நூற்றாண்டு நினைவு வெளியீடு புலவர் குழந்தை படைப்புகள் - 13 தொல்காப்பியம் பொருளதிகாரம் அனைத்து நூல்களும் ஒருசேரத் தொகுத்து, பொருள் வழிப்பிரித்து, கால வரிசையில் ஒரே வீச்சில் வெளிவருகின்றன. ஆசிரியர் புலவர் குழந்தை நூற்பெயர் : புலவர் குழந்தை படைப்புகள் - 13 ஆசிரியர் : புலவர் குழந்தை பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 528 = 544 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உரூபா. 340/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906இல் தோன்றி 1973இல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர். தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் பட்ட அவலங்களை எண்ணியெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளை எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு பதிவுகளாக எழுதி வைத்துச் சென்றவர். தமிழ் இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி 1 முதல் 15 படைப்புகளாக ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய முத்து மாலை யாகத் தந்துள்ளோம். இவர் நூல்கள் அனைத்தும் தமிழ்மொழி இன நாட்டின் மேன்மைக்கும், வாழ்வுக்கும், வளத்துக்கும் வித்திடுபவை. குறிப்பாக இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிழ் மண்ணில் தன்மானக் கொள்கைகள் நிலைத்து நிற்பதற்கு செயற்கரிய செயல்களைத் தமிழ் இளைஞர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும் எனும் இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்ற தமிழ்ப்பெருமக்களுக்கும், இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும்புலவர் இரா. வடிவேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன் கொள்ளும் வகை யில் பிழையற்ற பதிப்பக வெளிவருகின்றது. வாங்கிப் பயனடையுங்கள். (இராவண காவியம் நூலுக்கு மிகச்சிறந்த தெளிவுரை எழுதப்பட்டு வருவதால் இப்படைப்பு வரிசையில் சேர்க்க முடியவில்லை. விரைவில் வெளிவரும்.) கோ. இளவழகன் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்கள் கொங்கு நாட்டில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஓலவலசு’ என்னும் சிற்றூரில், பண்ணையக்காரர் என்னும் பழங்குடியில், முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையாருக்கு 1-7-1906இல் பிறந்தார். இவர்தம் பெற்றோருக்கு ஒரே மகனாக வளர்ந்தார். தாம் பிறந்த சிற்றூரில் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார்; தொடர்ந்து படிக்காமல் இடையிடையே விட்டு விட்டுப் படித்தார். மொத்தத்தில் எட்டு மாதங்களே திண்ணைப் பள்ளியில் பயின்றார். கருவிலே திருவுடையவராகிய இவர் பத்தாம் ஆண்டில் இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். யாரேனும் ஒருவர் ஒரு பாட்டைப் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசையில் புதுப்பாட்டு ஒன்றினைப் பாடுவார். எப்போதும் ஏதேனும் ஒருபாட்டை எழுதிக் கொண்டே இருப்பார். பாட்டு எழுதுவது இவருக்குக் கைவந்த கலையாக அமைந்து விட்டது. இவர் காலத்தில் இவர் வாழ்ந்த பகுதியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தானாகவே முயன்று படித்துக் கவிபாடும் திறம் பெற்றிருந்தார். இவர் முதன் முதலில் இசைப்பாடல்களைப் பாடினார். இவர்தம் கல்லாமல் பாடும் கவித்திறனையும், பாடல்களின் சிறப்பினையும் கண்டு வியந்த அறிஞர்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிக்குமாறு தூண்டினர்; ஊக்குவித்தனர். தாம் பிறந்த ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர்கள் எவரும் அக்காலத்தில் இல்லை. ஆகவே இவர் ஆசிரியர் துணையின்றித் தாமாகவே முயன்று இலக்கிய இலக்கணங்களைப் படித்துத் தமிழில் சிறந்த புலமை பெற்றார். மேலும் இவர் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகத் தேர்வு எழுதிப் புலவர் பட்டயம் பெற்றார். இவர் பவானியில் மாவட்டக் கழகப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். 1940வரை தமிழாசிரியராகத் தொண்டாற்றினார். 1941 முதல் 1962ஆம் ஆண்டுவரை தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்கள் வியந்து பாராட்டும்வகையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியினின்று ஓய்வு பெற்ற பின்பும் எழுத்துப் பணியினின்று ஓய்வு பெறவில்லை. வாழ்நாள் முழுமையும் தமிழுக்காகத் தொண்டாற்றினார்; பல நூல்களைப் படைத்தார்; தமது கவிதைகள் வாயிலாகச் சமுதாய உணர்வை - பகுத்தறிவை மக்களிடையே பரப்பினார். இவருக்கு முன் ஓலவலசில் படித்தவர் எவருமில்லை. அவ்வூரில் உள்ளவர் களுக்குக் கையொப்பம் இடவும் தெரியாது. இளமைப் பருவத்திலேயே பொதுத் தொண்டில் -குமுகாயத் தொண்டில் ஆர்வமுடையவராக இருந்தார். தாமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தம் ஊரிலிருந்த தம்மையொத்த அகவையுடைய இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்தார். அவர்கள் மூலமாகப் பெரியவர்களுக்குக் கையொப்பம் போடப் பயிற்சியளிக்கச் செய்தார்; கை நாட்டு போடுவதை அறவே ஒழித்தார். அக்காலத்தில் இவரைவிட மூத்தவர் பலர் இவரிடம் கல்வி கற்றனர். ஓலவலசில் கல்லாமை இருளைப் போக்கினார். வேளாளஇன மக்களிடையே இருந்த பலபிரிவினரையும் ஒன்று சேர்ப்பதற் காகவும், அவ்வின இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்காகவும் 1946 முதல் 1950வரை ‘வேளாளன்’ என்னும் திங்களிதழை நடத்தினார். அவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் அவ்வின இளைஞர்களிடையே புத்துணர்ச்சியை வளர்த்தது. விதவை மணம், கலப்புத் திருமணம், சீர்த்திருத்த மணம் முதலியன செய்யவும் அம்மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். வேளாள சமூகத் தலைவரான திரு. வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் தலைமையில், தகடூர் (தருமபுரி) மாவட்டத்திலுள்ள அரூரில் வேளாள மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் புலவர் குழந்தை அவர்கள் ‘விதவை மணம்’ தீர்மானங் கொண்டு வந்தார்; ஒருமனமாக நிறைவேறச் செய்தார். அதன்படி நூற்றுக்கணக்கான விதவை மணங்களைச் செய்து வைத்தார். இச்செயல்கள் இவர்தம் சமூகத் தொண்டிற்குச் சிறந்த சான்றுகளாகும். இவர், யாப்பிலக்கணம் படிப்பதற்கு முன்னே 1918இல் ‘கன்னியம்மன் சிந்து’ என்னும் கவிதை நூலை வெளியிட்டார். இவர் பாடிய அச்சாகாத பாடல்களும் நூல்களும் பல உள்ளன; சில நூல்கள் அச்சாகி வெளியிடப்பட்டன. யாப்பிலக்கணம் கற்பதற்கு முன்பு பாடிய பாடல்கள் யாப்பிலக்கணப்படி அமைந்துள்ளன. இவர் இதுவரை எழுதியுள்ள நூல்கள் : இராவண காவியம் உள்படச் செய்யுள் நூல்கள்-7, உரைநூல்கள் - 3, இலக்கண நூல்கள் -3, உரைநடை நூல்கள் -16 ஆகமொத்தம் 29 நூல்கள் படைத் துள்ளார். தீரன் சின்னமலை நாடகம் இன்னும் அச்சாகவில்லை. ‘விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர்கம்பன்’ என இதுவரையில் போற்றப்பட்டு வரும் புகழுரைக்கு ஈடாகப் புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் பாடிப் புகழ்பெற்றார். ‘காமஞ்சரி’ என்னும் செய்யுள் நாடக நூல், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் என்னும் நூலுக்குப் பிறகு எழுதப்பட்ட சிறந்த நாடக நூலாகும். ‘நெருஞ்சிப் பழம்’ என்னும் நூல் தமிழில் இதுவரை வெளிவராத கற்பனைக் கருவூலமான காதல் கதையாகும். புலவர் குழந்தை அவர்கள் பெருங்கவிஞர் மட்டுமல்லர். சிறந்த எழுத்தாளர்; கேட்போர் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசும் பெரும் பேச்சாளர். இவருடைய எழுத்துகள் உறுதியும் அஞ்சாமையும் ஆய்வும் செறிந்த புரட்சிக் கனல் தெறிக்கும் இயல்புடையவை. இவருடைய செய்யுள் நடையும் உரைநடையும் எளிய இனிய தனித்தமிழில் அமைந்தவை. இவர் படைத்த நூல்களெல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன. தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இவர் அவ்வியக்கத்தில் சேர்ந்தார்; பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். அன்று முதல் சுயமரியாதை இயக்கம் அதன் மறு பதிப்பான திராவிடர் கழகம், அதன் மறுமலர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுள் இணைந்து தொண்டாற்றியவர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். பள்ளித் தமிழாசிரியராக இருந்துகொண்டே, அத்தொழிலுக்குச் சிறிதும் இடையூறு இல்லாமல், ‘பெரியார் சீடர்’, ‘கருப்புச் சட்டைக்காரர்’ என்று பொது மக்கள் கூறும்படி கட்சித் தொண்டாற்றியவர். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் படைக்கத் தூண்டியது; இவருக்குப் புகழைச் சேர்த்தது. 1948இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திருக்குறளுக்குப் பகுத்தறிவிற்கு ஏற்ப உரை எழுதுவதற்குத் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் ஐவர் கொண்ட குழுவை அமைத்தார். அக் குழுவில் புலவர் குழந்தையும் ஒருவர். இவரே தனிஒருவராக இருந்து திருக்குறளுக்கு உரை எழுதி ‘திருக்குறள்-குழந்தையுரை’ என்று வெளியிட்டார். அவ்வுரையை 28 நாட்களில் எழுதி முடித்த பெருமைக்குரியர். அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்ட இவர்தம் இராவண காவியத்திந்கு தமிழக அரசால், தமிழ் வாழத் தாம் வாழும் தமிழக முதல்வர் கலைஞர் தமிழவேள் அவர்களால் 17-5-1971இல் தடை நீக்கப்பட்டது. அதைக்கண்டு தமிழகமே அகமிக மகிழ்ந்தது; தமிழவேள் கலைஞரை உளமார வாழ்த்தியது. புலவர் குழந்தை ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கொண்டவர். இவர் ஒரு புரட்சிப் புலவரே எனினும் அமைதியும் அடக்கமும் உடையவர்; ஆடம்பரமின்றி எளிய வாழ்வு வாழ்ந்தவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடமை தவறாதவர்; எதிர்க் கட்சியானாலும், மாற்றுக் கருத்து உடையவராலும் நன்கு மதிக்கத் தக்கவர். புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார். கல்வியறிவு பெற வாய்ப்பில்லாதவராயினும் பொது அறிவு நிரம்பப் பெற்றவர்; தன்மானக் கொள்கை யுடையவர்; தம் கணவரின் கொள்கைக்கேற்ப இல்லறத்தை இனிது நடத்தியவர். இவ்விணையருக்குச் சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர். தமிழுக்குத் தொண்டு செய்து வந்த புலவர் பெருந்தகை தமது 68ஆம் அகவையில் 24-9-1973இல் இயற்கை அடைந்தார். மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் புலவர் குழந்தையிடம் அன்பும் மதிப்பும் உடையவர். அவர் மறைந்த பிறகு, அவர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நூல்கள் 8-7-2006 அன்று அரசுடைமை ஆக்கப்பட்டதாக அறிவித்தார். குழந்தை அவர்களின் மகள்கள் இருவருக்கும் தலா ரூ.5 இலட்சம் பரிவுத் தொகை வழங்கினார். நன்றி : நித்திலக் குவியல் (திபி 2037 - டிசம்பர் 2006) மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு. புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல் களையும் அரசுடைமையாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது. பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர். அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது. 4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார். அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார். அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார். “இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3). புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தையானாலும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள் தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழுதினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும். விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார். “புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்து வதற்காக எழுதப்பட்டதேயாகும். நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப் படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார். புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக் கியத்தனங்களையெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப்படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளை யெல்லாம் சாமியாக்குகின்றான். அதுபோல நமக்காகப் பாடுபடு கின்றவர்களை, தொண்டு செய்கிறவர்களை, எழுதுகிறவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன்வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத்துரைத்தார்கள். சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை 1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடைபோட்ட காட்சி கண் கொள்ளாதது. 1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட! எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர். வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது. இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு! கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார். “தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!” நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப்பிட்டதி லிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது. கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள் கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார். “ இனியொரு கம்பனும் வருவானோ? இப்படி யும்கவி தருவானோ? கம்பனே வந்தான்; அப்படிக் கவிதையும் தந்தான் ஆனால், கருத்துதான் மாறுபட்டது” என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது. கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை. தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற் பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இராவண காவிய மாநாடு இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன; முதல் மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டதுண்டு. இத்திசையில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு. தீர்மானங்கள் 28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும். இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும். மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும். இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல் படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005) அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான். மத்திய அரசு தொலை தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத் துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005). தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது. கலைஞரின் சாதனை! இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார். வாழ்க அப்பெருமகனார்! (நன்றி : விடுதலை 2.7.2006) தொல்காப்பியம் பொருளதிகாரம் முகவுரை உலக மொழிகளுள் முதன்மையும் முதுமையும், இளமையும் வளமையும், சீர்மையும் நீர்மையும், தனிமையும் இனிமையும், இயல்பும் எளிமையும் உடைய உயர்தனிச் செம்மொழி தமிழ் மொழி யொன்றே யாகும். இத்தகு தகுதியுடைமை குறித்தே, ‘தன்னே ரிலாத தமிழ்’ என்றார், ஒரு புலவர் பெருமகனார். இத்தகு பெருமையோடு தமிழ்மொழி, கடல் பரந்தன்ன இலக்கியப் பரப்பும், இலக்கண வரையறையும் உடையவொரு மொழியாகும். தமிழ்மொழி போல இலக்கண வரையறையுடைய மொழி யொன்று இன்றெனத் துணிந்து கூறலாம். இன்று நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள் மிகப் பழமையானது தொல்காப்பியமே யாகும். தொல்காப்பியம் ஒரு பழந்தமிழ்ப் பேரிலக்கண நூலாகும். தொல்காப்பியம் தோன்றிய காலந்தொட்டுத் தமிழ் மக்கள் அதன் ஆணைக்குட்பட்டே நூல் செய்து வருகின்றனர். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களெல்லாம் அதன் ஆணைக்குட்பட்டனவே யாம். தொல்காப்பியத்தைவிடச் சிறந்த நூலொன்று - அத்தகு அகலமும் ஆழமும், அருமையும் பெருமையும், திட்பமும் நுட்பமும், செறிவும் நிறைவும் உடைய நூலொன்று - உலகின் கண் வழங்கும் வேறு எந்த ஒரு மொழியினும் இல்லை என்பது, ஆராய்ச்சி அறிஞர்கள் ஆய்ந்து கண்ட முடிந்த முடிவாகும். எனவே, தொல் காப்பியம் ஓர் ஒப்பிலா உயர்தமிழ் நூலென்பது தெள்ளத் தெளிந்த உண்மையாம். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் பிரிவினை யுடையது தொல்காப்பியம். ஒவ்வோர் அதிகாரமும் தனித்தனி ஒன்பதொன்பது இயல்களை யுடையது. தொல்காப்பிய நூற்பாத் தொகை - 1610. அவையாவன: 1. எழுத்ததிகாரம் இயல் நூற்பா இயல் நூற்பா 1. நூன்மரபு 33 6. உருபியல் 30 2. மொழி மரபு 49 7. உயிர் மயங்கியல் 93 3. பிறப்பியல் 20 8. புள்ளி மயங்கியல் 110 4. புணரியல் 40 9. குற்றியலுகரப் புணரியல் 78 5. தொகை மரபு 30 483 2. சொல்லதிகாரம் 1. கிளவியாக்கம் 61 6. வினையியல் 51 2. வேற்றுமையியல் 22 7. இடையியல் 48 3. வேற்றுமை மயங்கியல் 35 8. உரியியல் 98 4. விளிமரபு 37 9. எச்சவியல் 67 5. பெயரியல் 43 462 3. பொருளதிகாரம் 1. அகத்திணையியல் 55 6. மெய்ப்பாட்டியல் 27 2. புறத்திணையியல் 36 7. உவமவியல் 37 3. களவியல் 50 8. செய்யுளியல் 243 4. கற்பியல் 53 9. மரபியல் 110 5. பொருளியல் 54 665 எழுத்ததிகாரம் 483 சொல்லதிகாரம் 462 பொருளதிகாரம் 665 ஆக - 1, 610 தொல்காப்பியத்தின் பழைய உரையாசிரியர்களுள் - இளம் பூரணர், பிறப்பியல் 20 வது சூத்திரத்தின் ஈற்றடியிரண்டையும் தனிச் சூத்திரமாகக் கொண்டுள்ளார். சேனாவரையர், வேற்றுமை மயங்கில் 32, 33 ஆகிய இரு சூத்திரங்களையும் ஒரு சூத்திரமாகவும், உரியியல் 7, 15 ஆகிய இரு சூத்திரங்களையும் நான்கு சூத்திரங்களாகவும் கொண்டுள்ளார். நச்சினார்க்கினியர், கிளவியாக்கம் 54 வது சூத்திரத்தின் முதலடியைத் தனிச் சூத்திரமாகக் கொண்டுள்ளார். இம் மூவர் கொள்கைப்படி 1, 613 சூத்திரங்கள் ஆகின்றன. எழுத்ததிகாரத்தில் தமிழ் எழுத்துக்களின் இலக்கணமும், சொல்லதிகாரத்தில் சொற்களின் இலக்கணமும், பொருளதிகாரத்தில் பொருள்களின் இலக்கணமும் கூறப்படுகின்றன. பொருளதிகாரச் செய்யுளியலில் செய்யுளிலக்கணமும், உவம வியலில் அணி யிலக்கணமும் கூறப்படுவதால், தொல்காப்பியம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் தமிழிலக்கணம் ஐந்தும் கூறும் ஒரு பழந்தமிழ் இலக்கண நூலாகும். சொற்களாற் பொருளமை த்துச் செய்யப் படுவதே செய்யுள்; செய்யுளின் சொல் பொருள் அமைதியே அணி. எனவே, யாப்பணிகளைப் பொருளிலக்கணப் பகுதியாகவே கொண்டனர் ஆசிரியர். பொருளிலக்கணம் ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கை முறை அல்லது ஒழுக்கமுறை - உலக வழக்கு எனப்படும். தீமை கலவாத தனித்த நற்பொருள் ஒன்றும் உலகில் இல்லாமை போல, மக்களுள்ளும் ஒரு சிலரிடைத் தீய ஒழுக்கம் கலந்து நிகழ்தல் இயல்பே. எனவே, அத்தகு தீய ஒழுக்கம் மிகா திருத்தற் பொருட்டும், நன்மக்கள் ஒழுகும் நல்லொ ழுக்கமே ஒழுக்கமாகக் கொண்டு ஏனையோரும் ஒழுகும் பொருட்டும், நாட்டின் பல்வேறிடங்களில் வாழும் மக்களும் ஒரே நிகர்த்தாய் ஒழுகும் பொருட்டும், நன்மக்கள் வாழும் அந் நல்வாழ்க்கை முறைகளை மொழியியல்புக் கேற்ப அழகுறச் செய்யுளாகச் செய்வது - செய்யுள் வழக்கு எனப்படும். உயரிய உலக வழக்கே செய்யுள் வழக்கு ஆகையால், அச் செய்யுள் வழக்கு ஒரே தன்மையாய் இருத்தற் பொருட்டு வரையறை செய்வது - பொருளிலக்கணம் எனப்படும். மக்கள் வாழ்க்கை முறை - அறம் பொருள் இன்பம் என முக்கூறுபடும். இம் முக்கூற்றையும் பற்றி அமைவுற விளக்கிக் கூறுவதனாற்றான் திருக்குறள் - முப்பால் எனப்பட்டது. அறம் பொருள் இன்பம் என்னும் இம் முப்பொருளுமே தொல் காப்பியப் பொருளதிகாரத்தில் அகம், புறம் என வகுத்துக் கூறப்படுகின்றன. அகம் - அகப்பொருள், அகத்திணை எனவும், புறம் - புறப்பொருள், புறத்திணை எனவும் வழங்கும். இன்பம் அகத்திணையிலும், அறமும் பொருளும் புறத்திணையிலும் அடங்கும்; தலைவனும் தலைவியும் அறத்தின் வழிப்பட் டொழுகலான், அறம் ஒருபுடை அகச்சார் புடையதும் ஆகும். உலக வழக்கை யொட்டிச் செய்யுள் செய்யும் சான்றோர்கள் நாட்டின் பல்வேறிடங்களில் வாழ்வோராகலான், ஓரிடத்துக் கோரிடம் மொழி வழக்கு மாறுபடுதல் கூடும். அங்ஙனம் மொழி வழக்கு மாறுபடின், அம்மொழியாற் செய்யப்படும் செய்யுள் வழக்கும் மாறுபடும். செய்யுள் வழக்கு மாறுபடின், அச் செய்யுளைப் பயிலும் மக்கள் வாழ்க்கை முறையிலும் மாறுபா டுண்டாவதோடு, அச் செய்யுள் வழக்கையே துணையாகக் கொண்டொழுகும் பிற்கால மக்களின் வாழ்க்கை முறை புதியதோர் நிலையினை அடைந்துவிடும். ஆதலால், தமிழ்கூறு நல்லுலகத்து மொழிவழக்கு மாறுபடாது ஒரே நிலையாய் இருத்தற்பொருட்டுச் சொல் வரையறையும், சொன்னிலை மாறுபடா திருத்தற் பொருட்டு எழுத்து வரையறையும் செய்தல் இன்றியமையாத தொன்றாகும். சொல் வரையறை - சொல்லிலக்கணம். எழுத்து வரையறை - எழுத்திலக்கணம். எனவே, பொருளிலக்கணம் உலக வழக்கை ஒரே நிலையில் இயலும்படி செய்தலானும், சொல்லிலக்கணமும், எழுத்திலக்கணமும் பொருளிலக்கணத்தை அறிதற்குக் கருவியான மொழியியல்பை ஒரு நெறிப் படுத்துதலானும் - எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம் என்னும் மூன்றும் மக்களின் வாழ்வியலுக்கு இன்றியமையாதவை யாயின. இம் முறைப்படி செய்யப்பட்ட தொரு பழந்தமிழ் இலக்கண நூலே தொல்காப்பியம். தொல்காப்பியம் என்னும் இப்பழந்தமிழ்ப் பேரிலக்கண நூல், தொல்காப்பியர் என்னும் பழந்தமிழ்ப் பெரும் பேராசிரியராற் செய்யப்பட்ட தாகும். ‘ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர்’ எனப் புலவர் பெருமக்களாற் புகழ்ந்து பாராட்டிப் போற்றப்படும் அத்தகு பெருமை யுடையவராவர் ஆசிரியர் தொல்காப்பியனார். பழைய உரை இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், கல்லாடர், தெய்வச்சிலையார் என்னும் அறுவர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியுள்ளனர். இவர்கள், கி. பி. 9ஆம் நூற்றாண்டிற்கும் 13 ஆம் நூற்றாண்டிற்கும் இடைக்காலத்தே இருந்தவராவர். இவர்களுள் இளம்பூரணர், போராசிரியர், நச்சினார்க்கியர் என்னும் மூவரும் பொருளதி காரத்திற்கு உரையெழுதி யுள்ளனர். இவர்கள் உரைகள் நூலோடு ஒப்ப மதிக்கப்படும் அத்தகு மேம்பாட்டினை யுடையவாகும். எனினும், அவ்வுரைகள், இக்காலத் தமிழ் மக்கள் யாவரும் எளிதிற் புரிந்துகொள்ள முடியாத அத்தகு நிலையில் உள்ளமையால், இக்காலத்திற் கேற்ற முறையில் தொல் காப்பியத்திற்கு ஓர் உரை தேவை என்பது தமிழ்மக்கள் விரும்புவதொன்றாகும். தமிழ் மக்களின் அவ் விருப்பத்திற்கேற்ப, அத்தகு முறையில், எழுநூறு ஆண்டுகட்குப் பின்னர் எழுந்ததே யாகும், குழந்தையுரை என்னும் இவ்வுரை. வைப்பு முறை: தொல்காப்பியச் சூத்திரங்களின் வைப்பு முறை இக்காலத்தினர் எளிதில் இயைபு படுத்திக் கற்றறிய முடியாத அத்தகு நிலையில் உள்ளது. எடுத்துக் காட்டாக, இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என்னும் களவின் வகை கூறும் சூத்திரம், செய்யுளியலின் 186வது சூத்திரமாக உள்ளது. இது களவி யலின் முதலில் இருக்க வேண்டும். அப்போது தான் அவ் வகைகள் பற்றிய இலக்கணங்களைக் கற்றுணர்தற்கு எளிதாக இருக்கும். ஆனால் அது களவியலின் தொடக்கத்திலிருந்து 406 வது சூத்திரமாக உள்ளது. இது மிகமிகச் சேய்மைநிலை யுடையதாகும். இவ்வாறே கற்பின் வகைகூறும் ‘மறை வெளிப் படுதலும்’ என்னும் சூத்திரம், செய்யுளியலின் 187 வது சூத்திரமாக உள்ளது. இது கற்பியலின் தொடக்கத்திலிருந்து 347 வது சூத்திரங்கட் கப்பாலுள்ள தாகும். இவ்வாறு இடமாறியும், மிகச் சேய்மை நிலையிலும் உள்ள சூத்திரங்களெல்லாம் அவை இருக்க வேண்டிய இடங்களில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. களவு, கற்பியல்களின் வழு வமைக்கும் பொருளியற் சூத்திரங்களை அவ்வவ்வியல்களில் ஆங்காங்கே சேர்க்கப் பட்டுள்ளன. பொதுவழு வமைக்கும் பொருளியற் சூத்திரங்கள், கற்பியலிலுள்ள கூத்தர் முதலியோர் கூற்றுச் சூத்திரங்கள், செய்யுளியலிலுள்ள களவு கற்புக்குரிய கூற்றுச் சூத்திரங்கள், மரபியியலிலுள்ள நாற்பான் மரபுச் சூத்திரங்கள் முதலியவற்றை - 1. நாற்பான்மரபு, 2. கூற்று, 3. கேட்போர், 4. வாயில்கள், 5. கூறுதல், 6. வழுவமைதி, 7. வழக்கு, 8. முறைப் பெயர் என்னும் தலைப்புக்களிற் சேர்த்து, பொதுவியல் என்னும் பெயரில் அவ்வியல் அகத்திணை யியலை அடுத்து வைக்கப் பட்டுள்ளது. அகத்திணையியலிலுள்ள உள்ளுறை யுவமங் கூறும் சூத்திரங் களும், பொருளியலிலுள்ள இறைச்சி கூறும் சூத்திரங்களும் உவமவியலில் சேர்த்து முறை செய்யப்பட்டுள்ளன. களவியலில் இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என்னும் பலவிடங்கட்குரிய தலைவன் கூற்றுக்கள் ஒரே சூத்திரத்திற் கூறப் பட்டுள்ளன. இவ்வாறே கற்பியலின் மலிவு, புலவி, ஊடல், உணர்வு பிரிவுகட் குரிய கூற்றுக்களும் ஒரே சூத்திரத்திற் கூறப்பட்டுள்ளன. இங்ஙனமே, பல விடங்கட்குரிய தலைவி, தோழி, செவிலி முதலியோர் கூற்றுக்களும் ஒரோவோர் சூத்திரங்களிற் கூறப்பட்டுள்ளன. இவற்றை அவ்வவ் விடத்தின்கண் படுத்துணர்தல் அவ்வளவு எளிதாக இல்லை. எனவே, அக்கூற்றுச் சூத்திரங்களை அவ்வவ் வியல்களில் ஓரிடத்தில் எழுதி, அந்தந்த இடங்கட் குரிய கூற்றுக்களை அங்கங்கே எடுத்தெழுதி உரை எழுதப் பட்டுள்ளது. அகத்திணையியல் 41ஆம் சூத்திரத்தில் உள்ள தலைவன் கூற்றுக்கள் 17இல், 6 களவின் உடன் போக்கிற்கும், அடுத்த 11உம் கற்பின் பிரிவுக்கும் உரியவையாகும். எனவே, அச் சூத்திரத்தை இரண்டாக்கி, அந்தந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதனாலேயே ஒரு சூத்திரம் மிக்கது. இப்புதிய உரைக்கேற்ற வைப்பு முறைப்படி இயல்களும், அவற்றின் நூற்பாத் தொகையும் வருமாறு. முதற்பகுதி அடுத்த இயல்கள் 1. அகத்திணையியல் 45 1. உவமவியல் 46 2. பொதுவியல் 73 2. செய்யுளியல் 221 3. களவியல் 71 3. மரபியல் 101 4. கற்பியல் 46 368 5. மெய்ப்பாட்டியல் 27 298 6. புறத்திணையியல் 36 ஆகப் பொருளதிகார 298 நூற்பாக்கள் 666 மேலும், கூற்றுக்கள் நன்கு விளங்குதற் பொருட்டு, அவ்வவ் விடங்கட் குரிய கூற்றுக்களை ஆங்காங்கு முதலில் வரிசையாக எழுதிப் பின்னர் உரை எழுதப்பட்டுள்ளது. மேற்கோட் செய்யுட் களில் அவ்வவ் வெடுத்துக் காட்டுக்குரிய பகுதிமட்டும் எடுத்துக் காட்டி விளக்கப்பட்டுள்ளது. சில துறைகளுக்கு எடுத்துக்காட்டுச் செய்யுட்கள் (குழந்தை) செய்துள்ளனன். பெரும்பாலும் சங்க இலக்கியங் களிலிருந்தே எடுத்துக் காட்டுத் தரப்பட்டுள்ளதால், இவ்வுரையைக் கற்கத் தொடங்குமுன் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐந்குறுநூறு, கலித்தொகை முதலிய சங்க இலக்கியங்களை ஒருமுறை படித்தல் ஏற்புடைத்தாகும். இவ்வுரைநூற் சூத்திரங்களிற் கூறப்படும் அகம் புறம் பற்றிய செய்திகளைத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் விளக்கியும் ‘தொல் காப்பியர் காலத் தமிழர்’ என்னும் பெயரில் என்னால் எழுதப் பட்டுள்ள உரைநடை நூல், இவ்வுரை பயிலுதற்குப் பெருந்துணை செய்வதொன்றாகும், எனவே, இவ்வுரையைப் பயில்வதற்கு அந்நூலைத் துணையாகக் கொள்ளுதல் இன்றியமையாததாகும். பொருளதிகாரப் பொருளினை யுணர்ந்து, நம் முன்னோராகிய அக்காலத் தமிழ்மக்களின் வாழ்க்கை வரலாற்றினை அறிந் தின்புறுதற்கு, இவ்வுரை இயன்ற அளவு பயன்படுமென நம்பி, இவ்வுரையினைத் தமிழ்மக்களின் உடைமையாக்குகின்றனன். பவானி 16 - 2 - 68 அன்புள்ள, குழந்தை. தொல்காப்பியம் பொருளதிகாரம் குழந்தையுரை முதலாவது அகத்திணையியல் 1. அகத்திணையின் வகை 1. கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை யென்ப. நிறுத்த முறையானே பொருளினது இலக்கணம் உணர்த் தினமையின் இது, பொருளதிகாரம் என்னும் பெயர்த்தாயிற்று. இது, புலியின் வடிவம் பொறித்த கொடியைப் புலிக்கொடி என்றாற் போன்ற குணியாகு பெயர். அதிகாரம் - ஆட்சி. நிறுத்த முறை - எழுத்து சொல் பொருள் என முன் கொண்டு நிறுத்திய முறை. பொருளாவன: அகப்பொருளும் புறப்பொருளும், அவற்றின் பகுதியாகிய முதல் கரு உரிப்பொருள்களுமாம். அகம் புறம் என்பனவே, அறம் பொருள் இன்பம் என வேறு வகையான் வழங்கப்படுதலின், அவையும் இவையேயாம். இன்பம் அகத்தினும், அறமும் பொருளும் புறத்தினும் அடங்கும். ‘இன்பமும் பொருளும் அறனுமென் றாங்கு’ (கள - 1) என, ஆசிரியர் ஆளுதல் காண்க. இனி, இயற்கைப் பொருள் செயற்கைப் பொருள், காட்சிப் பொருள் கருத்துப் பொருள், உயர்திணைப் பொருள் அஃறிணைப் பொருள், பொதுப் பொருள் சிறப்புப் பொருள் முதலிய பொருட் கூறுபாடுக ளெல்லாம் இவ்விரண்டனுள் அடங்குமென்க. எல்லாப் பொருளும் அடங்கு மென்பது குறித்தே, பொருள் அதிகாரம் எனப் பெயர் வைத்தனர். எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் உணர்த்தி அச்சொல் கருவியாக உணரும் பொருளிலக்கணம் உணர்த்தலின், மேலதிகாரத் தோடு இயைபுடையதாயிற்று. நிறுத்த முறைப்படி உணர்த்துதலின் இயைபுடைத்தாயிற் றெனினுமாம். மக்கள் வாழ்க்கை முறையை, அகத்திணை புறத்திணை என இரு திணைகளாகவும், அத்திணை ஒவ்வொன்றையும் எவ்வேழ் பால்களாகவும், ஒவ்வொரு பாலையும் பல துறைகளாகவும் பாகுபடுத் திலக்கண முணர்த்தியும், அப்பொருள்களின் மரபிலக் கணமும், அவற்றைப் பாடுதற்குரிய செய்யுளிலக்கணமும், உணர்த்தியும் அத்தொகுதிக்குப் பொருளதிகாரம் எனப் பெயரிட்டமையின் இது, சிறந்ததோர் வழக்கு நூலென்பது பெறப்படும். ஆசிரியர் இந்நூல் செய்ததிலிருந்து, தமிழ்ப் புலனெறி வழக்கம் இதன்கட்பட்டே நடந்து வருதலும் இதற்குச் சான்றாகு மென்க. இனி, அகம் புறம் என்னும் இருவகை ஒழுக்கத்தினுள், அக வொழுக்கம் உணர்த்துதலான் இவ்வியல், அகத்திணையியல் என்னும் பெயர்த்தாயிற்று. மேல் களவு, கற்பு என, அக வொழுக்கத்தை இரண்டாகப் பகுத்துக் கூறுதலின், இவ்வியல் அகவொழுக்கத்தின் பொது விலக்கணம் கூறுவதாயிற்று. முதல் கரு உரிப்பொருள்களும், மக்களும், பிரிவிலக்கணமும் இரு வகைக் கைகோட்கும் பொதுவாத லறிக. அகவொழுக்க மாவது - ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டுக் காதல் கொண்டு, காதல் முதிர்ந்து மணஞ் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துதலாம். ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவர்களால் இத்தகையதெனக் கூறற் கியலாததாய், யாண்டும் உள்ளத்தளவே நுகர்ந்து இன்புறுவதோர் பொருளாகலின், அதனை அகம் என்றார். அகத்தே நிகழ்கின்ற இன்பத்தை அகம் என்றது இடவாகு பெயர். அகவாழ்வுக்குத் துணைசெய்யும் இடம், பொருள், ஏவல், கல்வி, அரசியல் முதலாய பொருள்கள் புறம் எனப்படும். ஒருவன் ஒருத்தியை யன்றி எல்லாரானும் துய்த்து உணரப் படும் - புறத்தே புலனாகும் - பொருளைப் புறம் என்றதும் இடவாகு பெயரேயாம். திணை என்பது ஒழுக்கம். அகத்திணை - அகவொழுக்கம் இயல் - இலக்கணம். அகத்திணைஇயல் - இன்ப வொழுக்கத்தின் இலக்கணம் என்றபடி. அது, அவ்வகத்திணையின் தொகுதியை யுணர்த்திற்று. இனி, இம்முதற் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், அகத் திணையின் வகையுணர்த்துதல் நுதலிற்று. நுதலுதல் - கருதுதல். உணர்த்துதல் நுதலிற்று - உணர்த்துதலைக் கருத்தாகக் கொண்டு நின்றதென்றவாறு. சூத்திரம், நூற்பா - ஒரு பொருட் கிளவி. இதன் பொருள்: முற்படக் கிளந்த - முதன்மை தோன்ற எடுத்துச் சொல்லப்பட்ட அகவொழுக்கங்கள், கைக்கிளை முதலா - கைக்கிளை என்னும் ஒழுக்கம் முதலாக, பெருந்திணை இறுவாய் - பெருந்திணை என்னும் ஒழுக்கம் ஈறாக, எழுதிணை என்ப - ஏழாகும் என்று கூறுவர். கிளந்த - கிளந்தவை: வினையாலணையும் பெயர். கிளந்தவை எழுதிணை என்று கூறுவர் என்பதாம். ‘என்ப’ என்றது - தொல் லாசிரியர்களை. முற்படக் கிளந்தது அன்னாரே. முதலும் ஈறும் கூறித் திணை ஏழெனவே, நடுவே ஐந்திணை உண்டென்பது தானே பெறப் படும். அவை - முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்பனவாம். கைக்கிளை - ஒருதலைக்காமம். கை - பக்கம். கிளை - கிளைத்தல், தோன்றுதல். அதாவது, ஆண்பால் பெண்பால் என்னும் ஒரு பக்கத்தே தோன்றும் அன்பென்க. பெருந்திணை - ஒவ்வாக்காமம். ஒவ்வாமை - பொருந்தாமை. கொடிய குட்ட நோய் - பெருநோய் எனவும், கொடிய வெடிகட்டி நோய் - பெருவாரிநோய் எனவும் வழங்குதல் போல, கொடிய தகா வொழுக்கம் - பெருந்திணை எனப்பட்டது. ‘ஏறிய மடற்றிறம்’ முதலிய நான்கும் (அகத் - 38) முரட்டுத் தன்மையுடையன வாகையால், அப்பெயர் பெற்ற தெனினுமாம். ஒரு தலைக் காமமாகிய கைக்கிளையை முதலிலும், ஒவ்வாக் காமமாகிய பெருந்திணையைக் கடையிலும், ஒத்த காமமாகிய ஐந்திணையை இடையிலும் வைத்தார். இயன் முறைப்படி. முதலும் ஈறுங் கூறி நடுவணைந் திணையைப் பெறவைத் தமையானது, ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்துக்குப் பன்னெடுநாள் முன்னரே இவ் வகவொழுக்கம் புலனெறி வழக்கில் நன்கு பயின்று வந்தமையைப் புலப்படுத்தும். இவ்வக வொழுக்கம் ஏழனுள், நடுநின்ற ஒத்த காமமாகிய ஐந்துமே ஒழுக்கம் என மேற்கொண் டொழுகும் அத்தகு சிறப்புடையவை யாகும். 1. கைக்கிளை 5. நெய்தல் 2. முல்லை 6. பாலை 3. குறிஞ்சி 7. பெருந்திணை 4. மருதம் என, அகத்திணை எழுவகைப்படும். (1) 2. ஒழுக்க நிகழிடம் 2. அவற்றுள், நடுவ ணைந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே. இ - ள்: அவற்றுள் - முற்கூறிய எழுதிணையுள், நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய - கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் நடுவில் நின்ற ஐந்தொழுக்கங்களுள், ஏனை நான்கற்கும் பொதுவான தாயுள்ள பாலை யொழுக்கம் ஒன்று நீங்கலாக ஏனை முல்லை முதலிய நான்கொழுக்கங்களும், படுதிரை வையம் பாத்திய பண்பு - ஒலிக்கும் கடல் சூழ்ந்த இந்நிலப் பரப்பு நான்காகப் பகுக்கப்பட்ட இயற்கையை யுடையதாயிருக்கிறது என்றவாறு. நடுவணது - பாலைத்திணை. பாத்தல் - பகுத்தல். பண்பு - இயற்கை. இதனால் தமிழகம் நானிலம் எனப்பட்டது. கைக்கிளை பெருந்திணைகட்கும், பாலைக்கும் நிலமின்று. அவை பகுக்கப் பட்ட நான்கு நிலத்தும் நிகழுமென்பதாம். ‘மாயோன் மேய’ (அகத். - 5) என்னும் நூற்பாவில், இன்ன ஒழுக்கம் இன்ன நிலத்தில் நிகழுமெனவும், அவற்றின் பெயரு முறையுங் கூறுவர். பாலைக்குத் தனிநிலமின்று. அது பொதுநில முடையது. அது, தனியாகப் பகுக்கப்படும் நிலமுமாகாது, முல்லை முதலியவற்றின் வேறுமாகாது, நடுநிலைத் தன்மையுடைய நிலமாகும் மென்பது. “ முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்தப் பாலை யென்பதோர் படிவங் கொண்ட காலை.” (சிலப் - 11: 64 - 7) என்பதாற் பெறப்படும். அதாவது, முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் வேனிற் காலத்தில் தம்மியல்பு திரிந்த தன்மையாகிய நடு நிகர்த்ததாய் நிற்றலின், நடுவணது எனப் பெயர் பெற்றது. மேலும், ‘நடுவுநிலைத்திணை’ (அகத் - 9) என ஆளுவர். இயல்பு திரிதலாவது - காடும் மலையும் கடு வெயிலால் மரஞ் செடி கொடிகள் உலர்ந்தும், நீர் நிலைகள் வறண்டும் வெப்ப மிகுதல். பாலை - பிரிவு என்பதறிக. பாலை - வளம் பிரிந்த நிலை. நெய்தலைப் ‘பெருமணலுலகம்’ (அகத் - 5) என்பதால், மணல் வெளி (பாலைவனம்) பாலை நில மாகாமை பெறப்படும். கைக்கிளை பெருந்திணை இந்நானிலத்துமே நிகழும் (அகத் - 12) (2) 3. மூவகைப் பொருள் 3. முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை. இ - ள்: பாடலுள் பயின்றவை நாடும் காலை - சான்றோர் பாடல்களிற் பயின்று வரும் கருத்துகளை ஆராயும் பொழுது நுவலுங்காலை - அவற்றைக் குறித்துச் சொல்லுங்கால், முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே - முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்ற மூன்று வகைகளே, முறை சிறந்தன - பொருத்த மிக்கனவாய் இருக்கின்றன. பொருள் என்பதை ஏனையவற்றோடும் கூட்டுக. நாடி நுவலுங்காலை - ஆராய்ந்து சொல்லுங்கால், முறை - பொருத்தம். சிறந்தன - மிக்கன. பயிலுதல் - தொன்று தொட்டுப் பாடப்பட்டு வருதல். முதற்பொருள் - இன்பம் எழுதற்கு அடிப்படையான பொருள். கருப்பொருள் - எழுந்த இன்பம் கருக் கொள்வதற்கு ஏதுவாயுள்ள பொருள். கரு - உரு. உரிப்பொருள் - எழுந்து கருவான இன்பம் முதிர்ந்து பயன்படுதற்குரிய பொருள். இவை மூன்றும் ஒன்றை யொன்று மிகவும் பொருந்தியுள்ளன என்பதாகும். இம்மூன்றும் அகவொழுக்கம் பற்றிப் பாடுதற்கு இன்றியமை யாதவை என்பது கருத்து. (3) 1. முதற்பொருளின் வகை 4. முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே. இ - ள்: முதல் எனப்படுவது - முதற்பொருள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது, நிலம் பொழுது இரண்டின் இயல்பு எனமொழிப - நிலமும் பொழுதும் என்னும் இரண்டின் இயற்கை என்று சொல்லுவர், இயல்பு உணர்ந்தோர் - அவற்றின் இலக்கணம் உணர்ந்தோர். நிலம் பொழுது என்னும் அவ்விரண்டின் இயல்புகளே இன்பந் தோன்றுவதற்கு அடிப்படையான காரணங்களாய் இருக்கின்றன என்பதாம். நிலமுதற்பொருள் காலமுதற் பொருள் என, முதற் பொருள் இருவகைத் தாயிற்று. நிலவியல்பை அடுத்த சூத்திரத்தினும், கால வியல்பை 6 - 11 சூத்திரங்களினும் அறிக. (4) 1. நிலமுதற்பொருள் 5. மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே. இது, முன்னர்ப் (அகத் - 2) பாத்திய வையத்தின் பெயரும் முறையும், அவற்றின் தலைவர்களும், அந்நிலங்களுக்குரிய ஒழுக்கங்களின் பெயரும் முறையும் கூறுகின்றது. இ - ள்: மாயோன் விரும்பிய காடு பொருந்திய நிலத்தையும், சேயோன் விரும்பிய முகிலுலாவும் மலைகள் பொருந்திய நிலத்தையும், வேந்தன் விரும்பிய இனிய நீர்வளம் பொருந்திய நிலத்தையும், வருணன் விரும்பிய மிக்க மணல் பொருந்திய நிலத்தையும் முறையே முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்று முன்னோர் சொல்லிய முறைப்படி சொல்லவும் படும் என்றவாறு. மேவுதல் - விரும்புதல்; விரும்பிக் காத்த என்றபடி. உலகம் - நிலப்பரப்பு. ‘காடு உறை உலகம்’ என்பதால், பண்டு தமிழகத்தின் அங்கங்கே காடுகள் (மரங்கள்) அமைந்திருக்குமாறு பாதுகாத்துப் போற்றிப் பயனடைந்து வந்தனர் என்பது புலனாகிறது. ‘மைவரை’ என்பதால், மலையின் பயன்களுள் முதன்மையானது ‘மழைவளஞ் சிறத்தல்’ என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர் என்பது தெரிகிறது. மலையிலிருந்தே ஆறுகள் தோன்றி வருதலை அறிக. மை -முகில். புனல் உலகம் - வயல். ‘புனல்’ என்ற அடையால், நீர்வளத்தில் மிக்க கருத்துடைமை விளங்குகிறது. ‘தீம்புனல்’ என்றார். உப்புத் தன்மையுள்ள கடல் நீரினின்றும் நீக்குதற்கு. பெருமணல் - மணல் மேடு. மணல்மேடு நீரினால் அமைவதால், ‘மணல் உலகம்’ என்றார் கடலையுஞ் சேர்த்து. மாயோன் முதலிய நால்வராலும் விரும்பிக் காக்கப்பட்டு வந்த காடுறை யுலகம் முதலிய நான்கும் முறையே முல்லை முதலிய பெயர்கள் பெறும் என்பதாம். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன ஒழுக்கம் பற்றிய பெயர்கள். ஒழுக்கத்தின் பெயர், அது நிகழும் நிலத்திற்கும் பெயரானது. முல்லை என்பது - இருத்தல் ஒழுக்கம் குறிக்கும் பெயர். அது காடுறை யுலகத்திற்கும் பெயரானமை அறிக. இன்னும், ‘முல்லை மலர்’ என, அந்நிலப் பூவுக்கும், ‘முல்லை யாழ்’ என, அந்நில மக்கள் யாழுக்கும் அது பெயராக வந்துள்ளமையுங் காண்க. முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்ததான அந்நிலத்திற்குப் பாலையென்று பெயரானதும், பாலை யொழுக்கத்தின் பெயரேயாகும். இதனால், பழந்தமிழ் மக்கள் உயிரினும் ஒழுக்கமே பெரிதெனக் கொண்டு போற்றி வந்தமை பெறப்படும். ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ (குறள் - 131) என்பது, இதனை வலியுறுத்தும். நிலம் பொழுது கருவி முதலிய பொருள்களை யெல்லாம் அவ்வொழுக்க நிகழ்ச்சியின் கருவிகளாகவே கொண்டுள்ளமையும் இதற்குச் சான்றாகும். 1. முல்லை - இருத்தல்; தலைவன் பிரியத் தலைவி ஆற்றியிருத்தல். ‘முல்லை சான்ற புறவு’ (மதுரை - 285) என்பதில், முல்லை - இருத்தல் என்னும் பொருளதே. பத்துப் பாட்டில் ஒன்றான முல்லைப்பாட்டு இருத்தல் ஒழுக்கம் பற்றியதே. முல்லை, இருத்தல் - ஒருபொருட் சொற்கள். 2. குறிஞ்சி - குறுகுதல், அணுகுதல், குறிஞ்சி, கூட்டம், அணுக்கம் - ஒருபொருட் சொற்கள். தழுவுதல் - தழிஞ்சி என்றானாற் போல, குறுகுதல் - குறிஞ்சி என்றானது. குறிஞ்சிப் பாட்டு புணர்தல் ஒழுக்கம் பற்றியதே. 3. மருவுதல் - மருதம். மருவுதல் - பொருந்துதல், தழுவியின் புறுதல். அதாவது, ஊடியும் உணர்ந்தும் கூடியும் இன்புறுதல். மரு - மணம், பொருந்துதல். ‘திருமணம்’ என்பதில், ‘மணம்’ என்பது இப்பொருள் தருதல் காண்க. 4. நெய்தல்: இது, ‘நெய்’ என்னும் வினையடியாகப் பிறந்த பெயர். நெய் - உருகு. நெய்தல் - உருகுதல். வெண்ணெய் உருகியானதாற்றான் நெய் எனப் பெயராயிற்று. தலைவன் வாராமையால் தலைவி மனம் உருகுதலால், இரங்குதலால் - நெய்தல் என்றாயிற்று. 5. பாலை: இது, ‘பால்’ என்பதன் அடியாகப் பிறந்த பெயர். பால் - பிரிவு. பாலை - பிரிவொழுக்கம். ஆண்பால் பெண்பால் என்பவற்றிலும் பால் பிரிவுப்பொருள் குறித்தல் காண்க. பாலை - தலைவன் தலைவியைப் பிரிதல். ‘முதுபாலை, பாலைநிலை’ (புறத் - 24) என்பன இப்பொருள் தருதல் காண்க. “ போக்கெல்லாம் பாலை, புணர்தல் நறுங்குறிஞ்சி” ஆக்கஞ்சே ரூடல் அணிமருதம், - நோக்குங்கால் இல்லிருத்தல் முல்லை, இரங்கல் நறுநெய்தல் சொல்லிறுத்த நூலின் றொகை.” என்னும் பழம்பாட்டினும் இவை ஒழுக்கமே குறித்தல் காண்க. போக்கு - பிரிவு. ஆக்கம் - இன்பமிகல். இல் - வீடு. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, என்னும் வைப்பு முறை - மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல் என்னும் சிறுபொழுது பற்றியதாகும். இது முதற்பொருள் பற்றிய வைப்புமுறை. மேல் (அகத் - 16) உரிப்பொருள் பற்றிக் குறிஞ்சி முதலாக வைத்தெண்ணினார். நானிலத்தலைவர் புணர்தல் முதலிய உரிப்பொருள்களைச் சிறப்பித்துப் பாடும் அகப்பாட்டுக்களில், அவ்வுரிப் பொருள்கள் நன்கு விளங்குதற் பொருட்டு, அவ்வுரிப் பொருட்குத் துணையாக அவை நிகழும் நிலம் பொழுதுகளாகிய முதற் பொருள்களையும், உணவு புள் மரம் முதலிய கருப்பொருள்களையும் அமைத்துப் பாடுதல் போல, அவ்வந் நிலமக்கள் தத்தம் நிலத் தலைவரை வாழ்த்தி வழிபடுவதாகப் பாடுதலும் உரிப்பொருளறிவுக்குத் துணை செய்வதாகும். மேலும், அந்நிலமக்கள் தங்கள் முன்னோர் சிறப்பை எடுத்துக் கூறி வாழ்த்தி வழிபடுமுகத்தான். தங்காலத் தலைவர்க்கும் அன்னார் குணஞ்செயல்களை எடுத்துக் கூறி வற்புறுத்தி, இவரையும் அவ்வாறு நடக்கும்படி ஊக்குவித்தற்கும் ஏதுவாகும். மாயோன் முதலிய நால்வரும், தொல்காப்பியர் காலத்திற்குப் பன்னெடுநாள் முன்னர். முல்லை முதலிய நிலங்களைச் சீருஞ் சிறப்புடன் ஆண்டு வந்த தமிழ்த் தலைவர்களே யாவர். இது குறித்தே, கருப்பொருளான இவரைக் கருப்பொருளுடன் கூறாது நிலமுதற் பொருளுடன் கூறியது மென்க. மாயோன் முதலிய பெயர்கள், சேர, சோழ, பாண்டியர் என்பதுபோல, அந்நிலத் தலைவர்கட்கு வழிவழியாக வழங்கி வந்த பெயர்களே யாகும். கருப்பொருள்களுள் ஒன்றான தெய்வம் என்பது (அகத் - 14) இந்நால்வரையுமே யாகும். (தொல்காப்பியர் காலத் தமிழர் - என்னும் நூலில், ‘தெய்வம்’ என்பதிற் காண்க.) இடம் நிலம் தலைவர் 1. காடும் காடுசார்ந்த இடமும் - முல்லை - மாயோன் 2. மலையும் மலைசார்ந்த இடமும் - குறிஞ்சி - சேயோன் 3. வயலும் வயல்சார்ந்த இடமும் - மருதம் - வேந்தன் 4. கடலும் கடல்சார்ந்த இடமும் - நெய்தல் - வருணன் காடு- - மரங்களடர்ந்த இடம். காடு சார்ந்த இடம்- புன்செய்க் காடுகள். மலைசார்ந்த இடம் - பக்கமலை, மலைச் சாரல். வயல் சார்ந்த இடம் - தோட்டம். கடல் சார்ந்த இடம் - கடற்கரை. (5) 2. கால முதற்பொருள் காலம் - பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும். 1. பெரும்பொழுது 1. கார்காலம் 4. பின்பனிக்காலம் 2. கூதிர்காலம் 5. இளவேனிற்காலம் 3. முன்பனிக்காலம் 6. முதுவேனிற்காலம் எனப் பெரும் பொழுது அறுவகைப்படும். கூதிர் - குளிர் - இது, கூதல் என வழங்குகின்றது. இவை யாறும் ஆவணி முதல் இரண்டிரண்டு மாதங்களாகும். 2. சிறுபொழுது 1. மாலை 4. காலை 2. யாமம் 5. நண்பகல் 3. வைகறை எனச் சிறுபொழுது ஐவகைப்படும். வைகறை - கோழி கூவும் நேரம். பெரும்பொழுது - பருவம் எனவும், சிறுபொழுது - பொழுது எனவும் வழங்கும். 1 - 2 முல்லை, குறிஞ்சி 6. காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர். இ - ள்: கார்காலமும் அதன் மாலைக்காலமும் முல்லை யொழுக்கத்திற்கு உரிய காலமாகும்; குளிர்காலமும் அதன் யாமமும் குறிஞ்சி யொழுக்கத்திற்கு உரிய காலமாகும் என்று சொல்லுவர் புலவர். (6) குறிஞ்சிக்குச் சிறப்புவிதி 7. பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப. இ - ள்: முன்பனிக் காலமும் குறிஞ்சியொழுக்கத்திற் குரிய தென்று சொல்லுவர். எதிர்தல் - முற்படல், முன்னதாதல். இதற்கும் சிறு பொழுது யாமமே யாகும். (7) 3 - 4 மருதம், நெய்தல் 8. வைகறை விடியல் மருதம்; ஏற்பாடு நெய்த லாதல் மெய்பெறத் தோன்றும். இ - ள்: வைகறைப் பொழுது மருதவொழுக்கத்திற்குரியது; காலைப் பொழுது நெய்தலொழுக்கத்திற்குரியது. வைகறையும் காலையும் அததற்குரிய ஒழுக்கவுணர்ச்சியைத் தவறாது உண்டாக்கும் என்பார், ‘மெய்பெறத் தோன்றும்’ என்றார். மெய்பெற - உண்மையாக. மற்றைக் காலங்கட்கும் இஃதொக்கும். வைகறை விடியல் - வைகறையாகிய விடியல்; இருபெயரொட்டு, எற்பாடு - காலைப்பொழுது. எல் - ஞாயிறு. படுதல் - உண்டாதல். எற்பாடு - பொழுது கிளம்பும் நேரம். ஊடலுக்குப் பெரும்பொழுது கூறாமை, ஊடல் மருத நிலத்தில் சிறுபொழுது காரணமாக உண்டாவது. அதாவது, நாடோறும் தலைவன் பிரிந்து செல்வதால் உண்டாவது. இரங்கலும் நாடோறும் நிகழ்தற்குரிய தாகலின், அதற்கும் பெரும்பொழுது கூறாதொழிந்தார். எனவே, இவ்விரு ஒழுக்கங்கட்கும் பெரும் பொழுது ஆறும் உண்டென்பது பெற்றாம். ஊடலும் இரங்கலும் பிரிவால் உண்டாவனவாகையால், பாலைக்குரிய பருவ மூன்றும் இவ்விரண்டற்கும் சிறப்புடையன வாகும். எற்பாடு பிற்பக லெனில், பிரிந்து சென்ற தலைவன் வரும் நேரமாகையால், இனி வருவான் எனத் தலைவி ஆற்றியிருக்குமே யன்றி இரங்காள். இரவு முழுவதும் தனித்துக் கண் துஞ்சாது கழித்த தலைவி, வைகறைப் பொழுது கழிந்து பொழுது கிளம்பும் நேரமான காலைப் பொழுது வரவே, இனிப் பகற் பொழுது கழிந்தன்றித் தலைவன் வாரான். இப்பாழும் பகல் எப்பொழுது கழியுமோ?’என எண்ணி யிரங்குவாள். எற்பாடு மாலைக்கு முன் எனில், தலைவன் வருவான் எனத் தலைவி ஆற்றியிருப்பாளா கையால், அது முல்லை யாகுமே யன்றி நெய்த லாகாது. (8) 5. பாலை 9. நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே. இ - ள்: நடுவுநிலைத் திணையே - நால்வகை யொழுக்கத் திற்கும் பொதுவான பாலை யொழுக்க மானது, நண்பகல் வேனிலொடு - நடுப்பகலும் இருவகை வேனிற் காலங்களும், முடிவு நிலை மருங்கின் - ஒத்து முடியும் நிலையை யுடையவாக, முன்னிய நெறித்து - ஆசிரியர் கருதிய முறையையுடையது. முன்னிய - கருதிய. நண்பகல் வேனிலொடு - நண்பகலும் வேனிலும். அதாவது, வேனிற் காலங்களும் அக்காலத்து நண்பகலும். வேனிற் காலத்து நண்பகல் வெப்ப மிகுதியால், பாலை யொழுக்கத் திற்குச் சிறப்பாயிற்று. பாலைக்குத் தனியாக நில மின்மையான், காலமும் கருப் பொருளுங் கொண்டு ஆசிரியர் கருதப்பட்ட நிலை யையுடையது என்பார், ‘முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்து’ என்றார். இருவகை வேனிற் காலமும், அவற்றின் நண்பகலும் பாலை யொழுக்கத்திற்குரியவாகும். (9) இதுவுமது 10. பின்பனி தானும் உரித்தென மொழிப. இ - ள்: பின்பனிக் காலமும் பாலைக்குரியதென்று சொல்லுவர் புலவர். இதற்கும் சிறுபொழுது நண்பகலேயாம். (10) 6. பின்பனியின் சிறப்பு 11. இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றினும் உரிய தாகும் என்மனார் புலவர். மேல், பாலைக்குப் பின்பனிக் காலமும் உரித்தென்று வாளா கூறினதைக் காரணங் காட்டி விளக்குகின்றது இச் சூத்திரம். இ - ள்: இருவகைப் பிரிவும் - காலிற் பிரிவும் கலத்திற் பிரிவும், நிலைபெறத் தோன்றினும் - உள்ளத்தளவாய் நில்லாமல் நிலையாகச் செயலளவில் தோன்றினும், உரியதாகும் என்மனார் புலவர் - அவ்விருவகைப் பிரிவுக்கும் பின்பனிக் காலம் உரியதாகும் என்று சொல்லுவர் புலவர். காலிற் பிரிவு - நிலத்தின் வழியாகத் தேர் முதலியவற்றிற் பிரிந்து செல்லுதல். கலத்திற் பிரிவு - கடல் வழியாகக் கப்பலிற் பிரிந்து செல்லுதல். ‘பின்பனி’ என்பது, அதிகாரத்தால் வந்தது. அடுத்து வரும் இளவேனிற் பருவத்தே பிரிய வேண்டுமென எண்ணிக் கொண்டிருத்தல், பின்பனிப் பருவத்திலேயே பிரிய வேண்டி நேரினும், அப்பருவம் இருவகைப் பிரிவிற்கும் உரித்தென்றபடி. அதாவது, அடுத்து வரும் இளவேனிற் பருவத்தே தலைவியை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டுமெனப் பின்பனிக் காலத்திலேயே எண்ணுதல் தலைவற் கியல்பு. அவ்வாறு எண்ணுதலே யன்றி, அப்பின்பனிக் காலத்திலேயே பிரிந்து செல்லுதலும் உண்டு என்பதாம். எனவே, பின்பனிக் காலமும் பாலைக்குரிய தென்றாயிற்று. ஒழுக்கம் பெரும்பொழுது சிறுபொழுது 1. முல்லை - கார் - மாலை 2. குறிஞ்சி - கூதிர் - முன்பனி - யாமம் 3. மருதம் - 6 பருவமும் - வைகறை 4. நெய்தல் - 6 பருவமும் - காலை 5. பாலை - பின்பனி இளவேனில் முதுவேனில் - நண்பகல் (11) 7. கைக்கிளை, பெருந்திணை நிகழ்ச்சி 12. உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே. இ-ள்: உரிப்பொருள் அல்லன - உரிப்பொருளாகிய ஐந்திணையும் அல்லாத கைக்கிளையும் பெருந்திணையும், மயங்கவும் பெறும் - ஐந்திணைக்குக் கூறிய நிலம் பொழுதுடன் மயங்கி வரவும் பெறும். இவ்விரு ஒழுக்கங்களும் ஐந்திணைக்கும் உரிய நிலம் பொழுதென்னும் முதற்பொருளே தமக்கு முதற் பொருளாகக் கொண்டு நிகழுமென்பதாம். தகாவொழுக்கங்களாகிய கைக்கிளையும் பெருந்திணையும், நானிலத்தும் ஒரு சிலரிடத்து நிகழ்வன வாகையால், அவற்றிற் குரியனவே இவற்றிற்கும் உரியவெனத் தந்துரைத்தார். உரிப் பொருள் - காதலன்பிற் குரிய பொருள். அல்லன் - காதலன்பிற் குரியவல்லாப் பொருள். (12) 8. முதற்பொருட்குப் புறனடை 13. முதலெனப் படுவ தாயிரு வகைத்தே. இ - ள்: முதற்பொருளென்று கூறப்படுவது நிலமும் பொழுதும் என முன் சொன்ன அவ்விருவகையேயாம். இது, கூறிற்றென்னும் உத்தியால், முதற்பொருளைத் தொகுத்துக் கூறியது. இதனால், நிலம் பொழுதில்லாக் கைக்கிளை பெருந்திணைக்கு, அவை மயங்கிய நிலமும் பொழுதுமே முதலெனப்படும் எனபதூஉம் பெறப்படும். நிலமில்லாப் பாலைக்கும் இது பொருந்தும். (13) 2. கருப்பொருள் 14. தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவுங் கருவென மொழிப. இ - ள்: தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் என்பனவும், பிறவும் கருப்பொருள்கள் ஆகும் என்று சொல்லுவர். பிற - பூ, நீர், ஊர் முதலியன. மக்களுங் கொள்க. மரம் உண்மையால் பூவும் உண்டு. ‘எந்நில மருங்கிற் பூவும் (அகத் - 15) என, ஆசிரியரே கொண்டுள்ளார். நிலம் எனில் நீருண்டு. மக்கள் அந்நிலத்து வாழ்வோரே. (14) கருப்பொருள் மயக்கம் 15. எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும். இ - ள்: எந்நில மருங்கின் பூவும் புள்ளும் - நானிலங்களில் ஒரு நிலத்துக்குரிய பூவும் புள்ளும், அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் - தத்தமக்கு உரியவாகக் கூறிய நிலத்தொடும் காலத்தொடும் நடவாமல் பிற நிலத்தொடும் காலத்தொடும் நடப்பினும், வந்த நிலத்தின் பயத்த ஆகும் - அவை வந்த நிலத்தின் கருப்பொருள் களாகக் கொள்ளப்படும் என்றவாறு இன்னின்ன நிலத்திற்கு இன்னின்ன பூவும் புள்ளும் உரியவென வரையறை செய்யப்பட்ட வேனும், அவை அந்நிலத்தே யன்றி வேறு நிலத்திலும் இருத்தல் உண்டு. மருதத்துத் தாமரை மலைச்சுனையிலும் மலர்தலுண்டு. குறிஞ்சி மயில் முல்லை. நிலத்திலும் உண்டு. இங்ஙனமே ஒவ்வொரு காலம் ஒவ்வொரு பூவுக்கும் புள்ளுக்கும் சிறப்புறுதலுண்டு. வேனிலும் காலையுந் தாமரைக்குச் சிறந்த காலம். காரும் மாலையும் மயிலுக்குச் சிறந்த காலம். எனினும், மற்றக் காலங்களிலும் தாமரை பூத்தலும் மயில் ஆடலும் உண்டு. இவ்வியற்கையின் படியே புலனெறி வழக்கில், ஒரு நிலத்துக் குரிய பூவும் புள்ளும் வேறு நிலம் பொழுதொடு சேர்த்துப் பாடப்படின், அந்நிலத்துக்குரிய கருப்பொருளாகவே கொள்ளப் படும் எனக் கருப்பொருள் மயக்கங் கூறிற்று இச்சூத்திரம். மாவும் பிறவும் மயங்குதலுங் கொள்க. கருப்பொருள் கரு முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை உணா வரகு தினை செந்நெல் மீன் விலை ஆறலைத்தல் சாமை ஐவன நெல் வெண்ணெல் உப்பு விலை சூறை கோடல் முதிரை மூங்கிலரிசி மா உழை புலி எருமை முதலை வலியிழந்த யானை புல்வாய் யானை நீர்நாய் சுறா வலியிழந்த புலி முயல் கரடி வலியிழந்த செந்நாய் மரம் கொன்றை அகில், ஆரம் வஞ்சி புன்னை வற்றிய இருப்பை குருந்து தேக்கு, காஞ்சி ஞாழல் வற்றிய ஞமை திமிசு மருதம் கண்டல் வற்றிய உழிஞை வேங்கை வற்றிய ஞெமை புள் கானக் கோழி கிளி, மயில் தாரா அன்னம் கழுகு சிவல் நீர்க்கோழி அன்றில் பருந்து புறா பறை ஏறுகோட் முருகியம் மணமுழவு மீன் கோட் சூறை கோட்பறை பறை தொண்டகம் நெல்லரி கிணை பறை நிரை கோட் பறை தொழில் நிரை தேனழித்தல், நாற்று நடுதல் மீன் பிடித்தல் ஆறலைத்தல் மேய்த்தல் கிழங் கெடுத்தல் களைகட்டல், உப்பு விளைத்தல், சூறை கோடல் வரகு முதலியன தினை விளைத்தல் நெல்லறுத்தல் அவை விற்றல் களை கட்டல், கிளி கடிதல் கடா விடுதல் கடா விடுதல் யாழ் முல்லை யாழ் குறிஞ்சி யாழ் மருத யாழ் நெய்தல் யாழ் பாலை யாழ் பூ முல்லை, பிடவு காந்தள் தாமரை கைதை, நெய்தல் மரா, குரா தளவு, தோன்றி வேங்கை கழுநீர் பாதிரி நீர் கான்யாறு மலையருவி ஆறு, குளம் மணற் கிணறு அறுநீர்க் கூவல் சுனை மனைக் கிணறு உவர்க் குழி சுனை ஊர் பாடி, சேரி சிறுகுடி ஊர் பட்டினம் பறந்தலை பள்ளி குறிச்சி பாக்கம் முகவுரை உலக மொழிகளுள் முதன்மையும் முதுமையும், இளமையும் வளமையும், சீர்மையும் நீர்மையும், தனிமையும் இனிமையும், இயல்பும் எளிமையும் உடைய உயர்தனிச் செம்மொழி தமிழ் மொழி யொன்றே யாகும். இத்தகு தகுதியுடைமை குறித்தே, ‘தன்னே ரிலாத தமிழ்’ என்றார், ஒரு புலவர் பெருமகனார். இத்தகு பெருமையோடு தமிழ்மொழி, கடல் பரந்தன்ன இலக்கியப் பரப்பும், இலக்கண வரையறையும் உடையவொரு மொழியாகும். தமிழ்மொழி போல இலக்கண வரையறையுடைய மொழி யொன்று இன்றெனத் துணிந்து கூறலாம். இன்று நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள் மிகப் பழமையானது தொல்காப்பியமே யாகும். தொல்காப்பியம் ஒரு பழந்தமிழ்ப் பேரிலக்கண நூலாகும். தொல்காப்பியம் தோன்றிய காலந்தொட்டுத் தமிழ் மக்கள் அதன் ஆணைக்குட்பட்டே நூல் செய்து வருகின்றனர். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களெல்லாம் அதன் ஆணைக்குட்பட்டனவே யாம். தொல்காப்பியத்தைவிடச் சிறந்த நூலொன்று - அத்தகு அகலமும் ஆழமும், அருமையும் பெருமையும், திட்பமும் நுட்பமும், செறிவும் நிறைவும் உடைய நூலொன்று - உலகின் கண் வழங்கும் வேறு எந்த ஒரு மொழியினும் இல்லை என்பது, ஆராய்ச்சி அறிஞர்கள் ஆய்ந்து கண்ட முடிந்த முடிவாகும். எனவே, தொல் காப்பியம் ஓர் ஒப்பிலா உயர்தமிழ் நூலென்பது தெள்ளத் தெளிந்த உண்மையாம். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் பிரிவினை யுடையது தொல்காப்பியம். ஒவ்வோர் அதிகாரமும் தனித்தனி ஒன்பதொன்பது இயல்களை யுடையது. தொல்காப்பிய நூற்பாத் தொகை - 1610. அவையாவன: 1. எழுத்ததிகாரம் இயல் நூற்பா இயல் நூற்பா 1. நூன்மரபு 33 6. உருபியல் 30 2. மொழி மரபு 49 7. உயிர் மயங்கியல் 93 3. பிறப்பியல் 20 8. புள்ளி மயங்கியல் 110 4. புணரியல் 40 9. குற்றியலுகரப் புணரியல் 78 5. தொகை மரபு 30 483 2. சொல்லதிகாரம் 1. கிளவியாக்கம் 61 6. வினையியல் 51 2. வேற்றுமையியல் 22 7. இடையியல் 48 3. வேற்றுமை மயங்கியல் 35 8. உரியியல் 98 4. விளிமரபு 37 9. எச்சவியல் 67 5. பெயரியல் 43 462 3. பொருளதிகாரம் 1. அகத்திணையியல் 55 6. மெய்ப்பாட்டியல் 27 2. புறத்திணையியல் 36 7. உவமவியல் 37 3. களவியல் 50 8. செய்யுளியல் 243 4. கற்பியல் 53 9. மரபியல் 110 5. பொருளியல் 54 665 எழுத்ததிகாரம் 483 சொல்லதிகாரம் 462 பொருளதிகாரம் 665 ஆக - 1, 610 தொல்காப்பியத்தின் பழைய உரையாசிரியர்களுள் - இளம் பூரணர், பிறப்பியல் 20 வது சூத்திரத்தின் ஈற்றடியிரண்டையும் தனிச் சூத்திரமாகக் கொண்டுள்ளார். சேனாவரையர், வேற்றுமை மயங்கில் 32, 33 ஆகிய இரு சூத்திரங்களையும் ஒரு சூத்திர மாகவும், உரியியல் 7, 15 ஆகிய இரு சூத்திரங்களையும் நான்கு சூத்திரங்களாகவும் கொண்டுள்ளார். நச்சினார்க்கினியர், கிளவி யாக்கம் 54 வது சூத்திரத்தின் முதலடியைத் தனிச் சூத்திரமாகக் கொண்டுள்ளார். இம் மூவர் கொள்கைப்படி 1, 613 சூத்திரங்கள் ஆகின்றன. எழுத்ததிகாரத்தில் தமிழ் எழுத்துக்களின் இலக்கணமும், சொல்லதிகாரத்தில் சொற்களின் இலக்கணமும், பொருளதி காரத்தில் பொருள்களின் இலக்கணமும் கூறப்படுகின்றன. பொருளதிகாரச் செய்யுளியலில் செய்யுளிலக்கணமும், உவம வியலில் அணியிலக்கணமும் கூறப்படுவதால், தொல்காப்பியம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் தமிழிலக்கணம் ஐந்தும் கூறும் ஒரு பழந்தமிழ் இலக்கண நூலாகும். சொற்களாற் பொருளமை த்துச் செய்யப் படுவதே செய்யுள்; செய்யுளின் சொல் பொருள் அமைதியே அணி. எனவே, யாப்பணிகளைப் பொருளிலக்கணப் பகுதியாகவே கொண்டனர் ஆசிரியர். பொருளிலக்கணம் ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கை முறை அல்லது ஒழுக்கமுறை - உலக வழக்கு எனப்படும். தீமை கலவாத தனித்த நற்பொருள் ஒன்றும் உலகில் இல்லாமை போல, மக்களுள்ளும் ஒரு சிலரிடைத் தீய ஒழுக்கம் கலந்து நிகழ்தல் இயல்பே. எனவே, அத்தகு தீய ஒழுக்கம் மிகா திருத்தற் பொருட்டும், நன்மக்கள் ஒழுகும் நல்லொ ழுக்கமே ஒழுக்கமாகக் கொண்டு ஏனையோரும் ஒழுகும் பொருட்டும், நாட்டின் பல்வேறிடங்களில் வாழும் மக்களும் ஒரே நிகர்த்தாய் ஒழுகும் பொருட்டும், நன்மக்கள் வாழும் அந் நல்வாழ்க்கை முறைகளை மொழியியல்புக் கேற்ப அழகுறச் செய்யுளாகச் செய்வது - செய்யுள் வழக்கு எனப்படும். உயரிய உலக வழக்கே செய்யுள் வழக்கு ஆகையால், அச் செய்யுள் வழக்கு ஒரே தன்மையாய் இருத்தற் பொருட்டு வரையறை செய்வது - பொருளிலக்கணம் எனப்படும். மக்கள் வாழ்க்கை முறை - அறம் பொருள் இன்பம் என முக்கூறுபடும். இம் முக்கூற்றை யும் பற்றி அமைவுற விளக்கிக் கூறுவதனாற்றான் திருக்குறள் - முப்பால் எனப்பட்டது. அறம் பொருள் இன்பம் என்னும் இம் முப்பொருளுமே தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகம், புறம் என வகுத்துக் கூறப்படுகின்றன. அகம் - அகப்பொருள், அகத்திணை எனவும், புறம் - புறப்பொருள், புறத்திணை எனவும் வழங்கும். இன்பம் அகத்திணையிலும், அறமும் பொருளும் புறத்திணையிலும் அடங்கும்; தலைவனும் தலைவியும் அறத்தின் வழிப்பட் டொழுகலான், அறம் ஒருபுடை அகச்சார் புடையதும் ஆகும். உலக வழக்கை யொட்டிச் செய்யுள் செய்யும் சான்றோர்கள் நாட்டின் பல்வேறிடங்களில் வாழ்வோராகலான், ஓரிடத்துக் கோரிடம் மொழி வழக்கு மாறுபடுதல் கூடும். அங்ஙனம் மொழி வழக்கு மாறுபடின், அம்மொழியாற் செய்யப்படும் செய்யுள் வழக்கும் மாறுபடும். செய்யுள் வழக்கு மாறுபடின், அச் செய்யுளைப் பயிலும் மக்கள் வாழ்க்கை முறையிலும் மாறுபா டுண்டாவதோடு, அச் செய்யுள் வழக்கையே துணையாகக் கொண்டொழுகும் பிற்கால மக்களின் வாழ்க்கை முறை புதியதோர் நிலையினை அடைந்துவிடும். ஆதலால், தமிழ்கூறு நல்லுலகத்து மொழிவழக்கு மாறுபடாது ஒரே நிலையாய் இருத்தற்பொருட்டுச் சொல் வரையறையும், சொன்னிலை மாறுபடா திருத்தற் பொருட்டு எழுத்து வரையறையும் செய்தல் இன்றியமையாத தொன்றாகும். சொல் வரையறை - சொல்லிலக்கணம். எழுத்து வரையறை - எழுத்திலக்கணம். எனவே, பொருளிலக்கணம் உலக வழக்கை ஒரே நிலையில் இயலும்படி செய்தலானும், சொல்லிலக்கணமும், எழுத்திலக்கணமும் பொருளிலக்கணத்தை அறிதற்குக் கருவியான மொழியியல்பை ஒரு நெறிப் படுத்துதலானும் - எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம் என்னும் மூன்றும் மக்களின் வாழ்வியலுக்கு இன்றியமையாதவை யாயின. இம் முறைப்படி செய்யப்பட்ட தொரு பழந்தமிழ் இலக்கண நூலே தொல்காப்பியம். தொல்காப்பியம் என்னும் இப்பழந்தமிழ்ப் பேரிலக்கண நூல், தொல்காப்பியர் என்னும் பழந்தமிழ்ப் பெரும் பேராசிரியராற் செய்யப்பட்ட தாகும். ‘ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர்’ எனப் புலவர் பெருமக்களாற் புகழ்ந்து பாராட்டிப் போற்றப்படும் அத்தகு பெருமை யுடையவராவர் ஆசிரியர் தொல்காப்பியனார். பழைய உரை இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், கல்லாடர், தெய்வச்சிலையார் என்னும் அறுவர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியுள்ளனர். இவர்கள், கி. பி. 9ஆம் நூற்றாண்டிற்கும் 13 ஆம் நூற்றாண்டிற்கும் இடைக் காலத்தே இருந்தவராவர். இவர்களுள் இளம்பூரணர், போராசிரியர், நச்சினார்க்கியர் என்னும் மூவரும் பொருளதி காரத்திற்கு உரையெழுதி யுள்ளனர். இவர்கள் உரைகள் நூலோடு ஒப்ப மதிக்கப்படும் அத்தகு மேம்பாட்டினை யுடையவாகும். எனினும், அவ்வுரைகள், இக்காலத் தமிழ் மக்கள் யாவரும் எளிதிற் புரிந்துகொள்ள முடியாத அத்தகு நிலையில் உள்ளமையால், இக்காலத்திற் கேற்ற முறையில் தொல்காப்பியத்திற்கு ஓர் உரை தேவை என்பது தமிழ்மக்கள் விரும்புவதொன்றாகும். தமிழ் மக்களின் அவ் விருப்பத்திற்கேற்ப, அத்தகு முறையில், எழுநூறு ஆண்டுகட்குப் பின்னர் எழுந்ததே யாகும், குழந்தையுரை என்னும் இவ்வுரை. வைப்பு முறை: தொல்காப்பியச் சூத்திரங்களின் வைப்பு முறை இக்காலத்தினர் எளிதில் இயைபு படுத்திக் கற்றறிய முடியாத அத்தகு நிலையில் உள்ளது. எடுத்துக் காட்டாக, இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என்னும் களவின் வகை கூறும் சூத்திரம், செய்யுளியலின் 186வது சூத்திரமாக உள்ளது. இது களவி யலின் முதலில் இருக்க வேண்டும். அப்போது தான் அவ் வகைகள் பற்றிய இலக்கணங்களைக் கற்றுணர்தற்கு எளிதாக இருக்கும். ஆனால் அது களவியலின் தொடக்கத்திலிருந்து 406 வது சூத்திரமாக உள்ளது. இது மிகமிகச் சேய்மைநிலை யுடையதாகும். இவ்வாறே கற்பின் வகைகூறும் ‘மறை வெளிப் படுதலும்’ என்னும் சூத்திரம், செய்யுளியலின் 187 வது சூத்திரமாக உள்ளது. இது கற்பியலின் தொடக்கத்திலிருந்து 347 வது சூத்திரங்கட் கப்பாலுள்ள தாகும். இவ்வாறு இடமாறியும், மிகச் சேய்மை நிலையிலும் உள்ள சூத்திரங்களெல்லாம் அவை இருக்க வேண்டிய இடங்களில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. களவு, கற்பியல்களின் வழு வமைக்கும் பொருளியற் சூத்திரங்களை அவ்வவ்வியல்களில் ஆங்காங்கே சேர்க்கப் பட்டுள்ளன. பொதுவழு வமைக்கும் பொருளியற் சூத்திரங்கள், கற்பியலிலுள்ள கூத்தர் முதலியோர் கூற்றுச் சூத்திரங்கள், செய்யுளியலிலுள்ள களவு கற்புக்குரிய கூற்றுச் சூத்திரங்கள், மரபியிய லிலுள்ள நாற்பான் மரபுச் சூத்திரங்கள் முதலியவற்றை - 1. நாற்பான்மரபு, 2. கூற்று, 3. கேட்போர், 4. வாயில்கள், 5. கூறுதல், 6. வழுவமைதி, 7. வழக்கு, 8. முறைப் பெயர் என்னும் தலைப்புக்களிற் சேர்த்து, பொதுவியல் என்னும் பெயரில் அவ்வியல் அகத்திணையியலை அடுத்து வைக்கப் பட்டுள்ளது. அகத்திணையியலிலுள்ள உள்ளுறை யுவமங் கூறும் சூத்திரங்களும், பொருளியலிலுள்ள இறைச்சி கூறும் சூத்திரங்களும் உவமவியலில் சேர்த்து முறை செய்யப்பட்டுள்ளன. களவியலில் இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என்னும் பலவிடங்கட்குரிய தலைவன் கூற்றுக்கள் ஒரே சூத்திரத்திற் கூறப்பட்டுள்ளன. இவ்வாறே கற்பியலின் மலிவு, புலவி, ஊடல், உணர்வு பிரிவுகட் குரிய கூற்றுக்களும் ஒரே சூத்திரத்திற் கூறப்பட்டுள்ளன. இங்ஙனமே, பல விடங்கட்குரிய தலைவி, தோழி, செவிலி முதலியோர் கூற்றுக்களும் ஒரோவோர் சூத்திரங்களிற் கூறப்பட்டுள்ளன. இவற்றை அவ்வவ் விடத்தின்கண் படுத்துணர்தல் அவ்வளவு எளிதாக இல்லை. எனவே, அக்கூற்றுச் சூத்திரங்களை அவ்வவ் வியல்களில் ஓரிடத்தில் எழுதி, அந்தந்த இடங்கட் குரிய கூற்றுக்களை அங்கங்கே எடுத்தெழுதி உரை எழுதப் பட்டுள்ளது. அகத்திணையியல் 41ஆம் சூத்திரத்தில் உள்ள தலைவன் கூற்றுக்கள் 17இல், 6 களவின் உடன் போக்கிற்கும், அடுத்த 11உம் கற்பின் பிரிவுக்கும் உரியவையாகும். எனவே, அச் சூத்திரத்தை இரண்டாக்கி, அந்தந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதனாலேயே ஒரு சூத்திரம் மிக்கது. இப்புதிய உரைக்கேற்ற வைப்பு முறைப்படி இயல்களும், அவற்றின் நூற்பாத் தொகையும் வருமாறு. முதற்பகுதி அடுத்த இயல்கள் 1. அகத்திணையியல் 45 1. உவமவியல் 46 2. பொதுவியல் 73 2. செய்யுளியல் 221 3. களவியல் 71 3. மரபியல் 101 4. கற்பியல் 46 368 5. மெய்ப்பாட்டியல் 27 298 6. புறத்திணையியல் 36 ஆகப் பொருளதிகார 298 நூற்பாக்கள் 666 மேலும், கூற்றுக்கள் நன்கு விளங்குதற் பொருட்டு, அவ்வவ் விடங்கட் குரிய கூற்றுக்களை ஆங்காங்கு முதலில் வரிசையாக எழுதிப் பின்னர் உரை எழுதப்பட்டுள்ளது. மேற்கோட் செய்யுட்களில் அவ்வவ் வெடுத்துக் காட்டுக்குரிய பகுதிமட்டும் எடுத்துக் காட்டி விளக்கப்பட்டுள்ளது. சில துறைகளுக்கு எடுத்துக்காட்டுச் செய்யுட்கள் (குழந்தை) செய்துள்ளனன். பெரும்பாலும் சங்க இலக்கியங் களிலிருந்தே எடுத்துக் காட்டுத் தரப்பட் டுள்ளதால், இவ்வுரையைக் கற்கத் தொடங்குமுன் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐந்குறுநூறு, கலித்தொகை முதலிய சங்க இலக்கியங்களை ஒருமுறை படித்தல் ஏற்புடைத்தாகும். இவ்வுரைநூற் சூத்திரங்களிற் கூறப்படும் அகம் புறம் பற்றிய செய்திகளைத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் விளக்கியும் ‘தொல் காப்பியர் காலத் தமிழர்’ என்னும் பெயரில் என்னால் எழுதப் பட்டுள்ள உரைநடை நூல், இவ்வுரை பயிலுதற்குப் பெருந்துணை செய்வதொன்றாகும், எனவே, இவ்வுரையைப் பயில்வதற்கு அந்நூலைத் துணையாகக் கொள்ளுதல் இன்றியமையாததாகும். பொருளதிகாரப் பொருளினை யுணர்ந்து, நம் முன்னோராகிய அக்காலத் தமிழ்மக்களின் வாழ்க்கை வரலாற்றினை அறிந் தின்புறுதற்கு, இவ்வுரை இயன்ற அளவு பயன்படுமென நம்பி, இவ்வுரையினைத் தமிழ்மக்களின் உடைமையாக்குகின்றனன். பவானி 16 - 2 - 68 அன்புள்ள, குழந்தை. தொல்காப்பியம் பொருளதிகாரம் குழந்தையுரை முதலாவது அகத்திணையியல் 1. அகத்திணையின் வகை 1. கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை யென்ப. நிறுத்த முறையானே பொருளினது இலக்கணம் உணர்த்தினமையின் இது, பொருளதிகாரம் என்னும் பெயர்த்தாயிற்று. இது, புலியின் வடிவம் பொறித்த கொடியைப் புலிக்கொடி என்றாற் போன்ற குணியாகு பெயர். அதிகாரம் - ஆட்சி. நிறுத்த முறை - எழுத்து சொல் பொருள் என முன் கொண்டு நிறுத்திய முறை. பொருளாவன: அகப்பொருளும் புறப்பொருளும், அவற்றின் பகுதியாகிய முதல் கரு உரிப்பொருள்களுமாம். அகம் புறம் என்பனவே, அறம் பொருள் இன்பம் என வேறு வகையான் வழங்கப்படுதலின், அவையும் இவையேயாம். இன்பம் அகத்தினும், அறமும் பொருளும் புறத்தினும் அடங்கும். ‘இன்பமும் பொருளும் அறனுமென் றாங்கு’ (கள - 1) என, ஆசிரியர் ஆளுதல் காண்க. இனி, இயற்கைப் பொருள் செயற்கைப் பொருள், காட்சிப் பொருள் கருத்துப் பொருள், உயர்திணைப் பொருள் அஃறிணைப் பொருள், பொதுப் பொருள் சிறப்புப் பொருள் முதலிய பொருட் கூறுபாடுக ளெல்லாம் இவ்விரண்டனுள் அடங்குமென்க. எல்லாப் பொருளும் அடங்கு மென்பது குறித்தே, பொருள் அதிகாரம் எனப் பெயர் வைத்தனர். எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் உணர்த்தி அச்சொல் கருவியாக உணரும் பொருளிலக்கணம் உணர்த்தலின், மேலதிகாரத் தோடு இயைபுடையதாயிற்று. நிறுத்த முறைப்படி உணர்த்துதலின் இயைபுடைத்தாயிற் றெனினுமாம். மக்கள் வாழ்க்கை முறையை, அகத்திணை புறத்திணை என இரு திணைகளாகவும், அத்திணை ஒவ்வொன்றையும் எவ்வேழ் பால்களாகவும், ஒவ்வொரு பாலையும் பல துறைகளாகவும் பாகுபடுத் திலக்கண முணர்த்தியும், அப்பொருள்களின் மரபிலக் கணமும், அவற்றைப் பாடுதற்குரிய செய்யுளிலக்கணமும், உணர்த்தியும் அத்தொகுதிக்குப் பொருளதிகாரம் எனப் பெயரிட்டமையின் இது, சிறந்ததோர் வழக்கு நூலென்பது பெறப்படும். ஆசிரியர் இந்நூல் செய்ததிலிருந்து, தமிழ்ப் புலனெறி வழக்கம் இதன்கட்பட்டே நடந்து வருதலும் இதற்குச் சான்றாகு மென்க. இனி, அகம் புறம் என்னும் இருவகை ஒழுக்கத்தினுள், அக வொழுக்கம் உணர்த்துதலான் இவ்வியல், அகத்திணையியல் என்னும் பெயர்த்தாயிற்று. மேல் களவு, கற்பு என, அக வொழுக்கத்தை இரண்டாகப் பகுத்துக் கூறுதலின், இவ்வியல் அகவொழுக்கத்தின் பொது விலக்கணம் கூறுவதாயிற்று. முதல் கரு உரிப்பொருள்களும், மக்களும், பிரிவிலக்கணமும் இரு வகைக் கைகோட்கும் பொதுவாத லறிக. அகவொழுக்க மாவது - ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டுக் காதல் கொண்டு, காதல் முதிர்ந்து மணஞ் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துதலாம். ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவர்களால் இத்தகையதெனக் கூறற் கியலாததாய், யாண்டும் உள்ளத்தளவே நுகர்ந்து இன்புறுவதோர் பொருளாகலின், அதனை அகம் என்றார். அகத்தே நிகழ்கின்ற இன்பத்தை அகம் என்றது இடவாகு பெயர். அகவாழ்வுக்குத் துணைசெய்யும் இடம், பொருள், ஏவல், கல்வி, அரசியல் முதலாய பொருள்கள் புறம் எனப்படும். ஒருவன் ஒருத்தியை யன்றி எல்லாரானும் துய்த்து உணரப் படும் - புறத்தே புலனாகும் - பொருளைப் புறம் என்றதும் இடவாகு பெயரேயாம். திணை என்பது ஒழுக்கம். அகத்திணை - அகவொழுக்கம் இயல் - இலக்கணம். அகத்திணைஇயல் - இன்ப வொழுக்கத்தின் இலக்கணம் என்றபடி. அது, அவ்வகத்திணையின் தொகுதியை யுணர்த்திற்று. இனி, இம்முதற் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், அகத் திணையின் வகையுணர்த்துதல் நுதலிற்று. நுதலுதல் - கருதுதல். உணர்த்துதல் நுதலிற்று - உணர்த்துதலைக் கருத்தாகக் கொண்டு நின்றதென்றவாறு. சூத்திரம், நூற்பா - ஒரு பொருட் கிளவி. இதன் பொருள்: முற்படக் கிளந்த - முதன்மை தோன்ற எடுத்துச் சொல்லப்பட்ட அகவொழுக்கங்கள், கைக்கிளை முதலா - கைக்கிளை என்னும் ஒழுக்கம் முதலாக, பெருந்திணை இறுவாய் - பெருந்திணை என்னும் ஒழுக்கம் ஈறாக, எழுதிணை என்ப - ஏழாகும் என்று கூறுவர். கிளந்த - கிளந்தவை: வினையாலணையும் பெயர். கிளந்தவை எழுதிணை என்று கூறுவர் என்பதாம். ‘என்ப’ என்றது - தொல் லாசிரியர்களை. முற்படக் கிளந்தது அன்னாரே. முதலும் ஈறும் கூறித் திணை ஏழெனவே, நடுவே ஐந்திணை உண்டென்பது தானே பெறப் படும். அவை - முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்பனவாம். கைக்கிளை - ஒருதலைக்காமம். கை - பக்கம். கிளை - கிளைத்தல், தோன்றுதல். அதாவது, ஆண்பால் பெண்பால் என்னும் ஒரு பக்கத்தே தோன்றும் அன்பென்க. பெருந்திணை - ஒவ்வாக்காமம். ஒவ்வாமை - பொருந்தாமை. கொடிய குட்டநோய் - பெருநோய் எனவும், கொடிய வெடிகட்டி நோய் - பெருவாரிநோய் எனவும் வழங்குதல் போல, கொடிய தகா வொழுக்கம் - பெருந்திணை எனப்பட்டது. ‘ஏறிய மடற்றிறம்’ முதலிய நான்கும் (அகத் - 38) முரட்டுத் தன்மையுடையன வாகையால், அப்பெயர் பெற்ற தெனினுமாம். ஒரு தலைக் காமமாகிய கைக்கிளையை முதலிலும், ஒவ்வாக் காமமாகிய பெருந்திணையைக் கடையிலும், ஒத்த காமமாகிய ஐந்திணையை இடையிலும் வைத்தார். இயன் முறைப்படி. முதலும் ஈறுங் கூறி நடுவணைந் திணையைப் பெறவைத் தமையானது, ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்துக்குப் பன்னெடுநாள் முன்னரே இவ் வகவொழுக்கம் புலனெறி வழக்கில் நன்கு பயின்று வந்தமையைப் புலப்படுத்தும். இவ்வக வொழுக்கம் ஏழனுள், நடுநின்ற ஒத்த காமமாகிய ஐந்துமே ஒழுக்கம் என மேற்கொண் டொழுகும் அத்தகு சிறப்புடையவை யாகும். 1. கைக்கிளை 5. நெய்தல் 2. முல்லை 6. பாலை 3. குறிஞ்சி 7. பெருந்திணை 4. மருதம் என, அகத்திணை எழுவகைப்படும். (1) 2. ஒழுக்க நிகழிடம் 2. அவற்றுள், நடுவ ணைந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே. இ - ள்: அவற்றுள் - முற்கூறிய எழுதிணையுள், நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய - கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் நடுவில் நின்ற ஐந்தொழுக்கங்களுள், ஏனை நான்கற்கும் பொதுவான தாயுள்ள பாலை யொழுக்கம் ஒன்று நீங்கலாக ஏனை முல்லை முதலிய நான்கொழுக்கங்களும், படுதிரை வையம் பாத்திய பண்பு - ஒலிக்கும் கடல் சூழ்ந்த இந்நிலப் பரப்பு நான்காகப் பகுக்கப் பட்ட இயற்கையை யுடையதாயிருக்கிறது என்றவாறு. நடுவணது - பாலைத்திணை. பாத்தல் - பகுத்தல். பண்பு - இயற்கை. இதனால் தமிழகம் நானிலம் எனப்பட்டது. கைக்கிளை பெருந்திணைகட்கும், பாலைக்கும் நிலமின்று. அவை பகுக்கப் பட்ட நான்கு நிலத்தும் நிகழுமென்பதாம். ‘மாயோன் மேய’ (அகத். - 5) என்னும் நூற்பாவில், இன்ன ஒழுக்கம் இன்ன நிலத்தில் நிகழுமெனவும், அவற்றின் பெயரு முறையுங் கூறுவர். பாலைக்குத் தனிநிலமின்று. அது பொதுநில முடையது. அது, தனியாகப் பகுக்கப்படும் நிலமுமாகாது, முல்லை முதலிய வற்றின் வேறுமாகாது, நடுநிலைத் தன்மையுடைய நிலமாகும் மென்பது. “ முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்தப் பாலை யென்பதோர் படிவங் கொண்ட காலை.” (சிலப் - 11: 64 - 7) என்பதாற் பெறப்படும். அதாவது, முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் வேனிற் காலத்தில் தம்மியல்பு திரிந்த தன்மையாகிய நடு நிகர்த்ததாய் நிற்றலின், நடுவணது எனப் பெயர் பெற்றது. மேலும், ‘நடுவுநிலைத்திணை’ (அகத் - 9) என ஆளுவர். இயல்பு திரிதலாவது - காடும் மலையும் கடு வெயிலால் மரஞ் செடி கொடிகள் உலர்ந்தும், நீர் நிலைகள் வறண்டும் வெப்ப மிகுதல். பாலை - பிரிவு என்பதறிக. பாலை - வளம் பிரிந்த நிலை. நெய்தலைப் ‘பெருமணலுலகம்’ (அகத் - 5) என்பதால், மணல் வெளி (பாலைவனம்) பாலை நில மாகாமை பெறப்படும். கைக்கிளை பெருந்திணை இந்நானிலத்துமே நிகழும் (அகத் - 12) (2) 3. மூவகைப் பொருள் 3. முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை. இ - ள்: பாடலுள் பயின்றவை நாடும் காலை - சான்றோர் பாடல்களிற் பயின்று வரும் கருத்துகளை ஆராயும் பொழுது நுவலுங்காலை - அவற்றைக் குறித்துச் சொல்லுங்கால், முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே - முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்ற மூன்று வகைகளே, முறை சிறந்தன - பொருத்த மிக்கனவாய் இருக்கின்றன. பொருள் என்பதை ஏனையவற்றோடும் கூட்டுக. நாடி நுவலுங்காலை - ஆராய்ந்து சொல்லுங்கால், முறை - பொருத்தம். சிறந்தன - மிக்கன. பயிலுதல் - தொன்று தொட்டுப் பாடப்பட்டு வருதல். முதற்பொருள் - இன்பம் எழுதற்கு அடிப்படையான பொருள். கருப்பொருள் - எழுந்த இன்பம் கருக் கொள்வதற்கு ஏதுவாயுள்ள பொருள். கரு - உரு. உரிப்பொருள் - எழுந்து கருவான இன்பம் முதிர்ந்து பயன்படுதற்குரிய பொருள். இவை மூன்றும் ஒன்றை யொன்று மிகவும் பொருந்தியுள்ளன என்ப தாகும். இம்மூன்றும் அகவொழுக்கம் பற்றிப் பாடுதற்கு இன்றியமை யாதவை என்பது கருத்து. (3) 1. முதற்பொருளின் வகை 4. முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே. இ - ள்: முதல் எனப்படுவது - முதற்பொருள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது, நிலம் பொழுது இரண்டின் இயல்பு எனமொழிப - நிலமும் பொழுதும் என்னும் இரண்டின் இயற்கை என்று சொல்லுவர், இயல்பு உணர்ந்தோர் - அவற்றின் இலக்கணம் உணர்ந்தோர். நிலம் பொழுது என்னும் அவ்விரண்டின் இயல்புகளே இன்பந் தோன்றுவதற்கு அடிப்படையான காரணங்களாய் இருக்கின்றன என்பதாம். நிலமுதற்பொருள் காலமுதற் பொருள் என, முதற் பொருள் இருவகைத் தாயிற்று. நிலவியல்பை அடுத்த சூத்திரத்தினும், கால வியல்பை 6 - 11 சூத்திரங்களினும் அறிக. (4) 1. நிலமுதற்பொருள் 5. மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே. இது, முன்னர்ப் (அகத் - 2) பாத்திய வையத்தின் பெயரும் முறையும், அவற்றின் தலைவர்களும், அந்நிலங்களுக்குரிய ஒழுக்கங்களின் பெயரும் முறையும் கூறுகின்றது. இ - ள்: மாயோன் விரும்பிய காடு பொருந்திய நிலத்தையும், சேயோன் விரும்பிய முகிலுலாவும் மலைகள் பொருந்திய நிலத்தையும், வேந்தன் விரும்பிய இனிய நீர்வளம் பொருந்திய நிலத்தையும், வருணன் விரும்பிய மிக்க மணல் பொருந்திய நிலத்தையும் முறையே முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்று முன்னோர் சொல்லிய முறைப்படி சொல்லவும் படும் என்றவாறு. மேவுதல் - விரும்புதல்; விரும்பிக் காத்த என்றபடி. உலகம் - நிலப்பரப்பு. ‘காடு உறை உலகம்’ என்பதால், பண்டு தமிழகத்தின் அங்கங்கே காடுகள் (மரங்கள்) அமைந்திருக்குமாறு பாதுகாத்துப் போற்றிப் பயனடைந்து வந்தனர் என்பது புலனாகிறது. ‘மைவரை’ என்பதால், மலையின் பயன்களுள் முதன்மையானது ‘மழைவளஞ் சிறத்தல்’ என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர் என்பது தெரிகிறது. மலையிலிருந்தே ஆறுகள் தோன்றி வருதலை அறிக. மை -முகில். புனல் உலகம் - வயல். ‘புனல்’ என்ற அடையால், நீர்வளத்தில் மிக்க கருத்துடைமை விளங்குகிறது. ‘தீம்புனல்’ என்றார். உப்புத் தன்மையுள்ள கடல் நீரினின்றும் நீக்குதற்கு. பெருமணல் - மணல் மேடு. மணல்மேடு நீரினால் அமைவதால், ‘மணல் உலகம்’ என்றார் கடலையுஞ் சேர்த்து. மாயோன் முதலிய நால்வராலும் விரும்பிக் காக்கப்பட்டு வந்த காடுறை யுலகம் முதலிய நான்கும் முறையே முல்லை முதலிய பெயர்கள் பெறும் என்பதாம். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன ஒழுக்கம் பற்றிய பெயர்கள். ஒழுக்கத்தின் பெயர், அது நிகழும் நிலத்திற்கும் பெயரானது. முல்லை என்பது - இருத்தல் ஒழுக்கம் குறிக்கும் பெயர். அது காடுறை யுலகத்திற்கும் பெயரானமை அறிக. இன்னும், ‘முல்லை மலர்’ என, அந்நிலப் பூவுக்கும், ‘முல்லை யாழ்’ என, அந்நில மக்கள் யாழுக்கும் அது பெயராக வந்துள்ளமையுங் காண்க. முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்ததான அந்நிலத்திற்குப் பாலையென்று பெயரானதும், பாலை யொழுக்கத்தின் பெயரேயாகும். இதனால், பழந்தமிழ் மக்கள் உயிரினும் ஒழுக்கமே பெரிதெனக் கொண்டு போற்றி வந்தமை பெறப்படும். ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ (குறள் - 131) என்பது, இதனை வலியுறுத்தும். நிலம் பொழுது கருவி முதலிய பொருள்களை யெல்லாம் அவ்வொழுக்க நிகழ்ச்சியின் கருவிகளாகவே கொண்டுள்ளமையும் இதற்குச் சான்றாகும். 1. முல்லை - இருத்தல்; தலைவன் பிரியத் தலைவி ஆற்றியிருத்தல். ‘முல்லை சான்ற புறவு’ (மதுரை - 285) என்பதில், முல்லை - இருத்தல் என்னும் பொருளதே. பத்துப் பாட்டில் ஒன்றான முல்லைப்பாட்டு இருத்தல் ஒழுக்கம் பற்றியதே. முல்லை, இருத்தல் - ஒருபொருட் சொற்கள். 2. குறிஞ்சி - குறுகுதல், அணுகுதல், குறிஞ்சி, கூட்டம், அணுக்கம் - ஒருபொருட் சொற்கள். தழுவுதல் - தழிஞ்சி என்றானாற் போல, குறுகுதல் - குறிஞ்சி என்றானது. குறிஞ்சிப் பாட்டு புணர்தல் ஒழுக்கம் பற்றியதே. 3. மருவுதல் - மருதம். மருவுதல் - பொருந்துதல், தழுவியின் புறுதல். அதாவது, ஊடியும் உணர்ந்தும் கூடியும் இன்புறுதல். மரு - மணம், பொருந்துதல். ‘திருமணம்’ என்பதில், ‘மணம்’ என்பது இப்பொருள் தருதல் காண்க. 4. நெய்தல்: இது, ‘நெய்’ என்னும் வினையடியாகப் பிறந்த பெயர். நெய் - உருகு. நெய்தல் - உருகுதல். வெண்ணெய் உருகியானதாற்றான் நெய் எனப் பெயராயிற்று. தலைவன் வாராமையால் தலைவி மனம் உருகுதலால், இரங்குதலால் - நெய்தல் என்றாயிற்று. 5. பாலை: இது, ‘பால்’ என்பதன் அடியாகப் பிறந்த பெயர். பால் - பிரிவு. பாலை - பிரிவொழுக்கம். ஆண்பால் பெண்பால் என்பவற்றிலும் பால் பிரிவுப்பொருள் குறித்தல் காண்க. பாலை - தலைவன் தலைவியைப் பிரிதல். ‘முதுபாலை, பாலைநிலை’ (புறத் - 24) என்பன இப்பொருள் தருதல் காண்க. “ போக்கெல்லாம் பாலை, புணர்தல் நறுங்குறிஞ்சி” ஆக்கஞ்சே ரூடல் அணிமருதம், - நோக்குங்கால் இல்லிருத்தல் முல்லை, இரங்கல் நறுநெய்தல் சொல்லிறுத்த நூலின் றொகை.” என்னும் பழம்பாட்டினும் இவை ஒழுக்கமே குறித்தல் காண்க. போக்கு - பிரிவு. ஆக்கம் - இன்பமிகல். இல் - வீடு. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, என்னும் வைப்பு முறை - மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல் என்னும் சிறுபொழுது பற்றியதாகும். இது முதற்பொருள் பற்றிய வைப்புமுறை. மேல் (அகத் - 16) உரிப்பொருள் பற்றிக் குறிஞ்சி முதலாக வைத்தெண்ணினார். நானிலத்தலைவர் புணர்தல் முதலிய உரிப்பொருள்களைச் சிறப்பித்துப் பாடும் அகப்பாட்டுக்களில், அவ்வுரிப் பொருள்கள் நன்கு விளங்குதற் பொருட்டு, அவ்வுரிப் பொருட்குத் துணையாக அவை நிகழும் நிலம் பொழுதுகளாகிய முதற் பொருள்களையும், உணவு புள் மரம் முதலிய கருப்பொருள்களையும் அமைத்துப் பாடுதல் போல, அவ்வந் நிலமக்கள் தத்தம் நிலத் தலைவரை வாழ்த்தி வழிபடுவதாகப் பாடுதலும் உரிப்பொருளறிவுக்குத் துணை செய்வதாகும். மேலும், அந்நிலமக்கள் தங்கள் முன்னோர் சிறப்பை எடுத்துக் கூறி வாழ்த்தி வழிபடுமுகத்தான். தங்காலத் தலைவர்க்கும் அன்னார் குணஞ்செயல்களை எடுத்துக் கூறி வற்புறுத்தி, இவரையும் அவ்வாறு நடக்கும்படி ஊக்குவித்தற்கும் ஏதுவாகும். மாயோன் முதலிய நால்வரும், தொல்காப்பியர் காலத்திற்குப் பன்னெடுநாள் முன்னர். முல்லை முதலிய நிலங்களைச் சீருஞ் சிறப்புடன் ஆண்டு வந்த தமிழ்த் தலைவர்களே யாவர். இது குறித்தே, கருப்பொருளான இவரைக் கருப்பொருளுடன் கூறாது நிலமுதற் பொருளுடன் கூறியது மென்க. மாயோன் முதலிய பெயர்கள், சேர, சோழ, பாண்டியர் என்பதுபோல, அந்நிலத் தலைவர்கட்கு வழிவழியாக வழங்கி வந்த பெயர்களே யாகும். கருப்பொருள்களுள் ஒன்றான தெய்வம் என்பது (அகத் - 14) இந்நால்வரையுமே யாகும். (தொல்காப்பியர் காலத் தமிழர் - என்னும் நூலில், ‘தெய்வம்’ என்பதிற் காண்க.) இடம் நிலம் தலைவர் 1. காடும் காடுசார்ந்த இடமும் - முல்லை - மாயோன் 2. மலையும் மலைசார்ந்த இடமும் - குறிஞ்சி - சேயோன் 3. வயலும் வயல்சார்ந்த இடமும் - மருதம் - வேந்தன் 4. கடலும் கடல்சார்ந்த இடமும் - நெய்தல் - வருணன் காடு- - மரங்களடர்ந்த இடம். காடு சார்ந்த இடம்- புன்செய்க் காடுகள். மலைசார்ந்த இடம் - பக்கமலை, மலைச் சாரல். வயல் சார்ந்த இடம் - தோட்டம். கடல் சார்ந்த இடம் - கடற்கரை. (5) 2. கால முதற்பொருள் காலம் - பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும். 1. பெரும்பொழுது 1. கார்காலம் 4. பின்பனிக்காலம் 2. கூதிர்காலம் 5. இளவேனிற்காலம் 3. முன்பனிக்காலம் 6. முதுவேனிற்காலம் எனப் பெரும் பொழுது அறுவகைப்படும். கூதிர் - குளிர் - இது, கூதல் என வழங்குகின்றது. இவை யாறும் ஆவணி முதல் இரண்டிரண்டு மாதங்களாகும். 2. சிறுபொழுது 1. மாலை 4. காலை 2. யாமம் 5. நண்பகல் 3. வைகறை எனச் சிறுபொழுது ஐவகைப்படும். வைகறை - கோழி கூவும் நேரம். பெரும்பொழுது - பருவம் எனவும், சிறுபொழுது - பொழுது எனவும் வழங்கும். 1 - 2 முல்லை, குறிஞ்சி 6. காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர். இ - ள்: கார்காலமும் அதன் மாலைக்காலமும் முல்லை யொழுக்கத்திற்கு உரிய காலமாகும்; குளிர்காலமும் அதன் யாமமும் குறிஞ்சி யொழுக்கத்திற்கு உரிய காலமாகும் என்று சொல்லுவர் புலவர். (6) குறிஞ்சிக்குச் சிறப்புவிதி 7. பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப. இ - ள்: முன்பனிக் காலமும் குறிஞ்சியொழுக்கத்திற் குரிய தென்று சொல்லுவர். எதிர்தல் - முற்படல், முன்னதாதல். இதற்கும் சிறு பொழுது யாமமே யாகும். (7) 3 - 4 மருதம், நெய்தல் 8. வைகறை விடியல் மருதம்; ஏற்பாடு நெய்த லாதல் மெய்பெறத் தோன்றும். இ - ள்: வைகறைப் பொழுது மருதவொழுக்கத்திற்குரியது; காலைப் பொழுது நெய்தலொழுக்கத்திற்குரியது. வைகறையும் காலையும் அததற்குரிய ஒழுக்கவுணர்ச்சியைத் தவறாது உண்டாக்கும் என்பார், ‘மெய்பெறத் தோன்றும்’ என்றார். மெய்பெற - உண்மையாக. மற்றைக் காலங்கட்கும் இஃதொக்கும். வைகறை விடியல் - வைகறையாகிய விடியல்; இருபெயரொட்டு, எற்பாடு - காலைப்பொழுது. எல் - ஞாயிறு. படுதல் - உண்டாதல். எற்பாடு - பொழுது கிளம்பும் நேரம். ஊடலுக்குப் பெரும்பொழுது கூறாமை, ஊடல் மருத நிலத்தில் சிறுபொழுது காரணமாக உண்டாவது. அதாவது, நாடோறும் தலைவன் பிரிந்து செல்வதால் உண்டாவது. இரங்கலும் நாடோறும் நிகழ்தற்குரிய தாகலின், அதற்கும் பெரும்பொழுது கூறாதொழிந்தார். எனவே, இவ்விரு ஒழுக்கங்கட்கும் பெரும் பொழுது ஆறும் உண்டென்பது பெற்றாம். ஊடலும் இரங்கலும் பிரிவால் உண்டாவனவாகையால், பாலைக்குரிய பருவ மூன்றும் இவ்விரண்டற்கும் சிறப்புடையன வாகும். எற்பாடு பிற்பக லெனில், பிரிந்து சென்ற தலைவன் வரும் நேரமாகையால், இனி வருவான் எனத் தலைவி ஆற்றியிருக்குமே யன்றி இரங்காள். இரவு முழுவதும் தனித்துக் கண் துஞ்சாது கழித்த தலைவி, வைகறைப் பொழுது கழிந்து பொழுது கிளம்பும் நேரமான காலைப் பொழுது வரவே, இனிப் பகற் பொழுது கழிந்தன்றித் தலைவன் வாரான். இப்பாழும் பகல் எப்பொழுது கழியுமோ?’என எண்ணி யிரங்குவாள். எற்பாடு மாலைக்கு முன் எனில், தலைவன் வருவான் எனத் தலைவி ஆற்றியிருப்பாளாகையால், அது முல்லை யாகுமே யன்றி நெய்த லாகாது. (8) 5. பாலை 9. நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே. இ - ள்: நடுவுநிலைத் திணையே - நால்வகை யொழுக்கத்திற்கும் பொதுவான பாலை யொழுக்க மானது, நண்பகல் வேனிலொடு - நடுப்பகலும் இருவகை வேனிற் காலங்களும், முடிவு நிலை மருங்கின் - ஒத்து முடியும் நிலையையுடையவாக, முன்னிய நெறித்து - ஆசிரியர் கருதிய முறையையுடையது. முன்னிய - கருதிய. நண்பகல் வேனிலொடு - நண்பகலும் வேனிலும். அதாவது, வேனிற் காலங்களும் அக்காலத்து நண்பகலும். வேனிற் காலத்து நண்பகல் வெப்ப மிகுதியால், பாலை யொழுக்கத் திற்குச் சிறப்பாயிற்று. பாலைக்குத் தனியாக நில மின்மையான், காலமும் கருப்பொருளுங் கொண்டு ஆசிரியர் கருதப்பட்ட நிலை யையுடையது என்பார், ‘முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்து’ என்றார். இருவகை வேனிற் காலமும், அவற்றின் நண்பகலும் பாலையொழுக்கத்திற் குரியவாகும். (9) இதுவுமது 10. பின்பனி தானும் உரித்தென மொழிப. இ - ள்: பின்பனிக் காலமும் பாலைக்குரியதென்று சொல்லுவர் புலவர். இதற்கும் சிறுபொழுது நண்பகலேயாம். (10) 6. பின்பனியின் சிறப்பு 11. இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றினும் உரிய தாகும் என்மனார் புலவர். மேல், பாலைக்குப் பின்பனிக் காலமும் உரித்தென்று வாளா கூறினதைக் காரணங் காட்டி விளக்குகின்றது இச் சூத்திரம். இ - ள்: இருவகைப் பிரிவும் - காலிற் பிரிவும் கலத்திற் பிரிவும், நிலைபெறத் தோன்றினும் - உள்ளத்தளவாய் நில்லாமல் நிலையாகச் செயலளவில் தோன்றினும், உரியதாகும் என்மனார் புலவர் - அவ்விருவகைப் பிரிவுக்கும் பின்பனிக் காலம் உரியதாகும் என்று சொல்லுவர் புலவர். காலிற் பிரிவு - நிலத்தின் வழியாகத் தேர் முதலியவற்றிற் பிரிந்து செல்லுதல். கலத்திற் பிரிவு - கடல் வழியாகக் கப்பலிற் பிரிந்து செல்லுதல். ‘பின்பனி’ என்பது, அதிகாரத்தால் வந்தது. அடுத்து வரும் இளவேனிற் பருவத்தே பிரிய வேண்டுமென எண்ணிக் கொண்டிருத்தல், பின்பனிப் பருவத்திலேயே பிரிய வேண்டி நேரினும், அப்பருவம் இருவகைப் பிரிவிற்கும் உரித்தென்றபடி. அதாவது, அடுத்து வரும் இளவேனிற் பருவத்தே தலைவியை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டுமெனப் பின்பனிக் காலத்திலேயே எண்ணுதல் தலைவற் கியல்பு. அவ்வாறு எண்ணுதலே யன்றி, அப்பின்பனிக் காலத்திலேயே பிரிந்து செல்லுதலும் உண்டு என்பதாம். எனவே, பின்பனிக் காலமும் பாலைக்குரிய தென்றாயிற்று. ஒழுக்கம் பெரும்பொழுது சிறுபொழுது 1. முல்லை - கார் - மாலை 2. குறிஞ்சி - கூதிர் - முன்பனி - யாமம் 3. மருதம் - 6 பருவமும் - வைகறை 4. நெய்தல் - 6 பருவமும் - காலை 5. பாலை - பின்பனி இளவேனில் முதுவேனில் - நண்பகல் (11) 7. கைக்கிளை, பெருந்திணை நிகழ்ச்சி 12. உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே. இ - ள்: உரிப்பொருள் அல்லன - உரிப்பொருளாகிய ஐந்திணையும் அல்லாத கைக்கிளையும் பெருந்திணையும், மயங்கவும் பெறும் - ஐந்திணைக்குக் கூறிய நிலம் பொழுதுடன் மயங்கி வரவும் பெறும். இவ்விரு ஒழுக்கங்களும் ஐந்திணைக்கும் உரிய நிலம் பொழுதென்னும் முதற்பொருளே தமக்கு முதற் பொருளாகக் கொண்டு நிகழுமென்பதாம். தகாவொழுக்கங்களாகிய கைக்கிளையும் பெருந்திணையும், நானிலத்தும் ஒரு சிலரிடத்து நிகழ்வன வாகையால், அவற்றிற்குரியனவே இவற்றிற்கும் உரியவெனத் தந்துரைத்தார். உரிப் பொருள் - காதலன்பிற் குரிய பொருள். அல்லன் - காதலன்பிற் குரியவல்லாப் பொருள். (12) 8. முதற்பொருட்குப் புறனடை 13. முதலெனப் படுவ தாயிரு வகைத்தே. இ - ள்: முதற்பொருளென்று கூறப்படுவது நிலமும் பொழுதும் என முன் சொன்ன அவ்விருவகையேயாம். இது, கூறிற்றென்னும் உத்தியால், முதற்பொருளைத் தொகுத்துக் கூறியது. இதனால், நிலம் பொழுதில்லாக் கைக்கிளை பெருந்திணைக்கு, அவை மயங்கிய நிலமும் பொழுதுமே முதலெனப்படும் எனபதூஉம் பெறப்படும். நிலமில்லாப் பாலைக்கும் இது பொருந்தும். (13) 2. கருப்பொருள் 14. தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவுங் கருவென மொழிப. இ - ள்: தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் என்பனவும், பிறவும் கருப்பொருள்கள் ஆகும் என்று சொல்லுவர். பிற - பூ, நீர், ஊர் முதலியன. மக்களுங் கொள்க. மரம் உண்மையால் பூவும் உண்டு. ‘எந்நில மருங்கிற் பூவும் (அகத் - 15) என, ஆசிரியரே கொண்டுள்ளார். நிலம் எனில் நீருண்டு. மக்கள் அந்நிலத்து வாழ்வோரே. (14) கருப்பொருள் மயக்கம் 15. எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும். இ - ள்: எந்நில மருங்கின் பூவும் புள்ளும் - நானிலங்களில் ஒரு நிலத்துக்குரிய பூவும் புள்ளும், அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் - தத்தமக்கு உரியவாகக் கூறிய நிலத்தொடும் காலத்தொடும் நடவாமல் பிற நிலத்தொடும் காலத்தொடும் நடப்பினும், வந்த நிலத்தின் பயத்த ஆகும் - அவை வந்த நிலத்தின் கருப்பொருள் களாகக் கொள்ளப்படும் என்றவாறு இன்னின்ன நிலத்திற்கு இன்னின்ன பூவும் புள்ளும் உரியவென வரையறை செய்யப்பட்ட வேனும், அவை அந்நிலத்தே யன்றி வேறு நிலத்திலும் இருத்தல் உண்டு. மருதத்துத் தாமரை மலைச்சுனையிலும் மலர்தலுண்டு. குறிஞ்சி மயில் முல்லை. நிலத்திலும் உண்டு. இங்ஙனமே ஒவ்வொரு காலம் ஒவ்வொரு பூவுக்கும் புள்ளுக்கும் சிறப்புறுதலுண்டு. வேனிலும் காலையுந் தாமரைக்குச் சிறந்த காலம். காரும் மாலையும் மயிலுக்குச் சிறந்த காலம். எனினும், மற்றக் காலங்களிலும் தாமரை பூத்தலும் மயில் ஆடலும் உண்டு. இவ்வியற்கையின் படியே புலனெறி வழக்கில், ஒரு நிலத்துக் குரிய பூவும் புள்ளும் வேறு நிலம் பொழுதொடு சேர்த்துப் பாடப்படின், அந்நிலத்துக்குரிய கருப்பொருளாகவே கொள்ளப் படும் எனக் கருப்பொருள் மயக்கங் கூறிற்று இச்சூத்திரம். மாவும் பிறவும் மயங்குதலுங் கொள்க. காட்டு 1. “ தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை நேரி தழ்க் கோதையாள் செய்குறி நீவரின்” (கலி - 25) இங்கு மருதப் பூவாகிய தாமரை குறிஞ்சிக்கண் வந்தது. குறியிடங் கூறலின் குறிஞ்சி யாயிற்று. 2. “ கன்மிசை மயிலாலக் கறங்கியூ ரலர்தூற்றத் தொன்னல நனிசாய நம்மையோ மறந்தைக்க ஒன்னாதார்க் கடந்தடூஉம் உரவுநீர் மாகொன்ற வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டு விரும்பார்கொல்” (கலி - 27) இங்கு, குறிஞ்சி மயில் பாலைக்கண் வந்தது. ‘ஊர் அலர் தூற்றவும் நமது பழைய எழில் கெடவும் நம்மை மறந்தான்’ எனப் பிரிவு கூறுதலான் பாலையாயிற்று. குன்றாடல் இளவேனிலா தலால், பொழுதொடு புள்ளும் மயங்கிற்று. (15) 3. உரிப்பொருள் 16. புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊட லிவற்றின் நிமித்த மென்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே. இ - ள்: புணர்தல் முதலிய ஐந்தும், அவற்றின் நிமித் தங்களும் என்னும் இவை முறையே குறிஞ்சி முதலிய ஐந்திணைக்கும் உரிய உரிப்பொருள்களாகும். தேருங்காலை - ஆராயுமிடத்து. திணை என்பது - நிலத்தையும், அந்நிலத்தே நிகழும் ஒழுக்கத்தையும் ஒருங்கு குறிக்கும். இன்ன உரிப்பொருள் இன்ன ஒழுக்கத்திற் குரியதாய் இன்ன நிலத்தே நிகழு மென்பதாம். ‘தேருங்காலை’ என்றதனால், குறிஞ்சிக்குப் புணர்ச்சியும், பாலைக்குப் பிரிவும், முல்லைக்கு இருத்தலும், நெய்தற்கு இரங்கலும், மருதத்திற்கு ஊடலும் உரித்தென்று ஆராய்ந்துணர்க. ‘மாயோன் மேய’ (அகத் - 5) என்ற சூத்திரத்தும் இதுபற்றிய விளக்கங் கூறப்பட்டுள்ளது. நிமித்தம் - காரணம். அவை புணர்ச்சி முதலியன நிகழ்தற்குக் காரணமான நினைவு, குறிப்பு, மெய்ப்பாடு முதலியன. நிலமும் ஒழுக்கமும் உரிப்பொருள் 1. குறிஞ்சி - புணர்தல் 2. பாலை - பிரிதல் 3. முல்லை - இருத்தல் 4. நெய்தல் - இரங்கல் 5. மருதம் - ஊடல் “ துனியும் புலவியும் இல்லாயிற் காமங் கனியுங் கருங்காயு மற்று.” (குறள்) என, மருதத்து ஊடலின் முன்னும் பின்னுமுள்ள புலவியும் துனியுங் கொள்க. புணர்ச்சி இருவர்க்கும் ஒப்ப நிகழ்தலானும், ஏனையவற்றிற்குக் காரணமாதலானும் புணர்ச்சியை முதலினும், புணர்ந்தபின் அல்லது பிரிவின்மையான் பிரிவை அதன் பின்னும், தலைவன் பிரிந்தபின் தலைவி ஆற்றியிருத்தல் முல்லையாதலின் இருத்தலை அதன் பின்னும், அங்ஙனம் ஆற்றி யிராது இரங்கலை அதன் பின்னும், இரங்கிய தலைவி தலைவன் வரின் ஊடுவாளாதலின் ஊடலை அதன் பின்னும் முறையே வைத்தார். மக்களின் வாழ்வியலை ஐந்திணையாக வகுத்து, அவற்றை நிலம், காலம், கருப்பொருளோடு பொருத்திக் கூறியிருக்குந் திறத்தால், நம் முன்னையோர் நிலவியற்கை, காலவியற்கை, பொருளியற்கை, அவற்றிற்கேற்ற உணர்வியற்கைகளை நன்கறிந் திருந்தன ரென்பதூஉம், அன்றே நிலநூல், கால நூல், இயற்கை நூல், அளவை நூல், ஒப்புநூல், உளநூல் முதலியன இருந்தன என்பதூஉம் அறிந்து இன்புறற் பால தொன்றாகும். (16) 1. உரிப்பொருள் மயக்கம் 17. திணைமயக் குறுதலுங் கடிநிலை யிலவே, நிலனொருங்கு மயங்குத லின்றென மொழிப புலனன் குணர்ந்த புலமை யோரே. இ - ள்: திணை மயக்கு உறுதலும் - ஓரொழுக்கம் அதற்குரியதல்லாத வேறு நிலத்தின்கண் நிகழ்தலும், கடிநிலை இல - நீக்கும் நிலைமை இல்லை, நிலன் ஒருங்கு மயங்குதல் இன்று என மொழிப - அங்ஙனம் ஒழுக்கம் மயங்குத லன்றி நிலம் ஒன்றோ டொன்று மயங்குதல் இல்லை யென்று சொல்லுவர், புலன் நன்கு உணர்ந்த புலமையோர் - புலனெறி வழக்கினை ஆராய்ந்தறிந்த அறிவுடையோர். திணை - ஒழுக்கம். அதாவது, புணர்தல் முதலிய உரிப் பொருள்கள். கடிதல் - நீக்குதல். மயங்குதல் - அதற்குரிய இடமாறி நிற்றல். புலன் - புலநெறி வழக்கம் (அகத் - 42) ‘மயங்குதல் இன்று’ என நிலத்தை விலக்கவே, நில மொழிந்த காலமும் கருப்பொருளும் அவற்றிற் கோதிய ஒழுக்கத்தைவிட்டு வேறொழுக்கத்தோடு மயங்குதல் உண்டென்பதாம். எனவே, ஐவகை யொழுக்கமும் அததற் கோதிய நிலம் காலம் கருப்பொருள் இவற்றை விட்டு, வேறு நில முதலியவற்றோடு வருதலும் உண்டென்பது பெற்றாம். அதாவது, ஒவ்வோர் ஒழுக்கத்திற்கும் இன்ன நிலம், இன்ன பெரும்பொழுது சிறுபொழுது, இன்னின்ன கருப்பொருள்கள் என வரையறை செய்யப்பட்டனவேனும், அவை அவ்வாறன்றி மாறியும் வருமென்பது கருத்து. வேறு நிலத்தொடு மயங்குத லென்பது, அந் நிலத்துக் கருப்பொருளொடுங் காலத்தொடும் மயங்குதலே யாமென்றற்கு, ‘நிலனொருங்கு மயங்குதல் இன்று’ என்றார். காட்டு 1. “ வேப்புநனை யன்ன நெடுங்கட் கள்வன் தண்ணக மண்ணளை நிறைய நெல்லின் இரும்பூ வுறைக்கும் ஊரற்கிவள் பெருங்கவின் இழப்ப தெவன்கொ லன்னாய்.” (ஐங் - 30) ‘அன்னாய்! நண்டு தன் வளை நிறைய நெல்லின் பூவைச் சொரியும் மருத நிலத்து ஊரனுக்காக, இவள் மிக்க எழிலை யிழப்பது என்கொல்’ என, தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்பதால், இது குறிஞ்சி. நண்டும், நெல்லும் - மருதக் கருப் பொருள். ஊரன் - மருதநிலத் தலைவன். எனவே, மருத நிலத்துக்கண் குறிஞ்சியொழுக்கம் நிகழ்ந்தது. கள்வன் - நண்டு - உறைத்தல் - சொரிதல், உதிர்த்தல். 2. “ கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே முண்டகக் கோதை நனையத் தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் றாளே.” (ஐங் - 121) இது, புலவி நீக்கக் கருதிய தோழி, பெதும்பைப் பருவத் தாளொரு பரத்தையோடு தலைவன் மறைந்தொழுகினதை, நகையாடிக் கூறியது. இது மருதம். முண்டகம், திரை, பௌவம் - நெய்தற் கருப்பொருள். முண்டகம் - தாழை. திரை - அலை. பௌவம் - கடல். கொண்கன் - நெய்தனிலத் தலைவன். எனவே, நெய்தல் நிலத்துக்கண் மருதவொழுக்கம் நிகழ்ந்தது. 3. “ பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ விரியிணர் வேங்கையொடு வேறுபட மிலைச்சி விரவுமல ரணிந்த வேனிற் கான்யாற்றுத் தேரொடு குறுக வந்தோன் பேரொடு புணர்ந்தன் றன்னையிவ ளுயிரே.” (ஐங் - 367) ‘தேரொடு குறுக வந்தோன் பேரொடு புணர்ந்தன்று அன்னை இவள் உயிரே’ என்றது, நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக் கறத்தொடு நின்றது; குறிஞ்சி. கோங்கு - பாலைக் கருப்பொருள். வேனில் - பாலைக்குரிய காலம். எனவே, இது பாலைக்கண் குறிஞ்சி யொழுக்கம் நிகழ்ந்தது. கருவொடும் காலத்தொடும் மயங்கிற்றென்க. பிறவொழுக்க மயக்கங்களை ஐங்குறு நூறு, கலித்தொகை, அகநானூறு முதலிய சங்க இலக்கியங்களிற் காண்க. (17) 2. பாலைக்கட் குறிஞ்சியும் நெய்தலும் 18. கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தவ ணிரங்கலும் உண்டென மொழிய ஓரிடத் தான. மேல் உரிப்பொருள் மயக்கங் கூறினார். ஈண்டு வேறு வகையான் உரிப்பொருள் மயக்கங் கூறுதலான் இது அதன் பின் வைக்கப்பட்டது. இ - ள்: கொண்டுதலைக் கழிதலும் - தலைவன் தலைவியைத் தன்னுடன் கூட்டிக் கொண்டு அவளூரினின்று நீங்குதலும், பிரிந்து அவண் இரங்கலும் - தலைவன் தானே பிரிந்த விடத்துத் தலைவி இரங்குதலும், ஓரிடத்தான உண்டு என மொழிப - ஒரோவோ ரிடத்தில் நிகழ்தலும் உண்டு எனச் சொல்லுவர். அங்ஙனம் நேரின் அவற்றையும் பிரிவொழுக்கமாகவே கொள்ள வேண்டும் என்பதாம். அவை - உடன் போக்கும் ஒருவழித் தணத்தலுமாம். தணத்தல் - பிரிதல். அவண் - அங்கே. பிரிந்து அவண் இரங்கல் - தலைவனைப் பிரிந்து தலைவி இல்லின்கண் இருந்து இரங்கல். இவை களவொழுக்கத்தின்போது நிகழ்வனவாகும். தலைவியின் பெற்றோர், தலைவியைக் குறியிடம் செல்ல விடாமல் இற்செறித்துத் தம் காதலன்புக் கிடையூறு செய்யின், தலைவி தோழி இவர்களின் உடன்பாட்டுடன் தலைவன் தலைவியைத் தன்னூர்க் கழைத்துச் செல்வான். இது, கொண்டுதலைக் கழிதல் எனப்படும். அவ்வுடன் போக்கினும் தலைவியின் சுற்றத்தார் வந்து தலைவியைப் பிரிப்பரோவெனப் பிரிவச்சமே நிகழும். அல்லது, தலைவன் தலைவியைப் பிரிந்து தனியாகத் தலைமறைவாகச் சிலநாள் இருப்பான். இது ஒருவழித்தணத்தல் எனப்படும். அவ்வாறு தலைவன் பிரிந்திருக்கின் பிரிவாற்றாது தலைவி இரங்குவள். நம் முன்னையோர் காதல் வாழ்க்கையை நன்றெனக் கொண்டு வாழ்ந்து வந்ததால், உடன்போக்கும் ஒருவழித் தணத்தலும் நிகழ இடமில்லை. அறியாமையோ, தெரியாமையோ காரணமாகச் சில பெற்றோர், தலைவியை வெளிவிடாமல் இற்செறிக்கின் இவை நிகழும் என்பதைக் குறிக்கவே, ‘ஓரிடத்தான உண்டு’ என்றார். இற்செறித்தல் - வெளிச் செல்லாமல் வீட்டினுள் வைத்துக் காத்துவருதல் - இல் - வீடு. செறித்தல் - அகலாதிருக்கச் செய்தல். ‘சிறை காக்கும் காப்பெவன் செய்யும்’ (குறள் - 51) எனக் காண்க. இருவருங் கூடிச் செல்வதால், உடன் போக்குக் குறிஞ்சி யொழுக்கமும், தலைவன் ஒருவழித் தணப்பின் தலைவி இரங்கல் நெய்தலொழுக்கமும் ஆமாயினும், அவ்வீரிடத்தும் பிரிவுணர்ச்சியே நிகழ்தலின் பாலை யொழுக்கமேயாமென்பதாம். கூதிர், முன்பனிக் காலங்களில் களவொழுக்க மொழுகிய தலைவனே உடன்கொண்டு சேறலும், ஒருவழித் தணத்தலும் செய்வானாகையால், பாலைக்குரிய இருவகை வேனிலிலும் இவை நிகழும். அதுவே புனங்காவல் நீங்கி இற்செறித்தற்கு ஏற்ற காலமாகும். (18) 3. பாலைக்கட் குறிஞ்சி 19. கலந்த பொழுதுங் காட்சியு மன்ன. இ - ள்: கலந்த பொழுதும் - இருவரும் எதிர்ப்பட்டு உறவு கொண்ட இயற்கைப் புணர்ச்சி நடந்த காலமும், காட்சியும் - இயற்கைப் புணர்ச்சிக்கு முன் வழிநிலைக் காட்சி நடந்த காலமும், அன்ன - பிரிவுணர்ச்சிக்கு இடமானவையேயாகும். இவையும் இருவகை வேனிற்கண்ணே நிகழும். தலைவனும் தலைவியும் தாமே எதிர்ப்பட்டு முதன்முதற் கூடியபோதும், நாளையும் இது கூடுமோ எனவும், யாரேனும் காண்பரோ எனவும் பிரிவுணர்ச்சியே நிகழும். முதன்முதல் தலைவியைக் கண்ட காட்சியும் எங்கோ தனியிடத்தில் நிகழ்ந்த தாகையால் பிரிவுணர்ச்சியோடேதான் நிகழும். கலந்தது -இயற்கைப் புணர்ச்சி. காட்சி - வழிநிலைக் காட்சி. வழிநிலைக் காட்சியாவது - தனியாகச் செல்லுந் தலைவியைத் தலைவன் காண்பது. அதாவது, வழியிற் செல்வாளைக் காணுதல். ஆடுமாடு மேய்த்தல், குருவி முடுக்குதல், பருத்தி பறித்தல், காடு தோட்டஞ் செல்லுதல் ஆகிய போது காணுதலுமாம். தலைவியும் தலைவனைக் காண்பாளேனும், தலைவன் காண்பதே புலனெறி வழக்கிற் குரியதாகும். வேனிற் காலத்திலேதான் தலைவி வெளிச்சென்று விளையாடு வாளாகையால், வழிநிலைக் காட்சி இருவகை வேனிற் காலத்திலும் நிகழும். இதைத் தொடர்ந்து இயற்கைப் புணர்ச்சி நடப்பதால், அதுவும் வேனிலிலேதான் நிகழும். மிக்க மழை பெய்யுங் காலத்துத் தலைவி வெளிப்போந்து விளையாடாளா கையால் எதிர்ப்பட்டுப் புணர்தல் அரிதாகலானும், அது இன்பஞ் செய்யாமையானும் இருவகை வேனிற் காலத்தும் இயற்கைப் புணர்ச்சி நடக்கும் என்கின்றது இச்சூத்திரம். முன்னர்க் (6 - 7) கூதிரும் யாமமும் முன் பனியும் உரிய வென்றது. இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்க் களவொழுக்க மொழுகுதற் குரிய காலாமாகுமென்க. சித்திரை முதல் ஆடி முடியவுள்ள வேனிற்காலத்து வழிநிலைக் காட்சியும், தொடர்ந்து இயற்கைப் புணர்ச்சியும் நிகழும். பின்னர் மிகுமழைக் காலத்து வந்து கூடுதலருமையான் ஒருவாறு பிரிந்திருந்து (இடையிட்டு மழையில்லாத நாளில் கூடி), குளிர்காலத்தும், முன்பனிக் காலத்தும் இருவகைக் குறியிடத்தும் தடையின்றிக் கூடிக் களவொழுக்கம் ஒழுகுவரென்பதாம். தை முதல் சித்திரைக்குள் மணந்து கொள்வ ரென்க. (19) 4. மக்கள் மக்களாவார், புலனெறி வழக்கிற் குரிய நிலமக்களும் தலைமக்களுமாகிய அடியோர், வினைவலரும், அந்தணர் அரசர் வணிகர் வேளாளரும் குறுநிலமன்னருமாவர். 1. நிலமக்களும் தலைமக்களும் 20. பெயரும் வினையுமென் றாயிரு வகைய திணைதொறு மரீஇய திணைநிலைப் பெயரே. இது, முன்னர் (14) ‘அவ்வகை பிறவும்’ என்றதனால் தழுவிய மக்கட்பகுதி கூறுகின்றது. இ - ள்: திணைதொறும் மரீஇய பெயர் - நானிலத்தும் பொருந்திய நிலப் பெயரும், திணைநிலைப் பெயர் - உரிப்பொருளில் நிற்றற்குரிய பெயரும், பெயரும் வினையும் என்று அ இருவகைய - பெயடிரயாகப் பிறந்த பெயரும் வினையடியாகப் பிறந்த பெயரும் என அவ்விரண்டு வகைப்படும். வினை - தொழில். திணைதொறும் மரீஇய பெயர் - நிலமக்கள் பெயர். திணை நிலைப் பெயர் - தலைமக்கள் பெயர். மரீஇய - மருவிய, பொருந்திய. முதல் திணை - நிலம். இரண்டாவது திணை - ஒழுக்கம். நிலப்பெயர்: குன்றுவர் குன்றுவித்தியர் பெயர்ப் பெயர் வேட்டுவர் வேட்டுவித்தியர் வினைப் பெயர் குன்றுவர் - குன்று என்னும் பெயரடியாகவும், வேட்டுவர் - வேட்டை என்னும் வினை யடியாகவும் பிறத்தல் காண்க. குன்று - மலை. வேட்டை - வேட்டையாடுந் தொழில். உரிப்பொருள்: வெற்பன் கொடிச்சி உரிப்பெயரின் பெயர் வினை வேறுபாடு விளங்க வில்லை உரிப்பெயர் - அகப்பொருட்டலை வராக்கிச் செய்யுளிலமைத்துப் பாடுதற்குரிய பெயர். திணைநிலைப் பெயர், உரிப்பெயர் என்பன ஒரு பொருட் சொற்கள். தலைமக்கள், உரிப்பொருட்டலைவர், கிளவித்தலைவர் என்பன ஒரு பொருட் சொற்கள். அகவொழுக்கம் எல்லா மக்கட்கும் பொதுவாகலான், வெற்பன், சிலம்பன் முதலிய திணைநிலைப் பெயரால் பாடுதலே புலனெறி வழக்கிற்கு மரபாகும். முன்னர், ‘அந்நிலம் பொழுதொடு’ (அகத் - 15) எனக் காலத்தையும் உடன் கூறலான், பொழுது முதலாக வரும் பாலைக்கும் நிலமக்கட் பெயரும் தலைமக்கட் பெயரும் கொள்ளப்படும். ‘அவ்வகை பிறவும்’ (அகத் - 14) என்பதால், இப்பெயர்களும் கருப்பொருள் ஆமென்க. நிலமக்கள் பெயர் தலைமக்கள் பெயர் நிலம் - ஆண் - பெண் ஆண் - பெண் மு - ஆயர் - ஆய்த்தியர் அண்ணல் மனைவி கோவலர் - கோவித்தியர் தோன்றல் இடையர் - இடைச்சியர் குறும்பொறை பொதுவர் - பொதுவியர் நாடன் கிழத்தி கு - வேட்டுவர் - வேட்டுவித்தியர் குறவர் - குறத்தியர் வெற்பன் கானவர் - கானத்தியர் சிலம்பன் கொடிச்சி குன்றுவர் - குன்றுவித்தியர் பொருப்பன் இறவுளர் - இறவுளத்தியர் ம - களமர் - களத்தியர் மகிழ்நன் உழவர் - உழத்தியர் ஊரன் மனையாள் நெ - நுளையர் - நுளைச்சியர் கொண்கன் திமிலர் - திமிலியர் துறைவன் பரத்தி பரதவர் - பரத்தியர் சேர்ப்பன் பா - எயினர் - எயிற்றியர் மீளி மறவர் - மறத்தியர் விடலை கன்னி காளை இது இலக்கியங் கண்டது. ஆய்ச்சியர், வேட்டுவிச்சியர், குன்றுவிச்சியர், நுளைச்சியர் எனவும் வழங்கும். (20) 2. முல்லை குறிஞ்சி நிலமக்கள் பெயர் 21. ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர் ஆவயின் வரூஉங் கிழவரும் உளரே. இ - ள்: ஆயர் வேட்டுவர், ஆடூஉத் திணைப் பெயர் - முல்லை குறிஞ்சி நிலமக்களின் ஆண்பாற் பெயர்களாகும், ஆவயின் வரும் கிழவரும் உளர் - அப்பெயர்களை இடமாகப் பெற்றுவரும் தலைவர்களும் உண்டு. உம்மையால், தலைவியரும் உண்டு எனக் கொள்க. அண்ணல், கிழத்தி, சிலம்பன், கொடிச்சி என்னும் முல்லை குறிஞ்சி உரிப் பெயர்களுக்கு ஈடாக ஆயர், ஆய்ச்சியர், வேட்டுவர், வேட்டுவிச்சியர் முதலிய அந்நில மக்கள் பெயர்களைக் கொண்டும் சிறுபான்மை பாடலாம் என்பதாம். காட்டு: 1. “ ஆயர் மகனையுங் காதலை கைம்மிக ஞாயையு மஞ்சுதி யாயி னரிதரோ நீயுற்ற நோய்க்கு மருந்து.” (கலி - 107) 2. “ வானிணப் புகவிற் கானவர் தங்கை” (அகம் - 132) 3. “ வேட்டுவற் பெறலோ டமைந்தனை” (அகம் - 28) 4. “ குன்றக் குறவன் காதன் மடமகள் வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி” (ஐங் - 256) என வந்தமை காண்க. (21) 3. ஏனை நிலமக்கள் பெயர் 22. ஏனோர் பாங்கினும் எண்ணுங் காலை ஆனா வகைய திணைநிலைப் பெயரே. இ - ள்: ஏனோர் பாங்கினும் எண்ணும் காலை - மற்ற நில மக்கள் பெயர்களை ஆராயும் போதும், திணைநிலைப் பெயர் ஆனா வகைய - உரிப்பெயர் பலவாம். மருதம் நெய்தல் பாலை நிலமக்கள் பெயர்களில் பல தலை மக்கள் பெயர்களாகக் கொண்டு பாடப்படும் என்பதாம். முல்லையுங் குறிஞ்சியும் இணைந்த நிலமாகலின் ஒன்றாகவும், அவ்வாறே இணைந்தமையோடு கற்புக்குச் சிறத்தலின் மருதமும் நெய்தலும் ஒன்றாகவும் கூறினார். பாலைக்கு நிலமின்மையான் ‘ஏனோர்’ எனப் பொதுப்படக் கூறி, இலேசினாற் கொள்ள வைத்தார். இலக்கியங்களிற் பயின்றுவரும் நிலமக்கள், தலைமக்கள் பெயர்களையே இன்ன பெயர் இன்ன நிலத்திற்குரியனவென வரையறை செய்தன ரென்க. ஆயர், வேட்டுவர் முதலிய நிலப் பெயர்களும் ஒருவரைக் குறியாமல், ஒரு நிலத்தில் வாழும் மக்கட்கெல்லாம் பொதுப் பெயராய் உள்ளனவாகையால், அப்பெயர் கொண்டும் சிறுபான்மை பாடுதல் வழுவின் றென்பதாம். காட்டு 1. “ முளவுமா வல்சி எயினர் தங்கை இளமா எயிற்றிக்கு நின்னிலை யறியச் சொல்லினே னிரக்கு மளவை வென்வேல் விடலை விரையா தீமே.” (ஐங் - 364) 2. “ மயிற்க ணன்ன மாண்முடிப் பாவை நுண்வலைப் பரதவர் மடமகள் கண்வலைப் படூஉங் கானலானே.” (குறுந் - 184) என வந்தமை காண்க. (22) 4. அடியோர் வினைவலர் 23. அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர். இ - ள்: அடியோர் பாங்கினும் - பிறரிடம் குற்றேவல் செய்வோரிடத்தும், வினைவலர் பாங்கினும் - பிறரிடம் நெட்டேவல் செய்வா ரிடத்தும், கடிவரை இல - தலைமக்களாக நாட்டிச் செய்யுள் செய்தல் நீக்கும் நிலைமை இல, புறத்து - ஒத்த காமத்தின் புறத்தவான கைக்கிளை பெருந்திணைக்கண், என்மனார் புலவர் - என்று சொல்லுவர் புலவர். கடிதல் - நீக்குதல். அந்நிலமக்களுள் செல்வமும் முயற்சியுமின்றித் தமக்குரியரல்லராய்ச் செல்வர்கீழ்க் குற்றேவல் செய்வாரும், ஆண்டுக் கூலிகளாய்ப் பிறரிடம் நெட்டேவல் செய்வாரும், ஒத்தகாம வொழுக்கத்தை ஒழுங்குற நடத்தற் குரியரல்ல ராகையால், அன்னார் கைக்கிளை பெருந்திணைத் தலைவர்களாய் நாட்டிச் செய்யுள் செய்யப்படுவ ரென்பதாம். அடியோர்: தமக்கு நிலையான பொருளோ தொழிலோ இன்றிச் செல்வரிட மிருந்து அங்கேயே உண்டுடுத்தோ, நாட்கூலி பெற்றோ அச்செல்வர் தொழிலுக்கு அடிப்படையாய் இருப்பவர்; கிளைகளைத் தாங்கும் அடிமரம்போல் செல்வர்க் கமைந்தவர். இன்றும் அவ்வாறு செல்வர்களிடம் ஆண்களும் பெண்களும் குற்றேவல் செய்து வருதலை அறிக. குறு ஏவல் - குற்றேவல்; தொடர்ச்சி யின்றி அவ்வப்போது ஏவியதைச் செய்தல். வினைவலர்: ஆண்டுக் கூலிகளாய்ச் செல்வரிடம் அமர்ந்து தொழில் செய்வோர். இவர் அவ்வப்போது ஏவாமல் தொடர்ந்து தந்தொழிலைச் செய்பவர். இன்றும் ஆண்டுச் சம்பளம் பெற்றுப் பண்ணையத் தாட்கள் வேலை செய்து வருதலை அறிக. புனங்காவலும் புள்ளோப்புதலும் இவ்வாறன்றிச் செல்வர் விளையாட்டாகி, இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் சில நாளில் தவிர்வர். செவ்வரிடம் குற்றேவலும் நெட்டேவலும் செய்யும் அடியோரும் வினைவலரும் ஒத்த வன்பாகிய ஐந்திணை யொழுக்கத் தைத் தொடர்ந்து நிகழ்த்தி, மணஞ்செய்து கொண்டு, கற்பினும் ஊடல் முதலிய பொருளுக் கேற்ப ஒழுகுதல் கூடாமையின், அடியோரும் வினைவலரும் கைக்கிளை பெருந்திணைக் கன்றி ஐந்தி ணைத் தலைவராகக் கொண்டு செய்யுள் செய்யப் பெறாரென்பதாம். இத புலனெறி வழக்கம் பற்றிய பிரிவேயன்றிக் குல வேற்றுமை யன்று. அடியோரும் வினைவலரும் செல்வராதலும் தலைமை தாங்குதலுங் கூடும். அப்போது அவர் ஐந்திணைத் தலைவராகக் கொண்டு பாடப் பெறுவர். அடியோர் வினைவலர் நிலை பற்றியதே யாகும் இவ்விலக்கணம். எல்லாச் சிறப்பு முடையோரைத் தலைவராக்கிப் பாடுதலே புலனெறி வழக் கென்பதையும், உயர்பொருளைக் கூறி அதைப் பிறரும் - பிற்காலத்தினரும் - பின்பற்றி நடக்க வேண்டுமென்றே சான்றோர் செய்யுட் செய்தலையும் அறிக. கைக்கிளை பெருந்திணை ஒழுக்கங்கள் தகாதனவாய்க் கடிக வென்பதே ஆசிரியர் கருத் தாகலான், ஓரோவொருகால் எளியர் பால் நிகழினும் அதனாற் குற்றமில்லை என்பதே, ‘கடிவரையில’ என்பதன் கருத்தாகும். காட்டு 1. “ நம்முள் நகுதற் றொடீஇயர் நம்முணாம் உசாவவுங் கோனடி தொட்டேன்” எனவும், “ பேயும் பேயுந் துள்ள லுறுமெனக் கோயிலுட் கண்டார் நகாமை வேண்டுவல்.” (கலி - 94) எனவும், பெருந்திணைக்கண் அடியோர்: தலைவராக வந்தது. ‘கோன் அடி தொட்டேன்’ என்றமையானும், கோயில் என்றமையானும் இவர்கள் குற்றேவல் மாக்களாயினர். 2. “ மேயு நிறைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோர் ஆயனை யல்லை பிறவோ அமருண்கண். ஞாயிற்றுப் புத்தேள் மகன்” (கலி - 108) என்பதனால், தலைவன் வினைவல பாங்காயின வாறு காண்க. 3. “ வழங்காப் பொழுதுநீ கன்று மேய்ப் பாய்போல் வழங்க லறிவா ருரையாரே லெம்மை இகந்தாரே யன்றோ வெமர்.” (கலி - 112) இது, வினைவல பாங்கினளாய தலைவியை நோக்கி அத்தலைவன் கூறியது. நிரை மேய்த்தலும் கன்று மேய்த்தலும் அவர் தொழிலா மென்க. (23) 5. நாற்பால் 24. ஏவல் மரபின் ஏனோரும் உரியர் ஆகிய நிலைமை அவரும் அன்னர். இது, இனிக்கூறும் ஓதல் முதலிய, பிரிவுகள் அகத்துக்குப் பயன்பட்டுப் புறத்திணைக்கண் நிகழ்வனவாகலின், அப்புறத்திற்கே சிறப்புடையராகக் கூறப்படும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பாலரும் அகத்திணைத் தலைவர்களாகவுங் கொண்டு செய்யுள் செய்யப் பெறுவர் என்கின்றது. இ - ள்: மரபின் - இலக்கண முறையானே, ஏவல் ஆகிய நிலைமை யவரும் - பிறரை ஏவிக் கொள்ளுந் தொழிலைத் தமக்குரியவாக வுடைய அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வரும், அன்னர் ஏனோரும் - அவர்களைப் போலப் பிறரை ஏவிக்கொள்ளும் உரிமை யுடைய குறுநில மன்னரும், உரியர் - உரிப்பொருட் டலைவராக நாட்டிச் செய்யுள் செய்தற் குரியராவர். வணிகரும் வேளாளருமே குறுநிலமன்ன ராயினும், அங்ஙனம் குறுநிலமன்ன ராயக்கால் பாடுதற் குரியரோ என்னும் ஐய நீக்குதற்கு வேறு கூறினார். குறுநில மன்னர்- சிற்றரசர். ஆட்சித் தொழில் முட்டின்றி நடத்தற்பொருட்டு மன்னர் - பெருநிலமன்னர், குறுநிலமன்னர் என இருவகைப் பட்டது போல, உழுதொழில் முட்டின்றி நடத்தற் பொருட்டு வேளாளரும் உழுவித்துண்ணும் வேளாளர், உழுதுண்ணும் வேளாளர் என இரு வகைப் பட்டனர். உழுதுண்போர் - தாமாக நிலத்தை உழுதுண்டு வாழ்பவர். உழுவித் துண்போர் - உழுதுண்போரைக் கொண்டு தமது நிலத்தை உழுவித்துண்டு வாழ்பவர். இவர் பெரு நிலக்கிழார் எனவும், வேளிர் எனவும் படுவர். இவரே சிற்றரசர் ஆவர். பாரி, பேகன், ஆய் முதலிய வள்ளல்களெல்லாம் உழுவித்துண்ணும் வேளாளர்களாகவும் , சிற்றரசர்களாகவும் இருந்தமை அறிக. பண்டு இடம் பற்றி ஆயர், வேட்டுவர் எனவும், அகவொழுக்கம் பற்றி அண்ணல், வெற்பன் எனவும், தொழில் பற்றி அடியோர், வினைவலர், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனவும் மக்கட்டொகுதியை முக்கூறாகப் பகுத்தனர். ஆயர் வேட்டுவர் என்னும் நிலமக்களே அந்தணர் முதலிய அறுவகை யினருமாவர். அந்தணர் முதலிய நால்வரும் ஐந்திணைத் தலைவர்களாகக் கொண்டு பாடவும், அடியோரும் வினைவலரும் கைக்கிளை பெருந்திணைத் தலைவராகக் கொண்டு பாடவும் உரியவராவர். இவர்கள் யாவரும் அகத்திணையில் கிளவித் தலைவர் எனப்படுவர். அந்தணர் முதலிய நால்வரின் இலக்கணம் பொதுவியலிற் கூறப்படும். இவர்களுள், அந்தணர் துறவியராகலான், நாற்பால் பற்றி உடன் கூறப்படினும், புறத்திணைத் தலைவராகப் பாடற்குரியரே யன்றி, அகத்திணைத் தலைவராகப் பாடற் குரியராகா ரென்க. (தொல்காப்பியர் காலத் தமிழர் - என்னும் நூலில் ‘அந்தணர்’ என்பது பார்க்க.) (24) 5. பிரிவிலக்கணம் 25. ஓதல் பகையே தூதிவை பிரிவே. பிரிவாவது, களவொழுக்கம் ஒழுகும் போதும், கற்பொழுக்கம் ஒழுகும் போதும் யாதேனும் ஒன்றன் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லுதல். இ - ள்: ஓதற் பிரிவும் பகைவயிற் பிரிவும், தூதிற் பிரிவும் ஆகிய இம்மூன்றும் பிரிவுகளாகும். 1. ஓதற் பிரிவு - அயல் நாட்டு நடைமுறை கற்கப் பிரிதல். இளமையிலிருந்து தாய்மொழி வாயிலாய் வாழ்க்கைக்கு இன்றியமை யாத இலக்கிய இலக்கணங்களையும், தத்தம் தொழிற்குரியவற்றையுங் கற்பர். மணவினைக்குப் பின்னர், வேற்று நாடுகட்குச் சென்று அந்நாட்டுப் பழக்க வழக்கங்களை அறிந்து வருவர். இப்பிரிவு மூன்றாண்டு வரை உண்டு (கற் - 31) என்பதால், வெளிநாடுகள் பலவற்றில் சுற்றுப் பயணஞ்செய்து அந்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களைக் கற்று வருவதே ஓதற்பிரிவென்பது பெறப்படும். உயர்ந்தோரே (செல்வர்களே) ஓதற்குப் பிரிவர் (அகத் - 26) என்பதாலும் இது விளங்கும். இன்று செல்வர்களும் ஆட்சித் தலைவர்களும், அறிஞர்களும் ஐரோப்பா, அமெரிக்கா, உரசை முதலிய வெளிநாடுகளிற் சுற்றுப் பயணஞ் செய்வது போலவே அன்றும் செய்து வந்தமை, அக்கால் மேனாடுகளுடன் தமிழகம் நடத்தி வந்த வாணிகமே சான்றாகும். 2. பகைப்பிரிவு - பொது நன்மையில் மாறுபட்டுப் போர் தொடுத்தாரை அடக்கப் பிரிதல். 3. தூதிற் பிரிவு - பகைகொண்ட இருவரைப் பகைதணிவித்து உறவுண்டாக்கப் பிரிதல். பகைப் பிரிவும், தூதிற் பிரிவும் ஓராண்டுக்கு மேல். இல்லை (கற் - 32 - 3) ஓதல், பகை, தூது என்னும் இம்மூன்றும் பொதுநலப் பிரிவாகும். வெளிநாடுகளில் கற்றவற்றைத் தந்நாட்டிற்குப் பயன் பாடுறச் செய்தலின், ஓதற்பிரிவும் பொது நலமுடைய தாயிற்று. (25) 1. ஓதலும் தூதும் 26. அவற்றுள், ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன. இ - ள்: முற்கூறிய மூன்றனுள் ஓதற்பிரிவும் தூதிற் பிரிவும் உயர்ந்தோர் பிரியும் பிரிவுகளாகும். உயர்ந்தோர் - செல்வமும் அறிவும் தலைமையும் உடையோர். உயர்ந்தோர் என்பது, பெரியோர் என்பது போலப் பெயர் குறித்து நின்றது. எளியரும் அறிவிலாரும் வெளி நாடுகட்குச் செல்லுதலும், அறிவிலார் சந்து செய்வித்தலுங் கூடாமை அறிக. சந்து - தூது. அந்தணரும் அரசரும் வணிகரும் உழுவித்துண்ணும் வேளாளரும் உயர்ந்தோரேயாவர். அடியோரும் வினைவலரும் தமக்குரிய ரன்மையான் ஓதற்கும் தூதுக்கும் பிரிதற்குரியராகார். அரசர் முதலிய மூவரும் முறையே அரசியல் முறை, வாணிக முறை, பயிர்த்தொழில் முறை கற்கவும், அந்தணர் அம்மூன்றையும் ஒருங்கு கற்கவும் பிரிவரென்க. இந்நால்வரும் தூதிற் பிரிவுக்கும் உரியராவர். அந்தணர் புறத் திணைச் சார்பாக இவ்விரண்டற்கும் பிரிவர். இவர் பிரிவு - ஊரை விட்டுச் செல்லுதலளவேயாம்.(26) 2. பகைவயிற் பிரிவு 27. தானே சேறலுந் தன்னொடு சிவணிய ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே. இ - ள்: தானே சேறலும் - தன் பகைக்குத் தானே செல்லுதலும், தன்னொடு சிவணிய ஏனோர் சேறலும் - தன்னொடு ஒத்த மற்றை அரசர் செல்லுதலும், வேந்தன் மேற்று - அரசரின் பகைவயிற் பிரிவாகும். சிவணுதல் - ஒத்தல், பொருந்துதல். சிவணிய - பெயரெச்சம். சிவணிய ஏனோர் என்க. ஏனோர் - பெருநில மன்னரும் குறுநில மன்னருமாகிய தன் நட்பரசர்கள். தானே சேறல் - ஓரரசன் தன்னொடு பகைத்தாரொடு பொரச் செல்லுதல். இது, பகைதணிவினைப் பிரிவு எனப்படும். ஏனோர் சேறல் - தன் நட்பரசனுக்குத் துணையாக அவன் பகைவனொடு பொரச் செல்லுதல். இது, வேந்தற் குற்றுழிப் பிரிவு அல்லது துணைவயிற் பிரிவு எனப்படும். தன்பகைமேற் செல்லல், தன் நண்பர்க்குத் துணையாகச் செல்லல் என வேந்தரின் பகைப் பிரிவு இருவகைப்படும். ஒரே காலத்தில் இரு பிரிவும் நிகழா. (27) 3. காவலும் பொருளும் 28. மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையால் பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும் இழைத்த வொண்பொருள் முடியவும் பிரிவே. இ-ள்: மேவிய சிறப்பின் ஏனோர் - பொருந்திய சிறப்பினையுடைய அரசன் ஆணையாளர்கள், படிமைய - வடிவமைத்த, முல்லை முதலாச் சொல்லிய முறையால் - முல்லை முதல் நெய்தலீறாகச் சொல்லப்பட்ட முறையையுடைய நானிலத்தும் (அகத் - 5), பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும் - மக்களிடை யுண்டான சீர்கேட்டைத் திருத்திப் பின்னர்ச் சீர்கெடாமற் காத்தற் பொருட்டும், இழைத்த ஒண்பொருள் முடியவும் - அரசிறையாக ஏற்படுத்தப்பட்ட மிக்க பொருளை வாங்குதற் பொருட்டும், பிரிவே - அரசர்க்குப் பிரிவு ஏற்படும். மேவிய - பொருந்திய. பிழைத்தல் - தவறுதல். இழைத்தல் - ஏற்படுத்தல். ஒண்பொருள் - மிக்க பொருள் - வரிப் பணம். படிமை - வடிவு. படி என்னும் சொல்லடியாகப் பிறந்த பெயர். வடிவு - இங்கே நீர்வள முதலியன. ஆகல் வேண்டியும் பிரிவே, முடியவும் பிரிவே எனக் கூட்டுக. ஆணையாளர் - அதிகாரிகள். ஏனோர் சீர்கெடாமல் காத்தற் பொருட்டும், வரிவாங்குதற் பொருட்டும் அரசன் பிரிவானென்க. அந்தந்த நிலம் வாழ் மக்களின் வேறுபாட்டாலும், அதிகாரிகளாலும் ஒழுக்கக் கேடு ஏற்படும். ஆகவே, அரசன் தன் அதிகாரிகளும் அலுவலாளரும் ஆளும் நாட்டை மேற்பார்வையிடுதற் பொருட்டும், வரி வாங்குதலை மேற்பார்வை யிடுதற் பொருட்டும் பிரிவான். நாட்டில் குற்றங்குறை யுண்டாகாமல் மேற்பார்வையிடவும், வரி வாங்குதலை மேற்பார்வையிடவும் அதிகாரிகள் பிரிதலும் அரசற்காகவே பிரிதலான் அரசன் பிரிவெனவேபடும். நாட்டில் குற்றங்குறை ஏற்படாமல் மேற்பார்வையிடப் பிரிதல் காவற் பிரிவாகும். வரி ஒழுங்காக வாங்கும்படி மேற்பார்வையிடப் பிரிதல் - பொருட் பிரிவாகும். (28) 4. இதுவுமது 29. மேலோர் முறைமை நால்வர்க்கு முரித்தே. இ-ள்: மேலோர் முறைமை - அரசர்க்கு உரியவென முற்கூறிய காவற் பிரிவும் பொருட்பிரிவும், நால்வர்க்கும் உரித்து - அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வர்க்கும் உரியவாகும். உழுவித்துண்ணும் வேளாளரே கொள்க. அந்தணரும் ஏனையிருவரும் அரசன் சார்பாளராக மேற்பார்வையிடச் செல்வ ரென்பதாம். அந்தணர் புறப்பொருட் சார்பினும், ஏனையிருவரும் தலைவியைப் பிரிந்தும் செல்வரெனக் கொள்க. இப்பிரிவு, அகம் புறம் இரண்டற்கும் பொதுவாகவே யுள்ளமை காண்க. ‘நால்வர்’ என்றது, அரசரொடு நால்வர் என நின்றது. உம்மை - முற்றும்மை. வணிகரும் வேளாளரும் அரசரோடு பிரிவராதலால், ‘மூவர்’ எனின், ‘யார் யார்’ என மயக்கந் தருமாகலான் ‘நால்வர்’ என்றார். (29) 5. வணிகர் வேளாளர் உரிமை 30. மன்னர் பாங்கிற் பின்னோ ராகுப. இ-ள்: மன்னர் பாங்கின் - அரசரது சார்பாளராய்த் தலைமை தாங்கிச் செல்லுதற்கு, பின்னோர் ஆகுப - வணிகரும் வேளாளரும் உரியராவர். பகை வெல்லவும் நாடுகாக்கவும் பொருள் திரட்டவும் சந்து செய்யவும் அரசர்க் கீடாக இவ்விருவரும் செல்வர் என்பதாம். ஈடு - பதில். ஆணையாளர் - அரசனுக் கீடாக நிலையாய் இருந்து நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வருபவர். சார்பாளர் - அவ்வப்போது பகை முதலியவற்றிற்காக அரசனுக் கீடாகச் செல்பவர். அந்தணர் துறவிகளாதலால் தலைமை தாங்கிச் செல்லார். (30) 6. வணிகர் வேளாளர் தூதிற் பிரிவு 31. வேந்துவினை யியற்கை வேந்தனி னொரீஇய ஏனோர் மருங்கினும் எய்திட னுடைத்தே. இ-ள்: வேந்து வினை இயற்கை - வேந்தரது போர்த் தொழிலை இயல்பு செய்தலாகிய தூதிற்பிரிவு, வேந்தனின் ஒரீஇய ஏனோர் மருங்கினும் - அரசனின் நீங்கிய வணிகர் வேளாளரிடத்தும், எய்து இடன் உடைத்து - சிறுபான்மை உண்டு. இயற்கை - பகை நீக்கி இயல்பு செய்தல் - தூது. முன்னர் (26, 30) வணிகர் வேளாளர்க்குத் தூதிற் பிரிவு உண்டென்றதைச் சிறுபான்மை யுண்டென வரையறை செய்தார். எனவே, அந்தணர் அரசர்க்கே தூது பெரும்பான்மை என்பதாம். (31) 7. வணிகர் வேளாளர் பொருட்பிரிவு 32. பொருள்வயிற் பிரிதலும் அவர்வயி னுரித்தே உயர்ந்தோர் பொருள்வயி னொழுக்கத் தானே. இ-ள்: பொருள் வயின் பிரிதலும் - பொருள் காரணமாக அயல் நாடுகட்குப் பிரிந்து செல்லுதலும், அவர் வயின் உரித்து - வணிகர் வேளாளர்க்கு உரியதாகும், உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான - அவர்களில் அறிவொழுக்கங்களிற் சிறந்தவர்கள் அறத்தில் திரியாமல் பொருள் தேடுவர். அயல்நாடுகளிற் சென்று பொருளீட்டல் அரசர்க்கே சிறந்தது. பண்டு வணிகரும் அரசன் கட்டளை யின்றி அயல் நாடுகட்குப் பொருள் தேடச் செல்லார். தந்நிலத்தே விளைவிக்கும் வேளாளர் வேற்று நாட்டிற்குச் செல்ல வேண்டியதேயில்லை. ஆனால், ஓரொருகாற் செல்வர். அங்ஙனம் செல்ல நேரின் அவர்களில் அறிவொழுக்கங்களிற் சிறந்த ஆன்றோரே சென்று அறந்தலைப் பிரியாமற் பொருள் தேடுவர் என்பதாம். அறந்தலைப் பிரியாமல் தேடல் - நல்வழியில்தேடல்.இதனால்,நம்முன்னோரின்நேர்மைஇனிதுவிளங்கும். (32) 8. பிரிவுக்குப் புறனடை 33. உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான. இ-ள்: ஓத்தின் ஆன - அறநூல்களிற் கூறியபடி பிரிவு நிகழ்த்துதல், உயர்ந்தோர்க்கு உரிய - ஏவல் மரபினரான அந்தணர் முதலிய நால்வர்க்குமே உரியதாகும். ஓத்து - நூல். ஓதப்படுவதனால் ஓத்து எனப்பட்டது. கூறுதல் - கூற்று என்றாவது போல, ஓதுதல் - ஒத்து என்றானது. அடியோர் வினைவலர் தமக்குரியரன்மையான் அன்னாரை விலக்கிற்று, உயர்ந்தோர்க் கென்பது. இது, ஓதல் பகை தூது காவல் பொருட் பிரிவுகட்கு அந்தணர் முதலிய நால்வருமே உரியரென வரையறை செய்தது. (33) 9. மகளிர் இயல்பு 34. முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை. இ-ள்: கடற்பிரிவில் பெண்களை உடனழைத்துச் செல்லுதல் வழக்கமில்லை. முந்நீர் - கடல். மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர் உடைய தென்னும் காரணப்பெயர். மகளிர் ஆடவர்போல் வெளி நாடுகட்கு அலுவல்மேற் செல்லும் இயல்பினர் அல்லர் ஆகையால், மனைவியுடன் கடல் கடந்து செல்லும் வழக்கம் இல்லை என்பதாம். ஆடவரே திரைகடலோடியுந் திரவியந்தேடற் குரியராவர். கடற் பிரிவு - கலத்திற் பிரிவு. காலிற் பிரிவினும் தலைவியுடன் செல்லும் வழக்கம் இன்றென்பதூஉங் கொள்க. (34) 10. இதுவுமது 35. எத்தினை மருங்கினும் மகடூஉ மடன்மேற் பொற்புடை நெறிமை யின்மை யான. இ-ள்: எத்திணை மருங்கினும் - பெருந்திணைக் குறிப்பான மிக்க காமத்து மிடலின் கண்ணும், மகளிர் மடல்மேல் - மகளிர் மடலேறுதல் இல்லை, பொற்புடை நெறிமை இன்மையான - அது மகளிர்க்குச் சிறப்புடைய முறைமையில்லாமை யாகலான். சிறப்புடைய முறைமை யில்லாததால் மகளிர் மடலேறுதல் இன்றென்க. மிக்க காமத்தால் வருந்தும்போதுகூட மகளிர் தெருவில் நின்று மடலேறுவதாகக் கூறுதல் இல்லையாகலான், அவர்கள் வெளிநாடுகட்கு, அஃதுங் காரியத்தின் பொருட்டுச் செல்லும் இயல்பினர் அல்லர் என முன்னதற்கோர் காரணங் கூறியவாறு. வீட்டைவிட்டு வெளிப்போந்து வாய்விட்டுத் தங்கருத்தை வெளியிடவும் நாணுந்தன்மை, அல்லது மென்மைத் தன்மையுடைய மகளிர், பொருள் தேடும் பொருட்டுக் கடல் கடந்து வெளிநாடு செல்லும் தங்கணவரோடு செல்லார். எனவே, தலைவியுடன் செல்லாமல், வெளி நாடுகட்குத் தலைவன் தனியாகவே செல்வான் எனப் பிரிவிலக்கணமே கூறியவாறாம் இவ்விரு சூத்திரங்களுமென்க. மனைவியைப் பிரிந்து செல்வதே பிரிவிலக்கணமாகையால், இது அகத்திணை பற்றிய வரையறையுமாம். மடலேறுதல் இன்னதென்பதை அகத்திணையியல் - 38 ஆம் சூத்திர வுரையில் காண்க. “கடலன்ன காம முழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்.” (குறள்) 6. அகப்புறம் பழந்தமிழ் மக்கள், ஒருவனும் ஒருத்தியும் தத்தமக்கேற்ற வரைத் தாமே தேர்ந்தெடுத்து அன்பொத்து இன்புற்று இனிது வாழ்ந்து வந்தனரேனும், ஒரு கட்டுப்பாட்டுக்குட்பட்டு வாழ்வியலுக் கொவ்வாத முறைகளை விலக்கி, ஒத்த முறைகளைக் கைக்கொண் டொழுகி வந்தனர். அக்கட்டுப்பாட்டை மீறி எவரும் நடவார். இளமையிலிருந்தே ஏற்ற வாழ்வியலின் இலக்கணங்கள் அறிவுறுத் தப்பட்டு வந்தன. அதன்படியே காதலர்கள் ஒழுகி அன்பு முதிர்ந்து மணஞ் செய்து கொண்டு இல்லறம் நடத்தி வந்தனர். இங்ஙனம் ஒத்த அன்புக்கு ஒவ்வாத வழியில் ஒரு சிலர் நடக்கவுங் கூடுமாகையால், அங்ஙனம் நடப்பவற்றை இன்ன வென்று எடுத்துக் காட்டிக் கடிந்தனர் ஆசிரியர். அவைதாம் கைக்கிளை, பெருந்திணை என்பன. இவை ஒத்த காமமாகிய அகத்திற்குப் புறம்பானவை யாகையால், அகப்புறம் எனப்பட்டன. (35) 1. கைக்கிளை 36. காமஞ் சாலா இளமை யோள்வயின் ஏமஞ் சாலா இடும்பை யெய்தி நன்மையுந் தீமையு மென்றிரு திறத்தால் தன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெறாஅன் சொல்லி யின்புறல் புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே. இது, 1. காமஞ் சாலா இளமை யோள்வயின் ஏமஞ் சாலா இடும்பை எய்தலும், 2. நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்தலும், 3. சொல்லெதிர் பெறான் சொல்லி இன்புறுதலும் என்னும் மூன்று செயல்கள், ‘புல்லித்தோன்றும்’ என்னும் ஒரு புணர் சொற்றொடரில் இணைத்துக் கூறப்பட்டன வென்க. எய்தி, புணர்த்து என்னும் வினையெச்சங்களை - எய்தல், புணர்த்தல் எனத் தொழிற் பெயராக்கி உம்மை விரிக்க. இன்புறல் என்பதனோடும் உம்மை கூட்டுக. இ-ள்: காமம் சாலா இளமை யோள் வயின் ஏமம் சாலா இடும்பை எய்தலும் - பூப்பெய்தியும் காமக் குறிப்புத் தோன்றாத ஒருத்தியையேனும், பூப்பெய்தாதாளைப் பூப்பெய்தினாளாகக் கொண்டேனும் ஒருவன் அவளைக் காதலித்துக் குறிப்புரை நிகழ்த்தியும் அவளுடைய காதற்குறிப்பைப் பெறாது பெருந்துன்பம் எய்தலும், நன்மையும் தீமையும் என்று இரு திறத்தால் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்தலும் - அங்ஙனம் அவளிடமிருந்து எதிர்க் குறிப்பைப் பெறாததனால், ‘நான் வறிதே (சும்மா) செல்லவும் தன் எழில் நலத்தால் எனது மனத்தைக் கவர்ந்தமையால் நான் தீங்கு செய்திலேன்’ எனத் தன்னிடத்து நன்மையையும், தன்னை அவள் வருத்தினாளென அவளிடத்துத் தீமையையும் ஏற்றிக் கூறலும், சொல் எதிர் பெறான் சொல்லி இன்புறலும் - அங்ஙனங் கூறிய கூற்றுக்குக் காமஞ்சான்ற பருவத்தாளாயினன்றே எதிர்மொழி கூறுவள்? காமந் தோன்றாதவளாகையால் எதிர்மொழி கூறாது செல்லவே, தான் மட்டுஞ் சொல்லி அதனால் இன்புறுதலும்; புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே - ஆகிய இம்மூன்று செயலும் பொருந்தித் தோன்றுகின்ற ஒருதலைக் காமத்தின் குறிப்புக்களாகும் என்றவாறு. சாலா - சாலாத - அமையாத, பொருந்தாத; ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ஏமம் - உய்வு. ஏமம் சாலா - பிழைக்க முடியாத. புல்லி - பொருந்தி. அதன் பின்னர் அவள் காமக்குறிப்புத் தோன்றாதவள் என்பதை உணர்ந்து அங்கு நின்றுஞ் செல்வன். இவ்வாறு ஒரு சிலரிடம் நிகழும். ஆகவே, இது ஒத்த காமமாகிய கள வொழுக்கத் திற்குப் புறம்பானதாகையால் கூடாதென்பதாம். பெண்மைப்பருவக் குறிகள் (தோளும் மார்பும் பெருத்தல், கண்பிறழ்தல் முதலியன) தோன்றியும், பூத்தற்குரிய ஆண்டு நிரம்பியும் சில பெண்கள் பூக்காமல் இருப்பதும், பூத்தும் சில பெண்கட்குக் காமவுணர்ச்சி தோன்றாமல் இருப்பதும் உடற்கூற்றின் இயல்பாகலான், அவ்வகைப் பெண்ணொருத்தியைக் கண்டு, அவள்மேற் காதல் கொண்ட ஒருவன் தனது குறிப்புக்கு அவள் எதிர்க்குறிப்பு நிகழ்த்தாமல் செல்வாளாயின் அதையறியாத அவன், ‘இவள் ஏன் இவ்வாறு செல்கிறாள்? நமது குறிப்பை அறிந்து கொள்ள வில்லையோ?’ என எண்ணித் தனது காதலை அடக்க முடியாமல் பெருந்துன்பம் அடைவன். அவன்கட் டோன்றிய காதலைக் காமஞ்சாலா இளமையோள் தீர்க்காளாகையால், ‘ஏமஞ் சாலா இடும்பை’ என்றனர். அங்ஙனம் துன்பமடைந்தவன், யாதேனுமொரு பொருளையோ, ஒருவரையோ பார்த்துச் சொல்வது போலவோ (முன்னிலைப் புறமொழி), நேராகவோ (முன்னிலை யாக்கியோ) நீயன்றோ என்னை வருத்தினாய்? அதனால் நீயே குற்றமுடையாய். நான் குற்றமுடையே னல்லேன் என்பன போன்றன கூறுவன். ‘ஏ அழகிய பூங்கொம்பே! மணத்தாலும் நிறத்தாலும் என் மனத்தை ஈர்த்து நீயன்றோ என்னை வருத்தினை? ஆகவே, நீயே குற்ற முடையாய். நான் குற்றமுடையே னல்லேன்’ என்பது - முன்னிலைப் புறமொழி. காமக்குறிப்பு அரும்பாதவளாகையால் அவன் கூறிய அக்குறிப்பு மொழியை அறிந்து எதிர்மொழி கூறாதிருக்கவே, தன் காதற் பெருக்கால் பழையபடியே சில இன்ப மொழிகளைக் கூறித் தானே இன்புறுவன். அதையும் உணராது அவள் செல்வாளாயின், அவள் காமப்பருவத்தினள் அல்லள் என்பதை யுணர்ந்து அவள் மேற் கொண்ட காதலை விட்டுச் செல்வானென்க. காமப் பருவத்தா ளாயின் அவன் குறிப்புக்கு எதிர்க்குறிப்பு நிகழ்த்துவள். இக்குறிப்பு மூன்றும் ஒரே நாளிலன்றிப் பல நாட்களில் நிகழும். ஒன்றிரண்டு நிகழ்ந்து நீங்குதலும் உண்டு. இவை மூன்றும் ஒருவன் ஒருத்தியின் ஒருமனப் பாட்டுக்குக் காரணமாகாது. ஆண்பாலிடத்து மட்டும் ஏற்பட்ட காமமாகையால், வாழ்க்கை முறைக் கேற்ற தன்றென முன்னையோர் கடிந்து வந்தனரென்க. காமஞ்சாலாளைக் காதலித்து எதிர்க் குறிப்பு நிகழ்த்தாமை கண்டு, காமஞ்சாலாளென நீங்கிச் செல்லின் குற்றமின்று. மேலும் அதனால் துன்புறுதலும், விடாமல் அவளைத் தொடர்தலுமே தகாமையாகும். காட்டு: “ உளனாவென் னுயிரையுண் டுயவுநோய் கைம்மிக இளமையா னுணராதாய் நின்றவ ரில்லானுங் களை நரின் நோய்செய்யுங் கவினறிந் தணிந்துதம் வளமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்; அல்லல்கூர்ந் தழிபுக அணங்காகி யடருநோய் சொல்லினு மறியாதாய் நின்றவ றில்லானும் ஒல்லையே யுயிர்வவ்வும் உருவறிந் தணிந்து தம் செல்வத்தாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய் எனவாங்கு, ஒறுப்பின்யா னொறுப்பது நுமரையான் மற்றிந்நோய் பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயிற் புனையிழாய்! மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி நிறுக்குவென் போல்வல்யான் நீபடு பழியே!” (கலி. 58) இதில், தான் உயிர் கொடுத்தானாகத் தனது நன்மை கூறி, தன்னை வருத்திய அவள் தீமை கூறி, மேலும் ஆற்றானாய் மடலேறுவேன் போலுமெனக் கூறியது காண்க. (36) 2. இதுவுமது 37. முன்னைய நான்கும் முன்னதற் கென்ப. இ-ள்: இயற்கைப் புணர்ச்சிக்கு முன் நிகழும் காட்சி, ஐயம், தெளிதல், தேறல் என்னும் குறிப்பு நான்கும் தலைவன் மாட்டே நிகழ்வதால், அவை கைக்கிளையின் பாற்படும் என்பர். (கள - 3 -7) புறப்பொருட் கைக்கிளை: இனி, ஒத்த அன்புடைய இருவர் இனிது இல்லறம் நடத்தி வரும்போது, யாதேனுமொரு காரணத்தால் கணவன் மனைவியைத் துறப்பதனால் உண்டாகும் பெண்பாற் கைக்கிளையும் உண்டு. அது பெண்பாலின்றிப் பிற சான்றோர் கூறுவதால், அகமாகாது புறமாயிற்று. பேகனால் துறக்கப்பட்ட அவன் மனைவி கண்ணகியைக் கபிலர் முதலிய சான்றோர் பேகனொடு கூட்டுவித்தது இதற்குக் காட்டாகும். (புறம் - 35 - 40) 37) 3. பெருந்திணை 38. ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம் தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே. இ-ள்: 1. ஏறிய மடல்திறம் - தலைமகள் உள்ளியைந்தும் வெளிக்கு இயையாள் போல் காட்டினும், தோழி மறுக்கினும், சுற்றத்தார் வரைவுடன் படாவிடினும் தலைவன் நான் மடலேறுவேன் எனக் கூறுதலேயன்றி மடலேறுதலும்; 2. இளமை தீர்திறம் - மூத்தாளை விரும்புதலும், இருவரும் பருவ முதிர்ந்தபின் புணர நினைப்பதும்; 3. தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் - பிரிந்து சென்ற தலைவன் வரவு நீட்டிக்கின், காம மிகுதியால் தலைவி மனமழிந்து இரங்குதலும்; 4. மிக்க காமத்து மிடலொடு தொகைஇ - இல்லறம் நடத்துங்கால் மனைவி விரும்பாமலும் கணவன் புணர்ச்சியை விரும்புதலும், வலிதிற் புணர எண்ணுதலும் ஆகிய இவற்றொடு தொகுத்து, செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே - சொல்லிய நான்கும் பெருந்திணைக் குறிப்புக்களாகும். திறம் - கூறுபாடு. தேறுதல் - தெளிதல். மிடல் - வலி. இக்குறிப்புக்கள் நான்கும் களவுக்கும் கற்புக்கும் ஒத்த வொழுக்க மன்றாகையாலும், வாழ்க்கை யொருமைக்குப் பொருந் தாமையாலும் இவற்றைப் ‘பெருந்திணை’ என்றார். தலைவன் தலைவி இருவர் பாலும் அன்பொத்து நடக்கும் ஒத்தகாமம் போலாது, இவை நான்கும் இருவரிடத்தும் ஏற்றத்தாழ்வாக நடத்தலான் ஒவ்வாக் காமமாயிற்று. 1. மடலேறுதல் - களவினும், 4. மிக்க காமத்துமிடல் கற்பினும், 2. இளமை தீர்திறம், 3. காமத்து மிகுதி ஆகிய இரண்டும் களவு கற்பு இரண்டிடத்தும் நிகழும். 1. நாணத்தால் உடன்படாதாளை வற்புறுத்தின் மறுத்து விடுவாள். மடலேறுதல் காதலன்புக்குப் புறம்பான செயலாகும். 2. மூத்தாள் இளையானைப் பெரும்பாலும் விரும்பாள். பருவ முதிர்ந்தபின் இருவர்க்கும் ஒரே தன்மையான புணர்ச்சி வேட்கை தோன்றாது. இது சிலரிடம் அருமையாக நிகழ்வதாம். 3. கணவன் வாராமை குறித்து மனமிகவழிதல் மனச்சோர்வையும் உடல் நலிவையும் உண்டாக்குதலோடு, தற்கொலைக்கும் ஏதுவாகும். மீறிய காமம் ஒழுக்கக் கேட்டையுந்தரும். 4. மனைவிக்கு விருப்பமின்றிக் கணவன் புணர நினைப்பதும், வலிதிற் புணர முயல்வதும் மனைவியின் அன்பைக் கெடுத்து, வெறுப்பை உண்டாக்கி இல்லற நிகழ்ச்சிக்கு இடையூறு செய்யும், இவ்வாறே கணவர்க்குமாம். கைக்கிளை, பெருந்திணையாகிய இவ்விரண்டொழுக்கமும் ஐந்திணைக்குப் புறம்பாக மிகச்சிலரிடைத் தவறுதலானும், அறியாமையானும் நடைபெறினும், இவையும் அகவொழுக்கத்தின் சார்பாகவே நடைபெறுவதால் ஒழுக்கமாகவும், ஒத்த காமத்திற்கு ஒவ்வாத ஒருதலைக்காமமும் பெருந்திணையும் ஐந்திணைக்குப் புறம்பானதால், ‘அகப்புறம்’ என்றும், ஐந்திணையை ‘அகம்’ என்றும் வரையறை செய்தனர். ஐந்திணையை ‘அகனைந்திணை’ (அகத் - 43) எனவும், கைக்கிளை பெருந்திணைகளைப் ‘புறத்து’ (அகத் - 23) எனவும் கூறுதல் காண்க. காமஞ்சாலாதவளிடம் பேசிமட்டும் இன்புறுதல் - கைக்கிளை; வரம்பு கடப்பின் - பெருந்திணை. மிக்ககாமமும் தீமை செய்யாத விடத்து - கைக்கிளையாம்; தீமை செய்யின் பெருந் திணையாம். பழங்காலத்தில் பெரும்பாலும் களவின் வழியாகவே கற்பு நிகழ்ந்து வந்தது. இப்போது பெரும் பாலும் பெற்றோர்களாலேயே மணஞ் செய்யப்படுகிறது. இவ்வாறு கட்டாய மணஞ் செய்யப்பட்ட மணமக்களில் ஒருவர்க்கே அன்பிருப்பின் - கைக்கிளையாகும்; இருவர்க்கும் அன்பில்லா திருப்பின் பெருந்திணையாகும். மடலேறுதலாவது: பெற்றோர் தலைவியின் கள வொழுக்ககத்தைக் கருதாமலும், தலைவி தோழிக்கும், தோழி செவிலி முதலியோர்க்கும் அறத்தொடு நில்லாமலும் தாழ்த்து வரினும், இற்செறிப்பால் தலைவியை எதிர்ப்பட முடியா விடினும் தலைவன் அலர் எழுப்புதற்காக, தலைவியின் உருவத்தைப் பனையோலையில் எழுதிக் குதிரைமேலேறிக் கொண்டு தலைவியின் ஊர்த்தெருவழியே செல்வன். அது கண்ட ஊரார் கூடிப்பேசுவர். அவ்வூரலருக் கஞ்சிய பெற்றோர் அவனுக்கே தம்மகளைக் கொடுப்பர் என்பதாம். மடல் - பனையோலை; மடலொடு ஏறுதல். ‘மடன்மாக்கூறும் இடனும் உண்டு’ (கள - 11) என்பது, மடலொடு குதிரையில் ஏறுவேன் எனத்தோழியிடம் கூறுதல். மடல்மா மடல் தாங்கிச் செல்லும் குதிரை. அலர் எழுப்புதற்கு, ஊரார் அறியப் பனங்கருக்கால் செய் பொய்க்குதிரையில் ஏறுதல் எனினுமாம், அலர் - ஊரார் கூறும் பழிச்சொல். பனங்கருக்கு - பனமட்டை. அறத்தொடு நிற்றல் - உள்ளதை உரைத்தல். இதையே பிற்காலக் கோவை நூலார் பலவாறு கற்பனை செய்துவிட்டனர். இது மிகச் சிலரிடை நிகழ்ந்த தீய ஒழுக்கமேயாகும். காட்டு: 1. “ யாமத்து மெல்லையு மெவ்வத் திரையலைப்ப மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன் தேமொழி மாத ருறாஅ துறீஇய காமக் கடலகப் பட்டு.” (கலி - 139) இது, ஏறிய மடற்றிறம், 2. “ கொக்குரித் தன்ன கொடுமடாய்! நின்னையான் புக்ககலம் புல்லினெஞ் சூன்றும் புறம்புல்லின் அக்குளுத்துப் புல்லலு மாற்றேன் அருளீமோ பக்கத்துப் புல்லச் சிறிது.” (கலி - 94) ‘கொக்குரித்தன்ன’ என்பதனால் இது, இளமை தீர்திறம். 3. “ மெல்லியப் பொறுத்தேன் களைந்தீமின் சான்றீர்! நலிதருங் காமமுங் கௌவையு மென்றிவ் வலிதி னுயிர்காவாத் தூங்கியாங் கென்னை நலியும் விழும மிரண்டு.” (கலி - 142) இது. காமத்து மிகுதிறம்; தலைவி சான்றோரை நோக்கிக் கூறுதல் காண்க. 4. “ மெல்லிணர் செல்லாக் கொடியன்னாய்! நின்னையான் புல்லினி தாகலிற் புல்லினென். எல்லா! தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா செய்வது நன்றாமோ மற்று.” (கலி - 62) இது, மிக்க காமத்து மிடல். (38) 4. வேட்கை மறுத்துரைத்தல் 39. வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தல் மரீஇய மருங்கின் உரித்தென மொழிப. இது. கைக்கிளை பெருந்திணைக்குப் பொதுவானதோர் இலக்கணம் உணர்த்துகின்றது. இ - ள்; வேட்கை மறுத்து ஆங்கு கிளந்து உரைத்தல் - தம்மனத்து வேட்கையை மாற்றி, இருவரும் எதிர்ப்பட்ட போது தாமாற்றிய வேட்கை புலப்படக் கூறுதல், மரீஇய மருங்கின் உரித்து என மொழிப - கைக்கிளை பெருந்திணைக் கண் உண்டு என்று கூறுவர். வேட்கை மறுத்துரைத்தல் - புணர்ச்சிக் குடன்படாமையைக் கூறுதல். அதாவது, தலைவன் புணர்ச்சி வேண்டத் தலைவியும், தலைவி புணர்ச்சி வேண்டத் தலைவனும் மறுத்துரைத்தலாம். வேட்கை - புணர்ச்சி விருப்பம். மரீஇய மருங்கு - புலனெறி வழக்கஞ் செய்து மருவிப் போந்த கைக்கிளை பெருந்திணை. ‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்’ (அகத் - 1) என அவை ஐந்திணையின் இருமருங்கும் நிற்றலான், ‘மருங்கு’ என்றார். ஒத்த அன்புடையார் சினம் மிகினும் ஒருவர்க்கொருவர் தமது விருப்பத்தை நேரில் மறுத்துக்கூறார். இது பெரும் பாலும் பெண்பாலரிடமே நிகழும். ஊடற்காலத்தும் முன்னிலைப்புற மொழி யாகவோ, சிறைப்புறமாகவோ கூறுதலன்றித் தலைவன் எதிர்நின்று கூறாள் தலைவி. இது களவு கற்பு இரண்டற்கும் பொது. நேரில் கூறுதல் அகமாகாது அகப்புறம் ஆகும் என்பதாம். முன்னிலைப் புறமொழி - வேறொன்றைப் பார்த்துக் கூறுவது போலக் கூறுதல். இது சாடைபேசுதல் எனப்படும். சிறைப்புறமாகக் கூறுதல் - தலைவன் மறைவிலிருக்கும் போது கேட்கும்படி கூறுதல். சிறிது மறுத்தல் - கைக்கிளையாம். உணர்த்த உணராது மறுத்துரைத்தல் - பெருந்திணையாம். இவ்வாறு நேரில் மறுத்துரைத்தல் ஒத்த அன்புக்கு இழுக்காகும். இது சிலரிடை நிகழுமாகையால் எடுத்துக்கூறி விலக்கினார். இன்றும் மனைவியோ கணவனோ மனம் வேறுபட்டுப் புணர்ச்சியை மறுக்கின் - புணர்ச்சிக்குடன்படாவிடின் - ஒற்றுமை கெட்டுப் பிரிய நேர்ந்து குடும்பங் கெடுதலை அறிக. காட்டு: “ தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா செய்வது நன்றாமோ மற்று.” (கலி - 62) இது, தலைவி வேட்கை மறுத்துணர்த்தியது. (39) 5. தேறுதலொழிந்த காமத்து மிகுதிறம் 40. பொழுது தலைவைத்த கையறு காலை இறந்த போலக் கிளக்குங் கிளவி மடனே வருத்தம் மருட்கை மிகுதியோ டவைநாற் பொருட்கண் நிகழு மென்ப. இது, பெருந்திணைக் குறிப்பு நான்கனுளொன்றன் வழு வமைக்கின்றது. இ - ள்: பொழுது தலைவைத்த கையறு காலை - மாலைப் பொழுதிலுண்டான துயரால் தலைவி செயலற்றபோது, மடனே வருத்தம் மருட்கை மிகுதியோடு அவை நாற்பொருட் கண் - அடக்கமும் ஆற்றாமையும் வியப்பும் அழகு மிகுதியும் ஆகிய அந்நான்கும், இறந்த போலக் கிளக்கும் கிளவி நிகழும் என்ப - தன்னை நீங்கினவாகக் கூறுங் கூற்று நிகழுமென்று சொல்லுவர் புலவர். பொழுது - மாலைப்பொழுது; இங்கே ஆகுபெயரான் அப்பொழுதில் உண்டான துயருக்கானது. தலைவைத்தல் - உண்டாதல். துயரால் உண்டான செயலறவு என்க. கையறுதல் - செயலறுதல்; செய்வதின்னதென்று தோன்றாது நிற்றல். அவை நாற்பொருட்கண் இறந்த போலக் கிளத்தல் - அந்நான்கும் தன்னை விட்டு நீங்கினாற் போலக் கூறுதல். இறத்தல் - கடத்தல், நீங்கல். பிரிந்து சென்ற தலைவன் வரவு நீட்டிக்கின், வரத் தாழ்க்கின் காமமிக்க தலைவி, தலைவன் வரும் மாலைப்பொழுது வரவே, அதனா லுண்டாகிய துயரால் செய்வது இன்னதென்று தோன்றாது அடக்கம், ஆற்றாமை, வியப்பு, அழகு மிகுதி ஆகிய நான்கும் தன்னை நீங்கினவாகக் கூறும் என்பதாம். தன்னை நீங்கல் - என்னால் இனிக் காதலை அடக்க முடியாது, ஆற்றாமையைப் பொறுக்க முடியாது - ஆற்றியிருக்க முடியாது - எனவும், இனி வியக்கமுடியாது, என்மிக்க அழகு கெட்டது எனவும் கூறுதல். இங்ஙனம் கூறுதல் ஒத்த அன்புக்கு ஏற்ற தன்றாகையால், ஒவ்வாக் காமமாகிய பெருந்திணையாயிற்று. அதாவது, தலைவன் களவுக்காலத்தே பொருள்வயிற் பிரிவு முதலியவற்றிற்குப் பிரியும்போது. கற்பிற்போல, இன்னவாறு ஆற்றியிரு என்று கூறாது பிரிவான். பிரிந்து சென்றவன் வரவு நீட்டிக்கின் வருந்துகின்ற தலைவியை ஆற்றுவிக்குந் தோழியால் ஆற்றுவிக்க முடியாமல், அன்பின்றி நீங்கினன் எனத் தலைவிக்கு ஆற்றாமைமிக்குப் பெருந்திணை நிகழுமென்பதாம். காட்டு: 1. “ எல்லீரும் என்செய்தீர் என்னை நகுதிரோ நல்ல நகாஅலிர் மற்கொலோ யானுற்ற அல்ல லுறீஇயான் மாய மலர்மார்பு புல்லிப் புணரப் பெறின்.” (கலி - 142) ‘மலர் மார்பு புல்லிப் புணரப் பெறின் என்னை நகுதிரோ’ எனக் கூறத்தகாதன கூறலான், மடந் தன்னை இறந்தவாறு கூறினாள். 2. “ தெள்ளியே மென்றுரைத்துத் தேரா தொருநிலையே வள்ளியை யாகென நெஞ்சை வலியுறீஇ உள்ளி வருகுவர் கொல்லோ வுளைந்தியான் எள்ளி யிருக்குவேன் மற்கொலோ.” (கலி -142) ‘தெள்ளியேம் என்றுரைத்து’ என்றதனாலும், ‘எள்ளி யிருக்குவேன்’ என்றதனாலும், வருத்தந் தன்னை இறந்தவாறு கூறினாள். 3. “ கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று நாடுவேன் கண்டனென் சிற்றிலுட் கண்டாங்கே ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய காணான் திரிதருங் கொல்லோ மணிமிடற்று மான்மலர்க் கொன்றை யவன்.” (கலி - 142) பிறையைச் சிற்றிலுட் பிறிதொன்று நாடுவேன் கண்டனன். ஆடையால் மூடி அகப்படுப்பேன். கொன்றையவன் காணான் திரிதரும் - எனத் தான் செய்ததனை வியவாமையின் மருட்கை தன்னை யிறந்தவாறு கூறினாள். 4. “ பைதல வாகிப் பசக்குவ மன்னோவென் நெய்தன் மலரன்ன கண்.” (கலி - 142) ‘நெய்தல் மலரன்ன கண் பசக்குவ’ என்றலின், வனப்பு மிகுதி தன்னை யிறந்தவாறு கூறினாள். (40) 7. அகத்திணை மரபு 41. மரபுநிலை திரியா மாட்சிய வாகி விரவும் பொருளும் விரவும் என்ப. இ - ள்: மரபு நிலை திரியா மாட்சியவாகி - அகத்திணை மரபுக்கு மாறாகாத மாட்சிமை யுள்ளனவாய், விரவும் பொருளும் விரவும் என்ப - புதிதாக வந்து கலக்கும் கருத்துக்களும் கலக்கும் என்று சொல்லுவர். மாட்சி - இலக்கணம், குணம். அதாவது, அகவொழுக்கத் திற்குக் கூறிய இலக்கணத்தில் மாறுபடாத சில கருத்துக்கள் பிற்காலத்தில் சேர்த்துக் கொள்ளுதலும் இழுக்கின் றென்பதாம். ‘புதியன புகுதலும் வழுவல கால வகையினான்’ என்பதாம். அவை, 1. பாசறைக்கண் தலைவியின் தூது கண்டு தலைவன் கூறல், 2. தலைவியின் ஆற்றாமை கண்டவிடத்துப் பிரிந்து சென்ற தலைவன் வந்தானெனத் தோழி கூறல், 3. வரவிடை வைத்துப் பிரிந்தோன் தலைவியை நினைந்து வருந்திக் கூறல், (வரைவு - திருமணம். வரைவு - இடைவைத்துப் பிரிதல் - திருமணச் செலவுக்கு வேண்டிய பொருள் கொண்டு வரச் செல்லுதல்) 4. உடன்போயவழி இடைச்சுரத்து நிகழ்ந்ததனை மீண்டு வந்துழித் தலைவன் தோழிக்குக் கூறல், 5. யான் நினைத்துச் சென்ற காலமளவும் பொருள் தேடாது உன்னை விரும்பி வந்தேனெனத் தலைவன் கூறுதல், 6. பொருள்வயிற் பிரிந்தோன் தலைவியை நினைந்து வருந்துதல், 7. இடைச்சுரத்துத் தலைவன் செலவு கண்டோர் கூறல், 8. அவன் மீட்சி கண்டோர் கூறல், 9. ஊரின்கட் கண்டோர் கூறல், 10. தலைவி என்னையும் உடன்கொண்டு செல்க எனல், 11. தலைவன் தலைவிக்கு உடன்போக்கு மறுத்துக் கூறல் முதலியன. இவற்றிற்கு இலக்கியம் சங்க நூல்களிற் காண்க. (41) 8. செய்யுள் வழக்கம் 42. நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட் டாயிரு பாங்கினும் உரிய தாகு மென்மனார் புலவர். இ - ள்: நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் - நாடக வழக்கத்தாலும் உலகவழக்கத் தாலும், பாடல் சான்ற புலனெறி வழக்கம் - புலவராற் பாடுதற் கமைந்த அகத்திணைப் புலனெறி வழக்கமானது, கலியே பரிபாட்டு ஆஇருபாங்கினும் - கலிப்பா, பரிபாடல் என்னும் அவ்விரு பாவாலும், உரியதாகும் என்மனார் புலவர் - பாடுதற்குரியதாமென்று சொல்லுவர் புலவர். சான்ற - அமைந்த. புலன் - அறிவு. புலனெறி வழக்கம் - அறிவின் வழிப்பட்டு வரும் வழக்கம். அதாவது, உலக வழக்கினைச் சுவையுடையதாகக் கற்பனை நயம் படப் புலவர் பாடுதலாம். வழக்கம் - தொழிற் பெயர். மக்கள் வாழ்க்கையில் இயல்பாகக் காணப்படும் ஒழுக்கம் ‘உலக வழக்கம்’ எனப்படும். அவ்வுலக வழக்கங்களிற் சிறந்தன வாயுள்ளவற்றை அறிஞர்கள் ஒன்றாகத் தொகுத்துப் பிற்கால உலக வழக்கம் திருத்தமாக நடைபெறுதற் பொருட்டுப் பாடல் களாகப் பாடி வைப்பர். அப்பாடல்களாகிய நூல் வழக்கம் - நாடக வழக்கம் எனப்படும். உலக வழக்கும் நாடக வழக்கும் சேர்ந்ததே புலனெறி வழக்கம், அல்லது செய்யுள் வழக்கம் ஆகும். எனவே, பழந்தமிழ் நூல்களெல்லாம் உலக வழக்கும் நாடக வழக்கும் ஒருங்கு அமைந்தன வாகையால், அவற்றைக் கடைப்பிடித் தொழுகத் தமிழ் மக்கள் கடமைப்பட்டவராவர். அகப்பொருளைப் பாடக் கலிப்பாவும் பரிபாடலும் பெரும் பான்மை; சிறுபான்மை ஆசிரியப்பாவும் வெண்பாவும் உரியவாம். அதாவது, கலிப்பாவும் பரிபாடலும் பெரும்பாலும் அகப்பொருள் பற்றிப் பாடடுதற்கே உரியவென்பது கருத்து. பரிபாடல், கடவுள் வாழ்த்து, ஊர், யாறு பற்றிய யாவும் காமங் கண்ணியே வருதல் பரிபாடலுட் காண்க. ஆசிரியமும் வெண்பாவும் வஞ்சியும் அகம் புறம் என்னும் இரண்டிற்கும் பொதுவாக வரும். பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய சங்க நூல்களுட் காண்க. நானிலத்திற்கும் பொதுவான புணர்ச்சியை மலையின் கண் நிகழுமென்றும், பெரும்பொழுது சிறுபொழுது முதலியன வரையறுத்துங் கூறுதல் நாடக வழக்கம். எனவே, ஆசிரியர் தொல்காப்பியர் உலக வழக்கையே மக்கள் விரும்பிக் கற்றற் பொருட்டுச் சுவைபட நூலாகச் செய்து வைத்துள்ளனராகையால்?, பொருளதிகாரத்திற் கூறப்படும் ஒழுக்கங்கள் நம் முன்னையோர் ஒழுகிய ஒழுக்கங்களேயாகு மென்க. (42) 1. இயற்பெயர் சுட்டாமை 43. மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஅர். இ - ள்: மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும் - மக்களிடத்தில் நிகழும் ஐந்திணையும் பாடும்போது, ஒருவர் பெயர் சுட்டிக் கொளப்பெறார் - ஒருவர் இயற்பெயரைச் சுட்டிக் கூறப் பெறார். அகவொழுக்கம் யாவர்க்கும் பொதுவாகையால் ஒருவருடைய இயற் பெயரைச் சுட்டி - பாடலில் அமைத்து - பாடுதல் கூடா வென்பதாம். ‘அகனைந்திணையும்’ என்றதனால், கைக்கிளையும், பெருந்திணையும் சுட்டி யொருவர் பெயர் கொண்டும் கொள்ளாதும் வருமென்பதாயிற்று. இயற்பெயர் அகத்திணைக்கண் சார்த்துவகையான் - உவமை யாக - வருதலன்றித் தலைமக்கள் பெயராக வாராவென்பது கருத்து. இது, ‘பெயர்’ எனப்பட்ட கருப்பொருளாதலின், தோழி, பாங்கன் முதலிய வாயிலோரையும் பொதுப் பெயரானன்றி இயற்பெயர் சுட்டிக் கூறப்படாவென்பதும் பெற்றாம். காட்டு: “ வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்ந் திசினால் யானே.” (அகம் - 147) ‘வெள்ளிவீதி’ என்னும் இயற்பெயர் அகத்திணைக்கண் உவமமாக வந்துள்ளமை காண்க. 2. இயற்பெயர் வருமிடம் 44. புறத்திணை மருங்கின் பொருந்தி னல்ல தகத்திணை மருங்கின் அளவுத லிலவே. இ - ள்: புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது - அகத்திணைப் பாட்டுக்களில் புறத்திணைப் பகுதி வருமானால் அப்புறத்திணைப் பகுதிகளில் தலைவன் இயற்பெயர் பொருந்தி வரினல்லது, அகத்திணை மருங்கின் அளவுதல் இல - அப்பாட்டின் அகவொழுக்கப் பகுதியில் இயற் பெயர் பொருந்தி வரமாட்டா. மருங்கு - பகுதி, இடம். அதாவது, புறத்திணை கருப் பொருளாயும், உவமமாயும் அகத்திணையுட் கலக்கு மென்பதாம். ‘அளவுதல்’ என்றதால், அப்புறத்திணைப் பகுதிக் கண் இயற் பெயர் ஒன்றே யன்றிப் பல வருதலுங் கொள்க. காட்டு: 1. “ முருக னற்போர் நெடுவே ளாவி அறுகோட்டி யானைப் பொதினி யாங்கண் சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய கற்போற் பிரியல மென்ற சொற்றான் மறந்தனர் கொல்லோ தோழி.” (அகம் - 1) இவ் வகைப்பாட்டில், ‘வேளாவி’ எனப் புறத்திணைத் தலைவன் இயற்பெயர் கருப்பொருளாய் வந்தவாறு காண்க. 2. “ எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர் பூவில் வறுத்தலை போலப் புல்லென்று.” (குறுந் - 19) ‘எவ்வி’ என்னும் இயற்பெயர் கருப்பொருளுவமமாய் வந்தது. இவ்விரு நூற்பாவினும், அகப்பாட்டுக்களில் கிழவன், கிழத்தி, வெற்பன், கொடிச்சி முதலிய உரிப்பொருட் பெயர் களாலன்றி, பாரி, காரி, அல்லி, வள்ளி போன்ற இயற்பெயர் களால் உரிப்பொருட்ட லைவர்களைச் சுட்டிக் கூறப்பெறா வென்பதும், அவ்வாறு இயற்பெயர் சுட்டிக் கூறப்பெறுதல் அகத்திணைப் பாட்டுகளில் வரும் புறத்திணைப் பகுதிகளி லென்பதும் கூறியவாறாம். (44) 3. இயற்பெயர் சுட்டல் 45. மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே. இ - ள்: வழிமருங்கின் - அகத்திணையின் வழியாகிய புறத்திணையிடத்து, மெய்ப்பெயர் வைத்தனர் - பாட்டுடைத் தலைவரின் இயற்பெயர் சுட்டிக் கூறலாமென வைத்தனர் முன்னையோர். மெய்ப்பெயர் - இயற்பெயர். இயற்பெயர் சுட்டாது, காளை, செம்மல் எனப் பாடுதலுமாம். (45) முதலாவது அகத்திணையில் குழந்தையுரை முற்றிற்று. இரண்டாவது பொதுவியல் 1. நாற்பான் மரபு அந்தணர் முதலிய நால்வரின் வாழ்வியல் மரபு கூறுதல் 1. அந்தணர் 1. அந்தணர்க்குரியன 46. நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய. இரண்டாவதாகிய இவ்வியல், பொதுவியல் என்னும் பெயர்த்து. இதனுள் நாற்பான் மரபும் கூற்றும் கேட்போரும் வாயிலும் கூறலும் வழுவமைதியுங் கூறப்படுகின்றன. நாற்பாலார், அகம் புறம் என்னும் திணை யிரண்டற்கும் உரியராகலானும், களவிற்கும் கற்பிற்கும் உரிய கூற்றும், அவ்விரண்டன் வழுவமைதியும் பிறவும் ஓரிடத்திற் கூறற்கமை யாமையானும் இது, பொதுவியல் என்னும் பெயர்த்தாயிற்று. இம்முதற் சூத்திரம், நாற்பான் மரபு உணர்த்துவான், முதலில் அந்தணக்குரியன உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்: நூலும் கரகமும் முக்கோலும் மணையும் ஆராயுங்கால் அந்தணர்க்கு உரியவாகும் என்றவாறு. நூல் - அறநூல் முதலிய தமிழ் நூல்கள். கரகம் - செம்பு. மணை - இருக்கை, விரிப்பு. ‘ஆயுங்காலை’ என்றதனால், குடையும் செருப்பும் உடையராவர். இத்தமிழ்த் துறவிகள் மிகுதியாக ஓரிடத்தில் தங்கியிராமல் ஊர்தோறும் சென்று மக்களை நன்னெறிக்கட் செலுத்தி வந்தன ராகையால், வெயிலுக்காகக் குடையும் செருப்பும், நீர் கொண்டு (மொண்டு கொள்ளவும்) செல்லச் செம்பும், வழிச் செல்வோர்க்குத் துணையான கோலும், தங்குமிடத்தில் விரித்து இருக்க விரிப்பும், மக்கட் குரைக்கப் பழந்தமிழ் நூலும் உடையராய் இருந்து வந்தன ரென்க. நூல் - சாதியொருமை. கோல் - ஊன்றுகோல், கைத்தடி. முக்கோல் - பிறப்பு, வாழ்வு, இறப்பு என்னும் வாழ்க்கையின் உண்மைப் பொருள் குறிக்கும் முத்தலைகளையுடைய ஊன்றுகோல். (1) 2. பாடுமுறை 47. பரிசில்பா டாண்டினைத் துறைக்கிழ மைப்பெயர் நெடுந்தகை செம்மல் என்றிவை பிறவும் பொருந்தச் சொல்லுதல் அவர்க்குரித் தன்றே. இ - ள்: பாடாண் திணை - பாடாண் திணைக்கண், பரிசில்துறை கிழமைப் பெயர் - பரிசில் கடாநிலையும், பரிசில் விடையுமாகிய பரிசிற் றுறை பற்றிப் பாடுதற்குரிய பெயர்களாகிய காளை, இளையோன் என்னும் பெயர்களும், நெடுந்தகை செம்மல் என்று இவை பிறவும் - இவ் விரு பெயர்களும், இவை போன்ற பிற பெயர்களும், பொருந்தச் சொல்லல் - பொருந்தும்படி பாடுதல், அவர்க்கு உரித்தன்றே - அந்தணர்க்கு உரியதன்று. மற்ற மூவர்க்கும் உரித்தாகும் என்றவாறு. பெயரொடு உம்மை கூட்டுக. பிற பெயர் - அண்ணல், தோன்றல் என்பன. பாடாண்டுறை - பரிசில் கடாநிலையும், பரிசில் விடையும். அவை, பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும், நடைவயிற் றோன்றும் இருவகை விடையும் (புறத் - 35) எனப் புறத்திணையிற் கூறப்படுவன. அந்தணர் துறவிகளாதலின் கொடுத்தற் றொழிற்குரியரல்லர். எனவே, அக் கொடைத்தொழிற்குரிய காளை முதலிய பெயர்களால் அந்தணர் பாடுதற்குரியரல்லர் என, அவரது மரபு கூறிற்று இந்நூற்பா. எனவே, வாகைப் பாடாணாகப் பாடப்படுவர் என்பதாம். (2) 3. அரசுரிமை 48. அந்த ணாளர்க் கரசுவரை வின்றே. இ - ள்: அரசர் இல்வழி அந்தணர் அரசியற் றொழில் செய்தலும் கூடும் என்றவாறு. ‘அரசு வரைவின்றே’ என்பது, அந்தணர்க்கு அரசு விலக்கப்படுதல் இன்றென்பதாம். அரசர் போர், வேட்டை முதலிய வற்றிற்குச் சென்றபோது, அவர்க்குத் துணையாயிருந்த அந்தணர் அரசியலை மேற்பார்த்து வருவரென்பதாம். ‘அரசர் இல்வழி அந்தணரே அவ்வரசியல் பூண்டொழுகலும் வரையப் படாது என்றவாறு’ (மரபு - 82 - பேரா) என்பது அறிக. முன் (1) ஊர்தோறும் செல்வரென்றது ஒரு சிலரே. பெரும்பாலோர் தம்மூரிலிருந்து பொதுநலம் புரிந்தும், அரசர்க்குத் துணையாகவும் இருந்து வருவரென்க. (எனது, தொல்காப்பியர் காலத் தமிழர் - ‘அந்தணர்’ என்பது பார்க்க.) (3) 2. அரசர் 1. அரசர்க்குரியன 49. படையுங் கொடியுங் குடையு முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோ லரசர்க் குரிய. அரசராவார், சேர சோழ பாண்டியராகிய முடியுடை மூவேந்தரும், அவர்கீழ்ச் சிற்றரசரு மாவார். இது, பேரரசர்க் குரியன பற்றிக் கூறுகின்றது. இ - ள்: படை, கொடி, குடை, முரசு, குதிரை, யானை, தேர், தார், முடி என்பனவும், பொருந்துவன பிறவும் அரசர்க்குரிய என்றவாறு. நடை நவில் - விரைவுள்ள. நேர்வன - பொருந்துவன. பிற -கவரி, அரியணை முதலியன. தெரிவு கொள் - ஆராய்ந்து செய்யும். தார் - போர்ப்பூவும் தார்ப்பூவும். போர்ப்பூ - வெட்சி, வஞ்சி, உழிஞை முதலியன. தார்ப்பூ - அடையாளப் பூ. அவை - ஆர், வேம்பு, பனை என்பன. கொடி முதலிய மூன்றும் படைஞரானன்றி இயலாமையின் படையுடன் கூறி, குதிரையும் யானையும் தாமாகவும், தேர் குதிரையானும் இயலுதலின் பின்னர்க் குதிரை முதலிய மூன்றையுங் கூறினார். இதனால் நாற்படையின் பழமை பெறப்படும். ‘தெரிவுகொள் செங்கோலரசர்’ என்பதால், பழந்தமிழரசர்கள் முறைபிறழாது ஆண்டுவந்தமை பெறப்படும். (4) 2. இதுவுமது 50. அந்த ணாளர்க் குரியவு மரசர்க் கொன்றிய வரூஉம் பொருளுமா ருளவே. இ - ள்: அந்தணர்க் குரியவாக மேற் (1இல்) கூறிய பொருள்களில் அரசர்க்குரியவாகி வருவனவும் உண்டு என்றவாறு. ஒன்றிய - பொருந்திய. ஆர் -அசை. அவை - நூலும் மணையும். அரசர் முறைதவறாமல் ஆள்வோராகலின் அவர்க்கு அரசியன்முறை நூல் உரியதாயிற்று, மணை - அரியணை. இவற்றை உரியராக அரசரைப் பாடுதலும் மரபு என்பதாம். (5) 3. குறுநிலமன்னர்க் குரியன 51. வில்லும் வேலுங் கழலுங் கண்ணியும் தாரும் மாலையுந் தேரும் வாளும் மன்பெறு மரபி னேனோர்க்கு முரிய. இ - ள்: வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், வாள் எனும் இவை குறுநில மன்னர்க் குரிய என்றவாறு. ‘மன்பெறு மரபின் ஏனோர்’ என்றது, அரசு பெறு மரபினையுடைய குறுநில மன்னர் என்றவாறு. மரபு - முறைமை. அதாவது, தங்கீழ்ப் பல சிற்றரசரை யுடையராய்ப் பேரரசு நிலைபெறும் செல்வத்தையுடையர் என்பதாம். இதனால், சேர சோழ பாண்டியராகிய முடியுடை மூவேந்தர் மரபின் அரசியிற் பெருமை விளங்கும். கண்ணி - சூடும்பூ. தார் - குடிப்பூ. மாலை - அடையாளப்பூ. வில், வேள், வாள் உரிமை கூறவே, நாற்படை யுரிமையும் பெறப் படும். (6) 4. சிறப்புவிதி 52. அன்ன ராயினும் இழிந்தோர்க் கில்லை. இ - ள்: அன்னர் ஆயினும் - மன்னர் போலும் பெருஞ் செல்வத்தை யுடைய ராயினும், இழிந்தோர்க்கு இல்லை - அரசராற் சிறப்புப் பெறாதார்க்கு முற்கூறிய வில் முதலியன கூறற்கமையாது என்றவாறு. ‘இழிந்தோர்’ என்பது, சிறப்பிலர் என்ற அளவில் நின்றது. அரசராற் சிறப்புப் பெற்றவரே சிற்றசராவரென்பதாம். பேரரசரால் வில் வேல் முதலிய உரிமை கொடுத்துச் சிற்றரசராக்கப் பட்டவரே சிற்றரசராவர் என்பது கருத்து. இதனால், பண்டு தடியெடுத்தவன் தண்டத்தலைவனாக இல்லாமல் முறையொடு அரசுபுரிந்து வந்தமை பெறப்படும். (7) 3. வணிகர் 1. வணிகர் தொழில் 53. வணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை. வணிகராவார், ‘கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது’ (பட் - 210 - 11) வாணிகம் செய்து பொருளீட்டுபவர். இ - ள்: வணிகர் வாணிக வாழ்க்கை மட்டும் உடையவராவர் என்றவாறு. வாணிகம் - கொண்டு கொடுத்தல். வணிகரை, வாணிக வாழ்க்கை மட்டும் உடையராகப் பாடுதல் மரபு என்பதாம். (8) 2. இதுவுமது 54. மெய்தெரி வகையின் எண்வகை யுணவின் செய்தியும் வரையா ரப்பா லான. இ - ள்: சிறுபான்மை எண்வகைக் கூலவாணிகம் செய்தலும் வணிகர்க்கு நீக்கப்படாது என்றவாறு. மெய்தெரி வகையின் - பொருள் தெரிந்த வகையான் - உண்மையாக ஆராய்ந்து பார்க்கின் என்றபடி. செய்தி - செயல், தொழில். அப்பாலான - முன்போல வணிகர்க்கு. முன், பொதுவாகத் தந் நாட்டினும் வெளி நாட்டினும் கொண்டு கொடுத்துப் பொருளீட்டும் பெருவாணிகங் கூறினார். இதில், கூலவாணிகமும் சிறுபான்மை உண்டென்றார். உணவு - உணவுப் பொருள்; தவசம், பயறு முதலியன. எண்வகை யுணவு - நெல், புல், வரகு, தினை, சாமை, சோளம், கம்பு, கேழ்வரகு என்பனவும்; அவரை, துவரை, தட்டைப் பயறு, பாசிப் பயறு, கடலை, கொள், உழுந்து, எள் என்பனவுமாம். வகை - இருவகை. ‘கூல வாணிகன் சாத்தனார்’ என்பது காண்க. (9) 3. சிறப்புரிமை 55. கண்ணியுந் தாரும் எண்ணின ராண்டே. இ - ள்: வணிகர்க்குக் கண்ணியும் தாரும் உண்டு என்றவாறு. ஆண்டே - அது போலவே. கண்ணி - சூடும்பூ. தார் - குடிப்பூ. இவற்றையுடையராகப் பாடுதல் மரபு என்பதாம். (10) 4. வேளாளர் 1. வேளாளர் தொழில் 56. வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்ல தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி. வேளாளராவார், உழுதுண்போரும், உழுவித் துண்போரும் ஆகிய உழவுத் தொழிலுக் குரிமையுடையவராவர். இ - ள்: வேளாண் மாந்தர்க்கு - வேளாளர்க்கு, உழுதூண் அல்லது, உழுந் தொழில் அல்லது பிறவகை நிகழ்ச்சி - வேறு தொழில்கள், இல் என மொழிப - இல்லையென்று சொல்லுவர் புலவர். ஊண் - ஊண் உண்டாக்குந் தொழிலை உ'99ர்த்திற்று. நிகழ்ச்சி - தொழில். உழவுத் தொழில் வேளாளர்க்குச் சிறப்புடையது. பலவகைர் தொழிலாளரும் வேளாளரேயாவர்; தலைமை பற்றி உழவொன்றே கூறப்பட்டது. இதுவே மரபாகும். வேளாண் மாந்தர் பலவகைப்பட்ட தொழிலரேனும், உழுந்தொழிலே பெரும்பான்மை யாதலின் அதனையே சிறப்பித்துச் சொல்லுதன் மரபு’ (மரபு - 80 - பேரா) (11) 2. சிறப்புரிமை 57. வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தன ரென்ப அவர்பெறும் பொருளே. இ - ள்: வேந்துவிடு தொழிலில் - அரசரால் கொடுக்கப்படும் படைத்தலைமை யாகிய சிறப்புத் தொழிலில், படையும் கண்ணியும் - படைக்கலங்களும் கண்ணியும், அவர் பெறும் பொருள் வாய்ந்தனர் என்ப - வேளாளர் பெறும் பொருள்களாகச் சொல்லப்படுவர் என்றவாறு. வாய்ந்தனர் - சொல்லப்படும் தகுதி வாய்ந்தனர். வேளாளர் படைத்தலைவராகும்போது இவற்றை யுடையராதல் மரபு என்பதாம். படை - வில், வேல், வாள் முதலியன. இவர் உழுவித் துண்ணும் வேளாளர். இவரே சிற்றரசருமாவார். (12) 5. பொது 1. பெயர் மரபு 58. ஊரும் பேரும் உடைத்தொழிற் கருவியும் யாரும் சார்த்தி யவையவை பெறுமே. இது, நாற்பாற்கு முரிய சில பொதுவிலக்கணங் கூறுகின்றது. இ - ள்: பிறந்த ஊரும் பெயரும் அவரவர் தொழிற் கருவிகளும் யார்க்கும் பொதுவாகலான், எவரும் தம் பெயரோடு அவற்றைச் சேர்த்துக் கூறப்படுவர் என்றவாறு. ஊர்ப் பெயர், கருவிப் பெயர் கொடுத்துப் பாடுதல் மரபென்பது. அதாவது, அவரவர் ஊர்ப்பெயரையும், கருவிப் பெயரையும் அவரவர் பெயரோடு சேர்த்துப் பாடலாம் என்பதாம். காட்டு: 1. ஊர்ப் பெயர்: அந்தணர் - மதுரையாசான் அரசர் - மதுரைச் செழியன் வணிகர் - மதுரைக் கூலவாணிகன் சாத்தனார்வேளாளர் - கோவூர்க்கிழார் 2. கருவிப் பெயர்: அந்தணர் - முக்கோலினர் அரசர் - முடி மன்னர் வணிகர் - நாவாயினர் வேளாளர் - மேழியர் (13) 2. இதுவுமது 59. தலைமைக் குணச்சொலுந் தத்தமக் குரிய நிலைமைக் கேற்ப நிகழ்த்துக வென்ப. இ - ள்: தலைமைக் குணச் சொலும் - அந் நாற்பாலாரின் தலைமைக் குணம்படச் சொல்லுகின்ற சொல்லும், தத்தமக்கு உரிய நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துக என்ப - அவரவர்க்குரிய நிலைமைக்கு ஏற்ப அமைத்துப் பாடுக வென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. நிலைமை - தகுதி. தலைமைக் குணச் சொல் - முதன்மை யான குணச்சொல். அவரவர்க்குரிய தகுதிக் கேற்ற குணச் சொற்களாற் சிறப்பித்துப் பாடுதல் மரபு என்பதாம். தலைமைக்குணமாவன: அந்தணர்க்கு அருளும், அரசர்க்கு வீரமும், வணிகர்க்கு நடுநிலையும், வேளாளர்க்குக் கொடையுமாம். இவையுடையராகப் பாடுதல் வேண்டும். அருளாற் பொதுநலம் புரிந்து அந்தணர் சிறப்பெய்தலும், வீரத்தாற் பகைவென்று குடிகாத்து அரசர் சிறப்பெய்தலும், நடுநிலையால் வாணிகஞ் செய்து பொருளீட்டி வணிகர் சிறப் பெய்தலும், கொடைக் குணத்தால் உணவீந்து வேளாளர் சிறப்பெய்தலும் அறிக. இலக்கியம் சங்க நூல்களிற் காண்க. (14) 3. அந்தணரொழிந்தோர் சிறப்பு 60. இடையிரு வகையோ ரல்லது நாடின் படைவகை பெறாஅ ரென்மனார் புலவர். இ - ள்: நாடின் ஆராய்ந்து பார்க்கின், இடை இருவகையோர் அல்லது - அரசரும் வணிகரும் அல்லது, படைவகை பெறார் என்மனார் புலவர் - மற்றவர் படைவகை பெறார் என்று சொல்லுவர் புலவர். முன்னர் (12இல்) வேளாளர் படைவகை பெறுதல் கூறி, வணிகர்க்குக் கூறாததால், ஈங்கு எடுத்துக் கூறி, ‘நாடின்’ என்பதால் வேளாளரைத் தழுவினர். அந்தணர் துறவிகளாதலின் படைவகை பெறாரென்க. ஆகவே, வேளாளர் படைவகை பெறுதல் கூறப்படுவதால், முதலை விலக்கி, ‘இடையிரு வகையோர்’ என்றாரென்க. முதல் - அந்தணர். இது குறித்தே அகத்திணை 30, 31, 32 சூத்திரங்கட்கு அவ்வாறு பொருள் கொள்ளப்பட்டதும். அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால் வகையினரும், ஒரு மரத்திற் றோன்றிய கிளைகள் போல, முதலில் ஒரு குலத்தினின்றும் தோன்றித் தத்தம் தொழில் வகையால் வேறுபட்டவரேயாவர். இவர்களுள், அந்தணர் என்போர் ஏனை மூன்று குலத்துத் துறவியரே யாவர் (கற்பு - 35). தொல்காப்பியர் காலத்தில் பல தொழிலாளர் குலங்கள் (தச்சர், கொல்லர், குயவர் முதலிய) இருந்தன வேனும், அவற்றையெல்லாம் உழுதுண்போர் வகையுளடக்கிப் பழைய முறைப்படி நாற்பெரும் பிரிவுகளே கூறப்பட்டன. அத்தொழிற் குலங்களிடை அன்று குலவேற்றுமை யின்மையே யதற்குக் காரணமாகும். அன்று அக்குலங்களிடை மணவேற்றுமை யிருந்ததாகத் தொல்காப்பியத்தில் யாதொரு குறிப்புமின்றென்க. (15) 2. கூற்று கூற்றாவது, அகத்திணை பற்றிப் பேச்சு நிகழ்த்துதற் குரியோர் இன்னாரென்பது. இன்னார் இன்ன இடத்தில் இன்னாரிடம் கூறுவர் என்பதால், பண்டு இவ்வகப் பொருள் வழக்கம் மிகவும் இன்றி யமையாத தொன்றாகக் கருதப்பட்டுப் பல வகை இலக்கண வரம்புக்குட்பட்டு நடந்து வந்ததென்பது விளங்குகிறது. இங்ஙனம் பலருங் கூறுவது தலைவன் தலைவி கிளவியேயாம். 1. களவிற் குரிய கூற்று 61. பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியோ டளவியன் மரபி னறுவகை யோரும் களவினிற் கிளவிக் குரிய ரென்ப. இ - ள்: பார்ப்பான் முதலிய அறுவரும் களவுக்காலத்தில் கூற்று நிகழ்த்தற்குரியர் என்றவாறு. சீர்த்தகு சிறப்பு - புகழத்தகும் சிறப்பு. கிழவன், கிழத்தி யருக்காகவே மற்றவர் கூற்று நிகழ்த்தலின் அவரை ‘சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தி’ என்றார். அளவியல் மரபின் அறுவகையோர் - எண்ணப்பட்ட அறுவர். இக் கூற்றுகட்கு எடுத்துக்காட்டு, அவரவர் கூற்றுட் காட்டுதும். (16) 2. செவிலி சிறப்பு 62. ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின் தாயெனப் படுவோள் செவிலி யாகும். இ - ள்: ஆய்பெரும் சிறப்பின் - ஆராய்ந்து துணியப் பட்ட பெருஞ்சிறப்பினை யுடைய, அருமறை கிளத்தலின் - கூறுதற்கரிய மறைப்பொருளான களவொழுக்கத்தை வெளிப்படையாகக் கூறுதலினால், தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் - தாயென்று சிறப்பித்துச் சொல்லப்படுவாள் செவிலியே யாம் என்றவாறு. மறை - மறைத்துக் கூறப்படுவது. ஈன்ற தாயாகிய நற்றாயினும் இவள் களவின்கட் சிறந்தாளாகையால், ‘தாய்’ எனச் சிறப்பித்துக் கூறுதற் குரிமையுடையா ளென்பதாம். கற்பிற்கு இருவரும் - செவிலியும் நற்றாயும் - ஒப்பாவாராயிற்று. (17) 3. தோழி சிறப்பு 63. தோழி தானே செவிலி மகளே. இ - ள்: தோழியர் பலருள்ளும் சிறப்புடையளாகிய இவள் செவிலித் தாயின் மகளாவள். தோழி என்றது - தலைமகளின் காதற்றோழியை. தலைமகளின் தோழியர் பலருள்ளும் இவளே களவிற்குச் சிறந்தவளாகையால், ‘தானே’ எனப் பிரித்தார். (18) 4. கற்பிற் குரிய கூற்று 64. பாணன் கூத்தன் விறலி பரத்தை ஆணஞ் சான்ற அறிவர் கண்டோர் பேணுதற் சிறப்பிற் பார்ப்பான் முதலா முன்னுறக் கிளந்த கிளவியொடு தொகைஇத் தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர். இ - ள்: 1. பாணன் 5. அறிவர் 9. தோழி 2. கூத்தன் 6. கண்டோர் 10. செவிலி 3. விறலி 7. பார்ப்பான் 11. கிழவன் 4. பரத்தை 8. பாங்கன் 12. கிழத்தி என்னும் இப்பன்னிருவரும் கற்புக் காலத்தில் கூறுதற்குரியர் என்றவாறு. ‘தொன்னெறி மரபின்’ என்றதனால், பாகனும், தூதனும் கூறுதற் கமைவர். ஆ'99ம் - அன்பு. ‘ஆண மில் நெஞ்சத் தணிநீலங் கண்ணார்க்கு’ (நால் - 374) எனக் காண்க. ஆணம் சான்ற - அன்பு மிக்க. பேணுதல் - காத்தல், போற்றுதல். ‘முன்னுறக் கிளந்த’ - முற்கூறிய (16இல்). கிளவி - கூற்று என்னும் அளவில் நின்றது. தொன்னெறி மரபு - தொன்று தொட்டு வரும் இலக்கண முறை. ஈண்டு எடுத்துக் கூறிய அறுவரும், களவிற் குரியரெனக் கூறிய பார்ப்பான் முதலிய அறுவரும் கற்பிற்குரியர் என்பதாம். எடுத்துக் காட்டு அவரவர் கூற்றிற் காட்டுதும். (19) 5. கொண்டு கூறுங் கூற்று 65. ஊரு மயலுஞ் சேரி யோரும் நோய்மருங் கறிநருந் தந்தையுந் தன்னையும் கொண்டெடுத்து மொழியப் படுத லல்லது கூற்றவ ணின்மை யாப்புறத் தோன்றும். இ - ள்: 1. ஊரார் 2. அயலார் இவர் பெண்டிர் 3. சேரியார் 4. நோய் மருங்கறிநர் ஆடவரும் பெண்டிரும் 5. தந்தை 6. தன்னை ஆடவர் இது, களவிற்கும் கற்பிற்கும் பொது. இவர் கூறியதாக முற்கூறிய பன்னிருவரும் கொண்டு கூறுவதல்லது, அகத்திணைக் கண் இவ்வறுவருங் கூறியதாகச் செய்யுள் செய்யப் பெறா. புறத்திணைக் கண் இவர் கூறப் பெறுவர். யாப்புறத் தோன்றும் - பொருள் பெறத் தோன்றும். நோய் மருங்கறிநர் - தலைவன் தலைவியின் வேட்கைப் பெருக்கை அறிந்து ஆவன செய்பவர். அவர் - பாட்டன் பாட்டியும் ஆயமும் தோழரும். தன்னை - அண்ணன். காட்டு: “ ஊஉ ரலரெழச் சேரி கல்லென ஆனா தலைக்கும் அறனி லன்னை.” (குறுந் - 263) இது, ஊரார் சேரியார் கொண்டு கூற்று. “ அவரும், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந் தொருபக லெல்லா முருகத்தெழுந் தாறி இருவர்கட் குற்றமு மில்லையா லென்று தெருமருந்து சாய்த்தார் தலை.” (கலி - 39) இது, தந்தை தன்னையர் கொண்டு கூற்று. (20) 6. நற்றாய் கூறாவிடம் 66. கிழவன் றன்னொடுங் கிழத்தி தன்னொடும் நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது. இ - ள்: தலைவன் தலைவியோடு நற்றாய் கூறப்பெறாள். முற்றத் தோன்றாது - நிரம்பத் தோன்றாது; கூறாள் என்பதாம். மற்றவரிடம் கூறும் என்பது. (21) 7. கண்டோர் கூறுமிடம் 67. ஒண்டொடி மாதர் கிழவன் கிழத்தியொடு கண்டோர் மொழிதல் கண்ட தென்ப. இ - ள்: இடைச் சுரத்துத் தலைவன் தலைவியொடு கண்டோர் கூறுவர். கண்டோர் - வழியிற் கண்டோர். ஒண்டொடி மாதர் கிழவன் - தலைவியை உடனழைத்துச் செல்லும் தலைவன். ஒண்டொடி மாதர் - ஒள்ளிய வளையலை யணிந்த தலைவி. ‘ஒண்டொடி மாதர் கிழவன்’ எனவே, அவ்விருவர் கூடிச் செல்லும் போதன்றி, தனித்துழி அவ்விருவரொடுங் கூறார் என்பதாம். ‘கண்டது’ என்ற மிகையான், இடைச் சுரத்துத் தலைவியைத் தேடிச் சென்ற செவிலிக் குரைத்தலுங் கொள்க. காட்டு: 1. இளையள் மெல்லியள் மடந்தை அரிய சேய பெருங்கான் யாறே. (சிற்றெட்டகம்) எனவும், அணித்தாத் தோன்றுவ தெம்மூர் மணித்தார் மார்ப சேந்தனை சென்மே. (பொருளியல்) எனவும் வரும். இவை உடன்போக்கில் தலைவற்குக் கண்டோர் கூறியன. 2. வில்லோன் காலன கழலே, தொடியோள் மெல்லடி மேலன சிலம்பே. (குறுத் - 7) இது, செவிலிக்குக் கூறியது. (22) 8. தலைவி கேட்பக் கூறுதல் 68. பரத்தை வாயில் எனவிரு கூற்றும் கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப்பய மிலவே. இ - ள்: பரத்தை வாயில் என இரு கூற்றும் - பரத்தையரும் வாயில்களும், கிழத்தியைச் சுட்டாக் கிளப்பு பயம் இல - தலைவி கேட்கும்படி கூறாவிடின் பயனில்லை என்றவாறு. பரத்தையரும் வாயில்களும் தலைவி கேட்கும்படி கூற வேண்டும். இல்லையேல் கூறுவதால் பயனில்லை என்பது. பரத்தை கூற்றால் தலைவி ஊடுதலும், வாயில்கள் கூற்றால் ஊடல் தணிதலும் கூடுமாகலின் அவள் கேட்பக் கூற வேண்டுமென்றார். வாயில்கள் தோழி கேட்பவுங் கூறலாம். கிழத்தியைச் சுட்டல் - கிழத்தி கேட்பக் கூறல். கிளப்பு - கூற்று. ‘கிழத்தியைச் சுட்டா’ எனவே, பாங்காயினார் கேட்பச் சொல்லினும் அமையும். பாங்காயினார் - தோழி முதலியோர். காட்டு: 1. “ செறிதொடி தெளிர்ப்ப வீசிச் சிறிதிவண் உலமந்து வருகஞ் சென்மோ தோழி.” (அகம் - 106) இது, பாங்காயினார் (தோழி) கேட்பப் பரத்தை கூறியது. 2. “ ஓருயிர் மாதர் ஆகலின் இவளும் தேரா துடன்றனள் மன்னே.” இது, கிழத்தி கேட்ப வாயில்கள் கூறியது. (23) 9.தலைவியைச் சுட்டிக் கூறல் 69. வாயி லுசாவே தம்முளு முரிய. இ - ள்: பாணன் முதலிய வாயில்கள், தலைமகளைச் சுட்டி அவள் கேட்பத் தமக்குத் தாம் கூறிக் கொள்வதும் உண்டு; இதுவும் ஊடல் தணித்தற் பயனாம் என்றவாறு. உசாவுதல் - ஒருவர்க்கொருவர் கூறிக்கொள்ளுதல். ‘தலைவியைச் சுட்டி அவள் கேட்பக் கூறுதல்’ என்பது, மேனின்ற அதிகாரத்திற் கொள்க. காட்டு: தண்ணந் துறைவன் கொடுமை நம்முன் நாணிக் கரப்பா டும்மே. (குறுந் - 9) இது, பாடினி தலைவியைச் சுட்டி அவள் கேட்பப் பாணற் குரைத்தது. பாடினி - பாணிச்சி. (24) 3. கேட்போர் முற்கூறிய (19 இல்) பன்னிருவருள், இன்னின்னார் கூறுவதை இன்னின்னார் கேட்டற்குரியர் என்பது. 1. தலைவன் தலைவி கூற்றைக் கேட்போர் 70. மனையோள் கிளவியுங் கிழவன் கிளவியும் நினையுங் காலைக் கேட்குந ரவரே. இ - ள்: முற்கூறிய (19இல்) பன்னிருவருள், தலைவி தலைவன் ஆகிய இருவர் சொல்லையும் மற்றைப் பதின்மருங் கேட்பர் என்றவாறு. தலைவி கூற்றைத் தலைவனும், தலைவன் கூற்றைத் தலைவியும் கேட்பது முறை யாகலின் கூறவில்லை. ‘நினையுங்காலை’ என்றதனால், தலைவனும் தலைவியுங் கூறப் பரத்தை கேட்டல் புலனெறிவழக் கன்றென்க. காட்டு: 1. “ விளங்குதொடி முன்கை வளை ந்துபுறஞ் சுற்ற நின்மார் புடைதலி னினிதா கின்றே.” (அகம் - 58) இது, தலைவி கூற்று, தலை வன் கேட்டது. 2. “ வருந்தா தேகுமதிர வாலெயிற் றோயே.” இது தலைவன்கூற்று, தலைவி கேட்டது மற்வற்றை அங்கங்கே காட்டுதும். (25) 2. பார்ப்பார், அறிவர் கூற்றைக் கேட்போர் 71. பார்ப்பார் அறிவ ரென்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே. இ - ள்: பார்ப்பார், அறிவர் என்னும் இருவர் கூற்றையும் அகத்தும் புறத்தும் யாவருங் கேட்பர் என்றவாறு. ‘யாப்பொடு புணர்ந்து’ என்றது - அகப்பொருளும் புறப் பொருளுமாக யாக்கப்படும் செய்யு ளெல்லாவற்றொடும் பொருந்தி என்றவாறு. ‘யார்க்கும் வரையார்’ என்பதன் உம்மையை எச்சவும்மை யாக்கி, களவில் பார்ப்பார் கூறுவதைத் தலைவன், செவிலி, நற்றாய் அன்றிப் பிறர்கேட்டற் கேலாவெனக் கொள்க. அதாவது, இவரிட மன்றிப் பிறரிடம் பார்ப்பார் கூறாரென்பது. புறத்திணையில் பொதுவியற் கரந்தையோர் தாமே செல்வதால் அவர்க்கும் பார்ப்பார் கூற்று ஏலா. களவில் அறிவர் கூறுவதைத் தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகிய நால்வருங் கேட்பர். இவரிடம் வரைவு பற்றிக் கூறுவரென்க. கற்பில் வாயிலாகச் செல்லின் பார்ப்பார், அறிவர் ஆகிய இருவர் கூற்றையுந் தலைவி மறாள் என்க. (26) 3. கூற்றுங் கேள்வியும் 72. ஞாயிறு திங்கள் அறிவே நாணே கடலே கானல் விலங்கே மரனே புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே அவையல பிறவு நுவலிய நெறியாற் சொல்லுந போலவுங் கேட்குந போலவும் சொல்லியாங் கமையு மென்மனார் புலவர். இது, வழுவமைதியுள், ‘செய்யா மரபில் தொழிற்படுத் தடக்கியும்’ (46இல்) என்று வழுவமைக்கப்படுபவை, இலக்கண வகையாலும் சொல்பவையாகவும் கேட்பவையாகவும் பாட அமையும் என்கின்றது. இ - ள்: 1. ஞாயிறு 5. கடல் 9. பொழுது 2. திங்கள் 6. கனல் 10. புள் 3. அறிவு 7. விலங்கு 11. நெஞ்சு 4. நாண் 8. மரம் என்னும் இப்பதினொன்றும், இவையல்லாத பிறவும் சொல்வன போலவும், கேட்பன போலவும் கூறவும் பெறும் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. நுவலிய நெறியால் - கூறிய முறையான். நாண் - தலைவி நாண். கானல் - கடற்கரை. பொழுது:- கார், கூதிர், பனி, இளவேனில்; மாலை, யாமம், காலை. பிற - புல், புதல் முதலியன. காட்டு: “ கதிர்பகா ஞாயிறே! கல்சேர்தி யாயின் அவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித் தருகுவை யாயிற் றவிருமென் னெஞ்சத் துயிர்திரியா மாட்டிய தீ.” (கலி - 142) இது, ஞாயிறு கேட்பச் சொல்லியது. “ பாய்திரை வேலிப் படுபொருள் நீயறிதி காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என்கணவன்.” (சிலம் 18) என, இது புறத்திலும் வருதல் காண்க. (27) 4. வாயில்கள் 73. தோழி தாயே பார்ப்பான் பாங்கன் பாணன் பாடினி இளையர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் யாத்த சிறப்பினை வாயில் களென்ப. இ - ள்: இப்பன்னிருவரும் வாயில்கள் என்று சொல்லுவர் என்றவாறு. யாத்தல் - கட்டுதல். யாத்த சிறப்பின் - தலைவன் தலைவியோட மனம் பிணிப்புண்ட சிறப்பினையுடைய, வாயில்கள் என்றபடி. இவர்கள், தலைவன் தலைவி சொல்லைக் கேட்டும், கூறியும், இருவரையும் கூட்டியும், பிரித்தும் அகவொழுக்கம் நிகழ்தற்கு வாயில் போறலின் வாயில்கள் எனப்பட்டனர். வாயில் - தூது. தாய் - செவிலி. முன் (19 இல்) கூற்றிற்குரியராகக் கூறிய பன்னிருவருள், கிழவன், கிழத்தி பரத்தை என்னும் மூவரை நீக்கி, பாடினி இளையர் விருந்தினர் என்னும் மூவரைக் கூட்டிக் கூறினரென்க. 1. பாணன் 6. கண்டோர் 11. கிழவன் 2. கூத்தன் 7. பார்ப்பான் 12. கிழத்தி 3. விறலி 8. பாங்கன் 13. பாடினி 4. பரத்தை 9. தோழி 14. இளையர் 5. அறிவர் 10. செவிலி 15. விருந்தினர் என்னும் இப்பதினைவரே, களவு, கற்பு என்னும் இருவகைக் கைகோளினும் - கூற்று. கேட்போர், வாயில்கள் என்னும் மூன்றற்கும் உரியராகக் கூறிய, களவிற்குரிய கூற்று (சூ - 16) - 6 கற்பிற்குரிய கூற்று (சூ- 19) - 12 கேட்போர் (சூ - 25) - 10 வாயில்கள் (சூ - 28) - 12 40 நாற்பதின்மரும் எனக் கொள்க. (28) 1. வாயில்களின் இலக்கணம் 74. எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும் புல்லிய மகிழ்ச்சிப் பொருள வென்ப. இ - ள்: பன்னிரண்டு வாயில்களும் தலைவன் தலைவி இருவரிடத்தும் பொருந்திய மனமகிழ்ச்சியை யுண்டாக்குதலைத் தமக்குப் பொருளாகவுடையார் என்றவாறு. தேம் - இடம். தலைவனும் தலைவியும் நுகரும் இன்பத்திற்குத் துணை செய்பவராவர் என்பதாம். ‘புல்லிய’ என்றதனால், புதல்வனும், தலைவனது ஆற்றாமையும் வாயிலாதலுங் கொள்க. காட்டு, களவு கற்பியலிற் காண்க. (29) 2. சிறைப்புறமாகக் கூறல் 75. அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின் சிறைப்புறங் குறித்தன் றென்மனார் புலவர். இ - ள்: அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின் - அவ்வாயில்கள் தலைவன் தலைவியிடம் கடுஞ்சொற் கூறவேண்டின், சிறைப்புறங் குறித்தன்று என்மனார் புலவர் - நேர் கூறாது சிறைப்புறமாகக் கூறுவர் என்று சொல்லுவர் புலவர். அன்புதலைப் பிரிந்த கிளவி - அன்பு இருவரிடத்தும் நீங்கிய சொல். அதாவது, கடுஞ்சொல். சிறைப்புறமாகக் கூறல் - மறைவில் உள்ளவர் கேட்குமாறு ஒன்றன்மேல் வைத்துக் கூறுதல். சிறை - மறைவு. சிறைப்புறம் - மறைவிடம். மறைந்திருந்து கேட்டல் - சிறைப்புறமாகக் கேட்டல் எனப்படும். காட்டு: “விழவயர் துணங்கை தழூஉகஞ் செல்ல நெடுநிமிர் தெருவிற் கைபுகு கொடுமிடை நொதும லாளன் கதுமெனத் தாக்கலின் கேட்போ ருளர்கொல் இல்லைகொல் போற்றென யாண்டைய பசலை யென்றனன் அதனெதிர் நாணிலை எலுவ என்றுவந் திசினே.” (நற் - 50) இதனுள், ‘யாங்களாடுந் துணங்கையை மறைந்து கண்ட கள்வனைக் கையொடு பிடிக்கச் செல்ல, அவன் தெரு முடிவில் திடீரென எதிர்ப்பட, விலகிச் செல்லென, அவன் விலகாதிருக்க, நாணிலை என்று வந்தேன்’ எனத் தலைவன் சிறைப்புறமாக வேறொருவன்மேல் வைத்துக் கூறினமை காண்க. (30) 3. தலைவன் கொடுமை கூறாமை 76. மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை தம்முள வாதல் வாயில்கட் கில்லை. இ - ள்: மனைவி தாள்தலை - தலைவி எவ்வாறு புலக்கினும் அவளிடத்து, கிழவோன் கொடுமை - தலைவன் கொடுமையை, தம் உளவாதல் வாயில்கட்கு இல்லை - தம் சொற்கண் சேர்த்துக் கூறுதல் வாயில்கட்கு இல்லை. தலைத்தாள் - தாள்தலை என மாறுக. அது தாளினிடம் என்னும் தகுதிச்சொல். இங்கு இடங்குறித்து நின்றது. தலைவி எவ்வாறு புலக்கினும் அவளிடத்துத் தலைவன் கொடுமையை வாயில்கள் கூறக்கூடாது என்பதாம். கொடுமை - தலைவனது கெட்ட நடக்கை. (31) 4. கொடுமை கூறுமிடம் 77. மனைவி முன்னர்க் கையறு கிளவி மனைவிக் குறுதி யுள்வழி யுண்டே. இ - ள்: மனைவிக்கு உறுதி உள்வழி - புலந்துள்ள தலைவியைத் தலைவன் கூடுவதோர் வாய்ப்பு இருக்குமானால், தலைவி முன்னர்க் கையறு கிளவி உண்டு - ‘தலைவன் பணியு மளவன்றி நம்மைப் புறக்கணித்து விட்டான்’ என அவன் கொடுமையை வாயில்கள் கூறப் பெறுவர் என்றவாறு. கையறு கிளவி - செயலற்றுக் கூறுங் கூற்று; வெறுத்துக் கூறுதல். அவ்வாறு கூறக்கேட்ட தலைவன் வரவும், தலைவி ஊடல் தணிந்து கூடுவள் என்க. 30 ஆம் சூத்திரத்தில் எடுத்துக் காட்டிய நற்றிணைப் பாட்டில், தலைவன் சிறைப்புறத் தானாகத் தோழி அவ்வாறு கொடுமை கூறுதலறிக. (32) 5. முன்னிலைப் புறமொழி 78. முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும் பின்னிலைத் தோன்று மென்மனார் புலவர். இ - ள்: பின்னிலை - தலைவன் குறை வேண்டியபோது, எல்லா வாயிற்கும் - பன்னிரண்டு வாயில்களும், முன்னிலைப் புறமொழி தோன்றும் என்மனார் புலவர் - தலைவனை நோக்கி முன்னிலைப் புறமொழி கூறுவர் என்று சொல்லுவர் புலவர். பின்னிலை - பின் + நிலை - பின் நிற்றல். அதாவது, குறை வேண்டி நிற்றல். முன்னிலைப் புறமொழி - முன்னிலையாக நிற்பவரைக் குறித்துப் பிறரைக் கூறுமாறு போலக் கூறுதல். முன்னிலையாக நிற்பவர் - முன்னிற்பவர், எதிரில் நிற்பவர். காட்டு: “ உண்கடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனுந்தாங் கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல் பண்டுமிவ் வுலகத் தியற்கையஃ தின்றும் புதுவ தன்றே புலனுடை மாந்திர்!” (கலி - 22) எனத் தலைவனை நோக்கித் தோழி முன்னிலைப் புறமொழி கூறியவாறு. இதனுள், தோழி உலகியல் கூறுவாள் போன்று கூறுதல் காண்க. (33) 5. கூறுதல் 79. தொல்லவை யுரைத்தலும் நுகர்ச்சி யேற்றலும் பல்லாற் றானும் ஊடலிற் றணித்தலும் உறுதி காட்டலும் அறிவுமெய் நிறுத்தலும் ஏதுவி னுணர்த்தலும் துணிவு காட்டலும் அணிநிலை யுரைத்தலுங் கூத்தர் மேன. தலைவிக்கு தலைவற்கு 1. தொல்லவை யுரைத்தல் 5. அறிவுமெய் நிறுத்தல் 2. நுகர்ச்சி யேற்றல் 6. ஏதுவின் உணர்த்தல் 3. ஊடலில் தணித்தல் 7. துணிவு காட்டல் 4. உறுதி காட்டல் 8. அணிநிலை உரைத்தல் இ - ள்: 1. தொல்லவை உரைத்தல் - முன்வு அன்புமிக்கார் இருவர் இன்பம் நுகர்ந்தவாறு இதுவெனத் தலைவிக்குக் கூறல்; தொல்அவை - முன்னிகழ்ந்தவை. 2. நுகர்ச்சி ஏற்றல் - நுமது இன்ப நுகர்ச்சி அம் முன்னோர் நுகர்ச்சியினும் சிறந்ததெனக் கூறல்; ஏற்றல் - ஏற்றுதல், சிறப்பித்தல். 3. ஊடலில் தணித்தல் - இவ்வூடல் இல்லறவொழுக்கத்திற்கு இயல்பன்று என்றாயினும், இது அன்பின்மையாம் என்றாயினும் கூறித் தலைவியின் ஊடல் தணித்தல். 4. உறுதி காட்டல் - இல்வாழ்க்கை நிகழ்த்தி இடைவிடாது இன்ப நுகர்தலே மக்கட்பயன் என்றல். 5. அறிவு மெய்நிறுத்தல் - புறத்தொழுக்கம் ஒழுகும் தலைவற்கு, நீ கற்றறிந்த அறிவு மெய்யாக வேண்டும் என அவனை மெய்யறிவின்கண் நிறுத்தல்; அதாவது, புறத்தொழுக்கத்து நின்று நீக்கி இல்லொழுக்கத்தின்கண் நிலைபெறச் செய்தல். 6. ஏதுவின் உணர்த்தல் - இம்மிக்க காமத்தால் பழியுண்டாகுமென்று காரணங்காட்டல், 7. துணிவு காட்டல் - கழிகாமத்தால் கெட்டாரை எடுத்துக்காட்டல், 8. அணிநிலை உரைத்தல் - தலைவியின் மார்பினும் தோளினும் முகத்தினும் தொய்யில் எழுதுங்கால் புணர்ச்சிதோறும் அழித்தெழுதுமாறு இதுவெனக் கூறல்; அதாவது, புணர்ச்சிக்கு முன் தலைவியின் மார்பு முதலியவற்றில் சந்தனக் குழம்பால் கொடி முதலிய எழுதுதல் பண்டை மரபு. அஃது ஓரிரவிற் புணரும் ஒவ்வொரு புணர்ச்சியினும் வெவ்வேறு வகையாக எழுதுவர். அங்ஙனம் எழுதும் வகையைக் கூத்தர் தலைவனுக்குக் கற்பிப்பர் என்பதாம். கூத்தர் மேன- இவ்வெட்டும் கூத்தரிடத்தன என்றவாறு. இதனால் கூத்தர் தாழ்த்தப்பட்டோர் ஆகாமையறிக. ‘இலக்கியம் இக்காலத் திறந்தன’ (கற் - 27- நச்) “ பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொரு ளாயு மறிவி னார்.” (குறள்) இது, அறிவு மெய் நிறுத்தது. (34) 2. கூத்தர், பாணர் கூற்று 80. நிலம்பெயர்ந் துறைதல் வரைநிலை யுரைத்தல் கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை யுரிய. இ - ள்: சேட்புலத்துப் பிரிந்துறைதலை விட்டு மீளும்படி தலைவற்குக் கூறுதல் கூத்தர்க்கும் பாணர்க்கும் உரிய என்றவாறு. பெயர்ந்து உறைதலை வரையும் நிலையுரைத்தல் என, ஐயும் உம்மும் விரிக்க. வரைதல் - நீக்குதல், விட்டு மீளுதல். யாத்தவை -பொருந்தியவை. சேட்புலம் - தொலைநாடு. அதாவது, தொலை நாட்டிலுள்ள தலைவனிடம் சென்று, தலைவியது ஆற்றாமை தோன்றும்படி யாழ்மீட்டி மெய்ப்பாடு தோன்றும்படி பாடித் தலைவனை மீட்ப ரென்க. காட்டு: “ செவ்வழி நல்யாழ் இசையினென் பையெனக் கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்நிறுத் தவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே, விடுவிசைப் புரவி வீங்குபரி முடுகக் கல்பொரு திரங்கும் பல்வாய் நேமிக் கார்மழை முழங்கிசை கடுக்கும் முனைநல் லூரன் புனைநெடுந் தேரே.” (அகம் - 14) இதனுள், தலைவியது இரக்கந் தோன்றக் கடவுள் வாழ்த்தி யாழ் மீட்டிப் பாடிப் பிரிந்தோர் மீள எண்ணி நின்றேனாக, அவர் மீட்சி கண்டேன் எனப் பாணன் கூறியவாறு காண்க. (35) 3. இளையோர் கூற்று 81. ஆற்றது பண்புங் கருமத்து விளைவும் ஏவல் முடிவும் வினாவும் செப்பும் ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும் தோற்றஞ் சான்ற அன்னவை பிறவும் இளையோர்க் குரிய கிளவி யென்ப. 1. ஆற்றது பண்புரைத்தல் 5. செப்பல் 2. கருமத்து விளைவுரைத்தல் 6. அற்றிடைக் கண்ட பொருள் கூறல் 3. ஏவல் முடிவு கூறல் 7. இறைச்சி கூறல் 4. வினாவல் இ-ள்: 1. ஆற்றது பண்புரைத்தல் - தலைவன் தலைவி யுடனேனும், தனித்தேனும் போகத் துணியின் இக்காலம் தண்ணிது வெய்து என்றும், போகும் இடம் சேய்த்து அணித்து என்றும், வழியது நிலைமை கூறல்; ஆறு - வழி; கால நிலையையுங் குறித்தது. 2. கருமத்து விளைவுரைத்தல் - முதலிற் சென்று பார்த்து வந்து செய்யுந் தொழிலை முடிக்கும் திறத்தை அறிந்து கூறல்; தலைவனுடன் சென்று காரிய முடிக்குந் திறங்கூறலுமாம். 3. ஏவல் முடிவு கூறல் - இன்னவிடத்து இன்ன செய்கவென ஏவியக்கால் அதனை முடித்து வந்தமை கூறல்; 4. வினாவல் - தலைவன் ஏவலைத் தாங்கேட்டல்; செய்வன என்ன வெனத் தலைவனைக் கேட்டலாம்; 5. செப்பல் - தலைவிக்கு வேண்டியவற்றைத் தலைவன்பாற் சொல்லல். 6. ஆற்றிடைக் கண்ட பொருள் கூறல் - செல்சுரத்துக் கண்ட நன்னிமித்தங் கூறல்; சுரம் - வழி. 7. இறைச்சி கூறல் - அங்கு மாவும் புள்ளும் புணர்ந்து விளையாடுவனவற்றைச் சுட்டிக் கூறுதல்; இளையோர்க்கு உரிய கிளவி என்ப - இளையோர்க்குரிய கூற்றுக்களென்று கூறுவர் என்றவாறு. 1. உடன் போக்கிலும், கற்பிற் பிரிவிலுங் கூறல் 6, 7. உடன் போக்கிலும், வேறு பிரிவிலுங் கூறல். இது, களவு கற்பு இரண்டற்கும் பொது. தோற்றம் சான்ற - தோற்றுவித்தற் கமைந்த, சொல்லுதற்குரிய. பிற: 1. தலைவன் வருவன் எனத் தலைவிமாட்டுத் தூதாய் வருதல். 2. அறிந்துசென்று தலைவற்குத் தலைவிநிலை கூறுதல். 3. தலைவன் மீளுங்கால் விருந்து பெறுகுவளோ எனத் தலைவிநிலை யுரைத்தல் போல்வன. ‘உரைத்தல், கூறல், சொல்லல்’ என ஒவ்வொன்றோடும் கூற்றைக் கூட்டிக் கூறப்பட்டது. இலக்கியம் வந்துழிக் காண்க.(36) 4. இளையோரிலக்கணம் 82. உழைக்குறுந் தொழிலுங் காப்புமுயர்ந் தோர்க்கு நடக்கை யெல்லாம் இவர்கட் படுமே. இ - ள்: உயர்ந்தோர்க்கு - தலைவர்க்கு, உழை குறுந்தொழிலும், உடனிருந்து கூறிய தொழில் செய்தலும், காப்பும் - தலைவரிடம் பாதுகாப்பாக - மெய்க்காப்பாளராக - இருத்தலும், நடக்கை எல்லாம் அவர் கண்படும் - ஆகிய தொழிலெல்லாம் இளையோரித் துண்டாம் என்றவாறு. உழை - இடம், குறுந்தொழில் - குற்றேவல், அவ்வப்போது ஏவுந்தொழில். இளையோர் என்னும் பன்மைக்கேற்பத் தலைவரையும் ‘உயர்ந்தோர்’ எனப் பன்மை கூறினார். இவர் எப்போதும் தலைவனுடனிருக்கும் இளைஞர்கள். (37) 5. செவிலி கூற்று 83. கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள நல்லவை யுரைத்தலும் அல்லவை கடிதலும் செவிலிக் குரிய வாகு மென்ப. இ - ள்: முக்காலத்திற்கும் ஏற்கும்படியாகத் தலைவிக்கு நல்லவற்றை யுரைத்தலும் தீயவற்றை விலக்குதலும் செவிலி கடமையாகும் என்று சொல்லுவார் என்றவாறு. வழிகொள - ஏற்கும்படி. இறப்பு எதிர்வு நிகழ்வு என்னும் முக்காலத்தும் தலைவி தீயொழுக்கத்தை விட்டு நல்லொழுக்கத்தைக் கொள்ளும்படி செய்தல் செவிலி கடமை என்பதாம். இறப்பு இளமைப் பருவம். எதிர்வு - கற்புக் காலம். காட்டு: “ கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள் உட்குடையாள் ஊர்நா ணியல்பினாள் - உட்கி இடனறிந் தூடி இனிதி னுணரும் மடமொழி மாதராள் பெண்.” (நால - 384) கட்கினியாள் - இது களவு. வகைபுனைவாள் - இது கற்பு. உட்குடையாள், ஊர்நாணியல் பினாள் - இவை ஒழுக்கம். இவை நல்லவை உரைத்தல். இனிதின் - உணராதிருத்தல் கூடா என்பது - அல்லவை கடிதல் ‘ஆகும்’ என்றதனால், செவிலி நற்றாய்க்கு உவந்துரைப்பனவுங் கொள்க. காட்டு: “ பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப் புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் உண்ணென் றோக்குபு புடைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற் றரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர் பரிமெலிந் தொழியப் பந்த ரோடி ஏவல் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி, அறிவு மொழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் கொண்ட கணவன் குடிவற னுற்றெனக் கொடுத்த தாதை கொழுஞ்சோ றுள்ளாள் ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுதுமறுத் துண்ணும சிறுமது கையளே.” (நற் - 110) இது, தலைவியின் மனையறங் கண்டு மருண்ட செவிலி, நற்றாய்க்கு உவந்து கூறியது. (38) 6. அறிவர் கூற்று 84. சொல்லிய கிளவி அறிவர்க்கு முரிய. இ - ள்: முற்கூறிய (சூ - 38) நல்லவை யுரைத்தலும் அல்லவை கடிதலுமாகிய கிளவி, செவிலிக்கே யன்றி அறிவர்க்கும் உரிய என்றவாறு. என்றது, முன்னையோர் அறம் பொரு ளின்பம் பற்றிச் செய்துள்ள செய்யுட்களைக் கூறி நல்வழிப்படுத்துவரென்பதாம். காட்டு: 1. “ மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.” (குறள்) “ தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.” (குறள்) இவை, நல்லவை யுரைத்தல். 2. “ எரியென் றெதிர்நிற்பாள் கூற்றம், சிறுகாலை அட்டிற் புகாதா ளரும்பிணி, - அட்டதனை உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய் இம்மூன்றும் கொண்டானைக் கொல்லும் படை.” (நாலடி) இது, அல்லவை கடிதல். (39) 7. இதுவுமது 85. இடித்துவரை நிறுத்தலு மவர தாகும் கிழவனுங் கிழத்தியும் அவர்வரை நிற்றலின். இ-ள்: கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின் - தலைவனும் தலைவியும் அறிவர் சொல்லைக் கடவாராதலின், இடித்துவரை நிறுத்தலும் அவரது ஆகும் - உணர்ப்பு வயின் வாராது ஊடினானையும் ஊடினாளையும் இடித்துரைத்து நல்வழிக்கண் நிறுத்தலும் அறிவரது நீங்காக் கடமையாகும் என்றவாறு. இடித்து வரை நிறுத்தல் - இடித்துரைத்து நல்வழியில் நடக்கச் செய்தல். இடித்துரைத்தல் - கடிந்து கூறுதல். தலைவன் தலைவியின் பாட்டனாரும் இன்னராவர். காட்டு: 1. “ உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந் தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி விழவொடு வருதி நீயே, இஃதோ ஓரான் வல்சிச் சீறில் வாழ்க்கைப் பெருநலக் குறுமகன் வந்தென இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே.” (குறுந் - 295) இது, தலைவனை இடித்துரைத்தது. தலைவன் இல்லறத்தைக் கருதாது புறத்தொழுக்க மொழுகுவானைக் கடிந்து கூறியவாறு காண்க. 2. “ மனைமாட்சி யில்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினு மில்.” (குறள்) இது, தலைவியை இடித்துரைத்தது. மாட்சிமை யில்லாயின் வாழ்க்கை கெடும் எனக் கடிந்து கூறுதல் காண்க. (40) 8. பார்ப்பார் கூற்று 86. காமநிலை யுரைத்தலும் தேர்நிலை யுரைத்தலும் கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும் ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும் செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும் அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய. இ - ள்: 1. காமநிலை உரைத்தல் - தலைவனது காம மிகுதி கண்டு அது தகாதென இழித்துக் கூறுதல்; களவில் தீதெனவும், கற்பில் காதலுடன் இல்லறம் நடத்துதல் நன்றெனவுங் கூறுதல்; 2. தேர்நிலை உரைத்தல் - அங்ஙனங்கூறி அவன் தெளியுமாறு காரணமும் எடுத்துக்காட்டுங் கூறுதல்; 3. கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதல் - தலைவனது புறத்தொழுக்கினை அவன் குறிப்பாலறிந்து கூறுதல்; 4. ஆவொடு பட்ட நிமித்தங் கூறுதல் - கற்றா கல நிறையப் பால் சொரிதலானும் குறைதலானும் உளதாய நிமித்தம் பற்றி நன்மை தீமை கூறுதல்; மாடு சாணம் போடுதல், சிறுநீர் பெய்தல் இவற்றைக் கொண்டு நன்மை தீமை கூறுதலுமாம். இஃதின்றும் வழக்கிலுள்ளது. 5. செலவுறு கிளவி - இப்போது செல்லுதல் நன்றெனக் கூறுதல்; காலவியல்பையும், தலைவியின் பிரிவாற்று தலையும் அறிந்து செல்ல விடுதல். 6. செலவழுங்கு கிளவி - இப்போது செல்லுதல் தீதெனக் கூறிச் செலவழுங்குவித்தல்; காலவியல் பையும், தலைவியின் பிரிவாற்றாமையையும் அறிந்து செல்லாமற் றடுத்தல். அழுங்குதல் - தவிர்தல். அழுங்குவித்தல் - செலவைத் தவிர்த்தல். அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய - அவைபோல்வன பிறவும் பார்ப்பார்க்குரிய கூற்றுக்களாகும் என்றவாறு. இவை, களவு கற்பு என்னும் இருவகைக் கைகோளுக்கும் பொது. ‘இவையெல்லாம் தலைச்சங்கத்தாரும் இடைச்சங்கத்தாரும் செய்த பாடலுட் பயின்றபோலும்; இக்காலத்தில் இலக்கியமின்று’ (கற் - 36 - நச்) என்பதால், கடைச்சங்க காலத்திற்கு முன்னரே இத்தமிழ்ப் பார்ப்பனத்தொழில் அருகிவிட்டது போலும்! (41) 9. பாங்கன் கூற்று 87. மொழியெதிர் மொழிதல் பாங்கற் குரித்தே. இ - ள்: களவினும் கற்பினும் தலைவன் கூற்றுக்கு எதிர் கூறுதலும் பாங்கற்கு உரித்தென்றவாறு. களவில் பாங்கற் கூட்டத்தும், கற்பில் புறத்தொழுக்கத்துத் தலைவன் புகாமல் நிறுத்தற்பொருட்டும் பாங்கன் எதிர்மொழிவ னென்க. ‘உரித்து’ என்றதனால், தலைவன் வருத்தங்கண்ட விடத்து இஃது எதனால் உண்டாயிற்றெனத் தலைவன் கூறுமுன்னே கேட்டலுங் கொள்க. தலைவிக்குத் தோழி போன்றவன் தலைவற்குப் பாங்கன். ‘பாங்கன்’ என்னும் ஒருமை வழக்கே இதற்குச் சான்றாகும். பார்ப்பார் மற்ற வாயில்கள் போன்றவர். (42) 10. இதுவுமது 88. குறித்தெதிர் மொழிதல் அஃகித் தோன்றும். இ - ள்: தலைவன் கூறாமல் அவன் குறிப்பினைத் தான் உணர்ந்து கூறல் பாங்கற்குச் சிறுபான்மையவாம். எனவே, தலைவன் கூறிய வழியே எதிர்மறுத்துக் கூறுவன் என்பதாம். குறித்து எதிர்மொழிதல் - தலைவன் குறிப்பினை அவன் கூறாமல் தான் குறித்துணர்ந்து அக்குறிப்பை மறுத்துக் கூறுதல். அஃகுதல் - சுருங்குதல். (43) 11. அகநகர் புகும் வாயில்கள் கூற்று 89. கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும் மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறந் தருதலும் சுற்ற மோம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள், முகம்புகல் முறைமையிற் கிழவோற் குரைத்தல் அகம்புகல் மரபின் வாயில்கட் குரிய. இ - ள்: கற்பும் - இல்வாழ்க்கைச் சிறப்பும், காமமும் - அன்பும், நற்பால் ஒழுக்கமும் - நல்லொழுக்கமும், மெல்லியல் பொறையும் - மென்மைத் தன்மையான பொறையும், நிறையும் - அடக்கமும், வல்லிதின் விருந்துபுறந்தருதலும் - வறுமையும் செல்வமுங் குறியாது இயன்ற அளவில் விருந்தினரைப் பேணுதலும், சுற்றம் ஓம்பலும் - சுற்றந் தழுவலும், அன்ன பிறவும் - அவை போன்ற பிறவும், கிழவோள் மாண்புகள் - தலைவி குணங்களாகும், முகம்புகல் முறைமையில் கிழவோற்கு உரைத்தல் - அவற்றைத் தலைவனது குறிப்பறிதல் முறையால் தலைவற்குக் கூறுதல், அகம்புகல் மரபின் வாயில்கட்கு உரிய - வீட்டினுள் பழகும் தோழி முதலிய வாயில்கட்கு உரிய என்றவாறு. பிற - அடிசிற்றொழில் முதலியன. முகம் புகுதல் - குறிப்பறிதல். தலைவியின் இக்குணங்களை எடுத்துக்கூறித் தலைவன் குறிப்பை அறிவரென்க. கற்பு முதலிய தலைவி குணங்களை எடுத்துக் கூறிப் பரத்தைமை நீங்கி இல்லறம் இனிது நடத்தும்படி வற்புறுத்துவ ரென்க. தலைவியின் இக்குணங்களைக் கேட்ட தலைவன் அன்புற்றுப் பரத்தைமை நீங்குவனென்க. காட்டு: “மணப்பருங் காமந் தணப்ப நீங்கி வாரா தோர்நமக் கியாஅ ரென்னாது மல்லன் மூதூர் மறையினைச் சென்று சொல்லி னெவனோ பாண, எல்லி மனைசேர் பெண்ணை மடல்வா யன்றில் துணையொன்று பிரியினுந் துஞ்சா காணெனக் கண்ணிறை நீர்கொண்டு கரக்கும் ஒண்ணுத லரிவையா ளென்செய்கோ வெனவே.” (அகம் - 50) இதனுள், காம மிகுதியால் கண் தாமே அழவும், கற்பிற் சுரக்குமெனத் தலைவி பொறையும் நிறையும் தோழி பாணற்குக் கூறினாள்; அவன் தலைவற்கு இவ்வாறே கூறுவனெனக் கருதி. “வாயி லுசாவே தம்முளு முரிய” (சூ - 24) என்பதனால், தலைவற்குரையாமல் வாயில்கள் தம்முட்டாமே கூறுவனவுங் கொள்க. ‘முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்’ (குறுந் - 167) என்ற பாட்டு, தலைவியின் அடிசிற்றொழிற் றிறங்கண்ட மகிழ்ச்சியை வாயில்கள் தம்முட் கூறியது. (44) 6. வழுவமைதி 1. சொல், பொருளமைதி 90. இசைதிரிந் திசைப்பினும் இயையுமுன் பொருளே அசை திரிந் தியலா வென்மனார் புலவர். இ - ள்: இசை திரிந்து இசைப்பினும் - சொற்கள் தமக்கு இயற்கையாகவுள்ள பொருளுக்கு மாறாக அகப் பொருள் மரபில் வேறு பொருள் உணர்த்தினும், அசை திரிந்து இயலா இசைப் பினும் - அகவொழுக்கம் பற்றிக் கூறிய பொருள்கள் நாடக வழக்கும் உலக வழக்கு மாகிய புலனெறி வழக்கிற்கு மாறாக இயன்று நடக்கினும், மன்பொருள் இயையும் என்மனார் புலவர் - அவை மிகவும் பொருளாய்ப் பொருந்து மென்று தொல்லாசிரியர் கூறுவர் என்றவாறு. ‘இசைப்பினும்’ என்பதை ஈரிடத்தும் கூட்டுக. இது, சொல் வழுவும் பொருள் வழுவும் அமைத்தவாறு. அதாவது, சொல்லதிகாரத்திற் கூறிய சொற்கள் அகப்பொருள் மரபு பற்றி வேறுபொருள் உணர்த்தினும், அகத்திணையியல் களவியல் கற்பியல்களில் அகப்பொருள் பற்றிக் கூறப்படும் பொருள்கள் சிறிது மாறுபட்டு நடத்தினும், அவையுங் குணமாகவே கொள்ளப்படும் என்பதாம். இசை - சொல். அசை - பொருள். அசைத்தல் - சொல்லுதல். அசைக்கப்படுவது அசை என, ஆகு பெயரான் பொருளை யுணர்த்திற்று. இயலா - இயன்று, அமைந்து. (45) 2. தலைவன் தலைவி கூற்றமைதி 91. நோயும் இன்பமும் இருவகை நிலையில் காமங் கண்ணிய மரபிடை தெரிய எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல் மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும் சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச் செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும் அவரவ ருறுபிணி தமபோற் சேர்த்தியும் அறிவும் புலனும் வேறுபட நிறீஇ இருபெயர் மூன்றும் உரிய வாக உவம வாயிற் படுத்தலும் உவமமோ டொன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி. இது, தலைவன் தவைவி கூற்றின்கட்படும் வழுவமைக்கின்றது. இ - ள்: காமம் கண்ணியமரபு இடை தெரிய - காதலொழுக்கத் தொடர்பு விளங்கும்படி, நோயும் இன்பமும் இருவகை நிலையில், துன்புறு நிலையிலும் இன்புறு நிலையிலும், எட்டன் பகுதியும் விளங்க - நகை முதலிய எட்டுவகை மெய்ப்பாடுந் தோன்ற, அவரவர் ஒட்டிய உறுப்புடையது போல் உணர்வுடையது போல் மறுத்துரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும் - கூறுகின்றவர் தமக்குப் பொருந்திய உறுப்பெல்லாம் அது (நெஞ்சு) உடையது போலவும், உணர்வு உடையது போலவும், மறுமாற்றம் (எதிர்மொழி) தருவது போலவும் நெஞ்சொடு சேர்த்துச் சொல்லியும்; சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇ செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கியும் - சொல்லாத இயல்புள்ளனவற்றைச் சொல்லுவன வாகவும், தொழில் செய்யாதனவற்றைத் தொழில் செய்வன வாகவும், உறுபிணி தமபோல் சேர்த்தியும் - அச் சொல்லா மரபினவையும் செய்யா மரபினவையும் உற்ற வருத்தத்தைத் தம் பிணிக்கு வருந்தின வாகவும், அறிவும் புலனும் வேறுபட நிறீஇ - மனவறிவும் ஐம்பொறி யறிவும் வேறுவேறாக நிறுத்திக் காட்டியும், இரு பெயர் மூன்றும் உரியவாக உவமம் ஒன்றிடத்து உவம வாயிற் படுத்தலும் - அஃறிணை யிருபாற் கண்ணும் உயர்திணை முப்பாலும் உரியவாக உவமை காட்ட வேண்டும் இடத்தில் உவமித்துக் காட்டியுங் கூறுதல், இருவர்க்கும் உரிய பாற் கிளவி - தலைவன் தவைவி இருவர்க்கும் உரிய சொற்களாகும் என்றவாறு. பாற்கிளவி - இலக்கணத்திற் பக்கச் சொல், இலக்கணைச் சொல். அவை, சொல்லா மரபினை சொல்லுதலாகக் கூறுதல் முதலியன. இது பால்கெழுகிளவி எனவும் வழங்கும். 1. தலைவனும் தவைவியும் - காமத்தால் துன்புறு நிலையில் எட்டு மெய்ப்பாடும், இன்புறு நிலையில் எட்டு மெய்ப்பாடுந் தோன்ற, நெஞ்சை உறுப்பும் உணர்வும் உடையது போலவும் மறுமாற்றந் தருவது போலவும் கூறுவர்; 2. சொல்லாதனவற்றைச் சொல்லுவன வாகவும், செய்யாதன வற்றைச் செய்வனவாகவுங் கூறுவர்; 3. அச் சொல்லாதனவும் செய்யாதனவும் உற்ற வருத்தத்தைத் தமது வருத்தத்துக்காக வருந்தியன போலவும் கூறுவர்; 4. அறிவும் புலனும் வேறுபட நிமிர்த்தியும், அஃறிணையிரு பாலையும் உயர்திணை முப்பாலாக உவமித்துக் காட்டியுங் கூறுவர் என்க. உறுப்பும் உணர்வும் இல்லாததும், எதிர்மாற்ற முரை யாதது மான நெஞ்சை, அவையுடையது போலக் கூறுதல் வழுவேனும், அகப்பொருட்குப் பயன்படுதலின் வழுவமையும் என்பதாம். மற்றவையும் இவ்வாறே. சொல்லா மரபினவை: கிளி, அன்னம், வண்டு, நண்டு முதலிய புள்ளும் மாவும். செய்யா மரபினவை: மாலை, கார், கடல், கானல், புன்னை முதலியன. செய்யா மரபின - செய்கை யில்லாதன. ஐம்பொறியறிவு - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன. இவை ஐம்புலன் ஆகும். இருபெயர் மூன்றும் உரியவாகக் கூறுதலாவது - நெஞ்சாகிய அஃறிணை யொருமையைத் தலைவன் ஆண்பாலாகவும், தலைவி பெண்பாலாகவும் கூறுதலும், பன்மையாற் கூறும் வழிப் பலர்பாலாகக் கூறுதலுமாம். நெஞ்சு, சொல்லா மரபின, செய்யா மரபின என்னும் இவற்றை உயர்திணை முப்பாலாக்கி உவமித்துக் கூறுதலென்க. மெய்ப்பாடெட்டாவன, நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன. (மெய். - 3) காட்டு: 1. “ கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் அந்தீங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறநசைஇச் சென்றவென் நெஞ்சே.” (அகம் - 9) இது, தலைவன் நெஞ்சை உறுப்புடையது போல் உவகை பற்றிக் கூறியது. 2. “ பூவில் வறுந்தலை போலப் புல்லென் றினைமதி வாழிய நெஞ்சே.” (குறுந் - 19) இது, தலைவன் தன் நெஞ்சை உ'99டர்வுடையது போல் வெகுளி பற்றிக் கூறியது. 3. “ ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச் செய்வினை கைம்மிக எண்ணுதி, அவ்வினைக் கம்மா வரிவையும் வருமோ? எம்மை யுய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே!” (குறுந் - 63) இது, தலைவன் தன் நெஞ்சை மறுத்துரைப்பது போல் இளிவரல் பற்றிக் கூறியது. இவை மூன்றும் தலைவன் தன் நெஞ்சை ஆண்பாலாகக் கூறியன. 1. “நெஞ்சம், என்னொடும் நின்னொடும் சூழாது.” (அகம் - 128) என்னும் அகப்பாட்டில், ‘தளரடி தாங்கிய சென்ற தின்றே’ எனத் தலைவி தன் நெஞ்சை உறுப்புடையது போல் அழுகை பற்றிக் கூறினாள். 2. “அறியவும் பெற்றாயோ அறியாயோ மடநெஞ்சே!” (கலி - 123) இது, தலைவி நெஞ்சை உணர்வுடையது போல் நகை பற்றிக் கூறியது. 3. “ கோடெழில் அகலல்குல் கொடியன்னா ரகமூழ்கிப் பாடழி சாந்தினன் பண்பின்றி வரினெல்லா, ஊடுவேன் என்பேன்மன் அந்நிலையே யவற்காணின் கூடுவேன் என்னுமிக் கொள்கையில் நெஞ்சே” (கலி - 67) இது, தலைவி நெஞ்சை மறுத்துரைப்பது போல் உவகை பற்றிக் கூறியது. மற்ற மெய்ப்பாடுகள் பற்றித் தலைவன் தலைவி கூற்று வந்துழிக் காண்க. 4. “ கானலுங் கழறாது கழியுங் கூறாது தேனிமிர் நறுமலர்ப் புன்னையு மொழியாது ஒருநீ யல்லது பிறிதியாது மிலனே இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல் கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத் தண்டா தூதிய வண்டினங் களிசிறந்து பறைஇ தளருந் துறைவனை நீயே சொல்லல் வேண்டுமார் அலவ!” (அகம் - 170) இது, தலைவி சொல்லா மரபின சொல்லுவனவாக அழுகை பற்றிக் கூறியது. கானல், கழி, புன்னை, அலவன் - இவை சொல்லா மரபின வாதல் காண்க. இவை செய்யா மரபினவுமாம். இவை உயர்திணையுமாயின. கானல் - கடற் கரை. கழி - உப்பங்கழி. அலவன் - நண்டு. 5. “ பாய்திரை படோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல்! தூவத் துறந்தனன் துறைவனென் றவன்றிறம் நோய்தெற வுழைப்பார்க ணிமிழ்தியோ வெம்போலக் காதல்செய் தகன்றாரை யுடையையோ நீ! மன்றிரும் பெண்ணை மடல்சேர் அன்றில்! நன்றறை கொன்றனர் அவரெனக் கலங்கிய என்றுய ரறிந்தனை நரறியோ வெம்போல இன்றுணைப் பிரிந்தாரை யுடையையோ நீ.” (கலி - 129) இதனுள், கடலும் அன்றிலும் உற்ற பிணியைத் தலைவி தம்பிணிக்கு வருந்தினவாகச் சேர்த்தி, உயர்திணையாக்கி, உவம வாயிற் படுத்தவாறு காண்க. பிறவு மன்ன. ‘காமங்கண்ணிய’ என்றதனால், கைக்கிளை பெருந்திணைக்குங் கொள்க. (46) 3. கனவில் நிகழ்தல் 92. “கனவு முரித்தா லவ்விடத் தான.” இ-ள்: அவ்விடத்தான - மேற்கூறியவை, கனவும் உரித்தால் - இருவர்க்கும் கனவின் கண்ணும் நிகழும் என்றவாறு. முற்கூறிய பால்கெழுகிளவி, தலைவன் தலைவியர் கனவிலும் நிகழுமென்பதாம். காட்டு: “அலந்தாங் கமையலேன் என்றானைப் பற்றியென் நலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவும், கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப் புலம்பல் ஓம்பென அளிப்பான் போலவும்.” (கலி - 128) இதனுள், ‘பற்றி, முயங்கி’ என்றது தலைவன் உருவினை. இது கனவு நிலை. கனவில் கண்ட தலைவன் உருவமும் உறுப்பும் உணர்வும் மறுத்துரைப்பதும் உடையவாகச் செய்யா மரபின செய்வதாகக் கூறியவாறும், அவை உயர்திணையாகக் கூறியவாறும் அறிக. (47) 4. செவிலிக் கனவு 93. தாய்க்கு முரித்தாற் போக்குடன் கிளப்பின். இ - ள்: தலைமகள் உடன்போய காலத்துச் செவிலியும் இவ்வாறு கனவு காண்பாள் என்றவாறு. பால்கெழுகிளவி இவட்குரித்தாதல் அடுத்த நூற்பாவிற் கூறுகிறார். தலைவி உடன் போகாமற் காத்தற்குரிய ளாதலானும், தலைவியை என்றும் பிரியாத பழக்கத்தானும் செவிலிக்குக் கனவு உரித்தாயிற்று. “கண் படை பெறேஎன் கனவ.” (அகம் - 55) எனக் காண்க. (48) 5. பால்கெழு கிளவி கூறுவோர் 94. பால்கெழு கிளவி நால்வர்க்கு முரித்தால். இ - ள்: இலக்கணச் சொல் (சூ - 46) - தோழி, செவிலி, நற்றாய், பாங்கன் என்னும் நால்வர்க்கும் உரித்தென்றவாறு. ‘இருவர்க்கு முரியபாற் கிளவி’ (சூ - 46) எனத் தலைவனையும் தலைவியையும் ஆண்டே கூறலின், ஈண்டு இந்நால்வருமேயாம். தலைவன் தலைவியரைத் தாமாகவே கொள்வோர் இவரே. காட்டு: “ தருமணற் கிடந்த பாவையென் மருமக ளேயென முயங்கின ளழுமே.” (அகம் - 165) இது, நற்றாய் மணற்பாவையைப் பெண்பாலாக் கூறித் தழீஇக் கொண்டெழுதலிற் பால் கெழுகிளவி யாயிற்று, இது, செவிலிக்கும் பொருந்தும். அடுத்த சூத்திரத்தில் ஏனையிரு வரையும் விலக்குப. (49) 6. மேலதற்கோர் சிறப்பு விதி 95. நட்பி னடக்கை யாங்கலங் கடையே. இ - ள்: ஆங்கு - முன்னை நூற்பாவில் (49) கூறிய அந்நால்வரும் அவ்வாறு கூறுதல், நட்பின் நடக்கை அலங்கடை - தலைவனும் தலைவியும் நட்பாக நடவாத போது ஆமென்றவாறு. நட்பின் நடக்கை - களவொழுக்கம் ஒழுகுதல். அலங்கடை - களவொழுக்கத்தை விட்டு உடன்கொண்டு போதல். உடன் போனபின் இந்நால்வர்க்கும் பால்கெழு கிளவி நடக்கு மென்பதாம். தோழியும் உடன்பட்டுத் தலைவியை அனுப்புதலின், தோழி கூறாள். பாங்கன் அறியவே உடன் போக்கு நிகழ்தலின் பாங்கனும் கூறான். ஒருகால் பாங்கனறியாமல் உடன்போக்கு நிகழின், பாங்கன் கூறுவான். இது அருகி நிகழும். (50) 7. தலைவியைக் காப்போர் 96. உயிரு நாணும் மடனு மென்றிவை செயிர்தீர் சிறப்பின் நால்வர்க்கு முரிய. இது, தலைவனால் தலைவிக்கு வேறுபாடு தோன்றிய வழி, அதனைக் காத்தற்குரியோர் இவரென்கின்றது. இ - ள்: உயிரும் நாணும் மடனும் என்று இவை - தலைவியின் உயிரும் நாணும் மடனும் அவளை விட்டு நீங்காமற் காத்தல், செயிர்தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய - குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய நற்றாய், செவிலி, தோழி, தலைவன் ஆகிய நால்வர்க்கும் உரியவாகும் என்றவாறு. தலைவன் பிரிவால் தலைவி உயிர் வாடி இறந்து படாமலும், நாணும் மடனும் நீங்கி உடன் போகாமலும், கற்பில் நாண் மடன் நீங்கி வெளிப்படக் கூறாமலும் (இது பெருந்திணை) தோழி ஆற்றுவித்துக் காக்கும். தலைவன் பிரிவு நீட்டியாது காத்தல். களவில் தோழி செவிலிக் கறத்தொடு நின்றும், செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றும், நற்றாய் தந்தை தன்னைக் கறத்தொடு நின்றும் காத்தல். தலைவன் களவில் வரைவிடை வைத்துப் பிரிந்தும், கற்பில் பரத்தையிற் பிரிந்தும் இவற்றைக் காவானாகையால், தலைவனை யொழிந்த மூவர்க்குமே பெரும்பான்மை உரியவென்பதாம். உம்மை - எச்சம். பாங்கன், பிரிவு நீட்டியாது களவினும் கற்பினும் தலைவனைக் கூட்டுவித்துக் காப்பானாகலான், தலைவனை யொழித்துப் பாங்கனொடு நால்வர் எனினுமாம். (51) 8. தலைவி உறுப்பினை உணர்ந்தபோலக் கூறல் 97. வண்ணம் பசந்து புலம்புறு காலை உணர்ந்த போல உறுப்பினைக் கிழவி புணர்ந்த வகையிற் புணர்க்கவும் பெறுமே. இ - ள்: வண்ணம் பசந்து புலம்புறு காலை - பிரிவால் தலைவிக்கு நிறம் வேறுபட்டு மிகுந்த துன்ப முறும்போது, கிழவி உறுப்பினை உணர்ந்த போல - தலைவி தனது உறுப்புக்களை அறிவுடையன போல, புணர்ந்த வகையால் புணர்க்கவும் பெறும் - பொருந்தின கூற்றால் விளித்துக் கூறவும் பெறும் என்றவாறு. வண்ணம் பசத்தல் - உடல் பசுமைநிற மாதல். இது காதல் நோயால் ஏற்படும் நிறவேறுபாடு. புலம்புறுதல் - தனிப்படர் உறுதல்; அதாவது, தலைவன் பிரியத் தனித்திருக்க ஆற்றாது துன்பமிகுதல். புலம்பு - தனிமை. படர் - துன்பம். ‘புணர்ந்த வகை’ என்றதனால், காதும் ஓதியும் முதலாயின கூறப்பெறா. கண்ணும் தோளும் மார்பும் கூறப்பெறும். இவற்றைத் தலைவன்பாற் செலவு வரவுடையன போலக் கூறுவாள். காட்டு: 1. “ தணந்தநாள் சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள்.” (குறள்) இது, தோளினை அறிவுடையது போல் கூறியது. 2. “ கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத் தின்னு மவர்க்காண லுற்று.” (குறள்) இது, கண்ணினைத் தலைவனிடம் செல்வனவாகக் கூறியது. (52) 9. தலைவனைச் சேராமை 98. உடம்பும் உயிரும் வாடியக் காலும் என்னுற் றனகொல் இவையெனி னல்லது கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை. இ-ள்: உடம்பும் உயிரும் வாடியக் காலும் - கூட்ட மின்மையால் உடம்பும் உயிரும் தேய்வுற்ற காலத்தும், இவை என் உற்றன கொல் எனின் அல்லது - ‘இவை (உடம்பும் உயிரும்) என்ன வருத்த முற்றன கொல்’ என்று தனக்கு வருத்த மில்லது போலக் கூறுதலல்லது, கிழவோன் சேர்தல் கிழத்திக்கு இல்லை - தலைவி தானே சென்று தலைவனை அடையாள் என்றவாறு. களவு கற்பு இரண்டினும் சேராளென்க. காதல் மிகவும் கணவனைச் சேராது வஞ்சம் போன்றொழுகல் வழுவாயினும் அமைக்க வென்பதாம். காட்டு: “ கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து.” (குறள்) இதனுள், அன்று தாமே நோக்கி, இன்று தாமே இருந் தழுகின்றன. இது நம்மால் சிரிக்கத்தக்க இயல்பினை யுடைத்து எனத் தலைவி, இக்கண்களுக்கு என்ன வருத்தமுற்றவோ எனக் கூறியவாறு காண்க. அன்று - இயற்கைப் புணர்ச்சி நடந்த போது.(53) 10. தலைவி நெஞ்சொடுசாவுதல் 99. ஒருசிறை நெஞ்சமோ டுசாவுங் காலை உரிய தாகலும் உண்டென மொழிப. இ - ள்: ஒரு சிறை - தனது நெஞ்சத்தை வேறாக வைத்து, நெஞ்சமொடு உசாவுங் காலை - அதைக் கூட்டத்திற்கு வினாவுங் காலம், உரிய தாகலும் உண்டு என மொழிப - உரித்தாகலும் உண்டென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. ஒரு சிறை - ஒரு பக்கம். அதாவது, தனது நெஞ்சத்தைத் தன்னின் வேறாகக் கொண்டு வினாவுதலாம். உம்மையால், தோழியொடு உசாவுதலுங் கொள்க. உசாவுதல் - வினாவுதல். இது, தலைவனொடு கூடாமையால் அவன் ஆற்றானாவன் என்றேனும், உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் அவன் புலக்கு மென்றேனும் (கற் - 9) தலைவி உசாவுதலாம். உணர்ப்பு வயின் வாரா ஊடல் - தலைவன் உணர்த்த உணராது தலைவி ஊடல். காட்டு: 1. “ மாண மறந்துள்ளா நாணிலிக் கிப்போர் புறஞ்சாய்ந்து கண்டைப்பாய் நெஞ்சே! - உறழ்ந்திவனைப் பொய்ப்ப விடேஎ மெனநெருங்கிற் றப்பினேன் என்னடி சேர்தலு முண்டு.” (கலி - 89) இதனுள், ‘நெஞ்சே, நாணமில்லாமவனுக்கு இவ்வூட போரில் தோற்று, அதனாலுள்ள பயனைக் காண்பாய்’ என நெஞ்சைத் தன்னின் வேறாக நிறுத்தி வினாய்த் தலைவி ஊடல் தீர்ந்தமை காண்க. 2. “ பகலே பலருங் காண நாண்விட் டகல்வயிற் படப்பை அவனூர் வினவிச் சென்மோ வாழி தோழி!” (நற் - 365) இது, தோழியொடு உசாவியது. (54) 11. தலைவி மடனழிதல் 100. தன்வயிற் கரத்தலும் அவன்வயின் வேட்டலும் அன்ன விடங்கள்அல்வழி யெல்லாம் மடனொடு நிற்றல் கடனென மொழிப. இ - ள்: தன் வயின் கரத்தலும் - தலைவன் தலைவியிடத்தே புறத்தொழுக்கம் இல்லையெனப் பொய்கூறலும், அவன் வயின் வேட்டலும் - அங்ஙனம் கரந்து கூறிய தலைவனை அடைதலைத் தலைவி விரும்புதலும், அன்ன இடங்கள் அல்வழி எல்லாம் - ஆகிய இடங்கள் அல்லாத இடத்தெல்லாம், மடனொடு நிற்றல் கடனென மொழிப - தலைவி மடனழியாமல் இருத்தல் கடமை யெனக் கூறுவர் புலவர் என்றவாறு. வயின் - இடம். வேட்டல் - விரும்பல். கரத்தல் - ஒளித்தல், மறைத்தல். எனவே, தன்வயிற் கரத்தலும், அவன் வயின் வேட்டலு மாகிய ஈரிடத்தும் தலைவி மடனழிந்து கூறுவளென்பதாம். மடம் - சொன்னதை மெய்யெனக் கொண்டு அதை விடாமல் இருக்கும் மனவடக்கம். மடம் - மடன் - போலி. ‘குதிரை வழங்கி வருவல்’ (கலி - 69) எனத் தலைவன் மறைத்துக் கூறியவழி, அதை மெய்யெனக் கொள்ளுதல் மடன்; அங்ஙனம் கொள்ளாது, ‘அறிந்தேன், பரத்தையராகிய குதிரை என்பதை’ எனக் கூறுதல், மடனழிதல். வழங்கிவருதல் - ஏறி வருதல். “யாரினுங் காதலம் என்றானா ஊடினாள் யாரினும் யாரினும் என்று.” (குறள்) தலைவன், ‘காதலர்கள் யாரினும் நம் காதலம்’ என்றதை, தன்னால் (என்னால்) காதலிக்கப்பட்டார் யாரினும் உன்னிடம் காதல் மிக்குடையேன் எனக் கூறினதாகக் கொண்டு தலைவி ஊடிக் கூறியதும் மடனழிந்து கூறியதேயாம். (55) 12. உண்டற்குரிய வல்லாப் பொருள் 101. உண்டற் குரிய வல்லாப் பொருளை உண்டன போலக் கூறலு மரபே. இ - ள்: உண்டற்கு உரியவல்லாத (பசலை முதலியன) பொருளை உண்டன போலக் கூறலும் முறையேயாம் என்றவாறு. உய்த்துக்கொண் டுணர்தலான், உண்ணப்படுதற்குரிய வல்லாத (நலன், குணம்) பொருளைப் பிறரால் உண்ணப்பட்டது போலக் கூறுதலுமாம். மரபு - முறை. காட்டு: 1. “பசலையால் உணப்பட்டுப் பண்டைநீர் ஒழிந்தக்கால்.” (கலி - 15) எனவரும். நீர் - தன்மை, அழகு. தலைவியின் அழகைப் பசலை உண்டதாகக் கூறியது காண்க. 2. “ தோணல முண்டு துறக்கப் பட்டோர் வேணீ ருண்ட குடையோ ரன்னர்; நல்குநர் புரிந்து நலனுணப் பட்டோர் அல்குநர் போகிய ஊரோ ரன்னர்; கூடினர் புரிந்து குணனுணப் பட்டோர் சூடுந ரிட்ட பூவோ ரன்னர்.” (கலி - 23) இதனுள், தலைவி தன் குணம் நலன்களைத் தலைவன் உண்ட தாகக் கூறினமை காண்க. “ புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு.” (குறள்) பசப்பு அள்ளிக் கொள்ளும்படி நிறைந்ததெனல், ‘கூறலும்’ என்னும் உம்மையாற் கொள்க. (56) 13. தோழியின் உரிமை 102. தாயத்தி னடையா ஈயச் செல்லா வினைவயிற் றங்கா வீற்றுக் கொளப்படா எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம் அல்ல வாயினும் புல்லுவ வுளவே. இ - ள்: 1. தாயத்தின்அடையா - பெற்றோருடைய பொருள்களாய் மக்களால் அடையமுடியாதனவும், 2. ஈயச் செல்லா - பிறர்க்குக் கொடுக்க அவர்பாற் செல்லாதனவும், 3. வினைவயின் தங்கா - எடுப்புப் பிள்ளைகள் போல் தனதாக்கிக் கொள்ள முடியாதனவும், 4. வீற்றுக் கொளப்படா - பகைவரால் கவர்ந்து கொள்ளப் படாதனவும் ஆகி, எம் என வரும் கிழமைத் தோற்றம் - தலைவி யுறுப்புகளைத் தோழி எம்முடைய வென்று கூறுதல், அல்லா வாயினும் புல்லுவ உள - வழுவேனும் புலனெறி வழக்கிற்குப் பொருந்தும் என்றவாறு. தாயம் -பெற்றோர் பொருள். எடுப்புப் பிள்ளை - வளர்ப்புப் பிள்ளை (சுவீகாரம்). தனதாக்குதல் - தனக்குரிய தாக்குதல் (சுவீகரித்தல்). எம் என வரும் கிழமை தோற்றம் - தோழி எம்முடைய என்று சொல்லும் உரிமையையுடைய தலைவி உறுப்புக்கள். உறுப்புப் பார்க்கப்படுதலின், ‘தோற்றம்’ என்றார். பொருள் முதலியன ஒருவர்க்குச் சொந்த மன்மையால் எம்முடைய வெனக் கூறப்படா. உறுப்புக்கள் தம்முடன் கூடியன வாகையால் எம்மெனக் கூறலாமென்பதாம். ஒருவர் உறுப்புக்களை மற்றொருவர் எவ்வகையினும் அடையமுடியாமை யறிக. காட்டு: “ ஒரு நாளென் தோள்நெகிழ புற்ற துயரால் துணிதந்தோர்.” (கலி - 37) “ என்றோள் எழுதிய தொய்யிலும்.” (கலி - 18) எனத் தோழி, தலைவி தோளினை என் தோள் என்றமை காண்க. ‘உள’ என்றதனால், சிறுபான்மை தலைவி தோழியுறுப்பினைத் தன்னுறுப்பாகக் கூறுதலுங் கொள்க. “ நின்கண்ணால் காண்பன்மன் யான்.” (கலி - 39) எனவரும். (57) 14. வாழ்க்கையுள் இரக்கந் தோன்றக் கூறல் 103. வருத்த மிகுதி சுட்டுங் காலை உரித்தென மொழிப வாழ்க்கையு ளிரக்கம். இ - ள்: வருத்த மிகுதி சுட்டும் காலை - தோழியும் அறிவரும், பரத்தையிற் பிரிவால் தலைவற்கும் தலைவிக்கும் தோன்றிய மிக்க வருத்தத்தைக் கருதிக் கூறுமிடத்து , வாழ்க்கையுள் இரக்கம் உரித்து என மொழிப - அவர்கள் (தலைவன், தலைவி) நடத்தும் இல்வாழ்க்கையில் தமக்கு இரக்கந் தோன்றிற்றாகக் கூறலும் உரித்தென்று கூறுவர் என்றவாறு. வருத்த மிகுதி - ஊடல். தலைவன் பரத்தையிற் பிரிவால் தலைவி ஊடின விடத்து, ‘நீ இவ்வாறு செய்தல் முறையன்று’ எனத் தோழியும் அறிவரும் தலைவனைக் கடிந்து கூறி நல்வழிப் படுத்துவர் என்பதாம். வாழ்க்கையுள் இரக்கமாவது - நீ இவ்வாறு செய்யின் நுமது வாழ்க்கை கேடுறுமெனத் தமது வருத்தந் தோன்றக் கூறுதல். காட்டு: 1. “ நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும் ஆர்ந்தோர் வாயிற் றேனும் புளிக்கும் தணந்தனை யாயி னெம்முய்த்துக் கொடுமோ அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க் கடும்பாம்பு வழங்குந் தெருவில் நடுங்கஞ ரெவ்வம் களைந்த வெம்மே.” (குறுந் - 354) இதனுள், ‘இல்லறத்தினை நீ துறந்தனையாயின் எம்மை எம்மூர்க் கண்ணே விடுக’ எனத் தனக்கு வருத்தந் தோன்றிற்றாகத் தோழி கூறியவாறு காண்க. ‘எம்மை’ என்றது, தன்னையும் தலைவியையும். இல்லறத்தினைத் துறத்தல் - தலைவியைப் பிரிந்து பரத்தையிடம் செல்லுதல். 2. “ உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும் தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி விழவொடு வருதி நீயே, இஃதோ ஓரா வல்சிச் சீறில் வாழ்க்கைப் பெருநலக் குறுமகள் வந்தென இனிவிழ வாகும் என்னுமிவ் வூரே.” (குறுந் - 295) இதனுள், ‘முன்னர் நடத்திய ஓராவல்சிச்சீறில் வாழ்க்கை, இவள் வரப் புறத்து விளையாடும் விழவுள தாயிற்றென்று இவ்வூர் கூறுகின்ற செல்வம், இவளைப் பிரிந்தால் பழைய தன்மையாம்’ என்று அறிவர் இரங்கிக் கூறியவாறு காண்க. ஓராவல்சி - பருக்கை யற்ற கூழுணவு. சீறில் வாழ்க்கை - வறுமை வாழ்வு. இனியும் நீ இவ்வாறு நடந்துவரின் அவள் தாய் வீடு செல்வள் என்பதாம். (58) 15. உறழுங் கிளவியும் ஐயக் கிளவியும் 104. உயர்மொழிக் குரிய உறழுங் கிளவி ஐயக் கிளவி ஆடூஉவிற் குரித்தே. இ - ள்: உயர்மொழிக்கு உறழும் கிளவியும் உரிய - இன்பம் உயர்தற்குக் காரணமான கூற்று நிகழுமிடத்தில், ஒருவர் கூறுதற்கு மற்றொருவர் மாறுபடக் கூறுதலும் உரிய, ஐயக் கிளவி ஆடூஉவிற்கு உரித்து - கூறுவேமோ கூறேமோ என்று ஐயமுற்றுக் கூறுதல் தலைவற் குரித்து என்றவாறு. உறழ்தல் - மாறுபடுதல். உறழுங் கிளவி - தலைவிக்கும் தோழிக்கும் உரித்தென்க. 1. தோழி உயர்மொழி கூறியவழித் தலைவி உறழ்ந்து கூறுவள். 2. தலைவி உயர்மொழி கூறியவழித் தோழி உறழ்ந்து கூறுவள். 3, 4. தலைவன் உயர்மொழி கூறியவழித் தலைவியும் தோழியும் உறழ்ந்து கூறுவர். காட்டு: 1. “ நின்முகங் காணு மருந்தினேன் என்னுமால் நின்முகந் தான்பெறி னல்லது கொன்னே மருந்து பிறிதியாது மில்லேன் திருந்திழாய், என்செய்வாம் கொல்லினி நாம்.” (கலி - 60) எனத் தோழி கூறிய வழி, “பொன் செய்வாம்” எனத் தலைவி உறழ்ந்து கூறியவாறு காண்க. இது, தலைவனது வருத்தங் கூறத் தலைவி அதை ஏற்றுக் கொள்ளாது மாறுபடக் கூறலின் (உறழ்தலின்) வழுவாய், நாண மிகுதியால் விரைவில் உடன்படாமையின் வழுவமைதி யாயிற்று. 2. “ ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ ஓர்வுற் றொருதிறம் ஒல்காத நேர்கோல் அறம்புரி நெஞ்சத் தவன்.” (கலி - 42) எனத் தலைவி கூறுதலும், “ தண்ணறுங் கோங்க மலர்ந்த வரையெல்லாம் பொன்னணி யானைபோல் தோன்றுமே நம்மருளாக் கொன்னாளன் நாட்டு மலை.” (கலி - 42) எனத் தோழி உறழ்ந்து கூறியவாறு காண்க. இது, தலைவி கூற்றுக்கு மாறாகலின் வழுவாய், தலைவன் சிறைப்புறமாகக் கேட்டு வரைதல் பயனாகலின் வழுவமைதி யாயிற்று. 3. “ ஈத லிரந்தார்க்கொன் றாற்றாது வாழ்தலிற் சாதலுங் கூடுமா மற்று;” எனத் தலைவன் கூறிய வழி, “ இவள் தந்தை, காதலின் யார்க்குங் கொடுக்கும் விழுப்பொருள் யாதுநீ வேண்டியது.” (கலி - 61) எனத் தோழி உறழ்ந்து கூறியவாறு காண்க. இது, தலைவன் கூற்றுக்கு எதிர் கூறலின் வழுவாய் தலைவியின் கருத்தை யறிந்து உடம்பட வேண்டும் என்று கருதுதலின் வழுவமைதி யாயிற்று. 4. “சொல்லின் மறாதீவாள் மன்னோ இவள்.” (கலி - 61) என, ஐயக்கிளவி தலைவற் குரியவாய் வந்தது. (59) 16. தோழி அறிவுடையளாகக் கூறல் 105. உறுக ணோம்பல் தன்னியல் பாகலின் உரிய தாகுந் தலைவற் குரியவாய் உரனே. இ - ள்: உறுகண் ஓம்பல் தன் இயல்பு ஆகலின் - தலைவிக்கு வந்த வருத்தத்தைப் போக்குதல் தோழிக்குக் கடனாதலின், தோழிகண் உரன் உரியதாகும் - தோழி அறிவுடையளாகக் கூறுதலும் உரித்தாகும் என்றவாறு. உறுகண் - துன்பம். உரன்- அறிவுடைமை. அதாவது, தலைவன் பிரியக் கருதின் அப்பிரிவினால் பயனில்லையெனக் காரணங் காட்டி விலக்குதல். ‘ஒன்றென முடித்தலான்’ தலைவி உரனுடையளாகக் கூறலுங் கொள்க. காட்டு: “ பிண்ட நெல்லின் அள்ளூ ரன்னவென் ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரே.” (அகம் - 46) இதனுள், தலைவன் செல்லாமை யறிதலின், ‘தலைவி வருந்தினும் நீ செல்’ என, தோழி உரனுடையளாகக் கூறியவாறு காண்க. தலைவி கூற்றுக் கிலக்கியம் வந்துழிக் காண்க. (60) 17. தோழி உயர்மொழிக் கிளவி கூறல் 106. உயர்மொழிக் கிளவியு முரியவா லவட்கே. இ - ள்: அவட்கு - தோழிக்கு, உயர்மொழிக் கிளவியும் உரிய - தலைவனையும் தலைவியையும் உயர்த்துக் கூறுதலும் உரியவாம் என்றவாறு. உயர்த்தல் - மிகச் சிறப்பித்தல். ஒரோவோரிடத்து உரியவென்க. காட்டு: “ மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ யாண ரூரநின் மாணிழை யரிவை காவிரி மலிர்நிறை யன்னநின் மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே.” (ஐங் - 42) இதனுள், காவிரிப் பெருக்குப் போலத் தலைவியை நோக்கி வருகின்ற தலைவன் மார்பினை அவள் விலக்குமாறு என்னெனத் தலைவியை உயர்த்துக் கூறியவாறு காண்க. மார்பினை விலக்குதல் - பிரிந்து ஆற்றியிருத்தல். ஆற்றியிருத்தலில் வல்லள் எனத் தலைவியைச் சிறப்பித்தவாறு. “ உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையு முடையான்.” (கலி - 47) இது, தலைவனை உயர்த்துக் கூறியது. (61) 18. மங்கல முதலிய மொழிகள் 107. மங்கல மொழியும் வைய மொழியும் மாறில் ஆண்மையிற் சொல்லிய மொழியும் கூறியல் மருங்கிற் கொள்ளு மென்ப. இ-ள்: மங்கல மொழியும் - தலைவற்குத் தீங்கு வருமென் றஞ்சித் தலைவியும் தோழியும் அவனை வாழ்த்துதலும், 2. வைய மொழியும் - தலைவன் தம்மை வஞ்சித்தானாகத் தலைவியும் தோழியுங் கூறுதலும்; வைய மொழி - தீங்கை உள்வைத்த மொழி, வஞ்சனை. 3. மாறில் ஆண்மையில் சொல்லிய மொழியும் - மாறு பாடில்லாத தனது ஆண்மையில் தவறினான் எனக் கூறுதலும், கூறு இயல் மருங்கில் கொள்ளும் என்ப - வழுவமைதியாகக் கூறிய இலக்கணத்திடத்தே கொள்ளும் மொழி என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. ஆண்மை - குற்றங் களைந்து குணங் கைக்கொண்டு நடத்தல். அதாவது, நல்லொழுக்கத்தை யாளுதல். ஆண்மை யின்மை - நல்லொழுக்கத்திற் றவறி நடத்தல். 1. மங்கல மொழி - பிரிவிடத்தும், 2. வைய மொழி - பிரிவு நீட்டிப்பினும், 3. ஆண்மையில் சொல் - தலைவன் வலிதிற் புகுதல் முதலிய தவறு செய்த விடத்தும் கூறுவனவாம். காட்டு: 1. “நோயில ராகநங் காதலர்” (அகம் - 115) இது, நம்மை அறனன்றித் துறத்தலின் தீங்கு வருமென்றஞ்சி வாழ்த்தியது. நம்பொருட்டு அவர்க்குத் தீங்கு வருமென்று நினைத்தலின் வழுவமைந்தது. 2. “வையினர் நலனுண்டார் வாராமை நினைத்தலின்.” (கலி - 184) இது, வஞ்சித்தமை கூறிற்று. வையினர் - வஞ்சகர். வருவதாகக் கூறி நலனை யுண்டு வாராமையின் வஞ்சகர் என்றார். 3. “ யாரிவன் எங்கூந்தல் கொள்வான் இதுவுமோர் ஊராண்மைக் கொத்த படிறுடைத் தெம்மனை வாரல்நீ வந்தாங்கே மாறு.” (கலி - 89) இது, ஆண்மையில் பழியுண்டு என்றது. வலிய எனது கூந்தலைப் பிடித்தல் உனது ஒழுக்கத்திற்கு ஏற்றதல்ல எனக் கூறுதல் காண்க. படிறு - கொடுமை. (62) 19. மெய்ப்பாட்டமைதி 108. சினனே பேதைமை நிம்பிரி நல்குர வனைநால் வகையும் சிறப்பொடு வருமே. இது, மெய்ப்பாட்டியலில் (சூ - 26) ஆகாவென்பவற்றுள் சில இவ்விடத்து அமையுமென வழுவமைக்கின்றது. பொது வாகக் கூறலின் தலைவிக்கும் தோழிக்குங் கொள்க. இ - ள்: சினம், பேதைமை, நிம்பிரி, நல்குரவு என்னும் இவை நான்கும் காதலைச் சிறப்பித்துக் கூறுமிடத்து வரும் என்றவாறு. சினம் - சினம், நீட்டித்தல். பேதைமை - அறிவின்மை. நிம்பிரி- பொறாமை. நல்குரவு - செல்வமின்மை. காட்டு: 1. “ தொடிய வெமக்குநீ யாரை? பெரியார்க் கடியரோ ஆற்றா தவர்.” (கலி - 88) இதனுள், ‘என்னைத் தொடாதே; எமக்கு நீ யார்? பிரியவல்ல பெரியார்க்குப் பிரிவாற்றாதவர் (தலைவியர்) அடியரோ?’ எனச் சினந்து கூறியவாறு காண்க. இது சினம் பற்றி வரினும், தன் காதலைச் சிறப்பித்தலின் அமைந்தது. 2. “ செவ்விய தீவிய சொல்லி, யவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான் றவையெல்லாம் பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய.” (கலி - 19) இதனுள், யான் கழிபெருங்காதலால் நின்னை உள்ளவாறறிந் திலேன் எனத் தலைவி தன் பேதைமையைக் காதலால் சிறப்பித்தமை காண்க. ‘யான் யாங்கு அறிகோ’ என்றது, யான் மிக்க காதலால் பேதைமையுற்று அன்று நீ செய்தவையெல்லாம் பொய்யென் றறியாமற் போனே னென்பதாம். 3. “ உறலியாம் ஒளிவாட உயர்ந்தவன் விழவினுள் விறலிழை யவரொடு விளையாடு வான்மன்னோ பெறலரும் பொழுதொடு பிறங்கிணர்த் துருத்திசூழ்ந் தறல்வாரும் வையையென் றறையுந ருளராயின்.” (கலி - 30) இதனுள், அவரோடும் விளையாடுவானெனப் பொறாமை தோன்றக் கூறியும், அவனிங்கு வரவேண்டுமெனக் காதலைச் சிறப்பித்தவாறு காண்க. உறல் + யாம் - உறலியாம் - தன்னை உறுதற்குரிய யாம். 4. “ அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக் கொடுத்த தாதை கொழுஞ்சோ றுள்ளாள் ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுதுமறுத் துண்ணுஞ் சிறுமது கையளே.” (நற் - 110) இதனுள், ‘குடிவறனுற்று’ என நல்குரவு கூறியும், ‘கொழுஞ் சோறு உள்ளாள், பொழுதுமறுத்து உண்ணும், அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள்’ எனக் காதலைச் சிறப்பித்தலின் அமைந்தது. (63) 20. காட்டலாகாப் பொருள் 109. ஒப்பும் உருவும் வெறுப்பு மென்றா கற்பும் ஏரும் எழிலு மென்றா சாயலும் நாணும் மடனு மென்றா நோயும் வேட்கையும் நுகர்வு மென்றாங் காவயின் வரூஉங் கிளவி யெல்லாம் நாட்டிய மரபின் நெஞ்சுகொளி னல்லது காட்ட லாகாப் பொருள வென்ப. இது, காட்சிப் பொரு ளல்லாத கருத்துப் பொருளையும் காட்சிப் பொருள் போலப் பொருள் கொள்ளப்படும் என்கின்றது. இ - ள்: ஒப்பு முதலிய பன்னிரண்டும், அவை போன்ற பிறவும் - நாட்டிய மரபின் நெஞ்சு கொளின் அல்லது - புலனெறி வழக்க முறையானே உணர்வதல்லாது, காட்டல் ஆகாப் பொருள என்ப - உலக வழக்கான் ஒருவர்க்கொருவர் கட்புலனாகக் காட்டப் படாத பொருள என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. மனவுணர்வா னன்றிப் பொறியான் உணரப்படா வென்பதாம். ‘என்றா’ என்பன எண்ணிடைச் சொற்கள். 1. ஒப்பு - ஒத்த கிழவனும் கிழத்தியும் (கள -3) என்றவழி, அவரொப்புமையை மனவுணர்வானன்றி மெய்வேறு பாடு பற்றிப் பொறியான் உணரலாகா தென்பது. அதாவது, கண்ணால் பார்த்து இவனும் இவளும் ஒப்பர் எனக் கூறமுடியா தென்பதாம். ‘தந்தையர் ஒப்பர் மக்கள்’ என்பது மது. 2. உரு - அச்சம். அதுவும் பொறிநுதல் வியர்த்தல் போல்வன வற்றாலன்றி, வடிவு பற்றி உணரலாகாது. 3. வெறுப்பு - செறிவு, மனவிறுக்கம். அதுவும் பொறியாலு ணரலாகாது. 4. கற்பு - மனைவிக்குக் கணவனிடத்து ஏற்படும் அன்புணர்ச்சி. இது கணவற்கும் ஒக்கும். 5. ஏர் - எழுச்சி; மனவெழுச்சியாலேற்படும் உடலெழுச்சி. இது, தன்னையறியாமல் நிகழ்வதாம். இது, எழுகின்ற நிலைமை என நிகழ்காலமே குறித்து நிற்கும். 6. எழில் - அங்ஙனம் வளர்ந்தமைந்த பருவத்தும், இது வளர்ந்து மாறிய தன்றி இன்னும் வளரு மென்பது போன்று காட்டுதல். அதாவது, எழுச்சியா லேற்படும் அழகுணர்ச்சி யென்க. 7. சாயல் - ஐம்பொறியால் நுகரும் மென்மை; மென்மைத் தன்மையாகும். 8. நாண் - செய்யத் தகாதனவற்றைச் செய்ய நாணுதல். 9. மடன் -கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. அதாவது, அடக்கம், கொளுத்த - சொல்ல. 10. நோய் - நோதல். 11. வேட்கை- பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம்; காணும் பொருள் களையெல்லாம் தனக்குரியனவாக எண்ணுதல். 12. நுகர்வு - இன்ப துன்பங்களை நுகரும் நுகர்ச்சி. பிறவாவன: ஒளியும் அளியும் காய்தலும் அன்பும் அழுக்காறும் பொறையும் நிறையும் அறிவும் முதலியன. 1. ஒளி - அறிவு நுணுக்கம்; வெள்ளறிவின்மை என்க. 2. அளி - அன்பு காரணத்தால் தோன்றும் அருள். 3. காய்தல் - வெகுளி. 4. அன்பு - மனைமக்கள் முதலிய சுற்றத்தாரிடம் மனமகிழ்ச்சி யுண்டாக்கிப் பிணித்து நிற்கும் உணர்ச்சி. 5. அழுக்காறு - பிறர் பொருள் முதலிய கண்டு பொறாமை. அழுக்காறு - பொறாமை. 6. பொறை - பிறர் செய்த தீங்கைப் பொறுத்தல். 7. நிறை - மறை பிறர் அறியாமல் ஒழுகுதல். மறை - களவொழுக்கம். 8. அறிவு - நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உள்ள வாறறிதல். இவை எட்டும் காணப்படாப் பொருளேனும் பொருளாகக் கொள்க என்பதாம். இவை அகத்தும் புறத்தும் வரும். புறத்தில் வருமாறு: காட்டு: “ வரைபுரை மழகளிற்றின் மிசை.” (புறம் - 53) ஒப்பு “ வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்.” (புறம் - 53) வெறுப்பு “ உருகெழு முரசம்.” (புறம் - 50) உரு என வரும். (64) 21. அறம்பொருளின்பம் 110. இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும் அவையல் காலம் இன்மை யான. இ-ள்: தேவருலகத்தும் மண்ணுலகத்தும் அறம் பொருளின் பங்களின் நுகர்வில்லாத காலம் இல்லை என்றவாறு. எங்கும் என்றும் உண்டென்பது. எனவே, அறம்பொருளின்பங்களும் காட்டலாகாப் பொருள்களேயா மென்பதாம். தேம் - இடம். எறிகடல் வரைப்பு - அலைகடல் சூழ்ந்த உலகம். தேவருலகம் - ஓரிடம். (தொல்காப்பியர் காலத் தமிழர் - ‘தெய்வம்’ என்பது பார்க்க.) (65) 7. வழக்கு 1. வழக்கிலக்கணம் 111. வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட் டாக லான. இ - ள்: நிகழ்ச்சி அவர்கட்கு ஆகலான - உயர்ந்தோர் ஆணைப் படி உலகம் நிகழ்வதால், வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே- வழக்கென்று சொல்லப்படுவது உயர்ந்தோர் வழங்கிய வழக்கே யாகும் என்றவாறு. கட்டு - கண், இடம். உயர்ந்தோர் - மேன்மக்கள். உயர்ந்தோர் வழக்கின்படி நடப்பமே மக்கள் கடமை என்பதாம். நடக்கையே யன்றி மொழிவழக்கும் வழக்கெனவே படும். (66) 2. செய்யுள் வழக்கு 112. உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின் வழக்குவழிப் படுத்தல் செய்யுட்குக் கடனே. இ - ள்: உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின் - உயர் மக்கள் கூறும் உலக வழக்கச் சொற்களும் செய்யுட்குப் பொருந்தி வருதலின், வழக்கு வழிப்படுத்தல் செய்யுட்குக் கடனே - அவ்வுலக வழக்கின் வழியிலே நடத்தல் செய்யுட்கு முறைமையாகும் என்றவாறு. உயர்ந்தோர் வழங்கும் உலக வழக்கப்படியே செய்யுள் செய்ய வேண்டும் என்பதாம். செய்யுள் வழக்கிற் குரிய கற்பனை நீங்க நிற்பவை உலக வழக்காய் இருக்கச் செய்தலே செய்யுளாகும் என்பது. அகத்திணையியலில், ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்’ (அகத் - 42) இயன்றது செய்யுள் வழக்கென்றார். ஈண்டு, அவ்வுலக வழக்கம் உயர்ந்தோர் வழக்கென அதன் சிறப்புக் கூறினார். “நாற்சொல் லியலான் யாப்புவழிப் பட்டன.” (செய் - 80) “செய்யுள் மொழியான் சீர்புனைந் தியாப்பின்.” (செய் - 236) என்பவற்றால், உலக வழக்குச் சொற்களே செய்யுட் சொல்லாவதால், உயர்ந்தோர் வழங்கிய வழக்கேயன்றிச் சொற்களும் செய்யுட்காதல் பெறப்படும். (67) 3. அறக்கழிவுடையன 113. அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின் வழக்கென வழங்கலும் பழித்தன றென்ப. இ-ள்: அறக்கழிவு உடையன - உலக வழக்கிற்குப் பொருத்தமில்லாத கருத்துக்கள், பொருள் பயம் படவரின் - அகப்பொருட்குப் பயனுடையவாக வருமாயின், வழக்கு என வழங்கலும் பழித்தன்று என்ப - அவற்றை வழக்காக வழங்குதலும் குற்றமுடைத்தன்று என்று கூறுவர் என்றவாறு. அறக்கழிவு - ஒழுக்கத்தவறு. அதாவது, வழக்கை மீறி வருவது. பொருட்பயம்பட வருதலாவது - தலைவனைச் செலவழுங்கு வித்தல், தலைவியை ஆற்றுவித்தல் முதலிய காரிய முடிக்கப் பயன்படுதல். அறக்கழிவுடையன வாவன: தோழியிற் கூட்டத்தில் தலைவன் குறையுற்று நின்றதைத் தோழி தலைவிக்குக் கூறும்போது, தலைவன் தன்னை விரும்பினான் என்று கூறுதலும், தலைவி தலைவனுள்ள இடத்தைச் சென்றடைதலும், நின் ஊர்க்குச் செல்வாமெனத் தலைவி கூறுதலும் (கள - 45) போல்வன. காட்டு: 1. “ சிறுபுறங் கவையின னாக அதற்கொண் டிகுபெயல் மண்ணின் ஞெகிழ்பஞ ருற்றவென் உள்ளவ னறித லஞ்சி யுள்ளில் கடிய கூறிக் கைபிணி விடா.” (அகம் - 32) எனத் தலைவன் தன்னை விரும்பினான் எனத் தோழி கொண்டாள் போலும் எனத் தலைவி கருதுமாற்றால் தோழி கூறவே, தலைவி மறை புலப்படுத்துவளென்பது பயனாயிற்று. 2. “ மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் குழீஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்டக் கோனை.” (குறுந் - 31) இது, தலைவி தேடிச் சென்றது. 3. “ அருங்கடி யன்னை காவல் நீவிப் பெருங்கடை யிறந்து மன்றம் போகிப் பகலே பலருங் காண நாண்விட் டகல்வயற் படப்பை யவனூர் வினவிச் சென்மோ வாழி தோழி.” (நற் - 365) இது, தலைவி செல்வாம் என்றது. தேடிச் சென்றதும், செல்வாம் என்றதும் அறக்கழிவுடையன வேனும், சிறைப்புறமாக வரைவு கடாதலாகிய பொருட்பயன் தருதலின் அமைந்தது. தோழி தலைவி இருவர்க்கும் கொள்க.(68) 4. மேலதற்கோர் புறனடை 114. மிக்க பொருளினுட் பொருள்வகை புணர்க்க நாணுத்தலைப் பிரியா நல்வழிப் படுத்தே. இ - ள்: மிக்க பொருளினுள் - அவ்வாறு அறக்கழிவுடையன கூறும்போது, நாணுத்தலைப் பிரியா நல்வழிப் பொருள்வகை படுத்துப் புணர்க்க - தலைவியது நாண் நீங்காமைக் கேதுவாகிய நல்ல பொருட் கூறுபாடுகளை உள்ளடக்கிக் கூறுக என்றவாறு. தலைவியது நாண் நீங்காமல் அறக்கழிவுடையன கூற வேண்டும் என்பதாம். மிக்க பொருள் - வழக்கைக் கடந்த பொருள், அறக்கழிவுடையன. அதாவது, தோழி, ‘நேற்று நான் காக்கின்ற புனத்து ஒருவன் வந்து புன்சொற்கூறி என்னைத் தழுவினான்; நான் அவனை வன்சொற்கூறி நீக்கினேன்; இன்றும் வருவான். நாம் அவனைக் கண்டு சிரிப்பாம். நீ அவன் வருமிடத்தே செல்க’ எனவே, தலைவனை இவள் வேறாகக் கொண்டாள் எனத் தலைவி கருதுமாற்றால் கூறினா ளேனும், ‘இவள் எனக்குச் சிறந்தா ளென்பதை அறிந்தே தழுவினான்; இவள் அவனுடன் என்னைக் கூட்டவே என்னை வேறு நிறுத்தி ஆயத்தோடு பிரிந்தனள்’ எனத் தலைவி பிரிதலின் நாண் பிரியாமை அறிக. ‘நெருந லெல்லை’ (அகம் - 32) பார்க்க. (69) 8. முறைப்பெயர் 1. எல்லா 115. முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச்சொல் நிலைக்குரி மரபின் இருவீற்று முரித்தே. இ - ள்: முறைப்பெயர் மருங்கில் கெழுதகைப் பொதுச்சொல் - முறைப்பெயரிடத்து இருபாற்கும் பொருந்தின தகுதியையுடைய ‘எல்லா’ என்னும் சொல், நிலைக்குரி மரபின் இருவீற்றும் உரித்தே - புலனெறி வழக்கிற்குரிய முறைமையினாலே ஆண்பாற்கும் பெண்பாற்கும் ஒப்ப உரியதாய் வழங்கும் என்றவாறு. ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவாய் வழங்கும் ‘எல்லா’ என்னும் சொல், ஆண்பாலைப் பெண்பாலும், பெண் பாலை ஆண்பாலும் கூறற்குரியதாகும் என்பதாம். கெழு - பொருந்திய. தகை - தகுதி. நிலை - புலனெறி வழக்கு. தோழியும் தலைவியும் தலைவனை ‘எல்லா’ எனவும், தலைவன் தலைவியையும் தோழியையும் சிறுபான்மை பாங்கனையும் ‘எல்லா’ எனவும் கூறுவர். இதுவே இன்று சிலர் மனைவியை, ‘ஏல்லா’ என்று அழைப்பதாகும். இது, ‘எலா, எல்ல, எலுவ’ எனவும் வழங்கும். காட்டு: 1. “ இனி எல்லா! யாம் தீதிலேம் என்று தெளிப்பவும்.” (கலி - 81) எனத் தலைவன் தலைவியை ‘எல்லா’ என்றான். 2. “ எல்லா நீ முன்னர்த்தா னொன்று குறித்தாற்போற் காட்டினை.” (கலி - 61) எனத் தோழி தலைவனை ‘எல்லா’ என்றாள். (70) 2. அன்னை, என்னை 116. அன்னை என்னை யென்றலு முளவே தொன்னெறு முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர். இ - ள்: சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின - சொல்ல திகாரத்தும் எழுத்ததிகாரத்தும் சொல்லப்படாத இலக்கணத் தனவாய், தொல்நெறி முறைமை - புலனெறி வழக்கிற்குப் பொருந்திய பழைய நெறிமுறையானே, அன்னை என்னை என்றலும் உள என்மனார் புலவர் - தோழி தலைவியை அன்னை என்றலும், தலைவி தோழியை அன்னை என்றலும், இருவரும் தலைவனை என்னை என்றலும் உளவென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. காட்டு: 1. “ அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்.” (குறுந் - 33) இது, தோழியைத் தலைவி அன்னை என்றது. அன்னை - அன்னாய் - விளி. 2. “ அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும் குடுமித் தலைய மன்ற நெடுமலை நாட னூர்ந்த மாவே.” (ஐங் - 202) இது, தலைவியைத் தோழி அன்னை என்றது. 3. “ எனக்கு மாகா தென்னைக்கு முதவாது.” (குறுந் - 27) இது, தலைவனைத் தலைவி என்னை என்றது. “ என்னைக் கூரிஃ தன்மை யானும் என்னைக்கு நாடிஃ தன்மை யானும்.” (புறம் - 85) என, என்னை என்பது புறத்திற்கும் வரும். (71) 3. கிழவன் கிழத்தி 117. ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும் வருவகை தானே வழக்கென மொழிப. இது, ‘ஒத்த கிழவனும் கிழத்தியும்’ (கள- 3) என்பதற்குப் புறனடை. இ - ள்: ஒருபாற் கிளவி - ‘ஒத்த கிழவனும் கிழத்தியும்’ என்ற ஆணொருமையும் பெண்ணொருமையும் குறிக்கும் சொற்கள், எனைப்பாற்கண்ணும் வருவகை தானே - பன்மைப் பொருளு ணர்த்துதல், வழக்கு என மொழிப - உலக வழக்கென்று சொல்லுப ஆசிரியர் என்றவாறு. எனைப்பால் - ஆணும் பெண்ணும் ஆகிய உயர்திணைப் பலர்பால். அதவாது, ஒவ்வொரு நிலத்தும் பல தலைவரும் பல தலைவியரும் உண்மையால், அவர்களை யெல்லாம் கிழவர்கள், கிழத்திகள் எனப் பன்மையால் கூறாமல், கிழவன், கிழத்தி எனக் கூறும் ஒருமைச் சொல்லே அப்பன்மையைக் குறிக்கும் என்பதாம். ஒருவனுக்கும் ஒருத்திக்கும் கூறும் இலக்கணமே எல்லாத் தலைவர்க்கும் தலைவியர்க்கும் ஒக்கும் என்க. கிழவன், கிழத்தி என்பதன்றி, கிழவர், கிழத்தியர் என்னும் வழக்கின்மை அறிக. (72) 4. மேலதற்கோர் புறனடை 118. எல்லா வுயிர்க்கும் இன்ப மென்பது தானமர்ந்து வரூஉ மேவற் றாகும். இ - ள்: இன்பம் என்பதுதான் - அறமும் பொருளும் ஒழிய இன்பம் என்று கூறப்படு வதானது, எல்லா உயிர்க்கும் அமர்ந்து வரும் மேவற்றாகும் - மக்களும் மாவும் புள்ளும் முதலாகவுள்ள எல்லா உயிர்களிடத்தும் ஆண், பெண் என்னும் இரு கூற்றின்கட் பொருந்தி நிகழ்வதாகும் என்றவாறு. அமர்தல் - பொருந்துதல். என்றது, ஆணும் பெண்ணுமாய் இன்ப நுகர்ந்து வருதலின், ஒருவனும் ஒருத்தியுமே இன்ப நுகர்ந்தார் எனப்படாது. அவ்வின்பம் எல்லாவுயிர்க்கும் பொது என்பதூஉம், உயிர் களெல்லாம் ஆண் பெண் என்னும் இருபாலாய்ப் புணர்ச்சி நிகழ்த்தும் என்பதூஉம் கூறியவாறாம். இன்பம் எல்லா உயிர்க்கும் பொதுவாதல் போல, அறமும் பொருளும் மக்கட்கன்றி மற்றையுயிர்கட் கில்லை. எல்லா வுயிரும் ஆண் பெண் என்னும் இருபாலாகவே இன்ப நுகர்தலின், கிழவன், கிழத்தி என்னும் ஒருமை, எல்லாத் தலைவர் தலைவியரையுங் குறித்துப் பன்மையாயியலும் என வழுவமைத்தவாறு. (73) இரண்டாவது பொதுவியல் குழந்தையுரை முற்றிற்று. * * * மூன்றாவது களவியல் 1. களவின் வகை 119. காமப் புணர்ச்சியும் இடந்தலைப் பாடும் பாங்கொடு தழாலுந் தோழியிற் புணர்வுமென் றாங்கநால் வகையினும் அடைந்த சார்பொடு மறையென மொழிதல் மறையோ ராறே. இவ்வியல், களவு கற்பென்னும் அகவொழுக்கம் இரண்டனுள், களவினது இலக்கணங் கூறுகின்றமையான் களவியல் என்னும் பெயர்த்தாயிற்று. களவு - களவொழுக்கம். இயல் - இலக்கணம். முன்னிரண்டு இயல்களில் களவு கற்பு என்னும் இருவகைக் கைகோள்களின் பொதுவிலக்கணங் கூறி, அவ்விரு வகையுள் முன்னின்ற களவிலக்கணங் கூறுவதால், இது முன்னியலோடு இயைபுடைத் தாயிற்று. பொது விலக்கணங்கூறிச் சிறப்பிலக்கணங் கூறுதல் முறையாதலறிக. இம்முதல் நூற்பா, களவொழுக்கத்தின் வகை கூறுகின்றது. இ-ள்: இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கற் கூட்டமும் தோழியிற் கூட்டமும் என அந்நான்கு வகையின் கண்ணும் நடப்பது களவொழுக்கம் என்று கூறுதல் காம நூலார் முறையாகும் என்றவாறு. காமப்புணர்ச்சி - இயற்கைப் புணர்ச்சி. தழால் - தழுவுதல். புணர்வு - கூட்டம். மறை - களவொழுக்கம். மறையோர் - களவு நூல் வல்லார். மறைந்தொழுகலின் களவு - மறை எனப்பட்டது. அடைந்த சார்பொடு - பொருந்திய சார்பையுடையது மறை என்றபடி. அந்நான்கு கூற்றினும் பொருந்தி நடப்பதென்பதாம். ஆறு - முறை. 1. இயற்கைப் புணர்ச்சி 3. பாங்கற் கூட்டம் 2. இடந்தலைப்பாடு 4. தோழியிற் கூட்டம் எனும் இந்நான்கும் களவின் வகையாகும். (1) 2. இயற்கைப் புணர்ச்சி 120. இன்பமும் பொருளும் அறனு மென்றாங் கன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டங் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுள் துறையமை நல்லியாழ்த் துணைமையோ ரியல்பே. நிறுத்த முறையானே இயற்கைப் புணர்ச்சியின் இலக்கணங் கூறுகின்றது இந்நூற்பா. இ - ள்: இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு - இன்பமும் பொருளும் அறனும் என்ற இம் மூவகைப்பொருள் களுள், அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் - ஒருவன் ஒருத்தி யிடத்துத் தோன்றிய இன்பத்தின் பகுதியாகிய புணர்தல் முதலிய ஐவகை ஒழுக்கத்தினுள், காமக் கூட்டம் காணும் காலை - இயற்கைப் புணர்ச்சியை ஆராயுங் காலத்து, மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் - ஆரியரிடத்து நிகழும் எண்வகை மணங்களுள் ஒன்றாகிய, கந்தருவர் ஒழுக்கத்தைப் போன்றதே. காமக் கூட்டம் - இயற்கைப் புணர்ச்சி. மறையோர் - ஆரியர். ‘வேதியர்’ என்பதன் தமிழ் மொழி பெயர்ப்பு. தேஎத்து - இடத்து. மன்றல் - மணம். துறை அமை நல் யாழ் பண்ணமைந்த நல்லயாழ். யாழோர் - தமிழிசை வல்ல ஒரு குறிஞ்சி வகுப்பார். யாழ் - இசை. புணர்தல் என்னும் ஒழுக்கம் குறிஞ்சிக்கண் நிகழ்வதாலும், இசை காதலின்பத்தை வளர்க்குமொன் றாகையாலும், குறிஞ்சி வாணராகிய அவ்விசையாளரைக் களவுக்குரியராகக் கூறுதல் மரபு. கந்தரு வரும் இசைவல்லா ரென்பதால், அவ்வொப்புமை பற்றி, அவரைத் தமிழ்ப் பெயரால் ‘யாழோர்’ என்றார். துணைமையோர் - ஒருவனும் ஒருத்தியும். ஆசிரியர் தொல்காப்பியர் நூல் செய்த காலத்தே தமிழ் மக்கள் ஆரியர் பழக்க வழக்கங்கள் சிலவற்றைத் தெரிந்திருந்தனர். எனவே, இயற்கைப் புணர்ச்சியோ டொருபுடை ஒப்புமையுடைய கந்தருவ மணத்தை, இயற்கைப் புணர்ச்சிக்கு உவமையாக எடுத்துக் காட்டினர். ஆரிய மணம் எட்டனுள் கந்தருவ மணம் என்பது, இயற்கைப் புணர்ச்சி போலவே, ஒருவனும் ஒருத்தியும் தாமே எதிர்ப்பட்டுக் கூடிப் பிரிவது; பின்னர் அவ்விருவரும் ஒன்று கூடுவதில்லை; அதாவது, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் முதலியவற்றில் எதிர்ப்பட்டுக் காதல் முதிர்ந்து மணஞ் செய்து கொள்வதில்லை; கண்டவர் கண்டவிடத்துக் கூடிப் பிரிந்து செல்வர். ஆனால், தமிழ் மக்கள் இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் களவொழுக்கம் ஒழுகி மணஞ்செய்து கொண்டு வாழ்க்கை நடத்துவர். இயற்கைப் புணர்ச்சியில் பெரும்பாலும் உள்ளப் புணர்ச்சியே நிகழும். உள்ளப் புணர்ச்சி - மனத்தால் ஒருவரை யொருவர் காதலித்து அன்பு கொள்ளுதல், மன வொருமை யடைதல். கந்தருவமோ மெய்யுற்றுப் புணர்வதாகும். இயற்கைப் புணர்ச்சி களவொழுக்கத்தின் முதற்படி. கந்தருவம் முதலும் முடிவும் அதுவே. இயற்கைப் புணர்ச்சி ஒழுக்கம். கந்தருவம் மணம். எனினும், இயற்கைப் புணர்ச்சியும் கந்தருவமும் ஒருவனும் ஒருத்தியும் தாமே எதிர்ப்பட்டுப் பிரிதல் என்னும் ஒருகூ றொத்தலான், அவ்விரண்டும் ஒருபுடை ஒப்புடையதென்பது குறித்து, ‘யாழ்த் துணைமையோ ரியல்பே’ என்றார். ‘கந்தருவம் போன்றது இயற்கைப் புணர்ச்சி’ என முழுதுஞ் சேறலாக ஒப்பிட்டுக் கூறாமையும் அறிக. பழந்தமிழ் மக்களிடைப் பண்டு நிகழ்ந்து வந்த இவ்வெதிர்ப் பாடானது, புலனெறி வழக்கில் - காமக் கூட்டம், காமப்புணர்ச்சி, இயற்கைப் புணர்ச்சி, முன்னுறு புணர்ச்சி, தெய்வப் புணர்ச்சி எனப் பல பெயர்களால் வழங்கும். காமக் கூட்டம் - அன்பால் கூடுங்கூட்டம். காமப் புணர்ச்சி - காமக் கூட்டம். புணர்ச்சி - கூட்டம். இயற்கைப் புணர்ச்சி - கூட்டுவாரின்றி ஒருவனும் ஒருத்தியும் தாமே கூடுங் கூட்டம். முன்னுறு புணர்ச்சி - காதற் பெருக்கால் கூடுதல். முன்னுறுதல் - பெருகுதல். தெய்வப் புணர்ச்சி - சிறந்த, மேன்மையான கூட்டம். ஐந்திணை - இன்பமும் பொருளும் அறனும் ஆகியவா றென்னையெனின், 1. புணர்தல் முதலாகிய ஐந்தும் இன்பந்தருதலின் இன்பமாயின. 2. முல்லை முதலிய நான்கு திணைகளுக்கும் நிலமும் காலமும் கருப்பொருளும், குறிஞ்சி முதலியவற்றின் புறத்தவாகிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை என்பனவும், வாகையுள் முதற் பகுதியும் பொருளாகலானும், புணர்தல் முதலிய உரிப்பொருள்கள் கேடின்மையானும் இவை பொருளாயின. 3. இவ்வொழுக்கம் ஐந்தும் அறத்தின் வழி நிகழ்தலானும், பாலைப் புறத்ததான வகையுள் அறனிலை கூறுதலானும் இவை அறமாயின. (புறத் திணையியல் 2ஆம் சூத்திர உரை பார்க்க.) எனவே, களவொழுக்க மொழுகிக் காதல் முதிர்ந்து மணஞ் செய்து கொண்டு பொருளீட்டி அறந்தலைப் பிரியாது இன்ப நுகர்தலே வாழ்க்கைப் பயன் என்பது. இன்பங் கருதிய களவொழுக்கந் தொடங்கிப் பொருளால் அவ்வொழுக்கம் வலியுற்றுப் பின்னர் இல்லற வாழ்க்கையாக நடைபெறுதற்குரியது என, இன்பவொழுக்கத்தின் சிறப்பும், இயற்கைப் புணர்ச்சியின் இலக்கணமுங் கூறிற்று இச்சூத்திரம். ஆரிய மணம் எட்டாவன 1. பிரமம் 5. கந்தருவம் 2. பிரசாபத்தியம் 6. அசுரம் 3. ஆரிடம் 7. இராக்கதம் 4. தெய்வம் 8. பைசாசம் என்பன. 1. பிரமம்: ஒத்த கோத்திரத்தானாய், 48 யாண்டு பிரமசரியங் காத்தானுக்கு, 12 யாண்டுப் பருவமுள்ள பூப்பெய்தி யாளை, இரண்டாம்பூப் பெய்து முன்னர் அணிகலனணிந்து கொடையாகக் கொடுப்பது. பிரமசரியம் - மணமின்றிக் கற்கும் நிலை. 2. பிரசாபத்தியம்: மணமகன் பெற்றோர் கொடுத்த பரிசத்தைப் போல் இருமடங்கு கொடுத்துப் பெண்ணைக் கொடுப்பது. இன்று தமிழ் வகுப்பினரிடை நடைபெறும் திருமணங்கள் இப்பிரசாபத்தியப் போலியே யாகும். பரிசம் - பரியம். மாப்பிள்ளை வீட்டாரிடம் பரியம் வாங்குதலும், பெண்ணுக்குச் சீர்கொடுத்தலும் இன்று எல்லாத் தமிழ் வகுப்பாரிடையும் நடைபெற்று வருகின்றன. 3. ஆரிடம்: ஆண் பெண் மாடுகளிரண்டின் கொம்புகளுக்கும் குளம்புகளுக்கும் பொற்பூணணிந்து, அவற்றின் நடுவில் மண மக்களை நிறுத்திப் பொன்பூட்டி, ‘நீவிரும் இவைபோற் பொலிந்து வாழ்வீராக’ என நீர்வார்த்துப் பெண்ணைக் கொடுப்பது. 4. தெய்வம்: வேள்வி வேட்பிக்கும் ஆசிரியனுக்கு, வேள்வித் தீ முன்னர்ப் பெண்ணைக் காணிக்கையாகக் கொடுப்பது. இவை நான்கும் ஆரியப் பிராமணருக்கே உரியவாம். அசுரமும் இராக்கதமும் பெரும்பாலும் அரசர்க்கே உரியன. பைசாசம் சூத்திரர்க் குரியதாம். கந்தருவம் எல்லார்க்கும் பொது. 5. கந்தருவம்: ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்ட இடத்தில் கூடிப்பிரிவது. பராசரர் மச்சகந்தியைக் கூடிப் பிரிந்ததும், துஷ்யந்தன் சகுந்தலையைக் கூடிப் பிரிந்ததும் இதற்கு எடுத்துக் காட்டாகும். 6. அசுரம்: 1. கொல்லேறு கோடல், 2. வில்லேற்றுதல், 3. திரி பன்றி எய்தல் போன்றன செய்து பெண் கொள்ளல். 1. இது வலிய காளையை அடக்குதல். நப்பின்னை வளர்த்த முரட்டுக் காளைகளை அடக்கிக் கண்ணன் அவளை மணந்தனன் என்கின்றது பாகவதம். முல்லைக் கலியில் வரும் ஏறுதழுவல் என்பது, தங்காதலியர் வளர்த்த காளைகளையடக்கும் சடங்கு போன்ற ஒருவகைக் கைக்கிளையேயாம். 2. தசரதராமன் சீதையையும், அர்ச்சுனன் துரோபதையையும் வில்லேற்றி மணந்தனர். 3. மூன்று பன்றிகளை ஒரே அம்பால் எய்தல். காட்டுப் பன்றியைக் கொன்று கொடுத்து மணக்கும் வழக்கம் இன்றும் அஃசாமியரிடை யுள்ளதாம். அர்ச்சுனன் மீன் பொறி வீழ்த்தியது திரிபன்றி யெய்தலோ டொக்கும். 7. இராக்கதம்: பெண் விரும்பாமலும், பெற்றோர் கொடாமலும் வலிதிற்கொள்வது. வீடுமன் அம்பை முதலிய பெண்களை வலிதிற்கொண்டு வந்து தன் தம்பியர்க்கு மண முடித்தது இதன் பாற்படும். 8. பைசாசம்: 1. மூத்தாளையும், 2. கள்ளுண்டு களித்தாளையும், 3. துயின்றாளையும் புணர்தலும், 4. இழிந்தாளை மணத்தலும், 5. ஆடைமாற்றுதலுமாம். இவற்றுக்குப் புராணங்களில் எடுத்துக் காட்டுகள் உண்டு. இவ்வாரிய மணங்கள் எட்டும், தமிழ்க் காதல் மணத்திற்கு மாறுபட்டவை என்பதை அறிக. தமிழ்க் களவொழுக்கம் ஒத்த அன்பின் பாற்பட்டது; இயற்கையோ டொன்றியது. (2) 1. காட்சி 121. ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப. மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே. காட்சி, ஐயம், தெளிதல், தேறல் என இயற்கைப் புணர்ச்சி நான்கு வகைப்படும். 1. காட்சி: தனித்துள்ள தலைவியைத் தலைவன் காணுதல். இருவருமே காண்பாராயினும் தலைவி மிக்க நாணுடைமையால் தானாகக் குறிப்புரை நிகழ்த்தாளாகையால், காணுதல் தலைவற்கே சிறந்த தாயிற்று. 2. ஐயம்: இவளும் நம்மேற் காதல் கொண்டனளோ எனத் தலைவன் ஐயுறுதல். 3. தெளிதல்: இவள் நம்மேற் காதல் கொண்டுள்ளாளெனத் துணிதல். 4. தேறல்: அங்ஙனம் தெளிந்த தலைவன், கண்களால் குறிப்புரை நிகழ்த்தித் தலைவியின் கருத்தை அறிவன். இது தேறல் எனப்படும். இவை நான்கு பெரும்பாலும் தலைவன் மாட்டே நிகழ்தலின் ஒருதலைக் காமமாகிய கைக்கிளையின் பாற்படுமென்க. இந்நான்கனுள், இச்சூத்திரம் முதற்கண்ண தாகிய காட்சியின் இலக்கணம் உணர்த்துகின்றது. இ - ள் : ஒன்றே வேறே என்று இரு பால் வயின் - இருவர்க்கும் ஓரிடமும் வேறிடமும் ஆகிய இரு நிலத்தின் கண்ணும்,பாலது ஆணையின் - அன்பு தோன்றுதற்குரிய ஆண்பால் பெண்பால் என்னும் இரு கூற்றின் கட்டளைப்படி, ஒன்றி உயர்ந்த - இருவர்க்கும் அன்பு ஒற்றுமைப் பட்டு உயர்ந்த, ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப - பிறப்பு முதலிய பத்தும் (மெய் - 25) ஒத்த தலைவனும் தலைவியும் எதிர்ப்படுவர், மிக்கோன் ஆயினும் கடிவரை இன்று - தலைவன் சிறிது ஆண்டில் மூத்தவனாயினும் நீக்கும் நிலைமையின்று என்றவாறு. பாலது, அது - பகுதிப் பொருள் விகுதி. பால் - தொகுதி பொருமை. பாலது ஆணையில் காண்ப எனக் கூட்டுக. ஆண்மை பெண்மை என்னும் இருபாலின் தூண்டுதலினாலேயே அன்பு தோன்றுதலின், அத்தூண்டுதலைப் ‘பாலது ஆணை’ என்றார். உயர்ந்த கிழவன் கிழத்தி எனவும், ஒத்த கிழவன் கிழத்தி எனவும் கூட்டுக. உயர்ந்த, ஒத்த - பெயரெச்சங்கள். கடிவரை - நீக்கும் நிலைமை. அல்லது, ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்தகிழவனும் கிழத்தியும் காண்ப - குறைவின்றி அமைந்து உயர்வுற்ற ஆண்பால் பெண்பால் கூற்றின் கட்டளையினால், பிறப்பு முதலிய ஒத்த இருவரும் காண்பர் என்றுமாம். ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் குறைபடின் ஆண்பால் பெண்பால் ஆகாமல் அலிப்பாலாகுமன்றே? அவ்வாறு உறுப்புக் குறைவுடைய ஆண்பாலை உறுப்பு நிறைவுடைய பெண்பாலோ, பெண்பாலை ஆண்பாலோ எதிர்ப்படின், அக்குறையுடையார்க்கு அன்பு தோன்றாதாகையால், அவ்விருபாலும் குறைவின்றி நிறைவுற்ற தென்ப தறிவித்தற்கு, ‘ஒன்றி உயர்ந்த பாலதாணையின்’ என்றார், இது ஒத்த காமமாகையால். நிறைந்த ஆண்மையும் பெண்மையும் உடையார் இருவர் எதிர்ப்பட்ட வழியே ஒருவரை யொருவர் காதல் கொள்வரென்று, காதல் கொள்வதற்கேற்ற இருவர் இன்ன தன்மையார் என்பது கூறினார்.‘ உருவு நிறுத்த காமவாயில்’ (மெய் - 25) என்பதும் இக்கருத்தே. முன் (அகத் - 16) குறிஞ்சி நிலத்தின் கண்ணே புணர்ச்சி நிகழுமென்றார். தலைவனும் தலைவியும் குறிஞ்சி நிலத்தினரோ என்னும் ஐயம் நிகழுமன்றே? ‘ஒன்றே வேறே என்றிரு பால்வயின்’ என அவ்வையத்தைப் போக்கினார். அதாவது, இருவரும் குறிஞ்சி நிலத்தினராக விருந்து அதே நிலத்தில் எதிர்ப்படலும் கூடும். தலைவி குறிஞ்சி நிலத்தினளும் தலைவன் வேறு நிலத்தினனாகவுமிருந்து குறிஞ்சி நிலத்தில் எதிர்ப்படலும் கூடும். தலைவன் குறிஞ்சி நிலத்தினனும், தலைவி வேறு நிலத்தினளாயு மிருந்து குறிஞ்சி நிலத்தில் எதிர்ப்படலுங் கூடும். இருவரும் வேறு நிலத்தினனாகவு மிருந்து குறிஞ்சி நிலத்தில் எதிர்ப்படலும் கூடும். முல்லை முதலிய வேறு நிலங்களில் எதிப்படலுங் கூடும். எந்த நிலத்தில் எதிர்ப்படினும் குறிஞ்சி நிலத்தில் எதிப்பட்டாரெனல் புலனெறி வழக்கம். இது, பெரும் பான்மை பற்றிய வழக்கு. வேனிலிற் பொழுதுபோக்கிடமும் குறிஞ்சியாதலறிக. ஒப்புமை பத்தாவன : பிறப்பும் ஒழுக்கமும் ஆண்மையும் ஆண்டும் உருவமும் அன்பும் அடக்கமும் அருளும் அறிவும் செல்வமும் என்பன (மெய் - 25). (3) 2. ஐயம் 122. சிறந்துழி யையஞ் சிறந்த தென்ப இழிந்துழி யிழிபே சுட்ட லான. இ - ள்: இழிந்துழி இழிபே சுட்டலான - தலைவி காமப் பருவம் அடையா திருந்தால், தலைவன் மாட்டே நிகழும் ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக் குறிப்பே யாமாகலின், சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப - தலைமகள் காமப் பருவத்தளாகிய காலையே தலைவன் மாட்டு நிகழும் ஐயம் சிறந்து தோன்றும் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. சிறப்பு - காமப்பருவத்தையும், இழிபு - அப்பருவ மின்மையையும் குறித்தது. இழிபு - இழிந்த காமமாகிய கைக்கிளை. தலைவி காமப்பருவ மடையாளாயின், தலைவன் ஐயந்தெளிந்து, குறிப்புரை பெற்றுக் கூடுதல் கூடாமையின், காமப்பருவமுள்ள தலைவிமாட்டுக் கொண்ட ஐயமே சிறந்ததென்பதாம். இது, ஐயத்தின் சிறப்புக் கூறியது. தலைவி காமப்பருவம் (பூப்பு) அடையாதிருக்கின், தலைவன் குறிப்புக்கு எதிர்க்குறிப்பு நிகழ்த்தாமற் செல்வாளாகையால், அவள் மாட்டுத் தலைவன் காதல் கொண்டு, இவள் நம்மைக் காதலிக் கின்றனளோ’ என ஐயங்கொள்ளின், அது பின் பயன்படாமையால் ஒருதலைக் காமமாகிய கைக்கிளையே யாகும். அவள் காமப்பருவ மடைந்திருப்பின், தலைவன் குறிப்புக்கு எதிர்க்குறிப்பு நிகழ்த்திப் பின்னர்க் கூடுவாளாகையால், அவள் மாட்டுத் தலைவன் கொண்ட ஐயமே பின் பயன்படுதலின் சிறந்ததாகும் ஆகையால், ‘சிறந்துழி ஐயம் சிறந்தது’ என்றார். ஐயமாவது: எவ்விடத்தினளோ, யார் மகளோ, பருவ முற்றனளோ, நம்மீது காதற் குறிப்புடையளோ எனத் தலைவன் ஐயுறுதல். காட்டு “யாரோ இவள்தான் எவ்வூரோ, அயலோ இக்குன் றினளோதான், பேரே தோயா ரோவிவளைப் பெற்றோர், பருவ முற்றனளோ, ஓரே னானே யதுவன்றி ஒப்பொன் பானு முடையாளோ, காரோ மானாக் கருங்குழலாள் கருத்து மெதுவோ அறியேனே!” (இராவண காவியம்) எனக் காண்க. (4) 3. தெளிதல் 123. வண்டே இழையே வள்ளி பூவே கண்ணே அலமர லிமைப்பே அச்சமென் றன்னவை பிறவும் ஆங்கவண் நிகழ நின்றவை களையுங் கருவி யென்ப. இது, தெளிதற்கருவி கூறுகின்றது. இ - ள்: வண்டு முதலிய எட்டும் தெளிதற் கருவிகளாகும். நிகழ நின்றவை - ஐயம். பலவகையாக ஐயுறுவானாகலின், ‘நின்றவை’ எனப் பன்மை கூறினார். ஆங்கு அவண் - அவ்வெதிர்ப் பட்ட இடத்து. தெளிதலாவது - இவள் பக்கத்து ஊரினள்; நம்மீது காதல் குறிப்புடையவள்; செல்வக்குடியினள் முதலியனவாகத் தெளிதலாம். 1. நாடோறும் பழகியவிடத் தல்லது வண்டு செல்லாதாகலின், மலர்மாலையின்கண் தாதூதும் வண்டுகளாற் பக்கத்தாளெனவும்; 2. இழை - அணிகலன். அணிகலன்களாற் செல்வக் குடியினள் எனவும்; 3. வள்ளி - தொய்யிற்கொடி. அதாவது, சந்தனக் குழம்பால் தோள்களிற் கொடிகள் போல எழுதுதல். பருவமுற்ற பெண்களே தம்மை மிக்க அழகு செய்து கொள் வாராகையால், தொய்யிலால் காமப்பருவ மடைந்தாளெனவும் தெளிதல். 4. பூ - கையிலுள்ள கழுநீர்ப்பூவைக் கண்ணுக்கு ஒப்பிட்டுப் பார்த்தல்; 5. கண் - காமக் குறிப்பு நிகழ்த்துங் கண்; 6. அலமரல் - காமக்குறிப்பாலுண்டான சுழற்சி; 7. இமைப்பு - தலைமகன் நோக்குங்கால் நிலனோக்கல்; 8. அச்சம் - தன்னை யொத்தவோர் ஆண்மகனைத் தனியிடத்திற் கண்டதனா லுண்டான அச்சம். இவற்றால் தலைமகள் தன்மீது காதற்குறிப்புண்மையைத் தலைமகன் தெளிவான். காட்டு மிக்கின்ற அணிச்சுமையாள், மிஞிற்றுக் காப்பாள், மேலெல்லாங் கொடிபடர்ந்து விளங்கு கின்றாள், இக்குன்றால் இவ்வூராள் செல்வ மிக்காள் என்னோக்குக் கெதிர்நோக்கு மெனவுட் கொண்டான். (அரசியலரங்கம்) எனக் காண்க. மிஞிறு - வண்டு. (5) 4. தேறல் 124. நாட்ட மிரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும். இது, அங்ஙனம் ஐயுற்றுத் தெளிந்த தலைவன் குறிப்பால் தன் காதலை வெளியிடத் தலைவியும் அவ்வாறே தன் குறிப்பை வெளியிடு மென்கின்றது. இ - ள்: அறிவு உடம்படுத்தற்கு - தன் கருத்தைத் தலைவி உடம்படும்படி செய்வதற்கு, நாட்டம் இரண்டும் கூட்டி உரைக்கும் - இரு கண்களாலும் தலைவன் குறிப்பாகக் கூறுவான், குறிப்புரை ஆகும் - தலைவியும் அவ்வாறே தன்னுடம்பாட்டைக் குறிப்பாற் கூறுவாள். தலைவன் கண்களால் தன் குறிப்பை யுணர்த்துவான்; தலைவியும் அவ்வாறே தன் குறிப்பை யுணர்த்துவாள் என்பதாம். ‘நாட்டம் இரண்டும்’ என்பதை, இரண்டிடத்தும் கூட்டுக. நாடுதல் - நாட்டம், தொழிற்பெயர். நாட்டம் - கண். காட்டு “ நோக்கினாள் நோக்கி யிறைஞ்சினா ளஃதவள் யாப்பினு ளட்டிய நீர்.” (குறள்) எனக் காண்க. (6) 5. தலைவி குறிப்புரை 125. தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல் எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப் பிறநீர் மாக்களி னறிய வாயிடைப் பெய்நீர் போலும் உணர்விற் றென்ப. இ - ள் : பிறநீர் மாக்களின் - ஒத்த அன்பில்லாத ஒவ்வாக் காதலர் போல, கிழவன் அறியத் தன்னுறு வேட்கை முன் கிளத்தல் கிழத்திக்கு இல்லை - தலைவன் அறியும்படி தனது காதற் பெருக்கை அத்தலைவன் முன் தலைவி கூறாள், ஆயிடை - அவள் கூறாது நின்றவிடத்தும், எண்ணும் காலை - தலைவியின் வேட்கையைத் தலைவன் ஆராயும்பொழுது, பெய்நீர் போலும் உணர்விற்று என்ப - தலைவியின் வேட்கையானது, புதுமட்கலத்தி லூற்றிய நீர் புறத்துப் பொசிந்து காட்டுவதுபோலும் உணர்வினை யுடைத்து என்று கூறுவர் என்றவாறு. மாக்களின், இன் - ஒப்புப்பொருள். வெளிப்படக் கூறாத தோடு, குறிப்பினாலுங் கூறாது, குறித்துணரும்படி காட்டுவள் என்பதாம். அதாவது, தலைவி தன்மீது காதலுள்ளாள் என்பதை, அவள் உடற் குறிப்பால் தலைவன் அறிந்து கொள்ளும்படி செய்தல். ‘கிழவன் முன் கிளத்தல் இல்லை’ எனவே, தனது வேட்கையைத் தலைவி தோழிக்கு எதிர்நின்று கூறுவள். காட்டு “ கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல நடுங்கஞர் பெதிர முயங்கி நெருநல் ஆக மடைதந் தோளே.” (கம் - 62) இது, தலைவி வேட்கையைத் தலைவன் குறிப்பாலுணர்ந்தமை கூறியது. நீராடுவாள் போலக் கைகளை விரித்து முயங்கற் குறிப் புணர்த்தினாளெனக் கூறினமை காண்க. (7) 6. கூடல் விருப்பம் 126. குறிப்பே குறித்தது கொள்ளு மாயின் ஆங்கவை நிகழு மென்மனார் புலவர். இ - ள் : குறித்தது - தலைவன் குறித்த புணர்ச்சி வேட்கையே, குறிப்புக் கொள்ளுமாயின் - தலைவியுங் கருதுவாளானால், ஆங்கு - அப்போது, அவை நிகழும் என்மனார் புலவர் - புகுமுகம் புரிதல் முதலிய மெய்ப்பாடுகள் நான்கும் தலைவி மாட்டு நிகழும் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. ஆங்கு - தலைவன் குறிப்பையே தலைவியுங் கொண்ட காலத்து என்க. முதல்மெய்ப்பாடு நான்கு 1. புகுமுகம் புரிதல் 3. நகுநய மறைத்தல் 2. பொறிநுதல் வியர்த்தல் 4. சிதைவு பிறர்க்கின்மை என்பன. இவை, மடமை என்னும் பெண்மைக் குணத்தினால் ஏற்படுவன. (மெய் - 13 உரை பார்க்க). எடுத்துக்காட்டு ஆங்குக் காண்க. காட்சி, ஐயம், தெளிதல், தேறல், கூடல் விருப்பம் என்பவை மெய்யுறு புணர்ச்சிக்கு ஏதுவாகும். அவ்வாறு மெய்யுறு புணர்ச்சியின்றி, உள்ளப்புணர்ச்சியே நிகழ்ந்து மணந்து கொள்ளும் காதலர்களும் உண்டு. அது மேற்கூறுப. உள்ளப் புணர்ச்சி - ஒருவரையொருவர் மனத்திடத்தே அன்புகொள்ளுதல். (8) 7. உள்ளப் புணர்ச்சி 1. ஆண்டன்மை 127. பெருமையும் உரனும் ஆடூஉ மேன. இ - ள்: பெருமையும் வலியும் ஆண்மைத் தன்மையாகும். 1. பெருமையாவது - அறிவு, ஆற்றல், புகழ், கொடை, ஆராய்ச்சி, பண்பு, நண்பு, பழிபாவங்கட் கஞ்சுதல் முதலியவற்றில் மேம்படுதல். 2. வலியாவது - கடைப்பிடி, அடக்கம், துணிவு முதலியவை. கடைப்பிடி - கொண்டதை விடாமற் செய்து முடித்தல். அறிவாற்றல்களாலும், ஆராய்ச்சி அச்சங்களாலும், அடக்கம் துணிவு இவற்றாலும் தலைவன் மேம்பட்டு உள்ளப் புணர்ச்சியே நிகழ்ந்து வரைந்து கொள்ளுதலுங் கூடும் என்பதாம். வரைதல் - மணத்தல். (9) 2. பெண்டன்மை 128. அச்சமு நாணு மடனுமுந் துறுத்த நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப. இ - ள்: அச்சமும் - அன்பு காரணமாகத் தோன்றிய அச்சமும், நாணும் - காமக்குறிப்பு நிகழ்ந்த வழி உண்டாகும் நாணமும், மடனும் - அறிவிக்க அறிந்து அறிந்ததை வெளிக்குக் காட்டாமையாகிய மடனும், முந்துறுத்த - ஆகிய இம்மூன்றையும் முதலாகவுடைய குணங்கள், நிச்சமும் - எந்நாளும், பெண்பாற்கு உரிய என்ப - பெண்களுக்கு உரியவென்று கூறுவர் என்றவாறு. ‘முந்துறுத்த’ என்றதனால், பயிர்ப்பு, பேதைமை, நிறை என்னும் குணங்களுங் கொள்க. பயிர்ப்பு - புதிதாக ஒன்றைக் கண்ட விடத்து மனங்கொள்ளாமை. பேதைமை - காம வேட்கையால் செய்யத் தகுவன அறியாமை. நிறை - அடக்கம். ‘நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை.’ மறை - களவு. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, பேதைமை, நிறை என்னும் குணங்களால் தலைமகள் உள்ளப் புணர்ச்சியே புணர்ந்து, மெய்யுறு புணர்ச்சியை விரும்பாமல் மணந்து கொள்ளுமென்க. இப் பெண்மைக் குணங்கள் ஆறனுள், பேதைமை நாணிலும், நிறை அச்சத்திலும் அடங்குதலான், நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு எனக் குணம் நான் கென்றலும் உண்டு. ‘நாற்குணமும் நாற்படையா’ (நள - 32). (10) 1. தலைவன் கூற்று 129. மெய்தொட்டுப் பயிறல், பொய்பா ராட்டல், இடம் பெற்றுத் தழாஅல், இடையூறு கிளத்தல், நீடுநினைந் திரங்கல், கூடுத லுறுதல், சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇப் பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும்; பெற்றவழி மகிழ்ச்சியும், பிரிந்தவழிக் கலங்கலும், நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும், குற்றங் காட்டிய வாயில் பெட்பினும், பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும், ஊரும் பேரும் கெடுதியும் பிறவும் நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும், தோழி குறையவட் சார்த்தி மெய்யுறுக் கூறலும், தண்டா திரப்பினும், மற்றைய வழியும், சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகையினும், அறிந்தோள் அயிர்ப்பின் அவ்வழி மருங்கிற் கேடும் பீடும் கூறலும், தோழி நீக்கலி னாகிய நிலைமையும், நோக்கி மடன்மாக் கூறும் இடனுமா ருண்டே. இக்கூற்றுக்கள் இருபத்து நான்கனுள், 1 - 8 இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப் பாட்டிற்கும், 9 - 13 பாங்கற் கூட்டத் திற்கும், 14 - 17 உம், 18 - 24 உம் இருவகை மதியுடம் பாட்டிற்கும் உரியன வாகும். (11) 2. இதுவுமது 130. பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும் அன்புற்று நகினும் அவட்பெற்று மலியினும் ஆற்றிடை யுறுதலும் அவ்வினைக் கியல்பே. இக்கூற்றுக்கள் ஐந்தனுள், ஒன்று மதியுடம்பாடு இரண்டாவது கூட்டத்திற்கும், 2 - 5 குறியிடத்திற்கும் உரியனவாம். (12) 3. தோழி கூற்று 131. நாற்றமுந் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும் புணர்ச்சி யெதிர்ப்பா டுள்ளுறுத்து வரூஉம் உணர்ச்சி யேழினும் உணர்ந்த பின்றை மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும், குறையுறற் கெதிரிய கிழவனை மறையுறப் பெருமையிற் பெயர்ப்பினு முலகுரைத் தொழிப்பினும், அருமையி னகற்சியும் அவளறி வுறுத்துப் பின்வரு கென்றலும் பேதைமை யூட்டலும் முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துரைத்தலும் அஞ்சியச் சுறுத்தலும் உரைத்துழிக் கூட்டமோ டெஞ்சாது கிளந்த இருநான்கு கிளவியும், வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணங் குறித்த காலையும் புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற் கண்ணும் குறைந்தவட் படரினும் மறைந்தவ ளருகத் தன்னொடு மவளொடும் முதன்மூன் றளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும் நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும் எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும் புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும் வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும் புணர்ந்துழி யுணர்ந்த அறிமடச் சிறப்பினும் ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும் செங்கடு மொழியாற் சிதைவுடைத் தாயினும் என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்புதலை யடுத்த வன்புறைக் கண்ணும் ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும் காப்பின் கடுமை கையற வரினும் களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக் காதன் மிகுதி யுளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லுங் குடியும் பிறப்புஞ் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயிற் றோன்றிய கிளவியொடு தொகைஇ அனநிலை வகையான் வரைதல் வேண்டினும் ஐயச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப் பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும் அவன்விலங் குறினும் களம்பெறக் காட்டினும் பிறன்வரை வாயினு மவன்வரைவு மறுப்பினும் முன்னிலை யறனெனப் படுதலென் றிருவகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் வரைவுடன் பட்டோற் கடாவ வேண்டினும் ஆங்கதன் றன்மையின் வன்புறை யுளப்படப் பாங்குற வந்த நாலெட்டு வகையும் தாங்கருஞ் சிறப்பிற் றோழி மேன. இக்கூற்றுக்கள் நாற்பதனுள், 1 - 8 மதியுடம்பாடு முதற் கூட்டத் திற்கும், 9 - 16 அதிலேயே அடுத்தும், 17 - 20 மதியுடம் பாடு இரண்டாவது கூட்டத்திற்கும், 21 -31 குறியிடத்திற்கும், 32 - 37 வரைவு கடாதற்கும், 38 - 40 அறத்தொடு நிலைக்கும் உரியவாகும். (13) 4. தலைவி கூற்று 132. இருவகைக் குறிபிழைப் பாகிய விடத்தும் காணா வகையிற் பொழுதுநனி யிகப்பினும் தானகம் புகாஅன் பெயர்த லின்மையிற் காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிய கையறு பொழுதினும் புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் வேளா ணெதிரும் விருந்தின் கண்ணும் வாளா னெதிரும் பிரிவி னானும் நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிரும் வரைவுடன் படுதலும் ஆங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக் கிழவோள் மேன வென்மனார் புலவர். இக் கூற்றுகள் பத்தனுள், 1 - 5 குறியிடத்திற்கும், 6 - 10 வரைவு கடாதற்கும் உரியவாகும். (14) 5. செவிலி கூற்று 133. களவல ராயினும் காமமெய்ப் படுப்பினும் அளவு மிகத் தோன்றினும் தலைப்பெய்து காணினும் கட்டினுங் கழங்கினும் வெறியென இருவரும் ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் ஆடிய சென்றுழி யறிவுதலை வரினும் காதல் கைம்மிகக் கனவி னரற்றலும் தோழியை வினவலுந் தெய்வம் வாழ்த்தலும் போக்குட னறிந்தபின் தோழியொடு கெழீஇக் கற்பி னாக்கத்து நிற்றற் கண்ணும் பிரிவி னெச்சத்து மகணெஞ்சு வலிப்பினும் இருபாற் குடிப்பொரு ளியல்பின் கண்ணும் இன்ன வகையிற் பதின்மூன்று கிளவியோ டன்னவை பிறவுஞ் செவிலி மேன. (15) 6. நற்றாய் கூற்று 134. தாய்க்கும் வரையார் போக்குடன் கிளப்பின். இக் கூற்றுகள் பதின்மூன்றுள், 1 - 4 குறியிடத்திற்கும், 5- 9 வரைவு கடாதற்கும், 10 - 13 உடன் போக்கிற்கும் உரியவாகும். குறிப்பு: இவ்வைந்து சூத்திரத்தும் பலவிடங்களிற் கூறும் தலைவன் முதலியோர் கூற்றுக்களைத் தொகுத்துக் கூறுவதால், அங்கங்கே எடுத்தாளுதற் பொருட்டும், எளிதில் விளங்குதற் பொருட்டும் இங்கு ஒரு சேர எழுதப்பட்டன. 1. தலைவன் செயல் 11: 1 - 8 1. மெய்தொட்டுப் பயிறல் 5. நீடுநினைந் திரங்கல் 2. பொய் பாராட்டல் 6. கூடுதலுறுதல் 3. இடம் பெற்றுத் தழால் 7. சொல்லிய நுகர்ச்சி வல்லே பெறுதல் 4. இடையூறு கிளத்தல் 8. தீராத் தேற்றம் இதன் பொருள்: 1. மெய்தொட்டுப் பயிறல் - தலைவன் குறிப்புரையை ஏற்றுக் கொண்ட தலைவிபால் ‘புகுமுகம் புரிதல்’ முதலிய நான்கு மெய்ப் பாடுகளும் நிகழ்வ துணர்ந்த தலைவன், தலைவியின் புணர்ச்சிக்குறிப் பறிய வேண்டித் தலைவி யுடம்பினைத் தொடுவான். பயிறல் - குறிப் பறிதல்; அப்பயிற்சியைக் குறிப்பிடுவான். 2. பொய் பாராட்டல் - அங்ஙனந் தொட்டுக் குறிப்பறிந்தவன், தலைவியின் கூந்தலையும் நெற்றியையும் நீவி, ‘கூந்தல் கலைந்தது, அதைத் திருத்துகிறேன்; நெற்றி வியர்த்தது; அதைத் துடைக்கிறேன்’ எனக் கூறுவான். பொய்யை மெய்யாகக் கூறுதலென்க. இவ்வாறு மெய்யைத் தொடவும், பயிர்ப்பு என்னும் பெண்மைக் குணத்தால், தலைவிபால், 5. கூழை விரித்தல் 6. காதொன்று களைதல் 7. ஊழணி தைவரல் 8. உடை பெயர்த்துடுத்தல் எனும் இரண்டாவது மெய்ப்பாடு நான்கும் நிகழும். (மெய் - 14)...... 3. இடம் பெற்றுத் தழால் - மெய்தொட்டு, பொய் பாராட்டிய வழித் தலைவி தலைவன் முகத்தைப் பார்ப்பாள். தலைவன் அப்பார்வையைச் சிறப்பித்துக் கூறுவன். இடம் - தலைவி பார்வை. தழால் - தழுவுதல். அதாவது தலைவியின் பார்வையைத் தலைவன் பெற்றுத் தனதாக்கிக் கொள்ளுதல். ‘உம்மவர் யானையை ஓரம்பால் எய்து போக்குவர்; நீ நான் போகாமல் ஈரம்பால் எய்தனை’ எனக் காண்க. 4. இடையூறு கிளத்தல் - தலைவி பெரு நாணினளாதலின், அங்ஙனங் கூறக் கேட்டுக் கண்களை மூடிக் கொண்டும், செடி மறைவிற் போய் நின்று கொண்டும் தலைவனைப் பாராமல் இடையூறு செய்வாள்; தலைவன் அதைக் கூறுவான். 5. நீடு நினைந்து இரங்கல் - அங்ஙனம் கூறியும் தலைவி இணங்காமையினால், நீண்ட நேரம் ஆனது எனத் தலைவன் இரக்கந் தோன்றக் கூறுவன். நேரம் நீண்டதை எண்ணி இரங்குவன் என்க. 6. கூடுதல் உறுதல் - அதுகேட்ட தலைவி, தலைவனது ஆற்றாமைக் கிரங்கிப் பெருநாண் விரைவில் நீங்குவாள், அதையும் தலைவன் கூறுவன். கூடுதற்கு இணங்குதல். இடம் பெற்றுத் தழால் தொடங்கியதும் தலைவி மாட்டு, 9. அல்குல் தைவரல் 10. அணிந்தவை திருத்தல் 11. இல்வலி யுறுத்தல் 12. இருகையு மெடுத்தல் என்னும் மூன்றாவது மெய்ப்பாடு நான்கும் நிகழும் (மெய் - 15) ‘இருகையு மெடுத்தல்’ கூடுதலுறுதலின் பின்னர் நிகழும். 7. சொல்லிய நுகர்ச்சி வல்லே பெறுதல் - தலைவன்தான் முற்கூறிய புணர்ச்சியை விரைவிற் பெறுதல். நுகர்ச்சி - புணர்ச்சி. 8. தீராத் தேற்றம் - அங்ஙனம் கூடியவன், ‘இனி என்றும் உன்னைப் பிரியேன்’ எனச் சூளுரைப்பன். தேற்றம் - தெளிவு. தீராத் தேற்றம் - சூளாயிற்று. இங்ஙனம் புணர்ச்சி நிகழ்ந்த பின் தலைவிமாட்டு, 13. பாராட்டெடுத்தல் (மெய் - 16) என்னும் மெய்ப்பாடு நிகழும். உளப்படத் தொகைஇ - தீராத் தேற்றம் அகப்படத் தொகுத்து, பேராச் சிறப்பின் இரு நான்கு கிளவியும் - குறையாத சிறப்பினை யுடைய இவ்வெட்டும் இயற்கைப் புணர்ச்சி என்றவாறு. காட்டு 1. ‘உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தி னியன்றன தோள்.’ (குறள்) இது, மெய் தொட்டுப் பயிறல். 2. “ கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் னையர் உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் நீயும், மிடல்புக் கடங்காத வெந்துணையோ பாரம் இடர்புக் கிடுகும் இடையிழிவல் கண்டாய்.” (சிலப் - 7) இது, பொய்பாராட்டல், மார்பின் பாரந்தாங்காது இடை முரியவுங் கூடுமென இடையைத் தொடல். 3. “கொல்யானை வெண்மருப்புங் கோள்வல் புலியதளும் நல்யாணர் நின்னையர் கூட்டுண்டு - செல்வார்தாம் ஓரம்பி னானெய்து போக்வர்யான் போகாமை ஈரம்பி னாலெய்தா யின்று.” (திணை - நூற்) இது, இடம் பெற்றுத் தழால். 4. “சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின் திருமுக மிறைஞ்சி நாணுதி கதுமென.” (நற் - 39) இது, இடையூறு கிளத்தல் 5. “காமங் கைம்மிகிற் றாங்குத லெளிதோ.” (நற் - 39) இது, நீடுநினைந் திரங்கல். 6. “இலங்குவளை தெளிர்ப்ப அலவ னாட்டி முகம்புதை கதுப்பின ளிறைஞ்சிநின் றாளே புலம்புகொள் மாலை மறைய நலங்கே ளாகம் நல்குவ ளெனக்கே.” (ஐங் - 197) இது, கூடுதலுறுதல். 7. “வேட்ட பொழுதி னவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள்.” (குறள்) இது, நுகர்ச்சி பெற்றது. 8. “எம்மணங் கினவே மகிழ்ந,. . . . எக்கர் நண்ணிய எம்மூர் வியன்றுறை நேரிறை முன்கை பற்றிச் சூரர மகளிரோ டுற்ற சூளே.” (குறுந் - 53) இது, தீராத் தேற்றத்தைப் பின்னொருகால் தலைவி கூறியது. ‘சூள் எம் அணங்கின’ என்க. 2. இடந்தலைப்பாடு இடந்தலைப் பாடு - முன் தலைவியைக் கூடிய அதே இடத்து மறுநாளும் தலைவன் சென்று தலைவியைக் கூடுதல். இடம் - அதே இடத்தில். தலைப்பாடு - தலைப்படுதல், கூடுதல் - சேர்தல். முற்கூறிய மெய்தொட்டுப் பயிறல் முதலிய எட்டுமே இடந்தலைப் பாட்டிற்கும் உரிய. இயற்கைப் புணர்ச்சியில் இவ் வெட்டும் நிகழ்ந்தன வேனும், புதிதாக எதிர்ப்பட்ட தாகையால் மறுநாளும் அவ்வெட்டும் நிகழுமென்க. தாமே கூடும் இடந்தலைப் பாடும், பாங்கனால் தலைவியுள்ள இடங்கண்டு வந்து கூறச் சென்று கூடும் இடந்தலைப் பாடும் என இடந்தலைப்பாடு இருவகைப்படும். இரண்டாவது மிகச் சிறுபான்மை. வகை இயற்கைப் புணர்ச்சியினும், இடந்தலைப் பாட்டினும் அவ்வெட்டின் வகையாக வருங் கிளவிகள். 1. அச்ச மிகல், 2. காதல் மிகல் 3. இன்னும் புணர்ச்சி கூடுங்கொல் லெனல் 4. தலைவியை எதிர்ப்பட்ட இடத்தை அவளாகக் கூறல் 5. கிள்ளை வாழ்த்து 6. தலைவி தனித்த நிலைமை கண்டு வியத்தல் 7. முன்னர்த் தான் நீங்கியவழிப் பிறந்த வருத்தங்கூறல். 8. அணியணிந்து விடுத்தல் - என்பன. 1. தலைவன் வருவான்கொல் எனத் தலைவிக்கு அச்சமிகுதல். 2. தலைவன் வாரான் கொல் எனத் தலைவிக்குக் காதல் மிகுதல். 5. தலைவியுள்ள புனத்திடத்தைப் பாடிக் காட்டிய கிளியை வாழ்த்துதல். (16) இயற்கைப் புணர்ச்சிப் பின் தலைவன் பிரியும் போது கூறுவன 135. முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல் நன்னய முரைத்தல் நகைநனி யுறாஅ தந்நிலை யறிதல் மெலிவுவிளக் குறுத்தல் தந்நிலை யுரைத்தல் தெளிவகப் படுத்தலென் றன்னவை நிகழும் என்மனார் புலவர். 1. முன்னிலை யாக்கல் 2. சொல்வழிப் படுத்தல் 3. நன்னயம் உரைத்தல் 4. நகைநனி உறாது அந்நிலை அறிதல் 5. மெலிவு விளக்குறுத்தல் 6. தந்நிலை யுரைத்தல் 7. தெளிவகப் படுத்தல் 1, 2, 3 - நயப்பு. இவை பிரிதல் நிமித்தம்; தலைவியின் ஐயம் நீக்குதல். 4. பிரிவச்சம். 5. வன்புறை - வற்புறுத்திக் கூறுதல். 6, 7 - தேற்ற முரைத்தல். தேற்றம் - தெளிவு. இ - ள்: 1. முன்னிலை ஆக்கல் - தலைவன், முன்னிலையாகாத வண்டு, நெஞ்சு முதலியவற்றை முன்னிலை யாக்கிக் கூறுதல். 2. சொல்வழிப் படுத்தல் - அச்சொல்லாத வண்டு முதலியவற்றைத் தான் கேட்டதற்கு விடை கூறுவனபோல் கூறுதல். 3. நல் நயம் உரைத்தல் - வண்டு முதலியவற்றிற்குத் தன் காதல் விருப்பத்தை உரைத்தல். 4. நகை நனி உறாது அந்நிலை அறிதல் - அங்ஙனம் தன்னயப் புரைத்த தலைவன், தலைவி மிக்க மகிழ்ச்சி யடையாத புணர்ச்சிக்கினமான பிரிவு நிலை கூறி, அவள் ஆற்றுந் தன்மை யறிதல். நகை - மகிழ்ச்சி. நகையுறாத நிலை - பிரிவு. 5. மெலிவு விளக்குறுத்தல் - தலைவன் பிரிவானென்று எண்ணி வருந்தும் தலைவிக்கு, அவளுடைய மெலிவை நீக்குதற் பொருட்டுத் தலைவன் தன்னுடைய அன்பு நிலையானதென்று வற்புறுத்தல். அதாவது, இடமணித் தென்றல் - என் ஊர் அணித்தாக உளது; நெடிது பிரிந்து செல்வேனென வருந்தாதே எனக் கூறுதல். மெலிவு - வருத்தம். விளக்குறுத்தல் - பிரியேன் என்பதற்குக் காரணத்தை விளக்கிக் காட்டுதல். 6. தந்நிலை உரைத்தர் - தலைவியைப் பிரிந்திருத்தல் தனக்கு இயலாதென்று கூறுதல். 7. தெளிவு அகப்படுத்தல் - ‘உன்னைப் பிரியேன்; பிரியின் ஆற்றேன்; பிரியின் கொடியனாவேன்’ எனத் தலைவி தெளியுமாறு கூறுதல். அகப்படுத்தல் - தெளிவு தன் சொற்குள் அடங்கும்படி கூறுதல். என்று இன்னவை நிகழும் என்மானார் புலவர் - என்று இவை தலைவன் மாட்டு நிகழுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. காட்டு: “ கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி, காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவு முளவோ நீயறியும் பூவே.” (குறுந் - 2) இதனுள், ‘தும்பி’ என்றது, 1. முன்னிலை யாக்கல். ‘கண்டது மொழிமோ’ என்றது, 2. சொல்வழிப் படுத்தல். ‘கூந்தலின் நறியவும் உளவோ’ என்றது, 3. நன்னய முரைத்தல் ‘காமஞ் செப்பாது’ என்றது, இடமணித்தென, 5. மெலிவு விளக் குறுத்தது. ‘பயிலியது கெழீஇய நட்பு’ என்றது, 6. தந்நிலை யுரைத்தல். “ நீயே, அஞ்ச லென்றவென் சொல்லஞ் சலையே யானே, குறுங்கா லன்னம் குலவுமணற் சேக்கும் கடல்சூழ் மண்டிலம் பெறினும் விடல்சூ ழலன்யான் நின்னுடை நட்பே.” (குறுந் - 300) இது, நயப்பும், பிரிவச்சமும், வன்புறையுங் கூறிற்று. ‘நீ என் சொல் அஞ்சலை’ என்றது - பிரிதல் நிமித்தமும், பிரிவச்சமும். ‘நின்னுடை நட்பு பெறினும் விடல் சூழலன்’ என்றதால் வன்புறையும் ஆதல் காண்க. “ மெல்லிய லரிவைநின் நல்லகம் புலம்ப நிற்றுறந் தமைகுவெ னாயின் எற்றுறந் திரவலர் வாரா வைகல் பலவா குகயான் செலவுறு தகவே.” (குறுந் - 137) இது, தெளிவகப்படுத்தல். வகை 1. ஆயத்துய்த்தல் 2. யான் போவலென்றல் 3. மறைந்து அவட்காண்டல் 4. கண்டு நின்று அவள் நிலை கூறல் 5. அவளருமை அறிந்து கூறல் - என்பன. ஆயம் - விளையாட்டு மகளிர், தோழியர். அவர்களிடம் தலைவியைப் போக விடுதல். 5. ஆயத்துடன் கூடி விளையாடுந் தலைவியைத் தனித்து எதிர்ப்படல் அருமை என்பதை அறிந்து தனக்குள் கூறுதல். இதன் பின்னரும், பாங்கற் கூட்டம் நிகழ்ந்த பின்னரும் தலைவிமாட்டு, 14. மடந்தப வுரைத்தல் 15. ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் 16. கொடுப்பவை கோடல் (மெய் - 16) என்னும் நாலாவது மெய்ப்பாடு மூன்றும் நிகழும். கொடுப்பவை கோடல் பாங்கி மதியுடம்பட்ட பின்னரும் நிகழும். (17) இயற்கைப்புணர்ச்சி முதல் களவு வெளிப்படு மளவும் இருவர்க்கும் உளவாம் இலக்கணம் 136. வேட்கை யொருதலை யுள்ளுதல் மெலிதல் ஆக்கஞ் செப்பல் நாணுவரை யிறத்தல் நோக்குவ வெல்லாம் அவையே போறல் மறத்தல் மயக்கம் சாக்கா டென்றச் சிறப்புடை மரபினவை களவென மொழிப. 1. ஒருதலை வேட்கை 6. நோக்கிய வெல்லாம் அவையே போறல் 2. ஒருதலை யுள்ளுதல் 7. மறத்தல் 3. மெலிதல் 8. மயக்கம் 4. ஆக்கஞ் செப்பல் 9. சாக்காடு. 5. நாணுவரை யிறத்தல் இ-ள்: 1. ஒருதலை வேட்கை - இருவர்க்கும் ஒருதலையாக வேட்கை நிகழும். 2. ஒருதலை உள்ளுதல் - இடைவிடாது ஒருவரை யொருவர் நினைப்பர். ஒருதலை - துணிவு. ‘ஒருதலை’ என்பதை ஈரிடத்தும் கூட்டுக. 3. மெலிதல் - அதனால் உடம்பு மெலிவர். 4. ஆக்கம் செப்பல் - ஏதாவது ஓர் இடையூறு கேட்ட வழி அதனை நன்மையாக நெஞ்சிற்குக் கூறிக்கொள்வர். ஆக்கம் - ஆவது. நன்மை. தோழி சேட்படுத்தவழி, தலைவன் அதனை அன்பென்று கொள்ளுதலும், இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய வழித் தலைவி அதனை அன்பென்று கொள்ளுதலும் போல்வன ஆக்கஞ் செப்பலாகும். சேட்படுத்தல் - தலைவியை அணுகவிடாது தலைவனை நீக்கி நிறுத்தல். 5. நாணுவரை இறத்தல் - இயன்ற மட்டிலும் நாணி, காதல் மிகுந்த வழி நாணை விடல் இருவர்க்கும் இயல்பே. வரை - எல்லை. இறத்தல் - கடத்தல். இதனால், பண்டு ஆடவரும் நாணுடையராய் இருந்தமை பெறப்படும். தலைவன் பாங்கற்கும் தோழிக்கும் உரைத்தலும், தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றலும் போல்வன - நாணுவரை இறத்தலாம். 6. நோக்குவ எல்லாம் அவையே போறல் - பிறர் தம்மை நோக்கிய நோக்கமெல்லாம் தம்மனத்து மறைத்து ஒழுகுகின்ற களவொழுக்கத்தை அறிந்து நோக்குகிறார் எனக் கொள்வர். நோக்குதல் - பார்த்தல். 7. மறத்தல் - பிற தொழில்களை மறந்து நடப்பர். பிற - விளையாடல் முதலியன. 8. மயக்கம் - செய்வன இன்ன வென்று அறியாமல் மயங்குதல். அதாவது, புள்ளொடும் விலங்கொடும் கூறுதல். 9. சாக்காடு - சாவிற் கேதுவானவற்றைக் கூறுதல். தலைவன் மடலேறுவன், வரைபாய்வன் எனக் கூறுவன். தலைவி காதல் மிகுதியால் உடல் மெலிந்து வருந்திக் கூறுவள். அதாவது, நலனழிவு கூறலாம். நலன் - அழகு. அதன் மேலும் இற்செறிப்பால் தலைவனைக் கூடப் பெறாவிடின் காதல் நோயால் இறந்துபடுதலுங் கூடும். இன்றும் தங்காதலரை யடையப் பெறாத சில பெண்கள் தற்கொலை செய்து கொள்ளுதலை அறிக. ‘காதல் தப்பின் சாதல்’ என்பது பழமொழி. ஒருதலை வேட்கை முதலிய ஒன்பதும் களவிற் கன்றிக் கற்பிற் காகா. என்று அச்சிறப்புடை மரபினவை களவு என மொழிப - என்று சொல்லப்பட்ட அந்தச் சிறப்புடைத் தான முறையினை யுடைய ஒன்பதும் களவொழுக்கமென்று கூறுவர் என்றவாறு. காட்டு “ அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப! இம்மை மாறி மறுமை யாயினும் நீயா கியரெங் கணவனை யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே.” (குறுந் - 49) இது, சாக்காடு. ‘இம்மை மாறி’ எனவே, பிரியின் இறந்து படுவேன் எனல் காண்க. 3. பாங்கற் கூட்டம் - 1 இது, 1. தலைவன் பாங்கனைச் சென்று கூடுங் கூட்டம், 2. பாங்கனால் தலைவியைக் கூடுங்கூட்டம் என இருவகைப் படும். தலைவன் கூற்று 11: 9 - 3 9. பெற்ற வழி மகிழ்ச்சி 12. நிகழ்பவை உரைத்தல் 10. பிரிந்த வழிக் கலங்கல் 13. குற்றங் காட்டிய வாயில் பெட்டல் 11. நிற்பவை நினைஇ உரைத்தல் இ - ள்: 9. பெற்ற வழி மகிழ்ச்சியும் - கூடிய பின்னர்க் கூட்டத்தின் நயத்தைத் தலைவன் நெஞ்சிற்குக் கூறி மகிழ்வான். 10. பிரிந்த வழிக் கலங்கலும் - பிரிந்து சென்ற தலைவியைத் தலைவன் மறைந்து நின்று ஆயத்திடைக் கண்டு, இனிக்கூடுதல் அரிதென்று கலக்க முறுவன். தலைவி மறைந்து நின்று தலைவனைக் காண்டலும் உண்டு. பெற்ற வழி மகிழ்ச்சியும், பிரிந்த வழிக் கலங்கலும் தலைவிக்கும் உண்டு. இவ்விரண்டும் இடந்தலைப் பாட்டிற்கும் பாங்கற் கூட்டத்திற்கும் இடையே நிகழும். இதன் பின்னர்த் தலைவன் பாங்கனை அடையவே, அவன், ‘இவ்வளவு நேரம் எங்கு சென்றீர்?’ என வினாவுதலும், அதற்குத் தலைவன் தன்னை ஒருத்தி வருத்தியதாகக் கூறுதலும் நிகழும். 11. நிற்பவை நினைஇ உரைப்பினும் - அது கேட்ட பாங்கன், உலகத்து நிலைநிற்கின்ற நல்லொழுக்கத்தை நினைப்பித்துக் கூறுவான்; அதாவது, நின்போன்ற தலைவனுக்கு இம்மறைந்த ஒழுக்கம் தகாது எனக் கூறுதல். 12. நிகழ்பவை உரைப்பினும் - அது கேட்ட தலைவன், அதை மறுத்துத் தன் மனத்தின்கண் நிகழும் வருத்தங்களைக் கூறுவான், ‘உரைப்பினும்’ என்பதை இரண்டிடத்தும் கூட்டுக. 13. குற்றங் காட்டிய வாயில் பெட்பினும் - அங்ஙனந் தலைவனிடத்து நிகழுங் குற்றங்களை வெளிப்படையாகக் காட்டிய பாங்கன், தலைவனது ஆற்றாமை மிகுதி கண்டு அதனை நீக்குதற்கு விரும்புவான். வாயில் - பாங்கன். பெட்பு விருப்பம். காட்டு: 9. “ ஒடுங்கீ ரோதி ஒண்ணுதற் குறுமகள் நறுந்தண் ணீரள் ஆரணங் கினளே, இனைய ளென்றவட் புனையள வறியேன்; சிலமெல் லியவே கிளவி அணைமெல் லியல்யான் முயங்குங் காலே.” (குறுந் - 70) இது, பெற்றவழி மகிழ்ச்சி. 10. குணகடற் றிரையது பறைதபு நாரை திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை அயிரை யாரிரைக் கணவந் தாங்குச் சேய ளரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே. (குறுந் - 128) இது, பிரிந்தவழிக் கலங்கல். 11. “ தேரோன் றெறுகதிர் மழுங்கினுந் திங்கள் தீரா வெம்மையொடு திசைநடுக் குறுப்பினும் பெயராப் பெற்றியிற் றிரியாச் சீர்சால் குலத்திற் றிரியாக் கொள்கையுங் கொள்கையொடு நலத்திற் றிரியா நாட்டமும் உடையோய்! கண்டத னளவையிற் கலங்குதி யெனினிம் மண்டிணி கிடக்கை மாநிலம் உண்டெனக் கருதி யுணரலன் யானே.” இது, நிற்பவை நினைஇ உரைத்தல். 12. “நயனும் நண்பும் நாணுநன் குடைமையும் பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும் நும்மினு முடையேன் மன்னே!. . . . முதுநீ ரிலஞ்சி பூத்த குவளை எதிர்மலர்ப் பிணைய லன்னவிவள் அரிமதர் மழைக்கண் காணா வூங்கே.” (நற் - 160) இது, நிகழ்பவை உரைத்தல். காணாவூங்கு நும்மினும் உடையேன் என்க. 13. “ பங்கயமோ துங்கப் பனிதங்கு மால்வரையோ அங்கண் விசும்போ அலைகடலோ - எங்கோவிச் செவ்வண்ண மால்வரையே போலுந் திருமேனி இவ்வண்ணஞ் செய்தார்க் கிடம்.” இது, குற்றங் காட்டிய வாயில் பெட்டல். ‘இவ்வண்ணம் செய்தார்க்கு இடம் எங்கே’ என உடன் பட்டமை காண்க. இது, இடமும் தன்மையும் வினாயது. இதன்பின் நிகழும் துறைகள் பல அடிப்படையனவாய் முன்னிருந்தன வாகையால், அவற்றை உள்ளடக்கிப் ‘பெட்பினும்’ என்றார். அவ்வகையாவன: 1. பாங்கன்: 1. இடம் வினாதல், 2. தன்மை வினாதல். 2. தலைவன்: 3. இடங்கூறல், 4. தன்மை கூறல், 5. யாண்டுச் சென்று காணெனல். 3. பாங்கன்: 6. குறிவழிச் சேறல் 7. தலைவியைக் காண்டல் 8. பாங்கன் ஐயுறல் 9. தலைவியை வியத்தல், 10. தலைவனை வியத்தல், 11. தலைவற்கு வருத்தந் தகுமென வியத்தல் 4. தலைவன்: 12. கண்டானோ வெனல். இதனால், பழந்தமிழர் காதல் வாழ்க்ககை எவ்வாறு போற்றப் பட்டு வந்ததென்பது இனிது விளங்குகின்றதன்றோ? காட்டு: 1, 2 கூற்றுக்கு முன் 13க்குக் காட்டப்பட்ட எடுத்துக் காட்டே. 3. “ அதவத் தீங்கனி யன்ன செம்முகத் துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக் கழைக்க ணிரும்பொறை யேறி விசைத்தெழுந்து குறக்குறு மாக்கள் தாளங் கொட்டுமக் குன்றகத் ததுவே குறுமிளைச் சீறூர், சீறூ ராளே நாறுமயிர்க் கொடிச்சி, கொடிச்சிகை யகத்தது வேபிறர் விடுத்தற் காகாது பிணித்தவென் நெஞ்சே.” (நற் - 96) இது, தலைவன் இடங் கூறியது. 4. “ கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் நெஞ்சுபிணிக் கொண்ட அஞ்சி லோதி பெருநா ணணிந்த சிறுமெல் லாகம் ஒருநாட் புணரப் புணரின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே” (குறுந் - 280) இது, தன்மை கூறியது. 5. “ காயா வீன்ற கணவீ நாற்றம் மாயா முன்றில் வருவளி தூக்கும் ஆகோள் வாழ்நர் சிறுகுடி யாட்டி வேயேர் மென்றோள் விலக்குநர் யாரோ வாழிநீ அவ்வயிற் செலினே.” இது, பாங்கனை நீ யாண்டுச் சென்று காணென்றது. 6, 7, 8 பேதுற்று நீங்கிப் பிரியாத் துயரமொடு போதுற்ற வேந்தல் புலங்கொண்டு - தீதுற்ற திம்மயிலே போலு மினத்திற் பிரிந்துதனித் திம்மையிலே செய்த திடர். இது, குறிவழிச் சென்ற பாங்கன் தலைவியைக் கண்டு, ஐயுற்றுக் கூறியது. 9. “ கண்பொறையன் வெற்பிற் கமழ்நீலம் மென்முறுவல் விண்பொருதென் னன்கொற்கை வெண்முத்தம் - பண்பயில்வாய் அவ்வளவன் காவிரியா யம்பவளம் இக்குறவர் எவ்வளவி னீன்றே மெனல்.” (குழந்தை) இது, பாங்கன் தலைவியை வியந்தது. 10. “ பண்ணாது பண்மேற்றேன் பாடுங் கழிக்கானல் எண்ணாது கண்டாருக் கேரணங்காம் - எண்ணாது சாவார்சான் றாண்மை திரிந்திலார் மற்றிவளைக் காவார் கயிறுரீ இவிட் டார்.” (திணை - நூற் - 47) இது, பாங்கன் தலைவனை வியந்தது. 11. “மின்னின்ற சாயல் மிகுபணைத்தோள் ஈங்கிவள்முன் என்னென்று நிற்பா ரெவர்.” (குழந்தை) இது, தலைவற்கு வருத்தம் தகுமென அவனை வியந்தது. 12. “ கண்டனன் கொல்லோ கமழ்தே னிருங்கூந்தல் தொண்டைக் கனிவாய்த் துடியிடையைத் தண்டழைபூத் தாங்கியே நின்ற தருவின்கட் டன்னாயம் நீங்கியே நின்ற நிலை.” (குழந்தை) இது, பாங்கன் தலைவியைக் கண்டானோ வென்றது. பாங்கற் கூட்டம் - 2 இது, குறிவழிச் சென்ற பாங்கன் தலைவியைக் கண்டு மீண்டு தலைவனைக் கூடுதலும், தலைவன் சென்று தலைவியைக் கூடுலுமாம். 1. பாங்கன் தலைவி தன்மை கூறல் 2. இடங்காட்டல் 3. தலைவன், தலைவியைத் தோழியொடு வருகெனல் 4. பாங்கன் வாழ்த்தல் காட்டு: 1, 2. நஞ்சுங் கொலைவேலும் நச்சுவாய்க் கூர்வாளும் எஞ்சும் படைக ளெலாந்தாங்கி - அஞ்சவே தன்னை நிகர்த்துத் தனியாக நிற்கின்ற துன்னை வருத்திய வொன்று இது, பாங்கன் தலைவற்குத் தலைவி தன்மை கூறி இடங் காட்டியது. “எமக்குநயந் தருளினை யாயிற் பணைத்தோள் ஒண்ணுத லரிவையொடு மென்மெல வியலி வந்திசின் வாழியோ மடந்தை தொண்டி யன்னநின் பண்புபல கொண்டே.” (ஐங் - 175) - (18) 1. தலைவி நாணும் மடனும் 137. காமத் திணையிற் கண்ணின்று வரூஉம் நாணு மடனும் பெண்மைய வாதலின் குறிப்பினு மிடத்தினும் அல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயி னான. இது, தலைவி நாணு மடனு நிகழக் கூற்று நிகழ்த்துவள் என, ‘அச்சமும் நாணும்’ (கள - 10) என்பதற்குப் புறனடை கூறுகின்றது. இ - ள்: அவள் வயின் ஆன நாணும் மடனும் பெண் மையவாதலின் - தலைவியிடத் துளவாகிய நாணும் மடனும் பெண்மைப் பருவத்தே தோன்றுதலை யுடையவாகலின், காமத்திணையின் கண் நின்று குறிப்பினும் வரும் - அப்பெண்மைப் பருவத்தே தோன்றிய காமங் காரணமாக கண்ணின்கட் குறிப்பாக நிகழும், வேட்கை நெறிப்பட இடத்தினும் வரும் - காதல் வழிப்படுதலாலே கரும நிகழ்ச்சிக் கண்ணும் நிகழும், அல்லது வாரா - அவ்வீரிடத்தும் அல்லது நாணும் மடனும் நிகழா என்றவாறு. காமத்திணை - களவொழுக்கம். ‘வரும்’ என்பதனை இரண்டி டத்தும் கூட்டுக. இடம் - கரும நிகழ்ச்சி (செய் - 198) அதாவது, இடந்தலைப்பாடும், பாங்கற் கூட்டமும், தோழியிற் கூட்டமும், இயற்கைப் புணர்ச்சிக்கண் நிகழ்ந்த ‘புகுமுகம் புரிதல்’ முதலிய பன்னிரண்டு மெய்ப்பாட்டினும் நாணு மடனும் குறிப்பாக நிகழ்ந்தவாறு காண்க. இயற்கைப் புணர்ச்சி, கரும நிகழ்ச்சி ஆகிய இவ்விரண்டு மல்லாத இடத்துத் தலைவி நாணு மடனு நீங்கக் கூற்று நிகழ்த்துவ ளென்பதாம். (19) 2. நாணு மடனும் தன்மை திரிதல் 138. காமஞ் சொல்லா நாட்ட மின்மையின் ஏமுற விரண்டும் உளவென மொழிப. இது, கரும நிகழ்ச்சிக்கண் நாணு மடனும் தன்மை திரிந்து வருமென்கின்றது. மேலதற்கோர் சிறப்பு விதி. இ - ள் : சொல்லாக் காமம் இன்மையின் - கரும நிகழ்ச்சி யிடத்துக் கூற்று நிகழாத காமம் புலனெறி வழக்கின் கண் இன்மையால், இரண்டும் ஏமுற நாட்டம் உளவென மொழிப - முற்கூறிய நாணு மடனும் தந்தன்மை திரிந்து வர நாட்டுதல் உளவென்று கூறுவர் என்றவாறு. ஏமுறுதல் - திரிதல். தோழியிற் கூட்டத்துப் பெரும்பாலும் நாணு மடனுங்கெடத் தலைவி கூற்று நிகழ்த்துவளென்பதாம். எனவே,இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டங்களின்கண் நாணும் மடனும் நீங்கா வென்பது பெற்றாம். தோழியிற் கூட்டக் குறியிடத்திலிருந்தே தலைவி கூற்று நிகழ்த்துவாள். காட்டு பேரேமுற் றாய்போல முன்னின்று விலக்குமால் யாரெல்லா நின்னை யறிந்த தூஉ மில்வழி (கலி. 113) இது, தோழியிற் கூட்டத்துத் தலைவி நாண் மடனீங்கக் கூறியது. (20) 3. தலைவி நாண்மடன் நீங்கக் கூறுதல் 139. சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின் அல்ல கூற்றுமொழி யவள்வயி னான. இ - ள் : எதிர் சொல் - நாணு மடனு நீங்கிய சொல்லை, அவள் வயின் மொழிதல் அருமைத்து அல்ல ஆகலின் - தோழியிடத்துக் கூறுதல் தலைவிக்கு அருமையுடைத்து அல்லவாகையினாலே, கூற்றுமொழி ஆன - குறிப்பானன்றிக் கூற்றாற் கூறுமொழி தலைவிக்குப் பொருந்தின என்றவாறு. எதிர்தல் - தன்மை மாறுபடுதல். நாண்மடன் உள்ளத னாலேயே தலைவி கூற்றான் மொழியாது குறிப்பால் மொழிய லாயினள். தோழி தலைவியின் உடல் போன்றவளாகையால் அவளிடம் மறைத்துக் கூறவேண்டுவ தொன்றின்று. ஆகவே, தோழி யிடந் தலைவி நாண்மடன் நீங்க வெளிப்படக் கூறுவளென்பதாம். இம் மூன்று நூற்பாக்களாலும் தலைவி கூற்றுக் கிலக்கணங் கூறப்பட்டது. தலைவி நாணு மடனுமுள்ள பெண்மைப் பருவத்தா ளாகையால், இயற்கைப் புணர்ச்சிக்கண் மெய்ப்பாட்டுவழி குறிப்பாகத் தனது கருத்தை வெளியிடுவாள்; அந்நாணு மடனும் இயற்கைப் புணர்ச்சியே யன்றி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் தோழியிற் கூட்டத்தின் கண்ணும் நிகழும் (சூ - 14); ஆனால், தோழியிற் கூட்டத்தின் கண் பெரும்பாலும் நாணுமடனு நீங்கக் கூற்று நிகழ்த்துவாள் (சூ - 15); தோழியிடத்து நாண் மடனின்று வெளிப் படையாகவே கூறுவாள் (சூ - 16) என்பதாம். காட்டு : “கூடுதல் வேட்கையாற் குறிபார்த்து (கலி - 46) வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு” (கலி - 51) இவை, தலைவி தோழியிடம் நாணு மடனும் கூறியது. இது குறியிடம். 5. களவில் தலைவிக்குரியது 141. முந்நா ளல்லது துணையின்று கழியா தந்நா ளகத்தும் அதுவரை வின்றே. இ - ள்: முந்நா ளல்லது துணை இன்று கழியாது - பூப்பெய்திய மூன்று நாளு மல்லது தலைவி கூட்டமின்றி இரா. . அந் நாள்அது வரைவு அன்றே - அம் மூன்று நாளின் அகப்பட்ட நாளாகிய ஓரிரு நாளினும் துணையின்றிக் கழிதல் நீக்கப் படாது. அதாவது, மாதப்பூப் பெய்திய நாள் தொடங்கிப் பூப்பு நிகழும் நாளாகிய மூன்று நாளும் தலைவி தலைவனைக் கூடப்பெறாள். ‘அந்நாள் அகத்தும்’ என்றது, பூப்புப் புறப்பட்ட முந்நாளின் பின் ஒரு நாளும் இருநாளும் என்றவாறு. மூன்று நாளில் பூப்பு நில்லாது மேலும் ஒருநாள், இருநாள் பூப்பு வரின் அந் நாட்களிலும் தலைவி தலைவனைக் கூடாதிருத்தல் என்பதாம். அகப்படுதல் - உட்படுதல். மூன்று நாளின் உட்பட்டது ஒன்றும் இரண்டும் என்க. அது - துணையின்றிக் கழிதல். இம்மூன்றும் ஐந்துமல்லாத ஒரு திங்களில் இருபத்தேழும், இருபத்தைந்து நாளும் கூடுவள் என்பதாம். இனி, அல்ல குறிப்பட்டுழி ஒருநாளும் இருநாளும் துணையின்றிக் கழியப் பெறுமென்றுணர்க. (23) 6. பாங்கன் நிமித்தம் 142. பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப. இ - ள்: பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு வகைப்படும் என்றவாறு. நிமித்தம் - காரணம். பன்னிரண்டாவன: கைக்கிளைக் குறிப்பு மூன்றும் (அகத் - 36), ஐந்திணையும் (அகத் - 1) பெருந்திணைக் குறிப்பு நான்கும் (அகத் - 37) ஆம். முன் (கள - 11) புணர்ச்சிக்கு மட்டும் பாங்கனிமித்தங் கூறினார். ஈண்டு முதல் நூற்பாவில் (அகத் - 1) கைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய்க் கூறிய யாவற்றிற்கும் - பன்னிரண்டற்கும் - பாங்கன் நிமித்தமாவான் என்பது கூறினார். (24) 7. கைக்கிளை பெருந்திணை 143. முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே. இ - ள்: முற்கூறிய மூன்றும் கைக்கிளைக் குறிப்பாகும்; பிற்கூறிய நான்கும் பெருந்திணைக் குறிப்பாகும். அகத்திணையியல் 36, 37 நூற்பாவுரை பார்க்க. முன் இடந்தலைப் பாட்டின் பின்னர்த் தலைவியைக் கூட்டுதற்குப் பாங்கன் நிமித்தம் ஆயினாற்போல, இம் மூவகைக் கைக்கிளைக் குறிப்பினும் தகாதென விலக்கலும், சென்று தலைவியைக் கண்டு வந்து, இளையளெனவும், காதற் குறிப்புத் தோன்றா தவளெனவும், அவ்வாறு செய்தல் முறையன் றெனவுங் கூறி வேறுபடுத்தலுஞ் செய்வானாகையால் பாங்கன் நிமித்தமாயினான். அவ்வாறே, பெருந்திணைக் குறிப்பாகிய மடலேறுதல் முதலிய நான்கினும் பாங்கன் இடைநின்று நல்வழிப் படுப்பானாகலின் நிமித்தமாயினான். புணர்ச்சிக்கே யன்றிப் பிரிதல் முதலியவற்றிற்கும் பாங்கன் நிமித்த மாதலை அறிக. (25) 8. உலகியற் புணர்ச்சி 144. முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே. இது, குறிஞ்சிக்கண்ணே யன்றி ஐவகை நிலத்தினும் புணர்ச்சி நிகழு மென்கின்றது. எனவே, இது அகத் - 5, 16 சூத்திரங்கட்குச் சிறப்பு விதி கூறுவதாகும். இ -ள்: முதலொடு புணர்ந்த - நிலமும் காலமுமாகிய முதற் பொருள்களோடு கூடிய, யாழோர் மேன - களவொழுக்க மானது, தவல் அருஞ் சிறப்பின் - கெடலருஞ் சிறப்பினை யுடைய, ஐந்நிலம் பெறுமே - குறிஞ்சி முதலிய ஐந்து நிலத்தின் கண்ணும் நிகழும் என்றவாறு. களவொழுக்கம் - புணர்ச்சி. தவல் -கெடல். யாழோர் - தமிழிசையில் வல்ல ஓர் குறிஞ்சி வகுப்பார்; குறிஞ்சி யொழுக்கத் திற்குச் சிறப்புடையவர். கள - 2. உரை பார்க்க. முன்னர்க் (அகத் - 16) குறிஞ்சி நிலத்தின்கண்ணே புணர்ச்சி நிகழுமென்றார். அங்ஙனங் கூறியது புலனெறி வழக்கின்கண் ஆதலால், மருத முதலிய மற்றை நிலங்களினும் புணர்ச்சி நிகழுமென ஐயம் நீக்கினார். வேனிற் காலத்தில் முல்லையும் குறிஞ்சியும் வளம் பிரிந்தாகிய பாலை நிலத்தாரிடையும் புணர்ச்சி நிகழும் என்க. அங்கு (அகத் - 4) முதற்பொருள் பற்றி நிலத்தை நாலாக வகுத்தனர். இது உலகியல் கூறியது. (26) 9. தாமே தூதுவராதல் 145. காமக் கூட்டந் தனிமையிற் பொலிதலிற் றாமே தூதுவ ராதலு முரித்தே. இ - ள்: காமக் கூட்டம் தனிமையில் பொலிதலின் - இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் இடை நின்று கூட்டுவாரின்றித் தனிமையால் சிறத்தலின், தாமே தூதுவர் ஆதலும் உரித்தே - தலைவனும் தலைவியும் ஒருவர்க்கொருவர் தூதுவராகி ஒருவரை யொருவர் கூடுதலும் ஆண்டு உரித்து என்றவாறு. அதாவது, பாங்கற் கூட்டமும் தோழியற் கூட்டமும் நிகழாமல், இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப் பாடும் நிகழ்ந்தபின் வரைந்து கொள்ளுதலும் சிலரிடம் உண்டு என்பதாம். இயற்கைப் புணர்ச்சியினும் இடந்தலைப் பாட்டினும் இடை நின்று கூட்டுவாரின்றித் தலைவனும் தலைவியும் தாமே ஒருவரை ஒருவர் காதலித்துக் கூடுதல் காண்க. தனிமையில் பொலிதல் - தாமாகவே கூடியின்புறல். (27) 4. தோழியிற் கூட்டம் தோழியிற் கூட்டம் - தோழியால் தலைவனும் தலைவியும் கூடுங் கூட்டம். அது, 1. பாங்கி மதியுடம்பாடு 5. அறத்தொடு நிலை 2. குறியிடம் 6. வரைதல் 3. வரைதல் வேட்கை 7. உடன்போக்கு 4. வரைவு கடாதல் என எழுவகைப் படும். 1. பாங்கி மதியுடம்பாடு இயற்கைப் புணர்ச்சியினும், இடந்தலைப் பாட்டினும், பாங்கற் கூட்டத்தினும் தலைவியைக் கூடிய தலைவன், இனி என்றும் வருத்தமின்றிக் கூடக் கருதியவனாய், பாங்கற் கூட்டத்தே புணர்ந்த தலைவியை ஆயத்துய்த்து மறைந்து நின்று கண்ட போது, தலைவியின் மெய்த்தோழி இன்னாளென்று அறிந்து அவள் உடம்பாடு பெற எண்ணினான். அவ்வாறே மறுநாள் தோழி தனித்திருக்கும் போதேனும், தலைவியோடுடனிருக்கும் போதேனும் சென்று, சில குறிப்பு மொழிகள் கூறித் தோழியின் கருத்தை யறிவான். தலைவனது அக் குறிப்பு மொழியையும் செயலையுங் கண்ட தோழி இருவர் கருத்தினையும் தம்மதியோடு ஒன்று படுத்து ஓர்ந்து உணர்வாள். இவ்வாறு மூவர் மதியினையும் ஒன்று படுத்து உணர்தல் பற்றி இது, மதியுடம்பாடு எனப்பட்டது. மதியுடம்படுத்தல் எனவும் வழங்கும். இது பெரும்பாலும் பாங்கியால் இருவர் கருத்தையும் அறிந்து கூட்டப்படுதலான் ‘பாங்கி மதியுடம்பாடு’ எனப்பட்டது. உடம்பாடு - உடம்படுதல், ஒன்றுபடுதல். மதி - அறிவு, கருத்து. இத்தோழியிற் கூட்டத்தே தலைவன் தலைவி இருவருக்கும் உள்ள உரிமைப்பாடு எவ்வளவோ அவ்வளவு உரிமை தோழிக்கும் உண்டு. 1. முதற் கூட்டம் தலைவன் தோழியைக் குறையுறல் 1. தலைவன் 11: 14. பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தல் 15. ஊர்வினாதல் 16. பேர் வினாதல் 17. கெடுதி வினாதல் 14. பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தலும் - தலைவிக்கு விருப்ப முள்ள தோழியைத் தனக்கு வாயிலாகப் பெற்று, அவளை ‘இரந்து பின்னிற்றல்’ என முடிவு கட்டுதலும்; இரந்து பின்னிற்றல் - எனது குறையை முடித்துத் தருவாயெனக் கேட்டு நிற்றல். குறை - தலைவியை எப்போதும் இடையீடின்றிக் கூட எண்ணுதல். பெட்பு - விருப்பம். வாயில் - துணை. பெட்ட வாயில் - விருப்பமுள்ள வாயில். வாயில் - தோழி. 15, 16, 17. ஊரும் பேரும் கெடுதியும் பிறவும் நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும் - தோழியை இரந்து பின்னிற்கத் துணிந்த தலைவன், தோழி தனித்தோ, தலைவியுடனோ இருக்கும்போது சென்று, நும் ஊரும் பேரும் யாவை யெனவும், யான் கெடுத்தவை காட்டுமின் எனவும், அனையன பிறவற்றையும் அன்பு தோன்றக் கூறும் இக்கூற்று வேறோர் கருத்து உடைத்தென அவள் கருதுமாற்றான் அமையச் சொல்லித் தோழிக்குத் தன் குறையை அறிவிக்கும் கூறுபாடும். நீர்மை - தன்மை, அன்புத் தன்மை. நீரில் குறிப்பு - அவ்வன்பு மொழியால் வேறோர் கருத்துத் தோன்றுதல். கெடுதி வினாதலாவது - எனது அம்பு தப்பி வந்த யானை, மான் இவற்றைக் கண்டீரோ என வினாவுதல். கெடுதி - என்னால் கெடுதி செய்யப்பட்டது, அம்பெய்யப்பட்டது. பிற - வழிவினாதல், அவர் தொழில் வினாதல் முதலியன. யான் இங்கு தங்கினும், என்னுடன் பேசினும் வரும் கேடென் என்றலுமாம். காட்டு 14. “ நீதர வந்த நிறையழி துயரநின் ஆடுகொடி மருங்குல் அருளி னல்லது பிறிதிற் றீரா தென்பது பின்னின் றறியக் கூறுகம் எழுமோ நெஞ்சே, கொற்கையம் பெருந்துறை குனிதிரை தொடுத்த விளங்குமுத் துறைக்கும் வெண்பல் பன்மாண் சாயல் பரதவர் மகட்கே.” இது, இரவு வலியுற்றது. ‘மகட்கு அறியக் கூறுகம் எழுமோ நெஞ்சே’ எனல் காண்க. 15. “ கல்லுற்ற நோய்வருத்தக் காலும் நடையற்றேன் எல்லுற் றியானும் வருந்தினேன் - வில்லுற்ற பூங்க ணிமைக்கும் புருவ மதிமுகத்தீர்! ஈங்கிதுவோ நும்முடைய வூர்?” இது, ஊர் வினாயது. 16. “ செறிகுர லேனற் சிறுகிளி காப்பீர்! அறிகுவே னும்மை வினாஅய் - அறிபறவை அன்ன நிகர்க்குஞ்சீர் ஆடமை மென்றோளிர் என்ன பெயரிரோ நீர்?” இது, பெயர் வினாயது. 17. “ தண்டு புரைகதிர்த் தாழ்குரற் செந்தினை மண்டுபு கவரும் மாண்டகிளி மாற்றும் ஒண்டொடிப் பணைத்தோ ளொண்ணுத லிளையீர்! கண்டன ராயிற் கரவா துரைமின் கொண்டன குழுவி னீங்கி மண்டிய உள்ளழி பகழியோ டுயங்கியோர் புள்ளி மான்கலை போகிய நெறியே?” இது, கெடுதி வினாயது. “ மெல்லிலைப் பரப்பின் விருந்துண் டியானுமிக் கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ?” (அகம் - 110) இது, யான் இங்கு தங்கிப் போகலாமோ என்றது. “ இல்லுடைக் கிழமை எம்மொடு புணரின் தீது முண்டோ மாத ரீரே.” (அகம் - 290) இது, என்னோடு பேசினால் ஆகாதோ என்றது. இவ்வாறு அங்கு செல்லும்போது தலைவன் கண்ணி, தார், தழை முதலிய கையுறை கொண்டு செல்வான்; அக்கையுறையைத் தலைவிக்குக் கொடுக்கும்படி தோழியிடம் கொடுப்பான். தோழி அதைத் தலைவியிடம் கொடுத்து ஏற்றுக் கொள்ளும்படி சொல்வாள். தலைவி அக்காணிக்கையை ஏற்றுக் கொள்வதே தோழியிற் கூட்டமாகும். இன்றும் தன் காதலிக்குச் சிற்றுண்டி, துணி, பூ முதலியன கொண்டு செல்லுதல் காண்க. கண்ணி - முடியிற் கட்டும் பூ. தார் - மாலை. தழை - தழையாற் செய்யப்பட்ட உடை. இது, தழை எனவே வழங்கும். தழையுடையாவது - பலவகையான இளந்தழைக் கொத்துக் களையும் பூங்கொத்துக்களையுங் கலந்து, மாவிலைத் தோரணம் போலக் கொடியில் வைத்துக் கட்டி, ஓரத்தை ஒழுங்காகக் கத்தரித்து உடைக்கு மேல் எடுத்துக் கொள்ளும் உடை. இது விளையாடும்போது உடுப்பது, இது குறிஞ்சி நில இளம் பெண்டிர் விரும்பி உடுக்கும் உடையாகும். அழகான தழையுடை கட்டிக் கொடுத்துத் தன் காதலியை மகிழ்விப்பது காதலன் கடமையாகும். காட்டு “ முடித்த குல்லை இலையுடை நறும்பூச் செங்கால் மராத்த வாலிண ரிடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகா ழல்குல் திளைப்ப வுடீஇ.” (முருகு - 210 - 4) பசுந்தழையும் மரவுரியும் இசைந்திடவே உடுப்போம். (மீனாட்சியம்மை குறம்) எனக் காண்க. 2. தோழி சிறப்பு 146. சூழ்தலும் உசாத்துணை நிலைமையிற் பொலிமே. இ - ள் : உசாத்துணை நிலைமையின் - தலைவனும் தலைவியும் உசாவுதற்குத் துணையாகிய நிலைமையினாலே, சூழ்தலும் பொலிமே - இருவர்க்கும் புணர்ச்சியுண்மையை நாற்றம் முதலிய எழுவகை யானும் (கள - 13) ஆராய்தலும் தோழிக்கு உரித்து என்றவாறு. சூழ்தல் - ஆராய்தல். பொலிதல் - ஆராயும் போது தலைமை எய்துதல். உசாவுதல் - வினாவுதல். அதாவது, தலைவன் தனது குறை முடிக்கும் படியும், தலைவி தனது வரைதல் வேட்கையையும் வினாவுதலாம். அவ்வாறு தலைவனும் தலைவியும் தங்கட்கு வேண்டியதைக் கேட்டு முடித்துக் கொள்ளும் துணைவியாய் இருப்பதனால், தோழி அவ்விருவரது கூட்ட முண்மையை எழுவகையான் ஆராயுந் தலைமையும் பெறுவள் என்பதாம். தலைவன் தலைவியின் தலைமைக் கிழுக்காய்த் தோழி அன்னார் களவொழுக்கத்தை ஆராய்தல் குற்றமேனும், அவர் தம் களவொழுக்கத்திற்கு அவளையே துணையாகக் கொண்டுள்ளதால், ஆராய்தல் பொருந்துமென வழுவமைத்தவாறாம். எடுத்துக் காட்டுப் பின்னர்க் காட்டப்படும். (28) 3. தோழி ஆராய்ச்சி 147. குறையுற வுணர்தல் முன்னுற வுணர்தல் இருவரு முள்வழி அவன்வர வுணர்தலென மதியுடம் படுத்தல் ஒருமூ வகைத்தே இ - ள் : 1. குறையுற உணர்தல் - தலைவன் தோழியைத் தன் குறை முடிக்கும்படி வேண்டுதலால் உணர்தல், 2. முன்னுற உணர்தல் - குறிப்பால் மிகவும் உணர்தல், 3. இருவரும் உள் வழி அவன் வர உணர்தல் - தலைவியும் தோழியும் ஒருங்கிருந்த வழித் தலைவன் வருதலால், தலைவன் குறிப்பும் தலைவி குறிப்பும் கண்டு உணர்தல், என மதியுடம் படுத்தல் ஒரு மூவகைத்தே - என இருவர் கருத்தினையும் தன் கருத்தோடு ஒன்று படுத்து உணர்தல் மூன்று வகைப்படும் என்றவாறு. முன் - முன்னம் - குறிப்பு, உற - மிக. மூன்றானும் கூட்ட முண்மையை உணர்தலாம். மதியுடம் படுத்தல் - இருவர் உள்ளக் கருத்தினையும் - இருவரும் ஒருவரை யொருவர் காதலிக்கிறார் என்பதை ஆராய்ந்தறிதல். 1. முன்னுற வுணர்தல், 2. குறையுற வுணர்தல், 3. இருவரும் உள்வழி அவன் வர உணர்தல் என முறைப்படுத்துக. காட்டு 1. “ தோளா ரெல்வளை தெளிர்ப்ப நின்போல் யானு மாடிக் காண்கோ தோழி.” இது, முன்னுற வுணர்தல். இதில், கூட்ட முணராதாள் போல, நாணிற்கு மாறாகாமல் கூறுதல் காண்க. 2. “ நின்னின் விடாஅ நிழல்போற் றிரிதருவாய் என்னீ பெறாததி தென்.” (கலி - 61) இது, குறையுற வுணர்தல். 3. “ ஏனல் காவல் இவளு மல்லள் மான்வழி வருகுவன் இவனு மல்லன் நரந்தங் கண்ணி இவனோ டிவளிடைக் கரந்த வுள்ளமொடு கருதியது பிறிதே.” இது, அவன்வர வுணர்தல். (29) 4. எண்வகை ஆராய்ச்சி தோழி மதியுடம்படுங்கால் அவள் ஆராயும் ஆராய்ச்சி யெல்லாம் நாட்டம் எனப்படும். அது எட்டாம். அவற்றுள், முன்னுறு புணர்ச்சியை உணர்தற்குரியவை நாற்றம் முதலிய ஏழாம். முன்னுறு புணர்ச்சி - முன்னமே நிகழ்ந்த புணர்ச்சி. 13. 1. நாற்றம் 5. செய்வினை மறைப்பு 2. தோற்றம் 6. செலவு 3. ஒழுக்கம் 7. பயில்வு 4. உண்டி 8. பல்வேறு கவர் பொருள் நாட்டம் இ - ள் : நாற்றம் முதலிய ஏழும் முன்னுறு வுணர்தலாகும். புணர்ச்சி எதிர்ப்பாடு - எதிர்ப்பாடு புணர்ச்சி என மாறுக. எதிர்ப்பாடு புணர்ச்சியாவது - கொடுப்பாரின்றி இருவரும் தாமே எதிர்ப்பட்டுப் புணரும் புணர்ச்சி. உள்ளுறுத்து வரூஉம் உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை - அப் புணர்ச்சி எதிர்ப்பாடு நிகழ்ந்ததனைத் தோழி தன் உள்ளத்துள்ளே எழுந்த ஐயவுணர்வினை, நாற்ற முதலிய ஏழினாலும் தெளிந்து புணர்ச்சி உண்டென்பதை உணர்ந்த பின். ஏழினாலும் உணர்ந்த பின்பே தலைவியிடம் தோழி சொல்லாடுவாள் என்பதற்குப் பின்றை என்றார். அல்லது, உணர்ந்தபின் மெய்யினும் பொய்யினும் நாடு மென்க. இவ்வேழினாலும் முன்பே இருவரும் எதிர்ப்பட்டுப் புணர்ந்துள்ளனர் என்னும் முன்னுறு புணர்ச்சியைத் தோழி அறிவாள். உள்ளுறுத்து வரூஉம் உணர்ச்சி - உள்ளத்துள் எழும் ஐயவுணர்வு. உணர்ச்சி ஏழினும் - உணர்ச்சியை ஏழினாலும். 1. நாற்றமாவது - தலைவி கூந்தலும் நெற்றியும் பேதைப் பருவத்திற்குத்தக மணக்காமல், தலைவன் கூட்டத்தால் சந்தனம், குங்குமம், புனுகு, பல்வகைப் பூக்கள் இவை கலந்து மணத்தல். 2. தோற்றமாவது - கண் காமக்குறிப்பைக் காட்டுதல்; தோளும் மார்பும் பெருத்துக் காட்டுதல். 3. ஒழுக்கமாவது - விளையாட்டு மகளிரொடுகூடி, முற்றிலால் மணல் கொழித்துச் சோறாக்குதல் முதலியவற்றை வெறுத்த குறிப்பினளாய்ப் பெண்டன்மைக் கேற்ப ஒழுகுதல். முற்றில் - சிறுமுறம். 4. உண்டியாவது - முன் பால் முதலியன கொண்டு ஊட்ட உண்டு வந்தவள், இப்போது ஒழுக்கமும் நாணமும் காமமும் மிகவே, அதை வெறுத்த உள்ளத்தாளாதல். 5. செய்வினை மறைத்தலாவது - முன்பு போலாது, இக் காலத்து நினைவும் செயலும் தலைவனோடு பட்டனவாகலான், அவை பிறர்க்குத் தெரியாமல் மறைத்தல்; விளையாட்டு மகளிரோடு கூடாது இடந்தலைப் பாட்டுக்கு ஏதுவாக நீங்கி நிற்றல். 6. செலவாவது - முன்போல் விளையாட்டு நடை நடவாது திருத்தமாக நடந்து செல்லுதல். 7. பயில்வாவது - செவிலியண்டை படுத்துத் தூங்கு தலை வேண்டாது வேறிடத்துப் படுத்துத் தூங்குதல். தலைவியது இவ்வேறுபாட்டால் கூட்ட முண்மையைத் தோழி உணர்வாள். காட்டு “ கூந்தலு நுதலும் சாந்தொடு கமழும், கண்கள வுண்ணுங் காம்பிவர் தோளும் ஏந்தின மார்பும் ஏமுற் றனவே, முற்றில் கைதொட் டட்டில் புகாஅள் பாலு முண்ணாள் பந்துந் தொடாஅள் ஆய நீங்கி அல்கும் ஒருசார், அனநடை பழகத் தனிநடை பயிலும், தாயணை நீங்கித் தனியிடத் துறங்கும் புன்கண் ஏது மறியாள் என்கொல் மற்றிவட் கெய்திய வாறே.” இதனுள், முறையே நாற்ற முதலிய ஏழும் வந்தமை காண்க. “ ஏனல் காவல் இவளுமல்லள் மான்வழி வருகுவ னிவனு மல்லன் கரந்தங் கண்ணி யிவனோ டிவளிடைக் கரந்த வுள்ளமொடு கருதியது பிறிதே எம்முன் நாணுநர் போலத் தம்முள் மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல உள்ளத் துள்ளே மகிழ்ப சொல்லு மாடுப கண்ணி னானே.” இது, புணர்ச்சி யுண்டென்பதை யுணர்ந்தது. 8. பல்வேறு கவர்பொருள் நாட்டம் : மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும் - அங்ஙனம் நாற்ற முதலிய ஏழனானும் உணர்ந்த தோழி, மெய்ப்பொருளானும் பொய்ப்பொருளானும் தலைவி நடுக்கங்கொள்ளாமல், பலவகைப் புதைபொருள் படக்கூறி ஆராய்வாள். இதுவும் முன்னுற வுணர்தலே யாம். அதாவது, தோழி தலைவியைப் பார்த்து, பிறை தொழுவாம் எனவும், அம்புபட்ட புண்ணையுடைய யானையொன்றைக் கண்டேன் எனவும், ஒருவன் தன் பெருமைக்குத்தகாத சிறு சொற் கூறிக் குறை வேண்டி நின்றான்; அவனை நீயும் காண வேண்டும் எனவும், அவன் என்னைக் குறையிரந்தான், நான் மறுத்து விட்டேன் எனவும் கூறுதல். பிறை தொழுவாமெனில், தன் காதலனை யன்றிக் கருதா ளாகையால் உடன்படாள். புண்பட்ட யானையுண்டெனில், தலைவன் தான் எய்திருக்க வேண்டுமென எண்ணித் தலைவி நாணுவள். கண் ஏன் சிவந்த தெனில், சுனையாடிச் சிவந்த தென்பாள். இவை நாண நாட்டம் எனப்படும். தலைவி நாணும்படி நாடுதல். இவ்வாறன்றி, குருதி தோய்ந்த கொம்பையுடைய யானை யொன்றைக் கண்டேன் எனில், அது தலைவற்கு இடையூறு செய்யுமெனத் தலைவி நடுங்குவள். இது நடுங்க நாட்டம் எனப்படும். நடுங்க நாட்டம் களவிற்கு ஆகாதெனவே, ‘வழிநிலை பிழையாது’ என விலக்கினாரென்க. காட்டு “ முன்னுந் தொழத்தோன்றி முள்ளெயிற்றா யத்திசையே இன்னுந் தொழத்தோன்றிற் றீதேகாண் - மன்னும் பொருகளிமால் யானைப் புகார்க்கிள்ளி பூண்போல் பெருகொளியான் மிக்க பிறை.” இது, பிறைதொழுவா மென்றது. இதனுள், எப்போதும் போல் தொழுவாமெனக் கூறலின் மெய்யும், தொழாமை யறிந்தும் தொழுவாமெனக் கூறலின் பொய்யுமாயிற்று. பேஎ நாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை தோளா ரெல்வளை தெளிப்ப நின்போல் யானு மாடிக் காண்கோ தோழி. இது, கண் ஏன் சிவந்ததென, சுனையாடிச் சிவந்ததென, தோழி யானும் ஆடிக் காண்பல் என்றது. “ நெருந லெல்லை ஏனற் றோன்றித் திருமணி யொளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்ற முறழ்கொள இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றிச் சிறுபுறங் கவையின னாக வதற்கொண் டிகுபெயன் மண்ணின் ஞெகிழ்பஞ ருற்றவென் உள்ளவ னறித லஞ்சி. . . இனந்தீர் களிற்றிற் பெயர்தந்தோ னின்றும் தோலா வாறிலை தோழி நாஞ் சென்மோ என்குறைப் புறனிலை முயலும் அண்க ணாளனை நகுக யாமே.” (அகம் - 32) இது, தலைவன் செய்கை கூறி, இன்றும் வருவன், நாம் சென்று காண்பேம் என்றது. இவ்வாறு தோழி தலைவியை நாடுகின்ற காலமும், ‘குறையுறற் கெதிரிய கிழவனை மறையுறப் பெருமையிற் பெயர்த்தல்’ முதல், ‘உரைத்துழிக் கூட்டம்’ ஈறாகவுள்ள எட்டையும் (9-16) தோழி தலைவற்குக் கூறுங் காலமும் ஒருங்கே நிகழும். இவ்வாறு தோழி நாடுங்காலத்துத் தலைவி தோழிக் கறத்தொடு நிற்பாள் (கள - 50). அதாவது, தன் கருத்தை வெளியிடுவாள். 5. தலைவன் தோழியை வேண்டல் 148. அன்ன வகையா னுணர்ந்தபின் னல்லது பின்னிலை முயற்சி பெறானென மொழிப. இ - ள் : அன்ன வகையான் உணர்ந்தபின் அல்லது - முன்னுறவுணர்தல் முதலிய மூவகையானும் தோழி மதியுடம் பட்ட பின் அல்லது, பின்னிலை முயற்சி பெறானென மொழிப - தலைவன் தோழியைக் கூற்றால் குறையிரத்தல் செய்யான் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. தோழி மதியுடம் பட்ட பின்னரே, தலைவன் தலைவியைக் கூட்டுவிக்க வேண்டுமென்று தோழியைக் கேட்பானென்ப தாம். தோழி தன்னை வழிபடவே மதியுடம்பட்டமை கண்டு கூற்றால் கூறுவன். பின்னிலை முயற்சி - குறையிரத்தல். காட்டு : “ நேரிறை வளைத்தோள்நின் றோழி செய்த ஆரஞர் வருத்தங் களையாயோ?” (பொருளியல்) எனத் தலைவன் கூறுதல் காண்க. (30) 6. தோழி கூட்டுதல் 149. முயற்சிக் காலத் ததற்பட நாடிப் புணர்த்த லாற்றலு மவள்வயி னான. இ - ள் : முயற்சிக் காலத்து - தலைவன் தலைவியைக் கூடுதற்கு முயலுங் காலத்தே, நாடி அதற்படப் புணர்த்தலும் - தலைவி கூடுதற்கு முயலுதலை ஆராய்ந்து தலைவனிடம் கூட்டுதலும், அவள்வயின் ஆன ஆற்றல் - தோழியிடத் துண்டான செயற்றிற மாகும் என்றவாறு. அதன் பட - அக்காரியத்திற் பொருந்த, புணர்ச்சிக்கட்பட. ஆற்றல் - ஒன்றனை முடித்தல்; எடுத்த காரியத்தை முடித்தலுமாம். மதியுடம்படுத்தலே யன்றித் தோழி கூட்டவும் பெறுவாள். கூட்டல் - தலைவியைக் குறியிடத் துய்த்தல். (31) 7. தலைவனும் - தோழியும் 1. தலைவன் : 11 18. தோழி குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறல் 2. தோழி : 13 : 9 குறையுறற் கெதிரிய கிழவனை மறையுறப் பெருமையிற் பெயர்த்தல் 10. உலகுரைத்து ஒழித்தல் 11. அருமையி னகற்சி 12. அவளறி வுறுத்துப் பின்வரு கென்றல் 3. தலைவன் : 19. தண்டா திரத்தல் 4. தோழி : 13. பேதைமை யூட்டல் 5. தலைவன் : 20. மற்றைய வழி 6. தோழி : 14. முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துரைத்தல் 7. தலைவன் : 21. சொல்லவட் சார்த்திப் புல்லிய வகை 8. தோழி : 15. அஞ்சி யச்சுறுத்தல் 9. தலைவன் : 22. அறிந்தோ ளயிர்ப்பின் அவ்வழி மருங்கில் கேடும் பீடும் கூறல் 23. தோழி நீக்கலினாகிய நிலை 24. மடன்மாக் கூறல் 10. தோழி : 16. உரைத்துழிக் கூட்டம் இ - ள் : 18. தோழி குறையவள் சார்த்தி மெய்யுறக் கூறலும் - தான் கூறுகின்ற குறை தலைவியிடத்த தென்பதைத் தோழி உண்மை யென்று உணரும்படி கூறுதலும்; தலைவியிடத்துத் தான் கொண்ட காதலைத் தோழி நம்பும்படி கூறுதல். காட்டு “ கருங்கட லுட்கலங்க நுண்வலை வீசி ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழுமீன் உணங்கற்புள் ளோப்பும் ஒளியிழை மாதர் அணங்காகும் ஆன்ற வெமக்கு.” எனக் காண்க. 9. குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப் பெருமையிற் பெயர்ப்பினும் - அங்ஙனம் இரவு வலியுற்றுக் குறைகூறத் தொடங்கிய தலைவனைத் தோழி அக்களவினை அறிந்தும் அறியாள் போலத் தலைவன் பெருமை கூறி அவன் குறிப்பினை மாற்றுவாள்; மாற்றினும் என்க. இரவு வலியுறுத்தல் - தோழியைக் குறையிரக்கத் துணிதல். காட்டு : “ கல்லோங்கு சாரற் கடிபுனங் காத்தோம்பும் நல்கூர்ந்தார் மாட்டு நயந்தொழுகித் - தொல்வந்த வான்றோய் குடிக்கு வடுச்செய்தல் தக்கதோ தேன்றோய்பூங் கண்ணியீர் நீர்.” இது, பெருமையிற் பெயர்த்தது. 10. உலகு உரைத்து ஒழிப்பினும் - தலைவன் மேலும் நிற்கின், உலகத்தாரைப் போல நீயும் வரைந்து கொள் என நீக்குவாள். காட்டு : “ கோடீ ரெல்வளைக் கொழுமணிக் கூந்தல் ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின் தென்கழிச் சேயிறாப் படூஉம் தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ?” (ஐங் - 196) எனக் காண்க. 11. அருமையின் அகற்சியும் - மறுநாளுந் தலைவன் வரின், தலைவி இப்போது காண்டற்கு அரிய ளெனக் கூறி அகற்றுவாள். காட்டு “ நேரிறை வளைத் தோள்நின் றோழி செய்த ஆரஞர் வருத்தங் களையா யோவென எற்குறை யுறுதி யாயிற் சொற்குறை என்பதத் தெளிய ளல்லள்.” (பொருளியல்) எனக் காண்க. எளியள் அல்லள் என அருமை கூறினாள். 12. அவள் அறிவுறுத்துப் பின்வரு கென்றலும் - பின்னும் அவன் செல்லாது நின்றால், நீ காதலித்த தலைவிக்கு நீயே சென்று உரைத்துப் பின்னர் என்னிடம் வா என்று நீக்குவாள். பொருள் விளக்கத்தின் பொருட்டு உம்மை நீக்கி உரைக்கப் பட்டது. இனி வருவனவற்றிற்கும் இஃதொக்கும். இவை நான்கும் சேட்படை. தலைவனைச் சேண்படுத்தல். சேண் - தொலைவு. அதாவது, தம்மையணுகாமல் செய்தல். காட்டு : தன்னையுந் தானாணுஞ் சாயலாட் கீதுரைப்பின் என்னையும் நாணப் படுங்கண்டாய் - மன்னிய வேயேய்மென் றோழிக்கு வேறா யினியொருநாள் நீயே யுரைத்து விடு. எனக் காண்க. தலைவன் : 19. தண்டாது இரத்தலும் - இடந்தலைப்பாடு முதலிய கூட்டங்களான் அமையாது தலைவன் பகற்குறியும் இரவுக் குறியும் வேண்டலும். தண்டாது - அமையாது. காட்டு “ பாலொத்த வெள்ளருவி பாய்ந்தாடிப் பல்பூப்பெய் தாலொத்த ஐவனங் காப்பாள்கண் - வேலொத்தென் நெஞ்சம்வாய்ப் புக்கொழிவு காண்பா ளெவன்கொலோ அஞ்சாயற் கேநோவல் யான்.” (திணை - நூற் - 18) இது, பகற்குறி இரந்தது. அருவியாடலும், ஐவனங் காத்தலும் கூறலான் பகலாயிற்று. “ எல்லு மெல்லின் றசைவுபெரி துடையன் மெல்லிலைப் பரப்பின் விருந்துண வொருவன்.” (அகம் - 110) இது, தலைவன் இரவுக்குறி வேண்டியதனைத் தோழி கூறியது. தோழி : 13 பேதைமை ஊட்டலும் - தலைவி பேதைப் பருவத்தாளெனக் கூறி விலக்குவள். தலைவனை அறியாமை யுடையவனாகக் கூறி விலக்குதலுமாம். பேதைப் பருவம் - காதற்குறிப் பறியாத பருவம். நின்னோயை அறியும் அறிவிலள் என்பதாம். காட்டு “ நறுந்தண் டகரம் வகுள மிவற்றை வெறும்புதல்போல் வேண்டாது வெட்டி எறிந்துழுது செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு நொந்தினைய வல்லளோ நோக்கு.” (திணை, நூற் - 24) புதல் போல் தகர முதலியவற்றை வெட்டும் அறிவிலார் தங்கை நின்னோய் அறிய வல்லளோ என்றமை காண்க. “ நெடுந்தேர் கடாஅய்த் தமியராய் நின்று கடுங்களிறு காணீரோ வென்றீர் - கொடுங்குழையார் யானை யதருள்ளி நிற்பரோ தம்புனத் தேனற் கிளிகடிகு வார்.” இது, தலைவனைப் பேதைமை யூட்டியது. தலைவன் : 20. மற்றைய வழியும் - அதனால் தலைவன் இரந்து பின்னிற்றலை நீங்குவான். மற்றைய வழி - வேறு வழி; பின் னிற்றற் கெதிரான - அதை நீங்கும் வழி. காட்டு “ மாய்கதில் வாழிய நெஞ்சே, நாளும் மெல்லியற் குறுமகள் நல்லகம் நசைஇ அரவிரை தேரும் அஞ்சுவரு சிறுநெறி இரவி னெய்தியும் பெறாஅ யருள்வரப் புல்லென் கண்ணைப் புலம்புகொண் டுலகத் துள்ளோர்க் கெல்லாம் பெருநகை யாகக் காமங் கைம்மிக வுறுதர ஆனா விரும்படர் தலைத்தந் தோயே.” (அகம் - 258) இது, தன்னெஞ்சினை இரவு விலக்கியது. தோழி : 14 முன்னுறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தலும் - தலைவன் தலைவியைப் புணர்ந்துவரின், நான் அப்புணர்ச்சியை அறிவேன் எனத் தோழி கூறுவள். முறை நிறுத்தல் - நிகழ்ந்த முறையை உண்மை யாக்கல்; நிலை நிறுத்தல். தோழியறியாமற் புணர்ந்து வந்தானென்க. காட்டு “ நறுந்தண் கூந்தற் குறுந்தொடி மடந்தை சிறுமுதுக் குறைவி யாயினள் பெரிதென நின்னெதிர் கிளத்தலும் அஞ்சுவ லெனக்கே நின்னுயி ரன்ன ளாயினுந் தன்னுறு விழுமங் காத்த லானே.” இதனுள், “நீ அவட்கு உரைப்பா யெனக் கருதி, நின்னெதிர் கிளத்தல் அஞ்சுவல்” என்றதனால், புணர்ச்சி யுணர்ந்தமை கூறினாள். தலைவன் : 21 சொல்லவள் சார்த்திப் புல்லிய வகையினும் - தலைவன் தன் வருத்தத்தைத் தலைவியிடம் சார்த்திக் கூறுதல் கேட்ட தலைவி, இனி ஆற்றானென் றெண்ணித் தோழி யுணராமல் தானே கூடுவள். அதைத் தலைவன் புகழ்ந்து கூறுவன். சார்த்தல் - அவற்றால் உண்டானதெனக் கூறல். காட்டு “ அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுடங்கிடைப் பொங்கரி பரந்த வுண்கண் அங்கலிழ் மேனி அசைஇய வெமக்கே.” (ஐங் - 174) இது, புணர்ச்சி வியந்தது. தோழி : 15. அஞ்சி அச்சுறுத்தலும் - அது கேட்ட தோழி, பெற்றோர் சுற்ற முதலியவர்கட் கஞ்சினளாய்த் தலைவியும் அவரை அஞ்சுவள் எனக் கூறுவள். அச்சுறுத்தல் - அச்சத்தை மிகுத்துக் கூறல். காட்டு “ யானை யுழலு மணிகிளர் நீள்வரைக் கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம் ஏனலு ளைய வருதன்மற் றென்னைகொல் காணினுங் காய்வ ரெமர்.” (திணை - ஐம் - 6) இது, தமரை அஞ்சிக் கூறியது. தலைவன் : 22 அறிந்தோள் அயிர்ப்பின் அவ்வழி மருங்கில் கேடும் பீடும் கூறல் - நீ கூறியதை நான் தலைவியிடம் கூற மறந்துவிட்டேன் எனத் தோழி கூறின், தன்னோடு கூடாமையால் தலைவிக்குண்டான வருத்தத்தையும், அதனை யவள் ஆற்றி யிருந்த பெருமையையும் கூறுவன். அறிந்தோள்- தோழி; மதியுடம் பட்டவள். அயிர்த்தல் - மறுத்தல். அவ்வழி மருங்கு - அவ்விடத் துண்டான, கூறாமையினால் ஆன. காட்டு : தண்டழை செரீஇயும் தண்ணென வுயிர்த்தும் கண்கலுழ் முத்தம் கதிர்மார் புறைத்தும் ஆற்றின ளென்பது கேட்டனம் ஆற்றா என்னினு மவளினு மிகந்த இன்னா மாக்கட்டிந் நன்ன ரூரே. இது, கேடும் பீடும் கூறியது. தலைவன் : 23. தோழி நீக்கலின் ஆகிய நிலைமையும் நோக்கி - காவலர் கடியரெனத் தோழி கூறி நீக்கி நிறுத்தினதினால் தனக்குண்டாகிய வருத்தத்தையும் பார்த்துத் தலைவன் கூறுவன். முன் தலைவிக் குண்டான வருத்தங் கூறினான். இதில் தனக்குண்டான வருத்தங் கூறினான். இது சேட்படுத்தல். தோழி அஞ்சி அச்சுறுத்தி நீக்கி நிறுத்தினதினால் (15) வந்த வருத்தம். காட்டு “ பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி அரிதவா வுற்றனை நெஞ்சே, நன்றும் பெரிதா லம்மநின் பூசல் உயர்கோட்டு மகவுடை மந்தி போல அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.” (குறுந் - 29) இது, தலைவன் தன் வருத்தங் கூறியது. தலைவன் : 24. மடல்மா கூறும் இடனும் ஆர் உண்டே - இனி நீ உடன்படாவிடின் மடலேறுவேன் எனக் கூறும் இடமும் உண்டு. ஆர் - அசை. நோக்கி மடன்மாக் கூறுமென்க. (மடலேறுதல் இன்னவென்பதை - அகத் - 38 உரையிற் காண்க.) காட்டு : “ நாணாக நாறு நனைகுழலாள் நல்கித்தன் பூணாக நேர்வளவும் போகாது - பூணாகம் என்றே னிரண்டாவ துண்டோ மடன்மாமேல் நின்றேன் மறுகிடையே நேர்ந்து.” (திணை. நூற் - 16) இது, தோழிக்கு மடலேறுவ லெனக் கூறியது. தோழி : 16. உரைத்துழிக் கூட்டமொடு - அது கேட்ட தோழி குறியிடங் கூறுவள். அக்கூட்டத்தோடே, எஞ்சாது கிளந்த இருநான்கு கிளவியும் - ஒழியாமல் கூறிய எட்டுக் கிளவியும். உரைத்துழிக் கூட்டம் - ஆய்த்து நீங்கித் தன்னொடு நின்ற தலைவியை ஓரிடத்து நிறுத்தி, இன்னவிடத்துத் தலைவியை எதிர்ப்படுவாய் எனத் தோழி உரைத்த விடத்துச் சென்று கூடுங் கூட்டம். இது குறியிடம். இரு நான்கு கிளவியும் மதியுடம் பாட்டின் முதற்கூட்டத்திற்குரியவென முடிக்க. இதுவே தோழியால் முதலிற் கூடுங்கூட்டம். தோழி ஆராய்ச்சிக்கு நாற்ற முதல் பல்வேறு கவர் பொருள் நாட்ட மீறாகிய எட்டும்போக. பெருமையிற் பெயர்த்தல் முதல் உரைத்துழிக் கூட்டம் ஈறாகவுள்ள எட்டும் மதியுடம்பாட்டின் முதற் கூட்டத்திற்குரிய கிளவிகள் ஆம் என்பதாம். காட்டு : “ நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பினென் நின்குறி வந்தனென் இயறேர்க் கொன்க, செல்கஞ் செலவியங் கொண்மோ அல்கலும் ஆர லருந்து வயிற்ற நாரை மதிக்கும் என்மகள் நுதலே.” (குறுந் - 114) இது, தலைவியை இடத்துய்த்து மீண்ட தோழி தலைவற்கு இடங் கூறியது. செலவியங்கொள் - நீயே அவளைப் போக விடு. 8. தோழி கூற்றுள் வழுவமைதி 150. இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி நிரம்ப நீக்கி நிறுத்த லன்றியும், வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலும் நல்வகை யுடைய நயத்திற் கூறியும் பல்வகை யானும் படைக்கவும் பெறுமே. 1. சேட்படை, 4. நல்வகையுடைய நயத்தில் கூறல், 2. வாய்மை கூறல், 5. பல்வகையானும் படைத்தல் 3. பொய்தலைப் பெய்தல், இவை யைந்தும் தலைவன் இரந்து குறையுறும்போது தோழி கூறுவனவாம். இவை தோழி தலைவற்குக் கூறத்தகாதன கூறுதலான் வழுவாயினும், நாடக வழக்காகவும் உலகியல் வழக்காகவும் புனைந்துரைத்தமையான் அமைந்தன. இ - ள் : 1. இரந்து குறையுற்ற கிழவனை - தன் காரியத்தை முடித்துத் தரும்படி கேட்கும் தலைவனை, தோழி நிரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும் - தோழி மிகத் தொலைவில் நீக்கி நிறுத்துதல் அல்லாமலும், இது சேட்படை. 2. வாய்மை கூறலும் - உமது கூட்டத்தினை யான் முன்னரே அறிவேன் என மெய்யாகக் கூறுதலும், 3. பொய்தலைப் பெய்தலும் - தலைவன் அப்புணர்ச்சி இல்லையெனில், அவனைப் பொய்யன் எனக் கூறுதலும், 4. நல்வகை உடைய நயத்தில் கூறியும் - நல்ல கூறுபாடுடைய சொற்களை அசதியாடிக் கூறியும்; அசதி - கேலி. நல்ல கூறுபாடுடைய சொற்கள் - களவொழுக்கத்திற்குப் பொருந்திய சொற்கள். 5. பல்வகையானும் படைக்கவும் பெறும் - இக்கூறியவாறன்றி வேறுவகையானும் புனைந்துரைக்கவும் பெறும் என்றவாறு. படைத்தல் - கற்பித்துக் கூறுதல். 1. நிரம்ப நீக்கி நிறுத்தலும், 13 : 11உம் ஒன்றே. அதற்குக் காட்டிய எடுத்துக் காட்டே இதற்கும். காட்டு 2. “ எமக்கிவை யுரையன் மாதோ, நுமக்கியான் யாரா கியரோ பெரும, ஆருயிர் ஒருவி ரொருவிர்க் காகி முன்னாள் இருவிர் மன்னும் இசைந்தனி ரதனால் அயலே னாகிய யாஅன் முயலேன் போல்வனீ மொழிபொருட் டிறத்தே.” இது, வாய்மை கூறியது. நுமது கூட்டத்தினை அறிவேனெனல் காண்க. 3. “ நீயே, பொய்வன் மையிற் செய்பொருள் மறைத்து வந்துவழிப் படுகுவை யதனால், எம்மை யெமக்கே எய்திடு வலனே.” இது, பொய்தலைப் பெய்தது. ‘செய்பொருள் - புணர்ச்சி’. ‘செய்பொருள் மறைத்து வந்து வழிப்படுகுவை’ எனப் பொய் கூறுகின்றா யென்றமை காண்க. 4. “ அன்னையு மறிந்தனள் அலரு மாயிற்று நன்மனை நெடுநகர் புலம்புகொள வுறுதரும் இன்னா வாடையு மலையும் நும்மூர்ச் செல்கம் எழுமோ தெய்யோ.” (ஐங் - 236) இது, நல்வகையுடைய நயத்திற் கூறியது. நும்மூர்ச் செல்கம் என அசதியாடிக் கூறினமை காண்க. 5. படைத்துக் கூறுவன : 1. நீயே சென்று கூறெனல் 2. அறியாள் போன்று குறியாள் கூறல் காட்டு : 1. “ என்னை யெதிர்ப்பா டெவன்கொ லிடுகிடைக்கு நின்வரவு நீயே யுரை.” (32) 2. இரண்டாங் கூட்டம் தலைவன் : 12 : 1. பண்பிற் பெயர்ப்பினும் தோழி : 13 17. வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணங்குறித்த காலையும் 18. புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற் கண்ணும் 19. குறைந்து அவட் படரினும் 20. மறைந்தவள் அருகத் தன்னொடும் அவளொடும் முதல் மூன் றளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும் இ - ள் : 1. பண்பில் பெயர்ப் பினும் - தலைவன் மடன் மாக்கூறின் தோழி அதை விலக்குவது பண்பில் பெயர்த்தல் எனப்படும். அதாவது, மடலேறுவேன் என்ற குணத்தினின்றும் மாற்றுதல். அப்போது தலைவன் கூறுவன். காட்டு “ குன்றக் குறவன் காதல் மடமகள் வண்டுபடு கூந்தல் தண்டழைக் கொடிச்சி வளையள் முளைவா யெயிற்றள் இளைய ளாயினும் ஆரணங் கினளே.” (ஐங் 256) இது, தோழி தலைவியின் இளமை கூறி மடல் விலக்கத் தலைவன் கூறியது. அணங்கினள் - கண்டாரை வருத்தும் பேரழகுடையவள். தோழி : 13 : 17 வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணம் குறித்த காலையும் - தன் முன்னர் வந்து நின்ற தலைவனைக் கண்டும் வாராதான் போலப் பாசாங்கு செய்து, தலைவன் வாராமையால் தலைவி ஆற்றியிருந்த காரணத்தைக் குறிப்பாகக் கூறுங் காலையுங் கூறுவள். பொறுத்தல் - ஆற்றியிருத்தல். காரணமாவது - நீவாராமையால் அவள் ஆற்றாளென்று நின்னை ஏற்றுக்கொள்கிறேம் என்றல். கண்டும் காணாதாள் போற் கூறுகின்றா ளென்க. காட்டு : “ இரந்தோர் வறுங்கல மல்க வீசிப் பாடுபல வமைத்துக் கொள்ளை சாற்றிக் கோடுயர் திணிமணற் றுஞ்சுந் துறைவ, பெருமை யென்பது கெடுமோ வொருநாள் மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத் தண்ணறுங் கானல் வந்துநும் வண்ண மெவனோ என்றனிர் செலினே.” (அகம் - 30) இதனுள், தம்மால் துன்புற்று வருந்துகின்றானை ஒரு நாள் வந்திலிர் என மாயஞ் செப்பியவாறும், நீர்வாராமையால் தலைவியின் வண்ணம் வேறுபடு மென நின்னை ஏற்றுக் கொள்கிறேம் எனக் காரணங் கூறியவாறுங் காண்க. 18. புணர்ந்த பின் அவன் வயின் வணங்கற் கண்ணும் - அக்கூட்டத்தின் பின், முன்பு தன்னைப் பணிந்து குறையிரந்து நின்ற தலைவனைத் தோழி பணிந்தொழுகு மிடத்தும் கூறுவள். காட்டு : “ இவளே, நின்சொற் கொண்ட வன்சொற் றேறிப் பசுநனை ஞாழற் பல்கிளை யொருசிறைப் புதுநல னிழந்து புலம்புமா றுடையள் உதுக்காண் டெய்ய உள்ளல் வேண்டும் நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் கடலுங் கானலுந் தோன்றும் மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே.” (குறுந் - 81) இதனுள், ‘எம் சிறுநல்லூர் உள்ளல் வேண்டும்’ என வணங்கிக் கூறியவாறு காண்க. 19. குறைந்து அவள் படரினும் - தலைவன் இரந்து பின்னின்றமை கண்டு தோழி மனமிரங்கி, தலைவியிடத்தே சென்று தலைவன் குறையைக் கூறினும். குறையிரந்து என்பது, குறைந்து என நின்றது. படர்தல் - செல்லல், சேறல். காட்டு : “ வளையணி முன்கை வாலெயிற் றின்னகை இளைய ராடுந் தழையவிழ் கானல் விருந்தென வினவி நின்ற நெடுந்தோ ளண்ணற் கண்டிகும் யாமே.” (ஐங் - 198) யாம் அண்ணலைக் காண்போம் எனல் காண்க. 20. மறைந்தவள் அருக - நாண் மிகுதியால் தலைவி தனது வேட்கையை ஒளித்துத் தோழி கூறுவதற்கு உடன் படாது நிற்கவே, தன்னொடும் அவளொடும் முதன் மூன்று அளைஇ - தலைவன் தலைவியர்பால் முன்னிகழ்ந்த இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் ஆகிய மூன்றனையும் தான் அறிந்தமை குறிப்பால் உணர்த்தி, பின்னிலை பல்வேறு நிகழும் மருங்கினும் - தலைவியை இரந்து பின்னிற்றல், பலவகைப்பட்டு நடக்குமிடத்தும் தோழி கூறுவள். மறைந்த - மறைந்த. அருகல் - சுருங்கல், உடன் படாமை. இரந்து பின்னின்றவள் - தோழி. அவை, ஒரு தலைவன் யானை முதலிய வினாவியும், தழையுங் கண்ணியுங் கொண்டும் இப்புனத்து வருகின்றா னெனவும், அவன் என்னிடம் பெரிதும் குறையுடையானெவும் குறையை நான் முடியாததால் வருந்துகின்றானெனவும், அத்தழையை நீ ஏற்றல் வேண்டுமெனவும் அவன் வேண்டும் குறை முடித்தற்கு இது இடம் எனவும், யான் கூறுவதை ஏற்றுக் கொள்ளாயானால் நின் பெற்றோரைக் கேட்டு அவன் குறை முடிப்பானெனவும், நீ மறுப்பின் அவன் மடலேறுவன், வரைபாய்வன் எனவுங் கூறிக் குறை நயப் பித்தலாம். குறை நயப்பித்தல் - தலைவியை இணங்கு வித்தல், தலைவன் வேண்டுவதை விரும்பும்படி செய்தல். மறைந்தவள் - வினையாலணையும் பெயர். தலைவி நாணத்தால் வேட்கையை மறைத்துத் தோழி கூறுவதை ஏற்றுக் கொள்ளாது நிற்கவே, நீ முன்னரே அவனோடு கூடியதை நான் அறிவேன் எனக் குறிப்பாற் கூறி இணங்குவிப்பாளென்க. காட்டு : 1. “ புனைபூந் தழையல்குற்பொன்னன்னாய்! சாரல் தினைகாத் திருந்தேம்யா மாக - வினைவாய்த்து மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத் தாம்வினவ லுற்றதொன் றுண்டு.” (ஐந் - ஐம் - 14) இது, நம்மிடம் குறையுடையா னென்றது. ஒன்று - புணர்ச்சி. 2. “ ஓரை யாய மறிய வூரன் நல்கினன் தந்த நறும்பூந் தண்டழை ஆறுபடி னெவனோ தோழி வீறுசிறந்து நெடுமொழி விளக்குந் தொல்குடி வடுநாம் படுத்த லஞ்சுது மெனவே.” இது, கையுறை யேற்கும்படி தலைவிக்குக் கூறியது. ஓரை - விளையாட்டு. ஆறுபடின் எவன் - வழிப்படுதலான் என்ன கெடுதி. வழிப்படுதல் - தழையேற்றல். இல்லையேல் தொல்குடிக்கு நாம் வடுப்படுத்தவராவோம் எனத் தழையேற்பித்தாள். 3. “ அம்மலைக் கிழவோன் நந்நயந் தென்றும் வருந்தினன் என்பதோர் வாய்ச்சொற் றோறாய், நீயுங் கண்டு நுமரொடு மெண்ணி அறிவறிந் தளவல் வேண்டும் மறுத்தரற் கரிய வாழி தோழி, பெரியோர் நாடி நட்பி னல்லது நட்டும் நடாதார் ஒட்டியோர் திறத்தே.” (நற் - 32) இது, நீ ஏற்றுக்கொள்; இன்றேல் நுமரொடு கூறி ஏற்கும்படி செய்வானென்றது. 4. மறவல் வாழி தோழி, துறைவர் கடல்புரை பெருங்கிளை நாப்பண் மடல்புனைந் தேறிநிற் பாடும் பொழுதே. இது, மறுக்கின் மடலேறுவா னென்றது. இவ்வளவும் பாங்கி மதியுடம்பா டாகும். 2. குறியிடம் குறியிடமாவது - தலைவியும் தோழியும் குறித்த இடத்தே தலைவன் சென்று தலைவியைக் கூடுதலாம். இது, பகலிற் கூடும் பகற் குறியும், இரவிற் கூடும் இரவுக் குறியும் என இருவகைப் படும். 1. இருவகைக் குறி 151. குறியெனப் படுவ திரவினும் பகலினும் அறியத் தோன்றும் ஆற்ற தென்ப இது, தலைவனும் தலைவியும் கூடுதற் குரிய காலமும் இடமும் கூறுகின்றது. இ - ள் : குறி எனப்படுவது - குறி என்று சொல்லப்படுவது, இரவினும் பகலினும் - இரவின் கண்ணும் பகலின் கண்ணும், அறியத் தோன்றும் ஆற்றது என்ப - தலைவனும் தலைவியும் தோழியும் அறியும்படியுள்ள வழியையுடைய இடம் என்று கூறுவர் புலவர் என்றவாறு. தோழி, தலைவியை ஓரிடத்து இருக்கச் செய்து, தலைவனிடம் சென்று, தலைவியிருக்கும் இடத்தை அவனுக்குக் குறிப்பிட்டுக் காட்ட, அவன் சென்று தலைவியைக் கூடுதற்கு ஏற்ற இடமாகை யாலும், தலைவி குறித்த இடத்தே வந்து தலைவன் கூடுமாகை யாலும், அறியத் தோன்றும் ஆற்றது என்றார். பகற்குறியே முதலில் நடப்பதேனும், இரவு களவுக்குச் சிறத்தலின் முற்கூறினார். இவ்விருவகைக் குறியிடத்தும் தோழி தலைவியைக் குறியிடத் துய்த்துச் சென்று தலைவற்குக் கூறுதலும், தலைவி தானே குறியிடஞ் சென்று கூடுதலுமாம். காட்டு : “ மின்னிகரா மாதே விரைச்சாந் துடன்புணர்ந்து நின்னிகராம் மாதவிக்கண் நின்றருள் நீ - தன்னிகராம் செந்தீ வரமலருஞ் செங்காந்தட் போதுடனே இந்தீ வரங்கொணர்வல் யான்.” (தண்டி - 72 - மேற்) இது, தோழி தலைவியைக் குறியிடத் துய்த்து நீக்குவாள் கூறியது. மாதவி - காட்டுமல்லிகை. சாந்து - சந்தனமரம். (33) 2. பகற்குறி 152. பகற்புணர் களனே புறனென மொழிப அவளறி வுணர வருவழி யான. இ - ள் : அவளறிவு உணர வருவழியான பகல் புணர்களனே - தலைவி காட்டிய குறியிடத்தே தலைவன் சென்று கூடும் பகற்குறி யிடமானது, புறன் என மொழிப - மதிலின் புறத்தே என்று கூறுவர் என்றவாறு. களன் - இடம். ‘அறிவு’ என்பது, அறிந்த இடத்தை உணர்த்தினதால், ஆகுபெயர். உணர வருவழி - தலைவி சுட்டிய களத்தை யறிந்து வருகின்ற இடம். புறமாவது - மதிற்புறத்தேயுள்ள சோலையும், பிறவிடங்களுமாம். மர நிழலும், புதரும், பாறையின் ஒதுக்கிடங்களுமாம். காட்டு : “ புன்னையங் கானற் புணர்குறி வாய்த்த மின்னே ரோதியென் றோழிக்கு. . . பூவேய் புன்னையந் தண்பொழில் வாவே தெய்ய மணந்தனை செலற்கே.” (அகம் - 240) எனக் காண்க. மணத்தல் - புணர்தல். புன்னை நீழல்- குறியிடம். (34) 3. இரவுக் குறி 153. இரவுக் குறியே இல்லகத் துள்ளும் மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே மனையகம் புகாஅக் காலை யான. இ - ள்: அகமனை புகாக் காலையான இரவுக் குறியே - உள் மனையிற் சென்று கூடுதற்கு உரித்தல்லாத முற்காலத்ததாகிய இரவுக் குறியானது, இல்லகத்துள்ளும் மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே - புறமதிலுக்கும் உள்மனைக்கும் இடையே வீட்டிலுள்ளோர் பேசும் பேச்சுக் கேட்கக் கூடிய இடத்தில் நடைபெறும் என்றவாறு. புறமதிற்கும் அகமனைக்கும் இடையிலுள்ள இடம் இல் வரைப்பு எனப்படும். இல்வரைப்பாவன - குளிப்பறை, பண்டசாலை, கொட்டகை, நாடகசாலை, புறத்திண்ணை முதலிய இடங்கள். இன்றும் மாட்டுக் கொட்டகை, வீட்டின் புறத்தேயுள்ள சாவடி, சுற்றுத்திண்ணை முதலிய இடங்களிற் காதலர் கூடுதலை அறிக. இரவுக்குறி சிலநாள் நடந்தபின் தலைவன் அச்சமின்றி அகமனையிற் சென்று கூடுவானாகையால், அதன் முன்னர்க் கூடுங்காலத்தை ‘மனையகம் புகாக்காலை’ என்றார். இதனால், பண்டு களவொழுக்கத்தைப் பெற்றோர் விரும்பின்மை புலப்படும். அல்லகுறிப்பட்ட போது, அகமனையிலிருந்து தோழி சிறைப்புறமாகக் கூறினால், அது கேட்டுத் தலைவன் ஆற்றியிருக்க வேண்டுதலின், ‘மனையோர் கிளவி கேட்கும் வழியது’ என்றார். காட்டு “ அஞ்சிலம் பொடுக்கி அஞ்சினள் வந்து துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்.” (அகம் - 198) இது, இல்வரைப்பிற் புணர்ச்சி நடந்தது. “ தாரன் கண்ணியன் எஃகுடை வலத்தன் காவல ரறிதல் ஓம்பிப் பையென வீழாக் கதவம் அசையினன் புகுதந் துயங்குபட ரகல முயங்கித் தோள்மணந் தின்சொ லளைஇப் பெயர்ந்தனன் றோழி.” (அகம் - 102) இது, மனையகம் புக்கது. (35) 4. தலைவி களஞ்சுட்டல் 154. அவன்வரம் பிறத்தல் அறந்தனக் கின்மையின் களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகும் தான்செலற் குரிய வழியாக லான. இ - ள் : அவன் வரம்பு இறத்தல் - தலைவன் சொன்ன சொல்லைத் தட்டுதல், தனக்கு அறம் இன்மையின் - தலைவிக்குக் கடமையில்லை யாகையாலும், தான் செலற்கு உரிய வழியாக லான - தான் சென்று கூடுதற்குரிய இடத்தைத் தான் உணர்வாள் ஆகலானும், களஞ்சுட்டு கிளவி கிழவியது ஆகும் - தலைவனை இன்னவிடத்து வருக என்று கூறுதல் தலைவிக்கு உரித்தாகும் என்றவாறு. களஞ்சுட்டுக் கிளவி - குறியிடங் கூறல். தலைவன் இருவகைக் குறியும் வேண்டிய வழி அதனை மறுக்காமல் தான் அறிந்த இடத்தினைக் குறிப்பாகவேனும் சிறைப்புறமாகவேனும் தோழியா லேனும் தலைவி கூறுவள் என்பதாம். காட்டு “ மடக்கிளி யெடுத்தல் செல்லாத் தடக்குரல் குலவுப்பொறை யிறுத்த கோற்றலை யிருவிக் கொய்தொழி புனமு நோக்கி, நெடிது நினைந்து பைதலன் பெயரலன் கொல்லோ வைதேய் கயவெள் ளருவி சூடிய வுயர்வரைக் கூஉங்க ணஃதெம் மூரென ஆங்கதை யறிவுறன் மறந்திசின் யானே.” (அகம் - 38) ‘மறந்திசின்’ என்றதால், தலைவி குறிப்பால் களஞ்சுட்டியது. (36) 5. தோழி களஞ்சுட்டல் 155. தோழியின் முடியும் இடனுமா ருண்டே. இ - ள் : தலைவி குறிப்பால் தோழி குறியிடங் கூறுதலன்றித் தானேயுங் கூறுவள் என்றவாறு. ஆர் - அசை. தோழி குறித்த இடமும் தலைவி சென்று கூடுதற்குரிய இடமாம் என்பது கருத்து. முடியும்; உம் - இறந்தது தழுவிய எச்சம். காட்டு “திரைச்சுர முழந்த திண்டிமில் விளக்கில் பன்மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய எந்தையுஞ் செல்லுமார் இரவே, அந்தில் அணங்குடைப் பனித்துறை கைதொழு தேத்தி ஆயு மாயமோ டயரும், நீயும் தேம்பா யோதி திருநுதல் நீவிக் கோங்குமுகைத் தன்ன குவியிணை யாகத் தின்றுயி லமர்ந்தனை யாயின், வண்டுபட விரிந்த செருந்தி வெண்மண லெக்கர்ப் பூவேய் புன்னையந் தண்பொழில் வாவே தெய்ய மணந்தனை செலற்கே.” (அகம் - 240) இது, தோழி களஞ்சுட்டியது. ‘நீ’ என்றது தலைவனை. ‘ஓதி’ என்றது தலைவியை. (37) 6. அல்ல குறிப்படுதல் அல்ல குறிப்படுதல் - குறி அல்ல படுதல். தான் குறித்த தல்லாது வேறுவகையால் குறியுண்டாதல். அதாவது, குறியிடத்துக் கூடவந்த தலைவன் புனலொலிப்பித்தல், புள்ளெழுப்பல் போல்வன செய்வான். அது கேட்டுத் தலைவி சென்று தலைவனைக் கூடுவாள். இயற்கையாகக் காய்கனி விழுவதால் புனலொலி யுண்டாதலும், பறவைகள் தாமாகவே பறத்தலும் கூடுமாகையால், அவற்றைத் தலைவன் செய்த குறியெனக் கொண்டு தலைவி வந்து பார்த்துத் தலைவனைக் காணாது வறிதே செல்வள். அவ்வாறு செல்லும் போது இலை, பூக்களைப் பறித்துப் போட்டு அடையாளம் செய்து செல்வாள். பின் தலைவன் வந்து பார்த்து வருந்துவன். இதுவே அல்ல குறிப்படுதல் எனப்படும். தலைவன், தலைவி, தோழி மூவரும் அல்ல குறிப்படுவர். 1. தலைவி அல்லகுறிப்படுதல் 14: 1. இருவகைக் குறிபிழைப்பு ஆகிய இடத்தும் - இரவுக் குறியும் பகற்குறியும் தப்பியவிடத்தும் தலைவி வருந்திக் கூறுவள். காட்டு : 1. “ முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக் கொழுமட லிழைத்த சிறுபொற் குடம்பைக் கருங்கா லனறில் காமர் கடுஞ்சூல் வயப்பெடை யகவும் பானாட் கங்குல் மன்றம் போழு மினமணி நெடுந்தேர் வாரா தாயினும் வருவது போலச் செவிமுத லிசைக்கு மரவமொடு துயில்துறந் தனவாற் றோழியென் கண்ணே.” (குறுந் - 301) இது, தேரொலியென அல்லகுறிப்பட்டது. ‘பானாட் கங்குல்’ என்றதால், இரவுக்குறி. 2. “ கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே எம்மி லயல தேழி லும்பர் மயிலடி யிலைய மாக்குரல் நொச்சி அணிமிகு மென்கொம் பூழ்த்த மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.” (குறுந் - 138) இது, பூவுதிர்ந்ததால் புனலொலிகேட்டு அல்ல குறிப்பட்டது. பாடு - ஒலி. 3. “ இருள்வீ நெய்தல் இதழகம் பொருந்திக் கழுதுகண் படுக்கும் பானாட் கங்குல் எம்மினு முயவுதி செந்தலை யன்றில், கானலஞ் சேர்ப்பன் போல நின்பூ நெற்றிச் சேவலும் பொய்த்தன்றோ குறியே?” இது, புள்ளொலியால் அல்லகுறிப்பட்டது. இவை மூன்றும் இரவுக் குறி. 2. தோழி அல்லகுறிப்படுதல் 156. அல்லகுறிப் படுதலும் அவள்வயி னுரித்தே அவன்குறி மயங்கிய அமைவொடு வரினே. இ - ள் அவன் குறி மயங்கிய அமைவொடு வரின் - தலைவன் தன் வரவு அறிவிக்கும் குறிகளான புள்ளெழுப்புதல் புனலொலிப் படுத்தல் முதலியன அவனாலன்றி இயற்கையாக நிகழின், அல்ல குறிப்படுதல் - தலைவியைக் குறியிடத்துக் கூட்டுங்கால் அவ்வல்ல குறியால் மயங்குதல், அவள் வயினும் உரித்து - தோழிக்கும் உண்டு என்றவாறு. அல்ல குறிப்படுதலும் என்னும் உம்மையை வயின் என்பதனோடு கூட்டுக. தலைவிபோலத் தோழியும் அல்ல குறிப்படுவள் என்பதாம். காட்டு “ கொடுமுள் மடற்றாழைக் கூன்புற வான்பூ இடையு ளிழுதொப்பத் தோன்றிப் - புடையெலாந் தெய்வங் கமழுந் தெளிகடற் றண்சேர்ப்பன் செய்தான் தெளியாக் குறி.” (ஐந் - ஐம் - 49) இது, அல்ல குறிப்பட்டமை சிறைப்புறமாகக் கூறியது. இது, ‘சேர்ப்பன் செய்தான்’ எனப் படர்க்கையாகக் கூறியதால், சிறைப்புற மாயிற்று. இன்னும் வேறுபட வருவனவுங் கொள்க. (38) 3. தலைவன் அல்லகுறிப்படுதல் 157. ஆங்காங் கொழுகும் ஒழுக்கமு முண்டே ஓங்கிய சிறப்பி னொருசிறை யான. இ - ள் : ஓங்கிய சிறப்பின் - தனது மிக்க தலைமையினால் நேரமறிந்து வாராமையினால், ஒரு சிறை ஆன ஆங்கு - தான் குறிசெய்வதோ ரிடத்தே தன்னாலன்றி இயற்கையா லுண்டான அல்ல குறியிடத்தே, ஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டு - தலைவியும் தோழியும் அல்லகுறியால் துன்புறுமாறு போலத் தலைவனும் துன்புறுதலுண்டு என்றவாறு. ஒருசிறை - குறியிடம். சிறை - இடம். ஆன - உண்டான. முன்னின்ற ‘ஆங்கு’ முன்சூத்திரத்து (38) அல்ல குறியைச் சுட்டிற்று. பின்னின்ற ‘ஆங்கு’ - உவமவுருபு. தலைவன் குறித்த நேரத்தே குறியிடஞ் சேராமையால், இயற்கையாக உண்டான அல்ல குறியிடத்தே தலைவி வந்து போகவே, பின்னர்த் தலைவன் வந்து பார்த்து வருந்திச் செல்லுதலும் உண்டு என்பதாம். தலைவி செய்த அடையாளத்தால், தலைவி வந்து போனதை அறிவான். இருவகைக் குறியினும் புணரும் போது தலைவற்குத் தீய ஓரையும் நாளும் விலக்கில்லை (21). தலைவிக்குப் பூப்பு நாள் மூன்றும் விலக்குண்டு (22). காட்டு : “ நயவன் தைவருஞ் செவ்வழி நல்யாழ் இசையோர்த் தன்ன இன்றீங் கிளவி அணங்குசா லரிவையை நசைஇ வைகலும் இன்னா வருஞ்சுர நீந்தி நீயே என்னை யின்னற் படுத்தனை நெஞ்சே!” (அகம் - 212) இது, அல்ல குறிப்பட்டு நீங்குகின்றான் நெஞ்சிற்குக் கூறியது. (39) தலைவற்குப் புலவியும் ஊடலும் தலைவி செய்த குறியைத் தானே தப்பினும் தலைவற்குப் புலவியும் ஊடலும் உண்டாகும் (கற் - 10) அதாவது, தலைவி அல்ல குறிப்பட்டுச் சென்றபின் குறியிடம் வந்த தலைவன், தான் குறித்த நேரத்தில் தலைவி வரவில்லையென்று புலந்து ஊடுவா னென்க. தலைவி தான் வந்து போனதைப் பூ முதலியன இட்டு அறிவியாது போனபோதே தலைவற்குப் புலவியும் ஊடலும் நிகழும். தலைவி அடையாளமிட்டுச் சென்றும், இருளில் அதைக் காணாமை யாலும் புலப்பான். தான் நேரந் தாழ்த்தது தன் குற்றமாயிருந்தும், தலைவி குற்றஞ் செய்தாளெனப் புலந்தூடுவான். புலத்தல் - மனஞ் சிறிது வேறுபடுதல். ஊடல் - அவ்வேறுபாடு மிகுதல். புலவி, ஊடலின் தன்மையைத் திருக்குறள். 131, 132, 133 அதிகாரங்களிற் காண்க. தோழி, புலவி ஊடல் நீக்கல் அவ்வாறு தலைவன் புலந்தூடிய போது, தோழி பணிமொழி கூறித் தலைவனது புலவி ஊடலைத் தணிப்பாள் (கற் - 11). தலைவி குறிப்பறிந்து தோழி கூறுவதல்லது தலைவி கூறாள். காட்டு : 1. “ குணகடற் றிரையது பறைதபு நாரை திண்டேர்ப் பொறையன் றொண்டி முன்றுறை அயிரை யாரிரைக் கணவந் தாஅங்குச் சேய ளரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே.” (குறுந் - 128) இதனுள், ‘குணகடல் நாரை குடகடற் றொண்டி முன்றுறை அயிரையை யுண்ண விரும்பினாற்போல, சேயளரியளைப் படர்தி நெஞ்சே’ எனத் தலைவன் குறிபிழைத்துழி ஊடிய தறிக. “ கலந்தநோய் கைம்மிகக் கண்படா வென்வயிற் புலந்தாயு நீயாகிற் பொய்யானே வெல்குவை.” (கலி - 46) இது, தலைவி குறிப்பினால் தோழி கூறியது. 4. தலைவற்கு இல்லன 158. ஆறின தருமையும் அழிவும் அச்சமும் ஊறு முளப்பட அதனோ ரன்ன. இ - ள் : ஆறினது அருமையும் - வழியினது அருமையும், அழிவும் - விருப்பக் குறைவும், அச்சமும் - பாம்பு, கொடிய விலங்கு முதலியவற்றிற்கு அஞ்சுதலும், ஊறும் - கூட்டத்திற்கு இடையூறு உண்டாமோ என எண்ணுதலும், உளப்பட - இவை போல்வன பிறவும், அதனோரன்ன - தலைவற்கு இல்லை என்றவாறு. ‘அது’ என்றது, ‘துறந்த ஒழுக்கத்தை’ (கள - 21). இவை தலைவற்கு இல்லை எனவே, தலைவியும் தோழியும் ஆறின்னாமை முதலியன எண்ணிக் கூறுவரென்க (கள 46). வழியருமையாவது - மிக்க இருளினும், அரிய வழியினும் வரவேண்டின் அதற்கஞ்சாது வருதல். பிறவாவன - நிலவொளி, கள்வர் முதலியவற்றானும் செலவழுங்கல் இன்மை முதலியன. செலவழுங்கல் - செல்லுதலைத் தவிர்த்தல். களவுக் காலத்தில் தலைவன் எதனாலும் குறியிடத்திற்கு வராமல் நில்லானென்பதாம். (40) 5. தலைவன் ஊர்தியில் வருதல் 159. தேரும் யானையுங் குதிரையும் பிறவும் ஊர்ந்தன ரியங்கலு முரிய வென்ப. இ - ள் : களவுக் காலத்தில் தலைவர், - தேர் யானை குதிரை முதலியன ஊர்ந்து கொண்டு குறியிடஞ் சென்று கூடுதலும் உரியர் என்று கூறுவர் புலவர் என்றவாறு. பிற - கோவேறு கழுதை, சிவிகை முதலியன. இது பழந்தமிழ்த் தலைவர்களின் செல்வப் பெருக்கையும், பலரும் உடன்பட்டு நிகழ்ந்து வந்த களவொழுக்கத்தின் சிறப்பையும் தெரிவிப்பதாகும். காட்டு : “கடுமான் பரிய கதழ்பரி கடைஇ நடுநாள் வரூஉம்” (நற் - 149) எனக் காண்க. ‘இயங்கலும்’ என்ற உம்மையால், ஊர்தியின்றி, இளைய ரொடு வருதலும் உண்டு. காட்டு : “ வல்வில் லிளையரோ டெல்லிச் செல்லாது சேந்தனை செலினே சிதைகுவ துண்டோ?” (அகம் . . ) என வரும். உடன் போக்கிலும் தேர் முதலியன ஊர்ந்து செல்வர். (41) 6. தலைவி மறைபுலப்படாமல் ஒழுகுதல் 160. செறிவும் நிறைவுஞ் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான. இ - ள் : செறிவு முதலிய ஆறும் பெண்பாற்குக் காரணங்கள் - பெண்மைக் குணங்கள் - ஆகும் என்றவாறு. ஆகவே, தலைவி களவொழுக்கத்தை வெளிப்படுத்தாமல் மறைத் தொழுகுவாள் என்பதாம். மறை - களவு. புலப்படாமல் - வெளிப்படாமல், பிறர்க்குத் தெரியாமல். 1. செறிவு - அடக்கம் 2. நிறைவு - மறை புலப்படாமல் அடக்கும் மனத்திட்பம். 3. செம்மை - நேர்மை; மனக்கோட்ட மின்மை. 4. செப்பு - களவின்கட் செய்யத் தகுவன கூறல். 5. அறிவு - நன்மை பயப்பனவும் தீமை பயப்பனவும் அறியும் அறிவு. 6. அருமை - உள்ளக் கருத்தறிதலருமை; அல்லது கிட்டுதற்கரியராதல். இக்குணங்களால் தலைவி மறைபுலப்படுத்தற் குரியளன்மை அறிக. (42) 7. கூற்று தலைவன் : 12 : 2. பரிவுற்று மெலியினும் 3. அன்புற்று நகினும் 4. அவட்பெற்று மலியினும் 5. ஆற்றிடை யுறுதலும் இ - ள் : 2. பரிவுற்று மெலியினும் - இருவகைக் குறியிடத்தும் பலநாள் தலைவியைக் கூடப் பெறாத தலைவன், தலைவி எதிர்ப்பட்ட போது இரக்கமுற்று மெலிந்து கூறுவன்; மெலியினும் கூறுவன் என்க. ‘பரிவுற்று மெலியினும்’ என்றதனால், வேறுபட வருவன. 1. புணர்ந்து நீங்குந் தலைவன் ஆற்றாது கூறுதல் 2. வறும்புனங் கண்டு கூறுதல் 3. இற்செறிப்பு அறிவுறுப்ப ஆற்றானாய்க் கூறுதல் 4. தோழியிற் புணர்ச்சிக்கண் தன்னிலை கொளுத்திக் கூறுதல் 5. இரவுக் குறிக்கண் வருகின்றான் தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறுதல் 2. வறும்புனம் - தினையறுத்த புனம், அல்லது தலைவி இல்லாத புனம். 4. தோழியிற் புணர்ச்சி. தோழியால் குறியிடம் பெற்றுப்புணர்ந்த புணர்ச்சி. கொளுத்தி - அறிவுறுத்தி. காட்டு : “ ஆனா நோயோ டழிபடர்க் கலங்கிக் காமங் கைம்மிகக் கையறு துயரங் காணவு நல்கா யாயின். . . தேனுடை நெடுவரைத் தெய்வ மெழுதிய வினைமாண் பாவை யன்னோள் கொலைசூழ்ந்த தனளால் நோகோ யானே.” (நற் - 185) இது, பகற் குறியிற் பரிவுற்றுக் கூறியது. ‘காணவு நல்காயாயின்’ எனல் காண்க. “ கூகைச் சேவல் குராஅ லேறி ஆரிருஞ் சதுக்கத் தஞ்சுவரக் குழறும் அணங்குகால் கிளறும் மயங்கிருள் நடுநாள் தடமென் பணைத்தோள் மடமிகு குறுமகள் சுணங்கணி வனமார்பு முயங்க லுள்ளி மீன்கண் துஞ்சும் பொழுதும் யான்கண் துஞ்சின் யாதுகொல் நிலையே.” (நற் - 319) இது, இரவுக் குறியிற் பரிவுற்றுக் கூறியது. 1. “ என்று மினிய ளாயினும் பிரிதல் என்றும் மின்னா ளன்றே நெஞ்சம், பனிமருந்து விளைக்கும் பரூஉக்க ணிளமார்புப் படுசாந்து சிதைய முயங்குஞ் சிறுகுடிக் கானவன் பெருமட மகளே.” இது, புணர்ந்து நீங்குவோன் ஆற்றாது கூறியது. 2. “ கோடாப் புகழ்மாறன் கூட லனையாளை வாடா வடகினுளுங் காணேன்போர் - வாடாக் கருங்கொல்வேல் மன்னர் கலம்புக்க கொல்லோ மருங்குல்கொம் பன்னாள் மயிர்.” (திணை - நூற் - 4) இது, வறும்புனங்கண்டு கூறியது. வாடா அடகு - விளை யாட்டிடம். கலம் - மணிமுடி; மயிர் கலம் புகல் - மணமாதல். ‘கூந்தற்படுக்கை’ என்னும் வழக்கை யோர்க. 3. “ பெறுவ தியையா தாயினும் உறுவதொன் றுண்டுமன் வாழிய நெஞ்சே, திண்டேர்க் கைவள ரோரி கானந் தீண்டி எறிவளி கமழு நெறிபடு கூந்தல் மையீ ரோதி மாஅ யோள்வயின் நின்றை யன்ன நட்பின் இந்நோய் இறுமுறை யெனவொன் றின்றி மறுமை யுலகத்து மன்னுதல் பெறினே.” (குறுந் - 199) இது, இற்செறிப் பறிவுறுப்ப ஆற்றானாய்க் கூறியது. ‘பெறுவ தியையா தாயினும் உறுவதொன்றுண்டு’ எனல் காண்க. 4. “ நோயு மகிழ்ச்சியும் வீடச் சிறந்த வேய்வனப் புற்ற தோளை நீயே என்னுள் வருதியோ எழில்நடைக் கொடிச்சி முருகுபுணர்ந் தியன்ற வள்ளி போலநின் உருவுக்கண் ணெறிப்ப நோக்கலாற் றலனே!” (நற் - 82) இது, தோழியிற் புணர்ச்சிக்கண் தன்னிலை கொளுத்திக் கூறியது. 5. “ மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுட் பயில்வதோர் தெய்வங்கொல் கேளீர் - குயில்பயிருங் கன்னி யிளஞாழற் பூம்பொழில் நோக்கிய கண்ணின் வருத்துமென் நெஞ்சு.” (திணை. ஐம் - 49) இது, தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறியது. 3. அன்புற்று நகினும் - தோழி அன்பு தோன்ற நகையாடித் தலைவன் வேண்டியது மறுக்கும் போதும் கூறுவன். காட்டு : “ தகாஅது வாழியோ குறுமகள் நகாஅ துரைமதி யுடையுமென் உள்ளஞ் சாரற் கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போலச் சேயரி பரந்த மாயிதழ் மழைக்கண் உறாஅ நோக்க முற்றவென் பைதல் நெஞ்சம் உய்யு மாறே.” (நற் - 75) எனவரும். ‘என் நெஞ்சம் உய்யுமாறு நகாது உரை’ எனல் காண்க. 4. அவள் பெற்று மலியினும் - தோழியின் உடம்பாடு பெற்று மனம் மகிழினும், தலைவியை இருவகைக் குறியினும் பெற்று மகிழினும் கூறுவன். இரண்டுங் கொள்க. மலிதல் - மகிழ்தல். காட்டு : “ எமக்குநயந் தருளினை யாயிற் பணைத்தோள் ஒண்ணுத லரிவையொடு மென்மெல வியலி வந்திசின் வாழியோ மடந்தை தொண்டி யன்னநின் பண்புபல கொண்டே.” (ஐங் - 175) இது, தோழியின் உடம்பாடு பெற்று மகிழ்ந்து கூறியது. “ நன்றே செய்த வுதவி நன்றுதெரிந் தியாமெவன் செய்குவம் நெஞ்சே, காமர் மெல்லியற் கொடிச்சி காப்பப் பல்குர லேனற் பாத்தருங் கிளியே.” (ஐங் - 288) இது, பகற்குறிக்கண், ‘கிளி புனத்தில் படிகிறது; போய் ஓட்டு’ எனத் தோழி தலைவியை ஏவியதனை அறிந்த தலைவன் தலைவியைப் பெற்றே மென்று மகிழ்ந்து கூறியது. “காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ணொவ்வே மென்று.” (குறள்) இது, இரவுக் குறிக்கண் அவட் பெற்று மகிழ்ந்து கூறியது. 5. ஆற்றிடை உறுதலும் - தலைவியும் தோழியும் தலைவன் வரும் வழியருமை கூறியவிடத்தும் கூறுவன். வழியருமையாவது - வருகின்ற வழியில் கொடிய விலங்கு முதலியன இருக்கு மென்பது. காட்டு : “குருதி வேட்கை யுருகெழு வயமான் வலமிகு முன்பின் மழகளிறு பார்க்கும் மாரி யெண்கின் மலைச்சுர நீளிடை நீநயந்து வருத லெவனெனப் பலபுலந் தழுதன ளுறையு மம்மா வரிவைநின் மாணல முள்ளி வரினெமக் கேமமாகும் மலைமுத லாளே.” (நற் - 192) இது, தலைவி ஆற்றின தருமை கூறியதற்குத் தலைவன் கூறியது. தோழி : 13 21. நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும் 22. எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும் 23. புணர்ச்சி வேண்டினும் 24. வேண்டாப் பிரிவினும் 25. வேளாண் பெருநெறி வேண்டிய இடத்தும் 26. புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பினும் 27. ஓம்படைக் கிளவி பாங்கின் கண்ணும் 28. செங்கடு மொழியாற் சிதைவுடைத் தாயினும் 29. அன்புதலை யடுத்த வன்புறைக் கண்ணும் 30. ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும் 31. காப்பின் கடுமை கையற வரினும் - தோழி கூறுவள். இ - ள் : 21 நல் நயம் பெற்றுழி நயம் புரி இடத்தினும் - தோழி குறியிடஞ் செல்ல வேண்டுமெனக் கூறியதைத் தலைவி ஏற்றுக் கொண்டவழி, அதனைத் தலைவற்குக் கூறுதற்கு விரும்பு மிடத்தும் தோழி கூறுவள். நயம் - 1. குறையிரத்தல்; 2. குறியிடஞ் செல்ல வேண்டல். புரிதல் - விரும்புதல். அவை 1. தலைவன் ஆற்றாமைகண்டு தோழி கையுறையேற்றல் 2. இரவுக் குறியும் பகற்குறியும் நேர்தல், உடம்படல் 3. குறியிடங் காட்டல் 4. தலைவன் வரவினைத் தலைவிக்குக் கூறல் காட்டு : 1. “ பொன்மெலியுமேனியாள் பூஞ்சுணங்கின் மென்மார்பம் என்மெலிய வீங்கினவே பாவமென் - றென்மெலிவிற் கண்கண்ணி வாடாமை யானல்ல வென்றுரைத்தால் உண்கண்ணி வாடா ளுடன்று.” (திணை . நூற் - 21) இது, கையுறை யேற்றது. அண்கண்ணி - குறுங்கண்ணி. 2. “ ஒருநா ளுறைந்திசி னோர்க்கும் வழிநாட் டம்பதி மறக்கும் பண்பி னெம்பதி வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப, பொம்மற் படுதிரை கம்மென வுடைதரு மரனோங் கொருசிறை பலபா ராட்டி எல்லை யெம்மொடு கழிப்பி, எல்லுற நற்றேர் பூட்டலு முரியிர், அற்றன்று சேர்ந்தனிர் செல்குவி ராயின் யாமும் எம்வரை யளவையிற் பெயர்குவம் நும்மொப் பதுவோ மேவரி தெமக்கே.” இது, இரவுக் குறியும் பகற்குறியும் நேர்ந்தது. ‘எம்பதி வந்தனை சென்மோ’ - இரவுக்குறி. ‘எல்லை யெம்மொடு கழிப்பி’ - பகற்குறி. 3. “ கடும்புலால் புன்னை கடியுந் துறைவ படும்புலால் புட்கடிவான் புக்க - அடும்புலாந் தாழைமா ஞாழற் றதைந்துயர்ந்த தாழ்பொழில் ஏழைமா நோக்கி யிடம்.” (திணை. நூற் - 44) இது, குறியிடங் காட்டியது. 4. “ இவர்பரி நெடுந்தேர் மணியு மிசைக்கும் பெயர்பட வியங்கிய இளையரு மொலிப்பர் கடலாடு வியலணிப் பொலிந்த நறுந்தழை திதலை யல்குல் நலம்பா ராட்டிய வருமே தோழி வார்மணற் சேர்ப்பன், நிறைபட வோங்கிய முழவுமுதற் புன்னை மரவரை மறைகம் வம்மதி, பானாட் பூவிரி கானற் புணர்குறி வந்துநம் மெல்லிணர் நறும்பொழிற் காணா வல்லரும் படர காண்கநாஞ் சிறிதே.” (நற் - 307) இது, தோழி தலைவிக்குப் பகற்குறிக்கண் தலைவன் வருகின்றமை காட்டி, அவன் வருத்தங்காண நாம் மறைந்து நிற்பாம் வா எனக் கூறியது. 22. எண்ணரும் பல்நகை கண்ணிய வகையினும் - தலைவன் இளிவரவை உணர்த்துங் கருத்தினளாய்ப் பலவகையாக நகையாடல் குறித்தவிடத்தும் கூறுவள். எண் அரும் - எண்ணுதற்கரிய. இளிவரவு - இகழத்தக்க செயல். கண்ணிய - கருதிய, குறித்த. அவை : 1. என்னை மறைத்தல் எவனாகியர் எனல் 2. அறியாள் போறல் 3. குறியாள் கூறல் 4. படைத்து மொழி கிளவி 5. குறிப்பு வேறு கொண்டா ளெனல் காட்டு : 1. “ நிறைத்திங்கள் சேர்ந்தோடும் நீள்மலை நாட, மறைக்கப் படாதேனை மன்னும் - மறைத்துக்கொண் டோடினா யாதலா லொண்டொடியாள் தன்பக்கங் கூடக் கிடந்ததொன் றில்” இது, என்னை மறைத்தல் எவனாகியர் என்றது. என்னை மறைத்தல் - என்னிடம் மறைத்தல். எவனாகியர் - எப்படி முடியும். என்னிடம் மறைப்பதனால் நின் காரியம் முடியா தென்பதாம். 2. “ மன்னேர்மன் சாயல் அவருள் மருடீர இன்னார்க ணென்ப தறியேனான் - மின்னூருங் கார்கெழு தோன்றற் கணமலை நன்னாட யார்கண்ண தாகுங் குறை.” இது அறியாள் போற் கூறியது. ‘நின் குறை அவருள் யார் கண்ணது அறியேன்’ எனல் காண்க. 3. “ தன்னெவ்வங் கூறினும் நீசெய்த வருளின்மை என்னையு மறைத்தாளென் றோழி யதுகேட்டு நின்னையான் பிறர் முன்னர்ப் பழிகூறல் தானாணி” (கலி - 44) இது, ‘பழிகூறுவேன்’ எனத் தலைவி குறியாத தொன்றைத் தோழி கூறலால், குறியாள் கூறலாயிற்று. 4. “ விருந்தின ராதலின் வினவுதிர் அதனெதிர் திருந்துமொழி மாற்றந் தருதலு மியல்பெனக் கூறுவ தம்ம யான் ஊறுபல வருமென அஞ்சுவன் வாழி அறைய, எஞ்சா தெண்ணிலர் எண்ணியது முடிப்பர் கண்ணிலர் கொடியரிவள் தன்னை மாரே.” இது, நிகழாதது நிகழ்வதாகப் படைத்து மொழிந்தது. படைத்து மொழி - இல்லாததை உண்டுபண்ணிச் சொல்லுதல். விருந்தினர் - புதியவர். தன்னைமார் கொடியர் முதலனவாகப் படைத்து மொழிந்தமை காண்க. 5. நெறிநீ ரிருங்கழி நீலமுஞ் சூடாள் பொறிமாண் வரியலவன் ஆட்டலு மாட்டாள் சிறுநுதல் வேரரும்பச் சிந்தியா நின்றாட் கெறிநீர்த்தண் சேர்ப்பயா னென்சொல்லிச் செல்கோ இது, குறிப்பு வேறு கொண்டா ளென்றது. சூடாள், ஆடாள் எனல் காண்க. 23. புணர்ச்சி வேண்டினும் - தலைவன் பகற்குறியும் இரவுக் குறியும் விரும்பிக் கூறுமிடத்தும் தோழி கூறுவள். அவை 1. தலைவியைப் பகற்குறி நயப்பித்தல் 2. இடங்காட்டல் 3. இடத்துய்த்து நீங்கல் 4. தலைவன் சிறைப்புறமாகப் பகற்குறி நேர்வாள் போல் இரவிற் காப்பு மிகுதி கூறல் 5. இரவுக்குறி நயந்தவனைத் தோழி மறுத்தல் 6. கிழத்தியை இரவுக்குறி நயப்பித்தல் 7. தலைவன் வருவா னென்றல் 8. தலைவன் இரவுக்குறி வந்தமை தலைவிக்குக் கூறல் 9. தாய் தூங்குவதை யறிந்து தலைவன் வந்தமை தலைவிக்குக் கூறிக் குறிவழிச் சேறல் 10. இரவுக்குறி வேண்டிய தலைவற்குத் தோழி உடன் பட்டுக் கூறல் 11. இரவுக்குறி நயந்த தோழி, இங்கு நீ வருங்கால் இப்படி வருகெனல் 12. இரவுக்குறி யிடங்காட்டித் தோழி கூறல் 13. இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாகக் கூகைக்கு உரைப்பாளாய்த் தோழி கூறல் 14. தலைவனைக் கண்டு முயங்குகம் வாவெனத் தலைவியிடம் கூறல். காட்டு : 1. “ நன்னலஞ் சிதைய நாடொறும் புலம்பப் பொன்னிணர் வேங்கை துறுகற் றாஅய் இரும்பிடி வெரூஉம் நாடற்கோர் பெருங்க ணோட்டஞ் செய்தன்றோ விலமே.” இது, தோழி தலைவியைப் பகற்குறி நயப்பித்தது. நயப்பித்தல் - விரும்பும்படி செய்தல். ‘கண்ணோட்டம் செய்திலம்’ என நயப்பித்தல் காண்க. 2. “ ஊர்க்கு மணித்தே பொய்கை, பொய்கைக்குச் சேய்த்து மன்றே சிறுகான் யாறே, இரைதேர் வெண்குரு கல்லதி யாவதுந் துன்னல் போகின்றாற் பொழிலே, யாமெங் கூழைக் கெருமண் கொணர்கம் சேறும் ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.” (குறுந் - 113) இது, பகற்குறி நேர்ந்து இடங்காட்டியது. 3. “ செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பின் செங்கோட் டியானைக் கழறொடிச் சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.” (குறுந் - 1) இது, தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது. ‘குருதி போன்ற காந்தட் பூவினையுடைய குன்றம்’ எனக் கூறி நீங்கினமை காண்க. 4. “ ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக் கோடுயர் நெடுவரைக் கவாஅற் பகலே பாடின் னருவி யாடுத லினிதே, நிரையிதழ் பொருந்தாக் கண்ணோ டிரவிற் பஞ்சி வெண்டிரிச் செஞ்சுடர் நல்லில் பின்னுவீழ் சிறுபுறந் தழீஇ அன்னை முயங்கத் துயிலின் னாதே.” (குறுந் - 354) இது, இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப் புறமாகப் பகற்குறி நேர்வாள் போல் இரவின் காப்பு மிகுதி கூறியது. ‘பாடின் னருவி யாடுதல்’ என்பது, அதன்கண் உதவினான் என்பது பற்றியே. களவிலுடனாடுத லின்று. கற்பிலாடுவர். (கற் - 34) 5. “ செறுவார்க் குவகை யாகத் தெறுவர ஈங்கும் வருபவோ தேம்பாய் துறைவ, சிறுநா வெண்மணி விளரி யார்ப்பக் கடுமா நெடுந்தேர் நேமி போகிய இருங்கழி நெய்தல் போல வருந்தின ளளியல்நீ யறிந்திசி னோளே.” (குறுந் - 336) இது, இரவுக்குறி நயந்த தலைவனைத் தோழி மறுத்தது. 6. “ நாகுபிடி நயந்த முளைக்கோட் டிளங்களிறு குன்ற நண்ணிக் குறவ ரார்ப்ப மன்றம் போழு நாடன் றோழி, சுனைப்பூங் குவளைத் தொடலை தந்தும் தினைப்புன மருங்கிற் படுகிளி யோப்பியும் காலை வந்து மாலைப் பொழுதில் நல்லக நயந்துதா னுயங்கிச் சொல்லவு மாகா தஃகி யோனே.” (குறுந் - 346) இது, தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பித்தது. 7. “ ஏன மிடைந்திட்ட ஈர்மணிகொண் டெல்லிடைக் கானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும் வானுயர் வெற்பன் வருவான்கொல் தோழிநம் மேனி பசப்புக் கெட.” (திணை. ஐம் - 4) இது, தலைவன் வருவா னென்றது. (தலைவியிடம்) 8. “ சுறவுப்பிற ழிருங்கழி நீந்தி வைகலும் இரவுக்குறிக் கொண்கன் வந்தனன் விரவுமணிக் கொடும்பூண் விளங்கிழை யோயே.” (சிற்றெட்டகம்) இது, இரவுக் குறிக்கண் தலைவன் வந்தமை தலைவிக்குக் கூறியது. 9. “ அன்னையுங் கனைதுயில் மடிந்தன ளதன்றலை மன்னுயிர் மடிந்தன்றாற் பொழுதே காதலர் வருவ ராயிற் பருவ மிஃதெனச் சுடர்ந்திலங் கெல்வளை ஞெகிழ்ந்த, நம்வயிற் படர்ந்த வுள்ளம் பழுதின் றாக வந்தனர் வாழி தோழி” (அகம் - 68) இது, தோழி தாய் தூங்குவதை யறிந்து, தலைவன் வந்தமை தலைவிக்குக் கூறிக் குறிவயிற் சென்றது. 10. “ எல்லிமிழ் பனிக்கடல் மல்குசுடர்க் கொளீஇ எமரும் வேட்டம் புக்கனர் அதனால் தங்கி னெவனோ தெய்ய பொங்கதிர் முழவிசைப் புணரி யெழுதரும் உழைகடற் படப்பையெம் மிறைவ னூர்க்கே.” (நற் - 67) இது, இரவுக்குறி வேண்டிய தலைவற்குத் தோழி உடன் பட்டுக் கூறியது. 11. “ ஆம்பல் நுடங்கு மணித்தழையு மாரமும் தீம்புன லூரன் மகளிவள் - ஆய்ந்தநறுந் தேமலர் நீலம் பிணையல் செறிமலர்த் தாமரை தன்னையர் பூ.” (திணை - ஐம் - 40) இது, இரவுக்குறி நேர்ந்த தோழி இங்கு நீ வருங்கால் இவ்வாறு வருவாயாக என்றது. நீலப்பூ முதலியவற்றுடன். 12. “ கடற்கானற் சேர்ப்ப, கழியுலாஅய் நீண்ட அடற்கானற் புன்னைதாழ்ந் தாற்ற - மடற்கானல் அன்றி லகவும் அணிநெடும் பெண்ணைத்தே முன்றி லிளமணல்மேல் மொய்த்து.” (திணை. ஐம் - 56) இது, இரவுக் குறியிடங் காட்டித் தோழி கூறியது. 13. “ எம்மூர் வாயில் ஒண்டுறைத் தடைஇய கடவுள் முதுமரத் துடனுறை பழகிய தேயா வளைவாய்த் தெண்கட் கூருகிர் வாய்ப்பறை யசாவா வலிமுந்து கூகை, மையூன் றெரிந்த நெய்வெண் புழுக்கல் எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும் எஞ்சாக் கொள்கையெங் காதலர் வரனசைஇத் துஞ்சா தலமரும் போழ்தின் அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றா தீமே.” (நற் - 83) இது, இரவுக் குறி வந்த தலைவன் சிறைப்புறமாகக் கூகைக்கு உரைப்பாளாய்த் தோழி கூறியது. 14. “ நிலவும் மறைந்தன் றிருளும் பட்டன் றோவத் தன்ன இடனுடை வரைப்பிற் பாவை யன்ன நிற்புறங் காக்கும் சிறந்த செல்வத் தன்னையுந் துஞ்சினள், கெடுத்துப்பெறு நன்கல மெடுத்துக்கொண் டாங்கு நன்மார் படைய முயங்கி மேன்மேற் கண்டனம் வருகஞ் சென்மோ தோழி, கீழு மேலுங் காப்போர் நீத்த வறுந்தலைப் பெறுங்களிறு போல தமியன் வந்தோன் பனியலை நீயே.” (நற் - 182) இது, தலைவனைக் கண்டு முயங்குகம் வம்மோ வென்றது. 24. வேண்டாப் பிரிவினும் - தலைவன் புணர்ச்சியை விரும்பாது பிரிவை விரும்பின விடத்தும் தோழி கூறுவள். அதாவது, தலைவன் இரந்துபின் னிற்றலை விடுதலும் (கள - 11 : 20), சேய்மையின்றி அணுமையாகப் பிரிதலும் - இட்டுப் பிரிவு (கள - 14 : 9), தலைவன் அருமைசெய் தயிர்த்தலும் (கள் - 14 : 10) ஆகிய இடங்களில் தலைவற்குந் தலைவிக்கும் தோழி கூறுவள். காட்டு : “ இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதல் சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை பெருங்களிற்று மருப்பி னன்ன அரும்புதிர்பு நன்மா னுளையின் வேறுபடத் தோன்றி விழவுக்களங் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப, இனமணி நெடுந்தேர் பாக னியக்கச் செலீஇய சேறி யாயி னிவளே வருவை யாகிய சின்னாள் வாழ்வா ளாத லறிந்தனை சென்மே.” (நற் - 19) இது, தலைவன் பிரிவு வேண்டியவழிக் கூறியது. ‘சின்னாள் வாழ்வாளாதல் அறிந்தனை செல்’ எனப் பிரிவு நீட்டியாமை யுணர்த்தினாள். 25. வேளாண் பெருநெறி வேண்டிய இடத்தும் - தலைவற்குத் தலைவி மறைவாக விருந்தோம்புவதை விரும்பிய விடத்தும் தோழி கூறுவள். விருந்தோம்பல் - உணவிடுதல். இது, தலைவி ‘வேளாணெதிரும் விருந்தின்கண் (கள - 14) கூறுவதாம். காட்டு : “ பன்னா ளெவ்வந் தீரப் பகல்வந்து புன்னையம் பொதும்ப ரின்னிழல் கழிப்பி மாலை மால்கொள நோக்கிப் பண்ணாய்ந்து வலவன் வண்டே ரியக்க நீயும் செலவிருப் புறுத லொழிகதில் லம்ம, நின்றிறத் தவலம் வீட இன்றிவட் சேப்பி னெவனோ பூக்கேழ் புலம்பப் பசுமீன் நொடுத்த வெண்ணெல் மாஅத் தயிர்மிதி மிதவை வார்குவம் நினக்கே, வடவர் தந்த வான்கேழ் வட்டங் குடபுல வுறுப்பிற் கூட்டுபு நிகழ்த்தி வண்டிமிர் நறுஞ்சாந் தணிகுவம்.” (அகம் - 340) இதனுள், தலைவனுக்கும் குதிரைக்கும் கொடுப்பன கூறித் தடுத்தமை யறிக. நொடுத்த - விற்ற. ‘வார்குவம் நினக்கே, சாந்தணி குவம்’ எனக் காண்க. 26. புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பினும் - இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த காலத்துத் தலைவனது குறிப்புணர்ந்த அறிவினது மடப்பங் கூறித் தம் காதற்சிறப்புரைக்கு மிடத்தும் தோழி கூறுவள். ‘தம்’ எனத் தோழி தன்னையும் உளப்படுத்தாள். தலைவியின் அறிவினது மடப்பங் கூறல் - தலைவனிடம் தலைவியின் காதற்சிறப் புரைத்தல். காட்டு : “ சுரஞ்செல் லியானைக் கல்லுறு கோட்டில் தெற்றென இறீஇயரோ ஐய, மற்றியாம் நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே பாணர் பசுமீன் சொரிந்த மண்டைபோல் எமக்கும் பெரும்புல வாகி நும்மும் பெறேஎம் இறீ இயரெம் முயிரே.” (குறுந் - 169) இது, தலைவனோடு நகுதற்கு எண்ணிய எண்ணம் இன்றி யமையாததெனக் கூறிக் காதற்சிறப் புரைத்தது. 27. ஓம்படைக் கிளவிப் பாங்கின்கண்ணும் - வரைவிடைப் பிரிவினும், புணர்ந்து நீங்கும் போதும் தலைவியைப் பாதுகாத்துக் கொள் எனத் தலைவனிடம் தோழி கூறுவள். பாங்கு பிரிவு, வகை, ஓம்படை - பாதுகாப்பு, தலைவியைப் பாதுகாத்துக் கொள் எனல் - தலைவியை மறந்து விடாதேயெனல். ‘ஓம்படைக் கிளவி’ என்பதற்கு, பிரியும்போது தலைவியைப் பாதுகாத்துக் கொள் என்று தலைவன் கூறுமிடத்தும் தோழி கூறுவள் என்றுமாம். இஃதோருரை. காட்டு : 1. “ நனைமருள் ஞாழற் றிணைமருள் திரள்வீ நெய்தல் மாமலர்ப் பெய்த போல ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப, தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட் டன்னா யென்னுங் குழவி போல இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும் நின்வரைப் பினளென் றோழி தன்னுறு விழுமங் களைஞரோ விலளே.” (குறுந் - 397) இது, புணர்ந்து நீங்கும் போது தோழி ஓம்படுத்தது. 2. “ இவளொடு செலினோ நன்றே, குவளை நீர்சூழ் மாமல ரன்ன கண்ணழக் கலையொழி பிணையிற் கலங்கி மாறி அன்பிலிர் அகறி ராயின் என்பரம் ஆகுவ தன்றிவ ளவலம் நாகத் தணங்குடை யருந்தலை யுடலி வலனேர் பார்கலி நல்லேறு திரிதரும் கார்செய் காலை வரூஉம் போழ்தே.” (நற் - 37) இது, வரைவிடைப் பிரிகின்றான் தலைவியை ஆற்றுவித்துக் கொண்டிரு என்றாற்குத் தோழி கூறியது. கார்செய் காலை - கார் காலம். பாரம் - சுமை, பொறுப்பு. வரைவிடைப் பிரிவு - வரவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல். 28. செங்கடு மொழியால் சிதைவு உடைத்தாயினும் - வெளிப்படையாகக் கூறும் கடுஞ் சொற்களால் தலைவி மனம் வருந்தினும் தோழி கூறுவள். செங்கடு மொழி - செம்மையாகிய கடுஞ்சொல். செம்மை - வெளிப்படை. அவை: 1. தலைவனை இயற்பழித்தலும் 2. தலைவியைக் கழறலும் ஆம். 1. இயற்பழித்தல் - இயல்பைப் பழித்துக் கூறுதல். இயல்பு - தன்மை. 2. தலைவியைக் கழறலாவது - கிளிகடிதலை விட்டுத் தலைவனைக் கூடுதலே பயனென இருந்தால் நம் அன்னை உனக்குக் கிளிகடியத் தெரியாதென வேறொருவரை வைப்பாள். அப்போது நீ தலைவனைக் கூடமுடியா தெனத் தலைவியைக் கழறுவது. காட்டு : 1. “ கௌவையம் பெரும்பழி தூற்ற நலனழிந்து பைதலஞ் சிறுநுதல் பசலை பாய நம்மிகற் படுத்த அவரினு மவர் நாட்டுக் குன்றங் கொடியகொல் தோழி ஒன்றுந் தோன்றா மழைமறைந் தனவே.” இது, வரைவிடைப் பருவங் கண்டழிந்த தோழி தலைவனை இயற்பழித்தது. பருவங்கண்டழிதல் - கூறிப்போன பருவத்தில் தலைவன் வாராததால் வருந்துதல். குன்றம் மழையால் மறைத்துக் கொண்டது போல, அவரும் கூறிப்போனதை மறந்தனர் எனத் தலைவனை இயற்பழித்தமை காண்க. 2. “ மெய்யிற் றீரா மேவரு காமமொ டெய்யா யாயினும் உரைப்பல் தோழி, கொய்யா முன்னுகு குரல்வார்பு தினையே, அருவி யான்ற பைங்கால் தோறும் இருவி தோன்றிய பலவே, நீயே முருகுமுரண் கொள்ளுந் தேம்பாய் கண்ணிப் பரிபன் னாயொடு பன்மலைப் படரும் வேட்டுவற் பெறலோ டமைந்தனை, யாழநின் பூக்கெழு தொடலை நுடங்க வெழுந்து கிள்ளைத் தெள்விளி யிடையிடை பயிற்றி ஆங்காங் கொழுகா யாயின், அன்னை சிறுகிளி கடிதல் தேற்றா ளிவளெனப் பிறர்தந்து நிறுக்குவ ளாயின் உறற்கரி தாகுமவன் மலர்ந்த மார்பே.” (அகம் - 28) இது, கிளிகடிதலை விட்டுத் தலைவனைக் கூடுதலே பயனென இருந்தால் நம் அன்னை உனக்குக் கிளிகடியத் தெரியாதென வேறொருவரை வைப்பாள். அப்போது நீ தலைவனைக் கூட முடியாதெனத் தலைவியிடங் கூறியது. 29. என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும் - பிரிவாற்றாது வருந்தும் தலைவி யிடஞ் சென்று, தலைவன் அன்பை எடுத்துக் கூறித் தலைவியை வற்புறுத்து மிடத்தும் கூறுவள். என்பு நெகப் பிரிந்தோள் - என்பு உருகுமாறு தலைவனால் பிரிக்கப்பட்ட தலைவி. கடைஇ - செலுத்தி, எடுத்துக் கூறி. தலையடுத்தல் - பொருந்துதல். அப்பிரிவு, 1. வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவு. 2. வேந்தற் குற்றுழிப் பிரிவு. 3. காவற் பிரிவு. இம்மூன்று பிரிவும், இட்டுப் பிரிவும் (ஒருவழித்தணத்தல்) களவின்கண் நிகழும் பிரிவுகளாகும். அங்கு வற்புறுத்தும் போதும் தலைவனை இயற்பழித்தும், இயற்பட மொழிந்தும் வற்புறுத்துவாள். முன் (28இல்) செங்கடு மொழியால் இயற்பழித்ததும் வற்புறுத்திக் கூறியதேயாம். காட்டு : “ பெருங்கை யிருங்களி றைவன மாந்திக் கருங்கால் மராம்பொழிற் பாசடைத் துஞ்சும் சுரும்பிமிர் சோலை மலைநாடன் கேண்மை பொருந்தினார்க் கேமாப் புடைத்து.” (ஐந் - எழு - 12) இது, தலைவனை இயற்பட மொழிந்து வற்புறுத்தியது. இயற்பட மொழிதல் - இயல்பைச் சிறப்பித்துக் கூறுதல். கேண்மை பொருந்தினாற் கேமாப்புடைத்து எனல் காண்க. இயற்பழித்தற்குக் காட்டு, முன் (28) காட்டியது கொள்க. 30. ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும் - தலைவன் வருகின்ற வழியின் தீமையைப் பற்றித் தலைவி கலங்கிய போது, அவளை ஆற்றுவிக்குமிடத்துங் கூறுவள். அறிவுறு கலக்கம் - அறிந்ததனா லுண்டான கலக்கம். ஆற்றது தீமை - தலைவன் கூற்று 12 : 5 பார்க்க. காட்டு : “ கொடுவரி வேங்கை பிழைத்துக்கோட் பட்டு மடிசெவி வேழம் வெரீஇ - அடியோசை அஞ்சி யொதுங்கும் அதருள்ளி யாரிருட் டுஞ்சா சுடர்த்தொடி கண்.” (ஐந் - ஐம் - 16) இது, இரவுக்குறி வரவால் தலைவி அஞ்சுவளென்றது. அதர் - வழி. ‘கலக்கம்’ எனப் பொதுப்படக் கூறியதனால், வழியில் துன்பமின்றிச் சென்றமை தோன்ற, அங்குச் சென்றதும் ஓர் குறி செய் எனக் கூறலுங் கொள்க. காட்டு : “ ஏமுறு துயரம் நாமிவ ணொழிய எற்கண்டு பெயருங் காலை, யாழநின் கற்கெழு சிறுகுடி எய்திய பின்றை ஊதல் வேண்டுமாற் சிறிதே வேட்டொடு வேய்பயில் அழுவத்துப் பிறந்தநின் நாய்பயிர் குறுநிலை கொண்ட கோடே.” (அகம் - 318) இது, கோடூதிக் குறிசெய் என்றது. கோடு - கொம்பு, குழல். 31. காப்பின் கடுமை கையற வரினும் - தலைவியை வெளிவிடாது வீட்டினுள் வைத்துக் காவல் காத்து வருதலான் தலைவி வருந்தியபோதும் தோழி கூறுவள். காப்பின் கடுமை - கடுங்காவல். கையறல் - செயலறல், வருந்துதல். காப்பின் கடுமையால் தலைவி வருந்துவளென்க. இது, இற்செறித்தல் எனப்படும். தோழி கூறுதல் - செறிப்பறிவுறுத்தல் எனப்படும். செறிப்பை அறிவுறுத்தல். செறிப்பு - பாதுகாப்பு. இல் செறித்தல் - வீட்டினுள் வைத்துக் காத்தல்; வெளிப்போகாது செய்தல். புனங்காவ லின்றித் தலைவி வீட்டில் இருத்தலையே இவ்வாறு கூறப்படும். அது பலவகைய. அவை: 1. பகற் குறிக்கண் தலைவன் சிறைப்புறமாகச் செறிப் பறிவுறுத்தல் 2. தினைவிளைந்தமை கூறிச் செறிப்பறிவுறுத்தல் 3. குன்றத்திற்குக் கூறுவாளாகச் செறிப்பறிவுறுத்தல் 4. இவள் கிளிகடியாமையால் பிறரை வைப்பாரெனச் செறிப்பறிவுறுத்தல். 5. இரவுக்குறிக் காப்பின் கடுமை கூறல் 6. வேங்கை மலர்ந்ததெனக் தலைவிக்குக் கூறல் 7. புனங்காவலை விட்டு இற்செல்லும்போது சிறைப்புறமாகக் கூறல் 8. தலைவற்குக் கூறுமின் என ஆங்குள்ளவற்றிற்குக் கூறல் என்பன. காட்டு : 1. “ கடலுட னாடியுங் கானல் அல்கியுந் தொடலை யாயமொடு தழூஉவணி யயர்ந்தும் நொதுமலர் போலக் கதுமென வந்து முயங்கினன் செலினே அலர்ந்தன்று மன்னே துத்திப் பாந்தட் பைத்தக லல்குல் திருந்திழை துயல்வுகோட் டசைத்த பசுங்கழைத் தழையினு முழையிற் போகான் தான்றந் தனன்யாய் காத்தோம் பல்லே.” (குறுந் - 294) இது, பகற்குறிக்கண் தலைவன் சிறைப்புறமாகச் செறிப் பறிவுறீ இயது. அறிவுறீ இயது - அறிவுறுத்தியது. காத்தோம் பல் அலர்ந்தன்று என்க. 2. “ கணமுகை கையெனக் காந்தள் கவின மணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும் விறன்மலை நாட, வரவரிதாங் கொல்லோ புனமும் அடங்கின காப்பு.” (திணை ஐம் - 2) இது, திணை விளைந்தமை கூறிக் செச் செறிப்பறிவுறீஇயது. 3. “ அறையருவி யாடாள் தினைவனமுங் காவாள் பொறையுயர் தண்சிலம்பிற் பூந்தழையுங் கொய்யாள் உறைகவுள் வேழமொன் றுண்டென்றா ளன்னை மறையறநீ வாழிய மையிருங் குன்றே.” இது குன்றத்திற்குக் கூறுவாளாகச் செறிப்பறிவுறீஇயது வேழ முண்டென்று அன்னை இற்செறித்தனள் எனக் காண்க. 4. “ சாந்த மெறிந்துழுத சாரற் சிறுதினைச் சாந்த விதண மிசைச்சார்ந்து - சாந்தங் கமழக் கினிகடியுங் கார்மயி லன்னாள் இமிழக் கிளியெழா வார்த்து.” (திணை. நூற் - 3) இது, இவள் கடிவதால் கிளி எழாதாகையால் பிறரைக் காத்தற்கு இடுவரெனச் செறிப்பறிவுறீஇயது. இதணம் - பரண். 5. “ பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத் துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவு முயறல் கேளே மல்லேம் கேட்டனம் பெரும, ஓரி முருங்கப் பீலி சாய நன்மயில் வலைப்பட் டாங்கியாம் முயங்குதொறும் உயங்கும் அறனில் யாயே.” (குறுந் - 244) இது, இரவுக்குறிக் காப்பின் கடுமை கூறியது. 6. “ வினைவிளையச் செல்வம் விளைவதுபோல் நீடாப் பனைவிளைவு நாமெண்ணப் பாத்தித் - தினைவிளைய மையார் தடங்கண் மயிலன்னாய்! தீத்தீண்டு கையார் பிரிவித்தல் காண்.” (திணை. நூற் - 5) இது, களவொழுக்கத்தினை வேங்கை நீக்கிற்றெனத் தலைவிக்குக் கூறியது. தீத்தீண்டு கையார் - தீப்போன்ற பூக்களை யேந்திய கிளைகளையுடைய வேங்கை மரம். இது, தினைமுதிர் பருவம். 7. “ புன்னையம் பூம்பொழிலே போற்றவே பாதுகா, அன்னப் பெடையே அறமறவேல் - மன்னுங் கடும்புதர்மான் காவலி கானலஞ் செல்லூர் நெடுங்கடலே நீயு நினை.” இது, தினைப்புனக் காவலை விட்டு வீடு செல்லும்போது சிறைப்புறமாகத் தோழி கூறியது. 8. “ பண்டைக்கொள் நல்வினை யில்லேம் பதிப்பெயர்தும் கண்டற் குலங்காள்! கழியருகேர் - முண்டகங்காள்! நாணி யிராதே நயந்தங் கவர்க்குரைமின் பேணி யவர்செறித்த லான்.” இது, தலைவற்குக் கூறுமின் என்றது. கண்டல் - தாழை. முண்டகம் - தாமரை. தலைவி : 14 : 2 - 5 2. காணா வகையிற் பொழுதுநனி இகப்பினும் 3. தானகம் புகாஅன் பெயர்தல் இன்மையின் காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும் 4. புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பாட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் 5. வேளாணெதிரும் விருந்தின் கண்ணும் தலைவி - கூறுவள். 2. காணா வகையில் பொழுதுநனி இகப்பினும் - இரவுக் குறியிடம் சென்று தலைவனைக் காணப்பெறாமல் இரவுப் பொழுது நெடிது கழியினும் தலைவி கூறுவள். அதாவது, தான் குறித்த நேரத்திற் போக முடியாமை. அவை 1. தாய் துஞ்சாமை 5. நிலவு வெளிப்படுதல் 2. ஊர்துஞ்சாமை 6. கூகை குழறல் 3. காவலர் கடுகுதல் 7. கோழி கூவல் 4. நாய் துஞ்சாமை முதலியனவாம். காட்டு : இரும்பிழி மகாஅரிவ் வழுங்கன் மூதூர் விழவின் றாயினும் துஞ்சாதாகும், மல்ல லாவண மறுகுடன் மடியின் வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள், பிணிகோ ளருஞ்சிறை யன்னை துஞ்சின் துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர், இலங்குவே லிளையர் துஞ்சின் வையெயிற்று வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும், அரவாய் ஞமலி குரையாது மடியின் பகலுரு வுறழ நிலவுக்கான்று விசும்பின் அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே, திங்கள்கல் சேர்பு கனையிருள் மடியின் இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை கழுதுவழங் கியாமத் தழிதகக் குழறும், வளைக்கட் சேவல் வாளாது மடியின் மனைச்சேறி கோழி மாண்குர லியம்பும், எல்லா மடிந்த காலத் தொருநாள் நில்லா நெஞ்சத் தவர்வா ராரே; அதனால், நொச்சி வேலித் தித்த னுறந்தை கன்முதிர் புறங்காட் டன்ன பன்முட் டின்றாற் றோழிநங் களவே. (அகம் - 122) எனவரும். முட்டின்று - முட்டுப்பாடுடையது. “ தாயோ துஞ்சாள் நோயறி யாவத் தாய்துஞ்சின் நாயோ துஞ்சா நிலவொடு பொல்லா நாய்துஞ்சின் வாயோ துஞ்சாக் காவலர் துஞ்சின் மலர்துஞ்சும் போயே தொலையென் றாளது முண்மைப் பொருளன்றே.” (இராவண காவியம்) இதுவுமது. மலர் - கண். அவையெல்லாந் துஞ்சின் தனக்குத் தூக்கம் வந்துவிடுமென்கின்றாள். ‘போயேதொலை’ என்றது - உடன் போக்கு. ‘போ’ என்றது தோழி. 3. தானகம் புகான் பெயர்தல் இன்மையின் காட்சி ஆசையால் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும் - அங்ஙனம் காணாவகையிற் பொழுது நனி இகந்து தலைவி குறியிடம் செல்ல முடியாதபோதும், தலைவன் குறியிடம் வாராமல் இரானென்பது தலைவி அறிவாளாகையால், அங்குவந்தவன் தான் வந்து போனமையைத் தலைவி அறிதற்கு ஏதாவது அடையாளம் வைத்து விட்டுப் போவான். தலைவி அந்த அடையாளம் காணும் விருப்பால் மறுநாள் விடியற்காலையிற் சென்று அங்கு தலைவன் வைத்துச் சென்ற அடையாளத்தைக் கண்டு மனங்கலங்கி, அவனைக் காணும் வேட்கையளாகிச் செய்வதறியாது மயக்கத்தோடு வருத்த முற்றபோதுங் கூறுவள். குறி - மோதிரம், மாலை முதலியவற்றைச் செடியில் இட்டுவைத்தல். இதில் தோழியும் உடன் மயங்குவாள். ‘தான்’ என்றது தலைவனை. இரவுக்குறி மதிலகத்த தாகலின், குறியிடத்தை ‘அகம்’ என்றார். காட்சி - குறியைக் காணல். காட்டு : “ இக்காந்தள் மென்முகைமேல் வண்டன்றஃ திம்முகையிற் கைக்காந்தள் மெல்விரலாய் காணிதோ - புக்குச் செறிந்ததுபோற் றோன்றுந் தொடுபொறி யாம்பண் டறிந்ததொன் றன்ன துடைத்து.” இது, குறிகண்டு கூறியது. தொடுபொறி - மோதிரம். மோதிரத்தைக் காந்தள் முகைமேல் இட்டு வைத்தான். 4. புகாக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழிப் பகா விருந்தின் பகுதிக் கண்ணும் - உச்சிக்காலத்து வந்த தலைவனைத் தலைவி சுற்றத்தார் வரவேற்று உணவிட்ட காலத்தும் தலைவி கூறுவள். அதைத் தோழிக்குக் கூறுவள். மனையகம் புகாக் காலை - உச்சிப் பொழுது. அதாவது, பகலுணவுண்ணும் நேரம். பகா விருந்து - பகுத்துண்டல். புகாக் காலத்துப் புக்க தலைவனை விருந்தேலாது செவிலி நீக்குதலும் உண்டு. முன் (கள - 34) அகமனை புகுதற்கு முன்னெனவே சில நாளிற் புகுமென்றார். இங்கு அகமனை புகுந்தமை கூறினார். இது தலைவற்குக் காட்சி யாசை. காட்டு : 1. “ சுடர்த்தொடீஇ கேளாய் தெருவில்நா மாடும் மணற்சிற்றில் காலிற் சிதையா வடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யுஞ் சிறுபட்டி மேலோர்நாள் அன்னையும் யானும் இருந்தேமா வில்லீரே, உண்ணுநீர் வேட்டே னெனவந்தாற் கன்னை அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய் உண்ணுநீ ரூட்டிவா வென்றாள், எனயானுந் தன்னை யறியாது சென்றேன்மற் றென்னை வளை முன்கை பற்றி நலியத் தெருமந்திட் டன்னா யிவனொருவன் செய்ததுகா ணென்றேனா, அன்னை யலறிப் படர்தரத் தன்னையான் உண்ணுநீர் விக்கினா னென்றேனா அன்னையும் தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக் கடைக்கண்ணாற் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டஞ் செய்தானக் கள்வன் மகன்.” (கலி - 51) இது, புகாக் காலத்துப் புக்கானை அன்னை விருந்தேற்றுக் கொண்டதனைப் பின்னொரு நாள் தலைவி தோழிக்குக் கூறியது. நீரும் உணவேயாம். 2. “ மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை புனல்தரு பசுங்காய் தின்றதன் றப்பற் கொன்பதிற் றொன்பது களிற்றோ டவள் நிறை பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான் பெண்கொலை புரிந்த நன்னன் போல, வரையா நிரயத்துச் செலீ இயரோ வன்னை ஒருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப் பகைமுக வூரிற் றுஞ்சலோ விலளே.” (குறுந் - 292) இது, புகாக் காலத்துத் தலைவன் புக விருந்ததேலாது, செவிலி இரவினும் துயிலாதிருந்தாளைத் தலைவி முனிந்து கூறியது. 5. வேளாண் எதிரும் விருந்தின் கண்ணும் - அங்ஙனமன்றித் தலைவி விருந்தேற்கும்படி தோழிக்குக் கூறத் தோழி அவனை விருந்தேற்றுக் கொள்ளும் போதும் தலைவி கூறுவாள். காட்டு : “ செறிதொடி திருத்திப் பாறுமயிர் நீவிச் செல்லினி மடந்தைநின் தோழியொடு மனையெனச் சொல்லிய வளவை தான்பெரிது கழிந்து தீங்கா யினளிவ ளாயிற் றங்காது நொதுமலர் போலப் பிரியிற் கதுமெனப் பிறிதொன் றாகலு மஞ்சுவல் அதனால், எல்லின்று தோன்றல் செல்லா தீமென எமர்குறை கூறத் தங்கி ஏமுற இளையரும் புரவியும் இன்புற நீயும் இல்லுறை நல்விருந் தயர்தல் ஒல்லுதும் பெருமநீ நல்குதல் பெறினே.” (அகம் - 300) இதனுள், ‘தான் பெரிது கலிழ்ந்து தீங்காயினள்’ எனவே, அக்குறிப்புத் தலைவன் போகாமல் தடுப்பக் கூறியதென வுணர்ந்து தோழி கூறியது. 8. தலைவி, தன்வயின் உரிமையும் அவன்வயின் பரத்தைமையும் படக் கூறுதல் 161. மறைந்தவற் காண்டல் தற்காட் டுறுதல் நிறைந்த காதலிற் சொல்லெதிர் மழுங்கல் வழிபாடு மறுத்தல் மறுத்தெதிர் கோடல் பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் கைப்பட்டுக் கலங்கினும் நாணுமிக வரினும் இட்டுப்பிரி விரங்கினும் அருமைசெய் தயிர்ப்பினும் வந்தவழி யெள்ளினும் விட்டுயிர்த் தழுங்கினும் நொந்துதெளி வொழிப்பினும் அச்சம் நீடினும் பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும் வருந்தொழிற் கருமை வாயில் கூறினும் கூறிய வாயில் கொள்ளாக் காலையும் மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமைறை யுயிர்த்தலும் உயிராக் காலத் துயிர்த்தலும் உயிர்செல வேற்றுவரவு வரினது மாற்றுதற் கண்ணும் நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி ஒருமைக் கேண்மையி னுறுகுறை தெளிந்தோள் அருமை சான்ற நாலிரண்டு வகையில் பெருமை சான்ற இயல்பின் கண்ணும் பொய்தலை யடுத்த மடலின் கண்ணும் கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும் குறியி னொப்புமை மருடற் கண்ணும் வரைவுதலை வரினும் களவறி வுறினும் தமர்தற் காத்த காரண மருங்கினும் தன்குறி தள்ளிய தெருளாக் காலை வந்தனன் பெயர்ந்த வறுங்கள நோக்கித் தன்பிழைப் பாகத் தழீஇத் தேரலும் வழுவின்றி நிலைஇய இயற்படு பொருளினும் பொழுதும் ஆறும் புரைவ தன்மையின் அறிவுதலை வந்த சிந்தைக் கண்ணும் காமஞ் சிறப்பினும் அவனளி சிறப்பினும் ஏமஞ் சான்ற உவகைக் கண்ணும் தன்வயி னுரிமையும் அவன்வயிற் பரத்தையும் அன்னவு முளவே யோரிடத் தான. இது, களவினுள் தலைவிக் குரிய கூற்றெல்லாம் தொகுத் துணர்த்துகின்றது. ‘தன்’ என்றது தலைவியை. உரிமை - களவிலே தலைவி கற்புக்கடன் பூண் டொழுகுதல். அதாவது, தலைவனை யன்றி மற்றவரை எண்ணாமை; தலைவனையே தன் காதற்றுணை வனாக - வாழ்க்கைத் துணைவனாகக் கொள்ளுதல். பரத்தைமை - அயன்மை. தலைவன் தன்னைவிட்டு வேறு மகளிரையுங் காதலிக்கின்றானென எண்ணுதல். தலைவன் அவ்வாறு பரத்தைமை இல்லாதிருக்கவும் காதல் மிகுதியால் அங்ஙனங் கருதுதல் பெண்டன் மையாகும். எனவே, களவினும் தலைவி புலவி யுள்ளத்தாள் ஆவளென்பதாம். கற்பிறபோல ஊடலும் உணர்த்தலும் நிகழாமை யின் இது புலவிப்போலி எனப்படும். இந்நூற்பாவிற் கூறும் 36 கிளவியும் தலைவி, தலைவன் ஒழுக்கத்தில் ஐயுற்றுப் புலவி யுள்ளத் தினளாய்க் கூறுவனவேயாம். ‘அன்னவும்’ என்னும் உம்மை எதிர்மறையாகலான் அவையிரண்டும் இலவாதலே பெரும் பான்மை. இவை முப்பத்தாறு கிளவியும் தலைவியின் வரைதல் வேட்கைக்கு நிமித்தங்களாகும். 1. மறைந்தவற் காண்டல் 2. தற்காட் டுறுதல் 3. நிறைந்த காதலிற் சொல்லெதிர் மழுங்கல் 4. வழிபாடு மறுத்தல் 5. மறுத்தெதிர் கோடல் 6. பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் (இது, வெறியாட்டின் போது நிகழும்) 7. கைப்பட்டுக் கலங்கல் 8. நாணுமிக வருதல் 9. இட்டுப் பிரிவு இரங்கல் (இது, களவில் புலவிப்போலி) 10. அருமைசெய் தயிர்த்தல் (இது, தண்டா திரத்தலை மாறிய தலைவன் தானும் மறந்தான் போல் காட்டல் (கள - 11) 11. வந்தவழி எள்ளல் 12. விட்டுயிர்த்து அழுங்கல் (இது, சிறைப்புறம்) 13. நொந்து தெளிவு ஒழித்தல் 14. அச்சம் நீடல் 15. பிரிந்தவழிக் கலங்கல் 16. பெற்றவழி மலிதல் (இது, வரைவு நீட்டித்தவழி வெளிப் படுத்தவும், நீட்டியாவழி வெளிப்படுத்தாமையும் ஆம்) 17. வருந்தொழிற் கருமை வாயில் கூறல் 18. கூறிய வாயில் கொள்ளாக் காலை 19. மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தல் (இது, காப்புச் சிறை மிக்க கையறு கிளவி) 20. உயிராக் காலத்து உயிர்த்தல் (தோழிக்குக் கூறுவள்) 21. வேற்றுவரைவு வரின் அதுமாற்றுதற் கண்ணும் 22. நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்தல் (இது, தோழி நாட்டத்தின்கண் கூறும்) 23. அருமை சான்ற நாலிரண்டு வகையில் பெருமை சான்ற இயல்பின் கண்ணும் (இது, தன் பெருமை தோழிக்குக் கூறல்) 24. பொய்தலை அடுத்த மடலின் கண்ணும் 25. கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் 26. வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும் (இது, தாய் வெறி யாட்டெடுத்தபோது அஞ்சிக் கூறல்) 27. குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் 28. வரைவு தலைவரினும் 29. களவு அறிவுறினும் 30. தமர் தற்காத்த காரண மருங்கினும் (இது, இற்செறிப்பு) 31. தன்குறி தள்ளிய தெருளாக் காலை வந்தனன் பெயர்ந்த வறுங்கள நோக்கித் தன்பிழைப்பாகத் தழீஇத் தேறல் 32. வழுவின்றி நிலைஇய இயற்படு பொருளினும் (இயற்பட மொழிதல்) 33. பொழுதும் ஆறும் புரைவது அன்மையின் அறிவுதலை வந்த சிந்தைக் கண்ணும் (கள - 46 வரைதல் வேட்கை) 34. காமஞ்சிறத்தல் 35. அவனளி சிறத்தல் 36. ஏமஞ்சான்ற உவகைக் கண்ணும் இவை முப்பத்தாறினும் தலைவி கூறுவள். 1. மறைந்து அவன் காண்டல் - தலைவன் புணர்ந்து நீங்குங்கால் அவன் மறையும்வரை பார்த்திருந்து அதைத் தோழிக்குக் கூறுவள். காட்டு : “ கழிப்பூக் குற்றும் கான லல்கியும் வண்டற் பாவை வரிமண லயர்ந்தும் இன்புறப் புணர்ந்தும் இளிவரப் பணிந்தும் தன்றுயர் வெளிப்படத் தவறி, நந்துயர் அறியா மையின் அயர்ந்த நெஞ்சமொடு செல்லு மன்னோ மெல்லம் புலம்பன், செல்வோன் பெயர்புறத் திரங்கிமுன் னின்று தகைஇய சென்றவென் நிறையில் நெஞ்சம் எய்தின்று கொல்லோ தானே எய்தியும் காமஞ் செப்ப நாணின்று கொல்லோ, உதுவ காணவ ரூர்ந்த தேரே சிறுகுடிப் பரதவர் பெருங்கடல் மடுத்த கடுஞ்செலல் கொடுந்திமில் போல நிவந்துபடு தோற்றமொ டிகந்துமா யும்மே.” (அகம் - 300) இதனுள், ‘நந்துயர் அறியாமையின் அயர்ந்த நெஞ்ச மொடு செல்லும்’ என்பது தன்வயினுரிமை. ‘தேர் . . . . இகந்து மாயும்’ என்பது அவன் வயிற் பரத்தைமை. 2. தன் காட்டுறுதல் - நாணினால் தன்னை யவன் காணாமல் மறைந் தொழுகினும், தன் மெலிவினைத் தலைவற்குக் காட்ட வேண்டு மிடத்தும்; தன் மெலிவினை யாராவது தலைவற்கு உணர்த்த வேண்டு மென்று கருதிக் கூறுவள். காட்டு : இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் தோழி வாழ்நம் படப்பை நீர்வார் பைம்புதர்க் கலித்த மாரிப் பீரத் தலர்சில கொண்டே. (குறுந் - 98) ‘இன்னளாயினள்’ என்றது - தற்காட்டுறுதல். இதற்கு இரண்டும் உள. 3. நிறைந்த காதலிற் சொல்லெதிர் மழுங்கல் - தலைவி காதல் மிகுதியால் தலைவன் பரத்தைமையைத் தான் அறிவதாகக் கூற இயலாது போயினும், தன் கண்களும் அணிகளும் அவனுக் குணர்த்தின வென்று தோழிக்குக் கூறுவள். சொல்லெதிர் மழுங்கல் - சொல்ல முடியாமை. காட்டு : “ பிறைவனப் பிழந்த நுதலும் யாழநின் இறைவரை நில்லா வளையும் மறையா தூரலர் தூற்றுங் கௌவையு முள்ளி நாணிட் டுரையவற் குரையா மாயினும். . . மெல்லம் புலம்பற் கண்டுநிலை சொல்லாக் கரப்பவுங் கரப்பவுங் கைம்மிக் குரைத்த தோழி யுண்க ணீரே.” (நற் - 263) இது, ‘யாமுரையாமாயினும் கண் உரைத்தன’ என்றலின் இரண்டுங் கூறினாள். 4. வழிபாடு மறுத்தல் - வருத்த மிகுதியால் தலைவனை வழிபாடு மறுத்துக் கூறுவள். வழிபடுதல் - மதித்தல். காட்டு : “ உள்ளி னுள்ளம் வேமே, உள்ளா திருப்பினெம் மளவைத் தன்றே, வருத்தின் வான்றோய் வற்றே காமம் சான்றோ ரல்லர்யாம் மரீஇ யோரே.” (குறுந் - 102) ‘சான்றோரல்லர்’ எனல் காண்க. 5. மறுத்து எதிர் கோடல் - அங்ஙனம் வழிபாடு மறுத்த தலைவியே அவனை ஏற்றுக் கொள்ளுதல். காட்டு : “ கௌவை யஞ்சிற் காம மெய்க்கும் எள்ளற விடினே யுள்ளது நாணே பெருங்களிறு வாங்க முறிந்து நிலம்படாஅ நாளுடை யொசிய லற்றே கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே.” (குறுந் - 112 ) நாணே யுள்ளது, ‘நலன் போம்’ என்றலின், மறுத்தெதிர் கோடல், எய்த்தல் - குறைதல். 6. பழிநீர் முறுவல் சிறிதே தோற்றல் - தலைவன் பிரிவால் உண்டான நோய் நீங்குவதற்கு அவள் தாய் முதலியோர் வேலனுக்கு வெறியாடல் செய்யக் கருதவும், அது காலைத் தலைவன் வந்ததனால் தன் நோய் தீர்ந்தமையால் உண்டான மகிழ்ச்சியைத் தலைவி தோழிக்கு முறுவற் குறிப்பால் காட்டுவள். பழி - பழிதரும் காதல் நோய். முறுவல் - புன்சிரிப்பு. வெறியாட்டால் தீர்ந்த தென்று தலைவன் அறியின் கற்பிற்குப் பழியாதலின், ‘பழி’ என்றார். காட்டு : “ கணங்கொ ளருவிக் கான்கெழு நாடன் மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல் இதுவென வறியா மறுவரற் பொழுதில் நெடுவேட் பேணத் தணிகுவ ளிவளென முதுவாய்ப் பெண்டி ரதுவாய் கூற முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள் களிற்றிரை தெரீஇய பார்வ லொதுக்கின் ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல நன்மனை நெடுநகர்க் காவல ரறியாமைத் தன்னசை யுள்ளத்து நன்னசை வாய்ப்ப இன்னுயிர் குழைய முயங்குதொறு மெய்ம்மலிந்து நக்கனெ னல்லனோ யானே யெய்த்த நோய்தணி காதலர் வரவீண் டேதில் வேலற் குலந்தமை கண்டே.” (அகம் - 22) இதனுள், பழிதீர அவன் வந்து உயிர் தளிர்ப்ப முயங்கவே தான் நக்க நிலையைத் தலைவி தோழிக்குக் கூறியவாறு காண்க. 7. கைப்பட்டுக் கலங்கினும் - தலைவி யறியாது தலைவன் எதிர்க்கப்பட்ட வழிப் பிறர் அறிவரெனத் தலைவி கலங்கித் தோழிக்குக் கூறுவள். காட்சி விருப்பினை மீறிக் கலக்கம் புலப்பட்டது தலைவனிடம் பரத்தைமை கருதி யென்க. காட்டு : “ தொடிசெறி யாப்பமை யரிமுன்கைப்பணைத் தோளாய் அடியுறை யருளாமை யொத்ததோ நினக்கென்ன நரந்தநா றிருங்கூந்தல் எஞ்சாது நனிபற்றிப் பொலம்புனை மரவாய் நுங்கிய சிகழிகை நலம்பெறச் சுற்றிய குரலமை யொருகாழ் விரன்முறை சுற்றி மோக்கலு மோந்தன் அதனால், அல்லல் களைந்தனன் தோழி.” (கலி - 54) இதனுள், ‘அதனால் அல்லல் களைந்தனன் தோழி’ எனக் கைப்பட்டுக் கலங்கிய வருத்தத்தைக் களைந்தேன் எனத் தலைவி உரையெனத் தோழிக்குரைத்தவாறு காண்க. 8. நாணுமிக வரினும் - பரத்தைமை காரணமாக, தலைவனை எதிர்ப்பட்ட தலைவி தன் பெரு நாணுடைமை கூறித் தலைவனை ஏற்றுக் கொள்ள மறுத்தல். காட்டு : “ நெய்பெய் தீம்பால் பெய்தனம் வளர்த்து நும்மினும் சிறந்தது நுவ்வை யாகுமென் றன்னை கூறினள் புன்னையது சிறப்பே; அம்ம நாணுதும் நும்மொடு நகையே துறைகெழு கொண்கநீ நல்கின் நிறைபடு நீழல் பிறவுமா ருளவே.” (நற் - 172) இதனுள், ‘அம்ம நாணுதும்’ எனப் புதிது வந்ததோர் நாண்மிகுதி தோன்ற மறுத்துரைத்தலின், தன்வயினுரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் கூறினாள். 9. இட்டுப் பிரிவு இரங்கினும் - களவொழுக்கம் நிகழும் போது தலைவன் சிறிது காலம் தன்னூர்க்குப் பிரிந்து போவதைத் தலைவி ஆற்றாது தோழிக்குக் கூறுவள். இட்டு - அணுமை. இங்கே குறுகிய காலம். அகத் - 18 உரை பார்க்க. காட்டு : “ யானே யீண்டை யேனேயென் னலனே ஆனா நோயொடு கான லஃதே துறைவன் தம்மூ ரானே மறையல ராகி மன்ற மஃதே.” (குறுந் - 97) இதனுள், ‘தம்மூரான்’ என்றலின், பகை முதலிய பிரிவின்றிச் சிறிது காலம் பிரிந்தானென, அவ்விரண்டுங் கூறினாள். இது, களவில் புலவிப் போலி. 10. அருமை செய்து அயிர்ப்பினும் - இரண்டொருநாள் தலைவன் தலைவியை மறந்தனன் போல் குறியிடத்துவரா திருப்பினும் தலைவி தோழிக்குக் கூறுவள். இது, முற்கூறிய இட்டுப் பிரிவே யன்றி, அங்கு இருந்து கொண்டே குறியிடத்து வாராதிருத்தலாம். அது, தண்டா திரத்தலை முனிந்த மற்றைய வழித் (கள - 11) தலைவன் தானும் அரியனாய் மறந்தான் போன்று காட்டுதல். காட்டு : “ தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் தாமறிந் துணர்க வென்ப மாதோ மலைகெழு நாடன் கேண்மை பலவின் மாச்சினை துறந்த கோள்முதிர் பெரும்பழம் விடரளை வீழ்ந்துக் காங்குத் தொடர்பறச் சேணுஞ் சென்றுக் கன்றே, அறியா தேகல் லடுக்கத் திருள்முகை யிருந்த குறிஞ்சி நல்லூர்ப் பெண்டிரும் இன்னு மோவா ரென்றிறத் தலரே.” (நற் - 116) இதனுள், ‘தீங்கு செய்தோரையும் பொறுப்பார் நம்மை துறந்தது, நாம் அரியராகியது போலத் தாமும் அரியராயினார் போலும்’ என, இரண்டுங் கூறினாள். 11. வந்தவழி எள்ளினும் - பலநாள் வாராது அரிதாக வருதல் பற்றித் தலைவன் வந்த போது அவனை இகழ்ந்து கூறுவாள். அங்ஙனம் கூறும்போது, முன்னிலைப் புறமொழியாகக் கூறுவாள். காட்டு : “ வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை ஆரஞ ருற்றன கண்.” (குறள்) “ இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்க ணுடைத்தாற் புணர்வு” (குறள்) இவற்றுள், ‘வரிற்றுஞ்சா’ என வரவும், ‘புன்கணுடைத்து’ எனப் பிரிவும் அஞ்சி, இரண்டும் கூறினாள். வரவையும் பிரிவையும் அஞ்சினாளென்க. இவை, தலைவன் முன், முன்னிலைப் புற மொழியாகத் தோழிக்குக் கூறியது. முன்னிலைப் புறமொழியாவது - முன்னிலை யாரைப் படர்க்கை யாராகவோ, பிறிதொன்றனைக் கூறுவது போலவோ கூறுவது. பொதுவியல் 33 சூ. உரை பார்க்க. 12. விட்டு உயிர்த்து அழுங்கினும் - தமது களவொழுக்கத்தைத் தமர்க்கு உணர்த்தற்குத் தோழிக்கு வாய்விட்டுக் கூறி, அதனைத் தோழி வெளிப்படையாகக் கூறக் கூடாதெனக் கூறுதல். தான் வெளிப்படையாகக் கூறித் தோழியை வெளிப்படையாகக் கூறவேண்டா மென்பாள். அழுங்கல் - தவிர்தல். விட்டு உயிர்த்தல் - வாய்விட்டுக் கூறல். காட்டு : “ வலந்த வள்ளி மரனோங்கு சாரல் கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப் பொன்னேர் புதுமலர் வேண்டிக் குறமகள் இன்னா விசைய பூசல் பயிற்றலின் ஆகொள் வயப்புலி யாகுமஃ தெனத்தம் மலைகெழு சீறூர் புலம்பக் கல்லெனச் சிலையுடை யிடத்தர் போதரு நாடன் நெஞ்சமர் வியன்மார் புடைத்தென வன்னைக் கறிவிப் பேங்கொல் அறிவியேங் கொல்லென இருபாற் பட்ட சூழ்ச்சி யொருபால் சேர்ந்தன்று வாழி தோழி, யாக்கை இன்னுயிர் கழிவ தாயினு நின்மகள் ஆய்மல ருண்கட் பசலை காம நோயெனச் செப்பா தீமே.” (அகம் - 52) எனக் காண்க. இது, சிறைப்புறம். பொதுவி - 30 பார்க்க. ‘செப்பாது ஈமே’ - குறிப்புச் சொல். 13. நொந்து தெளிவு ஒழிப்பினும் - தலைவன் வரைவு நீட்டித்தலான் அதற்கு வருந்தி, அவனிடத்துள்ள நம்பிக்கையை ஒழிவதாகத் தோழிக்குக் கூறுவள். காட்டு : “ மன்றத் துறுகற் கருங்கண் முசுவுகளும் குன்றக நாடன் தெளித்த தெளிவினை நன்றென்று தேறித் தெளிந்தேன் றலையளி ஒன்றுமற் றொன்று மனைத்து.” (ஐந். எழு - 9) என வரும். தெளிவு - சூள். ஒன்று மற்றொன்று - சொல்லொன்று செயலொன்று. அவன் சொல்லில் நம்பிக்கை இன்றெனத் தோழிக்குக் கூறியது. 14. அச்சம் நீடினும் - தன் தந்தை யறிதலை அஞ்சித் தலைவன் வரவில்லையோ வென்றும், தனக்கும் தலைவனுக்கு முள்ள தொடர்புக்கு இடையூறாக ஒன்றும் நிகழக் கூடாதேயென்றும் அஞ்சும் அச்சும் மிகுவதைத் தோழிக்குக் கூறுவாள். தன் தந்தை - தலைவியின் தந்தை. இதனால், தந்தையறியினும் தடை செய்யாரென்பது தெரிவதனால், பண்டு களவொழுக்கம் யாவர்க்கும் உடன்பாடாகவே நடந்து வந்ததென்பது வெளிப்படை. காட்டு : 1. “ மென்றினை மேய்ந்த சிறுகட் பன்றி வன்கல் லடுக்கத்துத் துஞ்சு நாடன் எந்தை யறிதல் அஞ்சிக்கொல் அதுவே தெய்ய வாரா மையே.” (ஐங் - 261) இது, தந்தையறிதல் அஞ்சி வாராமையோ வென அச்சம் நீடிக் கூறியது. 2. “ வரிதேற்றாய் நீயென வணங்கிறை யவன்பற்றித் தெரிவேய்த்தோட் கரும்பெழுதித் தொய்யில்செய் தனைத்தற்கோ புரியுநம் ஆயத்தார் பொய்யாக எடுத்தசொல் உரிதென வுணராதாய் உலமந்தாய் போன்றதை; எனவாங்கு, அரிதினி யாயிழாய் அதுதேற்றல் புரிபொருள் கன்றுநும் வதுவையுள் நமர்செய்வ தின்றீங்கே தானயந் திருந்ததிவ் வூராயின் எவன்கொலோ நாஞ்செயற் பால தினி.” (கலி - 76) இது, கூட்டமுண்மை யுணர்ந்த தோழிக்கு உண்மை கூறுதற்கு அஞ்சிய அச்சம் நீடித்துத் தலைவி கூறியது. 15. பிரிந்த வழிக் கலங்கினும் - பிரிந்த விடத்துக் கலங்கிக் கூறுவள். காட்டு : “ வருவது கொல்லோ தானே வாரா தவணுறை மேவலின் அமைவது கொல்லோ புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை இருவி யிருந்த குருவி வெருவுறப் பந்தாடு மகளிரிற் படர்தரும் குன்றுகெழு நாடனொடு சென்றவென் நெஞ்சே.” (ஐங் - 295) இது, நாணொடு சென்றவென் நெஞ்சு வருமோ வாராதோ வெனக் கலங்கிக் கூறியது காண்க. 16. பெற்றவழி மலியினும் - தலைவனை இடையீடின்றிக் கூடப்பெற்ற விடத்து மகிழ்ந்து கூறுவள். இடையீடு - ஒரு காரியம் தொடர்ந்து நிகழாமல் இடையில் தவிர்தல். மலிவு - மகிழ்வு. வரைவு நீட்டித்த விடத்துப் பெற்றவழி மலிவை வெளிப் படையாகக் கூறுதலும், வரைவு நீட்டியா வழிப் பெற்றவழி மலிவை வெளிப்படுத்தாமையும் உணர்க. வரைதல் வேட்கையால் இவ்வாறு கூறும். காட்டு : “ அம்ம வாழி தோழி, நலமிக நல்ல வாயின அளிமென் றோள்கள் மல்ல லிருங்கழி மல்கும் மெல்லம் புலம்பன் வந்த மாறே.” (ஐங் - 120) ‘தோள்கள் நல்ல வாயின’ என மகிழ்ந்து தோழிக்குக் கூறினாள். வாராவிடின் நல்லவாகா வென்னுங் குறிப்பால், இரண்டுங் கூறினாள். 17. வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும் - தலைவன் வருவதற்குள்ள இடையூறுகளைத் தோழி கூறிய போதும், இடையூறில்லாக் காலத்தும் அவன் வருவதில்லையெனத் தலைவி கூறுவள். வாயில் - தோழி. காட்டு : “ நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந் தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று நனந்தலை யுலகமுஞ் துஞ்சும் ஓர்யான் மன்ற துஞ்சா தானே.” (குறுந் - 6) இதனுள், பொழுது செல்லவில்லை. மக்கள் துயிலவில்லை என வருந்தொழிற் கருமையைத் தோழி கூறியவழித் தலைவி, நடுயாம மாகியும் மக்கள் துயின்று வந்திலர் என வருந்திக் கூறியது காண்க. 18. கூறிய வாயில் கொள்ளாக் காலையும் - குறை நயப்பிக்கும் தோழி கூற்றைத் தலைவி ஏற்றுக் கொள்ளாது மறுத்துக் கூறுவள். மதியாது கூறுதலுமாம். வாயில் - கூற்றுக்காயிற்று. காட்டு : “ தெருவின்கண், காரண மின்றிக் கலங்குவார்க் கண்டுநீ வாரண வாசிப் பதம்பெயர்த லேதில நீ நின்மேற் கொள்வ தெவன்?” (கலி - 60) இது, தோழி கூற்றினை மறுத்தது. 19. மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும் - காவல் மிகுதியால் தலைவனைக் காணப் பெறாது மனையி லகப்பட்டு - இற்செறிக்கப் பட்டு - கலங்கிய தலைவி தனது உட்கோளை - எண்ணத்தை - தோழிக்கு உரைப்பாள். நினைத்தல் சான்ற - ஆராய்ச்சிமிக்க, அருமறை என்க. அருமறை - களவு - சிதைந்த வழி - மனஞ் சிதைந்த விடத்து. காட்டு : “ கேளா யெல்ல! தோழி யல்கல் வேணவா நலிய வெய்ய வுயிரா ஏமான் பிணையின் வருந்தினே னாகத் துயர்மருங் கறிந்தனள் போல அன்னை துஞ்சா யோவென் குறுமக ளென்றலிற் சொல்வெளிப் படாமை மெல்லவென் னெஞ்சிற் படுமழை பொழிந்த பாறை மருங்கில் சிரல்வா யுற்ற தளவிற் பரலவற் கான்கெழு நாடற் படர்ந்தோர்க்குக் கண்ணும் படுமோ வென்றிசின் யானே.” (நற் - 16) இதனுள், ‘துஞ்சாயோ’ எனத் தாய் கூறியவழி மனைப் பட்டுக் கலங்கிய வாறும், ‘படர்ந்தோர்க்கு’ எனத் தனது உட்கோள் கூறியவாறும், ‘கண்படாக் கொடுமை செய்தான் எனப் பரத்தைமை கூறியவாறும் காண்க. “ கூர்வாய்ச் சிறுகுருகே குண்டுநீ ருட்கிடந்த ஆர லிரைகருதி நித்தலும் நிற்றியால் நேரிணர்ப் புன்னைக்கீழ்க் கொண்கன் வருமெனப் பேருண்கண் நீர்மல்க நின்றாள்மற் றென்னாயோ” இது, குருகுவிடு தூது; காப்புச்சிறை மிக்க கையறு கிளவி. அதாவது, கடுங்காவலால் மிக்க துன்பமுற்றுக் கூறுதல். இது, ‘மனைபட்டுக் கலங்கி’ என்றதால், கொள்ளப்பட்டது. 20. உயிராக் காலத்து உயிர்த்தலும் - தலைவன் செய்தியொன்றையும் ஒருவரும் உரையாத விடத்து, தனது ஆற்றாமையை வெளிப்படுத்துஞ் சொற்களைத் தலைவி தானே கூறுவள். இது, இரண்டும்படக் கேட்போரின்றியுங் கூறுதலாம். காட்டு : “ உறைபதி யின்றித் துறைகெழு சிறுகுடி கானலஞ் சேர்ப்பன் கொடுமை யெற்றி ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள் துஞ்சா துறைநரொ டுசாவாத் துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே.” (குறுந் - 145) இது, தலைவி தானே கூறியது. தலைவி கூறுவன கேட்டற்குத் தோழி பொய்த்துயில் கொள்ளுமென்க. உயிராதாள் (உரையாதாள்) தோழியே யாகலின். ‘உயிர்த்தலும்’ எனப் பொதுப்படக் கூறியவதனால், தோழிக்குக் கூறுவதுங்கொள்க. 21. உயிர் செல வேற்று வரைவு வரின் அது மாற்றுதற் கண்ணும் - தான் இறந்து படு மாற்றால் தன்னை நொதுமலர் வரையக் கருதின் அதை மாற்றுதற் கண்ணும் கூறுவள் - நொதுமலர் - அயலார், பிறர். காட்டு : “ அன்னை வாழிவேண் டன்னை புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை என்னை யென்னு மியாமே யிவ்வூர் பிறிதொன் றாகக் கூறும் ஆங்கு மாக்குமோ வாழிய பாலே.” (ஐங் - 110) இது, நொதுமலர் வரையக் கருதியபோது, அதை மாற்றுவாளாய்த் தாய்க்குக் கூறியது. தாய் - செவிலி. தாய்க்குத் தலைவி கூறாளாகையால், தோழி கொண்டு கூறினளென்க. கொண்டு கூறல் - தலைவிக்காகத் தோழி கூறல், தலைவி கூற்றைத் தோழி கூறல். 22. நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் - தலைவனோடு கூட்ட முண்மையைத் தோழி யாராயும் போது (கள - 13). கண் சிவப்பு, நுதல் வேறுபாடு முதலிய மெய் வேறுபாட்டைச் ‘சுனையாடியதால் கண் சிவந்தது’ என்பது போல மறைத்துக் கூறுவள். இப்போது தோழியறிந்ததே. களவு நிகழ்வதால் செவிலிக்கு மறைத்தலே பெரும்பான்மை. சிறுபான்மை தோழிக்கும் மறைக்கும். தோழி மதியுடம் பாட்டில் தோழிக்கும், பின்னர்ச் செவிலிக்கும் மறைக்குமென்க. காட்டு : 1. “ கண்ணுந் தோளுந் தண்ணறுங் கதுப்பும் ஒண்டொடி மகளிர் தண்டழை யல்குலும் காண்டொறுங் கவினை யென்றி, யதுமற் றீண்டுமறந் தனையாற் பெரிதே வேண்டாய் நீயெவன் மயங்கினை தோழி யாயினுஞ் சிறந்தன்று நோய்பெரி துழந்தே.” இது, ‘காதல் மிகுதியால் கவினை யென்னாமல், வேறு பட்டனை யென்று ஏன் மயங்கினை, எனத் தலைவி தன் வருத்தம் மறைத்தது. 2. “ துறைவன் றுறந்தெனத் துறையிருந் தழுதவென் மம்மர் வாள்முகம் நோக்கி யன்னைநின் அவல முரையென் றனளே, கடலென் பைஞ்சாய்ப் பாவை கொண்டு வண்டலஞ் சிறுமனை சிதைத்ததென் றேனே.” இது, கடல் சிற்றிலைச் சிதைத்ததனால் அழுதேனென்று செவிலிக்கு மறைத்தது. 23. ஒருமைச் கேண்மையின் உறுகுறை தெளிந்தோள் அருமை சான்ற நாலிரண்டு வகையில் பெருமை சான்ற இயல்பின் கண்ணும் - தான் அவளென்னும் வேற்றுமையில்லாத நட்பினாலே, தோழி தனக்கு வந்து கூறிய குறையை முன்னிகழ்ந்த இயற்கைப் புணர்ச்சியைக் கொண்டு காரணங்காட்டுவதாகத் தெளிந்த தலைவி, தான் முன் அரியளாய் இருந்தபோது தலைவன் தன்கண் நிகழ்த்திய மெய்தொட்டுப் பயிறல் (கள - 11) முதலிய எட்டினாலே தனக்குண்டாகிய பெருமை கூறுதற்கு அமைந்த இலக்கணத்தானே கூறுவள். அதாவது, முன் இயற்கைப் புணர்ச்சியில் இவ்வளவு இழிந்தன செய்யவும் யான் நாணுமடனு நீங்காமல் நின்றேனெனத் தன் பெருமை கூறுதல். இழிந்தன - மெய் தொட்டுப் பயிறல் முதலியன. தான் அவள் - தலைவியும் தோழியும். காட்டு : “ இன்னகை யிலங்கெயிற்றுத் தேமொழித் துவர்ச்செவ்வாய் நன்னுதால் நினக்கொன்று நவிலுவாங் கேளினி, நில்லென நிறுத்தான் நிறுத்தே வந்து நுதலு முகனுந் தோளுங் கண்ணும் இயலும் சொல்லு நோக்குபு நினைஇ, ஐதேய்ந் தன்று பிறையு மன்று மைதீர்ந் தன்று மதியு மன்று வேயமன் றன்று மலையு மன்று பூவமன் றன்று சுனையு மன்று மெல்ல வியலு மயிலு மன்று சொல்லத் தளருங் கிளியு மன்று; எனவாங்கு, அனையன பலபா ராட்டிப் பையென வலையர் போலச் சோர்பத னொற்றிப் புலையர் போலப் புன்க ணோக்கித் தொழலுந் தொழுதான் தொடலுந் தொட்டான் காழ்வரை நில்லாக் கடுங்களி றன்னோன் தொழூஉந் தொழூஉமவன் றன்மை ஏழைத் தன்மையோ வில்லை தோழி.” (கலி - 55) இதனுள், ‘பாராட்டி’ எனப் (2) பொய் பாராட்டலும், ‘சோர்பதனொற்றி’ எனக் (6) கூடுதலுறுதலும், நெஞ்சு நெகிழ்ந்த செவ்வி கூறுதலின் கூடுதலுறுதலாயிற்று. ‘புலையர் போல நோக்கி’ என (5) நீடு நினைந் திரங்கலும், ‘தொழலும் தொழுதான்’ என (3) இடம்பெற்றுத் தழாலும், ‘தொடலும் தொட்டான்’ என (1) மெய் தொட்டுப் பயிறலும், ‘காழ்வரை நில்லாக் கடுங்களிறன்னோன்’ எனத் (8) தீராத் தேற்றமும் கூறித் தனக்குப் பெருமை சான்ற இயல்பைத் தலைவி பின்னொருகால் தோழிக்குக் கூறியவாறு காண்க. 24. பொய்தலை அடுத்த மடலின் கண்ணும் - தலைவன் மடலேறுவேன் என்றால் தலைவி அதனைப் பொய்யெனக் கொள்ளுதல். இது, பின்னர் நிகழ்ந்த மடல். முன் நாணத்தால் உடன் பட்டாள்; இப்போது சிறிது நாணம் நீங்கின வாதலின் அதனைப் பொய்யெனத் கொண்டாள். “ வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே, அவையினும் பலவே சிறுகருங் காக்கை, அவையினு மவையினும் பலவே குவிமடல் ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூங்கணங் குரீஇக் கூட்டுள சினையே.” (இறை - 9 மேற்) இது, மடன்மா ஏறுவேனென்றானைப் பறவைக் கூட்டம் நும்மை மடலூர விடாவென விளையாட்டு வகையாற் பொய்யென்று இகழ்ந்தது. 25. கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் - தலைவன் பிரிவால் ஆற்றாத தலைவியை ஆற்றுவித்துச் சலித்த தோழி, தலைவி கண்ணீரைத் துடைக்கும் போது தலைவி கூறுவள். இது, தனது ஆற்றாமைக்கு ஆற்றாத் தோழியைத் தானாற்று விப்பது. “ யாமெங் காமந் தாங்கவும் தாந்தம் கெழுதகை மையினான் அழுதன தோழி, கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் மன்ற வேங்கை மலர்ப்பதம் நோக்கி ஏறா திட்ட ஏமப் பூசல் விண்டோர் விடரகத் தியம்பும் குன்ற நாடற் கண்டவெங் கண்ணே.” (குறுந் - 241) என வரும். கண் அழுதன என்க. அவ்விரண்டுங் கூறியது. 26. வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும் - தலைவி வேறுபாடு எதனால் ஆய தென்று வேலனை வினாய் வெறியாட்டெடுத்த போது, முன்னமே தன் பரத்தைமையான் வரையாது ஒழுகுவான், இன்று நம் ஆற்றாமைக்கு வேறு மருந்து உண்டென்று அறியின், வரைவு நீடுமென்று தலைவி அஞ்சிக் கூறுவள். வரைவு நீடல் - மணஞ்செய்து கொள்ளத் தலைவன் நாள் கடத்தல் - செவிலி வெறியாட் டெடுப்பாள். “ பணிவரை நிவந்த பயங்கெழு கவாஅன் துனியில் கொள்கையொ டவர்நமக் குவந்த இனிய வுள்ளம் இன்னா வாக முனிதக நிறுத்த நல்கல் எவ்வஞ் சூருறை வெற்பன் மார்புறத் தணிதல் அறிந்தன ளல்லள் அன்னை, வார்கோல் செறிந்திலங் கெல்வளை நெகிழ்பதம் நோக்கிக் கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப் பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பிரீஇ முருக னாரணங் கென்றலின், அதுசெத் தோவத் தன்ன வினைபுனை நல்லிற் பாவை யன்ன பலராய் மாண்கவின் பண்டையிற் சிறக்கவென் மகட்கெனப் பறைஇச் செல்வன் பெரும்பெய ரேத்தி வேலன் வெறியயர் வியன்களம் பொற்ப வல்லோன் பொறியமை பாவையிற் றூங்கல் வேண்டின் என்னாங் கொல்லோ தோழி, மயங்கிய மையற் பெண்டிற்கு நொவ்வ லாக ஆடிய பின்னும் வாடிய மேனி பண்டையிற் சிறவா தாயின் இம்மறை அலரா காமையோ வரிதே, யஃதான் றின்றிவ ருறுவிய அல்லல்கண் டருளி வெறிகமழ் நெடுவேள் நல்குவ னெனினே செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக் கான்கெழு நாடன் கேட்பின் யானுயிர் வாழ்த லதனினு மரிதே.” (அகம் - 98) எனக் காண்க. ‘வாழ்தலரிது’ என்பது, தன்வயின் உரிமை. ‘இன்னாவாக நிறுத்த எவ்வம்’ என்பது, அவன் வயிற் பரத்தைமை. இவை வெறியாடலை அஞ்சியதால் நிகழ்ந்தன. 27. குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் - இரவுக்குறி வருந் தலைவன் செய்யுங் குறி பிறிதொன்றால் நிகழின், அக்குறிவழிச் சென்று தலைவனைக் காணாது தலைவி மயங்கிக் கூறுவள். மருடல் - மயங்கல். “ மெய்யே வாழி தோழி சாரல் மைப்பட் டன்ன மாமுக முசுக்கலை ஆற்றப் பாயாத் தப்ப லேற்ற கோட்டொடு போகி யாங்கு நாடன் தாங்குறி வாயாத் தப்பற்குத் தாம்பசந் தனவென் றடமென் றோளே.” (குறுந் - 121) இதனுள், சரியாகப் பாயாது தப்பாகப் பாய்ந்து கோட்டை முறித்த முசுக்கலை போல, யாங் குறி பெறுங்காலத்து வாராது பின் வந்ததால் என் தோள் பசந்தனவென்று, பின்னொருநாள் தலைவன் வந்தபோது தோழியை நோக்கி, இவ்வரவு மெய்யோவென அவ்விரண்டுங் கூறியது. கோடு - மரக்கிளை. 28. வரைவு தலைவரினும் - தலைவன் மணக்கக் கருதினும், முன்னர்க் களவில் நிகழ்ந்த ஆற்றாமையைத் தலைவி கூறுவள். இது களவு வெளிப்பட்ட பின்னராயினும், முன்னராயினும் மணந்து கொள்ளுதற் கேற்ற செய்கை தலைவனிடம் நிகழின் கூறுவள். “ கொல்லைப் புனத்த அகில்சுமந்து கற்பாய்ந்து வானி னருவி ததும்பக் கவினிய நாடன் நடனுடைய னென்பதனால் நீப்பினும் வாடல் மறந்தன தோள்.” (ஐந் - எழு - 2) ‘நயனுடையன்’ என்பதனால், வரைவு தலைவந்தமையும் (தலைவன் மணக்க விரும்பினமையும்), ‘நீப்பினும்’ என்பதனால், அவன் வயின் பரத்தைமையுங் கூறினாள். நயனுடைமையால் தோள்வாட மறந்தன வென்க. 29. களவு அறிவுறினும் - களவொழுக்கத்தைப் பிறர் அறியும்படி தலைவன் நடக்கினும் தலைவி கூறுவள். “ நாண்மழை தலைஇய நன்னெடுங் குன்றத்து மால்கடற் றிரையி னிழிதரு மருவி அகலிருங் கானத் தல்கணி நோக்கித் தாங்கவுந் தகைவரை நில்லா நீர்சுழல் போதெழில் மழைக்கண் கலுழ்தலின் அன்னை என்செய் தனையோநின் இலங்கெயி றுண்கென மெல்லிய வினிய கூறலின் வல்விரைந் துயிரினுஞ் சிறந்த நாணு நனிமறந் துரைக்கலுய்ந் தனனே தோழி, சாரற் காந்த ளூதிய மணிநிறத் தும்பி, தீந்தொடை நரம்பி னிமிரும் வான்றோய் வெற்பின் மார்பணங் கெனவே.” (நற் - 17) யான் தலைவனை எதிர்ப்பட்ட இடங்கண்டு அழுதேன். அது கண்ட அன்னை ஏன் அழுகிறாயெனக் கேட்க, இக்களவினைக் கூறலானேன் எனத் தாய் களவறி வுற்றவாறு கூறுவாள், அவன் வயிற் பரத்தைமை கூறினாள். நாண் மறந்து வெற்பன் மார்பணங் கென உரைக்கலுய்ந்தேனென்க. 30. தமர் தற்காத்த காரண மருங்கினும் - அங்ஙனம் களவறி வுற்றதனால், சுற்றத்தார் தனக்குக் காவலேற் படுத்திய போது தலைவி அவன் பரத்தைமை கூறுவாள். காரணமாவன - தலைவி தோற்றப் பொலிவும், வருத்தமும், அயலார் கூறும் அலருமாம். தற்காத்தல் - இற்செறித்தல். “ அடும்பி னாய்மலர் விரைஇ நெய்தல் நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல் ஓரை மகளிர் அஞ்சியீர் ஞெண்டு கடலிற் பரிக்குந் துறைவனொ டொருநாள் நக்குவிளை யாடலுங் கடந்தன் றைதேய் கம்ம மெய்தோய் நட்பே.” (குறுந் - 401) இது, மெய்வேறுபாடு கண்டு இற்செறித்தமை தலைவி தன்னுள்ளே கூறியது. 31. தன்குறி தள்ளிய தெருளாக் காலை வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும் - இற்செறிப்பால் தன் குறியிடம் சேர முடியாமையால் தலைவன் குறியிடத்து வந்து தன்னைக் காணாது சென்ற பின், தமக்குப் பயன்படாத வறுங்களத்தை நினைந்து, இற்செறிப்பால் வரமுடியா தென்பதை முன்னரே தலைவற்குக் கூறாத தவறு தனதென்றும், தோழியும் அது கூறவில்லை எனத் தன்னொடு சேர்த்துத் தமது தவற்றைத் தெளிந்து கூறுவாள். குறியிடம் வரமுடியாமல் இற்செறிப் புண்டதைத் தானேனும், தோழியைக் கொண்டேனும் முன்னரே தலைவற் குரையாமை தமது குற்றமென்பதை யுணர்ந்து கூறுவள். இவ்வாறு கூறுதல் - குறிபெயர்த்தல் எனப்படும். காட்டு : “ கணைவலந் தெளிந்து துணைப்படர்ந் துள்ளி வருதல் வாய்வது வான்றோய் வெற்பன் வந்தன னாயின் அந்தளிர்ச் செயலைக் காவி லோங்குசினைத் தொடுத்த வீழ்கயிற் றூசல் மாறிய மருங்கும், பாய்புடன் ஆடா மையிற் கலுழ்பில தேறி நீடிதழ்த் தலைஇய கவின்பெறு நீலம் கண்ணென மலர்ந்த சுனையும், வண்பறை மடக்கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல் குலவுப் பொறை யிறுத்த கோற்றலை யிருவிக் கொய்தொழி புனமும் நோக்கி நெடிது நினைந்து பைதலன் பெயரலன் கொல்லோ, வைதேய் கயவெள் ளருவி ஆடிய வுயர்வரைக் கூஉங்கண் அஃதெம் மூரென ஆங்கதை யறிவுறல் மறந்திசின் யானே.” (அகம் - 38) இதனுள், ஊசல் மாறுதலும், சுனையும், கொய் தொழிபுனமும் தன் குறி தள்ளிய இடம். ‘மறந்திசின்’ என்றது, தெருளாக் காலை. ‘ஊஉங்கண்ணது ஊர்’ என உணர்த்தாமையால், அவன் கண் தவறில்லைத் தன் தவறெனக் கொண்டாள். இது, சிறைப்புறமாக வரைவு கடாயது. இற்செறிப்பால் பழைய படி குறியிடங்கட்கு வரமுடியாது வரைந்துகொள் என்பதாம். 32. வழுவின்றி நிலைஇய இயற்படு பொருளினும் - தோழி தலைவனைக் குற்றங் கூறியபோது தலைவி அதை மறுத்துக் கூறுவள்; தோழி இயற்பழித்த போதே தலைவி இயற்பட மொழிவளென்க. வழுவின்றி நிலைஇய இயற்படு பொருள் - குற்றமில்லாத இயல்பு. இயல்பு - தன்மை, குணம். காட்டு : “ அடும்பமல் நெடுங்கொடி யுள்புதைத் தொளிப்ப வெண்மணல் விரிக்குந் தண்ணந் துறைவன் கொடிய னாயினு மாக அவனே தோழியென் னுயிர்கா வலனே!” (ஐங். பக். - 144) இது, இயற்பழித்த தோழிக்கு இயற்பட மொழிந்தது. 33. பொழுதும் ஆறும் புரைவது அன்மையின் அறிவு தலை வந்த சிந்தைக் கண்ணும் - பொழுதின்னாமை, ஆறின்னாமையால் தலைவனைச் சந்தித்தல் கூடாமையால் தலைவி மன மழிந்து கூறுவள். தோழியுங் கூறுவள். அழிவு தலைவந்த சிந்தை - வருந்திய மனம். ஆறு - வழி. இது, வரைதல் வேட்கை - கள - 46இல் கூறுவதையே, தன்வயினுரிமையும் அவன்வயின் பரத்தைமையும் பற்றி இங்கு கூறினார். காட்டு : “ குறையொன் றுடையேன்மற் றோழி நிறையில்லா மன்னுயிர்க் கேமஞ் செயல்வேண்டு மின்னே அரவழங்கு நீள்சோலை நாடனை வெற்பில் இரவரா லென்ப துரை.” (ஐந். எழு - 14) இதனுள், ‘இரவரால்’ என்றது - பொழுதின்னாமை. ‘அர வழங்கும்’ என்றது - ஆறின்னாமை. 34. காமம் சிறப்பினும் - தன் காம மிகுதியைக் கூறுவாள். காட்டு : “ கொடுந்தா ளலவ! குறையா மிரப்பேம் ஒடுங்கா வொலிகடற் சேர்ப்பன் - நெடுந்தேர் கடந்த வழியையெங் கண்ணாரக் காண நடந்து சிதையாதி நீ.” (ஐந். ஐம் - 42) ‘அலவ, தேர் சென்ற வழியை நான் காண வேண்டும் சிதையாதே’ எனக் காமமிகுதி கூறியவாறு காண்க. அலவன் - நண்டு. வழி - தாரை. தலைவன் தேர். 35. அவன் அளி சிறப்பினும் - தலைவனது அன்புமிகுதியைக் கூறுவள். அளி - அன்பு. காட்டு : “ உள்ளுந ருட்குங் கல்லடர்ச் சிறுநெறி அருள்புரி நெஞ்சமொ டெஃகுதுணை யாக வந்தோன் கொடியனு மல்லன், தந்த நீதவ றுடையையு மல்லை, நின்வயின் ஆனா வரும்படர் செய்த யானே தோழி தவறுடை யேனே.” (அகம் - 72) இதனுள். ‘வந்தோன்’ என்பது, அவனளி சிறத்தல். ‘தவறுடை யேன்’ என்பது தன்வயினுரிமை. ‘கொடியனு மல்லன்’ என்பது, அவன் வயிற் பரத்தைமை. 36. ஏமம் சான்ற உவகைக் கண்ணும் - களவொழுக்கத்திற்கு இடையூறு நேராமல் தலைவன் இடைவிடாது வந்து காப்புச் செய்தலை மகிழ்ந்து கூறுவள். ஏமம் - காவல்; இன்பத்திற்குப் பாதுகாவல். இது, எப்போதும் கூட்டம் பெற்ற மையால் மகிழ்ந்து கூறுதல். காட்டு : “நோயலைக் கலங்கிய மதனழி பொழுதிற் காமஞ் செப்பல் ஆண்மகற் கமையும், யானென், பெண்மை தட்ப நுண்ணிதிற் றாங்கிக் கைவல் கம்மியன் கவின்பெறக் கழாஅ மண்ணாப் பசுமுத் தேய்ப்பக் குவியிணர்ப் புன்னை யரும்பிய புலவுநீர்ச் சேர்ப்பன் என்ன மகன்கொல் தோழி, தன்வயின் ஆர்வ முடைய ராகிய மார்பணங் குறுநரை யறியா தோனே.” (நற் - 94) இதனுள், ‘கழுவாத பசிய முத்தம் தனது மிக்க ஒளியை மறைத்துக் காட்டினாற்போல, யாமும் புணர்ச்சியால் நிகழ்ந்த மிக்க நலனைப் புலப்படாமல் தாங்கிப் பெண்மையால் பொறுத்துக் கொள்ளும்படி தன்மார்பால் வருத்த முற்ற என்னை இன்னாரென்று அறியாத சேர்ப்பனை என்ன மகனென்று சொல்வதென மகிழ்ந்து கூறியது காண்க. ஓரிடத்தான தன்வயின் உரிமையும் அவன் வயின் பரத்தையும் உள - இக்கூற்று முப்பத்தாறனுள் ஒரோவோரிடங்களிலே தன்னிடத்து உரிமையுண்டாகவும், அவனிடத்து அயன்மை யுண்டாகவும் கூற்று நிகழ்த்தல் உள, அன்னவும் உள - அவை போல்வன பிறவும் உள என்றவாறு. அன்ன பிறவாவன: 1. தலைவி இரவுக்குறி நயந்து கூறல் 2. இரவுக்குறி வந்த தலைவனை நோக்கிக் கூறல் 3. பகற்குறிக்கண் தலைவன் நீட ஆற்றாது தோழிக்குக் கூறல். காட்டு : 1. “ பிணிநிறந் தீர்ந்து பெரும்பணைத் தோள் வீங்க அணிமலை நாடன் வருவான்கொல் தோழி, கணிநிற வேங்கை கமழ்ந்துவண் டார்க்கும் மணிநிற மாலைப் பொழுது.” (திணை ஐம் - 9) இது, தலைவி இரவுக்குறி நயந்து கூறியது. 2. “ பெயல்கால் மறைத்தலின் விசும்புகா ணலரே நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலரே எல்லை சேறலி னிருள்பெரிது பட்டன்று பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல் யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப! வேங்கை கமழுஞ் சிறுகுடி யாங்கறிந் தனையோ நோகோ யானே.” (ஐங் - 335) இது, இரவுக்குறி வந்த தலைவனை நோக்கிக் கூறியது. 3. ஓங்க லிறுவரைமேற் காந்தள் கடிகவினப் பாம்பென வோடி யுருமிடித்துக் கண்டிரங்கும் பூங்குன்ற நாடன் புணர்ந்தவந் நாட்போல ஈங்கு நெகிழ்ந்த வளை. (திணை. ஐம் - 3) இது, பகற்குறிக்கண் தலைவன் நீட ஆற்றாது தோழிக்குக் கூறியது. (43) 9. செவிலி 15: 1. களவு அலர் ஆயினும் 2. காம மெய்ப் படுப்பினும் 3. அளவு மிகத் தோன்றினும் 4. தலைப் பெய்து காணினும் இ - ள்: 1 களவு அலர் ஆயினும் - களவொழுக்கத்தைப் பிறர் அறிந்து அலர் கூறினும் செவிலி கூறுவள். அலர் - பிறர் கூறும் பழிச் சொல். செவிலி கூற்றுக்களெல்லாம் செவிலி தானே கூறலும், செவிலி கூறினாளாகத் தலைவியும் தோழியுங் கொண்டு கூறலும் என இருவகைப்படும். காட்டு: 1. “ பாவடி யுரல பகுவாய் வள்ளை ஏதின் மாக்கள் நுவறலு நுவல்ப, அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய நல்லியற் பாவை யன்னவென் மெல்லியற் குறுமகள் பாடிநன் குறினே.” (குறுந் - 89) இது, செவிலி தானே கூறியது. ‘வள்ளை பாடி நன்குறின் நுவல்ப’ என அலர் குறித்தவாறு. 2. “ அம்ம வாழி தோழி நென்னல் ஓங்குதிரை வெண்மண லுடைக்குந் துறைவற் கூரார் பெண்டென மொழிய வென்னை அதுகேட் டன்னாய் என்றன ளன்னை பைபைய வெம்மை யென் றனென் யானே.” (ஐங் - 133) இதனுள், பெண்டென்று ஊரார் அலர் தூற்றினமை கேட்டு அன்னை அன்னாய் என்றனள் எனச் செவிலி கூறிய கூற்றினைத் தலைவி கொண்டு கூறியவாறு காண்க. 2. காமம் மெய்ப்படுப்பினும் - தலைவி மறைந் தொழுகும் காமம் மெய்யின்கண் தோன்றினும், செவிலி கூறுவள். அவை தோற்றப் பொலிவு முதலியன. காட்டு: “ மணியிற் றிகழுழ்தரு நூல்போல் மடந்தை அணியிற் றிகழ்வதொன் றுண்டு.” (குறள்) இது, காமத்தால் விளங்கிய தலைவி பொலிவினைச் செவிலி தானே கூறியது. 3. அளவு மிகத் தோன்றினும் - தலைவி கண்ணும் தோளும் மார்பும் பிறவும் காமப்பருவத்திற் கேற்றவாறு பெருத்துத் தோன்றினும் செவிலி கூறுவள். தோழி கொண்டுங் கூறுவள். காட்டு: 1. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்ணிறைந்த நீர்மை பெரிது. (குறள்) இது, மடமைப் பெருக்கங்கண்டு செவிலி தானே கூறியது. 2. “ பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென ஆகத் தரும்பிய சுணங்கும், அம்புடைக் கண்ணுருத் தெழுதரு மார்பு நோக்கி எல்லினை பெரிதெனப் பன்மாண் கூறிப் பெருந்தோ ளடைய முயங்கி நீடுநினைந் தருங்கடிப் படுத்தன ளன்னை தாரார் மார்பநீ தணந்த ஞான்றே.” (அகம் - 150) இது, தோழி கொண்டு கூறியது. 4. தலைப்பெய்து காணினும் - தலைவன் மனையிடத்து வருதலையும், தலைவி வெளியில் போதலையும் கண்டவிடத்தும் செவிலி கூறுவள். தலைப்பெய்தல் - எதிர்ப்படல். காட்டு: “ மின்னொளிர் எஃகஞ் சென்னெறி விளக்கத் தனியன் வந்து பணியலை முனியான் குறியிறைக் குரம்பைநம் மனைவயிற் புகுதரும் மெய்ம்மலி யுவகைய னந்நிலை கண்டு முருகென வுணர்ந்து முகமன் கூறி உருவச் செந்தினை நீரொடு தூஉய் நெடுவேட் பரவு மன்னை யன்னோ என்னா வதுகொல் தானே பொன்னென மலர்ந்த வேங்கை யலங்குசினை பொலிய மணிநிற மஞ்ஞை யகவும் அணிமலை நாடனோ டமைந்தநந் தொடர்பே.” (அகம் - 272) இது, தலைவனைச் செவிலி கண்டு முருகெனப் பராவினமை தோழி கொண்டு கூறியது. நற்றாய் கூற்று இச் செவிலி கூற்று நான்கும் நற்றாய்க்கும் உரியனவாகும். (கள - 16) 3. வரைதல் வேட்கை 1. தலைவியும் தோழியும் 162. பொழுதும் ஆறும் காப்புமென் றிவற்றின் வழுவி னாகிய குற்றங் காட்டலும் தன்னை யழிதலும் அவனூ றஞ்சலும் இரவினும் பகலினும் நீவர வென்றலும் கிழவோன் றன்னை வார லென்றலும் நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறலும் புரைபட வந்த அன்னவை பிறவும் வரைதல் வேட்கைப் பொருள வென்ப. தலைவி: 1. பொழுதின்னாமை 2. ஆறின்னாமை 3. காப்பின்னாமை 4. தன்னையழிதல் 5. அவனூறஞ்சல் 7. கிழவோன்றன்னை வாரலென்றல் 8. நன்மையும் தீமையும் பிறிதினைக்கூறல் தோழி: 6. இரவினும் பகலினும் நீவர என்றல் இ - ள்: 1, 2, 3. பொழுதும் ஆறும் காப்பும் என்று இவற்றின் வழுவின் ஆகிய குற்றம் காட்டலும் - இராக்காலமும், அக்காலத்து வழியும், காவலும் முன்போலன்றி மாறுபடுதலான், அவற்றால் தலைவற்குளதாகிய குற்றத்தைத் தலைவி தலைவற்குக் கூறுவள். காட்டல் - காரணங் காட்டிக் கூறல். காட்டு: 1, 2.“மன்றூபா டவிந்து மனைமடிந் தன்றே கொன்றோ ரன்ன கொடுமையோ டின்றே யாமங் கொள்வரிற் கனைஇக் காமங் கடலினு முரைஇக் கரைபொழி யும்மே எவன்கொல் வாழி தோழி, மயங்கி இன்ன மாகவும் நன்னர் நெஞ்சம் என்னொடு நின்னொடுஞ் சூழாது கைம்மிக் கிரும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கான நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி.” (அகம் - 128) இதனுள், ‘மன்றுபா டவிந்து’ என்பது, பொழுதின்னாமை. ‘சிறு நெறி’ என்பது, ஆறின்னாமை. 3. ஈர்ந்த ணாடையை எல்லி மாலையை சோர்ந்துவீழ் கதுப்பினாள் செய்குறி நீவரின் ஒளிதிகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர் களிறென வார்ப்பவர் ஏனல்கா வலரே. (கலி - 52) இது, காப்பின்னாமை கூறியது. 4. தன்னை அழிதலும் - தலைவன் அக்காலத்து வரத்தான் ஏதுவாயினேன் எனத் தன்னை நொந்து கூறுவள். காட்டு: “ நீதவ றுடையையு மல்லை, நின்வயின் ஆனா வரும்படர் செய்த யானே தோழி தவறுடை யேனே.” (அகம் - 72) இது, தான் தவறுடையேன் எனத் தன்னை நொந்து கூறியது. 5. அவன் ஊறு அஞ்சலும் - அவ்வழியில் தலைவற்கு உண்டாகும். கேட்டிற்கு அஞ்சிக் கூறுவள். அது விலங்கு முதலிய வற்றால் தலைவன் வரவிற்கு இடையூறு நேருமென்று அஞ்சுதல். காட்டு: “ அஞ்சுவல் வாழி யைய ஆரிருட் கொங்கிய ரீன்ற மைந்தின் வெஞ்சின வுழுவை திரிதருங் காடே” இது, தலைவனைப் புலி நலியுமென் றஞ்சியது. உழுவை - புலி. 7. கிழவோன் தன்னை வாரல் என்றலும் - தலைவியும் தோழியும் தலைவனை வாராதே என்று கூறுவர். இவர் தலைமை செய்தல் வழுவெனினும் அன்பான் அமைந்தது. காட்டு: 1. “ இரவு வார லைய, விரவுவீ அகலறை வரிக்குஞ் சாரல் பகலும் பெறுதியிவள் தடமென் றோளே.” (கலி - 49) இது, இரவு வாரலென்றது. தோழி. 2. “பகல்வரிற் கௌவை யஞ்சுதும்.” (அகம் - 118) இது, பகல்வார லென்றது. கௌவை - அலர். 3. “நல்லவரை நாட, நீவரின் மெல்லிய லோருந் தான்வா ழலளே.” (அகம் - 12) இது, இரவும் பகலும் வாரலென்றது. தோழி. 8. நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும் - நன்மையையும் தீமையையும் வேறொரு பொருள்மேல் வைத்துக் கூறுவர். அதாவது, எடுத்துக்காட்டுத் தருதல். காட்டு: “ கழிபெருங் காதல ராயினுஞ் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்.” (அகம் - 112) இதனுள், சான்றோர் பழியொடுவரும் இன்பம் வெஃகார் எனவே, புகழொடு வரும் இன்பத்தை விரும்புவரென, நன்மையும் தீமையும் பிறிதின்மேல் வைத்துக் கூறியவாறு காண்க. தோழி: 6. இரவினும் பகலினும் நீ வர என்றலும் - இரவினும் பகலினும் நீ வருக என்று தோழி கூறுவள். காட்டு: வல்வில் லிளையரோ டெல்லிச் செல்லாது சேந்தனை செலினே சிதைகுவ துண்டோ? பெண்ணை யோங்கிய வெண்மணற் படப்பை அன்றி லகவு மாங்கண் சிறுகுரல் நெய்தலெம் பெருங்கழி நாட்டே. (அகம் - 120) எனவரும். எல்லி - இரவு. ‘எல்லிச் செல்லாது’ எனவே, பகலினும் வருக என்பதாம். புரைபட வந்த அன்னவை பிறவும் - வழுப்பட வந்த இவைபோல்வன பிறவும், வரைதல் வேட்கைப் பொருள என்ப - தலைவன் மணந்து கொள்ளுதற்கண் நிகழும் விருப்பத்தைத் தமக்குப் பொருளாக உடைய என்றவாறு. வரைந்து கொள்ளுதலை விரும்பிக் கூறப்படுவன இவ்வெட்டும் என்பதாம். வரைதல் வேட்கை - தலைவியும் தோழியும் தலைவன் தம்மை மணஞ்செய்து கொள்ளுதலில் விருப்ப முடையவராதல். பிறவாவன: 1. ஊடலின்றியும் தலைவனைக் கொடிய னென்றல் 2. நொதுமலர் வரைகின்றார் என்றல் 3. அன்னை வெறியெடுக்கின்றா ளென்றல் காட்டு: 1. பகையினோய் செய்தான். (கலி - 40) இது, ஊடலின்றிக் கொடிய னென்றது. 2. யாவது, முயங்கல் பெறுகுவ னல்லன் புலவிகோ ளிறீஇயதன் மலையினும் பெரிதே. (நற் - 119) இது, நொதுமலர் வரைவு சிறைப்புறமாகக் கூறியது. ‘முயங்கல் பெறுகுவன் அல்லன்’ எனக் காண்க. 13. கடம்புங் களிறும் பாடித் தொடங்குபு தோடுந் தொடலையுங் கைக்கொண் டல்கலும் ஆடிப் பாடின ளாகல் நன்றோ. (அகம் - 138) இது, வெறியாட்டுணர்த்தியது. (44) 2. தலைவி கூற்றுக்குச் சிறப்புவிதி 163. உயிரினுஞ் சிறந்தன்று நாணே, நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு காமக் கிழவ னுள் வழிப் படினும் தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும் ஆவகை பிறவுந் தோன்றுமன் பொருளே. இது, வரைதல் வேட்கையால் தலைவி கூறுதற்குத் தகாதன கூறினும் அகப்பொருளாம் என்கின்றது. இ - ள்: உயிரினும் நாண் சிறந்தன்று - எல்லாவற்றினும் சிறந்த உயிரினும் மகளிர்க்கு நாண் சிறந்தது, நாணினும் செயிர்தீர் கற்புக் காட்சி சிறந்தன்று - அந்நாணினும் குற்றந்தீர்ந்த கற்பினை நன்றென்று எண்ணுதல் சிறந்தது, எனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு - என்று முன்னோர் கூறிய கூற்றினை நினைந்து கொண்டு, காமக் கிழவன் உள்வழிப் படினும் - தலைவன் இருந்த இடத்தே தலைவி தானே செல்லினும், தாவில் நல்மொழி கிழவி கிளப்பினும் - மனவலியின்றிச் ‘செல்வாம்’ என்னும் நல்ல மொழியினைத் தலைவி தானே கூறினும், அவகை பிறவும் - அவை போன்ற பிறகூறினும், மன்பொருள் தோன்றும் - அவை அகப்பொருளாய் உயர்ந்து தோன்றும் என்றவாறு. உயிரினும் நாணும், நாணினும் கற்பும் பெண்டிர்க்குச் சிறந்தன வாகையால், தலைவி நாணை விட்டுத் தலைவனிடம் தானே செல்லினும், ‘செல்வாம்’ எனக் கூறினும் கற்பைக் காத்தற்காக அவ்வாறு செய்கின்றாளாகையால் குற்றமில்லை என்பதாம். நாணேயன்றிக் கற்புக்காக உயிரை விடுதலும் மகளிர் இயல்பாதல் காண்க. கற்பாவது - காதலன்பு; தலைவனிடத்துக் கொண்ட காதலன்பு அதாவது, மணந்து கொண்டு இல்லறம் நடத்த வேண்டும் என்ற எண்ணம். தான் காதலித்த காதலனை அடைய நாணேயன்றி உயிரையும் விடுவர் மகளிராதலால், நாணை விட்டுத் தலைவனிடம் தானே செல்லுதலும், தலைவனிடம் செல்வாம் என நெஞ்சிற்கோ, தோழிக்கோ கூறுதலும் முறையே யென்பதாம். இது, வரைதல் வேட்கையால் ஆவது. செயிர் - குற்றம். தா - வலி. தலைவி கூற்றுத் தோழிக்கும் தலைவற்குமே தோன்றும். காட்டு: 1. மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் குழீஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமொ ராடுகள மகளே, என்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமொ ராடுகள மகனே. (குறுந் - 31) இது, காமக்கிழவ னுள்வழிச் சென்றது. ‘யாண்டுங் காணேன்’ எனத் தலைவனைத் தேடினதாக நாண் நீங்கக் கூறினும், கற்பின் பாலதாய்த் தோழியும் தலைவனும் பெண்டன்மையிற் றிரிந்தாளெனக் கருதாது நன்கு மதித்தமை காண்க. யானும் அவனும் ஒன்றென அன்பு தோன்றக் கூறினாள். 2. கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும் பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி ஈங்கிவ ணுறைதலு முய்குவ, மாங்கே எழுகினி வாழிய நெஞ்சே முனாஅது குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் வழிபடல் சூழ்ந்திசி னவருடை நட்பே. (குறுந் - 11) இது, அவனிடம் செல்வாமென நெஞ்சிற்குக் கூறியது. 3. அருங்கடி யன்னை காவல் நீவிப் பெருங்கடை யிறந்து மன்றம் போகிப் பகலே பலருங் காண நாண்விட் டகல்வயற் படப்பை யவனூர் வினவிச் சென்மோ வாழி தோழி, பன்னாட் கருவி வானம் பெய்யா தாயினும் அருவி யார்க்கும் கழைபயில் நனந்தலை வான்றோய் மாமலை நாடனைச் சான்றோ யல்லை யென்றனம் வரற்கே. (நற் - 365) இது, அவனிடம் செல்வாமெனத் தோழிக்குக் கூறியது. 4. மாதர் வண்டின் நயவருந் தீங்குரல் மணநாறு சிலம்பின் அசுண மோர்க்கும் உயர்வரை நாடற் குரைத்த லொன்றோ, துயர்மருங் கறியா அன்னைக் கிந்நோய் தணியுமா றிதுவென வுரைத்த லொன்றோ செய்யா யாகலிற் கொடியை தோழி, மணிகெழு நெடுவரை யணிபெற நிவந்த செயலை யந்தளி ரன்னவென் மதனில் மாமெய்ப் பசலையுங் கண்டே. (நற் - 244) இது, செவிலிக்கு அறத்தொடு நிற்குமாறு தலைவி தோழிக்குக் கூறியது. இது, ‘பிற’ என்பதனாற் கொள்க. (45) 4. வரைவு கடாதல் தலைவன் இருவகைக் குறியினும் பல காலும் வந்து தலைவியைக் கூடிச் செல்லும் போது, இக்களவு வெளிப்படின் சுற்றத்தார் தலைவியை இற்செறிப்பரோ எனவும், வழியாலும் பொழுதாலும் தலைவற்கு இடையூறு நேரும் எனவும் தோழி அச்சமுற்று, இவ்வாறொழுகல் நுமது குடிப்பிறப் பிற்கும் சிறப்பிற்கும் பொருந்தாமையின், இனி நீர் இவளை மணந்து கொள்வதே தகுதி எனத் தலைவற்குக் கூறுவாள். இது, வரைவு கடாதல் எனப்படும். வரைவு - திருமணம். கடாதல் - வினாதல். வரைவு கடாதல் - மணந்து கொள்ளுதலைப் பற்றித் தலைவனிடம் வினாதல். இது, தலைவியின் வரைதல் வேட்கையினால் நிகழ்வதாகும். அதாவது, தலைவியின் வரைதல் வேட்கை யறிந்து வினாதலாம். 1. வரைந்து கொள்ளெனல் 164. பொருளென மொழிதலும் வரைநிலை யின்றே காப்புக் கைமிகுத லுண்மை யான. இ - ள்: காப்புக் கைமிகுதல் உண்மையான - தலைவி வெளிப் போகாது தமர் மிக்க காவல் செய்தலால் தலைவிக்கு வருத்தம் மிகுமாயின், பொருள் என மொழிதலும் - தலைவியை மணந்து கொள்ளெனத் தலைவனிடம் தோழி கூறுதலும், வரை நிலை இன்று - நீக்கும் நிலைமை யின்று என்றவாறு. பொருள் - வரைவு. காட்டு: மஞ்சுசூழ் சோலை மலைகெழு நன்னாட, வஞ்சி புணர்ந்த மராப்போல - வஞ்சிக் கொடிமருங்கு லாளைக் குறவர் மகிழ உடன்புணர்ந்து போதாய்நும் மூர். (குழந்தை) எனவரும். (46) 2. தலைவி அன்பு முதலியன நீங்கல் 165. அன்பே அறனே இன்பம் நாணொடு துறந்த வொழுக்கம் பழித்தன் றாகலின் ஒன்றும் வேண்டாக் காப்பி னுள்ளே. இது, தோழி வரைந்துகொள் என்றதற்குத் தலைவியும் உடன்படுவா ளென்கின்றது. இ - ள்: காப்பினுள் - காவல் மிகுதியால் தலைவிக்கு வருத்தம் உண்டான விடத்து, அன்பே அறனே இன்பம் நாணொடு துறந்த ஒழுக்கம் - தலைவன்கண் நிகழும் அன்பும், குடிப்பிறந்தோர் ஒழுகும் ஒழுக்கமும், தமக்கு இன்றியமையாத இன்பமும், நாணும் நீங்க நடத்தல், பழித்தன்று ஆகலின் ஒன்றும் - பழியுடைத்தன்றாகை யினால் பொருந்தும், வேண்டா - அவற்றைக் குற்றமென்று நீக்க வேண்டா என்றவாறு. எனவே, தலைவியும் பொருளென மொழிதற்கு - வரைவிற்கு - உடன்பட்டு நின்றாளென்பது கூறியதாம். தலைவி குறியிடஞ் சென்று கூடமுடியாமல் காவல் மிகின், தலைவியை மணந்து கொள்ளும்படி தோழி தலைவனை வேண்டுவள் (கள - 46). தலைவியும் அதற்கு உடன்படுவள் என்பதாம். தலைவி குறிப்பின்படியே தோழி பொருளென மொழிந்தாளெனக் கொள்க. (47) 3. சுரமென மொழிதல் 166. சுரமென மொழிதலும் வரைநிலை யின்றே. இ - ள்: தலைவன் பிரியக் கருதின் தோழியும் தலைவியும் நீ போகின்றவழி கடிது எனக் கூறி விலக்குதலும் நீக்கும் நிலைமை யின்று என்றவாறு. இஃதும் வரைதல் வேட்கை. சுரம் - கடிய நிலம். தலைவி தோழியால் கூற்று நிகழ்த்துவள். சூத்திரம் பொதுப் பட இருத்தலின், தலைவி உடன்போகக் கருதியவழித் தலைவன் சுரமென மொழிதலுங் கொள்க. காட்டு: 1. இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர் கொடுமரந் தேய்த்தார் பதுக்கை நிரைத்த கடுநவை யாராற் றறுசுனை முற்றி உடங்குநீர் வேட்ட உடம்புயங் கியானை கடுந்தாம் பதிபாங்குக் கைதெறப் பட்டு வெறிநிரை வேறாகச் சார்ச்சார லோடி நெறிமயக் குற்ற நிரம்பாநீ டத்தஞ் சிறுநனி நீதுஞ்சி யேற்பினு மஞ்சும் நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் செல்வோய் உரனுடை யுள்ளத்தை. (கலி - 12) இது, தோழி சுரமென மொழிந்தது. 2. எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின் மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை அல்லிசே ராயித ழரக்குத்தோய்ந் தவைபோலக் கல்லுறி னவ்வடி கறுக்குந வல்லவோ. (கலி - 13) இது, உடன் போகத் துணிந்த தலைவிக்குத் தலைவன் சுரமென மொழிந்தது. (48) 4. தலைவி தானே கூறல் 167. வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் வரையா நாளிடை வந்தோன் முட்டினும் உரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணும் தானே கூறுங் காலமு முளவே. இ - ள் 1. வரைவு இடை வைத்த காலத்து வருந்தினும் - தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த காலத்துத் தலைவி வருந்தினும் தானே கூறுவள். வரைவிடை வைத்துப் பிரிதலாவது - மணவினைக்கு வேண்டிய பொருளுக்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து தன்னூர் செல்லுதல். காட்டு: அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை மேக்கெழும் பெருஞ்சினை யிருந்த தோகை பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன், தகாஅன் போலத் தான்றீது மொழியினும் தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே முத்துநகை யொத்த முள்ளெயிற்றுத் துவர்வாய் வரையாடு வன்பறழ்த் தந்தை கடுவனு மறியுமக் கொடியோ னையே. (குறுந் - 26) இதனுள், ‘தகான் போலத் தான் தீது மொழியினும் தன் கண்கண்டது பொய்க்குவ தன்றே’ எனத் தலைவன் வரை விடைப் பிரிந்தமையால் தலைவி தனது ஆற்றாமையை அறிவித்தவாறு காண்க. ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்’ என்பதனைத் தொகுத்த மொழியால் வகுத்தனர் கோடல் (மர - 110) என்னும் உத்தியால், வேறுபட வருவன வெல்லாங் கொள். அவையாவன: 1. வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கூறல் 2. வரைவிடைப் பருவங் கண்டு ஆற்றாது கூறல் 3. அவன் மலைக் காற்றுப் படினும் ஆற்றலாமென்றல் 4. வன்புறை எதிரழிதல் 5. மாலைப் பொழுதுகண்டு வருந்தல் 6. கனவுநலி வுரைத்தல் காட்டு: 3. நோயுங் கைம்மிகப் பெரிதே மெய்யும் தீயுமிழ் தெறலின் வெய்தா கின்றே பொய்யெனச் சிறிதாங் குயிரியர் பையென முன்றிற் கொளினேர் நந்துவள் பெரிதென நிரையே நெஞ்சத் தன்னைக் குய்த்தாண் டுரையே வாழி தோழி, புரையின் உண்ணே ரெல்வளை நெகிழ்த்தோன் குன்றத் தண்ணல் நெடுவரை யாடித் தண்ணென வியலறை முள்கிய வளியென் பசலை யாகந் தீண்டிய சிறிதே. (நற் - 236) இது, வரைவிடை ஆற்றாமை மிக்கபோது, அவன் மலையில் உலாவிவருங் காற்று என் உடலிற் படினும் ஆற்றலா மென்றது. 6. கேட்டிசின் வாழி தோழி, யல்கற் பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇ வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந் தமளி தைவந் தனனே, குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் தமியேன் மன்ற அளியேன் யானே. (குறுந் - 30) இது, வரைதற்குப் பிரிய நீ வருந்துகின்றது என்னென்ற தோழிக்குக் கனவு நலி வுரைத்தது. பிறவற்றிற் இலக்கியம் வந்தவழிக் காண்க. 2. வரையா நாளிடை வந்தோன் முட்டினும் - வரையாது ஒழுகுந் தலைவன் ஒருநாள் தோழியை யாயினும், ஆயத்தை யாயினும், செவிலியையாயினும் கதுமென எதிர்ப்படினும் தலைவி கூறுவள். ஆயம் - விளையாட்டு மகளிர். கதுமென - எதிர்பாராமல், திடீரென. காட்டு: கழைவள ரடுக்கத் தியலி யாடுமயில் விழவுக்கள விறலியிற் றோன்று நாடன் உருவ வல்வில் பற்றி அம்புதெரிந்து செருச்செய் யானைச் சென்னெறி வினாஅய்ப் புலர்குர லேனற் புழையுடை யொருசிறை மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர் பலர்தில் வாழி தோழி, அவருள் ஆரிருட் கங்குல் அணையொடு பொருந்தி ஓரியா னாகுவ தென்கொல் நீர்வார் கண்ணொடு ஞெகிழ்தோ ளேனே. (அகம் - 82) இதனுள், அவனை ஆயத்தார் பலருங் கண்டார் என வந்தோன் முட்டியவாறும், அவருள் யானே ஞெகிழ்தோளேனே எனத் தானே கூறியவாறுங் காண்க. தாழை குருகீனுந் தண்ணந் துறைவனை மாழைமா னோக்கின் மடமொழி - நூழை நுழையு மடமகன் யார்கொலென் றன்னை புழையு மடைத்தாள் கதவு. (கைந்நிலை - 59) இது, வந்தோன் செவிலியை முட்டினானெனக் கூறியது. 3. உரை எனத் தோழிக்கு உரைத்தற் கண்ணும் - நொதுமலர் வரையக் கருதிய வழித் தமது கருத்தைத் தமர்க்கும், தலைவற்கும் கூறெனத் தோழிக்குக் கூறுவள். நொதுமலர் - அயலார். காட்டு: 1. நறாஅவவிழ்ந் தன்னவென் மெல்விரற் போது கொண்டு செறாஅச் செங்கண் புதைய வைத்துப் பறாஅக் குருகி னுயிர்த்தலு முயிர்த்தனன்; அதனால், அல்லல் களைந்தனன் தோழி, நந்நகர் அருங்கடி நீவாமை கூறின் நன்றென நின்னொடு சூழ்வல் தோழி, நயம்புரிந் தின்னது செய்தா ளிவளென மன்னா வுலகத்து மன்னுவது புரைமே. (கலி - 54) இது, தமர்க்குக் கூறுமாறு தோழிக்குக் கூறியது. அருங்கடி நீவாமை - அரிய மணவினை அவனை (தலைவனை) விட்டு நீங்காமை. நகர் - மனை. நீங்காமல் யாய்க்குக் கூறென்பதாம். 2. என்னைகொல் தோழி, யவர்கண்ணு நன்கில்லை அன்னை முகனு மதுவாகும் - பொன்னலர் புன்னையம் பூங்கானற் சேர்ப்பனைத் தக்கதோ நின்னல்ல நில்லென் றுரை. (ஐந் - எழு - 58) இது, தலைவற்குக் கூறென்றது. தானே கூறும் காலமும் உளவே - இம்மூன்று பகுதியினும் தோழி வினாவாமல் தலைவி தானே கூறும் காலமும் உளவென்றவாறு. இவை மூன்றும் தலைவி அறத்தொடு நிற்றற் குறிப்பு. இம்மூன்றிடத்தும் தலைவனிடம் தனக்குள்ள அன்புபற்றியே கூறுதல் காண்க. (49) 5. கூற்று 1. தலைவி: 14. 6. வாளாண் எதிரும் பிரிவினானும் 7. நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் 8. வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிரும் 9. வரைவுடன் படுதலும் 10. ஆங்கதன் புறத்துப் புரைபட வந்து மறுத்தல் இ - ள்: 6. வாளாண் எதிரும் பிரிவினானும் - வாளாண்மை செய்தற்கு ஒத்த பிரிவு தோன்றிய வழியும் தலைவி கூறுவள். எதிர்தல் - ஏற்றுக் கொள்ளல். இது, துணைவயிற் பிரிவு. நட்பரசனுக்காகப் படைத்துணை செல்லல். பகைவயிற் பிரிவு களவிற்கில்லை (கள - 59) காட்டு: பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர் வகைகொண்ட செம்மல்நாம் வனப்பார விடுவதோ புகையெனப் புதல்சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா முகைவெண்பல் நுதிபொர முற்றிய கடும்பனி. (கலி - 31) இது, வாளாணெதிரும் வென்றி தோழிக்குத் தலைவி கூறியது. பனியெதிர்பருவம் குறிஞ்சியாகலின் (அகத் - 7) களவாயிற்று. நட்பரசனுக்குத் துணை சென்று பகைவென்று திறை கொண்டா னென்க. 7. நாணுநெஞ்சு அலைப்ப விடுத்தற் கண்ணும் - தலைவியின் நாண் அவள் நெஞ்சினை அலைத்தலின் அவள் அந்நாணினைக் கைவிடுதற் கண்ணும் கூறுவள். காட்டு: அளிதோ தானே நாணே நம்மொடு நனிநீ டுழந்தன்று மன்னே யினியே வான்பூங் கொம்பி னோங்குமணற் சிறுசிறை தீம்புனல் நேர்தர வீந்துக் காங்குத் தாங்கு மளவைத் தாங்கிக் காம நெரிதரக் கைந்நில் லாதே. (குறுந் - 149) இது, உடன்போகத் துணிந்து நாண்துறந்து கூறியது. வரைதல் வேட்கை மிகுதியானே உடன்போகத் துணிந்தாளென்க. 8. வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிரும் - வரைதல் விருப்பினால் தோழி தலைவற்கு வரைவு கடாய்க் கூறிய புரைதீர் கிளவியைப் பொருந்திய எதிர்மறையும். புரைதீர் கிளவி - தலைவ னுயர்பிற்கு ஏலாது இயற்பழித்து உரைக்கும் உரை. அதற்கு எதிர்மறை - இயற்பட மொழிதல். புரை - உயர்வு (உரியி - 4). புல்லிய - பொருந்திய. தோழி தலைவனை இயற்பழித்துக் கூறின், வரைதல் வேட்கையால் தலைவி இயற்பட மொழியும் என்பதாம். காட்டு: இலங்கு மருவித் திலங்கு மருவித்தே வாளி னிலங்கு மருவித்தே தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை. எனத் தோழி இயற்பழித்த வாய்பாட்டான் வரைவு கடாவ, பொய்த்தற் குரியனோ பொய்த்தற் குரியனோ அஞ்சலோம் பென்றாரைப் பொய்த்தற் குரியனோ குன்றகல் நன்னாடன் வாய்மையிற் பொய்தோன்றிற் றிங்களுட் டீத்தோன்றி யற்று. (கலி - 41) எனத் தலைவி இயற்பட மொழிந்து எதிர்மறுத்தவாறு காண்க. 9. வரைவுடன் படுதலும் - தலைவி சுற்றத்தார் தலைவற்கே தலைவியைக் கொடுக்க உடன்பட்டதனைத் தலைவி விரும்புதலும் - விரும்பிக் கூறுவள். காட்டு: இலையமர் தண்குளவி யேய்ந்த பொதும்பிற் குலையுடைக் காந்தள் இனவண் டிமிரும் மலையக நாடனும் வந்தான்மற் றன்னை அலையும் அலைபோயிற் றின்று. (ஐந் - எழு - 3) இதனுள், ‘அலையும் அலை போயிற்று’ எனவே, அன்னை உடன்பட்டமை கூறினாள். ‘நாடனும் வந்தான் அலைபோயிற்று’ என விரும்பிக் கூறியவாறு காண்க. 10. ஆங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தல் - தலைவன் வரைவிற்குப் புறத்ததாகிய நொதுமலர் வரைவு உண்டாகிய வழித் தலைவி தன்னுயர்பு உண்டாக மறுத்துக் கூறுதலும். அதன் புறம் - தலைவன் வரைவிற்குப் புறம். அது - நொதுமலர் வரைவு. தலைவி தன் குடிப்பிறப்பு, கற்பு முதலிய உயர்ச்சிக்கு ஏற்ப அதனை (நொதுமலர் வரைவை) மறுத்துத் தலைவன் வரையுமாறு நீ கூறெனத் தோழிக்குக் கூறும் என்பதற்குப் ‘புரைபட வந்த மறுத்தல்’ என்றார். மறுத்தலொடு தொகைஇ கிழவோள் மேன என்மனார் புலவர் - மறுத்தலோடே முற்கூறியவற்றைத் தொகுத்து, இவை தலைவி யிடத்தன கிளவி என்று கூறுவர் புலவர் என்றவாறு. காட்டு: தருமணல் தாழப்பெய் தில்பூவ லூட்டி எருமைப் பெடையோ டெமரீங் கயரும் பெருமண மெல்லாந் தனித்தே யொழிய வரிமணல் முன்றுறைச் சிற்றில் புனைந்த திருநுத லாயத்தார் தம்முட் புணர்ந்த ஒருமணந் தானறியு மாயி னெனைத்தும் தெருமரல் கைவிட் டிருக்கோ வலர்ந்த வரிநீ ருடுக்கை யுலகம் பெறினும் அருநெறி யாயர் மகளிர்க் கிருமணங் கூடுத லில்லியல் பன்றே. (கலி - 114) இது, தலைவி பிறர் வரைவு மறுத்துத் தலைவன் வரையுமாறு கூறெனத் தோழிக்குக் கூறியது. 2. தோழி: 13. 32. வரைதல் வேண்டல் 1. பகற்குறி விலக்கல் 6. மனையை இறப்பக் கூறல் 2. இரவுக்குறி விலக்கல் 7. குடியை யிறப்பக் கூறல் 3. காதல் மிகுதி கூறல் 8. பிறப்பை யிறப்பக் கூறல் 4. நாட்டை இறப்பக் 9. சிறப்பை யிறப்பக் கூறல். கூறல் 5. ஊரை யிறப்பக் கூறல் 33. ஐயச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப் பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும் 34. அவன் விலங்குறினும் 35. களம்பெறக் காட்டினும் 36. பிறன் வரைவு ஆயினும் 37. அவன் வரைவு மறுப்பினும் - தோழி கூறுவள். இ - ள்: 32. களனும் பொழுதும் பிறவும் வரைநிலை விலக்கியும் - இடமும் காலமுமாகிய பகற்குறி விலக்கியும், இரவுக்குறி விலக்கியும் தலைவனிடம் கூறியும், வேறுவகையாகத் தலைவனிடம் கூறியும், காதல் மிகுதி உளப்பட - தலைவியது காதல் மிகுதி கூறியும் மற்றும், நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன் வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ - தலைவனது நாடும் ஊரும் மனையும் நற்குடியும் நற்குடிப் பிறப்பும் ஆண்மைச் சிறப்பும் ஆகிய இவற்றைச் சிறப்பித்துக் கூறியும், அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும் - ஆகிய இவற்றால் வரைந்து கோடலை விரும்பினும் தோழி கூறுவள். நாடு முதலியவற்றின் உயர்வை நோக்கித் தலைவனிடத்தே தோழி கூறிய கிளவிகளோடு தொகுத்தென்க. வரை நிலை - வரையறுத்துக் கொண்ட நிலை. இறப்ப - மிக, சிறப்ப. காட்டு 1. புன்னை காத்தும் அன்ன மோப்பியும் பனியிருங் கானல் யாம்விளை யாட மல்லலம் பேரூர் மறுகின் அல்லலு மோவா தலரா கின்றே. இது, பகற்குறி விலக்கியது. 2. நெடுமலை நன்னாட, நின்வேல் துணையாக் கடுவிசை வாலருவி நீந்தி - நடுவிருள் இன்னா வதர்வர ஈர்ங்கோதை மாதராள் என்னாவா ளென்னுமென் நெஞ்சு. (ஐந். ஐம் - 19) இது, இரவுக்குறி விலக்கியது. 3. வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட, செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. (குறுந் - 18) இது, தலைவியின் காதன் மிகுதி கூறியது. 4. கோழிலை வாழைக் கோள்மிகு பெருங்குலை ஊழுறு தீங்கனி யுண்ணுநர்த் தடுத்த சாரற் பலவின் சுளையோ டூழ்படு பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல் அறியா துண்ட கடுவன் அயலது கறிவளர் சாந்த மேறல் செல்லாது நறுவீ யடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும் குறியா வின்ப மெளிதின் நின்மலைப் பல்வேறு விலங்கு மெய்து நாட, குறித்த வின்பம் நினக்கெவ னரிய? வெறுத்த ஏஎர் வேய்மருள் பணைத்தோள் நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட் டிவளு மினைய ளாயிற் றந்தை அருங்கடிக் காவலர் சோர்பத னொற்றிக் கங்குல் வருதலு முரியை, பைம்புதல் வேங்கையு மொள்ளிணர் விரிந்தன நெடுவெண் டிங்களும் ஊர்கொண் டன்றே. (அகம் - 2) இதனுள், ‘விலங்கும் எய்தும் நாட’ என்றது, நாட்டை இறப்பக் கூறியது. ‘குறித்த இன்பம் நினக்கெவன் அரிய’ என்றது, வரைதல் வேண்டல். ‘வேங்கை விரிந்தன’ என்றது, தினையறுத்தல் குறித்த தாதலின், இற்செறிப்புக் கூறியது. ‘கங்குல் வருதலும் உரியை’ எனப் பகற்குறி மறுத்து இரவுக்குறி நேர்வாள் போற்கூறி, ‘நெடுவெண் டிங்களும் ஊர் கொண்டன்றே’ என, அதனையு மறுத்து, வரைதற்கு நல்ல நாள் எனக் கூறி வரைவு கடாயது. 5, 6. காமங் கடவ வுள்ள மினைப்ப யாம்வந்து காண்பதோர் பருவ மாயின் ஓங்கித் தோன்று முயர்வரைக் காங்கெனப் படுவது நும்மூர் தெய்யோ. (ஐங் - 237) இது, ஊரை இறப்பக் கூறியது. இல்லுங் கொள்க. 7, 8, 9. கடிமலர்ப் புன்னைக்கீழ்க் காரிகை தோற்றாளைத் தொடிநெகிழ் தோளளாத் துறப்பாயால் மற்றுநின் குடிமைக்கட் பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ; ஆய்மலர்ப் புன்னைக்கீழ் அணிநலந் தோற்றாளை நோய்மலி நிலையளாத் துறப்பாயால் மற்றுநின் வாய்மைக்கட் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ; திகழ்மலர்ப் புன்னைக்கீழ்த் திகழ்நலந் தோற்றாளை இகழ்மலர்க் கண்ணளாத் துறப்பாயால் மற்றுநின் புகழ்மைக்கட் பெரியதோர் புகராகிக் கிடவாதோ! (கலி - 135) என முறையே குடியும், பிறப்பும், சிறப்பும் வந்தன. வாய்மை - உண்மை. அது, குடிப்பிறந்தார்க் காவது. புகழ் - சிறப்பு. பிறவாவன: 1. ஆற்றா ளென்றல் 5. தினையரிதல் கூறல் 2. தலைவனைப் பழித்தல் 6. வெறியச் சுறுத்தல் 3. தெளிவிடை விலக்கல் 7. அருளவேண்டு மெனல் 4. புனங்காவல் இனி இன்றெனல் காட்டு: 1. கோடீ ரிலங்குவளை நெகிழ நாடொறும் பாடில கலிழ்ந்துகண் பனியா னாவே, துன்னரு நெடுவரை ததும்பிய அருவி தண்ணென் முழவின் இமிழிசை காட்டும் மருங்கிற் கொண்ட பலவிற் பெருங்கல் நாடநின் நயந்தோள் கண்ணே. (குறுந் - 365) இது, யான் வரையுந் துணையும் ஆற்றுவாளோ என்ற தலைவற்கு ஆற்றா ளென்றது. கண் கண்பனி ஆனா. கண்பனி - கண்ணீர். 2. நெடுவரை மிசையது குறுங்கால் வருடை தினைபாய் கிள்ளை வரூஉ நாட, வல்லைமன் றம்ம பொய்த்தல் வல்லாய் மன்றநீ யல்லது செயலே. (ஐங் - 287) இது, தலைவனைப் பழித்தது. ‘அல்லது செயல் வல்லாய்’ எனல் காண்க. 3. கானற் கண்டற் கழன்றுகு பைங்காய் நீனிற விருங்கழி யுடம்பட வீழ்ந்தெழ உறுகால் தூக்கத் தாங்கி யாம்பல் சிறுவெண் காக்கை யாவித் தன்ன வெள்ளிய விரியுந் துறைவ, என்றும் அளிய பெரியோர் கேண்மை நும்போற் சால்பெதிர் கொண்ட செம்மை யொருத்தி தீதில் நெஞ்சங் கையறுபு வாடி நீடின்று விரும்பா ராயின் வாழ்தல்மற் றெவனோ தேய்கமா தெளிவே. (நற் - 345) இது, ஆற்றாத் தலைவியை விரைவில் வரைந்து கொள்வே னெனத் தலைவன் தெளிவித்த போது, தோழி தெளிவிடை விலக்கியது. இடைவிலக்கியது - மறுத்தது. காட்டு: 4. குன்றக் குறவன் காதல் மடமகள் மென்றோட் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல, பைம்புறப் படுகிளி யோப்பலர் புன்புல மயக்கத்து விளைந்தன தினையே. (ஐங் - 260) இது, புனங்காவல் இனி இன்று என்றது. 5. என்னாங்கொல் நீடில் இனவேங்கை நாளுரைப்பப் பொன்னாம்போர் வேலவர் தாம்புரிந்த - தென்னே மருவியா மாலை மலைநாடன் கேண்மை இருவியா மேன லினி. (திணை. நூற் - 18) இது, தினையரி கின்றமையும், சுற்றத்தார் பொருள் வேட்கையுங் கூறியது. இருவி - தினையரிந்த நிலம். 6. வெறிகமழ் வெற்பவென் மெய்ந்நீர்மை கொண்ட தறியாள்மற் றன்னோ அணங்கணங்கிற் றென்று மறியீர்ந் துதிரந்தூஉய் வேலற் றரீஇ வெறியோ டலம்வரும் யாய். (ஐந். ஐம் - 20) இது, அன்னை வெறியாட் டுற்றாளென, வெறியச் சுறுத்தியது. 7. இனமீ னிருங்கழி யோத முலாவ மணிநீர் பரக்குந் துறைவ, தகுமோ குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்கம் நினைநீர்மை யில்லா தொழிவு. (திணை. ஐம் - 44) இது, நீ அருள வேண்டும் என்றது. நினைநீர்மை - நினைக்குந் தன்மை. ‘அனைநிலை வகை’ என்றதனால், 1. தலைவியது ஆற்றாமை கண்டு வரைவு கடாவவோ எனத் தலைவியைக் கேட்டலும், 2. சிறைப்புறமாகவும் சிறைப்புற மின்றியும் வரைவு கடாதலும் கொள்க. காட்டு 1. கழிபெருங் கிழமை கூறித் தோழி ஒழியா யாயினொன் றுரைக்கோ தெய்ய இலங்குவளை மென்றோட் கிழமை விலங்குமலை நாடநீ வேண்டுதி யெனினே. இதனுள், ‘நாட, மென்றோட் கிழமை நீ வேண்டுதி எனின் என்று ஒன்றுரைக்கோ’ எனத் தலைவியைக் கேட்டவாறு காண்க. 2. நிலவு மிருளும் போல நெடுங்கடற் கழியுங் கானலும் மணந்தன்று நுதலுந் தோளு மணிந்தன்றாற் பசப்பே. இது, சிறைப்புறமாகத் தலைவி ஆற்றாமை கூறி வரைவு கடாயது. நுதலும் தோளும் பசப்புப் பொருந்திற்றெனல் காண்க. 33. ஐயச் செய்கை தாய்க்கு எதிர்மறுத்துப் பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும் - தாய் களவொழுக்கத்தை ஐயுற்றவழி, அதைப் பொய்யென நம்பும்படி மாற்றி மெய்யென நம்பும்படி செய்தலும். காட்டு வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து மாந்தளிர் மேனி வியர்ப்பமற் - றாங்கெனைத்தும் பாய்ந்தருவி யாடினே மாகப் பணிமொழிக்குச் சேந்தனவாம் சேயரிக்கண் டாம். (ஐந். ஐம். - 15) இதனுள், கண்சிவந்தது காரணமாக ஐயுற்ற தாயை, ‘வேங்கை மலர் கொய்து உடம்பு வியர்த்தது’ எனப் பொய்யென மாற்றி, ‘சுனை யாடியதால் கண் சிவந்தது’ என மெய்வழிக் கொடுத்தது காண்க. சிறைப்புறமாகக் கூறி வரைவு கடாயது. இதைத் தலைவன் கேட்டா னென்க. 34. அவன் விலங்குறினும் - தலைவன் வரைவிடைப் பொருட்கும், வேந்தற் குற்றுழியும் காவற்கும் பிரியுமிடத்தும் தோழி தலைவற்குக் கூறும். வேந்தற்குற்றுழி - துணைப் பிரிவு. காவல் - நாடுகாவல். (அகத். - 28 பர்க்க) காட்டு செவ்விய தீவிய சொல்லி யவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான் றவையெல்லாம் பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைஇய அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து பகல்முனி வெஞ்சுர முள்ள லறிந்தேன் மகனல்லை மன்ற வினி. (கலி - 19) ‘அவரைத் தந்து பிரியவெண்ணுதலை அறிந்தேன்’ எனத் தலைவற்குக் கூறியது. 35. களம் பெறக் காட்டினும் - காவல் மிகுதியானும், காதல் மிகுதியானும், தமர் வரைவு மறுத்ததினாலும் தலைவி ஆற்றாளாய வழி, இது எதனால் ஆயதென அறிதற்குச் செவிலி களத்தை அமைக்கத் தலைவியின் எண்ணத்தைக் கூறித் தோழி அதை விலக்கும் போதும் கூறுவள். களம் பெற - களத்தைப் பெற. பெற - அமைக்க. காட்டல் - தலைவி எண்ணத்தைக் காட்டல், எடுத்துரைத்தல். களமாவது - கட்டுவிச்சி கட்டினாலும், வேலன் கழங்கினாலும் குறிபார்க்கும் இடமும், வேலன் வெறியாடும் இடமுமாம். கட்டு - நெல்லை முறத்திலிட்டுக் குறி பார்த்தல். கழங்கு - கழற்சிக்காய். (இவற்றின் விரிவைத் ‘தொல்காப்பியர் காலத் தமிழர்’ என்னும் நூலிற் காண்க.) அவை, 1. கழங்கு விலக்கல் 4. வேலற்குக் கூறல் 2. வெறி விலக்கல் 5. முருகற்குக் கூறல் 3. தலைவிக்குக் கூறல் 6. தமர் கேட்பக் கூறல் காட்டு 1. பொய்படு பறியாக் கழங்கே, மெய்யே மணிவரைக் காட்சி மடமயி லாலுநம் மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோன் ஆண்டகை விறல்வேள் அல்லனிவள் பூண்டாங் கிளமார் பணங்கி யோனே. (ஐங். - 250) இது, கழங்கு பார்த்துழிக் கூறியது. தலைவிக்கு நோய் தந்தவன் முருகனல்லன் எனக் கழங்கு விலக்கியது காண்க. கழங்கு - வேலனை யுணர்த்திற்று 2. கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி அறியா வேலன் வெறியெனக் கூறினும் அதுமனங் கொள்குவை அன்னையிவள் புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே. (ஐங் - 243) இது, அறிவில்லா வேலன் யாது கேட்பினும் வெறியெனக் கூறுவன். அவனை நீ இதற்கும் கேட்க எண்ணினாய் எனத் தாயின் அறியாமை கூறி வெறி விலக்கியது. 3. அம்ம வாழி தோழி! பன்மலர் நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை குன்றம் பாடா னாயின் என்பயஞ் செய்யுமோ வேலற்கவ் வெறியே. (ஐங் - 244) இது, செவிலி கேட்பத் தலைவிக்குக் கூறியது. பயனிற் கூற்றெனல். 4. நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக் கைபுனை நறுந்தார் கமழு மார்பன் அருத்திறற் கடவு ளல்லன் பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே. (ஐங் - 182) இது வேலற்குக் கூறியது. இவள் நோய்க்குத் தலைவன் காரணமென்றது. 5. அருவி யின்னியத் தாடு நாடன் மார்புதர வந்த படர்மலி யருள்நோய் நின்னணங் கின்மை யறிந்தும் அண்ணாந்து கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறியிடை வந்தோய் கடவு ளாயினு மாக மடவை மன்ற வாழிய முருகே. (நற் - 34) இது, முருகற்குக் கூறியது. வேலன் கொண்ட வெறியை முருகன் என்பது மரபு. விளக்கம் - ‘தொல்காப்பியர் காலத் தமிழர்’ என்னும் நூலிற் காண்க. 6. அன்னை தந்த தாகுவ தறிவன் பொன்னகர் வரைப்பிற் கன்னந் தூக்கி முருகென மொழியு மாயின் அருவரை நாடன் பெயர்கொலோ வதுவே. (ஐங் - 247) இது, தலைமகளை வினாவு வாளாய்த் தமர் கேட்பக் கூறியது. 36. பிறன்வரைவு ஆயினும் - பிறர் தலைமகளை மணக்கக் கருதியதனைத் தோழி தலைவற்கும் தலைவிக்குங் கூறுவள். ஆயினும் - ஆனாலும், கருதினும். காட்டு: நெடுந்தேர் பண்ணி வரலா னாதே குன்றத் தன்ன குவவுமணல் நீந்தி வந்தனர் பெயர்வர்கொல் தாமே யல்கல் இளையரு முதியருங் கிளையுடன் குழீஇக் கோட்சுறா வெறிந்தெனச் சுருங்கிய நாட்டின் முடிமுதிர் பரதவர் மடமொழிக் குறமகள் வலையுந் தூண்டிலும் பற்றிப் பெருங்கால திரைகெழு பௌவ முன்னிய கொலைவெஞ் சிறாஅர் பாற்பட் டனனே. (நற் - 207) இது, நொதுமலர் வரையக் கருதியதைத் தோழி சிறைப் புறமாகக் கூறியது. தலைவன் கேட்டு வரைவது பயன். ‘பாற் பட்டனள்’ எனத் தெளிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினாள். 37. அவன் வரைவு மறுப்பினும் - தலைவி சுற்றத்தார் தலைவற்குத் தலைவியைக் கொடுக்க மறுத்த போதுந் தோழி கூறுவள், அவனுக்கு வரைவு மறுப்பினும் என்க. அவன் - தலைவன். காட்டு: 1. அலங்குமழை பொழிந்த அகன்க ணருவி ஆடுகழை யடுக்கத் திழிதரு நாடன் பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு முயங்காது கழிந்த நாளிவள் மயங்கிதழ் மழைக்கண் கலுழு மன்னாய். (ஐங் - 220) இது, செவிலிக்குத் தோழி அறத்தொடு நிலையாற் கூறியது. ‘முயங்காது கழிந்த நாள் கண் கலுழும்’ எனக் காண்க. 2. நுண்ணோர் புருவத்த கண்ணு மாடும் மயிர்வார் முன்கை வளையுஞ் செறூஉம் களிறுகோட் பிழைத்த கதஞ்சிறந் தெழுபுலி எழுதரு மழையிற் குழுமும் பெருங்கல் நாடன் வருங்கொல் அன்னாய். (ஐங் - 218) இது, தமர் வரைவுமறுத்தபோது ஆற்றாத தலைவிக்கு நற்குறி காண்பதால் தலைவர் விரைவில் வருவர் எனக் கூறியது. 3. செவிலி: 15: 5 - 9 5. கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும் ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் 6. ஆடிய சென்றுழி அழிவுதலை வரினும் 7. காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும் 8. தோழியை வினாவல் 9. தெய்வம் வாழ்த்தல் இ - ள்: 5. கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும் ஒட்டிய திறத்தால் செய்திக் கண்ணும் - கட்டினாலும் கழங்கினாலும் குறி சொல்லும் கட்டுவிச்சியும் வேலனும் தெய்வத் திற்குச் சிறப்புச் செய்யாவிட்டால் இந்நோய் தீராது என்னும் போதும் கூறுவள். இருவரையும் கேட்டல் என்றுமாம். இருவரும் வெறி எனச் சொல்ல என்க. செய்தி - கட்டெடுத்தலும் கழங்கு பார்த்தலும். காட்டு: 1. பெய்ம்மணல் முற்றங் கவின்பெற வியற்றி மலைவான் கோட்ட வினைஇய வேலன் கழங்கினா னறிகுவ தென்றான் நன்றா லம்ம நின்றவிவள் நலனே. (ஐங் - 248) இது, வேலன் கழங்கு பார்த்தமை கூறிற்று. 2. அறியா மையின் வெறியென மயங்கி அன்னையு மருந்துய ருழந்தனள், அதனால் எய்யாது விடுதலோ கொடிதே நரையிதழ் ஆய்மல ருண்கண் பசப்பச் சேய்மலை நாடன் செய்த நோயே. (ஐங் - 242) இது, அன்னைவெறியென மயங்கினமை தோழி கொண்டு கூறியது. 3. அணங்குடை நெடுவரை யுச்சிலி னிழிதரு கணங்கொ ளருவிக் கான்கெழு நாடன் மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல் இதுவென வறியா மறுவரற் பொழுதில் நெடுவேட் பேணத் தணிகுவ ளிவளென மதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூறக் களநன் கிழைத்துக் கண்ணி சூட்டி முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாள். (அகம் - 22) இது, கட்டுக்கண்டு அன்னை வெறியெடுத்ததைத் தலைவி தோழிக்குக் கூறியது. முதுவாய்ப் பெண்டிர் - கட்டுவிச்சி. 6. ஆடிய சென்றுழி அழிவுதலைவரினும் - வெறியாட்டின் பின் தலைவிக்கு வருத்த மிகினும் பிறரை வினாவும், அழிவு - வருத்தம். தலைவருதல் - மிகுதல். தோழி கொண்டு கூறும். காட்டு: 1. வேங்கை யிரும்புனத்து வீழுங் கிளிகடியாள் காந்தள் முகில்விரலாற் கண்ணியுங் கைதொடாள் ஏந்தெழில் அல்குல் தழைபுனையாள் எல்லே யென் பூந்தொடி யிட்ட புலம்பு மறிதி ரோ. இது, வெறியாட்டின் பின்னும் தலைவி ஆற்றாமை கண்டு அஞ்சிச் செவிலி பிறரை வினாவியது. 2. அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி யதன்றிறம் யானும் தெற்றென வுணரேன். (அகம் - 48) இது, செவிலி கூற்றினைத் தோழி கொண்டு கூறியது. 7. காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும் - காதல் மிகுதியால் தலைவி துயிலும் போது உளறினும் செவிலி கூறுவள். தூங்கும் போது கனவுகண்டு உளறுதல். காட்டு: புலிப்பற் றாலிப் புதல்வற் புல்லி அன்னாய் என்னும் அன்னையு மன்னோ என்மலைந் தனன்கொல் தானே தன்மலை ஆர நாறு மார்பினன் மாரி யானையின் வந்துநின் றனனே. (குறுந் - 161) இதனுள் ‘புதல்வற்புல்லி அன்னாய்’ என்றது செவிலி. தலைவி அரற்றத் தாய் ‘அன்னாய்’ என எழுப்பினாள். இது, தலைவி கொண்டு கூறியது. புதல்வன் - செவிலி புதல்வன். 8. தோழியை வினாவலும் - இவ்வேறுபாடு எதனாலாயதெனத் தோழியை வினாவுவாள் வேறுபாடு - கனவினரற்றல். காட்டு: நெடுவே லேந்தி நீயெமக் கியாஅர் தொடுத லோம்பென அரற்றலு மரற்றும் வாழியெம் மகளை யுரைமதி யிம்மலைத் தேம்பொதி கிள வியெம் பேதை யாங்கா டினளோ நின்னொடு பகலே. இது, இவ்வரற்றலுக்குக்காரண மென்னெனத் தோழியை வினாயது. ‘பகலில் நின்னொடு இம்மலையில் யாங்காடினள்’ எனல் காண்க. 9. தெய்வம் வாழ்த்தலும் - களவை அறிந்தபின், ‘இவர்கள் ஒழுக்கம் நன்றாக’ வெனத் தெய்வத்தை வாழ்த்துவாள். காட்டு: வேங்கைக் கண்ணியன் இழிதரு நாடற் கெந்தையு மெதிர்ந்தனன் கொடையே, அலர்வாய் அம்ப லூரும் அவனொடு மொழியும், சாயிறைத் திரண்ட தோள்பா ராட்டி ஆயு மவனே யென்னும், யாமும் வல்லே வருக வரைந்த நாளென நல்லிறை மெல்விரல் கூப்பி இல்லுறை கடவுட் கோக்குதும் பலியே. (அகம் - 282) இதனுள், ‘தோள்பாராட்டி யாயும் அவனே யென்னும்’எனச் செவிலி தெய்வம் பராயினாள் எனக் கூறி, யாம் அத்தெய்வத்திற்குப் பலி கொடுப்போம் எனத் தோழி கூறியவாறு காண்க. இத்துறைகள்ஐந்தும் (5 - 9) நற்றாய்க்கும் உரிய (கள - 16). இங்கு, 17. தெரிந்துடம் படுதல் 18. திளைப்புவினைமறுத்தல் 19. கரந்திடத் தொழிதல் 20. கண்டவழி உவத்தல் என்னும் (மெய் - 17) ஐந்தாவது மெய்ப்பாடு நான்கும் தலைவிக்கு நிகழும். 5. அறத்தொடுநிலை அறத்தொடு நிலையாவது - தான் கொண்ட ஒழுக்கத்தின் கண் நிற்றல். அறம் - ஒழுக்கம். அதாவது, களவொழுக்கம் முதிர்ந்து கற்பொழுக்கம் ஒழுகுதல். நிலை - அதில் நிலை பெற எண்ணுதல். கற்பொழுக்கத்தின் கண் நிற்றலை வெளியிடுதலாம். தலைவனையே மணந்து கொள்கிறேன் என்னும் தன்கருத்தைத் தலைவி கூறுதலென்க. 1. தலைவி தோழிக் கறத்தொடு நிற்கும் 2. தோழி செவிலிக் கறத்தொடு நிற்கும் 3. செவிலி நற்றாய்க் கறத்தோடு நிற்கும் 4. நற்றாய் தந்தை தன்னையர்க் கறத்தொடு நிற்கும். 1. தலைவி தோழிக் கறத்தொடு நிற்றல் 168. பன்னூறு வகையினுந் தன்வயின் வரூஉம் நன்னய மருங்கின் நாட்டம் வேண்டலின் துணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாகும் துணையோர் கரும மாக லான. இ - ள்: தன் வயின் வரும் நல்நய மருங்கின் - தலைவி யிடத்தே தோழிக்கும் செவிலிக்கும் உண்டாகியஅன்பு மிகுதியினால், பல்நூறு வகையினும் நாட்டம் வேண்டலின் - பலவகையிலும் தலைவியின் வேறுபாட்டை அவர் ஆராய்தலினாலே, துணைச் சுட்டுக் கிளவி கிழவியது ஆகும் - தனது துணையைச் சுட்டிக் கூறுஞ் சொல் தலைவியதாகும், துணையோர் கருமம் ஆகலான - அச்சொல் அவ்விருவரானும் முடியுங் காரியமாகையினால் என்றவாறு. அதாவது, தோழியும் செவிலியும் பலபடியாகத் தலைவியின் வேறுபாட்டை ஆராயும் போது, தலைவி அவர்களிடம் தான் தலைவனையே மணந்து கொள்கிறேன் என்பதைக் கூறுவாளென்க. தோழியிடம், ‘பல்வேறு கவர்பொருள் நாட்டம்’ (கள-13) உற்றவழியும் செவிலி யிடம்,களவு அலராதலால் நாட்டம் (கள - 15) உற்ற வழியும் தலைவி கூறுவாளென்க. செவிலியிடம் தோழியின் வாயிலாய்க் கூறுவாள். துணைச்சுட்டுக் கிளவி, அறத்தொடு நிலை என்பன - ஒரு பொருட் கிளவி. தனது வாழ்க்கைத் துணைவனைச் சுட்டிக் கூறும் கிளவி என்க. காட்டு: 1. புனையிழை நோக்கியும் புனலாடப் புறஞ்சூழ்ந்தும் அணிவரி தைஇயுநம் இல்வந்து வணங்கியும் நினையுபு வருந்துமிந் நெடுந்தகை திறத்திவ்வூர் இனையளென் றெடுத்தோதற் கனையையோ நீயென வினவுதி யாயின் விளங்கிளாய் கேளினி; எனவாங்கு, அரிதினி யாயிழாய்! அதுதேற்றல் புரிபொருங் கன்றுநம் வதுவையுள் நமர்செய்வ தின்றீங்கே தானயந் திருந்ததிவ் வூராயின் எவன்கொலோ நாஞ்செயற் பால தினி. (கலி - 76) இதனுள், ‘வினவுதியாயின்’ எனநாட்டம் நிகழ்ந்த வாறும், சுரிதகத்துக் கூட்டம் நிகழ்ந்தவாறும் கூறியது காண்க. ‘வதுவையுள் அன்று செய்வது இவ்வூர் இன்று இங்கே நயந்திருந்தது’ என்பது, துணைச்சுட்டுக் கிளவி. இவ்வாறு தலைவி அறத்தொடு நில்லா முன் தோழி செவிலிக் கறத்தொடு நில்லாள் (கள - 51). 2. அல்லல் களைந்தனன் தோழி, நந்நகர் அருங்கடி நீவாமை கூறின் நன்றென நின்னொடு சூழ்வல் தோழி, நயம்புரிந் தின்னது செய்தா ளிவளென மன்னா வுலகத்து மன்னுவது புரைமே. (கலி - 54) இது, செவிலிக்கு உரையாய் எனக் கூறியது. கடிமணம், நீவாமை கூறின் - தலைவனை விட்டு நீங்காதிருக்கும் படி செவிலிக்குக் கூறினாள் என்க. (50) 2. தோழி செயல் 169. அறத்தொடு நிற்குங் காலத் தன்றி அறத்தியல் மரபிலள் தோழி யென்ப. இ - ள்: அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி - தலைவி இக்களவினைத் தமர்க்குத் தெரிவிக்க வேண்டும் என்னும் கருத்தினளாகிய காலத்தல்லாமல், தோழி அறத்தியல் மரபு இலள் என்ப - தோழி களவினைத் தமர்க்கு அறிவிக்கும் முறைமை இலள் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. அக்காலம் - நெதுமலர் வரையக் கருதும் காலமும், வெறியாட்டெடுக்கும் காலமுமாம். தலைவி குறிப்பினால் கூறென்று சொல்லாமல் தோழி செவிலிக்குக் கூறாள் என்பதாம். நொதுமலர் வரைவு கேட்பினும், வெறியாட்டு நிகழினும் தலைவிக்கு வருத்த முண்டாகுமென் றெண்ணி, அவை ஆகாமற் காத்தல் தோழிக்குக் கடனாதலின், அவை நிகழ்வதற்கு முன்னரே தமர்க்கறிவித்தல் வேண்டும்; அங்ஙனம் அறிவியாதிருத்தலின் வழுவா யமைந்தது. காட்டு: 1. இன்றியாண் டையனோ தோழி, குன்றத்துப் பழங்குழி யகழ்ந்த கானவன் கிழங்கின் கண்ணகன் றூஉமணி பெறூஉ நாடன் அறிவுகாழ்க் கொள்ளு மளவைச் செறிதொடி எம்மில் வருகுவை நீயெனப் பொம்ம லோதி நீவி யோனே. (குறுந் - 379) இது, நொதுமலர் வரைவு கூறி உசாவி அறத்தொடு நின்றது. 2. பெருவரை யடுக்கம் பொற்பக் குறமகள் அருவி யின்னியத் தாடு நாடன் மார்புதர வந்த படர்மலி யிருநோய் நின்னணங் கன்மை யறிந்தும் அண்ணாந்து கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறியிடை வந்தோய், கடவு ளாயினு மாக மடவை மன்றவாழிய முருகே. (நற் - 34) இது, வெறியாட் டெடுத்த வழி முருகற்குக் கூறுவாளாய் அறத்தொடு நின்றது. இவை இரண்டும் தலைவி தோழிக்குக் கூறியவை. இவை கொண்டே தோழி செவிலிக் கறத்தொடு நிற்கும். (51) 3. தோழி செவிலிக் கறத்தொடு நிற்றல் 170. எளித்த லேத்தல் வேட்கை யுரைத்தல் கூறுத லுசாதல் ஏதீடு தலைப்பா டுண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ அவ்வெழு வகைய வென்மனார் புலவர். 1. எளித்தல் 5. ஏதீடு 2. ஏத்தல் 6. தலைப்பாடு 3. வேட்கை யுரைத்தல் 7. உண்மை செப்பல் 4. கூறுத லுசாதல் இ - ள்: எளித்தல். . . . . . . கிளவியொடு தொகைஇ - எளித்தல் முதலிய ஆறனையும் உண்மை செப்பல் என்னும் கிளவியோடே கூட்டி, அவ்வெழுவகைய என்மனார் புலவர் - அத்தன்மைத் தாகிய ஏழுவகைப்படும் தோழி அறத்தொடு நிற்றல் என்று கூறுவர் புலவர் என்றவாறு. ‘தோழி அறத்தொடு நிற்றல்’ என்பது, அதிகரத்தாற் கொள்க. ‘அவ்வெழுவகைய’ என்றதனால், உண்மை செப்புங்கால், ஏனை யாறு பொருளினுள் சில உடன் கூறுதலும், ஏனைய கூறுங்காலும் தனித்தனி கூறாது இரண்டும் மூன்றும் உடன் கூறுதலுங் கொள்க. 1. எளித்தல் - தலைவனை எளியனாகக் கூறல். எளிமை - காட்சிக் கெளிமையும், தலைமையின்றித் தம்மிடம் வந்து குறையிரத்தலுமாம். காட்டு: எல்லும் எல்லின் றசைவுபெரி துடையன் மெல்லிலைப் பரப்பின் விருந்துண வொருவன். (அகம் - 110) என வரும். 2. ஏத்தல் - தலைவனை உயர்த்துக் கூறுதல். காட்டு: பகல்மா யந்திப் படுசுட ரமயத் தவன்மறை தேஏம் நோக்கி மற்றிவன் மகனே தோழி யென்றனள். (அகம் - 48) எனவரும், பொதுப்பட மகனே எனல் காண்க. 3. வேட்கை உரைத்தல் - தலைவனது வேட்கையை மிகுத்துக் கூறல். காட்டு: பூணாக முறத்தழீஇப் போதந்தான். (கலி - 39) என வரும். 4. கூறுதல் உசாதல் - வெறியாட் டிடத்தும், தலைவன் பிரிவிடத்தும் கூறும் போது, தோழி தானும் பிறரை வினாவுதல். தாங்கூறுதலோடு பிறரையும் வினாவுமென்க. காட்டு: முருகயர்ந்து வந்த முதுவாய் வேல, சினவ லோம்புமதி வினவுத லுடையேன் பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய விண்டோய் மாமலைச் சிலம்பின் ஒண்டா ரகலமும் ஒண்ணுமோ பலியே. (குறுந் - 362) இது, வேலனொடு கூறுத லுசாதல். 5. ஏதீடு - ஒருவன் களிறும் புலியும் நாயும் புனலும் போல்வன காத்து எம்மைக் கைக்கொண்டான் எனவும், பூத்தந்தான் தழைதந்தான் எனவும் காரணங் கூறுதல். ஏது - காரணம். ஈடு - இட்டுரைத்தல்; காரணங் காட்டுதலாம். அவை: 1. களிறுதரு புணர்ச்சி 4. புனல்தரு புணர்ச்சி 2. புலிதரு புணர்ச்சி 5. பூத்தரு புணர்ச்சி 3. நாய்தரு புணர்ச்சி 6. தழைதரு புணர்ச்சி என்பனவாம். காட்டு: 1, 4. கணைவிடு புடையூக் கானங் கல்லென மடிவிடு விளையர் வெடிபடுத் தெதிரக் கார்ப்பெய லுருமிற் பிளிறிச் சீர்த்தக இரும்பிணர்த் தடக்கை யிருநிலஞ் சேர்த்தச் சினந்திகழ் கடாஅஞ் செருக்கிமரங் கொல்பு மையல் வேழம் மடங்கலி னெதிர, உய்விட மறியே மாகி யொய்யெனத் திருந்துகோ லெல்வளை தெளிர்ப்ப நாணுமறந்து விதுப்புறு மனத்தினேம் விரைந்தவற் பொருந்திச் சூருறு மஞ்ஞையி னடுங்க, வார்கோல் உடுவுறு பகழி வாங்கிக் கடுவிசை அண்ணல் யானை யணிமுகத் தழுத்தலிற் புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப் புள்ளி வரிநுதல் சிதைய நில்லா தயர்ந்துபுறங் கொடுத்த பின்னர்,. . . . நுரையுடைக் கலுழி பாய்தலின் உரவுத்திரை அடுங்கரை வாழையி னடுங்கப் பெருந்தகை அஞ்சி லோதி, அசையல் எனையதூஉம் அஞ்ச லோம்புநின் அணிநலங் காக்கென மாசறு சுடர்நுதல் நீவி நீடுநினைந் தென்முக நோக்கி நக்கனென். (குறிஞ்சிப் - 160) இது களிறுதரு புணர்ச்சியும், புனல்தரு புணர்ச்சியும். களிறு காத்தவாறும், புனலுளிருந்து கரையில் எடுத்து விட்ட வாறுங் காண்க. 2. புலிபுலி யென்னும் பூசல் தோன்ற ஒண்செங் கழுநீர்க் கண்போ லாயிதழ் ஊசி போகிய சூழ்செய் மாலையன் வரிபுனை வில்லின் ஒருகணை தெரிந்துகொண் டியாதோ மற்றிம் மாதிறம் படரென வினவி நிற்றந் தோனே. (அகம் - 48) இது, புலிதரு புணர்ச்சி. 3. உரவுச்சினஞ் செருக்கித் துன்னுதொறும் வெகுளும் முளைவா யெயிற்ற வள்ளுகிர் ஞமலி கிளையாக் கண்ண வளைகுபு நெரிதர நடுங்குவன மெழுந்து நல்லடி தளர்ந்தியாம் இடும்பைகூர் மனத்தேம் மருண்டுபுலம் படர ஆகாண் விடையின் அணிபெற வந்தெம் அலமர லாயிடை வெருவுத லஞ்சி மெல்லிய வினிய மேவரக் கிளந்தெம் மடமத மழைக்கண் இளையீர் இறந்த கெடுதியு முடையே னென்றனன். (குறிஞ்சிப் - 130) இது, நாய் தரு புணர்ச்சி. ஞமலி - நாய். 5. சுள்ளி சுனைநீலஞ் சோபா லிகைசெயலை அள்ளி யளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி இதணாற் கடியொடுங்கா வீர்ங்கடா யானை உதணாற் கடிந்தா னுளன். (திணை. நூற் - 2) இது, ‘அளகத்தின்மேல் ஆய்ந்து’ எனவே, பூத்தரு புணர்ச்சி யாயிற்று. அளகம் - கூந்தல். 6. அன்னாய் வாழிவேண் டன்னை யென்னை தானு மலைந்தான் எமக்குந் தழையாயின பொன்வீ மணியரும் பினவே என்ன மரங்கொலவர் சார லவ்வே. (ஐங் - 201) இது, தழைதந்தா னென்றது. 6. தலைப்பாடு - இருவரும் தாமே எதிர்ப்பட்டார்; யான் அறிந்திலேன் எனக் கூறல். தலைப்பாடு - தலைப்படுதல், ஒன்று கூடல். காட்டு: பிறிதொன் றின்மை அறியக் கூறி கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கி கடுஞ்சூள் தருகுவ னினக்கே (அகம் - 110) என வரும். 7. உண்மை செப்பல் - உள்ளவாறே சொல்லுதல். காட்டு: கன்மழை பொழிந்த வகன்க ணருவி ஆடுகழை யடுக்கத் திழிதரு நாடன் பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு முயங்காது கழிந்த நாளிவள் மயங்கிதழ் மழைக்கண் கலுழு மன்னாய். (ஐங் - 220) எனவரும். (52) 4. மறைபுலப்படுத்தல் 171. உற்றுழி யல்லது சொல்ல லின்மையின் அப்பொருள் வேட்கைக் கிழவியி னுணர்ப. இ - ள்: உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின் - தலைவிக்கு ஏதமுற்ற விடத்தன்றி தோழி அவ்வாறு மறை புலப்படுத்துக் கூறாளாகலின், அப்பொருள் வேட்கை கிளவியின் உணர்ப - அம்மறை புலப்படுத்துதல் விருப்பத்தைத் தலைவி காரணத்தால் தோழி உணர்வாள் என்றவாறு. தலைவி துணைச் சுட்டிய பின்னரே தோழி செவிலிக்குக் கூறுவளென்பதாம். ஏதம் - குற்றம், வருத்தம். அல்லது, உற்றுழி - தலைவியின் உடல்வேறுபாடும், குறிப்பு மொழியும் உற்றவிடத் தென்றுமாம். மறைபுலப்படுத்தல் - களவை வெளிப்படுத்தல். ஆவது - அறத்தொடுநிலை. காட்டு இன்னுயிர் பிரிவ தாயினும் நின்மகள் ஆய்மல ருண்கட் பசலை காம நோயெனச் செப்பா தீமே. (அகம் - 52) இதனுள், ‘பசலை காமநோயெனச் சொல்லாமற் காட்டும்’ எனக் காரணங் கூறியவறு காண்க. தாய்க்கும் வரையார் உணர்வுடம் படினே. (கள - 16) என்பதால், நற்றாய் செவிலி யு'99ர்ந்தாற் போல் உணர்வளென்க. செவிலி உரைக்க உணர்வாள் என்பதாம். (53) 5. நற்றாய் அறத்தொடு நிற்றல் 172. தாயறி வுறுதல் செவிலியோ டொக்கும். இ - ள்: செவிலி தனக்குக் களவொழுக்கத்தை அறிவித்தது போல, நற்றாய் தந்தை தன்னைக்கு அறிவிக்கும் என்றவாறு. என்றது, செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றாற்போல நற்றாயும் தந்தைக்கும் தன்னைக்கும் அறத்தொடு நிற்பாள் என்பதாம். தன்னை - தலைவியின் அண்ணன். தன் + ஐ - தன்னை. அறிவுறுத்தல் - அறிவுறுத்தல்; பிறவினைப் பொருள். காட்டு: எனவாங், கறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட என்னையர்க் குற்றுரைத்தாள் யாய். (கலி - 39) இது, தான் கூறியதைச் செவிலி கூற, அதை நற்றாய் தன்னையர்க் குரைத்தாள் எனத் தோழி தலைவிக்குக் கூறினாளென்க. (54) 6. தந்தையும் தன்னையும் உணர்தல் 173. தந்தையுந் தன்னையும் முன்னத்தி னுணர்ப. இ - ள்: தந்தையும் தன்னையும் தலைவியினது கள வொழுக்கத்தைக் குறிப்பால் உணர்வர் என்றவாறு. முன்னம் - குறிப்பு. எனவே, நற்றாய் தந்தை தன்னையர்க்குக் குறிப்பால் அறத்தொடு நிற்பாள் என்பதும், அவ்வாறு அவள் குறிப்பால் கூறுவதை அவர் உய்த்துணர்வர் என்பதும் பெற்றாம். காட்டு: இருவர்கட் குற்றமும் இல்லையா லென்று தெருமந்து சாய்த்தார் தலை. (கலி - 39) என, முன்னர் நிகழ்ந்த வெகுட்சி நீங்கி உய்த்துக் கொண்டுணர்ந்த வாறு காண்க. (55) 7. களவு வெளிப்பாடு 175. அம்பலும்அலருங் களவுவெளிப் படுத்தலின் அங்கதன் முதல்வன் கிழவ னாகும். இது, களவு வெளிப்பாட்டுக்கு நிமித்தமாவான் தலைவன் என்கின்றது. இ - ள்: அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின் -அம்பலும் அலரும் களவொழுக்கத்தை வெளிப்படுத்தலான், அங்கு அதன் முதல்வன் கிழவன் ஆகும் - அவ்வெளிப் பாட்டுக்கு நிமித்தமாயினான் தலைவனாம் என்றவாறு. களவை வெளிப்படுத்தல் - அறத்தொடு நிற்றல். தலைவி முதலியோர் அறத்தொடு நிற்றற்குத் தலைவனே காரணம் என்பதாம். தலைவன் வருதலாலேயே அம்பலும் அலரும் உண்டாவதனாலும், அவை உண்டாவதனாலேயே அறத்தொடு நிலை ஏற்படுவதனாலும் அறத்தொடு நிலைக்குக் காரணமாவான் தலைவனே என்பது கருத்து. அம்பல் - வெளிப்படக் கூறாமல் முணுமுணுப்பது; குசுகு சென்று பேசுதல் என்பது வழக்கு. அலர் - வெளிப்படக் கூறுவது. அம்பல் - மலராத பூப்போன்றது. அலர் - மலர்ந்த பூப்போன்றது. பகற்குறியினும் இரவுக் குறியினும் தலைவன் வந்து தலைவியைக் கூடிப்போதலை ஊர்ப்பெண்டிர் அறிந்து, துணிவு கொள்ளாமல் ஒருவர்க்கொருவர் வாய்க்குட் பேசிக்கொள்வது - அம்பல் எனப்படும். பலரறிய வெளிப்படக் கூறுவது - அலர் எனப்படும். அம்பல் - பரவாத களவு. அலர் - பரவியகளவு. காட்டு: நீரொலித் தன்ன பேஎர் அலர்நமக் கொழிய அழப்பிரிந் தோரே. (அகம் - 211) எனக் காண்க. இங்கு, 21. புறஞ்செயச் சிதைதல் 23. கலங்கி மொழிதல் 22. புலம்பித் தோன்றல் 24. கையற புரைத்தல் என்னும் ஆறாவது மெய்ப்பாடு நான்கும் (மெய் - 18) தலைவிக்கு நிகழும். (56) 8. தோழி கூற்று: 13: 38 - 40 38. முன்னிலை அறனெனப் படுதலென் றிருவகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் 39. வரைவுடன் பட்டோற் கடாவல் வேண்டியும் 40. வன்புறை இ - ள்: 38 அறன் எனப்படுதல் புரைதீர் இருவகை முன்னிலை என்று கிளவி தாயிடைப்புகுப்பினும் - அறனென்று சொல்லப் படுதலானது குற்றந்தீர்ந்த இருவரும் தாமே எதிர்ப்படுதலென்று கூறுஞ் சொல்லைச் செவிலியிடம் கூறி, அதை நற்றாயிடம் சொல்லும்படி கூறினும். இது, அறத்தொடுநிலை, அறம் - ஒழுக்கம். இருவகை முன்னிலை - ஆண்பெண் என்னும் இருவரும் எதிர்ப்படுதல். ஒருவனும் ஒருத்தியும் தாமே எதிர்ப்பட்டுக் கூடுதலே சிறந்த ஒழுக்கமாகும். என்று அறிவர் கூறியுள்ளார் எனக் களவின் சிறப்பைச் செவிலிக்குக் கூறி, மணவினைக்கு ஏற்பாடு செய் எனச் சொல்லுதலாம். என்றது, புனல்தரு புணர்ச்சியும் பூத்தருபுணர்ச்சியும் களிறு தருபுணர்ச்சியும் போல்வன (கள - 52) செவிலிக்குக் கூறி, அவள் நற்றாய்க்கும், நற்றாய் தந்தை தன்னையர்க்கும் கூறும் படி செய்தலாம். பின்னர் அவர்கள் உடம்பாட்டைத் தலைவிக்குக் கூறுதலுமாம். பூத்தருபுணர்ச்சி முதலியவற்றுக்கு முன்னர்க் (கள - 52) காட்டிய எடுத்துக்காட்டுகள் காண்க. காட்டு: அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்; அவரும், தெரிகணைநோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந் தொருபக லெல்லாம் உருத்தெழுந் தாறி இருவர்கட் குற்றமு மில்லையா லென்று தெருமந்து சாய்த்தார் தலை. (கலி - 39) இது, தோழி செவிலிக் கறத்தொடு நிற்ப, அவள் நற்றாய்க்கு அறத்தொடு நிற்ப, அவள் தன்னையர் முதலியோர்க் கறத்தொடு நிற்ப, அவரும் ஒருவாற்றான் உடன் பட்டமை தோழி தலைவிக்குக் கூறியது. 2. வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க் கோடாது நீர்கொடுப்பி னல்லது - கோடா எழிலுந் தனமு மிரண்டற்கு முந்நீர்ப் பொழிலும் விலையாமோ போந்து. (திணை. நூற் - 15) இது, நற்றாய், தந்தை தன்னையர்க் கறத்தொடு நின்றது. 39. வரைவு உடன்பட்டோற் கடாவல் வேண்டினும் - தலைவன் தலைவியை மணந்து கொள்ள உடன்பட்டு, அதற்கு வேண்டிய பொருளுக்காகப் பிரியின், நீட்டியாது விரைவில் வந்து வரைந்து கொள் எனக் கூறுவள். காட்டு: சீர்மிகு சிறப்பினோன் மரமுதற் கைசேர்த்த நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப் பூமலர்ந் தவைபோலப் புள்ளல்குந் துறைவகேள், ஆற்றுத லென்பதொன் றலர்ந்தவர்க் குதவுதல் போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல் அன்பெனப் படுவது தன்கிளை செறாமை அறிவெனப் படுவது பேதையர் சொல்நோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறாமை நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல் பொறையெனப் படுவது போற்றாரைப் போற்றுதல், ஆங்கதை யறிந்தனி ராயினென் றோழி நன்னுதல் நலனுண்டு துறத்தல் கொண்க! தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைதல் நின்றலை வருந்தியாள் துயரம் சென்றனை களைமோ பூண்கநின் றேரே. (கலி - 133) இது, முற்காலத்துப் போலன்றி வெளிப்படையாக வரைவு கடாயது காண்க. 40. ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட - வரைந்து கோடல் உறுதியானபோது, அதுவரையிலும் தலைவியை ஆற்றியிருக்கும்படி வற்புறுத்திக் கூறுதல் உளப்பட, பாங்குற வந்த நாலெட்டும் வகையும் தாங்கரும் சிறப்பின் தோழிமேன - சிறப்புறக் கூறிய முப்பத்திரண்டும், இக் கூற்றுக்களிலே வேறுபட வருவனவும் மிக்க சிறப்பினையுடைய தோழியிடத்தன என்றவாறு. முதலிலுள்ள நாற்ற முதலிய எட்டையும் விலக்கி எண்ணி, ‘நாலெட்டும்’ என்றார். ஈங்கு அவ்வெட்டுடன் வரிசையாக எண்ணி நாற்பதாக எண் கொடுக்கப்பட்ட தென அறிக. தன்மை - மெய்ம்மை. எனவே, முன்பெல்லாம் பொய்யாக வற்புறுத்தினாள்; வரைவு உறுதியானதால் மெய்யாகவே வற்புறுத்துகிறாள் என்க. ஆங்கு - வரைந்து கோடலைக் குறித்தது. காட்டு: கூன்முள் முண்டகக் கூனி மாமலர் நூலறு முத்திற் காலொடு பாறித் துறைதொறும் பரிக்கும் தூமணற் சேர்ப்பனை யானுங் காதலென் யாயுநனி வெய்யள் எந்தையுங் கொடீயர் வேண்டும் அம்ப லூரு மவனொடு மொழிமே. (குறுந் - 51) இது, எல்லோரும் உடன்பட்டமையான் அதுவரையினும் ஆற்றியிரு என வற்புறுத்தியது. வகையாவன 1. மெய்படக் கூறல் 3. தாய்க்குக் காட்டிக் கூறல் 2. ஐயமகற்றல் 4. முன்வந்தா னெனல் முதலியன காட்டு: 1. அன்னை வாழிவேண் டன்னை நெய்தல் நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன் எந்தோள் துறந்த காலை யெவன்கொல் பன்னாள் வருமவ னளித்த போழ்தே. (ஐங் - 109) இது, அறத்தொடு நின்ற பின் வரைவிடைப் பிரிந்த தலைவன் காலம் நீட்டித்தபோது ஐயுற்ற செவிலி, அவன் கூறிய தென்னாயிற் றென்றாட்குத் தோழி மெய்படக் கூறியது. ‘அவன் அளித்த போழ்து பன்னாள் வரும்’ எனல் காண்க. 2. அன்னை வாழிவேன் டன்னை கழனிய முண்டக மலருந் தண்கடற் சேர்ப்பன் எந்தோள் துறந்தன னாயின் எவன்கொல் மற்றவன் நயந்த தோளே. (ஐங் - 108) இது, அறத்தொடு நின்றபின் வரைவு நீட, மற்றொரு தலைவியை வரைவானோ வென்று ஐயுற்ற செவிலி குறிப்பறிந்த தோழி, அவ்வாறு செய்யானெனக் கூறி ஐயமகற்றியது. ‘மற்று அவன் நயந்த தோள் எவன்’ எனல் காண்க. 3. அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு ஞாழல் பூக்குந் தண்ணந் துறைவன் இவட்கமைந் தனனாற் றானே தனக்கமைந் தன்றிவள் மாமைக் கவினே. (ஐங் - 103) இது, மணம் நிகழ்கின்றபோது தாய்க்குக் காட்டித் தோழி கூறியது. 4. அம்ம வாழி தோழி நம்மலை வரையா மிழியக் கோடல் நீடக் காதலர்ப் பிரிந்தோர் கையற நலியும் தண்பனி வடந்தை யச்சிர முந்துவந் தனர்நங் காத லோரே. (ஐங் - 223) இது, வரைவிடைப் பிரிந்தோன், குறித்த பருவத்திற்கு முன் வருகின்றமை யறிந்த தோழி தலைவிக்குக் கூறியது. அச்சிரம் - முன்பனிக்காலம். அச்சிரமுந்து - முன் பனிக் காலம் வருமுன். 9. செவிலி, நற்றாய் செயல் 175. கிழவோ னறியா அறிவின ளிவளென மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின் ஐயக் கிளவி யறிதலு முரித்தே. இது, களவு வெளிப்பட்ட பின்னர்த் தலைவன்மேல் ஐயங் கொண்ட செவிலியும் நற்றாயும் அறிவரைக் கேட்டு அமைவர் என்கின்றது. இ - ள்: கிழவோன் அறியா அறிவினள் இவளென ஐயக் கிளவி - களவு வெளிப்பட்ட பின்னர்ச் செவிலியும் நற்றாயும் தலைவனுடைய தன்மையறியாது அவன்மேல் காதல் கொண்டனள் தலைவி என ஐயுற்று, மைஅறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின் அறிதலும் உரித்தே - குற்ற மற்ற சிறப்பினையுடைய அறிவரைக் கேட்க, அவர் தலைவி கொண்டது முறையேயென்று கூற அறிந்து அமைதலும் உரித்து என்றவாறு. ஐயக்கிளவி - ஐயுற்றுப் பிறரைக் கேட்கும் சொல். களவு வெளிப்படல் - அறத்தொடு நிற்றல். தலைவியின் கருத்தை அறிந்த பின் என்பது. களவு வெளிப்படவே, செவிலியும் நற்றாயும் - தலைவன் எத்தன்மையனோ, செல்வம் ஒழுக்கம் முதலியவற்றில் நமக்குத் தகுதியுள்ளவனோ, பின்னர் வரைந்து கொள்வானோ, வரையாது செல்வானோ என்னும் இவற்றையறியாது தலைவி அவன்மீது காதல் கொண்டாள் என ஐயுற்று அறிவரைக் கேட்பர். அவர் ஆராய்ந்து பார்த்துப் பல்வகையினும் நம் பெண்ணை மணக்க அவன் தகுதியுள்ளவனே; அவள் அவனைக் காதலித்தது முறையேயாம் எனக் கூற, ஐயம் நீங்கிஅமைவர் என்பதாம். இதனைத் தலைவி அறியின் அவள்பால் வரைந்தெய்துங் கூட்டத்திற்கு ஏதுவாகிய, ‘முட்டுவயிற் கழறல்’ (மெய் - 23) முதலிய எட்டு மெய்ப்பாடும் நிகழும். (57) 6. வரைதல் 1. வரைதலின் வகை 176. வெளிப்பட வரைதல் படாமை வரைதலென் றாயிரண் டென்ப வரைத லாறே. இ - ள்: களவு வெளிப்பட்ட பின் வரைந்து கொள்ளுதல், களவு வெளிப்படா முன் வரைந்து கொள்ளுதல் என வரைந்து கொள்ளும் முறை இரண்டு வகைப்படும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. வரைதல் - மணத்தல். களவு வெளிப்படல் - அறத்தொடு நிற்றல். அதாவது, சுற்றத்தார்க் கறிவித்து - அறத்தொடு நின்று - அவர் உடன்பாடு பெற்று மணந்து கொள்ளுதலாம். களவு வெளிப்படாமை வரைதல் - அறத்தொடு நில்லாமல் தலைவன் தலைவியை உடன்கொண்டு சென்று தன்னூரில் மணந்து கொள்ளுதலாம். காட்டு: 1. சேயுயர் வெற்பனும் வந்தனன் பூவெழி லுண்கணும் பொலிகமா வினியே. (கலி - 39) ‘வந்தனன்’ என்பது, வரைவிடைப் பிரிந்த தலைவன் வந்தானென்பதால், களவு வெளிப்பட்டபின் வரைவு நிகழ்ந்தது. 2. கொல்லைப் புனத்த அகில்சுமந்து கற்பாய்ந்து வானி னருவி ததும்பக் கவினிய நாடன் நயனுடையன் என்பதனால் நீப்பினும் வாடல் மறந்தன தோள். (ஐந். எழு - 2) இது, களவு வெளிப்படாமல் வரைவு நிகழ்ந்தது. ‘நீப்பினும்’ என்பது, உடன்போயினும் என்பது. ‘தோள் வாடல் மறந்தன’ என்பது, மணம் நிகழ்ந்த தென்பது. 3. எம்மனை முந்துறத் தருமோ தன்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே. (அகம் - 195) இது, களவு வெளிப்படா முன்னர்க் கொண்டுதலைக் கழிந்ததால், தலைவனூரிலோ, அல்லது தமர் சென்று அழைத்து வரின் தலைவியூரிலோ, களவு வெளிப்படா முன்வரைவு நிகழும். கொண்டுதலைக் கழிதல் - உடன்போக்கு. அகத் - 18 பார்க்க. (58) 2. வரையாது பிரியாவிடம் 177. வெளிப்படை தானே கற்பினோ டொப்பினும் ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக வரையாது பிரிதல் கிழவோற் கில்லை. இது, வரையாது பிரியும் இடம் இதுவெனவும், பிரியலாகா இடம் இதுவெனவும் உணர்த்துகின்றது. களவு வெளிப் பட்டபின் வரைவுக்குப் புறனடையுமாம். இ - ள்: வெளிப்படை தானே கற்பினோடு ஒப்பினும் - களவு வெளிப்பட்டபின் வரைதலானது கற்பினோடு ஒத்ததாயினும், ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக - முற்கூறிய (அகத் - 25) ஓதல் பகை தூது என்ற மூன்றுங் காரணமாக, வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை - வரைவிடை வைத்துப் பிரிதல் தலைவற் கில்லை என்றவாறு. கற்பினோடு ஒத்தலாவது - கற்பினுள் தலைவி உரிமை சிறந்து தலைமை எய்தி நிற்பது போலக் களவு வெளிப்பட்டபின் தலைமை யெய்தி நிற்றல். களவு வெளிப்பாடானது கற்பினுள் தலைவி தலைமை சிறந்து நிற்பது போன்ற தாயினும், வரையாது ஓதல் முதலிய மூன்றற்கும் தலைவன் பிரியா னென்பது. அம் மூன்றும் கற்புக் காலத்துப் பிரியும் பிரிவாகும். எனவே, 1. வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவும் 2. வேந்தற் குற்றுழிப் பிரிவும் 3. காவற் பிரிவும் வரையாது பிரியப் பெறும் என்பதாம். காட்டு: 1. நாமுறை தேஏ மரூஉப்பெயர்ந் தவனோ டிருநீர்ச் சேர்ப்பின் உப்புட னுழுதும் பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும் படுத்தனம் பணிந்தனம் அடுத்தன மிருப்பிற் றருகுவன் கொல்லோ தானே விரிதிரைக் கானலம் பெருந்துறைப் பரதவ னமக்கே. (அகம் - 280) இதனுள், ‘அவனோடு தொழில் செய்து வழிபட்டால் தந்தை தருவானோ? தாரான்’ எனத் தலைவன் பொருள்வயிற் பிரியக் கருதியவாறு காண்க. 2. பூங்கொடி மருங்கிற் பொலம்பூ ணோயே, வேந்துவினை முடித்து வந்தனர் காந்தள் மெல்விரற் கவையினை நினைமே. (அகம்) இது, வேந்தற் குற்றுழிப் பிரிந்து சென்றான் வந்ததைத் தோழி தலைவிக்குக் கூறியது. 3. பல்வரி யினவண்டு புதிதுண்ணும் பருவத்துத் தொல்கவின் தொலைந்தவென் றடமென்றோ ளுள்ளுவார் ஒல்குபு நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி வெல்புக ழுலககேத்த விருந்துநாட் டுறைபவர். இது, காவற்பிரிவு புரித்து சென்ற தலைவன் கால நீட்டிக்க ஆற்றாளாய தலைவியை ஆற்றுவிக்குந் தோழி கூறியது. (59) 7. உடன்போக்கு உடன்போக்காவது - தலைவன் தலைவியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு தன்னூர் செல்லுதல். அதாவது, தலைவனுடன் அவனூர்க்குத் தலைவி செல்லுதல். களவு வெளிப்படின் உடன்போக்கில்லை. உடன்போக்குச் சிறுபான்மை நடைபெறுவதே. அதாவது, தலைவன் தலைவி இருவரும் ஒருவரையொருவர் காதல் கொண்டு களவொழுக்கம் ஒழுகி வருவதைத் தலைவி பெற்றோர் அறிந்து தாமும் அதற்கு உடன்பட்டு மணமுடிப்பர். சில பெற்றோர் களவொழுக்கத்தை யறிந்தும் அதற்கு உடன்படாது தலைவியை வெளிப் போகாது வீட்டினுள் வைத்துக் காவல் காத்து - இற்செறித்து - வருவர். அப்போதே உடன்போக்கு நிகழும். தலைவியைப் பிறர்க்குக் கொடுக்கக் கருதினும் உடன்போக்கு நிகழும். இது கொண்டு தலைக் கழிதல் எனவும் வழங்கும். (அகத் - 18) இவ்வுடன் போக்குக்குத் தோழியும் உடன்பட்டுத் தலைவியை அவனுடன் அனுப்புவள். தலைவனுடன் தலைவி சென்றதை யறிந்த செவிலி தேடிச் செல்வாள். சுற்றத்தாரும் தேடிச் செல்வர். சுற்றத்தார் தேடிக் கொண்டு வருவதை அறிந்த தலைவி தலைவனைத் தழுவிக் கொண்டு அவனுக்குத் தன் சுற்றத்தார் தீங்கு செய்வரென அஞ்சுவாள் அதையறிந்த சுற்றத்தார் தாம் எண்ணியது தவறென்பதை யுணர்ந்து இருவரையும் அழைத்துக் கொண்டு வந்து மணமுடிப்பர்; அல்லது இருவரையும் அவனூர் போகவிட்டு வருவர். அல்லது தேடிச் சென்ற சுற்றத்தார்க்குத் தென்படாமல் அவனூர் செல்வதும் உண்டு. தலைவற்கும் சுற்றத்தார்க்கும் போர் நிகழ்தலும் உண்டு. இருவரையும் அழைத்து வந்து மணமுடிப்பதே பெரும் பான்மை. இதுவும் பண்டு ஒழுக்கமாகவே கொள்ளப்பட்டது. இதைத் தழுவியதே வள்ளி திருமணம். தலைவன் தலைவியை உடன் கொண்டு செல்லும்போது தேர், யானை, குதிரை முதலியன ஊர்ந்து செல்லுதலும் உண்டு (கள - 41) உதயணன் வாசவதத்தையுடன் பத்திராவதி என்னும் யானை யூர்ந்து சென்றனன் என்கின்றது பெருங்கதை. 1. தலைவி போக்கும் வரைவும் 178. ஒருதலை யுரிமை வேண்டியு மகடூஉப் பிரித லச்சம் உண்மை யானும் அம்பலு மலருங் களவுவெளிப் படுக்குமென் றஞ்சவந்த ஆங்கிரு வகையினும் நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் போக்கும் வரைவும் மனைவிக்கட் டோன்றும். 1. ஒருதலை உரிமை வேண்டல் 2. பிரிதல் அச்சம் மகடூஉ உண்மை 3. அம்பலும் அலரும் களவு வெளிப்படுக்கும் என்று அஞ்சல் 4. நோக்கொடு வந்த இடையூறு இ - ள்: 1. ஒருதலை உரிமை வேண்டியும் - இடைவிடாது இன்ப நுகர்ந்து இல்லறம் நடத்தும் உரிமையை விரும்பியும், 2. பிரிதல் அச்சம் மகடூஉ உண்மை யானும் - பொருள் தேடும் கடமை யுண்மையால் ஆண்மக்கள் பிரிவரென்று அஞ்சும் அச்சம் மகளிர்க்கு உண்மையாலும், 3. அம்பலும் அலரும் களவு வெளிப்படுக்கும் என்று அஞ்ச வந்த ஆங்கிரு வகையிலும் - ஊரவர் கூறும் அம்பலும் அலரும் களவை வெளிப்படுத்தும் என்று அஞ்சுவதாலும்; அவ்விரு வகைக்கும் அஞ்சுத லென்க. 4. நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் - பிறர்தன்னை உற்று நோக்கும் நோக்கங் காரணமாக கூட்டத்திற்கு இடையூறு நேர்ந்ததனாலும், போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும் - தலைவி உடன் போகவும் வரைந்து கொள்ளவும் எண்ணுவாள் என்றவாறு. ‘ஒன்றித் தோன்றும் தோழிமேன’ (கள - 61) என்பதால் இவை தோழிக்கும் உரியவெனக் கொள்க. காட்டு: 1. இலங்குவளை நெகிழப் பரந்துபட ரலைப்பயாம் முயங்குதொறு முயங்குதொறு மயங்க முகந்துகொண் டடக்குவ மன்னோ தோழி, மடப்பிடி மைதவழ் சிலம்பிற் கடுஞ்சூ லீன்று கழைதின யாக்கை விழைகளிறு தைவர வாழையஞ் சிலம்பிற் றுஞ்சும் சாரல் நாடன் சாயல் மார்பே. (அகம் - 328) இதனுள், ‘முகந்துகொண் டடக்குவம்’ என இடைவிடாது இன்ப நுகர விரும்பிய வாறும், ‘களிறு தைவரப்பிடி துஞ்சும்’ எனவே, யாமும் அவ்வாறு ஆவோம் என்னும் உள்ளுறையால், தலைவி இல்லறம் நிகழ்த்த விரும்பிய வாறுங் காண்க. 3. உன்னங் கொள்கையோ டுளங்கரந் துறையும் அன்னை சொல்லும் உய்கம், என்னதூஉம் ஈரஞ் சேரா இயல்பிற் பொய்மொழிச் சேரியம் பெண்டிர் கௌவையு மொழிக, நாடுக ணகற்றிய உதியச் சேரற் பாடிச் சென்ற பரிசிலர் போல உவவினி வாழி தோழி, அவரே பொம்ம லோதி நம்மொ டொராங்குச் செலவயர்ந் தனரா லின்றே. (அகம் - 65) இது, அம்பலும் அலரும் அஞ்சிப் போக்குடன் பட்டது. 4. ஆனா தலைக்கும் அறனி லன்னை தானே யிருக்கத் தன்மனை யானே. (குறுந் - 262) இது, இடையூறு பொருளின்கட் போக்குடன் பட்டது. பிரிதல் அச்சத்திற்கு முன்காட்டிய வற்றுட் காண்க. (60) 2. தோழி கூற்று 179. தலைவரும் விழும நிலையெடுத் துரைப்பினும் போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும் நீக்கலின் வந்த தம்முறு விழுமமும் வாய்மையும் பொய்மையுங் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும் நோய்மிகப் பெருகித்தன் நெஞ்சுகலுழ்ந் தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் றிறத்தோ டென்றிவை யெல்லா மியல்புற நாடின் ஒன்றித் தோன்றுந் தோழி மேன. 1. தலைவரும் விழும நிலையெடுத் துரைத்தல் 2. போக்கற் கண்ணும் 3. விடுத்தற்கண்ணும் 4. நீக்கலின் வந்த தம்முறு விழுமம் 5. தலைப் பெயர்த்துக் கொளல் 6. வன்புறை இ - ள்: 1. தலைவரும் விழும நிலை எடுத்து உரைப்பினும் - தலைவியை உடனழைத்துச் செல்லாமையால் அவளுக்கும் பிறர்க்கும் இனிப் பெருந்துன்பம் நேருமென்று தலைவற்குக் கூறுவாள். தலைவரும் விழுமம் - மிக்க துன்பம். காட்டு: வெல்பேர்க் குரிசில்நீ வியன்சுர னிறப்பிற் பல்கா ழல்குல் அவ்வரி வாடக் குழலினு மினைகுவள் பெரிதே விழவொலி கூந்தனின் மாஅ யோளே. (ஐங் - 306) இதனுள், ‘நீ பிரியின் தலைவி குழலினும் இரங்குவள்’ எனத் தலைவியின்ஆற்றாமையை எடுத்துரைத்தமை காண்க. 2. போக்கற் கண்ணும் - தலைவனோடு தலைவியை அனுப்பும் போதும் இருவர்க்குங் கூறுவள். காட்டு: 1. இலங்குவீங் கெல்வளைஆய்நுதல் கவினப் பொலந் தேர்க் கொண்கன் வந்தன னினியே இலங்கரி நெடுங்கண் அனந்தல் தீர நலங்கவர் பசலையை நகுகம் யாமே. (ஐங் - 200) இதனுள், ‘கண் அனந்தல் தீர’ என்றது, உடன்கொண்டு போகத் தலைவன் வந்தானெனத் தலைவியைத் தேற்றியதாம். அனந்தல் - தூக்கம். 2. குறுமுறி யீன்றன மரனே நறுமலர் வேய்ந்தன போலத் தோன்றிப் பலவுடன் தேம்படப் பொதுளின பொழிலே கானமும் நனிநன் றாகிய பனிநீங்கு வழிநாட் பாலெனப் பரத்தரு நிலவின் மாலைப் போதுவந் தன்றாற் றூதே நீயும் கலங்கா மனத்தை யாகி வன்சொல் நயந்தனை கொண்மோ. (அகம் - 259) இது, தலைவியை உடன்போக்கும் போது கூறியது. 3. விடுத்தற் கண்ணும் - அவர்களை வழியனுப்பும் போதும் பாதுகாக்கவெனக் கூறுவள். காட்டு: அண்ணாந் தேந்திய மார்பகம் தளரினும் பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்த லோம்புமதி பூக்கே ளூரநின் பிழையா நன்மொழி தேறிய விவட்கே. (நற் - 10) இது, தலைவியைப் பாதுகாக்க வெனத் தலைவற்குக் கூறியது. 4. நீக்கலின் வந்த தம்முறு விழுமமும் - தலைவியை அனுப்பி விட்டமையால் தனக்கும் தன்னைச் சார்ந்தோர்க்கும் உண்டான துன்பத்தை ஆற்றிக் கொள்ளும் போதும் கூறுவள். விழுமம் - துன்பம், வருத்தம். காட்டு: வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால் அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண் வரிப்புனை பந்தொடு வைஇய செல்வோள் இவைகாண் டோறும் நோவர் மாதோ அளியரோ அளியரென் ஆயத் தோரென நும்மொடு வரவுதா னயரவும் தன்வரைத் தன்றியுங் கலுழ்ந்தன கண்ணே. (நற் - 12) இது, நீக்கலின் வந்த துன்பத்தைஆற்றிக் கொண்டு போக்குத் தவிர்ந்தமை கூறியது. 5. வாய்மையும் பொய்மையுங் கண்டோர்ச் சுட்டி தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும் - வழியில் தலைவனும் தலைவியும் கொண்டுள்ள காதலின் உண்மை இன்மையை ஆராய்ந்து கண்டோரைத் தாய்க்குக் குறிப்பித்து, அதனால், தாய் தன் கருத்திற் கிணங்கி மனமாறி வருதலை நோக்கித் தலைவியை மீட்டற்குச் செல்லாமல் தாயை மீட்டுக் கொள்ளும் போதும்; அல்லது, தலைவியை மீண்டும் அழைப்பிக்க ஏற்பாடு செய்யும் போதும் கூறுவள். இரண்டுங் கொள்க. தலைப் பெயர்த்தல் - மீட்டல். தாயைச் செல்லாமல் மீட்டல், தலைவியை மீட்டல். காட்டு: 1. அவளே, உடனம ராயமோ டோரை வேண்டா தென்னினு நின்னினுஞ் சிறந்த மென்மொழி ஏதி லாளன் காதலி னானாது பரல்பாழ் படுப்பச் சென்றன ளதனால், முழவிமிழ் பந்தர் வினைபுனை நல்லில் விழவயர்ந் திருப்பி னல்லதை யினியே நீயெவ னிரங்குதி யன்னை யாயினுஞ் சிறந்த நோய்முந் துறுத்தே. இது, தாயைத் தேடிச் செல்லாமல் மீட்டது. ‘என்னினும் நின்னினும் சிறந்தோன்’ என்றது, நம்மினும் அவளிடத்து அவன் அன்பு மிக்கவனாகையால், நீ வருந்தாதே என்பது. ஓரை - விளையாட்டு. 2. ஏதி லாளனென் றினையேல் நம்மினும் காதல னென்றனர் கருத்தழி யன்னாய், மதிநுதல் பொலியநம் மனையிற் புதுமலர் வேயப் புரிகுவை நீயே. (குழந்தை) இது, தலைவியை மீண்டும் அழைத்து வந்து மணஞ் செய்ய வேண்டுமெனத் தாய்க்குக் கூறியது. 6. நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்த தன் திறத்தோடு - இதுகாறுந் துன்புற்று நெஞ்சு வருந்தி யிருந்த தாய்க்கு, அவ்வருத்தம் நீங்கும் பொருட்டு இனி நடக்க வேண்டியவற்றைக் கூறி வற்புறுத்தல் கருதி அவளை நெருங்கிக் கூறுதலோடே, என்று இவை எல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழிமேன - என்று இச்சொல்லப் பட்டவற்றை யெல்லாம் இலக்கண வகையான்ஆராய்ந்து பார்க்கின் தான் அவள் என்னும் வேற்றுமை யின்றி ஒன்றுபடத் தோன்றும் தோழி கூற்று என்றவாறு. ‘தான்’ என்றது - தோழியை. ‘அவள்’ என்றது - தலைவியை. அழிந்தது - மன அழிவு, வருத்தம். ஒழிந்தது - நடவாதது; இனி நடக்க வேண்டியது. அது - மணவினை. சென்றுஇருவரையும் அழைத்து வந்து மணம் செய்வதே முறை என்பதாம். காட்டு: அன்னை வாழியோ அன்னை நின்மகள் என்னினும் யாயினு நின்னினுஞ் சிறந்த தன்னம ரிளந்துணை மருட்டலின் முனாது வென்வேற் புல்லி வேங்கட நெடுவரை மழையொடு மிடைந்த வயக்களிற் றருஞ்சுரம் விழைவுடை யுள்ளமொ டுழைவயிற் பிரியாது வன்கண் செய்து சென்றனள் புன்கண் செய்தல் புரைவதோ வன்றே. இது, தாயை வற்புறுத்தியது. யாய் - நற்றாய். என்னினும் நின்னினும் யாயினும் அன்பிற் சிறந்த தலைவனுடன் சென்றனள். அதனால், வருந்துவதிற் பயனில்லை. இனி ஆவதைச் செய் என்பதாம். தலைவன் சுரமென மொழிதல் உடன்வரத் துணிந்த தலைவியை நோக்கித் தலைவன் நான் செல்லும் வழி கடியது எனக் கூறி வரவு விலக்குதலும் உண்டு (கள - 49). (61) 3. தலைவன் கூற்று 180. ஒன்றாத் தமரினும் பருவத்துஞ் சுரத்தும் ஒன்றிய தோழியொடு வலிப்பினும் விடுப்பினும் இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக் கடைக்கொண்டு பெயர்த்தலின் கலங்கஞர் எய்திக் கற்பொடு புணர்ந்த கௌவை யுளப்பட அப்பாற் பட்ட ஒருதிறத் தானும் கிழவோன் மேன கிளவி யென்ப. 1. ஒன்றாத் தமரினும் 4 ஒன்றிய தோழியொடு வலிப்பினும் 2. ஒன்றாப் பருவத்தும் 5. விடுப்பினும் 3. ஒன்றாச் சுரத்தும் 6. கற்பொடு புணர்ந்த கௌவை இ - ள் : 1. ஒன்றாத் தமரினும் - வரைவுக்கு உடன்படாத சுற்றத்தாரைப் பற்றியும், 2. ஒன்றாப் பருவத்தும் - தலைவியை உடனழைத்துப் போக அவள் மென்மைத் தன்மைக்கு ஒவ்வாத கடுவேனிற் காலத்தைப் பற்றியும், 3. ஒன்றாச் சுரத்தும் - கொடிய வழியைப் பற்றியும் தலைவன் கூறுவான். ஒன்றா - ஒன்றாத - பொருந்தாத; ஈறுகெட்டது. ஏனை யிரண்டிடத்தும் கூட்டுக. காட்டு 1. ஐவகை யமைந்த கைபுனை கூந்தல் படர்கொடிப் பருவத் தினளைப் படரக் கொடாஅச் சுற்றம் போல விடாஅ துஞற்றும் மென்குழற் றுயிலே. (குழந்தை) இது, ஒன்றாத் தமரைப் பற்றிக் கூறியது. 2. மரந்தீ கடுவெயில் வழங்கு மதரிடை உடன்வரத் துணிதி யொண்டொடி மகளிர் தண்ணென் பனிநீர் சாயினும் உண்ணெகிழ்ந் தோவெனு நன்னுத லோயே. (குழந்தை) இது, ஒன்றாப் பருவத்தைப் பற்றிக் கூறியது. 3. எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின் மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை அல்லிசே ராயித ழரக்குத்தோய்ந் தவைபோலக் கல்லுறி னவளடி கறுக்குந வல்லவோ. (கலி - 13) இது, ஒன்றாச் சுரத்தைப் பற்றிக் கூறியது. சுரம் - கடுவழி. 4. ஒன்றிய தோழியொடு வலிப்பினும் - தலைவியை உடன ழைத்துச் செல்லுதற்கு உடன்பட்டுத் துணை செய்த தோழியை விட்டுப் பிரியத் துணியும் போதும், 5. விடுப்பினும் - அல்லது, இன்னும் சில நாள் பொறுப்போம் என்று கருதித் தலைவியைத் தோழியினிடமே விட்டுச் செல்லும் போதுங் கூறுவன். காட்டு : 1. ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்பவும் சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவும் தான்வரல் துணிந்த இவளினு மிவளுடன் வேய்பயி லழுவ முவக்கும் பேதை நெஞ்சம் பெருந்தக வுடைத்தே இது, தோழியொடு வலித்தது. ஒன்றாச் சுரத்திரற்கும் பருவத்திற்கும் முதலிரண்டடிகள் காட்டாகும். 2. இரும்புலிக் கிரிந்த கருங்கட் செந்நாகு நாட்டயிர் கடைகுரல் கேட்டொறும் வெரூஉம் ஆநிலைப் பள்ளி யல்க நம்மொடு மானுண் கண்ணியும் வருமெனின் வாரார் யாரோ பெருங்க லாறே இது, விடுத்தற்கட் கூறியது. 6. இடைச்சுர மருங்கின் அவள் தமர் எய்திக் கடைக்கொண்டு பெயர்த்தலின் கலங்கஞர் எய்தி - தலைவியை உடனழைத்துச் செல்லும் போது, இடைவழியில் அவள் சுற்றத்தார் தேடிச் சென்று தலைவியை அழைத்துச் செல்ல முயலுகையில் தலைவி மிகவும் வருத்த முற்று, கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட அப்பாற்பட்ட ஒரு திறத்தானும் - அவர்பாற் சாராது, அப்போது அவர் கூறும் கடுஞ் சொற்கள் கற்பொழுக்கத்தோடு கூடியதாகலின் அதனைப் பொருட்படுத்தாமல் தலைவனைத் தழுவிக் கொள்ளும் கொண்டுதலைக் கழிதற் கூற்றின் கட்பட்ட பகுதிக்கண்ணும், கிழவோன் மேன கிளவி என்ப - ஆகிய இவை தலைவன் கூற்றுக்களாகும் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட - ஒன்றாத்தமரினும் முதலிய ஐந்தனோடு இதுவுஞ் சேர்ந்த ஆறும், கொண்டு தலைக் கழிதற் கூற்றின் கட்பட்ட பகுதியான தலைவன் கூற்றுக்க ளென்பதாம். கடை - பின். பின் சென்று பெயர்க்க வென்க. அஞர் - வருத்தம். கற்பு - இல்லறம். கௌவை - பழிச்சொல், கடுஞ்சொல். அதாவது, ‘எங்களுக்குத் தெரியாது இவனோடு ஓடிவந்து விட்டனையே’ என்பன போன்ற சொல். கற்பொடு புணர்ந்த கௌவை - இல்லறத்தோடு கூடிய பழிச்சொல். தமர் - சுற்றத்தார். அதாவது, செவிலி தேடிச் சென்றதைக் (கள - 68) குறிப்பால் உணர்ந்த சுற்றத்தார், வலிதிற் கொண்டு சென்றானோ வென் றெண்ணிப் பின்சென்று, தலைவி தம்மை யடையாமல் தலைவனைச் சார்ந்து நின்றதால், அவள் கற்பொடு புணர்ந்தமை கண்டு தலைவியை விட்டு மீள்வரென்க. இருவரையும் அழைத்து வருதலும் உண்டு. காட்டு: தேடியவள் சுற்றத்தார் சென்று கண்டு சிலைவளைத்துக் கணைதொடுக்கக் கண்டே யன்னாள் ஓடியவன் றனைத்தழுவிக் கொளக்கண் டன்னார் உவந்தவளை யுடன்போக்கி ஊர்போந் தாரே. (அரசியலரங்கம்) எனக் காண்க. கணக்கலை வெரூஉஞ் சினப்புலி கண்டு பெருங்கலை தழீஇய பிணையெனத் தமர்வரப் படர்கொடி மானக் கடனறி காட்சி முதுக்குறை யினளே முன்னுறத் தழீஇக் கற்பொடு புணர்ந்தமை காட்டிய மிற்படு சாயல் மெல்லிய லோயே. (குழந்தை) இது, கற்பொடு புணர்ந்த கௌவை. தலைவன் கூற்று. குறிப்பு இச் சூத்திரத்தின் இதையடுத்த பிற்பகுதி கற்பியலைச் சேர்ந்ததாகையால், ‘கிழவோன் மேன கிளவியென்ப’ என்ற அடியைச் சேர்த்து, இம்முற்பகுதியைத் தனிச்சூத்திரம் ஆக்கிக் கொள்ளப் பட்டது. (62) 4. தலைவன் தன்கடமை கூறல் 181. இடைச்சுர மருங்கில் கிழவன் கிழத்தியொடு வழக்கிய லாணையிற் கிளத்தற்கு முரியன். இ - ள் இடைச்சுர மருங்கில் - உடன்போகும் போது இடைச் சுரத்தின்கண், கிழவன் கிழத்தியொடு வழக்கியல் ஆணையில் கிளத்தற்கும் உரியன் - தலைவன் தலைவியிடம், ‘உன்னைக் கை விடுதல் எனக்கு அறமன்று’ எனத் தன் கடமை பற்றிக் கூறிக் கொண்டு செல்வான். கற்பொடு புணர்ந்த கௌவையின் போது, தலைவியின் தமர் கேட்பத் தலைவன் தலைவிக்கு இவ்வாறு கூறுவன் என்க. இடை சுரம் - சுரம் இடை - செல்லும் வழியில். வழக்கியல் ஆணை - நம்பினோரைக் கைவிடாத ஆண் கடமை. காட்டு அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வங் கட்காண் டாஅங் கலமரல் வருத்தந் தீர யாழநின் நலமென் பணைத்தோ ளெய்தின மாகலின் நிழல்காண் டோறு நெடிய வைகி மணல்காண் டோறும் வண்டல் தைஇ வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே. (நற் - 9) இதனுள், ‘வழிபடு தெய்வம் கண்கண்டால் விடுவார் இல்லாதது போல, உன்னை விடுதல் எனக் கனன்று, வருந்தா தேகுமதி’ எனக் கூறியவாறு காண்க. (63) 5. செவிலி கூற்று : 15 : 10 - 13 10. கற்பின் ஆக்கத்து நிற்றல் 11. பிரிவின் எச்சத்தும் 12. மகள் நெஞ்சு வலிப்பினும் 13. இருபாற் குடிப்பொருள் இயல்பின் கண்ணும் இ - ள் : தோழியொடு கெழீஇ உடன்போக்கு அறிந்த பின் கற்பின் ஆக்கத்து நிற்றற் கண்ணும் - தோழியால் தலைவி உடன் செல்லத் துணிந்ததை அறிந்த பின்னர்த் தலைவியின் இல்லறத்தை எண்ணி உவந்து கூறுவள். கெழீஇ - பொருந்தி. கற்பின் ஆக்கம் - தலைவி இல்லறத்தினளாதல். காட்டு 1. எம்மனை முந்துறத் தருமோ தம்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே. (அகம் - 195) இது, கற்பினாக்கத்துக் கருத்து நிகழ்ந்தது. 2. சென்றன ளம்மநின் றோழி யவனோ டென்றினி வரூஉ மென்றனள் வலந்துரை தவிர்ந்தன் றலர்ந்த வூரே. இது, செவிலி கற்பினாக்கத்து நின்றமை தோழி கூறியது. 11. பிரிவின் எச்சத்தும் - தலைவி உடன்போயது தெரிந்து பின் செல்லாத காலத்தும் கூறுவள். எச்சம் - எஞ்சுதல் , தவிர்தல். காட்டு தெறுவ தம்ம நும்மகள் விருப்பே உறுதுய ரவலமொ டுயிர்செலச் சாஅய்ப் பாழ்படு நெஞ்சம் படரடக் கலங்க நாடிடை விலங்கிய வெற்பிற் காடிறந் தனள்நம் காத லாளே. (ஐங் - 313) இது, பின்செல்லாது வருந்தியிருந்த செவிலியைக் கண்ட நற்றாய் கூறியது. இது, நற்றாய் கூற்றாய்ச் செவிலி மேலதாயிற்று. 12. மகள் நெஞ்சு வலிப்பினும் - தலைவி உடன்போக்கிற்கு உடன்பட்டதை எண்ணிக் கூறுவள். தன்மேல் அன்பு நீங்கிய துணர்ந்து செவிலி கூறுமென்க. காட்டு: பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள் இனியறிந் தேனது துனியா குதலே கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில் வேங்கையுங் காந்தளு நாறி ஆம்பல் மலரினுந் தான் றண்ணியளே. (குறுந் - 84) என வரும். ‘முயங்க வியர்த்தனென் என்றனள்’ என அன்பு நீங்கினமை கூறினாள். 13 இருபால் குடிப்பொருள் இயல்பின் கண்ணும் - தலைவன் தலைவியின் இயல்பைப் பிறர்க்குக் கூறுவள். அவர்களது காத லொருமை கூறுதலாம். இருபால் குடி - தலைவனும் தலைவியும். பொருள் - காதல். இயல்பு - தன்மை. காட்டு காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள் தாமரைக் கண்புதைத் தஞ்சித் தளர்ந்ததனால் நீணாக நறுந்தண்டார் தயங்கப்பாய்ந் தருளினால் பூணாக முறத்தழீஇப் போத்தந்தான் அவனகலம் வருமார்பு புணர்ந்தன வென்பதனா லென்றோழி அருமழை தரல்வேண்டிற் றருகிற்கும் பெருமையளே, அவனுந்தான், ஏன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத் தேனி னிறாலென வேணி யிழைத்திருக்கும் கானக நாடன் மகன்; எனவாங்கு, அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட என்னையர்க் குய்த்துரைத் தாள்யாய். (கலி -39) இது, தான் கூறிய காதலொருமையைக் கூறிச் செவிலி அறத்தொடு நின்றாளெனத் தோழி கொண்டு கூறியது. ‘அவன் அகலம் மார்பு புணர்ந்தன என்பதனால் மழை தருகிற்கும் பெருமையள், நாடன்மகன்’ எனல் காண்க. வாயா கின்றே தோழி, ஆய்கழல் செயலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே. (குறுந் - 15) இது, உடன்போய பின் செவிலி நற்றாய்க்குக் கூறியது. இன்ன வகையில் பதின்மூன்று கிளவியொடு அன்னவை பிறவும் செவிலி மேன - இத்தன்மைத்தாகிய கூறுபாட்டையுடைய பதின் மூன்று கிளியோடே அவை போல்வன பிறவும் செவிலிக்குரிய கிளவிகளாம் என்றவாறு. இவை தன் கூற்றாயும், பிறர் கொண்டு கூற்றாயும் வரும். இக் கிளவிகள் நான்கும் நற்றாய்க்கும் உரியவாம். (கள - 16) 6. நற்றாய் கூற்று 182. தன்னு மவனு மவளுஞ் சுட்டி மன்னு நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் நன்மை தீமை அச்சஞ் சார்தலென் றன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ முன்னிய காலம் மூன்றுடன் விளக்கித் தோழி தேஎத்துங் கண்டோர் பாங்கினும் போகிய திறத்து நற்றாய் புலம்பலும் ஆகிய கிளவியும் அவ்வழி யுரிய. 1. தன்னை நோதல் 10. சுரத்திடை யஞ்சல் 2. அவனை நோதல் 11. தந்தமர்க் கஞ்சல் 3. அவளை நோதல் 12. சென்று சார்தல் 4. இறந்தகால நன்மை நாடல் 13. மீண்டு வந்து சார்தல் 5. நிகழ்ந்கால நன்மை நாடல் 14. நன்னிமித்தம் பார்த்தல் 6. எதிர்கால நன்மை நாடல் 15. நற்சொற் கேட்டல் 7. இறந்த காலத் தீமையை வெறுத்தல் 16. தெய்வந் தெளிதல் 8. நிகழ்காலத் தீமையை வெறுத்தல் 17. தோழியின் துயர் கண்டு கூறல் 9. எதிர்காலத் தீமையை வெறுத்தல் 18. மீண்டு வந்தோரிடம் கூறல் போகிய திறத்து நற்றாய், தன்னும் அவனும் அவளும் சுட்டிப் புலம்பல்; காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பல்; அச்சம், சார்தல், நிமித்தம், மொழிப்பொருள், தெய்வம் என்று அன்ன பிறவும் அவற்றோடு தொகைஇப் புலம்பல்; தோழி தேஎத்தும், கண்டோர் பாங்கினும் புலம்பல்; அவ்வழி ஆகிய கிளவியும் உரிய என முடிக்க. நன்மை தீமையை முக்காலத்துடனும் தனித்தனி கூட்டுக. இ - ள்: போகிய திறத்து நற்றாய் - தலைவி உடன் போய காலத்து நற்றாய், மூவரையும் குறித்துப் புலம்பலும், அச்சம் தெய்வம் என்று அன்ன பிறவும் - என்று கூறப்பட்டவையும், அவை போன்ற பிற துறைகளும் , அவற்றோடு தொகைஇப் புலம்பல் - அவற்றோடு தொகுத்துப் புலம்பலும், தோழி தேத்தும் கண்டோர் பாங்கினும் புலம்பலும்; அவ்வழி ஆகிய கிளவியும் - தன்னை நோதல் முதலாக மீண்டு வந்தோரிடம் கூறுத லீறாகவுள்ள அவ்வுடன் போக்கிற் குரியவாய் வரும் கிளவிகளும், உரிய - நற்றாய்க்கு உடன் போக்கின் கண் உரிய என்றவாறு. சுட்டி - குறித்து. மன்னும் - பொருந்தும். முன்னிய - கருத்துற, முன்னம் - கருத்து. புலம்பல் - வருந்திக் கூறல். உடன் போக்கி வருந்துதல் நோக்கித் தாயை முற்கூறி, அவன் கொண்டு போயினமை நோக்கித் தலைவி முன்னர்த் தலைவனைக் கூறினாரென்க. 1 - 3. தன்னும் அவனும் அவளும் சுட்டிப் புலம்பல் - தான் கவனியாமல் இருந்ததற்காகத் தன்னையும், தலைவன் காணாமல் அழைத்துச் சென்றமையாலும், தலைவி அவனுடன் சென்றமை யாலும் அவ்விருவரையும் குறித்து வருந்திக் கூறுவாள். காட்டு: கண்ணுந் தோளு மார்புங் கவினுறப் பிள்ளை மொழியும் பெயர்தர வுள்ளங் கொண்ட தறியா யான்கொல் கொடியள், எங்கண் காணா தீர்ந்தொடி நெகிழ்த்துப் பிடிதழீ இப் பெயரும் பெருங்களி றேய்ப்ப அவட்கொடு சென்ற அவனும் சென்றவென் மகளின் றிறத்தென் னென்கோ. (குழந்தை) இதனுள், தன்னையும் அவனையும் அவளையும் நோதல் காண்க. 4 - 9. காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பல் - இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் கால மூன்றுடன் பொருந்திய நன்மையையும் தீமையையும் கருத்துற விளக்கி வருந்திக் கூறுவள். 4. இறந்த கால நன்மை நாடல் - தலைவி சென்ற இடம் மழைபெய்து மரங்கள் தழைத்து நிழலும் நீரும் உடையதாக வேண்டும் என விரும்புதல். 5. நிகழ்கால நன்மை நாடல் - இப்போது இடையூயறின்றிச் செல்க வென விரும்புதல். 6. எதிர்கால நன்மை நாடல் - தலைவன் என்றும் அன்போடிருக்க வேண்டும் என விரும்புதல். காட்டு: 4. மள்ளர் கொட்டின் மஞ்ஞை யாலும் உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச் சுரநனி யினிய வாகுக தில்ல அறநெறி யிதுவெனத் தெளிந்தவென் பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே. (ஐங் - 371) இது, இறந்தகால நன்மை நாடிக் கூறியது. 5. பழமர மடுத்த பறவை போல வளமிக வாற்றிடைச் செல்க மனையகத் திருக்கும் மாண்பினென் மகளே. (குழந்தை) இது, நிகழ்கால நன்மை நாடிக் கூறியது. மனையகத் திருக்கும் மாண்பின் செல்க வென்க. 6. ஆய்தொடி மகளிர் அன்பொடு வளர்க்கும் பைஞ்சிறைக் கிள்ளை போலும் படர்ந்த குன்றுகெழு நாடன் நன்றுபெரி தோம்பி உண்மகிழ் செல்வ மோங்க என்றும் வாழியர் எங்குறு மகளே. (குழந்தை) இது, எதிர்கால நன்மை நாடிக் கூறியது. 7. இறந்த காலத் தீமையை வெறுத்தல் - முன்பு தான் எச்சரிக்கையின்றி யிருந்த குற்றத்தையும், மழையின்மையால் செல்சுரம் கொடியதாயிருத்தலையும் வெறுத்துக் கூறல். 8. நிகழ்காலத் தீமையை வெறுத்தல் - இப்போது தலைவிக்கு இடையூறு நிகழுமென வெறுத்தல். 9. எதிர்காலத் தீமையை வெறுத்தல் - பின்பு அன்பின்றி நடத்துவானோவென வெறுத்தல். தலைவன் தன்மையை அறியாமையாலும், அவள் செல்லுமிடத்தை யறியாமையாலும் இவ்வாறு ஐயங் கொள்வாளென்க. முன்னர் நன்மையுண்டாகவென் றெண்ணினாள்; அதற்கு மாறாகத் தீமை யுறாதிருக்க வேண்டு மெனவும் எண்ணினாளென்க. காட்டு: ஆயா திருந்தேன் அழவெங் கானம் தீயுமிழ் செயன்மை சென்றுதேய்ந் தொழிக, பூமே னடக்கினு நோமெனுஞ் சீறடிக் கூறுசெய் கல்லதல் உறுபுதல் மூய்க, மென்மொழி தப்பி வெய்துறும் அறனில் தீயோன் முறையினிற் படுகே. (குழந்தை) இது, முக்காலத் தீமையையும் வெறுத்துக் கூறியது. 10. சுரத்திடை அஞ்சல் - செலும் வழியில் விலங்கும், ஆறலைப் போரும் முதலியன கண்டு தன்மகள் அஞ்சுவாளென அஞ்சுதல். 11. தந்தமர்க்கு அஞ்சுதல் - தேடிச் சென்றவர் தலைவற்கும் தலைவிக்கும் தீங்கு செய்வாரோவென அஞ்சுதல். காட்டு: நினைத்தொறுங் கலுழு மிடும்பை யெய்துக புலிக்கோட் பிழைத்த கவைத்தலை முதுகலை மான்பிணை யணைதர வான்குரல் விளிக்கும் வெஞ்சுர மென்மக ளுய்த்த வம்பமல் வல்வில் விடலை தாயே. (ஐங் - 373) இது, சுரத்திடை யஞ்சிக் கூறியது. கள்ளி போகிய கடுவெங் கானிடைக் கொல்லென் சும்மையர் கொடுவரி வலத்தர் அஞ்சாக் கண்ணர் ஆறாச் சினத்தர் செல்வுழித் தலைதடு மாறி என்னுற் றனர்கொல் உடன்போ யினரே. (குழந்தை) இது, தேடிச் சென்றோர்க் கஞ்சிக் கூறியது. 12. சென்று சார்தல் - தன்மகள் தலைமகனுடன் சென்று அவனூர் அடைந்தாள் என்பதைக் கேட்டு மகிழ்ந்து கூறுவள். 13. மீண்டு வந்து சார்தல் - தமர் சென்று தலைவியை மீட்டுக் கொண்டு வந்தமை கண்டு மகிழ்ந்து கூறுவாள். தலைவனுடன் அழைத்து வருவரென்க. காட்டு: செறித்த சேரிச் செம்மன் மூதூர் அறிந்த மாக்கட் டாகுக தில்ல மென்றோ ளஞ்ஞை சென்ற வாறே. (அகம் - 15) இது, ‘ஊர் அறிந்த மாக்கட்டாகுக’ என, அவனூர் சென்று சார்தலை வேண்டிக் கூறியது. கார்சூ ழிருள்வாய்க் காற்கண் ணியங்குநர்க் கூர்சூழ் மதியம் உற்றாங் கெங்கட் குவளை மலரக் குறியா அவளை ஆய மறிந்தின் புறுமே. (குழந்தை) இது, மீட்டு வந்த தலைவியைக் கண்டு மகிழ்ந்து கூறியது. 14. நிமித்தம் - பல்லி சொல்லுதல், காக்கை கரைதல் முதலியன. காட்டு: மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை, அன்புடை மரபினின் கிளையோ டாரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம்புனை கலத்தில் தருவேன் மாதோ வெஞ்சின விறல்வேல் விடலையொ டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே. (ஐங் - 391) இது, இருவரும் வரும்படி காக்கையைக் கரையெனக் கூறியது. 15. மொழிப் பொருள் - நற்சொல். நற்சொல்லாவது, ஒருவர் தற்செயலாய் ‘ஆகும்’ என்பன போலக் கூறுதல். காலை யெழுந்த கடுங்கதிரோன் மேக்கெழுபு வேலை யுவந்து விழுவதன்முன் - மாலை பெருமென்றோட் செந்துவர்வாய்ப் பேரமர்க்கட் பேதை வருமென்றாள் வாழ்க மகிழ்ந்து. (குழந்தை) இது, நற்சொல்லை வாழ்த்தியது. 16. தெய்வம் - தெய்வந்தெளிதல். அதாவது, கட்டுங் கழங்குங் கொண்டு பார்த்தல். ஆகுவ தறியும் முதுவாய் வேல, கூறுக மாதோநின் கழங்கின் றிட்பம். (அகம் - 195) என வரும். 17. தோழி தேஎத்தும் - தோழியது ஆற்றாமை கண்ட விடத்தும் கூறுவள். காட்டு: செல்லிய முயலிற் பாஅய சிறகர் வாவ லுகக்கும் மாலையாம் புலம்பப் போகிய வவட்கோ நோவேன் தேமொழித் துணையிலள் கலுழு நெஞ்சின் இணையே ருண்க ணிவட்குநோ வதுவே. (ஐங் - 378) இது, தோழியின் துயர்கண்டு கூறியது. 18. கண்டோர் பாங்கினும் - தலைவியைத் தேடிப் போய்க் காணாது மீண்டு வந்தோரைக் கண்டுழியும் வருந்திக் கூறுவள். காட்டு: இதுவென் பாவைக் கினியநற் பாவை, இதுவென் பைங்கிளிக் கெடுத்த பைங்கிளி, இதுவென் பூவைக் கினியசொற் பூவையென் றலம்வரு நோக்கின் நலம்வரு சுடர்நுதல் காண்டொறுங் காண்டொறுங் கலங்க நீங்கின ளோவென் பூங்க ணாளே. (ஐங் - 375) இது, தேடிக் காணாது வந்தாரைக் கண்டு கூறியது. பிறவாவன: 1. தெருட்டுவோர்க் குரைத்தல் 2. சிலம்புகழி நோன்பு கேட்டுவத்தல் காட்டு: ஒருமக ளுடையேன் மன்னே யவளும் செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு பெருமலை யருஞ்சுரம் நெருநற் சென்றனள். இனியே, தாங்குநின் அவல மென்றனிர் அதுமற் றியாங்கன மொல்லுமோ அறிவுடை யீரே, உள்ளி னுள்ளம் வேமே, உண்கண் மணிவாழ் பாவை நடைகற் றன்னவென் அணியியற் குறுமக ளாடிய மணியேர் நொச்சியுந் தெற்றியுங் கண்டே. (நற் - 184) இது, தெருட்டும் அயலிலாட்டியர்க் குரைத்தது. தெருட்டுதல் - தேற்றுதல், அயல்இல் ஆட்டியர் - அயல் வீட்டுப் பெண்டிர். 2. நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும் எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச் சொல்லி னெவனோ மற்றே வென்வேல் மையற விளங்கிய கழலடிப் பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே. (ஐங் - 399) இது, தலைவன் தலைவியைத் தன்மனைக்கட் கொண்டு வரவே, அவன் தாய் தலைவிக்குச் சிலம்புகழி நோன்பு செய்கின்றாள் எனக் கேட்ட நற்றாய், அங்கிருந்து வந்தார்க்குக் கூறியது. சிலம்புகழி நோன்பு - தலைவி சிலம்பை நீக்கி வேறு சிலம்பணிதல் - உடன் கொண்டு வந்த தலைமகட்குத் தலைவன் தாய் அவ்வாறு செய்தல் பண்டைய வழக்கு. (64) 7. ஆயத்தார் முதலியோர் கூற்று 183. எஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவே. இ - ள்: எஞ்சி யோர்க்கும் - கூற்றுக் குரியராகக் கூறாது நின்ற ஆயத்தார்க்கும் அயலார்க்கும், எஞ்சுதல் இல கூற்றொழிதல் இல்லை என்றவாறு. இது, இலக்கியங் கண்டு துறைகொள்ள வைத்தமை. ஆயத்தார் - விளையாடு மகளிர். அயலார் - அயல்வீட்டு மகளிர். காட்டு: 1. மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி தான்வரு மென்ப தடமென் றோளி, அஞ்சின ளஞ்சின ளொதுங்கிப் பஞ்சின் மெல்லடி பரல்வடுக் கொளவே. இது, ஆயத்தார் கூற்று. 2. துறந்ததற் கொண்டுந் துயரடச் சாஅய் அறம்புலந்து பழிக்கும் அங்க ணாட்டி, எவ்வ நெஞ்சிற் கேம மாக வந்தன ளோநின் மடமகள் வெந்திறல் வென்வேல் விடலைமுந் துறவே. (ஐங் - 393) இது, அயலார் கூற்று. ‘எஞ்சியோர்’ எனப் பொதுப்படக் கூறியதனால், உடன் போக்கில் செவிலிக்கும் தலைவிக்கும் உரிய கூற்றுக்களும் கொள்க. செவிலி கூற்று: 1. பிணைகண்டு கூறல் 2. மரங்களை வினாவல் 3. வினாவெதிர் விடுத்தல் - என்பன. காட்டு: 1. ஒண்சுடர் நல்லில் அருங்கடி நீவி தன்சிதை வறித லஞ்சி யின்சிலை யேறுரை யினத்த நாறுயிர் நவ்வி, வலைகாண் பிணையிற் போகி யீங்கோர் தொலைவில் வெள்வேல் விடலையோ டென்மகள் இச்சுரம் படர்தந் தாளே. (அகம் - 7) இது, சுரத்திடைத் தேடிச் சென்ற செவிலி, நவ்விப் பிணை கண்டு சொல்லியது. நவ்வி - பெண்மான். 2. இலைபிரிய நிலையின்றி என்னைப் போல ஏங்கிநிற்கும் பாதிரியே! குராஅ, மராவே! கலைபிரியச் சிலைதொடுமோர் காளை யோடென் கன்னிசெலக் கண்டீரோ கழறு வீரே. (அரசியலரங்கம்) இது, பாதிரி முதலியவற்றை வினாவியது. 3. குடம்புகாக் கூவற் குடிகாக்குஞ் சின்னீர் இடம்பெறா மாதிரியும் ஏறாநீ ளத்தம் உடம்புணர் காத லுவப்ப விறந்த தடம்பெருங் கண்ணிக்குத் தாயர்யான் கண்டீர். இது, நீ யாரென்று கேட்டார்க்கு யான் தலைமகள் தாயென்றது. தலைவி கூற்று: 1. நாண் நீங்கினமை கூறல் 2. அலரச்சம் நீக்கங் கூறல் 3. ஆயத்திற் குரையெனல் 4. வழிவரல் வருத்தங் கண்டு வருந்திய தோழிக்குக் கூறல் - என்பன. காட்டு: 1. அளிதே தானே நாணே நம்மொடு நனிநீ டுழந்தன்று மன்னே, யினியே வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை தீம்புனல் நெரிதர வீந்துக் காங்குத் தாங்கு மளவைத் தாங்கிக் காம நெரிதரக் கைந்நில் லாதே. (குறுந் - 149) இது, நாண் நீங்கினமை கூறியது. சிறை - வரப்பு. நீர் மிக வரப்பு டைதல் போல, காமமிக நாண் நீங்கிற்றென்பதாம். 2. சிலரும் பலரும் கடைக்க ணோக்கி மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றச் சிறுகோல் வலத்தள் அன்னை யலைப்ப அலந்தனன் வாழி தோழி . . . கடுமான் பூண்ட நெடுந்தேர் கடைஇ நடுநாள் வரூஉம் இயற்றேர்க் கொண்கனொடு செலவயர்ந் திசினால் யானை அலர்சுமந் தொழிகஇவ் வழுங்க லூரே. (நற் - 149) இது, ‘நான் உடன்போகத் துணிந்தேன். இனி அலர் தூற்றுவார் தூற்றுக’ என, அலரச்சம் நீங்கினமை கூறியது. 3. சேட்புல முன்னிய அசைநடை யந்தணிர் நும்மொன் றிரந்தனென் மொழிவ லெம்மூர்த் தாய்நயந் தெடுத்த ஆய்நலங் கவின ஆரிடை யிறந்தனள் என்மின் நேரிறை முன்கையென் ஆயத் தோர்க்கே. (ஐங் - 384) இது, யான் உடன் போகின்றமை ஆயத்திற் குரையென அந்தணர்க் குரைத்தது. இறத்தல் - கடத்தல். ஆரிடை - அரியவழி. 4. வேய்வனப் பிழந்த தோளும், வெயில்தெற ஆய்கவின் தொலைந்த நுதலும் நோக்கிப் பரியல் வாழி தோழி, பரியின் எல்லையி லிடும்பை தரூஉம் நல்வரை நாடனொடு வந்த வாறே. (ஐங் - 392) இது, உடன் சென்று மீண்டுவந்த தலைவி, வழிவரல் வருத்தங் கண்டு வருந்திய தோழிக்குக் கூறியது. ‘நாடனொடு வந்த வாறே’ என்பதால், தலைவனும் மீண்டு வந்தவாறு பெற்றாம். (65) 8. பிரிவிலக்கணச் சிறப்பு 184. ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்தும் தாமே செல்லுந் தாயரு முளரே. இ - ள்: ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும் - காவலையுடைய பேரூர்த் தெருவின் கண்ணும் காட்டின் கண்ணும், தாமே செல்லும் தாயரும் உளர் - தந்தையும் தன்னையரும் அறியா முன்னர்த் தலைவியை மீட்டற்குத் தாமே செல்லும் தாயரும் உளர் என்றவாறு. ஏமம் - காவல். சேரி - தெரு. சேரிக்கு நற்றாய் சேறலும், சுரத்திற்குச் செவிலித்தாய் சேறலும் புலனெறி வழக்கிற்குச் சிறந்தனவென் றுணர்க. அதாவது, உடன்போன தலைவியை நற்றாய் ஊர்த் தெருவெங்கும் தேடுவன்; ஊரைக் கடந்து செல்லாள். செவிலி ஊரைக் கடந்து சுரத்திடைச் சென்று தேடுவள் என்பதாம். காட்டு: வெம்மலை யருஞ்சுரம் நம்மிவ ணொழிய இருநில முயிர்க்கும் இன்னாக் கானம் நெருநற் போகிய பெருமடத் தகுவி ஐதக லல்குல் தழையணிக் கூட்டும் கூழை நொச்சிக் கீழ தென்மகள் செம்புடைச் சிறுவிரல் வரித்த வண்டலுங் காண்டிரோ கண்ணுடை யீரே. (அகம் - 275) இதனுள் ‘வண்டலைக் கண்டிரோ’ எனக் கேட்டமையின், ஆயத்தாரை யன்றிச் சேரியாரைக் கேட்டதாயிற்று. வண்டல் - விளையாட்டு. இங்கே விளையாடுமிடம். செவிலி சுரத்திடைச் சென்று தேடினமை முன்னர்க் காட்டினாம். (66) 9. இதுவுமது 185. அயலோ ராயினும் அகற்சி மேற்றே. இ - ள்: முற் கூறிய சேரியினும் சுரத்தினு மன்றித் தம் மனைக்கு அயலே பிரிந்தாராயினும் அதுவும் பிரிவெனவே படும் என்றவாறு. அகறல் - இருப்பிடத்தை விட்டுச் செல்லல், பிரிதல். எனவே, நற்றாய் மனையின்கண் இருந்து தலைவி பிரிவினைக் கூறுவனவும், சேரியிற் கூறுவனவும் பிரிந்தாரைத் தேடிப் பின் சென்றதே யாகும் இதனானே, மனையயற்கண் பரத்தையிற் பிரிவும் பாலை யென்ப துய்த்துணர்க. (67) 10. கண்டோர் கூற்று 186. பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவி னாகிய குற்றங் காட்டலும், ஊரது சார்வுஞ் செல்லுந் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும் புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமோ டழிந்தெதிர் கூறி மீட்பினும், ஆங்கத் தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும் சேய்நிலைக் ககன்றோர் செலவினும் வரவினும் கண்டோர் மொழிதல் கண்ட தென்ப. 1. பொழுதுவழு வுரைத்தல் 6. தாய்நிலை கண்டு தடுத்தல் 2. ஆற்றுவழு வுரைத்தல் 7. விடுத்தல் 3. ஊரது சார்வு கூறல் 8. சேய்நிலைக் ககன்றோர் 4. செல்லுந் தேயங் கூறல் செலவு 5. அழிந்தெதிர் கூறி மீட்டல் 9. வரவு இ - ள்: 1, 2. பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டலும் - மாலைக் காலமும் வழியின் அருமையும் அச்சம் உண்டாகும்படி தோன்றுதலால், அவற்றால் மேல் உண்டாகக் கூடிய தீங்குகள் இவையென்று காதலர்க்கு எடுத்துக் கூறுவர். அதாவது, பொழுது சென்றது. இருள் வந்தது. வழி மிக அரிய வழி யாகையால் செல்லுதல் தீதெனக் கூறுவர். அரிய வழி - கொடிய விலங்குகளும் ஆறலைகள் வரும் உள்ள வழி. காட்டு: எம்மூ ரல்ல தூர்நணித் தில்லை, வெம்முரட் செல்வன் கதிரு மூழ்த்தன்; சேந்தனை சென்மோ பூந்தார் மார்ப! இளையள் மெல்லியள் மடந்தை அரிய சேய பெருங்கான் யாறே. (சிற்றெட்டகம்) இதனுள், ‘கதிரும் ஊழ்த்தனன்’ எனவே, பொழுது சென்றமையும், ‘அரிய சேய பெருங்கான் யாறே’ எனவே, ஆற்ற தருமையும் பற்றிக் குற்றங் காட்டியவாறு காண்க. 3, 4. ஊரது சார்வும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும் - தம்மூரினதுஅணிமையையும், செல்லவிருக்கும் ஊரினது தொலைவையும் பற்றி அன்போடு கூறித் தம்மூரில் தங்கிச் செல்லும்படி வேண்டுவர். ஆர்வ நெஞ்சம் - அருள் சேர்ந்த உள்ளம், தேயம்: தே + அம் - தேயம். யகரவுடம்படு மெய். தமிழ்ச் சொல். தே + அத்து - தேயத்து; தேம் - ஒப்பு நோக்குக. காட்டு: நல்லோள் மெல்லடி நடையு மாற்றாள், பல்கதிர்ச் செல்வன் கதிரு மூழ்த்தனன். அணித்தாத் தோன்றுவ தெம்மூர் மணித்தார் மார்ப சேந்தனை சென்மே. (பொருளியல்) இதனுள், ‘எம்மூர் அணித்து’ என்றதனால், ஊரது சார்வும், அதனால் செல்லுந் தேயம் சேய்த் தெனவுங் கூறியது காண்க. ‘எம்மூரல்ல தூரணித் தில்லை’ என்னும் சிற்றெட்டகச் செய்யுளும் இதற்குக் காட்டாகும். 5. புணர்ந்தோர் பாங்கில் புணர்ந்த நெஞ்சமொடு அழிந்து எதிர்கூறி மீட்பினும் - காதலர்களிடத்து அன்புடைய நெஞ்சினராகி, மனமிரங்கி, ‘இனி இதற்கப்பால் போதற்கரிது; எம்மூர்க்கு வாருங்கள்’ என உரைத்துச் செல்லாது மீட்டலும். அழிந்து - மனமிரங்கி. எதிர்கூறி - போகக் கூடாதென மறுத்துக்கூறி. ‘அழிந்தெதிர் கூறி மீட்பினும்’ என்பதே சரியான பாடமாகும். காட்டு: “ இதுநும் மூரே யாவருங் கேளிர் பொதுவறு சிறப்பின் வதுவையுங் காண்டும் ஈன்றோ ரெய்தாச் செய்தவம் யாம்பெற் றனமால் மீண்டனை சென்மே.” இது, அழிந்தெதிர் கூறி மீட்டது. 6. ஆங்கு அத்தாய் நிலைகண்டு தடுப்பினும் - அவ்விடத்துத் தேடிச் சென்ற அச்செவிலியின் நிலையைக் கண்டு அவளை அதற்குமேற் செல்லவிடாது தடுப்பர். அதாவது, ‘அன்னாய்! நீ வருந்த வேண்டா; அவரது அன்பின் நிலை சிறந்தது; அது முறையே; நீ அவர்கள் சேர்க்கையைக் குலைக்க வேண்டா’ எனக் கூறித் தடுத்தல். காட்டு: சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செயும் தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே. (கலி - 9) இதனுள், ‘முத்து நீரில் பிறக்கினும் அணிபவரைச் சேர்ந்து பெருமை யடைவதன்றி நீர்க்கென் செய்யும’ அது போல, நின் மகளும் அவனை யடைந்தின்புறுவதைத் தடுக்காதே எனத் தடுத்தவாறு காண்க. 7. விடுப்பினும் - அல்லது சிலர், நாங்கள் அவர்களை இன்ன இடத்துக் கண்டோம்; போய்ப் பார்த்து அவளை அவனுக்கே கொடுங்கள் எனக் கூறிப் போக விடுப்பர். காட்டு: நெருப்பவிர் கனலி யுருப்புச்சினந் தணியக் கருங்கால் யாத்த விரிநிழ லசைஇச் சிறுவரை யிறப்பிற் காண்டி, செறிதளிர்ப் பொன்னேர் மேனி மடந்தையொடு வென்வே லண்ணல் முன்னிய சுரனே! (ஐங் - 388) என வரும். சிறுவரை இறப்பின் - கொஞ்சதூரம் சென்றால். 8, 9. சேய்நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும் - தொலைவிலுள்ள ஊர்க்குச் செல்லும் அவ்விருவரும் போகும் போதும், செவிலியாலோ தமராலோ மீட்கப்பட்டு வரும் போதும், அல்லது மணஞ்செய்து கொண்டு பின்னொரு நாள் வரும் போதும், கண்டோர் மொழிதல் கண்டது என்ப இடைச் சுரத்துக் கண்டோர் கூறுதல் உலக வழக்கினும் காணப் பட்டதென்று கூறுவர் புலவர் என்றவாறு. இடைச் சுரத்து - சுரத்திடை - வழியில். இன்றும் இது வழக்கில் உண்டு. காட்டு: 8. பிணைய லந்தழை தைஇத் துணையிலள் விழவுக்களம் பொலிய வந்துநின் றனளே, எழுமினோ வெழுமினங் கொழுநர்க் காக்க ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையன தொருவேற் கோடி யாங்குநம் பன்மைய தெவனோவிவள் நன்மைதலைப் படினே. (நற் - 170) இது, செலவின்கட் கூறியது. இடைச்சுரத்து ஆறலைப் போர் வழிமறிக்க எழவே, அவர் பெண்டிர் மறுத்துக் கூறியது. துணை - தோழி. 9. இலைநெடுங் கோட்டுக் கலைதொடர்ந் ததன்பிணை செல்வது போலப் புல்லென் மாலை கறைவேற் காளை கைதழீஇச் சென்ற அசைமென் னடைச்சிற் றடியுங் கண்ணிறை கொள்ளக் காட்சிதந் தனளே. (குழந்தை) இது, வரவின்கட் கூறியது. (68) 11. கண்டோர் கூற்றுக்குச் சிறப்புவிதி 187. ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு மொழிந்தாங் குரியர் முன்னத்தி னெடுத்தே. இ - ள்: ஒழிந்தோர் கிளவி - கண்டோர் கூற்றும், கிழவன் கிழத்தியொடு மொழிந்தாங்கு முன்னத்தின் எடுத்து உரியர் - தலைவன் தலைவிக்கு வழக்கியலாணையாற் கூறினாற் போலத் (கள - 63) தேடிச் சென்றார்க்குக் குறிப்பாற் கூறுதற்கும் உரியர் என்றவாறு. மொழிந்தாங்கு முன்னத்தின் எடுத்து மொழிதற்கும் உரியர் என்க. ‘மொழிதற்கும்’ என்பது இசையெச்சம். உம்மை விரிக்க. முன்னம் - குறிப்பு. இங்கு முறை குறித்தது. காட்டு பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கவைதா மென்செயும் நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே. (கலி - 9) என, வழக்கியலாணையிற் கூறினமை காண்க. வழக்கிய லாணை - நீதி. (69) 12. இளையோர் கூற்று 1. ஆற்றது பண்புரைத்தல் 6. ஆற்றிடைக் கண்ட பொருள் கூறல் 7. இறைச்சி கூறல் இது, பொதுவியல் 36 வது சூத்திரம். அங்கு எடுத்துக் காட்டும் பொருளும் காண்க. 13. நிகழ்ந்தது நினைத்தல் 188. நிகழ்ந்தது நினைத்தற் கேதுவு மாகும். இ - ள்: முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பின்னர் நினைத்துப் பேசுதற்குக் காரணங்களாகும் என்றவாறு. ஏது - காரணம். என்றது, முன்னர்த் தலைவன்கண் நிகழ்ந்ததோர் நிகழ்ச்சி பின்னர்த் தலைவி நினைந்து பேசுதற்கும், முன்னர்த் தலைவிகண் நிகழ்ந்ததோர் நிகழ்ச்சி பின்னர்த் தலைவன் நினைந்து பேசுதற்கும் காரணங்களாகும் என்பதாம். நிகழ்ந்தது - நடந்த செயல். நிகழ்ந்தது நினைத்தல் - முன் ஒருவர் செய்த செயலைப் பின் எண்ணிப் பார்த்து அவர் தன்மை யறிதலாம். முன் அவரவர் செய்த செயல்களே பின் நினைத்துப் பார்த்து, அவரவர் உள்ளக் கருத்தறிதற்குக் காரணமாதலறிக. காட்டு: 1. நுண்ணெழில் மாமைச் சுணங்கணி யாகந்தம் கண்ணொடு தொடுத்தென நோக்கியு மமையாரென் ஒண்ணுதல் நீவுவர் காதலர், மற்றவர் எண்ணுதல் எவன்கொல் அறியே னென்னும். (கலி - 4) இதனுள், தலைவன் முன் தனக்குச் செய்த மிகுதியான தலையளி வஞ்சமென்று தலைவி எண்ணிப் பிரிவாரோ என நினைத்தற்குக் காரணமாவது அறிக. இதனானே, பின்னர்த் தலைவன் செய்திகளாய்த் தலைவி கூறுவனவற்றுக் கெல்லாம் இதுவே இலக்கணமாக அமைத்துக் கொள்க. 2. பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல் விரல்நுதி சிதைக்கும் நிலைநிலை யதர பரல்முரம் பாகிய பயமில் கானம் இறப்ப வெண்ணுதி ராயின் அறத்தா றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி அன்ன வாக எண்ணுநள் போல முன்னங் காட்டி முகத்தி னுரையா மணியுரு விழந்த அணியழி தோற்றங் கண்டே கடிந்தனஞ் செலவே, ஒண்டொடி உழைய மாகவும் இனைவோள் பிழையலள் மாதோ பிரிதுநா மெனினே. (அகம் - 5) இது, உடன்போய் மணந்த தலைவிபால் நிகழ்ந்தவை நினைந்து பின்னர்த் தலைவன் செலவழுங்கியது. செலவழுங்கல் - செலவைத் தவிர்தல். தொன்றுபடு கிளவி - இயற்கைப் புணர்ச்சிக் காலத்துச் சொன்ன சொல். தொன்றுபடு கிளவி எண்ணுநள் போல முன்னங் காட்டி முகத்தினுரைத்தது - இயற்கைப் புணர்ச்சிக் காலத்து நிகழ்ந்ததைக் குறிப்பால் கூறியது. அதனால், தலைவன் செல்லுதலைத் தவிர்ந்தான். (70) 14. நிகழ்ந்தது கூறல் 189. நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே. இ - ள்: அங்ஙனம் நிகழ்ந்தவற்றைப் பேசிக் கொண்டிருப்பதும் பிரிவொழுக்கமே யாகும் என்றவாறு. திணை ஒழுக்கம். தலைவன்பால் நிகழ்ந்தவற்றைத் தலைவியும் தோழியும் பேசுவரென்க. இது, முன்னைய நூற்பாவுக்குப் புறனடையாகும். அதாவது, முன்னர்ச் சூத்திரத்தில் (கள - 70), ஒருவர்பால் முன்னர் நிகழ்ந்த செயல்கள் பின்னர் ஒருவர் நன்றாகவும் தீதாகவும் எண்ணுதற்குக் காரணங்கள் ஆகுமென்றார். அங்ஙனம் எண்ணிப் பேசிக் கொண்டிருப்பதும் பிரிவொழுக்கமே (பாலைத்திணை) யாம் எனப் புறனடை தந்தாரென்க. பெரும்பாலும் தலைவியும் தோழியுமே தலைவன் நடக்கை யால் ஐயங்கொள் வராகையால், அவர்களே தலைவன்பால் நிகழ்ந்த வற்றை நினைந்து பேசிக்கொண்டி ருப்பரென்க. அவ்வாறு பேசிக் கொண்டு வீட்டிலிருப்பதும் உள்ளம் பிரிவையே நாடுதலால் அஃதும் பிரிவேயாமென்பது கருத்து. ‘நிகழ்ந்தது’ எனப் பொதுபடக் கூறியதனால், செயலே யன்றிச் சொல்லியதைப் பின்னர்க் கூறுதலும் பிரிவேயாமென்க. காட்டு: அரும்பொருள் வேட்கையி னுள்ளந் துரப்பப் பிரிந்துறை சூழாதி யைய, விரும்பிநீ என்றோ ளெழுதிய தொய்யிலும் யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கும் நினைத்துக்காண், சான்றோர் முகப்பப் பொருளுங் கிடவா தொழிந்தவ ரெல்லாரு முண்ணாதுஞ் செல்லார் இளமையுங் காமமு மோராங்குப் பெற்றார் வளமை விழைதக்க துண்டோ வுளநாள் ஒரோஒகை தம்முட் டழீஇ யொரோஒகை ஒன்றன்கூ றாடை யுடுப்பவரே யாயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை யரிதரோ சென்ற வளமை தரற்கு. (கலி - 18) இதனுள், ‘உளநாள்’ என்றது, 1. நாளது சின்மை; ‘அரிதரோ சென்ற இளமை தரற்கு’ என்றது, 2. இளமையதருமை. ‘உள்ளந் துரப்ப’ என்றது, 3. தாளாண் பக்கம்; ‘சான்றோர் முகப்பப் பொருளுங் கிடவாது’ என்றது, 4. தகுதியதமைதி; ‘ஒரோஒகை தம்முட் டழீஇ ஒரோஒகை ஓன்றன் கூறாடை உடுப்பவரே யாயினும்’ என்றது, 5. இன்மையதிளிவு; ‘வளமை விழைதக்க துண்டோ என்றது, 6. உடைமையது உயர்ச்சி; ‘பிரிந்துறை சூழாதி ஐய’ என்றது, 7. அன்பினதகலம்; ‘தொய்யிலும். . .சுணங்கு நினைத்துக்காண்’ என்றது, 8. அகற்சியதருமை. கற்பியல் - 37 உரை பார்க்க. இவ்வெட்டையும் முன்னொருகால் தலைவன் கூறக் கேட்டுணர்ந்த தோழி பின்னொருகால் கூறியது. (71) மூன்றாவது களவியல் குழந்தையுரை முற்றிற்று. * * * நான்காவது கற்பியல் 1. கற்பின் பொதுவிலக்கணம் 190. கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே. இவ்வியல், கற்பினது இலக்கணங் கூறுகின்றமையான் கற்பியல் என்னும் பெயர்த்தாயிற்று. கற்பு - கற்பொழுக்கம். இயல் - இலக்கணம். களவு, கற்பு என்னும் அகவொழுக்கம் இரண்டனுள், களவிலக்கணங் கூறிக் கற்பிலக்கணங் கூறுகின்றமையான் இது முன்னியலோடு இயைபுடைத் தாயிற்று. இம்முதல் நூற்பா, கற்பொழுக்கத்தின் பொதுவிலக்கணங் கூறுகின்றது. இதன் பொருள்: கற்பு எனப்படுவது - கற்பென்று சிறப்பித்துக் கூறப்படுவது, கரணமொடு புணர - மணவினையொடு பொருந்த, கொளற்கு உரி மரபில் கிழவன் - கொள்ளுதற்கு உரிய முறைமை யினையுடைய தலைவன், கிழத்தியை - தலைவியை, கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப - கொடுத்தற்குரிய முறைமை யினையுடைய பெற்றோர் முதலானோர் கொடுக்க, கொள்வதுவே - கொள்ளுத லாகும் என்றவாறு. கரணம் - மணவினை, திருமணம். இல்லறத்திற்குக் காரணமான தென்றவாறு. கரணம் - காரணம். (தொல்காப்பியர் காலத் தமிழர் - ‘கற்பும் கரணமும்’ என்பது பார்க்க.) கொள்ளு முறைமையை யுடைய தலைவன், அம்முறையை யுடைய தலைவியைக் கொடுக்கு முறையையுடைய பெற்றோர் கொடுப்பக் கொள்வது - கரணம் எனப்படும். அவ்வாறு கொண்டு இல்லறம் நடத்துதல் - கற்பு எனப்படும். இதனையே ‘கரணமொடு புணரக் கொடுப்பக் கொள்வது கற்பு’ என்றார். கணவன் மனைவி இருவரையும் ஒன்றுபடப் பிணித்து நிற்கும் நெஞ்சுகலந்த அன்பின் பயனே கற்பு ஆகும். அவ்வன்பு காதலாகும். மரபாவது - களவொழுக்க மொழுகிய தலைவனும் தலைவியும் வரைவுடன் படுதலும், அவ்வரைவைப் பெற்றோரும் உடன்பட்டுத் தலைவியைத் தலைவற்குக் கொடுத்தலுமாம். கொடைக்குரியோர் - பெற்றோரும், பெற்றோரில்வழி அண்ணனும், அண்ணனில்வழி அக்குடிக்குரியருமாம். நனிமிகு பழங்காலத்தே யாதொரு சீரும் (சடங்கு) இன்றி, இயற்கையை ஒட்டியே மணவினை நடந்துவந்தது. அது, வரைவுடன் பட்ட காதலர்களின் பெற்றோரும் வரைவுடன் படுதலே யாகும். அதாவது, மணஞ் செய்துகொள்ள முடிவு செய்த காதலர்களின் பெற்றோரும் அதற்குடன்படுதல். பெண்ணின் பெற்றோர் உடன்பாடு கொள்ளுதலே மரபு. தொல்காப்பியர் காலத்திற்குப் பின் சில சடங்குகள் உண்டாக்கப்பட்டன. அச்சடங்குகளுடன் கூடிய மண முறையே 86, 136 அகநானூற்றுப் பாடல்களிற் குறிக்கப்படுவது. அது வருமாறு. மணமகன் பெற்றோர் சுற்றஞ்சூழ மணமகள் வீடு சென்று விருந்துண்டு, மணவினை நாளைக் குறித்துக்கொண்டு மீள்வர். பின் சுற்றத்தார்க்கும் நட்பினர்க்கும் அழைப்பு விடுவர். குறித்த நாள் வந்ததும் பெண் வீட்டார் வாயிலிற் பந்தலிட்டு, மணல் பரப்பி, மாலை நாற்றி, விளக்கேற்றி வைப்பர். நட்பும் சுற்றமும் வந்து அத்திருமணப் பந்தலில் அமர்வர். பல்லிய முழங்க இல்லுறை தெய்வ வழிபாடு செய்வர். பின்னர் மூன்று அல்லது, ஐந்து மங்கல மகளிர் சென்று புதுக்குடங்களில் நீர் கொண்டு வந்து புதுத்தாழியில் ஊற்றி, அந்நீருள் பூவையும் நெல்லையும் இடுவர். மணமகளை மணையிலிருத்தி, மக்களைப் பெற்ற நான்கு மகளிர் மணமகளைச் சுற்றிநின்று, மூதாட்டியர் தாழியிலுள்ள நீரை மொண்டு தரத்தர வாங்கி, ‘ஏ நங்காய்! கற்பினின்றும் வழுவாது, இல்லற நிகழ்ச்சிக்கு வேண்டுவன உதவி, நின் கணவனைப் பேணும் துணைவி யாவாயாக’ என வாழ்த்தி நீராட்டுவர். இது வதுவை மணம் எனப்படும். வதுவை மணம் - நீராட்டுதல். பின் வாகை இலையும் அறுகம் புல்லும் சேர்த்து வெண்ணூலினால் கையில் காப்புக்கட்டி மணையி லிருத்துவர். பெண்ணின் பெற்றோர் வந்து, ‘குழந்தாய்! உன் விருப்பப் படியே, நீ விரும்பினவனுக்கே கொடுக்கிறோம். இணைபிரியாது இன்புற்று வாழ்வாயாக’ என வாழ்த்திக் கொடுப்பர். யாவரும் வாழ்த்துவர். இதுவே கடைச்சங்க கால மணமுறை. தை முதல் ஆவணி வரை, நில வொளியுள்ள இராக்காலத்தே, மணவினை நடத்தினர். சிலப்பதிகார காலத்தே, மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை (சிலப் - 1) (1) என்றினைய சடங்குகள் ஏற்பட்டன. 1. இதுவு மது 191. கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே புணர்ந்துடன் போகிய காலை யான. இ - ள்: புணர்ந்து உடன் போகிய காலை யான - தலைவி தலைவனுடன் அவனூர்க்குச் சென்ற காலத்தாயின், கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே - முன் (கற் - 1) ‘கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள்வது’ என்றார்; உடன்போய காலத்து அங்கு கொடுப்போர் இன்மையான், அவரில்லாமலும் மணவினை நடப்பதுண்டு சிறுபான்மை என்றவாறு. இது, புணர்ந்துடன்போய காலத்துப் பெற்றோர் முதலிய கொடுப்போ ரின்றி எவ்வாறு மணவினை நடக்கும் என்னும் ஐய மறுத்தது. ஆகவே, எய்தியதன்மேற் சிறப்பு விதியாம். ஆங்கு மணமகன் பெற்றோர் உடன்பட்டுத் தலைமகளை ஏற்றுக் கொள்வதே மணவினையாகும். வெளிப்பட வரைதல், படாமை வரைதல் (கள - 58) என, மணத்தல் இருவகைப் படுதலின், 1. களவு வெளிப்படாமுன் - தலைவி அறத்தொடு நில்லா முன் - தலைவன் தலைவியைத் தன்னூர்க்கு அழைத்துக் கொண்டு சென்று மணந்து கொள்ளுதல். 2. களவு அலராக - ஊரார் அறிய - தலைவியை உடன் கொண்டுபோய் மணந்து கொள்ளுதல், 3. அவ்வாறு உடன் கொண்டு போம்போது, செவிலி அல்லது தலைவியின் சுற்றத்தார் சென்று, இருவரையும் அழைத்துவந்து மணஞ் செய்தல், 4. உடன்போன தலைவியின் பெற்றோர் தலைவனூரிற் சென்று மண முடித்தல், 5. களவு வெளிப்படப் பெற்றோர் உடன்பட்டு மண முடித்தல் - எனக் களவின் வழிவந்த மணம் ஐந்து வகைப்படும். 6. இவ்வாறன்றி, களவொழுக்க மொழுகாது மணஞ் செய்து கொள்ளுதலும் உண்டு. இது சிறுபான்மை. இது களவின் வழிவாரா மணம் எனப்படும். இவ் வறுவகை மணத்துள், முன்னைய ஐவகை மணமும் செய்துகொண்டு இல்லறம் நடத்துதல் களவின் வழிவந்த கற்பு எனப்படும். ஆறாவது மணஞ் செய்து கொண்டு இல்லறம் நடத்துதல் - களவின் வழிவாராக் கற்பு எனப்படும். (2) 2. மண வேற்றுமை 192. மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமு முண்டே. இது, உழுதுண்ணும் வேளாளரை ஏனையோரி னின்றும் பிரித்து வேறுபடுத்தியவாறு கூறுகின்றது. இ - ள்: மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் - அரசர், வணிகர், உழுவித்துண்ணும் வேளாளர் ஆகிய மூவர்க்கும் ஒன்றாகச் செய்யப்படும் மணவினை யானது, கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே - ஏனை உழுதுண்ணும் வேளாளர்க்கும் முன்னைய மூவரோடு ஒன்றாக நடந்த காலமும் உண்டு என்றவாறு. மேல், கீழ் என்பன, முன் பின் என்ற அளவில் நின்றன. கரணம் - மணவினை. உழவொழிந்த மற்றைத் தொழிலெல்லாம் உழவுக்கும் வாழ்க்கைக்கும் பயன்படுவனவே யாகையால், மற்றைத் தொழிலாள ரெல்லாம் வேளாளரெனவே படுவர். பண்டு அரசர், வணிகர், உழுவித்துண்போர், உழுதுண்போர் ஆகிய நால்வகையினரும் ஒன்றாகவே கொண்டு கொடுத்து வாழ்ந்து வந்தனர். பின்னர்ச் செல்வாக்கான முன்னைய மூவரும் ஒன்றுபட்டு உழுதுண் போரை விலக்கி வைத்தனர். நாளடைவில் உழுதுண்போரை மற்றவர் தம்மினின்றும் பிரித்துக் கொடுத்தல் கோடலின்றி நீக்கி வைத்ததையே இச் சூத்திரம் குறிப்பதாகும். அந்தணர், அரசர் முதலிய ஏனைய வகுப்புத் துறவிகளென்பதை நினைவு கூர்க. இதன் விளக்கத்தை, எனது ‘கொங்கு நாடு’ என்னும் நூலின் ‘பழங்கொங்கு மக்கள்’ என்பதிற் காண்க. (3) 3. கட்டுப்பாடு 193. பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரண மென்ப. இ - ள்: பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் - சிலரிடைப் பொய்யும் வழுவும் தோன்றிய பிற்காலத்தே, ஐயர் கரணம் யாத்தனர் என்ப - குலப்பெரியார்கள் மணவினையை ஏற்படுத்தினர் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. பொய்யாவது - ஒருவன் ஒருத்தியோடு களவொழுக்கம் ஒழுகி விட்டு இல்லை என்பது. வழுவாவது - அவ்வாறு சொல்லுதலே யன்றி, ஒருத்தியோடு களவொழுக்கம் ஒழுகிக் களவு வெளிப்பட்டுச் சில நாள் இல்வாழ்க்கை நடத்திவிட்டு அவளைக் கைவிட்டு விடுதல். வழு - தவறு. அதாவது, பண்டைகாலத்தில் ஒத்த பருவம் உருவம் முதலியனவுள்ள ஒருவனும் ஒருத்தியும் தாமே எதிர்ப்பட்டுக் காதல் கொண்டு களவொழுக்க மொழுகிக் காதல் முதிர்ந்த பின் பலரறிய வெளிப்படையாக வாழ்க்கை நடத்தி வந்தனர். இதுவே இயற்கை வாழ்வியலாகும். அவ்வாறு நடந்து வருகையில் ஒரு சிலர், களவொழுக்க மொழுகிக் களவு வெளிப்பட்டபின் - பலரறிந்தபின் - எக்காரணத்தாலோ ‘நான் இவளைக் காதலிக்க வில்லை’ எனப் பொய் பேசியும்; ஒரு சிலர் பலரறிய வாழ்க்கை நடத்தி வந்த சில நாட்களில் அவளைக் கைவிட்டும் வந்தனர். அது கண்ட குலப் பெரியார்கள், ஒரு சிலரிடை நடைபெற்று வரும் இக் கெட்ட பழக்கம் பலரிடைப் பரவக்கூடுமெனவும், அதுவே வழக்கமாகி விடுமெனவும் அஞ்சி, இனிக் களவொழுக்க மொழுகிக் களவு வெளிப்பட்டபின் இல்லறம் நடத்தத் தொடங்குவோர், பலர் முன்னையில், பெற்றோர் உடன்பட்டுக் கொடுக்கப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்தினர். இதையே ஆசிரியர், ‘கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வது’ (கற் - 1) என்றார். இம் மணவினையில் எவ்வகைச் சடங்கும் இல்லை. மணமகள் பெற்றோர் உடன்பட வெளிப்படையாகக் குடும்பம் நடத்துதலே யாகும். ‘மறை வெளிப் படுதலே கற்பு’ (கற் - 9) என்பதால், பண்டு களவு வெளிப்பட்டபின் காதலர் இருவரும் கூடி இல்லறம் நடத்தி வந்தனர் என்பதும், சிலரிடைப் பொய்யும் வழுவும் தோன்றவே ஐயர் கரணம் யாத்தனர் என்பதும் (கற் - 4), அக்கரணம் பலரறியப் பெண்ணின் பெற்றோர் கொடுப்பக் கொள்வதென்பதும் (கற் - 1), எல்லார்க்கும் ஒப்ப நடந்து வந்த கரணம் பின்னர்ச் சிலர்க்கு நீக்கப்பட்ட தென்பதும் (கற் - 3) 1, 3, 4 நூற்பாக்களாற் கூறின ரென்க. (4) 1. தலைவன் கூற்று (மலிவு, புலவு, ஊடல், உணர்வு, பிரிவு) 194. கரணத்தி னமைந்து முடிந்த காலை நெஞ்சுதளை யவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும், எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்தும், அஞ்ச வந்த உரிமைக் கண்ணும், நன்னெறிப் படருந் தொன்னலப் பொருளினும், பெற்ற தேஎத்துப் பெருமையி னிலைஇக் குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினும், நாமக் காலத் துண்டெனத் தோழி ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும், அல்லல் தீர ஆர்வமொ டளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணும், சொல்லென ஏனது சுவைப்பினு நீகை தொட்டது வானோ ரமுதம் புரையுமா லெமக்கென அடிசிலும் பூவுந் தொடுதற் கண்ணும், அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்தும் அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும் ஒழுக்கங் காட்டிய குறிப்பினும், ஒழுக்கத்துக் களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி அலமர லுள்ளமொ டளவிய விடத்தும், அந்தரத் தெழுதிய எழுத்தின் மான வந்த குற்றம் வழிகெட ஒழுகலும், அழியல் அஞ்சலென் றாயிரு பொருளினும், தானவட் பிழைத்த பருவத் தானும், நோன்மையும் பெருமையும் மெய்கொள வருளிய பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் தன்னி னாகிய தகுதிக் கண்ணும், புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும், பயங்கெழு துணையணை புல்லிய புல்லா துயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப் புல்கென முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய விரவினும், உறலருங் குண்மையி னூடல் மிகுத்தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும், பிரிவி னெச்சத்துப் புலம்பிய விருவரைப் பிரிவி னீக்கிய பகுதிக் கண்ணும், நின்றுநனி பிரிவின் அஞ்சிய பையுளும் சென்றுகை யிகந்துபெயர்த் துள்ளிய வழியும், காமத்தின் வலியுங் கைவிடி னச்சமும், தானவட் பிழைத்த நிலையின் கண்ணும், உடன்சேறல் செய்கையோ டன்னவை பிறவும், மடம்பட வந்த தோழிக் கண்ணும், வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும், மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும், அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும், பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும், காமக் கிழத்தி மனையோள் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரும், சென்ற தேஎத் துழப்பு நனி விளக்கி இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும், அருந்தொழில் முடித்த செம்மற் காலை விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும், மாலை யேந்திய பெண்டிரும் மக்களும் கேளி ரொழுக்கத்துப் புகற்சிக் கண்ணும், ஏனை வாயில் எதிரொடு, தொகைஇப் பண்ணமை பகுதிமுப் பதினொரு மூன்றும் எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன. 5 இக் கூற்றுக்கள் முப்பத்து மூன்றனுள், 1 - 16 மலிவுக்கும், 17 - 22 புலவி, ஊடல், உணர்வுகளுக்கும், 23 - 33 பிரிவுக்கும் உரியவையாகும். 2. தலைவி கூற்று 195. அவனறி வாற்ற வறியு மாகலின் ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும் உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் பெருமையிற் பிரியா அன்பின் கண்ணும் கிழவனை மகடூஉப் புலம்புபெரி தாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் இன்பமு மிடும்பையு மாகிய விடத்தும் கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ நளியி னீக்கிய இளிவரு நிலையும் புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற் ககன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி இகன்ற நெஞ்சந் தலைப்பெயர்த் தருக்கி எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும் தங்கிய வொழுக்கத்துக் கிழவனை வணங்கி எங்கையர்க் குரையென இரத்தற் கண்ணும் செல்லாக் காலை செல்கென விடுத்தலும் காமக் கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு விளையாட் டிறுதிக் கண்ணும் சிறந்த செய்கை யவ்வழித் தோன்றி அறம்புரி யுள்ளமொடு தன்வர வறியாமைப் புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானும் தந்தைய ரொப்பர் மக்களென் பதனால் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கினும் கொடியோர் கொடுமை சுடுமென வொடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியி னீங்கிய தகுதிக் கண்ணும் கொடுமை யொழுக்கங் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காத லெங்கையர் காணின் நன்றென மாதர் சான்ற வகையின் கண்ணும் தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை யுள்ளிய வழியும் தன்வயிற் சிறைப்பினு மவன்வயிற் பிரிப்பினும் இன்னாத் தொல்சூ ளெடுத்தற் கண்ணும் காமக் கிழத்தியர் நலம்பா ராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் கொடுமை யொழுக்கந் தோழிக்குரியவை வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக் காய்தலு முவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக் கிழவோன் செப்பல் கிழவ தென்ப. 6 இக் கூற்றுகள் பத்தொன்பதனுள். 1 - 6 மலிவுக்கும், 7 - 19 புலவி, ஊடல், உணர்வுகளுக்கும் உரியவையாகும். 3. தோழி கூற்று 196. பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த தெறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணும் அற்றமழி வுரைப்பினும் அற்ற மில்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும் சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் அடங்கா வொழுக்கத் தவன்வயி னழிந்தோளை அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும் பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி இழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும் வணங்கியல் மொழியான் வணங்கற் கண்ணும் புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும் சிறந்த புதல்வனை நேராது புலம்பினும் மாணலந் தாவென வகுத்தற் கண்ணும் பேணா வொழுக்கம் நாணிய பொருளினும் சூணயத் திறத்தாற் சோர்வுகண் டழியினும் பெரியோ ரொழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை யில்லாப் பிழைப்பினும் அவ்வயின் உறுதகை யில்லாப் புலவியுள் மூழ்கிய கிழவோள்பால் நின்று கெடுத்தற் கண்ணும் உணர்ப்புவயின் வாரா ஊடலுற் றோள்வயின் உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும் அருமைக் காலத்துப் பெருமை காட்டிய எண்மைக் காலத் திரக்கத் தானும் பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும் நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும் பிரியுங் காலை யெதிர்நின்று சாற்றிய மரபுடை யெதிரும் உளப்படப் பிறவும் வகைபட வந்த கிளவி யெல்லாம் தோழிக் குரிய வென்மனார் புலவர். 7 இக் கூற்றுக்கள் பத்தொன்பதனுள், 1 - 4 மலிவுக்கும், 5 - 18 புலவி, ஊடல், உணர்வுகளுக்கும், 19 பிரிவுக்கும் உரியவை யாகும். 4. காமக்கிழத்தியர் கூற்று 197. புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும், இல்லோர் செய்வினை யிகழ்ச்சிக் கண்ணும், பல்வேறு புதல்வர்க் கண்டுநனி யுவப்பினும், மறையின் வந்த மனையோள் செய்வினை பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும், காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையின் தாய்போற் றழீஇக் கழறியம் மனைவியைக் காய்வின் றவன்வயின் பொருத்தற் கண்ணும், இன்னகைப் புதல்வனைத் தழீஇயிழை யணிந்து பின்னர் வந்த வாயிற் கண்ணும், மனையோ ளொத்தலின் தன்னோ ரன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும், எண்ணிய பண்ணையென் றிவற்றொடு பிறவும் கண்ணிய காமக் கிழத்தியர் மேன. 8 இக்கூற்றுக்கள் எட்டும் புலவி முதலிய மூன்றற்கும் உரியவை யாகும். குறிப்பு: இந்நான்கு சூத்திரத்தும் பலவிடங்களிற் கூறும் தலைவன் முதலியோர் கூற்றுக்களைத் தொகுத்துக் கூறுவதால், அங்கங்கே எடுத்தாளுதற் பொருட்டும், எளிதில் விளங்குதற் பொருட்டும் இங்கு ஒரு சேர எழுதப்பட்டன. 2. கற்பின் வகை 198. மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும் இவைமுத லாகிய இயல்நெறி பிழையாது மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே. 1. மலிவு 4. உணர்வு 2. புலவி 5. பிரிவு 3. ஊடல் என்பன கற்பின் வகையாகும். இ - ள்: மறை வெளிப்படுதலும் - களவொழுக்கம் வெளிப் படுதலும், தமரின் பெறுதலும் - சுற்றத்தார் கொடுப்பக் கொள்ளுதலும், இவை முதலாகிய இயல் நெறி பிழையாது - என்பவற்றை முதலில் உடையதாய் மணவினை முடிந்தபின், மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் பிரிவொடு புணர்ந்தது கற்பு எனப்படுமே - மலிவு முதலிய ஐந்துடன் கூடியது கற்பு எனப்படும் என்றவாறு. உடன் போய் மணந்து கொள்ளுதலும் கொள்க. இயல் நெறி - இயங்கும் வழி; மணவினை. களவு வெளிப் படுதலும், தமர்கொடுப்பக் கொள்ளுதலும் இயங்கும் நெறியென்க. அது மணவினை யாயிற்று. பிழையாது - தவறாது. இயல் நெறி தவறாது முடிந்தபின் என்பதாம். அதாவது, களவு வெளிப் பட்டுத் தமர் கொடுப்பக் கொள்ளும் மணவினை முடிந்தபின் மலிவு முதலிய ஐந்தும் நிகழ்வது கற்பு (இல்லற வொழுக்கம்) எனப்படும் என்பது. மலிவு முதலிய ஐந்தும் வாழ்க்கைத் தொடக்கத்திலிருந்து முடிவுவரை முறையாக நடத்தலின்றி, மாறி மாறி நடைபெறு மென்க. 1. மலிவு - இல்லொழுக்கம், இடையறாத புணர்ச்சி முதலியவற்றால் மகிழ்தல். மலிவு - மகிழ்வு. 2. புலவி - புணர்ச்சியாலுண்டாகிய மகிழ்ச்சி இடையறாது புணரப் பெறின் குறைவு படுமன்றோ? அது குறைவு படாமற் காக்கும் சிறிய மனவேறுபாடு. புணர்ச்சி இடையறவு படச் செய்வது. புலத்தல் - மனம் வேறுபடுதல். 3. ஊடல் - உள்ளத்து நிகழ்ந்த அவ்வேறு பாட்டைக் குறிப்பாலன்றி வெளிப்படையாகக் காட்டல். புலவியின் முதிர்ச்சி - ஊடலாகும். 4. உணர்வு - அங்ஙனம் ஊடல் நிகழ்ந்தவழி, அவ்வூடலுக்குக் காரணமான பொருள் இன்மையை அறிவித்தல் - உணர்வு எனப்படும். இது தலைவனால் உணர்த்தப்படுதலின் உணர்த்தல் எனவும்படும். தலைவனால் உணர்த்த உணர்ந்து தலைவி ஊடல் தணிதல் உணர்வு என்றுமாம். ஊடல் மிகின் துனி எனப்படும். துனித்தல் - வெறுத்தல். 5. பிரிவு - தலைவன் தலைவியையப் பிரிதல். அது. பரத்தையிற் பிரிவும், ஏனைப் பிரிவுகளுமாம். (9) 1. மலிவு 1. தலைவன் கூற்று: 5: 1 - 16 1. கரணத்தின் அமைந்து முடிந்த காலை நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும் 2. எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்தும் 3. அஞ்ச வந்த உரிமைக் கண்ணும் 4. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருளினும் 5. பெற்ற தேஎத்துப் பெருமையின் நிறீஇக் குற்றம் சான்ற பொருள் எடுத்து உரைப்பினும் 6. நாமக் காலத்து உண்டெனத் தோழி ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் 7. அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணும் 8. சொல்லென, ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோர் அமுதம் புரையுமால் எமக்னெ சந்தேகம் அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும் 9. அந்தணர் திறத்தும், சான்றோர் தேத்தும் அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும் ஒழுக்கங் காட்டிய குறிப்பினும் 10. ஒழுக்கத்து, களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும் 11. அந்தரத்து எழுதிய எழுத்தின் மான வந்த குற்றம் வகைகெட ஒழுகலும் 12. அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளினும் 13. தானவட் பிழைத்த பருவத்தானும் 14. நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளிய பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் தன்னின் ஆகிய தகுதிக் கண்ணும் 15. புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி ஐயர் பாங்கினும், அமரர்ச் சுட்டியும் செய்பெரும் சிறப்பொடு சேர்தற் கண்ணும் 16. பயங்கெழு துணையணை புல்லிய புல்லாது உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப் புல்கென முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய இரவினும் இ - ள்: 1. அமைந்து கரணத்தின் முடிந்த காலை நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும் - களவொழுக்கம் ஒழுகி முதிர்ந்து மணவினை முடிந்தபின், மனக்குறை தீரக் கூடிக் கலந்த மகிழ்ச்சியைக் கூறுவன். புணர்ச்சிக்கண் கூறுவனென்க. அக்களவொழுக்கம் மணவினையான் முற்றுப் பெற்றதென்றபடி. இது கற்பின் தொடக்கம். காட்டு: விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும் இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே பூப்போ லுண்கண் பொன்போல் மேனி மாண்வரி யல்குல் குறமகள் தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே. (குறுந் - 101) இது, நெஞ்சு தளை யவிழ்ந்த புணர்ச்சி. 2. எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்தும் - பின்னர், இல்லற வாழ்க்கை யின்பம் இடையறாது நுகரும் பொழுதும் கூறுவன். இறந்து வருதல் - மிகுதல், அளவைக் கடத்தல். அளவு கடந்த இன்பம். காட்டு: அறிதோ றறியாமை கண்டற்றாற் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. (குறள்) இதனுள், பின்னறியுந்தோறும் முன்னறிந்தது அறியாமை யாயிற்றென, இடையறாது மிக்கு வரும் இல்லறலின்பம் எனல் காண்க. 3. அஞ்ச வந்த உரிமைக் கண்ணும் - பிற பெண்டிர் கண்டு அஞ்சும்படி தலைவி இல்லறம் நடத்து மிடத்தும் கூறுவன். உரிமை - தலைவியின் தலைமை. இக்காரணம் பற்றியே மனைவிக்கு உரிமை என்னும் பெயர் வழங்குகிறது. மனைவிக்குரியவள் என்பதாம் அஞ்ச வந்த உரிமையாவன: வாழ்க்கைப் பெருக்கமும், கொடையும் மனையறமுமாம். காட்டு: உள்ளத் துணர்வுடையா னோதிய நூலற்றால் வள்ளமை பூண்டான்கண் ஒண்பொருள் - தெள்ளிய ஆண்மகன் கையில் அயில்வா ளனைத்தரோ நாணுடையாள் பெற்ற நலம். (நாலடி) நலம் என்றது அம்மூன்றனையும், வாழ்க்கை - உணர்வுடை யான் ஓதிய நூல் போல விரியாநின்றது; கொடைநலம் - வள்ளன்மை பூண்டான் பொருளனைத்து; மனையறம் - ஆண் மகன் கையில் அயில்வாள் அனைத்து எனக் காண்க. நலம் - அழகு. ‘கல்விக் கழகு கசடற மொழிதல்’ என்பதிற் போல, இங்கு பெண்மை நலங் குறித்தது. 4. நல்நெறிப் படரும் தொல் நலப் பொருளினும் - தலைவி நல்ல வழியிற் செல்லும் தொன்னலம் மிக்க காலத்தும். நல்நெறியாவன: உள்ள காலத்து வருவாயறிந்து செலவு செய்தலும், வருவாய் மிகச் சுருங்கிய காலத்தும் மனஞ்சோராது இல்லறத்தை இனிது நடத்திச் செல்லுதலுமாம். தொன்னலப் பொருள் என்றது, இது தலைவிக்குத் தானே அமைவது என்றவாறு. காட்டு: குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதும் கடல்நீ ரறவுண்ணும் கேளிர் வரினும் கடனீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி மாதர் மனைமாட்சி யாள். (நாலடி) எனக் காண்க. 5. பெற்ற தேத்துப் பெருமையின் நிலைஇக் குற்றம் சான்ற பொருள் எடுத்து உரைப்பினும் - தலைவி அவ்வாறு உரிமை எய்திய விடத்து அவளை இல்லறத் தலைமையாகிய பெருமையின்கண் நிறுத்தி, முன் தீதென்ற களவொழுக்கம் இல்லறத்திற் கேதுவாயிற்றென அதன் சிறப்புக் கூறுமிடத்தும் தலைவன் கூறுவன். தலைவி இல்லறத் தலைமை தோன்ற நடந்து கொண்ட விடத்து அவளை அவ்வாறே தலைமை தாங்கும்படி பெருமைப்படுத்தி என்பதாம். இங்ஙனம் சிறந்த இல்லறத்திற்கு முன்னர் ஒழுகிய களவொழுக்கம் ஏதுவாயிற்றென அதன் சிறப்புக் கூறி இல்லறத்தை வியத்தலாம். அலர் தூற்றலும் மறைந்தொழுகலும் பற்றிக் களவு குற்றம் எனப்பட்டது. சான்ற பொருள் - சிறந்த பொருள். தேத்து - இடத்து. காட்டு: நாலாறு மாறாய் நனிசிறிதாய் எப்புறனும் மேலாறு மேலுறை சோரினும் - மேலாய வல்லளாய் வாழுமூர் தற்புகழு மாண்கற்பின் இல்லா ளமைந்ததே யில். (நாலடி) இதனுள், மனைவியின் சிறப்புக்கூறி, அச்சிறப்பிற் கேது களவொழுக்கமே யென உட்கொண்டு கூறியவாறு காண்க. 6. தோழி நாமக் காலத்து ஏமுறு கடவுள் உண்டென ஏத்திய மருங்கினும் - தோழி, களவுக் காலத்து அஞ்சத் தக்க இடையூறு வராமல் காத்த தெய்வம் உண்டெனக் கூற, அத்தெய்வத்திற்குப் பரவுக்கடன் செய்யப் பணிக்குமிடத்தும் கூறுவன். நாமம் - அச்சம். களவு அச்சத்துடன் நிகழ்வதால், அக்காலத்தை, ‘நாமக் காலம்’ என்றார். ஏமம் - காவல். காட்டு: அதிரிசை யருவிய பெருவரைத் தொடுத்த பஃறேன் இறாஅல் அல்குநர்க் குதவும் நுந்தை நன்னாட்டு வெந்திறல் முருகென நின்னோய்க் கியற்றிய வெறிநின் றோழி என்வயின் நோக்கலிற் போலும் பன்னாள் வருந்திய வருத்தந் தீரநின் திருந்திழைப் பணைத்தோள் புணரவந் ததுவே. இதனுள், ‘நின்னோய்க்கு இயற்றிய வெறி, நின் தோழி என்வயின் நோக்கலின் நின்தோள் புணர வந்தது’ எனக் கற்புக் காலத்துப் பரவுக் கடன் கொடுக்கும் போது தலைவன் முன்னிகழ்ந்ததைச் சுட்டிக் கூறியவாறு காண்க. நின்தோழி என்வயின் நோக்கலின் என்றது - நீ யெனக்குப் பயன்பட வேண்டுமெனப் பரவுதலின் என்பது. 7. அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணும் - ஏதேனும் துன்பம் வந்தவிடத்து அது தீரத் தலைவிக்கு அறிவுரை கூறுமிடத்தும். துன்பத்திற்குத் தலைவி வருந்திய போது அவ்வருத்தம் தீர வென்க. ஆர்வமொடு அளைஇச் சொல்லுதல் -அன்பு கலந்த சொல்லால் சொல்லுதல். ஆர்வம் - அன்பு. அளைஇ - கலந்து. காட்டு: எற்குடைய வெல்லாம் இனிமொழி, எக்காலும் நிற்குடைய வாகி நிலைபெறும் - இற்குடைய நீயே வருந்தின் நிகழ்வதென் சேய்காணத் தாயே வருந்திற் றடை. (குழந்தை) இது, அல்லல் தீரச் சொல்லியது. 8. சொல் என ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு என அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும் - சோறு என்று நஞ்சை உண்ணினும் நீ கையால் தொட்டது தேவர் அமிழ்தம் போலும் எனக்கு அதன் காரணம் என் என்று தலைவன் கேட்கத் தலைவி சோற்றினையும் பூவினையும் தொடும் போதும் தலைவன் கூறுவன். தலைவி சோறு போடும் போது தலைவன் அவ்வாறு கேட்டுக் கொண்டு உண்பானென்பதாம். சொல் -நெல். ஆகுபெயரான் சோற்றை யுணர்த்திற்று. காட்டு: 1. நல்லியல் மேம்பட்ட - அந் நங்கை யுவக்கவச் செங்கதிர் வேலான் மெல்லியல் தொட்டதுநீ - எனக்கு வேம்புங் கரும்பென ஓம்பியே உண்பான். (அரசியலரங்கம்) எனக் காண்க. 2. வேம்பின் பைங்காயென் றோழி தரினே தேம்பூங் கட்டி யென்றனிர். (குறுந் - 196) இது, தலைவன் கூற்றினைத் தோழி கொண்டு கூறியது. அன்புடையார் இடும் உணவு சுவை பயத்தல் இயற்கை. ‘காய்ச்சு கிறவள் காய்ச்சினால் கழுதை மூத்திரமும் சுவைக்கும்’ என்பது பழமொழி. 9. அந்தணர் திறத்தும் சான்றோர் தேத்தும் அந்தமில் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும் ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் - துறவிகளாகிய அந்தணரிடத்திலும், பெரியோர்களிடத்திலும், மிக்க சிறப்பினையுடைய பெற்றோர் சுற்ற முதலியோர்களிடத்திலும் நடந்து கொள்ள வேண்டிய முறையைக் கூறுமிடத்தும். சான்றோர் - ஊர்ப் பெரியோர்கள்; துறவாதவர். பிறர்பிறர் - மாமன், மாமி, பாட்டன் முதலியோர். துறவிகள், ஊர்ப்பெரியோர்கள், மாமன் மாமி முதலியவர் களிடம் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமெனக் கூறுதல். தலைவிக்கு இவர்கள் புதியவர்களாகையால் அன்னார் இயல்பு கூறவேண்டியதாயிற்று. காட்டு: வெள்ளங் கடப்பார் மிதக்கும் புணைதழீஇக் கொள்ளுங் குறிப்பினிற் கொம்பனையாய் - உள்ளபடி வாழ்வாங்கு வாழ்ந்த வழிவாழ்வார் தந்துணையே வாழ்வாங்கு வாழ வழி. (குழந்தை) இது, அந்தணர் திறத்தும் சான்றோர் தேத்தும் ஒழுக்கங் காட்டியது. வாழ்வாங்கு வாழ்ந்தார் - அந்தணர். வழி வாழ்வார் - சான்றோர். 2. என்னையீங் கீன்று நினக்களித்த என்பெற்றோர் நின்னையீன் றோர்க்கு நிகர்காணாய் - அன்னவே ஈன்றோர் தமைப்பேணி வாழ்தலே யெக்காலும் வான்றோய் குடிக்குரியார் மாண்பு. (குழந்தை) இது, பிறர்பிறர் திறத்து ஒழுக்கங் காட்டியது. 10. களவு ஒழுக்கத்தினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும் - களவொழுக்கத்தில் கூட்டத்திற் கேற்பட்ட இடையூறுகளை எண்ணி, தலைவி மனச் சுழற்சியோடு கேட்ட போதும், அதாவது, அன்று தங்களைப் பார்க்கவும், தொடவுங் கூடப் பெருநாண் அடைந்தேனே அதன் காரணம் என்னெனத் தலைவி கேட்கத் தலைவன் அதன் காரணங் கூறுதலாம். புலம்பு - தனிமை. தனிமையை எண்ணி. அருமை - கூட்டத்திற் கரியதாகிய நாணை புணர்த்திற்று. அலமரல் - சுழற்சி. அளவிய - கலந்த. அலமரலொடு கலந்த பேச்சென முடிக்க. காட்டு: குளிர்மிகு நடுநாள் குடத்துறு பனிநீர் தொட்டாங் கன்றே தோன்றினை யின்றே தொடத்தொட வின்பந் துய்த்தாங் காயினை. (குழந்தை) இதனுள், பனிநீர் இரவில் தொட உடல் நடுக்குற்றுத் தொடத் தொடக் குளிரகன்று இன்பந் தருவது போல், முதலில் அவ்வாறிருந்து பழகப்பழக நாணகன்ற தெனக் காரணங் கூறினமை காண்க. 11. வந்த குற்றம் அந்தரத்து எழுதிய எழுத்தின் மான வழி கெட ஒழுகலும் - களவுக் காலத்துப் பகலினும் மறைவினும் கூடியொழுகிய துன்பம் வானத் தெழுதிய எழுத்துப் போல நீங்கத் தகுந்த நேரத்தில் கூடி வாழ்தலைக் கூறுவன். மான - உவமஉருபு. குற்றம் - துன்பம். களவுக் காலத்து ஒழுகி வந்த பகற் புணர்ச்சி முதலியன அறவே நீக்குதற்கு, ‘அந்தரத் தெழுதிய எழுத்தின் மான’ என்றார். முன் பகலினும் அச்சத்தோடும் விரைவினும் கூடியது போலன்றித் தக்க நேரத்தில் அமைதியாகக் கூடுதலை வியந்து கூறுவன். அந்தரத் தெழுதிய எழுத்துச் சிறிதுமின்றி யழிதல் போல, வந்தக் குற்றம் கெட என்றவாறு. காட்டு: பகற்புணரோம் பகற்றுயிலோம். (தேரையார்) உற்றநிலா முற்றமின்றி ஒதுக்கிடமுந் தேடோம். (பழம்பாடல்) அச்சமு மமைதியு மகன்று நிலவ நாள்மல ருண்ணுங் கோள்ஞிமி றென்ன நந்தக வமைந்தவிந் நயப்புச் சிந்தையி னியல்போல் சிறந்து வாழியவே. (குழந்தை) 12. அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளினும் - தனக்கு இடர் வந்தபோது தலைவி வருந்தாமலும், தலைவற்கு இடர் வந்தபோது அவள் அஞ்சாமலும் இருக்க வேண்டுமெனத் தலைவன் கூறுவன். வருந்தாதே, அஞ்சாதே எனக் கூறுதலாம். தனக்கு என்றது - தலைவியை. காட்டு: யாயும் ஞாயும் யாரா கியரோ, எந்தையு நுந்தையும் எம்முறைக் கேளிர், யானும் நீயும் எவ்வழி யறிதும், செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. (குறுந் - 40) இதனுள், இயற்கையாய் நம் உறவு ஏற்பட்டமை போல, இயற்கையாய் ஏற்படுந் துன்பத்திற்கு வருந்தலும் அஞ்சலும் கூடாதெனத் தெளிவித்தவாறு காண்க. 13. தான் அவள் பிழைத்த பருவத்தானும் - தலைவன் தலைவிக்குத் தவறு செய்த காலத்தும் கூறுவன். இது, முன்னர்க் களவிற் குறிபிழைத்ததைத் தலைவி கேட்க, அது நான் செய்த தவறே என்று தலைவன் கூறலாம். காட்டு: நீ தவ றில்லை, நெய்தலம் படப்பை பொருங்கால் புன்னைக் கருங்கா யூழ்க்க யானே பிழைத்தனன் யாழ மானே ருண்கண் மாஅ யோயே. (குழந்தை) இது, யானே பிழைத்தே னென்றது. 14. தன்னின் ஆகிய நோன்மையும் பெருமையும் மெய்கொள - தலைவனாலுண்டாகிய பொறையும் (பாரம்), பெருமையு முடைய கருப்பத்தைத் தலைவி தன் வயிற்றகத்தே கொள்ளவும், பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி அருளிய தகுதிக் கண்ணும் - அறிவரைக் கலந்து, தலைவன் தன் தகுதிக்கேற்பச் சுற்றத்தார், நண்பர் முதலாயினோர்க்கு விருந்து செய்தல், இரவலர்க்குக் கொடுத்தல் முதலியன செய்யும் போதுங் கூறுவன். பன்னல் சான்ற - ஆராய்ந்தறிந்தமைந்த. பன்னல் - ஆராய்கை. நோன்மை, பெருமை - பண்பாகு பெயர்; கருப்பத்தை உணர்த்திற்று. இது, தலைவி கருப்பமுறவே தலைவன் மகிழ்ந்து சிறப்புச் செய்தலாம். காட்டு: அன்றாங்கு கண்டமைந் தாங்கே யதன்பயன் இன்றீங்கு கண்டமைந் தின்புற்றான் - நின்றாங்கு தண்ணார மார்பன் தனிச்சிறப்புச் செய்தாங்கே கண்ணாரக் காதற் கனி. (குழந்தை) காதற்கனி கண்டு சிறப்புச்செய்து இன்புற்றான் என்க. காதற்கனி - கரு. 15. புதல்வன் பயந்த புனிறுசேர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி - குழந்தை பிறந்தபின் தலைவி எண்ணெய் நீராடுதலை விரும்பிய விடத்தும், நோக்கியும் என்க. ஐயர் பாங்கினும் - பெரியோர்களிடத்தும், அமரர் சுட்டியும் - தேவர்கள் புதல்வனைக் காத்தலைக் கருதியும், செய்பெரும் சிறப்பொடு சேர்தற்கண்ணும் - பெருஞ்சிறப்புக்கள் செய்யி மிடத்தும் கூறுவன். புனிறு - ஈன்றணிமை. நெய்யணி மயக்கம் - எண்ணெய் நீராடல். புரிதல் - விரும்புதல். பெரியோர் - பாட்டன் பாட்டியர். அவர் குழந்தைக்குப் பெயரிடும் போது கூறுதல். சிறப்பு - கொடைமுதலியன. தெய்வம் - இல்லுறை தெய்வம். தலைவி எண்ணெயாடும் போதும், குழந்தைக்குப் பெயரிடும் போதும் தேவர் காக்கவெனக் கூறுவன்; சிறப்புச் செய்யும் போதும் கூறுவன் என்க. காட்டு: வாராய் பாண, நகுகம் நேரிழை கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக் குதவி நெய்யோ டிமைக்கும் ஐயவித் திரள்காழ் விளங்குநர் விளங்கக் கிடந்தோட் குறுகிப் புதல்வனை யீன்றெனப் பெயர்பெயர்த் தவ்வரித் திதலை யல்குல் முதுபெண் டாகித் துஞ்சுதி யோமெல் லஞ்சி லோதியென மன்மா ணகட்டிற் குவளை யொற்றி உள்ளினெ னுள்ளுறை யெற்கண்டு மெல்ல முகைநாண் முறுவ லொன்றித் லைவன் கூறியது. 16. பயங்கெழு துணையணை புல்லிய புல்லாது உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகி - தலைவி தலைவனைக் கூடப் பெறாத ஆற்றாமையால், தழுவற்பயன் பொருந்திய தலையணையைத் தழுவித் தலைவனைத் தழுவாது வருந்திக்கிடந்த தலைவியை அணுகி, புல்கு என முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய இரவினும் - தான் கூடுதலைக் கருதின நிறையழிந்த காலத்தே அவளது மெல்லிய சிறிய அடியைத் தொட்டு இரக்கும் பொழுதும் கூறுவன். உயங்குதல் - வருந்துதல். புல்குதல் - கூடுதல். தலைவனைத் தழுவப் பெறாமையால், தழுவல் விருப்பந் தீரத் தலையணையைத் தழுவிக்கிடந்தவள், தலைவன் வர ஊடித் தலைவனைத் தழுவாது இருக்கவே. தலைவன் தன்னைத் தழுவும் படி தலைவியின் சீறடி தொட்டு இரக்கும் என்பதாம். பிள்ளை பெற்றதால் ஊடல் நீடிக்குமென அஞ்சி நிறையழிந்தா னென்க. கூடுதலைக் கருதி மனமுடைந்து சீறடி தொட் டிராந்தானென்க. இது, அடுத்துவரும் புலவி ஊடலுக்கு நிமித்தம். காட்டு: என்னைநீ செய்யினும் உணர்ந்தீவா ரில்வழி முன்னடிப் பணிந்தெம்மை உணர்த்திய வருதிமன் நிறைதொடி நல்லவர் துணங்கையுட் டலைக்கொள்ளக் கரையிடைக் கிழிந்தநின் காழகம்வந் துரையாக்கால். (கலி - 73) எனச் சீறடி புல்லி இரந்ததனைத் தலைவி கூறியவாறு காண்க. 2. தலைவி கூற்று: 6: 1 - 6 1. ஏற்றற் கண்ணும் 2. நிறுத்தற் கண்ணும் 3. உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில் பெருமையில் திரியா அன்பின் கண்ணும் 4. காமத்து மிகுதியும் 5. இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும் 6. கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ நளியின் நீக்கிய இளிவரு நிலையும். இ - ள்: 1, 2. அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் ஏற்றல் கண்ணும் - தலைவனது அறிவு நலனைத் தலைவி நன்றாக அறிவாளாகலின் தலைவன் தன்னைச் சிறப்பிக்குமிடத்தும்; சிறப்பித்தல் - இல்லறத் தலைமை கொடுத்தல். நிறுத்தல் கண்ணும் - தலைவியை நல்லொழுக்கத்தில் நிறுத்து மிடத்தும், அல்லது தலைவன் தன்னை நல்லொழுக்கத்தில் நிறுத்துமிடத்தும் என்றுமாம். ‘நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானும்’ என்பதறிக. ஓருரை: தலைவன் தன்னை அன்புடன் ஏற்குமிடத்தும், அங்ஙனங் கொண்ட அன்பை நிலைநிறுத்து மிடத்தும் என்றுமாம். இவ்வீரிடத்தும் தலைவி கூறுவள். காட்டு: 1. நின்ற சொல்லின் நீடுதோ றினியர் என்று மென்றோட் பிரிபறி யலரே, தாமரைத் தண்டா தூதி மீமிசைச்ண சாந்திற் றொடுத்த தீந்தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை, நீரின் றமையா வுலகம் போலத் தம்மின் றமையா நந்நயந் தருளி நறுநுதல் பசத்தல் அஞ்சிச் சிறுமை யுறுபவோ செய்பறி யலரே. (நற் - 1) இதனுள், ‘தாமரைத் தாதையும் ஊதிச் சந்தனத் தாதையும் ஊதிவைத்த தேன்போலப் புரைய கேண்மை’ என்றதனால், ஏற்றற்கண் தலைவி கூறினாள். 2. நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே, சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே (குறுந் - 3) இது, நிறுத்தற்கண் கூறியது. தலைவன் அன்பு சிறப்பிக் கப்படுதல் காண்க. 3. உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில் பெருமையில் திரியா அன்பின் கண்ணும் - தனக்கு இல்லற வொழுக்கத்தைப் பகிர்ந்து கொடுத்த தலைவனிடத்துப் பெண்டன்மையினின்று மாறுபடாது அவற்கு அன்பு செய்யுமிடத்தும் தலைவி கூறுவள். காட்டு: நிலத்தினும் பெரிதே. (குறுந் - 3) என்னும் பாட்டே கொள்க. 4. கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின்அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் - பொருள் முதலியவற்றிற்குப் பிரியுந் தலைவனைத் தலைவி பிரிந்திருக்குங் காலம் பெரிதாகலின் பிரிந்தபோது அப்பிரிவாற்றாமையைத் தோழிக்குக் கூறுமிடத்தும். வேட்கை மிகுதியைத் தோழிக்குக் கூறுமென்க. புலம்பு - தனிமை இங்கே பிரிவை யுணர்த்திற்று அலமரல் பெருகிய காமத்து மிகுதி - மனவருத்தமிக்க வேட்கை மிகுதி. காட்டு: காமந் தாங்குமதி யென்போர் தாமஃ தறியலர் கொல்லோ அனைமது கையர்கொல்! யாமெங் காதலர்க் காணே மாயின் செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல இல்லா குதுமே. (குறுந் - 290) இது, தேற்றுந் தோழிக்குக் காமத்து மிகுதி கூறியது. 5. இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும் - பிரிந்த தலைவனை எதிர்ப்பட்டபோது இன்பமும், பிரிந்தபோது துன்பமும் உண்டான விடத்தும் தலைவி கூறுவள். காட்டு: நளியிருஞ் சிலம்பின் நன்மலை நாடன் புணரிற் புணருமா ரெழிலே, பிரியின் மணிமிடை பொன்னின் மாமை சாயவென் அணிநலஞ் சிதைக்குமார் பசலை, அதனால், அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்தே தண்கமழ் நறுந்தார் விறலவன் மார்பே. (நற் - 304) எனவரும். இவ்விரண்டும் (4, 5) பிரிவை எதிர்நோக்கிய கூற்றென்க. 6. கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண் உறீஇ நளியின் நீக்கிய இளிவரு நிலையும் - புதல்வன் பிறத்தலான் உளதாகிய விருப்பத்தையுடைய நெய்யணிகாண விரும்பிய தலைவனை, தனது நெஞ்சு புண்ணாகும் படி செய்து பிரிந்தானென்று இகழும் போதும் கூறுவள் (கற் - 6. 15 பார்க்க). நெய்யணி - எண்ணெயாடுதல். தனது நெஞ்சு - தலைவியின் நெஞ்சு. கயந்தலை -யானைக் கன்று; உவமையாகுபெயர். புதல்வன் பிறந்து எண்ணெயாடுதலைக் காணவிரும்பிய தலைவனை இகழுமென்க. நளி - செறிவு. நளியின் நீக்கிய இளிவருநிலை - தலைவன் தன்னைச் செறிதலினின்று நீக்கிய இளிவருநிலை யென்க. இது புலவிக்கு நிமித்தம். காட்டு: கரும்புநடு பாத்தியில் கலித்த ஆம்பல் சுரும்புபசி களையும் பெரும்புன லூர, புதல்வனை யீன்றவெம் மேனி முயங்கல் அதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே. (ஐங் - 65) இது, புதல்வற் பயந்த காலத்துப் பிரிவு பற்றிக் கூறியது. இங்கு, தலைமகளிடை, “தெய்வம் அஞ்சல்” (மெய் - 24) முதலிய பதினொரு மெய்ப்பாடுகளும் நிகழும். 3. தோழி கூற்று 7: 1 - 4 1. பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த தெறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணும் 2. அற்றம் அழிவு உரைப்பினும் 3. அற்றம் இல்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும் 4. சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் இ - ள்: 1. பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த தெறற்கு அரும் மரபின் சிறப்பின் கண்ணும் - பெறுதற்கரி தென நினைத்த பெரிய பொருளாகிய மணவினை முடிந்த பின்னர்த் தலைவன் தன்னைச் சிறப்பித்துக் கூறுமிடத்தும் தோழி மறுத்துக் கூறுவள். தெறுதல் - நீக்குதல். மரபு - முறை. தோழியால் அம் மணவினை கைகூடினதால் அவளைப் பாராட்டுதல் தலைவனுக்கு நீக்குதற் கரிய முறைமையாயிற்று. அதாவது, மணமுடித்து வைத்த தற்காகத் தோழியைத் தலைவன் பாராட்டத் தோழி, ‘அது எனது கடமை: தாங்கள் என்னைச் சிறப்பித்தல் முறை யன்று’ என மறுத்துக் கூறுவளென்க. சிறப்பாவது - ‘இவளை நீ ஆற்று வித்தலின் எம்முயிர் தாங்கி மணமுடிக்கப் பெற்றோம்’ என்பது. அதற்குத் தோழி, நீரும் அவளும் ஆற்றியதன்றி யல்லது நான் செய்த தொன்றுமின்றென மறுத்துக் கூறுதலாம். காட்டு: அயிரை பரந்த அந்தண் பழனத் தேந்தெழில் மலரத் தூம்புடைத் திரள்தாள் ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள் இடைமார்பு கிடந்தும் நடுங்க லானீர் தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக் கரிய மாகிய காலைப் பெரிய நோன்றனிர் நோகோ யானே. (குறுங் - 178) இதனுள், ‘மார்பிடைக்கிடந்தும் - நடுங்குகின்ற நீர், நீர் காண யாம் அரியமாகிய காலத்து எங்ஙனம் ஆற்றினீர் என யான் நோவா நின்றேன். இங்ஙனம் நீர் தலைவியை அடையப் பெறாமல் அருமை செய்ததால் வெறுத்தற் குரியயேனாகிய என்னைச் சிறப்பித்தல் ஆகாது’ என, மறுத்துக் கூறியவாறு காண்க. தோழி: உடன்போய தலைவி எனின், உடன்போக்கிய பின் தோழி அங்கு வருவாள். இவள் தலைவியின் மகளுக்குச் செவிலி யாவாள். இவள் மகள் அவள் மகளுக்குத் தோழியாவாள். தலைவி தோழியின் கொடிவழி இத்தகையதாகும். 2. அற்றம் அழிவு உரைப்பினும் - களவுக் காலத்துப் பட்ட வருத்தம் நீங்கினமை கூறினும். அற்றம் - தக்க காலம். அது. பகற்குயினும் இரவுக்குறியினும் நேரம் பார்த்து வருந்திய வருத்தம். காட்டு: எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை வீயினிது கமழுந் துறைவனை நீயினிது முயங்குமதி காத லோயே. (ஐங் - 148) அற்றம் பாராது இனிது முயங்குக என்றமை காண்க. 3. அற்றம் இல்லாக் கிழவோள் சுட்டிய தெய்வக் கடத்தினும் - களவு புலப்பட ஒழுகுதல் இல்லாத தலைவியைத் தலைவன் வரைந்து கொள்ளுதல் குறித்துப் பரவிய தெய்வம் அதனை முடித்தலின், அத்தெய்வத்திற்குப் பரவுக் கடன் கொடுத்தல் வேண்டுமெனத் தலைவற்குக் கூறுமிடத்தும். இது, முன் களவுக் காலத்துப் பரவியது. தலைவன் தலைவியொடு இடையறா இன்பத்தால் மயங்கி யிருந்தலின் உணர்த்த வேண்டியதாயினாள். கடன் - பரவுக்கடன். அத்து - சாரியை. காட்டு: நெஞ்சொடு மொழிகடுத் தஞ்சுவர நோக்கும் தாயவட் டெறுவது தீர்க்கவெம் மகனெனச் சிறந்த தெய்வத்து மறையுறை குன்றம் அறைந்துநின் றிறைஞ்சினம் பலவே பெற்றனம் யாமே மற்றதன் பயனே. மற்றதன் பயன் பெற்றனம் - இறையதன் பயனை அடைந்தனம். பயன் - தலைவியை வரைந்து கொண்டது. பல இறைஞ்சினம்; அதன் பயன் பெற்றனம். ஆகவே, அக் கூட்டிய தெய்வத்திற்குக் கடன் கொடுத்தல் வேண்டும் எனல் காண்க. 4. சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் - சிறந்த இல்லறத்தைத் தலைவி மாட்டு வைத்த பின், அறம் பொருள் செய்யுங் காரணமாகத் தலைவன் தலைவியை மறந்து செல்லும் போதும் தலைவற்குக் கூறுவள். அறஞ் செய்தல் காரணத்தானும் பொருள் செய்தல் காரணத்தானும் சிறிது மறக்குமென்க. அதற்காற்றாது தலைவி வருந்துதல் கண்டு தோழி தலைவனிடம் கூறுவள். அறம் - இல்லோர்க் குதவல் முதலியன. தலைவி மாட்டு வைத்தல் - தலைவியை இல்லறத் தலைவியாக்கல் (7: 3 பார்க்க). காட்டு: கரும்பின் எந்திரங் களிற்றெதிர் பிளிற்றும் தேர்வண் கோமான் தேனூர் அன்னவிவள் நல்லணி நயந்துநீ துறத்தலின் பல்லோ ரறியப் பசந்தன்று நுதலே. (ஐங் - 55) இதனுள், வேறொருத்தியின் இன்பத்தை நயந்து இவளைத் துறத்தலின், இவள் நுதல் பசந்தது எனக் கூறுதல் காண்க. ‘தேனூர் அன்ன இவள் நுதல் பசந்தன்று’ என்க. தன்னை விரும்பிய ஒருத்தியை மகிழ்வித்தலும் தலைவற்கு அறமே போலும்! இது, புலவி நிமித்தம். 2 - 4. புலவி, ஊடல், உணர்வுகள் புலவி, ஊடல், உணர்வு என்னும் மூன்றும் ஒன்றை யொன்று பிரிக்க முடியாத தொடர்புடையன வாகையால் ஒன்றாக வைக்கப் பட்டன. புலவியின்றி ஊடலும், ஊடலின்றி உணர்த்தலும் இன்மையும், இவை ஒருங்கே நிகழ்தலும் அறிக. இவை இன்னவென்பதை, இவ்வியல் 9 ஆம் சூத்திர உரையிற்காண்க. இப்புலவி ஊடல்கள் தலைவன் பரத்தைமையால் தலைவிபால் நிகழ்வனவாம். தலைவன் உணர்த்த, தலைவி உணர்ந்து புலவி ஊடல் நீங்குவாள். 1. தலைவற்குப் புலவி ஊடல் 199. உணர்ப்புவரை யிறப்பினும் செய்குறி பிழைப்பினும் புலத்தலும் ஊடலுங் கிழவோற் குரிய. இ - ள்: உணர்ப்பு வரை இறப்பினும் - தலைவி ஊடிய வழித் தலைவன் தேற்றத்தேறாளாயினும், செய்குறி பிழைப்பினும் - களவில் தலைவி செய்த குறியை அவளே தப்பினாலும், புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய - புலவியும் ஊடலும் தலைவற்கு உரிய என்றவாறு. தேறுதல் - தெளிதல், உணர்தல்; உணர்த்த உணர்ந்து ஊடல் தணிந்து கூடுதல். வரை - எல்லை. இறத்தல் - கடத்தல். புலத்தல் - மனஞ்சிறிது வேறுபடுதல். ஊடல் - அவ்வேறுபாடு மிக்கு நீளுதல். உணர்ப்பு வரை யிறத்தல் கற்பிக்கும், செய்குறி பிழைத்தல் களவிற்கும் உரிய. புலவியும் ஊடலும் கற்பிற்கே உரிய வேனும், சிறுபான்மை களவிற்கும் உரிமையாதல் பற்றிச் சூத்திரச் சுருக்கம் நோக்கி உடன் கூறினார். காட்டு: எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர் பூவில் வறுந்தலை போலப் புல்லென் றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத் தெல்லுறு மௌவல் நாறும் பல்லிருங் கூந்தல் யாரோ நமக்கே. (குறுந் - 19) இது, ‘யாரோ நமக்கே’ எனக் கற்பில் புலந்தது. 2. தீதிலே மென்று தெளிப்பவுங் கைந்நீவி யாதொன்று மெங்கண் மறுத்தர வல்லாயின். (கலி 81) இது, கற்பில் ஊடியது. குறிபிழைத்துழி ஊடியதற் கிலக்கியங் களவியலிற் காட்டினாம். எனவே, ஊடுதல் காமத்திற் கின்பம், அதற்கின்பங் கூடி முயங்கப் பெறின். (குறள்) என்னும் விதியைக் கடைப்பிடித் தொழுகலே மனைக் குரியாள் கடமை யாகும் என்பதாம். (10) 2. தோழி புலவி ஊடல் தணித்தல் 200. புலத்தலும் ஊடலு மாகிய விடத்தும் சொலத்தகு கிளவி தோழிக் குரிய. இ - ள்: புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும் - அங்ஙனம் தலைவன் புலவியும், அது நீடித்து ஊடலுங் கொண்டபோது, சொலத்தகு கிளவி தோழிக்கு உரிய - தோழியே அப்புலவியும் ஊடலும் நீங்கும்படி தலைவற்குக் கூறுவள் என்றவாறு. எனவே, தலைவி குறிப்பறிந்து தோழி கூறுதலன்றித் தலைவி கூறாளென்பதாம். பாடாண்டிணைக் கைக்கிளையாயின் தலைவி கூறவும் பெறும். காட்டு: 1. அலந்தாரை யல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல். (குறள்) இது, கற்பில் தலைவி குறிப்பினால் தோழி கூறியது. 2. யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் தானூட யானுணர்த்தத் தானுணரான் - தேனூறுங் கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகலம் எய்தா திராக்கழிந்த வாறு. (முத்தொள் - 104) இது, பாடாண் கைக்கிளையில் தலைவி கூறியது. கணவனாற் கைவிடப்பட்ட மனைவியின் பொருட்டுச் சான்றோர் கூறுவதே பாடாண் கைக்கிளை (புறத் - 35). இது, அவ்வாறு கைவிடப் பட்டாள் கூறிய தென்க. அகப்பொருட் கைக்கிளையாயின், ‘வழுதி’ எனக் குடிப்பெயர் சுட்டிக் கூறப்பெறா வென்க. (11) 3. தலைவனை அன்பிலை கொடியை எனல் 201. பரத்தைமை மறுத்தல் வேண்டியும், கிழத்தி மடத்தகு கிழமை யுடைமை யானும் அன்பிலை கொடியை என்றலு முரியள். இ - ள்: பரத்தைமை மறுத்தல் வேண்டியும் - தலைவனது பரத்தைமையைப் போக்குதல் வேண்டியும், கிழத்தி மடத்தகு கிழமை உடைமையானும் - தலைவன் கூறியதை உண்மையெனக் கொள்ளும் மடமைக்குணம் தலைவிக்கு உண்மையால் அவளுக்கு ஏற்றதை அறிந்து கூறுதல் தோழியின் கடமையானதாலும், அன்பிலை கொடியை என்றலும் உரியள் - தலைவனை, ‘நீ தலைவியிடத்து அன்பிலை, கொடியை’ என்றும் கூறி ஊடல் தணித்தற்கும் தோழி உரியள் என்றவாறு. உனக்குத் தலைவியிடத்துச் சிறிதும் அன்பில்லை என்றும், நீ மிகவும் கொடியவன் என்றும் கடிந்து கூறி ஊடல் தணிக்கும் என்க. இவ்வாறு கூறி ஊடல் தணிக்கும் என்பதால், இது, மேலதற்கோர் புறனடை (கற் - 11). காட்டு: வண்பரி நவின்ற வயமான் செல்வ, நன்கதை யறியினும் நயனில்லா நாட்டத்தால் அன்பிலை எனவந்து கழறுவல் ஐயகேள்! மகிழ்செய் தேமொழித் தொய்யில்சூ ழிளமார்பு முகிழ்செய முள்கிய தொடர்பவள் உண்கண் அவிழ்பனி யுறைப்பவும் நல்காது விடுவாய் இமிழ்திரைக் கொண்க, கொடியை காணீ. (கலி - 125) தோழி, ‘அன்பிலை’ எனவும், ‘கொடியை’ எனவும் கூறுதல் காண்க. (12) 4. தலைவி தலைவனை அயலானாகக் கூறல் 202. அவன்குறிப் பறிதல் வேண்டியும், கிழவி அகன்மலி யூடல் அகற்சிக் கண்ணும் வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே. இ - ள்: அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் - தோழி ‘அன்பிலை கொடியை’ எனக்கேட்ட தலைவன் சினங் கொண்டானோ என ஐயுற்று, அவனது குறிப்பை அறிதற்கும், கிழவி அகன்மலி ஊடல் அகற்சிக் கண்ணும் - தலைவி தனது மனத்தில் நிறைந்து நின்ற ஊடல் துனியாகியவழி (பெருகியவழி) அத்துனி தலைவற்கு என்னாகுமோ என்று அஞ்சியும், வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே - தலைவி, ‘நான் இறந்துபட்டாலும் சரி; அவரை அன்பிலை கொடியை என்னாதி’ என்று தலைவனோடு தான் அயன்மை யுடையள் போன்ற சொல்லைக் கூறவும் பெறுவள் என்றவாறு. அதாவது, தலைவனை அயலான்போற் கூறுதல். அது கேட்ட தலைவன், தலைவி ஊடல் தணிந்து தன்னைக் கூட விரும்புகிறாள் என உணர்ந்து, ஊடல் தணிந்து கூடுவனென்க. அயன்மையாவது - தன்னின் வேறல்லாத தலைவனை வேறாகக் கூறுதல். காட்டு: நன்னலந் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர் கழியினும் உரையல் அவர்நமக் கன்னையும் அத்தனும் அல்லரோ தோழி, புல்லிய தெவனோஅன்பிலங் கடையே. (குறுந் - 93) இதனுள், ‘அவரை நீ அன்பிலை கொடியை என்னாதி; அவர் நம்மிடத் தன்பில் வழி நின் புலவி அவரை என்செய்யும்; அவர் நமக்கு இன்றியமையாத உறவினரல்லரோ’ என அயன்மை கூறியவாறு காண்க. ஈருடல் ஓருயிராகிய தலைவி, ‘உறவினரல்லரோ’ எனத் தலைவனை வேறாக வைத்துக் கூறினமையின், வேற்றுமைக் கிளவியாயிற்று. (13) 5. தலைவன் பணிமொழி 203. காமக் கடப்பினுட் பணிந்த கிளவி காணுங் காலைக் கிழவோற் குரித்தே வழிபடு கிழமை யவட்கிய லான. இ - ள்: வழிபடு கிழமை அவட்கு இயலான - தலைவனை வழிபட்டொழுகுதல் தலைவிக்கு இல்லற ஒழுக்கத்தோடு பட்ட இயல்பாகலான், காமக் கடப்பினுள் பணிந்த கிளவி - அங்ஙனம் தலைவியும் தோழியும் வேற்றுமைக் கிளவி தோற்றிய வழித் தனக்குக் காமமிக்க விடத்துப் பணிமொழி கூறுதல், காணும் காலை கிழவோற்கு உரித்தே - ஆராயுங் காலத்துத் தலைவற்கு உரித்து என்றவாறு. காமக் கடப்பு - காமமிகுதல். கடத்தல் - எல்லையைக் கடத்தல், எப்போதும் தாழ்ந்து கூறுதல் தலைவியின் இயல்பேயேனும், தலைவியும் தோழியும் வேற்றுமைக் கிளவி கூறின், தலைவனும், தனக்குக் காமமிகின் தாழ்ந்து கூறுவன் என்பதாம். ஊடல் தணிந்து தாழ்ந்து கூறுவனென்க. தலைவன் தன் தவறு சிறிதாய வழிப் புலப்பன்; பெரிதாய வழிப் பணிவன் என்க. அடுத்த சூத்திரத்துப் பணிவு கூறுகின்றார். காட்டு: ஆயிழாய், நின்கண் பெறின ல்லால் இன்னுயிர் வாழ்கல்லா என்கண் எவனோ தவறு. (அகம் - 88) நின்னாணை கடக்கிற்பார் யார். (கலி - 81) என்னிடம் தவறில்லை. நின்னாணை கடவேன்’ எனப் பணி மொழி கூறியவாறு காண்க. (14) 6. தலைவன் தலைவியைப் பணிதல் 204. மனைவி யுயர்வும் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியுள் உரிய. இ - ள்: புலவியுள் - புலவிக்காலத்து, கிழவோன் பணிவும் - தலைவன் தலைவியைப் பணிதலும், மனைவி உயர்வும் - தலைவி நாணாது அதை ஏற்றுக் கொள்ளுதலும், நினையுங்காலை உரிய - ஆராயுங்காலை இருவர்க்கும் உரியவாம் என்றவாறு. காட்டு: வலையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத் தலையுற முன்னடிப் பணிவான் போலவும், கோதை கோலா இறைஞ்சி நின்ற ஊழையஞ் சேர்ப்பனை அலைப்பேன் போலவும். (கலி - 128) இது, முன்னே தலைவி யிடத்து நிகழ்ந்ததனால் கனவிலுங் கண்டாளென்க. ‘நினையுங் காலை’ என்றதனால் தோழியுயர்வும், கிழவோன் பணிமொழியுங் கொள்க. காட்டு: ஒன்று, இரப்பான்போல் எளிவந்துஞ் சொல்லும் உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன் வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போல் நல்லார்கட் டோன்றும் அடக்கமு முடையன், இல்லோர் புன்கண் ஈகையிற் றணிக்க வல்லான் போல்வதோர் வண்மையு முடையன், அன்னான் ஒருவன்றன் ஆண்டகை விட்டென்னைச் சொல்லுஞ்சொல் கேட்டீ சுடரிழாய். (கலி - 47) இதனுள், தலைவன் இரந்துரைத்தவாறும், தோழி அதனை ஏற்றுக்கொண்டவாறுங் காண்க. இவ்வாறு தலைவன் பணிமொழி கூறுதலும் தலைவியும் தோழியும் அதனை ஏற்றுக்கொள்ளுதலும் வழுவேனும், கூடற்பயன்படுதலின் அமைந்தது. (15) 7. தலைவி அன்புமொழி கூறுதல் 205. அருள்முந் துறுத்த அன்புபொதி கிளவி பொருள்பட மொழிதல் கிழவோட்கு முரித்தே. இ - ள்: அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி - அருள் பிறத்தற்கு ஏதுவாகிய அன்போடு கூடிய சொல்லை, பொருள் பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே - பணிந்து கூறாது வேறோர் பொருள்படக் கூறுதல் தலைவிக்கும் உரித்து என்றவாறு. நான் உன்னை விரும்பா விடினும் என் நெஞ்சு விரும்புகிறது எனத் தனது அன்பு தோன்றக் கூறுதல். அருள் முந்துறுத்த அன்பு - அருளைத் தோற்றுவிக்கும் அன்பு. முந்துறுத்தல் - தோற்றுவித்தல். ‘அருளென்னும் அன்பீன் குழவி’ (குறள் - 757) எனக் காண்க. காட்டு: 1. கடைஇய நின்மார்பு தோயலம் என்னும் இடையும் நிறையும் எளிதோநிற் காணின் கடபுவு கைத்தாங்கா நெஞ்சென்னும் தம்மோ டுடன்வாழ் பகையுடையார்க் கே. (கலி - 77) இதனுள், ‘நிற்காணின் கடபுவு கைத்தாங்கா நெஞ்சு’ எனவே, அவன் ஆற்றாமை கண்டருளி என் நெஞ்சு அவன் பால் சென்றதென வேறோர் பொருள்படக் கூறித் தலைவி தன் அன்பினை வெளியிட்டவாறு காண்க. 2. இவைபா ராட்டிய பருவமு முளவே அதுகண்டு, யாமும் காதலெம் அவற்கெனச் சாஅய்ச் சிறுபுறங் கவையின னாக வுறுபெயல் தண்டுளிக் கேற்ற பலவுழு செஞ்செய் மண்போல் ஞெகிழ்ந்தவற் கலுழ்ந்தே நெஞ்சறை போகிய அறிவி னேற்கே. (அகம் - 26) இதனுள், ‘சிறுபுறங் கவையினன்’ என, அவன் வருந்தியது ஏதுவாகத் தான் ‘மண்போல் ஞெகிழ்ந்தேன்’ என அருள் முந்துறுத்த வாறும், ‘இவை பாராட்டிய பருவமும் உள’ என, அன்பு பொதிந்து கூறியவாறும், அப்போதும் பணிந்த மொழி வெளிப்படாமல், ‘நெஞ்சறை போகிய அறவினேற்கு’ எனத் தன் அறிவினை வேறாக்கி அதன்மேலிட்டுக் கூறிய வாறுங் காண்க. (16) 8. தலைவன் பரத்தைமை நீங்கல் 206. பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவைத் தொன்முறை மனைவி எதிர்ப்பா டாயினும், இன்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும் கிழவோன் இறந்தது நினைஇ யாங்கண் கலங்கலு முரியன் என்மனார் புலவர். இ - ள்: பின்முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவை - இரண்டாமுறை மணந்துகொண்ட மனைவியை, தொன்முறை மனைவி எதிர்ப்பாடு ஆயினும் - முதல் மனைவி எதிரேற்கினும், இன் இழைப் புதல்வனை வாயில் கொண்டு புகினும் - முதல் மனைவி தன் புதல்வனைக் கோலஞ் செய்து பின்முறை மனைவியிடம் வாயிலாகக் கொண்டு செல்லினும், கிழவோன் இறந்தது நினைஇ - தலைவன் அங்ஙனமாய இரு தலைவியரையும் கைவிட்டுப் பரத்தைமை செய்து ஒழுகியதை நினைந்து, ஆங்கண் கலங்கலும் உரியன் - அப்பரத்தையர்மீதுள்ள ஆசையை விட்டு நீங்கலும் உரியன், என்மனார் புலவர் என்றவாறு. ‘நீங்கலும்’ என்னும் உம்மையால், சிலர் நீங்காமையும் உரியர் என்பதாம். வதுவை - ஆகு பெயரான் மனைவியை யுணர்த்திற்று. முதல் மனைவி இரண்டா மனைவியை எதிரேற்றமையும், இரண்டாம் மனைவி, முதல் மனைவியின் மகனைக் கண்டு வாயில் நேர்ந்தமையுங் கண்டு, இங்ஙனமுள்ள இவரைவிட்டு நீங்கினேனே எனத் தலைவன் இரங்கிப் பரத்தைமை நீங்குவனென்பதாம். இவ்விரண்டும் வெவ்வேறு கால நிகழ்ச்சிகளாம். இன் இழைப் புதல்வனை வாயில் கொண்டு புகினும் என்பதற்கு, புதல்வனை இழையணிந்து தலைவன் இரண்டா மனைவியிடம் வாயிலாகக் கொண்டு புகினும் எனினுமாம். பெரும் பொருள் - மிக்க சிறப்பு, மிக்க சிறப்பினையுடைய மனைவி யென்க. களவொழுக்க மொழுகி மணந்து கொண்ட மனைவி யிருக்கவும், மகனிருக்கவும், பின்முறை வதுவை கொண்டதன் பொருள் விளங்கவில்லை. இவள் களவின் வழிவாராக் கற்பின் பாற்பட்டவளாவாள். காட்டு: மாத ருண்கண் மகன்விளை யாடக் காதலிற் றழீஇ இனிதிருந் தனனே தாதார் பிரச முரலும் போதார் புறவின் நாடுகிழ வோனே. (ஐங் - 406) தலைவன் பரத்தையிற் பிரிவொழிந்து மனையின்கண் இருந்தமை காண்க. (17) 9. தாய்போல் கழறித் தழீஇக் கோடல் 207. தாய்போற் கழறித் தழீஇக் கோடல் ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப கவவொடு மயங்கிய காலை யான. இ - ள்: தாய்போல் கழறித் தழீஇக் கோடல் - (அங்ஙனம் கலங்கித் தன்னைக்கூட எண்ணிய தலைவனை) ‘மேல் நின்று மெய்குறும் கேளிராகிய’ (கலி - 3) தாய்போலத் தேற்றித் தழுவிக் கொள்ளுதல், ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்து என மொழிப - ஆராய்ந்தமைந்த இல்லறம் நடத்தும் தலைவிக்கும் உரியவாகும் என்று கூறுவர், கவவொடு மயங்கிய காலையான - தலைவனது முயக்கம் வேண்டிய ஆற்றாத காலத்து என்றவாறு. கவவு - முயக்கம், கூட்டம். முயக்கம் வேண்டாத காலத்துத் தழுவாள் என்பதாம். தலைவன் தன் தவற்றுக்கு உடன்பட்டுக் கலங்கினமை கண்ட தலைவி, அதற்காற்றாது தனது புலவி நீங்கி, இதற்காக இவ்வாறு கலங்கலீர் எனத் தேற்றித் தழுவிக் கொள் வாளென்க. ஆய்மனைக் கிழத்தி - ஆராய்ந்தமைந்த இல்லறம், அல்லது ஆராய்ந்தறிந்து இல்லறம் நடத்தும் தலைவி என்பதாம். காட்டு: சிற்றில் சிதைத்தோமென் றெண்ணித் தெருமரல் கொற்றச் சிறுவர் குறிப்பாமோ - சிற்றிற் சிதையாமை வேண்டும் சிதைக்கின் அதற்காப் பதையாமை செய்கைப் பயன். (குழந்தை) என வரும். (18) 10. தலைவியின் குணச்சிறப்பு 208. அவன்சோர்பு காத்தல் கடனெனப் படுதலின் மகன்றா யுயர்புந் தன்னுயர் பாகும் செல்வன் பணிமொழி யியல்பாக லான. இ - ள்: செல்வன் பணிமொழி இயல்பாக லான - தலைவன் சொல்லைக்கேட்டு நடத்தல் தலைவியின் இலக்கணமாகலானும், அவன் சோர்வு காத்தல் கடனெனப் படுதலின் - தலைவற்கு இழுக்கம் உண்டாகாமற் காத்தல் தலைவியின் கடமையாகலானும், மகன்தாய் உயர்பும் தன் உயர்பு ஆகும் - மகன் தாயாகிய மாற்றாளைத் தன்போல் கருதி மதித்து நடத்தலும் தலைவியின் உயர்ந்த குணங்களில் ஒன்றாகும் என்றவாறு. ‘மகன் தாய்’ என்றது - பின்முறை வதுவையை, தன் போல் கருதல் - ஒப்பாகக் கொண்டு நடத்தல். அவன் சோர்பு காத்தல் கடனா கையாலே, முன்முறை வதுவையைத் தன்னின் உயர்ந்தாளாகக் கருதி மதித்து நடத்தல் பின் முறை வதுவையின் கடமை யென்றுமாம். ஈண்டு ‘மகன்றாய்’ என்றது - முன்னவளை. ஈருரையுங் கொள்க. முதலுரை சிறப்பு, அவள் தலைவியாதலின். இது, இருமனைவியரும் ஒற்றுமைப்பட்டுத் தலைவனுக்குத் துன்பந் தராமல் வாழ்க்கை நடத்துதலைக் குறித்தது. இருவரும் புலவியின்றி ஒன்றுபட்டு வாழ்தல். (19) 11. தலைவி தன்னைப் புகழ்தல் 209. தற்புகழ் கிளவி கிழவன்முன் கிளத்தல் எத்திறத் தானுங் கிழத்திக் கில்லை முற்பட வகுத்த இரண்டலங் கடையே. இ - ள்: முற்பட வகுத்த இரண்டு அலங்கடையே - முன்பு கூறிய ‘தாய்போற் கழறித் தழீஇக் கோடலும்’ (கற் - 18), ‘அவன் சோர்பு காத்தற்கு மகன்றா யுயர்வு தன்னுயர்பாக் கோடலும்’ (கற் - 19) அல்லாத விடத்து, எத்திறத்தானும் - ஊடல் மிக்குத் துனியாய வழியும், கிழவன் முன் தன்புகழ் கிளவி கிளத்தல் கிழத்திக்கு இல்லை - தலைவன் முன் தன்னைப் புகழ்ந்து கூறுதல் தலைவிக்கு இல்லை என்றவாறு. எனவே, அவ்விரண்டிடத்தும் தன்னைப் புகழ்ந்து கூறுவள் என்பதாம். தலைவன் இல்லாத விடத்துக் காமக் கிழத்தியரும், அவர்க்குப் பாங்காயினாரும் கேட்பத் தன்னைப் புகழ்வள். தலைவனும் தலைவியும் ஊடல் மிக்குத் தம்முள் மாறுபட்டுழித் தோழியும் அறிவரும் இரக்கந் தோன்றக் கடிந்து கூறி மாறுபாட்டை நீக்குவர். (பொதுவி - 58 உரை பார்க்க.) (20) 12. ஒருவரை யொருவர் புகழ்தல் 210. நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற் புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே. இ - ள்: கற்பினுள் - கற்புக்காலத்து, தகைநிகழ் மருங்கின் - புலவி நிகழுமிடத்து, வேட்கை மிகுதியில் புகழ்தகை வரையார் - வேட்கை மிகுதியால் தலைவனும் தலைவியும் ஒரு வரை யொருவர் புகழ்ந்து கூறுதலை நீக்கார் என்றவாறு. தத்தம் தகுதி பற்றியே புலத்தலான் புலவியை, ‘தகை’ என்றார். தகை - ஆகுபெயர். தன் வழிப்பட்ட தலைவியைத் தலைவன் புகழ்தலும், பெருநாணினளான தலைவி தலைவனைப் பிறர் முன்னிலையிற் புகழ்தலும் வழுவேனும் புலவியால் அமைந்தது. புகழ்தல் - எழில் நலங்களையும், உறுப்பினையும் புகழ்ந்து கூறுதல். காட்டு: 1. ஆக வனமார் பணங்கிய சுணங்கின் மாசில் கற்பின் புதல்வன் றாயென மாயப் பொய்ம்மொழி சாயின பயிற்றி. (அகம் - 6) இது, புலவிக்கண் தலைவன் தலைவியைப் புகழ்ந்தது. மார்பினையும் கற்பினையும் புகழ்ந்தவாறு காண்க. 2. ஏந்தெழி லாகத்துப் பூந்தார் குழைய. (அகம் - 6) இது, புலவிக்கண் தலைவி தலைவனைப் புகழ்ந்தது. மார்பினை. (21) 13. தலைவி பரத்தையைப் புகழ்தல் 211. கற்புவழிப் பட்டவள் பரத்தை யேத்தினும் உள்ளத் தூடல் உண்டென மொழிப. இ - ள்: கற்பு வழிப் பட்டவன் - கற்பின் வழி நின்ற தலைவி, பரத்தை ஏத்தினும் - பரத்தையைப் புகழ்ந்து கூறினாளாயினும், உள்ளத்து ஊடல் உண்டு என மொழிப - மனத்துள் ஊடின தன்மை உண்டென்று கூறுவர் புலவர் என்றவாறு. கற்பு - இல்லறம். தலைவி தன் ஊடற் குறிப்புத் தோன்றத் தலைவன் முன் பரத்தையைப் புகழ்ந்து கூறுவள் என்பதாம். பரத்தையை ஏத்தவே அவன்கட் காதலின்மை காட்டி வழுவாயிற் றேனும், உள்ளத்தூட லுண்மையின் அமைந்தது. காட்டு: நாணி நின்றோள் நிலைகண் டியானும் பேணின னல்லனோ மகிழ்ந, வானத் தணங்கருங் கடவுளன் னோள்நின் மகன்றா யாதல் புரைவதாங் கெனவே. (அகம் - 16) ‘அவளை நின் மகன் தாயெனக் கொண்டு பேணினேன்’ எனப் புகழ்ந்தமை காண்க. (22) 14. தலைவி, தலைவன் குறிப்பறிதல் 212. கிழவோள் பிறள்குணம் இவையெனக் கூறிக் கிழவோன் குறிப்பை உணர்தற்கு முரியள். இ - ள்: கிழவோள் பிறள் குணம் இவை எனக் கூறி தலைவி, வேறொரு தலைவியின் குணங்கள் இத்தன்மைய வென்று தலைவற்குக் கூறி, கிழவோன் குறிப்பை உணர்தற்கும் உரியள் - தலைவன் குறிப்பினை அறிதற்கும் உரியள் என்றவாறு. இது, தலைவி வேறொருத்தியின் குணங்கூறித் தலைவன் தன்னிடங் கொண்டுள்ள காதலை அறிதலாம். தலைவன் கூற உணராது தான் வேறொன்று கூறித் தலைவன் குறிப்பை அறியக் கருதுதலின் வழுவாயமைந்தது. காட்டு: கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே ஒள்ளிழை யுயர்மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினவு வோளே. (ஐங் - 122) இது, வேறொருத்தியை இத்தன்மையளெனக் கூறி, அவள் மாட்டுத் தலைவன் எத்தன்மைய னென்று அறிய விரும்பிக் கூறியவாறு காண்க. (23) 15. தலைவி, தலைவனெதிர் நின்று கூறல் 213. தம்முறு விழுமம் பரத்தையர் கூறினும் மெய்ம்மை யாக அவர்வயி னுணர்ந்து தலைத்தாட் கழறல்தம் எதிர்ப்பொழு தின்றே மலிதலும் ஊடலும் அவையலங் கடையே. இ - ள்: தம் உறு விழுமம் பரத்தையர் கூறினும் - தலைவனால் தாம் உற்ற வருத்தத்தைத் தலைவிக்குப் பரத்தையர் கூறினால், அவர்வயின் மெய்மையாக உணர்ந்து - அவர் கூறிய வாற்றானே அவ்வருத்தத்தை உண்மையாக உணர்ந்து அதனால், மலிதலும் - அப்பரத்தையர் துயருற இரக்கமின்றி நீங்கினானென மகிழ்தலும், ஊடலும் - அவன் பிரிவிற்கு இவர் இரங்கினார் என்னுங் காரணத்தால் ஊடலும், அவை அலங்கடை - அவையிரண்டும் அல்லாத விடத்து, தலைத்தாள் கழறல் - தலைவன் எதிர் நின்று அவனைக் கேட்டல், தம் எதிர்ப்பொழுது இன்றே - தம்மைப் பரத்தையர் எதிர்ப்பட்ட பொழுதில் இல்லை என்றவாறு. அவை - மலிதலும் ஊடலும். மலிதலும் ஊடலும் இல்லாதவிடத்து எதிர் நின்று கூறாள் எனவே, மலிதலும் ஊடலும் உள்ளபோது, பரத்தையர் எதிரில் உள்ள போதே தலைவன் எதிரில் நின்று தலைவி தலைவனைக் கழறுவாள் என்பதாம். மலிதலும் ஊடலும் உள்ளபோது, பரத்தையர் காணவும் காணாதும் எதிர் நின்று கூறுவள். அவை இல்லாதபோது, பரத்தையர் இல்லா விடத்தும் எதிர் நின்று கூறாள், வெறுத்த உள்ளத்தளாய் இருப்பள் என்க. இதனால், தலைவன் பரத்தையரும் தலைவன் வீட்டுக்கு வருதலும், தலைவன் பிரிவால் தமக்குண்டாகிய வருத்தத்தைத் தலைவிபாற் சொல்லலும் உண்டென்பதும், அதனால் தலைவி, ‘அவரை வருந்தவிட்டு இங்கு எதற்காக வந்தீர்? எங்கையரை இவ்வாறு வருத்துதல் தகுமோ?’ என்று ஊடிக் கூறுதல் உண்டென்பதும் உணர்க. காமக்கிழத்தியர், காதற்பரத்தையர், சேரிப்பரத்தையர் எனப் பரத்தையர் மூவகைப் படுவர். (தொல்காப்பியர் காலத் தமிழர் - ‘பரத்தையர்’ என்பதில் விளக்கங் காண்க.) ‘பரத்தையர் கூறினும்’ என்னும் உம்மை, இறந்தது தழீஇய தாகையால், ஏனைத் தலைவியர் கூறினும் என்பதுங் கொள்க. ஏனைத் தலைவியர் - பின்முறை வதுவையர். தலைத்தாள் - தாள்தலை - எதிரில். தலை - ஏழனுருபு. காட்டு: பொன்னெனப் பசந்தகண் போதெழில் நலஞ்செலத் தொன்னல மிழந்தகண் துயில்பெறல் வேண்டேன்மன் நின்னணங் குற்றவர் நீசெய்யுங் கொடுமைகள் என்னுழை வந்துநொந் துரையாமற் பெறுகற்பின். (கலி - 77) இது, பரத்தையர் முன்னில்லாமல் மலிதலும் ஊடலும் நிகழ்ந்து தலைத்தாட் கழறியது. ‘நின்னால் வருத்தமுற்ற பரத்தையர் நீ செய்யுங் கொடுமைகளை என்னிடத்தே வந்து வெறுத்துச் சொல்லாமையை யான் பெறின்’ எனக் கூறுதல் காண்க. தம்முறு விழுமத்தைப் பரத்தையர் தலைவிக்குக் கூறுதலான் பரத்தையர்க்கும், அவர் கூறத் தான் எளியவந்தமையின் தலைவிக்கும், இவர் இங்ஙனம் ஒழுகலின் தலைவற்கும் வழுவாயமைந்தது. (24) 16. வாயிலிடம் தலைவன் பழிகூறல் 214. வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல் தாவின் றுரிய தத்தங் கூற்றே. இ - ள்: தத்தம் கூற்றே - தோழிக்கும் தலைவிக்கும் உரிய கூற்றின்கண், வாயில் கிளவி வெளிப்படக் கிளத்தல் - வாயிலாய் வந்தவரிடம் தலைவன் பழிகளை வெளிப்படையாகக் கூறுதல். தாவின்று உரிய - குறைவின்றி உரியவாம் என்றவாறு. தாவின்மையாவது - இங்ஙனங் கூறுகின்றோமே என்னும் வருத்தம் மனத்து நிகழ்தலின்றித் தெளிவாகக் கூறுதலாம். மற்ற வாயில்கள் வந்துழியும், தலைவன் ஆற்றாமை வாயிலாக வந்துழியும் தலைவியும் தோழியும் வாயில் மறுத்து வெளிப்படக் கூறுவர். வாயில் - தூது (பொதுவி - 28). ‘உரிய’ என்றதனால் தோழி வாயிலாகச் சென்ற வழித் தலைவி வெளிப்படக் கூறுவள். காட்டு: நெஞ்சத்த பிறவாக நிறையில ளிவளென வஞ்சத்தான் வந்தீங்கு வலியலைத் தீவாயோ. (கலி - 69) இது, ஆற்றாமை வாயிலாகத் தலைவன் வந்துழித் தலைவி வெளிப்படக் கூறியது. இது, தோழிக்கும் ஒக்கும். (25) 17. பரத்தை வாயில் 215. பரத்தை வாயில் நால்வர்க்கு முரித்தே நிலத்திரி பின்றஃ தென்மனார் புலவர். இ - ள்: பரத்தை வாயில் - தலைவன் பரத்தைமையால் தலைவி ஊடிய வழி அவ்வூடல் தீர்க்கத் தலைவிபால் வாயில் விடுதல், நால்வர்க்கும் உரித்தே - நானிலத்தவர்க்கும் உரிமையுண்டு, நிலத்திரிபு இன்று என்மனார் புலவர் - அஃதும் மருத நிலத்தொழுக்கமே யாம் வேறெனப் படா என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. ‘மருதநிலத்தார்க்கே யன்றி’ என நின்றமையான், ‘நால்வர்க்கும்’ என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை, அதாவது, தலைவன் பரத்தையிற் பிரிவும், அதனால் தலைவி ஊடலும், அவ்வூடலை உணர்த்தத் தலைவன் வாயில் விடுதலும் மருதநிலத்தின்கண் நிகழும் மருதவொழுக்கமன்றோ? இது, மற்றைக் குறிஞ்சி முதலிய நிலத்தின் கண் நிகழ்த லுண்டோ? என ஐயுறுவார்க்கு, ஆங்கும் உண்டு; எந்நிலத்து நிகழினும் அதுவும் மருதவொழுக்க மாகவே கொள்ளப்படும் என ஐயமறுத்தது இச்சூத்திரம். எனவே, எல்லா நிலத்தும் ஊடலும் கூடலும் உண்டு. அவை புலனெறி வழக்கில் மருதநிலத்து நடந்ததாகச் செய்யுள் செய்யப்படும் என்பதாம். (26) 18. மகப்பேற்றுக் காலம் 216. பூப்பின் புறப்பா டீராறு நாளும் நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலை யான. இ - ள்: பரத்தையில் பிரிந்த காலை யான - தலைவன் பரத்தையிற் பிரிவின்கண் தலைவிக்குப் பூப்புண்டானபோது, பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் - பூப்பு நிகழ்ந்த மூன்று நாளைக்குப் புறம்பான பன்னிரு நாளும், நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர் - இருவரும் பிரிந்துறையார் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. பூப்பு நிகழ்ந்த மூன்று நாளும் புணர்ச்சிக்கு விலக்காகையால், நான்காநாள் தொடங்கிப் பதினைந்து நாளிடைப் பட்ட பன்னிரு நாளும் கருப்பந் தரிக்கும் காலமாகையால் அப்போது தலைவன் தலைவியைப் பிரியானென்பதாம். இருவரும் மனமகிழ்ச்சியோடு கலந்துண்டான கருவே நல்ல அழகு குண முதலியவமைந்த குழந்தையாய்ப் பிறக்குமாகையால், ‘ஈராறு நாளும் நீத்தகன் றுறையார்’ என்றார். பரத்தையிற் பிரிவால் தலைவி மனவேறுபாடுடையளா யிருப்பாளாதலால், அக்காலத் துண்டான பூப்பின்பின் அவ்வேறு பாடில்லாதிருக்க, ‘பரத்தையிற் பிரிந்த காலையான. . . நீத்தகன் றுரையார்’ என்றார். காட்டு: தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீ ராடியபின் ஈராறு நாளும் இகவற்க என்பதே பேரறி வாளர் துணிவு. (ஆசாரக்கோவை) எனக் காண்க. இனிப் பூப்பெய்தியதைத் தலைவி, செவ்வணியணிந்து சேடியரை விட்டுப் பரத்தை வீட்டிலுள்ள தலைவற்குத் தெரிவித்தலும் உண்டு. காட்டு: அரத்தம் உடீஇ அணிபழுப்புப் பூசிச் சிரத்தையாற் செங்கழுநீர் சூட்டிப் - பரத்தை நினைநோக்கிக் கூறினும் நீயொழியல் என்று மனைநோக்கி மாண விடும். (திணை. நூற் - 144) எனக் காண்க. அரத்தம் - சிவப்பாடை, பழுப்பு - சிவப்பு. இது, தலைவி செவ்வணியணிந்து சேடியரை விட்டாளெனத் தலைவற்குப் பாங்காயினார் கூறியது. ‘பூப்பின் புறப்பாடு ஈராறுநாளும்’ என்னும் காலத்தை நன்கு ஆராய்ந்து ஐயமறத் துணிந்து வரையறை செய்யின், குடும்பக் கட்டுப்பாட்டுக்கு எளிய முறையாகும். இதுபற்றி அறிவியல் முறைப்படி, இன்றைய மருத்துவ அறிஞர்கள் ஆய்ந்து கண்ட முறை கீழ்வருமாறு: முதற்பூப்பு நிகழ்ந்த 30 ஆம் நாள் அடுத்த பூப்பு நிகழின், பூப்பு நிகழ்ந்த 4 ஆம் நாளிலிருந்து 11 ஆம் நாள் வரையுள்ள 8 நாளும் கருத்தரியா நாட்களாகும். 12 ஆம் நாள் ஐயப்பாடான நாளாகும். 13 முதல் 18 முடியவுள்ள 6 நாள்களும் கருத்தரிக்கும் நாட்களாகும். 19 ஆம் நாள் ஐயப்பாடான நாளாகும். 20 முதல் 30 முடியவுள்ள 11 நாட்களும் கருத்தரியா நாட்களாகும். அதாவது, பூப்பு நிகழும் முதல் மூன்று நாளும் (1 - 3) கருப்பை தூய்தாக்கப்படுகிறது. 4 - 11 ஆகிய எட்டு நாளும் சினை, அல்லது முட்டை கருப்பையுள் வர ஆகும் நாட்களாகும். 12 சினை கருப்பையில் பொருந்துகின்ற நாளாகும். இந்நாளில் கூடினால் கருத்தரிக்கும் தரிக்காது என்பது உறுதியில்லை. 13 - 18 ஆகிய ஆறு நாளும் சினையோடு ஆணின் உயிரணு கலக்கும் நாட்களாகும். 19 கருப்பையில் பொருந்தியுள்ள இடத்திலிருந்து சினை விடுபடும் நாளாகும். இன்றும் கருத்தரிக்கும் தரிக்காது என்பது உறுதியில்லை. 20 - 30 ஆகிய பதினொரு நாளும் சினை வலியற்று நழுவி வெளிப்பட முயலும் நாட்களாகும். இந்நாட்களில் உயிரணு சினையைக் கூடப் பெறாது. இவ்வாறே, முதற்பூப்பு நிகழ்ந்த 28 வது நாள் பூப்பு நிகழின், 4 - 9 ஆகிய 6 நாளும் கருத்தரியாது. 10 ஐயப்பாடு. 11 - 17 ஆகிய 7 நாளும் கருத்தரிக்கும். 18 ஐயப்பாடு. 19 - 28 ஆகிய 10 நாளும் கருத்தரியாது. 26 வது நாள் பூப்பு நிகழின், 4 - 7 ஆகிய 4 நாளும் கருத்தரியாது. 8 ஐயப்பாடு. 9 - 15 ஆகிய 7 நாளும் கருத்தரிக்கும். 16 ஐயப்பாடு. 17 - 26 ஆகிய 10 நாளும் கருத்தரியாது. 24 வது நாள் பூப்பு நிகழின், 4 - 5 ஆகிய 2 நாளும் கருத்தரியாது. 6 ஐயப்பாடு. 7 - 13 ஆகிய 7 நாளும் கருத்தரிக்கும். 14 ஐயப்பாடு. 15 - 24 ஆகிய 10 நாளும் கருத்தரியாது. குறிப்பு: குடும்பக் கட்டுப்பாட்டை விரும்புவோர், இரு பூப்புக்கும் இடைப்பட்ட கருத்தரியா இரு பகுதி நாட்களிலும் கூடுதல் வேண்டும். 30. (1) 4 - 11 - 8 28. (1) 4 - 9 - 6 (2) 12 (2) 10 (3) 13 - 18 - 6 (3) 11 - 17 - 7 (4) 19 (4) 18 (5) 20 - 30 - 11 (5) 19 - 28 - 10 26. (1) 4 - 7 - 4 24. (1) 4 - 5 - 2 (2) 8 (2) 6 (3) 9 - 15 - 7 (3) 7 - 13 - 7 (4) 16 (4) 14 (5) 17 - 26 - 10 (5) 15 - 24 - 10 குறிப்பு: 1, 5 - கருத்தரியா. 2, 4 - ஐயம். 3 - கருத்தரிக்கும். (27) 19. கூற்று 1. தலைவன்: 8: 17 - 22 17. உறலருங்கு உண்மையின் ஊடல் மிகுத்தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும் 18. பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப் பிரிவின் நீக்கிய பகுதிக் கண்ணும் 19. நின்றுநனி பிரிவின் அஞ்சிய பையுளும் 20. சென்று கையிகந்து பெயர்த் துள்ளிய வழியும் 21. காமத்தின் வலியும் 22. கைவிடின் எச்சமும் இ - ள்: 17. உறல் அருங்கு உண்மையின் - தலைவன் மார்புச் சாந்தில் பிறபெண்டிர் செய்த குறிகள் இருத்தலினால், ஊடல் மிகுத்தோளை - அதுகண்டு ஊடல் மிகுந்த தலைவியை, பிறபிற பெண்டிரின் பெயர்த்தல் கண்ணும் - பிற மகளிரைச் சுட்டிக் காட்டி ஊடல் தணிக்கு மிடத்தும், தலைவன் கூறுவன். பிற பெண்டிரின் பெயர்த்தலாவது - உலகத்துத் தலைவரோடு கூடி இல்லறம் நடத்தும் தலைவியர் இவ்வாறு ஒழுகுவர். நீயும் இவ்வாறு ஒழுகாது அதற்கு மாறாக ஒழுகுதல் முறையன்றெனக் கூறி ஊடல் தணித்தலாம். ‘பெண்டிரின்’ இன் - ஒப்புப் பொருள். பெண்டிரைப்போல நடவெனப் பெயர்த்த லென்க. உறல் - உறுதல், செய்தல். ஆகுபெயரான் செய்த குறியை உயர்த்திற்று, குறி - உகிர்க்குறி முதலியன. அருங்கு - அணுக. மார்பிலென்க. காட்டு: ஒருத்தி, புலவியாற் புல்லா திருந்தாள் அலவுற்று வண்டின மார்ப்ப இடைவிட்டுக் காதலன் தண்டா ரகலம் புகும்; அனவகை யால்யான் கண்ட கனவுத்தான் நனவாகக் காண்டை நறுநுதால், நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார் ஆனா விருப்போ டணியயர்பு காமற்கு வேனில் விருந்தெதிர் கொண்டு. (கலி - 92) இதனுள், ‘புல்லாதிருந்தாள்’ என, ஊடல் மிகுதிகூறி, பின் காதலன் தண்டாரகலம்புகக் கனவு கண்டதாகவும் அதை நனவாக் காணும்படியும் கூறி, பின், மகளிரும் மைந்தரும் வேனில் விழாச் செய்கின்றார். நாமும் அது செய்ய வேண்டும் எனக் கூறியவாறு காண்க. மைந்தரோடு கூடி விழாச் செய்யும் மகளிரைப் போல் நீயும் செய் என்பதாம். 18. பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரை - பரத்தையிற் பிரிந்துவந்து தனிமை யுற்றிருந்த தலைவனையும் தலைவியையும், பிரிவின் நீக்கிய பகுதிக் கண்ணும் - அப்பிரிவினின்றும் நீக்கிக் கூட்டுவித்தபோதும் கூறும். பிரிவின் நீக்கியது தோழி. ‘பரிவின் நீக்கிய’ என்ற பாடத்திற்கு - இரக்கத்தோடு ஊடலை நீக்கிய என உரைக்க. புலம்பு - தனிமை. எச்சம் - தவிர்ச்சி. அதாவது, பரத்தையிற் போகாது தவிர்ந்திருத்தல். பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனைக் கூடாது தலைவி ஊடியிருந்தா ளென்க. அவர்களைத் தோழி கூட்டிய போதும் தலைவன் கூறுவன். இருவரையும் புகழ்ந்து கூறுவன். காட்டு: அன்னாய் கான லணிமல ரூதித் துன்னிய தமிழின் சுவைமிகு வண்டும் தும்பியோ டாடுதல் காண்மோ வம்பவிழ் கூந்தல் மாஅ யோயே. (குழந்தை) இதனுள், வேறிடஞ் சென்றுவந்த தும்பியோடு பெண் வண்டு கூடியாடுதல் காணெனவே, நீவிரும் ஊடல் தணிந்து கூட்டுமின் என்பது காண்க. சுவைமிகு தும்பியோடு வண்டும் ஆடுதல் காண்மோ என்க. 19. நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளும் - மிகவும் நீட்டித்து நின்ற பிரிவினால் தலைவிக்கு ஏற்படும் நோயினைத் தலைவன் அஞ்சுமிடத்தும். நின்று நனி பிரிவு - கூறிப்போன பருவத்தின் நீட்டித்து நின்ற மிக்க பிரிவு. பையுளைக் கண்டு அஞ்சி என்க. பையுள் - வருத்தம். இங்கே துனியை. ஊடல் மிக்கது துனி. காட்டு: ஏதப்பா டெண்ணிப் புரிசை வியலுள்ளோர் கள்வரைக் காணாது கண்டேமென் பார்போலச் சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவல்நின் ஆணை கடக்கிற்பார் யார். (கலி - 81) இதனுள், ‘சேய்நின்று’ என்றதனால், தலைவி துனித்து நின்றவாறும், ‘சினவல்’ என்றதனால், பிரிவு நீட்டித்தவாறும், ‘நின் ஆணை கடக்கிற்பார் யார்’ எனத் தலைவன் அஞ்சிக் கூறியவாறுங் காண்க. 20. சென்று - தலைவன் ஆற்றானாய்த் துனி தீர்த்தற்குத் தலைவியை அணுகச் சென்று, கையிகந்து - தலைவி நீக்கி நிறுத்தவே, பெயர்த்து உள்ளிய வழியும் - மீட்டும் அணுகித் துனியை ஒருவாறு தீர்க்கவே அவள் கூடக் கருதிய விடத்தும் கூறுவன். முதலில் அணுகத் தலைவி நீக்கி நிறுத்தவே, மேலும் அணுகிக் குறையிரக்கவே தலைவி துனி நீங்கிக் கூடக் கருதுவளென்க. இகந்து - இகக்க எனத் திரிக்க. காட்டு: அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேல் முதிர்பூ ணகம்பொருத ஏதிலாள் முச்சி உதிர்துகள் உக்கநின் ஆடை யொலிப்ப எதிர்வளி நின்றாய்நீ செல்; எனத் தலைவி கூற, இனி எல்லாயாம், தீதிலே மென்று தெளிப்பவுங் கைந்நீவி யாதொன்று மெங்கண் மறுத்தர வில்லாயின் மேதக்க எந்தை பெயரினை யாங்கொள்வேம் தாவா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்லும் ஆபோற் படர்தக நாம். (கலி - 81) எனத் தலைவன் சூளுற்றும், மகனை எடுத்துக் கொள்வே னெனவும், தீதிலேனெனவும் அடுத்தடுத்துக் கூறுதல் காண்க. 21. காமத்தின் வலியும் - அவள் அவ்வாறும் துனி தீராது விலகிச் செல்லவே, காமஞ் சிறத்தலான் ஆற்றாமை வாயிலாகச் சென்று வலிதிற் கூட முயலுமிடத்தும். சேரேன் எனின், நான் ஆற்றேன் என அவள் பின்தொடர்ந்து செல்லல். வாயில் - இங்கு துணை. இதுவும் துனி தீர்த்தல். காட்டு: யாரிவன் எங்கூந்தல் கொள்வான் இதுவுமோர் ஊராண்மைக் கொத்த படிறுடைத் தெம்மனை வாரல்நீ வந்தாங்கே மாறு; என, வலிந்து சென்றவனைத் தலைவி விலக்கவே, ஏஎ யிவை, ஓருயிர்ப் புள்ளின் இருதலை யுள்ளொன்று போரெதிர்ந் தாற்றாப் புலவல்நீ கூறியென் ஆருயிர் நிற்குமாறி யாது. (கலி - 89) எனத் தன் ஆற்றாமை மிகுதியைத் தலைவன் கூறியவாறு காண்க. 22. கைவிடின் அச்சமும் - தான் உணர்த்தவும் உணராமல் தன்னை விட்டுத் தலைவி நீங்கிச் செல்வதால், தான் (தலைவன்) அவளை நீங்குதற்குத் தலைவன் அஞ்சிய அச்சத்தின் கண்ணும் தலைவன் கூறுவன். அதாவது, தலைவன் உணர்த்தவும் உணராது தலைவி ஊடவே, தான் அவளை விட்டு நீங்கினால் தலைவி இறந்துபட்டாலும் படுவள் எனத் தலைவன் தலைவியைத் தனியாக விட்டு நீங்குதற்கு அஞ்சுதல். இது உணர்ப்புவயின் வாரா ஊடல். காட்டு: எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர் பூவில் வறுந்தலை போலப் புல்லென் றினைமதி வாழிய நெஞ்சே, மனைமரத் தெல்லுறும் மௌவல் நாறும் பல்லிருங் கூந்தல் யாரோ நமக்கே. (குறுந் - 19) இதனுள், அவளையின்றி வருந்துகின்ற நெஞ்சே, அவள் நமக்கு யார்? எனப் புலத்தலின்றி, அங்கு நின்றும் செல்வேம் எனக் கூறாமையின், கைவிடின் அச்சமாயிற்று. பூ - பொற்பூ. இனைதல் - வருந்துதல். எல் - விளக்கம். 2. தலைவி: 6: 7 - 19. 7. புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற் ககன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி இயன்ற நெஞ்சம் தலைப்பெயத் தருக்கி எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும் 8. தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி எங்கையர்க் குரையென இரத்தற் கண்ணும் 9. செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும் 10. காமக் கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு விளையாட் டிறுதிக் கண்ணும் 11. சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி அறம்புரி உள்ளமொடு தன்வர வறியாமைப் புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானும் 12. தந்தையர் ஒப்பர் மக்களென் பதனால் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கினும் 13. கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும் 14. கொடுமை யொழுக்கங் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காதல் எங்கையர் காணின் நன்றென மாதர் சான்ற வகையின் கண்ணும் 15. தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை யுள்ளிய வழியும் 16. தன்வயின் சிறைப்பினும் அவன்வயின் பிரிப்பினும் இன்னாத் தொல்சூ ளெடுத்தற் கண்ணும் 17. காமக் கிழத்தியர் நலம்பா ராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் 18. கொடுமை யொழுக்கந் தோழிக் குரியவை வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக் காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வருஉம் பல்வேறு நிலையினும் 19. வாயிலின் வருஉம் வகை இ - ள்: 7. புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனை - விரும்பிய மனத்தோடு புதிதாகக் கொண்ட பரத்தை யரிடம் பிரிந்து (பின் அவரிடமிருந்து) வந்த தலைவனை, புலம்பு நனி காட்டி - தனது மிக்க தனிமையைக் கூறி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி - தலைவன்மேற் சென்ற மனத்தைச் செல்லாமல் மீட்டு அருகப் பண்ணி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும் - பிறளொருத்தியைக் கண்டதுபோற் கூறி வாயின் மறுத்துப் பின் ஊடல் தணிந்த விடத்தும் கூறுவள். மறுப்பவள் போல் விரும்பினள் என்க. புதிய பரத்தையர்க்கு ஒன்று கொண்டு கொடுக்க வந்தானெனக்கொண்டு, தன் தனிமை கூறி, அவனை வெறுத்து மறுத்துப் பின் விரும்பினளென்க. புகற்சி - விருப்பம். சாயற்கு - இன்ப நுகர்தற்கு. தலைப்பெய்தல் - தன்னிடம் சேர்த்துக் கொள்ளல். அருகப்பண்ணி - தலைவன்மேற் சென்ற எண்ணத்தைச் சுருக்கி. அருகுதல் - சுருங்குதல். ஈரம் - அன்பு. அன்பால் ஊடல் தணிந்தாளென்க. காட்டு: “ விழவாடு மகளிரொடு தழுவணிப் பொலிந்து மலரே ருண்கண் மாணிழை முன்கைக் குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்த துடன்றனள் போலுநின் காதலி, எம்போல் புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து நெல்லுடை நெடுநகர் நின்னின் றுறைய என்ன கடத்தளோ மற்றே, தன்முகத் தெழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி ஊர்முழுது நுவலுநின் காணிய சென்மே.” (அகம் - 176) இதனுள், ‘எம்போல் நின்னை யின்றி உறைய அவள் என்ன கடமைப்பட்டாள், உன்னைக் காண ஊர் முழுதுஞ் செல்லுவாள், நீ செல்’ என, வேறொருத்தியை எதிர்பெய்து மறுத்தமை காண்க. இதில், தன் தனிமை யுரைத்தலான், மறுப்பாள்போல் உடன்பட்டா ளாயிற்று. ‘எதிர்பெய்து மறுத்த ஈரம்’ எனவே, எதிர்பெய்யாது மறுத்தலுங் கொள்க. ‘கூர்முள் வேலி’ (அகம் - 26) என்னும் அகப் பாட்டு அதற்குக் காட்டாகும். 8. தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை எங்கையர்க்கு வணங்கி உரையென இரத்தற் கண்ணும் - பரத்தையரிடத்திருந்து வந்த தலைவனை நோக்கி, நீ கூறுகின்ற பணிந்த மொழிகளை என் தங்கையராகிய பரத்தையர்க்கு வணங்கி உரையென இரந்து கூறுமிடத்தும். தங்கிய ஒழுக்கம் - பரத்தையரிடத்துக் கூடிவாழும் ஒழுக்கம். என்னைத் தொந்தரவு செய்யாதீர், உனக்கு வேண்டிய அவரிடம் போ என்பதாம். எங்கை - தங்கை. காட்டு: மண்டுநீ ராரா மலிகடல் போலுநின் தண்டாப் பரத்தை தலைக்கொள்ள நாளும் புலத்தகைப் பெண்டிரைத் தேற்றிமற் றியாமெனில் தோலாமோ நின்பொய் மருண்டு. (கலி - 73) இதனுள், ‘புலத்தகைப் பெண்டிரைத் தேற்றி யாம் நின் பொய் மருண்டு தோலாம்’ என, எங்கையரைத் தேற்றெனக் கூறியவாறு காண்க. 9. செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும் - தலைவன் பரத்தை மாட்டுச் செல்லானென்பதை யறிந்த தலைவி, ஊடலுள் ளத்தால் தலைவனைக் கூடப் பெறாதாள் அவளிடம் செல்கெனக் கூறிவிடுத்து ஆற்றியிருக்கும் போதும் கூறுவள். ஊடல் தீராமையான் கூடுதற்கு மனஞ் செல்லாமை யானும், செல்லான் என்பதை அறிந்தமையானும் செல்க என்று கூறுவள் என்க. உண்மையாகவே செல்லென்றாளில்லை. காட்டு: பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி, ஆங்கே அவர்வயின் சென்றி, அணிசிதைப்பான் ஈங்கென் புதல்வனைத் தந்து. (கலி - 76) எனக் காண்க. 10. காமக்கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு விளையாட்டு இறுதிக் கண்ணும் - தலைவனது காமக்கிழத்தி தனது (தலைவியின்) புதல் வனைத் தழுவிக்கொண்டு மகிழ்ச்சியோடு விளையாடும் விளையாட்டின் முடிவினும். தெருவில் விளையாடும் தலைவி புதல்வனைக் காமக்கிழத்தி எடுத்துக் கொண்டுபோய் விளையாடுதலைத் தலைவி மறைந்திருந்து பார்த்துக் கூறுவள். இதனால், தலைவன் மீதே தலைவிக்கு ஊடல் உண்டாவதால் தலைவனிடமே கூறுவள். காமக்கிழத்தி, ‘என்னைப் பாது காப்பாயோ? என, புதல்வன் ‘காப்பேன்’ எனக் கூறுவானாதலின், ‘ஏமுறு விளையாட்டு என்றார். ஏமம் - காவல். காட்டு: “ யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் தேர்வழங்கு தெருவிற் றமியோற் கண்டே கூரெயிற் றரிவை குறுகி, யாவரும் காணுந ரின்மையிற் செத்தனள் பேணி வருக மாளவென் உயிரெனப் பெரிதுவந்து கொண்டனள் நின்றோட் கண்டுநிலை செல்லேன், மாசில் குறுமகள் எவன்பே துற்றனை நீயுந் தாயை இவற்கென யான்றற் கரைய வந்து விரைவனென் கவைஇக் களவுடன் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா நாணி நின்றோள் நிலைகண்டு யானும் பேணினெ னல்லனோ மகிழ்ந வானத் தணங்கருங் கடவுள் அன்னோள்நின் மகன்றோ யாதல் புரைவதாங் கெனவே.” (அகம் - 16) எனத் தான் கண்டவாறும் கேட்டவாறும் தலைவனிடம் கூறி ஊடினமை காண்க. 11. சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி - தலைவி தன் மகனைத் தழுவி விளையாடும் மனையிடத்தே தலைவன் வந்து, அறம்புரி உள்ளமொடு தன்வரவு அறியாமைப் புறம் செய்து அவ்விளை யாட்டைக் காண விரும்பிய மனத்தோடே தன்வரவினைத் தலைவி காணாது அவள் பின்னே நின்று, பெயர்த்தல் வேண்டு இடத்தானும் - தலைவி துனியைப் போக்கு மிடத்தும் தலைவி கூறுவள். சிறந்த செய்கை - பிள்ளையொடு விளையாடுதல். அறம்புரி உள்ளம் - தலைவி தன் மகனைத் தழுவி விளையாடும் விளையாட்டு மகிழ்ச்சியாகிய இல்லறத்தினைக் காண விரும்பிய உள்ளம். புரிதல் - விரும்புதல். தலைவியிடம் நின்ற தோழியரைச் சும்மா இருக்கும்படி கையாற் பணித்துத் தலைவி பின் மறைந்து நின்றாளென்க. காட்டு: பெரும, விருந்தொடு கைதூவா என்னையும் உள்ளாய், பெருந்தெருவிற் கொண்டோடி ஞாயர் பயிற்றத் திருந்துபு நீகற்ற சொற்கள் யாங்கேட்ப மருந்தோவா நெஞ்சிற் கமிழ்தயின் றற்றாப் பெருந்தகாய் கூறு சில; எனப் புதல்வனை நோக்கிக் கூறி, தோழியை நோக்கி, எல்லிழாய், சேய்நின்று நாங்கொணர்ந்த பாணன் சிதைந்தாங்கே வாயோடி ஏனாதிப் பாடியம் என்றற்றா நோய்நாந் தணிக்கு மருந்தெனப் பாராட்ட ஓவா தடுத்தடுத்தத் தத்தாவென் பான்மாண வேய்மென்றோள் வேய்த்திறஞ் சேர்த்தலும் மற்றிவன் வாயுள்ளிப் போகா னரோ. (கலி - 81) தலைவன் தலைவி பின்னே மறைந்து நிற்ப, எதிராக நின்ற தலைவனைக் கண்டு பிள்ளை அத்தா அத்தா எனவும், தலைவன் பின்னிற்பதை யறியாத தலைவி தோழியை வினாயினாள். பின் தலைவனையறிந்து, உள்ளி யுழையே ஒருங்கு படைவிடக் கள்ளர் படர்தந் ததுபோலத் தாமெம்மை எள்ளுமார் வந்தாரே யீங்கு. (கலி - 81) எனத் தலைவி கூறுதல் காண்க. 12. தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும் - ‘தந்தையர் ஒப்பர் மக்கள்’ என்ற பழமொழிப்படி, தெருவிடத்து விளையாடுகின்ற தன் மகனைப் பார்த்து, ‘நீயும் உன் தந்தைபோல்தான் இருப்பாய்’ என்று பழித்து வெகுளுமிடத்தும். இது, குறிப்பாகத் தந்தையைப் பழித்தலேயாம். இன்றும், கணவனிடம் சினங்கொண்டிருக்கும் பெண்கள், குறும்பு செய்யும் தம்பிள்ளைகளை இவ்வாறு கூறுதல் காண்க. காட்டு: வனப்பெல்லாம் நுந்தையை ஒப்பினும் நுந்தை நிலைப்பாலு ளொத்த குறியென்வாய்க் கேட்டொத்தி, கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும் வென்றிமாட் டொத்தி பெருமமற் றொவ்வாதி ஒன்றினேம் யாமென் றுணர்ந்தாரை நுந்தைபோல் மென்றோள் நெகிழ விடல். (கலி - 86) இதனுள், வென்று களங் கொள்வதில் நுந்தையை ஒப்பாய் என்றும், பரத்தைமையில் நுந்தையை ஒவ்வாய் என்றும் தலைவன் செயலையே கூறிப் பழித்தமை காண்க. நிலைப்பால் - நிற்கின்ற கூறுகள். பால் - கூறு. அதாவது செயல்கள். 13. கொடியோர் நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ - கொடியோராய்த் தலைவன் புகழைக் கூறுதற்கு வாயிலாக வந்த பாணன் முதலியோரிடம் கூறும் சொல்லோடே, பகுதியின் நீங்கிய கொடுமை ஒடியாது சுடுமென தகுதிக் கண்ணும் - (தானே வாயிலாக வந்த தலைவனிடம்) பரத்தையிற் பிரிந்த கொடுமை தவிராது நெஞ்சைச் சுடுகின்ற தென அவன் தவற்றைக் கூறுதற்குத் தகுதியான இடத்தும் கூறுவள். கொடியோர் சொல்லொடு கீழ்வருவதைத் தொகுத் தென்க. கூறுதற்குத் தகுதியான இடம் - பாணன் முதலியோரால் தலைவன் பரத்தை வீட்டுள்ளான் என்பதை அறிந்து சின மூண்டிருக்கும் போது தலைவன் வந்த நேரம். பாணன் முதலியோர் வாயிலாக வரத் தலைவி வாயில் மறுக்கவே, பின் தலைவனே வர அப்பாணன் முதலியோர் கூற்றிலிருந்து அறிந்த தலைவன் செயலையும் கொண்டு கூறுதல். அதனால், இவை ஒரு துறையாயின. பகுதி - இல்லொழுக்கம் புறத்தொழுக்கம் என்னும் இரண்டனுள் இல்லொழுக்கம். தலைவனைப் பரத்தையரிடம் கூட்டுவதால் பாணன் முதலியோரைக் கொடியோர் என்றாள். காட்டு கண்ணிநீ கடிகொண்டார்க் கனைதொறும் யாமழப், பண்ணினாற் களிப்பிக்கும் பாணன்காட் டென்றானோ? பேணானென் றுடன்றவர் உகிர்செய்த வடுவினால் மேனாள்நின் தோள்சேர்ந்தார் நகைசேர்ந்த இதழினை (கலி. 72) இதனுள், ‘பரத்தை பல் அழுந்தின இதழை, பாணன் எனக்குக் காட்டென்று சொன்னானோ’ எனப் பாணன் வாயிலாயவாறு கூறினாள். ஏந்தெழில் மார்பா, எதிரல்ல நின்வாய்ச்சொல் பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை சாந்தழி வேரை சுவன்றாழ்த்த கண்ணியை யாங்குச்சென் றீங்குவந் தீத்தாய்? கேளினி, ஏந்தி, எதிரிதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய், குதிரை வழங்கிவரு வல். அறிந்தேன் குதிரைதான் பால்பிரியா வைங்கூந்தல் பன்மயிர்க் கொய்சுவல் மேல்விரித்தி யாத்த சிகழிகைச் செவ்வுளை, நீல மணிக்கடிகை வல்லிகை, யாப்பின்கீழ் ஞாலியல் மென்காதில் புல்லிகைச் சாமரை மத்திகைக் கண்ணுறை யாகக் கவின்பெற்ற உத்தி யொருகாழ்நூல் உத்திரியத் திண்பிடி நேர்மணி நேர்முக்காழ் பல்பல கண்டிகைத் தார்மணி பூண்ட தமனிய மேகலை, நூபுரப் புட்டி லடியோ டமைந்தியாத்த வார்பொலங் கிண்கிணி யார்ப்ப வியற்றிநீ காதலித் தூர்ந்தநின் காமக் குதிரையை ஆய்சுதை மாடத் தணிநிலா முற்றத்துள் ஆதிக் கொளீஇய அசையினை யாகுவை வாதுவன் வாழிய நீ. (கலி - 96) இதனுள், நீ எங்கு சென்று இவ் வலங் கோலத்துடன் இங்கு வந்தாய் எனத் தலைவி கேட்ப, தலைவன் குதிரையேறி வந்ததனால் இவ்வாறாயிற்றென, தலைவி, நீ ஏறிய குதிரையை நான் அறிவேன் என, பரத்தைக்கும் குதிரைக்கு முள்ளவற்றை ஒப்பிட்டுக்கூறி, அது, நின் காதற் பரத்தையல்லவோ என ஊடிக்கூறியவாறு காண்க, வாதுவன் - குதிரைப் பாகன். 14. கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி - தலைவன் செய்த கொடுமையைத் தலைவி பொறுத்தலை வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி - தன் (தலைவி) காலில் வீழ்ந்த தலைவனை மேலும் வெகுண்டு, காதல் எங்கையர் காணின் நன்று என - பரத்தையர் இதைக் கண்டால் நன்றாயிருக்கும் என்று கூறி, மாதர் சான்ற வகையின் கண்ணும் - காதல் மிகுந்து வேறுபட்ட விடத்தும் கூறுவள். வேறுபடுதல் - தான் முன்னிருந்த நிலையில் வேறுபடுதல், அதாவது, ஊடல் தணிந்து கூடல் விருப்பந் தோன்றல். ‘நன்று என’ என்பது - இதை நன்றெனக் கொள்வார் என்பதாம். பொறுத்தலை வேண்டி அடிமேல் வீழ்ந்தானென்க. கொடுமையொழுக்கம் - பரத்தையிற் பிரிவு. காட்டு நல்லாய், பொய்யெல்லா மேற்றித் தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய் பிழைத்தேன் அருளினி; அருளுகம் யாம்யாரேம் எல்லா தெருள அளித்துநீ பண்ணிய பூழெல்லாம் இன்னும் விளித்துநின் பாணனொ டாடி யளித்தி, விடலைநீ நீத்தலின் நோய்பெரி தேய்க்கு நடலைப்பட் டெல்லாநின் பூழ். (கலி - 95) இது, பரத்தையைப் பூழாகக் கொண்டு கூறியது. பூழ் - காடைக்குருவி. இதனுள்,‘அருளினி’ என அடிமேல் வீழ்ந்த வாறும், ‘அருளுகம் யாம்யார்’ எனக் காதல் ஒருவாறு அமைந்த வாறும், ‘விளித்து அளித்தி’ என, இப்பணிவை நின்பெண்டிர் கொள்வர் எனவும் கூறியவாறு காண்க. 15. தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளிய வழியும் - பரத்தையர் விரும்பி யணிந்த நல்லணிகளுடன் வந்த புதல்வனைச் சினந்து கூறுமிடத்தும். அவ்வணிகளின் பரத்தையைச் சினக்குமென்க. அதாவது, தலைவன் தன் மகனையும் பரத்தையர் சேரிக்குக் கூட்டிச் செல்ல, அவர் அணியணிந்தன ரென்று சினத்தலாம். பரத்தைமை - அயன்மை. தன்னை அறியாது கூட்டிச் சென்றதால், ‘மாயப்பரத்தை’ என்றாள். அல்லது, பொய்யாகிய பரத்தை என்றுமாம். பொய்யாகிய பரத்தை - பரத்தையரால் அணியப்பட்ட அணியுடன் வந்தமை. தாயர் - பரத்தையர். கண்ணிய - விரும்பிய. இவள், காதற் பரத்தை. காட்டு சிறுபட்டி, ஏதிலார் கையெம்மை எள்ளுபு நீதொட்ட மோதிரம் யாவோ யாங்காண்கு; முந்தைய கண்டும் எழுகல்லா தென்முன்னர் வெந்தபுண் வேலெறிந் தற்றா லிஃதொன்று தந்தை யிறைத்தொடி மற்றிவன் தன்கைக்கண் தந்தாரியா ரெல்லாஅ இது. (கலி - 84) இதனுள், மகனைப் பார்த்து, ‘அயலார் மோதிரத்தைக் காட்டு, தந்தையின் முன்கைக்காப்பு உனக்குத் தந்தார் யார்?’ என மகனைக் கேட்டல் காண்க. 16. தன்வயின் சிறைப்பினும் - தன் புதல்வனைத் தலை வனிடமும், பரத்தையிடமும் செல்லாமல் தன்னிடமே நிறுத்து மிடத்தும்; அவன் வயின் பிரிப்பினும் - மைந்தனைத் தன்னிடத்தி னின்றும் பிரித்துத் தலைவனிடம் சேர்க்குமிடத்தும்; இன்னாத் தொல்சூள் எடுத்தற் கண்ணும் - தனக்குக் கேடுபயக்கும் சூளைத் தலைவன் கூறுமிடத்தும் தலைவி கூறுவாள். சூள் - மகன்மேல் ஆணையிடல். புதல்வன் மேல் சூளுறுதலின், ‘இன்னாச்சூள்’ என்றும், களவுபோலச் சூளுறுதலின், ‘தொல்சூள்’ என்றும் கூறினார். சிறைத்தல் - சிறை செய்தல், தடுத்துக் கொள்ளுதல். காட்டு 1. அணியொடு வந்தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி மணிபுரை செவ்வாய்நின் மார்பகலம் நனைப்பதால் தோய்ந்தாரை யறிகுவேன் யானெனக் கமழுநின் சாந்தினால் குறிகொண்டாள் சாய்குவள் அல்லளோ. (கலி - 79) இது, தலைவன்பால் விடாது புதல்வனைச் சிறைத்தது. 2. வருந்தியாம் நோய்கூர நுந்தையை என்றும் பருந்தெறிந் தற்றாகக் கொள்ளுங்கொண் டாங்கே தொடியும் உகிரும் படையாக நுந்தை கடியுடை மார்பில் சிறுகண்ணும் உட்காள் வடுவுங் குறித்தாங்கே செய்யும், விடுவினி ஐயமில் லாதவ ரில்லொழிய எம்போலக் கையா றுடையவ ரில்லல்லால் செல்லல். (கலி - 82) இது, பரத்தையர்பால் விடாது புதல்வனைச் சிறைத்தது. 3. வேற்றுமை என்கண்ணே ஓராதி தீதின்மை தேற்றங்கண் டீயாய் தெளிக்கு; (எனத் தலைவன் கூறத் தலைவி) இனித் தேற்றேம் யாம், தேர்மயங்கி வந்த தெரிகோதை யந்நல்லார் தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி நீயுறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு. (கலி - 88) இப்பொய்ச்சூளால் வருங்கேடு என்னைச் சாரும் எனத் தலைவி மறுத்தமை காண்க. 17. காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் - காமக்கிழத்தியரின் இளமையை வியந்து தலைவனைக் குறைகூறுமிடத்தும். நலத்தைப் பாராட்டி என்க. நலம் - இளமை நலம். தீமையின் முடித்தல் - தலைவன்மேல் குற்றத்தை ஏற்றிக் கூறுதல். அவள் இளமையால் தன்னை விரும்பானெனக் குற்ற மேற்றிக் கூறலென்க. காட்டு மடவள் அம்மநீ இனிக்கொண் டோளே தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் பெருநலந் தருக்கும என்ப விரிமலர்த் தாதுண் வண்டினும் பலர்நீ ஓதி யொண்ணுதல் பசப்பித் தோரே. (ஐங் - 67) இதனுள், இப்போது கொண்ட பரத்தை தன்னிளமையால் செருக்குவாள் என, அவள் நலம் பாராட்டியவாறும், நீ பசப்பித்தோர் வண்டு தாதுண்ட மலரினும் பலர் எனத் தலைவனைத் தீமையின் முடித்தவாறுங் காண்க. 18. கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை - பிரிவுகளில் தலைவன்கண் நிகழும் கொடுமை யொழுக்கங்களில் தோழி கூறுகின்றவற்றைக் கேட்டவழி, வடுவறு சிறப்பில் கற்பில் திரியாமை - குற்றமற்ற சிறப்புப் பொருந்திய பெண்டன்மையிற் றவறாது, 1. காய்தலும் - தோழியைச் சினத்தலும், 2. உவத்தலும் - மகிழ்தலும், 3. பிரித்தலும் - அவளைப் பிரித்தலும்; பிரித்தல் - தோழியைத் தன்னின் வேறாக்குதல். 4. பெட்டலும் நிலையினும் - பின்பு அவள் சொல்லைக் கேட்டற்கு விரும்புதலுமாகிய இடத்தும், ஆவயின் வரூஉம் நிலையினும் - அத்தோழியிடத்துத் தலைவனைக் காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலுமாய் வருமிடத்தும், பல்வேறு நிலையினும் - அதன் சார்பாய் வரும் வேறுபல இடங்களிலும் தலைவி கூறுவள். பெட்பு - விருப்பம். தோழியைக் காய்தல் முதலிய நிலையினும், தோழியிடத்துத் தலைவனைக் காய்தல் முதலிய நிலையினும், பல்வேறு நிலையினும் என, ‘நிலையினும்’ என்பதை ஏனை ஈரிடத்தும் கூட்டுக. பரத்தையிற் பிரிவு முதலியவற்றில் தலைவன் தவற்றைத் தோழி கூறக்கேட்ட தலைவி, பெண்டன்மையில் தவறாது தோழியைக் காய்ந்தும் உவந்தும் பிரித்தும் பெட்டும் கூறுவள், தோழியிடத்துத் தலைவனைக் காய்ந்தும் உவந்தும் பிரித்தும் பெட்டும் கூறுவள், பல்வேறு இடங்களிலும் கூறுவள் என்பதாம். தோழியை தோழியிடம் தலைவனை 1. காய்தல் 1. காய்தல் 2. உவத்தல் 2. உவத்தல் 3. பிரித்தல் 3. பிரித்தல் 4. பெட்டல் 4. பெட்டல் காட்டு 1. இதுமற் றெவனோ தோழி, துனியிடை இன்னர் என்னும் இன்னாக் கிளவி இருமருப் பெருமை ஈன்றணிக் காரான் உழவன் யாத்த குழவியின் அகலாது பால்பெய் பைம்பயிர் ஆரும் ஊரன் திருமனைப் பல்கடம் பூண்ட பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே. (குறுந் - 181) இது, தோழி இன்னாக் கிளவி கூறியதனை, இல்லறத்திலிருந்து பருவஞ் சென்ற நம்மிடம் இப்போது கூறுவதனால் ஆவதென் னெனக் காய்ந்து கூறியது. 2. வெள்ளில் வல்சி வேற்றுநாட் டாரிடைச் சேறும் நாமெனச் சொல்லச் சேயிழை நன்றே புரிந்தோய் நன்றுசெய் தனையே செயல்படு மனத்தர் செய்பொருட் ககல்வ ராடவர் அதுவதன் பண்பே. (நற் - 24) இது, நன்று செய்தனை எனத் தலைவி உவந்து கூறியது. 3. வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக் கானங் காரெனக் கூறினும் யானோ தேறேனவர் பொய்வழங் கலரே. (குறுந் - 21) இது, தோழி, கானம் காரெனக் கூறவும் வாரார் என்ற வழி, அவர் பொய்வழங்கலர். அது கூறினும் யானோ தெளியேன் எனத் தோழியைப் பிரித்தது. ‘யானோ’ என்னும் பிரிநிலை ஓகாரம், நீதேறுவாய்; நான் தேறேன் எனத் தோழியினின்றும் தலைவியைப் பிரித்தது. தேறுதல் - தெளிதல். தோழி கூற்றை மறுத்தல் காண்க. 4. யாங்கறிந் தனர்கொல் தோழி, பாம்பின் உரிநிமிர்ந் தன்ன உருப்பவி ரமயத் திரைவேட் டெழுந்த சேவல் உள்ளிப் பொறிமயி ரெருத்திற் குறுநடைப் பேடை பொரிகாய்க் கள்ளி விரிகாய் அங்கவட்டுத் தயங்க விருந்து புலம்பக் கூஉம் அருஞ்சுர வைப்பிற் கானம் பிரிந்துசே ணுறைதல் வல்லு வோரே. (குறுந் - 154) இது, ‘பிரிந்து சேணுறைதல் வல்லுவோர், எனத் தோழி தலைவன் கொடுமை கூறியவழி, அங்ஙனமாயின் அவர் நம்மைப் பிரியும் வன்மை ‘யாங்கறிந்தனர்கொல்’ எனத் தலைவி தோழியை வினவுதலின், பின்னுங் கேட்டற்குப் பெட்டாளாம். பெட்டல் - விரும்பல். இனித் தோழியிடத்துத் தலைவனைக் காய்தல் முதலிய நான்கும் வருமாறு: 1. நன்னலந் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர் கழியினும் உரையல், அவர்நமக் கன்னையும் அத்தனும் அல்லரோ தோழி, புலவிய தெவனோ அன்பிலங் கடையே. (குறுந் - 93) இது, ‘அன்பில்லாத போது புலப்பதனால் பயன் என்ன? உயிர்போயினும் சரி உரையல்’ எனத் தலைவனைக் காய்ந்தாள். 2. கொடிப்பூ வேழந் தீண்டி யயல வடுக்கொள் மாஅத்து வண்டளிர் நுடங்கும் அணித்துறை யூரன் மார்பே பனித்துயில் செய்யும் இன்சா யற்கே. (ஐங் - 14) இது, மார்பு பனித்துயில் செய்யும் என உவந்தது. 3. புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ விசும்பாடு குருகிற் றோன்று மூரன் புதுவோர் மேவலன் ஆகலின் வறிதா கின்றென் மடங்கெழு நெஞ்சே. (ஐங் - 17) இது, பரத்தையரை விரும்புவதால், அவனை என் நெஞ்சைவிட்டு நீக்கினேன் எனப் பிரித்தமை காண்க. 4. நாமவர் திருந்தெயி றுண்ணவும், அவர்நம தேந்தெழி லாகத்துச் சாய்ந்துகண் படுப்பவும் கண்சுடு பரத்தையின் வந்தோற் கண்டும் ஊடுதல் பெருந்திரு வுறுகெனப் பீடுபெற லருமையின் முயங்கி யோனே. இது, பெட்டது. பல்வேறு நிலையாவன 1. செலவழுங்கக் கூறல் 8. பருவங்கண் டழிந்து கூறல் 2. செலவுக்குறிப் பறிந்து கூறல் 9. பொழுது கண்டு மகிழ்தல் 3. தூதுவிடக் கருதிக் கூறல் 10. வன்புறை எதிரழிந்து கூறல் 4. நெஞ்சுவிடு தூது 11. தலைவன் வரவை விரும்பிக் 5. பாண்விடு தூது கூறல் 6. தூது கண்டு கூறல் 12. குழலோசை கேட்டுக் கூறல் 7. வழியிடைப் புட்களை 13. புதல்வனை நீங்கியவழிக் நொந்து கூறல் கூறல் 14. அவனைக் கண்டே னெனல் காட்டு : 1. அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து பொருள்வயிற் பிரிவோர் உரவோ ராயின் உரவோ ருரவோ ராக மடவ ராக மடந்தை நாமே. (குறுந் - 20) இது, ‘அருளு மன்பு நீங்கிப் பிரிந்து செல்வோர் அறிஞராயின் ஆகுக. நாம் அறிவிலிகளாக’ என, அவ்வாறு செல்லல் தகாதெனச் செலவழுங்கக் கூறினாள். அழுங்கல் - தவிர்தல். உரவோர் - அறிஞர். 2. நுண்ணெழில் மாமைச் சுணங்கணி யாகந்தம் கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையரென் ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவர் எண்ணுவ தெவன்கொல் அறியேன் என்னும் (கலி - 4) இது, செலவுக் குறிப்பறிந்து தலைவி தோழிக்குக் கூறியதைத் தோழி கொண்டு கூறியது. நோக்குதலான் நீவுதலான் பிரிவரென்பது. 3. பலர்புகழ் சிறப்பினுங் குரிசில் உள்ளிச் செலவுநீ நயந்தனை யாயின், மன்ற இன்னா அரும்படர் எம்வயிற் செய்த பொய்வ லாளர் போலக் கைவல் பாணவெம் மறவா தீமே. (ஐங் - 473) இது,‘பாண, நீ செலவை விரும்பினால் எம்மை மறவா திருப்பாய்’ எனப் பாணனைத் தூதுவிடக் கருதிக் கூறியது. 4. சூழ்கம் வம்மோ தோழிபாழ் பட்டுப் பைதற வெந்த பாலை வெங்காட் டருஞ்சுர மிறந்தோர் தேஎத்துச் சென்ற நெஞ்சம் ஈட்டிய பொருளே. (ஐங் - 317) இது, நெஞ்சினைத் தூதுவிட்டுக் கூறியது. 5. மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர் செய்யரண் சிதைத்த செருமிகு தானையொடு கதழ்பரி நெடுந்தேர் அதர்படக் கடைஇச் சென்றவர்த் தருகுவல் என்னும் நன்றா லம்ம பாணன தறிவே. (ஐங் - 474) இது, பாணனைத் தூது விட்டுக் கூறியது. 6. புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர் வரையிழி யருவியிற் றோன்று நாடன் தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின் நயந்தன்று வாழி தோழி, நாமும் நெய்பெய் தீயி னெதிர்கொண்டு தாமணந் தனையமென விடுகந் தூதே. (குறுந் - 106) இது, தூது கண்டு கூறியது. தலைவன் விரைவில் வருவேனெனத் தூதுவிட, அது கண்டு நாமும் தூதுவிடுவேமென்றது. 7. ஆம்பற் பூவின் சாம்ப லன்ன கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ முன்றில் உணங்கல் மாந்தி மன்றத் தெருவின் நுண்டாது குடைவன ஆடி இல்லிறைப் பள்ளிதம் பிள்ளையொடு வதியும் புன்கண் மாலையும் புலம்பும் இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே. (குறுந் - 46) இது, அவர் சென்ற நாட்டு இவை இன்றோ என, வழியிடைப் புட்களை நொந்து கூறியது. இவை போன்ற குருவிகள் அவர் செல்லும் வழியில் இருந்து அவர் கண்டால் நம்மை எண்ணி வருவார் என்பது. 8. வாரா ராயினும் வரினும் அவர்நமக் கியாரா கியரோ தோழி, நீர நீலப் பைம்போ துளரிப் புதல பீலி யொண்பொறிக் கருவிளை யாட்டி நுண்முள் ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த வண்ணத் துய்மலர் உதிரத் தண்ணென் றின்னா தெறிவரும் வாடையொ டென்னா யினள்கொல் என்னா ராதே (குறுந் - 110) இது, வாடை வந்தும் அவர் வரவில்லையெனப் பருவங் கண்டு அழிந்து கூறியது. அழிந்து - நெஞ்சழிந்து - வருந்தி வாடை - வடகாற்று. 9. முதைப்புனங் கொன்ற ஆர்கலி யுழவர் விதைக்குறு வட்டி போதொடு பொதுளப் பொழுதோ தான்வந் தன்றே, மெழுகான் றூதலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி மரம்பயி லிறும்பி னார்ப்பச் சுரனிழிபு மாலை நனிவிருந் தயர்மார் தேர்வரு மென்முன் உரைவா ராதே. (குறுந் - 155) இது, பொழுதொடு தலைவன் வந்தானெனப் பொழுது கண்டு மகிழ்ந்து கூறியது. மணி ஆர்ப்பத் தேர்வருமென்க. இறும்பு - சிறுகாடு. 10. அம்ம வாழி தோழி, சிறியிலை நெல்லி நீடிய கல்காய் கடத்திடைப் பேதை நெஞ்சம் பின்படச் சென்றோர் கல்லினும் வலியர் மன்ற பல்லித ழுண்கண் அழப்பிரிந் தோரே. (ஐங் - 334) இது, வன்புறை எதிரழிந்து கூறியது. வன்புறை - வற்புறுத்தல். எதிர் அழிந்து கூறல் - எதிர்மறுத்துக் கூறல். ‘கல்லினும் வலியர்’ என எதிரழிதல் காண்க. வற்புறுத்துவாள் தோழி. 11. நீகண் டனையோ கண்டார்க்கேட் டனையோ ஒன்று தெரிய நசையின மொழிமோ, வெண்கோட் டியானை சோணை படியும் பொன்மலி பாடலி பெறீஇயர் யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. (குறுந் - 75) இது, தலைவன் வரவை விரும்பிக் கூறியது. 12. இம்மையாற் செய்ததை யிம்மையே யாம்போலும் உம்மையாம் என்பவர் ஓரார்காண் - நம்மை எளிய ரெனநினைந்த இன்குழலா ரேடி தெளியச் சுடப்பட்ட வாறு. (திணை. நூற் - 123) இது, குழலோசை கேட்டுத் தோழிக்குக் கூறியது. 13. உடலினே னல்லேன் பொய்யா துரைமோ யாரவன் மகிழ்ந தானே தேரொடு தளர்நடைப் புதல்வனை யுள்ளிநின் வளமனை வருதலும் வௌவி யோளோ. (ஐங் - 66) இது, தலைவன் புதல்வனை நீங்கியவழிக் கூறியது. நீ விரும்பியவள் நம் தளர்நடைப் புதல்வனைப் பார்க்க நம் வீட்டுக்கு வருவள். ஆகவே, நீ புதல்வனை விட்டுப் போதலொழி என்பதாம். கூட்டிக் கொண்டுபோ என்பது. 14. கண்டனெ மல்லமோ மகிழ்நநின் பெண்டே பலரொடு பெருந்துறை மலரொடு வந்த தண்புனல் வண்டல் உய்த்தென உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே. (ஐங் - 69) இது, நின்னால் காதலிக்கப்பட்டாளை நான் கண்டேன் என்றது. இன்னும் இவ்விடத்திற்கு வேறுபட வருவனவெல்லாங் கொள்க. தலைவன் பிரிவு பற்றியே புலவி ஊடல் உணர்வுகள் நிகழ்வன வாகையால், பிரிவிடத் தாகிய இக்கிளவிகள் இங்குக் கூறப்பட்டன. 18, 19 ஆகிய இரு துறைகளும் பிரிவிற்குங் கொள்க. 19. வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ கிழவோள் செப்பல் கிழவது என்ப - வாயில்களிடம் கூறுதலோடே தொகுத்து இப்பத்தொன்பதும் தலைவிக் குரிமையுடைத் தென்று கூறுவர் புலவர் என்றவாறு. வாயில்களாவார் - பாணன் முதலிய பன்னிருவர் (பொது 28). ‘வகை’ என்றதனால், ஆற்றாமையும், புதல்வனும், வண்ணாத்தியும் பிறவுங் கொள்க. அது, 1. வாயிற்குக் கூறல் 2. வாயின் மறுத்தல் 3. வாயில் நேர்தல் என மூவகைப்படும். நேர்தல் - உடன்படல். காட்டு 1. காண்மதி பாணநீ யுரைத்தற் குரியை துறைகெழு கொண்கன் பிரிந்தென இறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே. (ஐங் - 140) இது, வாயிலுள் பாணற்குக் கூறியது. வளை இறை நீங்கிய தெனத் தனதாற்றாமையைக் கூறினாள். இறை - முன்கை. 2. நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு மாசுபட் டன்றே கலிங்கமுந் தோளும் திதலை மார்பகந் தீம்பால் பிலிற்றப் புதல்வற் புல்லிப் புனிறுநா றும்மே வாலிழை மகளிர் சேரித் தோன்றும் தேரோற் கொத்தன மல்லேம், அதனால், கொண்டுசெல் பாணநின் தண்டுறை யூரனை. (நற் - 380) இது, பாணற்கு வாயில் மறுத்தது. 3. அன்னாய் இவனோ ரிளமா ணாக்கன் தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ இரந்தூண் நிரம்பா மேனியொடு விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே. (குறுந் - 33) இது, பாணன் சொல்வன்மைக்குத் தோற்று வாயில் நேர்ந்த தலைவி தோழிக்குக் கூறியது. இம் மூவகையினும் மற்ற வாயில்கட்கு வருவன கொள்க. 3. தோழி : 7 : 5 - 18 5. அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை அடக்கக் காட்டுதற் பொருளின் கண்ணும் 6. பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி இழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும் 7. வணங்கியல் மொழியான் வணங்கற் கண்ணும் 8. புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும் 9. சிறந்த புதல்வனை நேராது புலம்பினும் 10. மாணலந் தாவென வகுத்தற் கண்ணும் 11. பேணா வொழுக்கம் நாணிய பொருளினும் 12. சூள்நயத் திறத்தால் சோர்வுகண் டழியினும் 13. பெரியோ ரொழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை யில்லாப் பிழைப்பினும் 14. அவ்வயின், உறுதகையில்லாப் புலவியுள் மூழ்கிய கிழவோள்பால் நின்று கெடுத்தற் கண்ணும் 15. உணர்ப்புவயின் வாரா ஊடலுற் றோள்வயின் உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும் 16. அருமைக் காலத்துப் பெருமை காட்டிய எண்மைக் காலத் திரக்கத் தானும் 17. பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை எதிரும் 18. நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும் இ - ள் : 5. அடங்கா ஒழுக்கத்து அவன் வயின் அழிந்தோளை - தலைவனது புறத் தொழுக்கம் காரணமாக அவனை நொந்த தலைவியை, அடங்கக் காட்டுதல் பொருளின் கண்ணும் - அவன் அத்தகையன் அல்லன் என்று கூறித் தேற்று மிடத்தும் தோழி கூறுவள். காட்டு செந்நெற் செறுவிற் கதிர்கொண்டு கள்வன் தண்ணக மண்ணளைச் செல்லும் ஊரற் கெல்வளை நெகிழச் சாஅய் அல்லல் உழப்ப தெவன்கொல் அன்னாய். (ஐங் - 27) நண்டு நெற்கதிர் கொண்டு வளைக்குட் செல்வதுபோலப் பொருள் கொண்டு வருவார் என ஆற்றுவித்தமை காண்க. கள்வன் - நண்டு. 6. பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற் கண்ணும் - பரத்தையர் மனைக்கண் தங்கி வந்த தலைவனைக் குறைகூறி, அதனானே தலைவியது ஊடல் தணிக்குமிடத்தும். இப்போது தலைவன் புறமனையில் இருப்பன். இழைத்தல் - சொல்லல். தலைவனைக் குறைகூறு வதனால் தலைவியது ஊடல் தணித்தல். ஆக்கிக் கொடுத்தல் - ஊடல் தணித்துக் கூட்டல். காட்டு கேட்டிசின் வாழியோ மகிழ்ந, ஆற்றுற மையல் நெஞ்சிற் கெவ்வந் தீர நினக்குமருந் தாகிய யானினி இவட்குமருந் தன்மை நோமென் நெஞ்சே . (ஐங் - 59) எனக் காண்க. மருந்து அன்மை குறித்து நோம் என்க. மருந்து - ஊடல் தணித்தல். 7. வணங்கு இயல் மொழியான் வணங்கற் கண்ணும் - பரத்தையிற் பிரிவு கூடாதெனப் பணிவான மொழியால் பணிந்து கூறுமிடத்தும் கூறுவள். காட்டு உண்டுறைப் பொய்கை வராஅ லினமிரியும் தண்டுறை யூர, தகுவகொல் - ஒண்டொடியைப் பாராய் மனைத்துறந் தச்சேரி செல்வதனை ஊராண்மை யாக்கிக் கொளல். (ஐந். எழு - 54) ‘செல்வதனை ஆண்மையாகக் கொளல் தகுவகொல்’ என, வணங்கியல் மொழியால் கூறியவாறு காண்க. 8. புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும் - தலைவன் பரத்தையரோடு விளையாடினது தனக்குத் தெரியுமென்று கூறுமிடத்தும். புல்லிய புகற்சி - பொருந்திய மகிழ்ச்சி. மகிழ்ந்து விளையாடினது தெரியும் என்பதாம். யாறும் குளமும் காவும் ஆடி மகிழ்தல். காட்டு பகுவாய் வராஅல் பல்வரி யிரும்போத்துக் கொடுவா யிரும்பின் கோளிரை துற்றித் தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது கயிறடு கதச்சேப் போல மதமிக்கு நாட்கய முழக்கும் பூக்கே ழூர, வருபுனல் வையை வார்மண லகன்றுறைத் திருமரு தோங்கிய விரிமலர்க் காவின் நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு வதுவை யயர்ந்தனை யென்ப அலரே. (அகம் - 36) இதனுள், நீர் பரத்தையரோடு நீராடினீர் என அலர் எழுந்தது எனக் கூறுதல் காண்க. வதுவை அயர்தல் - நீராடல். 9. சிறந்த புதல்வனை நேராது புலம்பினும் - தலைவன் புதல்வனை வாயிலாகக் கொண்டு வரத் தலைவி அதை மறுக்கத் தலைவன் வருந்து மிடத்தும் தலைவிக்குக் கூறுவள். புலம்பல் - தனிமையுற்று வருந்தல். காட்டு மணித்தகைச் செவ்வாய் மழலையங் கிளவி புலர்த்தகைச் சாந்தம் புலர்தொறும் நனைப்பக் காணா யாகலோ கொடிதே, கடிமனைச் சேணிகந் தொதுங்கும் மாணிழை யரிவை, நீயிவண் நேரா வாயிற்கு நாணும் தந்தையொடு வருவான் போல மைந்தனொடு புகுந்த மகிழ்நன் மார்பே. எனக் காண்க. நனைப்பப் புகுந்த மகிழ்நன் மார்பு காணாயாகலே கொடிது என்க. 10. மாண் நலம் தா என வகுத்தற் கண்ணும் - இவள் இழந்த அழகு நலத்தைத் தந்து விட்டுச் செல் எனக் கூறுமிடத்தும். ‘நீ பிரியின் இழப்பாள்’ என எதிர்காலத்தில் கூறவேண்டியதைத் துணிவு பற்றி, ‘இழந்த’ என இறந்த காலத்தாற் கூறினாள். காட்டு யாரை யெலுவ யாரே நீயெமக் கியாரையு மல்லை நொதும லாளனை அனைத்தாற் கொண்கவெம் மிடையே நினைப்பின் ஓங்கற் புணரி பாய்ந்தாடு மகளிர் அணைந்திடு பல்பூ மரீஇ யாஅங் காபுலம் புகுதரு பேரிசை மாலைக் கடல்கெழும் அரந்தை யன்னவெம் வேட்டனை யல்லையால் நலந்தந்து சென்மே. (நற் - 395) எனக் காண்க. 11. பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும் - பரத்தை தலைவியை மதியாமைக்குத் தலைவி நாணியதைத் தலைவற்குத் தெரிவிக்குமிடத்தும்; தலைவன் மதியாமைக்குத் தலைவி நாணியதைத் தலைவற்குக் கூறுமிடத்தும். இரட்டுற மொழிதலாகக் கொள்க. காட்டு 1. பொய்கை நீர்நாய்ப் புலவுநா றிரும்போத்து வாளை நாளிரை தேரு மூர, நாணினென் பெரும யானே, மறையினள் மெல்ல வந்து நல்ல கூறி மையீ ரோதி மடவோய், யானுநின் சேரி யேனே அயலி லாட்டியேன் நுங்கை யாகுவென் நினக்கெனத் தன்கைத் தொடுமணி மெல்விரல் தண்ணெனத் தைவர நுதலுங் கூந்தலு நீவிப் பகல்வந்து பெயர்த்த வாணுதல் கண்டே. (அகம் - 386) இதனுள், யான் உனக்கு நுங்கை (தங்கை) யாவே னெனப் பரத்தை நுதலும் கூந்தலும் நீவிய பேணா வொழுக்கத்திற்குத் தலைவி நாணியது கண்டு நான் நாணினேன் எனத் தோழி கூறுதல் காண்க. 2. யாயா கியளே மாஅ யோளே மடைமாண் செப்பிற் றமிய வைகிய பொய்யாப் பூவின் மெய்சா யினளே; தண்ணந் துறைவன் கொடுமை நம்முள் நாணிக் கரப்பா டும்மே. (குறுந் - 9) இது, தலைவனது பேணாவொழுக்கத்திற்குத் தலைவி நாணினாளெனத் தோழி தலைவனுக்கு முன்னிலைப் புறமொழி யாகக் கூறியது. பூக்குடலையிலுள்ள சூடாப்பூப் போலப் பயன் படாது வருந்தினாளெனத் தலைவன் பேணாவொழுக்கங் குறித்தவாறு காண்க. 12. நயத்திறத்தால் சூள் சோர்வு கண்டு அழியினும் - பரத்தையை இனி நாடேன் என நயமாகப் பல திறப்படக் கூறிய சூள் பொய்த்தல் கண்டு தலைவி வருந்துவதைத் தலைவற்குக் கூறுமிடத்தும். நயம் - இனிமை. திறம் - கூறுபாடு. சூள் - ஆணை. பரத்தையிற் பிரியே னெனக் கூறிய சூள் தவறிப் பரத்தையிற் பிரிந்ததற்குத் தலைவி வருந்தியதைக் கூறுமென்பதாம். காட்டு: பகல்கொள் விளக்கோ டிராநா ளறியா வென்வேற் சோழர் ஆமூ ரன்னவிவள் நலம்பெறு சுடர்நுதல் தேம்பல் எவன்பயன் செய்யுநீ தேற்றிய மொழியே. (ஐங் - 56) இதனுள், ‘இவள் நுதல் தேம்பும்படி நீ தேற்றிய மொழி’ எனவே, சூள் சோர்வு கண்டு அழிந்தாளென்பதை உணர்ந்தும் இப்பொய்ச் சூள் நினக்கும் என்ன பயனைத் தருமெனத் தோழி தலைவனை நோக்கிக் கூறியவாறு காண்க. தேற்றிய மொழி - நின்னிற் பிரியே னெனச் சூளுரைத்த சொல். 13. பெரியோர் பெறுதகை இல் ஆ ஒழுக்கம் பெரிது எனக் கிளந்து பிழைப்பினும் - நன்மக்கள் பெறும் தகைமையை இல்லற மாகக் கொண்டு ஒழுகும் ஒழுக்கம் பெரியதாய் இருக்கு மென்று சொல்லித் தோழி தலைவனை வழிபடுதலைத் தப்பினும் கூறுவள். பெறுதகை - அடையுந் தகைமை. பெறுதகை - வினைத் தொகை. தகை - குணம். பெரியோர் என்றது, நன்கு இல்லறம் நடத்துவோரை. நன்மக்கள் நல்லொழுக்கத்தையே இல்லற வொழுக்கமாகக் கொண்டு ஒழுகுவரென்பதாம். அதாவது, நன்மக்கள் புறத்தொழுக்க மில்லாக் குணத்துடன் இல்லறம் நடத்தலே மிகுதியாயிருக்கத் தாங்கள் அதற்கு மாறாக நடத்தல் தகாதெனக் கூறுதலாம். இல் ஆ - இல்லறமாக. ஆ - ஆக. இல் - ஆகுபெயர். காட்டு வராஅ லருந்திய சிறுசிரல் மருதின் தாழ்சினை யுறங்குந் தண்டுறை யூர, விழையா வுள்ளம் விழைவ தாயினும் என்றும், கேட்டவை தோட்டி யாக மீட்டாங் கறனும் பொருளும் வழாமை நாடித் தற்றக வுடைமை நோக்கி மற்றதன் பின்னா கும்மே முன்னியது முடித்தல் அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால், அரிய பெரியோர்த் தேருங் காலை நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன பொய்யொடு மிடைந்தவை தோன்றின் மெய்யாண் டுளதோவிவ் வுலகத் தானே. (அகம் - 286) இதனுள், ‘அறன்’ என்றது - இல்லறத்தை. ‘தன் தகவுடைமை நோக்கி’ என்றது - தன்னால் அவ்வறனும் பொருளும் செய்யும் தகுதியை நோக்கி என்றவாறு. ‘முன்னியது’ என்றது - புறத் தொழுக்கத்தை. ‘பெரியோர் ஒழுக்கம் அனைய’ என்றது - பெரியோர் ஒழுக்கம் பெரிய என்பது. தற்றக - தன்தக. இது, முன்னர் நிகழ்ந்த பொய்ச் சூள் பற்றி, நும் போன்ற வரிடத்தும் இன்ன பொய்ச் சூள் பிறக்குமாயின் இவ்வுலகத்துப் பொய்ச் சூள் இனி இன்றாம். அதனால், பெரியோரினுடைய ஒழுக்கத்தை ஆராயுங்கால் அரியவாயிருக்கின்றன எனத் தலைவனை நோக்கித் தோழி கூறுதலின் வழிபாடு தப்பினாளாயிற்று. 14. அவ்வயின் உறுதகை இல்லாப் புலவியுள் மூழ்கிய கிழவோள் பால் நின்று கெடுத்தற் கண்ணும் - அங்ஙனம் தலைவன் சொற்பிறழ்ந்த காரணத்தால், அவன் சென்று தலைவியை அடைய முடியாது புலவி கொண்ட தலைவிபால் சென்று அவள் புலவியைத் தீர்க்குமிடத்தும் கூறுவள். இது புலவி தீர்த்தல். காட்டு மானோக்கி நீயழ நீத்தவன் ஆனாது நாணிலன் ஆயின் நலிதந் தவன்வயின் ஊடுதல் என்னோ வினி. (கலி - 87) ‘அவன் ஓயாது நாணின்றி வந்து குறையிரக்க, நீ அவன் வாட ஊடுதல் என்னோ எனப் புலவி தீர்த்தல் காண்க. உப்பமைந் தற்றாற் புலவி, அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். (குறள்) இதுவுமது. 15. உணர்ப்பு வயின் வாரா ஊடல் உற்றோள் வயின் - தலைவன் உணர்த்தவுணராது ஊடலுற்ற தலைவியிடத்து, உணர்த்தல் வேண்டிய கிழவோன் பால் நின்று, ஊடல் தீர்த்தலை விரும்பிய தலைவனோடு சேர்ந்து, தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக் கண்ணும் - தான் (தோழி) தலைவியைச் சினந்து அவள் ஊடல் தணிக்குமிடத்தும். அதாவது, தலைவன் உணர்த்த உணராத தலைவியைத் தலைவனோடு கூடித் தோழி உணர்த்தி ஊடல் தீர்ப்பாள் என்க. காட்டு: ஈர்ந்தண் எருமைச் சுவடுபடு முதுபோத்துப் போர்செறி மள்ளரிற் புகுதரு மூரன் தேர்தர வந்த தெரியிழை ஞெகிழ்தோள் ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தரப் பரத்தமை தாங்கலோ விலனென வறிதுநீ புலத்த லோம்புமதி மனைகெழு மடந்தை, அதுபுலந் துறைதல் வல்லி யோரே செய்யோள் நீங்கச் சிலபதங் கொழித்துத் தாமட் டுண்டு தமிய ராகித் தேமொழிப் புதல்வர் திரங்குமார் சுவைப்ப வைகுந ராகுத லறிந்தும் அறியா ரம்மவஃ துடலு மோரே. (அகம் - 316) இதனுள், ‘வறிது நீ புலத்தல் ஓம்புமதி’ என்றும், ‘செய்யோள் நீங்க . . . . அறியா ரம்ம அஃதுடலுமோரே’ என்றும், தோழி தலைவி யை வெகுண்டு ஆக்கியவாறு காண்க. ‘செய்யோள் நீங்க . . . . உடலுமோர்’ என்பது, எடுத்துக்காட்டு. 16. அருமைக் காலத்துப் பெருமை காட்டிய எண்மைக் காலத்து இரக்கத்தானும் - அரியளாய களவுக் காலத்துத் தலைவி பெருமையைக் காத்து, அவள் எளியளாகிய கற்புக் காலத்து அப்பெருமையைக் காவாததை எடுத்துக் கூறுமிடத்தும்; ‘அருமைக் காலத்துப் பெருமை காட்டிய’ எனவே, எண்மைக் காலத்துப் பெருமை காட்டாமை பெறப்பட்டது. பெருமை காட்டல் - அவள் பெருமை கெடாதபடி நடந்து கொள்ளுதல். பெருமை - மதிப்பு. முன்பு தலைவிக்குக் கொடுத்த மதிப்பு இப்போது கொடாதது தகுதியன்றெனக் கூறல். எண்மை - எளிமை. அடைதற் கருமையும் அடைதற் கெளிமையுமாம். காட்டு: வேம்பின் பைங்காயென் றோழி தரினே தேம்பூங் கட்டி என்றனிர், இனியே பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கட் டண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனிர் ஐய, அற்றால் அன்பின் பாலே. (குறுந் - 196) என வரும். கட்டி என்றனிர் முன் என்க. 17. பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை எதிரும் - பாணரும் கூத்தரும் விறலியரும் விரும்பிக் கூறி வாயில் வேண்டு மிடத்து வாயில் மறுத்தலும்; மறுத்தாள்போல் நேர்தலும் ஆகிய விடத்தும். குறைவினை - வாயில் வேண்டல், குறையிரத்தல். காட்டு: புலமக னாதலின் பொய்ந்நின் வாய்மொழி நில்லல் பாண, செல்லினிப் பரியல் பகலெஞ் சேரி காணின் அகல்வய லூரன் நாணவும் பெறுமே. இது, பாணற்கு வாயில் மறுத்தது. மற்றைய சங்க நூல்களிற் காண்க. 18. நீத்த கிழவனை - பரத்தையிற் பிரிந்து தலைவியைக் கைவிட்ட தலைவனை, நிகழுமாறு படீஇ - இல்லறத்தே நிற்கச் செய்ய வேண்டி, காத்த தன்மையில் கண் இன்று பெயர்ப்பினும் - புறத்தொழுக்கிற் பயனின்மை கூறிக் கண்ணோட்டமின்றி அப்பிரிவை நீக்கு மிடத்தும்; அப்பிரிவு - பரத்தையிற் பிரிவு. தலைவியைப் பிரிந்து செல்லத் தகாதெனக் கூறித் தடுத்தலாம். காத்த தன்மை - பரத்தையிடம் செல்லாது காக்குந் தன்மை. அதன் பயனின்மை கூறித்தடுத்தல். காட்டு: மனையுறை கோழிக் குறுங்காற் பேடை வேலி வெருகின் மாலை யுற்றெனப் புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇப் பைதற் பிள்ளைக் கிளைபயிர்த் தாஅங் கின்னா திசைக்கும் அம்பலொடு வாரல் வாழியர் ஐயவெந் தெருவே. (குறுந் - 139) இதனுள்,‘அம்பலொடு வாரல்’ எனவே பலநாள் தலைவியைப் பிரிந்தமையும், கண்ணின்று பெயர்த்தமையுங் கூறிற்று. கோழி குஞ்சுகளைத் தழீஇக் கொண்டது போலத் தாயர் மகளிரைத் தழீஇக் கொண்டார் என்றலின், புறம் போயும் பயனின்று எனக் காத்ததைக் கூறிற்று. அம்பல் - ஊரவர் சொல். 4. காமக்கிழத்தி 8 : 1 - 8 1. புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும் 2. இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும் 3. பல்வேறு புதல்வர்க் கண்டுநனி உவப்பினும் 4. மறையின் வந்த மனையோள் செய்வினை பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும் 5. காதற் சோர்வில் கடப்பாட்டு ஆண்மையில் தாய்போல் தழீஇக் கழறியம் மனைவியைக் காய்வின்று அவன்வயின் பொருத்தற் கண்ணும் 6. இன்னகைப் புதல்வனைத் தழீஇ இழையணிந்து பின்னர் வந்த வாயிற் கண்ணும் 7. மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும் 8. எண்ணிய பண்ணை இ - ள் : 1. புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும் - தலைவன் தன்னிடத்துச் சில நாளும் தலைவியிடத்துச் சில நாளும் தங்குதலான் தலைவி புலக்கு மிடத்தும் காமக் கிழத்தியர் புலந்து கூறுவர். புலத்தல் - வெகுளுதல். இரட்டுற மொழிதலான், தலைவன் பரத்தையர்பாற் செல்வத்தை யறிந்து காமக் கிழத்தியர் புலத்தலுங் கொள்க. மயக்கம் - இருவரிடமும் மறைந் தொழுகுதல். (காமக்கிழத்தியர் பற்றி, ‘தொல் காப்பியர் காலத் தமிழர்’ - ‘பரத்தையர்’ என்பதிற் காண்க.) காட்டு: மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத் தண்டுறை யூரனெம் சேரி வந்தென இன்கடுங் கள்ளின் அகுதை களிற்றொடு நன்கல னீயும் நாள்மகி ழிருக்கை அவைபுகு பொருநர் பறையின் ஆனாது கழறுப என்பவவன் பெண்டிர், அந்தில் அந்தண் காவிரி போலக் கொண்டுகை வலித்தல் சூழ்ந்திசின் யானே. (அகம் - 76) இதனுள், ‘எம் சேரி வந்தெனக் கழறுப என்ப அவன் பெண்டிர்’ என, முன்னை நாள் புல்லுதல் மயக்குதலால், தலைவி புலந்தவாறும், அது கண்டு காமக்கிழத்தி, ‘கொண்டுகை வலிப்பல்’ எனப் பெருமிதங் கூறியவாறுங் காண்க. 2. கண்டேன்நின் மாயங் களவாதல் பொய்ந்நகா மண்டாத சொல்லித் தொடஅல் தொடீஇயநின் பெண்டிர் உளமன்னோ ஈங்கு. (கலி - 90) இதனுள், ‘என்னைத் தொடாதே; நீ தொடுதற்குரியார் ஈங்கில்லை’ எனக் காமக் கிழத்தி, தலைவன் பரத்தையிடம் தங்கி வந்தானெனப் புலந்து கூறுதல் காண்க. 2. இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும் - தலைவனும் தலைவியும் ஊடியும் உணர்ந்தும் கூடும் தொழிலைக் கேட்டு இகழு மிடத்தும். இல்லோர் - இல்லத்திற்குரியோர்; தலைவனும் தலைவியும். வீட்டுக் குரியோர் என்றுமாம். வீட்டுக்காரன், வீட்டுக்காரி எனக் கணவன் மனைவியரை அழைக்கும் வழக்கை யறிக. காட்டு: கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூரன் எம்மிற் பெருமொழி கூறித் தம்மில் கையுங் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே. (குறுந் - 8) புதல்வன் தாய்க்கு மேவன செய்யும் என இகழ்ந்தமை காண்க. புதல்வன் தாய் - தலைவி. 3. பல்வேறு புதல்வர்க் கண்டு நன் உவப்பினும் - பல சிறுவரோடு தலைவி புதல்வன் விளையாடுதலைக் கண்டு மகிழுமிடத்தும். பல்வேறு புதல்வர்க் கண்டு - பல்வேறு வகைப்பட்ட சிறுவரோடு விளையாடுதலைக் கண்டென்க. காட்டு: மடக்குறு மாக்களோ டோரை யயரும் அடக்கமிற் போதின்கட் டந்தைகா முற்ற தொடக்கத்துத் தாயுழைப் புக்காற் கவளும் மருப்புப்பூண் கையுறை யாக வணிந்து பெருமான் நகைமுகங் காட்டென்பாள் கண்ணீர் சொரிமுத்தங் காழ்சோர்வ போன்றன மற்றும். (கலி - 82) இதனுள், தெருவில் விளையாடிய புதல்வனைக் காமக்கிழத்தி எடுத்துச் சென்று அணியணிந்தா ளெனத் தலைவி கூறுதலால், சிறுவரோடு விளையாடிய புதல்வனைக் காமக் கிழத்தி உவந்தமை காண்க. 4. மறையின் வந்த மனையோள் செய்வினை பொறையின்று பெருகிய பருவரல் கண்ணும் - களவொழுக்கத்தால் மணந்து கொண்ட தலைவியோடு தலைவன் ஆறும் குளமும் ஆடுதல் கண்ட காமக்கிழத்தி பொறுத்தலின்றி மிக்க வருத்த முற்றபோதும். மறையின் வந்த மனையோள் - தலைவி. காட்டு: பழன வாம்பற் பயன்சேர் நறுந்தழை ஐதக லல்குல் அணிபெறத் தைஇய ஒண்டொடி யுவப்ப உடன்கொடு செலீஇ யாறுங் குளனும் ஆடிய பெயரும் யாண ரூரன் கேண்மை காணின் காலறு பைங்கூழ் போல வாலிழை யுடங்க வாடுநர் பலவே. (குழந்தை) இதனுள், தலைவன் தலைவியோடு ஆறுங் குளமும் ஆடியதைக் காணின் பலர் வாடுவர் எனக் காமக்கிழத்தி வருத்த முற்றுக் கூறியவாறு காண்க. 5. காதல் கடப்பாட்டு ஆண்மையில் சோர்வில் - காதலையும், இல்லறத்துச் செய்யும் கடமையையும் தலைவன் மறத்தலான் தலைவிக்குத் துனி உண்டானபோது, தாய் போல் தழீஇக்கழறி - தான் செவிலி போலத் தலைமகளை உடன்படுத்திக் கொண்டு தலைவனைக் கழறி, அ மனைவியைக் காய் வின்று அவன்வயின் பொருத்தற் கண்ணும் - அத்தலைவியைத் துனி நீக்கித் தலைவனிடம் கூட்டுமிடத்தும் கூறுவள். சோர்வு - மறதி. தாய் போல் தழுவுதல் - காமக்கிழத்தி தன்னைச் செவிலியாகவும், தலைவியை மகளாகவும் கொண்டு கூறுதல். இது மூத்த காமக்கிழத்தி இளந்தலைவியை ஊடல் தீர்த்துத் தலைவனுடன் கூட்டுதலாம். இது 1. தலைவியின் ஊடல் தீர்த்தல், 2. தலைவனைக் கடிந்து கூறல் என இருவகைப்படும். காட்டு: 1. வயல்வெள் ளாம்பற் சூடுதெரி புதுப்பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் ஓய்நடை முதுபக டாரு மூரன் தொடர்புநீ வெஃகினை யாயின் என்சொற் கொள்ளன் மாதோ முள்ளெயிற் றோயே, நீயே பெருநலத் தையே அவனே நெடுநீர்ப் பொய்கை நடுநா ளெய்தித் தண்கமழ் புதுமலர் ஊதும் வண்டென மொழிப மகனென் னாரே. (நற் - 290) இதனுள், நீ அவனது இளமைச் செவ்வி யெல்லாம் நுகர்ந்து புதல்வற் பயந்த பின்னர், உழுதுவிடு பகடு (எருது) எச்சிலைத் தின்றாற் போலப் பிறர் அவனை நுகர்ந்தமை நினக்கு இழுக்கன்று எனவும், நீ இளமையும் எழில்நலமு முடையை, அவனை வண்டென்பதன்றி மகன் என்னாராதலின் எனவும் கூறி ஊடல் தணித்தமை காண்க. காட்டு: 2. மூத்துவினை போகிய மூரிவா யம்பி நல்லெருது நடைவளம் வாய்த்தென உழவர் புல்லுடைக் காவில் தொழில்விட் டாங்கு நறுவிரை நன்புகைக் கொண்டார்ச் சிறுவீ ஞாழலொடு கெழீஇய புன்னையங் கொழுநிழல் முழவுமுதல் பிணிக்கும் துறைவ னன்றும் விழுமிதிற் கொண்ட கேண்மை நொவிதின் தவறுநற் கறியா யாயின் எம்போல் ஞெகிழ்தோள் கலுழ்ந்த கண்ணர் மலர்தீந் தனையர் நின்னயந் தோரே. (நற் - 315) இதனுள், பழைய அம்பி போலப் பருவஞ் சென்ற என்னைப் போலாது, மலர்ந்து உதிராது மலருமுன் உதிரும் பூவினைப்போல இவ்விளமைப் பருவத்தே இவள் பயனின்றித் தனித்திருக்கத் தக்களோ எனத் தலைவனைக் காமக்கிழத்தி கடிந்து கூறுதல் காண்க. அம்பி - இறை கூடை. 6. பின்னர் - பலவாயில்களையும் மறுத்த பின்னர், இன்நகைப் புதல்வனைத் தழீஇ இழையணிந்து வந்தவாயிற் கண்ணும் - பலர்க்கும் இன்பந்தரும் புதல்வனை எடுத்து அணியணிந்து வாயிலாகக் கொண்டு புகுந்தவிடத்தும். கொண்டு புகுந்தவன் - தலைவன். புதல்வன் - தலைவி புதல்வன். காட்டு: என்குறித் தனன்கொல் பாணநின் கேளே வன்புறை வாயி லாகத் தந்த பகைவரும் நகூஉம் புதல்வனை நகுவது கண்டு நகூஉ மோரே. இதனுள், விரும்பத்தக்க புதல்வனைக் கண்டு மகிழ்வாரைத் தன்னைக் கண்டு மகிழ்வது போலக் கொண்டு மகிழா நின்றான் எனக் காமக்கிழத்தி கூறி வாயில் நேர்ந்தவாறு காண்க. வன்புறை - வற்புறுத்தல். அது, மற்ற வாயில்களை விட விரும்பத்தக்க வாயில் என நின்றது. இங்கே வாயில் - புதல்வன். 7. மனையோள் ஒத்தலில். - தானும் தலைவியோடு ஒத்தவ ளாகக் கருதி, தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும் - தன்னை யொக்கும் மற்றைப் பெண்களினும் தான் சிறந்தவளாகக் குறித்துக் கொள்ளுமிடத்தும். இது, தலைவியை ஒப்பேனெனக் காமக்கிழத்தி கூறுதல். காட்டு: தீம்பெரும் பொய்கைத் துறைகே ழூரன் தேர்தர வந்த நேரிழை மகளிர் ஏசுப வென்பவென் நலனே, அதுவே பாகன் நெடிதுயிர் வாழ்தல் காய்சினக் கொல்களிற் றியானை நல்கல் மாறே, தாமும் பிறரும் உளபோற் சேறல் முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின் யானவண் வாரா மாறே, வரினே வானிடைச், சுடரோடு திரிதரு நெருஞ்சி போல என்னொடு திரியே னாயின் வென்வேல் மாரி யம்பின் மழைத்தோற் சோழர் வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின் உடைகவென் நேரிறை முன்கை வீங்கிய வளையே. (அகம் - 336) இதனுள், ‘யானவண் வாரா மாறே’ எனத் தான் தலைவியைப் போல இல்லுறைதல் கூறி, யாண்டுச் செல்லின் (துணங்கையாடு மிடத்திற்கு) சுடரொடு திரியும் நெருஞ்சி போல, யான் செல்லு மிடத்திற்குக் கூடவே வரும் சேடியர் போல மகளிரை ஆக்கிக் கொள்வேன் எனத் தன்னைத் தலைமக ளொப்பக் கூறியவாறு காண்க. 8. எண்ணிய பண்ணை - தலைவனொடு யாறும் குளமும் காவும் ஆடி இன்ப நுகரும் போதும் கூறுவள். பண்ணை - விளையாட்டு. எண்ணுதல் - தலைவற்குத் தகுமெனப் பெரியோரான் ஆராய்ந்து துணிதல். காட்டு: கூந்த லாம்பல் முழுநெறி யடைச்சிப் பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி யாமஃ தயர்கம் சேறும் தானஃ தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி முனையான் பெருநிரை போலக் கிளையொடு காக்கதன் கொழுநன் மார்பே. (குறுந் - 80) யாம் அஃது அயர்கம் சேறும் என விளையாட்டுக் கூறுதல் காண்க. என்று இவறொடு, சந்தேகம் பிறவும் - இக்கூறிய எட்டோடு பிறவும், கண்ணிய காமக்கிழத்தியர் மேன - விரும்பப் பட்ட காமக்கிழத்தி யர்க்கு உரிய என்றவாறு. பிறவாவன 1. என்னலந் தாவெனல் 2. நின் பரத்தைமை தலைவிக் குரைப்பே னெனல் 3. சேரிப்பரத்தையைப் புலத்தல் காட்டு: 1. இனியான் விடுக்குவென் அல்லென மந்தி பனிவார் கண்ணள் பலபுலந் துறையக் கடுந்திற லத்தி ஆடணி நசைஇ நெடுநீர்க் காவிரி கொண்டொளித் தாங்குநின் மனையோள் வௌவலும் அஞ்சுவல் வஞ்சி யன்னவென் நலந்தந்து சென்மே. (அகம் - 396) இது, காமக் கிழத்தி என்னலம் தா வென்றது. மந்தி - கரிகாலன் மகளாகிய ஆதிமந்தி. அத்தி - அவள் கணவன் - ஆட்டனத்தி. ‘அத்தியைக் காவிரிகொண் டொளித்தாங்கு தலைவி நின் வௌவும், என் நலந்தந்து செல்’ எனக் காண்க. 2. மனையோட் குரைப்பல் என்றலின். . நன்ன ராளன் நடுங்கஞர் நிலையே. (நற் - 100) இது, மனையோட்கு உன் நிலை உரைப்பல் என்றது. 3. வரிவேய் உண்கணவன் பெண்டிர் காணத் தாரும் தானையும் பற்றி ஆரியர் பிடிபயிர்ந்து தரூஉம் பெருங்களிறு போலத் தோள்கந் தாகக் கூந்தலிற் பிணித்தவன் மார்புகடி கொள்ளே னாயின், ஆர்வுற் றிரந்தோர்க் கீயா தீட்டியோன் பொருள்போல் பரந்து வெளிப்படா தாகி வருந்துக தில்லயாய் ஓம்பிய நலனே. (அகம் - 276) இதனுள், ‘பரந்து வெளிப்படாதாகி வருந்துக என்னலம்’ என்றமையின், சேரிப் பரத்தையைப் புலந்து கூறுதல் கொள்க. 20. அலர் 1. அலர் நிகழிடம் 217. களவுங் கற்பும் அலர்வரை வின்றே. இ - ள் : களவின் கண்ணும் கற்பின் கண்ணும் அலர் எழுகின்ற தென்று கூறுதல் தலைவிக்கும் தோழிக்கும் நீக்கும் நிலைமையின்று என்றவாறு. வரைதல் - நீக்குதல். ‘ஒப்பக் கூறல்’ என்னும் உத்திபற்றிக் களவும் உடன் கூறினார், சூத்திரஞ் சுருங்குதற்கு. பரத்தையிற் பிரிவுபற்றிக் கூறப்படும் அலர், புலவி ஊடலுக்கு மிகவும் பயன்படுதல் கருதி இங்குக் கூறினார். அலராவது - ஊர்மகளிர் தலைவன் தலைவியைப் பற்றிக் கூறுதல். தலைவன் பிரிந்த வழி ஆற்றாளாய தலைவி நிலையை ஊரவர் அறிந்து கூறுதலைத் தலைவியும் தோழியும் தலைவனிடம் கூறுவர். நீர் பிரிந்து சென்றதால் நான் அடைந்த வருத்தத்தை இவ்வூரினர் எவ்வாறு அறிந்தனரோ பேசிக் கொள்கின்றனர் என்று தலைவியும், நீர் பிரிந்ததால் தலைவியுற்ற மெய்வேறு பாட்டை (வருத்தத்தை) ஊரினர் அறிந்து பழி கூறுகின்றனர் எனத் தோழியும் கூறுவர். களவு - 15, 56 சூத்திரங்கள் பார்க்க. காட்டு: 1. கண்டது மன்னும் ஒருநாள், அலர்மன்னும் திங்களைப் பரம்புகொண் டற்று. (குறள்) இது, களவு. தலைவனை ஒரு நாட் கண்டதும் ஊரெல்லாம் பரவிற்று எனல் காண்க. 2. சுரனே சென்றனர் காதலர், உரனழிந் தீங்கியான் தாங்கிய எவ்வம் போங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே. (குறுந் - 140) இது, கற்பு. தலைவன் பிரியத் தலைவியுற்ற வருத்தத்தை ஊரவர் அறிந்தனர் எனல் காண்க. 3. கரும்பின் எந்திரங் களிற்றெதிர் பிளிற்றும் தேர்வண் கோமான் தேனூர் அன்னவிவள் நல்லணி நயந்துநீ துறத்தலின் பல்லோ ரறியப் பசந்தன்று நுதலே. (ஐங் - 55) இது, தோழி அலர் பற்றித் தலைவனிடம் கூறியது. கற்பு. (28) 2. காமஞ்சிறத்தல் 218. அலரிற் றோன்றுங் காமத்தின் மிகுதி. இ - ள் : அலரினால் தலைவன் தலைவி இருவர் காமமும் சிறக்கும் என்றவாறு. களவு, கற்பு என்னும் இருவகைக் கைகோட்குங் கொள்க. கைகோள் - ஒழுக்கம். தலைவன் பரத்தைமையால் அலர் தோன்றிய வழித் தலைவி வருந்துமெனத் தலைவற்குக் காமஞ் சிறக்கும்; தலைவன் பிரிவால் அலர் தோன்றிய வழித் தலைவிக்குக் காமஞ்சிறக்கும். களவுக்குங் கொள்க. காட்டு: ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளுமிந் நோய். (குறள்) நெய்யா லெரிநுதுப்பே மென்றாற்றற் கௌவையால் காம நுதுப்பே மெனல். (குறள்) எனக் காண்க, கௌவை - அலர். நுதுத்தல் - அவித்தல், கெடுத்தல். (29) 3. இதுவுமது 219. கிழவோன் விளையாட் டாங்கு மற்றே. இ - ள் : கிழவோன் விளையாட்டு ஆங்கும் - தலைவன் பரத்தையரோடு விளையாடுங் காலும், அற்றே - அலரால் இருவர்க்கும் காமஞ் சிறக்கும் என்றவாறு. தலைவன் பரத்தையரோடு விளையாடினானெனப் பிறர் கூறக் கேட்குந் தோறும் தலைவிக்குப் புலவியும் ஊடலும் பிறந்து காமஞ்சிறக்கும் விளையாடுங்காலும், ஊடிய தலைவியிடம் பணிமொழி கூறுங்காலும் தலைவற்குக் காமஞ் சிறக்கும். விளையாடுதல் - பரத்தையருடைய ஆடல் பாடல் கண்டும் கேட்டும், அவரோடு ஆறு முதலியன ஆடியும் இன்ப நுகர்தல். காட்டு: எஃகுடை யெழில்நலத் தொருத்தியொடு நெருநை வைகுபுனல் அயர்ந்தனை என்ப அதுவே பொய்புறம் பொதிந்தயாங் கரப்பவுங் கையிகந் தலரா கின்றாற் றானே. (அகம் - 116) எனப் பிறர் அலர் கூறிய வழிக் காமஞ்சிறந்து, தலைவி புலந்தவாறு காண்க. (30) 5. பிரிவு பிரிவாவது, தலைவன் எதன் பொருட்டேனும் தலைவியைப் பிரிந்து வேறிடங்கட்குச் செல்லுதலாம். (பிரிவுகளின் விளக்கத்தைத் ‘தொல்காப்பியர் காலத் தமிழர்’ என்னும் நூலிற் - ‘பிரிவு’ என்பதிற் காண்க.) 1. ஓதற் பிரிவு 4. தூதிற் பிரிவு 2. பகைப் பிரிவு 5. காவற் பிரிவு 3. துணைப் பிரிவு 6. பொருட் பிரிவு 7. வரைவிடைப் பொருட்பிரிவு 9. பரத்தையிற் பிரிவு 8. இட்டுப் பிரிவு 10. பொதுநலப் பிரிவு எனப் பிரிவு பத்துவகைப்படும். 7. வரைவிடைப்பிரிவு 8. இட்டுப் பிரிவு களவிற்கே உரியவை 1. ஓதற் பிரிவு 2. பகைப்பிரிவு 4. தூதிற்பிரிவு கற்பிற்கே உரியவை 9. பரத்தையிற் பிரிவு 3. துணைப்பிரிவு 5. காவற்பிரிவு களவு கற்பு 6. பொருட்பிரிவு இரண்டற்கும் உரியவை 10. பொதுநலப் பிரிவு - இல்வாழ்க்கையிற் பிரிதல், துறத்தல். துணைப் பிரிவு, பகைப்பிரிவினுள் அடங்கும். காவற் பிரிவு, பொருட்பிரிவினுள் அடங்கும். கருப்பொருள் கூறுங்கால் (அகத் - 15) பூக் கூறாதிருந்தும், ‘எந்நில மருங்கிற் பூவும்’ (அகத் - 16) என்பதால், பூவுங் கொண்டது போல, சிறப்புடைமை பற்றி, ‘ஓதல் பகையே தூதிவை பிரிவு’ (அகத் - 25) என்றாரேனும், ‘பரத்தையினகற்சியிற் பரிந்தோட் குறுகி’ (கற் - 36) என்பதால், பரத்தையிற் பிரிவும், ‘மேவிய சிறப்பின் முல்லை முதலா’ (அகத் - 28) என்பதால், காவற்பிரிவும், அகத்திணை - 33, 34 சூத்திரங்களாற் பொருட்பிரிவுங் கொள்ளப் படுமென்க. பிரிவின் கால அளவு 1. ஓதற் பிரிவு 220. வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது. இ - ள் : வேண்டிய கல்வி - விரும்பிய ஓதற்பிரிவின் கால அளவு, மூன்று யாண்டு இறவாது - மூன்று ஆண்டுகளின் எல்லையைக் கடவாது என்றவாறு. ‘மூன்று யாண்டு’ என்பது பிரிந்து மீளும் எல்லையேயாகும். மூன்றாண்டுகட்குமேல் பிரிந்து சென்ற தலைவன் இருக்கக் கூடாதென்பதே. மூன்றாண்டுகட்குக் குறைவாகவரின் இழுக்கின்று. மற்றைப் பிரிவுகட்கும் இஃதொக்கும். (31) 2. பகை, துணைப் பிரிவுகள் 221. வேந்துறு தொழிலே யாண்டின தகமே. இ - ள் : வேந்துறு தொழிலே - அரசர்க் குரித்தாகிய பகைவயிற் பிரிவும் துணைவயிற் பிரிவும், யாண்டினது அகமே - ஓராண்டின் எல்லையைக் கடவாது என்றவாறு. பிரிவிற்குரிய வேனிற்காலத் தொடக்கமாகிய சித்திரை முதல் ஆவணி வரையுள்ள நான்கு திங்கள், அல்லது பின் பனித்தொடக்க மாகிய மாசிமுதல் ஆவணி வரையுள்ள ஆறு மாதங்களே இப் பிரிவிற்குரிய காலமாகும். மழைக்காலத்திற் போர் நடவா அப்போது, மதில் முற்றினோர் மட்டும் பாசறையி லிருப்பர். தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் மீண்டுவருங் காலம், ஆவணி புரட்டாசி மாதங்களாகிய கார்காலமே யாகும். ‘கூதிர்வேனில் என்றிரு பருவமும்’ (புறத் - 21) என்பதால், மதில் முற்றியகாலத்துக் கார்காலத்தைக் கடந்தும் இருப்பது பெற்றாம். எவ்வாறேனும் பிரிந்து சென்ற நாள் வருமுன் வரவேண்டு மென்பதாம். காட்டு: 1. கருவிக் காரிடி யிரீஇய பருவ மென்றவர் வருதுமென் றதுவே. (அகம் - 139) இது, கார்குறித்து வருவல் என்றலின், மாசிமுதல் ஆவணிவரை ஆறு திங்கள் இடையிட்டது. 2. வண்ணவண் டிமிர்ந்தானா வையைவா ருயரெக்கர் தண்ணருவி நறுமுல்லைத் தாதுண்ணும் பொழுதன்றோ? கண்ணிலா நீர்மல்கக் கவவிநாம் விடுத்தக்கால் ஒண்ணுதால், நமக்கவர் வருதுமென் றுரைத்ததை. (கலி - 35) இது, பின்பனியில் பிரிந்து இளவேனிலில் வருதல் குறித்தலின் இருதிங்களிடையிட்டது. வண்டு முல்லைத் தாதுண்ணல் இளவேனி லென்க. (32) 3. தூது, பொருட்பிரிவு 222. ஏனைப் பிரிவும் அவ்வயின் நிலையும். இ - ள் : மற்றைத் தூதிற் பிரிவும், பொருட்பிரிவும் அவ்வாறே ஓராண்டின தகமான மாசிமுதல் ஆடியிறுதியாகிய ஆறு திங்களே யாம் என்றவாறு. பொருட்பிரிவில் காவற்பிரிவும் அடங்கும். பரத்தையிற் பிரிவு ஒருநாளிடையிட்ட தாகையால் கூறிற்றிலர். காட்டு: மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயல் பாடுலந் தன்றே பறைக்குர லெழிலி, புதன்மிசைத் தளவின் இதல்முட் செந்நனை நெடுங்குலைப் பிடவமொ டொருங்குபிணி யவிழக் காடே கம்மென் றன்றே . . . . . . அனையகொல் தோழி, வாழி மனைய தாழ்வில் நொச்சி சூழ்வன மலரும் மௌவல் மாச்சினை காட்டி இவ்வள வென்றோர் ஆண்டுச்செய் பொருளே. (அகம் - 23) இது, பொருட்பிரிவின் கண் கார்குறித்து ஆறு திங்களிடை யிட்டது. இதல் - கவுதாரி. பிணி அவிழ - மலர. (33) 4. நாட்டுவலம் வருதல் 223. யாறுங் குளனுங் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்தலு முரிய வென்ப. இ - ள் : பதி இகந்து - ஊரைவிட்டு நீங்கி, யாறும் குளனும் காவும் ஆடி நுகர்தலும் - ஆறுகளிலும் குளங்களிலும் சோலை களிலும் விளையாடி இன்ப நுகர்தலும், உரிய என்ப - தலைவற்கும் தலைவிக்கும் காமக்கிழத்தியர்க்கும் உரிய என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. இதுவும் பிரிவொழுக்கமே யாகும் (கள - 67). ஏற்புழிக் கோடலால், தலைவிக்குச் சிறுபான்மை என்றுணர்க. இது, பிரிவின் சார்புடையதாகும். தலைவியைப் பிரிதல் பெரும் பான்மை. காட்டு: 1. மதில்கொல் யானையிற் கதழ்வுநெரி தந்த சிறையழி புதுப்புனல் ஆடுகம் எம்மொடுங் கொண்மோவெந் தோள்புரை புணையே. (ஐங் - 78) இது, காமக்கிழத்தி, நின் மனைவியோ டன்றி எம்மோடு புணைகொள்ளின் யாம் ஆடுதும் என்று, புனலாட்டிற்கு இயைந்தாள் போல் மறுத்தது. புணை - தெப்பம். 2. வண்ண வொண்டழை நுடங்க வாலிழை ஒண்ணுத லரிவை பண்ணை பாய்ந்தெனக் கண்ணறுங் குவளை நாறித் தண்ணென் றிசினே பெருந்துறைப் புனலே. (ஐங் - 73) இது, தலைவி புலவி நீங்கித் தன்னொடு புனலாட வேண்டிய தலைவன், முன் புனலாடியதனைத் தலைவி கேட்பத் தோழிக்குக் கூறியது. 3. நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார் ஆனா விருப்பொ டணியயர்ப காமற்கு வேனில் விருந்தெதிர் கொண்டு. (கலி - 92) இது, காவிற் கூடியாட நீயுங் கருதெனத் தலைவன் தலைவிக்குக் கூறியது. (34) 5. பொதுநலப் பிரிவு 224. காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. இ - ள் : கிழவனும் கிழத்தியும் - தலைவனும் தலைவியும், அறம்புரி சுற்றமொடு - இல்லறம் புரிதற்குத் துணையான தோழி முதலிய உரிமைச் சுற்றத்தோடும், ஏமம் சான்ற மக்களொடு - காப்பமைந்த மக்களொடும், துவன்றி - கூடியிருந்து இல்லறம் நடத்தி, சான்ற காமம் கடைக்கோள் காலை - அமைந்த காமம் தீர்ந்த காலத்து, சிறந்தது பயிற்றல் - மக்களிடம் வாழ்க்கையை ஒப்படைத்துவிட்டுப் பொது நலத் தொண்டு செய்தல், இறந்த அதன் பயனே - முன்னர் நடத்திய இல்லறத்தின் பயனாகும் என்றவாறு. கடை - முடிவு. கோள் - கொள்; முதனிலைத் திரிந்த தொழிற்பெயர். கடைக்கொள்ளுதல் - முடிவுறுதல். சிறந்தது - பொது நலம். ‘இறந்த’ என்பது - தொழில் முடிவையும், ‘அது’ என்பது - இல்லறத்தையும் குறித்தன. காப்பாவது - முதுமைக் காலத்துப் பெற்றோர்க்குக் காவலா யிருத்தல். ஆலம்வீழ் போல் தாங்குதலாம். தலைவனும் தலைவியும் உரிமைச் சுற்றத்தோடும், மக்க ளோடும் கூடி இல்லறம் நடத்தி மூத்த பின்னர், மக்களிடம் வாழ்க்கையை ஒப்படைத்துவிட்டுப் பொதுநலத் தொண்டு புரிதலே இல்லறம் நடத்தியதன் பயன் என்பதாம். மனையை விட்டுப் பிரியாவிடினும், வாழ்க்கையினின்றும், வாழ்க்கைப் பொறுப் பினின்றும் பிரிவதால் பிரிவின்பால் பட்டது. இந்நிலையில் நிலையாகத் தங்கிப் பொதுநலம் புரிவோரே அந்தணர் ஆவர். இவர் சிறுபான்மை. பெரும்பாலோர் மக்கள் தலைமை வாழ்க்கையிலிருந்து ஊர்ப் பொது நலம் புரிந்து வருவர். ‘காமஞ் சான்ற கடைக்கோட் காலை’யினரான அந்தணரின் மனைவியர் தம்மக்கள் காப்பில் அமைதியாக இருந்து வருவர். (35) 6. தலைவன் கூற்று 225. நாளது சின்மையும் இளமைய தருமையும் தாளாண் பக்கமுந் தகுதிய தமைதியும் இன்மைய திளிவும் உடைமைய துயர்ச்சியும் அன்பின தகலமும் அகற்சிய தருமையும் ஒன்றாப் பொருள்வயி னூக்கிய பாலினும், வாயினுங் கையினும் வகுத்த பக்கமொ டூதியங் கருதிய வொருதிறத் தானும் புகழு மானமும் எடுத்துவற் புறுத்தலும் தூதிடை யிட்ட வகையி னானும் ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் மூன்றன் பகுதியும் மண்டிலத் தருமையும் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் பாசறைப் புலம்பலும் முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும் காவற் பாங்கி னேனோர் பக்கமும் பரத்தையி னகற்சியிற் பரிந்தோட் குறுகி இரத்தலுந் தெளித்தலு மெனவிரு வகையோ டுரைத்திற நாட்டங் கிழவோன் மேன. 1. நாளது சின்மையும் . . . . . . பாலினும் 2. வாயினும் கையினும் வகுத்த பக்கம் 3. ஊதியங் கருதிய ஒருதிறத் தானும் 4. புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் 5. தூதிடை யிட்ட வகையி னானும் 6. ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் 7. மூன்றன் பகுதியும் மண்டிலத் தருமையும் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் 8. பாசறைப் புலம்பல் 9. முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும் 10. காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும் 11. பரத்தையின் அகற்சியிற் பரிந்தோட் குறுகி இரத்தலும் தெளித்தலும் எனவிரு வகையும் 1. பொருட் பிரிவு பொருள்செயல்வகை இன்ப வகை 1. நாளது சின்மை - இளமையது அருமை 2. தாளாண் பக்கம் - தகுதியது அமைதி 3. இன்மையது இளிவு - உடைமையது உயர்ச்சி 4. அன்பினது அகலம் - அகற்சியது அருமை இ - ள் : 1. நாளது சின்மையும் இளமையது அருமையும் - மக்களுக்கு வாழ்நாள் சிறிதாகையால் உடனே பொருள் தேடிக் கொள்ள வேண்டும் என எண்ணித் தலைவன் தலைவியைப் பிரிய முற்பட்டால், அவர்களது இளமைப் பருவமானது இன்ப வுணர்ச்சியை மிகுவித்து அப்பிரிவைத் தடுத்துவிடும். 2. தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும் - மிகுந்த ஊக்கத்தோடு பொருள் தேடற்கு விரும்பினால், தத்தம் நிலைமைக் கேற்பப் பொருள் செயல்வேண்டும் என்னும் தகுதியுணர்ச்சி தோன்றி அவ்வூக்கத்தைத் தடுத்துவிடும். பெரு முயற்சியால் பிறரை வஞ்சித்தும், பிறர்க் கிடையூறாக்கியும் பொருள் தேடவும் நேரு மாகையால், அவை தம் தகுதிக்கேற்ற தன்றெனும் எண்ணந்தோன்றி அம் முயற்சியைத் தளர்த்து விடுதலாம். தாள் - முயற்சி. 3. இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் - இன்ன இன்ன பொருள்கள் நமக் கின்மையால் இன்ன இன்ன இளிவுகள் உண்டாகின்றன என்று எண்ணிப் பொருள் தேட முயற்சிக்கும் போது, இல்லாதன போக உள்ள செல்வத்திற்கேற்ற உயர்ச்சி உணர்வு தோன்றி அம் முயற்சியைத் தடுத்துவிடும்; அதாவது, ஏதேனும் ஒரு பொருள் வேண்டுமென்று எண்ணும்போது, இதற்காக நாம் வெளியிற் சென்று பொருள் தேடுதல் நம் செல்வ வுயர்ச்சிக்குத் தக்க தன்றென்னும் எண்ணந் தோன்றி அம்முயற்சியைத் தடுத்தலாம். 4. அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்- பொருள் தேடும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து சென்றால் பொருள் பெருகுவதோடு, இருவர் அன்பும் இன்னும் அகலமாகும் (மிகும்) என்று எண்ணிப் பிரிய முயன்றால், இருவரும் ஒருவரை யொருவர் பிரிந்திருக்க முடியாத ஆற்றாமை தோன்றி அதைத் தடுத்துவிடும். ஒன்றாப் பொருள் வயின் ஊக்கிய பாலினும் - இங்ஙனம் ஒன்று ஒன்றனோடு ஒன்றாது வரும் பொருட்டிறத்துப் பிரிதற்குத் தலைவன் முயற்சிக்கும் பகுதிக்கண்ணும் தலைவன் கூறுவன். ‘ஒன்றா’ என்பதை நான்கனோடும் கூட்டுக. உம்மை எண்ணும்மைகள். இவ்வாறு பொருள் தேடுதற்குப் பிரிய எண்ணும்போது பல தடைகள் உண்டாகும். தலைவனும் தலைவியும் கல்வியறிவுடை யவர்க ளாகையாலும், வாழ்க்கை நலனுக்குப் பொருள் இன்றியமை யாமையை உணர்ந்தவராகையாலும் ஒரு முடிவுக்கு வருவர். பின்னர்த் தலைவன் பிரிவான். வாழ்நாள் சிறிதென் றுணர்ந்து, அதற்குள்ளே பொருள் தேடி அறமும் இன்பமும் பெறுதற்கு எண்ணிய வழி அதற்கு முயற்சியும், இன்மையால் வரும் இளிவரவும் துணை செய்தலானும், பொருள் அல்லது அப்பிரிவு பின்பு அன்பிற்குப் பெருக்கந் தருதலானும், ‘நாளது சின்மை, தாளாண் பக்கம், இன்மைய திளிவு, அன்பின தகலம்’ ஆகிய நான்கும் பொருள்செயல் வகையாயின. காதலின்பம் நுகரும் இளமைப்பருவம் பிரிவை விரும்பாமை யானும், அவ்விளம் பருவத்தில் விட்டுப்பிரிதல் தகுதியின்மையானும், செல்வம் பிரிவை விலக்கி இன்பத்திற்கு ஆக்கந் தருதலானும், ஆற்றாமையே பிரிவை விலக்கி இன்பத்தை முதிர்விப்பதனாலும், ‘இளமையதருமை, தகுதியதமைதி, உடைமையதுயர்ச்சி, அகற்சிய தருமை’ ஆகிய நான்கும் இன்பத்தின் வகையாயின. இப்பொருட் பிரிவைக் கூறும் பகுதி, ஆசிரியர் தொல் காப்பியரின் உலகியற் பேரறிவை எடுத்துக்காட்ட அமைந்த தொன்றாகு மென்க. பிறருழைப்பி லுண்டு வாழாது தன் முயற்சியாற் பொருளீட்டி வாழவேண்டும் என்னும் பழந்தமிழர் கொள்கைக்கு இப்பொருட் பிரிவுப் பகுதி சான்றாகும். காட்டு: ஈதலுந் துய்த்தலும் இல்லோர்க்கு கில்லெனச் செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக் கம்மா அரிவையும் வருமோ எம்மை யுய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே. (குறுந் - 63) எனத் தலைவன் இன்மைய திளிவை நெஞ்சிற்குக் கூறியவாறு காண்க. தலைவன் கூற்றினைத் தலைவியும் தோழியும் கொண்டு கூறுவன பெரும்பான்மை. “நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே” (கள - 71) என்பது இதற்கு இலக்கணமாகும். இப்பொருட்பிரிவுப் பகுதிக்கு எடுத்துக் காட்டும் ஆங்குக் காண்க. 2. ஓதற்பிரிவு வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு - வாயினாலும் கையினாலும் வகுத்துக் கொண்டு கற்கும் ஓதற் பிரிவின் கண்ணும். பக்கமும் என உம்மை விரிக்க. ஒடு எண்ணி நின்றது. வாய் - கற்றலையும் பிறரொடு உரையாடுதலையும், கை - எழுதுதலையும் குறிக்கும். இப்பிரிவின் விரிவை, அகத் - 25 இலும், ‘தொல்காப்பியர் காலத் தமிழர்’ என்னும் நூலிலும் காண்க. 3. பொதுநலப் பிரிவு ஊதியம் கருதிய ஒரு திறத்தானும் - பொதுத்தொண்டு புரிந்து அறந்தேடுதல் கருதிப் பிரியுமிடத்தும். ஊதியம் - அறம். இது முன் கூறிய (கற் - 35) பொதுநலப் பிரிவு போலன்றி, இல்லறம் நடத்தும்போது பொதுத்தொண்டு செய்யத் தலைவன் பிரிதல். அவை, மக்கட்கு நன்னலஞ் செய்தல், நல்லொழுக்கம் புகட்டல், நன்னெறியில் நிறுத்தல் முதலியன. இது, அறமாகிய பொருளைப் பெறப்பிரிதலான் பொருட்பிரிவின் சார்புடைய தாகும். 4. பிரிவின் சிறப்புரைத்தல் புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் - முற்கூறிய பொருட் பிரிவு, ஓதற் பிரிவு, பொதுநலப் பிரிவு இவற்றிற்குப் பிரிவதனா லுண்டாகும் புகழையும், பெருமையையும், பிரியாத தனாலுண் டாகும் குற்றத்தையும் எடுத்துக் காட்டிப் பிரிய வேண்டியதன் இன்றியமையாமையை வற்புறுத்திக் கூறுதலும். மானம் - பெருமை. இம்முப்பிரிவாலும் புகழும் பெருமையும் உண்டாகும் என்பதனையும், பிரியாமையால் அவை இன்றாகும் குற்றத்தையும் எடுத்துக் கூறித் தலைவியை ஆற்றுவித்துப் பிரிதலாம். இதனை ஏனைப் பிரிவுக்குங் கொள்க. காட்டு: அரியதாய அறனெய்தி யருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் பெயர்ந்தநங் காதலர் வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேளினி (கலி - 11) தருமெனக் கூறியது தலைவன். இதனுள், பிரிவின் சிறப்பை வற்புறுத்திக் கூறுதல் காண்க. 5. தூதிற் பிரிவு தூது இடையிட்ட வகையினானும் - தூதின் பொருட்டுப் பிரியும் பகுதிக் கண்ணும். இடையிடுதல் - கூட்டத்திற்கு இடை யிடுதல். ஆவது - பிரிதல். 6. துணைவயிற் பிரிவு ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் - தனக்குத் துணையாகவுள்ள நண்பர்கட்கு உற்றுழி உதவும் பொருட்டும்; பாங்கோர் - நண்பர். உற்றுழி உதவல் - தன் நட்பரசனோடு வேறொருவன் போர் தொடுத்துழி அப்போரில் தன் நண்பனுக்குப் படைத்துணை யாதல். காட்டு: முல்லை நாறுங் கூந்தல் கமழ்கொள நல்ல காண்குவ மாஅ யோயே பாசறை யருந்தொழி லுதவிநங் காதல் நன்னாட்டுப் போதரும் பொழுதே. (ஐங் - 446) இது, வேந்தற் குற்றுழிப் பிரிந்தோன், பருவ வரவின் கண் உரு வெளிப்பட்டுப் புலம்பியது. ‘உதவி’ என்றலின் வேந்தற்குற்றுழி யாயிற்று. 7. பகைவயிற் பிரிவு மூன்றன் பகுதியும் - தன்வலி, துணைவலி, வினைவலி என்னும் முவ்வலிகளையும், மண்டிலத்து அருமையும் - மலை யரண், நீரரண், காட்டரண், மதிலரண் ஆகிய அரண்கள் பொருந்திப் பகைவர் அணுகுதற் கரிய நாட்டினையும் உடைய, தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் - தோற்றமிக்க புகழினராய பகைவரது பெருமையைக் கண்டு பொறாது வஞ்சி சூடிப் பொருதற்குப் பிரியும் போதும். தோன்றல் - தோற்றம். தோற்றமிக்க புகழ் - மலைமீ தேற்றிய விளக்குப் போல உலகெல்லாம் பரவிய புகழ். மண்டிலம் - நாடு. பகைவரின் பெருமை கண்டு பொறாது அவர் மேற் செல்லுதலாம். மனவலி, உடல்வலி, படைவலி, பொருள்வலி, துணைவலி, வினைவலி என்னும் அறுவகை வலியுள், மனவலியையும் உடல் வலியையும் தன்வலி என்றும்; படைவலியும் பொருள்வலியும் துணை செய்தலே யாகலான் துணையாவாரோடு கூட்டித் துணைவலி என்றும்; இவை யெல்லாம் வினைவலி யின்றேல் பயனின்றாகலான், அதைத் தனியாக்கியும், ‘மூன்றன் பகுதி’ என்றார். தன்வலி, துணைவலி பல கூடிய வாகலின், மிகுதிபற்றிப் ‘பகுதி’ எனவும் கூறினார். காட்டு: புகழ்சால் சிறப்பிற் காதலி புலம்பத் துறந்துவந் தோயே அருந்தொழிற் கட்டூர் நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை உள்ளுதொறுங் கலிழும் நெஞ்சம் வல்லே யென்னையும் வரவிழைந் தனையே. (ஐங் - 445) இது, பகைவயிற் பிரிந்தோன் பருவங்கண்டு தலைவியை நினைந்து நெஞ்சொடு புலம்பியது. 8. பாசறைப் புலம்பல் பாசறைப் புலம்பலும் - பகைவயிற் சென்ற தலைவன், பாசறையிடத்திருந்து தலைவியின் ஆற்றாமையை நினைந்து தனித்திரங்கும் போதும் கூறுவன். (கற் - 37, 38, 39 நூற்பாக்கள் பார்க்க.) காட்டு: நனிசேய்த் தென்னாது நற்றே ரேறிச்சென் றிலங்கு நிலவின் இளம்பிறை போலக் காண்குவெம் தில்லவவள் கவின்பெறு சுடர்நுதல் விண்ணுய ரரண்பல வௌவிய மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே. (ஐங் - 443) இது, வேந்தற் குற்றுழிப் பிரிந்தோன், தான் குறித்த பருவத்து வினை முடியாமையின் பாசறைக்கண் புலம்பியது. 9. பாகனொடு கூறல் வினைத்திறம் முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வகை யினும் - போர் முடிந்தபின், விரைவில் தலைவியைச் சேர்தற் பொருட்டுத் தேரை விரைந்து செலுத்தும்படி தேர்ப்பாகனிடம் விரும்பிக் கூறுமிடத்தும். காட்டு: இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தென புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் ஏறிய தறிந்தன் றல்லது வந்தவாறு நனியறிந் தன்றோ விலனே. (அகம் - 384) இது, தேரை விரைந்து செலுத்திய பாகன் சிறப்புக் கூறியது. 10. காவற் பிரிவு ஆங்கோர் காவல் பாங்கின் பக்கமும் - பகைவரிடம் திறையாகக் கொண்ட நாடு காவலின் பொருட்டுப் பிரியு மிடத்தும். தனது நாட்டைச் சுற்றிப் பார்க்கவுமாம். ஆங்கோர் - பகைவர். ஈங்கு அவர் கொடுத்த நாட்டைக் குறித்தது. ஆங்கு - பகைவர் நாடு. ஓர் - ஒப்பற்ற எனினுமாம். காட்டு: பல்வரி யினவண்டு புதிதுண்ணும் பருவத்துத் தொல்கவின் தொலைந்தவின் தடமென்றோ ளுள்ளுவார் ஒல்குபு நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி வெல்புக ழுலகேத்த விருந்துநாட் டுறைபவர். (கலி - 26) எனக் காண்க. விருந்துநாடு - திறையாகக் கொண்ட புதுநாடு. ‘காத்தோம்பி’ எனக் காவற் பிரிவாதல் காண்க. 11. பரத்தையிற் பிரிவு பரத்தையின் அகற்சியில் பரிந்தோள் குறுகி - பரத்தையிற் பிரிவால் வருத்தமுற்ற தலைவியை அணுகி, இரத்தலும் - குறையிரத்தலும், தெளித்தலும் - பின்னர் ஊடலுணர்த்தலும், என இருவகையொடு - என்ற இரு பகுதியுடனே, உரைத்திற நாட்டம் கிழவோன் மேன - முற்கூறிய இடங்களிற் கூற்று நிகழ்த்துதல் தலைமகனிடத்தவாம் என்றவாறு. உரைத்திறம் - கூற்றுவகை. நாட்டம் - நாடுதல், ஆராய்ந்து கூறுதல். காட்டு: ஆயிழாய், நின்கண் பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா என்கண் எவனோ தவறு; (இரத்தல்) இஃதொத்தன், புள்ளிக் கள்வன் புனல்சேர் பொதுக்கம்போல் வள்ளுகிர் போந்தனவும் வாளெயி றுற்றனவும் ஒள்ளிதழ் சோர்ந்தநின் கண்ணியும் நல்லார் சிரறுபு சீறச் சிவந்தநின் மார்பும் தவறாதல் சாலாவோ கூறு; (தலைவி ஊடல்) அது தக்கது, வேற்றுமை என்கண்ணோ ஓராதி தீதின்மை தேற்றக்கண் டீயாய் தெளிக்கு. (தெளித்தல்) (கலி - 88) இதனுள், இரத்தலும், ஊடலும், தெளித்தலும் வந்தவாறு காண்க. (36) 7. தலைவன் பாசறைக்கண் தலைவியோ டிராமை 226. எண்ணரும் பாசறை பெண்ணொடு புணரார் இ - ள்: தலைவன் பாசறையிடத்துத் தலைவியோடு தங்கான் என்றவாறு. பகைப் பிரிவு, துணைப் பிரிவு, தூதிற் பிரிவு இவற்றிற்குத் தலைவன் தலைவியை அழைத்துக் கொண்டு செல்லான் என்பதாம். எண் அரும் பாசறை - போர் செய்து வெல்லு மாற்றை எண்ணும் அரியபாசறை; பாசறையிலிருந்து கொண்டு அறிஞருடன் கூடி, முன்னர்ப் போரில் தவறியவற்றையும், பின்னர்ச் செய்ய வேண்டிய வழிகளையும் ஆராய்ந்து முடிவு செய்வதால், ‘எண்ணரும் பாசறை’ என்றார். இரவும் பகலும் போர்த்தொழில் மாறாமை தோன்ற ‘அரும் பாசறை’ என்றார். காட்டு: நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் சிலரொடு திரிதரும் வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே (நெடுநல் - 186) அரிதாக முயன்றமை காண்க. (37) 8. தலைவியோ டிருப்போர் 227. புறத்தோ ராங்கட் புரைவ தென்ப. இ - ள் : புறத்தோர் - கைக்கிளை பெருந்திணையாகிய அகப் புறத் தலைவர்கள், ஆங்கண் புரைவது என்ப - பாசறை யிடத்துப் பெண்ணொடு புணர்த்துப் பாடுதல் பொருந்துவது என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. அகப்புறத் தலைவர்கள் பாசறைக்கண் தலைவியரோடிருப்பர் என்பதாம். (38) 9. பாசறைப் புலம்பல் 228. கிழவி நிலையே வினையிடத் துரையார் வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும். இது, முன் (கற் - 36) கூறிய பாசறைப் புலம்புக்குச் சிறப்புவிதி கூறுகின்றது. இ - ள் : கிழவி நிலையே வினையிடத்து உரையார் - முன் (கற் - 36) ‘பாசறைப் புலம்பு’ என்றார். அது போர் செய்யுங் காலத்துப் புலம்பினதாகச் செய்யுள் செய்யார், வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும் - வெற்றி பெற்ற பின் தான்குறித்த பருவம் வந்தவிடத்தும், தூது கண்டவிடத்தும் புலம்புவதாகச் செய்யுள் செய்வர் என்றவாறு. கிழவி நிலை - தலைவியின் நிலையைக் கூறல், பாசறைப் புலம்பல். புலம்பு - தனிமை. புலம்பல் - தனிமை பற்றிக்கூறல். காட்டு: விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி மங்குல் மாமழை சேட்புலம் படரும் பனியிருங் கங்குலும் தமியள் நீந்தித் தம்மூ ராளே நன்னுதல், யாமே கடிமதிற் கதவம் பாய்தலிற் றொடிபிளந்து நுதிமுகம் மழுங்கிய மொண்ணைவெண் கோட்டுச் சிறுகண் யானை நெடுநா வொண்மணி கழிப்பிணிக் கறைத்தோல் பொழிகணை யுதைப்பத் தழங்குகுரல் முரசமொடு மயங்கும் யாமத்துக் கழித்துறை செறியா வாளுடை யெறுழ்த்தோள் இரவுத்துயில் மடிந்த தானை உரவுச்சின வேந்தன் பாசறை யோமே. (அகம் - 24) இதனுள், ‘கணையுதைப்ப முரசமொடு மயங்கும் யாமத்துத் துயில் மடிந்து வாளுறை செறியா வேந்தன்’ எனவே, வென்றிக் காலங் கூறியவாறும், ‘பனியிருங் கங்குலும் தமியள் நீந்தித் தம்மூராளே நன்னுதல்’ எனக் கிழவி நிலை கூறியவாறுங் காண்க. (39) 10. மீண்டு வரும்வழியில் தங்காமை 229. வினைவயிற் பிரிந்தோன் மீண்டுவருங் காலை இடைச்சுர மருங்கில் தவிர்த லில்லை உள்ளம் போல உற்றுழி யுதவும் புள்ளியற் கலிமா வுண்மை யான. இ - ள் : வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரும் காலை - யாதானுமோர் செய்வினையிடத்துப் பிரிந்தோன் அதனை முடித்து மீண்டு வருங்காலத்து, உள்ளம் போல உற்றுழி உதவும் - மனம் நெடுந்தொலைவை ஒருகணத்திற் சென்றடையுமாறு போலத் தலைவன் மனஞ் சென்றவிடத்தே ஒரு கணத்திற் சென்றுதவி செய்யும், புள்இயல் கலிமா உண்மையான - பறவை போல நிலந் தீண்டாத செலவினையுடைய கலித்த குதிரை உடையவனாதலான், இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை - வரும் வழி எவ்வளவு தொலைவானாலும் இடைவழியில் தங்கி வருதலில்லை என்றவாறு. வினை - முற்கூறிய பிரிவுகள். புள் - விரைவிற்கு எடுத்துக் காட்டு. தேர் குதிரையாற் செல்வதால், குதிரையைக் கூறினார். கலி - எழுச்சி. ஏதேனுமொரு காரியத்தின் பொருட்டு வேறிடஞ் சென்ற தலைவன் மீண்டு வரும்போது, மிகுவிரைவில் செல்லும் குதிரை பூட்டிய தேர் இருப்பதனால் இடைவழியில் தங்கான் என்பதாம். இதனது பயன், ஆற்றாமை மிக்க தலைவியை, வினைமுடித்து மீளுந் தலைவன் விரைவில் வருகுவன் எனத் தோழி ஆற்றுவித்தற் பயத்ததாம். காட்டு: புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் ஏறிய தல்லது வந்த வாறு நானறிந் தன்றோ விலனே யம்ம இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே வான்வழங் கியற்கை வளியூட்டினையோ, மானுரு வாகநின் மனம்பூட் டினையோ உரைமதி வாழியோ வலவ. (அகம் - 384) என, ‘உள்ளம் போல உற்றுழி யுதவிற்று’ எனத் தலைவன் கூறியவாறு காண்க. வலவன் - தேர்ப்பாகன். (40) 11. தலைவன் தன்னைப் புகழ்தல் 230. கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி கிழவோன் வினைவயி னுரிய வென்ப. இதுகாறும் பிரிவு பற்றி யுணர்த்தி, இனி அப்பிரிவுணர்ந்த வழி யுணரப் பயன்படும் அப்பிரிவுக்கு முன்னிகழ்ச்சி பற்றி இதுமுதல் உணர்த்துகின்றார். இ - ள் : கிழவி முன்னர் கிழவோன் தன்புகழ் கிளவி - பிரியும் போது தலைவி முன்னர்த் தலைவன் தன்னைப் புகழ்ந்து கூறுங்கூற்று, வினைவயின் உரிய என்ப - தலைவன் செய்யுந் தொழிலின்கண் உரியவென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. வினைவயின் உரிமையாவது - தலைவன் தான் செய்யும் வினைகளைப் பற்றிப் புகழ்ந்து கூறுதலாம். புகழ்தலாவது - நான் சென்று கற்றுத் தெளிவேன்; பொருள் தேடிவந்து இரவலர்க்குக் கொடுப்பேன்; அறஞ்செய்வேன்; முற்றகப் பட்டோனை முற்று விடுவிப்பேன் எனப் புகழ்தல். அது கேட்ட தலைவி அப்பொதுத் தொண்டுகளை விரும்பிப் பிரிவுக் குடன்படுவள் என்க. காட்டு: இல்லென இரந்தோர்க்கொன் றீயாமை யிழிவெனக் கல்லிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ? (கலி - 2) இதனுள், யான் இழிவெய்தேன் என்றலின், புகழுக்குரியேன் எனக் கூறியவாறும், அதனால், இரவலர்க்குக் கொடுக்கப் பொருளீட்டி வருவேன் என்றவாறுங் காண்க. (41) 12. வன்புறை 231. துன்புறு பொழுதினும் எல்லாங் கிழவன் வன்புறுத் தல்லது சேறல் இல்லை. இ - ள்: துன்புறு பொழுதினும் - தலைவன் பிரியக் கருதின் அது கண்ட தலைவி ஆற்றாது வருந்திய பொழுதும், எல்லாம் - சுற்றமும் தோழியும் ஆயமும் உள்ளார் நீ ஆற்றியிரு என்றும், நாணம் மடம் அச்சம் முதலிய குணங்கள் உள்ள நீ ஆற்றியிரு என்றும், வன்புறுத்து அல்லது கிழவன் சேறல் இல்லை - வற்புறுத்திக் கூறியல்லது தலைவன் பிரிதல் இல்லை என்றவாறு. ‘துன்புறு பொழுதினும்’ என்ற உம்மை, உணர்த்தாது பிரிந்து தலைவி துன்பமிக்க பொழுதினும் என இறந்தது தழீஇயிற்று. அதாவது, உணர்த்திப் பிரியும் போது இவற்றைக் கூறிப் பிரிவது போலவே, உணர்த்தாது பிரியும் போதும் இவற்றால் ஆற்றி யிருப்பாள் என எண்ணியே பிரிவனென்பதாம். வன்புறை - வற்புறுத்துதல். வன்பு - வன்மை. இது, அன்பு, தென்பு, இன்பு போல நின்ற பண்புப்பெயர். உறை - தொழிற் பெயர். உறு + ஐ. ஐ - தொழிற் பெயர் விகுதி. அனைத்துமோர் விகுதியாய், வன்பு + உறை - வன்புறை எனப் புணர்ந்து தொழிற் பெயராயிற்று. சொல்லாது பிரியுங்கால், காட்டு: 1. காழ்விரி கவையாரம் மீவரு மிளமார்பு போழ்திடைப் படாஅமல் முயங்கியும் அமையாரென் தாழ்கதுப் பணிகுவர் காதலர் மற்றவர் சூழ்வதை யெவன்கொ லறியே னென்னும்; முள்ளுறழ் முளையெயிற் றமிழ்தூறுந் தீநீரைக் கள்ளினும் மகிழ்செயும் எனவுரைத்து மமையாரென் ஒள்ளிழை திருத்துவர் காதலர் மற்றவர் உள்ளுவ தெவன்கொ லறியே னென்னும். (கலி - 4) இவ்வாறு தலையளி செய்து தெருட்டிப் (தெளிவித்து) பிரிய, அவை பற்றுக் கோடாகத் தலைவி ஆற்றுதலின், அவள் குணங்கள் வற்புறுத்துவனவாயின. 2. அரிதாய வறனெய்தி அருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர். (கலி - 11) இது, சொல்லிப் பிரிதல். (42) 13. தலைவன் செலவழுங்கல் 232. செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும். இ - ள் : செலவு இடை அழுங்கல் - பிரியக் கருதிய தலைவன் இடையிற் சில நாள் தவிர்ந்திருத்தல், செல்லாமை அன்றே - செல்லாமல் நின்றுவிடுதற்கன்று, வன்புறை குறித்த தவிர்ச்சி ஆகும் - அவ்வாறு தலைவியை வற்புறுத்திச் செல்லுதற்குத் தவிர்ந்ததே யாகும் என்றவாறு. அவ்வாறு - முற்சூத்திரத்து வற்புறுத்தியவாறு. தலைவன் செலவழுங்கி ஆற்றுவிக்கத் தலைவி ஆற்றியிருத்தல் இப்பிரிவிற்கு நிமித்தமாகலின், இது பாலையாயிற்று. அழுங்கல் - தவிர்தல். காட்டு: மணியுரு விழந்த அணியிழை தோற்றம் கண்டே கடிந்தனஞ் செலவே, ஒண்டொடி உழைய மாகவும் இனைவோள் பிழையலள் மாதோ பிரிதுநா மெனினே. (அகம் - 5) எனக் காண்க. (43) 14. தலைவன் தலைவியைப் பாராட்டல் 233. செய்பொருள் அச்சமும் வினைவயிற் பிரிவும் மெய்பெற வுணர்த்துங் கிழவிபா ராட்டே. இ - ள் : கிழவி பாராட்டே - தலைவன் தலைவியைப் பாராட்டிய பாராட்டு, செய்பொருள் அச்சமும் - தான் செய்யும் பொருட்கு இவள் இடை யூறாவாளோ எனத் தலைவன் அஞ்சிய அச்சத்தையும், வினைவயின் பிரிவும் - தான் பொருள் செய்தற்குப் பிரிகின்றதனையும், மெய்பெற உணர்த்தும் - ஒரு தலையாகத் தலைவிக்கு உணர்த்தும் என்றவாறு. அதாவது, அப்பாராட்டினால் செலவுக்குத் தலைவி இடையூறு செய்யாமல் இருக்கவும், பிரியக் கருதினானென உய்த்துணரவும் பாராட்டுவனென்பதாம். ஒருதலை - துணிவு. காட்டு: கழிபெரு நல்கலொன் றுடைத்தென என்றோழி அழிவொடு கலங்கிய எவ்வத்தள் ஒருநாள்நீர் பொழுதிடைப் படநீப்பின் வாழ்வளோ ஒழிகினிப் பெருமநின் பொருட்பிணிச் செலவே. (கலி. . . .) (புணர்ச்சிப்பின்) மிக்க தலையளி செய்தலான் தலைவன் செய்பொருட்கு அஞ்சியவாறும், அவன் பிரியக் கருதியதும் தலைவி உணர்ந்தா ளென்க. கழிபெரு நல்கல் - மிக்க தலையளி செய்தல். இந்நான்கு சூத்திரங்களினும் (40, 41, 42, 43) கூறியவாற்றான், தலைவியின் உடன்பாடு பெற்றே தலைவன் பிரிவன் என்பதும், தான் பிரிந்து சென்று இன்ன செய்வேன் எனத் தன்னைப் புகழ்வதும், சுற்றத்தார் துணையையும் தலைவி குணங்களையும் சிறப்பித்துக் கூறுவதும், சில நாள் செல்லாமல் தவிர்வதும், தலைவியைப் பாராட்டிக் குறிப்பாற் பிரிவை யுணர்த்துவதும் தலைவியை ஆற்றுவித்துப் பிரிதற்கே யாமென்பது தெளிவாம். இது, அக்காலப் பெண்ணுரிமையின் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். (44) 15. தலைவன் செய்வினைக் கச்சம் 234. புணர்ந்துடன் போகிய கிழவோள் மனையிருந் திடைச்சுரத் திறைச்சியும் வினையுஞ் சுட்டி அன்புறு தக்கன கிளத்தல் தானே கிழவோன் செய்வினைக் கச்ச மாகும். இது, தலைவி கூற்றின்கட் படுவதோர் இலக்கணங் கூறுகின்றது. இ - ள் : புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து - களவுக் காலத்துப் புணர்ந்து உடன் போன தலைவி, கற்புக் காலத்து இல்லின்கண் இருந்து, இடைச் சுரத்து இறைச்சியும் அன்புறு தக்க வினையும் சுட்டிக் கிளத்தல் தானே - தான் உடன் போன போது காட்டின்கட் கண்ட கருப் பொருள்களையும், தலைவன் தன்மேல் அன்பு செய்தற்குத் தக்க கருப்பொருள்களின் தொழில்களையும் கூறுதலானது, கிழவோன் செய்வினைக்கு அச்சம் ஆகும். தலைவன் மேற்கொண்டு சென்ற காரியத்தை முடிப்பானோ என்று தலைவி அஞ்சும் அச்சமாகும் என்றவாறு. அன்புறுதக்க வினையாவது - ஆண்யானை பிடிக்கு இலைகளை ஒடித்துக் கொடுத்தல், புறாப் பெடையை அழைத்தல் போல்வன. வினை - இறைச்சியின் வினை. இறைச்சி - கருப்பொருள். அதாவது, இடைவழியில் அவ்வன்புறு தக்கன கண்டு நம்மை நினைந்து வினைமுடியாமல் தலைவன் திரும்பி வந்து விடுவானோ என்று தலைவி அஞ்சுதலாம். இதனால், தலைவி பிரிந்திருத்தலை ஆற்றாது பிரிவை வெறுத்தாளே யன்றி, வினை முடித்தலை விரும்பாதிருந்திலள் என்பது விளங்கும். முன், ‘நாளது சின்மையும் இளமைய தருமையும், (கற் - 36) பற்றி உடன் பட்டதற்கும் இஃது ஏதுவாகும். இதனால், களவொழுக்க மொழுகிக் களவு முதிர்ந்து மணந்து கொண்டு காதல் வாழ்க்கை நடத்திய அக்காலக் காதலர்களின் உற்றதறியும் ஒருமை வாழ்க்கை எண்ணி இன்புறற்பால தொன்றாம். புணர்ந்துடன் போகிய தலைவி, காட்டின் வழியே செல்லும் போது ஆங்குள்ள கருப்பொருள்களின் தொழில்களை அறிந்திருப் பாளாதலின் அவற்றுள் அன்புறு தக்கன கூறித் தலைவன் செய்வினைக் கஞ்சுவாள். எனவே, புணர்ந்துடன் போகாத தலைவி, தலைவன் கூறக் கேட்டறிந்தவாற்றால் அன்புறு தக்கன கூறல் தலைவன் செய்வினைக்கு அச்சமாகாது; வருவரெனத் துணிந்து கூறுதலாம். காட்டு: 1. கான யானை தோல்நயந் துண்ட பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை அலங்க லுலவை யேறி ஒய்யெனப் புலம்புதரு குரல புறப்பெடை பயிரும் அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச் சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக் கொல்லோ மென்ற தப்பற்குச் சொல்லா தகறல் வல்லு வோரே. (குறுந் - 79) இதனுள், புலம்புதரு குரலவாய்ப் புறவினைப் பெடை யழைக்கும் வருத்தங்கண்டு வினைமுடியாமல் தலைவர் வருவரோ என அஞ்சியவாறு காண்க. 2. கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலான் துன்னரூஉந் தகையவே காடென்றா ரக்காட்டுள் இன்னிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்குங் கலையெவு முரைத்தனரே; என வாங்கு, இனைநல முடைய கானஞ் சென்றோர் புனை நலம் வாட்டுந ரல்லர், மனைவயிற் பல்லியும் பாங்கொத் திசைத்தன நல்லெழி லுண்கணும் ஆடுமா லிடனே. (கலி - 11) இதனுள், தலைவன் அன்புறுதக்கன கூறக்கேட்ட தலைவி அவற்றைக் கூறி, ‘புனை நலம் வாட்டுநர் அல்லர்’, என வரவு கருதித் துணிந்து கூறுதல் காண்க. பிணை - பெண்மான். (45) 16. வாயில்கள் அன்புறு தக்கன கூறல் 235. தோழியுள் ளுறுத்த வாயில் புகுப்பினும் ஆவயின் நிகழும் என்மனார் புலவர். இ - ள் : தோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும் - தலைவனது செலவுக் குறிப்பறிந்த தலைவி, தலைவனைப் போகாமல் தடுப்பதற்குத் தோழி முதலிய வாயில்களை அவன்பால் போகவிட்ட போது அவர்களும், அவயின் நிகழும் என்மனார் புலவர் - அவ்வன் புறுதக்கன கூறித் தலைவனைச் செலவழுங்குவிப்பர் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. அதாவது, அன்புறுதக்கன கூறி, அதனால் நீர் செய்வினை முடியாமல் திரும்ப நேரும். ஆகவே, செலவொழிக என்பரென்க. தோழி உள்ளுறுத்த வாயில் - தோழி உள்ளிட்ட வாயில்கள். அவர் - பாணர், பாடினி முதலியோர். (பொது - 28) காட்டு: உடையவ ளுயிர்வாழாள் நீர்நீப்பி னெனப்பல விடைகொண்டியா மிரப்பவும் எமகொள்ளா யாயினை கடைஇய ஆற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை அடையொடு வாடிய அணிமலர் தகைப்பன, வல்லைநீ துறப்பாயேல் வகைவாடும் இவளென ஒல்லாங்கியா முரைப்பவும் உணர்ந்தீயா யாயினை செல்லுநீ ளாற்றிடைச் சேர்ந்தெழுந்த மரம்வாடப் புல்லுவிட் டிறைஞ்சிய பூங்கொடி தகப்பன. (கலி. 3) இதனுள், நீரற்ற மலரும், பற்றாகிய மரமற்ற கொடியும் ஆகிய இறைச்சியும் வினையுங் கூறி, அவை நின்னைத் தடுக்கும். அதனால், நீ தலைவிக் கிரங்கிச் செலவழுங்குமெனக் கூறியது காண்க. ‘யாமிரப்பவும் எமகொள்ளாய், யாமுரைப்பவும்’ எனத் தோழி பிற வாயில்களையும் உளப்படுத்துரைத்தவாறு காண்க. தகைப்பன - தடுப்பன. தோழி, அன்புறுதக்கன கூறித் தலைவியை ஆற்றுவித்தலுங் கொள்க. (உவம - 46) (46) 17. கூற்று 1. தலைவன் : 6 : 23 - 33 23. தானவட் பிழைத்த நிலையின் கண்ணும் 24. உடன்சேறல் செய்கையொடு அன்னபிறவும் மடம்பட வந்த தோழிக் கண்ணும் 25. வேற்றுநாட்டு அகல்வயின் விழுமத்தானும் 26. மீட்டுவரவு ஆய்ந்த வகையின் கண்ணும் 27. அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும் 28. பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும் 29. காமக் கிழத்தி மனையோள் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரும் 30. சென்ற தேஎத்து உழைப்புநனி விளக்கி இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும் 31. அருந்தொழில் முடித்த செம்மற் காலை விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும் 32. மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்ணும் 33. ஏனை வாயில் எதிரும் இ - ள் : 23. தான் அவள் பிழைத்த நிலையின் கண்ணும் - தலைவன் தலைவிக்குக் கூறிய சொல்லைத் தப்பிய இடத்தும் கூறுவன். தப்புதலாவது - இயற்கைப் புணர்ச்சி முதல் பல காலும் ‘உன்னைப் பிரியேன்; பிரியின் ஆற்றேன்’ எனக் கூறிய சொல்லைத் தப்பிப் பிரிவேன் என்றல். காட்டு: பூத்த விருப்பைக் குழைபொதி குவையிணர் கழறுளை முத்திற் செந்நிலத் துதிர மiளி மறந்த பைங்குடிச் சீறூர்ச் சேக்குவங் கொல்லோ நெஞ்சே, பூப்புனைப் புயலென வொலிவருந் தாழிருங் கூந்தல் செறிதொடி முன்கைநங் காதலி அறிவஞர் நோக்கமும் புலவியு நினைந்தே. (அகம் - 225) இது, நெஞ்சினாற் பிரியக் கருதி வருந்திக் கூறியது. சேக்குவம் - தங்குவம். 24. உடன் சேறல் செய்கை யொடு - தலைவி உடன் செல்லு தலை விரும்பும்படியான தலைவனிடத் துண்டாகும் செய்கையோடு, அன்ன பிறவும் - அவை போன்ற பிறவும், மடம்பட வந்த தோழிக் கண்ணும் - அறியாமை தோன்றக் கூறிய தோழிக்கு எதிர்கூறு மிடத்தும். உடன் கொண்டு சேறல் முறை எனக் கூறலின், ‘மடம்பட’ என்றார். உடன் சேறல் செய்கையாவன : வேற்று நாட்டுக்குச் செல்வான் வில்லெடுக்கத் தலைவி முகம் வேறுபடுதலும், அம்பு தொடக் கண்ணீர் விடுதலும் போல்வன. அன்னபிறவாவன - தேர்பூட்டல், இளையர்வருதல் முதலியன. இவற்றைத் தலைவி அறிந்தால் அவளும் உடன்வரத் துணிவாள் எனத் தோழி கூறுதலாம். காட்டு: 1. கைபுனை வல்வில் ஞாணுளர் தீயே, இவட்கே, செய்வுறு மண்டில மையாப் பதுபோல் மையில் வாள்முகம் பசப்பூ ரும்மே; நீயே, வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப் புனைமாண் மரீஇய அம்புதெரி தீயே, இவட்கே, சுனைமா ணீலங் காரெதிர் பவைபோல் இனை நோக் குண்கண் நீர்நில் லாவே. (கலி - 7) எனத் தோழி கூறுதல் காண்க. 2. வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகல் சின்னீர் வளையுடைக் கையள் எம்மொ டுணீஇய வருகதில் லம்ம தானே அளியளோ அளியளென் நெஞ்சமர்ந் தோளே. (குறுந் - 56) இதனுள், தோழி உடன்கொடு செல்க என்றதற்கு, ‘நாயுண்ட எச்சிலையும், அழுக்கு நீரையும் உண்ண வருக’ என, அவள் உண்ணாள் எனத் தலைவன் மறுத்துக் கூறியது காண்க. 25. வேற்று நாட்டு அகல் வயின் விழுமத்தானும் - அங்ஙனம் தலைவியைவிட்டு வேற்று நாட்டுக்குப் பிரியுங் காலத்துத் தான் துன்ப முற்ற விடத்தும். விழுமம் - துன்பம். விழுமமாவன: 1. கனவி னரற்றல் 2. போவேமோ தவிர்வேமோ வெனக் கூறல் 3. இவள் நலன் திரியு மென்றல் 4. தலைவியின் ஐயந்தீர்த்தல் 5. நெஞ்சிற்குக் கூறிச் செலவழுங்குதல் காட்டு: 1. மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள் பாயல்கொண் டென்றோட் கனவுவார் ஆய்கோல் தொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ இடுமருப் பியானை யிலங்குதேர்க் கோடு நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்று செய்பொருள் முற்று மளவென்றார். (கலி - 24) இதனுள், ‘யான் நெடுமலை வெஞ்சுரம் போய்ச் செய்பொருள் முற்றுமளவும் கடிமனை காத்தோம்பல் வல்லளோ, எனத் தலைவன் கனவின் அரற்றியதைத் தலைவி தோழிக்குக் கூறியது காண்க. 2. கான யானை கவினழி குன்றம் இறந்துபொருள் தருதலும் ஆற்றாய், சிறந்த சில்லையங் கூந்தல் நல்லகம் பொருந்தி ஒழியின் வறுமை யஞ்சுதி, அழிதக உடைமதி வாழிய நெஞ்சே. . . இறவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங்கட லோதம் போல ஒன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே. (அகம் -123) இதனுள், ‘நெஞ்சே, குன்றம் இறந்து பொருள் தரலும் ஆற்றாய், சில்லையங் கூந்தல் நல்லகம் பொருந்தி ஒழியின் வறுமை அஞ்சுதி, ஒன்றிற் கொள்ளாய் சென்று தரு பொருட்கே’ எனப் போவேமோ தவிர்வேமோ என நெஞ்சொடு கூறியது காண்க. 3. துன்னருங் கானம் என்னாய் நீயே, குவளை யுண்கண் இவளீண் டொழிய ஆள்வினைக் கதறி யாயின் நின்னொடு போயின்று கொல்லோ தானே படப்பைக் கொடுமு ளீங்கை நெடுமா வந்தளிர் நீர்மலி கதழ்பெயல் தலைஇய ஆய்நிறம் புரையுமிவள் மாமைக் கவினே. (நற் - 205) இது, இவள் நலன் அழியுமென்று செலவழுங்கியது. நீ என்றது - நெஞ்சை. ‘மாமைக்கவின் நின்னொடு போயின்று கொல்லோ’ எனக் காண்க. 4. தேர்செல வழுங்கத் திருவிற் கோலி ஆர்கலி யெழிலி சோர்தொடங் கின்றே வேந்துவிடு விழுத்தொழி லொழிய யான்றொடங் கின்னாள் நிற்புறந் தரவே. (ஐங் - 428) இது, பிரிவாரோ என்று ஐயுற்ற தலைவியின் ஐயந் தீர்த்தது. 5. ஈதலுந் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச் செய்வினை கைம்மிக எண்ணுதி, அவ்வினைக் கம்மா அரிவையும் வருமோ எம்மை யுய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே. (குறுந் - 63) இது, தலைவியும் வருமோ வென நெஞ்சிற்குக் கூறிச் செல வழுங்கியது. 26. மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும் - தலைவன் பிரிந்து செல்லும் போது, இடைவழியில் தலைவியின் உரு வெளிப்பாடு தோன்றிய விடத்தும், மனம் வேறுபட்ட விடத்தும், செல்லாது தன்னூர்க்கே மீண்டு (திரும்பி) வருதலை ஆராய்ந்த கூறுபாட்டின் கண்ணும் கூறுவன். அவை 1. உருவெளிப்பாடு கண்டு கூறல் 2. மனம் வேறுபட்டு மீட்டுவர வாய்ந்து கூறல் 3. மீளலுறும் நெஞ்சினை நொந்து இளையோர்க் குரைத்தல் 4. இடைச் சுரத்துத் தலைவி குணநினைந் திரங்கல் காட்டு: 1. பெருங்கா டிறந்தும் எய்தவந் தனவால் அருஞ்செயற் பொருட்பிணி முன்னி யாமே சேறு மடந்தை யென்றலில் தான்றன் நெய்த லுண்கண் பைதல் கூரப் பின்னிருங் கூந்தலின் மறையினள் பெரிதழிந் துதியன் மண்டிய ஒலிதலை ஞாட்பின் இம்மென் பெருங்களத் தியவ ரூதும் ஆம்பலங் குழலின் ஏங்கிக் கலங்கஞ ருறுவோள் புலம்புகொள் நோக்கே. (நற் - 113) இது, தலைவியின் உருவெளிப்பாடுற்றுக் கூறியது. 2. பசியட முடங்கிய பைதற் செந்நாய் மாயா வேட்டம் போகிய கணவன் பொய்யா மரபிற் பிணவு நினைந்திரங்கும் விருந்தின் வெங்காட்டு வருந்துதும் யாமே ஆள்வினைக் ககல்வாம் எனினும் மீள்வா மெனினும் நீதுணிந் ததுவே. (நற் - 103) இது, மனம் வேறுபட்டு மீட்டு வரவு ஆய்ந்து கூறியது. 3. ஆள்வழக் கற்ற பாழ்படு நனைந்தலை வெம்முனை யருஞ்சுரம் நீந்தி நம்மொடு மறுதரு வதுகொல் தானே செறிதொடி கழிந்துகு நிலைய வாக ஒழிந்தோள் கொண்டவென் உரங்கெழு நெஞ்சே. (ஐங் - 329) இது, மீளலுறும் நெஞ்சினை நொந்து இளையோர்க் குரைத்தது. 4. நெடுங்கழை முளிய வேனில் நீடிக் கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் வெய்ய வாயின முன்னே, இனியே ஒண்ணுத லரிவையை உள்ளுதொறும் தண்ணிய வாயின சுரத்திடை யாறே. (ஐங் - 322) இது, இடைச் சுரத்துத் தலைவி குணம் நினைந்து இரங்கியது. 27. அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும் - சென்ற விடத்தில் எடுத்த காரியம் முடிந்த வெற்றிச் சிறப்பைப் பாராட்டு மிடத்தும். சிறப்பாவன: பகைவென்று திறை கோடல், பொருள்தேடி முடித்தல், கற்றுத் தெளிதல் முதலியன. காட்டு: கேள்கே டூன்றவும் கிளைஞ ராரவும் (அகம் - 93) செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு. (குறுந் - 270) என, மனமகிழ்ந்து கூறியவாறு காண்க. 28. பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும் - பெரிய புகழை யுடைத்தாகிய தோர்ப்பாகன் விரைவில் தேரூர்ந்த சிறப்பினைக் கூறுமிடத்தும்; காட்டு: இருந்த வேந்த னருந்தொழில் முடித்தெனப் புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் ஏறிய தறிந்தன் றல்லது வந்தவாறு நனியறிந் தன்றோ விலனே, தாஅய் மெல்லிய லரிவை இல்வயின் நிறீஇ இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே. (அகம் - 384) இது, பாகன் சிறப்புக் கூறியது. 29. காமக்கிழத்தி மனையோள் என்று இவர் சொல்லிய ஏமுறு கிளவி எதிரும் - பிரிந்து மீண்ட தலைவனிடம் காமக் கிழத்தியும் தலைவியும் வருத்தமுற்றுக் கூறிய சொல்லிற்கு எதிர் மொழி கூறுமிடத்தும். ஏமுறுதல் - வருந்துதல். காட்டு: 1. எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடை அரிய வாயினும் எளிய வன்றே அவவுறு நெஞ்சம் கவவுநனி விரும்பிக் கடுமான் றிண்டேர் கடைஇ நெடுமான் நோக்கிநின் உள்ளியாம் வரவே. (ஐங் - 360) இது, வருத்தமுற்றீரோ என்றதற்கு, ‘நின் உள்ளி வர அரிய வாயினும் எளியவன்றே’ என, எதிர்மொழி கூறியது. 2. உள்ளுநர்ப் பணிக்கும் ஊக்கருங் கடத்திடை எள்ளல் நோனாப் பொருடரல் விருப்பொடு நாணுத்தளை யாக வைகி மாண்வினைக் குடம்பாண் டொழிந்தமை யல்லதை மடங்கெழு நெஞ்சம் நின்னுழை யதுவே. (அகம் - 29) இது, மறந்தீர் போலும் என்றதற்கு, எதிர்மொழி கூறியது. 30. சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி - (அங்ஙனம் கூறிய இருவர்க்கும்) தான் சென்ற இடத்தில் பிரிவாற்றாமையால் தானுற்ற வருத்தத்தை விளங்கக் கூறி, இன்றிச் சென்ற தம் நிலை கிளப்பினும் - உங்களைப் பிரிய மனமின்றி, நனவினன்றிக் கனவிற் பிரிவதுபோல் பிரிந்து சென்றேன் எனத் தம் நிலைமை கூறுமிடத்தும். அதாவது, உண்மையாக நான் சென்ற போதிலும் நினைவெல்லாம் உங்களிடமே; கனவு போன்றதே எம்பிரிவு என்பதாம். நெஞ்சை உளப்படுத்துத் ‘தம்’ என்றான். காட்டு: கோடேந்து புருவமொடு குவவுநுதல் நீவி நறுங்கதுப் புளரிய நன்ன ரமயத்து வறுங்கை காட்டிய வாயல் கனவின் ஏற்றேக் கற்ற உலமரல் போற்றா யாகலிற் புலத்தியா வெம்மே. (அகம் - 39) இதனுள், ‘வறுங்கை காட்டிய வாயில் கனவின்’ என நனவின்றிக் கனவு போலச் சென்றதாகத் தலைவன் கூறியவாறு காண்க. இக்குறிப்பால், தலைவியும் காமக்கிழத்தியும் ஒன்றுபட்ட வாழ்க்கை நடத்தினரெனத் தெரிகிறது. 31. அருந்தொழில் முடித்த செம்மல் காலை - செயற் கரிய வினையை முடித்து மீண்ட காலத்து, விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும் - தலைவி தன்னை வரவேற்றல், நீராடிக் கோலஞ் செய்தல் முதலியவற்றைக் காண வேண்டிய விடத்தும். விருந்து - விருந்திட அழைத்துச் செல்ல வருதல். நல்லவை - நீராடி ஆடையணிகளால் ஒப்பனை செய்து கொள்ளுதல். இன்றும், கணவர் வாணிகத்தின் பொருட்டோ, வேறு காரியமாகவோ வெளியூர் சென்றுவரின், நீராடிக் கோலஞ் செய்து கொண்டு, புதிதாகக் காய்கறி, பலகாரம் முதலிய செய்து விருந்திடுதல் உண்டு. காட்டு: வீழ்மா மணிய புனைநெடுங் கூந்தல் நீர்வார் புள்ளி யாகம் நனைப்ப விருந்தயர் விருப்பினள் வருந்தும் திருந்திழை யரிவை தேமொழி நிலையே. (நற் - 374) இதனுள், ‘கூந்தல் நீர்வார் புள்ளி ஆகம் நனைப்ப’ எனவும், விருந்தயர் விருப்பினள்’ எனவும், விருந்தொடு நல்லவை வேட்டுக் கூறியவாறு காண்க. 32. மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் கேளிர் - தலைவனை வரவேற்க மாலை ஏந்தி எதிர் சென்ற பெண்களும் பிள்ளைகளும் ஆகிய சுற்றத்தார், ஒழுக்கத்துப் புகற்சிக் கண்ணும் - வரவேற்கு மிடத்தும் தலைவன் மகிழ்ந்து கூறுவன். ஒழுக்கம் - முறையோடு வரவேற்றல். புகற்சி - விருப்பம். இன்றும் இது நடைமுறையில் உள்ளது. காட்டு: நாணுடை யரிவை மாணகர் நெடுந்தேர் எய்தவந் தன்றாற் பாக, நல்வர விளைய ரிசைத்தலிற் கிளையோ ரெல்லாம் சேயுயர் நெடுங்கடைத் துவன்றனர் எதிர்மார் தாயரும் புதல்வரும் தன்முன் பறியாக் கழிபே ருவகை வழிவழி சிறப்ப அறம்புரி யொழுக்கங் காண்கம் வருந்தின காண்கநின் திருந்துநடை மாவே. என, வரவேற்க வருதலைத் தலைவன் பாகற்குக் கூறுதல் காண்க. 33. ஏனை வாயில் எதிரொடு தொகை - பாணன் முதலிய வாயில்கட்கு எதிர்மொழி கூறும் கூற்றோடே முற்கூறியவற்றைத் தொகுத்து; பிரிந்து மீண்ட தலைவனைக் காலந்தாழ்த்தானெனத் தலைவி ஊடி விலக்கவே, அவ்வூடல் தீர்க்க விடும் வாயில்களிடம் தலைவன் தலைவி தன்மை கூறுவனென்க. காட்டு: நகுகம் வாராய் பாண, பகுவாய் அரிபெய் கிண்கிணி யார்ப்பத் தெருவில் தேர்நடை பயிற்றும் தேமொழிப் புதல்வன் பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு காமர் நெஞ்சந் துரப்ப யாந்தம் முயங்கல் விருப்பொடு குறுகினே மாகப் பிறைவனப் புற்ற மாசில் திருநுதல் நாறிருங் கதுப்பினெங் காதலி வேறுணர்ந்து வெரூஉமான் பிணையி னொரீஇ யாரை யோவென் றிகழ்ந்துநின் றதுவே. (நற் - 250) இது, பாணற்குத் தலைவி தன்மை கூறியது. புதல்வன் சிதைத்த சாந்தொடு செல்ல, அவள் வேறுணர்ந்து, பிணையின் ஒரீஇ, யாரையோ என்று இகந்து நின்றாள் எனக் காண்க. பண்ணமை பகுதி முப்பதினொரு மூன்றும் - சொல்லப்பட்ட இவையே இடமாக நல்லறிவுடையோர் வேறு வேறாகச் செய்யுள் செய்து கோடற்கு அமைந்து நின்ற கூறுபாட்டையுடைய முப்பத்து மூன்று துறையும், எண்ணரும் சிறப்பின் கிழவோன் மேன - மிக்க சிறப்பினையுடைய தலைவன் கண்ண என்றவாறு. பகுதி என்றது - மலிவு, புலவி, ஊடல், உணர்வு, பிரிவுகட்குரிய வென்றவாறு. 1. தலைவன் தலைவியை ஆற்றுவித்துப் பிரிதல் 2. வினைமுற்றியதும் தலைவியை நினைத்து உடனே புறப்படுதல் 3. மிகுவிரைவில் தலைவியை அடைதல் 4. தலைவியும் சுற்றமும் எதிர்சென் றழைத்து வருதல் 5. சென்ற இடத்து நிகழ்ச்சியைத் தலைவி கேட்டறிதல் 6. கூறிச்சென்ற பருவத்தில் வாராது காலந்தாழ்க்கின் தலைவி ஊடுதல். 7. வாயில்கள் மூலம் தாழ்த்த காரணத்தைக் கூறி ஊடல் தீர்த்தல். - ஆகியவை பிரிவின் வகையாகும். தலைவி கூற்று: கற் - 7: 18, 19 கூற்றுக்கள் இவ்விடத்திற்கும் பொருந்தும். புலவியூடற் பகுதியில் உள்ளன. 1. தோழி : 8 : 19 19. பிரியும் காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் - தலைவன் பிரியும்போது அவன் எதிர்நின்று கூறிய செலவழுங்கு வித்தற் சொல்லும், உளப்படப் பிறவும் - அவை போன்ற பிறவும், வகைபட வந்த கிளவி எல்லாம் தோழிக்கு உரிய என்மனார் புலவர் - இவ்வாறு பலதிறப்பட வந்த கிளவிக ளெல்லாம் தோழிக்கு உரியவென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. எதிர்தல் - தலைவன் கூற்றுக்கு எதிர்மொழி கூறுதல். பிறவாவன: 1. தலைவன் வரவும் மலிந்து கூறல் - தலைவிக்கு 2. வந்தபின் முன்பு நிகழ்ந்தன கூறல் - தலைவற்கு 3. பருவமன் றெனல் - தலைவிக்கு 4. தூது கண்டு கூறல் - தலைவிக்கு 5. தூதாய் வந்தார்க்குக் கூறல் - தூதர்க்கு 6. தூதுவிடுதல் - தூதர்க்கு 7. இரவில் வந்துழிக் கூறல் - தலைவற்கு காட்டு: புறவணி நாடன் காதன் மடமகள் ஒண்ணுதல் பசப்ப நீசெலிற் றெண்ணீர்ப் போதவிழ் தாமரை யன்னநின் காதலம் புதல்வன் அழுமினிப் பாற்கே. (ஐங் - 424) இதனுள், ‘நீ செலின் புதல்வன் பாலுக்கு அழும்’ எனவே, பாலின்றாகும்படி தலைவி உடல் வாடுவாளெனத் தலைவியது ஆற்றாமை கூறிச் செலவழுங்கு வித்தமை காண்க. 1. நெடும்பெருங் குன்றம் நீந்தி நம்வயின் வந்தனர் வாழி தோழி, கையதை செம்பொற் கழறொடி நோக்கி மாமகள் கவவுக்கொ ளின்குரல் கேட்டொறும் வயவுக்கொள் மனத்தே மாகிய நமக்கே. (நற் - 212) இது, தலைவிக்கு வரவு மலிந்து கூறியது. வரவு மலிதல் - தலைவன் வந்தமைக்கு மகிழ்தல். 2. இந்நிலை வாரா ராயின் தந்நிலை எவன்கொல் பாண உரைத்திசிற் சிறிதெனக் கடவுட் கற்பின் மடவோள் கூறச் செய்வினை யழிந்த மையல் நெஞ்சில் துனிகொள் பருவரல் றீர வந்தோய் இன்னகை இளையோள் கவவ மன்னுக பெருமநின் மலர்ந்த மார்பே. (அகம் - 314) இது, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும், அது கண்டு தான் கலங்கியவாறும் தலைவற்குக் கூறியது. ‘இந்நிலை வராராயின் தந்நிலை எவன் கொல்’ எனத் தலைவி ஆற்றாமை தோன்றக் கூறியது காண்க. 3. மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதரக் கொம்புநேர் கொடியிண ரூழ்த்த வம்ப மாரியைக் காரென மதித்தே. (குறுந் - 66) இது, பருவமன்றெனப் படைத்து மொழிந்தது. வம்பு - பருவ மல்லாத காலத்துத் தோன்றுவது, மடவ - அறியாமைய. வம்ப மாரியைக் காரென எண்ணி மலர்ந்ததால், கொன்றை அறியாமை யுடைய தெனப் படைத்துக் கூறியது காண்க. 4. எனநீ, தெருமரல் வாழி தோழிநங் காதலர் பொருமுரண் யானையர் போர்மலைந் தெழுந்தவர் செருமேம் பட்ட வென்றியர் வருமென வந்தன்றவர் வாய்மொழித் தூதே. (கலி - 26) இது, தூது வந்தமை தலைவிக்குக் கூறியது. 5. கைவல் சீறியாழ்ப் பாண, நுமரே செய்த பருவம் வந்துநின் றதுவே எம்மி னுணரா ராயினும் தம்வயின் பொய்படு கிளவி நாணலும் எய்யா ராகுதல் நோகோ யானே. (ஐங் - 472) இது, குறித்த பருவத்துத் தலைவன் வாராத வழித் தூதாய் வந்த பாணற்குத் தோழி கூறியது. நுமர் என்றது தலைவனை. 6. கைவல் பாண, செய்பொருட் பிரிந்தோர்க் கொய்யெனச் சென்றாங் குரைத்திசின் வால்வீக் கொன்றை மலர்ந்து நாள்சில சென்றன வெவன்கொல் தேமொழி நிலையே. (குழந்தை) இது, கூறிச் சென்ற பருவம் கழிந்தும் வரவில்லையெனப் பாணனிடம் கூறித் தலைவனிடம் அவனைத் தூது விட்டது. 7. பதுக்கைத் தாய வொதுக்கருங் கவலைச் சிறுகண் யானை உறுபகை நினையா தியாங்குவந் தனையோ பூந்தார் மார்ப, அருள்புரி நெஞ்சம் உய்த்தர இருள்பொர நின்ற இரவி னானே. (ஐங் - 362) இது, சேணிடைப் பிரிந்து இரவில் வந்த தலைவற்குக் கூறியது. அன்னை வாழிவேண் டன்னை நம்மூர்ப் பலர்மடி பொழுதின் நலமிகச் சாஅய் நள்ளென வந்த இயல்தேர்ச் செல்வக் கொண்கன் செல்வனஃ தூரே. (ஐங் - 104) இது, புதல்வன் பிறந்த ஞான்று தலைவனூர்க்கு வந்த செவிலிக்கு, முன்னர் அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவனூர் காட்டிக் கூறியது. நான்காவது கற்பியல் குழந்தையுரை முற்றிற்று. * * * ஐந்தாவது மெய்ப்பாட்டியல் 1. மெய்ப்பாட்டின் தொகை 236. பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் கண்ணிய புறனே நானான் கென்ப. மெய்ப்பாட்டினது இலக்கணங் கூறுகின்றமையான் இவ் வியல், மெய்ப்பாட்டியல் என்னும் பெயர்த்தாயிற்று. இயல் - இலக்கணம். மெய்ப்பாடாவது - உள்ளக் குறிப்பானது பிறர்க்குப் புலனாகும்படி மெய்யின்கண் வெளிப்பட்டுத் தோன்றுதல். அது, மெய்ம்மயிர் சிலிர்த்தல், மெய்வியர்த்தல், கண்ணிமைத்தல், முகஞ் சுளித்தல், உடல் நடுங்கல் முதலியனவாம். மெய்ப்பாடு - பொருள் வெளிப்பாடு. உள்ள நிகழ்ச்சி உள்ளத்தில் நிகழ்ந்தவாறே பிறர்க்குப் புலனாகும்படி மெய்யின் கண் வெளிப்படுதல். மெய்ப்பாடு - மெய்ப்படுதல். படுதல் - உண்டாதல், தோன்றுதல். உள்ளக்குறிப்பு உடலின் கட்டோன்றுதலாம். அம்மெய்ப்பாடு - அகம் புறம் இரண்டற்கும் உரிய பொது மெய்ப்பாடு; அகத்திற்கே உரியவை என இரண்டு வகைப்படும். அகத்திற்குரியவை - களவிற்குரியன, கற்பிற்குரிய என இரு வகைப்படும். களவிற்குரியனவும் - புணர்ச்சிக்கு முன்னிகழ்வன, பின்னிகழ்வன என இருவகையினவாம். இவ்வியல், அகம் புறம் இரண்டற்கும் பொதுவாதல் பற்றி அவ்விரண்டற்கும் இடையினும், அகத்தின் இறுதியியலான கற்பியலின் பின்னும் வைக்கப்பட்டது. இம்முதற் சூத்திரம் பொது மெய்ப்பாட்டின் தொகையும் அடக்கமும் உணர்த்துகின்றது. இதன் பொருள்: பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் - இன்ப விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும், கண்ணிய புறனே நானான்கு என்ப - கருதிய வெளிப்படைப் பகுதி பதினாறாகி அடங்கும் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. பண்ணை - விளையாட்டு “கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு” (தொல். உரி - 21) நாடக நூலுட் கூறுவதைத் தாங் கொண்டு கூறலின், இது, பிறன்கோட் கூறல் என்னும் உத்தி. அகம் புற மெய்ப்பாடு கூறுவார், அவற்றை நாடக நூலார் இவ்வாறு கூறுவார் எனக் கூறினர் என்க. நாடகத்துள், பாடுவோரும் ஆடுவோரும், பாடலின் பொருள் வெளிப்படும்படி பாடியும் ஆடியும், கேட்போர்க்கும் பார்ப்போர்க்கும் பாட்டின் பொருளை இனிது விளக்குதலே மெய்ப்பாடு எனப்படும். அவ்வாறு வெளிப்படும் மெய்ப்பாட்டுப் பொருள் முப்பத்தி ரண்டாயினும், அவை பதினாறாகவே அடங்கும் என்பதாம். முப்பத்திரண்டாவன: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை (மெய் - 3) என்னும் மெய்ப்பா டெட்டனையுங் கூறுங்கால், - 1. சுவைப் பொருளும், 2. சுவைக்கும் பொறியுணர்வும், 3. அச்சுவை மனத்துட் பட்டவழி உள்ளத்து நிகழும் குறிப்பும், 4. அக்குறிப்பு - மெய்ம்மயிர் சிலிர்த்தல், கண்ணீ ரரும்பல் முதலாக மெய்யின்கண் வெளிப்படும் விறலும் என நான்காகும். அந்நான்கினையும் நகை முதலிய அம்மெய்ப்பா டெட்டனோடும் உறழ்ந்தால் (பெருக்கினால்) நாலெட்டு - முப்பத்தி ரண்டாகும். எனவே, சுவைப் பொருள் எட்டு, பொறியுணர்வு எட்டு, குறிப்பு எட்டு, விறல் எட்டு ஆக முப்பத்திரண்டாம். குறிப்பு - உள்ள நிகழ்ச்சி. விறல் - அவ்வுள்ள நிகழ்ச்சி உடலின்கண் வெளிப்படும் உணர்ச்சி. விறல், சத்துவம் என்பன ஒருபொருட் சொற்கள். விறல்பட ஆடியதனாலேயே ஆடன் மகளிர்க்கு - விறலியர் என்னும் பெயர் வழங்கலாயிற்று. வரலாறு: வேம்பாகிய சுவைப் பொருளும், நாவாகிய பொறியும் கூடியவழிப் பிறப்பது கைப்புச் சுவை. இச் சுவையே பொறியுணர்வு எனப்படும். பொறியுணர்வு - பொறியால் உணரப் படும் உணர்வு. நாவாகிய பொறியின் உணர்வு - சுவை. கைப்புச் சுவை யுணர்வால் உள்ளத்தில் தோன்றுவது வெறுப்பு. இவ் வெறுப்பே - குறிப்பு எனப்படும். அவ் வெறுப்பை உணர்த்தும் தலைநடுக்கம். முகஞ்சுளித்தல் முதலியன மெய்யின்கண் தோன்றுதல் - விறல் எனப்படும். தலைநடுக்கம் முதலியனவே விறல் ஆமென்க. வேம்பு சுவைத்தவன் அறிந்த கைப்பறிவினை - கைப்புச் சுவையை - பிறனொருவன் நாவுணர்வினால் உணர முடியாது; அவன் மெய்வேறு பாட்டை - விறலை - கண்ணுணர்வினாற்றான் அறிய முடியும். ஆகவே, சுவைப் பொருளும், சுவைப் போனும் என்னும் இரண்டிடத்தே மெய்ப்பாடு நிகழுமென்க. இனி, அவை பதினாறாகுமாறு: வேம்பு முதலிய சுவைப் பொருளும், நா முதலிய பொறியும் வேறாயவழிச் சுவை தோன்றாது. அவை யிரண்டும் ஒன்று கூடிய வழியே சுவை தோன்றுதலான், சுவைப் பொருளும் பொறியுணர்வுமாகிய பதினாறும் எட்டா யடங்கும். இனிக் குறிப்பும் சத்துவமும் - உள்ள நிகழ்ச்சியும், அதனாலுண்டாகும் மெய் வேறுபாடுமே யாகலான், உள்ள நிகழ்ச்சியின்றி மெய் வேறுபாடு தோன்றாது. ஆகையால், குறிப்பும் சத்துவமுமாகிய அவை பதினாறும் எட்டா யடங்கும். எனவே, ஈரெட்டுப் பதினாறாதல் காண்க. அட்டவனை மெய்ப் சுவைப் பொறி குறிப்பு விறல் பாடு பொருள் யுணர்வு 1 குழவி பேசும் கேட்டல் உள்ளக் புன்முறுவல், நகை மழலை, கிளர்ச்சி சிரிப்பு அயலார் பேசும் தமிழ் 2 சுற்றத்தார் பார்த்தல், இரக்கம் அழுதல், அழுகை இறத்தல், கேட்டல் (உள்ள ஏங்குதல், பொருளை முருகுதல்) பெருமூச் இழத்தல் செறிதல் 3 பிணம், பார்த்தல், அருவருப்பு முகஞ்சுளித்தல், இழிவு தொழு கேட்டல் கண் மூடல், நோயாளர் மெய்ம்மயிர் சிலிர்த்தல் 4 புதிய விலங்கு, பார்த்தல் மனத் முகஞ்சுளித்தல், வியப்பு புதிய பறவை, கேட்டல் துணுக்கு சிறுநகை, புதிய பொருள் கண்ணிமை யாமை 5 திருடர் காணல், மனநடுக்கம் உடல் நடுக்கம், அச்சம் பாம்பு, கடிநாய் கேட்டல் வியர்த்தல், நாக் குழறல் 6 பகைவர் பார்த்தல், மன வெழுச்சி தோள் துடித்தல், வீரம் கேட்டல் இமை கொட் டாமை, கண் சிவத்தல், புன் சிரிப்பு 7 அடித்தல், உற்றறிதல், மனநோதல் கண் சிவத்தல், வெகுளி இடையூறு உணர்தல் உடல் துடித்தல் 8 விளையாட்டு பார்த்தல் மன மகிழ்ச்சி சிறுநகை, உவகை நற்செய்தி கேட்டல், முகமலர்தல் இவை போன்ற பிறவுங்கொள்க. இவற்றை முன்னரே அறிந்திருந்த ஒருவனுக்கு அப்பொருள் கண்டவழி அவ்வச் சுவை தோன்று மென்க. நகை முதலிய மெய்ப்பாடுகள், நகைச்சுவை முதலியனவாக வழங்கும். சுவை - மெய்ப்பாடு. (1) 2. இதுவுமது 237. நாலிரண் டாகும் பாலுமா ருண்டே. இ - ள்: முப்பத்திரண்டு மெய்ப்பாடும் பதினாறாதலே யன்றி எட்டாதலும் உண்டு என்றவாறு. பால் - பகுதி. ஆர் - ஆசை. நகை முதலியவற்றால் தோன்றும் சத்துவங்க ளெட்டையும் நகை முதலியவற்று ளடக்கின் எட்டாகும். என்பதாம். சத்துவம் - விறல். முன் (சூ - 1) சுவைப் பொருளையும் சுவையையும் ஒன்றாக்கி எட்டாகவும், குறிப்பையும் விறலையும் ஒன்றாக்கி எட்டாகவும் பதினாறு என்றார். அவை யிருகூறுங் கூடியதே மெய்ப்பா டாகையால், அவற்றை யொன்றாக்கி ஈண்டு எட்டு என்றாரென்க. அவ்வெட்டும் அடுத்த நூற்பாவில் கூறுகிறார். நடுவு நிலை, அல்லது அமைதியொடு சுவை ஒன்பதாகும். நடுவு நிலை துறவறத்தார் செயலாகலான், உலகியலுக் கேலாது. (2) 3. எண்வகை மெய்ப்பாடு 238. நகையே யழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி யுவகையென் றப்பா லெட்டே மெய்ப்பா டென்ப. இ - ள்: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என மெய்ப்பாடு எட்டு வகைப்படும் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. 1. நகை - சிரிப்பு. அது, முறுவலித்து நகுதல் (புன் சிரிப்பு), அளவே சிரித்தல், மிகச் சிரித்தல் என மூன்று வகைப்படும். 2. அழுகை - அவலம், புலம்பல். அது, தானே அவலித்தல், பிறர் துயரங்கண் டவலித்தல் என இருவகைப்படும். பிறர் துயரங்கண் டவலித்தல் - அருள் எனப்படும். 3. இளிவரல் - இழிவு, இகழ்ச்சி, பழிப்பு. 4. மருட்கை - வியப்பு. 6. பெருமிதம் - வீரம். 8. உவகை - காம முதலிய மகிழ்ச்சி. முறைவைப்பு: விளையாட்டுப் பொருட்டாகிய நகையை முதலினும், நகைக்கு மறுதலையாகிய அழுகையை அதன் பின்னும், இளிவரல் அழுகையோடு இயைபுடைமையின் அதன் பின்னும் இளிவந்த ஒருவன் - இகழப்படு நிலைமையிலுள்ள ஒருவன் - பிறிதொரு பொருளை வியக்குமாகலின் வியப்பை அதன் பின்னும், வியப்புப் பற்றியும் அச்சம் பிறத்தலின் அச்சத்தை அதன் பின்னும், அச்சத்திற்கு மறுதலையாகிய வீரத்தை அதன் பின்னும், வீரத்தினாற் பிறக்கும் வெகுளியை அதன் பின்னும், வெகுளிக்கு மறுதலை யாகலானும், மற்றையாறு மெய்ப்பாடு களும் சுருங்கிய வழித் தோன்றுவதாகலானும், நகையோடு இயைபுடையதாகலானும் உவகையை ஈற்றினும் வைத்தாரென்க. நகை, அழுகை, இளிவரல், மருட்கை என்னும் நான்கும் ஒவ்வொன்றும் நன்னான்கு பொருளவாக நானான்கு பதினாறாகி அவை ஒவ்வொன்றும் தன்கட்டோன்றுவனவும், பிறர்கட்டோன்று வனவும் ஆக, பதினாறிரண்டு முப்பத்திரண்டு ஆகும். எனவே, இவை நான்கும் ஓரினமாகவும்; அச்சம் பெருமிதம், வெகுளி, உவகை என்னும் நான்கும் தன்கட்டோன்றாமையால் அவை நான்கும் ஓரினமாகவும் வைக்கப்பட்டன. எனவே, இம்மெய்ப் பாடெட்டும் ஒவ்வொன்று நன்னான்காகி, முன்னைய நான்கும் தன்கட் டோன்றுதல் பிறர்கட்டோன்றுதல் என இருவகையாய் முப்பத் திரண்டும், பின்னைய நான்கும் தன்கட்டோன்றுவன வின்மையால் பதினாறும் ஆக நாற்பத்தெட்டு வகைப்படும் என்க. இந்நாற்பத் தெட்டும் நகை முதலிய மெய்ப்பாடெட்டும் தோன்றுதற்குரிய பொருள்களாகு மென்க. அப்பொருள் வகை மேற்கூறுப (மெய் - 4 - 11). (3) 1. நகைப் பொருள் நான்கு 239. எள்ள லிளமை பேதைமை மடனென் றுள்ளப் பட்ட நகைநான் கென்ப. இ - ள்: எள்ளல் முதலிய நான்கும் நகைப்பொருளாகும் என்றவாறு. இவை நான்கும் பொருளாகச் சுவையும், குறிப்பும், விறலும் பிறக்குமென்க. 1. எள்ளல் - இகழ்ச்சி. இது, தான் பிறரை எள்ளி நகுதலும் பிறரால் எள்ளப்பட்டவழித் தான் நகுதலும் என இரண்டாம். காட்டு: எள்ளி நகினும் வரூஉம். (கலி - 61) இது, தான் பிறரை எள்ளி நகுதல். நல்லை மன்னென நகூஉப்பெய்ந் தோளே. (அகம் - 248) இது, பிறரால் எள்ளப்பட்டவழித் தான் நகுதல். தன் மகள் தன்னை மதியாது இகழ்ந்தாளென நக்கவாறு 2. இளமை - தன் இளமையாற் பிறரை நகுதலும், பிறர் இளமைகண்டு தான் நகுதலும் என இரண்டாம். காட்டு : திறனல்ல யாங்கழற யாரை நகுமிம் மகனல்லான் பெற்ற மகன். (கலி - 86) இது, தன் இளமையால் பிறரை நகுதல். மகன் தன் இளமையால் தாயைப் பார்த்துச் சிரித்தானென்க. நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல். (அகம் - 16) இது, பிறரிளமை கண்டு தான் நகுதல். குதலை பேசும் இளைஞன் என நக்கது. 3. பேதைமை -அறிவின்மை. இது, தன் பேதைமையால் பிறரை நகுதலும், பிறர் பேதைமை கண்டு தான் நகுதலும் என இரண்டாம். காட்டு: நகைநீ கேளாய் தோழி. (அகம் - 248) இது, தான் செய்த தவற்றுக்குத் தாய் தன்னை வெகுண்டது தனக்கு நகையாகக் கொண்டமையின், தன் பேதைமையான் நக்கது. நகையா கின்றே தோழி மம்மர் நெஞ்சினன் தொழுதுநின் றதுவே. (அகம் - 56) அறிவில்லாது தலைவன் தன்னைத் தொழுதான் என்பதால், இது, பிறர் பேதைமை கண்டு நக்கது. 4. மடமை - சொன்னதை விடாமல் இருத்தல். இது, தன் மடமையால் நகுதலும், பிறர் மடமை கண்டு நகுதலும் என இரண்டாம். காட்டு: நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே. (குறுந் - 169) இது, நீர் கூறியதனையே மெய்யெனக் கொண்டு மகிழ்ந்து நக்கனம் என்றமையால், தன் மடத்தான் நகைதோன்றிற்று. நாணகை யுடைய நெஞ்சே நும்மொடு தான்வரு மென்ப தடமென் றோழி. (அகம் - 121) இது, நாம் சொன்னமையை நம்பி வரும் என்பதால், பிறர் மடங்கண்டு நக்கது. ‘உள்ளப்பட்ட’ எனவே, உள்ளத்தோடு படாத நகையும் உள. வறிதகத் தெழுந்த வாயன் முறுவல். (அகம் - 5) இது, உள்ளக்குறிப்பின்றி எழும் நகை என்க. (4) 2. அழுகைப் பொருள் நான்கு 240. இளிவே யிழவே யசைவே வறுமையென விளிவில் கொள்கை யழுகை நான்கே. இ - ள் இளிவு முதலிய நான்கும் அழுகைப் பொருளாகும் என்றவாறு. இளிவு - பிறரால் இகழப்பட்டு எளியனாதல். இழவு - தாய் தந்தை முதலிய சுற்றத்தாரையும், இன்பநுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல். அசைவு - முன்னிருந்த நிலைமை கெட்டுத் தாழ்மையுற்று வருந்துதல். ‘அவன் குடும்பம் அசைந்து போச்சு’ என்னும் வழக்கை யறிக. ‘விளிவில் கொள்கை’ என்றதால், அழுகைக் கண்ணீர் போல, உவகைக்கண்ணீர் உகுத்தலும் உண்டு. 1. இளிவு - தன்னைப் பிறர் எள்ளியதற்காகத் தான் அழுதலும், ஒருவரால் எள்ளப்பட்ட ஒருவரைக் கண்டு அழுதலும் என இரண்டாம். காட்டு: எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி. (அகம் - 176) இது, எள்ளினையென்று பரத்தை அழுகிறாள் என்று தலைமகற்குச் சொல்லியதால், தன்கட் டோன்றிய இளிவு பற்றி அழுதல். தானுற்ற, நோயுரைக் கல்லான் பெயருமற் பன்னாளும் பாயல் பெறேஎன் படர்கூர்ந் தவன்வயின் சேயேன்மன் யானுந் துயருழப்பேன். (கலி - 37) இது, ‘தலைமகன் தானுற்ற நோயை உணராமல் இளிவந்தொழுவகுவது காரணமாகத் துயில்பெறாது வருந்துவேன்’ என்றதனால், பிறன்கட்டோன்றிய இளிவுபற்றி அழுதல். 2. இழவு - தான் ஒன்றை இழந்தமைக்காக அழுதலும், பிறர் ஒன்றை இழந்தமை கண்டு அழுதலும் என இரண்டாம். காட்டு: மெழுகும் ஆப்பிகண் கலுழ்நீ ரானே. (புறம் - 249) இது, கணவனை இழந்தாள் கண்ணீரே நீராக வீடு மெழுகுகிறாள் என்றமையின், தன்கட் டோன்றிய இழவு பற்றிய அழுகை. என்னா குவள்கொல் அளியள் தானென என்னழி பிரங்கும் நின்னொ டியானும். (அகம் - 73) இது, தலைவன் பிரிந்ததால் வருந்திய தலைவி துயர்கண்டு தோழி துன்பமிக்கா ளென்றமையின், பிறன்கட்டோன்றிய இழிவு பற்றிய அழுகை. இன்பத்தை யிழந்தது. 3. அசைவு - தான் அசைவுற்றதால் அழுதலும், பிறர் அசைவு கண்டு அழுதலும் என இரண்டாம். துளியிடை மின்னுப்போல் தோன்றி யொருத்தி ஒளியோ டுருவென்னைக் காட்டி, அளியளென் நெஞ்சாறு கொண்டாள் அதற் கொண்டு துஞ்சேன். (கலி - 139) இது, தன்கட் டோன்றிய அசைவு பற்றிய அவலம். தில்லையன்ன புல்லென் சடையோ டள்ளிலைத் தாளி கொய்யு மோனே, இல்வழங்கு மடமயில் பிணிக்குஞ் சொல்வலை வேட்டுவ னாயினன் முன்பே. (புறம் - 252) இது, இவ்வாறானவன் இதுபொழுது அள்ளிலைத்தாளி கொய்யா நின்றான் என்றமை யின், பிறன்கட்டோன்றிய அசைவு பற்றிய அவலம். 4. வறுமை - தனது வறுமையான் அவலித்தலும் (அழுதல்), பிறர் வறுமை கண்டு அவலித்தலும் என இரண்டாம். இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக னோக்கி நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கணென மனையோ ளெவ்வம் நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண. (புறம் - 164) இதனுள், ‘பால் காணாது அழுகின்றது குழவி’ என்பது, தன்கட்டோன்றிய வறுமைபற்றிய அவலம்; மகன்முக நோக்கி யழுகிறாள் என்மனைவி’ என்பது, பிறன் கட்டோன்றிய வறுமை பற்றிய அவலம். மகனது இன்மை குறித்து அழுதாளென்க. இன்ன விறலு முளகொல் நமக்கென மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக் கூற்றுக்கண் ணோடியவெருவரு பறந்தலை. (புறம் - 19) மூதிற்பெண்டிர் இழவுபற்றி அழுதனராயிற் கூற்றுக் கண்ணோடாது. ஆகையால், அவர் உவந்தனர் என்பது பெற்றாம். அதனால் இது, உவகைக் கண்ணீராம். (5) 3. இளிவரற் பொருள் நான்கு 241. மூப்பே பிணியே வருத்த மென்மையோ டியாப்புற வந்த இளிவரல் நான்கே. இ - ள்: மூப்பு முதலிய நான்கும் இளிவரல் பொருளாகும் என்றவாறு. 1. மூப்பு - தன் மூப்பால் இளிவரவு உண்டாதலும் பிறர் மூப்புக்கண் டிகழ்தலும் என இரண்டாம். இளிவரல் - இகழ்ச்சி. காட்டு: தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்று இருமிடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரேம் ஆகிய வெமக்கே. (புறம் - 243) இது, நடக்கவியலாது தடியூன்றி நடந்தும், பேசமுடியாது இருமல் இடையிடை வரப்பேசியும் என்பதால், தன் கட்டோன்றிய மூப்புப்பற்றிய இளிவரவு. மூத்துத்தலை யிறைஞ்சிய நின்னோடு யானே போர்த்தொழில் தொடங்க நாணுவ லதனால். இது, பிறன்கட்டோன்றிய மூப்புப்பற்றிய இளிவரல். 2. பிணி - நோய் இது தன்னோயால் இளிவரவு உண்டாதலும், பிறர் நோய்கண் டிகழ்தலுமென இரண்டாம். காட்டு: இமயமுந் துளக்கும் பண்பினை துணையிலர் அளியர் பெண்டிரிஃ தெவனோ. (குறுந் - 158) இது, மலையைத் துளக்கும் ஆற்றலையுடைய வாடையே, காமநோய் மிக்கோரை அலைப்பது நினக்குத் தகுவது அன்றென இளிவந்து கூறினமையின். தன்கட் டோன்றிய பிணி பற்றிய இளிவரவு. சேய ளரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே. (குறுந் - 128) இது, நெஞ்சை வேறுபடுத்திக் கூறினமையின், பிறன்கட் டோன்றிய பிணிபற்றிய இளிவரவு. 3. வருத்தம் - முயற்சி, அருஞ்செயல் முயற்சியென்க. இது, தன் முயற்சியால் பிறரை இதழ்தலும், பிறர்முயற்சி கண்டு தன்னை இழிவு படுத்திக் கொள்ளுதலுமென இரண்டாம். காட்டு: யான்றன் அறிவல் தானறி யலளே. (குறுந் - 337) இது, பின்னின்ற தலைமகன், நான் அவளையறிவேன், அவள் என்னை யறியாளெனத் தன் முயற்சி தோன்றக் கூறினமையின், தன்கட் டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரவு. குணகடற் றிரையது பறைதபு நாரை திண்டேர்ப் பொறையன் றொண்டி முன்றுறை அயிரை யாரிரைக் கணவந் தாஅங்குச் சேய ளரியோட் படர்தி. (குறுந் - 128) இதனுள், குணகடல் நின்று நாரை குடகடல் செல்லுமாறு போலச் செல்கின்றாயென நெஞ்சின் முயற்சி தோன்றக் கூறினமையின், பிறன்கட் டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரவு. 4. மென்மை - மெலிவு, வலியின்மை. இது, தன் மெலிவான் இகழ்தலும், பிறர் மெலிவுகண் டிகழ்தலுமென இரண்டாம். காட்டு: வலியரென வழிமொழியலன். (புறம் - 239) இது, தன் மென்மை தோன்றக் கூறினமையின், தன்கட்டோன்றிய மென்மை பற்றிய இழிபு. மெலியரென மீக்கூறலன். (புறம் - 239) இது, பிறர் மென்மை தோன்றக் கூறினமையின், பிறன் கட்டோன்றிய மென்மை பற்றிய இளிவரல். ‘யாப்புற வந்த’ என்ற மிகையால், யானை யெறித லிளிவரவால் - யானை ஒருகை யுடைய தெறிவலோ யானும் இருகை சுமந்துவாழ் வேன். என்னும் வீரம் பற்றிய இளிவரவுங் கொள்க. இது, தன்கட்டோன்றிய வீரம் பற்றியது. (6) 4. மருட்கைப் பொருள் நான்கு 242. புதுமை பெருமை சிறுமை யாக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே. இ - ள்: புதுமை முதலிய நான்கும் மருட்கைப் பொருளாகும் என்றவாறு. மருட்கை - வியப்பு. 1. புதுமை - புதிதாகக் கண்ட பொருள். இது, தன்னிடத் துண்டான புதுமைபற்றி வியத்தலும், பிறரிடத்துண்டான புதுமை பற்றி வியத்தலும் என இரண்டாம். காட்டு: மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர் பலர்தில் வாழி தோழி, அவருள் ஆரிருட் கங்குல் அணையொடு பொருந்தி ஓரியா னாகுவ தெவன்கொல் நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே. (அகம் - 82) இது, தன்னையறியாது தன் மெய்க்கட் டோன்றிய புதுமையைத் தலைவி வியந்தாள் போலத் தோழிக் கறத்தொடு நின்றமையான், தன்கட் டோன்றிய புதுமை பற்றிய வியப்பு. மந்தி நல்லவை மருள்வன நோக்க கழைவள ரடுக்கத் தியலி யாடுமயில் விழவுக்கள விறலியிற் றோன்று நாடன். (அகம் - 82) இது, முன்னொரு நாளுங் கண்டறியாதபடி ஆடிற்றுமயில் என்றமையின், பிற பொருட்கட் டோன்றிய புதுமைபற்றிய வியப்பு. 2. பெருமை - மிகப் பெரியது. இது, தன்கட்டோன்றிய பெருமை பற்றி வியத்தலும், பிறன்கட் டோன்றிய பெருமை பற்றி வியத்தலும் என இரண்டாம். நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந் தன்று நீரினும் ஆரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே. (குறுந் - 3) இது, தலைவனிடம் தான் கொண்ட நட்பானது நிலத்தினகலம் போலவும், வானினுயரம் போலவும், கடலினாழம் போலவும் ஒருகாலே பெருகிற்று என்றமையின், தன்கட்டோன்றிய பெருமை பற்றிய வியப்பு. தலைவன் நட்புப் பெருகினதைக் கொள்ளின், பிறன்கட் டோன்றிய பெருமை பற்றிய வியப்பு. 3. சிறுமை - மிகச் சிறியது. இது, தன்னிடத்துண்டான சிறுமை பற்றி வியத்தலும், பிறரிடத்துண்டான சிறுமை கண்டு வியத்தலு மென இரண்டாம். அம்ம வவர்நட் பதுகொண்ட தோவெனுளத் திம்மியினு மேசிற் றிடம். இது, அவ்வளவு பெரிய அவர் நட்பை எனது சிறிய உள்ளங் கொண்டதே என்றமையின், தன்கட்டோன்றிய சிறுமை பற்றிய வியப்பு. கடையிற் சிறந்த கருநெடுங்கட் பேதைக் கிடையிற் சிறியதொன் றில். இது, பிறன்கட் டோன்றிய சிறுமை பற்றிய வியப்பு. 4. ஆக்கம் - ஒன்று வேறொன்றாய்த் திரிதல்; ஒன்றுதிரிந் தொன்றாதல் எனினுமாம். இது, தன்னிடத்துண்டான ஆக்கம் பற்றி வியத்தலும், பிறரிடத்துண்டான ஆக்கம் பற்றி வியத்தலு மென இரண்டாம். காட்டு: எருமை யன்ன கருங்கல் லிடைதோ றானிற் பரக்கும் யானைய முன்பிற் கான நாடனை நீயோ பெரும. (புறம் - 5) இது, நரிவெரூஉத் தலையார், தம்முடம்பு பெற்று வியந்து கூறினமையின், தன்கட்டோன்றிய ஆக்கம் பற்றிய வியப்பு. புலவரது வேறுபாடான உடம்பு திரிந்து நல்லுடம் பாயிற் றென்க. உறக்குந் துணையோ ராலம்வித் தீண்டி இறப்ப நிழல்பயந் தாங்கு. (நாலடி- 38) இது, பிறபொரு ளாக்கம் பற்றிய வியப்பு. உறக்குந் துணை - கிள்ளியெடுக்கும் அளவு. மன்னர்க்கிருக்க நிழலாதல். இனி, ‘மதிமை சாலா மருட்கை’ என்றதனால், சிறியோர் பெருந்தொழில் செய்தலும், பெரியோர் சிறுதொழில் செய்தலு மாகிய வியப்புங் கொள்க. மதிமை - அறிவுடைமை. சாலா - அமையாத, ஈறுகெட்டது. மதிமை சாலா மருட்கை - அறிவுக்கு அமையாத வியப்பு. காட்டு: கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டு. (புறம் - 77) என்னும் பாட்டு, மிக இளையோனான தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எழுவரை வென்றதாகிய பெருந் தொழில் செய்தமை கூறுதலின், இது, சிறியோர் பெருந்தொழில் செய்த வியப்பு. அன்னான் ஒருவன்ற னாண்டகைவிட் டென்னைச் சொல்லுஞ்சொற் கேட்டீ சுடரிழாய். (கலி - 47) இது, அவன் ஆண்டன்மையை விட்டு, அவன் தன்மைக் கொவ்வாத சிறுசொற் சொன்னான் என்றமையின், பெரியோர் சிறுதொழில் செய்த வியப்பு. சொல்லலும் தொழிலேயாகும்.(7) 5. அச்சப் பொருள் நான்கு 243. அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே. இனி, தன்கட் டோன்றுதல், பிறன்கட் டோன்றுதல் என்ப தின்றி ஒரு சார்பு பற்றியே வரும் மெய்ப்பாடு நான்கும் இதுமுதற் கூறுகின்றார். அச்சம் - பிறன் கட்டோன்றிய பொருள் பற்றியே - பிறபொருள் பற்றியே - வரும். இ - ள்: அணங்கு முதலிய நான்கும் அச்சப் பொருளாகும் என்றவாறு. 1. அணங்கு - பாம்பு, இடி, பேரிருள், பெருந்தீ முதலியன. அணங்குதல் - வருந்துதல். 4. தம் இறை - பெற்றோர், ஆசிரியர், அரசர் முதலாயினோர். தம்இறை - தமக்கு இறைவர், தலைவர் ஆயினார். காட்டு: யானை தாக்கினும் அரவுமேற் செலினும் நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும் சூர்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை. (பெரும்பா - 134) இது, அணங்கும், விலங்கும் பொருளாக அச்சம் பிறந்தது. ஏறு - இடி. யானை விலங்கு. பாம்பும் இடியும் - அணங்கு. ஒரூஉநீ எங்கூந்தல் கொள்ளல்யாம் நின்னை வெரூஉதுங் காணுங் கடை. (கலி - 87) இது, தலைவனைக் கள்வர்பாற் சார்த்தி யுரைத்தமையின், கள்வர் பொருளாக அச்சம் பிறந்து. எருத்துமேல் நோக்குறின் வாழலே மென்னும் கருத்திற்கை கூப்பிக் பழகி - எருத்திறைஞ்சிக் கால்வண்ண மல்லார் கடுமான்றேர்க் கோதையை மேல்வண்ணங் கண்டறியா வேந்து. இது, ‘வேந்தர் கோதையின் கால்வண்ணமல்லால் மேல் வண்ணங் கண்டறியார்’ என்றமையின், இறை பொருளாக அச்சம் பிறந்தது. பிணங்கல் சாலா - மாறுபாடு பொருந்தாத. ‘சாலா அச்சம்’ என்ற மிகையால், ஊடல் முதலியனவும் அச்சப் பொருளாக வரும். சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவல்நின் ஆணை கடக்கிற்பார் யார். (கலி - 81) இது, புலவி பொருளாக அச்சம் பிறந்தது. (8) 6. பெருமிதப் பொருள் நான்கு 244. கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே. (இது, தன்கட் டோன்றிய பொருள் பற்றியே வரும்,) இ - ள்: கல்வி முதலிய நான்கும் பெருமிதப் பொருளாகும் என்றவாறு. தறுகண் - தறுகண்மை - அஞ்சாமை. இசைமை - புகழ்; அதாவது, இன்பமும் பொருளும் மிகுதியாக உண்டாயினும் பழிக்கத் தகுவன செய்யாமை. பெருமிதம் - வீரம். காட்டு: வல்லார்முன் சொல்வல்லேன் என்னைப் பிறர் முன்னர்க் கல்லாமை காட்டி யவள். (கலி - 141) இது, ‘வல்லார் முன் சொல்வல்லேனாகிய என்னையும் கல்லாமை காட்டினாள்’ எனத் தன் பெருமிதங் கூறினமையின், கல்வி பற்றிய பெருமிதம். 2. அடன்மாமே லாற்றுவே னென்னை மடன்மாமேல் மன்றம் படர்வித் தவள்.” (கலி - 141) இது, ‘அரியேற்றுக்கும் அஞ்சாத நான் மடன்மாவுக்கா அஞ்சினேன்’ எனத் தன் அஞ்சாமை கூறினமையின், தறுகண் பற்றிய பெருமிதம். அடல்மா - சிங்கம். 3. கழியாக் காதல ராயினும் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார். (அகம் - 112) இது, ‘பழியொடு வரூஉம் இன்பம் விரும்பார்’ என்றமையின், இசைமை பற்றிய பெருமிதம். கழியாக்காதலர் - காதலுடையவர். இசைமை - புகழ். 4. வையம், புரவூக்கும் உள்ளத்தேன் என்னை இரவூக்கும் இன்னா இடும்பைசெய் தாள். (கலி - 141) இது, ‘வையத்தைக் காக்க முயலும் என்னைத் தன்பாலொன்று இரத்தற்கு முயலும்படி செய்தாள்’ எனத் தன் கொடை கூறினமையின், கொடை பற்றிய பெருமிதம் கொடுத்துக் காக்க முயலுமென்க. ‘சொல்லப்பட்ட பெருமிதம்’ என்றமையான், காமம் பற்றியும் பெருமிதம் பிறக்கும். பல்லிருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைகவென் றாரே. (புறம் - 73) நான் அவ்வாறு செய்யாவிடின் ஒவ்வாது முயக்குறுவேன்’ எனத் தன் வேட்கை (காமம்) கூறியதால், இது, காமம் பற்றிய பெருமிதம். (9) 7. வெகுளிப் பொருள் நான்கு 245. உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்பின் வந்த வெகுளி நான்கே. (இது, பிறன்கட் டோன்றிய பொருள்பற்றியே வரும்) இ-ள்: உறுப்பறை முதலிய நான்கும் வெகுளிப் பொருளாகும் என்றவாறு. 1. உறுப்பறை - கைகுறைத்தலும், கண்குத்துதலும் முதலாயின. உறுப்பு அறை - உறுப்பைக் குறைத்தல். அதாவது, கொல்ல வருதல். காட்டு: முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று. (கலி - 52) இது, உறுப்பறையான் வந்த வெகுளி. யானையின் முறம் போன்ற காதின் மறைப்பிடமாக வந்து பாய்ந்து கொல்ல வந்த புலியை வெகுண்டு கொன்றமை காண்க. 2. குடிகோள் - மனைவி, சுற்றம், குடிப்பிறப்பு முதலிய வற்றிற்குக் கேடு சூழ்தல். இவற்றைக் கெடுத்தலாம். காட்டு: நின்மகன், படையழிந்து மாறினன் என்றுபலர் கூற மண்டமர்க் குடைந்தனன் ஆயின் உண்டவென் மார்பறுத் திடுவன் யானெனச் சினைஇ. (புறம் - 278) தன்மகன் மறக்குடிக்குக் கேடுசூழ்ந்தா னென்று தாய் சினங் கொண்டா ளாகலின், இது குடிகோள் பற்றி வந்த வெகுளி. 3. அலை - கோல் கொண்டு அலைத்தல் முதலியன. அதாவது, ஒன்று ஒன்றற்கு இடையூறு செய்தல். ஒருவர் ஒருவர்க்குமாம். அலைத்தல் - வருத்துதல். காட்டு: வரிவயம் பொருத வயக்களிறு போல இன்னும் மாறாது சினனே. (புறம் - 100) புலியால் அலைக்கப்பட்ட (வருத்த) யானை, பொருத பின்பும் அவ்வலைப் புண்டலை நினைந்து சினங் கொண்டது போல, இவன் சினம் மாறாது என்றமையின், இது, அலை பற்றிப் பிறந்த வெகுளி. 4. கொலை - அறிவு, புகழ் முதலியவற்றைக் கொன்றுரைத்தல். கொல் + ஐ - கொலை. கொல்லுதல் - அவிழ்த்தல், கெடுத்தல். காட்டு: உறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை. (புறம் - 72) சிறுசொல் சொல்லுதல் என்பது, புகழ் கொன்றுரைத்த லாகலின், கொலைபற்றி வெகுளி பிறந்தது. ‘வெறுப்பின்’ என்றதனால், ஊடற்கட் டோன்றும் வெகுளியுங் கொள்க. செய்த வறில்வழி யாங்குச் சினவுவாய். (கலி - 87) இது, ஊடற்கண் தலைமகளது வெகுளி கூறியது. (10) 8. உவகைப் பொருள் நான்கு 246. செல்வம் புலனே புணர்வு விளையாட்டென் றல்லல் நீத்த உவகை நான்கே. (இது, தன்கட்டோன்றிய பொருள்பற்றியே வரும்.) இ - ள்: செல்வம் முதலிய நான்கும் உவகைப் பொருளாகும் என்றவாறு. உவகை - மகிழ்ச்சி. அல்லல் - துன்பம். நீத்த - நீக்கிய, விட்ட; தீர்த்த என்றுமாம். 1. செல்வம் - நுகர்ச்சி; செல்வப் பொருளை நுகர்தல். காட்டு: உரனுடை யுள்ளத்தை, செய்பொருள் முற்றிய வளமையா னாகும் பொருளிது வென்பாய். (கலி - 12) வளமையான் ஆகும் மனமகிழ்ச்சி இதுவெனக் கூறினமையின், இது செல்வம் பற்றிப் பிறந்த உவகை. ஆகும் பொருள் - உண்டாகும் மகிழ்ச்சி. 2. புலன் - கல்விப் பயனாகிய அறிவுடைமை (அறிவு). காட்டு : பெண்டிர் நலம்வௌவித் தன்சாரல் தாதுண்ணும் வண்டிற் றுறப்பான் மலை. (கலி - 40) ‘முகைப்பதம் பார்க்கும் வண்டுபோலத் தலைவியின் நகைப்பதம் பார்க்கும் அறிவுடைமை’ காமத்திற் கேதுவாகலின், இது, அறிவு பொருளாகப் பிறந்த உவகை. 3. புணர்வு - காமப்புணர்ச்சி, நட்பு. காட்டு : தொடிக்கண் வடுக்கொள முயங்கினள் வடிப்புறு நரம்பிற் றீவிய மொழிந்தே. (அகம் - 142) அவள் இவ்வாறு முயங்கினள் என்றமையின், இது புணர்ச்சியான் வந்த உவகை. 4. விளையாட்டு - ஆறும் குளமும் காவும் ஆடி வருதல் (கற் - 34) காட்டு : துயிலின்றி யாநீந்தத் தொழுநயம் புனலாடி மயிலியலார் மருவுண்டு மறந்தமைகு வான்மன்னோ. (கலி - 30) இது, புனல்விளையாட்டுப் பொருளாக உவகை பிறந்தது. ‘அல்லல் நீத்த உவகை’ என்றதனால், விறன்கட்டோன்றிய இன்பம் பொருளாகவும் உவகை பிறக்கும். காட்டு : பல்பூங் காவுந் துறையும் நல்கும் கழியா வின்பங் கண்டெம் ஒழியா வுள்ள மொருங்குவந் தன்றே. இது, தலைவி காவுந் துறையும் ஆடி இன்புறுதலைக்கண்டு செவிலி உவந்தமையான், பிறன்கட்டோன்றிய இன்பம்பற்றி உவகை பிறந்தது. 1. நகை, அழுகை, இளிவரல், மருட்கை என்னும் நான்கும் - தன்கட்டோன்றிய பொருள் பற்றியும், பிறன் கட்டோன்றிய பொருள் பற்றியும் வரும். 2. பெருமிதமும் உவகையும் - தன்கட்டோன்றிய பொருள் பற்றியே வரும். 3. அச்சமும் வெகுளியும் - பிறன்கட்டோன்றிய பொருள் பற்றியே வரும். இவ்வெட்டு மெய்ப்பாடும் அகம் புறப் பொருட்சார் பின்றிப் பொதுவகையான் மக்கள் மாட்டு இயல்பாக நிகழ்வனவாகும். (11) 4. வேறு முப்பத்திரண்டு மெய்ப்பாடு 247. ஆங்கவை யொருபா லாக வொருபால் உடைமை யின்புறல் நடுவுநிலை யருளல் தன்மை யடக்கம் வரைதல் அன்பெனாஅக் கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல் நாணுதல் துஞ்சல் அரற்றுக் கனவெனாஅ முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை கருத லாராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅக் கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை வியர்த்தல் ஐயம் மிகைநடுக் கெனாஅ இவையு முளவே அவையலங் கடையே. இது, நகைமுதல் உவகை யீறாக மேற்கூறி வந்த முப்பத் திரண்டும் போல, இவையும் மெய்ப்பாடா மென்கிறது. இ - ள்: ஆங்கவை ஒரு பாலாக - எள்ளல் (சூ - 4) முதல், விளையாட்டு (சூ - 11) இறுதியாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டும் ஒரு கூறாக, ஒருபால் - இனிச் சொல்லுகின்ற முப்பத்திரண்டுமாகிய ஒரு கூறு; உடைமை முதலாயின. இவையும் உளவே - ஈண்டுக் கூறும் முப்பத்திரண்டனுள் ஆண்டு (4 - 11) அடங்குவனவும் உள; அவை அலங்கடையே - அப்பொருண்மைய வல்லாதவிடத்து இவை முப்பத்திரண்டும் மெய்ப்பாடெனப்படும் என்றவாறு. இவையும் உள - இவற்றுள் அவற்றுள் அடங்குவனவும் உள. அவை அலங்கடை இவையும் மெய்ப்பாடெனப்படும் என முடிவு கொள்க. ‘ஆங்கவை ஒருபாலாக ஒருபால்’ என்றதனால், பால் அல்லது கூறு எனப்படுவன தம்மின் ஒத்த எண்ணாதல் வேண்டுமாகலின், அவை (4-11) முப்பத்திரண்டெனவே, இவையும் முப்பத்திரண்டெனத் தொகை கொள்ளப்பட்டது. அவை ஒருபால் ஆக, இவை ஒருபால் என்க. பால் - கூறு. ஆங்கவை - அங்குக் கூறியவை, முன் கூறியவை. எனா - எண்ணிடைச் சொற்கள். 1. உடைமை - செல்வம்; செல்வத்தை நுகராமே அச்செல்வந் தன்னை நினைந்து இன்புறுதற் கேதுவாகிய பற்றுள்ளம். செல்வமுடைமையான் வரும் மெய்வேறுபாடு மெய்ப்பா டாகும். செல்வ நுகர்ச்சியாயின் உவகைப்பொருளாகும். (மெய் - 11). 2. இன்புறல் - அவ்வுடைமையை நினைக்குந்தோறும் உண்டாகும் மனமகிழ்ச்சி. 3. நடுவுநிலை - ஒன்பான் சுவையுள் ஒன்றென நாடகத்துள் வேண்டப்படுவது (மெய் - 2 உரை பார்க்க.) நடுவுநிலை யாவது - வெயில், மழை, தீ முதலியவற்றிற்கும் உடலை வருத்துதற்கும் மனம் வேறுபடாமல் ஒரு தன்மையாய் இருத்தல் இது துறவுள்ளம் உடையோர் கண்ணே நிகழ்வது. 4. அருளல் - மக்கள் முதலிய சுற்றத்தாரைக் காத்தல். அதற்கு வேண்டிய உள்ளக் குறிப்பு மெய்ப்பாடாகும். அவர் துயர்கண்டு வருந்துதல். அவ்வருத்தத்தால் ஏற்படும் மெய் வேறுபாடு - மெய்ப்பாடு. 5. தன்மை - அவரவர் நிலைமைக் கேற்றதன்மை. செல்வம் கல்வியின் உயர்வுதாழ்வுக் கேற்றவாறும், அதிகாரத்திற் கேற்றவாறும் பேசுதல், நடத்தல் முதலியன. 6. அடக்கம் - உயர்ந்தோர்முன் அடங்கியொழுகும் ஒழுக்கம். அது கைகட்டி, வாய்பொத்திப் பணிந்த மொழி கூறுதல் முதலியன. அவ்வடக்க வுணர்ச்சி மெய்ப்பாடாகும். 7. வரைதல் - காப்பனவற்றைக் காத்து, நீக்குவனவற்றை நீக்கியொழுகும் ஒழுக்கம், உண்மை, நடுநிலை முதலியன காத்து, பொய், பொறாமை முதலியன நீக்கியொழுகல். அதாவது, செய்வன தவிர்வன கடைப்பிடித்தல். நல்லன செய்ய மகிழ்தலும், தீயன செய்ய அஞ்சுதலும் மெய்ப்பாடாகும். 8. அன்பு - அருளுக்கு முதலாகி மனத்தின்கண் நிகழும் நேயம். ‘அருளென்னும் அன்பீன் குழவி’ (குறள்) எனக் காண்க. அப்புடையார்க்குப் பிறர் துன்பங் கண்டவழிக் கண்ணீர் வடிதலின், அவ்வருளானே அன்புடைமை விளங்கும். உடைமை முதலிய எட்டும் தத்தம் மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுப்பன வாகலின் மெய்ப்பாடெனப்பட்டன. மேல் வருவனவற்றிற்கும் இஃதொக்கும். 9. கைம்மிகல் - ஒழுக்கக்கேடு. அது தன் நடத்தையினின்று தானீங்கினமை, தன் உள்ள நிகழ்ச்சியானே பிறர் அறியும்படி ஒழுகுதல். 10. நலிதல் - பிறர்க் கின்னா செய்து நெருங்குதல் (வருத்துதல்). அது, கெட்டவர்களிடம் நிகழும். 11. சூழ்ச்சி - சுழற்சி, அதாவது, மனத்தடுமாற்றம். 12. வாழ்த்தல் - பிறரால் வாழ்த்தப்படுதல். அப்பொழுது பிறக்கும் உள்ளக் குறிப்பு மெய்ப்பாடாகும். 13. நாணுதல் - நாணுள்ளம் பிறர்க்கு வெளிப்படத் (தெரிய) நிகழும் நிகழ்ச்சி. 14. துஞ்சல் - உறக்கம். நடந்து செல்பவரிடத்தும் தூக்க முண்மை விளங்கத் தோன்றுதலின், தூக்கம் மெய்ப்பா டெனப்பட்டது. 15. அரற்று - அழுகையில்லாமல் பல சொல்லித் தன்குறை கூறுதல். அதாவது, தன் குறையைப் பலவாறு எடுத்துக் கூறுதல். 16. கனவு - வாய் வெருவுதல். வாய் வெருவலாலும் அவன் உள்ளத்து நிகழ்கின்ற தொன்று உண்டென்றறியப்படும். 17. முனிதல் - வெறுத்தல். அது, அருளும் சினமுமின்றி நடு நிகர்த்தாதல். ‘வாழ்க்கையை முனிந்தான்’ என்பது காண்க. 18. நினைதல் - விருப்புற்று நினைத்தல். அந்நினைவுள்ளம் பிறர்க்குத் தெரிதலின் மெய்ப்பாடாயிற்று. 19. வெரூஉதல் - விலங்கும் புள்ளும்போல வெருவும் (அஞ்சும்) உள்ள நிகழ்ச்சி. அது, அஞ்சவேண்டாதன கண்ட வழியும் விரைவில் தோன்றி மாறுவதோர் வெறி. ஒன்றைக் கேட்டவழி வெருவுதலும் உண்டு. 20. மடிமை - சோம்பல் 21. கருதல் - மறந்ததனை நினைத்தல். 22. ஆராய்ச்சி - ஒருபொருளை நன்று தீது என்று ஆராய்தல். 23. விரைவு - இயற்கையானன்றி, ஒரு பொருளிடத்து விரைவு தொழில்பட (விரைவாக) உள்ளம் செல்லும் கருத்து. 24. உயிர்ப்பு - வேண்டிய பொருளைப் பெறாதவழிச் செயலற்று நிற்கும் கருத்து. அது, நெட்டுயிர்ப்புக்கு முதலாகலின், அதனையும் ‘உயிர்ப்பு’ என்றார். 25. கையாறு - அவ்வுயிர்ப்பு மின்றிச் செயலற்று அயர்தல். 26. இடுக்கண் - பெருநோக்கின்றிக் குறுகிய நோக்கம்பட வரும் இரக்கம். 27. பொச்சாப்பு - மறதி. மறதியின் மனத்துடிப்பால் மெய்ப் பாடு தோன்றும். 28. பொறாமை. 29. வியர்த்தல் - பொறாமை முதலாயின பற்றி மனம் புழுங்குதல். 30. ஐயம் - ஒரு பொருள்மேல் இருபொருட் டன்மைபட வரும் மனத்தடுமாற்றம்; ஒன்று துணியாமை. 31. மிகை - கல்லாமை, செல்வம், இளமை, உடல்வலி இவற்றால் வரும் உள்ளமிகுதி (செருக்கு). 32. நடுக்கம் - அன்பு, அச்சம் முதலியன உடம்பிற்றெரியும்படி உள்ளம் நடுங்குதல். மக்கட்குப் பிணி யில்லாத போதும் என்னாகுமோ என்று நடுங்குதல் - அன்பான் நடுங்குதலாம்; இனிமேற் பிணிவந்து வருத்துமோ என அஞ்சி நடுங்குதலாம். அச்சம் என்னும் மெய்ப்பாடு பிறந்ததன் பின்னர் அதன் வழித்தோன்றிய நடுக்கம் - அச்சத்தால் தோன்றிய நடுக்கமாம். (12) 5. அகத்திற்கே யுரிய மெய்ப்பாடு - 24 1. முதற்பகுதி 248. புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல் நகுநயம் மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு தகுமுறை நான்கே ஒன்றென மொழிப. இதுகாறும் அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவாகி வரும் மெய்ப்பாடு கூறினார். இனி, அகத்திணைக்கே பெரும் பான்மையாகி வரும் மெய்ப்பாடு கூறுவான் தொடங்கி, அவற்றுள் களவிற்குச் சிறந்து வரும் மெய்ப்பாடு கூறுவார், ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்ட வழி அவ்வெதிர்ப்பாடு தொடங்கிப் புணர்ச்சியளவும் மூன்று பகுதியாகவும், புணர்ச்சிக்குப் பின்னர்க் களவு வெளிப்படு மளவும் மூன்று பகுதியாகவும், அவையாறும் ஒரோவொன்று நன் னான்கு பகுதியாக ஒன்றன்பின் ஒன்று பிறக்குமெனவும் கூறுகின்றார். இவை நிகழுமிடங்கள் களவியலில் அங்கங்கே காட்டப்பட் டுள்ளன. ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழிக் கரந்தொழுகும் (மறைந்து) உள்ள நிகழ்ச்சி பெண்பாலதாகலான், பெரும் பான்மையும் தலைவிகண்ணே ஈண்டுக் கூறுகின்ற மெய்ப்பாடுகள் இருபத்து நான்கும் நிகழுமென்க. இச்சூத்திரத்து முதற்பகுதி கூறுகின்றார். இ - ள் : புகுமுகம் புரிதல் முதலிய நான்கும் முதற்பகுதி என்றவாறு. தகுமுறை நான்கு - இங்ஙனம் ஒன்றன்பின் ஒன்று தோன்று தற்குத் தகுமெனப்பட்ட முறையானே வந்த நான்கும். ஒன்றென மொழிப - களவிற்கு முதற்கூறு என்று சொல்லுவர். இவை நான்கும் தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டதிலிருந்து முறையாகத் தலைவி மாட்டு நிகழுமென்பதாம். 1. புகுமுகம் புரிதல் - தலைமகன் தன்னைப் பார்த்தலைத் தலைமகள் விரும்புதல். புகுதல் - தலைமகன் நோக்கெதிர் தான் சென்று புகுதல். முகம் - நோக்கு; அதாவது, தலைமகள் சென்று புகுதற்கிடமாகிய நோக்கு நோக்கெதிர் நோக்குதலை, ‘முக நோக்குதல்’ என்பவாகலின், இந்நோக்கினை ‘முகம்’ என்றார். முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி உற்ற துணர்வார்ப் பெறின். (குறள்) எனக் காண்க. புரிதல் - விரும்புதல். அவன் நோக்கில் தான்சென்று புக விரும்புதல். இது, எதிர்ப் பட்டதும் உண்டாவது. அது, யானோக்குங்கால் நிலனோக்கும், நோக்காக்காற் றானோக்கி மெல்ல நகும். (குறள்) எனவரும். இது, தலைவன் கூற்று. 2. பொறிநுதல் வியர்த்தல் - தலைமகன் தன்னை நோக்கியவழி அச்சமும் நாணும் ஒருங்குவந் தடைதலின் நெற்றியில் வியர்வை அரும்புதல். பொறி - வியர்வை நீர்த்துளி. அது, பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர் உறுவளி யாற்றச் சிறுவரை திறவென. (அகம் - 136) எனவரும். 3. நகுநயம் மறைத்தல் - பொறிநுதல் வியர்த்தபின்னர்த் தலைவன்கட்டோன்றிய குறிப்புக்களான், அக்குறிப்புக் கேதுவாகிய நயனுடைமை மனத்திற் பிறந்த வழியும் தலைமகள் நகாது நிற்றல்; சிரிப்பு வரினும் சிரிக்காது அடக்குதல். அது, முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு. (குறள்) எனவரும். 4. சிதைவு பிறர்க்கின்மை - அங்ஙனம் நகுநய மறைத்த வழியும் மனம் சிதைந்து நிறையழியுமாகலின், அச் சிதைவு பிறர்க்குத் தெரியாமல் நெஞ்சினை நிறுத்துதல்; மனச் சிதைவைப் பிறரறியாமல் அடக்குதலாம். நிறை - மறைத்து வைக்கக் கூடியதைப் பிறரறியாமல் மறைத்தல். சிதைவு - உள்ள முடைதல். அது, அகமலி யுவகைய ளாகி முகனிகுத் தொய்யென இறைஞ்சி யோளே. (அகம் - 86) எனவரும். பருவமுற்ற ஒருவனும் ஒருத்தியும் புதிதாகத் தனியிடத்தில் எதிர்ப்பட்டபோது, தலைமகள் பெருநாணின ளாகலின் தான் அவனைப் பார்க்க நாணி அவன் தன்னைப் பார்க்க வேண்டுமென்று விரும்புவள்; அவ்வாறே அவன் பார்த்தவழி அச்சத்தாலும் நாணத் தாலும் நெற்றி வியர்க்கும்; அதுகண்ட தலைவன் தன்னை அவள் விரும்புகிறாள் என்பதை அறிந்து அருகிற் சென்று நன்கு நோக்கு வான்; அதுகண்ட அவட்கு நகை தோன்றினும் நகாது அடக்கிக் கொண்டு நிற்பள்; அவ்வாறு நகுதலை அடக்கியவழியும் மனமுடை தலான் மெய்வேறுபாடு தோன்றும்; அதைத் தலைவன் அறியாமல் அடக்கிக் கொண்டு அப்புறம் திரும்பிக் கொள்வள்; ஆனால், இடம் விட்டுப் போகாது அவ்விடத்திலேயே சுழலுவ ளென்க. இவை நான்கும் முறையானே ஒருங்குவந்த செய்யுள் வருமாறு, யான்றற் காண்டொறுந் தான்பெரிது மகிழாள், வாணுதல் வியர்ப்ப நாணின ளிறைஞ்சி, மிகைவெளிப் படாது நகைமுகங் கரந்த, நன்னுத லரிவை தன்மனஞ் சிதைந்ததை நீயறிந் திலையால் நெஞ்சே, யானறிந் தேனது வாயா குதலே. இது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. ‘தான்பெரிது மகிழாள்’ என்பது, சிறிது மகிழும் என்றமையின், புகுமுகம் புரிதல். ‘வாணுதல் வியர்ப்ப நாணின ளிறைஞ்சி’ என்பது, பொறி நுதல் வியர்த்தல். ‘நகைமுகங் கரந்த’ என்பது, நகுநயமறைத்தல். ‘தன்மனஞ் சிதைந்ததை நீயறிந்திலையால்’ என்பது, சிதைவு பிறற்கின்மை. ‘மிகை வெளிப் படாது’ என்பது, நகை மொக்குள் - வாய்க்குட் சிரித்தல். இது, ‘அன்னபிறவும்’ (மெய் - 19) என்பதனாற் கொள்க. (13) 2. இரண்டாம் பகுதி 249. கூழை விரித்தல் காதொன்று களைதல் ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலோ டூழி நான்கே இரண்டென மொழிப. இ - ள் : கூழைவிரித்தல் முதலிய நான்கும் இரண்டாம் பகுதி என்றவாறு. ஊழ் இ நான்கு - முறைமையையுடைய நான்கு. தலைமகள் உள்ளத்துச் சிதைவறிந்த பின்னல்லது தலைமகன் தலைமகளிடத்துச் சென்று அவள் மெய்யைத் தீண்டானாகலின், அங்ஙனம் பிறந்த சிதைவு முதலாவதாகப் பின்னர்த் தலைமகன் மெய்யுற்றவழி நிகழ்ந்த உள்ள நிகழ்ச்சி (மெய்ப்பாடு) இரண்டாவது எனப்பட்டது. 5. கூழைவிரித்தல் - மயிர்முடி அவிழ்தல். மெய்யும் மெய்யுந் தீண்டியவழி மெல்லியல் மகளிர்க்கு இது நிகழும். தன்னுள்ளத்தில் நிகழ்ந்த வேறுபாட்டினை நிறையுடைத் தலைமகள் அடக்கிக் கொள்வாள்; அங்ஙனம் அடக்குங்கால் தன்வழியதான உடம்பு பற்றி வரும் வேறுபாட்டினை அடக்குவாள்; உடம்பொடு தொடர்புடைய தாகி வேறுபட்ட மயிர் முடி உள்ளச் சிதைவானே தன்வழியதின்றி அவிழுமென்க. உடம்பொடு தொடர்புடைய கை, கால், முதலிய உறுப்புக்கள் நம் எண்ணப்படி நடக்கும். உகிரும் (நகம்), மயிரும் உடம்பொடு தொடர்புடையதாகி வேறுபட்ட பொருளாகையால் நம் விருப்பம்போல் நடவா (இயங்கா). 6. காதொன்று களைதல் - உள்ள நெகிழ்ச்சியால் காதில் அணியப்பட்ட தோடு வீழ்தல். கை, விரல் இவற்றின் மேற்பூட்டிய வளையல், மோதிரம் முதலியன போலாது, காதின் துளையினுள் இட்டு வைத்ததாகலின் உள்ளமுடையவே ஊற்றுணர்வுடைய காது நீண்டது. அதனால், தோடு வீழ்ந்த தென்க. கூழைபோலாது இது (காது) ஊற்றுணர்வுடைய தாகலின் கூழையின் பின் வைத்தார். ஒன்று - தோடு. 7. ஊழணி தைவரல் - வளை, மோதிரம் இவற்றை மேலே தள்ளுதல். கைநெகிழ்ச்சியால் கீழ்வரவே வளையல்களை முன்கை மேற் செறித்தலும், மோதிரத்தைத் திருத்து தலுமாம். இவை தோடுபோல உட்பெய்து வையாமையின் அதன்பின் வைத்தார். தைவரல் - தடவுதல், மேலே தள்ளுதல். 8. உடை பெயர்த்துடுத்தல் - உடுத்த உடையினைப் பலமுறை அவிழ்த்து உடுத்துதல். இடைமெலிவால் உடை அவிழுமென்க. கழல் தொடி போலாது உடை செறிவுடைமையின் உடை நெகிழ்ச்சியைத் தொடி நிகழ்ச்சியின் பின் வைத்தார். தொடி - வளை. புதிதாக முதன்முதல் பருவமுற்ற ஒரு பெண்ணின் மெய்யினைப் பருவமுற்ற புதிய ஒருவன் தீண்டினால், அவள் மனம் நாணினால் உடல் முழுதும் மெலிந்துவிடும். அப்போது மயிர் முடி அவிழ்தலும், காதுகளிலுள்ள தோடு கழன்று வீழ்தலும், கைவளை கழலுதலும், உடையவிழ்தலும் அவற்றை அவள் திருத்துதலும் முறையே நிகழ்தலை நுனித்தறிந்து முறைப்படுத்துக் கூறியது இன்புறற் பால தொன்றாகும். காட்டு விண்ணுயர் விறல்வரைக் காவாஅ னொருவன் கண்ணி னோக்கிய தல்லது தண்ணென உரைத்தலு மில்லை மாதோ அவனே வரைப்பாற் கடவுளு மல்லன் அதற்கே ஓதி முந்துறக் காதொன்று நெகிழ, நிழலவிர் மணிப்பூண் நெஞ்சொடு கழலத் துகிலும் பன்முறை நெடிதுநிமிர்ந் தனவே நீயறி குவையதன் முதலே யாதோ தோழியது கூறுமா றெமக்கே. இது, தலைமகள் தோழிக் கறத்தொடு நின்றது. இதனுள் ‘ஓதி முந்துறநெகிழ’ என்பது, கூழைவிரித்தல். ‘காதொன்று நெகிழ’ என்பது, காதொன்றுகளைதல். ‘மணிப்பூண் நெஞ்சொடு கழல’ என்பது, ஊழணிதைவரல். ‘நெடிது நிமிர்ந்தன்று துகிலும் பன் முறை’ என்பது. உடைபெயர்த்துடுத்தல். (14) 3. மூன்றாம் பகுதி 250. அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல் இல்வலி யுறுத்தல் இருகையு மெடுத்தலொடு சொல்லிய நான்கே முன்றென மொழிப. இ - ள் : அல்குல் தைவரல் முதலிய நான்கும் மூன்றாம் பகுதி என்றவாறு. 9. அல்குல் தைவரல் - அரையை - இடையின் கீழ்ப் பாகத்தை - தடவுதல். உடை பெயர்த்து உடுத்தபின் உடை பெரிதும் அவிழ்வ தாயிற்று. அவிழ்ந்துவிழும் உடையை உடனே பிடித்தலே அல்குல் தைவரலாகும். அல்குல் தொடைகளுக்குமேலும் இடைக்குக்கீழும் உள்ளபாகம். அரையின் பின்பக்கமே அல்குல் எனப்படும். (கலி - 85 உரை பார்க்க.) 10. அணிந்தவை திருத்தல் - அரைஞாண், தோளாடை முதலியன திருத்தல். ஞெகிழ்ந்த அரைஞாணை இடையிற்சேர்த்து ஆடையை உடுத்துமென்க. அக்கால் பெண்டிரும் அரைஞாண் அணிந்திருந்தமை இதனால் தெரிகிறது. ‘கடிசூத்திர முதலியன திருத்துதல்’ (பேரா). கடிசூத்திரம் - அரைஞாண். கடி - உடைக்குப் பாதுகாப்பு. சூத்திரம் - கயிறு, ஞாண். உடையைப் போலக் காக்கவேண்டுதலின் இதை அல்குல் தைவரலின் பின்வைத்தார். 11. இல்வலி உறுத்தல் - புணர்ச்சி வேண்டாதாள் போல்வதோர் வன்மை படைத்துக் கொண்டு செய்தல். உள்ளத்திசைந்தும் வெளிக்கு இசையாள்போற் காட்டுதல். உறுத்தல் - மிகுத்தல். இல்லாத வலியை மிகுத்தலென்க. அல்குல் தைவரலும், அணிந்தவை திருத்தலும் தன் வலியின்மை காட்டவும், வலிதோற்றிக் கொண்டு செய்வதாகலின் இதனை மூன்றவாது வைத்தார். 12. இருகையும் எடுத்தல் - அங்ஙனம் படைத்துக் கொண்ட வலியானும் தடுக்கமுடியாது நிறையழிதலின், கைகள் தாமே முயங்கல் விருப்பத்தால் எழுவன போல்வதோர் குறிப்பு. அச்சமும் நாணும் எழுப்பக் கைகளை முன்பக்கத்தில் விரித்து அசைத்தல். இவை பன்னிரண்டும் புணர்ச்சிக்கு முன்னிகழ்வன. ‘சொல்லிய’ என்றதனால், இவையெல்லாம் இவ்வாறு நிகழுமெனச் சொல்லப்படுவதல்லது சொல் நிகழ்த்துதல் இல்லை. இவை பன்னிரண்டும் தலைமகன் ஏதுவால் தலைமகள் பால் நிகழ்வனவென்க. காட்டு: ஓதியும் நுதலும் நீவி யான்றன் மாதர் மெல்லகம் வருடலிற் கலங்கி உள்ளத் துகுநள் போல, அல்குலின் ஞெகிழ்நூல் கலிங்கமொடு, புகுமிட னறியாது மெலிந்தில ளாகி வலிந்துபொய்த் தொடுங்கவும், யாமெடுத் தணைத்தொறுந் தாமியைந் தெழுதில், இம்மை யுலகத் தன்றியும் நம்மை நீளரி நெடுங்கட் பேதையொடு கேளறிந் தனகொலிவள் வேய்மென் றோளே. இது, இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைமகன் தன்னிலை யுரைத்தது. இதனுள், ‘உள்ளத்து நகுநள்’ என்பது, அல்குல் தைவரல். உள்ளம் போல உடம்பும் சிதைந்தனள் போன்றனள் என்பதால், அவ்வேறுபாட்டானே தைவரலி னென்க. ‘அல்குலின் ஞெகிழ்நூல் கலிங்கமொடு’ என்பது, அல்குலிற் கட்டிய நூலிற்கு (அரைஞாணிற்கு) நெகிழ்ச்சி கூறினமையின், அணிந்தவை திருத்தல். ‘அல்குலின் ஞெகிழ்நூல்’ - அல்குலின் மேலிடத்தே கட்டிய அரைஞாண். ‘மெலிந்திலளாகி வலிந்துபொய்த் தொடுங்கவும்’ என்பது, இல் வலியுறுத்தல். ‘யாமெடுத் தணைத்தொறும் தாமியைந் தெழுதல்’ என்பது, இருகையு மெடுத்தல். (15) 4. நான்காம் பகுதி 251. பாராட் டெடுத்தல் மடந்தப வுரைத்தல் ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல்: கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ எடுத்த நான்கே நான்கென மொழிப. இ - ள்: பாராட்டெடுத்தல் முதலிய நான்கும் நான்காம் பகுதியாகும் என்றவாறு. 13. பாராட்டு எடுத்தல் - புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைமகனை இயற்பட நினையுங் குறிப்பு. இயற்பட நினைதல் - இயல்பைக்கூற எண்ணுதல். இயல் - தன்மை. ‘எடுத்த’ என்ற தனால், வாயாற் கூறாது உள்ளத்தால் எனக் கொள்க. இது, தலைமகற்கும் ஒக்கும். இருவரும் ஒருவர் ஒருவருடைய தன்மையை எண்ணுவரென்க. 14. மடந்தப உரைத்தல் - விளையாடும் பருவத்து நிகழ்ந்த அறிமட நீங்கக் காமப்பொருட்கண்ணே சிறிது அறிவு தோன்றுதலும் தோழியிடம் சில கூறுவள். அறிமடம் - சொன்னதை அப்படியே கொள்ளும் அறிவு. அம்மடம் நீங்க உரைக்குமென்க. தபுதல் - நீங்குதல். மடந்தப வுரைத்தற்கு ஏதுவாய கருத்து (எண்ணம்) ஈண்டு மெய்ப்பாடு எனப்படும். இது, புணர்ந்து நீங்கி ஆயத்தொடு விளையாடும்போது நிகழும். அந்நிகழ்ச்சியால் தோழி தலைமகளின் களவொழுக்கத்தை நாடுவளென்க. 15. ஈரமில் கூற்றம் ஏற்று அலர் நாணல் - அங்ஙனம் அறிமடங் கெடச் சொற்பிறந்தவழி, தோழி அக்களவையறிதற்கு இன்றளவும் கூறப்படாத கடுஞ்சொற் கூறுவள். தலைவி அக்கடுஞ் சொற்களை முனியாது ஏற்றுக்கொண்டு, பிறர் இதை அறிவாரோ என்று நாணுவள். ஈரமில் கூற்றம் - அன்பில்லாத சொல். ஈரம் - அன்பு. அலர்நாணல் - அலருக்கு நாணல். அலர் - பிறர் தலைமகள் களவை யறிந்து பழித்தல். 16. கொடுப்பவை கோடல் - தலைமகனால் கொடுக்கப்பட்ட தழை முதலிய கையுறையை ஏற்றுக் கொள்ளுதல். இடந்தலைப் பாட்டினும், தோழியிற் கூட்டத்தினும் தலைவன் தழையும் தாரும் கண்ணியும் தோள்மாலையும் பிறவுங் கொண்டுவந்து நேரிலும், தோழி வழியாகவும் கொடுக்கின் தலைவி அதைப் பெற்றுப் பாராட்டுவள் என்க. அத்தழை முதலியவற்றின்மேல் அன்பு கொள்ளும் நினைவு மெய்ப்பாடாகும். புணர்ச்சிப் பின்னரல்லது பாராட்டுள்ளம் பிறவாமையானும், அதன் பின்னரல்லது பிறரொடு கூற்று நிகழாமை யானும், அக்கூற்றுக் கேட்டல்லது தோழி முதலிய தமரான் ஈரமில் கூற்றம் கூறுதலின்மையானும் அவையெல்லாம் முடிந்தவழித் தலைவன்மேற் சென்ற உள்ளத்தால் தலைவி கொடுப்பவை கோடற் குறிப்பினளாத லானும் அம்முறையான் வைத்தாரென்க. காட்டு: ஒருநாள் வந்து பலநாள் வருத்தும் நின்னே போலுநின் தழையே யென்வயின் நிற்பா ராட்டியும், சொற்கொள லின்றியும், யாயெதிர் கழறலிற் பேரலர் நாணியும், மயல்கூர் மாதர்க்குத் துயர்மருந் தாயினும் நோய்செய் தன்றாற் றானே நீதொடக் கரிதலின் ஓரிடத் தாளே. இது, கையுறை மறுத்தது. இதனுள், ‘நிற்பாராட்டி’ என்பது, பாராட்டெடுத்தல். ‘சொற்கொளலின்றி’ என்பது, மடந்தப வுரைத்தல். சொன்னதைக் கொள்வதே மடமை; சொன்னதைக் கொள்ளாமை மடனன் றாகலானென்க. யாயெதிர் கழறலிற் பேரலர் நாணி’ என்பது, ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல். ‘துயர் மருந்தாயினும்’ என்பது, கொடுப்பவை கோடல். துயர்மருந்து - துயருக்கு மருந்து. (16) 5. ஐந்தாம் பகுதி 252. தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல் கரந்திடத் தொழிதல் கண்டவழி யுவத்தலொடு பொருந்திய நான்கே ஐந்தென மொழிப. இ - ள்: தெரிந்துடம்படுதல் முதலிய நான்கும் ஐந்தாம் பகுதியாகும் என்றவாறு. மேற்கூறிய கொடுப்பவை கோடல் நிகழ்ந்தவழி, அவ் வொழுகலாறு பிறர்க்கெல்லாம் ஐயமாகலின் அதன் பின்னர்த் தோன்றுவது தெரிந்துடம்படுதல் என்க. 17. தெரிந்துடம் படுதல் - தம் களவொழுக்கத்தைத் தெரிந்து கொண்டு இன்னவாறு நிகழ்ந்ததெனத் தோழிக்கு உடம்படுதல். இக்களவொழுக்கத்தை உள்ளவாறு உணராதார், தலைமகள் தகாத வொழுக்கத்தினள் என்று துணிந்தும் துணியாதும் உரைப்பாராகலான் அதற்கு நாணி, இனி என்செய்வதென்று ஆராய்ந்து, அவ்வொழுகலாற்றினைச் சொல்வேமோ சொல்லாமோ எனத் தடுமாறிப் பின்னர் முழுவதூஉம் சொல்லாது தன் ஒழுக்கத்திற்கும் பெண்டன்மைக்கும் ஏற்றவகையான் உரைக்க வேண்டுவனவற்றைத் தெரிந்து கொண்டு தோழிக்கு அறத்தொடு நிற்குமென்க. உடம்படுதல் - தன் நடத்தையை ஆம் என ஒத்துக் கொள்ளுதல். தோழி செவிலிக்கு உடம்படுவளென்க. 18. திளைப்புவினை மறுத்தல் - அங்ஙனம் தமர்க்குத் தான் உடம்பட்டதன் பின்னர்த் தலைமகனோடு பகலும் இரவும் முன்போற் கூடினவாறு கூடுதலை அச்சமும் நாணும் மடனுங் காரணமாக மறுத்தல்; பிறரறிந்தனராகையால் நாணி மறுக்குமென்க. உடம்பாட்டின் பின் மறுக்குமாகலின் தெரிந்துடம்படுதலின் பின் இதை வைத்தார். 19. கரந்திடத்து ஒழிதல் - அக்காலத்து இற்செறிக்கப்படுதலான், தான் அவனை மறுத்த குற்றத்திற்கு நாணியும் அஞ்சியும் அவற்கு வெளிப்படாது மறைந்தொழுகுதலை உடையளாதல். தன்னிடத்தே தங்குதலை, ‘இடத்தொழிதல் என்றார். கரந்த இடத்து - மறைவான இடத்து. ஒழிதல் - தங்குதல். உடம்பட்டபின் வெளிச் செல்லாமலும், தினைக் காவல் செய்யாமலும் இற்செறிப்பரென்க. இற்செறித்தல் - வீட்டைவிட்டு வெளிச்செல்லாமற் காத்தல். 20. கண்டவழி உவத்தல் - அங்ஙனம் கரந்தொழுகுங் காலத்து அவனை ஒருநாட் கண்டவழி மிக்க உவகை எய்தல். இது, தலைமகற்கும் ஒக்கும். திளைப்புவினை மறுத்தும் கரந்திடத் தொழிந்தும் ஒழுகினளேனும் தலைவன்பாலுள்ள அன்பு ஒழிந்தாளல்லள். ‘பொருந்திய நான்கு’ என்றது, இவை நான்கும் இடையறவின்றி ஒருங்கு தொடர்தலு முடையவென்பது. அதாவது, தெரிந்துடம்பட்டதும் திளைப்புவினை மறுப்பள், கரந்திடத்தும் ஒழிவள்; இதற்கிடையே காணின் உவப்பள் என்பதாம். இதனானே இவை ஐந்து கூறும் நன்னான்காக வருகின்றதற்குச் சிறிது இடையறவும் படுமென்பது. அதாவது, புகுமுகம் புரிதல் முதலிய நான்கும் தலைமகளனவேயாகி ஓரினத்தவாயின. கூழை விரித்தல் முதலியன நான்கும் தலைமகன் அவளைப் பொருந்தியவழி நிகழ்ந்தமையின் அவை, அவற்றோடு சிறிது இடையறவு பட்டன. அல்குல் தைவரல் முதலிய நான்கும் புணர்ச்சிக்கு மிகவும் இயைபுடைமையின் மேலவற்றோடு பொருந்தாது வேறாயின. பாராட்டெடுத்தல் முதலாயின புணர்ந்து நீங்கியபின் நிகழ்ந்தமையின் அவையும் அவற்றிற்குச் சிறிது வேற்றுமையுடைய. தெரிந்துடம் படுதல் முதலாயின களவு வெளிப்படுத்தற் குறிப்பினவாகலின் மேலவற்றோடு தழுவாது வேறாயின. முன்னது கண்டவழி யுவத்தலானும், இனிவருவது காணாதவழி நிகழ்கின்ற தாகலானும் இனமின்றி வேறாயிற்று. மேல் வருவன நான்கும் ‘புலம்பிய’ (மெய் - 18) என்பதால், தனிக்கூறு என்பது பெற்றாம். காட்டு: அறியாய் கொல்லோ நீயே தெறுவர நோக்குதொறும் பனிக்கு நெஞ்சமொ டிவளே யாய்க்கெதிர் வுறாலின், நின்னெதிர் நாணி மனைவயிற் பிரியலள் மன்னே யதற்கே நினைவிலள் இவளென வுரைத்தி புனைதார் மார்ப காண்டியே யதுவே. இது, பகற்குறிக்கண் தலைமகளை இடத்துய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி வரைவு கடாயது. இதனுள், ‘யாய்க்கறிவுறாலின்’ என்பது, அவள் நோக்கு தொறும் பனித்தலென்று அறிவுறுத்தாள் என்றமையின், தெரிந்துடம்படுதல். பனித்தல் - அஞ்சுதல். ‘நின்னெதிர் நாணி’ என்பது, தமர்க்கு மறைத்தாள் இம்மறையினையென்று தலைமகன் எண்ணுமென நாணி எதிர்ப்படாமையின், திளைப்புவினை மறுத்தல். ‘மனைவயிற் பிரியலள்’ என்பது, கரந்திடத் தொழிதல். ‘புனைதார் மார்ப காண்டியோவதுவே’ என்பது, நின்னைக் கண்டவழி நுதலும், தோளும் பசலை நீங்கியவாறு கண்டிலையோ வென்னும் குறிப்பினால் கூறினமையின், கண்டவழி யுவத்தல். (17) 6. ஆறாம் பகுதி 253. புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல் கலங்கி மொழிதல் கையற வுரைத்தலொடு புலம்பிய நான்கே ஆறென மொழிப. இ-ள்: புறஞ்செயச் சிதைதல் முதலிய நான்கும் ஆறாம் பகுதியாகும் என்றவாறு. 21. புறஞ்செயச் சிதைதல் - பூவும் சாந்தும் பூணும் துகிலும் முதலாயின கொண்டு புறத்தே கோலஞ் செய்ய அகத்தே சிதைவுண்டாதல். கோலங்கண் டுவக்கும் தலைவனின்மையால் சிதையுமென்க. சிதைதல் - மனம் வருந்துதல். கோலம் - அலங்காரம். மேல் கண்டவழி யுவத்தலானும், இது காணாதவழிச் சிதைதலானும் அதன்வழித் தோன்றியதால் அதன்பின் வைத்தார். 22. புலம்பித் தோன்றல் - அங்ஙனம் புனைந்த கோலம் துணையொடு கழியப் பெறாமையால் வருந்திய நெஞ்சினளாதலான், சுற்றத்தாரெல்லார்க்கும் நடுவில் இருந்தும் தணியள் போல் தோன்றுதல். தனித்திருப்பவள் போன்ற குறிப்புத் தோன்ற நிற்றல். புலம்பு - தனிமை. 23. கலங்கி மொழிதல் - களவொடுபட்ட கள்வரைப் போலச் சொல்லுவனவற்றைத் தடுமாற்றந் தோன்றச் சொல்லுதல். அதாவது, தன்மனத்து நிகழாநின்றன சில தன்னையறியாமல் பிறர்க்குத் தெரியும்படி சொல்லுதல். களவொடுபட்ட - களவுப் பொருளோடு பிடிபட்ட. 24. கையற வுரைத்தல் - கலங்காது சொல்லுங்காற் செயலறவு தோன்றச் சொல்லுதல். அதாவது, வன்புறை எதிரழிந்து சொல்லுதல் - வற்புறுத்துந் தோழிக்கு மறுத்துச் சொல்லுதல். கையறவு - செயலறவு. அதாவது, கருத்தின்றிச் சொல்லுதல். கலங்கி மொழிதலே யன்றிக் கலங்காது மொழியுங்கால் அவ்வாறு சொல்லு மென்க. ஆற்றாமை தோன்றச் சொல்லுதலாம். ‘உரைத்தல்’ என்றதனால், இது மனத்தளவே யன்றிச் சொல்லானும் பிறர்க்குத் தெரிய வெளிப் படுமென்க. களவொழுக்கத்தினுள் இதனினூங்கு மெய்ப்பாடு கூறப்படாது. புலம்பிய - தனித்த. காட்டு இவளே, அணியினும் பூசினும் பிணியுழந் தசைஇப் பல்கிளை நாப்பண் இல்கிளை போல மொழிவகை யறியாள் பொழிகண் ணீர்துடைத் தியானே கையற அலம்வரும் கூறாய் பெருமநிற் றேற்று மாறே. இது, வரைவு கடாயது. இதனுள், ‘அணியினும் பூசினும் பிணியுழந் தசைஇ’ என்பது, புறஞ்செயச் சிதைதல்.‘பல்கிளை நாப்பண் இல்கிளை போல’ என்பது, புலம்பித் தோன்றல். ‘மொழிவகை யறியாள்’ என்பது, கலங்கி மொழிதல். ‘யானே கையற அலம்வரும்’ என்பது, கண்ணீர் துடைத்தலும் ஆற்றாள் என்றமையின், கையறவுரைத்தல். புகுமுகம் புரிதல் முதல் கையற வுரைத்தல் ஈறாகக் கூறிய (13 - 18) இருபத்து நான்கு மெய்ப்பாடும், நம் முன்னையோரின் உளநூலறிவின் சிறப்பை நன்கு எடுத்துக் காட்டுவதொன்றாகும். (18) 7. மேலவற்றிற்கோர் புறனடை 254. அன்ன பிறவும் அவற்றொடு சிவணி மன்னிய வினைய நிமித்த மென்ப. இ - ள் : அன்ன பிறவும் - மேற் சொல்லப்பட்ட இருபத்து நான்கு மெய்ப்பாடு போல்வன பிறவும், அவற்றொடு சிவணி மன்னிய வினைய - அவற்றின் வேறன்றி அவற்றின் பகுதியாகி நிலைபெறத் தோன்றுபவை, நிமித்தம் என்ப - களவொழுக்கத்திற்கு நிமித்தம் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. ‘மன்னிய வினைய’ என்பது, நடுவணைந்திணைக்கே யுரிய மெய்ப்பாட்டினவை என்றவாறு. ‘வினைய’ என்பது, ஆறாம் வேற்றுமைப் பன்மை யுருபு. களவொழுக்கத்தினுடைய மெய்ப்பாடு என்பதாம். இவை முறையானே நிகழ்ந்து புணர்ச்சி நிகழுமாகலின், நிமித்தம் என்றார். மேற்கூறிய இருபத்து நான்கு மெய்ப்பாடும், அவை போல்வன பிறவும் களவொழுக்கத்திற்கே உரிய மெய்ப்பாடுகளாகும். இவை முறையானே நிகழ்ந்து புணர்ச்சி நிகழ்தலின், இவை களவொழுக்கத்திற்கு நிமித்தமாகும் என்பதாம். நிமித்தம் - காரணம். ஐந்திணைக்கும் இவற்றை வரையறுத்துக் கூறவே, கைக்கிளை பெருந்திணைக்கண் வரையறையின்றி வேண்டியவாறு வரு மென்பதாம். இனி, அன்ன பிறவும் அவற்றொடு சிவணி வருவனவாவன: 1. தலைமகன் நோக்கியவழித் தலைமகள் ஒரு கொடி மறைவிலேனும் செடிமறை விலேனும் மறைதலும், அவையில்லாத விடத்து இடர்ப்படுதலும் - புகுமுகம் புரிதலாயடங்கும். 2. தலைமகன்கட் டோன்றிய நகை முதலாகிய குறிப்பேதுவாகத் தலைமகள்பால் தோன்றிய நகையை மறைக்குங்கால் இதழ் மொக்குளுள் (சிறுநகை) தோன்றுவது - நகுநய மறைத்தலா யடங்கும். 3. அலமர நோக்குதலும், நிலங்கீறுதலும் - சிதைவு பிறர்க் கின்மையாயடங்கும். களவொழுக்கத்திற்கு இவை முறைப்பட வருமெனவே, கற்பிற்கு இம்முறையான் இவையனைத்தும் வரப்பெறா. ஒரு சில வரும். வருமாறு, காட்டு: இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே (குறுந் - 167) இது, நகுநயமறைத்தல். நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாணன் என்மனை நீசேர்ந்த இல்வினாய் வாராமற் பெறுகற்பின். (கலி - 77) இது, மடந்தபவுரைத்தல். (19) 8. மெய்ப்பா டின்றியும் புணர்ச்சி நிகழிடம் 255. வினையுயிர் மெலிவிடத் தின்மையு முரித்தே இ - ள் : வினை உயிர் மெலி விடத்து - ஆற்றாமை வந்த விடத்து, இன்மையும் உரித்தே - முற்கூறிய இருபத்து நான்கு மெய்ப்பாட்டினை நிமித்தமாகக் கொண்டு வருதலின்மையும் உரித்து என்றவாறு. அவ்விருபத்து நான்கு மெய்ப்பாடு இன்றியும் புணர்ச்சி நிகழும் ஆற்றாமை வந்தவிடத் தென்பதாம். இருபத்து நான்கு என்பது அதிகாரத்தாற் கொள்க. வினை - ஆற்றாமை. உயிர்மெலிதல் - உயிரை வருத்துதல். அதாவது, ஆற்றாமை மிகுதல். ‘இன்மையும்’ என்னும் உம்மையால், இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னரே இஃதெனக் கொள்க. காட்டு: தன்னசை யுள்ளத்து நன்னசை வாய்ப்ப இன்னுயிர் குழைய முயங்குதொறு மெய்ம்மலிந்து நக்கனெ னல்லனோ யானே எய்த்த நோய்தணி காதலர் வரவீண் டேதில் வேலற் குலந்தமை கண்டே. (அகம் - 22) இது, ‘முயங்குதொறு நகை தோன்றிற்று’ எனவே, பாராட்டெடுத்தல் முதலிய மெய்ப்பாடின்றியும் களவிற் புணர்ச்சி நிகழ்ந்ததாம். பாராட்டெடுத்தல் முதலாயின பின்னர் நிகழவில்லை என்பதாம். தண்டுளிக் கேற்ற பலவுழு செஞ்செய் மண்போல் ஞெகிழ்ந்தவற் கலுழ்ந்தே நெஞ்சறை போகிய அறிவி னேற்கே. (அகம் - 26) இது, பாராட்டெடுத்தல் முதலிய பன்னிரு நிமித்தமும் இன்றி ஆற்றாமை நிமித்தமாகக் கற்பினுட் புணர்ச்சி நிகழ்ந்தது. எப்போதுமே புணர்ச்சிக் காலத்துச் சில மெய்ப்பாடுகள் நிகழுமெனக் கொள்க. (20) 6. அவை யில்வழி நிகழும் மெய்ப்பாடு 256. அவையு முளவே அவையலங் கடையே. இ - ள்: அவை அலங்கடையே - முற்கூறிய இருபத்து நான்கும் அல்லாதவிடத்து, அவையும் உளவே - இன்பத்தை வெறுத்தல் முதலாக (மெய் - 22) இனிக்கூறும் மெய்ப்பாடுகளும் உளவாம் என்றவாறு. இது, எதிரது போற்றி இறந்தது காத்தது. அவை அல்லாத இடத்து அவையும் உளவாம் எனவே, வருகின்ற மெய்ப்பாடும் களவிற்கும் கற்பிற்கும் உரியவெனவும், களவிற்கு வருங்கால் முற்கூறிய இருபத்து நான்கின் பின்னுமே இவை வருமெனவும், கற்பிற்காயிற் பயின்று வருமெனவுங் கூறியவாறு. அதாவது, களவில் அவ்விருபத்து நான்கும் நிகழுங்கால் இவை உடனிகழும்; கற்பில் அவையின்றியும் இவை நிகழும் என்பதாம். அவை அடுத்த நூற்பாவிற் கூறுப. (21) அவையாமாறு 257. இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல் எதிர்பெய்து பரிதல் ஏத மாய்தல் பசியட நிற்றல் பசலை பாய்தல் உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல் கண்டுயின் மறுத்தல் கனவொடு மயங்கல் பொய்யாக் கோடல் மெய்யே யென்றல் ஐயஞ் செய்தல் அவன்றம ருவத்தல் அறனளித் துரைத்தல் ஆங்குநெஞ் சழிதல் எம்மெய் யாயினும் ஒப்புமை கோடல் ஒப்புவழி யுவத்தல் உறுபெயர் கேட்டல் நலத்தக நாடிற் கலக்கமு மதுவே. இ-ள்: இன்பத்தை வெறுத்தல் முதலாகிய இருபதும் மேல் (மெய் - 21) ‘அவையுமுள’ என்ற மெய்ப்பாடுகளாம் என்றவாறு. இவை புணர்ச்சிக்கு நிமித்தமாகாதன போன்று காட்டினும், அவற்றை நன்கு ஆராய்ந்துணரின் புணர்ச்சிக்கு நிமித்தமே யாம் என்பதாம். 1 இன்பத்தை வெறுத்தல் - யாழும் குழலும் பூவும் சாந்தும் முதலாகிய இன்பத்திற் கேதுவாகிய பொருள் கண்டவழி அவற்றின் மேல் வெறுப்புத் தோன்றுதல். யாழ் முதலியன காமத்துக் கேதுவாகலின், அவற்றை வெறுத்தல் புணர்ச்சிக் கேதுவாகாதாயினும் அதனை ஆராய்ந்துணரின் நிமித்தம் ஆம் என்பார், ‘நலத்தக நாடின் அதுவே’ என்றார். காட்டு: கல்லாக் கோவல ரூதும் வல்வாய்ச் சிறுகுழல் வருத்தாக் காலே. (அகம் - 74) எனக் குழலிசையாகிய இன்பத்தை வெறுத்தனளாயினும், அது வருத்துகின்றது எனப் புணர்ச்சியை வேண்டல் காண்க. 2. துன்பத்துப் புலம்பல் - பிரிவாற்றாது துன்புறுங்காலை அவ்வாற்றாமை தலைமகற்கின்றித் தானே துன்புறுகின்றாளாகச் சொல்லுதல். புலம்பல் - தனிமை கூறல். காட்டு: நின்னுறு விழுமங் களைந்தோள் தன்னுறு விழுமம் நீந்துமோ வெனவே. (அகம் - 170) ‘தன்னுறு விழுமம் நீந்துமோ’ எனத் தானே துன்புறு கின்றாளாகக் கூறுதல் காண்க. விழுமம் - துன்பம். 3. எதிர்பெய்து பரிதல் - தலைமகனையும், அவன் தேர் முதலாயினவற்றையும் தன் எதிர் பெய்து கொண்டு இரங்குதல்; அதாவது, உருவெளிப்பாடு. அவன் இல்லாத போதும் அவன் உருவந்தோன்றுதல். எதிர்பெய்தல் - தன்முன் நிறுத்தல். பரிதல் - இரங்குதல். காட்டு: வாரா தாயினும் வருவது போல செவிமுத லிசைக்கும் அரவமொடு துயில்மறந் தனவாற் றோழியென் கண்ணே. (குறுந் - 301) ‘வாராதாயினும் (தேர்) வருவதுபோல’ என, உரு வெளிப்பாடு கூறுதல் காண்க. 4. ஏதம் ஆய்தல் - கூட்டத்திற்கு வரும் இடையூறு உண்டென்று ஆராய்தல். அது, நொதுமலர் வரையக் கருதுவரோ, பிரிந்தோர் மறந்து இனிவாராரோ எனவுந் தோன்றும் உள்ள நிகழ்ச்சி. ஏதம் - இடையூறு. இடையூறு - ஒரு காரியம் நிகழும்போது இடையில் ஊறு செய்தல். ஊறு - கேடு. ஊறு - உறுதல்; இடையில் உற்று அக்காரியத்தை முடிவுறாமற் கெடுத்தலாம். காட்டு: வாரார் கொல்லெனப் பருவரும் தாரார் மார்பநீ தணந் ஞான்றே. (அகம் - 150) எனக் காண்க. பருவரும் - வருந்தும். பருவருதல் - வருந்துதல். தணந்த - பிரிந்த. 5. பசிஅடநிற்றல் - பசி வருத்தவும் அதற்குத் தளராது உணவு மறுத்தல். காட்டு: அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி. (அகம் - 48) இனியான், உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன். (கலி - 23) எனக் காண்க. பழங்கண் - துன்பம். 6. பசலை பாய்தல் - உடம்பில் பசலை பரத்தல். பசலை ஆவது, காமநோய் உற்றார்க்கு உடலில் ஒருவகைப் பசுநிறம் உண்டாகி அழகைக் கெடுத்தலாம். காட்டு: கன்று முண்ணாது கலத்தினும் படாது நல்லான் றீம்பால் நிலத்துக் காஅங் கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது பசலை யுணீஇயர் வேண்டும் திதலை யல்குலென் மாமைக் கவினே. (குறுந் - 27) என வரும். என்னை - தலைவன். 7. உண்டியில் குறைதல் - பசியட நிற்றலே யன்றிச் சிறிது உணவூட்டிய வழி, முன்போலாது மிகவும் சிறிதுண்டல். தீம்பா லூட்டினும் வேம்பினும் கைக்கும் வாரா ரெனினும் ஆர்வமொடு நோக்கும் நின்னிற் சிறந்ததொன் றிலளே என்னினும் படாஅள் என்னிதற் படலே. எனவரும். 8. உடம்புநனி சுருங்கல் - உடல் மிகவும் இளைத்தல். காட்டு: தொடிநிலை நெகிழச் சாஅய்த் தோளவர் கொடுமை கூறிய வாயினும் கொடுமை நல்வரை நாடற் கில்லை, தோழியென் நெஞ்சிற் பிரிந்ததூஉ மிலரே தங்குறை நோக்கங் கடிந்ததூஉ மிலரே. ‘தொடி நிலைநெகிழச் சாய், தோள் அவர் கொடுமை கூறிய வாயினும்’ என உடல் மெலிவு கூறுதல் காண்க. 9. கண் துயில் மறுத்தல் - இரவும் பகலும் தூங்காமை. காட்டு: புலர்குர லேனற் புழையிடை யொருசிறை மலர்தார் மார்பன் நின்றோற்கண்டோர் பலர்தில் வாழி தோழி, அவருள் ஆரிருட் கங்குல் அணையொடு பொருந்தி ஓர்யா னாகுவ தெவன்கொல் நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே. (அகம் - 82) என வரும். 10. கனவொடு மயங்கல் - அரிதினில் துயிலெய்திய வழித் தலைமகனைக் கனவிற்கண்டு விழித்துப் பார்க்க அவனைக் காணாமையால் மயங்கும் மயக்கம். காட்டு: அலந்தாங் கமையிலெ னென்றானைப் பற்றியென் நலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவும், கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப் புலம்ப லோம்பென அளிப்பான் போலவும். (கலி - 128) எனக் காண்க. 11. பொய்யாக் கோடல் - மெய்யைப் பொய்யெனக் கொள்ளுதல்; பெற்ற இன்பம் பொய்யெனக் கொள்ளுதலாம். காட்டு: கனவினான் எய்திய செல்வத் தனையதே ஐய வெமக்குநின் மார்பு. (கலி - 68) தலைமகன் அருகிலிருந்தும், கனவில் அடைந்த செல்வம் போலப் பொய்யாகும் நினது கூட்டம் எனக் கொண்டது காண்க. 12. மெய்யே என்றல் - பொய்யை மெய்யென்று துணிதல். காட்டு: கழங்கா டாயத் தன்றுநம் அருளிய பழங்கண் ணோட்டமும் நலிய அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே. (அகம் - 66) தலைமகன் தானே தன்மகனை வாயிலாகக் கொண்டு புக்கானாயினும் அதனை, முன் கழங்காடு போதுவர நாம் அருளிய பழைய இரக்கம் நலிதர வந்தான் எனப் பொய்யை மெய்யாகத் துணிந்தமை காண்க. இடந்தலைப் பாட்டின் கண் தலைவன் வர ஆயம்விட்டகன்று கூடினதை எண்ணி வந்தானெனக் கொண்டது. புதல்வனை வாயில் கொண்டு வந்ததை விட்டு, அவ்விரக்கம் வருத்த வந்தானெனப் பொய்யை மெய்யாகக் கொண்டா ளென்க. 13. ஐயம் செய்தல் - நம்மை வரையாது விடுவாரோ என வாளாதே ஐயம் செய்தல். வரையாது - மணக்காது. வாளா - சும்மா. காட்டு: தூதவர் விடுதரார் துறப்பார்கொல் நோதக இருங்குயி லாலு மரோ. (கலி - 33) ‘துறப்பார்கொல்’ என, வாளாதே ஐயம் செய்தமை காண்க. 14. அவன் தமர் உவத்தல் - தலைவனுடைய தமரான பாணன் முதலாயினோரைக் கண்டு மகிழ்தல். தமர் - சுற்றம். காட்டு: ஊர னூரன் போலும் தேரும் பாணன் தெருவி னானே. எனக் காண்க. அவன் நாட்டுப் பொருள்கண் டுவத்தலுங் கொள்க. காட்டு: அவர் நாட்டு, மாலை பெய்த மணங்கம ழுந்தியொடு காலை வந்த காந்தள் முழுமுதல் மெல்லிலை குலைய முயங்கலும் இல்லுய்த்து நடுதலுங் கடியா தோட்கே. (குறுந் - 361) தலைவன் நாட்டுக் காந்தட் செடியை முயங்கலும், வீட்டில் நடுதலும் செய்வாளென்றமை காண்க. 15. அறன் அளித்து உரைத்தல் - அறத்திணை அன்பு செய்து பரவுதல். அறன் - ஞாயிறு, திங்கள் முதலியனவும், பல்லி சொல்லல், காக்கை கரைதல் முதலியனவுமாம். தலைவி, ஞாயிறு திங்கள் முதலியவற்றைத் தலைவன் வரும் வழியை இனிது செய்யும்படி வேண்டுதலும், தனது ஆற்றாமையால் தலைவன் விரைவில் வரவேண்டும் எனப் பல்லியைச் சொல்லும்படியும், காக்கையைக் கரையும் படியும் வேண்டுதலுமாம். அளி - அன்பு. அன்புடன் பரவுதலாம். காட்டு: பாங்கர்ப் பல்லி பாடுதொறும் பரவிக் கன்றுபுகு மாலை நின்றோ ளெய்தி. (அகம் - 9) எனக் காண்க. 16. ஆங்கு நெஞ்சு அழிதல் - அங்ஙனம் அறனளித் துரைக்குங்கால் நெஞ்சழிந்துரைத்தல். அழிதல் - வருந்துதல். காட்டு: பழிதபு ஞாயிறே பாடறியா தார்கட் கடியக் கதழ்வை யெனக்கேட்டு நின்னை வழிபட் டிரக்குவேன் வந்தேனென் நெஞ்சம் அழியத் துறந்தானைச் சீறுங்கால் என்னை ஒழிய விடாதீமோ வென்று. (கலி - 143) ‘ஞாயிறே, துறந்தானைச் சீறுங்கால் என்னையும் விடாதே’ என, நெஞ்சழிந்துரைத்தமை காண்க. 17. எம்மெய் ஆயினும் ஒப்புமை கோடல் - யாதானுமொரு பொருள் கண்ட விடத்துத் தலைமகனோடு ஒப்புமை கொள்ளல். மெய் - பொருள். காட்டு: கணைகழி கல்லாத கல்பிறங் காரிடைப் பணையெருத் தெழிலேற்றின் பின்னர்ப் பிணையுங் காணிரோ பிரியுமோ அவையே. (கலி - 20) ஏற்றின் பின்னர்ப் பிணை செல்வது போல நாமும் அவரும் என, ஒப்புமை கண்டவாறு காண்க. ‘எம்மெய்யாயினும்’ என்றமையால், கண்டபொருளும் கேட்டபொருளும் ஒப்புமை கொள்ளப்படும் என்க. 18. ஒப்புவழி உவத்தல் - ஒப்புமை கொண்ட பொருளையே உவமை கொண்டு மகிழ்தல். எனவே, முன்னது (17) ஒப்பின்றி ஒப்புமை கொண்டதாயிற்று. ‘எம்மெய்யாயினும்’ என்றமையின், அது, உவமிக்காது ஒப்புமை கொள்வது. இது, உவமித்து மகிழ்வது. காட்டு: காமரு நோக்கினை, அத்தத்தா வென்னுநின் தேமொழி கேட்டல் இனிதுமற் றின்னாதே. (கலி - 80) காமரு நோக்கினை - விருப்பமருவுகின்ற அழகினையுடையை. தந்தையைப் போன்ற அழகுடையை என, மைந்தனைத் தந்தையோடு ஒப்பித்து மகிழ்ந்தமை காண்க. 19. உறுபெயர் கேட்டல் - தலைமகன் பெரும்புகழ் கேட்டு மகிழ்தல். பெயர் - புகழ். உறு - பெரிய. காட்டு: மென்றோள் ஞெகிழ்த்தான் றகையல்லால் யாங்காணேன் நன்றுதீ தென்ற பிற. (கலி - 142) எனக் காண்க. தகை - புகழ் 20. கலக்கம் - மனங்கலங்கிச் சொல்லத்தகாதன சொல்லுதல். காட்டு: பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய கையுளே மாய்ந்தான் கரந்து. (கலி - 142) எனக் காண்க. இக்காலத்து (களவுக் காலத்து) இதைவிட நிகழும் மெய்ப்பாட்டுக் குறிப்புத் தலைவிக் குண்டாகா. தலைவற்காயின் இதைவிட வருவதோர் கலக்கமும் உண்டு. அவை, மடலூர்தல் போல்வன. காட்டு: மாவென மடலு மூர்ப, பூவெனக் குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப, மறுகின் ஆர்க்கவும் படுப, பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே. (குறுந் - 17) எனச் சாதல் எல்லையாகக் கூறியவாறு காண்க. இவ்விருபது மெய்ப்பாடும் தலைமகற்கும் ஏற்றவகையாற் கொள்ளப்படும். இவையெல்லாம் அறனும் பொருளுமன்றி, இன்பப் பொருள் நிகழுமிடத்து அவரவருள்ளத்து நிகழ்வனவாதல் வழக்கு நோக்கி யுணரப்படும். இவையெல்லாம் உள்ளத்து நிகழ்ந்தனவற்றை வெளிப்படுப்பன வாகையால் மெய்ப்பாடெனப்பட்டன. மேல் வருவன வற்றுக்கும் இஃதொக்கும். (22) 7. வரைதற் கேதுவான மெய்ப்பாடு 258. முட்டுவயிற் கழறல் முனிவுமெய் நிறுத்தல் அச்சத்தி னகறல் அவன்புணர்வு மறுத்தல் தூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல் காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென் றாயிரு நான்கே அழிவில் கூட்டம். இ - ள் : முட்டுவயிற் கழறல் முதலிய எட்டும் அழிவில் கூட்டத்திற்கு ஏதுவாய மெய்ப்பாடுகளாகும் என்றவாறு. அழிவில் கூட்டம் - வரைந்து எய்தும் கூட்டம். அது - கற்பு. அதாவது, மணஞ்செய்து கொண்டு கூடும் கூட்டம். அவ்வழிவில் கூட்டத்திற்கு ஏதுவாயவையாகும் இவை. எனவே, தலைவி வரைதல் வேட்கை யுடையளாய காலத்துத் தோன்றும் மெய்ப்பாடுகளாகும் இவையெட்டும். 1. முட்டுவயின் கழறல் - தலைமகள் தலைமகனைச் சென்று கூடுங்கூட்டத்திற்குத் தடையுண்டானபோது கழறியுரைத்தல். முட்டு - தடை. கழறியுரைத்தல் - காரணத்தோடு கூறுதல். பகற்குறியினும் இரவுக்குறியினும் தம் விருப்பம் போற்சென்று கூடமுடியாது இற்செறிப்புண்டபோது கூறுதலாம். காட்டு: நொச்சி வேலித் தித்த னுறந்தை கல்முதிர் புறங்காட் டன்ன பன்முட் டின்றால் தோழிநங் களவே. (அகம் - 122) இது, தலைமகன் கேட்பத் தோழியுரைத்தது. பன்முட்டின்று - பலதடையை யுடையது. புறங்காடு போலவெனக் காரணத்தோடு கூறினமை காண்க. 2. முனிவு மெய் நிறுத்தல் - களவொழுக்கத்தில் தனக்குள்ள வெறுப்பைத் தலைவி புலப்படுத்தல். உள்ளத்து வெறுப்பு உடம்பின்கண் வெளிப்பட நிற்கும் நிலை என்க. முனிவு - வெறுப்பு. காட்டு: இன்னுயிர் கழிவ தாயினும் நின்மகள் ஆய்மல ருண்கட் பசலை காம நோயெனச் செப்பா தீமே. (அகம் - 52) எனக் காண்க. காமநோய் கொண்டாள் வரையவேண்டும் என்பதாம். எனவே, களவொழுக்கத்தில் வெறுப்புக் கொண்டாளென்பது. அதைக் கட்பசலை காட்டிற்று என்பது. 3. அச்சத்தின் அகறல் - இருளிடை வரும்போது தலைமகனுக்கு வரும் இடையூற்றுக் கஞ்சி அவனை நீங்குதல். அதாவது, அவனை மறந்திருத்தலாம். காட்டு : யாமங் கொள்வரிற் கனைஇக் காமங் கடலினு முரைஇக் கரைபொழி யும்மே எவன்கொல் வாழி தோழி, மயங்கி இன்ன மாகவும் நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடுஞ் சூழாது கைம்மிக் கிறும்புபட் டிருளிய இட்டருஞ் சிலம்பில் கான நாடன் வரூஉம், யானைக் கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரி வானந் தலைஇ நீர்வார் பிட்டருங் கண்ண படுகுழி யியவின் இருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே. (அகம் - 128) இதனுள், ‘அவர் இருளிடை வருத லேதம் அஞ்சி நாம் அகன்று வலித்திருப்பவும், என்னையும் நின்னையும் கேளாது என் நெஞ்சு அவர் தளரடிதாங்கிய சென்றது’ எனத் தான் அஞ்சியகன்றிருந்தமை புலப்படக் கூறியது காண்க. வலித் திருத்தல் - உறுதியாக இருத்தல். அதாவது, நெஞ்சைத் தலைவன்பால் விடாமற் பிடித்திருத்தல். தளரடி - தளர்ந்த அடி. 4. அவன் புணர்வு மறுத்தல் - இரவுக் குறியும் பகற்குறியும் விலக்குதற் கெழுந்த உள்ள நிகழ்ச்சி. சேர்க்கையை மறுத்தலாம். ‘திளைப்புவினை மறுத்தல்’ (மெய் - 17) தமரை அஞ்சி மறுத்தது. இது, வரைவு கடாதற் கருத்தான் மறுத்தது என்க. காட்டு : நல்வரை நாட நீவரின் மெல்லிய லோருந் தான்வா ழலளே. (அகம் - 12) இது, தலைமகள் குறிப்பினைத் தோழி கூறியது. வரின் வாழலள் வாரற்க என்பதாம். 5. தூது முனிவின்மை - புள் முதலியவற்றைச் சொல்லுமின் அவர்க்கென்று பன்முறை சொல்லுதல். வெறுப்பின்றித் தூது விடுதலாம். முனிவுஇன்மை - வெறுப்பின்மை. காட்டு : கானலுங் கழறாது கழியுங் கூறாது தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது ஒருநின் அல்லது பிறிதியாது மிலனே பறவை கிளருந் துறைனை நீயே சொல்லல் வேண்டுமால் அலவ. (அகம் - 170) இது, அலவனைத் தூதுவிட்டது. அலவன் - நண்டு. கானல், கழி, புன்னை, அலவன் ஆகியவையெல்லாம் தூதாகும். 6. துஞ்சிச் சேர்தல் - மனையகத்துப் பொய்த்துயிலோடு சோம்பித் தங்குதல். பொய்த்துயில் கொள்ளுதல். வேண்டியவாறு கூட்டம் நிகழப் பெறாமையின் தலைமகனோடு புலந்தாள் போலச் சோம்பியிருக்கு மாகலின், ‘துஞ்சிச்சேர்தல்’ என்றார். காட்டு : என்மலைந் தனன்கொல் தானே தன்மலை ஆரம் நாறும் மார்பினன் மாரி யானையின் வந்துநின் றனனே. (குறுந் - 161) ‘என்ன காரியம் மேற்கொண்டு வந்தான்’ என்றமையின் இது, துஞ்சிச் சேர்தலாயிற்று. இல்லையேல், இவ்வாறு சொல்லுதல் அன்பழிவு எனப்படும். அன்பழிவு களவுக்குப் பொருந்தாது. என்மலைந்தனன் - என்ன காரியம் மேற்கொண்டனன். 7. காதல் கைமிகல் - காதல் அளவுகடத்தல். அளவு கடந்தபோது நிகழும் உள்ள நிகழ்ச்சியாகும். காட்டு : உள்ளின் உள்ளம் வேமே, உள்ளா திருப்பினெம் அளவைத் தன்றே, வருத்தின் வான்றோய் வற்றே காமம் சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே. (குறுந் - 102) எனக் காண்க. 8. கட்டுரை இன்மை - உரை மறுத்திருத்தல்; பேசாதிருத்தல். காட்டு : யான்றன் அறிவல் தானறி யலளே யாங்கா குவள்கொல் தானே பெருமுது செல்வர் ஒருமட மகளே. (குறுந் - 337) இது, தலைமகள் கட்டுரையாதிருத்தலின், தலைமகள் தமரால் அவளை எய்தல் வேண்டினமையின், கட்டுரையின்மையால் தலைவி வரைவு கடாதலாயிற்று. இம்மெய்ப்பாட்டுக் குறிப்புக்களை அறிந்து தோழி தலைமகனை வரைவு கடாவுமென்க. (23) 8. கற்பின்கண் நிகழும் மெய்ப்பாடு 259. தெய்வ மஞ்சல் புரையறந் தெளிதல் இல்லது காய்தல் உள்ள துவர்த்தல் புணர்ந்துழி யுண்மை பொழுதுமறுப் பாக்கம் அருள்மிக வுடைமை அன்புதொக நிற்றல் பிரிவாற்றாமை மறைந்தவை யுரைத்தல் புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇச் சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே. ‘புகுமுகம் புரிதல்’ தொடங்கிக், ‘கட்டுரையின்மை’ முடியக் (மெய் - 13 - 23) களவிற்குரிய மெய்ப்பாடு கூறினார். இனி இச்சூத்திரத்தே கற்பிற்குரிய மெய்ப்பாடு கூறுகின்றார். இ - ள்: தெய்வமஞ்சல் முதலிய பதினொன்றும் கற்பிற்குரிய மெய்ப்பாடுகளாகும் என்றவாறு. சிறந்த பத்தும், புறஞ்சொன் மாணாக் கிளவியொடு தொகைஇப் பதினொன்று என்க. தொகைஇ - தொகுத்து. ‘செப்பிய பொருள்’ என்றது, முன்னர் (மெய் - 23) அழிவிற் கூட்டத்திற்கு ஏதுவெனக் கூறப்பட்ட எட்டும்போல, இவை பதினொன்றும் அழிவிற் கூட்டத்தின்கண் நிகழும் என்றவாறு. அதாவது, வரைந் தெய்தியபின் (மணந்து கொண்டபின்) தலைமகள் மனத்து நிகழ்வன இவை என்பதாம். 1. தெய்வம் அஞ்சல் - தலைமகனா லுணர்த்தப்பட்டு அவன் தெய்வத்தை அஞ்சி வழிபடல். தெய்வமாவது - ஆசிரியர், பெற்றோர், பெரியோர் முதலாயினோரும், குல தெய்வமுமாம். குலதெய்வம் - இறந்துபோன முன்னையோர். அஞ்சி வழிபடும் உள்ளக்குறிப்பு மெய்ப்பாடெனப்படும். தலைமகனால் உணர்த்தப்படுதல் அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும் ஒழுக்கங் காட்டிய குறிப்பினும். (கள - 6) எனக் காண்க. காட்டு : இன்னுயிர் புரையு மியல்கெழு மென்னையைச் செம்மையிற் பயந்தோர் தம்மையாங் கஞ்சி வழிபடல் பிழையா மடனுடை யோயே. எனக் காண்க. இது, தோழிகூற்று. 2. புரையறம் தெளிதல் - தனக்கொத்த இல்லறம் இன்னதென்று மனத்துள் தெளிதல். புரை - உயர்வு. ‘புரைதீர்காமம்’ (கற் - 6) எனக் காண்க. இது, ‘அஞ்ச வந்த உரிமைக்கண்’ (கற் - 6) என்பதாம். காட்டு : விரியுளைக் கலிமான் தேரொடும் வந்த விருந்தெதிர் கோடலின் மறப்பல் என்றும். (கலி - 75) இது, தலைவனொடு சொல்லாடாது ஊடியிருப்பேனாயின் அவர் விருந்தொடு வருவார்; அதனால், ஊடலை மறப்பேன் என்றமையின், புரையறந் தெளிதலாயிற்று. விருந்தினரைப் பேணுதல் இல்லறவொழுக்க மாமென்க. 3. இல்லது காய்தல் - தலைவர்க்கு இல்லாததனை உள்ளதாகக் கொண்டு வெறுத்தல். காட்டு : தேறினேன் சென்றீநீ செல்லா விடுவாயேல் நற்றா ரகலத்துக் கோர்சார மேவிய நெட்டிருங் கூந்தற் கடவுள ரெல்லார்க்கும் முட்டுப்பா டாகலு முண்டு. (கலி - 93) இது, தலைமகள் புலந்து கூறியது. பெரியோர்களையே கண்டு தங்கினா னாயினும், பரத்தையரைக் கண்டா னென்று இல்லது சொல்லிக் காய்ந்தது. நெட்டிருங் கூந்தல் கடவுளர் என்றது - பரத்தையரை. 4. உள்ளது உவர்த்தல் - உள்ளதைத் தெளியாது வெறுத்தல். தலைமகனாற் பெற்ற அன்பு உள்ளதே யாயினும், அதனை உண்மையென்றே தெளியாது அருவருத்து நிற்கும் உள்ள நிகழ்ச்சி. உவர்த்தல் - அருவருத்தல், வெறுத்தல். காட்டு : பட்டுழி யறியாது பாகனைத் தேரொடும் விட்டவள் வரநோக்கி விருந்தேற்றுக் கொளநின்றாய். (கலி - 69) இது, தலைவன் அன்புகொண்டு வரவும், நீ பாகனைப் போகவிட்டுப் பரத்தை உன்னை விருந்தாக எதிர்கொள்ள அவள் வரவினைக் கருதி நின்றாய்; அவள் வாராமையினால் இங்கு வந்தாய் என, உள்ளது உவர்த்தவாறு காண்க. 5. புணர்ந்துழி உண்மை - இல்லது காய்தலும், உள்ள துவர்த்தலுமின்றிப் புணர்ச்சிக் காலத்துச் செய்வன செய்யச் சென்ற உள்ள நிகழ்ச்சி. அதாவது, புணர்ச்சியால் உண்மையுவகை கொள்ளுதல். காட்டு : குளிரும் பருவத்தே யாயினும் தென்றல் வளியெறியின் மெய்யிற் கினிதாம் - ஒளியிழாய் ஊடி யிருப்பினும் ஊரன் நறுமேனி கூட லினிதா மெனக்கு. (ஐந். ஐம் - 30) எனக் காண்க. 6. பொழுது மறுப்பு ஆக்கம் - களவின்கண் பகற்குறியும் இரவுக் குறியுமென வரையறுத்தாற் போலக் கற்பில் வரையறை யின்மையின், அப்பொழுதினை மறுத்தலாகிய ஆக்கம் என்பதாம். பகற்குறிக்கண் வேட்டைமேல் வந்ததமர் இருக்கினும், இரவுக்குறிக்கண் நிலவு வெளிப்பாடு, தாய் துஞ்சாமை, நாய் துஞ்சாமை முதலாயின நேரினும் கூடுதலின்றிப் பிரிந்திருந்தமை போலன்றி, இங்கு, ‘நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சியில்’ (கற் - 5) நின்று பிரியாதிருத்த லென்க. காட்டு : அயிரை பரந்த அந்நண் பழனத் தாம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள் இடைமார்பு கிடந்தும் நடுங்க லானீர் தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக் கரியே மாகிய காலைப் பெரிய நோன்றனிர் நோகோ யானே. (குறுந் - 178) இதனுள், ‘தொழுதுகாண் பிறையில் தோன்றினம்’ என்பது, களவுக்காலத்து இடையீடு (இரவுக்குறியிடையீடு) பெருகிற்று எனக்கூறி, அங்ஙனம் வரைந்த பொழுதினை மறுத்த காலத்து (குறித்த காலத்தை நிலவு வெளிப்பட்டதென மறுத்தல்) நடுங் கலானீர் என்றமையின், இப்போது அஃதில்லையென்னும் ஆக்கம் கூறியவாறு காண்க. 7. அருள் மிக உடைமை - அருள் மிகுந்த நெஞ்சினளாதல். காட்டு : நின்ற சொல்லர் நீடுதோன் றினியர் என்றும் என்றோள் பிரிபறி யலரே. (நற் - 1) ‘இனியர்’ எனவும், ‘பிரிபறியலர்’ எனவும் அருள் தோன்றக் கூறியவாறு காண்க. 8. அன்பு தொக நிற்றல் - அன்பு மிகுதல். அதாவது, களவுக் காலத்து விரிந்த அன்பானது இல்லறத்தின்மேற் கொண்ட பெரிய விருப்பினானே ஒருங்கு தொக நிற்றலாம். பலவாறு விரிந்த அன்பெல்லாம் ஒன்றுகூடி நிற்றலென்பதாம். காட்டு : எம்போல், புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்தும் நெல்லுடை நெடுநகர் நின்னின் றுறைய என்ன கடத்தளோ மற்றே. (அகம் - 176) என, ‘புதல்வற் பயந்தும் நின்இன்று உறையும் கடத்தனம் யாது’ என்றமையின், நின்மேற் கொண்ட அன்பு ஒன்றுபட்டு மிகுந்தது என்றமை அறிக. கடம் - கடமை, தன்மை. 9. பிரிவாற்றாமை - களவிற் போலப் பிரிவாற்றுதல் வேண்டப் படாமை. பிறர்க்குத் தெரியாமல் ஒழுகல் கற்பிற்கு வேண்டுவ தின்றாகலின், பிரிவாற்றாமையும் வேண்டுவதின்றாயிற்று. பிரியா திருத்தலை வேண்டுங் குறிப்பு மெய்ப்பாடாகும். காட்டு: இடனின்றி யிரந்தோர்க்கொன் றீயாமை யிழிவெனக் கடனிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ வடமீன்போற் றொழுதேத்த வயங்கிய கற்பினாள் தடமென்றோட் பிரியாமை பொருளாயி னல்லதை. (கலி - 2) என்புழி, இனைய கற்பினாளைப் பிரியாமை பொருளாவதன்றி நும்மால் தரப்படும் பொருள் பொருளாகுமோ என்றதன் கருத்தாவது, பிரிவாற்றாமையால் இவள் இறந்து படுவள்; பின்னர் அப்பொருள் கொண்டு செய்யும் இல்லறம் எவ்வாறெனத் தலைமகளின் பிரிவாற்றாமை கூறியவாறு காண்க. 10. மறைந்தவை உரைத்தல் - களவுக் காலத்து நிகழ்ந்தனவற்றைக் கற்புக் காலத்துக் கூறுதல். மறைந்தவை - களவுக் காலத்து நிகழ்ந்தவை. அது, களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி அலமர லுள்ளமோ டளவிய விடத்தும். (கற் - 6) என்றவழித் தோன்றிய மனக்குறிப்பு. காட்டு: முயங்கல் விடாஅல் இவையென மயங்கி யானோம் என்னவும் ஒல்லார் தாமற் றிவைபா ராட்டிய பருவமு முளவே, இனியே, புதல்வற் பயந்த பாலொடு தடைஇத் திதலை யணிந்த தேங்கொள் மென்மார்பு நறுஞ்சாந் தணிந்த கேழ்கிள ரகலம் வீங்க முயங்கல் யாம்வேண் டினமே தீம்பால் படுதல் தாமஞ் சினரே. (அகம் - 26) இது, முன்னிலைப் புறமொழி. களவில் நிகழ்ந்ததைக் கற்பினிற் கூறியவாறு காண்க. இவை - மார்பு. முன் முயங்கங்கல் விடால், எனப் பாராட்டினார்; இன்று பால் படுமென அஞ்சினரென்பது. விடால் இவை - விடமாட்டேன் என்கின்ற இவை. 11. புறஞ்சொல் மாணாக்கிளவி - தலைவற் கெய்தக் கூடிய பழியுரையை மாற்றுஞ் சொல் கூறுதல். புறஞ்சொல் - பிறர் கூறும் பழிச்சொல், அலர். மாணாக் கிளவி - மாண் +ஆ. மாண்ஆய கிளவி - மாட்சிமையாகிய சொல்; பிறர்கூறும் பழிச்சொல்லை வெறுத்துக் கூறுதலென்பதாம். காட்டு: களிறுகவர் கம்பலை போல அலரா கின்றது பலர்வாய்ப் பட்டே. (அகம் - 96) எனப் பழியுரையை வெறுத்துக் கூறினமை காண்க. புகுமுகம் புரிதல் முதல், புறஞ்சொன்மாணாக் கிளவி ஈறாகக் கூறப்பட்ட (மெய் - 13 - 24) 63 மெய்ப்பாட்டுக் குறிப்பும் பழந்தமிழ் மக்களின் இன்ப வாழ்க்கையின் கழிபெரும் பெருமையைக் காட்டுவனவாகும். ஒருவன் ஒருத்தியிடை முறையே நிகழும் இம்மெய்ப்பாடுகளை இற்றென அறிந்து புலப்பட ஓதிய ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலப் பெருமையை என்னென்பது! இவ்வுளப் பாட்டை யுணர்ந்து அதற்குத்தக நடந்து வந்த நம் முன்னையோரின் வாழ்க்கை நலனை எவ்வாறு எடுத்துரைப்பது! பொருள் புலப்பாட்டுக்காக எடுத்துக் கொண்ட உவமை, உள்ளுறையுவமை, இறைச்சி, மெய்ப்பாடு - இவற்றுள் தலையாயது மெய்ப்பாடே யாகும். (24) 9. காதலர் ஒப்புமைக்குரிய மெய்ப்பாடு 260. பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ டுருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. இது, ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ (கள - 3) என்ற, ஒப்பினது பகுதி கூறுகின்றது. இ - ள்: ஒத்த பிறப்பும் ஒத்த குடிமையும் ஒத்த ஆண்மையும் ஒத்த ஆண்டும் ஒத்த உருவமும் ஒத்த அன்பும் ஒத்த நிறையும் ஒத்த அருளும் ஒத்த அறிவும் ஒத்த திருவும் எனப் பத்து வகைய இருவரின் ஒப்பினது பகுதி என்றவாறு. பிறப்பு முதலிய பத்தும் இருவர்க்கும் ஒத்திருக்க வேண்டும் என்பதாம். முறையுறக் கிளந்த - முறையாகச் சொல்லிய. தலைமகனது பிறப்பு முதலாயின தன் பிறப்பு முதலிய வற்றோடு ஒத்ததாயின் தலைமகட்குக் காமக் குறிப்புத் தோன்றும். பிறப்பு முதலியன பற்றி மனத்தின்கட் பிறக்கும் தருக்குணர்ச்சி மெய்ப்பா டெனப்படும். இது, தலைமகற்கும் உண்டேனும், ‘ஒப்பினது வகை’ என்றதனால், தலைமகட்கே உரிமை கொள்ளப் படும். ஒருவர்க்குள்ள பிறப்பு முதலியன மற்றவர்க்கும் இருக்கின் அவ்வொப்பினால் இருவர்க்கும் காமக் குறிப்புத் தோன்று மேனும், தலைமகனே தலைமகளைக் காண்பானாகையால் தலைமகள்பாலே இவ் வொப்புமைக் கேதுவாகிய உள்ள வுணர்ச்சி தோன்றித் தலைமகனைக் காதலிக்க வேண்டுதலின், அவளுக்கே சிறப்புடையன இவையென்பதாம். இப்பத்தில் குடிமை, ஆண்டு, உரு, அன்பு, அருள் என்பன இருவரும் எதிர்ப்பட்டதும் ஒத்துப் பார்க்கப்படும். மற்றவை பின்னர் வெளிப்படும். 1. பிறப்பு - நற்குடிப் பிறத்தல். 2. குடிமை - அக்குடிப் பிறப்புக்குத் தக்க ஒழுக்கம். ‘ஒழுக்கம் உடைமை குடிமை’ (குறள் - 133) எனல் காண்க. 3. ஆண்மை - ஆள்வினை. அதாவது, ஆளுந் தன்மை. ‘குடியாண்மை’ என்புழி, ஆண்மை என்பது இருவர்க்கும் ஒத்தல் காண்க. 4. ஆண்டு - காமக் குறிப்புத் தோன்றிய பருவம். 5, 6. உருவு நிறுத்த காம வாயில் - உருவும், அன்பும். அதாவது, பெண்மை வடிவும் ஆண்மை வடிவும் நன்கு அமைந்த வழி அவற்றின்கண் நிகழும் இன்பத்திற்கு அன்பு வாயில் போறலின், அன்பு - காமவாயில் எனப்பட்டது. அன்பு, வடிவுபற்றி யல்லது தோன்றாமையின், உருவும், அதன்கட் டோன்றும் அன்பும் என இரண்டாகப் பகுக்கப்பட்டது. உருவின்கண் நிலை பெற்ற காமத்திற்கு வாயில் போன்ற அன்பென்க. 7. நிறை - அடக்கம். 8. அருள் - பிறவுயிர்க் குண்டான துன்பங்கண் டிரங்குதல், துன்பஞ் செய்யாமை. 9. உணர்வு - அறிவு. 10. திரு - செல்வம். இப்பத்தினுள், உருவும், அவற்றுவழித் தோன்றும் அன்பும் மிகுதியும் ஒத்திருக்க வேண்டும். காட்டு: 1. அவனுந்தான், ஏன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத் தேனின் இறாலென வேணி இழைத்திருக்கும் கானக நாடன் மகன். (கலி - 39) இது, பிறப்பொப்புமை; இவள் போலவே அவனும் எனக் காண்க. 2. உள்ளின னல்லனோ யானே உள்ளிய வினைமுடித் தன்ன இனியாள் மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே. (நற் - 3) இது, குடிமை யொப்புமை, ‘உள்ளிய வினைமுடித் தன்ன இனியாள்’ எனத் தலைமகன் தனது இல்லறத்தினைத் தலைமகள் மேல் வைத்துச் சொல்லினமை காண்க. 3. கேள்கே டூன்றவும் கிளைஞ ராரவும் கேளல் கேளிர் கெழீஇயின ரொழுகவும் ஆள்வினைக் கெதிரிய ஊக்கமொடு புகல்சிறந்தது. (அகம் - 93) இது, ஆண்மை யொப்புமை. இன்ன காரணத்திற்காகப் பிரிந்து போந்து வினை முடித்தன மாயினும், ‘அவளை முயங்குகம் சென்மோ’ என்றமையின், தன் ஆள்வினைக்குத் தக்க பெண்மை யான் அவள் ஆற்றியிருந்தாள் என்று எண்ணிய எண்ணத்தால் காமக்குறிப்புப் பிறந்தமையின், ஆண்மையாயிற்று. ஆற்றியிருக்கும் ஆள்வினை யென்க. 4. என்றோ ளெழுதிய தொய்யிலும், யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கும் நினைத்துக்காண். (கலி - 18) இது, ஆண்டொப்புமை. தொய்யிலின் அழகும், சுணங்கின் அழகும் உடைய இளமை மாறி முதுமையடைதலும் கூடும் என்பதை எண்ணிப்பார் என்றமையான், ஆண்டொப்புமை யாயிற்று. இருவர்க்கும் ஒத்தபருவம் என்பது. 5. முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும் பணைத்தோளும் பேரம ருண்கண்ணும் நல்லேன்யா னென்று நலத்தகை நம்பிய சொல்லாட்டி நின்னொடு சொல்லாற்ற கிற்பாரியார். (கலி - 108) இது, உருவொப்புமை. 6. நின்மக ளுண்கண் பன்மா ணோக்கிச் சென்றோன் மன் றவக் குன்றுகிழ வோனே பகன்மா யந்திப் படுசுட ரமையத் தவன்மறை தேஎம் நோக்கி மற்றிவன் மகனோ தோழி யென்றனள். (அகம் - 48) இது, அன்பொப்புமை. பன்முறை நோக்கி மகனே தோழி என்றதால், தலைவன் மீது தலைவி அன்பு கொண்டமை காண்க. 7. கண்ணியன் வில்லன் வருமென்னை நோக்குபு முன்னத்திற் காட்டுத லல்லது தானுற்ற நோயுரைக் கல்லான் பெயருமற் பன்னாளும் பாயல் பெறேஎன் படர்கூர்ந்து. (கலி - 37) இது, நிறையொப்புமை. முன்னத்திற் காட்டுதலல்லது தானுரையானென அடக்கம் கூறுதல் காண்க. 8. தாதுண் பறவை பேதுற லஞ்சி மணிநா வார்த்த மாண்வினைத் தேரன். (அகம் - 4) இது, ‘வண்டு பேதுற லஞ்சி’ என்றமையின், அருளொப்புமை. அவ்வருள் பற்றிக் காமக் குறிப்புப் பிறந்தது. 9. தன்னசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப. (அகம் - 22) இது, ‘தலைமகள் குறிப்புணர்ந்து வந்தனன்,’ என்றமையின், அறிவொப்புமை. அக் குறிப்புணரும் அறிவுடையவன் என்பது. 10. நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடுமென்றோள் பெய்கரும் பீர்க்கவும் வல்லன் இளமார்பில் தொய்யி வெழுதவும் வல்லன்றன் கையில் சிலைவல்லான் போலும் செறிவினா னல்ல பலவல்லன் தோளான் பவன். (கலி - 143) இது, இனையன வல்லனாதல் செல்வக்குடிப் பிறந்தாரை அறிவிக்கு மாகலின், திருவொப்புமை. தொய்யில் எழுதல் செல்வர் விளையாட்டாகும். (25) 10. காமக்குறிப் பாகாதன 261. நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புற லேழைமை மறப்போ டொப்புமை என்றிவை யின்மை என்மனார் புலவர். இதுகாறும் தலைமகள்பால் நிகழும் மெய்ப்பாடும், இருவர்க்கு முள்ள ஒப்புமையுங் கூறி, இதில் தலைவற்கு ஆகாதன வற்றை வரையறுத்துக் கூறுகின்றார். இ - ள்: நிம்பிரி முதலிய பன்னிரண்டும் இன்றித் தலைமகன்கண் மெய்ப்பாடு நிகழும் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. 1. நிம்பிரி - பொறாமை; பொறாமை தோன்றுங் குறிப்பு. 2. கொடுமை - கேடு செய்ய எண்ணும் தீவினையுள்ளம். 3. வியப்பு - தற்புகழ்ச்சி. 4. புறமொழி - புறங்கூறுதல். 5. வன்சொல் - கண்ணோட்ட மின்றிச் சொல்லுஞ் சொல். 6. பொச்சாப்பு - உறுதியின்மை. 7. மடிமை - சோம்பல். 8. குடிமை - தலைவியை இழிந்தவளெனத் தன்னை நன்கு மதித்தொழுகுதல். 9. இன்புறல் - தான் பெரியனென்று தானே இன்புறுதல். 10. ஏழைமை - வெள்ளறிவு, நுண்ணுணர்வின்மை. ‘நுண்ணுணர் வின்மை வறுமை யஃதுடைமை பண்ண பணைத்த பெருஞ்செல்வம்.’ (நாலடி). 11. மறப்பு - மறதி. 12. ஒப்புமை - தலைவியோடு வேறொருத்தியை ஒப்பிட்டு அவளைத் தலைவியினும் சிறப்பித்தல். நிம்பிரி, கொடுமை, ஏழைமை என்பன, சிறப்பித்துக் கூறுமிடத்து அமையும் (பொது - 63). கொடுமையை ஆண்டு (பொது - 51) சினத்துள் அடக்கினார். ஏழைமையைப் பேதைமை என்றார். அச்சூத்திர உரைபார்க்க. (26) 11. மெய்ப்பாட்டுக்குப் புறனடை 262. கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதி னுணரும் உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே. இ - ள்: கண்ணானும் செவியானும் திட்பமாக உணரும் நுண்ணுணர்வினர்க் கல்லது ஆராயின் மெய்ப்பாட்டுப் பொருள் கொள்ளல் மற்றவர்க்கு அருமையுடைத்து என்றவாறு. தெரியின் - ஆராயின். நன்னயம் - மெய்ப்பாடு. பொருள்கோள் - பொருள் கொள்ளுதல். அருங்குரைத்து - அருமை யுடைத்து. எண்ணருங் குரைத்து - எண்ணுதற் கருமையுடைத்து. உள்ளத் துணர்வான் மெய்ப்பாடு பிறந்தவழி முகம் வேறுபடுதலும் சொல்வேறுபடுதலும் உடைமையின், அவை கண்ணானும் , செவியானும் உணர்தல் அம் மெய்ப்பாட்டில் நன்கு பயிற்சி யுடையார்க்கே முடியும் என்பதாம். காட்டு: 1. கூந்தல் வேய்ந்த விரவுமல ருதிர்ந்து சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி அமரா முகத்த ளாகித் தமரோ ரன்னள் வைகறை யானே. (குறுந் - 312) இதனுள், அமரா முகத்தள் ஆகுதலும், தமரோரன்னள் ஆகுதலும் தலைமகற்குப் புலனாகுதலின், அவை கண்ணுணர் வெனப்படும். 2. ஒழிகோ யானென அழிதகக் கூறி. (அகம் - 110) இதில், ‘தலைமகன் மனத்து நிகழ்ந்த அழிவெல்லாம் ஒழிகோ யான்’ என்ற சொல்லானே அவனியல் புணர்ந்தமையின், அது செவியுணர் வெனப்படும். இங்ஙனம் உணர்தலும் உணர்வுடையார்க்கன்றி அரிதென்பார், ‘எண்ணருங் குரைத்து’ என்றார். (27) ஐந்தாவது மெய்ப்பாட்டியல் குழந்தையுரை முற்றிற்று * * * ஆறாவது புறத்திணையியல் 1. புறத்திணை யொழுக்கம் 263. மெய்பெறு வகையே கைகோள் வகையே. என்பது சூத்திரம். அகம் புறம் எனப் பகுத்து நிறுத்திய நிறுத்த முறையானே அகத்திணையிலக்கணம் உணர்த்தி, இனி அகத்திணை ஏழற்கும் புறமான புறத்திணையிலக்கணம் உணர்த்து கின்றார். புறத்திணையினது இலக்கணங் கூறுகின்றமையின் இவ்வியல், புறத்திணையியல் என்னும் பெயர்த்தாயிற்று. புறத்திணை - புறமாகிய திணை எனப் பண்புத் தொகை. இயல் - இலக்கணம். அகத்திணை ஏழற்கும் புறமான புறத்திணை எனவே, அஃதும் ஏழென்பது பெறப்படும். புறத்திணை ஏழாவன: 1. வெட்சி 5. வாகை 2. வஞ்சி 6. காஞ்சி 3. உழிஞை 7. பாடாண் 4. தும்பை என்பன. 1. வெட்சி - நிரைகவர்தலும், நிரை மீட்டலுமாம். 2. வஞ்சி - பகைவர் நாட்டின்மேற் படையெடுத்தல். 3. உழிஞை - எயில் முற்றலும், எயில் காத்தலுமாம். 4. தும்பை - போர் செய்தல். 5. வாகை - தத்தம் குணஞ் செயல்களைச் சிறப்பித்துக் கூறுதல். 6. காஞ்சி - நிலையாமை கூறுதல். 7. பாடாண் - பாடப்படுவோன் ஒழுக்கங் கூறுதல். வெட்சி நிரைகவர்தல், மீட்டல் நிலனசை வட்கார்மேற் செல்லுதல் வஞ்சியாம்; - உட்கா தெயில்வளைத்தல், காத்தல் இயலுழிஞை; வேந்தர் துயிலப் பொருவது தும்பை - இயல்மிகுத்து நீணுவற்றல் வாகை; நிலையாமை காஞ்சி; பா டாணொழுக்கங் கூறுதல்பா டாண். (குழந்தை) இயல் - தன்மை. நீள் நுவற்றல் - நெடிது கூறுதல். நுவற்றல் - கூறல். இவற்றின் இலக்கணத்தைத் தத்தம் சிறப்புச் சூத்திரங்களிற் காண்க. இம்முதற் சூத்திரம், அகத்திணை ஏழற்கும் புறமாகிய புறத் திணை ஏழற்கும் அகத்திணைக்குரிய ஒழுக்கமே உரியவென்ப துணர்த்துகின்றது. இதன் பொருள்: மெய் பெறுவகையே - புறத்திணை யொழுக்கமானது, கைகோள் வகையே - அகத்திணை யொழுக்கமே யாம் என்றவாறு. மெய் - பொருள். இங்கே புறத்திணையை யுணர்த்திற்று. கைகோள் - ஒழுக்கம். அதாவது, புறத்திணையேழும் அகத்திணை யேழற்கும் புறனாகையால், அகத்திணைக்குரிய ‘மறைந்த ஒழுக்கமும், வெளிப்படையுமே’ (கள - 58) புறத்திணைக்கும் ஒழுக்கமாகும் என்பதாம். அவையாமாறு: (1) 2. அகம்புற வொப்புமை வெட்சி தானே குறிஞ்சியது புறனே. வஞ்சி தானே முல்லையது புறனே. 2 உழிஞை தானே மருதத்துப் புறனே. 3 தும்பை தானே நெய்தலது புறனே. 4 வாகை தானே பாலையது புறனே. 5 காஞ்சி தானே பெருந்திணைப் புறனே. 6 பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே. இவற்றின் பொருள் வெளிப்படை. புறத்திணை பலவற்றுள் ஒன்றை வாங்குதலின், ‘தானே’ என்றார். பாடாண் பலதிறப்படுதலின், ‘பகுதி’என்றார். அகம் புறம் அகம் புறம் 1. குறிஞ்சி - வெட்சி 5. பாலை - வாகை 2. முல்லை - வஞ்சி 6. பெருந்திணை - காஞ்சி 3. மருதம் - உழிஞை 7. கைக்கிளை - பாடாண் 4. நெய்தல் - தும்பை புறத்திணை முறை பற்றிக் கைக்கிளையை ஈற்றிற் கூறினார், இது புறத்திணை யியலாகலின். வெட்சி முதலிய ஆறு திணைகளையும் பாடவேண்டுதலின் பாடாணை ஈற்றில் வைத்தார். 1. குறிஞ்சி-வெட்சி: குறிஞ்சிப் பொருளாகிய களவொழுக்கம் பெரும்பாலும் இரவிற் பிறர்காணாது நடப்பது போல, வெட்சிப் பொருளாகிய நிரை கோடலும் மீட்டலும் இரவிற் பிறர்காணாது நடப்பதனாலும், களவில் தலைவனும் தலைவியும் கட்டுக்காவலை மீறித் தாம் கருதிய காதலின்பந் துய்த்து மீளுதல் போல, வெட்சி மறவரும் எதிர்க்கும் மறவரை மதியாது சென்று நிரைகவர்ந்து மீளுதலினாலும் குறிஞ்சிக்கு வெட்சி புறனாயிற்று. இராக்காலமாகிய முதற் பொருளும், தலைவன் தலைவியைக் கூடல், மறவர் நிரையைக் கூடல் ஆகிய உரிப்பொருளும் ஒத்தன. கூடல் - அடைதல். 2. முல்லை - வஞ்சி: முல்லைக்கு நிலம் காடு; வஞ்சி நிலமும் காடேயாகும். தலைவனைப் பிரிந்த தலைவி முல்லை நிலமான காட்டில் தங்கியிருத்தல் போல, பிறர் மண்வேண்டிச் சென்ற வஞ்சி வேந்தனும் யானை முதலிய படையுடன் காட்டில் மரநிழலில் தங்கியிருப்பன். தலைவன் பாசறைக்கண் தலைவியைப் பிரிந்திருக்க, தலைவி அவனைப் பிரிந்து மனையிலிருத்தல் இரண்டிற்கும் ஒக்கும். ‘கூதிர்ப்பாசறை’ கூறுவதால் (புறத் - 22), முல்லைக்குரிய கார்காலத்தும் சிறுபான்மை வஞ்சிப்போர் நடத்தல் கூடும். எனவே, முதல் கரு உரிப்பொருள் மூன்றும் ஒத்தலின் முல்லைக்கு வஞ்சி புறனாயிற்று. 3. மருதம் - உழிஞை: மருதம் வயல்சூழ் நிலம். கோட்டை (மதில்) மருத நிலத்தின்கண் உள்ளதே. தலைவன் வாயில் வேண்டத் தலைவி ஊடிக் கதவடைத்திருப்பது போல, பகைவன் முற்றுகையிடக் கதவடைத்திருக்கும் அகத்துழிஞை யானும் ஒருவன் வாயில் வேண்டத் திறவா திருத்தலானும்; தலைவி பின்னர் உணர்ந்து ஊடல் தணிந்து கதவு திறந்து கூட விரும்புதல் போல, உள்ளிருப்பவனும் போர் செய்ய வேண்டி வெளிப்பட விரும்புதலானும் மருதத்திற்கு உழிஞை புறனாயிற்று. முதல் கரு உரி மூன்றும் ஒத்தன. 4. நெய்தல் - தும்பை: கடலும் கடல் சார்ந்த மணல் வெளியும் உப்பங்கழியும் நெய்தல் நிலம். களரும் மணற்பாங்கான இடமுமே போர் செய்தற்கு உரிய இடமாகும். நெய்தலுக்குரிய காலைப் பொழுதே போர் தொடங்கும் காலமாகும். தலைவன் பிரிவால் தலைவி இரங்குதல் போல, போரில் கணவனை இழந்த மகளிர் இரங்குதலும், தலைவிக்காகத் தோழி முதலிய சுற்றத்தார் இரங்குதுல் போல, இறந்தோரின் சுற்றத்தார் இரங்குதலும், வீரக்குறிப்பின் அருள் பற்றி வீரர்கள் இரங்குதலும், ஒருவரு மொழியாத் தொகை நிலைக்கண் (புறத் - 19) கண்டோர் இரங்குதலும் ஆகிய முதல் கரு உரி என்னும் மூன்றும் ஒத்தலான், நெய்தற்குத் தும்பை புறனாயிற்று. 5. பாலை - வாகை: பாலை தனக்கென நிலமின்றி நானிலத்தும் நடப்பதுபோல, வாகையும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, என்னும் புறத்திணை நான்கன் இடமாக நடத்தலானும், பாலை இன்பத்தினீங்கி இல்லற நடத்திப் புகழெய்துதற்குப் பிரிதல் போல, வாகையும் சுற்றத் தொடர்ச்சியினீங்கி அறப்போர் செய்து வெற்றி பெறவும், நிறையாலும் பொறையாலும் வெற்றி பெறவும், பிரிதலானும் பாலைக்கு வாகை புறனாயிற்று. முதலும் உரியும் ஒத்தன. 6. பெருந்திணை - காஞ்சி: ஏறிய மடற்றிறம் முதலிய நான்கும் (அகத் - 38) தீயகாமம் என விலக்கப்படுதல் போல, அறம் பொருளின்பங்களின் நிலையின்மையும் உலகியலை நோக்க நற்பொருள் அன்றென விலக்கப்படுதலானும், ஐந்திணைக்குரிய நிலத்தின்கண் நிகழ்தலன்றித் (அகத் - 12) தனக்கென நிலமில்லாத பெருந்திணைபோல, அறம் பொரு ளின்பங்கள் பற்றியன்றி வேறு நிலையாமை யென்ப தின்மையானும் பெருந்திணைக்குக் காஞ்சி புறனாயிற்று. 7. கைக்கிளை - பாடாண்: கைக்கிளையாகிய ஒருதலைக் காமம் போல, ஒரு தலைவன் பரவலும் புகழ்ச்சியும் வேண்ட, ஒரு புலவன் பரிசில் வேண்டிப் பாடுதலான், பாடாண்டிணை கைக்கிளைக்குப் புறனாயிற்று. வெட்சி முதலிய திணைகளும் ஒருவர் பெயர் சுட்டியும் சுட்டாமலும் பாடுதலான் பாடாண்டிணையானாலும், அத்திணைத் தலைவர்கள் பிறரை வேண்டாமல் தாமே புகழ் பெறுதலானும், பாடும் புலவரும் ஒன்றை விரும்பிப் பாடாமையானும் அவை கைக்கிளைக்குப் புறனாகா. அத்திணைகளை நிகழ்த்தியதாகக் கொண்டு பாடாணாகப் பாடுதலே கைக்கிளைக்குப் புறனாகும். ‘வெட்சிதானே’ என்பது, 7ஆம் சூத்திரத்தும், ‘பாடாண்பகுதி’ என்பது 25ஆம் சூத்திரத்தும் சேர்ந்து வருதலின், இங்கு வரிசை எண் தரப்படவில்லை. (6) 3. வெட்சித்திணை 269. அகத்திணை மருங்கின் அரில்தப வுணர்ந்தோர் புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே உட்குரவத் தோன்றும் ஈரேழ் துறைத்தே. இது, வெட்சி, குறிஞ்சிக்குப் புறன் எனவும், அது பதினான்கு வகைப்படும் எனவும் கூறுகிறது. இ - ள்: அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர் - அகவொழுக்கத்தின்கண் குற்றமற உணர்ந்தோர் கூறிய, புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின் - புறத்திணை யினது இலக்கணத்தைக் கூறுபட ஆராய்ந்து சொல்லின், வெட்சி தானே குறிஞ்சியது புறனே - உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே - அதுதான் அச்சமுண்டாகத் தோன்றும் பதினான்கு துறையினை யுடைத்து என்றவாறு. அகத்திணை மருங்கின் அரில்தப உணர்தல் - குறிஞ்சி முதலிய அகத்திணை ஏழற்கும் வெட்சி முதலிய புறத்திணை ஏழும் புறனாதல் ஒப்புமையை நன்கு அறிதல். அவ்வாறு இன்ன அகத் திணைக்கு இன்னபுறத்திணை இவ்வாறு புறனாகும் என்பதைக் குற்றமற அறிந்தோர் கூறிய புறத்திணை இலக்கணம் என்க. உட்குவரத் தோன்றல் - கண்டார்க்கு அச்சம் உண்டாகும்படி தோன்றுதல். அரில் - குற்றம். தபுதல் - நீங்குதல். உட்குதல் - அஞ்சுதல். அகம்புற ஒப்புமை முன்னர்க் கூறப்பட்டது. துறை: மக்களும் மாவும் பிறவும் சென்று நீருண்ணும் (ஆறு, குளத்தின்) துறைபோலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவழிப்பட்டு நடக்கும் வழியாதலின் ‘துறை’ என்றார். எனவே, திணையும் துறையும் கொண்டாராயிற்று. அகத்திணைக்குப் பரந்துபட்டு வரம்பு கடந்துள்ளவற்றை யெல்லாம் தொகுத்துத் துறை கூறுக என்றற்குச் செய்யுளியலுள் (செய் - 209) துறை என்பதோர் உறுப்பாகக் கூறினார். புறத்திணைக்கும் அவ்வாறே துறை கூறுக வென்றற்குத் ‘துறை’ எனப் பெயராகக் கூறினாரென்க. துறைபதினான்கும் பிற்கூறுப. (புறத் - 9) (7) 1. வெட்சியின் பொதுவிலக்கணம் 270. வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பல் மேவற் றாகும். இ - ள்: வேந்துவிடு முனைஞர் - அரசனால் விடப்பட்டுப் பகைப் புலங் காத்திருந்த மறவர்கள், வேற்றுப்புலக் களவின் - பகைவர் நாட்டிற் சென்று நிரை காவலர் அறியாமற் களவாக, ஆ தந்து ஓம்பல் மேவற்றாகும் - ஆநிரையைக் கவர்ந்து வந்து பாதுகாத்தலை வெட்சித்திணை பொருந்துதலை யுடையதாகும் என்றவாறு. முனைஞர் - தண்டலைத் தலைவர். தண்டலை - காடு. தண் - குளிர்ச்சி. தலை - இடம். அது ஆகுபெயரான் காட்டை யுணர்த்திற்று. பகைப்புலம் - தந்நாட்டிற்கும் பகைவர் தந்நாட்டிற்கும் எல்லையாகவுள்ள இடைநிலம். பகைவர் தந்நாட்டுட் புகாமல் காத்து வருபவரென்க. அது காட்டு நிலமாகையால் அதிலிருந்து காப்போர் தண்டலைத் தலைவர் எனப்பட்டனர். இவர் மறவர் தலைவர். விடுதல் - ஏவுதல் அதாவது, அரசனால் ஏவப்பட்டு அவ்வெல்லை நிலத்திலிருந்து பகைவர் தந்நாட்டினுட் புகாது காத்துவந்த அத்தலைவர்கள் பகைவர் நாட்டுட் சென்று ஆக்களைக் களவிற் கொண்டுவந்து பாதுகாப்பர் என்க. புலம் - நிலம். ஓம்புதல் - பாதுகாத்தல். மேவுதல் - பொருந்துதல். தருதல் - கொண்டுவருதல். இருபெரு வேந்தர் போர் செய்யக் கருதினால், ஒருவர் மற்றவர் நாட்டுவாழும் ஆவும் பார்ப்பாரும் பெண்டிரும் குழந்தை களும் நோயாளரும் முதலாகிய தீங்கு செய்யத் தகாதவரை, ‘யான் போர் செய்ய வருகின்றேன். நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்’ என முன்னறிவித்து அகற்றிப் பொருதலும், போதற்கு அறிவில்லாத ஆவினைக் களவாகத் தாமே கொண்டுவந்து பாதுகாத்துப் பொருதலும் பண்டையோர் போர் முறையாகும். அவ்வாறு கொண்டு வந்து பாதுகாத்தலையே, ‘ஆதந்தோம்பல்’ என்றார். இதுவே, போர் தொடங்கற்கு ஏதுவாகும். அது, ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மினென அறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின். (புறம் - 9) எனச் சான்றோர் கூறியவாற்றா னுணர்க. பார்ப்பார் ஒழுக்கத் தொழில் புரிவோராதலால் விலக்கத்தக்கவ ராயினர். இதுவே பழந்தமிழரின் அறந்தலைப் பிரியாப் போர் முறைக்கு ஏற்ற சான்றாகும். நிரை கவர்ந்து வரும்போது, அந்நிரைக் குடையார் தடுத்து நிரையை மீட்டுச் செல்லுதலும் வெட்சியேயாம். இனிக் கூறும் பதினான்கு இருவகை வெட்சிக்கும் பொதுவாகும். (8) 2. வெட்சித் துறை 271. படையியங் கரவம் பாக்கத்து விரிச்சி புடைகெடப் போகிய செலவே புடைகெட ஒற்றி னாகிய வேயே வேய்ப்புறம் முற்றி னாகிய புறத்திறை முற்றிய ஊர்கொலை ஆகோள் பூசல் மாற்றே நோயின் றுய்த்தல் நுவலுழித் தோற்றம் தந்துநிறை பாதீ டுண்டாட்டுக் கொடையென வந்த ஈரேழ் வகையிற் றாகும். 1. படையியங்கு அரவம் 8. பூசல் மாற்று 2. பாக்கத்து விரிச்சி 9. நோயின்று உய்த்தல் 3. செலவு 10. நுவலுழித் தோற்றம் 4. வேய் 11. தந்து நிறை 5. புறத்திறை 12. பாதீடு 6. ஊர்கொலை 13. உண்டாட்டு 7. ஆகோள் 14. கொடை 1. நிரைகவர்வோர் செயல் 1. படைஇயங்கு அரவம் - நிரை கோடற்கு எழுந்தோர் ஆரவாரத்தோடு செல்வர்; 2. பாக்கத்து விரிச்சி - சென்று தங்கிய இடத்து இரவில் நற்சொற் கேட்பர். நற்சொல்லாவது, தற்செயலாய் ஒருவர், ‘ஆகும், வெற்றி’ என்பன போலக் கூறுதலாம். பாக்கம் - படைதங்கிய இடம். விரிச்சி - நற்சொல். 3. புடைகெடப் போகிய செலவே - நற்சொற்கேட்டு அங்கிருந்து சென்று பகைவர் நாட்டையடைவர், புடை - இடம். முன்தங்கியிருந்த இடம். 4. புடைகெட ஒற்றின் ஆகிய வேயே - அங்கிருந்து ஒற்றர் சிலர், பகைப்புலத்து ஒற்றர் உணராமற் சென்று நிரை காவலர் இருக்கும் நிலைமையை அறிந்துவந்து சொல்வர். வேய் - ஒற்றர் வந்து சொல்லும் சொல். ஒற்றின் ஆகிய வேய் - பார்த்துவந்து சொல்லிய சொல். ஒற்றல் - பிறரறியா மற் சென்று பார்த்தல். புடை - இடம். 5. வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்திறை - அவ்வாறு சொல்லிய ஒற்றர்களுக்கு வேண்டியதைக் கொடுத்துப் பின்னர்ச் சென்று, உள்ளே உள்ள காவலர் வெளிச் செல்லாமல் நிரைப்புறத்துச் சூழ்ந்து கொள்வர்; புறத்து இறை - நிரைப்புறத்தே தங்குதல். நிரையை வளைத்தல். இறை - தங்குதல். வேயுரைத்தோர்க்குக் கொடுத்தபின் ஆகிய புறத்திறை என்க. 6. முற்றிய ஊர் கொலை - புறஞ்சேரியை வளைத்துக் கொண்டு நிரைகாவலரைக் கொல்வர்; முற்றிய - வளைத்த, முற்றுகையிட்ட; முற்றுகையிட்ட ஊரிலுள்ளாரைக் கொல்லுதலுமாம். புறஞ்சேரி - மறவர் குடியிருக்கை. 7. ஆகோள் - அவ்வாறு கொன்று கொண்டே நிரையை ஓட்டிக் கொண்டு வருவர்; கோள் - கொள்ளுதல்; முதனிலைத் திரிந்த தொழிற் பெயர். நிரை - மாட்டுக் கூட்டம், ஆநிரை, ஆனிரை என்பனவும் இப்பொருளே. 8. பூசல் மாற்று - ஆநிரையைக் கவர்ந்து கொண்டு வரும்போது இடையில் வந்து வழிமறித்த நிரை காவலரைப் போர் செய்து துரத்துவர்; பூசல் - போர். பூசல் மாற்று - பூசலால் மாற்றுதல், பொரு தோட்டுதலாம். 9. நோய் இன்று உய்த்தல் - அங்ஙனம் பூசல் மாற்றும் போது சிலர், ஆக்களை புல்மேய்த்துக் கொண்டே ஓட்டிச் செல்வர். உய்த்தல் - செலுத்துதல். 10. நுவலுழித் தோற்றம் - பாடி வீட்டிலுள்ளோர் மகிழ்ந்து கூறும்படி நிரையை ஒட்டிக் கொண்டு வருவர்; நுவலல் - சொல்லல். சொல்லும்படி தோன்று வரென்க. பாடிவீடு - மறவர் தங்கியிருக்கும் இடம்; மறவரூர். 11. தந்து நிறை - ஓட்டிக் கொண்டு வந்த ஆக்களை ஊர்ப்புறத்து நிறுத்துவர்; நிறை - நிறுத்துதல். நிறு + ஐ. தொழிற் பெயர். தருதல் - கொண்டு வருதல். 12. பாதீடு - அரசன் கட்டளை பெற்றுத் தாங்கொண்ட நிரையைப் பகுத்துக் கொள்வர்; மறவர், ஒற்றர், நற்சொற் பார்த்துச் சொன்ன புலவர் முதலாயினோர்க்குப் பகுத்துக் கொடுப்பரென்க. பாதீடு - பகுத்து இடுதல்; பாத்து + ஈடு - பாதீடு என்றாயது. பாத்தல் - பகுத்தல். ஈடு - இடுதல். 13. உண்டாட்டு - நிரை கொண்ட மகிழ்ச்சியால் விருந்துண்டு களித்தாடுவர்; 14. கொடை - தாங்கொண்ட நிரையை இரவலர்க்குக் கொடுப்பர். படையியங்கரவம் முதலிய செய்கையை, கற்போர்க்கு எளிதில் விளங்குதற் பொருட்டும், துறைகள் தொடர்புறுதற் பொருட்டும் ‘ஆரவாரத்துடன் செல்வர்’ என்பனவாகச் செய்வார் மேல் ஏற்றிக் கூறப்பட்டது. இனி வருவனவும் இவ்வாறே கொள்க. நிரைகொள்வோரும் நிரை மீட்போரும் வெட்சிமறவர் எனப்படுவர். இவர் வெட்சிப் பூவைச் சூடுவர். இவ்வாறே வஞ்சி, உழிஞை, தும்பை மறவரும் வேந்தரும் அவ்வப் பூக்களைச் சூடுவரென்க. காட்டு: 1. வெவ்வாள் மறவர் மலைச்சிய வெட்சியால் செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்றார் - எவ்வாயும் ஆர்க்குங் கழலொலி ஆங்கட் படாலியரோ போர்க்குந் துடியோடு புக்கு. (புறத்திரட்டு - 752) இது, படையியயங்கரவம். கண்டோர் கூற்று. துடியடித்துக் கொண்டு கழலார்ப்பச் செல்கின்றார் என்க. துடி - ஒருவகைப் பறை. 2. திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி நரைமுதியோன் இன்றுரைத்த நற்சொல் - நிரையன்றி எல்லைநீர் வையம் இறையோர்க் களிக்குமால் வல்லைநீர் சென்மின் வழி. (புறத்திரட்டு - 756) இது, பாக்கத்து விரிச்சி, மறவர் கூற்று. உரைத்த நற்சொல், நிரையே யன்றி, வையத்தையும் அரசர்க்களிக்குமெனல் காண்க. 3. பிறர்புல மென்னார் தமர்புல மென்னார் விறல்வெய்யோர் வீங்கிருட்கட் சென்றார் - நிறையுங் கடாஅஞ் செருக்குங் கடுங்களி யானைப் படாஅ முகம்படுத் தாங்கு. (புறத்திரட்டு - 757) இது, செலவு. கண்டோர் கூற்று. 4. ஒருவ ரொருவர் உணராமற் சென்றாங் கிருவரு மொப்ப விசைந்தார் - வெருவர வீக்குங் கழற்கால் விறல்வெய்யோர் வில்லோடு கோக்குஞ் சரந்தெரிந்து கொண்டு. இது, வேய். ஒற்றர் இருவர் தனித்தனி பார்த்துவந்து சொன்னார். கண்டோர் கூற்று. 5. கரந்தியல் காட்டுத்தீப் போலப் பெரிதும் பரந்துசெல் மள்ளர் பதிந்தார் - அரந்தை விரிந்தவியு மாறுபோல் விண்டோயத் தோன்றி எரிந்தவியும் போலுமிவ் வூர். இது, புறத்திறை. கண்டோர் கூற்று. ஊர்ப்புறத்தே தங்கினதால், ஊர் எரிந்தவியும் என்றார். 6. அரவூர் மதியிற் கரிதூர ஈம இரவூ ரெரிகொளீஇக் கொன்று - நிரைநின்ற பல்லான் றொழுவும் பகற்காண்மார் போர்கண்டோர் கொல்வார்ப் பெறாஅர் கொதித்து. இது, ஊர்கொலை. கண்டோர் கூற்று. ஈமஎரி - சுடுகாட்டுத் தீ. 7. கொடுவரி கூடிக் குழூஉக்கொண் டனைத்தால் நெடுவரை நீள்வேய் நரலும் - நடுவூர்க் கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற நிணநிரை வேலார் நிரை. (பு. வெ. 1 - 9) இது, ஆகோள். கண்டோர் கூற்று. 8. ஒத்த வயவர் ஒருங்கவிய நாண்படரத் தத்த மொலியுந் தவிர்ந்தன - வைத்தகன்றார் தம்பூசல் மாற்றி நிரைகொள்வான் தாக்கினார் வெம்பூசல் மாற்றிய வில். இது, பூசல் மாற்று. கண்டோர் கூற்று. வில் நாண் படர. 9. புன்மேய்ந் தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும் வின்மே லசை இயகை வெல்கழலான் - தன்மேல் கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும் நெடுவரை நீழல் நிரை. (பு வெ - 1 - 11) இது, நோயின் றுய்த்தல். கண்டோர் கூற்று. புல் மேய்ந்து வில்மேல். 10 மொய்யணல் ஆநிரை முன்செல்லப் பின்செல்லும் மையணற் காளை மகிழ்துடி - கையணல் வைத்த எயிற்றியர் வாட்கண் இடனாட உய்த்தன் றுவகை யொருங்கு. (பு. வெ - 1 - 12) இது, நுவலுழித் தோற்றம். கண்டோர் கூற்று. அணல் - தாடி. கை அணல் வைத்த - கையை முக வாயில் வைத்த. 11. குளிறு குரல்முரசங் கொட்டின் வெரூஉம் களிறொடுதேர் காண்டலு மாற்றா - நளிமணி நல்லான் இனநிரை நம்மூர்ப் புறங்கானம் எல்லாம் பெறுக இடம். இது, தந்து நிறை. கண்டோர் கூற்று. 12. ஒள்வாள் மலைந்தார்க்கும் ஒற்றாய்ந் துரைத்தார்க்கும் புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை மாறட்ட வென்றி மறவர்தஞ் சீறூரின் கூறிட்டார் கொண்ட நிரை. (பு - வெ - 1 - 14) இது, பாதீடு. கண்டோர் கூற்று. புள் - நற்சொல், விரிச்சி. இது, ‘வாய்ப்புள்’ எனவும் வழங்கும். 13. நறவுந் தொடுமின், விடையும் வீழ்மின், பாசுவ லிட்ட பைங்காற் பந்தர்ப் புனல்தரு மிளமணல் நிறையப் பெய்ம்மின், ஒண்ணார் முன்னிலை முருக்கிப் பின்னின்று நிரையொடு வரூஉம் என்னைக் குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே. (புறம் - 262) இது, உண்டாட்டு. நறவு - கள். விடை - ஆட்டுக்கிடாய். மற்ற பண்ணிய முதலியவுங் கொள்க. 14. இளமா வெயிற்றி இவைகாண் நின் ஐயர் தலைநாளை வேட்டத்துத் தந்த நிரைகள் கொல்லன் துடியன் கொளைபுணர் சீர்வல்ல நல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன. (சிலப் - 12) இது, கொடை கண்டோர் கூற்று. 2. நிரை மீட்போர் செயல் 1. படை இயங்கு அரவம் - நிரை மீட்டற்கு எழுந்தோர் விரைந்து செல்வர்; 2. பாக்கத்து விரிச்சி - செல்லும் போது இடைவழியில் வழிச்செல்வோர் கூறுஞ் சொல்லை நற்சொல்லாகக் கேட்டுச் செல்வர்; 3. புடை கெடப் போகிய செலவு - நிரைகவர்ந்து செல்லும் மறவர் அறியாமற் பின் தொடர்ந்து செல்வர்; 4. புடைகெட ஒற்றின் ஆகிய வேய் - ஒற்றர் முன் சென்று நிரைகவர்ந்து செல்வோர் நிலையை அறிந்து வந்து சொல்வர்; 5. வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்திறை - வேயுரைத் தோர்க்குச் செய்வன செய்து, தமது நிரையை அடைந்து வளைத்துக் கொள்வர்; 6. முற்றிய ஊர்கொலை - பின்னர் நிரை கொண்டோர் தங்கிய சிற்றூரை வளைத்து அவரைக் கொல்வர்; 7. ஆகோள் - நிரையை மீட்டுச் செல்வர்; 8. பூசல் மாற்று - நிரைமீட்டுச் செல்லும்போது எதிர்த்த நிரை கொண்டோரைப் பொருது வெல்வர்; 9. நோய் இன்று உய்த்தல் - அவரோடு பொருது கொண்டிருக்கும்போதே சிலர் நிரையை ஓட்டிச் செல்வர்; 10. நுவலுழித் தோற்றம் - நிரையை மீட்டுவருதல் கண்டு ஊரிலுள்ளோர் மகிழ்வர்; 11. தந்து நிறை - மீட்ட நிரையைக் கொண்டு வந்து நிறுத்துவர்; 12. பாதீடு - அவரவர் நிரையை அவரவர்க்குக் கொடுப்பர்; 13. உண்டாட்டு - நிரை மீட்ட வெற்றியால் விருந்துண்டு விளையாடுவர்; களிப்பர் என்பது. 14. கொடை - நிரை மீட்ட வெற்றியால் இரவலர்க்குக் கொடுப்பர். காட்டு 1. அடியதி ரார்ப்பினர் ஆபெயர்த்தற் கண்ணா கடிய மறவர் கதழ்ந்தார் - மடிநிரை மீளாது மீளார் விறல் வெய்யோர் யாதாங்கொல் வாளார் துடியர் வலம். (புறத்திரட்டு - 756) இது, படையியங் கரவம். கண்டோர் கூற்று. கதழ்ந்தார் - விரைந்தார். 2 வந்தநீர் காண்மினென் றாபெயர்ப்போர் மாட்டிசைத்த பைந்தொடியார் கூறும் பறவாப்புள் - உய்ந்த நிரையவைத் தன்றியும் நீர்சூழ் கிடக்கை வரையளவைத் தாவதா மண். இது, பாக்கத்து விரிச்சி; நற்சொல். மறவர் கூற்று பறவாப் புள் - விரிச்சி. 3. கங்கை பரந்தாங்கு கானப் பெருங்கவலை எங்கு மறவ ரிரைந்தெழுந்தார் - தங்கிளைக்கண் மன்றுகாண் வேட்கை மடிசுரப்ப வேதோன்றுங் கன்றுகாள் மெய்குளிர்ப்பீர் கண்டு. (புறத்திரட்டு - 764) இது, செலவு. கண்டோர் கூற்று. 4. நெடுநிலையா யத்து நிரைசுவ டொற்றிப் படுமணி யாயங் பகர்ந்தோய் - நெடிது மனக்குரிய காதல் வயவேந்த னென்றும் நினக்குரிய வாக நிரை. இது, வெய். கண்டோர் கூற்று. சுவடு - தாமரை. பகர்ந்தோன் - ஒற்றன். 5. ஆகோள் மள்ளரு மருள்வரக் கானத்து நாம்புறத் திறுத்தென மாகத் தாந்தங் கன்றுகுரல் கேட்டன போல நின்றுசெவி யோர்த்தன சென்றுபடு நிரையே. (புறத்திரட்டு - 765) இது, புறத்திறை. மறவர் கூற்று. 6. சென்ற நிரைப்புறத்துச் சீறூர்த் தொடை கொண்டு நின்ற மறவர் நிலஞ்சேர்ந்தார் - கொன்றாண் டிகலுழந்த வல்வில் இளையோர்புண் தீரத் துகளெழுங்கொல் பல்லான் றொழு. இது, ஊர்கொலை. கண்டோர் கூற்று. 7. கடல்புக்கு மண்ணெடுத்த காரேனக் கோட்டின் மிடல்பெரி தெய்தின மாதோ - தொடலைக் கரந்தை மறவர்க் கருதார் குழாஅந் துரந்து நிரைமீட்ட தோள். (புறத்திரட்டு - 767) இது, ஆகோள். கண்டோர் கூற்று. தன்னுறு தொழிலான் நிரை மீட்டலின், ‘தொடலைக் கரந்தை’ எனக் கரந்தை சூடினமை கூறினார். பொதுவியர்ற் கரந்தையிற் காண்க. (புறத் - 36) 8. இரவூ ரெறிந்து நிரையொடு பெயர்ந்த வெட்சி மறவர் வீழவும் உட்காது கயிறியல் பாவை போல அயில்திரித் துழைக்குரற் குணர்ந்த வளைப்புலி போல முற்படு பூசல் கேட்டனர், பிற்பட நிணமிசை யிழுக்காது தமர்பிண மிடறி நிலங்கெடக் கிடந்த கருந்தலை நடுவண் வெஞ்சிலை விடலை வீழ்ந்தனன். இது, பூசல் மாற்று. கண்டோர் கூற்று. 9. கல்கெழு சீறூர் கடைகாண் விரும்பினான் மெல்ல நடவா விரையுநிரை - ஒல்லெனத் தெள்ளறற் கான்யாற்றுத் தீநீர் பருகவும் மள்ளர் நடவா வகை. (புறத்திரட்டு - 768) இது, நோயின் றுய்த்தல். கண்டோர் கூற்று. 10. காட்டகஞ் சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையா......... மீட்ட மகனை வினவுறாள் - ஓட்டந்து தன்னெதிர் தோன்றும் புனிற்றாத் தழீ இக்கலுழும் என்னெதிர்ப் பட்டதோ வென்று. (புறத்திரட்டு - 769) இது, நுவலுழித் தோற்றம். கண்டோர் கூற்று. கலுழும் - உவகைக் கண்ணீர் விடுவாள். 11. கழுவொடு பாகர் கலங்காமல் யாத்துத் தொழுவிடை யாயந் தொகுமின் - எழுவொழித்தால் போமே யிவையிவற்றைப் போற்றுமின் புல்லொடு நீர் தாமேய் புலம்போலத் தந்து. இது, தந்துநிறை. ஆயம் - நிரை. 12. யாமே பகுத்திடல் வேண்டா இனநிரை தாமே தமரை யறிந்தனகொல் - ஏமுற அன்றீன்ற தம்மை அறிந்துகொள் கன்றேய்ப்பச் சென்றீண்டு மாங்கவர்பாற் சேர்ந்து. (புறத் - 770) இது, பாதீடு. மறவர் கூற்று. அவரவர் மாடுகள் அவரவரிடம் தாமே செல்லும் என்பது காண்க. 13. பகைவர் கொண்ட படுமணி யாயம் மீட்டிவண் தந்த வாட்டிறற் குரிசில் முழவுத்துயில் மறந்த மூதூ ராங்கண் விழவுத்தலைக் கொண்ட விளையா டாயத் தூன்சுடு கொழும்புகைக் கருங்கொடி யும்பர் மீன்சுடு புகையின் விசும்புவாய்த் தன்றே, கைவல் கம்மியர் பல்கூட் டாரமொடு நெய்பிழி நறுவிரை நிலம்படர்ந் தன்றே இது, உண்டாட்டு. கண்டோர் கூற்று. 14. கொடைத்தொழி லெல்லாங் குறைவின்றிப் பண்டே முடித்தன னென்றிருந்த மூத்தோன் - கொடைக்கு வரம்பில னென்றே மருண்டான் நிரைகோட் கரந்தையங் கண்ணியாற் கண்டு. இது, கொடை. கண்டோர் கூற்று. ‘துறை’ என முற்கூறியதனால் (புறத் - 7), ஒவ்வொரு துறையின் வகையாய் வருவனவுங் கொள்க. 1. படையியங் கவரம் 1. படைத்தலைவரை 6. படைச் செருக்கு அழைத்து வாவெனல் 7. கண்டோர் கூறல் 2. படைத்தலைவர் வருதல் 8. கெடுமென வருந்தல் 3. இன்னது செய்கெனல் 9. நாட்கோடல் 4. படைத்தலைவர் வேந்தர்க் குரைத்தல் 10. கொற்றவைப் பரவல் 5. தலைவர் படையைக் கூவல் 8. படைச் செருக்கைக் கண்டோர் பகைவர் நாடு கெடுமென இரங்கிக் கூறல். விரைந்து செல்ல வேண்டுதலின் நாட்கோடலும், கொற்றவைப் பரவலும் நிரை மீட்போர்க் குண்டாகா. அதனால், அவர் அரசனுக் குணர்த்தாமையுங் கொள்க. ‘நாட்கோடலை’ புறத் - 16இல் காண்க. 2. பாக்கத்து விரிச்சி 1. இருப்பு வகுத்தல் 4. ஈதல் 2. சென்றோரை விடுத்தல் 5. நிமித்தம் பார்த்தல் 3. விரிச்சி விலக்கல் 6. நிமித்திகற் குதவல் 1. பாக்கத்தில் தங்குவதற்குப் பாடிவீடமைத்தல். 2. சோறு முதலியன கொண்டு வந்தோரை ஊர்க்கனுப்புதல். 3. நற்சொல் வேண்டாமென விலக்கும் வீரக்குறிப்பு. 4. விரிச்சிக்கு நெல்லும் மலருங் கொடுத்தல். விரிச்சி - இங்கே நற்சொல் அறிந்து சொல்வோன். 5. நிமித்தம் - பல்லிச்சொல், பறவை கத்தல் முதலியன. 3. செலவு: 1. விரைந்து செல்லல், 2. காவலர் அறியாம லடைதல். 4. வேய்: 1. ஒற்றர் செல்லல், 2. ஒற்றல், 3. மீளல், 4. ஒற்றியது கூறல். 5. புறத்துறை: 1. ஒற்றர்க் குதவல், 2. எழுச்சி, 3. நிரைகாணல் 4. நிரை வளைத்தல். 6. ஊர்கொலை: 1. ஊரை வளைத்தல், 2. ஊரழிவு கண்டோர் கூறல். 7. ஆகோள்: 1. நிரையைத் தொகுத்தல், 2. செலுத்தல். 8. பூசல் மாற்று: 1. நிரைக் குடையோர் வந்து வளைத்தல், 2. எதிர்த்தல், 3. பொருதல் 4. வெற்றி. 9. நோயின் றுய்த்தல்: 1. நிரை யோட்டல், 2. மேய விடுதல். 10. நுவலுழித் தோற்றம்: 1. ஊரார் காணல், 2. மகிழ்ந் துரைத்தல். 11. தந்து நிறை: 1. கண்டோர்கூறல், 2. நிரைப் பொலி வுரைத்தல். 12. பாதீடூ: 1. நிரை பெற்றோர் மகிழ்ச்சி, 2. சுற்றத்திற் குரைத்தல். 13. உண்டாட்டு: 1. நாடு வாழ்த்தல் 2. அரசனை வாழ்த்தல். 14. கொடை: 1. கொடைவளங் கூறல், 2. ஏற்றோர் மகிழ்ச்சி. இன்னும் வேறுபட வருவன அறிந்து அமைக்க. அவற்றுட் சில வருமாறு : காட்டு: 1-5. கடிமனைச் சீறூர்க் கடுங்கண் கறவை வடிநவில் வேலோன் மறுத்தோம்ப வேட்டான் அடிபுனை தோலின் அரண்சேர்ந்து மள்ளர் வருகமன் வாயிற் கடை. இது, படைத் தலைவர் படையாளரைக் கூயினது, அழைத்தது. கறவை மறுத்தோம்ப - ஆதந் தோம்ப. 1-6. வாள்வலம் பெற்ற வயவேந்தன் ஏவலால் தாள்வ லிளையவர் தாஞ்செல்லின் - நாளைக் கனைகுரல் நல்லாத்தன் கன்றுள்ளப் பாலான் நனைவது மோலுநம் மூர். இது, படைச் செருக்கு. கண்டோர் கூற்று. பாலால் நம்மூர் நனைவது போலும். 2-3. நாளும் புள்ளும் கேளா வூக்கமொ டெங்கோ னெயின னாதலின் யாமத்துச் செங்கால் வெட்சியுந் தினையுந் தூஉய் மறிக்குரற் குருதி மன்றுதுக ளவிப்ப விரிச்சி யோர்த்தல் வேண்டா எயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே. (புறத்திரட்டு - 755) இது, விரிச்சி விலக்கிய வீரக்குறிப்பு - : விரிச்சி ஓர்த்தல் - நற் சொற் கேட்டல். கொண்டுவந்த நிரையை மறவர் முதலாயினோரே பகுத்துக் கொள்ளுதலான், நிரைகோடல் போர்க்கு நிமித்தமே யென்பதும், அரசன் மக்கள் நலக் காவலனே என்பதும் விளங்குகிறது. (9) 3. வெட்சிச் சிறப்பு 272. மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே. இ - ள் : மறம் கடைக் கூட்டிய துடி நிலை - போர்க் களத்து மறவரது மறத்தினை முற்றுவிக்கும் துடியினது நிலையைக் கூறுதலும், சிறந்த கொற்றவை நிலையும் - அப்போர்த் தொழிலுக்குச் சிறந்த கொற்றவையைப் பரவுதலும், அத்திணைப் புறனே - முற்கூறிய இருவகை வெட்சிக்கும் புறனடையாமென்றவாறு. புறனடை - வெட்சியைச் சேர்ந்தன வென்பது. கடைக் கூட்டுதல் - முற்றுவித்தல். மறம் - வீரம். துடிநிலை - மறவர் போர்க்களத்தில் துடி கொட்டுதலைக் கூறுதல். துடி - ஒருவகைப் போர்ப்பறை, துடுமம். கொற்றவை நிலை - கொற்றவையைப் பரவும்போது அவள் நிலையைக் கூறுதல். கல்வி, செல்வம், நிலம், ஆறு முதலியவற்றைப் பெண் தெய்வமாகக் கொள்ளுதல் போல, வெற்றியைப் பெண் தெய்வமாகக் கொண்டு வணங்கி வந்த மரபே கொற்றவையாகும். (திருக்குறள் - குழந்தையுரை - முன்னுரை பார்க்க) கொற்றவையின் வடிவம் - வாளை நாட்டி அதற்குப் பொட்டிட்டு மாலை சூட்டுதலாம். கொற்றம் - வெற்றி. துடிநிலையும், கொற்றவை நிலையும் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது. உயிர்ப்பலியும், குருதிப்பலியும் கொற்றவை நிலைப் பகுதியாம். 1. உயிர்ப்பலி - வாள் நாட்டிக் கொற்றவை பரவும் போது, ஒரு மறவன் வாள்முனையில் வீழ்ந்து உயிர் விடுதல். இது, மறச்சாவு. 2. குருதிப்பலி - வாள்கொண்டு உடம்பில் புண்ணுண்டாக்கிக் கொள்ளுதல். இது, மறக்குறிப்பு. காட்டு: 1. நித்திலஞ்செய் பட்டமும் நெற்றித் திலதமும் ஒத்திலங்க மெய்பூசி யோர்ந்துடீஇத் - தத்தம் துடியரோ டூர்ப்புறம் சூழ்ந்தார் மறவர் குடிநிரை பாராட்டக் கொண்டு. இது - துடிநிலை. நிரைகொண்டோரும் நிரை மீட்டோரும் துடிகொட்டிச் செல்லுதலின். இது இருவகை வெட்சிக்கும் பொதுவாயினமை அறிக. 2. அருமைத் தலைத்தலும் ஆநிரையுள் ஐயை எருமைப் பலிகோ ளிசைந்தாள் - அரசனும் வேந்தன்மேற் செல்வான் விறல்வஞ்சி சூடானென் றியாந்தன்மேற் சீறாம லின்று. இது, கொற்றவை நிலை. ஐயை - கொற்றவை. உயர்ந்தவள் என்பது பொருள். இது, ஐயன் என்பதன் பெண்பால். காளிதேவி இக்கொற்றவையிலிருந்துண்டாக்கப் பட்டதேயாகும். காளிக்கும் எருமையைப் பலியிடல் காண்க. 3. நச்சிலைவேற் காளைக்கு நாளையே கொற்றவை கைச்சிலையு நல்கும்யாங் காணேங்கொல் - மிச்சில் கூர் வாளின்வாய்த் தீண்டாத வார்குருதி மெய்சாய்ப்பத் தாளின்வாய் வீழ்ந்தான் றலை. இது, உயிர்ப்பலி. 4. ஆடிப்பண் பாடி யளவின்றிக் கொற்றவை பாடினி பாடல் படுத்துவந்தாள் - நாடிய தோளுழலை யாடுவோன் தோளினுந் தூக்கமைத்த தாளுழலை யாடுவேன் றான். இது, குருதிப்பலி. உழலை - புண். உயிர்ப்பலியும், குருதிப்பலியும் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது. நிரை கொள்வோர் நிரை கொண்டு வந்தபிறகும், நிரை மீட்போர் பூசல் மாற்றி நிரைமீட்ட பிறகும் கொற்றவையைப் பரவுவ ரென்க. உண்டாட்டு - கொற்றவையைப் பராவலேயாம். பராவல் - வழிபாடு செய்தல், விழாக் கொண்டாடல். இதுபோதே உயிர்ப் பலியும் குருதிப்பலியும் நிகழும். (10) 4. வஞ்சித்திணை 273. எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே. இ - ள் : எஞ்சா மண் நசை - இருபெரு வேந்தர் நாட்டிற்கும் இடைப்பட்ட மண்ணை விரும்பி, அஞ்சு தகத் தலைச் சென்று - அங்கு வாழ்வார்க்கு அச்சமுண்டாகும்படி அந்நாட்டினிடத்தே சென்று? வேந்தனை வேந்தன் அடல் குறித்தன்று - ஒரு வேந்தனை ஒரு வேந்தன் வெற்றி கொள்ளுதலைக் குறித்தது வஞ்சித்திணை என்றவாறு. தன்னாட்டிற்கும் அடுத்த நாட்டிற்கும் இடையிலுள்ள பொது நிலத்தைத் தனதாக்க எண்ணி, அடுத்த நாட்டரசனை வெல்லுதற்குப் படையெடுத்துச் செல்லுதல் வஞ்சித்திணை யாகுமென்பது. எஞ்சா - எஞ்சிய; உடன்பாட்டுப் பெயரெச்சம். இடைப்பட்ட என்பதாம். அஃதாவது, இருவர் நாட்டினும் சேராது எஞ்சிய மண் என்பதாம். எஞ்சா - எஞ்சாத - நீங்காத, இரு நாட்டினும் நீங்காத பொதுமையுடைய மண் எனினுமாம். இதனால், முன்னர் இருநாடுகட் கிடையே சிறு நிலப்பரப்பு அவ்விரு நாடுகட்கும் எல்லைப் பொது நிலமாக இருந்து வந்த தென்பதும், இதன் இருபுறங்களிலும் இரு நாட்டுப் படையினரும் இருந்து காவல் காத்து வந்தனரென்பதும், அவர்கள் மிகுதியாக ஆடு மாடுகள் வளர்த்து வந்தனரென்பதும் பெறப்படும். வெட்சித் திணைக்குரிய நிலம் இதுவேயாகும். இன்றும் எல்லைப்புறக் காவல் உண்மை அறிக. ஒருவன் மண்ணசையான் மேற்செல்லின், அவனும் அம் மண்ணைக் காத்தற்கு எதிரே வருதலின், இருவர்க்கும் மண்ணசை யான் மேற்செறல் உளதாகலின் அவ்விருவரும் வஞ்சி வேந்தர் எனப்படுவர். ஒருவன் மேற்செல்லின் ஒருவன் எதிர்செல்லாது அவன் வருமளவும் தன் கோட்டைக்குள் இருப்பின் அது, உழிஞையன்றி வஞ்சியாகாது. இருவரும் வஞ்சிவேந்த ரெனவே, மேற்கூறும் துறை பதின்மூன்றும் இருவர்க்கும் பொதுவாகவே யுடையதாமென் றுணர்க. (11) வஞ்சித்துறை 274. இயங்குபடை யரவம் எரிபரந் தெடுத்தல் வயங்க லெய்திய பெருமை யானும் கொடுத்த லெய்திய கொடைமை யானும் அடுத்தூர்ந் தட்ட கொற்றத் தானும் மாராயம் பெற்ற நெடுமொழி யானும் பொருளின் றுய்த்த பேராண் பக்கமும் வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை யானும் பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும் வென்றோர் விளக்கமும் தோற்றார் தேய்வும் குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும் அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக் கழிபெருஞ் சிறப்பிற் றுறைபதின் மூன்றே. 1. இயங்குபடை அரவம் 7. பொருளின் றுய்த்த பேராண்பக்கம் 2. ` எரிபரந்து எடுத்தல் 8.வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை 3. வயங்கல் எய்திய பெருமை 4. கொடுத்தல் எய்திய கொடைமை 9.பிண்ட மேய பெருஞ்சோற்று நிலை 5. அடுத்தூர்ந்தட்ட கொற்றம் 10. வென்றோர் விளக்கம் 6. மாராயம் பெற்ற நெடுமொழி 11. தோற்றோர் தேய்வு 12. கொற்ற வள்ளை 13. தழிஞ்சி இ - ள் : 1. இயங்குபடை அரவம் - செல்லுகின்ற படையின் ஆரவாரமும்; படைஞர் ஆரவாரித்துக் கொண்டு செல்வர் என்க. ஏனை யானை, குதிரை, தேரின் ஆரவாரமுங் கொள்க. 2. எரிபரந்து எடுத்தல் - பகைவர் நாட்டில் தீப்பரவும்படி நெருப்பை எடுத்துச் சுடுவர்; 3. வயங்கல் எய்திய பெருமை - பிறவேந்தர் துணையாக வந்தவிடத்து மனக்கிளர்ச்சியுற்றுப் பெருமையடைவர்; வயங்குதல் - விளங்குதல். அது, மனக்கிளர்ச்சியால் விளக்கமுறுதல். 4. கொடுத்தல் எய்திய கொடைமை - படையாளர்க்குப் படைக்கலங் கொடுப்பர்; கொடுக்கும் கொடைத் தொழிலென்க. பரிசிலர்க்கும் கொடுப்பர்; 5. அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றம் - அப்படையாளர் பகைவர் நாட்டை யடைந்து காவலரைக் கொன்று வெற்றி பெறுவர்; 6. மாராயம் பெற்ற நெடு மொழி - அரசனாற் சிறப்புப் பெற்றோர் புகழுரை கூறுவர்; மாராயம் - சிறப்பு. சிறப்பாவது, ஏனாதி, காவிதி முதலிய பட்டங்களும், நாடு, ஊர் முதலியனவுங் கொடுத்தல். இது, ஒருவனைப் படைத்தலைவனாக்குதல். ‘மன்னர் பாங்கிற் பின்னோர் ஆகும்” (அகத் - 30) என்பதைப் பார்க்க. 7. பொருள் இன்று உய்த்த பேராண் பக்கம் - பகை வேந்தரை ஒரு பொருளாக மதியாது படையினைச் செலுத்திய பேராண்மைத் திறம்; அப் பேராண் மையைப் பிறர் கூறுதலென்க. 8. வருவிசைப் புனலைக் கல்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை - விரைவாக வரும் வெள்ளத் தினைக் கல்லணை தாங்கினாற் போல, ஒரு வீரன் தன்மேல் வரும் பெரும்படையினைத் தானே தடுத்த பெருமை; அப் பெருமையைப் பிறர் கூறுவரென்க. தானே - ஒருவனே. முன்னர் (6) மாராயம் பெற்றவனே பின்னர் இரண்டு துறையும் (7, 8) நிகழ்த்துவனென்க. திறனையும் பெருமையினையும் கண்டோர் கூறுப. 9. பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை - அரசன் போர் செய்யத் துணிந்த பின் படையாளருடனிருந்து உண்பான்; அதற்காகப் பிண்டித்து வைத்த உணவை இடுவன். பிண்டித்தல் - தொகுத்தல். பெருஞ்சோறு - விருந்து, பெருவிருந்து, கான்விருந்து. அதாவது, படையாளர்க்கு அரசன் ஒரு கான்விருந்து நடத்துவான். அதில் அரசனும் படையாள ரோடு உடனிருந்துண்டு படைஞரை மகிழ்விப்பா னென்க. 10. வென்றோர் விளக்கம் - வென்று திறை கொண்டவர் சிறப்பைக் கூறுதல்; திறை - அரசிறை. தோற்றவனுக்கே அவன் நாட்டினை கொடுத்து அதற்காகப்பெறும் பொருள். 11. தோற்றோர் தேய்வு - தோற்றுத் திறை கொடுத் தோருடைய குறையைக் கூறுதல்; இவை இரண்டும் (10, 11) கண்டோர் கூறுதல். 12 குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளை - வேந்தனது குறையாத வென்றிச் சிறப்பினால் பகைவர் நாடு அழிதற்கு இரங்கித் தோற்றோன் சிறப்பின்மையைக் கூறும் வள்ளைப்பாட்டு; அதாவது, வென்றோன் சிறப்பையும், தோற்றோன் சிறப்பின்மையினையும் கூறி, அத் தோற்றோன் நாட்டின் கேட்டிற்கு இரங்கிக் கூறுதலாம். வள்ளை - உரற்பாட்டு, வென்ற வேந்தன் நாட்டுப் பெண்டிர் நெல் முதலியன குற்றும் போது அவ்வாறு பாடிக்கொண்டு குற்றுவர். கொற்றம் - வெற்றி. கொற்றவள்ளை - தம்மரசன் வெற்றியைச் சிறப்பித்துப் பாடிக் கொண்டு குற்றுதல். இது, அக்கால மகளிர் அரசிய லறிவையும், நாட்டு நலத்திலிருந்த அக்கறையையும், மறக் குறிப்பையும் புலப்படுத்தும். தும்பையிலே நாடழியுமாதலால், ‘அழிதற்கு’ என எதிர்காலத்தாற் கூறினார். 13. அழிபடை தட்டோர் தழிஞ்சி - போர் முடிந்த பின், போர் செய்யும் போது பகைவர் விட்ட மிக்க படைக் கலங்களைத் தடுத்து உடம்பிற் புண்ணுண்டான வீரர்களை அரசன் தழுவிக் கொள்வான். தட்டல் - தடுத்தல். அழிபடை - மிக்கபடை. அழி - மிகுதி குறிக்குஞ்சொல். பொருள் கொடுத்தும், படையைத் தடுத்த முறையைக் கேட்டும் தழுவிக் கொள்வரென்க. இது, பழந்தமிழரசர் மக்களிடம் வைத்திருந்த அன்பையும் செய்ந்நன்றி யறிதலையுங் காட்டும். தழிஞ்சி - தழுவுதல். 10, 11, 12 இம்மூன்று மல்லாத மற்ற பத்துத் துறைகளும் இருபெரு வேந்தர்க்கும் பொது. தழிஞ்சியொடு தொகைஇக் கழிபெருஞ் சிறப்பின் தொகை பதின்மூன்றே - தழிஞ்சியொடு முற்கூறியவற்றைத் தொகுத்து மிக்க பெருஞ் சிறப்பினை யுடைய துறை பதின்மூன்றாம் என்றவாறு. இப்பதின்மூன்றும் வஞ்சித்திணைத் துறை என முடிக்க. காட்டு : 1. விண்ணசைச் செல்கின்ற வேலிளையா ரார்ப்பெடுப்ப மண்ணசைச் செல்கின்றான் வாள்வேந்தன் - எண்ணம் ஒருபாற் படர்தரக்கண் டொன்னார்தம் உள்ளம் இருபாற் படுவ தெவன். (புறத்திரட்டு - 774) இது, இயங்கு படை யரவம். போர்ப்படை யார்ப்பப் பொடியா யெழுமரோ பார்ப்புர வெண்ணான்கொல் பார்வேந்தன் -ஊர்ப்புறத்து நில்லாத தானை நிலனெளிய நீளிடைப் புல்லார்மேற் செல்லும் பொழுது. இது, எதிர்செல்வோன் படையரவம். 2. முனைமுருங்கத் தலைச்சென்றவர் விளைவயல் கவர்பூட்டி மனைமரம் விறகாகக் கடிதுறைநீர்க் களிறுபடீஇ எல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கம் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப் புலங்கெட விறுக்கும் வரம்பில் தானே. (புறம் - 16) இது, எரிபரந் தெடுத்தல். 3. மேற்செல்லுங் காலைத் துணைவந்த வேந்தர்தம் பாற்செல்லச் செல்லும் பரிசினால் - நாற்கடல்சூழ் மண்மகிழுங் காட்சியான் மீன்பூத்த வானத்து வெண்மதிபோல் மேம்பட்டான் வேந்து. இது, வயங்க லெய்திய பெருமை. 4. வேத்தமர் செய்தற்கு மேற்செல்வான் மீண்டுவந் தேத்துநர்க் கீதுமென் றெண்ணுமோ - பாத்தி உடைக்கலி மான்றேர் உடனீந்தா னீந்த படைக்கலத்திற் சாலப் பல. இது, கொடைமை. படைக்கலமும், குதிரைபூட்டிய தேரும் ஈந்தானெனக் காண்க. 5. நீணில வேந்தர் நாட்செல் விருப்பத்துத் தோள்சுமந் திருத்த லாற்றார் ஆள்வினைக் கொண்டி மாக்கள் உண்டியின் முனிந்து முனைப்புல மருங்கின் நினைப்பருஞ் செய்வினை வென்றியது முடித்தனர் மாதோ யாங்குள கொல்லினி ஊங்குபெறுஞ் செருவே. இது, அடுத்தூர் தட்ட கொற்றம். 6. போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக் கார்க்கடல் பெற்ற கரையன்றோ - போர்க்கெல்லாம் தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சேர் ஏனாதிப் பட்டத் திவன். இது, பிறர் கூறிய நெடுமொழி. 7. தளையவிழ் கண்ணி யிளையோன் சீறின் விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத் தண்ணறுங் கடாஅ முமிழ்ந்த வெண்கோட் டண்ணல் யானை யெறித லொன்றோ, மெய்ம்மலி யுவகையன் நம்மருங்கு வருதல் கடியமை கள்ளுண் கைவல் காட்சித் துடிய னுண்கண் நோக்கிச் சிறிய கொலைமொழி மின்னுச் சிதர்ந் தனையதன் வேல்திரித் திட்டு நகுதலும் நகுமே. (தகடூர் - யாத்) இது பொருளின் றுய்த்த பேராண் பக்கம். இஃது அதியமான் படைத்தலைவனான பெரும்பாக்கனை மதியாது படை செலுத்திய சேரமானைக் கண்டு அரிசில் கிழார் கூறியது. 8. கார்த்தரும் புல்லனற் கண்ணஞ்சாக் காளைதன் தார்ப்பற்றி யேர்தரு தோள்நோக்கித் தார்ப்பின்னர் ஞாட்பினுள் யானைக் கணநோக்கி, யானைப்பின் தேர்க்குழாம் நோக்கித் தன் மாநோக்கிக் கூர்த்த கணைவரவு நோக்கித்தன் வேல்நோக்கிப் பின்னைக் கிணைவனை நோக்கி நகும். (புறத்திரட்டு - 881) இது, கற்சிறைபோல ஒருவன் தாங்கிய பெருமை. இது சேரமானின் திறங்கண்டு பொன்முடியார் கூறியது. 9. ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால் பெருஞ்சமந் ததைந்த செருப்புகல் மறவர் உருமுநில னதிர்க்கும் குரலொடு கொளைபுணர்ந்து பெருஞ்சோ றுகுத்தற் கெறியும் கடுஞ்சின வேந்தேநின் தழங்குகுரல் முரசே. (பதிற் - 30) இது, பிண்டமேய பெருஞ்சோற்று நிலை. 10. பலிகொண்டு பெயரும் பாசம் போலத் திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் னூழி உரவரு மடவரும் அறிவுதெரிந் தெண்ணி அறிந்தனை யருளா யாயின் யாரிவண் நெடுந்தகை வாழு மோரே. (பதிற் - 71) இது, வென்றோர் விளக்கம். 11. ஒடிவில் தெவ்வர் எதிர்நின் றுரைஇ இடுக திறையே புரவெதிர்ந் தோற்கென அம்புடை வலத்தர் உயர்ந்தோர் பரவ இனையை யாகன் மாறே, பகைவர் கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக் கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி புலவரைத் தோன்றல் யாவது சினப்போர் நிலவரை நிறீஇய நல்லிசை தொலையாக் கற்பநின் தெம்முனை யானே. (பதிற் -80) இது, தோற்றோர் தேய்வு. நின் தெம்முனையில் பகைவர் கொடி தோன்றாது எனக் காண்க. 12. வேரறுகு பம்பிச் சுரைபரந்து வேளைபூத் தூரறிய லாகா கிடந்தனவே - போரின் முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான் நகையிலைவேல் காய்த்தினார் நாடு. (முத் - புறத்திர - 798) இது, கொற்றவள்ளை. 13. தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும் பழிச்சியசீர்ப் பாசறை வேந்தன் - விழுச்சிறப்பிற் சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன புல்லணலார் வெய்துயிர்க்கும் புண். (புறத்திர - 793) இது, தழிஞ்சி. தழிச்சிய - தழிஞ்சிய, தழுவிய. இத்துறைகளின் வகையாக வருவனவுங் கொள்க. அவை கொற்றவை நிலையும், படையெழுச்சி கண்டோர் கூறலும், பகை நாட்டினரை இகழ்தலும் போல்வன - ‘படையியங் கரவத்தில்’ அடங்கும். துணைவந்த வேந்தர் விளக்க முற்றமை கூறும் பாசறை நிலையும், பகைவர் தோற்றோடப் பொருத அரசன் வலிகூறும் நல்லிசை வஞ்சியும் ‘வயங்கலெய்திய பெருமையின்’ பாற்படும். காவல் மரத்தை வெட்டுதலாகிய கடிமரந்தடிதலும், நீருண்ணும் யானை குதிரைகளைக் கோறலும், புறஞ்சேரியைச் சுடுதலும் - ‘அடுத்தூர்ந்தட்ட கொற்றமா’ யடங்கும். (12) 5. உழிஞைத்திணை 275. முழுமுத லரணம் முற்றலுங் கோடலும் அனைநெறி மரபிற் றாகுமென்ப. இ - ள் : முழுமுதல் அரணம் - வலிபொருந்திய கோட்டையை, முற்றலும் கோடலும் - சென்றவேந்தன் முற்றுகையிடுதலும், இருந்த வேந்தன் காத்தலும் ஆகிய, அனைநெறி மரபிற்று ஆகும் என்ப - இரண்டு வழியாகிய இலக்கணத்தையுடையது உழிஞைத் திணை என்றவாறு. முழுமுதல் - அடிப்படை. மரத்தின் அடிப்படையான அடி மரம், ‘முழுமுதல் துமிந்த கோளியாலத்து’ (புறம் - 58) என, முழு முதல் எனப்படுதல் காண்க. அரணம் - மதில். இருந்த வேந்தன் - கோட்டைக்குடையவன். முற்றுதல் - வளைத்தல். சென்ற வேந்தன், இருந்த வேந்தன் ஆகிய இருவரும் முறையே புறத்துழிஞையோன், அகத்துழிஞையோன் எனவும்; புறத்தோன், அகத்தோன் எனவும் வழங்கப்படுவர். முழுமுதலரணாவது - மலையரணும், காட்டரணும், நீரரணும் அல்லாத அகநாட்டில் கட்டிய வலிபொருந்திய கோட்டை. அது புறமதில், இடைமதில், அகமதில் என்னும் மூன்று மதில்களை யுடையது; ஒவ்வொரு மதிலின் புறத்தும் ஆழமான அகழும், புற மதிலின் புறத்தே அகழோடு பெரிய காவற்காடும் பொருந்தி யிருக்கும். இது முழுமுதலரணம். காவற்காட்டில் முள்ளுள்ள மரம் செடி கொடிகள் அடர்ந் திருக்கும். விரைந்தோடும் பகைவர் கால்களில் தைப்பதற்காக நெருஞ்சிமுட் போன்ற இருப்புமுட்கள் அக்காடெங்கும் பரப்பப் பட்டிருக்கும். ஓடுவோர் காலில் மாட்டி யிழுத்துத் தள்ளு வதற்காகத் தோட்டி என்னும் இரும்புக் கொக்கிகள் அக்காடெங்கும் முளை யடித்துக் கட்டப்பட்டிருக்கும். காட்டைச்சுற்றிப் பெரும்படை காவலிருக்கும், யானைக்காவலும் உண்டு. காவற் காட்டுக்கும் கிடங்குக்கும் இடையே, பகைவர் மதிலை யணுகாமற் பார்த்துக் கொள்ள, மரஞ்செடி கொடிகள் இல்லாத மருநிலம் என்னும் வெட்டவெளி நிலம் இருக்கும். கிடங்கு - அகழ். மதில்களின் புறத்தேயுள்ள கிடங்குகளில் கொடிய முதலைகள் நிறைய இருக்கும். கோட்டைக்குட் புக நாற்புறமும் வாயில்கள் அமைந்திருக்கும். அகழைத் தாண்டிக் கோட்டைக்குட் செல்வதற்கு வாயில் வழியில் பலகை போடப்பட்டிருக்கும். போக்குவரவு இல்லாதபோது அப்பலகையை உள் இழுத்துக் கொள்வர். சில கோட்டைகள், மலைகட்கிடையினும் கட்டப் பட்டி ருக்கும். எனவே, கோட்டை - நீரரண், நிலவரண், காட்டரண், மலை யரண் என்னும் நால்வகை யரண்களாற் சூழப் பட்டிருக்கும். இதனை. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். (குறள்) என்றார் வள்ளுவர். கோட்டை வாயில்களுக்குப் பெரிய இரும்புக் கதவுகள் போடப் பட்டிருக்கும். மரக்கதவுகளும் பெரியதாக இருக்கும். நிலவுகால் மிக்க வலிபொருந்திய பல மரங்களிணைத்துச் செய்யப்பட்டிருக்கும். கதவின் உட்புறத்தில் வெளியிலிருந்து கதவை எளிதில் திறக்க முடியாதபடி, நிலவுகாலை யடுத்து இருபுறமும் எழு என்னும் பெரிய மரங்கள் நாட்டப்பட்டு, அவ்விரு எழுவினுக்கும் இடையே சீப்பு என்னும் குறுக்கு மரம், எழுக்களில் உள்ள ஐயவி என்னும் தாங்கு கட்டையின் மேற்போடப் பட்டிருக்கும். ஐயவி - துலாக்கட்டை. இது, ஐயவித்துலாம் எனவும் பெயர் பெறும். பெரிய கல்லுரல்களையும், பெரிய மரங்களையும் தூக்கிக் கட்டி, யானைகளைக் கொண்டு அடித்தாலும் அக்கதவை உடைக்கவோ, திறக்கவோ முடியாது. வெளியிலிருந்து யானை களைக் கொண்டு தள்ளினாலும் திறக்க முடியாமல் உள்ளிருந்து தள்ளிப் பிடிப்பதற்கு எப்போதும் வலிபொருந்திய மல்லர் பலர் அங்குக் காவலிருப்பர். உள்ளிருந்து யானைகளும் தள்ளிப்பிடிக்கும். நிலவுகளுக்கருகே உட்புறம் மதிற்சுவரில் உள்ள அறைக்குட் போர்க்கருவிகளுடன் மறவர்கள் தங்கியிருந்து, வாயில் வழியாக உட்புக முயலும் பகைவரைத் தாக்குவர். இவ்வறை இரு நிலவுப் பக்கமும் இருக்கும். பெரிய கோயில்களின் முதற்கோபுர வாயிலில் இத்தகைய அறைகள் உண்மையறிக. மதில் முகட்டில் மதிலைச் சுற்றிலும் பதணம் என்னும் மேடை அமைந்திருக்கும். இம்மேடைக்கு வெளியே வலி பொருந்திய சுற்றுச்சுவர் அமைந்திருப்பதனால் இம்மேடை மதிலுள் மேடை எனப்படும். அம்மேடையில், பகைவர் மதில் மேல் ஏறாமல் தடுக்கவும் தாக்கவும் பலவகைப் போர்க்கருவிகளும் பொறிகளும் வைக்கப்பட்டிருக்கும். கருவி - நாம் பிடித்து இயக்குவது. பொறி - தானாகவே ஏதாவது விசையினால் இயங்குவது. அம்மதிலுள் மேடையாகிய பதணத்தின் கீழ், உள்ளிருந்து பகைவர்மேல் அம்பெய்யும் துளைகள் பொருந்திய ஏப்புழைஞாயில் என்னும் அறையொன்று மதிலைச் சுற்றிலும் அமைந்திருக்கும். இவ் வறைக்குள் மறவர்கள் இருந்து காவல் காத்துவருவர். ஏ - அம்பு. புழை - துளை. ஞாயில் - அறை. இது ஏவறை எனவும் படும். பதணத்திலும் ஏவறையிலுமுள்ள மறவர்கள், பகைவர்கள் மதில்மேல் ஏற முடியாதபடி தாக்குவர். இம்மதில்முடி யுறுப்புக்களாகிய பதணமும் ஏவறையும் மூன்று மதில்களிலும் அமைந்திருக்கும். மதிலின்மேல் நான்கு மூலையிலும், தூண்கள் போல் மிகவும் உயர்ந்தகன்ற கட்டிடம் அமைந்திருக்கும். அது கொத்தளம் எனப்படும். அக்கொத்தளத்தின் மேல் இரவு பகல் எந்நேரமும் மறவர்களிருந்து, நெடுந்தொலைவில் வரும் பகைவரை யறிந்து சொல்வர். இது, ‘கோட்டை கொத்தளம்’ எனக் கோட்டையோடு சேர்த்து வழங்கப்படும். கோட்டை - மதில். மதிலுள்மேடையில் உள்ள கருவிகளும் பொறிகளுமாவன: மிளையம் கிடங்கும் வளைவிற் பொறியும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் காய்பொன் னுலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெய ரூசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும் ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும் வாயில். (சிலப் - 15: 207 - 218) மிளை - காவற்காடு. கிடங்கு - அகழ். 1. வளைவில் பொறி - வளைந்துதானே அம்பெய்யும் விற்பொறி. 2. கருவிரல் ஊகம் - கரியவிரல்களையுடைய குரங்கு போன்ற கடிக்கும் பொறி. இது, குரங்குப் பொறி. 3. கல் உமிழ் கவண் - கல்லெறியும் கவண். 4. பரிவுறு வெந்நெய் - மதில் மீதேற முயலும் பகைவர் மீது காய்ச்சி ஊற்றும் நெய். நெய் - எண்ணெய். 5. பாகு அடு குழிசி - எண்ணெய் காய்ச்சவும், செம்புருக்கவும், கரைத்த சாணம் காய்ச்சவும், அவற்றை ஊற்றி வைக்கவும் ஆன மிடாக்கள். 6. காய்பொன் உலை - இரும்புக் கம்பிகளைக் காய்ச்சும் உலை. பொன் - இரும்பு. 7. கல்இடு கூடை - கவணில் வைத்தெறியும் கற்கள் போட்டு வைக்கும் கூடை. 8. தூண்டில் - மதில் மீது ஏறுவோரை மாட்டி இழுக்கும் தூண்டில். 9. தொடக்கு - கழுத்தில் மாட்டி முறுக்கும் சங்கிலி. 10. ஆண்டலை அடுப்பு - மதில்மேலேறுவோர் தலையைக் கொத்தி மூளையைக் கடிக்கும் ஆண்டலைப் பொறி. ஆண்டலை - ஆண்மகன் தலை போன்ற ஒருவகைப் பறவை. இது, ஆண்டலைப்புள் எனப்படும். அடுப்புக்கல் போல மூன்று ஒன்றாக இருப்பதால், ஆண்டலை அடுப்பு எனப்பட்டது. 11. கவை - மதில் மேலேறுவோர் கழுத்தில் கொடுத்துக் கீழே தள்ளுதற்கான இரும்புக்கவை. 12. கழு - இருப்பு லக்கை. 13. புதை - அம்புக்கட்டு. 14. புழை வெந்நீரை ஊற்றி மதில்மேலேறுவோர் முகத்தில் அடிக்கும் குழாய்; தீ வீசுங் குழாயு மாம். 15. கைபெயர் ஊசி - மதில் மேலேறும் பகைவர் கையைக் குத்தும் ஊசி. 16. சென்றெறி சிரல் - மதில் மேலேறுவோரைக் கொத்தும் மீன்கொத்திப் பறவை போன்ற பொறி. 17. பன்றிப்பொறி. 18. பணை - மூங்கில் போன்ற இரும்புக் கம்பிகள். 19. கணையம் - வளைதடி. 20 - 22 - ஈட்டி, வாள், வேல். பிற : 23. அரி நூற்பொறி - மதில் மேலேறும் பகைவர் உடலை அறுக்கும் நூல் போன்ற பொறி. 24. நூற்றுவரைக் கொல்லி - ஒரே எடுப்பில் நூறுபேரைக் கொல்லும் பொறி. 25. தள்ளி வெட்டி. 26. களிற்றுப் பொறி. 27. புலிப் பொறி. 28. தகர்ப் பொறி. 29. கழுகுப் பொறி. 30. விழுங்குபாம்பு. 31. குடப் பாம்பு. 32. வண்டிப் பொறி முதலியன. இக்கோட்டையொன்றே பழந்தமிழரின் நனிமிகு நாகரிகத்தைக் கண்கூடாகக் காட்டுவ தொன்றாகுமன்றோ! இவ்வாறு அமைந்துள்ள கோட்டையில், அகமதிற்குள்ளே யுள்ள கோயிலில் அரச குடும்பத்தினர் இருப்பர். கோ + இல் - கோவில், கோயில். கோ - அரசன். இல் - வீடு. அகமதிற்கும் இடை மதிற்கும் இடைப்பட்டது - ஊர் எனப்படும். ஊரில் அமைச்சர், படைத்தலைவர், வணிகர், உழுவித்துண்ணும் வேளாளர் முதலிய செல்வர்களிருப்பர். இடைமதிற்கும் புறமதிற்கும் இடைப் பட்டது - புறஞ்சேரி எனப் படும். சேரி - சேர்ந்து இருக்கு மிடம். புறஞ் சேரியில் எல்லாக் குடிமக்களும் இருப்பர். இங்கே மிகுந்த பரப்புடைய விளை நிலமும், வற்றா நீர்க் கிணறுகளும் இருக்கும். கோட்டைக்குள் இருப்போர்க்குப் பல ஆண்டுகட்கு வேண்டிய உணவுப் பொருள் சேர்த்து வைக்கும் பல பெரிய களஞ்சியங்கள் கோட்டைக்குள் இருக்கும். எனவே, பகைவர் பல ஆண்டுகள் மதிலை முற்றுகை யிட்ட போதினும் உணவுத் தட்டுதல் உண்டாகாது. சேல மாவட்டத்து ஆற்றூர்க் கோட்டைக்குள் உள்ள களஞ்சியங்கள் இன்றும் அப்பழங் கோட்டைகளுக்கு எடுத்துக் காட்டாக நின்று நிலவுகின்றன. இம்மூன்று மதில்களிலும் போர் நடக்கும். அகமதிலைக் கடந்து கோயில் கொண்டால்தான் கோட்டையைப் பிடித்ததாகும். ‘ஆகும்’ என்றதனால், எதிர் சென்ற வேந்தன் (வஞ்சியான்) பொருது தோற்றுப்போய் மதிலடைத்திருத்தலும், சென்ற வேந்தன் முற்றுதலும் உழிஞையேயாம், சென்ற வேந்தன் முற்றுகையிடா விடின் உழிஞையாகாது. (13) 1. உழிஞை வகை 276. அதுவே தானும் இருநால் வகைத்தே இ - ள் : அவ்வுழிஞைத் துறையானது புறத்தோன் கூறு நான்கும், அகத்தோன் கூறு நான்கும் என எட்டு வகைப்படும் என்றவாறு. அது அடுத்த நூற்பாவிற் கூறுப. (14) 2. உழிஞைத் துறை 277. கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும் உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் தொல்லெயிற் கிவர்தலும் தோலின் பெருக்கமும் அகத்தோன் செல்வமு மன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும் திறப்பட ஒருதான் மண்டிய குறுமையும் உடன்றோர் வருபகை பேணார் ஆரெயி லுளப்படச் சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே. புறத்தோன் றுறை 1. கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம் 2. உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு 3. தொல்லெயிற் கிவர்தல் 4. தோலின் பெருக்கம் அகத்தோன் றுறை 5. அகத்தோன் செல்வம் 6. புறத்தோன் அணங்கிய பக்கம் 7. ஒருதான் மண்டிய குறுமை 8. வருபகை பேணார் ஆரெயில் இ - ள் : புறத்தோன் 1. கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம் - பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னரே அதை வேண்டியோர்க்குக் கொடுத்தலாகிய வெற்றியும், தேஎம் - நாடு. 2. உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு - குறித்ததை முடிக்க வல்ல வேந்தன், தனது படைத் தலைவர் முதலியவர்களைப் பாராட்டுதல். வேந்தன் சிறப்பை வேற்று வேந்தன்பால் தூது செல்வோரும் பிறருங் கூறுவரெனினுமாம். வேந்தன் சிறப்பைப் படைத் தலைவர் கூறுவரெனில், தன்னுறு தொழிலாய் உழிஞையாகாது. தன்னுறு தொழில் - அரசன் கட்டளையின்றி மறவர் தாமே தம் விருப்பம் போல் செய்தல். அரசன் கட்டளை பெற்றுச் செய்தல் - மன்னுறு தொழில் எனப்படும். 3. தொல் எயிற்கு இவர்தல் - பழமையாகிய கோட்டையை இன்றே அழித்து விடுகிறேன் என்று கூறி, அதை அழித்தற்கு எண்ணுதல். எயில் - மதில். 4. தோலின் பெருக்கம் - அங்ஙனம் எண்ணிச் செல்லும் போது உள்ளிருப்போர் தாக்குதலைத் தடுப்பதற்காகத் தோற் கேடகம் மிகுதியாகக் கொண்டு செல்வர். கேடகம் - தட்டம் போன்று கைப்பிடியுடன் கூடியது. ஒரு கையில் பிடித்துக் கொண்டு பகைவர் வாள், வேல் கொடு தாக்குதலைத் தடுப்பது. தோல் - கேடகம்; ஆகுபெயர். இது, கிடுகுப்படை எனவும் வழங்கும். காட்டு 1. மாற்றுப் புலந்தொறும் மண்டில மாக்கள்செல வேற்றுப் புலவேந்தர் வேல்வேந்தர்க் - கேற்ற படையொலியிற் பாணொலி பல்கின்றால் ஒன்னார் உடையன தாம்பெற்று வந்து. (புறத்திரட்டு - 791) இது, கொள்ளார் தேம் குறித்த கொற்றம். ஒன்னார் உடையன - பகைவர் நாடு. அதைப் பெற்று உவந்து பாணர் வாழ்த்தினரென்க. ஒன்னார் - ஆரெயில் அவர்கட் டாகவும் நுமதெனப் பாண்கட னிறுக்கும் வள்ளியோய். (புறம் - 203) இதுவுமது. 2. மழுவான் மிளைபோய் மதிலா னகழ்தூர்ந் தெழுவாளோ னேற்றுண்ட தெல்லாம் - இழுமென மட்டவிழ் கண்ணி மறவேந்தன் சீற்றத்தீ விட்டெரிய விட்ட மிகை. (புறத்திரட்டு - 1339) இது, உள்ளியது முடிக்கும் வேந் தனது சிறப்பு. பிறர் கூற்று. மிளை - காவற்காடு. 3. இற்றைப் பகலுள் எயிலகம் புக்கன்றிப் பொற்றாரான் போனகங்கைக் கொள்ளானால் - எற்றாங்கொல் ஆறாத வெம்பசித்தீ யாற வுயிர்பருகி மாறா மறலி வயிறு. (புறத்திரட்டு - 847) இது, தொல்லெயிற் கிவர்தல். போனகம் - உணவு. 4. நின்ற புகமொழிய நில்லா வுயிரோம்பி இன்றுநாம் வைக லிழிவாகும் - வென்றொளிரும் பாண்டில் நிரைதோற் பணியார் பகையரணம் வேண்டி னெளிதென்றான் வேந்து. (பு - வெ - உழி - 12) இது, தோலின் பெருக்கம். பாண்டில் - காண்ணாடி தோல் - கேடகம். அகத்தோன் : 5 அகத்தோன் செல்வம் - அகத்தோனது குறைவில்லாத பெருஞ் செல்வங் கூறுதல்; செல்வமாவது - நீரும், உணவும், படைக்கலங்களும். 6. அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கம் - அல்லாமல், முற்றுகையிட்ட புறத்தோனை அகத்தோன் போர்த்தொழிலால் வருத்தியது கூறுதல்; புறத்தோன் அணங்கிய - புறத்தோனை அணங்கிய. அணங்கிய - வருத்திய. 7 திறப்பட ஒருதான் மண்டிய குறுமை - அகத்தோன் அரணழிந்த வழிப் புறத்துப் போர் செய்யும் சிறுமையைக் கூறுதல்; குறுமை - சிறுமை. அரணழியாமற் காக்க முடியாமையாகிய சிறுமை யென்க. அரணழியவே ஒதுக்கிடமின்றி வெளிப் போந்து போர் செய்யுமென்க. பேணார் ஆரெயில் - புறத்தோனை மதியாது அகத்தோன் இருத்தற்கு ஏதுவாகிய மதிலின் சிறப்புக் கூறுதல். உடன்றோர் வருபகை - உடன்று வரும் பகைவர். உடன்று - சினந்து. ஆர் எயில் - வலி பொருந்திய மதில். கண்டோர், புலவர் முதலியோர் கூறுவர். காட்டு 5. பொருசின மாறாப் புலிப்போத் துறையும் அருவரை கண்டார்போல் அஞ்சி - யொருவருஞ் செல்லா மதிலகத்து வீற்றிருந்தான் தேர்வேந்தன் எல்லார்க்கும் எல்லாங் கொடுத்து. (புறத்திரட்டு - 857) இது, அகத்தோன் செல்வம். கபிலர் பாரி பறம்பின் செல்வங் கூறிய பாட்டும் இது. (புறம் - 109) 6. கலையெனப் பாய்ந்த மாவும், மலையென மயங்கம ருழந்த யானையும், இயம்படச் சிலையலைத் துய்ந்த வயவரும் என்றிவை பலபுறங் கண்டோர் முன்னாள், இனியே அமர்புறங் கண்ட பசும்புண் வேந்தே, மாக்களி றுதைத்த கணைசேர் பைந்தலை மூக்கறு நுங்கிற் றூற்றயற் கிடப்பக் களையாக் கழற்காற் கருங்க ணாடவர் உருகெழு வெகுளியார் செறுத்தன ரார்ப்ப மிளைபோ யின்று நாளை நாமே உருமிசை கொண்ட மயிர்க்கட் டிருமுர சிரங்க ஊர்கொள் குவரே. (த - யா) இது, புறத்தோன் அணங்கிய பக்கம். இது, தகடூர் முற்றிய சேரமான் படைபட்ட தன்மையைப் பொன்முடியார் கூறியது. மிளை - காவற்காடு. இங்கு பாசறை. ‘இன்று போய் நாளை ஊர் கொள்வோம்’ என்பதால், அகத்கதான் வருத்தியது பெறுதும். 7. வருகதில் வல்லே வருகதில் வல்லென வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப நூலரி மாலை சூடிக் காலிற் றமியன் வந்த மூதி லாளன் அருஞ்சமந் தாங்கி முன்னின் றெறிந்த ஒருகை யிரும்பிணத் தெயிறு மிறையாகத் திரிந்த வாள்வாய் திருத்தாத் தனக்காங் கிரிந்த தானை பெயர்புற நகுமே. (புறம் - 284) இது, ஒருதான் மண்டிய குறுமை. 8. திண்கூ ரெஃகின் வயவர்க் காணின் புண்கூர் மெய்யி னுராஅய்ப் பகைவர் பைந்தலை யுதைத்த மைந்துமலி தடக்கை ஆண்டகை மறவர் மலிந்துபிறர் தீண்டல் தகாது வேந்துறை யரணே. (த - யா) இது, வருபகை பேணார் ஆரெயில். அகத்தோன் செல்வம் (5) மதிலுக் குள்ளிருக்கும் செல்வமட்டும் கூறுவது. இது, அச் செல்வத்தைப் போற்றுதற்கு ஏதுவான வலிபொருந்திய அரண் கூறுவதால், அதனின் இது வேறாதல் காண்க. இது, பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது. ‘அதுவே தானும் இருநால் வகைத்தே’ (புறத் - 14) என, முற் கூறிய தொகையே யன்றி, ஈண்டும் ‘சொல்லப்பட்ட நாலிரு வகைத்தே’ எனத் தொகை கூறியதால், அவை போல வேறு நாலிரண்டு துறை தோன்றுமெனக் கொள்க. அவை, புறத்துழிஞை யான் தனக்குத் துணையாகிய வேந்தனை யாயினும், படைத் தலைவரையாயினும் ஏவி, அகத்துழிஞையோனுக்குத் துணையாகிய அரசனது கோட்டையை முற்றுதலும், அவன் அதைக் காத்தலும் உண்டு. அப்போதும் இவ்விருநான்கு துறையும் இருவர்க்கும் நிகழுமென்க. அவற்றிற்கும் இலக்கியம் முற்காட்டியனவே. (15) 3. உழிஞைப் பொதுத்துறை 278. குடையும் வாளும் நாள்கோ ளன்றி, மடையமை யேணிமிசை மயக்கமும், கடைஇச் சுற்றம ரொழிய வென்றுகைக் கொண்டு முற்றிய முதிர்வும், அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும், மற்றதன் புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும், நீர்ச்செரு வீழ்ந்த பாசியும், அதாஅன் றூர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும், அகமிசைக் கிவர்ந்தோன் பக்கமு மிகன்மதிற் குடுமி கொண்ட மண்ணுமங் கலமும், வென்ற வாளின் மண்ணோ, டொன்றத் தொகைநிலை யென்னும் துறையொடு தொகைஇ வகைநான் மூன்றே துறையென மொழிப. புறத்தோற்கு அகத்தோற்கும் பொதுத்துறைகள் 1. குடைநாட் கோடல் 7. நீர்ச்செரு வீழ்ந்த பாசி 2. வாணாட் கோடல் 8. ஊர்ச்செரு வீழ்ந்த பாசிமறம் 3. ஏணிமயக்கம் 9. அகமிசைக்கிவர்ந்தோன் பக்கம் 4. முற்றிய முதிர்வு 10.குடுமிகொண்ட மண்ணு மங்கலம் 5. அகத்தோன் வீழ்ந்த நொச்சி 11. வாண் மங்கலம் 6. புறத்தோன் வீழ்ந்த 12. தொகை நிலை புதுமை இ - ள்: 1, 2 குடையும் வாளும் நாள்கோள் அன்றி - குடை நாட் கொள்ளுதலும், வாள்நாட் கொள்ளுதலும் அல்லாமல்; அன்றி மடையமை ஏணிமிசை மயக்கமும் என மேற்கூட்டுக. புறத்தோன் புதிதாக மதிலகத்தே (கோட்டைக்குள்) புகுதற்கு நாட்கொள்வன். அகத்தோனும் தனக்குத் துணையாக ஒரு வேந்தன் வந்தால், போர் செய்யக் கோட்டையை விட்டு வெளிச் செல்லுதற்கு நாட்கொள்வன். புறத்தோன் தன்னாட்டினின்றும் புறப்படுதற்கு நாட்கோடல் வஞ்சியன்றி உழிஞையாகாது. எனவே, கோட்டைக்குட் புகவே நாட்கொள்ளுமென்க. நாட்கொள்ளலாவது, இன்று மாநாட்டுத் தொடக்கத்திற் கொடியேற்று விழாக் கொண்டாடுவது போல, கோட்டைக்குட் புகத்தொடங்கும் முதல் நாளில் குடையை யுயர்த்தியும், வாளை நாட்டியும் வீரர்கள் தொடக்கவிழாக் கொண்டாடுதலாகும். குடை - குடிகாத்தற்கும், வாள் - எதிரி கேட்டுக்கும் அறிகுறியாகும். கொடிநாட்கோடலும் உண்டு. காட்டு 1. பகலெறிப்ப தென்கொலோ பான்மதியென் றஞ்சி இகலரணத் துள்ளவ ரெல்லாம் - அகநலிய விண்டஞ்சு மென்ன விரிந்த குடைநாட்கோள் கண்டஞ்சிச் சிம்பளித்தார் கண். (புறத்திரட்டு - 1325) இது, புறத்தோன் குடை நாட்கோள். குன்றுயர் திங்கள் போற் கொற்றக் குடையொன்று நின்றுயர் வாயிற் புறநிவப்ப - ஒன்றார் விளங்குருவப் பல்குடை விண்மீன்போற் றோன்றித் துளங்கினவே தோற்றந் தொலைந்து. (புறத்திரட்டு - 1336) இது, அகத்தோன் குடைநாட்கோள். 2. தொழுது விழாக்குறைக்குந் தொல்கடவுட் பேணி அழுது விழாக்கொள்வ ரன்றோ - முழுதளிப்போன் வாணாட்கோள் கேட்ட மடந்தையர் தம்மகிழ்நர் நீணாட்கோ ளென்று நினைந்து . (புறத்திரட்டு - 1326) இது, புறத்தோன் வாணாட்கோள். முற்றரண மென்னு முகிலுருமுப் போற்றோன்றக் கொற்றவன் கொற்றவாள் நாட்கொண்டான் - புற்றிழிந்த நாகக் குழாம்போல் நடுங்கின வென்னாங்கொல் வேகக் குழாக்களிற்று வேந்து. (புறத்திரட்டு - 1337) இது, அகத்தோன் வாணாட் கோள். 3. மடை அமை ஏணிமிசை மயக்கம் - அகழின் மீது இடுகின்ற பலகையோடு சேர்த்துச் செய்யப்பட்ட ஏணிமேல் நின்று புறத் தோரும் அகத்தோரும் போர்செய்வர்; மடை - பலகை. மதிலோ ரத்தில் அகழ் இருப்பதால் அகழின் மேற் போடும் பலகையோடு சேர்த்தே மதில்மேற் சார்த்தும் ஏணி செய்யப்பட்டிருக்கும். 4. கடைஇ சுற்று அமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வு - புறத்தோன் தன் படையைச் செலுத்திப் புறமதிலைக் கைக்கொண்டு இடை மதிலை வளைத்துப் போரிடுவான்; அகத்தோர் புறத்தோரைப் புறமதிலினின்று ஓட்டி அதனைக் கைக்கொள்வர்; கடைஇ - செலுத்தி. 3உம், 4உம் புறமதிற் போர். 5. அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சி - இடை மதிற்கண் புறத்தோனால் முற்றப்பட்ட அகத்தோன் அம்மதிலை விரும்பிக் காப்பான்; இடைமதிலை முற்றிய புறத்தோனும் போர் செய்தலை விரும்பிய மனத்தைக் காப்பான்; மனத்தைக் காத்தல் - போர் செய்தலில் ஊக்கஞ் செல்லுதல். முற்றிய - புறத்தோனால் முற்றப்பட்ட. வீழ்தல் - விரும்புதல். ‘தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்’ (குறள் - 1103) என்பது காண்க. நொச்சி - காவல். இதற்கு நொச்சிப்பூவைச் சூடுதலும் உண்டு. இவர் நொச்சி மறவர் எனவும், புறத்துவீரர் - உழிஞை மறவர் எனவும் வழங்கப்படுவர். 6. மற்று அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமை - பின்பு புறத்தோன் இடைமதிலை விரும்பிக் கொண்ட புதுவெற்றி; அல்லது, அகத்தோன் புறத்தோன் பிடித்த மதிலை மீட்டுக் கொண்ட புதுவெற்றி. 5உம், 6உம் இடை மதிற்போர். 7. நீர்ச்செரு வீழ்ந்த பாசி - நீர்ப்பாசி போல அகழின் இரு புறமும் நின்று நீங்காது போர் செய்வர்; நீர்ப்பாசி போல் நீங்காமல் நிற்றலின், ‘பாசி’ என்றார். பாசி - பாசம் என்பது. 8. அதாஅன்று ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறன் - அதுவன்றி, ஊரகத்து விரும்பிப் போர் செய்யும் பாசி மறனும்; பாசிபோல் ஒதுங்கியும், ஒன்று கூடியும் பொருதலின், ‘பாசிமறம்’ என்றார். அகழின்கட் பொருதோர், பின் இடைமதிற்கும் புறமதிற்கும் இடையிலுள்ள ஊரின் கட்பொருதா ரென்க. 9. அக மிசைக்கு இவர்ந்தோன் பக்கம் - புறமதிலும் இடை மதிலும் அல்லாத அகமதின்மேல் ஏறிப் பொருவர். அகமதில் - கோயில் மதில். 3. ஏணிமயக்கமும், 4. முற்றிய முதிர்வும் - புறமதிலிலும்; 5. அகத்தோன் வீழ்ந்த நொச்சியும், 6. புறத்தோன் வீழ்ந்த புதுமையும் இடைமதிலிலும்; 7. பாசி - இடைமதில் அகழினும்; 8. பாசிமறம் - இடைமதிற்கும் புறமதிற்கும் இடையிலுள்ள ஊரின் கண்ணும் போர் நிகழ்ந்த வென்க. 10. இகல் மதில் குடுமி கொண்ட மண்ணு மங்கலம் - வென்ற வேந்தன் பட்ட வேந்தன் பெயராலே முடிபுனைந்து நீராடுவன்; பட்ட வேந்தன் முடியைப் புனைந்தென்க. நீராடி முடிபுனைவன் எனக் கொள்க. இகல் மதில் - போர் நிகழ்ந்த மதில். குடுமி - முடிக்கலம். மண்ணுதல் - கழுவுதல், நீராடுதல். 11. வென்றவாளின் மண்ணோடு ஒன்ற - பின்னர் வென்ற கொற்றவாளினை நிறுத்தி நீராட்டுவர்; இது, வாள் மங்கலம் எனப்படும். நீராட்டுதலோடே கூடத் தொகைநிலை என்க. 12. தொகைநிலை - முடிவில் படைகளை ஒன்று திரட்டிச் சிறப்புச் செய்வர். தொகை நிலை - தொகுத்த நிலை. தொகைநிலை என்னும் துறையொடு தொகைஇ வகை நால் மூன்றே துறை என மொழிப - தொகைநிலை என்னும் துறையோடு தொகுத்து (கூட்டி) பன்னிரு வகைப்படும் உழிஞைத்திணைப் பொதுத்துறை என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. விளக்கத்தின் பொருட்டு உம்மை நீக்கி உரைக்கப்பட்டது. காட்டு 3. சேணுயர் ஞாயில் திணிதோளா னேற்றவும் ஏணி தவிரப்பாய்ந் தேறவும் - பாணியாப் புள்ளிற் பரந்து புகல்வேட்டார் போர்த்தொழிலோர் கொள்ளற் கரிய குறும்பு. இது, புறத்தோர் ஏணி மயக்கம். குறும்பு - மதில். இடையெழுவிற் போர்விலங்கும் யானையோர் போலும் மடையமை யேணி மயங்கிற் - படையமைந்த ஞாயில் பிணம்பிறக்கித் தூர்த்தார் நகரோர்க்கு வாயி லெவனாங்கொல் மற்று. இது, அகத்தோர் ஏணி மயக்கம். விலங்கும் - விலக்கும். ஏணிமே லேறுவோரை வெட்டி வீழ்த்தின ரென்க. இப்போது தான் ஏவறையிலிருந்து அம்பெய்தலும், பதணத்திலுள்ள கருவிகளையும் பொறிகளையும் பயனுறச் செய்தலுமாம். பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க் கொருவ ருடன்றெழுந்த காலை - இருவரும் மண்ணொடு சார்த்தி மதில்சார்த் தியவேணி விண்ணொடு சார்த்தி விடும். (புறத்திரட்டு - 1330) இது, புறத்தோர் அகத்தோர் இருவர் ஏணிமயக்கமும் உடன் வந்தது. 4. கடல்பரந்து மேருச்சூழ் காலம்போற் சென்றோர் கொடிமதில் காத்தோரைக் கொல்லக் - கடலெதிர் தோன்றாப் புவிபோ லரண்மறவர் தொக்கடைந்தார் மான்றேரான் மூதூர் வரைப்பு. இது, புறத்தோன் முற்றிய முதிர்வு. ஊர்சூழ் புரிசை யுடன்சூழ் படைமாயக் கார்சூழ்குன் றன்ன கடைகடந்து - போர்மறவர் மேகமே போலெயில் சூழ்ந்தார் விலங்கல் போன் றாகஞ்சேர் தோள்கொட்டி யார்த்து. இது, அகத்தோன் முற்றிய முதிர்வு. 5. இருகன்றின் ஒன்றிழந்த ஈற்றாப்போற் சீறி ஒருதன் பதிசுற் றொழியப் - புரிசையின் வேற்றரணங் காத்தான் விறல்வெய்யோன் வெஞ்சினத்துக் கூற்றரணம் புக்கதுபோற் கொன்று. இது அகத்தோன் மதி காத்த நொச்சி. தாய்வாங்கு கின்ற மகனைத் தருகென்று பேய்வாங்கி யன்னதோர் பெற்றித்தே - வாய்வாங்கு வெல்படை வேந்தன் விரும்பாதா ரூர்முற்றிக் கொல்படை வீட்டுங் குறிப்பு. (புறத்திரட்டு - 1328) இது, புறத்தோன் மானங்காத்த நொச்சி. 6. வெஞ்சின வேந்தன் எயில்கோள் விரும்பியக்கால் அஞ்சி யொதுங்காதார் யார்யாவர் - மஞ்சுசூழ் வான்றோய் புரிசை பொறியு மடங்கின ஆன்றோ ரடக்கம்போ லாங்கு. (புறத்திரட்டு - 1329) இது, புறத்தோன் வீழ்ந்த புதுமை. தாக்கற்குப் பேருந் தகர்போல் மதிலகத் தூக்க முடையோ ரொதுங்கியும் - கார்க்கண் இடிபுறப் பட்டாங் கெதிரேற்றார் மாற்றார் அடிபுறக் கீடு மரிது. (புறத்திரட்டு - 1340) இது, அகத்தோன் வீழ்ந்த புதுமை. 7. பொலஞ்செய் கருவிப் பொறையுமிப் பண்ணாய் நிலந்திடர் பட்டதன் றாயின் - கலங்கமர்மேல் வேத்தமர் செய்யும் விரகென்னாம் வேன்மறவர் நீத்துநீர்ப் பாய்புலிபோல் நின்று. இது, நீர்ச்செருவீழ்ந்த பாசி. இது, புறத்தோன் அகத்தோன் இருவர்க்கும் பொது. 8. மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியும் மாதர் பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தார் - எறிதொறும்போய் நீர்ச்செறி பாசிபோல் நீங்காது தங்கோமான் ஊர்ச்செரு வீழ்ந்தாரைக் கண்டு. இது, புறத்தோன் பாசிமறம். தாந்தங் கடைதொறுஞ் சாய்ப்பவும் மேல்விழுந்த வேந்தன் படைபிணத்து வீழ்தலான் - ஆங்கு மதுக்கமழுந் தார்மன்னர்க் குள்ளூர் மறுகிற் பதுக்கையும் வேண்டாதாம் பற்று. இது, அகத்தோன் பாசிமறம். 9. வாயிற் கிடங்கொடுக்கி மாற்றினார் தம்பிணத்தாற் கோயிற் கிடங்கொடுக்கிக் கோள்மறவர் - ஞாயின் கொடுமுடிமேற் குப்புற்றார் கோவேந்தர்க் காக நெடுமுடிதாங் கோடல் நினைந்து. இது, புறத்தோன் அகமிசைக் கிவர்தல். புற்றுறை பாம்பின் விடநோக்கம் போல்நோக்கிக் கொற்றுறை வாய்த்த கொலைவேலோர் - கொற்றவன் ஆரெயில்மேல் தோன்றினார் அந்தரத்துக் கூடாத பேரெயில்மேல் வாழவுணர் போன்று. இது, அகத்தோன் அகமிசைக் கிவர்தல். ‘புற்றுறை பாம்பு’ என அகத்தோரைச் சுட்டிற்று. 10. மழுவாளான் மள்ளர் மருங்கறுத்த மால்போற் பொழிலேழுங் கைக்கொண்ட போழ்தின் - எழின்முடி சூடாச்சீர்க் கொற்றவனும் சூடினான் கோடியர்க்கே கூடார்நா டெல்லாங் கொடுத்து. இது, புறத்தோன் மண்ணுமங்கலம். கோடியர் - கூத்தர். கூடார் - பகைவர். வென்றி பெறவந்த வேந்தை யிகன்மதில்வாய்க் கொன்று குடுமி கொளக்கண்டு - தன்பால் விருந்தினர் வந்தார்க்கு விண்விருந்து செய்தான் பெருந்தகையென் றார்த்தார் பிறர். இது, அகத்தோன் மண்ணுமங்கலம். 11. செற்றவர் செங்குருதி யாடற்கு வான்சேர்ந்த கொற்றவை மற்றிவையுங் கொள்ளுங்கொல் முற்றியோன் பூவொடு சாந்தம் புகையவி நெய்ந்நறைத் தேவொடு செய்தான் சிறப்பு. இது, புறத்தோன் வாண்மங்கலம். வாள்சேர்ந்த கொற்றவை - வாளே ஈங்குக் கொற்றவை. வருபெரு வேந்தற்கு வான்கொடுத்து மற்றை ஒருபெரு வேந்தற்கூ ரீந்தாள் -ஒருவன்வாள் இவ்வுலகிற் பெற்ற இகற்கலையேற் றூர்தியாள் அவ்வுலகிற் போய்ப்பெறுங்கொ லாங்கு. இது, அகத்தோன் வாண்மங்கலம். கலை ஏற்றூர்தியாள் - கொற்றவை. 12. கதிர்சுருக்கி யப்புறம்போங் காய்கதிர்போல் வேந்தை எதிர்சுருக்கி யேந்தெயில்பா ழாக்கிப் - பதியிற் பெயர்வான் றொகுத்த படைத்துகளாற் பின்னும் உயர்வான் குறித்த துலகு. இது, புறத்தோன் தொகைநிலை. பதியில் - பதிக்கு, அல்லது பதியினின்று. தலைவன் மதில்சூழ்ந்த தார்வேந்தர்க் கொன்று வலைவன் வலைசுருக்கி யாங்கு - நிலையிருந்த தண்டத் தலைவர் தலைக்கூட வீற்றிருந்தான் உண்டற்ற சோற்றா ரொழிந்து. இது, அகத்தோன் தொகைநிலை. தலைக்கூட - ஒன்றுகூட. வகை: 1, 2. குடை வாள் நாட்கோள்: 1. வீரரை யழைத்தல் 2. நாட்கொள் கென்றல் 3. குடைச்சிறப்புக் கூறல் 4. வாட்சிறப்புக் கூறல் 5. முரசுநாட்கோடல் முதலியன. 8. பாசிமறம் : 1. எயிற்போர் 2. புட்போற் பாய்தல் முதலியன. 9. அகமிசைக் கிவர்தல் : கதவுகோடல். 10. மண்ணுமங்கலம் : 1. முடிவடிவு கூறல், 2. அரசன் வடிவு கூறல் (ஒப்புக்கூறல்) முதலியன. 12. தொகைநிலை : தும்பைப் போர்போல் மதிற்போரில் இருபெரு வேந்தரும் அழிதலும் சிறுபான்மை உண்டு. இம்மதிற்போர் தும்மையாகிய பெரும்போர்க்கு ஏதுவாகு மென்க. புறத்திணை ஏழனுள் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை என்னும் நான்கும் போர் முறையையும், வாகை, காஞ்சி இரண்டும் வாழ்க்கை முறையையும், பாடாண் இவ்விரு முறைகளையும் பாடு முறையையும் கூறுவதெனக் கொள்க. (16) 6. தும்பைத்திணை 279. மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப. இ - ள் : மைந்து பொருளாக வந்த வேந்தனை - தன் வலியினை உலகம் புகழ்தலே தனக்குப் பொருளாக எண்ணி வந்த அரசனை, சென்று தலையழிக்கும் சிறப்பிற்று என்ப, மாற்று வேந்தனும் அவ்வாறே எதிர்த்துப் பொருதல் தும்பைத்திணை யாகும் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. இது, தும்பைத் துணையின் பொதுவிலக்கணமாகும். தலையழித்தல் - வந்த வேந்தன் வலியை யழித்தல், வெல்லுதல். மைந்து - வலி. சிறப்பாவன : சோம்பேறியையும், மலடனையும், மயிர் அவிழ்ந்தோனையும், ஒத்த படையெடாதோனையும் கொல்லாது விடுதலாம். (17) 1. சிறப்பு விதி 280. கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் சென்ற வுயிரின் நின்ற யாக்கை இருநிலந் தீண்டா அருநிலை வகையோ டிருபாற் பட்ட ஒருசிறப் பின்றே. இ - ள் : கணையும் வேலும் துணை உற மொய்த்தலின் - ஒரு பெரு வீரனை அணுகுதற் கஞ்சி அவன்மேல் விட்ட அம்பும் வேலும் அவனுடம்பில் அணியாகச் செறிதலான், சென்ற உயிரின் நின்ற யாக்கை - உயிர் செல்ல நின்ற உடம்பானது, இரு நிலம் தீண்டா அருநிலை வகையோடு - நிலத்தில் விழாமல் நிற்கும் அரிய நிலை யுடைத்தாகிய கூறுபாட்டோடு, இருபால் பட்ட ஒரு சிறப்பின்று - முற்கூறிய மைந்து பொருளாகப் பொருதலும் (17), இஃதும் ஆக இரு வகைப்பட்ட ஒரு சிறப்பினையுடையது தும்பைத் திணை என்றவாறு. இது, திணைச்சிறப்புக் கூறியது. 1. அம்பும் வேலும் வண்டி யுருளையின் (சர்க்கரம்) ஆரக்கால்கள் போல உடலில் தைக்கவே, உடல் அவ்வுருளையின் கும்பம் போல நிலத்திற் படாமல் இருக்கும் என்றும், 2. அம்பும் வேலும் உடலையும் தலையையும் வெவ்வேறாகத் துண்டித்தலான், உடலும் தலையும் அட்டை யாடல் போல நிலத்தில் நிலைகொள்ளாமல் ஆடும் என்றும் கொள்க; துண்டிக்கப்பட்ட அட்டையின் பல துண்டுகளும் ஆடும், ஊர்ந்து செல்லுமென்க. எனவே, 1. மைந்து பொருளாகப் பொருதலும், 2. யாக்கை இருநிலந் தீண்டா அருநிலையும் ஆகிய இரண்டும் தும்பைத் திணையாம் என்பதாம். யாக்கை இருநிலந் தீண்டா அருநிலையே, அட்டையாடல் போன்றதோடு இருவகையாம் என்பதாம். காட்டு: 1. நெடுவேல் பாய்ந்த மார்பின் மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே. (புறம் - 297) இது, யாக்கை இருநிலந் தீண்டா வகை. மடல்வன் போந்தை - பனையோலை. மடல் - பட்டை. பட்டை யோடு கிடக்கும் பனையோலை, பட்டை நிலத்திற் படாமற் கிடத்தல், அம்பு தைத்த, நிலத்திற்படாத உடலுக்குவமை. காட்டு: 2. பருதிவேல் மன்னர் பலர்காணப் பற்றார் குருதிவாள் கூறிரண்டு செய்ய - ஒருதுணி கண்ணிமையா முன்னம் கடிமதிலுள் வீழ்ந்ததே மண்ணதே மண்ணதே யென்று. இது, யாக்கை இருநிலந் தீண்டா அருநிலை; உழிஞைப் புறத்துத் தும்பை. அட்டை யாடுதல் போலத் துணிக்கப்பட்ட துண்டம் ஒன்று மதிலுக்குள் துள்ளி விழுந்ததெனல் காண்க. இது துறைநிகழ்ந்தபின் நடப்ப தென்க. (18) 2. தும்பைத்துறை 281. தானை யானை குதிரை யென்ற நோனா ருட்கும் மூவகை நிலையும் வேன்மிகு வேந்தனை மொய்த்த வழி யொருவன் தான்மீண் டெறிந்த தார்நிலை, அன்றியும் இருவர் தலைவர் தபுதிப் பக்கமும், ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக் கூழை தாங்கிய எருமையும், படையறுத்துப் பாழி கொள்ளும் ஏமத் தானும், களிறெறிந் தெதிர்ந்தோர் பாடும், களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோ ராடும் அமலையும், வாள்வாய்த் திருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும் ஒருவரு மொழியாத் தொகைநிலைக் கண்ணும், செருவகத் திறைவன் வீழ்ந்தெனச் சினைஇ ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும், பல்படை ஒருவற் குடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும் உளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே. 1. தானை நிலை 7. படையறுத்துப் பாழிகொள்ளும் ஏமம் 2. யானை நிலை 8. களிறெறிந்து எதிர்ந்தோர் பாடு 3. குதிரை நிலை 9. வாளோ ராடும் அமலை 4. தார் நிலை 10. தொகை நிலை 5. இருவர் தலைவர் தபுதிப் பக்கம் 11. நல்லிசை நிலை 6. எருமை நிலை 12. நூழில் இ - ள் : 1, 2, 3. தானை யானை குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலையும் - 1. படைச்சிறப்புக் கூறுதல், 2. யானைச் சிறப்புக் கூறுதல், 3. குதிரைச் சிறப்புக் கூறுதல் ஆகிய பகைவர் அஞ்சும் மூன்று துறையும் என்றவாறு. நோனார் - பகைவர். நோனார் உட்கும் எனவே, நோன்றார் உட்கார் எனக் கொள்க. நோன்றார் - நண்பர். அவர் - வீரரின் தாயரும், மனைவியரும், கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியரும், கண்டோரு மாவர். இவர்களும் போர்க்களஞ் செல்வர் என்க. நால்வகைப் படையில், தேர்ப்படை குதிரையாற் செல்வ தாகலின் அஃதும் அடங்கும். தானை முதலியவை தாமே சினங்கொண்டு பொருதால் முறையே தானைமறம், யானைமறம், குதிரைமறம் எனப்படும். தானை நிலையை - தாயர் கூறுதல் - மூதின் முல்லை, மனைவியர் கூறுதல் - இல்லாண் முல்லை, கண்டோர் கூறுதல் - வல்லாண் முல்லை, பாணர் கூறுதல் - பாடாண் பாட்டு எனப் பெயர் பெறும். யானை, குதிரை நிலையைக் கண்டோரும் பாணரும் கூறுதலும் யானை மறம், குதிரை மறம் எனவே பெயர் பெறுமென்க. இனி, 1. அத்தானை சூடிய பூக் கூறல் 7. அப்படையு ளொன்றற் கிரங்கல் 2. படையெழுச்சி 8. தலைவரை வகுத்தல் 3. படையரவம் 9. துணைவேந்தரை ஏத்தல் 4. அரசன் படைக்குச் 10. நும்போர் எந்நாட்டென்றல் சிறப்புச் செய்தல் 5. அதனைக் கண்டோர் 11. கையறு நிலை போரை விலக்கல் 6. அவரதற் குடன்படாமற் போர்துணிதல் முதலிய துறைகளெல்லாம் தானைநிலையின் பாற்படும். 7. ஒரு படையின் வீரக்குறிப்பினைக் கண்டு அதனாற் பகைவர்க் குறும் கேட்டிற் கிரங்குதல். 11. இருபெரு வேந்தரும் இன்னவாறு பொருவர் என்று அப்போரால் உண்டாகும் கேட்டிற் கிரங்கிச் செயலற்றுக் கூறுதல். கையறுதல் - செயலறுதல். காட்டு 1. கார்கருதி நின்றதிருங் கௌவை விழுப்பணையான் சோர்குருதி சூழா நிலனனைப்பப் - போர்கருதித் துப்புடைத் தும்பை மலைந்தான் துகளறுசீர் வெப்படைத் தானையெம் வேந்து. (பு - வெ. தும்பை - 1) இது, சூடிய பூக்கூறியது. 4. வெல்பொறியு நாடும் விழுப் பொருளுந் தண்ணடையும் கொல்களிறு மாவுங் கொடுத்தளித்தான் - பல்புரவி நன்மணித் திண்டேர் நயவார் தலைபனிப்பப் பன்மணிப் பூணான் படைக்கு. (பு - வெ - தும் - 2) இது, படைக்குச் சிறப்புச் செய்தது. 7. மின்னார் சினஞ்சொரிவேல் மீளிக் கடற்றானை ஒன்னார் நடுங்க உலாய்நிமிரின் - என்னாங்கொல் ஆழித்தேர் வெல்புரவி யண்ணல் மதயானைப் பாழித்தேர் மன்னர் படை. (பு - வெ - தும் - 5) இது, இருபடையுள் ஒன்றற் கிரங்கியது. துறைகட்கு எடுத்துக்காட்டு வருமாறு 1. ஆண்மை யுள்ளங் கேண்மையிற் றுரத்தலின் அழுந்துபடப் புல்லி விழுந்துகளம் படுநரும், தகருந் தருகந் தாக்கிய தாக்கின் முகமுகஞ் சிதர முட்டு வோரும், முட்டியின் முறைமுறை குத்து வோரும், கட்டிய கையொடு கால்தட் குநரும், கிட்டினர் கையறத் தொட்டுநிற் போரும், சக்கரம் போலச் சங்குவிட் டெறிநரும், மல்லிற் பிடித்தும் வில்லின் எற்றியும் ஊக்கியும் உரப்பியும் நோக்கியும் நுவன்றும் போக்கியும் புழுங்கியும் நாக்கடைக் கவ்வியும் எயிறுடன் திருகியும் கயிறுபல வீசியும் இனைய செய்தியின் முனைமயங் குநரும் பிறப்பும் பெருமையும் சிறப்புஞ் செய்கையும் அரசறி பெருமையும் உரைசெல் லாண்மையும் உடையோ ராகிய படைகொள் மாக்கள். (புறத்திரட்டு-அமர்-10) இது, தானை நிலை. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். (குறள்) இதுவுமது. 2. கையது கையோ டொருதுணி, கோட்டது மொய்யிலைவேல் மன்னர் முடித்தலை - பைய உயர்பொய்கை நீராட்டிச் செல்லுமே யெங்கோன் வயவெம்போர் மாறன் களிறு. இது, யானை நிலை. பல்லுருவக் காலின் பரியுருவத் தாக்கித்தன் தொல்லை யுருவிழந்த தோற்றம்போல் - எல்லாம் ஒருகணத்துத் தாக்கி உருவிழந்த பாய்மாப் பொருகளத்து வீழ்ந்த புரண்டு. இது, குதிரை நிலை. 4. வேல் மிகு வேந்தனை மொய்த்த வழி ஒருவன் தான் மீண்டு எறிந்த தார்நிலை - முன்னணியிற் சென்று வேற்போர் செய்து வெற்றி மிகுகின்ற வேந்தனை எதிரிகள் சூழ்ந்த கொண்டபோது, தானைத் தலைவனாயினும், துணை வந்த அரசனாயினும் விரைவிற் சென்று அவ்வெதிரிதகளைத் தாக்கிய தார்நிலையும்; தார் - தூசிப்படை, முன்னணிப் படை. மீண்டு - வந்து. எறிதல் - தாக்குதல். 5. அன்றியும் இருவர் தலைவர் தபுதிப் பக்கமும் - அல்லாமல், தானைத் தலைவர் இருவரும் போர் செய்து மடிதலும்; தபுதல் - உயிர் நீங்குதல். 6. உடைபடை ஒருவன் புக்கு ஒருவனைக் கூழை தாங்கிய எருமையும் - பின்வாங்கிச் செல்லும் தனது படைக்கண் ஒரு படைத்தலைவன் சென்று, தன் படையைத் தாக்கிய எதிரியைத் தான் எதிர்த்தோட்டித் தன் படையைக் கடாப் போலப் பாதுகாக்கும் எருமை நிலையும்; உடைதல் - பின் வாங்குதல். தாங்குதல் - ஓடாமல் செய்தல். கூழை - ஒரு படைவகை. எருமைக்கடாப் போல் தன் படையைத் தாங்கினானென்க. 7. படை அறுத்துப் பாழி கொள்ளும் ஏமாத்தானும் - வாள்வேலின்றி, உடல்வலியாற் போர்புரியும் பெருமையும்; கைப் படை பழுதுபடவே மெய்யாற் பொருவரென்க. பாழி - வலி; குணவாகுபெயர். ஏமம் - காவல். இங்கே தற்காக்கும் பெருமையை யுணர்த்திற்று. இது, மற்போர். 8. களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும் - மாற்றுவேந்தன் ஏறிவந்த யானையையும், அவனையும் பொருது தாக்கினோர் பெருமையும்; பாடு - பெருமை. 9. களிற்றொரு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும் - களிற்றொடு இறந்த வேந்தனை வியந்து, கொன்ற வேந்தன் படையாளர் சூழ்ந்து நின்று ஆடும் அமலையும்; அமலை - திரண்டாடுதல். அமல் - நெருக்கம். 10. வாள் வாய்த்து இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகை நிலை - வாட்போரில் இரு பெரு வேந்தரும், அவர்க்குத் துணைவந்தவரும், தானைத் தலைவரும், தானையும் ஒருவருமே ஒழியாமல் (எஞ்சுதலின்றி) போர்க்களத்தில் இறத்தலும்; அவ்வாறு இறந்தபோது கண்டோர் கூறுவரென்க. இது, அரிதின் நிகழ்வது. 11. செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ மண்டிய நல்லிசைநிலை - போர்க்களத்தே தனது வேந்தன் இறந்தது கண்டு சினங்கொண்ட பெரும் படைத் தலைவன் ஒருவன் நெருங்கிப் பொருத நல்ல புகழ் நிலையும்; மண்டுதல் - நெருங்குதல். இசை - புகழ். 12. ஒருவற்குப் பல்படை உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும் - அப்படைத்தலைவன் அங்ஙனம் செய்யவே (11), எதிரி; படைத்தலைவன் அவனை ஒள்ளிய வாளால் வீசிக் கொல்லுதலும், நூழில் - கொல்லுதல் அவனையும் அவன் படையையும் கொன்று குவித்தானென்க. 4. வெய்யோ னெழாமுன்னம் வீங்கிருள் கையகலச் செய்யோ னொளிதிகழுஞ் செம்மற்றே - கையகன்று போர் தாங்கும் மன்னன்முன் புக்குப் புகழ்வெய்யோன் தார்தாங்கி நின்ற தகை. (புறத்திரட்டு - 13) இது, தார்நிலை. 5. மதியமும் ஞாயிறும் பொருவன போல அரவணி கொடியோற் கிளையோன் சிறுவனும் பெருவிறல் வீமற் கிளையோன் சிறுவனும் உடன்றமர் தொடங்கிய காலை, அடங்கார் உட்குவருஞ் சீற்றத்துக் கைப்படை வழங்கி இழந்தவை கொடாஅர் கிடந்தன வாங்கித் தேர்மிசைத் தமியர் தோன்றார் பார்மிசை நின்றுசுடர் நோக்கியும் ஒன்றுபடத் திருகியும் தும்பியடி பிணங்கி மண்ணிற் றோற்றமொடு கொடிகொடி பிணங்கி வீழ்வனபோல ஒருவயின் வீழ்ந்தடு காலை இருபெரு வேந்தரும் பெரிதுவந் தனரே. (பெருந் - பார) இது, இருவர் தலைவர் தபுதிப் பக்கம். வீழ்ந்து அடு காலை - அட்டு வீழ்காலை. 6. சீற்றங் கனற்றச் சிறக்கணிந்துச் செல்லுங்கால் ஏற்றெருமை போன்றான் இகல்வெய்யோன் - மாற்றான் படைவரவு காத்துத்தன் பல்படையைப் பின்காத் திடைவருங்காற் பின்வருவார் யார். இது, எருமைநிலை. ஏற்றெருமை - எருமை ஏறு - மைக்கடா. 7. கொல்லேறு பாய்ந்தழிந்த கோடுபோல் தண்டிறுத்து மல்லேறு தோள்வீமன் மாமனைப் - புல்லிக்கொண் டாறாத போர்மலைந்தான் ஆங்கரசர் கண்டார்த்தார் ஏறாட லாய ரென. (பெரு. - பாரதம்) இது, படையறுத்துப் பாழி கொண்டது. 8. இடியா னிருள்முகிலும் ஏறுண்ணு மென்னும் படியாற் பகடொன்று மீட்டு - வடிவேல் எறிந்தார்த்தார் மள்ளர் இமையாத கண்கொண் டறிந்தார்த்தார் வானோரு மாங்கு. இது, களிறெறிந் தெதிர்ந்தோர் பாடு. பகடு - யானை. 9. ஆளுங் குரிசி லுவகைக் களவென்னாம் கேளன்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி ஆடினார் ஆர்த்தார் அடிதோய்ந்த மண்வாங்கிச் சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து. இது, வாளோராடும் அமலை. 10. பருந்தருந் துற்ற தானையொடு செருமுனிந்து மறத்தின் மண்டிய விறற்போர் வேந்தர் தாமாய்ந் தனரே, குடைதுளங் கினவே, உரைசால் சிறப்பின் முரசொழிந் தனவே, பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம் இடங்கெட ஈண்டிய வியன்கட் பாசறைக் களங்கொளற் குரியோ ரின்றித் தெறுவர உடன்வீழ்ந் தன்றா லமரே. (புறம் - 62) இது, தொகைநிலை. 11. மறங்கெழு வேந்தன் குறங்கறுத் திட்டபின் அருமறை யாசா னொருமகன் வெகுண்டு பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமொடு தந்தையைத் தலையற எறிந்தவ னிவனெனத் துஞ்சிடத் தெழீஇக் குஞ்சி பற்றி வடாது பாஞ்சாலன் நெடுமுதற் புதல்வனைக் கழுத்தெழுத் திருகிப் பறித்த காலைக் கோயிற் கம்பலை ஊர்முழு துணர்த்தலின் தம்பியர் மூவரும் ஐம்பான் மருகரும் உடன்சமர் தொடங்கி ஒருங்குகளத் தவிய வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யாள்வினைக் கின்றோ ரினிப்பிற ரில்லென. (பெரு - பாரதம்) இது, நல்லிசை நிலை. குறுக்கு - தொடை. ஆசான் மகன் - அசுவத்தாமன். 12. அறத்திற் பிறழ அரசெறியுந் தானை மறத்திற் புறங்கண்டு மாறான் - குறைத்தடுக்கிச் செல்லுங்காற் காட்டுத்தீச் சென்றாங்கு தோன்றுமே பல்படையார் பட்ட படி. இது, ஒள்வாள் வீசிய நூழில். நூழிலும் உளப்பட - நூழிலோடு, புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே - பொருந்தித் தோன்றும் பன்னிரு துறையினையுடைத்துத் தும்பைத்திணை என்றவாறு. இன்னும், உளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்து எனக் கூட்டி, முற்கூறிய வெட்சி முதலிய திணைகட்கும் உரியவாய்ப் பொருந்தித் தோன்றும் பன்னிரு துறையினை யுடைத்துத் தும்பைத் திணை எனவும் கொள்க. அதாவது, வெட்சித்திணைக்கும், வஞ்சித் திணைக்கும், அகத்துழிஞையோன் வெளிப்போந்து களம் வகுத்துப் போர் செய்யின் உழிஞைத் திணைக்கும் இப்பன்னிரு துறைகளும் உண்டு என்பதாம். 1. வெட்சிப் புறத்துத் தும்பை : நிரை கொண்டோனும் நிரைக்குடையோனும் களங்குறித்துப் போர் செய்தல். 2. வஞ்சிப்புறத்துத் தும்பை : பெரும் புண்பட்ட வீரரைப் பார்த்துப் பொறாமை தோன்ற இருவரும் பொருதல். 3. உழிஞைப்புறத்துத் தும்பை : படைத்துணை வர அகத்தோன் புறம்போந்து களங்குறிக்க, புறத்தோனுங் களங்குறித்துப் பொருதல். மற்றைத் திணைத்துறைகள் போல, ஒருவர் துறை நிகழ்ந்து மற்றொருவர் துறை நிகழாது, தும்பைத்திணைத் துறைகள், பன்னிரண்டு இருவர் படைக்கும் பொருந்த ஒரு காலத்து ஒருங்கு நிகழுமென்க. (19) 7. வாகைத்திணை 282. தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்த லென்ப. இ - ள் : தாவில் கொள்கை - குறையாத முயற்சியை யுடைய, தம்தம் கூற்றை - ஒவ்வொருவருடைய தொழில்களையும், ஒழுக்கத்தையும், பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப - பல கூறுபடச் சிறப்பித்துக் கூறுதல் வாகைத்திணை யென்று கூறுவர் புலவர் என்றவாறு. கொள்கையை யுடையோர் கூற்றை மிகுதிப்படுத்தலென்க. கொள்கை - கொண்டதை விடாமற் செய்யும் முயற்சிக் காயிற்று. தொழிலையும் ஒழுக்கத்தையும் சிறப்பித்தல் அவற்றின் வெற்றியையே யாகலின், வாகை என்பது வெற்றியாயிற்று. (20) 1. வாகைச் சிறப்பு 283. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் பாலறி மரபிற் பொருநர் கண்ணும் அனைநிலை வகையோ டாங்கெழு வகையில் தொகைநிலை பெற்ற தென்மனார் புலவர். மேல் (20) ‘பாகுபட மிகுதிப் படுத்தல்’ என்றார். அதன் வகை கூறுகின்றார் இதில். இ - ள் : 1. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கம் - பார்ப்பனருடைய அறுவகைத் தொழில்கள்; அறுவகைத் தொழில்களையும் ‘பாகுபட மிகுதிப்படுத்தல்’ - சிறப்பித்துக் கூறுதல் - என, மேல வற்றோடு (20) கூட்டுக. மற்றவற்றோடும் இவ்வாறே கூட்டுக. பார்ப்பனரின் அறுவகைத் தொழிலாவன 1. காமநிலை யுரைத்தல் 2. தேர்நிலை யுரைத்தல் 3. கிழவோன் குறிப்பெடுத் துரைத்தல் 4. ஆவொடு பட்ட நிமித்தங்கூறல் 5. செலவுறுகிளவி 6. செலவழுங்கு வித்தல் - என்பன (பொது - 41). இவற்றின் பொருளை : ஆங்குக் காண்க. இவ்வறு தொழிலே இவர்க்குச் சிறந்த தொழில்களாகும். ‘சிறப்பில்லனவற்றை அன்ன பிறவும்’ (பொது - 41) எனக் கூறினார். ‘இவையெல்லாம் தலைச்சங்கத்தாரும் இடைச் சங்கத்தாரும் செய்த பாடலுட் பயின்ற போலும்; இக்காலத்தில் இலக்கியமின்று’ (கற் - 36 - நச்) என்பதால், கடைச்சங்க காலத்திற்கு முன்னரே பார்ப்பனத் தொழிலைச் சிறப்பித்துப் பாடும் வழக்கம் ஒழிந்து விட்டது போலும். 2. ஐவகை மரபின் அரசர் பக்கம் - அரசருடைய ஐவகைத் தொழில்கள். அவை, 1. ஓதல் 4. குடிகாத்தல் 2. ஈதல் 5. செங்கோன்மை 3. படைக்கலம் பயிறல் என்பன. 3. இருமூன்று மரபின் ஏனோர் பக்கம் - வணிகர் வேளாளர் களுடைய அறுவகைத் தொழில்கள். 1. வணிகரின் அறுவகைத் தொழில்களாவன: 1. ஓதல் 4. விருந்தோம்பல் 2. ஈதல் 5. நிரைகாத்தல் 3. உதவி 6. வாணிகம் என்பன. 2. வேளாளரின் அறுவகைத் தொழில்களாவன: 1. ஓதல் 4. விருந்தோம்மல் 2. ஈதல் 5. நிரைகாத்தல் 3. உதவி 6. உழவு என்பன. ஓதலும், ஈதலும் எல்லோர்க்கும் உரிய பொதுத் தொழில் களாகும். எடுத்த காரியத்தை முடிக்க இயலாதவர்க்கு உதவுதலும் எல்லார்க்கும் ஒத்த கடமையேயாகும். அரசரின் காவலில் உதவி யடங்கும். விருந்தோம்பலிற் சுற்றந்தழுவல் அடங்கும். ஆடு மாட்டு வாணிகம் செய்தலால் நிரைகாத்தல் வணிகர்க் குரியதாயிற்று. அரசர், வணிகர், வேளாளர் தொழிலுக்கு இலக்கியம் திருக்குறளிற் காண்க. 4. அறிவர்: மூவகைக் காலமும் மறுவில் செய்தி இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூன்று காலத்தினும் தவறில்லாத ஒழுக லாற்றினை, நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் - முறையோடு செய்யும் அறிவரது சிறப்பும். முக்காலத்தும் தவறுதலில்லாத நல் லொழுக்கமென்க. முக்காலத்திற்கும் ஒத்த நன்மை தீமைகளை ஆராய்ந்தறிந்து, அவற்றை எடுத்துக் கூறி மக்களை நன்னெறிக் கண் நிறுத்துதல் அறிவர் தொழிலாகும் (பொது - 38). பொதுவியல் - 38, 39, 40, 26 நூற்பாக்களிற் கூறப்படும் அறிவரே இவராவர். பொது - 38 இல் கூறிய தொழிலையே சிறப்பித்துக் கூறுதலாம். தமிழகத்தி லிருந்த பதினெண் சித்தர்களே அறிவராவர். சித்தர் - அறிவர். தேயம் - இடம். பழந்தமிழ் அறிவர் வழியைப் பின்பற்றியவரே இவர்கள். காட்டு: வாய்மை வாழ்ந, மூதறி வாள, நீயே யொருதனித் தோன்றல் உறைபதி யாருமி லொருசிறை யானே தேரின் அவ்வழி வந்தநின் உணர்வுமுதற் றங்கும் தொன்னெறி மரபின மூவகை நின்றன காலமு நின்னொடு வேறென யாரோஒ பெருமநிற் றேர்கு வோரே. எனக் காண்க. ஒரு சிறை - ஒரு பக்கம். 5. தாபதர்: நாலிரு வழக்கில் தாபதர் பக்கம் - எண்வகை மனவொருக்கம் புரியும் தவத்தினர் சிறப்பும். தாபதர் - துறவியர். இவரே நாற்பாலரில் ஒருவராய அந்தணர் ஆவர். அந்தணரைப் பற்றி, கற் - 35. பொது - 1, 2, 3, 5 அகத் - 24 சூத்திரங்களிற் காண்க. திருக்குறளிற் கூறப்படும் - நீத்தார் இவரே. தாபதர் - தவத்தோர், துறவிகள். தாபதம் - நோன்பு. தாபதர் - நோன்பு நோற்பவர். நோன்பாவது - புலனடக்கம், ஊறு செய்வார்க்கும் தீங்கு செய்யாமற் பொறுத்தல் முதலியன. திருக்குறள் ‘தவம்’ என்னும் அதிகாரம் பார்க்க. ஒருக்கம் - யோகம். பொது நலஞ் செய்வோரும், தவஞ் செய்வோரும் என அந்தணர் இரு வகையினராவர். தாபதர் பொது நலமுங் செய்வர். பொது நலஞ் செய்வோர் தவமுஞ் செய்வர். மிகுதிபற்றித் ‘தாபதப் பக்கம்’ என்றார். எண்வகை ஒருக்கமாவன: 1. அடக்கம் 5. தொகை நிலை 2. நோன்பு 6. பொறை நிலை 3. இருக்கை 7. நினைத்தல் 4. வளிநிலை 8. கலத்தல் - என்பன. இவற்றின் விரிவை ஒருக்க நூலிற் காண்க. 6. பொருநர் : மரபில் பால் அறி பொருநர் கண்ணும் - முறையோடு போர்த்தொழிலின் கூறுபாட்டை அறிந்த மறவரிடத்தும். அதாவது, மறவரின் போர்த் திறனைச் சிறப்பித்துக் கூறுதலாம். மறவர் - வீரர். இலக்கியம் - தும்பை முதலிய திணைகளிலும், திருக்குறள் - படைச் செருக்கினுங் காண்க. 7. அனை நிலை வகை - அவ்வாறே அவ்வறுவர் கீழிருந்து அத்தொழில்களைப் பயில்வோர் கூறுபாடு. அவர்கள் பயிற்சியைச் சிறப்பித்துக் கூறுதலென்க. இது, மாணாக்கர் சிறப்புக் கூறுதல். அது, 1. பார்ப்பனர் கீழிருந்து பார்ப்பனத் தொழில் பயிலுதற் சிறப்பும், 2. அரசர் கீழ் இளவரசராயிருந்து அரசியற்றொழில் பயிலுதற் சிறப்பும், 3. வணிகர் கீழிருந்து வாணிகத் தொழில் பயிலுதற் சிறப்பும், 4. வேளாளர் கீழிருந்து உழவுத் தொழில் பயிலுதற் சிறப்பும், 5. அறிவர் கீழிருந்து அவர் தொழில் பயிலுதற் சிறப்பும், 6. தாபதர் கீழிருந்து தவத் தொழில் பயிலுதற் சிறப்பும், 7. பொருநர் கீழிருந்து போர்த் தொழில் பயிலுதற் சிறப்பும் கூறுதலாம். இதனால், பார்ப்பனர் முதலிய எழுவர்க்கும் ஓதுவித்தற்றொழில் உரித்தாதலும் கொள்க. அனைநிலை வகையோடு ஆங்கு எழுவகையில் தொகை நிலை பெற்றது என்மனார் புலவர் - அப்பயிற்சி நிலையோடு முற்கூறிய ஆறுமாக எழுவகையில் தொகை பெற்றது வாகைத் திணை என்று கூறுவர் புலவர் என்றவாறு. உம்மை கூட்டுக. வணிகர் வேளாளரை, ‘இரு மூன்று மரபின் ஏனோர்’ என ஒன்றாகக் கூறினமைக் கேற்ப, ‘ஆங்கு ஏழுவகையில் எனத் தொகை கூறினார். வணிகர் வேளாளரை வெவ்வேறாகக் கொண்டு, ஆங்கு எண்வகையில் தொகைநிலை பெற்றதாகக் கொள்க. பார்ப்பனர் முதலிய எழுவர் தொழிலையும், அவ்வெழுவர் கீழிருந்து அவ்வத் தொழில் பயிலுவோர் எழுவர் தொழிலையும் சிறப்பித்துக் கூறுதல் வாகைத்திணையாம் எனக் கொள்க. (21) 2. வாகைப் பொது - மறமும் அறமும் 284. கூதிர் வேனில் என்றிரு பாசறைக் காதலி னொன்றிக் கண்ணிய மரபினும் ஏரோர் களவழி யன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும், தேரோர் வென்ற கோமான் முன்றேர்க் குரவையும் ஒன்றிய மரபிற் பின்றேர்க் குரவையும், பெரும்பகை தாங்கும் வேலி னானும் அரும்பகை தாங்கும் ஆற்ற லானும் புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும் ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி யானும் ஒல்லா ரிடவயிற் புல்லிய பாங்கினும் பகட்டி னானும் மாவி னானும் துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமும் கட்டில் நீத்த பாலி னானும் எட்டுவகை நுதலிய அவையைத் தானும், கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை யானும் இடையில் வண்புகழ்க் கொடைமை யானும், பிழைத்தோர்த் தாங்குங் காவ லானும், பொருளொடு புணர்ந்த பக்கத் தானும், அருளொடு புணர்ந்த அகற்சி யானும், காம நீத்த பாலி னானுமென் றிருபாற் பட்ட ஒன்பதிற்றுத் துறைத்தே. இது, வாகைத்திணைப் பொதுவான மறவென்றியும் அறவென்றியுங் கூறுகின்றது. மறத்துறை - 9 1. பாசறைவென்றி 6. அரும்பகை தாங்கும் ஆற்றல் 2. களவழி வென்றி 7. வல்லாண் பக்கம் 3. முன்றேர்க் குரவை 8. அவிப் பலி 4. பின்றேர்க் குரவை 9. ஒல்லா ரிடவயிற் புல்லிய பாங்கு 5. பெரும்பகை தாங்கும் வேல் அறத்துறை - 9 10. பகட்டினானும் 14. இடையில் வண்புகழ்க் மாவினானும் துகட்டபு கொடைமை சிறப்பிற் சான்றோர் பக்கம் 11. கட்டில் நீத்த பால் 15. பிழைத்தோர்த் தாங்கும் காவல் 12. எட்டுவகை நுதலிய 16. பொருளொடு புணர்ந்த அவையம் பக்கம் 13. கட்டமை ஒழுக்கத்துக் 17. அருளொடு புணர்ந்த அகற்சி கண்ணுமை 18. காம நீத்த பால் மறத்துறை - 1 - 9 இ - ள் : 1. கூதிர்ப் பாசறை, வேனிற் பாசறை : கூதிர் வேனில் என்று இரு பாசறை - கூதிர்ப்பாசறை, வேனிற் பாசறை என்னும் இரு பாசறைக் கண்ணும், காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும் - விருப்பத்தோடு பொருந்திய மனத்தனாகி. ஆண்டு நிகழ்த்தும் போர்த் தொழில் கருதிய இலக்கணத்தானும், போரை விரும்பி இரு பாசறைக் கண்ணும் தங்கியிருக்கும் வென்றி யென்க. காதல் - விருப்பம். கண்ணிய - கருதிய. தலைவன், தலைவிமேற் காதலின்றிப் போர்த் தொழிலின் மேற் காதலுடையனாய்த் தட்பவெப்ப மிகுந்த அக்காலங்களிற் பிரிந்திருப்ப தருமையாகலான், வென்றியாயிற்று. ஓராண்டு போர்த் தொழிலி லீடுபட்டுப் பாசறைக்கண் இருப்பினும், ஏனைப் பனிமுதலிய காலங்களின் பெயர் பெறாது கூதிர், வேனில் என இரண்டாகவே அடக்குதல் மரபென்க. புணர்ச்சிக் காலமாகிய கூதிரினும், நீராடல், காவாடல் முதலிய இன்புறுங் காலமாகிய வேனிலினும் தலைவியைப் பிரிந்திருப்பதால் வென்றியாயிற்று. இது கருதியே அவ்விரு காலத்தாற் பெயர் கொடுத்ததும். 2. ஏரோர் களவழித் தேரோர் தோற்றிய வென்றியன்றி - வேளாளர் களத்துச் செய்யுஞ் செய்கைகளைத் தேரேறிவந்த கிணைப்பொருநர் முதலியோர் நெல்லடிக்கும் களத்தே தோற்று வித்த வென்றி அல்லாமல், களவழித் தேரோர் தோற்றிய வென்றியும் - அரசர் செய்யும் போர்க்களச் செய்கைகளைத் தேரேறி வந்த புலவர் தோற்றுவித்த வென்றியும்; ‘தேரோர் தோற்றிய’ என்பதை ஈரிடத்தும் கூட்டுக. கிணை - ஒருவகைப்பறை. வேளாளர் களத்தில் நெற்கதிரையடித்துப் பரிசிலர்க்குக் கொடுப்பதுபோல, அரசன் போரை முடித்து எஞ்சிய பகைவரது யானை குதிரை முதலியவற்றைப் பரிசிலர்க்குக் கொடுப்பா னென்பதாம். ஏர்க்களம் பாடுதல், போர்க்களம் பாடுதல் எனக் களம் பாடுதல் இருவகைப்படும். ஏர்க்களத்தைப் பொருநர், பாணர் முதலியோர் பாடுவர். போர்க்களத்தைப் புலவர் பாடுவர். இங்கு ஏர்க்களவழிவை உவமையாக்கிப் போர்க்களவழியைச் சிறப்பித்தா ரென்க. ஏரின் சிறப்பை - ஏரெழுபதிற் காண்க. பொய்கையார் செய்த களவழி நாற்பது போர்க் களவழிக்கு இலக்கியமாகும். களவழி - போர் வென்றி. 3. தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவை - தேர்வேந்தர் பலரையும் வென்ற வேந்தன், அவ்வெற்றிக் களிப்பாலே தேர்த் தட்டின்கண் போர்வீரரோடு கைபிணைத்துக் குரவையாடுவான். குரவை - பலர் கைகோத்தாடுதல். சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் காண்க. 4. ஒன்றிய மரபின் பின்தேர்க் குரவை. பொருந்திய முறையானே தேரின் பின்னே வீரர்கள் குரவைக் கூத்தாடுவர். மகளி ராடுங் குரவையை வென்றிக் களிப்பால் வேந்தனும் மறவரும் ஆடுதலான் இவை வென்றியாயின. 5. வேல் வென்றி: பெரும்பகை தாங்கும் வேலினானும் - பெரிய பகைவரை அஞ்சுவித்துத் தடுக்கும் வேற்றொழில் வன்மையும். இவனது வேற்றொழில் வன்மையைக் கண்டு பகைவர் அணுகுதற் கஞ்சி நீங்கலாம். தாங்குதல் - தாக்குதல். 6. மறவென்றி: அரும்பகை தாங்கும் ஆற்றலானும் - வெல்லுதற்கரிய பெரும்பகைவர்களை மதியாது எதி ரேற்றுக் கொள்ளும் ஆற்றலும். பகைவர்க் கஞ்சாது ஒருவனாகச் சென்றெதிர்த்தலின், மறவென்றியாயிற்று. 7. மனவென்றி : வாழ்க்கை புல்லா வல்லாண் பக்கமும் - உயிர் வாழ்க்கையைப் பொருட்படுத்தாத வலிய ஆண்மையும். இது, நில்லா உயிர் வாழ்க்கையை விரும்பாது (மதியாது) நிலையான வீரப்புகழை விரும்புதலின் மனவென்றி யாயிற்று. 8. அவிப்பலி : ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணி - பகைவர் நாணும்படியாக, பெரியோரால் நன்கு மதித்தலைக் கருதி, சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து - ‘இன்னது செய்யேனாயின் இன்னது செய்வேன் எனத் தான் கூறிய இரண்டில் ஒன்றனோடு பொருந்தி’ தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியானும் - தனது சிறந்த உயிரைத் தீக்கிரையாக்கிய அவிப்பலியும்; அதாவது, ‘நான் இன்ன நேரத்திற்குள் இப்படையை வெல்லா விட்டால் தீயில் விழுந்து இறப்பேன்’ என வஞ்சினங்கூறிப் பொருத வீரன், அக்காலத்திற்குள் வெல்ல முடியாது போகவே, தான் சொல்லியபடி நெருப்பு மூட்டி அதில் விழுந்திறத்தலாம். ஒன்று - தீக்குளிப்பேன் என்றது. ஒல்லார் - பகைவர். இது, சொன்ன சொற்றப்பாத சொல்வென்றி யென்க. ஆவிப்பலி என்பது, அவிப்பலி என முதற்குறுகி நின்றது. ஆவி - உயிர். 9. தகைவென்றி: ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கினும் - பகைவரேனும், அவர் சுற்றத்தாரேனும் வந்து வேண்டிய உதவியை இயைந்து செய்தலும்; சிறந்த படையேவாமை முதலிய உதவி வேண்டினும் அதற்கு உடன் படுதலாம். புல்லுதல் - பொருந்துதல், இசைதல். பகைவர் கருத்தொடு பொருந்துதலென்க. காட்டு: 1. மூதில்வாய்த் தங்கிய முல்லைசால் கற்புடைய மாதர்பாற் பெற்ற வலியளவோ - கூதிரின் வெங்கண் விறல்வேந்தன் பாசறையுள் வேனிலான் ஐங்கணை தோற்ற அளவு. (புறத்திரட்டு - பாசறை - 1271) இது, கூதிர்ப் பாசறை. காவுங் குளமுங் கலந்தாடுங் காலத்தே யாவு மறந்தாங் கினிதிருந்தான் - பாவை வெருவுறுத்து வேலான் வியன்பா சறையுள் அருகிருத்தல் போல அவன். இது, வேனிற் பாசறை. காவும் குளமும் ஆடுங்காலம் அதுவாதலறிக. 2. இரும்புமுகஞ் செறித்த ஏந்தெழில் மருப்பிற் கருங்கை யானை கொண்மூ வாக நீள்மொழி மறவர் எறிவன ருயர்த்த வாள்மின் னாக வயங்குகடிப் படைந்த குருதிப் பலிய முரசுமுழக் காக அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசுவளி யாக விசைப்புறு வல்வில் வீங்குநா ணுதைத்த கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை ஈரச் செருவில் தேரே ராக விடியல் புக்கு நெடிய நீட்டிநின் செருப்படை மிளிர்த்த திருத்துறு செஞ்சால் பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ் பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப் பாடுநர்க் கிருந்த பீடுடை யாள. (புறம் - 399) இது, போர்க்களவழி. களவழி நாற்பதுங் கொள்க. 3. சூடிய பொன்முடியும் பூணு மொளிதுளங்க ஆடிய கூத்தரின்வேந் தாடினான் - வீடிக் குறையாடல் கண்டுவந்து கொற்றப்போர் வாய்த்த இறையாட ஆடாதார் யார். இது, முன்றேர்க் குரவை. 4. வென்று களங்கொண்ட வேந்தன் கொடித்தேர்ப்பின் கொன்று களங்கொண்ட கோல்மறவர் - ஒன்றுகுழீஇ உண்டாடு நாள்போல் உரவோன் பெரும்புகழைக் கொண்டாடி னார்குரவைக் கூத்து. இது, பின்றேர்க் குரவை. 5. குன்று துகளாக்குங் கூர்ங்கணையான் வேலெறிந் தன்று திருநெடுமா லாடினான் - என்றும் பனிச்சென்று மூளாத பல்கதிரோன் சேயோ டினிச்சென் றமர்பொரா யென்று. (பெ - பாரதம்) இது, வேல்வென்றி. 6. எருது காலுறா திளைஞர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் பசித்த பாணர் உண்டுகடை தப்பலின் ஒக்க லொற்கஞ் சொலியத் தன்னூர்ச் சிறுபுல் லாளர் முகத்தவை கூறி வரகுகட னீர்க்கும் நெடுந்தகை அரசுவரிற் றாங்கும் வல்லா ளன்னே. (புறம் - 327) இது, அரும்பகை தாங்கும் ஆற்றல். மறவென்றி 7. கலிவர லூழியின் வாழ்க்கை கடிந்து மலிபுகழ் வேண்டு மனத்தர் - ஒலிகடல்சூழ் மண்ணகலம் வேண்டாது வான்வேண்டி யீண்டினார் புண்ணகலாப் போர்க்களத்துப் போந்து. (புறத்திரட்டு - 1346) இது, வல்லாண்பக்கம். மனவென்றி. 8. எம்பியை வீட்டுதல் எம்மனைக்கா யான்படுதல் வெம்பகல்முன் யான்விளைப்ப னென்றெழுந்தான் - தம்பி புறவோரிற் பாணிப்பப் பொங்கெரிவாய் வீழ்ந்தான் அறவோன் மறமிருந்த வாறு. (பெ - பாரதம்) இது, அவிப்பலி. இழைத்த திகவாமற் சாவாரை யாரே பிழைத்த தொருக்கிற் பவர். (குறள்) இதுவுமது. 9. இந்திரன் மைந்த னுயிர்வேட் டிரந்திரவி மைந்தனை வெல்வான் வரங்கொண்டான் - தந்தநாள் ஏந்திலைவேல் மன்னனே யன்றி யிதற்குவந்த வேந்தனும் பெற்றான் மிகை. (பெ - பாரதம்) இது, ஒல்லாரிடவயிற் புல்லிய பாங்கு; தகைவென்றி. இந்திரன்மைந்த - அர்ச்சுனன். இரவிமைந்தன் - கன்னன். அறத்துறை - 10 - 18 இ - ள் : 10. சான்றோர் பக்கம் : பகட்டினானும் மாவினானும் துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும் - எருதும் எருமையு மாகிய பகட்டினையும், யானையும் குதிரையும் ஆகிய மாவினையும் ஆளும் குற்றமற்ற சிறப்பினை யுடைய பெரியோர் திறனும்; பகட்டினால் உழவஞ்சாமையும், மாவினால் போரஞ்சாமையுமாகிய வென்றி கூறினார். இது, ஏர்வென்றியும் போர்வென்றியும் கூறியவாறு. அவை, அவற்றைக் கொண்டு செலுத்துவோர் வென்றியாயிற்று. 11. அரசவென்றி: கட்டில் நீத்த பாலினானும் - அரசன் அரசுரிமையைத் துறந்த வெற்றியும்; நிலையாமையை யெண்ணி அரசை இளவரசுக் கீந்து அரசன் துற வெய்துவனென்க. 12. அவையவென்றி: எட்டுவகை நுதலிய அவையத்தானும் - எண்வகைக் குணமுள்ள அவையத்தார் சிறப்பும்; இவர் குண வென்றியைக் கூறுதலாம். எண்குணமாவன 1. குடிப்பிறப்பு 5. தூய்மை 2. கல்வி 6. நடுவுநிலைமை 3. ஒழுக்கம் 7. அழுக்காறின்மை 4. வாய்மை 8. அவாவின்மை என்பன. குடிப்பிறப்பு - முன்னோர் நற்கருத்துப் போற்றுதல். அவை - முறைமன்றம். அவையத்தார் - நடுவர், அமைச்சர் முதலியோர். இவ்வெண்குணங்கட்கும் இலக்கியம் திருக்குறளிற் காண்க. 13. ஒழுக்கவென்றி: கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும் - ஐம்பொறி யடக்கத்தோடு கூடிய ஒழுக்கக் காட்சியும்; ஐம்பொறி யடக்கி ஒழுக்கத்தில் வெற்றி பெறுதலாம். அவ்வொழுக்கமாவன : இல்லறத்தார்க்குக் கூறிய அடக்க முடைமை, புறங்கூறாமை முதலியனவாம். திருக்குறளிற் காண்க. கட்டமை - அடக்கம். கண்ணுமை - காட்சி. 14. கொடைவென்றி: இடையில் வண்புகழ்க் கொடைமை யானும் - இடையறாத நிறைந்த புகழ்பயக்கும் கொடைவென்றியும்; வண்புகழ் - வளனுடைய புகழ். மிக்க புகழ் பெற்றோர், மூப்புப் பிணி சாக்காட்டுக்கு அஞ்சாமையின் வாகையாயிற்று. இலக்கியம் திருக்குறள் - ‘ஈகை’ என்னும் அதிகாரத்திற் காண்க. 15. பொறை வென்றி: பிழைத்தோர்த் தாங்கும் காவலானும் - தமக்குத் தீங்கு செய்தோரைப் பொறுத்துப் பாதுகாக்கும் பொறை வென்றியும்; இது, தமக்குத் தீங்கு செய்தார்க்குத் தாமும் தீங்கு செய்யாமற் பொறுப்பதால், தீங்கு செய்தோர்க்குப் பாது காப்பாயிற்று. இலக்கியம், திருக்குறள் - ‘பொறையுடைமை’ என்னும் அதிகாரத்திற் காண்க. 16. பொருள் வென்றி:பபொருளொடு புணர்ந்த பக்கத் தானும் - மிக்க பொருளுடையராதலும்; பொருளாவன: அரசர்க் குரிய படை குடி சூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்; மக்கட்பேறு முதலியனவு மாம். இப்பொருள் வளத்தை மிகுத்துக் கூறுதலாம். மிக்க பொரு ளுடைமையால், பொருள் வென்றியாற்று. இலக்கியம், திருக்குறளில் அவ்வவ்வதிகாரங்களிற் காண்க. 17. அருள்வென்றி: அருளொடு புணர்ந்த அகற்சியானும் - பிற வுயிர்களிடத்து வைத்த அருளால் தம்மைக் காவாத துறவுள்ளமும்; அதாவது, பிறவுயிர்க்கு ஓர் இடர் வந்துழித் தம்முயிர் கொடுத்துக் காத்தலும், அதன் வருத்தத்தைத் தமதாகக் கொண்டு வருந்துதலுமாம். இவ்வருளே துறவுக்குக் காரணமென்க. அகற்சி - அகலுதல், துறத்தல். இலக்கியம் - திருக்குறள் - ‘அருளுடைமை’ என்னும் அதிகாரத்திற் காண்க. 18. துறவுவென்றி: காமம் நீத்த பாலினானும் - அத்துறவுள் ளத்தால் எப்பொருளினும் பற்றற்று நிற்கும் நிலையும். காமம் - பொருள். ‘நெடுங்காமம் முற்பயக்கம் சின்னீர இன்பத்தின்’ (நீதிநெறி வி.) எனக் காண்க. 10 - 18 ஆகிய ஒன்பதினும் இல்லறத்தார் கடமையும் துறவறத்தார் கடமையும் கூறுதல் காண்க. காட்டு 10. யானை நிரையுடைய தேரோ ரினுஞ்சிறந்த ஏனை நிரையுடை ஏர்வாழ்நர் - யானைப் படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டேர் உடையோர்க் கரசரோ வொப்பு. (புறத்திரட்டு - 1159) இது, ஏர் வென்றி. 11. பரிதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம் ஒருபக லெழுவ ரெய்தி யற்றே, வையமும் தவமுந் தூக்கின் றவத்துக் கையவி யனைத்து மாற்றா தாதலின் கைவிட் டனரே காதல ரதனால் விட்டோரை விடாஅள் திருவே விடாஅ தோரிவள் விடப்பட் டோரே. (புறம் - 358) இது, கட்டில் நீத்த பால். தவத்துக்கு ஐயவி. ஐயவி - கடுகு. 12. குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மை வாய்மடுத்து மாந்தித் தூய்மையிற் காத லின்பத்துத் தூங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்கா றின்மை அவாஅ வின்மை யென இருபெரு நிதியமு மொருதா மீட்டும் தோலா நாவின் மேலோர் பேரவை. (புறத்திரட்டு - 827) இது, அவையவென்றி. இதனுள் எண்குணமும் வந்தமை காண்க. 13. இலக்கியம் - திருக்குறள் - இல்லறவியலிற் காண்க. 14. கேடில் நல்லிசை வயமான் றோன்றலைப் பாடி நின்றனெ னாகக் கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் நாடிழந் ததனினும் நனியின் னாதென வாள்தந் தனனே தலையெமக் கீயத் தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின் நாடுமலி யுவகையொடு வருகுவல் ஓடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே. (புறம் - 165) இது, கொடை வென்றி; குமணன் தலைகொடு செல்கென வாள் கொடுத்தது. 15. அகழ்வாரைத் தாங்கு நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (குறள்) இது, பொறை வென்றி. 16. படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும் உடையா னரசரு ளேறு. (குறள்) இது, அரசர் பொருள் வென்றி. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற. (குறள்) இது, மக்கட் பொருள். 17. தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல். (குறள்) இது, அருள் வென்றி. 18. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமங் கெடக்கெடும் நோய். (குறள்) இது, காமநீத்த பால். என்று இருபால் பட்ட ஒன்பதிற்றுத் துறைத்தே - என மறத்திற் கொன்பதும், அறத்திற் கொன்பதும் ஆக இரண்டு கூறுபட்ட ஒன்ப தாகிய பதினெட்டுத் துறையினை யுடைத்து வாகை என்றவாறு. ‘அறுவகைப் பட்ட’ (21) என்னும் சூத்திரம், வாகைத் திணைக் குரியோர் இவரென்பதூஉம், அவர்தம் தொழில் இவை யென்பதூஉங் கூறியது. இது, வாகைத் திணையின் துறை கூறியது. போர் வென்றி வாகை யென்பதூஉம் இதனாலமையும். (22) 8. காஞ்சித் திணை 285. பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும் நில்லா வுலகம் புல்லிய நெறித்தே. இ - ள்: பாங்கு அருஞ்சிறப்பின் - இணையில்லாத வாழ்க்கை யின்பம் ஏதுவாக, பல்லாற்றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே - பலவகையானும் நிலையில்லாத உலகியற்கையைப் பொருந்திய வழியை யுடைத்துக் காஞ்சித்திணை என்றவாறு. பாங்கு - ஒப்பு, இணை. மனவமைதியுடன் இனிது வாழும் வாழ்க்கை யின்பம் எல்லா வற்றினும் சிறந்ததாகையால் ‘சிறப்பு’ எனப்பட்டது. வாழ்க்கை யின்பம் - இன்ப வாழ்க்கை. பல்லாறாவன, அறம் பொரு ளின்பங்களும், அவற்றிற் கேதுவாய செல்வமும் இளமையும் யாக்கையுமாம். இவை நிலை யில்லாதன வென்றவாறு. காஞ்சி என்பது - நிலையாமை. செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என அந்நிலை யாமை மூன்று வகைப்படும். செல்வம், இளமை, யாக்கை என்னும் இவற்றானாய முறுகிய பற்றுள்ளம், இன்பவாழ்க்கைக் கேது வாகிய உலகியற் பொருளான அறம் பொருளின் பங்களை உள்ளபடி நுகர முடியாமற் செய்து வாழ்க்கையின்பத்தைக் கெடுத்து விடுமாகையால், அவற்றின் நிலையாமையை யுணர்ந் தாற்றான் அறம் பொருளின்பங்களைச் சரியானபடி அளவறிந்து நுகர்ந்து இன்ப வாழ்க்கை வாழ முடியுமென, அவற்றின் நிலையாமையைச் சான்றோர் கூறுவது காஞ்சித்திணை யாகும். இம்மூவகை நிலையாமை கட்கிலக்கியம் திருக்குறளிலும் நாலடியாரிலுங் காண்க. பல்வகை நிலையாமை பற்றி மாங்குடி மருதனார் செய்த மதுரைக் காஞ்சி இதற்கிலக்கிய மாகும். (23) 1. காஞ்சித்துறை 286. மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும் கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் பண்புற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியும் மறத்தி னானும் ஏமச் சுற்ற மின்றிப் புண்ணோற் பேஎ யோம்பிய பேஎய்ப் பக்கமும் இன்னனென் றிரங்கிய மன்னை யானும் இன்னது பிழைப்பி னிதுவா கியரெனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும் இன்னகை மனைவி பேஎய்ப் புண்ணோற் றுன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும் நீத்த கணவற் றீர்த்த வேலிற் பேஎத்த மனைவி ஆஞ்சி யானும் நிகழ்த்துமேல் வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பா டஞ்சிய மகட்பா லானும் முலையும் முகனுஞ் சேர்த்திக் கொண்டோன் தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ ஈரைந் தாகுமென்ப, பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் ஆய்ந்த பூசல் மயக்கத் தானும் தாமே யேங்கிய தாங்கரும் பையுளும் கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதா னந்தமும் நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து தனிமகள் புலம்பிய முதுபா லையும் கழிந்தோர் தேஎத் தழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் காதலி யிழந்த தபுதார நிலையும் காதல னிழந்த தாபத நிலையும் நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச் சொல்லிடை யிட்ட பாலை நிலையும் மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வன் பெயரத் தாய்தப வரூஉந் தலைப்பெயல் நிலையும் மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு நிறையருஞ் சிறப்பிற் றுறையிரண் டுடைத்தே. இது, ஆண்பாற்காஞ்சி, பெண்பாற் காஞ்சி எனக் காஞ்சித் திணைத்துறை இருகூறுபடு மென்கின்றது. ஆண்பாற் காஞ்சி - 10 1. பெருங்காஞ்சி 6. வஞ்சினக் காஞ்சி 2. முதுகாஞ்சி 7. தொடாக் காஞ்சி 3. மறக் காஞ்சி 8. ஆஞ்சிக் காஞ்சி 4. பேய்க் காஞ்சி 9. மகட்பாற் காஞ்சி 5. மன்னைக் காஞ்சி 10. தலையொடு முடிதல் பெண்பாற் காஞ்சி - 10 11. பூசல் மயக்கம் 16. தபுதார நிலை 12. தாங்கரும் பையுள் 17. தாபத நிலை 13. மூதானந்தம் 18. பாலை நிலை 14. முதுபாலை 19. தலைப்பெயல் நிலை 15. கையறு நிலை 20. காடு வாழ்த்து ஆண்பாற் காஞ்சி - 1 - 10 இ - ள் :1. மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமையும் - பிறரால் தடுத்தற்கரிய கூற்றம் வருமெனச் சான்றோர் சாற்றிய பெருங் காஞ்சியும்; கூற்றம் - உயிரும் உடம்பும் கூறுபடும் - பிரியும் - காலம். கூறு + அம் - கூற்றம். அக்காலத்தை - கூற்றம், கூற்றுவன் என்பது நூன்மரபு. காலன் என்பது மது. (திருக்குறள் குழந்தையுரை - முகவுரை பார்க்க.) இது, வெற்றியைக் கொற்றவை என்பது போன்றது. 2. கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் - இளமை கழிந்த முதியோர், அவ்விளமை கழியார்க்கு அவ்விளமை நிலையாமையைக் கூறும் முதுகாஞ்சியும்; முதுகாஞ்சி - இளமை நிலையாது, முதுமை வருமெனக் கூறுதல். கழிந்தோர் - முதியோர். ஒழிந்தோர் - இளையோர். வினையாலணையும் பெயர்கள். 3. பண்புற வரும் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியும் மறத்தினானும் - வாழ்க்கை நிலையாமைப் பகுதியை ஆராய்ந்தறிந்து, போரிற்பட்ட புண்ணைக் கிழித்துக் கொண்டு உயிர்விட்டுப் புகழ்கொள்ளும் மறக்காஞ்சியும்; போரிற்பட்ட புண்ணை ஆற்றிக்கொண்டு வாழினும் ஒருகால் இறக்க நேருமாகையால், அது காறும் காத்திராமற் புண்ணைக் கிழித்துக் கொண்டு உயிர் விடுதலாம். பண்பு - நிலையாமை. 4. ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோன் பேய் ஓம்பிய பேய்ப் பக்கமும் - இரவிற் காப்போரின்மையால் புண்பட்டவனைப் பேய் காக்கும் பேய்க்காஞ்சியும்; பேய் - அச்சமாதலால், நள்ளிரவிற் புண்பட்டுக் கிடப்போனை அச்சத்தினால் உயிருள்ளோனாக எண்ணி நரி முதலிய விலங்குகள் அணுகாவென்பதாம். பேய் - அச்சம். பேய் ஓம்பிய - அச்சமே நரி முதலியன அணுகாமற் பாதுகாத்த. அச்சக் காஞ்சி என்பது. ஏமம் - காவல். சுற்றத்தாரின்மை கூறலின் செல்வ நிலையாமை யாயிற்று. 5. இன்னன் என்று இரங்கிய மன்னை யானும் - ஒருவன் இறந்தபோது, ‘அவன் இத்தன்மையன்’ என்று இரங்கிக் கூறும் மன்னைக் காஞ்சியும்; இது, பல்வகைப்பட்ட நிலையாமை கூறி இரங்கலின் ‘மன்னை’ என வேறு பெயர் கொடுத்தார். இது, ‘மன்’ என்னும்சொற்பயின்றுவரும். 6. இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத் துன்னரும் சிறப்பின் வஞ்சினத்தானும் - நான் இன்னது செய்யத் தவறினால் இன்ன ஆவேன் எனக் கூறும் வஞ்சினக் காஞ்சியும்; அவிப்பலி (புறத் - 22 - 8) - உயிர்விடல். இது, ‘நான் அப்பகை வரை வெல்லாவிடின், என்னைக் கொடுங் கோலன் என்றுலகம் பழிக்க, என்னாட்டைப் புலவர் பாடாதொழிக’ எனக் கூறுதல். தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கூறுதல் காண்க (புறம் - 71 - 73). 7. புண்ணோன் பேய் துன்னுதல் கடிந்த இன்னகை மனைவி தொடாக் காஞ்சியும் - போரிற் புண்பட்டோனது உடம்பைப் பேய் தொடாதபடி அவன் மனைவி காத்துத் தானும் தீண்டாதிருக்கும் தொடாக் காஞ்சியும்; பேய்க் காஞ்சி - மனைவி முதலிய சுற்றமில்லாத நிலை. இது, நள்ளிரவில் இறந்த கணவன் உடம்பை மனைவி தொடுதற் காஞ்சித் தொடாதிருத்தலாம். அவ் வச்சத்தையே ‘பேய்’ என்றார். உளங்கலந்த மனைவியே தொடாநிலை எய்தினதால் அந்நிலையாமை ஆண்பாற்காயிற்று. 8. நீத்த கணவன் தீர்த்த வேலின் பேஎத்த மனைவி ஆஞ்சி யானும் - உயிர் நீத்த கணவனைத் தன் உறவினின்று நீக்கிய வேல் வடுவைக் கண்டு மனைவி அஞ்சும் ஆஞ்சிக் காஞ்சியும்; வேலின் - வேலுண்டாக்கிய புண்ணை. புண்ணைக் கண்டு பேத்த. பேத்த - அஞ்சிய, பே - அச்சம். கணவன் உடலிலுள்ள பல பெரும் புண்களைக் கண்டு மனைவி அஞ்சியதால், யாக்கை நிலையாமையாயிற்று. அஞ்சி என்பது, ஆஞ்சி எனத் திரிந்தது. 9. நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி மகள்பாடு அஞ்சிய மகட்பாலானும் - பெண் கொடுக்க மறுத்தமையால், வலிதிற் கோடற்கு வந்த அரசனோடு பழங்குடிப் பிறந்தோர் தம் மகளைச் சேர்த்தற்கு அஞ்சும் மகட்பாற் காஞ்சியும்; வலிதிற் கோடற்கு வந்த அரசனுக்குத் தம் மகளைக் கொடுக்க அஞ்சும் மகட்பாற் காஞ்சியென்க. வலிய எடுத்துச் செல்ல வந்த அரசனுக்குத் தன் மகளைக் கொடுத்தலை மறுத்து, அவனோடு போர் செய்தேனும் இறப்பதேயன்றி அவனுக்குக் கொடுக்கக் கூடாது என எண்ணுவதால், மகட்பாற்காஞ்சி யாயிற்று. மகளால் தன் நிலையாமை குறித்தது. 10. முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன் தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ - இறந்த கணவனது தலையைத் தன் முலையின் கண்ணும் முகத்தின் கண்ணும் சார்த்திக் கொண்டு அத்தலையால் அவள் இறக்கும் நிலையொடு தொகுத்து, ஈரைந்து ஆகும் என்ப - ஆண்பாற் காஞ்சி பத்து வகைப்படும் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. ஒடு - ஆனின்கண் வந்தது. சார்த்தல் - அணைத்தல். கணைவன் தலையே தானிறத்திற்குக் கருவியாக மனைவி இறக்குமென்பதாம். இது, உடனுயிர் நீத்தல். அவன் தலை யல்லது உடம்பினை அவள் பெறாமையின் அவன் யாக்கைக்கு நிலையின்மை எய்தலின் ஆண்பாற்காஞ்சி யாயிற்று. தொடாக்காஞ்சி முதலிய நான்கும் (7 - 10) பெண்பாலொடு பட்ட ஆண்பாற்காஞ்சியாகலின் ஈற்றில் வைத்தார். இவை பெண் பாற் கண்ணும் நிலையின்மையுடைய வாயினும், இரண்டிடத்துங் கூறிச் சூத்திரம் பல்காமல் ஆண்பாற்கண் சேர்த்துக் கூறினரென்க. காட்டு 1. பல்சான் றீரே பல்சான் றீரே, கயல்முள் ளன்ன நரைமுதிர் றிரைகவுள் பயனில் மூப்பிற் பல்சான் றீரே, கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன் பிணிக்குங் காலை இரங்குவிர் மாதோ, நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான் எல்லாரும் உவப்ப தன்றியும் நல்லாற்றுப் படூஉம் நெறியுமா ரதுவே. (புறம் - 195) இது, பெருங்காஞ்சி, கணிச்சிப் படையோன் - கூற்றம். திரை - சுருக்கம். கவுள் - கன்னம். சான்றீர் என்றது, இகழ்ச்சி. 2. இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற் செய்யுறு பாவைக்குக் கொய்பூத் தைஇ உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்த நீர்நணிப் படுகோ டேறிச் சீர்மிக நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணற் கொண்ட கல்லா விளமை அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ, தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற் றிருமிடை மிடைந்த சிலசொற் பெருமூ தாளரே மாகிய வெமக்கே. (புறம் - 243) இது, முதுகாஞ்சி. இளமை நிலையாமை கூறியவாறு காண்க. 3. பொருது வடுப்பட்ட யாக்கை நாணிக் கொன்று முகந்தேய்ந்த எஃகந் தாங்கிச் சென்று களம்புக்க தானை தன்னொடு முன்மலைந்து மடிந்த ஓடா விடலை நடுகல் நெடுநிலை நோக்கி யாங்குத்தன் புண்வாய் கிழித்தனன் புகழோன், அந்நிலைச் சென்றுழிச் செல்க மாதோ. இது, மறக்காஞ்சி. புண்கிழத்து முடிந்தோன் நடுகல்லைக் கண்டோர் கூறியது. 4. புண்ணனந்த ருற்றானைப் போற்றுவா ரின்மையிற் கண்ணனந்த ரில்லாப் பேய் காத்தனவே - உண்ணும் உளையோரி யுட்க உணர்வொடுசா யாத இளையோன் கிடந்த விடத்து. இது, பேய்க்காஞ்சி. அனந்தர் - துன்பம், தூக்கம். ஓரி - நரி. உட்குதல் - அஞ்சுதல். பேய் காத்தல் - அச்சங் காத்தல். 5. சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே, பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே, சிறுசோற் றானுநனிபல கலத்தல் மன்னே, என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயு மன்னே, அம்பொடு வேல்நிற்கும் வழியெல்லாம் தானிற்கு மன்னே. (புறம் - 235) இது, மன்னைக்காஞ்சி. இனி அவை கழிந்தன வென்றிரங்கியவாறு. 6. உறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்ககப் படேஎ னாயின் பொருந்திய என்னிழல் வாழ்நர் சென்னிழல் காணாது கொடியனெம் இறையெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலே னாகுக. (புறம் - 72) இது, வஞ்சினக் காஞ்சி. 7. நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக் காக்கம் வம்மோ காதலந் தோழி, வேந்துறு விழுமந் தாங்கிய பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே. (புறம் - 281) இது, தொடாக் காஞ்சி. ‘புண்ணைக் காப்போம் வா’ என்பதால், தொடாமை பெற்றாம். 8. இன்ப முடம்புகொண் டெய்துவிர் காண்மினோ அன்பி னுயிர்புரக்கும் ஆரணங்கு - தன்கணவன் அல்லாமை யுட்கொள்ளும் அச்சம் பயந்ததே புல்லார்வேல் மெய்சிதைத்த புண். (புறத்திரட்டு - 1404) இது, ஆஞ்சிக் காஞ்சி. உடம்பு கொண்டு இன்பம் எய்துவிர். 9. நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக் கடிய கூறும் வேந்தே, தந்தையும் நெடிய வல்லது பணிந்துமொழி யலனே, இஃதிவர் படிவ மாயின் வையெயிற் றரிமதர் மழைக்க ணம்மா வரிவை மரம்படு சிறுதீப் போல அணங்கா யினள்தான் பிறந்த வூர்க்கே. (புறம் - 349) இது, மகட்பாற் காஞ்சி. நெடுமொழி - வஞ்சினச் சொல். ‘மரத்திலுண்டாய தீ அம்மரத்தையே அழிப்பது போல, இவ்வூரிற் பிறந்தாள் இவ்வூரையே அழிக்கலானாள்’ எனவே, மகள் மறுத்துப் போர்தலைப்படுத லாயிற்று. 10. நிலையி லுயிரிழத்தற் கஞ்சிக் கணவன் தலையொழிய மெய்பெறாள் சாய்ந்தாள் - தலையினால் வண்ணம் படைத்தான் முழுமெய்யும் மற்றதன் உண்ணின்ற தன்றோ வுயிர். இது, தலையொடு முடிதல். மற்றதன் - தலையின். பெண்பாற் காஞ்சி - 11 - 20 11. பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் ஆய்ந்த பூசல் மயக்கத் தானும் - பெரும்புகழோடு இறந்தா னொருவனைச் சூழ்ந்த மகளிர் கூக்குர லிட்டழும் பூசல் மயக்கமும்; மகன் - ஆண்பால் குறித்து நின்றது. பூசல் - ஓசை. பூசல் மயக்கம் - பெண்டிர் பலர் கூடி அழும்போ தெழும் அழுகைக் குரலோசை. அழுகை யோசைப் பெருக்காம். ஆய்ந்த - நெருங்கிய. இசை - புகழ். மகளிர் பாடியழும் ஒப்பாரியை நினைவு கூர்க. 12. தாமே ஏங்கிய தாங்கரும் பையுளும் - அச்சுற்றமின்றி, மனைவியர் தாமே அழுவதைக் கண்டோர் கொள்ளும் பொறுத்தற் கரிய துன்பமும்; பையுள் - துன்பம். கண்டோர் இரங்கும்படி மனைவியர் துன்புறுவரென்பதாம். 13. கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும் - தன் கணவன் இறந்தவுடனே மனைவிதானும் உடனிறந்த செலவை நினைத்துக் கண்டோர் அதைப் பிறர்க்குக் கூறும் மூதானந்தமும்; உடனுயிர் நீத்ததைக் கண்டோர் பிறர்க்குக் கூறுவரென்க. ஆனந்தம் - சாக்காடு. பெருந் துன்பமும் இறத்தற் கேதுவாகலான் சாக்காடெனப் படுதலின் இது, மூதானந்தம் எனப்பட்டது. இது பிறர் கூறுதலான் தலையொடு முடிதலின் (10) வேறாயிற்று. இது, யாக்கை நிலையாமை. 14. நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபாலையும் - மிக்க வெப்பு நிலத்தே தன் கணவனை இழந்தவள் தன் தனிமையைக் கூறியழும் முதுபாலையும்; தன் தனிமையை அழுது வெளியிடுமென்க. பாலை - பிரிவு. முதுபாலை - பெரும்பிரிவு. ‘நனி மிகு சுரம்’ என, இருகால் மிகுத்து அதனருமை கூறவே, முதுவேனிற் றொடக்க மாயிற்று. இது, இன்பமும், செல்வமும் ஒருங்கு நிலையாமை. கணவனும் மனைவியும் வெளியூர் செல்லும்போது, அல்லது உடன்போக்கில் நேர்வதிது. 15. கழிந்தோர் தேத்து அழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் - கணவரொடு மனைவியரும் இறந்த விடத்து, அவரிடத் துண்டாகிய அழிவுப் பொருளை யெல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தி, ஆயத்தாரும் பரிசில் வாழ்நரும் விறலியரும் தாம் தனித்தமையால் வருந்திய செயலறு நிலையும்; அழிபடர் - அழிவுப் பொருளாலுண் டாகிய துன்பம். அழி - முதனிலைத் தொழிற்பெயர். அது தொழிலாகு பெயராய் அழிவுப் பொருளை யுணர்த்திற்று. உறீஇ - அறிவுறுத்தி. தேத்து - இடத்து. படர் - துன்பம். அழிவுப் பொருள்களாவன - தலைவி இறந்தமையால் புனல் விளையாட்டும், பொழில் விளையாட்டும் கெடுதல். இவற்றைப் பிறர்க்குக் கூறி வருந்துவரென்க. 16. காதலி இழந்த தபுதார நிலையும் - கணவன், மனைவியை இழந்து வருந்தும் தபுதார நிலையும்; தபுதல் - நீங்குதல். இது; யாக்கையும், இன்பமும் ஒருங்கு நிலையாமை. தன் காதலியை இழந்தபின் வழிமுறைத்தாரம் (இரண்டாந் தாரம்) வேண்டின் காஞ்சியாகாது. இதனால், நம் முன்னையோர் இன்றுபோல் வேண்டியவாறு பிள்ளைப் பேற்றுக்காகவும், புணர்ச்சிக்காகவும், செல்வப் பெருக் காலும் பலதாரம் கொள்ளும் வழக்கத்தைக் கைக்கொண்டிலர் என்பதும், பெரும்பாலோர் மகளிர் போலவே மனைவி இறந்தபின் தபுதார நோன்பு நோற்றுவந்தன ரென்பதும் விளங்குகிறது. இன்பமாகிய செல்வத்தை யிழத்தலின் பெண்பாற் காயிற்று. 17. காதலன் இழந்த தாபத நிலையும் - கணவனை இழந்த மனைவி தவம்புரிந் தொழுகும் தாபத நிலையும்; தாபதநிலை - தவம்புரியும் நிலை. அது - கைம்மை நோன்பு நோற்குதல். 18. நல்லோள் கணவனொடு நனி அழல் புகீஇச் சொல்லிடை இட்ட பாலை நிலையும் - கணவனை யிழந்தவள், தன் கணவனொடு தீப்புகுவதைத் தடுப்பாரை நோக்கிக் கூறும் பாலை நிலையும்; பாலை - புறங்காடு - இடுகாடும், சுடுகாடும். சுடுகாட்டில் கணவனொடு உடன்கட்டையேறச் செல்வத்தை விலக்கியோரை நோக்கி மறுத்துக் கூறித் தீப்புகுதலென்க. புறங்காட்டில் நிகழ்வதால், இது பாலை யாயிற்று. 19. மாய்பெறுஞ் சிறப்பில் புதல்வன் பெயரத் தாய்தப வரும் தலைப் பெயல் நிலையும் - புகழ் கெடுதலுக் கேதுவாகத் தன்மகன் புறங்கொடுத்தான் என்பதைக் கேட்ட தாய், தான் சாவதற்குச் சென்று மகனைக் கூடும் தலைப்பெயல் நிலையும்; அல்லது மகன் பிறர் சிறப்பு மாய்வதற்குக் காரணமாகிய பெருஞ் சிறப்பொடு மடிய அவனோடு தாய் இறந்து பட வருதலுமாம். தலைப் பெயல் - கூடுதல். தபுதல் - இறத்தல். 20. மலர்தலை உலகத்து மரபு நன்கு அறியப் பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு - இடமகன்ற உலகத்து வரலாற்று முறைமையினைப் பலரும் நன்றாக அறியும் படியாகப் பிறந்தோ ரெல்லாரும் இறந்து போகவும், நிலையாகவுள்ளள புறங்காட்டை வாழ்த்துதலோடு, தொகைஇ ஈரைந்து ஆகுமென்ப - தொகை பெற்றுப் பெண்பாற்காஞ்சி பத்து வகைப்படுமென்று சொல்லுவர் என்றவாறு. பிறந்தோர் இறந்துபோவ ரென்பதைக் காட்டுதற்கு அறிகுறியாக நிலையாக இருக்கும் புறங்காடென்க, அஃறிணைக் கண்ணுள்ள நிலையாமை காஞ்சியாகாது. காட்டு : 11 இரவலர் வம்மின் எனவிசைத்த லின்றிப் புரவலன் மாய்ந்துழியும் பொங்கும் - உரைமயங்க வேற்கண் ணியரழுத வெம்பூசல் கேட்டடங்கா தோற்கண்ண போலுந் துடி. (புறத்திரட்டு - 1437) இது பூசல் மயக்கம். 12. மழைகூர் பானாட் கழைபிணங் கடுக்கத்துப் புலிவழங் கதரிடைப் பாம்புதூங் கிறுவரை இருள்புக்குத் துணிந்த எண்குவரற் கல்லளை ஒருதனி வைகிய தனைத்தே, பெருவளத்து வேனின் மூதூர்ப் பூநாறு நறும்பகல் எழுதுசுவர் மாடத்துக் கிளையுடை யொருசிறை அவரின்று நிகழ்தரு முறவே, அதனால், அழுதுபனி கலுழ்ந்தவெங் கண்ணே, அவ்வழி நீர்நீந்து பாவை யசைவது நோக்கிச் சேணிடை யகன்ற துயிலே, அதுவினி அவருடைக் கனவோ டிவ்வழி யொருநாள் வாரா தாயினும் யாதாங் கொல்லோ, மெலிந்து மெலியுமென் யாக்கையிற் கழிந்த கழியுமென் ஆருயிர் நிலையே. இது, தாமே ஏங்கிய தாங்கரும் பையுள். கணவனில்லாத தனிமை, வீட்டினுள் சுற்றத்துடனிருக்கினும் விலங்கு வாழ் காட்டினுள் இருத்தல் போன்றதெனவும், தூக்கம் வரவில்லை எனவும், உயிர்கழியுமெனவும் ஏங்குதல் காண்க. 13. ஓருயி ராக வுணர்க வுடன்கலந்தார்க் கீருயி ரென்பர் இடைதெரியார் - போரில் விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கும் உடனே யுலர்ந்த துயிர். (பு - வெ - 10 - 23) இது, மூதானந்தம். 14. இளையரும் முதியரும் வேறுபுலம் படர எடுப்ப எழாஅய் மார்பமண் புல்ல இடைச்சுரத் திறுத்த மள்ள, விளர்த்த வளையில் வறுங்கை யோச்சிக் கிளையுள் இன்னன் ஆயின னிளையோ னென்று நின்னுரை செல்ல மாயின் மற்று முன்னூர்ப் பழுனிய கோளி யாலத்துப் புள்ளார் யாணர்த் தற்றே என்மகன் வளனும் செம்மலு மெமக்கென நாளும் ஆனாது புகழு மன்னை யாங்கா குவள்கொல் அளியள் தானே. (புறம் - 54) இது, முதுபாலை. 15. தேரோன் மகன்பட்ட செங்களத்துள் இவ்வுடம்பிற் றீராத பண்பிற் றிருமடந்தை - வாரா உலகத் துடம்பிற் கொழிந்தனள் கொல்லோ அலகற்ற கற்பி னவள். (பெ - பாரதம்) இது, கையறுநிலை. அவள் ஒழிந்ததால் பயன்பாடற்றோம் எனல் காண்க. 16. யாங்குப்பெரி தாயினும் நோயள வெனைத்தே உயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையிற் கள்ளி போகிய களரியம் பறந்தலை வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத் தொள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை இன்னும் வாழ்வல் என்னிதன் பண்பே. (புறம் - 245) இது, தபுதாரநிலை. 17. அளிய தாமே சிறுவெள் ளாம்பல் இளைய மாகத் தழையயா யினவே இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத் தின்னா வைக லுண்ணும் மல்லிப் படூஉம் புல்லா யினவே. (புறம் - 248) இது, தாபதநிலை. தழை - தழையுடை. இனிப் புல்லரிசியொடு சமைக்கும் கீரையாயின. புல் - புல்லரிசி. 18. பல்சான் றீரே, பல்சான் றீரே, செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே, அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டா தடகிடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெந்தை வல்சி யாகப், பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ, பெருங்கோட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம் நுமக்கரிப தாகுக தில்ல, எமக்கெம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென அரும்பற வள்ளித ழவிழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையும் தீயுமோ ரற்றே. (புறம் - 246) இது, பாலைநிலை. காழ் - வெள்ளிரிவிதை. அவ்விதை போன்ற அரிசி. வல்சி - சோறு. ஈமம் - சுடலைத்தீ. இது பூதப் பாண்டியன் தேவியார் கைம்மை நோன்பை வெறுத்து உடன் கட்டையேறிய போது கூறியது. 19. (1) வாதுவல் வயிறே, வாதுவல் வயிறே, நோவே னத்தை நின்னின் றனனே பொருந்தா மன்னர் அருஞ்சம முருக்கி அக்களத் தொழிதல் செல்லாய், மிக்க புகர்முகக் குஞ்சரம் எறிந்த எஃகம் அதன்முகத் தொழிய நீபோந் தனையே, அதனால், எம்மில் செய்யாப் பெரும்பழி செய்த கல்லாக் காளை யை ஈன்ற வயிறே. (புறத்திரட்டு - 1406) இது, களிற்றிடை வேலொழியப் போந்தது கேட்ட தாய் தபவந்த தலைப் பெயல்நிலை. வாதுதல் - அறுத்தல், கிழித்தல். அத்தை - அசை. எஃகம் - வேல். இல் - குடி. (2) எற்கண் டறிகோ, எற்கண் டறிகோ, என்மக னாதல் எற்கண் டறிகோ கண்ணே கணைமூழ் கினவே, தலையின் வண்ண மாலையும் வாளிவிடக் குறைந்தன, வாயே, பொங்குநுனைப் பகழி மூழ்கலிற் புலர்வழித் தாவ நாழிகை அம்புசெறிந் தற்றே, நெஞ்சே வெஞ்சரங் கடந்தன, குறங்கே நிறங்கரந்து பலசரம் நிரைத்தன அதனால், அவிழ்பூ வப்பணைக் கிடந்தோன் கமழ்பூங் கழற்றீங் காய்போன் றனனே.” (த - யா) இது, களத்து மடிந்த நெடுங்கேரளன் தாய் இறந்துபட்ட தலைப் பெயனிலை. ஆவநாழிகை - அம்புக்கூடு. அப்பணை - அம்புஅணை. 20. உலகு பொதியுருவந் தன்னுருவ மாக பலர்பரவத் தக்க பறந்தலை நன்காடு புலவங்கொல் என்போற் புலவுக் களத்தோ டிகல்நெடுவே லானை யிழந்து. (புறத்திரட்டு - 1438) இது, காடு வாழ்த்து. நன்காடு - சுடுகாடு. இக்காஞ்சித் துறைகள் இருபதும், மறப்பண்பு, காதலர் ஒருமை, உலகியலறிவு, சுற்றத் தொடர்பு, தன்மானம் முதலியவற்றை எடுத்துக் கூறுமுகத்தான், இவ்வாழ்க்கையில் மக்கட் குண்டாகும் பல்வகைத் துன்பங்களையும் விரிவாகவும், விளக்கமாகவும் தொகுத்துக் கூறி, பல்வகை நிலையாமைகளையும் நினைப்பூட்டி, அந் நிலையாமையின் உண்மையையுணர்ந்து, வாழ்க்கையில் வெறுப்புக் கொள்ளாமலும் அவற்றிடை முறுகிய பற்றுள்ளங் கொள்ளாமலும் இன்பவாழ்வு வாழ வேண்டுமென்பதை விளங்கக் கூறுமாறறிக. (24) 9. பாடாண்டிணை 287. பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே நாடுங் காலை நாலிரண் டுடைத்தே. இது, பாடாண்டிணை கைக்கிளைக்குப் புறனாகும் என்பதும், அதன் வகையும் உணர்த்துகின்றது. இ - ள்: பாடாண்டிணைக் கைக்கிளைக்குப் புறனாகும்; ஆராயுங் காலத்து அது எண்வகைப் பொருளையுடைத்து என்றவாறு. கைக்கிளைக்குப் புறனாதல் பற்றி இவ்வியலின் தொடக்கத்துக் கூறப்பட்டுள்ளது. பாடாண் திணையாவது - கொடையாளரைப் புலவர்கள் புகழ்ந்து பாடுவது. பாடு ஆண் திணை - பாடப்படும் ஆண் மகனது ஒழுக்கம் என்பது. பாட்டுடைத் தலைவனின் வீரம் கொடை புகழ் முதலியவற்றைச் சிறப்பித்துப் பாடுதல் பாடாண்டிணை எனப்படும். நாலிரண்டாவன: வெட்சி முதலிய ஏனை ஆறு திணைகளையும் பாடுதல், தனக்கே உரிய பொருளைப் பாடுதல் எனப்பாடுதல் இருவகைப்படும். வெட்சி முதலிய திணைகளைப் பாடுதல் - பாடாண்டலைவன் வெட்சி முதலிய திணைச் செயல்கள் நிகழ்த்தியதாகப் பாடுதல். தனக்கே உரிய பொருளைப் பாடுதல் - பாடாண்டிணைக்கே உரிய பொருளைப் பாடுதல். அது, தேவர்ப் பாடாண், மக்கட்பாடாண் என இருவகைப்படும். எனவே, 1. வெட்சிப்பாடாண் 5. வாகைப்பாடாண் 2. வஞ்சிப்பாடாண் 6. காஞ்சிப்பாடாண் 3. உழிஞைப்பாடாண் 7. தேவர்ப்பாடாண் 4. தும்பைப்பாடாண் 8. மக்கட்பாடாண் என, எட்டுவகை யாயினவாறு. வெட்சிப்பாடாண் - பாடாண் டிணைப் பொருளோடு வெட்சித்திணைப் பொருளும் அமையப் பாடுதல். ஏனையவும் இவ்வாறே. மக்களை உயர்த்துத் தேவராக்கிப் பாடுதலும், உயர் பொருள்களை உயர்த்துப் பாடுதலும் - தேவர்ப்பாடாண் ஆகும். மக்களை மக்களாகவே பாடுதல் - மக்கட்பாடாண் ஆகும். தேவரைப் பாடுதல் - தேவர்ப்பாடாண் பாட்டு எனவும், மக்களைப் பாடுதல் - செந்துறைப் பாடாண் பாட்டு எனவும் வழங்கும். பாடாண் பொருள் - பரவல், புகழ்ச்சி, காமம் என, மூன்று வகைப்படும், பரவல் - வாழ்த்தல், காமம் - புணர்ச்சி வேட்கை. தெய்வப்பகுதி - வாழ்த்தல், புணர்ச்சி வேட்கை என இரு பொருள் பெறும். மக்கட் பகுதி - வாழ்த்தல், புகழ்தல், என இருபொருள் பெறும். வெட்சி முதலிய பொருள் பற்றிய பதிற்றுப்பத்து நூறும் பாடாண்டிணையே யாகாலன், இவற்றிற்கு இலக்கியமாகும். (25) 1. தேவர்ப் பாடாண் 288. அமரர்கண் முடியும் அறுவகை யானும், புரைதீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன் பகுதி யொன்று மென்ப. இது, முன்னர் (25) எட்டெனப் பகுத்த பாடாண்டிணையுள், ஆறொழித்து நின்ற தனக்கே உரிய பகுதியாகிய தேவர்ப் பாடாண், மக்கட் பாடாண் என்னும் இரண்டனுள் ஒன்றான தேவர்ப் பாடாணும் இருவகைப்படும் என்கின்றது. அது - 1. வாழ்த்துப் பகுதியும், 2. காமப் பகுதியுமாம். இ - ள்: அமரர்கண் முடியும் அறுவகை யானும் - தேவர்கட் பொருந்தும் அறுமுறை வாழ்த்தினும், அமரர்கண் முடியும் -, புரைதீர் காமம் புல்லிய வகையினும் - குற்றந் தீர்ந்த புணர்ச்சி வேட்கையைப் பொருந்திய வகையினும், ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப - தேவர் மக்கள் என்னும் இரு பகுதியுள் தேவர்ப் பகுதியெல்லாம் அடங்குமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. புரை - குற்றம். புல்லிய - பொருந்திய. ஒன்றும் - அடங்கும். ‘அமரர் கண் முடியும்’ என்பதைப் பின்னுங் கூட்டுக. அறுமுறை வாழ்த்தும், புணர்ச்சி வேட்கையும் தேவர்ப்பகுதி யாமென்பதாம். அறுமுறை வாழ்த்தாவன: வான், நீத்தார், அறம், ஆன், அரசன், உலகு என்னும் ஆறையும் வாழ்த்துதல். அமரர் என்பது - உயர்ந்தோர் என்னும் பொருட்டு. பாட்டுடைத் தலைவனை வாழ்த்தும்போது உயர்ந்த பொருள்களையும் உடன் வாழ்த்துதல் பாடாண் மரபாகும். (இப்பாடாண் தெய்வ விளக்கத்தை ‘தொல்காப்பியர் காலத் தமிழர்’ - ‘தெய்வம்’ என்பதிற்காண்க.) புணர்ச்சி வேட்கை மேற்கூறுப (28ல்). முதல் மூன்று வாழ்த்தும் திருக்குறளில் முதலில் வந்துள்ளமை காண்க. இறைமாட்சியும், நாடும் - அரசவாழ்த்தும், நாடு வாழ்த்துமாக அமையும். பாலுந் தயிரும் பயிலுநறு நெய்மோரும் நாலுந் தருங்கொடையின் நன்கொன்றோ - மேலும் புனமலிந்து நல்விளைவு போற்றுகிற்கு நல்லா இனமலிந்து தான்வாழ்க வே. (குழந்தை) இது, ஆன் வாழ்த்து. ஆன் - மாடு. (26) 1. வாழ்த்திற்குச் சிறப்பு 289. கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. இது, அறுமுறை வாழ்த்தோடு இவையும் வாழ்த்தப்படும் என்கின்றது. இ - ள்: கொடிநிலை வள்ளி கந்தழி என்ற - ஞாயிறும் திங்களும் உயர்குணமும் என்ற, வடு நீங்கு சிறப்பின் - குற்றந் தீர்ந்த சிறப்பினை யுடைய, முதலான மூன்றும் - முதன்மையான மூன்றும், கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வரும் - கடவுள் வாழ்த்தோடு கருது மாற்றான் வருமென்றவாறு. கொடிநிலை - கீழ்த்திசைக் கண்ணே தோன்றும் ஞாயிறு. கொடி - கீழ்த்திசை. நிலை - இடம் . வள்ளி - வண்மையுடையது - திங்கள். வெங்கதிர் போற் காயாமல் தண்கதிர் தந்து மகிழ் விப்பதால் திங்கள் - வள்ளி எனப்பட்டது. கந்தழி - குணம். கந்து - குறி. அழி - அழிந்தது, அற்றது. கந்தழி - குறியற்றது. குறி - குணி - பொருள். குறியற்றது - குணம். செந்தாமரை என்பதில், செம்மை - குணம். தாமரை - குணி. குணத்தையுடையது - குணி. நிறம் சுவை வடிவு அளவு தன்மை என்னும் ஐவகைப் பண்பும் (எச்ச - 20) பொருளோடு உடன்றோன்றி, பொருள் அழியும்போது உடனழிதலான், குணம் - கந்தழி எனப்பட்டது. பண்பு - குணம், வாளா ‘செய்கை’ என்றால், ‘நற்செய்கை’ எனப் பொருள் படுதல் போல, குணம் என்பது உயர் குணத்தைக் குறிக்கும். திருக்குறள் முதலதிகாரம் உயர்குண வாழ்த்தாகும். (திருக்குறள் குழந்தையுரை பார்க்க.) ஞாயிறும் திங்களும் சிலப்பதிகார முதற்பாடலில் வாழ்த்தப் படுகின்றன. (27) 2. காமப் பகுதி 290. காமப் பகுதி கட வுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் இது, முன்னர்க் (26) கூறிய ‘புரைதீர் காமம், கடவுள்’ மக்கள் என்னும் இருவர்க்கும் பொதுவாக உரியதென்கின்றது. இ - ள்: காமப் பகுதி - புணர்ச்சி வேட்கை, கடவுள் பாங்கினும் வரையார் - கடவுளிடத்தும் நீக்கார், ஏனோர் பாங்கினும் வரையார் என்மனார் புலவர் - மக்களிடத்தும் நீக்கார் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. ‘வரையார், பாங்கினும்’ என்பவற்றை ஈரிடத்தும் கூட்டுக. 1. கடவுள் மக்கட் பெண்டிரை நயத்தல், 2. கடவுளை மக்கட் பெண்டிர் நயத்தல், என அப் புணர்ச்சி வேட்கை இருவகைப் படும். நயத்தல் - விரும்புதல். அரசர்களே பாடாண்டிணையில் தெய்வமாக உயர்த்திப் பாடப்படுவதால், ஓர் அரசனை ஒருத்தி விரும்புவதாகவும், ஓர் அரசன் ஒருத்தியை விரும்புவதாகவும் பாடுதலே புணர்ச்சி வேட்கை எனப்படும். ஓர் அரசனை ஒரு பெண் விரும்புவதாகப் பாடுதல் - கடவுளை மக்கட் பெண்டிர் நயத்தல் எனப்படும். ஓர் அரசன் ஒருத்தியை விரும்புவதாகப் பாடுதல் - கடவுள் மக்கட் பெண்டிரை நயத்தல் எனப்படும். அரச கன்னியர் முடிமன்னருக்கு மனைவியரான பின்னரே தெய்வமாக உயர்ச்சி பெறுவராகையால், கடவுளைக் கடவுட் பெண்டிரும், கடவுள் கடவுட் பெண்டிரையும் நயத்தலாகப் பாடுதல் பாடாண் மரபன்று. இது, தெய்வப்பகுதி பற்றியதாகையால், ‘ஏனோர் பாங்கினும்’ என்பது, மக்களுள் ஆணொழித்துகின்றது. காட்டு: 1. களியானைத் தென்னன் கனவில்வந் தென்னை அளியான் அளிப்பானே போன்றான் - தெளியாதே செங்காந்தள் மெல்விரலாற் சேக்கை தடவந்தேன் என்காண்பேன் என்னலால் யான். (முத்தொள் - 63) இது, கடவுளை மக்கட் பெண்டிர் நயந்தது. தென்னன் - பாண்டியன். சேக்கை - படுக்கை. காரிற் பொலிந்து களித்தாடாக் கார்காணின் நேரிற் பெயர்ந்து நிலம்படரா - மேரிற் புலிபொறித்த வென்றிப் புனனாடன் றிண்டோள் வலிபறித்த தோகை மயில். (குழந்தை) இது, கடவுள் மக்கட் பெண்டிரை நயந்தது. புனல் நாடன் - சோழன். (28) 2. மக்கட் பாடாண் 291. வழங்கியன் மருங்கின் வகைபட நிலைஇயப் பரவலும் புகழ்ச்சியுங் கருதிய பாங்கினும் முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை வண்ணப் பகுதி வரைவின் றாங்கே. இது, ஒன்றன் பகுதியுள் (26) தேவர்பகுதி கூறி, எஞ்சி நின்ற மக்கட் பகுதி கூறுகின்றது. இ - ள்: பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் - ஒருவன் தன்னைப் பிறர் வாழ்த்துதலையும் புகழ்ந்துரைத்தலையும் கருதிய விடத்தும், வகைபட முன்னோர் கூறிய குறிப்பினும் - அறம் பொரு ளின்பங்களின் கூறுபாடு தோன்ற முன்னோர் கூறிய கருத்துரைக்கு மிடத்தும், செந்துறை நிலைஇ - செல்வன் கூறும் துறை நிலைபெற்று, வழங்கு இயல் மருங்கின் - வழங்குதல் இயலுமிடத்து, ஆங்கு வண்ணப் பகுதி வரைவு இன்று என்ப - அவ்விடத்து வண்ணப் பாக்களாற் பாடுதல் நீக்கும் நிலைமை யில்லை என்று கூறுவர் புலவர் என்றவாறு. ஒருவனைப் புகழ்ந்தும் வாழ்த்தியும் பாடுதலும், அறம் பொருளின்பம் பயக்கப் பாடுதலும் செந்துறைப் பாடாண் பாட்டு எனப்படும் என்பதாம். செந்துறையாவது, மக்களை உயர்த்துப் (தேவராக்கி) பாடும் அறுமுறை வாழ்த்துப்போலாது, மக்களை மக்களாகவே இயல் பாகப் பாடுதலாம். வண்ணப்பா - ஆசிரியமும் வஞ்சியும். முன்னர் (அகத் - 42) புலனெறி வழக்கிற்கு - அகத்திணையைப் பாடுவதற்கு - கலியும் பரிபாடலும் உரிய வென்றார். புறத்திணையைப் பாடுதற்கு ஆசிரிய முதலிய மற்றைப் பாக்கள் உரிய வென்கின்றது இது. வெண்பா - கலிக்கும் பரிபாடற்கும் உறுப்பாய் வருதலான் அவ்விரு பாவில் அடங்கும். எனவே, அகப்பொருளைப் பாடுதற்குக் கலியும் பரிபாடலும் பெரும்பான்மைய வென்பதூஉம், புறப் பொருளைப் பாடுதற்கு ஏனைப் பாக்கள் பெரும்பான்மைய வென்பதூஉம், சிறுபான்மை மயங்கிவரவும் பெறுமென்பதூஉம் கூறியவாறாம். வண்ணங்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாவிலேயே வருதலையறிக (செய் - 215 - 231) ஒருவரை இயல்பாக வாழ்த்தியும் புகழ்ந்தும், அறம் பொருளின்பம் பயக்கவும் பாடுதல் - செந்துறைப்பாடாண் பாட்டு எனப்படும். அவ்வாறு பாடுதற்குப் பெரும்பான்மை ஆசிரியமும் வஞ்சியும், சிறுபான்மை பிற பாக்களும் உரிய வென்பது கருத்து. காட்டு: 1. நில நீர் வளிவிசும் பென்ற நான்கின் அளப்பரி யையே, நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல் ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர்பீ டழித்த செருப்புகல் முன்ப, படையே ருழவ, பாடினி வேந்தே, கடலக வரைப்பினி பொழின்முழு தாண்டநின் முன்றிணை முதல்வர் போல நன்றுநீ கெடாஅ நல்லிசை நிலைஇத் தவாஅ லியரோவிவ் வுலகமோ டுடனே. (பதிற் - 14) இது, பரவற்கண் வந்த செந்துறைப்பாடாண்பாட்டு. இது, வாழ்த்தியல் எனவும்படும். ‘நின் முன்னோர் போல நல்லிசை நிறுத்தி வாழ்க’வென வாழ்த்தியது காண்க. இது, ஆசிரியப்பா. 2. வரைபுரையு மழகளிற்றின்மிசை வான்றுடைக்கும் வகையபோல விரவுருவின கொடிநுடங்கும் வியன்றானை விறல் வேந்தே, நீ, உடன்று நோக்குமவா யெரிதவழ நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச் செஞ்ஞாயிற்றுள் நிலவுவேண்டினும் வெண்டிங்களுள் வெயில்வேண்டினும் வேண்டியது விளைக்கும் ஆற்றலை யாதலின் நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த எம்மள வெவனோ மற்றே, இன்னிலை உடையோ ரீதலும் இல்லோ ரிரப்பதும் கடவ தன்மையிற் கையற வுடைத்தென ஆண்டுச்செய் நுகர்ச்சி ஈண்டுங் கூடலின் நின்னா டுள்ளுவர் பரிசிலர் ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத் தெனவே. (புறம் - 38) இது, புகழ்ச்சிக்கண் வந்த செந்துறைப்பாடாண்பாட்டு. இது, குறளடிவஞ்சியும் சிந்தடிவஞ்சியும் கலந்துவந்த ஆசிரியப்பா. 3. உண்டா லம்மவிவ் வுலகம் இந்திரர் அமிழ்த மியைவ தாயினும் இனிதெனத் தமிய ருண்டலு மிலரே, முனிவிலர், துஞ்சலு மிலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப் புகழெனின் உயிருங் கொடுக்குவர், பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர், அயர்விலர், அன்ன மாட்சி யனைய ராகித் தமக்கென முயலர் நோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே. (புறம் - 182) இது, முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டு, ‘முயலுநர் உண்மையான் உலகம் உண்டு’ என, ஒழுக்கங் கூறலான், முன்னோர் கூறிய குறிப்பாயிற்று. (29) 1. பிள்ளைப் பாட்டு 292. குழவி மருங்கினுங் கிழவ தாகும். இ - ள்: குழந்தைகளைப் பாடுதற்கும் பாடாண்டிணை உரிய தாகும் என்றவாறு. இது, பிள்ளையைச் சிறப்பித்துப் பாடிப் பெற்றோரை மகிழ்வித்துப் பரிசு பெறுதலாகும். ஒரு தலைவனிடம் பரிசு பெறச் சென்ற புலவன், அத்தலைவனது பிள்ளையைச் சிறப்பித்துப் பாடுதல் - பிள்ளைப்பாட்டு எனப்படும். அப்பிள்ளை அந்தந்தப் பருவங்களிற் செய்யுஞ் செயலைச் சிறப்பித்து, அதன் முன்னோர் புகழுடன் சேர்த்துப் பாடப்படும் (புறத் - 34) முன்னோரின் வீரம் கொடை புகழ் முதலியவை அப்பிள்ளையினவாகப் பாடுதல். இதில் ஆண்பெண் இருபாற் குழவியும் அடங்கும். பிள்ளையைச் சிறப்பித்துப் பாடிப் பெற்றோரை மகிழ்வித்துப் பரிசுபெறும் இவ்வழக்கம் அருகிப் பிற்காலத்தே தலைவர்களையே பிள்ளைப் பருவத்தினராக்கிப் பாடும் வழக்கம் ஏற்பட்டது. இதுவே, பிள்ளைத்தமிழ் என்பது. (30) 2. இதுவுமது 293. ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப. இ - ள்: ஊரொடு தோற்றமும் - ஊர் மகளிர் அப் பிள்ளையை விரும்புவதாகப் பாடுதலும், உரித்து என மொழிப - அப் பாடாணுக்கு உரியதென்று கூறுவர் புலவர் என்றவாறு. ஊர் - இடவாகு பெயர். ஒரு பிள்ளை தெருவில் விளையாடும் போது, ஊர்மகளிர் அப்பிள்ளையின் நடை, வடிவு, அழகு, குதலை முதலியவற்றை வியந்து, அதன் முன்னோர் செயலுடன் சேர்த்துப் புகழ்ந்து கூறுவதாகப் பாடுதலும் பிள்ளைப்பாட்டு எனப்படும் என்பதாம். இதுவே, பிற்காலத்தே, ஓர் தலைவன் ஊர்வலம் வரும் போது, பேதை, பெதும்பை முதலிய ஏழ்பருவப் பெண்டிரும் விரும்புவதாகப் பாடும் உலாச் செய்யுளாயிற்று.(31) 3. புறனடை 294. வழக்கொடு சிவணிய வகைமை யான. இது, அறுமுறை வாழ்த்துமுதல் (26), ஊரொடு தோற்றம் (31) ஈறாகக் கூறப்பட்டவற்றிற்குப் புறனடை கூறுகின்றது. இ - ள்: அறுமுறை வாழ்த்து முதல் ஊரொடு தோற்றம் ஈறாகக் கூறியனவெல்லாம் சான்றோர் வழக்கொடு பொருந்தியே வரவேண்டு மென்றவாறு. கடவுள் வாழ்த்து முதலியவற்றை முன்னோர் பாடிய முறைப் படியே பாடவேண்டும் என்பதாம். (32) 4. கொற்றவள்ளை 295. கொற்ற வள்ளை யோரிடத் தான. இ - ள்: கொற்றவள்ளை - வெட்சிமுதல் வஞ்சி யீறாகிய பாடாண் கொற்றவள்ளை, ஓரிடத்தான - அங்ஙனம் பெண்டிர் பாடுதலேயன்றிப் புலவன் ஒன்றனை வேண்டிப் புகழ்தலாகிய பகுதிக்கண்ணது என்றவாறு. ‘குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளை’ (புறத் - 12) என, முற்கூறிய வஞ்சிக் கொற்றவள்ளை, பகைவர் நாடழிதற் கிரங்கிப் பெண்டிர் உரற்பாட்டாகப் பாடுவது. பாடாண் கொற்ற வள்ளையாகிய இது, புலவர் ஒன்றை நச்சிப் பகைவர் நாட்டின் அழிவு கூறிப் பாடாண்டலைவரைச் சிறப்பித்துப் பாடுவதாகும். பகைவர் நாடழிதற் கிரங்கிப் பாடுதல் கொற்றவள்ளை. வெட்சி, வஞ்சி, உழிஞை ஆகிய மூன்று திணையிலும் வருகின்ற கொற்றவள்ளையை - அம்மூன்றினும் பகைவர் நாடழிதற் கிரங்குதலை - புலவர் ஒரு பொருள் நச்சிப்பாடின், அது பாடாண் கொற்றவள்ளையாம் என்பது. காட்டு: மாவா டியபுலன் நாஞ்சி லாடா, கடாஅஞ் சென்னிய கடுங்கண் யானை இனம்பரந் தபுலம் வளம்பரப் பறியா, நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி, நீ,உடன்றோர் மன்னெயில் தோட்டி வையா, முனையகன் பெரும்பா ழாக மன்னிய உருமுறழ் பிரங்கு முரசிற் பெருமலை வரையிழி யருவியின் ஒளிறுகொடி நுடங்கக் கடும்பரிக் கதழ்சிற ககைப்பநீ நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடே. (பதிற் - 25) இது, பிறர்நா டழிவிற்கிரங்கிப் புலவன் பொருள் நச்சிக் கூறிய பாடாண் கொற்றவள்ளை. நச்சி - விரும்பி. (33) 3. மக்கட் பாடாண்டுறை 296. கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தலும், அடுத்தூர்ந் தேத்திய இயன்மொழி வாழ்த்தும், சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவலர்க் குரைத்த கடைநிலை யானும், கண்படை கண்ணிய கண்படை நிலையும் கபிலை கண்ணிய வேள்வி நிலையும், வேலின் ஓக்கிய விளக்கு நிலையும், வாயுறை வாழ்த்தும், செவியறி வுறூஉவும், ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும், கைக்கிளை வகையோ டுளப்படத் தொகைஇத் தொக்க நான்கும் உளவென மொழிப. 1. கொடுப்போர் ஏத்திக் 6. விளக்கு நிலை கொடார்ப் பழித்தல் 2. இயன்மொழி வாழ்த்து 7. வாயுறை வாழ்த்து 3. கடைநிலை 8. செவியறிவுறூஉ 4. கண்படைநிலை 9. புறநிலை வாழ்த்து 5. வேள்விநிலை 10. கைக்கிளை இ - ள்: 1. கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தலும் - பிறர்க்குக் கொடுப்போரைப் புகழ்ந்து கொடாரைப் பழித்துக் கூறுதலும்; “இல்லோர் இரப்பது மியல்பே யியல்பே இரப்போர்க் கீவதும் உடையோர் கடனே” (வெற்றி வேற்கை) எனக் கொடுத்தலின் கடமையையும், கொடா மையின் தவற்றையும் விளங்கக் கூறுதல். கொடார்ப் பழித்தல் சான்றோர்க்குத் தகுதியன்றேனும், செல்வத்துப் பயன்பாடுறச் செய்தலின் தகுதியாயிற்றென்க. 2. அடுத்து ஊர்ந்து ஏத்திய இயல்மொழி வாழ்த்தும் - தலைவன் எதிர் சென்று அவன் செய்தியையும், அவன் மரபினோர் (முன்னையோர்) செய்தியையும் அவன்மே லேற்றிப் புகழ்ந்து கூறும் இயன்மொழி வாழ்த்தும்; அவன் செய்தியோடு அவன் மரபினோர் செய்தியையு மென்க. செய்தி - வீரம், கொடை முதலிய செயல்கள். இயல் மொழி வாழ்த்து - இயல்பைப் புகழ்ந்து கூறி வாழ்த்துதல். 3. சேய்வரல் வருத்தம்வீட வாயில் காலவர்க்கு உரைத்த கடைநிலையானும் - நெடுந்தொலைவி லிருந்து வந்த வருத்தம் நீங்க, ‘என் வரவினைத் தலைவனுக்குக் கூறுக’ என, வாயில் காவலனுக்குக் கூறும் கடைநிலையும்; காவலனிடம் கூறிவிட்டுச் சேய்வரல் வருத்தம் நீங்க வாயிலின்கண் தங்கியிருப்பரென்க. தலைவர் - கொடுப் போர். சேய் - தொலைவு. வீட - நீங்க. கடை - வாயில். கடைநிலை - வாயிலில் தங்கியிருத்தல். நிலை - நிற்றல். 4. கண்படை கண்ணிய கண்படை நிலையும் - அரசரும், அரசர் போன்ற தலைவர்களும் இரவில் நெடுநேரம் தூங்காது விழித்திருந்தபோது, மருத்துவர், அமைச்சர் முதலானோர் அவரைத் தூங்கும்படி கூறும் கண்படை நிலையும்; அதனைப் புலவர் பாடுவ ரென்க. கண்படை கண்ணிய - கண்படுதலைக் கருதிக்கூறிய. கண்படை - கண்படுதல், தூங்குதல். இதனால், பழந்தமிழரசர்கள் மெய்வருத்த முதலியன பாராமல், குடி காத்தலே தமது கடனென வுணர்ந்து கருமமே கண்ணாக இருந்தமை விளங்கும். 5. கபிலை கண்ணிய வேள்விநிலையும் - ஈற்றாப் பால் சுரந்து கொடுத்தலைப் போல வரையாது கொடுத்தலைக் கூறும் கொடை நிலையும்; கபிலையைப் போலக் கருதிக் கொடுக்கும் கொடை யென்க. கபிலை - கற்றா. வேள்வி - கொடை. 6. வேலின் ஓக்கிய விளக்கு நிலையும் - வேலும் வேற்றலையும் நேராக உள்ளமைபோல, செங்கோலொடு விளக்கும் ஒன்றுபட்டு ஓங்குமாறு ஓக்குவிக்கும் விளக்கு நிலையும்; ஓக்குதல் - ஓங்கியெரியும் படி செய்தல். வேலின் - இன் - ஐந்தாவது ஒப்புப் பொருளது. இது, வேலைப்போல நேராக விளக்கு ஓங்கி யெரிவதுபோலச் செங்கோலும் ஓங்குக வெனப் பெரியோர் ஆக்கங் கூறுதலாம். விளக்கு அசையாமல் நேராகக் கொழுந்துவிட்டெரிதல் போல, செங்கோலும் வளையாமல் நேராக நிலைத்திருக்க வேண்டு மென்பதும், முறை தவறாமல் ஆளவேண்டு மென்பதும் கருத்து. அதாவது வேலும் வேற்றலையும் போல, விளக்கும் கோலும் ஒன்றுபடுகவென, வேலையும் வேற்றலையையும் விளக்குக்கும் கோலுக்கும் உவமையாக்கி வாழ்த்துதலாம். வேலைப்போல வேற்றலையும் ஒன்றுபட்டு நேராக அமைந்துள்ளமை போல, விளக்கைப் போலக் கோலும் ஒன்றுபட்டு நேராக அமைகவென ஒப்புமை கொளுத்திய வாறாம். வேற்றலை - வேலின்படம். 7, 8, 9. வாயுறைவாழ்த்து, செவியறிவுறூஉ, புறநிலை வாழ்த்து இம்மூன்றன் இலக்கணம் முறையே செய்யுளியல் - 112, 114, 110 நூற்பாக்களிற் கூறப்படுகிறது. எடுத்துக் காட்டுடன் ஆங்குக் காண்க. 10. கைக்கிளை: ஒருதலைக்காமம், இது, ‘காமஞ்சாலா இளமையோள்வயிற் கைக்கிளையும்’ (அகத் - 36), ‘முன்னைய நான்கும்’ (அகத் - 37) என்ற, கடவுளை மக்களும் மக்களைக் கடவுளும் விரும்புங் கைக்கிளையும் போலாது, உளங்கலந்த ஒருவனும் ஒருத்தியும் இனிது இல்லறவாழ்வு வாழ்ந்துவரும் போது, க'99வன் மனைவியைத் துறந்தவிடத்து, அவளை ஏற்றுக் கொள்ளும்படி சான்றோர்கள் அவளை வேண்டுதலாம். கைக்கிளை வகையோடு உளப்படத் தொகைஇ தொக்க நான்கும் உளவெனமொழிப - இக்கைக்கிளையும், வாயுறை வாழ்த்து முதலிய மூன்றும் ஆகிய நான்கும், முற்கூறிய கொடுப் பாரேத்தல் முதலிய ஆறுமாகப் பத்தும் பாடாண்டிணைத் துறைகளாகும் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. காட்டு: 1. தடவுநிலைப் பலவின் நாஞ்சிற் பொருநன் மடவன் மன்ற செந்நாப் புலவீர், வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த அடகின் கண்ணுறை யாக யாஞ்சில அரிசி வேண்டினே மாகத் தான்பிற வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர் பெருங்களிறு நல்கி யோனே, அன்னதோர் தேற்றா வீகையு முளது கொல் போற்றா ரம்ம பெரியயோர்தங் கடனே. (புறம் - 140) இது, கொடுப்போரை ஏத்தியது. அடகு - கீரை. கண்ணுறை - கீரையோடு சேர்த்துச் சமைக்கும் மாவு. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன். (குறள்) இது, கொடாரைப் பழித்தது. களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப் பாடின் பனுவற் பாண ருய்த்தெனக் களிறில வாகிய புல்லரை நெடுவெளில் கான மஞ்ஞை கணனொடு சேப்ப ஈகை யரிய இழையணி மகளிரொடு சாயின் றென்ப ஆஅய் கோயில், சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில் பிறர்க்கீ வின்றித் தன்வயி றருத்தி உரைசா லோங்குபுக ழொரீ இய முரசுகெழு செல்வர் நகர்போ லாதே. (புறம் - 127) இது, ஆயை ஏத்தி, ஏனைச் செல்வரைப் பழித்தது. உய்த்தென - கொண்டுபோக. வெளில் - யானைக்கட்டுத்தறி. ஈகை - பொன். குய் - தாளிப்பு. 2. குருதி வேட்கை யுருகெழு முரசம் மண்ணி வாரா வளவை, எண்ணெய் நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை அறியா தேறிய என்னைத் தெறுவர இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை அதூஉஞ் சாலுநற் றமிழ்முழு தறிதல் அதனொடு மமையா தணுக வந்துநின் மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென வீசி யோயே, வியலிடங் கமழ இவணிசை யுடையோர்க் கல்ல தவண உயர்நிலை யுலகத் துறையு ளின்மை விளங்கக் கேட்ட மாறுகொல் வலம்படு குரிசில்நீ யீங்கிது செயலே. (புறம் - 50) இது, இயன்மொழி வாழ்த்து. இதனுள், பொறையும், பெரியார்ப் பேணலுமாகிய சேரமான் பெருஞ்சேரலிரும் பொறையின் இயல்பைப் புகழ்ந்தவாறு காண்க. முரசுகட்டிலிற்று யின்ற மோசிகீரனாரைக் கொல்லாததோடு, கவரிவீசிய அவனது அருஞ்செயல் புகழப்படுதல் காண்க. 3. வேற்றுச் சுரத்தொடு வேந்தர்கண் வெம்மையும் மாற்றுதற்கு வந்தனேம் வாயிலோய், - வேற்றோர் திறைமயக்கு முற்றத்துச் சேணோங்கு கோயில் இறைமகற்கெம் மாற்றம் இசை. இது, காவலர்க் குரைத்த கடைநிலை. சுரத்தின் வெம்மை மாற்றல் - சேய்வரல் வருத்தம் வீடல். 4. வாய்வாட் டானை வயங்குபுகழ்ச் சென்னிநின் ஓவா வீகையின் உயிர்ப்பிடம் பெறாஅர் களிறுகவர் முயற்சியிற் பெரிதுவருந் தினரே உலகங் காவலர் பலர்விழித் திருப்ப வறிதுதுயில் கோடல் வேண்டுநின் பரிசின் மாக்களுந் துயில்கமா சிறிதே. இது, கண்படைநிலை. பரிசின்மாக்கள் களிறு கவர் முயற்சியிற் பெரிது வருந்தினரென்க. 5. மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று சொல்லி இரந்தழைப்பார் யாருமிங் கில்லை - சுரந்தமுதம் கற்றா தரல்போற் கரவா தளிப்பரேல் உற்றா ருலகத் தவர். (நல்வழி) இது, வேள்வி நிலை. 6. வேலுமவ் வேற்றலையும் போல மிளிர்விளக்கும் கோலுநே ரொன்றுங் குறிக்கோளா - மேலுங் குடிகாத்துக் கோடாச்செங் கோல்காத்து நீங்கா முடிகாத்தல் வேந்தன் முறை. இது, விளக்குநிலை. 10. அருளா யாகலோ கொடிதே, யிருள்வரச் சீறியாழ் செல்வழி பண்ணி யாழநின் காரெதிர் கானம் பாடினே மாக, நீனறு நெய்தலிற் பொலிந்த வுண்கண் கலுழ்ந்துவா ரரிப்பனி பூணகம் நனைப்ப இனைத லானா ளாக இளையோய், கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென யாந்தற் றொழுதனம் வினவக் காந்தள் முகைபுரை விரலிற் கண்ணீர் துடையா யாமவன் கிளைஞரே மல்லேம், கேளினி எம்போ லொருத்தி நலனயந் தென்றும் வரூஉ மென்ப வயங்குபுகழ்ப் பேகன் ஒல்லென வொலிக்குந் தேரொடு முல்லை வெலி நல்லூ ரானே. (புறம் - 114) இது, தன் மனைவி கண்ணகியைத் துறந்த வையாவிக் கோப் பெரும் பேகனைப் பரணர் பாடிய கைக்கிளைப் பாடாண் பாட்டு. (34) 4. இதுவுமது 297. தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூத ரேத்திய துயிலெடை நிலையும், கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும், சிறந்த நாளணி செற்றம் நீக்கிப் பிறந்த நாள்வயிற் பெருமங் கலமும், சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும், நடைமிகுத் தேத்திய குடை நிழல் மரபும், மாணார்ச் சுட்டிய வாண்மங் கலமும், மன்னெயி லழித்த மண்ணுமங் கலமும், பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும், பெற்ற பின்னரும் பெருவள னேத்தி நடைவயிற் றோன்றும் இருவகை விடையும், அச்சமும் உவகையும் எச்ச மின்றி நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமும் காலங் கண்ணிய ஓம்படை யுளப்பட ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பிற் கால மூன்றொடு கண்ணிய வருமே. 1. துயிலெடைநிலை 8. குடைமங்கலம் 2. கூத்தராற்றுப்படை 9. வாள்மங்கலம் 3. பாணராற்றுப்படை 10. மன்னெயில் அழித்த மண்ணு மங்கலம் 4. பொருநராற்றுப்படை 11. பரிசில் கடைஇயநிலை 5. விறலியாற்றுப்படை 12. கடைக்கூட்டு நிலை 6. பெருமங்கலம் 13. இருவகைவிடை 7. மண்ணுமங்கலம் 14. ஓம்படை இ - ள்: துயிலெடைநிலை: தாவில் கிடந்தோர்க்கு நல்லிசை கருதிய சூதர் ஏத்திய துயிலெடை நிலையும் - தமது வலியாலே மன வருத்தமின்றிப் பாசறைக்கண் துயின்ற அரசர்க்கு, நல்ல புகழைக் கொடுத்தலை விரும்பிய சூதர் அத்துயிலினின்றும் எழுப்பிய துயிலெடை நிலையும்; அவர் புகழைப் புகழ்ந்து பாடித் துயிலெழுப்புவரென்க. வீரத்தால் துயின்றாரைச் சூதர் எழுப்புதல் மரபு. எடுப்புதல் - எழுப்புதல். தா - தாழ்வு . கிடத்தல் - படுத்துறங்கல். இசை - புகழ். சூதர் - அரசர் புகழ்பாடித் துயிலெழுப்புந் தொழிலுடையர். 2 - 5. ஆற்றுப்படை: கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் - கூத்தர் முதலிய நால்வரும், ஆற்றிடை - செல்லும் வழியில், காட்சி உறழத் தோன்றி - பரிசு பெற்றுச் செல்வோரும் பரிசு பெறச் செல்வோருமாக எதிர்ப்பட்டு, பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇ - பரிசு பெற்றவர் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி, சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும் - அவரும் அங்குச் சென்று தாம் பெற்றவாறு பெறுமாறு கூறும் ஆற்றுப்படையும்; ஆற்றுப்படை - ஆற்றுப் படுத்தல், வழிப் படுத்தல். காட்சி - காணுதல், எதிர்ப்படல். உறழ - மாறுபட; பரிசு பெற்றாரும் பெறாருமாக. இவை அரவரர் பெயரானே 2. கூத்தராற்றுப்படை, 3. பாணராற்றுப்படை, 4. பொருநராற்றுப்படை, 5. விறலியாற்றுப் படை என வழங்கும். வளம் - செல்வம், பொருள். எதிர்தல் - அடைதல், பெறுதல். சென்று - கொடையாளரிடம் சென்று. 6. பெருமங்கலம்: நாளணி செற்றம் நீக்கி பிறந்த நாள்வயின் சிறந்த பெருமங்கலமும் - நாடோறுந்தான் மேற்கொள்ளு கின்ற சினத்தைவிட்டு, பிறந்த நாளில் சிறந்த தொழில்கள் செய்யும் பெருமங்கலமும்; இது, வெள்ளணி எனவும் பெயர் பெறும். அரசன் நாடோறும் மேற்கொள்ளும் செற்றமாவன: போர் செய்தல், சிறை செய்தல், கொலை செய்தல் முதலியன. சிறந்த தொழில்களாவன: செரு வொழிதல், சிறைவிடுதல், கொலை யொழிதல், சிறை தவிர்த்தல், வேண்டுவன கொடுத்தல் முதலியன. ஆண்டுதோறும் அரசன் தான் பிறந்தநாட் கொண்டாட்டத் தன்று மங்கல வண்ணமாகிய வெள்ளணி யணிந்து எவ்வுயிர்க்கண்ணும் அருள் நிறைதலின் அது வெள்ளணி எனப்பட்டது. எல்லா வுயிரும் பேரின் புற்றிருத்தலின் அது, பெரு மங்கலம் எனப்பட்டது. அணிதல் - மேற்கொள்ளல்; வெள்ளுடை அணிதலென்க. மங்கலம் - நல்லது. பெருமங்கலம் - மிகவும் நன்மையான காரியங்கள் செய்தல். 7. சிறந்த சீர்த்தி மண்ணு மங்கலமும் - சிறப்புப் பொருந்திய பெரும்புகழை எய்துவிக்கும் முடிபுனைந்து நீராடும் மண்ணுமங்கலமும்; சீர்த்தி - மிகுபுகழ். மண்ணுதல் - கழுவுதல், நீராடல். இது, முடிபுனைந்த நாள் தொடங்கி, அந்நாளை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா. புகழெய்துவிக்கும் முடி என்க. 8. நடை மிகுத்து ஏத்திய குடைநிழல் மரபும் - உலக வொழுக்கத்தை மிகவும் உயர்த்துப் புகழ்ந்து கூறப்பட்ட குடைநிழல் இலக்கணமும்; நடை - ஒழுக்கம். ஈங்கு உயர்ந்தோர் வழக்கைக் குறித்தது. உலகை நிழல் செய்து காப்பதாகக் கொற்றக் குடையின் நிலைப் புகழ்ந்து கூறுதல். 9. மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும் - பகைவரை வென்ற வெற்றியைக் குறித்த வாளை வீரர்கள் வாழ்த்தும் வாள்மங்கலமும்; சுட்டிய வாள் - பகைவர் தோல்விக்குக் காரணமான தெனச் சுட்டிக் கூறுதற்கு ஏதுவாய வாள் என்க. மாணார் - பகைவர். இது, பிறரால் வாழ்த்தப் படுதலின் ‘வென்ற வாளின் மண்ணின்’ (புறத் - 16) வேறாயிற்று. 10. மன் எயில் அழித்த மண்ணு மங்கலமும் - பகைவரது நிலையான மதிலை யழித்துக் கழுதை யேரான் உழுது வேலான் விதை விதைத்து மங்கல மல்லாதன செய்தான் மங்கலமாக நீராடும் மண்ணுமங்கலமும்; ‘குடிமி கொண்ட மண்ணுமங்கலம்’ (புறத் - 16) எயிலழித்தல் கூறாமையின் இதனின் வேறாயிற்று. மங்கலம் - சிறப்பு, நல்லது. 11. பரிசில் கடைஇய நிலையும் - பரிசிலரை விட்டகல மனமில்லாத தலைவன், பரிசில் கொடாது நாள் கடத்திக் கொண்டு வரவே, இரவலன், ‘எனது சுற்றம் பசியுடன் உள்ளது. ஆகையால், இன்னது வேண்டும்’ எனத் தான் குறித்த பொருளைக் கேட்கும் பரிசில் கடாநிலையும்; தனக்கு வேண்டிய பொருளை இரவலன் கேட்டல் என்க. கடைஇய - கேட்ட. கடாதல் - வினாதல், கேட்டல். 12. கடைக் கூட்டும் நிலையும் - இரவலன் வாயிலோனிடம் சொல்லியனுப்பி அவ்வாயிலிடத்தே பரிசில் பெறும் கடைநிலையும்; வாயிலினின்றே பரிசில் பெற்றுச் செல்லுத லென்க. நிலை என்பதை ஈரிடத்தும் கூட்டுக. கடை - வாயில். கடைக்கூட்டு நிலை எனவும் படும். 13. பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி நடைவயின் தோன்றும் இருவகை விடையும் - பரிசில் பெற்றபின் அப்பரிசிலை உயர்த்துக்கூறி, உலக வழக்கியலால் தோன்றும் இருவகை விடையும்; இருவகை விடையாவன; 1. தலைவன் தானே விடுத்தலும், 2. பரிசிலன் போகவேண்டு மெனக்கூற விடுத்தலுமாம். இவ்விரண்டிடத்தும் உயர்த்துக் கூறுவரென்க. நடைவயிற் றோன்றுவனவாவன: 1. பரிசு சிறிதென்று போகல் 2. பிறர்பாற் சென்று பரிசு பெற்றுவந்து காட்டிப் போகல். 3. இடை நிலத்துப் பெற்ற பரிசிலை இடை நிலத்துக் கண்டார்க்குக் கூறுதல். இது, அரசன் போர் வென்று வரும் வழியில் பெற்றது. 4. பெற்ற பரிசிலை மனைவிக்குக் கூறுதல் முதலியனவாம். 14. ஓம்படை: நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் அச்சமும் உவகையும் எச்சம் இன்றி - நாள் நிமித்தம், புள்நிமித்தம், பிறவற்றின் நிமித்தம் ஆகிய பவவகை நிமித்தங்களால் பாடாண் டலைவர்க்குத் தோன்றும் தீங்கிற்கு அஞ்சிய அச்சமும், அவ்வச்சம் பிறத்தற்குக் காரணமான அன்பும் பரிசிலர்க்கு நீங்காது நிகழ்தலின், காலம் கண்ணிய ஓம்படை உளப்பட - அவர் தலைவரது உயிர் வாழுங் காலத்தைக் கருதிய பாதுகாவலோடே கூட; நாள் நிமித்தம், புள்நிமித்தம், தீச்சொல் முதலிய நிமித்தங் கண்டவழிப் பாடாண்டலைவர்க்குத் தீங்குண்டாகுமென அஞ்சிப் பரிசிலர் ஓம்படை கூறுவரென்பதாம். ஓம்படை - பாதுகாப்புச் சொல். நிமித்தம் - சகுனம், குறி. 1. நாள் நிமித்தமாவது - ஒருவனது பிறந்த நாளொடு கோள் பொருந்தாமை. நாள் - நட்சத்திரம். கோள் - கிரகம். வான மண்டலத்தில் நாளும் கோளும் நிற்கும் நிலைகண்டு, அதனால் அந்நாளுடையானுக்குத் தீதுண்டாகுமென அஞ்சி, அவ்வாறு தீதுண்டாகாமல் இருக்க வேண்டுமென வாழ்த்துதல். 2. புள் நிமித்தமாவது - புதுப்பறவை காணுதல், கூகை குளறுதல் முதலியன. 3. பிற குறியாவது - நற்சொற்கு மாறாகத் தீச்சொற் கேட்டல், நரி ஊளையிடுதல் முதலியன. தலைவர்கள் பால் புலவர்கள் கொண்டிருந்த அன்பிற்கு இஃது அறிகுறியாகும். இது பற்றித்தான் போலும் வள்ளுவர் ‘அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ்’ என்றது. ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின் காலம் மூன்றொடு கண்ணிய வருமே - மேற்கூறிய பாடாண்டிணையானது உலக வழக்கை யொட்டி மூன்று காலத்தினும் வேறுபடாது வரும் என்றவாறு. உலக வழக்கு மாறுபடினும் இவை மாறுபடா வென்பதாம். உலக வழக்கு நாளடைவில் மாறுபடினும் முன்னோர் வரையறுத் துள்ளபடியே வெட்சி முதலிய திணைகளைப் பாட வேண்டு மென்பதாம். இது பாடாண்டிணைக்கே பொதுவிதி கூறிற்றென்க. காட்டு: 1. வாடா வஞ்சி மலைந்த சென்னிப் போரடு தானைப் பொலந்தேர் வளவ, நின்றுயில் எழுமதி நீயும் ஒன்றா வேந்தர் பொன்றுதுயில் பெறவே. இது, துயிலெடைநிலை. 2. வான்றோய் வெண்குடை வயமான் வளவன் ஈன்றோர் தம்மினுந் தோன்ற நல்கினன், சுரஞ்செல் வருத்தமொ டிரங்கி யென்றும் இரந்தோர் அறியாப் பெருங்கலஞ் சுரக்குவன் சென்மதி வாழிய நீயே, நின்வயின் ஆடலு மகிழான், பாடலுங் கேளான் வல்லே வருகென விடுப்பி னல்லது நில்லென நிறுக்குவ னல்லன், நல்லிசைப் பெருந்தகை வேந்தர் கோலமொடு திருந்தா வாழ்க்கையின் வருந்து வோயே. இது, கூத்தராற்றுப்படை. ‘வேந்தர் கோலமொடு வருந்து வோயே’ எனல் காண்க. 3, 4. இவற்றிற்கு முறையே பெரும்பாண், சிறுபாணாற்றுப் படைகளும், பொருநராற்றுப்படையும் இலக்கியமாகும். 5. சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி, பெய்யினும் பெய்யா தாயினும் அருவி கொள்ளுழு வியன்புலத் துழைகா லாக மால்புடை நெடுவரைக் கோடுதோ றிழிதரும் நீரினும் இனிய சாயற் பாரி வேள்பாற் பாடினை செலினே. (புறம் - 105) இது, விறலியாற்றுப்படை. 6. செய்கை யறிக களவழிப்பா முன்செய்த பொய்கை யொருவனாற் போந்தரமோ - சைய மலைச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்திக் கொலைச்சிறைதீர் வேந்துக் குழாம். இது, வெள்ளணி. சிறைவிடுதல் கூறிற்று. மற்றவை வந்தவழிக் காண்க. 7. அளிமுடி யாக்கொண்ட அப்பெருநாள் வேய்ந்த ஒளிமுடி நீலமலை யொக்கும் - ஒளிமுடியின் மன்னன் வளவன் மலிதர மண்ணியநீர் பொன்னிப் புதுவரவே போன்ம். இது, மண்ணு மங்கலம். அளி - அருள். முடி - தலைமை. அளிமுடியாகக் கொண்ட - அருளை மேற்கொண்ட. 8. மந்தரங் காம்பா மணிவிசும் போலையாத் திங்க ளதற்கோர் திலதமா - எங்கணும் முற்றுநீர் வையம் முழுவதும் நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை. (புறத்திரட்டு - 1468) இது, குடைமங்கலம். 9. அரும்பவிழ்தார்க் கோதை அரசெறிந்த ஒள்வாட் பெரும்புலவுஞ் செஞ்சாந்து நாறி - சுரும்பொடு வண்டாடும் பக்கமும் உண்டு, குறுநரி உண்டாடும் பக்கமும் உண்டு. (புறத்திரட்டு - 1471) இது, வாண்மங்கலம். 10. கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில். (புறம் 15) என்னும் புறப்பாட்டு, மன்னெயில் அழித்த மண்ணு மங்கலம். 11. ஆடுநனி மறந்த கோடுயர் அடுப்பின் ஆம்பி பூப்பத் தேம்பசி யுழல. (புறம் - 164) என்னும் புறப்பாட்டு, பெருந்தலைச் சாத்தனார் குமணனைப் பரிசில் கடாயது. 12. மதியேர் வெண்குடை அதியர் கோமான் கொடும்பூ ணெழினி நெடுங்கடை நின்றியான் அணங்குடை மரபின் இருங்களந் தோறும் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும் வைக லுழவ, வாழிய பெரிதெனச் சென்றியான் நின்றனெ னாக, அன்றே ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி வேர்புரை சிதாஅர் நீக்கி, நேர்கரை நுண்ணூற் கலிங்கம் உடீஇ, உண்மென விருந்திறை நல்கியோனே அந்தரத் தரும்பெற லமிழ்த மன்ன கரும்பிவட் டந்தோன் பெரும்புறங் கடையே. (புறம் - 392) இது, கடைநிலை. ‘புறங்கடை சென்றியான் நின்றனனாக’ எனக்காண்க. 13. நற்றார்க் கள்ளின் சோழன் கோயில் புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப் பனிக்கயத் தன்ன நீணகர் நின்றென் அரிக்கூடு மாக்கிணை இரிய வொற்றி எஞ்சா மரபின் வஞ்சி பாட, எமக்கென வகுத்த வல்ல மிகப்பல மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந் தோனே, அதுகண் டிலம்பா டுழந்தவென் இரும்பே ரொக்கல் விரற்செறி மரபின செவித்தொடக் குநரும், செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும், அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும், மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும் அறாஅ வருநகை யினிதுபெற் றிகுமே. (புறம் - 378) இது, தலைவன் தானே போகென விடுத்தபின், அவன் கொடுத்த பரிசிலை உயர்த்துக் கூறிய விடை. செல்வ, சேறுமெந் தொல்பதிப் பெயர்ந்தென மெல்லெனக் கிளந்தன மாக, வல்லே துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத் தன்னறி யளவையிற் றரத்தர யானும் என்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண் டின்மை தீர வந்தனென். (பொருநராற் - 119) இது, பரிசிலன் யான் போகல் வேண்டுமெனக் கூற விடுத்த பின் தலைவன் தந்த பரிசிலை உயர்த்துக் கூறிய விடை. 14. பங்குனி யுயரழுவத்துத் தலை நாண்மீன் நிலைதிரிய நிலைநாண்மீ னதனெ திரேர்தரத் தொன்னாண் மீன் துறைபடியக் கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி ஒருமீன் வீழ்ந்தன்றால் விசும்பி னானே, அதுகண்டு, யாமும் பிறரும் பல்வே றிரவலர் பறையசை யருவி நன்னாட்டுப் பொருநன் நோயில னாயின் நன்றுமற் றில்லென அழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப வஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே. (புறம் - 229) இது, பாடாண்டலைவனது நாள்மீனை வீழ்மீன் நலிந்தமைக் கஞ்சி ஓம்படை கூறியது. புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற வறியா வேமக் காப்பினை அனையை யாகன் மாறே மன்னுயி ரெல்லாம் நின்னஞ் சும்மே. (புறம் - 20) இது, புள் நிமித்தங் கண்டஞ்சி ஓம்படுத்தது. மற்றவை வந்தவழிக் காண்க. (35) 10. எழுதிணைப் பொது 298. வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளும், உறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி யேய்ந்துபுகழ்ப் போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும், வாடா வள்ளி, வயவ ரேத்திய ஓடாக் கழனிலை யுளப்பட, ஓடா உடல்வேந் தடுக்கிய உன்ன நிலையும், மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் ஆரம ரோட்டலும், ஆபெயர்த்துத் தருதலும் சீர்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தலும், தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் அனைக்குரி மரபினது கரந்தை யன்றியும்; வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென் றிருவகைப் பட்ட பிள்ளை நிலையும், வாள்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க நாடவற் கருளிய பிள்ளை யாட்டும், காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று வகையிற் கல்லொடு புணரச் சொல்லப் பட்ட எழுமூன்று துறைத்தே. பொதுவியல் - 1 - 8 கரந்தை - 9 - 15 (7) 1. காந்தள் 9. ஆரமர் ஓட்டல் 2. போந்தை 10. ஆபெயர்த்துத் தருதல் 3. வேம்பு 11. வேந்தன் சிறப்பெடுத்துரைத்தல் 4. ஆர் 12. தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல் 5. வள்ளி 13. வருதார் தாங்கள் 6. கழனிலை 14. வாள்வாய்த்துக் பிள்ளை நிலை கவிழ்தல் 7. உன்ன நிலை 15. பிள்ளையாட்டு 8. பூவைநிலை நடுகல் - 16 - 21 (6) 16. காட்சி 19. நடுதல் 17. கால்கோள் 20. பெரும்படை 18. நீர்ப்படை 21. வாழ்த்தல் பொதுவியல் - 1 - 8 இ - ள்: 1. வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் - வெறியாட்டின் தன்மையை யறியுஞ் சிறப்பினையும் வெவ்விய வாயினையு முடையனாகிய வேலன் வெறிகொண்டாடும் காந்தளும்; வெறி கொண்டாடல் - சாமியாடுதல் போன்றது. வெறியாட்டு என்பது - ஒருவகைக் கூத்து. வேலன் வெறிகொண்டாடுதலின் இப்பெயர் பெற்றது. வேலைக் கையிலேந்தி யாடுதலின் வேலன் எனப்பட்டான். இன்றும் சாமியாடிகள் வேலேந்தியாடுதல் அறிக. அவ்வேலன் காந்தட் பூவைச் சூடியாடுதலின் இது காந்தள் எனப் பட்டது. இது அகத்திற்குச் சிறந்தது; புறத்திற்குச் சிறுபான்மை வரும். எனவே, இது அகம் புறம் இரண்டற்கும் பொதுவாயிற்று. இது, அகத்திணைக்கண் வெறியாட் டெனவும், புறத்திணைக்கண் வெறிக் கூத்தெனவும் பெயர் பெறும். புறத்தில் வெறிகொண்டாடுதல் மட்டுமே. அகத்தில் வேலன் வெறியாடிக் குறி சொல்வான். வேலன் - ஒரு குறிஞ்சி வகுப்பினன். 2, 3, 4. புகழ் ஏந்தும் மாபெரும் தானையர் - போர் செய்து புகழ் தாங்கும் மூவேந்தருடைய பெரும்படையாளர், உறுபகை வேந்து இடை தெரிதல் வேண்டி - உற்ற பகையிடத்து இன்ன வேந்தன் படையாளர் வென்றார் என்பதை அறிய வேண்டி, மலைந்த போந்தை வேம்பு, ஆர் என வரூஉம் பூவும் - சூடிய பனம்பூ, வேப்பம்பூ, ஆத்திப்பூ என அடிப்பட்டு வருகின்ற அப்பூக்களைச் சிறப்பித்துக் கூறுதலும்; பனை முதலிய மூன்றும் முறையே சேர பாண்டிய சோழர்களாகிய மூவரசர்க்குரிய பூக்கள். இங்ஙனம் பூவை மூன்றாகக் கொள்ளா விடின், ‘சொல்லப்பட்ட எழுமூன்று துறைத்தே’ என்னும் தொகை சரியாகாமை யறிக. ஒரு களத்தில் இருபெரு வேந்தர் பொருவுழி, இருபெரும் படையுந் தலைமயங்கிப் பொரும்போது யார் வென்றார் எனக் காண்போர் அறிதற்கும், மறவர்கள் தம்மவரை அறிதற்கும் அன்னார் தத்தம் அரசர் பூவைச் சூடிக் கொள்வர். தும்பை முதலிய திணைப்பூக்கள் இருபடையாளரும் சூடுதலான் இன்னாரென எளிதில் அறிய முடியாது. எனவே, திணைப் பூவுடன் தம் அரசர் பூவையுஞ் சூடிக் கொள்வரென்க. ஓரரசனுக்கு மற்றொருவன் படைத்துணையாகும் போது மூவரசர் சேனையும் ஒருகளத்தில் பொரும். ஆகவே, முப்பூவும் சூடுதலாயிற்று. இத்துறை மூன்றும் ‘பூ’ என வழங்கும். 5. வாடா வள்ளி - வாடுங் கொடியல்லாத வள்ளிக் கூத்து; வள்ளி என்பது மகளிர் ஆடுங் கூத்துள் ஒருவகை. வள்ளி - குறிஞ்சி நிலப் பெண் - குறத்தி; வேலன் மகளிர். வள்ளிக் கூத்து - குறத்தி போலக் கோலங் கொண்டாடுவது. ஆண்கள் குறத்திபோலக் கோலங் கொண்டாடுதலும் உண்டு. இது, அகத்திணைக்கண் வாராது. மறக்குடி மகளிர் போர்க்களத்தில் வள்ளிக் கூத்தாடி, மறவர்க்கு ஊக்க மூட்டுவர். இது, பெண் ஆண் இருவர்க்கும் பொது. 6. வயவர் ஏத்திய ஓடாக் கழல்நிலை உளப்பட - ஓர் இளைஞன், பெரும்படையைக் கண்டஞ்சி ஓடாது எதிர்நின்று பொருதமை கண்ட மறவர்கள், அவன் காலின்கண் கழல் புனைந்து ஆடும் கழல்நிலைக் கூத்தோடு; மறவரேயன்றி, மறக்குடி மகளிராடுதலும் உண்டு. இது, புறத்தில் மட்டும் வரும். 7. ஓடா உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும் - பின் வாங்காது பொரும் வேந்தனுக்கு வெற்றியுண்டாக இவ்வுன்ன மரம் தளிர்க்க வென மறவர் பரவும் உன்ன நிலையும்; உன்ன மரம் - ஒருவகைக் காட்டுமரம். ‘எம் வேந்தனுக்கு வெற்றி உண்டாக அக்கிளை தழைக’ என வேண்டுதல். 8. மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின் தாவா விழுப்புகழ் பூவை நிலையும் - முல்லை நிலத் தலைவனான மாயோன் விரும்பிக் காத்ததைப் போல நிலைபெற்ற மிக்க சிறப்புடன் காத்து அடைந்த நீங்காத பெரும் புகழைக் கூறும் பூவை நிலையும்; ஈண்டு ‘மாயோன்’ என்றது, ‘மாயோன் மேய’ (அகத் - 5) என அகத்திணையியலிற் கூறிய மாயோனையே யாகும். அவனைப்போல் காத்தெய்திய விழுப்புகழ் என ஒப்பிட்டுக் கூறியவாறு. பூவைநிலை - ஒருவர் புகழை ஒப்பிட்டுக் கூறுதல். ‘தொல்காப்பியர் காலத் தமிழர்’ - ‘தெய்வம்’ என்னும் தலைப்பிற் காண்க. இவை எட்டும் அகத்திற்கும் புறத்திற்கும் பொது வாயும். புறத்திற்கெல்லாம் பொதுவாயும் வருதலின், பொதுவியல் ஆயின. காந்தள் - அகம் புறம் இரண்டிற்கும் பொது. மற்றவை புறத்திற் கெல்லாம் பொது. காட்டு: 1. வெண்போழ் கடம்பொடு சூடி யின்சீர் ஐதமை பாணி யிரீஇக் கைபெயராச் செல்வன் பெரும்பெய ரேத்தி வேலன் வெறியயர் வியன்களம். (அகம் - 98) இது, வெறியாட்டயர்ந்த காந்தள்; அகத்திற்கு வந்தது. ‘அணங் குடை நெடுவரை’ (அகம் - 22) என்னும் அகப்பாட்டும் அது. அமரகத்துத் தன்னை மறந்தாடி யாங்குத் தமரகத்துத் தன்மறந் தாடுங் - குமரன்முன் கார்க்காடு நாறுங் களனிழைத்துக் காரிகையார் ஏர்க்காடுங் காளை யிவன். இது, மகளிராடிய வெறியாட்டு: புறத்திற்கு வந்தது. 2. ஏழக மேற்கொண் டிளையோ னிகல்வென்றான் வேழ மிவனேற வேந்துளவோ - ஏழுலகுஞ் தாந்தயங்கு நாகந் தலை தயங்க ஆடாமோ போந்தையங் கண்ணி புனைந்து. இது, போந்தை சூடியாடியது. போந்தை - பனம்பூ. ஏழகம் - ஆட்டுக் கிடாய். 3. குறும்பூழ்ப்போர் கையெறிந்து கொற்றம் பெறுதல் இறும்பூதென் றியாமாடல் வேண்ட - செறுங்கோன் குலமிதிக்கு மாறறியிற் கொற்றவன் வேம்பு தலைமலையற் பாலதூஉ மன்று. இது, வேம்பு குடியாடியது. குறும்பூழ் - காடை. 4. ஆர்வேய்ந்த கோலத்தோ டாடுவர் பாடுவர் போர்வேந்தர் பெற்றநாள் போலுவப்பர் - சீர்சால் பறைகெழு வாரணப்போர் பண்டிகழ்ந்தோ ரின்று சிறைகெழு வாரணப்போர் செய்து. இது, ஆர்மிலைந் தாடியது. ஆர் - ஆத்தி. வாரணம் - யானை. சிறைகெழு வாரணம் - கோழிச் சேவல். 5. மண்டம ரட்ட மறவர் குழாத்திடைக் கண்ட முருகனுங் கண்களித்தான் - பண்டே குறமகள் வள்ளிதன் கோலங்கொண் டாடப் பிறமகள் நோற்றாள் பெரிது. இது, வள்ளிக்கூத்து. முருகன் - வெறியாடும் வேலன். குறமகள் வள்ளி - குறமகளாகிய வள்ளி; இருபெயரொட்டு. இது, மறக்குடி மகளிர் வள்ளிபோலக் கோலங்கொண்டு போர்க் களத்தாடி வீரர்க்கு ஊக்க மூட்டுங் கூத்தென்க. 6. மீளாது பெற்ற விறற்கழலோன் வாளாட்டின் வாளாடு கூத்திவந் தாடினாள் - வாளாட்டின் மண்ணாளும் மன்னரே பெண்ணாவார் வண்ணமைக்குப் பெண்ணாடின் யாதாம் பிற. இது, கழற்கூத்து; பெண்டிராடியது. 7. முன்னங் குழையவுங் கோடெலா மொய்தளிரீன் றுன்னங் குழையொலித் தோங்குவாய் - மன்னரைக் கொன்று களங்கொள்ளுங் கொல்யானை வேந்தனை வென்றுகளங் கொள்ளுமேல் வேந்து. இது, உன்னநிலை. குழைதல் - தழைதல். 8. என்னு மினிதே யிருப்பக் குடிகாத்த மன்னு புகழ்மேய மாயோன்போல் - இன்னும் அரசில்லா தில்லை யவன்வழிபோந் தார்க்கப் பரிசில்லா தில்லை பயன். இது, பூவைநிலை. கரந்தை - 9 - 15 9. ஆர் அமர் ஓட்டலும் - குறுநிலமன்னர் முடி மன்னரை வெல்லுதலும்; காட்டில் வாழும் மறவர் வெல்லுதலும் சிறுபான்மை யுண்டு. வேந்தற்குத் துணையாகச் சென்றவர் பகை வேந்தரை வெல்லுதலும் இத்துறையே யாம். 10. ஆ பெயர்த்துத் தருதலும் - வெட்சிமறவர் கொண்ட நிரையைக் குறுநில மன்னரேனும், காட்டகத்து மறவ ரேனும் மீட்டுத் தருதலும்; இது, கண்டோர் முதலாயோர் கூறுவர். இது, வெட்சியைச் சேரும். 11. வேந்தன் சீர்சால் சிறப்பு எடுத்து உரைத்தலும் - வேந்தர்க்குரிய மிக்க புகழை வேறொருவர்மே லேற்றிக் கூறுதலும்; படையாளரும் பிறருங் கூறுவர். இது பாடாணைச் சாரும். 12. தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் - தன் ஆண்மையினாலே படையாளர் வஞ்சினங் கூறுதலும்; தாள் - முயற்சி. தலைத்தாள் - மிக்க முயற்சி. நெடுமொழி - வஞ்சினங் கூறல். இது, ஆண்மையினால் உண்டாவதால், இங்கு ஆண்மையை உணர்த்திற்று. 13. வருதார் தாங்கல் - தன்மேல் வரும் கொடிப்படையைத் தானே தாங்குதல். தாங்குதல் - எதிர்த்து நிற்றல். தார் - கொடிப்படை. 14. வாள் வாய்த்துக் கவிழ்தல் என்று இருவகைப் பட்ட பிள்ளை நிலையும் - வாட்போரிற் பகைவரைக் கொன்று தானும் இறத்தல் என இருவகைப்பட்ட பிள்ளை நிலையும்; பிள்ளை - போர்க்களஞ் சென்றறியாத வீர இளைஞர்கள் . அவர்கள் புதிதாகப் போர்க்களஞ் சென்று செய்யும் அஞ்சாமையே - பிள்ளைநிலை எனப்பட்டது. அது இரண்டு துறையானது. 1. வருதார் தாங்கும் பிள்ளை நிலை, 2. வாள் வாய்த்துக் கவிழும் பிள்ளைநிலை எனக் கூட்டுக. 15. வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடு அவற்கு அருளிய பிள்ளை யாட்டும் - வாட்போரில் வென்ற பிள்ளையை நாட்டினர் கண்டு மகிழ்ந்து, பறை யொலிக்க அவ்வரசிளங் குமரனுக்கு அரசு கொடுக்கும் பிள்ளையாட்டும்; நாடருளுதல் - தந்தை (அரசன்) போரிற் பட்டதனால் இளவரசற்கு நாட்டவர் முடி சூட்டுதல். இதனால், நாட்டு மக்களே அரசனுக்கு முடி சூட்டுதலாகிய பொதுமக்களாட்சி முறை (விரும்பியுடன் பட்ட ஆட்சி) பழந் தமிழகத்தே நடந்து வந்தமை பெறப்படும். எழுதல் - வெல்லுதல். தூங்குதல் - ஒலித்தல். அனைக்குரி மரபினது கரந்தை அன்றியும் - ஆரமர் ஓட்டல் முதலிய ஏழு துறைக்கு முரிய மரபினையுடைய கரந்தை யல்லாமலும்; ‘அன்றியும் காட்சி கால்கோள்’ எனப் பின்னவற்றோடு கூட்டுக. கரந்தையாவது - தன்னுறு தொழில்; ஆரமரோட்டல் முதலிய ஏழும் வேந்தன் ஏவுதலின்றி மறவரும், துணைவந்தோரும், குறுநில மன்னரும், மறக்குடிச் சிறாரும், அரசிளங் குமரரும் தாமாகவே செய்யுந் தொழிலாகலான் கரந்தையாயிற்று. மன்னுறுதொழி லல்லாமையால் இவை ஏழும் புறத்திணை வழுவாயின. மன்னுறு தொழில் - அரசன் ஏவலாற் செய்தல். தன்னுறு தொழில் - அரசன் ஏவலின்றித் தாமே செய்தல். காட்டு சீறூர் மன்னன் சிறியிலை யெஃகம் வேந்தூர் யானை யேந்துமுகத் ததுவே, வேந்துடன் றெறிந்த வேலே யென்னை சாந்தா ரகல முளங்கழித் தன்றே, உளங்கிழி சுடர்ப்படை யேந்திநம் பெருவிறல் ஓச்சினன் றுறந்த காலை மற்றவன் புன்றலை மடப்பிடி நாணக் குஞ்சர மெல்லாம் புறங்கொடுத் தனவே. (புறம் - 308) இது, குறுநில மன்னன் வேந்தனைப் புறங்கண்டது. கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக் காட்டொடு மிடைந்த சீயா முன்றில் நாட்செருக் கனந்தர்த் துஞ்சு வோனே அவனெம் மிறைவன் யாமவன் பாணர் கள்ளுடைக் கலத்தேம் யாமகிழ் தூங்கச் சென்றுவாய் சிவந்துமேல் வருக சிறுகண் யானை வெந்துவிழு முறவே. (புறம் - 316) இது, மறவன் வேந்தனைப் புறங்கண்டது. ‘வெருக்கு விடை யன்ன’ (புறம் - 324) என்னும் புறப்பாட்டுத் துணைவந்தோர் வென்றமை கூறியது. 10 ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த வல்வில் மறவர் ஒடுக்கங் காணாய் செல்லல் செல்லல் சிறக்கநின் உள்ளம் முருகுமேம் பட்ட புலத்தி போலத் தாபுவு தெறிக்கும் ஆன்மேற் புடையிலங் கொள்வாட் புனைகழ லோயே. (புறம் - 259) இது, குறுநில மன்னர் நிரை மீட்டது. கண்டோர் கூற்று. தாபுவு தெறிக்கும் - தாவிக் குதிக்கும். 11. அத்த நண்ணிய நாடுகெழு பெருவிறல் கைப்பொருள் யாதென்று மிலனே, நச்சிக் காணிய சென்ற இரவல் மாக்கள் களிற்றொடு நெடுந்தேர் வேண்டினும் கடல உப்பொய் சாகாட் டுமணர் காட்டக் கழிமுரி குன்றத் தற்றே எள்ளமை வின்றவ னுள்ளிய பொருளே. (புறம் - 313) இது, படையாளர், வேந்தற்குரிய புகழை மற்றொருவற் கேற்றிக் கூறியது. யானைக்கொடை கூறுதல் காண்க. 12. தானால் விலங்கால் தனித்தாற் பிறன்வரைத்தால் யானை யெறிதல் இளிவரவால் - யானை ஒருகை யுடைய தெறிவலோ யானும் இருகை சுமந்துவாழ் வேன். இது, வஞ்சினத்தைத் தன்னொடு புணர்த்துக் கூறியது. இளிவரவு - இகழ்ச்சி. 13. ஏற்றெறிந்தார் தார்தாங்கி வெல்வருகென் றேவினாள் கூற்றினுந் தாயே கொடியளே - போர்க்களிறு காணா விளமையாற் கண்டிவனோ நின்றிலனேல் மாணாருள் யார்பிழைப்பார் மற்று. இது, வருதார் தாங்கிய பிள்ளை நிலை. 14. ஆடும் பொழுதி னறுகயிற்றுப் பாவைபோல் வீடுஞ் சிறுவன்றாய் மெய்ம்மகிழ்ந்தாள் - வீடுவோன் வாள்வாயின் வீழ்ந்த மறவர்தந் தாயரே கேளா வழுதார் கிடந்து. இது, வாள்வாய்த்துக் கவிழ்ந்த பிள்ளை நிலை. 15. வன்கண் மறமன்னன் வாள்மலைந்து மேம்பட்ட புன்றலை யொள்வாட் புதல்வற்கண் - டன்புற்றுக் கான்கெழு நாடு கொடுத்தார் கருதார்க்கு வான்கெழு நாடு வர. இது, பிள்ளை யாட்டு. மன்னன் புதல்வன். கருதார் - பகைவர். நடுகல் - 16 - 21 இ - ள் : 16. காட்சி - கல்லுள்ள இடத்தே சென்று தகுதியான கல்லைப் பார்த்தல்; நாட்டியபின் கல்லைக் காணுதல். 17. கால்கோள் - மறவனது பெயரும் பெருமையும் பொறித்தற்கு நாட்கொள்ளுதல்; கல் நாட்டிய பின்னர் மறவன் அக்கல்லின்கண் வருதற்கு நாட்கொள்ளுதல். 18. நீர்ப்படை - கண்டு கொண்டு வந்த கல்லினை நீரிலிட்டுத் தூய்மை செய்தல்; நாட்டிய பின் நீராட்டுதல். 19. நடுதல் - கல்லினை நடுதல்; அக் கல்லின்கண் மறவனை நடுதல் - அக்கல்லில் தங்கும்படி செய்தல். 20. சீர்த்தகு சிறப்பின் பெரும்படை - மறவனது சிறப்புப் பொருந்திய புகழை அக்கல்லிற் பொறித்தல்; நாட்டிய கல்லிற்குப் பெருஞ் சிறப்புக்களைப் படைத்தல். படு + ஐ - படை. படைத்தல் - பதித்தல், பொறித்தல். படைத்தல் - தேங்காய் பழம் முதலிய படைத்தல். 21. வாழ்த்தல் - கால்கொள்ளுங்கால் - நாட்கொள்ளும் போது - வாழ்த்தல்; நட்டபின் கல்லினை வாழ்த்தல். ‘வகை’ என்றதனால், இவ்வாறு கொள்ளப்பட்டது. என்று இரு மூன்று வகையின் கல்லொடு புணரச் சொல்லப் பட்ட எழுமூன்று துறைத்தே - என்று முற்கூறப்பட்ட அறுவகையிலக்கணத்தையுடைய கல்லோடு, பின்னரும் அறுவகை யிலக்கணத்தையுடைய கல்லுங்கூட, இக்கூறப்பட்ட பொதுவியல் இருபத்தொரு துறையினை யுடைத்து என்றவாறு. கல்லின் துறை இருவகையாகக் கொள்ளப் பட்ட தெனினும் தொகை ஒன்றே பெற்ற தெனக் கொள்க. அதாவது, கல் ஆறுதுறையே யென்பது. கல்லைப் பார்த்துக் கொண்டுவந்து நீர்ப்படை செய்து பெயரும் பீடும் பொறித்து நாட்கொண்டு நட்டு வாழ்த்தலே முறையாகக் கொள்க. நடுகல்லாவது, போரிற் புறங்கொடாது வீரத்தோடு போர் புரிந்து புகழை நிறுத்திப் போர்க்களத் தொழிந்த வீரர்க்கு நினைவுக்கல் நாட்டி விழாக்கொண்டாடிப் போற்றுதல். அக் கல்லில் வீரனது பேரும் புகழும் உருவமும் பொறிக்கப்படும். அது நடுகல் எனப்படும். இதனால், பழந்தமிழ் மறவர்கள் கூலிப்படை யாயிராது, நாட்டுப் பற்றும் இனப்பற்றும் பொறுப்புணர்ச்சியும் உடையராய், நாட்டைக் காப்பதே தமது நீங்காக் கடமை யென்னும் உறுதி பூண்டு, தந் தாயகமாகிய தமிழகத்தை உயிரினும் பெரிதாக மதித்து, வீரப்போர் புரிந்து வெற்றியுடன் காத்து வந்தமை பெறப்படும். ஒளிறுவாள் அருஞ்சம முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. (புறம் - 312) என்னும் வீரத்தாயின் கூற்றும் இதற்குச் சான்று பகரும். காட்டு: 16. தாழி கவிப்பத் தவஞ்செய்வர் மண்ணாக வாழிய நோற்றனை மால்வரை - ஆழிசூழ் மண்டல மாற்றா மறப்புகழோன் சீர்பொறிப்பக் கண்டனென் நின்மாட்டோர் கல். இது, நடக் கற்கண்டது. கல்லாயு மேறெதிர்ந்து காண்டற் கெளிவந்த வல்லான் படலைக்கு வம்மினோ - வெல்புகழாற் சீரியல் பாடல் சிதையாமல் யான்பாடத் தூரிய மெல்லாந் தொட. இது, நட்டுக் கற்கண்டது. படலை - மாலை. தூரியம் - மங்கலப் பறை. 17. வரையறை சூழ்கிடக்கை மாத்தாட் பெருங்கல் வரையறை செய்யிய வம்மோ - வரையறை வாராப் பெரும்புகழ் வல்வேல் விடலைக்கும் ஓராற்றாற் செய்வ துடைத்து. இது, நடக் கால்கொண்டது. வரையறை செய்யிய - கால் கொள்ள, நாட்கொள்ள. காப்புநூல் யாத்துக் கடிகமழ் நீராட்டிப் பூப்பலி பெய்து புகைகொளீஇ - மீப்படர்ந்த காளை நடுகற் சிறப்பாய்ந்து கால்கொள்மின் நாளை வரக்கடவ நாள். இது, நட்டுக் கால் கொண்டது. 18. வாளமர் வீழ்ந்த மறவோன்கல் ஈர்த்தொழுக்கிக் கேளி ரடையக் கிளர்ந்தெழுந்து - நீள்விசும்பிற் கார்ப்படுத்த வல்லேறு போலக் கழலோன்கல் நீர்ப்படுத்தார் கண்ணீரி னின்று. இது, நாட்டா முன் நீராட்டியது. பல்லா பெயர்த்து நல்வழிப் படர்ந்தோன் கல்சொரிந் தாட்டிய நீரே தொல்லை வான்வழங்கு நீரினுந் தூய்தே யதனால் கண்ணீ ரருவியுங் கழீஇத் தெண்ணீ ராடுமின் தீர்த்தமா மதுவே. இது, நாட்டி நீராட்டியது. ‘கல் சொரிந்து’ என்பதால், நட்ட கல்லாயிற்று. 19. சீர்த்த துகளிற்றாய்த் தெய்வச் சிறப்பெய்த நீர்ப்படுத் தற்கு நிலைகுறித்துப் - போர்க்களத்து மன்னட்ட வென்றி மறவோன் பெயர்பொறித்துக் கன்னட்டார் கல்சூழ் கடத்து. இது, கல் நாட்டியது. கோள்வாய்த்த சீயம்போற் கொற்றவர்தம் மாவெறிந்து வாள்வாய்த்து வீழ்ந்த மறவேலோய் - நாள்வாய்த் திடைகொள லின்றி எழுத்துடைக் கல்வாய் மடைகொளல் வேண்டு மகிழ்ந்து. இது, கல்லில் மறவனை நாட்டியது. 20. கைவினை மாக்கள் கலுழக்க ணோக்கிழந்து செய்வினை வாய்ப்பவே செய்தமைத்தார் - மொய்போர் மறவர் பிணம்பிறக்கி வாள்வாய்த்து வீழ்ந்தோன் பிறபெயர்சூழ் கல்மேற் பெரிது. இது, பெயர் முதலியன பொறித்தது. பெயர் சூழ்கல்மேல் பிற செய்தமைத்தார். அன்றுகொ ளாபெயர்த் தாரமரில் வீழ்ந்தான்கற் கின்றுகொள் பல்லர னினமெல்லாம் - குன்றாமற் செய்ம்மினோ சீர்ப்பச் சிறப்பாகத் தீபங்கள் வைமினோ பீடம் வகுத்து. இது, கல்லிற்குச் சிறப்புப் படைத்தது. 21. ஆவாழ் குழக்கன்றுய் வித்துக் களத்தவிந்த நீவாழ வாழிய நின்னடுகல் - ஓவாத விற்கோட்ட நீண்டதோள் வேந்தன் புலிபொறித்த பொற்கோட் டிமயமே போன்று. இது, கல் வாழ்த்து. பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண் இரும்பறை யிரவல, சேறி யாயிற் றொழாதனை கழித லோம்புமதி, வழாஅது வண்டுமேம் படுமிவ் வறநிலை யாறே பல்லாத் திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து கல்லா மறவர் நீங்க நீங்கான் வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக் கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லே. (புறம் - 263) இது, நட்டபின் வாழ்த்தியது. ‘கல் தொழாதனை கழிதல் ஓம்பு மதி’ எனத் தொழுது செல்லென்றமை காண்க. (36) ஆறாவது புறத்திணையியல் குழந்தையுரை முற்றிற்று தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பகுதி மூலமும் குழந்தையுரையும் முற்றிற்று. * * * நூற்பா முதற்குறிப் பகர வரிசை / நூற்பா அகத்திணைமருங் 269 அச்சமுநாணு 128 அடியோர்பாங் 23 அணங்கேவிலங் 243 அதுவேதானு 276 அந்தணாளர்க்க 48 அந்தணாளர்க்கு 50 அமரர்கண்முடி 288 அம்பலுமலரு 174 அயலோரா 185 அருள்முந்து 205 அலரிற்றோன் 218 அல்குல்தைவ 250 அல்லகுறிப்படு 156 அவற்றுள் - ஓ 26 அவற்றுள் - ந 2 அவனறிவாற் 195 அவன்குறிப் 202 அவன்சோர்பு 208 அவன்வரம்பி 154 அவையுமுள 256 அறக்கழிவுடை 113 அறத்தொடுநி 169 அறுவகைப்பட்ட 283 அன்புதலைப்பி 75 அன்பேயறனே 165 அன்னபிற 254 அன்னராயி 52 அன்னவகை 148 அன்னையென்னை 116 ஆங்கவையொ 247 ஆங்காங்கொ 157 ஆயர்வேட்டு 21 ஆய்பெருஞ்சி 62 ஆறினதருமை 158 ஆற்றதுபண்பும் 81 இசைதிரிந் 90 இடித்துவரை 85 இடைச்சுர 181 இடையிருவ 60 இமையோர்தே 110 இயங்குபடைய 274 இரந்துகுறை 150 இரவுக்குறி 153 இருவகைக்குறி 132 இருவகைப்பி 11 இளிவேயிழ 240 இன்பத்தைவெ 257 இன்பமும்பொ 120 உடம்புமுயிரு 98 உணர்ப்புவரை 199 உண்டற்குரி 101 உயர்ந்தோர்கி 93 உயர்ந்தோர்க்கு 33 உயர்மொழிக்கி 106 உயர்மொழிக்குரி 104 உயிரினுஞ்சி 163 உயிருநாணு 96 உரிப்பொருளல் 12 உழைக்குறுந் 82 உறுகணோம்ப 105 உறுப்பறைகு 245 உற்றுழியல்லது 171 ஊருமயலு 65 ஊரும்பேரு 58 ஊரொடுதோற்ற 293 எஞ்சாமண்ண 273 எஞ்சியோர்க்கு 183 எண்ணரும்பா 226 எத்திணைமருங் 35 எந்நிலமருங் 15 எல்லாவாயிலு 74 எல்லாவுயிர்க் 118 எளித்தலேத்த 170 எள்ளலிளமை 239 ஏமப்பேரூர்ச் 184 ஏவல்மரபி 24 ஏறியமடற் 38 ஏனைப்பிரிவு 222 ஏனோர்பாங் 22 ஒண்டொடிமா 58 ஒப்பும்உருவு 109 ஒருசிறைநெஞ் 99 ஒருதலையுரிமை 178 ஒருபாற்கிளவி 117 ஒழிந்தோர்கி 187 ஒன்றாத்தமரி 180 ஒன்றேவேறே 121 ஓதல்பகையே 25 கணையும்வே 279 கண்ணியுந்தா 55 கண்ணினுஞ்செ 262 கரணத்தின 194 கலந்தபொழுது 19 கல்விதறுகண் 244 கழிவினும் 83 களவலரா 133 களவுங்கற்பு 217 கற்புங்காமமு 89 கற்புவழிப் 211 கற்பெனப் 190 கனவுமுரித் 92 காமக்கடப் 203 காமக்கூட்டந் 145 காமஞ்சாலா 36 காமஞ்சான்ற 224 காமஞ்சொல்லா 138 காமத்திணையி 137 காமநிலை 86 காமப்பகுதி 290 காமப்புணர்ச்சி 119 காரும்மாலையும் 6 கிழவன்றன் 66 கிழவிநிலையே 228 கிழவிமுன்னர் 230 கிழவோள்பிற 212 கிழவோனறி 175 கிழவோன்வி 219 குடையும்வா 278 குழவிமருங் 292 குறித்தெதிர் 88 குறிப்பேகுறித் 126 குறியெனப்ப 151 குறையுறவு 147 கூதிர்வேனில் 284 கூழைவிரித் 249 கைக்கிளைமு 1 கொடிநிலைகந் 289 கொடுப்போரின் 191 கொடுப்போரேத் 296 கொண்டுதலைக் 18 கொள்ளார்தேஎ 277 கொற்றவள்ளை 295 சிறந்துழியை 122 சினனேபே 108 சுரமெனமொ 166 சூழ்தலும்உசா 146 செய்பொரு 233 செலவிடையழுங் 232 செல்வம்புலனே 246 செறிவுநி 160 சொல்லியகி 84 சொல்லெதிர் 139 ஞாயிறுதிங் 72 தந்தையுந்த 173 தம்முறுவிழு 213 தலைமைக்கு 59 தலைவரும்வி 179 தற்புகழ்கி 209 தன்வயிற்க 100 தன்னுமவ 182 தன்னுறுவேட் 125 தாயத்தினடை 102 தாயறிவுறுத 172 தாய்க்குமுரித் 93 தாய்க்கும்வ 134 தாய்போற்க 207 தாவில் கொள்கை 282 தாவில் நல்லிசை 297 தானே சேறலுந் 27 தானையானை 281 திணைமயக்கு 17 துன்புறுபொழு 231 தெய்வமஞ்சல் 259 தெய்வமும்உனாம் 14 தெரிந்துடம்படு 252 தேரும்யானையு 159 தொல்லவையு 79 தோழிதாயே 73 தோழிதானே 63 தோழியின்மு 155 தோழியுள்ளுறு 235 நகையேயழு 238 நடுவுநிலைத் 9 நட்பினடக்கை 95 நாடகவழக் 42 நாட்டமிரண் 124 நாலிரண்டாகு 237 நாளதுசின்மை 225 நாற்றமுந்தோற் 131 நிகழ்தகைம 210 நிகழ்தகூ 189 நிகழ்ந்ததுநி 188 நிம்பிரிகொடு 261 நிலம்பெயர்ந் 80 நூலேகரக 46 நோயுமின்பமு 91 பகற்புணர்க 152 படையியங்க 271 படையுங்கொ 49 பண்ணைத்தோன் 236 பண்பிற்பெயர்ப் 130 பரத்தைமைம 201 பரத்தைவாயி 215 பரத்தைவாயில் எ! 68 பரிசில் பாடாண் 47 பனியெதிர்பரு 7 பன்னூறுவ 168 பாங்கருஞ்சி 285 பாடாண்பகுதி 287 பாணன்கூத் 64 பாராட்டெடுத் 251 பார்ப்பார்அ 71 பார்ப்பான்பாங் 61 பால்கெழுதி 94 பிறப்பேகுடிமை 260 பின்பனிதானு 10 பின்முறையாக் 206 புகுமுகம்புரிதல் 248 புணர்தல்பிரி 16 புணர்ந்துடன்போ 234 புதுமைபெரு 242 புலத்தலும்ஊ 200 புல்லுதல்ம 197 புறஞ்செயச் 253 புறத்திணைமருங் 414 புறத்தோராங் 227 பூப்பின்புறப் 216 பெயரும்வி 20 பெருமையு 127 பெறற்கரும் 196 பொய்யும்வ 193 பொருளென 164 பொருள்வயிற் 32 பொழுதுதலைவைத் 40 பொழுதுமாறுங்கா 162 பொழுதுமாறும்உ 186 மக்கள் நுதலி 43 மங்கலமொழி 107 மரபுநிலைதிரி 41 மறங்கடைக் 272 மறைந்தவற்கா 161 மறைந்தவொழுக் 140 மறைவெளிப் 198 மனையோள்கி 70 மனைவிதலைத் 76 மனைவிமுன் 77 மனைவியுயர் 204 மன்னர்பாங் 30 மாயோன்மேய 5 மாற்றருங்கூற் 286 மிக்கபொருளி 114 முட்டுவயிற் 258 முதலெனப்படு 13 முதலொடுபுணர்ந் 144 முந்நாளல்லது 141 முந்நீர்வழக் 34 முயற்சிக்காலத் 149 முழுமுதலரணம் 275 முறைப்பெயர் 115 முன்னிலைப்புற 78 முன்னிலையாக் 135 முன்னையநான்கு 37 முன்னையமூன்று 143 மூப்பேபிணியே 241 மெய்தெரிவ 54 மெய்தொட்டுப் 129 மெய்பெறுவகை 263 மெய்ப்பெயர் 45 மேலோர்முறை 29 மேலோர்மூவர் 192 மேவியசிறப் 28 மைந்துபொரு 279 மொழியெதிர் 87 யாறுங்குளனு 223 வஞ்சிதானே 263 வணிகன்பெறு 53 வண்டேயிழை 123 வண்ணம்பசந்து 97 வருத்தம்மிகுதி 103 வரைவிடை 167 வழக்கெனப் 111 வழக்கொடுசிவ 294 வழங்கியன்ம 291 வாகைதானே 263 வாயிலுசாவே 69 வாயிற்கிளவி 214 வில்லும் வேலும் 51 வினையுயிர் 255 வினைவயிற் 229 வெட்சி தானே 263 வெளிப்படவ 176 வெளிப்படை 177 வெறியறிசிறப் 298 வேட்கைமறுத் 39 வேட்கையொரு 136 வேண்டியகல்வி 220 வேந்துவிடுதொழி 57 வேந்து விடுமுனைநர் 270 வேந்துவிடுவினையியற் 31 வேந்துறுதொ 221 வேளாண்மாந்தர்க் 56 வைகறைவிடியல் 8