நூற்றாண்டு நினைவு வெளியீடு புலவர் குழந்தை படைப்புகள் - 12 நீதிக்களஞ்சியம் உரை - 2 அனைத்து நூல்களும் ஒருசேரத் தொகுத்து, பொருள் வழிப்பிரித்து, கால வரிசையில் ஒரே வீச்சில் வெளிவருகின்றன. ஆசிரியர் புலவர் குழந்தை நூற்பெயர் : புலவர் குழந்தை படைப்புகள் - 12 ஆசிரியர் : புலவர் குழந்தை பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 408 = 424 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 265/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906இல் தோன்றி 1973இல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர். தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் பட்ட அவலங்களை எண்ணி யெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளை எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு பதிவுகளாக எழுதி வைத்துச் சென்றவர். தமிழ் இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி 1 முதல் 15 படைப்புகளாக ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய முத்து மாலையாகத் தந்துள்ளோம். இவர் நூல்கள் அனைத்தும் தமிழ்மொழி இன நாட்டின் மேன்மைக்கும், வாழ்வுக்கும், வளத்துக்கும் வித்திடுபவை. குறிப்பாக இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிழ் மண்ணில் தன்மானக் கொள்கைகள் நிலைத்து நிற்பதற்கு செயற்கரிய செயல்களைத் தமிழ் இளைஞர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும் எனும் இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்ற தமிழ்ப்பெருமக்களுக்கும், இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும்புலவர் இரா. வடிவேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன் கொள்ளும் வகையில் பிழையற்ற பதிப்பக வெளிவருகின்றது. வாங்கிப் பயனடையுங்கள். (இராவண காவியம் நூலுக்கு மிகச்சிறந்த தெளிவுரை எழுதப்பட்டு வருவதால் இப்படைப்பு வரிசையில் சேர்க்க முடியவில்லை. விரைவில் வெளிவரும்.) கோ. இளவழகன் மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு. புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல் களையும் அரசுடைமை யாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது. பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர். அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது. 4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார். அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார். அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார். “இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3). புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தையானாலும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள்தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழுதினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும். விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார். “புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்து வதற்காக எழுதப்பட்டதேயாகும். நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப்படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார். புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக் கியத்தனங்களையெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப்படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளை யெல்லாம் சாமியாக்குகின்றான். அதுபோல நமக்காகப் பாடுபடுகின்றவர்களை, தொண்டு செய்கிறவர்களை, எழுதுகிறவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன்வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத்துரைத்தார்கள். சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை 1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடைபோட்ட காட்சி கண் கொள்ளாதது. 1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட! எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர். வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது. இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு! கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார். “தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!” நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப்பிட்டதிலிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது. கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள் கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார். “ இனியொரு கம்பனும் வருவானோ? இப்படி யும்கவி தருவானோ? கம்பனே வந்தான்; அப்படிக் கவிதையும் தந்தான் ஆனால், கருத்துதான் மாறுபட்டது” என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது. கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை. தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற்பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இராவண காவிய மாநாடு இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன; முதல் மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டதுண்டு. இத்திசையில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு. தீர்மானங்கள் 28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும். இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும். மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும். இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல் படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005) அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான். மத்திய அரசு தொலைத் தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத் துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005). தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது. கலைஞரின் சாதனை! இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார். வாழ்க அப்பெருமகனார்! (நன்றி : விடுதலை 2.7.2006) ‘செந்தமிழ்க் குழந்தை’ பள்ளி சென்று படித்த காலம் 5 ஆண்டு எட்டு மாதம் தான்! ஆனால் திருக்குறளுக்கும், தொல்காப்பியத்துக்கும் உரை எழுதி, பேரிலக்கியம் ஒன்றைப் படைத்து, நாடகக் காப்பியம் உருவாக்கிப் பல இலக்கண நூல்களையும், வரலாற்று நூல்களையும் எழுதியவர் பெரும்புலவர் அ.மு. குழந்தை. ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த ஓல வலசில் 1.7.1906 அன்று முத்துசாமிக் கவுண்டர், சின்னம்மையார் தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர் குழந்தைசாமி; பின்பு தன்னைக் ‘குழந்தை’ என்றே குறிப்பிட்டுக் கொண்டார். ஈரோடு லண்டன் மிஷன் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் “எலிமெண்டரி கிரேடு”, “லோயர் கிரேடு”, ஹையர் கிரேடு” ஆசிரியர் பயிற்சி பெற்ற அவர் திருவையாறு சென்று தேர்வு எழுதி 1934இல் ‘வித்துவான்’ பட்டம் பெற்றார். மொத்தம் 39 ஆண்டுகள் ஆசிரியப் பணிபுரிந்தார். பவானி மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் மட்டும் தொடர்ந்து 21 ஆண்டுகள் பணி புரிந்தார். தொடக்க காலத்தில் கன்னியம்மன் சிந்து, வீரக்குமாரசாமி காவடிச்சிந்து, ரதோற்சவச் சிந்து போன்ற பக்திப் பாடல்களைப் பாடினாலும் 1925க்குப் பின் பெரியாரின் பெருந் தொண்டராகவே விளங்கினார். ‘தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக விளங்கும் நூல்திருக்குறள்; அது மனித வாழ்வின் சட்ட நூல்’ என்ற கொள்கையுடைய குழந்தை 1943, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற திருக்குறள் மாநாடுகளில் பெரும் பங்காற்றினார். தான் எழுதிய பள்ளிப்பாட நூல்களுக்கு ‘வள்ளுவர் வாசகம்’ வள்ளுவர் இலக்கணம்’ என்று பெயரிட்டார். வள்ளுவர் பதிப்பகம் வைத்துப் பல நூல்களை வெளியிட்டார். அவற்றுள் பெரியார் நூல்கள் நான்கு. பள்ளிக்கு வெளியே வந்தவுடன் கருப்புச்சட்டை அணிந்து கடவுள் மறுப்பாளராக விளங்கினாலும் பள்ளிப் பாடங்களில் உள்ள பக்திப் பாடல்களை மிகவும் சுவைபட நடத்துவார். தான் இயற்றிய ‘யாப்பதிகாரம்’ ‘தொடையதிகாரம்’ போன்ற நூல்களில் திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள் பலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அரசியல் அரங்கம், நெருஞ்சிப்பழம், காமஞ்சரி, உலகப் பெரியோன் கென்னடி, திருநணாச் சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல்கள் போன்றவை கவிதை நூல்கள், ‘காமஞ்சரி’ பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மனோண்மனியத்திற்குப் பின் வந்த மிகச் சிறப்பான நாடகக் காப்பியம் ஆகும். தொல்காப்பியர் காலத் தமிழர், திருக்குறளும் பரிமேலழ கரும், பூவா முல்லை, கொங்கு நாட்டு வரலாறு, தமிழக வரலாறு, தமிழ் வாழ்க, தீரன் சின்னமலை, கொங்குக் குலமணிகள், கொங்கு நாடும் தமிழும், அருந்தமிழ் அமுது, சங்கத் தமிழ்ச் செல்வம், அண்ணல் காந்தி ஆகியவை உரைநடை நூல்கள். ‘தமிழ் வாழ்க’ நாடகமாக நடிக்கப்பட்டது. தீரன் சின்னமலை பற்றி முதன்முதலில் நூல் எழுதி அவர் வரலாற்றை வெளிக் கொணர்ந்தவர் புலவர் குழந்தை. தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்குப் புதிய எளிய உரை எழுதினார். திருக்குறளுக்குப் புத்துரை எழுதியதுடன் தமிழில் வெளிவந்த அனைத்து நீதி நூல்களையும் தொகுத்து உரையுடன் “நீதிக் களஞ்சியம்” என்ற பெயரில் பெரு நூலாக வெளியிட்டார். தமிழ் அறிந்தவர்கள் அனைவரும் கவிஞராக ‘யாப்பதி காரம்’, ‘தொடையதிகாரம்’ என்ற யாப்பு நூல்களை எழுதினார். கும்மி, சிந்து ஆகியவற்றிற்கும் யாப்பிலக்கணம் வகுத்துள்ளார். இலக்கணம் கற்க நன்னூல் போல ஒரு நூல் இயற்றி ‘இன்னூல்’ என்று பெயரிட்டார். ‘வேளாளர்’ ‘தமிழோசை’ போன்ற இதழ்களையும் நடத்தினார். வகுப்பில் பாடம் நடத்தும்போது பாடல்களை அதற்குரிய ஓசை நயத்துடன் ஒலிப்பார். உரைநடைபோலத் தமிழாசிரியர்கள் பாடல்களைப் படிக்கக் கூடாது என்பது அவருடைய கருத்தாகும். தமிழைப் பிழையாகப் பேசினாலோ, எழுதினாலோ கண்டிப்பார். ஈரோட்டில் வாழ்ந்த மேனாட்டுத் தமிழறிஞர் ‘பாப்லி’லியுடன் நெருங்கிப் பழகியவர். அவரைப் பற்றிப் ‘பாப்புலி வெண்பா’ என்ற நூலே எழுதியுள்ளார். அவர் படைப்பில் தலையாயது ‘இராவண காவியம்’ ஆகும். பெயரே அதன் பொருளை விளக்கும். 5 காண்டங்கள், 57 படலங்கள், 3100 பாடல்கள். இந்நூல் 1946-ல் வெளிவந்தது. பின் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. தடை நீங்கி 1971-ல் இரண்டாம் பதிப்பும் 1994-ல் மூன்றாம் பதிப்பும் வெளிவந்தது. அண்மையில் நான்காம் பதிப்பை சாரதா பதிப்பகம் (சென்னை - 14) வெளியிட்டுள்ளது. மிகச்சிறந்த நயமுடைய இராவண காவியத்தைக் கம்பனில் முழு ஈடுபாடு கொண்ட அறிஞர்களும் பாராட்டியுள்ளனர். ‘கம்பன் கவிதையில் கட்டுண்டு கிடந்தேன். இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது’ என்று ரா.பி.சேதுப்பிள்ளை கூறினார். கம்பர் அன்பர் ஐயன்பெருமாள் கோனார் ‘இனியொரு கம்பன் வருவானோ? இப்படியும் கவிதை தருவானோ? ஆம், கம்பனே வந்தான்; கவிதையும் தந்தான்’ என்று புலவர் குழந்தையைப் பாராட்டுவார். அறிவியல் தமிழ் அறிஞர் பெ.நா.அப்புசாமி போன்றோரின் துணையுடன் அரிய செய்திகள் சேகரித்துத் ‘திராவிட காவியம்’ பாட முயன்றபோது 24.9.1972 அன்று புலவர் குழந்தை மறைந்தார். பாரதிதாசன் ‘செந்தமிழ்க் குழந்தை’ என்று பாராட்டியது போலத் தமிழாக வாழ்ந்த அவருடைய நூற்றாண்டு நிறைவு நாள் 1.7.2006 ஆகும். புலவர், முனைவர் இரா. வடிவேலனார் பொருளடக்கம் நீதிக்களஞ்சியம் உரை - 2 பதிப்புரை iii மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை iv செந்தமிழ்க் குழந்தை x 37. இல்வாழ்க்கை 3 38. மனைமாட்சி 16 39. மக்கட்பேறு 28 40. பொருளுடைமை 32 41. முயற்சியுடைமை 46 42. இடுக்கணழியாமை 66 43. கடன்படாமை 68 44. விருந்தோம்பல் 70 45. அன்புடைமை 73 46. இன்சொல் 75 47. நன்றியறிதல் 82 48. ஈகை 87 49. ஈயாமை 115 50. சுற்றந்தழுவல் 127 51. கண்ணோட்டம் 141 52. ஒப்புரவு 146 53. குடிப்பிறப்பு 152 54. பண்புடைமை 163 55. மேன்மக்கள் 171 56. நல்லினஞ்சேர்தல்... 215 57. பெரியாரைப் பேணல் 227 58. பெருமை 232 59. மானம் 239 60. புகழ் 252 61. இன்மை 254 62. இரவச்சம் 269 63. நன்றியிற் செல்வம் 277 64. உழவு 287 65. வினைத்திறம் 291 66. கீழ்மை 298 67. கயமை 335 68. அரசியல் 342 69. அமைச்சியல் 360 70. பகைத்திறம் 369 71. நிலையாமை 377 செய்யுள் முதற்குறிப்பகரவரிசை 390 நீதிக்களஞ்சியம் உரை-2 (1962) 37. இல்வாழ்க்கை அதாவது, இல்லறத்தின் சிறப்புக் கூறுதல். இல்வாழ்க்கை - இல்லறம் - குடும்பம் நடத்ததுதல். 586. சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம் இல்லாளே வந்த விருந்தோம்பச் - செல்வத் திடரின்றி யேமாந் திருந்தாரே நாளும் கடலுட் டுலாம்பண்ணி னார். (பழ) சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பின் - தாம் சொல்லாமலே தம் முகக் குறிப்பைப் பார்த்து அகக் குறிப்பை அறியும் குணத்தையுடைய, தம் இல்லாள் வந்த விருந்து ஓம்ப - தமது மனைவி வீட்டுக்கு வந்த விருந்தினரைப் பேண, இடர் இன்றி செல்வத்து ஏமாந்து இருந்தாரே - யாதொரு துன்பமு மின்றிச் செல்வமாகிய பாதுகாப்பைப் பெற்றிருந்தவரே, நாளும் கடலுள் துலாம் பண்ணினார் - நாடோறும் நீரிறைத்துக் கொள்ளக் கடலில் ஏற்றம் வைத்தாரோடொப்பர். நோக்கி - முகக் குறிப்பைப் பார்த்து. குறிப்பு - அகக் குறிப்பு. பண்பு - குணம். பண்பின் - குணமுடைய. ஓம்ப - உணவிட்டுப் பேண. இடர் - துன்பம். ஏமாப்பு - பாதுகாப்பு. துலாம் - ஏற்றம். குறிப்பறிதல் - கணவன் விருப்பமறிந்து நடந்து கொள்ளுதல். இது பெண்டிர்க்குரிய சிறந்த குணங்களுள் ஒன்றாகும். அக்குறிப் பறியாப் பெண்களே ஒத்துக் குடும்பம் நடத்தாமல் குடும்பத்தைக் கெடுப்பர். செல்வம் இருந்தால் இடரொன்றும் நேராதாகையால் செல்வத்தை ஏமாப்பு என்றார். செல்வமாகிய பாதுகாப்பைப் பெற்றிருத்தலினால் அவரை யாதொரு துன்பமும் அணுகாத தாயிற்று. கடலில் ஏற்றுவைத்துத் தண்ணீர் இறைப்பார்க்கு ஒருநாளும் தண்ணீர்த் தட்டுதல் உண்டாகாதவாறு போல, கொண்டான் குறிப்பறிந்து நடக்குங் குணமும், விருந்தினரை யோம்பும் தன்மையும் உடைய மனைவியையும், நிறைந்த செல்வத்தையும் பெற்றவர் யாதொரு குறையுமின்றி இனிது வாழ்வர் என்பதாம். இல்வாழ்க்கைக்கு, மனைமாட்சியுடைய மனைவியும், போதிய செல்வமும் இன்றியமையாதனவாகும். (1) 587. நல்கூர்ந் தவர்க்கு நனிபெரிய ராயினார் செல்விருந் தாகிச் செலவேண்டா - ஒல்வ திறந்தவர் செய்யும் வருத்தம் குருவி குறங்கறுப்பச் சோருங் குடர். (பழ) நனி பெரியர் ஆயினார் - மிகப் பெரிய செல்வர்கள், நல்கூர்ந்த வர்க்கு செல்விருந்து ஆகிச் செலவேண்டா - வறுமை யுடைய சுற்றத்தார் வீட்டுக்கு அடிக்கடி விருந்தினராகச் செல்லக் கூடாது; (செல்வாராயின்), அவர் ஒல்வது இறந்து - அவ்வறியவர் தமது தகுதிக்கு மீறி, செய்யும் வருத்தம் - விருந்து செய்யும் வருத்தமானது, குருவி குறங்கு அனுப்பக் குடர் சோரும் - குருவியின் தொடையை அறுத்த அளவில் அதன் குடல் சோருவதனோ டொக்கும. நல்கூர்ந்தவர் - வறுமையுற்றவர். நனிபெரிய - ஒரு பொருட் பன்மொழி - மிகப் பெரிய. பெரியர் - பெருஞ் செல்வர். செல் விருந்து - விருந்து என்னும் அளவில் நின்றது. இங்கு விருந்து என்றது சுற்றத்தார் வீட்டுக்கு அடிக்கடி செல்வதை. ஒல்வது - இயல்வது. இறந்து - கடந்து, மீறி. குறங்கு - தொடை. சோர்தல் - நோதல். குடர் - குடல், போலி. மிகப் பெரிய செல்வர் தமது ஏழைச் சுற்றத்தார் வீட்டுக்கு அடிக்கடி சென்றால், அவர் இவர் தகுதிக் கேற்பத் தம் தகுதிக்கு மீறி விருந்து செய்து வருந்துவர். சுற்றத்தாரைப் பார்க்கச் சென்று அவரை வருந்தச் செய்யும் அவ்வருத்த மானது, குருவியின் தொடையை அறுத்து அதனை வருந்தச் செய்வது போன்றதாகும் என்பதாம். மிகப்பெருஞ் செல்வர்கள் தம் ஏழைச் சுற்றத்தார் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவரை வருந்தச் செய்யக் கூடாது. (2) 588. நட்டாரை யாக்கிப் பகைபணித்து வையெயிற்றுப் பட்டா ரகலல்கு லார்ப்படிந் - தொட்டித் தொடங்கினா ரில்லகத் தன்பிற் றுறவா உடம்பினா னாய பயன். (சிறு) நட்டாரை ஆக்கி - நண்பர்களை மிகச் செய்து, பகை பணித்து - பகைவரைக் குறைத்து, வை எயிற்று பட்டு ஆர் அகல் அல்குலார் படிந்து - கூரிய பற்களையுடைய பட்டாடை உடுக்கப் பெற்ற அகன்ற அல்குலையுடைய பெண்களோடு கூடி, ஒட்டித் தொடங் கினார் அகத்து இல் அகத்து - மனைவியின் குடியிற்பிறந்தாரி டத்தும் தமது குடியிற் பிறந்தாரிடத்தும், அன்பின் துறவா - அன்பு நீங்காமை ஆகிய இவை, உடம்பினான் ஆய பயன் - மக்கட் பிறப்பினால் உண்டாய பயன்களாம். நட்டார் - நன்பர். ஆக்கி - மிகுதியாக்கி. பணித்தல் - குறைத்தல். வை - கூர்மை. எயிறு - பல், பட்டு - பட்டாடை. ஆர்தல் - பொருந்துதல் - உடுத்தல். அல்குல் - இடைக்கும் தொடைக்கும் இடைப்பட்ட பகுதியின் பின்புறம். அல்குலார் - அல்குலையுடைய பெண்கள். படிதல் - பொருந்தி வாழ்தல். ஒட்டி - மனைவியின் குடியின் தொடர்பு பட்டு. தொடங்கினார் - முறையாயினார். அதாவது மனைவியின் சுற்றத்தார். இல் - குடி. தன்குடி அகத்து என்பதைத் தொடங்கினார் என்பதனோடும் கூட்டுக. அகம் - இடம். துறவா - துறவாமை நீங்காமை. உடம்பு - மக்கட் பிறப்பு. நண்பர்களைப் பெருக்குவதும், பகைவர்களைக் குறைப்பதும். மனைவியோடு கூடி இன்புற்று வாழ்வதும், மனைவியின் சுற்றத் தாரிடத்தும், தனது சுற்றத்தாரிடத்தும் அன்பு நீங்காமையும் இல்வாழ்வானின் கடமை என்பதாம். இருவகைச் சுற்றத்தாரிடத்தும் அன்பு நீங்காமை கணவன் மனைவி இருவர்க்கும் உரிய கடமையாகும். அல்குல்:- தொடைக்கு மேலும், இடைக்குக் கீழு முள்ளபாகம். அதன் மேற்பகுதி சுருங்குதலின் - சிறுத்தலின் - அது அல்குல் எனப்பட்டது. அல்குல் - சுருங்குதல். தொடைக்கும் இடைக்கும் நடுவிலுள்ள பகுதியின் பின்பக்கமே அல்குல் எனப்படும். அல்குலுக்குப் பாம்பின் படம், தேர்த்தட்டு, அரசிலை முதலியவற்றை உவமை கூறியுள்ளனர் பழம்புலவர்கள். இவை அப்பின்பக்கத்திற்கே உவமையாதலை ஒப்பிட்டறிக. (3) 589. நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை என்றிவைபோல் தங்கரும நல்ல கடைப்பிடித்துத் - தங்கருமம் அப்பெற்றி யாக முயல்பவர்க் காசாரம் எப்பெற்றி யானும் படும். (ஆசா) நந்து எறும்பு தூக்கணம்புள் காக்கை என்று இவை போல் - எழுச்சியுள்ள எறும்பும் தூக்கணங்குருவியும் காக்கையும் என்று சொல்லப்பட்ட இவற்றின் செய்கை போல், நல்ல தம்கருமம் கடைப்பிடித்து - நல்லனவாகிய தமது காரியத்தை மேற்கொண்டு, தம் கருமம் அப்பெற்றியாக முயல்பவர்க்கு - தம் செயல்களை அம் மூன்றன் தன்மைபோல் செய்பவர்க்கு, ஆசாரம் எப்பெற்றி யானும்படும் - இல்லற வொழுக்கம் எத்தன்மையானும் சிறப்புறும். நந்துதல் - எழுச்சியுறுதல், முயலுதல். தூக்கணம் புள் - தூக்கணங்குருவி. கருமம் - காரியம். கடைப்பிடித்தல் - மேற் கொள்ளல். அப்பெற்றி - அத்தன்மை - எறும்பு, தூக்கணம், காக்கை ஆகிய மூன்றன் தன்மை, ஆக - போல. முயலல் - செய்தல். ஆசாரம் - ஒழுக்கம் - இல்வாழ்க்கையின் நடக்கை. பெற்றி - தன்மை. படும் - சிறப்புறும். எறும்பு இல்லாத காலத்திற்கு உதவ உள்ள காலத்தில் உணவைச் சேர்த்து வைத்துக் கொள்ளும். தூக்கணங்குருவி வெயில், குளிர், காற்று, மழை முதலியவற்றால் இடையூறு நேராவகையில் கூடுகட்டிக் கொள்ளும். காக்கை ஏதாவது இரைகிடைத்தால் தன் இனத்தை அழைத்து உண்ணும். இவ்வாறே, வலுவும் வருவாயு முள்ள காலத்தே தளர்ந்த காலத்துக்கு உதவச் செல்வத்தைச் சேர்த்துக் கொள்வதும், பாதுகாப்பான வீட்டைக் கட்டிக் கொள்வதும், சுற்றஞ்சூழ உண்பதும், விருந்தோம்பலும் இல்வாழ்வாரின் கடமை என்பதாம். காக்கை கரவாக் கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே யுள (குறள்) எய்ப்பினில் வைப்பாகப் பொருளைச் சேர்த்து வைத்தலும், தகுதியான வீடுகட்டிக் கொள்வதும், சுற்றந் தழுவல், விருந்தோம்பல் முதலியவையும் இல்வாழ்வார்க் குரிய இன்றியமையாத ஒழுக்க மாகும் என்பது கருத்து. (4) 590. எய்ப்பில்வைப் பாக வருவாயி லைந்தொன்றை மெய்ப்பிணி சேய்வரைவிற்கூட்டிடுக - கைப்பொருள்வாய் இட்டிலுய் வாயிடுக்க வீங்க விழையற்க வட்டல் மனைக்கிழவன் மாண்பு. (இன்னி) வட்டல் மனைக்கிழவன் மாண்பு - பொருள் தேடிக் குடும்பம் நடத்தும் இல்வாழ்வான் இலக்கணமாவது, கைப் பொருள் வாய் இட்டில் உய்வாய் இடுக்க - பொருள்கள் வரும் வழிகள் சுருங்கின் அவை தன்னை விட்டுச் செல்லும் வழிகளைச் சுருக்குக, வீங்க விழையற்க - அளவுக்கு மீறிச் செலவு செய்ய விரும்பற்க, வருவாயில் ஐந்து ஒன்றை - தனது வரும்படியில் ஐந்திலொருபாகத்தை, மெய்ப் பிணி சேய்வரைவு எய்ப்பில் வைப்பு ஆக கூட்டிடுக - நோயுற்ற காலத்திலும் மக்கட்குத் திருமணஞ்செய் காலத்திலும் உடல் தளர்ச்சியுற்ற காலத்திலும் உதவும் படி சேர்த்துவைத்திடுக. எய்ப்பு - உடல் தளர்ச்சி. வைப்பு - பொருள் - சேர்த்து வைக்கும் பொருள். பிணி - நோய். சேய் - மக்கள். வரைவு - திருமணம். கைப்பொருள் - பொருள். வாய் - வரும்வழி. இட்டில் - சுருங்கின். இட்டுதல் - சுருங்குதல். உய்வாய் - செல்லும் வழி. இடுக்கல் - சுருக்கல். வீங்க - அதிகமாக - அளவுக்கு மீறி. விழைதல் - விரும்புதல். வட்டல் - திரட்டுதல் - பொருள் திரட்டுதல். இங்கு பொருள் தேடிக் குடும்பம் நடத்துதலைக் குறித்தது. மனைக் கிழவன் - இல்வாழ்வான். மாண்பு - தன்மை, இலக்கணம். பொருளிலார்க் கிவ்வுலகின்பம் இல்லை யாதலால். பொருள் ஈட்டுதல் இல்வாழ்வான் முதற்கடமையாயிற்று. ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை (குறள்) என்பதால், வருவாய் சுருங்கின் செலவு சுருங்கவேண்டும் என்றார். அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் (குறள்) ஆகையால், ஆடம்பரச் செலவு செய்யக்கூடா தென்றார். வருவாயில் ஒரு பகுதியை மீத்துவைக்க வேண்டும் என்பார் ‘ஐந்திலொருபகுதியை’ என்றார். “வருவாயில் கால்வழங்கி வாழ்தல்” (திரிகடுகம்) என நாலில் ஒரு பங்கை மீத்துவைக்க வேண்டு மென்பது கருத்தாகையால், இவர் ஐந்திலொரு பங்கை யென்றார். பொருள் தேடிக் குடும்பம் நடத்தும் இல்வாழ்வான் கடமையாவது, பொருள் வரும் வழிகள் சுருங்கின காலத்தே செலவைச் சுருக்க வேண்டும்; எப்போதும் அளவுக்கு மீறிச் செலவு செய்யக்கூடாது; வருவாயில் ஒரு சிறுபகுதியை நோயுற்ற காலத்துக்கு உதவவும்; மக்கட்குத் திருமணம் செய்தல் முதலிய செலவுக்காகவும், முதுமைக் காலத்து உதவுவதற்காகவும் சேர்த்து வைக்க வேண்டும் என்பதாம். (5) 591. மருவிய காதல் மனையாளும் தானும் இருவரும் பூண்டுய்ப்பி னல்லால் - ஒருவரால் இல்வாழ்க்கை யென்னு மியல்புடைய வான்சகடம் செல்லாது தெற்றிற்று நின்று. (அற) மருவிய காதல் மனையாளும் தானும் இருவரும் - ஒத்த அன்புடைய மனைவியும் கணவனுமாகிய இருவரும், பூண்டு உய்ப்பின் அல்லால் - மேற்கொண்டு செலுத்தினாலன்றி, ஒருவரால் - அவ்விருவருள் ஒருவரால், இல்வாழ்க்கை என்னும் இயல்பு உடைய வான் சகடம் - இல்வாழ்க்கையாகிய அழகிய பெரிய வண்டியானது, தெற்றிற்று நின்று செல்லாது - செல்லாமல் தடைபட்டு நின்றுவிடும். மருவிய - பொருந்திய - ஒத்த. காதல் - அன்பு. தானும் - கணவனும். பூண்டு - மேற்கொண்டு - ஒத்து. உய்த்தல் - செலுத்துதல். அதாவது, வாழ்க்கையாகிய வண்டியை இழுத்துச் செல்லுதல். இயல்பு - அழகு. வான் - பெரிய - சிறந்த. சகடம் - வண்டி. தெற்றுதல் - தடைபடுதல். இல்வாழ்க்கையை வண்டி என்பதற்கேற்ப, கணவன் மனைவியை எருதுகள் என்னாதது ஒரு கூற்றுருவகம். கணவனும் மனைவியும் ஒத்து நடத்தினால்தான் இல் வாழ்க்கை இனிது நடைபெறுமேயன்றி, கணவனும் மனைவியும் ஒற்றுமையின்றி, யாரோ ஒருவர் மட்டும் நடத்தினால் இல் வாழ்க்கை இனிது நடைபெறாது என்பதாம். கணவனும் மனைவியும் ஒத்த அன்புடையராய் வாழ்வதே இன்ப வாழ்க்கையாகும் என்பது கருத்து. (6) 592. விருந்து புறந்தரான் வேளாண்மை செய்யான் பெருந்தக் கவரையும் பேணான் - பிரிந்துபோய்க் கல்லான் கடுவினை மேற்கொண் டொழுகுமேல் இல்வாழ்க்கை யென்ப திருள். (அற) விருந்து புறந்தரான் - தன்வீட்டுக்குவந்த விருந்தினரை ஓம்பாமலும், வேளாண்மை செய்யான் - பிறருக்கு உதவி யொன்றும் செய்யாமலும், பெருந்தக்கவரையும் பேணாண் - தகுதிமிக்க பெரியோர்களையும் போற்றாமலும், பிரிந்து போய்க் கல்லான் - மனைவியைப் பிரிந்து வெளியிடங் கட்கும் வெளிநாடு கட்கும் சென்று அங்குள்ள மக்களின் பழக்கவழக்கம் தொழில் முதலிய வற்றைக் கல்லாமலும், கடுவினை மேற்கொண்டு ஒழுகு மேல் - தீச் செயல்களை மேற்கொண்டு ஒருவன் ஒழுகுவானாயின், இல்வாழ்க்கை என்பது இருள் - அவனது இல்வாழ்க்கை என்பது இருளுக் கொப் பாகும். புறந்தருதல் - ஓம்புதல். வேளாண்மை - உதவி. பெருந் தக்கவர் - பெருமையும்தகுதியும் உடைய பெரியவர். பேணுதல் - போற்றுதல். கடுவினை - தீச்செயல். மேற்கொண்டு ஒழுகல் - தீச் செயல்களையே எப்பொழுதும் செய்தல். புறந்தரான், செய்யான், பேணான், கல்லான் - எதிர்மறை முற்றெச்சங்கள். மனைவியைப் பிரிந்து வெளியிடங்களுக்கும் வெளி நாடு களுக்கும் சென்று அவ்வவ் விடங்களில் வாழும் மக்களின் நாகரிகம், தொழில் முதலியவற்றை அறிந்து வருதல் பண்டைய வழக்கம். இது ஓதற்பிரிவு எனப்படும். இதற்குக் காலம் மூன்றுயாண்டு என்கிறார் தொல்காப்பியர். இன்று செய்யும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் போன்றதே இவ்வோதற் பிரிவு. விருந்தினரை ஓம்பாமலும், பிறர்க்கு உதவாமலும், பெரியோர்களைப் போற்றாமலும், பிற நாட்டினர் வாழ்க்கை முறைகளை அறியாமலும், எப்போதும் தீச்செயல்களைச் செய்வோன் இல்வாழ்க்கை விளக்கமற்றிருக்கும் என்பதாம். (7) 593. நொறுங்குபெய் தாக்கிய கூழார வுண்டு பிறங்கிரு கோட்டொடு பன்றியும் வாழும் அறஞ்செய்து வாழ்வதே வாழ்க்கைமற் றெல்லாம் வெறும்பேழை தாழ்க்கொளீஇ யற்று. (அற) நொறுங்கு பெய்து ஆக்கிய கூழ் ஆர உண்டு - குறுணை யால் காய்ச்சிய கூழினை வயிறார உண்டு. பிறங்கு இருகோட் டொடு பன்றியும் வாழும் - விளங்குகின்ற இரண்டு கோரைப் பற்களுடன் பன்றியும் வாழும்; (ஆதலால்), அறஞ்செய்து வாழ்வதே வாழ்க்கை - அறஞ்செய்து வாழ்வதே மக்கள் வாழவேண்டிய இல்வாழ்க்கை யாகும், மற்று எல்லாம் வெறும் பேழை தாழ்க் கொளீஇ அற்று - அறஞ்செய்யாது தாமட்டும் உண்டுடுத்து வாழ்வாருடைய இல்வாழ்க்கை யெல்லாம் உள்ளே ஒன்றுமில்லாத பெட்டியைத் தாழிட்டுப் பூட்டி வைத்தல் போலாம். நொறுங்கு - நொய் - குறுணை. பெய்து - உலையில் போட்டு. ஆர - நிரம்ப. பிறங்குதல் - விளங்குதல். கோடு - கொம்பு - பல். யானைத் தந்தம் போலப் பன்றிக்கும் கோரைப் பற்கள் நீண்டு வளரும். இப்பல்லும் கொம்பு எனவே வழங்கும். மற்று பிறிது என்னும் பொருளது. பேழை - பெட்டி. தாழ்க் கொளீஇ - தாழிட்டு. அற்று - போலும். பன்றி போலத் தாமட்டும் உண்டு வாழ்வது பணம் இல்லாத பெட்டியைப் பூட்டி வைப்பது போன்றதாகும். அறஞ்செய்து வாழ்வதே பணப் பெட்டியைப் பூட்டி வைப்பது போல் பயனுடைய தாகும் என்பதாம். (8) 594. கருமஞ் சிதையாமே கல்வி கெடாமே தருமமுந் தாழ்வு படாமே - பெரிதுந்தம் இன்னலமுங் குன்றாமே யேரிளங் கொம்பன்னார் நன்னலந் துய்த்த னலம். (நீநெ) கருமம் சிதையாமே - தாம் செய்ய வேண்டிய நற்செயல் கள் தவறாமலும், கல்வி கெடாமே - கற்க வேண்டியவை கல்லாமற் போகாமலும், தருமமும் தாழ்வு படாமே - அறச்செயல்களும் குறைவு படாமலும், பெரிதும் தம் இல் நலமும் குன்றாமே - மிகுதியாகத் தமது இல்லற நன்மையுங் குறைவுபடாமலும், ஏர் இளங்கொம்பு அன்னார் நல் நலம் துய்த்தல் நலம் - அழகிய இளங் கொம்பினை யொத்த தம் மனைவியரின் நல்லின்பத்தை நுகர்தல் நன்று. கருமம் - இல்வாழ்க்கைக் கேற்ற நற்செயல்கள். சிதைதல் - தவறுதல். தருமம் - அறம். இல் நலம் - இல்லற நன்மை; விருந் தோம்பல், சுற்றந் தழுவல் முதலியன. ஏர் - அழகு. நலம் - இன்பம். துய்த்தல் - நுகர்தல் - அனுபவித்தல். நலம் - நன்று. ஏரிளங்கொம் பன்னார் நன்னலம் துய்த்தல் - மனைவியோடு கூடி இல்லறம் நடத்துதல். செய்ய வேண்டிய நற்செயல்கள் செய்யத் தவறாமலும், கற்க வேண்டிய நூல்களைக் கற்கத் தவறாமலும், செய்யத் தக்க அறங்களைச் செய்யத் தவறாமலும், விருந்தோம்பல் சுற்றந் தழுவல் முதலிய இல்லற நன்மையுங் குறையாமலும் இல்வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதாம். கணவனும் மனைவியும் மனமொத்த வழியே கருமஞ் சிதை யாமை முதலியன நடைபெறுமாதலால், ‘ஏரிளங் கொம்பன்னார் நன்னலம் துய்த்தல் நலம்’ என்றார். (9) 595. காதல் மனையாளுங் காதலனு மாறின்றித் தீதி லொருகருமஞ் செய்பவே - ஓதுகலை எண்ணிரண்டு மொன்றுமதியென் முகத்தாய் நோக்கறான் கண்ணிரண்டு மொன்றையே காண். (நன்) ஓது எண்ணிரண்டு கலை ஒன்றும் மதி என் முகத்தாய் - சொல்லுகின்ற பதினாறு கலைகளும் பொருந்தியிருக்கின்ற மதி என்று சொல்லத்தக்க அழகிய முகத்தையுடைய பெண்ணே, கண் இரண்டு ஒன்றையே நோக்கல் காண் - இரண்டு கண் களும் எப்போதும் மாறுபடாமல் ஒரு பொருளையே பார்ப் பதை நீ காண்பாயாக; (அவ்வாறே), காதல் மனையாளும் காதலனும் மாறு இன்றி - ஒத்த அன்புடைய மனைவியும் கணவனும் மாறு பாடில்லாமல், தீது இல் ஒரு கருமம் செய்ப - குற்றமில்லாத ஒரு காரியத்தையே செய்வார்களாக. காதல் - அன்பு. மாறு - மாறுபாடு. தீது - குற்றம். கருமம் - காரியம் - இங்கு இல்வாழ்க்கையைக் குறித்தது. செய்ப - செய்வார்களாக. கலை - ஒளி. எண்ணிரண்டு - எட்டிரண்டு - பதினாறு. ஒன்றுதல் - பொருந்துதல் - கூடுதல். மதி - திங்கள். பதினாறு கலையும் பொருந்தியது - முழுமதி. அம் முழுமதி போன்ற முகம். முகத்தாய் - மகடூஉ முன்னிலை. நோக்கல் தான். தான் - அசை. நோக்கல் - பார்த்தல். கண் இரண்டு எப்போதும் மாறுபாடில்லாமல் ஒரு பொரு ளையே பார்ப்பதுபோல, மனைவியும் கணவனும் எப்போதும் மாறுபாடில்லாமல் ஒன்றுபட்டுக் குடும்பம் நடத்த வேண்டும் என்பதாம். (10) 596. உற்றபெருஞ் சுற்ற முறநன் மனைவியுடன் பற்றிமிக வாழ்க பசுவின்வால் - பற்றி நதிகடத்த லன்றியே நாயின்வால் பற்றி நதிகடத்த லுண்டோ நவில். (நீவெ) பசுவின் வால் பற்றி நதிகடத்தல் அன்றி - மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைத் தாண்டலாமே அல்லாமல், நாயின் வால் பற்றி நதிகடத்தல் உண்டோ நவில் - நாயின் வாலைப் பிடித்துக்கொண்டு ஆற்றைத் தாண்டுதல் உண்டோ நீ சொல். (அதுபோல), உற்ற பெரும் சுற்றம் உற - அன்பு பொருந்திய சுற்றத்தார் சூழ, நன் மனைவியுடன் பற்றி மிக வாழ்க - நன் மனைவியோடு கூடிச் சிறப்புடன் வாழ்வாயாக. உற்ற - அன்பு உற்ற - அன்பு பொருந்திய. நன் மனைவி - நற்குணம் நற்செய்கையுடைய மனைவி. பற்றி - கூடி. கடத்தல் - தாண்டல். நவில்தல் - சொல்லுதல். மாட்டு வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடத்தல் போல, சுற்றஞ் சூழ நன் மனைவியோடு கூடி வாழ்வதே இல்வாழ்க்கையாகும்; முற்றிய இல்வாழ்க்கையாகும். நாய் வாலைக் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடத்தல் முடியாமை போல, மனைவி யல்லாதவளோடு கூடி வாழும் வாழ்க்கை முற்றிய இல்வாழ்க்கை யாகாது என்பதாம். மனைவி அல்லாதவள் - விலைமகள். மாட்டு வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடத்தல், மனைவியோடு கூடி வாழ்க்கை நடத்துதலுக்கும், நாய் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடக்க முயலுதல், விலை மகளோடு கூடி வாழ்க்கையின்பம் பெற முயலு தலுக்கும் உவமை. சுற்றமும் நட்பு மிழந்த இல்வாழ்க்கை முற்றுப் பெறாத வாழ்க்கை என்பதாம். (11) 597. மாதா மரிக்கின் மகனாவி னற்சுவைபோம் தாதா வெனிற்கல்வி தானகலும் - ஓதினுடன் வந்தோன் மரித்துவிடின் வாகுவலி போமனையேல் அந்தோ விவையாவும் போம். (நீவெ) ஓதின் மாதா மரிக்கின் மகன் நாவின் நல்சுவை போம் - சொல்லப் புகுந்தால், தாய் இறந்தால் மகனுக்கு நாவால் சுவைத் துண்ணும் நல்ல சுவையுள்ள உணவு இல்லையாகும், தாதா எனின் கல்வி அகலும் - தந்தை இறந்தால் படிப்புக் கெடும், உடன் வந்தோன் மரித்து விடின் வாகு வலிபோம் - உடன் பிறந்தோன் இறந்தால் தோள் வலி போய்விடும், மனை ஏல் அந்தோ இவை யாவும் போம் - மனைவி இறந்தால் ஐயோ! இவையெல்லாம் போய்விடும். மரித்தல் - இறத்தல். நாவில் நல் சுவை - நாவினால் சுவைத்து உண்ணும் நல்ல சுவையுடைய உணவு. தாதா - தந்தை. தான் - அசை. உடன் வந்தோன் - உடன் பிறந்தவன் - அண்ணன், தம்பி. வாகு - தோள். மனைஏல் - மனைவி இறந்தால். ஒருவனுக்குத் தாய் அறுசுவையோடு கூடிய உணவிடு வாள், தந்தை கல்வி கற்பிப்பான், உடன் பிறந்தவர் துணை யாக இருப்பர்; ஆனால், மனைவி இம்மூன்றையும் செய்வாள் என்பதாம். மனைவி அறுசுவையுணவிட்டுக் கணவனைப் பேணுவாள். நன்மனைவியை யுயைடவன் கவலையின்றிப் பல நூல்களைப் படித்தின்புறுவான், மனைவி வாழ்க்கைக்குத் துணையாவாள் என்றபடி. மனைவி யில்லாதவன் வாழ்க்கை இன்ப வாழ்க்கை ஆகாது என்பது கருத்து. (12) 598. வருவா யறிந்து வழங்க லினிது. (இனி) வருவாய் அறிந்து - தமக்குப் பொருள் வருகின்ற அளவினை அறிந்து, வழங்கல் இனிது - செலவு செய்தல் நல்லது. வழங்கல் - செலவு செய்தல். வரவுக்கு மீறாமல் செலவு செய்ய வேண்டும் என்பதாம். இது இல்வாழ்வானுக்குரிய முதற் கடமை யாகும். (13) 599. மனைக்குப்பாழ் வாணுத லின்மை. (நான்) மனைக்கு பாழ் - வீட்டுக்குப் பாழாவது, வாள் நுதல் இன்மை - வாள் போலும் நெற்றியை யுடைய மனையாள் இல்லாமையாம். மனை - வீடு. பாழ் - பயனின்மை. வாணுதல் - பெண் என்றபடி. மனைவியில்லாத வீடு பொலிவின்றி யிருக்கும் என்பதாம். மங்கல மென்ப மனைமாட்சி (குறள்) இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை. (குறள்) (14) 600. மெல்லினல்லா டோள்சேர். (ஆத்) மெல் இல் நல்லாள் - மெல்லிய உன் மனைவியாகிய பெண்ணி னுடைய, தோள் சேர் - தோள்களைச் சேர்ந்து வாழ்வாயாக. மெல் - மென்மை. மென்மைத் தன்மை வாய்ந்த நல்லாள் என்றபடி. இல் - இல்லாள் - மனைவி. தோள் சேர்தல் - கூடி வாழ்தல். மனைவியோடு கூடி வாழ்வதே இன்ப வாழ்க்கை யாகும் என்பதாம். (15) 601. இல்லற மல்லது நல்லற மன்று. (கொன்) இல்லறம் நல் அறம் - இல்லறமானது நல்ல அறமாகும், அல்லது அன்று - இல்லற மல்லாத துறவற மானது நல்லறம் அன்று. இல்லறத்தாரின் துணை கொண்டே துறவறத்தார் வாழவேண்டியிருப்பதால் இல்லறமே சிறந்ததாகும் என்பதாம். துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வா னென்பாண் துணை. (குறள்) (16) 38. மனைமாட்சி அஃதாவது, மனைவியினது மாட்சி கூறுதல். இல்வாழ்க் கையில் கணவன் மாட்சி கூறப்பட்டது. இதில் மனைவி மாட்சி கூறப்படுகிறது. மாட்சி - நற்குண நற்செய்கை. 602. குடநீரட் டுண்ணு மிடுக்கட் பொழுதும் கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும் கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி மாதர் மனைமாட்சி யாள். (நால) குடம் நீர் அட்டு உண்ணும் இடுக்கண் பொழுதும் - ஒரு குடத்து நீரைக் காய்ச்சி உண்ணும் படியான வறுமைத் துன்பம் உற்ற காலத்தும், கடல் நீர் அற உண்ணும் கேளிர் வரினும் - கடலின் நீரை வற்றும்படி உண்ணத்தக்க - மிகப் பெருங் கூட்டமான - சுற்றத்தார் வந்தாலும், கடன் நீர்மை கை ஆறு ஆ கொள்ளும் - தனது கடமையாகிய குணங்களை ஒழுக்க நெறியாகக் கொள்ளு கின்ற, மடமொழி மாதர் மனை மாட்சியாள் - இனிமையான சொல்லையுடைய பெண்ணே இல்வாழ்க்கைக்குத் தக்கவளாவாள். அடுதல் - காய்ச்சுதல். இடுக்கண் - துன்பம் - அது வறுமை யைக் குறித்தது. அற - வற்றும்படி - முழுதும். கேளிர் - சுற்றத்தார். கடன் - கடமை - நீர்மை - தன்மை, குணம். கை - ஒழுக்கம். ஆறு - வழி. நெறி - வழி. ஆறு ஆ. ஆ - ஆக. மடமொழி - இனிமையான சொல். மாதர் - பெண். மனை - இல்வாழ்க்கை. மாட்சியாள் - தகுதி யுடையவள். குடநீர் அட்டுண்ணல் - நீரேயன்றி உண்பதற்கு உரிய வேறு பொருளொன்றும் இல்லாத அத்தகு வறுமை. கடல் நீர் அற உண்ணும் கேளிர் - ஏராளமான பேர். மிக்க வறுமைக் காலத்தே சுற்றத்தார் பலர் வந்தாலும் வெறுப்பின்றி அன்போடு இன்சொற் கூறி வரவேற்பவளே பெண்ணாவாள் என்பதாம். சுற்றத்தாரை வரவேற்பதில் இன்சொல் இன்றியமையாத தாகலின் ‘மடமொழி மாதர்’ என்றார். கடன் நீர்மையைக் கையாறாக் கொள்ளுதலாவது - அத்தகு வறுமைக் காலத்தும், சுற்றம் பேணுகின்ற தமது கடமையில் தவறாது சுற்றத்தாரை அன்போடு வரவேற்றல். சுற்றம் பேணல் மகளிரின் மனை மாட்சிகளில் முதன்மையான தாகும் மனைமாட்சி யில்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் (குறள்) (1) 603. நாலாறு மாறாய் நனிசிறிதா யெப்புறனும் மேலாறு மேலுறை சோரினும் - மேலாய வல்லாளாய் வாழுமூர் தற்புகழு - மாண்கற்பின் இல்லா ளமர்ந்ததே யில். (நால) நால் ஆறும் ஆறு ஆய் - நான்கு பக்கங்களிலும் வழியை யுடையதாயும், நனி சிறிது ஆய் - மிகச் சிறிதாயும், எப்புறனும் மேல் ஆறு மேல் உறை சோரினும் - எல்லாப் பக்கங்களிலும் கூரை யிலுள்ள வழிகளிலிருந்து தன்மேல் மழை நீர் ஒழுகினாலும், மேல் ஆய வல்லாள் ஆய் - சிறந்த கடமைகளைச் செய்ய வல்லாளாய், வாழும் ஊர் தன்புகழும் மாண் கற்பின் - தான் வாழுகின்ற ஊரிலுள்ளார் தன்னைப் புகழும்படியான சிறந்த கற்பினையுடைய, இல்லாள் அமர்ந்ததே இல் - மனைவியை யுடையதே வீடாகும். ஆறு - பக்கம். ஆறு - வழி. நனி - மிக. மிகச்சின்ன வீடு. புறன் - பக்கம். மேல் ஆறு - கூரையிலுள்ள வழிகள் - துவாரங்கள். ‘நனைசுவர்க் கூரை’ என்பது காண்க. மேல் - நம்மீது. உறை - மழைத்துளி, நீர். சோர்தல் - வீழ்தல். மேல் ஆய - சிறந்த கடமைகள். மாண் - சிறந்த. கற்பு - மனவுறுதி. அமர்தல் - பொருந்தியிருத்தல் - இல்லாளையுடையதா யிருத்தல். நாலு பக்கங்களிலும் வழியை யுடையதாதல் - சுவர்கள் இடிந்து கிடத்தல். எல்லாப் பக்கங்களிலும் மழை நீர் வீழ்தல் - கூரை முழுவதும் பிரிந்து கிடத்தல். நனி சிறிது என்றது - சிறு மண் குடிசை என்றபடி. இவை மிக்க வறுமையைக் குறிக்கும். அத்தகைய வறுமைக் காலத்தும் ஊரார் புகழும்படி தன் கடமையைச் செய்ய வல்லவளே சிறந்த பெண் என்பதாம். பெரிய மாடிவீடே யாயினும் மனைமாட்சியுடையாள் இல்லாதது வீடு ஆகாது என்ற நயமுங் கொள்க. எவ்வளவு வறுமைக் காலத்திலும் தனக்குரிய நல் லொழுக்கத்தில் தவறாதவளே பெண் என்பது கருத்து. (2) 604. கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள் உட்குடையா ளூர்நா ணியல்பினால் - உட்கி இடனறிந் தூடி யினிதி னுணரும் மடமொழி மாதராள் பெண். (நால) கட்கு இனியாள் - கண்ணுக்கு இனிய உருவ முடைய வளாயும், காதலன் காதல் வகை புனைவாள் - தனது கணவனது விருப்பத்தின்படி தன்னை அழகு செய்து கொள்பவளாயும், உட்கு உடையாள் - செய்யத்தகாதன செய்தற்கு அச்ச முடைய வளாயும், ஊர் நாண் இயல்பினாள் - ஊரிலுள்ளார் நாணங் கொள்ளுதற் கேற்ற இயல்புடையவளாயும், இடன் அறிந்து ஊடி - ஏற்றபோது கணவனோடு ஊடி, உட்கி இனிதின் உணரும் - ஊடல் நீட்டிப்புக் கஞ்சி இன்பமுண்டாகும் படி ஊடல் தீர்கின்ற, மடமொழி மாதராள், பெண் - இன்சொல் லையுடையவளே மனைவியாவாள். இனியாள் - இனிய - நல்ல உருவமுடையவள். அதாவது - முகக் கோட்டம், கடுகடுப்பு முதலியன இன்றியிருத்தல். காதல் வகை - விருப்பத்தின்படி. புனைதல் - ஆடை அணி களால் அழகு செய்து கொள்ளுதல். உட்குதல் - அஞ்சுதல் - தகாதன செய்ய அஞ்சுதல். ஊர் - ஊரினர். இயல்பு - தன்மை. இடன் - சமயம். ஊட வேண்டிய போது ஊடி என்றபடி. ஊடுதலாவது - இன்பக்காலத்து அவ்வின்பத்தை மிகுவிக்கு மாறு கணவன் மீது மனைவி சினங்கொள்ளுதல். உணர்தல் - ஊடல் தீர்தல். ஊடி உட்கி இனிதின் உணரும் எனக் கூட்டுக. இங்கு உட்குதல் - அஞ்சுதல். அதாவது ஊடல் நீட்டிக்கின், கணவன் மனம் மிகவும் வருந்தி அவனும் ஊடநேருமென அஞ்சுதல். மடமொழி - இன்சொல். முகக்கோட்ட முதலிய இன்றிப் பார்ப்பதற்கு இனிய தோற்றப் பொலிவுடனிருத்தலும், கணவன் விருப்பப்படி தன்னை அழகு செய்து கொள்ளுதலும், செய்யத்தகாத காரியங்களைச் செய்ய அஞ்சுதலும், ஊரார் கண்டு நாணங் கொள்ளும்படி நடந்து கொள்ளுதலும், காலமறிந்து ஊடியுங் கூடியும் ஒழுகுதலும் நன் மனைவியின் குணங்களாகும் என்பதாம். இவை ஒரு நல்ல பெண்ணுக் குரிய குணங் களாகும். ஊடலுணர்தல் புணர்தல் இவைகாமங் கூடியார் பெற்ற பயன். (குறள்) (3) 605. உள்ளத் துணர்வுடையா னோதிய நூலற்றால் வள்ளன்மை பூண்டான்க ணொண்பொருள் - தெள்ளிய ஆண்மகன் கையி லயில்வா ளனைத்தரோ நாணுடையாள் பெற்ற நலம். (நால) நாணுடையாள் பெற்ற நலம் - நாணம் என்னும் பெண்மைக் குணமுடையவள் பெற்றுள்ள அழகானது, உள்ளத்து உணர்வு உடையான் ஓதிய நூல் அற்று - மனத்தில் நல்லறிவுடையவன் கற்றறிந்த நூலைப் போலும், வள்ளன்மை பூண்டான் கண் ஒண் பொருள் அற்று - கொடைக் குணத்தை மேற்கொண்டவ னிடத்திலுள்ள மிக்க செல்வத்தைப் போலும், தெள்ளிய ஆண் மகன் கையில் அயில் வாள் அனைத்து - சிறந்த வீரன் கையிலுள்ள கூரிய வாளைப் போலும். உணர்வு - அறிவு. அற்று - அத்தன்மைத்து - போலும். ஆல் - அசை. வள்ளன்மை - கொடைக்குணம். பூணல் - மேற்கொள்ள - பொருந்தியிருத்தல். ஒண்பொருள் - பெருஞ் செல்வம். தெள்ளிய - சிறந்த. ஆண்மகன் - ஆண்மை யுடையவன் - வீரன். அயில் - கூர்மை. அனைத்து - போலும். அரோ - அசை. நாணம் என்பது, மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் ஏனைப் பெண்மைக் குணங் கட்கும் இன விலக்கணம். குலமகட்கு அமைந்த அழகானது - தெளிந்த அறிவுடை யவன் கற்ற நூல்போலவும், கொடையாளனுக்குக் கிடைத்த செல்வம் போலவும், வீரன் கையிற் பிடித்த கூரியவாள் போலவும் பெருமையடையும் என்பதாம். (4) 606. நல்விருந் தோம்பலின் நட்டாளாம் வைகலும் இல்புறஞ் செய்தலி னீன்றதாய் - தொல்குடியின் மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன். (திரி) நல்விருந்து ஓம்பலின் நட்டாள் ஆம் - வந்த விருந்தினரை ஓம்புதலால் கணவனுக்கு நட்பினளாம், வைகலும் இல் புறஞ் செய்தலின் ஈன்ற தாய் - நாடோறும் இல்லறத்தைப் பாதுகாத்தலால் பெற்ற தாயாம், தொல்குடியின் மக்கள் பெறலின் மனைக்கிழத்தி - தனது பழைய குடும்பத்திற்குரிய நன்மக்களைப் பெறுதலால் மனையாளாம், இம்மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன் - ஆகிய இம்மூன்று செயலும் கற்புடையாள் மேற்கொண்ட கடமைகளாம். ஓம்பல் - உணவிட்டுப் போற்றுதல். வைகலும் - நாடோறும். இல் - இல்லறம் - குடும்பம். புறஞ் செய்தல் - பாதுகாத்தல். தொல் - பழைய. கடன் - கடமை. நட்டாளாம் என்பதில் உள்ள ‘ஆம்’ என்பதனை தாய், மனைக்கிழத்தி என்பவற் றோடும் கூட்டுக. விருந்தோம்பல், குடும்பத்தைப் போற்றல், நன்மக் களைப் பெறுதல் ஆகிய இவற்றைச் செய்பவளே சிறந்த பெண்ணாவாள் என்பதாம். மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. (குறள்) என்பதால், நன்மக்கட்பேறும் மனைக்கிழத்தியின் கடமைகளுள் ஒன்றாயிற்று. (5) 607. வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம் வெருவாமை வீழ்ந்துவிருந் தோம்பித் - திருவாக்கும் தெய்வதையு மெஞ்ஞான்றுந் தேற்ற வழிபாடு செய்வதே பெண்டிர் சிறப்பு. (சிறு) வருவாய்க்குத் தக்கவழக்கு அறிந்து - வரவுக்குத்தக்க செலவு செய்தலை அறிந்து, சுற்றம் வெருவாமை வீழ்ந்து - சுற்றத்தார் அஞ்சி அகலாமல், விருந்து ஓம்பி - விரும்பி, திரு ஆக்கும் தெய்வத்தையும் எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு செய்வதே - செல்வத்தை மேன்மேல் உயரச் செய்கின்ற இல்லுறை தெய்வத்தையும் எப்போதும் நன்கு வழிபாடு செய்வதே, பெண்டிர் சிறப்பு - பெண்களுக்குரிய சிறப்பு களாகும். வழக்கு அறிதல் - செலவு செய்யத் தெரிதல். வழங்கு என்பது வழக்கு என வலிந்தது. அஞ்சுதல் - கடுஞ்சொல்லால் அஞ்சுதல். வீழ்தல் - விரும்புதல். கடுஞ்சொல் சொல்லாமல் இன்சொல் சொல்லுதல் என்க. திரு - செல்வம். ஆக்குதல் - வளரச் செய்தல். தெய்வதை - தெய்வம் - இல்லுறை தெய்வம். எஞ்ஞான்றும் - எப்போதும். தேற்ற - நன்கு. வரவுக்குத்தக்க செலவு செய்வதும், சுற்றத்தாரை விரும்பிப் போற்றுவதும், விருந்தோம்புவதும், இல்லுறை தெய்வ வழிபாடு செய்வதும் குடும்பப் பெண்களுக்குரிய சிறப்பாகும் என்பதாம். அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை நிகர்மலர் நெல்லொடு தூய்உய்ப் பகல்மாய்ந்த மாலை மணிவிளக்கங் காட்டி (சிலப் : 1 - 3 ) எனச் சிலப்பதிகாரத்தில் இல்லுறை தெய்வ வழிபாடு கூறுதல் காண்க. மாலையில் நடுவீட்டில் விளக்கேற்றி வைத்து, நெல்லையும் மலரையும் தூவி வணங்குவதே இல்லுறை தெய்வ வழிபாடாகும். இதனால் செல்வம் பெருகுமென்பது நம்பிக்கை. (6) 608. மக்கட் பெறுதல் மடனுடைமை மாதுடைமை ஒக்க வுடனுறைதல் ஊணமைவு - தொக்க அலவலை யல்லாமை பெண்மகளிர்க் கைந்து தலைமகனைத் தாழ்க்கு மருந்து. (சிறு) மக்கள் பெறுதல் - மக்களைப் பெறுதலும், மடன் உடைமை - அடக்கமுடைமையும், மாது உடைமை - அழகுடைமையும், ஒக்க உடன் உறைதல் - கணவனது கருத்துக்கு இசைய அவனோடுறை தலும், ஊண் அமைவு - கணவனுக்கு விருப்பமான உணவு சமைத்தலும், தொக்க ஐந்து அலவலை அல்லாமை - ஆகிய இவ்வைந்தையும் புல்லியவை எனக் கொள்ளாமையே, பெண் மகளிர்க்குத் தலைமகனைத் தாழ்க்கும் மருந்து - பெண்டிர்க்குத் தம் கணவரைத் தம்மிடத்து வணக்குகின்ற மருந்தாகும். மடன் - அடக்கம். மாது - அழகு. ஒக்க - கருத்துக் கிசைய. உடனுறைதல் - கூடுதல். ஊண் அமைவு - கணவனுக்கு விருப்பமான உணவு சமைத்தல். அமைவு - அமைத்தல் - ஆக்குதல். தொக்க - கூடிய. தொக்க ஐந்து - ஆகிய ஐந்து. அலவலை - புல்லியது - அற்பமானது. அலவலை அல்லாமை - புல்லியதாகக் கொள்ளாமை - சிறப்பாகக் கொள்ளுதல். பெண் மகளிர் - ஒரு பொருட் பன்மொழி. தாழ்க்குதல் - தன்னை விட்டு நீங்காமல் செய்தல். மக்களைப் பெறுதலும், அடக்க முடைமையும், அழகு டைமையும், கணவனது விருப்பத்திற்கேற்ப உடனுறைதலும், கணவனுக்கு விருப்பமான உணவு சமைத்தலும் ஆகிய இவ்வைந்தையும் புல்லியவையாகக் கொள்ளாமையே - சிறந்தவையாகக் கொள்ளு தலே - பெண்டிர்க்குத் தம் கணவரைத் தம்மை விட்டு நீங்காமல் செய்யும் மருந்தாகும். முதல் மனைவிக்குப் பிள்ளையில்லா விட்டால் இளைய தாரம் செய்யும் வழக்கம் உடைமையால், பிள்ளைப்பேறும் கணவனைத் தன்னோடு தாழ்க்கும் மருந்தாதல் அறிக. கணவன் விருப்பத்திற் கிணங்காத - உடனுறைதலை மறுக்கும் - மனைவியிடம் கணவன் அன்பின்றியிருத்தல் இயல் பன்றோ? விலைமகளிரை விரும்புதற்கும் இது காரணமாகு மன்றோ? விருப்பமான சுவையையுடைய உணவு வகை வன்மை யாகத் தாழ்க்கும் மருந்தாகும். மகளிர் இவற்றை அறிந்து நடந்து கொள்ளுதல் வேண்டும். (7) 609. காட்டுக் களைந்து கலங்கழீஇ யில்லத்தை ஆப்பிநீ ரெங்குந் தெளித்துச் சிறுகாலை நீர்ச்சால் கரகம் நிறைய மலரணிந் தில்லம் பொலிய அடுப்பினுட் டீப்பெய்க நல்ல துறல்வேண்டு வார். (ஆசா) நல்லது உறல் வேண்டுவார் - நன்மை உண்டாதலை விரும்பும் மகளிர், சிறுகாலை - அதிகாலையில் எழுந்து, காடு களைந்து - குப்பையைக் கூட்டி யெறிந்து, இல்லத்தை எங்கும் ஆப்பிநீர் தெளித்து - வீடு முழுவதும் சாணநீர் தெளித்து, கலம் கழீஇ - கருங்கலங்களையும் மற்ற ஏனங் களையும் விளக்கிக் கழுவி, நீர்ச்சால் கரகம் நிறைய மலர் அணிந்து - சால்நிறையத் தண்ணீர் ஊற்றி அதற்கும் நிறை குடத்திற்கும் மலரணிந்து, இல்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க - இல்லத்துப் பொலியும்படி அடுப்பினுள் தீ மூட்டுக. காடு - செத்தை - குப்பை. களைதல் - நீக்குதல். காடு களைந்து - வீடு கூட்டி. கலம் - சோறு சாறாக்கும் மட்கலம். இது கரிப்பிடித் திருப்பதால் கருங்கலம் எனப்படும். ஏனம் என்றது வட்டில், செம்பு முதலியவற்றை. கருங்கலங்களைக் கழுவி. மற்ற ஏனங்களை விளக்கி என்க. ஆப்பிநீர் - சாணித் தண்ணீர். சிறுகாலை - அதிகாலை. நீர்ச்சால் - குடிநீர் ஊற்றி வைக்கும் பெரிய மிடா. இது சால் எனவே வழங்கும். கரகம் - குடம். சாலும் குடமும் நிறைய நீர் ஊற்றி, மலரணிந்து என்க. இல்லம் - வீடு. பொலிய - பொலியும்படி. இல்லம் - இல்லத்தின் கண், பொலிதல் - சோறு சாறாகுதல். வீட்டில் சோறு சாறாகும் படி அடுப்பினுள் தீ மூட்டுக என்பதாம், பெய்தல் - உண்டாக்குதல் - எரித்தல், மூட்டுதல். நல்லது - நன்மை. உறல் - உண்டாதல். வேண்டுதல் - விரும்புதல் ஐந்தடியால் வந்ததால், இது பஃறொடை வெண்பா. அதிகாலையில் எழுந்து, வீடு கூட்டி, வாசலுக்குச் சாணி போட்டு, வீடுமெழுகி, சட்டிபானை கழுவி, வட்டில் செம்பு விளக்கி, தண்ணீர்மொண்டு வந்து சால் நிறையத் தண்ணீர் ஊற்றி, சாலுக்கும் நிறைகுடத்துக்கும் மலரணிந்து, பின்னர் சோறு சாறாக்கத் தொடங்குவதே நல்ல முறை என்பதாம். சாலுக்கும் குடத்திற்கும் மலரணியும் வழக்கம் முன்னர் இருந்தது போலும்! (8) 610. ஒத்த வுரிமையளா வூடற் கினியளாக் குற்ற மொரூஉங் குணத்தளாக் - கற்றறிஞர்க் கோணுந் தகையளாக் கொண்கன் குறிப்பறிந்து பேணுந் தகையளே பெண் (இன்னி) ஒத்த உரிமையளா - ஒத்த அன்புடையவளாகவும், ஊடற்கு இனியளா - ஊடுதற்கு இனியளாகவும், குற்றம் ஒரூஉம் குணத் தளா - குற்றம் நீங்கிய குணத்தையுடைய வளாகவும், கற்ற அறிஞர் கோணும் தகையளா - கற்ற அறிஞரைப் பணியுந் தன்மை யுடையளாகவும், கொண்கன் குறிப்பறிந்து பேணும் தகையளே பெண் - கணவனது குறிப்பினையறிந்து நடக்குந் தன்மை யுடைய வளாகவும் உள்ளவளே பெண்ணாவாள். உரிமை - அன்பு. ஊடற்கு இனியளாவது - ஊடுவது போலவே உணர்ந்து கூடுந் தன்மையுடையவள் என்பதாம். ஒரூஉம் - நீங்கிய, குற்றம் நீங்கிய குணம் - குற்றமற்ற குணம் - நற்குணம். கற்ற அறிஞர் - கற்றறிஞர் - தொகுத்தல் விகாரம். கோணுதல் - பணிதல். கொண்கன் - கணவன். பேணுதல் - நடத்தல். தகையள் - தகுதி அல்லது தன்மை யுடையவள். ஆக என்பது நான் கிடத்தும் ஆ என நின்றது. ஒத்த அன்புடையவளாகவும், ஊடியுணர்ந்து கூடுங் குண முள்ளவளாகவும், நற்குண முடையவளாகவும், கற்றவரைப் போற்றுபவளாகவும், கணவன் குறிப்பறிந்து நடப்பவளாகவும் உள்ளவளே நல்லபெண்ணாவாள். (9) 611. மடப்பதூஉம் மக்கட் பெறுவதூஉம் பெண்பால் முடிப்பதூஉ மெல்லாருஞ் செய்வர் - படைத்ததனால் இட்டுண்டில் வாழ்க்கை புரிந்துதாம் நல்லறத்தே நிற்பாரே பெண்டிரென் பார். (அற) மடப்பதும் - பருவமடைதலும், மக்கட் பெறுவதும் - பெண்பால் முடிப்பதும் எல்லாரும் செய்வர் - பெண்களுக் குரிய அணிகலன்களை அணிந்து கொள்ளுதலுமாகிய இவற்றை எல்லாப் பெண்களும் செய்வர்; படைத்ததனால் - பெற்ற பொருள் சிறிய தாயினும் அதனால், இட்டு தாம் உண்டு - இரப்பார்க்கு இட்டுத் தாமும் உண்டு. இல்வாழ்க்கை புரிந்து நல்அறத்தே நிற்பாரே - குடும்பம் நடத்தி நன்னெறியில் நடப்பவர்களே, பெண்டிர் என்பார் - பெண்டிர் என்று சிறப்பித்துச் சொல்லப் படுவார். மடத்தல் - பருவமடைதல். முடித்தல் - அணிகலன்கள் அணிந்து கொள்ளுதல். மடப்பதூஉம் முதலிய மூன்றும் இன்னிசை அளபெடை. படைத்தது - தேடியது - வரவு. பருவமடைதலும், பிள்ளை பெறுதலும், அணிகலன்கள் அணிந்து கொள்ளுதலும் எல்லாப் பெண்களுக்கும் உரிய பொது இயல்பாகும். ஆனால், வருவாய் சிறிதானாலும் அதைக் கொண்டு, இரப்பார்க்கு இட்டு, தாமும் உண்டு டுத்துக் குடும்பம் நடத்திக் கொண்டு நன்னெறியில் நடப்பவளே சிறந்த பெண்ணாவாள் என்பதாம். (10) 612. இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை இல்லாளு மில்லாளே யாமாயின் - இல்லாள் வலிகிடந்த மாற்ற முரைக்குமே லவ்வில் புலிகிடந்த தூறாய் விடும். (வாக்) இல்லாள் அகத்து இருக்க - நற்குண நற்செய்கை யுடைய மனைவி வீட்டில் இருப்பாளாயின், இல்லாதது ஒன்று இல்லை - அவ்வீட்டில் இல்லாத பொருள் ஒன்று மில்லை; இல்லாளும் இல்லாளே ஆமாயின் - மனைவியும் இல்லாமற் போயினும், இல்லாள் வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் - மனைவி கடுஞ் சொற்களைச் சொல் வாளாயினும், அவ்வில் புலிகிடந்த தூறு ஆய்விடும் - அந்த வீடானது புலி தங்கியிருந்த புதருக்கு ஒப்பாகி விடும். அகம் - வீடு, வலிகிடந்த மாற்றம் - கடுஞ்சொல். மாற்றம் - சொல். தூறு - புதர். நற்குண நற்செய்கையுடைய மனைவியிருக்கும் வீடே எல்லாச் செல்வமுமுடைய வீடாகும். மனைவி இல்லா விட்டாலும், இருந்தும் நற்குண நற்செய்கை இல்லாதவளா யிருந்தாலும் அவ்வீடு புலி தங்கியிருக்கும் காட்டை ஒக்கும் யென்பதாம். இல்லதென் இல்லவள் மாண்பானால், உள்ளதென் இல்லவள் மாணாக் கடை. (குறள்) மனைவி இல்லாத தனி வாழ்க்கை வாழ்க்கையாகாது. நற்குண நற்செய்கையுடைய மனைவியோடு கூடி வாழும் வாழ்க்கையே வாழ்க்கை எனப்படும் என்பதாம். மனைவி கடுஞ்சொற் சொன்னால், அவ்வீட்டுக்கு நண்பர் சுற்றத்தார் எவரும் அணுக அஞ்சுவாராகையால், அவ்வீடு புலி கிடந்த தூறுக்கு ஒப்பாகுமென்றார். (11) 613. நிலத்துக் கணியென்ப நெல்லுங் கரும்பும், குளத்துக் கணியென்ப தாமரை, பெண்மை நலத்துக் கணியென்ப நாணம். (நான்) நெல்லும் கரும்பும் - நிலத்துக்கு அணிஎன்ப - வயலுக்கு அழகென்று சொல்லுவர், தாமரை - குளத்துக்கு அணி என்ப - குளத்துக்கு அழகென்று சொல்லுவர், (அதுபோல), நாணம் பெண்மை நலத்துக்கு அணி என்ப - தகாதன செய்ய நாணு தலைப் பெண் தன்மைக்கு அழகென்று சொல்லுவர். நெல்லும் கரும்பும் செழித்து வளர்ந்திருக்கின் நிலத்துக்கு அழகைத் தரும். தாமரை பூத்திருக்கின் குளத்துக்கு அழகைத் தரும். அதுபோல, தகாதன செய்ய நாணுந் தன்மை பெண் கட்கு அழகைத் தரும் - பெருமையைத் தரும் என்றபடி. அணி - அழகு. பெண்மை நலம் - பெண்டன்மை. நாணம் - தகாதன செய்ய மனங்கூசுதல். (12) 614. தாரமா ணாதது வாழ்க்கை யன்று. (முது) தாரம் மாணாதது - மனைவி நற்குண நற்செய்கை யுடையவளாகப் பெறாத இல்வாழ்க்கை, வாழ்க்கை அன்று - இல்வாழ்க்கை எனக் கூறத் தக்கதாகாது. தாரம் - மனைவி. மாணாதது - மாணாத - மாட்சிமைப் படாத இல் வாழ்க்கை என்க. மாட்சிமையில்லாத மனைவியோடு கூடிவாழும் வாழ்க்கை வாழ்க்கை யாகாது. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். (குறள்) (13) 615. குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல். (வெற்) குலமகட்கு அழகு - மனைவிக்கு அழகாவது, தன் கொழுநனைப் பேணுதல் - தனது கணவனைப் போற்றுதலாம். போற்றுதலாவது - காலத்துக்கேற்ற உணவூட்டி, அன்பூட்டி இன்பூட்டி இனிது வாழச் செய்தல். (14) 616. தையல்சொற் கேள். (ஆத்) தையல் - பெண் - மனைவி. குடும்ப நல்வாழ்வு பற்றி மனைவி சொல்லும் நல்லுரைகளைக் கணவன் கேட்டு நடப்பதே குடும்பம் இனிது நடத்தற் கேதுவாகும். குடி, சூது முதலிய கெட்ட பழக்கங்களை விட்டு விடும்படி மனைவி சொல்வதைக் கணவன் கேட்க வேண்டும் என்பதாம். ‘கேள்’ என்பதையே,. ‘கேளேல்’ என மாற்றிவிட்டனர் பிற்காலத்தார். பெண்பாலாகிய ஒளவையார், ‘மனைவி சொல்லைக் கேளாதே’ என்றா கூறுவர்? அது என்ன நீதி! (15) 39. மக்கட்பேறு அதாவது, நன்மக்கட் பேற்றின் சிறப்புக் கூறுதல். இது இல்வாழ்க்கையின் பயனும் உலகியல் நடத்தற்குக் காரணமு மாகும். நன்மக்களாக வளர்த்தல் இதன் பயன். 617. கற்புடுத் தன்பு முடித்துநாண் மெய்ப்பூசி நற்குண நற்செய்கை பூண்டாட்கு - மக்கட்பே றென்பதோர் செல்வமு முண்டாயின் இல்லன்றே கொண்டாற்குச் செய்தவம் வேறு. (நீநெ) கற்பு உடுத்து - கற்பாகிய ஆடையை உடுத்து, அன்பு முடித்து - அன்பாகிய மலரைச் சூடி, மெய் நாண் பூசி - உடம்பில் நாணமாகிய கலவையைப் பூசி, நற்குணம் நற்செய் கை பூண்டாட்கு - நற்குண நற்செய்கையாகிய அணிகலன் களை அணிந்த மனையாளுக்கு, மக்கள் பேறு என்பதோர் செல்வமும் உண்டாயின் - மக்கள் என்னும் ஒப்பற்ற செல்வமும் உண்டானால், கொண்டாற்கு செய்தவம் வேறு இல் - அவளை மனைவியாகக் கொண்டவனுக்கு அவள் செய்ய வேண்டிய நன்மை வேறு இல்லை. கற்பு - கணவனே இனி உயிர்த்துணைவன் எனவும், கணவ னோடு கூடிவாழும் இல்வாழ்க்கையே சிறந்த தெனவும் கொள்ளும் மனவுறுதி. வள்ளுவரும், ‘கற்பென்னும் திண்மை’ (குறள் - 54) எனல் காண்க. தவம் - நன்மை. கற்பு, அன்பு, நாணம், நற்குண நற்செய்கைகள் முறையே ஆடை, மலர், கலவை, அணிகலன் எனக் கொள்ளப்பட்டன. அதற்கேற்ப உடுத்து, முடித்து, பூசி, பூண்டாள் என்னும் வினைகள் தந்தார். இது உருவக அணி. கணவனிடத்து மனவுறுதியும் (கற்பும்), சுற்றத்தாரிடத்தும், மற்றவரிடத்தும் அன்பும், ஊர் நாணியல்பும், நற்குண நற் செய்கையும், உடையளாயினும் ஒருத்திக்கு மக்கட்பேறே சிறந்த செல்வமாகும் என்பதாம். மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. (குறள்) (1) 618. பொற்பறிவில் லாதபல புத்திரரைப் பேறலினோர் நற்புதல்வ னைப்பெறுதல் நன்றாமே - பொற்கொடியே பன்றிபல குட்டி பயந்ததனா லேதுபயன் ஒன்றமையா தோகரிக்கன் றோது. (நீவெ) பொன் கொடியே - அழகிய கொடி போன்றவளே, பன்றி பலகுட்டி பயந்ததனால் பயன் ஏது - பன்றி பல குட்டி போட்டுப் பயன் என்ன, கரிக்கன்று ஒன்று அமையாதோ - யானைக் கன்று ஒன்று போதாதோ, (அதுபோல), பொற்பு அறிவு இல்லாத பல புத்திரரைப் பேறலின் - நல்லறிவில்லாத பல பிள்ளைகளைப் பெறுவதைக் காட்டிலும், ஓர் நல்புதல் வனைப் பெறுதல் நன்று ஆம் - ஒரு நல்லறிவுள்ள பிள்ளையைப் பெறுதல் நல்லதாம். பொற்பு - நன்மை. பேறல் - பெறுதல். பொன் - அழகு. பொன் கொடி - அழகிய கொடி போன்றவள் - மகடூஉ முன்னிலை. பயத்தல் - ஈனுதல் - போடுதல். அமையாதோ - போதாதோ. கரி - யானை. பன்றி பல குட்டி போடுவதினும் யானை ஒரு குட்டி போடுவதே போதும். அதுபோல, நல்லறிவில்லாத பல பிள்ளைகளைப் பெறுவதினும் நல்லறிவுள்ள ஒரு பிள்ளையைப் பெறுதலே போதும் என்பதாம். அறிவில்லாத பிள்ளைகள் பலரைப் பெற்று வளர்ப்பதை விட, அறிவுடைய ஒரு பிள்ளையே போதும் என்பது கருத்து. நன்றிதரு பிள்ளையொன்று பெற்றாலுங் குலமுழுதும் நன்மை யுண்டாம் அன்றியறி வில்லாத பிள்ளையொரு - நூறுபெற்றும் ஆவ தென்னே? மன்றில்நடம் புரிவாரே தண்டலையா ரேசொன்னேன் வருடந் தோறும் பன்றிபல வீன்றுமென்ன குஞ்சரமொன் றீன்றததன் பயனுண் டாமே. (தண்டலையார் சதகம்) பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற. (குறள்) (2) 619. ஏவது மாறா இளங்கிளமை முன்னினிது. (இனி) ஏவது மாறா - ஏவலை மாறாது செய்யும், இளங்கிளமை - மக்களையுடைமை, முன்இனிது - பெற்றோர்க்கு மிகவும் நல்லது. ஏவுவது என்பது ஏவது என நின்றது. மாறா - மாறாத, மறுக்காத. இளங்கிளை - மக்கள். இளங்கிளைமை - மக்களை உடைமை. மக்கள் பெற்றோர் சொல்லைத் தட்டக் கூடாது என்பது கருத்து. (3) 620. அறிவறியா மக்கட் பெறலின்னா. (இன்) அறிவு அறியா மக்கள் - அறிய வேண்டுவனவற்றை அறிய மாட்டாத பிள்ளைகளை, பெறல் இன்னா - பெறுதல் துன்பமாம். அறிவறிந்த மக்கட் பெறுதல் (குறள் 54) சிறந்த பேறாகை யால், அறிவறியா மக்கட்பேறு துன்பந் தருவதாயிற்று. (4) 621. ஏவா மக்கள் மூவா மருந்து. (கொன்) ஏவா மக்கள் - (பெற்றோர் இதைச் செய் என்று) ஏவுவதற்கு முன்பே குறிப்பறிந்து செய்கிற மக்கள், மூவா மருந்து - பெற்றோர்க்கு அமிழ்தம் போல இன்பஞ் செய்ப வராவர். ஏவா - ஏவாத. மூவாமருந்து - அமிழ்தம். பெற்றோரின் குறிப்பறிந்து நடந்துகொள்வதே மக்கள் கடமையாகும் என்பதாம். (5) 622. சான்றோ ரென்கை ஈன்றோர்க் கழகு. (கொன்) சான்றோர் என்கை - தம் மக்களை அறிவொழுக்கங் களில் நிறைந்தவர் என்று கற்றோர் சொல்வது, ஈன்றோர்க்கு அழகு - பெற்றோர்க்கு அழகாகும். சான்றோர் - அறிவொழுக்கங்களில் நிறைந்தவர். என்கை - என்று சொல்வது. அழகு - பெருமை. கற்றோரால் தம்மக்களைச் சான்றோர் எனக் கூறுதல் பெற்றோர்க்குப் பெருமையாகும் என்பதாம். ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். (குறள்) (6) 40. பொருளுடைமை அதாவது, பொருளுடைமையின், பொருளின் சிறப்பினைக் கூறுதல். 623. காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனிற் பலராவர் - ஏலா இடரொருவ ருற்றக்கா லீர்ங்குன்ற நாட! தொடர்புடையே மென்பார் சிலர். (நால) ஈர் குன்றம் நாட - குளிர்ந்த மலைகளையுடைய நாடனே, கால் ஆடு போழ்தில் - ஒருவர்க்குச் செல்வம் வந்த காலத்தில், வானத்து மேல் ஆடும் மீனின் பலர் - வானத்தின் கண் இருக்கின்ற மீன்களினும் பலர், கழிகிளைஞர் ஆவர் - அவர்க்கு மிக்க உறவின ராவர், ஒருவர் ஏலா இடர் உற்றக்கால் - அவரே பொறுக்க முடியாத வறுமைத் துன்பத்தை அடைந்தால், தொடர்பு உடையேம் என்பார் சிலர் - அவரோடு யாம் உறவுடையோ மென்று சொல்லி முன்வந்து உதவுவோர் சிலரேயாவர். கால் ஆடுதல் - கால் நினைத்த இடம் செல்லுதல். இது இலக்கணையால், செல்வம் பெறுதலை உணர்த்திற்று, செல்வரும் நினைத்த இடம் செல்வர் ஆதலால். கழி - மிக்க. கிளைஞர் - உறவினர். ஆடுதல் - இயங்குதல். மீனின் - மீன்களை விட. ஏலா - ஏலாத. நாட - ஆடூஉ முன்னிலை. தொடர்பு - உறவு. சிலர் என்றது அருமை குறித்தது. ஒருவரும் உதவார் என்றபடி. ஒருவர் செல்வராக உள்ளபோது வானத்து மீனைவிடப் பலர் உறவினராவர். அவரே மிக்க வறுமையுற்றால் யாம் உறவினரென்று முன்வந்து உதவுவார் ஒருவரும் இரார் என்பதாம். பொருள்கை யுண்டாய்ச் செல்லக் காணிற் போற்றி யென்றேற் றெழுவர், இருள்கொள் துன்பத் தின்மை காணில் என்னே யென்பாரு மில்லை. (ஆழ்வார் பாசுரம்) பொருளில்லாரை யாரும் மதியார் என்பது கருத்து. (1) 624. வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவண தெய்த இருதலையு மெய்தும் நடுவண தெய்தாதா னெய்தும் உலைப்பெய் தடுவது போலுந் துயர். (நால) வடு இலா வையத்து மன்னிய மூன்றில் - குற்றமில்லாத இவ்வுலகத்தின்கண் பொருந்திய அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றனுள், நடுவணது எய்த இருதலையும் எய்தும் - நடுவில் உள்ள பொருளை ஒருவன் அடையின் அதனால் முன்னும் பின்னும் உள்ள அறத்தையும் இன்பத்தையும் அடைவான், நடுவணது எய்தாதான் - இடையில் உள்ள பொருளை அடையாதவன், உலைப்பெய்து அடுவது போலும் துயர் எய்தும் - கொல்லன் உலைக்களத்தில் வைத்துக் காய்ச்சப் படுவதனாலாகும் துன்பத்தைப் போன்ற துன்பத்தை அடைவான். வடு - குற்றம். இலா - இல்லாத. வையம் - உலகம். மன்னிய - பொருந்திய. மூன்று - அறம் பொருள் இன்பம். நடுவணது - பொருள். எய்த - அடைய - அடையின். இருதலை - முன்னும் பின்னும். அதாவது அறமும் இன்பமும். உலை - கொல்லன் உலைக்களம். பெய்தல் - உலைக்களத் தீயில் வைத்தல். அடுதல் - காய்ச்சுதல். குற்றமற்ற இவ்வுலகின்கண் பொருந்திய அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றனுள், பொருளை ஒருவன் அடைந்தா னானால் அறத்தையும் இன்பத்தையும் அடைவான், பொருளை அடையாதவன் கொல்லன் உலையில் வைத்துக் காய்ச்சப் படுவத னால் உண்டாகும் துன்பத்தைப் போன்ற பெருந் துன்பத்தை அடைவான் என்பதாம். உலைப்பெய்து அடுவது போலும் துன்பம் - மிக்க வறுமைத் துன்பம். பொருளிலார் உண்ண உடுக்க இன்றி அத்தகு துயர் அடைவர் என்பதாம். பொருளிருந்தால் அறம் செய்து இன்பம் நுகர்ந்து இனிது வாழலாம். பொருளில்லாவிடின் வறுமைத் துன்பத்தால் வருந்த நேரும் என்பது கருத்து. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள் ஏனை யிரண்டு மொருங்கு. (குறள்) (2) 625. நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம் கல்லாரே யாயினுஞ் செல்வர்வாய்ச் சொற்செல்லும் புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச் செல்லாவா நல்கூர்ந்தார் சொல். (நால) நல் ஆவின் கன்று ஆயின் நாகும் விலை பெறும் - நல்ல சாதி மாட்டின் கன்றாயிருக்குமானால் இளங்கன்றும் மிகுந்த விலை பெறும், (அதுபோல), கல்லாரே ஆயினும் செல்வர் வாய்ச் சொல் செல்லும் - படியாதவரே யானாலும் பொரு ளுடைய இளைஞர் சொல்லும் சொற்கள் (தகாதன வாயினும்) பலராலும் ஏற்றுக் கொள்ளப்படும், நல்கூர்ந்தார் வாய்ச்சொல் - (படித்த பருவ முதிர்ந்தவரானாலும்) வறுமை யுடையவர் சொல்லும் சொற்கள் (தக்கனவாயினும்), புல் ஈரம் போழ்தில் உழவே போல் - புல்லிய ஈரமுடைய காலத்தில் உழவு நிலத்தில் ஆழமாகச் செல்லாமல் மேலாகச் செல்வது போல, மீது ஆடிச் செல்லா ஆம் - காதால் மட்டும் கேட்டு மனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதாம். நல்ஆ - நல்ல சாதி மாடு. நாகு - இளங்கன்று. பெறூஉம் - இன்னிசை யளபெடை. புல் ஈரம் - குறைந்த ஈரம். போழ்து - காலம். மீது - மேலாக. ஆடி - தோன்றி. நல்கூர்ந்தார் - வறுமை யுற்றார். நாகு என்ற உவமைக்கேற்ப, இளையஞர் முதியர் என்ற சொற்களும், கல்லார் என்றதால் கற்றார் என்பதும் வருவித் துரைக்கப்பட்டன. நல்ல சாதி மாட்டின் கன்று மிக்க இளமையுடைய தாயிருப்பினும் மிகுந்த விலை பெறுதல் போல, செல்வ முடையவர் மிக்க இளமையுடையவராகவும் படியாதவராகவும் இருந்தாலும் அவர் சொல்வதை எல்லாருங் கேட்பர். குறைந்த ஈரமுடைய காலத்தில் உழவு நிலத்தில் ஆழமாகச் செல்லாது மேலாகச் செல்வது போல, வறிவர் முதியவராகவும் படித்த வராகவும் இருந்தாலும் அவர் சொல்லை எவரும் கேளார் என்பதாம். நிறைந்த ஈரமுடைய காலத்தில் கலப்பை நிலத்தில் ஆழமாகச் செல்லும், குறைந்த ஈரமுடைய காலத்தில் ஆழமாகச் செல்லாது. அது போல, செல்வமுடைய காலத்தில் சொல்லும் சொல்லைக் கேட்பர், செல்வமில்லாக் காலத்தில் சொல்லும் சொல்லைக் கேளார் என்ற கருத்துப்படக் கொள்க. கல்வியறிவொழுக்கங்களிற் சிறந்தவராய் இருந்தாலும் பொருளில்லாவிட்டால் அவர் சொல்லை யாரும் மதியார் என்பது கருத்து. (3) 626. அருமை யுடைய பொருளுடையார் தங்கண் கரும முடையாரை நாடார், - எருமைமேல் நாரை துயில்வதியும் ஊர! குளந்தொட்டுத் தேரை வழிச்சென்றா ரில். (பழ) எருமை மேல் நாரை துயில் வதியும் ஊர - எருமை மேல் நாரை தூங்கும் ஊரை யுடையவனே, அருமை உடைய பொருள் உடையார் - பெறுதற்கரிய சிறந்த பொருளுடை யார், தம் கண் கருமம் உடையோரை நாடார் - தம்மிடத்துப் பயன் பெறுவார் யாரென்று ஆராய வேண்டுவதில்லை; குளம் தொட்டு தேரை வழி சென்றார் இல் - குளத்தைத் தோண்டி அதன்கண் தங்கி வாழத் தவளை யுள்ள இடத்தைத் தேடிச் செல்வார் யாரும் இல்லை. அருமை - இங்கு சிறப்பினைக் குறித்தது. அருமை உடைய பொருள் - சிறந்த பொருள். தம்கண் - தம்மிடத்து. கருமம் - பயன். நாடார் - ஆராயார். துயில்வதியும் - தூங்கும். ஊர - ஆடூஉ முன்னிலை. தொடுதல் - தோண்டுதல். தேரை - தவளை. வழிச் செல்லல் - உள்ள இடத்தைத் தேடிச் செல்லல். நீருள்ள குளத்தை நாடித் தவளைகள் வருவது போல, பொருளுள்ளவரை நாடிப் பொருள் வேண்டுவோர் வருவர் என்பதாம். பொருளுடையாரை எல்லோரும் விரும்புவர் என்பது கருத்து. (4) 627. உடையதனைக் காப்பான் உடையான், அதுவே உடையானைக் காப்பதூஉ மாகும் - அடையின் புதற்குப் புலியும் வலியே புலிக்குப் புதலும் வலியாய் விடும். (பழ) அடையின் புதற்கு புலியும் வலியே - புதரை அடைந்தால் புதருக்குப் புலியும் வலியாகும், புலிக்கு புதலும் வலியாய் விடும் - புலிக்குப் புதரும் வலியாம்; (அதுபோல), உடைய தனைக் காப்பான் உடையான் - கையிலுள்ள பொருளை அழியாமல் காப்பவனே அதனை உடையவனாவான், அதுவே உடையானைக் காப்பதும் ஆகும் - அப்பொருளே தன்னையுடையானைக் காப்பது மாகும். உடையது - பொருள் - செல்வம். அதுவே - அப்பொருளே. அடையின் - புலி புதரை அடைந்தால். புதல் - புதர். வலி - வலிமை - துணை. காட்டுக்குப் புலி துணை; புலிக்குக் காடு துணை. அது போல, உடையவனுக்குப் பொருள் துணை. பொருளுக்கு உடையவன் துணை. புலியுள்ள காட்டை யாரும் அணுகார், அதனால், காடும் அழிக்கப்படாது, புலியும் கொல்லப்படாது. அது போல, பொரு ளுடையவனை யாரும் வெல்லக் கருதார். அதனால், அவனும் கெடான், பொருளும் கெடாது என்பதாம். பொருளை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பது கருத்து. அதாவது, வீண் செலவு செய்து பொருளை அழிக்கக் கூடாது என்றபடி. பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். (குறள்) (5) 628. வருவாய் சிறிதெனினும் வைகலு மீண்டின் பெருவாய்த்தாய் நிற்கும் பெரிதும் - ஒருவா றொளியீண்டி நின்றால் உலகம் விளக்கும் துளியீண்டில் வெள்ளந் தரும். (பழ) ஒருவாறு ஒளி ஈண்டி நின்றால் உலகம் விளக்கும் - ஒரு சேரப் பல விண் மீன்களும் கூடியிருந்தால் உலகமெல்லாம் இருள் நீங்கும்படி விளக்கும், துளி ஈண்டில் வெள்ளம் தரும் - மழைத் துளியும் ஒன்று கூடின் வெள்ளத்தை உண்டாக்கும்; (அதுபோல), வருவாய் சிறிது எனினும் வைகலும் ஈண்டின் - ஒருவர்க்கு வருமானம் சிறிதாயினும் நாடோறும் சிறிதாயினும் கூடின், பெருவாய்த்தாய் பெரிதும் நிற்கும் - பெரிய அளவினை யுடையதாய் அவனுக்குச் செல்வம் மிகும். வருவாய் - பொருள் வருகின்ற வழி - வருமானம். வைகலும் - நாடோறும். ஈண்டுதல் - கூடுதல் - சேர்தல். பெருவாய்த்தாய் - மிகப் பெரிதாய், ஒருவாறு - ஒருசேர - ஒன்றாக. ஒளி - வீண்மின். துளி - மழைத்துளி. சிறிய விண்மீன்கள் பல ஒன்று கூடினாலும் உலகை விளக்கும் ஒளியுண்டாகும். பலதுளி பெருவெள்ளமாகும். அது போல, குறைந்த வருவாயுடையவரும் கொஞ்சங் கொஞ்ச மாகச் சேர்த்துவந்தால் பெரும்பொருள் சேரும் என்பதாம். வருமானம் கொஞ்சமாயினும் நாடோறும் சிறிது சிறிது சேர்த்து வந்தால் செல்வம் பெருகும் என்பது கருத்து. ஒன்றொன்றாய் நூறா ஒருமிக்க நூறா? பலதுளி பெருவெள்ளம் - பழமொழி (6) 629. ஊக்கி யுழந்தொருவர் ஈட்டிய வொண்பொருளை நோக்குமி னென்றிகழ்ந்து நொவ்வியார் கைவிடுதல் போக்கினீர் தூஉம் பொருகழித் தண்சேர்ப்ப! காக்கையைக் காப்பிட்ட சோறு. (பழ) போக்கு இல்நீர் தூவும் பொருகழி தண்சேர்ப்ப - போக்கில்லாத நீரைக் கரைமேல் தூவுகின்ற கரையைப் பொருகின்ற கழிகள் சூழ்ந்த குளிர்ந்த துறையையுடைய வனே, ஒருவர் ஊக்கி உழந்து ஈட்டிய ஒண்பொருளை இகழ்ந்து - ஒருவர் முயன்று வருந்தித்தேடிய சிறந்த பொருளைத் தாம் காவாமல், நோக்குமின் என்று நொவ்வியார் கைவிடுதல் - பாதுகாத்துத் தாருங்கள் என்று நாணமில்லாதவரிடம் கொடுத்தலானது, காக்கையைக் காப்பிட்ட சோறு - காக்கையைக் காவலாக வைத்த சோறுபோலும். ஊக்கி - முயன்று. உழந்து - வருந்தி. ஈட்டிய - தேடிய. ஒண்பொருள் - சிறந்த பொருள்; மிகுந்த பொருள் என்றபடி. நோக்குமின் - பாதுகாருங்கள். இகழ்தல் - தாம் காத்தலை இகழ்ந்து - தாம் காவாமல் என்றபடி. நொவ்வியர் - கீழ்மக்கள் - நாணய மில்லாதவர். கைவிடுதல் - அவரிடம் கொடுத்தல். போக்கில்லாத நீர் - தேங்கி நிற்கும் நீர். கழிகளில் தேங்கி நிற்கும் நீர் கரையில் மோதிக் கரைமேல் நீரைத் தூவுமென்க. தூஉம் - தூவும் என்பது வுகரங்கெட்டு அளபெடுத்தது. பொருதல் - கரையில் மோதுதல். கழி - உப்பங் கழி. தண் - குளிர்ச்சி. சேர்ப்பு - கரை, துறை. சேர்ப்ப - ஆடூஉ முன்னிலை. காப்பிடல் - காவல் வைத்தல். வருந்தித் தேடிய பெரும் பொருளைத் தாமே பாது காவாமல் நாணயமில்லாதவரிடம் கொடுத்து வைப்பது, சோற்றுக்குக் காக்கையைக் காவல் வைத்தது போலாம். காக்கை சோற்றைத் தின்றுவிடுவது போல அன்னாரும் திருப்பிக் கொடுக்க மாட்டார் என்பதாம். இவ்வாறு நாணயமில்லாதவரிடம் வட்டிக்குக் கொடுத்து ஏமாந்தவர் பலருண்டு. சில வங்கிகளில் போட்ட பணமே மோசம் போவது உண்டல்லவா? பொருளைப் பிறர்க்குக் கொடுக்கும் போது, நாணயமும் நம்பிக்கையும் உள்ளவர் களாக, நிலையுடைய வங்கியாகப் பார்த்துக் கொடுக்க வேண்டு மென்பது. (7) 630. முன்னை யுடையது காவா திகந்திருந்து பின்னையஃ தாராய்ந்து கொள்குறுதல் - இன்னியல் மைத்தடங்கண் மாதராய் அஃதாதல் வெண்ணெய்மேல் வைத்து மயில்கொள்ளு மாறு. (பழ) இன்இயல் மைதடங்கண் மாதராய் - இனிய இயல்பினை யுடைய மையெழுதிய பெரிய கண்களையுடைய பெண்ணே. முன்னே உடையது காவாது இகழ்ந்து இருந்து - முன்னோர் ஈட்டிவைத்த பொருளைக் காவாமல் அழியும்படி விட்டு விட்டு, பின்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல் அஃது - பின்னர் அதனைத் தேடிக் கொள்ளுதலாகிய அத்தன்மை, மயில்மேல் வெண்ணெய் வைத்து கொள்ளும் ஆறுஆதல் - மயிலின் தலையில் வெண்ணெயை வைத்து அவ்வெண்ணெய் உருகி அதன் கண்ணில் புகுந்தால் அப்பொழுது அதனைப் பிடித்துக் கொள்ள நினைக்குமாறு போலும். முன்னை உடையது - முன்னோர் தேடி வைத்த பொருள். இகந்து - அழியவிட்டு. அஃது - அப்பொருளை. ஆராய்ந்து - தேடி. கொள்குறுதல் - கொள்ளுதல். அஃது - அத்தன்மை. இயல் - இயல்பு - தன்மை. மை - மையெழுதிய. தடங்கண் - பெரிய கண். மாதராய் - பெண்ணே - மகடூஉ முன்னிலை. முன்னோர் தேடி வைத்த பொருளைக் காவாமல் அழிய விட்டுவிட்டு - அழித்துவிட்டு - பின்னர் அதனைத் தேடிக் கொள்ள முயல்வதானது, மயிலின் தலையில் வெண்ணெயை வைத்து, அது உருகிக் கண்ணில் விழும் பொழுது மயிலைப் பிடித்துக் கொள்ள நினைப்பது போலாம். அது முடியாது என்பதாம். ‘கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துக் கொக்கைப் பிடிக்கிறது போல’ - பழமொழி. கையில் உள்ள பொருளை அழித்துவிட்டு மீண்டும் அதனைத் தேட முயல்வது பேதைமையாகும். உள்ளதை அழியாமல் காப்பதே அறிவுடைமையாகும். (8) 631. உடைமையறா தீட்ட லுறுதுணையாம் யாண்டும் உடைமையராச் சென்றக்கா லூரெல்லாஞ் சுற்றம் உடைமைக்கோ லின்றங்குச் சென்றக்காற் சுற்றம் உடையவரும் வேறு படும். (இன்னி) உடைமை அறாது ஈட்டல் - ஒருவர் பொருளை இடை விடாது ஈட்டக் கடவர்; யாண்டும் உறுதுணை ஆம் - அவர்க்கு அது எவ்விடத்தும் உற்ற துணையாகும்; உடைமைய ராச் சென்றக்கால் ஊர் எல்லாம் சுற்றம் - ஒருவர் செல்வ முடைய வராக அயலூருக்குப் போனால் அவ்வூரெல்லாம் அவருக்குச் சுற்றமாவர், உடைமைக் கோல் இன்று அங்கு சென்றக்கால் - செல்வமாகிய ஊன்று கோல் இல்லாமல் அவ்வயலூருக்கு ஒருவர் போனால், சுற்றம் உடையாரும் வேறுபடும் - அவருக்கு உறவாக உடையவரும் வேறுபடுவர். உடைமை - செல்வம். அறாது - இடைவிடாது. ஈட்டல் - தேடுதல். உறுதுணை - உற்ற துணை. யாண்டும் - எவ்விடத்தும். உடைமையர்ஆ - செல்வமுடையவராக. ஆ - ஆக. உடைமைக் கோல் - செல்வமாகிய ஊன்றுகோல். சுற்றம் உடையவர் - சுற்றத்தார். ஒருவர் செல்வத்தை இடைவிடாது ஈட்ட வேண்டும். ஏனெனில், அது அவருக்கு எவ்விடத்தும் உற்ற துணையாகும். ஒருவர் செல்வமுடையராக அயலூருக்குச் சென்றால் அவ்வூரா ரெல்லாரும் அவருக்கு உறவினராவர். செல்வமாகிய ஊன்று கோல் இல்லாமல் ஒருவர் அயலூருக்குச் சென்றால் அவருக்கு உறவாக உடையவரும் வேறாவர். அதாவது உறவு பாராட்ட மாட்டார்கள் என்பதாம். துன்புற்ற காலத்தும், சென்ற விடத்தும் செல்வம் துணை யாவதால், ஒவ்வொருவரும் செல்வத்தை இடையறாமல் ஈட்டுதல் வேண்டும் என்பது கருத்து. (9) 632. தத்த நிலைக்குங் குடிமைக்குந் தப்பாமே ஒத்த கடப்பாட்டிற் றாளூன்றி - எய்த்தும் அறங்கடையிற் செல்லார் பிறன்பொருளும் வெஃகார் புறங்கடைய தாகும் பொருள். (நீநெ) தத்தம் நிலைக்கும் குடிமைக்கும் தப்பாமே - அவரவர்க் குரிய தகுதிக்கும் குலவொழுக்கத்திற்கும் ஏற்றவாறு, ஒத்த கடப் பாட்டில்தாள் ஊன்றி - இயைந்த முறையில் முயற்சி செய்து, எய்த்தும் அறங்கடையில் செல்லார் - மறந்தும் கெட்ட வழியில் செல்லாமல், பிறன் பொருளும் வெஃகார் - பிறனுடைய பொரு ளையும் விரும்பாதவருடைய, புறங் கடையது ஆகும் பொருள் - வாயிலில் வந்து சேரும் பொருள். தத்தம் - அவரவர். நிலை - தகுதி. தகுதி - அறிவு, ஆண்மை முதலியன. குடிமை - குலவொழுக்கம். தப்புதல் - தவறுதல். ஒத்த - இயைந்த, பொருந்திய. கடப்பாடு - முறை, வழி. தாள் - முயற்சி. தாள் ஊன்றல் - முயற்சி செய்தல். எய்த்தல் - மறத்தல். அறங்கடை - கெட்டவழி. வெஃகுதல் - விரும்புதல். செல்லார், வெஃகார் - வினையாலணையும் பெயர்கள். புறங்கடை - வாசல். செல்லா ருடைய, வெஃகாருடைய புறங்கடை. அவரவர் தகுதிக்கும் குலவொழுக்கத்திற்கும் ஏற்ப, ஏற்ற வழியில் முயற்சிசெய்து, மறந்தும் கெட்ட வழியில் செல்லா மலும் பிறன் பொருளை விரும்பாமலும் பொருளீட்டுவார் வாசலில் வந்து சேரும் பொருள் என்பதாம். இது பொருள் தேடும் முறை கூறியது. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை. (குறள்) என்பதை நோக்குக. இவ்வாறு பொருளீட்டுவோர்க்கு எளிதில் பொருள் சேரும் என்றபடி. (10) 633. மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும் திருவுந்தீர் வின்றே லினிது. (இனி) மயரிகள் அல்லராய் - அறிவிலிகள் அல்லராய் - அறிவுடை யராய், மாண்பு உடையார்ச்சேரும் திருவும் - மாட்சிமை யுடை யாரைப் பொருந்தும் செல்வமும், தீர்வு இன்றேல் இனிது - எப்போதும் நீங்காதாயின் நல்லது. மயரிகள் - அறிவிலிகள். மாண்பு - நற்குண நற்செய்கை. திரு - செல்வம். தீர்வு - தீர்தல். அறிவும் மாட்சியும் இல்லாரைச் சேரும் தீர்வில்லாச் செல்வம் தமக்கும் பிறர்க்கும் கேடு பயக்குமாகையால், மயரிகளல்லராய் மாண்புடையார்ச் சேரும் திரு’ என்றார். இடையே தீரும் செல்வம் துன்பத்துக் கேதுவாதலால், தீர்வு இன்றேல் நன்று என்றார். செல்வம் எப்போதும் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது கருத்து. (11) 634. ஊனமொன் றின்றி உயர்ந்த பொருளுடைமை மானிடவர்க் கெல்லா மினிது. (இனி) ஊனம் ஒன்று இன்றி - குறைவு சிறிதும் இல்லாது, உயர்ந்த பொருள் உடைமை - மிக்க பொருளுடையராதல், மானிடவர்க்கு எல்லாம் இனிது - எல்லா மக்கட்கும் நல்லது. ஊனம் - குறைவு, கெடுதல். உயர்ந்த - மிக்க. மானிடர் - மக்கள். மக்கள் எல்லோரும் குறையாதபெரும் பொருளுடைய ராய் வாழ்தல் நல்லது. அத்தகுநிலை ஒரு நாட்டிற்கு ஏற்படு மாயின் அந்நாடு, எந்நாட்டின் முன்னாட்டும் நன்னாடாகத் திகழுமென்க. (12) 635. கல்லிற் பிறக்கும் கதிர்மணி காதலி சொல்லிற் பிறக்கு முயர்மதம் - மெல்லென் அருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம் பொருளிற் பிறந்து விடும். (நான்) கதிர்மணி கல்லில் பிறக்கும் - ஒளிபொருந்திய மணிகள் மலையில் உண்டாகும், உயர் மதம் காதலி சொல்லில் பிறக்கும் - மிக்க மகிழ்ச்சி மனைவியின் இன் சொல்லினால் உண்டாகும், அறநெறி மெல் என் அருளில் பிறக்கும் - அறவழி மென்மை பொருந்திய அருளினால் உண்டாகும், எல்லாம் பொருளில் பிறந்து விடும் - அறமுதலிய எல்லாம் செல்வத் தினால் உண்டாகி விடும். கல் - மலை. கதிர் - ஒளி. மணி - மாணிக்கம், வைரம் முதலியன. காதலி - மனைவி. மதம் - மகிழ்ச்சி, இன்பம். உயர்மதம் - மிக்க இன்பம். அருள் - இளகிய மனத்தில் தோன்றுவ தாகையால், ‘மெல் என் அருள்’ என்றார். அறநெறி - அறஞ் செய்யும் வழிகள். மலையில் ஒளியுள்ள மணிகள் உண்டாகும். அது போல, மனைவி சொல்லினால் கணவற்கு இன்பம் உண்டாகும். அருளினால் அற வழிகள் உண்டாகும். இன்பம் அறம் முதலிய எல்லாம் பொருளினால் உண்டாகிவிடும் என்பதாம். இது பொருளின் சிறப்புக் கூறியது. (13) 636. திருவிற் றிறலுடைய தில்லை. (நான்) ஒருவர்க்கு, திருவின் திறல் உடையது இல்லை - செல்வத் தைப்போல வலிமையுடையது வேறில்லை. செல்வத்தால் எச்செயலையும் எளிதில் செய்து முடிக்கலா மாகையால் அது திறனுடைய தாயிற்று. (14) 637. வளமையோ டொக்கும் வனப்பில்லை. (நான்) வளமையோடு ஒக்கும் - ஒருவர்க்குச் செல்வவாழ்க்கை யோ டொப்பான, வனப்பு இல்லை - அழகு வேறில்லை. செல்வச்சிறப்பினால் செயற்கை யழகு மிகுதிப்படு மாகை யால் செல்வம் அழகுக்குக் காரணமாயிற்று. (15) 638. கைத்துடையான் காமுற்ற துண்டாகும். (நான்) கைத்துடையான் - பொருள் உடையவன், காமுற்றது உண்டாகும் - விரும்பியது கைகூடும். கைத்து - பொருள். காமுறுதல் விரும்புதல். காமுற்றது - விரும்பியது. பொருளுடையவன் எதை விரும்பினாலும் அது கைகூடும் என்பதாம். (16) 639. முற்பெரு கலிற்பின் சிறுகாமை சிறந்தன்று. (முது) முன் பெருகலின் - செல்வம் முதலில் பெருகிப் பின் அழிதலைக் காட்டிலும், பின் சிறுகாமை சிறந்தன்று - உள்ள அளவில் பின்னர்க் குறையாதிருத்தல் சிறந்ததாம். குறையாதிருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது கருத்து. (17) 640. வணிகர்க் கழகு வளர்பொரு ளீட்டல். (வெற்) வணிகர்க்கு அழகு - வளர் பொருள் ஈட்டல் - மிகுந்த பொருளை ஈட்டுதலாம். மேன்மேலும் பெரும் பொருளை ஈட்டுதலே வணிகர்க்கு அழகாகும். உழவு, கைத்தொழில், பெருந்தொழில், வணிகம், அலுவல் என்னும் வாழ்க்கைத் தொழில்களில் வணிகத்தினா லேயே பெரும் பொருளீட்ட முடியுமாகையாலும், பெருந் தொழிலும் - ஆலைத் தொழில் முதலியன வணிகர்க்கே உரிமையுடைய வாகலானும் நாட்டின் செல்வத்தைப் பெருக்குவோர் வணிகரேயாவர். எனவே, நாட்டு வணிகர்கள் நன்கு முயன்று பொருளை மேன் மேலும் ஈட்டுதல் வேண்டும் என்பது. (18) 641. முதலுள பண்டங் கொண்டுவா ணிகஞ்செய் ததன்பய னுண்ணா வணிகரும் பதரே. (வெற்) முதல் உள பண்டம் கொண்டு - முதலாகவுள்ள பொருளைக் கொண்டு, வாணிகம் செய்து - அதன் பயன் உண்ணா - அவ்வாணி கத்தால் கிடைக்கும் ஊதியத்தை மட்டும் செலவு செய்யாமல் முதலையும் அழிக்கும், வணிகரும் பதரே - வணிகர் அறிவில்லாத வராவர். முதல் உள பண்டம் - வணிக முதலீடாக உள்ள பொருளும் சரக்குகளும். ஊதியம் - லாபம். உண்ணா - உண்ணாத - செலவு செய்யாத. பயனை மட்டும் உண்ணாது முதலையும் உண்ணும் என்றபடி. பதர் - பாளை - அறிவில்லாதவர். வணிகர்கள், வணிகத்தால் கிடைக்கும் ஊதியத்தில் ஒரு பகுதியைச் செலவு செய்துகொண்டு பொருளீட்டுதல் வேண்டுமே யன்றி, ஊதியத்தோடு முதலையும் உண்ணுதல் அறிவுடைமை யாகாது என்பதாம். (19) 642. பொருடனைப் போற்றிவாழ். (ஆத்) பொருள் தனை - பொருளை, போற்றிவாழ் - மேன் மேலும் பெருக்கிப் பாதுகாத்து வாழ்வாயாக. பொருளாட்சி போற்றாதார்க் கில்லை. (குறள்) என்றார் வள்ளுவரும். (20) 643. அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடு. (கொன்) அஃகமும் காசும் - தவசத்தையும் பணத்தையும், சிக்கெனத் தேடு - உறுதியாகத் தேடிக் கொள். அஃகம் - தவசம். இங்கு தானியாகு பெயராய், நெல், கம்பு, சோளம் முதலிய தவசங்கள் விளையும் நிலத்தையும் குறிக்கும். காசு - பணம். சிக்கென - உறுதியாக - கட்டாயம். சிக்கென - விரைவாக - இளமையிலேயே. இரு பொருளும் கொள்க. ஒவ்வொருவரும் கட்டாயம் இளமையிலேயே முயன்று நிலமும் பொருளும் தேடிக் கொள்ள வேண்டும் என்பதாம். (21) 644. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர். (கொன்) சொக்கர் என்பவர் - பொருளுடையவர் என்பவர், அத்தம் பெறுவர் - ஏனை அறத்தையும் இன்பத்தையும் அடைவர். சொக்கம் - பொன், சொக்கர் - பொன்னுடையவர். அத்தம் - பொருள். இங்கு பொருளுடையவர். பொருள் பெறுவர் என்பதால், உறுதிப் பொருள்களான ஏனை இரண்டையும் குறித்தது. நடுவணது எய்த இருதலையும் எய்தும் (நாலடி) பொருளையுடையவர் அறமும் இன்பமும் அடைவர் என்பதாம். (22) 645. திரைகட லோடியுந் திரவியந் தேடு. (கொன்) உள்நாட்டிலேயன்றி, கடல் கடந்து வெளிநாடுகட்குச் சென்றும் பொருள் தேடுதல் வேண்டும் என்பதாம். இது, நாட்டின் செல்வ வளத்திற்கு ஏற்றதாகும். இது பழந்தமிழர் களின் பொருளீட்டு முயற்சியை நினைவு படுத்துவதாகும். (23) 41. முயற்சியுடைமை அஃதாவது, எடுத்துக்கொண்ட செயலைச் சோர்வில் லாமல் செய்து முடித்தல். அது மன முயற்சி, மெய்ம் முயற்சி என இரு வகைப்படும். மனமுயற்சியை - ஊக்கமுடைமை எனவும், மெய்ம் முயற்சியை - ஆள்வினையுடைமை எனவும் கூறுகின்றனர் வள்ளுவர். 646. கோளாற்றக்கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போற் கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப; வாளாடு கூத்தியர் கண்போற் றடுமாறும் தாளாளர்க் குண்டோ தவறு. (நால) கோள் ஆற்றக் கொள்ளா - கொள்ளுதற்குரிய நீரை மிகுதி யாகக் கொள்ளமாட்டாத, குளத்தின்கீழ்ப் பைங்கூழ் போல் - குளத்தின் கீழுள்ள பசிய பயிர்போல, கேள் ஈவது உண்டு கிளை களோ துஞ்சுப - அன்பர்கள் கொடுப்பதை உண்டு அவரை நம்பி வாழ்பவரோ கொடுப்போர் வறுமையுற்ற போது தாமும் உணவின்றி வருந்துவர், (அங்ஙனமின்றி), வாள் ஆடு கூத்தியர் கண்போல் தடுமாறும் - வாளின்மேல் ஆடுகின்ற கூத்தியின் கண்கள் போலக் கருத்தைச் செலுத்துகின்ற, தாள் ஆளர்க்கு தவறு உண்டோ - முயற்சியுடையோர்க்குத் தொடங்கிய காரியம் முடியாமல் போவதுண்டோ? இல்லை என்றபடி. கோள் - கொள்ளுதல். ஆற்ற - மிக. கொள்ளா - கொள்ளாத. குளத்தின் கீழ் - குளத்து நீர் பாயும் வயலில். உயரமான கரை யில்லாத குளம் என்றபடி. பைங்கூழ் - பயிர். கேள் - சுற்றத்தார், அன்பர். கிளை - நம்பிவாழ்வோர். துஞ்சுதல் - வருந்துதல். தடுமாறுதல் - ஒரே காலத்தில் பலவழியிலும் கருத்தைச் செலுத்துதல், தாளாளர் - முயற்சி யுடையார். தவறு - காரியங் கைகூடாமை. உண்டோ - ஓகாரம் வினாவொடு எதிர்மறை. வாளாடு கூத்தியர் - செண்டில் (சர்க்கஸ்) கம்பிமேல் நின்று ஆடுவதுபோல், நீண்ட வாளைக் கம்பிபோல் கட்டி அதன்மேல் ஆடுதல். அதாவது கத்திமுனைமேல் ஆடுதல். அல்லது இரண்டு கையிலும் வாளைப் பிடித்துச் சுழற்றிக் கொண்டு ஆடுதல் எனினு மாம். மிகுந்த நீரைக் கொள்ளமாட்டாத சிறு ஏரியின் கீழுள்ள வயலிலுள்ள பயிர் அவ்வேரி செழித்திருக்குமளவும் செழித்திருந்து, ஏரிநீர் வற்றினால் தாமும் வறண்டு போவது போல, ஒரு முயற்சியும் செய்யாமல் பிறர் கொடுக்க உண்டு காலங் கழிக்கும் சோம்பேறிகள், அக்கொடுப்போர் வறுமை யுறும்போது தாமும் சோறின்றி வருந்துவர். கத்திமுனையில் ஆடுகின்ற கூத்தி, அவ்வாட்டந் தவறாமலும், தனக்கு இடையூறு நேராமலும் கருத்துடன் கண்களை நாற்புறமும் செலுத்துதல் போல, கருத்துடன் முயற்சி செய்வோர்க்கு எடுத்த காரிய மெல்லாம் தவறாமல் முடியுமாதலால் ஒரு பொழுதுங் குறையில்லை என்பதாம். எப்போதும் ஒருவர் தன் முயற்சியாலேயே வாழ வேண்டும். பிறரை நம்பி வாழ்வோர் அவர் வறுமையுறின் இவரும் சோறின்றி வருந்துவர் என்பது கருத்து. (1) 647. ஆடுகோ டாகி யதரிடை நின்றதூஉம் காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும், வாழ்தலு மன்ன தகைத்தே யொருவன்றான் தாழ்வின்றித் தன்னைச் செயின். (நால) ஆடுகோடு ஆகி அதரிடை நின்றதும் - துவளுகின்ற சிறு கொம்பாகி வழியிலே நின்ற இளஞ்செடியும், காழ் கொண்ட கண்ணே களிறு அணைக்கும் கந்து ஆகும் - பெரியதாகி முற்றி வயிரங்கொண்டபோது யானையைக் கட்டுவதற்கேற்ற தறியாகும்; ஒருவன் தான் தன்னை - தாழ்வின்றிச் செயின் - நின்ற நிலை யினின்றும் கீழ்ப்படுதலில்லாதபடி முயற்சியால் பெருகச் செய் வானாயின், வாழ்தலும் அன்ன தகைத்தே - அவனுடைய வாழ்க் கையும் அப்படிப்பட்ட தன்மையுடையதே யாகும். ஆடுதல் - மென்மையால் வளைதல். கோடு - சிறு கொம்பு. அதர் - வழி. காழ் - சேவு; மரத்தின் நடுவில் உள்ள வைரம். கண் - இடம். களிறு - ஆண் யானை. அணைத்தல் - கட்டுதல். கந்து - கட்டுத்தறி. தகைத்து - தன்மையுடையது. தாழ்வு - குறைவு. செய்தல் - செல்வமுடையனாகச் செய்தல். வழியிலே நின்ற இளங்கொம்பானது பெரிய மரமாகிச் சேவேறினால் யானை கட்டுதற்குரிய தறியாகும். அது போல, ஒருவன் தன் வாழ்க்கை வளங்குன்றாமல். முயற்சி செய்வா னானால், அவன் வாழ்க்கையும் அவ்வாறே பெருஞ் செல்வ முடைய வாழ்க்கை யாகும் என்பதாம். வழியில் முளைத்த கொம்பு தானே வளர்ந்து பெரிய மரமாவது போல, இவனுந் தானாகவே முயன்று பெருஞ் செல்வ முடைய வனாக வேண்டும். அம்மரம் யானைகட்டுந் தறியாவது போல, இவனும் பலர்க்குத் துணையாக வேண்டும் என்பது கருத்து. (2) 648. நல்ல குலமென்றுந் தீய குலமென்றும் சொல்லள வல்லாற் பொருளில்லைத் - தொல்சிறப்பின் ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை என்றிவற்றா லாகுங் குலம். (நால) நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும் - உயர்ந்த குடி யெனவும் தாழ்ந்த குடியெனவும், சொல் அளவு அல்லாமல் பொருள் இல்லை - சொல் மாத்திரமல்லாமல் அச்சொற் களுக்குப் பொருள் இல்லை; (ஏனெனில்), தொல்சிறப்பின் ஒண் பொருள் ஒன்றோ - பழமையான சிறப்பினையுடைய சிறந்த செல்வம் மட்டுமோ, தவம் கல்வி ஆள்வினை என்ற இவற்றால் குலம் ஆகும் - தவமும் கல்வியும் முயற்சியும் என்று சொல்லப் பட்ட இவற்றால் குடி மேன்மையடையும். நல்ல - உயர்ந்த, தீய - தாழ்ந்த குலம் - குடி அதாவது ஒருவன் பிறக்கும் குடி. சொல் அளவு - சொல்மாத்திரம். தொல் - பழைய. ஒண்பொருள் - சிறந்த பொருள். ஒன்றோ - மட்டுமோ. தவம் - நற்குண நற்செய்கை. ஆள்வினை - முயற்சி. நல்ல குலம் தீய குலம் என்னும் சொற்கள் பொருள் குறிப்ப தில்லை. அதாவது, நல்ல, தீய என்னும் சொற்கள் நல்ல, தீய என்னும் சொல் மாத்திரமன்றி நல்ல பொருளையும் தீய பொருளையும் குறிப்பதில்லை. ஏனெனில், பொருள், தவம், கல்வி, முயற்சி இவற்றால் ஒருகுலம் உயர்வடையும். இவை இன்மையால் ஒருகுலம் தாழ்வடையும் என்பதாம். பொருள், தவம், கல்வி என்னும் மூன்றும் முயற்சியால் உண்டாவதால், ஒருவன் முயற்சியும் முயற்சியின்மையுமே அவன் குடியின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் என்பது கருத்து. ஆள்வினையு மான்ற அறிவும் எனவிரண்டின் நீள்வினையால் நீளுங் குடி. (குறள்) (3) 649. சிதலை தினப்பட்ட ஆல மரத்தை மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக் குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும். (நால) சிதலை தினப்பட்ட ஆலமரத்தை - நரையான் அரிக்கப் பட்ட ஆலமரத்தை, அதன் வீழ் மதலையாய் ஊன்றி ஆங்கு - அம்மரத்தின் விழுதானது தூணாக அம்மரத்தைத் தாங்குவது போல, தந்தை கண் குதலைமை தோன்றின் - தந்தையின் பால் தளர்ச்சி யுண்டானால், தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும் - அவன் பெற்ற மைந்தன் தன் முயற்சியால் மறைக்க அத்தளர்ச்சி நீங்கிப்போகும். சிதலை - நரையான்; கறையான் போல வெண்ணிற மாக இருக்கும். மதலை - தூண். மற்று - அசை. வீழ் - விழுது. ஆங்கு - போல. குதலைமை - தளர்ச்சி. மறைத்தல் - துணை செய்தல். நரையான் அரித்து வீழ்ந்து விடும் நிலையில் உள்ள ஆல மரத்தை அதன் விழுதுகள் தாங்குதல் போல, தந்தை தளர்ச்சி யுற்றால் அவன் மைந்தன் தன் முயற்சியால் அத்தளர்ச்சியைப் போக்க வேண்டும் என்பதாம். இதனால், ஒருவன் தன்னையே யன்றித் தன் சுற்றத் தாரையும் பெருமைப் படுத்த வேண்டும் என முயற்சியின் சிறப்புக் கூறப் பட்டது. நைந்தடி யற்ற வாலம் நடுங்கிவீழ் கின்ற தென்று வந்தவீ ழூன்றி வீழா வகைநிலை விளக்கு மாபோல் மைந்தர்கள் தமக்குள் நல்ல அறிவினால் மகிழ்ந்து சேர்ந்து தந்தையைத் தளரா வண்ணம் தாங்குவர் தவத்தி னென்றான். (உத்தரகாண்டம் - ஒட்டக்கூத்தர்) தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன ஓங்குகுல நையவத னுட்பிறந்த வீரர் தாங்கல்கட னாகும். (சிந்தாமணி) (4) 650. தீங்கரும் பீன்ற திரள்கா லுளையலரி தேங்கமழ் நாற்ற மிழந்தாஅங் - கோங்கும் உயர்குடி யுட்பிறப்பி னென்னாம் பெயர்பொறிக்கும் பேராண்மை யில்லாக் கடை. (நால) தீம்கரும்பு ஈன்ற திரள்கால் உளை அலரி - தித்திப்பான கரும்பு ஈன்ற திரண்ட தாளையுடைய குதிரையின் பிடரிமயிர் போன்ற பூவானது, தேம் கமழ் நாற்றம் இழந்து ஆங்கு - தேனோடு கூடிய நன்மணம் இல்லாமை போல, பெயர் பொறிக்கும் பேர் ஆண்மை இல்லாக்கடை - ஒருவன் தன் பெயரை நிலை நிறுத்தற்குக் காரணமான பெரிய முயற்சி இல்லாதவிடத்து, ஓங்கும் உயர் குடியுள் பிறப்பின் என் ஆம் - மிக உயர்ந்த குடியில் பிறந்த தனால்யாது பயன் உண்டாகும்? ஒன்றுமில்லை என்றபடி. தீம் - இனிமை. கால் - பூந்தண்டு. திரள் - திரண்ட, உருண்ட. உளை - பிடரிமயிர். அலரி - பூ. மேம் - தேன். கமழ்தல் - மணத்தல். நாற்றம் - மணம். இழத்தல் - இன்றாதல். ஆங்கு - போல. ஓங்கு உயர் - மிக உயர்ந்த. ஒரு பொருட் பன்மொழி. பொறித்தல் - நிலை நிறுத்தல். பேர் ஆண்மை - பெருமுயற்சி கடை - இடத்து. மிக்க இன்சுவையுள்ள கரும்பினிடத்துத் தோன்றியும் அதன் மலருக்கு மணம் இன்மையால் சிறப்பின்மை போல, உயர்குடியில் பிறந்தாலும் முயற்சியில்லாதவர்க்குச் சிறப் பில்லை என்பதாம். கரும்பு - உயர் குடிக்கும், கரும்புப் பூ - உயர்குடிப் பிறந்த வனுக்கும், மணமின்மை - முயற்சியின்மைக்கும்., கரும்புப் பூ சூடப் பெறாமை - முயற்சில்லான் மதிக்கப் பெறாமைக்கும் உவமை. (5) 651. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும் கருனைச்சோ றார்வர் கயவர் - கருனையைப் பேரு மறியார் நனிவிரும்பு தாளாண்மை நீரு மமிழ்தாய் விடும். (நால) கயவர் - முயற்சி சிறிதுமில்லாத சோம்பேறிகள், பெரு முத்தரையர் பெரிது உவந்து ஈயும் - பெருமுத்தரையர் என்னும் வள்ளல் மிகவும் விரும்பி அளிக்கின்ற, கருனைச் சோறு ஆர்வர் - பொரிக்கறியோடு கூடிய சோற்றை உண்பர், கருனையைப் பேரும் அறியார் தாளாண்மை நீரும் - பொரிக் கறியின் பேரையும் அறியார் முயற்சியால் பெற்று உண்ட புற்கை நீரும், நனி விரும்பு அமிழ்து ஆய்விடும் - மிகவும் விரும்புகின்ற அமிழ்தினை ஒத்த தாகும். உவந்து - மகிழ்ந்து. கருணை - பொரிக்கறி. இது மற்றைப் பலகார முதலியவற்றிற்கு இனவிலக்கணம். ஆர்தல் - உண்ணுதல். கயவர் - சோம்பேறிகள். நனி - மிக. தாளாண்மை - முயற்சி. புற்கை - கஞ்சி. புற்கை நீர் - கஞ்சித் தண்ணீர். பழைய சோற்று நீருமாம். தன் முயற்சியாலன்றிப் பிறர் முயற்சியால் உண்ணும் நல்லுண வினும், தன் முயற்சியால் உண்ணும் பழைய சோற்று நீர் மேலானது என்பதாம். பெருமுத்தரையர் என்பார் அக்காலத்தே இருந்த ஒரு வள்ளல்; ஊர் முதலியன தெரியவில்லை; பாரி, பேகன் முதலிய வள்ளல் களைப் போல, இரவலர்க்கு நல்லுண விட்டுப் போற்றிய நல்லோன் என்று தெரிகிறது. தெண்ணீ ரடுபுற்கை யாயினும் தாடந்த துண்ணலின் ஊங்கினிய தில். (குறள்) (6) 652. எமக்குத் துணையாவார் வேண்டுமென் றெண்ணித் தமக்குத் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா; பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோமற் றில்லை தமக்கு மருத்துவர் தாம். (பழ) தமக்கு மருத்துவர் தாம் - தமது நோயைத் தீர்க்கும் மருத்துவர் தாமேயாம், (ஆதலால்), எமக்குத் துணை ஆவார் வேண்டும் என்று எண்ணி - எமக்கோ ரிடர் வந்தால் அதைத் தீர்க்கத் துணையாவார் வேண்டும் என்று எண்ணி, தமக்குத் துணை ஆவார் தாம் தெரிதல் வேண்டா - தமக்குத் துணை யாவாரைத் தாம் தேடுதல் வேண்டா, பிறர்க்குப் பிறர் செய்வது உண்டோ இல்லை - ஒருவர்க்கு மற்றொருவர் செய்யும் உதவி ஏதேனும் உண்டோ? இல்லை. துணை - துணை செய்தல். தன்னால் செய்ய முடியாத தைச் செய்ய உதவுதல். தெரிதல் - தேடுதல். பிறர் - வேறொருவர். செய்வது - செய்யும் உதவி. மற்று - அசை. தமது நோயைத் தீர்ப்பதற்குத் தாமே மருத்துவர் ஆதலாவது - மருத்துவர் சொல்கிறபடி மருந்துணவும் மருந்தும் உண்டு வருதல். கொடுத்த மருந்தைச் சரியாக உண்ணாமையும், பொருந்தா உணவையுண்டலும் நோயை மிகுவிக்குமாகை யால், நோய் நீங்கத் தாமும் முயலுவதாம். தமது முன்னேற்றத்திற்குத் தமது முயற்சியே காரண மாகை யால், பிறருதவியை எதிர்நோக்கிச் சோம்பியிருத்தல் கூடாதென் பதாம். (7) 653. கற்றதொன் றின்றி விடினுங் கருமத்தை அற்ற முடிப்பா னறிவுடையான் - உற்றியம்பும் நீத்தநீர்ச் சேர்ப்ப! இளையானே யாயினும் மூத்தானே யாடு மகன். (பழ) நீத்தம் நீர்ச் சேர்ப்ப - மிக்க நீரையுடைய துறைவனே, கற்றது ஒன்று இன்றி விடினும் - கற்றது சிறிதும் இல்லா விட்டாலும் - சிறிதுங் கல்லாவிடினும் என்றபடி, கருமத்தை அற்றம் முடிப்பான் அறிவுடையான் - காரியஞ் செய்வதில் சோம்பலின்றி முயல்பவன் அறிவுடையவனாவான், உற்று இயம்பும் - மேலும் அவன் காரியம் முடிக்கும் வழியையும் எடுத்துச் சொல்லுவான், ஆடும் மகன் இளையானே ஆயினும் மூத்தானே - காரிய முடிப்பவன் ஆண்டில் இளையானே யாயினும் மூத்தோன் போலவே மதிக்கப்படுவான். ஒன்று - சிறிதும். கருமம் - காரியம். அற்றம் - சோர்வு - சோம்பல். உற்று இயம்பும் - நன்கு எடுத்துரைப்பான். நீத்தம் - மிக்க நீர் - வெள்ளம். நீத்த நீர் - மிக்க நீர். சேர்ப்பு - கடற்கரை. சேர்ப்ப - ஆடூஉ முன்னிலை. ஆடுதல் - காரிய முடித்தல் - தொழில் செய்தல். ஒருவன் சிறிதும் கல்லாதவனே யானாலும் தான் மேற் கொண்ட காரியத்தை நன்கு முயன்று முடிப்பானாயின் அவன் அறிவுடையவனாவான். அவன் காரிய முடிக்கும் வழியையும் எடுத்துரைக்குந் திறமுடையவனாவான். தான் காரியத்தை முயற்சி யுடன் செய்வன் ஆண்டில் இளையனே யாயினும் மூத்தோ னாகவே மதிக்கப்படுவான் என்பதாம். கல்வியறிவிருந்தும், தொழில் செய்தற்கேற்ற பருவமுடைய வனாயிருந்தும், தன் காரியத்தை முயற்சியுடன் செய்து முடியா னாயின் பிறரால் நன்கு மதிக்கப்படான். கல்லாமை யோடு ஆண்டில் இளையனாயினும் முயன்று காரிய முடிப் பவனே நன்கு மதிக்கப்படுவானென்பதாம். (8) 654. இனியாரு மில்லாதார் எம்மிற் பிறர்யார் தனியேம்யாம் என்றொருவர் தாமடியல் வேண்டா; முனிவில ராகி முயல்க, முனிவில்லார் முன்னிய தெய்தாமை யில். (பழ) யாம் தனியேம் - யாம் தனியே மாயினேம், இனி யாரும் இல்லாதார் எம்மின் பிறர் யார் என்று - இப்பொழுது ஒருவருந் துணையில்லாதார் எம்மைப்போல் யாருளர் என்று எண்ணி, ஒருவர் மடியல் வேண்டா - ஒருவர் முயற்சியின்றிச் சோம்பி யிருக்க வேண்டா, முனிவு இல்லார் முன்னியது எய்தாமை இல் - காரியத்தில் வெறுப்பில்லாதவர் நினைத்ததைப் பெறா திருத்தல் இல்லை (ஆதலால்), முனிவு இலராகி முயல்க - வெறுப் பில்லாமல் காரியம் செய்ய முயல்க. இனி - இப்பொழுது. இல்லாதார் - துணையில்லாதார். தனியேம் - ஒருவரும் துணையில்லை என்றபடி. மடிதல் - சோம்பி யிருத்தல். மடி - சோம்பல். முனிவு - வெறுப்பு. முன்னியது - நினைத்ததை - எண்ணியதை, எய்தாமை - பெறாமை - அடையாமை. எமக்குத் துணை செய்வார் ஒருவரும் இல்லை என்று சோம் பியிராமலும், வேலையில் வெறுப்புக் கொள்ளாமலும் முயன்றால் முடியாத காரியம் ஒன்றுமில்லை என்பதாம். எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின். (குறள்) (9) 655. தற்றூக்கித் தன்றுணையுந் தூக்கிப் பயன்றூக்கி மற்றவை கொள்வர் மதிவல்லார் - அற்றன்றி யாதானு மொன்று கொண் டியாதானுஞ் செய்தக்கால் யாதானும் ஆகி விடும். (பழ) தன் தூக்கி - தனது திறமையை ஆராய்ந்து, தன் துணையும் தூக்கி - தனக்குத் துணையாவார் திறத்தையும் ஆராய்ந்து, பயன் தூக்கி - அக்காரியத்தால் உண்டாகும் பயனையும் ஆராய்ந்து, அவை கொள்வர் மதிவல்லார் - தனது திறமை முதலியன அமையுமானால் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குவர் அறிவுடையார், அற்று அன்றி - அவ்வாறு ஆராயாமல், யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக் கால் - தகுதியில்லாத தனது திறமை முதலிய வற்றுள் ஒன்றைக் கொண்டு அதற்குத் தகுதி யில்லாத செயலைச் செய்தால், யாதானும் ஆகிவிடும் - காரிய முடியாது துன்பத்தைத் தரும். தூக்குதல் - ஆராய்தல். துணை - தனக்குத் துணை செய்வோர். மற்று - அசை. அவை - தனது திறமை, தன் துணைவர் திறமை, பயன். அவை கொள்ளல் - தனது திறமை முதலிய மூன்றும் அமையுமானால் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குதல். மற்று அசை. மதி - அறிவு. அற்று - அவ்வாறு யாதானும் - கெடுதல், துன்பம். அறிவுடையோர், தமது திறத்தினையும், தம் துணை வருடைய திறத்தினையும், அக்காரியத்தால் உண்டாகும் பயனையும் ஆராய்ந்து, அப்பால் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குவர். இங்ஙனம் ஆராயாமல், தகுதியில்லாதவர் தகுதியில்லாத செயலைச் செய்ய முற்பட்டால் காரிய முடியாது வருந்துவர் என்பதாம். வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியுந் தூக்கிச் செயல். (குறள்) முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும் படுபயனும் பார்த்துச் செயல். (குறள்) செய்து முடிக்கும் தகுதியறிந்து ஒரு காரியத்தைச் செய்ய முயல வேண்டும் என்பது கருத்து. (10) 656. வீங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில் தூங்கு மெயிலும் தொலைத்தலால் - ஆங்கு முடியுந் திறத்தால் முயல்கதாங் கூரம் படியிழுப்பின் இல்லை யரண். (பழ) வீங்கு தோள் செம்பியன் சீற்றம் - பெருத்த தோள்களை யுடைய சோழனது சினமானது, விறல் விசும்பில் தூங்கும் எயிலும் தொலைத்தலால் - உயர்ந்த விசும்பின் கண் இயங்கும் கோட்டை யையும் அழித்தலால், முடியும் திறத்தால் முயல்க - ஒரு காரியத்தை முடியும் வகையால் முயற்சி செய்க, கூர் அம்பு அடி இழுப்பின் அரண் இல்லை - கூரிய அம்பை அடிபொருந்த இழுத்துவிடின் அதுபட்டு உருவாத மெய்யுறை இல்லை. வீங்குதல் - பெருத்தல். செம்பியன் - சோழன். இவன், தூங் கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் எனப்படுவான். சீற்றம் - சினம். விறல் - வெற்றி, இங்கே உயர்வு. விசும்புக்கு விறல் - மிகவும் உயரத்தில் இருத்தலாகும். விசும்பும் - ஆகாயம். தூங்குதல் - தொங்குதல். தொங்குதல் போல் வானிற் செல்லுதல். எயில் - மதில். கோட்டை இங்கு வானூர்தி, தொலைத்தல் - அழித்தல். ஆங்கு - அசை. திறம் - வகை. தாம் - அசை. அடி - அம்பின் காம்பு. அரண் - மெய்யுறை - கவசம். அம்பைச் சரியானபடி அடியுற இழுத்து விட்டால் ஊடுருவிச் செல்ல மாட்டாத உடலுறை இல்லை. அது போல, சரியானபடி முயன்றால் முடியாத காரியம் இல்லை. வானில் இயங்கும் எயிலை ஒரு சோழன் முயன்று அழித்ததே இதற்குச் சான்றாகும். காரியம் முடியும் வகையறிந்து நன்முயற்சி செய்தால், முடியாத காரியம் ஒன்றும் இல்லை என்பது கருத்து. தூங்கெயில் எறிந்த வரலாறு: ஒரு சோழ மன்னனின் பகைவன் ஒருவன் ஒருவானூர்தியில் ஊர்ந்து அடிக்கடி வந்துவந்து குடிகட்குத் தொல்லை கொடுத்து வந்தான். வானில் பறந்து செல்வதால் அவனை எளிதில் வெல்ல முடிய வில்லை. முடிவில் சோழன் பெரு முயற்சி செய்து, அவ் வானூர்தியை வீழ்த்தி, பகைவனை வென்று தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான். இவன் கி. மு. வில் இருந்த வனாவான். ஒன்னார் உட்கும் துன்னருங் கடுந்திறல் தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின். (புறம்) தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன். (மணி, விழாவறை காதை) ஓங்கெயில் கதவம் உருமுச்சுவல் சொறியும் தூங்கெயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன். (சிறுபா) . . . . . . . . . . . . . . . . . . உயர் விசும்பில் தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்கா ணம்மானை (சிலப் - வாழ்த்து) எனக் காண்க. இளங்கோவடிகள் மூன்றெயில் என்பது, சிவன் முப்புரம் எரித்தான் என்னும் கதையை நினைத்துப் போலும்! இதனால், அக்காலத்தே இன்றைய வானூர்தி போன்ற ஊர்திகள் இருந்தன வென்பது தெரிகிறது. அவை எந் நிலைமையில் இருந்தன, எவ்வாறு இயங்கின என்பன தெரிய வில்லை. உதயணன் கதையில், யூகி, பூணியின்றிப் பொறியின் இயங்கும் வானவூர்தி யூர்ந்து சென்றதாகக் காணப்படுவதும், பிரச்சோதனன் செய்த களிற்றுப் பொறியும், சீவகன் தாயான விசயை ஊர்ந்து சென்ற மயிற் பொறியும் இதற்குச் சான்று பகரும். (11) 657. அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது, கன்றுவிட் டாக்கறக்கும் போழ்தில் கறவானாய் அம்புவிட் டாக்கறக்கு மாறு. (பழ) அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது - அன்பினால் ஒருவன் மனம் இளகும்படி அவனிடம் பணிவாக நடந்து அவனா லாகும் பயனைப் பெறாது, நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது - தான் நினைத்த பொழுதே முடித்துக் கொள்வே னென்று வலிய முயலுதல், ஆ கறக்கும் போழ்தில் கன்று விட்டுக் கறவானாய் - மாட்டை வழக்க மாகக் கறக்கின்ற வேளையில் கன்றை விட்டுப் பால் சுரந்த பின் கறவாமல், அம்புவிட்டு ஆ கறக்கும் ஆறு - (தான் நினைத்தபோது) அம்புவிட்டு மாட்டைப் பால் கறக்கும் தன்மையை ஒக்கும். அன்பின் - அன்பினால். நெகிழ்தல் - இளகுதல். வழி படல் - பணிவாக நடந்து கொள்ளுதல். நின்றபொழுது - நினைத்த நேரம். முடிவித்தல் - காரியத்தைச் செய்து கொள்ளுதல். ஆ - பெண் மாடு. ஆறு - தன்மை. அம்புவிட்டுக் கறத்தல் - வருத்திக் கறத்தல். காலையும் மாலையும் கன்றை விட்டுப் பால் கறந்தால்தான் மாடு பால் சுரக்கும். மற்ற நேரங்களில் பால் சுரக்காது. அடித்து வருத்திக் கறக்க முயன்றால், உதைக்குமே யன்றிப் பால் சுரக்காது. அதுபோல, ஒருவரிடம் பெறலான உதவியை அன்புடன் பணி வாக, ஏற்ற காலமறிந்து பெற முயலாமல், நினைத்த போது வலியப்பெற முயலுதல் பயன்படாது என்பதாம். கற்றா மடிகொன்று பால்கொளலு மாண்பே. (நீதிநெறி) ஏற்ற காலத்தே, மனமுவக்குமாறு நடந்து, பிறரிடம் ஓருதவி யைப் பெற முயலவேண்டும் என்பது கருத்து. (12) 658. ஆணியாக் கொண்ட கருமம் பதிற்றாண்டும் பாணித்தே செய்ப வியங்கொள்ளின் - காணி பயவாமற் செய்வாரார் தஞ்சாகா டேனும் உயவாமற் சேறலோ வில். (பழ) தம் சாகாடு ஏனும் - தம்முடைய வண்டியாயினும், உயவாமல் சேறல் இல் - உயவு நெய் இடாமல் செல்லுதல் இல்லை; (அது போல), காணி பயவாமல் செய்வார் யார் - காணியளவு பொருளாயினும் கொடாமல் காரியம் செய்பவர் யாரும் இல்லை, ஆணியாக் கொண்ட கருமம் வியம் கொள்ளின் - சுள்ளாணி போன்ற காரியத்தையும் ஒன்றுங் கொடாமல் செய்யச் சொன்னால், பதிற்று ஆண்டும் பாணித்தே செய்ப - பத்தாண்டுக் காலமானாலும் காலந்தாழ்த்தே செய்வார். ஆணி - சுள்ளாணி. பதிற்றாண்டு - பத்தாண்டு. பாணித்தல் - காலந் தாழ்த்தல் - தாமதித்தல். வியங் கொள்ளல் - ஏவுதல். காணி - மூன்று காசு - காலணா. பயத்தல் - கொடுத்தல். சாகாடு - வண்டி. உயவு நெய் - கீல் எண்ணெய், வண்டிச் சக்கரத்தின் கும்பத்திற்குள் இரு சுக்குப் பதமாகத் தடவும் எண்ணெய். விளக்கெண்ணெயும் போடுவர். சேறல் - செல்லல். ஓ - அசை. வண்டிக்கு எண்ணெய் போடாவிட்டால் வண்டி எளிதில் செல்லாது. காலணாவாவது கொடாமல் யாரும் ஒரு வேலையை அக்கறையோடு செய்யார். பணங்கொடாமல் ஒரு சுள்ளாணி செய்யச் சொன்னாலுங்கூட நீண்ட காலத் திற்குத் தவணை சொல்லிக் கொண்டே வருவர். ஆகையால், பணங்கொடாமல் ஒருவரை ஒரு காரியம் செய்யும்படி ஏவுவது வீண்முயற்சியே யாகும் என்பதாம். தமது வண்டியே எண்ணெய் போடாமல் செல்லாது என்பதால், தம்மவரானாலும் பணங்கொடுக்காமல் சும்மா ஒன்றைச் செய்யச் சொல்வது முழுப்பயன் படாது என்ற படி. (13) 659. விட்டுக் கருமஞ் செயவைத்த பின்னரும் முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால் தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா துளி. (பழ) தொட்டக் கால் மாழ்கும் தளிர் மேல் நிற்பினும் - கையால் தொட்டவுடன் துவண்டு போகும் இளங்கொழுந்தின் மேல் இருந்தாலும், உளி தட்டாமல் செல்லாது - உளியானது மழு அல்லது கொட்டாப்புளியால் தட்டாமல் - அடிக்காமல் - அத்தளிரை அறுத்துக் கொண்டு செல்லாது, (அதுபோல), கருமம் விட்டுச் செயவைத்த பின்னரும் - ஒருவரிடம் ஒரு காரியத்தைச் செய்யும் படி விட்ட பின்னரும், முட்டாது அவரை வியங் கொளல் வேண்டும் - இடைவிடாது அவரை எச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். கருமம் - காரியம். விட்டுச் செயவைத்தல் - ஒரு காரியத்தைச் செய்யும்படி ஒருவரை அமர்த்துதல். செய விடுதல் - செய்யும்படி விடுதல். முட்டாது - அக்காரியம் தடையின்றி நடக்குமாறு. முட்டுதல் - தடைப்படுதல். வியங்கொளல் - ஏவுதல். அக் காரியத் தை முயன்று செய்யும் படி அடிக்கடி எச்சரித்துக் கொண்டே இருத்தல். ஆல் - அசை. மாழ்குதல் - துவளுதல், வாடுதல். அவ்வளவு மெல்லிது, தளிர் - இளங்கொழுந்து. தட்டுதல் - கொட்டாப்புளி, அல்லது மழுவால் தட்டுதல், அடித்தல். மிகவும் மெல்லிய தளிர்மேல் நின்ற உளியும் மழுவால் அடிக்காமல் அத்தளிரை அறுத்துக் கொண்டு கீழே செல்லாது. அது போல, ஒருவரை ஒரு காரியத்தைச் செய்யும்படி அமர்த்தினால், அத்துடன் சும்மா இருந்து விடக்கூடாது. அடிக்கடி எச்சரிக்கை செய்துகொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் அக்காரியத்தை ஒழுங்காகச் செய்யமாட்டார். உளிக்குத் தானாகவே வெட்டுந் தன்மை இன்மை போல, பிறருடைய தொழிலைச் செய்வோர் தாமாகவே முனைந்து செய்யமாட்டார் என்பதாம். தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா உளிநீரர் மாதோ கயவர். (நால) சுடர் விளக்கே யெனினும் தூண்டுதல் வேண்டுதல் போல, எத்தகைய தகுதியுடையோ ரெனினும் அடிக்கடி எச்சரிக்கை செய்துகொண்டே இருந்தால்தான் முனைந்து செயலாற்றுவர். பல ஆட்களுக்கு ஒரு மேலாள் இருத்தலும் இதுபற்றியே யாகும். (14) 660. அகந்தூய்மை யில்லாரை ஆற்றப் பெருக்கி இகந்துழி - விட்டிருப்பின் அஃதால் - இகந்து நினைந்து தெரியானாய் நீள்கயத்துள் யாமை நனைந்துவா வென்று விடல். (பழ) அகம் தூய்மை இல்லாரை - மனத் தூய்மை இல்லாத வரை, ஆற்றப் பெருக்கி - மிகவும் நம்பி, இகந்த உழி விட்டிருப்பின் - தொலைவான இடத்தில் தங்கிக் காரியம் பார்க்க ஒருவன் வீட்டிருப் பானாயின், அஃது - அச்செயல், நினைந்து தெரி யானாய் - ஆராய்ந்து அறியானாய், யாமை இகந்து நீள்கயத்துள் நனைந்துவா என்று விடல் - அமை பிடித்தவன் அந்த ஆமையைப் போய் ஆழமான குளத்தில் குளித்துவா என்று விட்டதனோ டொக்கும். அகம் - மனம். தூய்மை - சுத்தம். ஆற்ற - மிகவும். ஆற்றப் பெருக்கல் - மிகவும் நம்பிக்கை வைத்தல். இகந்த உழி - தொலை விடத்தில். இகத்தல் - கடத்தல். இங்கே தொலைவு குறித்தது. உழி - இடம். ஆல் - அசை. இகந்து - போய். நினைந்து தெரிதல் - ஆராய்ந்தறிதல். கயம் - குளம். நீள்கயம் - ஆழமான நீருள்ள குளம். நனைதல் - குளித்தல். ஆமை பிடித்தவன், அவ்வாமையைக் குளித்துக் கொண்டு வா என்று ஆழமான நீருள்ள குளத்தில் விட்டால் அது திரும்பி வராது. அதுபோல, நாணயமில்லாதவரைத் தொலைவான இடத்தில் இருந்து காரியம் பார்க்கும்படி செய்தால் அவர் அக் காரியத்தை முடித்துக் கொண்டு திரும்பார். இது மிகவும் எச்சரிக்கையாகக் கவனிக்க வேண்டிய தொன்றாகும். கீழ் மக்களை நம்பிக் காரிய முடிக்க முயலுதல் வீண் முயற்சி என்பது கருத்து. எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையால் வேறாகு மாந்தர் பலர். (குறள்) (15) 661. மன்னர் புறங்கடை காத்து வறிதேயாம் எந்நலங் காண்டுமென் றெள்ளற்க - பன்னெடுநாள் காத்தவை யெல்லாங் கடைமுறைபோய்க் கைகொடுத்து வேத்தவையின் மிக்குச் செய்யும். (நீநெ) யாம் மன்னர் புறங்கடை காத்து - நாம் அரசர் தலை வாசலை வீணாகக் காத்து வந்தும், எந்நலம் காண்டும் என்று எள்ளற்க - யாது பயனடைந்தோம் என்று அக்காவல் தொழிலை இகழாதொழிக, பல் நெடுநாள் காத்தவை எல்லாம் கடை முறை போய் - பல நாட்கள் தலைவாயிலைப் பொறுமை யுடன் காத்து வந்தவையெல்லாம் முடிவிற் சென்று, கைகொடுத்து - உதவி யாகி, வேந்து அவையின் மிக்குச் செயும் - அரசவையில் மிகுந்த நன்மையைச் செய்யும். புறங்கடை - தலைவாசல். வறிதே - வீணாக. நலம் - நன்மை. காண்டும் - கண்டோம். எள்ளல் - இகழுதல். பல் நெடுநாள் - பல நாள். காத்தவை - பொறுமையுடன் காத்து வந்த முயற்சிகள். கடைமுறை - முடிவு. கை கொடுத்தல் - உதவல். வேந்து அவை - வேத்தவை. வேத்தவை - அரசியல். அரண்மனை வாயில் காவற்காரன் ஒருவன். நீண்ட நாளாய் அக்காவற்றொழிலிலிருந்து வேறு மேல் வேலைக்கு உயர்த்தப் படாமையால், அத் தொழிலில் வெறுப்புக் கொள்ளுதல் கூடு மல்லவா? அவன் அங்ஙனம் வெறுப்புக் கொள்ளாமல் பொறுமை யுடன் முயற்சியைக் கைவிடாமல் காத்து வந்தால் அரசியலில் நல்ல வேலை கிடைக்கு மென்பதாம். ஒருவன் நீண்ட நாளாய் வாயில் காவலனாக இருந்தும், அரசன் வெளியே வரும்போதும் போகும்போதும் அடிக்கடி பார்த்துங்கூட அவனை மேல்வேலைக்கு உயர்த்தாமையால் அவன் அவ் வேலையில் சலிப்பும் வெறுப்புங் கொள்ளக் கூடும். அவ்வாறு கொள்ளாமல் - அதாவது முயற்சியைக் கைவிடாமல் இருந்தால் - அரசன் அவன் இயல்பினை உணர்ந்து பின்னர் நல்ல வேலை தருவான் என்றபடி. மனந்தளராமல் மேன்மேல் முயன்று வந்தால் நன்னிலை அடையலாம் என்பது கருத்து. தெய்வத்தா னாகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். (குறள்) (16) 662. உறுதி பயப்ப கடைபோகா வேனும் இறுவரை காறு முயல்ப - இறுமுயிர்க்கும் ஆயுள் மருந்தொழுக்கல் தீதன்றால் அல்லனபோல் ஆவனவு முண்டு சில. (நீநெ) இறும் உயிர்க்கும் ஆயுள் மருந்து ஒழுக்கல் தீது அன்று - இறக்கும் நிலையில் உள்ள உயிர்க்கும் வாழ்நாளை வளரச் செய்யும் மருந்தை வாயில் விடுதல் குற்றமாகாது, சில அல்லன போல் ஆவனவும் உண்டு - சில காரியங்கள் முடியாதவை போல் தோன்றி விடாமுயற்சியால் பின்பு முடிவனவும் உண்டு. (ஆதலால்), உறுதி பயப்ப கடைபோகா ஏனும் - நன்மை பயக்குங் காரியங்கள் முற்றுப் பெறும் வரைக்கும் அறிஞர்கள் முயற்சி செய்து வருவர். உறுதி - நன்மை. பயத்தல் - உண்டாதல். உறுதி பயப்ப - நன்மையுண்டாகுங் காரியங்கள். பயப்ப - வினை யாலணையும் பெயர். கடைபோதல் - முடிதல். இறுவரை காறும் - முடிவு பெறும் வரை. காறும் - மட்டும். முயல்ப - முயல்வர். இறுதல் - சாதல். ஆயுள் மருந்து - வாழ்நாளை வளர்க்கும் மருந்து. ஒழுக்கல் - ஊற்றுதல். தீது - குற்றம். அல்லனபோல் - ஆகாதன போல். ஒருவர் நோயால் இறக்கும் நிலையில் இருந்தாலும் ஏதாவ தொரு மருந்தை வாயில் ஊற்றுதல் குற்றமாகாது. அதாவது இறக்கும்வரை ஏதாவது மருந்து கொடுத்துக் கொண்டே வருதல் முறையாகும். அதுபோல, எடுத்துக் கொண்ட காரியம் முடியா விட்டாலும் அது முடியும் வரை முயல்வர் என்பதாம். ஏனெனில், முடியாதவை போல் தோன்றி விடா முயற்சியால் முடியுங் காரியங் களும் சில உண்டு. ஆகையால், எந்தக் காரியமானாலும் முடியாதென்று இடையில் விட்டுவிடாமல் முடிவுவரை முயல வேண்டும் என்பது கருத்து. இசையா தெனினும் இயற்றியோ ராற்றல் அசையாது நிற்பதாம் ஆண்மை. (நாலடி) கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல். (குறள்) (17) 663. அடுத்து முயன்றாலும் ஆகுநா ளன்றி எடுத்த கருமங்க ளாகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம் பருவத்தா லன்றிப் பழா. (வாக்) தொடுத்த உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம் - கிளைத்த வடிவத்தால் நீண்டுள்ள உயர்ந்த எல்லா மரங்களும், பருவத்தால் அன்றிப் பழா - பழுக்குங் காலத்தில் அல்லாமல் பழுக்கா, (அதுபோல), அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி - இடைவிடாது முயற்சி செய்தாலும் முடிகிற காலத்தி லல்லாமல், எடுத்த கருமங்கள் ஆகா - எடுத்துக்கொண்ட காரியங்கள் முடியா. அடுத்து - இடைவிடாது. தொடுத்த - கிளைத்த அதாவது ஒன்று பலவாகக் கிளைவிட்ட. உருவம் - வடிவம். நீண்ட - பரந்த. பழுத்தல் - பூத்துக் காய்த்துப் பழுத்தல், பனைமரம் - ஆடி மாதத்தில் பழுக்கும். மாமரம் - சித்திரையில் பழுக்கும். அதனதன் பருவத்திலல்லாமல் மரங்கள் பழுக்கா. அது போல, எவ்வளவு முயன்றாலும் முடியும் போதுதான் ஒரு காரியம் முடியும். ஒரு பழம் பழுக்கும் பருவம் வருகிறவரையிலும் காத்தி ருந்து பழுத்ததும் பறித்துண்பது போல, ஒரு காரியம் முடிகிற வரையிலும் முயற்சியை விடாமல் முயன்று முடித்துப் பயன் பெற வேண்டும் என்பதாம். முடியாத காரியத்திற்கு முயல்வது - போகூழ் எனப் படும். முடியுங் காரியத்திற்கு முயல்வது - ஆகூழ் எனப்படும். திருக்குறள் குழந்தையுரை, ஊழ் என்னும் அதிகார உரை பார்க்க. காலங் கருதி யிருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர். (குறள்) பருவத்தோ டொட்ட வொழுகல், - திருவினைத் தீராமை யார்க்குங் கயிறு. (குறள்) (18) 664. வித்துக்குற் றுண்ணா விழுப்ப மிகவினிது. (இனி) வித்து குற்று உண்ணா - விதைக்காக வைத்திருக்கும் தவசத் தைக் குற்றிச் சோறாக்கி உண்ணாத, விருப்பம் மிக இனிது - முயற்சி மிகவும் நல்லது. வித்து - நிலத்தில் விதைக்கும் தவசம். உண்ணா - உண்ணாத. விருப்பம் - சிறப்பு; இங்கு அச்சிறப்புக்குக் காரணமான முயற்சியை உணர்த்திற்று. சோம்பேறித் தனத்தால் தொழில் செய்யாது வறுமை யுற்றால் சோற்றுக்கில்லாதபோது இன்னும் ஒரு சிலர் விதைத் தவசத்தை ஆக்கி யுண்ணுதல் உண்டு. அந்நிலையடையும்படி சோம்பேறியாய் இராது, எப்போதும் முயன்று பொருள் தேடி வாழவேண்டு மென்பது. ‘விதையைத் தின்று சதையை வைத்திரு’ என்னும் பழ மொழி இதற்குச் சான்றாகும். முன்னோர் தேடி வைத்த சொத்தை உண்டழித்தல், வாணிக முதலை யுண்ணல், எய்ப்பினில் வைப்பை யுண்ணல் முதலிய வற்றிற்கும் இஃதொக்கும். (19) 665. உரனுடையா னுள்ளம் மடிந்திருத்த லின்னா. (இன்) உரன் உடையான் - அறிவுடையவன், உள்ளம் மடிந் திருத்தல் இன்னா - மனம் சோம்பியிருத்தல் துன்பமாம். உரன் - அறிவு. மடி - சோம்பல். அறிவுடையான் முயற்சியின்றிச் சோம்பியிருத்தல் தகாது என்பதாம். முயற்சியின்றி யிருத்தல் அறிவுடைமை யாகாது என்பது கருத்து. (20) 666. ஊக்கமது கைவிடேல். (ஆத்) கைவிடுதல் - விட்டு விடுதல், ஊக்கமின்றியிருத்தல். விடா முயற்சியிடன் ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என்பது. (21) 667. அனந்த லாடேல். (ஆத்) அனந்தல் - தூக்கம், ஆடுதல் - மிகுதியாகத் தூங்குதல், முயற்சியின்றி எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கக் கூடாது. தூங்குதல் - சோம்பல் என்ற பொருளும் உடைய தாகும். (22) 668. சோம்பித் திரியேல். (ஆத்) சோம்பித் திரியேல் - (செய்ய வேண்டிய காரியங்களை முயற்சியுடன் செய்யாது) சோம்பேறியாகத் திரியாதே. (23) 669. கைவினை கரவேல். (ஆத்) கைவினை - உனக்குத் தெரிந்த கைத்தொழிலை, கரவேல் - சோம்பலால் செய்யாமல் இராதே. (24) 670. வைகறைத் துயிலெழு. (ஆத்) வைகறை - (நீ நாடோறும்) அதிகாலையிலேயே, துயில் எழு - தூக்கத்தை விட்டு எழுந்திரு. பொழுது கிளம்புவதற்கு முன், அதாவது அதிகாலை யிலேயே எழுந்திருக்க வேண்டும். பொழுது கிளம்பும் வரை யிலும் சோம்பேறியாகத் தூங்கிக் கொண்டே இருக்கக் கூடாது. மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிக்க வேண்டும்; மற்றவர்கள் எழுந்து தொழில் செய்ய வேண்டும். (25) 671. சோம்ப ரென்பவர் தேம்பித் திரிவர். (கொன்) தேம்பித் திரிதல் - (வறுமையால்) வருந்தி அலைதல். (26) 672. தேடா தழிக்கிற் பாடா முடியும். (கொன்) தேடாது அழிக்கின் - ஒருவன் முயன்று பொருள் தேடாமல் (சும்மா இருந்துகொண்டே இருக்கிற பொருளைச்) செல வழித்தால், பாடாமுடியும் - பின் துன்பமாக முடியும். பாடா - படாக. (27) 673. போனகம் என்பது தானுழந் துண்டல். (கொன்) போனகம் - உணவு, உழந்து - முயன்று தேடி, ஒருவன் தானாக ஏதாவது ஒரு தொழில் செய்து உண்பதே உணவு எனப்படும். சும்மா இருந்துகொண்டு, பிறர் பாடு பட்டுப் போட உண்பது இழி வென்பது கருத்து. (28) 674. ஊக்கமுடைமை ஆக்கத்திற் கழகு. (கொன்) ஆக்கம் - செல்வம். செல்வத்திற்கு அழகாவது - குறை யாமல் பெருகுதல். முயற்சியுடையவன் செல்வம் பெருகும் என்பதாம். (29( ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும், அசைவிலா ஊக்க முடையா னுழை. (குறள்) 42. இடுக்கணழியாமை அதாவது துன்பம் வந்தால் அதற்கு மனங்கலங்காமை - இடுக்கண் - துன்பம். அழிதல் - மனங்கலங்குதல். 675. துன்பம் வெய்யோர்க் இன்ப மெளிது. (முது) துன்பம் வெய்யோர்க்கு - துன்பத்தை விரும்பிப் பொறுத்துக் கொள்வோர்க்கு, இன்பம் எளிது - இன்பம் எளிதாகும். வெய்யோர் - விரும்புவோர், எளிது - எளிதில் இன்பத்தை அடைவர் என்பதாம். ஒரு காரியத்தைச் செய்வதில் உண்டாகும் துன்பத்தை வெறுக்காமல் விரும்பிப் பொறுத்துக் கொண்டு அக் காரியத்தைச் செய்வோர்க்கு, அக்காரியம் எளிதில் முடிந்து இன்பந்தரும் என்பதாம். இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்ப முறுத லிலன். (குறள்) (1) 676. துன்பத்திற் கிடங்கொடேல். (ஆத்) துன்பத்திற்கு - ஒரு காரியம் செய்யும் போது உண்டாகும் துன்பத்திற்கு, இடம் கொடேல் - நீ உன் மனத்தில் இடங் கொடாதே. துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளாமலும், துன்பத்தைப் பொருட்படுத்தாமலும், துன்பத்திற்குத் துன்புறாமலும், துன்பம் துன்பஞ் செய்யாமல் துன்புற்றொழியும் படி செய்யவேண்டும் என்பதாம். இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக் கிடும்பை படாஅ தவர். (குறள்) (2) 677. மனந்தடு மாறேல். (ஆத்) மனம் - தடுமாறேல் - எத்தகைய துன்பம் வந்த போதும் கலங்காதே. பல துன்பங்கள் ஒரு சேர வந்தாலும் மனம் கலங்கக் கூடாது என்பதாம். அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். (குறள்) ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தில்லாள் மெய்நோவ அடிமை சாவ மாவீரம் போகுதென்று விதைகொண் டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக் கோவேந்த ருழுதுண்ட கடனைக் கேட்கக் குருக்கள்வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப் பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப் பாவிமகன் படுந்துயரம் பகரொ ணாதே. (விவேக சிந்தாமணி) (3) 678. கேட்டி லுறுதி கூட்டு முடைமை. (கொன்) கேட்டில் உறுதி - கைப்பொருளை இழந்த காலத்தில் மனந் தளராமல் இருப்பது, உடைமை கூட்டும் - இழந்த அப் பொருளை உண்டாக்கும். உள்ள பொருளை இழந்த காலத்தும் மனங்கலங்கக் கூடாது. (4) 43. கடன்படாமை அதாவது, வரவுக்கு மீறிச் செலவு செய்து, கடன் படாமல் இருத்தல். 679. கடனுண்டு வாழாமை காண்ட லினிது. (இனி) கடன் உண்டு வாழாமை - ஒருவன் கடன் கொண்டு உண்டு வாழாதிருத்தலை, காண்டல் இனிது - காணுதல் நல்லது. கடன்பட்டு வாழ்க்கை நடத்துதல் கூடாது என்பதாம். கடனுண்டு வாழாதிருத்தலைக் காணுதலே இனிது என்பதால், கடன் படலின் கொடுமை இனிது விளங்கும். கடனுண்டு வாழ்தலைக் காணுதல் எவ்வளவு கொடியது என்பது சொல்லாமலே விளங்கும். உண்கடன் வழிமொழிந் திரங்குங்கால் முகனுந்தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல் பண்டுமிவ் வுலகத் தியற்கையஃ தின்றும் புதுவ தன்றே புலனுடை மாந்தீர். (கலி) எனக் கடன் வாங்கும் போதும் துன்பம், திருப்பிக் கொடுக்கும் போதும் துன்பம் என்பது பெறப்படும். விடங்கொண்ட மீனைப் போலும் வெந்தழல் மெழுகைப் போலும் படங்கொண்ட பாந்தள் வாயிற் பற்றிய தேரை போலும் திடங்கொண்ட ராம பாணஞ் செருக்களத் துற்ற போது கடங்கொண்ட நெஞ்சம் போலும் கலங்கின னிலங்கை வேந்தன். (இராமா) (1) 680. கடனுடையார் காணப் புகலின்னா. (இன்) கடன் உடையார் காணப் புகல் - கடன் கொடுத்தவர் பார்க்கும்படி அவர்க் கெதிரே செல்லுதல், இன்னா - துன்பந் தரும், புகல் - செல்லல். கடன் கொடுத்தவர் எவ்வளவு பெரிய கூட்டத்திலும் எவ்விடத்திலும் கூசாது கொடுத்த கடனைக் கேட்பாராத லால், ‘காணப் புகல் இன்னா’ என்றார். கடன்பட்டவர் எத்தகைய பெருமையுடையவராய் இருந்தாலும் நண்பரும் உறவினரும் இருந்தாலும் கடன் கொடுத்தவர் கூசாமல் கேட்பாராதலால், ஒரு காசு கடன் கொடுத்தராயினும் அவரைக் கண்டால், கடன் பட்டார் அஞ்சி அகலுவ ரென்க. வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள (விவேகசிந்தாமணி) கடன்படாமல் வாழவேண்டும்மென்பது கருத்து. (2) 44. விருந்தோம்பல் விருந்து - புதுமை. விருந்தினர் - புதியவர். நட்பும் சுற்றமும் அல்லாது புதிதாக நம் வீட்டுக்கு வருபவர். ஓம்பல் - அன்புடன் வரவேற்று உணவிடுதல். 681. முறுவ லினிதுரை கானீர் மணைபாய் கிடக்கையோ டிவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க் கூணொடு செய்யுஞ் சிறப்பு. (ஆசா) தலைச் சென்றார்க்கு - தம் வீட்டிற்கு வந்தார்க்கு, ஊணொடு செய்யும் சிறப்பு - உணவுடனே செய்யும் சிறப்புக்கள், முறுவல் இனிதுரை - புன்னகையோடு கூடிய இன்சொல்லும், கால்நீர் மணைபாய் - கால் கழுவ நீரும், இருக்க மணையும், படுக்கப் பாயும், கிடக்கையோடு இவ்வைந்தும் என்ப - படுக்கும் இடத்தோடு இவ்வைந்தும் என்று சொல்லுவர். முறுவல் - புன்னகை - புன்சிரிப்பு. அதாவது முகமலர்ச்சி. இனிதுரை - இன்சொல், கால் நீர் - குடிக்கும் குளிக்கும் நீரையும் குறிக்கும். மணை - உட்காரும் பலகை. பாய் - படுக்கை, கட்டி லையுங் குறிக்கும். கிடத்தல் - படுத்தல். தலைச் செல்லல் - தம் மிடம் செல்லல்; அதாவது தம் வீட்டுக்கு வருதல். தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை மலர்ந்த முகத்தோடு இன்சொற் கூறி வரவேற்று, கைகால் கழுவத் தண்ணீர் கொடுத்து, மணையிட்டு உட்காரச் செய்து, உணவிட்டு, படுக்கப் படுக்கை கொடுத்துப் போற்ற வேண்டும் என்பதாம். நம் வீட்டுக்கு வருவாரை இவ்வாறு போற்றுதல் முறை யாகும். விருந்தின னாக ஒருவன்வந் தெதிரின் வியத்தல்நன் மொழியினி துரைத்தல் திருந்துற நோக்கல் வருகென வுரைத்ல் எழுதல்முன் மகிழ்வன செப்பல் பொருந்துமற் றவன்றன் அருகுற விருத்தல் போமெனிற் பின்செல்வ தாதல் பரிந்துநன் முகமன் வழங்கலிவ் வொன்பான் ஒழுக்கமும் வழிபடு பண்பே தவிசுதாள் விளக்கப் புனல்தமக் கியன்ற அடிசில்பூந் தண்மலர்ப் பாயல் உவகையி னுறையும் இடனுகர் தெண்ணீர் ஒண்சுடர் எண்ணெய்வெள் ளிலைகாய் இவைகளொன் பதுந்தன் மனைவயி னடைந்தோர் மகிழ்வுற வினிதினில் அளித்தல் நவையற இல்வாழ் வடைந்துளோன் பூண்ட கடன். (காசி கண்டம்) ‘கிடக்கையோ டிவ்வாறும்’ என,. முறுவலைத் தனி யாகக் கொள்ளுதல் சிறந்த பாடமாகும். இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள்) (1) 682. கன்றூட்ட நந்துங் கறவை கலம்பரப்பி நன்றூட்ட நந்தும் விருந்தும். (நான்) கன்று ஊட்ட கறவை நந்தும் - கன்றை உண்பிக்க மாடு பால் சுரக்கும், (அதுபோல), கலம் பரப்பி நன்று ஊட்ட - இலையை இட்டு அன்போடு உண்பிக்க, விருந்து நந்தும் - விருந்தினர் மகிழ்வர். மகிழ்ச்சி மிகும் என்றபடி. ஊட்ட - ஊட்டுவிக்க - உண்பிக்க. பிறவினை. நந்துதல் - மிகுதல். கறவை - மாடு. கலம் - உண்கலம் - இலை. பரப்புதல் - இடுதல். ஊட்டல் - உண்பித்தல். விருந்து. விருந்தினர். நம் வீட்டுக்கு வருவோரை இனிது போற்ற வேண்டும் என்பது கருத்து. (2) 683 உண்டிக் கழகு விருந்தோ டுண்டல். (வெற்) உண்டி - உணவு, அழகு - சிறப்பு, இன்பந்தருதல். விருந்தினரை விட்டுத் தனித்துண்ணல் கூடாது என்பது கருத்து. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றற்று. (குறள்) (3) 684. மருந்தே யாயினும் விருந்தோடுண். (கொன்) மருந்து - சாவா மருந்து (குறள் - 92), சாவாமைக்காக உண்ணும் மருந்து. அதாவது வாழ்நாள் நீடிக்க உண்ணும் மருந்து. எவ்வளவு சிறந்ததானாலும் விருந்தினரை விட்டுத் தனித் துண்ணக் கூடாது என்பதாம். நம் வீட்டுக்கு வந்தவரைத் தனியாக உண்பித்தல் கூடாது என்பதும் இதனால் பெறப்படும். வந்தவருடன் நாமும் உடனிருந் துண்பதே முறையாகும். (4) 685. விருந்திலோர்க்கில்லை பொருந்திய வொழுக்கம். (கொன்) விருந்து இலோர்க்கு - விருந்தினரைப் பேணாதவர்க்கு, பொருந்திய ஒழுக்கம் இல்லை - தாம் பொருந்திய இல் வாழ்க்கையில் இன்பம் இல்லை. இல்லோர் - ஓம்புதல் இல்லோர். பொருந்திய - மேற் கொண்டுள்ள, ஒழுக்கம் - இல்லறவொழுக்கம். வந்த விருந்தினரை ஓம்பாதவர் வாழ்க்கை சிறப்புறாது என்பதாம். (5) 45. அன்புடைமை அதாவது, தொடர்புடையாரிடத்துக் கொள்ளும் பற்று அன்பு எனப்படும். இவ்வன்பே ஒருவரோடொருவர் தொடர் பறாமல் பிணித்து வைத்திருக்கும் பிணிப்பாகும். அன்புடைமை - பிறரிடம் அன்புடையராதல். 686. இல்லானுக் கன்பிங் கிடம்பொரு ளேவல்மற் றெல்லா மிருந்துமவற் கென்செய்யும் - நல்லாய்! மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும் விழியிலார்க் கேது விளக்கு. (நன்) நல்லாய் - நற்குண முடையவளே, மொழி இலார்க்கு முது நூல் ஏது - வாய்பேசாத ஊமர்களுக்குப் பழைய நூல் களால் என்ன பயன் உண்டாகும்? தெரியும் விழி இலார்க்கு விளக்கு ஏது - பார்க்கும் கண் இல்லாத குருடர்களுக்கு விளக்கினால் என்ன பயன்? (அது போல), இங்கு அன்பு இலானுக்கு - இவ்வுலகில் அன்பில்லா தவனுக்கு, இடம் பொருள் ஏவல் எல்லாம் இருந்தும் - இடமும் பொருளும் ஏவலரும் ஆகிய இவை எல்லாம் இருந்தாலும், அவற்கு என் செய்யும் - அவனுக்கு அவை என்ன நன்மையை உண்டாக்கும்? ஒன்றுமில்லை. இடம் - நிலமும் வீடும். பொருள் - பணம். மற்று அசை. நல்லாய் - மகடூஉ முன்னிலை, மொழி இலார் - ஊமர். ஏது - என்ன பயன். முதுநூல் - பழமையான நூல்கள். விழி - பார்க்கும் கண் - விழிஇலார் - குருடர். ஊமர்கட்குப் பழைய நூல்களாலும், குருடர்களுக்கு விளக்கி னாலும் பயன் இல்லாமைபோல, அன்பில்லாதவர்க்கு இடம் பொருள் ஏவல் முதலிய செல்வத்தினால் பயன் இல்லை என்பதாம். அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத் தின்புற்றார் எய்துஞ் சிறப்பு. (குறள்) எல்லாச் செல்வமும் உடையனாயினும் அன்பில்லாதவன் உலகத்தில் நன்கு மதிக்கப்படான் என்பது கருத்து. (1) 687. நகையாய நண்பினார் நாரின்மை யின்னா. (இன்) நகை ஆய நண்பினார் - நகுதலையுடைய நண்பர், நார் இன்மை இன்னா - அன்பில்லாதிருத்தல் துன்பமாம். நகுதல் - கூடி மகிழ்தல், நார் - அன்பு. முகத்தே நகுதல் செய்து அகத்தே அன்பு சுருங்கும் நண்பரின் நட்புத் துன்பந் தரும் என்பதாம். (2) 688. பேரிற் பிறந்தமை ஈரத்தி னறிய. (முது) பேர் இல் பிறந்தமை - ஒருவன் உயர்குடியில் பிறந்தவன் என்பதை, ஈரத்தின் அறிப - உயிர்களிடத்தில் அவனுக்குள்ள அன்பினால் அறிவர். அன்புடைமையே உயர்குடிப் பிறப்பிற்குக் காரணம் என்பதாம். (3) 689. ஈரமில் லாதது கிளைநட் பன்று. (முது) ஈரம் இல்லாதது - மனத்தின்கண் அன்பில்லாதது. கிளை நட்பு அன்று - சுற்றமுமன்று நட்புமன்று. அன்பில்லாதவர் சுற்றத்தாருமாகார், நட்பினருமாகார் என்பதாம். ஈரம் - அன்பு. கிளை - சுற்றம். விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவுந் தரும். (குறள்) அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர். (குறள்) (4) 46. இன்சொல் அதாவது, பிறரிடம் இனிமையாகப் பேசுதல். 690. புன்சொல்லு நன்சொல்லும் பொய்யின் றுணர்கிற்பார் வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ? புன்சொல் இடர்ப்படுப்ப தல்லால் ஒருவனை இன்சொல் இடர்ப்படுப்ப தில். (பழ) புன்சொல்லும் நன்சொல்லும் பொய் இன்று உணர் கிற்பார் - புன்சொல்லால் வரும் பயனையும் நன்சொல்லால் வரும் பயனையும் பழுதில்லாமல் உணர வல்லவர், வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ - பிறரை வன்சொல் சொல்லுதலையுடையராய் நடத்தலும் ஆகுமோ, ஒருவனை - புன்சொல் இடர்ப்படுப்பது அல்லால் - தான் சொல்லும் புன்சொல் துன்பப்படுத்துவதன்றி, இன்சொல் இடர்ப்படுப்பது இல் - இன்சொல் துன்பப்படுத்துவது இல்லை. புன்சொல் - வன்சொல், கடுஞ்சொல். நன்சொல் - இன் சொல். பொய்இன்று - பழுதில்லாமல் - சரியாக. உணர்கிற் பார் - உணர வல்லவர். உணர்வார். வன்சொல் வழியராய் வாழ்தல் - வன் சொல் சொல்லல். இடர் - துன்பம். புன்சொல் இடர்ப்படுத்தல் - புன்சொல் சொல்கிற வனுக்குப் பிறர் இடையூறு செய்வாராதலால், அதனால் அவன் சொல்லிய புன்சொல்லே அவனைத் துன்பப்படுத்துதல் ஆகும் - துன்புறச் செய்யும். ஒருவன் சொல்கிற இன்சொல்லால் பலரும் அவனுக்கு நண்பராவராதலால், இன்சொல் இடர்ப் படுக்காததாயிற்று. வன்சொல்லின் பயனையும் இன்சொல்லின் பயனையும் நன்கு உணர வல்லவர், வன்சொல் சொல்லார். தான் சொல்லும் வன் சொல்லால் ஒருவனுக்குத் துன்பம் வருமே யல்லாது இன் சொல்லால் துன்பம் வராது. எனவே, வன்சொல் சொல்லார், இன்சொல்லே சொல்வர் என்பதாம். இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. (குறள்) (1) 691. ஈகை யரிதெனினு மின்சொலினும் நல்கூர்தல் ஓகோ கொடிது கொடிதம்மா - நாகொன்று தீவினைக் கம்மியனால் வாய்ப்பூட் டிடப்படின் ஆவா விவரென்செய் வார். (நீநெறி) ஈகை அரிது எனினும் - ஒருவர்க்கு ஒன்றைக் கொடுத்தல் முடியாதெனினும், இன்சொலினும் நல்கூர்தல் ஓகோ கொடிது கொடிது - இன்சொல் சொல்லுதலினும் வறுமை யுறுதல் ஐயோ மிகவும் கொடுமையே, தீவினைக் கம்மி யனால் நாகொன்று வாய்ப்பூட்டிடப்படின் - தீச்செயலாகிய கொல்லனால் பேச முடியாதபடி நாவைச் சிதைத்துவாய் பூட்டப்பட்டால், ஆஆ இவர் என் செய்வார் - அந்தோ இவர் என்ன செய்வார்? அரிது - முடியாது. நல்கூர்தல் - வறுமையுறுதல் - சொல்லா மலிருத்தல். ஓகோ, அம்மா, ஆஆ - வியப்பும் இரக்கமும் குறிக்கும் இடைச்சொற்கள். கொடிது கொடிது - அடுக்குத் தொடர். கொல்லுதல் - சிதைத்தல் அறுத்தல். தீவினை - தீய காரியம், தீச் செயல். இன்சொல் சொல்லாமை யாகிய தீச்செயல். கம்மியன் - கொல்லன். தீச்செயலைக் கம்மியனாக உருவகம். பூட்டிடப்படல் - பூட்டப்படல். இரப்பார்க்கு ஒன்றை ஈய முடியாதபடி வறுமை மிக் கிருந் தாலும் இன்சொல் சொல்லாமை மிகவும் கொடுமை யாகும் என்பதாம். கொடுக்க முடியாவிட்டாலும், ‘ஐயோ! கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே! என்செய்வேன். தாங்கள் வந்த வேளை இப்படியானது. வந்துவிட்டுச் சும்மா திரும்பிப் போவதற்கு வருந்துகிறேன்’ என்று இன்சொல்லாவது சொல்லக்கூடாதா? என்பதை, தீச்செயலாகிய கொல்லனால் வாய்பேச முடியாத படி நாவை அறுத்து வாயையும் பூட்டப்பட்டால் எப்படி இவரால் பேசமுடியும்? இன்சொல் சொல்லமுடியும்? என்று இரங்கிக் கூறுவது போல, இன்சொல் சொல்வதற்கு என்ன வாய்ப்பூட்டா பூட்டப் பட்டிருக்கிறது? என இகழ்ந்தவாறு. ஈயமுடியாமற் போனாலும் இன்சொல்லேனும் சொல்லா மலிருப்பது பெருங்குற்றம் என்பது கருத்து. அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந் தின்சொல னாகப் பெறின். (குறள்) (2) 692. வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்திற் பட்டுருவுங் கோல்பஞ்சிற் பாயாது - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்து வேருக்கு நெக்கு விடும். (நல்) நெடு இருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை - நீண்ட கடப்பாரைக்குப் பிளவுபடாத கல்லானது, பசு மரத்தின் வேருக்கு நெக்குவிடும் - பச்சை மரத்தினது மெல்லிய வேருக்குப் பிளவுப் படும், (அதுபோல), வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் - கடுஞ்சொற்கள் மென்சொற் களை வெல்லாவாம், வேழத்தில் பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது - யானைமேல் தைத்து அப்பால் உருவிச் செல்லுகின்ற அம்பானது பஞ்சு மூட்டைமேல் பட்டு அவ்வாறு ஊடுருவிச் செல்லாது. வெட்டெனவை - வன்சொற்கள். ‘வெட்டு’ என்றாற் போன்ற அவ்வளவு கொடிய சொற்கள். மெத்தெனவை - இன் சொற்கள். வேழம் - யானை. உருவுதல். ஊடுருவிச் செல்லுதல், பொத்துக் கொண்டு போதல். கோல் - அம்பு. பஞ்சு - பஞ்சு மூட்டை. இருப்புப்பாரை - கடப் பாரை. நெக்குவிடல் - பிளத்தல். விடா - விடாத. கெட்டியான இரும்புக் கடப்பாரையால் பிளக்க முடியாத கல்லும் மரத்தின் மெல்லியவேரினால் பிளந்து விடும். அது போல, கடுஞ்சொற்களால் கரைக்க முடியாத கன்மனத்தையும் மென்மை யான சொற்களால் கரையச் செய்யலாம். யானையின் மேற்பட்டு ஊடுருவிச் செல்லும் அத்தகு கெட்டி யான அம்பு பஞ்சு மூட்டையில் பாயாது. அது போல, இன் சொல்லைப்போல வன்சொல் எல்லோரிடத் திலும் பயன் படாது என்பதாம். கடின மனமுள்ள கீழ்மக்களை ஒருவேளை வன்சொல் வயப் படுத்தலாம்; மெல்லிய மனமுடைய மேன் மக்களை ஒரு போதும் வயப்படுத்த முடியாது, இன்சொல்லால்தான் வயப் படுத்த முடியும். ஆகையால், வன்சொல்லினும் இன் சொல்லே சிறப்புடையது என்பதாம். (3) 693. இன்சொலா லன்றி யிருநீர் வியனுலகம் வன்சொலா லென்று மகிழாதே - பொன்செய் அதிர்வளையாய் பொங்கா தழற்கதிரால் தண்ணென் கதிர்வரவாற் பொங்குங் கடல். (நன்) பொன்செய் அதிர்வளையாய் - பொன்னால் செய்த ஒலிக்கின்ற வளையல்களையுடையவளே, கடல் தண் என் கதிர் வரவால் பொங்கும் - கடலானது குளிர்ச்சியான ஒளியையுடைய திங்களின் வரவைக் கண்டு பொங்குமே யல்லாமல், அழல் கதிரால் பொங்காது - சுடுகின்ற ஒளியை யுடைய கதிரவன் வருகையால் பொங்காது; (அதுபோல), இருநீர் வியன் உலகம் - கடலால் சூழப்பட்ட பெரிய உலகத்தார், இன்சொலால் அன்றி வன்சொலால் என்றும் மகிழாது - இன்சொல்லினால் அல்லாமல் வன் சொல்லினால் எப்போதும் மகிழமாட்டார். இரு - பெரிய. இரு நீர் - கடல். வியன் - பெரிய. உலகம் - இடவாகு பெயர். அதிர்தல் - ஒலித்தல். அழலுதல் - சுடுதல். கதிர் - ஒளி. அழற்கதிர் - ஞாயிறு. தண் - குளிர்ச்சி. தண்கதிர் - திங்கள். அதிர்வளையாய் - மகடூஉ முன்னிலை. திங்களைக் கண்டு பொங்கு மென்பது மரபு. கடல், வெப்பமான பகலவனால் பொங்காது குளிர்ச்சி யான திங்களால் பொங்குவது போல, உலகத்தார் வன்சொல் லால் மகிழாது இன்சொல்லால் மகிழ்வர் என்பதாம். இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. (குறள்) (4) 694. மென்மதுர வாக்கால் விரும்புஞ் சகங்கடின வன்மொழியி னாலிகழு மண்ணுலகம் - நன்மொழியை ஓதுகுயி லேதங் குதவியது கர்த்தபந்தான் ஏதபரா தஞ்செய்த தின்று. (நீவெ) நல்மொழியை ஓது குயில் ஏது உதவியது - இனிய ஓசை யுடன் கூவுகின்ற குயிலானது உலகத்தாருக்கு என்ன நன்மை செய்தது? கர்த்தபம் ஏது அபராதம் செய்தது இன்று - (வலிய ஓசையுடன் கத்துகின்ற) கழுதையானது என்ன தீமை செய்தது? இரண்டும் இல்லை (ஆகையால்), சகம் மென்மதுர வாக்கால் விரும்பும் - உலகத்தார் மெல்லிய இனிய சொல்லைக் கேட்க விரும்புவர், மண்ணுலகம் கடின வன்மொழியினால் இகழும் - இவ்வுலகத்தார் கடினமான வன்சொல்லைக் கேட்க விரும்பார். மதுரம் - இனிமை. சகம் - உலகம் - உலகத்தார். கடின வன் மொழி - கடினமான வன்சொல்; ஒரு பொருட் பன்மொழி. நல்மொழி - இனிய ஓசை. அங்கு - அசை. கர்த்தபம் - கழுதை. அபராதம் - தீமை - குற்றம். சகம், மண்ணுலகம் - ஒரு பொருள். குயில் இனிமையாகக் கூவுகிறது. அதனால் அதை மக்கள் விரும்புகின்றனர். கழுதை இனிமையின்றிக் கத்துகிறது. அதனால் அதை மக்கள் வெறுக்கின்றனர். இனிமை இனிமை யின்மைக்காக மக்கள் விரும்புவதும் வெறுப்பதும் செய்கிறார் களேயன்றி, குயில் நன்மையும் கழுதை தீமையும் செய்ய வில்லை. அதுபோல, இன்சொல்லை மக்கள் விரும்புவர், வன்சொல்லை வெறுப்பர். எனவே, இன்சொல்லே சொல்ல வேண்டும். (5) 695. வாக்குநயத் தாலன்றிக் கற்றவரை மற்றவரை ஆக்கைநயத் தாலறிய லாகாதே - காக்கையொடு நீலச் சிறுகுயிலை நீடிசையா லன்றியே கோலத் தறிவருமோ கூறு. (நீவெ) காக்கை யொடு நீலச்சிறு குயிலை - காக்கையையும் கரு நிறமுள்ள சிறு குயிலையும், நீடு இசையால் அன்றி கோலத்து அறிவருமோ கூறு - அவற்றின் நீண்ட குரலோசையால் அல்லாமல் உருவத்தால் அறியக் கூடுமோ நீ சொல்; (அதுபோல), கற்றவரை மற்றவரை - கற்றவரையும் கல்லாத வரையும், வாக்கு நயத்தால் அன்றி ஆக்கை நயத்தால் அறியல் ஆகாது - சொற்சுவையால் அல்லாமல் உடல் அழகால் அறிய முடியாது. வாக்கு - பேச்சு. நயம் - இனிமை. மற்றவர் - கல்லாதவர். ஆக்கை - யாக்கை. ஆக்கை நயம் - வடிவழகு - உடலழகு. நீலம் - கறுப்பு. இசை - ஓசை. கோலம் - உருவம் - நிறம். அறிவருமோ - அறியக் கூடுமோ. காக்கையையும் குயிலையும் அவற்றின் ஓசையாலன்றி உருவத்தால் அறிய முடியாது. அதுபோல, கற்றவரையும் கல்லாத வரையும் அவர்கள் பேசும் பேச்சினாலன்றி உருவத் தால் அறிய முடியாது. காக்கையும் கருநிறம், குயிலும் கருநிறம். கொஞ்சந் தொலைவில் இருந்தால் இரண்டையும் எளிதில் இது காக்கை, இது குயில் என்று அறிய முடியாது. குரலோசையைக் கொண்டு இது காக்கை, இது குயில் என்று எளிதில் அறியலாம். அது போல, ஒரே வகையான உறுப்புகளையுடைய கற்ற வரையும் கல்லாதவரையும் அவர்கள் உருவத்தைக் கொண்டு இவர் கற்றவர், இவர் கல்லாதவர் என்று அறியமுடியாது. அவர்கள் பேசும் பேச்சைக் கொண்டு இவர் கற்றவர், இவர் கல்லாதவர் என்று எளிதில் அறியலாம் என்பதாம். இனிமையாகப் பேசும் பேச்சே கல்லாதவரினின்று கற்றவரை எளிதில் வேறு பிரித்தறிதற்குக் கருவியாகும். (6) 696. திங்க ளமுத கிரணமிகச் சீதளமே திங்களினுஞ் சந்தனமே சீதளமாம் - இங்கிவற்றின் அன்பறிவு சாந்த மருளுடையார் நல்வசனம் இன்பமிகுஞ் சீதளமா மே. (நீவெ) திங்கள் அமுத கிரணம் மிகச் சீதளமே - திங்களி னுடைய அமுதம் போன்ற ஒளி மிகவுங் குளிர்ந்தது; சந்தனமே திங்களினும் சீதளமாம் - (ஆனால்), சந்தனமே திங்களைவிடக் குளிர்ந்ததாம்; இங்கு இவற்றின் - இவ்வுலகில் இவ்விரண் டையும் விட, அன்பு அறிவு சாந்தம் அருள் உடையார் - அன்பும் அறிவும் பொறுமையும் அருளும் உடைய பெரி யோர்களினுடைய, நல்வசனம் இன்பம் மிகு சீதளம் ஆம் - இன்சொல் இன்பத்தை மிகுவிக்கும் குளிர்ச்சி யுடையதாம். அமுதம் - இனிமை. கிரணம் - ஒளி. சீதளம் - குளிர்ச்சி. சாந்தம் - பொறுமை. வசனம் - பேச்சு, சொல். திங்களின் ஒளி மிகவும் குளிர்ந்தது - திங்களைவிடச் சந்தனம் குளிர்ந்தது. இவ்விரண்டையும் விட, அன்பும் அறிவும் பொறு மையும் அருளும் உடைய மேலோர்கள் சொல்லும் இன்சொல் மிகவும் குளிர்ந்ததாம். (7) 697. ஞயம்பட வுரை. (ஆத்) இனிமையாகப் பேச வேண்டும். கடுமையாகப் பேசக் கூடாது. ஞயம் - இனிமை. (8) 698. வெட்டெனப் பேசேல் (ஆத்) வெட்டென - கத்தி வெட்டைப் போலக் கடுமையாக. எவருடனும் கடுமையாகப் பேசக் கூடாது, இனிமையாகப் பேச வேண்டும். (9) 47. நன்றியறிதல் அதாவது, பிறர் செய்த நன்றியை மறவாமை. நன்றி - நன்மை. உதவி. நன்றியின் பயனை எண்ணிப் பார்த்தல் என்பது கருத்து. 699. நாடி நமரென்று நன்குபுறந் தந்தாரைக் கேடு பிறரோடு சூழ்தல், கிளர்மணி நீடுகல் வெற்ப! நினைப்பின்றித் தாமிருந்த கோடு குறைத்து விடல். (பழ) கிளர் மணி நீடுகல் வெற்ப - விளங்குகின்ற மணிகள் பொருந்திய பெரிய பாறைகளையுடைய மலையை யுடைய வனே, நமர் என்று நாடி நன்கு புறந் தந்தாரை - இவர் நம் உறவினரென்று எண்ணி மிகவும் தம்மைக் காப்பாற்றின வருக்கு, பிறரோடு கேடு சூழ்தல் - அயலாரோடு கூடிக் கேடு செய்ய எண்ணுதலானது, தாம் இருந்த கோடு நினைப்பு இன்றிக் குறைத்து விடல் - தாம் ஏறியிருந்த மரக் கொம்பினை உணர்வின்றி வெட்டி விடுவதனோ டொக்கும். நாடி - எண்ணி. நமர் - உறவினர். புறந்தருதல் - காப் பாற்றுதல். கேடு - கெடுதல். சூழ்தல் - எண்ணுதல். கிளர் மணி - விளங்குகின்ற மணி. வெற்ப - ஆடூஉ முன்னிலை. நீடு - பெரிய, நீண்ட, கல் - பாறை. வெற்பு - மலை. நினைப்பு - உணர்வு. கோடு - கொம்பு - கிளை. குறைத்தல் - வெட்டுதல். தான் ஏறி நின்ற மரக்கிளையை நினைப்பில்லாமல் வெட்டினவன் அங்கு நின்றும் விழுந்து அழிவது போல, ஒருவர் செய்த நன்றியை மறந்து அவர்க்குக் கேடு செய்பவன் கெடுவான் என்பதாம். தன்னைத் தாங்கிய கிளையை வெட்டுவோன் கீழே விழுந்து துன்புறுதலைப் போல, தனக்கு உதவி செய்தவர்க்குக் கேடு செய்வோன் உறவினராலும் நண்பர்களாலும் புறக் கணிக்கப் பட்டுத் துன்புறுவான் என்பது கருத்து. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (குறள்) (1) 700. பண்டின்ன ரென்று தமரையுந் தம்மையும் கொண்ட வகையாற் குறைதீர நோக்கியக்கால் விண்டவரோ டொன்றிப் புறனுரைப்பின் அஃதாலவ் வுண்டவில் தீயிடு மாறு. (பழ) பண்டு இன்னர் என்று - முன்பு இவர் இத்தகைச் சிறப்பினை யுடையவர் என்று கொண்டு, தமரையும் தம்மையும் - தம் சுற்றத் தாரையும் தம்மையும், கொண்ட வகையால் குறை தீர நோக்கியக்கால் - அவ்வாறு கொண்டதற் கேற்றவாறு தம் வறுமை தீர உதவினால், விண்டவரோடு ஒன்றிப் புறன் உரைப்பின் அஃது - அவ்வாறு உதவின வருடைய பகைவரோடு சேர்ந்து கொண்டு உதவினவரைப் புறங்கூறினால் அது, உண்ட அவ்வில் தீ இடும் ஆறு - தாம் உண்ட அவ்வீட்டிற்குத் தீயிடு வதனோ டொக்கும். பண்டு - முன்பு - வறுமை யுறுதற்கு முன்பு. இன்னர் இத்தகையர், இத்தகைச் சிறப்புடையவர். பெருஞ்செல்வச் சிறப்புடையராய் இருந்தவர் என்றபடி. தமர் - சுற்றத்தார். கொண்ட வகை - இன்னர் என்று மதித்தவாறு. குறை - வறுமை. நோக்குதல் - உதவுதல். விண்டவர் - பகைவர். ஒன்றி - பொருந்தி - சேர்ந்து. புறன் உரைத்தல் - புறங்கூறுதல் - கோள் சொல்லுதல், அஃது - புறனு ரைக்கும் அச்செயல். ஆல் - அசை. முன்பு இவர் இத்தகைய செல்வச் சிறப்பினையுடையவர் என்று தம் சுற்றத்தாரையும் தம்மையும் மதித்து, அவ்வாறு மதித்ததற் கேற்றவாறு வறுமை தீர உதவிய வருடைய பகைவர்களோடு சேர்ந்து கொண்டு உதவிய அவரைப் புறங் கூறுதலானது, உண்ட வீட்டுக்குத் தீ வைப்பதனோடொக்கும் என்பதாம். உதவினவரைப் பழி தூற்றுதல் உணவிட்டவர் வீட்டிற்குத் தீ வைப்பது போலாம். நன்றி மறப்பது நன்றன்று. (குறள்) (2) 701. நன்றி யொருவற்குச் செய்தக்கா லந்நன்றி என்று தருங்கொ லெனவேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்றருத லால். (வாக்) நின்று தளரா வளர் தெங்கு - நிலைபெற்றுத் தளராமல் வளர்கின்ற தென்னை மரமானது, தாள் உண்ட நீரை - அடி யினால் உண்ட நீரை, தலையாலே தருதலால் - இளநீராக்கி முடியினால் தருதலால், ஒருவற்கு நன்றி செய்தக்கால் - ஒருவனுக்கு ஓர் உதவியைச் செய்தால், அந்நன்றி என்று தரும் கொல் என வேண்டா - அந்த உதவியை அவன் எப்பொழுது திருப்பித் தருவானோ என்று ஐயப்பட வேண்டியதில்லை. நன்றி - உதவி. தருங்கொல் - தருவானோ. கொல் - ஐயப் பொருள் தரும் இடைச்சொல். தளரா - தளராமல். தாள் - அடி. தலை - முடி. தான் - அசை. தென்னைமரம் அடியால் உண்ட தண்ணீரைச் சுவை யுடைய இளநீராக முடியினால் தருதல் போல, ஒருவர்க்கு உதவி செய்தால் தருணம் வாய்க்கும் போது அவர் மிகுதியாகத் திருப்பிச் செய்வார் ஆதலால், ஒருவர்க்கு ஓருதவி செய்தால் அவர் எப்போது திருப்பித் தருவாரோ என்று எண்ண வேண்டியதில்லை என்பதாம். (3) 702. நல்லா ரொருவர்க்குச் செய்த வுபகாரம் கன்மே லெழுத்துப்போற் காணுமே - அல்லாத ஈரமில்லா நெஞ்சத்தார்க் கீந்த வுபகாரம் நீர்மே லெழுத்திற்கு நேர். (வாக்) நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் - நற்குணமுடைய ஒருவர்க்குச் செய்த உதவியானது, கல் மேல் எழுத்துப் போல் காணும் - கல்லின் மேல் செதுக்கப்பட்ட எழுத்தைப் போல எப் பொழுதும் நிலைபெற்றிருக்கும், அல்லாத ஈரம் இல்லா நெஞ்சத் தார்க்கு ஈந்த உபகாரம் - நல்லவரல்லாத அன்பில்லாத மன முடையவர்க்குச் செய்த உதவியானது, நீர் மேல் எழுத்திற்கு நேர் - நீரின் மேல் எழுதப்பட்ட எழுத்தைப் போல அப்போதே மறக்கப்படும். உபகாரம் - உதவி. காணும் - தோன்றும் - நிலை பெறும். அல்லாத - நல்லவரல்லாத. ஈரம் - அன்பு. ஈந்த - செய்த. நேர் - போலும். நல்லவர்க்குச் செய்த உதவியனாது கல்மேல் செதுக்கிய எழுத்தைப் போல எப்போதும் நிலைபெற்றிருக்கும் கெட்ட வர்க்குச் செய்த உதவியானது நீர் மேல் எழுதிய எழுத்தைப் போலச் செய்த அப்பொழுதே மறக்கப்படும் என்பதாம். (4) 703. நன்றிப் பயன்றூக்கி வாழ்தல் நனியினிது. (இனி) நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் - ஒருவர் செய்த உதவியின் பயனை எண்ணி வாழ்தல், நனி இனிது - மிகவும் நல்லது. நன்றி - உதவி. பயன் - அவ்வுதவியால் உண்டாகும் பயன். தூக்கி - எண்ணி, ஆராய்ந்துபார்த்து. நனி - மிக. ஒருவர் செய்த உதவியின் பயனை எண்ணி வாழ்வது மிகவும் நல்லது. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்றெறிவார். (குறள்) உதவியின் சிறுமையைப் பாராது அதன் பயனை எண்ணிப் பார்க்க வேண்டும் என்பது கருத்து. (5) 704. தனிய னெனப்படுவான் செய்தநன் றில்லான். (நான்) தனியன் எனப்படுவான் - துணையில்லாதவனென்று சொல்லப்படுவான். செய்த நன்று இல்லான் - தன்னால் பிறர்க்குச் செய்யப்பட்ட நன்மையொன்று மில்லாதவனா வான். தனியன் - துணையில்லாதவன். நன்று - நன்மை, உதவி. (6) 705. நன்றி மறவேல். (ஆத்) நன்றி - ஒருவர் உனக்குச் செய்த உதவியை, மறவேல் - நீ ஒரு போதும் மறக்காதே. பிறர் செய்த நன்மையை எப்போதும் மறக்கக் கூடாது. நன்றி மறப்பது நன்றன்று. (குறள்) (7) 706. புகழ்ந்தாரைப் போற்றிவாழ். (ஆத்) புகழ்ந்தாரை - உன் பெருமையைக் கூறிவந்து உன்னை அடுத்தவரை, போற்றிவாழ் - கைவிடாமல் பாதுகாத்து வாழ் வாயாக. அடுத்தவரை ஆதரிக்க வேண்டும். (8) 707. செய்த நன்றி யொருநாளும் மறக்க வேண்டாம். (உல) பிறர் செய்த நன்றியை ஒரு நாளும் மறக்கக் கூடாது. (9) 48. ஈகை அதாவது, இல்லார்க்கு ஈதல். ஓயாது உழைத்தும் உண்ணவும் உடுக்கவும் இல்லாது வருந்துவோர் இல்லாத வராவர். அவர்கட்கு ஈதல் செல்வர் கடமையாகும். 708. இம்மி யரிசித் துணையானும் வைகலும் நும்மி லியைவ கொடுத்துண்மின் - உம்மைக் கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத் தடாஅ வடுப்பி னவர். (நால) வைகலும் இம்மி அரிசித் துணையானும் - நாடோறும் இம்மியரிசி யளவாயினும், நும்மில் இயைவ கொடுத்து உண்மின் - உங்களால் கொடுக்க முடிந்ததைப் பிறர்க்குக் கொடுத்து உண்டு வாழுங்கள், (அவ்வாறு கொடாவிட்டால்) குண்டு நீர் வையத்து அடா அடுப்பினவர் - ஆழமாகிய நீரையுடைய கடலால் சூழப் பட்ட இவ்வுலகத்தில் சமைக்காத அடுப்பையுடையவராய் உங்களிடம் சோற்றுக்கு வரும் வறியவர், உம்மைக் கொடாதவர் என்பர் - உங்களைக் கொடாத உலுத்தர்களென்று இகழ்வர். இம்மி அரிசி - ஒருவகைப் புல்லரிசி. இது மிகச் சிறியது. துணை - அளவு. வைகலும் - நாள் தோறும். இயைவ - கொடுக்க முடிந்தவற்றை. குண்டு - ஆழம். குண்டு - நீர் - கடல். வையம் - உலகம். அடுதல் - சமைத்தல். ‘அடா அடுப்பினவர்’ என்றது, இரப்போர் என்னும் குறிப்பு மொழி. ஒவ்வொரு நாளும் மிகச் சிறிய அளவு பொருளேனும் பிறர்க்குக் கொடுக்க வேண்டும். இல்லையேல், இரப்போர் ‘கொடாத பாவிகள்’ என்று இகழ்வார்கள் என்பதாம். கொடாதவர்ர்க்குப் பழியுண்டாகுமே யன்றிப் புகழுண் டாகாது. ‘தினை’ என்பது போல, இம்மியரிசி சிறுமைக்கு எடுத்துக் காட்டும் அளவையாகும். (1) 709. நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார் குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள் இடுகாட்டு ளேற்றைப் பனை. (நால) பலர் நச்ச வாழ்வார் - பலரும் தம்மை விரும்பி வந்து பயன் பெறும்படி வாழ்பவர், நடு ஊருள் வேதிகை சுற்றுக் கோட் புக்க படுபனை அன்னர் - ஊர் நடுவில் மேடையினால் சூழப் பெற்ற பெண்பனை மரத்தை ஒப்பர், குடி கொழுத்த கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள் - தமது குடும்பம் செல்வத்தினால் சிறந்த விடத்தும் பிறர்க்குக் கொடுத்துண்ணா தவர், இடுகாட்டுள் ஏற்றைப் பனை - சுடுகாட்டிலுள்ள காய் காய்க்காத ஆண் பனையை ஒப்பர். நடு ஊருள் - ஊர் நடுவுள். வேதிகை - மேடை, திண்ணை. சுற்றுக் கோட்புக்க - சூழப் பெற்ற - சுற்றிலும் உள்ள. படுபனை - காய்க்கும் பனை, பெண் பனை. நச்ச - விரும்ப; நச்சி வாழும்படி என்க. கொழுத்தல் - செல்வமிகுதல். இடுகாடு - சுடுகாடு. ஏற்றை - ஆண். ஏற்றைப்பனை - ஆண்பனை. ஊர் நடுவில் பழம் பழுக்கும் (காய்க்கும்) பனைமரம் ஒன்று இருந்து, அதைச் சுற்றிலும் திண்ணையும் இருந்தால், வேண்டி யவர் வந்து பழம் பறித்து அத்திண்ணை மேல் இருந்து தின்று மகிழ்வது போல, ஓரூரில் பெருங் கொடை யாளர் ஒருவர் இருந்தால், இரவலர் பலரும் வந்து தமக்கு வேண்டியதைப் பெற்று மகிழ்வர். சுடுகாட்டிலுள்ள காய்க்காத ஆண்பனையை எவரும் அணுகாத வாறு போல, கொடுக்குங் குணமில்லாத உலுத்தர்களை ஒருவரும் அணுகார் என்பதாம். கொடைக்குண முள்ளோர் தம் செல்வம் பலர்க்கும் பயன் பட வாழ்வர். உலுத்தர் தம் செல்வம் ஒருவர்க்கும் பயன்படாமல் வாழ்வர் என்பது கருத்து. பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வம் நயனுடைய யான்கட் படின். (குறள்) (2) 710. பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம் செயற்பால செய்யா விடினும் - கயற்புலால் புன்னை கடியும் பொருகடற் றண்சேர்ப்ப! என்னை யுலகுய்யு மாறு. (நால) கயல் புலால் புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப - மீன்களின் புலால் நாற்றத்தைப் புன்னை மலர்கள் நீக்கும் அலை மோதுகின்ற கடலின் குளிர்ச்சியான கரையை யுடைய வனே, மழை பெயல்பால் பெய்யாக் கண்ணும் - முகில்கள் பெய்யுங் காலத்தே பெய்யா விட்டாலும், உலகம் செயல்பால செய்யா விடினும் - உயர்ந்தோர் செய்யத்தக்க உதவிகளைச் செய்யா விட்டாலும், உலகு உய்யும் ஆறு என்னை - உலகத் துயிர்கள் பிழைக்கும் வழியாதோ? பெயல் பால் - பெய்யுங்காலத்தே. மழை மேகம். பெய்யா - பெய்யாத. கண் - இடம். உலகம் - உயர் குடிப் பிறந்த செல்வர் களைக் குறிக்கிறது. செயல்பால - செய்யத் தக்கவை, பிறர்க்கு உதவுதல். செய்யா - செய்யாது - ஈறுகெட்ட எதிர்மறை வினை யெச்சம். கயல் - மீன். புலால் - புலால் நாற்றம். புன்னை - புன்னை மலர். கடிதல் - நீக்குதல்; மணத்தால் நீக்கு மென்க. பொருதல் - அலை மோதுதல். தண் - குளிர்ச்சி சேர்ப்பு - கரை. உய்தல் - பிழைத்தல் - வாழ்தல். என்னை - எப்படி. உலகத்துயிர்கள் எல்லாம் வாழ்வதற்கு மழை பெய்தல் இன்றியமையாதது போல, இல்லாதவர்களெல்லாம் வாழ் வதற்கு உள்ளவர் ஈதல் இன்றியமையாதது என்பதாம். மழை பெய்யா விட்டால் மன்னுயிரும், உள்ளோர் கொடா விட்டால் ஏழைகளும் வாழ முடியா என்பது கருத்து. கைம்மாறு கருதாது மழை பெய்யும் முகில், கைம்மாறு கருதாது கொடுக்கும் - உதவும் - செல்வர்களுக்கு உவமை. விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே பசும்புற் றலைகாண் பரிது. (குறள்) கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு. (குறள்) (3) 711. ஏற்றகை மாற்றாமை யென்னானுந் தாம்வரையார் ஆற்றாதார்க் கீவதா மாண்கடன் - ஆற்றின் மலிகடற் றண்சேர்ப்ப மாறீவார்க் கீதல் பொலிகட னென்னும் பெயர்த்து. (நால) மலிகடல் தண்சேர்ப்ப - வளமிகுந்த கடலின் குளிர்ந்த துறையை யுடையவனே, ஏற்றகை மாற்றாமை என்னானும் தாம் வரையார் - இரப்போன் ஏந்திய கையை மாற்றாமல் தமக்கு உள்ளது யாதாவ தொன்றையேனும் வரைந்து கொள்ளாத வராய், ஆற்றார்க்கு ஈவது ஆண் கடன் ஆம் - வறியார்க்குக் கொடுப்பதே மாந்தர் கடமையாகும், ஆற்றின் மாறு ஈவார்க்கு ஈதல் - தாம் கொடுப்பதானால் திருப்பிக் கொடுக்க வல்லார்க்குக் கொடுத்தல், பொலிகடன் என்னும் பெயர்த்து - கொழுத்த கடன் கொடுத்தல் என்னும் பெயரையுடையது. மாற்றாமை - மாற்றாமல் - (ஏந்திய கையைச்) சும்மா மடக்கிக் கொள்ளாமல். வரைதல் - கொடாமல் இருத்தல். ஆற்றாதார் - திருப்பித்தர முடியாத வறியவர். ஆற்றுதல் - கொடுத்தல். ஆற்றின் - கொடுக்கின் - கொடுப்பதானால். மலிதல் - நிறைதல், நீர்வளமிகல். மாறு ஈவார் - திருப்பிக் கொடுக்கும் செல்வர். பொலிதல் - நிறைதல். பொலி கடன் - வட்டியுடன் வரும் கடன். பெயர்த்து - பெயரையுடையது. ஆண்கடன் - ஆண்மக்கள் கடமை. இரப்போர் ஏந்தியகையைச் சும்மா மடக்கிக் கொள்ளாமல், தம்மிடம் உள்ளதொன்றை இல்லை யென்னாமல், திருப்பித் தர முடியாத வறியவர்க்குக் கொடுப்பதே கொடையாகும். திருப்பித் தரும் தகுதியுடைய செல்வர்க்குக் கொடுத்தல் வட்டியுடன் திருப்பித் தரப்படும் கடன் கொடுத்தல் போன்றதே யாகும். தம்மிடம் உள்ளதொன்றை இல்லையென்னாமல், வறிய வர்க்குக் கொடுப்பதே சிறந்த கொடையாகும். திருப்பித் தரவல்ல செல்வர்க்குக் கொடுத்தல் கடன்கொடுத்தது போலாகுமே யன்றிக் கொடையாகாது என்பது கருத்து. வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பு நீர துடைத்து. (குறள்) ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்; ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே யுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை. (மணிமேகலை) ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம் நீர்ப்படும் உப்பினோ டைந்து என்பன கடல் வளம். ஓர்க்கோலை - அம்பர் என்னும் மணப் பொருள். இது கடலில் உண்டாவது. (4) 712. கடிப்பிடு கண்முரசங் காதத்தோர் கேட்பர் இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர் அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர் கொடுத்தா ரெனப்படுஞ் சொல். (நால) கடிப்பு இடு கண் முரசம் காதத்தோர் கேட்பர் - குறுந் தடியால் அடிக்கப்படும் கண்ணினையுடைய முரசின் ஒலியை ஒருகாத தூரத்தில் உள்ளவர் கேட்பர், இடித்து முழங்கியது ஓர் யோசனையோர் கேட்பர் - மேகம் இடியிடித்து முழங்கும் ஓசையை ஒரு யோசனை தூரத்தில் உள்ளவர் கேட்பர், சான்றோர் கொடுத்தார் எனப்படும் சொல் - பெரியோர் களால் ‘இவர் இரப்போர்க்குக் கொடுத்தார்’ என்னும் சொல்லையோ வெனில், அடுக்கிய மூவுலகும் கேட்கும் - ஒன்றன்மேலொன்று அடுக்காக உள்ள மூவுலகத்தவரும் கேட்பர். கடிப்பு - முரசடிக்கும் கோல். கண் - அடிக்கும் இடம். காதம் - ஏழரைக்கால். யோசனை - நான்கு காதம் - 30 கல். முழங்கியது - முழங்கிய ஓசை. மூவுலகு - மண்ணுலகு விண்ணுலகு பாதாள வுலகு என்பன. தம் தலைக்குமேல் உள்ள வானவெளியை வான்முகடு எனவும், அதற்குமேல் இம்மண்ணுலகம் போலவே ஓர் உலகம் உண் டெனவும், அங்கு வாழ்வோர் மக்களினும் உயர்ந்த தேவர்கள் எனவும், அவ்வாறே இம்மண்ணுலகின் கீழ் ஓர் உலகம் உண் டெனவும், அங்கு மக்களினும் தாழ்ந்த பாம்பு முதலிய உயிர்கள் வாழ்கின்றன எனவும் கூறும் புராணம். இன்னும், மேல் - பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், சனலோகம், தவலோகம், மகாலோகம், சத்தியலோகம் என ஏழு என்றும், கீழ் - அதலம், விதலம், சுதலம், மகாதலம். இரசாதலம், பாதாளம் என்றும் - ஆக, ஈரேழு பதினாலு உலகம் என்பதும் உண்டு. முரசின் ஒலி ஒரு காத தூரத்தும், இடியின் ஒலி ஒரு யோசனை தூரத்தும் கேட்கும். ஆனால், ‘இவர் ஏழைகட்குக் கொடுத்தனர்’ என்று பெரியோர்கள் சொல்லும் சொல் உலக முழுவதும் கேட்கும் என்பதாம். கொடைப் புகழ் உலக முழுவதும் பரவும் என்பது கருத்து. (5) 713. சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால் பெரிய பொருள்கருது வாரே - விரிபூ விராஅம் புனலூர! வேண்டயிரை யிட்டு வராஅஅல் வாங்கு பவர். (பழ) விரிபூ விராம் புனல் ஊர - மலர்ந்த பலவகைப் பூக்களும் கலந்துள்ள நீரையுடைய ஊரையுடையவனே, சிறிய பொருள் கொடுத்து செய்த வினையால் - ஒருவர்க்குச் சிறிய பொருளைக் கொடுத்துச் செய்த நற்செயலால், பெரிய பொருள் கருதுவாரே - பெரிய புகழை விரும்புவோரே, வேண்டு அயிரை இட்டு - விரும்பப்படும் அயிரை என்னும் சிறிய மீனைத் தூண்டிலில் இரையாகக் கோத்துப் போட்டு, வரால் வாங்குபவர் - வரால் என்னும் பெரிய மீனைப் பிடிப்பவரோ டொப்பர். வினை - செயல். கொடுத்துச் செய்த வினை - கொடுத்த அக்கொடையாகிய நற்செயல். பொருள் - புகழ். கருதுதல் - விரும்புதல். விரிபூ - மலர்ந்த பூ. விராவுதல் - கலத்தல் - பல வகையான பூக்கள் கலந்திருத்தல். புனல் - நீர் இங்கு ஏரி குளம் முதலிய நீர்நிலைகளைக் குறித்தது. புனலூர - ஆடூஉ முன்னிலை. வேண்டுதல் - விரும்புதல் - வரால் விரும்புதல். அயிரை - ஒரு வகைச் சிறுமீன். வரால் - பெரிய மீன்வகை. வாங்குதல் - பிடித்தல். வராஅஅல் என்னும் அளபெடை ஈரள பெடுத் துள்ளது. பெரிய மீனைப் பிடிக்க விரும்புவோர் சிறிய மீனை இரையாக இடுவது போல, பெரிய புகழைப் பெற விரும்பு வோர் ஏழைகட்குத் தம்மால் இயன்ற சிறிய பொருளைக் கொடுப்பர் என்பதாம். சிறிய மீனால் பெரிய மீன் கிடைப்பதுபோல, சிறிய பொரு ளால் பெரிய புகழ் கிடைக்குமென்பது கருத்து. ‘கெண்டையைப் போட்டு வராலைப் பிடிக்க வேண்டும்’ - பழமொழி. (6) 714. கரப்புடையார் வைத்த கடையு முதவா துரப்புடை மன்னர்க்கே துப்புரவ தல்லால் நிரப்பிடும்பை மிக்கார்க் குதவவொன் றீதல் சுரத்திடைப் பெய்த பெயல். (பழ) கரப்பு உடையார் வைத்த - பிறர்க்கு இல்லையென்று மறைத்து வைப்பவர் தேடிவைத்த பொருள்கள், துரப்பு உடைய மன்னர்க்கே துப்புரவு - பகைவரைத் துரத்தும் வலியுடைய அரசர்க்கே உதவு வனவாம்; அது அல்லால் கடையும் உதவா - அதுவன்றி இறுதிக் காலத்திலும் தமக்கு உதவுவன ஆகா; நிரப்பு இடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்று ஈதல் -- வறுமைத் துன்பம் மிக்கவர்க்கு உதவியாகும்படி ஒரு பொருளைக் கொடுத்தல், சுரத்திடைப் பெய்த பெயல் - வெயிலால் காய்ந்த வெப்பு நிலத்தின்கண் பெய்த மழை யினோ டொக்கும். காத்தல் - மறைத்தல் - இல்லை யென்றால். வைத்த - தேடிவைத்த பொருள்கள்; பலவின் பால் விளையாலணையும் பெயர். கடை - கடைசி. துரப்பு - துரத்தல் - வெல்லுதல். துப்புரவு - உதவி. நிரப்பு - வறுமை. இடும்பை - துன்பம். நிரப்பிடும்பை - வறுமைத் துன்பம். சுரம் வறண்ட நிலம் - பாலை நிலம். பெயல் - மழை. ஏழைகளுக்கு இல்லை என்று மறைத்து வைத்த பொருள்கள் கடைசியில் அரசர்க்கே உதவுவனவாம். சேர்த்து வைத்த அவர்க்கு உதவியாவதில்லை. ஏழைகளுக்குக் கொடுத்த பொருள் பாலை நிலத்தில் பெய்த மழைபோல நன்மை செய்யும். பிள்ளையில்லாதார் பொருள், புதைபொருள் முதலிய பொருள்கள் அன்று அரசர்க்கே உரியதாகும். அரசர்க்கு உதவுதல் - அரசர்க்குரிய பொருளாதல், ‘உறுபொருளும்’ (குறள் - 756) என்ற குறளுரை பார்க்க. பாலை நிலத்தில் பெய்த மழை அங்குள்ள வாடிய மரஞ் செடி கொடிகளைத் தழைப்பித்து மேகத்திற்கும் பெருமை தருவது போல, ஏழைகட்குக் கொடுத்த பொருள் அவர்களை வாழ்விப்பதோடு, கொடுத்தவருக்கும் புகழையுண்டாக்கும் என்பதாம். வறியார்க்கொன் றீவதே ஈகை. (குறள்) (7) 715. இரப்பவர்க் கீயக் குறைபடுமென் றெண்ணிக் கரப்பவர் கண்டறியார் கொல்லோ - பரப்பிற் றுறைத்தோணி நின்றுலாந் தூங்குநீர்ச் சேர்ப்ப! இறைத்தோறும் ஊறுங் கிணறு. (பழ) பரப்பின் துறைத்தோணி நின்று உலாம் தூங்கு நீர்ச்சேர்ப்ப - கரையோர மெங்கும் துறையை அணுகும் படகுகள் நிலை பெற்று உலாவும் மிக்க நீரையுடைய துறையையுடையவனே, இரப்பவர்க்கு ஈயக் குறைபடும் என்று எண்ணிக் கரப்பர் - இரப்பவர்க்குக் கொடுத்தால் உள்ள பொருள் குறையும் என்று நினைத்துக் கொடாதவர், இறைத்தோறும் ஊறும் கிணறு கண்டறியார் - இறைக்குந் தோறும் மேன்மேல் நீர் ஊறுகின்ற கிணற்றைப் பார்த்தறி யாரோ? கரப்பவர் - ஒளிப்பவர் - இல்லையென்பவர். கொல் - அசை. பரப்பு - கரை. ஊரை அடுத்துள்ள ஆற்றங்கரையில், ‘வண்ணான் பரப்பு’ என்னும் இடம் இருத்தலை அறிக. துறைத் தோணி - வரவும் போகவும் உள்ள தோணிகள் எப்போதும் நிறைந் திருக்கும் துறை என்றபடி. உலாம் - உலாவும். தூங்கு நீர் - ஆழ மான நீர். கப்பல்கள் நிறையத் தங்கி நிற்பதற்கேற்ற ஆழமான நீரையுடைய துறை என்பது. இது பழந்தமிழ் மக்களின் கப்பல் வணிகத்தின் சிறப்புக்குச் சான்றாகும். இறைத் தோறும் - இறைக்குந்தோறும். இரப்பவர்க்குக் கொடுத்தால் உள்ள பொருள் குறைபடும் என்றெண்ணிக் கொடாதவர், இறைக்க இறைக்க நீர் ஊறுகின்ற கிணற்றைப் பார்த்ததில்லையோ, பார்த்திருந்தால் கொடுத் தால் குறைபடுமென்னெண்ணாது கொடுப்பர் என்பதாம். இறைத்த கிணறு ஊறுவது போலக் கொடுப்போர் செல்வம் பெருகும் என்பது கருத்து. கொடையாளர்க்குப் பலரும் உதவுவதால், அவர்கள் மேற் கொண்ட செயல்கள் இடையூறின்றி இனிது முடிவதால், செல்வம் பெருகுவதாயிற்று. இறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும். (குறள்) இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ் செல்வம் - பழமொழி (8) 716. மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு - நீருலையுள் பொன்றிறந்து கொண்டு புகாவாக நல்கினாள் ஒன்றுறா முன்றிலோ வில். (பழ) மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும் - மழை யில்லாமல் உணவுத் தட்டுதல் ஏற்பட்டிருந்த காலத்திலும், பாரி மடமகள் பாண்மகற்கு - பாரி வள்ளலின் இளமகள் தம் மனையை அடைந்த பாணனுக்கு, (சோறு இன்மையால், சோறாக்க அரிசி இன்மை யால்), நீர் உலையில் பொன் கொண்டு திறந்து புகாவாக நல்கினாள் - கொதிக்கின்ற உலைநீருள் பொன்னை இட்டு எடுத்து அதையே சோறாக இட்டாள்; (ஆதலால்), ஒன்றும் உறாத முன்றில் இல்லை - சென்றிரந்தால் பயன்படாத வீடு ஒன்றும் இல்லை. வறந்திருந்த காலம் - உணவுத் தட்டுதல் உண்டான காலம் - போதிய விளைவில்லாத காலம். மடம் - இளமை, அழகு. பொன் கொண்டு திறந்து - பொன்னை இட்டு எடுத்து. கொண்டு - போட்டு என்பது. திறந்து - உலை மூடியைத் திறந்தெடுத்து. புகா - சோறு. நல்குதல் - இடுதல். மழை இல்லாமல் நாட்டில் உணவுத் தட்டுதலாய் இருந்த காலத்தில் தம் வீட்டை அடைந்த ஒரு பாணனுக்குப் போடச் சோறு இன்மையால் சோறாக்க அரிசியும் இன்மை யால், உலையில் பொன்னை இட்டு எடுத்து அதையே சோறாக இலையில் இட்டாள் பாரி மகள். ஆதலால், சென்று இரந்த வர்க்கு ஒன்றும் கிடைக்காத வீடு ஒன்றும் இல்லை என்பதாம். சோறு இல்லை என்று சொல்ல முடியாமையால், பொன்னை உலையில் போட்டு எடுத்துச் சோறென்று படைத்தா ளென்க. பொன்னையே சோறாகப் படைத்தாள் என்பது. பாரி, சங்காலத் தமிழ் வள்ளல்களில் ஒருவன்; பறம்பு நாட்டுத் தலைவன்; பறம்பு நாட்டு முந்நூறு ஊர்களையும் இரவலர்க்குக் கொடுத்தவன்; முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளியோன். வள்ளல் பாரியின் மகளாதலால், அவ்வாறு செய்தாளென்க. (9) 717. வெந்தீக்காண் வெண்ணெய் மெழுகுநீர் சேர்மண்ணுப் பந்தன் மகற்சார்ந்த தந்தையென் - றைந்தினுள் ஒன்றுபோ லுண்ணெகிழந் தீயிற் சிறிதெனினும் குன்றுபோற் கூடும் பயன். (சிறு) வெம்தீ காண் வெண்ணெய் மெழுகு - வெப்பமாகிய நெருப்பைக் கண்ட வெண்ணையும் மெழுகும், நீர் சேர்மண் உப்பு - நீரைச் சேர்ந்த மண்ணும் உப்பும், அம் தன் மகன் சேர்ந்த தந்தை என்று ஐந்தனுள் ஒன்று போல் - அழகிய தன் மகனைத் தழுவிய தந்தையும் என்று சொல்லப்பட்ட ஐந்தனுள் ஒன்றுபோல, உள் நெகிழ்ந்து ஈயின் - இரவலரைக் கண்டு மனமிரங்கி ஒருவன் கொடுப்பானாயின் சிறிதெனினும் பயன் குன்றுபோல் கூடும் - சிறிதெனினும் அதனாலுண்டாகும் பயன் மலைபோல மிகப் பெரியதாக வந்து சேரும். அம் - அழகு. நெகிழ்ந்து - இளகி. குன்று - மலை. பயன் - புகழ். நெருப்பைக் கண்ட வெண்ணையும் மெழுகும் போலவும், நீரைச் சேர்ந்த மண்ணும் உப்பும் போலவும், மகனைத் தழுவிய தந்தை போலவும் இரவலரைக் கண்டு மனம் இரங்கிக் கொடுக்கின், அப்பொருள் சிறிதாயினும் அதனாலுண்டாகும் புகழ் மலைபோல மிகப் பெரிதாகும் என்பதாம். அன்போடு கொடுக்கும் பொருள் சிறிதெனினும் அதனா லுண்டாகும் புகழ் பெரிதென்பது கருத்து. ஒப்புடன் முகம லர்ந்தே உபசரித் துண்மை பேசி உப்பிலாக் கூழிட் டாலும் உண்பவர்க் கமுத மாகும்; முப்பழ மொடுபா லன்னம் முகங்கடுத் திடுவா ராயின் கப்பிய பசியி னோடு கடும்பசி யாகுந் தானே. (விவேகசிந்தாமணி) அகனமர்ந் தீதல். (குறள்) (10) 718. புண்பட்டார் போற்றுவா ரில்லாதார் போகுயிரார் கண்கெட்டார் காலிரண்டு மில்லாதார் - கண்பட்டாங் காழ்ந்து நெகிழ்ந்தவர்க் கீந்தார் கடைபோக வாழ்ந்து கழிவார் மகிழ்ந்து. (சிறு) புண்பட்டார் போற்றுவார் இல்லாதார் - போரில் புண் பட்டவர்க்கும் காப்பாற்றுவார் இல்லாதவர்க்கும், போகு உயிரார் - உயிர்போகுந் தருவாயிலுள்ளவர்க்கும். கண் கெட்டார் கால் இரண்டும் இல்லாதார் - குருடர்க்கும் இரண்டு கால்களும் இல்லாத முடவர்க்கும், கண்பட்டு ஆழ்ந்து நெகிழ்ந்து - கண்ணோடி மிகவும் மனமுருகி, அவர்க்கு ஈந்தார் - ஆகிய அவ்வைவர்க்கும் வேண்டு வன கொடுத்தவர், கடைபோக மகிழ்ந்து வாழ்ந்து கழிவார் - இறக்கும் வரை இடையூறில்லாமல் இன்புற்று வாழ்வார்கள். புண்பட்டார் - நோயாளருமாம். போகு உயிரார் - உயிர் போகும் நிலையில் உள்ளார். அதாவது உணவின்மையால் உயிர் போகும் நிலையில் உள்ளார் என்றபடி. கண்படல் - கண் ணோடுதல் - இரங்குதல். ஆங்கு - அசை. ஆழ்ந்து - மிக, நெகிழ்தல் - இளகுதல். அவர்க்கு - புண்பட்டார் முதலிய வர்க்கு. கடைபோக - கடைசி வரை சாகு மட்டும். வாழ்ந்து கழிவார் - வாழ்வார். புண்பட்டார் முதலிய ஐவர்க்கும் இரக்கங்கொண்டு உணவு முதலியன உதவியவர்கள் எப்போதும் இடையூறின்றி இனிது வாழ்வார்கள் என்பதாம். இத்தகைய அருளாளர்க்கு யாரும் இடையூறு செய்யாராகையால், இடையூறின்றி இனிது வாழ்வா ரென்க. காணார் கேளார் கால்முட மானார் பேணுத லில்லார் பிணிநடுக் குற்றார் யாவரும் வருக. (மணி) (11) 719. கடம்பட்டார் காப்பில்லார் கைத்தில்லார் தங்கால் முடம்பட்டார் மூத்தார்மூப் பில்லார்க் - குடம்பட் டுடையரா யில்லுளூ ணீத்துண்பார் மண்மேல் படையராய் வாழ்வார் பயின்று. (ஏலா) கடம்பட்டார் - பெருங்கடன் பட்டு நிலபுலன்களை யெல்லாம் இழந்தவர்க்கும், காப்பு இல்லார் - பாதுகாப்பவர் இல்லாதவர்க்கும், கைத்து இல்லார் - பொருள் சிறிதும் இல்லாத எளியார்க்கும், கால் முடம் பட்டார் - கால்கள் முடமான வர்க்கும், மூத்தார் - வாழ வழியற்ற முதியோர்க்கும், மூப்பு இல்லார்க்கு - பெற்றோர் முதலிய பெரியோர்களை இல்லாத சிறுவர்க்கும், உடம்பட்டு உடையவ ராய் - உதவ எண்ணி அன்பு டையராய், இல் உள் ஊண் ஈந்து உண்பார் - தமது வீட்டில் உணவிட்டுத் தாம் பின்பு உண்பவர், மண்மேல் படையராய் பயின்று வாழ்வார் - இவ்வுலகில் நால் வகைப் படையையுடைய அரசர்களைப் போலச் சிறந்து வாழ் வார்கள். கடம் - கடன், காப்பு - பாதுகாப்பு. கைத்து - பொருள். தம் - அசை. மூப்பு - மூத்தவர். உடம்படல் - உதவ எண்ணுதல். உடைய ராய் - அன்பு உடையராய். இல் - வீடு ஈத்து - ஈந்து. நால் வகைப் படை - யானை, குதிரை, தேர், காலாள். பயின்று - சிறந்து. காப்பில்லார் - பிறர் பாதுகாப்பில் வாழும் குருடர் முதலி யோர் பாதுகாப்பவரை இல்லாதபோது என்றபடி. மூப்பு இல்லார் - பெற்றோர் முதலியோர் இல்லாத அனாதைச் சிறுவர். ஊண் ஈதல் என்பது - உணவிட்டும் பிறவகையிலும் உதவுதல் என்பது. மூப் பில்லார்க்கு என்பதில் உள்ள குகரத்தை கடன் பட்டார் முதலியவற்றோடும் கூட்டுக. பெருங்கடன் பட்டு நிலபுலன்களை யிழந்து தவிப் போர்க்கும், பாதுகாப்பவர் இல்லாத குருடர் முதலியோர்க்கும், எளியர்க்கும், முடவர்க்கும், வாழவழியற்ற முதியோர்க்கும், அனாதைச் சிறுவர்க்கும் உதவுவோர் இனிது வாழ்வார்கள் என்பதாம். (12) 720. தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி வாயிழந்த வாழ்வினார் வாணிகம் - போயிழந்தார் கைத்தூண் பொருளிழந்தார் கண்ணி லவர்க்கீந்தார் வைத்து வழங்கிவாழ் வார். (ஏலா) தாய் இழந்த பிள்ளை - தாயை இழந்த பிள்ளைகட்கும், தலை இழந்த பெண்டாட்டி - கணவனை இழந்த மகளிர்க்கும், வாய் இழந்த வாழ்வினார் - பேசமுடியாத ஊமைகட்கும், வாணிகம் போய் இழந்தார் - வணிகஞ்செய்து முதலையும் இழந்தார்க்கும், கைத்து ஊண்பொருள் இழந்தார் - கையி லுள்ள உணவுப் பொருளை இழந்தவர்க்கும், கண் இலவர்க்கு ஈந்தார் - கண் ணில்லாதவர்க்கும் வேண்டுவன கொடுத்தவர், வழங்கி வைத்து வாழ்வார் - (எய்ப்பினில் வைப்பாகச்) சேர்த்து வைத்து வாழ்ப வராவர். தாய் - தந்தையையும் குறிக்கும் - தாய் இழந்த பிள்ளை - பெற்றோரை இழந்த அனாதைப்பிள்ளை. தலை - தலைவன் - கணவன். பெண்டாட்டி - பெண். வாய் இழந்த வாழ்வினார் - ஊமையர். வாணிகம் போய் - வாணிகம் செய்து. கைத்து - கையிலுள்ளது. ஊண் பொருள் - உணவுப் பொருள். வீடு தீப்பற்றி வெந்தோ, திருடர்களாலோ வீட்டில் வைத்திருந்த உணவுப் பொருளை - தவசம் முதலியவற்றை இழந்தவர் என்றபடி. வழங்குதல் - சேர்த்தல் - சேர்த்து வைத்துள்ள பொருளுடன் சேர்த்தல். எய்ப்பினில் வைப்பு - தளர்ந்தபோது - முதுமைக் காலத்தே உதவும்படி சேர்த்து வைத்த பொருள். கண்ணிலவர்க்கு என்பதிலுள்ள நான்கனுருபை (கு) மற்றவை யோடும் கூட்டுக. அனாதைப் பிள்ளைகட்கும், கணவனை இழந்து வாழ வழி யின்றித் தவிக்கும் பெண்கட்கும், ஊமையர்க்கும் வணிகத் தால் முதலையும் இழந்தோர்க்கும், உணவுப் பொருளை யிழந்த வர்க்கும், குருடர்க்கும் உதவினவர் பிற்காலத்துக்குச் சேர்த்து வைத்து வாழ்பவராவர் என்பதாம். இத்தகையோர் என்றும் சிறப்புடன் வாழ்வார் என்பது. வாழ வழியற்றோர்க்கு உதவுதல் ஒவ்வொருவரின் கடமை யாகும் என்பது கருத்து. (13) 721. பெற்றநாள் பெற்றநாள் பெற்றதனுள் ஆற்றுவதொன் றிற்றைநாள் ஈத்துண் டினிதொழுகல் - சுற்றும் இதனி லிலேசுடை காணோம் அதனை முதனின் றிடைதெரியுங் கால். (அற) பெற்றநாள் பெற்றநாள் - செல்வத்தினை அடையுந் தோறும், பெற்றதனுள் ஆற்றுவது ஒன்று - பெற்ற அச் செல்வத்தினால் செய்தற்குரிய நன்மையை, இற்றைநாள் ஈத்து உண்டு இனிது ஒழுகல் - இப்பொழுதே செய்வோமென்று எண்ணி இல்லார்க்குக் கொடுத்து நீயும் உண்டு இனிது வாழ்வாயாக, அதனை முதல் நின்று இடை தெரியுங்கால் - அவ் வறஞ் செய்தற்குரிய வழியை முதலிலிருந்து முழுவதும் ஆராயு மிடத்து, சுற்றும் இதனில் இலேசு உடை காணோம் - எவ் விடத்தும் இதைக் காட்டிலும் எளியவழி வே றொன்றும் இல்லை. பெற்றநாள் பெற்றநாள் - அடுக்குத் தொடர் - பன்மை குறித்தது. ஆற்றுவது - இயன்றது - கொடுக்க முடிந்தது. இற்றைநாள் - இப்பொழுதே. அதாவது செல்வத்தைப் பெறுந் தோறும் அவ்வப்பொழுதே என்றபடி. ஈத்து - ஈந்து. இனிது - நன்கு. ஒழுகல் - வாழ்தல் - வியங்கோள் வினைமுற்று. சுற்றும் - எவ்விடத்தும், எவ்வழியிலும் என்றபடி. இதனில் - இதைவிட - கிடைத்த போது கொடுப்பதைவிட. இலேசு - எளிது. உடை - உடையது. காணோம் - இல்லை என்றபடி. முதல் நின்று இடை தெரிதல் - முழுதும் ஆராய்தல் - நன்கு ஆராய்தல். வரவு வரும் அவ்வப்போதே இயன்ற அளவு இல்லார்க்கு ஈதல் வேண்டும். இதுவே ஈதற்கு - அறஞ்செய்தற்கு - எளிய வழி யாகும் என்பதாம். செய்வன தவிர்வனவே அறம் ஆகையால், ஈகையும் - அறம் எனப்படும். (14) 722. கண்ணோக் கரும்பா நகைமுகமே நாண்மலரா இன்மொழியின் வாய்மையே தீங்காயா - வண்மை பலமா நலங்கனிந்த பண்புடையா ரன்றே சலியாத கற்ப தரு. (நீநெ) கண்நோக்கு அரும்பு ஆ - இரவலரைப் பார்க்கும் அருட் பார்வையே மொக்காகவும், நகை முகமே நாள் மலர்ஆ - புன் முறுவல் பூத்த முகமே புதுப் பூவாகவும், வாய்மையின் இன் மொழியே தீம் காய் ஆ - உண்மையான இன்சொல்லே தித்திப் பான காயாகவும், நலம் கனிந்த வண்மை பலம் ஆ - அன்பு கனிந்த ஈகையே பழ மாகவும், பண்பு உடையார் அன்றே சலியாத கற்பதரு - இத்தகைய கொடைக் குணம் உடைய செல்வர்களல்லவா சலிப்பில்லாத கற்பகமரமாவர். நோக்குதல் - பார்த்தல் - இரக்கத்தோடு பார்த்தல் - அருட் பார்வை. அரும்பு - பூவரும்பு. நகை முகம் - சிரித்த முகம் - முக மலர்ச்சி. நாள்மலர் - அன்று பூத்த மலர் - புது மலர். இன்மொழி - இன்சொல். வாய்மை - உண்மை. வாய்மையின் இன்மொழியே என மாற்றுக. தீம் - தித்திப்பு. வண்மை - கொடை. பலம் - பழம். நலம் - அன்பு. கனிந்த - மிக்க. பண்பு - குணம். சலியாத - வெறுப் பில்லாத. தரு - மரம். கற்பதரு - கற்பக மரம். அரும்பா - அரும்பு ஆ. ஆ - ஆக. மலர் ஆ முதலிய மூன்றும் இவ்வாறே. கொடையாளரைக் கற்பக மரம் என்றதற்கேற்ப. இரவ லரைக் கண்டதும் பார்க்கும் அருட்பார்வையை அரும் பாகவும் முக மலர்ச்சியை மலராகவும், இன்சொல்லைக் காயாகவும், கொடையைப் பழமாகவும் உருவகம் செய்தார். இப்பாட்டு உருவக அணி. ‘நலம் கனிந்த வண்மை பலமா’ என்பது - அன்புமிக்க ஈகையே பழமாகவும் என்பதோடு, நலம் கனிந்த பலம் - நன்கு கனிந்த பழம் என்னும் நயந் தோன்ற நின்றது. கற்பகமரம் - தேவருலகத்திலுள்ள ஒருமரம், அது சலியாது கொடுக்குந் தன்மையுடையது என்பது புராணம். நம்மிடம் வரும் இரவலரை அருட்பார்வை பார்த்து, முக மலர்ச்சியோடு இன்சொற்கூறி, அன்போடு கொடுக்க வேண்டும் என்பதாம். அகனமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந் தின்சொல னாகப் பெறின். (குறள்) (15) 723. வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பின் தூங்குங் களிறோ துயருறா - ஆங்கதுகொண் டூரு மெறும்பிங் கொருகோடி யுய்யுமால் ஆருங் கிளையோ டயின்று. (நீநெ) வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய்தப்பின் - தான் வாங்கி உட்கொள்ளும் உணவின் உருண்டையில் கொஞ்சம் வாய்தவறிக் கீழே விழுந்தால், (அதனால்), தூங்கும் களிறோ துயர் உறா - அசையும் இல்பையுடைய யானையோ வருத்த மடையாது, அதுகொண்டு - தவறிய அவ்வுணவைக் கொண்டு, இங்கு ஊரும் எறும்பு ஒரு கோடி - இவ்வுலகில் ஊருகின்ற எறும்புகள் ஒரு கோடி, ஆரும் கிளையோடு அயின்று உய்யும் - தம் நிறைந்த சுற்றத்தோடு உண்டு வாழும். வாங்குதல் - பாகன் கொடுக்க வாங்குதல். நெல்லும் வெ ல்லமும் கலந்து இடித்து உருட்டி யானைக்குக் கொடுப்பது வழக்கம். கவளம் - உணவுருண்டை. தப்பின் - தவறினால் - கீழே விழுந்தால். தூங்குதல் - அசைதல் - அசைந்து நடத்தல். களிறு - யானை. உறா - உறாது. ஆங்கு - அசை. கோடி - மிகப் பல உய்தல் - பிழைத்தல், அயிலுதல் - உண்ணுதல். யானை உண்ணும் உணவுருண்டையில் சிறிது தவறிக் கீழே விழுந்தால் அதனால் யானை பசித் துன்பமுறாது. கீழே விழுந்த அந்தச் சிறிய உணவைத் தின்று பல எறும்புகள் வாழும். அது போலவே, செல்வர்கள் தங்கள் செல்வத்தில் கொஞ்சம் கொடுப் பதனால் அவர்கட்குப் பொருட்குறை உண்டாகாது. அச்சிறு பொருளைக் கொண்டு ஏழைகள் தம் சுற்றத்தாரோடு உண்டு வாழ்வர் என்பதாம். இது பிறிதுமொழிதல் அணி. (16) 724. சந்தன மென்குறடு தான்றேய்ந்த காலத்தும் கந்தங் குறைபடா தாதலால் - தந்தம் தனஞ்சிறிய ராயினுந் தார்வேந்தர் கேட்டால் மனஞ்சிறிய ராவரோ மற்று. (வாக்) மெல் சந்தனக் குறடு தான் தேய்ந்த காலத்தும் - மென்மை யான சந்தனக் கட்டையானது தான் தேய்ந்து போன காலத்திலும், கந்தம் குறைபடாது ஆதலால் - மணத்தில் குறையாது ஆதலி னால், தார் வேந்தர் தம்தம் கேட்டால் தனம் சிறியர் ஆயினும் - மாலையை யணிந்த அரசர்கள் அவரவருடைய பொருட் கேட்டால் செல்வத்தால் சிறிய வரானாலும், மனம் சிறியர் ஆவரோ - கொடுக்குங் குணத்தில் சிறியவர் ஆவாரோ? ஆகார் என்றபடி. குறடு - கட்டை. தேய்தல் - உரைத்துரைத்துத் தேய்தல் கந்தம் - மணம். குறைபடாது - குறையாது, தம் தம் - அவரவர். தனம் - செல்வம். தனம் சிறியராதல் - செல்வங் குறைந்தவ ராதல். தார் - மாலை. கேடு - பொருட்கேடு. மனம் - இங்கு மனத்தின் தன்மையாகிய குணத்தைக் குறித்தது. குணம் - கொடைக் குணம் மற்று - அசை. சந்தனக்கட்டை தேய்த்துத் தேய்த்துச் சிறிதான காலத்தும் மணத்தில் குறையாது. அதுபோல, செல்வங் குறைந்தபோதும் பழங்குடிச் செல்வங் குறைந்தபோதும் பழங்குடிச் செல்வர்கள் கொடைக் குணத்தில் சுருங்கார் என்பதாம். வேந்தர் என்றது பழங்குடிச் செல்வரை. உவமையால், கொடுத்துக் கொடுத்துச் செல்வங் குறைந்த காலத்தும் கொடுக்கத்தவறார் என்பது பெறப்படும். வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலைப்பிரித லின்று. (குறள்) என்பது இக்கருத்துடையதே. (17) 725. சாதி யிரண்டொழிய வேறில்லைச் சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதா ரிழிகுலத்தோர் பட்டாங்கி லுள்ள படி. (நல்) பட்டாங்கில் உள்ளபடி - அற நூல்களில் சொல்லுகின்ற படி, மேதினியில் சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை - உலகத்தில் சாதி வேறுபாடு இரண்டே தவிர அதற்குமேல் ஒன்று இல்லை, சாற்றுங் கால் - அவை இவை எனச் சொல்லும் பொழுது, நீதி வழுவா நெறிமுறையின் - முறை தவறாத நல்ல வழியில், இட்டார் பெரி யோர் இடாதார் இழிகுலத்தோர் - ஏழைகட்குக் கொடுத்தவர் உயர்குலத்தோராவர் கொடாதவர் இழிகுலத்தோராவர். சாதி - குலம், இனம். ஒழிய - தவிர. சாற்றுதல் - சொல்லுதல். நீதி - முறை. வழுவா - வழுவாத - தவறாத. நெறிமுறை - நல்வழி. முறை தவறாத நல்வழியில் இடுதல் - இல்லார்க்குக் கொடுத்தல். மேதினி - உலகம். இடுதல் கொடுத்தல். இழிகுலம் - தாழ்ந்த குலம். பட்டாங்கு - அறநூல். உலகில் மக்களிடை வழங்கும் சாதி வேறுபாடு களெல்லாம் உண்மையான வேறுபாடுகளல்ல. உலகில் இரண்டே சாதி தான் உண்டு. அவையாவை எனில், இல்லார்க்குக் கொடுப்போர் உயர்ந்த சாதியாராவர்; கொடாதார் இழிந்த, தாழ்ந்த சாதியா ராவர் என்பதாம். கொடுப்போர் உயர்ந்தவராகவும் கொடாதார் தாழ்ந்தவ ராகவும் மதிக்கப்படுவர் என்பது கருத்து. (18) 726. மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம் கற்றா தரல்போற் கரவா தளிப்பரேல் உற்றா ருலகத் தவர். (நல்) கன்று ஆ அமுதம் சுரந்து தரல்போல் - கன்றையுடைய மாடு பாலைச் சுரந்துகொடுப்பதைப்போல, கரவாது அளிப்ப ரேல் - ஒருவர் உள்ளதை ஒளியாமல் கொடுப்பாரானால், உலகத்தவர் உற்றார் - உலக மக்கள் உறவினர்போல் வந்தடைவர்; (எங்ஙன மெனில்), மரம் பழுத்தால் - மரத்தில் பழம் பழுத்தால், வா என்று வௌவாலைக் கூவி - பழங்களை உண்ண வருவாயாக என்று வௌவாலைக் கூப்பிட்டு, இரந்து அழைப்பார் யாவரும் அங்கு இல்லை - வேண்டி அழைப்பவர்கள் ஒருவரும் அங்கு இல்லை. வௌவால் தானாகவே வரும் என்றபடி. கூவுதல் - கூப்பிடுதல். இரந்து அழைத்தல் - வேண்டி அழைத்தல் - கட்டாயம் வரவேண்டும் என அழைத்தல். கூப் பிடுதல், அழைத்தல் - ஒருபொருட் சொற்கள். அங்கு - அம்மரத் தண்டை. அமுதம் - பால். கற்றா - கன்று ஆ - கன்றையுடைய மாடு. ஆ - மாடு. கரவாது - ஒளியாது - இல்லை என்னாது அளித்தல் - கொடுத்தல். உற்றார் - உறவினர். கற்றா பாலைச் சுரந்து கொடுப்பதைப் போல ஒருவர் உள்ளதை இல்லை என்னாமல் கொடுத்தால், உலகத்தவர் அவர்க்கு உறவினராவர். மரம் பழுத்தால் வௌவால் முதலிய பறவைகள் தாமே வருதல் போல, கொடுப்போரை நாடி எல்லோரும் தாமே வருவர் என்பதாம்., கற்றா பாலைச் சுரந்து கொடுத்தல் இல்லை என்னாமல் கொடுப்பதற்கும், பழ மரத்தை நாடி வௌவால் தானே வருதல் கொடையாளரை நாடி மக்கள் தாமே வந்து உறவினரா வதற்கும் உவமை. இது ஈகையின் பயன் கூறியது. (19) 727. பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட் கேற்ப விருப்ப மொடுகொடுப்பர் மேலோர் - நிரக்கும் மலையளவு நின்றபுகழ் மாதே மதியின் கலையளவு நின்ற கதிர். (நன்) நிரக்கும் மலையளவு நின்றபுகழ் மாதே - வரிசையான மலைபோல் உயர்ந்த புகழையுடைய பெண்ணே, மதியின் கதிர் கலை அளவு நின்ற - திங்களின் ஒளி வளர்தலையும் தேய்தலையும் உடைய கலைகளின் அளவே நின்கின்றது. (அதுபோல), மேலோர் பெருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப - பெரியோர்கள் மிகுதியாகவும் குறை வாகவும் உள்ள பொருளுக்குத் தகுந்தாற் போல, விருப்ப மொடு கொடுப்பர் - விருப்பத்தோடு கொடுப் பார்கள். பெருக்கம் சுருக்கம் - மிகுதி குறைவு. நிரத்தல் - வரிசையாக இருத்தல். அளவு - போல். நின்ற - உயர்ந்த. மாதே - மகடூஉ முன்னிலை. கலை - மதியின் கூறு. கதிர் - ஒளி. முழுமதி - பதினாறு கலைகளையுடைய தென்றும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாகக் குறைந்து, பதினைந்தா நாள் (உவாவென்று) ஒரு கலை மட்டும் உள்ளது என்பதும் மரபு. இவ்வாறே வளர்ந்து பதினைந்தா நாள் மதியமாகும். திங்கள் தன் கலைகட்குத் தக்கபடியே ஒளியைத் தருவது போல, கொடையாளர் தம்மிடமுள்ள பொருளின் அளவுக்குத் தக்கபடியே கொடுப்பர் என்பதாம். இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள. (குறள்) (20) 728. எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன் மைந்தர்தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடீஇ! நின்று பயனுதவி நில்லா வரம்பையின் கீழ்க் கன்று முதவுங் கனி. (நன்) பைந்தொடீஇ - பசிய வளையல்களை அணிந்தவளே, நின்று பயன் உதவி நில்லா அரம்பையின்கீழ் கன்றும் - காய்க்குமுன் அழியாமல் நின்று பழத்தைக் கொடுத்து அதனால் அழிவடைந்த வாழைமரத்தின் கீழ் உள்ள அதன் கன்றும், கனி உதவும் - பழத்தைக் கொடுக்கும், (அதுபோல), இரப்பார்க்கு ஈந்து எந்தைநல் கூர்ந்தான் என்று - இரப்போர்க்குக் கொடுத்து எங்கள் தந்தை வறுமையுற்றான் என்று எண்ணி, அவன் மைந்தர் தம் ஈகை மறுப்பரோ - அவனுடைய மக்கள் தாங்கள் கொடுப்பதை நிறுத்தி விடுவார்களோ? நிறுத்த மாட்டார். எந்தை - தந்தை. நல்கூர்தல் - வறுமையுறுதல். மறுத்தல் - கொடாதிருத்தல். தொடி - வளையல். பைந்தொடி - பசுமை யாகிய தொடி - பச்சை வளையல். பைந்தொடிஇ - அன் மொழித் தொகை - இன்னிசை அளபெடை. பைந்தொடி - மகடூஉ முன்னிலை. பயன் - பழம். நில்லா - நில்லாத - அழிந்துவிட்ட. அரம்பை - வாழை மரம். கன்று - பக்கக் கன்று. வாழைமரம் காய்த்துப் பழங்களைப் பிறர்க்குக் கொடுத்த தனால் அழிவுற்றதை அதன் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண் டேயிருந்த அதன் கன்றுகள், நமது தாய் பிறர்க்குக் கொடுத்ததனால் அழிந்துவிட்டது. அதனால், நாம் பிறர்க்குக் கொடுக்கக்கூடாது என்று எண்ணாமல் அவையும் தம் தாய் போலவே பழங்களைத் தருகின்றன. அதுபோல, தமது தந்தை ஏழைகளுக்குக் கொடுத்துக் கொடுத்துச் செல்வத்தை யிழந்து வறியரானதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள், தாமும் கொடுத்தால் தந்தை போல வறியராக நேரும் என்று எண்ணாமல் அவர்களும் தம்மாலியன்றதைக் கொடுப்பர் என்பதாம். இல்லார்க்குக் கொடுத்தல் உள்ளோர் கடமை யாகையால், ஒருவர் கொடுத்து வறுமையுற்றா ரென்று கொடாமலிருப்பது அறிவுடைமையாகா தென்பது கருத்து. (21) 729. கைம்மா றுகவாமற் கற்றறிந்தோர் மெய்வருந்தித் தம்மா லியலுதவி தாஞ்செய்வர் - அம்மா முளைக்கு மெயிறு முதிர்சுவைநா விற்கு விளைக்கும் வலியனதா மென்று. (நன்) முளைக்கும் எயிறு நாவிற்கு வலியன மென்று முதிர் சுவை விளைக்கும் - முளைக்கின்ற பற்களானவை தமக்கு எதிருதவி செய்ய இயலாத நாவிற்குக் கெட்டியான பொருள் களைத் தாமே மென்று தந்து மிக்க சுவையை உண்டாக்கும், (அதுபோல), கற்று அறிந்தோர் - கற்றறிந்த பெரியோர்கள், கைம்மாறு உகவாமல் - எதிருதவியை விரும்பாமல், மெய் வருந்தித் தம்மால் இயல் உதவி தாம் செய்வர் - உடல் வருந்தித் தம்மால் இயன்ற உதவிகளைத் தாங்களே செய் வார்கள். கைம்மாறு - எதிருதவி. உகத்தல் - விரும்புதல். மெய் - உடம்பு. இயலுதல் - செய்யக்கூடுதல். அம்மா - அசை. எயிறு - பல். முளைத்தல் - விழுந்து முளைத்தல். முதிர் சுவை - மிக்க சுவை. விளைக்கும் - உண்டாக்கும். வலியன - கெட்டி யானவை. பற்கள், எதிருதவி செய்ய இயலாத நாவிற்குக் கடினமான பொருள்களைத் தாமே மென்று மிக்க சுவையுடையதாக்கிக் கொடுக்கின்றன. அதுபோல, பெரியோர்கள் உடல் வருந்தித் தேடிய செல்வத்தை எதிருதவி செய்ய இயலாத ஏழைகளுக்கு இயன்ற அளவு தாமே கொடுப்பர் என்பதாம். (22) 730. தானறிந்தோ ருக்குதவி தன்னா லமையுமெனில் தானுவந் தீதல் தலையாமே - ஆனதனால் சொன்னாற் புரிதலிடை சொல்லியும்பன் னாள்மறுத்துப் பின்னாட் புரிவதுவே பின். (நீவெ) தான் அறிந்தோர்க்கு உதவி தன்னால் அமையும் எனில் - ஒருவன் தான் அறிந்த ஒருவர்க்கு உதவி செய்யத் தன்னால் முடியு மானால், தான் உவந்து ஈதல் தலை ஆம் - (அவர் கேட்கு முன்) தானே (குறிப்பறிந்து) மனமகிழ்ச்சியோடு கொடுத்தல் தலைப் பட்டதாம், ஆனதனால் சொன்னால் புரிதல் இடை - ஆகை யினால் அவர் கேட்ட பிறகு உதவுதல் இடைப்பட்டதாம், சொல்லியும் பல் நாள் மறுத்து - அவர் கேட்ட பிறகும் பலநாள் தாழ்த்து, பின் நாள் புரிவது பின் - பின்பு உதவுவது கடைப் பட்டதாம். அறிந்தோர் - புதிய இரவலரன்றி முன்னமே தெரிந்தவர், நண்பர் எனினுமாம். அமைதல் - முடிதல் - கொடுக்கக் கூடுதல். உவந்து - மகிழ்ந்து. தலை - முதன்மை. தலைப் பட்டது - முதன்மை யானது. ஆனதனால் - ஆகையினால். சொல்லுதல் - கேட்டல். புரிதல் - உதவுதல். மறுத்தல் - தாழ்த்தல். புரிவது - உதவுவது. ஏ - அசை. பின் - கடை. கேளாமல் கொடுப்பது முதன்மையானது. கேட்டுக் கொடுப்பது நடுத்தரமானது. கேட்ட பின்னும் காலந் தாழ்த்திக் கொடுப்பது கடைப்பட்டதாகும் என்பதாம். பல நாள் தாழ்த்துக் கொடுத்தல் - இன்றை நாளை என இழுத்தடித்துக் கொடுத்தல். இவ்வாறு இழுத்தடிப்பதை, வாதக்கோன் நாளையென்றான் வையக்கோன் பின்னையென்றான் ஏதக்கோன் யாதொன்று மில்லையென்றான் - ஓதக்கேள் வாதக்கோன் நாளையினும் வையக்கோன் பின்னையினும் ஏதக்கோன் இல்லை இனிது. என்னும் பாடல் இனிது விளக்கும். குறிப்பறிந்து, அல்லது கேட்டதும் உதவுதல் வேண்டும் என்பது கருத்து. (23) 731. உத்தமர்தா மீயுமிடத் தோங்குபனை போல்வரே மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே - முத்தலரும் ஆங்கமுகு போல்வா ரதம ரவர்களே தேங்கதலி யும்போல்வார் தேர்ந்து. (நீவெ) தேர்ந்து ஈயும் இடத்து - குறிப்பறிந்து கொடுக்கும் தன்மையில், உத்தமர் ஓங்கு பனை போல்வர் - தலையாயர் உயர்ந்த பனை மரத்தைப் போல்வர், மத்திமர் தெங்குதனை மானுவர் - இடையாயார் தென்னைமரத்தைப்போல்வர், அதமர் முத்து அலரும் கமுகு போல்வர் - கடையாயார் முத்தைப் போலப் பூக்கும் பாக்கு மரத்தைப் போல்வர், அவர்களே தேங் கதலியும் போல்வர் - அக்கடையாயார் தித்திக்கப் பழம் பழுக்கின்ற வாழை மரத்தையும் போல்வர். உத்தமர் - மேன்மக்கள். தாம் - அசை. இடம் - இங்கு தன்மை. ஓங்குதல் - உயர்தல். மத்திமர் - நடுத்தரமானவர் - இடையாயார். தெங்கு - தென்னை. மானுவர் - போல்வர். அலர்தல் - மலர்தல். ஆம் - அசை. கமுகு - பாக்கு. அதமர் - கீழ் மக்கள். அவர்களே - அக்கீழ் மக்கள். தேம் - இனிப்பு. கதலி - வாழை. தேர்ந்து - ஆராய்ந்து - குறிப்பறிந்து. பனைமரம் தண்ணீர் ஊற்றுதல் முதலிய யாதொரு உதவியும் செய்யாமல் பழந் தருகிறது. அதுபோல, மேன் மக்கள் யாதொரு எதிருதவியையும் நாடாமல் ஈவர். தென்னைமரம் இடையிடையே நீர் விட்டால் காய் தருகிறது. அது போல, இடையாயார் எதிருதவியை நாடியே கொடுப்பர். கமுகும் வாழையும் எப்போதும் நீர் பாய்ச்சினால்தான் பலன்தரும். அதுபோல, கீழ்மக்கள் உதவிக்கே உதவுவர் என்பதாம். அல்லதூஉம், பனம்பழம் தானாகவே பழுத்துவிழும். அது போல, தலையாயார் கேளாமல் தாமே தருவர். தென்னை மரத்தில் ஏறிக் காய் பறிக்க வேண்டும். அது போல, இடையா யார் கேட்டால்தான் தருவர். கமுகங்காயை ஏறிப் பறித்துப் பாக்கை வேக வைத்தால்தான் பயன்படும் வாழைக் காயையும் வெட்டிப் புகைபோட்டால்தான் பழுத்துத் தின்னப் பயன்படும். அது போல, கடையாயார் வற்புறுத்திக் கேட்டால்தான் தருவர் என்பதுங் கொள்க. மேன்மக்கள் ஏழைகளுக்கு இயன்ற அளவு தாமே கொடுப்பர் என்பதாம். எதிருதவி கருதாமல் ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பது கருத்து. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு. (குறள்) (24) 732. எட்டுணை யானும் இரவாது தானீதல் எத்துணையும் ஆற்ற வினிது. (இனி) எள்துணை ஆனும் இரவாது தான் ஈதல் - எள்ளளவு பொருளாயினும் தான் பிறரிடம் இரவாமல் தான் பிறர்க்குக் கொடுத்தல், எத்துணையும் ஆற்ற இனிது. எவ்வகையினும் மிகவும் நல்லது. எள் - சிறுமைக்கு எடுத்துக்காட்டு. துணை - அளவு. எத்துணையும் - எவ்வகையினும் - எப்படிப் பார்க்கினும் என்ற படி. எள்ளளவு சிறிய பொருளாயினும் பிறரிடம் தான் இரவாமல், பிறர்க்குத் தான் கொடுத்தல் எவ்வகையினும் நல்லது என்பதாம். ஈகையின் சிறப்புக் கூறுவார், இரவாமையின் சிறப்பும் உடன் கூறினார். நல்லா றெனினும் கொளல்தீது. (குறள்) ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற் கிரவின் இளிவந்த தில். (குறள்) (25) 733. முட்டிற் பெரும்பொரு ளாக்கியக்கால் மற்றது தக்குழி யீத லினிது. (இனி) முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால் - குறை யில்லாத பெரும் பொருளைத் தேடினால், அது தக்குழி ஈதல் இனிது - அப்பொருளைத் தகுதியானவர்க்குக் கொடுத்தல் நல்லது. முட்டு - தட்டுப்பாடு, குறை. பொருட்கு முட்டாவது - கொடுத்தால் குறைதல். ஆக்குதல் - தேடுதல். மற்று - அசை. தகு உழி - தக்குழி. உழி - இடம். தக்குழி - தக்க இடம் - தக்கார் என்றபடி. தக்கார் - ஏற்கத் தகுதியுடைய எளியர். ஒருவன் குறையில்லாத பெரும் பொருள் ஈட்டினால், அதில் இயன்ற அளவு இல்லார்க்குக் கொடுக்க வேண்டும் என்பதாம். செல்வத்துப் பயனே ஈதல். (புறம்) (26) 734. நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிது. (இனி) நச்சி தன் சென்றார் - (ஒருபொருளை) விரும்பி தன்னை அடைந்தவரது, நசை கொல்லா மாண்பு இனிது - விருப்பத் தைக் கெடுக்காத குணம் நல்லது. நச்சுதல் - விரும்புதல். நசை - விருப்பம். கொல்லுதல் - கொடுத்தல். மாண்பு - குணம். குணத்தை யுடையவனாதல் நல்லது என்றபடி. ஒன்றை விரும்பித் தன்னை அடைந்தவரது விருப்பத் தைக் கெடுக்காமல் அதனைக் கொடுத்தல் நல்லது என்பதாம். (27) 735. எத்திறத் தானும் இயைவ கரவாத பற்றினிற் பாங்கினிய தில். (இனி) எத்திறத்தானும் இயைவ கரவாத பற்றினின் - எவ்வகை யாயினும் பிறர்க்குக் கொடுக்கக் கூடியவற்றை இல்லை என்னாத பண்பினும், பாங்கு இனியது இல் - மிக நல்லது வேறொன்றும் இல்லை. திறம் - வகை. எத்திறத்தானும் - எப்படியாயினும். இயைவ - தன்னால் கொடுக்கக் கூடியவற்றை - உள்ளவற்றை. கரத்தல் - ஒளித்தல் - இல்லை எனல். பற்று - இங்கு பண்பு, குணம். பாங்கு - இனிது. பாங்கு இனிது - ஒரு பொருட் பன்மொழி. எப்படியாயினும் தன்னால் கொடுக்கக் கூடியதை இல்லை என்னாத பண்புடைமை மிகவும் நல்லது என்பதாம். இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும் வசையன்று வையத் தியற்கை. (நாலடி) ஆகலின், ‘இயைவகரவாத’ என்றார். (28) 736. எளிய ரிவரென் றிகழ்ந்துரையா ராகி ஒளிபட வாழ்த லினிது. (இனி) இவர் எளியர் என்று இகழ்ந்து உரையார் ஆகி - இவர் வறியவர் என்று எண்ணிப் பழித்துக் கூறாமல், ஒளிபட வாழ்தல் இனிது - (அவர் விரும்புவதைக் கொடுத்துப்) புகழ் உண்டாக வாழ்வது நல்லது. எளியவர் இவர் என்று இகழ்ந்து உரைத்தல் - செல்வச் செருக்கால், தம்மிடம் ஒன்றை நாடி வரும் எளியவரை எளியர் என்று எண்ணிப் பழித்துக் கூறுதல். ஒளி - புகழ். அது புகழுக்குக் காரண மான ஈகையை உணர்த்திற்று. நம்மிடம் வரும் இரவலரை எளியரென் றிகழாமல் அவர் விரும்புவதை ஈந்து புகழுடன் வாழ வேண்டும் என்பதாம். ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை யுயிர்க்கு. (குறள்) (29) 737. ஈத்துண்பா னென்பான் இசைநடுவான். (நான்) ஈத்து உண்பான் என்பான் - பிறர்க்குக் கொடுத்து உண்பவன் என்று சிறப்பித்துக் கூறப்படுவான், இசை நடுவான் - உலகத்தில் புகழை நிலை நிறுத்துவான். ஈத்து - ஈந்து - வலித்தல் விகாரம். இசை - புகழ். நடுதல் - நிலை நிறுத்துதல். பிறர்க்குக் கொடுத்து வாழ்வோர்க்கு உலகில் புகழ் நிலை பெறும் என்பதாம். “ஈதல் இசைபட வாழ்தல்” (குறள் - 231) என்றார் வள்ளுவர். இதுவே வாழ்க்கைப் பயனாகும். (30) 738. ஈர முடைமை ஈகையி னறிப. (முது) ஈரம் உடைமை - ஒருவன் அருளுடையவன் என்பதை, ஈகையின் அறிப - அவன் ஏழைகட்குக் கொடுப்பதனால் அறிவர். ஈரம் - அருள், இரக்கம். அறிப - அறிவர். ஒருவனிடம் அருள் உண்டென்பதற்கு அவனுடைய ஈகையே அறிகுறியாகும். இல்லார் பால் அருள் கொண்டு ஈயவேண்டும் என்பது கருத்து. (31) 739. பேணி லீகை மாற்றலிற் றுவ்வாது. (முது) பேண் இல் ஈகை - விருப்ப மில்லாது கொடுக்கும் கொடை யானது, மாற்றலின் துவ்வாது - இல்லையென்று மறுத்து ரைத்தலின் வேறாகாது. மறுத்துரைத்தலேயாம் என்றபடி. பேணுதல் - விரும்புதல். மாற்றல் - மறுத்துரைத்தல். அதாவது இல்லை யென்றல். துவ்வுதல் - நீங்குதல். துவ்வாது - நீங்காது. மறுத்துரைத்தலில் துவ்வாது - மறுத்துரைத்தலே. விருப்பமில்லாத ஈகை, ஈயாமையின் வேறாகாது; ஈயாமை யோ டொக்கும் என்பதாம். 740. பொய்வே ளாண்மை புலைமையிற் றுவ்வாது. (முது) பொய் வேளாண்மை - விருப்பமில்லா விட்டாலும் விருப்ப முடையவர் போல் கொடுக்கும் கொடையானது, புலைமையின் துவ்வாது - கீழ்மைத் தன்மையின் நீங்காது. வேளாண்மை - ஈகை. புலைமை - கீழ்மை - கீழோரது தன்மை. புலைமையின் துவ்வாது - கீழ்மைத் தன்மையோ டொக்கும் என்றபடி. மனமாரக் கொடாத கொடை கீழோரது தன்மையோ டொக்கும் என்பதாம். கீழோரது தன்மையாவது - கொடுப்பது கடமையென்று கொடாது, ஒரு பயன்கருதிக் கொடுத்தலாம். (33) 741. இரப்போர்க் கீதலின் எய்துஞ் சிறப்பில்லை. (முது) இரப்போர்க்கு ஈதலின் - இரப்பவர்க்குக் கொடுப் பதைக் காட்டிலும், எய்தும் சிறப்பு இல்லை- ஒருவன் அடைதலான மேன்மை வேறில்லை. எய்தல் - அடைதல். ஈகை போல் புகழ்தருவது வேறொன்றில்லை என்பதாம். உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ். (குறள்) (34) 742. இல்லோ ரிரப்பதும் இயல்பே யியல்பே இரந்தோர்க் கீவதும் உடையோர் கடனே. (வெற்) இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே - பொருள் இல்லாதவர் உள்ளவரிடம் தமக்கு வேண்டிய தொன்றைக் கேட்பதும் இயற்கையே யாம்; இரந்தோர்க்கு ஈவதும் - அங்ஙனம் கேட் போர்க்கு இல்லை யென்னாமல் கொடுப்பதும், உடையோர் கடனே - பொருளுடையோர் கடமையேயாம். வேண்டிய அளவு நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் வாய்ப்பில்லாத வயல் நீர் வேண்டுவதும், நிரம்ப நீரைத் தேக்கி வைத்திருக்கும் வாய்ப்பினையுடைய ஏரி நீருதவுவதும் போன்றதே, இல்லோர் இரப்பதும் உடையோர் ஈவதும் எனக் கொள்க. நீர் வேண்டுதல் வயலின் இயல்பு; நீருதவல் ஏரியின் கடமை. இவ்வுண்மையை உணர்ந்து உள்ளோர் இல்லோர்க்குக் கொடுக்க வேண்டும் என்பது கருத்து. (35) 743. இயல்வது கரவேல். (ஆத்) இயல்வது - உன்னால் கொடுக்கக் கூடியதை, கரவேல் - இல்லை என்னாதே. இயல்வது - கொடுக்கக் கூடியது - உள்ளது. கரத்தல் - ஒளித்தல் - இல்லையென்றல். நம்மால் கொடுக்கக் கூடியதைக் கேட்பவர்க்கு இல்லை யென்னாமல் கொடுக்க வேண்டும் என்பதாம். (36) 744. ஐய மிட்டுண். (ஆத்) ஐயம் இட்டு - இரப்பவர்க்குக் கொடுத்து, உண் - நீயும் உண். ஐயம் - கொடை. உண்ணுதல் - வாழ்தல் என்னும் பொருட்டு. இட்டு உண்டு வாழ்தல் என்றபடி. இல்லார்க்கு உதவி வாழ வேண்டும் என்பது கருத்து. (37) 745. தானமது விரும்பு. (ஆத்) தானம் அது - இல்லார்க்கு ஈதலை, விரும்பு - நீ விரும்பு. தானம் - ஈகை, கொடை. இல்லார் நிலைக்கிரங்கி, அவர் கேட்பதை விரும்பிக் கொடுக்க வேண்டும் என்பதாம். (38) 746. சையொத் திருந்தால் ஐய மிட்டுண். (கொன்) சை ஒத்து இருந்தால் - உனக்கு வேண்டிய அளவு பொருள் இருந்தால், ஐயம் இட்டு உண் - இல்லார்க்குக் கொடுத்து உண்டு வாழ்வாயாக. சை - பொருள். ஒத்திருத்தல் - பொருந்தியிருத்தல். மிகுதி யாக இருத்தல். செல்வமிக்கவர்கள் இல்லார்க்கு உதவி வாழ வேண்டு மென்பதாம். (39) 49. ஈயாமை அஃதாவது, ஈயாமையின் இழிவு கூறுகிறது. 747. இசையா வொருபொருள் இல்லென்றல் யார்க்கும் வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ செய்ந்நன்றி கொன்றாரிற் குற்ற முடைத்து. (நால) நிரை தொடீஇ - ஒழுங்காக வளையல்களை அணிந்த வளே, இசையா ஒரு பொருள் இல் என்றல் யார்க்கும் வசை அன்று - தம்மால் கொடுக்க முடியாததொரு பொருளை இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லுதல் எவர்க்கும் பழிப்பா காது; வையத்து இயற்கை - இது உலக மக்களின் இயல்பாம்; நின்று ஓடி நசை அழுங்க பொய்த்தல் - கொடுப்பவர்போலக் காட்டி நெடு நாட் கழித்து இரவலர் விருப்பங் கெடும்படி இல்லையென்றல், செய்நன்றி கொன்றாரின் குற்றம் உடைத்து - தமக்குப் பிறர் செய்த நன்றியை மறந்தவரது குற்றத்திலும் மிக்க குற்றமுடையது. இசையா - இசையாத - கொடுக்க முடியாத. வசை - பழிப்பு. வையம் - உலக மக்கள். நசை - விருப்பம் - ஆசை. அழுங்கல் - கெடுதல். நின்று - கொடுப்பது போலக் குறிப்புக் காட்டி, கொடுப்ப தாகச் சொல்லி எனினுமாம். ஓடுதல் - நீளுதல்; இங்கு கால நீட்டிப்பு. பொய்த்தல் - இல்லை யென்றல். நிரை - ஒழுங்கு. தொடி வளையல். தொடீஇ - மகடூஉ முன்னிலை. கொல்லுதல் - கெடுத்தல் - மறத்தல். மேலோர்கள் தம்மால் கொடுக்க முடியாத ஒரு பொருளை - தம்மிடம் இல்லாததொன்றை - ஒருவர் கேட்டால் அப் பொழுதே இல்லையென்று சொல்லிவிடுவர். இது குற்றமன்று, இயல்பாகும். கீழ்மக்களோ கொடுப்பதாகப் பல நாள் ஆசை காட்டிக் கடைசியில் அவர் ஆசை கெடும்படி இல்லையென்று சொல்லிவிடுவர். இது எல்லாக் குற்றங் களிலும் பெரியதொரு குற்றம் என்பதாம். குற்றங்களிலெல்லாம் பெரியகுற்றம் செந்நன்றி மறத்தல். அதைவிடப் பெரியகுற்றம் ஆசை காட்டி இல்லையென்றல் என்பது கருத்து. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (குறள்) இனி, நின்று நசை அழுங்க ஓடிப் பொய்த்தல் - இரவலன் நெடுநேரம் நின்று ஆசை கெடும்படி ஓடி ஒளித்தல் என்றுங் கொள்ளலாம். தம்மால் கொடுக்க முடியாததொன்றைக் கேட்ட அப் பொழுதே இல்லையென்றுசொல்லிவிடுதல் இயல்பாம். பல நாள் கொடுப்பதாக ஆசைகாட்டிக் கடைசியில் இல்லை யென்றல் பெருங்குற்றமாகும் என்பது கருத்து. ‘வாதக் கோன் நாளை யென்றான்’ என்ற முன் எடுத்துக்காட்டுச் செய்யுளைப் பார்க்க. (1) 748. எத்துணை யானும் இயைந்த வளவினாற் சிற்றறஞ் செய்தார் தலைப்படுவர் - மற்றைப் பெருஞ்செல்வ மெய்தியக்காற் பின்னறிது மென்பார் அழிந்தார் பழிகடலத் துள். (நால) எத்துணை ஆனும் இயைந்த அளவினால் - எவ்வளவா னாலும் தமக்கு முடியுமளவில், சிறு அறம் செய்தார் தலைப் படுவர் - சிறிய உதவியேனும் செய்தவர் மேன்மையடைவர், மற்றைப் பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின் அறிதும் என்பார் - இங்ஙனம் அவ்வப்பொழுது இயன்றது கொடாது பெருஞ் செல்வங் கிடைத்தால் அதன்பின் கொடுப்போம் என்று இருப்பார், பழி கடலத்துள் அழிந்தார் - உலகப் பழியாகிய கடலுள் பட்டுச் சிதைந்தவராவர். எத்துணை - எவ்வளவு இயைந்த அளவு - உள்ள பொருளுக் கேற்ற அளவு. அறம் - உதவி, ஈகை. தலைப் படுதல் - மேம்படுதல் - மேன்மக்களெனப் புகழப்படுதல். மற்றை - அவ்வாறு கொடாது - அவ்வப்பொழுது இயன்றது கொடாது. அறிதும் - கொடுப் போம். அழிதல் - கெடுதல். கடல் அத்து உள். அத்து - சாரியை. பழிகடல் - பழியாகிய கடல் - உருவகம்; பெரும்பழி என்பது. பழிக்கடல் என்பது தொகுத்தல். பொருள் கிடைத்த அவ்வப்போது இயன்ற அளவு உதவாமல் பெருஞ் செல்வங் கிடைத்தால் உதவுவோ மென்றி ருப்போர், உலகத்தாரால் பழிக்கப்படுவர் என்பதாம். பெருஞ் செல்வம் பெறுவது உறுதியின்மையானும், ‘நாய் காணிற் கற் காணாவாறு போல’ கொடுக்க எண்ணும் போது செல்வம் அழிந்து போதலும் கூடுமாகையாலும், அவ்வப் பொழுது இயன்ற அளவு உதவவேண்டும் என்பது கருத்து. (2) 749. துய்த்துக் கழியான் றுறவோர்க்கொன் றீகலான் வைத்துக் கழியும் மடவோனை - வைத்த பொருளு மவனை நகுமே யுலகத் தருளு மவனை நகும். (நால) துய்த்துக் கழியான் - (வருத்தப்பட்டுத் தேடிய செல்வத் தைத்) தானும் செலவு செய்து வாழாமலும், துறவோர்க்கு ஒன்று ஈகலான் - துறவறத்தார்க்கு ஏதாவதொரு பொருளை யேனும் கொடாமலும், வைத்துக் கழியும் மட வோனை - வீணாக வைத்திருக்கின்ற அறிவில்லாத அப்பிசினை, வைத்த பொருளும் அவனை நகும் - அவன் தேடி வைத்த அச்செல்வமும் அவனைப் பார்த்துச் சிரிக்கும், உலகத்து அருளும் அவனை நகும் - உலகத்தில் விளங்குகின்ற அருளென்னும் சிறந்த குணமும் அவனைப் பார்த்துச் சிரிக்கும். துய்த்தல் - பயன்படுத்தல் - அநுபவித்தல். கழிதல் - வாழ்தல். ஈகலான் - ஈயான். மடவோன் - அறிவில்லாதவன். நகும் - சிரிக்கும், இகழும். அருள் - இரக்கம். ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்னும் அறவுரைப்படி, செல்வ மிகுந்தும் எளியார்க்கு உதவுதலாகிய அருள் சிறிது மில்லானாகையால் அருளும், பொருளைத் தானும் பயன் படுத்தாமல் பிறர்க்குங் கொடாமல் வீணாக வைத்திருப்பதால் பொருளும் அவனை நகுதலாயின. பிறர்க்குக் கொடா விட்டாலும் தானாவது பயன்படுத் தலாமே, அதுவுஞ் செய்யாது வீணாகச் சேர்த்து வைக்கும் அறியாமையைக் கண்டு பொருள் சிரிப்பதாயிற்று. உலகத்தார், ‘அருளிலன், பிசினன்’ என்று இகழ்வதைப் பொருள் மேலும் அருள்மேலும் ஏற்றி அவை நகும் என்றார். வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் அஞ்சு மகத்தே நகும். என்ற குறளோடு ஒப்பிடுக. எளியார்க் கீயாச் செல்வர் இகழப்படுவர் என்பது கருத்து. (3) 750. எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை எனதென தென்றிருப்பன் யானும் - தனதாயின் தானு மதனை வழங்கான் பயன்றுவ்வான் யானு மதனை யது. (நால) எனது எனது என்று இருக்கும் ஏழை பொருளை - ‘என்னுடையது என்னுடையது’ என்று மிக்க பற்றுக் கொண்டு செலவு செய்யாமல் வைத்திருக்கும் அறிவில்லாதவன் செல்வத்தை, யானும் எனது எனது என்றிருப்பன் - (அச்செல்வத் தோடு யாதொரு தொடர்பும் இல்லாத) யானும் என்னுடையது என்னுடையது என்று கூறிக் களிப்புற்றிருப்பேன், தனது ஆயின் - அச்செல்வம் அவனுடையதாய் இருக்குமானால், தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான் - அவனும் அச் செல்வத்தைப் பிறர்க்குக் கொடுத்தலும் தான் பயன் படுத்தலுங் கூடுமல்லவா? அவ்வாறு செய்கிறதில்லை, யானும் அதனை அது - நானும் அச்செல்வத்தை, அவ்வாறே - அவனைப் போலவே - பிறர்க்குக் கொடுத்தலும் பயன் படுத்தலும் செய்யேன். எனது எனது - அடுக்கு, செல்வத்தினிடத்துள்ள மிக்க அன்பை விளக்க வந்தது. ஏழை - அறிவில்லாதவன். வழங்குதல் - கொடுத்தல். பயன்துய்த்தல் - செல்வத்தைச் செலவு செய்து இன்புறுதல். செல்வத்தை வருந்தித் தேடிய அறிவில்லாத பிசினன் அதைப் பயன்படுத்தாமல் ‘எனது’ என்று சொல்வதற்கும், தேடாதவன் அப்படிச் சொல்வதற்கும் யாதொரு வேறுபாடும் இல்லை. ஏனெனில், செல்வத்தின் பயனாகிய தான் துய்தல், பிறர்க்குக் கொடுத்தல் என்னும் இருவகைப் பயனும் இருவர்க்கும் இல்லையாதலால் என்பது கருத்து. அறிவில்லாத பிசினன் ஒருவனை ஒருவன் பகடி செய்வ தாக இச்செய்யுள் செய்யப்பட்டது. பகடி - விகடம் - கேலி. இப்பாட்டு நகைச்சுவையுடையது. தானும் பயன்படுத்திப் பிறர்க்குங் கொடுத்து வாழ்தலே செல்வத்தின் பயனாகும். அங்ஙனம் செய்யார் செல்வத்தின் பயனறியாமையோடு, பலராலும் இகழப்படுவர் என்பது கருத்து. ஈத்துவக்கு மின்ப மறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். (குறள்) (4) 751. வழங்காத செல்வரின் நல்கூர்ந்தா ருய்ந்தார் இழந்தா ரெனப்படுத லுய்ந்தார் - உழந்ததனைக் காப்புய்ந்தார் கல்லுதலு முய்ந்தார்தங் கைந்நோவ யாப்புய்ந்தா ருய்ந்த பல. (நால) வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உயர்ந்தார் - பொருளைப் பயன்படுத்தாத செல்வர்களினும் வறுமையுடை யோர் துன்பங் களினின்றும் தப்பினார், (எப்படியெனில்) இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் - பொருளை இழந்து விட்டார் என்கின்ற பழிப்பினின்றும் தப்பினார், அதனை உழந்து காப்பு உய்ந்தார் - அப்பொருளை வருந்திக் காக்கின்ற துன்பத்தினின்றும் தப்பினார், கல்லுதலும் உய்ந்தார் - அப்பொருளைப் புதைத்து வைத்தற் பொருட்டு நிலத்தைத் தோண்டுகின்ற வருத்தத்தி னின்றும் தப்பினார், தம் கை நோவ யாப்பு உலந்தார் - தம் கைகள் நோகும்படி இறுகப் பிடித்தலினின்றும் தப்பினார், உயர்ந்த பல - இங்ஙனம் அவ்வறியவர் தப்பினவை இன்னும் பல உண்டு. வழங்குதல் - செலவு செய்தல். நல்கூர்தல் - வறுமை யுறுதல். உய்தல் - தப்புதல். உழந்து - வருந்தி. காப்பு - காத்தல். கல்லுதல் - தோண்டுதல். யாத்தல் - இறுகப் பிடித்தல். பொருளைத் தேடுதலும் அழியாமல் காத்தலும், குறைந் தாலும், தொலைந்தாலும் துன்பமாதலால் (நாலடி - 280), வறியவர் - இழந்தாரென்று பிறர் பழிப்பதினின்றுந் தப்பினார், வருந்திக் காத்தலினின்றுந் தப்பினார், அதைப் புதைத்து வைக்க மண்ணைத் தோண்டுதலினின்றுந் தப்பினார், பொருளைச் செலவிடாமல் இறுகப் பிடித்துக் கைந்நோதலினின்றுந் தப்பினார் என்றார். அதாவது, பொருளில்லார்க்கு அதை இழத்தலோ காத்தலோ, புதைத்து வைக்கவேண்டிய வேலையோ, கெட்டி யாகப் பிடிக்க வேண்டிய வேலையோ இல்லையாதலால், அது பற்றிய துன்பங்கள் அவர்க்கு இல்லை. பொருளைப் பயன் படுத்தாத பிசினர்களுக்கோ அவ்வகைத் துன்பங்கள் பல உண்டு. அத்தகைய துன்பங்கள் பலபட்டுப் பொருளைக் காப்பதைவிட அதை நல்வழியில் செல விட்டு அத்தகைய துன்பங்கள் யாதும் இல்லாமல் இருத்தலோடு பெரும்புகழும் அடைதல் வேண்டும் என்பதாம். தாமும் பயன்படுத்திப் பிறர்க்குங் கொடுத்து வாழ்வதே செல்வர்க்கழகு என்பது கருத்து. (5) 752. தனதாகத் தான்கொடான் தாயத் தவரும் தமதாய போழ்தே கொடாஅர் - தனதாக முன்னே கொடுப்பின் அவர்கடியார் தான்கடியான் பின்னே யவர்கொடுக்கும் போழ்து. (நால) (ஒரு சில குடும்பத்தில் பொருள் ஈட்டி வைத்தவன்) தனது ஆகத் தான் கொடான் - அப்பொருள் தனக்கு உரிய தாயிருக்க அப்பொழுது அவனும் அப்பொருளைப் பிறர்க்குக் கொடான், தாயத்தவரும் தமது ஆய போழ்தே கொடார் - அவன் பங்காளி களும் அவனுக்குப் பின் அப்பொருள் தம்முடையதாகிய பொழுது அவரும் அதனைப் பிறர்க்குக் கொடார். முன்னே தனது ஆகக் கொடுப்பின் அவர் கடியார் - தேடியவன் வாழ்ந்த காலத்தே அச்செல்வம் அவனுடையதாயிருக்கையில் அதை அவன் பிறர்க்குக் கொடுத்தால் அத்தாயத்தார் விலக்க மாட்டார், பின்னை அவர் கொடுக்கும் போழ்து தான் கடியான் - அவன் இறந்த பின் அச்செல்வம் தாயத்தாருடையதாய் இருக்கையில் அவர் பிறர்க்குக் கொடுத்தால் அத்தேடியவன் வந்து விலக்க மாட்டான். தனது ஆக - தனக்கு உரிமையுடையதாக. தாயத்தார் - பங்காளிகள். கடிதல் - விலக்குதல். முன், பின் - காலங் குறித்தன. பொருளைத் தேடியவன் அப்பொருளைப் பிறர்க்குக் கொடுக்க வேண்டும். அப்படி அவன் கொடாமல் பிசினாரி யாய் இருந்து இறந்து விட்டானானால், அவனுக்குப் பின் அச் செல்வத்தை அடையும் அவன் மக்களாவது, அல்லது அவன் பங்காளிகளாவது, “பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம்” என்றபடி, அப் பொருளை இல்லார்க்குக் கொடுத்துப் புகழ் அடைய வேண்டும். அவ்வாறு செய்யாமல், அக்குடும்பத்தில் பிறக்கும் ஒவ்வொரு வரும் பிசினர்களா யமைவதும் ஒரு சில குடும்பங் களில் உண்டு. அத்தகைய குடும்பத் தைப் பற்றியது இச்செய்யுள். தந்தை கொடாமல் பிசினன் என்னும் இழிபெயருடன் இறக்கின், அவன் மைந்தர் கொடுத்துத் தந்தையின் அவ்விழி பெயரைப் போக்குதலோடு, புகழடைந்து தம் தந்தையால் தம் குடும்பத்திற்கு உண்டான இழிவை - கெட்ட பெயரை - போக்க வேண்டும். மைந்தரும் தந்தையின் வழியையே பின்பற்றக் கூடாது என்பதாம். செல்வத்தைத் தேடினவன் கொடுத்தால் அச்செல்வம் அவனுக்குரியதாகையால், அவன் தாயத்தார் விலக்கார். அவன் இறந்த பின்பு அது அவன் தாயத்தார்க்குரியதாகையால் அவர் கொடுத்தால், அச்செல்வந் தேடினவன் இறந்து விட்ட தால் அவன் விலக்கமாட்டான். இவ்வுண்மையை அறியாத் தன்மையே பொரு ளைப் பிறர்க்குக் கொடாமைக்குக் காரணம் எனப் பொருளைக் கொடுத்தற்கு ஏதுக் கூறியவாறு. இதுவும் நகைச்சுவை யுடையதே. (6) 753. இரவலர் கன்றாக ஈவாரா வாக விரகிற் சுரப்பதாம் வண்மை - விரகின்றி வல்லவ ரூன்ற வடியாபோல் வாய்வைத்துக் கொல்லச் சுரப்பதாங் கீழ். (நால) இரவலர் கன்று ஆக - இரப்பவர் கன்றை ஒப்ப, ஈவார் ஆ ஆக - கொடுப்பவர் கற்றாவை ஒப்ப, விரகின் சுரப்பது வண்மை ஆம் - உள்ளக் கிளர்ச்சியுடன் கொடுப்பதே கொடைக் குணமாகும், விரகு இன்றி - அத்தகைய மனவெழுச்சி யின்றி, வல்லவர் ஊன்ற வடி ஆ போல் - வலிமையுடையவர் அழுத்தி வருத்தப் பால் தருகின்ற கொண்டி மாட்டைப் போல, வாய் வைத்துக் கொல்லச் சுரப்பது கீழ் ஆம் - பலவாறு வற்புறுத்திக் கேட்டு வருத்தக் கொடுப்பது கீழ்மைக் குணமாம். விரகு - ஊக்கம், மனவெழுச்சி. சுரத்தல் - பால் சுரத்தல். வண்மை - கொடைக் குணம். ஊன்ற - மடியை அழுத்த. வடித்தல் - பால் சுரத்தல். கொண்டி மாடு - அடங்காத - எளிதில் பால் சுரக்காத மாடு. வாய் வைத்துக் கொல்லுதல் - பலவாறு வற்புறுத்தி வருத்திக் கேட்டல். கொல்லுதல் - வருத்துதல். சுரத்தல் - கொடுத்தல். கீழ் - கீழ்மைக்குணம் - எளிதில் கொடாத் தன்மை. கன்றைக் கண்ட அளவில் மனவெழுச்சியோடு பால் சுரக்கும் நல்ல இன மாட்டைப் போல, இரப்பவரைக் கண்டதும் மன வெழுச்சியுடன் அவர் விரும்புவதைக் கொடுப்பது தான் கொடைக் குணமாகும். கன்று வாயால் சப்பிச்சப்பி வருத்தவும், பால் கறப் போன் அழுத்தி வருத்தவும், மனமின்றி ஒருவாறு பால் சுரக்கின்ற தாழ்ந்த இனமாடு போல, இரப்பவர் பல பேசி வற்புறுத்திக் கேட்கவும், பிறர் இகழவும் வெறுப் போடு கொடுப்பது கொடை யாகாது என்பதாம். இரவலரைக் கண்டதும் மனமுவந்து கொடுப்பதே கொடை யாகும். இரவலர் பலவாறு கெஞ்சிக் கேட்கக் கொடுப்பது கொடையாகாது என்பது கருத்து. முதலிரண்டடி உருவகம். (7) 754. வள்ளன்மை யில்லாதான் செல்வத்தின் மற்றையோன் நல்குரவே போலு நனிநல்ல - கொன்னே அருளிலன் அன்பிலன் கண்ணறைய னென்று பலரா லிகழப் படான். (நீநெ) வள்ளன்மை இல்லாதான் செல்வத்தின் - ஈகைக் குணம் இல்லாதவன் செல்வத்தை விட, மற்றையான் நல்குரவே நனி நல்ல - ஈகைக் குணம் உடையவனுடைய வறுமையே மிகவும் நல்லது, (ஏனெனில், அவ்வறியவன்), அருள் இலன் அன்பு இலன் கண்ணறை யன் என்று - அருளில்லாதவன் அன் பில்லாதவன் கண்ணோட்டம் இல்லாதவன் என்று, பலரால் கொன்னே இகழப்படான் - பலராலும் வீணாகப் பழிக்கப் படமாட்டான். வள்ளன்மை - கொடைக்குணம். மற்றையோன் - கொடைக் குணம் உள்ளவன். நல்குரவு - வறுமை. போலும் - அசை. வியப்பு எனினுமாம். நனி - மிகவும். கொன்னே - வீணாக. கண்ணறையன் - கண்ணோட்டம் இல்லாதவன். ஈகைக் குணமில்லாத செல்வர் பலராலும் இகழப் படுவர்; ஈகைக்குணமுடைய வறியர் பலராலும் புகழப்படுவர் என்பதாம். “ஈயாத செல்வர்க்கு இருந்தென்ன போயென்ன” என இகழப் படுதல் காண்க. (8) 755. தாமுங் கொடார்கொடுப்போர் தம்மையுமீ யாதவகை சேமஞ்செய் வாருஞ் சிலருண்டே - ஏமநிழல் இட்டுமலர் காய்கனிக ளீந்துதவு நன்மரத்தைக் கட்டுமுடை முள்ளெனவே காண். (நீவெ) ஏமம் நிழல் இட்டு மலர் காய் கனி ஈந்து உதவும் - நல்ல நிழலைச் செய்து மலரும் காயும் பழமும் கொடுத்து உதவு கின்ற, நல் மரத்தைக் கட்டும் உடைமுள் என - நல்ல மரத்தின் கண் கட்டுகின்ற வேலா முள்ளைப் போல. தாமும் கொடார் - தாமும் கொடாமல், கொடுப்போர் தம்மையும் ஈயாவகை சேமம் செய்வாரும் சிலர் உண்டு - கொடுக்கும் பிறரையும் கொடாதபடி தடுப்பவரும் சிலர் உண்டு. சேமம் - காவல், தடை. ஏமம் - இனிய, நல்ல. நிழல் இட்டு - நிழலைச் செய்து, தந்து. மரத்தை - மரத்தின் கண். உருபு மயக்கம். உடை - வேலாமரம். காண் - அசை. மாமரம். தென்னை மரம் முதலிய மரங்களில் பிறர் ஏறிக் காய் பறிக்காமல் இருத்தற் பொருட்டு அடிமரத்தில் இலந்தை முள், வேலாமுள் முதலிய முட்களைக் கட்டி வைத்தல் வழக்கம். வேலா மரத்தில் முள் இருப்பதால் அதிலும் ஏறிக்காய் பறிக்க முடியாது; மா, தென்னை முதலிய மரங்களில் ஏறிக் காய் பறிக்கவும் விடாமல் தடுக்கிறது. அதுபோல, தாமுங் கொடாமல் கொடுப் போரையுந் தடுப்போரும் சிலர் உண்டு என்பதாம். (9) 756. உற்றபே ராசை கருதி அறனொரூஉம் ஒற்க மிலாமை யினிது. (இனி) உற்ற பேராசை கருதி - பெருஞ் செல்வராக வேண்டும் என்ற பேராசையை எண்ணி, அறன் ஒரூஉம் ஒற்கம் இலாமை இனிது - ஈகைக் குணம் நீங்குதற்குக் காரணமான மனத் தளர்ச்சி இல்லாமை நல்லது உற்ற - தோன்றிய, பெருஞ் செல்வர் ஆகவேண்டும் என்று மனத்துள் தோன்றிய. கருதி - எண்ணி. அறம் - இங்கு ஈகை. ஒரூஉம் - நீங்குதல் - சொல்லிசை அளபெடை. ஒற்கம் - மனத் தளர்ச்சி. அதாவது கொடுத்தால் குறைந்து விடும் என்ற அச்சம். அவ் வச்சத்தால் தளர்ச்சி உண்டாகு மென்க. பெருஞ் செல்வராக வேண்டும் என்ற ஆசையால், கொடுத் தால் குறைந்து விடும் என்று அஞ்சிக் கொடாமல் இராது கொடுத்தல் நல்லது என்பதாம். (10) 757. இலமென்னும் வன்மையில் வன்பாட்ட தில். (நான்) இலம் என்னும் வன்மையில் - இரப்பவரிடம் ‘யாம் இலம்’ என்று கூறும் மனவுறுதியை விட, வன்பாட்டது இல் - வன்மை யுடையது வேறில்லை. இலம் - வறியேம். வன்பாட்டது - வன்மையுடையது, உறுதியானது. இரப்பவரிடம் ‘யாம் வறியேம்; கொடுப்பதற் கொன்றும் இல்லை’ எனக் கூற யார்க்கும் துணிவுண்டாகாதாகையால், ‘வன்மையில் வன்பாட்டது இல்’ என்றார். அவ்வாறு இல்லை எனல் கொடுமை என இகழ்ந்தவாறு. இலனென்னு மெவ்வ முரையாமை யீதல் குலனுடையான் கண்ணே யுள. (குறள்) இரப்பவர்க்கு இல்லையெனல் கொடுமையாகும். (11) 758. தானோ ரின்புறல் தனிமையிற் றுவ்வாது. (முது) தான் ஓர் இன்புறல் - தானொருவனே இன்புற்றிருப்பது, தனிமையில் துவ்வாது - வறுமையின் நீங்காது. வறுமையே யாகும். பொருளில்லாதவன் இரந்து பெற்றதைத் தனியாக உண்பான். அவ்வறியன் போன்றவனே, பிறர்க்குக் கொடாது தான் மட்டும் உண்டு வாழும் செல்வன். ஆகையால், அவ் வேழையின் வறுமையைத் தனிமையென்றார். எனவே. பிறர்க்குக் கொடாது தான் மட்டும் உண்டு வாழும் வறியவனே யாவான் என்பதாம். இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல். (குறள்) (12) 759. சோராக் கையன் சொன்மலை யல்லன். (முது) சோராக் கையன் - பிறர்க்கு ஒன்றுங் கொடாதவன். சொல் மலை அல்லன் - மலைபோன்ற புகழையுடையவன் ஆகான். சோரா - சோராத. சோர்தல் - நெகிழ்தல். சோராக் கையன் - நெகிழ்ச்சி யில்லாத கையை யுடையவன். கொடாதவன் என்ற படி. சொல் - புகழ். சொல் மலை - மலைச்சொல் - மலைபோன்ற புகழ். பிறர்க்குக் கொடாதவன் பெரும்புகழை யடைய மாட்டான் என்பதாம். உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ். (குறள்) (13) 760. இயைவது கரத்தலிற் கொடுமை யில்லை. (முது) இயைவது கரத்தலின் - தன்னால் கொடுக்கக் கூடிய தொன்றை இல்லை என்பதை விட, கொடுமை இல்லை - கொடுமையான செய்கை வேறில்லை. இயைவது - உள்ளது, கொடுக்கக் கூடியது. கரத்தல் - ஒளித்தல், இல்லையென்றல். கொடுக்க முடிந்ததை இல்லை என்றல் கொடுமையினுங் கொடுமை என்பதாம். (14) 761. ஈவது விலக்கேல். (ஆத்) ஈவது - ஒருவர் கொடுப்பதை, விலக்கேல் - கொடுக்க வேண்டாம் என்று தடுக்காதே. கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் (குறள்) என, பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் பட்டுக் கொடுக்க வேண்டாம் என விலக்குபவன் தான் கெடுவதோடு, அவன் சுற்றமும் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடுமாகையால், ‘ஈவது விலக்கேல்’ என்றார். ஈவது விலக்கல், ஈயாமையினும் கொடுமை என்பதாம். தன்னால் கொடுக்கமுடியாவிட்டாலும் பிறர் கொடுப்பதை விலக்காமலிருப்பது நல்லது என்பது கருத்து. (15) 50. சுற்றந்தழுவல் அதாவது - சுற்றத்தாரைத் தழுவிக் கொள்ளுதல். தழுவல் - தன்னிடத்தினின்றும் நீங்காமல் இருக்கச் செய்தல். 762. வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகக்கண்டு தாய்மறந் தாஅங் கசாஅத்தா னுற்ற வருத்தம் உசாஅத்தன் கேளிரைக் காணக் கெடும். (நால) வயாவும் - கருக்கொண்ட காலத்து வரும் ஒருவகை நோயையும், வருத்தமும் - அது பற்றி வரும் பல துன்பங் களையும், ஈன்றக்கால் நோவும் - கருவுயிர்க்கையில் உண்டாகும் நோவையும், தாய் கவான் மகக் கண்டு மறந்து ஆங்கு - தாயானவள் தன் மடியில் குழந்தையைக் கண்ட அளவில் மறந்து விடுதல் போல, அசாதான் உற்ற வருத்தம் - குடியோம் பல் தளர்ச்சியால் ஒருவன் அடைந்த துன்பமெல்லாம், உசா தன் கேளிரைக் காணக் கெடும் - குடும்ப நலன் கேட்கும் தன்மையுள்ள தனது சுற்றத்தாரைப் பார்த்த அளவில் பறந்து விடும். வயா - கருக்கொண்ட மகளிர்க்கு வரும் ஒருவகை நோய். இது மயற்கை எனப்படும். மசக்கை என வழங்கும். வருத்தம் - அக்காலத்து - சரியாக உண்ண முடியாமை, உண்டி வெறுத்தல், உண்டது கான்றல், மயக்கம் முதலியன. ஈன்றக்கால் நோவு - பிள்ளை பிறக்கும் போதுண்டாகும் வலி. கவான் - தொடை. இரு தொடைகளின் மேற்பாகம் மடி எனப்படும். மகவு - குழந்தை. மக - ஈறுகெட்டது. ஆங்கு - போல. அசா - தளர்ச்சி. உசாவுதல் - வினாவுதல், குடும்ப நலங் கேட்டல். உசாவும் இயல்புள்ள கேளிர். கேளிர் - சுற்றத்தார். அளபெடைகள் பலவந்து ஓசையின்பம் பயத்தலை அறிக. கருக்கொண்ட காலத்து வரும் மயற்கையையும், அது பற்றி வரும் பல துன்பங்களையும், பிள்ளை பிறக்கும் போதுண்டாகும் வலியையும் குழந்தையைக் கண்ட அளவில் தாய் மறந்துவிடுதல் போல, குடும்பம் நடத்துவதாலுண்டாகும் துன்பங்களெல்லாம் சுற்றத்தாரைக் கண்ட அளவில் பறந்து விடும் என்பதாம். இதனால் சுற்றந் தழுவலின் பயன் கூறப்பட்டது. (1) 763. அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம் நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம்போற பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன். (நால) அழல் மண்டு போழ்தின் - வெயிலின் வெப்பம் மிக்க காலத்தே, அடைந்தவர்கட்கு எல்லாம் - தன்னை அடைந்தவர் யாவரையும், நிழல் மரம் போல் - நிழலையுடைய மரம் வேறு பாடின்றி வெப்பந் தணித்துக் காப்பது போல, நேர் ஒப்பத் தாங்கி - துன்புற் றடைந்த சுற்றத்தார் யாவரையும் வேறுபா டின்றித் துன்பந் துடைத்துக் காத்து, பழு மரம் போல் - பழுத்த மரம் பலரும் வந்து தன் பழங்களை யுண்ணும்படி பழுப்பது போல், பல்லார் பயன் துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே - சுற்றத்தார் பலரும் வந்து தன் செல்வத்தை நுகரும்படி தான் முயன்று பொருளீட்டி வாழ்வதே, நல் ஆண் மகற்குக் கடன் - நற்குணமுள்ள ஒருவனுக்குக் கடமையாம். அழல் - வெப்பம் - வெயிலின் வெப்பம். மண்டுதல் - மிகுதல். போழ்து - பொழுது - காலம். நேர் ஒப்ப - வேறு பாடின்றி, ஒரே படித்தாய். பழுமரம் - பழுத்தமரம். பயன் -இங்கு செல்வம். துய்த்தல் - பயன்படுத்தல். வருத்தம் - முயற்சி. கடன் - கடமை. வெயிலால் வருந்தி வந்தடைந்தோர் யாவரையும் மரம் வேறுபாடின்றி நிழலைத் தந்து வெப்பந் தணித்துக் காப்பது போல, வறுமையால் வருந்தி வந்தடைந்த சுற்றத்தார் யாவரை யும் வேறு பாடின்றிப் பொருளுதவி வறுமை நீக்கிக் காத்து, மரம் தன் பழங்களைப் பலரும் உண்ணும்படி பழுப்பது போல, தனது செல்வத்தைச் சுற்றத்தார் பலரும் நுகரும்படி முயன்று பொருளீட்டி வாழ்வதே ஒருவனது கடமை என்பதாம். நிழல் மரம், சுற்றத்தார் யாவர்க்கும் வேறுபாடின்றி ஒப்ப உதவுதற்கும், பழுமரம் - அடிக்கடி சுற்றஞ் சூழ வாழ்வதற்கும் உவமை. சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன். (குறள்) (2) 764. அடுக்கன் மலைநாட தற்சேர்ந் தவரை எடுக்கல மென்னார் பெரியோர் - அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்பினு மில்லையே தன்காய் பொறுக்கலாக் கொம்பு. (நால) அடுக்கல் மலைநாட - கற்களை ஒன்றன் மேலொன்று அடுக்கி வைத்தாற் போன்ற மலைகளையுடைய நாட்டை யுடையவனே, பெரியோர் தன் சேர்ந்தவரை எடுக்கலம் என்னார் - பெருமைக் குணமுடையோர் தம்மை அடைந்த சுற்றத்தாரைத் தாங்க மாட்டோம் என்று கூறார், அடுத்து அடுத்து வன்காய் பல பல காய்ப்பினும் - நெருக்கமாக வலிய காய்கள் மிகப்பல காய்ததாலும், தன் காய் பொறுக்கலா கொம்பு இல்லையே - தன் காய்களைச் சுமக்கமாட்டாத மரக்கிளைகள் இல்லையன்றோ? அடுக்கல் - அடுக்கடுக்கான. மலைநாடா - ஆடூஉ முன்னிலை. எடுக்கலம் - தாங்கமாட்டோம். அத்தனை பேருக்கு ஆக்கிப் படைக்கும் நிலையில் நாங்கள் இல்லை என்றபடி. அடுத்து அடுத்து - மிக நெருக்கமாக. வன்காய் - பாரமான பெரிய காய். பலபல - மிகப்பல. பொறுத்தல் - சுமத்தல் - தாங்குதல். கொம்பு - மரக்கிளை. வலிய பெரிய காய்கள் எத்தனை காய்த்தாலும் எவ்வளவு மெல்லிய - சிறிய - கிளையாயிருப்பினும் அவற்றைத் தாங்குதல் இயல்பாதல் போல, பெருங்குடும்பத்தைச் சேர்ந்த சுற்றத்தார் எத்தனை பேர் வந்தாலும் தாங்கள் எவ்வளவு எளிய நிலையில் இருந்தாலும் நன்மக்கள் அவர்களை இயல்பாக வரவேற்பர் என்பதாம். குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதும் கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும் (நாலடி) மனங்கலங்காது வரவேற்று இயன்றவாறு போற்றுதலே சுற்றத்தார் கடமையாகும். (3) 765. இன்ன ரினையர் எமர்பிற ரென்னுஞ்சொல் என்னு மிலரா மியல்பினால் - துன்னித் தொலைமக்கள் துன்பந்தீர்ப் பாரேயார் மாட்டும் தலைமக்க ளாகற்பா லார். (நால) இன்னர் - இன்னார் (இவர்), இனையர் - எமர் பிறர் என்னும் சொல் - இத்தன்மையர் எமக்கு வேண்டியவர் எமக்கு வேண்டா தவர் என்று சொல்லுகின்றசொல். என்னும் இலர் ஆம் இயல்பினால் துன்னி - சிறிதும் இல்லாதவரா கின்ற தன்மையிற் பொருந்தி - இல்லாதவராய், தொலை மக்கள் துன்பம் தீர்ப்பாரே - துன்பத்தால் தளர்கின்ற சுற்றத்தார்களின் துன்பத்தைப் போக்கு வாரே, யார்மாட்டும் தலைமக்கள் ஆகல் பாலார் - எல்லாரிடத்தும் முதன்மையான சுற்றத்தாராகும் தன்மையுடையராவர். இன்னார் - இன்னார், இவர். இனையர் - இத்தன்மையர். எமர் - எம்மவர் - எமக்கு வேண்டியவர். பிறர் - எமக்கு வேண்டா தவர். என்னும் - சிறிதளவு கூட. இலர் ஆம் இயல்பினால் துன்னி - இல்லாதவராகின்ற தன்மையிற் பொருந்தி - இல்லாதவராசி என்றபடி. இயல்பு - தன்மை துன்னி - பொருந்தி. தொலை மக்கள் - தொலைகின்ற மக்கள் - நிகழ்கின்ற வினைத்தொகை. தொலைதல் - தளர்தல் - சோர்தல். மக்கள் - சுற்றத்தார் என்னும் பொருட்டு. தலை மக்கள் - முதன்மையான சுற்றத்தார், சிறந்த சுற்றத்தார். ஆகல்பாலார் - ஆகுந் தன்மையுடையார்; சிறந்த சுற்றத்தார் ஆவர் என்பது. தமது சுற்றத்தார் ஒருவர்க்கு ஏதாவது துன்பம் நேருமாயின் அவர் கெட்டகுண முடையவராயினும், தமக்கு வேண்டாதவ ராயினும், ‘இவர் கெட்ட குணமுடையவர், நமக்கு வேண்டா தவர்’ என்ற எண்ணத்தை அறவே மறந்து அவர் துன்பத்தைத் தீர்ப்பவரே சிறந்த உறவினராவர் என்பதாம். இவர் இத்தன்மையர், எமக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற சொல்லை அறவே மறந்து - அங்ஙனம் எண்ணிப்பாராது - உதவ வேண்டும் என்பது கருத்து. (4) 766. முட்டிகை போல முனியாது வைகலும் கொட்டியுண் பாருங் குறடுபோற் கைவிடுவர்; சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே நட்டா ரெனப்படு வார். (நால) முனியாது வைகலும் - ஓயாமல் நாடோறும், முட்டிகை போலக் கொட்டி உண்பாரும் - இரும்பை அடிக்கும் சம்மட்டி போலச் சுற்றத்தாரை வருத்தி யுண்டு வாழ்வோரும், குறடு போல் - இரும்பு உலைத்தீயை அணுகும் போது அதைத் தீயில் விட்டு விட்டு நீங்கும் குறடுபோல, கைவிடுவர் - அச்சுற்றத் தார்க்குத் துன்பம் வந்த காலத்து அவரைக் கைவிட்டு நீங்குவர், நட்டார் எனப்படுவார் - உண்மையான சுற்றத்தார் என்று சொல்லப் படுபவர், சுட்டுக்கோல் போல எரியும் புகுவர் - அவ்விரும்புடன் உலைத்தீயில் புகும் உலையாணிக் கோலைப் போல அச் சுற்றத்தாருடன் தாமுந் துன்புறுவர். முட்டிகை - இரும்படிக்கும் சம்மட்டி. முனியாது - வெறுப் பில்லாமல், ஓயாமல் என்றபடி. வைகலும் - நாடோறும். கொட்டி - அடித்து, வருத்தி. உண்பார் - உண்டு வாழ்வார். குறடு - சம்மட்டி யால் அடிக்கப்படும் இரும்பைப் பிடிக்கும் கருவி. கைவிடுதல் - விட்டுவிடுதல். சுட் டுக்கோல் - உலை யாணிக்கோல், உலைத்தீயில் உள்ள கரியைத் தள்ளித்தள்ளித் தீ நன்கு எரியும்படி செய்யும் முனை வளைந்த இரும்புக்கம்பி. நட்டார் - உண்மை யான சுற்றத்தார். உலைத்தீயில் வெந்து பதமான இரும்பைப் பதமுள்ள வரை யிலும் அடிக்கும் சம்மட்டிபோல, வருத்தித் தேடிய பொருளுள்ள சுற்றத்தாரை அப்பொருளுள்ளவரை சுரண்டி வாழ்ந்து வந்து, இரும்பு உலைத் தீயை அணுகும் போது அதைத் தீயில் விட்டு விட்டு நீங்கும் குறடுபோல, அச்சுற்றத் தார்க்குத் துன்பம் வந்தபோது அவரைவிட்டு நீங்குவோர் சுற்றத்தாராகார்; இரும்பு புகும் உலைத்தீயில் தானும் புகும் உலையாணிக்கோல் போல, சுற்றத் தார்க்குத் துன்பம் வந்த போது தாமும் அவரோடு துன்புறுவோரே - அவர்க்கு உதவு வோரே - உண்மையான சுற்றத்தார் ஆவர் என்பதாம். முட்டிகை, குறடு, சுட்டுக்கோல் என்னும் கொல்லன் கருவி களே இச்செய்யுளில் உவமையாகக் கொள்ளப் பட்டமை கருதத் தக்கது. முட்டிகையும் குறடும் பொய்ச் சுற்றத்தாருக்கு உவமை. சுட்டுக்கோல் உண்மைச் சுற்றத்தாருக் குவமை. இரும்பு தீயில் வெந்து பதமாவது - வருந்திப் பொருளீட்டிச் செல்வந்தராதற்கும், பதமுள்ளவரை இரும்பைச் சம்மட்டி அடிப்பது - பொருளுள்ளவரை சுரண்டியுண்டு வாழ்வதற்கும், இரும்பு தீயை அணுகினதும் விட்டு நீங்கும் குறடு - சுற்றத்தார் துன்ப முற்றதும் விட்டு நீங்குவோர்க்கும், சுட்டுக்கோல் இரும்புடன் எரிபுகுதல் - துன்புறும் சுற்றத் தாருடன் தாமும் துன்புறுதற்கும் உவமை. சம்மட்டியும் குறடும் போலல்லாமல், சுட்டுக்கோல் போன்றவரே சுற்றத்தாராவரென்பது கருத்து. (5) 767. விருப்பிலா ரில்லத்து வேறிருந் துண்ணும் வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம் - விருப்புடைத் தன்போல்வா ரில்லுட் டயங்குநீர்த் தண்புற்கை என்போ டியைந்த வமிழ்து. (நால) விருப்பு இலார் இல்லத்து - தன்மேல் அன்பில்லாத பிறர் வீட்டிலே, வேறு இருந்து உண்ணும் - தனியாக இருந்து உண்ணு கின்ற, வெருகுகண் வெங்கருணை வேம்பு ஆம் - பூனைக்கண் போல் பளபளப்பையுடைய சூடான பொரிக்கறி யுணவும் வேம்பு போலக் கைப்புடையதாகும்; விருப்பு உடை தன் போல்வார் இல்லுள் - அன்புடைய தன்னோடொத்த சுற்றத்தார் வீட்டிலே உண்கின்ற, தயங்கு நீர் தண்புற்கை - தெளிந்த நீர் வடிவமான குளிர்ந்த புல்லரிசிக் கஞ்சியும், என்போடு இயைந்த அமிழ்து - உடம்புக்கு ஒத்த அமிழ்து போல இனிப்புடைதாகும். விருப்பு - அன்பு. வேறு இருந்து - சிறப்பாகத் தனியிடத்தி லிருந்து என்றபடி, வெருகு - பூனை. கருனை - பொரிக்கறி - பொரிக் கறியோடு கூடிய விருந்து என்றபடி. தன்போல்வார் - தன் போன்ற தரமுடையவர். தயங்குதல் - தெளிதல். புற்கை - புல்லரிசிக்கஞ்சி. புல்லரிசி - புல்லில் விளைந்த அரிசி. இது மத்தங்காய்ப் புல் எனப்படும். இவ்வரிசி வரகரிசி போலிருக்கும். என்பு - உடம்பு . என்போடு இயைதல் - உடல் நலந்தருதல். அன்பில்லாத அயலார் வீட்டில் சிறப்பாகத் தனியிடத் திலிருந்து உண்ணும் விருந்தும் வேம்புபோலக் கசப்புடைய தாகும். அன்புடைய சுற்றத்தார் வீட்டில் அவர்களோடு நாலோடு நடுவி லிருந்து உண்ணும் தெளிந்த கஞ்சியும் அமிழ்தம் போல இனிக்கும் என்பதாம். சூடான உணவு சுவையோடு உடல் நலமும் தருமாகை யால், ‘வெங்கருனை’ எனவும், சூடில்லாத உணவு சுவையோடு உடல் நலமும் தராதாகையால், ‘தண்புற்கை’ எனவும் கூறினார். (6) 768. தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க் குற்ற தெமக்குற்ற தென்றுணரா விட்டக்கால் என்னாம்! இமைத்தருவி பொன்வரன்று மீர்ங்குன்ற நாட! உமிக்குற்றிக் கைவருந்து மாறு. (பழ) அருவி இமைத்து பொன் வரன்றும் ஈர்ங்குன்ற நாட - அருவி விளங்கிப் பொன்னைக் கொழிக்கும் குளிர்ந்த மலை நாடனே, தம் அடைந்தார்க்கு உற்றது - தமது சுற்றத்தார்க்கு உற்ற துன்பம், தமக்கு உற்றதே ஆக - தமக்கு உற்றதாகவே எண்ணி, எமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால் என் ஆம் - எமக்கு உற்ற துன்பத்தைப் போலவே தீர்ப்பேன் என்று ஒருவர் நினையா ராகில் அவரை நம்பிய அச்சுற்றத் தார்க்கு என்ன பயன் உண்டாம்? உமி குற்றிக் கை வருந்தும் ஆறு - உமியைக் குற்றிக் கை வருந்துவதனோ டொக்கும். உற்றதேயாக - உற்றதாக. அடைந்தார் - சுற்றத்தார். உற்றது - உற்ற துன்பம். உணர்தல் - நினைத்தல். உணரா விட்டக்கால் - உணராவிட்டால். இமைத்தல் - விளங்குதல். வரன்றுதல் - வாருதல், கொழித்தல். ஈர்ங்குன்றம் - குளிர்ந்த மலை. உமி - நெல்லுமி. குற்றுதல் - குத்துதல். உற்றார்க்கு உற்ற துன்பத்தைத் தமக்குற்ற துன்பமாகக் கொண்டு உதவாதவரோடு உறவாடுதல், உமியைக் குற்றி ஒரு நன்மையும் பெறாமல் கைசலிப்பது போல, ஒரு நன்மையும் பெறாமல் மனஞ் சலிப்பதற்கு இடமாகும் என்பதாம். இவ்வுவமையால், நெல் குற்றிக் கைவருந்தினால் அரிசி கிடைப்பதுபோல உதவுவாரோடு உறவாடினால் நன்மை கிடைக்கும் என்பதுங் கொள்க. (7) 769. அல்ல லொருவர்க் கடைந்தக்கால் மற்றவர்க்கு நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல வினைமரபின் மற்றதனை நீக்கும் அதுவே மனைமர மாய மருந்து. (பழ) ஒருவர்க்கு அல்லல் அடைந்தக்கால் - ஒருவர்க்குத் துன்பம் வந்தால், அவர்க்கு நல்ல கிளைகள் எனப்படுவார் - அவர்க்கு நெருங்கிய சுற்றத்தார் என்று சொல்லப்படுகின்றவர், நல்ல வினை மரபின் அதனை நீக்கும் அது - நன்கு உதவு முறையிலே அத் துன்பத்தை நீக்குதலான அச்செய்கை, மனை மருந்து ஆய மரம் - மனையின்கண் உள்ள மருந்தாய மரத்தோ டொக்கும். அல்லல் - துன்பம். கிளை - சுற்றத்தார். நல்ல கிளை - நெருங்கிய சுற்றத்தார். வினை - உதவி. மரபு - முறை. மற்று - அசை. மனைமரம் - மனையின்கண் உள்ளமரம். மனை - வீடு. தன்னை அடைந்தாருடைய நோயைத் தீர்ப்பது மருந்து மரத்துக்குரிய தன்மையாகும். அதுபோல, தம்மை அடைந் தாருடைய துன்பத்தைப் போக்குவது சுற்றத்தார்க்குரிய இலக்கண மாகும் என்பதாம். மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம் பெருந்தகை யான்கட் படின். (குறள்) (8) 770. முன்னின்னா ராயினும் மூடு மிடர்வந்தால் பின்னின்னா ராகிப் பிரியார் ஒருகுடியார்; பொன்னாச் செயினும் புகாஅர் புனலூர! துன்னினா ரல்லார் பிறர். (பழ) புனல் ஊர - நீர்வளமுள்ள ஊர்களையுடையவனே, ஒரு குடியார் - ஒரு குடிப் பிறந்தார், முன் இன்னார் ஆயினும் - முன்பு ஒரு காரணத்தால் பகைகொண்டு பிரிந்திருந்தா ராயினும், மூடும் இடர்வந்தால் - தனக்கு வருத்துகின்ற துன்பம் வந்தால், பின் இன்னாராகிப் பிரியார் - பின்னரும் பகைகொண்டாராகிப் பிரிந்திராமல் வந்து அத்துன்பம் தீர்ப்பர்; (ஆனால்), பிறர் துன்னி னார் அல்லர் - ஒரு குடிப்பிற வாதவர் உடற்கலப்பில் லாதவர் ஆதலால், (முன்), பொன்னாச் செயினும் (பின்) புகார் - முன்பு பொன்போல மதித்து உறவாடினும் ஏதாவதொரு காரணத்தால் மனவேறுபாடுண் டானால், பின்பு தனக்குத் துன்பம் வந்தால் வந்து உதவார். இன்னார் - பகைவர். இன்னார் ஆயினும் - பகை கொண்டா ராயினும். மூடுதல் - வருத்துதல். இடர்- துன்பம். பின் - இடர் வந்தபின், பிரியார் - பிரிந்திரார் - பகை பாராட்டார் என்றபடி, ஒரு குடியார் - ஒரு குடியிற் பிறந்தவர். பொன்னாச் செய்தல் - பொன் போல மதித்தல். பொன்னா - பொன்னாக. புகார் - வந்துதவார். புனல் - நீர். துன்னினார் அல்லார் - உடற்கலப் பில்லாதவர். பிறர் - ஒருகுடிப் பிறவாதவர். முன், பின் என்பவை பின்னும் கூட்டிப் பொருள் கொள்ளப்பட்டது. ஒரு குடியிற் பிறந்த இருவரில் ஒருவர் ஏதாவது ஒரு காரணத் தால் பகைகொண்டு பிரிந்திருப்பினும், மற்றவர்க்கு ஏதாவது துன்பம் வந்தால் அப்பகையை விட்டு வந்து அத் துன்பம் தீர்ப்பர். ஆனால் ஒரு குடிப்பிறவாதார் இருவர் உடற் கலப்பில்லாதவர் ஆகையால், ஒருவரோடொருவர் மனங்கலந்து உறவாடினும், ஏதாவது ஒரு காரணத்தால் மனவேறுபாடுண் டானால், பின்பு ஒருவர்க்கு ஏதாவது துன்பம் வந்தால் மற்றவர் வந்து உதவார் என்பதாம். ஒரு குடிப்பிறவாதார் எவ்வளவு உறவாடினும், சுற்றத்தார் போல் ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது மற்றவர் உதவார் என்பது கருத்து. இது சுற்றந் தழுவலின் சிறப்புக் கூறப்பட்டது. பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள. (குறள்) (9) 771. உளைய வுரைத்து விடினு முறுதி கிளைகள்வாய்க் கேட்பது நன்றே - விளைவயலுள் பூமிதித்துப் புட்கலாம் பொய்கைப் புனலூர! தாய்மிதித்த வாகா முடம். (பழ) விளை வயலுள் - விளைகின்ற வயலில், பூ மிதித்து புள் கலாம் - பூக்களை மிதித்துப் பறவைகள் ஒன்றுகூடி வாழும், புனல் பொய்கை ஊர - நிர் நிறைந்த குளங்களையுடைய ஊரனே, தாய் மிதித்த முடம் ஆகா - தாய் மிதித்த குஞ்சுகள் முடம் ஆகா, (ஆதலால்), உளைய உரைத்து விடினும் - மனம் வருந்தும்படி உரைப்பாராயினும், கிளைகள் வாய் உறுதி கேட்பது நன்றே - தமது சுற்றத்தார் உறும் நன்மைகளைக் கேட்டுக்கொள்வது நல்ல தாகும். உளைய - வருந்தும்படி. உளைதல் - வருந்துதல். உறுதி - நன்மை. கிளை - சுற்றத்தார். வாய் - இடம். புள் - பறவை. கலாவுதல் - கலத்தல், கூடிவாழ்தல். பொய்கை - குளம். புனல் - நீர். புனல் - பொய்கை என மாற்றுக. தாய் - தாய்க்கோழி. மிதித்த - மிதிக்கப் பட்ட குஞ்சுகள். முடம் - காலும் மேலும் வளைதல். வயலும் புனல் பொய்கையும் உடைய ஊர் என்பதாம். கோழி தன் குஞ்சுகளின்பால் உள்ள அன்பால் அணைக்கும் போது மிதிக்கிறது. அதுபோல, சுற்றத்தார் தம் சுற்றத்தார்பால் உள்ள அன்பால் நன்மை கூறும் போது கடிந்து கூறுகிறார்கள். கோழி மிதிப்பதால் குஞ்சு முடமாவதில்லை. அதுபோல, சுற்றத்தார் உளைய உரைப்பதால் கெடுதல் உண்டாவ தில்லை. கோழி மிதிப்பதைக் குஞ்சுகள் பொறுத்துக் கொள்வது போல, சுற்றத்தார் கூறும் கடுஞ்சொல்லைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதாம். கோழி மிதித்துக் குஞ்சு முடமாகுமா (பழமொழி) நமது நன்மையின் பொருட்டு உறவினர் கடுஞ்சொற் சொன்னாலும் நாம் அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது கருத்து. உறவினர் கூறும் கடுஞ்சொல் - இடித் துரைத்தல் எனப்படும். (10) 772. தன்னை மதித்துத் தமரென்று கொண்டக்கால் என்ன படினும் அவர்செய்வ செய்வதே; இன்னொலி வெற்ப! இடரென்னை துன்னூசி போம்வழி போகும் இழை. (பழ) இன் ஒலி வெற்ப - இனிய ஓசையை உடைய மலையை யுடையவனே, துன்ஊசி போம் வழி இழைபோகும் - தையலூசி போகின்ற வழியே இழையும் போகும்; (அதுபோல), தன்னை மதித்து தமர் என்று கொண்டக்கால் - சுற்றத்தார் ஒருவர் தன்னை மதித்து எமக்கு இவன் உறவினனாவான் என்று கொண்டால், என்ன படினும் அவர் செய்வ செய்வதே - எவ் வகைத் துன்பம் நேரினும் உறவினர் செய்வனவற்றைத் தானும் செய்வதே தகுதி; இடர் என்னை - அவ்வாறு சுற்றத்தார் ஒருவர்க்கொருவர் உதவி செய்து கொண்டால் அவர்க்கு உண்டாகும் துன்பம் ஒன்றுமில்லை. தமர் - சுற்றத்தார். தமர் என்று கொள்ளுதல் - உறவினன் என்று உரிமை பாராட்டிக் கொள்ளுதல்; பகையின்றி என்பது. என்ன படினும் - எவ்வகைத் துன்பம் உறினும். அவர் செய்வ செய்வது - ஒருவர்க்கொருவர் உதவி செய்துகொள்ளுதல், வெற்பு - மலை. இடர் - துன்பம், துன்னுதல் - தைத்தல். இழை - நூல். ஊசி போகின்ற வழியே நூலும் போவது போல, சுற்றத்தார் ஒருவர்க்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் துன்பம் ஒன்றும் இல்லை யென்பதாம். (11) 773. அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வா ருறவல்லர் - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவா ருறவு. (வாக்) அற்ற குளத்தின் அறு நீர்ப்பறவைபோல் - நீர் வற்றிய குளத்தினின்றும் நீங்கிப் போகின்ற நீர்ப்பறவைகள் போல, உற்றுழி தீர்வார் உறவு அல்லர் - தம் உறவினர்க்கு வறுமை வந்தபோது விட்டு நீங்குவார் உறவினராக மாட்டார், அக் குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல - அக் குளத்திலுள்ள கொட்டிமுதலிய கொடிகள் போல, ஒட்டி உறுவார் உறவு - கூடியிருந்து இன்ப துன்பங்களில் பங்கு கொள்வாரே உறவினராவர். அற்ற - நீர் வற்றிய. அறுதல் - விட்டு நீங்குதல். உற்றுழி - வறுமை வந்தபோது. தீர்தல் - நீங்குதல். உறவு - உறவினர் - சுற்றத்தார். கொட்டி - ஒரு நீர்ப் பூங்கொடி. ஆம்பல் - அல்லி, ஒட்டி - கூடியிருந்து. உறுதல் - இன்ப துன்பங்களிற் பங்கு கொள்ளல். ஒரு குளத்தில் நீர் உள்ளபோது அக்குளத்திலுள்ள மீன் முதலியவற்றைத் தின்றுகொண்டிருந்து, அக்குளத்தில் நீர் வற்றியதும் அங்கு நின்றும் நீங்கிப்போகின்ற கொக்கு முதலிய பறவைகள்போல, ஒருவரிடம் செல்வம் உள்ளபோது உண்டு களித்து இருந்து, அச்செல்வந் தீர்ந்ததும் அவரை விட்டு நீங்குவோர் உறவினராக மாட்டார். அக்குளத்திலுள்ள கொட்டி முதலிய நீர்க்கொடிகள் நீருள்ளபோது செழித்திருந்து நீர் வற்றியபோதும் வாடி வதங்கி அங்கேயே இருப்பதுபோல, ஒருவரிடம் செல்வமுள்ள போது போலவே, செல்வந்தீர்ந்த போதும்விட்டு நீங்காமல் இருப்பவரே உறவினராவர் என்பதாம். வறுமையுற்றபோது விட்டு நீங்காதவரே உண்மைச் சுற்றத்தின ராவரென்பது கருத்து. பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள (குறள்) (12) 774. தங்கண மர்புடையார் தாம்வாழ்தல் முன்னினிது. (இனி) தம்கண் அமர்பு உடையார் - தமது சுற்றத்தார். தாம் வாழ்தல் முன்இனிது - செல்வாக்குடன் வாழ்தல் மிகவும் நல்லது. அமர்தல் - சேர்தல். அமர்புஉடையார் - சேர்ந்தவர். தம்கண் அமர்புடையார் - தம்மைச் சேர்ந்தவர் - சுற்றத்தார். தாம் என்பது செல்வாக்குடன் வாழ்தலைக் குறித்தது. செல்வாக்கு - செல்வம், அதிகாரம் முதலியன. முன் - மிகவும். தமது சுற்றத்தார் செல்வாக்குடன் வாழ்வது தமக்குப் பெருமை தரும் என்பதாம். ஒவ்வொருவரும் தத்தம் சுற்றத்தார் செல்வாக்குடன் வாழ உதவ வேண்டும் என்பது கருத்து. (13) 775. பந்தமில் லாத மனையின் வனப்பின்னா. (இன்) பந்தம் இல்லாத - சுற்றத்தார் சூழ வாழாத, மனையின் வனப்பு இன்னா - இல்வாழ்க்கையின் செல்வச் சிறப்பு இன்பந் தராது. வனப்பு - அழகு. இன்னா - துன்பம்; எதிர்மறைப் பொருள் தந்தது. பந்தம் - உறவு, சுற்றம். மனை - மனைவாழ்க்கை. இல் வாழ்க்கைக்கு வனப்பாவது - செல்வச்சிறப்பு. அடிக்கடி சுற்றத்தாரோடு அளவளாவி வாழாத செல்வ வாழ்க்கை இன்பந்தராது என்பதாம். சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன். (குறள்) (14) 776. ஈன்றாளை யோம்பா விடலின்னா. (இன்) ஈன்றாளை - முதுமைப் பருவ முடைய தாயை, ஓம்பா விடல் இன்னா - காப்பாற்றாமல் விடுதல் துன்பமாம். தந்தையும் கொள்க. ஓம்புதல் - காப்பாற்றுதல். பெற்றோர்கள் முதுமைப் பருவமடைந்தபோது ஊணுடை யின்றித் தவிக்கும்படி விட்டுவிடக் கூடாது என்பதாம். ஈன்றோர் முதன்மைச் சுற்றத் தாராவர். “ஈன்றாள் பசிகாண்பா ளாயினும்” (குறள்) என, ஈன்றோரை ஓம்புதலை வள்ளுவர் வற்புறுத்துதல் காண்க. (15) 777. கிழமை யுடையாரைக் கீழ்ந்திடுத லின்னா. (இன்) கிழமை உடையாரை - சுற்றத்தாரை, கீழ்ந்திடுதல் இன்னா - நீக்கிவிடுதல் துன்பமாம். கிழமை - உறவு. கீழ்தல் - நீக்குதல் - பகைத்து நீக்குதல். சுற்றத்தார்களைப் பகைத்துக் கொள்ளுதல் துன்பந் தரும். சுற்றத்தாற் சுற்றப்படாது தனித்து வாழ்பவன் துன்ப முறுதல் இயல்பு. (16) 778. செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல். (வெற்) செழுங்கிளை - நெருங்கிய சுற்றத்தார்; அண்ணன், தம்பி, அக்கை, தங்கை, அத்தை மாமன் முதலியோர். தாங்குதல் - பொருளுதவிக் காத்தல். சுற்றத்தாரைப் பாதுகாப்பதே செல்வர்க்கு அழகாகும். (17) 779. ஙப்போல் வளை. (ஆத்) ஙப்போல் - ஙகரமானது தான் பயனுள்ள எழுத்தாக இருந்து, பயனில்லாத ஙா, ஙி, ஙூ முதலிய தன் இனத்தையும் தழுவுதல் போல, வளை - நீ பயனுள்ளவனாக இருந்து உன் சுற்றத் தாரையும் தழுவிக் கொள். தமிழ் மொழியில் ‘ங’ ஒன்றுதான் பயன்படுகிறது. அஃதும், அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என, ‘ஙனம்’ என்னும் ஒரே சொல்லில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பயன் படுத்தப்படாத - பயன்படாத - ஙா, ஙி, ஙு முதலிய மற்ற உயிர் மெய்களும் ஙகரத்தோடு கூட வரிவடிவில் எழுதப்பட்டுப் பாடம் செய்யப்பட்டு வருகின்றன அல்லவா? இவ்வாறே செல்வாக் குள்ளவர் தம் தம் சுற்றத்தினர்கெடாமல் உதவிப் பாதுகாக்க வேண்டும். வளைத்தல் - தழுவிக் கொள்ளுதல். பயன் - செல்வாக்கு. (18) 780. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. (கொன்) குற்றம் பார்க்கின் - சுற்றத்தார் செய்யும் தவறுகளை ஆராய்ந்து பார்க்கின், சுற்றம் இல்லை - சுற்றத்தார் இலராவர். ஆராய்ந்து பார்த்தலாவது - சிறு தவற்றையும் பெரிதாகக் கொண்டு பகை பாராட்டல். அவ்வாறு செய்யின் சுற்றத்தார் அவரை விட்டு நீங்குவர் என்பது. ‘சுற்றம் பார்க்கின் குற்றம் இல்லை’ எனக் கொண்டு, சுற்றத் தாரின் இன்றியமையாமையை எண்ணிப் பார்த்து, அவர் செய்யும் தவறுகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டு மென்பது கருத்து. (19) 781. சுற்றத்திற் கழகு சூழ விருத்தல். (கொன்) சுற்றத்திற்கு அழகு - சுற்றத்தார்க்கு அழகாவது, சூழ இருத்தல் - நன்மை தீமைகளில் கூடி இன்பமும் துன்பமும் அடைதல். நன்மை - திருமணம், திருநாள் முதலியன. தீமை - நோய், இறப்பு முதலியன. நன்மை தீமைகளில் கலந்து கொள்ளாத சுற்றத்தார் வெறுக்கப் படுவர் ஆதலால், நன்மை தீமைகளில் கலந்து கொள்ளுதல் சுற்றத்தார்க்கு இன்றியமையாத கடமையாகும். (20) 782. உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம். (உல) உதாசினம் - இகழ்ச்சி. சுற்றத்தாரை இகழ்ந்து பேசக் கூடாது, இகழின் விட்டு நீங்குவர் என்பது. (21) 51. கண்ணோட்டம் அதாவது, பழக்கமுடையார்பால் இரக்கங் காட்டுதல். பழக்கமுடையார் கடுஞ்சொல் சொல்லினும், தீமை செய்யினும் வெகுளாது இரக்கங்காட்டுதலாம். கண்ணோட்டம் - இரக்கம். 783. காதலார் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும் ஏதிலார் இன்சொலிற் றீதாமோ - போதெல்லாம் மாதர்வண் டார்க்கும் மலிகடற் றண்சேர்ப்ப! ஆவ தறிவார்ப் பெறின். (நால) போது எலாம் மாதர் வண்டு ஆர்க்கும் - பூக்களி லெல்லாம் அழகிய வண்டுகள் ஆரவாரிக்கின்ற, மலி கடல் தண் சேர்ப்ப - நீர் நிறைந்த கடலின் குளிர்ச்சியான கரையை யுடையவனே, ஆவது அறிவார்ப் பெறின் - ஒன்றன் பயனை நல்லது தீயது என்று பகுத்தறிய வல்லாரைப் பெற்றால், காதலார் சொல்லும் கடுஞ்சொல் - அன்புள்ளவர் சொல்லு கின்ற கடுஞ்சொல், ஏதிலார் உவந்து உரைக்கும் இன் சொலின் தீது ஆமோ - பகைவர்கள் மகிழ்ந்து சொல்லுகின்ற இனிய சொல்லைப் போலத் தீமையைத் தருவதாகு மோ? ஆகாது, நன்மையையே தரும் என்றபடி. காதலார் - அன்புள்ளவர் - நண்பரும் சுற்றத்தாரும். கடுஞ் சொல் - கடுமையான சொல். உவந்து - மகிழ்ந்து. ஏதிலார் - பகைவர். தீது - தீமை. போது - பூ. மாதர் - அழகு. ஆர்தல் - ஆரவாரித்தல், ஒலித்தல், கடற்கரைப் பூக்களில் வண்டார்க்கு மென்க. மலிதல் - நிறைதல் - சேர்ப்பு - கரை. ஆவது - பயன். அறிவார்ப் பெறின் - அறிவாரைப் பெற்றால் - அறியவல்லா ராயின் என்றபடி. நண்பர்கள், வெறுக்கத்தக்க கடுஞ்சொற் சொன்னாலும் அது பின்னர் நன்மை தரும். பகைவர்கள் விரும்பத் தக்க இன் சொற் சொன்னாலும் அது பின்னர்த் தீமை தரும். சொல்லின் பயனை அறியவல்லார்க்கு இத்தன்மை நன்கு விளங்கும், ஆதலால், வேண்டியவர் கடுஞ்சொற் சொன்னாலும் பயநோக்கிக் கண் ணோடிப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதாம். (1) 784. வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால் தேற்றா வொழுக்க மொருவன்க ணுண்டாயின் ஆற்றுந் துணையும் பொறுக்க பொறானாயின் தூற்றாதே தூர விடல். (நால) இருவர் - வேற்றுமை இன்றிக் கலந்து நட்டக்கால் - மன வேறுபாடு இல்லாமல் சேர்ந்து நட்புக் கொண்டால், ஒருவன் கண்தேற்றா ஒழுக்கம் உண்டாயின் - பின்பு அவ்விருவரும் ஒரு வனிடத்துத் தீய நடத்தை உண்டாகுமானால், ஆற்றும் துணையும் பொறுக்க - மற்றவன் தன்னால் பொறுக்கக் கூடிய மட்டும் பொறுக்கக் கடவன், பொறான் ஆயின் தூற்றாதே தூர விடல் - பொறுக்க முடியாமற் போனால் அவனது தீய வொழுக்கத்தைப் பலரும் அறியும்படி செய்யாமல் கண்ணோடி அவனது நட்பை விட்டுவிடக் கடவன். வேற்றுமையின்றி - மனம் ஒன்று பட்டு. கலத்தல் - சேர்தல் - கூடுதல். நட்டல் - நட்புக் கொள்ளல். தேற்றா - தேற்றாத - ஆற்றாத. தேற்றா ஒழுக்கம் - பொறுக்க முடியாத தீய ஒழுக்கம், ஆற்றுந் துணையும் - பொறுக்கக் கூடிய மட்டும். பொறுக்க - வியங்கோள் வினைமுற்று. தூற்றுதல் - பலரறியச் செய்தல். தூரவிடல் - விட்டு விடுதல். மனங்கலந்த நண்பர் இருவருள், ஒருவன் பொறுக்க முடியாத குற்றஞ் செய்தால் மற்றவன் பொறுக்க முடிந்த மட்டும் பொறுக்க வேண்டும்; பொறுக்க முடியாவிட்டால் அவன் குற்றத்தைப் பலரிடமும் கூறித் திரியாமல் கண்ணோடி, அவன் நட்பை விட்டு விட வேண்டும் என்பதாம். அவன் தீய நடத்தையைப் பலரிடமும் கூறினால், பலரும் அவனை வெறுப்பாராதலால், இரக்கங் கொண்டு பிறரறியாமல் அவன் நட்பை விட்டு விடுதலே தகுதி என்பது கருத்து. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை. (குறள்) (2) 785. இன்னா செயினும் இனிய வொழிகென்று தன்னையே தானோவி னல்லது - துன்னிக் கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட விலங்கிற்கும் விள்ள லரிது. (நால) கானகம் நாட - காடு செறிந்த நாட்டை யுடையவனே, இன்னா செயினும் - தன் நண்பர் தனக்குத் துன்பந் தருஞ் செயல் களைச் செய்தாலும், இனிய ஒழிக என்று - அவை இனியனவாகக் கடவன என்று எண்ணி, தன்னையே தான் நோவின் அல்லது - அவர் அவ்வாறு செய்தற்குக் காரணமான தன்னையே தான் வெறுத்துக் கொள்வதல்லாமல், துன்னிக் கலந்தாரைக் கைவிடுதல் - நெருங்கி நட்புக் கொண்டவரை விட்டுவிடுதல், விலங்கிற்கும் விள்ளல் அரிது - பகுத்தறி வில்லாத விலங்கிற்கும் பிரிதல் அரிதாகலான், பகுத்தறி வுள்ள மக்கட்கு எங்ஙனம் முடியும்? இன்னா - துன்பம். இன்னா செய்தல் - துன்பந் தருஞ் செயல்களைச் செய்தல். ஒழிதல் - தங்குதல், இனிய ஒழிக - இனியனவாக. அதாவது - அச்யெல்கள் துன்பந் தராமல் இன்பந் தருவனவாக என்றபடி. நோதல் - வெறுத்தல். துன்னி - நெருங்கி - ஒன்றுபட்டு. கலந்தார் - நட்புக்குக் கொண்டவர். கைவிடுதல் - விட்டுவிடுதல். கானகம் - காடு. விள்ளல் - பிரிதல். அரிது - முடியாது. தன் நண்பர் தனக்குத் துன்பந் தருஞ் செயல்களைச் செய்தால், அவர்மேல் கண்ணோடி, அத்துன்பந் தருஞ் செயல்கள் இன்பந் தருவனவாக என்று எண்ணி, அவரை வெறுக்காமல், அவர் அவ்வாறு செய்தற்குத் தான் கொண்ட நட்பே காரணமாகுமென்று தன்னையே வெறுத்துக் கொண்டு அவர் நட்பை விடாமல் இருக்க வேண்டும். ஏனெனில், பகுத்தறிவில்லாத விலங்கிற்கும் நட்புக் கொண்டபின் ஒன்றை விட்டொன்று பிரிதல் முடியாதாகலின், பகுத்தறிவுள்ள மக்கட்கு எங்ஙனம் கை விடுதல் முடியும்? முடியாது என்பதாம். முன் பாட்டில், கண்ணோடி, ‘தூற்றாதே தூரவிடல்’ என்றார். இதில், ‘விலங்கிற்கும் விள்ளல் அரிது’ எனப் பிரியாம லிருத்தற்குக் காரணங் கூறினார். ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை. (குறள்) (3) 786. பெரியார் பெருநட்புக் கோடறாஞ் செய்த அரிய பொறுப்பவென் றன்றால் - அரியரோ ஒல்லெ னருவி யுயர்வரை நன்னாட நல்லசெய் வார்க்குத் தமர். (நால) ஒல் என் அருவி உயர் வரை நல் நாட - ஒல்லென்று ஒலிக்கின்ற அருவிகளையுடைய உயர்ந்த மலைகளையுடைய சிறந்த நாட்டை யுடையவனே, பெரியார் பெரு நட்புக் கோடல் - பெரியோரது மேன்மையான நட்பை யாவரும் விரும்பிக் கொள்ளுதல், தாம் செய்த - அரிய பொறுப்ப என்று அன்றோ - பொறுத்தற்கரிய குற்றங்களைக் கண்ணோடிப் பொறுத்துக் கொள்ளுவர் என்று எண்ணி யல்லவோ? நல்ல செய்வார்க்கு தமர் அரியரோ - நல்லவை களையே செய்வார்க்கு நண்பரா வோர் கிடைத்தற்கரியரோ? எளிதிற் கிடைப்பர் என்றபடி. பெருநட்பு - சிறந்த நட்பு. கோடல் - கொள்ளுதல். அரிய - பொறுத்தற்கரிய குற்றங்கள். பொறுப்ப - பொறுத்துக் கொள்வர் - உயர்திணைப் பலர் பால் முற்று. ஒல்லெனல் - ஒலிக்குறிப்பு. வரை - மலை. நல் நாடு - சிறந்த நாடு. நல்ல - நன்மைகள். தமர் - நண்பர். தம்மிடம் நட்புக் கொண்டவர்கள் பெருங் குற்றங் களைச் செய்தாலும், கண்ணோடி அவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல் பெரியோரியல்பு. அதனாலேயே பெரியோர் நட்பை யாவரும் விரும்பிக் கொள்கின்றனர். நன்மையே செய்பவர்க்கு எல்லோரும் நண்பராவர் என்பதாம். கண்ணோடிக் குற்றம் பொறுத்தல் பெரியோரது இயல் பாகுமென்பது கருத்து. பெயக்கண்டு நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். (குறள்) (4) 787. பழமைகந் தாகப் பசைந்த வழியே கிழமைதான் யாதானுஞ் செய்க - கிழமை பொறாஅ ரவரெனிற் பொத்தித்தந் நெஞ்சத் தறாஅச் சுடுவதோர் தீ. (நால) பழமை கந்து ஆக பசைந்த வழியே - பழைய நட்புக் காரண மாக ஒருவர் மற்றொருவர்பால் அன்போடு சென்றால், யாது ஆனும் கிழமைதான் செய்க - அவர் யாதாயினும் ஓர் உதவியைச் செய்யக் கடவர், அவர் கிழமை பொறார் எனின் - அவர் கண்ணோட்டமின்றி அவ்வாறு உதவி செய்யாமற் போவா ராயின், தம் நெஞ்சத்து பொத்தி அறாச்சுடுவது ஓர் தீ - அது அச்சென்றவர் மனத்திலே பதிந்து நீங்காமல் சுடும்படி யான ஒரு தீயாகும். பழமை - பழைய நட்பு. கந்து - காரணம். பசை - அன்பு. பசைந்த அன்பு கொண்டு சென்ற. வழி - இடத்து. கிழமை - உரிமை. இங்கு உரிமையொடு செய்யும் உதவி குறித்தது. யாதானும் - ஏதாவது. கிழமை பொறார் - உதவார். பொத்தி - பதிந்து. அறா - அறாமல் - நீங்காமல். பொறாஅர், அறாஅர் - இசைநிறை அளபெடை. வறுமையுற்ற ஒருவர், இரத்தலுக்கஞ்சிப் பழைய நண்ப ரிடம் அன்போடு சென்றால், அவர் தம்மால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும். அவர் கண்ணோட்டமின்றி உதவி யொன்றும் செய்யாமற் போனால், அது அச்சென்றவரது மனத்தை மிகவும் வருந்தச் செய்யும் என்பதாம். கண்ணோடிப் பழைய நண்பர்க்கு உதவவேண்டும் என்பது கருத்து. மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர். (குறள்) (5) 52. ஒப்புரவு ஒப்புரவு - உலக நடைபேறு. அதாவது - உலகம் ஒழுங்காக நடைபெறுதல். ஒழுங்காக நடைபெறுதலாவது - உலக மக்கள் எல்லோரும் உண்டுடுத்து ஒழுங்காக வாழ்தல். அவ்வாறு வாழும் படி செய்தலே ஒப்புரவு செய்தலாகும். ஒப்புரவு - சமன். ஒப்புரவு செய்தல் - சமன் செய்தல். விதைத்த நிலத்தில் பாத்தி கட்டுவோர், தண்ணீர் சமனாகப் பாயும் பொருட்டு மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டுச் சமன் செய்வது - ஒப்புரவு செய்தல் எனப் படும். அவ்வாறே, உள்ளவர் இல்லார்க்கு உதவி உலக வாழ்வைச் சமன் செய்தல் - ஒப்புரவு செய்தலாகும். இல்லார்க்கு உதவல் உள்ளோர் கடமை என்பதை உள்ளோர் உணர்தல் இதன் பயன். 788. சிக்கர் சிதடர் சிதலைப்போல் வாயுடையார் துக்கர் துருநாமர் தூக்குங்கால் - தொக்க அருநோய்கள் முன்னாளில் தீர்த்தாரே யிந்நாள் ஒருநோயு மின்றிவாழ் வார். (சிறு) தூக்குங்கால் - ஆராயுமிடத்து, சிக்கர் - தலைநோயு டையார், சிதடர் - பித்துடையார், சிதலைப் போல் வாய் உடையார் - வாய்ப் புற்றுடையார், துக்கர் - ஈளை நோயுடை யார், துரு நாமர் - மூல நோயுடையார், தொக்க அரு நோய்கள் முன் நாளில் தீர்த்தாரே - ஆகியோர் கொண்ட தீர்த்தர்க்கரிய அந் நோய்களை முன்னாளில் தீர்த்தவரே, இந்நாள் ஒரு நோயும் இன்றி வாழ்வார் - இந்நாளில் ஒரு துன்பமும் இன்றி இன்புற்று வாழ்வார். சிதல் - கறையான். இங்கு கறையான் வாழும் புற்றைக் குறித்தது. வாய்ப்புற்று - புற்று நோய். ஈளை நோய் - காச நோய், சயரோகம். தூக்குதல் - ஆராய்தல். தொக்க ஆகியோர் கொண்ட. முன்னாள் - இளமைப் பருவத்தையும், இந்நாள் - முதுமைப் பருவத்தையும் குறிக்கும். தீராத் தலைநோய், பித்து, புற்றுநோய், ஈளைநோய், மூலநோய் முதலிய கொடிய நோய்கள் தீர உதவினோர் எப் போதும் இன்புற்று வாழ்வார் என்பதாம். இத்தகைய கொடிய நோயாளர்க்குப் பொருளுதவி யோ, இந்நோய்கள் தீர்த்தற்குரிய மருத்துவசாலைகள் கட்டிவைத்தோ இந்நோய்களைத் தீர்த்தோர் இன்புறுதல் இயல்பன்றோ? தொழு நோய் முதுலிய எல்லாக் கொடு நோய்களும் கொள்க. (1) 789. கருஞ்சிரங்கு வெண்டொழுநொய் கல்வாளி காயும் பெருஞ்சிரங்கு பேர்வயிற்றுத் தீயார்க் - கருஞ்சிரமம் ஆற்றியூ ணீந்தவை தீர்த்தா ரரசராய்ப் போற்றியூ ணுண்பார் புரிந்து. (ஏலா) கருஞ்சிரங்கு - கருஞ்சிரங்கும், வெண்தொழுநோய் - வெண் குட்ட நோயும், கல்நோய் - கல்லெரிப்பு நோயும், வளிநோய் - வாதநோயும், காயும் பெருஞ்சிரங்கு - வருத்து கின்ற கழலையும், பேர் வயிற்றுத் தீயார்க்கு - யானைத் தீ என்னும் நோயுடை யார்க்கும், ஊண் ஈந்து - உணவளித்து, அருஞ்சிரமம் ஆற்றி அவை தீர்த்தார் - பொறுத்தரிய வருத்தத்தைத் தணியச் செய்து அந்நோய் களைத் தீர்த்தவர்கள், அரசராய்ப் புரிந்து போற்றி ஊண் உண்பார் - அரசர்களைப் போல் யாவராலும் விரும்பிப் போற்றப்பட்டு இனிது உண்டு வாழ்வார். கருஞ்சிரங்கு - கருந்தழும்பு பேறுகின்ற ஒருவகைக் கொடிய சிரங்கு, தொழுநோய் - குட்ட நோய் கருங் குட்டமும் உண்டு. கல்நோய் - கல்லெரிப்பு நோய் இது கல்லடைப்பு நோய் எனவும் வழங்கும். சிறு நீர்த்துளையில் கல்போலும் ஏதோ அடைத்துக் கொள்வதால் உண்டாகும் ஒருவகை நோய். சிறுநீர் கழிக்கும் போது எரியும். வளி - வாதநோய். காய்தல் - வருத்துதல். பெருஞ் சிரங்கு - கழல் - சிலந்தி. வயிற்றுத்தீ - யானைத்தீ என்னும் நோய். எவ்வளவு உண்டாலும் பசி தீராது. காயசண்டிகை என்பாள் இந்நோ யுற்று வருந்தினதாக மணிமேகலை கூறும். சிரமம் - வருத்தம், ஊண் ஈந்து அருஞ்சிரமம் ஆற்றி அவை தீர்த்தார் எனக் கூட்டுக. போற்றி - போற்றப்பட்டு. ஊண் உண்ணல் - இனிது உண்டுவாழ்தல். புரிந்து - விரும்பி. நோய் என்பதை எல்லா வற்றோடும் கூட்டுக. இந்நோயாளர்களுக்கு உணவளித்து, மருத்துவஞ் செய் வதற்குப் பணங்கொடுத்து நோய்தீர்த்தலெனக் கொள்க. இந் நோய்கள் தீர்த்தற்குரிய மருத்துவசாலைகள் கட்டி வைத்தலுங் கொள்க. இந்நோய்களைத் தீர்க்க உதவினோர் அரசரைப் போலச் செல்வாக்குடன் யாவராலும் விரும்பிப் போற்றப்பட்டு இனிது வாழ்வார் என்பதாம். (2) 790. உண்ணீர் வளங்குளம் கூவல் வழிப்புரை தண்ணீரே யம்பலந் தான்படுத்தான் - பண்ணீர் பாடலோ டாடல் பயின்றுயர் செல்வனாய்க் கூடலோ டூடலுளான் கூர்ந்து. (ஏலா) உண் நீர்வளம் - உண்ணுகின்ற நீர்வளத்தினையுடைய, குளம் கூவல் - குளத்தையும் கிணற்றையும், வழிப்புரை தண்ணீரே - வழிகளில் சாவடிகளையும் தண்ணீர்ப் பந்தல் களையும், அம்பலம் தான் படுத்தான் - பொதுமண்டபங் களையும் அமைத் தவன், செல்வனாய் பண் நீர பாடலொடு ஆடல் பயின்று - சிறந்த செல்வமுடையனாய் பண்ணமைந்த பாடலையும் ஆடலையும் நுகர்ந்து, ஊடலோடு கூடல் கூர்ந்து உளான் - ஊடுதலோடு கூடுதலை மிக்குள்ள வனாவான். உண்நீர் - உண்ணுகின்ற நீர். நீர்வளம் - வற்றாத நீருடைய வாதல். கூவல் - கிணறு - புரை - சாவடி - வழிச் செல்வோர் தங்கிச் செல்வது. அம்பலம் - பொது மண்டபம் - ஊர்மக்கள் கூடிப் பேசவும், ஆடல் பாடல் நிகழ்த்தவும், திருமணம் செய்யவும் பயன்படுதல். பண் - இசை . நீர்மை - தன்மை. பண்நீர பாடல் - இசைபொருந்திய பாடல், பயிலுதல் - பாடல் கேட்டும் ஆடல் கண்டும் இன்புறுதல். ஊடலொடு கூடல் என மாற்றுக. கூர்தல் - மிகுதல். பாடலொடாடல் பயிலுதல் - செல்வச் சிறப்பையும், ஊட லொடு கூடல் கூர்தல் - இல்வாழ்க்கைச் சிறப்பையும் குறிக்கும். வழிச்செல்வோர் உண்ணுதற் பொருட்டு வற்றாத குளமும் கிணறும் வெட்டி வைத்தல், வழிச்செல்வோர் தங்கிச் செல்லச் சாவடிகள் கட்டிவைத்தல், தண்ணீர்ப் பந்தல் வைத்து நடத்தல், ஊரில் பொதுமண்டபங் கட்டி வைத்தல் ஆகிய ஒப்புரவு செய்தோர் செல்வாக்குடன் இன்புற்று வாழ்வர் என்பதாம். போக்குவரத்து வசதியில்லாத அக்காலத்தே வழியில் இவை தேவைப்பட்டன. இன்றும், ஊர்க்குடி கிணறு வெட்டி வைத்தல், யாத்திரை விடுதி, திருமணமண்டபம், ஊர்ப் பொது மண்டபம் கட்டிவைத்தல் முதலியன தேவையே. (3) 791. ஊனொடு கூறை எழுத்தாணி புத்தகம் பேணொடு மெண்ணு மெழுத்திவை - மாணொடு கேட்டழுதி யோதிவாழ் வார்க்கீந்தா ரிம்மையான் வேட்டெழுத வாழ்வார் விரிந்து. (ஏலா) எண்ணும் எழுத்தும் இவை - கணக்கும் இலக்கிய இலக்கணமும் ஆகிய இவற்றை, கேட்டு எழுதி ஓதி வாழ்வார்க்கு - ஆசிரியரிடம் கேட்டும் எழுதியும் படித்தும் வாழ்கின்ற மாணவர்களுக்கு, ஊண் ஒடு கூறை எழுத்தாணி புத்தகம் ஈந்தார் - உணவும் உடையும் எழுத்தாணியும் புத்தகங்களும் வழங்கின வர்கள், இம்மையான் - இவ்வுலகில், வேட்டு எழுத விரிந்து வாழ்வார் - புலவர்கள் விரும்பிப் புகழ்ந்து பாடப் பெருகி வாழ்வார். ஊண் - உணவு. ஒடு - எண்ணொடு. கூறை - உடை. எழுத் தாணி - ஏடெழுதும் இருப்பாணி. பேண் - விருப்பம். மாண் - மாட்சிமை - மாணாக்கர்க்குரிய ஒழுக்கம். இம்மை யான் - இம்மையில் - இவ்வுலகில். வேட்டு - விரும்பி, எழுத - புகழ்ந்து பாட. விரிந்து - பெருகி - செல்வாக்குடன். பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உணவு உடை புத்தகம் முதலியன வழங்குவோர் இவ்வுலகில் புலவர் பாடும் புகழுடையோராய்ச் செல்வாக்குடன் வாழ்வர் என்பதாம். பாடசாலையும் மாணவர் விடுதியும் கட்டிவைத்தல், நூலகம் ஏற்படுத்தல் முதலியனவும் கொள்க. (4) 792. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டாம் நமக்கு மதுவழியே நாம்போ மளவும் எமக்கென்னென் றிட்டுண் டிரும். (நல்) ஆண்டாண்டு தோறும் புரண்டு அழுதாலும் - ஆண்டு தோறும் தரையிற் புரண்டு அழுதாலும், மாண்டார் வருவரோ - இறந்தவர் எழுந்து வருவார்களோ? வரமாட்டார்; (ஆதலால்), மாநிலத்தீர் - வேண்டாம் - இறந்தவரை எண்ணி அழ வேண்டாம், நமக்கும் அதுவே வழி - நமக்கும் அவ்விறப்பே முறையாக இருக்கிறது; (ஆதலால்), நாம் போம் அளவும் - நாம் இறக்கும் வரையிலும், எமக்கு என் என்று - நமது கடமை என்ன என்று எண்ணிப்பார்த்து, இட்டு உண்டு இரும் - பிறர்க்கு உதவி இனிது உண்டு வாழ்வீராக. ஆண்டாண்டுதோறும் - ஒவ்வோராண்டும் அவர் இறந்த நாளில், நமக்கும் அதுவேவழி - நாமும் அவர்களைப் போலவே இறப்போம், அதுவே வாழ்வியல் என்ற படி . இடுதல் - உதவுதல். யாக்கை நிலையாமையை யுணர்ந்து, அதற்குள் செய்ய வேண்டிய கடமையை எண்ணிப் பார்த்து, பிறர்க்கு உதவி செய்து வாழவேண்டும் என்பதாம். (5) 793. மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்த லினிது. (இனி) மலர்தலை ஞாலத்து மன் உயிர்க்கு எல்லாம் - அகன்ற இடத்தையுடைய இவ்வுலகத்தில் வாழ்கின்ற மக்களுக் கெல்லாம், தகுதியால் வாழ்தல் இனிது - உரிமைப்பட வாழ்தல் நல்லது. மலர்தல் - பரத்தல், அகலல். ஞாலம் - உலகம். மன் உயிர் - வாழ்கின்ற உயிர், இங்கு மக்கள். தகுதி - உரிமை. உரிமைப்பட வாழ்தலாவது - தமது செல்வம் பயன்பட வாழ்தல் - ஒப்புரவு செய்து வாழ்தல். பிறர்க்குப் பயன்பட வாழவேண்டும் என்பது. (6) 794. காவோ டறக்குளம் தொட்டல் மிகவினிது. (இனி) கா - சோலை, மரம். அறக்குளம் - பொதுக்குளம், கிணறு. தொடுதல் - தோண்டுதல் - வெட்டுதல். வழியில் மரங்கள் வைத்துக் கிணறு வெட்டி வைத்தல் மிகவும் நல்லது என்பதாம். இன்னும் - பூங்கா அமைத்தல், ஊர்க் குடிகிணறு வெட்டி வைத்தல் முதலியனவும் கொள்க. காவோ டறக்குளம் தொட்டானும். (திரிகடுகம்) (7) 795. ஒப்புர வொழுகு. (ஆத்) ஒப்புரவு உலக நடைபேற்றை அறிந்து, ஒழுகு - அதன்படி நட. ஒப்புரவு செய்த வாழவேண்டுமென்பது கருத்து. (8) 796. கிழமைப் படவாழ். (ஆத்) கிழமைப்பட - உன் செல்வம் பிறர்க்கும் பயன்படும் படி, வாழ் - நீ வாழ்வாயாக. நமது செல்வம் பிறர்க்குப் பயன்படும்படி வாழ வேண்டும். (9) 797. ஐயம் புகினும் செய்வனசெய். (கொன்) ஐயம் புகினும் - ஐயம்புகும் நிலைமையில் இருந்தாலும், செய்வன செய் - உன்னால் பிறர்க்குச் செய்யத்தகும் உதவி களைச் செய். ஐயம் - பிச்சை. ஏழையாக இருந்தாலும் பொதுக் கிணறு வெட்டுதல், சாலை போடுதல் முதலிய பொதுநலத் தொண்டு செய்ய வேண்டும் என்பதாம். (10) 798. நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை. (கொன்) நாடு எங்கும் வாழ - நாட்டு மக்கள் எல்லோரும் நன்கு வாழின், கேடு ஒன்றும் இல்லை - அந்நாட்டிற்கு யாதொரு குறையும் இல்லை. நாடு - நாட்டு மக்களை உணர்த்திற்று. கேடு - குறை. நாட்டு மக்கள் எல்லோரும் நன்கு உண்டு உடுத்து இனிது வாழ்ந்தால், திருட்டு, புரட்டு, வழிப்பறி, கொள்ளை, இரத்தல் முதலிய யாதொரு குறையும் இரா. நாட்டில் உள்ள செல்வர்கள் இவ்வுண்மையை உணர்ந்து நாடெங்கும் நன்கு வாழும்படி செய்து, நாட்டைக் கேடொன்றும் இல்லாத நாடாக்க வேண்டு மென்பது கருத்து. (11) 53. குடிப்பிறப்பு அதாவது, உயர் குடிப்பிறப்பின் சிறப்பு. உயர் குடியாவது - வழிவழியாக நல்லொழுக்கமுடைய பழங்குடி. 799. உபகாரஞ் செய்ததனை யோராதே தங்கண் அபகார மாற்றச் செயினும் - உபகாரம் தாஞ்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல் வான்றோய் குடிப்பிறந்தார்க் கில் . (நால) உபகாரம் செய்ததனை ஓராதே - தாம் நன்றி செய்ததை நினையாமலே, தம்கண் அபகாரம் ஆற்ற செயினும் - தமக்குத் தீமைகளை மிகுதியாகச் செய்தாலும், தாம் உபகாரம் செய்வது அல்லான் - தாம் அவர்க்கு மேன்மேலும் நன்மை செய்வதே யல்லாமல், தவற்றினால் தீங்கு ஊக்கல் - அவர் செய்த குற்றங் காரணமாக வெகுண்டு தாமும் அவர்க்குத் தீமை செய்ய முயலுதல். வான் தோய் குடிப் பிறந்தார்க்கு இல் - பெருமை பொருந்திய உயர்குடியில் பிறந்தவர்களுக்கு உண்டாகாது. உபகாரம் - நன்மை, உதவி. ஓர்தல் - எண்ணிப் பார்த்தல். அபகாரம் - தீமை. ஆற்ற - மிகவும். தவறு - குற்றம். தீங்கு - தீமை. ஊக்குதல் - முயலுதல். வான் - பெருமை, சிறப்பு. தோய்தல் - பொருந்துதல். தாம் செய்த நன்மையை மறவாமலிருந்து எதிருதவி செய்யாமையோடு, அதனை மறந்து தமக்குத் தீமை செய் தார்க்கும் தாம் தீமை செய்யாமையோடு பின்னும் நன்மையே செய்தல் உயர் குடிப் பிறந்தாரின் இயல்பு என்பதாம். இன்னாசெய் தாரை யொறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல். (குறள்) இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. (குறள்) (1) 800. உடுக்கை யுலறி யுடம்பழிந்தக் கண்ணும் குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார் இடுக்கண் தலைவந்தக் கண்ணு மரிமா கொடிப்புற் கறிக்குமோ மற்று. (நால) உடுக்கை உலறி உடம்பு அழிந்தக் கண்ணும் - உடுக்கப் படும் ஆடையும் சிதைந்து உணவில்லாமையால் உடம்பும் மெலிந்து அழிந்தொருவதானாலும், குடிப் பிறப்பாளர் தம் கொள்கையில் குன்றார் - உயர் குடிப்பிறந்தவர் தமது குடிக் குரிய ஒழுக்கத்திற் குறை படார்; (ஏது போல வெனில்), இடுக்கண் தலைவந்தக் கண்ணும் - பசித் துன்பம் மிகுதியாக உண்டான போதும், அரிமா கொடிப்புல் கறிக்குமோ - சிங்கம் கொடியாகப் படர்ந்திருக்கும் புல்லைத் தின்னுமோ? தின்னாது. உடுக்கை - உடை. உலறுதல் - சிதைதல். அதாவது உடுக்க முடியாமல் கிழிந்து போதல். அழிதல் - அழியும் நிலையை அடைதல். கொள்கை - ஒழுக்கம். குன்றுதல் - குறைதல், தவறுதல். இடுக்கண் - துன்பம். தலைவருதல் - மிகுதல். அரிமா - சிங்கம். கறித்தல் - தின்னல். மற்று - அசை. உடுக்கை உலறி உடம்பழிதல் - அத்தகு வறுமையைக் குறிக்கும். சுற்றிய கந்தை ஒருமுழமாம் - அதில் தோன்றிய பீறலும் ஆயிரமாம். (கவிமணி) பசியினால் மிகவும் வாடி வருந்தினும் சிங்கம் புல்லைத் தின்னாமை போல, வறுமையால் மிகவும் வருந்தினும் உயர் குடிப் பிறந்தார் ஒழுக்கங்குன்றார் என்பதாம். ‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ - பழமொழி ஒழுக்கங் குன்றுதலாவது - இரந்தும், கெட்ட வழியிற் பொருள் தேடியும் வாழமுயலுதல். சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்துமென் பார். (குறள்) (2) 801. சான்றாண்மை சாய லொழுக்க மிவைமூன்றும் வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது - வான்றோயும் மைதவழ் வெற்ப படாஅ பெருஞ்செல்வம் எய்தியக் கண்ணும் பிறர்க்கு. (நால) வான் தோயும் மை தவழ் வெற்ப - ஆகாயத்தை அளாவிய முகில்கள் தவழ்கின்ற மலையை யுடையவனே, சான் றாண்மை சாயல் ஒழுக்கம் இவை மூன்றும் - சான்றாண்மை யும் மென்மையும் நல்லொழுக்கமும் ஆகிய இவை மூன்றும், வான்நோய் குடிப் பிறந்தார்க்கு அல்லது - உயர் குடிப் பிறந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு பெருஞ்செல்வம் எய்தியக் கண்ணும் படா - மற்றை யோர்க்கு மிக்க செல்வம் அடைந்த காலத்தும் உண்டாகாவாம். சான்றாண்மை - நிறைந்த நற்குணங்களையுடைமை. சாயல் - மென்மை - இளகிய மனம். வான் தோய்குடி - உயர்குடி - மிகப் பழமையான உயர்குடி என்பது. வான் - ஆகாயம். தோய்தல் - பொருந்துதல் - அளாவுதல். மை - மேகம். தவழ்தல் - தங்குதல். வெற்பு - மலை. படா - உண்டாகா. எய்துதல் - அடைதல் - பிறர் - உயர்குடிப் பிறவாதார். உயர்குடிப் பிறந்தார் சான்றாண்மை, மென்மை, நல் லொழுக்கம் ஆகிய மூன்றையும் இயல்பாகவே உடையரா யிருப்பர். உயர் குடிப்பிறவார் புதிதாகப் பெருஞ் செல்வம் அடைந்தாலும் இம்மூன்று குணங்களும் அவர்க்கு உண்டாகா என்பதாம். சான்றாண்மை முதலிய மூன்றும் உயர்குடிப் பிறப்பின் இலக்கணமாகும் என்பது கருத்து. ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். (குறள்) நகையீகை யின்சொல் இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு. (குறள்) (3) இக்குணங்களும் கொள்க. 802. இருக்கை யெழலும் எதிர்செலவு மேனை விடுப்ப வொழிதலோ டின்ன - குடிப்பிறந்தார் குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோ டொன்றா வுணரற்பாற் றன்று. (நால) (பெரியோரைக் கண்டால்), இருக்கை எழலும் - உடனே இருக்கையை விட்டு எழுந்து நிற்றலும், எதிர் செலவும் - எதிர் சென்று அழைத்து வருதலும், ஏனை விடுப்ப ஒழிதலோடு - இன்ன - இன்னும் அவரை வழியனுப்பிப் பிரிதலும் ஆகிய இத்தன்மையான செய்கை களை, குடிப்பிறந்தார் குன்றா ஒழுக்கம்ஆ கொண்டார் - உயர்குடிப் பிறந்தவர்கள் குறையாத ஒழுக்கமாகக் கொண்டவராவர், (ஆதலால், அவர்களை) கயவரோடு ஒன்றா உணரல் பாற்று அன்று - கீழ்மக்க ளோடு ஒரு தன்மையாக மதித்தல் தக்கதன்று. இருக்கை - கட்டில், நாற்காலி முதலியன. செலவு - செல்லுதல், இங்கு சென்று அழைத்து வருதலை உணர்த்திற்று. ஏனை - இன்னும், மற்றும். விடுப்ப ஒழிதல் - உடன்சென்று வழியனுப்புதல். குன்றா - குன்றாத - குறையாத - இயற்கை யான. ஒழுக்கம்ஆ. ஆ - ஆக. கயவர் - கீழ்மக்கள். ஒன்றா - ஒருதன்மை யாக - ஒப்ப. உணர்தல் - மதித்தல். பாற்று - தன்மை - தக்கது. உட்கார்ந்திருக்கும் போது பெரியோர் வந்தால் உடனே எழுந்து நிற்றலும், எதிர்சென்று அழைத்து வருதலும், அவர் செல்லும் போது வெளியே சென்று வழியனுப்பி மீளுதலும் ஆகிய இத்தகைய செய்கைகளை உயர்குடிப்பிறந்தார் இயல் பாக உடைய ராவர். ஆனால், கீழ்மக்களோ இத்தகைய ஒழுக்க முடையரல்லர் ஆகவே, உயர் குடிப்பிறந்தாரைக் கீழ்மக்க ளோடு ஒப்ப மதித்தல் தக்கதன்று என்பதாம். ‘இன்ன, என்றதனால், பெரியோர் இரு என்ற பின் இருத்தல், பேசும்போது எதிர் பேசாமை முதலியனவுங் கொள்க. யார் சென்றாலும் எழாமல், தெருவில் கட்டிலின் மேல் உட்கார்ந்து கொண்டிருப்போர் இன்றும் பலர் உண்டு. இருக்கை எழல் முதலியன உயர்குடிப் பிறப்பின் இலக்கணம் ஆகும் என்பது கருத்து. (4) 803. நல்லவை செய்யி னியல்பாகுந் தீயவை பல்லவர் தூற்றும் பழியாகும் - எல்லாம் உணருங் குடிப்பிறப்பி னூதிய மென்னோ புணரு மொருவர்க் கெனின். (நால) ஒருவர்க்குப் புணரும் எனின் - ஒருவர்க்கு உயர் குடிப் பிறப்பு வாய்க்கு மானால், நல்லவை செய்யின் இயல்பு ஆகும் - நல்ல காரியங்களைச் செய்வாராயின் அது அவர்க்கு இயல் பென்று எண்ணப்படும், (சிறப்பாகக் கொள்ளப்படாது என்ற படி), தீயவை (செய்யின்) பல்லவர் தூற்றும் பழி ஆகும் - கெட்ட காரியங்களைச் செய்தாலோ பலருந் தூற்றும் பழிப்புக்குக் காரணமாகும், (ஆதலால்), எல்லாம் உணரும் குடிப்பிறப்பின் ஊதியம் என் ஆம் - எல்லா வற்றையும் அறியவல்ல உயர்குடிப் பிறத்த லினால் பயன் யாதோ? நல்லவை - நல்ல செயல்கள் இயல்பு இயற்கை. செய்யின் என்பதைத் தீயவை என்பதோடுங் கூட்டுக. பல்லவர் - பலரும். தூற்றுதல் - பலரறியச் செய்தல். பழி - பழிப்பு. உணர்தல் - அறிதல். எல்லாம் - செய்வன தவிர்வன எல்லாம். ஊதியம் - பயன். புணர்தல் - வாய்த்தல் - கூடுதல். ஒருவர்க்குப் புணரும் எனின் - ஒருவன் உயர் குடிப்பிறப் பானானால் - உயர் குடிப்பிறந்த ஒருவர் என்றபடி. உயர்குடிப் பிறந்த ஒருவர் நல்லவை செய்வாரானால் அது அவர்க்கு இயல்பு என்று கொள்ளப்படுமேயன்றிச் சிறப்பாகக் கொள்ளப்படாது. தீயவை செய்வாரானால் அது பலருந் தூற்றம் பழிப்புக்குக் காரணமாகும். ஆதலால், அவ்வுயர்குடிப் பிறத்தலினால் பயன் - லாபம் - யாதோ என்பதாகும். உயர்குடிப் பிறந்தார்க்கு மிகுந்த நல்லொழுக்கத்தாலும் பெரும்புகழ் உண்டாதலில்லை; சிறிய தீயொழுக்கத்தாலும் பெரும்பழி உண்டாகிறது. ஆனால், தாழ்குடிப் பிறந்தார்க் கோ இங்ஙனமில்லை; சிறிது நல்லொழுக்கத்தால் பெரும் புகழும், பெருந் தீயொழுக்கத்தால் சிறு பழியும் உண்டா கின்றன. ஆதலால், உயர்குடிப் பிறந்தார்க்கு அக்குடிப்பிறப் பால் கேடே யன்றி ஊதியம் ஒன்றும் இல்லை என, வஞ்சப் புகழ்ச்சியாக, உயர்குடிப் பிறப்பின் உயர்வை விளக்கியவாறு. உயர் குடிப்பிறப்பின் பெருமை கூறுமுகத்தான், தாழ் குடிப்பிறப்பின் சிறுமையும் பெற வைத்தார். நல்லவையே செய்தலும், தீயவை செய்யாமையுமே உயர் குடிப்பிறந்தாரின் இயல்பென்பது கருத்து. (5) 804. கல்லாமை யச்சம் கயவர் தொழிலச்சம் சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம் - எல்லாம் இரப்பர்க் கொன் றீயாமை யச்ச மரத்தாரிம் மாணாக் குடிப்பிறந் தார். (நால) கல்லாமை அச்சம் - தான் கல்லாமைக்கு அஞ்சுதலும், கயவர் தொழில் அச்சம் - கீழோர் செய்யும் இழிதொழில் களைச் செய்தற்கு அஞ்சுதலும், சொல்லாமையுள்ளும் ஓர் சோர்வு அச்சம் - தீச்சொற் களைச் சொல்லாமல் இருப்பதிலும் எங்கு தவறிவிடுமோ என்று ஒரு சோர்வுக்கு அஞ்சுதலும், எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை அச்சம் - தமக்கு வேண்டுவன வற்றை இரப்பவர்க்கு அவற்றுள் யாதாயினு மொன்றைக் கொடுக்க முடியாமல் போனால் அதற்கு அஞ்சுதலும், (ஆகிய இத்தன்மையான பல அச்சங்கள் உயர் குடிப்பிறந்தார்க்கு உள்ளன ஆதலால்), இம்மாணாக்குடிப் பிறந்தார் மரத்தார் - மாட்சிமைப் படாத இவ்வுயர் குடியிற் பிறந்தவர்கள் மரக்கலத் திலுள்ளார் போல எப்பொழுதும் அச்சமுடையார். கயவர் - கீழ்மக்கள், தீச்சொற்கள் - பொய், குறளை, கடுஞ் சொல், பயனில சொல். சோர்வு - தவறு; அச்சொற் களைத் தவறிச் சொல்லுதல். மரம் - மரக்கலம் - கப்பல். மரக்கலம் என்பது கலம் என நிற்பது போல இங்கு மரம் என நின்றது. மாணா - மாணாத - மாட்சியமையில்லாத. இதுவும் - வஞ்சப்புகழ்ச்சியாக, உயர்குடிப் பிறப்பின் உயர்வைக் கூறியதாகும். ஒன்றானும் தீச்சொற் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும். (குறள்) ஆதலால், ‘சொல்லாமையுள்ளுமோர் சோர்வச்சம்’ என்றார். சாதலின் இன்னாத தில்லை; இனிததூஉம் ஈத லியையாக் கடை. (குறள்) என்பதால், உள்ளதையெல்லாம் கொடுத்து இல்லாததற்காக இரங்குவர் என்பார், ‘எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை அச்சம்’ என்றார். எப்பொழுதும் பல அச்சத்திற்கு இருப்பிட மாய் இருத்தல் பற்றி, உயர் குடியை ‘மாணாக்குடி’ என்றார். கற்பவை கற்றலும், இழி தொழில்கள் செய்யாமையும், தீச்சொற்கள் சொல்லாமையும், இரப்போர்க்கு இயன்றவை கொடுத்தலும் உயர் குடிப்பிறந்தாரின் இலக்கணம் என்பதாம். (6) 805. செய்கை யழிந்து சிதன்மண்டிற் றாயினும் பெய்யா வொருசிறை பேரி லுடைத்தாகும்; எவ்வ முழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார் செய்வர் செயற்பா லவை. (நால) பேர் இல் - பெரிய வீடாயிருந்தால் அது, செய்கை அழிந்து சிதல் மண்டிற்று ஆயினும் - கட்டுக் குலைந்து கறையான் அரிக்கப் பட்டதானாலும், பெய்யா ஒரு சிறை உடைத்து ஆகும் - மழை நீர் உள்ளே ஒழுகாத ஒரு பக்கத்தை யுடையதாகும்; (அது போல), குடிப்பிறந்தார் - எவ்வம் இழந்தக் கடைத்தும் - வறுமை நோயால் வருந்துகின்ற பொழுதும், செயல்பாலவை செய்வர் - தாம் செய்தற் குரிய கடமைகளைத் தவறாது செய்வார்கள். செய்கை - கட்டு, கூரை. சிதல் - கறையான். மண்டுதல் - நிரம்பத்தின்னும் - நிறைதல், பெய்தல் - ஒழுகுதல். பெய்யா - பெய்யாத. சிறை - பக்கம். இல் - வீடு. எவ்வம் - துன்பம். இழத்தல் - வருந்துதல். கடைத்தும் - இடத்தும் - பொழுது. மேற்கூரை பிரிந்து கறையான் தின்று கிடந்தாலும் பெரிய வீடாயின் மழை நீர் ஒழுகாத ஒரு பக்கத்தையுடைய தாயிருக்கும். அது போல, மிக்க வறுமையுற்ற காலத்தும் குடிப்பிறந்தார் செய்தற் குரியவற்றைச் செய்வர் என்பதாம். செய்தற்குரிய கடமைகளைத் தவறாது செய்தலே உயர் குடிப்பிறந்தாரின் இலக்கணமாகு மென்பது கருத்து. (7) 806. ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் - திங்கள்போற் செல்லாமை செவ்வனேர் நிற்பினு மொப்புரவிற் கொல்கார் குடிப்பிறந் தார். (நால) ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை - தனது ஒரு பாகம் பாம்பினால் கவ்வப்பட்டிருந்தாலும் மற்றொரு பாகத்தால், அம்கண் மாஞாலம் விளக்குறும் திங்கள் போல் - அழகிய இடத்தை யுடைய பெரிய உலகத்தை விளங்கச் செய்கின்ற முழுமதிபோல, குடிப் பிறந்தார் - செல்லாமை செவ்வன் நேர் நிற்பினும் - வறுமை மிகவும் வருத்தினாலும், ஒப்புரவிற்கு ஒல்கார் - பிறர்க்கு உதவி செய்யத்தளரார். புடை - பக்கம். அம் - அழகிய. கண் - இடம். ஞாலம் - உலகம். விளக்குறுதல் - விளங்கச் செய்தல் - ஒளி கொடுத்தல் என்பது. உறூஉம் - இன்னிசை அளபெடை. செல்லாமை - வறுமை. செவ்வன் - நன்கு. நேர் - சரியாக. செவ்வன் நேர் - நன்கு மிகவும். கொடிய வறுமை என்றபடி. ஒல்குதல் - சுருங்குதல் - தளர்தல். ஒரு பக்கத்தே பாம்பு கவ்வி மறைக்கினும் மறு பக்கத்தே ஒளிதரும் திங்களைப் போல, குடிபிறந்தார், வறுமை ஒரு பக்கத்தே வருத்தினும் உதவி யொரு பக்கத்தே செய்வர் என்பதாம். கதிர்மறை (கிரகணம்) காலங்களில் திங்களை மறைக் கின்ற நிலத்தின் நிழலை, இராகு கேது என்னும் கரும் பாம்பு செம் பாம்புகளாகக் கூறும் புராணக் கூற்றுப்படி இவ்வாறு கூறப் பட்டது. (8) 807. எற்றொன்று மில்லா விடத்துங் குடிப்பிறந்தார் அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்றாவர்; அற்றக் கடைத்து மகல்யா றகழ்ந்தக்கால் தெற்றெனத் தெண்ணீர் படும். (நால) அகல்யாறு அற்றக் கடைத்தும் - பெரிய ஆறானது நீர் வற்றிய பொழுதும், அகழ்ந்தக்கால் தெற்றென தெள்நீர்படும் - தோண்டினால் விரைவாகத் தெளிவான நீர் உண்டாகும்; (அதுபோல), குடிப் பிறந்தார் - என்று ஒன்றும் இல்லா இடத்தும் - யாதொரு பொருளும் இல்லாக் காலத்தும், அற்றுதன் சேர்ந் தார்க்கு - வாழ வகையின்றித் தம்மை அடைந்தவர்க்கு, அசைவு இடத்து ஊற்று ஆவர் - தளர்ச்சி நேர்ந்த விடத்து ஊன்று கோல் உதவுவது போல உதவுவர். எற்று ஒன்றும் - யாதொன்றும். அற்று - பொருளற்று. அசைவு - தளர்ச்சி. ஊற்று - ஊன்றுகோல். அற்ற - நீர்வற்றிய. கடைத்தும் - காலத்தும். அகழ்தல் - தோண்டுதல். தெற்றென - விரைவாக. தெள்நீர் - தெளிவான நீர். படுதல் - ஊறுதல். பெரிய ஆறானது நீர்வற்றிய காலத்தும் ஊற்றுத் தோண் டினால் நீர் ஊறும். அதுபோல், குடிப்பிறந்தார் வறுமையுற்ற காலத்தும் தம்மை அடைந்தோர்க்கு உதவுவர் என்பதாம். நடக்கும்போது கால் ஓய்ந்து அல்லது வழுக்கி விழ நேர்ந்தால் ஊன்றுகோல் விழாமல் உதவுவது போல, வறுமை யால் மெலிந்து வருந்துவோர்க்கு உதவுவர் என்னும் உவமை யுங் கொள்க. (9) 808. கடித்துக் கரும்பினைக் கண்டகர நூறி இடித்துநீர் கொள்ளினு மின்சுவைத்தே யாகும், வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் குடிப்பிறந்தார் கூறார்தம் வாயிற் சிதைந்து. (நால) கரும்பினை - கடித்து - பல்லால் கடித்தும்; கண்தகர நூறி - கணுக்கள் நொருங்கும்படி ஆலையிலிட்டுச் சிதைத்தும், இடித்து நீர் கொள்ளினும் - உலக்கை, கல் முதலியவற்றால் நொருக்கியும் சாற்றைக் கொண்டாலும், இன்சுவைத்தே ஆகும் - அச்சாறு இனிய சுவையுடையதே யாகும்; (அது போல), வடுப்பட வைது இறந்தக் கண்ணும் - மனத்தில் தழும்பாகும்படி மிகவும் திட்டின விடத்தும், குடிப்பிறந்தார் - தம் வாயின் சிதைந்து கூறார் - தம் வாயினால் தன்மை கெட்டுப் பேசமாட்டார். கண் - கணு. தகர்தல் - நொருங்குதல் - நூறுதல் - கசக்குதல். நீர் - சாறு. வடு - தழும்பு. ‘நாவினாற் சுட்டவடு’ (குறள் - 129) என்றார் வள்ளுவரும். வைதல் - திட்டுதல். இறந்து - மிகுதியாக. சிதைந்து - தன்மை கெட்டு - தம் தகுதிக்கு மாறாக என்றபடி. கரும்பைப் பலவாறு வருத்திச் சாறு கொள்ளினும் அச் சாறு இனிமையாகவே இருத்தல் போல, பிறர் எவ்வளவு திட்டி னாலும் குடிப்பிறந்தார் இனிமையாகவே பேசுவர் என்பதாம். (10) 809. உறுபுனல் தந்துல கூட்டி யறுமிடத்தும் கல்லூற் றுழியூறு மாறேபோல் - செல்வம் பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணுஞ் சிலர்க்காற்றிச் செய்வர் செயற்பா லவை. (நால) உறுபுனல் தந்து உலகு ஊட்டி - (நீருள்ள காலத்தில்), மிகுந்த நீரைக் கொடுத்து உலகத்தாரை உண்ணச் செய்து, அறும் இடத்தும் - நீர் வற்றிய காலத்திலும், கல் ஊற்று உழி உதவும் ஆறேபோல் - தோண்டப் படுகின்ற ஊற்றின்கண் நீர் சுரக்கின்ற ஆறே போல, (குடிப்பிறந்தார்), செல்வம் பலர்க்கு ஆற்றி - பொருளுள்ளபோது அப்பொருளைப் பலர்க்கும் கொடுத்து, கெட்டு உலந்தக் கண்ணும் - அச்செல்வம் அழிந்து வறந்த விடத்தும், சிலர்க்கு ஆற்றி செயற் பாலவை செய்வர் - சிலர்க் காயினும் கொடுத்துச் செய்யத்தக்க உதவிகளைச் செய்வார்கள். உறு - மிக்க. புனல் - நீர். அறுதல் - வற்றுதல். கல்லுதல் - தோண்டுதல். உழி - இடம், கண். ஆற்றி - கொடுத்து, உலத்தல் - வற்றுதல் - குறைதல். செயல்பாலவை - செய்யத்தக்க உதவிகள். நீர்ப் பெருக்குள்ள காலத்தே மிகுந்த நீரைக் கொடுத்து, நீர் வற்றிய காலத்தும் ஊற்றுநீர் கொடுக்கின்ற ஆறு போல, குடிப் பிறந்தார், செல்வம் உள்ள காலத்துப் பலர்க்கும் கொடுப்பர்; செல்வமிழந்து வறுமையுற்ற காலத்தும் சிலர்க் காயினும் கொடுப்பர் என்பதாம். செல்வம் உள்ள காலத்து ஆறு போல மிகுதியாகக் கொடுத் தலும், செல்வங் குறைந்தபோது குறைவாகவேனுங் கொடுத்தலும் கொள்க. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலைப்பிரித லின்று. (குறள்) (11) 810. கயவரைக் கையிகந்து வாழ்தல், நயவரை நள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல், - தெள்ளி வடுவான வாராமல் காத்தலிம் மூன்றும் குடிமா சிலார்க்கே யுள. (திரி) கயவரைக் கையிகந்து வாழ்தல் - கீழ் மக்களைச் சேராமல் வாழ்தலும், நயவரை நட்டு நள் இருளும் கைவிடா ஒழுகல் - மேன் மக்களை நட்புக்கொண்டு நடு இரவிலும் பிரியாமல் நடத்தலும், தெள்ளிவடுவான வாராமல் காத்தல் - ஆராய்ந்து பார்த்துத் தனக்குப் பழிப்பான காரியங்கள் வராமல் காத்துக் கொள்ளுதலும், இம் மூன்றும் குடிமாசு இலார்க்கே உள ஆகிய இம் மூன்றும் குடிப்பிறப்பிலே குற்றம் இல்லாதவர்க்கே உண்டாகும். கைஇகத்தல் - விட்டு நீங்குதல், நயவர் - நல்லவர். நள் இருள் - நடு இரவு, கைவிடா - கைவிடாமல் - நீங்காமல், நடுதல் - நட்புக் கொள்ளுதல். தெள்ளி - ஆராய்ந்து. வடு - குற்றம். மாசு - குற்றம். குடிமாசு இலார் - உயர் குடிப்பிறந்தார். கீழ் மக்களைச் சேராதிருப்பதும், மேன்மக்களை எப் போதும் பிரியாதிருப்பதும், பழி நேராமல் காப்பதும் குடிப் பிறந்தார்க்குரிய குணங்கள் என்பதாம். (12) 811. ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா றூற்றுப் பெருக்கா லுலகூட்டும் - ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தா ரானாலும் இல்லையென மாட்டா ரிசைந்து. (நல்) ஆறு பெருக்கு அற்று - ஆறானது நீர்வற்றி, அடிசுடும் அந்நாளும் - நடப்போர் அடியைச் சுடுகின்ற அக்காலத் திலும், அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும் - அந்த ஆறானது, ஊற்று நீரினால் உலகத்தாரை உண்பிக்கும், (அது போல), நல்ல குடிப்பிறந்தார் - உயர்குடிப் பிறந்தார், நல் கூர்ந்தார் ஆனாலும் ஏற்றவருக்கு இசைந்து இல்லை என மாட்டார் - வறுமையுற்ற போதிலும் தம்மிடம் வந்து இரந்த வர்க்கு மனமிசைந்து இல்லை யென்று சொல்ல மாட்டார்கள்; முடிந்த அளவு கொடுப்பர் என்பது. பெருக்கு - வெள்ளம். அடி - உள்ளங்கால். உலகு - உலகத்தார். ஏற்றவர் - இரந்தவர் - இரவலர். நல்கூர்தல் - வறுமை யுறுதல். மனமிசைந்து - மனமார. ஆறானது நீர் வற்றி நடப்போர் அடியைச் சுடுகின்ற காலத்தும் ஊற்று நீர்தருவது போல, உயர் குடிப்பிறந்தார் வறுமை யுற்ற போதிலும் இரப்பவர்க்கு இல்லை யென்னாமல் இயன்றதைக் கொடுப்பர் என்பதாம். (13) 54. பண்புடைமை அதாவது , சிறந்த குணங்களில் வழுவாமல், பிறர் இயல் பறிந்து அதற்கேற்ப ஒழுகுங் குணம். 812. தூய்மை மனத்தவர் தோழர் மனையகத்தும் தாமே தமியர் புகல்வேண்டா - தீமையான் ஊர்மிகின் இல்லை கரியோ, ஒலித்துடன் நீர்மிகின் இல்லை சிறை. (பழ) நீர் ஒலித்து உடன் மிகின் சிறை இல்லை - வெள்ளம் ஒலித்துக் கொண்டு மிகுமாயின் அதைத் தவிர்க்கக் காப்பு இல்லை, (அது போல), தீமையான் ஊர் மிகின் கரியோ இல்லை - ஒருவன் தீமை செய்தானென்று ஊராரெல்லாம் ஒருமுகமாகக் கூறின் அதனைத் தவிர்க்க வேறொரு சான்று இல்லை; (ஆதலால்), தூய மனத்தவர் -, தோழர் மனை அகத்தும் தமியர் தாமே புகல் வேண்டா - தம்முடைய தோழர் மனையின் கண்ணும் தனியாகத் தாமே புகுதல் வேண்டா. தூய்மை - குற்றமின்மை. தோழர் - நண்பர். மனை - வீடு தமியர் - தனியாக. தீமை - குற்றம். ஊர் - ஊரார். மிகுதல் - எல்லோரும் ஒன்றுபட்டுக் கூறுதல். கரி - சான்று. சிறை - காப்பு, கரை. வெள்ளம் அளவுக்கு மீறி வந்தால் அதை அடக்க முடியாது. அதுபோல, ஊராரெல்லோரும் கெட்டவனென்று நம்பிவிட்டால் அதை நீக்கமுடியாது. ஆதலால், மிகப் பழகிய நண்பர் வீட்டிற்கும் அவர் இல்லாமல் தனியாகப் போகக் கூடாது. அப்படிப் போனால் ஊரார் ஐயுறுவர் என்பதாம். ஊரார் ஐயுறின் அதனை நீக்க முடியாதாகையால், அவ்வாறு செல்லுதல் பண்புடைமை யன்று என்பது கருத்து. ‘தாமே’, என்பது - அவர் விரும்பாமல், அழையாமல் செல்லுதலைக் குறிக்கும். ‘தூயமனத்தவர்’ என்பது - தூய்மை யான மனமுடையவரேயாயினும் அங்ஙனம் செல்லின், பிறர் ஐயுறக் கூடும் என்பது குறித்தது. (1) 813. நல்லற மெந்தை நிறையெம்மை நன்குணரும் கல்லியென் தோழன் துனிவெம்பி - அல்லாத பொய்ச்சுற்றத் தாரும் பொருளோ பொருளாய இச்சுற்றத் தாரி லெனக்கு. (அற) நல் அறம் எந்தை - நல்லொழுக்கமே எனது தந்தை, நிறை எம்மை - அறிவே எனது தாய், நன்கு உணரும் கல்வி என் தோழன் - நன்மையை உணர்தற்குக் காரணமாகிய கல்வியே எனது நண்பன், துணிவு எம்பி - மனத்தெளிவே எனது தம்பி, பொருளாய இச்சுற்றத் தாரில் எனக்கு - உறுதி பயக்கும் இச் சுற்றத்தாரைப் போல எனக்கு, அல்லாத பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ - இச்சுற்றத்தார் களல்லாத பொய்ச் சுற்றத்தார் உறுதி பயப்பரோ? பயவார். அறம் - ஒழுக்கம். நிறை - அறிவு, எந்தை - தந்தை. எம்மை - தாய். பொருள் - உறுதி - நன்மை. இல் - போல - ஐந்தாவது ஒப்புப் பொருள். நல்லறம் முதலியவை போல அத்தகு நன்மை பயவாமையின் தந்தை முதலியோரைப் பொய்ச்சுற்றத்தார் என்றார். ஒழுக்கத்தைத் தந்தையாகவும், அறிவைத் தாயாகவும், கல்வியைத் தோழனாகவும், துணிவைத் தம்பியாகவும் கூறியது - உருவகம். கல்வி கற்று, அறிவைப் பெற்று, மனதெளிவுற்று, நல் லொழுக்கத்தைக் கடைப்பிடித்து நடப்பதே மக்கட் பண்பு என்பது கருத்து. (2) 814. மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா - கடல்பெரிது மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல் உண்ணீரு மாகி விடும். (வாக்) தாழை மடல் பெரிது - தாழம்பூப் பெரியது, மகிழ் கந்தம் இனிது - மகிழம்பூச் சிறியதாயினும் தாழம்பூவை விட மணம் இனியது, கடல் பெரிது - கடல் பெரியது, மண்நீரும் ஆகாது - அதன் நீர் குளித்தற்குரிய நீரும் ஆகாது, அதன் அருகே சிற்றூறல் உண் நீரும் ஆகிவிடும் - அக்கடலின் பக்கத்தே உள்ள சிறிய ஊற்று நீர் குடித்தற்குரிய நீரும் ஆகிவிடும் (ஆதலால்), உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - ஒருவரை உருவத்தில் சிறியா ரென்று அவமதித்து இருக்க வேண்டாம். மடல் - பூவிதழ். தாழைமடல் - தாழம்பூ. மகிழ் - ஒருவகை மரம். பூவை உணர்த்திற்று. கந்தம் - மணம். மண்ணுதல் - கழுவுதல் - குளித்தல். சிறு ஊறல். ஊறல் - ஊற்று நீர். பெரிய தாழம்பூவைவிடச் சிறிய மகிழம்பூ இனிய மண முடையது. பெரிய கடல் நீர் உப்புத்தன்மையுடையதால் குளிக்கவும் பயன்படாது. அதன் பக்கத்து உள்ள சிறிய ஊற்று நீர் நன்னீராதலால் குளிப்பதோடு குடிக்கவும் பயன்படும். அது போல, சிறிய உருவமுடையோரும் பெரிய உருவமுடை யோரை விடச் சிறந்த குணம் - பண்பு உடையவராய் இருப்பர் என்பதாம். ஒருவர் பெரியவர் சிறியவர் என்பதை உருவத்தால் அன்றிப் பண்பாட்டால் தெளிய வேண்டும் என்பது கருத்து. (3) 815. புலவர்தம் வாய்மொழி போற்ற லினிது. (இனி) புலவர் தம் வாய்மொழி - அறிவுடையோர் கூறும் அற வுரைகளை, போற்றல் இனிது - பாதுகாத்தல் நல்லது. புலவர் - அறிவுடையோர். புலமை - அறிவு. வாய்மொழி - உண்மையான சொல், அறிவுரை. போற்றல் - பாதுகாத்தல், அதாவது கடைப்பிடித்து நடத்தல். அறிவுடையோர் கூறும் அறவுரைகளைப் போற்றுதல் நல்லது என்பதாம். இனி, பழந்தமிழ்ப் புலவர்கள் செய்யுட்களைப் போற்றல் என்பதும் கொள்ளத்தகும். (4) 816. அன்றறிவார் யாரென் றடைக்கலம் வௌவாத நன்றியின் நன்கினிய தில். (இனி) அன்று அறிவார் யார் என்று - தன்னிடம் வைத்த அந்நாள் அறிவார் ஒருவரும் இலர் என்று எண்ணி, அடைக் கலம் வௌவாத - அடைக்கலப் பொருளைக் கவராத, நன்றியின் நன்கு இனியது இல் - நன்மையினும் மிக நல்லது வேறில்லை. அன்று - அடைக்கலம் வைத்த அன்று. வௌவுதல் - இல்லை என்றல். நன்றி - நற்பண்பு. அடைக்கலம் வைத்தபோது பிறர் அறியார் என்று எண்ணிப் பிறர் தன்னிடம் வைத்த அடைக்கலப் பொருளை இல்லை என்னாத தை விட மிகவும் நல்ல பண்பு வேறில்லை என்பதாம். (5) 817. தெற்றென வின்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப் பத்திமையிற் பாங்கினிய தில். (இனி) தெற்றெனவு இன்றி - ஆராய்தலில்லாமல், தெளிந் தாரை தீங்கு ஊக்கா பத்திமையின் - தன்னை நம்பினவர்க்குக் கெடுதி செய்ய எண்ணாத அன்புடைமையினும், பாங்கு இனியது இல் - மிகவும் நல்லது இல்லை. தெற்றெனவு - ஆராய்ச்சி. தெற்றெனவு இன்றித் தெளிதல் - ஒருவன் சொல்வதை ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே நம்புதல். ஊக்குதல் - முயலுதல் - எண்ணுதல். பத்திமை - அன்புடைமை. பாங்கு இனியது - மிகவும் நல்லது. தன்னை உண்மையாக நம்பினவர்க்குக் கெடுதி செய்ய எண்ணாத பண்பை விடச் சிறந்தது வேறில்லை என்பதாம். (6) 818. பகல்போலு நெஞ்சத்தால் பண்பின்மை யின்னா. (இன்) பகல் போலும் நெஞ்சத்தார் - ஞாயிறுபோலும் மன முடையவர், பண்பு இன்மை இன்னா - பண்பில்லாதிருத்தல் துன்பமாம். பகல் - ஞாயிறு. பகல் போலும் நெஞ்சம் - ஞாயிறு போலத் திரிபில்லாமல் ஒரே தன்மையான மனம். ‘ஞாயிறன்ன வாய்மையும்’ என்பது புறம். இனி, நுகத்தின் பகலாணி போல் நடுவு நிலையுடைய மனம் என்பதும் பொருந்தும். நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர்’ என்பது பட்டினப்பாலை. பகல் - பகலாணி. அது நுகத்தின் சரிநடுவில் உள்ள ஆணி. இவ்விரு பொருளும் கொள்க. ஞாயிறு போலத் திரிபில்லாது ஒரே தன்மையும், பகலாணி போல நடுவு நிலைமையும் உடைய நெஞ்சத்தார் பண்பில்லா திருத்தல் தகுதியன்று என்பதாம். (7) 819. குணமது கைவிடேல். (ஆத்) குணம் - பண்பு. கைவிடுதல் - விட்டுவிடுதல், பண்பின்மை. (8) 820. சக்கர நெறிநில். (ஆத்) சக்கர நெறிநில் - அரசியல் சட்டதிட்டங்களின் படி நட. சக்கரம் - அரசு. நெறி - வழி. சக்கர நெறி - அரசியல் சட்ட திட்டங்கள். ஆட்சி முறைக்கு அடங்கி நடக்க வேண்டும். அவ்வாறு அடங்கி நடப்பதே மக்கட் பண்பாகும்; அடங்காமை கயமைத் தனமாகும். ‘தேவரனையர் கயவர்’ என்னும் குறளுரை பார்க்க. (9) 821. தக்கோ னெனத்திரி. (ஆத்) தக்கோன் என - (பெரியோர்கள் உன்னை) நல்லவ னென்று சொல்லும்படி, திரி - நடந்து கொள். தக்கோன் - மக்கட் பண்பு டையோன். (10) 822. உத்தம னாயிரு. (ஆத்) உத்தமன் ஆய் - நற்குணங்களில் மேம்பட்டவனாக, இரு - நடந்து கொள். (11) 823. ஒன்னாரைச் சேரேல். (ஆத்) ஒன்னாரை - பகைவரை, சேரேல் - பயன்கருதிச் சேரேல். பயன் கருதிப் பகைவரைச் சேர்ந்து, நாடு, அல்லது தம்மவரைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. பகைவர்க்கு உளவாளியாகக் கூடாது. தம்மவரை விட்டுப் பகைவரைச் சேர்தல் - அறை போதல் எனப்படும். எவ்வளவு பொருள் பெறுவதாயினும் பகைவரைச் சேராமலிருப்பது சிறந்த பண்பாகும். பயன் கருதிக் கட்சி மாறு தலும் இதன் பாற்படும். கோடி கொடுக்கினும் கூடாதார் தம்மோடு கூடாமை கோடி யுறும். (ஒளவையார்) (12) 824. வாழாமல் பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம். (உல) வாழாமல் - தன் கணவனோடு கூடி வாழாமல், பெண்ணை வைத்து - உன் மகளை உன்வீட்டிலே வைத்துக் கொண்டு, திரிய வேண்டாம் - இருக்க வேண்டாம். பெண் கணவனோடு சீராடிக் கொண்டு வந்தாலும் வற் புறுத்திக் கூறிக் கணவன் வீட்டிலேயே இருக்கும் படி செய்ய வேண்டுமே யல்லாமல் தன் வீட்டிலேயே வைத்துக் கொள்வது பெற்றோர்க்குரிய கடமையன்று. அது நாமே நம் பெண்ணை வாழாமல் கெடுப்பதாகும். இவ்வாறு அறியாமை யால் தம் பெண்ணை வாழாமல் கெடுத்த பெற்றோர் பலர் உண்டு. (13) 825. மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம். (உல) வாழ்க்கைத் துணைவியாகவுள்ள மனைவி மனம் வருந்தும் படி அடிக்கடி ஏதாவது குற்றங் கூறிக் கொண்டே இருக்கக் கூடாது. இது வாழ்க்கையின்பத்தைக் கெடுப்ப தோடு, பெருங் கேட்டுக்கும் ஏதுவாகும். (14) 826. தந்தை தாய்ப்பேண். (ஆத்) தந்தை தாய் - தந்தையையும் தாயையும், பேண் - போற்று. முதுமைப் பருவமுற்ற பெற்றோர்களை நன்கு போற்றுதல் வேண்டும் என்பதாம். இது மக்களின் இன்றி யமையாத கடமை யாகும். (15) 827. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். (கொன்) அன்னையும் பிதாவும் - முன் அறி தெய்வம் - (மக்களால்), முதலில் அறியப்பட்ட தெய்வங்களாவர். பிதா - தந்தை. தெய்வம் - மேன்மை. இங்கு மேலானவர் என்னும் பொருள் குறித்தது. தாயும் தந்தையுமே மக்களால் முதலில் அறியப்பட்ட மேலானவராவர் என்பதாம். பெற்றோர்களை மேலாக மதித்து, வணங்கி வழி பட்டுப் போற்றுதல் மக்கள் கடமையாகும் என்பது கருத்து. (16) 828. மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம். (உல) பெற்ற தாயை ஒரு நாளும் மறக்கக் கூடாது. மறத்தல் - முதுமையுற்றபோது போற்றாது விட்டு விடுதல். (17) 829. தந்தைசொல் மிக்க மந்திர மில்லை. (கொன்) தந்தை சொல் மிக்க - தந்தையின் சொல்லுக்கு மேம்பட்ட, மந்திரம் இல்லை - நன்மை பயக்கும் சொல்வேறொன்றும் இல்லை. மந்திரம் - மறைமொழி; அதாவது - சான்றோர்களால் மறைவாக - பிறர்க்குக் கேளாமல் வாய்க்குள் என்றபடி - சொல்லப் பட்டு, சொல்லியபடி பலன் தரும் சொல். இது மன வொருமையால் இயல்வது போலும். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப. (தொல் செம்) நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். (குறள்) என்பன காண்க. தந்தை சொல்லைவிட நன்மை பயக்கும் சொல் மக்கட்கு வேறொன்றும் இல்லை. எனவே, தந்தை சொல்லைக் கேட்டு அதன்படி நடப்பது மக்கள் கடமையாகும் என்பதாம். (18) 830. தாய்சொற் றுறந்தால் வாசக மில்லை. (கொன்) தாய்சொல் துறந்தால் - தாய்சொல்லைத் தட்டினால், வாசகம் இல்லை - அத்தகைய பயனுடைய சொல் வேறு இல்லை துறத்தல் - நீக்குதல் - தட்டுதல். வாசகம் - சொல். தாய்சொல்லை விட மக்கட்கு நன்மை தரும் சொல் வேறொன்றும் இல்லையாகையால், தாய்சொல்லைத் தட்டாமல் கேட்பது மக்கள் கடமையாகும் என்பதாம். (19) 831. மூத்தோர்சொல் வார்த்தை யமிர்தம். (கொன்) மூத்தோர்சொல் வார்த்தை - பெரியோர்கள் சொல்லு கின்ற சொல்லானது, அமிர்தம் - அமிர்தம்போல் நன்மை பயப்பதாகும். மூத்தோர் - கல்வியறிவினால் முதிர்ந்த பெரியோர்கள். அமிர்தம் - பால். பால் உடல் நலந்தருவது. பெரியோர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும் என்பதாம். (20) 832. எழுத்தறி வித்தவன் இறைவ னாகும். (வெற்) எழுத்து அறிவித்தவன் - கல்வி கற்பித்த ஆசிரியன், இறைவன் ஆகும் - தலைவன் ஆவான். எழுத்து - இலக்கிய, இலக்கண நூல்களைக் குறித்தது. அறிவித்தல் - கற்பித்தல். இறைவன் - தலைவன். தலைவன் - மேலானவன். வணங்கத்தக்கவன். ‘அறிவித்தவன்’ என்று இறந்த காலத்தால் கூறியதால், எப்போதும் என்பது பெறப்படும். கல்வி கற்பித்த ஆசிரியர் வணங்கத்தக்க பெரியோராவர் என்பதாம். ஆசிரியரிடத்து வணக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்பது கருத்து. (21) 55. மேன்மக்கள் அதாவது, பலவகை நற்குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவர். அன்னார் தன்மை கூறுதல். 833. அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும் திங்களுஞ் சான்றோரு மொப்பர்மன் - திங்கள் மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமந்து தேய்வ ரொருமா சுறின். (நால) அம் கண் விசும்பின் - அழகிய இடத்தையுடைய வானிலே யிருந்து, அகல் நிலா பாரிக்கும் திங்களும் - பரந்த ஒளியை வீசுகின்ற திங்களும், சான்றோரும் மன் ஒப்பர் - பெரியோர்களும் பெரும் பாலும் ஒத்திருப்பர்; (ஆனால்), திங்கள் மறு ஆற்றும் - திங்கள் தன்னிடத்திலுள்ள களங்கத் தைப் பொறுத்துக் கொள்ளும், சான்றோர் அஃது ஆற்றார் - பெரியோர்கள் களங்கத்தைப் பொறுக்கமாட்டார்கள், ஒரு மாசு உறின் தெருமந்து தேய்வர் - சிறிது களங்கம் தம்மை யடையுமாயினும் வருந்தி அழிந்தே விடுவர். அம் - அழகிய. கண் - இடம், விசும்பு - ஆகாயம். நிலா - ஒளி. பாரித்தல் - பரப்புதல், வீசுதல். மன் - மிகவும். மறு - குற்றம். தெருமந்து - வருந்தி. தேய்தல் - இறத்தல். மாசு - குற்றம். திங்களினிடத்தில் தெரியும் கறுப்பு நிறத்தை - மறு, களங்கம், முயல், மான் எனப் பலவாறு கூறும் நூல்கள், அது மலையின் நிழல் என்கின்றனர் வானநூல் வல்லார். திங்கள் உலகின் புறத்திருளை நீக்குகிறது. சான்றோர் உலகின் அகத்திருளை நீக்குகின்றனர். திங்கள் குளிர்ச்சி யானது. சான்றோர் தண்ணளி (அருள்) உடையர். இவற்றால் ஒப்பர். ஆனால், திங்கள் குற்றத்தைப் பொறுத்துக் கொண் டிருக்கிறது. பெரியோர் குற்றத்தைப் பொறுக்க மாட்டார்; ஏதாவது குற்றம் உண்டானால் வருந்தி உயிர் விடுவர் என்பதாம். கோவலனை ஆராயாது கொன்றது குற்றமெனக் கண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் அரசு கட்டிலில் துஞ்சியது இதற்கு எடுத்துக்காட்டாகும். மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். (குறள்) ‘தேய்வர்’ என்றதால், திங்கள் தேய்ந்தாலும் மறுபடியும் வளர்கிறது. சான்றோர் தேய்வாரேயன்றி அங்ஙனம் வளரார் என்ற குறிப்புங் கொள்க. ஒரு குற்றமும் செய்யாமையும், குற்றம் வரின் உயிர் வாழாமையும் மேன்மக்கள் இயல்பு என்பது கருத்து. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போ லுயர்ந்து. (குறள்) (1) 834. நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினுஞ் சான்றோர் குரம்பெழுந்து குற்றங் கொண் டேறார் - உரங்கவறா உள்ளமெனு நாரினாற் கட்டி யுளவரையாற் செய்வர் செயற்பா லவை. (நால) சான்றோர் - நரம்பு எழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் - (உண வின்மையால் உடல் மெலிந்து), நரம்புகள் மேலே தோன்றப் பெற்று வறுமை யுற்றாராயினும், குரம்பு எழுந்து குற்றம் கொண்டு ஏறார் - (மனமானது நல்லொழுக்கத்தின்) வரம்பைக் கடந்து குற்றமான செய்கையை மேற்கொண்டு செய்யப் புகாமல், உரம் கவறு ஆ - தமது அறிவையே கிட்டி யாகக் கொண்டு, உள்ளம் என்னும் நாரினால் கட்டி - முயற்சி என்கின்ற கயிற்றினாலே அக்கிட்டியைக் கட்டி, உளவரை யால் செயற்பாலவை செய்வர் - பொருளள விற்கேற்பச் செய்யத் தக்கவற்றைச் செய்வர். நல்கூர்தல் - வறுமையுறுதல். குரம்பு - வரம்பு. குரம்பு எழுந்து - வரம்பைக் கடந்து. ஏறுதல் - புகுதல். ஏறார் - ஏறாமல் - முற்றெச்சம். உரம் - அறிவு. கவறுஆ - கவறாக. கவறு - கவை. இது கிட்டி எனப்படும். வெள்ளாடு வேலியில் முட்டாமல் - புகுந்து செல்லாமல் - அதன் கழுத்தில் கிட்டி கட்டுவர். கிட்டியாவது - ஒரு கவைக் கோலை ஆட்டின் கழுத்தில் தொங்க வைத்து, கவையின் இரண்டு கம்பையிலும் பொருந்த ஒரு கோலை வைத்துக் கட்டுதல். வேலிச்சந்தில் முட்டினால் குறுக்குக் கோல் இருபக்கமும் பட்டுக் கொள்ளும். உள்ளம் - முயற்சி. நார் - கயிறு. உளவரையால் - உள்ள அளவிற்கேற்ப. செயற்பாலவை - செய்யத் தக்கவை. வறுமையால் உணவில்லாமல் உடல்வற்றி நரம்பெழுந்து வருந்தினும் மேன்மக்கள் நல்லொழுக்கத்தின் வரம்பைக் கடந்து குற்றமான செய்கையைச் செய்யாமல், அறிவைக் கிட்டிக் கோலாகக் கொண்டு, முயற்சி என்னும் கயிற்றினால் கட்டி, மனத்திற்குக் கிட்டி போட்டுக் கெட்ட செயலில் புகாமல் தடுத்து, பொருள் உள்ள அளவிற்கேற்ப நல்ல காரியங்களைச் செய்வர் என்பதாம். வெள்ளாடு தீனி போதாவிட்டால் வேலியில் புகுந்து விளை நிலத்தில் சென்று பயிரைத் தின்னும். அதற்காகக் கழுத்தில் கிட்டி கட்டி விட்டால் வேலியில் முட்ட முடியாமல் உள்ளதைத் தின்று கொண்டு உரிய இடத்திலேயே இருக்கும். அதுபோல, வறுமையால் போதிய பொருள் இல்லா விட்டால், மனம் நல்லொழுக்கமென்னும் வேலியைக் கடந்து குற்றமான செயல்களைச் செய்தாவது வயிறு வளர்க்கத் தலைப்படும். மேன் மக்கள் அங்ஙனம் தம் மனத்தை விடாமல், அறிவு என்னும் கிட்டிக்கோலை மாட்டி, முயற்சி என்னும் கயிற்றி னால் கட்டி, உள்ளதைக் கொண்டு நற்காரியம் செய்து பிழைக்கும்படி செய்வர் என்பது குறிப்பு. இது உருவகம். வறுமையால் மிகவும் வருந்தினும் கெட்ட காரியம் செய்ய முற்படாமல், அறிவாலும் முயற்சியாலும் மனத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு நல்வழியில் நடப்பதே மேன் மக்கள் இயல்பு என்பது கருத்து. (2) 835. செல்வுழிக் கண்ணொருநாட் காணினுஞ் சான்றவர் தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் புரிந்தியாப்பர் நல்வரை நாட சிலநா ளடிப்படின் கல்வரையு முண்டா நெறி. (நால) நல்வரை நாட - நல்ல மலைகளையுடைய நாடனே, சான்றவர் - செல்வுழிக்கண் ஒரு நாள் காணினும் - போகிற இடத்திலே ஒரு நாள் ஒருவரைப் பார்த்தாலும், தொல்வழிக் கேண்மையில் தோன்ற புரிந்துயாப்பர் - பழைய வழியில் வந்த நட்புப் போலக் காணும் படி விரும்பி நட்புக்கொள்வர்; சில நாள் அடிபடின் கல்வரையும் நெறி உண்டாம் - சில காலம் மக்களின் காலடி பட்டு வருமாயின் கல்மலையிலும் வழியுண்டாகும். செல்உழி - செல்கின்ற இடம். செல் உழிகண் - செல்கின்ற இடத்திலே வெளியூர் செல்கின்ற இடத்திலே. உழி - இடம். தொல் - பழமை. தொல் வழிக் கேண்மை - இளமையி லிருந்து கொண்ட நட்பு அல்லது நெடு நாட்பழகிய நட்பு. புரிந்து - விரும்பி. யாப்பர் - நட்புக்கொள்வர். கல்வரை - கல்லாலாகிய மலை. வரை - மலை. நெறி - வழி. ‘எறும்பூரக் கல்லுந் தேயும்’ என்றபடி, சில காலம் காலடிபட்டு வந்தால் கல்லிலும் தடம் உண்டாவது போல, வன்னெஞ்சர்க்கும் பலநாட் பழகினால் நட்புண்டாகும். அது சிறப்பன்று. “ஒரு நாட்பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே” (வெற்றிவேற்கை) என்றபடி, கண்ட வுடனே நட்புக் கொண்டு, கொஞ்சநேரப் பழக்கத்தால் நெடுநாட் பழகிய நட்புப் போலக் கொள்வதே சிறந்த நட்பாகும். பெரியோர்கள் வெளியூர் செல்கின்றபோது வழியில் ஒருவரைக் கண்டு சிறிது நேரம் பழகினால், இளமை தொட்டுப் பழகினவர் போல அத்தகு நட்புக்கொள்வர் என்பது. ‘சிலநா ளடிப்படின் கல்வரையும் உண்டாம் நெறி’ என்பது பிறிது மொழிதல் அணி. (3) 836. கள்ளார்கள் ளுண்ணார் கடிவ கடிந்தொரீஇ எள்ளிப் பிறரை யிகழ்ந்துரையார் - தள்ளியும் வாயிற்பொய் கூறார் வடுவறு காட்சியார் சாயிற் பரிவ திலர். (நால) வடு அறு காட்சியார் - குற்றமற்ற அறிவினை யுடையார். மேன் மக்கள், கள்ளார் - பிறர் பொருளைக் களவு செய்ய மட்டார்கள், உண்ணார் - கள்ளுண்ண மாட்டார், கடிவ கடிந்து ஒரீஇ - அற நூல்களில் விலக்கப்பட்ட தீச் செயல்களை வெறுத்து ஒதுக்கி, பிறரை எண்ணி இகழ்ந்து உரையார் - பிறரை அவமதித்துப் பழித்துப் பேசார், தள்ளியும் வாயின் பொய் கூறார் - மறந்தும் வாயினால் பொய் சொல்லார், சாயின் பரிவது இலர் - (வறுமை முதலிய வற்றால்) தளர்ச்சி யுண்டான காலத்தும் வருந்த மாட்டார். கள்ளல் - திருடுதல். கடிவ - கடியப்படுவன. அவை - தீச் செயல்கள். கடிந்து - வெறுத்து. ஒரீஇ - நீக்கி, ஒதுக்கி எள்ளல், இகழ்தல் - ஒரு பொருள். தள்ளுதல் - மறுத்தல். வடு - குற்றம். காட்சி - அறிவு. சாய்தல் - தளர்தல் - நிலைமை கெடல். பரிதல் - வருந்துதல். மேன்மக்கள் திருடமாட்டார், கள்ளுண்ணமாட்டார், தீச்செயல்கள் செய்யமாட்டார், பிறரை இகழமாட்டார், மறந்தும் பொய்பேச மாட்டார். துன்பத்திற்கு வருந்த மாட்டார். துன்பம் வந்தால் அதைப்போக்க வழி காணாமல் வருந்துவதால் பயனின்மையின் மேன்மக்கள் வருந்தாரென்க. இதனால், மேன் மக்களின் தீச்செயலின்மை கூறப்பட்டது. இது பெரியோர்களின் தன்மை கூறுவதால் - தன்மை நவிற்சியணி. (4) 837. பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந் தேதிலா ரிற்கட் குருடனாய்த் தீய புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும் அறங்கூற வேண்டா வவற்கு. (நால) திறன் அறிந்து - ஒருவன் நல்லொழுக்கத்தின் வகை அறிந்து, பிறர் மறையின்கண் செவிடு ஆய் - அயலாரது மறை மொழியைக் கேட்பதில் செவிடனாகியும், ஏதிலார் இல் கண் குருடன் ஆய் - அயலாரது மனைவியை விரும்பிப் பார்ப்பதில் குருடனாகியும், தீய புறங் கூற்றின் மூங்கையாய் - தீயவாகிய புறங்கூறுதலில் ஊமை யாகியும், நிற்பானேல் அவற்கு யாதும் அறம் கூற வேண்டா - இருப்பானானால் அவனுக்கு எந்த அறத்தையும் பிறர் கூற வேண்டியதில்லை. மறை - இரகசியம். திறன் - வகை. ஏதிலார் - அயலார். இல் - மனைவி. புறங்கூறுதல் - கோட்சொல்லுதல். மூங்கை - ஊமை. ஒருவன் பிறர்மறைமொழியை மறைந்து கேளாமலும், அயலார் மனைவியாரை விரும்பிப் பாராமலும், புறங் கூறாமலும் இருப்பானானால் அவனுக்கு வேறு அறங் கூற வேண்டிய தில்லை என்பதாம். இம்மூன்றுமே எல்லா அறங்களிலும் சிறந்தன வென்பதும், இவற்றையுடையானிடத்து எல்லா அறங்களும் பொருந்தி யிருக்கு மென்பதும் கருத்து. இதனால் மேன்மக்களது ஒழுக்கச் சிறப்புக் கூறப் பட்டது. (5) 838. பன்னாளுஞ் சென்றக்காற் பண்பிலார் தம்முழை என்னானும் வேண்டுப வென்றிகழ்ப - என்னானும் வேண்டினு நன்றுமற் றென்று விழுமியோர் காண்டொறுஞ் செய்வர் சிறப்பு. (நால) பண்பு இலார் தம் உழை - மேன்மைக் குணம் இல்லாத வரிடத்து, பல்நாளும் சென்றக்கால் - பலநாளும் ஒருவர் வருவா ராயின், என் ஆனும் வேண்டுப என்று இகழ்ப - இவர் யாதாயினும் ஒரு பொருளைத் தம்மிடத்து விரும்புவர் என்று கருதி அவரை இகழ்ச்சி செய்வர்; விழுமியோர் - மேன்மக்கள், என் ஆனும் வேண்டினும் நன்று என்று - இவர் யாதாயினும் நம்மிடத்துப் பெற விரும்பினாலும் நல்லதே என்று கருதி, காண் தோறும் சிறப்புச் செய்வர் - அவரைப் பார்க்கும் பொழு தெல்லாம் முகமன் செய்வர். பண்பு - நற்குணம். உழை - இடம். வேண்டுப - விரும்புவர். இகழ்ப - பழிப்பர். மற்று அசை. விழுமியோர் - மேலோர். காண் தொறும் - சென்றபோதெல்லாம். முகமன் - உபசாரம். கீழ்மக்களிடம் அடிக்கடி ஒருவர் சும்மா சென்றாலும் ஏதாவ தொன்றைத் தம்மிடம் பெற விரும்புவர் என்றெண்ணி, ‘எம்மிடம் ஏதோ ஒன்றை விரும்பித்தான் அடிக்கடி வருகின்றீர்’ என்று இகழ்வர். ஆனால், மேன்மக்களிடம் ஒருவர் அடிக்கடி சென்றாலும். செல்லும் போதெல்லாம் ஏதாவது கேட்டாலும் வெறுக்காமல். செல்லும் போதெல்லாம் முகமன்கூறி வர வேற்பர் என்பதாம். இது, மேன்மக்களது மனமாட்சி கூறியது. ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம் பலநாட் பயின்று பலரொடு செல்லினும் தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ. (புறம்) என, ஒளவையார் பாராட்டின அதியமானின் மனமாட்சி யைக் காட்டாகக் கொள்க. (6) 839. உறைப்பருங் காலத்து மூற்றுநீர்க் கேணி இறைத்துணினு மூராற்று மென்பர் - கொடைக்கடனுஞ் சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார் ஆஅயக் கண்ணு மரிது. (நால) உறைப்பு அருங்காலத்தும் - மழைபெய்தல் அருமை யான காலத்திலும், ஊற்றுநீர்க் கேணி - ஊற்றினால் நீரை யுடைய குளம், இறைத்து உணினும் ஊர் ஆற்றும் என்பர் - இறைத்துக் குடித்தாலும் ஊரிலுள்ளாரைக் காப்பாற்றும் என்று சொல்வார்கள்; கொடைக் கடனும் - கொடுத்தலாகிய கடமையும், சாயக்கண்ணும் பெரியார் போல் - (வறுமை யால்) தளர்ந்த விடத்தும் பெரியவர்கள் போல, மற்றையார் ஆயக்கண்ணும் அரிது - சிறியோர் செல்வமுடை யோரான விடத்தும் உண்டாத லில்லை. உறைத்தல் - மழைபெய்தல். கேணி - சிறுகுளம். ஆற்றுதல் - காப்பாற்றுதல். சாய்தல் - தளர்தல் - கெடுதல். ஆதல் - செல்வ முடையராதல். சாஅம், ஆஅய - இசைநிறை அளபெடை. ஊற்ற முள்ள தொரு குளம் மழையில்லாத காலத்தும் ஊற்று நீரால் - ஊறுகின்ற நீரால் - பலரைக் காப்பாற்றுவது போல, பெரியவர்கள் செல்வ மில்லாத காலத்தும் யாதேனும் ஒருவகையால் பிறர்க்கு உதவி செய்வர்; சிறியாரோ செல்வ மிகுதியாக இருந்தாலும் அப்படிச் செய்யார் என்பதாம். முன்னிரண்டடிகளில் கூறிய உவமை பெரியோர்களது கொடைக்குணத்திற்கானதால் - பிறிது மொழிதலணி. (7) மேன் மக்கள் இயல்பு 840. நீறார்ந்தும் ஒட்டா நிகரில் மணியேபோல் வேறாகத் தோன்றும் விளக்க முடைத்தாகித் தாறாப்1 படினும் தலைமகன் தன்னொளி நூறா யிரவர்க்கு நேர். (பழ) வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகி - பொதுப் பட இல்லாமல் சிறப்பாகத் தோன்றும் ஒளியையுடையதாய், நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியே போல் - புழுதியிலே படிந்தாலும் அப்புழுதி ஒட்டாத ஒப்பில்லாத மாணிக்கமே போல, தலைமகன் தன் ஒளி - மேன்மகனுடைய ஒளியானது, தாறாப் படினும் நூறாயிரவர்க்கு நேர் - தெள்ளிக்கொள்ளப் பட்ட தாயினும் நூறாயிரவர் ஒளிக்கு ஒப்பாகும். நீறு - புழுதி. ஆர்தல் - படிதல். அதாவது - மண்ணுக் குட் கிடத்தல். ஒட்டா - ஒட்டாத. நிகர் - ஒப்பு. வேறாகத் தோன்றுதல் - சிறப்பாகத் தோன்றுதல். முத்து, பவளம், மாணிக்கம், மரகதம், நீலம், வைரம், வைடூரியம், புட்பராகம், கோமேதகம், என்னும் ஒன்பான் மணிகளில் மாணிக்கமே மிக்க ஒளியுடையதாகும். விளக்கம் - ஒளி. தாறாப்படுதல் - தாற்றிக் கொள்ளுதல். தாற்றுதல் - தெள்ளுதல், கொழித்தல். ஒளி - பெருமை. நேர் - ஒப்பு. தாற்றிக் கொள்ளுதல் - தவசத்தை முறத்திலிட்டுப் புடைத்துப் பதர், கல், மண் போக்கிக் கொள்ளுதல் போல ஒரு சிறு குற்றமும் இல்லாமல் தனிப் பெருமையைக் கொள்ளுதல். அவ்வாறு தெள்ளிக் கொண்டாலும் மேன் மக்கள் பெருமை, நூறாயிரம் கீழ் மக்கள் பெருமைக்கு ஒப்பாகும் என்பதாம். புழுதியிலே கிடந்தாலும் அப்புழுதி யொட்டாமல் மாணிக்கம் மிகச் சிறந்த ஒளியை யுடையதாதல் போல, சிறியாரோடு சேர்ந்திருந் தாலும் அவரோடொட்டாமல் சான்றோர் மிகச் சிறந்த பெருமையை யுடையராவர் என்பது கருத்து. இது மேன்மக்கள் இயல்பு கூறியது. (8) 841. ஒற்கந்தா முற்ற விடத்தும் உயர்ந்தவர் நிற்பவே நின்ற நிலையின்மேல் - வற்பத்தால் தன்மேல் நலியும் பசிபெரி தாயினும் புன்மேயா தாகும் புலி. (பழ) வற்பத்தால் தன்மேல் நலியும் பசி பெரிதாயினும் - பஞ்சத் தால் தன்னை வருத்தும் பசி மிகுந்தாலும், புலி புல் மேயாதாகும் - புலி புல்லைத் தின்னாதாகும்; (அதுபோல), தாம் ஒற்கம் உற்ற இடத்தும் - தாம் வறுமை யடைந்த காலத்தும், உயர்ந்தவர் நின்ற நிலையின் மேல் நிற்பவே - மேன்மக்கள் நின்ற நிலையின் கண் வழுவாதே நிற்பர். ஒற்கம் - வறுமை. வற்பம் - பஞ்சம். நலிதல் - வருத்துதல். நின்ற நிலையாவது - மேற்கொண்டொழுகும் ஒழுக்கம். எவ்வளவு பசியானாலும் புலி புல்லைத் தின்னாது. அது போல, எவ்வளவு வறுமையுற்றாலும் மேன்மக்கள் தம் ஒழுக்கத்தில் தவறார் என்பதாம். (9) 842. மாட மழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர் கூடம் மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல் பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர் ஈடில் லதற்கில்லைப் பாடு. (பழ) மாடம் அழிந்தக்கால் - ஒரு வீடு கட்டுக்குலைந்து அழிந் தாலும், மரம் மற்றும் எடுப்பதோர் கூடத்திற்குத் துப்பு ஆகும் - அதிலுள்ள மரம் முதலியன மறுபடியும் கட்டுவதான ஒரு வீட்டிற்கு உதவியாகும்; அஃதே போல் - அது போலவே, பெரியோர் - பீடு இலாக் கண்ணும் பெருந்தகையர் - தம் செல்வம் அழிந்த விடத்தும் தமது பெருமையினின்றும் தவறார்; ஈடு இல்லதற்குப்பாடு இல்லை - வலியில்லாத தற்குப் பெருமை யில்லை. மாடம், கூடம் - வீடு. துப்பு - உதவி. பீடு - செல்வம். பெருந்தகை - பெருமை. ஈடு - வலிமை. பாடு - பெருமை. மரத்திற்கு என்பதன் குவ்வுருபை, கூடத்திற்கு எனக் கூட்டுக. வீட்டைத் துணையாகக் கொண்டிருந்த மரம் முதலியன அவ்வீடழிந்த விடத்தும் பின்னரும் கட்டப்படும் ஒரு வீட்டைத் துணையாகக் கொண்டு சிறப்படைதல் போல, செல்வத்தைத் துணையாகக் கொண்டிருந்த பெரியோர் அஃதழிந்த விடத்தும் வேறோர் துணைபெற்றுப் பெருமை குறையாதிருப்பர் என்பதாம். வீடழிந்த விடத்து உதவாமற் போகும் மண், காரை முதலியன போல, கீழ் மக்கள் செல்வமிழந்த விடத்து வேறோர் துணையின்றிப் பெருமையிழப்பர் என்பதும் குறிப்பு. இது பிறிது மொழிதலணியின் பாற்படும். மனவலியுடையார்க்கே பெருமையுண்டு. மனவலியில் லார்க்குப் பெருமையில்லை என்பது. (10) 843. கற்றதொன் றின்றி விடினும் குடிப்பிறந்தார் மற்றொன் றறிவாரின் மாண்மிக நல்லரால்; பொற்ப வுரைப்பான் புகவேண்டா; கொற்சேரித் துன்னூசி விற்பவ ரில். (பழ) கொல்சேரி துன் ஊசி விற்பவர் இல் - கொல்லத் தெருவில் சென்று தையலூசி விற்பவர் ஒருவரும் இல்லை; (அதுபோல), குடிப்பிறந்தார் கற்றது ஒன்று இன்றி விடினும் - மேன்மக்கள் கற்கவில்லை யாயினும், மற்றொன்று அறிவாரின் மாண் மிக நல்லர் - நற்குடிப் பிறவாத கற்றாரைக் காட்டிலும் மிகமிக நல்லவராவர்; (ஆதலால்), பொற்ப உரைப்பான் புகவேண்டா - நல்லவற்றை அவரிடம் சொல்லும் பொருட்டுச் செல்ல வேண்டா. மற்று - குடிப்பிறவாத - வினை மாற்று. மாண் மிக - மிக மிக. ஆல் - அசை. பொற்ப - நல்லவை. உரைப்பான் - உரைக்க. கொல் - கொல்லர். துன்னூசி - தையலூசி. உயர்குடியில் பிறந்தவரிடம் கல்வியறி வில்லையா யினும் அவரிடம் பெருந்தன்மை இயல்பாகவே அமைந் திருக்கும். அவரி டத்தில் கல்வியறிவுள்ள ஏனையோர் சென்று பெருந்தன்மையை விரித்துரைப்பது, கொல்லரிடம் சென்று தையலூசி விற்பது போலாம் என்பதாம். ஊசி செய்யும் கொல்லரிடம் சென்று ஊசி விற்றல் எங்ஙனம் வீண் வேலையோ, அங்ஙனமே - இயல்பாகவே பெருந் தன்மை யுள்ள மேன்மக்களிடம் சென்று பிறர் பெருந் தன்மையைப் பற்றிப் பேசுவதும் என்பது கருத்து. கொண்டுழிப் பண்டம் விலையொரீஇக் கொற்சேரி நுண்டுளைத் துன்னூசி விற்பாரின். (ஐந்திணையைம்பது) கொல்லத் தெருவில் ஊசி விலைபோமா. - பழமொழி (11) 844. முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும் - சொல்லின் நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப அறிமடமுஞ் சான்றோர்க் கணி. (பழ) நெறி மடல் பூந்தாழை நீடு நீர்ச் சேர்ப்ப - வளைந்த ஓலை களையுடைய அழகிய தாழைகள் ஓங்கிய கடற்கரையை யுடையவனே, முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்-, தொல்லை அளித் தாரைக் கேட்டறிதும் - முன்னாளில் கொடுத்தாரைக் கேட்டறி வோம்; (ஆதலால்), சொல்லின் அறி மடமும் சான்றோர்க்கு அணி - சொல்லுமிடத்து அறி மடமும் சான்றோர்க்கு அழகேயாம். தொல்லை - முன்பு. அளித்தல் - கொடுத்தல். சொல்லின் - ஆராயின். நெறிதல் - வளைதல். மடல் - ஓலை. பூ - அழகு. நீடுதல் - மிக்கிருத்தல், ஓங்கியிருத்தல். சேர்ப்பு - கடற்கரை, அறிமடம் - அறிந்தும் அறியார் போன்றிருத்தல், அணி - அழகு. முல்லைக்குத் தேர்கொடுத்தவன் - பாரி என்னும் வள்ளல். மயிலுக்குப் போர்வை போர்த்தவன் - பேகன் என்னும் வள்ளல். ‘தொல்லை’ எனவும், ‘கேட்டறிதும்’ எனவும் கூறுதலால், பழமொழி ஆசிரியர்க்குப் பன்னூறாண்டு களுக்கு முன்னர் வாழ்ந்தவர் பாரியும் பேகனும் என்பது பெறப்படும். பாரி, பேகனின் இக்கொடை மடத்தைப் புறநானூறு முதலிய சங்க நூல்களில் காண்க. முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் - தொல்லை இரவாம லீந்த இறைவர்போல் நீயும் கரவாம லீகை கடன். (புறப்பொருள் வெண்பாமாலை) முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் வேண்டுவ தில்லை என்பதை அறிந்தும் அறியார் போன்று கொடுத்த அவ் வறிமடமன்றோ அன்னார் புகழை என்றும் நின்று நிலவும்படி செய்துள்ளது? (12) 845. எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித் தனக்குக் கரியாவான் தானாய்த் தவற்றை நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும்; காணார் எனச்செய்யார் மாணா வினை. (பழ) தென்னவனும் எனக்குத் தகவு அன்று என்பதே நோக்கி - பாண்டியனும் இது எனக்குத் தகுதியன்று என்பதனை நினைத்துப் பார்த்து, தனக்குக் கரியாவான்தானாய் - தான் செய்த குற்றத்திற்குச் சான்றாவான் தானேயாய், தவற்றை நினைத்துத் தன்கை குறைத் தான் - (அயலான் வீட்டுக் கதவைத் தட்டிய) குற்றத்தை நினைத்து அதற்குத் தண்டனை யாகத் தன் கையை வெட்டிக் கொண்டான்; (ஆதலால்), காணார் என மாணாவினை செய்யார் - பிறர் காணார் என்று (மேன்மக்கள்) கெட்ட காரியத்தைச் செய்யார். தகவு - தகுதி. ஆல் - அசை. நோக்கி - எண்ணிப் பார்த்து. கரி - சான்று - சாட்சி. தவறு - குற்றம். குறைத்தல் - வெட்டுதல். மாணா - மாணாத. மாணாத வினை - கெட்ட காரியம். ஒருவருங் காணவில்லை என்று மேன்மக்கள் கெட்ட காரியத் தைச் செய்யமாட்டார்கள் என்பது கருத்து. மதுரையில் கீரந்தை என்னும் பார்ப்பான் ஒருவன் இருந்தான். அவன், ‘அரசன் காப்பான் அஞ்சா திரு’ எனத் தன் மனைவியைத் தேற்றி யாத்திரை சென்றான். அவ்வழிச் சென்ற பாண்டியன் அது கேட்டு, அப்பார்ப்பான் மனைவியை அவளறி யாமல் காத்து வந்தான். ஒரு நாள் அவ்வீட்டில் ஆண் பேச்சுக் கேட்டது. வந்ததை அறியாத மன்னன் ‘யாரது’ என்று கதவைத் தட்டினான். யாவனோ என்று பார்ப்பான் ஐயுற, அவள், ‘அன்று நீர் அரசன் காப்பான் எனச் சொல்லிப் போனீரே, இன்றும் அரசன் காவானோ?’ என்றாள். அது கேட்ட பாண்டியன், பார்ப்பானுடைய ஐயத்தை அகற்றும் பொருட்டுக் கதவைத் தட்டிய தன் கையைக் குறைத்துக் கொண்டான். கொற்கையை யுடைய அக்கொற்கைப் பாண்டியன், பின் பொன்னால் கை செய்து வைத்துப் பொற்கைப் பாண்டியன் எனப் பெயர் பெற்றனன் என்பது. இச்செய்தி, உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி புதவக் கதவம் புடைத்தனன் ஓர் நாள் அரச வேலி யல்லதி யாவதும் புரைதீர் வேலி யில்லென மொழிந்து மன்றத் திருத்திச் சென்றீர் அவ்வழி, இன்றவ் வேலி காவா தோவெனச் செவிச்சூட் டாணியிற் புகையழல் பொத்தி நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று, வச்சிரத் தடக்கை அமரர் கோமான் உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத் திறை. (சிலப்) எனச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. பழந்தமிழ் மன்னரின் செங்கோன்மையே செங்கோன்மை! (13) 846. மடங்கிப் பசிப்பினும் மாண்புடை யாளர் தொடங்கிப் பிறருடைமை மேவார் - குடம்பை மடலொடு புட்கலாம் மால்கடற் சேர்ப்ப கடலொடு காடொட்ட லில். (பழ) குடம்பை மடலொடு புள்கலாம் மால் கடல் சேர்ப்ப கூடுகளிலும் பனையோலைகளிலும் பறவைகள் தங்கி யிருக்கும் பெரிய கடற்கரையையுடையவனே, கடலொடு காடு ஒட்டல் இல் - கடலொடு துரும்பு பொருந்துதல் இல்லை; (அதுபோல), மடங்கிப் பசிப்பினும் - தம் உடம்பு ஒடுங்கும்படி பசித்த தாயினும், மாண் புடையாளர் பிறர் உடைமை தொடங்கி மேவார் - மாட்சிமையுடைய பெரியோர் பிறருடைய பொருளைத் தாங் கொள்ள விரும்பார். மடங்கி - உடம்பு ஒடுங்கும்படி. மடங்குதல் - ஒடுங்குதல். மாண்பு - மாட்சிமை, தொடங்கி மேவார் - கொள்ள விரும்பார். மேவுதல் - விரும்புதல். உடைமை - பொருள். குடம்பை - கூடு. மடல் - பனையோலை. கலாம் - கலக்கும் - தங்கும். மால் - பெரிய. காடு - துரும்பு. ஒட்டுதல் - பொருந்துதல். தன்னிடம் வந்து சேர்ந்த துரும்பைக் கடல் வைத்துக் கொள்ளாமல் ஒதுக்கி விடுவது போல, தம்மிடம் வந்த பிறர் பொருளை வைத்துக் கொள்ளாமல் பெரியோர் புறக்கணித்து விடுவர் என்பதாம். பிறர் பொருள் தாமாகக் கிடைப்பதானாலும் பெரியோர் விரும்பார் என்பது கருத்து. இது, பிறர் பொருள் வெஃகாமைக் குணம் கூறியது. (14) 847. கன்றி முதிர்ந்த கழியப்பன் னாள்செயினும் ஒன்றும் சிறியார்கள் என்றானுந் தோன்றாதாம்; ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம் குன்றின்மே லிட்ட விளக்கு. (பழ) கன்றி முதிர்ந்த கழியப் பல்நாள் செயினும் - மிக வெகுண்டு செய்யும் தீச்செயல்களை மிகப் பலநாள் செய்யினும், ஒன்றும் சிறியார்கண் என்றானும் தோன்றாது - அவற்றுள் ஒரு குற்றமும் சிறியாரிடம் என்றேனும் தோன்றாது; உயர்ந்தார் படுங்குற்றம் ஒன்றாய் விடினும் - உயர்ந்தார் செய்யும் குற்றம் ஒன்றே யாயினும், குன்றின் மேல் இட்ட விளக்கு - அது குன்றின் மேல் ஏற்றிவைத்த விளக்குப் போல விளங்கித் தோன்றும். கன்றுதல் - வெகுளுதல், முதிர்தல் - மிகுதல். முதிர்ந்த - முதிர்ந்த செயல்கள்; பலவின்பால் வினையாலணையும் பெயர். கன்றி முதிர்ந்த - மிக வெகுண்டு செய்யுந் தீச் செயல்கள். கழிய - மிக. என்றானும் - எப்போதும். ஆம் - அசை. படுதல் - செய்தல். இட்ட - ஏற்றிய. சிறியார் எப்போதும் தீச்செயல்களையே செய்தாலும் அவற்றுள் ஒன்றும் தோன்றாது. ஆனால், பெரியார் ஒரு சிறு குற்றம் செய்தாலும் அது மலைமேல் ஏற்றிவைத்த விளக்குப் போல் நெடுந்தூரம் விளங்கித் தோன்றும் என்பதாம். குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போ லுயர்ந்து. (குறள்) (15) இனி 6 செய்யுள் மேன்மக்கள் செய்கை. 848. ஈட்டிய வொண்பொருள் இன்றெனினு மொப்புர வாற்றும் மனைப்பிறந்த சான்றவன் - ஆற்றவும் போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும் ஏற்றுக்கன் றேறாய் விடும். (பழ) ஏற்றுக் கன்று - நல்லசாதிக் காளைக்குப் பிறந்த மாட்டுக் கன்று, ஆற்றவும் போற்றப்படாதாகிப் புல் இன்றிமேயினும் - மிகவும் பாதுகாக்கப்படாதாகி நல்ல புல்லின்றி யாதாயினும் ஒன்றைத் தின்றாலும், ஏறுஆய்விடும் - நல்ல காளை ஆகி விடும்; (அது போல), மனைப் பிறந்த சான்றவன் - உயர்குடிப் பிறந்த மேன்மகன், ஈட்டிய ஒண்பொருள் இன்று எனினும் ஒப்புரவு ஆற்றும் - தான் தேடிய மிக்கபொருள் இல்லை யாயினும் பிறர்க்கு உதவி செய்ய வல்லவனாவான். ஈட்டுதல் - தேடுதல். ஒண்பொருள் - மிக்க பொருள். ஒப்புரவு - உதவி. ஆற்ற - மிக. போற்றுதல் - நல்ல தீனி போட்டு வளர்த்தல். புல் இன்றி மேய்தல் - வளர்ப்பவன் புல் போடாததால், புறம் போக்கு நிலங்களிலுள்ள செடி பூண்டு களைத் தின்று வளர்தல். ஏறு - காளை. நல்ல காளைக்குப் பிறந்த கன்று வளர்ப்பவனால் புல் போட்டு நன்கு வளர்க்கப்படாமல் கண்ட பக்கம் மேய்ந்து திரிந்தாலும் நல்ல காளையாகி விடும். அது போல, நற்குடிப் பிறந்தவர் மிக்க பொருள் இல்லா விட்டாலும் இயன்ற அளவு உதவி செய்வர் என்பதாம். அது நல்ல காளையாவது போல் இவர் நல்ல குணஞ்செயல் உள்ளவர் ஆவர் என்றபடி. (16) 849. அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும் இடங்கண் டறிவாமென் றெண்ணி யிராஅர்; மடங்கொண்ட சாயல் மயிலன்னாய்! சான்றோர் கடங்கொண்டுஞ் செய்வர் கடன். (பழ) மடம் கொண்ட சாயல் மயில் அன்னாய் - மடமாகிய குணம் கொண்ட அழகிய மயில் போன்றவளே, சான்றோர் -, அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும் - வறுமையால் நெருக்கப்பட்டு மிக எளியராய் ஒருவர்க்கு ஒன்றைக் கொடுக்க முடியாத காலத்தும், இடம் கண்டு அறிவாம் என எண்ணி இரார் - நல்ல காலம் வந்தால் ஒப்புரவு செய்வோம் என்று எண்ணி ஒப்புரவு செய்யாமலிரார், கடம் கொண்டும் கடன் செய்வர் - வேறொருவரிடம் கடன் வாங்கியாகிலும் தாம் செய்யக் கடவனவற்றைச் செய்வர். அடர்ந்து - அடர்க்கப்பட்டு - நெருக்கப்பட்டு; மிக்க வறுமையுற்று என்றபடி. ஆற்றாத - கொடுக்க முடியாத. இடம் - காலம். கண்டு - கண்டால் - இடம் கண்டால் - நல்ல காலம் வந்தால் - அதாவது பொருள் கிடைத்தால் என்றபடி. மடம் - சொன்னதைக் கொண்டு கொண்டதை விடாமை யாகிய பெண்மைக் குணம். சாயல் - அழகு. கடம் - கடன். கடன் - கடமை. மிக்க வறுமையுற்று ஒருவர்க்கு ஒன்றைக் கொடுக்க முடியாத காலத்தும், பெரியோர்கள் நல்ல காலம் வந்தால் உதவுவோம் என்று எண்ணி ஒன்றுங் கொடாதிரார். கடன் வாங்கியாகிலும் கொடுப்பர் என்பதாம். ‘கடனுண்டு வாழாமை காண்டலினிது’ (இனிய) என்ற அதே ஆசிரியர், ‘கடங்கொண்டும் செய்வன செய்தலினிதே’ என்பதால், சும்மா இருந்து கொண்டு கடன் வாங்கிச் செலவு செய்வதும், கடன் கொண்டு வீண் செலவு செய்வதுமே குற்றமாகும். இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர். (குறள்) (17) 850. தெற்றப் பகைவ ரிடர்ப்பாடு கண்டக்கால் மற்றுங்கண் ணோடுவர் மேன்மக்கள் - தெற்ற நவைக்கப் படுந்தன்மைத் தாயினுஞ் சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு. (பழ) தெற்ற நவைக்கப்படும் தன்மைத்து ஆயினும் - உண்மை யாகத் துயர் செய்யப்படும் தன்மையுடைய தாயினும், பாம்பு சான்றோர் அவைப்படின் சாவாது - பாம்பானது பெரியோர் கூட்டத்தில் புகுந்தால் சாவாது; (அதுபோல), தெற்ற பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால் - உண்மையாகத் தமக்குப் பகையாயினார் துன்பப்படு வதனைக் கண்டால், மற்றும் கண்ணோடுவர் மேன்மக்கள் - மீண்டு இரக்கங்காட்டுவர் மேன்மக்கள். தெற்ற - தெளிய - உண்மையாக. இடர்ப்பாடு - துன்பம். மற்றும் - முன்பு தமக்குப் பல இடையூறுகளும் செய்தவராயினும் மீண்டும் என்றபடி. கண்ணோடுதல் - இரக்கங் காட்டுதல். நவை - துன்பம். நவைக்கப்படும் - துன்பஞ் செய்யப்படும். கடித்து வருத்தும் தன்மையுடைய பாம்பும் சான்றோர் கூட்டத்துட் சென்றால் அதன் கொடுந்தன்மையை எண்ணாமல் இரக்கங் கொண்டு கொல்லாது விடுவர். அதுபோல, தமது கொடிய பகைவர்க்கும் ஏதாவது துன்பம் உண்டானால், அவர் செய்த கொடுமைகளையெல்லாம் மறந்து கண்ணோடி உதவுவர் மேன்மக்கள் என்பதாம். தாங்காச் சினத்தொடு காட்டி உயிர்செகுக்கும் பாம்பும் அவைப்படின் உய்யுமாம். (நெய்தற்கலி) நல்லோ ரவைபுக்க நாகமும் சாகா. பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. (குறள்) (18) 851. பெரிய குடிப்பிறந் தாரும் தமக்குச் சிறியா ரினமா யொழுகல் - எறியிலை வேலொடு நேரொக்குங் கண்ணாய்! அஃதன்றோ பூவொடு நாரியைக்கு மாறு. (பழ) எறிஇலை வேலொடு நேர் ஒக்கும் கண்ணாய் - ஒளி வீசுகின்ற இலையையுடைய வேல்போன்றிருக்கும் கண்ணை யுடையவளே, பெரிய குடிப்பிறந்தாரும் - உயர் குடியிலே பிறந்தவர்களும், சிறியார் தமக்கு இனமாய் ஒழுகல் அஃது - கீழ் மக்களுக்கு நட்பினராக நடந்து கொள்ளும் அச்செய்கை, பூவோடு நார் இயைக்கும் ஆறு அன்றோ - பூவோடு நாரைச் சேர்க்கும் முறை போன்றதாகு மன்றோ? எறிதல் - ஒளி வீசுதல். இலை - வேலின் தலை - குத்தும் முனை. நேர் ஒத்தல் - வேல் போலக் கூர்மையும் கொடுமை யும் ஒளியும் உடைத்தலால். இயைத்தல் - சேர்த்தல் - கட்டுதல். பூவோடு சேர்ந்த நார் மணம் பெறுவது போல, மேன் மக்களோடு சேர்ந்த கீழ் மக்களும் மேன்மையடைவர் என்பதாம். பெரியார் சிறியாரைத் தம்மொடு சேர்த்துத் தமது தன்மை யுண்டாகும்படி செய்வர் என்பது கருத்து. உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். (குறள்) (19) 852. வருவாயுட் கால்வழங்கி வாழ்தல், செருவாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்புடைமை - எய்தப் பலநாடி நல்லவை கற்றலில் மூன்றும் நலமாட்சி நல்லவர் கோள். (திரி) வருவாயுள் கால் வழங்கி வாழ்தல் - தமது வருமானத்தில் நான்கிலொரு பாகத்தைப் பிறர் நலத்துக்காகச் செலவு செய்து வாழ்தலும், செரு வாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்பு டைமை - போரின்கண் வெற்றி யுண்டாகத் தான் செய்தவீரச் செயல்களை ஆராயாத சிறப்புடைமையும், எய்த பல நாடி நல்லவை கற்றல் - அறிவுண்டாகும்படி பல நூல்களையும் ஆராய்ந்து நல்லவற்றைக் கற்றலும், இம் மூன்றும் நலம் மாட்சி நல்லவர் கோள் - நற்குண நற் செய்கைகளால் மாட்சிமைப்பட்ட நல்லவருடைய கொள்கை களாம். கால் - காற்பாகம். செரு - போர். வாய்த்தல் - வெற்றி கிடைத்தல். நாடா - நாடாத - ஆராய்ந்து பாராத - எண்ணிப் பாராத. எய்த - உண்டாக - அடைய. நாடி - ஆராய்ந்து. நலம் - நற்குண நற் செய்கை. கோள்- கொள்கை. தமக்கு வரும் வருமானத்தில் நாலிலொரு பங்கைப் பொது நலத்திற் செலவு செய்தலும், போரில் தம் அரசனுக்கு வெற்றி யுண்டாகும்படி தாம் செய்த வீரச் செயல்களை எண்ணிப் பாராத சிறந்த குணமுடைமையும், அறிவுண்டாகும் படி பல நூல்களையும் ஆராய்ந்து கற்று நல்ல கருத்துக்களைத் தெரிந்து கொள்ளுதலும் மேன் மக்கள் கொள்கைகளாகும் என்பதாம். ஒருவன் வருமானத்தில் பாதியை வாழ்க்கைச் செலவுக்கும், காற்பங்கைப் பொது நலத்திற்கும், மீதிக் காற்பங்கை மீத்து வைக்கவும் கொள்ள வேண்டுமென்பதாம். போரில் தான் செய்த விரச்செயலை எண்ணிப் பார்த்து, அவற்கு அரசன் தனக்குத் தனிச்சிறப்புச் செய்ய வேண்டும் என்று விரும்புதல் கீழ்மைக் குணமாகையால், அவ்வாறு நாடாமை சிறப்புடைமை யாயிற்று. (20) 853. ஒல்வ தறியும் விருந்தினனும், ஆருயிரைக் கொல்வ திடைநீக்கி வாழ்வானும், - வல்லிதிற் சீல மினிதுடைய ஆசானு மிம்மூவர் ஞால மெனப்படு வார். (திரி) ஒல்வது அறியும் விருந்தினனும் - விருந்திடுவோர் நிலைமையை அறியும் விருந்தினனும், ஆர் உயிரைக் கொல்வது இடை நீக்கி வாழ்வானும் - அருமையாகிய உயிரை ஒருவன் கொல்லுதலைத் தடுத்து வாழ்கின்றவனும், வல்லிதின் இனிது சீலம் உடைய ஆசானும் - உறுதியான நல்லொழுக்கத் தையுடைய ஆசிரியனும், இம்மூவர் ஞாலம் எனப்படுவர் - ஆகிய இம்மூவரும் உயர்ந்தோர் என்று சிறப்பித்துச் சொல்லப் படுவர். ஒல்வது - இயல்வது - செல்வ நிலைமை. இடை நீக்கல் - தடுத்தல். வல்லிதின் - உறுதியான - தவறாத. இனிது நன்மை. சீலம் - நல்லொழுக்கம். இனிது - நன்மை. சீலம் - ஒழுக்கம். ஞாலம் - உலகம்‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்றபடி, உயர்ந் தோரை உணர்த்திற்று. உள்ளதை யுண்டு மகிழும் விருந்தினனும், கொலை செய் யாமல் செய்பவனும், ஒழுக்கத்திற் சிறந்த ஆசிரியரும் உயர்ந்தோர் எனப்படுவார் என்பதாம். (21) 854. உண்பொழுது நீராடி யுண்டலும், என்பெறினும் பால்பற்றிச் சொல்லா விடுதலும், - தோல்வற்றிச் சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும் தூஉய மென்பார் தொழில். (திரி) உண் பொழுது நீராடி உண்டலும் - உண்ணும் பொழுது குளித்துக் கொண்டு உண்ணுதலும், என் பெறினும் பால் பற்றிச் சொல்லா விடுதலும் - எவ்வளவு பொருளைப் பெறுவதா யிருந்தாலும் ஒரு பக்கமாகச் சேர்ந்து பொய்ச்சான்று சொல்லாமல் இருத்தலும், தோல் வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை - உணவின்மை யால் உடம்பு இளைத்துக் கெடுவதா யிருந்தாலும் நற்குணங்களில் குறையா மையும், இம்மூன்றும் தூயம் என்பார் தொழில் - ஆகிய இம்மூன்றும் தூய்மையுடையேம் என்று எண்ணுவோர் செயல் களாம். பால் - பக்கம் - ஒருபக்கம். சொல்லா - சொல்லாமல். தோல் - உடம்பைக் குறிக்கிறது. வற்றுதல் - இளைத்தல். சாய்தல் - அழிதல், கெடுதல். சான்றாண்மை - நல்லொழுக்கம். குன்றுதல் - குறைதல், கெட்ட எண்ணம் எண்ணுதல். கெட்ட காரியம் செய்ய எண்ணுதல். குளித்துக் கொண்டு உண்ணுதலும், பொய்ச்சான்று சொல்லா மையும், எத்தகைய வறுமையுற்ற போதும் கெட்ட எண்ணம் எண்ணாமையும் மெய் மொழி மனத்தூயோர் செயல்களாம். நீராடி யுண்டல் மெய்த்தூய்மை, பொய்க்கரி சொல்லாமை மொழித்தூய்மை, சான்றாண்மை குன்றாமை மனத் தூய்மை. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. (குறள்) ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக் காழி யெனப்படு வார். (குறள்) (22) 855. வள்ளன்மை பூண்டான்கட் செல்வமும், உள்ளத் துணர்வுடையா னோதிய நூலும், - புணர்வின்கண் தக்க தறியுந் தலைமகனும் இம்மூவர் பொத்தின்றிக் காழ்த்த மரம். (திரி) வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் - வரையாது கொடுத் தலை மேற்கொண்டவனிடத்திலுள்ள செல்வமும், உள்ளத்து உணர்வுடையான் ஓதிய நூலும் - உள்ளத்தில் உணரும் இயல்பு டையவன் கற்ற நூலறிவும், புணர்வின்கண் தக்கது அறியும் தலை மகனும் - பிறர் தன்னை அடைந்த விடத்து அவர்க்குத் தன்னால் செய்யத் தக்கதைக் கேட்டறியும் தலைவனும். இம்மூவர் பொத்து இன்றிக் காழ்த்த மரம் - ஆகிய இம்மூவரும் பொந்து இல்லாமல் வயிரம் பற்றிய மரம்போல் சிறந்தவராவர். வள்ளண்மை - வரையாது - இல்லை யென்னாது - கொடுக்குந் தன்மை. பூணல் - மேற்கொள்ளல். உள்ளம் - மனம். உணர்வு - ஆராய்ந்து பார்க்குந் தன்மை. புணர்தல் - சேர்தல், அடைதல். தக்கது - செய்யத்தக்கது. பொத்து - பொந்து. காழ் - வைரம், சேவு. காழ்த்த - சேவேறிய. வள்ளன்மை பூண்ட செல்வனும், உள்ளத்துணர்வுடைய கற்றோனும், தக்கதறியும் தலைமகனும் பொத்தின்றிக் காழ்த்த மரம் எனக் கொள்க. வைரம் பற்றிய மரம் சிறப்பாகக் கொள்ளப்படுதல் போல இம்மூவரும் சிறப்பாகக் கொள்ளப் படுவரென்பது. (23) 856. சான்றாருட் சான்றான் எனப்படுதல், எஞ்ஞான்றும் தோய்ந்தாருள் தோய்ந்தானெனப்படுதல், பாய்ந்தெழுந்து கொள்ளாருள் கொள்ளாத கூறாமை இம்மூன்றும் நல்லாள் வழங்கு நெறி. (திரி) சான்றாருள் சான்றான் எனப்படுதல் - நற்குணங்களால் நிறைந்தவர்களில் நற்குணங்களால் நிறைந்தவன் என்று எண்ணும் படி நடத்தலும், எஞ்ஞான்றும் தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் - எப்போதும் நண்பர்களிடத்து நண்பன் என்று எண்ணும்படி நடத்தலும், பாய்ந்து எழுந்து கொள்ளாருள் கொள்ளாத கூறாமை - தம்மேல் சினத்தோடு பாய்ந்தெழுந்து தமது சொல்லை ஏற்றுக்கொள்ளாதவரிடத்து அவர் ஒப்புக் கொள்ளாத சொற்களைச் சொல்லாதிருத்தலும், இம்மூன்றும் நல்லாள் வழங்கும் நெறி - ஆகிய இம்மூன்றும் நல்லவன் மேற்கொள்ளும் நெறியாம். சான்றாருள் சான்றான் எனப்படுதல் - பெரியோர் மதிக்கும் படி நடந்துகொள்ளுதல். எஞ்ஞான்றும் - செல்வ முள்ள காலத்தும் வறுமையுற்ற காலத்தும். தோய்ந்தார் - மனங்கலந்த நண்பர். பாய்ந்தெழுந்து - சினங்கொண்டு என்றபடி. பெரியோர்களிடத்து நல்லவனாக நடந்து கொள்ளு தலும், நண்பர்களிடத்து எப்போதும் ஒரு தன்மையாக நடந்து கொள்ளுதலும், தமது சொல்லை ஏற்றுக்கொள்ளாதவரிடம் அவர் விரும்பாத வற்றைக் கூறாமையும் மேன் மக்கள் கொள்கை என்பதாம். (24) 857. துன்பத்துள் துன்புற்று வாழ்தலும், இன்பத்துள் இன்ப வகையான் ஒழுகலும் - அன்பின் செறப்பட்டார் இல்லம் புகாமையிம் மூன்றும் திறப்பட்டார் கண்ணே யுள. (ஆசா) துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் - துன்பக்காலத்தில் அத்துன் பத்துள் அமைவுற்று வாழ்தலும், இன்பத்துள் இன்ப வகையான் ஒழுகலும் - இன்பக் காலத்தில் தம்மோடு பிறரும் இன்புறும்படி நடத்தலும், அன்பின் செறப்பட்டார் இல்லம் புகாமை - அன் பில்லார் இல்லம் புகாமையும், இம்மூன்றும் திறப்பட்டார் கண்ணே உள - ஆகிய இம்மூன்றும் நன் மக்களிடத்தே உளவாம். செறப்படல் - வேறுபடல். அன்பின் செறப்படல் - அன்பி னின்றும் வேறுபடல். திறம் - கூறுபாடு. நற்கூறு - நன்மை. நற்கூறு பட்டார் - நல்லவர். துன்பம் நேரிட்ட காலத்தில் அதனைப் பொறுத்திருத் தலும், இன்பக்காலத்தில் - செல்வமுள்ள காலத்தில் - பிறரையும் இன்புறச் செய்து தாமும் இன்புற்று வாழ்தலும், அன்பில்லார் வீட்டிற்குச் செல்லாதிருத்லும் நன்மக்கள் குணங்களாகும் என்பதாம். இன்பம் விழையான் இடும்பை யியல்பென்பான் துன்ப முறுத லிலன். (குறள்) மதியாதார் வாசல் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடியுறும். (ஒளவையார்) (25) 858. எய்தாத வேண்டார், இரங்கார் இழந்ததற்குக் கைவாரா வந்த இடுக்கண் மனமழுங்கார் மெய்யாய காட்சி யவர். (ஆசா) எய்தாத வேண்டார் - தமக்குக் கிடைத்தற்கரியவற்றை விரும்பார், இழந்ததற்கு இரங்கார் - தம்மால் இழந்த பொருளைப் பற்றி வருந்தார், கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார் - அகற்றற் கரிய துன்பம் வந்த விடத்து மனங்கலங்கார், மெய்யாய காட்சியவர் - உண்மையான அறிவினையுடையார். எய்துதல் - அடைதல், கிடைத்தல். வேண்டுதல் - விரும்புதல். இழந்தது - இழந்த பொருள். கைவருதல் - நீக்க முடிதல். கைவாராத - நீக்கமுடியாத, இடுக்கண் - துன்பம். அழுங்குதல் - கலங்குதல். காட்சி - அறிவு. கிடைத்தற்கரியவற்றை விரும்பாமையும், இழந்ததற்கு இரங் காமையும், துன்பத்திற்கு மனங்கலங்காமையும் நன்மக்கள் இயல்பு என்பதாம். (26) 859. கடன்முகந்து தீம்பெயலை யூழ்க்கு மெழிலி மடனுடையார் கோதகற்றி மாண்புறுத்த லேமம் படைத்தாக்கல் பண்பறிந்தோர் சால்பு. (இன்னி) எழிலி கடல் முகந்து - மேகமானது கடலிலுள்ள உப்பு நீரை மொண்டுவந்து, தீம் பெயிலை ஊழ்க்கும் - இனிய நீரைச் சொரியும்; (அதுபோல), பண்பு அறிந்தோர் சால்பு - ஒழுக்க நெறியை அறிந்தோர் இயல்பானது, மடன் உடையார் கோது அகற்றி மாண்பு உறுத்தல் - அறிவில்லாதவருடைய குற்றங் களை அகற்றி நற்குணங்களை அறிவுறுத்தலும், ஏமம் படைத்து ஆக்கல்- பாது காப்புச் செய்து காத்தலுமாகும். முகந்து - மொண்டு, தீம் - இனிய. பெயல் - மழை. ஊழ்த்தல் - சொரிதல். எழிலி - மேகம். மடன் - அறியாமை. கோது - குற்றம். மாண்பு - குணம். உறுத்தல் - அறிவுறுத்தல். ஏமம் - பாதுகாப்பு. ஏமம் படைத்து ஆக்கல் - பாதுகாப்புச் செய்தல். பண்பு - ஒழுக்கம். சால்பு - இயல்பு. மேகமானது உப்புநீரை மொண்டுவந்து, உப்புத் தன்மையைப் போக்கி இனிய நீராகச் சொரிவது போல ஒழுக்கநெறியை அறிந்தார், அறிவிலாரின் குற்றங்களைப் போக்கிக் குணத்தை அறிவுறுத்திப் பாதுகாப்பர் என்பதாம். பாதுகாத்தலாவது - குணத்தைக் கைவிடாமலும், குற்றங் களை மீண்டும் செய்யாமலும் காத்தல். மேகத்தை உவமை கூறினதால், இவரும் கைம்மாறு கருதாமல் உதவுவது கொள்ளப் படும். (27) 860. காலொடு கையமுக்கிப் பிள்ளையை வாய்நெறித்துப் பாலொடு நெய்பெய்யுந் தாயனையர் - சால அடக்கத்தை வேண்டி அறன்வலிது நாளும் கொடுத்துமேற் கொண்டொழுகு வார். (அற) சால அடக்கத்தை வேண்டி - மக்களை மிகவும் அடங்கி யிருக்குமாறு செய்யக் கருதி, நாளும் அறன் வலிது கொடுத்து - நாடோறும் அறத்தினை வற்புறுத்திக் கூறி, மேற்கொண்டு ஒழுகு வார் - அடக்கியாளும் பெரியோர், காலொடு கை அமுக்கி - காலையும் கையையும் அமுக்கிப் பிடித்துக் கொண்டு, வாய் நெறித்து - வாயைப் பிளந்து, பிள்ளையை பாலொடு நெய் பெய்யும் தாயனையர் - பிள்ளைக்குப் பாலையும் விளக் கெண்ணெயையும் வார்க்கின்ற தாய்க்கு ஒப்பாவர். பிள்ளையை - பிள்ளைக்கு - உருபு மயக்கம். நெறித்து - பிளந்து. நெய் - விளக்கெண்ணெய். சால - மிக. வேண்டி - கருதி, எண்ணி, வலிது - வற்புறுத்தி. கொடுத்து - கூறி. மேற்கொண்டு ஒழுகல் - அடக்கியாளல். பிள்ளையின் மீது அன்புள்ள தாய், பிள்ளை நன்கு வாழும் பொருட்டு, கையையும் காலையும் அமுக்கிப் பிடித்துக் கொண்டு வாயைப் பிளந்து பாலையும் எண்ணெயையும் வார்த்தல் போல, மக்களின் மீது அன்புடைய பெரியோர்கள், மக்கள் தீநெறிக்கட் செல்லாமல் நன்னெறிக்கண் நன்கு வாழும்பொருட்டு, அறத்தை வற்புறுத்திக் கூறி அடக்கி யாள்வர் என்பதாம். மக்களை நல்வழியில் நடக்கும்படி செய்தல் பெரி யோர் கடமையாகும் என்பது கருத்து. (28) 861. தண்டாமம் பொய்வெகுளி பொச்சாப் பழுக்காறென் றைந்தே கெடுவார்க் கியல்பென்ப பண்பாளா! ஈத லறித லியற்றுத லின்சொற்கற் றாய்த லறிவார் தொழில். (அற) பண்பாளா - நற்குணமுடையவனே; தண்டாமம் - நன்மை செய்யக் கூசுகின்ற மானமும், பொய் வெகுளி பொச்சாப்பு அழுக்காறு என்ற ஐந்து - பொய்யும் வெகுளியும் மறதியும் பொறாமையும் என்ற ஐந்தும், கெடுவார்க்கு இயல்பு என்ப - கெட்டவர்களுக்கு உரிய குணங்களாகும் எனவும், ஈதல் அறிதல் இயற்றுதல் இன்சொல் கற்று ஆய்தல் - ஈகையும் நன்மை தீமைகளை ஆராய்ந்தறிதலும், நல்லன செய்தலும் இன்சொற் சொல்லுதலும் நூல்களைக் கற்று ஆராய் தலும் ஆகிய ஐந்தும், அறிவார் தொழில் என்ப - அறிவுடையோர் தொழில்களாகு மெனவும் கூறுவர் பெரியோர். தண்டாமம் - நல்ல காரியங்கள் செய்வதற்கு மனங் கூசுகின்ற மானம். பொச்சாப்பு - மறதி. அழுக்காறு - பொறாமை. இயல்பு - இயற்கைக் குணம். இயற்றுதல் - செய்தல். ‘என்ப’ என்பதை ஈரிடத்துங் கூட்டுக. நல்ல காரியங்கள் செய்ய மனங் கூசுதல், பொய் பேசுதல், சினத்தல், மறத்தல், பொறாமை ஆகிய ஐந்தும் கீழ்மக்களின் இயற்கைக்குணம். ஈகை, நன்மை தீமைகளை அறிதல், நல்லன செய்தல், இன்சொற் சொல்லுதல், நூலாராய்ச்சி ஆகிய ஐந்தும் மேன்மக்கள் தொழில்களாகும் என்பதாம். மேன்மக்களின் பெருமை கூறுவார், கீழ்மக்களின் சிறுமையும் உடன் கூறினார். (29) 862. பாம்புண்ட பாலெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட தேம்படு தெண்ணீ ரமுதமாம் - ஓம்பற் கொளியாம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோற் களியாங் கடையாயார் மாட்டு. (அற) பாம்பு உண்ட பால் எல்லாம் நஞ்சாம் அது போல் - பாம்புகள் உண்ட பாலனைத்தும் நஞ்சாக மாறுதல் போல், கடையாயார் மாட்டு ஞானம் களி ஆம் - கீழ்மக்கள் கற்கும் அறிவு நூல்கள் அவர் மாட்டு மயக்கத்தையே உண்டாக்கும், பசு உண்ட தெள்நீர் தேம்படு அமுதம் ஆம் அது போல - மாடுகள் குடித்த தெளிந்த நீர் இனிய பாலாக மாறுதல் போல, உயர்ந்தார் கண் ஞானம் ஓம்பற்கு ஒளியாம் - மேன்மக்கள் கற்கும் அறிவு நூல்கள் அவர் மாட்டுப் போற்றுதற் குரிய அறிவினை வளர்க்கும். தேம்படு - இனிமையான. தேம் - இனிமை. தெள்நீர் - தெளிந்த நீர் - தண்ணீர் என்றபடி. அமுதம் - பால். ஓம்புதல் - போற்றுதல். ஒளி - அறிவு. ஞானம் - அறிவு நூல்கள். களி - மயக்கம். மாட்டு - இடத்தில். ‘அது போல்’ என்பதை ஈரிடத்துங் கூட்டுக. பாம்பு உண்ட பால் நஞ்சாக மாறுவது போல, கீழ் மக்கள் கற்ற நல்ல நூல்களும் அவர்க்குக் கெட்ட அறிவை உண்டாக்கும். மாடு உண்ட தண்ணீர் பாலாக மாறுவது போல, மேன்மக்கள் கற்ற பொதுவான நூல்களும் அவர்க்கு நல்லறிவை உண்டாக்கும் என்பதாம். (30) 863. வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறுசிலர் காத்தவை கொண்டாங் குவப்பெய்தார் - மாத்தகைய அந்தப் புரத்தது பூஞை புறங்கடைய கந்துகொல் பூட்கைக் களிறு. (நீநெ) மாத்தகைய அந்தப்புரத்தது பூஞை - பெருமை பொருந்திய வீட்டினுள் இருப்பது பூனை, புறங்கடைய கந்து கொல் பூட்கைக் களிறு - பெருமையில்லாத தலைவாயிலில் இருப்பது கட்டுத் தறியை முறிக்கக்கூடிய வலிமையுடைய யானை; (ஆகவே), மிகல் மக்கள் வேந்து அவை காவார் - மேன்மக்கள் அரசவையைக் காத்துக் கொண்டிருக்க மாட்டார், வேறு சிலர் காத்தது கொண்டு ஆங்கு உவப்பு எய்தார் - கீழ்மக்கள் அவ் வரசவையைக் காத்துக் கொண்டிருந்த தனால் மகிழ்ந்து விடவும் மாட்டார். வேந்து அவை என்பது - வேத்தவை என எதுகை நோக்கி வலித்தது. மிகல் மக்கள் - மேன்மக்கள். மிகல் - மேன்மை. வேறு சிலர் - கீழ்மக்கள், கீழ்மக்களின் இழிவு தோன்ற வேறு சிலர் என்றார். ஆங்கு - ஆல். உவப்பு - மகிழ்ச்சி. எய்தல் - அடைதல். மாத்தகைய - பெருமை பொருந்திய. அந்தப்புரம் - பெண்கள் இருப்பிடம். பூஞை - பூனை. புறங்கடை - தலைவாயில். அதாவது - வீட்டுக்கு வெளியே. புறங்கடையது. து - கெட்டது. கந்து - கட்டுத்தறி. கொல்லுதல் - முறித்தல். பூட்டிகை - வலிமை. களிறு - ஆண் யானை. காத்தது, காவார் என்பன - அரசியலலுவல் பார்த் தலையும், அது பெறாதிருத்தலையும் குறிக்கும். எல்லோரும் செல்லுதற் கரிதான அந்தப்புரம் - அத்தகைய அரச அவைக்கு உவமையாக வந்தது. வீட்டினுள் இருப்பதனால் பூனைக்கும், வீட்டின் வெளியில் இருப்பதனால் யானைக்கும் யாதொரு பெருமையும் சிறுமையும் இல்லை. அதுபோல, அரசியலலுவல் பார்ப்பதனால் கீழ்மக் கட்கும், அவ்வலுவல் பாராததனால் மேன்மக்கட்கும் பெருமையும் சிறுமையும் இல்லை என்பதாம். அதிகாரச் செல்வாக்குடைய கீழ்மக்களைவிட, அஃதில்லா மேன்மக்கள் பெருமையுடையவர் என்பது கருத்து. (31) 864. மனத்த கறுப்பெனின் நல்ல செயினும் அனைத்தெவையுந் தீயவே யாகும் - எனைத்துணையும் தீயவே செய்யினு நல்லவாக் காண்பவே மாசின் மனத்தி னவர். (நீநெ) கறுப்பு மனத்த எனின் நல்ல செயினும் - களங்க முள்ள மனத்தையுடையவராயின் ஒருவன் நல்லனவே செய்தாலும், அனைத்து எவையும் தீயவே ஆகும் - அவையாவும் அவருக்குத் தீயனவாகவே காணப்படும்; (ஆனால்), மாசு இல் மனத் தினவர் - களங்கமில்லாத மனத்தை யுடையவர்க்கு , எனைத் துணையும் தீயவே செய்யினும் - எவ்வளவுதான் தீயனவே செய்தாலும், நல்லவாக் காண்பவே - நல்லனவாகவே எண்ணிக் கொள்வார்கள். கறுப்பு - களங்கம், குற்றம். ‘மனத்தர்’ என்பது - செய்யுளின்பம் நோக்கி மனத்த என நின்றது. துணையும் - அளவும். நல்லவாக. மாசு - களங்கம், குற்றம். மாசு - வெகுளி, பொறாமை, வெறுப்பு, பகை முதலியன. குற்றமுள்ள மனத்தையுடைய கீழ்மக்கள், பிறர் நல்ல செய்யினும் தீயனவாகவே கொள்வர். குற்றமில்லாத மனத்தை யுடைய மேன்மக்கள், பிறர் தீயனவே செய்யினும் நல்லன வாகவே கொள்வர் என்பதாம். நன் மனத்தினர் யார் என்ன செய்தாலும் அதில் குற்றங் காணாது குணமே காண்பர். தீ மனத்தினர் நல்ல செய்யினும் நன்றென உணரார் என, ஒருவர் மனம் எப்படியோ அப்படி யோ அவர் எண்ணமும் இருக்குமென, மனத்தின் பயன் கூறப்பட்டது. (32) 865. நல்லா றொழுக்கின் தலைநின்றார் நல்கூர்ந்தும் அல்லன செய்தற் கொருப்படார் - பல்பொறிய செங்கட் புலியே றறப்பசித்துந் தின்னாவாம் பைங்கட் புனத்தபைங் கூழ் (நீநெ) பல்பொறிய செங்கண் புலி ஏறு - பலபுள்ளிகளையும் சிவந்த கண்ணையுமுடைய புலியானது, அறப் பசித்தும் பைங்கண் புனத்த பைங்கூழ் தின்னாவாம் - மிகப்பசித்தாலும் பசுமையான இடத்தை யுடைய விளை நிலத்தில் உள்ள பயிர்களைத் தின்னாது; (அது போல) , நல் ஆறு ஒழுக்கின் தலை நின்றார் - நன்னெறியில் நடக்கின்ற பெரியோர்கள், நல் கூர்ந்தும் அல்லன செய்தற்கு ஒருப்படார் - வறுமையுற்ற காலத்திலும் கெட்ட காரியங்களைச் செய்ய உடன்படார். நல் ஆறு ஒழுக்கம் - நல்லவழியில் நடத்தல், தலை நிற்றல் - தவறாதிருத்தல், கடைப்பிடித்தல். நல்கூர்தல் - வறுமையுறுதல். அல்லன - தீச்செயல்கள் - பொய், களவு, வஞ்சனை முதலியன. ஒருப்படார் - உடன்படார். பொறி - புள்ளி. புலி ஏறு - ஆண் புலி. அற - மிக. பைங்கண் - பசிய இடம். புனம் - விளை நிலம். புனத்த - விளைநிலத்திலுள்ள. பைங்கூழ் - பயிர். புலி எவ்வளவு பசித்த போதிலும் பயிரைத் தின்னாமை போல, மேன்மக்கள் எவ்வளவு வறுமையுற்ற போதிலும் கெட்ட காரியங்கள் செய்யமாட்டார் என்பதாம். ‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ - பழமொழி எத்தி றத்திட ரெய்திய ராயினும் உத்த மக்குல மேன்மை யொழுக்கமார் தத்த நீதி பிழைப்பர்கொல் சால்புளோர். (சேதுபுராணம்) இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர். (குறள்) (33) 866. அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய் நட்டாலு நண்பல்லார் நண்பல்லர் நன்னுதால்! கெட்டாலு மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு சுட்டாலும் வெண்மை தரும். (வாக்) நல் நுதால் - நல்ல நெற்றியையுடையவளே, பால் அட்டாலும் சுவையில் குன்றாது - பாலைக் காய்ச்சினாலும் இனிய சுவையிலே குறையாது, சங்கு சுட்டாலும் வெண்மை தரும் - சங்கினைச் சுட்டுச் சாம்பலாக்கினாலும் வெண்மை யாகவே இருக்கும்; (அதுபோல), கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே - செல்வமிழந்து வறுமையுற்றாலும் மேலான குணமுள்ளவர் மேன்மக்களாகவே விளங்குவர், அளவளாய் நட்டாலும் நண்பு அல்லார் - மனங்கலந்து நட்புக் கொண் டாலும் நட்புக் குணம் இல்லாத கீழோர் நண்பரா கார். அடுதல் - காய்ச்சுதல். அளவளாவுதல் - மனங்கலத்தல் - மனம் ஒன்றுபடல். நடுதல் - நட்புக் கொள்ளல், நுதல் - வெற்றி, நன்னுதால் - மகடூஉ முன்னிலை. ஏடுபெயர்த் தெழுதுவோரால் இச்சொல் விடுபட்டதால், இரண்டாவதடி முச்சீருடைய வெண்பாவை பிற்காலத்தார் சவலை வெண்பா என வழங்கலாயினார். தீயில் காய்ச்சியும் சுட்டும் வருத்தினாலும் இன்சுவையும் வெண்ணிறமும் மாறாத பாலும் சங்கும் போல, வறுமை எவ்வளவு வருத்தினாலும் மேன்மக்கள் தம் குணத்தில் மாறார். மனங்கலந்து நட்புக் கொண்டாலும் நற்குணமில்லார் நண்ப ராகார் எனவே, மேன்மக்களோடு நட்புக்கொள்ள வேண்டு மென்பதாம். உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். (குறள்) (34) 867. நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில் நல்லா ரொருவ ருளரேல் அவர்பொருட் டெல்லார்க்கும் பெய்யு மழை. (வாக்) நெல்லுக்கு இறைத்த நீர் - நெற்பயிருக்கு இறைக்கப் பட்ட நீரானது, வாய்க்கால் வழி ஓடி - வாய்க்காலின் வழியாகச் சென்று, ஆங்கே புல்லுக்கும் பொசியும் - அங்குள்ள புற்களுக்கும் பாயும்; (அதுபோல), தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் - பழமை யாகிய இவ்வுலகத்தில் நல்லவர் ஒருவர் இருப்பாரானால், அவர் பொருட்டு மழை எல்லார்க்கும் பெய்யும் - அவர் காரணமாக மழையானது எல்லோர்க்கும் பெய்யும். பொசிதல் - பெய்தல். பொருட்டு - ஆக. அவர் பொருட்டு மழை - அவருக்காகப் பெய்யும் மழை என்ற படி. நெல்லுக்குத்தான் தண்ணீர் இறைக்கின்றனர். அத் தண்ணீர் நெல்லுக்குப் பாயும்போது அவ்வயலிலுள்ள புல்லுக்கும் பாய்கிறது. புல்லுக்குத் தண்ணீர் இறைப்பார் யாருமில்லை. அதுபோல, நல்லார்க்காகத்தான் மழை பெய்கிறது. நல்லார் உள்ள இடத்தில் வாழும் மற்ற மக்களுக்கும் அம்மழை பயன்படுகிறது. கீழ் மக்களுக் காக மழை பெய்வதில்லை என்பதாம். மழை மாநிலத்திற்கு மிகமிக இன்றியமையாத தாகலின், மழையின்மேல் வைத்து நல்லவர்க்காகவே மழை பெய்கிறது என்றார், ‘கணவற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ (குறள்) என்றாற்போல, நல்லவர் ஒருவரால் பலர் பயனடைவர். ஓரூரில் நல்லவர் ஒருவர் இருந்தால், அவருக்காக அரசிய லாரும் அவ்வூர்க்கு நன்மைகள் பல செய்வர். மற்ற ஊர் மக்களும் அவ்வூரை மதித்து நடப்பர். பகைவர்கள் அவ்வூரைத் தாக்க நினையார். இன்னபல காரணங்களால் நல்லாரால் எல்லார்க்கும் பயனுண்டாதல் காண்க. காந்தியடிகள் இருந்து வந்த சபர்மதி, வார்தா என்னும் இடங்களில் உள்ள மக்கள் பெற்ற நன்மைகளையும் மதிப்பையும் நோக்குக. (35) 868. சீரியர் கெட்டாலுஞ் சீரியரே சீரியர்மற் றல்லாதார் கெட்டாலங் கென்னாகும் - சீரிய பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகும் என்னாகும் மண்ணின் குடமுடைந்தக் கால். (வாக்) சீறிய பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும் - சிறந்த பொன்னால் செய்யப்பட்ட குடமானது உடைந்து போனாலும் முன் போலப் பொன்னேயாகிப் பயன்தரும், மண்ணின் குடம் உடைந்தக்கால் என் ஆகும் - மண்ணால் செய்யப்பட்ட குடமானது உடைந்து போனால் அது என்ன பயன் தரும்? (ஒருபயனும் தராது. அதுபோல), சீரியர் கெட்டாலும் சீரியரே - மேன்மக்கள் வறுமையால் வாடி னாலும் மேன்மக்களே, சீரியர் அல்லாதார் கெட்டால் அங்கு என் ஆகும் - மேன்மக்களல்லாத கீழ்மக்கள் வறுமையடைந் தால் அப்பொழுது யாதாகும். சீரியர் - சிறப்புடையவர் - மேன்மக்கள். கெடுதல் - செல்வங் கெட்டு வறுமையுறுதல். மற்று -அசை, மேன்மக்கள் வறுமையுற்ற காலத்தும் தங்கள் நிலையி னின்றும் தவற மாட்டார்கள். அதாவது - ஒழுக்கத்திற் குன்ற மாட்டார்கள். கீழ்மக்களோ வறுமையுற்றால் திருட்டுப் புரட்டு பொய் பித்தலாட்டம் முதலிய இழிசெயல்கள் அத்தனையும் செய்வர் என்பதாம். பொன்குடம் உடைந்தால் அப்பொன் முன்போலவே மதிக்கப் பெறும் அதுபோல, மேன்மக்கள் கெட்டாலும் முன்போல மதிக்கப் பெறுவர். மண்குடம் உடைந்தால் அந்த ஓடு மதிப்பின்றி வெளியே எறியப் படுவதுபோல, கீழ்மக்கள் செல்வமிழந்து கெட்டால் மதிப்பின்றி ஒதுக்கப்படுவர் என்பதுங் கொள்க. (36) 869. உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரு முண்டு. (வாக்) வியாதி உடன் பிறந்தே கொல்லும் - நோயானது உடம்போடு கூடப் பிறந்தே - உடம்பிற் பிறந்தே என்றபடி - அவ்வுடம்பை அழிக்கும், (அதுபோல), உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா - கூடப் பிறந்தவர் களெல்லாம் உறவினர் என்று எண்ணி நம்பியிருக்க வேண்டாம், உடன் பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் - உடம்போடு கூடப் பிறவாத பெரிய மலையில் பிறந்த மருந்தே அந்நோயைப் போக்கும், அம்மருந்து போல் வாரும் உண்டு - அம்மருந்தைப் போன்ற மேன்மக்களும் உண்டு. பிறத்தல் - உண்டாதல். உடம்போடு கூடப் பிறந்த நோய் அவ்வுடம்பை அழிப்பது போல, கூடப் பிறந்தவருள் தீமை செய்வோரும் உண்டு. ஆதலால், உடன்பிறந்தவர்களெல்லாம் உறவினர் - நன்மை செய்வோர் - என்று எண்ணி நம்பியிருக்கக் கூடாது. உடம் போடு கூடப் பிறவாத மலையில் பிறந்த மருந்தே அந்நோயைத் தீர்ப்பது போல, உடன் பிறவாத அயலாரான மேன் மக்கள் நன்மை செய்வர். ஆதலால், அவரையே நம்பியிருக்க வேண்டும் என்பதாம். (37) 870. நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும் அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர். (வாக்) நாகம் தான் நஞ்சுடைமை அறிந்து கரந்து உறையும் - நாகபாம்பானது தான் நஞ்சினை உடைத்தாயிருத்தலைத் தெரிந்து ஒளிந்து கொண்டுவாழும், நீர்ப்பாம்பு அஞ்சாப் புறம் கிடக்கும் - நஞ்சில்லாத தண்ணீர்ப் பாம்பானது அஞ்சாமல் வெளியில் கிடக்கும்; (அதுபோல) நெஞ்சில் கரவு உடையார் தம்மைக் கரப்பர் - மனத்திலே, வஞ்சனையுடையவர்கள் தங்களைத் தாமே மறைத்துக் கொள்வர், கரவு இலா நெஞ்சத் தவர் கரவார் - வஞ்சனை யில்லாத மனத்தை யுடையவர்கள் தங்களை மறைத்துக் கொள்ளார். கரந்துறைதல் - மறைந்து வாழ்தல். புற்றுக்குள்ளும், சந்து பொந்துக்குள்ளும் ஒளிந்து வாழ்தல். அஞ்சா - அஞ்சாமல். புறம் - புறத்தே - வெளியில். கரவு - வஞ்சனை. கரத்தல் - மறைந் தொழுகுதல்; அதாவது தமது வஞ்சனையைப் பிறரறியாமல் நல்லவர் போல நடித்தல். கரவிலா - கரவிலாத. நஞ்சினையுடைய நாகபாம்பு தம்மைக் கண்டவர் அடித்துக் கொன்று விடுவார் என்று அஞ்சி மறைந்து வாழும். அதுபோல, வஞ்சனையுடையவர்கள் அதைப் பிறரறியாமல் நல்லவர் போல நடிப்பர். நஞ்சில்லாத நீர்ப்பாம்பு அஞ்சாமல் வெளியில் திரிவது போல, வஞ்சனையில்லாத மேன் மக்கள் உள்ளபடியே நடப்பர் என்பதாம். (38) 871. என்று முகமன் இயம்பா தவர்கண்ணும் சென்று பொருள் கொடுப்பர் தீதற்றோர் - துன்றுசுவை பூவிற் பொலிகுழலாய்! பூங்கை புகழவோ நாவிற் குதவு நயந்து. (நன்) பூவின் பொலி குழலாய் - பூவினால் விளங்குகின்ற கூந்தலை யுடையவளே, பூங்கை - அழகிய கையானது, புகழவோ - (நாதன்னைப்) புகழட்டுமென்றோ, துன்று சுவை நாவிற்கு நயந்து உதவும் - மிகுந்த சுவையுள்ள உணவை நாவிற்கு விரும்பிக் கொண்டு போய்க் கொடுக்கிறது? (இல்லை. அதுபோல), தீது அற்றோர் - குற்றமற்ற பெரியோர்கள், என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும் - எக்காலத்திலும் (தங்களைப்) புகழ்ந்து பேசாதவர்களுக்கும், பொருள் சென்று கொடுப்பர் - வேண்டிய பொருளைத் தாங்களாகவே கொண்டு போய்க் கெடுப்பர். முகமன் - உபசாரம். இயம்புதல் - சொல்லுதல். தீது - குற்றம். துன்று சுவை - மிக்க சுவை - சுவையுள்ள உணவைக் குறித்தது. பொலிதல் - விளங்குதல். பூ - அழகு. நயந்து - விரும்பி. நாவானது தன்னைப் புகழட்டுமென்று கை சுவையுள்ள உணவை நாவிற்குக் கொடுப்பதில்லை. நாவிற்குக் கொடுப்பது கையின் கடமை. அதுபோல, பிறர் தம்மைப் புகழட்டு மென்று பெரியோர்கள் பிறர்க்குக் கொடுப்பதில்லை. பிறர்க்குக் கொடுப்பது பெரியோர்களின் கடமை என்பதாம். நா சுவையின்றி வருந்துவது கண்டு கை தானே கொண்டு போய்க் கொடுப்பது போல, பிறர் பொருளின்றி வருந்துவது கண்டு பெரியோர்கள் தாமே கொண்டு போய்க் கொடுப்பர் என்பதாம். (39) 872. தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம் வெங்குறைதீர்க் கிற்பர் விழுமியோர் - திங்கள் கறையிருளை நீக்கக் கருதா துலகின் நிறையிருளை நீக்குமேல் நின்று. (நன்) திங்கள் கறை இருளை நீக்கக் கருதாது - திங்கள் தன்னிடத்தி லுள்ள களங்கமாகிய இருளை நீக்க எண்ணாமல், மேல் நின்று உலகின் நிறை இருளை நீக்கும் - வானில் இருந்து கொண்டு உலகத்தின் கண் உள்ள மிக்க இருளை நீக்கும்; (அதுபோல), விழுமியோர் தம் குறை தீர்வு உள்ளார் - பெரியோர்கள் தம் குறைகளைத் தீர்க்க எண்ணாமல், தளர்ந்து பிறர்க்கு உறும் வெங் குறை தீர்க்கிற்பார் - இரக்கங் கொண்டு பிறர்க்குள்ள மிக்க குறைகளைப் போக்குவர். குறை - குறையுடையது - வாழ்க்கைக்கு வேண்டியது. தீர்வு - தீர்த்தல். உள்ளார் - நினையார், எண்ணார் - தளர்ந்து - இரங்கி. வெங்குறை - மிக்க குறை. தீர்க்கிற்பார் - தீர்ப்பார், விழுமியோர் - பெரியோர். கறை - திங்களிடத்துள்ள களங்கம். மேல் - வானம். உள்ளார், கருதாது - முற்றெச்சம். திங்களானது தன்னிடத்துள்ள களங்கமாகிய இருளைப் போக்கிக்கொள்ள நினையாமல் உலகிருளைப் போக்குகிறது. அதுபோல, பெரியோர்கள் தங்களுக் குண்டான குறைகளைப் போக்கிக்கொள்ள எண்ணாமல் பிறர் குறைகளைப் போக்குவர் என்பதாம். (40) 873. தம்மையுந் தங்கள் தலைமையும் பார்த்துயர்ந்தோர் தம்மை மதியார் தமையடைந்தோர் - தம்மின் இழியினுஞ் செல்வ ரிடர்தீர்ப்பர் அல்கு கழியினுஞ் செல்லாதோ கடல். (நன்) கடல் அல்கு கழியினும் செல்லாதோ - பெரிய கடலானது சிறிய உப்பங்கழியினும் சென்று பாயாதோ? (பாயும். அது போல), உயர்ந்தோர் - மேன் மக்கள், தம்மை அடைந்தோர் தம்மின் இழியினும் - தம்மைச் சார்ந்தவர்கள் தங்களைக் காட்டிலும் தாழ்வுடையவர்களானாலும், தம்மையும் தங்கள் தலைமையும் பார்த்து - தங்களையும் தங்கள் உயர்வையும் எண்ணிப்பார்த்து, தம்மை மதியார் செல்வர் இடர் தீர்ப்பர் - தங்களை மதியாமல் அவர்களிடத்திற்குப் போய் அவர்கள் துன்பங்களைப் போக்குவர். தம்மையும் தங்கள் தலைமையும் - தமது தரத்தையும் தமது உயர்வையும். பார்த்து - எண்ணிப் பார்த்து. தம்மை மதியார் - தாம் உயர்வுடையோம் என்று தம்மை மதியாமல். இழியினும் - தம்மினுந் தாழினும். செல்வர் - சென்று - அவர் இருப்பிடம் சென்று. அல்குதல் - சுருங்குதல். அல்கு - சிறு, கழி - உப்பங்கழி. மதியார், செல்வர் - முற்றெச்சம். அடைந் தோர் - உதவி வேண்டி வந்தோர். அவரிடத்திற்கே வந்து ஏதாவது உதவும்படி வேண்டின் அங்கு சென்று உதவுவர் என்பது. பெரிய கடலானது தன்னினும் சிறிய தாழ்ந்த உப்பங் கழியினும் சென்று பாய்வது போல, மேன் மக்கள், தம்மிடம் ஓர் உதவி வேண்டி வந்தோர் தம்மினும் தாழ்ந்தவர்களாய் இருப்பினும், தமது தரத்தையும் உயர்வையும் பாராமல் அவர்கள் இருப்பிடத்திற்குச் சென்று அவர்கள் துன்பத்தைப் போக்குவர் என்பதாம். (41) 874. பெரியவர்தம் நோய்போற் பிறர்நோய்கண் டுள்ளம் எரியின் இழுதாவ ரென்க - தெரியிழாய்! மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக் கண்டு கலுழுமே கண். (நன்) தெரி இழாய் - தெரிந்தெடுத்த நகைகளை யணிந்த வளே, மண்டு பிணியால் வருந்து பிற உறுப்பைக் கண்டு கண் கலுழும் - மிகுந்த நோயினால் துன்பப்படுகின்ற மற்ற உறுப்புக்களைப் பார்த்துக் கண்கள் அழும்; (அதுபோல), பெரியோர் - பிறர் நோய் கண்டு - மற்றவர்கள் படுந்துன்பத் தைக் கண்டு, தம் நோய் போல் உள்ளம் எரியின் இழுது ஆவர் என்க - தங்களுக்கு வந்த துன்பத்தைப் போல் நினைத்து மனம் நெருப்பில் பட்ட நெய்யைப் போல் உருகுவர் என்க. நோய் - துன்பம், எரி - நெருப்பு. இழுது - வெண்ணெய், நெய். தெரிதல் - நல்லதாகத் தெரிந்தெடுத்தல். இழை - நகை. மண்டுதல் - மிகுதல். கலுழுதல் - அழுதல். நோயால் துன்பப்படுகின்ற கை கால் முதலிய பிற உறுப்புக் களைக் கண்டு கண் அழுவது போல, பெரியோர்கள் பிறர் துன்பத்தைக் கண்டு வருந்துவர்; வருந்தி அத்துன்பத் தைத் தீர்ப்பர் என்பதாம். தன்னோய் போல் பிறர் நோயை எண்ணி வருந்தி, அவர் நோய் தீர்த்தல் பெரியோர் இயல்பு என்பது கருத்து. (42) 875. பேரறிஞர் தாக்கும் பிறர்துயரந் தாங்கியே வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய்! மெய்சென்று தாக்கும் வியன்கோ லடிதன்மேற் கைசென்று தாங்குங் கடிது. (நன்) நேர் இழாய் - தகுதியான நகைகளை அணிந்தவளே, மெய் சென்று தாக்கும் வியன் கோல் அடி - உடம்பில் போய்த் தாக்கு கின்ற பெரிய கோலினுடைய அடியை, கை கடிது சென்று தன் மேல் தாங்கும் - கைகள் விரைந்து போய்த் தம்மேல் படும்படி ஏற்றுக் கொள்ளும்; (அதுபோல), பேர் அறிஞர் - சிறந்த அறிவுடை யவர்கள், தாக்கும் பிறர் துயரம் வீரமொடு தாங்கிக் காக்க விரைகுவர் - துன்பப்படுத்துகின்ற மற்றவருடைய துன்பத்தை வீரத்தோடு தாம் ஏற்றுக் கொண்டு அவரைப் பாதுகாக்க விரைவர். தாக்குதல் - துன்பப்படுத்துதல். தாங்கி - தாம் ஏற்றுக் கொண்டு. விரைகுவர் - விரைந்து செல்வர் - விரைந்து சென்று பாதுகாப்பர் என்பது. நேர் - நல்ல, தகுதியான. வியன் - பெரிய. கடிது - விரைந்து. உடம்பின் மேல் விழும் அடியைக் கைகள் விரைந்து சென்று உடம்பின் மேல் விழாமல் தாம் ஏற்றுக் கொள்வது போல, பெரி யோர்கள் பிறரை வருத்துகின்ற துன்பத்தைத் தாங்கள் ஏற்றுக் கொள்வர் என்பதாம். தாங்கள் ஏற்றுக் கொள்வதாவது - அவர்கள் துன்பத்தைப் போக்குதல்; உதவுதலாம். (43) 876. எள்ளா திருப்ப இழிஞர்போற் றற்குரியர் விள்ளா வறிஞரது வேண்டாரே - தள்ளாக் கரைகாப் புளதுநீர்க் கட்டுகுள மன்றிக் கரைகாப் புளதோ கடல். (நான்) நீர் கட்டு குளம் - தண்ணீரைத் தேக்கி வைக்கும் சிறிய குளமே, தள்ளா கரை காப்பு உளது அன்றி - உடைக்கப்படாத கரையைக் காவலாக உடைத்தாயிருக்கிறதே யல்லாமல், கடல் கரை காப்பு உளதோ - பெரிய கடலானது கரையைக் காவலாகக் கொண்டுள்ளதோ? (இல்லை. அதுபோல), இழிஞர் எள்ளாது இருப்ப போற்றற்கு உறியர் - கீழ்மக்களே தம்மைப் பிறர் இகழாமல் இருக்குமாறு காத்தற்குக் கடமைப் பட்டவராவர்; விள்ளா அறிஞர் அது வேண்டார் - சொல்ல முடியாத அறிவினையுடைய பெரியோர் அவ்வாறு காக்க வேண்டிய தில்லை. எள்ளல் - இகழ்தல். இழிஞர் - கீழ்மக்கள். விள்ளா - விள்ளாத (இத்தகைய தென்று) சொல்ல முடியாத. தள்ளா - தள்ளாத - உடையாத கட்டுதல் - தேக்குதல். சிறிய குளம் உடைத்துக் கொள்ளாமல் கரைகாப்பையுடையது போல, கீழ்மக்கள் குற்றஞ் செய்யாமல் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். கடல் உடைத்துக் கொள்ளா தாகையால் கரைகாப்பை உடையதாயில்லாமை போல, மேன்மக்கள் குற்றஞ் செய்யா ராகையால் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டியதில்லை என்ப தாம். குற்றஞ் செய்யாமை மேன்மக்களின் இயல்பாகும் சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். (குறள்) (44) 877. தாமரைபொன் முத்துச் சவரங்கோ ரோசனைபால் பூமருதேன் பட்டுப் புனுகுசவ்வா - தாமழல்மற் றெங்கே பிறந்தாலு மெள்ளாரே நல்லோர்கள் எங்கே பிறந்தாலு மென். (நீவெ) தாமரை, பொன், முத்து, சவரம், கோரோசனை, பால், தேன், பட்டு, புனுகு, சவ்வாது, நெருப்பு, ஆம் - ஆகிய இவை, எங்கே பிறந்தாலும் எள்ளாரே - எந்த இடத்தில் பிறந்தாலும் இகழ மாட்டார்கள், (அதுபோல), நல்லோர்கள் - எங்கே பிறந்தாலும் என் எக்குலத்தில் பிறந்தாலும் என்ன? யாரும் இகழமாட்டார்கள் என்க. சவரம் - சாமரம் - கவரி. பூமரு தேன் - பூவிலுள்ள தேன். மற்று - அசை. எள்ளார் இகழார்; இகழ்ந்து தள்ளமாட்டார் என்பது. தாமரை - சேற்றிலும் - பொன் - மண்ணிலும், முத்து - சிப்பி முதலியவற்றிலும், சவரம் - மானினிடத்திலும், கோ ரோசனை - மாட்டு வயிற்றிலும், பால் - மாடு முதலியவற்றின் குருதியிலும், தேன் - வண்டின் வாயெச்சிலிலும், பட்டு - பூச்சிவயிற்றிலும், புனுகு - பூனையினிடத்திலும், சவ்வாது - மானினிடத்திலும், நெருப்பு - விறகிலும் பிறக்கின்றன. இவை சேறு முதலிய தாழ்வான பொருள்களினிடத்தில் பிறந்தாலும் இவற்றையாரும் இழிவுடையதென இகழ்ந்து தள்ளாமல் மேன்மையாகக் கொள்வது போல, நல்லோர்கள் தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் நன்கு மதிக்கப்படுவர் என்பதாம். இந்நூல், தமிழரிடைக் குலவேற்றுமை நிலைபெற்றபின் செய்ததாகும். (45) 878. பகைசேரு மெண்ணான்கு பற்கொண்டே நன்னா வகைசேர் சுவையருந்து மாபோல் - தொகைசேர் பகைவரிட மெய்யன்பு பாவித் தவராற் சுகமுறுதல் நல்லோர் தொழில். (நீவெ) நல் நா - நல்ல நாவானது, பகைசேரும் எண்ணான்கு பல் கொண்டே, தனக்குப் பகையான முப்பத்திரண்டு பற் களைக் கொண்டே, வகை சேர் சுவை அருந்தும் ஆ போல் - பலவகையான சுவையுடைய பொருள்களை உண்ணுந் தன்மை போல, நல்லோர் தொழில் - நன்மக்கள் செய்கை யானது, தொகைசேர் பகைவரிடம் மெய் அன்பு பாவித்து - தொகையான தம் பகைவரிடத்தில் உண்மையான அன்பு பாராட்டி, அவரால் சுகம் உறுதல் - அவரால் நலம் அடைத லேயாம். பற்கள் நாவைக் கடித்து விடுதலால், பகை சேரும் என்றார். வகை. சேர் - பலவகையான. ஆ - ஆறு. தொகை - கூட்டம், பலர் என்பது. பாவித்தல் - பாராட்டல். அதாவது - அன்புடன் நடந்து கொள்ளுதல். சுகம் - நலம் - நன்மை. நாவானது தனக்குப் பகையான பற்களைக் கொண்டு மென்று பலவகையான சுவையுடைய உணவை உண்பது போல, பகைவர் களிடம் அன்பு பாராட்டி நண்பராக்கி அவர்களால் நன்மையை யடைதல் நல்லோர் இயல்பாகு மென்பதாம். பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கட் டங்கிற் றுலகு. (குறள்) (46) 879. கற்றோர் கனமறிவர் கற்றோரே, கற்றறியா மற்றோ ரறியார்; வருத்தமுறப் - பெற்றறியா வந்தி பரிவாய் மகவைப் பெறுந்துயரம் நொந்தறிகு வாளோ நுவல். (நீவெ) வருத்தம் உற பெற்று அறியா வந்தி - வருத்தப்பட்டுப் பிள்ளையைப் பெற்றறியாத மலடி, பரிவாய் நொந்து மகவைப் பெறும் துயரம் - ஆசையோடு வருந்திப் பிள்ளையைப் பெறும் துன்பத்தை, அறிகுவாளோ நுவல் - அறிவாளோ சொல், (அறிய மாட்டாள், அதுபோல), கற்றார் கனம் கற்றாரே அறிவர் - கற்றறிந்த பெரியோர் பெருமையை கற்றறிந்த பெரியோரே அறிவர், கற்று அறியா மற்றோர் அறியார் - கற்றறியாத மூடர் அறியமாட்டார். கனம் - பெருமை.அறியா - அறியாத. மற்றோர் - பிறர் - மூடர். வந்தி - மலடி. பரிவு - அசை; அன்பு எனினுமாம். மகவு - பிள்ளை. நுவல் - சொல். பிள்ளை பெறும் வருத்தத்தைப் பிள்ளை பெற்றவளே அறிவாள், பிள்ளை பெறாத மலடி அறியமாட்டாள். அது போல, வருத்தப்பட்டுக் கற்றறிந்த பெரியோர் பெருமையை வருத்தப் பட்டுக் கற்றறிந்தவரே அறிவர். கற்றறியாத மூடர் அறியமாட்டார். மேன்மக்கள் பெருமையைக் கீழ்மக்கள் அறிய மாட்டார் என்பது கருத்து. (47) 880. பொன்னுங் கரும்பும் புகழ்பாலுஞ் சந்தனமுஞ் சின்னம் படவருத்தஞ் செய்தாலும் - முன்னிருந்த நற்குணமே தோன்றும் நலிந்தாலு முத்தமர்பால் நற்குணமே தோன்றும் நயந்து. (நீவெ) பொன்னுங் கரும்பும் புகழ்பாலுஞ் சந்தனமுஞ் சின்னம் படவருத்தம் செய்தாலும் - சின்ன பின்னமாகத் துன்பம் செய்தாலும், முன் இருந்த நற்குணமே தோன்றும் - அவைகளிடத்தில் அதற்கு முன்னிருந்த நல்லகுணமே வெளிப்படும், (அதுபோல), நலிந்தாலும் உத்தமர் பால் நற்குணமே நயந்து தோன்றும் - துன்புறுத்தும் போதும் மேன்மக்களிடத்தில் நல்ல குணமே மிகுந்து விளங்கும். புகழ் பால் - உயர்வாகச் சொல்லுகின்ற பால். சின்னம் பட - உருக் குலைய. அதாவது - பொன்னை உருக்கித் தட்டித் துண்டு களாக்கியும், கரும்பை நொருக்கிக் கசக்கியும், பாலைச் சுண்டக் காய்ச்சியும், சந்தனத்தை உரைத்தும் வருத்துதல். நலிதல் - வருத்துதல், உத்தமர் - மேலோர். நயந்து - மிகுந்து. பொன் முதலியவற்றை எவ்வளவு வருத்தினாலும் ஒளியும் மணமும் மாறாதவாறு போல, மேலோர்களை எவ்வளவு வருத்தி னாலும் முன்னுள்ள நற்குணத்துடனேயே விளங்குவர் என்பதாம். வறுமை வருத்தினாலும், பிறர் வருத்தினாலும் மேலோர் நற்குணத்தின் மாறார் என்பது கருத்து. (48) 881. மனம்வேறு சொல்வேறு மன்னுதொழில் வேறு வினைவேறு பட்டவர்பால் மேவும் - அனமே மனமொன்று சொல்லொன்று வான்பொருளு மொன்றே கனமொன்று மேலவர்தங் கண். (நீவெ) அனமே - அன்னம் போன்றவளே, வினைவேறு பட்டவர் பால் - கீழ்மக்களிடத்தில், மனம் வேறு சொல் வேறு மன்னு தொழில் வேறு மேவும் - மனம் வேறாகவும் சொல் வேறாகவும் நிலை பெற்ற செயல் வேறாகவும் இருக்கும்; கனம் ஒன்று மேலவர்தம் கண் - பெருமை பொருந்திய மேன்மக்களி டத்தில், மனம் ஒன்று சொல் ஒன்று வான்பொருளும் ஒன்றே - மனம் சொல் செயல் மூன்றும் ஒன்றாக வேயிருக்கும். மன்னுதல் - நிலை பெறுதல். மன்னு தொழில் - நிலை யாகச் செய்யுந் தொழில். வினை - செயல். வினை வேறுபடுதல் - மேன்மக்கள் செயலுக்கு வேறு படுதல்; தீச்செயல் என்றபடி. வினை வேறு பட்டவர் - கீழ்மக்கள். மேவும் - இருக்கும், பொருந்தும். வான் - சிறந்த. பொருள் - இங்கே செயல். கனம் - பெருமை. ஒன்றுதல் - பொருந்துதல். எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றாக இருக்க வேண்டும். அதுதான் மேன்மக்கள் இயல்பு. கீழ்மக்களோ எண்ணுவதொன்று, சொல்வதொன்று, செய்வதொன்றாக இருப்பர் என்பதாம். கீழோர்க்கு எண்ணம், சொல், செயல் மூன்றும் வேறு பட்டிருக்கும். மேலோர்க்கு அவை மூன்றும் ஒன்று பட்டிருக்கும் என்பது கருத்து. (49) 882. பாலினீர் தீயணுகப் பால்வெகுண்டு தீப்புகுந்து மேலுநீர் கண்டமையு மேன்மைபோல் - நூலினெறி உற்றோ ரிடுக்க ணுயிர்கொடுத்து மாற்றுவரே மற்றோர் புகல மதித்து. (நீவெ) பாலின் நீர் தீ அணுக - பாலோடு கூடிய நீரைத் தீயானது அணுகிச் சுட, பால் வெகுண்டு தீப்புகுந்து - பாலானது வெகுண் டெழுந்து தீயில் பாய்ந்து (அவித்து), மேலும் நீர்கண்டு அமையும் மேன்மை போல் - மறுபடியும் நீரைக் கண்டு சினம் தணிகின்ற உயர்குணத்தைப் போல, நூலின் நெறி உற்றோர் - நூன் முறைப்படி நடக்கும் மேன்மக்கள், மற்றோர் இடுக்கண் புகல மதித்து - பிறர் தம் துயரத்தைச் சொன்னவுடனே அத்துயர் தீர்த்தல் தம் கடமை யென எண்ணி, உயிர் கொடுத்தும் மாற்றுவர் - தமது உயிரைக் கொடுத்தும் நீக்குவார்கள். அணுக - அணுகிச்சுட. அமையும் - சினந்தணியும் - பொங் கினது அடங்கும். மேன்மை - மேலான குணம். நூலின் நெறி உற்றோர் - அற நூல்களின்படி நடப்போர். மற்றோர் - துன்புற்றவர். புகல - சொல்ல. மதித்து - அத்துயர் தீர்த்தல் தமது கடமையென எண்ணி. பாலைக் காய்ச்சும் போது பால் காய்ந்ததும் பொங்கி வழியும். கொஞ்சம் தண்ணீர் தெளித்தால் அடங்கிவிடும். பால் சூடு மிகுந்து பொங்குகிறது; தண்ணீர் பட்டதும் சூடு தணிந்து அடங்குகிறது. இதனையே, பாலைக் காய்ச்சும் போது, பாலோடு கலந்துள்ள நீரைத் தீச்சுடுகிறது. தன்னோடு சேர்ந்துள்ள நீரைத் தீச்சுடுவது கண்டு, பால் உடனே கடுஞ்சினங் கொண்டு பொங்கி யெழுந்து தீயில் புகுந்து அதை அவிக்கிறது. கொஞ்சம் நீரைத் கண்டதும் சினந்தணிந்து பொங்குதல் அடங்குகிறது என நயம்படக் கூறியது, தற்குறிப்பேற்ற அணி. பால் தீப்புகுந்து தன்னை அண்டின நீரின் துன்பத்தைப் போக்க முற்படுதல் போல, மேலோர்கள் பிறர் தம் துன்பத்தைச் சொன்னவுடனே அதைத் தீர்த்தல் தம் கடமையென எண்ணித் தமது உயிரைக் கொடுத்தும் அவர் துன்பத்தைப் போக்குவர் என்பதாம். (50) 883. கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின் ஒள்ளரி தாரம் பிறக்கும் - பெருங்கடலுள் பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார் நல்லாள் பிறக்குங் குடி. (நான்) அகில் கள்ளி வயிற்றின் பிறக்கும் - அகிற் கட்டை சதுரக் கள்ளியின் நடுவில் உண்டாகும், ஒள் அரிதாரம் மான் வயிற்றில் பிறக்கும் - ஒளியுள்ள அரிதாரம் மான் வயிற்றில் பிறக்கும், பல்விலைய முத்தம் பெருங்கடலுள் பிறக்கும் - மிக்க விலை யுடைய முத்து பெரிய கடலினுள் பிறக்கும், (அதுபோல), நல் ஆள் பிறக்கும் குடி அறிவார்யார் - நன்மக்கள் பிறக்கும் குடியை அறிய வல்லவர் யார்? (ஒருவருமில்லை.) அகில் - நறும்புகை தரும் மரக்கட்டை. அகில் மரம் வேறே இருப்பினும், சதுரக் கள்ளியின் உட்பகுதி அகில் கட்டை போல் மணமுடைமையின் அதனையும் அகில் எனல் உண்டு. அரிதாரம் - ஒரு மருந்து. 960 செய்யுளைப் பார்க்க. கள்ளியில் அகிலும், மான் வயிற்றில் அரிதாரமும், கடலுள் முத்தும் பிறப்பது போல, எக்குடியினும் நன்மக்கள் பிறப்பர் என்பதாம். (51) 884. அரிசியான் இன்புறூஉங் கீழெல்லாந் தத்தம் வரிசையான் இன்புறூஉ மேல். (நான்) கீழ் எல்லாம் - கீழ் மக்களெல்லோரும், அரிசியான் இன்புறும் - அரிசிச் சோற்றினால் இன்புறுவர், மேல் - மேன்மக்கள், தத்தம் வரிசையான் இன்புறும் - அவரவர் தகுதிக் கேற்ற ஒப்புரவு செய்தலால் இன்புறுவர். அரிசி, கீழ், மேல் - ஆகு பெயர்கள். வரிசை - ஒப்புரவு. அதாவது பொது நலம். இன்புறூஉம் - இன்னிசை அளபெடை. கீழ்மக்கள் இனிய உணவுகளை உண்பதே வாழ்க்கைப் பயனெனக் கொண்டு உண்டு களித்திருப்பார். மேன்மக்கள் பிறர்க்கு உதவுவதே வாழ்க்கைப் பயனெனக் கொண்டு உதவி இன்புறுவர் என்பதாம். (52) 885. தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே. (வெற்) தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை - தெள்ளிய ஆலமரத்தின் சிறிய பழத்திலுள்ள ஒரு விதையானது, தெள்நீர் கயத்துசிறு மீன் சினையினும் நுண்ணிதே ஆயினும் - தெளிந்த நீரையுடைய குளத்திலுள்ள சிறிய மீனின் முட்டையினும் சிறியதேயானாலும், (அது முளைத்து மரமானால்), அண்ணல் யானை - பெருமை பொருந்திய யானையும், அணி தேர் - அழகிய தேரும், புரவி ஆள் - குதிரையும் வீரரும் ஆகிய, பெரும் படையொடு மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும் - பெரிய படையோடு அரசர் தங்கியிருக்கத்தக்க நிழலைத் தரும். மிகச்சிறிய ஆல விதையால் உண்டாகிய ஆலமரம், நாற் பெரும் படையோடு மன்னர் தங்கியிருக்க நிழல் தருவது போல, மிகச்சிறிய செல்வமுடைய மேன்மக்கள் பிறர்க்குப் பெரிதும் பயன்பட வாழ்வார் என்பதாம்: இது பிறிது மொழிதலணி. மிகச்சிறிய - ஏழ்மையான - குடியிற் பிறந்தாலும் மேன்மக்கள் பெரிதும் பிறர்க்குப் பயன்பட வாழ்வர் என்பது கருத்தாகும். (53) 886. அடினு மாவின்பால் தன்சுவை குன்றாது, சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது, அரைக்கினுஞ் சந்தனம் தன்மணம்அறாது, புகைக்கினுங் காரகில் பொல்லாங்கு கமழாது, கலக்கினும் தண்கடல் சேறா காது. (வெற்) ஆவின் பால் அடினும் தன்சுவை குன்றாது - மாட்டுப் பாலைக் காய்ச்சினாலும் தனது சுவையில் குறையாது, செம் பொன் சுடினும் தன் ஒளி கெடாது - தங்கத்தைச் சுட்டாலும் தனது ஒளி குன்றாது, சந்தனம் அரைக்கினும் தன்மணம் அறாது - சந்தனக் கட்டையைத் தேய்த்தாலும் தனது மணம் நீங்காது, கார் அகில் புகைக்கினும் பொல்லாங்கு கமழாது - கரிய அகிற் கட்டையைப் புகையச் செய்தாலும் கெட்ட நாற்றம் வீசாது, தண்கடல் கலக்கினும் சேறு ஆகாது - குளிர்ச்சி பொருந்திய கடலைக் கலக்கினாலும் சேறாகாது, அதுபோல, பிறர் எவ்வளவு கெடுதல் செய்தாலும் மேன்மக்கள் தம் மேன்மையான குணங்கெடாமல், அக்கேடு செய்வார்க்கு நன்மையே செய்வர் என்பதாம். பிறிதுமொழிதலணி. (54) 887. சான்றோ ரில்லாத் தொல்பதி யிருத்தலின் தேன்றேர் குறவர் தேயம் நன்றே. (வெற்) சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின் - பெரி யோர்கள் இல்லாத பழமையான ஊரிலே வாழ்தலினும், தேன் தேர் குறவர் தேயம் நன்றே - தேனழித்து வாழ்கின்ற குறவருடைய மலைநாட நல்லதே. சொல்லாலும் செயலாலும் கைம்மாறு கருதாது உதவிக் காக்கின்ற மேன்மக்கள் இல்லாதஊரில் இருப்பதைவிட மலையில் சென்று வாழ்வது நல்லது என, மேன்மக்களின் சிறப்புக் கூறியது. (55) 888. மேன்மக்கள் சொற்கேள். (ஆத்) மேன்மக்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டு, அதன் படி நடக்க வேண்டும் என்பது. (56) 56. நல்லினஞ்சேர்தல்... அதாவது, பெரியோர்களுடன் ‘நட்புக்’ கொள்ளுதல் நல்ல இனத்தைச் சேர்தல் எனப்படும். நல்லினஞ் சேர்தலின் சிறப்பு இதனால் கூறப்படுகிறது. 889. கல்லாரே யாயினுங் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின் ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு. (நால) தொல் சிறப்பின் ஒள் நிறம் பாதிரிப் பூ சேர்தலால் - பழமை யான சிறப்பையும் ஒளி பொருந்திய நிறத்தையும் உடைய பாதிரிப் பூவைச் சேர்தலினால், புது ஓடு தண்ணீர்க்குத் தான் பயந்து ஆங்கு - புதுப்பானையானது தன்னிடமுள்ள தண்ணீர்க்குத் தான் மணத்தைக் கொடுத்தாற்போல, கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின் - கல்லாதவர்களே யானாலும் கற்ற வர்களைச் சேர்ந்திருந்தால், நல்லறிவு நாளும் தலைப்படுவர் - அவர் சேர்க்கையால் நல்லறிவு நாடோறும் உண்டாகப் பெறுவர். தொல் சிறப்பு - இயற்கையான சிறப்பு என்றுமாம். தலைப் படுதல் - உண்டாதல், அடைதல். ஒள் - ஒளி. பாதிரி - செந்நிற முள்ளது. புது ஓடு - புதுப்பானை, புதுச்சட்டி. பயத்தல் - கொடுத்தல். ஆங்கு - போல. புதுச் சட்டியில் தண்ணீரை ஊற்றிப் பாதிரிப் பூவைப் போட்டு வைத்தால், அப்புதுச்சட்டி பாதிரிப்பூவின் மணத்தைத் தான் பெற்று, அதைத் தன்னைச் சார்ந்துள்ள தண்ணீர்க்கும் கொடுக்கிறது. அதாவது மணமில்லாத ஓடு மணமுள்ள மலரைச் சேர்ந்து மணம் பெற்று, அம் மணத்தைத் தன்னைச் சேர்ந்த தண்ணீருக்குங் கொடுப்பது போல, கல்லாதவர்கள் கற்றவர்களைச் சேரின் நல்லறிவைப் பெற்று அதைத் தன்னைச் சேர்ந்தவர்களுக்குக் கொடுப்பர் என்பதாம். புத்தோடு கல்லார்க்கும், பாதிரிப் பூ கற்றார்க்கும், மணம் கல்வியறிவுக்கும், தண்ணீர் மணம் பெறுதல், கற்றாரைச் சேர்ந்தறிவைப் பெற்றாரைச் சேர்ந்தாரும் நல்லறிவு பெறுதற்கும் உவமை. (1) 890. அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த நற்சார்வு சாரக் கெடுமே வெயில்முறுகப் புற்பனிப் பற்றுவிட் டாங்கு (நால) அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி - அறிவு பெறாத இளமைப் பருவத்திலே அடக்கமில்லாத கீழ்மக்க ளோடு சேர்ந்து, நெறி அல்ல செய்து ஒழுகியவும் - நன்னெறி யல்லாத கெட்ட காரியங்களைச் செய்து வந்த குற்றங்களும், நெறி அறிந்த நல் சார்வு சார - நல்வழியை உணர்ந்த நல்லோர் களைச் சேர்தலால், புல் பனி வெயில் முறுகப் பற்றுவிட்டு ஆங்கு கெடும் - புல்லைச் சேர்ந்திருந்த பனித் துளி வெயில் மிகுதலால் அப் புல்லைவிட்டு அகன்றாற் போலக் கெடும். அறியா - அறியாத. அறியாத பருவம் - காளைப் பருவம். அடங்கார் - அடக்கமில்லார். ஒன்றுதல் - சேர்தல். நெறி அல்ல - கெட்டகாரியங்கள். நெறி - நன்னெறி - நல்ல காரியம். ஒழுகியவும் என்பது ஒழுகியவ்வும் என விரித்தல் விகாரம். நல் சார்வு - நல்லோர்களைச் சார்தல். முறுகுதல் - மிகுதல். பற்றுவிடல் - தொடர்பு விடல் - நீங்குதல். ஆங்கு - போல. வெயில் காயப் புல்லின் மேல் ஒட்டியிருந்த பனித்துளி நீங்கினாற் போல, கீழோரைச் சார்ந்துண்டான குற்றம் நல்லோரைச் சேர்தலால் நீங்கும் என்பதாம். இதனால், நல்லினம் சேர்தலின் பயன் கூறப்பட்டது. இரவைச் சார்ந்துண்டான பனித்துளி வெயிலைச் சார நீங்கி னாற் போல என்னும் குறிப்பு நயமுங் கொள்க. (2) 891. இறப்ப நினையுங்கா லின்னா தெனினும் பிறப்பினை யாரு முனியார் - பிறப்பினுள் பண்பாற்று நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும் நண்பாற்றி நட்கப் பெறின். (நால) பிறப்பினுள் - ஒருவன் மக்கட் பிறப்பிலே, பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு நண்பு ஆற்றி - நல்லனவே செய்ய வேண்டும் என்னும் மனமுடைய நல்லோர்களுடனே நட்புச் செய்து, எஞ்ஞான்றும் நட்கப் பெறின் - எப்பொழுதும் பிரியாமல் கூடி வாழப் பெற்றால், இறப்பநினையுங்கால் இன்னாது எனினும் - மிகவும் எண்ணிப் பார்க்கு மிடத்து (பிறப்பு) துன்பந்தருவதாயினும், பிறப்பினை யாரும் முனியார் - அவனது பிறப்பை எவரும் வெறுக்க மாட்டார். இறப்ப - மிக, நன்கு. நினைத்தல் - ஆராய்ந்து பார்த்தல். இன்னாது - துன்பந்தருவது. பிறப்பு - நல்லாரோடு நட்புற்று வாழ்வோன் பிறப்பு. முனிதல் - வெறுத்தல். பண்பு - நன்மை. ஆற்றல் - செய்தல். எஞ்ஞான்றும் - எப்போதும். நண்பு ஆற்றி - நட்புக் கொண்டு. நட்கப் பெறின் - கூடி வாழப் பெற்றால். பசி பிணி மூப்புத் துன்பங்களையும், சில் வாழ் நாளையும் உடையது மக்கட் பிறப்பு, ஆகவே, நன்கு எண்ணிப் பார்த்தால், மக்கட் பிறப்புத் துன்பந்தருவ தொன்றாகும். எனினும், நல்லோரு டன் கூடிவாழும் ஒருவன் பிறப்பையாரும் துன்ப முடைய தென்று வெறுக்க மாட்டார்கள் என்பதாம். நல்லினம் சேர்தலின் சிறப்புக் கூறப்பட்டது. மக்கட் பிறப்பின் பெரும்பயன் நல்லினம் சேர்தல் என்பது கருத்து. (3) 892. ஊரங் கணநீர் உரவுநீர்ச் சேர்ந்தக்காற் பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் - ஓருங் குலமாட்சி யில்லாருங் குன்றுபோல் நிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து. (நால) ஊர் அங்கண நீர் உரவு நீர் சேர்ந்தக்கால் - ஊரிலுள்ள சலதாரை நீரானது சிறப்புப் பொருந்திய ஒரு ஆறு குளங்களின் நீரைச் சேர்ந்தால், பேரும் பிறிது ஆகி தீர்த்தம் ஆம் - அதற்குப் பேரும் வேறாகித் தீர்த்தம் ஆகிவிடும்; (அதுபோல), குலம் மாட்சி இல்லாரும் - பிறந்த குலப் பெருமை யில்லாதவர் களும், நலமாட்சி நல்லாரைச் சார்ந்து குன்றுபோல் நிற்பர் - நற்குணங்களை யுடைய நன்மக்களை அடைந்து அதனால் மலைபோல் பெருமை யுடையவ ராய் இருப்பர். அங்ஙணம் - சலதாரை. உரவு - சிறப்பு. பேர் பிறிதாதல் - அங்ஙண நீர் என்னும் பெயர் மாறி ஆற்று நீர், குளத்து நீர் எனப் படுதல். தீர்த்தம் - தூயநீர். இது குளிப்போரின் பாவங் களைப் போக்குவ தென்பது புராணம். ஆடிப்பதினெட்டு, உவா முதலிய நாட்களில் காவிரிமுதலிய ஆறுகளில் குளிப்பதன் நோக்கம் இதுவே. தலப்புராணங்களில் பல தீர்த்தப் பெருமை கூறப்படும். ஓரும் - அசை; எண்ணி மகிழும் எனினும் மகிழும் எனினுமாம். இங்கு ஓர்தல் - நினைத்தல். குலமாட்சி - நற்குடிப்பிறப்பு. நலமாட்சி - நற்குணம். தாழ்ந்த சலதாரை நீர் ஆற்று நீரைச் சார்ந்து, தன் பெயரை மாற்றி ஆற்று நீர் என்னும் பெயர் பெற்றுத் தீர்த்த மாவதுபோல, தாழ்குடிப்பிறந்தோரும் உயர்குடிப்பிறந்த நல்லோர்களைச் சேரின், இவரும் நல்லோர் என்னும் பெயர் பெற்று மிக்க பெருமை யுடையவராவர் என்பதாம். நல்லமண முள்ளதொன்றை நண்ணி யிருப்பதற்கு நல்லமண முண்டாம் நயமதுபோல் - நல்ல குணமுடையோர் தங்களுடன் கூடியிருப் பார்க்குக் குணமதுவே யாஞ்சேர்வு கொண்டு. (உபதேச ரத்தின மாலை) 893. ஒண்கதிர் வாண்மதியஞ் சேர்தலா லோங்கிய அங்கண் விசும்பின் முயலுந் தொழப்படூஉம் குன்றிய சீர்மைய ராயினுஞ் சீர்பெறுவர் குன்றன்னார் கேண்மை கொளின். (நால) ஓங்கிய அம்கண் விசும்பின் - உயர்ந்த அழகிய இடத்தை யுடைய வானத்திலே, ஒள்கதிர் வாள் மதியம் சேர்தலால் - விளக்கமாகிய கதிர்களையுடைய ஒளிபொருந்திய திங்களைச் சேர்ந்திருத்தலினால், முயலும் தொழப்படும் - முயலும் யாவராலும் தொழப்படும்; (அதுபோல), குன்றிய சீர்மையர் ஆயினும் - குறைந்த சிறப்புள்ளவர்களானாலும், குன்று அன்னார் கேண்மை கொளின் சீர்பெறுவர் - மலையை யொத்த பெரியோர்களது நட்பைக் கொண்டால் சிறப்பைப் பெறுவர். ஒண்மை - விளக்கம். கதிர் - திங்களின்கலை. வாள் - ஒளி. ஓங்கிய - உயர்ந்த. அம் - அழகிய. விசும்பு - வானம். முயல் - திங்களி னிடத்துள்ள களங்கத்தை முயல் என்பது மரபு. சீர்மை, சீர் - சிறப்பு. கேண்மை - நட்பு. முயலை வணங்குதல் வணங்குவோர் கருத் தில்லை யாயினும் திங்களி னிடத்திருந்து முயல் தானும் வணக்கத் தைப் பெறுதல் போல, சிறப்பில்லார்க்குச் சிறப்புச் செய்தல் செய்பவர் கருத்தில்லை யாயினும் அச்சிறப்பை நல்லோரினத்தி லிருந்து தாமும் சிறப்புப் பெறுவர் என்பதாம். திங்கள் தோன்றுங் காலத்துத் தொழுவது வழக்கம். அப்போது திங்களினிடத்துள்ள முயலும் தொழப் படுகிறது. (5) 894. பாலோ டளாயநீர் பாலாகு மல்லது நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம் - தேரிற் சிறியார் சிறுமையுந் தோன்றாதா நல்ல பெரியார் பெருமையைச் சார்ந்து. (நால) பாலோடு அளாய நீர் பாலாகும் அல்லது - பாலோடு கலந்த நீரானது அந்தப் பாலாய்த் தோன்றுமே யல்லாமல், நீராய் நிறம் தெரிந்து தோன்றாது - நீராய்த் தன்நிறம் விளங்கிக் காணப்படாது; (அதுபோல), தேரின் - ஆராயு மிடத்து, நல்ல பெரியார் பெருமை யைச் சார்ந்து - நற்குண முடைய பெரியோர் களுடைய பெருமை யைச் சேர்தலினால், சிறியார் சிறுமையும் தோன்றாது - கீழ்மக்களது கீழ்மைக் குணமும் வெளிப்படாது. அளாய - கலந்த. ஆம் - அசை. தேரின் - ஆராயின். பாலோடு கலந்த நீர் அப்பாலாகவே தோன்று மல்லாது நீராகவே வேறுபாடறியத் தோன்றாது, அதுபோல, பெரியா ரினத்தைச் சார்ந்த சிறியாரும் பெரியாராகவே தோன்றுவாரே யல்லாமல் சிறியாராகத் தோன்றார் என்பதாம். பெரியாரைச் சேர்ந்து வாழின் சிறியாரின் சிறுமை தோன்றாது என்பது கருத்து. மனத்தானும் மாந்தர்க் குணர்ச்சி; இனத்தானாம் இன்னா னெனப்படுஞ் சொல். (குறள்) (6) 895. கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல் ஒல்காவே யாகு முழவ ருழுபடைக்கு; மெல்லியரே யாயினு நற்சார்வு சார்ந்தார்மேற் செல்லாவாஞ் செற்றார் சினம். (நால) கொல்லை இரும் புனத்து குற்றி அடைந்த புல் - கொல்லை களிலும் பெரிய வயல்களிலும் உள்ள மரக் கட்டையை அடுத்துள்ள புற்கள், உழவர் உழுபடைக்கு ஒல்காவே ஆகும் - உழவர்களது கலப்பைக்கு அசையாதனவே யாகும்; (அதுபோல), மெல்லியரே ஆயினும் நல் சார்வு சார்ந்தார் மேல் - இயற்கை யாகவே வலியில்லாதவர்களே யானாலும் நல்லோர்களைச் சார்ந்தவர்களின் மேல், செற்றார் சினம் செல்லாவாம் - பகைவர்களது சினம் பயன்படாவாம். கொல்லை - புன்செய். புனம் - வயல். குற்றி - மரக்கட்டை, மரமும். ஒல்கா - பெயரா - கலப்பையால் பெயர்க்க முடியாது என்பது. உழுபடை - கலப்பை. செற்றார் - பகைவர். உழுநிலத்தில் உள்ள மரங்களுக்குப் பக்கத்தில் கலப்பை செல்லாதாகையால், அம்மரங்களுக்குப் பக்கத்தில் முளைத் திருக்கும் புற்கள் கலப்பையால் பெயர்க்கப்பட மாட்டா. அதுபோல, பகைவர் சினம் வலியாரிடத்துச் செல்லாதாகை யால், அவரை அடுத்துள்ள மெலியாரிடத்துஞ் செல்லாது என்பதாம். தக்கா ரினத்தனாய்த் தானெழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில் (குறள்) மெலியார் வலிய விரவலரை யஞ்சார் வலியார் தமைத்தா மருவின். (நன்னெறி) (7) 896. நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம் குலநலத்தா லாகுவர் சான்றோர் - கலநலத்தைத் தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை தீயினஞ் சேரக் கெடும். (நால) நில நலத்தால் நந்திய நெல்லே போல் - நிலத்தினது வளத்தால் வளர்ந்த நெற்பயிர் போல, தம்தம் குல நலத்தால் சான்றோர் ஆகுவர் - அவரவர் சேர்கின்ற இனத்தின் நன்மை யால் மேன்மக்களாவர், கலம் நலத்தை தீவளி சென்று சிதைத்து ஆங்கு - மரக்கலத்தினது வலிமை யைக் கடுங் காற்றுப் போய்க் கெடுத்தலால் அக்கலம் கெடுவது போல, சான்றாண்மை தீ இனம் சேர கெடும் - ஒருவரது மேன்மை கீழ் மக்கள் கூட்டத்தைச் சேர்தலினால் கெடும். நிலநலம் - நிலவளம். நந்துதல் - வளர்தல். குலம் - கூட்டம். நலம் - நன்மை. கலம் - கப்பல். நலம் - வலிமை. தீவளி - கடுங் காற்று. சிதைத்தல் - கெடுத்தல். சான்றாண்மை - மேண்மை. தீ இனம் - கீழோர் கூட்டம். நிலவளத்தால் நெற்பயிர் வளர்தல் போல, தாம் சேர்ந்த இன நலத்தால் மேன்மக்களாவர். கப்பலின் வலிமையைக் கடுங்காற்றுக் கெடுப்பது போல, கீழ்மக்களைச் சேர்ந்தால் மேன்மை கெடும்; மேன்மையைக் கெடுப்பர் என்பது. நல்லினஞ் சேர்தலின் நன்மை கூறுவார், தீயினஞ் சேர்தலின் தீமையும் உடன் கூறினார். நல்லினத்தி னூங்கு துணையில்லை; தீயினத்தின் அல்லற் படுப்பதூஉ மில். (குறள்) (8) 897. மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த இனத்தா லிகழப் படுவர் - புனத்து வறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே எறிபுனந் தீப்பட்டக் கால். (நால) எறிபுனம் தீப்பட்டக்கால் - வெட்டப்பட்ட மரச் செறிவில் நெருப்புப் பற்றினால், புனத்து வெறி கமழ் சந்தனமும் வேங்கையும் வேம் - அக்காட்டிலுள்ள மணம் வீசுகின்ற சந்தனமரமும் வேங்கை மரமும் வெந்து போம்; (அதுபோல), மனத்தால் மறு இலர் ஏனும் - மனத்தினால் குற்றமில்லாதவர் களானாலும், தாம் சேர்ந்த இனத்தால் இகழப்படுவர் - தாங்கள் சேர்ந்த இனத்தின் தீமையால் இகழப்படுவார்கள். மறு - குற்றம். புனம் - காடு. வெறி - மணம். கமழ்தல் - மணத்தல். வேம் - வேகும். எறிதல் - வெட்டுதல். செறிவு - அடர்த்தி. எறி புனம் - வெட்டப்பட்ட வறண்ட மரங்கள். வெட்டப்பட்ட காய்ந்த மரங்களில் தீப்பற்றினால், அக்காட்டி லுள்ள சந்தனம் வேங்கை போன்ற உயர்ந்த மரங்களும் வேதல் போல, மனத்தினால் குற்றமில்லாத வராயினும் தாம் சேர்ந்த இனத்தினால் இகழப்படுவர் என்பதாம். நல்லவரும் கெட்டவர்களைச் சேர்ந்தால் இகழப்படவர் என்பது கருத்து. மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி; இனத்தானாம் இன்னா னெப்படுஞ் சொல். (குறள்) மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநலம் ஏமாப் புடைத்து. (குறள்) (9) 898. தக்கார் வழிகெடா தாகுந் தகாதவர் உக்க வழியரா யொல்குவர் - தக்க இனத்தினா னாகும் பழியும் புகழும் மனத்தினா னாகு மதி. (சிறு) தக்கார் வழி கெடாது ஆகும் - தகுதியுடையவரது மரபு என்றும் கெடாததாகும், தகாதவர் உக்க வழியராய் ஒல்குவர் - தகுதியில்லாதவர் அழிந்த மரபை யுடையவராய்த் தளர்வர்; பழியும் புகழும் தக்க இனத்தினான் ஆகும் - ஒருவனுக்குப் பழியும் புகழும் அவன் சேர்ந்த இனத்தினால் உண்டாகும்; மதிமனத்தினான் ஆகும் - ஒருவனுக்கு அறிவானது அவனது மனத்தினளவே உண்டாகும். தக்கார் - தகுதியுடையவர், மேன்மக்கள். வழி - மரபு. கெடாது ஆகும் - கெடாது, அழியாது. உக்க - கெட்ட, அழிந்த. ஒல்குதல் - சுருங்குதல், தளர்தல். மதி - அறிவு. மரஞ் செடி கொடிகள் முதல் மக்களீறாகிய உலகுயிர் கட்கு இனப்பேறு (மகப்பேறு) மிகவும் இன்றியமையாத தாகும். மகப்பே றில்லையேல் உலகுயிர் அழிந்து விடும். மக்களைப் பெற்று இன்புறா தவர் வாழ்க்கை வறண்ட பாலை நிலம் போன்றதாகும். இத்தகைய இன்றியமையாச் சிறப்புடைமை யினாலேயே கெட்டவர்களுக்குப் பிள்ளைப் பேறற்றுப் போகும் என்றும், பிள்ளையில்லாதவர்களைப் பாவிகளென்றும் பழிக்க லாயினர். பிள்ளைப் பேற்றுக்காக எத்தனை யோ அரும்பாடு படுவது இதனாலேயேயாகும். இது பற்றியே தகாதவர்க்குப் பிள்ளைப் பேறில்லாது போகும் என்றார். நல்லவர்கள் மரபு கெடாது; கெட்டவர்கள் மரபு கெட்டுப் போகும். நல்லவர்களைச் சேர்ந்தால் புகழுண்டாகும்; கெட்டவர் களைச் சேர்ந்தால் பழியுண்டாகும். மனத்தின் தன்மைக் கேற்ப அறிவுண்டாகும். மனத்தின் தன்மைக் கேற்ப அறிவுண்டாகாது போலவே, இனத்தின் தன்மைக் கேற்பப் புகழும் பழியும் உண்டாகும் என்பது கருத்து. மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி; இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல். (குறள்) மக்களுண்மை இன்மை, தக்கார் தகவிலர் என்பதை அறிதற்கு அறிகுறிகளாம். தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும். (குறள்) தக்கவர் மக்கள் தக்கவராகவும், தகாதவர் மக்கள் தகாதவ ராகவும் இருத்தலும் தக்கார் தகவிலரை அறிதற்கு அறிகுறிகளாகும். (10) 899. நல்லாரைக் காண்பதுவு நன்றே நலமிக்க நல்லார்சொற் கேட்ப துவுநன்றே - நல்லார் குணங்க ளுரைப்பதுவு நன்றே யவரோ டிணங்கி யிருப்பதுவு நன்று. (வாக்) நல்லாரைக் காண்பதுவும் நன்றே - நற்குணமுடைய பெரியோர் களைப் பார்ப்பதும் நல்லதே, நலம் மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நன்மை மிகுந்த நல்லவர்கள் சொல்லைக் கேட்பதும் நல்லதே, நல்லார் குணங்கள் உரைப் பதுவும் நன்றே - நல்லவர்களுடைய நற்குணங்களைப் புகழ்ந்து பேசுவதும் நல்லதே, அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று - நல்லவர்களோடு கூடி வாழ்வதும் நல்லது. நல்லாரை அடிக்கடி பார்த்தால் அவர்களுடைய நன்னடக் கையில் விருப்ப முண்டாகும்; அவர்கள் சொல்லைக் கேட்டால் நல்வழியில் நடக்க முயலலாம்; அவர் குணங்களைப் புகழ்ந்து பேசினால் நமக்கும் அக்குணங்கள் அமையும்; அவரோடு இணங்கியிருந்தால் அவர் பெருமை நமக்கும் உண்டாகும். நல்லாரோடு பழகுமுறை கூறப்பட்டது. (11) 900. நல்லோர் வரவால் நகைமுகங்கொண் டின்புறீஇ அல்லோர் வரவால் அழுங்குவார் - வல்லோர் திருந்துந் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா வருந்துஞ் சுழல்கால் வர. (நன்) தேமா - இனிய பழங்களைத் தரும் மாமரமானது, தென்றல் வரத் தளிர்காட்டித் திருந்தும் - தென்றல் காற்று வரத் தளிர்த்து அழகுடன் விளங்கும், சுழல்கால் வர வருந்தும் - சுழல்காற்று வரத் துன்பப்படும்; (அதுபோல), வல்லோர் - கல்வி கேள்விகளால் வல்ல பெரியோர், நல்லோர் வரவால் நகைமுகம் கொண்டு இன்புறீஇ - நல்லோரின் வருகையால் முகமலர்ந்து இன்புற்று, அல்லோர் வரவால் அழுங்குவார் - தீயோரின் வருகையால் வருந்துவர். வருதல் - அடைதல். சேர்தல். நகை - சிரிப்பு, நகை முகம் - முகமலர்ச்சி. உறீஇ - உற்று. சொல்லிசை அளபெடை. அல்லோர் - நல்லவரல்லாதவர் - கெட்டவர். அழுங்குதல் - வருந்துதல். திருந்தும் - விளங்கும். தளிர் - கொழுந்து. சுழல்கால் - சுழல்காற்று. மாமரமானது தென்றல் காற்று வரத் தளிர்த்து விளங்கும்; சுழல் காற்று வர இலைகள் உதிர்ந்து கிளைகள் ஒடிந்து வருந்தும். அதுபோல, பெரியோர்கள் நல்லவர் வருகையால் முக மலர்ச்சியோடு இன்புறுவர்; தீயவர் வருகையால் வருந்துவர் என்பதாம். வரவால் - சேர்க்கையால் என்றபடி. (12) 901. அரிமந் திரம்புகுந்தா லானை மருப்பும் பெருகொளிசேர் முத்தும் பெறலாம் - நரிநுழையில் வாலுஞ் சிறிய மயிரெலும்புங் கர்த்தபத்தின் தோலுமல்லால் வேறுமுண்டோ சொல். (நீவெ) அரி மந்திரம் புகுந்தால் - சிங்கத்தின குகைக்குட் போனால், ஆனை மருப்பும் பெருகு ஒளிசேர் முத்தும் பெறலாம் - யானைத் தந்தங்களையும் ஒளிமிகுந்த முத்துக் களையும் பெறலாம், நரி நுழையில் - நரிவங்கில், வாலும் - சிறியமயிர் எலும்பும் - சிறிய மயிர்களும் எலும்புகளும், கர்த்தபத்தின் தோலும் அல்லால் வேறும் உண்டோ சொல் - கழுதையின் தோலும் அல்லாமல் வேறு உயர்ந்த பொருள்களும் உண்டோ சொல். அரி - சிங்கம், மந்திரம் - குகை. மருப்பு - கொம்பு, தந்தம். யானைக் கொம்பில் முத்து இருக்கும். நுழை - வங்கு. கர்த்தபம் - கழுதை. சிங்கம் யானையைக் கொன்று தின்னும். பெருநரி ஆடு, கழுதை முதலியவற்றைக் கொன்று தின்னும். சிங்கத்தின் குகைக்குள் போனால் யானைத் தந்தங்களும் முத்துக்களும் பெறலாம். அதுபோல, பெரியோர்களைச் சேர்ந்தால் அறிவும் ஒழுக்கமும் மதிப்பும் பெறலாம். நரிவங்கில் ஆட்டுவாலும் மயிரும் எலும்பும் கழுதைத் தோலுந்தான் கிடைக்கும். அதுபோல, சிறியாரைச் சேர்ந்தால் புல்லறிவும் தீயொழுக்கமும் சிறுமையுந்தான் பெறலாம் என்பதாம். இது பிறிது மொழிதலணி. (13) 902. வாய்ப்புடைய ராகி வலவைக ளல்லாரைக் காப்படையக் கோட லினிது. (இனி) வாய்ப்பு உடையர் ஆகி - கல்வி செல்வம் அதிகாரம் ஆண்மை மதிப்பு முதலிய நலம் எல்லாம் பொருந்துதலுடைய வராய், வலவைகள் அல்லாரை - நாணிலிகளல் லாரை, காப்பு அடையக் கோடல் இனிது - காப்பாகப் பொருந்தக் கொள்ளுதல் நல்லது. வாய்ப்பு - பேறு. வாய்ப்பு உடையர் - கல்வி செல்வம் முதலிய எல்லாம் பொருந்துதலுடையர், வலவை - நாணில்லா தவன். நாண் - கெட்ட காரியஞ் செய்ய நாணுதல். காப்படைய - காப்பாக. எல்லா நலமும்உடைய பெரியோரைச் சேர்ந்து வாழ்தல் நல்லது. (14) 903. மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்னினிது. (இனி) மிக்காரைச் சேர்தல். அறிவொழுக்கங்களில் சிறந்த மேலோரைச் சேர்தல், மிக மாண முன் இனிது - மிகமிக மிக நல்லது. மாண, முன் என்பனவும் மிகுதியே குறித்தலான் நல்லினஞ் சேர்தலின் இன்றியமையாச் சிறப்பினை அவ்வாறு மிகுத்துக் கூறினார். தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. (குறள்) (15) 904. சான்றோ ரினத்திரு. (ஆத்) பெரியோர்களுடன் எப்போதும் சேர்ந்திரு. இனம் - கூட்டம். (16) 905. பெரியாரைத் துணைக்கொள். (ஆத்) துணைக் கொள்ளுதல் - அவருடன் சேர்ந்து வாழ்தலாகும். (17) 57. பெரியாரைப் பேணல் அதாவது, பெரியார்க்குப் பிழை செய்யாமையும் உதவுதலு மாம். 906. பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும் வெறுப்பன செய்யாமை வேண்டும் - வெறுத்தபின் ஆர்க்கு மருவி அணிமலை நன்னாட பேர்க்குதல் யார்க்கு மரிது. (நால) ஆர்க்கும் அருவி அணிமலை நல் நாட - ஒலிக்கின்ற அருவிகளை யுடைய அழகிய மலைகளையுடைய நல்ல நாட்டை யுடையவனே, பொறுப்பர் என்று எண்ணி - (நாம் செய்யும் பிழைகளைப்) பொறுத்துக் கொள்வர் என்று நினைத்து, புரை தீர்ந்தார் மாட்டும் வெறுப்பன செய்யாமை வேண்டும் - குற்றமற்ற பெரியோர் களிடத்தும் அவர் வெறுக்கத் தக்க கொடுஞ் செயல்களைச் செய்யா திருத்தல் வேண்டும்; (ஏனெனில்), வெறுத்த பின் பேர்க்குதல் யார்க்கும் அரிது - அவர் பொறாமல் வெறுப்பாராயின் அதன் பின் அதனால் வரும் தீங்கை நீக்குதல் எவராலும் முடியாது. புரை - குற்றம். மாட்டும் - இடத்தும். ஆர்த்தல் - ஒலித்தல். அணி - அழகு. பேர்க்குதல் - நீக்குதல். அரிது - முடியாது. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயின் பொறுப்பது கடனே. (வெற்) என்ற நீதியை முதன்மையாகக் கொண்டு, பெரியார்க்கு எவ்வகைப் பிழையும் செய்யக் கூடாது. செய்யின், சிறியார் பெரும்பிழை செய்தன ராயின் பெரியா ரப்பிழை பொறுத்தலு மரிதே. (வெற்) என்றபடி, பிழையின் கொடுமையால் பெரியோர் மனம் பொறாமல் சினங்கொண்டால், அச் சினத்தினால் வரும் தீமையை எவராலும் விலக்க முடியாது என்பதாம். பெரியோர்களிடம் எல்லோரும் அன்புடையரா யிருப்பா ராதலால், அவர்க்குப் பிழை செய்தார்க்கு யாரும் உதவ முன்வராமையோடு அவர்களும் வெறுத் தொதுக்குவரா கையால், தீங்கை நீக்குதல் அரிதாயிற்று. குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது. (குறள்) (1) 907. விரிநிற நாகம் விடருள தேனும் உருமின் கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்; அருமை யுடைய வரண்சேர்ந்து முய்யார் பெருமை யுடையார் செறின். (நால) விரிநிற நாகம் விடர் உளது ஏனும் - படம் விரிக்கின்ற ஒளி பொருந்திய பாம்பானது வெடிப்புக்குள்ளே இருந்தாலும், உருமின் கடும் சினம் சேண் நின்றும் உட்கும் - இடியினது மிக்க சினத்தினாலாகியது போன்ற ஒலிநெடுந்தொலைவி லுள்ள வானத்திலிருக்கவும் அஞ்சும், (அதுபோல), பெருமை யுடையார் செறின் - பெரியோர்கள் வெகுள்வாராயின், அருமை யுடைய அரண் சேர்ந்தும் உய்யார் - பிறரால் அழித்தற்கும் புகுத்தற்கும் அரிய அரணைச் சேர்ந்திருந்தாலும் தப்பமாட்டார். விரி - விரித்தல் - படம் விரித்தல். நிறம் - ஒளி. விரி நிறம் - விரிந்த - மிக்க ஒளி என்றுமாம். விடர் - வெடிப்பு, சந்து, உருமு - இடி, சேண் - வானத்தில் நெடுந்தொலை வில். உட்குதல் - அஞ்சுதல். அரண் - மதில். கோட்டை, காவல், உய்யார் - தப்பார். செறின் - வெகுளின், கடுஞ் சினம் - இடியோசைக்கு ஆனது இலக்கணை. பாம்பு சந்துக்குள் இருந்தாலும் இடியோசை கேட்டு அஞ்சும். அதுபோல், புகுதற்கரிய கோட்டைக்குள் ஒளிந்திருந் தாலும் பெரியோரால் வெகுளப் பட்டவர் தப்பார் என்பதாம். இறந்தமைந்த சார்புடையா ராயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின். (குறள்) (2) 908. எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரைக் கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் - சொல்லின் நிறைந்தார் வளையினாய் அஃதால் எருக்கு மறைந்தியானை பாய்ச்சி விடல். (பழ) நிறைந்து ஆர் வளையினாய் - நிறைந்து ஒலிக்கும் வளையல்களை அணிந்தவளே, சொல்லின் - சொல்லு மிடத்து, எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரை - எல்லா வகையாலும் மிகவும் பெரியாரை, கல்லாத் துணையார் கைப்பித்தல் அது - கல்லாமையைத் துணையாக வுடையார் வெறுக்கும்படி செய்தலானது, எருக்கு மறைந்து யானை பாய்ச்சிவிடல் - எருக்கம் புதரிலே மறைந்து நின்று யானையை வெறி பாய்ச்சி வெகுள்விப்பதனோ டொக்கும். திறம் - வகை. இறப்ப - மிக, கல்லாத் துணையார் - கல்லா மையைத் துணையாக வுடையார் - கல்லாதவர். கைப்பித்தல் - வெறுப்பித்தல் - சினமுண்டாகும்படி செய்தல். நிறைந்து - நிறைய அணிந்து. ஆர்த்தல் - ஒலித்தல். ஆல் - அசை. வெறி பாய்ச்சல் - வெறியுண்டாக்கிச் சினமூட்டுதல். எருக்கஞ் செடியின் மறைவில் நின்று யானைக்குச் சின மூட்டுபவன் எங்ஙனந் தப்பானோ, அவ்வாறே, கல்லாமையின் மறைவில் நின்று பெரியாருக்குச் சின மூட்டுவாருந் தப்பார் என்பதாம். மூடத் தன்மையால் பெரியார்க்குச் சினமூட்டினார் தப்பார் என்பது கருத்து. (3) 909. முன்னு மொருகாற் பிழைப்பானை ஆற்றவும் பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ? - இன்னிசை யாழின்வண் டார்க்கும் புனலூர! ஈனுமோ வாழை யிருகாற் குலை. (பழ) இன்னிசை யாழின் வண்டு ஆர்க்கும் புனல் ஊர - இனிய இசையையுடைய யாழ்போல வண்டுகள் ஒலிக்கும் நீரையுடைய ஊரனே, முன்னும் ஒருகால் பிழைப்பானை - முன்னரும் ஒரு காலத்துக் குற்றம் செய்தவனை, ஆற்றவும் பின்னரும் பிழைப்பப் பொறுப்பவோ - பெரியார் பொறுக்கவும் பின்னரும் குற்றம் செய்தால் பொறுப்பார்களோ, வாழை இருகால் குலை ஈனுமோ - வாழை மரம் இரு முறை குலை தள்ளுமோ? தள்ளாது. பிழைத்தல் - குற்றம் செய்தல். ஆற்றல் - பொறுத்தல், ஆர்க்கும் - ஒலிக்கும். புனல் - தண்ணீர். ஈனுதல் - குலை விடுதல். குலையின் சுமையை ஒருமுறை பொறுத்த வாழை மரம் இரண்டா முறை அது செய்வதில்லை. அதுபோல, ஒருவர் செய்த குற்றத்தை ஒரு முறை பொறுத்த பெரியோர் மீண்டும் குற்றம் செய்தால் பொறார் என்பதாம். இயற்கையாகவே ஒரு முறைதான் ஈனும் வாழை மரத்தை, இரண்டாமுறை ஈனினால் பொறாததனால் ஈனுவதில்லை எனத் திரும்பத் திரும்பச் செய்யும் குற்றத்தைப் பொறாத பெரியோர்க்கு உவமை கூறியது - தற்குறிப் பேற்ற அணியின் பாற்படும். (4) 910. நெடுங்காலம் வந்தார் நெறியின்மை கண்டு நடுங்கிப் பெரிதும் நலிவார் பெரியார் அடும்பார் அணிகானற் சேர்ப்ப! கெடுமே கொடும்பா டுடையான் குடி. (பழ) அடும்பு அணி ஆர் கானல் சேர்ப்ப - அடும்பம் பூவினால் அழகு பெறும் கடற்கரையை யுடையவனே, நெடுங்காலம் நெறியின்மை வந்தார் கண்டு - நெடுங்காலம் தீய வழியிலே நடந்து வந்தாரைக் கண்டு, பெரியார் பெரிதும் நடுங்கி நலிவார் - பெரியோர்கள் பெரிதும் அஞ்சி வருந்துவர்; (அங்ஙனம் அவர் வருந்துவாராகில் அதனால்,) கொடும்பாடு உடையான் குடி கெடும் - அக்கொடிய தன்மையையுடையவன் குடி கெடும். நெறியின்மை - தீ நெறி. வருதல் - தீ நெறியில் நடத்தல். நடுங்குதல் - அஞ்சுதல். நலிதல் - வருந்துதல். அடும்பு - கடற் கரையில் உள்ள ஒரு கொடி. ஆர்தல் - பொருந்துதல். அணி - அழகு. கானல் - கடற்கரைச் சோலை. சேர்ப்பு - கடற்கரை. கொடும்பாடு - கொடுமை. ஒருவன் நீண்ட காலம் கொடுமையே செய்துவரின், அதனால் மக்கட்கு என்ன கெடுதி நேருமோ வென்று பெரி யோர்கள் அஞ்சி வருந்துவர். பெரியோர்கள் அவ்வாறு வருந்துவது கண்ட பொதுமக்கள் அக்கொடியோனைப் புறக்கணிப்பர். அதனால் அவன் குடி கெடுவதாயிற்று. குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து. (குறள்) தமக்கே இவ்வாறு கொடுமை செய்வோன் பிறர்க்கும் இவ்வாறு தானே செய்வான் என்று அஞ்சி நடுங்குவரென்க. பெரியோர் மனம் வருந்தும்படி ஒருவன் கொடுமை செய்யின் அவன் குடிகெடும். (5) 911. திருவுடை யாரைச் செறலின்னா. (இன்) திரு - செல்வம். செறல் - பகை கொள்ளல். பெருஞ் செல்வ முடையாரோடு பகை கொள்ளுதல் துன்பந் தரும். 912. பெருவலியார்க் கின்னா செயலின்னா (இன்) பெருவலியார் - கல்வி, செல்வம், ஆண்மை முதலிய வற்றில் மிக்கவர். இன்னா - துன்பம். (7) 913. பெரியார்க்குத் தீய செயலின்னா. (இன்) பொருள் வெளிப்படை. (8) 914. பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா. (இன்) பீடு - பெருமை. பீடழித்தல் - பழித்தல். பெரியாரின் பெருமையை இகழ்ந்து கூறுதல் தகாது என்பதாம். (9) 915. சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற் பெரியோ ரப்பிழை பொறுத்தலு மரிதே. (வெற்) சிறியோர் பெரும்பிழை செய்தனர் ஆயின் - சிறியோர் (பெரியோர்க்குப்) பெருங்குற்றங்கள் செய்தாரானால், பெரி யோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே - பெரியோர் அக்குற்றத்தைப் பொறுத்தலும் அருமையே. ‘பொறுத்தலும்’ என்னும் உம்மையால், சில வேளை களில் பொறுப்பர் என்பதாம். அதனால், மேலும் மேலும் குற்றங்கள் செய்யக்கூடாதென்பது கருத்து. (10) 58. பெருமை அதாவது, எத்தகைய இடர்ப்பாடுறினும் மனக்கலக்க மின்றித் தாம் செய்யவேண்டியவற்றை இயன்ற அளவு செய்யும் உறுதிப் பாட்டாலாகிய பெருந்தன்மை. 916. பெருவரை நாட பெரியார்கட் டீமை கருநரைமேற் சூடேபோல் தொன்றும் - கருநரையைக் கொன்றன்ன இன்னா செயினுஞ் சிறியார்மேல் ஒன்றானுந் தோன்றாக் கெடும். (நால) பெருவரை நாட - பெரிய மலைகளையுடைய நாடனே, பெரியோர்கண் தீமை - பெரியோரிடத் துண்டான குற்றமானது, கருநரைமேல் சூடேபோல் தோன்றும் - பெரிய வெள்ளை யெருத்தின் மேல் போட்ட சூட்டின் வடுப்போல நன்கு விளங்கும். கருநரையை கொன்று அன்ன இன்னா செயினும் - பெரிய எருத்தைக் கொன்றாற் போன்ற தீச்செயல்களைச் செய்தா ராயினும், சிறியார் மேல் ஒன்றானும் தோன்றாக் கெடும் - கீழ் மக்களிடத்து ஒரு குற்றமாயினும் விளங்கித் தோன்றாது. வரை - மலை. கருமை - பெருமை. நரை - வெள்ளை எருது. சூடு - சூட்டின் தழும்பு. இன்னா - துன்பம் - தீச்செயல். தோன்றாக் கெடும் - தோன்றாது, பிறர்க்குக் குற்றமாகத் தெரியாது. ஒரு வெள்ளை எருத்தின்மேல் போட்ட சூட்டுத் தழும்பு நன்கு தெரிவது போல, பெரியார் செய்த குற்றம் எல்லோர்க்கும் நன்கு தெரியும். மாட்டைக் கொன்றாற் போன்ற பெருங் குற்றம் செய்தாலும் சிறியாரிடத்துத் தெரியாது. காரி, சிவலை முதலிய மாட்டின்மேல் போட்ட சூட்டுத் தழும்பு நன்கு தெரியாததுபோல, சிறியார் செய்யும் குற்றமும் தெரியாது என்பதும் கொள்க. பெருமையுடையார் ஒரு குற்றமும் செய்யக்கூடா தென்பது கருத்து. (1) 917. நாடறியப் பட்ட பெருஞ்செல்வர் நல்கூர்ந்து வாடிய காலத்தும் வட்குபவோ? - வாடி வலித்துத் திரங்கிக் கிடந்தே விடினும் புலித்தலையை நாய்மோத்த லில். (பழ) வாடி வலித்துத் திரங்கிக் கிடந்தே விடினும் - உடல் மெலிந்து நரம்பெழுந்து சுருங்கிப் படுத்துக் கிடந்தாலும், புலித் தலையை நாய் மோத்தல் இல் - புலியினது தலையை நாயானது (அஞ்சாமற் சென்று) மோந்து பார்க்காதது போல, நாடு அறியப்பட்ட பெருஞ் செல்வர் - உலகத்தாரால் அறியப் பட்ட பெரிய செல்வத்தை யுடையவர், நல்கூர்ந்து வாடிய காலத்தும் வட்குபவோ - வறுமை யுற்றுத் தளர்ந்த காலத்தும் மற்றொரு வர்க்குத் தாழ்வாரோ? தாழார். நல்கூர்தல் - வறுமையுறுதல். வாடுதல் - தளர்தல் - நிலைமை கெடுதல். வட்குதல் - தாழ்தல். வலித்தல் - நரம்பெழுதல். திரங்குதல் - சுருங்குதல். புலியானது உணவில்லாமல் வாடிவதங்கி நடக்க முடியாமல் படுத்துக் கிடந்தாலும், நாய் அஞ்சாது அருகில் சென்று அதன் தலையை மோந்து பார்க்கும் அத்தகு நிலையை அடையாது. அதுபோல, பெருஞ்செல்வர் அச்செல்வமிழந்து வறுமையால் வாடி வருந்தினாலும் ஒரு வரைத் தாழும் நிலையை அடையமாட்டார் என்பதாம். (2) 918. பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார் திறன்வேறு கூறிற் பொறையும், - அறவினையைக் காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும் ஊராண்மை யென்னுஞ் செருக்கு. (திரி) பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் - மற்றவர் தன்னை உயர்த்துப் பேசும்போது அதற்கு நாணுதலும், பேணார் திறன் வேறு கூறின் பொறையும் - தன்னை விரும் பாதவர் தன்னை இகழ்ந்து கூறின் அதைப்பொறுத்துக் கொள்ளு தலும், அறவினையை கார் ஆண்மைபோல ஒழுகலும் - அறச்செயலை மேகம்போலக் கைம்மாறு கருதாமல் செய்தலும், இம்மூன்றும் ஊர் ஆண்மை என்னும் செருக்கு - ஆகிய இம்மூன்றும் மிக்க ஆண்மை என்கின்ற செல்வங்களாம். பேணுதல் - மதித்தல் - உயர்த்துப் பேசுதல். பேணார் - மதியாதவர், பகைவர், திறன் வேறு - நற்றிறமல்லாதது - இகழ்ச்சி. கார் - முகில். ஊர்தல் - மேற்செல்லுதல் - மிகுதல். ஊர் ஆண்மை - மிக்க ஆண்மை. செருக்கு - செல்வம். செருக்கைத் தரும் செல்வத்தைச் செருக்கு என்றது ஆகுபெயர். பிறர் தன்னைப் புகழ்ந்து பேசும்போது அவ்வாறு புகழ்தல் தகாதென நாணுதலும், பிறர்தன்னை இகழ்ந்து பேசும்போது சினங்கொள்ளாது பொறுத்தலும், கைம்மாறு கருதாது உதவுதலும் அரிய செயல்களாகையால், ஊராண்மை என்னும் செருக்கு என்றார். ஆண்மை என்னும் செருக்கு - உருவகம். தன்னைப் பிறர் புகழ்தலை வெறுத்தலும், இகழ்தலைப் பொறுத்தலும், கைம்மாறு கருதாது உதவுதலும் பெருமை யுடைய செயல்கள் என்பதாம். (3) 919. பல்லவையுள் நல்லவை கற்றலும், பாத்துண்டாங் கில்லற முட்டா தியற்றலும் - வல்லிதின் தாளி னொருபொரு ளாக்கலு மிம்மூன்றும் கேள்வியு ளெல்லாந் தலை. (திரி) பல்லவையுள் நல்வவை கற்றலும் - பலவகையான நூல்களிலும் நல்ல கருத்துக்களைக் கற்றறிதலும், பாத்து உண்டு இல்லறம் முட்டாது இயற்றலும் - பிறர்க்குப் பகுத்துக் கொடுத்து உண்டு இல்லறத்தை முட்டுப்பாடில்லாமல் நடத்துதலும், வல்லிதின் தாளின் ஒரு பொருள் ஆக்கலும் - மிகவும் முயன்று சிறந்த பொருளை ஈட்டுதலும், இம்மூன்றும் கேள்வியில் எல்லாம் தலை - ஆகிய இம்மூன்றும் கல்விகளி லெல்லாம் சிறந்த கல்வியாம். பல்லவை - பலவகையான நூல்கள். அவை - அகத்திணை நூல்களும் புறத்திணை நூல்களும் அற நூல்களும் அறிவு நூல்களும் பிறவுமாம். நல்லவை - நல்ல கருத்துக்கள். பாத்தல் - பகுத்தல். ஆங்கு - அசை. முட்டுதல் - தடைப்படுதல். தாள் - முயற்சி. ஒரு பொருள் - ஒப்பற்ற பொருள் - சிறந்த பொருள்; பெரும்பொருள் என்பது. வல்லிதின் - விரைவாக என்றுமாம். கல்வி - கற்றல், கேட்டல் என இருவகைப் படலால், கல்வியைக் கேள்வி என்றார். பலவகையான நூல்களையும் ஆராய்ந்து பார்த்து நல்ல பொருள்களைக் கற்றுக் கொள்ளுதலும், சுற்றத் தார், நண்பர், விருந்தினர், வறியர் ஆகியோற்குப் பகுத்துண்டு குறைவில்லாமல் வாழ்க்கை நடத்துதலும், மிகவும் முயன்று சிறந்த பொருளை ஈட்டுதலும் பெருமையுடைய செயல் களாகும் என்பதாம். (4) 920. மெலியார் விழினு மொருவாற்றா னுய்ப வலியார்மற் றொன்றானு முய்யார் - நிலைதப நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும் உய்யுமா லுய்யா பிற. (நீநெ) நொய்ய நிலைதப சழக்கென வீழாவாம் - கனமில்லாத பொருள்கள் நிலைதப்பி விரைவில் வீழமாட்டா, வீழினும் உய்யும் - ஒருவேளை வீழ்ந்தாலும் தப்பும், பிற உய்யா - கனமான பொருள்கள் நிலைதப்பி விழுந்தால் தப்பமாட்டா; (அதுபோல), மெலியார் விழினும் ஒரு ஆற்றான் உய்ப - சிறியோர் தம் நிலையினின்றும் தவறினாலும் ஒரு வழியாகப் பிழைத்துக் கொள்வர், வலியோர் மற்று ஒன்றானும் உய்யார் - பெரியோர் தம் நிலைதவறினால் வேறு எந்த வகையாலும் பிழைத்தல் முடியா. மெலியார் - சிறியோர், வீழ்தல் - நிலைதவறுதல். உய்தல் - பிழைத்தல். வலியார் - பெரியோர். மற்று - வேறு. தப - தவறி, தப்பி. நிலைதப - இருந்த இடத்திலிருந்து தவறி, நொய்ய - கனமில்லாத மெல்லிய பொருள்கள். சழக்கென - விரைவாக. ஆல் - அசை. பிற - கனமுள்ள பொருள்கள். கனமில்லாத பொருள்கள் ஓரிடத்திலிருந்து விரைவாகக் கீழே விழமாட்டா, அப்படி விழுந்தாலும் கெடாமல் தப்பிக் கொள்ளும். ஆனால், கனமான பொருள்கள் வீழ்ந்தால் தப்பா. அது போல, சிறியோர் நிலை தவறினால் அதை உலகோர் பொருட்படுத்த மாட்டார்கள். ஆகையால், அவர்கள் மறுபடியும் ஒருவாறு பிழைத்துக் கொள்வர். ஆனால், பெரியோர்கள் நிலை தவறினால் அது உலகெல்லாம் பரவி விடுமாகையால், மறுபடியும் அவர்கள் பெருமையடைதல் முடியாது என்பதாம். உயரத்திலிருந்து ஓர் அட்டைப் பெட்டி விழுந்தால் உடையாது. மரப் பெட்டி விழுந்தால் உடைத்து விடும். மறுபடியும் அதைப் பழையபடி நல்ல பெட்டியாக்க முடியாது. பெரியோர்கள் தவறு செய்தால் - பெருமை குன்றினால் - பழையபடி பெருமைடைய முடியாது என்பது கருத்து. தலையி னிழந்த மயிரனையர் மாந்தர் நிலையி னிழிந்தக் கடை. (குறள்) (5) 921. தலைமயிருங் கூருகிரும் வெண்பல்லுந் தத்தம் நிலையுடைய மானவரு நிற்கும் - நிலைதவறாத் தானத்திற் பூச்சியமே சாரும் நிலைதவறுந் தானத்திற் பூச்சியமோ தான். (நீவெ) தலைமயிரும், கூர் உகிரும் - கூரிய நகமும், வெண் பல்லும், தம்தம் நிலை உடைய மானவரும் - அவரவர்க்குரிய நிலையில் வாழும் மக்களும், நிற்கும் நிலை தவறா தானத்தில் பூச்சியமே - தாம்தாம் உள்ள நிலையில் தவறாத இடத்தில் சிறப்புடையன வேயல்லாமல், சாரும் நிலை தவறும் தானத்தில் பூச்சியமோ - பொருந்திய நிலைதவறு மிடத்தில் சிறப்பு டையனவோ? தம்தம் நிலை - அவரவர் வாழும் தகுதி, மானவர் - மாந்தர், மக்கள். தவறா - தவறாத. தானம் - இடம், பூச்சியம் - நன்மதிப்பு, சிறப்பு. தான் - அசை. மயிரும் நகமும் பல்லும் முறையே தலையிலும் விரலிலும் வாயிலும் உள்ள போது மதிப்புப் பெறுவது போல, மக்களும் அவரவர்க்குத் தகுந்த நிலையில் உள்ளபோது மதிப்புப் பெறுவர். உதிர்ந்த மயிரும் வெட்டப்பட்ட நகமும் விழுந்த பல்லும் மதிப்புப் பெறாமை போல, தத்தம் நிலையில் தவறியோரும் மதிப்புப் பெறார் என்பதாம். நிலையில் தவறுதல் - தகுதியில்லாத செயல்கள் செய்தல். அவரவர் தகுதிக்குத் தகாதன செய்வோர் மதிக்கப் பெறார் என்பது கருத்து. (6) 922. தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிது. (இனி) தானம் அழியாமை - தான் வாழும் நிலை கெடாதபடி, தான் அடங்கி வாழ்வு இனிது - தான் அடங்கி வாழ்தல் நல்லது. அடங்கி வாழ்தல் - தன் தகுதிக்குத் தகாதன செய்யாம லிருத்தல். தன் தகுதிக்குத் தகாத காரியம் செய்தால் பெருமை கெடும் என்பதாம். (7) 923. மனைக்கு விளக்கம் மடவார், மடவார் தமக்குத் தகைசால் புதல்வர், மனக்கினிய காதற் புதல்வர்க்குக் கல்வியே, கல்விக்கும் ஓதிற் புகழ்சா லுணர்வு. (நான்) மனைக்கு விளக்கம் மடவார் - வீட்டுக்கு ஒளி பெண்கள், மடவார் தமக்கு தகைசால் புதல்வர் - பெண்ணுக்குத் தகுதி மிக்க மக்கள் ஒளி, மனக்கு இனிய காதல் புதல்வர்க்குக் கல்வியே - பெற்றோர் மனத்திற்கு இன்பந்தரும் அன்பிற்குரிய மக்கட்குக் கல்வியே ஒளியாகும், கல்விக்கும் ஓதின் புகழ்சால் உணர்வு - அக்கல்விக்கும் சொல்லுமிடத்து புகழ்மிக்க உணர்வே ஒளியாகும். முதலிலுள்ள விளக்கம் என்பது ஏனை மூன்றிடத்திலும் கூட்டப்பட்டது, முதல்விளக்கணி எனப்படும். மடவார் புதல்வர் முதலிய சொற்கள் மடக்கிவந்தது, மாலைவிளக்கணி எனப்படும். விளக்கம் - ஒளி; இங்கு பெருமை. மடவார் - பெண்கள். தகை - தகுதி. சால் - மிக்க. மனக்கு - மனத்துக்கு. அத்துச் சாரியை தொக்கது. காதல் - அன்பு. உணர்வு - உணர்ச்சி - எண்ணிப் பார்த்தல். வீட்டுக்குப் பெண்டிரும், பெண்டிர்க்கு அறிவறிந்த மக்களும், மக்களுக்குக் கல்வியும், அக்கல்விக்கு உணர்வும் பெருமைதரும் என்பதாம். (8) 924. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல். (முது) காதலின் - ஒருவன் பிறரால் அன்பு செய்யப்படுவதை விட, கண்ணஞ்சப்படுதல் சிறந்தன்று - பிறரால் அஞ்சப் படுதல் சிறந்தது. காதல் - அன்பு. கண்ணஞ்சுதல் - அஞ்சுதல் - ஒருவன் பெற்றிருக்கும் நன்மதிப்பால் - பெருமையால் - பிறர் அஞ்சி நடக்கத்தக்க பெருமையுடையரா யிருத்தல். பிறர் அன்பு செய்வதிலும் நன்குமதித்தலே சிறந்தது என்பதாம்.(9) 925. நிலையிற் பிரியேல். (ஆத்) நிலையில் - நின்ற நிலையிலிருந்து, பிரியேல் - தாழாதே. நின்ற நிலையிலிருந்து தாழ்வுறும்படி நடந்துகொள்ளக் கூடாது. (10) 926. பீடு பெறநில். (ஆத்) பீடு பெற - பெருமையுண்டாகும்படி, நில் - நீ நட. பீடு - பெருமை. பெருமை கெடும்படி இழிந்த செயல்கள் செய்யக் கூடா தென்பது கருத்து.(11) 59. மானம் அதாவது, எப்பொழுதும் தாம் நின்ற நிலையினின்றும் தாழாமையும், அங்ஙனம் தாழ்வு வந்தவிடத்து உயிர் வாழா மையுமாம், அதாவது, தமது பெருமை கெடும் படியாக நடந்து கொள்ளாமையாம். உயர்பதவியிலுள்ள ஒருவர் ஏதாவது தகாச்செயல் செய்து அப்பதவியினின்றும் கீழே தள்ளப்படு தலும், வேலையை விட்டு நீக்கப்படுதலும் மானங்கெட்ட தன்மையாகும். 927. வற்றிமற் றாற்றப் பச்சிப்பினும் பண்பிலார்க் கற்ற மறிய வுரையற்க - அற்றம் மறைக்குந் துணையார்க் குரைப்பவே தம்மைத் துறக்குந் துணிவிலா தார். (நால) வற்றி ஆற்ற பசிப்பினும் - உடம்பு உலர்ந்து மிகவும் பசித்தாலும், பண்பு இலார்க்கு அற்றம் அறிய உரையற்க - நற்குண மில்லாத வர்களுக்குத் தமது வறுமையை அவர் அறியும் படி சொல்லற்க, தம்மைத் துறக்கும் துணிவு இலாதார் - (பொறுக்க முடியாத துன்பம் வந்தபோதும்) தம் உயிரை மாய்த்துக் கொள்ளும் மன அமைதி இல்லாதவர், அற்றம் மறைக்கும் துணையார்க்கு உரைப்ப - தமது வறுமையை நீக்கவல்ல தன்மையுடைய நண்பர்க்கு உரைப்பர். வற்றுதல் - உலர்தல் - உணவின்மையால் உடம்பு உலர்தல். மற்று - அசை. ஆற்ற - மிக. பண்பு பிறர் இயல்பறிந்து நடக்குங் குணம். அற்றம் - வறுமை. பொருள் அறுதல் என்பது பொருள். மறைத்தல் - நீக்குதல். துணை - தன்மை. துறத்தல் - உயிர் விடுதல். அதாவது தற்கொலை செய்து கொள்ளல். மிக்க வறுமையுற்ற விடத்தும் அதனைப் பிறரிடம் சொல்லக் கூடாது. பிறரோடு சொல்லத் துணிந்தாலும் அதனை நீக்க வல்லார்க்குச் சொல்லலாமேயன்றி, பிறர் துயரம் அறியாதவர்களிடம் சொல்லக் கூடாது. அவ்வாறு பிறரிடம் உதவி பெற்று வாழ்வதைவிட மானம் அழியாமல் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் சிறந்தது என்பதாம். ‘மறைக்கும் துணையார்க்கு உரைப்ப’ என்றது, அத்தகை யார்க்கும் உரையார் என்பது கருத்தாகும். மானங் கெடவரின் உயிரைவிட்டு மானத்தைக் காப்பர் மானமுடையார். மானமி லாரே, வறுமையால் வாழமுடியாத நிலை ஏற்பட்ட போது பிறரிடம் சென்றிரப்பர் என இகழ்ந்தவாறு. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலி னந்நிலயே கெட்டா னெனப்படுதல் நன்று. (குறள்) (1) 928. ஈனமா யில்லிருந் தின்றி விளியினும் மானந் தலைவருவ செய்பவோ - யானை வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள் அரிமா மதுகை யவர். (நால) யானை வரிமுகம் புண்படுக்கும் - யானையினது புள்ளி களையுடைய முகத்தைப் புன்படுத்துகின்ற, வள்உகிர் நோன் தாள் - கூர்மையான நகங்களையும் வலிய கால்களையுமுடைய, அரிமா மதுகையவர் - சிங்கத்தினது வலிமை போன்ற வலிமை யுடையவர்கள், ஈனம் ஆய்இல் இருந்து இன்றி விளியினும் - தொழில் முயற்சியின்றி வீட்டிலேயே இருந்து பொருளில் லாமல் இறக்க நேர்ந்தாலும், மானம் தலைவருவ செய்பவோ - மானங் கெடும்படியான காரியங்களைச் செய் வார்களோ? செய்யார். ஈனம் - குறைவு. ஈனம் ஆய் - குறைந்து இன்றி - பொருளின்றி. விளிதல் - இறத்தல். தலைவருதல் - கெடுதல். வரி - புள்ளி. வள் - கூர்மை. உகிர் - நகம். நோன்மை - வலிமை. அரிமா - சிங்கம். மதுகை - வலிமை. மிக்க வலிமையுடையவர்கள் ஒருவேளை தங்கள் தொழிலுக்கு இடையூறு நேர்ந்து பொருளின்றி இரக்க நேரினும், உயிர் விட்டு மானத்தைக் காப்பார்களே யல்லாமல் மானங் கெடும்படியான இரத்தல் முதலிய இழிவான காரியங் களைச் செய்து உயிர்வாழார் என்பதாம். செய்யுந் தொழில் முட்டுப்பட்டோ, செய்துவந்த வேலையை இழந்தோ வாழமுடியாத நிலை ஏற்படினும் மானத்தைவிட்டு, இரந்துண்ணல் முதலிய இழிதொழிலைச் செய்யக்கூடாது என்பது கருத்து. (2) 929. திருமதுகை யாகத் திறனிலார் செய்யும் பெருமிதங் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக் கானந் தலைப்பட்ட தீப்போற் கனலுமே மான முடையார் மனம். (நால) திரு மதுகை ஆக - செல்வமிகுதியால், திறன் இலார் செய்யும் பெருமிதம் கண்டக் கடைத்தும் - கீழ்மக்கள் செய்கின்ற வரம்பு கடந்த நடத்தையைக் கண்டவிடத்து, மானம் உடையார் மனம் - எரிமண்டி கானம் தலைப்பட்ட தீப்போல் கனலும் - எரிதல். பொருந்திக் காட்டிலுள்ள மரங்களிற்பற்றியெழுந்த தீச்சுடர் போலக் கொதிக்கும். திரு - செல்வம். மதுகை - வலிமை. வலிமையுடைய செல்வ மாவது - எடுக்கெடுக்கக் குறையாத பெருஞ்செல்வம். திறன் - கூறு. இங்கே நற்கூறு - நன்மை. பெருமிதம் - செருக்கு, கடைத்து - இடத்து. உம் - அசை. எரி - எரிதல். மண்டுதல் - பொருந்துதல், என்றுமாம். கானம் - காடு. தலை - ஏழனுருபு. கானம் தலை - காட்டில். கனலுதல் - கொதித்தல். கீழ்மக்கள் தம் செல்வச் செருக்கினால் அளவுக்குமீறி, நடந்து கொள்வதைக் கண்டால், மானமுடையார் மனம் வருந்தும் என்பதாம். அளவுக்குமீறி நடத்தல் - பெரியோர்களை மதியாமல் இகழ்தல். செல்வர்கள் இகழும்படி அவர் உதவியை நாடாமல் வாழவேண்டுமென்பது கருத்து. (3) 930. என்பா யுகினு மியல்பிலார் பின்சென்று தம்பா டுரைப்பரோ தம்முடையார் - தம்பா டுரையாமை முன்னுணரு மெண்மை யுடையார்க் குரையாரோ தாமுற்ற நோய். (நால) தம் உடையார் - தம் மானத்தைக் காக்கும் இயல்புடை யவர், என்புஆய் உகினும் - (வறுமையால் உணவின்றித் தம் உடம்பு) எலும்பு மாத்திரமாகி அழிவதாயிருந்தாலும், இயல்பு இலார்பின் சென்று தம்பாடு உரைப்பரோ - நற்குணமில்லாத செல்வர்களிடம் சென்று தமது வருத்தத்தைக் கூறுவார்களோ? (கூறார்). தம்பாடு உணராமை முன் உணரும் ஒண்மை உடையார்க்கு - தமது வருத்தத்தைத் தாம் சொல்லு முன்னரே குறிப்பினாலறிந்து உதவக் கூடிய கூரிய அறிவுடையவர்களுக்கு, தாம் உற்ற நோய் உரையாரோ - தாம் அடைந்த துன்பத்தைக் கூறாதிருப்பாரோ? (கூறுவர் என்றபடி). என்பு - எலும்பு. உகுதல் - சிதைதல், அழிதல். இயல்பு - தன்மை, நற்குணம். பாடு - வருத்தம். தம் உடையார் - மான முடையார். உரையாமை முன் உணர்தல் - குறிப்பாலறிதல். ஒண்மை - கூறிய அறிவு. நோய் - வருத்தம். மானமுடையவர்கள் எவ்வளவு வறுமையால் வாடிய போதும் தமது வருத்தத்தைத் தகாதவரிடத்துக் கூறார். ஏனெனில், அவரால் இகழ்ச்சியைப் பெறுதலோடு பயனின் மையுமாகும். தக்காரிடம் கூறுவர். ஏனெனில், தாம் கூறா விடினும் குறிப்பறிந்து உதவுவாராதலாலும், பயனுண்மை யானும் என்பதாம். இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலுந் தேற்றாதார் மாட்டு. (குறள்) இரப்பன் இரப்பாரை யெல்லாம் இரப்பிற் கரப்பா ரிரவன்மின் என்று. (குறள் 4) 931. யாமாயி னெம்மில்லங் காட்டுதுந் தாமாயிற் காணவே கற்பழியு மென்பார்போல் - நாணிப் புறங்கடை வைத்தீவர் சோறு மதனால் மறந்திடுக செல்வர் தொடர்பு. (நால) யாம் ஆயின் எம் இல்லம் காட்டுதும் - நாமானால் (வரும் விருந்தினர்க்கு) நமது வீடு முழுவதையும் காண்பிப் போம், தாம் ஆயின் காணவே கற்பு அழியும் என்பார்போல் நாணி - செல்வச் செருக்கு உடையவர்களானால் (பிறர்தம் வீட்டினுட்புகுந்து) பார்த்த அளவிலே அதன் உறுதி குலையு மென்று கருதுவார் போல (பிறர்க்குத் தமது வீட்டைக் காட்டக் கூச்சப்பட்டு,) புறங்கடை வைத்து சோறும் ஈவர் - வீட்டின் வெளித் திண்ணையில் வைத்துச் சோறுபோடுவர், அதனால் செல்வர் தொடர்பு மறந்திடுக - ஆகையால் (மான முடையவர்) செல்வச் செருக்குடையாரைப் பின் தொடர் தலை மறந்து விடக் கடவர். காட்டுதும் - காட்டுவோம். தாம் - செல்வச் செருக்கு டையவர். கற்பு - கல்லின் தன்மை - உறுதி. நாணி - மனங்கூசி. புறங்கடை - வெளித்திண்ணை. செல்வச் செருக்கில்லாதவர் வந்த விருந்தினரை வீட்டுக்குள் அழைத்துப்போய் உணவிட்டுப் போற்றுவர் என்பதை ‘யாமாயின் எம்மில்லம் காட்டுதும்’ என்றார். இது செல்வச் செருக்கில்லா தவர் கூறியதுபோலக் கூறியது. செல்வர்கள் - பிறரை வீட்டுக்குள் வர விடாமைக்குக் காரணம், அவர்கள் பார்த்தால் வீட்டின் வலிமை - உறுதிப் பாடு கெட்டுவிடும் என்னும் கருத்து என்று கற்பித்துக் கூறியது - தற்குறிப்பேற்றம். வீட்டுக்கு வந்தவரை வெளித்திண்ணையில் வைத்துச் சோறுபோடும் அத்தகு செல்வச் செருக்குடைய கீழ்மக்களிடம் ஒன்றை வேண்டிச் செல்லுதல் மானமுடைமையாகாது என்பதாம். (5) 932. பாவமு மேனைப் பழியும் படவருவ சாயினுஞ் சான்றவர் செய்கலார்; சாதல் ஒருநா ளொருபொழுதைத் துன்ப மவைபோல் அருநவை யாற்றுத லின்று. (நால) பாவமும் ஏனை பழியும் பட வருவ - குற்றமும் மற்றை உலகப் பழியும் உண்டாகும்படியான காரியங்களை, சான்றவர் சாயினும் செய்கலார் - பெரியோர்கள் (அவற்றைச் செய்யா விட்டால் தமக்குச்) சாவுண்டாவதாயிருந்தாலும் செய்ய மாட்டார்கள்; (ஏனெனில்), சாதல் ஒரு நாள் ஒரு பொழுதை துன்பம் - இறத்தல் இறக்கிற ஒரு நாளிலே இறக்கிற அப்பொழுது மட்டுமே துன்பமாகும், அவைபோல் அருநவை ஆற்றுதல் இன்று - அந்த இழிதொழில்கள் போல மிக்க துன்பங்களைச் செய்தல் இல்லை. பாவம் - குற்றம். பழி - பிறர் பழித்தல். குற்ற முடையதும் பிறர் பழிக்கத் தக்கதுமான செயல்களைச் செய்யக் கூடாது. ஏனை - மற்ற. படவருவ - உண்டாகும்படியான செயல்கள். சாய்தல் - இறத்தல். அவை - பழிபாவச் செயல்கள். நவை - துன்பம். அருநவை - மிக்க துன்பம். பிறர் பழிக்கத்தக்க குற்றமுடைய செயல்களைச் செய்யா விட்டால் இறக்கநேரினும் பெரியோர்கள் அவற்றைச் செய்ய மாட்டார்கள். ஏனெனில், இறத்தல் இறக்கும்போது மட்டும் துன்பமாகும். அக்குற்றமுடைய செயல்களைப்போல் எப்போதும் மிக்க துன்பத்தைச் செய்வதில்லை. ஆகையால், இழிதொழில் கள் செய்து மானங்கெட்டு உயிர்வாழ்வதைவிட, அவற்றைச் செய்யாமல் உயிரை விட்டு மானங்காத்தலே மேல் என்பதாம். பாவமும் பழியும் படவருஞ் செயல்கள் - இரத்தல் முதலியன. (6) 933. கடையெலாங் காய்பசி யஞ்சுமற் றேனை இடையெலா மின்னாமை யஞ்சும் - புடைபரந்த விற்புருவ வேல்நெடுங் கண்ணாய் தலையெல்லாஞ் சொற்பழி யஞ்சி விடும். (நால) புடை பரந்த வில்புருவவேல் நெடுங்கண்ணாய் - பக்கங்களிலே பரவிய விற்போல் வளைந்த புருவங்களையும் வேல்போன்ற கூரிய கண்களையுமுடையவளே, கடை எலாம் காய் பசி அஞ்சும் - கடைமக்கள் யாவரும் வருத்துகின்ற பசிக்கு அஞ்சுவார்கள், ஏனை இடை எலாம் இன்னாமை அஞ்சும் - ஏனை இடைப்பட்ட மக்களெல்லாம் துன்பத்திற்கு அஞ்சுவார்கள், தலை எல்லாம் சொல்பழி அஞ்சிவிடும் - தலைமக்களோ வெனில், உலகத்தார் சொல்லுகின்ற பழிக்கு அஞ்சுவார்கள். கடை - கடைப்பட்ட குணமுள்ளவர். காய்பசி - மிக்க பசி. இன்னாமை - துன்பம். மற்று - அசை. இடை - நடுத்தர மான குண முள்ளவர். புடை - பக்கம். புடைபரத்தல் - நீண்டிருத்தல். வில் - புருவ வளைவிற்கு உவமை. வேல் - கண்ணின் கூர்மைக்கு உவமை. சொல்பழி - பிறர் சொல்லு கின்றபழி - பழிச்சொல். கடைமக்கள் பசிக்கொடுமைக்கு அஞ்சுவார்கள், இடை மக்கள் துன்பத்திற்கு அஞ்சுவார்கள், தலைமக்களோ, பிறர் பழித்தால் அதனால் மானக்கேடு வருமென்று பிறர்பழிக்கு அஞ்சுவார்கள். அதாவது - பழியாயினவற்றைச் செய்ய அஞ்சுவர் என்பதாம். அரிசியான் இன்பு றூஉம் கீழெல்லாம் தத்தம் வரிசையான் இன்புறூஉம் மேல். (நான் - 67) என்றபடி, கீழ்மக்கள் மானத்தையும் இழிவையும் கருதாமல் கிடைத்த உணவுக்காக மகிழ்வர். மேன்மக்களோ, பசி துன்ப மெல்லாம் பொறுத்து மான முடையவர்களாய் வாழ்வதிலே மகிழ்வர். இங்ஙனம், தற்காலத்துப் பயனாகிய பசி நீங்குதலையும், எக்காலத்தும் பயன்படுவதான மானத் தையும் நோக்கியல்லாமல், அரசர் முதலியோரால் நேரக் கூடிய தண்டனை முதலிய துன்பங் களுக்கு அஞ்சி, தீச்செய லொழிந்து நற்செயல் செய்து வாழ்வோர் நடுத்தர மக்கள் என்பதாம். (7) 934. நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தா ரென்றெள்ளிச் செல்வர் சிறுநோக்கு நோக்குங்காற் - கொல்லன் உலையூதுந் தீயேபோல் உள்கனலுங் கொல்லோ தலையாய சான்றோர் மனம். (நால) நல்லர் பெரிது அளியர் நல்கூர்ந்தார் என்று எள்ளி - இவர் மிகவும் நல்லவர், பெரிதும் இரங்கத்தக்கவர், வறுமை யடைந்தார் என்று இவ்வாறு இகழ்ந்து கூறி, செல்வர் சிறு நோக்கு நோக்குங்கால் - செல்வர்கள் இகழ்ச்சிப் பார்வை பார்க்கும் போது, தலையாய சான்றோர் மனம் - தலை மக்களது நெஞ்சம், கொல்லன் உலை ஊதும் தீயேபோல் உள் கனலும் - கொல்லன் உலைக்களத்தில் ஊதியெழுப்பும் நெருப்புப்போல உள்ளே கொதிக்கும். அளியர் - இரங்கத்தக்கவர். நல்கூர்தல் - வறுமை யுறுதல். எண்ணி - இகழ்ந்து; சிறு நோக்கு - இகழ்ச்சி நோக்கு. கனலும் - கொதிக்கும். கொல்லோ - அசை. நல்லர், பெரிதளியர், நல்கூர்ந்தார் என்னும் சொற்கள் இங்கு இரக்கத்தாற் சொல்லும் சொற்களல்ல, இகழ்ச்சியால் சொல்லும் சொற்கள் என்பது, சிறுநோக்கு நோக்குதலால் பெறப்படும். ஒரு செல்வர் ஒரு ஏழையைப் பார்த்து, ‘இவர் மிகவும் நல்லவர், மிகவும் இரங்கத்தக்கவர், வறுமையடைந்து விட்டார் பாவம்’ என்று இகழ்ந்து கூறி, இகழ்ச்சியாகப் பார்த்தால், மான முள்ள பெரியோர் மனம் அவ்விகழ்ச்சியைப் பொறுக்க முடியாது கொல்லன் உலைத்தீபோல் கொதிக்கும் என்பதாம். எனவே, மானத்தைவிட்டு அத்தகைய செல்வரிடம் சென்று ஒன்றை இரவார் என்பது கருத்து. (8) 935. நச்சியார்க் கீயாமை நாணன்று நாணாளும் அச்சத்தால் நாணுதல் நாணன்றாம் - எச்சத்தின் மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது சொல்லா திருப்பது நாண். (நால) நச்சியார்க்கு ஈயாமை நாண் அன்று - தம்மை விரும்பி வந்தவர்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடாமை நாணமன்று, நாள்நாளும் அச்சத்தால் நாணுதல் நாண் அன்று - நாடோறும் அஞ்சவேண்டிய செயல்களுக்கு நாணுதலும் நாணமாகாது, எச்சத்தின் மெல்லியர் ஆகி - தாம் செல்வக் குறையையுடைய எளிராயிருக்கையில், தம் மேலாயார் செய்தது சொல்லாது இருப்பது நாண் - தம்மினும் மேலான செல்வமுடையவர் தமக்குச் செய்த இகழ்ச்சியைப் பிறர்க்குச் சொல்லாமலிருப்பதே உண்மையான நாணமாகும். நச்சுதல் - விரும்புதல். நாண் - நாணம் - வெட்கம். நாள் நாளும் - நாடோறும். அச்சம் - செய்யத்தகாத செயல்கள் செய்ய அஞ்சுதல். ஆம் - அசை. எச்சம் - குறை - செல்வக் குறை. மெல்லியர் - எளியர். மேலாயார் - தம்மினும் மிகுதியான மேலான - செல்வ முடையவர். செய்தது இகழ்ந்தது - இகழ்ச்சி. தம்மை விரும்பி வந்தவர்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடாமை நாணத் தக்கதாகும். செய்யத்தகாத காரியங்களைச் செய்தற்கு நாணவேண்டும். இவ்விரண்டையும் விட, தமக்குச் செய்த இகழ்ச்சியைச் சொல்லுதற்கு நாணுதலே சிறந்த நாணமாகும் என்பதாம். அத்தகைய செல்வரிடம் ஒன்றை வேண்டிச் செல்லா மலிருப்பதே மானத்திற்குரிய நாணமாகும் என்றபடி. மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த விடத்து. (குறள்) (9) 936. தனக்குத் தகவல்ல செய்தாங்கோ ராற்றால் உணற்கு விரும்புங் குடரை - வனப்பற ஆம்பற்றாள் வாடலே போல வகத்தடக்கித் தேம்பத்தாங் கொள்வ தறிவு. (அற) தனக்குத் தகவு அல்ல செய்து - தனக்குத் தகுதியல்லாத காரியத்தைச் செய்து, ஓர் ஆற்றால் உணற்கு விரும்பும் குடரை - ஒருவாறு உண்ணுதலை விரும்புகின்ற குடலை, ஆம்பல் தாள் வாடலேபோல - நீரற்ற போது ஆம்பற் கொடி வாடுதலே போல, வனப்பு அற தேம்ப தாம் அகத்து அடக்கிக் கொள்வது அறிவு - அழகு கெடவும் இளைக்குமாறும் தாம் உள்ளே அடக்கிக் கொண் டிருப்பதே அறிவுடைமையாகும். தகவு - தகுதி, ஆங்கு - அசை. ஆறு - வழி. குடர் - குடல். இங்கே வயிறு. வனப்பு - அழகு. ஆம்பல் - ஒரு நீர்க்கொடி. அகம் - உள். அகத்து அடக்கல் - பசியைப் பொறுத்தல். தேம்ப - உடல் இளைக்க. தகாத காரியத்தைச் செய்து மானங்கெட்டு உண்டு உயிர் வாழ்தலைக் காட்டிலும், உடல் அழகு கெட்டு இளைத்து அழியுமாறு உண்ணாதிருத்தலே அறிவுடைமையாகுமென்ப தாம். நீரிலுள்ள ஆம்பல் நீர் நிறைந்திருக்கும்போது செழிப்புட னிருக்கும், நீரற்றபோது வாடி வறண்டு போகும். அதுபோல, செல்வமுள்ளபோது நன்கு உண்டு வாழ்வோர் செல்வமற்ற போது உண்ணாதிருந்து உயிர்விடுதலே யன்றி, மானத்தை விட்டு இரந்துண்டு வாழக்கூடாதென்பது கருத்து. (10) 937. போற்றியே போற்றியே யென்று புதுச்செல்வம் தோற்றியார் கண்ணெல்லாந் தொண்டேபோல் - ஆற்றப் பயிற்றிப் பயிற்றிப் பலவுரைப்ப தெல்லாம் வயிற்றுப் பெருமான் பொருட்டு. (அற) புதுச் செல்வம் தோற்றியார் கண் எல்லாம் - புதிதாகச் செல்வத்தை யடைந்தவரிடத் தெல்லாம் சென்று, தொண்டே போல் போற்றியே போற்றியே என்று - அடிமையைப் போல நீ என்னைக் காப்பாயாக நீ என்னைக் காப்பாயாக என்று, ஆற்ற பயிற்றி பயிற்றி பல உரைப்ப தெல்லாம் - மிக பலகாற் சொல்லி அவர்களைப் பலவாறு புகழ்ந்து கூறுவதெல்லாம், வயிற்றுப் பெருமான் பொருட்டு - வயிறு வளர்த்தற் பொருட்டே யாகும். அடுக்குகள் பன்மை குறித்தன. புதுச் செல்வம் தோற்றி யார் - புதுப் பணக்காரர். தொண்டு - அடிமை. ஆற்ற - மிக. பயிற்றல் - சொல்லல். வயிற்றுப் பெருமான் என்றது - இழிவு குறித்தது. வயிறு வளர்த்தற் பொருட்டு புதுப் பணக்காரர்களிடம் சென்று, அடிமையைப் போல, ‘என்னைக் காப்பாற்றுக என்னைக் காப்பாற்றுக’ என்று பலமுறை சொல்லி அவர் களைப் புகழ்வது மானங்கெட்டதனம் என்பதாம். (11) 938. தம்முடை யாற்றலும் மானமுந் தோற்றுத்தம் இன்னுயி ரோம்பினு மோம்புக - பின்னர்ச் சிறுவரை யாயினும் மன்ற தமக்காங் கிறுவரை யில்லை யெனின். (நீநெ) பின்னர் சிறுவரை ஆயினும் - இனிமேல் கணப் பொழு தாவது, மன்ற தமக்கு இறுவரை இல்லை எனின் - உறுதியாகத் தமக்குச் சாவு இல்லையானால், தம்முடை ஆற்றலும் மானமும் தோற்று - தம்முடைய வலிமையையும் மானத்தையும் இழந்து, தம் இன் உயிர் ஓம்பினும் ஓம்புக - தமது இனிய உயிரைப் பாது காக்கினும் பாதுகாக்க. ஆற்றல் - வலிமை. ஓம்புதல் - பாதுகாத்தல். சிறுவரை - சிறு பொழுது - நொடிப் பொழுது. மன்ற - உறுதியாக. ஆங்கு - அசை. இறுவரை - இறுதிக்காலம் - சாவு. உடல் நிலையுடையதன்று. எப்போது சாவு நேரு மென்பது யார்க்கும் தெரியாது. இத்தகைய நிலையில்லாத உயிர் வாழ்க்கைக் காக, ஆற்றலையும் மானத்தையும் இழக்கக் கூடாது. உயிரை விட்டேனும் ஆற்றலையும் மானத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்பதாம். இதுவரைக்கும் சாவு இல்லை என்பது உறுதியாகத் தெரிந்தால், ஆற்றலையும் மானத்தையும் விட்டு உயிரைப் பாதுகாக்கலாம். அவ்வாறு உறுதி கூற முடியாததாகையால், ஆற்றலும் மானமும் இழக்க நேரும்போது, உயிரை விட்டு மானத்தைக் காக்கவேண்டும் என்பது. உடல் வலுவாக இருந்தும் உழைப்பின்றிச் சோம்பி யிருத்தல் - ஆற்றலிழத்தல். இழி தொழில் செய்து பிறரால் இகழப்படுதல் - மானமிழத்தல். மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த விடத்து. (குறள்) (12) 939. உற்றவிடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர் பற்றலரைக் கண்டாற் பணிவரோ - கற்றூண் பிளந்திறுவ தல்லாற் பெரும்பாரந் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான். (வாக்) கல்தூண் பெரும்பாரம் தாங்கின் - கல்லால் செய்யப் பட்ட தூணானது பெரிய பாரத்தைத் தாங்கினால், பிளந்து இறுவது அல்லால் தளர்ந்து வளையுமோ - பிளந்து ஒடியுமே யல்லாமல் தளர்வுற்று வளையுமோ? (வளையாது. அதுபோல), உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் - மானங் கெடவந்த விடத்து உயிரையே கொடுக்கும் குணமுடை யோர், பற்றலரைக் கண்டால் பணிவரோ - பகைவரைக் கண்டால் வணங்குவரோ? (வணங்கார்). உற்ற - வந்த, நேர்ந்த. உற்ற இடம் - மானக்கேடு ண்டான போது, உயிர் வழங்கல் - உயிரை விடுதல். பற்றலர் - பகைவர். பணிதல் - வணங்குதல் - அடங்குதல். இறுதல் - ஒடிதல். தளர்தல் - இளகுதல். தான் - அசை. கல்தூணானது பெரிய பாரத்தை வைத்தால் துண்டாக ஒடியுமேயல்லாது வளையாது. அதுபோல, மானமுடைய வர்கள் தம்மினும் வலிய பகைவர் படையெடுத்து வந்தால் எதிர்த்துப் போர் செய்து உயிர் விடுவாரேயல்லாமல் அவர்க்குப் பணிய மாட்டார் என்பதாம். உயிரைவிட மானமே சிறந்த தென்பது கருத்து. இளிவரின் வாழாத மான முடையார் ஒளிதொழு தேத்து முலகு. (குறள்) (13) 940. பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால் இச்சைபல சொல்லி யிடித்துண்கை - சிச்சீ வயிறு வளர்க்கைக்கு மான மழியா துயிர்விடுகை சால வுறும். (நல்) பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால் - இரந் துண்பதினும் இழிவிற் பெரிய குடும்ப வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுமிடத்து, இச்சை பல சொல்லி இடித்து உண்கை - விருப்பமான சொற்கள் பலவற்றைச் சொல்லி வற்புறுத்தி உண்டு வாழ்தலாம்; சிச்சீ வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாமல் - இது மிகவும் இழிவு, உடலை வளர்ப் பதற்காக மானத்தைக் கெடுக்காமல், உயிர் விடுகை சால உறும் - உயிரை விட்டுவிடுதல் மிகவும் பொருந்தும். மூத்த - மிக்க, இழிவில் மிக்க. குடி வாழ்க்கை - உயிர் வாழ்தல். இச்சை - விருப்பம். இடித்தல் - வற்புறுத்தல். சிச்சீ - இகழ்ச்சி, வயிறு - உடம்பு, சால - மிக. உறும் - பொருந்தும். இரந்துண்பது மிகவும் இழிவானது. இச்சைபல சொல்லி இடித்து உண்கை - செல்வர் விரும்பும்படி சொற்கள் பல சொல்லி வற்புறுத்தி வாங்கியுண்பது. இவ்வாறு மானத்தை விட்டு வாங்கி யுண்டு உயிர் வாழ்வதைவிட இறத்தல் மிகவும் நல்லது என்பதாம். ‘இச்சை பல சொல்லி இடித்துண்கை’ என்பதற்கு வறுமை யுற்றகாலத்து, தமக்குத் தெரிந்தவர் வீடுகளுக்குச் சென்று, அவர்கள் விரும்பும்படியான எதெதையோ பேசிக் கொண்டு, அவர்கள் வெறுப்போடு போடும் சோற்றையுண்டு காலங் கழித்தல் என்றும் பொருள் கொள்ளலாம். இடித்தல் - வெறுத்துக் கூறுதல், திட்டுதல். வெறுத்துக்கூறி இட உண்ணுதல். இன்றும் ஒருசில முதியோர் (ஆண்கள்), நெருங்கிய சுற்றத் தாரல்லாத, ஏதோ தெரிந்தவர் ஊர்களுக்குச் சென்று, இரண்டு மூன்று நாட்களுக்கு இருந்து கொண்டு அவர்கள் வேண்டா வெறுப்போடு, ‘என்ன செய்து தொலைப்பது, எங்கேயோ போகிற சனியன் இங்குவந்து இருந்துகொண்டு உயிரை வாங்குகிறது’ என்று முணு முணுத்துக் கொண்டு போட உண்டுகொண்டு, இவ்வாறே ஊர்சுற்றி வருவர். இத்தகைய மானங்கெட்டவர்களை வெறுத்துக் கூறியதேயாகும் இச்செய்யுள். இது இடிகஞ்சி குடித்தல் எனப்படும். (14) 941. மான மழிந்தபின் வாழாமை முன்னினிது. (இனி) 942. மானம் படவரின் வாழாமை முன்னினிது. (இனி) அழிதல், படுதல் - கெடுதல். முன்இனிது - மிகவும் நல்லது முன்னது மானங்கெட்டபின் வாழாமையும், பின்னது கெடும் நிலைவரின் வாழாமையும் கூறியவாறு. உயிரை விட்டேனும் மானத்தைக் காக்கவேண்டுமே யன்றி, மானத்தை விட்டு உயிர்வாழக்கூடாது என்பது கருத்து. (15 - 16) 943. மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம். (உல) நம்மை மதியாதவர் வீட்டுக்கு மானமில்லாமல் செல்லக் கூடாது. (17) 60. புகழ் அதாவது, புகழ்பட வாழ்தல். பலரும் ஒருவனைப் பற்றி நல்லவனென்று பேசுதலே புகழ் எனப்படும். அப்புகழ் உண்டாகும் படி ஒருவன் வாழவேண்டும் என்பதாம். 944. தன்னச்சிச் சென்றாரை யெள்ளா வொருவனும், மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும், என்று மழுக்கா றிகந்தானு மிம்மூவர் நின்ற புகழுடை யார். (திரி) தன் நச்சி சென்றாரை எள்ளா ஒருவனும் - தன்னை விரும்பி அடைந்தாரை இகழாத ஒருவனும், மன்னிய செல்வத்து பொச்சாப்பு நீத்தானும் - மிகுந்த செல்வம் வந்த காலத்து மறதியை நீக்கினவனும், என்றும் அழுக்காறு இகந்தானும் - எப்போதும் பிறரிடத்துப் பொறாமை கொள்ளாதவனும், இம்மூவர் நின்ற புகழுடையார் - ஆகிய இம்மூவரும் நிலை பெற்ற புகழுடையவராவர். நச்சுதல் - விரும்புதல். எள்ளுதல் - இகழ்தல். மன்னிய - மிகுந்த. பொச்சாப்பு - மறதி. நீத்தல் - நீக்குதல், விடுதல். அழுக்காறு - பொறாமை. இகழ்தல் - கடத்தல், நீங்கல். நின்ற - நிலைபெற்ற - அழியாத. தன்னை விரும்பி அடைந்தவரை இகழாமல் அவர் வேண்டி யதைக் கொடுத்தவனும், மிக்க செல்வம் வந்த காலத்துத் தன் பழைய நண்பர்கள் முதலியவர்களை மறவாத வனும், எப்போதும் பிறரிடம் பொறாமை கொள்ளாதவனும் அழியாப் புகழுடையராவர். (1) 945. இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக. (நன்) இந்நிலத்து மன்னுதல் வேண்டின் - இவ்வுலகத்தில் எப்போதும் தம்பெயர் நிலைபெறுதலை விரும்பினால். இசை நடுக - புகழை நிலை நிறுத்துக. மன்னுதல் - நிலைபெறுதல் - அழியாதிருத்தல். இசை - புகழ். அழியாத பொருள் புகழேயாதலால், இவ்வுலகில் தன் பெயர் என்றும் அழியாதிருத்தலை விரும்புவோர் புகழை நிலைநாட்ட வேண்டும் என்பதாம். ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில். (குறள்) (2) 946. இசையிற் பெரியதோர் எச்ச மில்லை. (முது) இசையின் பெரியதுஓர் எச்சம் - புகழைவிடச் சிறந்த தொரு செல்வம், இல்லை - வேறில்லை. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். (குறள்) (3) 947. சீர்மை மறவேல். (ஆத்) சீர்மை - புகழுக்குக் காரணமாகிய குணம். புகழுக்குக் காரணமாகிய குணத்தை மறவாது புகழுடன் வாழ வேண்டும் என்பதாம். (4) 61. இன்மை அதாவது, வாழ்க்கைக்கு வேண்டிய பொருள் ஒன்றும் இல்லாமை. பொருளின்மை காரணமாகவே ஒருவன் இரத்தற்குத் துணிவதால், அவ்வின்மையின் கொடுமையை அறிய வேண்டியதே. இன்மை - வறுமை. 948. அத்திட்ட கூறை யரைசுற்றி வாழினும் பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும் ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார் செத்த பிணத்திற் கடை. (நால) அத்து இட்ட கூறை அரைசுற்றி வாழினும் - காவி நிறம் பொருந்திய ஆடையை இடுப்பிலே கட்டிக்கொண்டு உயிர் வாழ்ந்தாலும், பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடு எய்தும் - கொஞ்சம் பொருளுடைமை மக்கள் பலருள்ளும் பெருமையை உண்டாக்கும்; ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார் - உயர்குடியில் பிறந்தாலும் சிறிதும் பொருளில்லா தவர், செத்த பிணத்தின் கடை - உயிர் நீங்கிய உடம்பாகிய பிணத்தினும் கடைப் பட்டவராக மதிக்கப் படுவார். அத்து - செந்நிறம். இங்கு காவிநிறம். அத்து - தையல் என்றும் பொருள்படும். கூறை - ஆடை. அத்து இட்ட கூறை - தைத்த கந்தைத்துணி. இட்ட - பொருந்திய அரை - இடுப்பு. பாடு - பெருமை. ஒத்தகுடி - உயர்குடி. காவிநிறமுடைய தைத்த கந்தை கட்டிய துறவியாய் இருந்தாலும், சிறிதாயினும் அவனிடம் பொருளிருந்தால் அவனைப் பலரும் மதிப்பார்கள். உயர்குடியில் பிறந்திருந் தாலும் ஒருவன் சிறிதும் பொருளில்லாதவனானால் அவனை எவரும் மதிக்க மாட்டார் என்பதாம். பிணத்திற்காயினும் கோடிபோர்த்தல், கொட்டி முழக்கல், பூந்தேரில்வைத்தல் முதலிய சிறப்புச் செய்கின்றனர். பொருளில் லாரை எவ்வகையிலும் மதியார் என்பார் ‘செத்த பிணத்திற் கடை’ என்றார். கொடிது கொடிது வறுமை கொடிது. (ஒளவையார்) பொருளில்லார்க் கிவ்வுல கில்லை. (குறள்) இன்மையின் இழிவு கூறுவார், செல்வத்தின் உயர்வும் உடன் கூறினார், எப்படியாகினும் முயன்று பொருள் தேடி மதிப்புடன் வாழவேண்டும் என்பதற்கு. (1) 949. நீரினு நுண்ணிது நெய்யென்பர் நெய்யினும் யாரு மறிவர் புகைநுட்பம் - தேரின் நிரப்பிடும்பை யாளன் புகுமே புகையும் புகற்கரிய பூழை நுழைந்து. (நால) நீரினும் நெய் நுண்ணிது என்பர் - (எல்லாப் பொருள் களினும் நுட்பமான) நீரைக்காட்டிலும் நெய் நுட்பமானது என்பர், நெய்யினும் புகை நுட்பம் யாரும் அறிவர் - அந்நெய் யைக் காட்டிலும் புகையினது நுண்ணிய தன்மையை எல்லோரும் அறிவார்கள், தேரின் - ஆராய்ந்து பார்த்தால், நிரப்பு இடும்பை ஆளன் - வறுiமத் துன்பத்தையுடையவன், புகையும் புகுதற்கு அரிய பூழை நுழைந்து புகும் - அதிக நுட்பமான புகையும் உட்புகுதற்கு முடியாத துளையில் நுழைந்து செல்வான். நுண்ணிது - நுட்பமானது. தேரின் - ஆராய்ந்து பார்த்தால். நிரப்பு - வறுமை. இடும்பை - துன்பம், நிரப்பிடும்பை - வறுமைத் துன்பம், பூழை - துளை; புழை என்பதன் நீட்டல் விகாரம். நீரினும் நெய் நுண்ணிது; நெய்யினும் புகை நுண்ணிது என்பதால், பொருள்களின் தன்மையை ஆராய்ந்து துணியும் அறிவியற்கலை (விஞ்ஞானம்) பண்டைத் தமிழரிடைப் பயின்று வந்துள்ளமை தெரிகிறது. ‘புகையும் புகுதற்கரிய பூழை நுழைந்து புகும்’ என்றது வியப்புச்சுவை. நீரினும் நெய் நுட்பமானது, நெய்யினும் புகை நுட்ப மானது. அப்புகையும் புகமுடியாத நுட்பமான துளையினும் வறியவன் நுழைந்து செல்வான். அதாவது - எத்தகைய தடையிருக்கினும் அத்தடைகளைக் கடந்து செல்வர் வீட்டுக்குள் செல்வான் என்பதாம். எவ்வளவு இகழ்ச்சியையுங் கடந்து செல்வான் என்பதுங்கொள்க. (2) 950. கல்லோங் குயர்வரைமேற் காந்தள் மலராக்காற் செல்லாவாஞ் செம்பொறி வண்டினம் - கொல்லைக் கலாஅல் கிளிகடியுங் கானக நாட! இலாஅ அர்க் கில்லைத் தமர். (நால) கொல்லை கலால் கிளிகடியும் கான அகம் நாட - கொல்லை களிலே கற்களைக் கொண்டு கிளிகளை ஓட்டு கின்ற காட்டினிடத் தையுடைய நாடனே, கல்ஓங்கு உயர் வரைமேல் - கற்களால் வளர்ந்துள்ள உயர்ந்த மலையின் மேலே, காந்தள் மலராக்கால் செம்பொறிவண்டு இனம் செல்லா ஆம் - காந்தட் செடிகள் மலராவிட்டால் சிவந்த புள்ளிகளையுடைய வண்டுக் கூட்டங்கள் அச்செடி களினிடத்துப் போகாவாம்; (அதுபோல), இலார்க்குத் தமர் இல்லை - பொருளில்லாதவர்க்கு விரும்பிவரும் சுற்றத்தார் உளராகார். ஓங்குதல், உயர்தல் - ஒரு பொருள். வரை - மலை. காந்தள் மற்ற பூக்களுக்கும் இனவிலக்கணம். பொறி - புள்ளி. கொல்லை - கதிர் முற்றிய விளைநிலம். கலால் - கல்லால் என்பதன் தொகுத்தல். கடிதல் - ஓட்டுதல். கான் - காடு. அகம் - இடம். இலாஅ அர் - ஈரள பெடுத்தது. தமர் - சுற்றத்தார். மலைமேல் காந்தள் முதலிய செடிகள் பூக்காவிட்டால் வண்டுகள் அங்குச் செல்லா. அதுபோல, செல்வமில்லாரிடம் சுற்றத்தார் செல்லார் என்பதாம். பொருளில்லாரைச் சூழவிருக்கும் சுற்றத்தாரும் விரும் பார் என, இன்மையின் இழிவு கூறியது. (3) 951. உண்டாய போழ்தி னுடைந்துழிக் காகம்போல் தொண்டா யிரவர் தொகுபவே - வண்டாய்த் திரிதருங் காலத்துத் தீதிலிரோ வென்பார் ஒருவரு மிவ்வுலகத் தில். (நால) உடைந்த உழிகாகம் போல் - உடல் சிதைந்தவிடத்து (அதனை உண்பதற்கு) அளவில்லாத காக்கைகள் அங்கு வந்து சேர்தல்போல, உண்டாய போழ்தின் ஆயிரவர் தொண்டு தொகுப - ஒருவர்க்குச் செல்வம் உண்டான போது ஆயிரக் கணக்கானவர் பழைய நண்பர்களைப் போல வந்து கூடுவார்கள், வண்டு ஆய் திரிதரும் காலத்து - (அச்செல்வர்), வண்டைப் போல உணவின் பொருட்டுப் பலவிடத்தும் அலைந்து திரியுங் காலத்தில், தீதுஇலிரோ என்பார் ஒருவரும் இவ்வுலகத்து இல் - (அவரை நோக்கி, நீர்) ‘நலமாக இருக்கின்றீரோ’ என்று நலம் விசாரிப்பவர் ஒருவரும் இந்த உலகத்தில் இல்லை. உடைதல் - சிதைதல், உயிர் நீங்கி உடம்புகெடுதல், அதாவது பிணமாதல். உழி - இடம். உடைந்த உழி - அகரம் தொகுத்தல் விகாரம். தொண்டு - பழமை. பழைய நண்பர் களைக் குறித்தது. ஆயிரவர் - பலர் என்றபடி. தொகுதல் - கூடுதல். ஆய் - போல. வண்டாய் திரிதல் - வண்டு தேனின் பொருட்டுப் பல இடங் கட்கும் செல்லுதல் போல அலைந்து திரிதல். தீது - தீமை. ஒருவரிடம் செல்வமுள்ள காலத்துப் பழைய நண்பர்கள் போலப் பலர் வந்து உறவு கொண்டாடுவர்; செல்வந் தொலைந்து வறுமையுற்ற போது, நீர் நன்றாயிருக்கிறீரோ? என்று கேட்பவர் ஒருவருமிரார் என்பதாம். இன்மை அத்தகைய கொடிய தென்பது. ஒருவரிடம் பொருளுள்ள போது மட்டும் வந்து உண்டு உறவாடுகின்ற இழிகுணமுடையோரின் இழிவு தோன்ற, பிணந் தின்னுங் காக்கையை உவமை கூறினார். உண்டான போது கோடானு கோடி உறவினர்போல் கொண்டாடு வார்கள். (விவேக சிந்தாமணி) வண்டுகள் பூக்களுள்ள இடங்களையெல்லாம் தேடிச் சென்று அலைந்து திரிந்து பல பூக்களிலுமுள்ள தேனை உட்கொள்வது போல, இல்லார் செல்வர்களுள்ள இடங்களை யெல்லாம் தேடிச் சென்று அலைந்து திரிந்து அவர்களிடம் பொருளைப் பெறும் இரத்தல் தொழிலின் இயல்பை விளக்க, ‘வண்டாய்த் திரிதருங் காலத்து’ என்றார். (4) 952. பிறந்த குலமாயும் பேராண்மை மாயும் சிறந்ததங் கல்வியு மாயும் - கறங்கருவி கன்மேற் கழூஉங் கணமலை நன்னாட இன்மை தழுவப்பட் டார்க்கு. (நால) கறங்கு அருவி கல்மேல் கழூஉம் கணமலை நல்நாட - ஒலிக்கின்ற நீரருவிகள் கற்களின்மேல் விழுந்து அவற்றின் அழுக்கைப் போக்கித் துப்புரவு செய்கின்ற கூட்டமாகிய மலைகளையுடைய சிறந்த நாடனே, இன்மை தழுவப் பட்டார்க்கு - வறுமையால் தழுவிக்கொள்ளப்பட்டவர்க்கு, பிறந்த குலம் மாயும் - பிறந்த உயர்குடிப் பெருமையும் அழியும், பேர் ஆண்மை மாயும் - சிறந்த ஆண்மையும் அழியும், சிறந்த தம் கல்வியும் மாயும் - எல்லாப் பொருள் களினும் சிறந்த கல்வித் திறமையும் அழியும். மாயும் - அழியும், கெடும். கறங்குதல் - ஒலித்தல். கழூஉம் - கழுவும். கணம் - கூட்டம். தழுவுதல் - பிடித்துக் கொள்ளல்; வறுமையுற்றோர் என்றபடி. இன்மை - வறுமை. இன்மை தழுவப் படல் - வறுமையுறுதல். வறியவர்க்குக் குடிப் பிறப்பு, ஆண்மை, கல்வி இவற்றா லாய பெருமை இருந்தாலும் அவர்கள் சிறப்படையாரென்ப தாம். வறுமை எல்லாவகையான பெருமைகளையுங் கெடுத்து ஒருவனை இழிவு படுத்துமென்பது கருத்து. தொல்வரவுந் தோலுங் கெடுக்கும் தொகையாக நல்குர வென்னும் நசை. (குறள்) குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் நாணணி களையும் மாணெழில் சிதைக்கும் பூணணி மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி யென்னும் பாவி. (மணிமேகலை) (5) 953. உள்கூர் பசியா லுழைநசைஇச் சென்றார்கட் குள்ளூ ரிருந்துமொன் றாற்றாதான் - உள்ளூர் இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய் விருந்தின னாதலே நன்று. (நால) உள்கூர் பசியால் உழை நசைஇ சென்றார்கட்கு - வயிற்றி னுள்ளே மிகுந்த பசியினாலே தன்னிடம் விரும்பி வந்தார்க்கு, ஊர் உள் இருந்தும் ஒன்று ஆற்றாதான் - ஊர்க் குள்ளே இருந்தும் ஓருதவியும் செய்யமாட்டாத வறியவன், உள்ளூர் இருந்து உயிர் கொன்னே கழியாது - அந்த ஊரினுள்ளே இருந்து தனது வாணானை வீணாகக் கழியாமல், தான் போய் விருந்தினன் ஆதலே நன்று - தான் வேரூர்க்குப் போய் ஒருவர்க்கு விருந்தாளி யாவதே நல்லது. உள் - வயிற்றினுள். கூர்தல் - மிகுதல். உழை - இடம். நசைஇ - விரும்பி. உள்ஊர் - ஊருள் - ஊர்க்குள். ஆற்றுதல் - உதவுதல். கொன்னே - வீணாக பயனில்லாமல். விருந்தினனாதல் - அயலூரில் சென்று இரந்துண்ணல். தன்னிடம் பசித்து வந்தவர்க்கு உதவிசெய்ய முடியாத வறியவன், ஊர்க்குள்ளே இருந்து வாழ்வதைவிட எங்கே யாகிலும் போய் இரந்துண்பது நல்லது என்பதாம். இரந்துண்ணுதல் மிக மிக இழிந்ததாகும். அதனினும் இழிந்த தாகும் வறுமை என்பது கருத்து. (6) 954. நீர்மையே யன்றி நிரம்ப வெழுந்ததங் கூர்மையு மெல்லா மொருங்கிழப்பர் - கூர்மையின் முல்லை யலைக்கு மெயிற்றாய் நிரப்பென்னும் அல்ல லடையப்பட் டார். (நால) கூர்மையின் முல்லை அலைக்கும் எயிற்றாய் - கூர்மை யினால் முல்லை யரும்பின் அழகைக் கெடச் செய்கின்ற பற்களையுடைய வளே, நிரப்பு என்னும் அல்லல் அடையப் பட்டார் - வறுமை என்னும் துன்பம் அடையப்பட்டவர்கள், நீர்மையே அன்றி நிரம்ப எழுந்த தம் கூர்மையும் எல்லாம் ஒருங்கு இழப்பர் - நற்குணங்களை மட்டுமேயல்லாமல் முற்றுப் பெற்ற தமது அறிவு நுட்பத்தோடு மற்றுமுள்ள எல்லாச் சிறப்புக்களையும் ஒருங்கே இழந்து விடுவர். நீர்மை - நற்குணம். நிரம்ப எழுந்த கூர்மை - குறை வில்லாத கூர்மையான அறிவு; ‘நுண்மாண் நுழைபுலம்’ (குறள் 407) என்றபடி. அலைத்தல் - கெடுத்தல். எயிறு - பல். நிரப்பு - வறுமை. அல்லல் - துன்பம். நிரப்பு என்னும் அல்லல் - வறுமைத் துன்பம். வறுமையானது நற்குணங்களையும், நுட்பமான அறிவையும், மற்றுமுள்ள எல்லாச் சிறப்புக்களையும் கெடுக்கும் என்பதாம். இரக்கவும், திருடவுங் கூடச் செய்வதால், நற்குணங் களைக் கெடுத்தலாயிற்று. சோற்றுக்கில்லாவிட்டால் எத்தகைய அறிவும் மழுங்கிப் போகுமல்லவா? (7) 955. கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி அடகு பறித்துக்கொண் டட்டுக் - குடைகலனா உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே துப்புரவு சென்றுலந்தக் கால். (நால) துப்புரவு சென்று உலந்தக்கால் - நுகரப்படும் பொருள்கள் அழிந்தொழிந்தால், (அவ்வேழைகள்), கடகம் செறிந்த தம் கைகளால் - முன்னே வளையல்கள் பொருந்தியிருந்த தமது கைகளால், அடகு வாங்கி பறித்துகொண்டு அட்டு - கீரைகளை வளைத்துப் பறித்துக் கொண்டு போய்ச் சமைத்து, குடைகலன் ஆ - தேங்காய்த் தொட்டி யையே உண்கலமாகக் கொண்டு. உப்பு இலி வெந்தைத் தின்று உள் அற்று வாழ்ப - உப்பில்லாத அந்த வெந்த கீரையைத் தின்று மனமுடைந்து வாழ்வார்கள். கடகம் - பொன் வளையல். செறிந்த - பொருந்திய. வாங்குதல் - வளைத்தல். அடகு - கீரை. அட்டு - சமைத்து. குடை - குடையப் பட்டது - தேங்காய்த் தொட்டி. கலன் - உண்கலன். இலி - இல்லாத. வெந்தைத் - வெந்தது. துப்புரவு - நுகர் பொருள் செல்வம். உலத்தல் - அழிதல், கெடுதல். சென்று உலத்தல் - அறவே அழிதல். ‘கடகம் செறிந்தகை’ என்றதால், முன்பு அவர்கள் சிறந்த செல்வமுடையராய் இருந்தமை பெறப்படும் ‘உப்பிலாப் பண்டம் குப்பையிலே’ என்றபடி அறுசுவையில் உப்பு தலைமையான தாகையால், அதுவுமில்லாத வெந்தை என, அவ்வுணவின் இழிவை யுணர்த்தினார். மிக்க செல்வாக்காக இருந்தவரும் வறுமையுற்றால் உப்பில்லாத கீரையை யுண்டு மனமுடைந்து வருந்துவர் என்பதாம். மிக்க வறுமைத் துன்பம் பொருள் தேடும் சிறு முயற்சியுமில்லாமல் மனத்தை உடைத்துவிடும். பாலுடை யமுதம் பைம்பொற் கலத்திடைப் பாவை யன்ன நூலடு நுசுப்பி னல்லார் ஏந்தவு நேர்ந்து நோக்காச் சேலடு கண்ணி காந்தள் திருமணித் துடுப்பு முன்கை வாலட கருளிச் செய்ய வனத்துறை தெய்வ மானாள் . (சிந்தாமணி) (8) 956. ஆர்த்த பொறிய வணிகிளர் வண்டினம் பூத்தொழி கொம்பின்மேற் செல்லாவாம் - நீர்த்தருவி தாழா வுயர்சிறப்பிற் றண்குன்ற நன்னாட வாழாதார்க் கில்லைத் தமர். (நால) நீர்த்து அருவி தாழா உயர் சிறப்பின் தண்குன்ற நல்நாட - நல்ல தன்மையையுடைய அருவிகள் குறைவு படாத மிக்க சிறப் பினை யுடைய குளிர்ச்சியான மலை வளத்தையுடைய சிறந்த நாட்டை யுடையவனே. ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம் - நிறைந்த புள்ளிகளையுடைய அழகுமிக்க வண்டுகள், பூத்து ஒழி கொம்பின் மேல் செல்லாவாம் - பூத்து மாறிய மரக்கிளைகளின் பக்கம் போகமாட்டாவாம்; (அது போல), வாழாதார்க்கு தமர் இல்லை - செல்வ மிழந்தவர்க்கு இனத்தவர் இல்லை. ஆர்த்த - நிறைந்த. பொறி - புள்ளி. அணி - அழகு. கிளர்தல் - மிகுதல். ஒழிதல் - பூவில்லாமல் போதல். நீர்த்து - நல்ல தன்மை - உப்புத் தன்மையில்லாமை. தாழா - தாழாத - வற்றாத. தமர் - சுற்றமும் நட்பும். பூக்களில்லாத மரத்தை வண்டுகள் அணுகாதவாறு போல, செல்வமில்லாதவரை இனத்தவர் அணுகார் என்பதாம். அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். (குறள்)(9) 957. முட்டின் றொருவ ருடைய பொழுதின்கண் அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவ ராபவே; கட்டலர்தார் மார்ப! கலியூழிக் காலத்துக் கெட்டார்க்கு நட்டாரோ வில். (பழ) கட்டு அலர்தார் மார்ப - கட்டிய பூமாலையை அணிந்த மார்பையுடையவனே, ஒருவர் முட்டு இன்று உடைய பொழுதின் கண் - ஒருவர் குறைவின்றிச் செல்வமுடையவரா யுள்ள காலத்தில், அட்டிற்று தின்பவர் ஆயிரவர் ஆப - அவருடைய சமையலறையி லுள்ள உணவை உண்பவர் மிகப் பலராவர், கலி ஊழிக் காலத்து கெட்டார்க்கு நட்டார்இல் - கலியூழியாகிய இக்காலத்தில் பொருளில்லார்க்கு நண்பர் ஒருவரும் இல்லை. முட்டு - குறை. முட்டு இன்றி - குறைவில்லாமல். அட்டில் - சமையலறை. அட்டிற்று - சமையலறையிலுள்ள உணவு. அலர் - பூ. ஊழி - மிக நீண்டதொருகாலம். இக்காலத் தைக் கலியூழி என்பது வழக்கம். ஓ - அசை. மிகவும் சொந்தம் பாராட்டிக் கொண்டு உண்பர் என்பார், ‘அட்டிற்றுத்தின்பவர்’ என்றார். கலியூழிக்காலத்தே - இக் காலத்தே என்றபடி. பொருள் உள்ளபோது மிகப் பலர் வந்து சொந்தம் பாராட்டிக் கொண்டு உண்டு வாழ்வர். ஆனால், பொருள் அழிந்து வறுமை யுற்றால் ஒருவரும் வாரார் என்பதாம். இல்லாரை யாரும் நட்புக் கொள்ளமாட்டார் என்பது. (10) 958. ஒருநாளும் நீதரியாய் உண்ணென்று சொல்லி இருநாளைக் கீந்தாலு மேலாய் - திருவாளா! உன்னோ டுறுதி பெரிதெனினு மிவ்வுடம்பே நின்னோடு வாழ்த லரிது. (அற) இவ்வுடம்பே - இப்பசி நோயால் வருந்துகின்ற வயிறே, ஒரு நாளும் நீ தரியாய் - (உணவில்லாமல்) ஒரு நாளாவது நீ பொறுத் திராய், உண் என்று சொல்லி இரு நாளைக்கு ஈந்தாலும் ஏலாய் - (சிறந்த உணவை மிகுதியாகப் பெற்ற காலத்தில்) இதனை உண்பாயாக வென்று கூறி இரண்டு நாளைக்கு வேண்டியதை ஒரே தடவையில் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளாய், திருவாளா - திருவுடையவனே, உன்னோடு உறுதி பெரிது எனினும் - உன்னோடு கூடிவாழ்வதால் அடையும் பயன் சிறந்த தாயினும், நின்னோடு வாழ்தல் அரிது - உன்னோடு கூடி வாழ்வது துன்பமேயாம். தரித்தல் - பொறுத்தல். ஏலாய் - ஏற்றுக் கொள்ளாய் - உண்ண மாட்டார். ‘திருவாளா’ என்றது இகழ்ச்சி. உறுதி - பயன். உடம்பு - வயிற்றைக் குறித்தது. அரிது - முடியாது. முடிந்தால் துன்பம் என்றபடி. ஒரு நாளைக்கு உண்ணாமல் இருக்க முடியாது. பல நாளைக்கு வேண்டிய உணவை ஒரே வேளையில் உண்ணவும் முடியாது. ஆகையால், சோற்றுக்கில்லாத வறுமைத் துன்பம் மிகவும் கொடியது என்பதாம். ‘ஒரு நாளுணவை ஒழியென்றாலொழியாய்’ என்னும் நல்வழிச் செய்யுள் இதுபோன்றதே. (11) 959. இன்சொல்லன் தாழ்நடைய னாயினுமொன் றில்லானேல் வன்சொல்லி னல்லது வாய்திறவா - என்சொலினும் கைத்துடையான் காற்கீ ழொதுங்குங் கடல்ஞாலம் பித்துடைய வல்ல பிற. (நீநெ) இன் சொல்லன் தாழ் நடையன் ஆயினும் - இனிய சொல்லை யுடையவனும் அடக்கமான ஒழுக்கமுடைய வனும் ஆனாலும், . ஒன்று இல்லானேல் - அவன் சிறிது பொருளும் இல்லாதவ னானால், கடல் ஞாலம் வன்சொல்லின் அல்லது வாய் திறவா - கடலாற் சூழப்பட்ட இவ்வுலகத்தார் கடுஞ்சொல் கொண்டு பேசுவார் களேயன்றி, இன்சொற் கொண்டு பேசார், என் சொலினும் கைத்துடையான் கால் கீழ் ஒதுங்கும் - எத்தகைய கடுஞ்சொற் சொன்னாலும் செல்வ முடையவன் காலின் கீழே அடங்கும், (ஆதலால், இவ்வுலகம்) பித்து உடைய - பணப்பித்துப் பிடித்தவை, பிற அல்ல - (இவ்வாறு நடத்தற்கு) வேறு காரண மல்ல. தாழ் நடை - அடக்கமான ஒழுக்கம். நடை - நடக்கை - ஒழுக்கம். ஒன்று - சிறிதும் என்றபடி. திறத்தல் - பேசுதல். என் என்பது தாழ்ந்ததைக் குறித்தது. கைத்து - பொருள். கால் கீழ் ஒதுங்கல் - அவன் சொற்படி நடத்தல். ஞாலம் - உலகம். ஆகு பெயரான் உலக மக்களை உணர்த்திற்று. ஞாலம் என்பதற்கேற்ப - வாய் திறவா, ஒதுங்கும், பித்துடைய, பிற அல்ல என அஃறிணைப் பலவின்பாலாற் கூறினும், வாய் திறவார், ஒதுங்குவார், பித்துடையார், பிற அல்லர் எனப் பலர் பாலாகக் கொள்க. பொருள் இல்லாதவன் இன் சொல்லையுடையோ னாயினும், அடக்கமான ஒழுக்கமுடையவனாயினும் உலகத் தார் அவன் சொல்லைக் கேளார். அதாவது அவனை மதியார். பொருளுள்ளவன் எத்தகைய கடுஞ் சொற்சொல்லினும் அவன் சொற்படியே மக்கள் நடப்பர் என்பதாம். இதற்குக் காரணம் பணப் பித்தேயாம் என்பது. பொருளில்லாரை யாரும் மதியார் என்பது கருத்து. (12) 960. ஒருநா ளுணவை ஒழியென்றா லொழியாய் இருநாளைக் கேலென்றா லேலாய் - ஒருநாளும் என்னோ வறியாய் இடும்பைகூ ரென்வயிறே உன்னோடு வாழ்த லரிது. (நல்) ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் - ஒரு நாளைக்கு உணவை உண்ணாமல் இரு என்று நான் கேட்டுக் கொண்டால் நீ உண்ணாமல் இருக்கமாட்டாய், இரு நாளைக்கு ஏல் என்றால் ஏலாய் - (நாடோறும் உணவைத் தேடுதல் அருமையாய் இருப்பதால்) இரண்டு நாளைக்கு வேண்டிய உணவை ஒரே வேளையில் உண்ணென் றாலும் உண்ண மாட்டாய், என் நோ ஒரு நாளும் அறியாய் - உணவைத் தேடுவதில் எனக்குண்டாகும் வருத்தத்தை (நீ என்னோடு வாழ்ந்தும்) ஒரு காலத்தும் தெரிந்து கொள்ள மாட்டாய், (ஆதலால்), இடும்பை கூர் என்வயிறே - துன்ப மிகுந்த என்னுடைய வயிறே, உன்னோடு வாழ்தல் அரிது - (ஒரு வகையிலும் என்னோடு ஒத்து வாராத) உன்னோடு ஒத்து வாழ்வது எனக்கு மிகவும் அருமையான தாகும். ஒழிதல் - உண்ணாதிருத்தல், ஏல் - ஏற்றுக் கொள் - உண். ஏலாய் - உண்ணாய். நோ - வருத்தம், துன்பம். இடும்பை - துன்பம், கூர் - மிகுதி. அரிது - முடியாது. இது, ‘ஒரு நாளு நீ தரியாய்’ என்னும் பழமொழிச் செய்யுள் போன்றதே. ஒரு நாளைக்கு உணவில்லாமல் சும்மா இருத்தலும், இரண்டு நாளைக்கு வேண்டிய உணவை ஒரே தடவையில் உண்ணுதலும் முடியாது. அதாவது உணவில்லாத போது உண்ணாதிருத்தலும். உள்ளபோது மிகுதியாக உண்ணுதலும் முடியாது என்பதாம். வயிற்றுக்கு உணவு தேடுவதற்காகவே மக்கள் பல வகை யான துன்பங்களுக்குள்ளாவதால், அதை வயிற்றின் மேல் ஏற்றி, ‘இடும்பைகூர் என் வயிறே’ என்றார். இது, பசிக் கொடுமையைப் பொறாத ஒருவர் சொன்னதாகச் செய்யப் பட்டது. (13) 961. சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும் பாவித்தும் பாட்டிசைத்தும் பாராண்டும் - போவிப்பம் பாழி னுடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி யரிசிக்கே நாம். (நல்) வயிற்றின் கொடுமையால் - வயிற்றினது பசிக் கொடுமை யால், நாழி அரிசிக்கே நாம் - ஒருபடி அரிசி பெறுவதற்கு வேண்டி நாம், சேவித்தும் - பிறரிடம் அடிமை வேலை செய்தும், சென்று இரந்தும் - செல்வரிடத்திற் சென்று இரந்தும், தெள்நீர் கடல் கடந்தும் - தெளிந்த நீரையுடைய கடலைக் கடந்து போய் வணிகம் செய்தும், பாவித்தும் - துறவிகளைப் போல பாவனைகள் செய்தும், பார் ஆண்டும் - நாட்டை ஆண்டும், பாட்டு இசைத்தும் - கவி பாடியும் (அவ்வரிசியைப் பெற்று, அதனால்) பாழின் உடம்பை போப்பம் - அழிந்தொழியும் இவ்வுடம்பைக் காப்பாற்று கிறோம். சேவித்தல் - அடிமை வேலை செய்தல்; அரசியலலு வலும் அடங்கும். தெள்நீர் - தெளிந்தநீர். பாவித்தல் - துறவியர்போலக் கோலம் பூணுதல். போவித்தல் - காப்பாற்றுதல். பாழ் - அழிதல். நாழி - படி. உலகில் மக்கள் செய்யும் பல்வகையான தொழிலும் உண்டு வாழ்வதற்கேயாம் என்பதாம். யாதொரு தொழிலுமின்றி பசிக் கொடுமை பொறுக்க முடியாத ஒருவன் பாடியதாகப் பாடிய பாட்டு இது. (14) 962. மானங் குலங்கல்வி வண்மை யறிவுடைமை தானந் தவமுயற்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும் பசிவந் திடப்போம் பறந்து. (நல்) மானம் - பெருமையும், குலம் - குலவொழுக்கமும், கல்வியும் - வண்மை - கொடைக் குணமும், அறிவுடைமை - இயற்கை யறிவும், தானம் - கொடுத்தலும், தவம் - தவவொழுக் கமும், முயற்சி - ஊக்கமும். தாளாண்மை - ஆற்றலும், தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் - தேன் போல இனிமை ததும்புகின்ற சொற்களைப் பேசும் மனைவிய ரோடு அன்புற்று வாழ்தலும் ஆகிய பத்தும், பசிவந்திட பறந்து போம் - பசி உண்டான அளவிலே முற்றிலும் நீங்கிப் போய்விடும். குலம் - உயர்குடிப்பிறப்புக்கேற்ற ஒழுக்கம். வண்மை - கொடைக் குணம். அறிவு - இயற்கை யறிவு. கல்வி - நூலறிவு. தானம் - கொடை. தாளாண்மை - ஆற்றல். கசிவருதல் - கசிதல் - ஒழுகுதல். காமுறுதல் - விரும்புதல், அன்பு கொள்ளல். பசி உண்டானால் மானம் முதலிய பத்தும் கெடும் என்பதாம். இது, பசியின் கொடுமை கூறுமுகத்தான் இன்மையின் கொடுமை கூறியது. (15) 963. கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின் எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லா தவன்வாயிற் சொல். (நல்) கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் - ஒருவன் படியாதவனே யானாலும் பொருள் மட்டும் இருக்கு மானால், எல்லாரும் சென்று எதிர் கொள்வர் - யாவரும் போய் அவனை வரவேற்றுப் போற்றுவர், இல்லானை - இல்லாளும் வேண்டாள் ஈன்று எடுத்த தாய் வேண்டாள் - மனைவியும் விரும்பமாட்டாள்; பெற்றெடுத்த தாயும் விரும்ப மாட்டாள், அவன் வாயில் சொல் செல்லாது - அவன் சொல்லை ஒருவரும் மதிக்கமாட்டார். மற்று - அசை. செல்வப் பொருளினும் கல்விப் பொருள் சிறப்புடையதே யெனினும், செல்வப் பொருள் இல்லாவிட்டால் அவனை ஒருவரும் மதிக்கமாட்டார்கள். கல்லாதவனேயானாலும், பொருள் இருந்தால் அவனை யாவரும் விரும்புவர் என்பதாம். இல்லானை அன்புடைய மனைவியும் விரும்பாள், பெற்ற தாயும் விரும்பாள் என்பது. உளமொன்றுபட்ட மனைவியும், பெற்று அன்போடு வளர்த்த தாயும் விரும்பாமை கூறவே. பிறர் விரும்பாமை கூற வேண்டிய தில்லை. பணமில்லையேல் படிப்பிருந்தாலும் ஒருவரும் மதியார் என்பது கருத்து. (16) 964. நொய்தாந் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின் நொய்தா மிரப்போன் நுவலுங்கால் - நொய்யசிறு பஞ்சுதனின் நொய்யானைப் பற்றாதோ கற்றணுக அஞ்சுமவன் கேட்ப தறிந்து. (நீவெ) நுவலும்கால் - சொல்லுமிடத்து, இரப்போன் - நொய்து ஆம் திரணத்தின் நொய்து ஆகும் - மென்மையான துரும்பைக் காட்டிலும் மென்மையாகும், வெண்பஞ்சின் நொய்து ஆம் - இலவம் பஞ்சினும் மெல்லியனாவான், (ஆகையால்), காற்று பஞ்சுதனின் நொய் யானைப் பற்றாதோ - காற்றானது (பஞ்சை யடித்துக் கொண்டு போவதுபோல) பஞ்சைக் காட்டிலும் மெல்லியனான இரவலனை அடித்துக் கொண்டு போகாதோ? (போகாது. ஏனெனில்), அவன் கேட்பது அறிந்து அது அணுக அஞ்சும் - ஏதாவது கேட்பானென்று அறிந்து அது அவனை நெருங்க அஞ்சும். நொய்து - மெல்லியது, திரணம் - துரும்பு. வெண்பஞ்சு - வெளிமையான இலவம் பஞ்சு. அதாவது - கொட்டை யில்லாத பஞ்சு. நுவலுதல் - சொல்லுதல். பற்றுதல் - அடித்துக் கொண்டு போதல். மெல்லிய துரும்பைக் காட்டிலும் இலவம் பஞ்சு மெல்லியது. அதைவிட இரவலன் மெல்லியவன். ஆனால், இலவம் பஞ்சை அடித்துக் கொண்டு போகும் காற்றானது, இரவலனை அடித்துக் கொண்டு போகாதோ என்றால், அவனை அணுகினால் தன்னை ஏதாவது கேட்பானென்பதை அறிந்து, காற்று அவனை அணுக அஞ்சும் என்பதாம். இதனால், இன்மை மிகவும் கொடியது என்பது கருத்து. 965. எற்றுள்ளும் இன்மையி னின்னாத தில்லை. (நன்) எற்றுள்ளும் - எதனுள்ளும், இன்மையின் இன்னாதது இல்லை - வறுமையைப் போலத் துன்பந் தருவது வேறொன் றில்லை. எற்றுள்ளும் - எந்தப் பொருளிலும். இன்மையின் இன்னாததி யாதெனின் இன்மையின் இன்மையே யின்னா தது. (குறள்) (18) 966. நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச்சாம். (நன்) நலனும் இளமையும் - அழகும் இளமைத் தன்மையும், நல்குரவின் கீழ் சாம் - வறுமையின் கண் மங்கும். நலன் - அழகு. நல்குரவு - வறுமை. நல்குரவின் கீழ் - வறுமை யுற்றவனிடத்து. சாதல் - மங்குதல், கெடுதல். வறுமை அழகையும் இளமைத் தன்மையையும் போக்கும் என்பதாம். (19) 967. கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை. (வெற்) கெட்டோர்க்கு - வறுமையுற்றவர்க்கு, கேளும் கிளையும் இல்லை - நட்பும் சுற்றமும் இல்லை. பொருளில்லாரை நண்பரும் சுற்றத்தாரும் விரும்பார் என்பதாம். (20) 62. இரவச்சம் அதாவது, இரத்தற்கு அஞ்சுதல், ஒருவரிடம் சென்று ஒரு பொருளை இரப்பது - கேட்பது - தமது மானங் கெடுதற்குக் காரணமாகுமாதலான், மானமுடையார் இரத்தற்கு அஞ்சுவ ரென்க. இனி ஈயாரிடம் சென்று இரந்து மானங்கெடுதற்கு அஞ்சுதலு மாம். முன்னர் ஈகை, ஈயாமை என்ற அதிகாரங் களில் கொடுத்தலை வற்புறுத்தியது இதற்கு முரணாகு மெனின், ஆகாது. இரத்தல் நல்லது எனின், பெரும்பாலோர் இரக்கத் தலைப்பட்டுச் சோம்பேறிகளாய் விடுவர். நாட்டில் தொழில் வளங்குன்றும். உழைத்தும் போதிய வருவாயில்லாத ஏழைகளுக்குக் கொடுத்தல் உள்ளோர் கடமை. வறுமை யினும் இரத்தல் கூடாதென்பது இரவச்சம். 968. மான வருங்கலம் நீக்கி யிரவென்னும் ஈன விளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால் ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு நீட்டித்து நிற்கு மெனின். (நால) ஈனத்தால் ஊட்டியக் கண்ணும் - இரத்தலாகிய இழி தொழிலைச் செய்து உணவூட்டி வளர்த்த விடத்தும், இவ்வுடம்பு உறுதி சேர்ந்து நீட்டித்து நிற்கும் எனின் - இந்த உடம்பானது வலிமையையடைந்து பல ஆண்டுகள் நிலை பெற்று நிற்கு மானால், மான அருங்கலம் நீக்கி - மானமாகிய பெறுதற்கரிய அணிகலத்தை விட்டு, இரவு என்னும் ஈன இளிவினால் வாழ்வேன் மன் - இரத்தலாகிய மிக்க இழிவைத் தரும் தொழிலினால் உயிர் வாழ்வேன். அருங்கலம் - பெறுதற்கரிய அணிகலம். ஈனம், இளிவு - மிக்க இளிவு - ஒரு பொருட் பன்மொழி. ஈனத்தால் - இரத்த லாகிய இழி தொழிலால். உறுதி - வலிமை. நீட்டித்து - நெடுங்காலம். உடம்பு நிலையில்லாதது; அழியக் கூடியது. எனவே, இவ்வுடம்பை வளர்ப்பதற்காக மானத்தை விட்டு இரத்தலைச் செய்யேன் என்பதாம். நீண்ட காலம் அழியாதிருக்குமானால் மானத்தை விட்டு இரந்து உண்டு வாழ்வேன் என, இரத்தலை இகழ்ந்தவாறு. மானமுடையோ னொருவன் இரத்தலை அஞ்சிக் கூறியது போல் செய்யப்பட்டது இச் செய்யுள். இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலு மிரவொல்லாச் சால்பு. (குறள்) (1) 969. மல்லல்மா ஞாலத்து வாழ்ப வருளெல்லாம் செல்வ ரெனினுங் கொடாதவர் - நல்கூர்ந்தார் நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே செல்வரைச் சென்றிரவா தார். (நால) மல்லல் மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம் - பெரிய இவ் வுலகத்தின்கண் வாழ்பவர்க ளெல்லாருள்ளும், செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார் - செல்வராயிருந்தாலும் பிறர்க்குக் கொடாதவர் வறியவரே யாவர், நல்கூர்ந்தக் கண்ணும் செல்வரைச் சென்று இரவாதார் - வறுமையடைந்த விடத்தும் செல்வரிடம் போய் இரவாதவர், பெருமுத்தரையரே - பெருஞ் செல்வமுடைய முத்தரையர் என்னும் வள்ளலைப் போன்றவரே யாவர். மல்லல் - வளம். ஞாலம் - உலகம். நல் கூர்ந்தார் - வறுமை யுடையார். இவ்வுலகில் வாழ்வோரில் செல்வமிருந்தும் இல்லார்க்குக் கொடாதவர் வறியரே யாவர். வறுமையுற்ற விடத்தும் செல்வரிடம் சென்று இரவாதவர் செல்வரே யாவர். செல்வத்தின் பயன் பிறர்க்குக் கொடுத்தலே யாதலால் கொடாதவர் வறியராகவும், செல்வமில்லாதவர் செய்யும் இரத்தல் இல்லாமையின் இரவாதவர் செல்வராகவும் எண்ணப் படவர் என்பதாம். வறுமைக் காலத்தும் இரத்தலுக்கு அஞ்சி இரவாதவர் நன்கு மதிக்கப்படுவர் என்பதாம். முத்தரையர் என்பவர் ஒரு வள்ளல். 41-ஆம் அதிகாரம் 6 - ஆம் செய்யுளின் உரைபார்க்க. (2) 970. நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தா ரெஞ்ஞான்றும் தம்மாலா மாக்க மிலரென்று - தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமுந் தெருண்ட வறிவி னவர். (நால) இந் நல்கூர்ந்தார் நம்மாலே ஆவர் - இவ்வறியவர் நம்மாலே தான் பொருளுடையவராவர், எஞ்ஞான்றும் தம்மால் ஆம் ஆக்கம் இலர் என்று - எப்போதும் தமது முயற்சியால் தேடும் பொருளுடைய வரல்லர் என்று எண்ணியும் சொல்லியும், தம்மை மருண்ட மனத்தவர் பின் - தம்மைத் தாமே மேலானவ ராக மயங்கின மனத்தை யுடைய செல்வரிடம் இரத்தற்கு, தெருண்ட அறிவினவர் தாமும் செல்வரோ - தெளிந்த அறிவுள் ளவர்களும் செல்வார்களோ? (செல்லார்) ஆவர் - பொருளுடையவர், நாம் கொடுத்தால்தான் இவர்க்குப் பொருள் என்றபடி. நல் கூர்ந்தார் - வறுமை யுற்றார். எஞ்ஞான்றும் - எப்போதும். ஆக்கம் - செல்வம். தம்மால் - தமது முயற்சியால். மருளுதல் - மயங்குதல். தம்மை மருளுதல் - தம்மைத் தாமே அவ்வளவு உயர்வாக எண்ணுதல். தாமும் - தாம் உம். தாம் - அசை. உம் - உயர்வு சிறப்பு. தெருளுதல் - தெளிதல். இல்லார்க்கு ஈவது நமது கடமை யென எண்ணாமல், ‘நாம் கொடுத்தால்தான் இவ்வறியவர்க்குப் பொருள் உண்டே ஒழிய அவர்கள் சொந்த முயற்சியால் பொருள் தேட முடியாது’ என்று இல்லாரை இகழ்ந்தும், தம்மைத் தாமே பெருமை பாராட்டியும் செருக்குக் கொள்கின்ற கீழ்மக்களிடம் அறிவாளிகள் இரத்தற்குச் செல்ல மாட்டார் என்பதாம். இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளளுள் ளுவப்ப துடைத்து. (குறள்) என்றபடி, தம்மிடம் வருகிற இரவலரை இகழாது நன்கு மதித்து இன்சொற் கூறி வேண்டிய பொருள் கொடுப்பவரே இரக்கப் படத் தக்கவராவர். அத்தகையரல்லாரிடம் போய் இரத்தற்கு அஞ்ச வேண்டுமென்பது. (3) 971. இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர் செல்லாரு மல்லர் சிறுநெறி - புல்லா அகம்புகுமி னுண்ணுமின் என்பவர்மாட் டல்லான் முகம்புகுத லாற்றுமோ மேல். (நால) இல்லாமை கந்தா இரவு துணிந்து ஒருவர் - பொரு ளில்லாமை காரணமாக இரக்கத் துணிந்து ஒருவர், சிறுநெறி செல்லாரும் அல்லர் - இரத்தலாகிய கெட்ட வழியில் செல்லா மலும் இருக்க மாட்டார், (ஆனாலும்), புல்லா அகம் புகுமின் உண்ணுமின் என்பவர் மாட்டு அல்லான் - தழுவிக் கொண்டு எமது வீட்டுக்கு வாருங்கள் உண்ணுங்கள் என்று வரவேற்கும் தன்மையுடையாரிடத்தல்லாமல், மேல் முகம் புகுதல் ஆற்றுமோ - (பிறரிடத்து) மேலோர் முகங் காட்டிச் செல்லு தலைப் பொறுப்பார்களோ? (பொறார்). கந்து - காரணம். ஆ - ஆக. துணிதல் - முடிவு செய்தல். செல்லாரும் அல்லர் - செல்லுவர். சிறுநெறி - கெட்டவழி. புல்லா - புல்லி - தழுவி. அகம் - வீடு. மாடு - இடம். முகம் புகுதல் - இன்னது வேண்டும் என்று முகத்தைக் காட்டிச் செல்லுதல். ஆற்றுதல் - பொறுத்தல், அதாவது செல்லத் துணிதல். உலகத்தில் மக்கள் வறுமை காரணமாக இரக்கத் துணிதலும், இரத்தலும் உண்டு. ஆனால், ஈயாத பிசினரிடம் சென்றிரவாமல் மனமுவந்து முகமலர்ந்து வரவேற்கும் குண முள்ளவரிடமே செல்வர் மேலோர் என்பதாம். கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் றிரப்புமொ ரேஎ ருடைத்து. (குறள்) (4) 972. கரவாத திண்ணன்பிற் கண்ணன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம் வாழ்க்கை - இரவினை உள்ளுங்கா லுள்ள முருகுமா லென்கொலோ கொள்ளுங்காற் கொள்வார் குறிப்பு. (நால) கரவாத திண் அன்பின் கண் அன்னார் கண்ணும் - (இரவலர்க்குப் பொருளை) ஒளிக்காத உறுதியான அன்புடைய கண் போன்ற செல்வரிடத்தும், இரவாது வாழ்வது வாழ்க்கை ஆம் - இரவாமல் வாழ்வதே ஒருவர்க்கு நல்வாழ்க்கையாம், இரவினை உள்ளுங்கால் உள்ளம் உருகும் - இரத்தலாகிய தொழிலை நினைக்கும் பொழுதே மனங்கரைந்து விடுகிறது, (அப்படியிருக்க), கொள்ளுங் கால் கொள்வார் குறிப்பு என் கோலோ - (பிறரிடம் ஒரு பொருளை இரந்து) பெறும் பொழுது அங்ஙனம் பெற்றுக் கொள்பவரது மனம் எப்படிப் பட்ட தாமோ? கரவாத - ஒளியாத - இல்லை யென்னாத. திண் அன்பு - உறுதியான - மிக்க அன்பு. கண் அன்னார் - கண்போலச் சிறந்தவர். கண் - இடம். உள்ளுதல் - நினைத்தல். கொல் - ஐயம். குறிப்பு - மனநிலை. பிசினர் அல்லாதவரும், மிக்க அன்புடையவரும், கண் போலச் சிறந்தவருமான செல்வரிடத்தும் இரக்கக் கூடாது என்றால், இரத்த லென்பதை எண்ணும் பொழுதே உருகும் மனம், இரந்து பொருள் பெறும் பொழுது என்ன நிலைதான் அடையுமோ என்பதாம். கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி யுறும். (குறள்) இரவுள்ள உள்ள முருகும்; கரவுள்ள உள்ளதூஉ மின்றிக் கெடும். (குறள்) (5) 973. இன்னா வியைக இனிய வொழிகென்று தன்னையே தானிரப்பத் தீர்வதற் - கென்னைகொல் காதல் கவற்று மனத்தினாற் கண்பாழ்பட் டேதி லவரை யிரவு. (நால) இன்னா இயைக - துன்பங்கள் நமக்கு வந்து பொருந்தக் கடவன, இனிய ஒழிக - இன்பங்கள் நம்மைவிட்டு நீங்கக் கடவன, என்று தன்னையே தான் நிரப்ப தீர்வதற்கு - என்று எண்ணித் தன் மனத்தையே தான் நிரம்பச் செய்வதனால் நீங்கிப் போகும் படியான வறுமைக்காக, காதல் கவற்றும் மனத்தினால் - பொருளாசை கவலைப்படுத்தும் மனத்தோடு கூடி, கண் பாழ்பட்டு - துன்பத்தால் கண்பொலி விழக்கப் பட்டு, ஏதிலவரை இரவு என்னை கொல் - அயலாரை இரத்தல் என்ன பயன் கருதியோ? இன்னா - துன்பம். இயைதல் - பொருந்துதல். இனிய - இன்பங்கள். நிரப்புதல் - அமைதியுறச் செய்தல். கொல் - ஐயம். காதல் - ஆசை. கவற்றுதல் - கவலைப் படுத்துதல். பாழ்படல் - பொலிவிழத்தல். அயலாரை எதிர்பார்த்துப் பார்த்துக் கண் பொலிவிழத்தல். இன்பம் துன்பம் என்பன மனத்தின் குணமாதலால், இன்பத்தைத் துன்பம் போலவும், துன்பத்தை இன்பம் போலவும் எண்ணி மனவமைதி அடைந்துவிட்டால் வறுமைத் துன்பம் நீங்கி விடும். அப்படி நம்மாலேயே நீக்கத் தக்க ஒன்றை நீக்கு வதற்காக மனத்தைப் பண்படுத்தாமல் புண் படுத்தி, பொருளாசையால் பிறரிடம் சென்று கவலையுடன் இரப்பது சிறிதும் பொருந்தாது என்பதாம். வறுமைத் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு இரவாமல் வாழ்வதே ஏற்றதென்பது கருத்து. வைததனை இன்சொலாக் கொள்வானும். (திரிகடுகம்) (6) 974. புறத்துத்தன் இன்மை நலிய வகத்துத்தன் நன்ஞான நீக்கி நிறீஇ யொருவனை ஈயா யெனக்கென் றிரப்பானே லந்நிலையே மாயானோ மாற்றி விடின். (நால) புறத்துத் தன் இன்மை நலிய - வெளியிலே தனது வறுமை மேனியைப் பொலிவழிக்க. (அதற்காக), அகத்து தன் நல்ஞானம் நீக்கி நிறீஇ - மனத்திலே தனது நல்ல அறிவை நீக்கிவிட்டு அறியாமையை நிலை நிறுத்தி, ஒருவனை எனக்கு ஈயாய் என்று இரப்பானேல் - செல்வமுடைய ஒருவனை எனக்கு ஒரு பொருளைக் கொடுப்பாயென்று ஒருவன் சென்று இரப்பா னானால், மாற்றி விடின் அந்நிலையே மாயானோ - அச்செல்வன் இல்லையென்றால் அவ்விடத்திலேயே அவ்விரப் போன் இறந்து போகமாட்டானோ? புறத்து - உடம்பிலே. இன்மை - வறுமை. நலிய - வருத்த; உணவின்மையாலும் கவலையாலும் மேனி பொலி விழக்க என்றபடி. அகம் - மனம். ஞானம் - அறிவு. நிறீஇ - நிறுத்தி - சொல் லிசையளபெடை. மாய்தல் - இறத்தல். மாற்றுதல் - இல்லை யென்றால். வறுமை காரணமாக உடல் வருந்துதலினால் உணர் விழந்து, ஒருவனிடம் போய் இரக்கும்பொழுது அவன் இல்லை யென்று சொன்னால் அந்த இரவலன் மனம் என்ன பாடு படுமோ என்பதாம். சாவதுபோன்ற துன்பமுறுவான் என்பது. இரப்பவர் சொல்லாடப் போஒ முயிர். (குறள்) உடம்பை வருத்துகின்ற வறுமையைப் போக்கும் பொருட்டு இரப்பது, அவ்வுடம்பைச் சாத்துன்பத்திற்குள் ளாக்கி வருத்து தலாய் முடிதலால், இரப்பது பேதைமை; அதற்கு அஞ்ச வேண்டு மென்பது கருத்து. (7) 975. பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா. (இன்) பாத்து உணல் இல்லார் உழை சென்று - பகுத்துண்ணும் தன்மை இல்லாதவரிடத்தில் சென்று, உணல் இன்னா - உண்ண விரும்புதல் துன்பமாம். பாத்தல் - பகுத்தல். உழை - இடத்து. பகுத்துண்ணும் தன்மையில்லாதவரிடத்தில் சென்று ஒன்றை இரத்தல் தகாது என்பதாம். (8) 976. இன்னாமை வேண்டின் இரவெழுக. (நான்) இன்னாமை வேண்டின் - இழிவை ஒருவன் விரும் பினால், இரவு எழுக - இரத்தலை மேற்கொள்க. இரத்தல் இழிவைத் தரும் என்பதாம். (9) 977. நகையாகு நண்ணார்முற் சேறல், பகையாகும் பாடறியா தானை யிரவு. (நான்) நண்ணார் முன் சேறல் நகையாகும் - தன்னை விரும்பாத வரிடம் ஒன்றை விரும்பிச் செல்வது இகழ்ச்சியாகும். பாடு அறியாதானை இரவு பகை ஆகும் - தனது தகுதியறியாத வனிடம் இரத்தல் பகைமைக்கே இடமாகும். நகை - இகழ்ச்சி. நண்ணார் - விரும்பாதவர். சேறல் - செல்லுதல். பாடு - தகுதி. தன்னை விரும்பாதவரிடத்திலும் தன் தகுதியறியாதவ ரிடத்திலும் சென்று இரத்தல் பழிப்பும் பகையும் ஆகு மென்பதாம். பகைஆதல் - பகைவனைப்போல வெகுண்டு துரத்துவா னென்பதாம். (10) 978. இரத்தலி னூஉங் கிளிவர வில்லை. (முது) இரத்தலின் ஊங்கு - இரந்துண்டு வாழ்வதைக் காட்டிலும், இளி வரவு இல்லை - இழிவு வேறில்லை. ஊங்கு - மிகுதியான. இளி வரவு - இழிவு. இரத்தலைவிட மிக்க இழிவு வேறில்லை என்பதாம். (11) 979. ஏற்ப திகழ்ச்சி. (ஆத்) இரந்துண்பது இழிவாகும். (12) 980. உரவோ ரென்கை இரவா திருத்தல். (கொன்) உரவோர் - அறிவுடையோர். உரவோர் என்கை - அறிவு டையோர் என்று சொல்லப்படுதல், இரவாது இருத்தல் - பிறரை இரவாது இருத்தலாம். (13) 63. நன்றியிற் செல்வம் அதாவது, தேடினவனுக்கும் பிறர்க்கும் பயன்படுதலில் லாத செல்வம். செல்வத்தின் பயன் தானும் துய்த்து இல்லார்க்குங் கொடுத்த லேயாகும். அவ்விரண்டிற்கும் பயன்படாத செல்வம் நன்றியில் செல்வமாயிற்று. நன்றி - நன்மை. 981. அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும் பொரிதாள் விளவினை வாவல் குறுகா பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வங் கருதுங் கடப்பாட்ட தன்று. (நால) அருகலது ஆகி பல பழுத்தக் கண்ணும் - பக்கத்தில் உள்ளதாய் மிகுதியாகப் பழங்கள் பழுத்திருக்கப் பெற்றாலும், பொரிதாள் விளவினை வாவல் குறுகா - பொரிந்த அடிமரத்தை யுடைய விளா மரத்தை வௌவால்கள் சேர மாட்டா, (அது போல), பெரிது அணியர் ஆயினும் பீடு இலார் செல்வம் - மிகவும் பக்கத்தில் உள்ளவராயிருந்தாலும் (எளிதிற் பிறர்க்கு உதவுதலாகிய) பெருமைக் குணம் இல்லாதவருடைய செல்வம், கருதும் கடப் பாட்டது அன்று - (எளியவரால் தமக்குக் கிடைக்கு மென்று) நினைக்கத்தக்க முறைமையுடையதன்று. அருகலது - பக்கத்திலுள்ளது. அருகல் - பக்கம். கண்ணும் - இடத்தும், போதும். பொரிதல் - மேல்தோல் பொரிந் திருத்தல். தாள் - அடிமரம், விளவு - விளாமரம். வாவல் - வௌவால், குறுகா - அணுகா. அணியர் - பக்கத்திலுள்ளவர். பீடு - பெருமை. பீடு இலார் - பிசினர். கடப்பாடு - முறைமை. கடப்பாட்டது - முறைமையுடையது. விளாம்பழம் கெட்டியான மேலோட்டை உடையதால் வௌவால் அணுகாமை போல, பிசினத்தன்மையுடைமை யால் அவர் செல்வமும் இல்லோரால் விரும்பப்படத்தக்க தன்றென்ப தாம். ஆல் முதலிய மரங்கள் தொலைவிலிருந்தாலும் அவற்றின் பழங்கள் எளிதில் உண்ணக்கூடியதாகையால், வௌவால் முதலிய பறவைகள் சென்று உண்டு வாழும். அதுபோல், ஈகைக் குணமுடை யோர் தொலைவிலிருந்தாலும் இரவலர் சென்று எளிதில் அச்செல்வத்தைப் பெற்று வாழ்வர். பக்கத்தி லிருந்தாலும் விளா மரத்தைப் பறவைகள் அணுகாமைபோல, பக்கத்திலிருந்தாலும் பிசினரை ஒருவரும் அணுகார் என்பதாம். விளாம் பழத்தின் கெட்டியான ஓடு ஈயாத் தன்மைக்கும், பழம் அன்னார் செல்வத்திற்கும் உவமை. (1) 982. அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும் கள்ளிமேற் கைநீட்டார் சூடும்பூ வன்மையால் செல்வம் பெரிதுடைய ராயினுங் கீழ்கிளை நள்ளா ரறிவுடை யார். (நால) அள்ளிக் கொள்வ அன்ன குறுமுகிழ ஆயினும் - கை களால் அள்ளியெடுத்துக் கொள்ளத்தக்கவை போன்ற அழகிய சிறிய அரும்புகளை யுடையனவாய் இருந்தாலும், சூடும் பூ அன்மை யால் கள்ளிமேல் கை நீட்டார் - அவை சூடிக் கொள்ளத்தக்க மலரன்மை யால் எவரும் கள்ளிச் செடியின் மேல் (பூப்பறித்தற்கு) கை நீட்ட மாட்டார்கள்; (அதுபோல), பெரிது செல்வம் உடையர் ஆயினும் - மிகுதியாகச் செல்வத்தை உடையவர்களா யிருந்தாலும், கீழ்களை அறிவுடையார் நள்ளார் - கீழ்மக்களை அறிவுடையவர்கள் விரும்பிச் சேர மாட்டார்கள். அள்ளிக் கொள்ளல் - உள்ளதை யெல்லாம் அப்படியே எடுத்துக் கொள்ளல்; அத்தகைய அழகு, அன்ன - போல. முகிழ் - அரும்பு. கள்ளி - முள்ளையுடைய ஒருவகைச் செடி. 1931-ல் உண்டான ஒருவகைப் பூச்சிநோயால் கள்ளி அடியோ டொழிந்து விட்டது. அது நிலங்களுக்கு வேலியாக இருந்து வந்தது; ஆற்றங்கரை, பள்ளம் படுகை, மந்தைவெளி, காடு கரை எங்கு பார்த்தாலும் செழித்து வளர்ந்திருந்தது. பூ மஞ்சள் நிறம். பழம் செக்கச் செவேலென்றிருக்கும். பழம் சர்க்கரைபோல் அவ்வளவு இனிப்பாக இருக்கும். ஏழை மக்களின் உணவாக இருந்து வந்தது அப்பழம். எப்போதும் பழம் இருக்கும். எவ்வளவு காலத்திற்கு மழையில்லா விட்டாலும் கள்ளி வாடாது. கீழ்கள் - கீழ்மக்கள். நள்ளார் - அணுகார். சேரார். மிக அழகிய பொருளை அப்படியே அள்ளி யெடுத்துக் கொள்ளலாம் என்னும் விருப்பம் உண்டாதல் இயல்பாத லால், ‘அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ’ என்றார். கள்ளிப்பூ மஞ்ச மசேலென்று மிக்க அழகாக இருக்கும். அதை யாரும் தலையில் சூடார். கள்ளிப்பூ மிக்க அழகுடையதாயினும், சூடும்பூ அன்மை யால் யாரும் அதைப் பறிக்க அணுகமாட்டார்கள். அதுபோல, பிசினரிடம் செல்வம் மிகுதியாக இருந்தாலும், அது பிறர்க்குப் பயன்படாமையால் யாரும் அவரை அணுகார் என்பதாம். (2) 983. மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும் வல்லூற் றுவரில் கிணற்றின்கட் சென்றுண்பர்; செல்வம் பெரிதுடைய ராயினுஞ் சேட்சென்று நல்குவார் கட்டே நசை. (நால) மல்கு திரைய கடல்கோடு இருப்பினும் - மிகுந்த அலை களையுடைய கடலின் கரையிலே குடியிருந்தாலும், வல் ஊற்று உவர் இல்கிணற்றின் கண் போய் உண்பர் - வன்மை யாக நீர் ஊறுதலையுடைய உப்புத்தன்மையில்லாத கிணறு (நெடுந் தொலைவில் இருந்தாலும்) அங்கு போய்த் தண்ணீர் குடிப்பார்கள். (அதுபோல), செல்வம் பெரிது உடையர் ஆயினும் - பக்கத்தில் உள்ள கீழ்மக்கள் பெருஞ் செல்வ முடைய வர்களா யிருந்தாலும், சேண் சென்றும் நல்குவார் கட்டே நசை - வெகு தொலைவில் சென்றாயினும் கொடுக்கும் குணமுடைய நன்மக்களிடத்திலே பெரியோர்கட்கு விருப்பம் உண்டாகும். மல்குதல் - மிகுதல். திரை - அலை. கோடு - கரை. வல்ஊற்று - கொஞ்சமாக நீர் ஊறும் சலக்கண்களையுடைய கிணறு. உவர் - உப்புத்தன்மை. சேண் - தொலைவு. நல்குதல் - கொடுத்தல். கட்டே - கண்ணே - இடத்தே. நசை - விருப்பம். கடலின் கரையில் வாழ்ந்தாலும், கடல்நீர் உப்புச் சுவை உடையதாகையால் அந்நீரைக் குடிக்காது, தொலைவிலுள்ள உப்புத் தன்மையில்லாத கிணற்று நீரைச் சென்று குடிப்பர். அதுபோல, பக்கத்தில் பெரும் பொருளுடைய பிசினர் இருந்தாலும், அவரிடம் ஒன்றைக் கேட்காது, தொலைவில் உள்ள சிறிது பொருளுடைய ஈகைக் குணம் உள்ளவரிடம் சென்று ஒன்றைப் பெறுவர் அறிவுடை யோர் என்பதாம். பிசினர் செல்வம் பிறர்க்குப் பயன்படாது என்பது கருத்து. கடல் - கீழ்மக்கட்கும், உவர் - பிசினத்தன்மைக்கும், கிணறு - மேன்மக்கட்கும், நன்னீர் - ஈகைக்குணத்திற்கும் உவமை. நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று. (குறள்) (3) 984. பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வாட மின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்றுகுக்கும்; வெண்மை யுடையார் விழுச்செல்வ மெய்தியக்கால் வண்மையு மன்ன தகைத்து. (நால) பொன் நிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட - பொன் போன்ற நிறத்தையுடைய செந்நெற்பயிர்கள் (வயல்களிலே) பீட்டையோடு இளங்கருவும் வாட, (அங்கு மழை பெய்யாது), மின் ஒளிர் வானம் கடலுள் கான்று உகுக்கும் - மின்னல் மின்னும் முகில்கள் கடலின் கண் நீரைச் சொரியும், வெண்மை உடையார் விழுச் செல்வம் எய்தியக்கால் - அறிவில்லாத வர்கள் பெருஞ் செல்வத்தை அடைந்தால், வண்மையும் அன்ன தகைத்து - அவர்கள் கொடையும் அப்படிப்பட்ட தன்மையுடையதே யாகும். செந்நெல் - ஒருவகைச் சிறந்த நெல். பொதி - கதிர். உள்ளே கதிர் பொதிந்திருத்தல் என்னும் காரணப் பெயர். பீள் - இளங்கரு. ‘பால்’ என்பர். மின் ஒளிர் - மின்னி விளங்கும். வானம் - முகில். கடல் உள்ளும், உம் - அசை. காலுதல் - கக்குதல். உகுத்தல் - சொரிதல். கான்று உகுக்கும் - நிறையச் சொரியும். வெண்மை - அறிவின்மை. விழுமம் - சிறப்பு, மிகுதி. எய்தல் - அடைதல். வண்மை - கொடை. தகைத்து - தன்மையுடையது. வயலில் உள்ள நெற்பயிர்கள் நீரில்லாமல் வாட அங்கு மழை பெய்யாமல், முகில் கடலில் மிகுதியாக மழை பெய்வது போல, அறிவில்லாத செல்வர்கள், ஏழைகள் உணவில்லாமல் வாட அவர்களுக்கொன்றும் கொடாமல் உள்ளவர்க்கே மிகுதி யாகக் கொடுப்பர் என்பதாம். அறிவிலார் செல்வம் ஏழைகளுக்குப் பயன்படாது என்பது கருத்து. (4) 985. ஓதியு மோதா ருணர்விலார் ஓதாதும் ஓதி யனையா ருணர்வுடையார் - தூய்தாக நல்கூர்ந்துஞ் செல்வ ரிரவாதார் செல்வரும் நல்கூர்ந்தா ரீயா ரெனில். (நால) உணர்வு இல்லார் ஓதியும் ஓதார் - பகுத்தறிவில்லாத வர்கள் படித்திருந்தாலும் படியாதவர்களே, உணர்வு உடையார் ஓதாதும் ஓதியனையார் - பகுத்தறிவுடையவர்கள் படியா திருந்தாலும் படித்தவர் போன்றவர்களே, (அதுபோல), தூய்து ஆக இரவாதார் - மனந் தூயராயிருக்க இரவாதவர்கள், நல் கூர்ந்தும் செல்வர் - வறுமையடைந்திருந்தாலும் செல்வ முடையவர்களே, செல்வரும் ஈயார் எனில் நல்கூர்ந்தார் - செல்வமுடை யவரும் பிறர்க்குக் கொடார் எனில் வறுமை யுடையவரே. உணர்வு - பகுத்தறிவு. தூய்து - மனத்தூய்மை. நல்கூர்தல் - வறுமையுறுதல். பகுத்தறிவு இல்லாதவர் படித்திருந்தாலும் படியாதவர்க்கு ஒப்பாவர். பகுத்தறிவுடையவர் படியாதிருந்தாலும் படித்தவர் போன்றவரே. அதுபோல, பிறரை இரவாதவர் வறுமையுடை யராயிருந்தாலும் செல்வரோடொப்பர். ஈயாத செல்வர் வறிய ரோடொப்பர். பகுத்தறிவு ஒருவர்க்கு எங்ஙனம் இன்றியமையாததோ அங்ஙனமே ஈதலும் செல்வர்க்கு இன்றியமையாதது. பகுத்தறி வில்லார் படிப்புப் போல ஈயார் செல்வம் பயனுடையதன்று என்பதாம். (5) 986. வழங்கலுந் துய்த்தலுந் தேற்றாதான் பெற்ற முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ நாய்பெற்ற தெங்கம் பழம். (பழ) தழங்கு அருவிவேய் முற்றி முத்து உதிரும் வெற்ப - முழங்கு கின்ற அருவிகளையுடைய மூங்கில்கள் முற்றி முத்துக்கள் உதிரும் மலையையுடையவனே, வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற - பிறர்க்குக் கொடுத்தலும் தான் துய்த்தலும் செய்யாதவன் அடைந்த, முழங்கும் முரசுடைச் செல்வம் அது - முழங்குகின்ற முரசினையுடைய செல்வ மானது, நாய்பெற்ற தெங்கம் பழம் - நாய் பெற்ற தேங்கா யோடொக்கும். வழங்கல் - கொடுத்தல். துய்த்தல் - அனுபவித்தல். தேற்றுதல் - செய்தல். முழங்கு முரசுடைச் செல்வம் அது - அரசச் செல்வம். தழங்குதல் - ஒலித்தல். வேய் - மூங்கில். வெற்பு - மலை. தெக்கு - தென்னைமரம். தெங்கம் பழம் - தென்னங்காய். மூங்கிலில் முத்து உண்டாகிறதென்பது, நம்முன்னை யோர் கண்டறிந்தது. முத்துப் பிறக்கும் இடங்கள் இருபதனுள் மூங்கிலும் ஒன்றாகும். தந்தி வராக மருப்பிப்பி பூகந் தழைகதலி நந்து சலஞ்சலம் மீன்றலை கொக்கு நளினமின்னார் கந்தரஞ்சாலி கழைகன்ன லாவின்பல் கட்செவிகார் இந்து முதலையுடும்புமுத் தீனு மிருபதுமே யானைக் கொம்பு, பன்றிக் கொம்பு, முத்துச்சிப்பி, பாக்கு மரம், வாழைமரம், நந்து சலஞ்சலம், மீன்தலை, கொடுக்குத்தலை, தாமரை, பெண்கள் கழுத்து, நெல், மூங்கில், கரும்பு, மாட்டுப்பல், பாம்பு, முகில், கர்ப்பூரம், முதலை, உடும்பு என்னும் இருபது இடங்களில் முத்துப் பிறப்பதைக் கண்டறிந்த நமது முன்னோரின் பொருளறிவே அறிவு! தேங்காயை நாய் கொண்டால் அதைத் தின்னவு மாட்டாது, பிறர்க்குங் கொடாது காத்திருக்கும். அது போல, பிசினர் பெற்ற செல்வத்தைத் தானும் துய்க்காது பிறர்க்கும் கொடாது காத்திருப்பர் என்பதாம். (6) 987. விரும்பி யடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும் வருந்தும் பசிகளையார் வம்பர்க் குதவல் இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! ஆற்றக் கரும்பனை யன்ன துடைத்து. (பழ) இரும்பணைவில் வென்ற புருவத்தாய் - பெரிய மூங்கிலால் செய்தவில்லைவென்ற புருவத்தினை உடையவளே, விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத்தவர்க்கும் வருந்தும் பசிகளையார் - தம்மை விரும்பி வந்தடைந்தவர்க்கும் சுற்றத்தார்க்கும் வருந்தும் பசியை நீக்காதவராய், வம்பர்க்கு உதவல் - புதிய அயலார்க்கு உதவுதல், ஆற்ற கரும்பனை அன்னது உடைத்து - (வித்திட்டுத் தன்னை உண்டாக்கினவர்க்கு அக்காலத்தே உதவாது, நெடுங் காலம் சென்று பிறர்க்குப் பயன்படும்) மிகக் கரிய பனைமரம் போலும் தன்மையுடையது. விரும்பி அடைந்தார் - நண்பரும் இரவலரும். - வருந்தும் பசி - வருந்துதற் கேதுவான பசி. களைதல் - நீக்குதல், வம்பர் - புதியவர். இங்கே திருடர் முதலியோர். இரு - பெரிய. பணை - மூங்கில். வெல்லல் - வில்லை ஒவ்வாமை; வில்லின் வளைவிலும், மிக்கு வளைந்திருத்தல். ஆற்ற - மிக. அன்னது உடைத்து - பனையின் தன்மை போலும். பனைமரம் சுமார் முப்பது ஆண்டுகட்குப் பின்னர்த் தான் காய்க்கும். ஆதலால், நட்டு வளர்த்தவர்க்குப் பழம் தராமல் பிறர்க்குப் பயன்படும் பனையைப் போல, உற்றார் உறவினர்க்கு உதவாமல் பிறர்க்கு உதவுவர் கீழ்மக்கள் என்பதாம். உற்றார் உறவினர்க்குதவாத கீழ்மக்கள் செல்வத்தைத் திருடர் முதலியோர் பறித்துக் கொள்வர் என்பது கருத்து. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை. (குறள்) (7) 988. பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு பிறர்க்குதவி யாக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி செய்யாக் கருங்கடனீர் சென்று புயல்முகந்து பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு. (நன்) பிறர்க்கு உதவி செய்யா கருங்கடல் நீர் - பிறர்க்கு உதவி செய்யாத பெரிய கடல் நீரை, புயல் சென்று முகந்து பிறர்க்கு பெய்யா கொடுக்கும் - மேகம் போய் மொண்டு வந்து மழையாகப் பெய்து உதவும், (அதுபோல), பிறர்க்கு உதவி செய்யார் பெருஞ் செல்வம் - பிறர்க்கு உதவி செய்யாதவர் களின் மிகுந்த செல்வ மானது, பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறு ஆம் - பிறர்க்கு உதவி செய்கிறவர்களது செல்வம் ஆகும். வேறு - அசை. பேறு - செல்வம். செய்யா - செய்யாத, கருங் கடல் - பெரிய கடல்; கரிய கடல் எனினுமாம். புயல் - மேகம். முகத்தல் - மொள்ளல். பெய்யா - பெய்து; செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சம். பெய்யாக் கொடுக்கும் - பெய்யும். கடல் நீர் உப்புச் சுவையுடையதால், உண்ணப் பயன் படுவ தில்லை. இதையே பிறர்க்கு உதவி செய்யாக் கடல் என்றார். பிறர்க்குப் பயன்படாக் கடல் நீர் என்ற படி. அந்த உப்பு நீரை மேகம் உண்டு வந்து நன்னீராக்கித் தருகிறது. கடல் நீரை மொண்டு வந்து மழை பெய்யும் மேகத்தை மக்கள் பாராட்டு கிறார்களே யன்றி, கடலைப் பாராட்டுவதில்லை. அதுபோல, பிறர்க்கு உதவாத பிசினன் சேர்த்து வைத்த பொருள், அவனுக்குப் புகழைத் தராமல், அப்பொருளைப் பிறர்க்குக் கொடுப்பவனுக்குப் புகழைத் தரும் என்பதாம். அவனுக்குப் பின், அச் செல்வத்தை அடைந்து, பிறர்க்குக் கொடுப்பவர்க்குப் புகழைத் தருவதால், அவ்வாறு கொடுப்பவர் களது செல்வமாகும் என்றார். அவன் செல்வத்தை அடைவோர், அவன் மக்களும் பங்காளிகளும் ஆவர். பிசினர் செல்வம் அவர்க்குப் புகழ் தராது, பிறர்க்குப் புகழ் தரும் என்பது கருத்து. (8) 989. உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா. (இன்) உண்ணாது வைக்கும் - செலவு செய்யாமல் சேர்த்து வைக்கும், பெரும் பொருள் வைப்பு இன்னா - பெரிய பொரு ளானது துன்பந் தரும். பொருள்வைப்பு - பொருள். காவல் காக்கும் துன்பமும், திருடர் முதலியோர் பறித்துக் கொண்டால் உண்டாகும் துன்பமுமாம். (9) 990. பழியோர் செல்வம் வறுமையிற் றுவ்வாது. (முது) பழியோர் செல்வம் - பிசினன் என்று பழிக்கப்படு வோரது செல்வமானது, வறுமையில் துவ்வாது - வறுமைத் தன்மை யினின்றும் நீங்காது. பழியோர் - பிறரால் பழிக்கப்படுவோர், துவ்வாது - நீங்காது, வறுமையில் நீங்காது - வறுமையே யாகும். அச்செல்வம் இருந்தும் அவனுக்குப் பயன்படாமையால் - பயன்படுத் தாமையால் - அது இல்லாமையோ டொக்கும் என்பதாம். செல்வத்தால் எய்தும் இன்பமும் புகழும் பெறாமை யால், செல்வத்தைப் பயன்படுத்தாத பிசினன் வறியவனே யாவான் என்பது கருத்து. கொடுப்பதூஉந் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய கோடியுண் டாயினும் இல். (குறள்) (10) 991. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். (கொன்) ஈயார் தேட்டை - பிறர்க்கு உதவாதவருடைய செல்வத்தை, தீயார் கொள்வர் - திருடர் முதலான தீயவர் பறித்துக் கொள்வர். தேட்டை - பொருள். தேடு + ஐ = தேட்டை - தொழிற் பெயர். தொழிலாகு பெயராய்த் தேடப்படும் செல்வத்தை உணர்த் திற்று. பிறர்க்குக் கொடாது சேர்த்து வைத்த பிசினர் பொருளைக் கள்வர் முதலியோர் பறித்துக் கொள்வர் என்பதாம். அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய ஒண்பொருள் கொள்வர் பிறர். (குறள்) (11) 992. நன்புலத்து வையடக்கி நாளுமா டோபோற்றிப் புன்புலத்தைச் செய்தெருப் போற்றியபி னின்புலத்தின் பண்கலப்பை யென்றிவை பாற்படுப் பானுழவோன் நுண்கலப்பை நூலோது வார். (சிறு) நன்புலத்து வை அடக்கி - வயலின் கண் விளைந்த வைக் கோலைப் போரிட்டு வைத்து, நாளும் மாடு போற்றி - நாடோறும் உழு மாடுகளைக் காப்பாற்றி, புன் புலத்தைச் செய்து - புல்லிய நிலத்தை வெட்டித் திருத்தி நன்னிலமாகச் செய்து, எரு போற்றிய பின் - எரு விட்டு உரமுடைய தாக்கியபின், பண் கலப்பை என்ற இவை - பண்படுத்தல் உழுதல் என்ற தொழில்களை, இன்புலத்தின் பால்படுப்பான் உழவோன் - திருத்திய அந்நிலத் தினிடத்தே செய்பவனே சிறந்த உழவனாவான் என்று, நுண் கலப்பை நூல் ஓதுவார் - நுட்பமாக உழவு நூலை அறிந்த அறிஞர்கள் சொல்லு வார்கள். நன்புலம் - நல்ல நிலம் - வயல். புலம் - நிலம். வை - வைக்கோல். அடக்குதல் - போரிட்டு வைத்தல். மாடுஓ. ஓ - இசை நிறை, புன்புலம் - புல்லிய நிலம் - கல்லுங்கரடுமான மேட்டு நிலம். எரு போற்றுதல் - எரு விட்டுச் சாரமுள்ள நிலமாக்குதல். இன்புலம் - திருத்திய நன்னிலம். பண் - பண்படுத்தல். கலப்பை - உழவுத் தொழிலைக் குறித்தது. புலத்தின்பால் படுத்தல் - நிலத்தி னிடத்தே செய்தல். நூல் - நூலை அறிந்தாரை உணர்த்திற்று. உழுமாடுகளுக்கு வேண்டிய தீனியைச் சேர்த்து வைத்தல் உழவனின் முதற் கடமையாகையால், ‘வையடக்கி’ என்றார். எருப் போற்றுதல் - புதிதாகத் திருத்திய நிலம் சாரமற்றிருக்கு மாகையால் எருவிட்டுச் சாரமுடைய தாக்குதல். பண் படுத்தல் - போகத்துக்குப் போகம் நல்ல மண்ணும் எருவும் போட்டு வள முடைய நிலமாக்குதல். வைக்கோலைப் போரிட்டு வைத்து, அதனால் உழு மாடுகளைப் போற்றி, புன்னிலத்தைத் திருத்தி நன்னிலமாக்கி, அடிக்கடி எருவிட்டு அந்நிலத்தை வளமுடைய தாக்கி, உழுது பயிர் செய்பவனே சிறந்த உழவனாவான் என்பதாம். ஏரினு நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினு நன்றதன் காப்பு. (குறள்) புன்னிலத்தை நன்னில மாக்குதல் இன்றியமையாமை யாகும். (12) 64. உழவு அதாவது, உழவுத் தொழிலின் சிறப்புக் கூறுதல். உழவின் இன்றியமையாச் சிறப்பினை உணர்ந்து நன்கு செய்து இனிது வாழ்தல் இதன் பயன். 993. பொச்சாப்புக் கேடு பொருட்செருக்குத் தான்கேடு முற்றாமை கேடு முரண்கேடு - தெற்றத் தொழின்மகன் தன்னோடு மாறாயி னென்றும் உழுமகற்குக் கேடி னுரை. (சிறு) உழுமகற்கு - உழவுத் தொழிலை யுடையவனுக்கு, பொச்சாப்பு கேடு - மறதி கெடுதியாம், பொருள் செருக்கு கேடு - செல்வ மிகுதியால் உண்டாகும் செருக்குக் கெடுதியாம், முற்றாமை கேடு - அறிவு முதிராமை கெடுதியாம், முரண் கேடு -பிறரோடு மாறு படுதல் கெடுதியாம். தெற்ற தொழில் மகன் தன்னோடு மாறு ஆயின் என்றும் கேடின் உரை - தெளிவாகத் தொழில் செய்கின்ற பண்ணையத்து ஆளோட மனவேறுபாடு கொள்ளின் எந்நாளும் கெடுதியாகச் சொல்வாய். பொச்சாப்பு - மறதி. கேடு - கெடுதி. பொருள் செருக்கு - செல்வ மிகுதியால் செருக்குக் கொண்டு பிறரை மதியாமல் நடத்தல். தான் - அசை. முற்றுதல் - முதிர்தல். அறிவு முதிர்தல். முரண் - மாறுபாடு - பகை. தெற்ற - தெளிவாக, நன்கு. தொழில் மகன் - பண்ணையாள், வேலைக்காரன். மாறு - மன வேறுபாடு. கேடின் - கேடாக, கெடுதியாக. உரை - சொல். செய்ய வேண்டிய வேலையை அக்காலத்தே செய்யாமல் மறத்தலும், செல்வச் செருக்குக் கொள்ளுதலும், உழவுத் தொழில் பற்றிய முதிர்ந்த அறிவின்மையும், பக்கத்துப் பண்ணை யத்தாரோடு பகை கொள்ளுதலும், நன்கு வேலை செய்யும் பண்ணை யாட்களோடு மன வேறுபாடு கொள்ளு தலும் எப்போதும் உழவனுக்குக் கேட்டைத் தருவனவாம். மறதி - களையெடுக்க வேண்டிய பருவத்தே களை யெடுக்க மறத்தல் போல்வன. பண்ணையாட்களோடு மாறு படின் ஒழுங்காக ஒத்து வேலை செய்யார். உழவனுக்கு மறதி முதலியன கேட்டைத் தரும் என்பது கருத்து. பொச்சாப்பு முதலியன இல்லாமல் உழவன் நடந்து கொள்ள வேண்டும். (1) 994. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு. (நல்) ஆற்றங்கரையின் மரமும் விழும் - ஆற்றங்கரையில் உள்ள மரங்களும் வேருடன் விழுந்து விடும், (அதுபோல), அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் விழும் - அரசரும் அறியும்படியாகச் செல்வாக்காக வாழ்ந்துவந்த பெரு வாழ்வும் அடியுடன் கெடும், (ஆகையால்), ஏற்றம் உழுது உண்டு வாழ்வு - உயர்ந்த வாழ்வாவது உழவுத் தொழில் செய்து அதனால் வரும் விளைவை உண்டு வாழ்தலே, அதற்கு ஒப்பு இல்லை - உழவுத் தொழிற்கு ஒப்பானது ஒரு தொழிலும் இல்லை, வேறு ஓர் பணிக்கு பழுது உண்டு - வேறு எந்த ஒரு தொழிலுக்கும் கேடு உண்டு. அரசு அறிய வீற்றிருத்தல் - அரசர் மதிக்கும்படி பெருஞ் செல்வத்துடன் வாழ்தல். விழும் - அடியோடழியும். விழும் என்பது, மரம் என்பதனோடுங் கூட்டப் பட்டது. ஏற்றம் - உயர்வு. கண்டீர் - அசை. பழுது - கெடுதல். பணி - தொழல். ஆற்றங்கரையில் உள்ள மரங்கள் மிகவும் செழிப்பாக இருக்கும். ஆற்றில் பெரு வெள்ளம் வந்தால் அவை வேரோடு விழ நேரும். அதுபோல, அரசர் மதிக்கும்படி வாழும் பெருஞ் செல்வ வாழ்வு. அவ்வரசராலேயே கெடுதலுங் கூடும். ‘மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்’ (நால - 134) என்பதால் அரசரால் கேடுறுதல் பெறப்படும் ஆகையால், உயர்வான தொழில் வேறொன்றில்லை. ஏனென்றால், மற்ற தொழில் களுக் கெல்லாம் கேடு உண்டு. கேடில்லாத தொழில் உழவுத் தொழிலே ஆகும் என்பதாம். சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனால் உழந்தும் உழவே தலை. (குறள்) இது உழவின் சிறப்புக் கூறியது. (2) 995. உழவர்க் கழகே ருழுதூண் விரும்பல். (வெற்) ஏர் உழுது ஊண் விரும்பல் - உழவுத் தொழிலைச் செய்து உண்டு வாழ விரும்புதல். உழவுத் தொழிலை விரும்பிச் செய்வது உழவர்க்கு அழகாகும் என்பதாம். (3) 996. வித்தும் ஏரும் உளவா யிருப்ப எய்த்தங் கிருக்கும் ஏழையும் பதரே. (வெற்) வித்தும் ஏரும் உளஆய் இருப்ப - விதையும் உழுமாடு களும் இருக்க, எய்த்து இருக்கும் ஏழையையும் பதரே - (உழுது பயிர் செய்து வாழாமல்) சோர்ந்து இருக்கின்ற அறிவில்லாதவனும் பதராவான். ஏர் - உழுமாடு. உளவாய் இருக்க - பொருந்தியிருக்க, வேண்டிய அளவு இருக்க. எய்த்தல் - சோர்தல். எய்த்திருத்தல் - சோம்பியிருத்தல், உழவுத் தொழில் செய்யாமல் சோம்பி யிருத்தல். அங்கு - அசை. ஏழை - அறிவில்லாதவன். பதர் - பாளை. பயனில்லாதவன் என்றபடி. விதை, உழுமாடு முதலிய உழவுத் தொழிலுக்கு வேண்டு வனவெல்லாம் இருந்தும், உழவுத் தொழில் செய்யாமல் இருப்பவன் அறிவிலி என்பதாம். (4) 997. பருவத்தே பயிர்செய் (ஆத்) விளையும் பருவ காலத்தே பயிர் செய்ய வேண்டும். (5) 998. நெற்பயிர் விளை. (ஆத்) நெல்லை மிகுதியாக விளைவிக்க வேண்டும். நெல்லுணவு நல்லுணவாகையால், ‘நெற்பயிர் விளை’ என்றார். இனவிலக்கணத்தால், எல்லாப் பயிர்களையும் மிகுதி யாக விளைவிக்க வேண்டும் என்பது கருத்தாகும். உழவர்கள் நாட்டு நலங்கருதி, உணவுப் பொருள்களை மிகுதியாக விளைவிக்க வேண்டும் என்பதாம். (6) 999. பூமி திருத்தியுண். (ஆத்) திருத்தல் - மேட்டு நிலத்தை வெட்டி நல்ல விளைநில மாக்கல். (7) 1000. சீரைத்தேடின் ஏரைத் தேடு. (கொன்) சீரைத்தேடின் - சிறப்பாக வாழ விரும்பினால், ஏரைத் தேடு - உழவுத் தொழிலைச் செய். உழவுத் தொழிலே சிறந்த தொழில் என்பதாம். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். (குறள்) (8) 1001. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது. (கொன்) தொழுது ஊண் சுவையின் - பிறரைத் தொழுது உண்ணும் உணவின் சுவையைக் காட்டிலும், உழுது ஊண் இனிது - உழு தொழில் செய்து உண்ணும் உணவு இனிதாகும். பிறரைத் தொழுது சுவையுடைய உணவை உண்பதை விட, உழவுத் தொழில் செய்து சுவையில்லாத எளிய உணவை உண்டு வாழ்வது சிறந்தது என்பது. (9) 1002. மேழிச் செல்வம் கோழை படாது. (கொன்) மேழிச் செல்வம் - உழுதொழில், கோழைபடாது - ஒரு போதும் குறைவை அடையாது. கோழை - குறைவு. பயிர்த் தொழில் செய்வோர்க்கு ஒரு நாளும் குறைவு உண்டாகாது. (10) 65. வினைத்திறம் அதாவது, வினைசெய்தற்கேற்ற திறமையும் தகுதியும், வினை - தொழில். 1003. வான்குருவிக் கூடரக்கு வாலுலண்டு கோற்றருதல் தேன்புரிந் தியார்க்குஞ் செயலாகா - தாம்புரீஇ வல்லவர் வாய்ப்பன வென்னாரொ ரோவொருவர்க் கொல்காதோ ரொன்று படும். (சிறு) வான்குருவிக் கூடு - தூக்கணங்குருவிக் கூடும், அரக்கு - அரக்கும், வால் உலண்டு தருதல் - தூய உலண்டு என்னும் புழுவால் நூற்கப்பட்ட நூலும், கோல் தருதல் - கோல் என்னும் புழுவால் செய்யப்பட்ட கூடும், தேன் - தேனீக் களால் செய்யப் பட்ட தேன்கூடும், (ஆகிய இவ்வைந்தும்), புரிந்து யார்க்கும் செயல் ஆகா - விரும்பி எவர்க்கும் செய்தல் முடியா, (ஆதலால்), வல்லவர் தாம் புரீஇ வாய்ப்பன என்னார் - தொழில் திறமையுடையவரும் தாம் விரும்பிச் செய்யலா மெனக் கருதமாட்டார். ஒரோ ஒருவர்க்கு ஓரொன்று ஒல்காது படும் - ஒவ்வொருவர்க்கு செயற்கருஞ் செயல் நன்கு செய்ய முடியும். வான் குருவி - தூக்கணங் குருவி, தூக்கணங் குருவிக் கூடு போல் யாராலும் பின்ன முடியாது. அரக்கு - ஒருவகைப் பெரிய செவ்வெறும்புகளால் உண்டாக்கப்படுவது. வால் - தூய்மை, உலண்டு - பட்டுப் புழு, சிலந்திப் பூச்சி எனவும் பெயர் பெறும். இது அழகான பட்டு நூல் நூற்கும். கோல் - ஒருவகைப் புழு. இது அருமையான கூடுகட்டும். தருதல் என்பது உலண்டு என்பத னோடும் கூட்டப்பட்டது. தேன் - தேன்கூடு. புரிந்து - விரும்பி. புரீஇ - புரிந்து - விரும்பி; சொல்லிசை அளபெடை. வல்லவர் - தொழில் திறமை யுடையவர். வாய்ப்பன என்னார் - தம்மால் செய்யமுடியும் என்று எண்ணார். ஒல்காது - குறையாது - நன்கு. ஒல்காது படும் - நன்கு அமையும். தூக்கணங்குருவிக்கூடு, அரக்கு, பட்டுப் பூச்சிநூல், கோற் புழுக்கூடு, தேன்கூடு இவை யாராலும் செய்ய முடியா. எனவே, எவ்வளவு கெட்டிக்காரரும் இவற்றைச் செய்ய எண்ண மாட்டார். ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு அருமை யான தொழில் இயல்பாக அமையும் என்பதாம். அருமையான தொழில்திறம் வாய்க்கப் பெற்றோர், அதனால் தற்பெருமை கொள்ளாது அத்தொழிலைப் பெருக்க வேண்டும் என்பது கருத்து. (1) 1004. புனைபடை கண்டஞ்சித் தற்காப்பான் தன்னை வினைகடியு மென்றடி வீழ்தல் - கனையிருட்கண் பல்லெலி தின்னப் பறைந்திருந்த பூனையை இல்லெலி காக்குமென் றற்று. (அற) புனைபடை கண்டு அஞ்சி தற்காப்பான் தன்னை - படைக் கலன்களை அணிந்து வரும் படையைக் கண்டு அஞ்சித் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஓடி ஒளிபவனை, வினை கடியும் என்று அடி வீழ்தல் - தனக்கு வந்த போரைப் போக்கென அவனது அடியில் வீழ்ந்து வேண்டுதல், கனை இருள்கண் - மிக்க இருளின் கண், பல் எலி தின்ன பறைந் திருந்த பூனையை - பல எலிகள் வீட்டிலுள்ள பொருள் களைத் தின்று கொண்டி ருப்பதைக் கண்டு ஒன்றுஞ் செய்யாது அஞ்சிக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த பூனையை, இல் எலி காக்கும் என்றற்று - ஒருவன் தன் வீட்டிலுள்ள எலிகளின் துன்பத்தினின்று காக்கு மென்று அதனைக் கொண்டாற் போலும். புனைதல் - அணிதல்; வாள் வேல் முதலிய படைக் கலங்களைத் தரித்தல். படை - படைவீரர். தற்காத்தல் - அவ் வீரர்கள் கொல்லாமல் தன்னைக் காத்துக் கொள்ளுதல். வினை - போர். கடிதல் - நீக்குதல். வினை கடிதல் - பகைவனை வென்று துரத்துதல். அடி வீழ்தல் - வணங்கிக் கேட்டல். கனை இருள் - மிக்க இருள் - நள்ளிருள். பல் எலி - பல எலிகள். பறைதல் - ஒலித்தல். இல் - வீடு. காத்தல் - எலிகள் பொருள்களைத் தின்னாமல் காத்தல். அற்று - போலும். படைக்கலந் தரித்து வரும் படையைக் கண்டஞ்சி ஓடி ஒளிபவனைப் படைத்துணையாகக் கொள்வது, எலிகளைக் கண்டஞ்சும் பூனையை எலிகளைப் பிடிக்க வீட்டில் வளர்ப்பது போலும். ஒரு தொழில் திறம் இல்லாதவனை அத்தொழில் செய்ய அமர்த்துதலுக்கும் இஃதொக்கும். ஒரு தொழில் செய்யுந் திறமையில்லாதவனை அத்தொழில் செய்யும்படி அமர்த்துதல் கூடாதென்பது கருத்து. (2) 1005. கால மறிந்தாங் கிடமறிந்து செய்வினையின் மூல மறிந்து விளைவறிந்து - மேலுந்தாம் சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந் தாள்வினை யாளப் படும். (நீநெ) காலம் அறிந்து - (ஒரு காரியத்தைச் செய்தற்குரிய) காலத்தை அறிந்து, இடம் அறிந்து (அக்காரியத்தைச் செய்து முடித்தற் கேற்ற) இடத்தினை அறிந்து, செய்வினையின் மூலம் அறிந்து - செய்யும் காரியத்தின் காரணத்தை அறிந்து, விளைவு அறிந்து - அக்காரியத்தால் ஏற்படும் பயனை அறிந்து, மேலும் சூழ்வன சூழ்ந்து - பின்னும் ஆராய வேண்டிய வற்றை ஆராய்ந்து, துணைமை வலிதெரிந்து - (அக்காரியஞ் செய்தற்கு) துணையா வோரின் வலிமையையும் தெரிந்து கொண்டு, ஆள்வினை ஆளப் படும் - ஒரு காரியத்தைச் செய்ய முயற்சி செய்ய வேண்டும். அறிந்து ஆங்கு. ஆங்கு - அசை. மூலம் - காரணம். மூலம் அறிதல் - எதனால் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அறிதல். கருவிகளும் முறையும். விளைவு - பயன். மேலும் - பின்னும், மறுபடியும். தாம் - அசை. சூழ்தல் - ஆராய்தல். துணைமை - துணை செய்வோர், காரியஞ் செய்யும் ஆட்கள். ஆள்வினை - முயற்சி. ஆள்தல் - செய்தல். ஒரு காரியஞ் செய்யத் தொடங்குவோர், அக்காரியம் முடித்தற்கேற்ற காலத்தையும், இடத்தையும், அக்காரியஞ் செய்தற் கேற்ற கருவிகளையும், வழிகளையும், அக்காரியத் தால் உண்டாகும் பயனையும், துணைவலியையும் அறிந்து, மேலும் ஆராய வேண்டியவற்றை ஆராய்ந்து பார்த்துக் காரியஞ் செய்ய முயல வேண்டும் என்பதாம். இச்செய்யுள் பொதுவாக எல்லாத் தொழில் செய்தலை யும் குறிக்குமேனும், சிறப்பாகப் போர்த்தொழிலையே குறிக்கும். காலம் - தமக்கு வெற்றி தருங்காலம். இடம் - தாம் வெல்லுதற்கேற்ற இடம். மூலம் - படைகள், படைக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் முதலியன. சூழ்வன சூழ்தல் - போர்க் காலத்தே நிகழும் இடுக்கண்களையும் அவற்றை நீக்கும் வழிகளையும் ஆராய்தல். துணைமை வலி - படைத் துணையா வோரின் வலிமை. பகல்வெல்லுங் கூகையைக் காக்கை; இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (குறள்) நெடும்புனலுள் வெல்லும் முதலை, அடும்புனலின் நீங்கி னதனைப் பிற. (குறள்) முடிவு மிடையூறும் முற்றியாங் கெய்தும் படுபயனும் பார்த்துச் செயல். (குறள்) (3) 1006. மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார் எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயி னார். (நீநெ) கருமமே கண்ணாயினார் - தாம் தொடங்கிய காரியத்தை முடிப்பதிலேயே கருத்துடையவர், மெய் வருத்தம் பாரார் - (அக்காரியம் செய்வதால் உண்டாகும்) உடல் வருத்தத்தைக் கவனியார், பசி நோக்கார் - பசியையும் கவனியார், கண் துஞ்சார் - தூங்கார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - யார் இடை யூறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தார், செவ்வி அருமையும் பாரார் - காலத்தின் அருமையையும் நோக்கார், அவமதிப்பும் கொள்ளார் - (பிறர்) இகழ்வதையும் பொருட்படுத்தார். மெய் - உடல். துஞ்சுதல் - தூங்குதல். எவ்வெவர் - எவர் எவர். தீமை - இடையூறு. மேற்கொள்ளல் - பொருட் படுத்தல், அதனால் தொழில் முயற்சியை விடுதல். செவ்வி - காலம். காலத்தின் அருமை நோக்காமை - எவ்வளவு நேரமா னாலும் சலியாது செய்தல். அவமதிப்பு - இகழ்ச்சி; நேரங் கெட்ட நேரம் தொழில் செய்வது பற்றிப் பிறர் இகழ்தல். கருமம் - காரியம். கண்ணுதல் - கருதுதல். கண்ணாயினார் கருத்துடையார். கருமமே கண்ணாயினார் உடல் வருத்தத்தைப் பாராமலும், பசியைக் கவனியாமலும், பிறர் செய்யும் இடை யூற்றைப் பொருட் படுத்தாமலும், நேரத்தைக் கவனியாமலும், பிறர் இகழ்வதைப் பொருட்படுத்தாமலும் காரியம் செய்வார் என்பதாம். (4) 1007. செய்யு மொருகருமந் தேர்ந்து புரிவதன்றிச் செய்யின் மனத்தாபஞ் சேருமே - செய்யவொரு நற்குடியைக் காத்த நகுலனைமுன் கொன்றமறைப் பொற்கொடியைச் சேர்துயரம் போன்று. (நீவெ) செய்ய ஒரு நற்குடியைக் காத்த நகுலனை - சிறந்த ஒரு நல்ல குடும்பத்தைக் காப்பாற்றின கீரியை, முன் கொன்ற பொன்மறை கொடியைச் சேர்துயரம் போல் - முற்காலத்தே எண்ணிப் பாராமல் கொன்ற ஓர் அழகிய பார்ப்பனப் பெண்ணுக்கு நேரிட்ட துன்பம் போல், செய்யும் ஒரு கருமம் - செய்ய வேண்டிய காரியத்தை, தேர்ந்து புரிவது அன்றி செய்யின் - ஆராய்ந்து செய்வதல்லாமல் செய்தால் - ஆராயாமல் செய்தால், மனத்தாபம் சேரும் - மனத்துயரம் உண்டாகும். கருமம் - காரியம். தேர்ந்து - ஆராய்ந்து. புரிதல்; செய்தல். தேர்ந்து புரிவது அன்றிச் செய்யின் - ஆராயாமல் செய்தால். மனத்தாபம் - மனத்துயரம் - துன்பம். செய்ய - சிறந்த. நகுலன் - கீரி. பொன் - அழகு. மறைக் கொடி - பார்ப்பனப் பெண். கீரியைக் கொன்ற கதை: ஒரு பார்ப்பனப் பெண் ஒரு கீரியை வளர்த்து வந்தாள். தொட்டிலில் தூங்கும் தன் குழந்தைக்கு அக்கீரியைக் காவல் வைத்துவிட்டுத் தண்ணீர் கொண்டுவரப் போனாள். அப்போது, ஒரு பாம்பு குழந்தை யைக் கடிக்கத் தொட்டிலில் ஏறவே, கீரி அப்பாம்பைக் கடித்துக் கொன்றுவிட்டு அச் செய்தியைப் பார்ப்பினிக்குச் சொல்ல ஓடிற்று. கீரியின் வாயில் குருதியைக் கண்ட பார்ப்பினி, குழந்தையைக் கடித்துக் கொன்று விட்டு ஓடுகிறதென்று எண்ணி, தண்ணீர்க் குடத்தைப் போட்டு அக்கீரியைக் கொன்று விட்டாள். ஆராய்ந்து பாராமல் ஒரு காரியத்தைச் செய்தால் துன்புற நேரும். எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு. (குறள்) (5) 1008. தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர் தங்கட் குரியவரால் தாங்கொள்க - தங்கநெடுங் குன்றினாற் செய்தனைய கொம்பனையாய் ஆவின்பால் கன்றினாற் கொள்ப கறந்து. (நன்) நெடு தங்கக் குன்றினால் செய்து அனைய கொம்பனை யாய் - நெடிய பொன்மலையால் செய்தது போன்ற அழகிய கொம்பு போன்ற பெண்ணே, ஆவின் பால் கன்றினால் கறந்து கொள்ப - மாட்டுப் பாலை அதன் கன்றினால் கறந்து கொள் வார்கள், (அதுபோல்), தங்கட்கு உதவிலர் கை தாம் ஒன்று கொள்ளின் - தங்களுக்கு உதவாதவரிடத்திலிருந்து தாங்கள் ஏதாவதொரு பொருளைப் பெற்றுக் கொள்ள விரும்பினால், அவர் தங்கட்கு உரியவரால் கொள்க - அவர்கட்கு வேண்டி யவர்களால் கொள்க. உதவிலர் - உதவாதவர் - பழக்கமில்லாதவர். கை - இங்கு இடம். ஒன்று - ஒரு பொருள், ஓருதவி. உரியவர் - வேண்டியவர். குன்று - மலை. அனைய - போன்ற. தங்கமலை - மேனியொளிக்கு உவமை. கன்று - மாட்டுக்கன்று. கொள்ப - கொள்வர். கொம்பனை யாய் - மகடூஉ முன்னிலை. மாட்டுப்பாலை அம்மாட்டின் கன்றினால் கறந்து கொள்வது போல, ஒருவர்க்கு வேண்டியவரைக் கொண்டு அவரிடமிருந்து ஏதாவது பொருளையோ, உதவியையோ பெற வேண்டும் என்பதாம். தமக்கு வேண்டியவரைக் கொண்டு, ஒருவரிடம் ஓருதவி பெறுதலும் வினைத்திறமே யாகும். பரிந்துரை (சிபாரிசு) கூடாது என்று இன்று கூறுதல் இதற்கு முரணாதல் காண்க. ‘கூட்டுக் குருவியைக் கொண்டு காட்டுக் குருவியைப் பிடித்தல்’ - என்பது பழமொழி. (6) 1009. பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர் சிறியோ ரெல்லாஞ் சிறியரு மல்லர். (வெற்) உருவத்தில் பெரியவர் எல்லாம் பெரியவர் ஆகார்; காரியஞ் செய்வதில் சிறியராயிருப்பர்; உருவத்தில் சிறியவ ரெல்லாம் காரியஞ் செய்வதில் பெரியராயிருப்பர். உருவுகண் டெள்ளாமை வேண்டும், உருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னா ருடைத்து. (குறள்) (7) 1010. செய்வன திருந்தச்செய். (ஆத்) செய்யுங் காரியங்களைத் திருத்தமாகச் செய்ய வேண்டும். (8) 1011. தூக்கி வினைசெய். (ஆத்) தூக்கி - ஆராய்ந்து, வினை - செயல், முடிக்கும் வழியை ஆராய்ந்து ஒரு தொழிலைச் செய்ய வேண்டும். (9) 1012. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி. (கொன்) நுண்ணிய கருமமும் - சிறிய தொழிலையும், எண்ணித் துணி - ஆராய்ந்து செய். (10) 1013. கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம். (உல) ஆராயாமல் எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது. (11) 66. கீழ்மை அதாவது, கீழ்மக்களது தன்மை. 1014. நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்ததனை உள்ளத்தா னுள்ளி உரைத்துரா யூர்கேட்பத் துள்ளித்தூண் முட்டுமாங் கீழ். (நால) நிகர் அல்லார் - தமக்கு ஒப்பாகாதவர், நேர்த்து நீர் அல்ல சொல்லியக்கால் - எதிர்த்துச் சொல்லத் தகாத சொற் களைச் சொன்னால், விழுமியார் வேர்த்து வெகுளார் - பெரியோர்கள் மனம் புழுங்கி வெகுளார்; கீழ் - கீழ்மக்களோ வென்றால், அதனை உள்ளத்தான் உள்ளி ஓர்த்து - அப்பழிச் சொல்லை மனத்தால் நினைத்து ஆராய்ந்து, ஊர் கேட்ப உரைத்து - ஊரில் உள்ளவ ரெல்லாருங் கேட்கும்படி சொல்லி, உராய் துள்ளி தூண் முட்டும் - (சுவர் முதலியவற்றில்) உராய்ந்து துள்ளிக் குதித்துத் தூணில் முட்டிக்கொள்வர். நேர்த்து - எதிர்த்து. நிகர் அல்லார் - ஒப்பாகாத கீழ்மக்கள். நீர் அல்ல - தகுதியல்லாத சொற்கள், பழிச் சொற்கள்; அதாவது இகழ்தல். வேர்த்தல் - மனம் புழுங்குதல். விழுமி யோர் - பெரியோர்கள். ஓர்த்தல் - ஆராய்தல். உள்ளி - எண்ணி. உராய் --உராய்ந்து, சுவர் முதலியவற்றில் உடம்பைத் தேய்த்துக் கொள்ளுதல். ஊர் கேட்பச் சொல்லுதல் - பலரு மறியச் சொல்லுதல். ஆம் - அசை. கீழ் - கீழ் மக்கள். வேர்த்தல், உராய்தல், துள்ளுதல், தூண் முட்டுதல் - இவை சினத்தின் மிகுதியால் நிகழ்வன. கீழ்மக்கள் இகழ்ந்து கூறினால் விழுமியோர் வெகுளார். கீழ்மக்களோவெனில் மிகவும் வெகுள்வர் என்பதாம். மேலோரது தன்மையும் கீழோரது தன்மையும் ஒருங்கு கூறினது, கீழோரது தன்மை நன்கு விளங்குதற்காக என்க. (1) 1015. இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினு மென்றும் அடங்காதா ரென்று மடங்கார் - தடங்கண்ணாய்! உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும் கைப்பறாப் பேய்ச்சுரையின் காய். (நால) தடங்கண்ணாய் - பெரிய கண்களை யுடையவளே, அடங் காதார் இடம்பட என்றும் மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும் அடங்கார் - இயல்பாய் அடங்கும் தன்மை இல்லாதவர் மிகுதியாக எப்போதும் அறிவு நூல்களைப் படித்து வந்தாலும் என்றும் அடங்க மாட்டார்கள், (எதுபோலவெனின்), உப்போடு நெய் பால் தயிர் காயம் பெய்து அடினும் - உப்பும் நெய்யும் பாலும் தயிரும் பெருங் காயமும் சேர்த்துச் சமைத்தலும், பேய்ச் சுரையின் காய் கைப்பு அறா - பேய்ச்சுரைக்காய்கள் தமது இயற்கையான கசப்பு நீங்கா வாம். இடம்பட - மிகுதியாக. ஞானம் - அறிவு. மெய்ஞ் ஞானம் - உண்மையறிவு. இங்கு அறிவு நூல்களை உணர்த் திற்று. அடங்கா தார் - அடக்கம் இல்லாதவர். தட - மிகுதி குறிக்கும் உரிச்சொல். காயம் - பெருங்காயம். பெய்து - இட்டு, சேர்த்து. அடுதல் - சமைத்தல். கைப்பு - கசப்பு. பேய்ச்சுரை - ஒருவகைச் சுரை. ‘உப்பொடு’ என, உப்பை ஒடுக்கொடுத்துப் பிரித்தது, அறு சுவை யுள்ளும் தலைமை பெறுதலாகிய அதன் சிறப்புத் தோன்றற் கென்க. உப்பிலும் நெய்யிலும் பாலிலும் தயிரிலும் காயத்திலும் தனித்தனியே வேகவைத்தாலும் பேய்ச்சுரைக்காய் கசப்பு நீங்காத வாறு போல, எப்போதும் மிகுதியாக அறிவு நூல் களைப் படித்து வந்தாலும் அடங்குந்தன்மையில்லாத கீழ் மக்கள் என்றும் அடங்கார் என்பதாம். எப்போதும் அறிவு நூல்களையே படித்துவரினும் அடங் காமல் நடத்தல் கீழ்மக்கள் இயல்பு. அடங்குதல் - கற்றபடி நிற்றல். (2) 1016. கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும் குப்பை கிளைப்போவாக் கோழிபோல் - மிக்க கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினுங் கீழ்தன் மனம்புரிந்த வாறே மிகும். (நால) காலை கப்பி கடவதா தன்வாய் பெயினும் - உணவு வேண்டிய காலத்திலே தவசத்தைப் போதுமான அளவு தன் வாயில் போட்டாலும், குப்பை கிளைப்பு ஓவா கோழி போல் - தன் இயல்பான குப்பை கிளறுந் தொழிலை நீங்காத கோழியைப் போல, மிக்க கனம் பொரிந்த நூல் விரிந்து காட்டினும் - மிக்க பெருமை பொருந்திய நூற்பொருளை விளக்கமாக எடுத்து ரைத்தாலும், கீழ்தன்மனம் புரிந்த ஆறே மிகும் - கீழ்மகன் தன் மனம் விரும்பினபடியே நடப்பான். கப்பி - கம்பு, சோளம், அரிசி முதலிய தவசக் குறுணை நொய். கடவது ஆ. ஆ - ஆக. கடவது - போதுமானது. பெய்தல் - கோழி தானாகப் பொறுக்கி உண்ணாமல் அதன் வாயில் போடுதல். பெய்தல் - போடுதல், இடுதல். காலை - பசியான நேரம். கிளைப்பு - கிளைத்தல் - கிளறுதல்; தொழிற் பெயர், ஓவா - ஓவாத - நீங்காத. கனம் - பெருமை. நூல் - நூற்பொருள். விரித்துக் காட்டல் - தெளிவாக விளங்கும்படி எடுத்துரைத்தல். புரிதல் - விரும்புதல். மிகுதல் - தன் இயல் பின்படியே மிகுதியாக நடத்தல். தானாக முயன்றுண்ணாமல், நல்ல இரை கிடைத்தாலும் அதையும் உண்ணாமல் குப்பையைக் கிளறுங் கோழியைப் போல, தாமாக வருந்திக் கல்லாமல், கற்றோர் விளக்கமாக எடுத்துரைத்தால் அதையும் ஏற்றுக் கொள்ளாமல் கீழ்மக்கள் தீய வழியிலேயே நடப்பர் என்பதாம். (3) 1017. பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையா தொருநடைய ராகுவர் சான்றோர் - பெருநடை பெற்றக் கடைத்துப் பிறங்கருவி நன்னாட வற்றா மொருநடை கீழ். (நால) பிறங்கு அருவி நல் நாட - விளங்குகின்ற மலையருவி களையுடைய சிறந்த நாட்டையுடைய அரசனே, சான்றோர் பெருநடை தாம் பெறினும் - பெரியோர்கள் மிக்க செல்வத் தைப் பெற்றாலும், பெற்றி பிழையாது ஒரு நடையர் ஆகுவர் - தம் இயல்பாகிய பெருமைக் குணம் மாறாமல் எப்போதும் ஒரே வகைப்பட்ட நடக்கையையுடையராவர், கீழ் பெரு நடைபெற்ற கடைத்து ஒரு நடைவற்று ஆம் - கீழ்மகன் மிக்க செல்வத்தை அடைந்தவிடத்து முன்னைய நடக்கைக்கு வேறுபட்ட ஒரு நடையில் வல்லவனாவான். நடை - செல்வம், பெற்றி - தன்மை. பிழையாது - மாறாமல். ஒரு நடை - ஒரே தன்மையான நடக்கை, ஒழுக்கம், கடைத்து - இடத்து. பிறங்குதல் - விளங்குதல். வற்று - வல்லமை. எவ்வளவு செல்வம் அடைந்தாலும் மேலோரது நடக்கை சிறிதும் மாறாது. கீழோர் செல்வம் பெற்ற மாத்திரத்தே நடக்கை முழுவதும் மாறிவிடுவர் என்பதாம். (4) 1018. தினையனைத்தே யாயினுஞ் செய்தநன் றுண்டாற் பனையனைத்தா வுள்ளுவர் சான்றோர் - பனையனைத் தென்றுஞ் செயினு மிலங்கருவி நன்னாட நன்றில நன்றறியார் மாட்டு. (நால) இலங்கு அருவி நல் நாட - விளங்குகின்ற மலையருவி களையுடைய சிறந்த நாட்டையுடையவனே, தினை அனைத்தே ஆயினும் செய்த நன்று உண்டால் - தினையளவே யானாலும் ஒருவன் செய்த உதவியைப்பெற்றால், சான்றோர் பனை அனைத்தா உள்ளுவர் - பெரியோர்கள் அதனைப் பனை அவ்வளவு பெரிதாக நினைப்பார்கள், என்றும் பனை அனைத்து செயினும் - எப்போதும் பனையவ்வளவு பெரிய உதவியைச் செய்தாலும், நன்று அறியார் மாட்டு நன்று இல - செய்ந் நன்றியறியாத கீழ்மக்களிடத்தில் அவ்வுதவிகள் சிறப்பில் லாதனவாம். தினை, பனை என்பன, சிறுமை பெருமைக்குக் காட்டப் படும் அளவைகள். நன்று - நன்றி - உதவி, உண்டால் - அடைந்தால், பெற்றால். அனைத்தா - அனைத்தாக. உள்ளுதல் - நினைத்தல். நன்று அறியார் - உதவியின் பயனை அறியார். நன்று இல - சிறப்பில்லன வாம். அதாவது மறந்து விடுவர் என்பதாம். மாட்டு - இடத்து. மாடு - இடம். தமக்குப் பிறர்செய்த சிறிய உதவியையும் பெரிதாக மதிப்பது பெரியோர் இயல்பு. பெரிய உதவியையும் ஒரு பொருளாக மதியாமை கீழ்மக்கள் இயல்பு என்பதாம். மதியாதிருத்தல் - நினையாமல் மறந்து விடுதல். தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்றெரி வார். (குறள்) (5) 1019. பொற்கலத் தூட்டிப் புறந்தரினு நாய்பிறர் எச்சிற் கிமையாது பார்த்திருக்கும் - அச்சீர் பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யுங் கருமங்கள் வேறு படும். (நால) பொன்கலத்து ஊட்டி புறந்தரினும் - பொன்னால் செய்த ஏனத்தில் இட்டு நல்ல உணவை உண்பித்துப் பாது காத்து வந்தாலும், நாய் - பிறர் எச்சிற்கு இமையாது பார்த் திருக்கும் - பிறர் உண்டு எறியும் இலையிலுள்ள எச்சிற் சோற்றுக்கு இமை கொட்டாமல் எதிர்பார்த்துக் கொண் டிருக்கும், அச்சீர் பெருமை உடைத்தாக் கொளினும் - அதுபோலச் சிறப்புள்ளவனாகப் பிறர் தன்னை மதித்து ஏற்றுக் கொண்டாலும், கீழ் செய்யும் கருமங்கள் வேறுபடும் - கீழ்மகன் செய்யும் காரியங்கள் பெருமைக்கு வேறு பட்டன வாக இருக்கும். கலம் - ஏனம், பாத்திரம். ஊட்டல் - உண்பித்தல். புறந்தரல் - பாதுகாத்தல். புறந்தா - பகுதி. இமையாது - கண்ணிமையாது. அச்சீர் - அவ்வாறே, அத்தன்மையே. உடைத்தா - உடைத்தாக. கருமம் - காரியம். வேறுபடும் - பெருமைக்கேதுவான காரியங்கள் செய்யாமல், சிறுமைக் கேதுவான காரியங்கள் செய்வான் என்பதாம். நல்ல உணவிட்டு நன்கு வளர்த்தாலும் இழிவான உணவை எதிர்பார்த்திருப்பது நாய்க்கு இயல்பாதல் போல, பெருமை யாக மதித்தாலும் இழிவான காரியங்களையே செய்வது கீழ்மக்களின் இயல்பு என்பதாம். ‘கப்பி கடவதா’ என்னும் செய்யுளோடு இதை ஒப்பிடுக. (6) 1020. சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர் எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல் - எக்காலும் முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை இந்திரனா வெண்ணி விடும். (நால) சக்கரச் செல்வம் பெறினும் - உலக முழுவதையும் ஆளுவ தாகிய பெருஞ் சிறப்பைப் பெற்றாலும், விழுமியோர் எக்காலும் மிகுதிச் சொல் சொல்லார் - மேலோர் எப்பொழுதும் வரம்பு கடந்த சொற்களைச் சொல்லமாட்டார், எக்காலும் காணிமேல் முந்திரி மிகுவதேல் - எப்பொழுதாயினும் காணி என்னும் சிறிய அளவின் மேல் முந்திரி என்னும் சிறிய அளவு செல்வம் மிகுவதானால், கீழ் தன்னை இந்திரனா எண்ணி விடும் - கீழ்மகன் தன்னை இந்திரனாக நினைத்துவிடுவான். சக்கரம் - வட்டம். இங்கே வட்டமான உலகைக் குறித்தது. சக்கரச்செல்வம் - உலகாளும் உரிமை. சக்கரம் - ஆணை. சக்கரச் செல்வம் - அரசுரிமை எனினுமாம். மிகுதிச் சொல் - தகாத சொல், செருக்குடன் சொல்லும் சொல். அதாவது, செல்வச் செருக்கால் பிறரை மதியாது பேசுதல். முந்திரி என்பது முக்கால் காசு. காணி - மூன்று காசு - காலணா. நால் முந்திரி - காணி. முந்திரி, காணி - இவை தமிழ் எண்ணுப் பெயர்கள். முந்திரியிலக்கம் என்னும் தமிழ்க் கணக்கு வாய்பாட்டு நூலில் காண்க. மூன்று காசுக்கு மேல் ஒரு முக்கால் காசு சேர்ந்தால் என்பதாம். இந்திரன் - தேவருலகை ஆளும் பெருஞ் செல்வன் என்னும் புராணக் கருத்தைக் கொண்டு கூறியது. மேலோர் பெருஞ் செல்வ முற்றாலும் வரம்பு கடந்து நடவார். கீழோர் உள்ளதுக்குமேல் கொஞ்சம் பொருள் சேர்ந்தாலும் தம்மை மிகச் சிறந்தவராக மதித்துச் செருக்குக் கொள்வர் என்பதாம். (7) 1021. மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச் செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம்; எய்திய செல்வத்த ராயினுங் கீழ்களைச் செய்தொழிலாற் காணப் படும். (நால) மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணி அழுத்தி செய்தது எனினும் - குற்றமற்ற சிறந்த பொற்றகட்டின் மேல் மாட்சிமைப் பட்ட மணிகளைப் பதித்துச் செய்யப்பட்ட தாயினும், செருப்பு தன் காற்கே ஆம் - செருப்பானது ஒருவனது காலிற் போட்டுக் கொள்வதற்கே உரியதாகும், (அதுபோல), எய்திய செல்வத்தர் ஆயினும் - பொருந்திய செல்வமுடையவர்களானாலும், கீழ் களைச் செய்தொழிலால் காணப்படும் - கீழ்மக்களை அவர்கள் செய்யுந் தொழில் களால் அவர்கள் கீழ்மக்களென்று அறியப் படும். மை - குற்றம். பசும் பொன் - சிறந்த பொன். மாண்ட - மாட்சிமைப்பட்ட - சிறந்த. தன் என்பது - ஒருவன் என்னும் பொருட்டு. எய்திய - போதுமான அளவு பொருந்திய. பொற்றகட்டின்மேல் மணிகள் பதித்து அழகாகச் செய்யப் பட்டாலும் செருப்பு தாழ்வான காலிற் போட்டுக் கொள்வ தற்கே உரியது போல, கீழ்மக்கள் பெருஞ்செல்வம் பெற்றாலும் இழி தொழில்களே செய்வர் என்பதாம். உவமையால் கீழோரின் இழிதன்மை நன்குவிளங்கிற்று. எத்தகைய விலைமதிப்புள்ள செருப்பும் தலைக்குப் போட்டுக் கொள்வதில்லை போல, எவ்வளவு செல்வமுடைய ரானாலும் கீழ்மக்கள் மேற்படியில் வைக்கத் தக்கவரல்லர் என்பது கருத்து. (8) 1022. கடுக்கெனச் சொல்வற்றாங் கண்ணோட்ட மின்றாம் இடுக்கண் பிறர்மாட் டுவக்கும் - அடுத்தடுத்து வேக முடைத்தாம் விறன்மலை நன்னாட ஏகுமா மெள்ளுமாங் கீழ். (நால) விறல் மலை நல் நாட - பெருமை பொருந்திய மலை களையுடைய சிறந்த நாட்டையுடையவனே, கீழ் கடுக்கென சொல் வற்று ஆம் - கீழ் மகனது தன்மை கடுமையாகப் பேச வல்லதாம், கண்ணோட்டம் இன்றாம் - இரக்கம் இல்லாத தாம், பிறர் மாட்டு இடுக்கண் உவக்கும் - பிறரிடத்துண்டான துன்பத்திற்கு மகிழும், அடுத்து அடுத்து வேகம் உடைத்தாம் - அடிக்கடி சினவெறி யுள்ளதாம், ஏகுமாம் எள்ளுமாம் - மனம்போன பக்கம் போகுமாம் பிறரை இகழுமாம். கடுக்கென - கடுமைக் குறிப்பிடைச் சொல்; வெடுக் கென, பொள்ளென என்பனபோல. வற்று - வல்லமை. கண்ணோட்டம் - இரக்கம். இடுக்கண் - துன்பம். மாட்டு - இடத்து. அடுத்தடுத்து அடுக்கு, பன்மைப் பொருளது. வேகம் - இங்கு மிகுதி. வேகம் - விறல் - பெருமை. ஏகுமாம் எள்ளுமாம் - பிறரிடம் வலியச் சென்று இகழும் எனினுமாம். கடுமையாகப் பேசுவதும், யாரிடத்தும் இரக்கமில்லா மையும், பிறர் துன்பங் கண்டு மகிழ்வதும், காரணமின்றி மேன்மேல் சின முடையராதலும், செல்லத்தகாத இடங் கட்குப் பலகாலும் செல்லுதலும், பிறரை இகழ்தலும் கீழோர் இயல்பு என்பதாம். கீழ் மக்கள் தன்மையை உள்ளபடி சொல்வதால், இது தன்மை நவிற்சி அணி. (9) 1023. கல்லாக் கழிப்பர் தலையாயார் நல்லவை துவ்வாக் கழிப்ப ரிடைகள் கடைகள் இனிதுண்ணே மாரப் பெறேம்யா மென்னும் முனிவினாற் கண்பா டிலர். (நால) தலையாயார் கல்லா கழிப்பர் - முதன்மையான அறிவு டையவர் அறிவு நூல்களைக் கற்றுக் காலங் கழிப்பர், இடைகள் நல்லவை துவ்வாக் கழிப்பர் - நடுவாயினார் நல்லவற்றை நுகர்ந்து கொண்டு காலங்கழிப்பர், கடைகள்யாம் இனிது உண்ணேம் - கீழ்மக்கள் யாம் இனிமையான உணவுகளை உண்ணப் பெற்றி லோம், ஆரப் பெறோம் என்னும் முனி வினால் கண்பாடு இலர் - செல்வத்தை நிரம்பப் பெற்றிலோம் என்று கருதுகின்ற வெறுப் பினால் இரவிலும் தூக்கமில்லாமல் வருந்துவர். கல்லா - கற்று. துவ்வா - துய்த்து. உடன்பாட்டு வினை யெச்சங்கள். துய்த்தல் - நுகர்தல், அனுபவித்தல். நல்லவை துய்த்தல் - இனிய உணவுகளை உண்பதும், நல்ல உடைகளை உடுப்பதும், பூண்பதும் பூசுவதும், நினைத்த இடங்கட்குச் செல்வதும் ஆகிய ஆடம்பர வாழ்க்கை வாழ்தல். ஆர்தல் - நிறைதல். முனிவு - வெறுப்பு. கண்பாடு - கண்படுதல் - தூங்குதல். அறிவு நூல்களைக் கற்று இன்புற்று வாழ்வது தலை யாயார் இயல்பு. செல்வத்தால் இன்புற்று வாழ்வது இடை யாயார் இயல்பு. எவ்வளவு செல்வம் பெற்றாலும் அமைதி யில்லாமல் மேன்மேலும் செல்வத்திற்காக ஏக்கங் கொண்ட லைவது கடையாயார் இயல்பு. கடையாயார் தன்மை கூறுவார், அது நன்கு விளங்குதற் பொருட்டு, ஏனையிருவர் தன்மையும் உடன் கூறினார். செல்வ வாழ்க்கையைப் பற்றிக் கருதாமல் கற்பதில் கருத்தைச் செலுத்துவர் தலைமக்கள். கற்பதில் கருத்தில்லாமல் செல்வ வாழ்வில் செருக்கி வாழ்வர் இடைமக்கள். எவ்வளவு செல்வமிருந்தாலும் போதுமென்னும் அமைதியில்லாமல் மேலும் மேலும் செல்வத்திற் காக ஏங்கியலைவர் கடை மக்கள் என்பதாம். (10) கீழ்மக்கள் இயல்பு 1024. மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும் உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க இனநலம் நன்குடைய வாயினும் என்றும் மனநல மாகாவாங் கீழ். (பழ) மிகு புனல் மிக்கு பெருகி பாய்ந்தாலும் - ஆற்று வெள்ளம் மிகப் பெருகிவந்து பாய்ந்தாலும், ஒலி கடல் உப்பு ஒழிதல் செல்லாதுபோல் - ஒலிக்கின்ற கடல் உவர்ப்பு நீங்கப்பெறாது அதுபோல, மிக்க இன நலம் நன்கு உடையர் ஆயினும் - மிக்க இனத்தின் நன்மை மிகவும் உள்ளவராயினும், கீழ் என்றும் மனம் நலம் ஆகா - கீழ் மக்கள் எக்காலத்தும் மனத்தால் நல்லராக மாட்டார். மிகுபுனல் - ஆற்று வெள்ளம். இன நலம் - நல்ல இனம். தாம் சேர்ந்துள்ள நல்ல இனம். மன நலம் - நல்ல மனம். கடலில் பல ஆறுகள் சென்று கலக்கின்றன. ஆற்று நீர் நன்னீர். அவ்வாறு நன்னீர் கலந்துங்கூடக் கடலினது உப்புத் தன்மை நீங்குவதில்லை. அதுபோல, நல்லாரோடு கூடிக் கலந் திருந்தாலும் கீழோருடைய கீழ்க்குணம் நீங்குவதில்லை. (11) 1025. தக்காரோ டொன்றித் தமரா யொழுகினார் மிக்காரா லென்று சிறியாரைத் தாந்தேறார்; கொக்கார் வளவய லூர தினலாமோ அக்காரஞ் சேர்ந்த மணல். (பழ) கொக்கு ஆர்வள வயல் ஊர - கொக்குகள் நிறைந்த வளம் பொருந்திய வயல்களையுடைய ஊர்களையுடைய வனே, தக்கா ரோடு ஒன்றி தமராய் ஒழுகினார் - பெரியாரோடு பொருந்தி அவர்க்கு உறவாய் ஒழுகினார் ஆதலால், மிக்க என்று சிறியாரை தாம் தேறார் - சிறந்த குணமுடையார் என்று கீழோரைத் தாம் கொள்ளார், அக்காரம் சேர்ந்த மணல் தினலாமோ - சர்க்கரை யோடு கலந்த மணலைத் தின்னலா மோ? தின்ன முடியாது. தக்கார் - தகுதியுடையார், பெரியோர். ஒன்றி - பொருந்தி. தமர் - உறவினர். ஒழுகுதல் - நடத்தல். மிக்கார் - சிறந்த குண முள்ளவர். ஆல் - அசை. தேறுதல் - தெளிதல் - கொள்ளுதல். ஆர் - நிறைந்த. அக்காரம் - சர்க்கரை. சர்க்கரையோடு மணல் கலந்திருந்தால், சர்க்கரையோடு கலந்துள்ளதென்று மணலை யாரும் உண்ணமாட்டார். அதுபோல, கீழ்மக்கள் பெரியாரோடு சேர்ந்திருந்தாலும், பெரியாரோடு சேர்ந்துள்ளாரேயென்று கீழ்மக்களைப் பெரியாரோடொப்பக் கொள்ளக்கூடாது, சிறந்த குணமுள்ளவ ரென்று கொள்ளக் கூடாது என்பது. சர்க்கரையோடு சேர்ந்த மணலுக்குச் சர்க்கரையின் குணம் அமையாமைபோல, பெரியாரோடு சேர்ந்த கீழ் மக்கட்கும் பெரியாரின் குணம் அமையாதென்பது கருத்து. ‘சர்க்கரையும் மணலும் சரியாமா?’ - பழமொழி. (12) 1026. பூத்தாலும் காயா மரமுள மூத்தாலும் நன்கறியார் தாமு நனியுளர், பாத்தி விதைத்தாலு நாறாத வித்துள பேதைக் குரைத்தாலுந் தோன்றா துணர்வு. (பழ) பூத்தாலும் காயா மரம் உள - பூத்தும் காய் காய்க்காத மரங்கள் உண்டு, (அதுபோல), மூத்தாலும் நன்கு அறியாரும் நனி உளர் - ஆண்டில் மூத்தவிடத்தும் நன்மையை அறியாத மக்களும் மிகவும் உள்ளனர், பாத்தி விதைத்தாலும் நாறாத வித்து உள - பாத்தியில் விதைத்தாலும் முளைக்காத விதை களும் உண்டு, (அதுபோல), பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்றாது - மூடனுக்கு நன்கு எடுத்துரைத்தாலும் அறிவு உண்டாகாது. காயா - காயாத, நன்கு - நன்மை. தாம் - ஆசை. நனி - மிக. பாத்தி - பாத்தியில். நாறாத - முளைக்காத. முளையாத. விதை - பாளைவிதை. பேதை - அறிவிலான். உணர்வு - அறிவு. ‘தாமும்’ என்பதன் ‘உம்’ ‘நன்கறியார்’ என்பதனோடும் கூட்டப் பட்டது. பூத்தாலும் காயாத மரம் - பாதிரி முலியன. பூத்தாலும் காய்க்காத மரங்களைப்போல, மூத்தும் நன்மையையறியாத மக்களும் உண்டு. பாத்தியில் விதைத் தாலும் முளைக்காத விதையைப்போல், சொன்னாலும் தெரிந்து கொள்ளாத மூடரும் உண்டு என்பதாம். (13) 1027. ஓர்த்த கருத்தும் உணர்வு முணராத மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க - மூர்க்கன்றான் கொண்டதே கொண்டு விடானாகும் ஆகாதே உண்டது நீலம் பிறிது. (பழ) ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத மூர்க்கர்க்கு - ஆராய்ந் தறிந்த கருத்தினையும் உலகியலையும் சொன்னால் உணர்ந்து கொள்ளாத மூர்க்கர்க்கு, யாதும் உரையற்க - யாதொன்றும் சொல்லற்க, நீலம் உண்டது பிறிது ஆகாது - நீல நிறத்தை உண்ட பொருள் வேறு நிறம் ஆகாது, (அது போல), மூர்க்கன் தான் கொண்டதே கொண்டுவிடான் ஆகும் - மூர்க்கன் தான் கொண்டதையே மனத்தின்கண் கொண்டு அதை விட மாட்டான். ஓர்த்தல் - ஆராய்தல். உணர்வு - உலகியல், ஒழுக்க முறை. உணராத - சொன்னால் அறிந்து கொள்ளாத. மூர்க்கர் - கீழோர். விடானாகும் - விடமாட்டான். நீலம் - நீலநிறம். நீலம் உண்டது - நீலந்தோய்த்த பொருள். நீலச்சாயத்தில் தோய்த்த துணி நீலநிறமே யாகும், வேறு நிறம் ஆகாது. அதாவது, வேறு நிறம் ஒட்டாது. அதுபோல, மூர்க்கன் தான் கொண்ட கருத்தையே மனத்தில் கொண்டி ருப்பான், பெரியோர் சொல்வதைக் கொள்ளமாட்டான். ஆகையால், மூர்க்கனுக்கு அறிவுரை கூறுவதில் பயனில்லை என்பதாம். மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா -பழமொழி காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானும் தான்கண்ட வாறு. (குறள்) (14) 1028. கருந்தொழில ராய கடையாயார் தம்மேல் பெரும்பழி யேறுவ பேணார் - இரும்புன்னை புன்புலால் தீர்க்கும் துறைவமற் றஞ்சாதே தின்ப தழுவதன் கண். (பழ) இரும் புன்னை புன்புலால் தீர்க்கும் துறைவ - பெரிய புன்னை மரமானது புல்லிய புலால் நாற்றத்தை நீக்கும் துறையை யுடைய வனே, அழுவதன் கண்தின்பது அஞ்சாது - பெரிய உயிர் கட்கு இரையாய் அகப்பட்டு அழுகின்ற சிறிய உயிர்கட் குண்டான துன்பத்தைக் கண்டு அதைத் தின்னும் பெரிய உயிர் அஞ்சி அதைத் தின்னாமல் விடாது, (அது போல), கருந் தொழிலர் ஆய கடையா யார் - தீய தொழில் செய்பவரான கீழ் மக்கள், தம்மேல் ஏறுவ பெரும் பழி பேணார் - தம் மீது வந்தேறு வனவான பெரும் பழிகளை வராதபடி பாதுகாக்க மாட்டார். கருந்தொழில் - தீய தொழில், கெட்ட காரியம். கடை யாயார் - கீழ் மக்கள். தம் மேல் ஏறுதல் - தம்மைச் சேர்தல், தம்மைப் பிறர் பழித்தல். பேணுதல் - பாதுகாத்தல்; பழி தம்மைச் சேராமல் பாதுகாத்தல். புன்னை - புன்னை மலர். இருமை - பெருமை. புலால் - புலால் நாற்றம். புல்லிய - மிக்க. மற்று - அசை. கடற்கரையில் உலர்த்தும் மீனின் நாற்றத்தை, அங்குள்ள புன்னை மலரின் மணம் நீக்கும் என்றபடி. அழுவதன் கண் - அழுகின்ற உயிர்க்கு உண்டான துன்பத்திற்கு என்றபடி. அஞ்சுதல் - அழு கின்ற உயிரின் துன்பத்தைக் கண்டு தான் செய்யும் கொலைக்கு அஞ்சுதல். ஓருயிரைக் கொல்லும் உயிர் அக்கொலைக்கு அஞ்சாதது போல, கீழ்மக்கள் தாங்கள் செய்யும் கெட்ட செயல்களுக்கு அஞ்சார் என்பதாம். அதாவது, பிறர் பழிக்கத்தக்க தீய செயல்களைச் செய்யாமல் இரார் என்றபடி. (15) 1029. மிக்க பழிபெரிதுஞ் செய்தக்கால் மீட்டதற்குத் தக்க தறியார் தலைசிறத்தல் - எக்கர் அடும்பலருஞ் சேர்ப்ப அகலுணீ ராலே துடும்ப லெறிந்து விடல். (பழ) எக்கர் அடும்பு அலரும் சேர்ப்ப - மணம் மேட்டில் அடும்பு மலரும் துறையை யுடையவனே, மிக்க பழி பெரிதும் செய்தக் கால் - மிக்க பழியை மிகவும் செய்தால், மீட்டு அதற்கு தக்கது அறியார் தலை சிறத்தல் - பின்பு அதனைத் தீர்க்கத்தக்க வழியை அறிந்து தீர்க்காமல் அப்பழியை மேன் மேலும் செய்தலானது, அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல் - சலதாரை நீரிலே குளித்து விளையாடுவதனோ டொக்கும். பழி - பழிக்கத்தக்க செயல். மீட்டு - பின்னும்., தக்கது - தீர்க்கத்தக்க வழி. தலை சிறத்தல் - மிகுதல். எக்கர் - மணல் மேடு. அடும்பு - கடற்கரையிலுள்ள ஒரு கொடி. சேர்ப்பு - கடற்கரை. அகலுள் - சலதாரை. துடும்பல் எறிதல் - குளித்து விளையாடல். முன் செய்த பழியை நீக்க முயலாமல் பின்னும் மிகுந்த பழியைச் செய்தல், முன்னமே தூய்மையில்லாத ஒருவன் சலதாரை நீரிலே குளித்தலை ஒக்கும். அழுக்குடைய ஒருவன், நல்ல நீரிலே குளித்து அவ் வழுக்கைப் போக்கிக் கொள்ளாமல் அழுக்கு நீரான சலதாரை நீரிலே குளிப்பது போன்றதே, பழியை மிகுதியாகச் செய்தோர் அதைப் போக்க முயலாமல் மேலும் மிகுதியாகப் பழியையே செய்தல் என்பதாம். முன் செய்த பழியைத் தீர்க்க முயலாமல் பின்னும் பழியையே செய்தல் கீழ் மக்களின் இயல்பு என்பது கருத்து. (16) 1030. ஊழாயி னாரைக் களைந்திட் டுதவாத கீழாயி னாரைப் பெருக்குதல் - யாழ்போலும் தீஞ்சொல் மழலையாய் தேனார் பலாக்குறைத்துக் காஞ்சிரை நட்டு விடல். (பழ) யாழ் போலும் தீம் சொல் மழலையாய் - யாழ் போலும் இனிய மழலைச் சொல்லையுடையவளே, ஊழாயினாரைக் களைந்திட்டு உதவாத கீழாயினாரைப் பெருக்குதல் - முறை யாகத் தமக்கு நன்மை செய்வாரை நீக்கிவிட்டுத் தமக்கு ஒரு துன்பம் வந்தால் உதவாத கீழ் மக்களை நட்பாக்கிக் கொள்ளுதல், தேன் ஆர்பலா குறைத்து காஞ்சிரை நட்டு விடல் - தேன் நிறைந்த பலா மரத்தை வெட்டி விட்டு எட்டி மரத்தை வைத்து வளர்ப்பதனோ டொக்கும். ஊழ் - முறை. ஊழாயினார் - முறையாக நன்மை செய்பவர். களைதல் - நீக்குதல். பெருக்குதல் - மிகுதி யாக்குதல். தீம் சொல் - இனிய சொல். மழலை - இனிமை. தீம்சொல் மழலை - மிக இனிய சொல். ஆர் - நிறைந்த. குறைத்தல் - வெட்டுதல். காஞ்சிரை - எட்டிமரம். தமக்கு எப்போதும் ஒழுங்காக நன்மை செய்யும் நல்லோர் களை நீக்கி விட்டு, ஒரு போதும் உதவாத கீழோரை நட்பாக்கிக் கொள்ளுதல், தேன் நிறைந்த இனிய பழங்களை யுடைய பலா மரங்களை வெட்டி விட்டு, கசப்பான நச்சுப் பழங்களை யுடைய எட்டி மரங்களை வைத்து வளர்ப்பதனோ டொக்கும் என்பதாம். (17) 1031. பெரியார்க்குச் செய்யுஞ் சிறப்பினைப் பேணிச் சிறியார்க்குச் செய்து விடுதல் - பொறிவண்டு பூமேல் இசைமுரலு மூர அதுவன்றோ நாய்மேல் தவிசிடு மாறு. (பழ) பொறி வண்டு பூமேல் இசை முரலும் ஊர - புள்ளிகளை யுடைய வண்டுகள் பூவின் மேல் இருந்து இசை பாடுகின்ற ஊரனே, பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணி சிறியார்க்குச் செய்து விடுதல் அது - பெரியார்க்குச் செய்யத் தக்க சிறப்பினை விரும்பிச் சிறியார்க்குச் செய்து விடுதலானது, தவிசு நாய்மேல் இடுமாறு அன்றோ - குதிரை மேல் இடுகின்ற சேணத்தை நாய் முதுகில் இடுவது போலாகு மன்றோ? சிறப்பு - மதிப்பு. பேணுதல் - விரும்புதல். செய்து விடுதல் - செய்தல். பொறி - புள்ளி. முரலுதல் - ஒலித்தல் - பாடுதல். தவிசு - சேணம். பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைச் சிறியார்க்குச் செய்தல், குதிரை மேல் இடும் சேணத்தை நாய் மேலிடு தலைப் போலாகும். சிறியார் அத்தகு சிறப்புக்குத் தகுதியல்லர் என்பதாம். (18) கீழ்மக்கள் செய்கை 1032. நெறியா லுணராமல் நீர்மையு மின்றிச் சிறியா ரெளியாரா லென்று - பெரியாரைத் தங்கணேர் வைத்துத் தகவல்ல கூறுதல் திங்களை நாய்குரைத் தற்று. (பழ) பெரியாரை சிறியார் நெறியால் உணராது - பெரி யாரைச் சிறியார் முறைமையால் உணராமல், நீர்மையும் இன்றி எளியர் என்று - தகுதியும் இல்லாமல் எளியரென்று எண்ணி, தங்கள் நேர்வைத்து தகவு அல்ல கூறுதல் - தங்களுக்கு ஒப்பாகக் கொண்டு தகுதியல்லாத சொற்களைச் சொல்லுதல், திங்களை நாய் குரைத் தற்று - திங்களைப் பார்த்து நாய் குரைத்தாற் போலும். நெறியால் உணர்தல் - பெரியார் சிறியார் என்னும் முறைமை யால், பெரியார் சிறந்தவர் என்பதை எண்ணிப் பார்த்தல். நீர்மை - தகுதி, தன்மை. எளியர் - வறியவர். ஆல் - அசை. நேர் - ஒப்ப. தகவு - தகுதி. அற்று - போலும். பெரியோரைப் பார்த்துக் கீழ்மக்கள் தகாத சொற் களைச் சொல்வது, திங்களைப் பார்த்து நாய் குரைப்பது போலாகும். (19) 1033. கண்ணிற் கயவர் கருத்துணர்ந்து கைமிக நண்ணி யவர்க்கு நலனுடைய செய்பவேல் எண்ணி யிடர்வரும் என்னார் புலிமுகத் துண்ணி பறித்து விடல். (பழ) கண் இல்கயவர் கருத்து உணர்ந்து - கண்ணோட்ட மில்லாத கீழ்மக்கள் விரும்பியதை அறிந்து, கைமிக நண்ணி - அதைச் செய்யத் துணிந்து, இடர் வரும் என்னார் - இது செய்தால் துன்பம் உண்டாகும் என்று எண்ணாராய், அவர்க்கு நலனுடைய எண்ணி செய்பவேல் - அக்கீழ் மக்கட்கு நன்மை யாயினவற்றை ஆராய்ந்து செய்வாராயின் (அது), புலி முகத்து உண்ணி பறித்து விடல் - புலி முகத்தில் உள்ள உண்ணியை அருளினால் எடுத்து விடுவதனோடொக்கும். கண் - கண்ணோட்டம். கயவர் - கீழ் மக்கள். கருத்து - எண்ணம், விருப்பம். கை - செயல். கைமிக - செய்ய. நண்ணி - அச்செயலைச் செய்யத் துணிந்து. நலனுடைய - நன்மை. இடர் - துன்பம். உண்ணி - ஆடு மாடு நாய் முதலிய விலங்கு களின் உடலில் இருந்து கொண்டு குருதியை உண்ணும் ஒருவகைப் பூச்சி. உண்பது - உண்ணி. இது உணி எனவும் வழங்கும். உண்ணி பிடித்த விலங்குகள் இளைத்து விடும். குருதியைக் குடித்துப் புலியை இளைக்கச் செய்யும் என்று இரங்கி, அதன் முகத்திலுள்ள உண்ணியை எடுப்பவர் அப் புலிக்கு இரையாவது போல, கீழ்மக்கட்கு நன்மை செய்வோர் அவரால் துன்பமடைவர் என்பதாம். (20) 1034. சொல்லெதிர்ந்து தம்மை வழிபட் டொழுகலராய்க் கல்லெறிந்தாற் போலக் கலாந்தலைக் கொள்வாரை இல்லிருந் தாற்ற முனிவித்தல்; உள்ளிருந் தச்சாணி தாங்கழிக்கு மாறு. (பழ) சொல் எதிர்ந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய் - தமது சொல்லை ஏற்றுத் தமக்குக் கீழ்ப்படிந்து நடக்காதவராய், கல் எறிந்தால் போல கலாம் தலைக் கொள்வாரை - கல்லை எறிந்தாற் போல கடுஞ்சொற்கள் சொல்லி பகைகொள்வாரை, இல் இருந்து ஆற்ற முனிவித்தல் - அவர்கள் வீட்டிலிருந்தே அவரை மிகவும் வெகுளும்படி செய்தல், உள் இருந்து அச்சாணி கழிக்கும் ஆறு - வண்டிக்குள்ளிருந்து அச்சாணியைக் கழற்றுவதனோடொக்கும். எதிர்தல் - ஏற்றுக் கொள்ளுதல், வழிபட்டு ஒழுகல் - கீழ்ப் படிந்து நடத்தல். கல்லெறிதல் - கடுஞ்சொல் சொல்லுதல், கலாம் - பகை. இல் - வீடு. ஆற்ற - மிக. முனிவித்தல் - சினங் கொள்ளச் செய்தல். உள் - வண்டிக்குள். அச்சாணி - கடை யாணி. தாம் - அசை. கழித்தல் - கழற்றுதல், நீக்குதல். தமது சொல்லையேற்றுக் கீழ்ப்படிந்து நடக்காது, கடுஞ் சொற் சொல்லிப் பகை கொள்ளும் கீழ்மக்களை, அவர் வீட்டி லிருந்தே சின மூட்டுவது, வண்டிக்குள் இருந்து கடை யாணியைக் கழற்றி விடுவது போலாம். கீழ்மக்கள் அறிவுரையை ஏற்று அதன்படி நடவாரா தலால், அவர்க்கு ஏதாவது நல்லதைச் சொன்னால் சினங் கொண்டு தீமை செய்வர் என்பதாம். வண்டிக்குள் இருந்து கடையாணியைக் கழற்றினால் வண்டி கீழே விழுந்து துன்புற நேர்வது போல, கீழ்மக்கள் வீட்டிலிருந்தே அவர்க்குச் சினமுண்டாகும்படி கூறினால் அவரால் துன்புற நேரும் என்பது கருத்து. (21) 1035. நாணார் பரியார் நயனில செய்தொழுகும் பேணா வறிவிலா மாக்களைப் - பேணி ஒழுக்கி யவரோ டுடனுறை செய்தல் புழுப்பெய்து புண்பொதியு மாறு. (பழ) நாணார் பரியார் நயன் இல செய்தொழுகும் - பழிக்கு நாணாமல் பிறர் மேல் அன்பு கொள்ளாமல் நன்மையில்லாத வற்றையே செய்யும், பேணா அறிவிலா மாக்களை - பிறரால் விரும்பப்படாத அறிவில்லாத கீழ்மக்களை, பேணி ஒழுக்கி அவரோடு உடனுறை செய்தல் - விரும்பி நடத்தித் தாம் அவரோடு உடனுறைதலைச் செய்தல், புழுபெய்து புண் பொதியும் ஆறு - புழுவை உள்ளே வைத்துப் புண்ணை மூடிக் கட்டி வைத்ததனோ டொக்கும். நாணுதல் - பிறர் பழிக்கத்தக்க செயலைச் செய்தற்கு வெட்கப் படுதல். பரிவு - அன்பு. நயன் - நன்மை. பேணாத - விரும்பப்படாத. பிறவினை. இலா - இலாத. ஒழுக்குதல் - நடத்துதல். விரும்பி நடத்துதல் - தம்போல நல்லொழுக்கத் துடன் நடக்கும்படி செய்தல். பெய்து - வைத்து. பொதிதல் - மூடுதல். புழுவை உள்ளே வைத்துப் புண்ணை மூடிக் கட்டினால், புண் சீப்பிடித்துப் புரையோடிக் கேடுண்டாக்குவது போல, பழிக்கு நாணாமலும் பிறரிடம் அன்பில்லாமலும் தீமையே செய்யும் அறிவில்லாத கீழ்மக்களோடு கூடி வாழ்தல் கேட்டைத் தரும் என்பதாம். உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட் பாம்போ டுடனுறைத் தற்று. (குறள்) (22) 1036. பொல்லாத சொல்லி மறைந்ததொழுகும் பேதைதன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய் மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலுந்தன் வாயாற் கெடும். (பழ) நல்லாய் - நற்குணமுடையவளே, மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலும் தன் வாயால் கெடும் - மணலுக் குள்ளே முழுகி மறைந்து வாழும் தவளையும் தன் வாயா லேயே கெடும், (அதுபோல), பொல்லாத சொல்லி மறைந்து ஒழுகும் பேதை - பிறர் மேல் பொல்லாங்கு சொல்லி மறைந்து வாழும் அறிவிலான், தன் சொல்லாலே தன்னைத் துயர்ப் படுக்கும் - தான் சொல்லும் சொல்லாலே தன்னைத் துன்பத்திற் குள்ளாக்குவான். பொல்லாத சொல்லல் - புறங்கூறுதல், மறைந் தொழுகல் நல்லவன் போல் நடத்தல். பேதை - அறிவிலான். துயர்ப் படுத்தல் - துன்பத்துக்குள்ளாக்கிக் கொள்ளல், துன்பமுறச் செய்து கொள்ளல். நுணல் - தவளை. மணலுள் மறைந்து வாழும் தவளை சும்மா இராமல் கத்தி, தான் இருக்கும் இடத்தைத் தானே வெளியிட்டு நரி முதலிய வற்றிற் கிரையாகும். அதுபோல, மூடன் சும்மா இராமல் புறங்கூறித் தன் இயல்பைத் தானே வெளியிட்டுத் துன்பத்தைத் தேடிக் கொள்வான். தவளையின் சொல்லே அதைக் கெடுத்தல் போல, மூடன் சொல்லே அவனைக் கெடுக்கும் என்பது. மூடன் ஒருவரைப் பற்றிப் பலரிடமும் புறங்கூறுதலால், இவன் தன்மை வெளிப்பட்டுப் புறங்கூறப்பட்டோர் பலரும் இவனுக்குக் கேடு செய்வர் என்பது கருத்து. (23) 1037. முதுமக்க ளன்றி முனிதக்கா ராய பொதுமக்கள் பொல்லா வொழுக்கம் - அதுமன்னும் குறைத்து வீழுங் கொடியருவி நன்னாட மன்றத்து மையல்சேர்ந் தன்று. (பழ) மன்னும் குன்றத்து வீழும் கொடி அருவி நல் நாட - நிலை பெற்ற குன்றத்து நின்று வீழ்கின்ற கொடி போன்ற அருவியை யுடைய நல் நாடனே, முது மக்கள் அன்றி - அறிவு முதிர்ந் தவர்கள் அல்லாமல், முனி தக்கார் ஆய பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் அது - யாவராலும் வெறுக்கத்தக்கவரான சிறப்பில் லாதவருடைய பொல்லா ஒழுக்கமாகிய அது, மறைத்து மையல் சேர்ந்தன்று - அவைக்கண் இருந்தானொரு வனுக்குப் பித்துப் பிடித்தது போலும். முது மக்கள் - அறிவு முதிர்ந்தவர், அறிவாளிகள். முனி தக்கார் - முனிதல் - வெறுத்தல். பொதுமக்கள் - சிறப்பில்லா தவர். பொல்லா ஒழுக்கம் - தீய வொழுக்கம். மன்னுதல் - நிலை பெறுதல். கொடி அருவி - கொடிபோல் நுடங்கும் அருவி. நுடங்குதல் - வளைதல். மன்றம் - அவை. மையல் - பித்து . பித்துப் பிடித்தவனைக் கண்டு பலரும் அஞ்சுவது போல, தீய வொழுக்கமுடைய கீழ்மக்களைக் கண்டு பலரும் அஞ்சுவர் என்பதாம். பித்தர்கள் கண்டபடி பேசுதல், கல்லாலடித்தல் முதலிய கெடுதல்செய்வது போலவே, கீழ்மக்களும் திட்டுதல், தீங்கு செய்தல் முதலியன செய்வர். எனவே, கீழ் மக்களை அஞ்சி அகன்று வாழ்வதே நல்லது என்பது. (24) 1038. உறுமக்க ளாக வொருவரை நாட்டிப் பெறுமாற்ற மின்றிப் பெயர்த்தே யொழிதல், சிறுமைக் கமைந்ததோர் செய்கை யதுவே குறுமக்கள் காவு நடல். (பழ) உறுமக்கள் ஆக ஒருவரை நாட்டி - ஒரு காரியஞ் செய்பவ ராக ஒருவரை ஏற்படுத்தி, பெருமாற்றம் இன்றியே பெயர்த்து ஒழிதல் - அவர் செய்ததொரு குற்றம் உண் டென்னும் சொல் இன்றியே அவரை அக்காரியஞ் செய்வதி னின்றும் நீக்குதல், சிறுமைக்கு அமைந்ததோர் செய்கை - கீழ்மக்களுக்கு ஏற்றதோர் செய்கையாம். அது குறுமக்கள் காவு நடல் - அச்செய்கை சிறு பிள்ளைகள் சோலை வைப்பது போலாகும். உறுதல் - காரியஞ் செய்தல். உறுமக்கள் - காரியஞ் செய்வோர், துணை செய்வோர். நாட்டுதல் - ஏற்படுத்துதல். மாற்றம் - சொல். பெறு மாற்றம் - பெற்ற சொல்; இவர் இப் பேர்ப் பட்டவர் என்று சொல்லப்பெற்ற சொல். பெயர்த்து ஒழிதல் - நீக்கி விடுதல். சிறுமை - சிறுமைக் குணமுடைய கீழ்மக்களைக் குறித்தது. சிறுமைக்கு அமைந்த தோர் செய்கை - கீழ்மக்களுக்கு இயற்கையான செய்கை. குறுமக்கள் - சிறுவர்கள். கா - சோலை. ஒருவரை ஒரு காரியஞ் செய்ய ஏற்படுத்தி, அவர் யாதொரு குற்றமும் செய்யாமலிருக்கவும் அவரை அக்காரியஞ் செய்தலி னின்றும் நீக்கி விடுதல் கீழ் மக்களின் இயல்பாகும். அது, பூந்தோட்டம் உண்டாக்கப் புகுந்த சிறுவர்கள் செடிகளை நட்ட இடத்தில் தரிக்க விடாமல், நடவும் பிடுங்கவும் இருப்பதைப் போன்றதாகும் என்பதாகும். நன்கு ஆராய்ந்து பார்த்து ஒருவரை வேலைக்கு அமர்த்த வேண்டும். அவ்வாறு அமர்த்தினால் இடையில் நீக்கக் கூடாது. அப்படி நீக்குவது கீழ்மக்கள்செய்கை என்பதாம். (25) 1039. உரைசான்ற சான்றோர் ஒடுங்கி யுறைய நிரையுள ரல்லார் நிமிர்ந்து பெருகல் வரைதாழ் இலங்கருவி வெற்ப அதுவே சுரையாழ அம்மி மிதப்பு. (பழ) வரை தாழ் இலங்கு அருவி வெற்ப - பக்க மலை யினின்று வீழும் விளங்குகின்ற அருவிகளை யுடைய மலை நாடனே, உரை சான்ற சான்றோர் ஒடுங்கி உறைய - புகழமைந்த பெரியோர்கள் ஒடுங்கி வாழ, நிரை உளர் அல்லார் - நிமிர்ந்து பெருகல் அது- நல்ல குடிமரபிற் சேராதவரான கீழோர் செல்வத்தால் ஓங்கிப் பெருகுத லானது, சுரை ஆழ அம்மி மிதப்பு - தண்ணீரிலே சுரைக்காய் ஆழ அம்மி மிதப்பதை ஒக்கும். உரை - புகழ். சான்ற - அமைந்த. சான்றோர் - பெரியோர். ஒடுங்கி உறைதல் - வறுமையால் வாடிவருந்தி வாழ்தல். நிரை வரிசை. இங்கே நல்ல குடி மரபைக் குறித்து. நிரை உளர் அல்லார் - நற்குடிப்பிறப்பினரல்லாத கீழ்மக்கள் என்ற படி. நிமிர்தல் - செல்வத்தால் சிறந்து வாழ்தல். வரை - பக்க மலை. தாழ்தல் - வீழ்தல். இலங்குதல் - விளங்குதல். வெற்பு - மலை. காய்ந்த சுரைக்காய் தண்ணீரில் ஆழ்வதும், அம்மிக்கல் மிதப்பதும் பொருந்தாமை போல, பெரியோர்கள் செல்வ மின்றி ஒடுங்கி வாழ, சிறியோர் செல்வத்தால் சிறந்து வாழ்தல் பொருந்தாது என்பதாம். இவ்வாறு தலைகீழாய் இருத்தல் தகாதென, கீழோர் தீய வழிகளில் செல்வந் திரட்டிச் செருக்குற்று வாழ்தலை இகழ்ந்த வாறாம். (26) 1040. தேர்ந்துகண் ணோடாது தீவினையு மஞ்சலராய்ச் சேர்ந்தாரை யெல்லாஞ் சிறிதுரைத்துத் - தீர்ந்த விரகர்கட் கெல்லாம் வெறுப்பனவே செய்யும் நரகர்கட் கில்லையோர் நஞ்சு. (பழ) தேர்ந்து கண்ணோடாது தீவினையும் அஞ்சலராய் - ஆராய்ந்து பார்த்து ஒருவரிடத்தும் கண்ணோடுதலும் செய் யாமல் தீய காரியங்களையும் அஞ்சாது செய்து, சேர்ந்தாரை எல்லாம் சிறிது உரைத்து - தம்மை ஓர் உதவி வேண்டி அடைந்தார் எல்லாரையும் சிறுமைப்படச் சொல்லி, தீர்ந்த விரகர்கட்கு எல்லாம் வெறுப்பனவே செய்யும் - தமது நெருங்கிய சுற்றத்தார்க் கெல்லாம் வெறுக்கத் தக்கவை களையே செய்யும், நரகர்கட்கும் நஞ்சு இல்லையோ - கீழ்மக்கட்குக் கொல்ல வல்லதான ஒரு நஞ்சு இல்லையோ. தேர்ந்து கண்ணோடல் - கண்ணோடத் தக்கவரை ஆராய்ந்து பார்த்துக் கண்ணோடுதல். கண்ணோட்டம் - இரக்கம், தீவினை - கெட்ட காரியம். சேர்ந்தார் - ஓர் உதவி வேண்டித் தம்மை அடுத்தோர். சிறிதுரைத்தல் - இழித்துக் கூறுதல், பழித்தல். விரகர் - உறவினர். தீர்ந்த - நெருங்கிய, மிக்க. நரகர் - மக்கட் பண்பில்லாத கீழ்மக்கள். உலகிற்குப் பலவகையிலும் கேடு சூழும் கீழ்மக்கள் அழிந் தொழிவதே மேல் என, கீழ்மக்களின் இழிதன்மையை வெறுத்துக் கூறியது. (27) 1041. ஐங்குரவ ராணை மறுத்தலும், ஆர்வுற்ற எஞ்சாத நட்பினுட் பொய்வழக்கும் - நெஞ்சமர்ந்த கற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும் நற்புடையி லாளர் தொழில். (திரி) ஐங்குரவர் ஆணை மறுத்தலும் - தாய் தந்தை முதலிய பெரியோர்கள் ஐவரின் கட்டளையை மீறி நடத்தலும், ஆர்வு உற்ற எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும் - விரும்பிய குறையாது வளர்கின்ற நட்பினரிடத்துப் பொய் பேசுதலும், நெஞ்சு அமர்ந்த கற்புடையாளைத் துறத்தலும் - மனங் கலந்த கற்புடைய மனைவியைக் கைவிடுதலும், இம் மூன்றும் நற்புடை இலாளர் தொழில் - ஆகிய இம் மூன்றும் நற்குண மில்லாத கீழ்மக்கள் தொழில்களாம். ஐங்குரவர் - தாய், தந்தை, அண்ணன், ஆசிரியர், அரசன், அரசனுக்குப் பதில், தலைவரைக் கொள்ளலாம் ஆணை - கட்டளை. மறுத்தல் - மீறி நடத்தல். ஆர்தல் - விரும்புதல், எஞ்சாத - குறையாத, வழக்கு - பேச்சு. வழங்குதல் - பேசுதல், அமர்தல் - கலத்தல், கற்பு - மனவுறுதி. துறத்தல் - தொடர் பின்றி நீக்கி விடுதல். நற்புடை - நற்குணம். இலாளர் - இல்லாதவர், கீழ்மக்கள். தாய் தந்தை முதலிய பெரியோர்கள் சொல்லை மீறி நடத் தலும், சிறந்த நண்பர்களிடத்துப் பொய் பேசுதலும், மனவுறுதி யுடைய மனைவினையத் துறத்தலும் கீழ்மக்கள் தொழில்க ளாகும் என்பதாம். (28) 1042. கல்லா வொருவனைக் காரணங் காட்டினும் இல்லைமற் றொன்று மறனுணர்தல் - நல்லாய் நறுநெய் நிறைய முகப்பினு மூழை பெறுமோ சுவையுணரு மாறு. (அற) நல்லாய் - நற்குணமுடையவளே, மூழை நறுநெய் நிறைய முகப்பினும் - அகப்பை யானது நல்ல நெய் கலந்த உணவை நிறைய முகக்குமாயினும், சுவை உணருமாறு பெறுமோ - சுவை யினை அறியுந் தன்மையை உடைய தாகுமோ? ஆகாது, (அது போல), கல்லா ஒருவனை காரணம் காட்டினும் - படியாத மூடனுக்குக் காரணங்காட்டி விளக்கிச் சொன்னாலும், அறன் உணர்தல் ஒன்றும் இல்லை - அறத்தினை ஒரு சிறிதும் உணரான். கல்லா - கல்லாத, ஒருவனை - ஒருவனுக்கு. காரணம் காட்டல் - எடுத்துக் காட்டுடன் நன்கு விளக்கிக் கூறுதல். மற்று - அசை. நெய் - நெய் கலந்த உணவு. நறுநெய் - நல்ல நெய். மூழை - அகப்பை. உணருமாறு பெறுமோ - உணரு மோ - உடைய தாகுமோ. சுவையுடைய குழம்பு முதலியவற்றை நிறைய முகந் தாலும் அகப்பை அவற்றின் சுவையை அறியுந் தன்மையை உடையதா காதது போல, கீழ்மக்களுக்கு நல்லதை எவ்வாறு விளக்கிக் கூறினும் சிறிதும் உணரமாட்டார் என்பதாம். (29) 1043. வைகலும் நீருட் கிடப்பினுங் கல்லிற்கு மெல்லென்றல் சால வரிதாகும் - அஃதேபோல் வைகலும் நல்லறங் கேட்பினுங் கீழ்கட்குக் கல்லினும் வல்லென்னும் நெஞ்சு. (அற) வைகலும் நீருள் கிடப்பினும் - எப்போதும் நீரினுள் ளேயே கிடந்தாலும், கல்லிற்கு மெல்லென்றல் சால அரிது ஆகும் - கல்லுக்கு மென்மையாதல் சிறிதும் இல்லை; அஃதே போல் வைகலும் நல் அறம் கேட்பினும் - அது போல, நாடோறும் நல்ல அற நூல்களைக் கேட்டாலும், கீழ்மக்கட்கு நெஞ்சு கல்லினும் வல்லென்னும் - கீழ்மக்களுக்கு மனம் கல்லைக் காட்டிலும் வன்மையுடையதாகவே இருக்கும். வைகல் - நாள். வைகலும் - நாடோறும். மெல்லென்றல் - மெதுவாதல். சால - மிக. அரிது - இல்லை. சால அரிது - சிறிதும் இல்லை. அறம் - அறநூல்கள். வல்லென்னும் - இளகாது, கெட்டி யாக இருக்கும். அதாவது, அறநூற் கருத்துக்கள் அவர் நெஞ்சில் புகா என்றபடி. கல் எவ்வளவு நாளைக்குத் தண்ணீர்க்குள் கிடந்தாலும் கல்லுக்குள் தண்ணீர் புகுந்து கல்லை மென்மையுடைய தாக்காத வாறுபோல, கீழ்மக்கள் எவ்வளவு நாளைக்கு அறவுரையைக் கேட்டாலும் அவர்கள் மனம் அவற்றை யேற்று நல்வழிப்படா தென்பதாம். (30) 1044. கயத்திடை யுய்த்திடினுங் கன்னனையா தென்றும் பயற்றுக் கறிவேவா தற்றால் - இயற்றி அறவுரை கேட்ட விடத்தும் அனையார் திறவுரை தேறா தவர். (அற) கயத்திடை உய்த்திடினும் கல் நனையாது - குளத்தில் போட்டு வைத்தாலும் கல் ஊறி மெல்லென்றாகாது, என்றும் பயறுகறி வேவாது அற்று - எப்போதும் பயறுகளுள் பத்தினிப் பயறு கறியினிடத்தே வேவதில்லை அதுபோல, இயற்றி அறவுரை கேட்ட இடத்தும் - நன்கு அறநூல்களைக் கேட்ட போதிலும், அனையார் திறவுரை தேறாதவர் - கீழ்மக்கள் அவ்வறவுரைகளை அறியாதவர் களே யாவர். கயம் - குளம். உய்த்தல் - போட்டு வைத்தல். பத்தினிப் பயறு - பாசிப் பயறு, தட்டைப் பயறு, நரிப் பயறு முதலிய பயறுகளில் சில பயறுகள் எவ்வளவு நேரம் வேக வைத்தாலும் கொஞ்சங்கூட வேகாமல் அப்படியே இருக்கும். அதற்குப் ‘பத்தினிப்பயறு’ என்று பெயர். வேகாததை ‘நெறழ்’ என்பதும் உண்டு. கறி - குழம்பு. குழம்பில் அப்பத்தினிப் பயறுகள் வேகா வென்பதாம். அற்று - போலும். ஆல் - அசை. இயற்றுதல் - இயலச் செய்தல், நன்கு சொல்லுதல். அனையார் - அத்தகைய கீழ்மக்கள். திறவுரை - அறவுரை. தேறாதவர் - அறியாதவர். குளத்துக்குள் போட்டு வைத்தாலும் கல் நனையாது. எந் நேரம் வேகவைத்தாலும் பத்தினிப் பயறு வேகாது. அதுபோல, நன்கு கேட்டாலும் கீழ்மக்களுக்கு அறவுரை ஏறாது என்பதாம். இதுவும் முன்னைய பாட்டுப்போன்ற கருத்துடையதே. (31) 1045. கண்கூடாப் பட்டது கேடெனினுங் கீழ்மக்கட் குண்டோ வுணர்ச்சிமற் றில்லாகும் - மண்டெரி தான்வாய் மடுப்பிம் மாசுணங் கண்டுயில்வ பேரா பெருமூச் செறிந்து. (நீவெ) மண்டு எரி வாய் மடுப்பினும் - மிக்க நெருப்புத் தம்மைச் சூழ்ந்து எரிந்தாலும், மாசுணம் பேரா பெருமூச்சு எறிந்து கண் துயில்வ - பெரிய பாம்புகள் அவ்விடத்தி னின்றும் பெயராமல் பெருமூச்சு விட்டுத் தூங்கிக்கொண் டிருக்கும், (அதுபோல), கேடு கண்கூடா பட்டது எனினும் - தமக்கு வரும் கெடுதிகளை நேராகவே பார்த்தார்களானாலும், கீழ்மக்கட்கு உணர்ச்சி உண்டோ இல்லாகும் - கீழ்மக்களுக்கு அக்கேடுகளினின்றும் தப்பிப் பிழைக்கும் அறிவு உண்டோ? இல்லையாகும். கண்கூடு - நேரில் காண்பது, கண்ணாற் காண்பது. உணர்ச்சி - அறிவு. மற்று - அசை. மண்டுதல் - மிகுதல். தான் - அசை. வாய் மடுத்தல் - சூழ்தல். மாசுணம் - பெரும் பாம்பு, மலைப் பாம்பு. பேரா - பேராமல் - ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம். சுற்றிலும் தீச் சூழ்ந்து கொண்டாலும் மலைப் பாம்பு அவ்விடத்தைவிட்டுப் போகாமல் பெருமூச்சு விட்டுக் கொண்டு தூங்கும். அதுபோல, கீழ்மக்கள் தமக்கு வருங் கேட்டினைக் கண்ணாரக் காண்பாராயினும் அக் கேட்டிலிருந்துந் தப்பிப் பிழைக்க எண்ணா ரென்பதாம். தீமை செய்வதால் தமக்குத் தீமை வரும் என்பதை அறிந்தும் கீழ்மக்கள் மீண்டும் தீமையே செய்வர் என்பது கருத்து. (32) 1046. நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல் கற்றாரைக் கற்றோரே காமுறுவர் - கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் காக்கை யுகக்கும் பிணம். (வாக்) நல் தாமரை கயத்தில் நல் அன்னம் சேர்ந்தால் போல - நல்ல தாமரைக் குளத்தில் நல்ல அன்னப் பறவைகள் சேர்ந்தாற் போல, கற்றாரைக் கற்றோரே காமுறுவர் - கற்றவர்களைக் கற்றவர்களே விரும்புவர்; காக்கை முதுகாட்டில் பிணம் உகக்கும் - காக்கைகள் சுடுகாட்டிலுள்ள பிணத்தை விரும்பும், (அது போல), கற்பு இலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் - கல்வி யறி வில்லாத மூடர்களை மூடர்கள் விரும்புவர். தாமரைக் குளத்தை அன்னம் விரும்புவதுபோல, கற்ற அறிஞரைக் கற்ற அறிஞர் விரும்புவர். சுடுகாட்டிலுள்ள பிணத்தைக் காக்கை விரும்புவதுபோல, கல்லாத மூடரைக் கல்லாத மூடரே விரும்புவர் என்பதாம். கீழ்மக்கள் மேன்மக்களோடு கூடி வாழ விரும்பார் என்பது கருத்து. (33) 1047. பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில் உற்றா ருகந்தா ரெனவேண்டார் - மற்றோர் இரணங் கொடுத்தா லிடுவர் இடாரே சரணங் கொடுத்தாலுந் தான். (நல்) பெற்றார் - தாய் தந்தையர், பிறந்தார் - உடன் பிறந்தவர், பெரு நாட்டார் - பெரிய தம் நாட்டினர், பேருலகில் உற்றார் உகந்தார் என வேண்டார் - பெரிய உலகத்தில் உள்ள உறவினர் நண்பர்கள் என்று விரும்பாத கீழ் மக்கள், சரணம் கொடுத் தாலும் இடார் - காலில் விழுந்து வணங்கினாலும் பெற்றோர் முதலி யோருக்குக் கொடுக்க மாட்டார், மற்றோர் இரணம் கொடுத்தால் இடுவர் - தொடர்பில்லாத கள்வர் முதலிய அயலார் அடி கொடுத்தால் அவர்கட்குக் கொடுப்பர். பெருநாட்டார் - தாய் நாட்டினர். உற்றார் - சுற்றத்தார். உகந்தார் - நண்பர். வேண்டார் - விரும்பாதவர் - வினையா லணையும் பெயர். மற்றோர் - அயலார் - தொடர்பில்லாத பிறர். இரணம் - புண், காயம். இரணம் கொடுத்தல் - புண் உண்டாகும் படி அடித்தல். இடுதல் - கொடுத்தல். சரணம் - கால். சரணம் கொடுத்தல் - காலில் விழுந்து வணங்குதல். அதாவது, கெஞ்சிக் கேட்டல். தாம் - அசை. கீழ்மக்கள், பெற்றார் பிறந்தார் எனக் கருதியாவது, கெஞ்சிக் கேட்கிறார்களே எனக் கருதியாவது ஒன்றுங் கொடார், கள்வர் முதலியோர் அடித்தால் கொடுப்பர் என்பதாம். (34) 1048. உண்டு குணமிங் கொருவர்க் கெனினுங்கீழ் கொண்டு புகல்வதவர் குற்றமே - வண்டுமலர்ச் சேக்கை விரும்புஞ் செழும்பொழில்வாய் வேம்பன்றோ காக்கை விரும்புங் கனி. (நன்) செழும் பொழில்வாய் மலர்ச் சேக்கை வண்டு விரும்பும் - செழிப்புள்ள சோலையினிடத்தில் பூப்படுக்கையை வண்டுகள் விரும்பும், வேம்பு அன்றோ காக்கை விரும்பும் கனி - வேப்பம் பழம் அல்லவோ காக்கை விரும்பும் பழமாகும், (அதுபோல), இங்கு ஒருவர்க்கு குணம் உண்டு எனினும் - இவ்வுலகத்தில் ஒருவர்க்கு நல்ல குணம் இருக்கிற தென்றாலும், கீழ் கொண்டு புகல்வது அவர் குற்றமே - கீழோர் எடுத்துக் கூறுவது அவருடைய குற்றத்தையே யாகும். கீழ் - கீழ்மக்கள். புகல்வது - கூறுவது. சேக்கை - படுக்கை. மலர்ச்சேக்கை - மலராகிய படுக்கை. வண்டு மலரை விரும்பும் என்றபடி. பொழில் - சோலை. வாய் - இடம். வண்டு மலரை விரும்புவது போல, மேலோர்கள் ஒருவரிடம் உள்ள நல்ல குணத்தையே எடுத்துப் பேசுவர். கீழ்மக்களோ, பிறரிடங் காணப்படும் கெட்ட குணத்தையே எடுத்துக் கூறுவர் என்பதாம். இது கீழோரியல்பு. (35) 1049. முனிவினு நல்குவர் மூதறிஞ ருள்ளக் கனிவினு நல்கார் கயவர் - நனிவிளைவில் காயினு மாகுங் கதலிதா னெட்டிபழுத் தாயினு மாமோ வறை. (நன்) கதலி நனிவிளைவு இல் காயினும் ஆகும் - வாழைக்காய் மிகவும் முற்றாத காயாக இருந்தாலும் பயன்படும், எட்டி பழுத்து ஆயினும் ஆமோ அறை - எட்டிக்காய் நன்றாகப் பழுத்தாலும் பயன்படுமோ நீ கூறுவாயாக, (அதுபோல), மூதறிஞர் முனி வினும் நல்குவர் - சிறந்த அறிவாளிகள் சினமுற்ற போதும் இல்லை யென்னாது கொடுப்பர்; கயவர் உள்ளம் கனிவினும் நல்கார் - கீழ்மக்கள் மனமகிழ்ச்சியாய் இருக்கும்போதும் ஒன்றும் கொடார்கள். முனிவு - சினம், நல்குதல் - கொடுத்தல். கனிவு - மகிழ்ச்சி. கயவர் - கீழ்மக்கள். நனி - மிக. விளைவு - முற்றுதல். முற்றாத காய் - பிஞ்சுக் காய். கதலி - வாழை. தான் - அசை. அறை - சொல். வாழைக்காய் முற்றாது பிஞ்சாக இருக்கும் போதும் பொரிய லாகப் பயன்படுவதுபோல, மேலோர்கள் சினங் கொண்டுள்ள போதும் உதவுவர். எட்டிக்காய் நன்கு பழுத் தாலும் பயன் படாததுபோல, கீழ்மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போதும் ஒன்றும் உதவார் என்பதாம். (36) 1050. கற்ற வறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள் மற்றையர்தா மென்று மதியாரே - வெற்றிநெடும் வேல்வேண்டும் வாள்விழியாய்! வேண்டா புளிங்காடி பால்வேண்டும் வாழைப் பழம். (நன்) வெற்றி நெடுவேல் வேண்டும் வாள்விழியாய் - வெற்றி பொருந்திய நெடிய வேல் விரும்பும் ஒளியையுடைய கண் களை யுடையவளே, வாழைப் பழம் பால் வேண்டும் - வாழைப்பழம் பால் வேண்டும் - வாழைப் பழத்தை இனிமை யான பால் விரும்பும், புளிங்காடி வேண்டா - புளிப்பான காடி நீர் வாழைப் பழத்தை விரும்பாது, (அதுபோல), கற்ற அறிவினரை - கல்வி யறிவுடை யோரை, மேன்மக்கள் கா முறுவர் - மேன்மக்கள் விரும்புவர், மற்றையர் என்றும் மதியார் - கீழ்மக்கள் எப்போதும் மதிக்க மாட்டார்கள். காமுறுதல் - விரும்புதல். மற்றையர் - கீழ்மக்கள். தாம் - அசை. வாள் - ஒளி. வேல் வேண்டும் விதி - வேல்போலக் கூர்மையான கண். வேண்டா - வேண்டாது; ஈறுகெட்டது. வேண்டுதல் - விரும்புதல். வாழைப்பழத்தோடு பால் சேருமே யல்லாது புளிங்காடி சேராது, அதுபோல, மேன்மக்களோடு மேன்மக்கள் சேர்வார் களேயல்லாமல் கீழ்மக்கள் சேரார் என்பது. (37) 1051. ஈக்கு விடந்தலையில் எய்துமிருந் தேளுக்கு வாய்த்த விடங்கொடுக்கில் வாழுமே - நோக்கரிய பைங்கணர வுக்குவிடம் பல்லளவே துர்ச்சனருக் கங்கமுழு தும்விடமே யாம். (நீவெ) ஈக்குத் தலையில் விடம் எய்தும் - தேனீக்குத் தலையில் நஞ்சு இருக்கும், இருந்தேளுக்கு வாய்த்த விடம் கொடுக்கில் இருக்கும் - பெரிய தேளுக்குப் பொருந்திய நஞ்சு கொடுக்கில் இருக்கும், நோக்கு அரிய பைங்கண் அரவுக்கு விடம் பல் அளவே - நோக்கு தற்கரிய அழகிய கண்களையுடைய பாம்புக்கு நஞ்சு பல்லில் மட்டும் இருக்கும், துர்ச்சனருக்கு அங்கம் முழுதும் விடமே ஆம் - கீழ்மக்களுக்கு உடல் முழுதும் நஞ்சாகவே இருக்கும். ஈ - தேனீ, தும்பி முதலியன. விடம் - நஞ்சு. தேனீ, குழவி, தும்பி, கோத்தும்பி முதலிய ஈ வகைகளுக்கெல்லாம் கொடுக்கில் தான் நஞ்சு இருக்கிறது. தலையில் இல்லை. அதாவது, ஈக்கள் கொடுக்கால் கொட்டுகிறதேயல்லாமல் வாயால் கடிப்ப தில்லை. ஈக்குத் தலையில் நஞ்சு இருக்கும் என்பது ஆராய்ச்சிக் குரியது. எய்தும் - இருக்கும். நோக்கரிய - கொடிய என்றபடி. பைங்கண் - அழகிய கண். துர்ச்சனர் - கீழ்மக்கள், அங்கம் - உடல். தேனீக்குத் தலையிலும், தேளுக்குக் கொடுக்கிலும், பாம்புக்குப் பல்லிலும் நஞ்சிருக்கும். ஆனால் கீழ்மக்களுக் கோ உடல் முழுதும் நஞ்சாகவே இருக்கும் என்பதாம். கீழ்மக்கள் நஞ்சுருவமாயிருப்பர் என்பது கருத்து. (38) 1052. துர்ச்சனரும் பாம்புந் துலையொக்கி னும்பாம்பு துர்ச்சனரை யொக்குமோ தோகையே - துர்ச்சனர்தாம் எந்தவிதத் தாலு மிணங்காரே பாம்புமணி மந்திரத்தா லாமே வசம். (நீவெ) தோகையே - மயில்போலும் சாயலையுடையவளே, துர்ச்சனரும் பாம்பும் துலை ஒக்கினும் - கீழ்மக்களும் பாம்பும் தீங்கு செய்வதில் எடை ஒத்திருப்பார்களானாலும், பாம்பு துர்ச்சனரை ஒக்குமோ - பாம்பு கீழ்மக்களை ஒக்குமோ? ஒவ்வாது; துர்ச்சனர் எந்த விதத்தானும் இணங்காரே - கீழ்மக்கள் எவ்வகை யாலும் இணங்கா மாட்டார்கள், பாம்பு மணி மந்திரத்தால் வசம் ஆம் - பாம்பு மணி மந்திரங்களால் இணங்கும். துலை - எடை. தாம் - அசை. மணி - எந்திரத் தகடு. மணி, மந்திரம், மருந்து என்னும் மூன்றும் நோய் தீர்க்கக் கொள்வன. பாம்பு - மந்திரித்த எந்திரத் தகட்டுக்கும் மந்திரத் திற்கும் அடங்கு மென்பர். வசம் ஆதல் - இணங்குதல். பாம்பு மணி மந்திரங்கட்கு இணங்கும், கீழ்மக்கள் எதற்கும் இணங்கார் என்பதாம். கீழ்மக்கள் பாம்பினுங் கொடியர் என்பது. (39) 1053. கொம்புளதற் கைந்து குதிரைக்குப் பத்துமுழம் வெம்புகரிக் காயிரந்தான் வேண்டுமே - வம்புசெறி தீங்கினர்தங் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி. (நீவெ) கொம்பு உளதற்கு ஐந்து முழம் - கொம்புள்ள மாடு முதலிய விலங்குகட்கு ஐந்து முழமும், குதிரைக்குப் பத்து முழம் - குதிரைக்குப் பத்து முழமும், வெம்புகரிக்கு ஆயிர முழம்தான் வேண்டுமே - வெகுளுந் தன்மையுள்ள யானைக்கு ஆயிர முழமும் விலக வேண்டும்; (ஆனால்), வம்பு செறி தீங்கினர் தம் கண்ணில் தெரியாத தூரத்து - தீங்கு மிகுந்த கீழ்மக்களுடைய கண்ணுக்குத் தெரியாத தூரத்தில், நீங்குவதே நல்ல நெறி - விலகிப் போவதே நல்ல வழியாம். முழம் - என்பதை மற்றவற்றோடும் கூட்டுக; முதல் விளக் கணி. வெம்புதல் - வெகுளுதல். வம்பு - தீமை. செறிதல் - மிகுதல். நெறி - வழி, முறை. மாடு முதலியவை கொம்பால் வீசுமாகையால் ஐந்து முழத்துக் கப்பால் விலகிச் செல்ல வேண்டும். குதிரை மிக விரைவாக ஓடுமாகையால் பத்து முழம் விலகிச் செல்ல வேண்டும். யானை கடுஞ்சினங் கொண்டு கொல்லுங் குண முடையதாகையால் ஆயிர முழம் விலகிச் செல்ல வேண்டும். ஆனால், கீழ்மக்களோ கண்ணில் கண்டாலே தீங்கு செய்வா ராகையால் அவர்தங் கண்ணிற்படாமல் மறைவாகச் செல்வதே நல்லது என்பதாம். ‘கெட்டவரைக் கண்டால் எட்டி நட’ - பழமொழி. (40) 1054. அவ்விய நெஞ்சத் தறிவில்லாத் துர்ச்சனரைச் செவ்விய ராக்குஞ் செயலுண்டோ - திவ்வியநற் கந்தம் பலவுங் கலந்தாலு முள்ளிதன்றுர்க் கந்தங் கெடுமோ கரை. (நீவெ) திவ்விய நல்கந்தம் பலவும் கலந்தாலும் - மேன்மை யான நல்ல பல வகையான மணப் பொருள்களைச் சேர்த்தாலும், உள்ளி தன் துர்க்கந்தம் கெடுமோ - வெள்ளுள்ளியானது தனது கெட்ட மணம் நீங்குமோ? (அதுபோல), அவ்விய நெஞ்சத்து அறிவு இல்லா துர்ச்சனரை - பொறாமைக் குணமுடைய அறி வில்லாத கீழ்மக் களை, செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ கரை - நல்லவராக்கும் செயல் உண்டோ சொல்? அவ்வியம் - பொறாமை. துர்ச்சனர் - கீழ்மக்கள். செவ்வியர் - நல்லவர். திவ்வியம் - மேன்மை. கந்தம் - மணம். உள்ளி - வெள்ளைப் பூண்டு. துர்க்கந்தம் - கெட்ட மணம். கரைதல் - சொல்லுதல். பலவகையான மணப் பொருள்களைக் கலந்தாலும் வெள்ளைப் பூண்டின் கெட்ட மணம் நீங்காமைபோல, பொறாமைக் குணமுடைய அறிவில்லாத கீழ்மக்களை எத்தகைய அறங்களை யுரைத்தும் நல்லவராக்க முடியாது என்பதாம். என்ன சொன்னாலும் நல்லவரா கார் என்பது. வெள்ளுள்ளியின் இயற்கை மணம் மாறாததுபோல, கீழ்மக்களின் இயற்கைக் குணம் மாறாது என்பது கருத்து. (41) 1055. துன்னு மிருமலுந் துர்ச்சனரு மொக்குமே மன்னு மினிமையால் மாறாகிப் - பன்னுங் கடுவுங் கடுநேர் கடுமொழியுங் கண்டாற் கடுக வசமாகை யால். (நீவெ) மன்னும் இனிமையால் மாறு ஆகி - பொருந்திய இனிமை யால் மாறுபட்டதாகி, பன்னும் கடுவும் கடுநேர் மொழியும் கண்டால் - தாழ்வாகக் கூறும் கசப்பையும் நஞ்சுக்கொப்பான வன்சொல்லையும் கண்டால், கடுக வசம் ஆகையால் - விரைவில் உடன்படுதலால், துன்னும் இருமலும் துர்ச்சனரும் ஒக்கும் - பொருந்திய இருமலும் கீழ்மக்களும் ஒப்பாவர். துன்னுதல் - பொருந்துதல். மன்னுதல் - நிலைபெறுதல் - பொருந்துதல். இனிமையால் - இனிப்புப் பொருளால், இன் சொல்லால், மாறாதல் - உள்ளத்தில் மிகுதல். அதாவது, இனிப்புத் தின்றால் இருமல் மிகும், இன்சொற் சொன்னால் கீழ்மக்கள் தம் கீழ்மைக் குணத்தில் மிகுவர். பன்னுதல் - சொல்லுதல். கடு - கசப்பு. கடு - நஞ்சு. இனிப்பு - இன்சொல்லுக்கும், கசப்பு - வன் சொல்லுக்கும் உவமை. மிகவும் கடுகடுத்துக் கடுஞ்சொற் சொன்னால்தான் கீழ்மக்கள் அடங்குவர் என்பார், ‘கடுநேர் கடுமொழி’ என்றார். இனிப்புப் பண்டம் தின்றால் இருமல் மிகும், கசப்புப் பண்டம் (மருந்து) தின்றால் இருமல் அடங்கும். அது போல, இன்சொற் சொன்னால் கீழ்மக்கள் அடங்கார், வன்சொற் சொன்னால் அடங்குவர் என்பதாம். (42) 1056. செங்கமலப் போதலர்ந்த செவ்விபோ லும்வதனம் தங்கு மொழிசந் தனம்போலும் - பங்கியெறி கத்தரியைப் போலுமிளங் காரிகையே வஞ்சமனக் குத்திரர்பால் மூன்று குணம். (நீவெ) இளங் காரிகையே - இளம் பெண்ணே, வதனம் செங் கமலம் போது அலர்ந்த செவ்விபோலும் - முகம் மலர்ந்த செந் தாமரைப் பூவின் அழகு போலிருக்கும், தங்கும்மொழி சந்தனம் போலும் - இனிமைதங்கிய சொல் சந்தனம் போல் குளிர்ச்சியாக இருக்கும், வஞ்ச மனம் பங்கி எறி கத்தரியைப் போலும் - வஞ்சனை பொருந்திய மனம் மயிரை வெட்டுங் கத்தரிக்கோல்போல் கடுமையாக இருக்கும், குத்திரர்பால் மூன்று குணம் - இவை வஞ்ச நெஞ்சமுள்ள கீழ்மக்களிடத் துள்ள மூன்று குணங்களாகும். போது - பூ. செவ்வி - அழகு. வதனம் - முகம். பங்கி - மயிர். எறிதல் - வெட்டுதல். காரிகை - பெண். குத்திரர்- வஞ்சகர். தாமரை மலர் - முகமலர்ச்சிக்கும், சந்தனம் - இன் சொல்லுக்கும், கத்தரிக்கோல் மனத்தின் கடுமைக்கும் உவமை. வஞ்சனை பொருந்திய மனத்தையுடைய கீழ்மக்கள் முக மலர்ந்து இன்சொல் சொல்லினும், அவர்கள் மனம் கடுமையாக இருக்கும் என்பதாம். (43) 1057. கற்பூரம் போலக் கடலுப் பிருந்தாலும் கற்பூர மாமோ கடலுப்புப் - பொற்பூரும் புண்ணியரைப் போல விருந்தாலும் புல்லியர்தாம் புண்ணியரா வாரோ புகல். (நீவெ) கடல் உப்பு கற்பூரம்போல இருந்தாலும் - கடலில் உண் டாகும் உப்பு கற்பூரம்போல வெண்மையாக இருந்தாலும், கடல் உப்பு கற்பூரம் ஆமோ - கடல்உப்பு கற்பூரம் ஆகுமோ? ஆகாது, (அது போல), பொற்பு ஊரும் புண்ணியரைப் போல இருந்தாலும் - அழகுமிக்க நல்லோர்களைப்போல இருந்தாலும், புல்லியர் புண்ணியர் ஆவாரோ புகல் - தீயோர் நல்லோர் ஆவாரோ சொல்! பொற்பு - அழகு. ஊர்தல் - மிகுதல். புல்லியர் - கீழ்மக்கள். தாம் - அசை. புகல்தல் - சொல்லல். உப்பு கற்பூரம்போல் வெண்மையாக இருந்தாலும் கற்பூரத்தின் குணம் உப்புக்கு உண்டாகாது. அதுபோல கீழ் மக்கள் உருவத்தில் நல்லோரைப்போல இருந்தாலும் நல்லோர் குணம் கீழ்மக்கட்கு உண்டாகாது என்பது கருத்து. (44) 1058. தூய வறிவினர்முன் சூழ்துன்ப மில்லையாம் காயும் விடங்கருடற் கில்லையாம் - ஆயுங்கால் பன்முகஞ்சேர் தீமுன் பயில்சீத மில்லையாம் துன்முகனுக் குண்டோ சுகம். (நீவெ) ஆயுங்கால் - ஆராயுமிடத்து, காயும் விடம் கருடற்கு இல்லை ஆம் - கொல்லுகின்ற நஞ்சு கருடனுக்குத் துன்பஞ் செய்வ தில்லையாம், (அதுபோல), தூய அறிவினர் முன் சூழ் துன்பம் இல்லை ஆம் - நல்ல அறிஞர்களுக்கு எதிரில் சூழ்ந்து வருகின்ற துன்பங்கள் இல்லையாம்; பல்முகம் சேர் தீமுன் - பல சுடர் விட்டெரியும் தீ முன், பயில்சீதம் இல்லை ஆம் - பொருந்திய குளிர்ச்சி இல்லையாம், (அதுபோல), துன்முகனுக்கு சுகம் உண்டோ - கீழ்மகனுக்கு இன்பம் உண்டோ? இல்லை. சூழ்துன்பம் - மிக்க துன்பங்கள். காய்தல் - கொல்லுதல். கருடனைக் கண்டால் பாம்பு அஞ்சும் என்பதாம். ஆய்தல் - ஆராய்தல். முகம் - சுடர். பயில்தல் - பொருந்துதல். சீதம் - குளிர்ச்சி. துன்முகன் - கீழ்மகன். சுகம் - இன்பம். கருடனைப் பாம்பு அணுகாமைபோல, அறிஞரைத் துன்பம் அணுகாது, தீயைக் குளிர்ச்சி பொருந்தாமை போல, கீழ்மக்களை இன்பம் பொருந்தாது என்பதாம். அறிஞர்களுக்குத் துன்பமில்லை. கீழ்மக்களுக்கு இன்ப மில்லை என்பது கருத்து. (45) 1059. கன்மமே புரித்த காயத்தோர் தஞ்செவியில் தன்மநூல் புக்காலுந் தாங்காதே - சன்மமெலும் புண்டு சமிக்குநா யூணாவி னெய்யதனை உண்டு சமிக்குமோ வோது. (நீவெ) சன்மம் எலும்பு உண்டு சமிக்கும் நாய் - தோலையும் எலும்பையும் உண்டு களிக்கும் நாயானது, ஆவின் செய் ஊண் அதனை உண்டு சமிக்குமோ ஓது - மாட்டு நெய் கலந்த உணவை உண்டு களிக்குமோ சொல்? (அதுபோல), கன்மமே பூரித்த காயத்தோர் செவியில் - தீமை நிறைந்த மனத்தை யுடைய கீழ் மக்கள் காதில், தன்ம நூல் புக்காலும் தங்காது - அறநூற் பொருள் நுழைந்தாலும் தங்கியிராது. கன்மம் - தீமை. பூரித்தல் - நிறைதல். காயம் - உடம்பு. இங்கு உள்ளத்தை உணர்த்திற்று. தன்மம் - அறம். சன்மம் - சர்மம் - தோல். சமித்தல் - களித்தல், மகிழ்தல். ஆ - மாடு. ஊண்அதனை - ஊணை. தோலையும் எலும்பையும் தின்று களிக்கும் நாய் நெய்ச் சோற்றை விரும்பாதது போல், தீமை நிறைந்த மனத்தை யுடைய கீழ்மக்கள் அறநூற்பொருளை விரும்பார். வலியச் சொன்னாலும் மனத்தின் தங்காது என்பதாம். (46) 1060. சத்தியமெக் காலுஞ் சனவிருத்த மாகுமே எத்தியபொய் யார்க்கு மிதமாகும் - நத்தியபால் வீடுதொறுஞ் சென்று விலையா மதுவிருந்த வீடுதனி லேவிலையா மே. (நீவெ) நத்திய பால் வீடுதொறும் சென்று விலைஆம் - எல் லோரும் விரும்புகின்ற பால் வீடுவீடாய்ச் சென்று விற்கப் படும், மது இருந்த வீடுதனிலே விலை ஆம் - கள்ளானது இருந்த வீட்டிலேயே விலையாகும், (அதுபோல), சத்தியம் எக்காலும் சன விருத்தம் ஆகும் - உண்மையின் பெருமை தெரியாமையால் அது எப்போதும் மக்களுக்கு வெறுப்பாகும், எத்திய பொய் யார்க்கும் இதம் ஆகும் - பிறரை ஏய்க்கும் பொய் எல்லார்க்கும் விருப்பமுடையதாகும். சத்தியம் - உண்மை. சனம் - மக்கள். விருத்தம் - வெறுப்பு. எத்துதல் - ஏமாற்றுதல். இதம் - விருப்பம். நத்துதல் - விரும்புதல். இருந்த வீடுதனிலே - இருந்த இடத்திலே. ‘சனம், யார்க்கும்’ என்றது கீழ்மக்களை. பால், நன்மணமும் இன்சுவையும் உடையது, உடல் நலத்தையும் தரத்தக்கது. கள், கெட்ட நாற்றமும் கைப்பும் புளிப்பும் கலந்த கெட்ட சுவையும் உடையது; உடல் நலக் கேட்டைத் தரத் தக்கது. எனினும், பாலை வீடுவீடாகக் கொண்டு போய் விற்க வேண்டியிருக்கிறது. விலை தள்ளியுங் கேட்கின்றனர். கள்ளை அது இருந்த இடத்திலேயே வந்து சொன்ன விலையைக் கொடுத்துக் குடிக்கின்றனர். அதாவது, கள்ளை விரும்புவது போல் மக்கள் பாலை விரும்புவதில்லை. அதுபோல, கீழ்மக்கள் உயர்வைத் தருவதும் உயர்வுடையது மான உண்மையில் வெறுப்பும், தாழ்வைத் தருவதும் தாழ்வு டையதுமான பொய்மையில் விருப்பும் கொள்வர் என்பதாம். இது கீழோரியல்பு. (47) 1061. தீமை யுடையார் அயலிருத்தல் நன்கின்னா. (இன்) தீமை உடையார் - தீச்செயலையுடைய கீழ்மக்கள், அயல் இருத்தல் - பக்கத்திலே குடியிருத்தல், தீச்செயல் - திருட்டு, புரட்டு முதலியன. நன்கு இன்னா - மிகவும் துன்பந் தரும். தீச்செயல் புரியும் கீழ்மக்களது பக்கத்தில் குடியிருத்தல் துன்பந் தரும் என்பதாம். (48) 1062. பாசத்து ளிட்டு விளக்கினுங் கீழ்தன்னை மாசுடைமை காட்டி விடும். (நான்) கீழ்தன்னை - கீழ்மகனை, பாசத்து உள் இட்டு விளக் கினும் - தளையிட்டுச் சிறையிலிட்டு வருத்தி நல்லறிவு புகட்டினாலும், மாசு உடைமை காட்டிவிடும் - தன் கீழ்மைத் தன்மையையே காட்டி விடுவான். பாசம் - தளை, விலங்கு. உள் - சிறையினுள். விளக்குதல் - நல்லறிவு புகட்டுதல். கீழ் - கீழ்மகன். மாசு - குற்றம். திருடர்களைப் பலமுறை சிறைவைத்து எப்படி அறிவுரை கூறினும், சிறையிலிருந்து வெளிவந்ததும் மறுபடியும் திருடு கிறார் களல்லவா? எவ்வளவு வருத்தி நல்லறிவு கொளுத்தினாலும் கீழ் மக்கள் தங்கள் கீழ்மைத் தன்மையை விடமாட்டார் என்பதாம். (49) 1063. வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றுங் கற்றார்வாய்ச் சாயினுந் தோன்றா கரப்புச்சொல் - தீய பரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா நிரப்புச்சொல் கீழ்கள்வாய்த் தோன்றி விடும். (நான்) வடுச்சொல் நயம் இல்லார் வாய் தோன்றும் - குற்ற முடைய சொற்கள் கெட்டவர்கள் வாயில் பிறக்கும், கற்றார் வாய் சாயினும் கரப்புச்சொல் தோன்றா - கற்றவர்கள் வாயில் அவர்கள் கெடுவ தாயிருந்தாலும் வஞ்சனைச் சொற்கள் பிறவா, தீய பரப்புச் சொல் சான்றோர் வாய்தோன்றா - தீயவற்றைப் பரப்பும் சொற்கள் பெரியோர்கள் வாயில் தோன்றா, நிரப்புச்சொல் கீழ்கள்வாய் தோன்றி விடும் - பயனற்ற சொற்கள் கீழ்மக்கள் வாயில் பிறந்து விடும். வடு - குற்றம். வடுச்சொல் - குற்றமுடைய சொல் - கெட்ட வார்த்தை எனப்படும். நயம் - நன்மை. நயம் இல்லார் - கெட்டவர். சாய்தல் - கெடுதல். கரப்புச் சொல் வஞ்சனைச் சொல். தீய பரப்புச் சொல் - தீயவற்றைக் கூறுஞ்சொல் - கோட்சொல்; பிறர் தீமை கூறுதல். நிரப்பு - வறுமை, இன்மை - பொருள், பயன் இன்மை, வீண்பேச்சு என்றபடி. நயமில்லார் - கீழ்மக்கள். கற்றார் - சான்றோர். கீழ்மக்கள் குற்றமுடைய சொற்களையும் பயனற்ற சொற் களையுமே பேசுவர். பெரியோர்கள் வஞ்சகச் சொற் களையும் கோட் சொற்களையும் பேசார் என்பதாம். கெட்ட சொற்களும் பயனற்ற சொற்களும் பேசுதல் கீழ் மக்கள் இயல்பு. வஞ்சகச் சொற்களும் கோட் சொற்களும் பேசாமை பெரியோர்களின் இயல்பு என்பது கருத்து. எனவே, கெட்ட சொல், பயனற்ற சொல், வஞ்சகச் சொல், கோட் சொல் எனத் தீச்சொல் நான்கு வகைப்படுவ தாயிற்று. இந்நால்வகைத் தீச்செற்களும் கீழ் மக்கட்கு உரியவை என்பது குறிப்பு. (50) 1064. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை வானுற வோங்கி வளம்பெற வளரினும் ஒருவர்க் கிருக்க நிழலா காதே. (வெற்) பனையின் தேம்படு திரள் பழத்து ஒருவிதை - பனை மரத்தினது இனிமை பொருந்திய திரண்ட பழத்தினது ஒரு கொட்டையானது, வான் உற ஓங்கி வளம்பெற வளரினும் - ஆகாயத்தைப் பொருந்த உயர்ந்து செழுமையாக வளர்ந் தாலும், ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாது - ஒருவர் தங்கியிருக்க நிழலைத் தராது. தேம் - இனிமை. படுதல் - பொருந்துதல். திரண்ட - உருண்டையான. உற - பொருந்த. வளம்பெற - செழிப்பாக. பனங்கொட்டை முறைத்து ஓங்கி வளர்ந்தாலும் ஒருவர் தங்கி யிருக்கவும் நிழலைத் தராது. அதுபோல, கீழ்மக்கள் பெருஞ் செல்வம் படைத்த போதிலும் ஒருவர்க்கும் உதவார் என்பதாம். பிறிது மொழிதலணி. (51) 1065. அடினும் பால்பெய்து கைப்பறாது பேய்ச்சுரைக்காய், ஊட்டினும் பல்விரைஉள்ளி கமழாது. (வெற்) பேய்ச்சுரைக்காய் - பால் பெய்து அடினும் கைப்பு அறாது - பால் விட்டுச் சமைத்தாலும் கசப்பு நீங்காது. உள்ளி - வெள்ளைப் பூண்டு, பல்விரை ஊட்டினும் கமழாது - பல மணப் பொருள் களைச் சேர்த்த போதிலும் நல்ல மணம் வீசாது. அடுதல் - சமைத்தல். பெய்து - ஊற்றி. கைப்பு - கசப்பு. பேய்ச்சுரைக்காய் - கசப்பான ஒருவகைச் சுரைக்காய். ஊட்டுதல் - சேர்த்தல், கலத்தல். விரை - மணம். கமழ்தல் - மணத்தல். பால்விட்டுச் சமைத்தாலும் பேய்ச் சுரைக்காயின் கசப்புத் தன்மை நீங்காது. பல மணப்பொருள்களைக் கலந் தாலும் வெள்ளுள்ளி நறுமணம் வீசாது. அதுபோல, கீழ் மக்களுக்கு எவ்வாறு நல்லுரை கூறினும் அவர்கள் கீழ்மைக் குணம் நீங்காது என்பதாம். இதுவும் பிறிது மொழிதல் அணியே. (52) 1066. கீழ்மை யகற்று. (ஆத்) கீழ்மை - கீழ்மையான குணம் - செயல்கள். அகற்றுதல் - விலக்குதல், நீக்குதல். இழிவான குணஞ் செயல்களை நீக்கிவிட வேண்டும் என்பதாம். (53) 1067. பூரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம். (கொன்) பூரியோர் - கீழ்மக்கள். சீரிய ஒழுக்கம் - சிறந்த ஒழுக்கம். கீழ் மக்களுக்கு நல்லொழுக்கம் உண்டாகாது. (54) 67. கயமை அதாவது, யாதொன்றும் அறியாத முழு மூடத்தனம் - பேதைமை, யாதொரு நற்குணமும் இல்லாத பேதையரது தன்மை - கயமை. 1068. செழும்பெரும் பொய்கையுள் வாழினு மென்றும் வழும்பறுக்க கில்லாவாந் தேரை - வழும்பில்சீர் நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார் தேர்கிற்கும் பெற்றி யரிது. (நால) தேரை - தவளைகள், என்றும் செழும் பெரும் பொய் கையுள் வாழினும் - எந்நாளும் செழிப்பான பெரிய குளத்தில் வாழ்ந்தாலும், வழும்பு அறுக்ககில்லா ஆம் - தம் உடம்பின் மேல் உள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்கிக் கொள்ள மாட்டாவாம், (அது போல), நுணுக்கம் ஒன்று இல்லாதார் - நுண்ணறிவு சிறிதும் இல்லாதவர், வழும்பு இல் சீர் நூல் கற்றற் கண்ணும் - குற்ற மில்லாத சிறப்புப் பொருந்திய நூல்களைக் கற்றவிடத்தும், தேர் கிற்கும் பெற்றி அரிது - அந்நூலில் உள்ள உண்மைப் பொருளை ஆராய்ந்தறியும் தன்மை அவர்க்கு இல்லையாகும். செழுமை - நீர்வளம். பொய்கை - குளம். வழும்பு - வழு வழுப்பு. அறுக்ககில்லா - அறுக்கமாட்டா. கில் - ஆற்றலு ணர்த்தும் இடைநிலை. தேரை - தவளை, வழும்பு - குற்றம். சீர் - சிறப்பு. நுணுக்கம் - நுட்பம். தேர்கிற்கும் - தேரும் - ஆராய்ந் தறியும். பெற்றி - தன்மை. தவளைகள் குளம் முதலிய நீர் நிலையில் பல காலம் வாழ்ந்தாலும் தம் உடம்பின்மேலுள்ள வழுவழுப்பான மாசைக் கழுவிக்கொள்ள மாட்டாமை போல, கயவர்கள் பல பெரிய நூல்களைப் பல காலம் பயின்றாலும் தமது அறியாமை யாகிய குற்றம் ஒழிந்து, அவற்றின் உண்மையான கருத்துக் களை அறியுந் தன்மை இல்லாதவராவர் என்பதாம். உடம்பின் அழுக்கைப் போக்கித் தூய்மைப் படுத்தும் இயல்புடைய நீரிலிருந்தும் அழுக்கு நீங்காத தவளை போல, அறியாமையைப் போக்கி அறிவொளியைத் தரும் நூற்களிற் பலகாலும் பழகியும் கயவர்களுடைய மனம் தூய்மையடை யாது என்பது கருத்து. (1) 1069. தளிர்மேலே நிற்பினுந் தட்டாமற் செல்லா உளிநீரர் மாதோ கயவர் - அளிநீரார்க் கென்னானுஞ் செய்யா ரெனைத்தானுஞ் செய்பவே இன்னாங்கு செய்வார்ப் பெறின். (நால) கயவர் -, தளிர் மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா உளி நீரர் - மிகவும் மெதுவான தளிரின்மேல் நின்றாலும் ஒருவர் மழுவால் தட்டாமல் அத்தளிரினுள் செல்லாத உளியின் தன்மையையுடைய வராவர், அளி நீரார்க்கு என்னானும் செய்யார் - (அக்கயவர்கள்) அருளையே இயற்கைக் குணமாக வுடைய பெரியோர்களுக்குச் சிறிய உதவியும் செய்ய மாட்டார்கள், இன்னாங்கு செய்வார் பெறின் எனைத்தானும் செய்பவே - தமக்குத் துன்பஞ் செய்பவர்களுக்கு எவ்வளவு பேருதவியுஞ் செய்வார்கள். தளிர் - கொழுந்திலை. செல்லா - செல்லாத. நீரர் - தன்மையர். மாதோ - அசை. அளி - அருள். அளிநீரார் - அருளையே இயற்கைக் குணமாக உடையர். என்னானும் - சிறிதும். எனைத்தானும் - எவ்வளவு பெரிதும். இன்னாங்கு - துன்பம். செய்வார்ப்பெறின் - செய்வார்க்கு. உளியானது மெதுவான பொருளிலும்தானே செல்லாமல் ஒருவர் மழுவால் தட்டிய பின்னரே செல்வது போல, கயவர்கள் எவ்வளவு சிறிய தொழிலாயினும் பிறரேவாமல் தாமாகவே செய்யமாட்டார்; அன்றியும், நல்லோர்க்கு ஓருதவியும் செய்ய மாட்டார், அடித்து வருத்துங் கொடியோர்க்கு எதை வேண்டு மானாலும் கொடுப்பர் என்பதாம். ‘இன்னாங்கு செய்வார்க்குச் செய்ப’ என்றது - அவர் அடித்துப் பறித்துக் கொள்வர் என்றபடி. ஈர்ங்கை விதிரார் கயவர் கோடிறுடக்கும் கூன்கைய ரல்லா தவர்க்கு. (குறள்) (2) 1070. ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த பிழைறூறுஞ் சான்றோர் பொறுப்பர் - கயவர்க் கெழுநூறு நன்றிசெய் தொன்றுதீ தாயின் எழுநூறுந் தீதாய் விடும். (நால) சான்றோர் - பெரியோர், ஒரு நன்றி செய்தவர்க்கு - தமக்கு ஓருதவி செய்தவர்க்கு, ஒன்றி எழுந்த பிழை நூறும் பொறுப்பர் - இடைவிடாது தொடர்ச்சியாக நூறு குற்றங்கள் அவர் செய்தாலும் (முன்பு அவர் செய்த நன்றியைக் கருதி) பொறுத்துக் கொள்வர்; கயவர்க்கு எழுநூறு நன்றி செய்து ஒன்று தீது ஆயின் - கயவர்க்கோவெனில், ஒருவர் முன்பு எழுநூறு உதவிகள் செய்து பின்பு ஒரு தீங்கு செய்தால், எழுநூறும் தீது ஆய்விடும் - முன் செய்த அந்த எழுநூறு நன்மையும் தீமையாகவே கொள்வர். நன்றி - நன்மை, உதவி. ஒன்றி - பொருந்தி. எழுந்த - செய்த. ஒன்றி எழுதல் - இடைவிடாது தொடர்ச்சியாகச் செய்தல். பிழை - குற்றம். நூறு, எழுநூறு - மிகப் பல என்றபடி. பெரியோர்கள், தமக்கு முன்பு ஒரு நன்மை செய்தவர் பின்பு பல தீமைகளைச் செய்தாலும், முன்செய்த அந்த ஒரு நன்மையை எண்ணி அத்தீமைகள் பலவற்றையும் பொறுத்துக் கொள்வர். கயவர்களோ வெனில், ஒரு தீமையை எண்ணி அவர் முன்பு செய்த பல நன்மைகளையும் மறந்து விடுவர் என்பதாம். கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும். (குறள்) ஒன்றுதவி செய்யினுமவ் வுதவிமறவாமல் பின்றையவர் செய்பிழை பொறுத்திடுவர் பெரியோர்; நன்றிபல வாகவொரு நகைபுரிவ ரேனும் கன்றிடுவ தன்றிமுது கயவர்நினை யாரே. (வில்லிபாரதம்) (3) 1071. ஏட்டைப் பருவத்து மிற்பிறந்தார் செய்வன மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள் - கோட்டை வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய் பன்றி செயிர்வேழ மாகுத லின்று. (நால) வாள் கண்ணாய் - வாள் போன்ற கண்ணையுடைய வளே, இல் பிறந்தார் ஏட்டை பருவத்தும் செய்வன - உயர் - குடியில் பிறந்தவர்கள் வறுமையுற்ற காலத்திலும் செய்யும் நற் காரியங்களை, முழு மக்கள் மோட்டித்தும் செய்யார் - மூடர்கள் செல்வத்தால் உயர்ந்த நிலையில் உள்ள காலத்திலும் செய்ய மாட்டார்கள்; (எதுபோல வெனில்), கோட்டை வயிரம் செறிப் பினும் பன்றி செயிர் வேழம் ஆகுதல் இன்று - தந்தங்களில் பூண் போட்டாலும் பன்றி வெகுளுந் தன்மை யுள்ள யானையைப் போலப் போர் செய்ய வல்லதாகுதல் இல்லை. ஏட்டை - வறுமை. இல் பிறத்தல் - உயர் குடியில் பிறத்தல். செய்வன - செய்யத்தக்க செயல்கள். மோடு - பெருமை, உயர்ச்சி. கோட்டை - கோட்டில். கோடு - பல், தந்தம். வயிரம் - பூண். செறித்தல் - போடுதல். செயிர் - வெகுளி. வேழம் - யானை. யானையின் தந்தங்களுக்குப் பூண் கட்டுவது போலப் பன்றியின் பற்களுக்குப் பூண் கட்டினாலும் யானையைப் போலப் பன்றி போர் செய்யாது. அதுபோல, கீழ்மக்கள் மிகுந்த செல்வம் பெற்ற காலத்தும், மேன்மக்கள் வறுமையுற்ற காலத்துச் செய்யு மளவும் நற்காரியங்கள் செய்ய மாட்டார்கள் என்பதாம். கயவர்கள் எவ்வளவு செல்வம் பெற்ற போதும் தங்கட் குரிய இழி குணத்தினின்றும் மாறார் என்பதற்குப் பன்றியை உவமை கூறினார். (4) 1072. நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும் ஈரங் கிடையகத் தில்லாகும் - ஓரும் நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும் அறைப்பெருங்க லன்னா ருடைத்து. (நால) நீருள் பிறந்து நிறம் பசியது ஆயினும் - தண்ணீரில் உண்டாகிப் பசிய நிறமுடையதாய் இருந்தாலும், கிடை அகத்து ஈரம் இல்லாகும் - சடையானது தன் உள்ளிடத்தில் ஈரம் இல்லாத தாகும், (அதுபோல), நிறைபெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும் - நிறைந்த பெருஞ் செல்வமுடையரா யிருந்தாலும், அறை பெருங்கல் அன்னார் உடைத்து - பாறையாகிய பெரிய கல்லைப்போல மனம் இளகுதலில்லாத வர்களை இவ்வுலகம் உடையதாய் இருக்கிறது. பிறந்து - தோன்றி. கிடை - சடை, நெட்டி. இது குளம் குட்டை முதலிய நீர்நிலைகளில் உள்ள ஒருவகை நீர்ப்பூண்டு - இது பிறண்டைபோல் கிளைகிளை யாகவும், நாணல் தண்டு போல் உருண்டையாகவும் வெண்மையாகவும் இருக்கும். கன மில்லாமல் சோளத் தண்டுபோல் இருந்தாலும் உட்டுளை யில்லாது கெட்டி யாக இருக்கும். பொம்மைகள் செய்யப் பயன் படுகின்றது. சப்பானில் இத் தொழிலால் பலர் பிழைக் கின்றனர். பழந் தமிழர்கள் இத்தொழில் செய்து வந்தனர். ஓரும் - அசை. கடைத்தும் - இடத்தும். செல்வத்து நின்றக் கடைத்தும் - செல்வ மிருந்தாலும், அறை - பாறை. அறைகல் - அறையாகிய கல் மனத்தில் ஈரம் - இரக்கம். இளகுதல் - இரங்குதல். எப்பொழுதும் தண்ணீருள் இருந்தாலும் உள்ளீரம் இல்லாத நெட்டிபோல, எப்பொழுதும் செல்வத்தில் திளைத் தாலும் இளகுத லில்லாத கல்நெஞ்சர் இவ்வுலகில் பலர் உண்டு என்பதாம். (5) 1073. அருளினை நெஞ்சத் தடைகொடா தானும் பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும் இறந்தின்னா சொல்லகிற் பானுமிம் மூவர் பிறந்தும் பிறந்திலா தார். (திரி) அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும் - அருளை மனத்தின்கண் நிறைத்து வையாதவனும், பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும் - செல்வத்தைத் தானும் நுகராது (பிறர்க்குங் கொடாது) நிலத்தில் புதைத்து வைக் கின்றவனும், இறந்து இன்னா சொல்லகிற்பானும் - அளவு கடந்து பிறர்க்குத் துன்பந் தருஞ் சொற்களைச் சொல்லு கின்றவனும், இம்மூவர் பிறந்தும் பிறந்திலா தார் - ஆகிய இம்மூவரும் மக்களாகப் பிறந்தும் பிறவாதவராவர். அருள் - இரக்கம். நெஞ்சத்து அடைகொடல் - இரக்க முள்ள மனமுடையனாதல். துவ்வான் - துவ்வாமல் - அனுபவி யாமல். இறந்து - அளவுகடந்து. இன்னா - துன்பம். பிறந்தும் பிறந்திலாதார் - மக்களாகப் பிறந்தும் மக்கட் பண்பில்லார் என்றபடி. இரக்கமில்லாத மனத்தையுடையவனும், தானும் செலவு செய்யாது பிறர்க்குங் கொடாது செல்வத்தைச் சேர்த்து வைப்பவனும், அளவு கடந்து பிறரைத் திட்டுபவனும் மக்கட் பண்பில்லாக் கயவர் என்பதாம். (6) 1074. திரைத்த விரிக்கின் திரைப்பினா வாய்போல் உரைத்த வுரையதனைக் கேட்டும் - உரைத்த பயன்றவா செய்வார் சிலரேதந் நெஞ்சத் தியன்றவா செய்வார் பலர். (இன்னி) உரைத்த உரையதனைக் கேட்டும் - பெரியோர்கள் கூறிய அறவுரைகளைக் கேட்டும், திரைத்த விரிக்கின் நாவாய் போல் - சுருண்ட பாய்களை விரித்தால். (கப்பலோட்டி குறித்த வழியில் செல்லும்) கப்பல்போல, உரைத்த பயன் தவா செய்வார் சிலரே - அப்பெரியோர்கள் கூறிய அறவுரைகளின் பயன் கெடாது செய்பவர் சிலரேயாவர். திரைப்பின் நாவாய் போல் - பாய்களைச் சுருட்டினால் காற்றின் போக்கில் செல்லும் கப்பல்போல, தம் நெஞ்சத்து இயன்றவா செய்வார் பலர் - தமது மனத்தில் தோன்றிய வாறு செய்பவர் பலராவர். திரைத்தல் - சுருட்டுதல். திரைத்த - சுருண்ட; சுருண்ட பாயைக் குறித்தது. திரைப்பின் - சுருட்டினால். நாவாய் - கப்பல். தவா - தவாது - கெடாது. இயன்றவா - இயன்றவாறு - தோன்றிய படி - ஈறு கெட்டது. சுருண்ட பாய்களை விரித்தால் கப்பலோட்டி குறித்த வழியில் செல்லும் கப்பல்போல, பெரியோர் உரைத்த உரையைக் கேட்டு அதன்படி நடப்பவர் சிலரே; விரித்த பாய்களைச் சுருட்டினால் காற்றடித்த பக்கம் செல்லும் கப்பல்போல, தம் மனம் போனபடி நடப்பவர் பலராவர் என்பதாம். பாய்களை விரித்தால் கப்பல் மாலுமி விரும்பிய பக்கம் செல்லும்; பாய்களைச் சுருட்டினால் மாலுமி விரும்பிய பக்கம் செல்லாது, மாலுமி விருப்பப்படி செல்லும் கப்பல் பெரியோர் சொற்படி நடக்கும் மேன்மக்கட்கும், மாலுமி விருப்பப்படி செல்லாத கப்பல் பெரியோர் சொற்படி நடக்காது தம் விருப்பப் படி நடக்கும் கயவர்கட்கும் உவமை. (7) 1075. உற்ற மறையகத்தி லுய்க்குமவ னுத்தமனே மற்றம் மறைபகர்வோன் மத்திமனே - முற்றிழையே அத்த முறலாற் புகல்வா னதமனென வித்தகநூ லோதும் விரித்து. (நீவெ) முற்று இழையே - முற்றிய வேலைப்பாடுடைய நகைகள ணிந்தவளே, உற்ற மறை அகத்தில் உய்க்குமவன் உத்தமன் - தன் காதுக்கெட்டின மறைமொழியை வெளியிடாமல் மனத்தில் அடக்கி வைப்பவன் முதன்மையானவன்; அம்மறை பகர்வோன் மத்திமன் - அந்த மறைமொழியைப் பிறரறியச் சொல்பவன் நடுத்தரமானவன்; அத்தம் உறலால் புகல்வோன் அதமன் என - பணம் பெறுவதனால் அம்மறையை வெளி யிடுபவன் கடைப் பட்டவன் என்று, வித்தக நூல் விரித்து ஓதும் - அறிவு நூல்கள் விரித்துச் சொல்லும். உற்ற - கெட்ட. மறை - மறைமொழி - இரகசியம். உய்த்தல் - சொல்லுதல். பகர்தல் - சொல்லுதல். இழை - நகை. அத்தம் - பணம். வித்தகம் - அறிவு. தலைமக்கள் தாம் கேட்ட மறையை வெளியிட மாட்டார், இடைமக்கள் வெளியிடுவர், கடைமக்கள் பணம் வாங்கிக் கொண்டு பிறர்க்குக் கூறுவர் என்பதாம். அறையறை யன்னர் கயவர்தாங் கேட்ட மறைபிறர்க் குய்த்துரைக்க லான். (குறள்) (8) 68. அரசியல் அதாவது, அரசனது இலக்கணம். இன்று அரசன் இன்மை யால், ஆட்சித் தலைவர்க்கும் இவ்விலக்கணம் பொருந்தும். 1076. எங்கண் ணினையர் எனக்கருதி னேதமால் தங்கண்ண ரானுந் தகவில கண்டக்கால் வன்கண்ண னாகி யொறுக்க, ஒறுக்கல்லா மென்கண்ண னாளா னரசு. (பழ) தம் கண்ணர் ஆனும் தகவுஇல கண்டக்கால் - தமது கண் போல்வாராயினும் தகுதியில்லாத செயல்களை அவரிடம் கண்டால், எம்கண் இனையர் என கருதின் ஏதம் - எம் கண் போல்வார் இவர் (இந்தக் குற்றத்தைப் பொறுக்க வேண்டும்) என்று எண்ணினால் அது குற்றமாம்; ஆதலால், வன்கண்ணன் ஆகி ஒறுக்க - இரக்க மில்லாத வனாகிக் குற்றத்துக்குத் தக்க தண்டஞ் செய்க, ஒறுக்கல்லா மென் கண்ணன் அரசு ஆளான் - அவ்வாறு தண்டியாத கண்ணோட்ட முள்ளவன் அரசினை ஆளமாட்டான். கண்இனையர் - கண் போல்பவர். ஏதம் - குற்றம். ஆல் - அசை. கண்ணர் - கண்போல்வார். மிகவும் வேண்டியவர். தகவில - தகுதியில்லாத செயல்கள் - குற்றம். வன்கண் - இரக்கமின்மை. ஒறுத்தல் - தண்டித்தல். ஒறுக்கல்லா - தண்டியாத. மென் கண்ணன் - கண்ணோட்டமுள்ளவன். மிகவும் வேண்டியவராயினும் குற்றஞ் செய்தால், மிகவும் வேண்டியவராயிற்றே என்று பாராமல் அரசன் தண்டிக்க வேண்டும். தண்டியாது இரக்கங்காட்டுபவன் ஆளத் தகுதி யுடையவனாகான். ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் தேர்ந்செய் வஃதே முறை. (குறள்) நீமெய் கண்ட தீமை காணின் ஒப்பநாடி அத்தக ஒறுத்தி. (புறம்) (1) 1077. சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக் காலை கழிந்ததன் பின்றையும் - மேலைக் கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான் முறைமைக்கு மூப்பிளமை யில். (பழ) மேலை கறவைக்கன்று ஊர்ந்தானை - முன்னாளில் மாட்டுக் கன்றின்மேல் தேரூர்ந்து கொன்ற தன் மகனை, சான்றவர் சால மறைத்து ஓம்பி கைகரப்ப - அமைச்சர்கள் மிகவும் மறைத்துப் பாதுகாத்து அச்செயல் வெளிப்படாமல் ஒளிப்பவும், காலை கழிந்ததன் பின்றையும் - நெடுங்காலம் சென்ற பின்பும், தந்தையும் ஊர்ந்தான் - தந்தையாகிய சோழனும் தேரை ஊர்ந்து கொன்றான்; (ஆதலால்), முறை மைக்கு மூப்பு இளமை இல் - முறை செய்தலுக்கு முதுமை யென்பதும் இளமை யென்பதும் இல்லை. சால - மிக. ஓம்பி - பாதுகாத்து. சான்றவர் - அமைச்சர்கள். கைகரத்தல் - வெளிப்படாமல் ஒளித்தல். காலை - நெடுங் காலம். பின்றை - பின்பு. மேலை - முன்னாளில். கறவை - மாடு. ஊர்ந்தான் - தேரூர்ந்து கொன்றவன் - வினை யாலனையும் பெயர். மூப்பு - முதுமை. ஒரு சோழ மன்னன், ஒரு மாட்டுக் கன்றின்மேல் தேரை விட்டுக் கொன்ற தன் மகனை, அச்செயல் வெளிப்படாமல் அமைச்சர்கள் மிகவும் மறைத்து வைத்திருந்து நெடுங்காலஞ் சென்ற பின்பும் தேரூர்ந்து கொன்றான். ஆதலால், முதியோன் இளையோன் என்று வேறுபாடு கருதாமல் முறை செய்ய வேண்டும் என்பதாம். தன் மகனென்றும் கண்ணோடாமல் முறை செய்த சோழனின் செங்கோன்மை இங்கு நினைவுகூரத் தக்கது. இவ்வரலாறு, பெரிய புராணத்தில், அக் கன்றின் தாய் அரண் மனை ஆராய்ச்சி மணியை அடிக்க, அரசன் நடந்ததை யுணர்ந்து மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்திலும் இவ்வாறே கூறப்படுகிறது. (2) 1078. முறைதெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும் இறைதிரியான் நேரொக்க வேண்டும் - முறைதிரிந்து நேரொழுகா னாயின் அதுவா மொருபக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு. (பழ) இறை திரியான் - அரசன் வழுவானாய், முறை தெரிந்து - செய்யும் முறையைத் தெரிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்த வர்க்கும் நேர் ஒக்க வேண்டும் - செல்வர்க்கும் வறியவர்க்கும் நடுவாக முறை செய்யவேண்டும், முறை திரிந்து நேர் ஒழுகான் ஆயின் - முறை தவறி நடுவாக நடவானானால், அது ஒருபக்கம் நீர் ஒழுகி பால் ஒழுகும் ஆறு - அது, தாயின் மார்பிலிருந்து ஒரு பிள்ளையின் பக்கம் நீர் ஒழுக மற்றொரு பிள்ளையின் பக்கம் பால் ஒழுகுமாறு போலும். நல்கூர்ந்தார் - வறுமையுற்றார். இறை - அரசன். திரியான் - வழுவான் - வழுவாமல் - முற்றெச்சம். நேர் - நடு. நேர்ஒத்தல் - நடுவுநிலையாதல். இருவர்க்கும் ஒப்ப முறை செய்தல். ஒழுகல் - நடத்தல். ஆம் - அசை. ஒரு பக்கம் நீர் ஒழுகி ஒரு பக்கம் பால் ஒழுகுமாறு என, ‘ஒரு பக்கம்’ என்பதை ஈரிடத்தும் கூட்டுக. தாயின் மார்பு ஒரு பக்கம் உண்கின்ற குழந்தைக்குப் பாலும், மறுபக்கம் உண்கின்ற குழந்தைக்கு நீருமாகச் சுரப்ப தில்லை. இரு பக்கமும் பாலே சுரக்கிறது. அதுபோல, அரசனும் உள்ளவர்க்கு ஒருவகையாகவும் இல்லாதவர்க்கு வேறொரு வகையாகவும் முறை செய்யக்கூடாது; நடுவாகவே செய்ய வேண்டும். எல்லாக் குடிமக்களையும் அரசன் பெற்ற தாய்போல் சரி சமனாக எண்ணவேண்டும் என்பது கருத்து. தகுதி யெனவொன்றே நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின். (குறள்) (3) 1079. பொருத்த மழியாத பூந்தண்டார் மன்னர் அருந்த மடிநிழ லாரை - வருத்தாது கொண்டாரும் போலாதே கோட லதுவன்றோ வண்டுதா துண்டு விடல். பொருத்தம் அழியாத தண் பூ தார் மன்னர் - முறை தவறாத குளிர்ந்த பூமாலையையணிந்த அரசர், அடி நிழலாரை - தம் அடி நிழலுள் வாழும் குடிகளை, வருத்தாது கொண்டாரும் போலாது - வருத்தாமலும் வருத்தியும் வாங்கினவர் போலா காமல், அருத்தம் கோடல் - அரசிறையைக் காலமறிந்து கொள்க, அது வண்டு தாது உண்டுவிடல் அன்றோ - அங்ஙனம் வரி வாங்குவது வண்டானது தாதுண்ணும் பூவை வருத்தாது உண்டு விடுதலோடொக்கும். பொருத்தம் - முறை. அழிதல் - கெடுதல். தண் - குளிர்ச்சி. தார் - மாலை. அருத்தம் - பொருள். இங்கு வரிப்பணம். அடி நிழலார் - ஆட்சிக் கீழ் வாழும் குடி மக்கள். கோடல் - கொள்ளல். தாது - பூந்தாது - தேன். வண்டானது மலர்ந்த பூக்களில் சென்று தேனுண்பது போல, அரசன் குடிமக்கள் கையில் பொருளுள்ள காலத்தே வரி வாங்க வேண்டும் என்பதாம். ‘வருத்தாமலும் வருத்தியும் வாங்கினவர் போலாகாமல்’ என்பது - குடிகட்கு வருவாயுள்ளபோது வாங்காமலும், வரு வாயில்லாதபோது வற்புறுத்தாமலும் உள்ள போது வாங்க வேண்டும் என்பதாம். (4) 1080. பாற்பட்டு வாழ்ப வெனினுங் குடிகள்மேல் மேற்பட்ட கூட்டு மிகநிற்றல் வேண்டாவாம்; கோற்றலையே யாயினுங் கொண்டீக காணுங்கால் பாற்றலைப் பாலூற லில். (பழ) பால்பட்டு வாழ்ப எனினும் - தன் ஆட்சிக்குட்பட்டு ஒழுங் காக வாழ்பவர்களேயாயினும், குடிகள்மேல் மேற்பட்ட கூட்டு மிக நிற்றல் வேண்டா - குடிகளிடத்து நிலுவையா யுள்ள வரி மிகுதியாக நிற்கக்கூடாது, காணுங்கால் - ஆராயுமிடத்து, பால் தலைபால் உறல்இல் - (ஒன்றாகக் கறக்கலா மென்று மாட்டின் மடியில் கறவாது விட்ட) பாலைவிட மிகுதியாகப் பால் சுரத்தல் இல்லை, (ஆகவே), கோல்தலையே ஆயினும் கொண்டீக - தாளடி நெல்லே யாயினும் அவ்வப்போது வாங்கிக் கொள்க. பால்பட்டு - தன் ஆட்சிக்குட்பட்டு. வாழ்ப - அடங்கி வாழ்பவர். மேற்படல் - நிலுவை நிற்றல் - பாக்கி நிற்றல். கூட்டு - வரி. கோல்தலை - தாளடிநெல். நெல்லடித்த பின் வைக்கோலைக் குவித்துத் தாம்பாடும்போது உதிர்ந்த நெல். இதில் பாளை கலந்திருக்கும். அது போரடிநெல் எனவும் படும். கொண்டீக - கொள்க. காணுங்கால் - ஆராயுமிடத்து. பால்தலை - முன்சுரந்த பால் மடியில் இருக்க. பால் ஊறல் இல் - அச்சுரந்த பாலைக் கறவாது விட்டால் மேலும் பால் சுரத்தல் இல்லை. காலையில் சுரந்த பாலைக் கறந்து கொண்டால் மாலை யிலும் அவ்வளவு பால் சுரக்கும். காலையில் கறவாது விட்டாலும் மாலையில் சுரக்கும் பால் அவ்வளவுதான் சுரக்கும். காலையில் கரவாது விட்ட பாலும் சேர்த்துச் சுரக்காது என்றபடி. மாட்டுப் பாலை வேளைக்குவேளை கறந்து கொள்ள வேண்டும். ஒருவேளை கறவாது விட்டால் அப்பாலும் சேர்ந்து அடுத்த வேளையில் சுரக்காது. அதுபோல, குடிகளிடம் அவ்வப் போது வரி வாங்கிக் கொள்ளவேண்டும். அவ்வாறு வாங்காது நிறுத்திவைத்து ஒன்றாக வாங்கினால் வரவேண்டிய வரி சரியாக வராது. ஆகையால், குடிகள் தருவது போரடி நெல்லே யாயினும் காலத்தே வாங்கிக் கொள்வதே நல்லது என்பதாம். (5) 1081. அடைய வடைந்தாரை அல்லவை செய்து கொடைவேந்தன் கோல்கொடிய னாகிக் - குடிகண்மேல் கூட்டிறப்பக் கொண்டு தலையளிப்பி னஃதன்றோ சூட்டறுத்து வாயி லிடல். (பழ) கொடைவேந்தன் - கொடைத் தொழிலையுடைய அரசன், கோல் கொடியன் ஆகி - கொடுங்கோலனாகி, அடைய அடைந்தாரை அல்லவை செய்து - தன்னை நெருங்க அடைந்தவர்க்குத் தீங்குசெய்து, குடிகள்மேல் கூட்டு இறப்ப கொண்டு - குடி மக்களிடம் மிகுதியாக வரி வாங்கி, தலை யளிப்பின் அஃது - அக் குடிகளுக்கு நன்மை செய்யின் அது, சூடு அறுத்து வாயில் இடல் அன்றோ - கோழிச் சேவலின் பூவை அறுத்து இரையாக அதன் வாயினுள் இடுதல் போலாகும். அடைய அடைந்தவர் - நெருங்கி வந்தவர்; நன்மை வேண்டி வந்தவர். அடைந்தவரை - அடைந்தவர்க்கு. வேற்றுமை மயக்கம். அல்லவை - தீமை. தீமையாவது - வரிகொடுக்க முடியவில்லை என்று கூறினோரிடம் வருத்தி வரி வாங்குதல். கோல் கொடியன் - கொடுங்கோலன். கூட்டு - வரி. இறப்ப - மிக. தலையளி - அன்பு. இங்கு நன்மை. சூடு - கோழிக் கொண்டை, பூ. அரசன் கொடுங்கோலனாகிக் குடிமக்களை வருத்தி அதிக வரி வாங்கிப் பின் அவர்கட்கு நன்மை செய்தலானது, கோழிச் சேவலின் பூவை அறுத்து அதற்கு இரையாகப் போடுவதனோ டொக்கும். வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றா னிரவு. (குறள்) (6) 1082. உடைப்பெருஞ் செல்வத் துயர்ந்த பெருமை அடக்கமில் உள்ளத்த னாகி - நடக்கையின் ஒள்ளிய னல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல். (பழ) அடக்கம் இல் உள்ளத்தன் ஆகி - அடக்கமில்லாத மனத்தை யுடையவனாகி, ஒள்ளியன் அல்லான்மேல் - நல்லொழுக்க மில்லாதவ னிடத்து, உடைப்பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை வைத்தல் - மிகப் பெரிய செல்வத்ததாகிய உயர்ந்த பெருமையை வைத்தலானது, குரங்கின் கை கொள்ளி கொடுத்து விடல் - குரங்கின் கையிலே கொள்ளிக் கட்டையைக் கொடுத்ததனோ டொக்கும். உடைப் பெருஞ் செல்வம் - மிகப் பெரிய செல்வம். உடைப் பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை - ஆட்சித் தலைமை. உள்ளம் - மனம். நடக்கை - ஒழுக்கம். ஒள்ளியன் - நல்லவன். ஒழுக்கத்தில் நல்லவன் - ஒழுக்கமுள்ளவன். குரங்கின் கையில் கொள்ளிக் கட்டையைக் கொடுத்தால்., அது வீட்டுக் கூரையில் தீவைத்து ஊரையே அழித்து விடுவது போல, அடக்கமும் நல்லொழுக்கமும் இல்லாதவனிடம் ஆட்சித் தலைமையைக் கொடுத்தால் - ஆட்சித் தலை வனாக்கினால், நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடுவான் என்பதாம். (7) 1083. கோலஞ்சி வாழுங் குடியும், குடிதழீஇ ஆலம்வீழ் போலு மமைச்சனும் - வேலின் கடைமணிபோல் திண்ணியான் காப்புமிம் மூன்றும் படைவேந்தன் பற்று விடல். (திரி) கோல் அஞ்சி வாழும் குடியும் - செங்கோலுக்கு அஞ்சி வாழ்கின்ற குடியும், குடிதழீஇ ஆலம் வீழ்போலும் அமைச்சனும் - குடிகளைத் தழுவி ஆலமரத்தின் விழுதைப் போலத் தாங்க வல்ல அமைச்சனும், வேலின் கடைமணி போல் திண்ணியான் காப்பும் - வேலினிடத்துப் பூண்போல் உறுதியுடைய வீரனது காவலும், இம்மூன்றும் படைவேந்தன் பற்றுவிடல் - ஆகிய இம் மூன்றையும் படையையுடைய அரசன் கைவிடாதிருக்கக் கடவன். கோல் - செங்கோல். கோல் அஞ்சிவாழ்தல் - அரசியல் சட்ட திட்டங்களுக்கு அடங்கி நடத்தல். சட்டத்தை மீறி நடத்தல் தகாச் செயலாகையால், ‘கோலஞ்சி வாழும்’ என்றார். தழீஇ - தழுவி. வீழ் - விழுது. விழுதுகள் கிளை களைத் தாங்குவது போல ஆட்சியைத் தாங்கும் அமைச்சன். தாங்குதல் - அரசனுக்கு ஆய்வுரை கூறி ஆட்சியை இனிது நடத்துதல். கடைமணி - பூண். திண்ணியான் - மனவுறுதியுடைய வீரன். காப்பு - காவல். பற்று விடுதல் - கைவிடுதல். அதாவது, குடிகள் முதலிய மூவர்க்கும் தன்னிடத்து அன்பு நீங்கும்படி அரசன் நடந்து கொள்ளுதல். விடல் - விடற்க. எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. அரசியலுக்கு அடங்கி நடக்கும் குடிகளையும், குடி களைத் தழுவி ஆட்சித்துணை செய்யும் அமைச்சரையும், நாட்டைக் காத்துவரும் உறுதியுடைய படை வீரரையும் அரசன் இனிது போற்றவேண்டும் என்பதாம். படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசரு ளேறு. (குறள்) என்னும் அரசியல் உறுப்புக்கள் ஆறனுள், முதன்மையான குடி, அமைச்சு, படை என்னும் மூன்றையும் அரசன் நன்கு போற்ற வேண்டும் என்பது கருத்து. (8) 1084. பத்திமை சான்ற படையும், பலர்தொகினும் எத்துணையு மஞ்சா வெயிலரணும் - வைத்தமைந்த எண்ணினுலவா விழுநிதியும் இம்மூன்றும் மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு. (திரி) பத்திமை சான்ற படையும் - (அரசரிடத்து) அன்பு நிறைந்த படையும், பலர் தொகினும் எத்துணையும் அஞ்சா எயில் அரணும் - பகைவர் பலர் ஒன்று கூடி எதிர்ப்பினும் சிறிதும் அஞ்சவேண்டாத மதிலரணும், வைத்து அமைந்த எண்ணின் உலவா விழுநிதியும் - ஈட்டி நிரம்ப வைக்கப் பட்டுள்ள அளவிட முடியாத பெரும் பொருளும், இம்மூன்றும் மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு - நிலத்தை ஆளுகின்ற அரசர்க்கு உறுப்புக்க ளாகும். பத்திமை - அன்பு. சான்ற - நிறைந்த. தொகுதல் - ஒன்று கூடுதல். எத்துணையும் - சிறிதும். அஞ்சா - உள்ளிருப்போர் அஞ்ச வேண்டாத. எயில் - மதில். அரண் - பாதுகாப்பு. வைத்தல் - ஈட்டி வைத்தல். அமைதல் - நிறைதல். எண்ணின் - அளவிடின். உலவா - முற்றுப் பெறாத. விழுநிதி - சிறந்த பொருள். அன்பு நிறைந்த படையையும், பகைவர் அணுக முடியாத பாதுகாப்பையும், அளவிடமுடியாத பெரும் பொருளையும் உடையவனே சிறந்த அரசன் ஆவான் என்பதாம். மக்களாட்சி நடக்கும் இக்காலத்திற்கும் இஃதொக்கும். (9) 1085. வார்சான்ற கூந்தல்! வரப்புயர வைகலும் நீர்சான் றுயரவே நெல்லுயரும் - சீர்சான்ற தாவாக் குடியுயரத் தாங்கருஞ்சீர்க் கோவுயரும் ஓவா துரைக்கு முலகு. (சிறு) வார்சான்ற கூந்தல் - நீட்சிமிக்க கூந்தலையுடையவளே, வைகலும் வரப்பு உயர - நாடோறும் வயல்களின் வரப்புகள் உயர்ந்திருக்க, (நீர் உயரும்), நீர் சான்று உயரவே நெல் உயரும் - நீர் மிகுந்து உயரவே நெற்பயிரானது வளர்ந்து உயர்வடையும், சீர்சான்ற தாவா குடி உயர - அதனால் சிறப்பு மிக்க கெடாத குடி மக்கள் உயர்வடைய, தாங்கு அரும் சீர்கோ உயரும் - பிறரால் தாங்கு தற்கரிய சிறப்பினையுடைய அரசன் உயர்வான், (என்று), உலகு ஓவாது உரைக்கும் - இவ்வுலகமானது ஒழியாமல் சொல்லும். வார் - நீண்ட. சான்ற - மிக்க. நீட்சிமிக்க - மிகநீண்ட. கூந்தல் - கூந்தலையுடைய பெண்ணை யுணர்த்திற்று. வரப்பு - வயலின் வரப்பு. வைகலும் - நாடோறும் - எப்போதும். சான்று - மிகுந்து. சீர் - சிறப்பு. தாவா - தாவாத - கெடாத. தாங்கு அரும்சீர் - பகைவரால் தாங்குதற்கரிய சிறப்பு. கோ - அரசன். ஓவாது - ஒழியாமல். உலகு - உலகமக்கள். வரப்புயர நீர் உயரும், நீருயர நெல்லுயரும், நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோனுயர்வான் என்பதாம். நாடெங்கும் எப்போதும் குறையாத நீர்வளமுண் டாக்குதல் அரசர் கடமை என்பது கருத்து. இன்று ஆள்வோர் கடமையாகும். (10) 1086. கண்ணிற் சொலிச் செவியின் நோக்கு மிறைமாட்சி புண்ணியத்தின் பாலதே யாயினும் - தண்ணளியால் மன்பதை யோம்பாதார்க் கென்னாம் வயப்படைமற் றென்பயக்கு மாணல் லவர்க்கு. (நீநெ) கண்ணின் சொலிச் செவியின் நோக்கும் இறை மாட்சி - கண்ணால் தன் கருத்தை அறிவித்துக் காதினால் செய்திகளை யறியும் ஆட்சிமுறை, புண்ணியத்தின் பாலதே ஆயினும் - நல்ல ஆட்சி முறையே ஆனாலும், தண்ணளியால் மன்பதை ஓம்பா தார்க்கு என்னும் - அன்போடு குடிகளை ஆளாத அரசர்க்கு அவ்வாட்சி முறை என்ன பயனைத்தரும்? ஆணல்ல வர்க்கு வயம்படை என் பயக்கும் - பேடிகளுக்கு வில் வாள் வேல் முதலிய படைக்கலங்கள் என்ன பயனைத் தரும்? சொலி - சொல்லி. நோக்குதல் - அறிதல். இறை - அரசன். மாட்சி - ஆட்சிமுறை. புண்ணியம் - நல்லது. பாலது - சேர்ந்தது. புண்ணியத்தின் பாலது - நல்ல ஆட்சி முறையைச் சேர்ந்தது. தண்ணளி - அன்பு. மன்பதை - குடிமக்கள். ஓம்புதல் - பாது காத்தல். வயம் படை - வாள்முதலிய படைக்கலங்கள். மற்று - அசை. பயக்கும் - தரும். ஆண் அல்லவர் - பேடிகள். கண்ணிற் சொல்லுதல் - அதிகாரிகளும் குடிமக்களும் தன் ஆணையைக் குறிப்பால் அறிந்து நடக்கும்படி பார்த்தல். செவியால் அறிதல் - ஒற்றர் மூலம் நாட்டில் நிகழும் செய்தி களைக் கேட்டறிதல். இவ்வாறு ஆள்வதே நல்லாட்சியாகும். இவ்வாறு ஆளுந்திறமை யில்லாதவர் அரசராவது, போர் செய்யும் ஆற்றலில்லாத பேடிகையில் வாள் முதலிய படைக் கலங்களை ஏந்துவது போலாகும் என்பதாம். கண்ணிற் சொல்லிச் செவியின் அறிந்து அன்போடு குடி மக்களை ஆள்வதே நல்லாட்சியாகும் என்பது கருத்து. (11) 1087. குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்றா மடிகொன்று பால்கொளலு மாண்பே - குடியோம்பிக் கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியம் வெள்ளத்தின் மேலும் பல. (நீநெ) குடி கொன்று இறைகொள்ளும் கோமகற்கு - குடி மக்களை வருத்தி வரி வாங்கும் அரசன் செயலைவிட, கன்றுஆ மடி கொன்று பால் கொளலும் மாண்பே - கன்றையுடைய ஆவின் மடியை வருத்திப் பால் கறப்பதும் நல்ல செயலாகும், குடி ஓம்பி கொள்ளுமா கொள்வோர்க்கு - குடிகளைப் பாதுகாத்து வாங்குகின்ற வகையில் வரி வாங்கும் அரசர்க்கு, மாநிதியம் வெள்ளத்தின் மேலும் பல காண்டும் - சிறந்த செல்வம் வெள்ளத்தின் மேலும் பலவாகச் சேரக் காண் கின்றோம். கொல்லுதல் - வருத்துதல். இறை - வரி. கோமகன் - அரசன். கற்றா - கன்றுஆ - இளங்கன்று - மாடு. மடி கொல்லல் - மடியை வருத்துதல். மாண்பு - நல்ல செயல். ஓம்புதல் - பாதுகாத்தல், வருத்தாமல் காத்தல். கொள்ளும் ஆறு. று - தொகுத்தல். காண்டும் - காண்கின்றோம். மாநிதியம் - சிறந்த செல்வம். வெள்ளம் - ஒரு பேரெண். கோடி கோடி - சங்கம் - 15 - 100000000000000 சங்கம் கோடி - விந்தம் - 22 விந்தம் கோடி - குமுதம், ஆம்பல் - 29 குமுதம் கோடி - கமலம், பதுமம் - 36 கமலம் கோடி - குவளை, நாடு - 43 குவளை கோடி - நெய்தல், சமுத்திரம் - 50 நெய்தல் கோடி - வெள்ளம் -57 மாடு பால் சுரக்காதபோது மடியை வருத்திப் பால் கறப்பதினுங் கொடியதாகும், பணமில்லாதபோது குடிகளை வருத்தி வரி வாங்குதல். மடியை வருத்திப் பால் கறப் போர்க்குப் பால் சேராததுபோல, குடிகளை வருத்தி வரி வாங்குவோர்க்கும் பொருள் சேராது. மாடு பால் சுரந்த போது கறப்பவர்க்குப் பால் நிறையக் கிடைப்பதுபோல, குடிகளிடம் பொருளுள்ளபோது வரி வாங்கும் அரசர்க்கு நிறையப் பொருள் சேரும் என்பதாம். கொள்ளுமாறு கொள்வோர்க்குக் குடிகள் விரும்பிக் கொடுப் பாராகையால், ‘மாநிதியம் வெள்ளத்தின் மேலும் பல காண்டும்’ என்றார். குடிகளை வருத்தி வரி வாங்குதல் கொடுங் கோன்மை என்பது கருத்து. (12) 1088. இன்று கொளற்பால நாளை கொளப்பொறான் நின்று குறையிரப்ப நேர்படான் - சென்றொருவன் ஆவன கூறி னெயிறலைப்பான் ஆறலைக்கும் வேடலன் வேந்து மலன். (நீநெ) இன்று கொளற்பால நாளை கொளப் பொறான் - இன்று கொள்ளத்தக்க பொருள்களை நாளைக்கு வாங்கிக் கொள்வ மென்றால் ஒரு நாள் பொறுக்க மாட்டான், நின்று குறை இரப்ப நேர்படான் - கொஞ்ச நேரம் எதிரே நின்று குடிகள் தங்கள் குறைகளைச் சொல்லிக்கொள்ள எதிர்ப்பட மாட்டான், ஒருவன் சென்று ஆவன கூறின் எயிறு அலைப்பான் - ஒருவன் எதிரே போய்த் தனக்கு வேண்டியவைகளைக் கூறினால் பல்லைக் கடித்து அச்சுறுத்து வான், ஆறு அலைக்கும் வேடு அலன் வெந்தும் அலன் - இத் தகையவன் வழிபறிக்கும் வேடனும் அல்லன் அரசனும் அல்லன். கொளற்பால - கொள்ளத்தக்க பொருள்கள். நின்று - எதிரில் நின்று. குறை இரத்தல் - குறைகளைச் சொல்லிக் கொள்ளல். நேர்படல் - எதிர்ப்படல் - காட்சிக் கெளிய னாதல். ஆவன - வேண்டுவன. எயிறு - பல். எயிறலைத்தல் - பற்கடித்தல். ஆறலைத்தல் - வழிபறித்தல். வேடு - வேடன் வேந்து - வேந்தன். இன்று வாங்க வேண்டிய வரியை நாளைக்கு வாங்கிக் கொள்ள அந்த ஒருநாள் பொறுக்கமாட்டான்; அங்ஙனம் ஒரு நாள் பொறுக்குமாறு குடிமக்கள் நேரில் தங்கள் குறைககளைச் சொல்லிக் கொள்ளலா மென்றாலும் அதற்கும் எதிர்ப்பட மாட்டான்; ஏதோ நல்ல வேளையாக எதிர்ப்பட்டா னாயினும் குடிகள் தங்கள் குறைகளைக் கூறும் பொழுது அதனை ஏற்றுக்கொள்ளாமல் பல்லைக் கடிப்பான்; அதாவது, சீறி விழுவான். இத்தகையவன் அரசனாக இருக்கத் தகுதி யற்றவன் என்பதாம். வழியில் நின்று பறியாமையால் வேடன் அல்லன் என்றும், அன்பின்றிக் குடிகளை வருத்தி வரி வாங்குத லால் அரசன் அல்லன் என்றும் கூறினார். குடிகளை வருத்தி வரி வாங்குதலும், காட்சிக் கெளியன் அன்மையும், கடுஞ் சொல் சொல்லுதலும் கொடுங் கோன்மை என்பதாம். இது இன்றைய ஆட்சித்தலைவர்களுக்கும் பொருந்தும். காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம். (குறள்) வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. (குறள்) (13) 1089. முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி உடுப்ப வுடுத்துண்ப வுண்ணா - இடித்திடித்துக் கட்டுரை கூறிற் செவிகொளா கண்விழியா நெடுயிர்ப்போ டுற்ற பிணம். (நீநெ) முடிப்ப முடித்து - முடிக்கத்தக்க மலர் முதலியவை களை முடித்துக்கொண்டு, பூசுவ பூசி - பூசத்தக்க கலவை முதலிய வைகளைப் பூசிக்கொண்டு, உடுப்ப உடுத்து - உடுக்கத்தக்க பட்டாடை முதலியவைகளை உடுத்திக் கொண்டு, உண்ப உண்ணா - உண்ணத்தக்க நல்ல உணவுகளை உண்டு கொண்டு, இடித்து இடித்து கட்டுரை கூறின் - பலமுறை இடித்து அறிவுரை கூறினாலும், செவிகொளா கண்விழியா - காதிற் கொள்ளாமலும் கண் திறந்து பாராமலும் உள்ள அரசர்கள், நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம் - பெருமூச்சோடு கூடிய பிணங்களேயாவர். முடிப்ப, பூசுவ, உடுப்ப, உண்ப - வினையாலணையும் பெயர்கள். உண்ணா - உண்டு - உடன்பாட்டு வினையெச்சம், உண்டு கொண்டு செவி கொளாமலும் விழியாமலும் உள்ள அரசர் என்க. இடித்து இடித்து கூறல் - மிகவும் வற்புறுத்திக் கூறல், வெட்க முண்டாகும்படி கூறல். கட்டுரை - அறிவுரை. கொளா - கொள்ளா மலும், விழியா - விழியாமலும். நெட்டு யிர்ப்பு - பெருமூச்சு. முடிப்பதும் பூசுவதும் உடுப்பதும் உண்பதுமான செயல்கள் உயிர் இருப்பதுபோல் காட்டுகின்றன. கேளாமையும் பாராமையும் உயிர் இல்லாததுபோல் காட்டுகின்றன. உயிர்த் தன்மையான முடிப்பது முதலியன செய்தும், அறிவுத் தன்மை யான கேட்பதும் பார்ப்பதும் இல்லாத அரசர்களை ‘நெட்டு யிர்ப்போ’டுற்ற பிணம் என்றார். முடிப்பது முதலியன செய்து அரச செல்வத்திலாழ்ந்து, பெரியோர் கூறும் அறிவுரையைக் கேளாமலும், குறை யிருக்கும் குடிகளைக் கண்ணால் பாராமலும் உள்ள அரசர் ஆளத் தகுதி யில்லார் என்பதாம். (14) 1090. ஒற்றிற் றெரியா சிறைப்புறத் தோர்துமெனப் பொற்றோ டுணையாத் தெரிதந்தும் - குற்றம் அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று முறையிடினுங் கேளாமை யன்று. (நீநெ) ஒற்றின் தெரியா - ஒற்றரால் தெரியப்படாதவற்றை, சிறைப் புறத்து ஓர்தும் என - மறைந்திருந்து தெரிந்து கொள் வோம் என்று, பொன்தோள் துணையா தெரிதந்தும் - தனது அழகிய தோளே துணையாகச் சென்று தெரிந்தும், குற்றம் அறிவரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை - குடி மக்களிடத்தில் காணும் குற்றங்களை உள்ளபடி அறிவது அருமையானதென்று அஞ்சுவதே நல்ல ஆட்சி முறையாகும், (அங்ஙனமன்றி), சென்று முறையிடினும் கேளாமை அன்று - குடிமக்களே நேரில் சென்று தம் குறைகளைச் சொல்லிக் கொண்டாலும் கேளாமல் இருப்பது செங்கோன்மை யன்று. தெரியா - தெரியப்படாத குடிகளின் குற்றங்கள் - வினை யாலணையும் பெயர். சிறைப்புறம் - மறைவிடம் - மாறு கோலத்தில் என்றபடி. ஓர்தல் - தெரிதல். தோளே துணையாகச் செல்லல் - தனியாகச் செல்லல். பொன் - அழகு. துணையா - துணையாக. தெரிந்ததும் - தெரிந்தும். குற்றம் - குடிமக்களிடம் காணும் குற்றங்குறைகள். ஒரு சிலர் செய்யுங் குற்றங்களையும், பலரிடங் காணும் குறைகளையும் என்ற படி. அறிவரிது என்று அஞ்சுதல் - ஒற்றராலும் தன்னாலும் அறியமுடியாத குற்றங் குறைகளும் இருக்கும். அவற்றை எவ்வாறு அறிவது என்று அஞ்சுதல். ஒற்றர்களைக் கொண்டு தெரிந்தும், மாறுகோலம் பூண்டு தானே நேரில் சென்று அறிந்தும், இன்னும் அறியப் படாத குற்றங்குறைகள் இருக்கும். அவற்றை எவ்வாறு அறிந்து, அக் குற்றங்குறைகளைத் தீர்த்துக் குடிமக்களைக் காப்பது என்று அஞ்சுவோனே அரசனாவன் - குடிகள் நேரில் சென்று தம் குறை களைச் சொல்லியும் கேளாதவன் அரசனா கான் என்பதாம். அரசன் தானே நேரில் சென்று குடிமக்கள் குற்றங் குறை களைத் தெரிதல், பொற்கைப் பாண்டியன் வரலாற்றால் உணர்க. ஒற்றினா னொற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்த தில். (குறள்) (15) 1091. ஏதிலார் யாதும் புகல விறைமகன் கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு - நேர்நின்று காக்கை வெளிதென்பார் என்சொலார் தாய்க்கொலை சால்புடைத் தென்பாரு முண்டு. (நீவெ) காக்கைநேர் நின்று வெளிது என்பார் என் சொலார் - காக்கையின் எதிரிலேயே நின்று கொண்டு வெண்மையானது என்று உண்மைக்கு மாறாகப் பேசுவோர் வேறு எதைத்தான் சொல்ல மாட்டார், தாய்க் கொலை சால்புடைத்து என்பாரும் உண்டு - தாயைக் கொலை செய்தல் கூடப் பொருத்தமானதே என்று சொல்வோரும் உலகத்தில் இருக்கிறார்கள், (ஆதலால்), ஏதிலார் யாதும் புகல இறைமகன் கோது ஒரீஇ கொள்கை முதுக்குறைவு - பிறர் தமக்குத் தோன்றியவா றெல்லாம் சொல்ல அரசன் அவர்கள் கூறிவதில் குற்றமானவற்றை நீக்கி நல்லன வற்றை மட்டுங் கொள்ளுதல் அறிவுடைமையாகும். ஏதிலார் - பிறர். யாதும் - தமக்குத் தோன்றியவாறு. புகல - சொல்ல. இறைமகன் - அரசன். கோது - குற்றம். ஒரீஇ - நீக்கி. கொள்கை - கொள்ளுதல். முதுக்குறைவு - பேரறிவு. வெளிது - வெண்மை. சால்பு - தகுதி, பொருத்தம். குடி மக்கள் வழக்கிட்டுக் கொண்டு ஒருவர்மேலொருவர் பொய்யும் புரட்டும் பொருந்தாதனவும் கூறுவாராகையால், அவர் கூற்றுக்களை அப்படியே கொள்ளாமல் பொருந்துவன வற்றையே கொள்ள வேண்டும் என்பதாம். இது வழக்குத் தீர்க்கும் போது அரசன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது கூறிற்று. இது நடுவர்கட்கும் பொருந்தும். (16) 1092. நட்புப் பிரித்தல் பகைநட்டல் ஒற்றிகழ்தல் பக்கத்தார் யாரையு மையுறுதல் - தக்கார் நெடுமொழி கோறல் குணம்பிறி தாதல் கெடுவது காட்டுங் குறி. (நீநெ) நட்புப் பிரித்தல் - நண்பர்களைப் பகையாக்கிக் கொள்ளு தலும், பகை நட்டல் - பகைவர்களை நட்பாக்கிக் கொள்ளு தலும், ஒற்று இகழ்தல் - ஒற்றர்களை இகழ்ந்து ரைத்தலும், பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் - உடனிருக்கும் அமைச்சர் முதலிய எல்லாரிடத்திலும் ஐயுறவு கொள்ளுதலும், தக்கார் நெடுமொழி கோறல் - பெரி யோர்களுடைய அறி வுரைகளை மீறுதலும், குணம் பிறிது ஆதல் - கெட்ட குண முடைய ராதலும் ஆகிய இவை, கெடுவது காட்டும் குறி - கெடுவதைக் காட்டும் அடையாளங்களாம். ஒற்று இகழ்தல் - ஒற்றர் கூறுவதை நம்பாமல் பிறர் முன்னி லையில் இகழ்ந்துரைத்தல். பக்கத்தார் - உடனிருந்து ஆட்சி நடத்தும் அமைச்சர், படைத்தலைவர், முதலியோர்; ஆட்சித் தொழிலுக்கு நெருங்கிய உரிமையுடையவர் என்பதாம். தக்கார் - பெரியோர். நெடு மொழி - அறிவுரை, உறுதிச் சொல். கோறல் - கொல்தல் - மீறுதல், தட்டுதல். கெடுவது காட்டும் குறி - கேட்டின் அடையாளங்கள். நட்புப் பிரித்தல் முதலிய ஆறையும் உடைய அரசன் கெடு வான் என்பதாம். ஒற்று - நம்மைப் பற்றிப் பிறர் பேசுவதைத் தெரிந்து சொல் வோராகவும், பக்கத்தார் - கூட்டாளிகளாகவும் கொண்டு, பொது வாகவும் கொள்ளலாம். (17) 1093. ஒற்றினா னொற்றிப் பொருடெரிதல் முன்னினிதே முற்றான் றெரிந்து முறைசெய்தல் முன்னினிதே பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல் வெற்றிவேல் வேந்தர்க் கினிது. (இனி) வெற்றி வேல் வேந்தர்க்கு - வெற்றியைத் தருகின்ற வேலை யுடைய அரசருக்கு, ஒற்றினால் ஒற்றி பொருள் தெரிதல் முன் இனிது - ஒற்றர்களைக் கொண்டு குடிமக்கள் பால் நிகழ்வன வற்றை அறியச் செய்து அவற்றைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் நல்லது, தான் முன் தெரிந்து முறை செய்தல் முன் இனிது - ஒரு குற்றத்தைத் தான் முதலில் தெரிந்து பின் அறிஞர்களோடு ஆராய்ந்து குற்றத்திற்குத் தக ஒறுத்தல் மிகவும் நல்லது, பற்று இலனாய் - ஒரு சிலரிடம் மட்டும் அன்பில னாய், பல் உயிர்க்கும் பாத்து உற்று பாங்கு அறிதல் இனிது - எல்லாரிடத்தும் அன்புற்று அவர்கள் நலனை அறிதல் நல்லது. ஒற்று - ஒற்றர். ஒற்றுதல் - குடிமக்கள் பால் நிகழும் குற்றங் குறைகளை அறியச் செய்தல். பொருள் - குற்றங் குறைகள். முன் இனிது - மிகவும் நல்லது. முறை செய்தல் - குற்றஞ் செய்தாரைத் தண்டித்தல். ஒறுத்தல் - தண்டித்தல். பற்று - அன்பு. பாத்து - பகுத்து. பாத்து உற்று - எல்லாரி டத்தும் அன்புற்று. பாங்கு - நன்மை. ஒற்றர்களைக் கொண்டு குடிமக்கள் பால் நிகழும் குற்றங் குறைகளை அறிதலும், அவ்வாறு அறியப்பட்ட குற்றத்தின் உண்மை யைத் தான் முதலில் அறிந்து பின் அறிஞர் களோடு ஆராய்ந்து தண்டித்தலும், குடி மக்கள் எல்லோரி டத்திலும் ஒரு நிகரான அன்புடையனாய் அவர்கள் நலனறி தலும் அரசனுடைய கடமை யாகும் என்பதாம். (18) 1094. கோல்கோடி மாராயஞ் செய்யாமை முன்னினிது. (இனி) கோல் கோடி மாராயம் செய்யாமை - அரசன் முறை தவறி ஒருவர்க்குச் சிறப்புச் செய்யாமை, முன் இனிது - மிகவும் நல்லது. கோல் கோடல் - முறைதவறல், மாராயம் - சிறப்பு. அரசன், அரசியல் அலுவலாளர்களுக்கும், அதிகாரிகட்கும் குடிமக் கட்கும் வேண்டியவர் வேண்டாதவர் எனக் கொண்டு, பட்டம், பதவி யுயர்வு முதலிய சிறப்புச் செய்தல் கூடாது. தகுதிப்படியே செய்ய வேண்டும் என்பதாம். இது, மக்க ளாட்சிக்கு மிகவும் பொருந்தும். (19) 1095. பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்னினிது. (இனி) பற்று அமையா வேந்தன் கீழ் - (குடிகளிடத்தில்) அன் பில்லாத அரசனுடைய ஆட்சியில், வாழாமை முன் இனிது - வாழாதிருத்தல் மிகவும் நல்லது. பற்று - அன்பு. அமையா - அமையாத - இல்லாத. அரசன் குடிகளிடத்து அன்புடையவனாக இருத்தல் வேண்டும். இது அமைச்சர், அதிகாரிகள் எல்லோர்க்கும் பொருந்தும். (20) 1096. காப்பாற்றா வேந்த னுலகின்னா. (இன்) வேண்டுவன செய்து குடிகளைக் காப்பாற்றாத அரசனது நாட்டில் வாழ்வது துன்பமாம். உலகு - நாடு. (21) 1097. கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா. (இன்) கொடுங்கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் - கொடுங் கோல் செலுத்தும் கொடிய அரசர்களது ஆட்சிக் கீழ் வாழ்வது, இன்னா - துன்பமாம். மறம் - கொடுமை. (22) 1098. முறையின்றி யாளும் அரசின்னா. (இன்) முறை இன்றி ஆளும் - நீதியில்லாமல் ஆளுகின்ற, அரசு இன்னா - அரசனது ஆட்சி துன்பமாம். (23) 1099. நாட்டாக்கம் நல்லனிவ் வேந்தென்றல். (நான்) இவ் வேந்து நல்லன் என்றல் - இவ்வரசன் நல்லவன் என்று குடிமக்களால் பாராட்டப்படுதல், நாடு ஆக்கம் - அந் நாட்டுக்கு உயர்வாம். குடிமக்களால் நல்லவன் என்று பாராட்டப்படும் அரசன் ஆளுகின்ற நாடு பிற நாடுகளினும் உயர்வுறும் என்பதாம். இது மக்களாட்சித் தலைவர்கட்கு மிகவும் பொருந்தும். (24) 1100. கோல்நோக்கி வாழுங்குடி யெலாம். (நான்) குடி எலாம் - குடிமக்கள் எல்லோரும், கோல் நோக்கி வாழும் - அரசனது செங்கோன்மையை நோக்கி வாழ்வார்கள். அரசன் கொடுங்கோல னானால் தாங்கள் துன்புற நேரு மாகையால், குடிமக்கள் அரசன் செங்கோலனாக இருக்க வேண்டு மென்பதையே எண்ணிக் கொண்டு வாழ்வர் என்பதாம். வானோக்கி வாழு முலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழும் குடி. (குறள்) (25) 1101. முறையி லரசனாடு நல்கூர்ந் தன்று. (முது) முறை தவறி யாளும் அரசனுடைய நாடானது, வறுமை யுறும். நல்கூர்தல் - வறுமையுறுதல். முறையிலானோடு குடிகள் முரண்பட்டு நடப்பாரா கையால், நாடு நல்கூர்வதாயிற்று. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். (குறள்) (26) 1102. ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான். (முது) ஏமம் வேண்டுவோன் - குடிகளைப் பாதுகாத்தலை விரும்பிய அரசன், முறை செயல் தண்டான் - முறை செய் தலைத் தவிரான். ஏமம் - பாதுகாப்பு. வேண்டுதல் - விரும்புதல். முறை - நீதி. தண்டான் - தவிரான், நீங்கான். ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்தி யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்) என்பது முறையின் இலக்கணம். யாரிடத்தும் இரக்கங் காட்டாது குற்றத்திற்குத் தகத் தண்டித்தலே முறையாகும். அவ்வாறு முறை செய்து குடிகளைக் காப்பது அரசன் கடமை யாகும். (27) 1103. மன்னர்க் கழகு செங்கோன் முறைமை. (வெற்) செங்கோல் செலுத்துதல் மன்னர்க்கு அழகாகும். (28) 1104. கொடுங்கோல் மன்னர் வாழு நாட்டிற் கடும்புலி வாழுங் காடு நன்றே. (வெற்) கொடுங்கோலையுடைய அரசர்கள் ஆட்சி செய்கின்ற நாட்டில் வாழ்வதைவிட, கொடிய புலி வாழ்கின்ற காடு நல்லதே. கொடுங்கோல் மன்னர் ஆட்சிக் கீழ் வாழ்வது கொடியது என்பதாம். (29) 1105. குடியலைத் திரந்து கோலொடு நின்ற முடியுடை யிறைவனா மூர்க்கனும் பதரே. (வெற்) குடி அலைத்து இரந்து - குடிகளை வருத்தி வரி வாங்கி, கோலொடு நின்ற - கொடுங்கோலாட்சி செய்கின்ற, முடி யுடை இறைவனாம் மூர்க்கனும் பதர் - முடியையுடைய அரசனாகிய கொடியவனும் அரசருள் பதராவன். அலைத்தல் - வருத்துதல். இரத்தல் - மிகுவரிவாங்கல். கோல் - கொடுங்கோல். மூர்க்கன் - கொடியவன். பதர் - பாளை; பயனில்லாதவன். குடிகளை வருத்தி வரி வாங்கிக் கொடுங் கோலாட்சி புரியும் அரசன் அரசனாகான் என்பதாம். வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. (குறள்) (30) 69. அமைச்சியல் அதாவது, அமைச்சரது இலக்கணம். 1106. கல்வி யகலமுங் கட்டுரை வாய்பாடும் கொல்சின வேந்த னவைகாட்டும் - மல்கி தலைப்பா யிழிதரு தண்புனல் நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை. (பழ) மல்கி தலை பாய் இழிதரு தண்புனல் நீத்தம் - நிறைந்து குன்றிட மெல்லாம் பரவி வீழ்கின்ற குளிர்ந்த வெள்ளப் பெருக்கு, மலை பெயல் காட்டும் துணை - மலையிலே மழை பெய்த அளவினை அறிவிக்கும் அளவாம்; (அதுபோல்) கொல்சின வேந்தன் கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும் - பகைவரைக் கொல்லுகின்ற சினத்தையுடைய அரசனது கல்வியின் பெருமை யையும் சொல்வன்மையையும், அவை காட்டும் - அவனது அமைச்சரவை அறிவிக்கும். அகலம் - பெருமை, மிகுதி, கட்டுரை வாய்பாடு - சொல் வன்மை, அவை - அமைச்சரவை. மல்குதல் - நிறைதல். தலை - இடம், மலையின் இடம். பாய் - பரவி. இழிதருதல் - விழுதல். தண் - குளிர்ச்சி. புனல் - நீர் - வெள்ளம். நீத்தம் - பெருக்கு. புனல் நீத்தம் - வெள்ளப் பெருக்கு. பெயல் - மழை பெய்தல். துணை - அளவு. மலையிலிருந்து வரும் வெள்ளப் பெருக்கு மலையில் மழை பெய்த அளவினைக் காட்டுவது போல, அரசனுடைய கல்வியின் பெருமையையும் சொல்வன்மையையும் அவனது அமைச்சரவை அறிவிக்கும் என்பதாம். அமைச்சர் சிறந்த கல்வியறிவும் சொல்வன்மையும் உடைய ராய் இருத்தல் வேண்டும் என்பது கருத்து. (1) 1107. கற்றார் பலரைத்தன் கண்ணாக வில்லாதான் உற்றிடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம், மரையா துணைபயிரும் மாமலை நாட சுரையாழ் நரம்பறுத் தற்று. (பழ) மரையா துணை பயிரும் மா மலை நாட - மலை மாடுகள் தம் துணைகளை அழைக்கும் பெரிய மலை நாடனே, கற்றார் பலரை தன் கண்ணாக இல்லாதான் - கற்றறிந்த அமைச்சர்கள் பலரைத் தன் கண்ணாக இல்லாத அரசன், உற்று இடர்ப்பட்ட பொழுதின்கண் தேற்றம் - தனக்கு ஏதாயினும் துன்பம் வந்த போது செய்யத் தகுவது இன்னதென்று துணியும் துணிவு, சுரை யாழ் நரம்பு அறுத்தற்று - ஒரு நரம்பையுடைய செங்கோட்டி யாழின் அவ்வொரு நரம்பையும் அறுத்ததனோ டொக்கும். உற்று இடர்ப்பட்ட பொழுது - துன்பம் வந்தபோது. தேற்றம் - தெளிவு - துணிவு. மரைஆ - காட்டுமாடு. துணை - ஆண் மாடு. பயிர்தல் - அழைத்தல். சுரை - நரம்பு. அற்று - போலும். அறிவுடைய அமைச்சர் பலரைத் தனக்குக் கண்ணாகக் கொள்ளாத அரசன், ஏதாவது இடருற்ற போது செய்யத் தகுவது இன்னதென்று தானே துணியுந் துணிவு, உள்ள ஒரு நரம்பும் அறுந்த செங்கோட்டியாழ் போல் பயன்படாது என்பதாம். பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், செங்கோட்டியாழ் என்னும் யாழ் நான்கனுள், செங்கோட்டியாழ் ஒரு நரம்பை யுடையது. கண்ணாகக் கொள்ளல் - ஆட்சி முறையை நோக்கும் கண்ணாகக் கொள்ளுதல். இன்று அமைச்சர்கள் அத்தகைய அதிகாரிகளைக் கண்ணாகக் கொள்வார்களாக. சூழ்வார்கண் னாக வொழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். (குறள்) (2) 1108. செயல்வேண்டா நல்லன செய்விக்குந் தீய செயல்வேண்டி நிற்பின் விலக்கும்; இகல்வேந்தன் தன்னை நலிந்து தனக்குறுதி கூறலால் முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல். (பழ) மூத்தார் வாய்ச் சொல் - அறிவு முதலியவற்றில் மூத்த அமைச்சரது வாய்ச் சொல்லானது, செயல் வேண்டா நல்லன செய்விக்கும் - அரசன் செய்ய விரும்பாத நல்லனவற்றைச் செய்யும் படி செய்யும், தீய செயல் வேண்டி நிற்பின் விலக்கும் - தீமைகளைச் செய்ய விரும்பினால் செய்யாமல் விலக்கும், இகல் வேந்தன் தன்னை நலிந்து தனக்கு உறுதி கூறலால் - வலிமை பொருந்திய அரசனை வருத்தி அவனுக்கு நன்மை யாயின வற்றையே சொல்லுத லால், முன் இன்னா - முதலில் துன்பந் தரும், பின்னர் இன்பந் தரும். செயல் - செய்தல். வேண்டா - வேண்டாத - விரும்பாத. வேண்டி நிற்பின் - விரும்பினால். இகல் - வலிமை. நலிந்து - வருத்தி. உறுதி - நன்மை. இன்னா - துன்பம். மூத்தார் - அறிவு, ஆண்டு, பழக்கம் ஆகியவற்றில் முதிர்ந்த அமைச்சர். அமைச்சர் சொல், அரசன் செய்ய விரும்பாத நல்லன வற்றைச் செய்யும்படி செய்யும், தீயனவற்றைச் செய்ய விரும்பினால் செய்யாமல் விலக்கும், எனினும், அரசனை வருத்தி அவ்வாறு கூறுவதால் அச் சொல் முன்னே துன்பமாகத் தோன்றும். அத்துன்பத்தைப் பொருட்படுத்தாது அம்மூத்தார் சொல்லைக் கொள்ள வேண்டும் என்பதாம். அமைச்சர் செய்வதை அவர் சொல்மேலேற்றி, சொல் செய்விக்கும் விலக்கும் என்றார் உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். (குறள்) (3) 1109. செறிவுடைத் தார்வேந்தன் செவ்வியல பெற்றால் அறிவுடையார் அவ்வியமுஞ் செய்வர் - வறிதுரைத்துப் பிள்ளை களைமருட்டுந் தாயர்போல் அம்புலிமேல் ஒள்ளிய காட்டற் கரிது. (பழ) செறிவுடை தார் வேந்தன் செவ்வி அல பெற்றால் - செறிந்த மாலையை யணிந்த அரசன் தகுதியல்லாதவை களைச் செய்ய முற்பட்டால், அம்புலிமேல் வறிது உரைத்து - திங்களைக் காட்டிப் பொய் கூறி, பிள்ளைகளை மருட்டும் தாயார் போல் - அழுகின்ற பிள்ளைகளைத் தெளிவிக்குந் தாய்மார் போல, அறிவுடையார் அவ்வியமும் செய்வர் - அறிவுடைய அமைச் சர்கள் பொய்யுரைத்து வஞ்சித்தாயினும் அரசனை நல்வழிப் படுத்துவர்; (ஏனெனில்), ஒள்ளிய காட்டற்கு அரிது - உண்மையைக் கூறித் தெளிவித்தல் அரிதாகும். செறிவு - நெருக்கம், அடர்த்தி; நெருக்கமாகத் தொடுத்த மாலை. தார் - மாலை. செவ்வி - நல்லது, செவ்வி அல - தீயவை. அறிவுடையோர் - அமைச்சர். அவ்வியம் - வஞ்சனை, ஏமாற்றல், அதாவது பொய்யை மெய்போலக் கூறி நம்பும் படி செய்தல். வறிதுரை - பொய்யுரை, பயனில்லாத சொல். மருட்டுதல் - தெளிவித்தல். அம்புலி - திங்கள். ஒள்ளிய - உண்மையாயின. குழந்தைகள் அழுதால் உண்மை கூறி அழுகையை மாற்ற முடியாதாகையால், திங்களைக் காட்டித் திங்கள் விளையாட வருவதாகப் பொய்கூறி குழந்தைகளின் அழுகையை அடக்கும் தாய்மாரைப்போல, அரசன் தவறு செய்ய முற் பட்டால், உண்மை யைக் கூறி அவனை நல்வழியில் திருப்ப முடியா தாகையால் அமைச்சர்கள் பொய் கூறியேனும் அவனை நல்வழிப்படுத்துவர் என்பதாம். (4) 1110. ஐயறிவுந் தம்மை யடைய வொழுகுதல் எய்துவ தெய்தாமை முற்காத்தல் - வைகலும் மாறேற்கு மன்னர் நிலையறிதல் இம்மூன்றும் சீரேற்ற பேரமைச்சர் கோள். (திரி) ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல் - ஐம்புலனும் தம்மிடத்து அடங்கியிருக்கும்படி நடத்தலும், எய்துவது எய்தாமை முன்காத்தல் - அரசனுக்கு வருவதாகிய தீங்கை வராதபடி முன் அறிந்து தடுத்தலும், மாறு ஏற்கும் மன்னர் நிலை வைகலும் அறிதல் - தம்மோடு பகை கொள்ளும் அரசருடைய நிலையை நாடோறும் அறிதலும், இம்மூன்றும் சீர் ஏற்ற பேரமைச்சர் கோள் - ஆகிய இம்மூன்றும் சிறப்புப் பொருந்திய பேரமைச்சர்களின் கடமை யாகும். ஐயறிவு - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐம் புலன்கள். தம்மை அடைய - தமக்கு அடங்கியிருக்க. இது புலனடக்கம். எய்துவது - வருவது. வருந் தீமை. வைகலும் - நாடோறும். மாறு - பகை. மாறேற்றல் - பகை கொள்ளல். பகையரசர் நிலை அறிதல் - அவர் படைவலி முதலியவற்றை ஒற்றரால் அறிந்து அதற்குத் தகத் தமது படை முதலிய வற்றைப் பெருக்குதல். சீர் - சிறப்பு. கோள் - கொள்கை, கடமை. புலனடக்கமுடையரா யிருத்தலும், அரசனுக்கு வரக் கூடிய தீங்கை முன் அறிந்து வராதபடி தடுத்தலும், பகைவர் நிலையை அவ்வப்போது அறிதலும் அமைச்சர் கடமை யாகும் என்பதாம். (5) 1111. தன்னிலையுந் தாழாத் தொழினிலையுந் துப்பெதிர்ந்தா ரின்னிலையு மீடி லியனிலையும் - துன்னி அளந்தறிந்து செய்வா னரசமைச்சன் யாதும் பிளந்தறியும் பேராற்ற லான். (சிறு) தன் நிலையும் - தனது நிலையினையும், தாழா தொழில் நிலையும் - தாழ்வில்லாத தனது போர் முதலிய தொழிலின் நிலையினையும், துப்பு எதிர்ந்தாரின் நிலையும் - தமது வலியினால் தன்னோடு எதிர்த்தவராகிய பகைவரின் நிலை யையும், ஈடுஇல் இயல் நிலையும் - ஒப்பில்லாத இயற்கையின் நிலையினையும், துன்னி அளந்து அறிந்து செய்வான் அரசு - நன்கு ஆராய்ந்தறிந்து செய்பவன் அரசனாவான், யாதும் பிளந்து அறியும் பேராற்றலான் அமைச்சன் - எல்லவற்றையும் பகுத்தறிகின்ற பேராற்றலை யுடையவன் அமைச்சனாவான். தன்நிலை - தனது படைவலி, பொருள்வலி முதலிய வற்றின் நிலை. தாழா - தாழாத - தாமதியாத; தாமதியாது செய்யப்படும் தொழில், தொழில் - போர் முதலிய ஆட்சித் தொழில். துப்பு - வலிமை. எதிர்ந்தார் - பகைவர். பகைவரின் நிலை - படைவலி முதலியன. ஈடு - ஒப்பு. இயல் - இயற்கை. அது காலம் முதலிய வற்றின் இயல்பு. துன்னி - பொருந்தி - நன்கு. அளத்தல் - ஆராய்தல். யாதும் - தன்னிலை முதலிய நான்குமன்றி மற் றெல்லாம். பிளந்து - பகுத்து. ஆற்றல் - அறிவுத்திறமை. தனது நிலையையும், தனது தொழிலின் நிலையையும், பகைவர் நிலையையும், காலம் இடம் முதலிய இயற்கையின் நிலையையும், நன்கு ஆராய்ந்தறிந்து போர் முதலிய ஆட்சித் தொழிலை இனிது செய்பவன் அரசனாவான். தன்னிலை முதலியவற்றோடு, மற்றெல்லாவற்றையும் பகுத்தறியும் பேராற்ற லுடையவன் அமைச்சனாவான் என்பதாம். (6) 1112. செவிசுடச் சென்றாங் கிடித்தறிவு மூட்டி வெகுளினும் வாய்வெரீஇப் பேரா - கவிழ்மதத்த கைம்மா வயத்ததே பாகுமற் றெத்திறத்தும் அம்மாண் பினவே யமைச்சு. (நீநெ) பாகு - பாகன், எத்திறத்தும் கவிழ்மதத்த கைமாவ யத்தது - எவ்வகையாலும் பொழியும் மதத்தினையுடைய யானையின் வயத்தினனாவான்; (அதுபோல), அமைச்சு எத்திறத்தும் அம்மாண் பின - அமைச்சர்கள் எவ்வகையாலும் அரசனிடத்து அத்தன்மை யராவர்; (ஆகையால்), சென்று செவிசுட இடித்து அறிவுமூட்டி - அரசன் நெறி தவறினால் (அவனிடம்) போய் அவனுடைய செவிகள் வருந்தும்படி (குற்றங்களை எடுத்துக் காட்டி) இடித்துரைத்து அறிவு வரச் செய்து, வெகுளினும் வாய் வெரீஇ பேரா - அவன் வெகுளினும் அஞ்சி அவனை விட்டு அகலார். சுட - வருந்த. ஆங்கு அசை. இடித்தல் - இடித்துரைத்தல் - கடிந்து கூறுதல். மூட்டி - உண்டாக்கி. வாய்வெரீஇ - அஞ்சி. வெரீஇ - வெருவி. பேரா - அகலார். கவிழ்தல் - பொழிதல். கைமா - யானை. பாகு - பாகன். மற்று - அசை. திறம் - வகை. மாண்பின - தன்மையர். அமைச்சு - அமைச்சர். பாகு, அமைச்சு என்றதற்கேற்ப, வயத்தது, பேரா, மாண்பின என அஃறிணையாற் கூறினார். யானை தன்னியல்பில் இருக்குபோது அதனைத் தன்வயப் படுத்தி நடத்தும் பாகன், அது வெறிகொண்டு தன்னிலை தவறிய போது அங்குசத்தால் அதன் காதுகளில் இடித்து அதன் வெறியை அடக்கி மறுபடியும் அதனைத் தன்னியல்பிற்குக் கொண்டு வருவது போல, அரசன் தன்னியல்பில் இருக்கும் போது அவனைத் தம் வயப்படுத்தி நடத்தும் அமைச்சர், அவன் சினங்கொண்டு தன்னிலை தவறுங்கால், அவன் செவி களில் நன்மொழிகளை இடித்துரைத்து அறிவு புகட்டி அவனை மறுபடியும் தன்னியல்பிற்குக் கொண்டு வருவர் என்பதாம். வெறிகொண்டபோது யானை வெகுளினும் பாகன் அஞ்சிய கலாமல் அதனை அடக்கி நல்வழிப்படுத்துவது போல, அரசர் வெகுளினும் அஞ்சியகலாது அறிவுரை கூறி அவனை நல்வழிப் படுத்துவது அமைச்சர் கடன் என்றபடி. கதங்கொள் சற்றத்தை யாற்றுவா னினியன கழறிப் பதங்கொள் பாகனும் மந்திரி யொத்தனன். (கம்பராமாயணம்) அறிகொன் றறியா னெனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன். (குறள்) (7) 1113. மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல். (வெற்) மந்திரிக்கு அழகாவது பின் வருவதை அரசனுக்கு முன்னாடி யே அறிவித்தலாகும். இது அமைச்சரது முதன்மை யான கடமை யாகும். (8) 1114. மாண்டமைந்தா ராய்ந்த மதிவனப்பே வன்கண்மை ஆண்டமைந்த கல்வியே சொல்லாற்றல் - பூண்டமைந்த கால மறிதல் கருதுங்கால் தூதுவர்க்கு ஞால மறிந்த புகழ். (ஏலா) மாண்டு அமைந்து ஆராய்ந்த மதி - மாட்சிமைப் பட்டு நிறைந்து ஆராய்ந்தடைந்த அறிவுடையராதலும், வனப்பு - தோற்றப் பொலிவுடையராதலும், வன்கண்மை - பகைவர்க்கு அஞ்சாமை யுடையராதலும், ஆண்டு அமைந்த கல்வி - மறவாமல் காத்து நிரம்பிய கல்வியறிவுடையராதலும், சொல் ஆற்றல் - சொல்வன்மை யுடையராதலும், பூண்டு அமைந்த காலம் அறிதல் - பொருந்தி அமைந்த காலத்தையறிதலும், கருதுங்கால் - ஆராயு மிடத்து, தூதுவர்க்கு -, ஞாலம் அறிந்த புகழ் - உயர்ந்தோர் அறிந்த புகழைத் தருவனவாம். மாண்டு - மாட்சிமைப்பட்டு - சிறந்து என்றபடி. அமைதல் - நிறைதல். ஆராய்ந்த மதி - அரசியல் நூல்களையும் அற நூல் களையும் ஆராய்ந்து அடைந்த அறிவு. மதி - அறிவு. வனப்பு - அழகு - தோற்றப் பொலிவு. வன்கண்மை - அஞ்சாமை. ஆளுதல் - மறவாமல் பாதுகாத்தல். அமைந்த - நிரம்பிய. கல்வி - கல்வியறிவு. சொல் ஆற்றல் - சொல்வன்மை. பூண்டு - பொருந்தி. பூண்டு அமைந்த காலம் - பகைவரிடம் சொல்லுதற்கும், சொல்வதை அவர் கேட்பதற்கும் தகுந்த காலம். கருதுதல் - ஆராய்தல். ஞாலம் - உயர்ந்தோர். புகழ் - புகழைத் தருவன. சிறந்த அறநூல் அரசியல் நூலறிவும், தோற்றப் பொலிவும், பகைவர்க்கு அஞ்சாமையும், நிறைந்த கல்வியறிவும், சொல் வன்மையும், பகைவரிடம் பேசி உடன்படுத்தும் காலமறியுந் திறனும் தூதர்க்குப் புகழைத் தரத்தக்கன என்பதாம். இத்தகைய இலக்கண முடையவரே பகைவரிடம் தூது செல்லற்குத் தகுதியுடையர் என்பது கருத்து. அமைச்சரே தூது செல்லற் குரியராவர். கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்க தறிவதாந் தூது. (குறள்) அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. (குறள்) (9) 1115. எள்ளப் படுமரபிற் றாகலும் உள்பொருளைக் கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி உள்பொருள் சொல்லு முணர்ச்சியும் இம்மூன்றும் ஒள்ளிய ஒற்றாள் குணம். (திரி) எள்ளப்படும் மரபிற்று ஆகலும் - (பகைவரால் தன் செய்கை) மதிக்கப்படாத இயல்புடையதாதலும், உள்பொருளை கேட்டு மறவாத கூர்மையும் - பகைவரிடத்து நடப்பதைக் கேட்டுப் பின் மறவாத கூரறிவுடைமையும், உள்பொருள் முட்டு இன்றி சொல்லும் உணர்ச்சியும் - கேட்டறிந்ததைத் தடையின்றித் தன் அரசனுக்குச் சொல்லுகின்ற தெளிவுடை மையும், இம் மூன்றும் ஒள்ளிய ஒற்றாள் குணம் - ஆகிய இம்மூன்றும் அறிவுள்ள ஒற்றனது தன்மையாகும். எள்ளப்படுதல் - இகழப்படுதல். மரபு - இயல்பு, தன்மை. எள்ளப்படுந்தன்மை - பகைவர்கள் இவனை ஒரு பொருளாக மதியாமை, இவன் அயல் நாட்டு ஒற்றன் என்று ஒருவரும் எண்ணாத படி நடந்து கொள்ளுதல். உள்பொருள் - பகைவரிடத்து நடப்பது; தன் அரசனைப் பற்றி அப்பகைவர் பேசிக் கொள்வது. கூர்மை - கூரிய அறிவு. முட்டு - தடை. உள்பொருள் - கேட்டறிந்தது. உணர்ச்சி - தெளிவு. ஒள்ளிய - அறிவுள்ள. குணம் - தன்மை. பகைவர் நாட்டில் தான் ஒற்றாய்வதைப் பிறர் கவனியாத படி நடந்து கொள்ளுதலும், அப்பகைவர் பேசிக் கொள்வதைக் கேட்டறிந்து கொள்ளும் கூரிய அறிவும், கேட்டறிந்ததைத் தன் அரசனிடம் தெளிவாகச் சொல்லுதலும் அறிவுள்ள ஒற்றனது இயல்பாகும் என்பதாம். ஒற்றும் அமைச்சரவையைச் சேர்ந்ததே. (10) 70. பகைத்திறம் அதாவது, பகைவரிடம் நடந்துகொள்ள வேண்டிய வகை, தற்செய்கை, பகை வெல்லல் முதலியன. 1116. வன்சார் புடைய ரெனினும் வலிபெய்து தன்சார் பிலாதாரைத் தேசூன்ற லாகுமோ? மஞ்சுசூழ் சோலை மலைநாட யார்க்கானும் அஞ்சுவார்க் கில்லை யரண். (பழ) மஞ்சுசூழ் சோலை மலை நாட - முகில் தங்கும் சோலை யையுடைய மலை நாடனே, வன்சார்பு உடையர் எனினும் - வலியாரைத் துணையாக உடையவராயினும், தன் சார்பு இலாதாரை - தன்வலி யில்லாதாரை, வலி பெய்து தேசு ஊன்றல் ஆகுமோ - வலியுண்டாக்கி வெற்றிப் புகழை நிலைநாட்ட ஒருவரால் முடியு மோ, முடியாது, யார்க்கானும் அஞ்சுவார்க்கு அரண் இல்லை - யாரைக் கண்டாலும் அஞ்சுவோர்க்கு ஒரு பாதுகாப்பான இடம் இல்லை. சார்பு - துணை. பெய்து - உண்டாக்கி. தேசு புகழ். இங்கு வெற்றிப்புகழ், ஊன்றல் - நிலைநாட்டல். மஞ்சு - மேகம், யார்க் கானும் - தன்னைவிட மிகவும் தாழ்ந்த வலியுடை யாரைக் கண்டும், அரண் - பாதுகாப்பு. தன்வலி - படைவலி, பொருள்வலி முதலிய வற்றோடு மனவலியும். தன்வலி இல்லாத அரசர், மிக்க வலியுடைய அரசர் பலரைத் துணையாகப் பெற்றிருக்கினும் பகை வெல்ல முடியாது. யாரைக் கண்டும் அஞ்சும் மன வலியில்லார்க்குத் துணை வலியால் பயனில் லை என்பதாம். மனவலியோடு, படைவலி, பொருள்வலிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமேயன்றித் துணைவலியை மட்டும் நம்பி யிருக்கக் கூடாது என்பது கருத்து, அச்ச முடையார்க் கரணில்லை. (குறள்) (1) 1117. எதிர்த்த பகையை யிளைதாய போழ்தே கதித்துக் களையின் முதிராதே தீர்த்து நனிநயப்பச் செய்தவர் நண்பெல்லாந் தீரத் தனிமரங் காடாத லில். (பழ) எதிர்த்த பகையை இளைதாய போழ்தே - தம்மோடு எதிர்த்த பகையை அது உண்டான போதே, கதித்து களையின் முதிராது - விரைந்து களைந்துவிட்டால் அது முதிராது; அவர் நண்பெல்லாம் நனி நயப்ப செய்து - அப்பகைவருடைய நண்பரை யெல்லாம் தம்மை மிகவும் விரும்பும்படி செய்து, தீரத்தீர்ந்து - மிகவும் பிரித்தால், தனிமரம் காடாதல் இல் - தனியே ஒரு மரம் நின்று காடாவதில்லை. (அதுபோல் அவர்தான் அஞ்சத்தக்க பகைவர் ஆகார்.) கதித்தல் - விரைதல். களைதல் - அடியோடழித்தல் நீக்குதல். தீர்த்தல் - பிரித்தல். தீரத்தீர்த்தல் - தொடர்பின்றிப் பிரித்தல். நனி - மிக. நயத்தல் - விரும்புதல். பகை உண்டான போதே விரைவில் களைந்துவிட வேண்டும். அவர் நண்பரையெல்லாம் பிரித்துத் தமக்கு நண்ப ராக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் தனிமரம் காடாகாத வாறு போல, தனியாகிய அப்பகைவரால் ஒன்றுஞ் செய்ய முடியாது என்பதாம். பகையை முதிர விடாமல் களைவதோடு, பகைவர்க்குத் துணையாயினோரைப் பிரித்துத் தமக்குத் துணையாக்கிக் கொள்ள வேண்டும் என்பது கருத்து. இளைதாக முள்மரம் கொல்க, களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து. (குறள்) (2) 1118. முன்னலிந் தாற்ற முரண்கொண் டெழுந்தோரைப் பின்னலிது மென்றிருத்தல் பேதைமையே - மின்னின்ற காம்பன்ன தோளி கலத்திற் கடித்தோடும் பாம்பின்பற் கொள்வாரோ வில். (பழ) மின்நின்ற காம்பு அன்ன தோளி - மின்னல் போல ஒளி பொருந்திய மூங்கில் போன்ற தோளையுடையவளே, கலத்தின் கடித்து ஓடும் பாம்பின் பல் கொள்வார் இல் - கப்பலினின்றும் கடித்துவிட்டு ஓடுகின்ற பாம்பின் பல்லைப் பிடுங்குவார் இல்லை, ஆற்ற முரண் கொண்டு முன் நலிந்தோரை - மிகவும் பகைகொண்டு முன்னாகத் தம்மை வருத்தினவரை, பின் நலிதும் என்று இருத்தல் பேதைமை - பின்பு நலிவோம் என்று எண்ணி யிருத்தல் அறியாமையேயாம். நலிதல் - வருத்துதல் - படையெடுத்து வருதல். ஆற்ற - மிக. முரண் - பகை. நலிதும் - நலிவாம். பேதைமை - அறி வின்மை. நின்ற - போன்ற. காம்பு - மூங்கில். கலம் - கப்பல். கொள்ளுதல் - பிடுங்குதல். கடிப்பதற்கு முன்னே பாம்பின் பல்லைப் பிடுங்கிவிட வேண்டும். அதுபோல, பகைவர் படையெடுத்து வந்து வருத்து வதற்கு முன்னரே எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்பதாம். உயிர்ப்ப வுளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். (குறள்) (3) 1119. தமரல் லவரைத் தலையளித்தக் கண்ணும் அமராக் குறிப்பவர்க் காகாதே தோன்றும்; சுவர்நிலஞ் செய்தமையக் கூட்டியக் கண்ணும் உவர்நில முட்கொதிக்கு மாறு. (பழ) சுவர்நிலம் செய்து அமையகூட்டிய கண்ணும் - சுவர் மண்ணாகச் செய்து நன்கு செறியும்படி சுவர் வைத்த விடத்தும், உவர் நிலம் உள் கொதிக்கும் ஆறு - உவர் மண் உள்ளே உருகி உதிருமாறு போல, தமர் அல்லவரைத் தலையளித்தக் கண்ணும் அவர்க்கு ஆகாதே - பகைவரை அன்பு செய்து போற்றிய விடத்தும் அது அவர்க்கு அன்பாகத் தோன்றாது, அமரா குறிப்பு தோன்றும் - விரும்பாத குறிப்பாகத் தோன்றும். தலையளித்தக் கண்ணும் அவர்க்கு ஆகாது, அமராக் குறிப்புத் தோன்றும் எனக் கூட்டுக. தமர் - உறவினர். தமர் அல்லர் - பகைவர். தலையளி - அன்பு. தலையளித்தல் -அன்பு செய்து போற்றுதல். அமரா - அமராத - விரும்பாத; அன்பல்லாததாக. அன்பாகத் தோன்றாது, அன்பல் லாததாகத் தோன்றும் என்றபடி, நிலம் - மண். சுவர் மண்ணாகச் செய்தல் - தண்ணீர் விட்டுக் குழைத்தல். அமைதல் - செறிதல் - இறுகுதல். கூட்டுதல் - சுவர் வைத்தல். உவர்நிலம் - உவர் மண். உள்கொதித்தல் - உள்ளே உருகிச் சுவரின் வெளியே மண் உதிர்தல். ஆறு - போல. உவர்மண்ணைத் தண்ணீர்விட்டு நன்கு பிசைந்து வைத் தாலும் அது ஒட்டியிராமல் உதிரும். அதுபோல, பகைவரை அன்பு செய்து போற்றினாலும் அவர் நட்பினராக இராமல் வேறுபடுவர் என்பதாம். (4) 1120. தழங்குகுரல் வானத்துத் தண்பெயல் பெற்றால் கிழங்குடைய வெல்லாம் முளைக்குமோ ராற்றால் விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டொழுகல் வேண்டா பழம்பகை நட்பாத லில். தழங்கு குரல் வானத்துத் தண் பெயல் பெற்றால் - முழங்கு கின்ற ஓசையையுடைய முகிலின்கண் உள் குளிர்ந்த மழையைப் பெற்றால், கிழங்குடைய எல்லாம் ஓர் ஆற்றால் முளைக்கும் - கிழங்குடைய புல் முதலாயின வெல்லாம் ஒருவகையால் முளைக்கும்; பழம்பகை நட்பு ஆதல் இல் - பழம் பகைவர் நட்பினர் ஆதல் இல்லை; (ஆகையால்), அவரை விழைந்து வேர் சுற்ற கொண்டு ஒழுகல் வேண்டா - அப் பழம் பகைவரை விரும்பி வேரூன்றும்படி ஒருவரும் நட்பாகக் கொண்டொழுக வேண்டா. தழங்குதல் - ஒலித்தல். குரல் - ஒலி. வானம் - முகில். தண் - குளிர்ச்சி. பெயல் - மழை. கிழங்குடைய - கோரை, அறுகு முதலியன. ஆறு - வகை. விழைந்து - விரும்பி. அவரை - அப் பகைவரை. வேரூன்றும்படி - உறுதியாக. நட்பிற்கு மழையும், பழம் பகைவர்க்குக் கிழங்கு டையனவும், நட்பின் துணையால் பழம் பகைவர் தலை யெடுப்பதற்கு மழையின் துணையால் கிழங்குடையன முளைப்பதும் உவமை. பழம்பகைவர் நட்பின ராகாராகையால், பழம் பகை வரை நட்பினராகக் கொண்டால், அந்நட்பையே துணை யாகக் கொண்டு தீங்கிழைப்பராகையால் பழம்பகைவரை நட்பினராகக் கொள்ளக் கூடாது என்பதாம். பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட் டகநட் பொரீஇ விடல். (குறள்) (5) 1121. வெள்ளம் பகையெனினும் வேறிடத்தார் செய்வதென் கள்ள முடைத்தாகிச் சார்ந்த கழிநட்புப் புள்ளொலிப் பொய்கைப் புனலூர அஃதன்றோ அள்ளில்லத் துண்ட தனிசு. (பழ) புள் ஒலி பொய்கை புனல் ஊர - பறவைகளின் ஒலி பொருந்திய குளங்களையுடைய புனலூரனே, வேறு இடத்தார் பகை வெள்ளம் எனினும் செய்வது என் - வேறு நாட்டின் கண் உள்ள பகைவர் வெள்ளம் என்னும் எண்போல மிகப் பலரா யினும் அவர்கள் வந்து செய்யுந் துன்பம் என்ன, கள்ளம் உடைத்தாகி சார்ந்த கழிநட்பு அஃது - வஞ்சனை - பொருந்திய மனத்தை உடையராகித் தம்மை யடைந்த உட்பகைவரது நட்பானது, அள் இல்லத்து உண்ட தனிசு அன்றோ - ஒரு வீட்டில் குடியிருப்போரிடம் வாங்கிய கடன் போலாகு மன்றோ? வெள்ளம் - ஒரு பேரெண். ‘குடிகொன்று’ என்னும் செய்யுளுரையைப் பார்க்க. வெள்ளம் பகை - வெள்ளம் போன்ற பகை. வேறு இடத்தார் - வேறு நாட்டார். கள்ளம் - வஞ்சனை. கழி - மிக. புள் - பறவை. பொய்கை - குளம், புனல் - நீர். அள் - நெருக்கம். அள் இல்லம் - இல்லில் நெருங்கி யிருப்பவர் - ஒரு வீட்டில் இருப்பவர். உண்ட - கொண்ட - வாங்கின. தனிசு - கடன். வேறு நாட்டிலுள்ள பகைவர் மிகப் பலராயினும் அவரால் துன்பம் உண்டாகாது. உட்பகைவர் நட்பானது உள் வீட்டுக் கடன் போல் துன்பந்தரும் என்பதாம். உள்வீட்டார் கடனை அடிக்கடி கேட்டுத் துன்புறுத்து வது போல, உட்பகைவர் அடிக்கடி துன்புறுத்துவர் என்பது கருத்து. வான்போல் பகைவரை அஞ்சற்க, அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. (குறள்) (6) 1122. ஒன்னா ரடநின்ற போழ்தி னொருமகன் தன்னை யெனைத்தும் வியவற்க - துன்னினார் நன்மை யிலராய் விடினும் நனிபலராம் பன்மையிற் பாடுடைய தில். (பழ) ஒன்னார் அட நின்ற போழ்தின் - தனது பகைவர் போர் செய்யத் தொடங்கிய பொழுதில், ஒரு மகன் - தனியனாயுள்ள அரசன், தன்னை எனைத்தும் வியவற்க - பகைவரை வெல்ல வல்லவனாகத் தன்னை எத்துணையும் வியவாதொழிக, துன்னினார் நன்மை இலராய் விடினும் - தன்மேல் போர் தொடுத்தவர் வீர மில்லாதவராயினும், நனி பலராம் பன்மையின் பாடு உடையது இல் - அவர் மிகவும் பலராயிருத்தலை விடப் பெருமையுடையது வேறு இல்லை. ஒன்னார் - பகைவர். அடுதல் - போர் செய்தல். வியத்தல் - தான் மிக்க வலியுடைமையால் பகைவரை வென்று விடுவேம் என்று எண்ணுதல். துன்னினார் - ஒன்று கூடினவர். நன்மை - வீரம். நனி - மிக. பன்மை - பல. நனிபலராம் பன்மை - மிக மிகப்பலர். பாடு - பெருமை. வீரமில்லாராயினும் மிகப்பலர் ஒன்று கூடின் வலியுடைய ராவர். ஆகையால், ஒருவன் மிக்க வலியுடையவனாயினும் பலரைத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும். ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். (குறள்) (7) 1123. யானுமற் றிவ்விருந்த எம்முனு மாயக்கால் வீரஞ் செயக்கிடந்த தில்லென்று கூடப் படைமாறு கொள்ளப் பகைதூண்ட லஃதே இடைநாயிற் கென்பிடு மாறு. (பழ) யானும் இவ்விருந்த எம்முனும் ஆயக்கால் - நானும் இவ் விடத்திருந்த என் தமையனுமாகப் போர் செய்யத் தொடங் கினால், வீரம் செயக் கிடந்தது இல் என்று - பகைவரால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை யென்று புகழ்ந்து கூறி, கூட - தன் பகைவர்க்குத் துணையானோர் தன்னோடு கூட, படை மாறு கொள்ள - தன் பகைவரை எதிர்க்கும் வகை. பகை தூண்டல் அஃது - பகைமை யைத் தூண்டுதலானது, இடை நாயிற்கு என்பு இடும் ஆறு - இடையர் நாய்க்குத் திருடர் எலும்பிடு மாறு போலும். எம்முனும் என்றது - தன் பகைவர்க்குத் துணையா யினாரை. ஆயக்கால் - ஒன்று கூடிப் போர் செய்தால். வீரம் என்றது பகை வரை, பகைவர் வீரம் எனினுமாம். கூட - தன்னொடு கூட. படைமாறு கொள்ள - தன் பகையை எதிர்க்க. பகை தூண்டல் - தன் பகைவர் மீது பகை கொள்ளச் செய்தல். நாய் இன் - இன் - சாரியை. என்பு - எலும்பு. ஆறு - போலும். ஆடு திருட விரும்பும் திருடர், இடையருடைய ஆட்டு மந்தையைக் காக்கும் நாய்க்கு எலும்பு போட்டு வசப் படுத்திக் கொள்வது போல, பகைவரை வெல்ல விரும்பும் அரசன், பகைவர்க்குத் துணையாவோரைப் புகழ்ந்து வசப் படுத்தித் தன் பகைவரிடம் பகை கொள்ளும்படி செய்ய வேண்டும் என்பதாம். (8) 1124. தெள்ளி யுணருந் திறனுடையார் தம்பகைக் குள்வாழ் பகையைப் பெறுதல் உறுதியே; கள்ளினால் கள்ளறுத்தல் காண்டு மதுவன்றோ முள்ளினால் முட்களையு மாறு. (பழ) தெள்ளி உணரும் திறன் உடையார் - ஆராய்ந்தறியுந் திறனுடையவர், தம் பகைக்குள் வாழ் பகையைப் பெறுதல் உறுதியே - தமது பகைவர்க்குள்ளே வாழும் உட்பகை யாரைத் தமக்கு வசமாகப் பெறுதல் நன்மையே; கள் கள்ளி னால் அறுத்தல் காண்டும் - முன் குடித்த ஒருவகைக் கள்ளின் வெறியைப் பின் குடிக்கும் மற்றொரு வகைக் கள்ளினால் நீக்குதலைக் காண்கிறோம். அது முள் முள்ளினால் களையும் ஆறு அன்றோ - அது தன் காலில் தைத்த முள்ளை மற்றொரு முள்ளினாலே களைவது போலாகும். தெள்ளி - ஆராய்ந்து. உறுதி - நன்மை, கள் - கள்ளின் வெறி, காண்டும் - காண்கிறோம். தன்மைப் பன்மை. முள்ளைக் கொண்டு காலில் தைத்த முள்ளைக் களைவது போல, தன் பகைவரிடத்தில் உட்பகை யுடையாரைக் கொண்டு தன் பகைவரைக் களைய வேண்டும் என்பதாம். கள்ளைக் கொண்டு கள்ளறுத்தலும், முள்ளைக் கொண்டு முட் களைதலும் உவமை. (9) 1125. சிறிய பகையெனினு மோம்புதல் தேற்றார் பெரிதும் பிழைபா டுடையர் - நிறைகயத் தாழ்நீர் மடுவில் தவளை குதிப்பினும் யானை நிழல்காண் பரிது. (நீநெ) பகை சிறிய எனினும் - தம் பகைகள் சிறியனவாயி ருப்பினும், ஓம்புதல் தேற்றார் - அவற்றினின்றும் தம்மைக் காத்துக் கொள்ளு தலை உணராதவர், பெரிதும் பிழைபாடு உடையர் - மிகவும் குற்ற முடையராவர், நீர் நிறை கயத்து ஆழ்மடுவில் - நீர் நிறைந்த குளத்தின் ஆழமான மடுவில், தவளை குதிப்பினும் யானை நிழல் காண்பு அரிது - தவளை குதித்தாலும் அம்மடுவில் காண்கின்ற யானையின் நிழலையும் காணுதல் அரிதாகி விடும். ஓம்புதல் - பாதுகாத்தல். தேற்றுதல் - உணர்தல். பிழை - குற்றம். கயம் - குளம். மடு - குளத்தின் ஆழமான இடம். ஆழ்மடு எனக் கூட்டுக. காண்பு - காணுதல். குளக்கரையில் ஒரு யானை நிற்கிறது. அதன் நிழல் நீரில் காணப்படுகிறது. அப்போது ஒரு சிறு தவளை தண்ணீரில் குதிக்கிறது. அதனால் நிர் கலங்கி யானையின் நிழல் சிதைவுறு கிறது. தவளை யோ யானையினும் எவ்வளவோ சிறியது. தவளை குதித்தால் நீர் நிலை முழுவதும் காணப்பட்ட யானை நிழல் சிதைவுறுவது போல, சிறிய பகைவராயிருந்தாலும் அவராலும் கேடுண்டு ஆகையால், சிறிய பகை என்றாலும் அவற்றினின்றும் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதாம். பஞ்சியின் மெல்லி தேனும் பகைசிறி தென்ன வேண்டா அஞ்சித்தற் காக்க வேண்டும். (சிந்தாமணி) (10) 1126. மாற்றானுக் கிடங்கொடேல். (ஆத்) மாற்றான் - பகைவன். பகைவன் எளிதில் வெல்லும் படி இடங் கொடுக்கக் கூடாது. பகைவர் நம் நாட்டை யணுகாமல் பாதுகாப்புச் செய்து கொள்ள வேண்டும் என்பதாம். (11) 71. நிலையாமை அதாவது, செல்வம், இளமை, யாக்கை இவற்றின் நிலை யாமையை உணர்தல். இவ்வுணர்ச்சி, செல்வ முதலிய மூன்றாலும் செருக்கின்றி வாழவும், அவற்றின் பயனை இனிது நுகரவும் பயன்படுதலின், நிலையாமையை உணர்தல் இன்றியமை யாத தாகும். தொல்காப்பியரும் காஞ்சித் திணையில் இந்நிலை யாமைகள் பற்றி விளக்கமாகக் கூறியுள்ளார். 1. செல்வ நிலையாமை 1127. துகடீர் பெருஞ்செல்வந் தோன்றியக் காற்றொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க அகடுற யார்மாட்டு நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும். (நால) செல்வம் - அகடு உறவார் மாட்டும் நில்லாது - நடுவு நிலைமை பொருந்த எவரிடத்தும் நிலைபெறாமல், சகடக் கால் போலவரும் - வண்டிச் சக்கரம் போல மாறி மாறி வரும்; (ஆதலால்), துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டு - குற்றமற்ற பெருஞ்செல்வம் உண்டான நாள் தொடங்கி, பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க - எருமைக் கடாக்கள் பூட்டி உழுது உண்டாகிற உணவைப் பலரோடுங்கூடி உண்க. துகள் - குற்றம். செல்வத்திற்குக் குற்றமாவது - கெட்ட வழியில் வருதல். பகடு - எருமைக்கடா, எருது. கூழ் - உணவு. பல்லார் - விருந்தினர், சுற்றத்தார், நண்பர் முதலியோர். அகடு - நடுநிலை. உற - பொருந்த. சகடம் - வண்டி. கால் - சக்கரம். செல்வம் நடுவுநிலைமை பொருந்த எவரிடத்தும் நிலை பெறாமல் வண்டிச் சக்கரம் போல மாறி மாறி வரும். ஆதலால், பெருஞ்செல்வம் உண்டானால் அச்செல்வம் பலருக்கும் பயன் படும்படி வாழ வேண்டும் என்பதாம். அற்கா வியல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல். (குறள்) (1) 1128. அறுசுவை யுண்டி யமர்ந்தில்லா ளூட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்ப ரோரிடத்துக் கூழெனிற் செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. (நால) அறுசுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட - அறு சுவையோடு கூடிய உணவை அன்போடு மனைவி உண்பிக்க, மறு சிகை நீக்கி உண்டாரும் - மற்றொரு கவளத்தை விலக்கி உண்ட பெருஞ் செல்வமுடையோரும், வறிஞராய் ஓர் இடத்து சென்று கூழ் இரப்பர் எனின் - வறியவர்களாய் வேறோரி டத்தில் போய்க் கூழை இரப்பார்களென்றால், செல்வம் ஒன்று உண்டு ஆக வைக்கற்பாற்று அன்று - செல்வம் என்கிற ஒரு பொருள் நிலை யுள்ளதாக எண்ணத் தக்க தன்மையுடைய தன்று. அறுசுவை - இனிப்பு, கசப்பு, காரம், புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு. உண்டி - உணவு. அமர்ந்து - விரும்பி, அன்போடு. இல்லாள் - மனைவி. ஊட்ட - எடுத்தெடுத்துக் கொடுக்க. சிகை - கவளம். பிடிசோறு, மனைவி அன்போடு எடுத்துக் கொடுத்தலால், ஒவ்வொரு சுவையிலும் ஒவ்வொரு பிடியே உண்டு பசியாறி, இரண்டாவது பிடியை விலக்கினாரென்க. கூழ் - கேழ்வரகு மாவினால் காய்ச்சியது. உண்டு ஆக - நிலையுடையதாக. வைத்தல் - மனத்தில் எண்ணுதல். பாற்று - பான்மை, தன்மை. தமது வீட்டில், அறுசுவையோடு கூடிய உணவைத் தம் மனைவி அன்போடு உண்பிக்க மறுசிகை நீக்கியுண்ட பெருஞ் செல்வரும், வறுமையுற்று உண்ண உணவின்றி, வேறோரி டத்தில் சென்று கூழாகிய இழிந்த உணவையும் கேட்டு வாங்கி உண்பர் ஆகையால், செல்வம் நிலையுடைய தென்று எண்ணுந் தன்மை யுடையதன்று என்பதாம். அறுசுவையோடு கூடிய உணவை மனைவியூட்ட மறுசிகை நீக்கியுண்ட அத்தகு செல்வரும், மிகத்தாழ்ந்த சுவையற்ற கூழை இரந்துண்பர் எனச் செல்வ நிலையாமையின் கொடுமை கூறியவாறு. (2) 1129. உண்ணா னொளிநிறான் ஓங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ இழந்தானென் றெண்ணப் படும். (நால) (ஒருவன்), உண்ணான் - தானும் உண்டுடுத்து இன்புறான், ஒளி நிறான் - நன்மதிப்பையும் நிலைபெறச் செய்யான், ஓங்கு புகழ் செய்யான் - மிக்க புகழையும் தேடான், துன் அருங் கேளிர் துயர்களையான் - நெருங்கிய அருமையான சுற்றத் தாரது துன்பத் தையும் போக்கான், வழங்கான் கொன்னே பொருள் காத்து இருப்பானேல் - ஏழைகளுக்குக் கொடாமலும் வீணாகச் செல்வத் தைக் காத்து வருவானானால், அஆ இழந்தான் என்று எண்ணப்படும் - ஐயோ! அவன் அச் செல்வத்தை இழந்து விட்டா னென்றே யாவராலும் நினைக்கப் படுவான். உண்ணுதல் - உடுத்தல் முதலியவற்றிற்கு இனவிலக் கணம். ஒளி - நன்மதிப்பு. நிறான் - நிலைபெறச் செய்யான். ஒளி நிறுத்தல் - பிறர் நன்கு மதிக்கத் தக்கபடி நடந்து கொள்ளல். துன்னுதல் - நெருங்குதல். துன் அருங்கேளிர் - மிக நெருங்கிய சுற்றத்தார். கொன்னே - வீணாக; பயனின்மை குறிக்கும் இடைச்சொல். வழங்கல் - இல்லார்க்குக் கொடுத்தல். அஆ - இரக்கங் குறிக்கும் இடைச்சொல். பாடுபட்டுத் தேடிய செல்வத்தைத் தானும் நுகராமல், பிறர்க்கும் பயன்படச் செய்யாமல் இருப்பது அதனை இழந்த தற்கு ஒப்பாகும் என்பதாம். அவ்வாறு காத்து வந்தாலும் செல்வம் நிலையா தாகை யால், அச்செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்பட வாழ வேண்டும் என்பது கருத்து. (3) 1130. உடாஅது முண்ணாதுந் தம்முடம்பு செற்றும் கெடாஅத நல்லறமுஞ் செய்யார் - கொடாஅது வைத்தீட்டி னாரிழப்பர் வான்றோய் மலைநாட உய்த்தீட்டுந் தேனீக் கரி. (நால) வான்தோய் மலை நாட - வானளாவிய மலைகளை யுடைய நாடனே, உடாதும் உண்ணாதும் உடம்பு செற்றும் - நல்ல உடை களை உடுக்காமலும் நல்ல உணவுகளை உண்ணா மலும் தமது உடம்பை வருத்தியும், கெடாத நல் அறமும் செய்யார் - அழியாத நல்ல அறங்களையும் செய்யாமலும், கொடாது வைத்து ஈட்டினார் இழப்பர் - ஏழைகளுக்குக் கொடாமலும் செல்வத்தை ஈட்டி வைத்தவர் (அதை ஒரு காலத்தில்) இழந்தே விடுவர், உய்த்து ஈட்டும் தேனீ கரி - (பல பூக்களிலிருந்து தேனை) எடுத்துக்கொண்டு போய்ச் சேர்த்து வைக்கின்ற தேனீக்களே அதற்குச் சான்றாகும். செற்று - வருத்தி. கெடாத நல்லறங்கள் - குடிகிணறு வெட்டி வைத்தல், கல்விச்சாலை, மருத்துவசாலை கட்டி வைத்தல் போன்ற வை. வைத்து ஈட்டினார். ஈட்டி வைத்தவர். ஈட்டுதல் - தேடுதல், சேர்த்தல், தோய்தல் - பொருந்துதல். உய்த்தல் - எடுத்துக்கொண்டு போதல். ஈட்டுதல் - சேர்த்து வைத்தல். கரி - சான்று. தேனீக்கள் பல நாள் சிறிது சிறிதாகச் சேர்த்து வைத்த தேனை ஒரு நாளில் ஒருவன் அழித்துக் கொண்டு போவது போல், ஒருவன் பல காலமாகச் சேர்த்து வைத்த செல்வத்தை ஒரு காலத்தில் கள்வர் முதலியோர் எடுத்துக் கொண்டு போவ ரென்பதாம். தேனீக்கள் உண்ணாமல் சேர்த்து வைத்த தேனை இழப்பது போல, உடாமலும் உண்ணாமலும் கொடாமலும் சேர்த்து வைப்போரும் இழப்பர் என்பது கருத்து. உண்டுடுத்து, நல்லறங்கள் செய்து, இல்லார்க்குக் கொடுத்து வாழவேண்டும் என்பது. (4) 1131. ஆறிடு மேடு மடுவும்போ லாஞ் செல்வம் மாறிடு மேறிடு மாநிலத்தீர் - சோறிடும் தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக உண்ணீர்மை வீறு முயர்ந்து. (நல்) மாநிலத்தீர் - பெரிய உலகத்தில் உள்ளவர்களே செல்வம் - ஆறு இடும் மேடும் மடுவும் போல் - ஆற்று வெள்ளம் உண்டாக்குகின்ற மேடும் பள்ளமும் போல ஏறிடும் மாறிடும் - ஓங்கி வளரும் அடியோடு போய் விடும், (ஆகை யால்), சோறு இடும் தண்ணீரும் வாரும் - ஏழைகளுக்குச் சோறு போடுங்கள், தண்ணீரும் ஊற்றுங்கள், தருமமே சார்பாக - அவ்வறமே துணை யாக உண் நீர்மை உயர்ந்து வீறும் - உங்களுடைய நில முதலிய பொருள்கள் ஓங்கி வளரும். ஆறு - ஆற்று வெள்ளம். மடு - பள்ளம். ஆம் - அசை. மாறிடும் - அழிந்து விடும், போய் விடும். ஏறிடும் - உயரும், பெருகும். மேடுபோல் ஏறிடும், மடுபோல் மாறிடும் எனக் கூட்டுக. எதிர் நிரனிரை. மா - பெரிய. தருமம் - அறம். சார்பு - துணை. உண் - உணவு. உணவுப் பொருளைத் தரும் நிலத்தை யுணர்த்திற்று. நீர்மை - தன்மை, இங்கு அத்தன்மையான பொருளைக் குறித்தது. வீறுதல் - வளருதல். ஆற்றில் வரும் முதல் வெள்ளம் மணலைக் குவித்து ஓரிடத்தை மேடாக்கும். அடுத்த வெள்ளம் அவ்விடத்தைப் பள்ள மாக்கி, வேறோரிடத்தை மேடாக்கும். இவ்வாறே செல்வமும் வரவும் போகவும் இருக்கும். ஆகையால், செல்வம் வந்த போது ஏழை களுக்கு உதவினால், அதனால் செல்வம் அழியாதிருக்கும் என்பதாம். (5) 1132. உடைமையும் வறுமையு மொருவழி நில்லா. (வெற்) உடைமையும் வறுமையும் - செல்வமும் வறுமையும், ஒரு வழி நில்லா - ஒரே வழியில் நிற்கமாட்டா. ஒருவழி நிற்றல் - மாறாமல் நிலையாக நிற்றல். போகவும் வரவும் இருக்கும் என்பதாம். கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கு மதுவிளிந் தற்று. (குறள்) (6) 1133. குடைநிழ லிருந்து குஞ்சர மூர்ந்தோர் நடைமெலிந் தோரூர் நண்ணினு நண்ணுவர். (வெற்) குடை நிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் - வெண் கொற்றக் குடையின் நிழலில் இருந்து யானையை ஊர்ந்து செல்லும் அரசரும், நடை மெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர் - நடை தளர்ந்து வேறொரு நாட்டை அடைந் தாலும் அடைவர். நடை மெலிதல் - கால் நடையாக நடப்பதால் நடை தளர்தல். வெண்கொற்றக் குடையுடன் யானை மேல் ஊர்வலம் வந்த அரசரும், அவ்வரச செல்வத்தை இழந்து கால் நடையாக நடந்து வேறொரு நாட்டிற்குப் பிழைக்கச் செல்ல நேரினும் நேரும் என்பதாம். (7) 1134. சிறப்புஞ் செல்வமும் பெருமையு முடையோர் அறக்கூழ்ச்சாலை யடையினு மடைவர். (வெற்) சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர் - அறக்கூழ் சாலை அடையினும் அடைவர் - (அவற்றை யிழந்து) அன்னச் சத்திரத்தை அடைந்தாலும் அடைவர். (8) 1135. அறத்திடு பிச்சை கூவி யிரப்போர் அரசோ டிருந்தர சாளினு மாளுவர். (வெற்) அறத்திடு பிச்சை கூவி இரப்போர் - அறத்திற்காக இடப் படும் பொருளை வீட்டினுள் உள்ளாரைக் கூப்பிட்டு இரப் போர், அரசோடு இருந்து அரசு ஆளினும் ஆளுவர் - அரசிலக் கணத் தோடு அரியணையிலிருந்து அரசாண்டாலும் ஆளுவர். அறத்திடு பிச்சை - அறத்தை நோக்கி இரப்போர்க்குக் கொடுக்கும் பொருள். கூவி இரத்தல் - தெருவில் நின்று பிச்சை போடும்படி கேட்டல். தெருவில் பிச்சையெடுப்போர், அரசராக மாறி நாட்டை ஆண்டாலும் ஆளக்கூடும். (9) 1136. குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே அழியினு மழிவர். (வெற்) குன்று அத்தனை இரு நிதியைப் படைத்தோர் - மலை யளவாகப் பெரிய செல்வத்தைப் படைத்தோரும், அன்றை பகலே அழியினும் அழிவர் - படைத்த அப்பொழுதே அச் செல்வத்தை இழக்கினும் இழப்பர். குன்று - மலை. அத்தனை - அவ்வளவு. இரு - பெரிய. அன்றைப் பகலே - அப்பொழுதே. அழிதல் - அச்செல்வ மிழந்து வறியராதல். பெருஞ் செல்வம் பெற்றோர் பெற்ற அப்போதே அதை இழக்கினும் இழப்பர் என்பதாம். (10) 1137. எழுநிலை மாடங் கால்சாய்ந் துக்குக் கழுதை மேய்பா ழாகினு மாகும். எழு நிலை மாடம் கால் சாய்ந்து உக்கு - ஏழடுக்கினை யுடைய வீடுகளும் அடியோடு சாய்ந்து நொறுங்கி, கழுதை மேய் பாழ் ஆகினும் ஆகும் - கழுதைகள் மேய்கின்ற குட்டிச் சுவர் ஆனாலும் ஆகும். மாட மாளிகைகளெல்லாம் அழிந்து கழுதைகள் மேயும் பாழிடமாவதும் உண்டு. மாடமாளிகைகளையுடையோரும் அவற்றை இழந்து வறியராவர் என்பதாம். (11) 1138. பெற்றமுங் கழுதையும் மேய்ந்த வப்பாழ் பொற்றொடி மகளிரு மைந்தருஞ் செறிந்து நெற்பொலி நெடுநக ராயினு மாகும், (வெற்) பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ் - எருதும் கழுதையும் மேய்ந்த அப்பாழ் நிலமானது, பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து - பொன்னாற் செய்த வளையல் களை அணிந்த பெண் களும் ஆண்களும் பொருந்தி, நெல் பொலி நெடுநகர் ஆயினும் ஆகும் - நெற் கூடுகளையுடைய பெரிய நகரம் ஆனாலும் ஆகும். முன்னே நகரமாக இருந்து அழிந்த நத்த மேடானது, பின் னொரு காலத்தே அழகிய பெரிய நகரமானாலும் ஆகும் என்பதாம். (12) 2. இளமை நிலையாமை 1139. வெறியயர் வெங்களத்து வேன்மகன் பாணி முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி அறிவுடை யாளர்க ணில். (நால) வெறி அயர் வெங்களத்து - வெறியாடுகின்ற கொடிய பலியிடுமிடத்திலே, வேல் மகன் பாணி - வெறியாட்டாள னான அவ்வேலன் கையிலுள்ள. முறி ஆர் நறுங்கண்ணி முன்னர் தயங்க - இடையிடையே தளிர்கள் பொருந்திய மணம் வீசுகின்ற பூமாலை தனக்கு எதிரில் விளங்க, மறி குளகு உண்டு அன்ன மன்னா மகிழ்ச்சி - (அங்கு பலியிடுதற்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ள) ஆடானது (அம்மாலை யிலுள்ள தளிரை) இரையாக எண்ணி உண்டு அடைகின்ற மகிழ்ச்சி போன்ற நிலை யில்லாத மகிழ்ச்சி, அறிவுடையாளர் கண் இல் - அறிவுடைய வரிடத்து உண்டாகாது. வெறி அயர்தல் - வெறியாடுதல். களம் - வெறியாடு மிடம். ஆட்டைப் பலியிடுவதால் ‘வெங்களம்’ என்றார். வெறி யாடுவோன் வேலைக் கையில் கொண்டு ஆடுவதால் ‘வேலன், வேல்மகன்’ எனப்பட்டான். பாணி - கை. முறி - தளிர். நறுங் கண்ணி - மணமுள்ள மாலை. நறுமை - மணம். முன்னர் - எதிரில். தயங்குதல் - விளங்குதல். மறி - ஆடு. குளகு - இலையுண்ணும் விலங்கின் உணவு. மன்னா - நிலையில்லாத. இன்று சாமியாடிகள் வெறி கொண்டு சாமியாடுதலே வெறியாட்டாகும். இன்றும் பெரும்பாலும் வேலைக் கையில் பிடித்துக் கொண்டே சாமியாடுகின்றனர். இவர்கள் பூசாரி, சாமியாடி என அழைக்கப்படுகின்றனர். விரைவில் அழியுந் தன்மையான இளமையைக் கண்டு மகிழ்வது, தன்னை வெட்டுதற்காக வாளைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற வேலனது கையிலுள்ள மாலையில் உள்ள தளிரைத் தின்று ஆடு மகிழ்வது போன்ற தாகும் என்பதாம். (1) 1140. பனிபடு சோலைப் பயன்மர மெல்லாங் கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும் வேற்கண்ண ளென்றிவளை வெஃகன்மின் மற்றிவளுங் கோற்கண்ண ளாகுங் குனிந்து. (நால) இளமை - இளமைப் பருவமானது, பனிபடு சோலை பயன் மரம் எல்லாம் - குளிர்ச்சி பொருந்திய சோலையிலுள்ள பழம் பழுக்கின்ற மரங்களெல்லாம், கனி உதிர்ந்து வீழ்ந்தற்று - பழங்களு திர்ந்து விழப்பெற்றாற் போன்ற நிலையில்லாத தன்மையை யுடையது; (ஆதலால்), வேல் கண்ணள் என்று இவளை நனி பெரிதும் வெஃகன்மின் - (இப்போது) வேல் போற் கூர்மையான கண்களையுடையவளென்று எண்ணி இவளை மிகவும் விரும்பாதீர்கள், இவளும் - மற்று குனிந்து கோல் கண்ணள் ஆகும் - பின்பு உடம்பு கூனடைந்து (வழி தெரிந்து நடப்பதற்கு) ஊன்று கோலையே கண்ணாக உடையவளாவாள். பனி - குளிர்ச்சி. படுதல் - பொருந்துதல். பயன் - பழம். உதிர்ந்து வீழ்தல் - உதிர்ந்து போதல். வீழ்ந்தற்று - வீழ்ந்த தன்மையை உடையது. நனி பெரிதும் - மிக மிக - ஒரு பொருட் பன்மொழி. வெஃகுதல் - விரும்புதல். மற்று - பின்பு. குனிந்து - கூனடைந்து. யாவரும் விரும்பும்படி சோலையில் பழங்களோடு இருந்த மரம் அப்பழங்கள் உதிர்ந்த பின்பு விரும்பத்தகாத தாதல் போல, யாவரும் விரும்பத்தக்கதாக இருந்த உடம்பு, இளமை அழிந்த பின்பு கூனிக் குருடாகி விரும்பத் தகாத தாகும் என்பதாம். மரம் உடம்புக்கும், பழம் இளமைக்கும் உவமை. (2) 1141. மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்மின்; முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால் நற்கா யுதிர்தலு முண்டு. (நால) நல்வினை மற்று அறிவாம் யாம் இளையம் என்னாது - அறச் செயலைப் பின்னால் செய்வோம் இப்போது நாம் இளமைப் பருவமுடைய மன்றோ என்று எண்ணாமல், கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம் செய்மின் - கையிற் பொருள் கிடைக்கும் பொழுதே ஒளியாமல் ஈதல் முதலிய அறங்களைச் செய்யுங்கள், (ஏனெனில்), முற்றி இருந்த கனி ஒழிய - முதிர்ந் துள்ள பழங்கள் மட்டுமே யல்லாமல், தீ வளியால் நல் காய் உதிர்தலும் உண்டு - கடுங் காற்றினால் நல்ல காய்கள் உதிர்ந்து விடுதலும் உண்டு. மற்று - பின்னால். அறிதல் - அறிந்து செய்தல். நல்வினை - அறச்செயல். கைத்து - பொருள்; கையிலுள்ளது என்பது. கரத்தல் - ஒளித்தல். தீவளி - கடுங்காற்று. முதிர்ந்த பழங்கள் மட்டுமேயல்லாமல் கடுங்காற்றி னால் நல்ல காய்களும் உதிர்ந்து விடுமாதலால், பருவ முதிர்ந்த கிழவர் களே யன்றிக் கொடிய நோய்களால் இளையவர்களும் இறந்து விடுதல் உண்டு. ஆகையால், நாம் இப்போது இளமை யுடையோம்; பருவ முதிர்ந்த பின் அறஞ்செய்வோம் என்று எண்ணாமல் பொருள் கிடைக்கும் போதே ஒளிக்காமல் அறஞ் செய்ய வேண்டும் என்பதாம். பின்னிரண்டடி பிறிது மொழிதலணி. நாச்செற்று விக்குள்மேல் வராமை நல்வினை மேற்சென்று செய்யப் படும். (குறள்) (3) 3. யாக்கை நிலையாமை 1142. மலைமிசைத் தோன்று மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையார் - நிலமிசைத் துஞ்சினா ரென்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால் எஞ்சினா ரிவ்வுலகத் தில். (நால) மலை மிசை தோன்றும் மதியம் போல் - மலையின் மேல் காணப்படுகின்ற மதியம் போல, யானை தலைமிசை கொண்ட குடையர் - பட்டத்து யானையினது தலையின் மேல் கொள்ளப் பட்ட வெண்கொற்றக் குடையையுடைய ராய்ச் சென்ற அரசர் களும், நிலமிசை துஞ்சினார் என்று எடுத்துத் தூற்றப்பட்டார் அல்லால் - இவ்வுலகிலே இறந்தார் களென்று எடுத்துச் சொல்லிப் பார்த்தாலும் இகழப்பட்டார் களேயல்லாமல், எஞ்சினார் இவ்வுல கத்து இல் - அவ்விறப் பினின்றுந் தப்பி நிலையாக இருந்தவர்கள் இந்த உலகத்தில் எவரும் இல்லை. மிசை - மேல். மதியம் - முழுமதி. தலை - பிடரி. துஞ்சுதல் - இறத்தல். தூற்றதல் - பலரறியச் சொல்லி இகழ்தல். எஞ்சுதல் - தப்புதல். வெண்கொற்றக் குடைபிடித்து யானைமேல் ஊர்வலஞ் சென்ற அரசர்களும் இறந்தொழிந்தனரே யன்றி இறவாது உள்ளவர் எவரும் இல்லை. ஆகையால், உடம்பின் நிலையா மையை யுணர்ந்து, அது அழியுமுன் அதன் பயன் கொள்ள வேண்டு மென்பதாம். நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும் பெருமை யுடையத்திவ் வுலகு. (குறள்) (1) 1143. வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம் வீழ்நாட் படாஅ தெழுதலால் - வாழ்நாள் உலவாமு னொப்புர வாற்றுமின் யாரும் நிலவார் நிலமிசை மேல். (நால) வாழ்நாட்கு அலகு ஆ - வாழ்நாளுக்கு ஓர் அளவாக, வயங்கு ஒளி மண்டிலம் - விளங்குகின்ற ஒளியையுடைய கதிரவன், வீழ் நாள் படாது எழுதலால் - உதியாத நாள் உண்டாகாதபடி நாடோறும் உதித்தலால், வாழ்நாள் உலவா முன் ஒப்புரவு ஆற்றுமின் - அவ்வாழ்நாள் கழிவதற்கு முன்னமே பிறர்க்கு உதவி செய்யுங்கள், யாரும் நிலமிசை மேல் நிலவார் - எவரும் உலகில் (அவ்வாழ் நாளெல்லையைக்) கடந்து வாழ மாட்டார். அலகு - அளவு. அலகு ஆ. ஆ - ஆக. வயங்குதல் - விளங்குதல். ஒளி மண்டிலம் - சூரியன். வீழ்நாள் - ஞாயிறு தோன்றாத நாள். உலத்தல் - கழித்தல், கெடுதல். ஒப்புரவு - உதவி. நிலவார் - வாழார். மேல் - வாழ்நாளின் எல்லையைக் கடந்து. பொழுது கிளம்பியதிலிருந்து மறுநாட்பொழுது கிளம்பும் வரை ஒரு நாள் என்றும், அப்படிப்பட்ட முப்பது கொண்டதை ஒரு மாதம் என்றும், மாதம் பன்னிரண்டு கொண்டதை ஆண்டு என்றும் எண்ணி நாள் கணக்கிடப் படுதலால், ‘வாழ்நாட்கலகா வயங்கொளி மண்டிலம் வீழ்நாட் படாஅ தெழுதலால்’ என்றார். வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் கழிந்து கொண்டு வருதலால், அவ்வாழ்நாளின் எல்லையைக் கடந்து இவ்வுலகில் யாரும் வாழ மாட்டார் ஆகையால், அவ்வாழ்நாள் கழிவதற்கு முன் பிறர்க்குதவி யாக்கையின் பயனையடைய வேண்டு மென்பதாம். நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும் வாள துணர்வார்ப் பெறின். (குறள்) (2) 1144. யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற யாக்கையா லாய பயன்கொள்க - யாக்கை மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே நிலையாது நீத்து விடும். (நால) யாக்கையை யாப்பு உடைத்து ஆ பெற்றவர் - உடம்பை உறுதியுடையதாகப் பெற்றவர்கள், தாம் பெற்ற யாக்கையால் ஆய பயன்கொள்க - தாம் அடைந்த உடம்பினால் பெறுதற் குரிய பயனை அப்பொழுதே கொள்க, (ஏனெனில்), யாக்கை மலை ஆடும் மஞ்சு போல் தோன்றி - உடம்பு மலையின்மேல் அசைந்து கொண் டிருக்கிற மேகம் போலக் காணப்பட்டு, ஆங்கே நிலை யாது நீத்து விடும் - அக்கண்ட பொழுதிலேயே நிலைபெறாமல் அழிந்து விடும். யாக்கை - உடம்பு. உடம்புக்கு உறுதியாவது - உறுப்புக் குறையின்மை வலுவுடைமை, நோயின்மை முதலியன. பயன் - அறஞ் செய்து புகழ்பெறுதல். ஆடுதல் - அசைதல். மஞ்சு - மேகம். தோன்றுதல் - காணப்படுதல். தெரிதல். மற்று - அசை. ஆங்கே - அப்போதே. நீத்தல் - இறத்தல். உடம்பு, மலைமேல் அசைகின்ற முகில் போல் காணப் பட்டு அப்பொழுதே அழிந்து விடுமாகையால், நல்லுடம்பு பெற்றவர் அவ்வுடம்பினாலாய பயனை அடையவேண்டு மென்பதாம். (3) 1145. புன்னுனிமே னீர்போல் நிலையாமை யென்றெண்ணி இன்னினியே செய்க அறவினை - இன்னினியே நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றா னெனப்படுத லால். (நால) இன்னினியே நின்றான் இருந்தான் கிடந்தான் - இப்பொழுதே ஒருவன் நின்றிருந்தான் உட்கார்ந்திருந்தான் படுத்திருந்தான், தன் கேள் அலற சென்றான் எனப்படுதலால் - தனது சுற்றத்தார் கதறியழும்படி இறந்து போனான் என்று சொல்லப்படுதலால், புல் நுனி மேல் நீர் போல் நிலையாமை என்று எண்ணி - புல்லினது நுனியில் நிற்கின்ற பனி நீர்த்துளி போல உடம்பு நிலையாமையை உடையது என்று எண்ணி, இன்னினியே அறவினை செய்க - இப்பொழுதே அறச் செயலைச் செய்க. நீர் - பனி நீர். இன்னினியே - இப்பொழுதே, அடுக்கு, உடனே என்பது குறித்தது. கேள் - சுற்றத்தார். சென்றான் - இறந்தான். உடம்பின் நிலையாமையை உணர்ந்து அவ்வப் பொழுதே அறச்செயல்கள் செய்ய வேண்டும் என்பது. (4) 1146. மணவணி யணிந்த மகளி ராங்கே பிணவணி யணிந்துதங் கொழுநரைத் தழீஇ உடுத்த ஆடை கோடியாக முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர். (வெற்) மண அணி அணிந்த மகளிர் ஆங்கே - மணக் கோலம் பூண்ட பெண்கள் அப்பொழுதே, பிண அணி அணிந்து தம் கொழுநரை தழீஇ - பிணக்கோலம் பூண்டு தமது கணவரைத் தழுவி, உடுத்த ஆடை கோடி ஆக - முன்பு உடுத்த கூறையே கோடியாக, முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர் - முடித்த கூந்தலை விரித்தாலும் விரிப்பார்கள். மண அணி - மணக்கோலம், அங்கே - அப்போதே - அம் மணவறையிலேயே, பிண அணி - பிணக்கோலம். கொழுநர் - கணவர். தழீஇ - தழுவி. கூறை - மணப் பெண் உடுத்தும் புத்தாடை. கோடி - கணவனை இழந்தவள் உடுத்தும் வெண் புத்தாடை. முடித்த - பின்னிய எனினுமாம். கோடியுடுத்தலும் கூந்தல் விரித்தலும் பிணக்கோல மாகும். மணவறையிலேயே கணவன் இறக்க, மணக்கோலம் நீத்துப் பிணக்கோலங்கொள்ள நேரினும் நேரும் என்பதாம். (5) செய்யுள் முதற்குறிப்பகரவரிசை அஃகம் 202 அஃகமு 643 அஃகுநீ 184 அகந்தூய் 660 அகம்பொ 358 அகலமு 343 அங்கண் 833 அச்சமலை 180 அச்சமுநா 506 அச்சம்பெ 545 அஞ்சாம 215 அடக்கமு 148 அடர்ந்து 849 அடல்வே 200 அடினுமா 886 அடினும்பா 1065 அடுக்கன் 764 அடுத்தவ 283 அடுத்துமு 663 அடைய 1081 அட்டாலு 866 அத்திட்ட 948 அம்பல 549 அம்பும 550 அரிசியா 884 அரிமந் 901 அரியவை 541 அருகல 981 அருமறை 177 அருமையு 626 அரும்பெ 560 அருவிலை 321 அருளின 508 அருளினை 1073 அலகுசால் 8 அலர்ந்தார்க் 571 அல்லலொ 769 அல்லவை 344 அல்லன 147 அவையஞ் 347 அவ்விய 119 அவ்வியநெ 1054 அவ்வியமி 509 அழகலா 111 அழன்மண் 763 அள்ளிக் 982 அறங்கூறு 99 அறஞ்செய 582 அறத்திடு 1135 அறமனத் 260 அறம்புகழ் 546 அறம்புரி 187 அறம்பொ 23 அறனும 551 அறனைம 583 அறிஞர்க் 152 அறியாப் 890 அறிவத 313 அறிவழுங் 183 அறிவறி 620 அறிவிலி 464 அறிவினா 317 அறிவுடைமை 537 அறிவுடையா 504 அறிவுடையொ 334 அறுசுவை 1128 அற்புப்பெ 182 அற்றகுள 773 அனந்த 667 அன்பின் 657 அன்றறி 816 அன்னையு 827 ஆகாதெனி 524 ஆக்கமழி 259 ஆக்கம் 291 ஆக்குமறி 331 ஆசைபிற 527 ஆடுகோ 647 ஆணியாக் 658 ஆண்டான் 792 ஆயிரவ 318 ஆய்ந்தவ 127 ஆர்கலி 107 ஆர்த்தபொ 956 ஆர்த்தவ 514 ஆர்வமே 185 ஆவாநா 559 ஆவேறு 565 ஆறிடு 1131 ஆறுவது 139 ஆற்றங் 994 ஆற்றவுங் 12 ஆற்றாமை 500 ஆற்றாரிவ 275 ஆற்றானை 282 ஆற்றுந் 581 ஆற்றுப் 811 ஆற்றுமி 9 ஆனமுத 502 ஆனைமருப் 33 ஆன்படு 420 இசையா 747 இசையிற் 946 இடம்பட 1015 இடம்தீர்த் 72 இடிப்பதெ 160 இடையீடு 423 இடைவ 19 இணக்க 401 இந்நிலத் 945 இமைக்கு 510 இம்மிய 708 இம்மைப 2 இயம்பலா 110 இயல்வது 743 இயைவது 760 இரத்தலி 978 இரப்பவ 715 இரப்போர்க் 741 இரவலர் 753 இருக்கை 802 இருதார 118 இருவர்த 228 இருளாய்க் 499 இலமென் 757 இல்லதுகா 332 இல்லற 601 இல்லாமை 971 இல்லார்க் 326 இல்லாளகத் 612 இல்லானுக் 686 இல்லோரி 742 இழித்ததொ 487 இழுக்கலி 173 இழுக்கானி 78 இளமைப் 486 இளமையி 47 இளையான 156 இறந்தாலும் 242 இறப்பச் 124 இறப்பநி 891 இறப்பவே 406 இனியவ 269 இனியனெ 106 இனியாரு 654 இனியாரை 377 இனியார்த 376 இன்சொலால 693 இன்சொல்லன் 959 இன்சொல்வி 574 இன்றுகொல் 562 இன்றுகொள 1088 இன்றுளாரி 576 இன்னரி 765 இன்னாசெ 785 இன்னாசெயி 407 இன்னாசெயி 408 இன்னாமை 976 இன்னாவியை 973 ஈகைய 691 ஈக்குவி 1051 ஈட்டிய 848 ஈதற்குச் 66 ஈத்துண்பா 737 ஈயார்தே 991 ஈரமில் 689 ஈரமுடை 738 ஈவது 761 ஈனமா 928 ஈன்றாளை 776 உடலின் 31 உடன்பி 869 உடாஅது 1130 உடுக்கை 800 உடைப்பெ 1082 உடைமைய 631 உடைமையு 1132 உடையத 627 உடையது 542 உணர்வி 505 உணற்கினி 13 உண்டாய 951 உண்டிக் 683 உண்டிசு 307 உண்டிவெ 303 உண்டுகு 1048 உண்ணாது 989 உண்ணானொ 1129 உண்ணீர் 790 உண்பது 530 உண்பொழு 854 உதவிப்ப 93 உத்தமர் 731 உத்தமனா 822 உபகாரஞ் 799 உப்பின் 65 உப்புக்கு 579 உயிருமு 129 உரவோ 980 உரனுடைய 665 உரிஞ்சி 63 உருவிற் 421 உரைசான்ற 1039 உரைமுடிவு 16 உலப்பிலு 570 உழவர்க் 995 உளையவு 771 உள்கரந் 519 உள்கூர் 953 உள்ளங் 131 உள்ளத் 605 உறக்குந் 563 உறுதிபய 662 உறுபுனல் 809 உறுமக்க 1038 உறைப்பரு 839 உற்றதற் 125 உற்றதுரை 234 உற்றபெ 596 உற்றபே 756 உற்றம 1075 உற்றவி 939 உற்றாரை 782 ஊக்கமது 666 ஊக்கமு 674 ஊக்கியு 629 ஊரொடு 791 ஊரங்க 892 ஊருடன்ப 211 ஊரோடு 254 ஊழாயி 1030 ஊனமொ 634 எக்குடி 46 எங்கண் 1076 எட்டுணை 732 எண்ணுமெ 53 எண்ணெழு 50 எதிர்த்த 1117 எத்திறத் 735 எத்துணை 748 எத்துணைய 360 எந்தை 728 எப்பிறப் 20 எமக்குத் 652 எம்மைய 535 எய்தாத 858 எய்தாந 126 எய்ப்பில் 590 எய்ப்புழி 422 எல்லாத் 908 எல்லாம் 134 எழுத்தறி 832 எழுநிலை 1137 எளியரி 736 எளியாரை 284 எள்ளப்படு 1115 எள்ளாதி 876 எள்ளிப் 161 எற்றுள்ளு 965 எற்றொன்று 807 எனக்குத் 845 எனதென 750 என்பாயு 930 என்றுமு 871 என்றும்வி 135 ஏசலிட்ட 472 ஏட்டைப் 1071 ஏதிலார் 1091 ஏமம்வே 1102 ஏவதுமா 619 ஏவாதுமா 287 ஏவாமக் 621 ஏற்பதி 979 ஏற்றகை 711 ஐங்குரவ 1041 ஐயமிட் 744 ஐயம்பு 797 ஐயறிவுந் 1110 ஐவாய 150 ஒட்டாரை 400 ஒண்கதிர் 893 ஒத்தவுரி 610 ஒப்புரவொ 795 ஒருநன்றி 1070 ஒருநாட் 387 ஒருநாளுண 960 ஒருநாளுநீ 958 ஒருபுடை 806 ஒருபோது 302 ஒருவர்பங் 226 ஒருவரையு 213 ஒருவற்குக் 39 ஒருவனறி 536 ஒருவன்ம 41 ஒல்வதறி 853 ஒழுக்கமி 102 ஒளியுமொ 300 ஒறுப்பா 162 ஒற்கந்தா 841 ஒற்றிற் 1090 ஒற்றினா 1093 ஒன்னார 1122 ஒன்னாரை 823 ஓதலு 309 ஓதாதா 490 ஓதாம 55 ஓதியு 985 ஓதுவ 48 ஓரஞ்சொ 230 ஓர்த்தக 1027 ஒளவியம் 120 ஒளவியம்பே 121 கடகஞ் 955 கடம்பட் 719 கடற்குட் 37 கடனுடை 680 கடனுண் 679 கடன்முக 859 கடித்துக் 808 கடிப்பிடு 712 கடியவரு 298 கடிவது 264 கடுக்கென 1022 கடையாயார் 395 கடையெலா 933 கட்கினி 604 கட்டளை 329 கணக்காய 285 கண்கூடாப் 1045 கண்டவர் 22 கண்டறிவா 424 கண்டொண் 236 கண்ணிற்க 1033 கண்ணிற்சொ 1086 கண்ணுக் 325 கண்ணோக் 722 கப்பிகட 1016 கயத்தி 1044 கயவரைக் 462 கயவரைக்கை 810 கரப்புடை 914 கரவாத 972 கருஞ்சிரங் 789 கருதாமல் 1031 கருத்துணர் 373 கருந்தொழி 1028 கருமஞ் 594 கருமமு 316 கருமவ 315 கரும்பாட்டி 561 கல்லாக் 1023 கல்லாதவ 475 கல்லாது 492 கல்லாமை 804 கல்லாரு 481 கல்லாரே 889 கல்லார்க் 498 கல்லார்ப 480 கல்லாவ 451 கல்லாவொ 1042 கல்லாவொரு 485 கல்லாவொரு 488 கல்லானே 963 கல்லிற்பி 635 கல்லென்று 491 கல்லோங் 950 கல்விகரை 4 கல்விக் 364 கல்விய 1106 கல்வியா 474 கல்வியு 290 கல்வியே 25 கவையாகி 478 கவ்வித் 297 கழறும் 350 கழிவிரக் 572 களர்நில 5 களியான்க 79 கள்ளமனத் 436 கள்ளார்க 836 கள்ளியகி 57 கள்ளிவ 883 கள்ளுண் 301 கற்கைந 45 கற்பனவூ 146 கற்பிள 130 கற்புடுத் 617 கற்புடை 558 க.ற்பூரம் 1057 கற்றது 333 கற்றதொன்றி 653 கற்றதொன்றி 843 கற்றல்வே 44 கற்றவ 1050 கற்றறியார் 432 கற்றறிந் 15 கற்றறிந்த 493 கற்றன 349 கற்றனவு 525 கற்றாருரை 497 கற்றறாரைக் 74 கற்றார்ப 1107 கற்றார்மு 351 கற்றாற்று 476 கற்றானொ 463 கற்றுப் 103 கற்றோர்க் 27 கற்றோர்க 879 கனைகடற் 372 கன்மமே 1059 கன்றிமுறி 847 கன்றூட்ட 682 கன்னனி 521 காட்டுக் 609 காணாத 241 காதலார் 783 காதலிற் 924 காதல்ம 595 காப்பாற்றா 1096 காயவு 427 காய்தலு 224 காலமறிந் 1005 காலாடு 623 காலைச்செய் 575 காலொடு 860 காவாதொ 255 காவோட 794 காழார 280 கானமயி 479 கிட்டாதா 335 கிழமைப் 796 கிழமையு 777 கிளைஞர்க் 178 கீழோரா 295 கீழ்மைய 1066 குஞ்சிய 1 குடநீரட் 602 குடிகொண் 1087 குடியலைத் 1105 குடைநிழ 1133 குணமது 819 குருடராச் 38 குலஞ்சி 439 குலத்துப் 482 குலந்தவ 520 குலமகட் 615 குலனுங் 484 குலனுடை 43 குறளைவெ 249 குறுகான்சி 77 குற்றத்தை 428 குற்றமுமே 410 குற்றமொ 253 குற்றம்பா 780 குன்றத் 1136 குன்றுடை 154 கூடிப்பி 388 கூரம்பா 544 கூர்த்துநா 256 கூறாக்கி 223 கெடுப்ப 204 கெடுப்பின் 137 கெடுமிட 438 கெடுவது 444 கெடுவலெ 61 கேட்டிலு 678 கேட்பாரை 341 கேளுங்கி 967 கேள்வி 52 கைத்துடை 638 கைப்பொரு 54 கைம்மாறு 729 கைவாய்ப் 460 கைவினை 669 கொடுங்கோ 1097 கொடுங்கோ 1104 கொண்டுக 440 கொம்புள 1053 கொலைகள 467 கொலையஞ் 553 கொலையொக் 248 கொல்லான் 76 கொல்லையி 895 கொல்வது 528 கொழித்து 411 கொள்பொ 176 கொள்ளுங் 580 கொள்ளைவி 299 கோட்செவி 250 கோட்டுப்பூ 394 கோதாட் 205 கோதைய 157 கோலஞ்சி 1083 கோல்கோடி 1094 கோல்நோக்கி 1100 கோளாற்ற 646 கௌவைசொ 251 கௌவைய 206 ஙப்போல் 779 சக்கரச் 1020 சக்கரநெ 820 சத்தியமெ 1060 சந்தனத் 456 சந்தனமெ 724 சலவரை 458 சாதல்பொ 378 சாதியிர 725 சாந்தனை 163 சாலமறை 1077 சான்றாண் 801 சான்றாருட் 856 சான்றோரி 887 சான்றோரில் 904 சான்றோரென 391 சான்றோரென் 622 சிக்கர் 788 சிதலைதி 649 சித்திரம் 237 சிறந்தமை 362 சிறப்புஞ் 1134 சிறியப 1125 சிறியபொ 713 சிறியார் 133 சிறியோர் 165 சிறியோர்பெ 915 சிறுகாலை 512 சிறுமை 294 சிற்றுணர் 149 சினந்திரு 218 சினந்தேடி 141 சீரியர்கெட் 868 சீரியார்கே 417 சீரைத்தே 1000 சீர்மைம 947 சீலமில்லா 164 சுருக்குக 138 சுளிக்கச் 265 சுற்றத்திற் 781 சூதர்க 95 சூதும்வா 312 சூதுவி 311 செங்கமல 1056 செந்நெல்லா 354 செயக்கடவ 270 செயத்தக்க 415 செயல்வே 1108 செய்கைய 805 செய்தந 303 செய்யு 1007 செய்வன 1010 செல்லுந் 383 செல்வர்க் 778 செல்வுழி 835 செவிசுட 1112 செவ்விய 132 செழும்பெ 1068 செறிவுடை 1109 செறுத்தோ 405 சேராதவி 469 சேரிடம 402 சேவித்துஞ் 961 சையெனத் 112 சையொத் 746 சொக்கர் 644 சொலற்பா 261 சொல்லாமை 586 சொல்லுங் 363 சொல்லே 1034 சொல்வன் 361 சொற்செல் 353 சொற்சோர் 367 சொற்றாற்று 338 சொற்றொறு 10 சோம்பரெ 671 சோம்பித் 668 சோரா 759 சோராந 386 ஞயம்பட 697 தக்காரோ 1025 தக்கார்வ 898 தக்கோனெ 821 தங்கட் 1008 தங்கணம 523 தங்கண்ம 774 தங்குறை 872 தங்குற்றநீ 60 தண்டாமம் 861 தத்தநி 632 தந்தீமை 413 தந்தைசொ 829 தந்தைதா 826 தந்நடை 58 தமக்குற்ற 368 தமரல்ல 1119 தமரென்று 409 தம்மின் 145 தம்முடை 938 தம்மையு 873 தருமத் 585 தலைமயி 921 தவலருந் 7 தழங்குகு 1120 தளிர்மே 1009 தறுகண் 153 தற்றூக்கி 655 தனக்கு 936 தனக்குத் 573 தனக்குப் 483 தனதாக 752 தனந்தேடி 507 தனியனெ 304 தன்பயந் 576 தன்மனையா 532 தன்னச்சி 944 தன்னாயு 533 தன்னிலை 1111 தன்னுடம் 94 தன்னைத் 143 தன்னைத்தா 151 தன்னைம 772 தன்னைவியந் 175 தன்னைவி 540 தாமரை 877 தாமுங் 755 தாமேயு 511 தாயிழந்த 720 தாய்சொற் 830 தாரமாணா 614 தாழ்ந்த 219 தாளாள 398 தானமது 745 தானமழி 922 தானறிந் 730 தானோரி 758 தான்பிறந்த 71 திங்கள 696 திரியழற் 40 திருமது 929 திருவிற் 636 திருவினு 554 திருவுடை 911 திருவொக்கு 105 திரைகட 645 திரைத்த 1074 திரையவி 577 திறம்பேசி 222 தினையனை 1018 தீங்கரும் 650 தீமையுடை 1061 தீயசெயற் 186 தீயவர்பா 453 தீயாரைக் 450 தீராக்கோ 140 தீவினை 207 துகடீர் 1127 துர்ச்சன 473 துர்ச்சனரு 1052 துறையறி 190 துன்பத் 676 துன்பத்துள் 857 துன்பம்வெ 675 துன்னியி 342 துன்னுமி 1055 தூக்கிவி 1011 தூயவறி 1058 தூயவாய்ச் 100 தூய்மைம 812 தூர்ந்தோ 399 தெரியத் 392 தெரியாத 159 தெள்ளிய 885 தெள்ளியு 1124 தெறியொடு 89 தெற்றப் 850 தெற்றென 817 தேசுந்தி 98 தேடாதழி 672 தேர்ந்துக 1040 தேம்படு 1064 தையல் 616 தொடங்குங் 24 தொல்லவை 142 தொழுதூண் 1001 தொன்மை 389 தோணியி 6 தோள்வழங் 181 தோற்பன 229 தோற்றத்தா 277 நகைநலம் 384 நகையாகு 977 நகையாய 687 நகையொடு 92 நச்சித் 734 நச்சியார் 935 நஞ்சுடனே 217 நஞ்சுடை 870 நடலையி 346 நடுவூருள் 709 நட்டாரை 588 நட்டார்ப் 246 நட்பிடை 430 நட்புப்பி 1092 நண்டுசி 555 நண்பில்லார் 67 நந்தெறும் 589 நம்மாலே 970 நம்மைப் 257 நயமில் 434 நரமபெழு 834 நலத்தகை 166 நலமாறி 385 நலனுடை 168 நலனும் 966 நல்குர 90 நல்கூர்ந்த 587 நல்லகுல 648 நல்லர்பெ 934 நல்லவெ 328 நல்லவை 345 நல்லவை செ 803 நல்லறமெ 813 நல்லாரைக் 899 நல்லாரொரு 702 நல்லார் செ 431 நல்லாவின் 625 நல்லாரெ 404 நல்லாறொ 865 நல்லிணக்கம 445 நல்லிணக்கமி 447 நல்லினஞ் 96 நல்லொழுக் 455 நல்லோர்வ 900 நல்விருந் 606 நளிகடற் 374 நறுமலர் 375 நற்கறி 319 நற்றாமரை 1046 நன்புலத்து 992 நன்மைக 584 நன்மையி 435 நன்றிப்பய 179 நன்றிப்ப 703 நன்றிம 735 நன்றியறி 84 நன்றியொ 701 நன்னிலை 314 நாடறிய 917 நாடிநம 699 நாடெங்கு 798 நாடொப்பன 113 நாட்டாக்க 1099 நாணார்பரி 1035 நாணிலான் 289 நாணில்வா 169 நாப்பாடஞ் 337 நாய்க்கா 396 நாலாறு 603 நாளுந 34 நாற்பாற்கு 489 நிந்தையி 454 நிலத்துக் 613 நிலநலத் 896 நிலையில் 216 நிலையிற் 925 நில்லாத 416 நிறையுடை 73 நிற்கக் 238 நீக்கம் 414 நீரளவே 28 நீரினு நு 949 நீருட்பிற 1072 நீர்த்தக 279 நீர்த்தன் 59 நீர்மையே 954 நீறார்ந்தும் 840 நுண்ணிய 1012 நுண்மை 304 நுண்மொழி 17 நூறாண்டு 442 நூற்பல 51 நூன்முறை 115 நெஞ்சார 240 நெஞ்சை 239 நெடியது 276 நெடுங்காலமோ 123 நெடுங்காலம்வ 910 நெடுமர 189 நெடும்ப 348 நெருப்பழ 416 நெல்லுக் 867 நெறியாலு 1032 நெற்பயிர் 998 நேரல்லார் 158 நேராநெ 441 நேர்த்துநி 1014 நேர்பட 114 நைபவ 267 நைவினை 208 நொய்தாந் 964 நொய்யவு 271 நொறுங்கு 593 நோக்கிய 357 நோய்க்கி 305 நோவஞ்சா 288 நோவவு 128 பகல்போலு 818 பகைசே 878 பகைமுன் 170 பகையின் 245 பசைந்தா 382 படிறும்ப 88 பட்டாங்கு 293 பண்டின்ன 700 பண்டுமு 379 பத்திமை 1084 பந்தமில் 775 பரந்ததி 320 பருவத் 997 பலகற் 538 பல்லவை 919 பல்லாரறி 548 பழமைக 787 பழிப்பன 266 பழியாரி 87 பழியோர் 990 பற்பல 35 பற்றமை 1095 பனிபடு 1140 பன்றிக் 494 பன்னாளுஞ் 838 பன்னும் 503 பாசத்துளி 1062 பாடமே 340 பாடுபட்டு 501 பாத்துண 975 பாம்புண்ட 862 பாம்பொடு 443 பாலாற் 495 பாலினீ 882 பாலோடளா 894 பாலோடா 308 பாவமும் 310 பாவமுமே 932 பாற்பட்டு 1080 பிச்சைக்கு 940 பிச்சைபுக் 36 பிழைத்தல் 68 பிழைபட 368 பிறந்தகு 952 பிறப்புநெ 83 பிறராற் 292 பிறர்க்கி 281 பிறர்க்கு 988 பிறர்தன் 918 பிறர்மறை 837 பிறன்கை 296 பிறன்மனைபி 556 பிறன்மனையா 557 பிறன்வ 552 பீடுபெற 926 புகழ்செ 233 புகழ்ந்தா 706 புக்கவி 547 புண்ணாகப் 21 புண்பட 268 புண்பட்டார் 718 புலமிக்க 14 புலவர்த 815 புலையுங் 212 புல்லிக் 433 புறஞ்சொல் 470 புறத்துத் 974 புறநட்ட 429 புனைபடை 1004 புன்சொல் 690 புன்னுனி 1145 பூத்தாலு 529 பூத்தாலுங் 1026 பூமிதிருத் 999 பூரியோர்க் 1067 பூவாதுகா 327 பூவாதே 531 பெண்விழை 322 பெயற்பா 710 பெயரிகு 851 பெரியநட் 425 பெரியவர்தம் 874 பெரியவர் 371 பெரியாரு 91 பெரியாரைத் 905 பெரியாரோ 380 பெரியார்க் 1031 பெரியார்க்குத் 913 பெரியார்சொ 80 பெரியார்பெ 786 பெரியோ 1009 பெருகுவது 418 பெருங்கட 567 பெருங்குண 69 பெருநடை 1017 பெருமுத் 651 பெருமைபு 449 பெருமையு 109 பெருமையு 526 பெருமை 914 பெருவரை 616 பெருவலி 912 பெறுவதொ 522 பெற்றநா 721 பெற்றமு 1138 பெற்றார் 1047 பேணிலீ 739 பேதைமை 534 பேதைய 452 பேரறி 875 பேரான 220 பேரிற்பி 688 பேருலையுட் 355 பையச்செ 116 பையலோ 465 பொச்சாப்பு 993 பொதுநில 117 பொய்குற 104 பொய்சிதை 232 பொய்ப்பு 330 பொய்மேற் 244 பொய்யான்பு 75 பொய்யுடை 365 பொய்வழங் 426 பொய்வே 740 பொருடனைப் 642 பொருத்தம 1079 பொருந்தாப் 62 பொருளுணர் 352 பொல்லாங் 209 பொல்லாத 1036 பொழிந்தி 496 பொறிகெடு 167 பொறுப்பரெ 906 பொற்கலத் 1019 பொற்பறி 618 பொன்பெறு 477 பொன்னணி 30 பொன்னிற 984 பொன்னுங் 880 பொன்னே 515 போகவிட்டு 252 போகாத 214 போற்றியே 937 போனக 673 மக்கட்பெ 608 மக்களுட 578 மக்களைக் 487 மடங்கிப் 846 மடப்பதூஉ 611 மடல்பெரி 814 மணவணி 1146 மண்ணிய 381 மண்ணினி 231 மண்பறித் 203 மதித்திறப் 122 மதியாதார் 943 மந்திரிக் 1113 மயரிக 633 மயிர்வனப் 18 மரம்பழு 726 மரீஇப் 397 மருந்தேயா 684 மருவிய 591 மலர்தலை 793 மலைமிசை 1142 மல்குதிரை 983 மல்லற்பெ 569 மல்லல்மா 969 மறந்தேயு 459 மறம்பேசி 471 மற்றறிவா 1141 மனஞ்சலி 221 மனத்தக 864 மனத்தான் 897 மனந்தடு 677 மனமாண் 457 மனம்போன 155 மனம்வேறு 881 மனைக்குப் 599 மனைக்குவி 923 மனையாளை 825 மன்றிற் 227 மன்னர்க் 1103 மன்னர்பு 661 மன்னனு 29 மாடமழிந் 842 மாண்டமை 1114 மாதாமரி 597 மாதாவை 828 மாரியொன் 716 மாற்றாராய் 273 மாற்றானு 1126 மாற்றானை 403 மானங்கு 962 மானமழி 941 மானம்ப 942 மானவருங் 968 மிகைபட 369 மிக்கபழி 1029 மிக்காரை 903 மிக்குடை 278 மிக்குப் 1024 மீதூண் 306 முடிப்ப 1089 முட்டிகை 766 முட்டிற்பெ 733 முட்டின் 957 முட்டுற்ற 419 முதலுள 641 முதுமக்க 1037 முந்தையெ 64 முல்லைக்கு 844 முறுவலி 681 முறைதெ 1078 முறையி 1101 முறையின் 1098 முற்பகல் 210 முற்பெரு 639 முற்றுமு 144 முனிதக்கா 262 முனியான 97 முனிவினு 1049 முன்கோ 448 முன்னலிந் 1118 முன்னின் 243 முன்னின்னா 770 முன்னுமொ 109 முன்னையுடை 630 முன்னையு 247 மூத்தோர் 831 மூப்புமே 566 மூர்க்கரோ 466 மெஞ்ஞானக் 335 மெய்யுடை 366 மெய்வருத் 1006 மெலியார் 920 மெல்லின 600 மெல்லிலைவா 201 மென்மது 694 மேதையிற் 42 மேழிச் 1002 மேன்மக் 888 மைதீர் 1021 மையேர்த 517 மொழிவ 370 யாக்கை 1144 யாமாயி 931 யார்மட்டும் 188 யானுமற் 1123 யானையனை 393 வஞ்சக 263 வஞ்சனைக 446 வடுச்சொ 1063 வடுவிலா 624 வணங்கி 82 வணிகர்க் 6401 வண்மையி 235 வயாவும் 762 வருத்தவ 32 வருந்தித் 26 வருவாய 598 வருவாயுட் 852 வருவாய்க்கு 607 வருவாய்சி 628 வல்லமை 543 வழங்கலு 986 வழங்காத 751 வழங்காத் 171 வழிபறித் 468 வளமையோ 637 வள்ளன்மை 754 வள்ளன்மை பூ 855 வறிஞர்க் 108 வற்றிமற் 927 வன்சார் 1116 வாக்குந 695 வாங்குங் 723 வாய்ப்பு 902 வார்சான்ற 1085 வார்த்தை 272 வாழாமல்பெ 824 வாழ்நாட் 1143 வான்குரு 1003 விட்டுக்கரு 659 வித்துக்குற் 664 வித்தும் 996 வித்தைவி 49 விரிநிற 907 விருந்திலோ 685 விருந்தின் 286 விருந்தினர் 86 விருந்துபு 592 விருப்பிலா 767 விரும்பி 987 விரைந்து 359 விலக்கிய 539 விழுத்தொடை 56 விளக்குவி 11 விளியாதான் 172 வினைப்பய 274 விங்குதோட் 656 வீரன் கே 390 வெகுளிநு 323 வெட்டெனப் 698 வெந்தீக் 717 வெம்மையு 101 வெய்யோன் 258 வெல்வது வே 136 வெல்வது வே 174 வெள்ளம்ப 1121 வெள்ளம்ப 356 வெறியார் 1139 வெறுமை 513 வென்றிப் 339 வேங்கைவ 518 வேதாளஞ் 225 வேத்தவை 863 வேற்றரவஞ் 81 வேற்றுமை 784 வைகலும் 564 வைகலும் 1043 வைகறை 85 வைகறைத் 670 தைததனா 70 வைத்தணை 324 வைத்ததனை 568 வைப்புழி 3