைப் படித்தறிக. “கொங்கு தங்கு கோதை யோதி மாத ரோடு கூடியே வெங்கண் யானை வேந்தர் போந்து வேத கீத மோதியே” என எழுசீர்க் கழிநெடிலடியாகக் கொள்வதே ஏற்புடைத்து. 6, 7, 8, 12, 14 சீர்க் கழிநெடிலடிகளே கொள்ளத் தக்கவை. பயிற்சி 1. ஆசிரியப்பாவில் வாராத சீர், அடிகள் யாவை? 2. ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்? 3. ஆசிரியப்பா என்ன ஓசையுடையது? 4. அடிமறிமண்டில ஆசிரியப்பா, இணைக்குறளாசிரியப்பா இவற்றின் இலக்கணம் என்ன? 5.எதன் இலக்கணந் தெரிந்த பின்னர் இணைக்குறளாசிரியப்பாவின் இலக்கணந் தெரிதல் வேண்டும்? 6. ஆசிரியப்பாவின் அடியும் முடிவும் என்ன? 7. ஆசிரிய விருத்தத்தின் இலக்கணம் யாது? 3. கலிப்பாவும் அதன் இனமும் கலிப்பா 1. ஒத்தாழிசைக் கலிப்பா 2. வெண்கலிப்பா 3. கொச்சகக் கலிப்பா 4. உறழ் கலிப்பா எனக் கலிப்பா நான்கு வகைப்படும். ஒத்தாழிசைக் கலிப்பா 1. நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா 2. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா 3. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என மூவகைப்படும். வெண்கலிப்பா 4. வெண்கலிப்பா ஒருவகையே. கொச்சகக் கலிப்பா 5. தரவு கொச்சகக் கலிப்பா 6. தரவிணைக் கொச்சகக் கலிப்பா 7. சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா 8. பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா 9. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என ஐந்து வகைப்படும். உறழ் கலிப்பா 10. உறழ் கலிப்பா ஒருவகையே எனக் கலிப்பா பத்து வகைப்படும். இனம்: 1. கலித்தாழிசை 2. கலித்துறை 3. கலிவிருத்தம் எனக் கலிப்பாவின் இனம் மூன்று வகைப்படும். கலிப்பாவின் இலக்கணம் கலிப்பாவில், தேமா, புளிமா என்னும் மாச்சீர் இரண்டும், கருவிளங்கனி, கூவிளங்கனி என்னும் விளங்கனிச்சீர் இரண்டும் அல்லாத ஏனை எட்டுச்சீரும் வரும். நேரொன்றாசிரியத் தளை யல்லாத ஆறுதளைகளும் வரும். எனினும் பெரும்பாலும் கலித்தளையே வரும். அளவடியே பெரும்பான்மை வரும். 1. கலிப்பாவின் உறுப்புக்கள் 1. தரவு 4. அம்போதரங்கம் 2. தாழிசை 5. தனிச்சொல் 3. அராகம் 6.சுரிதகம் என்னும் ஆறும் கலிப்பாவின் உறுப்புக்கள் ஆகும். 1. தரவு இது கலிப்பாவின் முதலுறுப்பு. தரவு, எருத்து என்பன ஒருபொருட் சொற்கள். எருத்து - பிடரி; இங்கு, தலை. 2. தாழிசை இது பாட்டின் இரண்டாவது உறுப்பு. தாழம்பட்ட ஓசையை உடையது - தாழிசை. தாழிசை, இடைநிலைப் பாட்டு என்பன ஒருபொருட் சொற்கள். 3. அராகம் அராகம் - இசை. இது முடுகி வரும். அராகம் என்னும் தனித்தமிழ்ச் சொல்லே முதலெழுத்தை இழந்து, ராகம் என வடசொல் வடிவுபெற்றுப் பின் இராகம் என வழங்கி வருகிறது. அராகம், வண்ணகம், முடுகியல், அடுக்கியல் என்பன ஒரு பொருட் சொற்கள். 4. அம்போதரங்கம் தரங்கம் - கடலலை. அலைபோல் சுருங்கி வருவதால் இப்பெயர் பெற்றது. அம்போதரங்கம், அசையடி. பிரிந்திசைக் குறள், சொற்சீரடி, எண் என்பன ஒரு பொருட் சொற்கள். எண்: ஈரடி யிரண்டு - பேரெண் - தலையெண் ஓரடி நான்கு - அளவெண் - இடையெண் முச்சீர் எட்டு - இடையெண் இருசீர் பதினாறு - சிற்றெண் இருசீர் எட்டு - கடையெண் ஒருசீர் பதினாறு - சிற்றெண் இவ்விரு வகையிலும் வழங்கும் அடி - அளவடி 5. தனிச்சொல் பொருட் டொடர்புடையதாய், ஓர் அசை அல்லது சீர் தனித்து வருவதால் தனிச்சொல் எனப்பட்டது. தனிச்சொல், விட்டிசை; கூன், தனிநிலை, அடைநிலை என்பன ஒரு பொருட் சொற்கள். 6. சுரிதகம் இது பாட்டினை முடிக்கும் உறுப்பு. சுரிதகம், அடக்கியல், வாரம், வைப்பு, போக்கு, போக்கியல் என்பன ஒரு பொருட் சொற்கள். சுரிதகம் - வெண்பாவாகவும் ஆசிரியமாகவும் வரும். இப் பெயர் வேறுபாடுகள் பழந்தமிழ் நூல்களில் பயில்வன. இவற்றை மனப்பாடஞ் செய்க. இவ்வுறுப்புக்களின் இயல்பினை எடுத்துக்காட்டிற் கண்டு தெளிக. 2. கொச்சகக் கலிப்பா அளவடி நான்கு கலியோசை பெற்று வருவது கொச்சகக் கலிப்பா எனப்படும். இது கொச்சகம் எனவும் வழங்கும். நான்கடியும் ஓரெதுகையாய் வரவேண்டும். காட்டு : “செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப் போய் எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையு மதியம் போல் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே.” இவ் வளவடிகள் நான்கும் பொழிப்பு மோனை பெற்றுள்ளமை காண்க. முதல் இரண்டடிகள் மேற்கதுவாய் மோனை பெற்றுள்ளன. எனினும், பொழிப்பு மோனை கொள்ளுதலே கொச்சகத்திற்குச் சிறப்பு. 3. கட்டளைக் கலிப்பா தேமா, புளிமா என்னும் மாச்சீரை முதற்சீராக உடைய நாற்சீரடி; முதலசை நேரசையாயின் - தேமாவாயின்- பதினோ ரெழுத்தும், முதலசை - நிரையசையாயின் - புளிமாவாயின் - பன்னிரண்டெழுத்தும் பெற்று, இது ஓர் அரையடியாய், இத்தகைய அரையடி இரண்டு கொண்ட அடி நான்கு வருவன கட்டளைக் கலிப்பா எனப்படும். எழுத்தெண்ணும்போது ஒற்று நீக்கி எண்ண வேண்டும். இது கட்டளைக் கலித்துறைக்கும் ஒக்கும். எழுத்தெண்ணிப்பாடுவதால் இஃது இப்பெயர் பெற்றது. கட்டளை - அளவு. 19. மாச்சீர் முதல நாற்சீ ரடியே நேர்பதி னொன்றாய் நிரைபன் னிரண்டாய் எழுத்துடை யரையடி யிணைந்தடி நான்கு கவினுற வருவது கட்டளைக் கலியே. இதை மனப்பாடஞ் செய்க. காட்டு : “மனைவி மக்களும் மாண்டு மறைந்தனர் வாழ்ந்த வீடுங் குடியு மிழந்தனன் இனிய நட்பினர் யாவரு மேகினர் ஏழை யாண்டியே காங்கியு மாயினேன் எனையு மிந்நிலை கண்டனை யின்னுமிங் கின்ன லேது மிழைத்திட வுள்ளதோ உனையு மன்னையென் றோதி யழைத்திடேன் உலக லாந்தருந் தேவிகா மாட்சியே.” - கவிமணி ‘மனைவி . . . மறைந்தனர்’ என்பது நிரையசையை முதலில் உடைய அரையடி. ‘வாழ்ந்த . . . மிழந்தனன்’ என்பது நேரசையை முதலில் உடைய அரையடி. முதலரை யடியில் பன்னிரண் டெழுத்தும், இரண்டாவது அரையடியில் பதினோரெழுத்தும், இருத்தலை எண்ணியறிக. இது எண்சீர்க் கழிநெடிலடி நான்குடைய தெனினும், எழுத்தெண்ணிப் பாடுவதால் ஆசிரிய விருத்தம் ஆகாது. 4. கலித்தாழிசை குறளடி முதல் கழிநெடிலடி யீறாக அளவொத்த இரண்டடிகள் வருவன கலித்தாழிசை எனப்படும். இது வண்ணவோசையுடன் இருக்கும். இக் கலித்தாழிசைகளாலே பாடவேண்டும் என்பது பரணி என்னும் பனுவலின் இலக்கணம். வண்ணம் - சந்தம், குறள்வெண் செந்துறை வண்ணம் பட வருவதில்லை. காட்டு : “அடப்படப்பொறா தமரர் தம்படை படப்படப்ரசா பதிபடைக்கவே.” இது குறளடியிரண்டான் வந்த கலித்தாழிசை. “பொருபுலி புலியொடு சிலைத்தபோல் பொருபட ரொடுபடர் சிலைக்கவே அரியினொ டரியினம் அடர்ப்பபோல் அரசரு மரசரு மடர்க்கவே.” - கலிங்கத்துப்பரணி இது அறுசீர்க் கழிநெடிலடியான் வந்த கலித்தாழிசை. “மருப்பொடு மருப்பெதிர் பொருப்பிவை யெனப்பொரு மதக்கரி மருப்பி னிடையே நெருப்பொடு நெருப்பெதிர் சுடர்ப்பொறி தெறித்தெழ நிழற்கொடி தழற்க துவவே” - தக்கயாகப் பரணி இது எழுசீர்க் கழிநெடிலடியான் வந்த கலித்தாழிசை. கலிங்கத்துப்பரணி, தக்கயாகப் பரணி முதலிய பரணிப் பனுவல்களில் கலித்தாழிசையின் வகைகளைப் பயின்றறிக. குறிப்பு: மற்றைக் கலிப்பாக்களின் இலக்கணத்தை இரண்டாம் பாகத்தில் காண்க. 5. கலித்துறை நெடிலடி நான்கு வருவன கலித்துறை. நெடிலடி ஐஞ்சீரடி. காட்டு : “எறிந்த வேலினைக் கண்டுமே விழித்த கண்ணிமைப்பின் புறந்த ருதலிற் பிறிதிலை யாதலாற் புதல்வா! பிறந்த நாளினும் பெரிதியா னுவந்திடப் பெயர்ந்து சிறந்த வீரனாய் வருகவென் பாளொரு சினத்தாய்.” இக் கலித்துறை யடிகளில் முதற்சீரினும் ஐந்தாஞ் சீரினும் மோனை வந்துளது. கலித்துறை இவ்வாறே வரவேண்டும். “தாயோ துஞ்சாள், நோயறி யாவத் தாய்துஞ்சின் நாயோ துஞ்சா நிலவொடு பொல்லா நாய்துஞ்சின் வாயோ துஞ்சாக் காவலர் துஞ்சின் மலர் துஞ்சும் போயே தொலையென் றாளது முண்மைப் பொருளன்றே.” இது அவ்வாறே மோனை வந்த வோறோரோசையுடைய கலித்துறை. குறிப்பு: கலித்துறைகளைச் சிந்தாமணி, பெரிய புராணம் முதலிய தமிழ் நூல்களில் கண்டு பயில்க. 6. கட்டளைக் கலித்துறை எழுத்தெண்ணிப் பாடும் கலித்துறை கட்டளைக் கலித்துறை எனப்படும். எழுத்தெண்ணிப் பாடுவதால், இது இப் பெயர் பெற்றது. கட்டளைக் கலித்துறையாவது - நெடிலடி நான்காய், அவ் வடிகளின் முதற்சீர் நான்கும் வெண்டளை பொருந்தி, கடையொரு சீரும் கருவிளங்காய் கூவிளங்காய்ச் சீர்களில் ஒன்றாக, நேரசையை முதலாக உடைய அடியொன்றுக்குப் பதினாறு எழுத்தும், நிரையசையை முதலாகவுடைய அடியொன்றுக்குப் பதினே ழெழுத்தும் உடையதாய், ஏகாரத்தால் முடியும். எழுத்தெண்ணும் போது ஒற்று நீக்கி எண்ண வேண்டும். 20. நேர்நிரை முதல நெடிலடி நான்காய் முதற்சீர் நான்கு வெண்டளை பொருந்தி கடையொரு சீரும் விளங்கா யாகி, நேர்பதி னாறாய் நிரைபதி னேழாய் ஏகா ரத்தா லிறுங்கலித் துறையே. இதை நன்கு மனப்பாடம் செய்க. ஐஞ்சீருடைய நெடிலடியின் முதற்சீர் நான்கும் பெரும்பாலும் ஈரசைச் சீராகவே வரும். சிறுபான்மை தேமாங்காய் புளிமாங்காய்ச் சீர்கள் வரும். விளங்காய்ச் சீர்கள் வரப் பெறா. ஈற்றுச்சீர் மிகச் சிறுபான்மை தேமாங்கனி புளிமாங்கனியாக வரும். தளை கொள்ளும் போது, வெண்பாவிற் போல ஓரடியின் இறுதிச்சீர் அடுத்த அடியின் முதற்சீரோடு வெண்டளை பொருந்தி வரவேண்டுமென்ப தில்லை. அவ்வாறு கொள்ளின் நிரையசையை முதலாகவுடைய கட்டளைக் கலித்துறையில் காய்ச்சீர்முன் நிரை வந்து கலித்தளையாகு மென்க. காட்டு : “அள்ளிக் கொடுக்கின்ற செம்பொனு மாடையும் ஆதரவாக் கொள்ளிக்கும் பட்ட கடனுக்கு மென்னைக் குறித்ததல்லால் துள்ளித் திரிகின்ற காலத்தி லேயென் துடுக்கடக்கிப் பள்ளிக்கு வைத்தில னேதந்தை யாகிய பாதகனே.” இது நேரசையை முதலாகவுடைய கட்டளைக் கலித்துறை. ஒவ்வோரடியிலும் பதினாறெழுத்து இருத்தலை எண்ணிப் பாருங்கள். ‘கொடுக்கின்ற, கடனுக்கு, திரிகின்ற’ என்பன புளிமாங்காய்ச் சீர்கள். ‘காலத்தி, னேதந்தை’ என்பன தேமாங் காய்ச் சீர்கள். முதலடியினும் ஈற்றடியினும் ஈற்றுச்சீர் கூவிளங்காய். இடை இரண்டடி யினும் ஈற்றுச்சீர் கருவிளங்காய். முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாது வருகிறதா என்று அலகிட்டுப் பாருங்கள். முதற்சீரினும் ஈற்றுச் சீரினும் மோனை வந்துள்ளது. “வலம்புரி போற்கொடை வாணன்றென் மாறை மழைவளர் பூஞ் சிலம்புறை சூர்வந்து தீண்டின போலொளி தேம்பியிவ்வா றுலம்புனை தோளுநின் னுள்ளமும் வாடி யுருகிநின்று புலம்புவ தென்னைகொல் லோசொல்ல வேண்டும் புரவலனே.” இது நிரையசையை முதலாகவுடைய கட்டளைக் கலித்துறை. அடியொன்றுக்குப் பதினேழெழுத்து வந்திருத்தலை எண்ணியறிக. நிரையசையில் இரண்டெழுத் துள்ளதால் ஓரெழுத்து அதிகமாயிற்று. திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை முதலிய கோவை நூல்களிலும், யாப்பருங்கலக் காரிகையிலும் கட்டளைக் கலித் துறைகளைப் படித்துப் பயிலுக. 7. கலி விருத்தம் துள்ளலோசை யின்றி அளவடி நான்கு வருவன கலிவிருத்தம். பெரும்பாலும் இயற்சீரான் வரும். காட்டு : மூவர் மன்னர் முறையொடு முன்புதம் ஆவி யென்ன அருமையிற் போற்றிய நாவின் மீது நடம்பயில் நாணயத் தாவில் நற்றமிழ்த் தாயினைப் போற்றுவோம். இது துள்ளலோசை யின்றி வந்திருத்தல் காண்க. இவ்வாறு கலிவிருத்தம் பொழிப்பு மோனையுடன் வரவேண்டும். வெவ்வேறு ஓசையையுடைய கலிவிருத்தங் களைக் காவிய நூல்களிற் பயிலுக. தொடையதிகாரம் பார்க்க. பயிற்சி 1. கலிப்பாவில் வாராத சீர்கள் யாவை? 2. கலிப்பா எத்தனை வகை தொகை பெறும்? 3. கலிப்பாவின் உறுப்புக்கள் யாவை? 4. சுரிதகம், தாழிசை - இவற்றின் வேறு பெயர்கள் யாவை? 5. எருத்து, அடுக்கியல், விட்டிசை - இவை எவ்வெவற்றின் மறு பெயர்கள்? 6. எண் என்பது என்ன? பேரெண், சிற்றெண் யாவை? 7. கொச்சகக் கலிப்பா, கலிவிருத்தம் - ஒற்றுமை வேற்றுமை என்ன? 8. கட்டளைக் கலிப்பாவின் இலக்கணம் என்ன? 9. எழுத்தெண்ணும்போது ஒற்றுக்களின் மதிப்பென்ன? 10. கலித்தாழிசையின் இலக்கணம் என்ன? அது எந்நூற்கு உரிமையுடையது? 11. கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் யாது? 12. கட்டளைக் கலித்துறையின் ஓரடியில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தென்ன? 13. கட்டளைக் கலித்துறை, கட்டளைக் கலிப்பா ஒற்றுமை வேற்றுமை என்ன? 4. வஞ்சிப்பாவும் அதன் இனமும் வஞ்சிப்பா: 1. குறளடி வஞ்சிப்பா 2. சிந்தடி வஞ்சிப்பா என வஞ்சிப்பா இரு வகைப்படும். இனம்: 1. வஞ்சித்தாழிசை 2. வஞ்சித்துறை 3. வஞ்சிவிருத்தம் என வஞ்சிப்பா இனம் மூன்று வகைப்படும். வஞ்சிப்பா குறளடியானும் சிந்தடியானும் வந்து, தனிச்சொல்லும், சுரிதகமும் வஞ்சிப்பா பெறும். பெரும்பாலும் கனிச்சீர்களும் இருவகை வஞ்சித்தளையும் வரும். சிறுபான்மை பிற சீரும் வரும். காட்டு : 1. குறளடி வஞ்சிப்பா “பூந்தாமரைப் போதலமர தேம்புனலிடை மீன்றிரிதரும் வளவயலிடைக் களவயின் மகிழ் வினைக்கம்பலை மனைச்சிலம்பவும் மனைச்சிலம்பிய மணமுரசொலி வயற்கம்பலைக் கயலார்ப்பவும் நாளும் மகிழும் மகிழ்தூங் கூரன் புகழ்த லானப் பெருவண் மையனே” ‘நாளும்’ என்பது தனிச்சொல். இரண்டடி ஆசிரியச் சுரிதகத் தான் முடிந்தது. அலகிட்டுப் பாருங்கள். 2. சிந்தடி வஞ்சிப்பா “கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன வடிவாளெயிற் றழலுளையன வள்ளுகிரன பணையெருத்தி னிணையரிமா னணையேறித் துணையல்லாத் துறவுநெறிக் கிறைவனாகி எயினடுவ ணினிதிருந் தெல்லோர்க்கும் பயில்படுவினைப் பத்திமையிற் செப்பினோன் புணையெனத் திருவுறு திருந்தடி திசைதொழ விரிவுறு நற்கதி வீடுநனி யெளிதே.” புணையென - தனிச்சொல். இதுவும் இரண்டடி ஆசிரியச் சுரிதகத்தான் முடிந்தது. பணையெருத்தி, கருவிளங்காய். னணையெறி - புளிமாங்காய். செப்பினோன் - கூவிளம். குறிப்பு: வஞ்சியடிகளைப் பட்டினப்பாலையிற் காண்க. 3. வஞ்சித் தாழிசை குறளடி நான்கு ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வருவன வஞ்சித் தாழிசை எனப்படும். இது ஒருபொருள் மேல் மூன்றடுக்கி யல்லது தனித்து வாராது. குறளடி நான்கு தனித்து வருவன வஞ்சித்துறை. காட்டு : “பாட்டாளர் நலம்பேணாத் தேட்டாள ராய்வாழ்வார் மாட்டாத மரமென்ன நாட்டாரால் நகையுண்பர். எளியவர்க் கிரங்காமல் ஒளியராய் உறவாழ்வார் துளியிலா விசும்பென்ன வைளியாரல் இளிவுண்பர். உழவர் தம் உழைப்புண்டு விழவராய் மிகவாழ்வார் இழவராம் இவரென்னக் கிழவரால் இழிவுண்பர்.” இவை ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வந்தமையால் வஞ்சித் தாழிசை. இருசீரடி யாகையால் மோனை வரவேண்டு மென்ப தில்லை. 4. வஞ்சித்துறை “மைசிறந்தன மணிவரை கைசிறந்தன காந்தளும் பொய்சிறந்தனர் காதலர் மெய்சிறந்திலர் விளங்கிழாய்.” இது குறளடி நான்கு தனித்து வந்ததால் வஞ்சித்துறை. ஒரு பொருள் மேல் மூன்று வரின் வஞ்சித்தாழிசை யாகுமாகையால் இது தனித்தே வரும். 5. வஞ்சி விருத்தம் சிந்தடி நான்கு வஞ்சி விருத்தம். காட்டு : “அருவி யாடி யருஞ்சுனை மருவி யாடி மணிக்கதிர் இருவி யாடி யிளங்கிளி ஒருவி யோடி யுவப்பரே.” இது சிந்தடி நான்கு வந்ததால் வஞ்சி விருத்தம். முதற் சீரிலும் மூன்றாஞ் சீரிலும் மோனை வந்துள்ளமை காண்க. பயிற்சி 1. வஞ்சிப்பா எத்தனை வகைப்படும்? 2. வஞ்சிப்பாவின் உறுப்புக்கள் யாவை? 3.வஞ்சிவிருத்தத்திற்கும் வஞ்சித்துறைக்கும் உள்ளவேறுபாடு யாது? 4. வஞ்சித்துறைக்கும் வஞ்சித்தாழிசைக்கும் உள்ள வேறுபாடென்ன? நீங்கள் அறிந்த பாவும் பாவினமும் பா: 1. குறள் வெண்பா 2. நேரிசைச் சிந்தியல் வெண்பா 3. இன்னிசைச் சிந்தியல் வெண்பா 4. நேரிசை வெண்பா 5. இன்னிசை வெண்பா அளவியல் வெண்பா 6. நேரிசைப் பஃறொடை வெண்பா 7. இன்னிசைப் பஃறொடை வெண்பா 8. நேரிசைக் கலிவெண்பா 9. இன்னிசைக் கலிவெண்பா 10. நேரிசை யாசிரியப்பா 11. இணைக்குற ளாசிரியப்பா 12. நிலைமண்டில ஆசிரியப்பா 13. அடிமறிமண்டில ஆசிரியப்பா 14. கொச்சகக் கலிப்பா 15. கட்டளைக் கலிப்பா 16. கலித்தாழிசை 17. குறளடி வஞ்சிப்பா 18. சிந்தடி வஞ்சிப்பா இனம்: 19. குறள்வெண் செந்துறை 20. ஆசிரிய விருத்தம் 21. கலித்துறை 22. கட்டளைக் கலித்துறை 23. கலிவிருத்தம் 24. வஞ்சித்தாழிசை 25. வஞ்சித்துறை 26. வஞ்சிவிருத்தம் இவற்றின் இலக்கணத்தினை மற்றொரு முறை திருப்பிப் படித்து நன்கு அறிந்துகொள்ளுங்கள். தமிழ் இலக்கியங்களில் செய்யுட்களைப் படித்துப் பயிலுங்கள். பயிற்சி மிகமிக இன்றியமை யாததாகும். முற்கூறிய பாக்கள், பாவினங்களின் அடிகளில் எந்தெந்தச் சீர்களில் மோனைவரும் என்பதையும், கலித்தாழிசை, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தங்களின் வண்ண வேறுபாடுகளையும் தொடை யதிகாரத்திற் காண்க. வண்ணம் - சந்தம்.  3. புதிய செய்யுட்கள் தொல்காப்பிய உரையாசியர்களுள் ஒருவரான பேராசிரியர், கொச்சகக் கலிப்பாவின் இலக்கணங்கூறும் தொல்காப்பியச் செய்யுளியல் 149-வது சூத்திரத்தின், யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது. என்னும் அடியின் இலக்கணத்தினால் தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்களை அமைத்துள்ளார். அவ்வடியின் புறனடை யாய் அமைந்தவையே கும்மி, சிந்து முதலிய புதிய செய்யுட்கள். கலிப்பா இசைப்பாவாகையால் இப் புதிய செய்யுட்கள் யாவும் இசைப் பாடல்களே யாகும். 1. கும்மி கும்மியாவது - வெண்டளை பிழையாத ஓரெதுகையுடைய எழுசீர்க்கழிநெடிலடி இரண்டு வருதல். அடியில் முதற்சீரினும் ஐந்தாஞ்சீரினும் மோனை வரவேண்டும். இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் அல்லாத வேறு தளைகள் வருதல் கூடாது. ஈற்றுச்சீர் பெரும்பாலும் விளங்காய்ச்சீராக வரும். இது வெண்பாவின் இனமாகும். இது இயற்கும்மி, ஒயிற்கும்மி என இரண்டு வகைப்படும். முற்கூறிய இலக்கணப் படி அமைவது இயற்கும்மி எனப்படும். காட்டு : "தேவர் சபைதனில் தேவேந்திரன் வந்து தேவரைப் பார்த்தவ னேதுசொல்வான் பூவுல கையாளு மன்னர் தனிலொரு பொய்யுரை யாதாரைக் கண்டதுண்டோ" - அரிச்சந்திரக் கும்மி இது இயற்கும்மி. வெண்டளை பிழையாது வந்திருத்தலை அலகிட்டறிக. 'ஏது சொல்வான், கண்ட துண்டோ' என ஈற்றுச்சீர் கூவிளங்காய்ச் சீராய் வந்திருத்தல் காண்க. இயற்கும்மியின் நாலாஞ்சீரின் முதலசையைப் பிரித்து, மூன்றாஞ் சீருடன் கூட்டி, அந் நாலாஞ்சீரிலுள்ள மற்ற அசையைத் தனிச்சொல்லாகக் கொள்வது பெருவழக்கு. அங்ஙனங் கொள்ளுங் கால், மூன்றாஞ்சீரினும் ஈற்றுச் சீரினும் இயைபுத் தொடை அமைதல் சிறப்புடைத்து. காட்டு : "நல்லபண் டங்களைக் கண்டறி யோமொரு நாளும் வயிறார உண்டறி யோம் அல்லும் பகலும் அலைந்திடு வோம்பசி யாற வழியின்றி வாடிடு வோம்." - கவிமணி இதை, "நல்லபண் டங்களைக் கண்டறியோம் - ஒரு நாளும் வயிறார உண்டறியோம் அல்லும் பகலும் அலைந்திடுவோம் - பசி யாற வழியின்றி வாடிடுவோம்." என இவ்வாறு பிரித்துக் கூட்ட, 'வோம்' என்ற ஈற்றில் இயைபுத் தொடை அமைந்தவாறு காண்க. அரிச்சந்திரக் கும்மி, ஞானக் கும்மி, வாலைக் கும்மி முதலிய கும்மி நூற்களில் இயற்கும்மிப் பாடல்களைப் படித்துப் பயிலுக. ஒயிற் கும்மி இரண்டாவதடியின் முதல் நான்கு சீர் முடுகி வருதல் ஒயிற்கம்மி எனப்படும். அம் முடுகியலடி முதலடியின் மோனையுடையதாக வரும். அம்முடுகியலின் மோனையாக அடுத்த அரையடியின் முதற்சீர் வரும். முடுகுசீர்களில் வெண்டளை வரவேண்டும் என்பதில்லை. காட்டு : "தென்பரங் குன்றினில் மேவுங் குருபர தேசிகன் மேற்கும்மிப் பாட்டுரைக்க சிகரத்திரு மகரக்குழை திகழுற்றிடு முமைபெற்றிடு தில்லை விநாயகன் காப்பாமே" - முருகர் ஒயிற்கும்மி இதில், முடுகியலின் முதற்சீர், முதலடியின் முதற்சீரின் மோனை பெற்றுள்ளமை (தெ - சி) காண்க. காப்பாமே - தேமாங்காய்ச் சீர். இது சிறுபான்மை வரும். "மாவும் பலாவுங்கொய் யாவுமா ரஞ்சியும் வன்னப் பழம்பழுக்கும் - மகிழ்வாய்த் தின்னச் சுவையிழுக்கும் - மலர்ந்த பூவுங் கனியும் பொழியுஞ்செந் தேனங்கு போவா ரடிவழுக்கும்." இஃதொருவகை ஒயிற்கும்மி. தனிச்சீரொழிந்தவை வெண்டளை பிழையாமல் வந்திருத்தலை அறிக. 'தின்ன' என்பது, 'வன்ன' என்பதன் எதுகை எடுப்பு. ஓரடிக்கும்மி இனி கும்மியின் இலக்கணம் அமையப்பெற்ற எழுசீர்க் கழிநெடிலடி ஒன்றே பொருள் முற்றிவரின், அஃது ஓரடிக்கும்மி எனப்படும். காட்டு : "ஆளுடன் ஆளு முகையாம லேநீங்கள் ஆளுக் கொருமுழந் தள்ளிநில்லும். வக்காவும் கொக்கும் வருகுது பார்நல்ல வங்கார சாமி குளந்தேடி." இவை ஒற்றைக் கும்மியடிகள். முதற்சீரினும் ஐந்தாஞ் சீரினும் மோனை யமைந்துள்ளது. "பாட்டுக் குகந்த படியிரு கையையும் ஆட்டியொய் யாரமாய் ஆடிடுவோம்." இதில் முதற்சீரினும் ஐந்தாஞ்சீரினும் எதுகைத் தொடை அமைந்துள்ளது. சிறுபான்மை இவ்வாறும் வரும். பயிற்சி 1. கும்மியின் இலக்கணம் யாது? 2. கும்மியின் ஓரடியில் எந்தெந்தச் சீர்களில் மோனை வரும்? 3.ஓரடியில் தனிச்சொல் அமைப்பதெப்படி? அப்போது அவ்வடியின் சிறப்பென்ன? 4. கும்மி எத்தனை வகைப்படும்? 5. ஓரடிக் கும்மி என்பது யாது? 2. சிந்து ஓரெதுகை பெற்ற இரண்டடிகள் அளவொத்து வருதல் சிந்து எனப்படும். இரண்டேயன்றி நான்கடிகள் ஓரெதுகையாய் வருதலும் உண்டு. ஓரடியின் மோனைத்தொடை எடுப்பின் முன்னும் பின்னும் உள்ள அரையடி இங்கு அடி எனவே வழங்கப்பெறும். காட்டு : "பூவும் வேண்டாமே - பழமும் பொரியும் வேண்டாமே மேவு முள்ளன்பே - தேவி விரும்பும் நல்லமுதாம்." - கவிமணி இச் சிந்தில், "பூவும் வேண்டாமே - குறளடி பொரியும் வேண்டாமே - குறளடி பழமும் - தனிச்சொல்." இது குறளடி முதல் எல்லா அடியானும் வரும். தளை வரையறை இல்லை. மோனைத்தொடை எடுப்பின் முன்னும் பின்னும் உள்ள அடிகள் ஒத்து வருதல் - சமனிலைச் சிந்து எனவும், ஒவ்வாது வருதல் - வியனிலைச் சிந்து எனவும் பெயர் பெறும். 'பூவும் வேண்டாமே, பொரியும் வேண்டாமே' என்னும் இரண்டும் குறளடியாக வந்ததால் இது சமனிலைச் சிந்து. "பத்தி யினாலே - இந்தப் பாரினி லெய்திடு மேன்மைகள் கேளடி." இது முதலடி குறளடியாகவும், அடுத்த அடி அளவடியாகவும் வந்ததால் இது வியனிலைச் சிந்து. முதலடியின் ஈற்றில் தனிச்சொல் பெற்றும் பெறாதும் வரும். மேல் எடுத்துக் காட்டிய சிந்துகள் தனிச்சொற் பெற்று வந்துள்ளமை காண்க. சமனிலைச் சிந்து 1. குறளடி இரண்டு வருதல் - இரு சீரிரட்டை 2. சிந்தடி யிரண்டு வருதல் - முச்சீரிரட்டை 3. அளவடி யிரண்டு வருதல் - நாற்சீரிரட்டை 4. நெடிலடி யிரண்டு வருதல் - ஐஞ்சீரிரட்டை 5. கழிநெடிலடி யிரண்டு வருதல் - அறுசீரிரட்டை எழுசீரிரட்டை, எண்சீரிரட்டை என, அவ்வச் சீர்த் தொகைப் பெயர் பெறும். குறிப்பு: குறளடி என்றது ஓரடியின் மோனைத் தொடை எடுப்பின் முன்னும் பின்னும் உள்ள, அதாவது தனிச் சொல்லின் முன்னும் பின்னும் உள்ள, அரை அடியை என்பதை நினைவில் வையுங்கள். வியனிலைச் சிந்து 1. குறளடியும் சிந்தடியும் வருதல் - இருமுச் சீரிரட்டை 2. குறளடியும் அளவடியும் வருதல் - இருநாற் சீரிரட்டை 3. சிந்தடியும் அளவடியும் வருதல் - முந்நாற் சீரிரட்டை 4. சிந்தடியும் குறளடியும் வருதல் - முவ்விரு சீரிரட்டை 5. அளவடியும் குறளடியும் வருதல் - நாலிரு சீரிரட்டை 6. அளவடியும் சிந்தடியும் வருதல் - நாமுச் சீரிரட்டை எனப் பெயர் பெறும். இவ்வாறே பிறவும் பெயர் பெறும். இவை ஒவ்வொன்றும் விருத்தம் முதலிய பாவினங்கள் போல வெவ்வேறு ஓசையுடையதாக வரும் சிந்து இசைப்பாடல் ஆகும். காட்டு : சமனிலைச் சிந்து ஆதி பகவனையே - பசுவே அன்பாய் நினைப்பாயேல் சோதி பரகதிதான் - பசுவே சொந்தம தாகாதோ. - இடைக் காட்டுச் சித்தர் நஞ்சுண்ண வேண்டாமே - அகப்பேய் நாயகன் தாள்பெறவே நெஞ்சு மலையாதே - அகப்பேய் நீயொன்று சொல்லாதே. - அகப்பேய்ச் சித்தர் சின்னஞ் சிறுகிளியே - கண்ணம்மா செல்வக் களஞ்சியமே என்னைக் கலிதீர்த்தே - புவியில் ஏற்றம் புரியவந்தாய். - பாரதியார் இவை இருசீரிரட்டை: தனிச்சொற் பெற்று வந்தன. "ஆடுமயி லேநட மாடுமயிலே - எங்கள் ஆதியணி சேடனைக்கொண் டாடுமயிலே கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே - என்றும் குறையாமல் போனநெறி கூடுமயிலே." - இடைக்காட்டுச் சித்தர் "எல்லை யறியாப்பெருங் கடலே - நீதான் இரவும் உறங்காயோ கடலே அல்லும் பகலுமலை கடலே - உனக் கலுப்பு மிலையோ கருங் கடலே." - கவிமணி "ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா - ஒரு குழந்தையை வையாதே பாப்பா." - பாரதியார் "ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக் குண்மை தெரிந்தது சொல்வேன் சீருக்கெல் லாமுத லாகும் - ஒரு தெய்வந் துணை செய்ய வேண்டும்." - பாரதியார் இவை வெவ்வே றோசையான் வந்த முச்சீரிரட்டை இடையிரண்டு சிந்தும் ஓரிசை. "முருகு சந்தனக் குழம்பு பூசுவார் - விரகத்தீயை மூட்டி மூட்டி விசிறி வீசுவார் கருகு தேயுடல் உருகு தேயென்பார் - விரிதற்பூவும் கரியு தேமுத்தம் பொரியு தேயென்பார்." - குற்றாலக் குறவஞ்சி "எல்லோரும் ஒன்றென்னும் காலம்வந்ததே - பொய்யும் ஏமாற்றுந் தொலைகின்ற காலம் வந்ததே - இனி நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே." - பாரதியார் "நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே நச்சுப்பல்லை வைத்திருக்கும் நல்ல பாம்பே பாதலத்தில் குடிபுகும் பைகொள் பாம்பே பாடிப்பாடி நின்றுவிளை யாடும் பாம்பே." -பாம்பாட்டிச் சித்தர் இவை நாற்சீரிரட்டை. முதற் சிந்து வேறோசை; இரண்டாவது நாற் சீரிரட்டை ஈற்றில் 'இனி' என்னும் தனிச்சீர் பெற்றது. மூன்றாவது தனிச்சீர் பெறவில்லை. "இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு சுழியெறியுங் கொண்டையாள் - குழை ஏறி யாடிநங்கை சூறை யாடும்விழிக் கெண்டையாள் திருந்து பூமுருக்கி னரும்பு போலிருக்கு மிதழினாள் - வரிச் சிலையைப் போல்வளைந்து பிறையைப் போலிருக்கு நுதலினாள்." - குற்றாலக் குறவஞ்சி "உலகு தொடங்கிய நாள்முத லாகநஞ் சாதியில் - புகழ் ஓங்கிநின் றாரித் தருமனைப் போலெவர் மாமனே இலகு புகழ்மனு வாதி முதுவர்க்கும் மாமனே - பொருள் ஏற்றமு மாட்சியு மிப்படி யுண்டுகொல் மாமனே." - பாரதியார் இவை ஐஞ்சீரிரட்டை; வெவ்வே றோசையான் வந்தன. "ஆதிக்கு முன்ன மநாதியு மென்னடி சிங்கி - அது அந்தக் கருக்குழி முந்த விருளறை சிங்கா." ஐஞ்சீரிரட்டை; தனித்து வந்தது. "முப்பொரு ளென்றுநீ முன்சொன்ன தாரடி சிங்கி - அது அப்பனு மாயு மநாதையு மாமடா சிங்கா." இஃது ஐஞ்சீரிரட்டை; எதுகைத் தொடையான் வந்தது. "ஆசை கொண்டு பாரில் வீழ்ந்தாள் நேச மாமென்பார் - விளை யாடாள் பாடாள் வாடா மாலை சூடாள் காணென்பார் பேசொ ணாதோ மோச மென்ன மோச மோவென்பார் - இது பேயோ வென்பார் பித்தோ வென்பார் மாய மோவென்பார்." - குற்றாலக் குறவஞ்சி இஃது அறுசீரிரட்டை. ஒவ்வோரரையடியும் முதற் சீரினும் ஐந்தாஞ் சீரினும் மோனைக்குப் பதில் எதுகை (ஆசை - நேச) பெற்றுள்ளது. வியனிலைச் சிந்து "ஓமெனப் பெரியோர்கள் - என்றும் ஒதுவ தாய்வினை மோதுவதாய் தீமைகள் மாய்ப் பதுவாய் - துயர் தீர்ப்பது வாய்நலம் வாய்ப்பதுவாய்." - பாரதியார் இஃது இருமுச்சீரிரட்டை. "பிள்ளைப் பிராயத்திலே - அவள் பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டே னங்கு பள்ளிப் படிப்பினிலே - மதி பற்றிடவில்லை யெனினுந் தனிப்பட." - பாரதியார் இஃது இருநாற்சீரிரட்டை. "தின்னப் பழங்கொண்டு வருவான் - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான் என்னப்ப னென்னைய னென்றால் - அதை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்." - பாரதியார் இஃது முந்நாற்சீரிரட்டை. "முன்னை யிலங்கை யரக்கர் அழிய முடித்தவில் யாருடைவில் - எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவிநல் ஆரிய ராணிகைவில்." - பாரதியார் இஃது நாலிருசீரிரட்டை; இரட்டையின் ஈற்றில் தனிச் சொற் பெற்றது. "ஆட்டுக் கூட்டங்களை அண்டும் புலிகளை ஓட்டியே யூதுகுழல் - கோனே ஓட்டியே யூதுகுழல்." - இடைக்காட்டுச் சித்தர் இது பின்னடி மடக்கி வந்த நாலிருசீரிரட்டை. பின்னிருசீர் எதுகைத் தொடை யான் வந்தது. "அத்தின புரமுண்டாம் - இவ் வவனியி லேயதற் கிணையிலையாம் பத்தியல் வீதிகளாம் - வெள்ளைப் பனிவரை போற்பல மாளிகையாம் முத்தொளிர் மாடங்களாம் - எங்கும் மெய்த்தளி சூழ்மலர்ச் சோலைகளாம் நத்தியல் வாவிகளாம் - அங்கு நாடு மிரதிநிகர் தேவிகளாம்." - பாரதியார் இது நாலடியான் வந்த இருமுச்சீரிரட்டை. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் சித்தர் பாடல். குறவஞ்சி, பாரதியார் பாடல் முதலியவற்றில் படித்துப் பயிலுக. இன்னும், 1. காவடிச் சிந்து 4. வழிநடைச் சிந்து 2. தங்கச் சிந்து 5. ஆனந்தக் களிப்பு 3. நொண்டிச் சிந்து 6. தெம்பாங்கு முதலியனவெல்லாம் இவ் விலக்கணத்தால் அமைந்த சிந்துகளேயாம். நம் முன்னோர்கள், அவற்றையெல்லாம் நன்கு பாடிப் படித்துக் கருத்துணர்வோடு கவித்திறனும் பெற்று வந்தனர். அவற்றை யெல்லாம் திரட்டித் திருத்தமாக வெளியிட்டுத் தமிழை வளர்ப்பது தமிழ் அறிஞர்கள் கடமையாகும். நாடோடிப் பாடல்கள் என்பனவும் சிந்துகளேயாகும். தற்கால இளங்கவிஞர்கள் அவற்றை யெல்லாம் கற்றுக் கவிபாடிப் பழகுதல் வேண்டும். அவற்றுள் ஒரு சில வருமாறு : 1. காவடிச் சிந்து "தெள்ளுதமி ழுக்குதவு சீலன் - துதி செப்பண்ணா மலைக்குமநு கூலன் - வளர் செழியர் புகழ்விளைத்த கழுகு மலைவளத்தைத் தேனே - சொல்லு - வேனே" - அண்ணாமலை ரெட்டியார் இது முச்சீரிரட்டைக்குப் பின், முடுகும், தனிச்சீர் எடுப்பும் உடையன. 'சீலன் - கூலன், தேனே - வேனே'என இயைபுத்தொடை நான்கு அமைந்துள்ளமை காண்க. அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்தினைப் படித்துக் காவடிச் சிந்தின் இலக்கணத்தை அறிக. 2. தங்கச் சிந்து "மெஞ்ஞானத் தங்கம் மேலான தங்கம் அஞ்ஞானத் தங்கமெல்லாம் - என் தங்கமே ஆகாத தங்கமடி." இது நாலிருசீரிரட்டை எடுப்பு. எதுகைத் தொடையால் அமைந்தது. 'என் தங்கமே' என்பது தனிச்சொல். "செங்கரும்பை வாங்கித் திருக்கையிலே தாங்கி அங்கசவே ளோட அவன்செயலைப் பாட மங்கையர்கள் கூடி மணாளரு டனாடித் தெங்கிளநீ ருண்பாரடி - என் தங்கமே தெருவில் திரிவாரடி." இது மூன்றடி நாலிருசீரிரட்டை எடுப்பு; ஓரெதுகையான் அமைந்தது. 3. நொண்டிச் சிந்து "மாதவர் குலத்துதித்த - நல் மாட்டிடையர் ஆய்ச்சிசேதி கேட்டிடுவீரே ஆதவன் மரபினர்கள் - நன்கு அரசு புரியுமுயர் புரிசைகளார் காவிரிப்பூம் பட்டினமாம் - அதில் கனத்த வணிகர்செல்வ இனத்துதித்த மேவியமா சாத்துவனென்பார் - பெற்று மேவளர்த்த மைந்தனென்பேர் கோவல னென்பார்." - கோவல நாடகம் இஃது இருமுச்சீரிரட்டை, இவ்வாறு எதுகைத் தொடையாய், முச்சீர்பொழிப் பெதுகையாய்த் தொடர்ந்து வரும். முச்சீர்பொழிப் பெதுகையின்றியும் வரலாம். 4. வழிநடைச் சிந்து "கோபுர மீதுபுறாச்சோடி - நம்மைக் கூப்புடுதே வாவெனக் குமரனைக்கொண் டாடி நூபுர வோதையவிந் தோடி - கதிர் நூலென விடந்தொறு நுடங்கிடை நீ வாடி." - வெள்ளக்கோவில் வழிநடைச் சிந்து இது முந்நாற்சீரிரட்டை. ஒருவன், ஒருத்திக்கு வழியிலுள்ள காட்சிகளைக் கூறிக்கொண்டு நடப்பது போல் பாடுவது. 5. ஆனந்தக் களிப்பு "நீர்மேல் குமிழியிக் காயம் - இது நில்லாது போய்விடும் நீயறி யாமம் பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும் பற்றா திருந்திடப்பண்ணு முபாயம்." - கடுவெளிச் சித்தர் இது முந்நாற்சீரிரட்டை. 6. தெம்பாங்கு "வாழையடி உன்கூந்தல் வயிரமடி பற்காவி ஏழையடி நானுனக்கு இரங்கலையோ உன் மனது நன்னான நானா நனநனனா தன்னான தானா தனனதான தானா ." - இன்பரசத் தெம்பாங்கு இது இருசீரிரட்டை. எதுகைத் தொடையான் வந்தது. 'நன்னான' என்பது தெம்பாங்கு எடுப்பு. இஃதின்றியும் வரும். "சாரட்டு வண்டிக்காரா சலங்கைபோட்ட மாட்டுக்காரா மாட்டை யடிக்காதடா வருகிறானான் கூண்டுக்குள்ளே." இது முதலடியின் ஈற்றுச்சீர், மடக்காக, இரண்டாவதடி வந்தது. எதுகைத் தொடையான் வருவதே சிறப்பு. வளையல் சிந்து, சேவற்பாட்டு, புறாப் பாட்டு, குள்ளத் தாராச் சிந்து, கொலைச் சிந்து, ஏற்றப்பாட்டு, ஏசல், தாலாட்டு, ஒப்பாரி, உடுக்கைப் பாட்டு, கிளிக் கண்ணி, எக்காலக் கண்ணி, பலசரக்கு ஏலப்பாட்டு, லாவணி முதலியன வெல்லாம் சிந்து வகையே யாகும். இவற்றைத் தொடையதிகாரத்தில் காண்க. குறிப்பு: ஒரு சிந்துப்பாட்டில் வரும் ஒவ்வொரு சிந்தும் கண்ணி எனப்படும். பயிற்சி 1. சிந்தின் இலக்கணம் என்ன? 2. சிந்து எத்தனை வகைப்படும்? 3. சமனிலை, வியனிலை - பொருளென்ன? 4. இருசீர் இரட்டை என்பது யாது? 3. வண்ணம் ஓரடியின் ஒரு சீரின் ஓரசை என்ன எழுத்தாக வருகிறதோ, அவ்வாறே, அடுத்த அடியின் அதே சீரின் அவ்வசை அந்த எழுத்தாகவே வருவது - வண்ணம் எனப்படும். வண்ணம் - சந்தம். அதாவது ஓரடியின் முதற்சீரின் முதலசை, குறில் நெடில், வலி, மெலி, இடை இவற்றில் ஒன்றாக வரின், அடுத்த அடியின் முதற்சீரின் முதலசையும் அவ்வெழுத்தே வருதல். இவ்வாறே மற்றச் சீர்களும் அசைகளும் வருதல். முதலடியும் மூன்றாவதடியும் ஒரு மோனையாக வரவேண்டும். பல அடிகள் வருதலும் உண்டு. காட்டு : "முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முக்கட் பக வற்குச் சுருதியின் - முடிவாகி." - அருணகிரியார் திருப்புகழ் இதில், மூன்றடியினும் முதற்சீரில் முதலெழுத்துக் குறில், இரண்டாவது வல் லெழுத்து, மூன்றாவது குறில், நான்காவது வலி, ஐந்தாவது குறிலிணை ஆக வந் திருத்தல் காண்க. இரண்டாஞ் சீர்களில் இரு குற்றொற்றுக்கள். ஒற்று வல்லொற்று. மூன்றாஞ் சீர்களில் இரு குறிலிணைகள். தை, றை, கை - என்னும் ஐகாரங்கள் ஐகாரக்குறுக்கம், வலி, மெலி என்பன ஒற்றுக்கள். உயிர்மெய்யில், வல்லின உயிர்மெய், மெல்லின உயிர்மெய் என்பதில்லை. "மன்றலங் கொந்துமிசை தந்தனந் தந்தவென வண்டினங் கண்டு தொடர்- குழல்மாதர் ." - திருப்புகழ் குறிலும் குறிலிணையும் மெல்லினமெய் பெற்று வந்தன. "மருவே செறித்த குழலார் மயக்கின் மதனா காமத்தின் - விரகாலே." - திருப்புகழ் மூன்றடியினும் முதற்சீரின் முதல் குறிலிணை; அடுத்தது நெடில். இரண்டாஞ் சீரின் முதல் குறிலிணை; அடுத்தது வல்லொற்று; இறுதி குறில். அருணகிரிநாதர் திருப்புகழைப் படித்து வண்ணங்களின் வகைகளை அறிந்து கொள்க. விளக்கம் - 'தொடையதிகாரம்' பார்க்க. 4. பண்ணத்தி அரிச்சந்திர நாடகம், மார்க்கண்ட நாடகம் முதலிய நாடக நூல்கள், இசைப் பாடலும் உரைநடையும் ஒன்றன் பின் ஒன்று தொடர்ந்து வருவதாகும். அவற்றுள் இசைப் பாடலே முதன்மை யுடையதாகும். கீர்த்தனை என்னும் இசைப்பாடல்கள் போன்றனவே அவ்விசைப்பாடல்கள். தொல்காப்பியச் செய்யுளியலில் (180) கூறப்படும் பண்ணத்தி என்பது இத்தகைய உரைநடை கலந்த இசைப் பாடலைக் குறிப்பதேயாகும். பண் + அத்து + இ = பண்ணத்தி. பண் - இசை; அத்து - சாரியை; இ - பெயர்விகுதி. பண்ணத்தி - பண்ணையுடைய பாடல் என்பது பொருள். எனவே பண்ணத்தி என்பது, கீர்த்தனை என்னும் இசைப் பாடலைக் குறிப்பதேயாகும். பழந்தமிழ்ச் செல்வமாகிய அதனைப் போற்றுவது தமிழ்மக்கள் கடமையாகும். அது, பல்லவி, பல்லவி எடுப்பு, கண்ணி என்னும் மூன்று உறுப்புக்களை யுடையது. பல்லவம் - தளிர். இது தமிழ்ச் சொல், பல்லவி- தளிர்த்தல். பாட்டின் தொடக்கமாதலால் இது இப்பெயர் பெற்றது. பல்லவி எடுப்பு - தளிர் முதிர்ந்து அரும்பி மலர்தல் போல. இசை முதிர்ந்து இன்பந் தோன்றி மிகுதலினால் இது இப்பெயர் பெற்றது. கண்ணி - அம்மலரால் தொடுக்கப்பட்ட மாலை போல, இசைத் தொகுதியால் பொலிவுறுதலின் இப்பெயர் பெற்றது. கண்ணி - மாலை, கண்ணி ஒன்றுக்கு மேற்படின் கண்ணிகள் எனப் பெயர் பெறும். பல்லவியாவது - ஓரடியின் தனிச்சொல்லுக்குப்பின், அடிமடக்காய் ஓரடி வரும். அல்லது அவ்வடி, மோனை எதுகைத் தொடையமைய வரும். தனிச்சொல் பெறாது வருதலும் உண்டு. பல்லவி யெடுப்பானது - பல்லவியின் எதுகையுடையதாய் வரும். பல்லவியைவிட மிகுதியான சீர்கள் வரும். இஃதும் இரண்டடி மோனை அல்லது எதுகைத் தொடையமைய வரும். பல்லவி, பல்லவி எடுப்பு இரண்டும் இயைபுத் தொடையமைய வருதல் சிறப்பு. கண்ணியாவது - இருசீரிரட்டை. முச்சீரிரட்டை முதலிய அடிகள் இரண்டு ஓரெதுகையாய் வரும். கண்ணியில் கட்டாயம் இயைபுத் தொடை வரவேண்டும். பல்லவி முதலிய மூன்றினும் முடுகியலும் வரும். பல்லவி எடுப்பு இல்லாமல், பல்லவியும் கண்ணிகளும் மட்டும் வருதலும் உண்டு. பண்ணத்தி - தாளமும் அராகமும் பொருந்த வரவேண்டும். அராகம் - இசை. அது முதலெழுத்தை இழந்து ராகம் எனவும், அகர மிருந்த இடத்தில் இகரம் சேர்ந்து இராகம் எனவும் வழங்கப் படுகிறது. காட்டு : பல்லவி இதுநல்ல தருணம் - அருள்செய்ய இதுநல்ல தருணம் பல்லவி எடுப்பு பொதுநல்ல நடம்வல்ல புண்ணிய ரேகேளும் பொய்யெதுஞ் சொல்கிலேன் மெய்யாக வேநாளும் - (இது) கண்ணி மதித்தமை யாதமத வழக்கெலாம் சாய்ந்தது வருணாச் சிரமமென்னும் மயக்கமும் மாய்ந்தது கொதித்த வுலகாசாரக் குதிப்பெல்லா மொழிந்தது கொலையுங் களவுமற்றைப் புலையு மழிந்தன - (இது) - இராமலிங்கர் இப் பண்ணத்தியில், பல்லவி அடிமடக்காகவும் பல்லவி யெடுப்பு பல்லவியின் எதுகையாகவும், பல்லவி முதலிய மூன்றும் இயைபுத்தொடை பொருந்தவும் வந் துள்ளமை காண்க. பல்லவி வருவா ரழைத்துவாடி - வடலூர் வடதிசைக்கே வந்தால் மகிழ்வோங் கூடி பல்லவி எடுப்பு திருவார்பொன் னம்பலத்தே செழிக்குங்குஞ் சிதபாதர் சிவசிதம் பரபோதர் தெய்வச்ச பாநாதர் - (வரு) - இராமலிங்கர் இப் பல்லவி மோனைத் தொடையால் அமைந்தது. பல்லவி அய்ய னேநடம் ஆடிய பொற்பாதா ஆனந்தக் கைலாயனே பல்லவி எடுப்பு துய்ய னேதிருச் சபைதனில் தாண்டவம் தோகுசெம்தரி தாகுதித்திமி திமிர்தமென்றொரு பாதந்தூக்கியே - (அய்) - முத்துத் தாண்டவர் இது பல்லவி எடுப்பு இரண்டாவதடி முடுகியலாக வந்தது. பல்லவி மன்று ளாடியவா - ஈசர் மன்று ளாடியவா பல்லவி எடுப்பு அன்று வெள்ளி யம்பலத்தில் தொண்டர்கள்துயர மகற்றிட- (மன்று) கண்ணிகள் கன்று மானைக் கரத்தில் தரித்தவா கங்கையோடு சடையை விரித்தவா பண்டு முப்புரந் தன்னை யெரித்தவா பதஞ்சலி முனிவர்கள் தொழவே ததிங்கணத் தைத்தோ மெனவே- (மன்று) வாடிய நாரைக்கு முத்தியைத் தந்தவா வாதவூ ரடிகளை யாளாக்க வந்தவா பாடிய பாஸ்கரன் பாடற் குகந்தவா பண்ணவர் முனிவர்க ளாடக் கண்ணனயன் தாளம் போட - (மன்று) - பாஸ்கரதாசன் இது பல்லவி - அடிமடக்காகவும், பல்லவியெடுப்பு - பல்லவியின் எதுகை பெற்று, எதுகைத் தொடையாக முடுகிய லாகவும், கண்ணிகள் நான்காவதடி முக்கியலாகவும் வந்துள்ளது. கண்ணிகளில் மோனை எதுகை இயைபுத் தொடைகள் நன்கு அமைந்துள்ளமை அறிக. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் அரிச்சந்திர நாடகம், இராம நாடகம், கோவலன் வள்ளி முதலிய வரலாற்று நாடகங்கள், பாஸ்கரதாசன் கீர்த்தனை, பூமிபாலகதாஸ் கீர்த்தனை, நந்தன் கீர்த்தனை, முத்துத் தாண்டவர் கீர்த்தனை முதலியவற்றில் படித்தறிக. இசைப்பாடல்களின் முழு இலக்கணஅமைதியையும் தொடை யதிகாரத்திற் காண்க. இன்று பயிலும் புதிய செய்யுட்களனைத்தின் இலக்கணமும், தொடையதிகாரத்தில் எடுத்துக் காட்டுடன் கூறப் பட்டுள்ளது. பயிற்சி 1. பண்ணத்தியின் இலக்கணம் என்ன? 2. பல்லவி, பல்லவி எடுப்பு, கண்ணி - பொருளென்ன? 3. இசைப்பாடல் அல்லது பண்ணத்தி எவ்வாறு வரும்?  4. கவியரங்கம் கவியரங்கம் என்பது - பெரும்புலவர்கள் முன்னிலையில் ஒருவர் தாம் பாடிய கவிகளைப் படித்துப் பொருள் கூறி, அப் புலவர்கள் கூறும் குற்றங் குறைகளைத் திருத்தியமைத்துக் கொள்ளுதல் எனப்படும். இங்கு கவியரங்கம் - கவியரங்கேற்றுதல். இங்கு, வாரஇதழ்கள், மாதஇதழ்கள், தனிக் கவிநூல்கள், பொங்கல் மலர்கள், ஆண்டு மலர்கள், வானொலி முதலியவற்றில் வெளிவந்த தற்காலக் கவிஞர்கள் கவிகள் சில அரங்கேற்றப் பட்டுள்ளன. ஏறக்குறைய எல்லா வகைப் பாக்களும் இடம் பெற்றுள்ளன. எனவே, இத்தலைப்பு இளம்புலவர்களுக்குப் பழம் புலவர்களின் தமிழ்த் தொண்டினை நினைப்பூட்டி, பழந் தமிழ்ச் சங்கத்தை அகக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, தமிழுணர்ச்சியை உண்டாக்கி, தமிழ்ச்செய்யுள் இலக்கணமான சீர் வரையறை, தளை வரையறை, அடி வரையறை, மோனை எதுகைத் தொடை யமைப்பு, பாவகை, செய்யுளோசை முதலியவற்றைத் தெள்ளத் தெளியத் தெளிவித்து, சிறந்த யாப்பிலக்கண அறிவை உண்டாக்கும் என்பது திண்ணம். யாப்பின் அடிப்படையான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் செய்யுள் உறுப்புக்கள் ஆறனையும் மோனை எதுகைத் தொடைகளின் சிறப்பினையும், அவை வரும் இடங்களையும் நன்கு தெரிந்து கொண்டீர்கள். அவ்வுறுப்புக்களால் ஆக்கப்படும் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, குறள்வெண் செந்துறை, நேரிசையாசிரியப்பா, இணைக் குறளாசிரியப்பா, - நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறிமண்டில ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கொச்சகக் கலிப்பா, கட்டளைக் கலிப்பா, கலித்தாழிசை, கலித்துறை, கட்டளைக் கலித்துறை, கலி விருத்தம், வஞ்சிப்பா, வஞ்சித் தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம், கும்மி, சிந்து முதலிய செய்யுட்களின் இலக்கணங்களையும் ஒருவாறு அறிந்து கொண்டீர்கள். அச் செய்யுட்களின் இலக்கணத்தை இன்னொரு முறை திருப்பிப் படியுங்கள். நீங்கள் பாடியுள்ள கவிகள் அவ்விலக்கணப் படி அமைந்துள்ளனவா என்று பாருங்கள். இங்கு எடுத்துக்காட்டி விளக்கப்படும், யாப்பிலக்கணப்படி அமையப் பெறாத கவிகளின் குறைபாடுகளை நன்கு கவனித்துத் திருத்தம் பெறுங்கள். கவி பாடும் பழக்கம் இல்லாதவர்கள் எந்தெந்தக் கவிதைகள் எப்படி யெப்படி அமையவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு நூலுக்கு உரை எழுதுவோர் தமக்கு முன்னர் அந்நூலுக்கு எழுதப்பட்ட உரையை எடுத்துக்காட்டி, அதன் பிழைபாட்டை விளக்கிச் செல்லுதலைத் தொல்காப்பியம், திருக்குறள் முதலிய பழந்தமிழ் நூல்களின் பழைய உரைகளில் காணலாம். ஒருவர் கருத்தை - கொள்கையை - மறுத்து நூல் செய்தலைப் பழந்தமிழ் இலக்கண நூல்களில் காணலாம். எனவே, குறைபாடுகளை எடுத்துக் காட்டி விளக்கந் தருதல் பழந்தமிழ்ப் புலவர் மரபேயாகும். அம் முன்னோர் மரபை மேற் கொண்டதேயன்றி, இது புதியன புகுதலன்று, பழங்காலக் கவியரங் கேற்றத்தை நினைவு கூர்க. மேலும், யாம் இங்கு மேற்கொண்டது யாப்புக் குறையைப் பற்றியதேயன்றிக் கருத்துக் குறையைப் பற்றிய தன்று. நடுவு நிலைமையில் நின்று, யாப்புக் குறைபாடுகளை எடுத்துக் காட்டி, அக் குறைபாடுகளைத் திருத்தியமைப்பதன் வாயிலாய், இளம் புலவர்களுக்குத் திருத்தமான யாப்பறிவையும் யாப்பிலக்கண உணர்ச்சியையும் உண்டாக்கி, தமிழ்ச் செய்யுள் மரபைச் சிதையாமல் காக்க வேண்டும் என்ற பெருநோக்குடன் இப்பணியை மேற் கொண்டதன்றி ஒருவர் முயற்சியில் குறைகாணவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் நமக்கில்லை. தமிழ்வளர்ச்சி யொன்றே நமது குறிக்கோளாகும். 1. வெண்பா வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் பாக்கள் நான்கனுள், வெண்பாப் பாடுதல் கடினம். காரணம், மற்றைப் பாக்களில் அதற்குரிய தளையல்லாத வேறு தளைகளும் வரலாம். ஆனால், வெண்பாவிலோ இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் அல்லாத வேறு தளை எதுவும் வரக்கூடாது. அதாவது தளை தட்டாமல் வெண்பாப் பாட வேண்டும். இது குறித்தே, "காசினியில் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம் பேசும் உலாவிற் பெதும்பைபுலி - ஆசு வலவர்க்கும் வண்ணம் புலியாமற் றெல்லாப் புலவர்க்கும் வெண்பாப் புலி." என்றனர் ஒரு புலவர். பிள்ளைத் தமிழில் அம்புலிப் பருவம் பாடுதலும், உலாவில் பெதும்பைப் பருவம் பாடுதலும், வண்ணக்கவி பாடுதலும் கடினம். எல்லாப் புலவர்க்கும் வெண்பாப் பாடுதல் கடினம் என்பதாகும். அம்புலி - நிலா. பெதும்பைப் பருவம் - பெண்கள் பருவம் ஏழனுள் ஒன்று. தளை தட்டாமல், மோனை எதுகைத் தொடைகள் நன்கு அமைய, செப்பலோசை பொருந்தும்படி பாடவேண்டும் வெண்பா. வெண்பா அடிகளில் முதற்சீரிலும் மூன்றாஞ் சீரிலும் மோனை வரவேண்டும். அதாவது பொழிப்பு மோனை பொருந்த வேண்டும். சிறுபான்மை ஒரூஉ மோனையும் வரலாம். புகழேந்திப் புலவர் நளவெண்பா இவ்வாறு அமைந்திருப் பதினாலேயே, 'வெண்பாவிற் புகழேந்தி' எனச் சிறப்பிக்கப் பட்டனர். காட்டு : "காமர் கயல்புரளக் காவி முகைநெகிழத் தாமரையின் செந்தேன் தளையவிழப் - பூமடந்தை தன்னாட்டம் போலும் தகைமைத்தே சாகரஞ்சூழ் நன்னாட்டின் முன்னாட்டும் நாடு." - நளவெண்பா - 12 இவ் வெண்பாவில், மோனையும் எதுகையும் வெண்டளையும், செப்பலோசையும் நன்கு அமைந்திருத்தலை அறிக. அலகிட்டுப் பாருங்கள். "உய்ந்தொழிவா ரீங்கில்லை ஊழிக்கட் டீயேபோல் முந்தமருள் ஏற்றார் முரண்முருங்கத் - தந்தமரின் ஒற்றினா லொற்றி உரவோர் குறும்பினைச் சுற்றினார் போகாமற் சூழ்ந்து." - புறப்பொருள் வெண்பாமாலை - 1 : 7 இவ் வெண்பாவும் அவ்வாறு அமைந்திருத்தலை அறிக. வெண்பாப் பாட விரும்புவோர், நளவெண்பாவை ஓசையுடன் பலமுறை படித்தல் வேண்டும். அப்போது தலையாய வெண் பாக்கள் பாடும் புலமை தானே அமையும். மற்றும், புறப்பொருள் வெண்பா மாலை, தண்டியலங்காரம், நாலடியார் போன்ற வெண்பா நூற்களையும் படிக்க வேண்டும். வெண்பாவின் இலக்கணம் அறியாதவர் வெண்பாப் பாடுதலை விட்டுவிட்டு, வேறு பாக்கள் பாடுதலே தமிழ் இலக்கியத் தொண்டாகும். "வெண்பாவைப் பாட விரும்புவோ ரீங்குநள வெண்பாவைச் சால விருப்புடனே - பண்பாகப் பன்முறையு நன்கு படித்தாற் சிறந்த வெண்பா நன்முறையிற் பாடிவிடும் நா." - புலவர் குழந்தை இவ் வெண்பாவையும் எடுத்துக் காட்டாகக் கொள்க. இவ் வெடுத்துக்காட்டு வெண்பாக்களை ஓசையுடன் நன்கு படித்தபின் கீழ் அரங்கேற்றும் வெண்பாக்களைக் கூர்ந்து பாருங்கள். அரங்கேற்றம் 1. "துருப்பிடித்த வேலைத் தூரவெறி, இங்கேவா உருப்படியாய்ப் பாட்டொன்று சொல்லு - விருப்புடனே கவியரங் கங்கூட்டிக் கன்னித் தமிழ்வளர்ப்பார் செவிக்கமுத மாயொன்று சொல்லு." இவ்வெண்பாவில், உருப்படியாய் - சொல்லு செவிக்கமுத - சொல்லு என இரண்டாவ தடியிலும் நான்காவ தடியிலும் மோனை அமையவில்லை. எதுகை அமைந்துள்ளது. நே - ஆ வே லைத் x தூ ரவெ றி நேர் நேர் x நேர் நிரை நேர் தே மா x கூ விளங்காய் என மாமுன் நேர்வந்து நேரொன்றாசிரியத் தளையானது. வெண்பாவில் ஆசிரியத்தளை வரக்கூடாது. க - த இங் கே வா x உருப் படி யாய் நேர் நேர் நேர் x நிரை நிரை நேர் தே மாங் காய் x கரு விளங் காய் க - த விருப் புட னே x கவி யரங் நிரை நிரை நேர் x நிரை நிரை கரு விளங் காய் x கரு விளம் க - த தமிழ் வளர்ப் பார் x செவிக் கமு த நிரை நிரை நேர் x நிரை நிரை நேர் கரு விளங் காய் x கரு விளங் காய் இம் மூன்றிடத்தும் காய்முன் நிரைவந்து கலித்தளை யானது. வெண்பாவில் கலித்தளை வரக்கூடாது. வெண்பாவில் இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் அன்றி, வேறு தளை வரக்கூடாது என்னும் வெண்பாவின் இலக்கணம் இங்கே புறக் கணிக்கப்பட்டது. இவ் வெண்பா, வெண்பாவுக்குரிய இலக்கணப்படி அமைய வில்லை. எனவே, இது வெண்பா வன்று, ஈற்றடி சிந்தடியாகவும், ஏனையடிகள் அளவடியாகவும், முதல் இரண்டடியின் எதுகை பெற்ற தனிச்சீரை இரண்டாவதடியின் ஈற்றில் பெற்று வரும் வேறு செய்யுளொன்று தமிழில் இன்மையின் இது ஒரு செய்யுளுமன்று. குறிப்பு: நாலடியார் போன்ற பழந்தமிழ்ப் புலவர்கள் வெண் பாக்களின் சில அடிகள் மோனையின்றிச் செந்தொடையாக அமைந்துள்ளன வெனினும், வெண்பா மாலை முதலிய பிற்காலப் புலவர்கள் வெண்பாக்களிலெல்லாம் மோனைத் தொடை நன்கு அமைந்துள்ளமையான், வெண்பா மோனை அமையாது வருதல் கூடாது. அவ் வெண்பாவை, தளை தட்டாமல் மோனைத் தொடை அமையும்படி திருத்திய திருத்தம் வருமாறு: துருப்பிடித்த வேலதனைத் தூரவெறிந் தேவந் துருப்படியாய்ப் பாட்டொன் றுரைப்பாய் - விருப்பாய்க் கவியரங்கங் கூட்டிவளர் கன்னித் தமிழர் செவியரங்க மாமென்று செப்பு. அரங்கம் - இடம். இதைப் படித்தபின் இன்னொரு முறை அரங்கேற்றிய வெண்பாவைப் படித்துப் பாருங்கள். 2. “கடைபோட்டார் நற்கொள்கை காணென்று கூறினார் நடைபோட்டு மக்கள் நழுவினார் - கடைமூடித் தலையீந்து தமிழாட்சி தருந்தீர சூரர்கள் விலைபோந்த தென்சொல்லு வேன்.” இவ் வெண்பாவில் மோனையும் எதுகையும் நன்கமைந் துள்ளன. ஆனால், 14 தளைகளில் 6 தளைகள் தட்டுகின்றன. எனவே, இதில் வெண்பாவுக்குரிய தளையும் ஓசையும் அமையவில்லை. நி - ஆ கூ றினார் x நடை போட் டு நேர் நிரை x நிரை நேர் நேர் கூ விளம் x புளி மாங் காய் நி - ஆ நழு வினார் x கடை மூ டி நிரை நிரை x நிரை நேர் நேர் கரு விளம் x புளி மாங் காய் க - த க - த கடை மூ டித் x தலை யீந் து x தமி ழாட் சி நிரை நேர் நேர் x நிரை நேர் நேர் x நிரை நேர் நேர் புளி மாங் காய் x புளி மாங் காய் x புளி மாங் காய் க - த தமி ழாட் சி x தருந் தீ ர நிரை நேர் நேர் x நிரை நேர் நேர் புளி மாங் காய் x புளி மாங் காய் க - த சூ ரர் கள் x விலை போந் த நேர் நேர் நேர் x நிரை நேர் நேர் தே மாங் காய் x புளி மாங் காய் (நி - ஆ - நிரையொன் றாசிரியத் தளை. க - த - கலித்தளை.) ஆசிரியத்தளையும் கலித்தளையும் வெண்பாவில் வருதல் கூடா. ‘புல்லாது அயற்றளை’ என்பது யாப்பருங்கலக் காரிகை - 40. ‘சூரர்கள்’ என்னும் சீரிலுள்ள ரகர வொற்றை நீக்கி, ‘சூரகள்’ எனக் கொள்ளினும், சூரகள் - நேர் நிரை - கூவிளம் ஆகி, நி - ஆ சூ ரகள் x விலை போந் த நேர் நிரை x நிரை நேர் நேர் கூ விளம் x புளி மாங் காய் என, விளமுன் நிரை வந்து நிரையொன்றாசிரியத் தளையாகும். தலையீந்து தமிழாட்சி தருந்தீர சூரர்கள். என்பது கலியடி. அலகிட்டுப் பாருங்கள். வெண்பாவில் கலியடி வரக்கூடாது. எனவே, இது வெண்பா வன்று. தலைப்பில் வெண்பா வென்றும் பதிக்கப் பட்டுள்ளது. நேரிசை வெண்பாவுக்குரிய மோனை எதுகை எல்லாம் நன்கு அமைந்திருந்தும், வெண்பாவின் இன்றியமையாத இலக் கணமான - உயிர்நாடியான - தளையமையாது - தளை தட்டி, அது வெண்பா வல்லா வெண்பாவாகி விட்டது. தளை தட்டாமலிருந்தால் அருமையான வெண்பா. ஆனால், இப்போது வெண்பாவல்லாத தாயிற்று. இதனால்தான் ‘எல்லாப் புலவர்க்கும் வெண்பாப் புலி’ என்றனர். இவ்வெண்பாவைப் படித்தபின், முன்னர்க் காட்டிய நளவெண்பாவையும், வெண்பாமாலை வெண்பாவையும் படித்துப் பாருங்கள். மறுபடியும் இவ்வெண்பாவை ஒருமுறை படித்துப் பாருங்கள். திருத்தம் வருமாறு: “கடைபோட்டு நற்கொள்கை காணென்று கூற நடைபோட்டு மக்கள் நழுவக் - கடைமூடித் தலையீந்து கண்ட தமிழாட்சி வீரர் விலைபோந்த தென்சொல்லு வேன்.” திருத்திய இவ் வெண்பாவைப் படித்தபின், அவ்வெண்பாவை ஒருமுறை படித்துப் பாருங்கள். 3. சொல்லினிலே கீரனென்றும் துணிவான மறம்புரியும் வில்லினிலே சேரனென்றும் வீறுபெற்றுப் - பல்லாண்டு வாழ்ந்துயர்ந்த தமிழ்நிலத்தார் வளங்கூறுங் குறள்மலரே ஆழ்ந்துணர்ந்த கலைமணியே நீ யாம். இவ்வெண்பாவில், மூன்றாவதடி முழுதுங் கலித்தளையான் வந்த கலியடி, முதலடியில் பின்னிரண்டு தளையுங் கலித்தளை. ஈற்றடியின் முதற்றளை கலித்தளை, 14 - ல் 6 கலித்தளை. அலகிட்டுப் பாருங்கள். காய்முன் நிரை வருவது கலித்தளை. கலைமணியே நீ - என்பது நாலசைச்சீர். வெண்பாவில் நாலசைச்சீர் வருதல் கூடாது. ‘நீயாம்’ என்பதை ஈற்றுச் சீராகக் கொள்ளின் மோனை அமையாததோடு, நீயாம் - நேர் நேர் - தேமா ஆகிறது. வெண்பாவின் ஈற்றில் தேமாச்சீர் வருதல் கூடாது; நாள், மலர், காசு, பிறப்பு என்பவைதாம் வரவேண்டும். இதைத் திருத்தி யமைத்தால், “சொல்லினிலே கீரனென்றும் தோய்ந்து மறம்புரியும் வில்லினிலே சேரனென்றும் வீறுபெற்றுப் - பல்லாண்டு வாய்ந்த தமிழர்வளம் வாய்ந்த குறள்மலரே ஆய்ந்த கலைமணிநீ யாம்.” என்றமையும். இயல்பாக அமையுங் கவியே ஓசை நயத்துடனும் பொருட் செறிவுடனும் நன்கமையும். ‘தமிழர் வளம்’ என்னும் சீரிலுள்ள ரகர வொற்றை நீக்கிக் கருவிளங்காய்ச் சீராகக் கொள்க. இதை வெண்பா வாக்குவதை விட, “சொல்லினிலே கீரனென்றும் துணிவான மறம்புரியும் வில்லினிலே சேரனென்றும் வீறுபெற்றுப் பல்லாண்டு வாழ்ந்துயர்ந்த தமிழ்நிலத்தார் வளங்கூறும் குறள்மலரே ஆழ்ந்துயர்ந்த கலைமணியே அறங்கூறப் பிறந்தனையே.” என அமைக்கின், இரு கலித்தாழிசைகள் ஆகும். ஆனால், முதலி ரண்டடிகளில் பொருள் முற்றுப் பெறாமையால் அது கலித்தாழிசை ஆகாது. நாலடியும் ஓரெதுகை பெறாமையால், அது கொச்சகக் கலிப்பாவும் அன்று. இவ்வாறு ஈற்றடியும் அளவடியாக இருக்கின், ஒரு கலிப்பாவின் நாலடித் தரவு எனக் கொள்ளலாம். ஈற்றடி சிந்தடியானதால் அவ்வாறு கொள்ளுவதற்கும் இல்லை. இது செய்யுளிலக்கணப்படி அமைந்த ஒரு செய்யுளன்று. வெண்பாவின் இலக்கணந் தெரியாமையே இவ்விடர்ப் பாட்டுக்குக் காரணமாகும். 4. “ எந்நாடும் ஈன்றிடா இன்குறளை ஈன்றுள்ள இந்நாடே இன்பமிலா தேங்குவதா - செந்தமிழர் கண்பெற்றும் பார்வையிலார் காட்சியிதைக் காணிற்றீக் கண்டானும் சிந்திடுமே கண்ணீர்.” இதில் மோனை நன்கமைந்துள்ளது. முதலடி முற்று மோனை. இரண்டாவதடி கூழை மோனை, மூன்றாவதடி மேற்கதுவாய் மோனை. ஆனால், செந்தமிழர் என்ற தனிச்சீர் முதலிரண்டடிக் கேற்ற எதுகை யன்று. ஈற்றில், கண்ணீர் - நேர் நேர். தேமா வருகிறது. இது வெண்பா விலக்கண மன்று. வெண்பாவின் ஈற்றில் தேமாச்சீர் வருதல் கூடாது. திருத்தம் வருமாறு: “எந்நாடும் ஈன்றிடா இன்குறளை ஈன்றுள்ள இந்நாடே இன்பமிலா தேங்குவதா - நந்நாடர் கண்பெற்றும் பார்வையிலார் காட்சியிதைக் காணிற்றீக் கண்பற்றுங் கண்ணீர்க் கடல்.” 2. ஆசிரிய விருத்தம் கழிநெடிலடி நான்கு கொண்டது ஆசிரிய விருத்தம். மிக எளிதில் பாடக்கூடியது ஆசிரிய விருத்தமே. எல்லாப் புலவராலும் கையாளப்படும் சிறப்புடையது. 1. “வழிந்துவரு மொலிப்பரப்பை வடித்துவைத்த - மானுடத்தை வாழ்த்தத்தா ளக்கட்டில் கிழிந்தவுடன் குரலானாய் சுவைத்தேனில் ஊற்றேவேய்ங் குழலினிலே சீராக எழுந்திருந்து இசையானாய் எண்ணெழுத்தில் எக்களிக்கும் இயற்றமிழே சிறுகுழந்தை அழுகையிலே ரீங்காரம் ஆகின்றாய் மகரந்தப் புழுதிதிரு டுங்காற்றே.” இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இவ்வாசிரிய விருத்தத்தில் முதற்சீரினும் ஐந்தாஞ்சீரினும், மோனை வரவேண்டும். முதலடியிலும் மூன்றாமடி யிலும் அவ்வாறே மோனை வந்திருக் கிறது. ஏனை இரண்டடிகளிலும் மோனை அமையவில்லை. மேலும் ஓசையும் அவ்விருத்தத்திற்கேற்றவாறு அமையவில்லை. ‘அழுகையிலே’ என்பது ‘வழிந்துவரும், கிழிந்தவுடன் எழுந்திருந்து’ என்னும் முதற்சீர்களுக் கேற்ற எதுகை யன்று. ஆசிரிய விருத்தத்தில் மோனையும் எதுகையும் நன்கு அமைய வேண்டும். குறிப்பு: மூன்றாமடியில், ‘எழுந்து, இருந்து’ என்பவை குற்றி யலுகரங்கள். ‘கு சு டு து பு று’ என்னும் வல்லின உசுரங்களில் ஒன்றை ஈற்றில் பெற்று வரும் சொல் குற்றியலுகரம் எனப்படும். எழுந்து + இருந்து + இசையானாய் - ‘எழுந்திருந் திசை யானாய்’ எனக் குற்றியலுகரம் உயிர்வரக் கெட்டுப் புணர்வதே தமிழ்ச்சொற் புணர்ச்சி முறையும், தமிழ்ச் செய்யுள் நடைமரபும் ஆகும். ‘எழுந் திருந்து’ எனக்கெட்டுப் புணர்ந்திருத்தல் காண்க. ‘எழுந்திருந்து இசையனாய்’ எனக் குற்றியலுகரம் உயிர்வரக் கெடாமல் இருப்பது தமிழ் ஒலியியல்புக்கும், தமிழ்ச் செய்யுளிலக்கண மரபுக்கும் ஒத்ததல்ல. புணருமாறு: எழுந்து + இருந்து எழுந்த்உ + இருந்து எழுந்த் + இருந்து எழுந்திருந்து - எனக் காண்க. சீர்வகையடி, கட்டளையடி என அடி இருவகைப்படும். சீர்களைக் கொண்டு இருசீர் குறளடி, முச்சீர் சிந்தடி எனப் பெயரிடுவது - சீர்வகையடி. எழுத்துக்களின் அளவைக் கொண்டு, 4 முதல் 6 எழுத்து வரை குறளடி, 7 முதல் 9 எழுத்து வரை சிந்தடி எனப் பெயரிடுவது - கட்டளையடி. ‘கட்டளையடிகளில் குற்றிய லுகரம் எழுத்தாக எண்ணப்படாது’ என்பது தொல்காப்பியம் (செய். 44). எனவே, குற்றியலுகரம் உயிர்வரக் கெடாம லிருப்பது செய்யுள் நடையேயன்று. குற்றியலுகரம் உயிர்வரக் கெடாமல் நிற்கச் செய்யுளோசையுடன் பாட்டைப் படிக்கவும் முடியாது. இசையில் குறில் நீண்டு ஒலித்தலான், இசைப்பாடல்களில், அடியின் இறுதியில் இயைபுத்தொடை நயத்துடன் குற்றுகரம் உயிர் வரக்கெடாமல் இருக்கலாம். இசைப் பாடலினும் அடியின் இடையில் குற்றுகரம் உயிர்வரக் கெட்டே புணர வேண்டும். காட்டு “ஊனுண்டு பாய்புலியும் கடுவாயும் உண்டு உறுமியெதிர்ந் தோடிவரும் பன்றிகளும் உண்டு.” - கவிமணி இவ்விசைப் பாடலில், ‘உண்டு’ என அடியின் ஈற்றில் உள்ள உகரம், ‘உறுமி’ என உயிர்வர, ‘உண்டு உறுமி’ எனக் கெடாமல் இருப்பதை அறிக. இதில், எதிர்ந்து + ஓடி - எதிர்ந்தோடி என, ‘எதிர்ந்து’ என்னும் குற்றுகரம், அடியின் இடையில் உயிர்வரக் கெட்டுப் புணர்ந் திருத்தல் காண்க. “இருந்தெழுந் தியன்றசைந் தியைந்த மைந்தி ருப்பரை” என்னும் முடுகிசை யுடைய அடியை, இருந்து எழுந்து இயன்று அசைந்து இயைந்து அமைந்து இருப்பரை - எனக் குற்றுகரம் உயிர்வரக் கெடாமல் எழுதினால், முடுகிசை அமையாமை அறிக. எழுந்திருந் திசையானாய். எனக் குற்றுகரத்தைக் கெடுத்துப் புணர்க்கின், ‘எழுந்திருந்’ என்னும் சீர் ஓசை குன்றுகிறது. ‘விழுந்துவரும்’ ‘கிழிந்தவுடன்’ என்ற மற்ற அடிகளின் முதற் சீர்களுடன் சேர்த்துப் படித்துப் பாருங்கள். இவ் விருத்தத்தின் அடிகளில் உள்ள ஆறு சீர்களும் மூவசைச் சீர்களாகவே உள்ளன. அதனால், இவ் விருத்தம் அகவலோசை யின்றிக் கலியோசை தட்டுகிறது. ஈற்றுச்சீர் இரண்டும் ஈரசைச் சீராக வரவேண்டும். கீழ்வரும் விருத்தத்தைப் படியுங்கள். “விளிந்துமயில் புறங்கொடுக்கும் மெல்லியலா ளொருத்தியொடு வேயும் பாகும் களிந்துவருங் கடகளிற்றுச் சுவேதவா கனன்கடகத் தோளின் மீது தெளிந்தநறுங் கத்தூரிச் சேறுபடு விசிறியினீர் சிந்துந் தோற்றம் களிந்தகிரி மிசைக்கடவுட் காளிந்தி பரந்ததெனக் கவினு மாதோ.” - வில்லிபாரதம், காண்டவதகனச் சருக்கம் - 11. இவ்வறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் போன்றதே அரங்கேற்றும் விருத்தமும். இவ்விருத்தம் போலவே தொடையும் நடையும் அமையவேண்டும் அவ் விருத்தமும். இரண்டையும் இன்னொரு முறை படித்துப் பாருங்கள். அவ் விருத்தத்தை இவ்வாறு தொடையும் நடையும் அமையும்படி திருத்தினால், “வழிந்துவரும் ஒலிப்பரப்பை வகுத்தமைத்த மானிடத்தை வாழ்த்தத் தாளங் கிழிந்தவுடன் குரலானாய் சுவைத்தேனில் தேய்ந்து குரல் கெழுமிச் சீராய் எழுந்திருந்தின் னிசையானாய் எண்ணெழுத்திலெக் களிக்கும் இயலே நற்சேய் அழுங்குரலில் ரீங்காரம் ஆகின்றாய் மகரந்தம் அவிழ்க்குங் காற்றே.” என அமையும். இன்னொருமுறை வில்லி விருத்தத்தையும் இத் திருத்தத்தையும் ஓசையுடன் படித்துப் பாருங்கள். எழுதும் போது இயல்பாக அமைவதே பொருட் பொலிவுடைய செய்யுளாகும். இத்தகைய இடர்ப்பாட்டுக்குக் காரணம் போதிய யாப்பறி வின்மையேயாகும். அக் கவிஞரின் மற்ற விருத்தங்களின் சில அடிகள் வருமாறு: ‘போங்களடி மாப்பிள்ளையைப் பார்க்காதீர் எனப்பேதை திரட்டும்பா வாடையைப்போல்’ ‘ஓணானின் முதுகைப்போல் போராடும் நெற்றாளில் மணியொதுக்கி விளையாடும்’ ‘தழைச்சிறகு வேண்டாத பறவையுண்டோ என்பாதச் சிலம்பரசி யாக்கிவிட்டாய்.’ இவையும் மோனைத் தொடையும் நடையும் அமையாத அடிகளே. அவை அமையும்படி திருத்த முயலுக. 2. இருப்பிட மின்ப மென்றும் சேறதே சொர்க்க மென்றும் வாழ்விலே கடமை யொன்றைக் கடவுளே விதித்தா ரென்றும் போதனை செய்து வந்தாய் புதுமையைக் கொன்று வந்தாய் பாசியின் நடுவே போந்து ரவிமதி முகங்கள் கண்டு நீரிலோர் முத்த மிட்டு வெட்கியே பின்னும் மறைதல் மீனாட்டு வாழ்வு என்றாய். இது இன்ன செய்யுள் என்பது விளங்கவில்லை. தொல் காப்பியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய எதினும் இதன் இலக்கணம் காணப் படவில்லை. ஈற்றடி யொழிந்த ஏனை ஐந்தடிகளும் அறுசீர்க் கழிநெடி லடிகள். ‘மீனாட்டு வாழ்வென்றாய்’ எனப் புணர்த்தெழுதின், ஈற்றடி குறளடி யாகும். அறுசீர்க்கழிநெடிலடி ஐந்து பெற்றுக் குறளடியால் முடியும் செய்யுளொன்று தமிழில் இல்லை ஆசிரியப்பாவுக்கு அளவடி, சிந்தடி, குறளடி என்பவை உரியவை. ஆனால், முதலடியும் ஈற்றடியும் அளவடியாக - நாற் சீரடியாக - வரவேண்டும். பல அடிகள் கொண்ட ஆசிரியப்பாவில் இடையிடையே ஒன்றிரண்டு ஐஞ்சீரடி வரலாம். அறுசீரடியாகிய கழிநெடிலடி நான்கு கொண்டது ஆசிரிய விருத்தம். ஆனால், இது நான்குக்கு மேல் வந்திருக்கிறது. எனவே, இது ஒரு தமிழ்ச் செய்யுளன்று. ‘எனக்குப் பிடித்த கவிகளில் இது ஒன்று’ என்கிறார் இதை எழுதிய கவிஞர்! ‘கவி’ என்னும் சொல்லுக்கு அவர் கொண்ட பொருள் என்னவோ நமக்கு விளங்கவில்லை. பொருட் பொலிவுங் கூட அவ்வளவு இருப்பதாகத் தெரியவில்லை. ‘நீரிலோர் முத்தமிட்டு வெட்கியே பின்னும் மறைதல்’ என்ற அடி மோனைத்தொடை அமையாததோடு, மற்றை அடிகள்போல ஓசையும் அமையவில்லை. உரைநடைக்குரிய எளிமையின்மையால் இவ்வடி உரைநடையுமன்று; செய்யுள் நடையுமன்று. முதலிலுள்ள நான்கடிகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இவ்வறுசீர்க் கழிநெடிலடி நான்கு கொண்டது - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இவ் விருத்தத்தில் ‘இருப்பிடம்’ என்னும் முதலடியின் முதற்சீரிலுள்ள எதுகையே ஏனை மூன்றடியின் முதற்சீரிலும் வரவேண்டும். இதில் அவ்வாறு வரவில்லை. இரண்டா மெழுத் தொன்றுதல் - எதுகை. இவ் வறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் முதற் சீரிலும் நான்காஞ் சீரிலும் மோனை வரவேண்டும். மூன்றாமடியில் மட்டும் ‘போ - பு’ என மோனை வந்திருக்கிறது. மற்றையடிகளில் மோனை வரவில்லை. ‘இருப்பிடம் இன்பம் என்றும்.’ ‘போதனை செய்து வந்தாய் புதுமையைக் கொன்று வந்தாய்,’ என்பன அல்லாத வெல்லாம் உரைநடை போலவே உள்ளன. மோனையும் எதுகையும் அமையாவிடினும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்திற்குரிய ஓசை அமைந்துள்ளது. இத்தகைய பாட்டல்லாப் பாட்டுக்களைத் தமிழ் மக்களுக்கு ஒலிபரப்பும் நிலையில் உள்ளது தமிழ்நாட்டு வானொலி நிலையம்! எதுகையே இல்லாத இவ் வடிகளை அப்படியே பொருள மைவுடன் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகத் திருத்திய மைப்பது இயலாதெனினும், இயன்ற மட்டிலும் எதுகையும் மோனையும் அமையத் திருத்தி யமைத்துள்ளோம். அது வருமாறு: “இருப்பிட மின்ப மென்றும் இனியசே றும்ப ரென்றும் விருப்பொடு கடமை யொன்றை விதித்தனர் கடவு ளென்றும் பொறுப்பொடு புலமை தந்தாய் புதுமையைக் கொண்டு வந்தாய் பருப்படு பாசி போந்து பகல்மதி முகங்கள் கண்டே.” உம்பர் - சொர்க்கம், பொருப்பு - மலை, நிலை. பருப்படு - பெரிய, மிக்க, பகல் - சூரியன். இவ் விருத்தத்தைப் படித்துவிட்டு மறுபடியும் கவிஞர் கவியைப் படியுங்கள். எது பாட்டு என்பதைக் கூர்ந்து பாருங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தை ஓசையுடன் படித்துவிட்டுத் திருத்தியமைத்துள்ள விருத்தத்தையும் அவ்வாறே படித்துப் பாருங்கள். “திருக்கிளர் முகமும் வேர்வுஞ் சிறந்தசெம் பவள வாயும் மருக்கிளர் மாலை மார்பும் மகரகுண் டலமுங்காதும் சுருக்கிய மருங்குங் கண்டால் துடியிடை மடவா ராவி இருக்கினு மிருக்கு நில்லா திறக்கினு மிறக்கு மன்றே.” - அரிச்சந்திர புராணம் 3. “தேங்கட்டும் இந்நாட்டுப் பொருளிங்கே தேறட்டும் உயர் நிலைக்கு ஓங்கட்டும் உலக நிலைக்கு ஓடட்டும் முன்னேற்றந் தேடி வாங்கட்டும் மிகதேவைப் பொருள்கள் வாழட்டும் அதனுதவி கொண்டு தாங்கட்டும் புகழ்பெரு கட்டும் ஏறட்டும் நன்றாய் வாழட்டும்.” இக் கவியின் ஒவ்வோரடியும் ஒவ்வோரோசை யுடையதாய் உள்ளது. முதலடியின் ஈற்றுச்சீரான ‘நிலைக்கு’ என்னும் குற்றுகரத் தையும், இரண்டாவதடியின் மூன்றாஞ் சீரான ‘நிலைக்கு’ என்னும் குற்றுகரத்தையும் கெடுத்து, உயர்நிலைக் கோங்கட்டும் உலகநிலைக் கோடட்டும் எனப் புணர்த் தெழுதினால், முன்னிரண்டடிகளும் ஐஞ்சீரும், பின்னிரண்டடிகளும் அறுசீரும் உடையனவாகும். முடிவும் இல்லை ஈற்றடியில் மோனை அமையவில்லை. புணரிலக்கணம், செய்யுள் வகை, இன்ன செய்யுட்கு இன்ன அடி வரவேண்டும் என்னும் யாப்பிலக்கணம் தெரியாமையே இத் தவற்றுக்குக் காரணமாகும். திருத்தம் வருமாறு. “தேங்கட்டும் இந்நாட்டுப் பொருள்கள் தேறட்டும் இங்கேயே மேன்மை ஓங்கட்டும் உலகத்தி லொன்றாய் ஓடட்டும் முன்னேற்றந் தேடி வாங்கட்டும் மிகுதேவைப் பொருள்கள் வாழட்டும் அதனுதவி கொண்டு தாங்கட்டும் புகழ்நன்கு பெருகித் தமிழ்நாடு வாழட்டுந் தானே.” 4. “ இயற்கையொளி யாய்நிற்குந் தனியாற்ற லுலகனைத்தும் இயக்கு கின்ற தனிக்கடவுள் எனவுரைத்துத் தம்வழக்கை நிலைநிறுத்தும் சமயத் தோரே மனித்தர் செயுந் தவத்தாலும் சமயநெறி வழக்காலும் நினைத்த வண்ணம் தனித்தபெரு மியற்கையது மாறிலதை யியற்கையெனச் சாற்ற லுண்டோ.” இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். ‘வழிந்து வரும்’ என்று முன் காட்டிய விருத்தம் போன்றது. இவ் விருத்தத்தில் முதற்சீரினும் ஐந்தாஞ்சீரினும் மோனை வரவேண்டும். மூன்றாமடி யொழிந்த ஏனை மூன்றடிகளிலும் மோனை அவ்வாறே அமைந் துள்ளது. மூன்றா மடியிலும், நினைத்த வண்ணம் என்பது ‘மதித்த வண்ணம்’ என்றிருக்கலாம். சேர்த்துப் படித்துப் பாருங்கள். முதலடி எதுகை அமையவில்லை. ‘தனி, மனி’ என்பவற்றிற்குச் சிறிதும் தொடர்பில்லாது, ‘இய’ என அமைத்ததன் காரணம் நமக்கு விளங்கவில்லை. ‘உயிரெதுகை’ எனின் அதுபெரும்பாலும் ஆசிரிய அடியில் வருவதன்றோ? இஃது எதுகைத் தொடையின் இன்றி யமையாமையை அறியாமையால் ஏற்பட்ட தவறே யாகும். தளையாவது, அலகிட்டுக் காணவேண்டியிருப்பதால் தெரிய வில்லை எனலாம். ‘தனி - இய’ என்பதன் வேறுபாடுமா தெரியாது போகும்? அடியெதுகையைப் பொருட் கேற்பத் திருத்துவ தென்பது அவ்வளவு எளிதன்று. ஒருவாறு பொருளமைய, இனித்தவியல் பாய்நிற்கும். என அமைக்கலாம். இனித்த - மகிழ்ச்சியைத் தரும். நல்ல, இயல்பு - இயற்கை, இயல்பாக அமைவதே சிறந்த தொடையாகும். இயற்கையொளி யாய்நிற்கும். என்னும் இடத்தில், இனித்தவியல் பாய்நிற்கும். என்பதை அமைத்துப் பாட்டைப் படித்துப் பாருங்கள். 5. “ எல்லையில்லாத் தெய்வமேநீ போவாய் போவாய் இன்றிடிலோ இவ்வுலகில் சாவாய் சாவாய் முள்நிறைந்து நீபடைத்த கொடிய காட்டை வளநாடாய்த் தொழிலாளர் மாற்றி விட்டார் கொல்லவென நீபடைத்த விலங்கை யெல்லாம் குழந்தைகளாய்த் தொழிலாளர் மாற்றி விட்டார்.” இவை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தின் மூன்றடிகள் - இவ் விருத்தம் சிறந்த ஓசை நலத்துடன் உள்ளது. ஆனால், இரண்டாவ தடியில் மோனை எதுகை இரண்டும் அமைய வில்லை. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் முதற்சீரினும் ஐந்தாஞ்சீரினும் மோனை வரவேண்டும். மற்ற இரண்டடிகளும் அவ்வாறே அமைந்துள்ளமை காண்க. இரண்டாமடியில் ‘மு - வ’ என மோனை அமையாமை அறிக. ல் - ள் எதுகையாக அமைத்துள்ளனர். ஆனால், முள் x நிறைந்து - முண்ணிறைந்து எனப் புணரும்போது எதுகை அமையாமையை நோக்கிற்றிலர். ‘தமிழ்ச் சொற்களின் புணர்ச்சி மிகக் கடினமானது. புணர்ச்சியின்றிச் சொற்களைத் தனியாக எழுதுதலே ஏற்றதும் எளியதுமாகும்’ என்னும் வெற்றுரையை நம்பியதே, இவ்விடர்ப்பாட்டுக்குக் காரண மாகும். ‘முண்ணிறைந்து’ என்பதில் உள்ள ஓசையின்பம், ‘முள் நிறைந்து’ என்பதில் இல்லாமையை ஓசையுடன் படித்தறிக. திருத்தம் வருமாறு: “எல்லையில்லாத் தெய்வமேநீ போவாய் போவாய் இன்றிடிலோ இவ்வுலகில் சாவாய் சாவாய் வல்லியகூர் முள்ளொடுநீ படைத்த காட்டை வளநாடாய்த் தொழிலாளர் மாற்றிவிட்டார் கொல்லவென நீபடைத்த விலங்கை யெல்லாம் குழந்தைகளாய்த் தொழிலாளர் மாற்றி விட்டார்.” இப்போது படித்துப் பாருங்கள். விருத்தங்களுக்கு அடி யெதுகை மிகமிக இன்றியமையாதது. வில்லி பாரதத்தில் விருத்தங் களின் அமைப்பைப் படித்துப் பயிலுங்கள். 6. “தமிழ்நாட்டின் வறுமையினா லிலங்கை சென்றான் தமிழகமும் அவனை யங்கு விரட்டிற் றாமே தங்கணவர் செல்லுங்கால் குழந்தை தன்னைத் தாலாட்டி யழுதவண்ணந் தரையில் வீழ்ந்தாள் அம்மாவைக் கதறவிட்டே இலங்கை சென்றான் அங்கேயும் இன்பமில்லை வருந்தி னானே திமிரான கழுதையெனத் தோட்டச் சீமான் திட்டியே சுழற்றினார் சவுக்கை மேலே.” இது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். ஒவ்வோர டியும் மோனையுடனும் ஓசையுடனும் அமைந்துள்ளது. ஆனால், இக் கவிஞர்க்கு எதுகை இன்னதென்பதும், அது எங்கு வரவேண்டும் என்பதும் தெரியவில்லை என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. முதலடியும் ஈற்றடியும் ஓரெதுகை. இடையடி யிரண்டும் தனித் தனியானது. பாட்டின் கருத்து மாறாமல், பொருட் பொருத்தமுற, அடியெதுகையைத் திருத்துதல் எளிதன்று. திருத்தம் வருமாறு: “தமிழ்நாட்டின் வறுமையினால் இலங்கை சென்றான் தமிழகமும் ஆங்கவனை விரட்டிற் றாமே தமிழ்வீட்டான் செல்லுங்கால் குழந்தை தன்னைத் தாலாட்டி அழுதவண்ணந் தரையில் வீழ்ந்தாள் அமிழ்தூட்டி யலறவிட்டே யிலங்கை சென்றான் அங்கேயும் இன்பமில்லை வருந்தி னானே திமிராட்டிக் கழுதையெனத் தோட்டச் சீமான் திட்டியே சுழற்றினான் சவுக்கை மேலே.” தமிழ்வீட்டான் - இன்பந்தரும் வீட்டுக்காரன், அமிழ்தூட்டி - தாய். திமிர்ஆட்டி - திமிர் பிடித்த. குறிப்பு: ஆசிரிய விருத்தங்களில் பயிற்சி பெற சித்தர் பாடல்கள், தமிழ் மருத்துவ நூல், வாகட நூல்கள், பதிகங்கள், சதகங்கள், பிள்ளைத்தமிழ், தாயுமானவர் பாடல், அருட்பா முதலிய நூல்களைப் படிக்க வேண்டும். ‘தொடையதிகாரம்’ பார்க்க. 3. கொச்சகக் கலிப்பா அளவடி நான்கு கொண்டது கொச்சகக் கலிப்பா. இது கலியடியாலாயினும், வெள்ளடியாலாயினும் வரும். கலித்தளை யான் வருவது கலியடி. வெண்டளையான் வருவது வெள்ளடி. கலியடியில் சிறுபான்மை வெண்டளையும் வரலாம். 1. “ நந்தா விளக்கனைய நாயகனே நானிலத்தோர் தந்தாய் தனியறத்தின் தாயே தயாநிதியே! எந்தாய் இகல்வேந்த ரேறே யிறந்தனையே அந்தோ! இனிவாய்மைக் காருளரே மற்றென்றான்.” - கம்பரா. அயோத், கிளைகண்டு நீங்கு படலம் - 60. இக் கொச்சகம், வெண்டளை பிழையாமல் அமைந்திருத் தலை அலகிட்டறிக. “நீர்நிலையின் முதலையின்வாய் நிலைகுலைந்த வொருகரிமுன் ஓர்முறையுன் பெயர்விளிக்க உதவினைவந் தெனவுரைப்பார் ஆர்துயர வளக்கர்விழு வறிவிலியா னழைப்பதற்குன் பேர்தெரியேன் ஆகிடினும் பிறகிடல்நின் பெருந்தகையோ.” இக் கொச்சகக் கலிப்பா கலித்தளையான் வந்திருத்தலையறிக. 1. “ நந்தா விளக்கனைய நாயகமே எமைநீத்துப் பொந்தார் புன்குரம்பை போக்கியிசை கொண்டனையோ சிந்தா மணியே சிதையா வொளிப்பிழம்பே மந்தா கினியாள் மண்ணாட்ட மறைந்தனையோ.” கம்பர் கொச்சகம் போல் இஃதும் வெண்டளை பிழையாமல் வரவேண்டும். ஆனால், இதில், க - த நாயகமே x எமைநீத்து நே - ஆ பொந்தார் x புன்குரம்பை எனக் கலித்தளையும், ஆசிரியத் தளையும் வந்துள்ளன. அதனால் ஓசை யமையாமையைக் கம்பர் கவியுடன் படித்தறிக. திருத்தம்: “நந்தா விளக்கனைய நாயகமே எந்நீத்துப் பொந்தார் புலைக்குரம்பை போக்கியிசை கொண்டனையோ சிந்தா மணியே சிதையா வொளிப்பிழம்பே மந்தா கினியாளும் மண்ணம றைந்தனையே.” மண்ண - நீராட்ட. மேலும், இவர் பாடிய, “சரமளித்தாய் தென்னாப்ரிக் காவிறைக்குக் கதியிழந்த சோதரற்குக் கரமளித்தாய் கரந்தனையோ களைப்பாறக் குளிர்யமுனை பாங்க ரந்தோ.” என்னும் அறுசீர்க் கழிநெடிலடிகளில் மோனை அமையவில்லை. இவ்வடியில் முதற்சீரிலும் ஐந்தாஞ் சீரிலும் மோனை வரவேண்டும். திருத்தம். “சரமளித்தாய் தென்னாப்பிரிக் காவிறைக்குக் கதியிழந்த சகோத ரர்க்குக் கரமளித்தாய் கரந்தனையோ களைப்பாறக் குளிர்யமுனைக் கரையி லந்தோ.” இத் தவறுகளுக்குக் காரணம் யாப்புப் பயிற்சியின்மையோடு, செய்யுளோசையுடன் செய்யுட்களைப் படித்துப் பழகாமையுமேயாகும். 2. “ திருக்குறளின் பெருமைதனைத் தெரிந்துணர்ந்த வேற்றுநாட்டார் பெருகுந்தம் மொழியென்றே மொழிபெயர்த்துக் கொண்டார்கள் அருகுள்ள சிறுநாட்டார் தமிழ்தெரிந்து குறள்கற்றார் அருந்தமிழர் மட்டுமின்னும் அதன்பெருமை யறிந்திலரே.” இது கலியடியான் வந்த கொச்சகம். கொச்சகக் கலிப்பாவில் மோனை வரவேண்டும். இரண்டு மூன்று அடிகளில் மோனை அமையவில்லை. ‘வேற்று நாட்டார்’ என்பது ஓசை தட்டுகிறது. ஆசிரிய விருத்தம் போல் எளிதில் பாடக் கூடியது கொச்சகம். அடிகளின் சிறப்புக்கு மோனையே காரணம் என்பதை நினைவில் இருத்துங்கள். திருத்தம். திருக்குறளின் பெருமையினைத் தெளிந்துணர்ந்த வெளிநாட்டார் பெருகுந்தம் மொழியென்றே பெயர்த்தமைத்துக் கொண்டார்கள் அருகுள்ள சிறுநாட்டார் அறிந்து தமிழ்க் குறள்கற்றார் அருந்தமிழர் மட்டுமின்னும் அதன்பெருமை யறிந்திலரே. 3. “ உலகத்து வரலா றுலகிற்கு வைத்துச் சென்ற சிலசெய்தி கூறிடுவேன் செவிசாய்ப்பீ ரென்மக்காள் பரந்தவிப் பாரினிலே பரவுகின்ற மக்களெல்லாம் தலையாய தம் வாழ்வைத் தற்கொலை செய்கின்றார்.” இது பலதளை விரவி வந்த கொச்சகம். இதில் முதலடி ஐஞ்சீரடி; மற்றவை அளவடிகள். கொச்சகத்தில் ஐஞ்சீரடி வரக் கூடாது. மூன்றாமடியில் எதுகை அமையவில்லை. ஈற்றடி ஓசை குன்றுகிறது. முதலடியினும் ஓசையமையவில்லை. திருத்தம்: உலகேய வரலாற்றை யுலகுக்கு வைத்துள்ள சிலசெய்தி கூறிடுவேன் செவிசாய்ப்பீ ரென்மக்காள் பலவாயிப் பாரினிலே பரவுகின்ற மக்களெல்லாம் தலையாய தம்வாழ்வைத் தற்கொலைசெய்கின்ற னரே. இரண்டையும் படித்துப் பாருங்கள். 4. “ அருளொன் றுண்டெண்ணி யழுதழுது பெரும்பேறு பெறக்கூறும் பெரியோர் யாரும் அரும்புமுல்லை வெண்பற்கள் நிறைந்த வாயால் ஒருமுத்தம் பெற்றா ரானால் அருளே வேண்டார்.” இதன் முதலடி சிந்தடியாகவும், ஈற்றடி நெடிலடியாகவும், ஏனையிரண்டும் அளவடிகளாகவும் உள்ளன. முதலடி, அருளொன்று உண்டெண்ணி அழுது அழுது. என அளவடியாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இது புணரி லக்கணந் தெரியாமல் எழுதியதாகும். ஈற்றடியை, ஒருமுத்தம் பெற்றாரா னாலரு ளே வேண்டார். என அலகிடின் அளவடியாகும். ஆனால், ஓசை வேறுபடுகிறது. இப் பாட்டு ஏதோ பாட்டென்று எழுதிய பாட்டே யாகும். கொச்சகம் அல்லது விருத்தமாகக் கொள்ளலா மெனின், இரண்டாமடி தவிர ஏனை மூன்றடிகளிலும் மோனை அமையவில்லை. முதற்சீரினும் மூன்றாஞ்சீரினும் மோனை வரவேண்டும்; பொழிப்பு மோனை. எனவே, இது ஒரு செய்யுளன்று. முதலடி யொழிந்த ஏனை மூன்றடியும் எண்சீர்க்குரிய ஓசையுடையன வேயன்றி அளவடிக்குரிய ஓசை அமையவில்லை. அத்திருத்தம் வருமாறு: “பெரும்பேறு பெறக்கூறும் பெரியோர் யாரும் பிறைமுல்லை வெண்பற்கள் நிறைந்த வாயால் அரும்பேறு பெறுவாரேல் அருளே வேண்டார் அறமென்று மனைவாழ்வை யடைவா ரன்றே.” என எண்சீரடிக் கலித்தாழிசையாக அமைதல் காண்க. 4. கட்டளைக் கலித்துறை கட்டளைக் கலித்துறையின் இலக்கணத்தைத் திருப்பிப் படியுங்கள். திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை முதலிய கோவை நூல்களெல்லாம் கட்டளைக் கலித்துறையால் பாடிய வையேயாம். யாப்பருங்கலக் காரிகையும் கட்டளைக் கலித்துறை நூலே. ஒருகாலத்தே கட்டளைக் கலித்துறைக்கிருந்த பெருமை சொல்லுந் தரத்தன்று. எதை யெடுத்ததாலும் கட்டளைக் கலித்துறை யாலேயே பாடி வந்தனர். பிற்காலக் கவிஞர்கள் தனிப்பாடல்களில் பெரும் பான்மை கட்டளைக் கலித்துறையே. தூற்றா தலரை மறைப்பவர்க் கேகுறை சொல்லுகுற்றம் ஏற்றா தொழியெனை யெம்பெரு மாட்டிசென் றேற்றவர்க்கு மாற்றா தருள்செங்கை வாணன்றென் மாறையில் வந்து நெஞ்சம் போற்றா துறையவே யான்சொன்ன தீங்கு பொறுத் தருளே. - தஞ்சைவாணன் கோவை. இதில், அடியொன்றுக்கு 16 எழுத்திருத்தலை எண்ணிப் பாருங்கள். ஒற்றுக்களை நீக்கி யெண்ணுக. வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை யம்பல வன்மலையத் திருங்குன்ற வாண ரிளங்கொடி யேயிட ரெய்த லெம்மூர்ப் பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாயநும்மூர்க் கருங்குன்றம் வெண்ணிற மேய்க்குங் கனங்குழைக் காரிகையே. - திருக்கோவையார். இதில், அடியொன்றுக்கு 17 எழுத்திருத்தலை எண்ணியறிக. இவ்விரண்டு கட்டளைக் கலித்துறையிலும் வந்திருப்பதுபோல் முதற்சீரினும் ஈற்றுச்சீரினும் மோனை வரவேண்டும். முகத்தினிற் குட்டிக் கராப்பௌடர் பூசி மினுமினுக்கி நகத்தினிற் செஞ்சாயம் நாசுக்காப் பூசியோர் நற்கரத்தில் பகட்டான வளையலும் பார்ப்பதற் கேயோர் கைதனில் சொகுசான கர்ச்சீபுங் கொண்டபெண் ணேயுன் பேருசொல்லே. இதில், முகத்தினில் - மினுமினுக்கி சொகுசான - பேருசொல்லே என மோனை அமையவில்லை. மூன்றாமடியிலுங் கூட மூன்றாஞ் சீரில் மோனை வந்திருக்கிறதேயன்றி ஐந்தாஞ்சீரில் மோனை வர வில்லை. நான்காமடியில் எதுகையும் ஓசையுடன் அமையவில்லை. கட்டளைக் கலித்துறை அடிகளில் இறுதிச் சீரொழிந்த ஏனை நான்கு சீரும் வெண்டளை பிழையாது வரவேண்டும். வேறு தளைகள் வரக்கூடா. இதில், க - த பகட் டா ன x வளை யலும் நிரை நேர் நேர் x நிரை நிரை புளி மாங் காய் x கரு விளம் நே - ஆ கே யோர் x கை தனி லே நேர் நேர் x நேர் நிரை நேர் தே மா x கூ விளங் காய் நே - ஆ ணே யுன் x பே ருசொல் லே நேர் நேர் x நேர் நிரை நேர் தே மா x கூ விளங் காய் எனக் கலித்தளையும் ஆசிரியத் தளையும் வந்திருக்கின்றன. கட்டளைக் கலித்துறையில் கலித்தளையும் ஆசிரியத் தளையும் வருதல் கூடா. குறிப்பு: கட்டளைக் கலித்துறையடியின் இறுதிச் சீர் காய்ச்சீர் ஆனதால், நிரையசை முதலாகவுடைய கலித்துறையில் மட்டும் ஈற்றுச்சீர்க்கும் அடுத்த அடியின் முதற்சீர்க்கும் கலித்தளை வரும். திருக்கோவைக் கலித்துறையிற் காண்க. இது, நிரையசையை முதலாக வுடைய கட்டளைக் கலித்துறை. நிரையசையை முதலாகவுடைய அடியொன்றுக்கு 17 எழுத்து வரவேண்டும். ஆனால், இதன் ஈற்றடியில் 16 எழுத்து வருகிறது. எண்ணிப் பாருங்கள். இக் கட்டளைக் கலித்துறையில், பாட்டின் இன்றியமையாத உறுப்பான மோனை அமையவில்லை; தளை தட்டுகிறது; எழுத்துக் குறைகிறது. எனவே இது கட்டளைக் கலித்துறையன்று; கட்டளைக் கலித்துறை போன்ற கட்டளைக் கலித்துறையே. மேலும், குட்டிக்கரா பௌடர், கர்ச்சீப்பு, நாசுக்கு என தமிழ்மொழிக் கொவ்வாத அயற்சொற்கள் பல வந்துள்ளன. இப் பாட்டைப் படித்தபின் திருக்கோவை, தஞ்சைவாணன் கோவைப் பாட்டுக்களை ஒருமுறை படித்துப் பாருங்கள். திருத்தம் வருமாறு: “முகத்தினிற் குட்டிக் கராப்பௌடர் பூசி மினுமினுக்கி நகத்தினிற் செஞ்சாயம் நாசுக்காகப் பூசியோர் நற்கரத்தில் உகத்தினி லாடும் வளையது மற்றோர் ஒளிமலர்க்கை அகத்தினிற் கர்ச்சீபுங் கொண்டபெண் ணேபெயர் யாதுசொல்லே!” உகம் - இணை. உகத்தினில் ஆடும் - இணைந்தாடும். அகம் - உள், இடம். இக் கலித்துறையில் உள்ள அயற்சொற்களை நீக்கினால், முகத்தினில் பொற்சுண்ணம் பூசிநன் றாக முகமினுக்கி நகத்தினிற் செஞ்சாயம் பூசியோர் நற்கரத்தில் உகத்தினி லாடு வளையலு மற்றோர் ஒளிர்மலர்க்கை அகத்தினிற் குட்டையுங் கொண்டபெண் ணேபெயர் யாதுசொல்லே. பொற்சுண்ணம் - முகப்பொடி, மணத்தூள். குட்டை - கைக்குட்டை, ‘நற்கரத்தில்’ என்பது ‘நற்கையினில்’ என்றிருக்கலாம். இயல்பாக அமைவதே இனியபாட்டாகும். 5. கும்மி மிக எளிதாகப் பாடும் பாக்களில் கும்மியும் ஒன்று. கும்மியின் இலக்கணத்தைத் திருப்பி ஒருமுறை படியுங்கள். காட்டு : அத்தி முகவனைப் பெற்ற மனோன்மணி ஆதி பராபரை தாள்போற்றி சத்திய வாய்மை தவறா வரிச்சந்திரன் தாரணி யாண்ட கதையுரைப்பேன். - அரிச்சந்திரக் கும்மி இக் கும்மி வெண்டளை பிழையாமல் அமைந்திருத்தலை அறிக. 1. செந்தமிழ் நாட்டில் வாழ்பவரே அனைவரும் சேருவீர் ஒன்றாகப் போரிடவே பைந்தமிழ்ப் பண்பினைக் காத்திட வேயிந்தப் பாரில் சிந்துவோம் இரத்தத்தை. இக் கும்மியில், நே - ஆ க - த நாட்டில் x வாழ்பவரே x அனைவரும் நே - ஆ ஒன்றாய்ப் x போரிடவே நே - ஆ நி - ஆ பாரில் x சிந்துவோம் x இரத்தத்தை என ஆசிரியத்தளையும் கலித்தளையும் வந்துள்ளன. முடிவும் இல்லை. காரணம் கும்மியின் இலக்கணம் தெரியாமையே யாகும். திருத்தம் வருமாறு: செந்தமிழ் நாட்டினில் வாழ்பவ ரேயாரும் சேருவீ ரொன்றாகப் போரிடவே பைந்தமிழ்ப் பண்பினைக் காத்திட வேயிந்தப் பாரில் குருதியைச் சிந்திடுவோம். இரண்டையும் படித்துப் பாருங்கள். 2. “ பணமூட்டை யாவுங் கரையவேண் டுமதைப் பரமவே ழைக்குப் பகிர்தல்வேண்டும் உணவூட்டிப் பசியை ஒடுக்கவேண்டும் யாரும் உலகில் சமமென்ப தோங்கவேண்டும்.” இக் கும்மியில், நி - ஆ கரையவேண் x டுமதை க - த உணவூட்டிப் x பசியை என ஆசிரியத்தளையும் கலித்தளையும் வந்துள்ளன. அலகிட்டுப் பாருங்கள். ‘டுமதை’ என்பதில் உள்ள டுகரத்தை (டு) விட்டிசையாகக் கொண்டு, டுமதை நேர் நிரை கூ விளம் என அலகிடின். நி - ஆ டு மதைப் x பர மவே நேர் நிரை x நிரை நிரை கூ விளம் x கரு விளம் என அடுத்த சீருடன் நிரையொன்றாசிரியத் தளை ஆகிறது. இவ்விடர்ப்பாடு யாப்பறிவுக் குறைவால் ஏற்பட்டது. விட்டிசைத்தலாவது - ஓசை அறுத் திசைத்தல் காட்டு: “கோலமாய்ச் சீவிச் சிணுக்கெடுத் துமலர்க் கூந்தலிற் சூட்டி யழகுசெய்வோம்.” - கவிமணி. ‘துமலர்’ என்பதில் உள்ள, ‘து’, ‘ம’ என்பதனோடு சேர்த்து ‘தும’ நிரையசை யாகாமல், ‘து’ பிரிந்திசைத்து நேரசையாதல். து மலர் நேர் நிரை கூ விளம் “அன்னப்பால் காணாத ஏழைகட் குநல்ல ஆவின்பால் எங்கே கிடைக்கு மம்மா.” - கவிமணி இதிலும், கு நல்ல, என்பதில், ‘கு’ விட்டிசைத்து ‘குநல்ல’ தேமாங்காய் ஆயிற்று. ‘தும’, ‘குந’ என்பவற்றை நிரையசையாக - குறிலிணையாகக் கொள்ளின், நி - ஆ க - த சிணுக் கெடுத் x தும லர் ஏழை கட் x குநல்ல நிரை நிரை x நிரை நேர் நேர் நேர் நேர் x நிரை நேர் கரு விளம் x புளி மா தே மாங் காய் x புளி மா எனத் தளை தட்டுதலோடு, அடுத்த அடியின் முதற்சீரோடும் தளை தட்டுதலை அறிக. திருத்தம் வருமாறு: பணமூட்டை யாவுங் கரையவேண் டுமதைப் பாரினி லேழைக்குப் பங்கவேண்டும் உணவூட்டி யின்மையை ஓட்ட வேண்டும் யாரும் உலகில் சமமென்ப தோங்கவேண்டும். 6. சிந்து சிந்தின் இலக்கணத்தைத் திருப்பிப் பாருங்கள். 1. “ ஊராள்வோர் எந்தமிழர் என்போம் ஆனால் உருப்படியாய்த் தமிழ்வளர வகையேயில்லை வேற்றாரின் மொழிக்கெல்லாம் எமது நாட்டில் வேண்டுமட்டும் வளர்ச்சியுண்டு கொடுமை யையோ பட்டினிச் சாவிற்கோர் எல்லை இல்லை இந்தப் பல்வளம் ஓங்கிடுந் தென்னர் நாட்டில் ஆட்சி யமைச்சர்கள் செய்வதெலா மெங்கும் அஸ்திவாரக் கல்லிடும் அன்புத் தொண்டே. தமிழ்நா டென்றிட்ட இன்பநாட் டையுயிர் ஈந்தேனும் பெற்றிட உறுதி செய்வோம் அமிழ்தான பொதுவுடைமைக் கொள்கை யெல்லாம் அமைந்திட்ட திருநாட்டை விரைவில் காண்போம்.” இவற்றுள் முதற்கண்ணி ஓரோசையாகவும், ஏனையிரண்டும் வேறோசையாகவும் உள்ளன. இரண்டாவது கண்ணி கும்மிப் பாட்டைப்போல் உள்ளது. ஆனால் கும்மிப் பாட்டில் இரண்டு எழுசீரடிதான் வரும். இது எண்சீரடியாக உள்ளது. மூன்றாவது கண்ணியின் முதலடி கும்மி யோசையும், இரண்டாவதடி முதற் கண்ணியின் ஓசையும் அமைந்துள்ளன. படித்துப் பாருங்கள். இரண்டாவது கண்ணியில், ‘அஸ்திவாரக் கல்லிடும் அன்புத் தொண்டே’ என்பது ஓசை தட்டுகிறது. முதல் இரண்டு கண்ணிகளில் எதுகை அமையவில்லை. ஊராள்வோர் - வேற்றாரின் பட்டினி - ஆட்சி என்பன எதுகையாகா. எதுகையில் இரண்டாவதெழுத்து ஒன்றி வருவதோடு, முதலெழுத்தும் குறிலுக்குக் குறிலும், நெடிலுக்கு நெடிலுமாக அளவொத்து வரவேண்டும். ‘ப’ என்னும் குறிலுக்கு, ‘ஆ’ என நெடில் வந்திருத்தல் சரியன்று. இனி, முதலெழுத்து அளவொத்தலோடு, ‘பட்டி - அட்டி’ என்பன போல மூன்றாவ தெழுத்தும் ஒத்து வருதலே சரியான எதுகையாகும். வண்டமிழில் என்ன எதுகைச் சொற்களுக்கா தட்டுப்பாடு? மூன்றாவது கண்ணியில், ‘தமிழ்நாடு - ஈந்தேனும்’ என மோனை அமையவில்லை. எனவே, இவை எதுகை மோனை ஓசை அமையாததோடு, ஒருவகைப் பாக்களாகவும் இல்லை. திருத்தம் வருமாறு: “ஊராள்வோர் எந்தமிழர் என்போம் ஆனால் உருப்படியாய்த் தமிழ்வளர வகையேயில்லை பாராள்வோர் மொழிக்கெல்லாம் எமது நாட்டில் பலவகையில் வளர்ச்சியுண்டு கொடுமை யையோ, தமிழ்தானம் முயிருயிரைத் தந்தே யேனும் தமிழ்நாட்டைப் பெற்றிடவே உறுதி செய்வோம். அமிழ்தான பொதுவுடைமைக் கொள்கை யெல்லாம் அமைந்திட்ட தமிழ்நாட்டை விரைவில் காண்போம்.” இவை சிந்து. இவற்றைக் கலித்தாழிசையாகவும் கொள்ளலாம். இனி, “ஊராள்வோர் எந்தமிழர் என்போம் ஆனால் - இங்கே உருப்படியாய்த் தமிழ்வளர வகையே யில்லை. தமிழ்தானம் முயிருயிரைத் தந்தே யேனும் - நாம் தமிழ்நாட்டைப் பெற்றிடவே உறுதி செய்வோம்.” எனத் தனிச் சொற் பெற்று வரும். “பட்டினிச் சாவிற்கோர் எல்லையில் லையிந்தப் பல்வள மோங்கிடுந் தென்னாட்டில் அட்டியி லாதுநம் ஆள்வோர்செய் தொண்டோ அடிப்படைக் கல்நாட் டரும்பணியே.” இது கும்மி. திருத்தியமைத்துள்ள பாட்டுக்களைப் படித்து விட்டு, மறுபடியும் கவிஞர் பாட்டுக்களைப் படித்துப் பாருங்கள். 3. “ காலையிலே பூங்கொடிதன் தலையைத் தூக்கிக் காட்டினிலே வண்டொன்றுங் காணா தேங்கக் களிவண்டு அங்கொன்று வந்து சேரக் காதலரே கூறுங்கள் ஏனின் னேரம்? என்றுகொடி சொல்லிடப்பொய் சொல்லும் வண்டு வீட்டைவிட் டோடியுனைப் பார்க்க வந்தேன் வீதியிலே என்தம்பி என்னைப் பார்த்து விருந்துண்ண வாருங்கள் என்றான் தோழி.” இச் சிந்துகள் எதுகை இன்னதென்றே தெரியாமல் பாடப் பட்டனவாகும். அதோடு பாவகையும் தெரிந்ததாகத் தெரியவில்லை. களிவண்டு - அங்கொன்று - களிவண்டங்கொன்று ‘களிவண் டங்கொன்று வந்து சேர. எனக் குற்றுகரத்தைக் கெடுத்துப் புணர்க்க, அவ்வடி ஓசை குன்றுகிறது. திருத்தம் வருமாறு: காலையிலே பூங்கொடியின் தலையைத் தூக்கிக் காட்டினிலே வண்டொன்றுங் காணா தேங்கச் சோலையிலே யிருந்தோராண் சுரும்பர் போதச் சுருக்காகக் கூறுங்கள் ஏனின் னேரம்? என்றுகொடி சொல்லிடப்பொய் சொல்லும் வண்டர் இல்லினைவிட் டோடியுனைப் பார்க்க வந்தேன் மன்றிடை என்தம்பி என்னைப் பார்த்து வாருங்கள் விருந்துண்ண என்றான் தோழி! 3. வள்ளிக் கொடியிலே துத்திப்பூப் பூப்பானேன் சிங்கி - காதில் வங்காளத் தாரிட்ட சிங்காரக் கொப்படா சிங்கா. பொன்னிட்ட மேலெல்லாம் மின்வெட்டிப் பார்ப்பதேன் சிங்கி - இந்த வன்னப் பணிகளின் மாணிக்கக் கல்லடா சிங்கா - குற்றாலக் குறவஞ்சி. இது சிங்கன் சிங்கி உரையாடற் சிந்து. முதற்கண்ணி மோனைத் தொடையாகவும், இரண்டாவது கண்ணி எதுகைத் தொடையாகவும் அமைந்துள்ளன. ‘சிங்கி’ ‘சிங்கா’ என்னும் விளிப்பெயர்கள் அல்லாதவை வெண்டளையான் அமைந்துள்ளன. அலகிட்டுப் பாருங்கள். 1. ஆகாயங் கட்டிய கொட்டகை யோமலை கண்ணா? அசைகின்ற பூமியின் கொப்புளந் தான்மலைக்கண்ணே. 2. முத்தம் ஒட்டினால் உதடு களைப்பாகும் கண்ணா! நித்திரை செய்வதால் விழிகள் வீணாகுமோ கண்ணே? 3. காதல ராலிந்தத் தோட்டங் கசங்காதோ கண்ணா? குளிர்ந்த பனித்துளி யாலேகல் லுடையுமோ கண்ணே? 4. பகல்நிறக் கண்டு போலே - பேசும் நாக்கை வசமாக்கும் பழம்போலே - இனிப்புத்தாராய் இவை, மேற்காட்டிய குறவஞ்சிக் கண்ணிகளைப் போலப் பாடியவை யாகும். முதற்கண்ணி குறவஞ்சிக் கண்ணிகள் போலவே அமைந் துள்ளது. இரண்டாவது கண்ணி தளை தட்டுகிறது. அலகிட்டுப் பாருங்கள். மூன்றாவது கண்ணியில் மோனை அல்லது எதுகை அமையவில்லை. நான்காவது கண்ணி சரியாக அமைய வில்லை. தனிச் சொல்லும் வரவில்லை. குறவஞ்சிக் கண்ணியின் இலக்கணம் சரியாகத் தெரிந்ததாகத் தெரியவில்லை. திருத்தம் வருமாறு: 2. முத்தம் கொடுத்தால் உதடு களைப்பாகும் கண்ணா - நாம் நித்திரை செய்வதால் கண்கள் வீணாகுமோ கண்ணே? 3. காதல ராலிந்தத் தோட்டங் கசங்காதோ கண்ணா - மேற் காலும் பனித்துளி யாற்கல் லுடையுமோ கண்ணே? 4. தேக்குங்கற் கண்டுபோல் பேசுங்கண்ணேயிங்கு வாராய் - என் நாக்கை வசமாக்கும் நற்பழம் போலின்பந் தாராய். இதைப் படித்தபின் கவிஞர் பாட்டை ஒரு முறை படித்துப் பாருங்கள். 7. புணர்ச்சி தமிழ் மொழியின் இனிமைக்குத் தமிழ்ச் சொற்களின் புணர்ச்சியே சிறந்த காரணமாகும். பொன்னும் மணியும் அழகுறப் பொருந்தினாற் போலத் தமிழ்ச்சொற்கள் ஒன்றோடொன்று ஓசையின்பமும் பொருட் பொலிவும் பொருந்தப் புணர்ந்துள்ளன. தேனும் பாலும் கலந்தாற் போன்றது தமிழ்ச் சொற்களின் புணர்ச்சியின்பம். காதலர் களின் உள்ளப் புணர்ச்சியே போன்றது கன்னித் தமிழ்ச் சொற்களின் புணர்ச்சி! அந்த பையன் என்பதைவிட, அந்தப் பையன் என்பது ஓசை யின்பமும் பொருள் விளக்கமும் உடையதன்றோ? கோல் தொடி என்பதைவிட, கோற்றொடி என்பது இன்சுவையும் எடுப்போசையும் அமைந்ததன்றோ? நிலம் வரி என்பதை விட, நிலவரி என்பது இன்னோசையும் தெளிபொருளும் உடையதல்லவா? எனவே, தோன்றல் திரிதல் கெடுதல் என்னும் மூவகைப் புணர்ச்சியும் தமிழ் மொழியின் இனிமைக்கும் பெருட்பொலிவுக்கும் முதற்காரணமாய் அமைந்துள்ளன வென்பது தெளிவு. பெயர் சொல் - உன் பெயர் என்ன சொல்; பெயர்ச் சொல் - பொருளைக் குறிக்கும் சொல். வினை சொல் - ஏதாவதொரு தொழில் சொல்; வினைச் சொல் - பொருளின் தொழிலைக் குறிக்கும் சொல். பொருள் பெயர் - பொருளும் பெயரும்; உம்மைத் தொகை; பொருட்பெயர் - பொருளைக் குறிக்கும் பெயர். நாட்டு புகழ் - புகழை நிலை நாட்டு; வினைத்தொகை. நாட்டுப் புகழ் - ஒரு நாட்டின் புகழ். பொருத பார் - போர் செய்த நாடு; பெயரெச்சத் தொடர். பொருதப் பார் - நீ போர் செய்யப் பார், வினையெச்சத் தொடர். தாய் சென்றாள் - தாய் போனாள்; எழுவாய்த் தொடர். தாய்ச் சென்றாள் - ஒருத்தி தாவிச் சென்றாள்; வினையெச்சத் தொடர். பல் குச்சி - பல குச்சி; பண்புத் தொகை. பற்குச்சி - பல் விளக்கும் குச்சி; இரண்டன் உருபும் பயனும் உடன்றொக்க தொகை. கறிகாய் -கறியும் காயும்; உம்மைத் தொகை. கறிக்காய் - முதிராத காய் - கறிக்கு ஏற்ற காய்; நான்கன் உருபும் பயனும் உடன்றொக்க தொகை. ஓடா குதிரைகள் - குதிரைகள் ஓடா; ஓடா - எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்று. ஓடாக் குதிரைகள் - ஓடா (ஓடாத) - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். இவ்வாறு புணர்ச்சியால் பொருளும் இலக்கண அமைப்பும் மாறுபடுவதால், தமிழ்ச் சொற்புணர்ச்சியின் இன்றியமையாமை பெறப்படும். இவ்வாறே புணர்ச்சியால் யாப்பு வேறுபாடும் உண்டாகும். அது வருமாறு: 1. “ அறிஞர் பலரின் அரிய கருத்து அறியாமை நீக்கி யறிவும் - திறமுமன்பும் நல்குமே நாட்டு நடப்புங் குறள்மலர் நல்மணம் வீசிட நன்று.” மேலாகப் பார்த்தால் இது ஒரு நல்ல வெண்பாவே. ஆனால், இது இன்றியமை யாப் புணர்ச்சி புறக்கணிக்கப்பட்டு வெண்பா வாக்கப்பட்டுள்ளது. இவ்வெண்பாவைப் புணர்ச்சியின்பந் தோன்ற எழுதினால், “அறிஞர் பலரின் அரிய கருத் தறியாமை நீக்கி யறிவும் - திறமுமன்பும் நல்குமே நாட்டு நடப்புங் குறள்மலர் நன்மணம் வீசிட நன்று.” முதலடியில், ‘கருத்’ என நிரையசைச் சீராக வந்துளது. வெண்பாவின் ஈற்றிலன்றி இடையில் அசைச்சீர் வருதல் கூடாது. இதை எவ்வாறு அடுத்த சீருடன் தளை கொள்வது? அலகிட்டுப் பாருங்கள். ‘அரியகருத் - நிரை நிரை நேர் - கருவிளங்காயாகக் கொள்ளின். அடுத்தது ‘தறி’ - நிரைவந்து கலித்தளையாகிறது. முதலடி சிந்தடி யாகிறது’. ‘ல’ என்பது ‘ஞ ந ம’ என்னும் மெல்லெழுத்துவரின் ‘ன்’ ஆகத் திரியும். அவ்வாறே, நல் + மணம் - நன்மணம் எனத் திரிவதே புணர்ச்சி யின்பமும் விதியும் ஆகும். அவ்வாறு திரியவே, பின்னிரண்டடிகள் எதுகை யமையாமை அறிக. இவ்விடர்ப்பாட்டுக்குக் காரணம், புணர்ச்சியிலக்கணம் தெரியாமையும், ‘புணர்ச்சி கூடாது’ என்னும் தப்பான கூற்றை நம்பியதுமே யாகும். திருத்தம். “அறிஞர் பலரின் அரிய கருத்தை அறியாமை நீக்கி யறிவும் - திறமுமன்பும் நல்குமே நாட்டு நடப்புங் குறள்மலர் பல்குமே யின்பம் பயின்று.” 2. “கடல்கடந்த நாட்டினரும் தமக்கு ஏற்ற கலையாக்கி மொழிபெயர்த்துப் பயனும் பெற்றார் அடலார்ந்த தமிழர்நாம் நமக்கு ஏற்ற அருங்குறளை வாழ்க்கையிலே உணர்ந்தோ மில்லை.” இவ் வெண்சீர்க் கழிநெடிலடிகள், தமக்கு + ஏற்ற - தமக்கேற்ற நமக்கு + ஏற்ற - நமக்கேற்ற எனக் குற்றுகரங் கெட்டுப் புணரின், இருசீர் ஒருசீராகிச் சீர் குறைந்து, ஓசை தட்டிப் பா வேறுபடுதல் காண்க. தமக்கு வாய்ந்த நமக்கு வாய்ந்த எனத் திருத்திப் படியுங்கள். 3. “கடலிலே ஒருகாணி கேட்பார் - வானக் காற்றிலே போகவொரு வழிதாரு மென்பார் உடலிலே உயிருள்ள மட்டும் - எங்கள் உரிமைக்கு உதிரத்தைச் சொட்டிடுவோ மென்பார். வள்ளுவனை உலகுக்கு ஈவோம் - அவன் வாக்கென்று கேட்டாலே வாயூமை யாவோம்” இச் சிந்துக் கண்ணிகள் நன்கு அமைந்துள்ளன. ஆனால், உரிமைக்கு ஒ உதிரத்தை - உரிமைக் குதிரத்தை உலகுக்கு x ஈவோம் - உலகுக் கீவோம் எனப் புணர்த்தெழுதின் ஓசை குன்றுகிறது. புணர்த்திப் படித்துப் பாருங்கள். செய்யுளின் இடையில் குற்றுகரம் உயிர்வரக் கெடாமல் இருப்பது செய்யுள் நடையன்று. திருத்தம். “உடலிலே உயிருள்ள மட்டும் - எங்கள் உரிமைக்கிங் குதிரத்தைச் சொட்டிடுவோ மென்பார் வள்ளுவனை யுலகினுக் கீவோம் - அவன் வாக்கென்று கேட்டாலோ வாயூமை யாவோம்.” 4. “ஆம்தமிழர் நல்வாழ்வும் அரசும் வளம்ப லவும் நாம்தமிழை நன்றாக நவிலுங்கால் - போம்பிறவும் பொய்யர்கள் கற்பனைகள் புரட்டுகளும் மிரட்டுகளும் மெய்யறமாந் திருக்குறளை விளம்பு.” இவ் வெண்பாவில், நல்வாழ்வும் x அரசும் நன்றாக x நவிலுங்கால் கற்பனைகள் x புரட்டுகளும் புரட்டுகளும் x மிரட்டுகளும் மெய்யறமாம் x திருக்குறளை x விளம்பு என்னும் ஆறு இடத்தில் தளை தட்டுகிறது. அலகிட்டுப் பாருங்கள். மேலும், “ஆந்தமிழர் நல்வாழ்வும் அரசும் வளம்பலவும் நாந்தமிழை நன்றாக நவிலுங்கால் - போம்பிறவும்.” எனப் புணர்ச்சியின்பந் தோன்ற எழுதின், ‘போம் பிறவும்’ என்னும் தனிச்சீரில் முதல் இரண்டடியின் எதுகை அமையவில்லை. ஆம் தமிழர் நாம் தமிழை எனப் புணர்ச்சி நீக்கி ஓசையுடன் படிக்க முடியாமையைப் படித்தறிக. பேசும்போதுகூட அவ்வாறு பேசுதல் கடினமே. எனவே இது நேரிசை வெண்பாவன்று. ஆறு கலித்தளைகள் வருவதால் இன்னிசை வெண்பாவு மன்று. திருத்தம் வருமாறு: “ஆந்தமிழர் வாழ்வும் அரசும் வளம்பலவும் நாந்தமிழை நன்றாய் நவிலுங்கால் - தீந்தொழியும் பொய்யர்கள் கூறும் புரட்டு மிரட்டுகளும் மெய்யற மாங்குறளை வேய்.” வேய்தல் - சூடுதல். ‘மேவு’ எனவும் முடியலாம். குறிப்பு: கவியரங்கத்தின் அரங்கேற்றத்தை நன்கு கருத்தூன்றிப் படியுங்கள். நல்ல யாப்பறிவு உண்டாகும். மேலும், மற்றொருமுறை யாப்பிலக்கணத்தை முதலிலிருந்து திருப்பிப் படியுங்கள். பயிற்சிகளை நன்கு கவனித்து மனத்தில் நன்கு பதியும்படி செய்து கொள்ளுங்கள். நீங்கள் படிக்கும் ஒவ்வொரு பாட்டையும் ஓசையுடன் படிப்பதோடு, அது என்ன செய்யுள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். படிக்கும் பாட்டுகளில் அமைந்துள்ள மோனை எதுகை முதலிய தொடைகளை நன்கு கவனித்துப் படியுங்கள். வெண்பா, கட்டளைக் கலித்துறைகளைக் கட்டாயம் அலகிட்டுப் பாருங்கள். இம்முறைகளைக் கட்டாயம் மேற்கொண்டு சிறந்த கவிஞர் களாகத் திகழ்வீர்களாக.  இரண்டாம் பாகம் யாப்பதிகாரம் என்னும் இந்நூலின் முதற் பாகத்தில் கூறப் படாத செய்யுள் உறுப்புக்களின் இலக்கணமும், செய்யுட் களின் இலக்கணமும் ஈங்குக் கூறப்படுகின்றன. முதற்பாகம் இரண்டாம் பாகங்களின் பொருளடக்கத்தைப் பாருங்கள். 1. உறுப்பியல் 1. சீர் அசைச்சீர், மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர் என்னும் ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர்களின் இலக்கணமும் முதற் பாகத்தில் கூறப்பட்டது. அச்சீர்களே பாடலுட் பயின்று வருவன. நாலசைச்சீரும் உண்டு. அது மிகச் சிறுபான்மையாக அருகி வரும். 1. நாலசைச்சீர் நாலசைச் சீராவது - மாச்சீர் விளச்சீர் முன்னர் தண்பூ, தண்ணிழல், நறும்பூ, நறுநிழல் வருதல். தேமா புளிமா கருவிளம் கூவிளம் என்னும் ஈரசைச்சீர் நான்கனோடும், தண்பூ, தண்ணிழல், நறும்பூ, நறுநிழல் என்னும் நான்கையும் உறழ்ந்தால் நாலசைச்சீர் (4 x 4) பதினாறாகும். அவையாவன: வரலாறு 1. தேமாந்தண்பூ 9. தேமாந் தண்ணிழல் 2. புளிமாந்தண்பூ 10. புளிமாந் தண்ணிழல் 3. கருவிளந் தண்பூ 11. கருவிளந் தண்ணிழல் 4. கூவிளந் தண்பூ 12. கூவிளந் தண்ணிழல் 5. தேமா நறும்பூ 13. தேமா நறுநிழல் 6. புளிமா நறும்பூ 14. புளிமா நறுநிழல் 7. கருவிள நறும்பூ 15. கருவிள நறுநிழல் 8. கூவிளநறும்பூ 16. கூவிள நறுநிழல் இவை எட்டும் பூச்சீர் இவை எட்டும் நிழற்சீர் எனப்படும். எனப்படும். தண்பூ முதலிய நான்கும், தேமா முதலிய நான்குமேயாகும். இவை இரண்டும் ஈரசைச்சீர்களே. இரண்டு ஈரசைச்சீர்கள் சேர்ந்து ஒரு நாலசைச் சீர் ஆனது. வரலாறு தண்பூ - நேர் நேர் - தேமா நறும்பூ - நிரை நேர் - புளிமா நறுநிழல் - நிரை நிரை - கருவிளம் தண்ணிழல் - நேர் நிரை - கூவிளம் அலகிடல் 1. நேர்நேர் நேர்நேர் - தேமாந் தண்பூ 2. நிரைநேர் நேர்நேர் - புளிமாந் தண்பூ 3. நிரைநிரை நேர்நேர் - கருவிளந் தண்பூ 4. நேர்நிரை நேர்நேர் - கூவிளந் தண்பூ மற்ற நறும்பூ, தண்ணிழல், நறுநிழல்களையும் இவ்வாறே அலகிடுக. 2. தளை தளை கொள்ளும்போது, பூச்சீர் - காய்ச்சீர் போலவும், நிழற்சீர் - கனிச்சீர் போலவும் தளை கொள்ளப்படும். அதாவது, காய்முன் நேர் வருதல் - வெண்சீர் வெண்டளை பூமுன் நேர் வருதல் - வெண்சீர் வெண்டளை காய்முன் நிரை வருதல் - கலித்தளை பூமுன் நிரை வருதல் - கலித்தளை கனிமுன் நிரை வருதல் - ஒன்றிய வஞ்சித்தளை நிழல்முன் நிரை வருதல் - ஒன்றிய வஞ்சித்தளை கனிமுன் நேர் வருதல் - ஒன்றாத வஞ்சித்தளைநிழல்முன் நேர் வருதல் - ஒன்றாத வஞ்சித்தளை எனக் கொள்ள வேண்டும். குறிப்பு: பூமுன் நேர் வருதல் வெண்சீர் வெண்டளை எனினும், வெண்பாவில் நாலசைச்சீர்கள் வரப்பெறா; ஏனைப் பாக்களில் வரும். காட்டு : “மாதவர் குலத்துதித்த - நல்ல மாட்டிடையர் ஆய்ச்சிசேதி கேட்டிடுவீரே. மேவியமா சாத்துவானென்பார் - பெற்று மேவளர்த்த மைந்தனென்பார் கோவலனென்பார்.” கேட் டிடு வீ ரே கோ வல னென் பார் நேர் நிரை நேர் நேர் நேர் நிரை நேர் நேர் கூ விளந் தண் பூ கூ விளந் தண் பூ ஏனையவற்றை இலக்கியங்களில் வருமிடத்துக் காண்க. இந்த நாலசைச் சீருடன் சீர்கள், அசைச்சீர் பூச்சீர் மாச்சீர் நிழற்சீர் விளச்சீர் காய்ச்சீர் கனிச்சீர் என எழுவகைப்பட்டன. 2. குற்றியலிகரம் ‘நாடு + யாது - நாடியாது’ எனக் குற்றியலுகரத்தின் முன் யகரம் வரின், அவ்வுகரம் இகரமாகத் திரியும். இது குற்றியலிகரம் எனப் படும். செய்யுளில் தளை தட்டினால் குற்றியலிகரம் அலகு பெறாது: ஒற்றே போல் கொள்ளப்படும். காட்டு : “சிறுநன்றி யின்றிவர்க்கியாம் செய்தக்கால் நாளைப் பெருநன்றி பின்னும் பெரிதென் - றுறுநன்றி தானவாய்ச் செய்வதுந் தானமன் றென்பவே வானவா முள்ளத் தவர்.” இவ் வெண்பாவில், ‘இன்றிவர்க்கியாம்’ - நேர் நிரை நிரை - கூவிளங்கனி. வெண்பாவில் கனிச்சீர் வரக்கூடாது. இவர்க்கு + யாம் - இவர்க் கியாம் என்பது குற்றியலிகரம். எனவே, குற்றிய லிகரத்தைக் கெடுத்து ஒற்றாக்கி அலகிடின், இன்றிவர்க்யாம் - நேர் நிரை நேர் - கூவிளங்காய்ச் சீராகும். தளை தட்டாத விடத்துக் குற்றியலிகரம் அலகு பெறும். அதாவது உயிர்மெய்க் குறிலாகவே கொள்ளப்படும். காட்டு : “குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.” இதில், இனிது + யாழ் - இனிதியாழ் - என்பது குற்றியலிகரம். நே -ஆ குழ லினி x தியா ழினி நிரை நிரை x நிரை நிரை கரு விளம் x கருவிளம் வெண்பாவில் ஆசிரியத்தளை வரக்கூடாது. இதை, வெ - வெ குழ லினி தி x யா ழினி நிரை நிரை நேர் x நேர் நிரை கரு விளங் காய் x கூ விளம் இவ்வாறு பிரித்தலகிடின் தளை தட்டவில்லை. இங்கு குற்றியலிகரம் குறில்போல் நேரசையாதல் காண்க. 3. அளபெடை தளை தட்டினவிடத்துக் குற்றியலிகரம் போல அள பெடையும் அலகு பெறாது; தளை தட்டாவிடத்து அலகு பெறும். காட்டு : “உப்போஒ வெனவுரைத்து மீள்வாள் ஒளிமுறுவற் கொப்போநீர் வேலை யுலகு.” இதில், க - த உப் போ ஒ x வென நேர் நேர் நேர் x நிரை தே மாங் காய் x எனத் தளை தட்டுகிறது. வெண்பாவில் கலித்தளை வருதல் கூடாது. எனவே, அளபெடையை நெட்டெழுத்தே போல் கொண்டு, உப்போ - நேர் நேர். தேமாச் சீராக அலகிடின், மா முன் நிரை வந்து இயற்சீர் வெண்டளையாகக் காண்க. “ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கு செய்வினை ஆஅது மென்னு மவர்.” (குறள்) வெ - வெ ஓ ஒ தல் x வேண்டும் நேர் நேர் நேர் x தேமா இங்கு தளை தட்டாததால், அளபெடை அலகு பெற்றது. குறிப்பு: நெடில் அளபெடுத்தல் நேர்நேர் - தேமாவாகவும், குறினெடில் அள பெடுத்தல் நிரைநேர் - புளிமாவாகவும் கொள்க. பா அல் படா அ நேர் நேர் நிரை நேர் தே மா புளி மா 3. தொடை 4. இனவெதுகை வல்லின மெல்லின மெய்களுள், ஓரின மெய்யில் அதற்கதுவே யன்றி வேறு மெய் எதுகையாக வரின் இனவெதுகை எனப்படும். இது சிறுபான்மை. காட்டு : “தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தால் காணப் படும்.” (குறள்) தக்கார் - எச்சத்தால், க் - ச் - வல்லின வெதுகை. தன்சீர் தனதொன்றின் வெண்சீர் விகற்பம். தன் - வெண் - மெல்லின வெதுகை. 5. ஆசெதுகை எதுகையாக வரும் எழுத்துக்குமுன் ‘ய் ர் ல் ழ்’ என்னும் நான்கில் ஒன்று வரின், அது ஆசெதுகை எனப்படும். ஆசு - பற்று - முதலெழுத்தையும் இரண்டாவ தெழுத்தையும் பற்றி நிற்கும் எழுத்து. காட்டு : “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.” எந் - செந் - எதுகை. ய்ஆசு. இது யகரவொற்றிடை வந்த ஆசெதுகை. “மாக்கொடி யானையும் மௌவற் பந்தரும் கார்க்கொடி முல்லையும் கலந்து மல்லிகை” இது ரகரவொற் றிடைவந்த ஆசெதுகை. “ஆவே றுருவின வாயினும் ஆபயந்த பால்வே றுருவின வல்லவாம்.” இது லகரவொற் றிடைவந்த ஆசெதுகை. குறிப்பு: லகரமெய், வல்லின மெல்லின மெய்களோடு மயங்காதாகையால், உயிரெதுகையிலேயே ஆசாக வரும். “வாழ்கின்றே மென்று மகிழன்மின் வாழ்நாளும் போகின்ற பூளையே போன்று.” இது ழகரவொற் றிடைவந்த ஆசெதுகை. பயிற்சி 1. நாலசைச் சீர்கள் யாவை? 2. காய்ச்சீர்போலத் தளை கொள்ளப்படும் நாலசைச்சீர் எது? 3. தளை தட்டியவிடத்து அலகுபெறா எழுத்துக்கள் யாவை? 4. இனவெதுகை, ஆசெதுகை - எடுத்துக்காட்டுத் தந்து விளக்குக. 5. லகரமெய் எவ்வெழுத்துகளின் முன் ஆசாக வராது? ஏன்? 2. செய்யுளியல் 1. வெண்டாழிசை சிந்தியல் வெண்பா ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருதல் வெண்டாழிசை எனப்படும். காட்டு : “அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி ஒன்னா ருடைபுலம் போல நலங்கவர்ந்து துன்னான் துறுந்து விடல்.” “ஏடி யறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி கூடா ருடைபுலம் போல நலங்கவர்ந்து நீடான் துறந்து விடல்.” “பாவா யறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி மேவா ருடைபுலம் போல நலங்கவர்ந்து காவான் துறந்து விடல்.” சிந்தியல் வெண்பா ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வந்ததால் இதுவெண்டாழிசை. குறிப்பு: வெண்டளை பிழைத்து வரும் சிந்தியல் வெண்பா வெண்டாழிசை யெனல் பொருந்தாது. சிந்தியல் வெண்பாவை ஏன் வெண்டளை பிழையப் பாட வேண்டும்? சிதைந்த சிந்தியல் வெண்பா வெண்டாழிசையெனின் சிதைந்த அளவியல் வெண்பாவை எந்த இனத்திற் சேர்ப்பது? 2. வெண்டுறை மூன்றடி முதல் ஏழடிகாறும் வந்து, பின்னர்ச் சில அடிகள் குறைந்து வருவது வெண்டுறை எனப்படும். முன்னர்ச் சில அடிகள் ஓரோசையாகவும், பின்னர்ச் சில அடிகள் வேறோரோசையாகவும் வருதலும் உண்டு. இவை முறையே ஓரொலி வெண்டுறை, வேற்றொலி வெண்டுறை எனப் பெயர் பெறும். காட்டு : தாளாள ரல்லாதார் தாம்பல ராயக்கால் என்னாம் என்னாம் யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும் பீலிபோற் சாய்ந்துஎழும் பிளிற்றியாங் கேபோலும். இது மூன்றடியாய் ஈற்றடியிரண்டும் இரண்டுசீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை. குழலிசையை வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலைமேற் பாய அழலெரியின் மூழ்கினவா லந்தோ வளியவென் றயல்வாழ் மந்தி கலுழ்வனபோல் நெஞ்சயர்ந்து கல்லருவி தூஉம் நிழல்வரை நன்னாடன் நீப்பனோ வல்லன். இது நான்கடியாய், ஈற்றடியிரண்டும் இரண்டுசீர் குறைந்து வந்த வேற்றொலி வெண்டுறை. ‘கலுழ்’ - என்பது இடையின உயிரெதுகை. “கல்லாதார் நல்லவையுட் கல்லேபோற் சென்றிருந்தால் கருமம் யாதாம் இல்லாதார் செல்வரைக்கண் டிரங்கியே யேமுற்றா லியைவ தென்னாம் பொல்லாதார் நன்கலன்கள் மெய்புதைப்பப் பூண்டாலும் பொலிவ தென்னாம் அல்லாதார் பொய்க்கேண்மை புனைந்துரைத்தா லாவதென்னே அல்லாதார் பொய்யாவ தறிபவே லமையாதோ.” இது ஐந்தடியாய் ஈற்றடி யிரண்டும் இருசீர் குறைந்து வந்த வேற்றொலி வெண்டுறை. முதல் மூன்றடியும் ஓரோசையாகவும், பின்னிரண்டடியும் வேறோசை யாகவும் இருத்தலை ஓசையுடன் படித்தறிக. 3. வெளிவிருத்தம் மூன்றடியானும் நான்கடியானும் வந்து, அடிதோறும் அடி முடிவிடத்து ஒரே தனிச்சொற் பெற்று வருவது வெளிவிருத்தம் எனப்படும். காட்டு : “கொண்டல் முழங்கினவால் கோபம் பரந்தனவால் - என்செய்கோயான் வண்டு வரிபாட வார்தளவம் பூத்தனவால் - என்செய்கோயான் எண்டிசையுந் தோகை யிருந்தகவி யேங்கினவால் - என்செய்கோயான்.” இது மூன்றடியான், அடிதோறும் அடிமுடிவிடத்து ‘என் செய்கோ யான்’ என்னும் தனிச்சொற் பெற்று வந்த வெளிவிருத்தம். “பண்ணா நின்றே பண்ணில மென்பார் - ஒரு சாரார் உண்ணா நின்றே உண்ணில மென்பார் - ஒரு சாரார் எண்ணா நின்றே எண்ணில மென்பார் - ஒரு சாரார் மண்ணா நின்றே மண்ணில மென்பார் - ஒரு சாரார்.” இது நான்கடியாய், அடிதோறும் அடிமுடிவிடத்து, ‘ஒரு சாரார்’ என்னும் தனிச்சொற் பெற்று வந்த வெளிவிருத்தம். ‘என்பார்’ என்பதுடன் அடிமுடிகிறது. தனிச்சொல்லை விட்டுப் படித்துப் பாருங்கள். 4. ஆசிரியத் தாழிசை மூன்றடியாய்த் தம்முள் அளவொத்து வருவன ஆசிரியத் தாழிசை எனப்படும். ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது சிறப்புடைத்து. காட்டு : “என்று மிளமையும் இயல்பு மினிமையும் ஒன்றி யுலகிடை யுயர்ந்து விளங்கிடும் தென்றமிழ் போலொரு செம்மொழி யுண்டுகொல்.” இது தனித்து வந்த ஆசிரியத் தாழிசை. “கன்று குணிலாக் கனியுகுந்த மாயவன் இன்றுநம் ஆனுள் வருமே லவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி; பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் மானுள் வருமே லவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி; கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லிநம் மானுள் வருமே லவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி.” இது ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வந்த ஆசிரியத் தாழிசை. 5. ஆசிரியத் துறை நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வருவதும், நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடைமடக்காய் வருவதும், நான்கடியாய் இடையிடை குறைந்து வருவதும், நான்கடியாய் இடையிடை குறைந்து இடைமடக்காய் வருவதும் என ஆசிரியத்துறை நான்கு வகைப்படும். காட்டு : “கரைபொரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருதிராயின் அரையிருள் யாமத்தே யடுபுலி யேறஞ்சி யகன்றுபோக நரையுரு மேறஞ்சு நுங்கைவேல் நும்மை வரையர மங்கையர் வவ்வுத லஞ்சுதும் வாரலையோ.” இது நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வந்த ஆசிரியத்துறை “வண்டுளர் பூந்தார் வளங்கெழு செம்பூட்சேய் வடிவே போலத் தண்டளிர்ப்பூம் பிண்டித் தழையேந்தி மாவினவித் தணந்தோன் யாரே தண்டளிர்ப்பூம் பிண்டித் தழையேந்தி வந்துநும் பண்டைப் பதிவினவிப் பாங்கு படமொழிந்து பகர்ந்தோ னன்றே.” இது நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடை மடக்காய் வந்த ஆசிரியத்துறை. “சங்க முழங்குந் தமிழ்நாடன் றன்னைத் திங்கள் முகத்துத் தெரிவையர் கண்டு திளைக்கவான் கங்குல் புகுந்து கருமுகில் தன்னை எங்கண் அகற்றி யிருந்தனை வாழி வெண்டிங்காள்.” இது நான்கடியாய் இடையிடை குறைந்து வந்த ஆசிரியத் துறை. “இரங்கு குயின்முழவா இன்னிசையாழ் தேனா அரங்க மணிபொழிலா ஆடும் போலும் இளவேனில் அரங்க மணிபொழிலா வாடுமே யாமாயின் மரங்கொல் மணந்தகன்றார் வாய்மையென் செய்த திளவேனில்.” இது நான்கடியாய் இடையிடை குறைந்து இடைமடக்காய் வந்த ஆசிரியத்துறை. கலிப்பா கலிப்பாவின் இலக்கணம் முதற்பாகத்தில் கூறப்பட்டுள்ளது. திருப்பி ஒருமுறை படியுங்கள். 6. தரவு தாழிசைகளின் அடியளவு தரவிற் சுருங்கி வரும் - தாழிசை. ஒரு தரவு, மூன்று தாழிசை வரும். சுரிதகம் - தரவின் அளவை ஒத்தும் பாதியும் வரும். சுரிதகம் - வெண்பாவாகவும், ஆசிரியமாகவும் வரும். தரவின் சிறுமை மூன்றடி; பெருமை பன்னிரண்டடி. தாழிசை சிறுமை இரண்டடி; பெருமை நான்கடி. தரவு தாழிசை சுரிதகம் 3 - 12 2 - 4 3 - 12 12 4 12 -6 3 4 8 - 4 4 3 4 -3 3 2 3 (எண் அடிகளின் தொகையினைக் குறிக்கும்) அம்போதரங்கம் - எண்: இரண்டடி இரண்டு - பேரெண் ஓரடி நான்கு - அளவெண். முச்சீர் எட்டு (4) - இடையெண். இருசீர் பதினாறு (8) - சிற்றெண். எட்டும், பதினாறும் - முறையே நான்கும் எட்டும் ஆகவும் வரும். மற்றொரு முறை இரண்டடி இரண்டு - தலையெண். ஓரடி நான்கு - இடையெண். இருசீ ரெட்டு - கடையெண். ஒருசீர் பதினாறு - சிற்றெண். அடி என்பது - அளவடி. 7. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா ஒரு தரவும், மூன்று தாழிசையும், தனிச்சொல்லும் சுரிதகமும் வருதல் - நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும். காட்டு : “வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து தோணெடுந் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினளாய்ப் பூணொடுங்கு மகங்கண்டும் பொருட்பிரிதல் வலிப்பாரோ.” இது மூன்றடித் தரவு. “சூருடைய கடுங்கடங்கள் செலற்கரிய வென்பவாற் பீருடைய நலந்தொலைய பிரிவரோ பெரியவரே; சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய வென்பவால் நாணுடைய நலந்தொலைய நடப்பரோ நலமிலரே. சிலம்படைந்த வெங்கானஞ் செலவரிதே யென்பவாற் புலம்படைந்த நலந்தொலையப் போவாரோ புலமிலரே.” இவை மூன்றும் இரண்டடித் தாழிசை. எனவாங்கு - தனிச்சொல். “அருளெனு மிலராய்ப் பொருள்வயிற் பிரிவோர் பன்னெடுங் காலமும் வாழியர் பொன்னெடுந் தேரொடுந் தானையிற் போலிந்தே.” இது மூன்றடி ஆசிரியச் சுரிதகம். இக்கலிப்பா - மூன்றடித் தரவு, தரவிற் சுருங்கித் தாழிசை இரண்டடியில் மூன்று, தரவோடொத்த சுரிதகமும் வந்தமை காண்க. 8. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா ஒரு தரவும், மூன்று தாழிசையும், அம்போதரங்கமும், தனிச் சொல்லும், சுரிதகமும் வருதல் - அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா எனப்படும். காட்டு : “கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் தொழுதேத்த கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைஇ அடலவிர் உடல்செங்க ணரிமாவாய் மலைந்தனை தாரொடு முடிபிதிரத் தமனியப் பொடிவாங்க நீரென விழிகுருதி நிலமுழுது முடனனைப்பக் கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்!” இது ஆறடித் தரவு. முரசதிர் வியன்மதுரை முழுவதூஉந் தளைபனிப்பப் புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்லர் இடியொடு முடியறுப்புண் டயர்ந்தவர் நிலஞ்சேர பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ? கலியொலி வியனுலகங் கலந்துடன் நனிநடுங்க வலியிய லவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வு மாணாதா ருடம்போடு மறம்பிதிர வெதிர்கலக்கிச் சேணாரு மிருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ? படுமணி யினநிரைகள் பரிந்துட னிரிந்தோடக் கடுமுர ணெதிர்மலைந்த காரொலி யெழிலேறு வீறினொடு மருப்பொசிய வீழ்ந்துதிறம் வேறாக ஏறுமலி பெருந்தொழுவி னிறுத்ததுநின் இகலாமோ? இவை மூன்றும் நான்கடித் தாழிசை. இலங்கொலி மரகத மெழின்மிகு வியன்கடல் வலம்புரித் தடக்கையின் மாஅல் நின்னிறம் விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும் பொருகளி றதுவட்டோய் புரையு நின்னுடை. இவை நாற்சீரடி இரண்டம்போதரங்கம் (பேரெண்). கண்கவர் கதிர்முடி கனலுஞ் சென்னியை; தண்சுட ருறுபகை தவிர்த்த வாழியை; ஒலியிய லுவண மோங்குங் கொடியினை; வலிமிகு சகட மாற்றிய வடியினை. இவை நாற்சீ ரோரடி நான்கம் போதரங்கம் (அளவெண்) போரவுணர்க் கடந்தோய் நீஇ; புணர் மருதம் பிளந்தோய் நீஇ; நீரகல மளந்தோய் நீஇ; நிழறிகழைம் படையோய் நீஇ; இவை மூச்சீ ரோரடி நான்கம்போதரங்கம் (இடையெண்) ஊழி நீஇ; உலகு நீஇ; உரவு நீஇ; அருவு நீஇ; ஆழி நீஇ; அருளு நீஇ; அறமு நீஇ; மறமு நீஇ; இவை இருசீரோரடி எட்டம்போதரங்கம் (சிற்றெண்) என வாங்கு - தனிச்சொல். “அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன் தொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரி புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன் தொன்றுமுதிர் கடலுலக முழுதுடன் ஒன்றுபுரி திகிரி யுருட்டுவோ னெனவே.” இது ஆறடி ஆசிரியச் சுரிதகம் 9. வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா ஒரு தரவும், மூன்று தாழிசையும், அம்போதரங்கம், அராகம், தனிச்சொல் சுரிதகமும் வருதல் - வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும். காட்டு : “விளங்குமணிப் பசும்பொன்னின் விசித்தமைத்துக் கதிர்க்கான்று துளங்குமணிக் கனை கழற்காற் றுறுமமலர் நறுமபைந்தார்ப் பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றும் குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்து முன்னாட்கண் மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கு மெல்லார்க்கும் தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரகேள்;” இது ஆறடித் தரவு. காட்சியாற் கலப்பெய்தி யெத்திறத்துங் கதிர்ப்பாகி மாட்சியார்க் கறியாத மரபொத்தாய்க் கரவினாற் பிணிநலம் பெரிதெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய அணிநலந் தனியேவந் தருளுவது மருளாமோ; அன்பினா லமிழ்ந்தலைஇ யறிவினாற் பிறிதின்றிப் பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப் பெருவரைத்தோ ளருளுதற்கி ருளிடைத் தமியையாய்க் கருவரைத்தோள் கதிர்ப்பிக்குங் காதலுங் காதலோ; பாங்கனையே வாயிலாப் பல்காலும் வந்தொழுகும் தேங்காத காவினையுந் தெளியாத விருளிடைக்கட் குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான் றமியையாய்த் தடமலர்த்தா ரருளுநின் றகுதியுந் தகுதியோ; இவை மூன்றும் நாலடித் தாழிசை. தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவனபொழில்; போதுறு நறுவிரை புதுமலர் தெரிதரு புதுநெய்தல் விரிவனகழி; தீதுறு திறமறு கெனநனி முனிவன திசையொடு பிணைவனதுறை; மூதுறு மொலிகலி நுரைதரு திரையொடு முதுதொடர் புடையதுகடல்; இவை நான்கும் அராகம். கொடுந்திற லுடையன சுறவேறு கொட்பதனால் இடுங்கழி யிராவருதல் வேண்டாவென் றிசைத்திலரே; கருநிறத் துறுதொழிற் கராம்பெரி துடைமையால் இருநிறத் தொருகானில் இராவார லென்றிலமோ; இவை நாற்சீரடி இரண்டம்போதரங்கம் (பேரெண்) நாணொடு கலந்தற்றாற் பெண்ணரசி நலத்தகையே; துஞ்சலு மொழிந்தற்றாற் றொடித்தோளி தடங்கண்ணே; அரற்றொடு கழிந்தன்றா லாரிருளு மாயிழைக்கே; நயப்பொடு கழிந்தன்றால் நனவது நன்னுதற்கே - இவை நாற்சீரோரடி நான்கம்போதரங்கம் (அளவெண்) அத்திறத்தா லசைந்தன தோள். அலர்தற்கு மெலிந்தன கண். பொய்த்துரையாற் புலர்ந்தது முகம். பொன்னிறத்தாற் போர்த்தன வகம். அழலினா லசைந்தது நகை. அணியினா லொசிந்த திடை. குழலினால் நிமிர்ந்தது முடி. குறையினாற் கோடிற்று நிறை. இவை முச்சீரோரடி எட்டம்போதரங்கம் (இடையெண்) உட்கொண்ட தகைத்தொருபால். உலகறிந்த வலத்தொருபால். கட்கொண்ட றுனித்தொருபால். கழிவெய்தும் படித்தொருபால். பரிவுறூஉந் தகைத்தொருபால். பரிவுறூஉம் பசப்பொருபால். இரவுறூஉந் துயரொருபால். இளிவந்த வெளிற்றொருபால். மெலிவுறூஉந் தகைத்தொருபால். விளர்ப்புவந் தடைந்தொருபால். பொலிவுசென் றகன்றொருபால். பொறைவந்து கூர்ந்தொருபால். காதலிற் கதிர்ப்பொருபால். கட்படாத் துயரொருபால். ஏதில்சென் றணைந்தொருபால். இயனாணிற் செறுவொருபால். இவை இருசீரோரடிப் பதினாறம்போதரங்கம் (கடையெண்) எனவாங்கு - தனிச்சொல். “இன்னதிவ் வழக்க மித்திற் மிவணலம் என்னவு முன்னாட் டுன்னா யாகிக் கலந்தவ ணிலைமை யாயினு நலந்தகக் கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக் கற்பொடு காணியம் யாமே பொற்பொடு பொலிகநும் புணர்ச்சி தானே” இது ஆறடிச் சுரிதகம்; தரவோ டொத்து வந்தது. 10. வெண் கலிப்பா கலிவெண்பாவே போல் கலித்தளை தட்டி வருவது வெண் கலிப்பா எனப்படும் காட்டு : “வாளார்ந்த மழைத் தடங்கண் மதிமுகத்தே வம்பவிழக் கோளார்ந்த பூணாகங் குழைபுரளக் கோட்டெருத்தின மாலைதாழ் கூந்தலார் வரன்முறையான் வந்தேத்தச் சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தஞ் சொன் முறையான். மனையறமுந் துறவறமும் மன்னவர்க்கும் விண்ணவர்க்கும் வினையறுக்கும் வகைதெரிந்து வீடொடுகட் டிவை யுரைக்கும் தொன்மைசால் சுழிகுணத்தெந் துறவரசைத் தொழுதேத்த நன்மைசால் வீடெய்து நாடு.” இது பெரும்பாலும் கலித்தளையான் வந்தமையால் வெண் கலிப்பா. 11. தரவு கொச்சகக் கலிப்பா கொச்சகம் - பாட்டு. பெண்கள் சேலையின் ஒரு பகுதியைப் பல அடுக்காக அல்லது மடிப்பாகக் கொய்து உடுப்பதனைக் கொச்சகம் என்பர். அதுபோல அடுக்கி வரும் பாட்டு கொச்சகம் எனப்பட்டது. கொச்சகக் கலிப்பாவில், தரவும் தாழிசையும் சிலவும் பலவும் அடுக்கிவந்து தரவிணைக் கொச்சகம், சிஃறாழிசைக் கொச்சகம், பஃறாழிசைக் கொச்சகம் எனப் பெயர் பெறும். அப்பெயரே தனித்து வரும் தரவுக்கும் ஆனது. தனித்து வரும் தரவு ஓரெதுகையுடைய நான்கடியான் வரும் முதற்பாகத்தில் காண்க. பெண்கள் சேலையைக் கொய்து உடுக்கும் கொச்சகம் என்பது இக்காலத்தே கொசுவம் என வழங்குகிறது. இது கொச்சகம் என்பதன் திரிபே யாகும். சேலையின் ஒரு பகுதியைக் கொய்து அதைப் பின்புறம் அல்லது முன்புறம் வைத்து. அதன் மேலே சேலையைச் சுற்றி உடுப்பதால் சேலைக்கு உள்ளே உள்ள அது கொச்சகம் எனப் பட்டது. கொய்து + அகம் - கொய்தகம். அகம் - உள், உள்ளே. ‘கொய்’ என்பது தொழிலாகு பெயராய்க் கொய்யப்பட்ட சேலையின் அப்பகுதிக்கானது. கொய்தகம் என்பதே, கொய்து + அகம் - கொய்தகம் - கொய்சகம் - கொச்சகம் எனத் திரிந்தது. நைந்தது - நஞ்சது. தீய்ந்தது - தீஞ்சது என்பது போல; தகரத்திற்குச் சகரம் போலி. கொச்சகம் - கொசுவம் எனத் திரிந்தது. ஒருதரவும் தனிச்சொல்லும் சுரிதகமும் வருதல் - தரவு கொச்சகக் கலிப்பா எனப்படும். காட்டு : “குடநிலைத் தண்புறவிற் கோவல ரெடுத்தார்ப்பத் தடநிலைப் பெருந்தொழுவிற் றகையேறு மரம்பாய்ந்து வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் தேறப்போய்த் தேங்குசிறு முயலிரியச் சிறுமுல்லை முறுவலிப்ப; - இது நாலடித் தரவு. எனவாங்கு - இது தனிச்சொல். ஆனொடு புல்லிப் பெருமபுதன் முனையு கானுடைத் தவர்தேர் சென்ற வாறே.” - இது ஆசிரியச் சுரிதகம். 12. தரவிணைக் கொச்சகக் கலிப்பா இரண்டு தரவும் தனிச்சொல்லும் சுரிதகமும் வருதல். காட்டு : வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்குங் காவலனாங் கொடிபடு மணிமாடக் கூடலார் கோமானே; இது மூன்றடித் தரவு. என வாங்கு - இது தனிச்சொல். துணைவளைத்தோ ளிவள்மெலியத் தொன்னலத் தொடர்புண்டாங் கிணை மலர்த்தா ரருளுமே விதுவிதற்கோர் மாறென்று துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரே; - இது தரவு. அதனால் - இது தனிச்சொல். செவ்வாய்ப் பேதை யிவடிறத் தெவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே. - இது ஆசிரியச் சுரிதகம். இது இடையிடை தனிச்சொற் பெற்றுவந்த தரவிணைக் கொச்சகம். இணை - இரண்டு. 13. சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா சில தாழிசைகள் வருதல். தாழிசையாற் பெயர் கொடுக் கினும் முதலில் தரவும் வரப்பெறும். காட்டு : “பரூஉத் தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத் தோன்றிக் குருஉக்கொண்ட வெண்குடைக்கீழ் குடைமன்னர் புடை சூழப் படைப்பரிமான் றேரினொடும் பரந்துலவு மறுகினிடைக் கொடித்தானை யிடைப்பொலிந்தான் கூடலார் கோமானே.” - இது நாலடித் தரவு. ஆங்கொருசார் - இது தனிச்சொல். உச்சியார்க் கிறைவனாய் உலகெலாங் காத்தளிக்கும் பச்சையார் மணிப்பைம்பூட் புரந்தரனாப் பாவித்தார் வச்சிரங் காணாத காரணத்தான் மயங்கினரே; - இது தாழிசை. அக்கால மணிநிரைகாத் தருவரையாற் பனிதவிர்த்து வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார் சக்கரங் காணாத காரணத்தாற் சமழ்த்தனரே; - இது தாழிசை. ஆங்கொருசார் - இது தனிச்சொல். மால்கொண்ட பகைதணிப்பான் மாத்தடிந்து மயங்காச்செங் கோல்கொண்ட சேவலங் கொடியவனாப் பாவித்தார் வேல்கொண்ட தின்மையால் விம்மிதராய் நின்றனரே; இது தாழிசை. அஃதான்று - இது தனிச்சொல். “கொடித்தேர்த் தோன்றல் கொற்கைக் கோமான் நின்புக ழொருவன் செம்பூட் சேஎய் என்றுநனி யறிந்தனர் பலரே யேனும் ஐவரு ளொருவனென் றறிய லாகா மைவரை யானை மடங்கா வென்றி மன்னவன் வாழியென் றேத்தத் தென்னவன் வாழி திருவொடும் பொலிந்தே.” - இது ஏழடி ஆசிரியச் சுரிதகம். இதில் தாழிசைகளின் இடையிடையே தனிச்சொல் வந்தது. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவின் தாழிசைகளின் இடையிடையே தனிச்சொல் வாராமையால் இது இப்பெயர் பெற்றது. தரவினு மிக்கு வந்தது சுரிதகம். தரவோ டொத்து வரவேண்டுமென்பது ஒத்தாழிசைக் கலிக்கே யாம். 14. பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா பல தாழிசைகள் வருதல் பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்: தாழிசையின் இடையிடையே தனிச்சொற் பெற்றும் பெறாதும் வரும். எடுத்துக்காட்டு கலித்தொகையில் காண்க. 15. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா முன்னர்க் கலிப்பாக்களுக் கோதிய இலக்கணத்தில் மாறி அல்லது மயங்கி வருதல் - மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும். காட்டு : “மணிகிளர் நெடுமுடி மாயவனுந் தம்முனும்போன் றணிகிளர் நெடுங்கடலுங் கானலுந் தோன்றுமால் நுரைநிவந் தவையென்ன நொய்ப்பறைய சிறையன்னம் இரைநயந் திறைகூரு மேமஞ்சேர் துறைவகேள்; மலையென மழையென மஞ்செனத் திரைபொங்கிக் கலையெனக் காற்றெனக் கடிதுவந் திசைப்பினும் விழுமியோர் வெகுளிபோல் வேலாழி யிறக்கலா தெழுமுந்நீர் பரந்தொழுகு மேமஞ்சேர் துறைவகேள்:” - இவை யிரண்டும் நான்கடித் தரவு. கொடிபுரையு நுழைநுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்தாள் தொடிநெகிழ்ந்த தோள்கண்டுந் துறைவலனே யென்றி யால். கண்கவரு மணிப்பைம்பூட் கயில்கவைய சிறுபுறத்தாள் தெண்பனிநீ ருகக்கண்டுந் தெரிந்திலனே யென்றியால், நீர்பூத்த நிரையிதழ்க்க ணின்றொசிந்த புருவத்தாள் பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே யென்றியால். கனைவரலாற் றிருகரைபோல் கைநில்லா துண்ணெ கிழ்ந்து நினையுமென் நிலைகண்டும் நீங்கலனே யென்றியால் வீழ்சுடரி னெய்யேபோல் விழுமநோல் பொறுக்கலாத் தாழ்தருமென் னிலைகண்டுந் தாங்கலனே யென்றியால். கலங்கவிழ்ந்த நாய்கன்போற் களைதுணை பிறிதின்றிப் புலம்புமென் னிலைகண்டும் போகிலனே யென்றியால். - இவை யாறும் இரண்டடித் தாழிசை. அதனால் - இது தனிச்சொல். அடும்பயி லிறும்பி னெடும்பணை மிசைதொறுங் கொடும்புற மடலிடை யொடுங்கின குருகு. செறிதரு செருவிடை யெறிதொழி லிளையாவர் நெறிதரு புரவியின் மறிதருந் திமில். அரசுடை நிரைபடை விரைசெறி முரசென நுரைவரு திரையொடு கரைபொரு கடல். அலங்கொளி யவிர்சுட ரிலங்கொளி மலர்தொறுங் கலந்தெறு காலொடு புலம்பின பொழில். - இவை நான்கும் இரண்டடி அராகம். விடாஅது கழலுமென வெள்வளையுந் தவிர்ப்பாய்மன் கெடாஅது பெருகுமென் கேண்மயு நிறுப்பாயோ ஒல்லாது கழலுமென் ஒள்வளையுஞ் செறிப்பாய்மன் நில்லாது பெருகுமென் நெஞ்சமு நிறுப்பாயோ தாங்காது கழலுமென் தகைவளையுந் தவிர்ப்பாய்மன் நீங்காது பெருகுமென் நெஞ்சமு நிறுப்பாயோ மறவாத வன்பினேன் மன்னிற்கு மாறுரையாய் துறவாத தமருடையேன் துயர்தீரு மாறுரையாய் காதலார் மார்பின்றிக் காமக்கு மருந்துரையாய் ஏதிலார் தலைசாய யானுய்யு மாறுரையாய், இணைபிரிந்தார் மார்பின்றி யினபக்கு மருந்துரையாய் துணைபிரிந்த தமருடையேன் துயர்தீரு மாறுரையாய். - இவை ஆறும் இரண்டடித் தாழிசை. என வாங்கு - இது தனிச்சொல். பகைபோன்ற றதுதுறை; பரிவா யினகுறி, நகையிழந் ததுமுகம்; நனிநா ணிற்றுளம்; தகையிழந் தனதோள்; தலைசிறந் ததுதுயர், புகைபரந் ததுமெய்; பொறையாயிற் றென்னுயிர். - இவை இருசீரோரடி எட்டம்போதரங்கம் (சிற்றெண்) அதனால் - இது தனிச்சொல். “இனையது நினையா லனையது பொழுதால் நினையல் வாழி தோழி தொலையாப் பனியொடு கழிக வுண்கண் என்னொடு கழிகவித் துன்னிய நோயே.” -இது நாலடி ஆசிரியச் சுரிதகம். இது தரவு இரண்டும், தாழிசை ஆறும், தனிச்சொல்லும், அராகம் நான்கும், மீண்டும் ஆறு தாழிசையும், தனிச்சொல்லும், இருசீரோரடி எட்டம் போதரங்கமும், தனிச்சொல்லும், நான்கடி ஆசிரியச் சுரிதகமும் பெற்று, கலிக் கோதப்பட்ட உறுப்புக்கள் மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் மயங்கியும் வந்தமை யான், மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா எனப்பட்டது. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் கலித்தொகையில் காண்க. 16. உறழ்கலிப்பா இது வினா விடையாக வரும். சுரிதகம் பெற்றும் பெறாமலும் வரும். இடையிடை கொச்சகங்கள் (வெண்பா) வரும். ‘ஒரூஉநீ எங்கூந்தல்’ (கலி - 87) ‘நலமிக நந்திய’ (கலி - 133) என்னும் கலிப்பாக்கள் உறழ்கலியாகும். இனம் 17. கலித்தாழிசை இரண்டடியும் பலவடியும் வந்து ஈற்றடிமிக்கு, ஏனைய அடிகள் தம்முள் ஒத்தும் ஒவ்வாதும் வருதல் - கலித்தாழிசை எனப்படும். இது கலிப்பாவின் இனம். காட்டு : “கொய்தினை காத்துங் குளவி யடுக்கத்தெம் பொய்தற் சிறுகுடில் வாரனீ யைய நலம் வேண்டின்.” இது இரண்டடியாய் ஈற்றடி மிக்கு வந்த கலித்தாழிசை. முதலடி நாற்சீரடி, இரண்டாவதடி ஐஞ்சீரடி. வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங் கேள்வரும் போதில் எழால்வாழி வெண்டிங்காள் கேள்வரும் போதில் எழாலாய்க் குறாலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்டிங்காள். இது ஈற்றடி மிக்கு ஏனையடி மூன்றும் ஒத்து வந்த கலித்தாழிசை. மூன்றாவதடி இடைமடக்கு. “பூண்டபறையறையப் பூத மருள நீண்டசடையா னாடுமே; நீண்ட சடையா னாடுமென்ப மாண்டசாயல் மலைமகள் காணவே காணவே.” இது ஈற்றடி மிக்கு இரண்டாமடி குறைந்து, முதலடியும் மூன்றாமடியும் ஒத்துவந்த கலித்தாழிசை. குறிப்பு : முதற் பாகத்தில் கூறிய கலித்தாழிசை வேறு, இது வேறு. இது கலிப்பாவின் இனம். இது அளவொத்த இரண்டடி வருவது. அது பரணிப் பனுவல் பாடுதற்குரிய தாழிசை. பிற பொருள் பற்றியும் பாடலாம். அது இரண்டடியாகவே வரும். இது இரண்டடியும் பலவடியும் வரும். விளக்கம் ‘தொடையதிகாரம்’ பார்க்க. பயிற்சி 1. கலிப்பாவின் இலக்கணம் என்ன? 2. கலிப்பாவின் உறுப்புக்கள் எவை? 3. கலிப்பா எத்தனை வகைப்படும்? 4. தரவு தாழிசைகளின் அடியளவு என்ன? 5. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவின் உறுப்புக்களை வரிசையாகக் கூறுக 6. தரவு கொச்சகத்தின் இலக்கணம் என்ன? 7. கொச்சகம் என்பதன் பொருள் என்ன? 8. கலித்தாழிசை எவ்வாறு வரும்? 9. பரணி பாடும் தாழிசைக்கும் கலிப்பாவின் இனமான கலித்தாழிசைக்கும் உள்ள வேறுபாடு என்ன? 18. மருட்பா வெண்பா முதலாக ஆசிரியம் ஈறாக ஒரு பா வருதல் - மருட்பா எனப்படும். மருட்பாவில் ஆசிரிய அடி இரண்டாய், அதுவும் ஈற்றயலடி சிந்தடியாய் வரும். வெண்பாவடியும் ஆசிரிய வடியும் ஒத்து வருவன சமனிலை மருட்பா எனவும், ஒவ்வாது வருவன வியநிலைமருட்பா எனவும் பெயர் பெறும். குறிப்பு : மருட்பாவில் வரும் வெண்பா இன்னிசை வெண் பாவாக இருக்கினும், வெண்பா முடியும் இடத்தில், அதாவது வெண்பாவின் ஈற்றடியின் இறுதியில் இவ்வடியின் எதுகை பெற்ற தனிச் சீர்வரும். காட்டு : திருநுதல் வேர ரும்புந் தேங்கோதை வாடும் இருநிலஞ் சேவடியுந் தோயும் - அரிபரந்த சேயித ழுண்கணு மிமைக்கும் ஆகுமற்றிவ ளகலிடத் தணங்கே. இது வெள்ளடியும் ஆசிரியவடியும் ஒத்து வந்தமையால் சமனிலை மருட்பா. பலமுறையும் ஓம்பப் படுவன கேண்மின் சொலன்முறைக்கட் டோன்றிச் சுடர்மணித்தே ரூர்ந்து நிலமுறையி னாண்ட நிகரில்லார் மாட்டும் சிலமுறை யல்லது செல்வங்கள் நில்லா இலங்கு மெறிபடையு மேற்றமு மன்பும் துலங்குதங் கல்வியும் தோற்றமு மேனைப் பொலன்செய் புனைகலனோ டிவ்வாறனாலும் விலங்கிவருங் கூற்றை விலக்கலு மாகா அனைத்தாதல் நீயிருங் கண்டீர் - நினைத்தக்க கூறிய வெம்மொழி பிழையாது தேறிநீ ரொழுகிற் சென்றுபயன் றருமே. இது வெள்ளடி ஒன்பதும் ஆசிரியவடி இரண்டும் வந்தமையால் வியனிலை மருட்பா. வெள்ளடிகள் இன்னிசை வெள்ளடிகள் ‘அனைத்தாதல்’ என்பதன் எதுகை பெற்ற ‘நினைத்தக்க’ என்னும் தனிச்சீர் வந்தமை காண்க.  இறுதிப் பயிற்சி கீழ்வரும் வினாக்கட்கு சரியான விடை தெரிந்து கொள்க. முதற் பாகம் 1. உறுப்பியல் 1. செய்யுள் உறுப்புக்கள் யாவை? 2. நேரசை, நிரையசை எழுத்துக்கள் எவை? 3. தனிக்குறில் எங்கெங்கு எவ்வெவ்வசையாக வரும்? 4. மாச்சீர், காய்ச்சீர் - ஒற்றுமை வேற்றுமை என்ன? 5. விளச்சீர் போன்ற சீர் எது? 6. சீர் பதினாறு, சீரின் வகை ஆறு - யாவை? 7. காசு, பிறப்பு - இவற்றின் பிறப்பிடம் எவை? 8. காசு, பிறப்பு - செய்யுளின் இடையில் வரின் எவ்வாறு அலகு பெறும்? 9. வெண்பாவின் ஈற்றில் வரும் சீர்கள் எவை? 10. தளை என்பது யாது? அது எத்தனை வகைப்படும்? 11. தளைகட்கு ஒப்புமை கூறுக? 12. இயற்சீர் வெண்டளை போன்ற தளைகள் எவை? 13. தளை தட்டும்போது ஐகாரம் எவ்வாறு அலகிடப் பெறும்? தளை தட்டும்போது ஆய்தம் எவ்வாறு அலகிடப் பெறும்? 14. தமிழ்மக்களே - இதைக் கருவிளங்காய் ஆக அலகிடு அவ்வாறு அலகிடுதலின் பெயர் என்ன? 15. அடி என்பது யாது? அது எத்தனை வகைப்படும்? 16. தொடை என்பது யாது? அது எத்தனை வகைப்படும்? 17. தொடைக்கும் தளைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன? 18. இயைபுத்தொடைக்கும் மற்றத் தொடைகளுக்குமுள்ளவேறுபாடென்ன? 19. இயைபுத்தொடை பெரும்பான்மை எப்பாடலில் வரும்? 20. இனமோனை எழுத்துக்கள் யாவை? 21. இனமோனையில் உயிர்மெய் எவ்வாறு வர வேண்டும்? 22. மோனையும் எதுகையும் எங்கெங்கு பயின்று வரும்? 23. சீர்மோனை என்பது என்ன? 24. எதுகையில் முதலெழுத்தும் மூன்றாவ தெழுத்தும் எவ்வாறு வரவேண்டும்? 25. செந்தொடையின் இலக்கணம் யாது? 26. உறழ்ச்சித்தொடை என்பது என்ன? அது எத்தனை வகைப்படும்? 27. கடையிணை, கடைக்கூழை, பொழிப்பு – இவற்றின் எதிர்த்தொடைகள் எவை? 2. செய்யுளியல் 28. பாவும் பாவினமும் யாவை? வரிசையாக எழுதுக? 29. செப்பலோசை, துள்ளலோசை - யாவை? 30. தூங்கலோசை எப்பாவுக் குரியது? 31. வெண்பாவின் இலக்கணம் என்ன? 32. வெண்பாவில் வாராச் சீரும் தளையும் எவை? 33. வெண்பா எத்தனை வகைப்படும்? 34. நேரிசை, இன்னிசை வெண்பாக்களின் இலக்கணம் என்ன? 35. பஃறொடை வெண்பா, கலிவெண்பா - அடியளவென்ன? 36. ஓரடி முக்கால், மூவடி முக்கால் - எவற்றைக் குறிக்கும்? 37. குறள் வெண் செந்துறை எவ்வாறு வரும்? 38. ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்? 39. நிலைமண்டில, அடிமறிமண்டில ஆசிரியப்பாக்களின் ஒற்றுமை வேற்றுமை என்ன? 40. ஆசிரியப்பா எவ்வாறு முடியும்? 41. ஆசிரியப்பாவின் முதலிலும் ஈற்றிலும் வரும் அடி எது? 42. கழிநெடிலடி நான்கு கொண்டது என்ன? 43. பதினான்குசீர்க் கழிநெடிலடி என்பது யாது? 44. இனிய ஓசை பெறாத கழிநெடிலடிகள் யாவை? 45. கலிப்பாவில் வாராச் சீர்கள் யாவை? 46. கலிப்பா எத்தனை வகைப்படும்? 47. கலிப்பாவின் உறுப்புக்கள் எவை? 48. அராகம், அம்போதரங்கம் - குறிப்பெழுதுக.? 49. அடக்கியல் எருத்து - என்ன? 50. அளவெண், இருசீரெட்டு - யாவை? 51. கொச்சகக் கலிப்பா, கலிவிருத்தம் - ஒற்றுமை, வேற்றுமை என்ன? 52. கட்டளைக் கலிப்பாவின் இலக்கணம் யாது? 53. கட்டளைக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை அடிகளில எவ்வாறு எழுத்தெண்ணப்படும்? 54. கலித்தாழிசையின் இலக்கணம் என்ன? அதனாலேயே பாடப்படும் பனுவல் எது? 55. கலித்துறை, கலிவிருத்தம் - அடி வேறுபாடு யாது? 56. கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் என்ன? 57. முறையே 11, 12, 16, 17 எழுத்துக்கள் வரும் கட்டளை அடிகள் எவை? 58. வஞ்சிப்பாவின் உறுப்பும் வகையும் யாவை? 59. வஞ்சித் தாழிசைக்கும், துறைக்கும் உள்ள வேறுபாடு என்ன? 60. குறளடி நான்கு, சிந்தடி நான்கு வரும் பாவினங்கள் யாவை? 61. இதுகாறும் நீங்கள் அறிந்த பாவையும் பாவினத்தையும்வரிசையாக எழுதுக. 3. புதிய செய்யுட்கள் 62. கும்மி, சிந்து - இவை கொள்வதற்கு இலக்கணம் யாது? 63. கும்மியின் இலக்கணம் என்ன? அது எத்தனைவகைப்படும்? 64. சிந்தினில் 'அடி' என்பது என்ன? 65. முச்சீரிரட்டை, இருமுச்சீரிரட்டை என்பன யாவை? 66. சமனிலை, வியனிலைச் சிந்துகட்குள்ள வேறு பாடென்ன? 67. சிந்தின் வகைகள் யாவை? 68. எவை எல்லாம் சிந்தில் அடங்கும்? 69. வண்ணம் என்பது யாது? வண்ணப் பாக்களாலேயே செய்யப்பட்ட நூல் எது? 70. பண்ணத்தி என்பது என்ன? விளக்கந் தருக. 71. பல்லவி, பல்லவி எடுப்பு, கண்ணி - பொருள் விளக்கந் தருக. 4. கவியரங்கம் 72. கவியரங்கம் என்பது யாது? 73. இங்கு எவ்வாறு கவியரங் கேற்றப்பட்டுள்ளது? 74. இக்கவியரங்கேற்றம் இளங்கவிஞர்க்குச் செய்யும் நன்மைகள் யாவை? 75. பொன்னார் மேனியின் மேல் வைத்திட்ட வொளியதனால் தன்னேரில் லாதபசு மயில். - இக்குறள் வெண்பாவை அரங்கேற்றுக.  இரண்டாம் பாகம் 1. உறுப்பியல் 76. நாலசைச் சீர்கள் யாவை? 77. தண்பூ - இது எச்சீர் போன்றது? 78. பூச்சீர், நிழற்சீர்கள் எவ்வாறு தளை கொள்ளப் படும்? 79. தளை தட்டும்போதும் தட்டாதபோதும் குற்றியலிகரமும்அளபெடையும் எவ்வாறு அலகிடப் பெறும்? 80. இனவெதுகை, ஆசெதுகை - எடுத்துக்காட்டு தருக. 81. லகரமெய் எம்மெய்களோடு மயங்காது? அதனால் அதுஎங்கு ஆசாக வரும்? 2. செய்யுளியல் 82. வெண்டாழிசையின் இலக்கணம் என்ன? எதை வெண்டாழிசை எனல் பொருந்தாது? ஏன்? 83. வெண்டுறையின் வகையினைக் கூறுக. 84. அடிதோறும் அடிமுடிவிடத்துத் தனிச்சொற் பெற்றுவரும் பாவினம் எது? 85. ஆசிரியத்தாழிசை யாது? அது எவ்வாறு வரும்? 86. ஆசிரியத்துறை நான்கு வகைப்படும். அவை யாவை? 87. தரவு தாழிசைகளின் அடியளவு என்ன? 88. ஒத்தாழிசைக் கலிப்பா எத்தனை வகைப்படும்? ஒவ்வொன்றின் இலக்கணத்தை வரைக 89. வெண்கலிப்பாவுக்கும் கலிவெண்பாவுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றும என்ன? 90. கொச்சகம் - குறிப்பு வரைக. 91. தரவு, தரவிணைக் கொச்சகக் கலிப்பாக்களின் உறுப்புக்கள்யாவை? 92. சிஃறாழிசை, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாக்கள் எவ்வாறு வரும்? 93. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா - பெயர்க் காரணம் என்ன? 94. வினா விடையாக வரும் கலிப்பா எது? 95. கலித்தாழிசையின் இலக்கணம் என்ன? இதற்கும், முதற் பாகத்தில் கூறப்பட்ட கலித்தாழிசைக்கும் உள்ள வேறுபாடென்ன? 96. மருட்பா என்பது யாது? அது எத்தனை வகைப்படும்? 97. பாவும் பாவினமும் கும்மியும் சிந்துவகையும் வந்துள்ளநூல்களைக் குறிப்பிடுக? 98. பாவும் பாவினமும் கும்மியும் சிந்தும் வண்ணமும் பண்ணத்தியும் பாடிப் பழகுக.  தொடையதிகாரம் முன்னுரை சங்ககாலத் தமிழகத்தையும், கவிராயர் காலத் தமிழகத்தையும் நினைப்பூட்டும் வகையில் இன்று தமிழகத்தில் இளந் தமிழ்க் கவிஞர்கள் தோன்றியிருப்பது கண்டு தமிழ்த்தாய் பேருவகை கொள்வாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நொந்து போன, நொந்து வலுவற்றுப் போன அவள் கால் களிலொன்றான செய்யுள் நடையை வலுப்பெறச் செய்வது கண்டால் தமிழ்த்தாய் மகிழ்ச்சி கொள்வாள் என்பதன் கருத்து, தமிழ்வளரும், தமிழினஞ் சிறப்புறும், தமிழ்மக்கள் மகிழ்வர் என்பதாகும். செய்யுள் நடை, உரைநடை என்னும் தமிழ்த்தாயின் இருநடை களில் - கால்களில் - இன்று உரைநடை உரம் பெற்றும், செய்யுள் நடை உரமற்றும் இருத்தலான் தமிழ்த்தாய் நொண்டி நொண்டி நடப்பது கண்ட இளந்தமிழர்கள் - இளந்தமிழ்க் கவிஞர்கள் - மனநொந்து, தமிழன்னையின் அக்குறைபாட்டைப் போக்க முனைந்துள்ளதில் வியப்பொன்றுமில்லை. இது தமிழரின் தனிப் பண்பாகு மல்லவா! சங்க காலத் தமிழ்ப் புலவர்களும், பிற்காலக் கவிராயர்களும் ஐந்திலக்கணமும் முற்றக் கற்று, ஆன்ற அறிவு பெற்று, சிறந்த கவித்திறமுற்று, செல்வர்களிடம் பரிசு பெறும் பொருட்டுப் பாட்டுப் பாடுதலை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு தமிழ் வளர்த்து வந்தனர். சங்க காலத் தமிழ்ப்புலவர்கள் பாடிப் பெற்ற பரிசுக்காக நமக்குத் தந்த பரிசுதாம் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் முதலிய சங்கத் தமிழ் நூல்கள்! இன்றைய இளந்தமிழ்க் கவிஞர்களோ, கவித்திற முற்றப் பெற்றுக் கவிபாடுதலை மேற்கொள்ளாமல், கவிபாடிப் பழகும் நிலையில் பரிசு பெறும் நோக்கமின்றிக் கவிபாடி வருகின்றனர் எனினும், தாமும் கவிஞர் ஆக வேண்டும், தம் கவிதைகளையும் தமிழ் மக்கள் படிக்க வேண்டும் என்னும் நோக்குடன் பாடி வருகின்றனர். அதனால் தான் அவர்கள் தாம் பாடும் பாடல்களைச் செய்தித் தாள்களில் வெளியிட்டும், சிலர் தனி நூல்வடிவில் வெளியிட்டும் வருகின்றனர். தமிழ்மக்கள் தம் கவிகளைப் படித்துத் தம்மைப் பாராட்ட வேண்டும் என்பதே அவர்கள் விரும்பும் பரிசாகும். சங்ககாலத் தமிழ்ச்சான்றோர்கள் தமிழ்மக்களின் அகவாழ்வையும் புறவாழ்வையும் சிறப்பித்து அகப்பாடல்களும் புறப்பாடல்களும் பாடினர். அறம் பொருள் இன்பமெனக் கொண்டு பாடினர். அகப்பாட்டுக்களில் பாட்டுடைத் தலைவன் இயற்பெயர் சுட்டிப் பாடக் கூடாதென்பது அக்காலத் தமிழிலக்கணச் சட்டம். 'சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர்' என்பதுதொல்காப்பியம். புறப்பாட்டுக்களிலுங் கூடப்பாட்டுடைத் தலைவர்செயல் கூறப் படுமே யன்றிச் செய்யாதன கூறப்பெறா. பிற்காலக் கவிராயர்களோ, அகம்புறம் என்னும் முறையை விட்டுச் செல்வர்களை அளவுக்கு மீறிப் புகழ்வதையே நோக்கமாகக் கொண்டு பாடினர். அகப்பொருள் பற்றிய பாட்டுக்களினும் பாட்டுடைத் தலைவர் பெயர் சுட்டிப் புகழ்ந்தே பாடினர். இதனால் எழுந்தவையே கோவை, உலா, மடல், காதல், பிள்ளைத் தமிழ், கலம்பகம், தூது முதலிய புகழ் நூல்களெல்லாம். இவர்கள் கவிகள், கருத்துச் செறிவும் கற்பனைநயமும் நடையழகும் உடையவை எனினும், பழந்தமிழ்ப் புலவர்கள் போல மக்கள் வாழ்க்கையோடு ஒட்டியவை யல்லாமையால் பயில்வாரற்று இன்று ஏட்டளவில் உள்ளன. தனிப்பாடற்றிரட்டு ஒன்று இரண்டு பாகங்களில் அவர்கள் கவிச் சிறப்பினைக் காண்க. சங்க காலப் புலவர்கள் பாடல்கள் கற்பனை நயம் அவ்வள வின்றியும், 'ஆழமுடைத்தாதல்' என்னும் கருத்துச் செறிவுடன் இயல்பாக அமைந்துள்ளவை எனினும், வாழ்க்கையோடு ஒட்டிப் பாடப்பட்டுள்ளமையால், அவை இன்றும் அன்றே போல் படித்துப் பயன்பட்டு வருகின்றன. தமிழ் மொழி உயிரோடிருப்பதற்கு அச்சங்கப் பாடல்களே முதற்காரணம் ஆகும். தற்காலக் கவிஞர்களோ எந்த ஒரு குறிக்கோளும் இன்றிப் பாடி வருகின்றனர். ஏதோ காதற் பாடல்கள் பாடுகின்றனர். ஆனால், முன்னோர் பாடிய காதற்பாடல்கள் போலத் திணை, துறை அமையப் பாடுவதில்லை. இன்றையக் கவிஞர்கள் கவிகளில் அகம்புறம் என்ற வேறுபாடே இல்லை எனலாம். சங்ககாலப் புலவர்கள் மக்கள் வாழ்க்கை முறையைச் சிறப் பித்துப் பாடினர். பிற்காலப் புலவர்கள் செல்வர்களைப் புகழ்ந்து பாடினர். தற்காலப் புலவர்களோ அவ்விரண்டும் இன்றி, ஏதோ பாடிவருகிறார்கள் எனலே பொருந்தும். இனிச் சங்கப் பிற்காலத்திலிருந்து கி.பி.6 ஆம் நூற்றாண்டு வரை இருந்த புலவர்கள், அகம்புறப்பொருள் பற்றிய தனிப் பாடல்கள், தனிநூல்கள் பாடுதலைக் கைவிட்டு, சமயச்சார்பான, சமயக் கொள்கைகளை வற்புறுத்தும் காவியங்களும் நீதி நூல்களும் பாடினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் பெருங்காப்பியங்களும், பெருங்கதை, சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமாரகாவியம் என்னும் சிறுகாப்பியங்களும் இக்காலத்தெழுந்த சமயச் சார்பான காவியங்களாகும். நாலடியார், நான்மணிக்கடிகை, ஏலாதி, சிறுபஞ்சமூலம், ஆசாரக் கோவை முதலியன அத்தகைய நீதி நூல்கள். இவற்றுள், மக்கள் வாழ்க்கை முறையோடு, சமயமுறையும் வற்புறுத்தப் படுதலை அறிக. இனி, இக்காலத்துக்கும், பிற்காலக் கவிராயர் காலத்துக்கும் இடைப்பட்ட காலத்துப் புலவர்களுள் - கி.பி. 6 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை இருந்த புலவர்கள், மக்கள் வாழ்க்கை முறையைப் பாடுதலை விட்டு, கடவுளர்களின் அருட்செயல்களைப் பாடினர்; மக்கள் வாழ்க்கையைச் சிறப்பித்துப் பாடுவதைவிட்டு, மக்கள் வாழ்க்கையை வெறுத்துப்பாடலாயினர். அப்பத்திப் பாடல்களே - தேவாரம், திருவாசகம், நாலாயிரம் முதலியன. இவர்கள் பாடல்களிலே தொட்டகுறையாக, அகப்பாடல் களும் உண்டு. ஆனால், அவை கடவுள் பற்றியவையாகும். அவையே அப்பத்திப் பாடல்களில் வரும் பெண்பாற் கைக்கிளைப் பாடல்களாகும். திருக்கோவையார் அங்ஙனம் எழுந்த தனி நூலாகும். ஆண்டாள் பாடல்களை நோக்குங்கள். இக்காலத் திறுதியை ஒட்டியவையே சித்தர் பாடல்களாகும். இக்காலத்தை ஒட்டியே மொழிபெயர்ப்புக் காவியங்களும் சமயப் புராணங்களும் எழுந்தன. கம்பராமாயணம், வில்லிபாரதம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம், பாகவதம் முதலியவை இத்தகைய நூல்களே. இதை யொட்டிய காஞ்சிப்புராணம், தணிகைப்புராணம், கோவிற்புராணம், சீகாளத்திப் புராணம் முதலிய தலபுராணங்கள் பாடப்பட்டன. புகழேந்திப் புலவரின் வெண்பாத்திறனும், அதிவீரராம பாண்டியனின் விருத்தத்திறனும், தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் தமிழரசையும் விட்டு, அயல் நாட்டையும் அயல் மக்களையும் அயலரசனையும் பாடப்பயன்பட்டதும் இங்ஙனமே. கி.பி. 14 ஆம் நூற்றாண்டில், சைவசமய நெறிமுறைச் சட்ட நூல்களான சிவஞான போதம், சிவஞான சித்தியார் முதலிய சைவ சித்தாந்த சாத்திரங்கள் தோன்றின. அப்புறம் கவிராயர் பாடல்கள். அடுத்து வீரசைவ நூல்கள், தேம்பாவணி, சீறாப் புராணம் முதலிய கிறித்துவ, முகமதிய சமயநூல்கள், தாயுமானவர், இராமலிங்கர் பாடல்கள், வேதநாயகம் பிள்ளை பாடல்கள். இங்ஙனம் தமிழிலக்கியப் பொருள்மரபு மாறிக்கொண்டே வரலானது. இங்ஙனமே, பழந்தமிழ் இலக்கியங்களின் இலக்கண நூலான தொல்காப்பியத்தினின்றும், நன்னூல், புறப்பொருள் வெண்பா மாலை, அகப்பொருள்விளக்கம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம், மாறனலங்காரம், இலக்கணவிளக்கம், இலக்கணக்கொத்து, தொன்னூல் விளக்கம் முதலிய இலக்கண நூல்களும் மாறிக்கொண்டே வரலாயின. செய்யுள் மரபு தமிழ்மொழியில் செய்யுள்நடை தோன்றிய காலத்தை இற்றென வரையறுத்துக் கூற இயலாது. கடைச் சங்ககாலம் வரை-வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் தனிப்பாக் களும், பொதுப்பாவாகிய பரிபாடலும், கலப்புப் பாவான மருட்பாவுமே பாடலிற் பயின்று வந்தன. இவற்றுள் ஆசிரியப்பாவே பெருவழக்கு. அடுத்தது வெண்பா. மற்றவை சிறுபான்மை. வஞ்சிப் பாச் சிறுபான்மையோடு, ஆசிரியப்பாவினிடை வஞ்சியடிகள் கலந்து பாடப்பட்டு வந்தன. கலிப்பா - ஆசிரியப் பாவினம். பழங்காலத்தே, வெண்பா முதலிய நான்குபாவும் முறையே செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை என்னும் ஓசைவேறுபாட்டால் வகைப்பட்டனவாகும். பா-ஓசை. தொல்காப்பியர் காலம்வரை, 'பா' என்பது ஓசையே குறித்து வந்தது. பிற்காலத்தே தளைவகையால் அவ்வோசை வேறுபாடு கொள்ளப் பட்டது. சங்கப் பிற்காலத்தே, தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்கள் தோன்றின. தொல்காப்பியர் காலத்திலேயே சிலபா வினம் தோன்றியிருந்தது எனினும், தொல்காப்பியர் பாவினங்கட்கு தனியிலக்கணங் கூறவில்லை. சிலப்பதிகார காலத்திலே பாவினம் நூல்வழக்குப் பெற்றது. சிலப்பதிகாரத்தில் கலிவிருத்தம், ஆசிரிய விருத்தம், ஆசிரியத்துறை, கலித்தாழிசை ஆகிய பாவினங்கள் வருகின்றன. சிந்தாமணிதான் தனிப்பாவினத்தாலான முதல் தமிழ் நூலாகும். சிந்தாமணிச் செய்யுட்களில் சில துறை, விருத்தம் முதலிய பாவினப் பாடல்கள், பிற்காலப்பாடல்கள் போலச் சிறந்த ஓசை நயத்துடன் அமையா திருத்தலின் காரணம் அதுவேயாகும். அடுத்துப் பாவினத்தால் பாடப்பட்டவை தேவார, திருவாசகப் பாடல்களும் நாலாயிரப் பாடல்களுமாகும். பத்தாம் நூற்றாண்டுக்கு மேல் பாவினம் வீறுபெற்றது. கம்பர் காலத்தில் பாவினம் அரியணை ஏறியது. பாக்கள் ஒதுக்கப் பட்டன எனலாம். 'விருத்த மென்னும் ஒண்பாவில் உயர்கம்பன்' எனல்காண்க. கலித்துறை, வஞ்சித் துறைகளும் அன்று விருத்தம் எனவே வழங்கின. வெண்பா மட்டும் பண்டேபோல் பயின்று வந்தது என்பதற்குப் புகழேந்திப் புலவர் நளவெண்பாச் சான்றாகும். சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியும் (கி.பி. 11 நூ) ஒட்டக் கூத்தர் தக்கயாகப் பரணியும் (கி.பி. 12நூ) பாவகை வண்ண வேறுபாடுடைய பாவினத் தாழிசைகளால் ஆன நூல்களாகும். கி. பி. 15 ஆம் நூற்றாண்டில் விருத்தம் சீரும்சிறப்பும் உற்றுத் திகழ்ந்தது என்பது, வில்லிபாரதப்பாடல்களால் விளங்கும். அவை படிப்போருள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் ஓசை நயம் மிக்க பலவகை வண்ண வேறுபாடுகளை உடையவையாகும். வண்ணம்-சந்தம். தனி வண்ணப் பாக்களாலான அருணகிரிநாதர் திருப்புகழ் இக்காலத்ததே. எண்சீரடிக்கு மேற்பட்ட ஆசிரிய விருத்தங்க ளெல்லாம் பிள்ளைத் தமிழிலும் சதகத்திலும் இடம் பெற்றன. 16 - 18 நூற்றாண்டுகளில் கட்டளைக்கலித்துறை அரசு செலுத்தத் தொடங்கியது. எடுத்ததற்கெல்லாம் கட்டளைக் கலித்துறைதான். கோவைநூல் கட்டளைக் கலித் துறையால் தான் செய்ய வேண்டும் என்ற கட்டளையும் பிறக்கலானது. கட்டளைக் கலித்துறை அந்தாதி வேறு. இலக்கண நூலாகிய காரிகையும் காரிகையால் செய்யும் அத்தகு பெருமை பெற்றது கட்டளைக் கலித்துறை. காரிகை-யாப்பருங்கலக் காரிகை. காரிகை-கட்டளைக் கலித்துறை. வெண்பா அன்றே போல் என்றும் பயிற்சியுடையதாகவே இருந்துவரலானது. ஆனால், சங்ககாலத்தே தலைமை தாங்கி வந்த ஆசிரியப்பா ஒதுக்கித் தள்ளப்பட்டது. கலிப்பாவும் வஞ்சிப்பாவும் வழக்கொழிந்தே விட்டன எனலாம். கலிவிருத்தம், கலித்துறை, ஆசிரிய விருத்தம் என்னும் மூன்றும் தமிழிலக்கியத் தின் மும்மணிகளாயின. வஞ்சி விருத்தமும் வஞ்சித் துறையும் அங்கங்கே தென்பட்டன. குறட்டாழிசை, வெண்டாழிசை, வெண்டுறை, வெளி விருத்தம், ஆசிரியத் தாழிசை, ஆசிரியத்துறை, கலித்தாழிசை என்னும் பாவினங்கள் காட்சிசாலையை அடைந்தன. பஞ்சபாண்டவர் வனவாசம், அல்லியரசாணி மாலை முதலிய அம்மானை நூல்கள் புகழேந்திப் புலவரால் பாடப்பட்டன என்பது உண்மையானால், குறள்வெண்டுறை தோன்றியதிலிருந்து நல்ல செல்வாக்குடனேயே இருந்து வருகிறது எனலாம். இனி, கி. பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே பாவின வகையைச் சேர்ந்த சிந்து என்னும் பாடல்கள் பாடலிற் பயிலத் தொடங்கின. அகப்பேய்ச்சித்தர், குதம்பைச்சித்தர், கடுவெளிச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டுச்சித்தர் முதலிய சித்தர் பாடல்களில் சிந்துப் பாடல்கள் முன்னோடும் பிள்ளைகளா யுள்ளன. குறவஞ்சி, பள்ளு முதலியவை பெரும்பாலும் சிந்து களாலேயான நூல்களேயாகும். பாரதியார் காலத்திலிருந்து அச்சிந்து வகைகள் மிக்க செல்வாக்குப் பெறலாயின. இசையும் நாடகமும் முத்தமிழில் இரண்டெனினும் பிற்காலத் தேதான் அவ்விருவகைத் தமிழிலும் இன்றுள்ள இசைப் பாடல்கள் தோன்றின. பேசும்படம் தோன்றுமுன் அவை நாடக மேடையில் நடம்பயின்றன. இங்ஙனம் தோன்றி வளர்ந்துள்ளது தமிழ்ச் செய்யுள் மரபு. தமிழகத்தில் ஆங்கில ஆட்சி நிலைபெற்றபின் எவ்வகையான பாடல்கள் பாடும் வழக்கமும் வழக்கற்றுப் போயிற்று. தமிழ்த்தாயின் ஒருகால் நொண்டியாகவே போய்விட்டது; ஆங்கில ஆட்சியின் இறுதிக் காலத்தே அக்காலை ஒருவாறு ஊன்றி நடக்கத் தொடங்கினாள். அக்காலைப் பழையபடி வலுப்பெறச் செய்வது - தமிழன்னையின் இருகால்களையும் எழிலுறச் செய்வது-செய்து, முத்தமிழ்ச் செல்வியை முன்போலப் பாடியாடி ஓடி விளையாடும்படி செய்வது தற்காலத் தமிழ்க்கவிஞர்களின் இன்றியமையாக் கடமை யாகும். ஆனால், அங்ஙனம் செய்யத் தற்காலத் தமிழ்க் கவிஞர்கள், பழந்தமிழ்க் கவிஞர்போலக் கவித்திறம் பெற வேண்டும். சிறந்த கவிஞர்கள் ஆகவேண்டும்; நால்வகைப் பாக்களிலிருந்து வளர்ந்து வந்துள்ள எல்லாவகையான தமிழ்ப்பாடல்களையும் பாடும் திறமை பெறவேண்டும். உலக வழக்கிற் சொல்வது போல, இலக்கணத்தை, அதிலும் யாப்பிலக்கணத்தைக் கரைத்துக் குடிக்க வேண்டும். எந்தப் பாடலையும் எளிதில் பாடும் ஆற்றலைப் பெற வேண்டும். அத்தகு முயற்சி தற்காலக் கவிஞர்களுக்கு மிகமிகத் தேவை என்பது அவர்களே அறிந்த தொன்றாகும். 'கவிதைக்கு இலக்கணத்தடைகூடாது. கவிதையை யாப் பிலக்கண மோனை எதுகைச்சிறையில் இடக்கூடாது' என்னும் பேச் செல்லாம், தமிழுக்கு - தமிழ்ச் செய்யுள் நடைக்கு - தமிழிலக்கிய மரபுக்கு - ஆக்கந்தேடும் பேச்சாகாது; அழிவுதேடும் பேச்சே யாகும். தமிழ்க் குளம் இன்னும் வற்றாமல் இருப்பதற்குக் காரணம், இலக்கணம் என்னும் திண்ணிய கரையேயாகும். அத்தகு கரை யினை உடைய விடக்கூடாது; இன்னும் உறுதியுறச் செய்ய வேண்டும். எழுத்தால் சொல் உண்டாகிறது. சொல் பொருளை உணர்த்து கிறது. எனவே, எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றன் இலக்கணமும் ஐயந்திரிபற முறையொடு நன்கு கற்றுக் கொள்ளுதல் வேண்டும். பொருளமையச் சொற்களை அழகாக யாப்பதே யாப்பாகும். யாப்பு - கட்டு. அழகு - அணி. எனவே, தற்காலத் தமிழ்க்கவிஞர்கள் நன்கு - எத்தகைய ஐயப்பாடும் இன்றி - யாப்பிலக்கணங் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். ஒருகாலத்தே யாப்பிலக்கணத்திற்கு இருந்த மதிப்பை நோக்கி னால், இன்றுள்ள இரங்கத்தக்க நிலைக்கு, இம்மியளவு தாய் மொழிப் பற்றுள்ள ஒரு தமிழனும் வருந்தாமல் இருக்க முடியாது. ஒரே காலத்தே பல புலவர்கள் போட்டி போட்டுக் கொண்டு யாப்பிலக்கணம் செய்திருப்பதே அதற்குச் சான்றாகும். 1. அவிநயனார் 7. பரிமாணனார் 2. காக்கைபாடினியார் 8. பல்காயனார் 3. சிறுகாக்கை பாடினியார் 9. பேராசிரியர் 4. கையனார் 10. மயேச்சுரர் 5. நல்லாதனார் 11. வாய்ப்பியனார் 6. நற்றத்தனார் முதலிய நல்லிசைப் புலவர்கள் தத்தம் பெயரால் யாப்பிலக்கணஞ் செய்து, தமிழ்ச் செய்யுள் மரபைப் போற்றி வளர்த்து வந்திருக் கின்றனர். 1. அடிநூல் 4. செயிற்றியம் 2. சங்கயாப்பு 5. நாலடி நாற்பது 3. செயன்முறை 6. பெரிய பம்மம் என்பனவும் யாப்பிலக்கணங்கூறும் நூல்களேயாம். அப்பழந் தமிழ் நூல்களை யெல்லாம் நாம் பெறமுடியாத பெருங்குறை யுடைய மாயினேம். இன்று பயிற்சியிலுள்ள யாப்பிலக்கண நூல்கள்:- 1. தொல்காப்பியச் செய்யுளியல் 2. யாப்பருங்கலம் 3. யாப்பருங்கலக்காரிகை என்னும் மூன்றுமே யாம். இன்று புலவர் பட்டம் பெற்றவரே யன்றி, அது பெறாத தமிழ் இளைஞர்களும் கவிபாடி வருகின்றனர். அன்னாருக்காக எளிய முறையில் விளக்கமாக எம்மால் செய்யப்பட்டதே யாப்பதிகாரம் (1959). யாப்பதிகாரம் அன்னார்க்குப் பெரிதும் பயன்பட்டு வருகிறது. இனி, தமிழ்ப்புலவர் பட்டப்படிப்புப் பாடத்திட்டத்தில் செய்யுளியற்றும் பகுதி இன்மையால், புலவர் பட்டம் பெற்றோரில் பெரும்பாலோர், கவித்திறம் வாய்க்கப் பெறாதவராக உள்ளனர் என்பது மிகைபடக் கூறுதலாகாது. தமிழ்ப்புலவர் பட்டம் பெற்றும், பழந்தமிழ்ப் புலவர்கள் போலக் கவிபாடும் ஆற்றல் பெறாமல் இருக்கும் நிலையில் தமிழ்க் கல்வித்திட்டம் அமைந்திருப்பது தமிழ்த்தாயின் குறைபாடேயாகும். அன்னார்க்கும் யாப்பதிகாரம் பயன்பட்டு வருகிறதென்பது குறிப்பிடத் தக்கதாகும். தற்கால இளந்தமிழ்க் கவிஞர்களிற் பெரும்பாலோர், செய்யுள் அடிகளில் மோனை எதுகை எங்கெங்கு எவ்வாறு வரவேண்டும் என்பதை அறியாதவர்களாகவே இருக்கின்றனர். அத்தகைய பல இளங்கவிஞர்களின் விருப்பத்திற் கிணங்கவே தொடையதிகாரம் என்னும் இந்நூல் செய்யப் பட்டதாகும். இந்நூலின்கண், சங்ககால முதல் இன்று வரையுள்ள தமிழ்ச் செய்யுள் இலக்கிய நூல்களான - சங்க இலக்கியங்கள், காவியங்கள், சமயநூல்கள், புராணங்கள், சிறுநூல்கள், சித்தர் பாடல்கள், தனிப்பாடல் நூல்கள், சில்லறைக்கோவை நூல்கள் முதலிய 180க்கு மேற்பட்ட நூல்களிலிருந்து, பாவும், பாவினமும், சிந்துகளும் ஆகிய மூவகைப்பட்ட வெவ்வேறு வகையான 650க்கு மேற்பட்ட செய்யுட்கள் - பாடல்கள் - எடுத்துக்காட்டி, ஒவ்வொரு பாடலின் அடிகளிலும், எந்தெந்தச் சீர்களில் மோனை வந்துள்ளது, எந்தெந்தச் சீர்களில் மோனை வரவேண்டும் என்பதும், அப்பாடல்களின் அடியெதுகை அமைதியும் நன்கு விளக்கப் பட்டுள்ளன. வெண்பா முதலிய அறுவகைப் பாக்கள், குறட்டாழிசை முதலிய பதினாலுவகைப் பாவினங்கள், சமனிலைச் சிந்து, வியனி லைச் சிந்து வகைகள், நொண்டிச்சிந்து முதல், கும்மி, தெம்பாங்கு, உடுக்கைப் பாட்டு, ஒப்பாரி ஈறாகவுள்ள பலவகைச் சிந்துப் பாடல்கள், இசைப் பாடல், வண்ணப் பாடல், நாடகப்பாடல் ஆகிய தமிழிலுள்ள எல்லா வகையான பாடல்களுக்கும் தொடையமைதியோடு, இலக்கணமும் கூறப்பட்டுள்ளது. இந்நூலின் கண் எடுத்துக்காட்டி விளக்கப்பட்டுள்ள பாடல் வகைகளுள், தமிழிலுள்ள எல்லாவகையான ஓசை வேறுபாடுடைய பாடல்களும் அடங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. வெவ்வேறு வகையான ஓசை வேறு பாடுடைய 46 எண் சீரடி விருத்தங்கள் எடுத்துக்காட்டி விளக்கப் பட்டுள்ளன. இந்நாற்பத்தாறு வகையுள், தமிழிலுள்ள எண்சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தங்கள் எல்லாம் அடங்கும். இவற்றைவிட வேறுபட்ட ஓசையுடைய எண்சீரடி விருத்தம் இராதென்றே கூறலாம். இருக்கினும், இவற்றுள் ஏதாவதொரு வகையில் அடங்கும் எனலாம். தமிழிலுள்ள பாடல்வகை ஒவ்வொன்றினும் இத்தனை வகை உள்ளனவா என்பதை அறிந்து, கற்போர்க்கு வியப்பும் உவப்பும் உண்டாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்நூலை நன்கு கற்கின் யாப்பிலக்கணத்தைப் பற்றிய, தமிழ்ச் செய்யுட்களைப் பற்றிய, கவிபாடுதலைப் பற்றிய எத்தகைய ஐயப்பாடும் இரா. இங்கு எடுத்துக்காட்டி விளக்கப்பட்டுள்ள பாடல்களைச் சேர்ந்த பாடல்களையும் படிக்கவேண்டும் என்னும் ஆர்வம் உண்டாகு மாகையால், இந்நூலைப் படிப்போர்க்குத் தமிழ்ச் செய்யுள் நூல்களை யெல்லாம் படிக்கும் வாய்ப்பும் உண்டாகும். எனவே, இந்நூல் கவிபாடிப் பழகுவோர்க்கே அன்றிப் பொதுவாக எல்லோர்க்கும் பெரிதும் பயன்படும் என்பது திண்ணம். தமிழ் மக்கள் இந்நூலை விரும்பிக் கற்றுணர்ந்து தமிழ்ச் செய்யுள் வகை, அவற்றின் இலக்கணம், தொடையைமதி ஆகிய வற்றை அறிந்து, தமிழ் நூல்களைக் கற்கும் முயற்சியில் ஈடுபட்டுத் தமிழ் வளர்ச்சியில் ஆர்வமும் அக்கறையும் கொள்வதே இந்நூற் பயனாகும். தற்காலத் தமிழ்க் கவிஞர்களை, பழந்தமிழ்ப் புலவர்கள் போல, பிற்காலக் கவிஞர்கள் போலச் சிறந்த கவிஞர்களாகச் செய்து, தமிழ்ச் செய்யுள் நடையைத் திறப்பாடுறச் செய்து, தமிழ்த் தாயை மகிழ்விப்பது இந்நூலின் பயனுக்குப் பயனாகும். வாழ்க தமிழ்ச் செய்யுள் மரபு!  இந்நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள நூற்பெயர் விளக்கம் அகம் - அகநானூறு அகப் - அகப்பேய்ச்சித்தர் பாடல் அப் - அப்பர் தேவாரம் அமு - அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அர - அரசியலரங்கம் அரி-கு - அரிச்சந்திரக்கும்மி அரி-நா - அரிச்சந்திர நாடகம் அரி - அரிச்சந்திர புராணம் அரு - அருட்பா அருண் - அருணகிரிநாதர் திருப்புகழ் அல்லி - அல்லியரசாணி மாலை அவி - அவிநயம் அழு - அழுகணிச்சித்தர் பாடல் ஆசா - ஆசாரக் கோவை ஆசி - ஆசிய சோதி ஆத் - ஆத்திசூடி ஆதி - ஆதிரை இடைக் - இடைக் காட்டுச்சித்தர் பாடல் இடைம - இடைமருதூர்க் கலம்பகம் இ.கா - இராமகாதை இரா. - இராமாயண ஏற்றம். இ.சி - இராமாயணச்சிந்து இ.பா.ஏ.- இலக்குமி பார்வதி ஏசல் இனி - இனியவை நாற்பது இன்ப - இன்பரசத் தெம்பாங்கு உத்.சி - உத்தமிச் சிந்து உரி - உரியியல் உல - உலகநீதி உ.கெ - உலகப் பெரியோன் கென்னடி எரி.எ - எரிந்த கட்சி, எரியாக் கட்சி ஏரெ - ஏரெழுபது ஐங் - ஐங்குறுநூறு ஒப் - ஒப்பாரி கடுவெ - கடுவெளிச்சித்தர் பாடல் கந் - கந்தபுராணம் க.அ. - கந்தரநுபூதி கக - கந்தர் கலிவெண்பா கப் - கப்பற் பாட்டு கம் - கம்பராமாயணம் கலி - கலித்தொகை கலிங் - கலிங்கத்துப் பரணி க.சி - கன்னியம்மன் சிந்து காக் - காக்கை பாடினியம் காஞ் - காஞ்சிப் புராணம் காத் - காத்தவராயன் கதை காயக் - காயக் கப்பல் குசே - குசேலோபாக்யானம் குண் - குண்டல கேசி குதம் - குதம்பைச் சித்தர் பாடல் கு.தா - குழந்தைத் தாலாட்டு குள் - குள்ளத்தாராச் சிந்து குறிஞ் - குறிஞ்சிப்பாட்டு குறுந் - குறுந்தொகை குற் - குற்றாலக் குறவஞ்சி குன் - குன்றுடையாக் கவுண்டன் கதை கொன் - கொன்றை வேந்தன் கோ ஒ - கோமளா ஒப்பாரி கோமா - கோமாளிப்பாட்டு கோயி - கோயிற் புராணம் கோ நா - கோவல நாடகம் கோ நா - கோவலன் நாடகம் சஞ் - சஞ்சீவி பர்வதத்தின்சாரல் சந்.தெ - சந்தனத்தேவன் தெம்பாங்கு சம் - சம்பந்தர் தேவாரம் சர்வ - சர்வசமய சமரசக் கீர்த்தனை சா.ஒ - சாரதா ஒப்பாரி சிதம் - சிதம்பரச் செய்யுட் கோவை சி.கொ - சித்தையன் கொலைச்சிந்து சிந் - சிந்தாமணி சில - சிலப்பதிகாரம் சிசி - சிவஞான சித்தியார் சி.கு. - சிவன்மலைக் குறவஞ்சி சிறுத் - சிறுத்தொண்டன் கதை சிறு - சிறுபாணாற்றுப் படை சீ.ப - சீகாழிப் பள்ளு சீகா - சீகாளத்திப் புராணம் சீறா - சீறாப்புராணம் சுத - சுதந்தரத் தங்கச் சிந்து சுந் - சுந்தரர் தேவாரம் செய் - செய்யுளியல் சேபி - சேக்கிழார் பிள்ளைத்தமிழ் சேவ - சேவற்பாட்டு ஞாசி - ஞானத்தங்கச் சிந்து ஞாகு - ஞானரத்தினக் குறவஞ்சி ஞாஏ - ஞான ஏற்றம் தயா - தகடூர் யாத்திரை தக் - தக்கயாகப் பரணி தங்தெ - தங்கந் தில்லாலே தெம்பாங்கு தங்.தங் - தங்கமே தங்கச் சிந்து தஞ் - தஞ்சைவாணன் கோவை த.ம - தலையணை மந்திரம் தனி - தனிப்பாடல் திரட்டு தாயு - தாயுமானவர் பாடல் தி.நூ - திணைமாலை நூற்றைம்பது தி.ஐ. - திணைமொழி ஐம்பது திப - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி குறள் - திருக்குறள் திகோ - திருக்கோவையார் திபல் - திருப்பல்லாண்டு திபா - திருப்பாவை திநீப - திருநீலகண்டன் பள்ளு திம - திருமந்திரம் திக - திருவரங்கக் கலம்பகம் திரு - திருவாசகம் திவி - திருவிசைப்பா திபு - திருவிளையாடற் புராணம் தேசி - தேசிகவிநாயகம் பிள்ளை பாடல் தேசிங் - தேசிங்குராசன் கதை தேம் - தேம்பாவணி தொல் - தொல்காப்பியம் தொகள - தொல்காப்பியக் களவியல் தொசெய்- தொல்காப்பியச் செய்யுளியல் நந்த - நந்தன் சரித்திரக்கீர்த்தனை நல்ல - நல்லதங்காள் கதை நல்ச - நல்லதங்காள் சரித்திரக்கீர்த்தனை நல்கா - நல்லதம்பிச்சர்க்கரை மன்றாடியார் காதல் நள - நளவெண்பா நற்ற - நற்றத்தம் நற் - நற்றிணை நன் - நன்னூல் நாட் - நாட்டுப் பாடல் நாம - நாமக்கல் கவிஞர் பாடல் நாவ - நாமக்கல் வழிநடைச்சிந்து நால - நாலடியார் நாலா - நாலாயிரம் நான் - நான்மணிக்கடிகை நெடு - நெடுநல் வாடை நெரு - நெருஞ்சிப்பழம் நைட - நைடதம் பஞ்ஒ - பஞ்சகல்யாணி ஒப்பாரி பஞ்வ - பஞ்சபாண்டவர் வனவாசம் பபா - பட்டினத்தார் பாடல் பட் - பட்டினப்பாலை பதிற் - பதிற்றுப்பத்து பத்தி - பத்திரகிரியார் பாடல் பசி - பரிதாபச் சிந்து பரி - பரிபாடல் பலஏ - பலசரக்கு ஏலப்பாட்டு பல்கா - பல்காயம் பழம் - பழம்பாடல் பகா - பழனியாண்டவர் காவடிச் சிந்து பதி - பழைய திருவிளையாடல் பாக - பாகவதம் பாஞ் - பாஞ்சாலி சபதம் பாம் - பாம்பாட்டிச்சித்தர் பாடல் பாஏ - பாரத ஏற்றப்பாட்டு பாதா - பாரதிதாசன் பாடல் பார - பாரதியார் பாடல் பிர - பிரபுலிங்கலீலை புகை - புகைவண்டிச் சிந்து புரட் - புரட்சிக் கவி புகு - புலவர் குழந்தை பாடல் புறத் - புறத்திணையியல் புறம் - புறநானூறு புறா - புறாப்பாட்டு பெரி - பெரியபுராணம் பெருங் - பெருங்கதை பெரும் - பெரும்பாணாற்றுப்படை பேபா - பேயோட்டப்பாட்டு பொரு - பொருநராற்றுப்படை மணி - மணிமேகலை மக - மதுரைக் கலம்பகம் மது - மதுரைக்காஞ்சி மயா - மயான காண்டம் மலை - மலைபடுகடாம் மனோ - மனோன்மணீயம் மீபி - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முக் - முக்கூடற் பள்ளு முது - முதுமொழிக் காஞ்சி முபி - முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் முகீ - முத்துத்தாண்டவர் கீர்த்தனை முச - முத்துநாச்சி சண்டை முகு - முத்துவீராயி கும்மி முந் - முந்திரி இலக்கம் முஒ - முருகர் ஒயில்கும்மி முருகு - திருமுருகாற்றுப்படை முல் - முல்லைப் பாட்டு யாக - யாப்பருங்கலம் யாகா - யாப்பருங்கலக் காரிகை வம - வள்ளி மணச்சிந்து வசி - வளையற் சிந்து வளை - வளையாபதி வாட் - வாட் போக்கிக் கலம்பகம் வில் - வில்லிபாரதம் வெண் - வெண்பாமாலை வெவ - வெள்ளக்கோயில் வழிநடைச்சிந்து வெற் - வெற்றிவேற்கை  தொடையதிகாரம் தொடையதிகாரம் என்பது, தொடையினது அதிகாரம் என, தொடையிலக்கணம் கூறும் நூலுக்குப் பெயராயிற்று. தொடை யாவது - எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் செய்யுள் உறுப்புக்கள் ஆறனுள் ஒன்றாகும். அது, மோனை முதலாக ஐந்து வகைப்படும். அதிகாரம்-ஆட்சி அதாவது, தலைமைப்பாடு. செய்யுளின் அடிகளில் வரும் தொடை யிலக்கணத்தின் சிறப்புக் கூறுவதால், இந்நூல் இப்பெயர்த்தாயிற்று. அது, முதலியல், எடுத்துக்காட்டியல், ஒழிபியல் என மூன்று வகைப்படும். 1. முதலியல் யாப்பிலக்கணம் கற்றுக் கவிபாடிப் பழகி வரும் இளங் கவிஞர்கட் காகவே இந்நூல் செய்யப்பட்ட தெனினும், எளிமையும், விளக்கமும், பயன்பாடும், நினைவுகூர்தலும் கருவியாக, தொடையின் முன்னர்த்தாகிய எழுத்து முதலிய செய்யுளுறுப்புக்களும், தொடையும், தொடை பயிலும் பாவும் பாவினமும் ஈண்டுச் சுருக்கமாக எடுத்து ரைக்கப் படுவதால், சுருக்கமாக அவற்றின் இலக்கணங் கூறுவதால், இது, முதலியல் எனப் பெயர் பெற்றது. முதல்-செய்யுளுக்கு முதல். ஆவன-எழுத்து முதலியன. இயல்-இலக்கணம். 1. எழுத்தும் அசையும் வாய்பாடு எழுத்து அசை 1. க குறில் 2. கல் குற்றொற்று நேர் 3. கா நெடில் 4. கால் நெட்டொற்று நேர் 5. கட குறிலிணை 6. கடல் குறிலிணையொற்று 7. கடா குறினெடில் நிரை 8. கடாம் குறினெடிலொற்று இவற்றின் விளக்கத்தை யாப்பதிகாரத்திற் காண்க. தொல் காப்பிய உரையாசிரியர், ‘அ ஆ, அல் ஆல், பல பலா, புகர் புகார்’ எனவும், யாப்பருங்கலக்காரிகை ஆசிரியர், ‘ஆழி, வெள் வேல், வெளி சுறா, நிறம் விளாம்’ எனவும், எழுத்துக்களுக்கு வாய்பாடு காட்டினார். குறிப்பு : உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் என்னும் 247 தமிழ் எழுத்துக்களும் யாப்பிலக்கணத்தில் - குறில், நெடில், ஒற்று என மூவகையில் அடங்கும். ஒற்று - மெய், ஆய்தம், ஒற்றினி லடங்கும். விளக்கம் யாப்பதிகாரத்திற் காண்க. குறில், நெடில் என்னும் இவ்விரண்டெழுத்துக்களையும் தனியாகவும், ஒற்றுடனும் உறழின், 1. குறில் 2. குற்றொற்று 3. நெடில் 4. நெட்டொற்று 5. குறிலிணை 6. குறிலிணையொற்று 7. நெடிலிணை 8. நெடிலிணையொற்று 9. குறினெடில் 10. குறினெடிலொற்று 11. நெடிக்குறில் 12. நெடிக்குறிலொற்று எனப் பன்னிரண்டெழுத்தாகும். 7. நெடிலிணை காயா 8. நெடிலிணையொற்று காரான் 11. நெடிற்குறில் காவி 12. நெடிக்குறிலொற்று காவல் என்னும் நான்கும், நேர் நேர்-தேமா- என்னும் ஈரசைச் சீர் ஆவதால், அவற்றை விலக்க, எழுத்து எட்டாயின. இதை நன்கு மனத்தில் இருத்துதல் வேண்டும். வீட்டுக்கு அடிப்படை போன்றவை செய்யுட்கு எழுத்தும், அசையும். ஆகையால், இவற்றின் அறிவு மிகமிக இன்றியமையாத தாகும். எழுத்தும் அசையும் ஒன்றோடொன்று தொடர்புடைய உறுப்புக்களாகும். ஓரெழுத்தால் ஆகிய அசை நேரசை ஈரெழுத்தால் ஆகிய ஆசை நிரையசை நேர் - தனி நேரசை தனியசை நிரை - இணை நிரையசை இணையசை யாப்பிலக்கணத்தில் ஒற்றெழுத்துக்கு மதிப்பில்லை. ‘ஈர்க்’ என, ஈரொற்று வரினும் ‘கால்’ என்பதுபோல நெட்டொற்றே யாகும். பயிற்சி இருள்படப் பொதுளிய பராரை மராஅத் துருள்பூந் தண்டார் புரளு மார்பினன். முரு - 10 இவ்வடிகளிலிருந்து குறில் முதலிய எட்டெழுத்துக்களுக்கும் ஒவ்வோர் காட்டுத் தருக. 2. சீர் நேர், நிரை என்னும் அசை, இரண்டும் மூன்றும் நான்கும் சேர்ந்து வருவது - சீர் எனப்படும். 1. ஈரசைச்சீர் - 4 அசை வாய்பாடு சீர் 1. நேர் நேர் தேமா 2. நிரைநேர் புளிமா மாச்சீர் 3. நிரைநிரை கருவிளம் 4. நேர்நிரை கூவிளம் விளச்சீர் 2. மூவசைச்சீர் - 8 1. காய்ச்சீர் - 4 அசை வாய்பாடு 1. நேர்நேர் நேர் தேமாங்காய் 2. நிரைநேர்நேர் புளிமாங்காய் 3. நிரைநிரைநேர் கருவிளங்காய் 4. நேர்நிரைநேர் கூவிளங்காய் இவை நான்கும்-மாச்சீர், விளச்சீர் என்னும் ஈரசைச் சீர் நான்கனோடும் நேரசை சேர்ந்தானவை. 2. கனிச்சீர் - 4 அசை வாய்பாடு 1. நேர் நேர் நிரை தேமாங்கனி 2. நிரை நேர் நிரை புளிமாங்கனி 3. நிரை நிரை நிரை கருவிளங்கனி 4. நேர் நிரை நிரை கூவிளங்கனி இவை நான்கும் - அவ்வீரசைச்சீர் நான்கனோடும் நிரையசை சேர்ந்தானவை. இவற்றின் விளக்கத்தை யாப்பதிகாரத்திற் காண்க. பயிற்சி - 1 மடன்மலி கொன்றை துன்றுவா ளெருக்கும் வன்னியு மத்தமுஞ் சடைமேல். - சம் ஆய்ச்சியர் சேரி அளைதயிர் பாலுண்டு. - நாலா ஒன்னலர் மணிமுடி உரிஞ்சு தாளினான். - நைட இவ்வடிகளிலுள்ள ஈரசைச்சீர்களை எடுத்துக்காட்டுக. பயிற்சி - 2 அரியானை யந்தணர்தஞ் சிந்தை யானை அருமறையி னகத்தானை யணுவை யார்க்கும். - அம் பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடி. - சுந் இவ்வடிகளிலுள்ள காய்ச்சீர்களை எடுத்துக்காட்டுக. பயிற்சி - 3 வசையில்புகழ் வயங்குவெண்மீன். - பட் - 1 மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும் - பட் - 127 புழைவாயில் போகிடைகழி. - பட் - 144 இரவுச்செய்யும் வெண்டிங்களும். - மது - 8 இவ்வடிகளிலுள்ள கனிச்சீர்களை எடுத்துக்காட்டுக. 3. நாலசைச்சீர் - 16 1. தேமாந்தண்பூ 9. தேமாந்தண்ணிழல் 2. புளிமாந்தண்பூ 10. புளிமாந்தண்ணிழல் 3. கருவிளந்தண்பூ 11. கருவிளந்தண்ணிழல் 4. கூவிளந்தண்பூ 12. கூவிளந்தண்ணிழல் 5. தேமாநறும்பூ 13. தேமாநறுநிழல் 6. புளிமாநறும்பூ 14. புளிமாநறுநிழல் 7. கருவிளநறும்பூ 15. கருவிளநறுநிழல் 8. கூவிளநறும்பூ 16. கூவிளநறுநிழல் இவற்றின் விளக்கத்தை யாப்பதிகாரத்திற் காண்க. குறிப்பு : தண்பூ நேர்நேர் தேமா நறும்பூ நிரைநேர் புளிமா நறுநிழல் நிரைநிரை கருவிளம் தண்ணிழல் நேர்நிரை கூவிளம் என, மாச்சீர், விளச்சீர் என்னும் ஈரசைச்சீர் நான்கனோடும், அவ்வீரசைச்சீர் நான்கையும், தண்பூ நறும்பூ, தண்ணிழல், நறுநிழல் என, வேறுவாய்பாட்டால் உறழ்ந்தனவே - தேமாந்தண்பூ முதலிய நாலசைச்சீர் பதினாறுமாகு மென்க. நாலசைச்சீர் மிகச் சிறுபான்மை அருகிவரும். தளை கொள்ளும் போது, பூச்சீர் எட்டும் - காய்ச்சீர் போலவும், நிழற்சீர் எட்டும் - கனிச்சீர் போலவும் கொள்ளப்படும். அதாவது, பூமுன் நேர்வரின் - வெண்டளையாகவும், நிரை வரின் - கலித்தளையாகவும், நிழல்முன் நிரைவரின் ஒன்றியவஞ்சித் தளை யாகவும், நேர்வரின் - ஒன்றா வஞ்சித்தளையாகவும் கொள்ள வேண்டும் மென்க. குறிப்பு : வெண்பா வடிகளில் நாலசைச்சீர்வரின் செப்ப லோசை சிதையுமாகையால், வெண்பாவில் நாலைச்சீர்கள் வரப் பெறா. பயிற்சி 1. நேர் நேர் நேர் நேர் தேமாந்தண்பூ. ஏனைப் பதினைந்து சீர்களையும் இவ்வாறு அலகிடுக. 2. மலைநாறிய வியன்ஞாலத்து வலமாதிரத்தான் வளிகொட்ப. - மது -4, 5 மைதீர்ந்து கிளர்ந்துவிளங்க. - மது -9 அள்ளற்பள்ளத் தகன்சோணாட்டு. - பழம் மேவியமா சாத்துவானென்பார் - பெற்று மேவளர்த்த மைந்த னென்பேர் கோவலனென்பார். - கோ நா இவ்வடிகளிலுள்ள நாலசைச்சீர்களை எடுத்துக்காட்டுக. வாய்பாடு எழுத்து அசை 4. நேர் நாள் நிரை மலர் அசைச்சீர் நேர்பு காசு நிரைபு பிறப்பு வெள்ளீற்றுச்சீர் இவை நான்கும் வெண்பாவின் ஈற்றில் வரும். இந்நான்கு மன்றி, வெண்பாவின் ஈற்றில் தேமா முதலிய சீர்கள் வரப்பெறா. இவற்றைத் திருக்குறள் முதலிய வெண்பாக்களிற் கண்டறிக. நாள், மலர் என்னும் அசைச்சீர் இரண்டும் வெண்பாவின் ஈற்றிலன்றி, வேறிடங்களில் வாரா; வேறு செய்யுட் களினும் வாரா. கலிப்பாவின் உறுப்புக்களுள் ஒன்றான அம்போதரங்கத்தில் சிறுபான்மை அசைச் சீராக வரும். காசு, பிறப்பு என்னும் சீர்கள், வெண்பாவின் ஈற்றிலன்றி மற்ற இடங்களில் வரின், காசு - நேர் நேர் - தேமா; பிறப்பு - நிரைநேர் - புளிமா என அலகிடப்பெறும். இவற்றின் விளக்கத்தை யாப்பதிகாரத்திற் காண்க. 3. தாளை - 7 1. நேரொன்றாசிரியத்தளை 5. கலித்தளை 2. நிரையொன்றாசிரியத்தளை 6. ஒன்றியவஞ்சித்தளை 3. இயற்சீர் வெண்டளை 7. ஒன்றாத வஞ்சித்தளை 4. வெண்சீர் வெண்டளை எனத் தளை ஏழாம். இவற்றின் விளக்கத்தை யாப்பதிகாரத்திற் காண்க. இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் அன்றி, வெண்பாவில் வேறு தளைகள் வரப்பெறா. இது நன்கு நினைவு கூரத்தக்கது. வெண்பாவில் இவ்விரண்டும் அல்லாத பிற தளைகள் வரின், தளைதட்டுதல் எனப்படும். தளைதட்டாமல் வெண்பாப் பாடுதல் வேண்டும். தளைதட்டிய வெண்பாக்களை யாப்பதிகாரத்தில் கவி யரங்கம் என்னும் பகுதியில் காண்க. பயிற்சி தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். - குறள் விறலிழை நெகிழ்த்த வீவருங் கடுநோய். - குறி-3 தேம்படு கவுள சிறுகண் யானை. - முல்-31 பொய்கைப்பூப் புதிதுண்ட வரிவண்டு கழிப்பூத்த நெய்தற்றா தமர்ந்தாடிப் பாசடைச் செப்பினுள். - கலி-74 உருகெழுதிற லுயர்கோட்டத்து முருகமர்பூ முரண்கிடக்கை வரியணிசுடர் வான்பொய்கை. - பட்-36-8 இவ்வடிகளிலுள்ள தளைகளை அலகிடுக 4. அடி - 5 1. இருசீர் குறளடி 4. ஐஞ்சீர் நெடிலடி 2. முச்சீர் சிந்தடி 5. அறுசீர் கழிநெடிலடி 3. நாற்சீர் அளவடி என அடி ஐந்தாம். இவற்றின் விளக்கத்தை யாப்பதிகாரத்திற் காண்க. அளவடி - நேரடி எனவும் வழங்கும். ‘அடி’ எனில், அளவடி யையே - நாற்சீரடியையே - குறிக்கும். அளவில் குறைந்தது சிந்து, குறள் எனவும், மிக்கது நெடில், கழிநெடில் எனவும் பெயர் பெற்றன. 6, 7, 8, 12, 14 சீர்க்கழிநெடிலடிகளே பயின்று வரும். 9, 10, சீரடிகள் மிகமிக அருகிவரும். இவை அத்தகு சிறப்புடையனவுமல்ல. பன்னிருசீர்க் கழிநெடிலடியும், பதினான்குசீர்க் கழிநெடிலடியும் - அறுசீரடியும், எழுசீரடியும் இரண்டு ஒரு மோனைத்தொடைபட வந்த இரண்டடிகளே யாகும். பதினான்கு சீரடி விருத்தத்தை - எழுசீர்க் கழிநெடிலடி இரட்டை ஆசிரிய விருத்தம் என வழங்குதலே இதனை வலியுறுத்தும். 16, 32 முதலிய சீரடிகள் என்பனவெல்லாம் இவ்வாறு மோனைத் தொடையால் வளர்த்துக் கொள்வனவே யாகும். இவ் ஐவகை அடிகட்கும் எடுத்துக்காட்டு, ‘எடுத்துக் காட்டியல்’ என்னும் அடுத்த இயலிற் காண்க. இவை சீர்வகை அடிகள் எனப்படும். அதாவது, சீரின் அளவால் பெயர் பெறுபவை. தொல்காப்பியர் காலம் வரை, எழுத்தெண்ணிப் பாடும் கட்டளையடி முறையும் வழக்கத்தில் இருந்து வந்ததென்பது, தொல். செய்யுளியல் 36-40 சூத்திரங்களாற் பெறப்படும். அது, 4 எழுத்து முதல் 6 எழுத்து முடிய உள்ள மூன்றடியும் குறளடி எனப்படும். விளக்கம் தொல்காப்பியத்திற் காண்க. இவ்வடி 625 வகைப்படும் என்பதை, ஐவகை யடியும் விரிக்குங் காலை. - செய் - 50 என்னும் தொல்காப்பியச் செய்யுளியல் சூத்திரவுரையிற் காண்க. 5. தொடை அடிகளை ஒன்றோடொன்று தொடுப்பது - தொடை எனப்படும். தொடுத்தல் - இணைத்தல், கட்டுதல். இரண்டு அடிகளிலே யன்றி, ஓரடியிலுள்ள சீர்களிலுள்ள இத்தொடை வரும், சீர்களில் வருந் தொடைகளின் - சிறப்பாக மோனைத் தொடையின் - விளக்கமே இந்நூல் நுதலிய பொருளாகும். செய்யுளின் ஓசை நயத்துக்கும் இனிமைக்கும் சிறப்புக்கும் இத்தொடை உறுப்பு இன்றியமையாத தாகும். “தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்” என்பது பழமொழி. சீரும் தளையும் அடியும் ஒவ்வொரு செய்யுட்கே உரியன. அதாவது, இவற்றால் செய்யுள் வேறுபாடு உண்டாகும். குறிப்பு : மாச்சீரும் விளச்சீரும், இருவகை வெண்தளையும், அளவடியும் சிந்தடியும் வெண்பாவுக் குரியவையாகும். அதாவது, இவற்றையுடையதே வெண்பாவாகும். எழுத்தும் அசையும் போல எல்லாப்பாவுக்கும் பொதுவாக உடையது தொடை யாகும். எழுத்தும் அசையும் சீர்களை ஆக்குதல் மாத்திரை அமையும். தொடையோ, சீர்க்கும், சீராலாகும் அடிக்கும், அடியாலாகும் செய்யுட்கும் சிறப்பைத் தந்து, செய்யுளின் நடையின்பத்திற்குக் காரணமாய் நிற்பதாகும். முதற்றொடை, உறழ்ச்சித்தொடை என, அத்தொடை - இருவகைப்படும். இரண்டு அடிகளில் வருவது - முதற்றொடை. ஓரடியிலுள்ள சீர்களில் வருவது - உறழ்ச்சித் தொடை உறழ்ச்சித் தொடையை - விகற்பத் தொடை எனவும் வழங்குப. முதற்றொடையை, அடை யின்றித் தொடை எனவும், உறழ்ச்சித் தொடையை - தொடைவகை எனவும் வழங்குதலும் உண்டு. 1. மோனை 4. இயைபு 2. எதுகை 5. அளபெடை 3. முரண் என, அம்முதற்றொடை ஐந்து வகைப்படும். 1. மோனை முதலெழுத் தொன்றுதல் மோனை யாகும். ஒன்றுதல் - ஒரே எழுத்து வருதல். முதலெழுத்து - சீரின் முதலெழுத்து. காட்டு கற்றுத் தெளிந்தினிது கற்ற படிநடவான் கற்றவ னாவானோ காண். -புகு இவ்வடிகளின் முதற்சீரின் முதலெழுத்து, ‘க’ ஒன்றே வந்திருத்தல் - அடிமோனை எனப்படும். முதலடியின் முதற்சீரினும் மூன்றாஞ்சீரினும் முதலெழுத்து ‘க’ ஒன்றே வந்திருத்தல் - சீர்மோனையாகும். இரண்டா மடியினும் சீர்மோனை காண்க. இச்சீர்மோனையே - மோனை வகை அல்லது தொடைவகை எனப்படும். 2. எதுகை இரண்டாமெழுத் தொன்றுதல் எதுகையாகும். இரண்டா மெழுத்து - சீரின் இரண்டாமெழுத்து. முன்னர் மோனைத் தொடைக்குக் காட்டிய செய்யுளின் இரண்டடிகளிலும் முதற்சீரின் இரண்டாமெழுத்து, ‘ற்’ ஒன்றே வந்திருத்தல் - அடியெதுகை யாகும். அப்பாட்டின் முதலடியின் முதற்சீரிலும் மூன்றாஞ்சீரிலும் இரண்டாமெழுத்து, (கற்று-கற்ற) ‘ற்’ ஒன்றே வந்திருத்தல்-சீரெதுகையாகும். இது, எதுகைத் தொடை வகை. 3. முரண் முரணத் தொடுப்பது முரண்டொடை யாகும். முரணுதல் - மாறுபடுதல், மாறுபட்ட சொற்கள் வருதல் - முரண்டொடை. காட்டு கருங்கழல் வெண்குடை கார்நிகர் வண்கை. - நன் கருமை x வெண்மை - முரண். 4. இயைபு இறுவா யொத்தல் இயைபெனப்படுமே. இறுவாய்-இறுதி. இரண்டடிகளின் இறுதி ஒன்றாக வருதல் - இயைபுத் தொடை யாகும். காட்டு மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு. - சம் ‘நீறு’ என்பது இரண்டடியினீற்றிலும் வந்திருத்தல் - இயைபுத் தொடையாகும். நல்லபண் டங்களைக் கண்டறியோம் - ஒரு நாளும் வயிறார உண்டறியோம். - தேசி ‘கண்டறியோம் - உண்டறியோம்’ என, ஓரெழுத்து மாறி வரினும், இயைபுத் தொடையே யாம். இசைப் பாடல்களில் இயைபுத் தொடை பயின்று வரும். 5. அளபெடை அளபெடுத் தொன்றுதல் அளபெடைத் தொடையே. காட்டு ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை ஆஅது மென்னு மவர். - குறள் ஓஒ - ஆஅ - அளபெடைத் தொடை. மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்னும் தொடை ஐந்தனுள், மோனையும் எதுகையும் செய்யுட்கு மிகமிக இன்றியமையாதவை யாகும். மோனையும் எதுகையும் பாட்டின் நடையழகைத் தருத லோடு, பாட்டை எளிதில் மனப்பாடம் செய்தற்கும் ஏற்ற கருவி களாகும். மோனையால் - ஓரடியும், எதுகையால்-அடுத்த அடிகளும் நினைவிற்கு வரும். மோனையும் எதுகையும் கவியின் இரு கண் போன்றவை என்பன மட்டுமல்ல; அவை கவிதையின் உயிர் நாடிகளே யாம் எனல் மிகையாகாது. ஓசையூட்டிச் சொற்களைப் பாட்டாக்கிக் கவிச் சுவையை உண்டாக்குவன மோனையும் எதுகையுமேயாகும். ஒரு பாட்டில் எதுகை மோனை சிறிது தவறினும், ‘இந்தப் பாட்டு எகனை மொகனை இல்லை.’ ‘இதென்ன ஏனை மோனை இல்லாத பாட்டு’ எனக் கல்வியறிவில்லாத மக்களும் குறை கூறும் அத்தகு சிறப்புடையவை மோனையும் எதுகையும், ‘எகனை-மொகனை, ஏனை-மோனை’ என, அன்னார் எதுகைத் தொடையமையக் கூறுவதே, எதுகை மோனைத் தொடைகளின் இன்றியமையாச் சிறப்பினை வலியுறுத்தும், மோனையும் எதுகையும் அமையப் பெறாத பாட்டுக்களை நம் முன்னையோர் - பழந்தமிழர்கள் - பாட்டுக்களாகவே கருதவில்லை என்பது, மேற்காட்டிய எடுத்துக் காட்டால் விளங்குகிற தல்லவா? நெய்யிலையு நீரிலையு நிறுத்துவீன்னு நானிருந்தேன் நெருஞ்சிமுள்ளுக் காட்டினிலே நின்னழுவ வெச்சாயே. பாலிலையும் பழத்திலையும் பதிப்பீன்னு நானிருந்தேன் பாயும்புலிக் காட்டினிலே பதறியழ வெச்சாயே. எங்கேயோ வானம் இடித்ததென்று நானிருந்தேன் தப்பாமல் வானம் தலையி லிடித்ததுவே. - ஒப் எழுதப்படிக்கத் தெரியாத, ஏட்டைக்கையால் தீண்டியும் அறியாத மகளிர், தாய், தந்தை, கணவன் போன்ற இன்றியமை யாதாரை இழந்த துயரம் தாளாமல் கதறியழும்போது, கல்லாக் கவியாகப் பாடியழும் பாடலே இது. ஒப்பாரி, அல்லது அழுகணிச் சிந்து எனப்படும். இப்பாடலில், மோனை எவ்வாறு அமைந்துள்ள தென்பதை நோக்குங்கள். அழுகணிச்சித்தர் என்பார், மெய்ஞ் ஞானக் கருத்துக்களை இவ்வழுகணிச் சிந்தினால் பாடியதனாலேயே அப்பெயர் பெற்றார். சாரட்டு வண்டிகட்டிச் சலசலெனப் போயிவரும் கோரட்டுச் சாட்சிகளா கூடியழ விட்டீரே நாட்டுக் கணக்கருகா நாகரிக மிக்கவுகா வீட்டுக் கணக்கெழுத விட்டுவிட்டுப் போனீரே. - ஒப் இப்பாடல்களில் மோனையும் எதுகையும் முரணும் எப்படி அமைந்துள்ளன? ‘கவிதைக்கு யாப்பிலக்கணத் தடை கூடாது’ என்போர் கூற்று எத்தகைய தப்பான கூற்று என்பதை நன்கு எண்ணிப் பாருங்கள். கவிதையின் உயிர் தொடையன்றோ? மோனை முத்தமிழ் மும்மத மும்பொழி யானை முன்வந் தெதிர்த்தவ னாரடா. - கூத்தர் என்பது ஒட்டக்கூத்தர் உரை. யானையின் பெருமைக்குக் காரண மான மதத்தினைப் பாட்டின் பெருமைக்குக் காரணமான மோனைத் தொடைக்கு உவமை கூறுதலை நோக்குக. மோனையாகிய வெறிச்சுவை சொட்டும் முத்தமிழ்க் கவியானை எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் கூத்தர், மோனைத் தொடையின் சிறப்பினை எங்ஙனம் மதித்துள்ளாரென்பதை எண்ணிப் பாருங்கள்! மோனையின் சிறப்பை ‘மோனை முத்தமிழ் மும்மத மும்பொழி’என, முற்று மோனை நயம்படக் கூறுதலை உற்று நோக்குக. ‘மும்பொழி’ என்பதில் மகரமே (மு) ஒலித்தலையறிக. மோனை எதுகைத் தொடையமையாது பாட்டுப் பாடுதல் கூடவே கூடாது என்பதை மனத்திருத்துங்கள். 6. தொடைச் சிறப்பு 1. மோனை முதலெழுத்து ஒன்றி வருதலாகிய அம்மோனைக்கு, அம்முத லெழுத்து வந்த எழுத்தே வருதலன்றி, இனவெழுத்தும் வரும். அது, இனமோனை, அல்லது கிளைமோனை எனப்படும். இனம், கிளை - ஒருபொருட்கிளவி. இவ்வினமோனையே பெருவழக்கு. இதை நன்கு கவனித்துப் படித்தறிதல் வேண்டும். இனவெழுத்துக்கள்: உயிர் : 1. அ ஆ ஐ ஒள ஓரினம் 2. இ ஈ எ ஏ ஓரினம் 3. உ ஊ ஒ ஓ ஓரினம் இவை தனித்தும், உயிர்மெய்யாகவும் வரும். மெய் : 1. ஞ் ந் ஓரினம் 2. ம் வ் ஓரினம் 3. த் ச் ஓரினம் நேரிசை வெண்பா அகரமோ டாகாரம் ஐகாரம் ஒளகான் இகரமோ டீகாரம் எஏ - உகரமோ டூகாரம் ஒரு ஞநமவ தச்சகரம் தோகாய் கிளையெழுத்தாச் சொல். - பழம் இவ்வெண்பாவை நன்கு மனப்பாடம் செய்து கொள்க. மெய்யெழுத்து மொழிக்கு முதலில் தனித்து வாராதாகையால், ‘ஞ் ந் ம் வ் த் ச்’ என்னும் மெய்களை - ஞ ஞா ஞி ஞீ முதலிய உயிர் மெய்களாகக் கொள்க. தச்சகரம் - தகரம் சகரம். ஞ, ந, ம, வ, த, ச - என்னும் ஆறும் அல்லாத மற்றமெய்கள் அதற்கதுவே மோனையாக வரும். ஞந மவ தச என்பனவும் அதற்கதுவேயும் வரும். மெய்யெழுத்துக்கள் இவ்வாறு - ஞந, மவ, தச - என இனமாக வருவதோடு, அம்மெய்களின் மேல் ஏறிவரும் உயிர்களும் - அ ஆ ஐ ஒள - என இனமாகவே வர வேண்டும், ‘ஞா - ஞெ, மி-வு’ என, மாறிவருதல் கூடா, ‘ஞா - ந, நா, நை, நௌ’ எனவே வர வேண்டும். இவ்வாறு மெய்களும் மற்ற மெய்களும் அதற்கதுவே வரும் போதும், அவற்றின் மேலேறிய உயிர் இவ்வாறு ஓரினமாகவே வரவேண்டும். யா - இ ஈ எ ஏ ஓரினமாகும். ஒன்றின முடித்தலாக, யா - அ ஆ ஐ ஒள - ஓரினமாதலுங் கொள்க. கீழ்வரும் எடுத்துக்காட்டுக்களை நன்கு கவனித்துப் பார்த்து மோனை, இனமோனைகளைக் கண்டுகொள்க. எளிதாதற் பொருட்டு, யாப்பதிகாரத்தில் உள்ளவாறே பெரும் பாலும் எடுத்துக்காட்டுக்கள் தரப்பட்டுள்ளன. காட்டு அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ். - குறள் (அ-அ) ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்.-குறள் (ஐ-ஆ-அ-ஆ) இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும். - குறள் (இ-எ-இ) உரனென்னும் தோட்டியால் ஒரைந்துங் காப்பான். - குறள் (உ-ஓ) உயிர் தனித்து மோனையாக வந்தது, ‘அ - அ’ - தனி மோனை. மற்றவை இனமோனை. ஞாயிலுஞ் சிறந்து நாட்கொடி நுடங்கும். - சில - 15 (ஞா-நா) நீலச் சுனையில் ஞிமிறார்ப்ப. - முரு. 6 (நீ-ஞி) வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன. - நள (வெ-மெ) துடியா நெடிதுயிராச் சோர்ந்து. - நள (து-சோ) செருவெங் காதலின் திருமா வளவன். - சில-5 (செ-தி) ஞ, ந, ம, வ, த ச என்பன உயிரோடு கூடி - உயிர்மெய்யாக - இனமோனையாக வந்தன. ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும். -சில-1 (ஞா-ஞா) நெஞ்சம் நினைப்பினும் நெல்பொரியும் நீளத்தம். - திநூ (நெ-நி-நெ-நீ) மங்கல மென்ப மனைமாட்சி. - குறள் (ம-ம) வையத்து வாழ்வாங்கு வாழ்பவன். - குறள் (வை-வா-வா) துன்றியார் குற்றமும் தூற்று மரபினார். - குறள் (து - தூ) செம்மைப் புதுப்புனல் சென்றிரு ளாயிற்றே. - பரி - 7 (செ - செ) ‘ஞ ந ம வ த ச’ - என்பன அதற்கதுவே மோனையாக வந்தன. குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு. - குறள் (கு-கு-கு) பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல். - குறள் (ப-ப) கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும். - குறள் (கொ-கு) பிறமெய்கள் அதற்கதுவே மோனையாக வந்தன. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும். - குறள் (யா-இ-எ) யானையொடு வீழ்ந்தான் அவன். (யா-அ) யா - இகரவினத்தோடும், அகரவினத்தோடும் மோனையாக வந்தது. ங ட ண ர ல ழ ள ற ன - இவொன்பது மெய்களும் மொழிக்கு முதலாகா. குறிப்பு : எடுத்துக்காட்டியலில் காட்டப் பெறும் செய்யுட் களில் இவ்வாறு அமைந்துள்ள மோனைகளை நன்கு கவனித்துக் கண்டறியுங்கள்.அதுவே இந்நூற் பயனாகும். ஆங்குப் பயன்படுதற் பொருட்டே ஈங்கு எடுத்துக் காட்டப்பட்டன. 2. எதுகை எதுகைக்கு மெய்யெழுத்து வந்ததே வரவேண்டும். உயிர்மெய் எழுத்தாயின் வெவ்வேறு உயிரேறிய உயிர் மெய்யெழுத்து வரலாம்; இனவெழுத்தே (அ ஆ ஐ ஒள) வரவேண்டும் என்பதில்லை. ஆனால், நெடிலுக்கு நெடிலும், குறிலுக்குறிலுமே வருதல் சிறப்பு. அங்ஙனம் வெவ்வேறு உயிர்வரினும் அவ்வுயிரூர்ந்து வரும் மெய்யெழுத்து வந்ததேதான் வரவேண்டும். காட்டு தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். - குறள் ‘தற்-சொற்’ என, வந்த மெய்யே (ற்) எதுகையாக வந்தது. பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். - குறள் ‘பொறி - நெறி’ என, வந்த உயிரே (இ) எதுகையாக வந்தது. ஆயிடை யின்னணம் வருந்தி யன்புகூர் வேயுறழ் தோளியைப் பிரிந்து வெஞ்சின மாயவெங் கொடுங்கலி வயத்த னாகினான். - நைட ‘ஆயி - வேயு - மாய’. இ-உ-அ-எதுகை. இங்கு யகரமெய் ஒன்றே வர, அதன் மேல் ‘இ,உ,அ’ என்னும் வெவ்வேறு இனக் குற்றுயிர்கள் ஏறி வந்திருத்தலை அறிக. குறிப்பு: ஐகாரம் சொல்லின்கண் வரும்போது தன்னளவில் குறுகிக் குறில்போல - ஒரு மாத்திரையாக - ஐகாரக் குறுக்க மாக - ஒலிப்பதால், ‘அ, இ’ முதலிய குற்றுயிர்கட்கு இனமாக வரும். ஒழிபியலில், ஐகாரக் குறுக்கம் என்பதைப் பாருங்கள். காட்டு கோதி லியக்கனி யாவுங் கூறக் கேட்டுத் தாதை யுருத்திர சேனன் றன்னை நோக்கி மாத மலர்ப்பொழி லூடு வந்த மனித்தன் ணஏதி லருத்தியன் என்னக் கேட்டி யென்றான். - வில் ‘கோதி - தாதை - மாத’ என, ‘இ, ஐ, அ’ - இனமாக வந்தவாறறிக. 1. இனவெதுகை எதுகையில், மெய்யெழுத்து வந்ததே வருதலோடு சிறு பான்மை இன வெழுத்தும் வரும். இது, இனவெதுகை எனப்படும். இனம் - வல்லினம், மெல்லினம், இடையினம். காட்டு 1. தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும். - குறள் ‘தக் - எச்’ க் - ச் - வல்லின எதுகை. 2. மன்னவன் றலைமகன் வருத்த மாற்றுவான் அந்நெறிப் பருவம்வந் தணுகிற் றாகலால். - கம் ‘மன் - அந்’. ன் - ந் - மெல்லினவெதுகை. குறிப்பு : இடையின எதுகை வருதல் இல்லை. நகர வெதுகைச் சொற்கள் மிகமிகக் குறைவானதால், னகரத்தின் இனமாக அஃதொன்றும் கொள்ளுதல் வேண்டும். ககர சகர முதலிய வல்லெழுத்துக்களின் எதுகைச் சொற்கள் தமிழில் ஏராளமாக இருந்தலான். இனி வல்லின எதுகை கொள்ள வேண்டிய தில்லை. 1. இவ்வகை யனைவரும் எழுந்த தானையர் மொய்கிளர் தோரண மதனை முற்றினார். - கம் ‘இவ்-மொய்’ வ் - ய் - இடையெழுத்துக்கள். இத்தகைய இனவெதுகை இனிக் கொள்ளற்குரிய தன்றென விடுக்க. 2. பீளைசோரக் கண்ணிடுக்கிப் பித்தெழ மூத்திருமித் தாள்கள் நோவத் தம்மில் முட்டித் தள்ளி நடவாமுன். - நால ‘தூய-சாய்’ ய-ய்-எதுகை. இங்கு உயிரும் மெய்யும் எதுகையாக வந்துள்ளன. இத்தகைய எதுகையும் இனிக் கோடற்க. 3. உண்ட வீட்டுக்கி ரண்டகஞ் செய்திட எண்ணல் யார்க்கும் இயல்புடைத் தல்லவே. ‘உண்ட-எண்ண’, -இத்தகைய எதுகை வருதல் சிறப்பின்று. கொடி - தேடி - என, முதலெழுத்துக் குறிலும் நெடிலுமாக இல்லாமல், ஒன்றாகவே, - குறிலாகவோ, நெடிலாகவோ - இருத்தல் வேண்டும். உண்-கண்ட, தின்ற - நின்ற, உய்ய - செய்ய, நல்ல - பொல்ல, அள்ள - கொள்ள என்பனபோல மூன்றாமெழுத்தும் ஒன்றிவருதல் சிறப்பு. 2. எதுகை வகை 1. முச்சிர முடையது மூவிரு திரடோள் அச்சிர முடனெதிர் அழல்பொழி தறுகண் நச்சிர வினையது நகமிரு முனைவாய் வச்சிர மனையது வருதலு மகிழா. - வில் 2. விற்பக லின்றியே யிரவு விண்டற எற்பக வெரிந்துள தென்னத் தோன்றுமால் மற்பக மலர்ந்ததோள் மைந்தர் சூடிய கற்ப மாலையும் புலவு காலுமால். - கம் 3. கண்ணை வேண்டினு மீகுவன் காக்கின்ற மண்ணை வேண்டினும் வாழ்வுட னீகுவன் பண்ணை வேண்டிடுஞ் செஞ் சொற் பறைக்குலப் பெண்ணை வேண்டிலன் யானென்று பேசினான். - அரி 4. நஞ்சுறு பிரிவினை நாளி னீளமோர் தஞ்சுர விடுவதோர் தயாவு தாங்கலால் வெஞ்சிறை நீங்கிய வினையினாரென நெஞ்சுற வுவந்தன நேமிப் புள்ளெலாம். - கம் 5. மன்கு லத்துளோர் வஞ்ச கஞ்செயார் என்கு லத்துளோ ரென்கோ லீதெனத் தன்கு லத்துளோர் தமைவி லக்கவோ நன்கு லத்துளோ னுதய நண்ணினான். - வில் 6. நென்மலை யல்லன நிரைவரு தரளச் சொன்மலை யல்லன தொடுகடல்அ லமிர்த நன்மலை யல்லன நதிதரு நிதியப் பொன்மலை யல்லன மணிபடு புளினம். - கம் 7. மண்வளர் பெரும்புகழ் மன்ன ரைவரும் பண்வளர் நல்லிசைப் பலம கீபரும் கண்வளர் பாளையங் காண வெண்ணியே விண்வளர் குபேரனும் விரைந்து தோன்றினான். - வில் 8. அவ்வயி னரக்கிய ரறிவுற் றம்மவோர் செவ்வயி றுயினமைச் செகுத்தல் தீதெனா எவ்வயின் மருங்கினு மெழுந்து வீங்கினார் வெவ்வயின் மழுவெழுச் சூல வெங்கையார். - கம் 9. நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ் சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை இல்வழி யாளர் இமையவ ரெண்டிசை பல்வழி யெய்தினும் பார்வழி யாமே. - திம 10. எய்து காலையப் பிலனு ளெய்தியான் நொய்தி னங்கவற் கொணர்வெ னோன்மையாய் செய்தி காவனீ சிறிது போழ்தெனா வெய்தி னெய்தினான் வெகுளி மேயினான். - கம் 11. மெய்மை வாழ்வை விரூம்பு முளத்தினர் பொய்மை யான புகலுரு மொன்றினை நொய்மை யாமிது வென்ன நுவலினும் செய்மை மாறிச் சிறுமை யடைவரே. - புகு 12. அஃகிய செல்வந்த ராயினுங் கீழல்லார் வெஃகிய செய்யார் விழைந்து. - புகு 13. இசைவி ளங்கு மெழில்சூழ்ந் தியல்பாகத் திசைவி ளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர் பசைவி ளங்கப் படித்தா ரவர்போலும் வசைவி ளங்கும் வடிசேர் நுதலாரே. - சம் இப்பாடல்கள் பதின்மூன்றினும் அமைந்துள்ள எதுகை அமைதியைக் கவனியுங்கள். எல்லாச் செய்யுட்களினும் எதுகை அமைய வேண்டியவாறு நன்கு அமைந்துள்ளது. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான எதுகைத் தொடை யாகும். ஓசையோடு படித்து, எதுகைத் தொடை பாட்டுக்கு எவ்வளவு இன்பந் தருகின்ற தென்பதைச் சுவைத்து இன்புறுங்கள். வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து, ஆய்த வெழுத்து, உயிரெழுத்து எனச் செய்யுளில் எதுகையாக அமையும் எழுத்து ஐந்துவகைப்படும். அவ் வைவகை எழுத்துக்களால் அமைந்த எதுகை வகையினை யுடையனவே இப்பதின்மூன்று பாடல்களும். எனவே, எதுகை பதின்மூன்று வகைப்படும் என்பதாயிற்று. அவையாவன, பாட்டு 1-ல் வல்லொற்றின் முன் அதே வல்லின உயிர் மெய் வந்துளது. 2-ல் வல்லொற்றின் முன் வேறு வல்லின உயிர் மெய் வந்துளது. 3-ல் மெல்லொற்றின் முன் அதே மெல்லின உயிர் மெய் வந்துளது. 4-ல் மெல்லொற்றின் முன் இன வல்லின உயிர் மெய் வந்துளது. 5-ல் மெல்லொற்றின் முன் வேறு வல்லின உயிர் மெய் வந்துளது. 6-ல் மெல்லொற்றின் முன் வேறு மெல்லின உயிர் மெய் வந்துளது. 7-ல் மெல்லொற்றின் முன் இடையின உயிர் மெய் வந்துளது. 8-ல் இடையொற்றின் முன் அதே இடையின உயிர் மெய் வந்துளது. 9-ல் இடையொற்றின் முன் வேறு இடையின உயிர் மெய் வந்துளது. 10-ல் இடையொற்றின் முன் வல்லின உயிர் மெய் வந்துளது. 11-ல் இடையொற்றின் முன் மெல்லின உயிர் மெய் வந்துளது. 12-ல் ஆய்த எதுகை வந்துளது. ஆய்தத்தின் முன் வல்லின உயிர்மெய் மட்டுந்தான் வரும். 13-ல் உயிரெதுகை வந்துளது. 3. ஆசெதுகை வல்லொற்று மெல்லொற்றெதுகைகளில், முதலெழுத்துக்கும் அவ்வொற்றெழுத் துக்கும் இடையில், ‘ய், ர், ழ்’ என்னும் மூன்று மெய்யும் வரும். இது, ஆசெதுகை எனப்படும். ஆசு-பற்று, பொன் வெள்ளி நகைசெய்வோர், கம்பி, தகடுகளைப் பொடி வைத்தூதி இணைப்பர். அதைப் ‘பற்றுவைத்தல்’என்பர். பற்று-பொடி. முதலெழுத்தையும் எதுகையெழுத்தையும் இடைப்போந்து இணைத்தலால் இது இப்பெயர் பெற்றது. காட்டு 1. காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே. - திம - 244 2. சாந்தினான் மெழுகிய தவள மாளிகை ஏய்ந்தபொற் றூணிடை யிலங்கு மின்னெனச் சேர்ந்துறை பெண்ணுருக் கண்டு சிந்தையிற் கூர்ந்தபே ரார்வமோ டிறைஞ்சிக் கூறுவான். - வில் 3. ஒத்துயர் கானவன் கிரியி னோங்கிய மெத்துறு மரந்தொறு மின்மி னிக்குலம் மொய்த்துள வாமென முன்னும் பின்னரும் தொத்தின தாரகை மயிரின் சுற்றெலாம். - கம் 4. வஞ்சினை மானின்பின் மன்னைப் போக்கியென் மஞ்சனை வைதுபின் வழிக்கொள் வாயென நஞ்சனை யானகம் புகுந்த நங்கையான் உய்ஞ்சனெ னிருத்தலும் உலகங் கொள்ளுமோ? - கம் 5. வாழ்த்தவல் லார்கள் மனத்துறு சோதியைத் தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை ஏத்தியும் எம்பெரு மானென் றிறைஞ்சியும் ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே. - திக 6. பூந்தண் வார்குழற் பொற்கொழுந் தேபுகழ் ஏந்து செல்வ மிகழ்ந்தனை யின்னுயிர்க் காந்தன் மாண்டிலன் காடு கடந்துபோய் வாழ்ந்த வாழ்வது மானுடர் வாழ்வன்றோ? - கம் 1. காய்ச்ச - வல்லின நெட்டொற்றிடை யகரம் வந்த யகரவொற் றாசிடை யெதுகை. - கம் கா - நெடில், ச்-வல்லொற்று, காச்-வல்லின நெட் டொற்று, யகரம் - ய். ‘காச்’ - என்னும் நெட்டொற்றினிடை, ‘காய்ச்’ - என யகரவொற்று (ய்) வந்தவாறு காண்க. மற்றவற்றையும் இவ்வாறே கண்டு கொள்க. 2. ஏய்ந்த - மெல்லின நெட்டொற்றிடை யகரம் வந்த, யகரவொற் றாசிடை யெதுகை. 3. மொய்த்துள - வல்லினக் குற்றொற்றிடை யகரம் வந்த, யகரவொற் றாசிடை யெதுகை. 4. உய்ஞ்ச் - மெல்லினக் குற்றொற்றிடை யகரம் வந்த, யகரவொற் றாசிடை யெதுகை. 5. தீர்த்தனை - வல்லின நெட்டொற்றிடை ரகரம் (ர்) வந்த, ரகரவொற் றாசிடை யெதுகை. 6. சேர்ந்துறை - மெல்லின நெட் டொற்றிடைரகரம் வந்த ரகரவொற்றா சிடையெதுகை. 7. வாழ்த்த - வல்லின நெட்டொற்றிடை ழகரம் (ழ்) வந்த ழகரவொற்றாசிடை யெதுகை. 8. வாழ்ந்த - மெல்லின நெட்டொற்றிடை ழகரம் வந்த, ழகரவொற் றாசிடை யெதுகை. ரகரமும் ழகரமும் (ர், ழ்) குற்றொற்றாக வாரா. இவ்வெண்வகை ஆசிடையெதுகையுங் கொள்க. 1. ஆவே றுருவின வாயினும் ஆபயந்த பல்வேறுருவின அல்லவாம். 2. வாழ்கின்றே மென்று மகிழன்மின் வாழ்நாளும் போகின்ற பூளையே போன்று. 1. ஆவே-பால்வே. பால்வே-லகரவொற் றாசிடை யெதுகை. 2. வாழ்கி-போகி. வாழ்கி-ழகரவொற் றாசிடை யெதுகை. இத்தகைய ஆசிடை யெதுகை இனிக் கொள்ளுதல் வேண்டா. குறிப்பு : யகர, ரகர, ழகரம் (ய், ர், ழ்) போல, லகரம் (ல்) வல்லொற்று மெல்லொற்றோடு மயங்காது. பாய்த்து, பார்த்து, வாழ்த்து என்பனபோல, ‘சால்த்து’ என, வாராமை காண்க. 4. விட்டிசை வல்லொற்றெதுகை எக்கா ளத்தொடு மிக்குல கப்போர் எனுமக் கொடியோ னிறுமாப்பாய் தக்கோர் தொக்கொரு மிக்கேங் கக்கெடு தலையா நின்றவந் நிலைகண்டே, எஏ! வாலை யொடுக்கென் றேயார்த் தெழுந்தோய் மண்ணில் விழுந்தாயே! அஆ கென்னடி! என்செய் கோசொல் லாயோ இனிவரு வாயோதான்! - உ.கெ ‘எ ஏ, அ ஆ’ - என்பன, ‘எக்கா, தக்கோர்’ - என்னும் வல்லொற் றெதுகைபோல விட்டிசைத்து, அவற்றோடு ஓரெதுகையாய் வருதலான். இது விட்டிசை வல்லொற்றெ துகை எனப்படும். இது கொள்க. அஅவனும் இஇவனும் உஉவனும் கூடியக்கால் எஎவனை வெல்லா ரிகல். - பழம் இதுவுமது. உயிர்க்குறில் தனித்துவந்து விட்டிசைத்தது. பயிற்சி 1. இவ்வெதுகை வகையினை நன்கு மனத்திலிருத்திக் கொள்ளுங்கள். 2. இனி நீங்கள் பாடும் பாட்டுக்களை இவ்வாறு நன்கு எதுகை அமையவே பாடுங்கள். 3. எங்கே, இப்போதே வகைக்கொன்று பாடிப்பாருங்கள். பயிற்சி 1. அடி 1. அடி எனின் எவ்வடியைக் குறிக்கும்? ஏன்? 2. ‘எழுசீர்க் கழிநெடிலடி இரட்டை ஆசிரியவிருத்தம்’ - இதனால் புலப்படுவ தென்ன? 3. சீர்வகையடி, கட்டளையடி - வேறுபாடென்ன? 4. கட்டளையடியைப் பழம்புலவர்கள் எவ்வாறு கொண்டார்? 2. தொடை 1. தொடையின் சிறப்பினைப் புலப்படுத்துக. 2. தொடை எத்தனை வகைப்படும்? 3. முதற்றொடை, உறழ்ச்சித் தொடை - வேறுபாடென்ன? 4. இயைபுத் தொடை மற்ற தொடைகளினின்று எங்ஙனம் வேறுபடுகிறது? அது எப்பாடலில் பயின்று வரும்? 5. மோனை எதுகைத் தொடையின் சிறப்பினை விளக்குக. 3. தொடைச்சிறப்பு 1. இனமோனை என்பது யாது? 2. இன மெய்யெழுத்துக்கள் எவை? 3. அதற்கதுவே மோனையாக வரும் எழுத்துக்கள் எவை? 4. மோனையில் உயிர்மெய்யெழுத்து எவ்வாறு வரவேண்டும்? 5. யா இதற்கு இனமாக வரும் உயிரெழுத்துக்கள் எவை? 4. எதுகை 1. எதுகையில் மெய்யெழுத்தும் உயிரெழுத்தும் எவ்வாறு வர வேண்டும்? 2. இனி வல்லின எதுகை கொள்ள வேண்டியதில்லை. ஏன்? 3. கொள்ள வேண்டிய மெல்லின எதுகை எது? ஏன்? 4. வாராத இனவெதுகை எது? 5. எதுகை பதின்மூன்று வகைப்படுதல் எங்ஙனம்? 6. இனி எவ்வாறு எதுகை அமையப் பாடவேண்டும்? 7. ஆசெதுகை என்பது யாது? 8. அது எத்தனை வகைப்படும்? 9. கொள்ளத்தகா ஆசெதுகை எவை? 10. யகரத்தொடு ரகர ழகரத்துக்குள்ள வேறுபாடென்ன? 11. லகரம் எம் மெய்களோடு மயங்காது? 12. விட்டிசை வல்லொற் றெதுகை என்பது என்ன? 7. தொடைவகை இரண்டடிகளில் மோனை முதலிய தொடைகள் வருதல் - முதற்றொடை எனப்படும். ஓரடியிலுள்ள சீர்களில் மோனை முதலிய தொடைகள் வருதல் - உறழ்ச்சித் தொடை, அல்லது தொடைவகை எனப்படும். அத்தொடைவகை அளவடியிலேயே கொள்ளப்படும். அளவடி - நாற்சீரடி. இது நேரடி எனவும்படும். அடிகளின் முதற்சீரில் மோனை முதலியன வருதல். 1. அடிமோனை 4. அடியியைபு 2. அடியெதுகை 5. அடியளபெடை 3. அடிமுரண் எனப்படும். இயைபுத் தொடை, அடிகளின் இறுதிச் சீர்களில் வரும். ஓரடியின் சீர்களில் வரும் தொடைவகை. 1. இணை 5. மேற்கதுவாய் 9. கடைக்கூழை 2. அடியெதுகை 6. கீழ்க்கதுவாய் 10. இடைப்புணர் 3. ஒரூஉ 7. முற்று 11. பின் 4. கூழை 8. கடையிணை எனப் பதினொரு வகைப்படும். இப்பதினொன்றையும் மோனை முதலிய முதற்றொடை ஐந்தனோடும் உறழ்ந்தால் (பெருக்கினால்) அவ்வுறழ்ச்சித் தொடை (5 x 11 = 55) ஐம்பத்தைந்தாகும். வரலாறு 1 2 3 4 இது, அளவடிக்கு எடுத்துக்காட்டு, எண்கள் ஓரளவடியி லுள்ள சீர்களைக் குறிக்கும். அளவடி - நாற்சீரடி. 1. இணைமோனை (1, 2) - முதல் இருசீர்களில் மோனை வருவது. 2. பொழிப்பு மோனை (1,3)-முதற்சீரினும் மூன்றாஞ்சீரினும் மோனை வருவது. 3. ஓரூஉ மோனை (1, 4) - முதற்சீரினும் நான்காம் சீரினும் மோனை வருவது. 4. கூழைமோனை (1, 2, 3) - முதல் மூன்று சீரினும் மோனை வருவது. 5. மேற்கதுவாய் மோனை (1, 3, 4) - இரண்டாஞ் சீரொழிந்த ஏனை மூன்று சீரினும் மோனைவருவது. 6. கீழ்கதுவாய் மோனை (1, 2, 4) - மூன்றாஞ் சீரொழிந்த ஏனை மூன்று சீரினும் மோனைவருவது. 7. முற்று மோனை (1, 2, 3, 4) - நான்கு சீரினும் மோனை வருவது. இவை ஏழும் முதலிலிருந்து எண்ணப்படும். 8. கடையிணைமோனை (3, 4) - கடையிரு சீர்களில் மோனை வருவது. 9. கடைக்கூழைமோனை (2, 3, 4) - முதற் சீரொழிந்த ஏனைமூன்று சீரினும் மோனை வருவது. 10. இடைப்புணர் மோனை (2, 3) - இடையிரு சீரினும் மோனை வருவது. 11. பின்மோனை (2, 4) - இரண்டாஞ்சீரினும் நான்காஞ் சீரினும் மோனை வருவது. இவை நான்கும் கடையிலிருந்து எண்ணப்படும். பிறைக் கோட்டுக்குள் உள்ள எண்கள், மோனைவரும் சீர்களைக் குறிக்கும். இடைப்புணர் - முதலிலிருந்தும் எண்ணலாம். இவ்வாறே ஏனை எதுகை முதலிய நான்கனுக்குங்கொள்க. பொழிப்பு - ஒன்று விட்டது. ஒரூஉ - இரண்டு விட்டது. கூழை - குட்டை; அளவில் குறைந்தது. கதுவாய் - பொக்கைவாய்; பல் இல்லாத வாய். 8, 9, 11 முறையே 1, 4, 2 தொடைகளைக் கடையிலிருந்து கொண்டனவாகும். 1. இணை (1, 2) 8. கடையிணை (4, 3) 4. கூழை (1, 2, 3) 9. கூடைக் கூழை (4, 3, 2) 2. பொழிப்பு (1, 3) 11. பின் (4, 2) இடைப்புணர் - இவ்விருவகையினுஞ் சேராத தனி. பெரும்பாலும் மோனையிலேயே இத்தொடைவகை வரும். ஏனை எதுகை முதலியவற்றில் சிறுபான்மை வரும். இவற்றுள் பொழிப்புமோனை சிறப்புடையதாகும். அடுத்து ஒரூஉ மோனை. இவற்றோடு மற்றவையும் வரின் இவையே சிறப்புறும். இத்தொடைவகை அளவடிக்கண்ணே கொள்ளப்படும் என்பதை நினைவில் வையுங்கள். குறிப்பு : மோனை, சீர்மோனையாகவே வரும். அதாவது ஓரடியிலுள்ள சீர்களில் மோனை வருதல். எதுகை, அடியெதுகையாகவே வரும். அதாவது இரண்டடிகளின் முதற்சீரில் எதுகை வருதல்.நேரிசை வெண்பாவில் இரண்டாமடியில் ஒரூஉ எதுகை வரும். அதாவது, இரண்டாமடியின் முதற்சீரின் எதுகையே, அவ்வடியின் ஈற்றுச் சீரான தனிச்சீரினும் வரும். நேரிசைப் பஃறொடை வெண்பா. நேரிசைக் கலிவெண் பாக்களினும் இவ்வாறே இவ்விரண்டடிக் கொருமுறை ஒரூஉ வெதுகை வரும். வெண்பா, கொச்சகம், கலிவிருத்தம் இவற்றில் பொழிப்பு மோனையும், சிறுபான்மை ஒரூஉ மோனையும் வரும். ஏனை இணை மோனை முதலிய தொடைவகைகள் வருதல் சிறப்பில. ஆசிரியப் பாவிற்றான் சிறுபான்மை இணை முதலிய தொடை வகைகள் ஒருவாறு எடுக்கும். பொழிப்பு மோனையோடு, ஏனைமோனைகள் வரின் பொழிப்பு மோனையும், பொழிப்புமோனையின்றி ஒரூஉ மோனை யோடு ஏனை மோனைகள் வரின் ஒரூஉ மோனையும் சிறப்புறும். பொழிப்பு, ஒரூஉவோடு சேர்ந்து, ஏனைத்தொடை வகைகள் செய்யுட்குச் சிறப்பு தரும். அது, தொடை நயம் எனப்படும். கூழைமோனை, மேற்கதுவாய் மோனை, முற்று மோனை களில் பொழிப்பு மோனையும், கீழ்க்கதுவாய் மோனையில் ஒரூஉ மோனையும் சிறப்புறு மென்க. முதற்சீரில் மோனை முதலிய தொடைவகை இல்லது பாட்டன்மையான், கடையினை முதலிய நான்கும் மேலவற்றோடு சேர்ந்தே வரும்; தனித்து வாரா. காட்டு மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் - மின்நிறத்துச் செய்யதாள் வெள்ளைச் சிறையன்னஞ் செங்கமலப் பாய்கைவாய்ப் போவதே போன்று. - நள இவ்வெண்பாவில், முதலடியில் - 1, 3, 4 சீர்களில் - ம, ம, ம - மோனை. இரண்டாமடியில் - 1, 3 சீர்களில் - பொ, போ - மோனை. மூன்றாமடியில் - 1, 3, 4 சீர்களில் - செ, சி, செ, மோனை. நான்காமடியில் - 1, 2, 3 சீர்களில் - பொ, போ, போ - மோனை. இன்ன மோனை என்று கூறுக. நான்காமடி சிந்தடி. அதன் மூன்று சீரினும் மோனை வந்துள்ளது. அளவடியின் நான்கு சீரினும் மோனை வருவதே முற்று மோனையாகும். எனவே, இது முற்று மோனையன்று. அளவடியில் ஈற்றுச்சீரொழிந்த ஏனை மூன்று சீரினும், அதாவது முதன் மூன்று சீரினும் மோனை வருவதே கூழை மோனையாகும். எனவே, இது கூழை மோனையு மன்று. 1, 3, 4 அடிகளிலும் பொழிப்பு மோனையே சிறப்புறும். ஓசையுடன் படித்தறிக. பண்பிலசொல் பல்லா ரகத்து. - குறள் எனச் சிந்தடியில் முதலிரு சீரினும் மோனைவரின், (ப-ப) இணை மோனை எனவும்; திறனறிந் தாங்கே திரு. - குறள் எனச் சிந்தடியில் முதற்சீரினும் மூன்றாஞ்சீரினும் மோனைவரின், (தி - தி) - பொழிப்பு மோனை எனவும் கொள்ளலாம். மேல் எடுத்துக்காட்டிய நளவெண்பாவில். ‘மன் - பொன்’ ‘செய் - பொய்’ - அடியெதுகைகள். இரண்டாமடியில் - ‘பொன்-மின்’ ஒரூஉ வெதுகை. மூன்றாமடியில் - ‘செய்ய, வெள்ளை, செங்கமலம்’ - கீழ்க்கது வாய் முரண். ‘செய்ய - பொய்கை’ தலையாய எதுகையன்று. ‘செய்ய - பொய்ய’ - என்பதனோடு ஒப்பிடுக. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து. - குறள் “கொலை - அலை” - என, இரண்டாமடி யல்லாத ஏனையடிக் கண் (முதலடியில்) ஒரூஉ. எதுகை வந்தது. இதுமிகச் சிறுபான்மை. 1. மோனை வகை காட்டு 1. உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு. -முரு-1 (இணைமோனை, பொழிப்பெதுகையும்) 2. 11. மறுவில் கற்பின் வாணுதல் கணவன். -முரு-6 (பொழிப்புமோனையும், பின்மோனையும்) 3. முடியுடைக் கருத்தலை புரட்டும் முன்தாள். -பட்-230 (ஒரூஒ மோனை) 4. புகுந்தனை புகுந்துநின் புதல்வனைத் தழீஇ. (கூழைமோனை) - பெருங் 2:1.33 5. வையை யன்ன வழக்குடை வாயில். -மது-356 (மேற்கதுவாய்மோனை) 6. சிறுதாள் செறித்த மெல்விரல் சேப்ப. -நற்-120 (கீழ்க்கதுவாய் மோனை) 7. விரிகடல் வேலி வியலகம் விளங்க. - சிறு - 114 (முற்றுமோனை) 8. ஓங்கிரும் பெண்ணை அகமடல் அகவ. -குறி-220 (கடையிணை மோனை) 9. வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழை. -மலை-334 (கடைக்கூழைமோனை) 10. மதந்தபு ஞமலி நாவின் அன்ன. -மலை-42 (இடைப்புணர்மோனை) மோனைகளை எடுத்துக் காட்டுக 2. எதுகை வகை 1. கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன். -பொரு-148 (இணையெதுகை) 2. நெருப்பெனச் சிவந்த வுருப்பவி ரங்காட்டு. -அபம்-11 (பொழிப்பெதுகை) 3. பறவை படிவன வீழக் கறவை. - நெடு 10 (ஒரூஉ வெதுகை) 4. அசைவுழி யசைஇ நசைவுழித் தங்கி. -பெரும்-44 (கூழை யெதுகை) 5. குருதி வேட்கை யுருகெழு முரசம். -புறம்-50 (மேற்கதுவா யெதுகை) 6. மருந்துந் தருங்கொலிம் மாநில வரைப்பின். -சில 5 (கீழ்க்கதுவாயெதுகை) 7. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு. -குறள் (முற்றெதுகை, முற்றுமோனையும்) 8. கையுங் காலுந் தூக்கத் தூக்கும். -குறுந்-8 (கடையிணையெதுகை) 9. சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென. -சிறு-20 (கடைக்கூழை யெதுகை) 10. நால்வகைத் தேவரு மூவருங் கணங்களும். -சில-5 (இடைப்புண ரெதுகை) 11. பொருநர்க் காயினும் புலவர்க் காயினும். -சிறு-203 (பின்னெதுகை) எதுகைகளை எடுத்துக்காட்டு. இவ்வடிகளிலுள்ள மோனை களையும் எடுத்துக் காட்டுக. குறிப்பு :பத்துப்பாட்டடிகளின் எண்-அடியெண். மற்றவை. பாட்டெண். 8. அடிமோனை எதுகை 1. அடிமோனை அடிமோனை எச்செய்யுளினும் வருதலின்று; வரினும் சிறப்பின்று. காட்டாக, மாவும் புள்ளும் வதுவையிற் படர மாநீர் விரிந்த பூவுங் கூம்ப மாலை தொடுத்த கோதையுங் கமழ மாலை வந்த வாடை மாயோ ளின்னுயிர்ப் புறத்திறுத் தற்றே. - பழம் இந்நேரிசை யாசியப்பாவின் அடிகள் ஐந்தும் ஒரே அடி மோனைத் தொடையான் அமைந்தும், அடியெதுகை பெறாமை யாற் சிறப்புறாமை காண்க. சீரெதுகை பெற்றால்தான், அடியெதுகை யின்றி அடிகள் தனித்தனி வரலாம். முதலிரண்டடிகள் சீரெதுகையின்றித் தனித்து வந்து சிறப்புறாமையை ஓசையோடு படித்தறிக. 3, 4 அடிகளில் அடியெதுகை எடுப்பாக உள்ளதேயன்றி, அடிமோனை எடுப்பின்மையை அறிக. ஈற்றடி, ஈற்றயலடியின் எதுகை பெறாமையால் அதுவும் எடுப்பின்மை காண்க. 2. அடியெதுகை 1. வெண்பா : பொழிப்புமோனை முதலிய சீர்மோனை பெற்ற நேரிசை வெண்பா அடிகள், இவ்விரண்டடிகள் ஓரடி யெதுகை யுடையவாக வரும். இன்னிசை வெண் பாவின் எல்லா வடிகளும், ஓரெதுகையுடையவாக வரும். பொழிப் பெதுகை, அல்லது ஒரூஉ வெதுகை பெற்ற இன்னிசை வெண்பாவடிகள் அடியெதுகையின்றித் தனித்துவரும். 2. ஆசிரியப்பா : வெண்பா வடிகள் போலவே, சீர்மோனை பெற்ற ஆசிரிய வடிகள், இவ்விரண்டடிகள் ஓரேதுகை யுடையவாக வரும். பொழிப்பல்லது, ஒரூஉ வெதுகை பெற்ற அடிகள், அடியெதுகை யின்றித் தனித்து வரும். 3. கலிப்பா : கலிப்பாவின் முதலுறுப்பான தரவு, மூன்றடி முதல் 12 அடிவரை வரும். பொழிப்பு அல்லது ஒரூஉ மோனை யுடைய தரவடிகள், இவ்விரண்டு ஓரடியெதுகை யுடையவாக வருதலோடு, ஆறு அல்லது எட்டடி காறும் ஓரெதுகையுடைய வாகவும் வரும். கலிப்பாவின் இரண்டா முறுப்பான தாழிசை, 2 அடி முதல் 4 அடிப் பெருமையுடையது. தாழிசையடிகள் நான்கும் ஓரெதுகை யுடையவாக வரும். இவ்விரண்டும் ஓரெதுகை யுடையதாகவும் வரும். கலிப்பாவின் உறுப்பான கொச்சகவடிகளும் இவ்வாறே எதுகை பெற்று வரும். தனித்து வரும் நாலடிக் கொச்சகமும், ஆறடிக் கொச்சகமும், எட்டடிக் கொச்சகமும் ஓரெதுகையுடையதாகவேவரும். 4. வஞ்சிப்பா : இருவகை வஞ்சிப்பாவும், இவ்விரண்டடி ஓரெதுகை யுடையதாகவும், இரண்டடிக்கு மேலும் ஓரெதுகை யுடையதாகவும் வரும். 5. பரிபாடலும், மருட்பாவும்: பரிபாடலினடிகள், நற்பாவின் அடிகள் போலவும், மருட்பாவின் அடிகள், வெண்பா ஆசியப்பாவின் அடிகள் போலவும் எதுகை பெறும். 6. பாவினம் : வஞ்சித் தாழிசை வஞ்சித்துறை கலித்துறை வஞ்சி விருத்தம் கட்டளைக் கலித்துறை கலி விருத்தம் ஆசிரிய விருத்தம் ஆகிய இவை ஏழும் நான்கடியாலானவை. இவற்றின் நான்கடியும் ஓரெதுகை யுடையவாகவே வரும். 7. குறட்டாழிசை : இதன் இரண்டடியும் ஓரெதுகை யுடைய வாக வரும். 8. குறள் வெண்டுறை : இது தனியடி, தொடர் பொருளைப் பாடும் போது, சிறுபான்மை இவ்விரண்டடி ஓரெதுகை யுடைய தாகவும் வரும். 9. வெண்டாழிசை : இது, மூன்றடியும் ஓரெதுகை யுடைய தாக வரும். 10. வெண்டுறை : மூன்றடி முதல் ஏழடிகாறும் வரும் இதனடிகள், பெரும்பாலும் ஓரெதுகையன ஆக வரும். சிறுபான்மை வேற்றொலி வெண்டுறையின் முன்னர்ச் சில அடிகள் ஓரெதுகையாகவும், பின்னர்ச் சில அடிகள் வேறோரெதுகை யாகவும் வரும். 11. வெளிவிருத்தம் : மூன்றடியானும் நான்கடியானும் வரும் இதன் மூன்றடியும் ஓரெதுகையாகவும், நான் கடியும் ஓரெதுகையாக வரும். 12. ஆசிரியத்தாழிசை : மூன்றடியாலாகிய இதன் மூன்றடியும் ஓரெதுகையாக வரும். 13. ஆசிரியத்துறை : நான்கடியாலாகிய இதன் நான்கடியும் ஓரெதுகையாக வரும். 14. கலித்தாழிசை: இரண்டடியும் பல வடியுமாக வரும் இதன் அடிகள், ஓரெதுகையாகவே வரும். 15. தாழிசை: இரண்டடித் தாழிசைகளின் இரண்டடியும் ஓரெதுகையுடைய வாக வரும். 16. சிந்துகள்: சிந்துகளெல்லாம் பெரும்பாலும் இரண்டடி யான் ஆனவை யாகலான், அவற்றின் இரண்டடிகளும் ஓரெதுகையாக வரும். பிறவு மன்ன. இவற்றின் எடுத்துக்காட்டு, எடுத்துக்காட்டியலில் காட்டி யுள்ள அவ்வச் செய்யுட்களிற் காண்க. பயிற்சி 1. வெங்கண் முரசதிரும் வேலமருள் வில்லுதைப்ப எங்கு மருமத் திடைகுளிப்பச் செங்கட் புலவாள் நெடுந்தகை பூம்பொழி லாகம் கலவாமற் காத்த கணை. - வெண் 2. திசையுந் திசையுறு தெய்வமுந் தெய்வத் திசையுங் கருமங்க ளெல்லாம் - அசைவில்சீர்க் கண்ணன் நெடுமால் கடல்கடைந்த காரோத வண்ணன் படைத்த மயக்கு. - நாலா இவ்வெண்பாக்களிலுள்ள மோனை எதுகைகளை எடுத்துக் காட்டுக. (2. தெய்வத்து இசையும்) மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு தொண்டுதலை யிட்ட பத்துக்குறை எழுநூற் றொன்பஃதென்ப உணர்ந்திசி னோரே. -செய் -101 என, ஆசிரியர் தொல்காப்பியர், மோனை முதலிய இத்தொடை வகைகள், 13708 வகைப்படும் என்பதால், நம்முன்னையோர் இத்தொடையினை எவ்வாறு மதித்துப் போற்றி வந்தனர் என்பது புலப்படும். நீவிர் அத்தனை தொடைவகைகளையும் அறிதல் வேண்டா. எந்தெந்தச் செய்யுட்களின் அடிகளில் எங்கெங்கே மோனை முதலிய தொடைகள் வரும் என்பதை மட்டும் நன்கு அறிந்து கொண்டாற் போதும். ஐயீராயிரம் - பத்தாயிரம். ஆறு ஐஞ்ஞூறு - மூவாயிரம் - தொண்டு - ஒன்பது. தொண்டுதலையிட்ட எழுநூற்று ஒன்பது - எழுநூற்றுப் பதினெட்டு. ஆக, 10000+3000+718= 13718 அதில் குறைய - 13708. பயிற்சி 1. தொடை வகைகள் யாவை? 2. முதலிலிருந்தும் ஈற்றிலிருந்தும் எண்ணப்படும் உறழ்ச்சித் தொடைகள் எவை? அவற்றை வகைப்படுத்துக? 3. இடைப்புணரின் சிறப்பென்ன? 4. மோனையும் எதுகையும் எங்கெங்கே சிறப்பாக வரும்? 5. ஒரூஉ வெதுகை எங்கு பயின்று வரும்? 6. தொடைவகைகளில் சிறப்புடையவை எவை? 7. ஓரடியில் பலவகை மோனைவரின் அவற்றுள் எது சிறப்புறும்? விளக்கந் தருக. 8. முற்று மோனையும் கூழைமோனையும் கொள்ளக்கூடாத அடி எது? 9. சிந்தடியில் எவ்வெம் மோனை கொள்ளலாம்? 10. மேற்கதுவாய்மோனை, ஒரூஉ மோனை, பின் எதுகை, இடைப் புணரெதுகை - எடுத்துக்காட்டுத் தருக. 11. நம் முன்னையோர் தொடையுறுப்பினை நன்கு மதித்துப் போற்றி வந்தனர் என்பதற்கு ஒரு காட்டுத்தருக. 9. செந்தொடை மோனை எதுகை முதலிய முதற்றொடையும், இணை மோனை முதலிய தொடைவகையும் பெறாது வருவது - செந்தொடை எனப்படும். செந்தொடை - சொற்கள், அல்லது சீர்களை இயல் பாகத் தொடுப்பது. பழந்தமிழ்ப் புலவர்கள் செய்யுட்களில் இச்செந் தொடை, ஓசைநயங்குன்றாமல் இயல்பாக அமைந்துள்ளமை யைக் காணலாம். சீரிய நடையின்பம்படத் தொடுப்பதே செந்தொடை யாகும். இத் தொடை மிகமிக அருகிவரினும், பெரும்பாலும் ஆசிரிய வடிகளின் கண்ணே வரும். சீரிய செந்தொடை அமையப் பாடுதல் எளிதன்று. காட்டு மாமழை யிடியூஉத் தளி சொரிந் தன்றே வாணுதல் பசப்பச் செலவயர்ந் தனையே யாமே நிற்றுறந் தமையலம் ஆய்மல ருண்கணு நீர்நிறைந் தனவே. -ஐங் இந்நேரிசை யாசிரியப்பாவில், மோனை முதலிய தொடைகள் அமையாவிடினும், அகவலோசையுடன் செந்தொடை நன்கு அமைந்திருத்தலை அறிக. யாமே - அமையலம். ‘யா-அ’ - பொழிப்பு மோனையாகக் கொள்ளலாம். நீர்நிறைந்து அனவே. ஆய்-அன - ஒரூஉமோனை. முதல் இரண்டடியினும் யாதொரு தொடையும் இல்லாமையோடு, அடியெதுகையும் அமையவில்லை. மற்றறிவாம் நல்வினை யாமிளையம் என்னாது கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்! முற்றி யிருந்த தனியொழியத் தீவளியால் நற்கா யுதிர்தலு முண்டு. - நால இந்நாலடி வெண்பாவின் மூன்றாமடி செந்தொடை. முதல டியில், ‘யா - எ’ கடையிணை மோனை. வெள்ளடிக்கு இது எடுக்காது. ஈற்றடியும் இத்தகையதே. இரண்டாவதடியில் பொழிப்பு மோனை வந்திருப்பதால் எவ்வளவு எடுப்பாக உள்ள தென்பதை ஓசையுடன் படித்தறிக. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. - குறள் இக்குறளில் மோனை எதுகை ஒன்றுமே அமையவில்லை. அது பாவினந் தோன்றாத காலம். புறப்பொருள் வெண்பா மாலை, முதலாழ்வார் மூவரின் இயற்பா வெண்பா, நளவெண்பா முதலிய வெண்பாக்களெல்லாம் நன்குமோனை எதுகை அமைந் திருப்பதால், காலத்துக் கேற்பச் செந்தொடை கைவிடப்பட்ட தென்று தெரிகிறது. அக்காலத்தை அடுத்த காலத்ததான சிலப்பதி காரத்திலுள்ள வெண்பாக்கள் செவ்விய தொடையமைதி யுடைய வாகவேயுள்ளன. சிலப்பதிகார மணிமேகலை அகவற்பாக்கள் மோனை எதுகைத் தொடை அமையவே செய்யப்பட்டுள்ளன. அவ்வகையான பெருங்கதை ஆசிரியப்பாக்கள் நன்கு தொடை நடை உடையவாக அமைந்துள்ளன. எனவே, இனி எல்லாப் பாக்களும் பாவினங்களும் தொடையமைதியுடன் செய்தலே ஏற்புடைத்தாகும். உண்டி உடை நடை எல்லாம் திருந்திய இன்று, அவை திருத்தப் பெறாத காலத்தைக் காட்டி, அங்ஙனம் இருந்தனவே எனல், காலத்துக்கு ஒத்தாகுமோ? அத்தகையதே மோனை எதுகையைப் பற்றிய கவலை வேண்டா மென்பதும். பயிற்சி 1. செந்தொடை என்பது என்ன? 2. பழம்புலவர்கள் செந்தொடையை எவ்வாறு அமைத்தனர்? 3. இனிச் செந்தொடை தேவையில்லை. ஏன்? 10. பாவும் பாவினமும் தாயும் பிள்ளையும் போலும் பாவும் பாவினமும், ஒரு தாய்க்கு மூன்று பிள்ளைகள் உண்டாதல் போல, ஒரு பாவுக்கு மூன்று இனங்கள் உண்டாயின. அவை தாழிசை, துறை, விருத்தம் எனப்படும். 1. வெண்பா 3. கலிப்பா 2. ஆசிரியப்பா 4. வஞ்சிப்பா என, பா நான்கு வகைப்படும். ‘பா’ என்பது, தொல்காப்பியர் காலம் வரை, செய்யுளின் ஓசை குறித்து வந்ததென்பது. ‘பா என்பது, சேட்புலத் திருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடமோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்தற்கேது வாகிப் பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை’ (தொல். செய்-1 பேரா) என்னும் பேராசிரியர் கூற்றால் பெறப்படும். பா என்னும் ஓசை, பண்பாகு பெயராய் அதனையுடைய செய்யுளை உணர்த்திற்று. 1. செப்பலோசை 3. துள்ளலோசை 2. அகவலோசை 4. தூங்கலோசை என, அச்செய்யு ளோசை நான்கு வகைப்படும். செப்பலோசை - இருவர் உரையாடல் போன்ற ஓசை. அகவலோசை - ஒருவர் பேசுதல் போன்ற - சொற்பொழி வாற்றுதல் போன்ற - ஓசை துள்ளலோசை - கன்று துள்ளினாற் போலச் சீர்தொறும் துள்ளி வரும் ஓசை. தூங்கலோசை - கன்று துள்ளினாற் துள்ளாது தூங்கி வரும் ஓசை. தூங்குதல் - ஏறியிறங்காது தாழ்ந்தே வருதல். வெண்பா - செப்பலோசையுடையது ஆசிரியப்பா - அகவலோசையுடையது கலிப்பா - துள்ளலோசையுடையது வஞ்சிப்பா - தூங்கலோசையுடையது இருவகை வெண்டளையானும் வருவது - செப்பலோசை இருவகை ஆசிரியத்தளையானும் வருவது - அகவலோசை கலித்தளையான் வருவது - துள்ளலோசை. இருவகை வஞ்சித்தளையானும் வருவது - தூங்கலோசை. அகவல் என்பது ஆசிரியப்பாவின் மறுபெயர். பழந்தமிழ் மக்கள் இவ்வோசை வேறுபாட்டை நன்கு அறிந்து நால்வகைப் பாக்களையும் அதனதன் ஓசையோடு ஓதி வந்தனர். இன்று மிகப் பெரும்பாலோர் இவ்வோசை வேறுபாட்டை அறிந்து, அவ்வாறு நாற்பாவையும் அதனதன் ஓசையுடன் ஓத அறியாராய் உள்ளனர் என்பதை வருத்தத்துடன் கூறிக்கொள்ள வேண்டியுள்ளது. இது தமிழ்த்தாயின் பயக்குறையேயாகும். தாழிசை, துறை, விருத்தம் ஆகிய பாவினங்கட்கும், அவற்றின் வகைகட்கும் தனித்தனி ஓசை உண்டு. அவ்வவ்வோசையுடன் படித்தால்தான் செய்யுளின்பமுற்றுத் திளைக்க முடியும். 11. பாவகை 1. வெண்பா 1. குறள் வெண்பா 4. பஃறொடை வெண்பா 2. சிந்தியல் வெண்பா 5. கலிவெண்பா 3. அளவியல் வெண்பா என, வெண்பா ஐந்து வகைப்படும். அளவியல் வெண்பா - வெண்பா எனவே வழங்கும். அதாவது, வெண்பா எனின், நாலடி வெண்பாவையே குறிக்கும். குறள் வெண்பா அல்லாத நான்கும். 1. நேரிசைச் சிந்தியல் வெண்பா 2. இன்னிசைச் சிந்தியல் வெண்பா 3. நேரிசை வெண்பா 4. இன்னிசை வெண்பா 5. நேரிசைப் பஃறொடை வெண்பா 6. இன்னிசைப் பஃறொடை வெண்பா 7. நேரிசைக் கலிவெண்பா 8. இன்னிசைக் கலிவெண்பா என இவ்விரண்டு வகைப்படும். எனவே, குறள் வெண்பாவுடன் வெண்பா - ஒன்பது வகையாயிற்று. எடுத்துக்காட்டுடன் இவற்றின் இலக்கணத்தை யாப்பதி காரத்திற் காண்க. திருக்குறள் - குறள் வெண்பாவால் ஆனநூல், சிந்தியல் வெண்பாவும், பஃறொடை வெண்பாவும் சிறுபான்மையாக வெண்பா நூல்களில் வரும். அவற்றை ஆசாரக்கோவை, களவழி நாற்பதிற் காண்க. வெண்பா நூல்கள் 1. திருக்குறள் அருட்பா 2. நாலடியார் 32. சிவநேச வெண்பா 3. நான்மணிக்கடிகை 33. நெஞ்சுறுத்திருநேரிசை 4. திரிகடுகம் 34. பொதுத்தனித் 5. இன்னா நாற்பது திருவெண்பா 6. இனியவை நாற்பது 35. ஆனந்தானுபவம் 7. கார்நாற்பது 36. சுத்தசிவநிலை 8. களவழிநாற்பது 37. சோமேசர் முதுமொழி 9. ஆசாரக்கோவை வெண்பா 10.பழமொழி நானூறு 38. சிவசிவ வெண்பா 11.ஐந்திணை ஐம்பது 39. இரங்கேச வெண்பா 12. ஐந்திணை எழுபது 40. குமரேச வெண்பா 13.திணைமொழி ஐம்பது 41. முருகேச வெண்பா 14. திணைமாலை 42. கதிரேச வெண்பா நூற்றைம்பது 43. கலைசைச் சிலேடை 15.சிறுபஞ்சமூலம் வெண்பா 16.ஏலாதி 44. சிங்கைச் சிலேடை 17.இன்னிலை வெண்பா 18.கைந்நிலை 45. நெல்லைச் சிலேடை 19. வெண்பாமாலை வெண்பா 20. நளவெண்பா 46. திருநாணாச் சிலேடை 21. அறநெறிச்சாரம் வெண்பா 22. நீதிநெறிவிளக்கம் 47. வச்சணந்தி மாலை 23. நல்வழி 48. வெண்பாவந்தாதிகள் 24. நன்னெறி 49. தனிப்பாடல் 25. வாக்குண்டாம் வெண்பாக்கள் 26. நீதிவெண்பா 50. தண்டியலங்கார நாலாயிரம் வெண்பாக்கள் 27. முதற்றிருவந்தாதி 51. முத்தொள்ளாயிரம் 28. இரண்டாந் 52. பாரத வெண்பா திருவந்தாதி 53. இராமாயண வெண்பா 29. மூன்றாந்திருவந்தாதி 54. திருமண வெண்பா 30.நான்முகன் திருவந்தாதி 31.பெரிய திருவந்தாதி முதலியன வெண்பா நூல்கள் கீழ்க்கணக்கு வெண்பாக்கள் அல்லாத மற்றவை யெல்லாம் பெரும்பாலும் திருந்திய வெண்பாக்கள். 2. ஆசிரியப்பா 1. நேரிசை யாசிரியப்பா 2. இணைக்குற ளாசிரியப்பா 3. நிலைமண்டில ஆசிரியப்பா 4. அடிமறிமண்டில ஆசிரியப்பா என, ஆசிரியப்பா நான்கு வகைப்படும். எடுத்துக்காட்டுடன் இவற்றின் இலக்கணத்தை யாப்பதிகாரத்திற் காண்க. 1. அகநானூறு 11. முல்லைப்பாட்டு 2. புறநானூறு 12. மதுரைக்காஞ்சி 3. நற்றிணை 13. நெடுநல்வாடை 4. குறுந்தொகை 14. குறிஞ்சிப் பாட்டு 5. ஐந்குறுநூறு 15. பட்டினப்பாலை 6. பதிற்றுப்பத்து 16. மலைபடுகடாம் 7. திருமுருகாற்றுப்படை 17. சிலப்பதிகாரம் 8. பொருநராற்றுப்படை 18. மணிமேகலை 9. பெரும்பாணாற்றுப் 19. பெருங்கதை படை 10. சிறுபாணாற்றுப்படை 20. தகடூர் யாத்திரை முதலிய பழந்தமிழ் நூல்களெல்லாம் ஆசிரியப்பாவால் ஆகிய நூல்களே. 21. திருவாசகக் கீர்த்தித் திருஅகவல் 22. திருவண்டப் பகுதி 23. போற்றித் திருவகவல் 24. பட்டினத்தார் கோயில் திருவகவல் 25. விநாயகரகவல் 26. கபிலரகவல் முதலியன பிற்கால ஆசிரியப்பாக்கள். 3. கலிப்பா 1. ஒத்தாழிசைக் கலிப்பா 2. கொச்சகக் கலிப்பா 3. உறழ்கலிப்பா 4. வெண்கலிப்பா என, கலிப்பா நான்கு வகைப்படும். ஒத்தாழிசைக் கலிப்பா 1. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா 2. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா 3. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என, ஒத்தாழிசைக் கலிப்பா மூன்று வகைப்படும். கொச்சகக் கலிப்பா 1. தரவு கொச்சகக் கலிப்பா 2. தரவிணைக் கொச்சகக் கலிப்பா 3. சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா 4. பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா 5. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என, கொச்சகக் கலிப்பா ஐந்து வகைப்படும். உறழ்கலிப்பாவும், வெண்கலிப்பாவும் ஒவ்வொரு வகையே. எனவே, ஒத்தாழிசைச் கலிப்பா 3 கொச்சகக் கலிப்பா 5 உறழ்கலிப்பா 1 வெண்கலிப்பா 1 ஆக, கலிப்பா பத்து வகைப்படும். எடுத்துக்காட்டுன் இவற்றின் இலக்கணத்தை யாப்பதிகாரத்திற் காண்க. கலித்தொகை, கலிப்பாவால் ஆகிய நூல். 4. வஞ்சிப்பா 1. குறளடி வஞ்சிப்பா 2. சிந்தடி வஞ்சிப்பா என, வஞ்சிப்பா இருவகைப்படும். விளக்கம் யாப்பதிகாரத்திற் காண்க. வஞ்சிப்பாவாலாகிய தனி நூல் இன்றில்லை. மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை முதலிய பழந்தமிழ் நூல்களின் ஆசிரியப்பாவின் இடையிடையே வஞ்சியடிகள் வருகின்றன. பட்டினப் பாலையில் மிகுதி. 5. பரிபாடல் இது, இன்னபா என்னும் வரையறையின்றி, வெண்பா முதலிய நால்வகைப் பாவுக்கும் பொதுவாய் வரும். அதாவது வெள்ளடி முதலிய நால்வகையடியும் கலந்துவரும். எடுத்துக் காட்டுடன் இதன் இலக்கணத்தை அடுத்த இயலில், பரிபாடல் என்னும் தலைப்பிற் காண்க. 6. மருட்பா வெள்ளடிகள் முதலினும், ஆசிரிய வடிகள் ஈற்றினும் வரும் பா-மருட்பா எனப்படும். இதன் விளக்கத்தை யாப்பதிகாரத்திற் காண்க. பயிற்சி 1. ‘பா’ என்பது எதைக் குறிக்கும்? 2. பாவோசை எத்தனை வகைப்படும்? 3. வெண்பா, ஆசிரியப்பாவுக்குரிய ஓசை எவை? அவை எவ்வாறு ஒலிக்கும்? 4. தமிழ்த்தாயின் பயக்குறை எது? 5. பா எத்தனை வகைப்படும்? ஒவ்வொன்றன் வகையையும் தெரிந்து கொள்க. 12. பாவினம் பா இனம் 1. வெண்பா 1. வெண்டாழிசை 2. வெண்டுறை 3. வெளி விருத்தம் 2. ஆசிரியப்பா 1. ஆசிரியத் தாழிசை 2. ஆசிரியத் துறை 3. ஆசிரிய விருத்தம் 3. கலிப்பா 1. கலித்தாழிசை 2. கலித் துறை 3. கலி விருத்தம் 4. வஞ்சிப்பா 1. வஞ்சித்தாழிசை 2. வஞ்சித்துறை 3. வஞ்சிவிருத்தம் 5. குறள்வெண்பா 1. குறட்டாழிசை 2. குறள்வெண்டுறை இவற்றுள், 1. வஞ்சித் தாழிசை குறளடி நான்கு ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருதல். 2. வஞ்சித்துறை குறளடி நான்கு தனித்து வருதல். 3. வஞ்சிவிருத்தம் சிந்தடி நான்கு வருதல். 4. கலிவிருத்தம் அளவடி நான்கு வருதல். 5. கலித்துறை நெடிலடி நான்கு வருதல். 6. ஆசிரிய விருத்தம் கழிநெடிலடி நான்கு வருதல். 7. குறட்டாழிசை அடி இரண்டாய், ஈற்றடிகுறைந்து வருதல். 8. வெண்டாழிசை சிந்தியல் வெண்பா ஒரு பொருள் மேல்மூன்றடுக்கி வருதல். 9. ஆசிரியத் தாழிசை அளவொத்த மூன்றடியாய், ஒரு பொருள் மேல் மூன்றடுக்கியும், தனித்தும் வருதல், எனவே இருவகை. 10. வெளிவிருத்தம் மூன்றடியானும் நான்கடியானும் வந்து, அடிதோறும் அடி முடிவிடத்து ஒரே தனிச்சொல் பெற்று வருதல், எனவே, இதுவும் இருவகை. இவை நான்கும் அடிவகையானும், பாவகையானும் ஆனவை. 8. பாவகையான் ஆனது. 11. வெண்டுறை - மூன்றடி முதல் ஏழடிகாறும் வந்து,பின்னர்ச் சில அடிகள் குறைந்தும், வேற்றொலி யாகவும் வருதல். மூன்றடியிற் குறைந்தும், ஏழடியில் மிக்கும் வரப்பெறாது. இதுவும் பலவகை. 12. ஆசிரியத்துறை - நான்கடியாய், 1. ஈற்றயலடி குறைந்தும், ஈற்றயலடி குறைந்து இடைமடக்காயும் வருதல்; 2. இடையிடை குறைந்தும், இடையிடை குறைந்து இடைமடக்காயும் வருதல். இடையிடை குறைதல் 1. இரண்டாமடியும் நான்காமடியும் குறைதல். 2. முதலடியும் மூன்றாமடியும் குறைதல். இதுவும் பலவகை. 13. கலித்தாழிசை - இரண்டடியும் பலவடியும் வந்து, ஈற்றடி மிக்கு, ஏனையடிகள் தம்முள் ஒத்தும் ஒவ்வாதும் வருதல். இரண்டடியின் மிக்க விடத்தே, ஏனையடிகள் ஒத்தும் ஒவ்வாதும் வருமென்க. எனவே, இதுவும் பலவகை. குறிப்பு : 1. கலித்தாழிசை ஈற்றடி மிகுதல் 2. வெண்டுறை ஈற்றில் குறைதல் 3. ஆசிரியத்தாழிசை முதலும் இடையும் ஈறும் குறைதல் இவை மூன்றும் அடிகள் மிக்கும் குறைந்தும் ஆனவை. இவற்றிற்கெல்லாம் எடுத்துக்காட்டு, எடுத்துக்காட்டியலில் காட்டப்படும். இவற்றின் அமைப்புக்களை நன்கு அறிந்து கொள்க. குறள் வெண்டுறை குறள் வெண்டுறை - அளவொத்த இரண்டடி வருதல். காட்டு 1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை. - முது 2. கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை என்று மேத்தித் தொழுவோ மியாமே. - கொள் இவை, அளவடி இரண்டு வந்த குறள்வெண்டுறைகள். 3. நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளு நாளு நல்லுயிர்கள் கொன்று தின்னும் மாந்தர்கள் குடிலஞ் செய்து கொள்ளாரே. - யாக இது, அறுசீரடி இரண்டு வந்த குறள்வெண்டுறை. இது பழைய இலக்கணம். புதியது புகுதல் இக்குறள் வெண்டுறை போலவே, தாழிசை - குறளடி முதல் கழிநெடிலடி ஈறாக அளவொத்த இரண்டடி வருதலே. வரலாறு குறளடி 4 - வஞ்சித்துறை குறளடி 2 - தாழிசை சிந்தடி 4 - வஞ்சிவிருத்தம் சிந்தடி 2 - தாழிசை அளவடி 4 - கலிவிருத்தம் அளவடி 2 - தாழிசை நெடிலடி 4 - கலித்துறை நெடிலடி 2 - தாழிசை கழிநெடிலடி 4 - ஆசிரிய கழிநெடிலடி 2 - தாழிசை விருத்தம் இவற்றிற்கு எடுத்துக் காட்டு, எடுத்துக்காட்டியலில் காண்க. எனவே, தாழிசையும், குறள் வெண்டுறையும் ஒன்றெனவே படும். மேல் குறள் வெண்டுறைக்குக் காட்டிய மூன்றாவது காட்டு, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தின் இரண்டடியாதல் காண்க. முதல் எடுத்துக்காட்டு, ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் வண்மையிற் சிறந்தன்று வாய்மை யுடைமை. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் கற்ற துடைமை காட்சியி னறிப. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் கொண்டுகண் மாறல் கொடுமையிற் றுவ்வாது - முது என, ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம். என்னும் முதலடியை மற்ற அடிகளுடன் தனித்தனி சேர்க்கின் அடியெதுகை அமையாமையின், இவற்றை, ‘அளவொத்த இரண்டடி’ எனக் கொள்ளுதல் சிறிதும் பொருந்தாமையான், மற்ற அடிகளைத் தனியடிகள் எனக் கொள்ளுதலே சால்புடைத்தாம் இரண்டாவது எடுத்துக்காட்டான. கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை என்று மேத்தித் தொழுவே மியாமே. என்பது, ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே. - நன் என்பது போன்ற நூற்பாவே யாகும். ஆத்தி சூடி யமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே. - ஆத் முந்திரி யிலக்கம் முறையுடன் படிக்கத் தந்தி முகவன் தாளே சரணம். - முந் குள்ளக் குள்ளனே குண்டு வயிறனே வெள்ளிக் கொம்பனே விநாயகனே சரணம். - ஆதி பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன் சரணவற் புதமலர் தலைக்கணி வோமே. - வெற் வெற்றி வேற்கை வீர ராமன் கொற்கை யாளி குலசே கரன்புகல் நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால் குற்றங் களைவோர் குறைவிலா தவரே. - வெற் இவையெல்லாம் நூற்பாக்களேயாகும். நூற்பா, ஆசிரியப் பாவேயாகும். ஆசிரியப்பா, மூன்றடிச் சிறுமையுடைது. நூற்பா, ஓரடி முதல் வரும். இதுவே ஆசிரியப்பாவுக்கும் நூற்பாவுக்கு முள்ள வேறுபாடு. நூற்பா, சூத்திரம் - ஒரு பொருட் கிளவி. நூற்பாவின் இலக்கணத்தை, அடுத்த இயலில் நூற்பா என்பதிற் காண்க. எனவே, அளவொத்த இரண்டடி - தாழிசை எனக்கொண்டு, ‘அளவொத்த இரண்டடி - குறள் வெண்டுறை என்பதைப் பழையது கழிதலாக்கி, புதியது புகுதலாக, அளவடி தனித்து வருதல் - குறள்வெண்டுறை எனக்கொள்ளுதல் ஏற்புடைத் தாகும். ஒன்றின் முடித்தலால் அளவடியிற் குறைந்த அடியும் கொள்ளப்படும். காட்டு 1. சேமக் குருத்தோலை சிக்கனவே தான்வாரி வாரிய ஓலையிலே வக்கணைகள் வைத்தெழுதி என்னவென்று பச்சோலை எழுதினான் அர்ச்சுனனும் அமரா பதியாளும் அன்புள்ள அப்பாவே. - பஞ்சு இது, பொழிப்பு மோனையுடைய அளவடி தனித்து வந்த குறள் வெண்டுறை. 2. அன்றொரு நாழிகையுஞ் சென்ற பிறகாக மற்றுமொரு நாழிகை யுற்ற பிறகாக. -அல்லி இது, பொழிப்பெதுகை யுடைய அளவடி தனித்து வந்த குறள் வெண்டுறை. 3. கூலி மிகக்கேட்பார் கொடுத்ததெல்லாந் தாமறப்பார் வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார் ஏனடா நேற்றைக்கிங்குவர வில்லை யென்றால் பானையிலே தேளிருந்து பல்லாற் கடித்ததென்பார். - பாரதி இது பொழிப்பு மோனையோடு, அடியெதுகை பெற்று இவ்விரண்டடியாக வந்த குறள் வெண்டுறையே. அளவொத்த இரண்டடிகளல்ல. ‘கண்ணன் என் சேவகன்’ என்பதும் இதுபோலவே, பாரதி யாரின் குயிற்பாட்டும் குறள்வெண்டுறையே. பாஞ்சாலி சபதத்தின் ‘அதர்மக் குழப்பம்’ முதலிய பகுதிகளும் குறள்வெண்டுறையே. 4. தெற்கே வெகு தூரமிருக்குது செஞ்சிக் கோட்டைபாரு, செஞ்சிக்கோட்டை யாளும்ராசன் தேரணி மகராசன் தேரணிராசன் குமாரன்நான் தேசிங்கு மகிபாலன்; சிற்றப்பதுரை தரணிசிங்குமே சிறையி லிருக்கிறாராம்; குதிரையேற வலுவில்லாமல் கொலுவிருக்கிறாராம்; குதிரையேறிச் சவாரிசெய்துறநான் கொண்டு போகவந்தேன். -தேசிங்கு இது, வேற்றோசையுடைய அனவடியான் வந்த குறள் வெண்டுறை. 1. பஞ்சபாண்டவர் வனவாசம் 2. அல்லியரசாணி மாலை 3. பவளக்கொடி மாலை 4. அபிமன்னன் சுந்தரிமாலை 5. புலந்திரன் தூது 6. ஆரவல்லி சூரவல்லி கதை 7. வைகுந்தம்மானை 8. ஏணியேற்றம் 9. நல்லதங்காள் கதை 10. சங்கர் பொன்னர் அம்மானை 11. காத்தவராயன் கதை 12. தேசிங்குராசன் கதை முதலிய அம்மானை நூல்களெல்லாம் குறள்வெண்டுறை யாலானவை. பொருளமைதியோடு எளிதில் பாடுதற்கு ஏற்ற செய்யுள் ஆகும் இது. 5. ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை கற்ற துடைமை காட்சியினறிப இன்பம் வேண்டுவோன் துன்பந் தண்டான். - முது 6. எழுத்தறி வித்தவன் இறைவ னாகும். செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல். மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல். அறிஞர்க் கழகு கற்றுணர்ந் தடங்கல். - வெற் இவை பொழிப்பு மோனை பெற்ற ஓரோசையுடைய குறள் வெண்டுறைகள். 7. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயந் தொழுவது சாலவு நன்று ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். - கொன் இது பொழிப்பெதுகை யுடையது. 8. அறம்பொரு ளின்பம் பெறும்பயனாம் ஆன்றோர் உரையே அறமாகும் இன்சொல் அன்புக் கிருப்பிடமாம். ஈருளங் கலந்த தில்லறமாம் உண்மையே ஒழுக்கத் துரைகல்லாம். ஊரவர் வாழ்வுக் குறுதுணைசெய். - புகு இது சிந்தடியாலான குறள்வெண்டுறை. 9. அறஞ்செய விரும்பு ஆறுவ துசினம் இயல்வது கரவேல் ஈவது விளக்கேல். - ஆத் இது குறளடியாலான குறள்வெண்டுறை. பயிற்சி 1. பாவினம் எத்தனை வகைப்படும். 2. மொத்தப் பாவினங்கள் எத்தனை? 3. அடிவகையால் ஆன பாவினங்கள் எவை? 4. அடிவகையானும் பாவகையானும் ஆன பாவினங்கள் எவை? 5. அடிகள் மிக்கும் குறைந்தும் ஆன பாவினங்கள் எவை? 6. கலித்தாழிசை, வெண்டுறை, ஆசிரியத்தாழிசை - இவற்றின் வேறுபா டென்ன? 7. அளவொத்த இரண்டடி - குறள் வெண்டுறை எனல் எங்ஙனம் பொருந்தாது? 8. புதியது புகுந்த குறள்வெண்டுறையின் இலக்கணம் என்ன? நான்கு எடுத்துக்காட்டுத் தருக? 13. தாழிசை. 1. கலிப்பாவின் உறுப்புக்களுள் ஒன்றான தாழிசை 2. கலிப்பாவின் இனமான கலித்தாழிசை 3. அளவொத்த இரண்டடியான் வரும் தாழிசை என தாழிசை மூன்று வகைப்படும். இவற்றுள், 1. தரவை அடுத்து வரும் கலிப்பாவின் உறுப்புக்களுள் ஒன்றான தாழிசை - தரவின் அடியளவுக் கேற்ப அளவடி இரண்டானும் மூன்றானும் நான்கானும் வரும். 2. கலிப்பாவின் இனமான கலித்தாழிசை - இரண்டடியும் பலவடியும் வந்து ஈற்றடி மிக்கு ஏனையடிகள் தம்முள் ஒத்தும் ஒவ்வாதும் வரும். 3. அளவொத்த இரண்டடியான் வரும் தாழிசை - குறளடி முதல் கழிநெடிலடி ஈறாக உள்ள ஐவகை அடிகளாலும் வரும். முதல் தாழிசை - கலிப்பாவின் உறுப்பாகப் பாடப்படும். இரண்டும் மூன்றும் - தனியாகப் பாடப்படும் தாழிசைகளாகும். இவற்றிற்கு எடுத்துக்காட்டு, எடுத்துக் காட்டியலில் காண்க. 14. தரவு, தாழிசை, கொச்சகம் கலிப்பாவின் உறுப்புக்களான தரவு, தாழிசை, கொச்சகம் ஆகிய மூன்றும் அளவடியானே வரும். கலிப்பாவின் வகையால் வேறு பெயர் பெற்றனவேயன்றி, தரவும் கொச்சகமும் ஒன்றேயாம். அடியளவான் வேறுபடுவதன்றித் தாழிசையும் வேறன்று. கலிப்பாவின் இறுதியுறுப்பான சுரிதகம் - வெண்பாவாகவும், ஆசிரியப்பாவாகவும் வரும். வெண்பா - ஈற்றடி சிந்தடியாகவும், ஏனையடிகள் அளவடிகளாகவும் வரும். ஆசிரியப்பா - ஈற்றயலடி சிந்தடியாகவும், ஏனையடிகள் அளவடிகளாகவும் வரும். ஒத்தாழிசைக் கலிப்பாவின் உறுப்புக்களுள் ஒன்றான அம்போ தரங்கம் - அளவடியானும், சிந்தடியானும், குறளடியானும் வரும். அராகம் முடுகி வருதலான், பெரும்பாலும் கழிநெடிலடி யாகவே வரும். இவற்றிற்கு, எடுத்துக்காட்டுடன் இலக்கணத்தை யாப்பதி காரத்திற் காண்க. 15. சிந்து 1. சமனிலைச்சித்து 8. தங்கச்சிந்து 2. வியனிலைச் சிந்து 9. சேவற்பாட்டு 3. நொண்டிச்சிந்து 10. புறாப்பாட்டு 4. வழிநடைச்சிந்து 11. குள்ளத்தாராச்சிந்து 5 ஆனந்தக் களிப்பு 12. மேல்வைப்புச்சிந்து 6. காவடிச்சிந்து 13. தெம்பாங்கு 7. வளையற் சிந்து 14. கும்மி 15. இலாவணி 22. ஒப்பாரி 16. தானானேச் சந்தம் 23. தாலாட்டு 17. தன்னனச் சந்தம் 24. கண்ணி 18. ஏசல் 25. இசைப்பாடல் 19. ஏற்றப்பாட்டு 26. வண்ணப்பாடல் 20. ஏலப்பாட்டு 27. நாடகம் 21. உடுக்கைப்பாட்டு எனச் சிந்து பலவகைப்படும். இவற்றிற்கு எடுத்துக்காட்டும் இலக்கணமும் எடுத்துக் காட்டியலில் காண்க. 1. சித்தர்பாடல்கள் 6. தேசிகவிநாயகம் பிள்ளை 2. சில்லறைக்கோவை பாடல் 3. குறவஞ்சி நூல்கள் 7. பாரதிதாசன் பாடல் 4. பள்ளுநூல்கள் 8. நாமக்கல் கவிஞர் பாடல் 5. பாரதியார்பாடல் 9. அரசியலரங்கம் முதலியவற்றில், இச்சிந்து வகைகளைக் கண்டறிக. 16. அடிகள் வரும் செய்யுட்கள் அடுத்த இயலில், அடிவகையால் செய்யுட்களை எடுத்துக் காட்டித் தொடையமைதி காட்டப்படும். ஆகையால், அவ்வடிகள் வரும் செய்யுட்களைத் தெரிந்து கொள்ளுதல் பயனுடைத்தாம். 1. குறளடி 1. குறளடி வஞ்சிப்பா 6. நூற்பா 2. வஞ்சித்தாழிசை 7. குறள் வெண்டுறை 3. வஞ்சித்துறை 8. வெண்டுறை 4. இணைக்குறளாசிரியப்பா 9. தாழிசை 5. பரிபாடல் 10. சிந்து 2. சிந்தடி 1. சிந்தடி வஞ்சிப்பா 5. பரிபாடல் 2. வஞ்சிவிருத்தம் 6. குறள்வெண்டுறை 3. வெண்பாவின் ஈற்றடி 7. தாழிசை 4. நேரிசையாசிரியப்பாவின் 8. சிந்து ஈற்றயலடி 3. அளவடி 1. வெண்பா 10. வெண்டாழிசை 2. ஆசிரியப்பா 11. வெண்டுறை 3. கலிப்பா 12. வெளிவிருத்தம் 4. பரிபாடல் 13. ஆசிரியத்தாழிசை 5. மருட்பா 14. ஆசிரியத்துறை 6. நூற்பா 15. கலித்தாழிசை 7. கொச்சகம் 16. கலிவிருத்தம் 8. குறட்டாழிசை 17. தாழிசை 9. குறள்வெண்டுறை 18. சிந்து 4. நெடிலடி 1. கலித்துறை 4. தாழிசை 2. கட்டளைக்கலித்துறை5. சிந்து 3. ஆசிரியத்துறை 5. கழிநெடிலடி 1. கலித்துறை 5. ஆசிரியத்துறை 2. கட்டளைக்கலிப்பா 6. கலித்தாழிசை 3. குறட்டாழிசை 7. தாழிசை 4. வெண்டுறை 8. சிந்து இவற்றிற்கு எடுத்துக்காட்டு, எடுத்துக்காட்டியலிற் காண்க.  2. எடுத்துக்காட்டியல் தமிழ் இலக்கியச் செய்யுள் நூல்களிலிருந்து, குறளடி முதல் கழிநெடிலடி ஈறாகவுள்ள அடிகளாலான செய்யுட்களை எடுத்துக் காட்டி, அச்செய்யுட்களின் அவ்வவ்வடிகளில் எங்கெங்கே மோனை வந்துள்ளது. வரவேண்டும் என்பதைக் குறித்து விளக்குதலான், இவ்வியல் இப்பெயர்த்தாயிற்று. இதுவே இந்நூல் நுதலிய பொருளாகும். எதுகை முதலிய ஏனைத் தொடையமைதியும் குறித்துக் காட்டப்பெறும் நன்கு கருத்தூன்றிக் கவனித்துப் படித்தறிக. 1. குறளடி குறளடியாலான பாவும் பாவினமும் இங்கு எடுத்துக்காட்டி விளக்கப்படும். 1. குறளடி வஞ்சிப்பா 1. பூந்தாமரைப் போதலமரத் தேம்புனலிடை மீன்றிரிதரும் வளவயலிடைக் களவயின்மகிழ் வினைக்கம்பலை மனைச்சிலம்பவும் மனைச்சிலம்பிய மணமுரசொலி வயற்கம்பலை கயலார்க்கவும்; நாளும், மகிழும் மகிழ்தூங் கூரன் புகழ்த லானாப் பெருவண் மையனே. - பழம் இக்குறளடி வஞ்சிப்பா, இரண்டடி ஆசிரியச் சுரிதகத்தான் முடிந்தது. நாளும் - தனிச்சொல். தனிச்சொல்லும் சுரிதகமும் பெறுதல் - வஞ்சிப்பாவின் இலக்கணம். கலிப்பாவும் தனிச் சொல்லும் சுரிதகமும் பெற்றே முடியும். தனிச்சொல், சுரிதக இலக்கணத்தை, யாப்பதிகாரத்தில், ‘கலிப்பாவின் உறுப்புக்கள்’ என்னும் தலைப்பில் காண்க. குறிப்பு : தனிச்சொல் என்பது, இக் கலிப்பா, வஞ்சிப்பாக்களின் உறுப்பாக வருதலன்றி, சிந்து வகைகளில் பெரும் பான்மை பயின்று வரும். 1, 5 அடிகளில் மோனை அமைந்துள்ளது. அடி 5ல், ‘மனை - மண’ எதுகையுமாம். அடி 2ல், ‘தேம் - மீன்’ மெல்லின வெதுகை. ம் - ன் - மெல்லெழுத்து. இது அவ்வளவு சிறப்பின்று. 3, 4, 6 அடிகள் எதுகைத் தொடை. சுரிதகத்தில். ‘ம - ம’ - இணைமோனை. ஈற்றடி புகழ்த லானாப் பொருவண் மையனே என இருக்கின் மோனை அமையும். மோனை எதுகைகளை நன்கு பார்த்தறிக. 2. நந்தாய்தமர் நங்காதலர் நஞ்சேய்பிறர் நந்தாவுறை நந்தேயமேல் வந்தேநனி நொந்தாழ்துயர் தந்தேயிவண் நிந்தாநெறி நின்றாலிவர் தந்தாவளி சிந்தாவிழ, அடிப்போமடல் கெடுப்போமுகத் திடிப்போங்குடல் எடுப்போமிடுப் பொடிப்போஞ்சிர முடைப்போம்பொடி பொடிப்போம்வசை துடைப்போமுயிர் குடிப்போம்வழி தடுப்போம்பழி முடிப்போமினி நடப்போம்நொடி, எனவாங்கு, பெருமுர சதிரப் பெயருமின் கருமுகி வார்த்தெழும் உருமென ஆர்த்தே. - மனோ இக்குறளடி வஞ்சிப்பாவின் அடிகளிலுள்ள மோனை எதுகை களை நீங்களே கண்டுகளியுங்கள். ‘நஞ்சேய்’ இனவெதுகை போலும்! முதல் இரண்டடி மோனைத் தொடை. ஆசிரியச் சுரிதகத்தின் ஈற்றடி ‘கரு - உரு’ - பொழிப்பெதுகை. ‘ஈர்த்து - ஆர்த்து’ பின்னெதுகை. 3. வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவின் புட்டேம்பப் புயன்மாறி வான்பொய்ப்பினுந் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி புனல்பரந்து பொன்கொழிக்கும். - பட் இப்பட்டினப்பாலைக் குறளடிகளில் (1 - 7) அமைந்துள்ள மோனை எதுகைகளை நோக்குக. ஆறாவதடி தவிர, ஐந்தாவதடியில் எதுகையும், மற்ற அடிகளில் மோனையும் அமைந்துள்ளன. கண்டறிக. ஆறாவதடி, ‘அலைக்காவிரி’ என்றிருக்கின் மோனை அமையும். அலை -கடல். இன்னொருமுறை மூன்று பாட்டுக் களையும் கவனித்துப் படித்துப் பார்த்துத் தொடையமைதியைக் கண்டறிக. 1, 3 ன் தொடை அமைதியைக் கவனியுங்கள். செந்தொடை சிறப்புற்றிருந்த அன்றே, இருசீரடிகளை இவ்வாறு மோனை எதுகை அமையச் செய்திருத்தலே, பழந் தமிழ்ப் புலவர்கள் மோனை எதுகைத் தொடையின் பால் வைத்திருந்த மதிப்பினைப் புலப்படுத்தும். 4. அள்ளற்பள்ளத் தகன்சோணாட்டு வேங்கைவாயில் வியன்குன்றூரன். - பழம் இக்குறளடிகள் நாலசைச் சீர்களாலாயவை. நன்கு மோனை அமைந்துள்ளது. ‘பள்ளத்து அகன்’ அள் ளற் பள் ளத் நேர் நேர் நேர் நேர் தே மாந் தண் பூ மற்றச் சீர்களையும் இவ்வாறு அலகிட்டறிக. இவ்வடிகளை, அள்ளற் பள்ளத் தகன்சேர ணாட்டு வேங்கை வாயில் வியன்குன் றூரன் என, அளவடியாகக் கொள்ளினும் இழுக்காது. இவ்வடிகள், ‘தேமா, புளிமா’ என்னும் சீர்களாய் அமைந்தமை அறிக. குறிப்பு: கனிச்சீர் நான்கும் வஞ்சிப்பாவுக்குரியவை. எனினும், சிறுபான்மை பிற சீர்களும் வஞ்சியடிகளில் வரப்பெறும். மூன்றாவது வஞ்சியில், ‘வயங்கு வெண்மீன்’ முதலிய காய்ச்சீர்கள் வந்திருத்தலை அறிக. பயிற்சி 1. இரண்டாம் பாட்டிலுள்ள மோனை எதுகைகளைப் பிரித்துக் காட்டுக. 2. மூன்றாம் பாட்டடிகளிலுள்ள மோனைகளை எடுத்துக் காட்டுக. 3. முதற்பாட்டிலுள்ள கனிச்சீர்களை அலகிடுக. 4. 1, 2, 3, பாட்டுக்களிலுள்ள ‘ஒன்றிய, ஒன்றாத’ வஞ்சித் தளைகளை எடுத்துக்காட்டுக. 5. ‘அள்ளற் பள்ளத்*தகன்சோணாட்டு’ - தளைகூறுக. 6. 2 -ஆம் வஞ்சிப்பாவின் ஈற்றடியிலுள்ள தொடை வகை இரண்டற்குமுள்ள வேறுபாடென்ன? 7. வஞ்சிப்பாவுக்கும் கலிப்பாவுக்குமுள்ள ஒற்றுமை யாது? 8. ‘அள்ளற்பள்ளத்’ என்னும் குறளடிகளை அளவடிகளாகக் கொண்டு, அவ்வடிகளிலமைந்துள்ள மோனை எதுகைகளை எடுத்துக் காட்டுக. 9. “வரியணிசுடர்வான் பொய்கையிருகாமத் திணையேரிப்புலிப் பொறிப் போர்க்கதவிற்றிருத் துஞ்சுந்திண் காப்பிற்புகழ்நிலை இயமொழிவளர” தூங்கலோசை யமைந்த குறளடிகளாக எழுதுக. 2. வஞ்சித்தாழிசை 1. பாட்டாளர் பயன்பேணாத் 2. எளியவர்க் கிரங்காமல் தேட்டாளர் திருவென்னாம் ஒளியராய் உறவாழ்வார் மாட்டாத மரமென்ன துளியிலாத் தூவான்போல் நாட்டாரால் நகையண்பர். வெளியரால் இனிவுண்பர். 3. உழவர்தம் உழைப்புண்டு விழவராய் மிகவாழ்வார் இழவாரம் இவரென்னக் கிழவரால் இழிவுண்பர். - புகு இது, குறளடி நான்கு ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வந்ததால் வஞ்சித் தாழிசை. இவ்வாறு வருதல் வஞ்சித் தாழிசையின் இலக்கணம். 2, 3 பாட்டுக்களின் ஈற்றடிகள் எதுகைத் தொடை ஏனைய அடிகள் மோனைத் தொடை நன்கு அமைந்திருத்தல் காண்க. அடியெதுகையை நோக்குக. முதற்பாட்டு அதற்கதுவே வந்த வல்லொற்றெதுகை. 2, 3 உயிரெதுகை. 3. வஞ்சித்துறை 1. பானிறப் பனிவரை 7. தேவுகாதல் சீறியோன் மேனிற மிகுத்தன ஆவியோபி னானெனாப் நீனிற நிழன்மணி பூவுலாவு பூவையோ தானிரைத் தகமெலாம். - சிந் டேவலாரு மேகினார். - கம் 2. திரைத்த சாலிகை 8. முந்துவடி வாளமரின் நிரைத்த போனிரந் வந்தணுகு வான்மதலை திரைப்ப தேன்களே நிந்தனைகொ லாமிதென விரைக்கொள் மாலையாய். நொந்நுசில கூறினனே. - வில் - சூளா 3. நறவ மார்பொழிற் 9. வென்றபின் வாளமரின் புறவ நற்பதி நின்றநிலை கண்டே இறைவ னாமமே ஒன்றுபட மாவிரதர் மறவல் நெஞ்சமே. - சம் சென்றனரு டைந்தே. - வில் 4. மெய்யார் முதுகுன்றில் 10. தழைத்திடுங் கூடலார் ஐயா வெனவெல்லார் குழைத்துடன் கூடலார் பொய்யா ரிரவோர்க்குச் பிழைத்திடுங் கூடலே செய்யா ளணியாளே. - சம் இழைத்திடுங் கூடலே. - மக 5. மின்னின் நிலையில் 11. பாடுகின்ற பனுவலோர்கள் மன்னுயி ராக்கைகள் தேடுகின்ற செல்வமே என்னு மிடத்திறை நாடுகின்ற ஞானமன்றில் உன்னுமீனிரே. - நாலா ஆடுகின்ற அழகனே! -தாயு 6. ஆடரம்பை நீடரங் 12. ஒற்றி யூரனைப் கூடுகின்ற பாடலால் பற்றி நெஞ்சமே ஊடுவந்த கூடவிக் நிற்றி நீயருட் கூடுவந்து கூடினேன். - கம் பெற்றி சேரவே. - தாயு 13. நலமே நாடிற் புலவீர் பாடீர் நிலமா மகளின் தலைவன் புகழே. - பரா குறளடி நான்கு தனித்து வந்தமையால் இவை - வஞ்சித் துறைகள். இவற்றுள் 6, 7 பாட்டுக்கள் ஒரே ஓசையுடையவை. எதுகைத் தொடையும் மோனைத் தொடையும் புலப்படற்காக இரண்டுங் காட்டப் பெற்றன. மற்ற பாட்டுக்கள் பதினொன்றும் வெவ்வேறு ஓசையுடையவை . ஓசையுடன் படித்துப் பாருங்கள். ‘அசைவிலா ஊக்கமுடையானுழை ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்’ அல்லவா? இவற்றுள், முதற்பாட்டின் முதல் மூன்றடிகளில் மோனை நன்கு அமைந்துள்ளது. ஈற்றடி ‘தானிரைத்து + அகமெலாம்’ எனப்புணர்ந்தால் மோனையன்று. பாட்டு 2, 5 ன் மூன்றாமடியிலும் பாட்டு 8, 10 இரண்டாமடியிலும், பாட்டு 12ன் 1, 3 அடிகளிலும், பாட்டு 13ன் முதலடியிலும் மோனை அமைந்துள்ளது. மற்ற அடிகளில் மோனை அமையவில்லை. பாட்டு 6ன் முதற்சீரினும் இரண்டாஞ்சீரினும் நன்கு எதுகைத் தொடை அமைந்துள்ளது. ஈற்றடியில் எதுகையோடு மோனையும் அமைந்துள்ளது. 7, 11 பாடல்களில் நன்கு மோனை அமைந்துள்ளது. மோனை அமைந்துள்ள அடியையும், மோனை அமையா அடியையும் ஓசையுடன் படித்துப் பாருங்கள், மோனைத் தொடையின் சிறப்பு விளங்கும். இரு சீரடியானதால் மோனை அமையாவிடினும் இழுக்கின்று. ஓசை நயத்துடன் பாடவேண்டும். மோனை அமைதல் சிறப்பு. அடியெதுகை 1, 2, 3, 6, 7, 10, 11, 13 பாட்டுக்கள் - உயிரெதுகை. பாட்டு 4-ல் இடையொற்றின் முன் அதே இடையின உயிர்மெய் வந்துளது. பாடல் 5ல் மெல்லொற்றின் முன் அதே மெல்லின உயிர்மெய் வந்துளது. பாடல் 8, 9ல், மெல்லொற்றின் முன் இன வல்லின உயிர்மெய் வந்துளது. பாடல் 12ல் வல்லொற்றின் முன் அதே வல்லின உயிர்மெய் வந்துளது. குறிப்பு: நாலாம் பாட்டில், ‘ஐயா’ என்பது, ‘அய்யா’ என்னும் வடிவில், ‘மெய்யா, பொய்யா, செய்யா’ என்னும் மற்றச் சீர்களுடன் இயைந்து எதுகை நயம்படும். ‘அய்’ என்பதே பழைய வடிவம் என்பது, அகரத் திம்பர் யவகரப் புள்ளியும் ஐஒள நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் தெரிகிறது. இனி இவ்வாறேகொள்வோம். மெய்யார் முதுகுன்றில் அய்யா வெனவல்லார் பொய்யா ரிரவோர்க்குச் செய்யா ளணியாளே. இதைப் படித்துப் பாருங்கள். கை - கய் பை - பய் தை - தய் மை - மய் நை - நய் வை -வய் என, ஐகார உயிர் உயிர்மெய் யெழுத்துக்களை இவ்வாறே கொள்க. இவ்வாறே ஒளகாரமும், ‘ஒள - அவ், வௌ - வவ்’ எனக் கொள்ளப்படும். “ஒளவித் தழுக்கா றுடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்.” - குறள். என்பது, “அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்.” என எழுதப்படுதல் காண்க. “ நவ்வி வீழ்ந்தென நாடக மயில்துயின் றென்னக் கவ்வை கூர்தரச் சனகியாங் கடிகமழ் கமலத் தவ்வை நீங்குமென் றயோத் திவந் தடைந்தவம் மடந்தை தவ்வை யாமெனக் கிடந்தனள் கைகயன் றனையை. - கம்” நௌவி - நவ்வி கௌவை - கவ்வை ஒளவை - அவ்வை என எழுதப்படுதல் காண்க. 7 ஆம் பாட்டு, தேவு காதல் சீறியோன் ஆவி போயி னானெனாப் பூவு லாவு பூவையோ டேவ லாரு மேகினான். என, முச்சீரடிப் பாட்டாகவும் - வஞ்சி விருத்தம் ஆகவும் - அமையும். 6 ஆம் பாட்டையும் இவ்வாறு வஞ்சி விருத்தமாக எழுதுக. குறிப்பு: இன்னும் வேறுபட்ட ஓசையுடனும் பாடலாம். முயலுக. இவ்வஞ்சித் தாழிசையும், வஞ்சித்துறையும் மிகச் சிறுபான்மையினவே யாகும். இருசீரடி உண்மையால், அவ்வடியின் பயன் பாடுற, இருசீரடியாலாய குறளடி வஞ்சிப்பா, வஞ்சித் தாழிசை, வஞ்சித் துறைகளை இறவாமல் காத்தலும் வளர்த்தலும் கவிஞர்தம் கடப்பாடாகுமன்றோ? 4. தாழிசை 1. நாட்டின் நலமே 3. முத்தமிழின் மூதறிஞர் பாட்டின் பயனாம், வித்திநல் விளைக்குவர். 2. கற்றோர் கரியாக 4. பெற்றசெல்வ மற்றிடாதுஉ மற்றோர் வாழ்வாரே. ஞற்றலேநன் குற்றதே. - புகு இக் குறளடித் தாழிசைகள் வெவ்வே றோசையுடையன. நன்கு மோனைத் தொடை அமைந்துள்ளன. 4, எதுகைத் தொடை; ஒரே வகையான எதுகை யுடையவை. கண்டறிக. பயிற்சி 1. குறளடி வஞ்சிப் பாவுக்கும், வஞ்சித்துறைக்கு முள்ள வேறுபாடென்ன? 2. வஞ்சித்தாழிசை, வஞ்சித்துறை - வேறுபாடென்ன? 3. இத்தாழிசைகளை அதனதன் ஓசையுடைய வஞ்சித் துறையுடன் சேர்த்துக. 4. சிந்தடியாக எழுதக் கூடும் தாழிசை எது? அதை அவ்வாறு எழுதுக. 5. ஏதாவதொரு தாழிசையை வஞ்சித்துறை யாக்க முயலுக. 6. ஐ, ஒள - இவற்றின் பழைய வடிவம் என்ன? 7. ‘உலக ஒருமை’ இதை முதலடியாகக் கொண்டு ஒரு வஞ்சித் துறை யாக்குக. 8. ‘நல்லோர்தம் நாட்டமே’ இதை ஈற்றடியாகக் கொண்டு ஒரு வஞ்சித் துறை யாக்க முயலுக. 9. கணித்தவம் - தக்கதே - மாந்தர் வாழ்வு - லாளுவோர் ஆந்தகவி - வைகவே - காந்தியார் - தாந்துணிதல். இச் சீர்களைக் கொண்டு நன்கு மோனை எதுகைத் தொடை அமைந்த ஒரு வஞ்சித்துறை ஆக்குக. 2. சிந்தடி 1. சிந்தடி வஞ்சிப்பா 1. கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன வடிவாளெயிற் றழலுளையன வள்ளுகிரன பிணையெருத்தி னிணையரிமா னணையேறித் துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி எயினடுவ ணினிதிருந் தெல்லோர்க்கும் பயில்படுவினை பத்திமையிற் செப்பினோன் புணையெனத் திருவுறு திருந்தடி திசைதொழ விரிவுறு நாற்கதி வீடுநனி யெளிதே. - பழம் 2. பொன்பூக்குந் தாமரையின் பூநிழலில் இன்பூக்கும் இனச்சுரும்ப ரிசைபாட, அச்சுரும்ப ரின்னிசைகேட் டாங்கொருசார் கச்சணிமார் அயர்வின்றிக் களைகளையும் வளமார் பழனங் கதிரப் படிநெல் கழனி விளையுங் காவிரி நாடே. -புகு இவ்விரு சிந்தடி வஞ்சிப்பாவும் வெவ்வேறோசையின. ஓசை யோடு படித்துப் பாருங்கள். பாட்டு 1. அடி - 1, 5ல், முச்சீரினும் மோனை. அடி - 2ல், 1, 3 சீரில் மோனை. அடி - 3ல், முச்சீரினும் எதுகை. அடி - 4ல், முதலில் இணைமோனை; பின்னர் இணையெதுகை. அடி - 6ல், 1, 2, சீரில் மோனை. சுரிதகத்தின் முதலடி முச்சீரினும் மோனை. இரண்டாமடி பொழிப்பு மோனை. பாட்டு 2. அடி - 2ல், முச்சீரினும் மோனை. மற்ற அடிகளில் முதற்சீரினும் மூன்றாஞ்சீரினும் மோனை. இவ்வஞ்சியடிகள் இவ்விரண்டு ஓரெதுகையாய் அமைந்துள்ளன. குறிப்பு: சிந்தடியில் முதற்சீரினும் மூன்றாஞ்சீரினும் மோனை வருதலே சிறப்பு. இரண்டாவது பாட்டின் அடிகள் அவ்வாறே அமைந்துள்ளமை அறிக. முதற்பாட்டின் ஆறாவதடியை ஓசையுடன் படித்துப் பாருங்கள். அதன் சிறப்பு விளங்கும். ‘பயில்படுவினை பத்திமையிற் பகர்ந்திட்டோன்’ இப்போது படித்துப் பாருங்கள் இவ் வஞ்சிப்பாவின் பயிற்சி பழங்காலத்திலேயே மிகச் சிறுபான்மை. முடிந்த அளவிற் பாடலாம். பயிற்சி 1. முதற்பாட்டிலுள்ள கனிச்சீர்களை எடுத்துக்காட்டுக. 2. அவ்வடிகளில் அமைந்துள்ள வஞ்சித்தளைகளைக் குறிப்பிடுக. 3. இவ்விரு பாக்களிலுமுள்ள எதுகை வகையினைக் கண்டறிக. 4. வஞ்சிப்பாவின் இலக்கணம் என்ன? 2. வஞ்சி விருத்தம் 1. விரிமாமணி மாலை விளங்குமுடித் திருமாமணி சிந்து திளைப் பினராய் எரிமாமணி மார்பனும் ஏந்திழையும் அருமாமணி நாகரி னாயினரே. - சிந் 2. நீறணி மேனியன் நீள்மதியோ டாறணி சடையின னணியிழையோர் கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ் சேறணி வளவயற் சிரபுரமே. - சம் 3. பனியார்மல ரார்தரு பாதன் முனியானுமை யோடு முயங்கிக் கனியார்பொழில் சூழ்தரு காழி இனிதாமது கண்டவ ரீடே. -சம் 4. பண்ணினார் படியேற்றர் நீற்றர்மெய் பெண்ணினார் பிறைதாங்கு நெற்றியார் கண்ணினார் கருவூருள் ஆனிலை நண்ணினார் நமையாளு நாதரே. - சம் 5. ஈடு மெடுப்புமில் ஈசன் மாடு விடாதென் மனனே பாடுமென் நாஅ வன் பாடல் ஆடுமெ னங்கம் அணங்கே. -நாலா 6. கைத்தோ டுஞ்சிறை கற்போயை வைத்தோ னின்னுயிர் வாழ்வானாம் பொய்த்தோர் வில்லிகள் போவாராம் இத்தோ டப்பதி யாதுண்டே. -கம் 7. விண்ணினை வேலை விளிம்பார் மண்ணினை யோடி வளைந்தார் அண்ணலை நாடி யணைந்தார் கண்ணினின் வேறயல் கண்டார். கம் 8. கயமொடு கயமெதிர் குத்தின அயமுட னயமுனை முட்டின வயவரும் வயவரும் உற்றனர் வியனமர் வியலிட மிக்கதே. - பெரி 9. கூட லம்பதி கோயில்கொண் டாடல் கொண்டவ ராடலே ஊட லும்முடம் பொன்றிலே கூட லும்மொரு கொம்பரோ. - மக இவ்வஞ்சி விருத்தங்கள் ஒன்பதும் வெவ்வேறோசை யுடையவை. ஓசையோடு படித்துப் பாருங்கள். இவ்வஞ்சி விருதத்தில் முதற்சீரினும் மூன்றாஞ்சீரினும் மோனை வரவேண்டும். பெரும்பாலும் அவ்வாறே வந்திருத்தலை நோக்குக. பாட்டு - அடி பாட்டு - அடி 1 - 2 7 - 1 4 - 4 8 - 4 5 - 4 9 - 3 மூன்று சீரினும் மோனை வந்துள்ளது. பாட்டு 8ன், முதன் மூன்றடியினும் இணைமோனையும் இணை யெதுகையும் அமைந்திருத்தலை நோக்குக. நான்காமடியும் இணை யெதுகையே. இப்பாட்டின் ஈற்றுச்சீர்கள் எடுப்பாக உள்ளன. பாட்டு 9ன், 2ஆம் அடியின் 1, 3 சீர்களில் மோனையோடு எதுகையும் அமைந்துள்ளது. பாட்டு 4 ன், முதன் மூன்றடியும் இணைமோனை. பாட்டு 6 ன், ஈற்றடி, இ - யா - மோனை. சிந்தடிகளில் முதற்சீரினும் மூன்றாஞ்சீரினும் மோனை வருதலே சிறப்பு என்பதை, இன்னொருமுறை பாட்டுக்களை ஓசையோடு படித்தறியுங்கள். எடுத்துக்காட்டாக, நான்காம் பாட்டின் ஈற்றடியோடு ஏனையடிகளை ஒப்பிட்டுப் படித்துப் பாருங்கள். எல்லாப் பாட்டுக்களிலும் அடியெதுகை நன்கமைத் துள்ளமை நோக்குக. குறிப்பு: அடி அளவொத்தல்: ஒரு பாட்டில் அடிகள் அள வொத்து வரவேண்டும் என்பது மரபு. அதாவது, நாலடிப் பாட்டில், ஓரடியில் எந்த இடத்தில் என்ன சீர் வருகிறதோ, அவ்வாறே மற்ற அடிகளிலும் அந்த இடத்தில் அச்சீரே வருதல் அளவொத்தல் எனப்படும். எடுத்துக்காட்டாக, 6ஆம் பாட்டின், முதற் சீர்கள் - தேமா. இரண்டாஞ் சீர்கள் - கூவிளம். மூன்றாஞ் சீர்கள் - தேமாங்காய். இப்பாட்டு அடியளவொத்து வந்த பாட்டாகும் . ஆனால், முதற் பாட்டின் முதற் சீர்களெல்லாம் - புளிமாங் கனி. முதல் இரண்டடிகளின் இரண்டாஞ்சீர் - தேமா. பின் இரண்டடிகளின் இரண்டாஞ்சீர் - கூவிளம். எனவே, இச் செய்யுளில் அடிகள் அளவொத்து வரவில்லை. அற்றன்று; முதல் இரண்டடிகளின் இரண்டாஞ்சீர் - தேமா. மூன்றாஞ்சீர்கள் - கருவிளங்காய். பின்னிரண்டடிகளின் இரண் டாஞ்சீர் - கூவிளம். அதற்கேற்ப, அவ்வடிகளின் ஈற்றுச் சீர்கள் - மூன்றாஞ்சீர்கள் - கூவிளங்காய் ஆக வந்திருத்தலால், எழுத்தள வொத்து, அவ்வடிகள் நான்கும் அளவொத்த அடிகள் ஆயின. இரண்டாம் பாட்டின் பின் மூன்றடிகளும் அளவொத் துள்ளன. அவற்றோடு முதலடி அளவொத்து வரவில்லை. முதலடியின் 2, 3 சீர்களைக் கவனியுங்கள். இரண்டாஞ்சீர் - கூவிளம். மூன்றாஞ் சீர் - கூவிளங்காய். மற்ற மூன்றடிகளிலும். இரண்டாம்சீர் - கருவிளம். மூன்றாஞ்சீர் - கருவிளங்காய். ஒன்பதாவது பாட்டின் பின் மூன்றடிகளின் ஈற்றுச் சீர் - கூவிளம். முதலடியின் ஈற்றுச்சீர் - தேமாங்காய். கூவிளமும் தேமாங்காயும் எழுத்தளவொத்தமையான், இப்பாட்டு அடியள வொத்த பாட்டேயாகும். 10.அருவி யாடி யருஞ்சுனை மருவி யாடி மணிக்கதிர் இருவி யாடி யிளங்கிளி ஒருவி யோட வுவப்பரே. -புகு ஒன்பதாம் பாட்டுப் போன்றதே இப்பாட்டு. புளிமா, தேமா, கருவிளம் - என, முச்சீரும் ஒன்றாகவே வந்திருத்தலை யறிக. அளவொத்த அடிகளையுடைய பாட்டு மிக்க ஓசை நயமுடையதாக இருக்கும். தமிழ்க் கவிஞர்கள் இதை நன்கு கவனித்தல் வேண்டும். பழந்தமிழ்ப் புலவர்கள், எழுத்தெண்ணிப் பாடும் கட்டளை யடிகளால் செய்யுள் செய்து செந்தமிழ் வளர்த்து வந்தனர். அளவொத்த சீர்வகை யடிகளால் செய்யுள் செய்து செந்தமிழ் வளர்த்தல் நமது கடப்பாடாமன்றோ! பாட்டுக்கு ஓசையின்பந் தருவன - அளவொத்த அடிகளும், அவ்வடிகளில் அமைவான் அமைந்த மோனை எதுகையுமே யாகும் என்பதை எப்போதும் மறத்தல் கூடாது. பயிற்சி 1. சிந்தடி வஞ்சிப்பாவும், வஞ்சிவிருத்தமும் முச்சீரடியாலான வையே, இரண்டற்கு முள்ள வேறுபாடென்ன? 2. இவ்வஞ்சி விருத்தங்களின் ஓசை வேறுபாட்டுக்குக் காரணம் என்ன? 3. முதற் பாட்டுக்கு அடியளவொத்தமை போல, ஏழாவது பாட்டுக்கு அமைக்க. 4. இவ்வாறு அமையும் மற்றொரு வஞ்சி விருத்தத்தைக் கண்டறிக. 5. இவ்வாறு வகைக்கொன்று பாடுக. 6. இப்பாட்டுக்களோடு சேர்ந்த மற்ற பாட்டுக்களையும் இவ்வந் நூல்களில் படித்தறிக. 3. தாழிசை 1. எனக்கு மெவற்கு மிறைவன் தனக்கு மெவனோ தவறே. -தக் 2. சிரமுஞ் சிரமுஞ் செறிந்தன சரமுஞ் சரமுந் தறிப்பவே. -தக் 3. மடிந்தன குவலய வலயமே இடிந்தன குலகிரி யெவையுமே. -தக் 4. பொய்வாரி பரந்து புகப்புரளும் மெய்வாரி பிறங்கி விசும்புறவே. -தக் இத்தாழிசைகளுள், 2. எட்டாவது வஞ்சி விருத்தமும், 4 - முதல் விருத்தமும் போன்றவை, முதல் தாழிசை - ஐந்தாவது விருத்தத்தை ஒருபுடை ஒத்ததாகும். ஓசையுடன் படித்துப் பாருங்கள். இத்தாழிசைகளிலும் வஞ்சி விருத்தத்திற் போலவே, முதற்சீரினும் மூன்றாஞ் சீரினும் மோனை வரவேண்டும். தாழிசை - 1 - ல், முதலடி மூன்று சீரினும் மோனை. தாழிசை - 2 -ல், இரண்டடிகளிலும் அவ்வாறே மோனை அமைந்துள்ளதோடு, இணையெதுகையும் அமைந்துள்ளது. நான்கு தாழிசைகளிலும் அடியெதுகை நன்கு அமைந் துள்ளது; படித்தின்புறுக. பயிற்சி 1. இத்தாழிசைகளின் அடியெதுகை வகையைக் குறிப்பிடுக. 2. இத்தாழிசைகளைப் போல வகைக்கொன்று பாடிப் பாருங்கள். 3. இரண்டாந் தாழிசையைச் சேர்ந்த மற்ற எட்டுத் தாழிசை களும் இவ்வாறே உள்ளன; நூலில் படித்தின்புறுங்கள். 4. மூன்றாந் தாழிசை போல ஒரு வஞ்சிவிருத்தம் பாடுக. 5. கீழ்வரும் அடிகளைத் தாழிசைகளாக்குக: 1. அப்பா நீ எற்குதவி ஆகாவிட்டால் 2. எங்கள் தமிழுக் கிணையாய் 3. மக்களில் மிக்கரை மதிக்குவீர் 6. இதுகாறும் படித்தறிந்தவை: 1. குறளடி வஞ்சிப்பா 5. சிந்தடி வஞ்சிப்பா 2. வஞ்சித்தாழிசை 6. வஞ்சி விருத்தம் 3. வஞ்சித்துறை 7. முச்சீரடித் தாழிசை 4. இருசீரடித் தாழிசை இவற்றை இன்னொரு முறை திருப்பிப் பாருங்கள். 3. அளவடி 1. வெண்பா 1. குறள் வெண்பா 1. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறனறிந் தாங்கே திரு. - குறள். வெண்பாவின் ஈற்றடி சிந்தடியாகவும், ஏனையடி அளவடி யாகவும் வரும். இக்குறள் வெண்பா அவ்வாறே வந்திருத்தலை அறிக. சிந்தடியின் முதற் சீரினும் மூன்றாஞ் சீரினும் மோனை வரவேண்டு மென்று முன்பு கண்டோம். அவ்வாறு வருதல் - பொழிப்பு மோனை எனப்படும். இவ் வெண்பாவின் ஈற்றடியில் அவ்வாறே பொழிப்பு மோனை வந்திருத்தலை அறிக. வெண்பாவின் அளவடியினும் பொழிப்பு மோனையே வரவேண்டும். இவ்வெண்பாவின் முதலடியில் அவ்வாறே பொழிப்பு மோனை வந்திருத்தலை அறிக. பொழிப்பு மோனை அமைந்த குறள் வெண்பாவின் இரண் டடிகளும் ஓரெதுகை - அடியெதுகை - உடையனவாக வரவேண்டும். ‘அற - திற’ - என, இக்குறள் வெண்பா அவ்வாறே அடியெதுகை உடையதாய் வந்திருத்தலை அறிக. எனவே, இவ் வெண்பாவின் இரண்டடிகளும் வர வேண்டிய இலக்கணப்படியே வந்துள்ளமையால், இக்குறள் வெண்பா, நன்கு அமைந்த வெண்பாவாகும். 2. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். - குறள். இக் குறள் வெண்பாவின் ஈற்றடியில் பொழிப்பு மோனையும் முதலடியில் ‘ம- வா’ என, ஒரூஉ மோனையும் வந்துள்ளன. வெண்பாவின் அளவடிகள் சிறுபான்மை இங்ஙனம் ஒரூஉ மோனையும் பெற்று வரலாம். முதன்மையானது பொழிப்பு மோனை; இரண்டாவது ஒரூஉ மோனை. முதலடி ஒரூஉ மோனை பெறினும், இக்குறள் வெண்பாவே போல் அடியெதுகை வரவேண்டும். ‘இல் - இல்’ - என்பது, இடைப்புணர் மோனையும், இடைப்புணர் எதுகையும் எனினும், இங்கு ஒரூஉ மோனையே சிறப்பு. 3. அறநோக்கி ஆற்றுங்கொல் வையம் புறநோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை. - குறள். இவ்வெண்பாவின் முதலடி, ‘அற - புற’ என, ஒரூஉ வெதுகை பெற்றுள்ளது. ‘அ - ஆ’ இணைமோனை. இணைமோனை வரினும் ஒரூஉவெதுகையே சிறந்தது. ஒரூஉ எதுகை பெற்றதால், அடியெதுகை பெறவில்லை. 4. தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால தன்னை யடல்வேண்டா தான். - குறள். இக்குறள் வெண்பாவின் முதலடி, பொழிப்பு மோனை யோடு, ஒரூஉ எதுகையும் பெற்றுள்ளது. இங்கு ஒரூஉ எதுகையினும் பொழிப்பு மோனையே சிறப்பு, ‘தீ - செ’ - இனவெழுத்து. குறிப்பு வெண்பாவின் ஈற்றடி பொழிப்பு மோனை பெற வேண்டும். இந் நான்கு வெண்பாவின் ஈற்றடிகளும் அவ்வாறே பொழிப்பு மோனை பெற்றுள்ளன. வெண்பாவின் ஏனையடிகளும் பொழிப்பு மோனையே பெற வேண்டும். முதல் வெண்பாவின் முதலடி அவ்வாறே பொழிப்பு மோனை பெற்றுள்ளது. வெண்பாவின் முதலடிகள் சிறுபான்மை ஒரூஉ மோனையும், ஒரூஉ எதுகையும் பெற்று வரலாம். அவ்வாறே, இரண்டாவது குறளின் முதலடி ஒரூஉ மோனையும், மூன்றாவது குறளின் முதலடி ஒரூஉ எதுகையும் பெற்று வந்துள்னன. வெண்பாவின் அளவடிகளில், பொழிப்பு மோனையோடு வேறு தொடைகள் வரின், பொழிப்பு மோனையே சிறப்புறும். நான்காவது குறளின் முதலடியில், பொழிப்பு மோனையும் ஒரூஉ எதுகையும் வந்துள்ளன. இங்கு ஒரூஉ எதுகையினும் பொழிப்பு மோனையே சிறப்புறுதலை ஓசையுடன் படித்தறிக. இங்ஙனமே, இரண்டாவது குறளின் முதலடியில் வந்துள்ள இடைப்புணர் மோனை, இடைப்புணர் எதுகையினும் ஒரூஉ மோனையே சிறப்புறு தலை அறிக. பொழிப்பு மோனை யின்றி, ஒரூஉ எதுகையோடு வேறு தொடைகள் வரின், ஒரூஉ எதுகையே சிறப்புறும். மூன்றாவது குறளின் முதலடியில், ஒரூஉ எதுகையோடு இணை மோனையும் வந்துள்ளது. இங்கு இணைமோனையினும் ஒரூஉ எதுகையே சிறப்புறுதலை ஓசையுடன் படித்தறிக. குறள் வெண்பா முதலிய எல்லா வெண்பாக்களும் ஈற்றடி பொழிப்பு மோனையாகவும், ஏனையடிகளும் பொழிப்பு மோனை யாகவும், சிறுபான்மை ஒரூஉ மோனையாகவும் வரவேண்டும். மிகச் சிறுபான்மை ஒரூஉ எதுகையும் வரலாம். இங்ஙனம் அமைவதே வெண்பாவின் தொடையிலக்கணம். திருக்குறள் வெண்பாக்களெல்லாம் இவ்வாறு அமைய வில்லையே எனின், அது இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது. இன்று அதைச் சான்று காட்டுதல் பொருந்தாது. இக்காலத்துக் கேற்ப நன்கு மோனை எதுகைத் தொடையமையப் பாடுதலே ஏற்புடைத் தாகும். இங்கு எடுத்துக் காட்டியனவும் திருக்குறள் வெண்பாக் கள் தாமே! எழுசீரின் கட்பட்ட சிறுமைத்தாகலின், குறள் வெண்பாவின் ஈற்றடி பொழிப்புமோனை பெறாது வரினும் இழுக்கின்று. ஆனால், முதலடி தொடையமைதி இன்றி வரக்கூடாது. இங்ஙனமே, சிந்தியல் வெண்பாவின் ஈற்றடியும், பொருளமைதி குறித்து, மிகமிகச் சிறுபான்மை பொழிப்பு மோனை பெறாது வரினும் இழுக்கின்று. ஆனால், அதுவே இலக்கணமாகக் கொள்ளக் கூடாது. மற்ற வெண்பாக்களின் ஈற்றடிபொழிப்பு மோனை யின்றி வருதலே கூடாது. இவற்றை நன்கு மனத்திருத்துக. பயிற்சி 1. திருக்குறளில், மேல் எடுத்துக்காட்டிய குறள்களைப் போல் அமைந்த குறள்களைக் கண்டறிக. 2. பொழிப்பு மோனை அமைந்த குறள்களைப் பார்த்தறிக. 3. வெண்பா, ‘நாள், மலர், காசு, பிறப்பு’ என்னும் வாய்பாடுகளால் முடியும். திருக்குறளிலிருந்து எடுத்துக் காட்டுத் தருக. 4. வெண்பாவில் ஈரசைச்சீர் நான்கும், காய்ச்சீர் நான்கும் தாம் வரும். எடுத்துக்காட்டிய வெண்பாக்கள் அவ்வாறு வந்துள்ளனவா வென்று பாருங்கள். 5. வெண்பாவில், இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளை யுந்தாம் வரும். எடுத்துக்காட்டிய வெண்பாக்களில் அவ்வாறு வந்துள்ளனவாவென்று பாருங்கள். 6. திருந்திய வெண்பா நூற்களில் மூன்று குறிப்பிடுக. 2. சிந்தியல் வெண்பா 1. கங்கைக்குக் கண்மலர் சாத்தக் கருங்குவளை செங்குவளை பூத்தாள் செயலென்னே;- எங்கோமான் பங்குற்றுத் தீராப் பசப்பு. - சிதம் 2. திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் அங்கண் உலகளித்த லான். - சில - 1 . முதல் வெண்பா, இரண்டாவதடியின் ஈற்றில், முதல் இரண்டடியின் எதுகையுடைய தனிச்சொற் பெற்று வந்துள்ளதால் நேரிசைச் சிந்தியல் வெண்பா. இரண்டாவது வெண்பா, அத்தகைய தனிச் சொற்பெறாது, மூன்றடியும் ஓரெதுகையாய் வந்திருத்தலான் - இன்னிசைச் சிந்தியல் வெண்பா. இவ் வெண்பாக்களின் தொடையமைதியை நோக்குக. வெண்பா - 1. முதலடி - கீழ்க்கதுவாய் மோனை. இவற்றுள் முதலும் ஈறுமே சிறப்புப் பெறும். மற்ற இரண்டடியும் பொழிப்பு மோனை. கருங்குவளை* செங்கு வளை = முரண். வெண்பா - 2. முதலடி - பொழிப்பு மோனை பொழிப் பெதுகையோடு, பின்மோனை பின்னெதுகையும் அமைந்துள்ளமையை நோக்குக. இவற்றுள் பொழிப்பு மோனையே சிறப்பு. அடி - 2 மேற்கதுவாய் மோனை. ஈற்றடி - பொழிப்பு மோனை. இரு வெண்பாக்களின் அடியெதுகையும் ஒரு வகையே. 3. உடம்புநன் றென்றுரையார் ஊதார் விளக்கும் அடுப்பினுள் தீநந்தக் கொள்ளார் அதனைப் படக்காயர் தம்மேற் குறித்து. - ஆசார இவ்வின்னிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றடியில் பொழிப்பு மோனை வரவில்லை. ‘படக்காயார் தம்மேற் படர்ந்து’ எனத் திருத்திப் படித்துப் பாருங்கள். பொழிப்பு மோனையின் சிறப்பு விளங்கும். ‘அடுப்பினுள், படக்காயார்’ என்பவற்றோடு. ‘உடம்பு நன்’ என்ற முதலடியின் முதற்சீரின் எதுகை ஓசை நயம் பட அமையா மையை, ‘உடப்புநன்’என அச்சீரைத் திருத்திப் படித்துப் பாருங்கள் விளங்கும். காரணம், அச்சீரின் மூன்றாமெழுத்து (ம்) மெலிந் திருப்பதேயாகும். எனவே, எதுகை எழுத்தை அடுத்த எழுத்தும் - மூன்றா மெழுத்தும் - வலியும் மெலியும் இடையும் உயிரும் ஒன்றி வருதல் சிறப்புடைத் தாகும். உடப்புநன் றென்றுரையார் ஊதார் விளக்கும் அடுப்பினுள் தீநந்தக் கொள்ளார் அதனைப் படக்காயர் தம்மேற் படர்ந்து. இப்போது படித்துப் பாருங்கள். அதன் சிறப்பு விளங்கும். உடப்பு - வலித்தல் விகாரம். 3. நேரிசை வெண்பா 1. வையந் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினன்சொன் மாலை இடராழி நீங்கவே யென்று. - நாலா. 2. தந்தை திருமுகத்தை நோக்கித் தமைப்பயந்தாள் இந்து முகத்தை எதிர்நோக்கி - எந்தம்மை வேறாகப் போக்குதிரோ என்றார் விழிவழியே ஆறாகக் கண்ணீ ரழுது. - நள 3. காம நெடுங்கடல் நீந்துங்கால் கைபுனைந்த பூமலி சேக்கைப் புணைவேண்டி - நீமலிந்து செல்லாய் சிலம்பன் வருதற்குச் சிந்தியாய் எல்லாக நெஞ்ச மெதிர். -வெண் இரண்டாமடியின் ஈற்றில், முதல் இரண்டடியின் எதுகை யுடைய தனிச்சீர் பெற்று, முன்னிரண்டடியும் ஓரெதுகை யாகவும், பின்னிரண்டடியும் வேறோரெதுகை யாகவும் வருவது - நேரிசை வெண்பா எனப்படும். இம்மூன்று வெண்பாக்களும் அவ்வாறு வந்திருத்தலை அறிக. ‘வெண்பா’ எனில், நாலடி வெண்பாவையே குறிக்கும். நாலடிகளால் ஆனதால், இது அளவியல் வெண்பா எனப்படினும், அப்பெயர் வழக்கில் இல்லை. நாலடியில் குறைந்ததை - சிந்தியல் வெண்பா எனவும், அதினும் குறைந்ததை - குறள் வெண்பா எனவும், நாலடியில் மிக்கதை நெடுவெண்பாட்டு, அல்லது பஃறொடை வெண்பா எனவும் பெயரிட்டு வழங்கினர். இலக்கணப் புலவர்கள், இயற்கையளவில் குறைந்தவனைச் சிந்தன், குறளன் எனவும், மிக்கவனை நெடியன், அல்லது நெட்டையன் எனவும் வழங்குதல் போல. இயற்கை யளவுடையவனை அடையின்றி ஆள் என்பது போல, நாலடி வெண்பாவை - வெண்பா என்றே வழங்கினர். வெண்பா - 1. நான்கடியும் பொழிப்பு மோனை. பை - வய். வய்ய - என, எதுகை அமைவு காண்க. வெண்பா - 2. 1, 3 அடிகள் - ஒரூஉ மோனை. 2, 4 அடிகள் - பொழிப்பு மோனை. வெண்பா - 3. முதலடி - ஒரூஉ மோனையோடு, ‘நெ - நீ’ என, இடைப்புணர் மோனையும், மூன்றாமடி - ‘செ - சி - சீ’ எனக் கீழ்க்கதுவாய் மோனையும் பெற் றுள்ளன. இவற்றுள், ஒரூஉ மோனையே சிறப்புறும். நேரிசை வெண்பாவின் நான்கடிகளிலும் பொழிப்பு மோனை வரவேண்டும். முதலடியிலும் மூன்றாமடியிலும் சிறுபான்மை ஒரூஉ மோனை வரலாம். பொழிப்பு மோனையே சிறந்தது. இவ் வெண்பாக்களின் அடியெதுகை வகையினைக் கண்டறிக. எடுத்துக்காட்டிய வெண்பாக்கள் போல நேரிசை வெண்பாக்கள் பாடவேண்டும். நளவெண்பா, வெண்பாமாலை, நாலாயிர இயற்பாத் திருவந்தாதிகள், அருட்பா வெண்பா முதலிய வெண்பாக்களைக் கருத்துடன் கவனித்துப் படித்துத் திருந்திய நேரிசை வெண்பாவின் அமைப்பினை மனத்தில் பதித்துக் கொள்க. 4. இன்னிசை வெண்பா 1. இருங்கடல் மாந்தி எதிர்கொள்ள எழிலி கருங்கொடி முல்லை கவின முழங்கிப் பெரும்பெயல் தாழப் பெயர்குறி செய்தார் பொருந்த நமக்குரைத்த போது. - நிஜ 2. இன்னாமை வேண்டின் இரவெழுக - இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு செல்வது வேண்டின் அறஞ்செய்க - வெல்வது வேண்டின் வெகுளி விடல். - நான். 3. மலிதேரான் கச்சியும் மாகடலும் தம்முள் ஒலியும் பெருமையும் ஒக்கும் - மலிதேரான் கச்சி படுவ கடல்படா - கச்சி கடல்படுவ எல்லாம் படும். - பழம் இவை மூன்றும் முற்காட்டிய நேரிசை வெண்பாக்களின் வேறுபட்டு வந்திருத்தலை யறிக. இவற்றுள், முதல் வெண்பா அல்லாத இரண்டும் சரியானபடி மோனை அமையவில்லை. வெண்பா -1. நாலடியும் ஓரெதுகையாகத் தனிச்சொல் இன்றி வந்துள்ளது. முதலடி - மேற்கதுவாய் மோனை. அடி - 2. பொழிப்பு மோனையும் பின் மோனையும். இங்கு பொழிப்பு மோனையே சிறப்பு. வெண்பா -2. அடிதோறும் தனிச்சொற் பெற்று வந்துள்ளது. 2, 3 அடிகளில் மோனை அமையவில்லை. ஒரூஉ எதுகையாகக் கொள்ளலாம். அவ்வளவு சிறப்பின்று, ‘இன் - இந்’ -மெல்லின வெதுகை. வெண்பா -3. முதல் இரண்டடியும் ஓரெதுகை. 2, 3 அடிகளின் ஈற்றில் தனிச்சொல், ஈற்றடியில் மோனை அமைய வில்லை. 4. மன்றின் முதுமக்கள் வாழும் பதியினிதே, தந்திரத்தின் வாழுந் தவசிகள் மாண்பினிதே, எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக் கண்டெழுதல் காலை யினிது. - இனி இதைப் பல வெதுகையான் வந்த இன்னிசை வெண்பா என்பர். இரண்டு சீரின் இரண்டாமெழுத்து ஒன்றி வருவதே எதுகை எனப்படும். ஆதலால், இது எதுகை எனப்படாது. இது மோனைத் தொடையால் அமைந்த வெண்பா. ஈற்றடியில் அதுவும் அமைய வில்லை. இனி, இவ் வெண்பாவின் நான்கடிகளின் முதற்சீரின் இரண்டா மெழுத்தும் மெல்லெழுத்தாகையால் - ‘ன், ந், ஞ், ண்’ - மெல்லின எதுகையாக அமைதலின், நான்கடியும் ஓரெதுகை கொண்ட தெனின், இத்தகைய இனவெதுகை கொள்ளத்தக்க தன்றென விடுக்க. விளக்கம் 1. குறள்வெண்பா 1. சீர்பட வுண்ட சிறுகளி பேருண்கண் நீர்க்குவிட் டூர்ந்தாயு நீ. - கலி- 97 2. புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும் உள்வரிப் பாணியொன் றுற்று. - சில - 17 2. சிந்தியல் வெண்பா 3. ஓருயிர்ப் புள்ளி னிருதலை யுள்ளொன்று போரெதிர்ந் தற்றாப் புலவனீ கூறினென் ஆருயிர் நிற்குமாறி யாது. - கலி - 89 4. திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் அங்கண் உலகளித்த லான். - சில - 1. 3. நேரிசை வெண்பா 5. வானவ னெங்கோ மகளென்றாம் வையையார் கோனென்றான் பெற்ற கொடி யென்றான் - வானவனை வாழ்த்துவோ நாமாக வையையார் கோமானை வாழ்த்துவாள் தேவ மகள். -சில - 29 4. இன்னிசை வெண்பா 6. அழிந்துகு நெஞ்சத்தேம் அல்ல லுழப்பக் கழிந்தவை யுள்ளாது கண்ட விடத்தே அழிந்துநிற் பேணிக் கொளலின் அழிந்ததோ இந்நோய் உழத்தல் எமக்கு. - கலி - 72 இந்நால்வகை வெண்பாக்களிலும் மோனையும் எதுகையும் அமைந்துள்ளமையை நோக்குக. வெண்பா - அடி 1 -1 கடையிணை முரண். 2-1 மேற்கதுவாய் மோனையும், கடையிணை மோனையும் எதுகையும். 3-1 ஒரூஉ மோனையும், பின்னெதுகையும். 5-1 மேற்கதுவாய் மோனை. 6-3 ஒரூஉ வெதுகை. மற்ற அடிகள் பொழிப்பு மோனை. 4-ஆம் பாட்டுக்கு, முன்னர்ச் ‘சிந்தியல் வெண்பா’ என்னுமிடத்துத் தொடையமைதி கூறப்பட்டுள்ளது. முதற் குறள் வல்லின எதுகை. 2வது குறள் மூன்றாமெழுத்து இடையின உயிர்மெய். மற்ற வெண்பாக்களில் நன்கு அடியெதுகை அமைந்துள்ளது. கலித்தொகை, கடைச்சங்க காலத்தது. சிலப்பதிகாரம், அச்சங்க இறுதிக் காலத்தது. இவை இரண்டும் தனி வெண்பா நூல்களல்ல, கலித்தொகை – கலிப்பாக் களாலான நூல். சிலப்பதிகாரம் - ஆசிரியப்பா, கலிப்பா இரண்டானும் ஆன நூல். அங்ஙனமிருந்தும், அந்நூல்களின் கலிப்பாவின் இடையே வந்துள்ள இவ் வெண்பாக்கள், ‘வெண்பாவிற் புகழேந்தி’ என வியக்கத் தக்க புகழேந்திய புகழேந்திப் புலவர் வெண்பாக்களோ என வியக்கும் வகையில், மோனையும் எதுகையும் நன்கு அமைந்திருக்க, இந் நூற்களின் பிற்காலத்தன வாகிய நாலடியார், நான்மணிக்கடிகை முதலிய கீழ்கணக்கு நூல்களின் வெண்பாக்களிற் பெரும்பாலன உள்ளவாறு மோனை எதுகை அமையாதிருத்தலின் காரணம் விளங்கவில்லை. மேலும், இவை தனி வெண்பா நூல்களுமாகும். பாவினம் எனினும், ‘புதிய படைப்பு; இப்படித்தான் பாட முடியும்’ எனலாம். தமிழ் மொழியில் செய்யுள் நடைதோன்றிய அன்றே முதற்பாவாகத் தோன்றிய வெண்பாவை, இவ்வாறு பாட்டின் சிறந்த உறுப்பான மோனை எதுகைத் தொடை அமையாது பாடியது வியப்பினும் வியப்பாகவன்றோ உளது. பாட்டின் இரு கண் போன்ற மோனை எதுகை அமையாது இனிக் கட்டாயம் எந்தப் பாட்டையும் பாடுதல் கூடவே கூடாது. வெண்பாவின் எல்லா அடியினும் கட்டாயம் பொழிப்பு மோனை வரவேண்டும். முதுலடியினும் மூன்றாமடியினும் சிறுபான்மை ஒரூஉ மோனை வரலாம். இன்றியமையாத இடத்து, மிகச் சிறுபான்மை ஒரூஉ எதுகை வரலாம். ஈற்றடி பொழிப்பு மோனையின்றி வருதல் கூடாது. அடியெதுகை, முதலியலில், ‘எதுகை’ என்னும் தலைப்பில் காட்டியபடி நன்கு அமைய வேண்டும். இங்ஙன மின்றி இனி வெண்பாப் பாடுதல் கண்டிப்பாய்க் கூடவே கூடாது. நளவெண்பாவும் வெண்பாமாலையும் வழி காட்டிகளாயிருக்க, ஏன் கெட்ட வழியில் செல்ல வேண்டும். நல்ல வழியை விட்டு விலகி? தமிழ் மொழியில் என்ன மோனை எதுகைச் சொற்களுக்கா பஞ்சம்? நாலாயிர இயற்பாச் சிறிய திருமடல் - கலிவெண்பா 77 கண்ணிகளும் (156 அடி) ஒரே ரகர வெதுகையாகவும், பெரிய திருமடல் - கலிவெண்பா 148 கண்ணிகளும், (296 அடி) ஒரே னகர வெதுகையாகவும் அமைந்திருத்தலைக் கண்டு. தமிழ் எதுகைச் சொற் செல்வத்தின் பெருக்கினை அறிந்தின்புறுக. 5. பஃறொடை வெண்பா 1. ஆய்ந்தறிந்து கல்லாதான் கல்வியும் ஆறறிவில் தோய்ந்தறிந்து சொல்லாதான் சொற்பெருக்கும் - தீந்தமிழின் சொல்லிருக்க வன்கடுஞ்சொற் சொல்வதூஉம் தன்னனையாள் இல்லிருக்க வேறில் இரப்பதூஉம் - நெல்லிருக்கக் கற்கறிந்து மண்டின்று காய்த்துக் களத்தடித்த புற்கறிந்து வாழ்வதனைப் போன்ம். - புகு 2. வையக மெல்லாம் கழனியாய் - வையகத்துச் செய்யகமே நாற்றிசையின் தேயங்கள் - செய்யகத்து வான்கரும்பே தொண்டை வளநாடு - வான்கரும்பின் சாறேயந் நாட்டுத் தலையூர்கள் - சாறட்ட கட்டியே கச்சிப் புறமெல்லாம் - கட்டியுள் தானேற்ற மான சருக்கரை மாமணியே ஆனேற்றான் கச்சியகம். - பழம் 3. அன்றொருநாள் மாலை அழகு நிலவொளியில் சென்றுலவி வீடு திரும்பிவந்து முப்பாலை உண்டு களித்தின்பம் ஊற்றெடுப்ப ஏக்கழுத்தங் கொண்டு பழந்தமிழர் கூம்பாநல் வாழ்வஃதும் மற்றொருகால் நம்மவர்க்கு வாய்க்குங்கொல் என்றெண்ணிச் சற்றொருகால் அப்படியே தானிருக்க, என்மகவும் வாய்க்கு மெனமகிழ்ந்து வாரி யெடுத்துமுத்தம் தாய்க்கு மிகக் கொடுத்தேன் தான். - புகு இப் பஃறொடை வெண்பா மூன்றனுள், முதல் வெண்பா நேரிசை வெண்பாவே போல் இரண்டடிக்கொருமுறை அத்தகு தனிச்சீர் பெற்று வந்த ஆறடி நேரிசைப் பஃறொடை வெண்பா. இதன் அடி 1ல், ஒரூஉ மோனையும், இடைப்புணர் மோனையும் எதுகையும். அடி 2ல், கூழை மோனை. அடி 5 ல், மேற்கதுவாய் மோனை, எனினும், ஒரூஉ மோனையும் பொழிப்பு மோனையுமே சிறப்பு. இரண்டாவதடியின் தனிச் சீரை நோக்க, முதல் இரண்டடி யகர வொற்றாசிடை யெதுகை. இரண்டாவது வெண்பா அடிதோறும் தனிச் சீர் பெற்று வந்த ஏழடி இன்னிசைப் பஃறொடை வெண்பா. இது மிகச் சிறுபான்மை. இதன் அடி 1, 5ல், மோனையமையவில்லை. 5ல், இணை மோனை. பொழிப்பு மோனை இன்மையால், நடையின் பங்குன்று தலை ஓசையுடன் படித்தறிக. மற்ற அடிகளில் பொழிப்பு மோனை. வையக மெல்லாம் வளவயலாய். கட்டியே கச்சிக் கரையெல்லாம். இவ்வாறு அவ்வடிகளைத் திருத்திப் படித்துப் பாருங்கள்; மோனைத் தொடையின் பெருமை விளங்கும். மூன்றாவது வெண்பாத் தனிச்சீர் இன்றி, இவ்விரண்டடி ஓரெதுகை பெற்றுவந்த எட்டடி இன்னிசைப் பஃறொடை வெண்பா. எல்லா அடியினும் பொழிப்பு மோனை அமைந்துள்ளது. பஃறொடை வெண்பாத் தனிச்சீர் பெற்று நேரிசையாகவும், தனிச்சீரின்றி இன்னிசையாகவும் வருதலே பெருவழக்கு. பஃறொடை வெண்பா 5முதல் 12 அடிகாறும் வரும். அதற்கு மேல் அடிவரின், கலிவெண்பா எனப்படும். 6. கலி வெண்பா 1. பூமேவுஞ் செங்கமலப் புத்தேளுந் தேறரிய பாமேவுந் தெய்வப் பழமறையும் - தேமேவு நாதமுநா தாந்த முடிவும் நவைதீர்ந்த போதமுங் காணாத போதமாய் - ஆதிநடு வந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப் பந்தந் தணந்த பரஞ்சுடராய். - கக 2. குயில்பாடிக் கொண்டிருக்கும் கோலம் மிகுந்த மயிலாடிக் கொண்டிருக்கும் வாச முடையநற் காற்றுக் குளிர்ந்தடிக்கும் கண்ணாடி போன்றுநீர் ஊற்றுக்கள் உண்டு கனிமரங்கள் மிக்கவுண்டு. அன்பு மிகுந்த அழகிருக்கும் நாயகரே இன்பமும் நாமும் இனி. - சஞ் முதலாவது, குமர குருபரர் செய்த கந்தர் கலிவெண்பாவின் அடிகள். இது நேரிசை வெண்பாவே போல் இரண்டடிக்கொரு முறை தனிச்சீர் பெற்றுள்ளமையால் - நேரிசைக் கலிவெண்பா 244 அடிகளையுடையது. அடி 3 - ஒரூஉ மோனை. மற்ற அடிகள் பொழிப்பு மோனை. இரண்டாவது பாரதிதாசன் பாடியது; தனிச்சீர் இன்றி வந்த 519 அடிகளையுடைய இன்னிசைக் கலிவெண்பா; இரண்டடி எதுகையுடையது. கலிவெண்பாவின் ஓரெதுகையுடைய இரண்டடி களைக் கண்ணி என்பது மரபு. நான்காமடியைத் தவிர மற்ற அடிகள் பொழிப்பு மோனை நன்கு அமைந்துள்ளன. நான்காமடியின் இணைமோனை எடுப் பின்மையை ஓசையுடன் படித்தறிக. அவ்வடி, ஊற்றுக்கள் உண்டு கனிமரங்கள் உண்டுமிக. என இருக்கின், ஓசை நயம் பயத்தலை அறிக. அடியெதுகை வகைகளைக் கண்டறிக. இக்கலிவெண்பா சிந்தடியால் முடிந்துள்ளது. இருவகைக் கலி வெண்பாவும், மற்ற வெண்பாக்களைப் போலச் சிந்தடியாலே தான் முடியும். மற்ற வெண்பாக்களுக்குரிய இலக்கணமே தான் இதற்கும்; அடியளவிலே தான் வேறுபாடு. 3. காதற் கருங்குவளை கண்டு மலரவிருள் போதப் புகுந்த புதுமதிபோல் - மேதக்கான் நோயிடைய வேயுதவி நோக்கியெதிர் நின்றாளை ஆயிடைகண் டுள்ளமுவந் தான். - நெரு என, நேரிசைக் கலிவெண்பாச் சிந்தடியான் முடிந்துள்ளது. இருவகைக் கலிவெண்பாவும் பன்னீரடிக்கு மேல் அகவலே போல் எத்தனை அடி வேண்டுமேனும் வரலாம். இவ்விரு வகையிலும் அடியெதுகை நன்கு அமைய வேண்டும். ஏனை வெண்பாவே போல் மோனைத் தொடை அமைய வேண்டும். தூது, உலா, மடல் ஆகிய நூல்களெல்லாம் பெரும்பாலும் நேரிசைக் கலிவெண்பாவால் ஆனவையே. தமிழ் விடு தூது மூவருலா மேக விடு தூது கந்தர் கலிவெண்பா நெஞ்சு விடு தூது நெருஞ்சிப் பழம் வண்டு விடு தூது இராமலிங்கர் விண்ணப்பக் கலிவெண்பா மான் விடு தூது நெஞ்சறிவுறுத்தல் விறலி விடு தூது திருக்கை வழக்கம் முதலிய நூல்களில் நேரிசைக் கலிவெண்பாவைப் படித்தறியுங்கள். திருவாசகச் சிவபுராணம் பெரிய திருமடல் சிறிய திருமடல் சஞ்சீவி பருவதத்தின் சாரல் முதலிய நூல்களில் இன்னிசைக் கலிவெண்பாவைப் படித்தறியுங்கள். அவ்வாறு பாடிப் பழகுங்கள். அகவலைப்போல எளிதிற்பாடுதற்குரிய பா - கலி வெண்பா. பயிற்சி 1. வெண்பாவின் இலக்கணம் என்ன? 2. நேரிசை, இன்னிசை வெண்பாக்களின் வேறுபாடென்ன? 3. வெண்பாவில் வரும் சீர்கள், தளைகள் எவை? 4. வெண்பாவில் வரும் அடிகள் எவை? எவ்வடி எங்கு வரும்? 5. வெண்பா அடிகளில் எவ்வெம் மோனை வரும்? அவற்றுள், பெரும்பான்மை வரும் மோனை எது? அடுத்தது எது? 6. ஓரடியில் மோனைவகை பலவரின் அவற்றுள் எது சிறப்புப் பெறும்? 7. வெண்பாவின் எதுகை எவ்வாறு வரவேண்டும்? 8. வெண்பாவில் ஈற்றடியில் எவ்வாறு மோனை அமைய வேண்டும்? 9. ஒரூஉ எதுகை எங்கு வரும்? 10. எடுத்துக்காட்டிய வெண்பாக்களிலுள்ள மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர்களையும், இருவகை வெண்டளை களையுங் கண்டறிக. 11. வெண்பாவில் வாராத தளைகள் எவை? 12. வெண்பா எவ் வாய்பாடுகளால் முடியும்? எடுத்துக்காட்டு வெண்பாக்களி லிருந்து ஒவ்வோர் காட்டுத் தருக. 13. வெண்பாவின் வகை யாவை? அவ்வாறு வகைப்பட்டதன் காரணம் என்ன? 2. ஆசிரியப்பா 1. மான்ற மாலை மனையோர் புலம்ப ஈன்ற தாயும் இடும்பைய ளெனநினைந் தங்கண் வானத் தகடூர்ந்து திரிதரும் திங்களங் கடவுள் தெளித்துநீ பெயர்த்தரிற் கடிமலர்க் கொன்றைக் காவலன் சூடிய குடுமியஞ் செல்வங் குன்றினுங் குன்றாய் தண்பொழில் கவிந்த தமனிய வெண்குடை ஒண்புகழ்த் தந்தைக் குறுதி வேண்டித் தயங்குநடை முதுமை தாங்கித் தான்றனி இயங்குநடை யிளமை இன்புற் றீந்த மான்றே ரண்ணல் தோன்றுபுகழ் போலத் துளங்கிரு ளிரவினுந் தோன்றி விளங்குவை மன்னாலிவ் வியலிடைத் தானே. - தயா 2. கடிப்புடை வலத்தார் தொடித்தோ ளோச்ச வம்புகளை வறியாச் சுற்றமோ டம்புதெரிந்து அவ்வினை மேவலை யாகலின் எல்லு நனியிருந் தெல்லிப் பெற்ற அரிதுபெறு பாயற் சிறுமகி ழானும் நாணுமலி யாக்கை வாணுத லரிவைக்கி யார்கொல் லளியை, இன்றோ வன்றோ தொன்றோர் காலை நல்லம னளிய தாமெனச் சொல்லிக் காணுநர் கைபுடைத் திரங்க மாணா மாட்சிய மாண்டன பலவே. பதிற் - 19 3. என்றவ ளுரைத்த இசைபடு தீஞ்சொல் சென்றவ னுள்ளஞ் சேரா முன்னம் பளிங்குபுறத் தெறிந்த பவளப் பாவையின் இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன்னென் - மணி - 4 4. குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும் வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும் தினைக்குறு வள்ளையும் புனத்தெழு வளியும் நறுவுக்கண் ணுடைத்த குறவ ரோதையும் பறையிசை யருவிப் பயங்கெழு மோதையும். - சில - 25. 1. இவ்வாசிரியப்பாவின் அடிகள், அடியெதுகையுடைய இரண்டிரண்டாய், பெரும்பாலும் பொழிப்பு மோனை அமைய வந்துள்ளன. இவ்வாறு அடியெதுகை யும் பொழிப்பு மோனையும் அமைய ஆசிரியப்பாப் பாடுதலே பெரு வழக்கு. அடி 1ல் கூழை மோனை அடி 2, 6, 9- மேற்கதுவாய் மோனை - பொழிப்பே சிறப்புறும். அடி7-பொழிப்பு மோனையோடு, ஒரூஉ வெதுகை. பொழிப்பு மோனையே சிறப்பு. அடி 10 - முற்றுமோனை. 11 - பொழிப்பெதுகை மற்ற அடிகள் பொழிப்பு மோனை. 2. இவ்வாசிரியப்பாவின் அடிகள், பெரும்பாலும் சீரெதுகை யுடையதாய், அடியெதுகை பெறாது தனித் தனி வந்துள்ளன. இவ்வகை சிறுபான்மை. அடி 2, 9 - ஒரூஉ எதுகை அடி 3 - பொழிப்பு மோனை அடி 7 - ‘யா - அ’ மோனை அடி 8 - கூழையெதுகை. பொழிப்பே சிறப்புறும். அடி 10 - இணைமோனை. அடி 11 - கூழைமோனை. பொழிப்புச் சிறப்பு மற்ற அடிகள் பொழிப்பெதுகை. 3. இவ்வாசிரிய அடிகள், அடியெதுகையுடைய இவ்விரண்டாய், பொழிப்பு மோனை அமைய வந்துள்ளன. இது முதலாசிரியம் போன்றது. 4. இதுவும் 1, 3 போன்றதே. 2, 5அடிகள் பொழிப்பு மோனை. 3, 4 அடிகள் பொழிப் பெதுகை. முதலடி கூழைமோனை. பொழிப்பே சிறப்பு. பொழிப்பு மோனை, ஒரூஉ மோனை, பொழிப்பெதுகை, ஒரூஉ வெதுகை ஆகிய இந்நான்கு தொடைவகையும் அமைய வருதல் ஆசிரிய அடிகட்கு மரபு. இவற்றுள், பொழிப்பு மோனை பெருவழக்கு. அடுத்தது ஒரூஉ மோனை எதுகையும் இவ்வாறே. 1. நேரிசை ஆசிரியப்பா: முதற்பாட்டின் ஈற்றயலடி சிந்தடி யாகவும், மற்ற அடிகள் அளவடிகளாகவும் உள்ளன. இவ்வாறு வருவது - நேரிசை ஆசிரியப்பா எனப்படும். நேரிசையாசிரியப் பாவின் ஈற்றடியிரண்டும் - சிந்தடியும், அளவடியும், அடி யெதுகை யுடையவாக - இரண்டும் ஓரெதுகையுடையவாக - வருதல் சிறப்பு. இவ்வாசிரியப் பாவில் அவ்வாறே வந்திருத்தல் காண்க. 2. இணைக்குறளாசிரியப்பா: இரண்டாவது பாட்டின் ஈற்றடி யிரண்டும் முதற்பாட்டின் ஈற்றடிகளைப் போலவே தாம் வந்துள்ளன. ஆனால், ஈற்றயலடியல்லாத மற்ற அடிகள் அளவடியாக வருதற்கு மாறாக, ஏழாவதடி குறளடியாக வந்துள்ளது. மூன்றாவதடி - சிந்தடி. இவ்வாறு நேரிசை யாசிரியப்பாவின் இடையிடை குறளடி வருவது - இணைக் குறளாசிரியப்பா எனப்படும். நேரிசையாசிரியப்பாவில் சிந்தடி வருவதால், இது குறளடியால் பெயர் பெற்றது. இணைக் குறளாசிரியப்பாவின் முதலடியும் ஈற்றடியும் அளவடியாக வருவதோடு, ஈற்றயலடி சிந்தடியாகவும் வரவேண்டும். 3. நிலைமண்டில ஆசிரியப்பா: மூன்றாவது பாட்டின் ஈற்றயலடி சிந்தடியாக வரவில்லை. எல்லா அடியும் அளவடி யாகவே வந்துள்ளன. இவ்வாறு எல்லா அடியும் அளவடியாக வருவது - நிலைமண்டில ஆசிரியப்பா எனப்படும். 4. அடிமறிமண்டில ஆசிரியப்பா: நான்காவது பாட்டின் அடிகளும் இவ்வாறேதான் எல்லாம் அளவடியாகவே உள்ளன. ஆனால், இவ்வடிகள், எந்த அடியை முதலில் வைத்துப் பொருள் கொண்டாலும் பொருள் மாறுபடாத நிலையில் ஒவ் வோரடியும் பொருள் முடிந்துள்ளது. இவ்வடிகள் போல, நிலைமண்டில ஆசிரியப்பாவின் ஒவ்வோரடியும் பொருள் முடிய அமைவது - அடிமறி மண்டில ஆசிரியப்பா எனப்படும். முதல் ஆசிரியப்பா, ‘தானே’ - தான் + ஏ. ‘ஏ’ என்னும் எழுத்தால் முடிந்துள்ளது. இரண்டாம் பாட்டும் அவ்வாறே ஏகாரத்தால் முடிந்துள்ளது. புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பத்துப் பாட்டு முதலிய நூல்களின் ஆசிரியப்பாக் களெல்லாம் ஏகாரத்தால் முடியும் நேரிசை யாசிரியப் பாக்கள். இணைக்குறளாசிரியப்பாவும் இவ்வாறே முடியும். மூன்றாவது ஆசிரியப்பா, ‘முன்னென்’ - முன் + என். ‘என்’ என்னும் அசையால் முடிந்துள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலை, உதயணன் கதை இவற்றின் ஆசிரியப்பாக் களெல்லாம், ‘என்’ என்னும் முடிபையுடைய நிலைமண்டில ஆசிரியப்பாக்கள். ‘என்’ என்னும் அசையால் முடிதல் பழைய மரபின் ஒருவகை. ஏகாரத்தால் இறுவதே பெரு வழக்கு: இன்றைய வழக்கு மாகும். குறிப்பு: ஆசிரியப்பாவின் முதலடியும் ஈற்றடியும் அளவடி யாகவே வர வேண்டும். நேரிசையாசிரியப்பாவின் ஈற்றயலடி சிந்தடியாகவும், ஈற்றடியுடன் ஓரெதுகை யுடையதாகவும் வரவேண்டும். இணைக்குறளாசிரியப்பாவினும் இவ்வாறே வந்து, இடையிடை குறளடியும் சந்தடியும் வரும். ஆசிரியப்பாவின் சிறுமை மூன்றடி. அதாவது மூன்றடியிற் குறைந்து வரக்கூடாது. ஈற்றயலடி சிந்தடியாக வரவேண்டும் என்பதால், அத்துடன் முதலடியும், ஈற்றடியும் சேர்ந்து மூன்றடி களாயின. பெருமைப்பாடும் பொருளின் பெருமையே. எத்தனை அடிகளேனும் வரலாம். நால்வகை ஆசிரியப்பாக்களுள், நேரிசையாசிரியமே பெரு வழக்கு. அடுத்தது நிலைமண்டிலம். ஓரடி வேறுபாடுதானே? ஏனை யிரண்டும் மிக அருகிய வழக்கு. பயிற்சி 1. ஆசிரியப்பாவில் வரும் அடிகள் எவை? 2. சிந்தடி எங்கே வரும்? அதன் இயல்பென்ன? 3. பொழிப்பு மோனை பெறும் அடிகள் எவ்வாறு வரவேண்டும்? 4. ஆசிரியப்பாவில் வரும் நான்கு தெடை வகை யாவை? 5. நேரிசையாசிரியப்பாவின் ஈற்றடி யிரண்டும் எவ்வாறு வருதல் வேண்டும்? 6. நான்கு ஆசிரியப்பாக்களையும் வகைப்படுத்துக. 7. நேரிசை ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா - வேறுபாடென்ன? 8. ஆசிரியப்பா எவ்வாறு முடியும்? இவ்வாறு முடிபுடைய ஆசிரியப் பாக்களாலாய இவ்விரண்டு நூல்களைக் குறிப்பிடுக. 9. ஆசிரியப்பாவின் இலக்கணம் என்ன? 3. கலிப்பா 1. கார்முற்றி யிணரூழ்த்த கமழ்தோட்ட மலர்வேய்ந்து சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி யிருநிலந் தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையதன் நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார் போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்; இது தரவு நலத்தகை யெழிலுண்கண் நல்லார்தங் கோதையால் அலைத்தபுண் வடுக்காட்டி அன்பின்றி வரினெல்லா புலப்பேன்யா னென்பேன்மன் அந்நிலையே யவற்காணின் கலப்பே னென்னும் கையறு நெஞ்சே: கோடெழி லகலல்குற் கொடியன்னாரிணைமூழ்கிப் பாடழி சாந்தினன் பண்பின்றி வரினெல்லா ஊடுவே னென்பேன்மன் அந்நிலையே யவற்காணின் கூடுவே னென்னுமிக் கொள்கையில் நெஞ்சே; இனிப்புணர்ந்த வெழினல்லார் இலங்கெயி றுறாஅலின் நனிச்சிவந்த வடுக்காட்டி நாணின்றி வரினெல்லா துனிப்பேன்யா னென்பேன்மன் அந்நிலையே யவற்காணின் தனித்தே தாழுமித் தனியில் நெஞ்சே; இவை மூன்றும் தாழிசை என வாங்கு, தனிச்சொல். பிறைபுரை யேர்நுதால் தாமெண்ணி அவையெல்லாம் துறைபோத லொல்லுமோ தூவாகா தாங்கே அறைபோகு நெஞ்சுடை யார்க்கும். - கலி - 67 இது சுரிதகம். ஒரு தரவும், மூன்று தாழிசையும், தனிச்சொல்லும், சுரிதகமும் வருவது - நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும். எனவே, இது நேரிசையொத்தாழிசைக் கலிப்பா வாகும். தரவின் ஐந்தடியும் ஓரெதுகையாகவும், தாழிசை ஒவ்வொன்றும் ஒவ்வோரெதுகை யாகவும் வந்துள்ளன. சுரிதகமும் ஓரெதுகையே. 2. மணிநிற மலர்ப்பொய்கை மகிழ்ந்தாடும் அன்னந்தன் அணிமிகு சேவலை அகலடை மறைத்தெனக் கதுமெனக் காணாது கலங்கியம் மடப்பெடை மதிநிழல் நீருட்கண் டதுவென வுவந்தோடித் துன்னத்தன் எதிர்வரூஉம் துணைகண்டு மிகநாணிப் பன்மல ரிடைப்புகூஉம் பழனஞ்சே ரூரகேள்; இது தரவு. நலநீப்பத் துறந்தெம்மை நல்காய்நீ விடுதலிற் பலநாளும் படாதகண் பாயல்கொண் டியைபவால் துணைமலர்க் கோதையார் வைகலும் பாராட்ட மணமனைத் ததும்புநின் மணமுழவந் தெடுப்புமே -கலி70 இது தாழிசை. இவ்வாறு தரவும் தாழிசையும் இவ்விரண்டடி ஓரெதுகை யாகவும் வரும். இங்கு தரவோடு ஒரு தாழிசைமட்டும் காட்டப் பட்டது. இஃதும் நேரிசை யொத்தாழிசைக் கலிப்பாவே. கலியடிகளும் அளவடியே யாகலான், வெண்பா ஆசிரியப் பாவின் அடிகளிற் போலவே மோனை எதுகை அமைய வேண்டும். முதற்பாட்டு : தரவு. அடி 4 - ஒரூஉ மோனை. அடி 5 - மேற்கதுவாய் மோனை. முதல் மூன்றடியும் - பொழிப்பு மோனை. தாழிசை மூன்றினும் மூன்றா மடியில் மோனை அமைய வில்லை. சுரிதகத்தின் முதலடியிலும் மோனை அமைய வில்லை தாழிசை 3. அடி 1, 4 - கூழை மோனை. மற்ற அடிகளெல்லாம்பொழிப்பு மோனை பாட்டு 2 தரவு அடி 1, 3 - கூழை மோனை. அடி 4 - பொழிப்பெதுகை மற்ற அடிகள் பொழிப்பு மோனை. தாழிசை அடி 1, 4, - பொழிப்பு மோனை அடி 2 - கூழை மோனை. அடி 3 - மோனை அமைய வில்லை. மற்ற கலிப்பாக்கள் கலிப்பாவின் பொதுவுறுப்புக்கள் - தரவு, தாழிசை, தனிச் சொல், சுரிதகம் என்பன. அராகம், அம்போதரங்கம் என்பன சிறப்புறுப்புக்கள். அராகம் - முடுகியல். அளவடியும், சிந்தடியும் குறளடியும் முறையே அம்போதரங்க உறுப்புக்களாக வரும். விளக்கம் யாப்பதி காரத்திற் காண்க. நேரிசை யொத்தாழிசைக் கலிப்பாவின் தாழிசைக்கும் தனிச் சொல்லுக்கும் இடையில் அம்போதரங்கம் வருவது - அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும். அம்போதரங்கத்திற்கு முன் அராகம் வருவது - வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா எனப்படும். வண்ணகம் - அராகம். ‘கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் தொழுதேத்த’ என்பது, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா. விளக்குமணிப் பசும்பொன்னின் விரித்தமைத்துக் கதிர் கான்று. என்பது, வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா. இவ்விரு கலிப்பாக் களையும் யாப்பருங்கலக் காரிகையிற் காண்க. ஒரு தரவும் தனிச்சொல்லும் சுரிதகமும் வருதல் - தரவு கொச்சகக் கலிப்பா எனப்படும். இரு தரவும் தனிச்சொல்லும் சுரிதகமும் வருதல் - தரவு இணைக் கொச்சகக் கலிப்பா எனப்படும். பல தாழிசைகள் வருதல் - பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும். ஒத்தாழிசைக் கலிப்பா முதலிய கலிப்பாக்களுக்குக் கோதிய இலக்கணத்தில் மாறி, அல்லது மயங்கி வருதல் - மயங்கியற் கொச்சகக் கலிப்பா எனப்படும். இவ்வுறுப்பு வேறுபாடுகளே பெயர் வேறு பாட்டுக்குக் காரணமாகும். தரவு, தாழிசை யெல்லாம், நேரிசையொத்தாழிசைக் கலிப்பாவிற் போன்றவே. கலிவெண்பாவே போலக் கலித்தளை தட்டுவருவது - வெண்கலிப்பா எனப்படும். ‘மையற விளங்கிய’ என்னும் கலித்தொகை 81 ஆம் பாட்டு வெண் கலிப்பா. உறழ்கலிப்பா, வினாவிடையாக வரும். ஒரூஉநீ என்கூந்தல் - கலி - 97 நலமிக நந்திய - கலி - 113 - உறழ்கலிப்பாக்கள். கலியுறுப்புக்களுள், தரவு, தாழிசை இரண்டும் ஒன்றே, ஒருவகையே. இரண்டும் அளவடியான் துள்ள லோசைபட வருவனவே. முதலில் வருவது - தரவு. அடுத்து வருவது - தாழிசை. தரவும் தாழிசையும் அடியளவால் தான் வேறுபடும். ஒரு தரவுக்கு மூன்று தாழிசை வரும் ஒத்தாழிசைக் கலிப்பாவிற்கு தரவிற் சுருங்கி வரும் தாழிசை. வரலாறு 3. அடி தரவு ஒன்றுக்கு-2 அடித்தாழிசை 3 4 அடி தரவு ஒன்றுக்கு-3 அடித்தாழிசை 3 8 அடி தரவு ஒன்றுக்கு-4 அடித்தாழிசை 3 12 அடி தரவு ஒன்றுக்கு-4 அடித்தாழிசை 3 ஐந்து ஆறடித் தரவுக்கும் நாலடித் தாழிசையே. அம்போதரங்க வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாக்களுக்கு ஆறடித்தரவே; பெருமை சிறுமையில்லை. எடுத்துக்காட்டியுள்ள இரு கலிப்பாக்களின் (கார் முற்றி, மணிநிற) தரவு தாழிசைகளை ஓசையுடன் படித்துப் பாருங்கள். ஒரே வகையென்பது புலப்படும். தரவு, தாழிசை, கொச்சகம் தரவு கொச்சகம், அல்லது கொச்சகம் என்பதும், இத்தரவு போன்றதே. தரவு, தாழிசை, கொச்சகம் மூன்றும் ஒரு வகையே; துள்ளலோசைபட அளவடியான் வருவனவே. தாழிசையோடு வரும்போது - தரவு. தரவோடு வரும் போது - தாழிசை தனித்து வரும்போது - கொச்சகம் எனவும் கொள்ளலாம். காட்டு 1. ‘காதல்கொள் வதுவைநாட் கலிங்கத்து ளொடுங்கிய’ 2. ‘புணர்வினிற் புகன்றாங்கே புனலாடப் பண்ணியாய்’ 3. ‘தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற் கரும்பீன்று’ இம்மூன்றடிகளையும் ஓசையுடன் படித்துப் பாருங்கள். மூன்றும் ஒரே ஓசையுடையனவே. வேறுபாடு காண முடிகிறதா? இல்லை. ஆனால், முதலடி - கலித்தொகை 68 ஆம் கலிப்பாவின் தரவின் ஓரடி. இரண்டாவதடி - அக்கலிப் பாவின் தாழிசையின் ஓரடி. மூன்றாவதடி - 101 ஆம் கலிப்பாவின் கொச்சகத்தின் ஓரடி. தனித்து வரும் கொச்சகம் - ஓரெதுகையுடைய நான்கடியானும் ஆறடியானும் எட்டடியானும் வரும். எடுத்துக்காட்டுப் பின்னர்க் காட்டப்படும். கலிப்பாவினுள் வரும் கொச்சகம் வெண்பாவைப் போல முடியும். இவ்வேறுபாட்டை அறிந்து கொள்க. இதுகாறுங் கூறிய விளக்கத்தாற் பெறப்படுவது, கலிப்பா என்பது, வெண்பா ஆசிரியப்பாப் போல அளவடியான் வருவதே. வெண்பாச் செப்பலோசை படவும், ஆசிரியப்பா அகவலோசை படவும் வரும். கலிப்பாத் துள்ளலோசைபட வரும். இஃதே அவ்விரண்டோடு இதற்குள்ள வேறுபாடு. வெண்பா ஆசிரியப் பாப்போல மிக எளிதிற் பாடற்கேற்ற பாவேயாகும் கலிப்பாவும் என்பதைத் தெளிக, கலித்தொகையில் எல்லாவகைக் கலிப்பாக் களையும் கண்டறிக. பயிற்சி 1. மூவகை ஒத்தாழிசைக் கலிப்பாக்களின் இலக்கணம் என்ன? 2. மற்றக் கலிப்பாக்களின் இலக்கணத்தையும் குறிப்பிடுக? 3. தரவு தாழிசையும் எங்ஙனம் ஒன்றும் வேறும் ஆகும்? 4. தரவு, தாழிசை, கொச்சகம் - வேறுபாடு கண்டறிக. 5. தரவு, தாழிசைகளின் அடியள வென்ன? 6. கலிப்பாவுக்கும், வெண்பா ஆசிரியப்பாக்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன? 7. இக்கலிப்பாக்களை ஓசையுடன் படித்து, துள்ளலோசையின் இயல்பை அறிக. 8. எதைத் தெளிதல் வேண்டும்? ஏன்? 9. இருவகை அடியெதுகையுடைய ஒவ்வொரு நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா பாட முயலுக. 4. பரிபாடல் பரிபாடலாவது, இன்னபா என்னும் வரையறையின்றி, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு பாவும் கலந்துவரும் ஒருபொதுப்பா ஆகும். அதாவது, வெள்ளடி, அகவலடி, கலியடி, வஞ்சியடி என்னும் நால்வகை அடியும் கலந்து வரும் என்பதாம். தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், அராகம், அம்போதரங்கம் என்னும் கலியுறுப்பாறனுள் தாழிசை ஒழிந்த ஏனை ஐந்தும் பரிபாடலின் உறுப்பாக வரும். கலிப்பாவின் வகையிலொன்றான கொச்சகம், பரிபாடலின் உறுப்பாகப் பயின்றுவரும். அடி முதலில் அசை, அல்லது சீர் கூனாக வரும். இவ்வாறு வருதலே பரிபாட்டின் இலக்கணம் என்பது. 1. பரிபா டல்லே தொகைநிலை விரியின் இதுபா வென்னும் இயல்நெறி யின்றிப் பொதுவாய் நிற்றற்கும் உரித்தென மொழிப. - செய் 120. 2. கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு செப்பிய நான்கும் தனக்குறுப் பாகக் காமங் கண்ணிய நிலைமைத் தாகும். - செய் 121 3. சொற்சீ ரடியும் முடுகிய லடியும் அப்பா நிலைமைக் குரிய வாகும். - செய் 122 என்னும் தொல்காப்பியச் சூத்திரங்களால் புலப்படும். இதுபா - இன்னபா. இயல்நெறி - இலக்கண முறை. எருத்து - தரவு. சொற் சீரடி - கூன். அதாவது, அடிமுதலில், மடியின் பொருளைத் தழுவி அசை, அல்லது சீர் தனித்து வருதல். பொருளோ டடிமுதல் நிற்பது கூன்அது வேபொருந்தி இருள்சேர் விலாவஞ்சி யீற்றினும் நிற்கும். - யா. கா - 45. என்பது யாப்பருங்கலக் காரிகை. வஞ்சிப்பாவின் ஈற்றிலன்றிச் சிறுபான்மை இடையினும் கூன் வரும். இது, தனிச் சொல் என்னும் பெயரில் சிந்து வகைகளின் உறுப்பாக வரும். தனிச் சொல், தனிச்சீர், கூன், சொற்சீரடி - ஒரு பொருட்கிளவி. முடுகியல் - அராகம். ‘ஆயிரம் விரித்த’ என்னும் பரிபாடல் முதற்பாட்டில், தரவு, கொச்சகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் உறுப்புக்கள் வந்துள்ளன. “வானா ரெழிலி” என்னும் பரிபாடலில், தரவும், பல கொச்சகங்களும், அராகமும், சுரிதகமும், வந்துள்ளன. எனவே, பரிபாடலென்பது 1. தரவு, கொச்சகம், தனிச்சொல், சுரிதகம் முதலிய உறுப்புக் களைப் பெற்றுக் கலிப்பாவே போல வரும்; 2. அவ்வுறுப்புக்கள் பெறாமல் வெள்ளடி, ஆசிரியவடி, கலியடி, வஞ்சியடி ஆகிய நால்வகையடியும் இடையிடை கலந்து, வெண்பாவே போல் சிந்தடியான் முடியும் கொச்சகமாக வரும். 3. வெள்ளடியான் வந்து வெண்பாவே போல் முடியும் கொச்ச கமும், ஆசிரிய வடியான் வந்து, நேரிசை யாசிரியப்பாவே போல் ஈற்றயலடி சிந்தடியாக வரும் கொச்சகமும் இடை யிடை வரும்; 4. பல அடிகளால் அகவலே போல வரும்; 5. வெண்சுரிதகத்தானும், நேரிசையாசிரியச் சுரிதகத் தானும் நிலைமண்டில ஆசிரியச் சுரிதகத்தானும் முடியும். 6. அளவடிகளின் இடையிடையே குறளடியும் சிந்தடியும் கலந்து வரும். 7. இடையிடை தனிச்சொல் வரும். 8. அடிமுதலில் அசையும் சீரும் கூனாக வரும். இவ்வகையினைப் பரிபாடலில் காண்க. காட்டு 1. ஆயிரம் விரித்த அணங்குடை யருந்தலை. என்னும் பரிபாடல் முதற்பாட்டில், தரவு முதலிய உறுப்புக்க ளெல்லாம் வந்துள்ளன. 2. தொகுபுனல் பரந்தெனத் துடிபட வொருசார் ஓதஞ் சுற்றிய தூரென வொருசார், கார்தூம் பற்றது வாவென வொருசார், பாடுவார் பாக்கங் கொண்டென ஆடுவார் சேரியடைந்தெனக் 5. கழினிவந்து கால்கோத்தெனக் பழனவாளை பாளையுண்டென வித்திடுபுலம் மேடாயிற்றென உணர்த்த வுணரா ஒள்ளிழை மாதரைப் 10. புணர்த்திய விச்சத்துப் பெருக்கத்தில் துனைந்து சினைவளர் வாளையிற் கிளையொடு கெழீஇப் பழன உழவர் பாய்புனற் பரத்தந்து இறுவரை புரையுமா றிகுகரை யேமத்து வரைபுரை யுருவின் நுரைபல சுமந்து, 15. பூவேய்ந்து பொழில்பரந்து துனைந்தாடுவா ராய்கோதையர் அலர்தண்டா ரவர்காதில் தளிர்செறீஇக் கண்ணிபறித்துக் கைவழி யாழி தொய்யகம் புனைதுகில் 20. மேகலை காஞ்சி வாகு வலயம் எல்லாங் கவரு மியல்பிற்றாய் தென்னவன் ஒன்னா உடைபுலம் புக்கற்றால் மாறட்ட தானையான் வையைப் புனல். பரி - 7 முதல் மூன்றடிகளும் 9 - 14 ஆகிய ஆறடிகளும் கலியடிகள். 4 - 8 ஆகிய ஐந்தடிகளும், 15 - 18 ஆகிய நாலடிகளும் வஞ்சியடிகள். 19 - 20 இரண்டும் அகவலடிகள். இறுதி மூன்றும் வெள்ளடிகள். எனவே, இது நால்வகை யடியும் கலந்து வந்த, வெண்பாவே போல் முடிந்த கொச்சகம்.,........... 3. (1) கொன்றை கொடியிண ரூழ்ப்பக் கொடிமலர் மன்றன் மலர மலர்காந்தள் வாய்நாற நன்றவிழ் பன்மலர் நாற நறைபனிப்பத் தென்ன லசைவரூஉஞ் செம்மற்றே யம்மநின் குன்றத்தாற் கூடல் வரவு. - பரி - 8 இது, வெண்டளை பிழையாது, வெள்ளடியான் வந்து, வெண்பாவே போல் முடிந்த கொச்சகம். ஈற்றடி மட்டும் பொழிப்பு மோனை அமையவில்லை. மற்ற அடிகள் நன்குபொழிப்பு மோனை உடையனவாய் ஐந்தடியும் ஓரெதுகையாய் வந்த பஃறொடை வெண்பா வாகும் இது. (2) எரிமலர் சினை இய கண்ணை பூவை விரிமலர் புரையு மேனியை, மேனித் திருஞெமர்ந் தமர்ந்த மார்பினை, மார்பிற் றெரிமணி பிறங்கும் பூணினை, மால்வரை எரிதிரிந் தன்ன பொன்புனை யுடுக்கையை, சேவலங் கொடியோய்நின் வலவயி னிறுத்து மேவலுட் பணிந்தமை கூறும் நாவ லந்தண ரருமறைப் பொருளே. - பரி -1 இது, ஆசிரியவடியான் வந்து, நேரிசையாசிரியப்பாவே போல் முடிந்த கொச்சகம். 4. ‘தொன்முறை யியற்கையின்’ எனும் 2 ஆம் பாடலும், ‘மாஅ யோயே, மா அ யோயே’ எனும் 3 ஆம் பாடலும், ‘ஐந்திரு ளறநீக்கி’ எனும் 4 ஆம் பாடலும், ‘பாயிரும் பனிக்கடல்’ எனும் 5 ஆம் பாடலும், அகவலே போல் பல அடிகளால் அமைந்த பாடல்களாகும். 5. (1) உடம்புணர் காதலரு மல்லாருங் கூடிக் கடம்பமர் செல்வன் கடிநகர் பேண மறுமிடற் றண்ணற்கு மாசிலோ டந்த நெறிநீ ரருவி அசும்புறு செல்வம் மண்பரிய வானம் வறப்பினும் மன்னுகமா தண்பரங் குன்றம் நினக்கு. -பரி-8 இது எட்டாம் பாடலின் வெள்ளைச் சுரிதகம். தொடை அமைதியைக் கண்டறிக. (2) கற்பிணை நெறியூ டற்பிணைக் கிழமை நயத்தகு மரபின் வியத்தகு குமர! வாழ்த்தினோம் பரவுதுந் தாழ்த்துதலை நினையா நயத்தலிற் சிறந்தவெம் மடியுறை பயத்தலிற் சிறக்க நாடொறும் பொலிந்தே. - பரி - 9 இது, ஒன்பதாம் பாடலின் நேரிசையாசிரியச் சுரிதகம், தொடை யமைதியைக் கண்டறிக. (3) செறுதீ நெஞ்சத்துச் சினநீடி னோரும் சேரா வறத்துச் சீரி லோரும் அழிதவப் படிவத் தயரி யோரும் மறுபிறப் பில்லெனு மடவோருஞ் சேரார் நின்னிழ லன்னோ ரல்ல தின்னோர் சேர்வ ராதலின் யாஅ மிரப்பவை பொருளும் பொன்னும் போகமு மல்ல, நின்பால், அருளு மன்பு மறனு மூன்றும் உருளிணர்க் கடம்பி னொலிதா ரோயே! -பரி-5 இது ஐந்தாம் பாடலின் நிலைமண்டில ஆசிரியச் சுரிதகம். ‘நின்பால்’ என்பது - கூன் 6. கடுஞ்சூர் மாமுதல் தடிந்தறுத்தவேல் அடுபோ ராளநின் குன்றின்மிசை ஆடல் நவின்றோர் அவர்போர் செறுப்பவும் பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும் 5. வல்லாரை வல்லார் செறுப்பவும் அல்லாரை யல்லார் செறுப்பவுமோர் சொல்லாய்ச் செம்மைப் புதுப்புனல் தடாக மேற்ற தண்சுனைப் பாங்கர்ப் படாகை நின்றன்று 10. மேஏ வெஃகினவை வென்றுயர்த்த கொடி விறல்சான்றவை கற்பிணை நெறியூ டற்பிணைக் கிழமை நயத்தகு மரபின் வியத்தகு குமர! - பரி - 9 இதில் அளவடியின் இடையிடையே குறளடியும் சிந்தடியும் வந்தமை காண்க. 7. (1) அதிரங் கண்ணிநீ யன்பனெற் கன்பன் கதுவா யவன்கள்வன் கள்விநானல்லேன்; என வாங்கு, வச்சிய மானே மறலினை மாற்றுமக்கு நச்சினா ரீபவை நாடறிய நும்மவே. - பரி - 20 (2) முனிபொரு ளன்று முனியல் முனியல் கடவரை நிற்குமோ காமங் கொடியியலாய்! எனவாங்கு, இன்ன துனியும் புலவியு மேற்பிக்கும் தென்னவன் வையைச் சிறப்பு. - பரி - 20 என வாங்கு - தனிச்சொல். இது, இப்பாடலின் இடையிடையே வந்தமை காண்க. 8. (1) நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள, நின், தண்மையுஞ் சாயலுந் திங்களுள, நின், சுரத்தலும் வண்மையு மாரியுள நின், புரத்தலு நேர்மையு ஞாலத்துள. - பரி - 4 ‘நின்’ என, அடி முதலில் அசை கூனாக வந்தது. (2) கரையே, கைவண் டோன்றல் ஈகை போன்மென துறையே, முத்துநேர்பு புணர்காழ் மத்தக நித்திலம் செறுவே, விடுமலர் சுமந்து பூநீர் நிறைதலின் காவே, சுரும்பிமிர் தாதொடு தலைத்தொலை மிகூஉம். - பரி 16 ‘கரையே, துறையே, செறுவே, காவே’ - என அடி முதலில் சீர் கூனாக வந்தது. தொடை யமைதியை நோக்குக. 2. அடி 3, 5, 10, 11, 16, 22, 23 - தொடை அமையவில்லை. 9- கூழைமோனை. 12 - மேற்கதுவாய் மோனை. 13 - மேற்கதுவாயோடு, இடைப்புண ரெதுகை. 14 - கூழையெதுகை. பொழிப்பே சிறப்பு. 19 - பொழிப்பெதுகை. 20 - பொழிப்பெதுகையோடு கடையிணைமோனை. அடியெதுகையும், இடையிடை அமையவில்லை. 3 (2) 1, 4, 5, 6 , 7 , 8 அடிகளில் - மோனை அமையவில்லை. அடி 2 - மேற்கதுவாய் மோனை. அடி 3 - கடையிணை மோனையும் எதுகையும் எடுப்பில்லை. முதல் ஐந்தடியும் ஓரெதுகை. பின் மூன்றடியும் ஓரெதுகை. 5 (1) 1, 4, 6 அடிகளில் - மோனை அமையவில்லை. அடி 5 - முற்றுமோனை. அடி 2, 3 பொழிப்பு மோனை. இவ்விரண்டடி ஓரெதுகை. ‘செல்வம்* மண்பரிய’ - தளைதட்டுகிறது. அலகிட்டறிக. 5 (2) 4, 5 அடிகளில் - மோனை அமையவில்லை. 1, 2, 3 அடிகள் - பொழிப்பெதுகை. ஈற்றடியிரண்டும் ஓரெதுகை. 5 (3) அடி 5 - கீழ்க்கதுவாய் எதுகை. அடி 6 - தொடை அமையவில்லை. அடி 7, 8 - கூழை மோனை. அடி 9 - மேற்கதுவாய் மோனை. முதல் நான்கடியும் - பொழிப்புமோனை. அடியெதுகை நன்கு அமையவில்லை 6 அடி 1- பொழிப்பெதுகை. அடி 2- இணைமோனை. எடுப்பில்லை. அடி 3 - பொழிப்பு மோனை. அடி 4 - கூழைமோனை. அடி 5 - இணைமோனையும் இணையெதுகையும். 6 - கீழ்க்கதுவாய் எதுகை. அடி 7, 9, 10 - மோனை அமையவில்லை. அடி 11 - இருசீரிலும் மோனை. அடி 12, 13 - பொழிப்பெதுகை எடுத்துக்காட்டிய அடிகளில், பல தொடை அமைதியுடன் இருக்க, சில அடிகள் தொடையமைதி இல்லாதிருத்தலின் காரணம் விளங்கவில்லை. பயிற்சி 1. பரிபாடலின் இலக்கணம் என்ன? 2. பரிபாடலின் உறுப்புக்கள் என்ன? 3. பரிபாடலின் வரும் அடிகள் எவை? 4. பரிபாடல் எவற்றால் முடியும்? 5. கூனும், தனிச்சொல்லும் எங்கெங்கே வரும்? 6. பரிபாடலின் பொது விலக்கணம் என்ன? 7. எடுத்துக்காட்டிய பாடல்களின் தொடை அமைதியைக் கண்டறிக. 8. பரிபாடலில் பரிபாடலின் அமைப்பினைப் படித்தறிந்து, பரி பாடலும் பாட முயலுங்கள். 5. மருட்பா மல்லாடு தோளா னளியவாய் மாலிருட்கட் செல்ல மொழிக செலவென்பாய் - நில்லாய் புனையிழை இழந்த பூசல் நினையினு நினைதியோ வாழியென் நெஞ்சே. - வெண் இது, முன்னீரடியும் வெள்ளடியாகவும், பின்னீரடியும் ஆசிரிய வடியாகவும் உள்ளமையால் - மருட்பா எனப்படும். இதுவே மருட்பாவின் இலக்கணம். ஆசிரிய வடிக்கு முன்னுள்ள தனிச்சீர், முன்னுள்ள வெள்ளடி யிரண்டின் எதுகை யுடையதாக இருக்க வேண்டும். வெண்பா வடிகள் வெண்பா விலக்கணப்படியும், ஆசிரியவடிகள் ஆசிரிய இலக்கணப் படியும் அமைந்துள்ளமை அறிக. மருட்பாவின் ஆசிரியவடிகள் இவ்வாறே, ஈற்றயலடி சிந்தடியாக – நேரிசையா சிரியமாக - வரும். மருளுதல் - ஒப்பாதல், இணைதல். வெள்ளடிகளும் ஆசிரியவடிகளும் இணைந்து ஒரு பா ஆனதால், இது இப்பெயர் பெற்றது. முதலடி - ஒரூஉ மோனை. ஈற்றடி - கீழ்க்கதுவாய் மோனை. மற்ற ஈரடிகளும் - பொழிப்பு மோனை. கைக்கிளை, வாயுறை வாழ்த்து, புறநிலை வாழ்த்து, செவியறிவுறூஉ என்னும் பொருள் பற்றிப் பாடுதல் மருட்பாவின் மரபாகும். இப்பாட்டு - கைக்கிளை. விளக்கம் - தொல்காப்பியச் செய்யுளியலிலும், யாப்பதிகாரத்திலும் காண்க. ‘உலகப் பெரியோன் கென்னடி’ 289 ஆம் பாட்டாகிய வாயுறை வாழ்த்து மருட்பா, 116 வெள்ளடியும், 4 ஆசிரியவடியும் உடைய மருட்பாவாகும். வெண்பாமாலையில், ஆண்பாற்கைக்கிளை, பெண்பாற்கைக் கிளை, மருட்பாக் களைப் படித்தறிக. இது காறும் எடுத்துக்காட்டப்பட்ட, அளவடியாலான, 1. குறள் வெண்பா 2. நேரிசைச் சிந்தியல் வெண்பா 3. இன்னிசைச் சிந்தியல் வெண்பா 4. நேரிசை வெண்பா 5. இன்னிசை வெண்பா 6. நேரிசைப் பஃறொடை வெண்பா 7. இன்னிசைப் பஃறொடை வெண்பா 8. நேரிசைக் கலி வெண்பா 9. இன்னிசைக் கலி வெண்பா 10. நேரிசை யாசிரியப்பா 11. இணைக்குற ளாசிரியப்பா 12. நிலைமண்டில ஆசிரியப்பா 13. அடிமறி மண்டில ஆசிரியப்பா 14. கலிப்பா 15. பரிபாடல் 16. மருட்பா என்னும் பதினாறும் வெவ்வே றோசையுடையன அன்மையான், வகைக் கொவ்வொன்றே எடுத்துக்காட்டி விளக்கப் பட்டது. அதாவது, வெண்பா வெல்லாம் ஒரே ஓசையுடைமையான் வகைக் கொவ்வொன்றே காட்டப்பட்டது. இங்ஙனமே ஆசிரியப்பாவும் கலிப்பாவும் பரிபாடலும் மருட்பாவும். 6. நூற்பா 1. இடைபல குறைதல் இணைக்குறளாகும் - அவி 2. ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே கொச்சகக் கலியொடு கலிமூன் றாகும். - நற்ற 3. அறுசீர் முதலா நெடியவை யெல்லாம் நெறிவயிற்றிரியா நிலத்தவை நான்காய் விளைகுவ தப்பா இனத்துள விருத்தம் - காக் 4. முதலெழுத்தொன்றின் மோனை, எதுகை முதலெழுத்தளவோ டொத்து முதலா அஃதொழிந் தொன்றின் ஆகுமென்ப, இவ்விரு தொடைக்குங் கிளையெழுத்துரிய - பல்கா 5. நாற்றமுந்தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், தொ. கள - 23 6. அவற்றுள், ஒன்றே இருதிணைத் தன்பாலேற்கும் - நன் - 284 7. தாஅ வண்ணம், இடையிட்டு வந்த எதுகைத் தாகும் - செய் - 215 8. முரஞ்சல் முதிர்வே. இவை எட்டும் இலக்கண நூற்பாக்கள். நூற்பா, சூத்திரம் - ஒரு பொருட்கிளவி. முதல் நூற்பா - ஒரே அடியாலானது. 2- இரண்டடியாலானது. 3. மூன்றடியாலானது. 4. நாலடியாலானது. 5 - 4 6 அடிகளாலானது. 6. இதில், ‘அவற்றுள்’என, ஒரு சீர் ஓரடியாக வந்துள்ளது. இது சொற்சீரடி எனப்படும். கலிப்பா, பரிபாடல் முதலியவற்றுள், அடி முதலில் சீர்கூனாக வரும். இடையினும் சிறுபான்மை வரும். சிந்துகளின் அடியிறுதியில் சீர் கூனாக வரும். அவற்றிடை இதன் வேறு பாடறிக. 7. இதில், ‘தாஅ வண்ணம்’ என்பது - குறளடி இணைக் குறளாசிரியப் பாவினும் குறளடி வருகிறது. ஆனால், அதில் முதலில் வராது. 8. இது, குறளடி தனித்து ஒரு நூற்பாவாக வந்துள்ளது. குறள் வெண்டுறையும் குறளடியான் வரும். ஆனால், 7 ஆம் நூற்பாவிற் போல வேறு அடியோடு கூடி ஒரு பாட்டாக வராது. இந்நூற்பா, அகவலோசையுடைய அளவடியான் ஆனதே; ஆசிரியப்பாவே போல் பல அடிகள் வருதலுடையதே. எனினும், இது ஆசிரியப்பாவன்று, காரணம், ஆசிரியப்பா மூன்றடியில் குறைந்து வராது. ஒருசீர் அசையாக வராது. குறளடி முதலில் வராது. எனவே, நூற்பா தனிப்பா என்பது பெற்றாம். நூற்பா வடியும் அளவடியே யெனினும், சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளை செவ்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கும். - நன் திட்ப நுட்ப முடையதாகலான், நூற்பாவடிகளில் மோனை நன்கு அமைய வேண்டுமென்பதில்லை; அமைய வேண்டா மென்பது மில்லை. நான்கின் ஈற்றடி தவிர, மற்ற அடிகளெல்லாம் தொடையமைதி யுடனேயே வந்திருத்தலை நோக்குக. 5. இணையெதுகையும், கடையிணை மோனையும். 6. பொழிப்பெதுகையின் பாற்படும் 7. இருசீரடியும் மோனைத் தொடைபட வந்திருத்தலை அறிக. பயிற்சி 1. நூற்பாவின் இலக்கணம் என்ன? 2. நூற்பா ஆசிரியவடி பயின்றும் ஏன் ஆசிரியப்பா ஆகாது? 3. மற்ற பாக்களுக்கும் நூற்பாவுக்கு முள்ள ஒற்றுமை வேற்றுமையை எடுத்துக் காட்டுக. 4. நூற்பாவடிகள் தொடையமைதி யின்றியும் வருதலின் காரணம் என்ன? இனிவரும் கொச்சக முதலியன பலவகை ஓசைவேறு பாடுடையன வரும். தமிழ் இலக்கியச் செய்யுள் நூற்களில் வரும் அப்பல வகையில் வகைக்கு ஒவ்வொன்று எடுத்துக்காட்டி விளக்கப் படும். 7. கொச்சகம் 1. நாலடிக் கொச்சகம் 1. சங்கமுஞ் சக்கரமுந் தாமரைக் கையேந்திச் செங்க ணரிமான் சினவிடைமேல் நின்றாயால், கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து மங்கை யுருவாய் மறையேத்த வேநிற்பாய்! - சில - 12 2. வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல்வண்ணன் பண்டொருநாட் கடல்வயிறு கலக்கினையே கலக்கியகை யசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை மலர்க்கமல வுந்தியாய் மாயமோ மருட்கைத்தே! - சில - 17 3. நுளையர் விளரி நொடிதருந்தீம் பாலை இளிகிளையிற் கொள்ள இறுத்தாயால் மாலை! இளிகிளையிற் கொள்ள இறுத்தாய்மன் நீயேற் கொளைவல்லாய் என்னாவி கொள்வாழி மாலை! - சில - 7 4. கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன் செயலெழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்! திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே அங்கணேர் வானத் தரவஞ்சி வாழ்வதுவே. - சில - 7 5. பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையா னென்பரால். - சில -17 6. இறையவ னீசனெந்தை இமையோர்தொழு தேத்தநின்ற கறையணி கண்டன்வெண்டோ டணிகாதினன் காலத்தன்று மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னுசென்னிப் பிறையணி செஞ்சடையன் பிரமாபுரம் பேணுமினே! - சம் 7. மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக் கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுட் பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச் செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே. - சம் 8. சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே! பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான் முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப் பொன்மாலை மார்பனென் புதுநல முண் டிகழ்வானோ. - அப் 9. பொன்னார் மேனியனே புலித்தோலை யரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே! மன்னே மாணியே மழபாடியுள் மாணிக்கமே! அன்னே! உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. - சுந் 10. முன்னைநீ கூறியவை யெல்லா முடிந்தாலும் என்னைநீ கட்டுமா றெவ்வா றெனமாயன்; உன்னைநீ தானும் உணராதாய் உன்வடிவந் தன்னைநீ காட்டத் தளைந்திடுவேன் யானென்றான். - வில் 11. அன்னதொரு காலை அறுமா முகக்கடவுள் தன்னிகரி லாத தனக்கிளையோர் தங்களையும் துன்னலுறு பூதத் தொகையோர்கள் யாவரையும் உன்னியவர் தம்மால் ஒருகோல் தொடுத்தனரே. - கந் 12. கார்நடக்கும் படிநடக்கும் காராளர் தம்முடைய ஏர்நடக்கு மெனிற்புகழ்சால் இயலிசைநா டகம்நடக்கும் சீர்நடக்குந் திறநடக்குந் திருவறத்தின் செயல்நடக்கும் பார்நடக்கும் படிநடக்கும் பசிநடக்க மாட்டாதே. - ஏரெ 13. நறைமணக்குங் கொன்றை நதிச்சடில நாயகனே கறைமணக்குந் திருநீல கண்டப் பெருமானே! உறைமணக்கும் பூம்பொழில்சூழ் ஒற்றியப்பா! உன்னுடைய மறைமணக்குந் திருவடியே வாய்நிரம்ப வாழ்த்தேனோ! - அரு இதிலிருந்து எடுத்துக்காட்டுச் செய்யுட்கள், பெரும்பாலும் அந்நூல்களின் காலமுறைப்படியும், வகைப்படியும் இடம் பெறும். கொச்சகக்கலி உறுப்புக்களான தனிச்சொல்லும் சுரிதகமும் இன்றி, இவை தனியாக அளவடி நான்காற் செய்யப்படும் கொச்சகங்கள். இக்கொச்சகங்கள் பதின்மூன்றும் வெவ்வேறு வகையும், வெவ்வேறு ஓசையும் உடையவை. கவனித்து ஓசையுடன் படித்துப் பாருங்கள். 1, 3, 4, 5, 10, 11 எண்ணுள்ள கொச்சகங்கள் வெண்டளை யாலானவை. 8, 9, 12 கொச்சகங்கள் பெரும்பாலும் கலித்தளையாலானவை. 7 ல் ஆசிரியத்தளை, வெண்டளை, கலித்தளை மூன்றும் கலந்து வந்துள்ளன. 2, 13ல் வெண்டளையும் கலித்தளையும் விரவி வந்துள்ளன. 6ல் வெண்டளை, கலித்தளை, வஞ்சித்தளை மூன்றும் மயங்கி வந்துள்ளன. 1, 5, 10 கொச்சகங்கள் ஒரே வகையான ஓசையுடையவை. 10ன் முதற்சீர்கள் - தேமாங்காய். முதற் கொச்சகத்தின் முதலடியின் முதற்சீர் தவிர, ஏனை மூன்றடியின் முதற்சீர்களும் - தேமா. 5வது கொச்சகம் - அடிமடக்கு. ஆகையால், அம்மூன்றும் வேறாயின. 3, 4 கொச்சகங்கள் ஒரே ஓசையுடையவை. 3வது இருசீர் மடக்கொடு, பின்னிரண்டடியும் வேறெதுகை. 4வது அடிமடக் கொடு, நாலடியும் ஓரெதுகை. ஆகையால் வேறாயின. 8, 9, 12 கொச்சகங்கள் ஒருவகையே. 8ன் முதற்சீர்கள் - தேமாங்காய். 9ன் முதற்சீர்கள் - தேமா. எனவே, ஓசை வேறு பட்டன. 9 போன்றதே 12. ஆனால், 2 எடுப்பு நடையால் வேறுபட்டது. 8 போன்றதே 2. ஆனால், 2 சீர்மடக்கொடு, பின்னிரண்டடியும் வேறெதுகை ஆகையால் வேறுபட்டது. 11 முழுதும் வெண்டளை யுடையதாயினும், இரண்டாஞ்சீர் நான்கும் - தேமா. ஆகையால், வேறுபட்டது. 6, 7 உம் வேறுபட்ட ஓசையுடையவை. ஒன்றுக்கொன்று எவ்வெவ் வகையில், எவ்வளவு வேறுபாடு! நந்தா விளக்கனைய நாயகனே நானிலத்தோர் என்னும் கம்பராமாயணக் கொச்சகம் போன்றது முதற் கொச்சகம். 5, 10 கொச்சகங் களும் அதுபோன்றவையே. வற்கலையி னுடையானை மாசடைந்த மெய்யானை. என்னும் கம்பர் கொச்சகம் போன்றனவே 8 உம், 12-உம். முத்திநெறி யறியாத மூர்க்கரொடு முயல்வேனை. பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம். என்னும் திருவாசகப் பாடல்களும், மாலைவாய் நெடுங்குடைமேல் மதயானைக் கைதுணிந்து என்னும் சிந்தாமணிச் செய்யுளும் இதுபோன்ற கொச்சகங்களே. இதுவும் பெருவழக்குடையது. இன்னொரு முறை திருப்பிப் படித்துப் பாருங்கள். வெண்பா முதலியவற்றின் அளவடி போலவே இக்கொச்ச கத்தின் அடியும் பொழிப்பு மோனையும், சிறுபான்மை ஒரூஉ மோனையும் அமைய வேண்டும். இக்கொச்சகங்களின் அடிகள் பெரும்பாலும் அவ்வாறு அமைந்துள்ளமை அறிக. இவ்விரு தொடைகளோடு வேறு தொடைவகை வரினும், இவையே சிறப்புறும் என்பதை மறவாதீர்கள். அடுத்த கலிவிருத்தமும் அளவடியான் ஆனதாகையால், அதற்கும் இஃதொக்கும். பாட்டு அடி தொடை 2 1 கூழைமோனை 2 2, 3, 4 மேற்கதுவாய்மோனை. 3 1, 3 மேற்கதுவாய்மோனை 3 2 கூழைமோனை 5 2, 3 முற்றுமோனை 6 1, 3 முற்றுமோனை 6 2 கீழ்க்கதுவாய் மோனை 6 4 மேற்கதுவாய் மோனை 8 1 ஒரூஉ மோனை 8 2 மேற்கதுவாய் மோனை 8 3 மேற்கதுவாய் மோனையோடு இடைப்புணரெதுகை 9 3 முற்றுமோனை. 9 4 இணைமோனையும் கடையிணை எதுகையும் 10 1 ஒரூஉ மோனை 10 2, 3 மேற்கதுவாய் மோனை 10 2 மேற்கதுவாய் மோனை 12 2, 4 கூழைமோனை 12 3 முற்றுமோனை. 13 1 மேற்கதுவாய் மோனை 13 2 பொழிப்பு மோனை உடன் பின்னெதுகை 13 3, 4 மேற்கதுவாய் மோனை. எடுத்துக்காட்டாத அடிகள் - பொழிப்பு மோனை. கூழைமோனையிலும், மேற்கதுவாய் மோனையிலும் - பொழிப்பு மோனை சிறப்புறும். கீழ்க்கதுவாய் மோனையில் ஒரூஉ மோனை சிறப்புறும். குறிப்பு : 9 வது கொச்சகத்தின் ஈற்றடியில் மோனை வர வில்லை. முன்னிரு சீரும் ஓரெதுகை - இணையெதுகை; பின்னிரு சீரும் ஓரெதுகை - கடையிணை யெதுகை. இது ஒருவகைத் தொடையமைதி போலும்! எதுகை வகையினை நோக்கு. 2, 3, 4, 6, 7, 13 கொச்சகங்கள் - உயிரெதுகை. 5, 9, 10, 11 ல், மெல்லொற்றின் முன் அதே மெல்லின உயிர்மெய் வந்துள்ளது. முதல் கொச்சகத்தில் - மெல்லொற்றின் முன் இன வல்லின உயிர் மெய் வந்துள்ளது. கொச்சகம் 8ல், மெல்லொற்றின் முன் வேறு மெல்லின உயிர்மெய் வந்துள்ளது. 12வது பாட்டில் இடையொற்றின் முன் மெல்லின உயிர்மெய் வந்துள்ளது. முதலியலில், ‘எதுகை வகை’ என்பதைத் திருப்பிப் பாருங்கள். இன்னொரு முறை இத்தொடை அமைப்பினைக் கவனித்துப் படித்துப் பாருங்கள். பாட்டைப் படிக்கும் போது, மோனை எதுகையமைப் பினைக் கவனிப்பதோடு, மோனைத்தொடையெடுப்பில் எடுப்பாகப் படிக்க வேண்டும். காட்டாக, முதற்கொச்சகத்தின் முதலடியைப் படிக்கும் போது, ‘சங்கமுஞ் சக்கரமும்’ என நிறுத்தி, ‘தாமரை’ என்பதில் எடுப்பாகப் படிக்க வேண்டும். ஓசை வேறுபாடு: ஒரு செய்யுளைப் படிக்கும்போது, சீர்களில் நிறுத்தி, மோனைத் தொடையில் எடுத்துப் படிக்கின் அச்செய்யுளின் ஓசை புலப்படும். எதுகைத் தொடையாயின், அவ்வெதுகையில் எடுத்துப் படிக்க வேண்டும். 2. ஆறடிக் கொச்சகம் 1. செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான் அங்கண னந்தணனா யறைகூவி வீடருளும் அங்கருணை வார்கழலே பாடுதுங்கா ணம்மானாய்! - தி. வா. 3. எட்டடிக் கொச்சகம் 2. ஏற்ற கலங்க ளெதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளற் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய், மாற்றா ருனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்! - தி. பா 1. இது ஓரெதுகையான் வந்த ஆறடிக் கொச்சகம். திருப்பொன்னூசல் என்னும் திருவாசகப் பாடல்களும் இத்தகைய ஆறடிக் கொச்சகங்களே. ‘அந்தணனா யறைகூவி’ -கலித்தளை. மற்றவை வெண்டளை. கலிப்பாவானதால், கலித்தளை வருதல் இழுக்கின்று. தொடை அமைதி அடி 2- மேற்கதுவாய் மோனை. அடி 4, 5 - கூழைமோனை. அடி 6 - ஒரூஉ மோனை. அடி 1, 3 - பொழிப்பு மோனை. 2. இதுவும், ஓரெதுகையான் அமைந்ததே. அடி 1, 2, 8 - பொழிப்பு மோனை. அடி 3 - ஒரூஉ மோனை. அடி 4 - கீழ்க்கதுவாய் மோனை. அடி 5, 6, 7 - மேற்கதுவாய் மோனை. எதுகை யமைப்பு முதற்பாட்டு - மெல்லொற்றின் முன் இன வல்லின உயிர்மெய். இரண்டாம் பாட்டு - வல்லொற்றின் முன் அதே வல்லின உயிர்மெய். மாணிக்கவாசகர் திருவெம்பாவையும், உலகப்பெரியோன் கென்னடி - ‘உலகத்துயர்’ என்பதும் இத்தகைய எட்டடிக் கொச்சகங்களே. அவ்வந்நூல்களில் படித்தறிக. பயிற்சி 1. 1, 9 கொச்சகங்களுக்கு வேறுபாடென்ன? 2. 8, 9, 12 கொச்சகங்களின் ஒற்றுமை வேற்றுமை என்ன? 3. 1, 8 கொச்சகங்கள் எக்கொச்சகங்கள் போன்றவை? 4. இக்கொச்சகத்திற்கும் கலிப்பாவிற்கு முள்ள வேறுபாடென்ன? 5. இக்கொச்சகங்களை ஓசையுடன் படித்து, அவ்வாறே வகைக்கொன்று பாடிப் பாருங்கள். 6. சிலப்பதிகாரக் கொச்சகங்களின் தொடையமைதியை ஊன்றிப் பார்த்து, பாட்டுக்கு மோனை எதுகை எத்தகு இன்றியமையாதவை என்பதை உணருங்கள் 7. ‘எம்மீர்நம் தாய்மொழியின் இயல்பை உலகறிய’ - கொச்சகத்தை முடிக்க 8. பாட்டைப் படிக்கும்போது, தொடையமைதியோடு, சீர் தளைகளையும் கவனித்துப் படிக்க. 8. கட்டளைக் கலிப்பா 1. நிலத்தின் றன்மை பயிர்க்குள தாகுமாம் நிசத் தொண்டு மடமையுங் கொண்டதாய் தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல் சால வேயரி தாவதொர் செய்தியாம் குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம் கொடுமை செய்தும் அறிவை யழித்துமந் நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம் நங்கை கூறும் வியப்புகள் கேட்டிரோ! - குங் தேமா, புளிமா என்னும் மாச்சீரை முதற்சீராக உடைய நாற்சீரடி, முதலசை நேரசையாயின் - தேமாவாயின் - பதினோ ரெழுத்தும், முதலசை நிரையசையாயின் - புளிமாவாயின் - பன்னிரண் டெழுத்தும் உடையதாய், இஃதோர் அரையடியாய், இத்தகைய அரையடி இரண்டு கொண்ட அடி நான்கு வருவன - கட்டளைக் கலிப்பா எனப்படும். எழுத்தெண்ணும் போது, ஒற்றுநீக்கி எண்ண வேண்டும். எழுத் தெண்ணிப் பாடுவதால், இது இப்பெயர் பெற்றது. கட்டளை - அளவு; அடியின் எழுத்தளவு. மாச்சீர் முதல நாற்சீ ரடியே நேர்பதி னொன்றாய் நிரைபன் னிரண்டாய் எழுத்துடை யரையடி இணைந்தடி நான்கு கவினுற வருவது கட்டளைக் கலியே. இச் சூத்திரத்தை மனப்பாடம் செய்க. மேல் எடுத்துக்காட்டியுள்ள கட்டளைக் கலிப்பா, இவ்விலக் கணப்படி அமைந்துள்ளதா வென்று பாருங்கள். ‘நிலத்தின் றன்மை’ என்னும் முதலடி நிரையசையை முதலாக உடைய அரையடி. ‘நீசத்தொண்டு’ என்னும் இரண்டாவதடி நேரசையை முதலாக உடைய அரையடி. இவ்விரண்டு அரையடியும் ஒரு மோனைத் தொடையால் இணைந்தானது. ‘நிலத்தின் தன்மை... கொண்டதாய்’ என்னும் எண்சீரடி. முதலரையடியில் பன்னிரண்டெழுத்தும், இரண்டாவ தரையடியில் பதினோரெழுத்தும், இருத்தலை எண்ணியறிக. இது, எண்சீர்க் கழிநெடிலடி நான்குடைய தெனினும், எழுத்தெண்ணிப் பாடுவதால், ஆசிரிய விருத்தம் ஆகாது. 3. பாடிப் பாடிப் பழந்தமிழ்ப் பாவலர் பத்து நூறா இயலை வளர்த்தனர் பாடிப் பாடிப் பயிலியாழ்ப் பாணர்கள் பண்ண மைந்த இசையை வளர்த்தனர் ஆடி யாடிக்கூத் தர்முதல் மூவரும் அங்ங னேநாட கத்தை வளர்த்தனர் மூடி மூடி முகந்து கொடுத்துமே முத்த மிழைவ ளர்த்தனர் மூவரும். - அர இது, நேரசையை முதலாக உடைய கட்டளைக் கலிப்பா. ஒவ்வோர் அரையடியினும் பதினோரெழுத்து இருக்கிறதா என்று எண்ணிப் பாருங்கள். 4. வெறியெ னும்பித்து மட்டுமொன் றோகுடி வெறியும் நானுயர் வென்னும் இனநிற வெறியும் ஐந்தில்நான் மேலோ னெனுஞ்சாதி வெறியும் மற்றவை தாழ்ந்த வெனுமத வெறியும் எங்கொள்கை யேமே லெனுங்கட்சி வெறியும் மக்களைக் கொன்று குவிக்கும்போர் வெறியும் சேர்ந்தொன்று கூடினும் இம்மொழி வெறியி னுக்கிணை யாமென லாகுமோ! - அர இது, நிரையசையை முதலாக உடைய கட்டளைக் கலிப்பா, ஒவ்வோர் அரையடியினும் பன்னிரண்டெழுத்து இருக்கிறதா என்று எண்ணிப்பாருங்கள். இது, எழுத்தெண்ணிப் பாடும் கட்டளையடி யானதால், அளவடிக் குரிய மோனைத் தொடையமைதி பெற வேண்டும் என்பதில்லை. எளிதிற் பொருளமைத்துப் பாடுதற்கு ஏற்ற பாவாகும் இது. பாரதியாரின் சுயசரிதப் பாடல்கள் 49-ம் கட்டளைக் கலிப்பாக்களே. தேசியவிநாயகம் பிள்ளை பாடல்களில் பல கட்டளைக் கலிப்பாக்கள். அரசியலரங்கம் - ஆட்சிமொழி 132 பாடல்களும் கட்டளைக் கலிப்பாக்களே. பயிற்சி 1. எட்டடிக் கொச்சகத்திற்கும் கட்டளைக்கலிப்பாவுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன? 2. கட்டளைக் கலிப்பாவின் இலக்கணம் என்ன? 3. கட்டளைக் கலிப்பா, ஏன் எண்சீரடி ஆசிரியவிருத்தம் ஆகாது? 4. கட்டளைக் கலிப்பாவின் ஓரடியில், 22 எழுத்தும், 23 எழுத்தும், 24 எழுத்தும் வருதல் எங்ஙனம்? 5. கட்டளைக் கலிப்பா ஏன் மோனை அமைதி பெறவேண்டுமென்பதில்லை? 6. ‘கட்டளை’ என்னும் அடைபெற்று வரும் பாவினம் ஒன்றை அறிவீர்களா? 7. பாரதியாரின் - புதுமைப்பெண், சுயசரிதம், தேசிக விநாயகம் பிள்ளை பாடல், அரசியலரங்கம் முதலியவற்றுள் கட்டளைக் கலிப் பாக்களைப் படித்து, அதன் அமைப்பினை அறிந்து கொள்க. 9. கலிவிருத்தம் 1. மரவம் பாதிரி புன்னை மணங்கமழ் குரவங் கோங்க மலர்ந்தன கொம்பர்மேல், அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செயும் திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே. - சில - 12 2. அன்னந் துணையோ டாடக் கண்டு நென்னல் நோக்கி நின்றா ரொருவர் நென்னல் நோக்கி நின்றா ரவர்நம் பொன்னேர் சுணங்கிற் போவா ரல்லர். - சில -7 3. குறமக ளவளெம குலமக ளவளொடும் அறுமுக வொருவநின் அடியிணை தொழுதேம். துறைமிசை நினதிரு திருவடி தொழுநர் பெறுகநன் மண்விடு பிழைமண மெனவே. - சில - 24 4. நன்னித்திலத்தின் பூணணிந்து நலஞ்சார்பவளக் கலையுடுத்துச் செந்நெற்பழனக் கழனிதொறுந் திரையுலாவு கடற்சேர்ப்ப! புன்னைப் பொதும்பர் மகரத்திண் கொடியோனெய்த புதுப்புண்கள் என்னைக்காணா வகைமறைத்தால் அன்னகாணின் என்செய்கோ! - சில - 7 5. குலநினையல் நம்பி! கொழுங்கயற் கண் வள்ளி நலனுகர்ந்தா னன்றே நறுந்தார் முருகன், நிலமகட்குக் கேள்வனு நீணிரைநப் பின்னை இலவலர்வாய் இன்அமிர்த மெய்தினா னன்றே. - சில - 8 6. உலகுடன் விளங்கவுயர் உண்மைநிலை கொள்ளின் நிலையில்கதி நான்கினிடை நின்றுதடு மாறும் அலகில்துயர் அஞ்சினுயிர் அஞ்சவரும் வஞ்சக் கொலையொழிமின் என்றுநனி கூறினர றிந்தோர். - சிந் 7. மருவினியன மதுவிரிவன மலரணிவன வகுளம் திருமருவிய செழுநிழலன செங்குழையன தேமா வரிமருவிய மதுகரமுண மணம்விரிவன நாகம் பொரிவிரிவன புதுமலரன புன்குதிர்வன புறனே. - சூளா 8. நகுமலரன நறவம் அவைசொரிவன நறவம் தொகுமலரன துருக்கம் அவைசொரிவன துருக்கம் அகமலரன வசோகம் அவைதருவ அசோகம் பகுமலரன பாங்கர் பலமலையன பாங்கர். - சூளா 9. நிழலார் சோலை நீல வண்டினம் குழலார் பண்செய் கோலக் காவுளான் கழலான் மொய்த்த பாதங் கைகளால் தொழிலார் பக்கல் துயர மில்லையே. - சம் 10. வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலை தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர் ஊன மின்றி உறைவா ரவர்போலும் ஏன முள்ளும் எயிறும் புனைவாரே. - சம் 11. கழுவார் துவராடை கலந்துமெய் போர்க்கும் வழுவார் சமண்சாக்கியர் வாக்கவை கொள்ளேல், குழுமின் சடையண்ணல் குரங்கணின் முட்டத்து எழுவெண் பிறையான டிசேர்வ தியல்பே. - சம் 12. கூறுகொண்டாய் மூன்றுமொன்றாய்க் கூட்டியோர் வெங்கணையால் மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல் ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த நீறுகொண்டா ரிடர்களைவாய் நெடுங்கள மேயவனே! - சம் 13. தோடுடையா னொருகாதிற் றூய குழைதாழ ஏடுடையான் தலைகல னாக இரந்துண்ணும் நாடுடையான் நள்ளிரு ளேம நடமாடும் காடுடையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே. - சம்\ 14. விரையாலும் மலராலும் விழுமை குன்றா உரையாலு மெதிர்கொள்ள ஊரா ரம்மாக் கரையார்பொன் புனல்வேலிக் கள்ளின் மேயான் அரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே. - சம் 15. வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள் நீடுயர் கொள்ளிவி ளக்குமாக நிவந்தெரி ஆடிய எம்பெருமா னகத்தியான் பள்ளியைப் பாடிய சிந்தையினார் கட்கிலையாம் பாவமே. - சம் 16. பொடியிலங்கு திருமேனி யாளர் புலியதளினர் அடியிலங்கு கழலார்க்கு ஆடும் அடிகள்ளிடம் இடியிலங்குங் குரலோத மல்க எறிவார்திரைக் கடியிலங்கும் புனன்முத்த லைக்குங் கடற்காழியே. - சம் 17. சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. - சம் 18. இழித்துகந்தீர் முன்னைவேடம் இமையவர்க்கு முரைகள்பேணா தொழித்துகந்தீர் நீர்முன்கொண்ட உயர்தவத்தை அமரர்வேண்ட அழிக்கவந்த காமவேளை அவனுடைய தாதைகாண விழித்துகந்த வெற்றியென்னே வேலைசூழ்வெண் காடனீரே! - சுந் 19. உங்கைக ளாற்கூப்பி உகந்தேத்தித் தொழுமின் றொண்டீர்! மங்கையோர் கூறுடையான் வானோர்முத லாயபிரான், அங்கையில் வெண்மழுவன் அழலார்கதிர் மூவிலைய பங்கைய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே. - சுந் 20. வாழ்வாவது மாயமிது மண்ணாவது திண்ணம் பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய் செய்த பறிதான் தாழாதறஞ் செய்மின்தடங் கண்ணான்மல ரோனும் கீழ்மேலுற நின்றான்றிருக் கேதாரமெ னீரே. - சுந் 21. உயர்வற வுயர்நலம் உடையவ னெவனவன் மயர்வற மதிநலம் அருளின னெவனவன் அயர்வறு மமரர்க ளதிபதி யெவனவன் துயரறு சுடரடி தொழுதெழல் மனனே. - நாலா 22. கோதைகள் சொரிவன குளிரிள நறவம் பாதைகள் சொரிவன பருமணி கனகம் ஊதைகள் சொரிவன உறையுறு மமுதம் காதைகள் சொரிவன செவிநுகர் கவிகள். - கம் 23. வீர னுஞ்சிறிது வெண்முறுவல் வெண்ணிலவுகப் போர றிந்திலன் இவன்றனது பொற்புமுரணும் தீரு மெஞ்சியென நெஞ்சினுறு சிந்தைதெரியாய் பார வெஞ்சிலையி னாணொலி படைத்த பொழுதே - கம் 24. ஆடினா னன்னமாய் அருமறைகள் பாடினான் நீடுநீர் முன்னைநூல் நெறிமுறையி னேமிதாள் சூடினான் முனிவர் தந் தொகுதிசேர் சோலைவாய் மாடுதான் வைகினான் எரிகதிரும் வைகினான். - கம் 25. முச்சிர முடையது மூவிரு திரடோள் அச்சிர முடனெதிர் அழல்விழி தறுகண் நச்சர வனையது நகமுறு முனைவாய் வச்சிர மனையது வருதலு மகிழா. - வில் 26 காவின்மேல் முகிலெழும் கமழ்நறும் புறவுபோய் வாவிநீ டலவன்வாழ் பெடையுடன் மலர்நறும் பூவின்மேல் விழைவுறும் புகலியார் தலைவனார் சேவின்மே லண்ணலார் திருநல்லூர் நண்ணினர். - பெரி 27. ஆன காலைதனில் அண்டமும் வையம் தானு மங்குள தடங்கிரி யாவும் ஏனை மாகடலும் எண்டிசை யுள்ள மான வேழமும் நடுங்கின மன்னோ. - கந் 28. பாடுவர் சிலரன்பர் பரவுவர் சிலரன்பர் ஆடுவர் சிலரன்பர் அழுகுவர் சிலரன்பர் ஓடுவர் சிலரன்பர் உறவொடு மகிழாமே வாடுற அடியேனைத் தள்ளுதல் மரபேயோ! -காஞ் 29. செத்த பாம்பினைச் செய்ய தாமரைக் கைத்த லத்துவிற் கடையி னாற்கொளீஇ மெய்த்த வத்தினோன் தோளின் வீழ்த்தினன் மத்த யானையம் மன்னன் ஏகினான். -பாக 30. மாவுறங்கின புள்ளுறங்கின வண்டுறங்கின தண்டலைக் காவுறங்கின வெங்கண்மானிரு கண்ணுறங்கில ஐயகோ! கோவுறங்குக டைத்தலைக்குல தீபவள்ளை குதட்டிவாய் ஆவுறங்குப காரசஞ்சல அஞ்சலென்ன அடுக்குமே. -தனி 31. தொக்கரக்க ரைத்துரந்து தோரணத் திருந்துபோர் அக்கனைத்த ரைப்படுத்த ரைத்துரத்த மிக்கெழத் தக்கசம்பு மாலியைத் தரைப்படுத்து வெற்றிசேர் பக்கநின்ற பஞ்சசேனை மன்னரைப் படுத்தினான். -இகா 32. முன்னிய நோன்புசெய் மோகினி மாதின் தன்னுத ரத்துமை தண்ணரு ளாலே மன்னியன் மாரன் வலப்புய மாடக் கன்னிகை மாயை கருப்ப மடைந்தாள். -பிர 33. ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள ஊற்றுப் பசுக்கள் ஒருகுடம் பால்போதும் காற்றுப் பசுக்கள் கறந்துண்ணும் காலத்து மாற்றுப் பசுக்கள் வரவறி யோமே. -திம 34. ஆடும் பரிவேல் அணிசே வலெனப் பாடும் பணியே பணியா அருள்வாய் தேடுங் கயமா முகனைச் செருவில் சாடுந் தனியா னைசகோ தரனே! -கபூ இக் கலிவிருத்தங்கள் முப்பத்துநான்கும் வெவ்வேறோசை உடையவை. ஓசையுடன் படித்துப் பாருங்கள். தமிழ்ச் செய்யுள் இலக்கியங்களிலுள்ள எல்லாவகைக் கலிவிருத்தங்களும் பெரும் பாலும் இம் முப்பத்துநான்கு வகையினுள் அடங்கும். இன்னும் வேறுபட்ட ஓசையுடையவை இருக்கினும் இருக்கலாம். காண முயலுக. அளவடி நான்கா லாகிய ஒருவகைச் செய்யுளில் எத்தனை வகைப்பாடு! இன்னொரு முறை ஓசையோடு படித்துப் பாருங்கள். ஓசை வேறுபாடுகளை உணர்ந்தின்புறுங்கள். முதல் விருத்தம் ‘உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்’ என்னும் பெரிய புராணச் செய்யுள் போன்றது. ‘வாழ்க அந்தணர் வானவ ரானினம்’ -சம் ‘உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்’ -கம் ‘திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ -கந் என்னும் பாடல்களும் இது போன்றவையே. விருத்தம் 25, பிரம புரத்துறை பெம்மா னெம்மான். என்னும் சம்பந்தர் தேவாரம் போன்றது. விருத்தம் 28, வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்து. என்னும் சுந்தரர் தேவாரம் போன்றது. இதை ஓசையுடைய, திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே மருவிரி புரிகுழலே மதிப்புரை திருமுகமே இருகய லிணைவிழியே எனையிடர் செய்தவையே. - சில- 7 என்னும் சிலப்பதிகாரச் செய்யுளைப் படித்துத் திளைத்துக் களியுங்கள். விருத்தம் 29, வண்மை இல்லையோர் வறுமை யின்மையால். என்னும் கம்பராமாயணச் செய்யுள் போன்றது. விருத்தம் 31, ‘காவியன்ன கண்ணினார் கயந்தலைக் குடைதலில். - சி வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல். - சம் சுருக்குவாரை யின்றியே சுருங்கினாய் சுருங்கியும். - நாலா என்னும் பாடல்களைப் போன்றது. இப்பாடல்களை அவ்வந் நூல்களில் படித்து, ஒப்புமை அறிந்து உதவுங்கள். அளவடிகளில் பொழிப்பு மோனையும், சிறுபான்மை ஒரூஉ மோனையும் வரவேண்டும். இவ்விருத்தங்களில் பெரும்பாலும் அவ்வாறே வந்துள்ளமையே நோக்குக. இவ்விருவகை மோனையுடன் வேறு தொடைவகை வரினும் இவையே சிறப்புறும் என்பதை மறவற்க. கூழை மோனையும், மேற்கதுவாய் மோனையும் - பொழிப்பு மோனையாகவும், கீழ்க்கதுவாய் மோனை ஒரூஉ மோனையும் அமையும். முற்றுமோனையில் பொழிப்பே சிறப்புறும். இவற்றை நினைவிற் கொண்டே பாட்டைப் படிக்க வேண்டும். இது, கவிபாடிப் பழகுவோர்க்கு மிகமிக இன்றியமை யாததாகும். பாட்டு அடி தொடை 1 1 ஒரூஉ மோனை. 1 2 கீழ்க்கதுவாய் மோனை. 1 4 மோனை அமையவில்லை. 3 1 பொழிப்பு மோனையோடு, பின் மோனையும் பின்னெது கையும். 3 3 ஒரூஉ மோனை. 4 3, 4 ஒரூஉ மோனை. 5 4 கூழை மோனை 6 3 கூழை மோனையும் கடைக் கூழை எதுகையும் 7 1, 2, 4 முற்று மோனை. 7 3 கூழை மோனை 8 1, 2 கீழ்க்கதுவாய் மோனையோடு, பின்னெதுகை 8 3, 4 முற்றுமோனையோடு, பின்னெதுகை 9 3 ஒரூஉ மோனை 10 1 கூழை மோனை 10 2 மேற்கதுவாய் மோனை 11 4 மேற்கதுவாய் மோனை 13 2 ஒரூஉ மோனை 13 3, 4 கீழ்க்கதுவாய் மோனை 15 1 மேற்கதுவாய் மோனை 15 2, 4 ஒரூஉ மோனை 16 1, 3, 4 ஒரூஉ மோனை 16 2 மேற்கதுவாய் மோனையுடன் ஒரூஉ வெதுகை 18 4 கூழைமோனை 19 4 முற்றுமோனை 20 1 கூழைமோனையுடன்கடை யிணை யெதுகை 20 2 மேற்கதுவாய் மோனை. 20 3 மோனை அமையவில்லை 21 1, 3, 4 கூழைமோனை. 1- இணையெ துகையும் 21 2 இணைமோனை. எடுப்பில்லை 22 4 ஒரூஉ மோனை 23 1 மேற்கதுவாய் மோனை, கடையிணையெதுகை 23 2, 3, 4 ஒரூஉ மோனை, 3 இடைப் புணரெதுகையும். 24 1 கூழைமோனையும் ஒரூஉ வெதுகையும். 24 2, 3 மேற்கதுவாய் மோனை. 24 4 கீழ்க்கதுவாய் மோனையோடு, பின்னெதுகை 25 4 மேற்கதுவாய் மோனை. 26 2 ஒரூஉ மோனை 26 4 பொழிப்பு மோனையோடு, பின்னெதுகை 27 4 ஒரூஉமோனை 28 1, 2 பொழிப்பு மோனையோடு, பின்மோனையும் பின்னெது கையும் 28 4 ஒரூஉ மோனை 29 3 ஒரூஉ மோனை 30 1 பொழிப்பு மோனையோடு, கடையிணை யெதுகை 30 3 ஒரூஉமோனை 30 4 மேற்கதுவாய் மோனை 31 4 கீழ்க்கதுவாய் மோனை 32 3 கூழைமோனை 33 3 மேற்கதுவாய் மோனை 34 2 கூழைமோனையும், இடைப்புணரெதுகையும் 34 3 ஒரூஉமோனை 34 4 மேற்கதுவாய் மோனை. எடுத்துக்காட்டாத பாட்டுக்களும் அடிகளும் பொழிப்பு மோனை யுடையவை. முதற்பாட்டின ஈற்றடியில் மோனை அமையவில்லை. ‘திருவ மாற்கிளந் தேவியின் முன்றிலே’ எனப் படித்துப் பாருங்கள், மோனையின் சிறப்பு விளங்கும். 20வது பாட்டின் மூன்றாவதடி மற்ற அடிகளின் எதுகைக் கேற்ப, ‘தாழ்காதறம்’ என்றிருக்கின் எடுப்பாக இருக்கும். அவ்வடியில் மோனையும் அமைய வில்லை. தாழ்காதறஞ் செய்மின்தடங் கண்ணானயன் தானும். என, ஒருஉ மோனை அமையப் படித்துப் பாருங்கள். 21 ஆம் பாட்டின் இரண்டாமடி, இணைமோனையுடையது. அள வடியில் இணைமோனை எடுக்காமையை மற்ற அடிகளோடு சேர்த்துப் படித்துப்பாருங்கள், விளங்கும். பொழிப்பு மோனை, அல்லது ஒரூஉமோனை அமையாது கலிவிருத்தம் பாடுதல் கூடவே கூடாது. இப்பயிற்சி மிகமிக இன்றியமையாத தாகும். அடியெதுகை 1, 2, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 21, 22, 23, 24, 26, 27, 28, 30, 34 இவை ஒரேவகையான எதுகையுடையவை. 2, 4, 32 இம்மூன்றும் ஒரு வகையான எதுகை யுடையவை 17, 25, 29, 31, 33 இவ்வைந்தும் ஒரு வகையான எதுகையுடையவை. 19 ஒன்றும் ஒரு வகை எதுகை. 20 ஒன்றும் ஒரு வகை எதுகை இன்னின்ன வகை எதுகையென்று கண்டறியுங்கள். தெரியாவிட்டால், ‘முதலியலில், ‘எதுகை வகை’ என்பதிற் பாருங்கள். நாலாவது பாட்டு, நன்னித் திலத்தின் பூணணிந்து நலஞ்சார் பவளக் கலையுடுத்துச் செந்நெற் பழனக் கழனிதொறு திரையு லாவு கடற்சேர்ப்ப! புன்னைப் பொதும்பர் மகரத்திண் கொடியோன் எய்த புதுப்புண்கள் என்னைக் காணா வகைமறைத்தால் அன்னை காணின் என்செய்கோ. என, அறுசீரடி விருத்தமாகவும் நன்கு அமைதல் காண்க. இவ்வாறே, 12 ஆம் பாட்டை - கலித்துறையாகவும் (ஐஞ்சீரடி) 18 ஆம் பாட்டை - எண்சீரடி விருத்தமாகவும், 30 ஆம் பாட்டை - எழு சீரடி விருத்தமாகவும், 31 ஆம் பாட்டை - அறுசீரடி விருத்தமாகவும், எழுதிப் பாருங்கள். ஐந்தாவது பாட்டின் முதலடி போல மற்ற அடிகள் இல்லை. ஓசையோடு படித்துப் பாருங்கள்; ஓசைதட்டுதல் தெரியும். நலநுகர்ந்தா னன்றே நறுமலர்த்தார் வேலன் நிலமகட்குக் கேள்வன் நிரைவளைநப் பின்னை இலவலர்வாய் இன்ப மினிதடைந்தா னன்றே. இப்போதிவ்வடிகளை முதலடியோடு சேர்த்துப் படித்துப் பாருங்கள். இரண்டாம் பாட்டும் ஒன்பதாம் பாட்டும் ஒருபுடை ஒத்த ஓசை யுடையவை. ஆனால், 9 இன் ஈற்றுச்சீர்கள் - கூவிளம். பாட்டு 2 - அடிமடக்கியது. பாட்டு 21 ம், 22 ம் ஓரோசையுடையனவே, ஆனால், ஈற்றுச் சீர்கள் வேறுபடுவதால், வேறாயின. 34 கந்தரநுபூதிப் பாடல். கந்தரநுபூதிப் பாடல்களெல்லாம் ஒரே வகையே. அவை கலிவிருத்தங்களாகப் பதிக்கப்பட்டுள்ளன. அப்பாடல்கள் பெரும்பாலானவற்றில் மோனைத் தொடை நன்கு அமையவில்லை. ஒருபாட்டின் சில அடிகளில் மோனை அமைந்தும், சில அடிகளில் அமையாதும் உள்ளது. கலிவிருத்தத்தில் மோனையமையாத சில அடிகள், வஞ்சி விருத்தத்தில் மோனை அமைகின்றன. வஞ்சி விருத்தத்தில் மோனை அமையாத அடிகள், கலி விருத்தத்தில் அமைகின்றன. அதாவது அளவடியில் மோனையமையாதது சிந்தடியிலும், சிந்தடியில் மோனை யமையாதது அளவடியிலும் அமைகிறது என்றபடி. எடுத்துக்காட்டாக, கலிவிருத்தம் மட்டூர் குழல்மங் கையர்மை யல்வலைப் பட்டூ சல்படும் பரிசென் றொழிவேன் தட்டூ டறவேல் சயிலத் தெறியும் நிட்டூ ரநிரா குலநிர்ப் பயனே. முதலடியினும் ஈற்றடியினும் மோனை அமையவில்லை. இடையிரண் டடியினும் மோனை அமைந்துள்ளது. வஞ்சிவிருத்தம் மட்டூர்குழல் மங்கையர் மையல்வலைப் பட்டூசல் படும்பரி சென்றொழிவேன் தட்டூடர வேல்சயி லத்தெறியும் நிட்டூர நிராகுல நிர்ப்பயனே. மூன்றாமடியில் மோனை அமையவில்லை. இரண்டாமடி இணை மோனை. சிந்தடியில் முதற் சீரினும் மூன்றாஞ் சீரினும் மோனை வருதல் சிறப்பு. இணைமோனையும் விலக்கன்று. முதலடி யிலும் ஈற்றடியிலும் நன்கு மோனை அமைந்திருத்தலை நோக்குக. கலிவிருத்தம் நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே பஞ்சக் கரஆ னைபதம் பணிவாம். முதல் மூன்றடியினும் மோனை அமையவில்லை. ஈற்றடி ஒரூஉ மோனை. வஞ்சிவிருத்தம் நெஞ்சக்கன கல்லு நெகிழ்ந்துருகத் தஞ்சத்தருள் சண்முக னுக்கியல்சேர் செஞ்சொற்புனை மாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம்பணிவாம். மோனை நன்கு அமைந்திருத்தலை நோக்குக. 34 வது கலிவிருத்தத்தை வஞ்சிவிருத்தமாக எழுதின். ஆடும்பரி வேலணி சேவலெனப் பாடும்பணி யேபணி யாவருள்வாய் தேடுங்கய மாமுக னைச்செருவில் சாடுந்தனி யானை சகோதரனே. ஈற்றடி யொன்றில் மட்டும் மோனை அமைகிறது. அளவடியும் சிந்தடியுங் கலந்து இடையிடை குறைந்து வரும் ஆசிரியத்துறையாகக் கொள்வதற்கும் ஏற்றதாக இல்லை. இது ஆராய்ச்சிக் குரியது. பயிற்சி 1. கொச்சகம் கலிவிருத்தம் - வேறுபாடென்ன? 2. தமிழ்ச் செய்யுள் இலக்கியத்தின் சிறப்பு என்ன? 3. கலிவிருத்தங்கள் எவ்வாறு தொடையமைதியோடு வர வேண்டும்? 4. ‘அள்ளற்பள்ளத் தகன்சோணாட்டு’ என்னும் குறளடி ‘அள்ளற் பள்ளத் தகன்சோணாட்டு’ - என, அளவடியாகவும் அமைதல் போல, இச்செய்யுளில் ஒரு எடுத்துக்காட்டுத் தருக. 5. இக் கலிவிருத்தங்களோடு சேர்ந்த பாடல்களை அவ்வந் நூல்களில் படித்தறிக. 6. இவ்விருத்தங்கள் போல் வகைக் கொவ்வொன்று பாடிப் பாருங்கள். முயற்சி திருவினை யாக்கும். 10. தாழிசை 1. பேராழி யுலகனைத்தும் பிறங்கவள ரிருள்நீங்க ஓராழி தனைநடத்தும் ஒண்சுடரைப் பரவுதுமே. - கலிங் 2. மழலைத்திரு மொழியிற் சில வடுகுஞ்சில தமிழும் குழறித்தரு கருநாடியர் குறுகிக்கடை திறமின்! - கலிங் 3. ஒருக லிங்க மொருவ னழித்தநாள் ஒருக லிங்க மொருவ ருடுத்ததே. - கலிங் 4. எனாவுரை முடித்தனை என்கொல்விளை வென்றே வினாவுரை தனக்கெதிர் விளம்பின ளணங்கே. - கலிங் 5. கொலையினுட் படுகரிக் குழிசியுட் கூழினுக் குலையெனக் குதிரையின் உதிரமே சொரிமினோ. - கலிங் 6. வெற்ப னேகசிக ரத்துடன் மிடைந்தன எனக் கற்ப கோடிவிழ நீடுவ கற்பதருவே. - தக் 7. ஓலக் கடன்நெருப்பி னுலகேழு முருகும் காலக் கிடையினுங் கொடியகட் கடைகளே. - தக் 8. அகவனச முகவனசம் அவைமலர வரிவார் நகவனச மலர்குவிய வலம்வருவர் நகரே. - தக் 9. அடையா ளமுரித் தலைவிஆதி மடவார் உடையாள் திருவகம் படியில்யோகி னிகளே. - தக் 10. கழுவைப்புக் கறவெட்டிக் கவர்சுற்றத் தினரே உழுவைச்சிற் றுரிவைப்பச் சுதிரப்பட் டனரே - தக் 11. ஆடுவன தோகையோ அயனூர்தி அன்னமுமே பாடுவன பூவையோ கின்னரங்கள் பலவுமே. - தக் 12. கதுப்பிறக் கழுக்களிற் பழுக்களைக் கடித்துழிப் புதுப்பிணத் திரைப்புமிக் கடிப்பொருப் பொருப்பவே. - தக் 13. உலரெலும்பொ டொசிநரம்பி னுடலினின்ற குடலைபோன்று அலர்சிலம்பி யிழைசுழன்று வெளியடங்க அணிகவே - தக் 14. அருக்ககனப் பரப்படையப் புறத்துறவிட்டடைத்தே உருக்குமெரிப் பிழப்பெரிபுக் குழிப்பு கவிட் டுளைத்தே - தக் 15. மரகத மேயென லாய வனப்பின குரகத மேபதி னாயிர கோடியே - தக் 16. உலகு மூழியும் கொண்ட மைந்ததோர் இலகு வைதிகத் தேரி லேறியே - தக் 17. பின்னையும் பிதாமகன் படைக்கப் பேரமர் முன்னையி னெழுமடி முடுகி மூளவே. - தக் 18. இஞ்சியின் வல்லுரு மேறு கிடந்த வஞ்சியின் வாகை புனைந்தவன் வாழியே. - தக் 19. காரிருளு நீங்குகவே காந்திமதி நிலவுகவே பாரிலறம் பெருகுகவே பயிர்களெலாம் செழித்திடவே - தேசி 20. அஞ்சுகின்ற தற்றபோ தடிமையற்றுப் போகுமே நஞ்சுகொண்டு யாரையும் நலிவுசெய்து தீருமோ. - நாம 21. நெறிதவறி நாகமனும் நீள்மதுரை யாள அறிதலுமே மன்னவனுக் கதிகசின மூள. - அர 22. குடிவளம் குன்றாமல் குடைநிழல் பொன்றாமல் முடியுடை மூவேந்தர் முறையொடு தமிழ்காத்தார். -அர இத்தாழிசைகள் இருபத்திரண்டும் வெவ்வே றோசையுடை யவை. ஓசையோடு படித்துப்பாருங்கள். இவற்றுள், முதல் தாழிசை 8 ஆம் கொச்சகம் போன்றது. தாழிசை விருத்தம் 2 - 20 4 - 24 5 - 26 6 - 28 13 - 31 16 - 29 17 - 17 இவை ஒரே ஓசையுடையனவாம். ஒன்றுறப் படித்துப் பாருங்கள். 12, 13, 14, 15, 16, 17, 18- தாழிசைகள் தவிர, மற்ற தாழிசைகள் மோனைத்தொடை எடுப்பிலிருந்து மடக்கிப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. மோனை அமைப்பினை அறிக. அவற்றுள், தாழிசை - அடி - தொடை 7 - 2 - ஒரூஉமோனை 8 - 1 - ஒரூஉமோனை. 8 - 2 - பொழிப்பெதுகை. 10 - 2 - (பச்சு* உதிரம்) 11 - 2 - ஒரூஉமோனை 13 - 2 - ஒரூஉமோனை 16 - 1 - தொடை அமையவில்லை 16 - 2 - ஒரூஉ மோனை 17 - 1 - கீழ்க்கதுவாய் மோனை 17 - 2 - மேற்கதுவாய் மோனை 18 - 2 - கீழ்க்கதுவாய் மோனை. எடுத்துக் காட்டாதவை பொழிப்புமோனையுடையவை. பயிற்சி 1. தாழிசைகளின் அடியெதுகை அமைப்பினை நோக்குக அவற்றை வகைப்படுத்திக் கூறுக. 2. இத்தாழிசை அடிகளில் அமைந்துள்ள வேறு தொடை வகைகளைக் கண்டறிக. 3. இத்தாழிசைகட்கும், கொச்சகம் கலிவிருத்தங்களுக்கும் உள்ள வேறுபாடென்ன? 4. கொச்சகம், கலிவிருத்தம் போலாத மற்ற தாழிசை களைப்போல் வகைக்கொரு கலிவிருத்தம் பாடுக. 5. இத்தாழிசைகளோடு சேர்ந்த மற்ற தாழிசைகளை அவ்வந் நூல்களில் படித்தறிக. 4. நெடிலடி 1. கலித்துறை 1. பெய்யார் முகிலிற் பிறழ்பூங்கொடி மின்னின் மின்னா நெய்யார்ந் தகூந்தல் நிழற்பொன்னரி மாலை சோரக் கையார் வளையார் புலிகண்ணுறக் கண்டு சோரா நையாத் துயரா நடுங்கும்பிணை மான்க ளொத்தார். - சிந் 2. அழல் பொதிந்த நீ ளெஃகின் அலர்தார் மார்பற் கிம்மலைமேற் கழல் பொதிந்த சேவடியாற் கடக்க லாகா தெனவெண்ணி குழல் பொதிந்த தீஞ்சொல்லார் குழாத்தி னீங்கிக் கொண்டேந்தி நிழல்பொதிந்த நீள்முடியான் நினைப்பிற் போகி நிலத்திழிந்தான். - சிந் 3. ஆய்ந்த கேள்வி யவன்கான்முளை யாய்வழித் தோன்றினான் தோய்ந்த கேள்வித் துறைபோயலங் காரமுந் தோற்றினான் வேந்தன் தன்னால் களிறூர்சி றப்பொடு மேயினான் வாய்ந்த கோல முடையான்பெரு மஞ்சிகர்க் கேறனான். - சிந் 4. அன்னப் பெடைநடுங்கி அசைந்து தேற்றா நடையாளும் மன்னர் குடைநடுக்கும் மாலை வெள்வேல் மறவோனும் மின்னு மணிக்குடத்தின் வேந்த ரேந்தப் புனலாடிப் பொன்னங் கொடிமலருந் துகிலுஞ் சாந்தும் புனைந்தாரே. - சிந் 5. வேரிக் கமழ்தார் அரசன் விடுகென்ற போழ்தும் தாரித்த லாகா வகையால் கொலைசூழ்ந்த பின்னும் பூரித்தல் வாடலென் றிவற்றால் பொலிவின்றி நின்றான் பாரித்த தெல்லாம் வினையின் பயனென்ன வல்லான். - குண் 6. உலனல னடுதிண்டோள் ஊழிவே லோடை யானைச் சலநல சடியென்பேர்த் தாமரைச் செங்க ணான்றன் குலநல மிகுசெய்கைக் கோவொடொப் பார்கள் வாழும் நலனமர் நளிசும்மைத் தொன்னகர் நண்ணி னானே. - சூளா 7. நன்றுடை யானைத் தீயதில் லானை நரைவெள்ளே றொன்றுடை யானை யுமையொரு பாக முடையானைச் சென்றடை யாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக் குன்றுடை யானைக் கூறஎன் னுள்ளங் குளிரும்மே. - சம் 8. சேவுயருந் திண்கொடியான் திருவடியே சரணென்று சிறந்தவன்பால் நாவியலு மங்கையொடு நான்முகன்றான் வழிபட்ட நலங்கொள்கோயில் வாவிதொறும் வண்கமலம் முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள்காட்டக் காவியலுங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டுங் கழுமலம்மே. - சம் 9. பூவ லர்ந்தன கொண்டுமுப் போதுமும் பொற்கழல் தேவர் வந்து வணங்குமி குதளிச் சேரியீர்! மேவ ருந்தொழி லாளொடு கேழற்பின் வேடனாம் பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே. - சம் 10. வடிகொள் பொழிலின் மழலை வரிவண் டிசைசெய்யக் கடிகொள் போதில் தென்றல் அணையுங் கலிக்காழி முடிகொள் சடையாய் முதல்வா என்று முயன்றேத்தி அடிகள் தொழுவார்க் கில்லை அல்ல லவலமே. - சம் 11. பந்தார் விரல்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி அந்தா ரரவணிந்த அம்மா னிடம்போலும் அந்தண் சாரல் வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச் செந்தேன் தெளியொளிரத் தேமாக் கனியுதிர்க்கும் திருநணாவே. - சம் 12. கண்ணுத லானும் வெண்ணீற்றி னானுங் கழலார்க்கவே பண்ணிசை பாட நின்றாடி னானும் பரஞ்சோதியும் புண்ணிய நான்ம றையோர்க ளேத்தும் புகலிந்நகர்ப் பெண்ணினல் லாளோடும்வீற் றிருந்த பெருமானன்றே. - சம் 13. திக்கமர் நான்முகன் மாலண்ட மண்டலந் தேடிட மிக்கமர் தீத்திர ளாயவர் வீதிமி ழலையார் சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும் நக்கர்தம் நாமந மச்சிவா யவென்பார் நல்லரே. - சம் 14. கண்பொலி நெற்றியி னான்திகழ் கையிலோர் வெண்மழுவான்\ பெண்புணர் கூறுடை யான்திரு பீடுடை மால்விடையான் விண்பொலி மாமதி சேர்தரு செஞ்சடை வேதியனூர் தண்பொழில் சூழ்பனந் தாள்திரு தாடகை யீச்சரமே. - சம் 15. போழுமதி தாழுநதி பொங்கரவு தங்குபுரி புன்சடையினன் யாழின்மொழி மாழைவிழி ஏழையிள மாதினொ டிருந்தபதிதான் வாழைவளர் ஞாழன்மகிழ் மன்னுபுனை துன்னு பொழின் மாடுமடலார் தாழைமுகிழ் வேழமிகு தந்தமென வுந்துதகு சண்பைநகரே. - சம் 16. நச்சரவு கச்செனவ சைச்சுமதி யுச்சியின்மி லைச்சொருகையான் மெய்ச்சிரம ணைச்சுலகி னிச்சமிடு பிச்சையமர் பிச்சனிடமாம், மச்சமத நச்சிமத மச்சிறுமி யைச்செய்தவ வச்சவிரதக் கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்க ணச்சிமிடை கொச்சைநகரே. - சம் 17. பண்ணமரு நான்மறையர் நூன்முறை பயின்றதிரு மார்பிற் பெண்ணமரு மேனியினர் தம்பெருமை பேசுமடி யார்மெய்த் திண்ணமரும் வல்வினைகள் தீரவருள் செய்தலுடை யானூர் துண்ணெனவி ரும்புசரி யைத்தொழிலர் தோணிபுர மாமே. - சம் 18. காமனை அழல்கொள விழிசெய்து கருதலர் கடிமதில் தூமம துறவியல் சுடர்கொளு வியவிறை தொகுபதி ஓமமோ டுயர்மறை பிறவிய வகைதனோ டொளிகெழு பூமக னலரொடு புனல்கொடு வழிபடு புறவமே. - சம் 19. அரவினில் துயிறரும் அரியுநற் பிரமனும் அன்றயர்ந்து குரைகழல் திருமுடி அளவிட வரியவர் கொங்குசெம்பொன் விரிபொழி லிடைமிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த கரியநன் மிடறுடைக் கடவுளார் செச்சையே கருதுநெஞ்சே! - சம் 20. வண்ண வெண்பொடிப் பூசுமார்பின் வரியர வம்புனைந்து பெண்ண மர்ந்தெரி யாடல் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம் விண்ண மர்நெடு மாடமோங்கி விளங்கிய கச்சிதன்னுள் திண்ண மாம்பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர விடர்கெடுமே. - சம் 21. உரைப்பா ருரையுகந்து உள்ளவல் லார்தங்க ளுச்சியாய் அரைக்கா டரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்! புரைக்காடு சோலைப் புக்கொளி யூர்அவி நாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே. - சுள் 22. அங்கண் ஞால மஞ்சவங்கோர் ஆளரியா யவுணன் பொங்க வாகம் வள்ளுகிராற் போந்தபுனி தனிடம் பைங்க ணானைக் கொம்புகொண்டு பத்திமையா லடிக்கீழ்ச் செங்க ணாளி யிட்டிறைஞ்சுஞ் சிங்கவேள் குன்றமே. - நாலா 23. எனக்கு நல்லையு மல்லைநீ என்மகன் பரதன் தனக்கு நல்லையு மல்லையத் தருமமே நோக்கின் உனக்கு நல்லையு மல்லைவந் தூழ்வினை தூண்ட மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய்! - கம் 24. ஆளு மன்னம் வெண்குடைக் குலங்களா வருங்கரா கோளெ லாமு லாவுகின்ற குன்றமன்ன யானையா தாளு லாவு பங்கயத் தரங்கமுந் துரங்கமா வாளும் வேலும் மீனமாக மன்னர் சேனை மானுமே. -கம் 25. நின்று தொடர்ந்த நெடுங்கை தம்மை நீக்கி மின்துவள் கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள் ஒன்று மியம்பலள் நீடு யிர்க்க லுற்றாள் மன்ற லருந்தொடை மன்ன னாவி யன்னாள். - கம் 26. ஆர்த்தாரணி கூரலர் மாமழை யால்வி சும்பைத் தூர்த்தார்துதித் தார்மதித் தார்நனி துள்ளு கின்றார் போத்தானவர் தஞ்செருக் காற்படு புன்மை யெல்லாம் தீர்த்தானிவ னென்றகல் வானுறை தேவ ரெல்லாம். -வில் 27. நோற்று மாயவன் முதலினோர் யாவரு நுனதாளைப் போற்றி யர்ச்சனை புரியவித் திருவெலாம் புரிந்துற்றாய், தோற்ற மின்றியே யைந்தொழி லியற்றிய தொல்லோய்நீ ஆற்று கின்றதோர் தவநிலை யெம்பொருட் டளவன்றோ? - கந் 28. கல்லென் பேரிசைப் புனன்மழை பொழிதலால் கானத் தொல்லும் பேரழல் யாவையு மிமைப்பினி லொழித்த வெல்லுந் தீஞ்சல மருவிமிக் காருக்கு வியன்பார் செல்லுங் காலையி லங்கண்வீற் றிருப்பரோ தீயோர். - கந் 29. மலிவாச மலர்பூசி யளியாடு நறையோதி மயிலேயவன் ஒலியேறு திரைமோது முவராழி யுலகேழும் உடனாகவே வலியோர்க ளெளியோரை நலியாம லசையாத மணிவாயிலான் புலியேறு வடமேரு கிரிமீதி லிடுமீளி புனல்நாடனே. - அரி 30. வெய்யன் பதகன் பரதார விருப்பன் வீணன் பொய்யன் நிறையும் பொறையுஞ் சிறுதுமில் புல்லன் கையன் கபடன் கயவன் தனைநல்ல னென்றிவ் ஐயன் றிருமுன் னுரைத்தாயிதென் னாக என்றான். - அரி 31. நெற்படி விளைகழனி புடைசூழ் நென்மலி வாழ்தச்சன் கற்படி பணைதோளான் பெயரோ கங்கண கணகணவன்; விற்படி வாணுதலாள் மனைவி மின்மினி மினிமினிமி; சொற்படி வேலைசெயு மவளோ துந்துமி துரிதுரிதி. - தனி 32. கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான் நோகத்தான் ஐயோஎங்கும் பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான் புவியிற்றான் பண்ணினானே! - தனி ஐஞ்சீரடி நான்கு கொண்டது - கலித்துறை, இக்கலித் துறைகள் முப்பத்திரண்டும், வெவ்வே றோசையுடையவை. இவற்றுள் 3, 7, 23, 24, 28, 29, 32 எண்ணுள்ள கலித்துறைகள் மிகுந்த பயிற்சி யுடையவை. பாட்டு 15-ம், 16-ம் ஒருவகையினவே. 16- தனி எதுகைத் தொடையால் ஆனதால், வேறுபட்டது. இவ்வாறே, 23-ம், 28-ம் ஒரே ஓசையுடையவையே. ஆனால், 23-1, 4 சீர்களில் மோனையுடையது. 28-1, 5 சீர்களில் மோனை யுடையது. அதனால், வேறாயின. மூவா முதலா உலகமொரு மூன்று மேத்த. என்னும் சிந்தாமணிச் செய்யுள் போன்றது - 5 ஆம் கலித்துறை. தன்னே ரில்லா மங்கையர் செங்கைத் தளிர்மானே. என்னும் கம்பராமாயணக் கவிபோன்றது - 7 ஆம் கலித்துறை. நீடாழி உலகத்து மறைநாலொ டைந்தென்று நிலைநிற்கவே. என்னும் வில்லிபாரதப் பாடல் போன்றது - 29 ஆம் கலித்துறை. 8, 11, 32 ஆகிய கலித்துறைகளின் ஈற்றுச்சீர்களை 8.சிறந்த வன்பால் 11. ‘டேற தேறி நலங்கொள் கோயில் அந்தண் சாரல் வாய்கள் காட்ட வண்டு பாட கழும லம்மே, - எனவும், திருந ணாவே - எனவும் 32. கற்பித் தானா இரட்சித் தானா ஐயோ வெங்கும் பண்ணி னானே - எனவும் இரு சீர்களாகக் கொண்டு, இக்கலித்துறைகளை, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களாகக் கொள்ளுதற்கும் இடந் தருதல் காண்க. இவ்வாறு ஈற்றுச்சீர்களை இரு சீர்களாகக் கொண்டு படித்துப் பாருங்கள். பொழிப்பு மோனை முதலிய தொடை வகைகள், அளவடிக் கண்ணே கொள்ளப்படும் ஆகலான், நெடிலடி, கழிநெடிலடிகளில் இன்னின்ன சீர்களில் மோனை வர வேண்டும். இன்னின்ன சீர்களில் மோனை வந்துள்ளது என்பதையே கண்டறிதல் வேண்டும். அளவடிச் செய்யுட்களிற் போலல்லாது, நெடிலடி, கழிநெடிலடிச் செய்யுட்களின் ஒவ்வொரு வகையினும் வெவ்வேறு இடங்களில் - சீர்களில் - மோனை வரும் என்பதை அறிதல் வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள மோனை வந்துள்ள சீர்கள், மோனை வரவேண்டிய சீர்களின் அட்டவணையில், மோனைத் தொடை அமைப்பினைக் கண்டறியுங்கள். ஒவ்வொரு கலித்துறையும், மோனைத் தொடையெடுப்பின் படியே மோனை வரவேண்டிய சீர்களில் மடக்கிப் பதிக்கப் பட்டுள்ளது. ‘மோனை வரவேண்டிய சீர்கள்’ என்பதன் கீழ் முதலில் இருக்கும் எண்கள் - அக்கலித்துறையின் அடியில், மோனை வரவேண்டிய சீர்களைக் குறிக்கும் எண்களாகும். அதன் கீழ் உள்ள எண்கள் - இவ்வாறும் வரலாம் என்னும் சீர்களைக் குறிக்கும் எண்கள். எடுத்துக்காட்டாக. மூன்றாவது பாட்டில் 1 - 4 சீர்களில் மோனை வர வேண்டும். 1, 4 அடிகளில் அவ்வாறே வந்துள்ளது. 2, 3, அடிகளில் அவ்வாறு மோனை வரவில்லை. அவ்வடிகளில் 1 - 5 சீர்களில் மோனை வந்துள்ளது. அவ்வாறும் வரலாம் என்பதைக் குறிப்பதே கீழ் உள்ள எண்கள். இவ்விரு வகையினும் குறிக்கப்படாத சீர்களில் வந்துள்ள மோனையை, மோனை நயமாகக் கொள்க. மூன்றாங் கலித்துறையின் இரண்டாமடியின் 3 ஆம் சீரில் வந்துள்ள மோனையை அவ்வாறு கொள்க. பிறவும் இன்ன. பாட்டு - அடி - மோ. வ. சீ. மோ. வ.வே. சீ 1 - 1, 2, 4 - 1, 3 - 1 - 3 1 - 3 - 1, 4 - 1-4 2 - 1, 2 - 1, 3 - 2 - 3 - 1, 3, 5 - 2 - 4 - 1, 2, 3, 5 - 1 - 3 3 - 1 - 1, 3, 4 - 3 - 2 - 1, 3, 5 - 1-4 3 - 3 - 1, 5 - 1-5 3 - 4 - 1, 4 4 - 1, 3 - 1, 3 - 4 - 2 - 1, 3, 5 - 1-3 4 - 4 - 1, 5 - 1-5 5 - 1, 3, 4 - 1, 4 - 1-4 6 - 1 - 1, 3, 4 - 6 - 2 - 1, 2, 3 - 1-3 6 - 3 - 1, 3 - 1-4 6 - 4 - 1, 2, 4 - 7 - 1 - 1, 5 - 1-5 7 - 2, 3, 4 - 1, 3, 5 - 1-3-5 8 - 1 - 1, 2, 3, 5 - 8 - 2 - 1, 3, 5 - 1-3-5 8 - 3 - 1, 2, 5 - 1-5 8 - 4 - 1, 2, 3, 4, 5 - 9 - 1 - 1, 4, 5 - 1-4 9 - 2, 3, 4 - 1, 5 - 1-5 10 - 1 - 1, 3, 4 - 10 - 2 - 1, 5 - 1-4 10 - 3 - 1, 3, 5 - 1-5 10 - 4 - 1, 4, 5 - 11 - 1 - 1, 3 - 11 - 2, 4 - 1, 2, 3, 5 - 1-5 11 - 3 - 1, 2, 4, 5 - 12 - 1, 3, 4 - 1, 5 - 12 - 2 - 1, 2, 5 - 1-5 13 - 1, 3 - 1, 5 - 1-5 13 - 2 - 1, 4 - 1-4 13 - 4 - 1, 2, 5 - 14 - 1, 2 - 1, 4 - 14 - 3 - 1, 5 - 1-4 14 - 4 - 1, 3, 4 - 15 - 1, 2, 3, 4 - 1, 3, 5 - 1-3-5 17 - 1, 2, 4 - 1, 4 - 1-4 17 - 3 - 1, 3, 4 - 18 - 1 - 1, 4, 5 - 18 - 2, 4 - 1, 3, 5 - 1-5 18 - 3 - 1, 2, 5 - 19 - 1, 4 - 1, 3, 5 - 1-3-5 19 - 2, 3 - 1, 5 - 1-5 20 - 1, 2, 3, 4 - 1, 4 - 1-4 21 - 1 - 1, 2, 3, 5 - 21 - 2 - 1, 2, 3, 4 - 1-5 21 - 3 - 1, 3 - 21 - 4 - 1, 5 - 22 - 1 - 1, 3, 4, 5 - 1-4 22 - 2, 3, 4 - 1, 4 - 23 - 1, 2, 3 - 1, 4 - 1-4 23 - 4 - 1, 4, 5 - 24 - 1 - 1, 2, 5 - 1-4 24 - 2, 3 - 1, 4 - 1-5 24 - 4 - 1, 4, 5 - 25 - 1 - 1, 3, 5 - 1-3-5 25 - 2, 3 - 1, 5 - 25 - 4 - 1, 3 - 1-5 26 - 1, 2, 3, 4 - 1, 4 - 1-4 27 - 1, 2, 3, 4 - 1, 5 - 1-5 28 - 1, 2, 3, 4 - 1, 5 - 1-5 29 - 1 - 1, 2, 5 - 29 - 2 - 1, 3, 4, 5 - 1-5 29 - 3, 4 - 1, 5 - 30 - 1 - 1, 4, 5 - 30 - 2 - 1, 5 - 1-4 30 - 3 - 1, 2, 3 - 30 - 4 - 1, 4 - 31 - 1 - 1, 4 - 31 - 2, 3, 4 - 1, 4, 5 - 1-4 32 - 1, 2, 3, 4 - 1, 3, 5 - 3-5 அட்டவணையிற் காட்டியுள்ள ஒவ்வொரு கலித்துறையின் தொடையமைதியையும் நன்கு கவனித்துப் படித்தறியுங்கள். ஒவ்வொரு செய்யுளிலும் எந்தெந்தச் சீர்களில் மோனை வர வேண்டுமோ, அவ்வாறு மோனை வந்துள்ள அடிகளை மோனை எடுப்பில் எடுத்துப் படித்துப் பாருங்கள், அம்மோனையமைப்பின் சிறப்பு விளங்கும். 10. ஆம் பாட்டின் 1-4 சீர்களில் மோனை வரவேண்டும். அப்பாட்டின் ஈற்றடியை. அடிகை கொழுவார்க் கில்லை அல்லல் நாளுமே. எனப் படித்துப் பாருங்கள், அதன் உண்மை விளங்கும். 5ஆம் பாட்டின் 2ஆம் அடியில் மோனை அமையவில்லை. அவ்வடியை, தாரித்த லாகா வகையால் தகை வீழ்ந்த பின்னும். எனத் திருத்திப் படித்துப் பாருங்கள். 11 ஆம் பாட்டின் முதலடியின் 3, 4 சீர்கள் ‘பாக - நாக’ என, எதுகை நயம்பட்டுச் சிறப்புச் செய்கின்றன. 16 ஆம் பாட்டின் 20 சீர்களும் ஒரே சகரவொற்றெதுகை திருப்பித் திருப்பிப் படித்து இன்புறுங்கள். இதைவிட, 15ஆம் பாட்டின் 2 ஆம் அடியின் மூன்றாவது சீரை, ‘பாதியுமை’ என வைத்து, படித்துச் சுவைத்துக் களித்துத் திளைத்து இன்புறுங்கள். அப்பாட்டு, அமையவேண்டியவாறு அமைந்த மோனை யோடு, ஒவ்வொரடியின் முதலிரு சீர்கள் ஓரேதுகையாகவும் 3, 4 சீர்கள் ஓரெதுகையாகவும் அமைந்துள்ள தொடையமைதியை என்னென்பது! 21ஆம் பாட்டின், மூன்றாமடியை, புரைக்காடு சேர்புக் கொளிஅவி நாசியிற் புண்ணியா. எனக்கொண்டு படித்துப் பாருங்கள். மோனைத் தொடையின் பெருமை விளங்கும். 30 ஆம் பாட்டின், மூன்றாமடியை, கையன் கபடன் கயவன்தனைக் கழிநல்லன் என்றிவ். எனத் திருத்திப் படித்து மோனைச் சுவை பெறுங்கள். எந்தெந்தக் கலித்துறையில் எந்தெந்தச் சீர்களில் மோனை வரவேண்டும் என்று குறிக்கப்பட்டுள்ளதோ அவ்வாறு மோனை அமைய அவ்வக் கலித்துறைகளைப் பாடுதலே ஏற்புடைத்தாகும். எந்தெந்தச் சீர்களில் மோனை வரவேண்டுமோ, அவை அல்லாத சீர்களில் வந்துள்ள மோனைகள் சிறப்புப் பெறா. வரவேண்டியவாறு மோனை வந்துள்ள பாடல்கள் - 20, 26, 27, 28. இன்னொரு முறை திருப்பிப் படித்துப் பாருங்கள். பயிற்சி 1 1. கலிவிருத்தம், கலித்துறை - மோனை அமைப்பிலுள்ள வேறுபாடென்ன? 2. நெடிலடி, கழிநெடிலடிகளில், பொழிப்பு மோனை, ஒரூஉ மோனை என்று ஏன் கொள்ளக்கூடாது? 3. ஒவ்வொரு கலித்துறையிலும் வேறுவேறு இடங்களில் மோனை வருதலின் காரணம் என்ன? 4. அடியெதுகை வகை: (1) 2, 5, 6, 8, 9, 10, 15, 18, 19, 21, 23, 24, 29 - ஒருவகை. (2) 1, 28, 30, 32 - ஒருவகை. (6) 14-ஒருவகை. (3) 7, 11, 22, 25 - ஒருவகை. (7) 26 - ஒருவகை. (4) 4, 12, 17, 20 - ஒருவகை. (8) 31 - ஒருவகை. (5) 13, 16, 27 - ஒருவகை. (9) 3 - ஒருவகை. இன்ன இன்ன எதுகை என்று கூறுக. 5. இக்கலித்துறைகளைச் சேர்ந்த கலித்துறைகளை அவ்வந் நூல்களில் படித்தறிக. 6. இக்கலித்துறைகளைக் கவனித்துப் படித்து, மோனை அமைப் பினைத் தெரிந்துகொண்டபின், நன்கு மோனையமையும் படி வகைக் கொன்று பாடிப் பாருங்கள். 7. கீழ் வரும் அடிகளை முதலடியாகக் கொண்டு, வகைக்கொரு கலித்துறை பாடுக. 1. எந்தாய் என்னும் உரிமைகொண் டாடுநர்க்கு எந்நாளும். 2. கற்றவர்சொல்வதைக் கண்ணினைப் போற்கொடு காத்து வந்து. 3. உண்டு டுத்துவாழ் கின்றதே உலகுயிர் வாழ்வாகும். 8. இம் முப்பத்திரு வகையே யன்றி, இன்னும் வேறுபட்ட ஓசையுடைய கலித்துறைகளும் இருக்கலாம். காண முயலுங்கள். 2. கட்டளைக் கலித்துறை 1. மோனை கலைக்கட லென்புலன் மீனுண்டு மீண்டுவந்தென் ஆவிக் கமலத் தமரன்ன மேநின் அயில்விழிபோல் வாவிக் கயலுக ளுந்தஞ்சை வாணன் வரையினுடன் கூவிக் கயங்குடை நின்குயி லாயங் குறுகுகவே - தஞ் 2. புரங்கடந் தானடி காண்பான் புவிவிண்டு புக்கறியா திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன் னீரடிக் கென்னிரண்டு கரங்கடந் தானொன்று காட்டாமற் றாங்கதுங் காட்டிடென்று வரங்கிடந் தான்றில்லை யம்பல முன்றிலம் மாயவனே - திகோ நெடிலடி நான்கு கொண்டது - கலித்துறை என்பது - கலித்துறையின் இலக்கணம். அவ்வாறே நெடிலடி நான்கான், எழுத்தெண்ணிப் பாடும் கலித்துறை - கட்டளைக் கலித்துறை எனப்படும். எழுத்தெண்ணிப் பாடுவதால் இது இப்பெயர் பெற்றது. கட்டளை - அளவு. இங்கு, ஓரடியின் எழுத்தளவு. கட்டளைக் கலித்துறையாவது - நெடிலடி நான்காய், அவ் வடிகளின் முதற்சீர் நான்கும் வெண்டளை பொருந்தி, கடையொரு சீரும் கருவிளங்காய், கூவிளங்காய்ச் சீர்களி லொன்றாக, நேரசையை முதலாகவுடைய அடியொன்றுக்குப் பதினாறு எழுத்தும், நிரையசையை முதலாகவுடைய அடியொன்று க்குப் பதினே ழெழுத்தும் உடையதாய், ஏகாரத்தால் முடியும். எழுத்தெண்ணும் போது ஒற்றெழுத்துக்களை நீக்கியெண்ண வேண்டும். யாப்பிலக் கணத்தில் ஒற்றெழுத்துக்கு மதிப்பில்லை யல்லவா? இவ்வாறு வருதலே கட்டளைக் கலித்துறையின் இலக்கணமாகும். நேர்நிரை முதல நெடிலடி நான்காய், முதற்சீர் நான்கும் வெண்டளை பொருந்தி, கடையொரு சீரும் விளங்கா யாகி, நேர்பதி னாறாய் நிரைபதி னேழாய் ஏகா ரத்தா லிறுங்கலித் துறையே. இச்சூத்திரத்தை நன்கு மனப்பாடம் செய்யுங்கள். ஐஞ்சீருடைய நெடிலடியின் முதற்சீர் நான்கும் பெரும்பாலும் ஈரசைச் சீராகவே வரும். சிறுபான்மை தேமாங்காய், புளிமாங்காய்ச் சீர்கள் வரும் விளங்காய்ச் சீர்கள் வரப்பெறா. தளைகொள்ளும்போது, வெண்பாவிற் போல, ஓரடியின் இறுதிச் சீர் அடுத்த அடியின் முதற்சீரோடு வெண்டளை பொருந்தி வரவேண்டும் என்பதில்லை. அவ்வாறு கொள்ளின், நிரையசையை முதலாக உடைய கட்டளைக் கலித்துறையில், காய்ச்சீர் முன் நிரைவந்து கலித்தளை யாகுமென்க. இவ்வமைப்பினை நன்கு மனப்பாடம் செய்து கொள்க. மேலே எடுத்துக் காட்டிய இரு கட்டளைக் கலித்துறைகளும் இவ்விலக்கணப்படி பதினாறெழுத்து இருத்தலை எண்ணிப் பாருங்கள். 1. இது, நேரசையை முதலாக உடைய கட்டளைக் கலித்துறை, ஒவ்வோரடியிலும் பதினாறெழுத்து இருத்தலை எண்ணிப் பாருங்கள். ஈற்றுச்சீர் நான்கும் விளங்காய்ச் சீராக வந்திருத்தலை அறிக. முதற்சீர் நான்கும் வெண்டளைப் பிழையாது வந்திருக்கின்றனவா என்று அலகிட்டுப் பாருங்கள். கட்டளைக் கலித்துறையின் முதற்சீரினும் ஐந்தாம் சீரினும் மோனை வரவேண்டும். இதில் அவ்வாறே வந்திருத்தலை அறிக. இது, நேரசைக் கட்டளைக் கலித்துறை எனப்படும். 2. இது, நிரையசையை முதலாக உடைய நிரையசைக் கட்டளைக் கலித்துறை, அடியொன்றுக்குப் பதினேழெழுத்து இருத்தலை ஒற்று நீக்கி எண்ணிப் பாருங்கள், நிரையசையில் இரண்டெழுத் துள்ளதால், ஓரெழுத்து அதிகமாயிற்று. எழுத்தளவைத் தவிர, நேரசைக் கட்டளைக் கலித்துறைக் குரிய எல்லா இலக்கணமும் இதற்கும் பொருந்தும். ஒரே ஓசை யுடைமையால், ஒருவகையே. திருக்கோவையார் தஞ்சை வாணன் கோவை, அம்பிகாபதிக் கோவை, மாறன்கோவை, சீகாழிக்கோவை, குளத்தூர்க் கோவை, வியாசக்கோவை முதலிய நூல்களிலும், நாலாயிரத் திருவிருத்தம், இராமாநுச நூற்றந்தாதி, திருவாசக நீத்தல் விண்ணப்பம், பட்டினத்தார் பாடல், தனிப்பாடற்றிரட்டு, யாப்பருங்கலக் காரிகை முதலிய நூல்களிலும் இருவகைக் கட்டளைக் கலித்துறைகளையும் படித்தறிக. எதை யெடுத்தாலும் போட்டி போட்டுக்கொண்டு கட்டளைக் கலித்துறையாற் பாடிய காலமும் ஒன்றுண்டென்பதை நினைவு கூருங்கள். பயிற்சி 1. கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் யாது? 2. கட்டளைக் கலித்துறையின் ஓரடியில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தென்ன? 3. கட்டளைக் கலித்துறைகளின் முதற்சீரும் ஈற்றுச் சீரும் பற்றிய இலக்கணம் என்ன? 4. ஓரடியின் ஈற்றுச் சீரும், அடுத்த அடியின் முதற்சீரும் தளைவதில் அறியவேண்டிய தென்ன? 5. எழுத்தெண்ணும்போது கவனிக்க வேண்டிய தென்ன? 6. கட்டளைக் கலித்துறை இருவகைப்படக் காரணம் என்ன? 7. கலித்துறைக்கும் கட்டளைக்கலித்துறைக்கு முள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன? 8. கட்டளைக் கலித்துறையின் தொடை யமைதி என்ன? 9. கட்டளைக் கலித்துறை நூல்களில் இருவகைக் கட்டளைக் கலித்துறைகளையும் ஓசையுடன் படித்து, அவற்றின் அமைப்பினை மனக் கொண்டு, கட்டளைக் கலித்துறைக் கவிஞராகுக. 3. தாழிசை 1. படைவ லங்கொடுப சுந்தலையி டங்கொ டணைவார் இடைமொ ழிந்திடைநு டங்கவரு யோகி னிகளே. - கலிங் 2. என்ற வோசை தஞ்செவிக்கு இசைத்தலுந் தசைப்பிணம் தின்ற போற்ப ருத்துமெய் சிரித்துமேல் விழுந்துமே. - கலிங் 3. புயல்வாழ நெடிதூழி புவிவாழ முதலீறு புகல்வேதநூல் இயல்வாழ உமைவாழ்வ தொருபாக ரிருதாளின் இசைபாடுவாம். - தக் 4. பாகன கங்குழை வித்த பவித்ர பயோதரிதன் கோகன கம்பன கம்சத கோடி கொடுப்பனவே. - தக் 5. கோகனக னாள்பெறு கொடுங்கனக னாகமிரு கூறுபடுகூர் ஏகநக நாயகி அனந்தசய னத்தினி திருந்தருளியே. - தக் 6. விழிவழி கருணைப் பச்சை விளக்கே மின்னேநின் வழிவழி யடியேம் நீரர மகளி ரோம்யாமே. - தக் 7. மண்ணிற் செந்தீ யடுப்ப வுடுப்பல மாய்ந்தன கண்ணிற் காய்ச்சிக் குடித்தன நாற்பாற் கடலுமே. - தக் 8. சிகரக் குலக்கிரிகள் சிதறத் தகர்க்குமெறி திரையா லொரோர் மகரக் களிக்களிறு மறுகக் கடற்கரசன் வரவாரவே. - தக் 9. பள்ளிக் குன்றவிற் குன்றுமொழி யச்சிறக றுப்புண்டுபாழ் வெள்ளிக் குன்றுபொற் குன்றுகற் குன்றடைய வீழவே. இத்தாழிசைகள் ஒன்பதும் வெவ்வே றோசை யுடையவை. ஓசையோடு படித்துப் பாருங்கள். இவற்றுள். 5 ஆந் தாழிசை - 15 ஆம் கலித்துறையையும், 6 ஆந்தாழிசை 7 வது கலித்துறையையும் ஒருபுடை ஒத்த ஓசையுடையவை. பெரும்பாலும் மோனைத் தொடை யெடுப்பில் மடக்கிப் பதிக்கப் பட்டுள்ளது. தொடையமைப்பினை நோக்குக. 1, 9 தாழிசைகள், ஒருவகை எதுகைத் தொடையான் அமைந்தவை. 9 இன் முதலடியில் மோனை அமையவில்லை. பள்ளிக் குன்றுவிற் குன்றொழியச் சிறகறு பட்டயல். என்று திருத்திப் படித்துப் பாருங்கள். தாழிசை 3 இன் இரண்டாமடியின் 3, 4 சீர்கள் - எதுகைச் சுவைபட அமைந்துள்ளன. 6 ஆம் தாழிசையின் 1 - 5 சீர்களில் மோனை வருதலே சிறப்பு. 7 இன் 3, 4 சீர்கள் எதுகை யடுக்கு. அதன் இரண்டாவதடியின் அச்சீர்கள். ‘குடித்த வெடுத்தெக்’ என இருக்கின், மிக்க சுவை யுடையதாக இருக்கும். அவ்வாறு படித்துப் பாருங்கள். பயிற்சி 1. ஒரே ஓசை யுடைய தாழிசைக்கும் கலித்துறைக்கும் உள்ள வேறுபாடென்ன? 2. 15 ஆம் கலித்துறையின் முதல் இரண்டடியைத் தாழிசையாக்க என்ன செய்ய வேண்டும்? 3. 7 ஆம் தாழிசைபோன்ற ஓசையுடைய ஒரு கலித்துறை பாடிப் பாருங்கள். 4. இத்தாழிசைகள் போல் வகைக் கொன்று பாடிப் பாருங்கள். 5. கழிநெடிலடி 1. அறுசீரடி விருத்தம் 1. மோது முதுதிரையான் மொத்துண்டு போந்தசைந்த முரல்வாய்ச் சங்கம் மாதர் விரிமணல்மேல் வண்ட லுழுதழிப்ப மாழ்கி ஐய! கோதை பரிந்தசைய மெல்விரலாற் கொண்டோச்சும் குவளை மாலைப் போது சிறங்கணிப்பபப் போவார்கள் போகாப் புகாரே யெம்மூர். - சில - 7 2. திங்களோடுடன் குன்றெலாந் துளங்கி மாநிலஞ் சேர்வபோற் சங்க மத்தகத் தலமரத் தரணி மேற்களி றழியவும் பொங்கு மாநிரை புரளவும் பொலங்கொ டேர்பல முறியவும் சிங்கம் போல்தெழித் தார்த்தவன் சிறுவர் தேர்மிசைத் தோன்றினார். - சிந் 3. என்ன நாளு மரற்றப்பொறான் விடுப்பப் போகி யினமழைகள் மொய்த் தன்னந் துஞ்சு மடிக்குடிலினுள் அன்றி யான்கொண்ட நாடகத்தினைத் துன்னி நம்பி யுருவுதீட்டித் தொங்கல் வேய்ந்து தொழுதாற்றநீ மன்னன் மன்ன மதிதோய்குடையாய் மகளிர் காம மறைத்தொழிதியோ. - சிந் 4. முரச மார்த்தன முரன்றன முரிவளை முகிலிடை வயிரேங்க அரியொ டாகுளி ஆலித்த வதிர்ந்தன அணிமுழ வருகெல்லாம் விரைசென் மாவொடு விரவின களிறுகள் மிடைந்தன கடுமான்றேர் புரைசை யாhனையின் எருத்திடை யரசனும் புகழொடு பொலிவுற்றான். - சூளா 5. தோடுடை யசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக் காடுடை யசுட லைப்பொடி பூசியென் உள்ளங் கவர்கள்வன் ஏடுடை யமல ரான்முனை நாட்பணிந் தேத்த வருள்செய்த பீடுடை யபிர மாபுர மேவிய பெம்மா னிவன்றே. - சம் 6. தலைமதி புனல்விட வரவிவை தலைமைய தொருசடை யிடையுடன் நிலைமரு வவொரிட மருளினன் நிழன்மழு வினொடழல் கணையினன் மலைமரு வியசிலை தனில்மதில் எரியுண மனமரு வினனல கலைமரு வியபுற வணிதரு கழுமல மினிதமர் தலைவனே. - சம் 7. மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே. - சம் 8. தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார்; கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார் எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியால் ஏழை நெஞ்சே! அந்தணா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. - சம் 9. வானார் திங்கள் வாள்முக மாதர் பாட வார்சடைக் கூனார் திங்கள் சூடியோ ராடல் மேய கொள்கையான் தேனார் வண்டு பண்செயுந் திருவா ருஞ்சிற் றேமத்தான் மானார் விழிநன் மாதொடும் மகிழ்ந்த மைந்த னல்லனே. - சம் 10. அப்பனீ யம்மைநீ ஐயனுநீ அன்புடைய மாமனு மாமியுநீ ஒப்புடைய மாதரும் ஒண்பொருளுநீ ஒருகுலமும் சுற்றமும் ஒருரூநீ துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்றுவாய்நீ துணையாயென் னெஞ்சத் துறப்பிப்பாய்நீ இப்பொன்னீ இம்மணிநீ இம்முத்துநீ இறைவனீ ஏறூர்ந்த செல்வனியே. - அப் 11. அரவணையான் சிந்தித் தரற்றுமடி அருமறையான் சென்னிக் கணியாமடி சரவணத்தான் கைதொழுது சாருமடி சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி பரவுவார் பாவம் பறைக்குமடி பதினெண் கணங்களும் பாடுமடி திரைவிரவு தென்கெடில நாடனடி திருவீரட் டானத்தெம் செல்வனடி! - அப் 12. ஆரூ ரத்தா ஐயாற் றமுதே அளப்பூ ரம்மானே! காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே! பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே! பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே! - சுந் 13. தில்லையம் பலத்தெங்கள் தேவதேவைத் தேறிய அந்தணர் சிந்தைசெய்யும் எல்லைய தாகிய எழில்கொள்சோதி என்னுயிர் காவல்கொண் டிருந்தவெந்தாய்! பல்லையார் பசுந்தலை யோடிடறிப் பாதமென் மலரடி கோலநீபோய் அல்லினில் அருநடம் ஆடிலெங்கள் ஆருயிர் காவலிங் கரிதுதானே. - திளி 14. பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கட லீந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே. - திபல் 15. பண்டு காம ரான வாறும் பாவையர் வாயமுதம் உண்ட வாறும் வாழ்ந்த வாறும் ஒக்க வுரைத்திருமித் தண்டு காலா வூன்றி யூன்றித் தள்ளி நடவாமுன் வண்டு பாடுந் தண்டு ழாயான் வதரி வணங்குதுமே. - நாலா 16. நும்மைத் தொழுதோம் நுந்தம் பணிசெய் திருக்கும் நும்மடியோம் இம்மைக் கின்பம் பெற்றோம் எந்தாய் இந்த ளூரீரே! எம்மைக் கடிதாக் கருமம் அருளி யவா என்றிரங்கி நம்மை யொருகாற் காட்டி நடந்தால் நாங்க ளுய்யோமே. - நாலா 17. அலமன்னும் அடல்சுரி சங்கமெடுத் தடலாழியி னாலணி யாருருவிற் புலமன்னுவ டம்புனை கொங்கையினாள் பொறைதீரமு னாளடு வாளமரிற் பலமன்னர்ப டச்சுட ராழியினைப் பகலோன்மறை யப்பணி கொண்டணிசேர் நிலமன்னனு மாயுல காண்டவனுக் கிடமாமலை யாவது நீர்மலையே. - நாலா 18. மண்டு யின்றன நிலைய மலைது யின்றன மறுவில் பண்டு யின்றன விரவு பணிது யின்றன பகரும் விண்டு யின்றன கழுதும் விழிது யின்றன பழுதில் கண்டு யின்றில நெடிய கடல் துயின்றன களிறு. - கம் 19. தேனி ருக்கு சாரல் வாரி செல்ல மீது செல்லநாள் மீனி ருக்கு மன்றிவான வில்லி ருக்கும் வெண்மதிக் கூனி ருக்கு மற்றுலாவு கோளி ருக்கும் என்பரால் வானி ருக்கு மேலவாச மன்றல் நாறு குன்றமே. - கம் 20. கானே காவல் வேழக் கணங்கள் கதவா ளரிகொன்றை வானே யெய்தத் தனியே நின்ற மதமால் வரையொப்பான் தேனே புரைகண் கனலே சொரியச் சீற்றஞ் செருக்கினான் தானே யானான் சம்பு மாலி காலன் தன்மையான். - கம் 21. கண்டேன் நெஞ்சங் கனிவாய்க் கனிவாய் விடநா னெடுநாள் உண்டே னதனால் நீயென் உயிரை முதலோ டுண்டாய் பண்டே எரிமுன் முன்னைப் பாவீ தேவீ யாகக் கொண்டே னல்லேன் வேறோர் கூற்றந் தேடிக் கொண்டேன். - கம் 22. இந்த வோதை யெழிலிஏழும் ஊழி நாளி டித்தெழும் அந்த வோதை யோவதன்றி ஆழி பொங்கு மோதையோ, கந்தன் வானின் மீதுதேர் கடாவு கின்ற வோதையோ, எந்த வோதை யென்றயிர்த்து அயிர்த்து வஞ்சர் யாவரும். - வில் 23. வெம்புய விசாலவட மேருவொரி ரண்டுடைய வீடுமனை நீடுமுனைவாய் அம்புத மெழுந்துபொழி கின்றவழி யோடிவரும் அனிலமென வந்தணுகினர், செம்பியனு மாகிருப னுஞ்செறிது ரோணனொடு சேயொடுச யத்திரதனும் தம்பியரு மாமனும் சயிந்தரொடு வெய்யபக தத்தனொடு சல்லியனுமே. - வில் 24. விளைத்தனர் தொந்த மாகவமர் மிகைத்தனர் தந்தம் வீரமுடன் உளைத்தனர் சிங்க சாபமென உறுக்கினர் சென்று மேல்முடுகி வளைத்தனர் கொண்ட வார்சிலைகள் வடித்தச ரங்க ளாலுழுது திளைத்தனர் வென்றி கூரும்வகை செருக்களம் எங்கு மாடவரே. - வில் 25. நினைவுற்ற பொழுதெழுது முரசுற்ற கொடிநிருபன் நியமித்த படிதரியலார் முனைமட்க வமர்பொருது செயமுற்றி உவகைபெறு முகிலொத்த வடிவினெடுமால் புனைவிற்கை யடுபகழி திசைசுற்று மறையநனி பொதிகொற்ற விசயனுடனே வினைமுற்றி உயர்தரும னுடனிற்றை யரியவமர் விளைவுற்ற தெனஉரைசெய்தான். - வில் 26. அருண வெங்கதி ராயி ரத்தவன் அம்பி னாலுதவும் கருண னுஞ்சில பகழி யோரிரு கண்ணர் மார்பில்விடா வருண னும்பெய ரும்பி றந்திலர் மன்னு மொன்றெனவே தருண வாணில எழுந கைத்துரை தந்து போயினனே. - வில் 27. தரணி தாழு மாபோது சகுனி சேனை வானேற முரணு வாகு வான்மோதி முடுகு நீள்க தாபாணி அரணி யாக வேயேனல் அடவி யான தானீடும் இரண பூமி மால்யானை இரத வாசி காலாளே. - வில் 28. கதையெடுத் துடற்றுமா டவர்கள் கடிதடந் தனக்குமே லொழிய அதிர்வுறப் புடைப்பரோ தொடையில் அலிபடத் துகைப்பரோ முடியில் எதிரியைச் சலத்தினா லென்விழி எதிர்வழக் கழித்தபா வனனை முதுகிடப் புடைப்பல்யா னுமென முசலகைத் தலத்தொடோ டினனே. - வில் 29. பந்தணை மெல்விர லாளும் பரமரும் பாய்விடை மீது வந்துபொன் வள்ளத் தளித்த வரம்பில்ஞா னத்தமு துண்ட செந்தமிழ் ஞானசம் பந்தர் திறங்கேட் டிறைஞ்சுதற் காக அந்தணர் பூந்தராய் தன்னில் அணைந்தனர் நாவுக் கரையர். - பெரி 30. அகனிலம் வெருவுற நிலனேந்தும் அரவிறை வெருவுற வெயில்காலும் பகன்மதி வெருவுற விவைகௌவும் பணிகளும் வெருவுற வகறிக்கின் புகர்மலை வெருவுற வடுதண்டப் புரவலன் வெருவுற வருசெங்கண் நகைமதி புரையெயி றவன்மாட நகரெதிர் குடவயின் வருமெல்லை. - திபு 31. உருமு வன்ன குரலினார் உலவை யன்ன செலவினார் வெருவு தீயின் வெகுளியார் வெடித்த வீர நகையினார் செருவின் மான வணியினார் சினைஇ மடித்த வாயினார் இருவர் சேனை மன்னரும் எதிர்ந்து கைக லந்தனர். - திபு 32. மாதர் நகையாய் மதுரேசர் உண்பலிக்கென் மனைவாய் வந்து காதன் முகத்தரும்பிக் காட்டியென் சிந்தை கலந்தார் போலும்! காதன் முகத்தரும்பக் கையறவு தீரக் கலப்பேன் பாதி பேதையுரு வாயிருந்தார் நாணிவிழித் தாவி பிழைத்தேன் போலும்! - திபு 33. அளியினுக் குணவதாம் தேறல்வாய்க் கொண்டதோர் அரிவை யாற்றக் களிமயக் கெய்துவாள் இந்துவை நோக்கியிக் கடிய தேறல் துளியினைக் கோடியேல் உனதுமான சுள்ளதுந் தொலையு மின்னும் ஒளியினைப் பெறுதிநின் ஊனமுந் தவிர்தியென் றுரைசெய் கின்றான். - கந் 34. கானமுழுந் துந்தெறு கனற்றிரளில் வந்தெழு கதிர்ச்சு டரின்வெந் தூனமுற வற்றியுர கத்தலைவெ டிப்பவத னுச்சி வரைபோய் வானளவெ ழுந்துபுவி மீதுவிழு கின்றபணி வந்து பகல்வான் மீனம்விழு கின்றபடி யாமென விளங்கின வெளிப்பு றமெலாம். - அரி 35. அரவு யிர்த்தமணி துற்றுதர பந்தன மழுத்தி யதன்மேல் மரவு ரித்தொகை விசிப்புற நெருங்கி மருங்கு றஉடீஇக் கரத லப்பிரண வத்தொழில் செவிப்புடை கலக்க முடிமேல் குரவு நொச்சிவெ ளெருக்கலரி கொத்திதழி குற்ற லையவே. - அரி 36. இன்ப மளிப்பன போலுடல் எங்கணு நக்கி இறும்படி துன்ப மளிப்பன வாமெனச் சூல்கவ யங்கள் குமைத்தனன் வன்பி னிருங்கொலை யேபுரி மறலியி னூர்தி யினங்களென்று அன்பறு வன்கரு மேதிகள் ஆவி யழுங்க விளித்தனன். - காஞ் 37. மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி இலக்கணஞ் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பிற் பாடை அனைத்தும்வென் றாரி யத்தோடு உறழ்தரு தமிழ்த்தெய் வத்தை உண்ணினைந் தேத்தல் செய்வாம். - சீகா 38. நீர்பாய் உலகிற் குயிரோய்நீ நிமிர்வீட் டுலகிற் குயிரோய்நீ சீர்பாய் பாவிற் குரையோய்நீ திறங்கொண் டான்வாய்க் கடலோநீ ஏர்வாய் இரவிக் கொளியோய்நீ எம்மேல் இரங்கிப் பிறந்தனைநாஞ் சூர்பாய் துகளற் றுய்வதற்குன் துணைத்தாள் தொழும் பண்புரையாயோ. - தேம் 39. தண்பாய்நீர் வளநாட்டுக் குலோத்துங்கச் சோழனுடைச் சமுகந் தன்னில் ஒண்பாவி லெதிர்த்தவரை யுலவிவெட்டு முரனுடையான் ஒட்டக் கூத்தன் எண்பாடு படத்தமிழி ளெதிர்த்து வெல்லுந்திற முடையான் யாரு மேத்தி வெண்பாவிற் புகழேந்தி யெனவியக்கத் தக்கவனோர் வேளாண் சேயே. - வேளா 40. அளிக்கா தரவுற்றுச் சுவைத்தகள் அளித்தார் வனசத்துப் பொகுட்டயன் உளத்தா மரைநச்சத் தளைத்தவன் உரைப்பா லருள்பெற்றுத் தரித்தவன் களத்தா லமடக்கிச் சுடர்க்கிடர் களைத்தே யவொறுத்துக் கடைக்கணி குளத்தூர் நயனத்துக் கிடத்தமர் குளத்தூ வமுதத்தைப் புரக்கவே. - அமு இவ்வறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் நாற்பதும் வெவ்வே றோசை யுடையவை. ஓசையோடு படித்துப் பாருங்கள். ஒரேவகை யடியாலான செய்யுளில் எத்தனைவகை ஓசை வேறுபாடு! ஒன்றில் மிக்க திறமையை ‘கைவரிசை’ என்பர். இது, கவிஞர்களின் கைவரிசையைக் காட்டுகிற தல்லவா? முதல் விருத்தமும், 32 ஆம் விருத்தமும் ஒருவகை ஓசையுடை யவையே, இடைமடக்கால், 32 வேறுபட்டது. 7 ஆம் விருத்தமும், 29 ஆம் விருத்தமும் ஒருபுடை ஒப்புடைய வையே. ஈற்றடி மாறுபட்டு, 7 வேறுபட்டது. விருத்தம் 23 - ம், 25 - ம் ஒருபுடை யொத்தனவே. ஆனால், 25 இன் ஒன்றுவிட்ட சீர்களின் எடுத்த வல்லோசையால், இரண்டும் வேறாயின. ‘ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பை’ - கந் ‘தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமல மன்ன’ - கம் என்னும் விருத்தங்களைப் போன்றது - 37 ஆம் விருத்தம். ‘எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல் மருமத்தின் எறிவேல் பாய்ந்த’ - கம் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோ லினிதாவ தெங்குங் காணோம்’ - பார என்னும் பாடல்களைப் போன்றது - 39 ஆம் விருத்தம். மற்ற விருத்தங்களோடும் ஒத்த விருத்தங்களைக் காண முயலுக. ஒவ்வொரு விருத்தமும், மோனைத்தொடை எடுப்பின் படியே, மோனை வரவேண்டிய சிர்களில்மடக்கிப் பதிக்கப் பட்டுள்ளது. பெரும்பாலும் அவ்வாறே மோனை வந்துள்ளது. மற்ற விளக்கங்களுக்குக் கலித்துறையின் கீழ்க்கொடுக்கப் பட்டுள்ள குறிப்பைப் பார்க்க. கீழே கொடுக்கப்பட்டுள்ள மோனைவந்துள்ள சீர்கள், மோனை வரவேண்டிய சீர்களின் அட்டவணையில், மோனைத் தொடை அமைப்பினைக் கண்டறிக. பாட்டு - அடி - மோ. வ. சீர் - மோ. வர. சீர் 1 - 1 - 1, 2, 3, 5 - 1 - 2 - 1, 2, 5 - 1-2-5 1 - 3 - 1, 4, 5 - 1-5 1 - 4 - 1, 3, 4, 5 - 2 - 1 - 1, 6 - 2 - 2 - 1, 4 - 1-4 2 - 3 - 1, 3, 4 - 1-6 2 - 4 - 1, 4, 5 - 3 - 1 - 1, 6 - 3 - 2 - 1, 3, 4 - 1-4-6 3 - 3 - 1, 4, 6 - 1-4 3 - 4 - 1, 2, 3, 4, 6 - 4 - 1 - 1, 3, 4, 5 - 4 - 2 - 1,2, 3, 4, 5, 6 - 4 - 3 - 1, 3, 5 - 1-5 4 - 4 - 1, 5, 6 - 5 - 1 - 1, 5 - 5 - 2 - 1, 6 - 1--5 5 - 3 - 1, 5 - 1-6 5 - 4 - 1, 5 - 6 - 1, 2, 4 - 1, 4 - 6 - 3 - 1, 5 - 1-4 7 - 1, 2, 3 - 1, 4 - 7 - 4 - 1, 4, 6 - 1-4 8 - 1 - 1, 3, 5 - 8 - 2 - 1, 2, 3, 5 - 1-5 8 - 3 - 1, 3, 4 - 8 - 4 - 1, 5 - 9 - 1 - 1, 3, 4, 6 - 9 - 2 - 1, 6 - 1-4-6 9 - 3 - 1, 4 - 1-4 9 - 4 - 1, 3, 4 - 10 - 1 - 1, 2, 4, 6 - 10 - 2, 3 - 1, 3, 4, 6 - 1-3-4-6 10 - 4 - 1, 2, 3, 4, 5 - 1-4 11 - 1, 2 - 1, 3, 4, 6 - 11 - 3 - 1, 2, 3, 4, 6 - 1-3-4-6 11 - 4 - 1, 2, 4, 6 - 1-4-6 12 - 1 - 1, 2, 3, 4, 5, 6 - 12 - 2 - 1, - 1-3-5 12 - 3 - 1, 4, 5 - 1-5 12 - 4 - 1, 2, 3, 4, 5 - 13 - 1, 2 - 1, 3, 4, 6 - 13 - 3 - 1, 2, 4 - 1-3-4-6 13 - 4 - 1, 2, 3, 4, 6 - 1-4 14 - 1 - 1, 2, 5 - 14 - 2 - 1, 5 - 1-3-5 14 - 3 - 1, 2, 5 - 1-5 14 - 4 - 1, 3, 5 - 15 - 1 - 1, 5 - 15 - 2 - 1, 5, 6 - 1-5-6 15 - 3 - 1, 5 - 1-5 15 - 4 - 1, 5, 6 - 16 - 1 - 1, 3, 6 - 16 - 2 - 1, 2, 4, 5 - 1-4 16 - 3 - 1, 6 - 1-6 16 - 4 - 1, 4, 5 - 17 - 1 - 1, 2, 4, 5, 6 - 17 - 2 - 1, 4 - 1-4 17 - 3 - 1, 4 - 1-6 17 - 4 - 1, 6 - 18 - 1, 2, 3, 4 - 1, 4, 6 - 1-4-6 19 - 1, 2 - 1, 4, 6 - 1-4-6 19 - 3, 4 - 1, 4 - 1-4 20 - 1 - 1, 2, 4, 5 - 1-4 20 - 2, 3 - 1, 5, 6 - 1-6 20 - 4 - 1, 3, 6 - 21 - 1 - 1, 3, 4 - 1-4-6 21 - 2, 3, 4 - 1, 4, 6 - 1-4 22 - 1, 4 - 1, 3, 6 - 1-4 22 - 2, 3 - 1, 4 - 1-6 23 - 1 - 1, 2, 3, 5 - 23 - 2 - 1, 5, 6 - 1-3-5 23 - 3 - 1, 5 - 1-5 23 - 4 - 1, 3, 5, - 24 - 1 - 1, 4, 6 - 24 - 2 - 1, 4 - 1-4 24 - 3 - 1, 3, 4 - 24 - 4 - 1, 4 - 25 - 1, 2, 3, 4 - 1, 5 - 1-5 26 - 1 - 1, 3, 4, 5, 6 - 26 - 2, 3, 4 - 1, 5 - 1-5 27 - 1 - 1, 2, 4 - 27 - 2, 4 - 1, 4 - 1-4 27 - 3 - 1, 2, 4, 5 - 28 - 1, 2, 4 - 1, 4 - 28 - 3 - 1, 3, 4 - 1-4 29 - 1 - 1, 4, 5 - 29 - 2 - 1, 2, 4 - 29 - 3 - 1, 4 - 1-4 29 - 4 - 1, 4, 6 - 30 - 1, 2, 3, 4 - 1, 4 - 1-4 31 - 1, 3, 4 - 1, 4 - 31 - 2 - 1, 3, 4, 5 - 1-4 32 - 1 - 1, 3, 5, 6 - 32 - 2, 3 - 1, 3, 5 - 1-3-5 32 - 4 - 1, 5 - 1-5 33 - 1 - 1, 5, 6 - 33 - 2, 3 - 1, 5 - 1-3-5 33 - 4 - 1, 3, 4 - 1-5 34 - 1 - 1, 3, 5 - 34 - 2, 3 - 1, 5 - 1-3-5 34 - 4 - 1, 4, 5 - 1-5 35 - 1 - 1, 5, 6 - 35 - 2, 3 - 1, 5 - 1-5 35 - 4 - 1, 4, 5 - 36 - 1 - 1, 4, 6 - 36 - 2, 3 - 1, 4 - 1 - 4 36 - 4 - 1, 4, 5 - 37 - 1 - 1, 3, 4 - 37 - 2, 4 - 1, 4 - 1 - 4 37 - 3 - 1, 4, 5, 6 - 38 - 1, 2 - 1, 4 - 38 - 3, 4 - 1, 2, 4, 5 - 1 - 4 39 - 1 - 1, 5, 6 - 39 - 2 - 1, 3, 4, 6 - 39 - 3 - 1, 3, 5, 6 - 1 - 5 39 - 4 - 1, 5 - 40 - 1, 2, 4 - 1, 4 - 40 - 3 - 1, 4, 6 - 1 - 4 அட்டவணையிற் காட்டியுள்ள ஒவ்வொரு விருத்தத்தின் தொடையமைதியையும் நன்கு கவனித்துப் படித்தறியுங்கள். ஒவ்வொரு விருத்தத்திலும் எந்தெந்தச் சீர்களில் மோனை வரவேண்டுமோ, அவ்வாறு மோனை வந்துள்ள அடிகளை, மோனை எடுப்பில் எடுத்துப் படித்துப் பாருங்கள், அம்மோனை யமைப்பின் சிறப்பு விளங்கும். 6 ஆம் பாட்டின் அடிகளில், 1-4 சீர்களில் மோனை வரவேண்டும். 1, 2, 4 அடிகளில் அவ்வாறே வந்துள்ளது. 3ஆம் அடியின் 1-5 சீர்களில் மோனை வந்துள்ளது. அவ்வடி, மற்ற அடிகள் போல ஓசை நயம் படாமையை ஓசையோடு படித்தறியுங்கள். அவ்வடியை, மலைமரு வியசிலை தனினெரி மதிலுண மனமரு வினனல. எனக் கொண்டு படித்துப் பாருங்கள், மோனையின் சிறப்பு விளங்கும். விருத்தம் 7ல், இயைபுத் தொடையை நோக்குக. விருத்தம் 8ன் ஈற்றடியில், ‘உய்யலா - மய்யல’ ‘அஞ்சல் - நெஞ்சே’ எதுகை நயம். 14 ஆம் பாட்டில், ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாக. என்ற அடியில், ‘பலமே’ - பகர வொலியினும் அகர வொலியே மிக்கு மோனையாதல் காண்க. விருத்தம் 18ல், ‘கழுதும் - பழுதில்’ இயைபு நயம். விருத்தம் 19ல் ஈற்றடியில், ‘மன்ற - குன்ற’ - எதுகை நயம். விருத்தம் 24ல் 1-4 சீர்கள் வல்லோசையும், 2-5 சீர்கள் மெல்லோசையும் உடையனவாய் ஓசை இன்பந்தருதலைச் சுவைத் தின்புறுக. 25 ஆம் பாட்டில், ஒன்றனொன் றிடையிட்ட சீர்கள் வலிந்தும் ஒழுகியும் இன்புறுத்தலை ஓசையோடு படித்தறிக. இறுதிப் பாட்டின் 3-6 சீர்கள்வல்லோசைநயம். பெரும்பாலும் வரவேண்டியவாறு மோனை வந்துள்ள விருத்தங்கள் -1, 4, 7, 8, 11, 18, 21, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 35, 36, 37, 38, 39, 40. வரவேண்டிய சீர்களல்லாத சீர்களில் வந்துள்ள மோனைகளை மோனை நயமாகக் கொள்க. இன்னொரு முறை திருப்பிப் படித்துப் பார்த்து, அந்தந்த விருத்தங்களில் அமைய வேண்டிய மோனைத் தொடை அமைப்பினை நன்கு அறிந்து கொள்க. பயிற்சி 1. ஒரே வகையான அடியாலான விருத்தங்கள் வெவ்வேறு வகையான ஓசையுடையதாகக் காரணமென்ன? 2. ஏன் ஒவ்வொரு விருத்தத்திலும் வெவ்வேறு சீர்களில் மோனை அமைகிறது? 3. விருத்தங்களின் அடிகள் எவ்வாறு மடக்கிப் பதிக்கப்பட்டுள்ளன? 4. கீழ்வரும் அடியெதுகை வகை வந்துள்ள செய்யுட்களின் எண்களைக் குறிப்பிடுக. 1. உயிரெதுகை - 2. வல்லொற்றின் முன் அதே வல்லின உயிர்மெய் - 3. மெல்லொற்றின் முன் அதே மெல்லின உயிர்மெய் - 4. மெல்லொற்றின் முன் இன வல்லின உயிர்மெய் - 5. மெல்லொற்றின் முன் வேறு வல்லின உயிர்மெய் - 6. இடையொற்றின் முன் அதே இடையின உயிர்மெய் - 7. இடையொற்றின்முன் வல்லின உயிர்மெய் - 5. இவ்விருத்தங்களோடு சேர்ந்த விருத்தங்களை அவ்வந் நூல்களிற் படித்தறிக 2. தாழிசை 1. புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன் தொழில்காட்டப் புவன வாழ்க்கைச் செயல்வண்ணம் நிலைநிறுத்த மலைமகளைப் புணர்ந்தவனைச் சிந்தை செய்வாம். - கலிங் 2. பாலாறு குசைத்தலை பொன்முகலி பழவாறு படர்ந்தெழு கொல்லியெனும் நாலாறும் அகன்றொரு பெண்ணையெனும் நதியாறு கடந்து நடந்தனனே. - கலிங் 3. பூவிரி மதுகரம் நுகரவும் பொருகயல் இருகரை புரளவும் காவிரி யெனவரும் மடநலீர் கனகநெ டுங்கடை திறமினோ! - கலிங் 4. தென்னவர் வில்லவர் கூபகர் சாபகர் தேசிபர் யாதவரே கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே. - கலிங் 5. எழுந்தது சேனை எழலும் இரிந்தது பாரின் முதுகு விழுந்தன கானு மலையும் வெறுந்தரை யான திசைகள். - கலிங் 6. இடையிடை யரசர்கள் இடுகுடை கவரிகள் இவைகடல் நுரையெனவே மிடைகொடி பிறழ்வன மறிகட லடையவும் மிளிர்வன கயலெனவே. - கலிங் 7. நிரைமணி பலகு யிற்றிய நெடுமுடி மிசைவி திப்படி சொரிபுன லிடைமு ளைத்தன துறைகளின் அறம னைத்துமே. - கலிங் 8. நிழலில டைந்தன திசைகள் நெறியில டைந்தன மறைகள் கழலில் அடைந்தனர் உதியர் கடலில டைந்தனர் செழியர். - கலிங் 9. கலிங்கர் குருதி குருதி கலிங்கம் அடைய அடைய மெலிந்த உடல்கள் தடிமின்! மெலிந்த உடல்கள் தடிமின்! - கலிங் 10. எடுமெடு மெடுமென எடுத்ததோர் இகலொலி கடலொலி இகக்கவே விடுவிடு விடுபரி கரிக்குலம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே. - கலிங் 11. நேர்முனையில் தொடுத்த பகழிகள் நேர்வளைவில் சுழற்று மளவினில் மார்பிடையில் குளித்த பகழியை வார்சிலையில் தொடுத்து விடுவரே. - கலிங் 12. நெருங்காக அச்செங் களத்தே தயங்கும் நிணப்போர்வை மூடிக்கொளக் கருங்காகம் வெண்காக மாய்நின்ற வாமுன்பு காணாத காண்மின்களோ! - கலிங் 13. பறிந்த மருப்பின் வெண்கோலால் பல்லை விளக்கிக் கொள்வீரே, மறிந்த களிற்றின் பழுவெலும்பை வாங்கி நாக்கை வழியீரே. - கலிங் 14. கவன நெடும்பரி வீரதரன் காவிரி நாடுடை யானிருதோள் அவனி சுமந்தமை பாடீரே அரவு தவிர்ந்தமை பாடீரே. - கலிங் 15. பொருகை தவிர்ந்து கலிங்கரோடப் போக புரந்தரன் விட்டதண்டின் இருகையும் வென்றதோர் வென்றிபாடி இருகையும் வீசிநின் றாடினவே. - கலிங் 16. வேலை நின்றெழா வுகக்கனலென வேக நஞ்சறா மதிப்பிளவென மாலை யும்படா விழித்திரளது வாய்தொ றுங்குவா லெயிற்றணியதே. - தக் 17. ஆலி யுங்கடி திற்புலர்ந்துக லந்து குண்டர்துடைக்குமப் பீலி யுஞ்சுறு நாறியேறியெ ரிந்து போனபி ரம்புமே. - தக் 18. வாழிய மண்டல மால்வரை வாழிய குடக்கோழி மாநகர் வாழிய வற்றாத காவிரி வாழிய வரராச ராசனே. - தக் 19. வானிற் பறக்கின்ற புள்ளெலாநான் மண்ணிற் றிரியும் விலங்கெலாநான் கானில் வளரும் மரமெலாநான் காற்றும் புனலுங் கடலுமேநான். - பார 20. சின்னஞ் சிறிய மலரிந்தச் சிறிய மலரைக் கொய்திடுவாய் இன்னுங் காலஞ் செல்லினொளி இழந்து வாடி விழுந்திடுமே. - தேசி 21. தமிழன் என்றோ ரினமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு அமிழ்தம் அவனுடைய மொழியாகும் அன்பே அவனுடைய வழியாகும். - நாம 22. ஏழை யென்ற போதினும் என்ன துன்ப மோதினும் கோழை யென்று வாழ்ந்திடோம் கொடிய ருக்குத் தாழ்ந்திடோம். - நாம 23. முன்னர்நூ றாண்டு காலம் முதுகினைக் காட்டிக் காட்டி இன்னலுற் றுழந்தா ரின்றோ\ எளிதினில் வெற்றி பெற்றார். - அர 24. வலிமிகு விசுவ நாதன் முடிவினில் வாகை புனைந்தனனே கலிமிகு தந்தையைக் கள்வனைப் போலக் கட்டி நடந்தனனே. - அர இத்தாழிசைகள் இருபத்து நான்கும் வெவ்வேறோசை யுடையவை. முதல் தாழிசை - 39 ஆம் விருத்தம் போன்றது. இரண்டாந் தாழிசை - 17 ஆம் விருத்தம் போன்றது. நான்காந் தாழிசை - 14 ஆம் விருத்தம் போன்றது. இருபத்து மூன்றாம் தாழிசை - 37 ஆம் விருத்தம் போன்றது. ஒப்பிட்டுப் படித்துப் பாருங்கள். ஒவ்வொரு தாழிசையும் மோனைத் தொடை எடுப்பின் படியே மடக்கிப் பதிக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள அட்டவணையில் மோனைத் தொடை அமைப்பினை அறிந்து கொள்க. பாட்டு - அடி - மோ. வ. சீ . மோ. வர.வே. சீ. 1 - 1 - 1, 2, 3, 5 - 1-3-5 1 - 2 - 1, 4, 5 - 2 - 1 - 1, 4, 5 - 1-4 2 - 2 - 1, 4, 6 - 1-4-6 3 - 1 - 1, 4, 6 - 3 - 2 - 1, 4 - 1-4 4 - 1 - 1, 5 - 4 - 2 - 1, 3, 4, 5, 6 - 1-5 5 - 1 - 1, 3, 4 - 5 - 2 - 1, 4 - 1-4 6 - 1 - 1, 3, 5 - 6 - 2 - 1, 5 - 1-5 7 - 1, 2 - 1, 4 - 1-4 8 - 1, 2 - 1, 4 - 1-4 9 - 1, 2 - 1, 4 - 1-4 10 - 1 - 1, 2, 3, 4, 6 - 1-2-3-4-6 10 - 2 - 1, 2, 4, 6 - 1-2-4-6 11 - 1, 2 - 1, 4 - 1-4 12 - 1 - 1, 5 - 12 - 2 - 1, 5, 6 - 1-5 13 - 1 - 1, 4 - 1-4-6 13 - 2 - 1, 4, 6 - 1-4 14 - 1, 2 - 1, 4 - 1-4 15 - 1 - 1, 4, 5 - 15 - 2 - 1, 4 - 1-4 16 - 1, 2 - 1, 4 - 1-4 18 - 1 - 1, 2, 3, 4, 6 - 18 - 2 - 1, 2, 4, 5 - 1-4 19 - 1 - 1, 4 - 19 - 2 - 1, 4, 6 - 1-4 20 - 1 - 1, 2, 4 - 20 - 2 - 1, 4 - 1-4 21 - 1 - 1, 4 - 21 - 2 - 1, 2, 4, 5 - 1-4 22 - 1 - 1, 2, 4 - 22 - 2 - 1, 4 - 1-4 23 - 1 - 1, 4 - 23 - 2 - 1, 3, 4 - 1-4 24 - 1 - 1, 5 - 24 - 2 - 1, 3, 5 - 1-5 பத்தாம் தாழிசை - முடுகிசை எடுப்பாலானது. 11 ன் 2, 5 சீர்கள் - எடுப்போசையாய் இன்பஞ் செய்கின்றன. 17 ஆந்தாழிசை - ஒருவகை எதுகையாலானது. 21, 22 தாழிசைகள் - இயைபுத் தொடை. இன்னொரு முறை திருப்பிப் படித்துத் தொடை அமைப் பினைத் தெரிந்து கொள்ளுங்கள். பயிற்சி 1. ஒரே ஓசையுடைய விருத்தத்திற்கு தாழிசைக்கு முள்ள வேறுபாடென்ன? 2. தாழிசையை விருத்தமாக்க என்ன செய்ய வேண்டும்? 3. 20 ஆந்தாழிசையை ஆசிரிய விருத்தமாக்குக. 4. 18. ஆம் விருத்தத்தின் முதல் இரண்டடியைத் தாழிசையாக்க என்ன செய்ய வேண்டும்? 5. இத்தாழிசைகளின் வகைக் கொன்று பாடமுயலுக. 6. இத்தாழிசைகளின் அடியெதுகை வகையைக் குறிப்பிடுக. 7. இவ்விருத்தம் தாழிசைகளின் அடியெதுகை வகையினை ஒப்பிடுக. 8. இத்தாழிகளோடு சேர்ந்த தாழிசைகளை அவ்வந் நூல்களிற் படித்தறிக. 3. எழுசீரடி விருத்தம் 1. மைந்நீற் றனைய மாவீ ழோதி வகுத்துந் தொகுத்தும் விரித்தும் கைந்நூற் றிறத்திற் கலப்ப வாரிக் கமழு நானக் கலவை ஐந்நூற் றிறத்தின் அகிலின் னாவி அளைந்து கமழ வூட்டி எந்நூற் றிறமு முணர்வா ளெழிலேற் றிமிலின் ஏற்ப முடித்தாள். - சிந் 2. மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால், கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும் அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே - சம் 3. அகத்தடி மைசெய் யும்மந்த ணன்தான் அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான் மிகத்தளர் வெய்திக் குடத்தையு நும்முடி மேல்விழுத் திட்டுந டுங்குதலும் வகுத்தவ னுக்கு நித்தற் படியும் வருமென்றொரு காசினை நின்றநன்றிப் புகழ்த்துணை கைப்பு கச்செய்து உகந்தீர் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே! - சுந் 4. பூணா ணுவதோர் அரவங்கண் டஞ்சேன் புறங்காட் டாடல்கண் டிகழேன் பேணீ ராகிலும் பெருமையை யுணர்வேன் பிறவே னாகிலும் மறவேன் காணீ ராகிலுங் காண்பனென் மனத்தாற் கருதீ ராகிலுங் கருதி நாணே லும்மடி பாடுத லொழியேன் நாட்டியத் தான்குடி நம்பீ! - சுந் 5. வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடை யிட்டத னோசை கேட்கும் கண்ண பிரான்கற்ற கல்விதன்னைக் காக்ககில் லோம்உன் மகனைக் காவாய் புண்ணிற் புளிப்பெய்தா லொக்குந்தீமை புரைபுரை யாலிவை செய்ய வல்ல அண்ணற்கண் ணானோர் மகனைப்பெற்ற அசோதைநங் காயுன் மகனைக் கூவாய்! - நாலா 6. திண்படைக் கோளரி யின்உருவாத் திறலோ னகலஞ் செருவில் முனைநாள் புண்படப் போழ்ந்தபி ரானதிடம் பொருமா டங்கள்சூழ்ந் தழகாய கச்சி வெண்குடை நீழல்செங் கோல்நடப்ப விடைவெல் கொடிவேல் படைமுன் னுயர்த்த பண்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச் சுரவிண் ணகரம் மதுவே. - நாலா 7. மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை யுகந்தது காரண மாகஎன் சங்கிழக் கும்வழக் குண்டே; புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழுங் குயிலே! பன்னியெப் போதும் இருந்து விரைந்தென் பவளவா யான்வரக் கூவாய்! - நாலா 8. பரவி வானவ ரேத்த நின்ற பரம னைப்பரஞ் சோதியைக் குரவை கோத்த குழக னைமணி வண்ண னைக்குடக் கூத்தனை அரவ மேறி யலைக டல்அம ருந்து யில்கொண்ட அண்ணலை இரவு நன்பக லும்விடா தென்றும் ஏத்து தல்மனம் வைம்மினோ. - நாலா 9. அரம்பை மேனகை திலோத்தமை யுருப்பசி யாதி யர்மலர்க் காமன் சரம்பெய் தூணிபோல் தளிரடி தாந்தொடச் சாமா ரைபணி மாறக் கரும்பை யுஞ்சுவை கைப்பித்த சொல்லியர் காம ரங்கனி யாழின் நரம்பி னின்னிசை செவிபுக நாசியிற் கற்ப கவிரை நாற. - கம் 10. அன்றுமுத லாகவரி வெஞ்சிலை முதற்படைகள் ஆனவை யனைத்து மடைவே தொன்றுபடு நூன்முறையின் மறையினொடு உதிட்டிர சுயோதனர்க ளாதி யெவரும் ஒன்றியது ரோணனரு ளாலும்வலி யாலுமுய லுணர்வுடைமை யாலு முதலே நின்றகுறை யாலுமொரு வர்க்கொருவர் கல்வியில் நிரம்பினர் வரம்பில் நிதியோர். - வில் 11. தண்ட ரளமலை வெண்க யிலைமலை சங்க மலையென நங்கைமார் மொண்டு சொரிதரு கின்ற அடிசிலும் முந்து கறிகளும் வெந்தபால் மண்டு நறுநெயொ டந்த விடலையு மைந்த ரனைவரு முண்டுதம் பண்டி நிறைவுறு பின்பு பிறிதொரு பண்டி கெழுமிய பண்டமே. - வில் 12. கங்கை மகன்சிலை யின்குரு வென்பவர் காதி மலைந்தே கையற்றார் இங்கினி என்னுயிர் நண்பனை யல்லது வெல்ல வல்லோ ரிலரென்றே அங்கர் பிரானை வரூதினி யின்பதி யாகென் றருள்செய் தவனோடும் வங்கள முற்றனன் நஞ்சுமி ழுங்கொடி வேக நாக விறலோனே. - வில் 13. கொடிஞ்சி மாநெடுந் தேர்களிற் பூட்டிய குரகதக் குரம்படப் படமண் இடிஞ்சு மேலெழு தூளிமுற் பகல்வரும் இரவினை நிகர்த்ததவ் விரவு விடிஞ்ச தாமெனப் பரந்ததத் தேர்களின் மின்னிய மணிகளின் வெயில் போய்ப் படிஞ்ச தூளியோர் நடம்பயில் அரங்கினிற் பரப்பிய எழினிபோன் றதுவே. - வில் 14. தேவர்தந் தலைவனார் கோயில்புக் கனவரும் சீர்நி லத்துற வணங்கிப் பாவருந் தாழிசைப் பதிகமும் பாடிமுன் பரவு வார்புறம் பணைந்தே தாவில்சீர் முருகனார் திருமனைக் கெய்திய்த் தனிமு தல்தொண்டர் தாமே யாவையுங் குறைவறுத் திடவமர்ந் தருளுவார் இனிதி னங்குறையு நாளில். - பெரி 15. பண்கொண்ட வேதமுத லிடையீறு நாடரிய பரன்மாம னாகியொரு வணிகன் எண்கொண்ட காணிபொருள் கவர்ஞாதி மாதுலரை எதிரேறி வென்றபடி யிதுவாம். தண்கொண்ட நேமிவர குணதேவ னெய்துபழி தன்னைத்து டைத்தனைய மனவன் கண்கொண்டு காணவுயர் சிவலோக மதுரைதனில் வருவித்த காதையினி மொழிவாம். - திபு 16. கனவட்டத் தடியிடறப் பொறிவிட்டுப் புலனவியக் கரணத்துட் பொதியுயிர்விட் டவனாகம் தனையொக்கற் பனவரெடுத் தனர்கிட்டிக் குரிசில்கடைத் தலையிட்டத் திறமொழியத் தமிழ்மாறன் இனையுற்றுப் பனவர்கையிற் கனகக்குப் பைகள்நிறைவித் தெமதிக்குற் றவனையெடுத் தெரிமாலை புனைவித்தக் கடன்முடிவித் தனன்மற்றப் பழிபடரிற் புதையப்பற் றியதிடைவிட் டகலாதே. - திபு 17. மெய்ச்சோ திதங்கு சிறுகொள் ளிதன்னை விரகின் மைகொண்ட குருகார் கச்சோ தமென்று கருதிக் குடம்பை தனின்உய்த் துமாண்ட கதைபோல் அச்சோ வெனப்பல் இமையோ ரையீண்டு சிறைவைத் தபாவ மதனால் இச்சூ ரபன்மன் முடிவெய் துநாளை இதனுக் கொரைய மிலையே. - கந் 18. கையோ செழுங்கமல முகமோ நிறைந்தமதி காலோ இளஞ்சி னைவரால் மெய்யோ கலாபமயி லிடையோ நுடங்குகொடி விழியோ கடைந்த வடிவேல் மையோ சுருண்ட குழல் மலையோ திரண்டநகில் வனிதைக் கெனப்பு கலுவார் ஐயோ இவட்குவிதி கொலையோ வெனக்கதறி அழுவா ரறைந்து விழுவார். - அரி 19. வளைத்த டக்கை வெம்மை தீர வார வேல்வ ளைத்ததில் தெளித்த வாச நீர்நி றைத்து முத்த ணிந்த செவ்வியான் முளைத்த திங்கள் தார கைக்கு லங்க ளோடு மொய்த்துமா துளைத்த வேளை யார்வ மோடு காண வந்த தொத்ததே. - நைட 20. விரும்பும் யாம் வணங் கும்பதக் கடவுளே விளங்கும் ஆவினை மிக்க பெரும்பு கழ்ச்சிசால் மறையவர் குழாத்தினைப் பேணு கவென வேதம் அரும்பும் வாக்கிய முந்தொழில் ஆறினோர் அறையும் ஆசிக ளோங்கிப் பரம்ப வெண்ணுறூஉம் பெரியவ ரெண்ணமும் பாலிக் கநெடு மாலே! - குசே 21. சிறந்தமெய்ப் பொருளை அழிவிலா மணியைத் தெரிந்துமுக் காலமு முணர்ந்து துறந்தவ ரிதயா சனத்திருந் தவனைத் தொடரின்ப துன்பமற்ற றவனைப் பிறந்தபல் லுயிரின் மனத்தள வுறைந்து பிறப்பிறப் பென்றிலா தவனை மறந்தவர் கவர்க்கப் பதியையு மறந்து மண்ணினின் மதிமறந் தவரே. - சீறா 22. வானி ருந்தபதி புக்கு வானவரை வன்மை கொண்டுவரு மென்மகன் கோனி ருந்தகயி லாய மாமலை யெடுத்த தோள்வலி விடுக்கவோ! வேனி ருந்தவழி பனிபு குந்ததனை வெல்லு மென்பதுவு மொல்லுமோ? யானி ருந்தபதி யழியு மென்பதும் என்ன வோவதுமுன் எண்ணமோ! - விப 23. சேற்றில் நின்று வளர்ந்து நீரினிற் சேர்ந்தி ருப்பினுந் தாமரை சாற்று மோரள வுக்கு மீறிடத் தான ருந்துமோ நீரினை? சேற்றின் மூழ்கி யிருந்த போதிலும் சொற்ப மாகவே சுத்தமாய்ப் போற்றி யுண்ணுதல் வேண்டு மென்பதப் பூமு டித்தனள் பூவையே. - நாம 24. இப்பே ருலகத் தினில்மக் களர சில்லா நாடொன் றில்லாகத் தப்பா தெவரும் அவர்தம் உரிமை தகமக் கள்சரி நிகராக எப்போ துமுழைத் திட்டோய்! இனியிங் கெவரே யுன்போன் றவர்தானே! அப்பா கென்னடி! என்செய் கோசொல் லாயோ இனிவரு வாயோதான்! - உகெ இவ்வெழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் இருபத்து நான்கும் வெவ்வே றோசை யுடையவை. பனியால் நனைந்து வெயிலால் உலர்ந்து பசியா லலைந்து முலவா. என்னும்அரிச்சந்திரப் புராண விருத்தம் போன்றது - 17 ஆம் விருத்தம். ஆவியோ நிலையிற் கலங்கியது யாக்கை அகத்ததோ புறத்ததோ அறியேன். என்னும் வில்லி பாரத விருத்தம் போன்றது - 21வது விருத்தம். மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாத மேமனம் பாவித்தேன். என்னும் சுந்தரர் தேவாரம் போன்றது 23 ஆஞ்செய்யுள். ஒவ்வொரு விருத்தமும் மோனைத் தொடையெடுப்பின் படியே பதிக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள அட்டவணையில் மோனைத் தொடையமைப்பினை அறிக. பாட்டு - அடி - மோ. வ. சீ மோ. வர. வே. சீ. 1 - 1 - 1, 3, 5 - 1 - 2 - 1, 3, 5, 7 - 1-3-5-7 1 - 3 - 1, 3, 4, 5 - 1-5 1 - 4 - 1, 4, 5, 6 - 2 - 1 - 1, 2, 3, 5 - 1-3-5 2 - 3 - 1, 5 - 1-5 2 - 4 - 1, 3, 5, 6 - 3 - 1 - 1, 4, 5, 7 - 3 - 2, 3 - 1, 5 - 1-5 3 - 4 - 1, 5, 7 - 4 - 1 - 1, 5 - 1-3-5-7 4 - 2 - 1, 3, 5 - 1-5 4 - 3 - 1, 3, 5, 7 - 4 - 4 - 1, 5, 7 - 5 - 1 - 1, 2, 3, 4 - 5 - 2 - 1, 3, 5, 7 - 1-5 5 - 3, 4 - 1, 2, 5 - 6 - 1 - 1, 4, 6 - 6 - 2, 4 - 1, 2, 4 - 1-4 6 - 3 - 1, 4 7 - 1 - 1, 3, 4, 5, 6, 7 - 7 - 2, 3, 4 - 1, 5 - 1-5 8 - 1, 4 - 1, 5 - 1-5 8 - 2 - 1, 2, 3, 7 - 1-7 8 - 3 - 1, 3, 4, 7 9 - 1 - 1, 5, 6 - 9 - 2 - 1, 3, 4, 5 - 1-5 9 - 3 - 1, 3, 5 - 9 - 4 - 1, 4, 7 - 10 - 1 - 1, 2, 5, 6, 7 - 10 - 2, 3 - 1, 5 - 1-5 10 - 4 - 1, 5, 7 - 11 - 1, 2, 3 - 1, 5 - 11 - 4 - 1, 5, 7 - 1-5 12 - 1, 4 - 1, 5, 7 - 12 - 2 - 1, 2, 7 - 1-5-7 12 - 3 - 1, 5, 6, 7 - 1-5 13 - 1 - 1, 5, 6 - 13 - 2, 3 - 1, 5, 7 - 1-5-7 13 - 4 - 1, 5 - 1-5 14 - 1 - 1, 5 - 14 - 2 - 1, 3, 4, 5 - 1-5 14 - 3 - 1, 5, 6, 7 - 14 - 4 - 1, 3, 5 - 15 - 1, 3 - 1, 5 - 15 - 2 - 1, 5, 7 - 1-5 15 - 4 - 1, 2, 6 - 16 - 1, 4 - 1, 5 - 1-5-7 16 - 2, 3 - 1, 5, 7 - 1-5 17 - 1 - 1, 5 - 17 - 2 - 1, 3, 7 - 1-5 17 - 3 - 1, 4, 7 - 1-7 17 - 4 - 1, 5, 7 - 18 - 1, 2 - 1, 5 - 18 - 3 - 1, 3, 5 - 1-3-5 18 - 4 - 1, 5, 6 - 1-5 19 - 1 - 1, 5 - 19 - 2, 3 - 1, 7 - 1-5 19 - 4 - 1, 4, 7 - 1-7 20 - 1 - 1, 5, 7 - 20 - 2, 4 - 1, 5 - 1-5 20 - 3 - 1, 4, 5, 6 - 21 - 1, 3 - 1, 5 - 21 - 2 - 1, 5, 7 - 1-5 21 - 4 - 1, 4, 5, 7 - 22 - 1 - 1, 4, 5 - 22 - 3 - 1, 5, 7 - 22 - 4 - 1, 4, 5, 7 - 23 - 1, 2 - 1, 5 - 1-5-7 23 - 3, 4 - 1, 5, 7 - 1-5 24 - 1 - 1, 3, 5, 7 - 24 - 2 - 1, 5 - 1-3-5 24 - 3 - 1, 3, 4, 5 - 1-5 24 - 4 - 1, 5 பாட்டு 2. அடி 2 ல் மோனை அமையவில்லை பாட்டு 8. 2, 3 அடிகளில் 1-7 சீர்களில் மோனை அவ்வளவு எடுப்பாக இல்லை. பாட்டு 9. ஈற்றடியில் - முதல் நான்கு சீர் ஒரூஉ மோனை பெற்று, 5ஆம் சீர் வேறாக, 7ல் மோனை. பாட்டு 11. 5 - 7 சீர்கள் எதுகை நயம். பாட்டு 16. ஒருவகை எதுகை நயம் பாட்டு 18. 1, 3, 5 சீர்கள் நெடிலெடுப்போசை நயம். பாட்டு 22. 5, 7 சீர்கள் எதுகை நயம். 2 ஆம் அடியில் மோனை அமையவில்லை. பாட்டு 24, 22 போல 5, 7 சீர்கள் எதுகை நயம். அட்டவணையில் எடுத்துக் காட்டியுள்ள ஒவ்வொரு விருத்தத்தின் மோனையமைதியையும் நன்கு கவனித்துத் தெரிந்து கொள்ளுங்கள். எந்தெந்தச் சீர்களில் மோனை வரவேண்டுமோ, அவ்வாறு மோனை வந்துள்ள அடிகளை அம்மோனை எடுப்பில் எடுத்துப் படித்துப் பாருங்கள், மோனை அமைதியின் சிறப்பு விளங்கும். வரவேண்டிய சீர்களல்லாத சீர்களில் வந்துள்ள மோனையை, மோனை நயமாகக் கொள்க. எடுத்துக்காட்டாக, 10 ஆம் பாட்டின் அடிகளில் 1-5 சீர்களில் மோனை வரவேண்டும். அப்பாட்டின் முதலடியில், 1-5 , சீர்களில்லாமல் 2, 6, 7 சீர்களிலும் மோனை வந்துள்ளது. அவற்றை (2, 6, 7 மே னையை)மோனை நயமாகக் கொள்க என்றபடி. பயிற்சி 1. நான்காம் பாட்டின் அடிகள் ஐந்தாஞ்சீரிலும், ஐந்தாம் பாட்டின் அடிகள் நான்காஞ்சீரிலும் மடக்கிப் பதிப்பிக்கப் பட்டிருத்தலின் காரணமென்ன? 2. அவ்வாறு மடக்கிப் பதிக்கப்பட்டுள்ளன இடத்தில் என்ன செய்ய வேண்டும்? 3. வரவேண்டிய சீர்களல்லாத சீர்களில் வந்துள்ள மோனையை மோனை நயமாகக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டுத் தருக. 4. வரவேண்டிய சீர்களில் மோனைவராத அடி எவ்வாறு இருக்கும்? 5. (1) 2, 3, 4, 8, 9, 13, 14, 16, 18, 19, 20, 21, 22 விருத்தங்கள் உயிரெதுகை. (2) 1, 5, 7 விருத்தங்கள் என்ன எதுகை? (3) 6, 15 விருத்தங்கள் 23, 24 விருத்தங்கள் என்னென்ன எதுகை? (4) 10, 11, 12 விருத்தங்களின் எதுகையைப் புலப்படுத்துக. (5) விருத்தம் 17 என்ன எதுகை? அதன் எதுகையின் சிறப்பென்ன? (6) முதல் விருத்தத்தின் அடிமுதலெழுத்தை, ‘மை - மய்’ எனக் கொண்டால், அவ்வடிமோனையில் ஏற்படும் வேறுபாடென்ன? 6. இவ்விருத்தங்களைச் சேர்ந்த விருத்தங்களை அவ்வந் நூல்களில் படித்து மோனை வேறுபாட்டமைப்பினை அறிந்து கொள்ளுங்கள். 7. இவ்விருத்தங்கள் போல் வகைக்கொன்று பாடிப்பாருங்கள். 4. தொழிசை 1. மதுர மானமொழி பதர வாள்விழிசி வப்ப வாயிதழ்வெ ளுப்பவே அதர பானம்மது பான மாகவறி வழியு மாதர்கடை திறமினோ! - கலிங் 2. உபய தனமசையில் ஒடியு மிடைநடையை ஒழியு மொழியுமென ஒண்சிலம் பபய மபய மென அலற நடைபயிலும் அரிவை மீர்கடைகள் திறமினோ! - கலிங் 3. பொரிந்த காரை கரிந்த சூரை புகைந்த வீரை யெரிந்தவேய் உரிந்த பாரை எரிந்த பாலை உலர்ந்த வோமை கலந்தவே. - கலிங் 4. மருப்பொடு மருப்பெதிர் பொருப்பிவை யெனபொரு மதக்கரி மருப்பி னிடையே நெருப்பொடு நெருப்பெதிர் சுடப்பொறி தெறித்தெழ நிழற்கொடி தழற்க துவவே. - கலிங் 5. எங்குமுள மென்கதலி எங்குமுள தண்கமுகம் எங்குமுள பொங்கு மிளநீர் எங்குமுள பைங்குமிழ்கள் எங்குமுள செங்குமுதம் எங்குமுள செங்க யல்களே! - கலிங் 6. பிறைப்பெ ரும்பணை வேழ முன்பொடு பின்து ணிந்துத ரைப்படும் குறைத்த லைத்துணி கொல்லன் எஃகெறி கூட மொத்தமை காண்மினோ! - கலிங் 7. குறுமோ டீநெடு நிணமா லாய்குடை கலதீ கூரெயி றீநீலீ மறிமா டீகுதிர் வயிறீ கூழட வாரீர் கூழட வாரீரே! - கலிங் 8. மதுர வாரிதி மறுக வாசுகி வளைய மேருவில் வடமுகச் சிகர சீகர அருவி நீரர மகளிர் நீர்கடை திறமினோ! - தக் 9. யாமு மிமையவர் தாமும் வெருவர ஈம வெரியிர வெரிதொறும் தாமு மெரிவன போல எரிவன தாப மிலசில தீபமே. - தக் 10. மிசைபெ றாதுகுற ளான கூளிகளும் விம்மி யுள்ளதிசை செம்மியே திசைபெ றாதுஅடி யாத பாரிடமும் உடைய ளுலகுடை செல்வியே. - தக் 11. விதிநன் கமைந்து வழிபாடு செய்து மடவா யமாகி மிடையும் பதினெண் கணத்து மடவா ருமன்னை முனிவா றுமாறு பகர்வார். - தக் 12. இப்படை யோடுமையன் மகரால யத்தில் இரவிபோ லெழுந்த ருளுமென் றப்படை யோடுநின்ற சுரர்சென்று தங்கள் அரசற் கிசைத்த பொழுதே. - தக் 13. கொண்ட திருக்கோ லங்க ளிருக்கும் படியடி யோமே கூடவிருப்போம் அண்ட மனைத்துஞ் சூழ வரும்பே ராழிக ளாமே யாழியவர்க்கே. - தக் 14. மைந்து கூர்நில நீர்நெ ருப்பு வழங்கு மாருத மாகமென் றைந்து பூதமும் உண்ண வுண்ண அடுங்க ளோடு மிடுங்களே. - தக் 15. வைய முழுதும் படைத்தளிக் கின்ற மகாசத்தி தன்புகழ் வாழ்த்துகின்றோம் செய்யும் வினைக ளனைத்திலும் வெற்றி சேர்ந்திட நல்லருள் செய்கவென்றே. -பார 16. தமிழா உனக்கிது தருணம் வாய்த்தது தரணிக் கெல்லாம் வழிகாட்ட அமுதாம் என்மொழி அறமே என்வழி அன்பே உயிர்நிலை என்றுசொலும். -நாம இவ்வெழுசீரடித் தாழிசைகள் பதினாறும் வெவ்வேறோசை யுடையவை. தாழிசை 12-7 ஆம் விருத்தம் போன்றது. தாழிசை 16-24 ஆம் விருத்தம் போன்றது. பாட்டு - அடி - மோ. வ. சீ மோ. வ.வே. சீ. 1 - 1 - 1, 2, 4, 5, 6 - 1 - 2 - 1, 4, 5 - 1-5 2 - 1 - 1, 3, 5, 6, 7 - 2 - 2 - 1, 2, 3, 5 - 1-3-5 3 - 1 - 1, 5 - 3 - 2 - 1, 5, 6 - 1-5 4 - 1 - 1, 2, 5, 6 - 4 - 2 - 1, 2, 5 - 1-5 5 - 1 - 1, 3, 5, 7 - 5 - 2 - 1, 3, 5 - 1-3-5 6 - 1 - 1, 5 - 6 - 2 - 1, 3, 5 - 1-5 7 - 1 - 1, 6 - 7 - 2 - 1, 3, 5, 7 - 1-5 8 - 1 - 1, 2, 3, 4, 5, 7 - 8 - 2 - 1, 2, 7 - 1-5 9 - 1 - 1, 2, 5, 6, 7 - 9 - 2 - 1, 5 - 1-5 10 - 1 - 1, 5 - 10 - 2 - 1, 7 - 1-5 11 - 1, 2 - 1, 7 - 1-7 12 - 1 - 1, 5, 6 - 12 - 2 - 1, 5 - 1-5 13 - 1 - 1, 7 - 1-5-7 13 - 2 - 1, 2, 3, 6, 7 - 1-7 14 - 1 - 1, 5, 6, 7 - 14 - 2 - 1, 5 - 1-5 15 - 1, 2 - 1, 5, 7 - 1-5-7 16 - 1, 2 - 1, 3, 5 - 1-3-5 தாழிசைகள் ஒவ்வொன்றும் மோனைத்தொடை எடுப்பின் படியே பதிக்கப்பட்டுள்ளது. அட்டவணையைப் பார்த்து மோனை அமைப்பினை அறிந்து கொள்க. பாட்டு அடி 1 1 1-3, 5-7 எதுகை நயம் 1 2 2-3 மோனை, எதுகை நயம். 2 1 3-4, 5-6 எதுகை. 2 2 1-2 எதுகை. 3 - ஒருவகை எதுகை நயம். 4 - ஒருவகை எதுகை எடுப்பு நயம். 5 - ஒருவகை எதுகை நயம். 7 - ஒருவகை நெட்டோசை நயம். 8 2 ஒருவகை எதுகை அமைப்பு. 9 - ஒருவகை எதுகை அமைப்பு. 10 2 மோனை சரியாக இல்லை. இன்னொரு முறை கவனித்துப் படித்து மோனை எதுகைத் தொடையமைப்பினை நன்கு அறிந்து கொள்ளுங்கள். பயிற்சி 1. 3, 8 தாழிசைகள் போல ஒவ்வொரு விருத்தம் பாடுக. 2. ஏழாவது விருத்தத்தை இரண்டு தாழிசைகளாக்க ஏதாவது செய்ய வேண்டுமா? 3. 9 ஆம் விருத்தத்தின் முதலிரண்டடியைத் தாழிசையாக்குக. 4. இத்தாழிசைகளின் அடியெதுகைகளை வகைப்படுத்துக. 5. இத்தாழிசைகளோடு சேர்ந்த தாழிசைகளை அவ்வந் நூல்களிற் படித்தின்புறுக. 5. எண்சீரடி விருத்தம் 1. வானார்க மழ்மதுவுஞ் சாந்து மேந்தி மதுத்துளித்து வண்டுஞ் சுரும்பு மூசுந் தேனார்பூங் கோதாய்! நினக்குக் காமன் சிலையிரண்டுஞ் செவ்வனே கோலித் தந்தான்! தானாரப் பண்ணித் தடறு நீக்கித் தண்குருதி தோய்த்துத் தகைமை சான்ற ஊனார்ந்த வோரிணை யம்புந் தந்தான் என்னை யுளனாக வேண்டி னானே. - சிந் 2. செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்துதும்பி மொய்ம்புறும் சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய் ஒற்றைச்சேர் முற்றக்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக் கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகவிறையைப் பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக் கதுக்கமும் பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய் தவனதிடம் கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக் காணாதாரே சேரா மெய்க் கழுமல வளநகரே. - சம் 3. விரிகதிர் ஞாயி றல்லர் மதியல்லர் வேத விதியல்லர் மண்ணு நிலனும் திரிதரு வாயு வல்லர் செறுதீயு மல்லர் தெளிநீரு மல்லர் தெரியில், அரிதரு கண்ணி யாளை ஒருபாக மாக அருள்கா ரணத்தில் வருவார், எரியர வார மார்பர் இமையாரு மல்லர் இமைப்பாரு மல்லர் இவரே. - அப் 4. திங்க ணம்பி முடிமே லடியார்பால் சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கெல்லாம் அங்க ணம்பி அருள்மால் விசும்பாளும் அமரர் நம்பி குமரன் முதற்றேவர் தங்க ணம்பி தவத்துக் கொருநம்பி தாதை யென்றுன் சரணம் பணிந்தேத்தும் எங்க ணம்பி எனையா ளுடைநம்பி எழுபி றப்பும் எங்கள் நம்பிகண்டாயே. - சுந் 5. போற்றியென் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் றிருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் றிருவடி தொழுகோம் சேற்றிதழக் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! ஏற்றுயர் கொடியுடை யாயெனை யுடையாய்! எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! -திவா 6. துப்புடை யாயர்கள்தம் சொல்வழு வாதொருகால் தூய கருங்குழல்நல் தோகை மயிலனைய நப்பினை தன்திறமா நல்விடை யேழவிய நல்ல திறனுடைய நாதனு மானவனே! தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டியஎன் அப்ப! வெனக்கொருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே! ஆடுக செங்கீரை! - நாலா 7. அரவ ணையாய் ஆய ரேறே! அம்மம் உண்ணத் துயிலெ ழாயே! இரவு முண்ணா துறங்கி நீபோய் இன்று முச்சி கொண்ட தாலோ வரவுங் காணாய் வயிற சைந்தாய் வனவி ணைகள் சோர்ந்து பாயத் திருவு டைய வாய்ம டுத்துத் திளைத்து தைத்துப் பருகி டாயே. - நாலா 8. திருமடந்தை மண்மடந்தை இருபாலுந் திகழத் தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும் அருணடந்திவ் வேழுலகத் தவர்பணிய வானோர் அமர்ந்தேத்த இருந்தவிடம் பெரும்புகழ்வே தியர்வாழ் தருமிடங்கள் மலர்கள்மிகு கைதைகள் செங் கழுநீர் தாமரைகள் தடங்கடொறும் இடங்கடொறுந் திகழ அருவிடங்கள் பொழில்தழுவி எழில்திகழு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே! - நாலா 9. தளையவிழ் கோதை மாலை இருபால் தயங்க எரிகான் றிரண்டு தறுகண் அளவழ வெம்மை மிக்க அரியாகி அன்று பெரியோன் சினங்க ளவிழ வளையுகி ராளி மொய்ம்பின் மறவோன தாக மதியாது சென்றோர் உகிரால் பிளவெழ விட்ட குட்ட மதுவைய மூடு பெருநீரின் மும்மை பெரிதே! - நாலா 10. திருவாடிப் பூரத்துக் கெத்துதித்தான் வாழியே திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வழியே உயரரங்கற் கேகண்ணி உகந்தளித்தாள் வாழியே மருவாருந் திருமல்லி நளநாடி வாழியே வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே! - நாலா (அப்பிள்ளை) 11. வல்லி வரம்பில்லா மாயவினை தன்னால் மயங்கின ரோடெய்தி மதிமயங்கி மேனாள் அல்லை யிறையவனீ ஆதியெனப் பேதுற் றலமரு வேமுன்னை யறப்பயனுண் டாக எல்லை வலயங்கள் நின்னுழையென் றந்நாள் எரியோனைத் தீண்ட வெழுவரென நின்ற தொல்லை முதன்முனிவர் சூழுற்ற போதே தொகைநின்ற ஐயந் துடைத்திலையோ எந்தாய்! - கம் 12. கதையொடு பனைக்கை வீசி யெதிர்வரு கடகரி யினெற்றி யோடை யணியொடு புதைபட வடித்து மீள விசையொடு புரவியி ரதத்தின் மீது குதிகொள இதயம லர்செற்ற மூள விவனவ னெதிர்சிலை வளைத்து வாளி நிரைபட உதையவு தைபட்ட வாளி தனதுகை உயர்கதை புடைத்து வீழ முளியவே. - வில் 13. அரவு யர்த்தவன் மதலையொ டடலுடை அரசர் புத்திர ரனைவரு மெழுபரி இரவி பொற்கதிர் தெறிதலின் இரிதரும் இருளெ னத்திசை திசைதொறு முதுகிட உரனு டைப்பணை முழவுறழ் திணிபுயன் ஒருச மர்த்தனு மொருதனி யிரதமும் விரவு முற்பொரு களமழ குறும்வகை விறல்வ யப்புலி யெனவெதிர் முடுகவே. - வில் 14. ஏறி யிட்டவன் விரைந்துரத முங்கடவி ஏக லுற்றிபி னியம்பல தழங்கியெழ வேறு பட்டம ருடைந்தவர் களுந்திருகி மேலி டச்சகுனி யுந்தின கரன்சுதனும் ஆறி யிட்டரத குஞ்சர துரங்கமும் ஆக விப்படி பொரும்படையொ டன்றுநனி சூறி யிட்டனன் வலம்புரி யலங்கல்புனை தோளி லெப்புவன முந்தனி சுமந்தவனே. - வில் 15. பணைத்திரு புயக்கிரி வளர மாற்றலர் பயப்பட வயப்படு பயமில் நூற்றுவர் துணைப்பெற மனச்சின முடுக நாக்கொடு சுழற்றுக ணெருப்பெழ நிருதர் பார்த்திவன் இணைப்பிறை எயிற்றிள நிலவி னாற்செறி இருட்கிழி தரப்பகை முனையி லேற்குமுன் அணைத்திரு புயத்தினும் வருமி ராக்கதர் அதிர்த்தன ரெதிர்த்தனர் அமரை நோக்கியே. - வில் 16. முரசு கரடிகை கிணைதுடி பெருமரம் முருடு படுபறை முதலிய கருவிகள் அரச வரிவளை கொடுவயி ரெழுகுழல் அரவ விருதுகள் முதலிய கருவிகள் உரைசெய் கருவிகள் முழுவது மெழுவகை உலக முடிவுற உகவிறு தியிலெழு கரைசெய் கடலென வெறிவளி யெனமிசை கஞலி யுருமெறி கனமென அதிரவே. -வில் 17. வஞ்சிம துரைபு காருடை யான்வட மண்டலி கர்திறை வாரிய நேரியன் விஞ்சிமு னைதொறும் வாளசு ரேசரை வென்ற பொழுதடல் வானவர் கோனருள் நஞ்சுபொ ழியெரி காலொரு கோல்கொடு நம்பர் சிலைமலை போலவ னேறிய குஞ்சர மும்விழ மாகதர் கோனுயிர் கொண்டு திருகினன் வார்சிலை கோலியே. - வில் 18. தருமன்மைந் தன்பருதி புதல்வனைக் குறுகியிரு சரமவன் செங்கைவரி சிலைதுணித் திடவுமெதிர் இருசரந் துன்றியுயர் கொடியறுத் திடவுமுடன் இருசரஞ் சென்றுதனி யிரதமொட் டிடறிடவும் ஒருசரம் பொங்குதிறல் வலவன்மெய் புதைதரவும் ஒருசரந் திண்கவன துரகதத் துரனுறவும் வரமிகுந் துங்கதனு வினைவளைத் தெரிகொள்சில வடிசரங் கொண்டவன திருபுயத் தெழுதினனே. -வில் 19. மகபதி மைந்தனை மீளவுந் தினகரன் மகனுயிர் கொண்டிட வேணுமென் றுறுசினம் மிகமிக வன்சிலை கோலியொண் கிரிபல மிடைவனம் வெந்திட ஓடியந் தரமிசை புகைகது வும்படி சீறிவெம் பொறிவிடு புரிதழன் மண்டிய நாளிலம் பெனவரும் இகலுடை வெம்பகு வாய்களைந் துடையதொர் எழில்கொள்பு யங்கனை யேவவென் றுசவியே. -வில் 20. நடையொழி யாதோன் விறற்கு மாரனும் நயனமி லாதோன் முதற்கு மாரனும் அடலொடு கார்வா னிடிக்கு மாறென அதிர்வுற வேயோ டிமத்த வாரணம் விடையரி மாவே றெனப்பிர தாபமும் விசயமு மேன்மேல் மிகுத்து மேவிடு கடையுக நீள்வா யுவொத்து நீடிய கதைகெழு போரா தரித்து மூளவே. - வில் 21. வெஞ்சிலை விதுர னவனு நீவிரும் மிஞ்சிய புனல்கள் படிய வேகினிர் பஞ்சவர் களொடு வயிரி யாரொடு பண்பற வினைசெய் சமர பூமியில் வஞ்சனை வழியி லொழிய நேர்பட வன்பொடு மறமு மறம தாம்வகை எஞ்சிய பதினெண் வகைகொள் நாளினும் இன்றமர் பொருத துரக கேதுவே. -வில் 22. ஆன கமலமலர் வாவியிடை யேமுழுகி ஆவி யுதவுமறை யோகபர னாகிமொழி மான கவசவர ராசதுரி யோதனனை வாயு குமரன்முதிர் போரிலெதிர் வீழும்வகை தான கரடகரி மாவையரி மாபொருத தாய மெனவுழறி னானெனுமுன் வேதமுனி ஞான சரிதகுரு வாகியது ரோணன்மகன் நாடு களமணுகி னானொருவி நாழிகையில். -வில் 23. உரகது வசனயர் கின்ற வாவியின் உணர்வொடு துயில்வது கண்டு பேருடல் கரதல மலர்மிசை கொண்டு வார்புனல் கலுழ்தரு விழியினன் அன்பி னாலமர் பொருகள னிடைதன தந்தை வீடிய பொழுதினு மனமிக நொந்து ளானுயிர் சுரர்களு முருகஇ ரங்கி னான்வரி தொடுசிலை விசயது ரங்க தாமனே. -வில் 24. அருளுற வழக்கழி வுறாததோர் மாற்றமும் அறலுட னழுக்கறா தணுகுறா வேற்றமும் இருநில மதித்திட வினிதுகோ லோச்சுதல் இயல்புநி ருபர்க்கெனு முறைமையே பார்த்திலை நரைகெழு முடித்தலை யென்பிதா மீப்படு நதிமகன் முறித்தவில் விதுரனே போற்பல குரவரு முரைத்தசொல் உறுதிநீ கேட்டிலை குருமரபி னுக்கொரு திலகமா மூர்த்தியே! -வில் 25. வயிரஞ் செறிதரு மனனும் வாய்மையும் வலியும் பொருபடை வினையும் மேல்வரும் செயிருந் திகழ்தரு குருகுல மகிபதி திறல்வெஞ் செருமுனை யதனின் மேதகும் அயிர்நுண் குழலர மடநல் லார்பலர் அளிகொண் டெதிர்கொள அமர னானபின் உயிர்கொண்ட டதுசுர ருறையும் வானுல குடல்கொண்ட டதுதன துடைய பூமியே. -வில் 26. பூசுரர் பெருந்தகை பரித்தா மாவிரியல் போனகிரு பன்கிரு தவன்மன் மூவருமுன் வாசவன் விரிஞ்சன் உமைபாக னிவர்முதல வானவர் வழங்கிய விதப்போர் வாளிகளில் ஆசுகன் மகன்தனை யுமப்போ தேதுணைவ ரானவரை யுந்தலைது ணிப்பமென நாடியவர் பாசறைபு குந்தனர் பரித்தேரி யானையொடு பாரதமு டிந்தப தினெட்டா நாளிரவே. -வில். 27. மற்றத் திருப்பதி வைகு நாளில் வாக்கின் பெருவிறல் மன்ன ரார்தாம் புற்றிடங் கொண்டாரை வந்தி றைஞ்சிப் பொன்மதி லாரூர் புகழ்ந்து போற்றி சிற்றிடைப் பொற்றொடி பங்கர் தங்கும் திருப்புக லூர்தொழச் சிந்தை செய்து கொற்றவ னாரருள் பெற்ற தொண்டர் குழாத்தி னுடனவ்வூர் குறுக வந்தார். - பெரி 28. மணமே தருபால் பெறுமா றழமா மகனார் முனியாம் வறியோம் அறியோம் உணவே இனிதாம் அவைதாம் இவர்காண் உடைய ரெனவாழ் விடையா னெதிரே துணர்மே லெழுவெங் கனல்தங் கிநடுத் துஞ்சுந் தொழில்தஞ் செனநஞ் சமுதக் கணமே இறையான் இறைபால் அலையுங் கடல்பெற் றதுகண் டுகளித் திடுவான். -கோயி 29. அன்ன காலையி லெம்பெரு மாட்டி ஆழி யம்படை யண்ணலை நோக்கி என்னை நீயிவ ணவமதித் தனையால் என்பி ராற்குநீ யன்புளன் என்றால் முன்ன நீபெறு மதலையும் ஐயன் முனிவின் ஒல்லையின் முடிந்திட என்னாப் பன்ன ருங்கொடு மொழிதனை இயம்பிப் பராப ரன்றனை நோக்கியே பகர்வாள். - கந் 30. ஆதரஞ்சேர் குறுமுனியு மெனையொன் றாக்கி அருள்செய்தாய் அருள்செய்த படியே செய்வல் ஓதருந்தென் பூமிதமிழ்ப் பூமி யென்பார் ஒண்டமிழிற் குரியவெலாம் அடிமைக் கிங்கே போதமுற வறிவித்தல் வேண்டு மென்று போற்றுங்கால் எழுத்துச்சொற் பொருள்மூன் றான நீதியுடைச் சூத்திரங்கள் அறியும் வண்ணம் நெறியின்க ணறிவித்தாய் நேசங் கூர்ந்தே. - பதி 31. அன்னை யெத்தனை யெத்தனை அன்னையோ அப்ப னெத்தனை யெத்தனை அப்பனோ பின்னை யெத்தனை யெத்தனை பெண்டிரோ பிள்ளை யெத்தனை யெத்தனை பிள்ளையோ முன்னை யெத்தனை யெத்தனை சென்மமோ மூட னாயடி யேனு மறிந்திலேன் இன்னு மெத்தனை யெத்தனை சென்மமோ என்செய் வேன்கச்சி யேகம்ப நாதனே. -பபா 32. சென்றணையு நிழல்போலச் சிவனிற்ப னென்னில் சென்றணையு மவன்முதலி சிவத்தையணைந் தொன்றாய் நின்றதுயிர் கெட்டென்னின் கெட்டதணை வின்றாம் நின்றதேற் கேடில்லை அணைந்துகெட்ட தென்னில் பொன்றினதேல் முத்தியினைப் பெற்றவரார் புகல்நீ பொன்றுவதே மித்தியெனில் புருடனித்த னன்றாம் ஒன்றியிடு நீரொடுநீர் சேர்ந்தாற்போல் என்னின் ஒருபொருளா மதிபதியோ டுயிர்பொருளொன் றன்றே. - சிசி 33. பத்துக்கொண் டனதிக்கும் பதறிப்போ யுலையப் பைம்பொற்றா ரகைசிந்தப் பகிரண்டத் திடைநீள் மத்துக் கொண் டுமதிக்குந் திரையாழி நெடுமால் வடிவாகிப் புவிகைக்கொண் டருள்மானா பரணா! முத்துப்பந் தரினிற்குங் குருளைக்குஞ் சினவேல் முருகற்கும் பொதிகைக்கோ முனிவர்க்குஞ் சடிலக் கொத்தற்கும் பதுமக்கொத் தயனுக்கும் அலதி கூழைத்தண் டமிழுக்கென் கொடியுங்கா ளமுமே. -தனி 34. அடல்கொண்டெழு சூலப்படை யாரூர்ப்பெரு மானார் ஐயம்பக ரென்றேயெம தகவாசலில் வந்தார்; கடுகும்படி சென்றேபலி கொண்டேயெதிர் நின்றேன் கைவந்தன மென்றாரிது கைவந்தனம் என்றேன்; மடவன்னம தென்றாரிது மடவன்னம தென்றேன்; வல்லோதன மென்றாரிது வல்லோதன மென்றேன்; கொடுவந்தன மென்றாரிது கொடுவந்தன மென்றேன் கொள்ளார்பலி சொல்லாரவர் கோட்பாடறி யேனே! -தனி 35. கயக்காவி நாறுங் கொழும்பிற்பிர சண்டா! காரார்கொ டைச்செங்கை யாரோதன் மைந்தா! இயக்காநின் மார்பிற் செழும்புன்னை யந்தார் இப்போது நீநல்கின் என்பேதை மார்பில் சயக்காம வேளம்பு தையாது முத்தின் தாமஞ் சுடாசந் தனம்பூசி னாலும் தியக்காது வேயுஞ் செவிக்கும் பொறுக்கும் தீயென்ன மீளாது திங்கட் கொழுந்தே. -தனி 36. விக்கா வுக்கா வித்தா விப்போய் விட்டார் நட்டார் சுட்டூர் புக்கார் இக்கா யத்தா சைப்பா டுற்றே இல்தே டிப்போய் வைப்பீர் நிற்பீர்! அக்கா டப்பேய் தொக்கா டச்சூ ழப்பா டத்தீ வெப்பா டப்பூண் நெக்கா டக்கா னத்தா டப்போம் நெய்த்தா னத்தா னைச்சே வித்தே. -தனி 37. இடுக்கட் புண்படு நிரப்புக் கொண்டுழன்று இரக்கச் சென்றவின் றெனக்குச் சிங்களந் திடுக்குற் றஞ்சும்வெஞ் சினத்துச் செம்பியன் திருக்கைப் பங்கயஞ் சிறக்கத் தந்தன படுக்கக் கம்பளம் பரக்கக் குங்குமம் பதிக்கக் கங்கணம் பரிக்கக் குஞ்சரம் கடுக்கக் குண்டலங் கவிக்கச் சங்கினம் கவிக்குப் பஞ்சரங் கவிக்கத் தொங்கலே! -தனி 38. ஆதியந்தங் காட்டாத முதலா யெம்மை அடிமைக்கா வளர்த்தெடுத்த அன்னை போல நீதிபெருங் குருவாகி மனவாக் கெட்டா நிச்சயமாய்ச் சொச்சமதாய் நிமல மாகி வாதமிடுஞ் சமயநெறிக் கரிய தாகி மௌனத்தோர் பால்வெளியாய் மயங்கா நின்ற சோதியைஎன் னுயிர்த்துணையை நாடிக் கண்ணீர் சொரியவிரு கரங்குவித்துத் தொழுதல் செய்வாம். - அரு 39. ஆனந்தக் கூத்தனை யம்பலத் தானை அற்புதத் தேனைஎம் மாதிப் பிரானை தேனந்தக் கொன்றையஞ் செஞ்சடை யானைச் செங்கண் விடையனை எங்கண் மணியை மோனந்தத் தார்பெறுந் தானந்தத் தானை முத்தினை முத்தியின் வித்திளை முத்தை ஈனந்தக் காதெனை ஏற்றுக்கொண் டானை இன்றை யிரவி லெதிர்ந்துகொள் வேனே. -அரு 40. கலிமிகு கணபதி சரணஞ் சரணம் கசமுக குணபதி சரணஞ் சரணம் தலைவனி னிணையடி சரணஞ் சரணம் சரவண பவகுக சரணஞ் சரணம் சிலைமலை யுடையவ சரணஞ் சரணம் சிவசிவ சிவசிவ சரணஞ் சரணம் உலைவறும் ஒருபரை சரணஞ் சரணம் உமைசிவை யம்பிகை சரணஞ் சரணம். -அரு 41. தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றக் கூட்டிச் சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே தனித்தநறுந் தேன்பெய்து பசுப்பாலுந் தெங்கின் தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி இனித்தநறு நெய்யளைந்தே இளஞ்சூட்டி னிறக்கி எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே! அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே! அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே! - அரு 42. கனிவு றாமனங் கனிய நின்பெருங் கருணை தந்தவா போற்றி நாயினேன் இனிய பாடலால் களவி னீசனென்று ஏத்த நாத்தரும் இறைவ போற்றிவான் பனிநி லாவுடன் கங்கை துன்றுசெம் பவள வார்சடைப் பரம போற்றிவில் குனிவு றாமுனம் புரமெ ரித்திடக் குருத்த வாள்நகைக் குழக போற்றியே. -திப 43. பேசவந்த தூதசெல் லரித்தவோலை செல்லுமோ? பெருவரங்கள் அருளரங்கர் பின்னைகேள் வர்தாளிலே பாசம்வைத்த மறவர்பெண்ணை நேசம்வைத்து முன்னரே பட்டமன்னர் பட்டதெங்கள் பதிபுகுந்து பாரடா! வாசலுக் கிடும்படல் கவித்துவந்த கவிகையே மகுடகோடி தினையளக்க வைத்தகாலும் நாழியும் வீசுசாம ரங்குடில் தொடுத்தகற்றை புறமெலாம் வேலியிட்ட தவர்களிட்ட வில்லுமவாளும் வேலுமே! - திக 44. மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம் மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்\ தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம் தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம் சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம் சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம் வனந்தேடுங் குறவருடைய வள்ளி பங்கள் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நேஞ்சே! -உல 45. கடாமுமிழ் கைக்கதக் கிம்புரிக் கோட்டொரு கடாசல மிட்டமெய்க் கஞ்சுகிக் கேற்பவோர் படாமணி மத்தகத் தந்தியைத் தீர்த்தர்கள் பராவரு கற்பகக் கன்றினைப் போற்றுதும் வடாதுபொ ருப்பினில் துன்றுபுத் தேட்கெதிர் மனோலய முற்றமெய்ப் பண்பினைக் காட்டிய சடானன னைத்தலைச் சங்கம்வைத் தாற்றிய சடாயுபு ரத்தருட் கந்தனைக் காக்கவே. -முத் 46. துன்ப மிலாத நிலையே சத்தி தூக்க மிலாக்கண் விழிப்பே சத்தி அன்பு கனிந்த கனிவே சத்தி ஆண்மை நிறைந்த நிறைவே சத்தி இன்ப முதிர்ந்த முதிர்வே சத்தி எண்ணத் திருக்கு மெரியே சத்தி முன்புநிற் கின்ற தொழிலே சத்தி முத்தி நிலையின் முடிவே சத்தி. - பாரா இவ்வெண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் நாற்பத்தாறும் வெவ்வே றோசை யுடையவை. ஓசையோடு படித்துப் பாருங்கள். இன்னும் வேறுபட்ட ஓசையுடையவை இருக்கினும் இருக்கலாம். காண முயலுங்கள். ஓசை வேறுபாடுடைய பதினான்கு வகைக் கவித்துறைகளை ஆக்கிச் சிறப்பித்த சம்பந்தரின் நாவண்ணம் அங்குக் கண்டோம்; அவ்வாறே பதினைந்து வகை எண்சீரடி விருத்தங்களை ஆக்கிச் சிறப்பித்த வில்லியின் பாவண்ணம் இங்குக் கண்டோம். அங்கு இங்கும் இவ்விருவரின் வண்ணத்திறமும் மற்றவர்க்கு இடந்தந்தது போக இவ்வளவிற்றென்க. 19, 24, 45 ஆகிய மூன்று விருத்தமும் ஒருவகை யானவையே. 19 ஒழுகிய ஓசையுடைய 24, 3-7 சீர்கள், ஈற்றசை நீட்ட மாகவும், 4-6 சீர்கள், முதலசை நீட்டமாகவும் அமைந்து, ஓசை வேறுபட்டது. 45 2-3-4 சீர்களும் 6-7-8 சீர்களும் நடுச்சீர் மெலிந்ததும், இரு புடையும் வலிந்ததும் ஓசை நயமூட்டி வேறுபடுத்தன. 33, 34 ஆகிய இரண்டும் ஒருபுடை ஒப்புமையுடையவையே. 33 அறுத்திசை யுடையது. 34 - ஒழுகிசையுடையது. 29 ஆம் விருத்தம், ‘இரும்பைக் காய்ச்சி யுருக்கிடு வீரே’ என்னும் பாரதியார் பாடல் போன்றது. 30 ஆம் விருத்தம், நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம். - அப் அரியானை யந்தணர்தஞ் சிந்தை யானை. - அப் நீலநெடுங் கிரியுமழை முகிலும் பௌவ நெடுநீருங் காயாவும் நிகர்க்கும் இந்த - வில் என்ற விருத்தங்களைப் போன்றது. 32 ஆம் விருத்தம் தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன். -சுந் என்னும் பாடல் போன்றது. அப்பாடல்களோடு ஒப்பிட்டுப் படித்துப் பாருங்கள். மற்ற விருத்தங்களுக்கும் ஒப்புக்கொண்டு படித்தின்புறுங்கள். மோனைத் தொடை யமைப்பினை நோக்குக. பாட்டு - அடி - மோ. வ. சீ. மோ. வர.வே. சீ 1 - 1 - 1, 2, 5, 6 - 1 - 2 - 1, 5, 6 - 1-3-5-7 1 - 3 - 1, 3, 5, 7, 8 - 1-5 1 - 4 - 1, 2, 6 2 - 1, 2, 3 - 1, 3, 5, 7 - 2 - 4 - 1, 3, 4, 5, 7 - 1-3-5-7 3 - 1 - 1, 5, 6 - 1-4-6-8 3 - 2, 4 - 1, 4, 6, 8 - 1-5-6 3 - 3 - 1, 3, 5, 6 - 1-6 4 - 1 - 1, 5 - 4 - 2 - 1, 3, 5 - 1-3-5-7 4 - 3, 4 - 1, 3, 5, 7 - 1-5 5 - 1 - 1, 4, 5, 6 - 5 - 2 - 1, 3, 5 - 1-5-7 5 - 3, 4 - 1, 5, 7 - 6 - 1, 2, 3, 4 - 1, 3, 5, 7 - 1-3-5-7 7 - 1 - 1, 3, 5, 8 - 1-3-5 7 - 2, 4 - 1, 5 - 1-5 7 - 3 - 1, 3, 5 - 8 - 1 - 1, 4, 5 - 8 - 2 - 1, 3, 5 - 1-5 8 - 3 - 1, 5, 6 - 8 - 4 - 1, 5 - 9 - 1 - 1, 5, 8 - 9 - 2 - 1, 4, 5, 8 - 1-4-8 9 - 3 - 1, 4, 6 - 1-6-8 9 - 4 - 1, 6, 8 - 10 - 1 - 1, 3, 5, 7 - 10 - 2 - 1, 2, 3, 5, 7 - 10 - 3 - 4, 5, 7 - 1-3-5-7 10 - 4 - 1, 3, 4, 5, 7, 8 - 11 - 1 - 1, 2, 3, 5, 7 - 11 - 2 - 1, 3, 5, 7, 8 - 1-3-5-7 11 - 3 - 1, 5, 7 - 1-5-7 11 - 4 - 1, 3, 5, 7 - 12 - 1, 2, 3, 4 - 1, 5 - 1-5 13 - 1 - 1, 2, 4, 5, 7 - 13 - 2 - 1, 4, 5 - 13 - 3 - 1, 5, 7 - 1-5 13 - 4 - 1, 5 - 14 - 1 - 1, 2, 5, 7 - 14 - 2 - 1, 5 - 1-5-8 14 - 1, 4 - 1, 5, 8 - 1-5 15 - 1, 4 - 1, 5, 7 - 15 - 2 - 1, 5 - 1-5-7 15 - 3 - 1, 2, 5, 8 - 1-5 16 - 1, 3 - 1, 5, 7 - 1-5-7 16 - 2 - 1, 5 - 1-5 16 - 3 - 1, 2, 5, 7 - 17 - 1 - 1, 5, 7 - 17 - 2, 3 - 1, 5 - 1-5 17 - 4 - 1, 4, 5, 8 - 18 - 1, 4 - 1, 5 - 18 - 2 - 1, 4, 5, 7, 8 - 1-5 18 - 3 - 1, 5, 8 - 19 - 1, 2 - 1, 5 - 19 - 3 - 1, 4, 5 - 1-5 19 - 4 - 1, 5, 7 - 20 - 1, 2, 4 - 1, 5 - 20 - 3 - 1, 5, 7 - 1-5 21 - 1 - 1, 2, 5 - 21 - 2, 4 - 1, 5 - 1-5 21 - 3 - 1, 2, 5, 6 - 22 - 1 - 1, 5, 8 - 22 - 2, 3 - 1, 5 - 1-5 22 - 4 - 1, 5, 7, 8 - 23 - 1, 2, 3, 4 - 1, 5 - 1-5 24 - 1 - 1, 5, 6, 7 - 24 - 2 - 1, 3, 5 - 1-4 24 - 3, 4 - 1, 5 25 - 1 - 1, 3, 4, 5 - 25 - 2 - 1, 2, 5, 6 - 25 - 3 - 1, 4, 6, 7, 8 - 1-5 25 - 4 - 1, 3, 5, 7 - 26 - 1, 3 - 1, 5 - 26 - 2 - 1, 3, 5, 6, 8 - 1-5 26 - 4 - 1, 3, 5 - 27 - 1 - 1, 3, 5, 7 - 27 - 2, 3 - 1, 5, 7, 8 - 1-3-5-7 27 - 4 - 1, 5, 7 - 1-5-7 28 - 1 - 1, 5, 7 - 28 - 2, 4 - 1, 5 - 1-5 28 - 3 - 1, 5, 6 - 29 - 1 - 1, 4, 5, 6, 7 - 29 - 2 - 1, 5 - 29 - 3 - 1, 5, 7 - 1-5 29 - 4 - 1, 5, 8 - 30 - 1 - 1, 4, 5, 6 - 30 - 2 - 1, 5, 6 - 1-5-7 30 - 3, 4 - 1, 5, 7 - 1-5 31 - 1, 2 - 1, 4, 5, 8 - 31 - 3 - 1, 5 - 1-5 31 - 4 - 1, 2, 3, 5, 6, 7 - 32 - 1 - 1, 3, 5, 7 - 32 - 2 - 1, 5 - 1-5-7 32 - 3 - 1, 4, 5, 7 - 1-5 32 - 4 - 1, 5, 7 - 33 - 1 - 1, 3, 5, 7 - 33 - 2 - 1, 5 - 1-5-7 33 - 3, 4 - 1, 5, 7 - 1-5 34 - 1, 3, 4 - 1, 3, 5, 7 - 1-3-5-7 34 - 2 - 1, 5, 7 - 1-5-7 35 - 1 - 1, 5 - 35 - 2 - 1, 5, 7 - 1-5-7 35 - 3, 4 - 1, 3, 5, 7 - 1-5 36 - 1 - 1, 3, 4, 5 - 36 - 2, 4 - 1, 5 - 1-5 36 - 3 - 1, 2, 4, 5, 6, 8 - 37 - 1 - 1, 5, 7 - 1-3-5-7 37 - 2 - 1, 3, 4, 5, 7 - 1-5-7 37 - 3, 4 - 1, 3, 5, 7 - 38 - 1, 2, 3, 4 - 1, 5, 7 - 1-5-7 39 - 1 - 1, 3, 5, 7 - 39 - 2 - 1, 3, 5 - 1-3-5-7 39 - 3 - 1, 5, 6, 8 - 1-5 39 - 4 - 1, 3, 5, 6, 7, 8 - 40 - 1 - 1, 2, 5 - 40 - 2 - 1, 3, 4, 5, 7, 8 - 1-5 40 - 3 - 1, 5, 6 - 40 - 4 - 1, 2, 5 - 41 - 1, 2 - 1, 5 - 41 - 3 - 1, 3, 4, 5, 7 - 1-5 41 - 4 - 1, 4, 5, 7, 8 - 42 - 1 - 1, 3, 5 - 42 - 2 - 1, 4, 5, 7 - 1-5-7 42 - 3, 4 - 1, 5, 7 - 1-5 43 - 1, 3 - 1, 5, 7 - 43 - 2 - 1, 5, 6, 7, 8 - 1-5-7 43 - 4 - 1, 5, 7, 8 - 44 - 1, 2 - 1, 5 - 1-3-5-7 44 - 3, 4 - 1, 3, 5, 7 - 1-5 45 - 1 - 1, 2, 5, 7 - 45 - 2, 3 - 1, 5 - 1-5 45 - 4 - 1, 3, 5 - 46 - 1, 2 - 1, 5 - 1-5-7 .46 - 3, 4 - 1, 5, 7 - 1-5 மோனைத் தொடையமைப்பினை நோக்குக. பாட்டு 2. ஒருவகை எதுகை நயம். பாட்டு 4. அடி 1, 2ன், 5, 7 சீர்கள் எதுகை நயம் பாட்டு 12. 3-7 சீர்கள் நெட்டோசை நயம். பாட்டு 15. 4-8 சீர்கள் - நெடில் வல்லொற்றெதுகை நயம். பாட்டு 20. 2-4 6-8 சீர்கள் ஒருவகை நெட்டோசை. 3-7 சீர்கள் ஒருவகை வல்லோசை. பாட்டு 23. 3-7 சீர்கள். ஒருவகை மெல்லொற்றெதுகை. எதுகை நயம். 4-8 சீர்கள் - நெடிலெடுப்பு. பாட்டு 31. 2-3, 6-7 சீர்கள் ஒரே மோனை எதுகை நயம். இது, கட்டளைக் கலிப்பா. கட்டக்கலிப்பா, எண்சீரடி விருத்தம் போன்றதே என்பதறிவித்தற்கு இங்கு காட்டப்பட்டது. எழுத்தெண்ணிப் பாருங்கள். அட்டவணையிற் காட்டியுள்ள ஒவ்வொரு விருத்தத்தின் தொடை யமைதியையும் நன்கு கவனித்துப் படித்தறிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு விருத்தத்திலும் எந்தெந்தச் சீர்களில் மோனை வர வேண்டுமோ, அவ்வாறு மோனை வந்துள்ள சீர்கள் அல்லாத சீர்களில் வந்துள்ள மோனைகளை நயமாகக் கொள்க. பலவிருத்தங்களின் அடிகளில் அமைந்துள்ள சீரெதுகை நயத்தினைச் சுவைத் தின்புறுக. மோனை வரவேண்டியவாறு வந்துள்ள அடிகளை, அம்மோனை எடுப்பில் எடுத்துப் படித்துப் பாருங்கள், அம்மோனை அமைதியின் சிறப்பு விளங்கும். முதற் பாட்டின் அடிகளில் 1-3-5-7 சீர்களில் மோனை வரவேண்டும். அல்லது 1-5 சீர்களில் வரவேண்டும். முதல் மூன்றடி களில் அவ்விருவகைப் படவும் மோனைவந்துள்ளது. ஆனால், ஈற்றடியில் - 1, 2, 6 சீர்களில் மோனை வந்துள்ளது. அதனால், அவ்வடி எடுப்பாக இல்லை. அவ்வடியை, ‘ஊனார்ந்த வினைகொளம் பொன்றுந் தந்தான் உளனாக வேயென்னை ஊக்கி னானே.’ எனக் கொண்டு படித்துப் பாருங்கள், மோனைத் தொடை யமைப்பின் சிறப்பு விளங்கும். பயிற்சி 1. எண்சீரடி நான்காலான இவ்விருத்தங்கள் ஒவ்வொன்றும் வெவ்வே றோசையுடையதாகக் காரணம் என்ன? 2. 9 ஆம் விருத்தம் மற்ற விருத்தங்களின் அமைப்பிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? 3. மோனை மடக்கில் மற்ற விருத்தங்களிலிருந்து 2ஆம் விருத்தம் எங்ஙனம் மாறுபட்டுள்ளது? அதன் காரணம் என்ன? 4. மோனைத் தொடையின் சிறப்பு எப்போது விளங்கும்? 5. மோனைத் தொடை எடுப்பில் எவ்வாறு படிக்க வேண்டும்? 6. மோனைத் தொடையமைப்பின் அட்டவணையில், விருத்தங் களுக்கு, மோனை வரவேண்டிய சீர்களின் எண்கள் இருவகை யாகக் குறிக்கப்பட்டிருப்பதன் விளக்கம் என்ன? 7. 1, 2, 4, 11, 29 ஆகிய விருத்தங்கள், வெவ்வேறு வகை அடி யெதுகை உடையவை. மற்ற விருத்தங்களை அவற்றோடு வகைப்படுத்துக. 8. இவ்விருத்தங்களோடு சேர்ந்தவற்றை அவ்வந் நூல்களில் படித்து, மோனையமைப்பின் வேறுபாடு கண்டமைக. 9. இவ்விருத்தங்கள் போல வகைக் கொன்று பாடமுயலுங்கள். 10. வஞ்சி விருத்தம், கலிவிருத்தம், ஆசிரிய விருத்தம் - வேறு பாடென்ன? 11. இன்னொரு விருத்தம் யாது? அதற்கும் இம்மூவகை விருத்தங் கட்கு முள்ள வேறுபாடென்ன? 12. எண்சீரடி நான்கு கொண்ட இவ்வாசிரியவிருத்தம் போல, எண்சீரடி நான்கு கொண்ட வேறொரு செய்யுளெது? அதற்கும் இதற்கு முள்ள வேறுபாடென்ன? 6. தாழிசை 1. முனிபவர் ஒத்திலராய் முறுவல்கி ளைத்தலுமே முகிழ்நகை பெற்றமெனா மகிழ்நர்ம ணித்துவர்வாய் கனிபவ ளத்தருகே வருதலு முத்துதிரும் கயல்கனி ரண்டுடையீர்! கடைதிற மின்திறமின்! - கலிங் 2. அஞ்சியே கயல்கெடக் கூடலிற் பொருதுசென் றணிகடைக் குழையிலே விழவடர்த் தெறிதலால் வஞ்சிமா னதன்விடும் படையினிற் கொடியகண் மடநலீர்! இடுமணிக் கடைதிறந் திடுமினோ! - கலிங் 3. கடலில் விடமென அமுதென மதனவேள் கருதி வழிபடு படையொடு கருதுவார் உடலி னுயிரையும் உணர்வையும் நடுவுபோல் உருவு மதர்விழி யுடையவர் திறமினோ! - கலிங் 4. செந்நெ ருப்பினைத் தகடு செய்துபார் செய்த தொக்குமச் செந்த ரைப்பரப்பு அந்நெ ருப்பினில் புகைதி ரண்டதொப்ப பல்ல தொப்புறா வதனி டைப்புறா. - கலிங் 5. மாவுகைத் தொருதனி அபயன் இப்படி வடதிசை மேற்செல மன்னர் மன்னவன் தேவருக் கரசனாய் விசும்பின் மேற்செலத் தென்றிசைக் குப்புகுந் தன்மை செப்புவாம். - கலிங் 6. முடுகிய பவனப தத்திலு கக்கடை முடிவினி லுலகமு ணச்சுடர் விட்டெழு கடுகிய வடவன லத்தினை வைத்தது களமுறு துரகக ணத்தின்மு கத்திலே. - கலிங் 7. விடுபடை பெறுகிலர் மற்றி னிச்சிலர் விரைபரி விழஎறி தற்கு முற்பட அடுகரி நுதல்பட விட்ட கைப்படை அதனையொர் நொடிவரை யிற்ப றிப்பரே. - கலிங் 8. நெளிவு மகரவிரு குழையுமிள வெயில்விட நிறைவு மதியிரவு மழுகிநிலை கெடநகைத் தெளியு நிலவுபக லினமுளரி கெடமலர் திலக வதனசுர மகளிர்கடை திறமினோ! - தக் 9. பிரமற்கு மம்மனை பெருங்கற்ப கக்கொடிகள் பெருவான மேறுவன வருவான மாறுவன பரமற்கு மீதுமிடை சடையொக்கு மென்பதுகொல் பறியா பெருஞ்சுழியு மெறியா தரங்கமுமே. - தக் 10. கவனமாவோ டீராறு கதிரும்வாரி யூடாடு கனல்கடாவி யோரேழு கடலும்வாரு மாலாலம் அவனிவேவ வான்வேவ அளறுவேவ வேவாமல் அயிலுநாதன் மாதேவி அகிலலோக மாதாவே! - தக் 11. எறிபடை வல்லவிசையை இசைகெழு தெய்வமகளிர் எழுவரும் வெள்ளைமுளரி இனிதுறை செல்வமகளும் மறிகடல் வையமகளும் மலர்கெழு செய்யதிருவும் வரவிரு மெல்லவுரகன் மணியணி பள்ளியருகே. -தக் 12. நதிக ளேழினு தற்கிரிக ளேழினுமறா நளினி யேழினும் வலம்புரியு நல்லனமகோ ததிக ளேழினு மெடுத்தடைய வுள்ளனஎனுஞ் சங்க கோடிகள் குறித்தகில முந்தகரவே. - தக் 13. பாரப் பணையிணைக் கொலையினுஞ் சிலபுரூஉப் பங்கத் தினுமடுப் பனவடுப் பகவினும் கூரப் புறவமுல் லைம்முகை நகையினுங் கொல்லு கைதவிரா விறைவிசா கினிகளே. - தக் 14. தொக்கமேக மாகவெளி சுற்றுமோடி மூடிவன துர்க்கம்யாவும் வேவெரி துற்றுவேறு மேறுகொடு மிக்ககோடு கோடிபல வெற்பனேக பாகைபடி வெட்டிவாரி வாரிவர விட்டுவீசி மேல்விழவே. - தக் 15. அலைகொன்று வருகங்கை வாராமல் மேன்மேல் அடைக்கின்ற குன்றூ டறுக்கின்ற பூதம் மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன் வரராச ராசன்கை வாளென்ன வந்தே. - தக் 16. செந்தா மரையோனைக் கிளையோ டுயிர்வவ்வித் திருமால் வருகென்றெம் பெருமா னறைகூவத் தந்தா மரையுந்திப் புதல்வன் கொலையுண்ணத் தரியா ரிவரென்னக் கரியர ரெதிர்சென்றே. -தக் 17. எங்கு முலகு நுங்கு தீயென இன்று கனல நின்ற நீரொரு பங்கு பெறுக விங்கு தானிது பண்டு மறையி லுண்டு பார்மினே! - தக் 18. பொருதரங்கம் வீங்குசி லம்படை சேவடிப் புரையடங்க வூன்றிவி ழுந்தது மேதினி இருவிசும்பு தூர்ந்தற உந்திய மோலியின் இடைகழிந்து கூம்பின தண்டக பாலமே. - தக் 19. அடிக்க வடிக்கவெழும் அருகப் பேய்கட்கும் புத்தப் பேய்கட்கும் அண்டக பாடக்கூழ் பிடிக்கப் பிடிக்கவுறும் வயிறு பழம்படியே பெருகுக பெருகுகவாய் பருகுக பருகுகவே. - தக் 20. தேவரக் கரியார் மூவரிற் பெரியார் சித்திர சபையார் சித்திர நதிசூழ் கோவிலிற் புறவில் காவினி லடங்காக் குருவிகள் படுகுங் குளுவனு நானே. - குற் 21. தந்தைதாய் மகவுமனை வாழ்க்கை யாக்கை சகமனைத்து மௌனியருள் தழைத்த போதே இந்திரசா லங்கனவு கானல் நீராய் இருந்ததுவே இவ்வியற்கை யென்னே யென்னே! - தாயு 22. வாழியநின் மலரடிகள் மௌனதவ முனிவ மனமிரங்கி யருள்புரிந்தோர் வார்த்தையெனக் கீயிற் பாழடவி யிதிற்சுழன்று பாதைவிடுத் தலையும் பாவியொரு வினையளித்த பலனுறுவை பெரிதே. - மனோ 23. சந்திர னொளியி லவனைக் கண்டேன் சரண மென்று புகுந்து கொண்டேன் இந்திரி யங்களை வென்று விட்டேன் எனதெ னாசையைக் கொன்று விட்டேன். - பார 24. செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திட லாமென்றே எண்ணி யிருப்பார் பித்த மனிதர் அவர்சொலுந் சாத்திரம் பேயுரை யாமென் றூதேடா சங்கம்! -பார 25. கற்பனைக் குதிரை கடாவுதல் ஒழியடா காரியம் பொருளிற் கண்டு தெளியடா விற்பனர் விதிகளை விளம்புதல் வீணடா வினையில் விளைந்த விவேகம் காணடா! -தேசி 26. முன்பு கண்ட காட்சி தன்னை முருக னென்றும் வேல னென்றும் கொன்ப யின்றார் சொல்வர் அஃது குறுகுங் கொள்கை யன்றோ தோழி! - பாதா 27. மாதர்தம் உரிமை மறுப்பது மாண்பா மாதர்முன் னேற்றத்தால் மகிழ்வது மாண்பா? மேதினி துயர்பட விரும்புதல் இதமா, விதவைக்கு மறுமணம் உதவுதல் இதமா? - பாதா 28. வலியோர் சிலர் எளியோர்தமை வதையேபுரி குவதா மகராசர்கள் உலகாள்வது நிலையாமெனு நினைவா உலகாளவு னதுதாய்மிக உயிர்வாதைய டைகிறாள் உதவாதினி ஒருதாமதம் உடனேவிழி தமிழா! - பாதா 29. முருகனென்ற சிறுவன்வந்து முணுமுணுத்த சொல்லினால் முன்னிருந்த எண்ணம்யாவும் பின்னமுற்றுப் போனதே, அருகுவந்து மனமுவந்தே அவனுரைத்த ஒன்றினால் அடிமையென் மனத்திருந்த அச்சமற்றுப் போனதே. -நாம 30. மூவேந்தர் கோல்போல மின்னி யன்னார் முரசினதிர்ந் தவர்கொடை போல் பொய்வான் மெய்யப் பாவேந்தர் பாட்டிசைப்ப மலைக ளென்னும் பருஞ்சால்கள் நிறைந்துவளம் மயங்கு மாதோ! - அர 31. கதிர்ப ரப்பி யிலகொளி வீசியே காந்தி யென்னுங் கதிரவன் தோன்றவே, மதிம ருண்டய லாட்சி யிருள்கெட மக்க ளாட்சி மலர்ந்தது நாட்டிலே. - அர 32. தலைக்கழகு தருங்கூந்தல் அழகியவள் தனைப்பறட்டைத் தலைச்சியெனப் பழம்பெயரால் தானழைக்கு மதுபோலக் கொலைத்தொழிலை விடுத்துயர்நற் குணத்தொடுவாழ் இப்போதும் கொலை ஞனென முன்போலக்கூப்பிடுதற் கென்செய்கேன்! - உகெ இவ்வெண்சீரடித் தாழிசைகள் முப்பதிரண்டும் வெவ்வேறோசை யுடையவை. ஓசையோடு படித்துப் பாருங்கள். இவற்றுள். முதல் தாழிசை - 6 ஆம் விருத்தத்தையும், 2ஆந் தாழிசை - 19ஆம் விருத்தத்தையும், 4ஆந் தாழிசை - 42 ஆம் விருத்தத்தையும், 28ஆந் தாழிசை - 34 ஆம் விருத்தத்தையும், 30ஆந் தாழிசை - 29 ஆம் விருத்தத்தையும், போன்றவையாகும். ஒப்பிட்டுப் படித்துப் பாருங்கள் தொடையமைப்பினை நோக்குங்கள். பாட்டு - அடி - மோ. வ. சீ. மோ. வர. வே. சீர் 1 - 1 - 1, 3, 5 - 1-3-5-7 1 - 2 - 1, 5, 7 - 1-5 2 - 1, 2 - 1, 5 - 1-5 3 - 1 - 1, 5, 8 - 3 - 2 - 1, 2, 3, 5, 7 - 1-5 4 - 1, 2 - 1, 4, 5, 7 - 1-5-7 5 - 1 - 1, 5, 7, 8 - 5 - 2 - 1, 5, 8 - 1-5-8 6 - 1 - 1, 5 - 6 - 2 - 1, 5, 8 - 1-5 7 - 1 - 1, 5, 6 - 1-5 7 - 2 - 1, 5 - 8 - 1 - 1, 5 - 1-5-8 8 - 2 - 1, 5, 8 - 1-5 9 - 1 - 1, 3, 5 - 9 - 2 - 1, 5 - 1-5 10 - 1, 2 - 1, 3, 5, 7 - 1-3-5-7 11 - 1 - 1, 3, 5, 7 - 11 - 2 - 1, 2, 3, 5, 7 - 1-3-5-7 12 - 1 - 1, 5, 8 - 12 - 2 - 1, 5 - 1-5 13 - 1 - 1, 5, 8 - 13 - 2 - 1, 5 - 1-5 14 - 1 - 1, 3, 5, 7 - 1-3-5-7 14 - 2 - 1, 3, 5, 7, 8 - 15 - 1 - 1, 5, 7 - 1-3-5-7 15 - 2 - 1, 3, 5, 7, 8 - 1-5-7 16 - 1, 2 - 1, 5 - 1-5 17 - 1 - 1, 5 - 17 - 2 - 1, 5, 8 - 1-5 18 - 1, 2 - 1, 5 - 1-5 19 - 1 - 1, 3, 7 - 19 - 2 - 1, 2, 5, 6 - 1-5 20 - 1, 2 - 1, 5, 7 - 1-5-7 21 - 1 - 1, 5, 7 - 21 - 2 - 1, 5, 6, 7, 8 - 1-5-7 22 - 1, 2 - 1, 3, 5, 7 - 1-5-7 23 - 1, 2 - 1, 5 - 1-5 24 - 1 - 1, 3, 5 - 24 - 2 - 1, 5 - 1-5 25 - 1 - 1, 3, 5, 7 - 25 - 2 - 1,2,3,4,5,6,7 - 1-3-5-7 26 - 1 - 1, 5 - 26 - 2 - 1, 5, 6 - 1-5 27 - 1 - 1,3,4,5,7,8 - 27 - 2 - 1, 3, 5 - 1-3-5 28 - 1 - 1, 3, 5 - 3-5-7 28 - 2 - 1, 3, 5, 6, 7 - 1-5 29 - 1 - 1, 3, 5 - 29 - 2 - 1, 3, 5, 7 - 1-3-5-7 30 - 1 - 1, 5, 7 - 30 - 2 - 1, 2, 5, 7 - 1-5-7 31 - 1, 2 - 1, 5, 7 - 1-5-7 32 - 1 - 1, 2, 4, 5, 7 - 32 - 2 - 1, 3, 5, 7 - 1-3-5-7 தாழிசை 1. முதலடியின் சீர் 7ல் மோனை வரவில்லை. 5-7 எதுகை. 4. தரைப் பரப்பு + அந்நெருப்பு. ஒப்பு + அல்லது. 6. 3 - 4, 7-8 சீர்கள் ஒருவகை எதுகை நயம். 7. இதிலும் அத்தகைய எதுகையே. 9. 5-6, 7-8 சீர்கள் ஒருவகை ஓசையின்பம். 14. 1-2, 3-4, 5-6, 7-8 ஆகிய இவ்விரண்டு சீர்களின் ஈறும் முதலும் நீண்டு, ஒருவகை ஓசையின்பம். 16. 5-7 சீர்கள் எதுகை. 17. 1-3, 5-7 சீர்கள் தனித்தனி எதுகை. 19. முதலடியில் மோனை அமையவில்லை. ‘புத்தப் பேய்கட்கும் அருகப் பேய்கட்கும்’ என்றிருக்கலாம். அடி 2ல் 5-8 சீர்கள் நான்கும் ஓரெதுகை. 20. அடி 1ல், 1-3, 2-4, 5-7 சீர்கள் எதுகை. அடி 2ல் 1-3 சீர்கள் எதுகை. 23. 25, 27 - இயைபுத் தொடை. 27. அடி 2 1-4, 5-7 சீர்கள் எதுகை. 29. முதலடி 5-7 சீர்கள் எதுகை. 32. முதலடி 1-4 சீரில் ஒரூஉ மோனை போல. இந்நயங்களையும் அமைவினையும் அறிந்து கொள்ளுங்கள். இன்னொரு முறை தாழிசைகளைத் திருப்பிப் படித்துப் பார்த்துத் தொடை யமைப்பினை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். வரவேண்டிய சீர்களல்லாத சீர்களில் வந்துள்ள மோனைகளை, மோனை நயமாகக் கொள்க. பயிற்சி 1. விருத்தம் போன்ற ஓசையுடைய தாழிசைகளை அவ்வவ் விருத்தமாக்க என்ன செய்ய வேண்டும்? 2. 21 ஆம் தாழிசையை விருத்தமாக்குக. 3. 4 ஆம் விருத்தத்தின் முதலிரண்டடிகளைத் தாழிசையாக்குக. 4. இத்தாழிசைகளைப் போல வகைக்கொன்று பாட முயலுக. 5. 2, 4, 16, 25 தாழிசைகளின் அடியெதுகை வகையினைக் கூறுக. 6. எண்சீரடிவிருத்தம் இத்தாழிசைகளின் அடியெதுகை வகையினை வகைப் படுத்துக. 7. இத்தாழிசைகளோடு சேர்ந்த தாழிசைகளை அவ்வந் நூல்களில் படித்தின்புறுக. 7. ஒன்பதின் சீரடி விருத்தம் 1. மாதர் மடப்பிடி யும்மட வன்னமும் அன்னதோர் நடையுடை மலைமகள் துணையென மகிழ்வர் பூத இனப்படை நின்றிசை பாடவும் ஆடுவர்\ அவர்படர் சடைநெடு முடியதொர் புனலர் வேதமொ டேழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்டிரை இரைநுரை கரைபொருது விம்மிநின் றயலே தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை எழில்பொழில் குயில்பயில் தருமபு ரம்பதியே. -சம் 2. வளங்கு லாவரு மணங்க னார்விழி மயக்கி லேஇணை முயக்கி லேவிழு மாந்தர்கள்! களங்கு லாமுட லிறந்து போயிடு காடு சேர்முனம் வீடு சேர்வகை காண்மினோ. துளங்கு நீள்கழல் தழங்க வாடல்செய் சோதி யானணிபூதி யானுமை பாதியான் விளங்கு சேவடி யுளங்கொ ளிர்யமன் விடுத்த பாசமு மடுத்த பாசமும் விலக்குமே. - சிதம் 3. இடியது விழுந்த தோதான் இரும்பினைப் பழுக்கக் காய்ச்சி இருசெவி நுழைத்த தோதான் தடியது கொண்டே யெங்கள் தலையினில் அடித்த தோதான் தைரியம் பிறந்த தோதான் கொடியது சாய்ந்த தோதான் கொடுவிடம் உச்சிக் கேறிக் குறைந்திடுங் கொள்கை தானோ. திடமுள தீரவீரன் திலகனார் மாண்டா ரென்ற தீயசொற் கேட்ட போதே. - நாம இவ்வொன்பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் மூன்றும் வெவ்வே றோசையுடையவை. இது மிகச் சிறுபான்மை வழக்குடையது. முதல் விருத்தம் ‘யாழ்மூரி’ எனப்படும். அதாவது யாழின் இசையில் அடங்காப் பண்வலிமையுடையது என்றபடி, மூரி வலிமை. பண் - இசை. பண் அவ்வளவு வன்மை யுடையதாகத் தோன்றவில்லை. ஆனால், மோனை சரியாக அமையவில்லை. மோனை நன்கு அமையின், இது எளிமையான இசையுடைய பாடலேயாகும். ஈற்றடி போல முதற் சீரினும் எட்டாஞ் சீரினும் மோனைவரின் ஓசைநயமுடைய தாக அமையும், அங்ஙனம் மோனை அமையின், நடையுடைய மலைமகள் அவர்படர் சடைநெடு இரைநுரை கரைபொருது எழில்பொழில் குயில்பயில். என்னும் 6, 7 சீர்களை முடுகியலாகக் கொள்ளலாம். மாதர் மடப்பிடி யும்மட வன்னமும் அன்னதோர் நடையுடை மலைமகள் வகையென மகிழ்வர் பூத இனப்படை நின்றிசை பாடவும் ஆடுவர் அவர்படர் சடைமுடி பொலிதரு புனலர் வேதமொ டேழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்டிரை இரைநுரை கரைபொரூஉ விம்மிநின் றயலே தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை எழில்பொழில் குயில்பயில் தருமபு ரம்பதியே. எனக் கொண்டு படித்துப் பாருங்கள். ‘யாழ்மூரி’ யாகத் தோன்றாது. ஐந்தாவது சீரில் நீட்டி, ஏழாவது சீரில் நிறுத்தி, மோனைத்தொடை எடுப்பாகிய எட்டாஞ்சீரில் எடுத்துப் படிக்கவேண்டும். பாட்டு 2. - 1, 5, 9 சீர்களில் மோனை வரவேண்டும். 1, 2,4 அடிகளில் அவ்வாறே வந்திருத்தல் காண்க. மூன்றாம் அடியில், ‘சேதி யான்’ என்பதன் எதுகை யாக, ‘பாதியான்’ என்பது அமைந்தது. மயக்கி - முயக்கி காடு - வீடு என, 5, 7 சீர்கள் எதுகை நயம் சோதி - பூதி படஅமைந்திருத்தலை அறிக. விடுத்த - மடுத்த மூன்றாம் விருத்தத்தில் - 1, 4, 7 சீர்களில் மோனை அமைய வேண்டியவாறே அமைந்துள்ளது. 8. தாழிசை படியிடை யிணையொன் றின்றிப் பழமையோ டிளமை வாய்ந்து பாவலர் நாவின் மேவி முடியுடை மூவர் செங்கோல் முறையினிற் போற்றிக் காத்த முத்தமிழ் வாழ்க மாதோ! இத்தாழிசை மூன்றாம் விருத்தத்தைப் போன்றது. மோனை அமைய வேண்டிய வாறே, 1, 4, 7 சீர்களில் அமைந்துள்ளது. பயிற்சி 1. முதல் விருத்தத்தைப் போல, முதற் சீரினும் எட்டாஞ் சீரினும் மோனை அமையும் படி ஒரு விருத்தம் பாடிப் பாருங்கள். 6, 7 சீர்கள் முடுகியலாய் அமையவேண்டும். 2. மற்ற இரு விருத்தங்கள் போலவும் ஒவ்வொன்று பாடுக. 3. விருத்தம், தாழிசை இவற்றின் அடியெதுகை வகையினைக் கண்டறிக. 4. வேறு ஓசையில் ஓர் ஒன்பதின் சீரடி விருத்தம் பாட முயலுக. 9. பதின் சீரடி விருத்தம் 1. ஒழுகிய கருணையு வட்டெழு வைத்தவ ருட்பார்வைக் குளநெகிழடியர்ப வக்கடல் வற்ற அலைத்தோடிக் குழையொடு பொருது கொலைக்கணை யைப்பிணை யைச்சீறிக் குமிழொடு பழகிம தர்த்தக யற்கண்ம டப்பாவாய் தழைகெழு பொழிலின்மு சுக்கலை மைப்புய லிற்பாயத் தவழிள மதிகலை நெக்குகு புத்தமு தத்தோடே மழைபொழி இமயம யிற்பெடை கொட்டுக சப்பாணி மதுரையில் வளரும டப்பிடி கொட்டுக சப்பாணி. - மீபி 2. பரந்த வெண்புணரி மீதோன் வேதா மாதேவர் பணிந்து தொண்டுசெய வேலே சேலே போலாடும் கருங்க ணுந்துமளி யீவாய் பாவாய் தாவாது கறங்கு வண்டளக மானே தேனே ஏனார்தம் புரங்க டந்தநகை வாயார் தூயார் சேயார்பாற் புணர்ந்தி டும்பசிய தோகாய் காவாய் நீகாவென்று இரங்கு மன்பரக வாழ்வே தாலோ தாலேலோ இலங்கு ளந்தைவரு தாளாய் தாலோ தாலேலோ. - அமு இப்பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் இரண்டும் வேறோசை யுடையவை. இதுவும் சிறுவழக்குடையதாகும். இவ்விரு விருத்தங்களின் அடிகளினும் முதற்சீரினும் ஆறாஞ்சீரினும் மோனை வந்திருத்தலை அறிக. முதற் பாட்டின் அரையடிகளின் பின் மூன்று சீர்கள் ஒருவகை எதுகைத் தொடையான் இன்புறுத்தலை அறிக. சப்பாணி என்பதற் கேற்ப, ஈற்றடி முதற்சீரினும் ஆறாஞ்சீரினும் சகரம், அல்லது தகரம் மோனையாக வந்திருப்பின் எடுப்பாக இருக்கும். இரண்டாம் விருத்தத்தின் அடிகளில், பரந்த வெண்புணரி மீதோன் வேதா பாதேவர். என்பது போல, முதற்சீரினும் ஐந்தாஞ்சீரினும் மோனை வந்திருக்கின், ஓசைநய முடையதாக இருக்கும். தரங்கு மன்பரக தகுங்கு ளந்தைவரு. என இருக்கின், ‘தாலோ தாலேலோ’ என்பதற்கு எடுப்பாக இருக்கும். 10. தாழிசை 1 செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமையச் சிமய மால்வரை திரித்தருளி மீள அதனைப் பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகில் பாய்பு லிக்குறி பொறித்தது மறித்த பொழுதே. - கலிங் 2. பரந்தர னார்படை யூழியி லாழியை யொத்தது. பாயெரி கொன்று படுங்கடல் போற்குறை பட்டது புரந்தர னார்படை வந்து படும்படு மும்பர்கள் பூதமும் வேதா ளங்களு மாயே புகுதவே. - தக் இப்பதின்சீர்க் கழிநெடிலடித் தாழிசைகளிரண்டும் வெவ் வேறோசையுடையவை. இரண்டாந்தாழிசை, முதல் விருத்தத்தை ஒருபுடையொத்தது. இவ்விரு தாழிசை அடிகளினும் முதற்சீரினும் ஆறாஞ்சீரினும் மோனை வரவேண்டும். சிமய மால்வரை திரித்தருளி மீள வதனை. என்ற அரையடியைப் போல, 1, 3, 6, 8 சீர்களில் மோனைவரின், மிக்க ஓசைநய முடையதாக இருக்கும். பயிற்சி 1. விருத்தங்கள், தாழிசைகளின் அடியெதுகை வகையினைக் கண்டறிக. 2. இவ்விருத்தம் தாழிசைகள் போல, நன்கு மோனை அமையப் பாடிப்பாருங்கள். குறிப்பு : பதினொரு சீரடி விருத்தம் வழக்கில் இல்லை. அஃதும் வேண்டுமெனில். 11. பதினொரு சீரடி விருத்தம் பண்டைத் தமிழர் போலப் பண்பும் பயனும் இயலப் பலரும் ஒருவே மாகப் பயின்றிங் கினிநாமே, அண்டை யயல்நா டெல்லாம் அன்பாய் நண்பாய் இயல அமைவாய் நமவாய் மக்கள் ஆட்சி புரிவோமே; துண்டைத் தலையிற் கட்டித் துரும்பாய் உயிரை மாய்க்கத் துணியும் வறுமைப் புலியைத் துரத்தி யடிப்போமே; இண்டைப் பதிவாழ் அனமே இகலும் போரும் இன்றி எங்கும் அமைதி நிலவ இனிதே வாழ்வோமே. - புகு இவ்வாறு பாடலாம். மோனை எதுகை அமைப்பினை நோக்குக: 12. பன்னிரு சீரடி விருத்தம் 1. கண்க ளிரண்டு மவன்கழல் கண்டு களிப்பன வாகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படு மாகாதே மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடு மாகாதே மாலறி யாமலர்ப் பாத மிரண்டும் வணங்குவது மாகாதே பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பயின்றிடு மாகாதே பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுது மாகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே. -திவா 2. கல்லா லயமாந் தேவருமாம் கழுதை கசடர் பொதிசுமக்கும் கடாவோ உழுது பயிரிடற்காம் கட்டம் பன்றிக் கிரையாகும் புல்லே றீசர் வாகனமாம் பொதியுஞ் சுமக்கும் பிணமெனிலோ பூசி முடித்து மறையோர்க்கும் பொருளை யீந்து புகழெய்தும் மல்லார் குட்டிச் சுவரெனிலோ மாடும் உறைஞ்சும் மறைவாகும் மதியாத் துடைப்பந் தானெனிலோ மாட கூடந் தனைவிளக்கும் அல்லா துலுத்தன் தனக்கிணையா ஆரை யுரைப்பேன் புவிமீதில்? அவனைக் குறித்துக் கூறுமிடத் தவனுக் கவனே சரிதானே. - தனி 3. ஐயநின் சென்னிமிசை யுறைகின்ற மடமங்கை யாரென்ன உமைவினவவும் அன்னதொரு மடமங்கை யன்றுவெண் டிரைகொழித் தழகொழுகு தண்புனலெனத் துய்யவொளி யானனங் கரியவிழி காதுவாய் தோயத்தி லுண்டோவெனச் சொல்லருங் கமலமலர் காவிமலர் கொடிவள்ளை தூயசெங் குமுதமென்னப் பொய்யென நினைத்துநற் கொங்கையுங் கூந்தலும் புனலிடை யுண்டோவெனப் புற்புதஞ் சைவலம தெனவே மறுத்துப் புகன்றிடுதி நங்காயெனத் தையலவள் ஏனென்ன நாணொடு வணங்கியென் றன்பிழை பொறுத்திடென்றே சங்கர னுரைத்திடத் திருவுள மகிழ்ந்தசிவ சங்கரி உமைக்காக்கவே. - தனி 4. திமிர மறாத புலாதிக ளேதரு தேடரி தாய்மாறும் செனன மகாமால் வசமே மதமுறு சிறுமையின் மதியாலே குமர சிகாமணி யேகனி வாயருள் கூடென வேகூறும் குருபர கோலா கலனே விதியொடு குறுகிய மிடிதீராய்; நமது விநாயக தேவ சகோதர நாடொறு மேதேறும் நவிமகள் சேர்வே டுவனே புதுமண நறுமலர் புனைமார்பா! அமரர் பிரானருள் குஞ்சரி தோள்புண ராடவ னேமீறும் அரகர வேலா யுதனே முதுமறை அறுமுக முருகோனே! -தனி 5. புதையிருள் கிழிதர வெழுதரு பருதிவ ளைத்தக டற்புவியிற் பொதுவற வடிமைசெய் திடுவழி யடியர்பொ ருட்ட லர் வட்டணையில் ததைமலர் பொதுளிய களியளி குமிறுகு ழற்றிரு வைத்தவளச் சததள முளரியின் வனிதையை உதவுக டைக்கண்ம டப்பிடியே! பதுமமொ டொழுகொளி வளையுநி னளினமு கத்துமி டற்றுமுறப் பனிமதி யொடுசுவை யமுதமு நுதலொடு சொற்குத லைக்கணிறீஇ முதுதமி ழுததியில் வருமொரு திருமகள் முத்தம ளித்தருளே முழுதுல குடையதொர் கவுரியர் குலமணி முத்தம ளித்தருளே. - மீபி 6. உலகினிற் சிறந்த தென்றும் உருவினிற் பரந்த தென்றும் உயர்தவ யோக சித்தர் ஒப்பிலார் இருந்த தென்றும் பலவளம் நிறைந்த தென்றும் பகுத்தறி வுயர்ந்த தென்றும் படித்தனங் கேட்டோ மந்தப் பாரத தேச மக்கள் புலபுல வென்று நித்தம் புதுப்புது நோய்க ளாலே புழுக்கள்போல் விழுந்து மாண்டு போவதைக் கண்டோ மையோ! விலகிட வழிதே டாமல் விலங்கினம் போல வாழ்ந்து விதியென வாதம் பேசி வீணரா யிருத்தல் நன்றோ? இப்பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களாறும் வெவ்வே றோசை யுடையவை. அறுசீர்க் கழிநெடிலடி இரண்டு ஒரு மோனைத் தொடையால் இணைந்தானதே பன்னிருசீர்க் கழிநெடிலடி. 14, 16, 32 சீர்முதலிய கழிநெடிலடிகளெல்லாம் இவ்வாறு 7, 8 சீர்க் கழிநெடிலடிகளை மோனைத் தொடையால் அடுக்கிக் கொண்டே போவதேயாகும். 6, 7, 8 முதலிய சீரடிகளே இயற்கையடிகள். 12, 14 சீரடிகளெல்லாம் செயற்கை அடிகளே யாகும். இவ்விருத்தங்கள் ஆறும் மோனை எதுகைத் தொடைகள் நன்கு அமைந் துள்ளமையை நோக்குக. 1, 3, 4, விருத்தங்களின் அடிகளில் - 1, 5, 7, 11 சீர்களில் மோனை வரவேண்டும். அவ்வாறே வந்துள்ளமையை அறிக. 2, 6 விருத்தங்களின் அடிகளில் - 1, 4, 7,10 சீர்களில் மோனை வரவேண்டும். அவ்வாறே வந்திருத்தலை அறிக. 5ஆம் விருத்தத்தின் அடிகளில் - 1, 7 சீர்களில் மோனை, 5, 6, 11, 12சீர்கள், ஒருவகை எதுகைத் தொடையான் அமைந்துள்ளமையை படித்தின்புறுக. 3, 4, 5, 6 விருத்தங்கள் - உயிரெதுகை. 1, 2ன் எதுகை அமைப்பினைக் கண்டறிக. ‘திமிர மறாத’ என்னும் 4ஆம் விருத்தம், ஒரு பன்னிருசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தமாக மட்டும் இல்லாமல், தன்னகத்து வேறு ஆறு செய்யுட்களை அடக்கிக் கொண்டுள்ளது என்பது வியத்தற்குரிய தாகும். இது, எழுபாகி எனப்படும். வடமொழிப் பெயரால் சப்தபங் என்பர். அங்ஙனம் ஆகுமாறு, 1. ஒவ்வொரு முதலரையடியின் ஐந்தாஞ்சீரிலிருந்து எடுத்து, தொடர்ந்து ஐந்து சீர்களாக்கினால் கொச்சகம் ஆகும். 2. முதலரையடியின் முதலிலிருந்து, ஆறாவதுசீரின் முதலசை யோடு - கட்டளைக் கலித்துறை ஆகும். 3. முதலரையடியின் ஈற்றுச்சீரின் முதலசையொழிய மற்ற அசையிலிருந்து (இரண்டாவதசை) எடுத்து கொச்சக அடிகளின் முடிவில் முடிக்க - கலிவிருத்தம் ஆகும். 4. இரண்டாவது அரையடியின் நாலாஞ்சீரிலிருந்து, இரு மூன்று சீர் எடுக்கின் - வஞ்சிவிருத்தம் ஆகும். 5. இரண்டாவ தரையடியின் ஐந்தாஞ்சீரிலிருந்து, இரு சீர்எடுக்க - வஞ்சித் துறை யாகும். 6. முதலரையடியின் ஐந்தாஞ்சீரிலிருந்து ஐந்துசீரும்; மூன்றாவது முதலரையடியின் ஐந்தாஞ்சீரிலிருந்து ஐந்து சீரும்; நாலாவது முதலரையடியின் ஐந்தாஞ்சீரிலிருந்து இரண்டு சீரும், மூன்றாஞ் சீரின் முதல் நிரையசையும் எடுக்கின் - நேரிசை வெண்பா ஆகும். எனவே, அவ்விருத்தம் ஆறுபிள்ளைகளுக்குத் தாயாகும் அத்தகு பெருமை யுடையதாகும். அவை வருமாறு, 1. கொச்சகம் தேடரிதாய் மாறும் செனனமகா மால்வசமே கூடெனவே கூறுங் குருபரகோ லாகலனே நாடொறுமே தேறும் நவிமகள்சேர் வேடுவனே ஆடவனே மீறும் அரகரவே லாயுதனே. 2. கட்டளைக்கலித்துறை திமிர மறாத புலாதிக ளேதரு தேடரிதாய் குமர சிகாமணி யேகனி வாயருள் கூடெனவே நமது விநாயக தேவச கோதர நாடொறுமே அமரர் பிரானருள் குஞ்சரி தோள்புண ராடவனே. 3. கலிவிருத்தம் மாறுஞ் செனன மகாமால் வசமே கூறுங் குருபர கோலா கலனே தேறும் நவிமகள் சேர்வே டுவனே மீறும் அரகர வேலா யுதனே. 4. வஞ்சிவிருத்தம் மதமுறு சிறுமையின் மதியாலே விதியொடு குறுகிய மிடிதீராய் புதுமண நறுமலர் புனைமார்பா முதுமறை யறுமுக முருகோனே. 5. வஞ்சித்துறை சிறுமையின் மதியாலே குறுகிய மிடிதீராய் நறுமலர் புனைமார்பா அறுமுக முருகோனே. 6. நேரிசைவெண்பா தேடரிதாய் மாறுஞ் செனனமகா மால்வசமே நாடொறுமே தேறு நவிமகள்சேர் - வேடுவனே ஆடவனே மீறும் அரகரவே லாயுதனே கூடெனவே கூறுங் குரு. வஞ்சித் துறை யல்லாத மற்ற ஐந்து பாட்டுக்களின் மோனை யமைப்பினை நோக்குக. மோனையும் எதுகையும் நன்கு அமைந் துள்ளன அல்லவா? தாயைப் போலப் பிள்ளைகள்! ‘திமிர மறாத’ என்னும் இந்நாலாவது விருத்தம், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்னும் பழமொழிக்கு எடுத்துக் காட்டாக உள்ளதல்லவா? குறிப்பு: இவ்விருத்தத்தை இன்னொரு முறை படியுங்கள். இவ் விருத்தம் இன்பமூட்டுகின்றதல்லவா? ‘இத்தகைய பாடல்களும், சித்திரகவிகளும் பாடுவதெல்லாம் பயனற்ற வேலை’ என்போர் பேச்சைக்காதில் போட்டுக் கொள்ளா தீர்கள். தண்டியலங் காரத்தில் உள்ள ‘முரசபந்தம், மாலை மாற்று, வினாவுத் தரம்’ முதலிய சித்திரகவிகளின் இலக் கணத்தைப் படித்து, வகைக் கொன்று பாடிப் பாருங்கள். பெற்றவளுக் குத்தான் தெரியும். பிள்ளையின் அருமை. அவ் வறிவு, கவித்திறத்தின் நுட்பமான நுண்ணறிவினைத் தூண்டுங் கருவியாகும். 13. தாழிசை 1. ஆர மிவையிவை பொற்கலம் ஆனை யிவையிவை ஒட்டகம் ஆடல் அயமிவை மற்றிவை ஆதி முடியொடு பெட்டகம் ஈர முடையன நித்திலம் ஏறு நவமணி கட்டிய ஏக வடமிவை மற்றிவை ஏதும் விலையில்ப தக்கமே. - கலிங் 2. திரையைத் தோய்வன நாலிரு திசையைச் சூழ்வன சூழ்வரு சிலையைப் போல்வன தானவர் திரளைப் போழ்வன ஏழ்குல வரையைப் பாய்வன சூன்முதிர் மழையைக் கீள்வன கால்கொடு மதியைக் காய்வன பேரொளி வயிரத் தேர்சத கோடியே. - தக் 3. மலைநிகர் மாட மலிஅம ரிக்கத் தலைநகர் வா சிங்டன் வந்துல கத்தலை வர்களொருங் கிறுதி வணக்கஞ் செலுத்தியெழு நிலையலை போலூர் வலஞ்சென் றேஆர் லிங்டன் கல்லறையில் நெடியோன் உடலை அடக்கம் செய்தனர் நீள்புகழ் வாழியவே. - உகெ இப்பன்னிருசீர்க் கழிநெடிலடித் தாழிசைகள் மூன்றும் வெவ்வே றோசையுடையவை. மூன்றாந் தாழிசை. முதல் விருத்தத்தை ஒருபுடை ஒத்த ஓசை யுடையது. தொடையமைதியைக் கவனியுங்கள். முதல் இரண்டு தாழிசைகளின் அடிகளில் 1, 4, 7, 10 சீர்களில் மோனை வந்துள்ளது. மூன்றாந் தாழிசை யடிகளில், 1, 5, 7, 11 சீர்களில் மோனை வர வேண்டும். முதலடி 5ஆம் சீரில் எதுகை வந்து, 6ஆம் சீரில் மோனை வந்துளது. ‘நி - லி’ இனவெழுத்து; ஒன்றின முடித்தலால் கொள்க. பதின்மூன்று சீரடி விருத்தம் பயிற்சியில் இல்லை. 14. பதினான்கு சீரடி விருத்தம் 1. இந்திரன் கலையா யென்மருங் கிருந்தான் எரியென துதரம்விட் டகலான் இயமனெனைக் கருதான் அரனெனக் கருதி நிருதிவந் தென்னையென் செய்வான்? அந்தமாம் வருணன் இருகண்விட் டகலான் அகத்தினின் மக்களும் யானும் அநிலம தாகும் அமுதினைக் கொள்வோம் யாரெதி ரெமக்குளா ருலகில்? சந்ததம் இந்த வரிசையைப் பெற்றுத் தரித்திர ராசனை வணங்கித் தலைசெயும் எம்மை நிலைசெய்சற் கீர்த்திச் சாளுவக் கோப்பையன் உதவும் மந்தர புயத்தான் திப்பைய ராயன் மகிழ்வொடு விலையிலா வன்னோன் வாக்கினாற் குபேர னாக்கினா னவனே மாசிலீ சானபூ பதியே. - தனி 2. தேரு ளைப்புரவி வார ணத்தொகுதி திறைகொ ணர்ந்துவரு மன்னநின் தேய மேதுனது நாம மேதுபுகல்? செங்கை யாழ்தடவு பாணகேள், வாரு மொத்தகுடி நீரு நாமுமக தேவ னாறைநகர் காவலன் வாண பூபதி மகிழ்ந்த ளித்தவெகு வரிசை பெற்றுவரு புலவன்யான் நீரு மிப்பரிசு பெற்று மீளவர லாகு மேகுமவன் முன்றில்வாய் நித்தி லச்சிகர மாட மாளிகை நெருங்கு கோபுர மருங்கெலாம் ஆரு நிற்குமுயர் வேம்பு நிற்கும்வளர் பனையு நிற்கும் அதனருகிலே அரசு நிற்குமர சைச்சு மந்தசில அத்தி நிற்குமடை யாளமே. - தனி 3. சாதகப் பறவைக் கிரும்புயல் துளியுஞ் சகோதரத்தி னுக்குஉ திக்கும் சந்திரன் விடுங்கரமும் அம்புயத் திற்கேழு தாம்பரித் தேரி ரவியும் மேதக வுறுந்தவத் திற்கருளு மவ்வருள் விளக்கத்தி னுக்கு ழுவலும் மேவருங் கல்விக்கு நுண்ணறிவு நுண்ணறிவு விளக்கத்தி னுக்கொ ழுக்கும் நோதக விலாததைத் தாங்கருள் வழிச்செலீஇ நோய்ப்பிறவி போக்கு வார்க்கு நோற்றவர் புராணமில் லாதமை தராதா நுவன்றெம்மை ஆண்ட பெம்மான் தீதக மதித்திடாச் சேவையர்கு லாதிபன் சிறுதே ருருட்டி யருளே! சிறுகோ லெடுத்தரசு செங்கோல் நிறுத்தினோன் சிறுதே ருருட்டி யருளே! - சேக் 4. ஓதோ ரிந்துநற் பரிதி யாரனல் ஒளிரு முக்கணாக் கொண்டவன் உளத்தின் வருத்த மகல வொருவர்க் குலவாக் கோட்டை யளித்தவன் போதா ரொண்முகத் துமைக்கி டந்தந்து புகழ்கொள் மருத வானவன் புனித மாமலை யருவி யாமநீர் பொதுளிப் பாயுந்தன் வயலிலே வாதார் களமர் மிகவுங் களித்து மைய லுற்றலந் துறைதலால் மதர்த்த வசன முரைத்துச் சரச வகையிற் பொழுது போக்குவீர் சூதார் பெரிய தனங்கள் குலுங்கத் தொகுத்த கூந்தல் சரிந்திடத் தொடர்ந்து நிமிர்ந்து நாற்றை எடுத்துச் சுருக்காய் நடுமின் பள்ளீரே. - இடைக 5. தமிழ னென்ற பெருமை யோடு தலைநி மிர்ந்து நில்லடா! தரணி யெங்கும் இணையி லாத சரிதை கொண்டு செல்லடா அமிழ்த மென்ற தமிழி னோசை அண்ட முட்ட உலகெலாம் அகில தேச மக்க ளுங்கண் டாசை கொள்ளச் செய்துமேல் கமழ்ம ணத்தின் தமிழில் மற்ற நாட்டி லுள்ள கலையெலாம் கட்டி வந்து தமிழர் வீட்டில் கதவி டித்துக் கொட்டியே நமது சொந்தம் இந்த நாடு நானி லத்தில் மீளவும் நல்ல வாழ்வு கொள்ளச் சேவை செய்து வாழ்க நீண்டநாள். - நாம இப் பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் ஐந்தும் வெவ்வே றோசை யுடையவை. இவ்விருத்தங்களின் அடிகளில் - 1, 5, 8, 12 சீர்களில் மோனை வர வேண்டும். பெரும்பாலும் அவ்வாறே வந்திருத்திருத்தலை அறிக. முதற் பாட்டின் முதலடியில் - சீர் 12க்குப் பதில் 13ல் மோனை வந்துளது. இரண்டாம் பாட்டின் 2, 3 அடிகளில் - சீர் 5ல் மோனை வரவில்லை. அடி 4ல், சீர் 5க்குப் பதில் 6ல் மோனை. பாட்டு ஐந்தின் அடி 3ல், சீர் 5க்குப் பதில் 7ல் மோனை. அடி 4ல் சீர் 12ல் மோனை வரவில்லை. பாட்டு - 2. அடி2 - சீர் 7 ‘காவலன்’ - ‘மன்னனாம்’ அடி - 3 ‘மீளவர லாகு மேகுமவன்’ - ‘மீளவிவண் நின்று செல்லுமவன்’ பாட்டு 5. அடி - 4 ‘செய்து வாழ்க நீண்டநாள்’ - ‘நாளுஞ் செய்து வாழ்கவே’ எனத் திருத்திப் படித்துப் பாருங்கள், மோனையின் சிறப்பு விளங்கும். அடியெதுகை வகையினை நோக்கி அறிக. பதினைந்து சீரடி விருத்தம் வழக்கிலில்லை. 15. தாழிசை பகுத்த ளித்துண் டுலக மக்கள் பாலு நீரும் போலவே பகையும் போரு மின்றி நாளும் பாரி லமைதி யோங்கவே வகுத்த மைந்த மக்க ளாட்சி வகைம ணங்க மழவே மலர்ந்து நாளு மொருங்கு மக்கள் மகிழ்ந்து வாழ்க வாழ்கவே. - புகு இப் பதினான்கு சீர்க் கழிநெடிலடித் தாழிசை, நாலாம் விருத்தம் போன்றது. அது போன்ற தொடையமைதி யுடையதே. மோனைத் தொடை அமையவேண்டியவாறு நன்கு அமைந்திருத் தலை அறிக. 16. பதினாறுசீரடி விருத்தம் 1. இலகொளி யுமிழ்தரு சிறையோதி மத்தவள் எழிலுறு தவளவல் விடையூர்தி றத்தவள் எறுழ்வலி மயில்கட வினள்வேறி ப்பவள் இருசிறை யொருகலு ழனையேறி நிற்பவள் உலகதிர் தரவரு மரியே றுகைப்பவள் உமிழ்கட மழைபொழி யயிரா வதத்தவள் உழிதரு குழிவிழி யுடல்பேய் நடத்துநள் உவரெழு மகளிர்த மொளிதான் பழிச்சுதும், அலகைகள் நடமிடு மழலார் களத்தினில் அமரர்கள் தபுமுடல் கழிபா னிறக்கலன் அவரொடு திணிவரை நிகர்தோ ளிடைப்பொலி அணியென வணிதரு பெருமா னிடத்தமர் நிலவரி நகையவ ளிருமூ வகைப்படு நெறிகளு நிறுவிய வொருமா தவக்கொடி நிலமிசை யுயரிய கமலா கரத்துறை நிருமலி மலைமகள் தனையே புரக்கவே. - அமு 2. ஓங்குகயி லாயபரம் பரைநந்தி யடிகட்கு உறுமரபெட் டாவதுபிற் றோன்றலா யெங்கள் உயர்திருவா வடுதுறைச்சுப் பிரமணிய குரவற் குற்றபத்தொன் பதாவதுமுற் றோன்றலாய்ப் பொலிந்து தேங்குசிவப் பிரகாச முதலியவாய் மலர்ந்து திகழுமா பதிசிவனே குன்றையுற மேவித் திருந்துமேர் வளங்கொண்டு பெருமையின்மே லாகிச் சிறத்தலாற் செம்மேனிக் குமரவே ளொத்தும், பாங்குபெறத் துதிக்கையொ டொர் கோட்டத் தனாய பயிற்சியினக் குமரவேள் திருத்தமைய னொத்தும் பரவுசேக் கிழார் எனும்பேர் பரித்தலினக் கணேசப் பண்ணவனை யினிதுயிர்த்த திருத்தாதை யொத்தும், லீங்குபுகழ் படைத்த அருள் மொழிந்தேவன் புராணம் விரித்துவைத்தா னவனடிதாழ்ந் தென்னறிவிற் கேற்ப மேயபிள்ளைத் தமிழென வொன்றுரைப்பலஃ தறிவான் மிக்கவர்தங் குழாத்தினுக்கு மிக்கநகை தருமே. - சேக் 3. சீதரன் மலர்த்தவி சிருக்கையி னிவர்க்கரிய ஒப்பற்ற மெய்ச்சோதி பாதியுரு விற்பொலி தேவியை யுருக்கிளர் முருக்கித ழிதழ்க்கிளியை எப்பற்று மற்றாருள் மேவியவ ருக்குறு காதர மறுத்தவர் பவக்கடல் சுவற்றிமகி ழப்பெற்றி மிக்காளை மூவிரு முகத்தொரு காளையை மதக்கவு ளுடைக்கய முகத்தமர னைப்பெற்ற நற்றாயை மேதகு குணத்தியை ஓதர தநச்செழு வடத்தொடொளிர் முத்துவட முற்றிச்சி றப்பெறு ஞானவமு தக்கடல் ஊறுகல சத்துணை நகிற்கொடி யிடைத்துடியை அற்புக்கி னிப்பாளை ஆரரு ளொருத்தியை ஆதர மிகப்பெரு மணத்துமெ மனத்துமமர் முத்திக்கு வித்தாய தாளுடைய சக்தியை ஆதவர் உத்திரர் மருத்துவர் வசுக்களெனும் முப்பத்து முக்கோடி தேவர்கள் புரக்கவே. - திவெபி இப் பதினாறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் மூன்றும் வெவ்வே றோசையுடையவை. இரு எண்சீர்க் கழிநெடிலடி ஒரு மோனைத் தொடையான் இணைந்து பதினாறுசீர்க் கழிநெடிலடியாய் வந்துள்ளமை காண்க. 1, 2 விருத்த அடிகளின், 1, 5, 9, 13 சீர்களில் மோனை அமைந்துள்ளது. முதல் விருத்தத்தின் ஒவ்வொரு மோனைத் தொடை யெடுப்பின் அரையடியின் ஈற்றுச்சீர்கள் ஒருவகை இயைபுத் தொடையான் இன்பம் பயத்தலை அறிக. மூன்றாவது விருத்தத்தின் அடிகளின் 1, 9 சீர்களில் மோனை அமைந் துள்ளதோடு, ஒவ்வொரு மோனைத் தொடையெடுப் படியின் 5, 6 சீர்கள் ஒருவகை எதுகையான் அமைந்து ஓசையின்பம் பயக்கின்றன. முதலடியின் அரையடிகளின் 7ஆம் சீர், முதற்சீரின் எதுகையுடையதாய் அமைந்து சுவை பயத்தலைப் படித்துச் சுவைத்தின்புறுக. இவை யெல்லாம் புலவர் பெருமக்களின் நுண்கவித்திறத்தின் நுண்மாண் நுழைப்புல நுட்பத்துக்கு எடுத்துக்காட்டாகு மன்றோ? இன்னொரு முறை விருத்தங் களைத் திருப்பிப் படித்து இன்புறுங்கள். நீங்களும் இத்தகு கவிப்புலமையடைய முயலுங்கள். ஆர்வம் அப்பயன் தரும். 17. தாழிசை 1. கடல்க ளைச்சொரி மலையுள வெனவிரு கடத டத்திடை பொழிமத முடையன கனல்வி ளைப்பன முகிலுள வெனவிழி கனல்சி னத்தன கரியொடு பரிகளின் உடல்பி ளப்பன பிறைசில வுளவென உயர்ம ருப்பின உலகுகண் குலைதர உருமி டிப்பன வடவனல் உளவென ஒலிமு கிற்கட கரிகளும் மிடையவே. - கலிங் 2. உலரு முதுமர மிளமையும் வளமையும் உயிரு நிலைபெற வொளிவிடு மிவருரு உறுதி யமுதினு மிவரிவர் பிறவியும் உததி யிவர்களி லொருமகள் திருமகள் அலகில் சுரபதி மதனர்க ளர சிவர் அவர திகிரியும் அனிகமு மகிலமும் அலகில் புவனமு மிவரிவ ரெனவரும் அமரர் வனிதையர் அணிகடை திறமினோ! - தக் இப்பதினாறுசீர்க் கழிநெடிலடித் தாழிசைகளிரண்டும் வேறோசை யுடையவை. இதற்கு மேல் தாழிசைகளில்லை. மோனைத் தொடையால், இருபத்தெட்டு, முப்பத்திரண்டு என, அடுக்கிக் கொண்டே போகினும் போகலாம். இவ்விரு தாழிசைகளின் அடிகளிலும் 1, 5, 6, 13 சீர்களில் மோனை வந்துள்ளது. 18. இருபத்தெண்சீரடி விருத்தம் வாரிட்டு விம்மிப் புடைத்திறுகி யிளகிமணி மார்பிடமெ லாங்க வர்ந்து வட்டமிட் டடியிட்டு நாளுக்கு நாள்மேல் வளர்ந்துபூ ரித்து முத்து மாலையிட் டிறுமாந்து பட்டவர்த் தனயானை மத்தகத் தோடெ திர்த்து வாதிட்டு மல்லிகைப் பூச்செண்டி னைத்தினம் வாட்டப்ப டுத்தி வரையைப் போரிட்டு மைந்தர்கள் மனஞ்சூறை யிட்டுமேற் புளகித்து வச்சிர ரத்நப் புதுச்செப் பினைத்தோழ மைகொண்டு பொன்னினைப் பொடியாவ ராவி மீதிற் பொட்டிட்ட தென்னவே தேமற் படர்ந்துசெம் பொற்சரிகை வேலை யிட்டுப் புனைதரு ரவிக்கையை யிறுக்கிக் கிழித்துப் புறப்பட்டு வாச னைப்பூந் தாரிட்டு வரவரப் பளபளப் பாகியுயர் தங்கக்கி ணத்தை யொத்துச் சந்தனம் புனுகுகத் தூரிகற் பூரஞ் சவாதுகுங் குமம ணிந்து சந்திரகா விச்சேலை வல்லவாட் டுக்குள் ததும்பியண் ணாந்து இடையினித் தாங்கா தெனக்கனந் தோங்கிமன் மதனுஞ் சலாமிட்டு நிற்க வுந்தன் சீரிட்டு நின்றுதம் தலைவணங் காமல் திரண்டபூ ணிணைக ளுன்றன் திருமார்பி லணையவோர் ஊசிமே லேதவம் செய்கின்ற தொக்கு மென்னும் சிறுரோம ரேகையாள் வந்தாள் பராக்கென்று சேவித்து நிற்கி றாள்பார் திகழ்வடுக நாததுரை மெச்சும்பிர தானி சிவசுப்பிர மண்ய ராசனே. - தனி இவ் விருபத்தெண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். எழுசீரடி நான்கு ஒரு மோனைத் தொடையாலிணைத்த அடி நான்கான் ஆனது. இதன் அடியின் 1, 5, 8, 12, 15, 19, 22, 26 சீர்களில் மோனை வரவேண்டும். அவ்வாறே வந்திருத்தலையறிக. 19. முப்பத்திருசீரடி விருத்தம் 1. ஒருபு றத்துமர கதமி மைப்பவொளிர் மாமேரு மற்றொரு மேருவைச் சாய்த்தென உலக ளக்கநிமிர் வடபொ ருப்பையொரு தோளால்வ ளைத்தபி னாகியைத் தீக்கனல் உமிழு முக்குடுமி அயில்தி ரித்துவரு வாய்வாள்ம ழுப்படை வீரனைப் பார்த்தனொ டுடலு மற்றொழிலி னறவி ளைத்துமெதிர் ஓடாது டற்றுகி ராதனைக் கூக்குரல் விரிக டற்புவி முழுது ணச்சமையும் ஓர்காளை கட்டுப்பிர தாபனைக் கார்க்கடு விடமெ டுத்தரிய திருமி டற்றிலிடு காமாரி யைக்கவு மாரியைப் போற்றிரு விழிமு னிற்கும்வடி வழகு டைக்கடவுள் மாமோகி னிக்கும ணாளனைச் சூக்கும வெளியி னிற்பரம நடந விற்றுதிறல் வேளூர்வ யித்திய நாதனைப் போற்றுதும். குரவு செச்சையொடு நறவு யிர்ப்பவிரி தேனாறு உவட்டெழு மார்பனைப் பேய்த்திரன் குரவை யிட்டவுணர் தடிசு வைத்திடவொர் கூர்வேல்வி டுத்தகு மாரனைப் பார்ப்பதி குமர னைச்சமரி லுருமு கக்குளிறு காலாயு தக்கொடி யாளனைக் கோட்டிய குறுந கைக்குமன முருக வெற்பவர்த மானோடு மற்பொரு தோளனைத் தாக்கிய திரண்ம ருப்பினமர் பொருத னிக்கடவுள் மால்யானை யைப்புணர் காளையைச் சாற்றிய செழும றைப்பொருளி னுரைவி ரித்துமெனும் வேதாமு டித்தலை மோதுகைக் காய்ப்பொடு திருவ டித்துணையென் முடிப தித்தவடு ஆறாத மெய்ப்புக ழாளியைப் பூட்டிய சிறைவி டுத்தமரர் குறைமு டித்துதவு சேனாப திப்பெரு மாள்தனைக் காக்கவே. - முபி 2. சிகர வடவரை குனிய நிமிர்தரு செருவி லொருபொரு வில்லெனக் கோட்டினர் செடிகொள் பறிதலை அமண ரெதிரெதிர் செலவோர் மதலைசொல் வையையிற் கூட்டினர் திருவு மிமையவர் தருவு மரவொலி செயவ லவர்கொள நல்குகைத் தீட்டினர் சிறிய வென துபுன் மொழியும் வடிதமிழ் தெரியு மவர்மது சொல்லெனச் சூட்டினர். பகரு மிசைதிசை பரவ இருவர்கள் பயிலு மியறெரி வெள்வளைத் தோட்டினர் பசிய வறுகொடு வெளிய நிலவிரி பவள வனமடர் பல்சடைக் காட்டினர் பதும முதல்வனு மெழுத வரியதொர் பனுவ லெழுதிய வைதிகப் பாட்டினர் பரசு மிரசத சபையில் நடமிடு பரத பதயுக முள்ளம்வைத் தேத்ததும். தகர மொழுகிய குழலு நிலவுமிழ் தரள நகையுமெ மையனைப் பார்த்தெதிர் சருவி யமர்பொரு விழியு மறுகிடை தளர வளர்வதொர் செவ்விமுற் றாக்கன தனமும் மனனுற வெழுதி யெழுதரு தமது வடிவையும் எள்ளிமட் டூற்றிய தவள மலர்வரு மிளமி னொடுசத தளமின் வழிபடு தையலைத் தூத்திரை மகர மெறிகட லமுதை யமுதுகு மழலை பழகிய கிள்ளையைப் பேட்டனம் மடவ நடைபயில் பிடியை விரைசெறி வரைசெய் புயமிசை வையம் வைத் தாற்றிய வழுதி யுடையகண் மணியொ டுலவுபெண் மணியை யணிதிகழ் செல்வியைத் தேக்கமழ் மதுர மொழுகிய தமிழி னியல்பயில் மதுரை மரகத வல்லியைக் காக்கவே. - மீபி 3. அளிசு ரந்தமரர் பசிகெ டும்படியி னமிழ்து தந்தகதிர் கொள்சடைக் காட்டிடை அழல்வி டஞ்சொரியு மரவி னம்பசிய அறுகு வெண்டலைகள் பல்குறச் சூட்டியும் அரிய யன்பரச வவரி டும் பைதெறும் அலர்செ ழுங்கமலம் வெல்கரத் தோட்டிடை அணைவு றும்பொருள்கள் கருக வெம்புசுடர் அவிரு மங்கியினை வெய்தெனக் காட்டியும் இளிவ ரும்பொன்மலை வளையு முன்பவுணர் எயிலொ ருங்கவிய எள்ளுபொற் றோட்கிடை இடுவ னங்களினி லுயிர்ம டிந்தவர்தம் இகழு மென்பினையும் ஐதெனப் பூட்டியும் எழுத ருஞ்சொன்மறை முடிவு மன்பர்தம திதய மும்பரவ நல்குமெய்த் தாட்டுணை எமது புன்றலையு முறந யந்துமரு ளியப ரம்பரனை உள்ளுறச் சேர்த்ததும், தளிர்து வன்றியிருள் படநி ழன்றுகுளிர் தழுவி வண்டுதுதை செய்துணர்ப் பூத்திரள் ததைவு கொண்டுநறு மணம ளைந்துமகி தலம சும்புபட வெள்ளமட் டூற்றெழு தரவ ளர்ந்துமுகி லகடு டைந்தழகு தபவு தைந்துசிதை எல்லையைக் காத்திடு தறுக ணெண்கரியை முடுகு றுங்கருவி தகுமி தென்றவரும் வெள்ளமொய்த் தார்த்தவிர் ஒளியு மிழ்ந்துலவு பரிதி மண்டலமும் உடுப மண்டலமு நில்லெனத் தாழ்த்திவிண் ணுலகு சென்றுசுரர் தருவொ டும்பழகி யுறவு கொண்டுமகிழ் பல்வளக் காக்களின் உறைப சுங்கிளிகள் சுருதி சந்தையுடன் உரைசெய் கின்றதனை மல்குபுத் தேட்குலம் ஒளியி ருந்துகவர் பதிகு ளந்தைவரும் உரைவி ளங்கமுத வல்லியைக் காக்கவே. - அமு 4. சிறகரளி மொய்த்திகழ் கொழுதிமது வைப்பசி சிதைய மடுத்துக் களித்தாடு தேமலர் செருகுமள கக்கன மதர்நெடு விழிக்கடல் சிறிது குடித்துக் கறுத்தார மேவிய திணியிணை மலைச்சொரி திதலைநிதி யத்திரள் செழுவிய பொற்புக் கடற்பாய வாரெழில் செறிதரும டித்திரை இடையறலொ ழுக்கிய திறமை நிகர்த்தொத் தொழுக்காமு ரோமமுங் குறைவறவ ளித்தருள் குவலயம டக்கொடி குளிர்கெட நச்சிச் கறைப்போர்வை யாலுடல் கொழுவியதெ னத்திசை முழுவதும டக்கிய குமரி இருட்டைப் படச்சாடு மாதவர் குலவுகிர ணச்சுவை யுணவினைஉ ணத்தனி குறுகிய பொற்சக் கரச்சேவல் போலொளிர் குருமணிகு யிற்றிய புயமலைகு ழைக்கெதிர் குயமுடி யைச்சற் றெடுத்தேறு பார்வையும் வெறிகமழும் உற்பல நறுமலர்ம றைப்பினில் விழைத னலத்தைப் படித்தேக நீள்செவி வியனிலமி றுத்தமை யெறிமணிமி குத்தவை வெருவி விழச்செற் றுகைத்தோடி நீடிய விரிமலர்த மக்கொரு மறைவிட மெனப்படும் விதியெ னெனப்புக்கு விற்கோதி னோடமர் வினையிலிக ரத்துழை சடைவனமு றற்கெழ விரைவில் விளைத்துக் குதித்தாடு பார்வையும் இறைமையும் அளப்பறு மழகொளிர நிற்பவ ளிமய மலைகட் கொடிப்போல மேவிய இனியமட மைக்குயின் மரகதம யிற்பெடை யிரையு மிருக்குக் குளத்தூரி னாடியென் இருமைவினை முற்றற எனையுமடி மைக்கொளு மெழிலமிழ் தச்சத்தி வைப்பான காவலர் எரிகதிரு ருத்திரர் விறல்வசு மருத்துவ ரெனுமிவர் முப்பத்து முக்கோடி தேவரே. - அமு இப் முப்பத்திருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் நான்கும் வெவ்வே றோசையுடையவை. எண்சீரடிகள் நான்கு. ஒரு மோனையால் இணைந்தானது இவ்வடி. முதல் விருத்தத்தின் அடிகளின் 1, 9, 17, 25 சீர்களில் மோனை அமைந்துள்ளது. மோனைத்தொடை எடுப்பின் ஒவ்வோர் அரையடியின் முதல் நான்கு சீரும் ஒழுகிய ஓசையும், பின் நான்கு சீரும் எடுத்த ஓசையும் உடையவை. அதனால், 5, 13, 21, 29 சீர்களில் மோனை வரவில்லை. 1, 2, 4 அடிகளின் 29 சீர்களில் மோனை வந்துள்ளது. 2, 3, 4 விருத்தங்களின் அடிகளின் 1, 5, 9, 13, 17, 21, 25, 29 சீர்களில் மோனை வந்துள்ளது. 2,3 விருத்தங்களின், ‘கோட்டினர், கூட்டினர்’ என, இயைபுத் தொடையமைப் பினை நோக்குக. ஒவ்வோரடியின் 7 -8, 15 - 16, 23 - 24, 31 - 32 சீர்கள் எடுப்பான இணைந்த ஓசையுடையவை. இன்னொரு முறை திருப்பிப் படித்துப் பாருங்கள். ‘பரமசிவம் சின்மயம்’ என்னும் அருட்பா விருத்தம் 128 சீர் அடியாலானது. பயிற்சி 1. 12, 14, 16, 28, 32 சீரடிகள், இயற்கையடிகளா, செயற்கையடிகளா? விளக்கம் தருக. 2. ஒரேவகை யடியாலான விருத்தங்கள் ஓசை வேறு படுவதன் காரணம் என்ன? 3. வழக்கில் இல்லாத அடிகள் எவை? 4. சித்திரகவிகள் ஏன் பாடிப் பழக வேண்டும்? 5. ‘எழுபாகி’ என்பது என்ன? ‘முப்பாகி, ஒன்பான்பாகி’ களும் உண்டு என்பதை அறிக. 6. பழம்புலவர்களின் கவித்திறத்தின் கழிநுட்பம் எதனால் புலப்படுகிறது? 7. ‘இலகொளி உமிழ்தரு, ஒருபுறத்து மரகத, சிகர வட வரை’ என்னும் விருத்தங் களின் தொடையமைதியைப் புலப்படுத்துக. 8. அவ்வச் சீரடி விருத்தங்களோடு, அவ்வச் சீரடித் தாழிசைகளை ஒப்புமைக்காண முயலுக. 9. இனமில்லாத விருத்தங்களுக்குத் தாழிசைகள் ஆக்க முயலுக. 10. ஒன்பதின் சீரடி விருத்தத்திலிருந்து இன்னொருமுறை விருத்தங் களையும் தாழிசைகளையும் படித்துப் பாருங்கள். 11. அவ்வந் நூல்களில் இவ்விருத்தங்கள், தாழிசைகளைச் சேர்ந்த வற்றைப் படித்தின்புறுக. 12. இவ்விருத்தங்கள், தாழிசைகள் ஒவ்வொன்று போலவும் ஒவ்வொன்று பாடிப் பாருங்கள், முடிந்த அளவு முயலுங்கள். 6. பொது குறளடி நான்கு கொண்டது - வஞ்சித்துறை, அளவடி நான்கு கொண்டது - கலிவிருத்தம். என்றாற் போல அல்லாமல், பெரும்பாலும் அடிவரையறை யின்றிப் பலவகையடிகளும் கலந்து வரும் பாவினங்கள் எடுத்துக் காட்டப் பெறுவதால், இது பொது எனப்பட்டது. இங்கு, 1. குறட்டாழிசை 5. வெளிவிருத்தம் 2. குறள் வெண்டுறை 6. ஆசிரியத்தாழிசை 3. வெண்டாழிசை 7. ஆசிரியத்துறை 4. வெண்டுறை 8. கலித்தாழிசை என்னும் பாவினங்களும், ‘மேல்வைப்பு’ என்னும் பாடல்வகையும் எடுத்துக் காட்டப் பெறும். 1. குறட்டாழிசை 1. தண்ணந் தூநீர் தானாடச் சேந்த வண்ண வோதி மலர்க்கண். - பழம் 2. பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத் தரசு பேணிநின் றாரிவர் தன்மை அறிவாரார். - சம் 3. வரம தேகொளா உரம தேசெயும் புரமெ ரித்தவன் பிரம நற்புரத் தரன்நல் நாமமே பரவு வார்கள்சீர் விரவு நீள்புவியே. - சம் 4. அங்கண் ஞாலத்தை யாண்ட முடியர சகன்று மேகுடி யாட்சி மலர்ந்தபின் இங்கண் மேலுமப் போரும் பகைமையும் எற்றுக்கே. - புகு அடியிரண்டாய், ஈற்றடி குறைந்து வருவது - குறட்டாழிசை. இந்நான்கு பாட்டும் அவ்வாறு வந்திருத்தலை அறிக. இந்நான்கு குறட்டாழிசையும் வெவ்வேறு ஓசையுடையவை. ஓசையோடு படித்துப் பாருங்கள். முதல் தாழிசை - நாற்சீரடியும் முச்சீரடியும் 2, 4 தாழிசை - எண்சீரடியும் ஐஞ்சீரடியும் மூன்றாவது தாழிசை - எண்சீரடியும் அறுசீரடியும். பாட்டு 1. இது வெண்டளை தட்டும், ஈற்றுச்சீர் புளிமாச் சீராகவும் வந்திருத்தலான், குறள்வெண்பா ஆகாமல், குறட்டாழிசை ஆயிற்று. இரண்டடியிலும் பொழிப்பு மோனை. பாட்டு 2. முதலடி 1, 2, 3, 5, 7 சீர்களில் மோனை. இரண்டாஞ்சீரில் மோனை எடுப்பில்லை. 1, 3, 5, 7 சீர்களின் மோனையே அமையும். இரண்டாமடி 1, 3, 5 சீர்களில் மோனை. (ஈச்சரத்து + அரசு) பாட்டு 3. இது எதுகைத் தொடையான் அமைந்தது. மோனை போலவே, முதலடி 1, 3, 5 சீர்களிலும் எதுகை அமைந்திருத்தலை அறிக. பாட்டு 4. முதலடி 1, 3, 5, 7சீர்களில் மோனை. இரண்டாமடி 1, 5 சீர்களில் மோனை. எதுகை அமைப்பினை நோக்குக. குறட்டாழிசை மிகச் சிறுவழக் குடையது. 2. குறள் வெண்டுறை 1. அப்போது நல்லதங்காள் அரிவை யிளங்கொடியும் நாத்தனார் தன்மனையில் நாயகியும் வந்துநின்று, கதவையுந் தட்டியவள் காரிகை நாயகியும் நின்றா ளொருசாமம் நேரிழையா ளப்போது, நான், பேசாத அண்ணியுடன் பேசவே வேண்டுமென்றே அண்ணியரே அண்ணியரே அண்ணனுட தேவியரே! அண்ண னரண்மனையை ஆளவந்த மன்னியரே! அடி, காலுங் கடுக்குதண்ணி கச்சட்டை நோகுதண்ணி கதவைத் திறவாயோ கண்ணாட்டி அண்ணியரே. - நல்ல 2. கண்டாளே அல்லியரும் கண்கள் சிவந்தாளே கழுத்திலே மங்கிலியங் கட்டின தாரடாசொல்? திருட்டுப் பயலேயுன் சீவன் பறித்திடுவேன் என்சமத்தும் சேவகமும் இப்போ தெரியுமடா அல்லியென்று பேருசொன்னால் கல்லுத்தெய்வங் கூத்தாடும் கட்டழகி பேருசொன்னால் பட்ட மரந்தழைக்கும் நான், முன்வைத்த காலையினிப் பின்வைக்கப் போவதில்லை என்று, தேரைத் திருப்பினாளே செங்கையிலேவில் லெடுத்தாள் தொட்டாளே வில்லதனைத் தொடுத்தாள் சராபரணம். - அல்லி 3. சேவகராற் பட்ட சிரமமிக வுண்டுகண்டீர் சேவகரில் லாவிடிலோ செய்கை நடக்கவில்லை இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நானென்றான் மாடுகன்று மேய்த்திடுவேன் மக்களைநான் காத்திடுவேன் வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன் சொன்ன படிகேட்பேன் துணிமணிகள் காத்திடுவேன் சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன் காட்டுவழி போனாலும் கள்ளர்பய மானாலும் சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்பேன் கற்றவித்தை ஏதுமில்லை காட்டு மனிதனையே. - பார. 4. தட்டினதட்டில் குதிரைகிளம்பித் தரையில் நில்லாமல் ஆகாயமார்க்கமா யெழுந்துபாயுதே அந்தமே கக்குதிரை சூரியன்போலே துலங்குதுபாரு சொர்னமே கக்குதிரை லகானையிழுத்துச் சிமிட்டாக்கொடுத்தான் ராஜா தேசிங்கு சிமிட்டாக்கொடுத்த வேகத்தினாலே சீறிப் பாய்கிறது காடுமலைகள் செடிகளெல்லாம் கலங்கி நடுங்கிடவே மலைகளிடிந்து தவிடுபொடியாய் மண்மேல் விழுந்திடவே குன்றுமலைகள் தாண்டிக்குதிரை குதித்துப் போகுதுபார் குன்றுகளெல்லாம் பொடி பொடியாகக் குலுங்கி விழுகுதுபார் ஆறுகுளங்கள் மாடுகளெல்லாம் அதிர நடுங்குதுபார் மேகங்கிளம்பி வாயைத்திறந்து மின்னல் கக்குதுபார் மின்னல்வெளிச்சந் தன்னிற்பாயுது வேக மானகுதிரை - தேசிங் 5. வண்மையிற் சிறந்தன்று வாய்மை யுடைமை. கற்ற துடைமை காட்சியி னறிப செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார். கொண்டுகண் மாறல் கொடுமையிற் றுவ்வாது. சோராக் கையன் சொன்மலை யல்லன். நசையிற் பெரியதோர் நல்குர வில்லை. கால மறியாதோன் கையு றல்பொய். உண்டி வெய்யோர்க் குறுபிணி யெளிது. சொற்செல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று. இன்பம் வேண்டுவோன் துன்பந் தண்டான். - முது 6. கல்விக் கழகு கசடற மொழிதல் வணிகர்க் கழகு வளர்பொரு ளீட்டல் உழவர்க் கழகு ருழுதூண் விரும்பல் வறிஞர்க் கழகு வறுமையிற் செம்மை, அச்சமும் நாணமும் அறிவிலோர்க் கில்லை. - வெற் 7. எண்ணு மெழுத்துங் கண்ணெ னத்தகும் ஏவா மக்கள் மூவா மருந்து. கேட்டில் உறுதி கூட்டு முடைமை. சுற்றத்திற் கழகு சூழ விருத்தல். சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர். - கொன். 8. கல்வியும் செல்வமும் கண்போலும் ஙப்போ லினந்தழு விப்பேணு. சக்கையிற் சாறு மிக்கதுவாம். ஞறாவத னெழில்போல் நயமின்றே. தனக்குள் ளதுபிறர் தனக்குண்டு. நன்றி மறப்பது நன்றன்று. பகையும் போரும் மிகையாமே. மனம்வாய் மெய்யொரு மைப்படுக. வறுமையிற் கொடியது மடியாகும். - புகு 9. எண்ணெழுத் திகழேல். ஒப்புர வொழுகு. ஒதுவ தொழியேல். இணக்கமறிந் திணங்கு. செய்வன திருந்தச்செய். - ஆத் இவை ஒன்பதும் வெவ்வேறு வகையான குறள் வெண்டுறைகள் குறள் வெண்டுறையின் இலக்கணத்தை முதலியலில், ‘குறள் வெண்டுறை’ என்பதிற் காண்க. 1 - 7 பாட்டுக்கள், அளவடி தனித்துவந்த குறள்வெண்டு றைகள், 8 சிந்தடி தனித்து வந்தது. 9 குறளடி தனித்து வந்தது. 1. பொழிப்பு மோனையுடைய அளவடி தனித்துவந்த குறள் வெண்டுறை. எல்லா அடிகளிலும் பொழிப்பு மோனை நன்கு அமைந்திருத்தலை நோக்குக. 5ஆம் அடியின் முதலில், ‘நான்’ என்பது - கூன், கூனின் இலக்கணத்தைப் ‘பரிபாடல்’ என்னும் தலைப்பிற் காண்க. 2. இதுவும் மேலது போன்றதே. 5, 6, 7 அடிகள் -பொழிப் பெதுகை. இவ்வாறு பொழிப்பெதுகை பெற்றும் சிறுபான்மை வரும். மற்ற அடிகள் பொழிப்பு மோனை, 7, 8 அடிமுதலில் ‘நான்’, என்று’ - கூன். 3. இஃதும் மேலிரண்டு போன்றதே. ஆனால், இது பொழிப்பு மோனையோடு இவ்விரண்டடி எதுகையுடையதாக வந்துள்ளது. அவ்விரண்டும் தனியடியே. அளவொத்த இரண்டடிகளல்ல. இவ்வாறும் வரும். பொழிப்பு எதுகை நன்கு அமைந்திருத்தலை நோக்குக. பாரதியார் பாடலின் ‘கண்ணன் என் சேவகன்’ முழுதும் குறள் வெண்டுறையே. பாரதியார் ‘குயிற்பாட்டு’ முழுவதும் குறள் வெண்டுறையே. பாஞ்சாலி சபதத்தில் 48 ‘அதர்மக் குழப்பம்’ 67 ‘துரோபதைக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம்’ ஆகிய பகுதிகளும் குறள் வெண்டுறையே. 4. இது வேறோசையுடன் அளவடி தனித்துவந்த குறள் வெண்டுறை. முதலிருசீர்கள் பெரும்பாலும் நாலசைச் சீர்கள். தட் டின தட் டில் நேர் நிரை நேர் நேர் கூவிளந்தண்பூ மற்ற சீர்களையும் இவ்வாறு அலகிட்டுப் பாருங்கள். எல்லா அடிகளிலும் பொழிப்பு மோனை நன்கு அமைந்துள்ளது. 5. இதுவும் பொழிப்பு மோனை யுடைய அளவடி தனித்து வந்த குறள் வெண்டுறையே. வேறு ஓசையுடையது. ஈற்றடி பொழிப் பெதுகை. 6. இதுவும் மேலது போன்ற ஓசையுடையதே. பொழிப்பு மோனை நன்கமைந்துள்ளது. இவ் வெற்றி வேற்கையில், தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை வானுற ஓங்கி வளம்பெற வளரினும் ஒருவர்க் கிருக்க நிழலா காதே. என்பது, தனித்து வாராது, அகவல் போலப் பொருட்டொடர் புடையதாக வந்துள்ளது. இது, அகவலோசை யுடைய அடியாகையால், இவ்வாறு தொடர்ந்து வந்தது போலும்! ‘தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை’ போன்றவையும் இன்ன. 7. இது, பொழிப்பெதுகை யுடைய அளவடியாலானது. 4 ஆம் அடி - பொழிப்பு மோனை. இது மிகமிகச் சிறுபான்மை. 8. சிந்தடி தனித்து வந்த குறள் வெண்டுறை 1, 4, 8, 9 அடிகள் பொழிப்பு மோனை, மற்றவை பொழிப்பெதுகை. 9. இது, குறளடி தனித்து வந்த வெண்டுறை. எல்லா அடியிலும் மோனை அமைந்துள்ளது. இவ் ஆத்திசூடி அடிகள் பெரும் பாலனவற்றில் மோனை அமையவில்லை. இருசீரடி யானதால், மோனை அமையா விடினும் இழுக்கின்று. 1, 2, 3-ம் ஒருவகையே. 4 வேறு வகை. இந்நான்கும் பொருள் தொடர்நிலை பாடுதற்கு ஏற்ற வெண்டுறைகளாகும். 5, 6, 7 - ஒருவகையே. 8. சிந்தடி. 9. குறளடி. இம்மூன்றும் நீதிநெறி பாடுதற்கு ஏற்ற வெண்டுறைகளாகும். குறள் வெண்டுறையாலான அம்மானை நூல்களை முதலியலில் ‘குறள் வெண்டுறை’ என்பதில் காண்க. 3. வெண்டாழிசை 1. ஏரினைப் போற்றுதும் ஏரினைப் போற்றுதும் பாருல கத்தோர் பசிப்பிணிக் கோர்மருந்தாய் ஆருயி ரோம்புத லான். 2. கைத்தொழில் போற்றுதும் கைத்தொழில் போற்றுதும் ஒத்துல கத்தே உயர்வாழ்வுக் கானபொருள் அத்தனையுந் தான்தருத லான். 3. வாணிகம் போற்றுதும் வாணிகம் போற்றுதும் ஏணிபோ லெப்பொருளு மெங்கும்இல் லென்னாமே ஆணிபோ லேதருத லான். - புகு சிந்தியல் வெண்பா ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருதல் - வெண்டாழிசை. அவ்வாறு வந்திருத்தலை அறிக. இது சிறு வழக்குடையது. இம் மூன்று வெண்பாக்களும், பொழிப்பு மோனையுடைய அளவடியும் சிந்தடியும் ஓரெதுகை பெற்று வந்திருத்தலை அறிக. ‘ஏணிபோல்’ என்னும் அடி முற்றுமோனை. மூன்று வெண்பாக்களினும் முதலடி - பொழிப்பு மோனை பொழிப்பெதுகையும், பின்மோனை பின்னெதுகையும் உடையதாய் அமைந்திருத்தலை நோக்குக. சிந்தியல் வெண்பாக்களால் ஆனதால், இது இவ்வொரே வகையினை யுடையதே யாகும். 4. வெண்டுறை 1. கூவாய் பூங்குயிலே! குளிர்மாரி தடத்துகந்த மாவாய் கீண்ட மணிவண்ண னைவரக் கூவாய் பூங்குயிலே! - நாலா 2. தலையே நீவணங்காய்! தலைமாலை தலைக்கணிந்து தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்! 3. குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலைமேற் பாய அழலெரியின் மூழ்கினவால் அந்தோ அளியவென் றயல்வாழ் மந்தி கலுழ்வனபோல் செஞ்சசைந்து கல்லருவி தூஉம் நிழல்வரை நன்னாடன் நீப்பனோ வல்லன். - யாசு 4. கல்லாதார் நல்லவையுட் கல்லேபோற் சென்றிருந்தால் கருமம் யாதாம் இல்லாதார் செல்வரைக்கண் டிணங்கியே ஏமுற்றால் இயைவ தென்னாம் பொல்லாதார் நன்கலங்கள் பூண்டாலும் மெய்புதைப்பப் பொலிவ தென்னாம் புல்லாதார் பொய்க் கேண்மை புனைந்துரைத்தால் ஆவதென்னே அல்லாதார் பொய்யாவ தறிபவே லமையாதோ? - யாக 5. முழங்கு களியானை மூரிக் கடற்படை முறிதார் மன்னர் வழங்கு மிடமெல்லாந் தன்புகழே போக்கிய வைவேல் விண்ணன் செழுந்தண்பூம் பழைசையுள் சிறந்தநா ளுஞ்செய எழுந்தசே தகத்துள் ளிருந்தவண் ணலடி விழுந்தண்பூ மலர்களால் வியந்துநா ளுந்தொழத் தொழுந்தவ ருறுவினை துறந்துபோ மாலரோ. - யாகா 6. கூற்றிருக்கு மடலாழிக் குரிசின்முத லோரிறைஞ்சக் கொழுந்தேன் பல்கி ஊற்றிருக்குந் தில்லைவனத் தகம்பிருக்கும் பசும்பொன்மன்றத் தொருதா ளுன்றி வண்டுபா டச்சுடர் மகுடமா டப்பிறைத் துண்ட மாடப்புலித் தோலுமா டப்பகி ரண்டமா டக்குலைந் தகிலமா டக்கருங் கொண்டலோ டுங்குழற் கோதையோ டுங்கறைக் கண்டனா டுந்திறங் காண்மினோ காண்மினோ! - சிதம் மூன்றடி முதல் ஏழடிகாறும் வந்து, பின்னர்ச் சில அடிகள் குறைந்தும். வேற்றொலி யாகவும் வருதல் - வெண்டுறை. இவை முறையே அவ்வாறே வந்திருத்தலை அறிக. முதல் இரண்டு பாடல்களும் ஒரு வகையே. ஒன்றினா லொன்றினை அறிவுறுத்தற் பொருட்டு, இரண்டுங் காட்டப்பட்டன. அவை இரண்டும், 1, 2 அடிகள் நாற்சீரடி 3 ஆம் அடி இருசீரடி முதலடியின் முதலிருசீர் ஈற்றடியாக அமைந்துள்ளது. முதற் பாட்டின் 1, 2 அடிகள் - பொழிப்புமோனை. இரண்டாம் பாட்டின் முதலடி - மேற்கதுவாய் மோனையும் எதுகையும், அடி 2 -ஒரூஉ மோனையும் எதுகையும். பாட்டு - 3. முதலடி யிரண்டும் - அறுசீரடி. பின்னிரண்டடியும் நாற்சீரடி. முதல் இரண்டடிகளின் 1, 3, 5 சீர்களில் மோனை. பின்னிரண்டடிகள் - பொழிப்பு மோனை. ‘கலுழ்’ - இடையின உயிரெதுகை; அவ்வளவு சிறப்பின்று. பாட்டு - 4. முதலடி மூன்றும் - அறுசீரடி. பின்னிரண்டும் - நாற்சீரடி. தொடையமைதி மூன்றாம் பாட்டிற் போன்றதே. அதனின் வேறுபடவந்துள்ள மோனைகளைக் கண்டறிக. அடி 2ல், முதற்சீரினும் பின் நான்கு சீரினும் ஒரே மோனை. ஐந்தடியும் ஓரெதுகை. முதல் மூன்றடியும் ஓரோசையாகவும், பின்னிரண்டடியும் வேறோரோசையாகவும் இருத்தலான், இது - வேற்றொலி வெண்டுறை. எனவே, ஒரே ஓசையுடையது - ஓரொலி வெண்டுறை எனப்படும். பாட்டு - 5. முதலடி இரண்டும் - அறுசீரடி. பின் நான்கும் - நாற்சீரடி. ஆறடியும் ஒரே எதுகை. முதலடியின் 1, 3, 5 சீர்களில் மோனை. இரண்டாமடியின் 1, 5 சீர்களில் மோனை. பின்னான்கடியும் பொழிப்பு மோனை. இதுவும் வேற்றொலி வெண்டுறையே. பாட்டு - 6. இதுவும் வேற்றொலி வெண்டுறையே. முதலீரடியும் - அறுசீரடி. பின்னைந்தும் - நாற்சீரடி. முதலடியின் 1, 3, 5 சீர்களில் மோனை. இரண்டாமடியின் 1, 5 சீர்களில் மோனை. 3, 4 சீர்கள், ‘தசும்பு’ - ‘அசும்பு’ என, எதுகை நயம். 3, 4, 6 அடிகள் - பொழிப்பு மோனை. அடி 5 - முற்று மோனை. அடி 7- மேற்கதுவாய் மோனை. 3, 4, 5, 6 அடிகள் பின்மோனை, பின் எதுகையினைப் படித்தின்புறுங்கள். முதல் இரண்டடியும் ஓரெதுகை. பின் ஐந்தடியும் வோறோ ரெதுகை. தொடை அமைதியையும், ஓசை வேறுபாட்டையும் கவனித்து, இவ்வெண்டுறை களை இன்னொருமுறை படித்துப் பாருங்கள். 5. வெளி விருத்தம் 1. அங்கட் கமலத் தலர்கமல மேலீரும் - நீரேபோலும்! வெங்கட் சுடிகை விடவரவின் மேலீரும் - நீரேபோலும்! திங்கட் சடையீரும் தில்லைவனத் துள்ளீரும் - நீரேபோலும்! - சிதம் 2. ஒக்க வனைத்தும் ஆக்கிடு வாரும் - ஒருநீரே தக்க சிறப்பிற் காத்திடு வாரும் - ஒருநீரே புக்கவை முற்றப் போக்கிடு வாரும் - ஒருநீரே மிக்க முடிக்கட் கீற்றுடை யாரும் - ஒருநீரே - வாட் 3. வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே - என்கின்றாளால் சினபவளத் திண்டோள்மேல் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன் - என்கின்றாளால் அனபவள மேகலையோ டப்பாலைக் கப்பாலான் - என்கின்றாளால் கனபவளஞ் சிந்தும் கழிப்பாலைச் சேர்வானைக் - கண்டாள்கொல்லோ! - அப் 4. மன்னர் ஆகிட மக்களை ஆக்கினர் - அவர்போலும்! இன்னல் காண்கின் இளநகை செய்தவர் - அவர்போலும்! முன்னு மென்னு முகிழாப் புகழவர் - அவர்போலும்! கன்ன லன்னவெம் காந்தி யடிகளே - அவர்போலும்! - புகு மூன்றடியானும் நான்கடியானும் வந்து, அடிதோறும் அடிமுடி விடத்து ஒரே தனிச்சொற் பெற்றுவருவது - வெளிவிருத்தம். இந்நான்கும் அவ்வாறே வந்திருத்தலை அறிக. நான்கும் வெவ்வே றோசையுடையவை. இது சிறுவழக்குடையது. தனிச் சீரொழிய, 1, 3 விருத்தம் - கொச்சக வகை. 2, 4 விருத்தம் - கலிவிருத்தம். 1, 3, 4 பாட்டுக்களின் அடிகள் - பொழிப்பு மோனை. மற்ற தொடை வகையினைக் கண்டறிக. இரண்டாவது விருத்தம் - முதற்சீர் - வல்லினக் குற்றொற்றும், மூன்றாஞ்சீர் - வல்லின நெட்டொற்றுமாக வந்த ஒருவகை எதுகைத் தொடையாலமைந்தது. மூன்றாவதடி, அத்துடன் பொழிப்பு மோனை. மூன்றாம் விருத்தத்தின் ஈற்றடி, வேறு தனிச்சொற் பெற்றது. ‘கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள், வானவர்க்குந் தானவனே என்கின்றாளால்’ என முடிவு கொள்க. வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே சினபவளத் திண்டோள்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன் அனபவள மேகலையோ டப்பாலைக் கப்பாலான் கனபவளஞ் சிந்தும் கழிப்பாலைச் சேர்வானே. எனத் தனிச்சொல் ஒழிந்த அடிகள், கொச்சகம் ஆதலை அறிக. 6. ஆசிரியத்தாழிசை 1. வையைத் துறைவன் மாமது ரைத் தென்னவன் மெய்யை யுயிர்கொடுத்துக் காத்ததொடிம் மீநிலத்தே செய்ய தமிழ்வளர்த்துச் செல்லாப் புகழ்பூண்டான். 2. பொன்னித் துறைவன் பூம்புகார்ச் செம்பியன் மன்னு மகனைமுறை செய்தொடிம் மாநிலத்தே கன்னித் தமிழ்வளர்த்துக் கழியாப் புகழ்பூண்டான். 3. பொருநைத் துறைவன் பூவாவஞ் சிப்பொறையன் வருபுகார்ச் செல்விசிலை வைத்ததொடிம் மண்ணகத்தே அருமைத் தமிழ்வளர்த்தாங் கழியாப் புகழ்பூண்டான். 4. முன்னந் தமிழகத்தை மூவா முறைபுரந்த தன்னந் தனைநேர் தகுவண் புகழ்மூவர் தென்னன் பொறையன் செம்பியன் என்பரால். - புகு அளவொத்த மூன்றடியாய், ஒரு பொருள்மேல் மூன்றடுக்கியும், தனித்தும் வருதல் - ஆசிரியத் தாழிசை. இவை அவ்வாறே வந்திருத்தலை அறிக. நான்காவது தனித்து வந்தது. தொடையமைப்பினை நோக்குக. தாழிசை அடி தொடை 1 2 ஒரூஉ மோனை 2 2 கீழ்க்கதுவாய் மோனை 3 2 மேற்கதுவாய் மோனை 4 1 மேற்கதுவாய் மோனை 4 2 கூழை மோனை மற்ற அடிகள் பொழிப்பு மோனை. பாட்டு-1 ‘வய்யை’ என எதுகையமைதி கொள்க. ‘கன்று குணிலா கனியுகுத்த மாயவன்’ என்ற சிலப்பதிகாரத் தாழிசை போன்றது. 7. ஆசிரியத்துறை 1. நாணிக் கவிழ்த்தவள் தன்றலை தொட்டு நவின்றவுன்றன் ஆணைக் கவள்சிரம் அற்றினி வீழினும் அஞ்சிலம்யாம்; காணப் பிறர் பொருள் கள்ளலம் ஆதலினால், வாணிக் குரித்தெனக் கேட்டபின் வௌவலம் வாரலையோ! -மனோ 2. வலைவாழ்நர் சேரி வலையுணங்கு முன்றில் மலர்கை யேந்தி விலைமீ னுணங்கற் பொருட்டாக வேண்டுருவங் கொண்டு வேறோர் தொலைவேல் நெடுங்கட் கொடுங்கூற்றம் வாழ்வ தலைநீர்த்தண் கான லறியேன் அறிவேனேல் அடையேன் மன்னோ! -சில- 7 3. வண்டுளர் பூந்தார் வளங்கெழு செம்பூட்சேய் வடிவே போலத் தண்டளிர்ப்பூம் பிண்டித் தழையேந்தி மான்வினவித் தணந்தோன் யாரே! தண்டளிர்ப்பூம் பிண்டித் தழையேந்தி வந்தும் பண்டைப் பதிவினவிப் பாங்கு படமொழிந்து படர்ந்தா னன்றே. - யாக 4. அமல னாதிபி ரானடி யார்க்கென்னை யாட்படுத்த விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள்மதி ளரங்கத் தம்மான்றிருக் கமல பாதம்வந் தென்கண்ணி னுள்ளன ஒக்கின்றதே. - நாலா 5. விண்ணார் திங்கள் விளங்கு நுதலினார் எண்ணார் வந்தென் எழில்கொண்டார். பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை உண்ணார் நாளும் உறைவரே. - சம் 6. இளமதி நுதலியொ டின்னம்பர் மேவிய வளமதி வளர்சடை யீரே! வளமதி வளர்சடை யீருமை வாழ்த்துவார் உளமதி மிகவுடை யோரே. - சம் 7. வானி ளம்மதி மல்கு வார்சடை ஆனஞ் சாடலன் ஆடனை தேன ணிம்மலர் சேர்த்த முன்செய்த ஊன முள்ள வொழியுமே. - சம் 8. நீறு சேர்வதொர் மேனியர் நேரிழை கூறு சேர்வதொர் கோலமாய்ப் பாறு சேர்தலைக் கையர் பராய்த்துறை ஆறு சேர்சடை யண்ணலே. -சம் 9. யாதொன்றுங் காணேம் புலத்த லவர்மலை போதாடி வந்த புதுப்புனல்; போதாடி வந்த புதுப்புனல் மற்றையர் மீதாடி னோந்தோழி நெஞ்சன்றே. - சில - 24 10. ஆறணி செஞ்சடையான் அழகார் புரமூன்றும் அன்று வேவ நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை யெம்மிறைவன் பாறணி வெண்டலையிற் பகலே பலியென்று வந்து நின்ற வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே. - சம் 11. தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவுந் தலைமக னைத்து ழாய்விரைப் பூமருவு கண்ணி எம்பி ரானைப் பொன்மலையை நாமருவி நின்றேத்தி உள்ளி வணங்கி நாமகிழ்ந் தாட நாவலர் பாமருவி நிற்கத் தந்த பான் மையேய் வள்ளலே! - நாலா 12. அந்தமு மாதியு மாகிய வண்ணல் ஆரழ லங்கை யமர்ந்திலங்க மந்த முழவ மியம்ப மலைமகள் காணநின் றாடிச் சந்த மிலங்கு நகுதலை கங்கை தண்மதி யம்மய லேததும்ப வெந்தவெண் ணீறுமெய் பூசும் வேட்கள நன்னக ரீரே! - சம் 13. எவ்வ நோய்தவிர்ப் பானெ மக்கிறை இன்ன கைத்துவர் வாய்நி லமகள் செவ்வி தோயவல்லான் திருமா மகட்கினியான். மவ்வல் மாலைவண் டாரும் மல்லிகை மாலை யோடு மணந்து மாருதம் தெய்வ நாறவருந் திருக்கோட்டி யூரானே. - நாலா 14. ஆற்றுக் கேபிறைக் கீற்றுக் கேசடை யாக்கிச் சேவடி தூக்கி யாருயிர்ப் பேற்றுக் கேநடிப் பாய்மணி மன்றிற் பெருந்தகையே! சோற்றுக் கேயிதஞ் சொல்லிப் பேதையர் சூழல் வாய்த்துயர் சூழ்ந்து மேற்றிசைக் காற்றுக் கேகறங் காய்ச்சுழன் றேனைக் கருதுதியோ! - அரு 15. ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம் நாடி னாயிட மாநறுங் கொன்றை நயந்தவனே! பாடி னாய்மறை யோடுபல் கீதமும் பல்ச டைப்பனி கால்கதிர் வெண்டிங்கள் சூடினாயிரு ளாய்சுருங் கஎம தொல்வினையே. - சம் 16. அஞ்சொன் மடவார் ஆலோல மென்று சொலும் செஞ்சொன் மிகவேட்டுச் செல்லா வாய்ப் பைங்கிளிகள் செறிதண் சாரல்; வெஞ்சொல் விளையர் வேறின்றி மாவினவி நெஞ்சம் பறிபோக நீ ளெஃகங் கையேந்தி நின்றான் போலும்! - புகு நான்கடியாய், ஈற்றயலடி குறைந்தும், ஈற்றயலடி குறைந்து இடைமடக் காயும், இடையிடை குறைந்தும், இடையிடை குறைந்து இடைமடக்காயும் வருதல் - ஆசிரியத்துறை. இடையிடை குறைதல் - 1 இரண்டாமடியும் நான்காமடியும் குறைதல், 2. முதலடியும் மூன்றாமடியும் குறைதல். பாட்டு அடி சீர்அளவு பாட்டு அடி சீர்அளவு 1 1, 2, 4 5 11 1, 3 7 1 3 4 11 2, 4 5 2 1, 2, 4 6 12 1, 3 7 2 3 4 12 2, 4 6 3 1, 2, 4 6 13 1, 3 8 3 3 4 13 2, 4 4 4 1, 2, 4 5 14 1, 3 8 4 3 7 14 2, 4 5 5,6,7,8,9 1, 3 4 15 1, 3 8 5,6,7,8,9 2, 4 3 15 2, 4 5 10 1, 3 6 16 1, 3 4 10 2, 4 4 16 2, 4 6 முதற்பாட்டின் 1, 2, 4 அடிகள் - ஐஞ்சீரடி. மூன்றாமடி - நாற்சீரடி. எனவே, இது ஈற்றயலடி குறைந்து வந்தது. 2, 3 பாட்டுக்களும் இது போன்றனவே. மூன்றாம் பாட்டு இடைமடக்கி வந்தது. நாலாம் பாட்டு ஈற்றயலடி நீண்டு வந்தது. ‘குறைந்தும்’ என்ற உம்மையால், நீண்டும் வரும் என்பது பெறப்படுதலான், நீண்டு வந்தது. மற்ற பாடல்கள் இடையிடை குறைந்து வந்தன. 6,9 பாடல்கள் இடைமடக்காய் வந்தன. 5 - 15 ஆகிய 11 இரண்டாமடியும் பாடல்களும் நான்காமடியும் குறைந்து வந்தன. 16 ஆம் பாடல் முதலடியும் மூன்றாமடியும் குறைந்து வந்தன. இப்பதினாறு அடியளவின் வேறுபாட்டாலும் அடிக் பாட்டுக்களும் குறைவின் வேறுபாட்டாலும், அடிக் குறைவின் இடவேறுபாட்டாலும், இடை மடக்காலும் வெவ்வேறாயின. பாடல்கள் 14, 15 அடியளவு ஒன்றே எனினும், ஓசை வேறுபாட்டால் வேறாயின. இவ்வாறே - 5, 7, 8 பாடல்களும். இன்னொரு முறை கவனித்துப் படித்துப் பாருங்கள். தொடையமைதி பாட்டு - அடி - மோ. வ. சீ மோ. வர. வே. சீ 1 - 1, 2, 4 - 1, 3, 5 - 1 - 5 1 - 3 - 1, 3 2 - 1, 2, 4 - 1, 3, 5 2 - 3 - 1, 3 3 - 1, 2, 4 - 1, 3, 5 3 - 3 - 1, 3 4 - 1, 2, 4 - 1, 5 4 - 3 - 1, 3, 5 5 - 9 - 1, 3 - 1, 3 - 1 - 4 5 - 9 - 2, 4 - 1, 3 10 - 1, 3 - 1, 3, 5 10 - 2, 4 - 1, 3 11, 12 - 1, 3 - 1, 3, 5, 7 - 1 - 5 11, 12 - 2, 4 - 1, 4 13 - 1, 3 - 1, 5 13 - 2, 4 - 1, 3 14 - 1, 3 - 1, 5 14 - 2, 4 - 1, 5 15 - 1, 3 - 1, 5 15 - 2, 4 - 1, 5 16 - 1, 3 - 1, 3 16 - 2, 4 - 1, 3, 5 (1), (2) - 1ல் வரவேண்டியவாறு வராவிட்டால், 2ல் வரவேணடியவாறு வரலாம். பாட்டு - 4, 9. நான்காம் அடிகளில் மோனை அமைய வில்லை. பாட்டு - 13 அடி - 4. ‘தெய்வ’ - மூன்றாமெழுத்தொன்றெதுகை அவ்வளவு சிறப்பின்று. 14 ஆம் பாடல் - ஒருவகை எதுகைத்தொடையான் அமைந் துள்ளதை நோக்குக. வரவேண்டியதற்கு மேல் வந்துள்ள தொடைவகையினைக் கண்டறிக. அடிகள் மிக்கும் குறைந்தும் ஒருவகை ஓசையின்பம் பயக்கின்றதல்லவா? 8. கலித்தாழிசை 1. வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற! ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற! - திவா 2. செல்லார் பொழில்தில்லைச் சிற்றம் பலத்தெங்கள் பொல்லா மணியைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்! - சிதம் 3. வருவாய் மயில்மீ தினிலே வடிவே லுடனே வருவாய்; தருவாய் நலமும் தகவும் புகழும் தவமுந் திறமுந் தனமுங் கனமும். - பாரா 4. பின்னுமுன்னு மெங்கணும் பெயர்ந்துவந் தெழுந்துலாய் மின்னுமின் னிளங்கொடி வியனிலத் திழிந்தெனத் தென்னன்வாழ்க வாழ்க என்று சென்றுபந் தடித்துமே தேவரார மார்பன்வாழ்க என்றுபந் தடித்துமே. - சில - 29 5. வென்று பனிமலையில் விற்பொறித்த வானவன் இன்றுநம் பண்ணை வருமே லெழின்மார்பில் அன்றலர் போந்தை காணாமோ தோழீ! அலர்போந்தை கண்டின்பம் பூணாமோ தோழீ! - அர 6. பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியுங் கையுந் திருவாயுஞ் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே! கண்ணிமைத்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே! - சில - 17 7. மாதலைவன் கென்னடியை வன்கொலைசெய் புல்லியனை ஏதுமறி யாதவனென் றியம்பினரா மேதோழீ! ஏதுமறி யாதவனென் றியம்பினரே ஆமாயின் மாதலைவர் கள்வாழ வகையினியின் றோதோழீ! வாழவகை யற்றவர்க்கு வகையினிஇன் றேதோழீ! - உகெ 8. மடம்படு சாயலாள் மாதவி தன்னைக் கடம்படாள் காதற் கணவன்கைப் பற்றிக் குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த தடம்பெருங் கண்ணிக்குத் தாயர்நான் கண்டீர்! தண்புகார்ப் பாவைக்குத் தாயர்நான் கண்டீர்! - சில - 29 9. தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அகைப்பார் புகார்மகளிர் ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல்! பாவைமா ராரிக்கும் பாடலே பாடல்! - சில - 29 10. ஆலத் திலையான் அரவி னணைமேலான் நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான் பாலப் பிராயத்தே பார்த்தற் கருள்செய்த கோலப் பிரானுக்கோர் கோல் கொண்டுவா! குடந்தைக் கிடந்தற்கோர் கோல்கொண்டுவா! - நாலா 11. வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவ லாமைசொல்லிக் கல்லி னாலெறிந் திட்டு மோதியும் கூறை கொள்ளுமிடம் முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டிமா நகர்வாய் எல்லை காப்பதொன் றில்லை யாகில்நீர் எத்துக் கிங்கிருந்தீர் எம்பி ரானிரே! சுந் 12. காளி யாடக் கனலுமிழ் கண்ணுதல் மீளி யாடுதல் பாருமே! மீளி யாடல் வியந்தவள் தோற்றெனக் கூளி பாடிக் குனிப்பதும் பாருமே பாருமே! - சிதம் 13. காமர்நறு விரைத்துளபக் கண்ணியனைப் புண்ணியனை மாமகள்தன் கொழுநனை வழுத்துவீர் மானிடர்காள்! மாமகள்தன் கொழுநனை வழுத்துவீர் ஆமாகில், தாமரைப்பெ ரும்முதலுஞ் சாரற் கரியகதி சாரு வீரே. - குசே இரண்டடியும் பலவடியும் வந்து, ஈற்றடி மிக்கு, ஏனையடிகள் தம்முள் ஒத்தும் ஒவ்வாதும் வருதல் - கலித்தாழிசை. ஒத்தும் ஒவ்வாதும் வருதல், இரண்டடியொழிந்த வற்றுள் கொள்க. இக்கலித் தாழிசைகள் அவ்வாறு வந்திருத்தலை அறிக. முதல் மூன்றும் - 2 அடித் தாழிசைகள். நாலும் ஐந்தும் - 3 அடித் தாழிசைகள். மற்ற எட்டும் - 4 அடித் தாழிசைகள். முதல் தாழிசையின் முதலடி - நாற்சீரடி. ‘உளைந்தன - ஒருங்குடன்’ என, மோனைத் தொடையால் அமைந்த இரண்டாவதடி - அறுசீரடி. மற்றவும் இவ்வாறு காண்க. தாழிசை அடி சீர் தாழிசை அடி சீர் 2 1 4 10 1, 2, 3 4 2 2 5 10 4 6 3 1 6 11 1, 2, 3 6 3 2 8 11 4 8 4, 5 1, 2 4 12 1, 3 4 4, 5 3 8 12 2 3 12 4 5 6 - 9 1, 2, 3 4 13 1, 2, 3 4 6 - 9 4 8 13 4 6 இதை நன்கு கவனித்துத் தாழிசைகளின் வேறு பாட்டினை உணர்க. முதல் மூன்று இரண்டடித் தாழிசைகளும் அடியளவான் வேறுபட்டவை. மூன்றடித் தாழிசைகளிரண்டும் (4, 5) வேறுபட்ட ஓசை யுடையவை. நான்கடித் தாழிசைகள் எட்டில், 6, 7 ஓரோசை யுடையவையே. 7 இடைமடக்கி வந்ததால், வேறுபட்டது. 9 - 6, 7 போன்ற ஓசையுடையதே எனினும், முதலிரண்டடியும் ஓரெதுகையாகவும், பின்னிரண்டடியும் வேறெதுகையாகவும் உள்ள தால், வேறுபட்டது. 10ன் ஈற்றடி அறுசீரடியானதால், வேறுபட்டது. 13ன் ஈற்றடியும் அறுசீரடியே எனினும், வேறோசை யோடு இடைமடக்கி வந்தததால், வேறுபட்டது. 11ன் முதல் மூன்றடியும் அறுசீரடியும், ஈற்றடி எண்சீரடியும் ஆனதால், வேறுபட்டது. 12, இதன் முதல் மூன்றடிகள் - நாற்சீரடியும் முச்சீரடியுமாகி, ஒவ்வாது வந்ததால், வேறுபட்டது. இன்னொருமுறை திருப்பிப் படித்துப் பார்த்து, இவ்வேறு பாட்டினை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். தொடைவகை, பாட்டு அடி மோனைச்சீர் தொடைவகை 1 1 - பொழிப்பு மோனையும் எதுகையும் 1 2 1, 3, 4, 6 - 2 1 - பொழிப்பு மோனை 2 2 1, 3, 5 - 3 - - நன்கு அமைந்துள்ளது படித்து இன்புறுக. 4 1, 2 - பொழிப்பு மோனை 4 3 1, 3, 5 ‘சென்று- வென்று’ என எதுகைநயம். 5 1 - பொழிப்பு மோனை 5 2 - ஒரூஉ மோனை 5 3 1, 5 ‘காணாமோ - பூணாமோ’ என எதுகைநயம். 6 1 - பொழிப்பு மோனை 6 3 - மேற்கதுவாய் மோனை 6 4 - முற்றுமோனை, சுவைத்தின் புறுக. 7 1 - பொழிப்பு மோனை 7 2, 3 - மேற்கதுவாய் மோனை 7 4 1, 3, 5, 7 - 8 1 - பொழிப்பு மோனை 8 2, 3 - கூழை மோனை 8 4 1, 3, 5, 7 - 9 1, 2 - ஒரூஉ மோனை 9 3 - மோனை அமையவில்லை. ‘செம்பி - வம்ப’ என்னும் எதுகை நயம். 9 4 1, 3, 4, 5, 7, 8 - 10 1 - மேற்கதுவாய் மோனை 10 2, 3 - பொழிப்பு மோனை 10 4 1, 3, 4, 6 - 11 1 1, 3, 4, 5 - 11 3 1, 4 - 11 4 - மோனை நன்கு அமைத்துள்ளது. 11 2 - மோனை அமைய வில்லை. இதைச் சேர்ந்த மற்ற ஒன்பது பாடலிலும் இவ்வாறே. 12 1 - மேற்கதுவாய் மோனை 12 2 - மோனை அமையவில்லை. 12 3 - பொழிப்பு மோனை 12 4 1, 3 - 13 1, 3 - பொழிப்பு மோனை 13 2 - மேற்கதுவாய் மோனை 13 4 1, 3, 5 - வரவேண்டிய இடங்களுக்கு மேல் வந்துள்ள மோனைகளை நயமாகக் கொள்க. பயிற்சி 1. முன்னர் எடுத்துக்காட்டப்பட்ட கலிவிருத்தம் முதல் ஆசிரிய விருத்தம் ஈறாகவுள்ள பாவினங்கட்கும் இப்பாவினங் கட்கும் உள்ள வேறுபாடென்ன? 2. குறட்டாழிசை, ஆசிரியத்தாழிசை, வெளிவிருத்தம் இவற்றின் இலக்கணம் என்ன? 3. குறள் வெண்டுறையால் செய்யப்பட்ட நான்கு நூல்களைக் குறிப்பிடுக. 4. குறள் வெண்டுறையின் பழைய இலக்கணத்திற்கும் புதிய இலக்கணத்திற்கும் உள்ள வேறுபாடென்ன? இவ்வாறு புதியது புகுந்ததன் காரணம் என்ன? 5. வெண்டாழிசைக்கும் ஆசிரியத் தாழிசைக்கும் முள்ள வேறுபாடென்ன? 6. வெண்டுறைக்கும் கலித்தாழிசைக்கும் உள்ள வேறுபா டென்ன? 7. வெண்டுறை எத்தனை வகைப்படும்? 8. ஆசிரியத்துறையின் இலக்கணம் என்ன? ஆசிரியத்துறையை வகைப்படுத்திக் கூறுக. 9. கலித்தாழிசையின் வகையைக் குறிப்பிடுக. 10. ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வரும் பாவினங்கள் எவை? 11. இடையிடை குறைந்து வருதல், ஈற்றில் குறைந்து வருதல், ஈற்றடி குறைந்து வருதல், ஈற்றடிமிக்கு வருதல் - இவை எவ்வெப் பாரினங்களின் இலக்கணம்? 12. இப்பாவினங்களில் அமைந்துள்ள அடியெதுகை வகையினை வகைப்படுத்துக. 13. கீழ்வரும் அடிகளிலுள்ள மோனை எதுகை அமைப்பினை எடுத்துக் காட்டுக. 1. ‘தலையே நீவணங்காய் தலைமாலை தலைக்கணிந்து’ 2. ‘துண்டமா டப்புலித் தோலுமா டப்பகி’ 3. ‘முன்னந் தமிழகத்தை மூவா முறைபுரந்த’ 4. ‘ஆற்றுக் கேபிறைக் கீற்றுக் கேசடை’ 5. ‘கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே’ 14. 1. “இருளில் தனித்துறை ஏழையர் தங்கள்மேல் பொருதலோ வீரமென் றாடாய்க்கழல், போயெரிந் தான்பண்டென் றாடாய்க்கழல்” - மனோ 2. “மும்மதுரைச் சங்கத்து முறையொடு வளர்ந்த அம்மதுரச் சொல்லா ளவளே” - புகு இவை எப்பாவினம்? 15. ‘இளங்கோவடிகள் காலத்திலேயே பாவினங்கள் தோன்றி விட்டன’ என்பதைப் புலப்படுத்துக. 16. இப்பாவினப் பாடல்களோடு சேர்ந்த பாடல்களை அவ்வந் நூல்களில் படித்து, இவற்றின் அமைப்பு நன்கு மனத்தில் பதியும்படி செய்துகொள்க. 17. இவ்வெடுத்துக் காட்டுச் செய்யுட்களை நன்கு படித்து, அவ்வாறு வகைக்கொன்று பாடிப் பாருங்கள். 9. மேல்வைப்பு 1. தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய் மிக்க செம்மை விமலன் வியன்கழல் சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி நன்ற தாகிய நம்பன் றானே. - சம் 2. வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லி அமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே பாதி மாதுட னாய பரமனே! ஞால நின்புக ழேமிக வேண்டும்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே! - சம் 3. காதல்செய் திளையவர் கலவிதரும் வேதனை வினையது வெருவுதலாம்; ஆதலி லுனதடி அணுகுவன்நான் போதலர் நெடுமுடிப் புண்ணியனே! ஆண்டாயுனைக் காண்பதோர் அருளெனக் கருளுதியேல் வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே. -நாலா 4. மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்; யாதும் சுவடுப டாமல் ஐயா றடைகின்ற போது காதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன். கண்டேன் அவர்திருப் பாதம் கண்டறி யாதன கண்டேன். - அப் முதற்பாட்டு - ஈரடி மேல்வைப்பு. மற்ற மூன்றும் - நாடி மேல்வைப்பு. நாலடிப் பாடலுக்குமேல் மேல்வைப்பு வருவது -நாலடி மேல்வைப்பு ‘மேல்வைப்பு’ என்பது ‘கருப்பமுத்துத் தேவனுக்குக் கண்மணிகள் மூன்றுபேராம் அழகிற் சிறந்தவனாம் ஆண்மையுள்ள சந்தனமாம் தண்டை சிலம்பு சலசலென்க தாராபுரம் தங்க நடந்துவாடி மங்கை - சந்தெ என்னும் தெம்பாங்கில் வரும், ‘தண்டை சிலம்பு சலசலென்க என்னும் மேல்வைப்புப் போன்றதாகும். இரண்டாம் பாட்டு, வாழ்க அந்தணர் வானவ ரானினம் என்ற கலிவிருத்தம் போன்ற கலிவிருத்தம், அப்பாடலின் மேல்வைப் பாக, ‘ஞால நின்புகழ்’ என்னும் மேல்வைப்பு வருகிறது. இதுவே மற்ற ஒன்பதுபாடலுக்கும் தொடர்ந்து வருகிறது. மூன்று நாலு பாடல்களின் மேல்வைப்பும் இவ்வாறே தொடர்ந்து வருகிறது. முதற் பாடலின் மேல்வைப்பு மாறி வருகிறது. மூன்றாம் பாட்டு - வஞ்சிவிருத்தம் நான்காம் பாட்டு - அறுசீரடி விருத்தம். முதற் பாட்டு - அளவடித் தாழிசை. தொடை யமைப்பினை நோக்குக. முதற்பாட்டின் - மேல்வைப்பு முதலடியிலும், இரண்டாம்பாட்டின் - 1, 3 அடிகளிலும் மோனை அமையவில்லை, மற்றவற்றில் நன்கு மோனை அமைந்துள்ளது. கண்டறிக. சுண்ணவெண் சந்தனச் சாந்தும் சுடர்த்திங்கள் சூளா மணியும். என்ற அப்பர் பாடலும் நாலாம் பாடல் போன்றதே. பயிற்சி 1. ‘மேல்வைப்பு’ - எடுத்துக்காட்டுத் தந்து விளக்குக. 2. இவ்வாறு வகைக் கொன்று பாட முயலுக. 3. கல்வி யென்பது கற்றவர் செல்வமாம். செல்வ மென்பது சேர்ந்தவர் செல்வமாம்’ இதை மேல்வைப்பாகக் கொண்டு ஒரு பாட்டுப் பாடுக. இறுகாறும் எடுத்துக் காட்டிய, இலக்கணம் கூறிய பாவும் பாவினமும் 1. பா 1. குறள் வெண்பா. 2. நேரிசைச் சிந்தியல் வெண்பா 3. இன்னிசைச் சிந்தியல் வெண்பா 4. நேரிசை வெண்பா 5. இன்னிசை வெண்பா 6. நேரிசைப் பஃறொடை வெண்பா 7. இன்னிசைப் பஃறொடை வெண்பா 8. நேரிசைக் கலிவெண்பா 9. இன்னிசைக் கலிவெண்பா 10. நேரிசை ஆசிரியப்பா 11. இணைக்குற ளாசிரியப்பா 12. நிலைமண்டில ஆசிரியப்பா 13. அடிமறிமண்டில ஆசிரியப்பா 14. நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா 15. அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா 16. வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா 17. தரவு கொச்சகக் கலிப்பா 18. தரவிணைக் கொச்சகக் கலிப்பா 19. சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா 20. பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா 21. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா 22. உறழ் கலிப்பா 23. வெண் கலிப்பா 24. நாலடிக் கொச்சகம் 25. ஆறடிக் கொச்சகம் 26. எட்டடிக் கொச்சகம் 27. கட்டளைக் கலிப்பா 28. குறளடி வஞ்சிப்பா 29. சிந்தடி வஞ்சிப்பா 30. பரிபாடல் 31. மருட்பா 32. நூற்பா 2. பாவினம் 1. குறட்டாழிசை 2. குறள்வெண்டுறை 3. வெண்டாழிசை 4. வெண்டுறை 5. வெளிவிருத்தம் 6. ஆசிரியத்தாழிசை 7. ஆசிரியத்துறை 8. அறுசீரடி விருத்தம் 9. எழுசீரடி விருத்தம் 10. எண்சீரடி விருத்தம் 11. ஒன்பதின்சீரடி விருத்தம் 12. பதின்சீரடி விருத்தம் 13. பதினொருசீரடி விருத்தம் 14. பன்னிருசீரடி விருத்தம் 15. பதினான்கு சீரடி விருத்தம் 16. பதினாறுசீரடி விருத்தம் 17. இருபத்தெண்சீரடி விருத்தம் 18. முப்பத்திரு சீரடி விருத்தம் 19. கலித்தாழிசை 20. கலித்துறை 21. நேரசைக் கட்டளைக் கலித்துறை 22. நிரையசைக் கட்டளைக் கலித்துறை 23. கலி விருத்தம் 24. வஞ்சித்தாழிசை 25. வஞ்சித்துறை 26. வஞ்சிவிருத்தம் 27. மேல் வைப்பு 3. தாழிசை 1. இருசீரடித் தாழிசை 7. எண்சீரடித் தாழிசை 2. முச்சீரடித் தாழிசை 8. ஒன்பதின்சீரடித் தாழிசை 3. நாற்சீரடித் தாழிசை 9. பதின்சீரடித் தாழிசை 4. ஐஞ்சீரடித்தாழிசை 10. பன்னிரு சீரடித்தாழிசை 5. அறுசீரடித்தாழிசை 11. பதினான்குசீரடித் தாழிசை 6. எழுசீரடித்தாழிசை 12. பதினாறு சீரடித்தாழிசை 7. சிந்து சிந்து என்பது, கலிப்பாவின் இனத்தைச் சேர்ந்ததாகும்; பாவினத்தின் இனம் எனினுமாம். சிந்தின் இலக்கணத்தை யாப்பதி காரத்திற் காண்க. சிந்து - ஓரெதுகை உடைய இரண்டடியாய் வரும். சிறுபான்மை அவ்வாறு நான்கடி வருதலும் உண்டு. ஓரடியின் மோனைத் தொடை யெடுப்பின் முன்னும் பின்னும் உள்ள அரையடி, சிந்தியல் அடியெனவே வழங்கப் பெறும். அம் முதலரை அடியின் ஈற்றில், பெரும்பாலும் தனிச்சொல் வரும். சிறுபான்மை இரண்டாவ தரையடியின் ஈற்றில் தனிச்சொல் வருதலும் உண்டு. மிகச் சிறுபான்மை தனிச்சொல் இன்றியும் சிந்து வரும். தனிச்சொல்லின் இலக்கணத்தை, ‘பரிபாடல்’ என்னும் பகுதியிற் காண்க. சிந்து, குறளடி முதல் எல்லா அடியானும் வரும். தளை வரையறையில்லை. மோனைத்தொடையெடுப்பின் முன்னும் பின்னும் உள்ள அடிகள், அதாவது தனிச்சொல்லுக்கு முன்னும் பின்னும் உள்ள அடிகள் ஒத்து வருதல் - சமனிலைச் சிந்து எனவும், ஒவ்வாது வருதல் - வியனிலைச் சிந்து எனவும் பெயர் பெறும். 1. சமனிலைச் சிந்து 1. இருசீரிரட்டை 1. வெள்ளை கறுப்பாமோ? - அகப்பேய் வெள்ளியுஞ் செம்பாமோ? உள்ளது முண்டோடி? - அகப்பேய் உன்னாணை கண்டாயே. - அகப் 2. வருபங்குனித் திருநாட்படி வகைக்காயிரங் கோட்டை - சின்னத் திருவன்பயி ரிடும்புள்ளியிற் செந்தாழைநெல் லளந்தேன். - முக் 3. முக்கூடற் பள்ளியைப்போல் சொக்காரி நீயல்லவே வக்கணை ஏன் மருதூர் அக்கிர மப்பள்ளி! - முக் 4. தொண்டு செய்யுமடிமை - உனக்குச் சுதந்தர நினைவோடா! பண்டு கண்டதுண்டோ - அதற்குப் பாத்திர மாவாயோ? - பார 5. பச்சைக் குழந்தையடி - கண்ணிற் பாவையடி சந்திரமதி! இச்சைக் கினியமது! - என்றன் இருவிழிக்குத் தேனிலவு! - பார 6. ஒக்குந் தருமனுக்கே - இஃதென்பரோ ஓவென் றிரைந்திடுவார்; கக்கக்கென் றுநகைப்பார் - துரியோதனா கட்டிக்கொள் எம்மை யென்பார். -பார 7. தேடிஉனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி! கேடதனை நீக்கிடுவாய் கேட்டவரந் தருவாய். -பார 8. யாது மாகிநின்றாய் - காளீ! எங்கு நீநிறைந்தாய்! தீது நன்மையெல்லாம் - நின்றன் செயல்க ளன்றியில்லை. -பார 9. தாயேநின் மனக்கவலை - ஒழிந்திடத் தக்கநல் மருந்தளிப்பேன் சேயினை எழுப்பிடுவேன் - விளையாடித் திரியவுஞ் செய்திடுவேன். - ஆசி தனிச் சொல்லுக்கு முன்னும் பின்னும் உள்ள அடி இருசீரடி ஆனதாலும், அவ்வாறு இரண்டடி உள்ளதாலும் - இது, இரு சீரிரட்டை எனப்பட்டது. இருசீர் - இரு சீரடி. இது, தனிச் சொற்கு முன்பின் உள்ள சமனிலையான இரண்டடியையும் குறிக்கும். இரட்டை - அவ்வாறு இரண்டடி. இனிவரும் முச்சீரிரட்டை முதலிய வற்றிற் கும் இஃதொக்கும். இச்சிந்துகள் ஒன்பதும் வெவ்வேறோசையுடையவை. முதற் சிந்தும் ஆறாஞ் சிந்தும் ஒரே ஓசையுடையனவே எனினும், தனிச்சீரின் வேறுபாட்டால் ஓசை வேறுபட்டு வெவ்வேறாயின. இரண்டாஞ் சிந்தின் இரண்டாமடியின் இறுதியில் தனிச்சீர் வந்துள்ளது. 3, 7 சிந்துகள் தனிச்சீர் பெறவில்லை. இது மிகச் சிறுபான்மை. மூன்றாஞ் சிந்தின் அடிகள் எதுகைத் தொடை பெற்றுள்ளன. இச்சிந்து, வஞ்சித்துறையின் வகை போன்றுள்ளது. எல்லாச் சிந்துகளும் மோனையும் எதுகையும் நன்கு அமைந் திருத்தலை அறிக. சிந்தின் உயிர்நாடி மோனைத் தொடையே. மோனை அமைதியில்லையேல் சிந்துக்கு உயிர்ப்பில்லை. 2. இருசீரிரட்டிரட்டை 10. பெருமாள் பதிநூற்றெட்டும் மருவி வலஞ்செய்யாரைப் பேய்க்காலில் வடம்பூட்டி ஏர்க்கால் செய்வேன். திருவாய் மொழிகல்லாரை இருகால் மாடுகளாக்கித் தீத்தீயென் றுழக்கோலால் சாத்துவே னாண்டே. -முக் 11. அடுத்திடும் வீட்டார் - சொல்லிக் கொடுத்திட மாட்டார் - கிடைதான் ஆட்டினிற்கிடையோ - இளையாள் வீட்டினிற் கிடையோ! படுத்திடும் பள்ளன் - வேலையைக் கெடுத்திடுங் கள்ளன் - எனைக்கண்டு பதறியே எழுந்தான் - கைகால் உதறியே விழுந்தான். - முக் 12. பள்ளனுக்குத் தென்மருதூர்ப் பள்ளி யாசைதான் - இன்னும் பற்றுவிட்ட தில்லைப்பாடு பட்டு மறியான்; பிள்ளையா ரடியுமுறை நெல்லு மெடுத்தான் - அவள் பெற்றநெல் லுடன்கலந்து பெட்டியில் வைத்தான். - முக் இம்மூன்றும் வெவ்வே றோசையுடைய சிந்துகள். இருசீர் இரட்டி வந்துள்ளதால் - இருசீரிரட்டு எனப்பட்டது. 10 ஆம்பாடல் தனிச்சொல் இன்றி வந்துள்ளது. முதல் இருபாடலும் எதுகைத் தொடையா லானவை. மூன்றாம் பாடலின் முதலடிகள் எதுகை. இரண்டாவதடிகள் மோனை. ‘பிள் - நெல்’ இடையின எதுகை. அவ்வளவு சிறப்பின்று. 11 ஆம் பாடலின் இயைபுத் தொடையைப் படித்தின் புறுக. 3. முச்சீரிரட்டை 13. அண்ணாவின் மேல்வரும் பால்கற - பே ரண்டத்தி லூறிடும் பால்கற விண்ணாட்டி லில்லாத பால்கற - தொல்லை வேதனை கெடவே பால்கற. - இடைக் 14. மதயானை கைப்பிடிக்க வல்லாய்! - இந்த மாட்டுக்கு மாட்டாமற் போனதென்ன சொல்லாய்? கதையோமுன் மலைகளையும் முறித்தாய் - அந்தப்பலம் கண்டிலேன் என்றோடி மறித்தாய். - முக் 15. குடிலிற்கி டந்த பள்ளனை - முக்கூடற் பள்ளி கூப்பிட்டெ ழுப்பி முந்தாநாள் விடியப்போ வேலை யிலென்றாள் - அவனும்போனான் வெள்ளமும் மேல்வ ரத்தாச்சு. -முக் 16. ஓடி விளையாடு பாப்பா! - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா! கூடி விளையாடு பாப்பா! - ஒரு குழந்தையை வையாதே பாப்பா! - பார 17. மலரின் மேவுந் திருவே! - உன்மேல் மையல் பொங்கி நின்றேன்; நிலவு செய்யும் முகமும் - காண்பார் நினைவ ழிக்கும் விழியும். -பார 18. வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள் வீட்டில் வளருது கண்டீர். பிள்ளைகள் பெற்றதப் பூனை - அவை பேருக் கொருநிற மாகும். - பார 19. பாட்டுக் கொருபுலவன் பாரதியடா! - அவன் பாட்டைப்பண் ணோடொருவன் பாடினானடா! கேட்டுக் கிறுகிறுத்துப் போயினேனடா! - அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா! - தேசி 20. கனியிடை யேறிய சுளையும் - முற்றற் கழையிடை யேறிய சாறும் பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும் பாகிடை யேறிய சுவையும் நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும் இனியன என்பேன் எனினும் - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்! -பா. தா 21. இங்ஙனம் கம்பண்ணன் ஏற்பாடு - செய்தே அங்ஙனம் போகிய பிற்பாடு. - அர 14, 16 பாடல்கள் ஒருபுடை ஒத்த ஓசையுடையன. எனினும், தனிச் சொல்லின் வேறுபாட்டால் வேறு பட்டன. 20 நான்கடியான் அமைந்தது. 21 எதுகைத் தொடை பெற்று ஓரடியான் அமைந்தது. இதை முச்சீரொற்றை எனலாம். மோனையமைதியை நோக்குக. 19இல் ‘பாட்டை’ என்பதில், எதுகையை விட மோனையே சிறப்புறும். தனிச்சொல்லுக்கு முன்னும் பின்னும் உள்ள அடிகளில் மோனை அமையவேண்டும். சிறுபான்மை எதுகையாகவரலாம். அவ்வாறு வந்திருத்திலை அறிக. 13, 14, 16, 19, 21ல் இயைபுத்தொடை. 4. முச்சீரிரட்டிரட்டை 22. புகுந்த நெய்தலை மயக்கியே - மலர் மிகுந்த நெய்தலை கயக்கியே புடையிற் புளினஞ் சரியவே - அதன் இடையிற் புளினம் இரியவே; பருந்து நுழையப் பட்டினம் - திரை முகந்து நுழையப் பட்டினம் படைத்திடாமை நிகழவே - நிலை கிடைத்திடாமை புகழவே. - முக் முச்சீர் இரட்டு - முச்சீரடி வெவ்வே றெதுகையாய் இரட்டித்து வந்துள்ளது. இரட்டை - அவ்வாறு இரண்டு. இரண்டாவ தடிகளின் முதலடி, முதலடியின் மோனையாய் இவ்விரண்டடி ஒவ்வோரெதுகையாய் வந்துள்ளது. இயைபுத்தொடையோடு, மடக்காக வந்து (நெய்தலை - நெய்தலை) இன்பஞ் செய்தலைச் சுவைத்தின் புறுக. 5. நாற்சீரிரட்டை 23. நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே! நச்சுப்பல்லை வைத்திருக்கும் நல்ல பாம்பே! பாதலத்தில் குடிபுகும் பைகொள் பாம்பே! பாடிப்பாடி நின்றுவிளை யாடு பாம்பே! - பாம் 24. வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்; கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார், கவனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்! - குற் 25. முருகு சந்தனக் குழம்பு பூசுவார் - விரகத்தீயை மூட்டி மூட்டி விசிறி வீசுவார்; கருகு தேயுடல் உருகு தேயென்பார் - விரிதற்பூவுங் கரியு தேமுத்தம் பொரியு தேயென்பார். -குற் 26. ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்று தேகுறி - மலை யாளமின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே. நேற்றுமின்றும் கொம்புசுற்றிக் காற்ற டிக்குதே - கேணி நீர்ப்படு சொறித்தவளை கூப்பி டுகுதே. சேற்றுநண்டு சேற்றைக்குழைத் தேற்ற டைக்குதே - மழை தேடியொரு கோடிவானம் பாடி யாடுதே. போற்றுதிரு மாலழகர்க் கேற்ற மாம்பண்ணைச் - சேரிப் புள்ளிப்பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே. இந்நான்கு சிந்தும் வெவ்வேறோசை யுடையவை. 23-ம் 26ம் ஒருபுடை ஒப்புமை உடைய எனினும், 26வது எடுப்போசையும் தனிச்சீரும் பெற்று வேறானது. இது நாலடிச்சிந்து. முதல் இரண்டும் தனிச்சொற் பெறவில்லை. 23ன் ஈற்றடி - பொழிப்பெதுகை. 24ன் மூன்றாமடி - பொழிப்பெதுகை. மற்றவை - பொழிப்பு மோனை. 26ன் ஒவ்வொரு அரையடியும் 1 - 3 சீர்கள் எதுகை. மற்ற எதுகை நயத்தையும் படித்து இன்புறுக. 6. ஐஞ்சீரிரட்டை 27. துடிக்குள் அடங்கியொரு பிடிக்குள் அடங்குஞ்சின்ன இடையினாள், - காமத் துட்ட னரண்மனைக்குக் கட்டுங் கதலிவாழைத் தொடையினாள்; அடுக்கு வன்னச்சேலை எடுத்து நெறிபிடித்த உடையினாள் - மட அன்ன நடையிலொரு சின்ன நடைபயிலும் நடையினாள். - குற் 28. முத்தமிழ்க் காவல ராய முடியுடை மூவரும் - தமிழ் மூன்றெனச் செங்கோல் முறைதவ றாது முறைப்படி. தத்தம் நிலத்தினைத் தாயென அன்பு தழைக்கவே - ஒரு தப்புமில் லாமலே எப்பொழு துங்காத்து வந்தனர். - அர 29. ஆதிக்கு முன்னம் அநாதியு மென்னடி சிங்கி? - அது அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா! -ஞாகு 30. முப்பொரு ளென்றுநீ முன்சொன்ன தாரடி சிங்கி? - அது அப்பனும் ஆயும் அநாதியு மாமடா சிங்கா! - ஞாகு இவை நான்கும் வெவ்வேறு வகையான சிந்துகள். முதற் சிந்தின் எதுகைத் தொடை அமைப்பினை நோக்குக. ஒவ்வோரடியினும் 1 -3 சீர்கள் - எதுகை எடுப்பு. 28 இன் ஈற்றடி 1 - 3 சீரில் எதுகை. 29, 30 ஐஞ்சீரொற்றை. 29 மோனை எடுப்பு. 30 எதுகையெடுப்பு. மற்ற தொடையமைதியினையும் பார்த்தறிக. 7. அறுசீரிரட்டை 31. ஆசை கொண்டு பாரில் வீழ்ந்தாள் நேச மானென்பார் - விளை யாடாள் பாடாள் வாடா மாலை சூடாள் காணென்பார், பேசி டாத மோச மென்ன மோசமோ வென்பார் - காமப் பேயோ வென்பார் பித்தோ வென்பார் மாய மோவென்பார். -குற் 32. பைங்குழல் வண்டு மதுமல ருண்டு பறந்து பறந்தாட - வளர் திங்கள் வதனத் திருவிழி வண்டு திரண்டு திரண்டாட கொங்கை மருமல ரின்செண் டிரண்டும் குலுங்கி யசைந்தாட - சுப மங்கள கல்யாணி வால மோகினி வண்ணப்பந் தாடினளே. - சிகு இச்சிந்துகளின் மோனை எதுகை அமைதி நயத்தினைப் படித்துச் சுவைத் தின்புறுக. முதற் பாட்டின் 1 - 5 சீர்களில் எதுகை எடுப்பு. இரண்டாவதான தனிச்சொல்லின் முன் பின் அடிகள் எதுகைத் தொடை.. மற்ற தொடைச் சிறப்பினையும் கண்டு சுவைக்க. 8. எழுசீரிரட்டை 33. நெட்டை நெடுநெடென மொட்டை மொடுமொடென நிற்கு மொருமரத்தைப் பாராய்; - கண்டோர் நெக்கு மனமுருகு விக்கும் ஒயிலுடனே நிற்கு மதுவொருபெண் வாராய். கட்டை கருவெனப்ப றட்டை மயிரசையக் காணு மதோவொருபெண் பாராய்! - இலை கப்பு கவரொடசைந் தப்படி யாநமக்குக் காணு மதுகுடைவேல் வாராய். - கோமா இதன் மோனை எதுகைத் தொடையமைதியை நோக்குங்கள். நாட்டுப்பாடல் எனக்கூறும் கோமாளிப்பாட்டு, நல்ல இலக்கியப் பாட்டின் தொடையமைதியை மிஞ்சி விட்ட தல்லவா? பாட்டுப் படிக்க எவ்வளவு சுவையுடையதாக இருக்கிறது? தொடையின் சிறப்பே சிறப்பு! 2. வியனிலைச் சிந்து 1. இருமுச்சீ ரிரட்டை 1. அத்தின புரமுண்டாம் - இவ் அவனியி லேயதற் கிணையிலையாம்; பத்தியில் வீடுகளாம் - வெள்ளைப் பனிவரை போற்பல மாளிகையாம். - பார 2. தமிழெங்கள் இளமைக்குப்பால்! - இன்பத் தமிழ்நல்ல புகழ்மிக்க புலவர்க்குவேல்! தமிழெங்கள் உயர்வுக்குவான்! - இன்பத் தமிழெங்கள் அசதிக்குச் சுடர்தந்ததேன்! - பாதா 2. இருநாற்சீ ரிரட்டை 3. காணவு நாணியன்று - முதற் காட்சியில் நின்றவுன் மாட்சியினாலே பேண வரும்பொருளே ! - தமிழ்ப் பெண்டிரின் மாண்பினைக் கண்டு களித்தேன். - அர 3. ஈரிரு நாலிருசீ ரிரட்டை 4. மாரிச் சீவலப் பேரித் தண்ணீர்பாய் - கண்ணாறான வாச வன்றொழும் அழகர் பேருள்ள கேச வன்றிருத்தும் காரிற் பயிரிட் டூருக் கதிகமாய்க் கதலிவாழை காய்த்த வயலுங் கீர்த்தி சேர்நயி னாத்தை யார்திருத்தும் - முக் 4. அடுக்கிரு நாற்சீரொற்றை 5. குன்றத் தின்மீதே - அந்தக் குன்றத் தின்மீதே - தனி நின்றதோ ரால நெடுமரங் கண்டேன். - பார 5. நாலிருசீரிரட்டை 6. எங்கள் வேள்விக் கூட மீதில் ஏறுதே தீதீ! இந்நேரம் பங்க முற்றே பேய்க ளோடப் பாயுதே தீதீ! - பார 7. வெற்றியெட் டுத்திக்கு முற்றிலு மேசென்று ஏவிட ஆள்பவன்நான் - அட இற்றைக்கு நின்றிலை அற்றது மற்றென்னை என்னென்று தானினைத்தாய்? - புரட் 8. நாட்டி லெங்குஞ் சுதந்தர வாஞ்சையை நாட்டினாய் - கனல் - மூட்டினாய் வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே மாட்டுவேன் - வலி - காட்டுவேன். - பார 6. நாமுச்சீ ரிரட்டை 9. பிள்ளைக் கிளிமென் குதலையி லேமனம் பின்ன மறச்செல்ல விட்டு - அடி! தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வ மேநினைச் சேரவிரும்பினன் கண்டாய். - பார 10. எழுபதும் ஐந்துங் குழகுழ வயதினில் என்னே காந்தியின் இளமையடா! முழுவதும் அதிசயம் பழுதறு வாழ்க்கையின் மூத்த னடாபெருஞ் சித்தனடா! - நாம 7. நாமுச்சீரிரட்டிரட்டை 11. சத்தி யாட அன்பர் பதமும் பத்தி யாட ஒருபதஞ் சலியு மாடப் புலியு மாடச் சகல ருந்துதித் தாடவே வெற்றி யாடகச் சபையி லேபதம் ஒற்றி யாடும் பாதனார் விமலர் காழிப் பெரிய நாயகர் கமலப் பண்ணை வயலுளே. - சீப 8. நாலீரடுக்கொற்றை 12. முத்தமிழ் கற்று முழங்குமெய்ஞ் ஞானிக்குச் சத்தங்க ளேதுக்கடி! குதம்பாய்! சத்தங்க ளேதுக்கடி. - குதம் 13. ஆட்டுக்கூட் டங்களை அண்டும் புலிகளை ஓட்டியே ஊதுகுழல் - கோனே! ஓட்டியே ஊதுகுழல். - இடைக் 9. இருமூவிருசீரொற்றை 14. நெஞ்சி லுரமு மின்றி நேர்மைத் திறமு மின்றி வஞ்சனை செய்வாரடீ - கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி! - பார 10. மூவிருசீரிரட்டிரட்டை 15. காயிலே புளிப்ப தென்னே கண்ணபெரு மானே! - நீ கனியிலே இனிப்ப தென்னே கண்ணபெரு மானே! நோயிலே படுப்ப தென்னே கண்ணபெரு மானே! - நீ நோன்பிலே உயிர்ப்ப தென்னே கண்ணபெரு மானே! - பார 11. முந்நாளிருசீரொற்றை 16. பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கி செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே கம்பத்தின் மேலிருந்து - என் கண்ணம்மா! கண்குளிரப் பாரேனோ! - அழு 12. ஈரிருநாலிருசீரொற்றை 17. கீச்சென்று கத்தி - அணில் கிளையொன்றில் ஓடி - பின் வீச்சென்று பாய்ந்ததன் காதலன் வாலை வெடுக்கென்று தான்கடிக்கும். - பா. த 13. நாமும்முச்சீரொற்றை 18. வாதனை சொல்லி வணங்கிநின் றால்தெய்வ சோதனை யென்றவர் சொல்லுவார் - பணச் சாதனை யாலுமை வெல்லுவார் - கெட்ட போதனை யற்றினங் கொல்லுவார். - பாதா. 14. நாமுச்சீரொற்றை 19. 1 தேடிய திரவியம் வேணதுண்டு பத்தா திருப்பரங்க ளுக்கன்னம் நீரிடுங்காண்; 2. பொன்னைத்தான் பொருளைத்தான் தின்னலா மோபத்தா அன்னங் கொடுங்காணும் அன்பனாரே; 3. காசைத்தான் பணத்தைத்தான் தின்னலா மோபத்தா கடைத்தெருவி லன்னக்கொடி கட்டுமென்றாள். 4. வருவார்க்கும் போவார்க்கு மமுது படைப்பேனென்று வாசலிலே அன்னக்கொடி கட்டுவானாம். 5. அன்னக்கொ டிநின்றங்கே வாவென் றழைக்குமாம் அழகிய சிறுத்தொண்டர் வாசலிலே. - சிறுத் இவை பத்தொன்பதும் வெவ்வேறோசையுடையவை. இருமுச்சீர் - இரண்டு சீரும் மூன்று சீரும். இருசீர் முச்சீர் எனக் கூட்டுக. அதாவது, தனிச் சொல்லுக்கு முன்னுள்ளது இருசீரடியும். தனிச் சொல்லுக்குப் பின்னுள்ளது மூச்சீரடியும் என்பதாம். இதனாலேயே இது வியனிலைச் சிந்தாயிற்று. இரட்டை - அவ்வாறு இரண்டடி சீர் - அச்சீருடைய அடியைக் குறிக்கும். 3. ஈரிரு - இரண்டு இருசீரிட. நாலிருசீர் - நாற்சீரடியும் இருசீரடியும். 4. அடுக்கு இரு - இருசீரடி அடுக்கி வருதல். ஓரடியே இருமுறை வருதல். ஒற்றை - அவ்வாறு ஒன்றுமட்டும். 5. இருநாற்சீர் - இருநான்கு - எட்டு, எனப் பெருக்கலாகக் கொள்ளக் கூடாது. இரண்டும் நான்கும் என உம்மைத் தொகை பிறவற்றையும் இவ்வாறே கவனித்து அறிந்து கொள்க. 6. நாமுச்சீர் - நாலுசீரும் மூன்று சீரும். இரட்டு - அவ்வாறு இருமுறை வருதல். இரட்டை - அத்தகைய இரண்டடி. 7. முன் 4இல், இருசீரடி முன்னடுக்கியது போல் இங்கு பின்னடுக்கியது. பாடல்களைக் கவனித்துப் படித்துப் படித்துப் பார்த்து, இவ்வியனிலைச் சிந்துகளின் அமைப்பு வேறுபாட்டினை நன்கு தெரிந்து கொள்க. இவ்விருவகைச் சிந்துகளும் உள்ள நூல்களில், இச்சிந்துகளோடு சேர்ந்த சிந்துகளையெல்லாம் படித்தால் இவற்றின் அமைப்பு நன்கு மனத்தில் பதிந்துவிடும். அவ்வாறு பயின்று சிந்துச் செல்வர்களாகுக. தொடையமைப்பினை நோக்குக. எல்லாப் பாடல்களிலும் மோனை நன்கு அமைந்துள்ளன. பாட்டு 2, 18 இயைபுத் தொடை. பாட்டு 4ன் எதுகை அமைப்பினை நோக்கு. பாட்டு முதலடியின் மோனை பெற்றது மூன்றாவதடி. பாட்டு 11உம் இவ்வாறே. பாட்டு 9இல் ‘விட்டு + அடி’ எனக் குற்றுகரம் அறுத்திசைத் தலான், அடியிறுதியில் உயிர்வரக்கெடவில்லை. பாட்டு 19 பஞ்சபாண்டவர் வனவாசம், அல்லியர சாணி மாலை முதலிய அம்மானை நூல்களெல்லாம் குறள்வெண்டுறையா லானவை. ஆனால், அந்நூல் வகையைச் சேர்ந்த சிறுத்தொண்டன் கதை மட்டும் - தனிச்சொல் பெறாத நாமுச்சீ ரொற்றைச் சிந்தினால் செய்யப்பட்டுள்ளது. 2வது எதுகைத் தொடையா லானது. மற்ற நான்கும் மோனைத் தொடை. சமனிலைச்சிந்து: 2, 7, 8, 9, 10, 11, 14, 15, 16, 17, 20, 22, 23, 24, 25, 27, 29, 31உம், வியனிலைச்சிந்து: 2, 3, 4, 10, 15, 18, 19 ல் 1, 3, 4-ம் உயிரெதுகை. மற்ற பாடல்களின் எதுகை வகையினைக் கண்டறிக. பயிற்சி 1. சமனிலை, வியனிலைச் சிந்துகளின் வேறுபாடென்ன? 2. சமனிலைச் சிந்து எதனால் பலவகைப் பட்டது? 3. வியனிலைச் சிந்து பலவகைப்படக் காரணம் என்ன? 4. ஒற்றை, இரட்டை, இரட்டு - விளக்கம் தருக. 5. ஈரிரு நாலிருசீரொற்றை - இவ்வியனிலைச் சிந்தின் அடியமைப்பினைக் கூறுக. 6. மூவிருசீர், நாமுச்சீர் - தொகையிலக்கணங் கூறுக. 7. சமனிலைச்சிந்து - 10, 26, 27, 33 வியனிலைச் சிந்து - 11, 16, பாடல்களின் தொடைச் சிறப்பினை எடுத்துக் காட்டுக. 8. சமனிலை, வியனிலை ஆகிய 51 சிந்துகளையும் நன்கு கவனித்துப் படித்து, அவ்வாறு வகைக்கொன்று பாடிப் பாருங்கள். பலவகைச் சிந்து 3. நொண்டிச் சிந்து (இருமுச்சீரிரட்டை) 1. யாதவர் குலத்துதித்த - நல்ல ஆட்டிடையார் ஆய்ச்சிசேதி கேட்டிடுவீரே ஆதவன் மரபினர்கள் - நன் கரசு புரியுமுயர் பரிசைகளார்; 2. காவிரிப்பூம் பட்டினமாம் - அதில் கனத்த வணிகர்செல்வ இனத்துதித்த மேவியமா சாத்து வானென்பார் - பெற்று மேவளர்த்த மைந்தனென்பேர் கோவலனென்பார். - கோநா 3. நெஞ்சு பொறுக்கு தில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சியஞ் சிச்சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே. 4. வஞ்சனைப் பேய்களென்பார் - இந்த மரத்திலென் பாரந்தக் குளத்திலென்பார் துஞ்சுது முகட்டி லென்பார் - மிகத் துயர்ப்படு வாரெண்ணிப் பயப்படுவார். - பார கோவலநாடக நொண்டிச் சிந்தும், பாரதியார் நொண்டிச் சிந்தும் ஒருவகையே. விளக்கத்திற்காக இரண்டும் காட்டப்பட்டன. முதல் இரண்டு கண்ணிகளிலும் முச்சீரடி பொழிப்பெதுகை 3. சிந்தடிகள் - பொழிப்பு மோனை. 4. ஈற்றடி - பொழிப்பெதுகை அடி 2இல் தொடை அமையவில்லை. பொருட்டொடர் நிலை பாடுதற்கு ஏற்ற சிந்தாகும் இது. கொலைச்சிந்து போன்ற சிந்துவகை நூல்களிலும் நாடக நூல்களிலும் இது பெருவழக்கு. 4. வழிநடைச்சிந்து (முந்நாற்சீரிரட்டை) 1. பாரடீ நாமக்கல்லுப் பேட்டை - அங்கு பாங்காய்த் தெரிகுது மலைமேலொரு கோட்டே சேரடீ திருச்சிசேலம் ரோட்டே - தாண்டிச் சென்றால்நாமக் கல்லதனைச் சேருமிந்தப் பாட்டை. - நாவ 2. கோபுர மீதுபுறாச் சோடி - நம்மைக் கூப்பிடுதே வாவெனக் குமரனைக்கொண் டாடி, நூபுர வோதையவித் தோடி - கதிர் நூலென விடந்தொறும் நுடங்கிடைநீ வாடி! -வெ இரண்டும் ஒன்றே. மோனை எதுகை அமைப்பினை நோக்குக. முதற்பாட்டின் முதலடியின் நாற்சீரில் மோனை அமையவில்லை. மற்ற அடிகளின் நாற்சீரினும் பொழிப்பு மோனை நன்கு அமைந் துள்ளது. இரண்டு பாட்டிலும், இயைபுத் தொடை அமைப்பினை நோக்குக. ஒரு பெண்ணுடன் ஓரூரிலிருந்து மற்றோரூருக்குச் செல்கையில், வழியிலுள்ள இயற்கைக் காட்சி முதலியவற்றை அப்பெண்ணுக்குக் கூறிக்கொண்டே செல்வதாகப் பாடுவது இச்சிந்து. காவியங்களின் முதலிற் பாடும், ‘நாட்டுச்சிறப்பு, நகரச் சிறப்புக்கள்’ போலப் பொருளமைத்துப் பாடுதற்கேற்ற பாடலாகும் என்க. 5. ஆனந்தக் களிப்பு (முந்நாற்சீரிரட்டை) 1. நீர்மேற் குமிழியிக் காயம் - இது நில்லாது போய்விடும் நீயறி மாயம் பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும் பற்றா திருந்திட பண்ணுமு பாயம். -கடுவெ 2. தின்னப் பழங்கொண்டு தருவான் - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான் என்னப்பன் என்னையன் என்றால் - அதனை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். - பார இரண்டும் ஒருவகையே. விளக்கத்தின் பொருட்டு இரண்டுங் காட்டப்பட்டன. முதற்பாட்டின் இயைபுத் தொடையை நோக்குக. நாற்சீரடியில் பொழிப்பு மோனை நன்கமைந்துள்ளது இரண்டாம் பாட்டில் அவ்வாறு மோனை அமையவில்லை. இரண்டாவது முச்சீரிலும் மோனை. ஈற்றடி கடைக்கூழை எதுகை. நாற்சீரடியில் பொழிப்பு, அல்லது ஒரூஉமோனை அமைய வேண்டும். எளிதில் பொருளமைதியுடன் தொடர்நிலையாகப் பாடற்கேற்ற சிந்தாகும் இது. 6. காவடிச் சிந்து (இருசீரட்டை) 1. நீரையா காவேரி நித்தமையா சம்புநதி தேரையா தைப்பூசம் - கந்தையா! தென்பழனி ஆண்டவனே! (அரகரோ) 2. ஏறாத மலையேறி எருதிரண்டுந் தத்தளிக்கப் பாராமற் கைக்கொடுக்கும் - கந்தையா! பழனிமலை வேலனே! 3. மங்கைதெய் வானைவள்ளி மாதருடன் மாமயிலில் செங்கைவடி வேலுடனே - கந்தையா! தெரிசனந் தந்தருள்வாய். - பகா இது, கூட்டமாகக் கூடிக் காவடி எடுத்துக் கொண்டு போகும் போது பாடிக் கொண்டு போவது, ஒருவர் பாட்டைப் பாடி முடிக்க, கூட்டத்தினர், ‘அரகரோ’ என்று முழங்குவர். மூன்று பாடல்களிலும் நன்கு மோனை அமைந்துள்ளது. மோனை எடுப்புப்படியே பதிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து - வெவ்வே றோசையும் வகையுமுடைய 22 பாடல்களும் படித்து இன்புறத்தக் கனவாகும். 7. வளையற் சிந்து (இருசீரடுக்கொற்றை) 1. வாருமையா வளையற்செட்டி வளையல்விலை கூறும் - நீர் மகிழ்ந்துமேகை பாரும் - பசி வன்கொடுமை தீரும் - எந்த மாநகரம் பேரினங்கள் வகைவிபரம் கூறும். 2. மங்கையரே நானிருக்கும் வடபழனி தேசம் - அதில் வாழ்பெரியோர் நேசம் - தொழில் வளையல்செய்பிர காசம் - ஏழை வருத்தத்தினால் காட்டினிடை வழியில்வந்தேன் மோசம். 3. வளையற்செட்டி யாரேமோசம் வருவதுமொன் றில்லை - வேடர் வாழுமிந்த எல்லை - கதிர் வளருந்தினைக் கொல்லை - குற மாதுவள்ளி நானேகாவல் வனத்திலென்ன தொல்லை? - வசி இது உரையாடலாக அமைந்த சிந்து, உரையாடற் பொருளமைத்துப் பாடுதற்கு ஏற்ற சிந்தாகும். மோனை எதுகை, இயைபு - மூன்றும் நன்கமைந்துள்ளமையை நோக்குக. ‘வாருமையா - கூறும்’ வரை முதலடி ‘மாநகரம் - கூறும்’ ஈற்றடி. 8. தங்கச்சிந்து (இருசீரிரட்டை) 1. மெய்ஞ்ஞானத் தங்கம் மேலான தங்கம் அஞ்ஞானத் தங்கமெல்லாம் - தங்கமே! அனித்தியத் தங்கமடி. - மெத 2. ஆடுவதும் பாடுவதும் ஆளடிமை செய்கிறதும் ஓடுவதும் தேடுவதும் - தங்கமே ஒருசாண் வயிற்றுக்கடி - மெத 3. செங்கரும்பை வாங்கித் திருக்கையிலே தாங்கி அங்கசவே ளோட அவன்செயலைப் பாட மங்கையர்கள் கூடி மணாளருட னாடி தெங்கிளநீ ருண்பாரடி - என் தங்கமே தெருவில் திரிவாரடி. - கசி 4. வீட்டுக்குப் பின்புறத்தில் தங்கமே தங்கம் - நாம் விளையாடும் பருவத்திலே தங்கமே தங்கம் சாட்டைக்கை யாலடித்த தங்கமே தங்கம் - அந்தத் தழும்பு மறையுமோதான் தங்கமே தங்கம். -சுத முதல் மூன்று பாடலின் இயைபுத் தொடையை நோக்குக. நான்கு பாடலிலும் நன்கு மோனை எதுகை அமைந்துள்ளன. பின்னிரண்டு பாடலிலும் இருசீரிரட்டை இரட்டி வந்துள்ளன. 9. சேவற்பாட்டு (இருசீரிரட்டை) 1. தங்கத்தினால் சலங்கைகட்டித் தனியேவிட்ட சேவல் தனியேவிட்ட சேவல்தன்னைத் தட்டிக்கொண்டவ ளாரோ? 2. பார்ப்பார வீதியெங்கும் பறந்துவரும் சேவல் பறந்துவரும் சேவல்தன்னைப் பதுக்கிக்கொண்டவ ளாரோ! - சேவ இது தனிச்சீர் பெறவில்லை. முதலடியின் பின்னிருசீரிடை மடக்காத இரண்டாவதடி வந்துள்ளது. அதனால், அடியெதுகை யின்றி அடிமோனை தொடர்ந்து வந்துள்ளது. இஃதொருவகைத் தொடையமைதி. மோனைத் தொடையை அறிக. 10. புறாப்பாட்டு (இருசீரிரட்டை) 1. இங்குவந்த என்புறாவை எடுத்திருந்தால் கொடுத்திடம்மா! அங்குசெல்ல வேணும்விளை யாடவேணு மேசின்னம்மா! அன்னையே என்னையே அனுப்பத்தடை செய்யாதம்மா! 2. உன்புறாவிங் கிருக்குதடா ஓடிவாடா கண்மணியே! அன்புறாது சிற்றன்னையை அசட்டைசெய் கிறாய்மகனே! கிட்டிநீ எட்டிவா இட்டப்படிக் கேகொடுப்பேன். - புறா இது தனிச்சீர் பெறவில்லை. அடுத்துவரும் மேல் வைப்புக்குத் தோற்றுவாயாய் அமைந்துள்ளன. ‘அன்னையே. . செய்யாதம்மா’ என்பது மேல்வைப்பு. மேல்வைப் பின் இலக்கணத்தை, ‘பொது’ என்னும் தலைப்பில், ‘மேல்வைப்பு’ என்பதிற் காண்க. இவை அடியெதுகைத் தொடையால் அமைந்தவை. மோனை அமைப்பினை நோக்குக. மேல்வைப்பு - எதுகைத் தொடை இருவர் உரையாடலுக் கேற்ற பாடல் இது. 11. குள்ளத்தாராச் சிந்து (நாற்சீரொற்றை) 1. சந்துமுண்டு பொந்துமுண்டு குள்ளத்தாரா - நாம் சாடைசெய்து கூப்பிடவும் குள்ளத்தாரா. 2. தென்னைமரச் சோலையுண்டு குள்ளத்தாரா - நீ சிந்தைகளித் தாடவாடி குள்ளத்தாரா. 3. பாக்குமரச் சோலையுண்டு குள்ளத்தாரா - நீ பந்துவிளை யாடவாடி குள்ளத்தாரா. 4. கட்டிலுண்டு மெத்தையுண்டு குள்ளத்தாரா - உன் கால்பிடிக்கத் தோழியுண்டு குள்ளத்தாரா. - குள் இது மோனைத் தொடையால் அமைந்தது. நூலின் பெயரே அடியுறுப்பாக அமைந்தது. இயைபுத் தொடையை நோக்குக. 12. மேல்வைப்பு 1. கலியுக மதிலிந்தக் காட்சிகண் டதேயில்லை கதைகள் புராணங்கள் எதிலுங்கேட் டதேயில்லை வலிதிற் கணவனோடு வழிப்பட்ட மாதில்லை வஞ்சி யிவளுக்கினி மறுபிற வியுமில்லை மண்ணில்வாழ் வீரே! - உடன்கட்டை யேறிய வகையைக்கே ளீரே! - உசி 2. காட்டில் அனாதையாய்க் கைகால் நசுக்குண்டு கூட்டோடு கைலாசம் கூடிச்சென் றாருண்டு கடவுளின் கற்பனையே! - துடித்துயிர் விடவிதி சற்பனையோ! - பசி 1. இது, நாற்சீரிரட்டை, ‘மண்ணில் வாழ்வீரே . . . . . கேளீரே’ என்பது மேல் வைப்பு. அடுத்து வரும் தெம்பாங்கிலும் இம் மேல்வைப்பு வருதலை அறிக. பொழிப்பு மோனையோடு, இயைபுத்தொடை அமைதியை நோக்குக. இரண்டாம் பாட்டு - நாற்சீரொற்றை; அடியெதுகையான் அமைந்தது. இதன் மேல்வைப்பும் எதுகைத் தொடையான் அமைந்து இன்புறுத்துகிறது. இதிலும் மோனை நன்கமைந்துள்ளது. இது, கொலை முதலிய நிகழ்ச்சிகளைப் பாடுவதற்கு ஏற்ற சிந்தாகும். 13. தெம்பாங்கு (நாற்சீரொற்றை மேல்வைப்பு) 1. கருப்புமுத்துத் தேவனுக்குக் கண்மணிகள் மூன்றுபேராம் அழகிற் சிறந்தவனாம் ஆண்மையுள்ள சந்தனமாம் தண்டை சிலம்பு சலசலென்க தாராபுரம் தங்க நடந்துவாடி மங்கை. 2. அல்லாருங் குடிக்கும்பாலு ஆட்டுப்பாலு மாட்டுப்பாலு சந்தனங் குடிக்கும்பாலு சரியான புலிப்பாலு தண்டை சிலம்பு சலசலென்க தாராபுரம் தங்க நடந்துவாடி மங்கை. - சந்த இது, நாற்சீரொற்றை. தனிச்சொல் பெறவில்லை. முதலடியும் அடுத்த அடியும், மோனைத் தொடர்போ எதுகைத் தொடர்போ இன்றி வந்துள்ளன. மேல்வைப்பின், முதலடி - முச்சீர். அடுத்த அடி - நாற்சீர். தொடை அமைதியை நோக்குக. 3. அத்தைமகள் முத்துநகை அருக்காணி மருக்கொழுந்து கத்தைகத்தை யாகப்பாக்கு வெத்திலையைப் போட்டுக்கடி மாடுமேய்க்கப் போறேன் மலைமேலே மதுரைக்குப் போற வழிமேலே. - இன்ப இது, எதுகைத் தொடையான் அமைந்த இரண்டடி. முதலடியின் எதுகை யமைப்பினை நோக்குக. மேல்வைப்பு வேறோசை. 4. கொலைசெய்யப் போறேனென்று கோதையிடம் கூறிடவே மலைபோல நின்றாள் மங்கை இளம் பாலாம்பாளும் என்னசெய்தேன் அய்யா! - அதை எடுத்துரைப்பாய் மெய்யா! 5. காலையஞ் சுமணிக்குச் சாலைவழி போகையிலே சோலைக் கிளிமுகத்தில் பாலாக வடிகிறது பாதகனும் அன்று - மெய்யின் பாதைவிலகி நின்று. - சிகொ இவ்வாறு மேல்வைப்பு, பாட்டின் பொருட்டொடர்புடைய தாய் வருதலும் உண்டு. தொடையமைதியை அறிக. (நாலிருமுச்சீரொற்றை) 6. வாழையடி யுன்கூந்தல் வயிரமடி பற்காவி ஏழையடி நானுனக்கு மானே! - இன்னும் இரங்கலையோ உன்மனது தேனே! - இன்ப இஃதொருவகைத் தெம்பாங்கு. முன் எதுகையும், பின் மோனையும், ‘மானே - தேனே’ - இயைபு. 7. மதுரைக்கு நேர்கிழக்கே மாரியம்மன் தெப்பக்குளம் மஞ்சள்நீ ராடையிலே - தங்கந்தில்லாலே - நானும் குஞ்சரத்தைத் தோற்றனடி - பொன்னுந்தில்லாலே. 8. பொட்டுமேலே பொட்டுவைத்துப் பூமிபார்த்து நடக்கும் பெண்ணே! பொட்டலிலே பெய்தமழை - தங்கந் தில்லாலே - உன் பொட்டுருகப் பெய்யலையே - பொன்னுந்தில்லாலே - தங்க. தெ இஃதொருவகை. 7. முன்மோனையும், பின் எதுகையும், 8. அடியெதுகை. தில்லாலே - இயைபு. 9. சாரட்டு வண்டிக்காரா சலங்கைபோட்ட மாட்டுக்காரா மாட்டை அடிக்காதடா வருகிறேனான் கூண்டுக்குள்ளே நன்னான நானா நனநனனா தன்னான தானா தனனதான தானா. - இன்ப இது, முதலடியின் ஈற்றுச்சீர் மடக்காக இரண்டாவதடி வந்துள்ளது. ஒவ் வோரடியிலும் பொழிப்பு மோனை. தெம்பாங்கின் வகைகளை நன்கு அறிந்து கொள்க. பயிற்சி 1. நொண்டிச் சிந்து முதல் தெம்பாங்கு ஈறாகிய பத்துவகைச் சிந்துகளின் வேறுபாட்டையும் அமைப்பையும் அறிக. 2. இச்சிந்துகளில் எஃதெது எவ்வெப் பொருள்பற்றிப் பாடற் குரியது? 3. ‘மேல்வைப்பு’ எவ்வெப் பாடல்களில் வரும்? அதன் வேறுபா டென்ன? 4. இச்சிந்துகளின் மோனை எதுகை அமைப்பினை நன்கு கவனித்து அறிக. 5. ஒவ்வொரு வகையினும் ஒவ்வொன்று பாடிப் பாருங்கள். 14. கும்மி கும்மியாவது - வெண்டளை பிழையாத ஓரெதுகையுடைய எழுசீர்க் கழிநெடிலடி இரண்டு வருதல். அடியின் முதற்சீரினும் ஐந்தாஞ்சீரினும் மோனை வரவேண்டும். ஈற்றுச்சீர் பெரும்பாலும் விளங்காய்ச் சீராக வரும். இதுவே கும்மியின் பொதுவிலக்கணம். இது வெண்பாவின் இனமாகும். சிந்து, கலிப்பாவின் இனத்தைச் சேர்ந்ததன்றோ? ஆம், கலிப்பா வெண்பாவின் வகையே என்பது. வெண்பா நடைத்தே கலியென மொழிப. என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தாற் பெறப்படும். இயற்கும்மி, ஒயிற்கும்மி, ஓரடிக்கும்மி என, கும்மி மூன்று வகைப்படும். கும்மி பெண்களின் விளையாட்டுக்களில் ஒன்றாகும். 1. இயற்கும்மி 1. தேவர் சபைதனில் தேவேந்தி ரன்வந்து தேவரைப் பார்த்தவன் ஏதுசொல்வான், பூவுல கையாளும் மன்னர் தனிலொரு பொய்யுரை யாதவர்க் கண்டதுண்டோ? - அரிகு இது, வெண்டளை பிழையாது வந்திருத்தலை அலகிட்டறிக. ‘ஏது சொல்வான், கண்டதுண்டோ’ என, ஈற்றுச் சீர்கள் கூவிளங்காயாக வந்திருத் தலை அறிக. முதலடி - பொழிப்பு மோனை. இயற்கும்மி யடியின் நாலாஞ்சீரின் முதலசையைப் பிரித்து, மூன்றாஞ்சீருடன் கூட்டி, அந்நாலாஞ்சீரிலுள்ள மற்ற அசை, அல்லது அசைகளைத் தனிச் சொல்லாகக் கொள்வது பெருவழக்கு. அங்ஙனங் கொள்ளுங்கால் மூன்றாம் சீரினும் ஈற்றுச் சீரினும் இயைபுத்தொடை அமைதல் சிறப்பு. காட்டு 2. மானைப் பழித்த விழியுடை யாளொரு மாமயில் போலு நடையுடையாள் தேனைப் பழித்த மொழியுடையாள் பெண்ணின் தெய்வ மெனத்தகுஞ் சீருடையாள். - ஆசி இதை, மானைப் பழித்த விழியுடையாள் - ஒரு மாமயில் போலு நடையுடையாள் தேனைப் பழித்த மொழியுடையாள் - பெண்ணின் தெய்வ மெனத்தகுஞ் சீருடையாள். என, அவ்வாறு பிரித்துக் கூட்ட, ‘உடையாள்’ என, ஈற்றில் இயைபுத் தொடை அமைந்தவாறு காண்க. ஒரு - ஓரசை. பெண்ணின் - ஈரசை. 3. எங்கு நிறைந்தவள் வாலைப்பெண் ணாமாலின் தங்கையின் மேற்கும்மி பாடுதற்கு கங்கை யணிசிவ சம்புவாஞ் சற்குரு பங்கய பொற்பதங் காப்பாமே. - வாகு இது, ஐந்தாஞ்சீர் மோனைத்தொடை எடுப்புக்குப் பதில் எதுகைத் தொடை எடுப்பாக அமைந்துள்ளது. 4. வெள்ளைக்கா ரன்பணம் சின்னப்பணம் - அது வேடிக்கை செய்யுதாம் வெள்ளிப்பணம் வெள்ளிப் பணத்துக்கிங் காசைப்பட்டே - அதில் வீசம்போச் சேமுத்து வீராயி. - முத். கு இது, இரண்டாவதடி சீர்மடக்காக வந்துள்ளது. பொருட் டொடர் நிலை பாடுதற்கு ஏற்ற பாடலாகும் இவ்வியற்கும்மிப் பாடல். 2. ஒயிற்கும்மி 5. தென்பரங் குன்றினில் மேவுங் குருபர தேசிகன் மேற்கும்மிப் பாட்டுரைக்க சிகரத்திரு மகரக்குழை திகழுற்றிடும் உமை பெற்றிடு தில்லை விநாயகன் காப்பமே. - முஒ இயற்கும்மியின் இரண்டாவதடியின் முதல் நான்கு சீர் முடுகி வருதல் - ஒயிற்கும்மி எனப்படும். அம்முடுகியலடி முதலடியின் மோனையுடையதாக வரும். முடுகியலின் மோனையாக அடுத்த அரையடியின் முதற்சீர் வரும். முடுகு சீர்களில் வெண்டளை வரவேண்டுமென்பதில்லை. இப்பாடல் அவ்வாறு அமைந்திருத்தல் காண்க. காப்பாமே - தேமாங்காய். இது சிறுபான்மை வரும். 6. சொன்ன படிசெய்ய என்னாலே யாகாது சுத்த முழுமோசம் சித்தமதே சுந்தரமே இந்தவிதம் எந்தனிடம் வந்துரைக்கச் சொல்லிக் கொடுத்ததார் இல்லதெல்லாம். - தலைமை இது முடுகு சந்தம் வேறுபட்டு வந்தது. அடிகள் பொழிப் பெதுகை பெற்று வந்துள்ளன. இன்னும் வேறு பட்ட முடுகு சந்த முடையதாகவும் பாடலாம். இது கும்மி யடிக்க எடுப்பாக இருக்கும். 7. மாவும்ப லாவுங்கொய் யாவுமா ரஞ்சியும் வன்னப் பழம்பழுக்கும் - மகிழ்வாய்த் தின்னச் சுவைமிகுக்கும் - மலர்ந்த பூவுங் கனியும் பொழியுஞ்செந் தேனும் போவா ரடிவழுக்கும். - வெவ இஃதொரு வகை ஒயிற்கும்மி, தனிச்சீரொழிந்த அடிகள் வெண்டளை பிழை யாமல் வந்திருத்தலை அறிக. இங்கு எடுத்துக் காட்டிய பாடல்களெல்லாம் நன்கு தொடையமைதி உடைய வாயிருத்தலை அறிக. 3. ஓரடிக்கும்மி 8. ஆளுடன் ஆளு முகையாம லேநீங்கள் ஆளுக் கொருமுழந் தள்ளிநில்லும். - நாட் 9. வக்காவுங் கொக்கும் வருகுது பார்நல்ல வங்கார சாமி குளந்தேடி. - நாட் இவை ஓரடிக் கும்மி. இயற்கும்மி போலவே முதற் சீரினும் ஐந்தாஞ்சீரினும் மோனை அமைந்துள்ளமை அறிக. முதற்பாட்டின் அடியெதுகையினும் அடிமோனையே சிறப்பு. ஓசையுடன் படித்துப் பாருங்கள். 10. பாட்டுக் குகந்த படியிரு கையையும் ஆட்டிஒய் யாரமாய் ஆடிடுவோம். - நாட் இது முதற்சீரினும் ஐந்தாஞ்சீரினும் எதுகைத் தொடையமைந்த ஓரடிக்கும்மி. சிறுபான்மை இவ்வாறும் வரும். இவை மூன்றும் பழம் பாட்டுக்கள். 11. 1. குடிசை விட்டு வெளிப்பட்டா ளேயடா கொம்பனை யாள்முத்து நாச்சிதங்கை; 2. என்னுடைய யண்ணாநீ ஊமைத் துரைமன்னா என்னைவெட் டாதேயோர் சேதிகேளும்; 3. புலியதன் கூடப் பிறந்துபோட் டேநானும் பூனையாய்ப் போவேனோ தங்கையாரும்? 4. சிங்கத்தின் கூடப் பிறந்துபோட் டேநானும் சின்னவ ளாவேனோ உன்பிறப்பு? 5. கொண்டை யுடனண்ணா நீபிறந் தாயானால் கொசுவத் துடனேநா னும்பிறந்தேன். - முச இது பாஞ்சாலங் குறிச்சிக் கட்டபொம்மன் தங்கையின் போர்ச் செய்தியைக் கூறும் ஓரடிக்கும்மி யாகும். இவை அடிமோனைத் தொடையா லானவை. 12. 1. பாலக் காட்டுச் சந்தையிலே பயிறு விற்பாளாம் வீராயி. பயிறு விற்ற பணத்துக்கெல்லாம் பவளம் வாங்குவாள் வீராயி. 2. மூல னூருச் சந்தையிலே மொளகு விற்பாளாம் வீராயி; மொளகு விற்ற பணத்துக்கெல்லாம் முத்து வாங்குவாள் வீராயி. 3. தாரா புரத்துச் சந்தையிலே தவிடு விற்பாளாம் வீராயி; தவிடு விற்ற பணத்துக்கெல்லாம் தங்கம் வாங்குவாள் வீராயி. - முத்கு இது, இயற்கும்மியின் வேறுபட்டு, அடி மடக்காய் அடிமோனைத் தொடைய மைய வந்துள்ளது. சேவற்பாட்டுப் போன்ற தொடையமைதியுடையது. அதன் குறிப்பைப் பார்க்க மொளகு - மிளகு. 13. 1. காடுவெட்டிச் சிறையொதுக்கி - நல்ல கானகங்கள் உண்டுபண்ணி; 2. செடியைவெட்டிச் சிறையொதுக்கி - நல்ல தினைப்புனங்கள் உண்டுபண்ணி; 3. அள்ளித் தினைவிதைத்தார் - நல்ல அருங்கிளியைக் காவல்வைத்தார்; 4. முடுக்கித் தினைவிதைத்தார் - நல்ல மொய்குழலைக் காவல்வைத்தார்; 5. மரத்தால் பரணமைத்தார் - நல்ல வள்ளிப்பெண்ணைக் காவல்வைத்தார்; 6. கொம்பால் பரணமைத்தார் - நல்ல குறக்கொடியைக் காவல்வைத்தார். -வம இது, ஒருவகை ஓரடிக் கும்மி. இது கும்மியோடு, கோலாட்டத்திற்கும் ஏற்ற பாடலாகும். இன்னும் வேறு பட்ட ஓரடிக் கும்மிகளும் உண்டு. 4. இரட்டைக் கும்மி 13. தில்லைச் சிதம்பரந் தன்னி லொருநாள் திருநட்ட மாடுஞ் சிவனுடனே தேவி சிவகாமி நாயகி யந்தத் திருநீல பத்தன் நெறியுரைக்கச் சொல்லச் செவிதனிற் கேட்டான் நாளுஞ் சோதித் தவன்றன்னைச் சூதாக்கிச் சொன்ன மொழிநிலை யாமலெந் நாளும் சுகத்தினில் வாழ நினைத்திடென்றார். -திநீப இது இயற்கும்மி போன்று இரட்டித்து வந்துள்ளது. ‘கேட்டான் நாளுஞ் சோதி’ என்ற இடத்தில் தளைதட்டுகிறது. ‘கேட்டனன் நாளுமே’ என்றிருக்கின், தளை தட்டாது. சரியான இயற்கும்மியாகும். இதை இரட்டைக் கும்மி எனலாம். இப்பாடல் நாலடியாக உள்ளது. இரண்டடியாகப் பாடினால் சரியான இரட்டைக் கும்மியாகும். இவ்வாறு கும்மி பாடலாம். 1. அரிச்சந்திரக்கும்மி 5. முருகர் ஒயிற் கும்மி 2. வாலாக் கும்மி 6. முத்துவீராயி கும்மி 3. ஞானக்கும்மி 7. முத்துநாச்சி சண்டை 4. மறபாலர் கும்மி 8. வள்ளி மணச்சிந்து முதலிய கும்மிப் பாடல்கள் பலஉண்டு. தேசிக விநாயகம் பிள்ளை பாடல்களில் கும்மிப் பாடல்கள் பலவாம். இன்னும் நாட்டுப் பாடற் கும்மி பல உண்டு. பயிற்சி 1 1. கும்மியின் இலக்கணம் யாது? 2. கும்மி எத்தனை வகைப்படும்? வகைப் பட்ட காரணம் என்ன? 3. இயற்கும்மியின் ஓரடியில் தனிச்சொல் அமைப்பதெப்படி? அப்போது அவ்வடியின் சிறப்பென்ன? 4. இயற்கும்மியின் ஓரடியில் எந்தெந்தச் சீர்களில் மோனை வரும்? 5. ஓரடிக்கும்மியின் இருவகை யாவை? 6. இரட்டைக் கும்மி என்பதன் இலக்கணமென்ன? 7. வகைக்கொரு கும்மிப் பாடல் பாடுக. 15. இலாவணி 1. செஞ்சடை விரித்துத்தவம் துஞ்சிடா திருக்குமீசன் தெரிசனம் தன்னைமதன் கண்டு கண்டு - அப்போ அஞ்சாமல் முல்லைக் கணையைப் பஞ்சபாண னும்விடவே அரனார் அதிககோபங் கொண்டு கொண்டு. 2. மண்டலமெ லாநடுங்கத் தொண்டைகிழி யக்கத்திடும் மகாசூர வித்துவானே அய்யா அய்யா! மங்கல மிகுந்தகுண சங்கரன் நுதல்விழியால் மன்மதவேள் மடிந்ததும் பொய்யா பொய்யா! கண்டனம் புரியவந்தீர் அண்டசரா சரமெல்லாம் காமனாலே உற்பத்தியா சொல்லும் சொல்லும் கற்பனையாய்ப் பேசியிங்கே அற்பமான மன்மதனைக் கடவுளென் றுரைக்காதீர் செல்லும் செல்லும். -எரிலா இது அறுசீர்க்கழி நெடிலடி தனித்து வந்த ஒருவகைச்சிந்து. முதற்சீரினும் நான்காஞ் சீரினும் மோனை வந்துள்ளது. அடியின் ஈற்றில் அடுக்குச்சொற் பெற்றது. முதற்பாட்டு நாற்சீரிரட்டை, இரண்டாம் பாட்டு நாற்சீரிரட்டை இரட்டித்து வந்தது. மோனை எதுகைத் தொடையமைப்பினை நோக்குக. முதலரையடியின் 1, 3 சீர் எதுகைத் தொடையாகவும், இரண்டாவதரையடி, முதலரையடியின் முதற்சீரின் மோனைத் தொடையாகவும் அமைந்துள்ளன. இது, எதிர்த்து உரையாடற்கு ஏற்ற ஓசையுடைய பாடல். 16. தன்னானேச் சந்தம் 1. போகாதே போகாதே என்கணவா பொல்லாத சொப்பனங் கண்டேனையா! 2. இஞ்சிக் கிணறு மிடியக்கண்டேன் எலுமிச்சைத் தோப்பும் அழியக்கண்டேன். 3. மஞ்சட் கிணறும் வறளக்கண்டேன் மல்லிகைத் தோட்ட மழியக்கண்டேன். 4. கூகை நின்று குழறக்கண்டேன். கோபத்தில் ஆந்தை அலறக்கண்டேன். 5. மேகமில் லாமல் இடிக்கக்கண்டேன். வீரனே உன்தலை போகக்கண்டேன். 6. பாஞ்சை நகரம் அழியக்கண்டேன். பாழூ ராகவே போகக்கண்டேன். -கட்ட 17. தன்னனச் சந்தம் 1. சொப்பனந் தனிற்கண்ட சூரன் அழகுதன்னைச் சொல்ல முடியாதடி - ஒருவராலும் வெல்ல முடியாதடி. 2. இப்புவி தனிலெங்கும் இவன்போல் வடிவழகன் இருக்க முடியாதடி - சித்திரலேகா உருக்க முடையானடி. 3. ஓடிப்போ னகள்ளனைத் தேடிப் பிடிப்பமென்றால் ஊரையுங் காணேனடி - அவன்போன தாரையுங் காணேனடி. 4. நாலான விதத்திலும் மேலான விதம்பார்க்க நமக்கேற்ற கணவனடி - சித்திரலேகா! நமக்கேற்ற கணவனடி. 5. எந்தன் கனவில்வந்த இந்திரசா லக்கள்ளன் ஏச்சுமே போட்டானடி - என்னாசையை மாச்சுமே போட்டானடி. -வாணா இஃதொருவகைச் சிந்து. முதல் இரண்டு பாடலின் முதலடி பொழிப்பு மோனை. மற்ற பாடல்களின் முதலடி பொழிப்பெதுகை. பின்னுள்ள குறளடிகளில் எதுகைத் தொடை அமைந்துள்ளன. 18. ஏசல் 1. வீடுவாசல் கிடையாமல் சுடுகாட்டிலே வீற்றிருந்தார் அல்லரோடி உங்கள்சிவனார் நாடுதேசம் வீடுவாசல் காடுகள் வீட்டே நடுக்கடலிற் பள்ளிகொண்டார் உங்கள்பெருமாள். 2. அண்டையிலே மண்ணெடுத்துக் கூலியாளாகி அமர்ந்தசொக்க நாதரடி உங்கள் சிவனார்! சண்டையிலே அர்ச்சுனர்க்குக் கூலியாளாகிச் சாரதீயஞ் செய்தாரடி உங்கள் பெருமாள். 3. வேண்டுமென்றே சோறுகறி மிக்கவிருக்க விடத்தைக் குடித்தாரோடி உங்கள் சிவனார்! மாண்டுபோக வெண்ணெய்தயிர் தாழியிருக்க மண்ணைவாரித் தின்றாரோடி உங்கள் பெருமாள். -இபார இது பழிப்பது போல் புகழும் வஞ்சப் புகழ்ச்சி அணியின் பாற் பட்டது. தனிச்சீர் இன்றி வந்த முச்சீரிரட்டை. மோனை எதுகை அமைப்பினை நோக்கியறிக. 19. ஏற்றப்பாட்டு 1. பிள்ளையாரே வாரி 2. பிள்ளையாரே வாரி பிள்ளையாரு மங்கே, பிழையாமற் காரும் பெருத்தமூலா தாரம் காரும்பக வானே சிறுத்தவிதழ் நாலாம் வாரும்பெரு மானே உரைத்தகம்ப மாகி பெருமாள் தன் கதையைப் ஓங்கியுச்சி தொட்டுத் பிசகாமற் பாடச் தாங்கியதன் கீழாய்த் சரமாகி நின்றார் தானிரண்ட தாகித் தசரதனார் செல்வம் தங்கிவாயு வானால் செகமெங்குஞ் செல்ல அங்கிமேல் கடந்து அகமேறி வாழ்க! சங்கிலி பிளந்து அலையாழி சூழ்ந்த சமத்தவாயு வானால் அயோத்திமா நகரை இங்கிது வுரைத்தே வன்மையுட னாண்டு இரண்டுடனே வாரி. வந்ததச ரதனும் - ஞாஏ ஒருபதியா லொன்று. -இராஏ 3. அஞ்சியவர் மேலே அர்ச்சுனன் தயவாய் உத்தரனைப் பார்த்தே ஊர்க்குநீ திரும்பு செப்பவே திரும்பி ஒப்பொருவ ரில்லார் மெய்ப்பொருளைப் போலே விசயனிருந் தானே. -பாஏ இம் மூன்றுமே ஒரே ஓசையுடையனவே. இப்பாட்டின் பயிற்சி புலப்பட மூன்றும் எடுத்துக்காட்டப் பட்டன. நெல் முதலியவற்றை அளப்போர், ‘இலாபம் இரண்டு’ என்று எண்ணுவர். ‘இலாபம்’ என்பது ஒன்று என்பதாம். ‘பிள்ளையாரேவாரி’ என்பது இலாபம் என்பது போன்றதாம். அதாவது, ஒன்று என்றபடி. ஏறக்குறையப் பத்தடிகட் கொருமுறை, ‘ஒன்றுடனே வாரி, இரண்டுடனே வாரி, மூன்றுடனே வாரி’ எனவும், ‘ஒருபதியா லொன்று, இருபதியாலிரண்டு, முப்பதியால் மூன்று’ எனவும், நூறுவரை பப்பத்தாக எண்ணப்படும். இது ஏற்றம் இறைப்போர் பாடும் பாட்டு. குறளடியா லாகிய இப்பாட்டு, அடியெதுகை பெறின், செப்பவே திரும்பி ஒப்பொருவ ரில்லார். என இரண்டடி எதுகையாகவும், அடி மோனை பெறின். பெருமாள்தன் கதையைப் பிசகாமல் பாடச் சரமாகி நின்றார் தசரதனார் செல்வம். என இரு மோனைத் தொடை ஓரெதுகையாகவும் வருதல் சிறப்பு. 20. ஏலப்பாட்டு 1. நாழிகை யொன்றுக்கு நானூறு கப்பல் நாடோறுந் தப்பாமல் நகர்வந் திறங்கும் சீருடைய படித்துறைக்குக் கப்பல்வருஞ் சேதி சென்னைபட் டினக்கோட்டைச் சனங்களெல்லாங் கேட்டுப் பூரித்தே ஆனந்த சந்தோச மாகப் புதுமைகள் பார்க்கவந்து கரைதனிலே நிற்க. - பலர 2. தலத்தினுயர் சீரகம் பெருங்காயஞ் சுக்கு சதகுப்பை கொத்துமலி குங்கிலியம் ஏலம் உலப்பரிய கடுகுமிள கொடுலவங்கப் பட்டை ஓங்குவால் மிளகுபச்சைக் கருப்பூரங் கோட்டம் விலக்கரிய அதிம துரம் விளங்குமலைப் பச்சை மிக்ககுங்கு மப்பூவோ டரிதாரங் குக்கில் தலத்தமையுஞ் சாதிக்காய் ஆதிபல கொண்டு சஞ்சரித்துத் துறைவந்து சேர்ந்ததுகாண் கப்பல், ஏலேலோ - ஏல - ஏலலெலோ. - கப் 3. தந்தைதாய் சுற்றமுஞ் சகலமு மறந்து தாரஞ் சகோதரந் தானது மறந்து பந்தமு நேசமும் பாசமு மறந்து பதினாலு லோகமு மதனையு மறந்தே இந்திரிய ரிரட்சித்த கப்பலி லேறி ஏகாந்த மானதொரு கடலிலே தள்ளி அந்தர மானவெளி யானஅரு ளான ஆனந்த வெள்ளத்தில் அழுந்துதையா கப்பல், ஏலேலோ - ஏல - ஏலலெலோ. -காக ஏலப்பாட்டு, அல்லது கப்பற்பாட்டு என்னும் இப்பாடல், ஒருவகை முடுகு சந்தமுடைய அளவடியாலானது. பல அடிகள் ஒரே எதுகையுடையதாக உள்ளன. அப்பாடல் - 2, 3 பாடல்களைக் காண்க. வெவ்வேறு எதுகையுடையதாகவும் பாடலாம். முதற்பாட்டு அத்தகையதே. அடிகள் அளவடிக்குரிய தொடையமைதிப்படி, பொழிப்பு மோனை, அல்லது ஒரூஉ மோனையுடையதாக இருத்தல் நலம். சிறுபான்மை பொழிப்பெதுகையும் வரலாம். 4. நன்னானே யென்று நாவி லெழுதி நாகரிகம் பேசவே ரயிலுவண்டி சேர்த்தி ஆயிரம் வண்டியை அடுக்காகச் சேர்த்தி அதன்மேலே உட்கார நாற்காலி போட்டு நாட்டு மனிதருக்கு நாலுசக்கர வண்டி நல்ல மனிதருக்கு நயமான வண்டி போகுதாம் போகுதாம் புகைவண்டிப் பேட்டை புகைபோ கிறதைப் போயெவரும் பார்க்கக் காட்டானை மேட்டிலே ரோட்டாகப் போட்டு மாடுகன்று நுழையாத தண்டவாளம் போட்டு மைலுக்கு மூணுகாசு வரிவைத்து வாங்கி வெள்ளைக்காரன் பெட்டிவண்டி வேகமாகப் போகுதாம். -புகை இதுவும் ஏலப்பாட்டு வகையே, இங்ஙனம் இப்பாடலால் பலவகைப் பொருள்பற்றிப் பாடலாம். 4, 10 அடிகளில் மோனை அமையவில்லை. அடி 9 - முற்று மோனை. மற்ற அடிகள் - பொழிப்பு மோனை. 21. உடுக்கைப்பாட்டு உடுக்கை அடித்துக் கொண்டு முன்னும் பின்னுமாக இருவர் பாடுதல். பாட்டு - முன்பாட்டு, பின்பாட்டு எனவும், பாடுவோர் - முன்பாட்டுப் பாடுவோன், பின் பாட்டுப் பாடுவோன் எனவும் வழங்கும். அடி, அல்லது பாட்டு முடிந்ததும், பின்பாட்டுக்காரன் முன்பாட்டுக்காரனாக மாறியும், இருவரும் சேர்ந்தும் பாடுவர். 1. உரைமடை பெற்றவளே காமாட்சி பேருவைத்த மீனாட்சி வளர்த்தவளே காமாட்சி வாழவைத்த மீனாட்சி. - காத் இது, உரைநடை போல இசையாக இழுத்துப்பாடுதல். ஓரடி முடிந்ததும் - ‘டும் டும் டும் டும் டும்’ என்று உடுக்கை யடித்தல். உடனே பின்பாட்டுக்காரன் - ‘ஆமையா ஆமாமாம்’ என்பான். உரைமடை - பாட்டை உரைநடை போல மடுத்தல். மடுத்தல் - உரைநடையில் இசையமையப் பாடுதல். 1. பாட்டு தன்னநன்ன நானநன்ன தானநன்ன நானநன்ன பெற்றவளே காமாட்சி பேருவைத்த மீனாட்சி வளர்த்தவளே காமாட்சி வாழவைத்த மீனாட்சி. - காத் ஒவ்வொரு சீரினும் நிறுத்தி, அடுத்தசீரை எடுத்துப் பாட வேண்டும். இவ்விரு சீராக ஒருவர்பின் ஒருவர்பாடுதல். பாட்டு - வேறு இசை மேற்படி பாட்டை, ஒவ்வொரு சீரினும் நிறுத்தாமல் இரு சீர்களை ஒரே இசைத் தொடர்பாகப் பாடி, மூன்றாவது சீரில் எடுத்து, முன்போலவே இசைத்தொடர்புறப் பாடுதல். ஒவ்வோரடியாக ஒருவர்பின் ஒருவர் பாடுதல். 2. பாட்டு பன்றிமேலே சண்டைக்குத்தான் பாரச்சண்டை போகவேணும் கொம்பன்மேலே சண்டைக்குத்தான் குத்துச்சண்டை போகவேணும். - குன் முன்பாட்டைப் போல அவ்விருவகை இசையினும் இதைப் பாடலாம். ‘போகவேணும்’ என்பதைப் பின்பாட்டுக்காரன் சொல்லி, பாட்டு முடிந்ததும் இருவரும் சேர்ந்து பாடுவதும் உண்டு. பாட்டு - வேறு இசை தன்ன நன்ன தன்னநன்ன தானநன்ன பன்றிமேலே பன்றிமேலே சண்டைக்குத்தான் - சண்டை பாரச்சண்டை பாரச்சண்டை போகவேணும் கொம்பன் மேலே கொம்பன்மேலே சண்டைக்குத்தான். குத்துச்சண்டை குத்துச்சண்டை போகவேணும். -குன் 3. பாட்டு சுட்ட கருவாடு தொட்டி நிரம்ப சாராயம் வறுத்த கருவாடு வட்டி நிரம்ப சாராயம்.. வேறு இசை தன்னநன்ன நான தானநன்ன - தானநன்ன தன்னநன்ன தன்னநன்ன தானநன்ன சுட்டநல்ல சுட்ட கருவாடு - கருவாடு தொட்டிநம்ப தொட்டிநம்பச் சாராயம் வறுத்தநல்ல வறுத்த கருவாடு - கருவாடு வட்டிநம்ப வட்டிநம்பச் சாராயம். -பேபா ‘நல்ல’ என்ற சொல் பெய்து பாடப்பட்டது. தனிச்சீருக்குப் பின், ஒருசொல் (உனக்கு) சேர்த்து, முன்பாட்டுக்காரன் பாடுவதும் உண்டு. 4. பாட்டு நன்னநன்ன - நனனா - நானநன்ன பாலொருவாய் - கிளியே - பழமொருவாய் - பழமொருவாய் பாங்காகக் - கிளியே - பருகொருவாய் தேனொருவாய் - கிளியே - தினையொருவாய் சீராகக் - கிளியே - தின்னொருவாய். -காத் 5. பாட்டு தன்னநன்ன நானநன்ன தானநன்ன நானநன்ன கண்ணகியா மடிந்திட்டான்னு கையோலை வந்ததடி கொம்பனையா மடிந்திட்டான்னு கொத்தோலை வந்ததடி மாலையிட்ட தோசமல்லாமல் மற்றசுகங் கண்டதில்லை கூறையிட்ட தோசமல்லாமல் கொண்டசுகம் ஒன்றுமில்லை மாலையிட்ட தோசத்துக்கு மண்ணுத்தள்ளப் போகவேவேணும் கூறையிட்ட தோசத்துக்குக் கொள்ளிவைக்கப் போகவேணும் வழியைம றிக்காதடி மதிமோசம் செய்யாதடி தடத்தைம றிக்காதடி சதிமோசம் செய்யாதடி. - கோக ஒவ்வோரடியாக ஒருவர்பின் ஒருவராகப் பாடுதல். முன்பாட்டுக்காரன் - கண்ணகியா பின்பாட்டுக்காரன் - மடிந்திட்டான்னு முன்பாட்டுக்காரன் - கையோலை பின்பாட்டுக்காரன் - வந்ததடி. இவ்வாறு இருவரும் சீர்சீராகவும் பாடலாம். இவ்வுடுக்கைப் பாடல்கள், சீர்மோனை பெற்ற தனித் தனி அடியாக வந்துள்ளன. எல்லா அடிகளிலும் பொழிப்புமோனை அமைந்து அளவடிக்குரிய இலக்கணப் படி வந்துள்ளன. நாலாவது பாடலின் அடியின் இடைதனிச்சொல் வந்துளது. உடுக்கைப் பாட்டுக்காரரை நேரில் பாடச் சொல்லி இசைவேறுபாடறிந்து இன்புறுக. 22. ஒப்பாரி 1. காலைச் சிவந்திப்பூ கசங்காத மல்லிகைப்பூ - நான் கலந்து முடிக்குமுன்னே - என் கருணரைக் கொள்ளையிட்டேன். மாலைச் சிவந்திப்பூ வாடாத மல்லிகைப்பூ - நான் வாரி முடிக்குமுன்னே - என் மன்னவரைக் கொள்ளையிட்டேன். -சாரஓ 2. பொன்னுத் தமுக்கடிக்கும் போலீசு வந்திறங்கும் - இப்போ போலீசைக் கையமர்த்தும் பொறுப்புடையோ ரில்லையேதான்! தங்கத் தமுக்கடிக்கும் தாசீலு வந்திறங்கும் - இப்போ தாசீலைக் கையமர்த்தும் தகவுடையோ ரில்லையோதான்! -பரிசி 3. சாதிமல்லிப் பூப்பூக்கும் சந்தனக்கல் மேடையிலே - நான் சாய்ந்தே அழுதே னென்னா, சாலை மடங்கேட்கும் சாமிமலை ஓசையிடும் - அந்தச் சாமிமலைத் தேவடியாள் சதுரை நிறுத்திடுவாள் - என் தனியோசை கேட்டழுவாள். கொடிமுல்லைப் பூப்பூக்கும் கொத்தளத்து மேடையிலே - நான் கூவி அழுதேனென்னா, கோயில் குளங்கேட்கும் கொல்லிமலை ஓசையிடும் - அந்தக் கொல்லிமலைத் தேவடியாள் கொலுவை நிறுத்திடுவாள் - என் குரலோசை கேட்டழுவாள். - பஞ்ஓ 4. பச்சைக் கடுதாசி பட்டணத்து மைக்கூடு - நீங்க பரலோகம் போறேமென்னு பாங்கர யெழுதிவிட்டா - என் பாண்டி யருநானும் பறவாப் பறந்துவந்து பவளத்தேர் சோடித்துப் பதறி யழுதுவிட்டா - அந்தப் பரலோகங் கேட்டிடுமே! சிவப்புக் கடுதாசி சேலத்து மைக்கூடு - நீங்க சிவலோகம் போறோமென்னு சீரா யெழுதிட்டா - என் செல்வருட னேநானும் சிட்டாய்ப் பறந்துவந்து சித்திரத்தேர் சோடித்துத் தேம்பி அழுதுவிட்டா - அந்தச் சிவலோகங் கேட்டிடுமே. - கோமஓ இந்நான்கு பாடலும் ஒரே வகையான ஓசையுடையவையே. ஒப்பாரிப் பாடல்களெல்லாம் ஒரே வகையான ஓசையுடை யவையேயாம். அடியின் சுருக்கம் பெருக்கத் திற்றான் வேறுபாடு. முதல் மூன்றும் கணவனை யிழந்த மனைவி பாடிக்கொண்டு அழும் பாடல்கள். பொருள் வேறுபாட்டுக்காக மூன்றுங் காட்டப்பட்டன. முதல் இருபாடலும் ஒரே அளவான அடிகளை யுடையவை. மூன்றாம் பாட்டு அடிமிகுதியுடையது. நான்காம் பாடல் தந்தையை இழந்த மக்கள் பாடிக் கொண்டு அழும்பாடல். மோனைத் தொடை அமைப்பினைக் கவனியுங்கள். எவ்வளவு ஒழுங்காக அமைந்து ஓசையின்பம் பயக்கின்றது! அடிப்பெருக்கம் மோனைத் தொடையால் அடுக்கிக் கொண்டே போவதே யாகும். காட்டு சிவப்புக் கடுதாசி சேலத்து மைக்கூடு - என் செல்வக் கணக்கருகா செந்தமிழில் வல்லவுகா - நீங்க சிவலோகம் போறமென்னு சீரா யெழுதிவிட்டா சேதிகொண்டு வந்துவிட்டா - அந்தச் சேதி யதுகேட்டா செந்தமிழைக் கண்டுவிட்டா செவியில் நுழையுமுன்னே - என் செல்வருட னேநானும் சிட்டாய்ப் பறந்துவந்து சீக்கிரமா யோடிவந்து சித்திரத்தேர் சோடித்து - அந்தச் சித்திரத்தேர்க் குள்ளாகச் சீராய்ப் படுக்கவைத்துச் செல்வத் தமிழ்பாடி - நான் தேம்பி அழுதுவிட்டா - அந்தத் தெருவே திரண்டுவந்து சேர அழுதிடுமே - அந்தச் சிவலோகம் கேட்டிடுமே. இவ்வாறு மோனைத் தொடைப்பட அடிகளை வளர்த்துக் கொண்டே போகலாம். இழவு வீட்டில் அழுகிற பெண்கள், இவ்வாறே அடிகளைப் பெருக்கிக் கொண்டு பாடி அழுதலை நேரில் அறியலாம். இவ் ஒப்பாரிப் பாடல் மோனைத் தொடையால் தொடரும் குறல்வெண்டுறையே. குறள்வெண்டுறையின் இலக்கணத்தை ஒருமுறை பாருங்கள். ஒப்பு நோக்குக சேலத்து மைக்கூடு சிவலோகம் போறோமென்னு சித்திரத்தேர் சோடித்துத் தேம்பி யழுதுவிட்டா சாதிமல்லிப் பூப்பூக்கும் சந்தனக்கல் மேடையிலே கோயில் குளங்கேட்கும் கொல்லிமலை ஓசையிடும் பொன்னுத் தமுக்கடிக்கும் போலீசு வந்திறங்கும். - ஒப்பாரி பாஞ்சாலன் பெற்றெடுத்த பைங்கிளியே துரோபதையே நெருப்பிற் பிறந்தவளே நீலவண்ணன் தங்கையரே அனலிற் பிறந்தவளே அபிசேக பத்தினியே ஐவரையு மாலையிட்ட ஆதி பரஞ்சுடரே தோரா வடிவழகி துரோபதையே நீர்கேளும். - பஞ்வ மேலுள்ள ஒப்பாரி யடிகளும், கீழுள்ள பஞ்சபாண்டவர் வனவாச அடிகளும் ஒரே ஓசையுடையவைதாமே! ஓசையோடு படித்துப் பாருங்கள். குறள் வெண்டுறை எதெதற்கெல்லாம் பயன்படுகிறது! பாவையர் இதைப் பார்த்துப் பிடித்தார்களே தங்கள் அன்பின் பண்பைக் காட்ட! சிந்துபோல் ஒப்பாரியில் தனிச்சீர்வரும். தாய், தந்தை, மகன், மகள், அண்ணன், தம்பி, அக்கை, தங்கை, பாட்டன், பாட்டி, மாமன் மாமி, தூரத்துச் சுற்றம் முதலிய ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஒப்பாரிப் பாடல்கள் உண்டு. நாட்டுப்புற மூதாட்டியரிடம் கேட்டால் பொருள் வேறுபாடுடைய, வகை வகையான பன்னூற்றுக் கணக்கான ஒப்பாரிப் பாடல்கள் திரட்டலாம். மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் ஆய்ந்த பூசல் மயக்கத் தானும், தாமே ஏங்கிய தாங்கரும் பையுளும், கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதா னந்தமும், நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து தனிமகள் புலம்பிய முதுபா லையும், கழித்தோர் தேஎத் தழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும். -புறத் - 24 என்னும் தொல்காப்பியப் புறத்திணையியற் சூத்திரத்தால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரிருந்தே, மகளிர் ஒப்பாரி பாடி அழும் வழக்கம் இருந்ததென்பது புலப்படுதலால், ஒப்பாரிப் பாடலின் தொன்மையும் சிறப்பும் பயிற்சியும் விளங்கும். 23. தாலாட்டு 1. ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ சீராரும் எங்கள்குலச் சிகாமணியே கண்வளராய்! 2. கண்ணேயென் கண்மணியே கற்கண்டே முக்கனியே! எண்ணே எழுத்தேயென் இன்னமுதே கண்வளராய்! 3. ஆரடித்து நீயழுதாய் அடித்தாரை யாரெனச்சொல் சீரெடுத்த எங்கள்குலச் செல்வத் திருமகளே! 4. அக்கா அடித்தாளோ அயலார்முத் தாடினரோ விக்கியழ வேண்டாம்காண் விண்மணியே கண்வளராய்! - குழதா ஒப்பாரி போல, இதுவும் பெண்களுக்குரிய பாடலாகும். ‘ஆராரோ’ என்பது தாலாட்டுச் சந்தம். தூரிதூரி தூராரோ தூரிதூரி தூராரோ என்பதும் உண்டு. இத்தாலாட்டுப் பாடல் - இரண்டடித் தாழிசையேயாகும். தாழிசை - குறளடி முதல் எல்லா அடியானும் வரும். இது ஓரெதுகையுடைய அளவடி இரண்டானேதான் வரும் பொருள் பற்றி இங்கு வேறாகக் காட்டப்பட்டது. தாழிசை பலவகை ஓசை வேறுபாடுடையது. அவற்றுள் இஃதோரோசையுடைய தாழிசை யாகும். பேராழி யுலகனைத்தும் பிறங்கவளர் இருள்நீங்க ஒராழி தனைநடத்தும் ஒண்சுடரைப் பரவுதுமே. - கலிங் - 7 என்னும் கலிங்கத்துப் பரணித் தாழிசையை இப்பாடல்கள் பெரும்பாலும் ஒத்திருத்தலை ஓசையோடு படித்தறிக. இப்பாடல் ஒவ்வொன்றும் கண்ணி எனப்படும். அடுத்து வரும் கண்ணிக்கும் இதுவே இலக்கணமாகும். இக்கண்ணிகளின் அளவடிகளில் பொழிப்புமோனை உள்ளபடிஅமைந்திருத்தலை அறிக. ‘தாலாட்டு’ என்பது ஒருவகை நூலாகும். தமிழில் பல தாலாட்டு நூல்கள் உண்டு. அவற்றுள், கடவுளைக் குழந்தையாகக் கொண்டு தாலாட்டும் பாடல்களும் நூல்களும் மிகுதியாகும். பயிற்சி 1. ஒப்பாரி, தாலாட்டு - இவற்றின் செய்யுள் வகை என்ன? 2. அம்மானையிலும் ஒப்பாரியிலும் ஒரேவகைச் செய்யுள் எவ்வாறு வருகிறது? 3. ஒப்பாரியின் பழமையும் சிறப்பும் எதனால் விளங்குகின்றன? 4. ஒப்பாரிப் பாடலுக்கும் தாலாட்டுப் பாடலுக்கும் உள்ள சுவை வேறுபா டென்ன? 5. ஒப்பாரிப் பாடல் சிந்தின் எந்த உறுப்பைப் பெற்று வரும்? 6. ஒப்பாரியும் தாலாட்டும் யாருக்கு உரிமையுடைய பாடல்கள்? 24. கண்ணி 1. எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே. - தாயு 2. சிந்தை மருவித் தெளிவித் தெனையாள வந்தகுரு நாதனருள் வாய்க்குமோ பைங்கிளியே! - தாயு 3. வானிற் கதிர்மதியாய் வளர்ந்துபின் தானதுபோய் ஊனுடலுக் குள்ளிருந்த உயிர்ப்பறியேன் பூரணமே. -பரா 4. ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமற் றூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம். -பத்தி 5. பண்டு பறையனென்று பாராமற் கூடவைத்தே உண்டு மிகக்களித்தே உத்தமக்கா மிண்டனெங்கோ. -நல்கா இக் கண்ணியும் தாலாட்டுப் பாடல் போன்றதே. அடிகளில் பொழிப்பு மோனை உள்ளவா றமைந்திருத்தலை நோக்குக. ஐந்தாவது கண்ணி, ‘நல்லதம்பிச் சர்க்கரை மன்றாடியார் காதல்’ என்னும் காதல் நூலின் கண்ணியாகும். காதல் நூல் பாடுதற்குரிய இக்கண்ணி, தனிப்பொருள் பாடுதற்குரியதேயன்றித் தொடர் பொருள் பற்றிப்பாடுதற்கும் உரியதாதலை அறிக. பட்டினத்தார், பத்திரகிரியார், தாயுமானவர் முதலியோரின் பூரணக்கண்ணி, எக்காலக்கண்ணி, பராபரக்கண்ணி, பைங்கிளிக் கண்ணி முதலியவற்றிலும் காதல் நூல்களிலும் கண்ணிகளின் சிறப்பை யுணர்க. ஒருவகைச் சிந்து பஞ்சவ டிதனிலே - முவர்முன் தஞ்சமாய் வாழ்க்கையிலே - அந்தப் பாவியி ராவணன் ஏவமா ரீசனும் பன்னக சாலைமுன் வன்னமான் ருபமாய் வந்துவி ளையாடவே - சீதையும் அந்தமா னைநாடவே - அதைப் பற்றி யீயென உத்தமர் முன்பாகப் பண்பா யுரைசெயத் தம்பிலட் சுமணனும் இந்தமான் பொய்ம்மானண்ணா - யாகத்தில் வந்தமா ரீசனண்ணா. - இசி பெரும்பாலும் எல்லா அடிகளும் எதுகைத் தொடையுடன் வந்துள்ளன. ‘பற்றி - உத்த’ - வல்லின எதுகையில் அமையும். ‘பண்பாய் - தம்பி’ - மெல்லின எதுகையில் அமையும். 25. இசைப்பாடல் பல்லவி 1. இந்த வரந்தாரும் - சுவாமி இந்த வரந்தாரும். பல்லவி எடுப்பு பந்த வினையெல்லாம் அறவேண்டும் - உன் பாத தரிசனம் பெறவேண்டும் - இந்த கண்ணிகள் தினமுமுன் பதமலர் தொழவேண்டும் - நான் தேக பரவசமாய் எழவேண்டும் அனல்மெழு காயுருகி யழவேண்டும் - இனி ஆனந்தக் கடலில்நான் விழவேண்டும் - இத் தேக வியாதிகள் கெடவேண்டும் - ஞான தீபத்தை என்னுளத்தில் இடவேண்டும் பாக அறப்பயிரை நடவேண்டும் - அந்தப் பயிர்க்குள் அருட்புனலை விடவேண்டும் - இந் - சர்வ பல்லவி 2. கனக சபாபதி தரிசனம் ஒருநாள் கண்டாற் கலிதீரும். பல்லவி எடுப்பு சனகம காமுனி கைதொழு தேத்திய தினகர கோடி தேசோன்மய மாகிய - கன கண்ணிகள் மனதி லொடுங்கிய கன்மிசம் போக்கும் மாயப் பிணியதனை மறுவடி வாக்கும் செனன மரணசமு சாரத்தை நீக்கும் திருவடி நிழலிலே கூடிய யார்க்கும் - கன சுருதி முடிவிலும் சொல்லிக்கொண் டாடும் தூய வெளியே ஒளியாகவே கூடும் தரும நெறியும் தவறாதுள நாடும் ததிங்கணத் தோமெனத் தாண்டவ மாடும். - கன - கந்த பல்லவி 3. நிருத்தம் செய்தாரே - ஐயர்ச தானந்த நிருத்தம் செய்தாரே. பல்லவி எடுப்பு திருத்த மானமன்றுள் சிவசிதம் பரநாதர் தித்திமி திமிதிமி திக்கிடதிக் கிடதிகு தத்தித் திமிர்தக ததிங்கணத் தோமென - நிரு கண்ணி அருமறை யோர்கலிக்க அரகர அரகர அரகர எனவே அடியவர் குழாந்துதிக்க, திருநுத லுமைமதிக்க, சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சேர்ந்திரு முனிகுதிக்க, திதண திதணதிரு திரிகிட கிடகிட ததண ததணசெகு ததிங்கணத் தோமென - நிரு - முத்துத் கண்ணிகள் 4. மார்கழி மாதம் திருவா திரைநாள் வரப்போ குதையே மனதைப்புண் ணாகப்பண் ணாம லொருதரம்போய் வாவென்று சொல்லுமையே. கட்டை யிருக்கையில் சிதம்பரம் போய் நான் காணவே வேணுமையே கசடனா னாகிலும் ஆசை விளையுதுன் காலுக்குக் கும்பிடையே. அல்லும் பகலுமுங்க ளாதர வாலே ஆளாகி னேனையே அன்புட னேநல்ல கதிபெரு வாயென் றனுப்ப வேணுமையே. - நந்த 5. பத்தினிக் கண்ணகியே - நல்ல பழுதுபடா ரத்தினமே! பத்தினி நீயுமானால் - உன் பத்தாவைப் போலொரு பது மையுண் டாகவேணும். உத்தமி யானவளே - அடி ஒருசொல்லு வாசகமே! உத்தமி நீயுமானால் - என் உருவத்தைப் போலவோர் உருவமுண்டாக வேணும். நல்ல குடிப்பிறப்பே - மா நாய்கன்செட் டிமகளே! நல்லவள் நீயுமானால் - உன் நாயகன் எண்ணம்போல் நடந்திட வேணுமடி. - கோநா இவ்வைந்தும் இசைப் பாடல்கள். இசைப்பாடலின் இலக்கணத்தை யாப்பதிகாரத்திற் காண்க. பல்லவி, பல்லவிஎடுப்பு, கண்ணிகள் என்பன இசைப்பாடலின் உறுப்புக்களாகும். இவ்வுறுப்புக்களின் பெயர் விளக்கத்தை யாப்பதிகாரத்திற் காண்க. கண்ணி, ஒன்றெனில் கண்ணி எனவும், ஒன்றுக்கு மேற்படின் கண்ணிகள் எனவும் பெயர் பெறும். இசைப் பாடல்களில், மோனை எதுகையோடு இயைபுத் தொடையும் அமைதல் சிறப்பு. முதற் பாடலின் பல்லவியின் முதலடியே மடக்கி அடுத்த அடியாக வந்துள்ளது. அதனால், இயல்பாக அடியெதுகை அமைந்துள்ளது. பல்லவி எடுப்பின் முதலடி, பல்லவியின் எதுகை யுடையதாக வரவேண்டும். இப்பாடலில் அவ்வாறே (இந்த - பந்த) வந்துள்ளமை காண்க. பல்லவி, பல்லவி எடுப்பு, கண்ணிகள் மூன்றினும் இயைபுத்தொடை அமைந்துள்ளமையை நோக்குக. இது, வரவேண்டியவாறு தொடையமைதி வந்துள்ளபாடலாகும். இரண்டாம் பாடலின் பல்லவி எடுப்பின் முதலடி, பல்லவியின் எதுகை யுடையதாக வந்துள்ளதோடு, அதன் அடியிரண்டும் எதுகைத் தொடையுடையதாக அமைந்துள்ளன. இதன் கண்ணிகளும் இயைபுத் தொடை பெற்றுள்ளமை அறிக. பல்லவி எடுப்பினும் எதுகை அமையும் என்பதற்கே இப்பாடல் காட்டப்பட்டது. பல்லவி இரண்டடியானால் அடிமோனை, அல்லது அடியெதுகை அமைதல், பல்லவி எடுப்பின் முதலடி பல்லவியின் எதுகையுடையதாக வருதல், அப்பல்லவி எடுப்பு - மோனை, அல்லது எதுகை அமைய வருதல், கண்ணிகளில் மோனை, எதுகையோடு இயைபுத்தொடையும் அமைதல் - ஆகிய இவ்வாறு வருதலே இசைப் பாடலின் பொதுவிலக்கணமாகும். இரண்டாவது பாடலின் முதற்கண்ணி, பல்லவி, பல்லவி எடுப்பின் எதுகை யுடையதாக வந்திருத்தலை அறிக, மூன்றாம் பாடல், அவ்விலக்கணப்படி அமைந்துள்ளதோடு, பல்லவி எடுப்பு, கண்ணி இரண்டிலும் முடுகு வந்துள்ளது. கண்ணியின் ஒவ்வோர் அரை அடியிலும் நாலுசீர் முடுகு இயலாகவும், ஈற்றில் தாளவகை முடுகும் வந்துள்ளன. இதுபற்றியே இது காட்டப்பட்டது. 4, 5 பாடல்கள், பல்லவி, பல்லவி எடுப்புக்களின்றி, கண்ணிகள் மட்டும் வந்துள்ளன. இவ்வாறும் இசைப்பாடல் வரும். 4 ஆம் பாடலின் கண்ணிகள் அடிமோனைத் தொடையாகவும், 5 ஆம் பாடலின் கண்ணிகள் அடியெதுகைத் தொடையாகவும் அமைந்துள்ளன. 5. ஆம் பாடலின் கண்ணிகளின் இரண்டாவதடி, முதலடியின் முதற்சீரின் மடக்காக வந்துள்ளது. இவ்விசைப்பாடல்களின் அமைப்பு முறையை நன்கு அறிந்து கொள்க. இசைப்பாடல் நூல்கள் 1. நந்தன் சரித்திரக் கீர்த்தனை 2. முத்துத்தாண்டவர் கீர்த்தனை 3. சர்வசமய சமரசக் கீர்த்தனை 4. இராமலிங்கர் கீர்த்தனை 5. இராமாயணக் கீர்த்தனை 6. பக்திரசக் கீர்த்தனை 7. இன்பரசக் கீர்த்தனை 8. பாஸ்கரதாசன் கீர்த்தனை 9. செந்தமிழ்த் திலகம் 10. முத்துச்சாமிக் கவிராயர் கீர்த்தனை 11. மீனாட்சி கீர்த்தனை 12. நடராசக் கீர்த்தனை 13. சேசாசல நாயுடு கீர்த்தனை 14. பாலதண்டபாணி பசனாமிர்தம் 15. மாம்பழக்கவிராயர் கீர்த்தனை 16. பரமன் திருமால் மருகன் பக்திரசக் கீர்த்தனைகள் 17. கானரசக் கீர்த்தனம் 18. மதுரகானம் 19. இராமநாம பசனக் கீர்த்தனை 20. சமரச கீதம் 21. அம்மை நாதன் கீர்த்தனை 22. பழனியாண்டவர் கீர்த்தனை 23. தாசரதி கீர்த்தனை 24. இசையமுதம் 25. நாமக்கல் கவிஞர் கீர்த்தனம் 26. இலக்குமணப் பிள்ளை இசைப்பாடல் 27. குறவஞ்சி நூல்கள் 28. பள்ளு நூல்கள் 29. இன்னிசையின்பம் 30. பதங்கள் முதலிய இசைப்பாடல் நூல்கள் தமிழில் உள்ளன. பயிற்சி 1. இசைப்பாடலின் இலக்கணம் என்ன? 2. பல்லவியும் பல்லவி எடுப்பும் எவ்வாறு அமைய வேண்டும்? 3. கண்ணி என்பதன் சிறப்பென்ன? 4. இசைப்பாடலைச் சிறப்பிக்கும் தொடை எது? 5. முதல் மூன்று பாடல்களின் பல்லவி எடுப்பின் வேறுபா டென்ன? 6. தமிழ் இசைப்பாடல் நூல்களைச் சேர்க்க முயலுக. 26. வண்ணப்பாடல் 1. சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச் சுத்தப் பட்டிட் - டமுறாதே தொக்கப் பொக்கச் சிற்கச் சிக்குட் சொற்குற் றத்துத் - துறைநாடி. - அருண 2. சங்கந் தங்குஞ் செஞ்சொல் மிஞ்சும் சந்தங் கொந்துந் - தமிழாலே தந்தந் தம்பண் பன்றின் றொன்றுந் தண்டொண் டுண்டிங் - கமைவோமே. - புகு 3. முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர - வெனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரு முப்பத்துமூ வர்க்கத் தமரரு - மடிபேண. - அருண 4. நெஞ்சம்புரி வஞ்சம் களவுபொ யெஞ்சும்பிற வுந்தம் செயலுற நின்றகவை யொன்றுந் தவறுதல் - இலவாக நிந்தம்புரி யுந்தந் தொழிலினு வந்தஞ்சுந டுங்குங் கொடுமையை நெம்பும்பொரு ளன்பென் றிதுவரை - யறியாது. - புகு 5. நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி நடித்து விதத்தி - லதிமோகம் நடத்து சமத்தி முகத்தை மினுக்கி நலத்தி லணைத்து - மொழியாலும். -அருண 6. பசைந்து மிசைந்து கதந்து மிதந்து படர்ந்து தொடர்ந்து - நெடுவானம் பனிந்து கனிந்து கிளர்ந்து விளர்ந்து பரிந்து சொரிந்து - நிலனோம்பும். - புகு 7. துப்பா ரப்பா டற்றீ மெய்க்கால் சொற்பா வெளிமுக் - குணமோகம் துற்றா யப்பீ றற்றோ லிட்டே சுற்றா மதனப் - பிணிதோயும். - அருண 8. செம்பா கம்பா டுந்தா லுந்தா சிங்கா தமையும் - திறலாலே செந்தே னும்பா லுந்தோ லும்பா செஞ்சே உலகம் - செயுவோமே. - புகு 9. கரிக்கொம்பந் தனித்தங்கங் குடத்தின்பந் தனத்தின்கண் கறுப்புந்தன் சிவப்பும்செம் - பொறிதோள்சேர் கணைக்கும்பண் டுழைக்கும்பங் களிக்கும்பண் பொழிக்குங்கண் கழுத்துஞ்சங் கொளிக்கும்பொன் குழையாட. - அருண 10. பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத் துன்பு றுத்திட் டின்று நிற்கப் புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக் - கறியாமே பொங்கி முக்கிச் சங்கை பற்றிச் சிங்கி யொத்தச் சங்க டத்துப் புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட் - கொடியார்மேல். - அருண 11. தொய்யில் செய்யில் நொய்யர் கய்யர் தொய்யு மய்ய - இடையாலும் துள்ளி வள்ளை தள்ளி யுள்ளல் சொல்லு கள்ள - விழியாலும். - அருண 12. வெல்லிக்கு வீக்கு முல்லைக்கு வீக்கு வில்லிக்க தாக்க - ருதும்வேளால் வில்லற்ற தாக்கொள் சொல்லிற்று காப்பொ யில்லத்து றாக்க - வலைமேவு. - அருண 13. அல்லசல டைந்த வில்லடல நங்கன் அல்லிமல ரம்பு - தனையேவ அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற லய்யமுது கிண்ட - அணையூடே. - அருண 14. கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மய்வர் கட்கு மன்னு மில்ல - மிதுபேணி கற்ற விஞ்சை சொல்லி உற்ற வெண்மை உள்ளு கக்க வெண்ணி முல்லை - நகைமாதர். - அருண 15. முருகுசெறி குழலவிழ முகைபுளக மெழநிலவு முறுவல்தர விரகமெழ - அநுராகம் முதிரவச மறவிதரி யெழுகைவளை கலகலென முகநிலவு குறுவெயர்வு - துளிவீச. - அருண 16. கூசா தேபா ரேசா தேமால் கூறா நூல்கற் - றுளம்வேறு கோடா தேவேல் பாடா தேமால் கூர்கூ தாளத் - தொடைதோளில். - அருண 17. நாமேவு குயிலாலு மாமார னயிலாலு நாடோறு மதிகாயும் - வெயிலாலும் நாமாதர் வசையாலும் வேயூறு மிசையாலும் நாடாசை தருமோக - வலையூடே. - அருண 18. மருவே செறித்த குழலார் மயக்கி மதனா கமத்தின் - விரகாலே மயலே எழுப்பி யிதழே யருத்த மலைபோ லிணைக்கு - ளுறவாகி. - அருண 19. விதிபோ லுமுந்த விழியா லுமிந்து நுதலா லுமொன்றி - இளைஞோர்தம் விரிவா னசிந்தை யுருவா கிநொந்து விறல்வே றுசிந்தை - வினையாலே. - அருண 20. பொருவன கள்ள இருகயல் வள்ளை புரிகுழை தள்ளி - விளையாடும் புளகித வல்லி யிளகித வல்லி புரியிள முல்லை - நகைமீதே. - அருண 21. கறுக்கு மஞ்சன விழியிணை அயில்கொடு நெருக்கி நெஞ்சற வெறிதரு பொழுதொரு கனிக்கு ளின்சுவை யமுதுகு மொருசிறு - நகையாலே களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ மனைக்கெ ழுந்திரு மெனமன முருகவொர் கவர்ச்சி கொண்டிட மனைதனி லழகொடு கொடுபோகி -அருண 22. அந்தோமன மேநம தாக்கையை நம்பாதெயி தாகிய சூத்திர மம்போருக னாடிய பூட்டிது - வினிமேல்நாம் அஞ்சாதமை யாகிரி யாக்கையை பஞ்சாடிய வேலவ னார்க்கிய லங்காகுவம் வாவினி தாக்கையை - ஒழியாமல். - அருண 23. ஒய்யா ரச்சிலை யாமென வாசனை மெய்யா ரப்பணி பூடண மாலைகள் உய்யா நற்கலை யோகொடு மாமத - விதமாகி ஒவ்வா ரிப்படி யோரென வேயிரு கய்யா ரக்கணை மோதிர மேய்பல வுள்ளார் செப்பிட ஏமுற நாளிலு - முடல்பேணி. - அருண 24. நேசா சாரா டம்பர மட்டைகள் பேசா தேயே சுங்கள மட்டைகள் நீசா ளோடே யும்பழ கிக்கவர் - பொருளாலே நீயே நானே என்றொரு சத்தியம் வாய்கூ சாதோ துங்கப டத்திகள் நேரா லேதா னின்று பிலுக்கிகள் - எவர்மேலும். - அருண 25. பஃறிணை வெஃக மாந்தர் அஃறிணை தொஃகு மேம்பல் பஃறுளி மிஃக வாங்கு - நாடாண்ட. - புகு 26. பாஅ வேந்தர் நாஅ வாய்ந்த பாஅ வெய்ந்து - முறையாக பாஅ கார்ந்த மூஉ வேந்தர் பாஅ ராண்ட - பரிசேபோல். -புகு இவை இருபத்தாறும் வண்ணப் பாடல்கள். வண்ணத்தின் இலக்கணத்தை யாப்பதிகாரத்திற் காண்க. ஓரடியின் ஒருசீரின் ஓரசை என்ன எழுத்தாக வருகிறதோ, அவ்வாறே அடுத்த அடியின் அதே சீரின் அவ்வசை அவ்வெழுத் தாகவே வருவது - வண்ணம் எனப்படும். ஓரடியின் ஒரு சீர் போலவே, அடுத்த அடியின் அச்சீர் வருதலாம். வண்ணம் - சந்தம். அதாவது - ஓசை வேறுபாட் டினிமை. அதாவது, ஓரடியின் முதற் சீரின் முதலசை - குறில், நெடில், வலி, மெலி, இடை, ஆய்தம் என்னும் இவ்வெழுத்துக்களில் ஒன்றாகவரின், அடுத்த அடியின் முதற்சீரின் முதலசையும் அவ்வெழுத்தாகவே வருதல். இவ்வாறே அவ்வடிகளின் மற்றச் சீர்களின் அசைகளும் வருதல். அசைகளின் மாற்றமே வண்ண வேறுபாடாகும். காட்டு மயலே எழுப்பி இதழே யருத்த. முதலடியின் முதற்சீரின் முதலசை - மய - குறிலிணை. இரண்டாவதசை - லே - நெடில். அடுத்த அடியின் முதற்சீரின் முதலசை - யித - குறிலிணை. இரண்டாவதசை - ழே - நெடில். இரண்டாஞ்சீர்களையும் இவ்வாறு காண்க. வலி மெலி இடை என்பது அவ்வவ் வொற்றெழுத்தையே குறிக்கும். வல்லின உயிர்மெய், மெல்லின உயிர்மெய், இடையின உயிர்மெய் மூன்றும், குறிலாக இருந்தால் - குறில் எனவும், நெடிலாக இருந்தால் - நெடில் எனவும்படும். அதாவது, குறில் நெடில் என்பது, தனியுயிர்க்குறில் நெடில், உயிர்மெய்க் குறில் நெடில் இரண்டையும் குறிக்கும். இங்கு அடி என்றது - அரையடியில் மடக்கிப் பதிப்பித்திருக்கும் மூன்றடிகளில் ஒன்றைக் குறிக்கும். அதாவது, அரையடியின் மூன்றிலொன்றாக மடக்கிப் பதிப்பித்திருக்கும் அடி ஒவ்வொன்றும் இங்கு அடி என வழங்கப்படும். அம்மூன்றடி கொண்ட அரையடி இரண்டு, ஒரு மோனைத் தொடையால் இணைந்து வருவது பாட்டின் ஓரடியாகும். அவ்வடி நான்கு கொண்டது ஒரு பாட்டாகும். சிறுபான்மை, இன்பமுந் துன்பமுஞ் சந்ததங் கொண்டுசென் றிங்குமங் குஞ்சுழன் - றிடுமாயத் துன்பவெண் கும்பியங் கந்தவிர்ந் துன்பெருந் தொண்டனென் றுய்ந்துளங் - களியேனோ. - அருண இவ்வாறு அரையடிகள் நான்கு எதுகைத் தொடை பெற்று ஒரு பாட்டாக வருதலும் உண்டு. ஒவ்வோர் அரையடியின் முடிவிலும் தனிச்சொல் வரும். எனவே, ஓரடியில் இரண்டு தனிச்சொல் வரும். தனிச்சொல், அடியின் புறம்பானது, எனவே, இதில் அடியின் வண்ணச் சீர்வரையறை கொள்ளப்படுவ தில்லை. எனினும், தனிச்சீர்கள் எட்டும் ஒரேவகையாக ஒத்து வருதல் வேண்டும். அரையடியின் மூன்றிலொன்றான அவ்வடி மூன்றில் முதலடியும் மூன்றாமடியும் ஒரு மோனையுடையதாக வர வேண்டும். இடையிலுள்ள இரண்டாவதடி, முன் பின் அடிகளின் மோனை பெறாது தனித்து வரும். இதுவே வண்ணத்தின் பொது விலக்கணம். காட்டாக இரண்டாம் பாடலின் முதலரையடியின் மூன்றடியையுங் கவனியுங்கள். முதலடியின் முதற்சீர் - ‘சங்க’ என்பது. மூன்றாமடியின் முதற்சீர் - ‘சந்த’ என்பது இவ்விரண்டடியும் ஒரே மோனையுடையதாக வந்திருத்தலை அறிக. இரண்டாமடியின் முதற்சீர் - ‘செஞ்சொன்’ என, வேறாக வந்திருத்தல் காண்க. ‘தமிழாலே’ என்பது - தனிச்சொல். ‘தந்தந்’ என்பது, அடுத்த அரையடி. இவ்விரண்டரையடிகளும் சேர்ந்தது - ஓரடி. அவ்விரண்டரையடியும் ‘ச - த’ என, ஒரு மோனையாக வந்திருத்தலை அறிக. ஒவ்வொரு பாடலின் முதலடி மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. முழுப்பாடலையும் நூலிற் படித்தறிக. 2, 4, 6, 8, 25, 26 எண்ணுள்ள பாடல்கள் தவிர, மற்ற 20 பாடல்களும் அருணகிரி நாதர் திருப்புகழ்ப் பாடல்களாகும். அருணகிரி நாதர் திருப்புகழ்ப் பாடல்களெல்லாம் வண்ணப் பாடல்களாகும். தொல்காப்பியத்தில், அவைதாம், பாஅ வண்ணம் தாஅ வண்ணம் வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம் இயைபு வண்ணம் அளபெடை வண்ணம் நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம் சித்திர வண்ணம் நலிபு வண்ணம் அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம் ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம் எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம் தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம் உருட்டு வண்ணம் முடுகு வண்ணம். - செய் - 214 என, இருபது வகை வண்ணங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள், தனித்துப் பாடலில் பயின்று வரும் சிறப்புடைய வண்ணங்கள் அமைந்துள்ள பாடல்களே இங்கு எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. விளக்கம் முதற் பாடல் : தனிச்சொல்லைத் தவிர, இது முழுவதும் வல்லினக் குற்றொற்றுக் களாலான பாடல், வல்லொற்று பயின்று வருவது - வல்லிசை வண்ணம் எனப்படும். எனவே, இது வல்லிசை வண்ணப் பாடலாகும். 2. இதில் தனிச்சீரைத் தவிர, அவ்வாறே மெல்லினக் குற்றொற்றுக்கள் வந்துள்ளன. எனவே, இது மெல்லிசைவண்ணம் ஆகும். 3. இப்பாடலும் அவ்வாறே வல்லினக் குற்றொற்றுக்களா லானதே. ஆனால், இதன் அடியின் முதற்சீரின் ஈற்றில் குறிலிணையும் (தரு), ஈற்றுச்சீர் நான்கு குறில்களாகவும் (திருநகை) வந்துள்ளன. திருநகை - கருவிளம். இது குறித்தே இப்பாடல் எடுத்துக்காட்டப் பட்டது. இதுவும் வல்லிசை வண்ணப்பாடலே. குறிப்பு : ‘திருநகை’ என்பதன் ஈற்றிலுள்ள ஐகாரம் (கை) ஐகாரக்குறுக்கம். வண்ணத்தில் ஐகாரம் குறிலாகவே கொள்ளப்படும். 4. இது, அவ்வாறே மெல்லினக் குற்றொற்றாலான அது போன்ற அமைப்புடைய பாடலே. இதுவும் மெல்லிசை வண்ணப்பாடலே. 5. இது, வல்லினக் குறிலிணையொற்றும், குறிலும் உள்ள சீர்களாலான பாடல். இதுவும் வல்லிசைவண்ணமே. இவ்வகை வேறுபாடு குறித்தே இது எடுத்துக்காட்டப் பட்டது. 6. இது, ஐந்தாம் பாடல் போன்றதே; மெல்லொற்றுப் பயின்றுள்ளது. இதுவும் மெல்லிசை வண்ணமே. 7. இதன் ஒவ்வொரு சீரும் வல்லினக் குற்றொற்றும் தனி நெடிலும் உடையது. இதுவும் வல்லிசை வண்ணம். ‘மெய்க்கால்’ ய் - ஆக. ல் - எண்ணப்படாது. ஈற்றுச்சீர் - வேறு; புளிமா. 8. இதுவும் மேலது போன்றதே; மெல்லொற்றாலானது. மெல்லிசை வண்ணம். குறிப்பு: இவ்வெட்டுப் பாடல்களில், 1, 3, 5, 7 - நான்கும் - வல்லிசை வண்ணம். 2, 4, 6, 8 - நான்கும் - மெல்லிசை வண்ணம். அசை, சீர், குறில், நெடில் - இவற்றின் மாற்றங் குறித்து இங்கு காட்டப்பட்டன. 9. இதன் சீர்கள், முதலசை - வல்லினக் குறிலிணை யொற்றாகவும் (கரிக்), பின்னிரண்டசை - மெல்லினக் குற்றொற்றுக்களாகவும் வந்துள்ளன. எனவே, இது, வல்லிசை வண்ணமும் மெல்லிசை வண்ணம் கலந்து வந்த கலப்பு வண்ணப் பாடலாகும். இது பற்றியே இது காட்டப்பட்டது. 10. இது, மெல்லினக் குற்றொற்றும் குறிலுமுடைய சீரும், இரு வல்லினக் குற்றொற்றுக்களாலாகிய சீரும் தொடர்ந்து வந்த பாடலாகும். எனவே, இதுவும் மெல்லிசை வல்லிசைக் கலப்பு வண்ணப் பாடலேயாகும். இவ்வேறுபாடு குறித்தே இது காட்டப்பட்டது. 11. இது, முழுதும் இடையினக் குற்றொற்றும் குறிலு முடைய சீர்களாலான பாடல், சீரின் ஈற்றிலுள்ள ‘ல், ர்’ - மதிப்புப் பெறா. இடையொற்றுப் பயின்று வருவது - இயைபு வண்ணம் எனப்படும். எனவே, இது இயைபு வண்ணப் பாடல். 12. இதன் முதற்சீர் - இடையினக் குற்றொற்றும் வல்லினக் குற்றொற்றும் குறிலும் உடையது. இரண்டாஞ் சீர் வல்லின நெட்டொற்றும் குறிலு முடையது. எனவே, இது இயைபு வண்ணமும் வல்லிசை வண்ணமும் கலந்து வந்த இயைபு வல்லிசைக் கலப்பு வண்ணப் பாடலாகும். 13. இதன் முதற்சீர் - இடையினக் குற்றொற்றும் மூன்று குறிலும் உடையது. இரண்டாஞ்சீர் - மெல்லினக் குற்றொற்றும் குறிலுமுடையது. ‘டைந்’ - டை - குறிலோசை. எனவே, இது, இயைபு வண்ணமும் மெல்லிசை வண்ணமும் கலந்து வந்த, இயைபு மெல்லிசைக் கலப்பு வண்ணப்பாடலாகும். 14. இது முறையே, வல்லினக் குற்றொற்றுங் குறிலும், மெல்லினக் குற்றொற்றுங் குறிலும், இடையினக் குற்றொற்றுங் குறிலும் உடைய சீர்களையுடைய பாடல். எனவே, இது, வல்லிசை மெல்லிசை இயைபுக் கலப்பு வண்ணப் பாடல். 15. இதன் எல்லாச் சீர்களும், தனிக்குறிலா லானவை. முருகுசெறி - கருவிளங்காய். இவ்வாறு தனிக்குறில் பயின்று வருவது - குறுஞ்சீர் வண்ணம் எனப்படும். எனவே, இது, குறுஞ்சீர் வண்ணப் பாடலாகும். 16. இதன் எல்லாச்சீர்களும் இரு நெட்டெழுத்தாலானவை. இவ்வாறு தனிநெடில் பயின்று வருவது - நெடுஞ்சீர் வண்ணம் எனப்படும். எனவே, இது நெடுஞ்சீர் வண்ணப் பாடலாகும். 17. இதன் முதற்சீர் - இரு நெடிலும் ஒரு குறிலும் உடையது. இரண்டாஞ்சீர் - இரு குறிலும் ஒரு நெடிலும் ஒரு குறிலும் உடையது. நாமேவு - தேமாங்காய். குயிலாலு - புளிமாங்காய். இவ்வாறு நெடிலுங்குறிலும் அல்லது, குறிலும் நெடிலும் கலந்து வருவது - சித்திர வண்ணம் எனப்படும். 18. இதன் முதற்சீர் குறிலிணையும் நெடிலும் உடையது. இரண்டாஞ்சீர் - வல்லினக் குறிலிணை யொற்றும் குறிலும் உடையது. எனவே, இது, சித்திர வண்ணமும் வல்லிசை வண்ணமும் கலந்து வந்த, சித்திர வல்லிசைக் கலப்பு வண்ணப் பாடலாகும். 19. இதன் முதற் சீர் - மேலதன் முதற் சீர் போன்றதே. இரண்டாஞ் சீரில் - வல்லொற்றுக்குப் பதில் மெல்லொற்று வந்துள்ளது. எனவே, இது, சித்திர மெல்லிசைக் கலப்பு வண்ணப் பாடலாகும். 20. இதன் முதற்சீர் - நான்கு குறிலிணைந்தானது. இரண்டாஞ் சீர் - இடையினக் குற்றொற்றும் குறிலும் உடையது. எனவே, இது, குறுஞ்சீர் வண்ணமும் இயைபு வண்ணமும் கலந்து வந்த, குறுஞ்சீர் இயi வண்ணப் பாடலாகும். 21. இதன் முதற்சீர் - வல்லினக் குறிலிணை யொற்றும் குறிலும் உடையது. இரண்டாஞ் சீர் - மெல்லினக் குற்றொற்றும் குறிலிணையும் உடையது. பின்னிரு சீர்களும் இரு குறிலிணைகளால் (கருவிளம்) ஆனவை. எனவே, இது, வல்லிசை மெல்லிசை குறுஞ்சீர்க் கலப்பு வண்ணம். 22. இதன் முதற்சீர் - மெல்லினக் குற்றொற்றும் நெடிலும் குறிலிணையும் உடையது. இரண்டாஞ்சீர் - நெடிலும் குறிலிணையும் உடையது. மூன்றாஞ்சீர் - வல்லின நெட்டொற்றும் குறிலிணையும் உடையது. எனவே, இது, மெல்லிசை சித்திர வல்லிசைக் கலப்பு வண்ணம். 23. இதன் முதற்சீர் - இடையினக் குற்றொற்றும் நெடிலும் உடையது. இரண்டாஞ்சீர் - வல்லினக்குற்றொற்றும் குறிலிணையு முடையது. பின்னிருசீர்கள் - நெடிலும் குறிலிணையும் உடையவை. எனவே, இது, இயைபு வல்லிசை சித்திரக் கலப்பு வண்ணம். 24. இதன் முதற்சீர்கள் இரண்டும் - இருநெடிலாலானவை. மூன்றாஞ்சீர் - மெல்லினக் குற்றொற்றும் குறிலிணையும் உடையவை, ஈற்றுச்சீர் - வல்லினக் குற்றொற்றும் குறிலிணையும் உடையவை. குற்றிணை யொற்றெனவுங் கொள்ளலாம். எனவே, இது, நெடுஞ்சீர் மெல்லிசை வல்லிசைக் கலப்பு வண்ணம். 25. இதன் முதற்சீர் - ஆயுதக் குற்றொற்றும் குறிலிணையும் உடையது. இரண்டாஞ்சீர் - ஆயுதக் குற்றொற்றும் குறிலும் உடையது. ஈற்றுச்சீர் - மெல்லின நெட்டொற்றும் குறிலும் உடையது. ஆய்தம் பயின்று வருவது - நலிபு வண்ணம் எனப்படும். ஈற்றுச்சீர் மெல்லிசை வண்ணம். எனவே, இது, நலிபு மெல்லிசைக் கலப்பு வண்ணப் பாடலாகும். ஓரடி முழுதும் ஆய்தம் பயின்ற சீர்வருத லருமை. பஃ - குற்றொற்று. பஃறிணை - கூவிளம். 26. இதன் முதற்சீர் - நெட்டளபெடை. இரண்டாஞ்சீர் மெல்லினக் குற்றொற்றும் குறிலும் உடையது. அளபெடை பயின்று வருவது - அளபெடை வண்ணம் எனப்படும். ஈற்றுச்சீர் -மெல்லிசை வண்ணம். எனவே, இது, அளபெடை மெல்லிசைக் கலப்பு வண்ணப் பாடலாகும். பாஅ - தேமா. ஓரடி முழுதும் அளபெடை பயின்ற சீர்வருதலருமை. முடுகு வண்ணம் 15 ஆம் பாடல் தனிக் குற்றெழுத்துக்களால் ஆனது. அக்குற்றெழுத்துக்கள் - (அவ்வடி) முடுகியலாக வந்துள்ளன. இவ்வாறு குறில் முடுகி வருவது - முடுகுவண்ணம் எனப்படும். நாற்சீரின் மிக்க அடியே முடுகும். இப்பாடலின் அரையடி - அறுசீரடி. இப்பாடலில் குறுஞ்சீர் வண்ணத்தினும் முடுகு வண்ணமே சிறப்புறும். உருட்டு வண்ணம் நாற்சீரடியும், நாற்சீரடியிற் குறைந்தும் முடுகி வருவது - உருட்டு வண்ணம் எனப்படும். 21ஆம் பாடலின் பின்னிருசீர் முடுகி வந்திருத்தல் - உருட்டு வண்ணம் ஆகும். இங்கு, குறுஞ்சீர் வண்ணம் உருட்டுவண்ணம் இரண்டும் சிறப்புறும். தனிக்குறில்களாலானது. குறுஞ்சீர் வண்ணம் குறிலாலான சீர்கள் முடுகுவது - உருட்டு வண்ணம் எனக் கொள்ளப்படும். 15 ஆம் பாடலுக்கும் இஃதொக்கும். அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு. - திருப் - 862 என, நாற்சீரடியில் உருட்டு வண்ணம் வந்துள்ளது. அகைப்பு வண்ணம் அறுத்திசைப்பு - அகைப்பு வண்ணம் எனப்படும். 18, 19 பாடல்கள் அறுத்திசைப்பதனால் - அகைப்புவண்ணப் பாடல் களாகும். எண்ணு வண்ணம் எண்ணுப் பயின்று வருவது - எண்ணு வண்ணம் எனப்படும். ‘வஞ்சம் களவு பொய்’ 4 - எனவும், ‘குயில் அயில் வெயில்’ 17-எனவும், 4, 17 பாடல்களில் - எண்ணுப்பயில்வதால், அவை எண்ணு வண்ணப் பாடல்களாகும். வண்ணங்கள் வந்துள்ள பாடல்கள் 1. தனி வண்ணம் பாடல் 1. வல்லிசை வண்ணம் 1, 3, 5, 7 2. மெல்லிசை வண்ணம் 2, 4, 6, 8 3. இயைபு வண்ணம் 11 4. குறுஞ்சீர் வண்ணம் 15 5. நெடுஞ்சீர் வண்ணம் 16 6. சித்திர வண்ணம் 17 7. நலிபு வண்ணம் 25 8. அளபெடை வண்ணம் 26 9. முடுகு வண்ணம் 15 10. உருட்டு வண்ணம் 21 11. அகைப்பு வண்ணம் 18, 19 12. எண்ணு வண்ணம் 4, 17 2. கலப்பு வண்ணம் 1. வல்லிசை மெல்லிசைக் கலப்பு வண்ணம் 9 2. மெல்லிசை வல்லிசைக் கலப்பு வண்ணம் 10 3. இயைபு வல்லிசைக் கலப்பு வண்ணம் 12 4. இயைபு மெல்லிசைக் கலப்பு வண்ணம் 13 5. வல்லிசை மெல்லிசை இயைபுக் கலப்பு வண்ணம் 14 6. சித்திர வல்லிசை அகைப்புக் கலப்பு வண்ணம் 18 7. சித்திர மெல்லிசை அகைப்புக் கலப்பு வண்ணம் 19 8. குறுஞ்சீர் இயைபுக் கலப்பு வண்ணம் 20 9. வல்லிசை மெல்லிசை குறுஞ்சீர் உருட்டுக் கலப்பு வண்ணம் 21 10. மெல்லிசைச் சித்திர வல்லிசைக் கலப்பு வண்ணம் 22 11. இயைபு வல்லிசை சித்திரக் கலப்பு வண்ணம் 24 12. நெடுஞ்சீர் மெல்லிசை வல்லிசைக் கலப்பு வண்ணம் 25 13. நலிபு மெல்லிசைக் கலப்பு வண்ணம் 14. அளபெடை மெல்லிசைக் கலப்பு வண்ணம் 26 15. குறுஞ்சீர் முடுகுக் கலப்பு வண்ணம் 15 16. வல்லிசை எண்ணுக் கலப்பு வண்ணம் 4 17. சித்திர எண்ணுக் கலப்பு வண்ணம் 17 மற்ற எட்டு வண்ணங்களையும் எடுத்துக் காட்டுடன் தொல் காப்பியத்தில் காண்க. தொல்காப்பியர் காலத்திலேயே இத்தகைய வண்ணங்கள் பாடலிற் பயின்று வந்தன என்றால், பழந்தமிழ்ச் செய்யுள் மரபின் சிறப்பினை என்னென்பது! அவிநயனார் நூறு வண்ணம் கூறுகிறார். ஒருசீரின் அசைமாற்றத்தாலும், ஓரடியின் சீர்மாற்றத் தாலும் வண்ண வேறுபாடுகள் உண்டாகின்றன. 12ஆம் பாடலின் இரண்டாவது அரையடியினும், 19ஆம் பாடலின் முதல் அரையடியினும் மோனை அமைய வில்லை. அதாவது முதலடியும் மூன்றாமடியும் ஒரு மோனைத் தொடை பட வரவில்லை. மற்ற பாடல்களிலெல்லாம் உள்ளபடியே மோனை அமைந்துள்ளது. பார்த்தறிக. பயிற்சி 1. வண்ணத்தின் பொதுவிலக்கணம் என்ன? 2. வண்ணத்தில் அடி என்பது எவ்வடியைக் குறிக்கும்? 3. பாடலின் அடி என்பது யாது? 4. அரை அடி என்பது எது? 5. ஒரு பாட்டில் எத்தனை தனிச்சொல் வரும்? 6. தனிச்சொல்லின் இலக்கணம் என்ன? 7. 4 தனிச்சொல் வரும் பாடலின் இலக்கணம் என்ன? 8. வண்ணங்களின் இலக்கணம் எந்நூலிற் கூறப்படுகிறது? அதனால் நாம் அறிவதென்ன? 9. தனிவண்ணம், கலப்புவண்ணம் - வேறுபாடென்ன? 10. சித்திரவண்ணம் இயைபுவண்ணம் - இலக்கணம் என்ன? 11. முடுகு வண்ணத்திற்கும், உருட்டு வண்ணத்திற்கும் உள்ள வேறுபாடென்ன? குறுஞ்சீர் வண்ணத்திற்கும் முடுகு, உருட்டு வண்ணப்பாடல்கட்கும் உள்ள தொடர்பென்ன? 12. தனி வண்ணப்பாடல் நூல் எது? 13. எங்கே, எடுத்துக் காட்டியுள்ள வண்ணங்களின் வகைக் கொன்று பாடிப்பாருங்கள்! 27. நாடகம் நாடகம் என்பது - முத்தமிழில் ஒன்றாகும். இயல், இசை, நாடகம் என்பன முத்தமிழ். பாட்டும் உரையும் - இயற்றமிழ். கேட்போர்க்கு இன்பந் தரும்படி அப்பாட்டுக்களை இசையுடன் பாடுவது - இசைத்தமிழ். ஒருவர் ஒரு பாட்டை இசையுடன் பாட, கேட்போர்க்கு அப்பாட்டின் பொருள் எளிதில் விளங்கும்படி, அப்பாட்டின் கருத்தை விளக்கும் மெய்ப்பாடு தோன்ற ஒருவர் ஆடுவது - நாடகத்தமிழ். அம்முத்தமிழிலும் இலக்கியமும் இலக்கணமும் செய்து, பாடியும் ஆடியும் அவற்றை முறையாக வளர்த்து வந்தனர் பழந்தமிழ்ப் புலவர்கள். நாளடைவில் நாடகம் கதை தழுவி வளரலானது. பாடியும் ஆடியும் வந்த நடிகர்கள், நாடக உறுப்பினர்போல் கோலம் பூண்டு, பாடியும் ஆடியும் நடித்தும் வந்தனர். விருத்தம், உரைநடை, இசைப்பாடல் என்பன, நாடகத்தில் நடிகர் பேச்சின் உறுப்புக்களாகும். நடிகர்கள் நாடக நிகழ்ச்சியை தத்தம் கூற்றை - முறையே விருத்தமாகவும்; உரைநடையாகவும், இசைப்பாடலாகவும் கூறுவர். இவ்வாறு நாடக நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து செல்லும். அரிச்சந்திர நாடகம், இராம நாடகம் முதலிய பழைய நாடக நூல்கள் இம்முறையிலேயே அமைந்துள்ளன. விருத்தம், பெரும்பாலும் ஆசிரிய விருத்தமாக, தோடி விருத்தம் பைரவி விருத்தம் என, இசைக் கேற்ற அடிகளை உடைய தாயிருக்கும். உரைநடை, விருத்தத்தின் பொழிப்புரையாக இருக்கும். இசைப் பாடல், விருத்தத்தின் பொருட்டொடர் புடையதாக இருக்கும். இசைப் பாடலின் பின்னும் உரைநடை வரும். அவ்விசைப் பாடல் இருவகைப்படும். ஒன்று - நடிகர் தம் கருத்தைக் கூறுவது. மற்றொன்று - இருநடிகர்கள் உரையாடுவது (தர்க்கம்) இதுவே, பேசும் படக்காட்சி தோன்று முன், புதுமை நாடகந் தோன்று முன், நடிகர்களே பாடி நடித்துவந்த நாடகத்தின் பொது விலக்கணமாகும். அன்று இசைவல்லுநர்களே நடிகர்களாக அமைந்து நாடகம் நடத்தி வந்தனர். அதனால், நாடகத் தமிழோடு இசைத் தமிழும் வளர்ந்து வந்தது. காட்டு 1. விருத்தம் அற்புதஞ்சேர் காசிநகர் தன்னை யாளும் அதிவீர தீரரெந்தன் மன்ன ரானால் விற்பனராம் ராமலிங்கர் தந்தை யானால் விளங்குமுயர் நல்லண்ணன் தமைய னானால் சொற்பிசகா அடியவளின் உயிரைக் காக்கும் சோதிமணி முடிச்சொக்கார் நீயே யானால் கற்பழியா நல்லதங்கை யானே யானால் கதவுதிறந் திடக்கருணை புரிகு வாயே. - நல்நா இது நல்லதங்காள் நாடக விருத்தம். அண்ணியால் தாழிடப் பட்ட கதவு திறக்கும்படி, நல்லதங்காள் கடவுளை வேண்டுவது. 2. உரைநடை ஏ சொக்கேசா! நான் காசிராசனின் உண்மையான மனைவி யானால், இராமலிங்கரின் உண்மையான மகளானால், நல்லண்ணனின் உண்மைத் தங்கையானால், நின் அடியவளாகிய நான் உண்மையாகவே கற்புடையவளானால் இக்கதவு திறக்கும்படி கருணை புரிந்தருள்வாய். 3. இசைப்பாடல் பல்லவி கதவு திறந்திடக் கருணை புரிவாய் - முக் கண்ணா - அந்தி வண்ணா - இக்கதவு பல்லவி எடுப்பு மதியொடு கொன்றை நதிமுடி மீதா! மதுரையாம் பதியில் வாழ்சொக்க நாதா! - கத கண்ணிகள் அண்ணனில் லாதபோ தரிவை இங்குவந்தேன் அண்ணியின் கொடுமையால் அந்தோ உளநொந்தேன் கண்ணுத லேயுந்தன் கழலிணை பணிந்தேன் கதிநீயன் றிஇல்லை காத்தருள் வாய்வந்தே - கத காலனை யுதைத்துமார்க் கண்டனைக் காத்தவா கதியென முடிமிசை மதியினை ஆர்த்தவா ஆலம துண்டம ரரிடர் தீர்த்தவா ஆதியந் தங்கடந்து அனாதியாய் மூத்தவா - கத. - நல்நா இவ்விசைப் பாடலின் தொடையமைப்பினை நோக்குங்கள். பல்லவி எடுப்பு பல்லவியின் எதுகையுடையதாக அமைந்துள்ளது. பல்லவி எடுப்பின் முதலடி - பொழிப்பெதுகை; இரண்டாவதடி - பொழிப்புமோனை. இரண்டாவது கண்ணியின் முதலடி - பொழிப் பெதுகை மற்ற அடிகள் - பொழிப்புமோனை பல்லவி எடுப்பினும் கண்ணிகளினும் இயைபுத்தொடை நன்கமைந்து இன்பஞ்செய் தலை அறிக. இத்தகைய சிறந்த பாடல்களால் அன்று அவைக் குழாத்தினை மகிழ்வித்து நாடக நிகழ்ச்சியில் ஈடுபடச் செய்தனர் இசைவல்ல நடிகர்கள். இன்றைய பேசும் படங்களில் இத்தகைய பாடல்கள் அமைதல் நல்லதாகும். 4. இசைப் பாடல் பல்லவி இந்த மட்டும் போதும் - ஐயா! இந்த மட்டும் போதும் - என்னைத் பல்லவி எடுப்பு தொந்தர வுசெய்தால் வந்திடு மோபணம் - இந்த கண்ணிகள் செந்தா மரைக்கையில் கிட்டியைக் கட்டுறீர் செக்கச் சிவக்க இறுக்கி யடிக்கிறீர் வெந்தழல் போலும் வெயிலிற் கிடத்துறீர் வெட்டெனப் பேசி விரட்டி யடிக்கிறீர் - இந்த நெற்றியில் கல்லை நிறுத்தி யடிக்கிறீர் நெறிதவ றும்படி நிர்ப்பந்தப் படுத்துறீர் சற்று மிரக்கமில் லாமற் சடுத்துறீர் தஞ்ச மென் றாலுந் தவறா யெடுக்கிறீர் - இந்த. - அரிநா 5. உரைநடை ‘ஐயா! சும்மா கொடுமைப்படுத்தாதீர்! காசிக்குப் போனதும் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன்.’ இவை, அரிச்சந்திர நாடகப் பாடலும் உரைநடையும்; தரகனாக வந்த நட்சத்திரேசனிடம் அரிச்சந்திரன் கூறுதல். இது, ஒரு நடிகன் மற்றொரு நடிகனிடம் தன் கருத்தைக் கூறுவதாக அமைந்த பாடல். இசைப்பாடலின் பின்னும் உரைநடை வந்துள்ளது. பல்லவி, பல்லவி எடுப்பு, கண்ணி மூன்றும் ஒரே எதுகை. தொடையமைப் பினைக் கண்டறிக. 6. உரையாடற் பாடல் பல்லவி 1. ஆரடி - உன் பேரூர் சொல்லடி - இந்த அர்த்தராத் திரியினில்த னித்துமே இங்குவந்தவள் - ஆர பல்லவி எடுப்பு பாரடி எனைத்திரும்பிக் கூறடி பதிலுத்தரம் பாவியெந்தன் காவலுக்குள் மேவிஒண்டி - யாவந்தவள் - ஆர பல்லவி 2. நீதி தவறிநீ பேசாதே - அடா! நீசனுக் குகந்தபடி பேசலாமோ எனையிப்படி - நீதி பல்லவி எடுப்பு மாதுயா னொருவருமே ஆதரவி லாதவொர்பெண் பேதையென்ப தையறிந்தும் வாதனை யடையும்படி. - நீதி - மயான இது, அரிச்சந்திரனும் சந்திரமதியும் உரையாடும் அரிச்சந்திர நாடகப் பாடல்; கண்ணிகளும் உண்டு. இருவர் பாடலும் வெவ்வேறிசை யுடையவை. தொடையமைப்பினை நோக்குக. 1. ‘ஆர - பேரூ’ - எதுகை. ‘அர்த்த’ மோனை எடுப்பு. ‘அர்த்த - னித்து’ - எதுகை. ர் - ஆசு. ‘பாரடி - கூறடி’ - ஒருவகை எதுகை அடுத்தது - மோனை. 2. பல்லவி எடுப்பு : நாலடியும் ஓரெதுகை. இசையோடு படித்துப்பாருங்கள். எவ்வளவு இனிமையான பாடல்! 1. மேற்படி கண்ணிகள் 1. இந்த வனந்தனில் மைந்த ரேழ்வரோடு நொந்தமு கின்றவ ளாரு? 2. எந்த னதுசீமை வடம துராபுரி இயம்புவேன் கேளுமென் ஐயா! 3. வடமது ரையென்று வழுத்துகின் றாயுன்றன் திடமுள்ள கணவன்பேர் என்ன? 4. ஒருகுடை யின்கீழ் அரசு புரிந்திடும் உத்தமன் காசிப னையா! 5. காசிப னென்று கழறு கிறாயிந்தக் கண்மணி ஏழ்வரும் யாரு? 6. கண்மணி யேழ்வரும் யாரென்று கேட்கிறீர் கன்னிகை யான்பெற்ற தங்கம். 7. தங்கமென் றுசொல்லித் தவிக்கின்றாய் மாதேயுன் தாய்தந்தை பேரென்ன சொல்வாய்? 8. தாய்பே ரிந்திராணி தந்தை ராமலிங்கம் தங்கையென் பேர்நல்ல தங்காள். - நல்நா இவை நல்லதங்கை நாடகத்தில், நல்லண்ணனும் நல்ல தங்கையும் உரையாடும் கண்ணிகளாகும். இக்கண்ணிகள் வண்ணப் பாடல் போல் அமைந்திருக்கின்றன. முதற் கண்ணி மூன்றடியும் ஓரெதுகை. 2, 4, 6 கண்ணிகளின் 1-3 அடி மோனை. கண்ணி 3. 1-3 எதுகை. 5-7-8 கண்ணிகள் - அடிமோனை. எவ்வளவு இனிய எளிய அழகான பாடல்கள்! இவ்வகை அமைப்புடையதே பழைய நாடகம். தமிழ் நாடக நூல்கள் 1. சிவசாமி அரிச்சந்திர நாடகம் 2. நீதிநெறி அரிச்சந்திர நாடகம் 3. மூக்குவேளார் அரிச்சந்திர நாடகம் 4. அரிச்சந்திர விலாசம் 5. இந்திர சபா 6. மயான காண்டம் 7. இராம நாடகம் 8. இலங்காதகனம் 9. சூது, துகிலுரிதல் 10. வாணாசுரநாடகம் 11. இரணிய நாடகம் 12. மார்க்கண்ட நாடகம் 13. கண்டிராச நாடகம் 14. வீரக்குமார நாடகம் 15. ஓட்டநாடகம் 16. மதுரைவீர நாடகம் 17. உருக்குமாங்கத நாடகம் 18. குசேல நாடகம் 19. நல்லதங்காள் நாடகம் 20. சிறுத்தொண்டர் நாடகம் 21. குறவஞ்சி நாடகம் 22. கோவல நாடகம் 23. அல்லி சரித்திரம் 24. பவளக்கொடி சரித்திரம் 25. சுந்தரி நாடகம் 26. தவசு நாடகம் 27. வள்ளிதிருமணம் 28. ஞானசவுந்தரி சரித்திரம் முதலியன தமிழிலுள்ள பழைய - கதை தழுவிய - நாடக நூல்களாகும். குறளடி வஞ்சிப்பா முதல், நாடகம் ஈறாகத் தமிழ்ச் செய்யுள் வகைகள் எல்லாம் ஒருவாறு எடுத்துக்காட்டி விளக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டப் பெறாதவை இருக்கின், அவையும் ஏற்றப்பெற்றி இவற்றுள் ஏதாவதொரு வகையுள் அடங்கும். அடங்காதவை இருக்கின் அமைக்க. பயிற்சி 1. நாடகத்தின் பொதுவிலக்கணம் என்ன? 2. விருத்தம், உரைநடை, இசைப்பாடல் - இவை நாடகத்தில் எவ்வாறு வரும்? 3. இசைப்பாடலின் இருவகை எவை? 4. இன்றைய படக்காட்சி எவ்வாறு அமையவேண்டும்? 5. எதனால் இசைத்தமிழ் வளரும்? 6. நாடகத்தமிழை வளர்க்க முயல்க. இதுகாறும் எடுத்துக்காட்டிய, இலக்கணம் கூறிய சிந்து வகைகள் 1. சமனிலைச் சிந்து 14. கும்மி 2. வியனிலைச் சிந்து 15. இலாவணி 3. நொண்டிச் சிந்து 16. தானானச்சந்தம் 4. வழிநடைச் சிந்து 17. தன்னனச்சந்தம் 5. ஆனந்தக் களிப்பு 18. ஏசல் 6. காவடிச்சிந்து 19. ஏற்றப்பாட்டு 7. வளையற் சிந்து 20. ஏலப்பாட்டு 8. தங்கச் சிந்து 21. உடுக்கைப்பாட்டு 9. சேவற் பாட்டு 22. ஒப்பாரி 10. புறப்பாட்டு 23. தாலாட்டு 11. குற்றத்தாராச்சிந்து 24. கண்ணி 12. மேல்வைப்புச்சிந்து 25. இசைப்பாடல் 13. தெம்பாங்கு 26. வண்ணப்பாடல் 27. நாடகம் 1. சமனிலைச் சிந்து 1. இருசீரிரட்டை 5. நாற்சீரிரட்டை 2. இருசீரிரட்டிரட்டை 6. ஐஞ்சீரிரட்டை 3. முச்சீரிரட்டை 7. அறுசீரிரட்டை 4. முச்சீரிரட்டிரட்டை 8. எழுசீரிரட்டை 2. வியனிலைச் சிந்து 1. இருமூச்சீரிரட்டை 8. நாலீ ரடுக்கொற்றை 2. இருநாற்சீரிரட்டை 9. இருமூ விருசீ ரொற்றை 3. ஈரிருநாலிருசீரிரட்டை 10. மூவிருசீ ரிரட்டிரட்டை 4. அடுக்கிரு நாற்சீரொற்றை 11. முந்நாலிருசீ ரொற்றை 5. நாலிருசீ ரிரட்டை 12. ஈரிரு நாலிருசீ ரொற்றை 6. நாமுச்சீ ரிரட்டை 13. நாமும்முச்சீ ரொற்றை 7. நாமுச்சீ ரிரட்டிரட்டை 14. நாமுச்சீ ரொற்றை ððð 3. ஒழிபியல் முன்னிரண்டு இயல்களினும் கூறப்படாத - ஒழிந்து நின்ற - சிலவற்றின் இலக்கணங் கூறுவதால், இவ்வியல் இப்பெயர்த்தாயிற்று. இயல் - இலக்கணம். 1. எழுத்து 1. குற்றியலிகரம் ‘நாடு’ என்பது - நெடிற்றொடர்க் குற்றியலுகரம். ‘நாடு + யாது - நாடியாது’ எனக் குற்றியலுகரத்தின் முன்யகரம் வரின், அவ்வுகரம் இகரமாகத் திரியும். இவ்விகரம் - குற்றியலிகரம் எனப்படும் என்பது உங்கட்குத் தெரியும். செய்யுளில் சீரும் தளையும் சிதைய வரின், குற்றியலிகரம் அலகு பெறாது; அதாவது ஒற்றுப்போற் கொள்ளப்படும். யாப்பிலக்கணத்தில் ஒற்றுக்கள் அலகு பெறாமை அறிக. காட்டு 1. சிறுநன்றி யின்றிவர்க்கியாம் செய்தக்கால் நாளைப் பெருநன்றி பின்னும் பெரிது. இவ்வெண்பா வடியில், ‘இன்றிவர்க் கியாம்’ - நேர் நிரை நிரை - கூவிளங்கனி. வெண்பாவில் கனிச்சீர் வரக்கூடாது. இவர்க்கு + யாம் - இவர்க்கியாம் என்பது - குற்றியலிகரம். எனவே, குற்றியலிகரத்தைக் கெடுத்து அலகிடின். இன்றியவர்க்யாம் - நேர் நிரை நேர் - கூவிளங்காய் ஆகும். 2. வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல். - குறள் ‘படுவதியாது’ - குற்றியலிகரம். ‘எனப்படுவ + தியாதெனின், எனக் காய்முன் நிரை வந்து - கலித்தளையாகிறது. வெண்பாவில் கலித்தளை வரக்கூடாது. இதை, ‘எனப்படுவது + யாது’ - என எழுதின், ‘எனப்படுவதி’ என்பது - கருவிளங்கனி’ ஆகிறது. வெண்பாவில் கனிச்சீர் வரக்கூடாது. எனவே, ‘எனப்படுவத் + யாதெனின் எனக் குற்றியலிகரத்தை ஒற்று போலக் கொள்ளின், காய்முன் நேர்வந்து - வெண்சீர் வெண்டளை யாகிறது. இப்போது சீரும் தளையும் சிதையவில்லை. இனிச் சீரும் தளையும் சிதையாத விடத்துக் குற்றியலிகரம் அலகு பெறும். அதாவது, குறிலாகவே கொள்ளப்படும். காட்டு 1. குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச் சொற் கேளா தவர். - குறள் இனிது + யாழ் - இனிதியாழ் - குற்றியலிகரம் குழலினி + தியாழினிது என, விளமுன் நிரைவந்து நிரை யொன்றாசிரியத்தளை ஆகிறது. வெண்பாவில் ஆசிரியத்தளை வரக் கூடாது. ‘குழலினிதி + யாழினிது என அலகிடின், காய் முன் நேர் வந்து - வெண்சீர் வெண்டளை யாவதால், குற்றியலிகரம் கெடாமல், குறில் போல நேரசையாதல் காண்க. குறிப்பு : இத்தகைய இடங்களில் இவ்வாறு சீர்பிரிப்பதே ஏற்றதாகும். 2. அறனாடி நன்காய்ந் தியாதொன்றுஞ் செய்யார் திறனாடிக் கொள்ளல் சிறப்பு. நன்காய்ந்தியாது - குற்றியலிகரம் நன்காய்ந் + தியாது - என, மாமுன் நிரை வந்து - இயற்சீர் வெண்டளையாகிச் சீருந்தளையும் சிதையாமை யால், இங்கு குற்றியலிகரம் நின்றவாறே நின்று அலகு பெறுகிறது. பெரும்பாலும் இது வெண்பாவின் கண்ணதாகும். 2. ஐகாரக் குறுக்கம் ‘ஐ, கை’ - எனத் தன் பெயர் கூறின் ஐகாரம் குறுகாது; சொல்லின் முதல் இடை கடை என்னும் மூன்றிடத்தும் குறுகி, குறில் போல் நின்று அலகு பெறும். இது ஐகாரக் குறுக்கம் எனப்படும். ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு. - குறள் கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல். - குறள் கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். - குறள் மைய லொருவன் களித்தற்றாற் பேதைதன் கையொன் றுடைமை பெறின். - குறள் இக்குறள் வெண்பாக்களின் முதலில், அய் - மெய் கய்வேல் - மெய்வேல் கய் - மெய் மய்யல் - கய்யொன் எனக் குற்றொற்றுப் போல எதுகை நயம்பட ஒலித்தலான், ஐகாரக் குறுக்கமேயாம். யாமை யுடைத்தே யாமை கொளல் என்றவிடத்து, மை குறுகி யொலித்தலை ஓசையோடு படித்தறிக. உடைத்து பேதை உடைமை என்னும் ஐகாரங்களும் அங்ஙனமே, குறுகி ஒலித்தலை யறிக. முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண. முருகுசெறி குழலவிழ முகைபுளக மெழநிலவு. - திருப்புகழ் இங்கும் மற்றச் சீர்களை யொத்து ஐகாரம் குறுகியே ஒலித்தலை ஓசையுடன் படித்தறிக. 2. சீரும் தளையும் 1. வெண்பா : வெண்பாவில் கனிச்சீர்கள் வருதலே கூடா, இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் அன்றி, வேறு தளைகளும் வருதல் கூடா. 2. ஆசிரியப்பா : ஆசிரியப்பாவில், கருவிளங்கனி, கூவிளங்கனி இரண்டும் வரப்பெறா. வரின் அகவலோசை குன்றும். மற்ற இரண்டு கனிச் சீர்களும் வருதலான், அகவலில் ஏழுதளையும் வரும். 3. கலிப்பா : யாப்பருங்கலக் காரிகை உரையாசிரியர், ‘மாஞ்சீர் கலியுட்புகா என்னும் 40 ஆம் காரிகையுரையில், ‘தேமா, புளிமா என்னும் மாச்சீர் இரண்டும், கருவிளங்கனி, கூவிளங்கனி என்னும் நிரை நடுவாகிய வஞ்சிச்சீர் இரண்டும் ஆகிய இந் நான்கு சீர்களும் ஒத்தாழிசைக் கலியில் வாரா. கொச்சகக் கலியினும் வெண்கலியினும் இந் நான்கு சீர்களும் வரப்பெறும். கருவிளங்கனியும் கூவிளங்கனியும் கொச்சகத் துள் அருகி வரும்’ என்கின்றார். ஆனால், வீங்குநீர் அவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட ஞாங்கர் மலர்சூழ்தந் தூர்புகுந்த வரிவண்டு ஓங்குய ரெழில்யானைக் கனைகடாங் கமழ்நாற்றம். - கலி - 66 என்னும் இவ்வொத்தாழிசைக் கலிப்பாவின் ஓரடியில், முதலினும் ஈற்றினும், ‘ஞாங்கர் - வரிவண்’ என முறையே தேமாவும் புளிமாவும் வந்துள்ளன. எனவே, நிரைநடுவாகிய கனிச்சீர் இரண்டும் ஒத்தாழிசைக் கலியில் வரின், கலியோசைகெடும் ஆகையால், அவை இரண்டொழித்து மற்றைப் பத்துச் சீரும் வரும் என்பது பெற்றாம். நேர்நடுவாகிய கனிச்சீர் இரண்டும் வருவதால், கலிப்பாவில் ஏழுதளையும் வரும். 4. வஞ்சிப்பா நெடுமதில் நிரைஞாயில் அம்புமி ழயிலருப்பம் தண்டாது தலைச்சென்று தென்குமரி வடபெருங்கல். - மது - 66 மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளிநிலைஇய தீயும். - புறம் இவ்வஞ்சியடிகளில், தீயும் தேமா தண்டாது தேமாங்காய் நிலனும் புளிமா தலைச்சென்று புளிமாங்காய் நெடுமதில் கருவிளம் வடபெருங்கல் கருவிளங்காய் அம்புமிழ் கூவிளம் தென்குமரி கூவிளங்காய் என, மாச்சீர் விளச்சீர் ஆகிய ஈரசைச்சீர் நான்கும், காய்ச்சீர் நான்கும் வருதலான், தன்சீர் நான்கனோடு, வஞ்சிப்பாவில் எல்லாச் சீரும் வருமென்ப தாயிற்று. எனவே, வஞ்சிப்பாவில் ஏழுதளையும் வரப்பெறும். அள்ளற்பள்ளத் தகன்சோணாட்டு வேங்கைவாயில் வியன்குன்றூரன். என, நாலசைச் சீர்களும் வந்தன. பரிபாடல் நாற்பாவும் கலந்த பொதுப்பா வாகையால், நாற்பாவின் சீர்தளை வரையறை கலந்த பொதுவரையறை அதன் வரையறையாகும். மருட்பாவின் வெள்ளடி, வெண்பா வரையறையும், ஆசிரிய வடி ஆசிரியப்பா வரையறையும் உடையதாகும். பாவினங்கட்கு இவ்வரையறை யில்லை. கட்டளைக் கலித்துறை மட்டும் முதற்சீர் நான்கும் வெண்டளையும், ஐந்தாஞ்சீர் வெண்டளை கலித்தளை இரண்டும் பெறும். சிந்துகட்கும் சீர்தளை வரையறையில்லை. கும்மி அடிமட்டும் வெண்டளையான் வரும். பாட்டுக்களைப் படிக்கும் போது, சீர்தளைகளைக் கவனித்துக் கொண்டேபடித்தல் வேண்டும். 3. அடி எல்லாப் பாக்கட்கும் பாவினங்கட்கும் சிந்துகட்கும் அங்கங்கே அடிவரையறை கூறப்பட்டுள்ளது. ஒரு முறை பார்த்தறிக. அடிகள் நீண்டும் குறுகியும் வரும் செய்யுட்களின் அடிவரையறை வருமாறு. செய்யுள் அடிவகை அடியின்சீரளவு 1. குறட்டாழிசை முதலடி 4, 8 இரண்டாமடி 3, 5, 6 2. வெண்டுறை முன்னடி 4, 6 பின்னடி 2, 4 3. ஆசிரியத்துறை குறுகிய அடி 3, 4, 5 நீண்டஅடி 4, 5, 6, 7, 8 4. கலித்தாழிசை முன்னடி 3, 4, 6 பின்னடி 5, 6, 8 இந்நால்வகைச் செய்யுட்களையும் ஒருமுறை திருப்பிப் படித்து இவ்வடி வரையறையைக் கவனியுங்கள். குறிப்பு : யாப்பருங்கலக் காரிகையுடையார், கலிப்பாவின் கண்ணும் ஆசிரியப்பாவின் கண்ணும் ஐஞ்சீரடி - நெடிலடி அருகி வரும் (யாகா - 42) என்கின்றார். காட்டு 1. அணிகிளல் சிறுபொறி யவிர்துத்தி மாநாகத் தெருத்தேறித் துணியிரும் பனிமுந்நீர் தொட்டுழந்து மலைத்தனையே. -கலிப்பா 2. உமணர்ச் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்காட்டு இன்னா வென்றீ ராயின் இனியவோ பெரும தமியேற்கு மனையே. - குறுந் மற்ற அடிகள் போல, அவ்வைஞ்சீரடிகள் கலியோசையும் அகவலோசையும் பெறாமையை ஓசையோடு படித்தறிக. இனி அப்பாக்களில் ஐஞ்சீரடி வரப்பாட வேண்டுமென்ப தில்லை. 4. புணர்ச்சி 1. பொது தமிழ் மொழியின் இனிமைக்குத் தமிழ்ச் சொற்களின் புணர்ச்சியே சிறந்த காரணமாகும். பொன்னும் மணியும் அழகுறப் பொருந்தினாற் போலத் தமிழ்ச் சொற்கள் ஒன்றோடொன்று ஓசையின்பமும் பொருட்பொலிவும் பொருந்தப் புணர்ந்துள்ளன. பொன் கம்பிகளையும் தகடுகளையும் ஒன்றாக இணைத்து அழகிய நகையாக்கும் பொற்பொடி போன்றது இச்சொற் புணர்ச்சி! தேனும் பாலுங்கலந்தாற் போன்றது தமிழ்ச் சொற்களின் புணர்ச்சியின்பம். காதலர்களின் உள்ளப் புணர்ச்சி போன்றது கன்னித் தமிழ்ச் சொற்புணர்ச்சி! செய்யுள் நடைக்கு இச்சொற்புணர்ச்சி மிகமிக இன்றியமை யாத தொன்றாகும். தமிழ்ச் செய்யுட்களில் அமைந்துள்ள இச்சொற் புணர்ச்சி, படிப்போர் உள்ளத்தைக் கவர்ந்து, ஒரே செய்யுளைப் பன்முறை திருப்பித் திருப்பிப் படிக்கவும், செய்யுட்கருத்தினும் நயத்தினும் கருத்தைச் செலுத்தவும் செய்வதோடு, கேட்போர் உள்ளத்தையுங் கவர்ந்து மேன்மேலும் விரும்பிக் கேட்கும்படியுஞ் செய்யவல்ல அத்தகு சிறப்புடைய தொன்றாகும். அந்த பையன் - அந்தப்பையன் - தோன்றல் கோல் தொடி - கோற்றொடி - திரிதல் நிலம் வரி - நிலவரி - கெடுதல் அந்த பையன் என்பதைவிட, அந்தப்பையன் என்பது, ஓசையின்பமும் பொருள் விளக்கமும் உடையதன்றோ? கோல்தொடி என்பதைவிட, கோற்றொடி என்பது, இன்சுவையும் எடுப்போசையும் உடையதோடு, துணிபொருளும் தருவதொன்றன்றோ? நிலம்வரி என்பதைவிட, நிலவரி என்பது, இனிய ஓசையும் தெளிபொருளும் உடைய தல்லவா? எனவே, தோன்றல் திரிதல் கெடுதல் என்னும் மூவகைப் புணர்ச்சியும் தமிழ்மொழியின் இனிமைக்கும் பொருட் பொலிவுக்கும் முதற்காரணமாய் அமைந்துள்ளனவென்பது தெளிவு. பெயர்சொல் உன்பெயர் என்ன சொல். பெயர்ச்சொல் பொருளைக் குறிக்கும் சொல் பொருள்பெயர் பொருளும் பெயரும்; உம்மைத்தொகை பொருட்பெயர் பொருளைக் குறிக்கும் பெயர்; இரண்டன் உருபும் பயனும் உடன் றொக்கத் தொகை. நாட்டுபுகழ் புகழை நிலைநாட்டு; வினைத் தொகை. நாட்டுப்புகழ் ஒரு நாட்டின் புகழ்; ஆறாம் வேற்றுமைத் தொகை. மரம் வேர் மரமும் வேரும்; உம்மைத் தொகை. மரவேர் மரத்தினது வேர்; ஆறாம்வேற்றுமைத் தொகை. பல்குச்சி பலகுச்சி; பண்புத் தொகை. பற்குச்சி பல்விளங்குங்குச்சி; இரண்டன் உருபும் பயனும் பல்லுக்குச்சி உடன்றொக்கத் தொகை. கோயில் குளம் கோயிலும் குளமும்; உம்மைத் தொகை. கோயிற்குளம் கோயிலுக்குச் சொந்தமான குளம்; நான்கன் உருபும் பயனும் உடன் றொக்கத் தொகை. அல்லது, கோயிலைச் சேர்ந்த குளம்; இரண்டன் உருபும் பயனும் உடன் றொக்கத் தொகை. அல்லது, கோயிலின் கண் உள்ள குளம்; ஏழன் உருபும் பயனும் உடன் றொக்கத்தொகை. ஓடா குதிரைகள் குதிரைகள் ஓடா - எதிர்மறைப் பலவின் பால் வினைமுற்று. ஓடாக் குதிரைகள் ஓடா - ஓடாத; ஈறுகெட்ட எதிர் மறைப் பெயரெச்சம். இவ்வாறு புணர்ச்சியால் பொருளும் இலக்கணமும் மாறுபடுதலான், தமிழ்ச் சொற்புணர்ச்சியின் இன்றியமையாமை பெறப்படும். வாழை கன்று வாழைக் கன்று பெட்டிபலகை பெட்டிபலகை பட்டு சட்டை பட்டுச் சட்டை சட்டை துணி சட்டைத் துணி காவி கல் காவிக்கல் கல் கண்டு கற்கண்டு கொம்பு தேன் கொம்புத்தேன் முள் புதர் முட்புதர் இவ்விருவகையுள் எது இன்சுவையோடு உண்மைப் பொருளு ணர்த்துகின்றது என்பதைக் கவனியுங்கள். ஆம்தமிழர் நல்வாழ்வும் அரசும் வளம்பலவும் நாம்தமிழை நன்றாக நவிலுங்கால் - போம்பிறவும். ஆந்தமிழர் - நாந்தமிழை எனப் புணர்த்தெழுதினால் போம்பிறவும் என்னும் தனிச்சீரோடு எதுகை பொருந்தாமை அறிக. ஆம்தமிழர் நாம்தமிழை எனப் புணர்ச்சி நீக்கி ஓசையுடன் படிக்க முடியாமையை ஓசையுடன் படித்தறிக. தளையுந் தட்டுகிறது. 1. கன்னெடு மாறி பெய்யக் கடையுகத் தெழுந்த மேகம் மின்னொடு மசனி யோடும் வீழ்வதே போல வீழ்ந்தாள் - கம். தாடகை - 74 2. மற்றவ னிறந்தமை மைந்தர் தம்மொடும் பொற்றொடி கேட்டுவெங் கனலிற் பொங்குறா முற்றுற முடிக்குவென் முனியை என்றெழா நற்றவ னுறைவிட மதனை நண்ணினாள். - கம் 3. பொற்பாவை கேள்வன் மொழிகேட்டலும போன்ற நாணிச் சொற்பால வல்லாப் பழிகூருரை சொல்வ தென்னே! வெற்பார் நதிகள் சிறுபுன்குழி மேவி னன்றோ இற்பா லவர்க்குப் பிறர் மேல்மன மேற்ப தென்றான். - வில் 4. வெண்ணிற நறைநிறை வெள்ள மென்னவும் பண்ணிறஞ் செறிந்திடை பரந்த தென்னவும் உண்ணிறை காமமிக் கொழுகிற் றென்னவும் தண்ணிறை நெடுநிலாத் தழைத்த தெங்குமே. - கம் இச்செய்யுட்களை ஓசையுடன் ஒருமுறை படியுங்கள், வேண்டுமானால் இன்னொருமுறை படித்துப் பாருங்கள் 1. கல்நெடு 3. பொன்பாவை மின்னொடு சொல்பால வெற்பார் இல்பால் 2. மற்றவ 4. வெள்நிற பொன்தொடி பண்ணிற முற்றுற உள்நிறை நல்தவன் தண்ணிறை இவ்வாறு அம்முதற்சீர்களைக் கொண்டு, அப்பாடல்களை இன்னொரு முறை படித்துப்பாருங்கள்; சொற்புணர்ச்சியின் சிறப்பு விளங்கும். இவ்வாறு புணர்ச்சி நீக்கி எழுதினால் எதுகை அமையாமையையும் அறிக. சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. - அப் இப்பாடலின் முதற்சீர்களை, சொல்துணை கல்துணை நல்துணை என எழுதின், எதுகை அமைகின்றது எனினும், சொற்றுணை, பொற்றுணை, என்பது போல் ஓசையினிமையும் எடுப்பும் பொருட் பொலிவும் இன்மையை அறிக. பொன்துணை - எனப் பிரித்தெழுதின், எதுகை அமையாமையையும் அறிக. அரியானை யந்தணர்தஞ் சிந்தை யானை அருமறையி னகத்தானை யணுவை யார்க்கும். - அப் என்னும் அடியை, அரியானை அந்தணர்தம் சிந்தை யானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும். என, உடம்படுமெய்யும், இனமெல்லினத் திரிபும், உடன் மேலுயிரொன்றுதலும் இன்றி இவ்வாறெழுதின், அவ்வடிக்குரிய ஓசையின்பம் இன்மையை அறிக. இனி, முற்றுற அடிக்குவென் முனியை என்றெழா நற்றவ னுறைவிட மதனை நண்ணினாள். - கம் என்பதை, முற்றுற முடிக்குவென் முனியை யென்ழொ நல்த்தவ னுறைவிட மதனை நண்ணினாள். எனவும், சூட்டு டைத்துணைத் தூநிற வாரணம் தாட்டு ணைக்குடை யுந்தகை சால்மணி. - கம் என்பதை, சூட்டு டைத்துணைத் தூநிற வாரணம் தாள்த்து ணைக்குடை யுந்தகை சால்மணி எனவும், லகர ளகர ஒற்றுக்களுடன் தகர வல்லொற்று மயங்கு மாறு எழுதுதலும் எதுகைக்குப் பொருந்தாமையோடு, அது தமிழ்ச் சொற்புணர்ச்சி மரபன்றெனவும் விடுக்க. மற்ற வல்லொற்று மயக்க மின்மையுங் கொள்க. 2. குற்றுகரப் புணர்ச்சி எழுத்து + ஆணி - எழுத்தாணி எழுத்த்உ + ஆணி - எழுத்த் + ஆணி - எழுத்தாணி எழுத்து - குற்றியலுகரம். ஆ - உயிர். குற்றியலுகரத்தின் முன் உயிர்வரின், அவ்வுகரம் கெட, கெட நின்ற மெய்யின்மேல் அவ்வருமொழி முதல் உயிர் ஏறி முடிவதே, குற்றுகரத்தோடு உயிர்புணரும் புணர்ச்சி விதியாகும். ‘குற்றியலுகரம் உயிர்வரிற் கெடும்’ என்பது, தமிழ்ப் புணரியற் சட்டம். குற்றுகரம் உயிர்வரக் கெடாமலிருக்கச் செய்யுள் செய்வது, தமிழ்ச் செய்யுள் மரபே அன்று. காட்டு அருளொன்று உண்டென்றெண்ணி அழுது அழுது பெரும்பேறு பெறக்கூறும் பெரியோர் யாரும். அருளொன்று + உண்டென்றெண்ணி அழுது + அழுது எனக் குற்றுகரங்கள் உயிர்வரக் கெடாமல் இச்செய்யுள் செய்யப்பட்டுள்ளது. குற்றியலுகரத்தைக் கெடுத்துப் புணர்ந்து, அருளொன்றுண் டென்றெண்ணி யழுதழுது பெரும்பேறு பெறக்கூறும் பெரியோர் யாரும். என எழுதின், முதலடி முச்சீரடி யாகிறது. இது தமிழ்ச் செய்யுள் மரபன்று. பாவும் பாவினமுமாகிய செய்யுளிலெங்கும் குற்றுகரம் உயிர்வரக் கெடாமலிருத்தல் தமிழ்ச் செய்யுளிலக்கண முறையேயன்று. மேலும், ‘உண்டென் றெண்ணி’ என்பதை, ‘உண்டு என்று எண்ணி’ எனப் பிரித்தெழுதி அவ்வடியைப் படித்துப் பாருங்கள். அது, செய்யுளடி போல் இருக்கிறதா என்பது விளங்கும். இனி, 1. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று. - குறள் 2. ஆழியுள் நஞ்சமு தார வுண்டன் றமரர்க் கமுதுண்ண ஊழிதொ றும்முள ராகவ ளித்தா னுலகத் துயர்கின்ற காழியுள் ஞானசம் பந்தன் சொன்ன தமிழாற் கலிக்காமூர் வாழியெம் மானை வணங்கி யேத்த மருவா பிணிதானே. - சம் இப்பாடல்களில் குற்றுகரம் உயிர்வரக் கெட்டுப் புணர்ந்துள்ளதைப் பிரித்து, 1. நன்றி மறப்பது நன்(று) அன்று நன்(று) அல்ல(து) அன்றே மறப்பது நன்று - குறள் 2. ஆழியுள் நஞ்சமு தார வுண்(டு) அன்(று) அமரர்க்(கு) அழு(து) உண்ண ஊழிதொ றும்முள ராகவ ளித்தா னுலகத்(து) உயர்கின்ற எனப் பதித்தல், ஓசையுடன் படிக்க முடியாததோடு, தமிழ்ச் செய்யுள் மரபு அன்றாதலு மறிக. பல்லவி 1. ஏது பராமுகம் ஏழையின் மீது ஏகனே யோகனே மாகனே தியாகனே - ஏது பல்லவி 2. மைத்துனரே இன்றுமுதல் மகராசர் நீரோ! பல்லவி எடுப்பு கொத்தார் குழலெங்கள் குயிலைக்கொண் டீரே - மைத் கண்ணி ஏதும்வஸ் திரங்கட்ட அறியா திடுப்பு இனியுமக் குப்பல வகையுண் டுடுப்பு ஓதும்பு கைந்ததுண் டோஉம தடுப்பு உள்ளத்தை நான்சொன்னால் உனக்கென்ன கடுப்பு. - சர்வ 3. கண்ணி இந்நிலத் துயிரெல்லாந் தன்னலந் தருவது இல்லாமை என்பதெல்லாம் ஈயாமல் வருவது மன்னுயிர் வாழ்ந்திடத் தன்னுயிர் கொடுப்பது மனிதர் குலத்துக்கெல்லாம் புனிதர்க்கே அடுப்பது. - நாம இவ்விசைப் பாடல்களில், முதற் பல்லவியின் முதலடியின் இறுதியிலும் (மீது), இரண்டாம் பாடலின் கண்ணி யடிகளின் ஈற்றிலும் (இடுப்பு, உடுப்பு, அடுப்பு) மூன்றாங்கண்ணியின் முதலடியின் முடிவிலும் (தருவது) உள்ள குற்றுகரங்கள் உயிர்வரக் கெடாமல் உள்ளன. இசைப்பாடல்களின் ஓசை அறுத்திசைப்பதனால், அவற்றின் அடியிறுதியில் குற்றுகரம் உயிர்வரக் கெடுவதில்லை. அடியின் இடையில் உயிர்வரக் குற்றுகரம் கெட்டே புணரும். சிந்துகளும் இசைப்பாடல்களாதலால், சிந்துப்பாடலின் அடியிறுதியில் வரும் குற்றுகரமும் உயிர்வரக் கெடாது நிற்கும். இது மிகச் சிறுபான்மை. காட்டு பிள்ளைக் கிளிமென் குதலையி லேமனம் பின்ன மறச்செல்ல விட்டு - அடி தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வ மேநினைச் சேர விரும்பினேன் கண்டாய். - பார இச்சிந்தில், ‘விட்டு’ என அடியிறுதியில் குற்றுகரம் உயிர்வரக் கெடாதிருத்தல் காண்க. இவ்விதி விலக்குகளை உறுதியாகக் கடைப்பிடித்துச் செய்யுள் மரபு சிதையாமல் காப்பது. இளந்தமிழ்க் கவிஞர்களின் கடப்பாடாகும். வாழ்க செய்யுள் மரபு! பயிற்சி 1. குற்றியலிகரம் எப்போது அலகுபெறாது? எப்போது அலகு பெறும்? காட்டுத் தருக. 2. குற்றியலிகரம் அலகு பெறாத விடத்து எவ்வாறு இயலும்? 3. ஐகாரம் செய்யுளில் எவ்வாறு பயிலும்? காட்டுத் தந்து விளக்குக. 4. வெண்பாவுக்குரிய சீரும் தளையும் எவை? வெண்பாவில் வாராச் சீரும் தளையும் எவை? 5. நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீர் எந்தெந்தப் பாக்களில் வாரா? 6. சிலசீர்கள் வரப்பெறாமலும், ஏழு தளையும் பெறும்பாக்கள் எவை? விளக்கந் தருக. 7. வஞ்சிப்பாவின் சீர் தளை வரையறை என்ன? 8. வெவ்வேறு சீரளவுடைய அடிகள் பெற்று வரும் பாவினங்கள் எவை? 9. ஐஞ்சீரடி எப்பாக்களில் அருகிவரும்? இது யார் கொள்கை? அது பற்றிய இந்நூற் கொள்கை யாது? 10. தமிழ்ச் சொற்புணர்ச்சியின் சிறப்பென்ன? எடுத்துக் காட்டுடன் கூறுக. 11. செய்யுளைப் புணர்ச்சி நீக்கிப்பதித்தல் ஏன் கூடாது? 12. வல்லொற்றோடு மயங்காத இடையொற்றுக்களெவை? 13. குற்றுகரப் புணரிலக்கணம் என்ன? அதை எவ்வாறு கொள்ளக் கூடாது? அவ்வாறு கொள்வதனால் ஏற்படும் தவறு என்ன? 14. உயிர்வரக்கெடும் குற்றுகரத்தைப் பிறைக்கோட்டுக்குள் இட்டுக் காட்டி வருமொழி முதலுயிரைத் தனியாகப் பதித்தலின் தவறு என்ன? 15. குற்றியலுகரம் எங்கெங்கு உயிர்வரக்கெடாது நிற்கும்? 16. ஒழிபியலில் கூறப்படும் செய்திகளைத் தொகுத்தறிக. 5. பிற்சேர்க்கை கலிவிருத்தம் 1. பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாள எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அத்தாவுனக் காளாயினி அல்லேனென லாமே. - சுந் இது, சுந்தரர் தேவாரம், ‘வாழ்வாவது மாயமிது’ என்னும் 20ஆம் கலிவிருத்தம் போன்றது. அதுவும் சுந்தரர் தேவாரந்தான். இதன் தொடையமைதியை நோக்குங்கள். முதல் மூன்றடியினும் மோனை அமையவில்லை. இப்பதிகப் பாடல்கள் பத்தினுமே மூன்றாவ தடியில் மோனை அமைய வில்லை. முதலீரசை யொழியப் பத்துப்பாடலினும் இவ்வடி ஒன்றே தொடர்ந்து வருகிறது. முதல் ஒன்பது பாடல்களின் ஈற்றடியும் முற்று மோனை. அளவடியில் பொழிப்புமோனை வரவேண்டும். அடுத்தது ஒரூஉமோனை வரலாம். அல்லது பொழிப்பெதுகை வரலாம். பத்தாவது பாட்டின் முதல் இரண்டடியும் பொழிப்பு மோனை. பாட்டு 6 இன் 2 ஆமடி - பொழிப் பெதுகை. பாட்டு அடி 1 1, 2 2 1 3 1, 2 இவ்வடிகளில் தொடை 6 1 அமையவில்லை 8 1, 2 மூலநூலிற்பார்க்க. 9 1 மற்ற அடிகளின் தொடையமைதியைக் கண்டறியுங்கள். கொச்சகம் பித்தா பிறைசூடீ பெருமானே யருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய்பெண் ணைத்தென்பால் வெண்ணெய்நல்லூ ரருட்டுறையுள் அத்தா வுனக்காளா யினியல்லே னெனலாமே. இது, ‘பொன்னார் மேனியனே’ என்னும் 9 வது கொச்சகம் போன்றது. அஃதும் சுந்தரர் தேவாரப் பாடல்தான். இவ்வாறு கொச்சகமாக அலகிடின் 1, 6, 7, 8, 9, 10 பாடல் களின் முதலடிகளின் பொழிப்புமோனை அமைகிறது. முதல் ஒன்பது பாடல்களின் ஈற்றடியினும், 2 ஆம்பாடலின் முதலடியினும், 1, 9 பாடல்களின் இரண்டாவதடிகளினும் கடையிணை எதுகை அமைகிறது. 3 ஆம் பாட்டின் முதலடி இணைமோனையும், கடையிணையெதுகையும் 3, 4, 7 பாடல்களின், 2ஆம் அடியில் ஒரூஉமோனை. 1, 3 பாடலின் மூன்றாவதடியில் பொழிப்பு மோனையும், 6வது பாடலின் மூன்றாவதடியில் பொழிப் பெதுகையும் அமைகின்றன. 4, 5 பாடல்களின் முதலடிகளின் மோனை அமையவில்லை. மூல நூலிற் பார்த்தறிக. இப்பாடல்கள் பாடுதற்கு நிகழ்ந்ததெனக் கூறும் நிகழ்ச்சிப் படி, முதலில், ‘பித்தா’ என விளித்து, அதன் பின்னர், ‘பிறைசூடீ, பெருமானே, அருளாளா’ என விளித்திருப்பா ராகையால், கொச்சகமாகக் கொள்ளுதலே பொருத்தமாகத் தோன்றுகிறது. பொன்னார்மேனியனே என்னும் பதிகப்பாடல்களின் ஈற்றடி களும் கடையிணையெதுகை யாகத்தான் உள்ளது. இவ்வாறு தொடை அமைதியில்லாது பாடியதன் காரணம் விளங்கவில்லை. இனி, மூன்றாவதடியை அறுசீரடியாகக் கொண்டு, ஈற்றயலடி மிக்கு வந்த ஆசிரியத்துறையாகவும் கொள்ளுதற்கு இப்பாடல்கள் இடந்தருகின்றன. எழுசீரடி விருத்தம் 2. மற்றுப் பெற்றென கின்றி நின்றிருப் பாத மேமனம் பாவித்தேன் பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற வாத தன்மைவந் தெய்தினேன் கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லு நாநமச்சி வாயவே - சுந் இதுவும் சுந்தரர் தேவாரமே. இது சேற்றில் நின்று என்னும் 23 ஆம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் போன்றது. இப்பதிகத்தின் 6ஆம் பாடலின் முதலடியான. ஏடு வானிளந் திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின் மேல். என்பதுபோல, 1-5 சீர்களில் மோனை வரவேண்டும். இவ்வடிகளில் சிறுபான்மை 1-6, அல்லது 1-7 சீர்களிலும் மோனை வரலாம். இப்பாடலின் ஈற்றடியில் 1-3-6 சீர்களில் மோனை வந்துள்ளது. இப்பதிகத்தின் 6, 7, 9 பாடல்களின் ஈற்றடியில் அவ்வாறும் மோனை வரவில்லை. பாட்டு அடி முதற்சீர் 2 3 வட்ட 4 3 நல்ல 6 4 சேடி 7 4 விரும்ப 8 2 வம்பு 9 3 நார 9 4 கார 10 4 நாண இம்முதற் சீர்களின் முதலெழுத்துக் கேற்ற மோனை எழுத்துடைய சொல் அவ்வடிகளிலேயே இல்லை. பாடல் 2ன் அடி 2-ம் அத்தகையதே. 1 1, 2, 3 இவ்வடிகளில் மோனை 3 1 அமையவில்லை இனி, கலித்துறை மற்றுப் பற்றெனக் கின்றிநின் றிருப்பாதமே மனம்பாவித்தேன் பெற்றலும்பிறந் தேனினிப் பிறவாததன் மைவந்தெய்தினேன் கற்ற வர்தொழு தேத்துஞ்சீர்க் கறையூரிற்பாண் டிக்கொடுமுடி நற்ற வாவுனை நான்மறக் கினுஞ்சொல்லுநா நமச்சிவாயவே. இவ்வாறு கலித்துறையாக அலகிடின், மோனைச் சொல்லே இல்லாத ஒன்பதடிகளே யன்றி, பாட்டு அடி 4 2, 4 5 3 7 1, 2 இவ்வடிகளிலும் 8 3 மோனை அமையவில்லை 9 1, 2 10 1 இவ்வடிகளில் 1-4 சீர்களில் மோனை வரவேண்டும். அல்லது, 1-5 சீர்களில் வரலாம். இஃதும் ஆய்வுக் குரியதே. ஊன்வாட வுண்ணா துயிர்காவ லிட்டு உடலிற் பிரியாப் புலனைந்து நொந்து தாம்வாட வாடத் தவஞ்செய்ய வேண்டா தமதா விமையோ ருலகாள கற்பீர் கானாட மஞ்ஞைக் கணமாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடைபோய்த் தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச்சித்திர கூடஞ் சென்றுசேர் மின்களே. - நாலா இது நாலாயிரத்தின் - பெரிய திருமொழித் திருமொழிப் பாடல் 2. இதில் அடியெதுகை அமையவில்லை. முதலடியில், இட்டு + உடலில், எனக்குற்றுகரம் உயிர்வரக் கெடாமல் உள்ளது இட் டுடலில் எனப் புணர்த்தால், இட் - நேர் ஆகிறது. இது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இவ்விருத்தத்தில் அடியின் இடையில் அசை சீராகவருதல் யாப்பிலக்கண மரபன்று. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடுதலே செய்யுள் மரபு. இஃதும் ஆய்வுக் குரியதே. இனி யாரும் செய்யுள் மரபுக்கு மாறாகவும், மோனை எதுகை முதலிய தொடைகள் நன்கு அமையாமலும் பாடல்கள் பாடா திருப்பதே தமிழ்த் தொண்டாகும் என்பதை உணர்வார்களாக. வாழ்க தொடைமரபு!  செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை அகட்தடி மை 362 அகவனச 315 அகனிலம் 345 அங்கண் 323 அங்கண் 428 அஞ்சியவர் 486 அஞ்சியே 396 அஞ்சு 316 அஞ்சொன் 442 அடல் 385 அடிக்க 399 அடுட்திடும் 457 அடையா ள 315 அண்ணா 457 அதிர 286 அட்தின 462 அட்தை 475 அந்தமும் 323 அந்தோ 506 அப்பனீ 340 அப்போது 429 அமல னாதி 439 அரவணை 340 அரவினில் 322 அருக்க 316 அருண 344 அருவி 255 அருளுற 382 அலமன்னு 342 அலை 398 அல்ல 504 அவற்றுள் 291 அழல் 318 அழிந்துகு 265 அளி 347, 424 அள்ளற் 244 அற 258 அறனறி 257 அறுசீர் 290 அற்புதஞ் 518 அன்று 379 அன்றொரு 267 அன்ன 383 அன்னை 384 ஆங்கார 496 ஆசை 461 ஆடரம்பை 246 ஆடி னாய் 441 ஆடினா 305 ஆடும்பரி 313 ஆடுவதும் 472 ஆடுவன 315 ஆட்டு 464 ஆதரஞ் 384 ஆதி 461 ஆதியந்தங் 386 ஆயிரம் 283 ஆய்ந்த 319 ஆய்ந்தறி 267 ஆரடி 520 ஆர மிவை 414 ஆராரோ 494 ஆரூ ரட்தா 340 ஆர்ட்து 324 ஆலட் திலை 445 ஆலி 357 ஆளுடன் 480 ஆளு மன் 324 ஆறணி 440 ஆற்று 440,460 ஆன 382 ஆன காலை 305 ஆனந்த 386 இங்கு 473 இங்ஙனம் 458 இஞ்சி 316 இடியது 404 இடுக்கட் 385 இடைபல 290 இடையிடை 356 இந்த 343, 497,520,521 இந்திரன் 415 இப்படை 373 இப்பே ருலக 367 இருங்கடல் 263 இலகொளி 419,427 இழிட்து 304 இளமதி 439 இறை 293 இன்பம் 347 இன்னா 263 ஈடு 252,519 ஈற்று 306 உங்கை 304 உடம்புணர் 284 உடம்பு 261 உபய 372 உயர்வற 304 உரக 382 உருமு 345 உரை 323 உலகினில் 298 உலகுடன் 303 உலகு 316 உலரு 421 உலரெலும் 316 உலனல 319 உழவர் 245 எங்கள் 463 எங்கு 478 எங்கு முலகு 398 எடுமெடு 357 எண்ணு 431 எண் 431 எரிமலர் 284 எல்லாரும் 496 எவ்வ 440 எழுந்தது 356 எழுபதும் 464 எளியவர் 245 எறிபடை 398 எனக்கு 256,324 எனா 315 என்ற 336 என்றவ 272 என்ன 338 ஏரினை 433 ஏழை 358 ஏறாத 470 ஏறி யிட்ட 380 ஏற்ற 298 ஐயநின் 410 ஒக்க 436 ஒக்கும் 263 ஒட்தாழிசை 229 ஒரு 314 ஒருபுறட்து 427 ஒழுகிய 406 ஒற்றி யூர 246 ஓங்கு 419 ஓடி 458 ஓதோ ரிந்து 417 ஓருயிர் 265 ஓலக் கடன் 315 கங்கைக்கு 260 கங்கை 364 கடலில் 397 கடல்க ளை 421 கடாமுமிழ் 387 கடிப்புடை 271 கடுஞ்சூர் 285 கட்ட 505 கண் 409 கண்டாளே 429 கண்டேன் 343 கண்ணகி 490 கண்ணுதல் 445 கண்பொலி 321 கதவு 519 கதிர் 400 கதுப்பிற 316 கதை 379 கயக்காவி 385 கயமொடு 253 கரி 504 கரையே 286 கலிங்கர் 356 கலிமிகு 386 கலியுக 474 கல்லாதார் 434 கல்லென் 325 கல்லை 326 கல்வி 431 கல்வியும் 431 கவன நெடு 357 கவனமா 397 கழுவார் 303 கழுவைப்பு 315 கறுக்கு 506 கற்பனை 399 கற்பிணை 285 கற்றோர் 249 கனக 498 கனவட்ட 365 கனியிடை 458 கனிவு றா 387 காடு 481 காட்டில் 474 காண 463 காதல் 269,450 காமர் 445 காமனை 322 காயிலே 465 காரிருளு 316 கார்நடக்கும் 294 கார்முற்றி 275 காலை 491 காவிரி 468 காவின்மே 305 காளி 445 கானம் 444,502 கானே 342 கீச்சென்று 465 குடிசை 480 குடிலிற் 458 குடிவளம் 316 குயில் 269 குலம் 302 குழலிசை 434 குறமக ள 302 குறு 373 குன்ற 463 கூசா தே 505 கூடல் 284 கூவாய் 434 கூறு 303 கூற்றிரு 435 கைட்தொழில் 433 கைட்தோ டு 252 கையோ 365 கொடிஞ்சி 363 கொடி 250 கொண்ட 374 கொலைசெய் 476 கொலையினுஞ் 398 கொன்றை 284 கோகனக 336 கோதைகள் 305 கோபுர 469 சங்கம் 503 சங்கமுஞ் 292 சட்தி யாட 464 சந்திர 399 சந்து 474 சாதக 416 சாதி 491 சாரட்டு 476 சிகரக் குல 337 சிகர வட 423 சிந்தை 496 சிரமுஞ் 256 சிறகரளி 425 சிறந்த 366 சின்னஞ் 358 சீதரன் 420 சுட்த 502 செங்கண் 298 செங்கரும் 472 செஞ்சடை 483 செண்டு 407 செட்த பாம்பி 305 செட்த பிற 399 செந்நெ ருப்பி 397 செம்பா கம் 504 செல்லார் 443 செறுதீ 285 செற்றிட்டே 377 சென்றணை 384 சேவகராற் 430 சேவுயருந் 320 சேற்றில் நி 366 சொப்பன 484 சொற்றுணை 304 சொன் 293 சொன்ன 479 தக்கன் 450 தங்கட்தினால் 473 தட்டின 430 தண்ட ரள 363 தண்ணந் 428 தண்பாய் 347 தந்தைதா 487 தந்தை 262, 487 தந்தையார் 340 தமிழ னென்ற 417 தமிழன் 358 தமிழா 374 தமிழெங்கள் 463 தரணி 344 தருமன்மை 381 தலட்தினுயர் 487 தலைக்கு 306 தலைமதி 339 தலையே நீ 434 தழைட்திடு 246 தளை 379 தனிட்தனி 386 தாமரை 440 தாயேநின் 456 திக்கமர் 321 திங்க ணம்பி 378 திங்களை 260 திங்களோ 338 திண்படை 362 திமிர ம 410 திருமடந்தை 378 திருவாடி 379 திரைட்த 246 திரையை 415 தில்லை 480 தில்லையம் 341 தின்ன 470 தீங்கரும்பு 444 தீப்பால 258 துடிக்குள் 460 துப்பா ர 503 துப்புடை 378 துன்ப 388 தென்பரங் 479 தென்னவர் 356 தேடிய 466 தேடிஉனை 455 தேரு ளைப் 416 தேவருக் க 397 தேவர் 477 தேவர்தந் 363 தேவு 246 தொகுபுனல் 283 தொக்க 398 தொக்கர 306 தொண்டு 455 தொய்யில் 504 தோடுடைய 303 தோடுடையா 303 நகுமலரன 303 நகைட்து 503 நச்சரவு 322 நடையொழி 381 நதிக ளே 398 நந்தாய் 243 நலமே 247 நறவ மார் 246 நறை 294 நன்றுடை 320 நன்னானே 487 நன்னிட்தி 302 நாட்டின் 249 நாணி 438 நாதர் 459 நாமேவு 505 நாழிகை 486 நிருட்தம் 498 நிரைமணி 356 நீரையா 470 நிலட்தின் 299 நிழலார் 303 நிழலில் 251 நினைவு 344 நின்று 324 நீர்பாய் 347 நீர்மேற் 469 நீறணி மே 252 நீறு சேர் 439 நும்மை 341 நுளையர் 292 நெஞ்சம் 503 நெஞ்சி லு 465 நெஞ்சு 468 நெட்டை 462 நெருங்கா 357 நெறிதவறி 316 நெற்படி 325 நேசா சா 506 நேர்முனை 357 நோற்று 324 பஃறிணை 506 பகுட்த ளி 418 பசைந்து 503 பச்சைக் கடு 492 பஞ்சவ டி 497 படியிடை 406 படை 336 பணை 380 பண்கொண்ட 363 பண்டு 341 பண்டு பறை 496 பண்டை 408 பண்ணமரு 322 பண்ணினார் 252 பட்தினி 499 பட்து 384 பந்தணை 345 பந்தார் 321 பரசு 428 பரந்தர 407 பரந்தர 407 பள்ளனு 457 பள்ளிக் கு 337 பறிந்த ம 357 பனியார் 252 பன்றி 489 பாஅ 507 பாஞ்சாலன் 493 பாடிப்பாடி 459 பாடுகின்ற 246 பாடுவார் 283 பாட்டாளர் 245 பாட்டுக்கு 480 பாட்டு 458 பாரடீ நா 469 பாரப் பணை 398 பாலக் காட் 480 பாலாறு 356 பாலுக்கு 341 பாலொரு 490 பானிற 246 பிட்தா 541 பிரமற்கு 397 பிள்ளைக் கிளி 538 பிள்ளை 485 பின்னு 444 பின்னையும் 316 புகுந்த நெய் 459 புதையிரு 411 புயல்வண் 355 புயல் 355 புரங்கட 333 புள்ளூர் 265 பூசுரர் 383 பூணா 362 பூந்தாமரை 242 பூமேவுஞ் 268 பூவ லர்ந் 320 பூவிரி ம 356 பெய்யார் 318 பெரியவனை 444 பெற்றசெல் 249 பெற்றவளே 488 பேசவந்த 387 பேராழி 314 பைங்குழல் 462 பைம் 465 பொடியிலங் 304 பொட்டுமே 476 பொய்வாரி 256 பொரிந்த 372 பொருகை 357 பொருதர 398 பொருநை 438 பொருவன 506 பொன்பூக்கு 251 பொன்ற லை 504 பொன்னார் 293 பொன்னிமய 293 பொன்னி 438 பொன்னு 491 போகாதே 483 போழுமதி 321 போற்றியென் 378 மகபதி 381 மங்கை 470 மடம்படு 444 மடிந்தன 256 மணமே த 383 மண்டல 483 மண்டு 342 மண்ணி 336 மதயானை 457 மதிநுதன் 361 மதுர மான 372 மதுரை 476 மந்திர மா 197 மரகத 316 மரவம் 302 மருவினிய 303 மருவே 505 மலரின் 458 மலிதேரான் 263 மலிவாச 325 மலைநிகர் 415 மல்லாடு 288 மழலைட்திரு 314 மறைமுதற் 347 மற்று 543 மற்ற 383 மனம் 387 மனைமாட்சி 258 மன்றில் 246 மன்ன 437 மன்னு 363 மாதர்தம் 400 மாதர் நகை 345 மாதர்ப் பிறை 450 மாதர் மட 404 மாதலைவன் 444 மாரிச் சீவ 463 மார்கழி 499 மாவுகைட் 397 மாவும் 479 மாவுறங்கின 306 மானை 478 மான்ற 271 மிசை 373 மின்னின் 246 முச்சிர 204 முடுகிய 397 முதலெழு 196 முட்தமிழ் 461 முட்தமிழின் 249 முட்தைட் 528 முந்துவடி 246 முரசம் 217 முரசு 380 முரஞ்சல் 291 முருகனென் 400 முருகு 460 முருகுசெறி 505 முழங்கு களி 434 முனிபவர் 396 முனி 286 முன்பு 399 முன்னம் 438 முன்னர் 358 முன்னிய 306 முன்னைநீ 293 மூவேந்தர் 400 மெய்ச்சோதி 420 மெய்ஞ்ஞான 472 மெய்யார் 246 மேவி 339 மைந்து கூர் 373 மைட்துன 538 மை 361 மோது முது 338 யாதவர் 468 யாதொன்றும் 526 வக்காவுங் 480 வசையில் 244 வஞ்சனை 468 வஞ்சி 381 வடவரை 292 வடிகொள் 320 வண்டுளர் 439 வண்ண 323 வண்மை 430 வயிரஞ் 383 வரம் 428 வருபங்கு 455 வருவாய் 444 வலிமிகு 358 வலியோர் 400 வலைவாழ் 438 வளங்கு லா 404 வளைட்த ட 364 வளைந்தது 443 வனபவள 436 வாடிய 304 வாணிகம் 433 வாதனை 465 வாரிட்டு 421 வாருமையா 471 வாழிய 399 வாழிய மண் 358 வாழையடி 476 வாழ்வாவது 304 வானரங் 459 வானவன் 265 வானார் 340 வானி ருந்த 366 வானி ளம் 439 வானிற் கதி 496 விக்கா வுக் 385 விடுபடை 397 விண்ணார் 439 விண்ணினை 253 விதி 373 விரிகதிர் 377 விரிமாம 252 விரும்பும் 366 விரை 304 வில்லை 445 விழிவழி 336 விளைட்தனர் 343 வீடுவாசல் 485 வீட்டுக்குப் 472 வீர னுஞ் 305 வெஞ்சிலை 382 வெண்ணெய் 362 வெம்புய 343 வெய்யன் 325 வெல்லிக்கு 504 வெள்ளை 455,458 வெற்பனே 398 வெற்றியெட் டு 463 வென்ற 246 வென்று 444 வேத வேள்வி 450 வேரி 319 வேலை 357 வேனல் 303 வையக 267 வையம் 262 வைய முழு 373 வையைட் 437 புலவர் குழந்தை படைப்புகள் கவிதை நூல்கள் தொகுதி 1 1 நெருஞ்சிப்பழம் 2 திருநணாச்சிலேடை வெண்பா 3 உலகப்பெரியோன் கென்னடி தொகுதி 2 4 அரசியலரங்கம் தொகுதி 3 5 காமஞ்சரி தொகுதி 4 6 புலவர் குழந்தை பாடல்கள் வரலாற்று நூல்கள் தொகுதி 5 7 கொங்கு குலமணிகள் 8 கொங்கு நாடும் தமிழும் 9 தீரன்சின்னமலை 10 அண்ணல் காந்தி தொகுதி 6 11 தமிழக வரலாறு தொகுதி 7 12 கொங்கு நாட்டு வரலாறு உரைநடை நூல்கள் தொகுதி 8 13 தமிழ் வாழ்க 14 தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் 15 அருந்தமிழ் விருந்து 16 அருந்தமிழ் அமிழ்து தொகுதி 9 17 இந்தி ஆட்சி மொழியானால் 18 ஒன்றே குலம் 19 சங்க இலக்கியச் செல்வம் 20 பூவா முல்லை அறநூல்கள் தொகுதி 10 21 திருக்குறள் குழந்தை உரை 22 திருக்குறளும் பரிமேலழகரும் தொகுதி 11 23 நீதிக்களஞ்சியம் உரை 1 தொகுதி 12 24 நீதிக்களஞ்சியம் உரை 2 இலக்கண நூல்கள் தொகுதி 13 25 தொல்காப்பியம் பொருள் அதிகாரம் தொகுதி 14 26 யாப்பதிகாரம் 27 தொடையதிகாரம் தொகுதி 15 28 வள்ளுவர் தமிழ் இலக்கணம் தொகுதி 16 29 தொல்காப்பியர் காலத் தமிழர் 30 இன்னூல் தொகுதி 17 31 இராவண காவியம்