நூற்றாண்டு நினைவு வெளியீடு புலவர் குழந்தை படைப்புகள் - 11 நீதிக்களஞ்சியம் உரை - 1 அனைத்து நூல்களும் ஒருசேரத் தொகுத்து, பொருள் வழிப்பிரித்து, கால வரிசையில் ஒரே வீச்சில் வெளிவருகின்றன. ஆசிரியர் புலவர் குழந்தை நூற்பெயர் : புலவர் குழந்தை படைப்புகள் - 11 ஆசிரியர் : புலவர் குழந்தை பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 400+ = 416 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 255/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906இல் தோன்றி 1973இல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர். தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் பட்ட அவலங்களை எண்ணியெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளை எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு பதிவுகளாக எழுதி வைத்துச் சென்றவர். தமிழ் இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி 1 முதல் 15 படைப்புகளாக ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய முத்து மாலை யாகத் தந்துள்ளோம். இவர் நூல்கள் அனைத்தும் தமிழ்மொழி இன நாட்டின் மேன்மைக்கும், வாழ்வுக்கும், வளத்துக்கும் வித்திடுபவை. குறிப்பாக இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிழ் மண்ணில் தன்மானக் கொள்கைகள் நிலைத்து நிற்பதற்கு செயற்கரிய செயல்களைத் தமிழ் இளைஞர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும் எனும் இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்ற தமிழ்ப்பெருமக்களுக்கும், இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும்புலவர் இரா. வடிவேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன் கொள்ளும் வகையில் பிழையற்ற பதிப்பக வெளிவருகின்றது. வாங்கிப் பயனடையுங்கள். (இராவண காவியம் நூலுக்கு மிகச்சிறந்த தெளிவுரை எழுதப்பட்டு வருவதால் இப்படைப்பு வரிசையில் சேர்க்க முடியவில்லை. விரைவில் வெளிவரும்.) கோ. இளவழகன் மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு. புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல்களையும் அரசுடைமை யாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது. பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர். அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது. 4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார். அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார். அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார். “இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3). புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தையானாலும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள்தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழுதினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும். விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார். “புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்து வதற்காக எழுதப்பட்டதேயாகும். நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப்படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார். புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனங்களையெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப்படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளையெல்லாம் சாமியாக்குகின்றான். அதுபோல நமக்காகப் பாடுபடுகின்றவர்களை, தொண்டு செய்கிறவர்களை, எழுதுகிறவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன்வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத்துரைத்தார்கள். சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை 1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடைபோட்ட காட்சி கண் கொள்ளாதது. 1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட! எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர். வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது. இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு! கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார். “தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!” நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப்பிட்டதிலிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது. கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள்கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார். “ இனியொரு கம்பனும் வருவானோ? இப்படி யும்கவி தருவானோ? கம்பனே வந்தான்; அப்படிக் கவிதையும் தந்தான் ஆனால், கருத்துதான் மாறுபட்டது” என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது. கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை. தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற்பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இராவண காவிய மாநாடு இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன; முதல் மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்ட துண்டு. இத்திசையில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு. தீர்மானங்கள் 28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும். இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும். மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும். இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல் படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005) அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான். மத்திய அரசு தொலை தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத் துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்கு; பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005). தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது. கலைஞரின் சாதனை! இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார். வாழ்க அப்பெருமகனார்! (நன்றி : விடுதலை 2.7.2006) ‘செந்தமிழ்க் குழந்தை’ பள்ளி சென்று படித்த காலம் 5 ஆண்டு எட்டு மாதம்தான்! ஆனால் திருக்குறளுக்கும், தொல்காப்பியத்துக்கும் உரை எழுதி, பேரிலக்கியம் ஒன்றைப் படைத்து, நாடகக் காப்பியம் உருவாக்கிப் பல இலக்கண நூல்களையும், வரலாற்று நூல்களையும் எழுதியவர் பெரும்புலவர் அ.மு. குழந்தை. ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த ஓல வலசில் 1.7.1906 அன்று முத்துசாமிக் கவுண்டர், சின்னம்மையார் தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர் குழந்தைசாமி; பின்பு தன்னைக் ‘குழந்தை’ என்றே குறிப்பிட்டுக் கொண்டார். ஈரோடு லண்டன் மிஷன் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் “எலிமெண்டரி கிரேடு”, “லோயர் கிரேடு”, ஹையர் கிரேடு” ஆசிரியர் பயிற்சி பெற்ற அவர் திருவையாறு சென்று தேர்வு எழுதி 1934இல் ‘வித்துவான்’ பட்டம் பெற்றார். மொத்தம் 39 ஆண்டுகள் ஆசிரியப் பணிபுரிந்தார். பவானி மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் மட்டும் தொடர்ந்து 21 ஆண்டுகள் பணி புரிந்தார். தொடக்க காலத்தில் கன்னியம்மன் சிந்து, வீரக்குமாரசாமி காவடிச்சிந்து, ரதோற்சவச் சிந்து போன்ற பக்திப் பாடல்களைப் பாடினாலும் 1925க்குப் பின் பெரியாரின் பெருந் தொண்டராகவே விளங்கினார். ‘தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக விளங்கும் நூல்திருக்குறள்; அது மனித வாழ்வின் சட்ட நூல்’ என்ற கொள்கையுடைய குழந்தை 1943, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற திருக்குறள் மாநாடுகளில் பெரும் பங்காற்றினார். தான் எழுதிய பள்ளிப்பாட நூல்களுக்கு ‘வள்ளுவர் வாசகம்’ வள்ளுவர் இலக்கணம்’ என்று பெயரிட்டார். வள்ளுவர் பதிப்பகம் வைத்துப் பல நூல்களை வெளியிட்டார். அவற்றுள் பெரியார் நூல்கள் நான்கு. பள்ளிக்கு வெளியே வந்தவுடன் கருப்புச்சட்டை அணிந்து கடவுள் மறுப்பாளராக விளங்கினாலும் பள்ளிப் பாடங்களில் உள்ள பக்திப் பாடல்களை மிகவும் சுவைபட நடத்துவார். தான் இயற்றிய ‘யாப்பதிகாரம்’ ‘தொடையதிகாரம்’ போன்ற நூல்களில் திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள் பலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அரசியல் அரங்கம், நெருஞ்சிப்பழம், காமஞ்சரி, உலகப் பெரியோன் கென்னடி, திருநணாச் சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல்கள் போன்றவை கவிதை நூல்கள், ‘காமஞ்சரி’ பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மனோண்மனியத்திற்குப் பின் வந்த மிகச் சிறப்பான நாடகக் காப்பியம் ஆகும். தொல்காப்பியர் காலத் தமிழர், திருக்குறளும் பரிமேலழகரும், பூவா முல்லை, கொங்கு நாட்டு வரலாறு, தமிழக வரலாறு, தமிழ் வாழ்க, தீரன் சின்னமலை, கொங்குக் குலமணிகள், கொங்கு நாடும் தமிழும், அருந்தமிழ் அமுது, சங்கத் தமிழ்ச் செல்வம், அண்ணல் காந்தி ஆகியவை உரைநடை நூல்கள். ‘தமிழ் வாழ்க’ நாடகமாக நடிக்கப்பட்டது. தீரன் சின்னமலை பற்றி முதன்முதலில் நூல் எழுதி அவர் வரலாற்றை வெளிக் கொணர்ந்தவர் புலவர் குழந்தை. தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்குப் புதிய எளிய உரை எழுதினார். திருக்குறளுக்குப் புத்துரை எழுதியதுடன் தமிழில் வெளிவந்த அனைத்து நீதி நூல்களையும் தொகுத்து உரையுடன் “நீதிக் களஞ்சியம்” என்ற பெயரில் பெரு நூலாக வெளியிட்டார். தமிழ் அறிந்தவர்கள் அனைவரும் கவிஞராக ‘யாப்பதிகாரம்’, ‘தொடையதிகாரம்’ என்ற யாப்பு நூல்களை எழுதினார். கும்மி, சிந்து ஆகியவற்றிற்கும் யாப்பிலக்கணம் வகுத்துள்ளார். இலக்கணம் கற்க நன்னூல் போல ஒரு நூல் இயற்றி ‘இன்னூல்’ என்று பெயரிட்டார். ‘வேளாளர்’ ‘தமிழோசை’ போன்ற இதழ்களையும் நடத்தினார். வகுப்பில் பாடம் நடத்தும்போது பாடல்களை அதற்குரிய ஓசை நயத்துடன் ஒலிப்பார். உரைநடைபோலத் தமிழாசிரியர்கள் பாடல்களைப் படிக்கக் கூடாது என்பது அவருடைய கருத்தாகும். தமிழைப் பிழையாகப் பேசினாலோ, எழுதினாலோ கண்டிப்பார். ஈரோட்டில் வாழ்ந்த மேனாட்டுத் தமிழறிஞர் ‘பாப்லி’லியுடன் நெருங்கிப் பழகியவர். அவரைப் பற்றிப் ‘பாப்புலி வெண்பா’ என்ற நூலே எழுதியுள்ளார். அவர் படைப்பில் தலையாயது ‘இராவண காவியம்’ ஆகும். பெயரே அதன் பொருளை விளக்கும். 5 காண்டங்கள், 57 படலங்கள், 3100 பாடல்கள். இந்நூல் 1946-ல் வெளிவந்தது. பின் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. தடை நீங்கி 1971-ல் இரண்டாம் பதிப்பும் 1994-ல் மூன்றாம் பதிப்பும் வெளிவந்தது. அண்மையில் நான்காம் பதிப்பை சாரதா பதிப்பகம் (சென்னை - 14) வெளி யிட்டுள்ளது. மிகச்சிறந்த நயமுடைய இராவண காவியத்தைக் கம்பனில் முழு ஈடுபாடு கொண்ட அறிஞர்களும் பாராட்டியுள்ளனர். ‘கம்பன் கவிதையில் கட்டுண்டு கிடந்தேன். இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது’ என்று ரா.பி.சேதுப்பிள்ளை கூறினார். கம்பர் அன்பர் ஐயன்பெருமாள் கோனார் ‘இனியொரு கம்பன் வருவானோ? இப்படியும் கவிதை தருவானோ? ஆம், கம்பனே வந்தான்; கவிதையும் தந்தான்’ என்று புலவர் குழந்தையைப் பாராட்டுவார். அறிவியல் தமிழ் அறிஞர் பெ.நா.அப்புசாமி போன்றோரின் துணையுடன் அரிய செய்திகள் சேகரித்துத் ‘திராவிட காவியம்’ பாட முயன்றபோது 24.9.1972 அன்று புலவர் குழந்தை மறைந்தார். பாரதிதாசன் ‘செந்தமிழ்க் குழந்தை’ என்று பாராட்டியது போலத் தமிழாக வாழ்ந்த அவருடைய நூற்றாண்டு நிறைவு நாள் 1.7.2006 ஆகும். புலவர், முனைவர் இரா. வடிவேலனார் பொருளடக்கம் நீதிக்களஞ்சியம் உரை - 1 பதிப்புரை iii மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை iv செந்தமிழ்க்குழந்தை x முன்னுரை 3 1. கல்வி 5 2. ஒழுக்கமுடைமை 49 3. அழுக்காறாமை 93 4. சினமின்மை 94 5. அடக்கமுடைமை 105 6. பொறையுடைமை 117 7. நாணுடைமை 127 8. தீவினையச்சம் 129 9. நடுவுநிலைமை 153 10. பொய்யாமை 158 11. புறங்கூறாமை 161 12. இன்னாசொல்லாமை 167 13. பயனில சொல்லாமை 173 14. இன்னா செய்யாமை 176 15. பயனில செய்யாமை 185 16. பணிவுடைமை 191 17. கள்ளாமை 195 18. குடியாமை 197 19. நலவழி 199 20. சூது 203 21. அறிவுடைமை 205 22. அவையறிதல் 225 23. குறிப்பறிதல் 241 24. சொல்வன்மை 246 25. நட்பு 252 26. நட்பாராய்தல் 263 27. பழமை 273 28. கூடா நட்பு 284 29. சிற்றினஞ் சேராமை 302 30. கல்லாமை 312 31. அறிவின்மை 321 32. புல்லறிவாண்மை 336 33. பேதைமை 347 34. தற்புகழ்ச்சி 358 35. பிறனில் விழையாமை 364 36. அறன்வலியுறுத்தல் 376 நீதிக்களஞ்சியம் உரை-1 (1962) முன்னுரை ஆங்கிலக் கல்விமுறை ஏற்படுமுன்னர்த் தமிழ்நாட்டுப் பள்ளி களில் எண்ணும் எழுத்தும் கண்ணெனக் கற்பிக்கப் பட்டு வந்தன. எழுத்து என்பது இலக்கியமும் இலக்கணமும் ஆகும். தமிழ் இலக்கியத்தில் நீதி நூல்கள் முதலிடம் பெறும். திருக்குறள் முதலிய கீழ்க்கணக்கு நூல்கள் பத்தொன்பதில் நீதி நூல்கள் பன்னிரண்டு. ஆத்திச்சூடி முதலிய பிற்கால நீதி நூல்கள் பத்து. தமிழில் உள்ளமை போல இத்துணைத் தனி நீதி நூல்கள் வேறு எந்த ஒரு மொழியிலும் இல்லை எனலாம். முன்னெல்லாம் முதல் வகுப்பிலிருந்தே ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலிய நீதி நூல்கள் முறையாக மனப்பாடஞ் செய்யப் பட்டு வந்தன. இன்னவென்றறியாமல் இளமையில் மனப் பாடஞ் செய்த அவை, பின்னர்ப் பொருளுணரப்பட்டுப் பெரும் பயன் எய்துவிக்கும். செய்வன தவிர்வன கூறும் அந்நீதிச் செய்யுட்கள் வாழ்க்கை வழிகாட்டியாக அமைந்து, உயரிய நல்வாழ்வு வாழத் துணை செய்யும். தமிழ் நீதிநூல்களில் தலையாய திருக்குறள் இன்று ஒருவாறு தமிழ் மக்களால் போற்றப்படினும், நாலடியார் முதலிய ஏனைய நீதி நூல்கள் கண்ணெடுத்துப் பார்ப் பாரின்றி இறக்கும் நிலையில் இருந்து வருகின்றன. இப்படியே விட்டு வைத்தால் தமிழின் தனிச் சரக்காகிய அவை இறந்து படுமன்பதில் சிறிதும் ஐயமில்லை. இன்றையத் தமிழ்ப் பாடத் திட்டமும், அந்நூற்பாக்களுட் பல இக்காலப் போக்கிற் கேற்ப இன்மையுமே அதற்குக் காரணமாகும். இந்நிலையைப் போக்கி, தமிழ் மக்கள் எல்லோரும் அவற்றை முன் போல், விரும்பிக் கற்றுப் பயன் பெறுமாறு செய்ய எழுந்ததே நீதிக் களஞ்சியம் என்னும் இந்நூல். நாலடியார் முதல் உலக நீதி ஈறாகவுள்ள 21 நூல்களி லிருந்து, இக்காலத் தமிழ் மக்கள் கடைப்பிடித்து நடத்தற் கேற்ப இன்றியமை யாத நீதி கூறும் செய்யுட்களை ஆராய்ந்து பொறுக்கி எடுத்து, அப்பொறுக்கு மணிகளை, கல்வி முதல் நிலையாமை ஈறாக 71 அதிகாரங்களாக வகைப்படுத்தி யுள்ளனன். இனியவை நாற்பது, இன்னா நாற்பது, நான்மணிக் கடிகை ஆகிய மூன்றன் செய்யுட்களொவ்வொன்றும் வெவ்வேறு வகைப் பட்ட நீதி கூறுவதால், அவ்வத் தலைப்புக்குரிய நீதி கூறும் பகுதியைத் தனிச் செய்யுளாகக் கொண்டுள்ளேன். தமிழ் மக்கள் எல்லோரும் படித்துப் பயன் பெற வேண்டும் என்னும் நோக்குடன் இந்நூலின் உரையை மிக எளிய நடையில் அமைந்துள்ளனன். பதவுரையை அடுத்துள்ள கடுஞ்சொற் பொருள், பொருளறிவுக்கும், மொழி யறிவுக்கும் மிக்க துணை செய்வதாகும். முடிவிலுள்ள விளக்க வுரை, ஐயப்பாடு சிறிது மின்றிப் பாட்டின் கருத்தை விளக்கு மென்பதில் சிறிதும் ஐயப் பாடில்லை. தமிழ் மக்கள் இந்நூலைப் பெரிதும் விரும்பிக் கற்றுப் பெரும் பயன் எய்துவார் களாக. நீதிக் களஞ்சியம் 1. கல்வி அஃதாவது, கற்க வேண்டிய நூல்களைக் கற்றறிதல். கற்க வேண்டியவற்றைக் கற்றறிந்து அதன்படி நிற்றலே கல்வியின் பயனாகும். “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்பது குறள். 1. குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்ச ளழகு மழகல்ல - நெஞ்சத்து நல்லம்யா மென்னு நடுவு நிலைமையால் கல்வி யழகே யழகு. (நால) குஞ்சி அழகும் - தலைமயிரின் அழகும், கொடுந்தானை கோடு அழகும் - ஆடையினது கரையின் அழகும், மஞ்சள் அழகும் அழகு அல்ல - மஞ்சள் முதலிய கலவைப் பூச்சின் அழகும் அழகு அல்ல, நெஞ்சத்து யாம் நல்லம் என்னும் நடுவு நிலைமையால் - மனத்தின்கண் ‘நாம் நற்குண நற்செய்கை உடையோம்’ என்று எண்ணுகின்ற நடு நிலைமையால், கல்வி அழகே அழகு - கல்வியால் உண்டாகும் அழகே அழகாகும். குஞ்சி - ஆண்மயிர். கூந்தல், குழல், ஓதி என்பன பெண் மயிர். தலைமயிரைப் பிடரி மறைய விட்டு நறுக்கிக் கொள்வது குஞ்சி எனப்படும். இன்று ஆண் மக்கள் வைத்திருக்கும் குறுங்குஞ்சி (கிராப்பு) குஞ்சியின் குறுக்கமே யாகும். எனவே, குறுங்குஞ்சி தமிழர் நாகரிகமேயாகும். கொடுமை - வளைவு, ஈங்கு ஆடையின் மடிப்புக்கு ஆனது. தானை - ஆடை, கொடுந்தானை - மடித்து வைக்கும் ஆடை. கோடு - வேட்டி சேலைகளின் கரை. நல்லம் - தன்மைப் பன்மை முற்று. நடுவு நிலைமை கோடுதல் இல்லாத தன்மை. கோடுதல் - கோணுதல். சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி (குறள்) எனக் காண்க. குஞ்சி - பிற உறுப்புக்களையும், தானை - அணிகலன் களையும், மஞ்சள் - பூசிக்கொள்ளும் பலவகைக் கலவை களையும் குறிக்கும். இது இனவிலக்கணம் எனப்படும். கூந்தலழகுங் கொள்க. குஞ்சி முதலிய உறுப்புக்களின் அமைப்பாலாகிய இயற்கை யழகும். உடுப்பன, அணிவன, பூசுவன முதலியவற்றா லாகிய செயற்கை யழகும் தம்மைப் பார்க்கும் பிறர்க்கே யன்றித் தமக்கு இன்பந் தருவன வல்ல; கல்வியொன்றே தம் மனத்திற்கு இன்பந் தருவது என்பதாம். ‘தாம் இன்புறுவது உலகும் இன்புறுவதால்’ (குறள் - 399) கல்வி, கற்றவர்க்கே யன்றி மற்றவர்க்கும் இன்பந்தருவ தாகும். இயற்கை யழகினும் செயற்கை யழகும் கல்வி அழகே சிறந்தென்பது கருத்து. இயற்கை யழகும் செயற்கை யழகும் பிறர் கூறக் கேட்டு இன்புறுவனவே யாகும். கல்வி யழகே தாமறிந் தின்புறுவதாகை யால், ‘நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி யழகே அழகு’ என்றார். பிறர் கண்டின்புறும் ஏனை யழகுகளினும் தாம் கண்டின்புறும் கல்வி யழகே சிறந்தது என்பதாம். கல்வியறிவானது கற்றவரை இன்புறுத்துவதோடு, தீய வழிகளிற் செல்லாமல் தடுத்து நல்ல வழிகளில் செலுத்துவ தால், ‘நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்’ என்றார். கற்றவரை ‘நல்லம் யாம்’ என்று எண்ணும்படி செய்வதும், நடுவு நிலைமையில் நிறுத்துவது மான கல்வியழகே அழகு என்றபடி. இதனால், கல்வியின் தனிச் சிறப்புக் கூறப்பட்டது. ஆடவர்க்குரிய குஞ்சியை முதலிலும், பெண்டிர்க்குரிய மஞ்சளை இறுதியிலும், இருவர்க்கும் பொதுவாகிய ஆடையை இடையிலும் வைத்துக் கூறினார். கல்வி ஆண் பெண் இருபாற்கும் பொதுவாதற் சிறப்பு நோக்கி. வள்ளுவரும், ‘தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை’ (குறள் - 68) என, ஆண் பெண் இரு பாற்கும் பொதுவான ‘மக்கள்’ என்னும் பெயரையே குறித்தல் காண்க. பெண் கல்வி புறக்கணிக்கப் பட்டது பிற்காலத்தேயாகும். ஆடையணிகளாலாகிய அழகினும் கல்வி யழகே சிறந்தது என்பது கருத்தாகையால், கற்றோர் தம்மை ஆடையணிகளால் அழகு செய்து கொள்ள வேண்டியதில்லை என்பதும், உடலின் சிறுமைகண் டொண்புலவர் கல்விக் கடலின் பெருமை கடவார் (நன்னெறி) என, உடலழகைப் பற்றியும் கற்றோர்க்குக் கவலை வேண்டிய தில்லை என்பதும் பெற்றாம். (1) 2. இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் எம்மை யுலகத்தும் யாங்காணேங் கல்விபோல் மம்ம ரறுக்கு மருந்து. (நால) இம்மை பயக்கும் - கல்வியானது, இம்மைப் பயனாகிய புகழைத் தரும், ஈயக் குறைவு இன்று - பிறர்க்குக் கொடுக்கின் (செல்வத்தைப் போல) குறைவு படாது, தம்மை லினக்கும் - கற்றவர் பெயரை உலகெங்கும் விளங்கச் செய்யும், தாம் உளர் ஆ கேடு இன்று - கற்றவர் உயிரோடு உள்ளளவும் அழிதல் இல்லை, ஆல் - ஆதலால், கல்வி போல் மம்மர் அறுக்கும் மருந்து - கல்விபோல அறியாமையாகிய நோயைப் போக்குவதொரு மருந்தினை, எம்மை உலகத்தும் யாம் காணேம் - எவ்வுலகத்திலும் நாம் காண்கின்றோ மில்லை. ஒருவர் உயிரோடு இருக்கும் நிலை - இம்மை எனப்படும். அவர் இறந்த பிறகு அவரைப் பற்றி இங்கு பேசப்படுவது - மறுமை எனப்படும். வள்ளுவர், ஒளவையார், இளங்கோவடிகள் முதலிய பழந்தமிழ்ச் சான்றோர்களும், பாரி, காரி, பேகன் முதலிய பழந் தமிழ்ச் செல்வர்களும் மறுமை வாழ்வு வாழ்கின்றனர். ஒருவர் பெயர் (புகழ்) இவ்வுலகினின்றும் மறையும் போது மறுமை வாழ்வும் மறைந்து விடும். ஒருவர் இறந்த பின் அவர் பெயர் இவ்வுலகில் வழங்கப்படுவதே - பேசப்படுவதே - மறுமை யாதலால், இம்மையிலேயே மறுமை வாழ்வை நிலையுடைய தாக்கிக் கொள்வது தம்பெயரை நிலைபெறச் செய்வது - மக்கள் ஒவ்வொருவரின் நீங்காக் கடமையாகும். இம்மை என்பது - இம்மைப் பயனாகிய புகழை உணர்த் திற்று. முதல் மூன்று ஆல் - ஆசை. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை யுயிர்க்கு (குறள்) என வள்ளுவரும் இம்மைப் பயன் புகழ் எனல் காண்க. இசை - புகழ். இம்மையில் புகழைத்தேடி, அதை மறுமைக்கு நிலை நாட்டு வதே மக்கட் பிறப்பின் பயன் என்பது சான்றோர் முடிவாகும். பயத்தல் - தருத்தல். உளர் ஆ - உளராக. ஆ - ஆக என்பதன் தொகுத்தல். உளர் ஆக - உள்ளவரை. மம்மர் - மயக்கம். இங்கு அறியாமை, ஈதல் - மாணாக்கர்க்கு உரைத்தல். கல்வி, செல்வம் இரண்டும் இம்மை பயக்கின்றன. ஆனால், செல்வம் ஈயக் குறைகின்றது. செல்வமும் ஒருவாறு உடையவனை விளக்கினும், அவன் உள்ளளவும் ஒரு நிலையாக நிற்பதில்லை, எனக் கல்விக்கும் செல்வத்திற்கும் உள்ள வேற்றுமையை எடுத்துக் காட்டிக் கல்வியின் சிறப்புக் கூறியவாறு. தம்மை - கற்றறிவுடையவரை. கற்றோர் பெயர் உலகெங்கும் விளங்கித் தோன்றுதல் காண்க. கல்வியை மருந்தாகக் கூறியதற்கேற்ப, மம்மரை - அறியா மையை - நோயாகக் கூறாததால், இது ஒருகூற்றுருவக அணி. உடற் பிணி தீர்க்கும் மருந்தினும் உயிர்ப் பிணியாகிய அறியாமையைத் தீர்க்கும் கல்வி பல வகையினும் சிறந்தது என்பதாம். கல்வி புகழைத் தருகிறது. கொடுக்கக் கொடுக்கக் குறையா திருக்கிறது, உடையவன் பெயரை உலகெங்கும் விளங்கச் செய்கிறது, கற்றவன் உள்ளவரை அழிவதில்லை. இத்தகு சிறப்பினையுடைய கல்வியைக் கல்லாது காலங் கழிப்பதன் கருத்து என்ன என்பது கருத்து. (2) 3. வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார் எச்ச மெனவொருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற் றல்ல பிற. (நால) வைப்பு உழி கோள்படா - (கல்விப் பொருள்கள்) வைத்த இடத்திலிருந்து பிறரால் கவர்ந்து கொள்ளப்பட மாட்டா. வாய்த்து ஈயின் கேடு இல்லை - தக்கவர் கிடைத்து அவர்க்குக் கொடுத்தால் குறைவதில்லை, மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார் - மிக்க சிறப்பினையுடைய அரசர்கள் சினந்தாலும் பறித்துக்கொள்ள மாட்டார்கள், (ஆதலால்), ஒருவன் மிச்சம் என்று தன் மக்கட்குச் சேர்த்து வைக்கத் தக்கவை கல்விப் பொருள்களேயாகும், பிற அல்ல - செல்வப் பொருள்கள் அல்ல. உழி - இடம். வைப்பு உழி - வைத்த இடம். கோட் படல் - கொள்ளப்படல். கல்விக்குத் தக்கவர் - நன்மாணாக்கர், கேடு - கெடுதல், மிக்க சிறப்பின் அரசர் - பேரரசர். செறுத்தல் - சினத்தல். வவ்வுதல் - பறித்துக் கொள்ளுதல். எச்சம் - மிச்சம்; தான் செலவு செய்தது போகத் தன் மக்களுக்கென மிச்சப்படுத்தி வைப்பது. விச்சை - வித்தை என்பதன் போலி. அறிவுக் கல்வி, தொழிற் கல்வி எனக் கல்வி பலவகைப் படுதலின், ‘செய்வன’ எனப் பன்மையாற் கூறினார். மற்று - அசை. செல்வப் பொருள் கள்வராலும் பங்காளிகள் முதலி யோராலும் கவர்ந்து கொள்ளப்படும்; பிறர்க்குக் கொடுத்தால் குறைந்து போகும்; கொடுங்கோல் மன்னரால் கொள்ளை கொள்ளப்படும். கல்விப் பொருளுக்கு இத்தகைய கேடு ஒன்றும் இல்லை. ஆதலால், செல்வப் பொருளினும் கல்விப் பொருளே சிறந்தது என்பது கருத்து. இது வேற்றுமையணி. வெள்ளத்தே போகாது வெந்தணலால் வேகாது வேந்த ராலும் கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவு றாது கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது கல்வி யென்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெல்லாம் பொருள்தேடி உழல்வ தென்னே. என்னும் செய்யுளைக் காண்க. செர்மனி நாட்டுத் தலைவர் ஹிட்லர், யூதர்கள் செல்வத்தைப் பறித்தமை யறிக. இத்தகைய சிறப்புடைய கல்விப் பொருளிருக்க, தம் மக்கட்கு இதைத் தேடி வைக்க முயலாமல், இதற்கு மாறான இயல்புடைய செல்வப் பொருளைத் தேடி வைப்பதில் மட்டும் முனைவது அறியாமை என்பதாம். கேடில் விழுச்செல்வங் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை. (குறள்) தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல். (குறள்) என்கிறார் வள்ளுவர். செல்வத்தினும் கல்வி சிறந்த தென்பதற்குக் காரணங் காட்டி, அதனை மக்கட்குத் தேடி வைப்பது - அவரைக் கல்வியறிவுடை யராக்குவது - பெற்றோர் கடமை என்பது கருத்து. (3) 4. கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல்ல நினைக்கிற் பிணிபல - தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகிற் றெரிந்து. (நால) கல்வி கரை இல - கல்வியாகிய கடல்களோ கரையை உடையனவல்ல, கற்பவர் நாள் சில - அவற்றைக் கற்பவரது வாழ் நாட்களோ சிலவாம், மெல்ல நினைக்கின் பிணி பல - நன்கு ஆராய்ந்து பார்த்தால் (அச் சில்வாழ் நாட்களுள்) நோய்கள் பல உள்ளன, (ஆதலால்), நீர் ஒழியப்பால் உண் குருகின் தெரிந்து - நீர் ஒழியப் பாலை மட்டும் உண்கின்ற அன்னம்போல நூல்களின் தன்மையைப் பகுத்தறிந்து, தெள்ளிதின் ஆராய்ந்து - நன்கு ஆராய்ந்து பார்த்து, அமைவு உடைய கற்ப - நல்ல நூல்களையே படிப்பார்கள் அறிவுடையோர். ‘கரை இல’ என்றதனால், கல்வியைக் கடலாகக் கொள்ளப் பட்டது. மெல்ல - விரைவின்றி, மெதுவாக, நன்கு என்றபடி. தெள்ளிதின் - தெளிவாக, நன்கு. அமைவு உடைய - தகுதியானவை, கற்கத் தகுந்த நல்ல நூல்கள். குருகு - பறவை. ‘நீரொழியப் பாலுண் குருகு’ என்றதனால், அன்னப் பறவையைக் குறித்தது. பாலையும் நீரையும் கலந்து வைத்தால், நீரை விட்டுப் பாலை மட்டும் உண்ணும் இயல்புடையது அன்னம். இது பற்றியே அன்னம் முதன் மாணாக்கர்க்கு உவமை கூறப்படும். கல்வி கடல்போற் பரந்தும், மக்களின் வாழ்நாள் மிகக் குறுகியும், அவ்வாழ்நாளிலும் கற்க வொட்டாது தடை செய்யும் பலவகை நோய்கள் வருவனவாயும் இருத்தலால், வரையறை யின்றிக் கண்ட நூல்களையெல்லாம் படித்துக் காலத்தை வீணாகக் கழியாது, வாழ்க்கைக்கு இன்றியமை யாத நல்ல நூல்களையே கற்க வேண்டும்மென்பதாம். அறிவை வளர்க்கும் நன்னூல்களே யன்றி, அறிவைக் கெடுக்கும் புன்னூல்களும் உள்ளனவாகையால், அவற்றை விட்டு அறிவு நூல்களையே கற்க வேண்டும் என்பது கருத்து. இனி ஒரு நூலிலேயே வேண்டாக் கருத்துக்களும் இருக்கு மாதலால், ஒரு நூலிலுள்ள நற்பகுதிகளை மட்டும் தேர்ந்து படித்துப் பயன்பெற வேண்டுமென்பதுங் கொள்ளப் படும். இது கற்கும் முறை கூறப்பட்டது. ‘கற்க கசடறக் கற்பவை’ (குறள் - 391) என்பதும் இக்கருத்தே. (4) 5. களர்நிலத் துப்பிறந்த வுப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்; கடைநிலத்தோ ராயினுங் கற்றறிந் தோரைத் தலைநிலத்து வைக்கப் படும். (நால) சான்றோர் - பெரியோர்கள், களர் நிலத்துப் பிறந்த உப்பினை - தாழ்வான களர் நிலத்தில் உண்டான உப்பை, விளை நிலத்து நெல்லின் விழுமிதுஆ கொள்வர் - நல்ல நிலத்தில் விளைந்த நெல்லினும் சிறந்ததாகக் கொள்வார்கள், (அது போல), கடை நிலத்தோர் ஆயினும் கற்றறிந்தோரை - தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் களானாலும் கற்றவர்களை, தலை நிலத்து வைக்கப்படும் - மேன்மை யான இடத்தில் வைத்துப் போற்றப்படும். களர் நிலம் - உவர் நிலம், உப்பு மண்ணுடைய நிலம். அதில் பயிர் ஒன்றும் விளையாது. விளைநிலம் - பயிர் நன்கு விளையும் நல்ல நிலம். விழுமம் - சிறப்பு. ஆ - ஆக. விழுமிது ஆக - சிறப்பாக, கடைநிலம் - கீழ்க் குலம். தலைநிலம் - உயர்ந்த இடம். தலை நிலத்து வைத்தல் - மேலாக மதித்தல். கீழ்க்குலத்தவ ராயினும் கற்றவர் நன்கு மதிக்கப்படுவர் என்பது கருத்து. தாழ்த்தப்பட்ட வகுப்பினரான சிவசண்முகம் என்பவர் மேற்குலத்தோரும் தலைவணங்கித் தாழும்படி சென்னைச் சட்ட மன்றத் தலைவராக வீற்றிருந்ததும், அவ்வகுப்பினரான டாக்டர் அம்பேட்கார் என்பார் டில்லி அமைச்சராக இருந்ததோடு, இந் நாட்டு உயர்குல மக்களும் நன்கு மதிக்கும்படி விளங்கினதும் எடுத்துக் காட்டாகும். வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனும் அவன்கட் படுமே (புறநானூறு) நாற்பாற் குலத்தின் மேற்பா லொருவன் கற்றில னாயிற் கீழிருப் பவனே; எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை வருக வென்பர் (வெற்றிவேற்கை) நாற்பாற் குலம் - பார்ப்பனர், உயர்குலத்தோர், தாழ் குலத்தோர் - தாழ்த்தப்பட்டோர் என்பார். தமிழ் நாட்டில் இன்றுள்ள மேற்குலம் கீழ்க் குலம் என்னும் குலவேற்றுமை நாலடியார் காலத்துக்கு முன்னரே ஏற்பட்டு விட்டது. அது பிறப்பு வேற்றுமையாகவும் நம்பப் பட்டு வந்தது. அதை அப்படியே கொண்டு கூறியது இப்பாட்டு. வள்ளுவர் காலத்திலேயே இப்பிறவி வேற்றுமை தமிழரிடைப் புகுத்தப்பட்டு விட்டதென்பது, ‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’ (குறள் - 972) என்பதால் விளங்குகிறது. உப்பின் சுவை உணவுக்கு இன்றியமையாதது போல, கல்வி யறிவு மக்கட்கு இன்றியமையாதது என்பது தோன்ற, உப்பைக் கற்றவர்க்கு உவமையாக எடுத்துக் காட்டினார். ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது பழமொழி. களர்நிலம் - தாழ்த்தப்பட்ட வகுப்புக்கும். உப்பு - அவ் வகுப்பில் கற்றோர்க்கும், விளைநிலம் - உயர் குலத்திற்கும், நெல் - அக்குலத்தில் கல்லார்க்கும் உவமை. கற்றால் குலத்தாழ்வு நீங்கும் என்பது கருத்து. (5) 6. தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக் காணிற் கடைப்பட்டா னென்றிகழார் - காணாய் அவன்றுணையா வாறுபோ யற்றேநூல் கற்ற மகன்றுணையா நல்ல கொளல். (நால) நூல் கற்ற மகன் துணை ஆ - (தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவனாயினும்) நூல்களைக் கற்றறிந்தவனைத் துணையாகக் கொண்டு, நல்ல கொளல் - சிறந்த நூற்பொருளை அறிந்து கொள்ளுத லானது, தோணி இயக்குவான் - படகோட்டுபவன், தொல்லை வருணத்துக் கடைப்பட்டான் என்று காணின் - பழமையான சாதிகளுள் கீழ்க் குலத்தில் பிறந்தவன் என்பதை மேற்குலத்தோர் யாவரும் அறிந்திருந்தும், இகழார் - இகழாராய், அவன் துணை ஆ ஆறுபோய் அற்றே - அவனைத் துணையாகக் கொண்டு ஆற்று வெள்ளத்தைக் கடந்து போனாற் போன்றதாம். தோணி - படகு. இயக்குதல் - செலுத்துதல், ஓட்டுதல். தொல்லை - பழமை. வருணம் - சாதி. காணின் - கண்டும் என இறந்த காலங் குறித்தது. காணாய் - முன்னிலையசை. நல்ல - சிறந்த நூற்பொருள்கள். தாழ்ந்த குலத்தினனாயினும் படகோட்டுபவனைக் கொண்டே ஆற்று வெள்ளத்தைக் கடப்பது இன்றியமையா திருத்தல்போல, தாழ்ந்த குலத்தினனாயினும் கற்றவனைக் கொண்டே நூற் பொருளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதாம். தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த அரசியற் பேரறிஞரான டாக்டர் அம்பேட்கார் அவர்களைக் கொண்டு, இந்திய அரசியற் சட்டம் வகுத்தமை இதற்கு எடுத்துக் காட்டாகும். பட்டினத் தடிகள் என்னும் உயர் குலத்தினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினரான பாணபத்தர் என்னும் பெரியார்பால் அருளுரை கேட்டுத் தெளிந்தனர் என்ப. இதனால், நாலடியார் காலத்தே தாழ்த்தப்பட்ட வகுப்பின ரான சமண முனிவர்களிடம் உயர் வகுப்பினர் கற்க மறுத்து வந்தனர் என்பதும். அதைக் கண்டிக்கவே படகோட்டுந் தாழ்த்தப்பட்டவனை எடுத்துக் காட்டினர் என்பதும் விளங்கு கின்றன. இன்றும் நாட்டுப் புறங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பள்ளி ஆசிரியர்களை உயர் வகுப்பினர் புறக்கணித்து வருதல் இதற்குச் சான்றாகும். இந்நூலாசிரியர் காலத்துக்கு முன்னரே தமிழ் நாட்டில் சாதி வேற்றுமை நிலைநாட்டப்பட்டுவிட்டதால், ‘தொல்லை வருணம்’ என்றார். கற்றவன் என்னாது, ‘கற்ற மகன்’ என்றது, கல்லாதவன் மக்களுள் ஒருவனாக வைத்து எண்ணப்படாது, விலங்கோ டொப்ப மதிக்கப்படுவான் என்பது விளங்குதற் பொருட்டாம். குலத்தாழ்வு பாராட்டாது கல்வியிற் சிறந்தவரை மதித்து, அன்னாரிடம் கற்றுக் கொள்ள வேண்டுமென்பது கருத்து. (6) 7. தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார் இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ நகலி னினிதாயிற் காண்பா மகல்வானத் தும்ப ருறைவார் பதி. (நால) தவல் அரும் தொல் கேள்வித் தன்மை உடையார் - தவறுத லில்லாத பழமையான நூற்கேள்வியினது தன்மையை உடையவர் களும், இகல் இலர் - பகைமைக் குணம் இல்லாதவர்களும், எஃகு உடையார் தம்முள் குழீஇ நகலின் - நுட்பமான அறிவுடையவர் களும் ஆகிய கற்றவர் கூட்டத்துடன் கூடியிருந்து மகிழ்தலைக் காட்டிலும், இனிது ஆயின் - இன்பந் தருவதானால், அகல் வானத்து உம்பர் உறைவார் பதி காண்பாம் - அகன்ற வானுலகத்தின் கண் வாழ்கின்ற தேவர்களது நகரமாகிய அமராவதியை நாம் காண்போமாக. தவலுதல் - தவறுதல். கேள்வியினது தன்மையை உடை யார் - கேள்விச்சிறப்புடையார், இகல் - பகை, எஃகு - கூர்மை. ஈண்டு கூரிய அறிவுக்கானது. குழீஇ - கூடி. இது சொல்லிசை அளபெடை. நகுதல் - மகிழ்தல். உம்பர் - மேல். வானத்து உம்பர் - வானத்தின் மேல். உறைவார் - வாழ்பவர். பதி - ஊர். தவறுதலில்லாத கேள்விச் சிறப்பும், பகைபாராட்டுங் குணம் இன்மையும், நுண்ணறிவும் உடைய கற்றவர் கூட்டம் என்க. இத்தகைய கற்றவர்களோடு கூடி மகிழும் இன்பமே இன்பம். இவ்வின்பத்துக்கு வானுலகத்தின்பமும் ஒப்பாகாது என்பதாம். இதைக் காட்டிலும் இன்பம் தருவதானால் அதைக் காண்பாம் என்பதால், அதைவிட இது சிறந்த இன்பம் என்றபடி. ‘நம் தலைக்கு மேலே ஓர் உலகம் உண்டு. அது வானுலகம் எனப்படும். அதன் தலைநகர் அமராவதி என்பது. அவ் விண்ணுலகம் இம்மண்ணுலகினும் சிறந்தது; மிக்க இன்ப முடையது. அவ் வானுலகில் வாழ்வோர் தேவர்கள் எனப்படுவர். அவர் மக்களினும் உயர்ந்தவர். மக்களில் நன்மை செய்தோர் தேவர்களாய்ப் பிறந்தின் புறுவர்’ என்னும் புராணக் கொள்கையைப் பின்பற்றிக் கூறப்பட்டது இது. இதன் விளக்கம், திருக்குறள் குழந்தையுரை முகவுரையில் காண்க. கற்றறிந்தவர்களோடு கூடி அளவளாவும் இன்பத்தின் சிறப்புக் கூறப்பட்டது. (7) 8. அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா துலகநூ லோதுவ தெல்லாம் - கலகல கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம் போஒந் துணையறிவா ரில். (நால) அலகு சால் கற்பின் - அளவுமிக்க நூல்களுள், அறிவு நூல் கல்லாது - அறிவு வளர்ச்சிக்குக் காரணமான நூல்களைப் படியாது, உலக நூல் ஓதுவது எல்லாம் - அறிவுக்குப் புறம்பான வேறு நூல்களைப் படிப்பதெல்லாம், கலகல கூம் துணை அல்லால் - கலகல வென்று கூவுமளவே யல்லாமல், கொண்டு தடுமாற்றம் போம் துணை அறிவார் இல் - அந்நூல்களைக் கொண்டு அறியாமை நீங்கும் வழியை அறிவார் இல்லை. அலகு - அளவு. சால் - மிக்க. கற்பு - கல்வி. இங்கே நூலை உணர்த்திற்று. அறிவு நூல் - தொல்காப்பியம், திருக்குறள், அகநானூறு, புறநானூறு முதலிய பழந்தமிழ் நூல்களும், அறிவியல் ஆராய்ச்சி நூல்களும். உலக நூல் - புராணம், புகழ் நூல்கள் போன்றனவும், இன்று வெளிவரும் அறிவுக்குப் புறம்பான காதற் கதைகள் போன்ற நூல்களுமாம். இன்று அறிவுக்குப் புறம்பான, அறிவைக் கெடுக்கும் நூல்கள் பலப்பல வெளிவருதல் போலவே, அன்றும் புராண நூல்களும் புகழ்நூல்களும் பலப்பல வெளிவந்தன. அவற்றை விலக்க எழுந்ததே இச்செய்யுள். ‘கற்பவர் நாள் சில; பிணி பல’ (நாலடி 4) ஆதலால், அதற்குள் அறிவு நூல்களைக் கற்று நல்லறிவைப் பெற்று நல்வாழ்வு வாழ்வதை விட்டு, அறிவுக்குப் புறம்பான, அறிவைக் கெடுக்கும் பயனற்ற நூல்களைப் படிப்பதில் வீண்காலங் கழிக்கக் கூடா தென்பதாம். கலகல - இரட்டைக் கிளவி, கூவுதல் - சும்மா வெறுங்கத்துக் கத்துதல். ‘கூவும், போகும்’ என்பன கூம், போம் என இடைக் குறையாய் அளபெடுத்தன. தடுமாற்றம் - இதுவோ அதுவோ என்னும் மனத் தடுமாற்றம். அதாவது அறியாமை. உலக நூல் ஓதுவது தொண்டை தீயக் கத்துவதே யல்லாமல் பயனேதும் இல்லை என்பதாம். இதனால், இன்னது கற்க வேண்டும் என்பது கூறப்பட்டது. (8) 9. ஆற்று மிளமைக்கண் கற்கலான் மூப்பின்கண் போற்று மெனவும் புணருமோ - ஆற்றச் சுரம்போக்கி உல்குகொண்டா ரில்லையே யில்லை மரம்போக்கிக் கூலிகொண் டார். (பழ) சுரம் ஆற்றப் போக்கி உல்கு கொண்டார் இல்லை - ஆயத் துறையின் வழியை அப்புறம் கடக்கவிட்டு ஆயம் வாங்கினவர் இலர்; மரம் போக்கிக் கூலிகொண்டார் இல்லை - ஓடத்தி னின்றும் கரையேற்றி விட்டுக் கூலி கொண்டவரும் இலர்; (அங்ஙனமே) ஆற்றும் இளமைக் கண் கற்கலான் - கற்கக்கூடிய இளமைப் பருவத்தில் கற்காதவன், மூப்பின் கண் போற்றும் எனவும் புணருமோ - முதுமைப் பருவத்தில் கற்றுக்கொள்வான் என்று சொல்லவும் கூடுமோ? கூடாது. போற்றும் - கற்கும், கற்றுக் கொள்வான். புணர்தல் - பொருந்துதல், கூடுதல். உல்கு - ஆயம், சுங்கம். ஆயத்துறை - சுங்கச் சாவடி. சுங்கம் வாங்கும் இடம். சுரம் - வழி. சுங்கம் - வழிச் செல்லும் வண்டிகட்கு வாங்கப்படும் வரி. மரம் - ஓடம். ஊரை அடுத்துப் பாதையின் குறுக்கே ஒரு மூங்கிலை இட்டுத் தடுத்து, வரும் வண்டிகளை நிறுத்திப் பணம் வாங்கிக் கொண்டு சீட்டுக் கொடுத்து, பின்னர் மூங்கிலை எடுத்து வண்டியைப் போகவிடுவர். பணம் வாங்காமல் மூங்கிலை எடுத்துவிட்டால் அப்புறம் வண்டிக்காரனிடம் பணம் வாங்க முடியாது. இவ்வாறு முன்னர் வழிச் செல்லும் வண்டிகட்குச் சுங்கம் வாங்கிவந்தனர். 1931 இல் அதை எடுத்துவிட்டனர். இன்று சந்தைக்கு வரும் கூடைச் சுமை, வண்டி முதலியவற்றிற்குச் சுங்கம் வாங்குதலை அறிக. இது பழமொழியார் காலத்தே நடந்துவந்த தென்பது அறியற் பாலது. இவ்வாறே, ஓடத்தில் ஏறினதும் ஓடக்காரன் கூலி வாங்கிக் கொள்வான். அவ்வாறு ஏறினதும் வாங்காது ஆற்றின் அக்கரை சென்றால், ஓடத்தை விட்டிறங்கினதும் அவரவர் பாட்டில் சென்று விடுவர். அக்கரையில் கொண்டுபோய் இறக்கிவிட்டு விட்டுச் சரியாகக் கூலி வாங்க முடியாது. ஓடம் - படகு, பரசல். ஆயத்துறையைக் கடக்கவிட்ட பின்பு ஆயம் வாங்க முடியாது. ஓடத்தை விட்டிறங்கின பின்பு ஓடக்கூலி வாங்க முடியாது. இங்ஙனமே, இளமையை வீணாகக் கடக்க விட்டவர்கள் அப்புறம் சரியாகக் கல்வி கற்க முடியாது. “இளமையிற் கல்” - ஒளவையார் பழமொழி : ‘சுங்கம் தாண்டினால் சுண்ணாம்புங் கிடையாது; ஓடம் விட்டிறங்கினால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு’. (9) 10. சொற்றொறுஞ் சோர்வு படுதலாற் சோர்வின்றிக் கற்றொறுங் கல்லாதே னென்று வழியிரங்கி உற்றொன்று சிந்தித் துழன்றொன் றறியுமேல் கற்றொறுந்தான் கல்லாத வாறு. (பழ) சொல் தொறும் சோர்வு படுதலால் - ஆசிரியர் சொல்லுந் தோறும் மறதி உண்டாவதால், சோர்வு இன்றி - சோம்பல் இல்லாமல், கல் தொறும் கல்லாதேன் என்று வழி இரங்கி - கற்குந்தோறும் நான் கல்லாதவன் என்று எண்ணிப் பின்னரும் இரங்கி, ஒன்று உற்றுச் சிந்தித்து - கற்பதன்கண் மனம் ஒன்றுபடச் சிந்தித்து, உழன்று ஒன்று அறியுமேல் - வருந்தி முன்பு அறிந்திராத ஒரு பொருளை அறிவானாயின், கல்தொறும் தான் கல்லாத ஆறு - அது கற்குந் தோறும் தான் கல்லாததாகவே கருதுமாறு போலும். சோர்வு - மறதி, சோம்பல். வழி - பின். வழி இரங்கல் - முன்னர் வருந்திக் கற்றதேயன்றிப் பின்னரும் வருந்திக் கற்றல். ஒன்று உற்று - ஒன்றுற, ஒன்றுபட. ஒன்றுதல் - பொருந்துதல். உற்று - உற. ஒன்றுறுதல் - கற்றதன்கண் மனம் படிதல். உழன்று - வருந்தி. வருத்தம் - முயற்சி. ஒருவன் சோம்பலின்றி நூல்களைக் கற்கும்போது, அந்நூற் பொருள்களை - கற்பனவற்றை - பன்முறையும் நன்கு சிந்தித்துக் கற்றுவருவானாயின் அவன் முன்பறியாத பொருள் களை அறிவான். அங்ஙனம் புதிதாக அறியுந்தோறும் தான் கல்வியறிவு நிரம்பாதவன் என்பது தோன்றும். தோன்றவே, அவனுக்கு மேலும் மேலும் கற்க வேண்டும் என்ற ஊக்கம் பிறக்கும் என்பதாம். “அறிதோ றறியாமை கண்டற்றால்” (குறள் - 1110) என்ற குறட் கருத்தும் இஃதே. ஆசிரியர் பாடம் சொல்லுந்தோறும் மாணாக்கனுக்கு மறதி உண்டாவதால், அவன் சோம்பலில்லாமல் பின்னரும் பின்னரும் முயன்று, கற்பதில் கருத்தைச் செலுத்தி, நன்கு சிந்தித்து வருந்திக் கற்பானாயின், அவ்வாறு கற்குந் தோறும் தான் கல்லாதவன் - கல்வியறிவு நிரம்பாதவன் - என்பது அவனுக்குத் தோன்றும். தோன்றவே, அவன் மேன்மேலும் முயன்று கற்க ஏதுவாகும் என்பதாம். சோம்பலின்றி மேன்மேலும் முயன்று கற்க வேண்டும் என்பது கருத்து. (10) 11. விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத் துளக்கமின் றென்றனைத்துந் தூக்கி - விளக்கு மருள்படுவ தாயின் மலைநாட! என்னை பொருள்கொடுத்துக் கொள்ளா ரிருள். (பழ) மலை நாட - மலை நாட்டை யுடையவனே, விளக்கு துளக்கம் இன்று என்று தூக்கி - விளக்கு நன்கு பொருள்களை விளக்கிக் காட்டும் என்று எண்ணியே, விளக்கு அனைத்தும் விலை கொடுத்துக் கோடல் - விளக்குக்கு வேண்டிய எண்ணெய், திரி முதலியவற்றை ஒருவர் விலை கொடுத்து வாங்குவது, விளக்கு மருள்படுவது ஆயின் - அவ்விளக்கானது (பொருள்களைத் தெளிவாக விளக்கிக் காட்டாமல்) மயக்கத்தைச் செய்யுமாயின், என்னை - அவ்விளக்கினால் என்ன பயன், இருள் பொருள் கொடுத்துக் கொள்ளார் - இருளை எவரும் பொருள் கொடுத்து வாங்கார். துளக்கம் - அசைவு. துளக்கம் இன்றென்று - அசையாமல், ஆடாமல் இருக்குமென்று. விளக்கு ஆடினால் பொருள்களைத் தெளிவாக விளக்கிக் காட்டாது. தூக்குதல் - ஆராய்தல், எண்ணுதல். அனைத்தும் - அகல், திரி எண்ணெய் முதலிய விளக்கிற்கு வேண்டிய பொருள்கள். விளக்கு என்பது - சுடர்விட் டெரியும் விளக் கொளியை. கோடல் - கொள்ளல். மருள் - மயக்கம், நன்கு தெரியாமை. ‘மலை நாட’ என்பது ஆடூஉ முன்னிலை. அதாவது ஆணை முன்னிலை யாக்கிக் கூறுவது. பெண்ணை முன்னிலை யாக்கிக் கூறுவது மகடூஉ முன்னிலை எனப்படும். விளக்கு தெளிவாகப் பொருள்களை விளக்கிக் காட்டும் என்று எண்ணிய விளக்குக்கு வேண்டிய எண்ணெய் முதலிய வற்றை ஒருவர் விலை கொடுத்து வாங்குகின்றனர். அவ்விளக்கு தெளிவாகப் பொருள்களைக் காட்டவிட்டால் அதனால் என்ன பயன்? இருளை எவரும் விலை கொடுத்து வாங்க மாட்டார். வெளிச்சந் தராத விளக்கை யார் விலைக்கு வாங்குவர்? கெட்டுப் போன மின் குமிழை (பல்பு) யார் விலை கொடுத்து வாங்குவர்? ஆசிரியர்க்குப் பொருள் கொடுத்து அறிவுக்குக் கருவி யாகிய நூல்களை ஐயந்திரிபற ஓதியுணர வேண்டும். பணத்தைச் செலவு செய்தும் அவ்வாறு ஐயந்திரிபறக் கல்லாத கல்வியால் பயனில்லை என்பது கருத்து. இது பிறிது மொழிதல் அணி. ஐயம் - இதுவோ அதுவோ எனத் துணியாது ஐயுறவாகப் பொருள் தெரிதல். திரிபு - வேறு பொருள் கொள்ளுதல். கற்க கசடறக் கற்பவை (குறள் - 391) ஆசிரியரை அடுத்து ஐயந்திரிபறக் கற்றுக்கொள்வதே கல்வி யாகும். (11) 12. ஆற்றவுங் கற்றா ரறிவுடையார்; அஃதுடையார் நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை; அந்நாடு வேற்றுநா டாகா தமவேயாம்; ஆயினால் ஆற்றுணா வேண்டுவ தில். (பழ) ஆற்றவும் கற்றார் அறிவுடையார் - மிகவும் கற்றவர் அறி வுடையராவர், அஃது உடையார் நாற்றிசையும் செல்லாத நாடு இல்லை - அக்கல்வியறிவுடையார்க்கு நான்கு திசைகளிலும் செல்லாத நாடு ஒன்றும் இல்லை, அந்நாடு வேறு நாடு ஆகா தமவே ஆம் - செல்லும் அந்நாடுகள் வேற்று நாடுகள் ஆகா தம்முடைய நாடுகளே யாம். ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல் - அங்ஙனமானால் அந்நாடு களுக்கு அவர்கள் கட்டுச் சோறு கொண்டு போக வேண்டியதில்லை. ஆற்றவும் - மிகவும், நாற்றிசையும் - உலக முழுவதும். ஆற்றுணா - கட்டுச் சோறு. ஆறு உணா. ஆறு - வழி. உணா - உணவு. இன்று போல் ஊர் தோறும் உண்டிச் சாலைகளும், சிற்றுண்டிச் சாலைகளும், கடை கண்ணிகளும் இல்லாத காலத்தே வேற்றூர் செல்வோர், வழியில் உண்ண, அவ்வழிப் பயணத்திற்கு வேண்டிய அளவு கட்டுச் சோறு (புளிச்சோறு) கட்டிக் கொண்டு போவர். அதனால் அது ‘ஆற்றுணா’ எனப்பட்டது. இது பொதி சோறு எனவும் வழங்கும். ‘தோட் கோப்பு’ என்பர் (நாலடியார் - 20) சிறந்த கல்வியறிவுடையவர்களை உலக முழுதும் வரவேற்றுப் போற்றும். எல்லா நாடும் அவர்கட்குச் சொந்த நாடு போன்றே யாகும். அந்நாட்டினர் அவ்வறிஞர்களை அன்புடன் வரவேற்றுப் போற்றுவதால், போகும் இடங்களுக்கு அவர்கள் செலவுக்குப் பணங்கொண்டு போகவேண்டிய தில்லை. வழியிலும் சோறு இல்லையே என்ற கவலை இல்லை. கோவை சர். ஆர். கே. சண்முகம், சென்னை சர் . ஏ. இராம சாமி முதலிய தமிழ்ப் பேரறிஞர்கள் தம் சொந்த நாட்டிற் போன்றே உலக முழுதும் நன்மதிப்புப் பெற்றுள்ளமை இதற்கு எடுத்துக் காட்டாகும். கற்றார்க்குத் தம்மூரென் றூரில்லை (நான்மணி) யாதானு நாடாமால் ஊராமல் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு (குறள்) மன்னற்குத் தன்றேய மல்லால் சிறப்பில்லை; கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாஞ் சிறப்பு (நன்னெறி) சென்ற விட மெல்லாம் சிறப்பே கல்வி (பழமொழி) உலக முழுவதும் செல்வாக்கைத் தரும் கல்வியை முயன்று கற்றுக்கொள்ள வேண்டும் என்பது கருத்து. (12) 13. உணற்கினிய வின்னீர் பிறிதுழியில் லென்னும் கிணற்றகத்துத் தேரைபோ லாகார் - கணக்கினை முற்றப் பகலும் முனியா தினிதோதிக் கற்றலிற் கேட்டலே நன்று. (பழ) உணற்கு இனிய இன் நீர் - உண்ணுதற்கு இனிய நன்னீர், பிறிது உழி இல் என்னும் - வேறோரிடத்தில் இல்லையென்று எண்ணும், கிணறு அகத்து தேரைபோல் ஆகார் - கிணற்றி னுள்ளே வாழும் தவளைபோல் இராமல். கணக்கினை - நூலினையே, முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக் கற்றலின் - நாள் முழுதும் வெறுக்காமல் நன்கு ஓதிக் கற்றலைக் காட்டிலும், கேட்டலே நன்று - கற்றுணர்ந்தோர் சொல்வதைக் கேட்டறிதல் நன்றாகும். உழி - இடம். பிறிது உழி - வேறிடம். தேரை - தவளை. ஆகார் - ஆகாது; முற்றெச்சம். ஓதிக் கற்றல் - கற்றுத் தெரிந்து கொள்ளுதல். ஓதல் - கற்றல். எப்போதும் தாமே படித்துக் கொண்டிருப்பதை விடக் கற்றுணர்ந்த பெரியோர்கள் சொல்வதைக் கேட்டல் நன் றென்பதாம். இது கேள்வியின் சிறப்புக் கூறியது. கற்றல், கற்றோர் சொல்வதைக் கேட்டல் ஆகிய இரண்டுமே கல்வியாகையால், கேள்வியின்றிக் கற்றல் மட்டும் போதாது. கேட்டலும் வேண்டுமென்பது கருத்து. செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் (குறள் - 411) கற்றில னாயினும் கேட்க (குறள் - 414) கேள்வி முயல் - ஒளவையார் கிணற்றுத் தவளை அக்கிணற்றைவிட வேறு நீர் நிலையை அறியாதவாறு போல, ஒரு நூலைக் கற்பதிலேயே அழுந்தியிராமல் பல நூல்களைக் கற்றறிந்த பெரியோர்கள் கூறுவதைக் கேட்கவும் வேண்டுமென்பதாம். இன்று பொது மக்கள் மேடைப் பேச்சின் வாயிலாய்ப் பல் வகையான அறிவினைப் பெற்று வருதல் கண்கூடு. பல அறிஞர்கள் பேச்சைக் கேட்பவன் - அடிக்கடி பொதுக் கூட்டங்கட்குச் செல்பவன் - நல்ல அறிவினைப் பெறுவான் என்பது திண்ணம். (13) 14. புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புன லூர! பொதுமக்கட் காகாதே பாம்பறியும் பாம்பின கால் (பழ) நலம் மிக்க பூ புனல் ஊர - நன்மை மிக்க அழகிய நீர்வள முள்ள ஊரையுடையவனே. பாம்பினகால் பாம்பு அறியும் - பாம்பின் கால்களை அதன் இனமாகிய பாம்புகள் அறியும், (அது போல), புலம் மிக்கவரைப் புலமை தெரிதல் - அறிவு மிக்கவரது அறிவினை ஆராய்ந்தறிதல், புலன் மிக்கவர்க்கே புலன் ஆம் - அறிவு மிக்கவர்க்கே உளதாம். பொது மக்கட்கு ஆகாது - சிறந்த அறிவில்லாத வர்க்கு அது முடியாது. புலம் - புலமை - அறிவு. புனல் - நீர். பூம்புனலூர - ஆடூஉ முன்னிலை . பொதுமை - சிறப்பின்மை. பொதுமக்கள் - சிறந்த அறிவில்லாதவர். ‘சாதாரண மனிதர்’ என்பதன் தமிழ், கல்வியறி வில்லார், அவ்வறிவுடைய மக்களுள் ஒன்றாக வைத் தெண்ணப் பெறார் ஆகையால், ‘பொது மக்கள்’ எனப் பட்டனர். பாம்புக்குக் கால்கள் இல்லை. எனினும், எப்படி அது அவ்வளவு விரைவாகச் செல்கிறது என்பது அதன் இனமான பாம்புகளுக்கே தெரியும்; மற்ற உயிர்கட்குத் தெரியாது. அங்ஙனமே, கற்றார் அருமை கற்றார்க்கே தெரியும், கல்லார்க்குத் தெரியாது என்றபடி. கற்றோர் அருமை பெருமைகளைக் கற்றோரேயன்றிக் கல்லார் அறிய மாட்டார். ஆகையால், கல்லாதவர் மதிக்க வில்லையே யென்று கற்றோர் வருந்தக் கூடாது. கற்றோரின் தகுதியை அறியுந் திறமை கல்லார்க்கு எங்ஙனம் உண்டாகும்? அறியுந் திறமை இருந்தாலல்லவோ அறிந்து மதிப்பர்? ‘பாவலர் அருமையை நாவலர் அறிவார். வித்துவான் அருமையை வித்துவான் அறிவான், விறகுத் தலையன் அறிவானா?’ - பழமொழி. மாணவர்களுக்குப் பாடநூல்களைத் தேர்ந்தெடுப்போர் இத்தகுதியுடையராதல் இன்றியமையாதது. (14) 15. கற்றறிந்தார் கண்ட வடக்கம் அறியாதார் பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பர் - தெற்ற அரைகல் லருவி அணிமலை நாட! நிறைகுடம் நீர்தளும்ப லில். (பழ) அறைகல் அருவி அணிமலை நாட - பாறைக் கல்லிலே அருவி வந்து விழும் அழகிய மலை நாடனே, கற்றறிந்தார் கண்ட அடக்கம் - கற்றறிந்தவர்கள் தம் அறிவால் கண்டனவே அடக்கத் திற்குக் காரணமாகும், அறியாதார் பொச்சாந்து தம்மை தெற்ற புகழ்ந்து உரைப்பர் - கற்றறியாதார் மறந்து தங்களை நன்கு புகழ்ந் துரைப்பார்கள், நிறைகுடம் நீர் தளும்பல் இல் - நீர் நிறைந்த குடம் நீர் தளும்புதல் இல்லை; குறை குடமே நீர் தளும்பும். கண்ட - கண்டவை, கல்வியறிவால் ஆராய்ந்து கண்டறிந்த உண்மைகள். பொச்சாப்பு - மறதி. தெற்ற - தெளிவாக. நன்கு. அறை - பாறை. அறைகல் - அறையாகிய கல்; இருபெய ரொட்டு, அருவி - மலையாறு. அணி - அழகு. மலை நாட - ஆடூஉ முன்னிலை. நிறை குடம் நீர் தளும்பாததுபோல, நிறைந்த கல்வியறிவு டையவர் அடங்கி நடப்பர். குறைகுடம் நீர் தளும்புவது போல, கல்வியறிவு நிரம்பப் பெறாதார் அடங்கி நடக்கமாட்டார். அடக்கத்தின் சிறப்பினைக் கற்றறிந்தமையால் கற்றவர் அடங்கிநடப்பர். அஃதறியாமையால் கல்லாதார் தம் நிலைமையை மறந்து தம்மைப் புகழ்ந்துரைப்பர் என்றபடி. கற்றவர்கள் அடக்க மாக நடந்து கொள்ள வேண்டும். பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து (குறள்) கற்றபின் - நிற்க அதற்குத் தக (குறள் - 391) ‘நிறைகுடம் நீர் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும்’ என்பது பழமொழி. (15) 16. உரைமுடிவு காண னிளமையோ னென்ற நரைமுது மக்க ளுவப்ப - நரைமுடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமற் பாகம் படும். (பழ) உரை முடிவு காணான் இளமையோன் என்ற - தாங்கள் உரைக்கும் வழக்கின் முடிவினைக் கண்டறிய முடியாத இளைஞன் என்றிகழ்ந்த, நரைமுது மக்கள் உவப்ப நரைத்த முதியோர் மகிழும் படி, நரை முடித்து - நரை மயிரை முடித்துக் கிழக்கோலம் பூண்டு, சொல்லால் முறை செய்தான் சோழன் - வழக்குரைத்த அம்முதி யோர்கள் உரைத்த சொற் களைக் கொண்டே ஆராய்ந்து முடிவு கூறி முறை செய்தான் கரிகாலன் என்னும் சோழ மன்னன், (ஆதலால்), குலவிச்சை கல்லாமல் பாகம் படும் - தத்தம் குலத் தொழில் கல்லாமலே பாதியளவு உண்டாகும். உரை முடிவு காணுதல் - வழக்காளி எதிர்வழக்காளி ஆகிய இருவரும் உரைக்கும் உரையைக் கொண்டு தீர்ப்புக் கூறுதல். முறை - தீர்ப்பு. விச்சை - வித்தை என்பதன் போலி. பாகம் - பாதி. நரை முடித்தல் - தலைக்கு நரை மயிரை முடித்து, தாடி மீசை கட்கு நரைமயிரை ஒட்டவைத்துக் கிழக்கோலம் பூணுதல். இதில் குறிப்பிடும் வரலாறு: கரிகாலன் என்னும் சோழ மன்னன் இளமைப் பருவத்தி லேயே அரசெய்தினான். ஒரு நாள் முதியோர் இருவர் அவனிடம் வழக்குரைக்க வந்தனர். அரசன் மிக்க இளைஞனாய் இருத்தல் கண்டு, ‘இவ்விளைஞனால் எங்கள் வழக்கின் உண்மையை உள்ளபடி அறிந்து தீர்ப்புக் கூற முடியாது’ என்று இகழ்ந்து கூறி, அறங் கூறவையை விட்டுச் சென்றனர். அது கண்ட கரிகாலன், ‘முதியீர்! நாளை ஆண்டில் மூத்த நடுவ ரொருவரை வரவழைக்கின்றேன். இன்று போய் நாளை வாருங்கள்’ என்றான். அவர்கள் அதற்கிசைந்து சென்றனர். மறுநாள் கரிகாலன் நரை முடித்து முதுமைக் கோலம் பூண்டு வந்து அவைத் தலைமை தாங்கினான். அம்முதியோர் இருவரும் தங்கள் வழக்கை உரைத்தனர். அரசன் அவ்விருவர் தம் சொல்லையும் நன்கு கேட்டு, இருவரும் ஒத்துக் கொள்ளும் படி தீர்ப்புக் கூறினான். அம்முதியோர் இருவரும் அந்நடுவனின் திறமையைப் பலபடப் பாராட்டினர். உடனே கரிகாலன் தன் முதுமைக் கோலத்தைக் களைந்து அம்முதியோர் உவக்கும் படி செய்தான். . . . . . . . . . . . - முதியோர் அவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவும் (பொருநரா) இளமை நாணி முதுமை எய்தி உரைமுடிவு காட்டிய உரவோன் (மணிமேகலை) என்பன இச்செய்தி குறிப்பவையாகும். இவன் இமயத்தில் புலி பொறித்த முதற் கரிகாலன் ஆவான். குலவித்தை - பெற்றோர் செய்யுந் தொழில். கரிகாலன் அரச குமரன் ஆனதால், முறை செய்தலாகிய அவன் தந்தையின் தொழில் இயல்பாக அமையலான தென்பதாம். பெற்றோர் செய்யுந் தொழில் பிள்ளைகட்குக் கல்லாமலே இயல்பாக அமையுமாதலால். இள மாணவர்க்குக் கலைக் கல்வி கற்பிப்பதே சாலும்; குலக் கல்வி கற்பிக்க வேண்டிய தில்லை என்பது கருத்து. நெசவு, தச்சுப் போன்ற இரண்டொரு குலத்தொழிலை எல்லா மாணவர்க்கும் கற்பித்தல், அறிவுக் கல்வி கற்கும் இளமைப் பருவத்தை வீணாக்குவதேயாகும். குலவித்தை கற்றுப்பாதி கல்லாமல் பாதி, பழமொழி (16) 17. நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும், நூற்கேலா வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை - நன்மொழியைச் சிற்றின மல்லார்கட் சொல்லலும் இம்மூன்றும் கற்றறிந்தார் பூண்ட கடன். (திரி) மொழி நோக்கி நுண்பொருள் கொளலும் - செய்யுளின் சொற்போக்கினை அறிந்து நுட்பமான பொருள் கொள்ளுதலும், நூற்கு ஏலா வெண்மொழி வேண்டினும் சொல்லாமை - நூன் மரபுக்குப் பொருந்தாத வெள்ளைச் சொற்களைப் பிறர் விரும்பினாலும் சொல்லாதிருத்தலும், நன்மொழியைச் சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் - நல்ல நூற்கருத்துக் களை நன்மக்கட்குச் சொல்லுதலும், இம்மூன்றும் கற்றறிந் தார் பூண்ட கடன் - ஆகிய இம்மூன்று செயலும் கற்றறிந்தவர்கள் மேற்கொண்ட கடமையாகும். நோக்குதல் - பார்த்தல் - ஆராய்ந்து பார்த்தல். நுண் பொருள் - நுட்பமான பொருள் - சிறந்த பொருள். சொற் போக்கு - பொருள் கொள்ளுதற் கேற்றவாறு சொற்கள் இயைந்து நிற்கும் நிலை. செய்யுளில் சொற்கள் நிலைமாறி நிற்கும். அந்நிலை மாற்றத்தை அறிந்து, பொருள் கொள்ளற் கேற்றவாறு மாற்றியமைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு சொற்களை மாற்றிப் பொருள் கொள்வது - பொருள் கோள் எனப்படும். யாற்று நீர்ப் பொருள் கோள் முதலாகப் பொருள் கோள் எட்டு வகைப்படும். இச்செய்யுளில், ‘நுண்மொழி நோக்கிப் பொருள் கொளலும்’ என்பது, கொண்டு கூட்டுப் பொருள்கோள். செய்யுளின் சொற்போக்கினை அறிந்து - பொருள் கோட்படி சொற்களை மாற்றி யமைத்து - சிறந்த பொருள் கொள்ளுதல் வேண்டும். ஏலா - ஏலாத - பொருந்தாத. வெண்மொழி - வெள்ளைச் சொல் - பொருட் பொலிவும். கருத்தாழமும் இல்லாத சொல். அதாவது செய்யுட் கருத்தை விளக்குதற்கு ஏலாத சொற்கள். அவை கொச்சைச் சொற்களும் அயல் மொழிச் சொற்களுமாம். இத்தகைய சொற்களைக் கொண்டு செய்யுட்குப் பொருள் கூறின். செய்யுளின் கருத்து எளிதில் விளங்காது என்பதாம். வெள்ளைச் சொற்களைக் கொண்டு பொருள் கூறற்க என்பார், ‘வேண்டினும் சொல்லாமை’ என்றார். இன்று ஒரு சிலர், ‘கொச்சைச் சொற்களையும் அயல்மொழிச் சொற்களையும் கலந்து எழுதுதலே ஏற்றது’ என்பது பொருந்தாமையும் இதனாற் கொள்க. நல்மொழி - நல்ல கருத்து. மொழி - பொருளையுணர்த் திற்று. சிற்றினம் அல்லார் - நல்லினம்; நன் மக்கள் சொல்வதை விருப்ப முடன் கேட்டு அவ்வாறே நடக்கும் நல்லோர்கள். சிற்றினத்தார் அங்ஙனம் கேட்டு நடவார் ஆகையால், ‘சிற்றினம் அல்லார்கண் சொல்லலும்’ என்றார். பூண்ட - மேற்கொண்ட. கடன் - கடமை. பொருள்கோளை அறிந்து அதன் படி செய்யுளுக்குப் பொருள் கொள்ளுதலும், கொச்சைச் சொற்களைக் கலந்து சொல்லாமையும், நல்ல நூற் கருத்துக்களை நல்லோர்க்குச் சொல்லுதலும் கற்றறிந்தவர் கடமையாகும். கற்றல், கேட்டல், கற்பித்தல் என்னும் மூன்றனுள் இது கற்பித்தலின் சிறப்புக் கூறியது. (17) 18. மயிர்வனப்புங் கண்கவரும் மார்பின் வனப்பும் உகிர்வனப்புங் காதின் வனப்பும் - செயிர்தீர்ந்த பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த சொல்லின் வனப்பே வனப்பு. (சிறு) மயிர் வனப்பும் - தலை மயிரினது அழகும், கண்கவரும் மார்பின் வனப்பும் - காண்போர் கண்களைக் கவரும் மார்பினது அழகும், உகிர் வனப்பும் - நகங்களின் அழகும், காதின் வனப்பும் - காதுகளின் அழகும், செயிர் தீர்ந்த பல்லின் வனப்பும் - குற்றந் தீர்ந்த பற்களின் அழகும், வனப்பு அல்ல - அழகு அல்ல, நூற்கு இயைந்த சொல்லின் வனப்பே வனப்பு - நூல்களுக்குப் பொருந்திய சொல்லழகே அழகாகும். வனப்பு - அழகு. உகிர் - நகம். குற்றந் தீர்ந்த பல்லாவது - நீண்டும் குறுகியும் பெருத்தும் சிறுத்தும் கறுத்தும் பழுத்தும் ஏறுமாறாகவும் சந்து சந்தாகவும் இல்லாமல், ஒரே அளவாக அடர்ந்து வரிசையாக முத்துப்போல் வெண்மையாக இருத்தல். நூற்கியைந்த சொல் - கல்வியறிவு. சொல் - பொருளை யுணர்த்திற்று. தலை மயிர், மார்பு, நகம், காது, பல் முதலிய உறுப்புக்களின் அமைப்பால் உண்டாகும் கட்டழகைவிடக் கல்வியழகே அழகு என்பதாம். (18) 19. இடைவனப்புந் தோள்வனப்பும் ஈடின் வனப்பும் நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால் கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ டெழுத்தின் வனப்பே வனப்பு. (ஏலா) இடை வனப்பும் - இடுப்பின் அழகும், தோள்வனப்பும் - தோள்களின் அழகும், ஈடின் வனப்பும் - உடற் கட்டின் அழகும், நடை வனப்பும் - நடையினது அழகும், நாணின் வனப்பும் - நாணத்தினால் உண்டாகும் அழகும், புடை சால் கழுத்தின் வனப்பும் வனப்பு அல்ல - பக்கம் பருத்த கழுத்தினது அழகும் அழகாகா, எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு - எண் எழுத்து இவற்றாலாகிய அழகே அழகாகும். ஈடு - உயரத்துக்குத் தக்க உடற் பருமன். நாண் - நாணம். அது நாணத்தால் அடக்கமாக இருக்கும் நிலைக்கானது. கழுத்து நீண்டிராமல் பக்கங்கள் பருத்திருப்பது அழகாக இருக்கும். எண் - கணக்கையும், எழுத்து - இலக்கிய இலக்கணங் களையும் குறிக்கும். எண்ணோடு எழுத்து - எண்ணும் எழுத்தும். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டு கண்ணென்ப வாழும் உயிர்க்கு (குறள்) எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - ஒளவையார் இஃதும் மேற்பாட்டின் கருத்துடையதே. ‘குஞ்சி யழகும்’ என்னும் நாலடிச் செய்யுளும் இக்கருத்துடையதே. (19) 20. எப்பிறப் பாயினும் ஏமாம் பொருவற்கு மக்கட் பிறப்பிற் பிறிதில்லை - அப்பிறப்பில் கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண் நிற்றலும் கூடப் பெறின். (அற) எப்பிறப்பு ஆயினும் - வேறு எந்தப் பிறப்பானாலும், மக்கள் பிறப்பின் - மக்கட் பிறப்பினைப் போல, ஒருவற்கு ஏமாப்பு பிறிது இல்லை - ஒருவனுக்கு இன்பம் செய்வது வேறு ஒன்றுமில்லை, அப்பிறப்பில் - அம்மக்கட் பிறப்பில், கற்றலும் - கற்றற் குரியவற்றைக் கற்றலும், கற்றவை கேட்லும் - கற்றவற்றைக் கற்று ணர்ந்த பெரியோர் பால் கேட்டுத் தெளிதலும், கேட்டதன்கண் நிற்றலும் கூடப் பெறின் - கேட்ட அந்நெறியின் கண்ணே நிற்றலுங் கூடப் பெற்றால். கற்றலும் கற்றவை கேட்டலும், கற்றுக் கேட்டதன்கண் நிற்றலுங் கூடப் பெறின், மக்கட் பிறப்பைப் போல் இன்பஞ் செய்வது - சிறந்த பிறப்பு - வேறு பிறப்பில்லை என்பதாம். கற்றல் முதலியன கூடப் பெறாவிடின் மக்கட் பிறப்பில் சிறப்பில்லை என்றபடி. ஏமாப்பு - இன்பம். கற்றவை கேட்டல் - கற்றவர் சொல்வன வற்றைக் கேட்டல் என்றுமாம். பயிர்வகை, ஊர்வன, நீர்வாழ்வன, நடப்பன, பறப்பன, மக்கள் என உலகுயிர் அறுவகைப்படும். ஏனைப் பிறப்புக் களை விட மக்கட் பிறப்பே கற்றுணர்ந் தின்புறும் இயல்பின தாகையால், அம்மக்கட் பிறப்பு ஏனைப் பிறப்புக்களினும் சிறப்புடைய தாயிற்று. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (குறள்) கற்றில னாயினும் கேட்க (குறள்) மக்கட்குச் சிறப்பையும் இன்பத்தையும் தருவது கல்வியே யாகும் என்பது கருத்து. (20) 21. புண்ணாகப் போழ்ந்து புலால்பழிப்பத் தாம்வளர்ந்து வண்ணப்பூண் பெய்வ செவியல்ல - நுண்ணூல் அறவுரை கேட்டுணர்ந் தஞ்ஞான நீக்கி மறவுரை விட்ட செவி. (அற) புண் ஆகப் போழ்ந்து - புண்ணாகுமாறு துளை செய்யப் பட்டு, புலால் பழிப்ப வளர்ந்து - புலால் நாற்றம் வீசுகிறதென்று பிறர் பழிக்குமாறு வளர்ந்து, வண்ணப் பூண் பெய்வ செவி அல்ல - அழகிய நகைகள் அணியப் பெறுவன காதுகளல்ல, அற நூல் நுண் உரை கேட்டு உணர்ந்து - அறநூற்களின் நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்து, அஞ்ஞானம் நீக்கி - அறியாமையைப் போக்கி, மற உரைவிட்ட செவி - தீய சொற்களைக் கேளாதொழிவனவே காதுகளாகும். போழ்ந்து - துளைத்து. புலால் - புலால் நாற்றம். வளர்ந்து - நீண்டு தொங்கி. வண்ணம் - அழகு. பூண் - நகை. பெய்தல் - துளையுள் இடுதல். அஞ்ஞானம் - அறியாமை. மறம் - தீமை. விட்ட - விடுவன, விலக்குவன. முன்பு ஆண் பெண் இரு பாலாரும் கீழ்க் காதில் பெரிய துளை செய்து நகை யணிந்து வந்தனர். ஆடவர்கள் நீண்ட வளையம் போலக் காதுக்கு இரண்டு மூன்று கடுக்குப் போடுவது வழக்கம். காது குத்திப் பஞ்சு போடுவோர், பஞ்சு போடும் போதெல்லாம் காதை நகத்தால் கிள்ளித் துளையைப் பெரி தாக்குவர். அதனால், காது புண்ணாக இருக்கும்; சீப்பிடித்து நாறுவதும் உண்டு. இதையே, ‘புண்ணாகப் போழ்ந்து புலால் பழிப்ப’ என்றார். துளை செய்த காது நீண்ட தோளைத் தொட்டுக் கொண்டு தொங்குமாகையால், ‘வளர்ந்து’ என்றார். மகளிர், பஞ்சு போட்டுப் புண் ஆறின பிறகு, வறண்ட சோளத் தண்டுகளைச் சொருகித் தண்ணீர் விட்டுத் துளையைப் பெருக்கி, பின்னர்க் காதுக்கு இரண்டு மூன்று ஈயக் குணுக்குப் (ஈய வளையம்) போட்டுக் காது தோளளவு நீண்டு தொங்குமாறு செய்வர். இத்தகைய காதுகளுக்கே வள்ளை இலையை உவமை கூறினர். பாண்டி நாட்டில் இன்றும் இத்தகைய காதுகளையுடைய மகளிரைக் காணலாம். அழகிய நகைகளணியும் காதுகள் காதுகளல்ல; கற்றுணர்ந்தவர் கூறும் அறவுரையைக் கேட்டு, அறியாமையைப் போக்கி, தீய சொற்களைக் கேளாதவைகளே காதுகளாகும் எனக் கேள்வியின் சிறப்புக் கூறப்பட்டது. கேள்வியும் கல்வியேயாகும். (21) 22. கண்டவர் காமுறூஉங் காமருசீர்க் காதிற் குண்டலம் பெய்வ செவியல்ல - கொண்டுலகில் மூன்று முணர்ந்தவற்றின் முன்னது முட்டின்றிச் சூன்று சுவைப்ப செவி. (அற) கண்டவர் காமுறும் - பார்த்தவர் விரும்பும், காமரு சீர் காதில் - சிறந்த அழகினையுடைய காதில், குண்டலம் பெய்வ செவி அல்ல - குண்டலங்கள் அணியப்படுவன செவிகள் ஆகா, உலகில் மூன்றும் உணர்ந்து கொண்டு - உலகின் கண் அறம் பொருள் இன்பங்களை உணர்த்தும் நூல்களைக் கேட்டறிந்து கொண்டு, அவற்றின் - அம்மூன்றனுள், முன்னது முட்டு இன்றி சூன்று சுவைப்ப செவி - தலைமை யான அறநூலை ஒழிவின்றிக் கேட்டு ஆராய்ந்து இன்புறு தற்குக் காரணமாவனவே செவிகளாகும். காமுறுதல் - விரும்புதல். காமர் - அழகு. சீர் - சிறப்பு. காமரு சீர் - சிறந்த அழகு. குண்டலம் - காதணி. பெய்தல் - அணிதல். மூன்று - தொகைக் குறிப்புச் சொல். முட்டு - தடை. சூலுதல் - தோண்டுதல். இங்கு ஆராய்தல். சுவைத்தல் - இன்புறுதல். காதின் பயன், நூற் கருத்துக்களைக் கேட்டின்புறுதலே யன்றி, நகை யணிந்து கொள்வதன்று. நகை மட்டும் அணியப் படும் கேளாக் காது காதெனப் படாது என்பதாம். கேட்பினுங்கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப்படாத செவி. (குறள்) அறம் பொருள் இன்பங் கூறும் திருக்குறள் போன்ற நூல் களைக் கேட்டின்புறாத செவியாற் பயனில்லை, எனக் கேள்வியின் சிறப்புக் கூறப்பட்டது. (22) 23. அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும் புறங்கடை நல்லிசையு நாட்டும் - உறுங்கவலொன் றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியி னூங்கில்லை சிற்றுயிர்க் குற்ற துணை. (நீநெ) அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும் - அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றனோடு வீட்டையும் தரும். புறங்கடை நல் இசையும் நாட்டும் - உலகத்திலே நல்ல புகழையும் நிலைநாட்டும், உறும் கவல் ஒன்று உற்றுழியும் கைகொடுக்கும் - மிக்க கவலை யொன்று நேர்ந்த பொழுதும் அதை நீக்கும், (ஆதலால்), சிறு உயிர்க்கு உற்ற துணை - சிறிய உயிர்களாகிய மக்கட்கு மிக்க துணை, கல்வியின் ஊங்கு இல்லை - கல்வியை விடச் சிறந்தது வேறில்லை. செய்வன தவிர்வன என்னும் இரண்டில், செய்வன செய்து தவிர்வன தவிர்தல் அறம் எனப்படும். தவிர்தல் - செய்யாது நீக்குதல். செய்தக்க அல்ல செயக்கெடும், செய்தக்க செய்யாமை யானுங் கெடும். (குறள்) என்றார் வள்ளுவரும். பொருள் - இடம் பொருள் முதலிய செல்வப் பொருள். இன்பம் - ஆணும் பெண்ணுங் கூடி இன்புறுவது. இவை மூன்றுமே மக்கட் பிறப்பின் பயனாகும். அதாவது, மக்கட் பிறப்பினால் அடையும் பயன் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றுமேயாம். நூல்களைக் கற்று, அறிவைப் பெற்று, அதனால் அடையும் பயன் இவை மூன்றுமே என்னும் பழந்தமிழ் நூல்கள். அகம் புறம் பற்றிய எல்லாப் பழந்தமிழ் நூல்களும் இம்மூன்றனுள் அடங்கும். அறம்பொரு ளின்பம் அடைதல்நூற் பயனே என்பதையே, பிற்காலத்தார் சமயச் சார்பு பற்றி, அறம்பொரு ளின்பம்வீ டடைதல்நூற் பயனே (நன்னூல்) என மாற்றி விட்டனர். வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவண தெய்த இருதலையும் எய்தும் என்பது நாலடி. (114) மன்னிய மூன்று - உறுதிப் பொருளான அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று. வீடு என்பது உறுதிப்பொருளன்று. அது உயிர் பிறப்பற்று விடுதலை பெற்றநிலை என்னும் காரணப் பொருளது. அறம் பொருள் இன்பம் மக்களின் வாழ்வியலுக்குரியவை. சமயச் சார்புடையார், உயிர் வீடடைதலே சிறந்த பயன் என்பதால், வீடு உயிரின் உறுதிப் பொருளேயன்றி மக்களின் உறுதிப் பொருளன்று. வீடு மக்களின் உறுதிப் பொருள்களில் ஒன்றெனில், மக்களின் உறுதிப் பொருள் கூறவந்த வள்ளுவர், அறம் பொருள் இன்பத்தை மட்டும் கொண்டு வீட்டை விலக்கியிருக்க மாட்டார்; தமிழ் மக்களின் பழக்க வழக்க மான ஒழுக்கமுறை கூறும் திருக்குறளை அவர் நாற்பாலாகச் செய்திருப்பர்; முப்பாலாகச் செய்திருப்பதே வீட்டை உறுதிப் பொருளெனக் கொள்ளுதல் தமிழர் கொள்கை அன்றென் பதற்குச் சான்றாகும். தொல்காப்பியரும், இன்பமும் பொருளும் அறனு மென்றாஅங் கன்பொடு புணர்ந்த ஐந்திணை (தொல், களவு) என, அறம்பொருள் இன்பம் என்னும் இம் மூன்றுமேதான் உறுதிப் பொருளெனக் கொண்டுள்ளனர். இந்நூலாசிரியரும், ‘அறம் பொருள் இன்பமும் வீடும்’ என அறமுதல் மூன்றையும், உம்மை கொடுத்துப் பிரித்துக் கூறியிருத்தலும் இதற்குச் சான்று பகரும். புறங்கடை - உலகம். கடை - இடம். புறங்கடை - புலவர் இருக்கும் இடத்திற்குப் புறமாகிய இடம் என்பது பொருள். இசை - புகழ். கவல் - கவலை. உறுங்கவல் - மிக்க கவலை. உழி - இடம். உற்றுழி - உற்ற இடம். உற்ற பொழுது. கைகொடுத்தல் - உதவுதல். ஊங்கு - மிக. கற்பவர் நாள் சில (நாலடி - 4) என்றபடி, மக்கள் சில்வாழ் நாளினராதலால், ‘சிற்றுயிர்’ என்றார். சில்வாழ் நாளை யுடைய உயிர் - சிற்றுயிர். கல்வி அறமுதலிய நான்கையும் தரும்; உலகில் புகழை நிலை நாட்டும்; மிக்க துன்பம் ஒன்றுற்றபோது அதை நீக்கும்; ஆகையால், மக்கட்குக் கல்வியை விடச் சிறந்த துணை வேறில்லை என்பதாம். இத்தகு சிறப்புடைய கல்வியை ஒவ்வொருவரும் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது கருத்து. (23) 24. தொடங்குங்காற் றுன்பமா யின்பம் பயக்கும் மடங்கொன் றறிவகற்றுங் கல்வி - நெடுங்காமம் முற்பயக்குஞ் சின்னீர வின்பத்தின் முற்றிழாய் பிற்பயக்கும் பீழை பெரிது. (நீநெ) முற்று இழாய் - முற்றுப் பெற்ற தொழில்களையுடைய நகைகளை அணிந்தவளே, மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி - அறியாமையைப் போக்கி அறிவைப் பெருகச் செய்யும் கல்வி யானது, தொடங்கும் கால் துன்பம் ஆய் இன்பம் பயக்கும் - கற்கத் தொடங்கும்போது - கற்கும்போது - துன்ப முடையதாய்க் கற்ற பின்னர் இன்பந்தரும், நெடுங்காமம் - ஆனால் பெருஞ் செல்வமோ வெனில், முன் பயக்கும் சில் நீர இன்பத்தின் - தொடக்கத்தில் - அதாவது உள்ள போது - தரக்கூடிய சிறிய இன்பத்தைக் காட்டிலும். பின் பயக்கும் பீழை பெரிது - தீர்ந்தபின் உண்டாகும் துன்பம் பெரிதாகும். மடம் - அறியாமை. கொன்று - போக்கி, அகற்றும் - அகலமாகச் செய்யும், விரிவாக்கும், அகலுதல் என்பதன் பிறவினை அகற்றுதல். காமம் - ஆசை. கல்வியினும் செல்வத் திற்கே பெரும் பாலும் ஆசைப்படுதலால் - காமுறுதலால் - செல்வத்தைக் காமம் என்றார். நெடுங் காமம் - பெருஞ் செல்வம், மிகப் பெருஞ் செல்வமும் அழியுமாகையால், ‘நெடுங்காமம்’ என்றார். செல்வம் நிலையாதென்பதைச் ‘செல்வ நிலையாமை’ என்னும் தலைப்பில் காண்க. செல்வத்தாலாகிய இன்பம் நிலைத்து நில்லாதாகையால், ‘சின்னீர இன்பம்’ என்றார். சில்நீர - சிறு தன்மையுடைய நீர்மை - தன்மை. சில்நீர இன்பம் - சிற்றின்பம். முற்றிழாய் - மகடூஉ முன்னிலை. முற்றுப் பெற்ற தொழில் - சிறந்த வேலைப்பாடு. பீழை - துன்பம். ‘இருவகைப் பொருள் கல்விப் பொருள் செல்வப் பொருள்’ என்பது திவாகரம். கல்வி நிலையானது. செல்வம் நிலையில்லாதது. கல்வியானது - கற்கும்போது, ஆசிரியர் சொல்வதைக் கருத்துடன் கேட்டல், இரவு பகலாய்ப் படித்தல், படித்துப் புரிந்து கொள்ளுதல், மனப்பாடம் செய்தல், கற்றதை மறவாமல் வைத்திருத்தல், விடையிறுத்தல், தேர்வில் தேறுதல் முதலியன வாக மிகவும் வருந்திக் கற்கவேண்டியிருக்கிறது. கற்றுத் தேறிய பின் வாழ்க்கை உயர்வடைவதாலும், சொற் செல்வாக்காலும், உலகின்புறுவ தாலும் மிக்க இன்பந் தருகிறது. இது பற்றியே, தொடங்குங் கால் துன்பமாய் இன்பம் பயக்கும்’ என்றார். செல்வமோவெனில், உள்ள போது தாராளமாகச் செலவு செய்து எண்ணிய எண்ணியபடியே அடைவதால் இன்பந் தருகிறது. அச்செல்வந் தீர்ந்து விட்டாலோ, முன்துய்த்த வாறு துய்க்க முடியாமை யானும், செலவுக்கின்மையானும் மிக்க துன்பமுற வேண்டியிருக் கிறது. இது பற்றியே, ‘முற்பயக்கும் சின்னீர இன்பத்தின் பிற்பயக்கும் பீழை பெரிது’ என்றார். கல்வி கற்கும் போது துன்பந்தரினும் பின்னர்ப் பேரின்பந் தரும். செல்வம் உள்ளபோது இன்பந் தரினும் தீர்ந்தபின் பெருந் துன்பந் தரும். எனவே, செல்வப் பொருளினும் கல்விப் பொருளே சிறந்தது. ஆகையால், கற்கும் போதுண்டாகும் வருத்தத்தைப் பொருட்படுத்தாது கற்றுத் தேறுவதே ஒவ்வொருவரின் கடமை யாகும் என்பது கருத்து. (24) 25. கல்வியே கற்புடைப் பெண்டிரப் பெண்டிர்க்குச் செல்வப் புதல்வனே தீங்கவியாச் - சொல்வளம் மல்லல் வெறுக்கையா மாணவை மண்ணுறுத்துஞ் செல்வமு முண்டு சிலர்க்கு. (நீநெ) கல்வியே கற்பு உடைப் பெண்டிர் ஆ - கற்றவர்க்குத் தாம் கற்ற கல்வியே கற்புடை மனைவியராகவும், தீங்கவியே அப் பெண்டிர்க்குச் செல்வ புதல்வன் ஆ - இனிய செய்யுளே அம் மனைவியர்க்கு அருமையான மகனாகவும், சொல்வளம் மல்லல் வெறுக்கை ஆ - சொற்களின் வளமே நிறைந்த செல்வ மாகவும் கொண்டு, மாண் அவை மண்ணுறுத்தும் செல்வமும் சிலர்க்கு உண்டு - மாட்சிமைப்பட்ட அவையினை அழகு செய்யும் செல்வமும் சிலர்க்கு உள்ளதாம். கற்பு - மனவுறுதி. அதாவது, புதிய கூட்டுறவான கணவனே இனிய உயிர்த்துணைவன் எனவும், கணவனோடு கூடி வாழும் இல்வாழ்க்கையே சிறந்ததெனவும், இருவரும் ஒருவர் எனவும் கொள்ளும் மனவுறுதி. வள்ளுவரும் ‘கற்பென்னும் திண்மை’ (குறள் - 54) என்றார். தீங்கவி - இனிமையான - சிறந்த - செய்யுள். வளம் - மிகுதி. சொல்வளம் - சொற்களின் மிகுதி. மல்லல் - நிறைவு. வெறுக்கை - செல்வம். சொல் வளமே மல்லல் வெறுக்கை - பேசுதற்கும், செய்யுளியற்று தற்கும் வேண்டிய சிறந்த நிறைந்த சொற்களையுடையதாதல்; அச்சொல்வளமே நிறைந்த செல்வ மாகும். மாண் - மாட்சிமை, சிறப்பு, மாண் அவை - பெரியோர் கூடிய கூட்டம். மண்ணுறுத்தல் - அழகு செய்தல். அதாவது, பெரி யோர்கள் மகிழும்படி அரிய கருத்துக்களை எடுத்துரைத்தல். இது சொல்வன்மை. இங்கே சொற்கொடை. எல்லோர்க்கும் சொல் வன்மை எளிதில் அமையாதாகலின், ‘செல்வமும் உண்டு சிலர்க்கு’ என்றார். செல்வம் - பேச்சுச் செல்வம். கல்வியறிவுடைய ஒருவன் வாழ்க்கை, நன்மனைவியோடு கூடிக் குடும்பம் நடத்தும் ஒருவன் வாழ்க்கையை ஒக்கும். மனைவி, மக்கள், செல்வம், ஈகை என்னும் நான்கும் இல்லறத் திற்கு இன்றியமை யாதவையாகும். இங்குக் கல்வியை மனைவியாகவும், கவியை மக்களாகவும், சொல்வளத்தைச் செல்வமாகவும், சொல்வன்மையை ஈகை யாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. கல்விகற்றானொருவன் கவி செய்யுந் திறனையும் பெற வேண்டும். இல்லையேல், மகப்பெறா மனைவியோடு கூடி வாழ்தலிற் பயனில்லை யாதல்போல, கவி செய்யுந்திறனில்லாக் கல்வியாலும் பயனில்லையாம். கவித்திறம் அக்காலத்தது. இன்று எழுத்துத் திறம் வேண்டும். மிக்க செல்வ மிருந்தாற்றானே பெற்ற மக்களை இனிது செல்வமாக வளர்க்கலாம்? ஈந்து புகழடையலாம்? அங்ஙனமே, செய்யுள் செய்யவும் - எழுதவும் - சொற்பொழிவாற்றவும் கற்றானுக்குச் சொல்வளம் இன்றியமையாததாயிற்று. ஒருவன் கசடறக் கற்று, கவி செய்யுந் திறனைப் பெற்று, சொல்வளமும் சொல்வன்மையும் உடையவனாதல், ஒருவன் நன்மனைவியை யடைந்து, நன்மக்களைப் பெற்று, செல்வந் திரட்டி, ஈந்து புகழுடன் இல்லறம் நடத்துவதற்கு ஒப்பாகும் என்னும் நயம்படச் செய்யப்பட்டது இச்செய்யுள். இது உருவக அணி. செல்வமுடையவர்களில் ஒரு சிலர்க்கே கொடைக் குணம் அமைவது போல, கல்வியுடையவர்களிலும் ஒரு சிலர்க்கே சொல்வன்மை அமையும் என்றபடி. கவித் திறன் அல்லது எழுத்துத் திறனுடன் பேச்சுத் திறனும் பெறுவதே கல்வியின் பயன் என்பது கருத்து. (25) 26. வருந்தித்தாங் கற்றன வோம்பாது மற்றும் பரிந்துசில கற்பான் றொடங்கல் - கருந்தனங் கைத்தலத்த வுய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங் கெய்த்துப் பொருள்செய் திடல். (நீநெ) தாம் வருந்திக் கற்றன ஓம்பாது - தாங்கள் வருத்தப் பட்டுக் கற்றனவற்றை மறவாமல் பாதுகாவாது மறந்து விட்டு, மற்றும் சில பரிந்து கற்பான் தொடங்கல் - மேலும் சில நூல்களை வருந்திக் கற்கத் தொடங்குதல், கைத்தலத்த கருந்தனம் உய்த்துச் சொரிந் திட்டு - ஒருவன் கையிலிருந்த மிகுந்த பணத்தை வீசி எறிந்து விட்டு, அரிப்பு அரித்து எய்த்துப் பொருள் செய்திடல் - அரிப் பரித்து வருந்திப் பொருள் சேர்ப்பது போலாகும். ஓம்புதல் - பாதுகாத்தல். பரிந்து - வருந்தி, முயன்று. கருந் தனம் - பெரும்பணம், மிக்க பொருள். கைதலத்த - கையிலுள்ள பொருள். உய்த்தல் - வீசுதல், சொரிதல் - எறிதல். அரிப்பரித்தல் - அரித்தெடுத்தல். எய்த்தல் - வருந்துதல், இளைத்தல். அதாவது உள்ளத்தை இழந்து வறுமையுற்று என்றபடி. பொன் வேலை செய்யும் பட்டறையில் விழும் குப்பையில் பொற் பொடிகள் சிந்திக் கிடக்கும். அக்குப்பையைப் பாது காப்பாகச் சேர்த்து வைப்பர். ‘அரிப்புக்காரர்’ என்போர் அக் குப்பையை விலைக்கு வாங்கிப்போய், அதற்காக உள்ள ஒரு தொட்டியில் போட்டு, ஆறு அல்லது குளத்து நீரில் அத்தொட்டி முழுகும்படி வைத்து அசைப்பர். குப்பை யெல்லாம் தண்ணீரில் போய்ப் பொடிகள் மட்டும் தொட்டியில் தங்கும். அப்பொடியை உருக்கிப் பொற்கட்டி யாக்குவர். அவ்வாறு குப்பையிலுள்ள பொன்துகளைப் பிரித்தெடுப்பதற்கு ‘அரிப் பரித்தல்’ என்று பெயர். வருந்திக் கற்றதை மறந்துவிட்டு மறுபடிக் கற்கத் தொடங்குதல், கையிலுள்ள பணத்தை எறிந்து விட்டு அரிப் பரித்துப் பொருள் சேர்ப்பதனோ டொக்கும். கற்றதை மறவாமல் போற்ற வேண்டும். கற்றதை மறந்து விட்டு மறுபடிக் கற்கப் புகுவது பேதமை என்பது கருத்து. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை (முது) என்பது இதனை வலியுறுத்தும். (26) 27. கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோ ரணிகலம் வேண்டாவாம் - முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா; யாரே அழகுக் கழகுசெய் வார். (நீநெ) முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா - முழுதும் முழு மணிகளால் செய்யப்பட்ட நகைக்குப் பூண் வேண்டிய தில்லை, யாரே அழகுக்கு அழகு செய்வார் - எவர்தான் அழகுக்கு அழகு செய்வார்? ஒருவருமில்லை. (அதுபோல), கற்றார்க்குக் கல்வி நலனே கலன் அல்லால் - கற்றவர்களுக்கு அக்கல்வியினழகே அழகாவதல்லாமல், மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - வேறொரு நகையழகு வேண்டியதில்லை. முற்ற - முழுதும். முழுமணி - உடைத்துச் சாணை பிடியாத முழுமணி. பூண் - நகை. இரண்டாவது பூண் - உலக்கைப் பூண் போல, நகைகளுக்குப் போடும் பூண். அழகுக்காக நகைகளின் மேல் அரும்புப் பூண் பிடிப்பது காண்க. பிரம்புக்கு வெள்ளிக் கட்டுப் பிடிப்பதுபோலத் தங்க நகைகளின் மேற்பதிக்கும் மணியுங் கொள்க. நலன் - அழகு. கலன் - நகை. இங்கே அழகை உணர்த்திற்று. அணிகலம் - அணிகலத்தாலாகிய அழகு. இன விலக்கணத்தால் ஆடை முதலியவற்றாலாகிய அழகுங் கொள்க. முழுமணிப் பூணுக்குப் பூணும், அழகுக்கு அழகும் வேண்டிய தில்லை. அதுபோல, கற்றோர்க்கு வேறு நகையழகு வேண்டிய தில்லை. கல்வியழகே போதும் என்பதாம். ‘குஞ்சியழகும்’ (1) என்னும் நாலடிச் செய்யுளைக் காண்க. (27) 28. நீரளவே யாகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு. (வாக்) நீர் ஆம்பல் நீர் அளவே ஆகும் - நீரில் இருக்கின்ற ஆம்ப லானது நீரினது உயரத்தின் அளவாகவே இருக்கும், (அதுபோல), நுண் அறிவு தான் கற்ற நூல் அளவே ஆகும் - நுட்பமான அறிவானது ஒருவன் கற்றறிந்த நூல்களின் அளவாகவே இருக்கும். அதிகாரத்திற் கேற்ப இரண்டடி மட்டும் கொள்ளப்பட்டது. நீர் நிலையில் உள்ள நீர்மட்டம் உயர்ந்தால் அந்நீரில் உள்ள ஆம்பல் முதலிய நீர்க்கொடிகளும் உயரும்; நீர் தாழ்ந்தால் அவையும் தாழும். அதுபோல, ஒருவன் கற்ற நூல்களின் அளவுக்குத் தக்கவாறே அவனது அறிவின் அளவும் இருக்கும். பலவகையான, மிகுதியான நூல்களைக் கற்றால் மிகுந்த அறிவைப் பெறலாம் என்பது கருத்து. (28) 29. மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத் தன்றேய மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாஞ் சிறப்பு. (வாக்) மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர்தூக்கின் - அரசனையும் குற்றமறக் கற்றுணர்ந்தவனையும் ஆராய்ந்து பார்த்தால், மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - அரசனைக் காட்டிலும் கற்றவனே பெருமையுடையவனாவான், (எங்ஙன மெனில்), மன்னற்குத் தன்தேயம் அல்லால் சிறப்பு இல்லை - அரசனுக்குத் தன் நாட்டில் அல்லாமல் வேறு நாடுகளில் பெருமை இல்லை, கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு - கற்றவர்க்குச் சென்ற எல்லா நாடுகளிலும் பெருமை உண்டாகும். மாசு - குற்றம். அதாவது ஐயம் திரிபு. சீர்தூக்கல் - ஆராய்ந்து பார்த்தல், இருவர் பெருமையினையும் ஆராய்ந்து பார்த்தல். அரசர் வேறு நாட்டுக்குச் சென்றால் அந்த நாட்டரசர் எதிர்ப்பர். ஆனால், கற்றவரை எல்லா நாட்டினரும் வரவேற்றுப் போற்றுவர். எனவே, அரச செல்வத்திலும் கல்விச் செல்வமே சிறந்ததாகையால், கல்வியைக் கருத்துடன் கற்கவேண்டும் என்பது கருத்து. யாதானு நாடாமா லூராமா லென்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு (குறள்) என்கிறார் வள்ளுவரும். (29) 30. பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி மன்னு மறிஞரைத்தா மற்றொவ்வார் - மின்னுமணி பூணும் பிறவுறுப்புப் பொன்னே! அதுபுனையாக் காணுங்கண் ணொக்குமோ காண். (நன்) பொன்னே - அழகிய பெண்ணே, மின்னும் அணி பூணும் பிற உறுப்பு - ஒளிபொருந்திய நகைகள் அணியும் பிற உறுப்புக்கள், அது புனையாக் காணும் கண் ஒக்குமோ - அந்நகையை அணியாத பார்க்கின்ற கண்களுக்கு ஒப்பாகு மோ? ஆகா. (அதுபோல), பொன் அணியும் வேந்தர் - பொன்னால் செய்த அணிகலன்களை அணியும் அரசர்கள், புனையா பெருங்கல்வி மன்னும் அறிஞரை ஒவ்வார் - அவ்வணிகலன்கள் அணியாத மிகுந்த கல்வியறிவு நிலை பெற்ற அறிவுடையோர்களுக்கு ஒப்பாகார். பொன் - பொன்னாற் செய்த நகைகளுக்கானது. புனையா - புனையாத, மன்னுதல் - நிலைபெறுதல். தாம், மற்று காண் - அசை. மின் - ஒளி. பிற உறுப்பு - காது மூக்கு, கை முதலியன. பேரரசர்களும் கற்றவர்களுக்கு ஒப்பாகமாட்டார். எனவே, முயன்று கற்கவேண்டும் என்பது கருத்து. ‘அரசர்களுக்குத் தம் நாட்டில் மட்டுந்தான் மதிப்பு, பிற நாடுகளில் மதிப்பில்லை. கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு’ (வாக்குண்டாம்) என்பதை யறிக. (30) 31. உடலின் சிறுமைகண் டொண்புலவர் கல்விக் கடலின் பெருமை கடவார் - மடவரால் கண்ணளவாய் நின்றதோ காணுங் கதிரொளிதான் விண்ணளவா யிற்றோ விளம்பு. (நன்) மடவரால் - இளம்பருவ முடைய பெண்ணே, காணும் கதிர் ஒளி - காண்கின்ற சுடரொளியாலாகிய கண்ணொளி யானது, கண் அளவாய் நின்றதோ - சிறிய கண்ணின் அளவில் அடங்கி யிருந்ததோ, விண் அளவு ஆயிற்றோ விளம்பு - தான் காண்கின்ற பெரிய வானின் அளவாகப் பரவியிருந்ததோ சொல்? (வானளவே பரவியிருந்தது. அதுபோல), ஒண்புலவர் உடலின் சிறுமை கண்டு - ஒள்ளிய புலவர்களின் உடம்பின் சிறுமையைப் பார்த்து, கல்விக் கடலின் பெருமை கடவார் - அவர்களது கல்வியாகிய கடலின் பெருமையை எவரும் கடக்கமாட்டார்கள். ஒண்மை - கூரிய அறிவு. கல்விக் கடலின் பெருமை - கடல் போன்ற கல்விப் பெருக்கம். கடவார் - சிறிதாக மதியார். மடம் - இளமை. மடவரல் - இளம் பெண். மகடூஉ முன்னிலை. கதிர் - ஞாயிற்றின் ஒளி. ஞாயிறு - சூரியன். ஞாயிற்றின் ஒளியின் துணைக் கொண்டே கண் காண்கின்றது. திங்களின் ஒளியும், விளக்கொளி, மின்னொளியும் கொள்க. பிற பொறிகளான காது இரவிலும் பகலிலும் கேட்க, மூக்கு அவ்வாறே முகர, நாக்கு அவ்வாறே சுவைக்க, உடல் அவ்வாறே உணர, கண் மட்டும் இரவில் தெரிவதில்லை. காரணம், பகலவன் ஒளியாற்றான் கண் ஒளி பெறுகிறது. காலையும் மாலையும் சில வினாடி கதிரவனை உற்றுப் பார்த்துவரின், ஒளி மங்கிய கண்ணும் ஒளி பெறும் என்னும் உடனூற் புலவர் கொள்கையும் இதனை வலியுறுத்தும். ‘கண்கெட்ட பிறாக சூரிய வணக்கம்’ என்பது பழமொழி. கண்ணொளியானது சிறிய கண்ணின் அளவில் நில்லாது பெரிய விண்ணளவாகப் பரந்து நிற்பதுபோல. சிறிய உருவ முடையவரும் பேரறிவுடையராக இருப்பர். உருவத்தைக் கொண்டு ஒருவரின் கல்வியறிவை மதிப்பிடக் கூடாது என்பது கருத்து. ‘உடலின் சிறுமை’ என்பது பருவத்தையும் குறிக்கும். (31) 32. வருத்தவளை வேயரசர் மாமுடியின் மேலாம் வருத்த வளையாத மூங்கில் - தரித்திரமாய் வேழம்பர் கைப்புகுந்து மேதினியெல் லாந்திரிந்து தாழுமவர் தம்மடிக்கீழ்த் தான். (நீவெ) வருத்த வளைவேய் - இளமையில் வருத்தி வளைக்க வளைந்த மூங்கில், அரசர் மா முடியின்மேல் ஆம் - அரசர்களது சிறந்த முடியின்மேல் பல்லக்குத் தண்டாக உயர்வடையும், வருத்த வளையாத மூங்கில் - அவ்வாறு வருத்தி வளைக்க வளையாத மூங்கில், தரித்திரமாய் - ஏழ்மையாய், வேழம்பர் கைப்புகுந்து - கழைக் கூத்தரிடம் அகப்பட்டு, மேதினி எல்லாம் திரிந்து - உலகெங்கும் அலைந்து, அவர் அடிக் கீழ் தாழும் - அக்கழைக் கூத்தர் காலின்கீழ் மிதியுண்டு தாழ்வடையும். வேய் - மூங்கில். தரித்திரம் - வறுமை, ஏழ்மை. இது கழைக் கூத்தர் வாழ்க்கை நிலை. வேழம்பர் - கழைக் கூத்தர். இளமையில் பல்லக்குத் தண்டுபோல் வளைத்து விடப் பட்ட மூங்கில், பின்னர்ப் பல்லக்குத் தண்டாகி மன்னர் முடிக்கு மேல் இருந்து உயர்வடைகிறது. அவ்வாறு இளமையில் வளையாது முற்றிய மூங்கில், கழைக்கூத்தரிடம் அகப்பட்டு, ஊரூராக அலைந்து, அவரால் மிதித்துமேலே ஏறப்பட்டுத் தாழ்வடைகிறது. அதுபோல, இளமையில் வருந்திக் கற்றவர் சிறப் படைகின்றனர். அவ்வாறு இளமையில் வருந்திக் கல்லாதவர் பின்னர்த் தாழ்வடைகின்றனர். பிறிது மொழிதலணி. இளமையில் வருந்திக் கற்று உயர்வாழ்வு வாழ வேண்டு மென்பது கருத்து. (32) 33. ஆனை மருப்பு மருங்கவரி மான்மயிரும் கான வரியுகிருங் கற்றோரும் - மானே! பிறந்தவிடத் தன்றிப் பிறிதொருதே யத்தே செறிந்தவிடத் தன்றோ சிறப்பு. (நீவெ) மானே - மான் போன்றவளே, ஆனை மருப்பும் - யானைக் கொம்பும், அருங் கவரிமான் மயிரும் - அருமையாகிய கவரி மான் மயிரும், கான வரி உகிரும் - காட்டுப் புலி நகமும், கற்றோரும் - கற்றவரும், பிறந்த இடத்து அன்றி - பிறந்த (உண்டான) இடத்தில் அல்லாமல், பிறிது ஒரு தேயத்து செறிந்த இடத்து அன்றோ சிறப்பு - வேறொரு நாட்டில் சேர்ந்த இடத்திலல்லவா சிறப்பு உண்டாகிறது? ஆனை - யானை என்பதன் போலி. மருப்பு - கொம்பு. கானம் - காடு. வரி - வரிகளையுடைய புலியை உணர்த்திற்று; சினையாகு பெயர். யானை மருப்பு முதலியவை பிறந்த இடத்தை விடச் சேர்ந்த இடத்தே மிக்க சிறப்புறும். அவ்வாறே, கற்றோரும் உள்ளூரைவிட வெளியூர்களில், வெளிநாடுகளில் நன்கு மதிக்கப் பெறுவர். ‘மன்னனும் மாசறக் கற்றோனும்’ என்னும் வாக்குண் டாமை நோக்குக. (33) 34. நாளு நவைபோகான் கற்றல் மிகவினிது. (இனி) நவை போகான் - குற்றமில்லாமல், நாளும் கற்றல் மிக இனிது - நாடோறும் கற்றல் மிகவும் நல்லது. நவை - குற்றம். போகான் - போகாமல்; முற்றெச்சம். குற்றம் - சொற்குற்றமும் பொருட்குற்றமும். “கற்க கசடறக் கற்பவை” (குறள் - 391) நாடோறும் குற்றமறக் கற்றல் மிகவும் நல்லது. (34) 35. பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலிற் காழினிய தில். (இனி) பற்பல நாளும் - வாழ் நாட்களில் ஒரு நாளும், பழுது இன்றி - பழுது படாது, பாங்கு உடைய - நல்ல நூல்களை. கற்றலின் - கற்பதைப் போல, காழ் இனியது இல் - மிக நல்லது வேறொன்றும் இல்லை. பற்பல நாளும் - வாணாள் முழுதும். பழுது இன்றி - வீணா காமல். வாழ் நாட்களில் ஒரு நாட்கூடக் கல்லாமல் கழியக் கூடாது என்பதாம். பாங்கு - நன்மை. காழ் - உறுதி. ஈங்கு மிகுதி குறித்தது. அறிவொழுக்கங்களைத் தரும் நல்ல நூல்களை எப்போதும் படிக்க வேண்டும் என்பது கருத்து. (35) 36. பிச்சைபுக் காயினும் கற்றல் மிகவினிது; நற்சவையிற் கைகொடுத்தல் சாலவு முன்னினிது. (இனி) பிச்சை புக்கு ஆயினும் - இரந்துண்டு வாழ்ந்தாயினும், கற்றல் மிக இனிது - கற்றுக் கொள்ளுதல் மிகவும் நல்லது, நல்சவையில் கைகொடுத்தல் - அங்ஙனம் கற்ற கல்வியானது நல்ல அவையின் கண் பேசும்போது நினைவுக்கு வருதல், சாலவும் முன் இனிது - மிகவும் நல்லது. ஏதாவதொரு தொழில் செய்து வாழவேண்டுமே யன்றிப் பிறரிடம் சென்றிரந்துண்டு வாழ்வது மிகவும் இழிவானது. அத்தகைய இழிதொழிலான இரத்தலைச் செய்தேனும் கற்றுக் கொள்ளுதல் மிகவும் நல்லது என்பதாம். கல்லாமை இரத்தலினும் இழிவாகையால், அதனைச் செய் தேனும் கற்றுக் கொள்ளுதல் வேண்டும் எனக் கல்வியின் இன்றி யமையாச் சிறப்புக் கூறப்பட்டது. நல்சவை - நல்லோர் கூடிய கூட்டம். கை கொடுத்தல் - உதவுதல் - நினைவுக்கு வருதல். சால, முன் - மிக; ஒரு பொருட் பன்மொழி. ஒரு கூட்டத்தில் பேசும்போது கற்ற நூற்கருத்துக்கள் நினைவுக்கு வராவிட்டால் அவற்றால் பயனில்லை யாகையால், கற்றவை நினைவுக்கு வருதலைச் ‘சாலவும் முன்னினிது’ என்றார். கற்றதை மறவாமையே கல்வியின் பயனாகும். (36) 37. கடற்குட்டம் போழ்வர் கலவர், படைக்குட்டம் பாய்மா வுடையான் உடைக்கும், அவைக்குட்டம் கற்றான் கடந்து விடும். (நான்) கலவர் கடல் குட்டம் போழ்வர் - மரக்கலமுடையார் கடலின் ஆழமான நீரைப் பிளந்து செல்வர், பாய்மா உடையான் படைக்குட்டம் உடைக்கும் - குதிரையை உடையான் பகைவரது படையாகிய ஆழ்கடலின் கரையைப் பொருது உடைத்து விடுவான், (அதுபோல), கற்றான் அவைக் குட்டம் கடந்து விடும் - கல்வியறி வுடையான் அவையாகிய கடலைத் தாண்டி விடுவான். மரக்கலம் - கப்பல். குட்டம் - ஆழம். போழ்தல் - பிளத்தல்; எளிதில் கடப்பர் என்றபடி. பாய்மா - குதிரை. படைக் குட்டம், அவைக் குட்டம் - உருவகம். அவைக் குட்டம் கடத்தலாவது - பேச்சுத் திறனால் அவையினரை மகிழ்வித்தல். கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்பப் பேசும் (குறள் - 643) பேச்சுவன்மை யுடைமையே கல்வியின் பயன் என்றபடி. (37) 38. குருடராச் செய்வது மம்மர், இருள்தீர்ந்த கண்ணராச் செய்வது கற்பு. (நான்) குருடராச் செய்வது மம்மர் - ஒருவரை வழி தெரியாத குருடராகச் செய்வது கல்வியறிவின்மையாகும். இருள் தீர்ந்த - குருடு நீங்கிய, கண்ணராச் செய்வது கற்பு - கண்ணுடைய ராகச் செய்வது கல்வியாகும். மம்மர் - மயக்கம்; இங்கு கல்வியறிவின்மை. இருள் தீர்ந்த கண் - குருடு நீங்கிய கண், ஒளியுடைய கண். கற்பு - கல்வி. கல்லார்க்கு, பழைய நூல்களிற் கூறும் இறந்த கால நிகழ்ச்சி களையும், இக்கால நூல்களிற் கூறும் நிகழ்கால நிகழ்ச்சிகளையும், நாளிதழ்களிற் கூறும் அன்றாட உலக நிகழ்ச்சிகளையும் பார்த்துத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் இன்மையால், கல்லாரைக் ‘குருடர்’ என்றார். கல்வியின் உயர்வோடு கல்லாமையின் இழிவும் கூறப் பட்டது. கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் (குறள்) கண்போன்ற கல்வியைக் கற்று. அறிவுடையராய் வாழ வேண்டுமென்பது கருத்து. (38) 39. ஒருவற்குக் கற்றலின் வாய்த்த பிறவில்லை. (நான்) ஒருவற்கு - ஒருவனுக்கு, கற்றலின் வாய்த்த பிற இல்லை - கல்வியறிவைப் போலப் பயன்படுவன வேறொன்றும் இல்லை. வாய்த்தல் - பயன்படுதல், துணையாதல். பிற - இடம் பொருள் முதலியன. ‘கல்வியின் ஊங்கு இல்லை சிற்றுயிர்க் குற்றதுணை’ (நீநெ) என்பதும் இக்கருத்துடையதே. (39) 40. திரியழற் காணிற் றொழுப, விறகின் எரியழற் காணி னிகழ்ப - ஒரு குடியில் கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான் இளமைபா ராட்டு முலகு. (நான்) உலகு - உலகத்தார், திரி அழல் காணின் தொழுப - திரியால் எரியும் சுடரைக் கண்டால் தொழுவார்கள், விறகின் எரி அழல் காணின் இகழ்ப - விறகால் எரியும் சுடரைக் கண்டால் இகழ் வார்கள்; (அது போல), ஒரு குடியின் கல்லாது மூத்தானைக் கை விட்டு - ஒரு குடியிற் பிறந்த கல்லாமல் மூத்தவனை விட்டுவிட்டு, கற்றான் இளமை பாராட்டும் - இளைஞனாயினும் கற்றானையே பாராட்டுவர். திரி அழல் - விளக்கு. அழல் - தீ. விளக்கினைத் தொழுதல் மரபு. அடுப்பில் எரியும் தீயை யாரும் தொழுவதில்லை. இகழ்ப என்பது - தொழுவதில்லை என்னும் பொருள்பட நின்றது. கைவிடுதல் - விட்டு விடுதல். தொழுப, இகழ்ப - உயர்திணைப் பலர்பால் வினை முற்றுக்கள். உலகு - இடவாகு பெயர். விறகுத் தீ - கல்லாது மூத்தவனுக்கும், விளக்கு - கற்ற இளையவனுக்கும் உவமை. ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னா தவருள் அறிவுடை யோனா றரசுஞ் செல்லும் (புறம்) ஆண்டில் இளையனாயினும் கல்வியறிவுடையவனையே உலகம் மதிக்கும் ஆகையால், கல்லாது காலங்கழிக்கக் கூடாது என்பது கருத்து. (40) 41. ஒருவன் மதிநன்று மாசறக் கற்பின். (நான்) மாசு அறக் கற்பின் - குற்றமறக் கற்பானாயின், ஒருவன் மதி நன்று - ஒருவன் அறிவு நலம் பெறும். மதி - அறிவு. மாசு - குற்றம்; குற்றமுள்ள நூல்களையும் குறிக்கும். குற்றமற்ற நூல்களைக் குற்றமறக் கற்கின் நல்லறிவு வாய்க்கப் பெறும் என்றபடி. (41) 42. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை. (முது) கற்றது மறவாமை - கற்றதை மறாவதிருத்தல், மேதையின் சிறந்தன்று - நுண்ணறிவினும் சிறந்தது. மேதை - அறிவு. நுண்ணிய அறிவுடையரேனும் கற்றதை மறவாமல் இருத்தல் வேண்டும். நுண்மாண் நுழைபுலம் உடையராயினும், கற்றதை மறக்கின் அவ்வறிவால் பயனில்லையாகையால், அவ்வறிவினும் மறவாமை சிறந்ததாயிற்று. (42) 43. குலனுடைய மையின் கற்புச் சிறந்தன்று. (முது) குலன் உடைமையின் - நற்குடிப் பிறப்பினும், கற்புச் சிறந்தன்று -கல்வி சிறந்தது. குலன் உடைமை - உயர் குடிப் பிறப்பு; அதாவது வழிவழி நல்லொழுக்கமுள்ள பழங்குடியிற் பிறத்தல். மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றா ரனைத்திலர் பாடு. (குறள்) வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனும் அவன்கட் படுமே. (புறம்) கல்வி உயர்குடிப் பிறப்பினும் சிறந்ததாகும். (43) 44. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான். (முது) கற்றல் வேண்டுவோன் - கற்க விரும்புகின்றவன். வழிபாடு தண்டான் - கற்பிக்கும் ஆசிரியர்க்குச் செய்யும் வழிபாட்டினைச் செய்யத் தவிரான். வேண்டுவதல் - விரும்புதல். தண்டுதல் - தவிர்தல், ஒழிதல். அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோ டெத்திறத் தாசான் உவக்கும் அத்திறம் அறத்திற் றிரியாப் படர்ச்சிவழி பாடே. என மாணவரின் வழிபாட்டிலக்கணங் கூறுவர் நன்னூலார். பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே என்பது புறம். பிற்றைநிலை - வழிபாடு. பிற்றை நிலை முனியாது - வழிபாடு செய்தலில் வெறுப்புக் கொள்ளாது. ஆசிரியர் உவக்கும் வண்ணம் சிறிதும் வெறுப் பில்லாமல் அவர்க்குச் செய்யும் பணிவிடைகளைச் செய்து கற்று கொள்ளல் வேண்டும் என்பது கருத்து. (44) 45. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே. (வெற்) கற்கை - கற்றல். நன்று - நல்லது. பிச்சை புகினும் - இரந் துண்ண நேர்ந்தாலும் - இரந்துண்ணும் அத்தகு வறுமை நிலையில் உள்ளவர்களும். இளமையில் பிச்சை புக நேரினும் கற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் அந்நிலை நேரினும் நூல்களைக் கற்க வேண்டும் எனக் கொள்க. (45) 46. எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை வருக வென்பர். (வெற்) தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் கற்றவரை எல்லோரும் மதிப்பர். யாவரே ஆயினும் - செல்வர் வறியர், பெரியர் சிறியர் எவராயினும். வருக என்றல் - வரவேற்றுப் போற்றுதல். 5-ஆம் பாட்டின் உரை பார்க்க. (46) 47. இளமையிற் கல். (ஆத்) 48. ஓதுவ தொழியேல். (ஆத்) இளமையில் கற்றதோடு அமையாது எப்போதும் படிக்க வேண்டும். (47 - 48) 49. வித்தை விரும்பு. (ஆத்) வித்தை - கல்வி. கல்வியின் இன்றியமையாச் சிறப்பினை உணர்ந்து அதை விரும்பிக் கற்க வேண்டும். (49) 50. எண்ணெழுத் திகழேல். (ஆத்) எண் - கணக்கு. எழுத்து - இலக்கியமும் இலக்கணமும். இவ் விரண்டினுள் எல்லாவகைக் கல்வியும் அடங்கும். இகழேல் -இகழாமல் விரும்பிக் கற்றுக் கொள். எண்ணையும் எழுத்தையும் இகழாமல் கற்றுக் கொள்ள வேண்டும். (50) 51. நூற்பல கல். (ஆத்) ஒருவகை நூல்களை மட்டும் கற்பதோடு அமையாமல், பலவகை நூல்களையும் கற்க வேண்டும். (51) 52. கேள்வி முயல். (ஆத்) தாம் கற்பதோடு அமையாமல், கற்றோர் சொல்வதைக் கேட்க முயல வேண்டும்; முயன்று கேட்க வேண்டும். திருக்குறள் - ‘கேள்வி’ என்னும் அதிகாரத்தைப் பார்க்க. (52) 53. எண்ணு மெழுத்துங் கண்ணெனத் தகும். (கொன்) கண் எனத் தகும் - கண்கள் என்று சொல்லத்தகும்; கண்கள் போன்றவையாகும். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு (குறள் 53) 54. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி. (கொன்) கைப்பொருள் தன்னின் - செல்வப் பொருளைக் காட்டிலும், மெய்ப்பொருள் கல்வி - அழியாத பொருள் கல்வியே யாகும். 3-ஆம் பாட்டின் உரை பார்க்க. (54) 55. ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். (உல) ஒரு நாளையும் கல்லாமல் கழிக்கக் கூடாது. ஒவ்வொரு நாளும் கட்டாயம் படிக்க வேண்டும். (55) 2. ஒழுக்கமுடைமை ஒழுக்கம் - நன்னடக்கை. அதாவது கற்றதற்குத் தக நிற்றல் 56. விழுத்தொடைய ராகி விளங்கித்தொல் வந்தார் ஒழுக்குடைய ராகி யொழுகல் - பழத்தெங்கு செய்த்தலை வீழும் புனலூர! அஃதன்றோ நெய்த்தலைப்பா லுக்கு விடல். (பழ) தெங்கு பழம் செய்த்தலை வீழும் புனல் ஊர - தெங்கம் பழம் வயலின்கண் வீழும் நீர்வளமுள்ள உரையுடையவனே. விழுத் தொடையர் ஆகி விளங்கித்தொல் வந்தார் - சிறந்த தொடர்ச்சி யையுடையவராய் விளங்கிப் பழமையாகிய குடியில் பிறந்தவர். ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல் அஃது - நல்லொழுக்கம் உடைய ராகி ஒழுகும் தன்மையானது, நெய்த்தலைப் பால் உக்கு விடல் அன்றோ - நல்ல நெய்யின் கண்ணே பால் சிந்தி விடும் தன்மையோ டொக்கு மன்றோ? விழுத்தொடையர் - சிறந்த தொடர்ச்சியை யுடையவர். அதாவது நன்மக்களின் தொடர்புடையவர். விழுமம் - சிறப்பு, தொடை - தொடர்ச்சி, பழக்கம். தொல்வந்தார் - பழங்குடியிற் பிறந்தார். தொல் என்பது தொன்மையான குடியை உணர்த் திற்று. ஒழுக்கு - ஒழுக்கம். ஒழுக்கு உடையராகி ஒழுகல் - ஒழுக்கமுடை யவராய் இருத்தல். தெங்கு தென்னை. தெங்கு பழம் - முற்றிய தென்னங்காய். செய் - வயல். தலை - ஏழாம் வேற்றுமை உருபு. செய்த்தலை - செய்யின் கண். ‘புனலூர’ என்பது ஆடூஉ முன்னிலை. உக்குதல் - சிந்துதல். நெய்யின் கண் பால் சிந்தினால் எவ்வளவு சிறப்போ, அத்தகைய சிறப்புடையதே நன்மக்களின் தொடர்புடைய ராய்ப் பழங் குடியில் பிறந்தவரிடம் ஒழுக்கமும் பொருந்தியிருப்பது. நற்குடிப் பிறந்தாரின் நல்லோர் உறவுக்கு நெய்யும், ஒழுக்கத் திற்குப் பாலும் உவமை. நற்குடிப் பிறந்தவர், நல்லோர் உறவும் நல்லொழுக்கமும் பொருந்தியிருப்பது, நெய்யும் பாலும் கலந்தது போலச் சிறப்பைத் தரும் என்பது கருத்து. (1) 57. கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல் எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் - தெள்ளிதின் ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால் பார்ப்பாருந் தின்பர் உடும்பு. (பழ) தெள்ளிதின் ஆர்க்கும் அருவி மலை நாட - மிகவும் ஒலிக்கும் அருவியையுடைய மலைநாடனே, நாய் கொண்டால் உடும்பு பார்ப்பாரும் தின்பர் - நாய் கொண்டதாயினும் உடும்பினைப் பார்ப்பாரும் தின்பார்கள். (அதுபோல), கள்ளி அகிலும் கருங் காக்கைச் சொல்லும் போல் - கள்ளியினிடம் உண்டாகும் அகிலையும் கருங்காக்கையின் சொல்லையும் போல, யார் வாயின் நல் உரையை எள்ளற்க - கீழ்மக்கள் வாயின்கண் பிறந்ததேயாயினும் நல்லுரை யாயின் அதனையும் இகழாது கொள்க. அகில் - குங்கிலிகம். இது கள்ளியின் பிசின். இது நறும்புகை தருவது. ‘கள்ளி வயிற்றின்’ அகில் பிறக்கும் என்பது நான்மணிக் கடிகை (6) எள்ளுதல் - இகழுதல். தெள்ளிதின் - நன்கு, மிகவும். ஆர்த்தல் - ஒலித்தல். மலைநாட - ஆடூஉ முன்னிலை. கொள்ளுதல் - பிடித்தல். பழமொழி ஆசிரியர் காலத்தே தமிழ்நாட்டுப் பார்ப்பனர் உடும்பு போன்றவற்றின் புலாலையும் உண்டு வாழ்ந்தனர் என்பது தெரிகிறது. பார்ப்பனரின் மறை நூல்களிலும், அற நூலாகிய மனு நூலிலும் பார்ப்பனர் புலால் உண்பது சிறப்பித்துக் கூறப்படுகிறது. காக்கை கரைவதை விருந்தினர் வருதற்கு நிமித்தமாகக் கொள்ளுதல் மரபு. மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை! அன்புடை மரபின் கிளையோ டாரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம்புனை கலத்தில் தருகுவன் மாதோ வெஞ்சின விறல்வேற் காளையோ டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே. (ஐங்குறு நூறு : 391) என இச்செய்தி வந்துள்ளது. பார்ப்பாரும் நாய் பிடித்துக் கொண்டு வந்த உடும்பை உண்பர். கள்ளியினிடத்தில் உண்டானதென்று அகிலை இகழ்வா ரில்லை. காக்கை கரைவதை நன்னிமித்தமாகக் கொள்வதன்றி யாரும் இகழார். ஆகவே, நல்லுரை எவர் கூறினும் அதனை இகழாது கொள்ள வேண்டும் என்பதாம். ‘பார்ப்பாரும்’ என்னும் உயர்வு சிறப்பும்மை நாயின் இழிவைக் குறித்தது. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு (குறள்) யார் நல்லது சொல்லினும் அதைக் கேட்டு அதன் படி நடப்பதே ஒழுக்கமுடையாகும் என்பது கருத்து. (2) 58. தந்நடை நோக்கார், தமர்வந்த வாறறியார், செந்நடை சேராச் சிறியார்போ லாகாது, நின்னடை யானே நடவத்தா! நின்னடை நின்னின் றறிகிற்பா ரில். (பழ) அத்தா - அத்தனே, நின்நடை - உனக்கு இயல்பாகிய ஒழுக் கங்களை, நின்நின்று அறிகிற்பார் இல் - உன்னிடத்தில் நின்றும் அறியக் கூடியவர் பிறர் இல்லை, (நீயே அறிவாய் ஆதலால்), தம் நடை நோக்கார் - தமது முன்னைய ஒழுக்கத்தை எண்ணிப் பாராது. தமர் வந்தவாறு அறியார் - தம் சுற்றத்தாரின் ஒழுக்க வரலாற்றையும் பாராது, செம்நடை சேராச் சிறியார் போல் ஆகாது - நல்லொழுக்கத் தைச் சேராத சிறியாரைப் போல் ஒழுகாது, நின் நடையானே நட - உனக்கு இயல்பாகிய ஒழுக்கத்தின் படியே நடப்பாயாக. நடை - ஒழுக்கம். நோக்குதல் - எண்ணிப்பார்த்தல். முன்னைய ஒழுக்ககம் - முன்பு ஒழுகிய ஒழுக்கம். தமர் - சுற்றத்தார். வந்தவாறு - ஒழுகும் ஒழுக்க முறை. செந்நடை - நல்லொழுக்கம். சேரா - சேராத - ஒழுகாத. அத்தா - ஆடூஉ முன்னிலை. அறிகிற்பார் - அறிவார். பெரியோர்கள், தாம் முன்னொழுகிய ஒழுக்கத்திற் றவறாது, தம் சுற்றத்தார் ஒழுகும் ஒழுக்கத்தையும் பார்த்து, தம் குடிபிறப்பிற் கேற்றவாறு நல்லொழுக்க முடையராய் இருப்பர். ஆனால், சிறியாரோ அங்ஙன மன்றித் தீய ஒழுக்கம் ஒழுகுவர். ஒருவர் ஒழுகுவது நல்லது கெட்டது என்பதை அவரே அறிவாராகையால், சிறியார் போல் ஒழுகாமல் தன் குடிப்பிறப்புக் கேற்ப ஒழுக வேண்டும் என்பதாம். தன் குடிப்பிறப்புக்கு முரணாமலும், சுற்றத்தார் இகழாமலும் ஒழுக வேண்டும் என்பது கருத்து. (3) 59. நீர்த்தன் றொருவர் நெறியன்றிக் கொண்டக்கால் பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கு மாகாதே கூர்த்தநுண் கேள்வி அறிவுடையார்க் காயினும் ஓர்த்த திசைக்கும் பறை. (பழ) நீர்த்து அன்று நெறி அன்றி ஒருவர் கொண்டக்கால் - நீர்மையன்றிக் கெட்டவராக ஒருவர் தம்மை மனத்தின் கண் கொண்டால், பேர்த்துத் தெருட்டல் - அக்கொண்ட கொள்கை யினின்றும் அவரை மீட்டுத் தெளிவித்தல், பெரியோர்க்கும் ஆகாது - பெரியோர்க்கும் முடியாது, கூர்த்த கேள்வி நுண் அறிவு உடை யார்க்கு ஆயினும் - மிக்க கேள்வியால் நுண்ணறி வுடை யார்க்கே ஆயினும், ஓர்த்தது பறை இசைக்கும் - தாம் கருதிய ஒலியையே பறை ஒலிக்கும். நீர்த்து - நீர்மை, தன்மை. நெறி - நன்னெறி, நல்லொழுக்கம், பேர்த்து - மீட்டு, கொண்ட கொள்கையினின்றும் மாறுபடச் செய்து. தெருட்டல் - தெளிவித்தல். கூர்த்த - மிக்க. கேள்வி - நூற் கேள்வி. ஓர்த்தல் - கருதுதல், எண்ணுதல். இசைத்தல் - ஒலித்தல். ஒருவர் நீர்மையின்றி நல்லொழுக்கமுடைய பெரியோரைக் கெட்டவரென்று கொண்டால், அவரை அக்கொள்கையி னின்றும் மீட்டுத் தாம் நல்லொழுக்க முடையவரென்று நம்பும்படி செய்தல் அப்பெரியாராலும் முடியாது. தாம் கருதிய ஒலியே பறை ஒலிப்ப தாகத் தோன்றுவது போல், தமது கருத்தின் படியே பிறருடைய ஒழுக்கமும் தோன்றும். ஆதலால், தம்மை ஒருவர் தவறாகக் கொள்ளாதபடி ஒரு குற்றமும் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதாம். பிறர் ஐயுறாதவாறு நல்லொழுக்க முடையராக நடந்து கொள்ள வேண்டும். பிறர் கெட்டவரென்று எண்ணினால் பின் நல்லவரென்று பெயரெடுக்க முடியாதென்பது கருத்து. போற்றின் அரியவை போற்றல்; கடுத்தபின் தேற்றுதல் யார்க்கு மரிது (குறள் 4) 60. தங்குற்ற நீக்கல ராகிப் பிறர்குற்றம் எங்கேனும் தீர்த்தற் கிடைப்புகுதல் - எங்கும் வியனுலகில் வெள்ளாடு தன்வளி தீரா தயல்வளி தீர்த்து விடல். (பழ) தம்குற்றம் நீக்கலர் ஆகி - தாம் செய்யும் குற்றத்தை நீக்காமல், பிறர் குற்றம் தீர்த்தற்கு எங்கேனும் இடைப்புகுதல் - பிறர் செய்யும் குற்றத்தை நீக்குதற்குக் குறுக்கே புகுதலானது வியன் உலகில் எங்கும் வெள்ளாடு - இப்பெரிய உலகின்கண் எங்கும் வெள்ளாடானது, தன்வளி தீராது அயல் வளி தீர்த்து விடல் - தனது வாத நோயைத் தீர்க்கமாட்டாது பிற உயிரின் வாத நோயைத் தீர்த்து விடுவதனோ டொக்கும். நீக்கலராகி - நீக்க முடியாதவராகி. எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல் - எங்கெங்கு பிறர் குற்றத்தைக் கூற வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கங்கெல்லாம் கூறுதல். இடைப் புகுதல் - தாமாக வலியச் சென்று கூறுதல். வியன் - பெரிது. வளி - காற்று; இங்கு வாத நோயைக் குறித்தது. வெள்ளாட்டுப் பால், சிறுநீர் முதலியன வாதநோயைப் போக்கும் மருந்தாகும். தங்குற்றத்தை நீக்க முயலாமல் பிறர் குற்றத்தை நீக்க முயல்வது, வெள்ளாடு தன் வாத நோயை நீக்க முடியாமல் பிறர் வாத நோயை நீக்குவதனோ டொக்கும். வெள்ளாடு பால் முதலியவற்றைக் கொடுத்துப் பிறர் வாத நோயை நீக்குவது போல, இவரும் இடித்துரை கூறி நீக்குவர். ஒவ்வொருவரும் தத்தம் குற்றங்களை நீக்க முயல வேண்டும். தங்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்றம் ஆகு மிறைக்கு (குறள்) ‘தன் குற்றம் இருக்கப் பிறர் குற்றம் பார்க்கிறதா’ பழமொழி குற்றம் செய்யாமல் ஒழுகுவதே ஒழுக்கமுடைமை யாகும் என்பது கருத்து. (5) 61. கெடுவ லெனப்பட்ட கண்ணும் தனக்கோர் வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை முற்றுநீ ராழி வரையகத் தீண்டிய கற்றேயும்; தேயாது சொல். (பழ) நெடு வரை முற்று நீர் ஆழி வரை அகத்து ஈண்டியகல் தேயும் - பெரிய சக்கரவாள மலை சூழ்ந்த கடலை எல்லை யாக உடைய உலகத்திலுள்ள மலைகள் தேயும், சொல் தேயாது - சொல்லின் வடு தேயாது, (ஆதலால்), கெடுவல் எனப்பட்ட கண்ணும் - (இவர்க்கு இந்தப் பழியைச் சுமத்தா விட்டால்) யான் கெடுவேன் என்று எண்ணப்பட்ட விடத்தும், தனக்கு ஓர் வடுஅல்ல செய்தலே வேண்டும் - அதனால் தனக்கு யாதொரு பழியும் உண்டாகாத வற்றையே செய்தல் வேண்டும். கெடுவல் - கெடுவேன்; தன்மை ஒருமை வினைமுற்று. வடு - தழும்பு. இங்கே பழி. நெடுவரை - சக்கரவாளமலை. உலகைச் சுற்றி வட்டமாக உள்ள மலையென்பது புராணம். முற்றுதல் - சூழ்தல். நீர் ஆழி - நிரையுடைய கடல். ஆழி - கடல். வரை - எல்லை. அகம் - இடம். ஆழி வரை அகம் - கடலை எல்லையாக உடைய உலகம். ஈண்டுதல் - மிகுதல், மிக்கிருத்தல். கல் - மலை. சொல் - பழிச்சொல். நாம் செய்யும் கெட்ட செய்கையைக் கண்டு பிறர் பழிக்கும் பழிச் சொல். மலையும் ஒரு காலத்தே தேயும். ஆனால், பிறர் கூறும் பழிச் சொல்லின் வடு என்றும் தேயாது; நீங்காது நிற்கும். ஆதலால், இவர்க்கு இத்தீங்கைச் செய்யாவிட்டால் நான் கெடுவேன் என்று உறுதியாகத் தெரிந்த விடத்தும் - அவர்க்கு அக்கேட்டைச் செய்யா விட்டால் தான் கெடுவது உறுதி என நம்பப்பட்ட விடத்தும் - தனக்குப் பழியுண்டாகாதவற்றையே செய்ய வேண்டும் என்பதாம். தான் கெடுவதாயிருந்தாலும் பிறர் பழிக்கத்தக்க செயல்களைச் செய்யக் கூடாது என்பது கருத்து. கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின். (குறள்) பாவமும் ஏனைப் பழியும் படவருவ சாயினுஞ் சான்றவர் செய்கலார் - சாதல் ஒருநா ளொருபொழுதைத் துன்பம் அவைபோல் அருநவை ஆற்றுத லின்று. (நாலடி) ‘காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும். வார்த்தை இருந்துபோம் வழி தூர்ந்துபோம்’ பழமொழி. பிறர் பழிக்காமல் நடந்துகொள்வதே ஒழுக்க முடைமை யாகும். (6) 62. பொருந்தாப் பழியென்னும் பொல்லாப் பிணிக்கு மருந்தாகி நிற்பதாம் மாட்சி - மருந்தின் தணியாது விட்டக்கால் தண்கடற் சேர்ப்ப பிணியீ டழித்து விடும். (பழ) தண்கடல் சேர்ப்ப - குளிர்ந்த கடலின் துறையையுடைய வனே, மருந்தின் தணியாது விட்டக்கால் பிணி ஈடழித்து விடும் - மருந்தினால் தணிக்கா விட்டால் நோயானது உடல் நலத்தைக் கெடுத்து விடும், (ஆதலால்), பொருந்தாப் பழி என்னும் பொல்லாப் பிணிக்கு - தமது பெருமைக்குப் பொருந்தாத பழி என்று சொல்லப் படும் பொல்லாத நோய்க்கு, மருந்தாகி நிற்பது மாட்சி ஆம் - மருந்துபோல் இருப்பதே ஒழுக்கமாகும். பொருந்தா - பொருந்தாத. பொல்லா - பொல்லாத ஈறு கெட்டன. பழி - பழியாய செயல். பிணி - நோய். தணித்தல் - தீர்த்தல், செர்ப்பு - துறை, சேர்ப்ப - ஆடூஉ முன்னிலை, ஈடு - உடல் நலம். பழியைப் பிணியாகவும், ஒழுக்கத்தை மருந்தாகவும் உருவகித் தார். ஒருவன் உற்ற நோய் அவன் உடல் நலத்தைக் கெடுக்கும் மாகையால், தக்க மருந்து கொண்டு அந்நோயைப் போக்க வேண்டும். அதுபோல, ஒருவன் உற்ற பழி அவன் பெருமையைப் போக்குமாகையால், தக்க ஒழுக்கத்தை மேற்கொண்டு அப்பழியை நீக்க வேண்டும். மருந்தால் உடல் நலங் காத்தல்போல, ஒழுக்கத்தால் பெருமையைக் காக்க வேண்டும் என்பது கருத்து. (7) 63. உரிஞ்சி நடப்பாரை உள்ளடி நோவ நெருஞ்சியுஞ் செய்வதொன் றில்லை - செருந்தி இருங்கழித் தாழும் எறிகடல் தண்சேர்ப்ப! பெரும்பழியும் பேணாதார்க் கில். (பழ) செருந்தி இரும் கழி தாழும் - செருந்தி மரங்கள் பெரிய கழியிலே வந்து தொங்கும்படி தழைத்து வளரும், எறிகடல் தண் சேர்ப்ப - அலை வீசுகின்ற கடலினது குளிர்ந்த கரையை உடையவனே, உரிஞ்சி நடப்பாரை உள்ளடி நோவ நெருஞ்சியும் செய்வது ஒன்றில்லை - காலை உராய்ந்து நடப்பவரை உள்ளங் கால் நோவும்படி நெருஞ்சி முள்ளும் துன்பஞ் செய்வதில்லை. (அதுபோல), பெரும்பழியும் பேணாதார்க்கு இல்லை - பெரிய பழியும் அஞ்சிப் பாதுகாவாதவர்க்குத் துன்பம் செய்வது இல்லை. உரிஞ்சுதல் - உராய்தல் - காலைத் தேய்த்து நடத்தல். செருந்தி - ஒரு மரம். கழி - உப்பங்கழி, தாழ்தல் - தொங்குதல், கடற்கரையில் உள்ள மரங்கள் நீண்டு வளர்ந்து உப்பங் கழியில் தொங்கும். சேர்ப்ப - ஆடூஉ முன்னிலை. பழி - பிறர் பழிக்கத்தக்க செயல். பேணுதல் - பாதுகாத்தல். பேணாதார் - பாதுகாவாதார். நெருஞ்சி முள்ளுக்கு அஞ்சாமல் காலை உராய்ந்து நடப்ப வர்க்கு அம்முள்ளால் துன்பம் உண்டாவதில்லை. அது போல, பழிக்கு அஞ்சாமல் நடப்பவர்க்குப் பழியால் மனம் வருந்துதல் இல்லை என்பதாம். நல்லோர் பழிக்கு அஞ்சி நடப்பர். பொல்லார் பழிக்கு அஞ்சார் என்றபடி. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவல மிலர். (குறள்) ஆதலின், ‘பெரும் பழியும் பேணாதார்க் கில்லை’ என்றார், பழிக்கு அஞ்சி நடப்பதே நல்லொழுக்கமாகும். (8) 64. முந்தை யெழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு தந்தையும் தாயும் வழிபட்டு - வந்த ஒழுக்கம் பெருநெறி சேர்தலிம் மூன்றும் விழுப்ப நெறிதூரா வாறு. (திரி) முந்தை எழுத்தின் வரவு - இளமைப் பருவத்தில் கல்வியறிவு பெறுதலும், பிற்பாடு உணர்ந்து - அதன் பின்பு அக்கல்வியின் பயனை யுணர்ந்தும், தந்தையும் தாயும் வழிபட்டு வந்த ஒழுக்கம் - பெற்றோரை வழிபட்டுப் போற்றி வந்த ஒழுக்கமும், பெரு நெறி சேர்தல் இம்மூன்றும் - பெரியோரது வழியைச் சேர்தலும் ஆகிய இம்மூன்று செயலும், விழுப்ப நெறி தூரா ஆறு - உயர்வாகிய நெறியைத் தூர்க்காத வழிகளாம். முந்தை - முன்பு, இது இளமை குறித்தது. எழுத்து - கல்வி. வரவு - வருதல் - கற்றல். பெரு நெறி - பெரியோர்கள் ஒழுகும் வழி முறை. விழுப்பம் - உயர்வு. தூர்த்தல் - கெடுத்தல், தூரா - தூராத. ஆறு - வழி. உயர் நெறியைத் தூராத வழி எனவே, நல்லொழுக்கம் என்பதாயிற்று. இளமையில் கல்வி கற்றுக் கொள்ளுதலும், பெற்றோர்களை வழிபட்டுப் போற்றுதலும், சான்றோர் செல்லும் நெறியிற் செல்லு தலும் நல்லொழுக்கமாகும். (9) 65. உப்பின் பெருங்குப்பை நீர்படியி னில்லாகும் நட்பின் கொழுமுளை பொய்வழங்கி னில்லாகும் செப்ப முரைகோடி னில்லாகு மிம்மூன்றும் செப்ப நெறிதூரா வாறு. (திரி) உப்பின் பெரும் குப்பை - உப்பினது பெரிய குவியல், நீர் படியின் இல்லாகும் - நீர் படிந்தால் இல்லாமல் போகும், நட்பின் கொழு முளை - நட்பாகிய செழிய முளை, பொய் வழங்கின் இல்லாகும் - பொய்யாகிய நெருப்பைப் பெய்தால் அழிந்து போகும், செப்பம் உரை கோடின் இல்லாகும் - நடுவு நிலையானது ஒரு பக்கமாகப் பேசினால் கெட்டுப்போகும், இம்மூன்றும் செப்ப நெறி தூரா ஆறு - இம்மூன்றும் நல்வழியைக் கெடுக்காமைக்குக் காரணமானவையாம். குப்பை - குவியல். கொழுமை - செழுமை. முளை - பயிர் முளை. நட்பை முளை என்றதற்கேற்பப் பொய் நெருப்பெனப் பட்டது. இது ஒருகூற்றுருவகம். நெருப்பை இட்டால் பயிர் முளை அழிவது போல, பொய் பேசினால் நட்புக் கெட்டு விடும் என்பதாம். செப்பம் - நடுநிலைமை. உரை கோடல் - ஒரு பக்கமாகப் பேசுதல். ஒரு பக்கமாகத் தீர்ப்புக் கூறலுமாம். ‘சொற் கோட்டம் இல்லது - செப்பம்’ (குறள் - 119) என்றார் வள்ளுவரும். செப்பம் - நன்மை. செப்ப நெறி - நல்வழி. தூரா - தூராத. தூர்த்தல் - கெடுத்தல். ஆறு - காரணம். ‘செப்ப நெறி தூரா ஆறு’ என எதிர்மறையாகக் கூறிய தனால், ‘உப்புக் குவியலில் நீர் படியாமையும், நட்பினர் பொய் வழங் காமையும், நடுவர் உரை கோடாமையும் செப்ப நெறி தூரா ஆறு’ என எதிர்மறுத்துப் பொருள் கொள்ளப் படும். மூன்றையும் ஒரு சேரக் கூறினும், நீர் படிந்தால் உப்புக் குவியல் இல்லாமல் போவது போல, பொய் பேசினால் நட்பும், உரை கோடினால் நடு நிலைமையும் கெடும் என உவமையாகக் கொள்க. நண்பர்கள் பொய் பேசாமையும், நடுவர்கள் உரை கோடா மையும் ஒழுக்கமுடைமையாகும் என்பது கருத்து. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு (குறள்) சமன் செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. (குறள் 10) 66. ஈதற்குச் செய்க பொருளை அறநெறி சேர்தற்குச் செய்க பெருநூலை - யாதும் அருள்புரிந்து சொல்லுக சொல்லையிம் மூன்றும் இருளுலகஞ் சேராத வாறு. (திரி) ஈதற்குப் பொருளைச் செய்க - பிறர்க்குக் கொடுக்கும் பொருட்டுச் செல்வத்தைத் தேடுக, அறநெறி சேர்தற்குப் பெரு நூலைச் செய்க - பிறர் அறத்தின் வழியை அறிந்து நடப்பதற் காகச் சிறந்த நூல்களைச் செய்க, யாதும் சொல்லை அருள் புரிந்து சொல்லுக - எத்தகைய சொல்லையும் அருளை விரும்பிச் சொல்லுக, இம்மூன்று இருள் உலகம் சேராத ஆறு - ஆகிய இம்மூன்றும் துன்பவுலகத்தை அடையாத வழிகளாம். எனவே, இன்ப வுலகத்தை அடையும் வழிகள் என்பதாயிற்று. அருள் - இரக்கம். புரிதல் - விரும்புதல். அருள் விரும்பிச் சொல்லுதல் - இன்சொல் சொல்லுதல். இருள் - துன்பம், துன்ப வுலகம் - பெருந் துன்பம். பெருந்துன்பத் தினையே நரகம், நரக உலகம் என்று கற்பித்தனர். ஆறு - வழி. இல்லார்க்கு ஈதற்காகப் பொருளைத் தேடுதலும் - இல்லார்க்கு ஈதலும், பிறர் அறவழியை அறிந்து நடப்பதற் காகச் சிறந்த நூல்களைச் செய்தலும், பிறரிடம் பேசும்போது இனிமை யாகப் பேசுதலும் இன்பந் தருவன என்பதாம். இவை மூன்றும் நல்லொழுக்க மாகும் என்பது கருத்து. அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். (குறள்) முகத்தா னமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே யறம். (குறள் 11) 67. நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும் பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் - பண்பில் இழுக்கான சொல்லாடு வானுமிம் மூவர் ஒழுக்கங் கடைப்பிடியா தார். (திரி) நண்பு இல்லார் மாட்டு நசைக் கிழமை செய்வானும் - நட்புக் குணம் இல்லாதவரிடத்து நட்புச் செய்கின்றவனும், பெண் பாலைக் காப்பு இகழும் பேதையும் - மனைவியைக் காப்பதை இகழும் அறிவில்லாதானும், பண்பு இல் இழுக்கு ஆன சொல் ஆடுவானும் - குணமில்லாத வழுவுதலான சொல்லைச் சொல்பவனும், இம்மூவர் ஒழுக்கம் கடைப் பிடியாதார் - ஆகிய இம்மூவரும் ஒழுக்கத்தை உறுதியாகக் கொள்ளாதவராவர். நண்பு - நட்பு. மாட்டு - இடத்து. நசைக்கிழமை - நட்பு. காப்பு - காத்தல், காப்பு இகழ்தல் - பாதுகாவாது விட்டு விடுதல், அதாவது மனைவியை விட்டு வேறொருத்தியோடு இருத்தல், மனைவியைத் தாய்வீட்டுக்குத் துரத்திவிடல் முதலியன. பேதை - அறிவிலான். பண்பு - குணம். குணமில்லாத வழுவுதலான சொல் - கெட்ட சொல். கடைப்பிடித்தல் - உறுதியாகக் கொள்ளுதல். நட்புக் குணம் இல்லாதவரோடு நட்புச் செய்தலும், மனைவியைக் காவாமையும், இழிமொழி பேசுதலும் நல்லொழுக்கமல்ல. எனவே, நட்புச் செய்யாமையும், காத்தலும், பேசாமையும் நல்லொழுக்க மாகும் என்பதாம். கொள்ளற்க - அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. (குறள்) கற்புடையாள் பூப்பின்கண் சாராத் தலைமகனும். (திரிக) இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (குறள் 12) 68. பிழைத்தல் பொறுத்தல் பெருமை சிறுமை இழைத்ததீங் கெண்ணி யிருத்தல் - இழைத்த பகைகெட வாழ்வதும் பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று. (சிறு) பிழைத்தல் பொறுத்தல் பெருமை - தனக்குப் பிறர் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்ளுதல் பெருமையாகும், இழைத்த தீங்கு எண்ணி இருத்தல் சிறுமை - பிறர் செய்த தீமையை நினைத்துக் கொண்டே யிருத்தல் சிறுமையாகும், இழைத்த பகை கெட வாழ்வதும் - தான் செய்த பிழைகள் கெடும்படி வாழ்தலும், பல்பொருளார் நல்லார்நகை கெட வாழ்வதும் நன்று - பல பொருள்களையுடைய செல்வர்களும் பெரியோர்களும் ஏளனஞ் செய்வது நீங்க வாழ்தலும் நன்மையாம். பிழை - தீமை. இழைத்தல் - செய்தல். பகை - பிழை, குற்றம். நகைத்தல் - பழித்தல். செல்வர்களும் பெரியார்களும் பழிக்காமல் - ஏளனஞ் செய்யாமல் வாழ்தல் - இரவாமல் வாழ்தல். இரந்து வாழ வேண்டிய வறுமை நிலை ஏற்படினும் முயற்சி செய்து பொருள் தேடி இரவாமல் வாழ வேண்டும். அடிக்கடி ஏதாவது வேண்டிச் செல்வரிடம் சென்றால் அவர் ஏளனஞ் செய்வர். முயற்சியின்றி அவ்வாறு இரத்தலைப் பெரியோரும் ஏளனஞ் செய்வர் என்பதாம். பிறர் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளுதலும், அதை மறந்து விடுதலும், தான் முன்னர் அறியாது பிழைகள் செய்தாலும் பின்னர் அப்பிழைகளைச் செய்யாதிருத்தலும், செல்வரும் பெரி யோரும் ஏளனஞ் செய்யும் படி இரவாதி ருத்தலும் ஒழுக்க முடைமை என்பதாம். (13) 69. பெருங்குணத்தார்ச் சேர்மின் பிறன்பொருள்வவ் வன்மின் கருங்குணத்தார் கேண்மை கழிமின் ஒருங்குணர்ந்து தீச்சொல்லே காமின் வருங்காலன் திண்ணிதே வாய்ச்சொல்லே யன்று வழக்கு. (சிறு) பெருங்குணத்தார் சேர்மின் - நற்குணமுடையவர் களைச் சேருங்கள், பிறன் பொருள் வவ்வன்மின் - பிறன் பொருளைக் கவராதீர்கள், கருங்குணத்தார் கேண்மை கழிமின் - தீக்குணத்தார் நட்பை விடுங்கள். ஒருங்கு உணர்ந்து - (தீச்சொல்லின் தீமையை) முற்றுமுணர்ந்து, தீச்சொல்லே காமின் - (பிறர் வருந்தும்படி) தீய சொற்களைச் சொல்லாதீர்கள், காலன் வரும் திண்ணிதே - யமன் வருதல் உறுதியானதே, வாய்ச் சொல்லே அன்று வழக்கு - இது யான் சொல்லும் சொல் மாத்திரையன்று, உலகின்கண் வழங்கி வருகின்ற வழக்கமாகும். அதாவது உண்மை. வவ்வுதல் - கவர்தல். கருங்குணம் - கெட்ட குணம். உடலை விட்டு உயிர் பிரியும் நேரம் அல்லது காலத்தைக் காலன் என்பது நூன் மரபு. திருக்குறள் குழந்தையுரை முன்னுரை பார்க்க. திண்ணியது - உறுதியானது. வாய்ச் சொல் - ஒருவர் சொல்லும் சொல். வழக்கு - வழக்கம். சேர்மின் - வவ்வன்மின் முதலியன முன்னிலை ஏவற்பன்மை வினை முற்றுக்கள். காலன் வருவது - இறப்பது - உறுதியாகையால், அதுவரை பெருங்குணத்தார்ச் சேர்தல் முதலிய நல்லொழுக்க முடையவராய் வாழ்ந்து நற்பெயரெடுக்க வேண்டும் என்பது கருத்து. இது உலகத்தாரைப் பார்த்து ஒருவர் கூறுவது போலச் செய்யப்பட்டது. இறப்பது உறுதியாகையால், அதுவரை நற்குண முடைய வர்களைச் சார்ந்து, பிறன் பொருளை வௌவாமல், கெட்டவர் களுடன் சேராமல், பிறரைப் பார்த்துத் தீய சொற்கள் சொல்லாமல் வாழவேண்டு மென்பதாம். (14) 70. வைததனா னாகும் வசைவணக்கம் நன்றாகச் செய்ததனா னாகுஞ் செழுங்குலமுற் - செய்த பொருளினா னாகுமாம் போகம் நெகிழ்ந்த அருளினா னாகு மறம். (சிறு) வைததனான் வசை ஆகும் - (ஒருவன் பிறனை) வைததனால் அவனுக்கு வசை உண்டாகும், வணக்கம் நன்று ஆகச் செய்ததனால் செழுங் குலம் ஆகும் - பிறர்க்கு வணக்கமும் நன்மையும் பொருந்தச் செய்ததனால் வளமை யாகிய குடிப் பிறப்பு ஆகும், முன்பு செய்த பொருளினால் போகம் ஆகும் - முன்னர் ஈட்டிய பொருளினால் இன்பம் உண்டாகும், நெழிந்த அருளினால் அறம் ஆகும் - தன் மனம் நெகிழ்ந்த அருளினால் அறம் உண்டாகும். வைதல் - திட்டுதல், வகை - பழி, நன்று - நன்மை. ஆகச் செய்தல் - பொருந்தச் செய்தல், அதாவது பிறரிடம் வணக்கமாக பணிவாக - நடந்து கொள்ளுதல், பிறர்க்கு நன்மை செய்தல் என்பதாம். குலம் - குலமேன்மை. பிறரிடம் வணக்கமாக நடந்து கொள்ளுதலும் பிறர்க்கு நன்மை செய்தலும் நற்குடிப் பிறப்பின் இலக்கணமாகும். “குலம் வேண்டின் வேண்டும் யார்க்கும் பணிவு” (குறள் - 960). ஆம் - அசை, போகம் - இன்பம், நெகிழ்தல் - உருகுதல். பிறரை வைவதால் பழியும், வணக்கமும், நன்மையும், பொருந்த நடப்பதால் குலமேன்மையும், பொருளினால் இன்பமும் அருளினால் அறமும் உண்டாகும் என்பதாம். பிறரை வையாதிருத்தலும், பணிவாகவும், நன்மையுண் டாகவும் நடந்து கொள்ளுதலும், பொருளீட்டி இன்புற்று வாழ்தலும், அருளால் அறனுடையராதலும் ஒழுக்க முடைமை யாகுமென்ப தாம். (15) 71. தான்பிறந்த வின்னினைந்து தன்னைக் கடைப்பிடித்துத் தான்பிற ராற்கருதற் பாடுணர்ந்து - தான்பிறராற் சாவ வெனவாழான் சான்றோராற் பல்யாண்டும் வாழ்க வெனவாழ்தல் நன்று. (சிறு) தான் பிறந்த இல் நினைந்து - தான் பிறந்த குடிப் பெருமையை நினைந்து, தன்னைக் கடைப்பிடித்து - அதற்குத் தகத் தன்னை நல்லொழுக்கத்தினின்று வழுவாதபடி காத்து, தான் பிறரால் கருதற் பாடு உணர்ந்து - தான் பிறராலே மதிக்கப்படுதற்குரிய செயல்களை அறிந்து, தான் பிறரால் சாவ என வாழான் - பிறராலே ‘இவன் செத்தொழிக’ என்று வெறுத்துக் கூறும்படி நடந்து கொள்ளாது, சான்றோரால் பல்யாண்டும் வாழ்க என வாழ்தல் நன்று - பெரியோர்களால் ‘இவன் பல்லாண்டு வாழ்க, என வாழ்த்தும்படி ஒருவன் நல்லொழுக்கமுடையவனாக வாழ்தல் நல்லது. இல் - குடி. இங்கே குடிப்பெருமையை உணர்த்திற்று. கடைப் பிடித்தல் - உறுதியாகப் பற்றுதல். பாடு - பெருமை. கருதற்பாடு - எண்ணுதற்கேற்ற பெருமையைத் தரும் செயல்கள். வாழான் - முற்றெச்சம். ஒருவன் தன் குடிப்பெருமையை நினைந்து, அதற்கேற்ப ஒழுகி, பிறரால் மதித்தற்குரிய நற்செயல்களையே செய்து, பிறர், ‘இவன் அழிந்தொழிக’ என வெறுத்துக் கூறும்படி தீய ஒழுக்கம் ஒழுகாது, பெரியோர்களால், ‘இவன் நீடுவாழ்க’ என வாழ்த்தும் படி நல்லொழுக்கமுடையனாய் நடந்துகொள்ளுதல் நல்லது என்பதாம். ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். (குறள்) ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை, இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. (குறள்) (16) 72. இடர்தீர்த்த லெள்ளாமை கீழினஞ் சேராமை படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் - நடைதீர்த்தல் கண்டவர் காமுறுஞ்சொற் காணிற் கலவியின்கண் விண்டவர்நூல் வேண்டா விடும். (ஏலா) இடர் தீர்த்தல் - பிறர்க்கு நேரிட்ட துன்பத்தை நீக்கு தலையும், எள்ளாமை - பிறரை இகழாமையையும், கீழ் இனம் சேராமை - கீழ் மக்களைச் சேராமையையும், யார்க்கும் படர் தீர்த்தல் - பசித்தவர் யாவர்க்கும் பசித் துன்பத்தை நீக்குதலையும், பழிப்பின் நடை தீர்த்தல் - அறிவுடையோர் பழித்தலையுடைய நடக்கையினின்றும் தன்னை நீக்குதலையும், கண்டவர் காமுறும் சொல் காணின் - எதிர்ப்பட்டவர் விருப்பப்படுகின்ற இன்சொல் சொல்லு தலையும் ஒருவன் உடையவனாவானாயின், கலவியின் கண் விண்டவர் நூல் வேண்டா விடும் - அவனுக்கு, இல்வாழ்க்கையினின்று நீங்கிய அறவோர் செய்த அற நூல்கள் வேண்டாதனவாய் விடும். இடர் - துன்பம். எள்ளல் - இகழ்தல். கீழ்இனம் - கீழ்மக்கள் கூட்டம். படர் - பசித்துன்பம். ‘இடர்’ எனமேல் வந்ததால் இது பசித்துன்ப மாயிற்று. பழிப்பின் நடை - பிறர் பழிக்கும் நடக்கை, தீய நடக்கை. காமுறுதல் - விரும்புதல். காணல் - உடையவனாதல். கலவி - புணர்ச்சி. கலவியின் கண் விண்டவர் - புணர்ச்சி யின்பத்தைத் துறந்த பெரியோர்கள். பிறர்க்கு உண்டான துன்பத்தைத் தீர்த்தல், பிறரை இகழா திருத்தல், கீழ் மக்களைச் சேராதிருத்தல், பிறர் பசியைப் போக்குதல், தீய ஒழுக்கத்தை நீக்குதல், இன்சொல் சொல்லுதல் ஆகியவற்றை ஒருவன் உடையவனாயின் அவன் அறநூல்களைப் படிக்க வேண்டிய தில்லை என்பதாம். இவை சிறந்த அறங்களாகையால், இவ்வாறு நடப் போனுக்கு அறநூல்களைப் படித்துத் தெரிந்து கொள்ளக் கூடிய அறம் ஒன்றும் இல்லை என்பது கருத்து. (17). 73. நிறையுடைமை நீர்மை யுடைமை கொடையே பொறையுடைமை பொய்ம்மை புலாற்கண் - மறையுடைமை வேயன்ன தோளாய்! இவையுடையான் பல்லுயிர்க்கும் தாயன்ன னென்னத் தகும். (ஏலா) வேய் அன்ன தோளாய் - மூங்கிலையொத்த தோளை யுடையவளே, நிறை உடைமை - பிறர்பொருள் முதலியவற்றில் செல்லாமல் மனத்தை நிற்கச் செய்தலை உடையவனாதலும், நீர்மை உடைமை - நற்குணத்தையுடையவனாதலும், கொடை - உடைமை - வறியவர்க்குக் கொடக்கும் கொடைக் குணத்தை யுடையவனா தலும், பொறை - உடைமை - தனக்குத் தீமை செய்த வனுக்குத் தானும் தீமை செய்யாமல் பொறுத்தலை யுடையவ னாதலும், பொய்ம்மை புலால்கண் மறை உடைமை - பொய் பேசாமைiம் புலாலுண்ணாமையும் உடையவனாதலும், இவை உடையான் - ஆகிய இச் செயல்களை யுடையான். பல் உயிர்க்கும் தாய் அன்னன் என்னத்தகும் - பல உயிர்களுக்கும் தாய் போன்றவன் என்று சொல்லத்தகும். நிறை - ‘நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை’ என்பதால், மறையைப் (ரகசியத்தை) பிறரிடம் சொல்லாமையு மாம். நீர்மை - குணம், தன்மை. மறை - மறுத்தல். அதாவது மனம் விரும்புவதை மறுத்தல். வேய் - மூங்கில். வேயன்ன தோளாய் - மகடூஉ முன்னிலை. பிறர் பொருள்மேற் செல்லாமல் மனத்தை நிறுத்துதலும், நற்குண முடைமையும், கொடைக்குணமும், பொறுமையும், பொய் பேசாமையும், புலாலுண்ணாமையும் உடையவன் பிறர்க்குத் தாய்போன்றவனாவான். இவன் பிறரிடம் மிக்க அன்புடைய னாதலால், ‘தாயன்னன்’ என்றார். ஆசிரியர் சமணராதலால், புலாலுண்ணாமையை ஒழுக்கமாகக் கூறினார். (18). 74. கற்றாரைக் கற்ற துணரா ரெனமதியார் உற்றாரை யன்னண மோராராய் - அற்றார்கட் குண்டி யுறையு ளுடுக்கை யிவையீந்தார் பண்டிதராய் வாழ்வார் பயின்று. (ஏலா) கற்றாரைக் கற்றது உணரார் என மதியார் - கற்று வல்லாரைத் தாம் கற்ற கல்விப் பொருளை அறியமாட்டார் என்று எண்ணார், உற்றாரை அன்னணம் ஓராராய் - நட்பினரை அவ்வாறு (நாம் அன்பு வைத்திருப்பதுபோல அவர் நம்மேல் அன்பு வைத்திலர் என்று) எண்ணாராய், அற்றார்கட்கு உண்டி உறையுள் உடுக்கை இவை ஈந்தார் - வறியவர்கட்கு உணவும் இருப்பிடமும் உடையும் ஆகிய இவற்றை உதவுவோர், பண்டிதராய் பயின்று வாழ்வார் - உலகத்தவ ரால் புலவர்களைப்போல மதிக்கப் பட்டு யாவரோடும் கலந்து வாழ்வார்கள். உணர்தல் - அறிதல். மதித்தல் - எண்ணுதல். உற்றார் - நண்பர். அன்னணம் - அவ்வாறே. ஓர்தல் - எண்ணுதல். அற்றார் - பொருளற்றார், வறியர். உறையுள் - இருக்க இடம். ஏழைகட்கு மருத்துவம் செய்தல், கற்க உதவுதல் முதலியனவுங் கொள்க. பயிலல் - பழகல். கற்றவரின் கல்வித்திறத்தை மதித்தல், நண்பரின் நட்பு ரிமையை நம்புதல், ஏழைகட்கு உணவு முதலியன உதவுதல், ஆகிய இவை நல்லொழுக்கமாகும்என்பதாம். கற்றவரை அறிவிலார் என எண்ணுவதும். நண்பர்களை நம்பாமையும் அறிவிலார் செயலாகும். ஏழைகட்கு உதவுதல் உள்ளோர் கடமையாகும். (19) 75. பொய்யான் புலாலொடு கட்போக்கித் தீயன செய்யான் சிறியா ரினஞ்சேரான் - வையான் கயலிலுண் கண்ணாய் கருதுங்கா லென்றும் அயல வயலவா நூல். (ஏலா) கயல் இயல் உன்கண்ணாய் - கெண்டைமீனைப் போலப் பிறழ்கின்ற மையுண்ட கண்களையுடையவளே, என்றும் பொய்யான் - எப்போதும் ஒருவன் பொய் சொல்லா மலும், புலாலொடு கள் போக்கி - புலாலுண்ணுதலையும் கள்ளுண்ணு தலையும் நீக்கி, தீயன செய்யான் - தீய செயல்களைச் செய்யாமலும், சிறியார் இனம் சேரான் - சிற்றினம் சேராமலும், வையான் - பிறரை இகழாமலும் நடப்பானாயின், கருதுங்கால் நூல் அயல அயல - நோக்கு மிடத்து அறநூல்கள் அவனுக்கு வேண்டுவனவே அல்ல. புலாலொடு கள் - புலாலையும் கள்ளையும். போக்கி - நீக்கி. கயல் - கெண்டைமீன். இயல் - தன்மை. உண்கண் - மையுண்ட கண், மையெழுதிய கண். கண்ணாய் - மகடூஉ முன்னிலை. கருதுதல் - எண்ணிப்பார்த்தல். அயல அயல - அடுக்கு; சிறிதுந் தேவையில்லை என்பது. பொய் பேசாமை முதலிய குணமுடையவனுக்கு அறநூல்கள் தேவையில்லை என்பது கருத்து. இவை சிறந்த அறங்கள் என்பதாம். (20) 76. கொல்லான் கொலைபுரியான் பொய்யான் பிறர் பொருள்மேற் செல்லான் சிறியா ரினஞ்சேரான் - சொல்லும் மறையிற் செவியிலன் தீச்சொற்கண் மூங்கை இறையிற் பெரியார்க் கிறை. (ஏலா) கொல்லான் கொலை புரியான் - தான் ஓருயிரையுங் கொல்ல மாட்டான், பிறர் செய்யுங் கொலையையும் விரும்ப மாட்டான், பொய்யான் - பொய் சொல்லான், பிறர் பொருள் மேல் செல்லான் - பிறர் பொருளை விரும்பான், சிறியார் இனம் சேரான் - சிற்றினம் சேரான், சொல்லும் மறையில் செவி இலன் - ஒருவரோடொருவர் பேசுகின்ற மறை பொருளில் கேட்குங் காதிலன், தீச்சொற்கண் மூங்கை - தீச்சொற்கள் சொல்வதில் ஊமை, இறையில் பெரியார்க்கு இறை - (இத்தகைய குணமுடையவன்) முதன்மையான குணம் உடையோர்க்கெல்லாம் முதல்வனாம். புரிதல் - விரும்புதல். சிலர் தாம் கொல்ல விரும்பாத உயிர்களைப் பிறரைக் கொண்டு கொல்லுதல் உண்டல்லவா? அஃதும் கூடாது என்பார். ‘கொலைபுரியான்’ என்றார். மறைமொழி - ரகசியம். செவியிலன் - செவிடன். மூங்கை - ஊமை. இறை - தலைமை, முதன்மை. இறையில் பெரியார்க்கு இறை - தலைமைக் குணமுடையோர்க்கெல்லாம் தலைவன் என்றபடி. இறை - தலைவன். ‘இறைமாட்சி’ என்னும் திருக்குறளில் காண்க. தான் ஓருயிரையுங் கொல்லாமலும், பிறர் கொல்லு தலை விரும்பாமலும், பொய் சொல்லாமலும், பிறர் பொருளைக் கொள்ளக் கருதாமலும், சிற்றினஞ் சேராமலும், பிறர் பேசும் மறைபொருளைக் கேளாமலும், தீச்சொல் சொல்லாமலும் இருப்பவன் முதன்மையான ஒழுக்கம் உடையோன் என்பதாம். (21) 77. குறுகான் சிறியாரைக் கொள்ளான் புலால்பொய் மறுகான் பிறர்பொருள் வௌவான் - இறுகானாய் ஈடற் றவர்க்கீவா னாயி னெறிநூல்கள் பாடிறப்ப பன்னு மிடத்து. (ஏலா) சிறியாரைக் குறுகான் -சிற்றினம் சேராமலும், புலால் கொள்ளான் - புலாலை விரும்பாமலும், பொய் மறுகான் - பொய்யை மறந்தும் சொல்லாமலும், பிறர் பொருள் வௌவான் - பிறர் பொருளைக் கொள்ளக் கருதாமலும், இறுகானாய் ஈடு அற்றவர்க்கு ஈவான் ஆயின் - பொருளை இறுகப்பிடியாமல் பொருளற்றவர்க்குக் கொடுப் பானானால், பன்னும் இடத்து நெறி நூல்கள் பாடு இறப்ப - எண்ணுமிடத்து அறநூல்கள் அவனுக்குப் பயன்படுவன வல்ல. குறுகுதல் - நெருங்குதல். சேர்தல் - நட்புக் கொள்ளல். மறுகுதல் - மறத்தல். வௌவுதல் - பறித்துக் கொள்ளுதல். இறுகுதல் - பொருளைச் செலவு செய்யாமல் இறுகப் பிடித்தல். ஈடு - கைம்மாறு. ஈடு அற்றவர் - கைம்மாறு செய்ய முடியாத வறியவர். பாடு - பெருமை. இறத்தல் - கடத்தல். பாடு இறத்தல் - பயன்படாமை. பன்னுதல் - கருதுதல், எண்ணுதல், சொல்லுதலுமாம். சிற்றினஞ் சேராமை முதலிய ஒழுக்க முடையவனுக்கு வேறு அறங்கள் தேவையில்லை என்பது கருத்து. (22). 78. இழுக்கா னியனெறி யின்னாத வெஃகான் வழுக்கான் மனைபொருள் வௌவான் - ஒழுக்கத்தால் செல்வான் செயரிலூ ணீவா னரசாண்டு வெல்வான் விடுப்பான் விரைந்து. (ஏலா) இயல் நெறி இழுக்கான் - நன்னெறியினின்றும் வழுவி நடவாமலும், இன்னாத வெஃகான் - பிறர்க்குத் துன்பந் தருவன வற்றைச் செய்ய விரும்பாமலும், மனை வழுக்கான் - இல்லற ஒழுக்கத்தினின்றுந் தவறாமலும், பொருள் வௌவான் - பிறர் பொருளைக் கவர நினையாமலும், ஒழுக்கத்தால் செல்வான் - நல்வழியில் தவறாமல் சென்று, செயிர்இல் ஊண் ஈவான் - குற்றமற்ற உணவை எளியவர்க்கு இடுபவன், அரசு ஆண்டு - அரசாண்டு, விரைந்து விடுப்பான் வெல்வான் - விரைவாய் நீங்கும்படி பகை வரை வெல்வான். இழுக்குதல் - தவறுதல். இயல்நெறி - நன்னெறி. இன்னாத - துன்பந் தருஞ் செயல்கள், வெஃகுதல் - விரும்புதல். வழுக்குதல் - தவறுதல். மனை - மனையறம், இல்லறம். ஒழுக்கத்தால் - ஒழுக்கத்தில். செல்வான் - சென்று; முற்றெச்சம். செயிர் - குற்றம். விடுத்தல் - எதிர்த்து நிற்றலை விடுத்தோடுதல். குற்றமற்ற உணவு - நல்வழியில் தேடிய உணவு. நன்னெறியில் தவறாமல், பிறர்க்குத் துன்பஞ் செய்யாமல், இல்லற நெறியில் வழுவாமல், பிறர் பொருளைக் கொள்ளக் கருதாமல், நேர்வழியில் தவறாமல் நடந்து, நல்வழியில் தேடிய உணவை எளியவர்க்கு இடுவான் செல்வாக்குடன் வாழ்வான் என்பதாம். (23) 79. களியான்கள் ளுண்ணான் களிப்பாரைக் காணான் ஒளியான் விருந்திற் குலையான் - எளியாரை எள்வானீத் துண்பானே லேதமில் மண்ணாண்டு கொள்வான் குடிவாழ்வான் கூர்ந்து. (ஏலா) களியான் - செருக்குக் கொள்ளாமலும், கள்ளுண்ணான் - கள்ளுண்ணாமலும், களிப்பாரைக் காணான் - குடிவெறி யாரைக் காண விரும்பாமலும், விருந்திற்கு ஒளியான் - விருந்தினரைக் கண்டால் ஒளிந்து கொள்ளாமலும், உலையான் - ஒழுக்கத்தில் தவறாமலும், எளியாரை எள்ளான் - ஏழைகளை இகழாமலும், ஈத்து உண்பானேல் - இரப்பவர்க்குக் கொடுத்துத் தானும் உண்டு வாழ்வானானால், ஏதம் இல் மண் ஆண்டு கொள்வான் - குற்ற மில்லாமல் நாட்டையாண்டு, குடி கூர்ந்து வாழ்வான் - குடும்பம் பெருகி வாழ்வான். களிப்பு - செருக்கு, களிப்பாரைக் காணல் - குடியரோடு கூடியிருத்தல். விருந்துக்கு ஒளித்தல் - விருந்தினர் வந்தால் வீட்டில் இல்லையென்று சொல்லும்படி சொல்லல். உலைதல் - தளர்தல். இங்கே தவறுதல். ஈத்து - ஈந்து. வலித்தல் விகாரம். ஏதம் - குற்றம் ஏதம் இல்லாமல்- முறைதவறாமல். கூர்ந்து - பெருகி - செல்வம் பெருகி. செல்வச்செருக்கில்லாமல், கள்ளுண்ணாமல், குடியரோடு சேராமல். விருந்தினர் வந்தால் மறைந்து கொள்ளாமல், ஒழுக்கத்தில் தவறாமல். ஏழைகளுக்கு ஈத்துண்பார் பெருஞ் செல்வாக்குடன் வாழ்வர் என்பதாம். (24) 80. பெரியார்சொற் பேணிப் பிறழாது நின்று பரியா வடியார்ப் பறியான் - காரியார்சொல் தேறா னியையான் தெளிந்திடிசி லீத்துண்பான் மாறான்மண் ணாளுமா மற்று. (ஏலா) பெரியார் சொல் பேணி - அறவொழுக்கங்களில் பெரியாரது சொல்லைப் போற்றி, பிறழாது நின்று -அந்நெறியில் தவறாது நின்று, அடியார் பரியா பறியான் -தன் வேலை ஆட்களை அவர் விரும்பாமல் நீக்குதல் செய்யானாய், கரியார் சொல் தேறான் இயையான் - வஞ்சகர் சொல்லை நம்பாமலும், அவரோடு நட்புக் கொள்ளாமலும். தெளிந்து அடிசில் ஈத்து உண்பான் கொடையின் பயனை ஆராய்ந்து பார்த்து இல்லார்க்கு இட்டு உண்பவன், மாறான் மண் ஆளும் - தவறாமல் நிலத்தை ஆள்வான். பேணுதல் - போற்றுதல். பிறழ்தல் - தவறுதல். பரிதல் - விரும்புதல். பரியா - பரியாமல் - விரும்பாமல். ஈறுகெட்ட எதிர் மறை வினையெச்சம். பறித்தல் - நீக்குதல். விரும்பாமல் நீக்கி, அதாவது வேலையை விட விருப்பமில்லாமல் என்பதாம். அடியார் - வேலையாட்கள். தொல்காப்பியரும், ‘அடியோர் பாங்கினும்’ என்றார்.வேலையாட்கள் விரும்பாதபோது வலிய நீக்குதல் கூடாது என்பதாம். கரியார் - வஞ்சகர். தேறுதல் - தெளிதல், நம்புதல். இயைதல் - பொருந்துதல், நட்புக் கொள்ளுதல். மாறான் - மாறாமல், தவறாமல். மற்று - அசை. பெரியார் சொல்லைப் போற்றி, அவர் சொல்லும் வழியில் நின்று; வேலைக்காரரை வலிய நீக்காமல், வஞ்சகர் சொல்லை நம்பாமல், அவரோடு நட்புக் கொள்ளாமல், ஏழைகளுக்கு ஈத்துண் பவர் பெருஞ் செல்வாக்குடன் வாழ்வர் என்பதாம். இத்தகைய ஒழுக்கமுடையோர்க்கு எல்லோரும் உதவுவ தால், செல்வாக்குப் பெருகலாயிற்று. (25) 81. வேற்றரவஞ் சேரான் விருந்தொளியான் தன்னில்லுள் சோற்றரவஞ் சொல்லியுண் பானாயின் - மாற்றரவம் கேளான் கிளையோம்பிற் கேடி லரசனாய் வாளான்மண் ணாண்டு வரும். (ஏலா) வேறு அரவம் சேரான் - பழிபாவங்களைத் தரும் சொற்களைப் பேசமாட்டான், விருந்து ஒளியான் - விருந் தினரைக் கண்டு ஒளிந்து கொள்ள மாட்டான், தன் இல்லுள் சோறு அரவம் சொல்லி உண்பான் ஆயின் - தன் வீட்டில் சோறிடுதற்குரிய சொல்லைச் சொல்லி இரவலர்க்கிட்டு உண்பானாயின், கிளை ஓம்பின் - சுற்றத்தாரையும் போற்று வானானால், மாற்று அரவம் கேளான் - பகைவரது சொல்லைக் கேளாமல், கேடுஇல் அரசன் ஆய் - அழிவில்லாத அரசனாகி, வாளால் மண் ஆண்டு வரும் - வாள் வெற்றியினால் நிலத்தை ஆண்டு வருவான். வேறு அரவம் - சொல்லத்தகாத சொல். அரவம் சொல். பழி - பிறர் பழிப்பது. பாவம் - குற்றமுடையது. சேர்தல் - பொருந்துதல், சொல்லுதல். சோற்றரவம் - சோறிடும்போது முகமலர்ந்து கூறும் இன்சொல். ‘முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்’ என்பது குறள் (92). மாறு - பகை. கிளை - சுற்றத்தார். கேளான் - கேளாமல். முற்றெச்சம். வாள் -வாள் வெற்றி. ஒருவன் தகாத சொற்களைச் சொல்லாமலும், விருந்திற்கு ஒளியாமலும், இரவலர்க்கு முகமலர்ந்து இனிய கூறிச் சோறிட்டும், சுற்றத்தாரைப் பாதுகாத்தும் வருவானாயின் அவன் பகை யின்றிப் பெருஞ் செல்வாக்குடன் வாழ்வான் என்பதாம். (26) 82. வணங்கி வழியொழுகி மாண்டார்சொற் கொண்டு நுணங்கியநூ னோக்கி நுழையா - இணங்கிய பானோக்கி வாழ்வான் பழிப்பில்லா மன்னனாய் நூனோக்கி வாழ்வான் நுனித்து. (ஏலா) மாண்டார் சொற்கொண்டு - பெரியார் சொல்லைக் கேட்டு, வணங்கி வழி ஒழுகி - அன்னாரை வழிபட்டு நல்வழியில் நடந்து, நுணங்கிய நூல் நுழையா நோக்கி - நுட்பமான பொருளையுடைய நூல்களை ஆராய்ந்து பார்த்து, இணங்கிய பால் நோக்கி வாழ்வான் - அவற்றுள் பொருந்திய பகுதிகளை அறிந்து வாழ்கின்றவன், பழிப்பு இல்லா மன்னனாய் - குடிமக்கள் பழிக்காத அரசனாய், நூல் நுனித்து நோக்கி வாழ்வான் - பல நூல்களையும் நுட்பமாக ஆராய்ந்தறிந் தார் போல் வாழ்வான். மாண்டார் - மாட்சிமையுடையார். வழிஒழுகல் - நல்வழியில் நடத்தல். நுணங்கிய - நுட்பமான. நுழையா - நுழைந்து - செய்யா என்னும் வாய்ப்பாட்டு உடன்பாட்டு வினையெச்சம். பால் - பகுதி. நுனித்து - நுட்பமாக. பெரியார் சொல்லைக் கேட்டு, அவரை வழிபட்டு நல்வழியில் நடந்து, நல்ல நூல்களை ஆராய்ந்து, அவற்றுள் சிறந்த பகுதிகளை யறிந்து வாழ்பவன் சிறந்த செல்வாக்குடன் வாழ்வான். (27) 83. பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு நிலக்கிழமை மீக்கூறம் கல்விநோ யின்மை இலக்கணத்தா லிவ்வெட்டும் எய்துப என்றும் ஒழுக்கம் பிழையா தவர். (ஆசா) என்றும் ஒழுக்கம் பிழையாதவர் - எப்போதும் ஒழுக்கந் தவறாது நடப்பவர், பிறப்பு - நற்குடிப் பிறப்பும், நெடு வாழ்க்கை - நீண்ட வாழ்நாளும், செல்வம் - செல்வமும், வனப்பு - அழகும், நிலக் கிழமை - நிலவுரிமையும், மீக்கூற்றம் - மேலான சொற் செலவும், கல்வி - கல்வியும், நோயின்மை - நோயற்ற வாழ்வும், இவ்வெட்டும் இலக்கணத்தால் எய்துப - ஆகிய இவ்வெட்டையும் இயல்பாகப் பெறுவர். ஒழுக்க முடைமையே உயர்குடிப் பிறப்பிற்குக் காரண மாகையால், ஒழுக்கமுடையவர் உயர்குடிப் பிறப்பை அடைவர் என்றார். நற்குடிப் பிறப்பு - நல்லொழுக்க முள்ள குடியில் பிறத்தல். இங்கு நல்லொழுக்கமுள்ள குடியினராதல். ஒழுக்க முடையார் தீச்செய்கை, பொறாமை முதலியன இல்லாராகை யால், அன்னார் வாழ்நாள் நீளுவதாயிற்று. நல்லொழுக்க முடையார்க்கு யாவரும் உதவுவராகையால் செல்வம் பெருகுவ தாயிற்று. ‘அகத்தினழகு முகத்தில் தெரியும்’ என்ற படி, ஒழுக்கமுடையாருள்ளம் மாசற்றி ருப்பதால், அவர் உடலழகுடையராய் இருப்பர். நிலக்கிழமை - பெருநில முடையராதல். கூற்றம் - சொல். மீக் கூற்றம் - மேலாகிய சொல். இங்கு சொற் செல்வாக்கையுணர்த்திற்று. ஒழுக்க முடை யார்க்கு ஆசிரியர் விரும்பிக் கற்பிப்பாராதலால் கல்வி பெருகுவ தாயிற்று. கவலையின்மையால் நோயற்ற வாழ்வு அமையும். இலக்கணம் - இயல்பு. இயல்பாக - எளிதில். எய்துப - அடைவர். பிழைத்தல் -தவறுதல். ஒழுக்கம் தவறாதவர் பிறப்பு முதலிய எட்டையும் எளிதில் அடைவர் என்பதாம். (28) 84. நன்றி யறிதல் பொறை யுடைமை இன்சொல்லோ பின்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ டொப்புர வாற்ற வறித லறிவுடைமை நல்லினத் தாரோடு நட்ட லிவையெட்டும் சொல்லிய ஆசார வித்து. (ஆசா) நன்றி அறிதல் - தனக்குப் பிறர் செய்த நன்றியை அறிதலும், பொறை உடைமை - பிறர் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளுதலும். .இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை - இன்சொல் சொல்லுதலும் பிறர்க்குத் துன்பஞ் செய்யாமையும், கல்வியோடு ஒப்புரவு ஆற்ற அறிதலும் -கல்வி கற்றலும் ஒப்புரவு செய்தலை மிகவும் அறிதலும், அறிவுடைமை - அறிவுடைமையும், நல்இனத்தா ரோடு நட்டல் இவை எட்டும் - நல்லாரோடு நட்புக் கொள்ளு தலும் ஆகிய இவை எட்டும், சொல்லிய ஆசார வித்து - அறநூல்களில் சொல்லப்பட்ட ஒழுக்கங் கட்குக் காரணங் களாம். நன்றி - நன்மை, உதவி. கற்றவர் பெரும்பாலும் நல்லொழுக்க முடையராகவே இருத்தலின் கல்வியும் ஒழுக்கத்திற்குக் காரண மாயிற்று. ஒப்புரவாவது - தன்செல்வம் பலவகை யிலும் பிறர்க்குப் பயன்பட வாழ்தலாம். ஆற்ற - மிக. ஐந்தடியான் வந்ததால் இது, பஃறொடை வெண்பா. நன்றியறிதல் முதலிய எட்டும் நல்லொழுக்கத்திற்குக் காரணமாத லால் அவற்றைக் கடைபிடித்து நடக்க வேண்டு மென்பதாம். (29) 85. வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும் நல்லறமும் ஒண்பொருளுஞ் சிந்தித்து வாய்வதில் தந்தையுந் தாயுந் தொழுதெழுக என்பதே முந்தையோர் கண்ட முறை. (ஆசா) வைகறை யாமம் துயில் எழுந்து - வைகறையாகிய பின் யாமத்திலே விழித்தெழுந்து, தான் செய்யும் நல்லறமும் ஒண் பொருளும் சிந்தித்து - தான் அன்று செய்யும் நல்ல அறங் களையும் சிறந்த பொருள் வருவாயையும் ஆராய்ந்து பார்த்து, வாய்வதில் தந்தையும் தாயும் தொழுது எழுக என்பது - இயன்ற மட்டிலும் பெற்றோரைத் தொழுக என்பது, முந்தை யோர் கண்ட முறை - அறிவுடைய முன்னையோர் கண்ட முறையாகும். வைகறை யாமம் - பின் யாமம்; பொழுது புலர ஐந்து நாழிகைக்கு முன்; தலைக் கோழி கூவும் நேரம். வைகறை யாமம் - வைகறையாகிய யாமம். இருபெயரொட்டு. துயில் - தூக்கம். ஒண் பொருள் - சிறந்த பொருள். சிந்தித்தல் - எண்ணிப்பார்த்தல். வாய்வது - உண்மை. வாய்வதில் - உண்மையில், தப்பாமல். தொழுதெழுதல் - தொழுதல். முந்தையோர் - முன்னோர் - அறநூலோர். விடியற் காலையில் விழித்தெழுந்து, அன்று செய்யும் நற்செயல் களையும், பொருள் தேடும் வழிகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். பின்னர்ப் பெற்றோரை வணங்க வேண்டும். அதன் பின்னர்ச் செயலில் இறங்க வேண்டும் என்பதாம். இரவில் படுத்ததும் தூக்கம் வருவதில்லை. காலையில் விழித்தெழுந்ததும் திடீரென்று வேலை செய்யத் தொடங்குவ தில்லை. ஆகையால், ஒவ்வொரு நாளும் படுத்துத் தூக்கம் வரும் வரை அன்று செய்த செயல்களை எண்ணிப் பார்க்க வேண்டும். ஏதாவது குற்றம் செய்திருந்தால் அதற்காக எண்ணி யிரங்கி, இனி அத்தகைய குற்றம் செய்யாதிருக்க முயல வேண்டும். அவ்வாறே, ஒவ்வொரு நாளும் காலையில் விழித்ததும் அன்று செய்யப்போகும் நல்ல காரியங்களையும், பொருள் தேடும் வழிகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு நாடோறும் செய்து வந்தால் யாதொரு குற்றங் குறையும் ஏற்படா. பிறரை ஏமாற்றாது பொருள் தேட வேண்டும். ஆகையால் பொருள் தேடும் வழிகளை எண்ணிப் பார்த்தலும் ஒழுக்கமுடைய தாயிற்று. பெற்றோரை நேரில் வணங்குதலே யன்றி, மனத்தால் தொழுதலுங் கொள்க. வைகறைத் துயிலெழு - ஒளவையார் (30). 86. விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை இவர்க்கூண் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும் ஒழுக்கம் பிழையா தவர். (ஆசா) என்றும் ஒழுக்கம் பிழையாதவர் - எப்போதும் ஒழுக்கம் தவறாதவர், விருந்தினர் மூத்தோர் பசு சிறை பிள்ளை இவர்க்கு - விருந்தினர் மிக மூத்தோர் மாடு பறவை சிறுவர் என்னும் இவர்கட்கு, ஊண் கொடுத்தல்லால் உண்ணார் - உணவு இடாமல் தாம் உண்ணார். மூத்தோர் - பாட்டன் பாட்டி முதலிய முதியோர். சிறை - பறவை - கிளி, கோழி முதலியவை. விருந்தினர் மூத்தோர் என்னும் உயர் திணைப் பெயர்களோடு சேர்த்தப் பசு சிறை முதலியவற்றையும் ‘இவர்க்கு’ என்றார். இது மூன்றடியால் வந்தமையான் சிந்தியல் வெண்பா. (31) 87. பழியா ரிழியார் பலருள் உறங்கார் இசையாத நேர்ந்து கரவார் இசைவின்றி இல்லாரை எள்ளி இகழ்ந்துரையார் தள்ளியும் தாங்கருங் கேள்வி யவர். (ஆசா) தாங்கரும் கேள்வியவர் - பிறரால் பொறுத்தற்கரிய அறிவினை யுடையோர், பலருள் பழியார் இழியார் - பலர் நடுவில் பிறரைப் பழித்தும் இழித்தும் கூறார், பலருள் உறங்கார் - பலர் பேசிக் கொண் டிருக்கும் போது அங்கே படுத்துத் தூங்கார், இசையாத நேர்ந்து கரவார் - தம்மால் செய்ய முடியாததைச் செய்வதாகக் கூறிச் செய்யாதொழியார், இசைவு இன்றி இல்லாரைத் தள்ளி எள்ளி இகழ்ந்து உரையார் - தகுதியில்லாமல் வறியோரை வரம்பு கடந்து மிகவும் இகழ்ந் துரையார். பழித்தல் - இகழ்தல். இழித்தல் - தாழ்த்திக் கூறுதல். இசையாத - தம்மால் முடியாத காரியங்கள். நேர்தல் - செய்வதாக உடன்படல். கரத்தல் - தவிர்தல் - செய்யா தொழிதல். தம்மால் முடியாததைச் செய்வதாக உடன்படக் கூடாதென்பதாம். எள்ளி இகழ்தல் - ஒருபொருட் பன்மொழி - மிகவும் இகழ்தல் என்றபடி. தள்ளுதல் - வரம்பு கடத்தல். தள்ளியும். உம் - அசை. தாங்குதல் - பொறுத்தல். தாங்கரும் -பொறுத்தற்கரிய; சிறந்த என்றபடி. கேள்வி - அறிவு. பலரிடைப் பிறரைப் பழித்தும் இழித்தும் கூறுதலும், பலர் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கே படுத்துத் தூங்குதலும், தம்மால் முடியாததைச் செய்வதாக உடன் படலும், எளியாரை மிகவும் இகழ்ந்துரைத்தலும் ஒழுக்க முடைமையல்ல வென்பதாம். சிறந்த அறிவினையுடையோர் அங்ஙனம் செய்யா ரென்பது கருத்து. (32) 88. படிறும் பயனிலவும் பட்டி யுரையும் வசையும் புறனும் உரையாரே என்றும் அசையாத உள்ளத் தவர். (ஆசா) என்றும் அசையாத உள்ளத்தவர் - எப்போதும் தளராத உள்ள முடையவர், படிறும் பயனிலவும் பட்டி உரையும் - வஞ்சனைச் சொல்லும் பயனில்லாத சொல்லும் கீழ்த்தரமான சொல்லும், வசையும் புறனும் உரையார் - பழிச் சொல்லும் கோட் சொல்லும் சொல்லார். படிறு - வஞ்சனை. பயனில - வீண் பேச்சு. பட்டியுரை - வாய்க்கு வந்தபடி பேசுதல். மட்டமான பேச்சு. வசை - பழிச் சொல். புறம் - கோட் சொல்லுதல். இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல். (குறள்) பயனிலசொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல். (குறள்) இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (குறள்) அறஞ் சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். (குறள்) எண்ணம் சொல் செயல் மூன்றனுள் சொல்லொழுக்கம் கூறப்பட்டது. (33) 89. தெறியொடு கல்லேறு வீளை விளியே விகிர்தம் கதங்கரத்தல் கைபுடை தோன்ற உறுப்புச் செகுத்தலோ டின்னவை யெல்லாம் பயிற்றார் நெறிப்பட்டவர். (ஆசா) நெறிபட்டவர் - நல்வழியில் நடப்பவர்கள், தெறியொடு கல்லேறு வீளை விளியே - பொருள்களை வீசியெறிதலும் கல்லெறி தலும் கனைத்தலும் தொலைவில் போகின்றா னொருவனை அழைத்தலும், விகிர்தம் கதம் கரத்தல் கைபுடை - பிறரைப் பழித்துக் காட்டலும் விரைந்தோடு தலும் ஒளிந்து கொள்ளுதலும் கை தட்டுதலும், தோன்ற உறுப்புச் செகுத்த லோடு இன்னவை எல்லாம் பயிற்றா - பிறர்க்குத் தெரியும்படி உறுப்பசைத்தலும் ஆகிய இத்தகையன வெல்லாம் செய்யார். தெறித்தல் - வீசியெறிதல். பிறர் ஏதாவது கொடுத்தால் அது தனக்குப் பிடிக்காவிட்டால் அதை வீசி யெறிதல். சினங் கொண்ட போது சட்டி, பானை, செம்பு முதலிய பொருள் களை எடுத்து வாசலில் எறிதல் முதலியன. கல்லெறிதல் - நடக்கும் வழியில் கற்களை வீசுதல். வீளை - கனைத்தல், சீக்கியடித்தல் முதலியன. விகிர்தம் - பிறர் பேசுவது நடப்பது முதலியன போலத் தானும் பேசி நடந்து பழித்துக் காட்டுதல். கதம் - விரைவு. வழியில் அங்குமிங்கும் விரைந்தோடுதல். கரத்தல் - யாராவது தன்னைப் பார்க்க வந்தால் ஒளிந்து கொள்ளுதல். கைபுடை - கை தட்டுதல். தொலைவில் செல்வோரைக் கை தட்டி அழைத்தலுமாம். செகுத்தல் - அசைத்தல். கண், மூக்கு, வாய் முதலிய உறுப்புக்களை பார்ப்பவர்க்கு அருவருப்பு உண்டாகும்படி அசைத்தல் (அங்க சேட்டை). இவையெல்லாம் பழிக்கத்தக்க செயல்களாகும். இத்தகைய செயல்களைச் செய்தல், இவ்வாறு நடந்து கொள்ளுதல் ஒழுக்க முடைமை யன்று என்பதாம். (34) 90. நல்குர வாற்றப் பெருகினுஞ் செய்யாரே தொல்வரவிற் றீர்ந்த தொழில். (ஆசா) நல்குரவு ஆற்றப் பெருகினும் - வறுமை மிகப் பெரிய தாயிற் றாயினும், தொல்வரவில் தீர்ந்ததொழில் செய்யார் - தம் பழங்குடி மரபுக்குப் புறம்பான செயல்களைச் செய்யார். நல்குரவு - வறுமை. ஆற்ற - மிக. தொல் வரவில் தீர்ந்த தொழில் - பழங்குடி யொழுக்கத்திற்குத் தகாத செயல். வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரித லின்று. (குறள்) (35) 91. பெரியா ருவப்பன தாமுவவார் இல்லம் சிறியாரைக் கொண்டு புகாஅர் - அறிவறியாப் பிள்ளையே யேனு மிழித்துரையார் தம்மோ டளவளா வில்லா விடத்து. (ஆசா) பெரியார் உவப்பன தாம் உவவார் - பெரியார் விரும்பு வனவற்றைத் தாம் விரும்பார், இல்லம் சிறியாரைக் கொண்டு புகார் - தம் வீட்டிற்குள் கீழ் மக்களை அழைத்துக் கொண்டு போகார், தம்மோடு அளவளாவு இல்லாஇடத்து - தம்முடன் மனங் கலந்த நட்பு இல்லாதபோது - அறிவு அறியாப் பிள்ளையே யேனும் இழித்து உரையார் - அறிவில்லாத பிள்ளையே யாயினும் உயர்த் தன்றி இழித்துக் கூறார். உவத்தல் - விரும்புதல். சிறியார் - கீழ் மக்கள், கெட்ட குணமுள்ளவர். அளவளாவுதல் - மனங்கலந்துறவாடுதல். இல்லம் சிறியாரைக் கொண்டு புகல் - கெட்ட குணமுள்ளவர் களைத் தம் வீட்டினுள் தாராளமாகப் பழகும்படி செய்தல். அவ்வாறு பழகும் படி செய்தால் அன்னார் கெட்ட நடத்தை செய்யத் தலைப்படுவர் என்பதாம். கல்லார்க் கினனாய் ஒழுகலும் காழ் கொண்ட இல்லாளைக் கோலால் புடைத்தலும் - இல்லம் சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும் அறியாமை யான் வரூங் கேடு (திரிகடு) பெரியார் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாமையும், கீழ் மக்களை வீட்டினுள் பழகும்படி செய்யாமையும், நெஞ்சு கலந்த அன்பில்லாதவர் சிறு பிள்ளையாயினும் இழிவாகப் பேசாமையும் ஒழுக்கமுடைமையாகும் என்பதாம். மனங் கலந்த அன்புடையராயின், தவறு கண்ட விடத்து இடித்துக் கூறித் திருத்தலாம் என்றபடி. (36) 92. நகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல் இவையும் பெரியார்முன் செய்யாரே செய்யின் அசையாது நிற்கும் பழி. (ஆசா) நகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல் இவையும் - சிரித்தல் கொட்டாவி விடுதல் காறியுமிழ்தல் தும்முதல் என்னும் இவையும், பெரியார் முன் செய்யார் - பெரியார் எதிரில் செய்யார், செய்யின் அசையாது பழி நிற்கும் - செய்தால் கெடாது பழி நிற்கும். பெரியார் முன்பு சிரித்தல் முதலியன செய்யக் கூடாது. செய்யின் பிறர் பழிப்பர் என்பதாம். (37) 93. உதவிப் பயனுரையார் உண்டி பழியார் அறத்தொடு தாநோற்ற நோன்பு வியவார் திறத்துழி வாழ்துமென் பார். (ஆசா) திறத்துழி வாழ்தும் என்பார் - நல்லொழுக்கத்தின்கண் வாழ்வோம் என்று எண்ணுவோர், உதவிப் பயன் உரையார் - தாம் ஒருவர்க்குச் செய்த நன்மையைப் பிறரிடம் சொல்லார், உண்டி பழியார் - தமக்குப் பிறர் இட்ட உணவை இகழ்ந் துரையார், அறத்தொடு தாம் நோற்ற நோன்பு வியவார் - தாம் செய்த அறத்தையும் நோன்பையும் புகழ்ந்துரையார். உதவிப் பயன் - தாம் செய்த உதவியால் செய்யப்பட்டார் அடைந்த நன்மை. உண்டி - உணவு. நோற்றல் - செய்தல். வியத்தல் - புகழ்தல். திறம் - ஒழுக்கம். உழி - கண்; ஏழனுருபு. திறத்து உழி - ஒழுக்கத்தின்கண். தாம் ஒருவர்க்குச் செய்த நன்மையைப் பிறரிடம் சிறப் பித்துக் கூறுதலும், பிறர் இட்ட உணவைப் பழித்தலும், தாம் செய்த அறத்தையும் நோன்பையும் தாமே புகழ்தலும் முறை யல்ல என்பதாம். (38) 94. தன்னுடம்பு தாரம் அடைக்கலந் தன்னுயிர்க்கென் றுன்னித் துவைத்த பொருளோ டிவைநான்கும் பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால் மன்னிய ஏதந் தரும். (ஆசா) தன் உடம்பு - தன் உடம்பையும், தாரம் - மனைவி யையும், அடைக்கலம் - தன்னிடம் அடைக்கலமாக ஒருவன் வைத்த பொருளும், தன் உயிர்க்கு என்று உன்னி துவைத்த பொருளோடு இவை நான்கும் - தனக்கு வேண்டும்போது உதவியாக எண்ணிச் சேர்த்து வைத்த பொருளும் ஆகிய இந்நான்கினையும், பொன்னி னைப் போல் போற்றிக் காத்து உய்க்க - பொன்னைப் போலப் பாதுகாத்தொழுக வேண்டும், உய்யாக்கால் மன்னிய ஏதம் தரும் - அவ்வாறு ஒழுகாவிடத்து மிகுந்த துன்பத்தைத் தரும். உடம்பை நோய்க்கிடமாகாமல் உண்டி ஒழுக்க முதலிய வற்றால் காத்தல் வேண்டும். தாரம் - மனைவி. நடக்கையால் மனைவி தன்பால் வெறுப்புக் கொள்ளாமல் அன்பாக நடந்து கொள்ளும்படி காத்தல் வேண்டும். மனைவி வெறுப்புக் கொள்ளின் குடும்பம் ஒழுங்காக நடைபெறாததோடு, அவள் தற்கொலை செய்து கொள்ளவுங் கூடுமென்க. உன்னி - எண்ணி. துவைத்தல் - சேர்த்து வைத்தல். பொன்னினைப் போற்றிக் காத்தல் - கண்ணுங் கருத்துடன் பாதுகாத்தல். உய்த்தல் - ஒழுகல், நடத்தல். மன்னிய - மிகுந்த. ஏதம் - குற்றம். தன் உடம்பையும், தன் மனைவியையும், தன்னிடம் ஒருவர் அடைக்கலமாக வைத்த பொருளையும், வேண்டும் போது உதவு வதற்காகச் சேர்த்து வைத்த பொருளையும் நன்கு பாதுகாத்தல் ஒழுக்கமுடைமை என்பதாம். நோய்க் கிடங்கொடேல் -ஒளவையார். கற்புடையாள் பூப்பின்கண் சாராத் தலைமகனும் (திரிகடுகம்) இல்லாளைக் கோலால் புடைத்தலும் இம்மூன்றும் அறியாமை யான்வருங் கேடு (திரிகடுகம்) பொருடனைப் போற்றிவாழ் (ஒளவையார்) (39) 95. சூதர் கழகம் அரவ மறாக்களம் பேதைக ளல்லார் புகாஅர் - புகுபவேல் ஏதம் பலவுந் தரும். (ஆசா) சூதர் கழகம் - சூதாடுமிடத்தும், அரவம் அறாக்களம் - ஆரவாரம் நீங்காத விடத்தும், பேதைகள் அல்லார் புகார் - அறிவிலிகளல்லார் புகார், புகுபவேல் ஏதம் பலவும் தரும் - புகுவராயின் துன்பங்கள் பலவும் உளவாம். அரவம் - ஆரவாரம். அதாவது வாய்ப்போர். வாய்ச் சண்டை செய்யும் இடம். இவ்விரு இடங்கட்கும் அறிவுடை யார் செல்லார் என்பதாம். பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் (குறள்) (40) 96. நல்லினஞ் சாரல் நயனுணர்தல் பல்லாற்றால் நல்லின மோம்பல் பொறையாளல் - ஒல்லும்வாய் இன்னார்க் கினிய புரிதல் நெறிநிற்றல் நன்னாப்ப ணுய்ப்பதோ ராறு. (இன்னி) நல் இனம் சார்தல் - நல்லவர்களைச் சார்ந்து வாழ்தல், நயன் உணர்தல் - நூல்கள் கூறும் நீதியை அறிதல், பல் ஆற்றால் நல்இனம் ஓம்பல் - பல வழியிலும் நல்லொழுக்க முடையாரைப் போற்றுதல், பொறை ஆளல் - பொறுமையைக் கைக்கொள்ளுதல், இன்னார்க்கு ஒல்லும் வாய் இனிய புரிதல் - தனக்குத் தீமை செய்தவர்க்கும் இயலும் இடங்களில் நன்மை செய்தல், நெறி நிற்றல் - அறவழியில் நடத்தல், நல் நாப்பண் உய்ப்பது ஓர் ஆறு - ஆகிய இவையானும் நல்ல நடுவிடத்தின் கண் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு ஒப்பற்ற வழிகளாம். நயன் - அறம், நீதி. ஓம்பல் - பாதுகாத்தல், போற்றல். பொறையாளல் - பொறுத்தல். அதாவது பிறர் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளுதல், ஒல்லுதல் - இயலுதல் - செய்ய முடிதல். வாய் - இடம். ஒல்லும் வாய் - நன்மை செய்யக் கூடிய இடத்தில். இன்னார் - பகைவர். நெறி - அறவழி. நாப்பண் - நடு. உய்த்தல் - செலுத்தல். ஆறு - வழி. நல்லிடத்தின் நடுவில் செலுத்தும் வழிகள் என்பதாம். நல்லாரைச் சார்ந்து வாழ்தல், பலவழிகளிலும் நல்லாரைப் போற்றுதல், பிறர் செய்த தீமையைப் பொறுத்தல், தீமை செய் தார்க்கும் நன்மையே செய்தல், நன்னெறியில் நடத்தல் ஆகிய இவை ஒழுக்கமாகும் என்பதாம். அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். (குறள்) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (குறள்) (41) 97. முனியா னறமறங்கன் முக்குற்றம் பேணான் நனிகாக்கு மொண்மை யுறைப்படுத்தும் பண்போன் பனிநிலத்தின் வித்தாய்ப் பெயரா னடுக்கற் றினியனா வான்மற் றினி. (இன்னி) அறம் முனியான் - அறத்தை வெறுக்காதவனாய், மறம் முக்குற்றங்கள் பேணான் - மறத்தையும் முக்குற்றங்களையும் விரும்பாதவனாய், நனி காக்கும - மிகவும் பாதுகாக்கப்படும், ஒண்மை உறைப்படுத்தும் பண்போன் - அறிவை நிலைப் படுத்தும் ஒழுக்கத்தை யுடையோன், பனி நிலத்தின் இனி வித்தாம் - குளிர்ந்த நிலத்திலிட்ட இனிய வித்தைப் போல், நடுக்கற்று பெயரான் இனியன் ஆவான் - அசைவற்று நின்ற நிலையைவிட்டுப் பெயராமல் இன்ப வாழ்வையுடைய வனாவான். முனிதல் - வெறுத்தல். மறம் - அறத்தின் மறுதலை, தீமை. முக்குற்றம் - காமம், வெகுளி, மயக்கம். காமம் - ஆசை. மயக்கம் - மயக்க அறிவு. இவை துன்பங்களுக்குக் காரணமாகும். காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமங் கெடக்கெடும் நோய் (குறள்) பேணுதல் - விரும்புதல். நனி - மிக. ஒண்மை - அறிவு. உறைப்படுத்தல், உறுதிப்படுத்தல், அதாவது தெளிந்த அறிவுடை யனாதல். பண்பு - ஒழுக்கம். பனி - குளிர்ச்சி. பெயர்தல் - நிலை பெயர்தல், தாழ்தல். நடுங்கல் - அசைதல், மனந்தளர்தல், இனி - இனிய, கடைக்குறை. மற்று - அசை. நீர்வளமுள்ள நிலத்தில் இட்ட வித்து வாடாமல் வறளாமல் இனிது வளமுற வளர்வது போல இனிது வாழ்வான் என்பதாம். அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம் புறத்த . . . (குறள்) அறிவுடையார் எல்லாம் உடையார் என்றார் வள்ளுவரும். அறத்தை வெறுக்காமலும், மறத்தையும் முக்குற்றங் களையும் விரும்பாமலும், அறிவை நிலை நிறுத்தம் குணமுடை யோன், நன்னிலத்தில் விதைத்த விதையைப் போல வறுமை யால் மனந் தளராமலும் நின்ற நிலையினின்றுந் தாழாமலும் இனிது வாழ் வான் என்பதாம். (42) 98. தேசுந் திறனறிந்த திட்பமுந் தேர்ந்துணர்ந்து மாசு மனத்தகத் தில்லாமை - ஆசின்றிக் கற்றல் கடனறிதல் கற்றா ரினத்தராய் நிற்றல் விரைத்தே நெறி. (அற) தேசும் - புகழுக் கேதுவாகிய குணமும், திறன் அறிந்த திட்பமும் - நன்மை தீமைகளின் கூறுபாட்டை அறிந்த மனவுறுதியும் உடையராய், தேர்ந்து உணர்ந்து - உண்மைப் பொருளை ஆராய்ந்தறிந்து, மனத்து அகத்து மாசு இல்லாமை ஆசு இன்றிக் கற்றல் - மனத்தின் கண் குற்றம் இல்லாமல் பிழையறக் கற்றலும், கடன் அறிதல் - தமது கடமையை அறிதலும், கற்றார் இனத்தராய் நிற்றல் - கற்றவர்களைச் சார்ந்து நிற்றலுமாகிய, வரைத்தே நெறி - அவ்வளவே கற்றவர்க் குரிய ஒழுக்கமாகும். தேசு - புகழ். இங்கே புகழுக்குக் காரணமாகிய குணத்தை யுணர்த்திற்று, “தோன்றிற் புகழொடு தோன்றுக”(குறள் - 236) என்றார் வள்ளுவரும். திறன் - கூறுபாடு, வகை. திட்பம் - மனவுறுதி. மாசு - மனக்குற்றம். ஆசு - கற்கும்போது நேரும் குற்றம். கடன் அறிதல் - கற்றவர் தாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிதல். வரை - அளவு. வரைத்தே -அவ்வளவே. நெறி - முறை, ஒழுக்கம். கற்கும்போது, புகழுக் கேதுவாகிய குணமும் நன்மை தீமைகளின் கூறுபாட்டை அறிந்த மனவுறுதியும் உடையவ ராய், உண்மைப் பொருளை ஆராய்ந்தறிந்து, மனத்தின்கண் மாசில்லாமல் பிழை யின்றிக் கற்கவேண்டும். இஃதே கற்றலின் இலக்கணம். இங்ஙனம் கற்றலும், கற்ற கல்வியின் கடப் பாடறிதலும், கற்றாரினத்தராய் நிற்றலும் கற்றவர் ஒழுகும் ஒழுக்கமாகும் என்பதாம். கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (குறள்) என்றார் வள்ளுவரும். இதனால் கற்றபின் நிற்கும் முறையோடு, கற்கு முறையும் கூறப்பட்டது. (43). 99. அறங்கூறு நாவென்ப நாவுஞ் செவியும் புறங்கூற்றுக் கேளாத வென்ப - பிறன்றாரத் தற்றத்தை நோக்காத கண்ணென்ப யார்மாட்டும் செற்றத்தைத் தீர்ந்ததா நெஞ்சு. (அற) அறம் கூறும் நா என்ப நாவும் - அறத்தினைக் கூறுகின்ற நாவே நாவாகும் என்பர், செவியும் புறங்கூற்றுக் கேளாத என்பர் - புறங்கூறுதலைக் கேளாத செவிகளே செவியாகும் என்பர், பிறன் தாரத்து அற்றத்றை நோக்காத கண் என்ப - அயலான் மனைவி யினது சோர்வை எதிர்பாராத கண்ணே கண்ணாகும் என்பர், யார் மாட்டும் செற்றத்தைத் தீர்ந்ததாம் நெஞ்சு என்ப - தீமை செய் வாரிடத்தும் பகைமையின்றி யிருப்பதே மனம் ஆகும் என்பர் பெரியோர். புறங்கூறுதல் - கோட் சொல்லுதல். தாரம் - மனைவி. அற்றம் - சோர்வு. சோர்வாவது - தனித்திருத்தல் முதலியன வாம். செற்றம் - பகைமைக் குணம். என்ப - என்பர். உயர்திணைப் பலர்பால் படர்க்கை வினைமுற்று. எப்போதும் நல்லனவற்றையே பேசவேண்டும். அவ்வாறு பேசுவதே நாவின் பயன். அத்தகைய நாவே நாவென்று சிறப்பித்துச் சொல்லப்படும் என்பதாம். நன்மை - அறம். “யாகாவா ராயினும் நாகாக்க” என்பது குறள் (128). ‘நாவினால் சுட்டவடுஉள் ஆறாது’ (குறள் - 129) ஆகையால், தீயன பேசும் நா நாவெனப் படாதென்பதாம். அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப்படும் (குறள்) என்பதால், ‘புறங்கூற்றைக் கேளாத செவியே செவி’ என்றார். பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனொன்றோ ஆன்ற வொழுக்கு (குறள்) ஆகையால், பிறன் தாரத்தின் அற்றத்தை நோக்காத கண் கண் எனப்பட்டது. பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை (குறள்) என வள்ளுவரும், தீமை செய்தார்க்கும் பகை பாராட்டித் தீமை செய்யாதிருத்தல் தலையாய அறம் எனல் காண்க. இகல் - பகைமைக் குணம். நல்லனவற்றையே கூறுதலும், புறங்கூறாமையும், பிறன் மனைவியை விரும்பாமையும், தீமை செய்தார்க்கும் தீமை செய்யா மையும் ஒழுக்கமுடைமையாகும் என்பதாம். (41) 100. தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள் ஆய பொழுதாற்று மாற்றலும் - காய்விடத்து வேற்றுமை கொண்டாடா மெய்ம் மையும் இம்மூன்றும் சாற்றுங்காற் சாலத் தலை. (அற) தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் - குற்றமில்லாமல் சொல்லும் குணமும், துன்பங்கள் ஆய பொழுது ஆற்றும் ஆற்றலும் - துன்பம் உண்டானபோது அதனால் தளர்ச்சி யடையாதிருக்கும் பொறுமையும், காய்விடத்து வேற்றுமை கொண்டாடா மெய்ம் மையும் - தம்மை வெறுப்பவரிடத்தும் மாறுபாடு கொள்ளாத உண்மைத் தன்மையும், இம்மூன்றும் சாற்றுங்கால் சாலத் தலை - சொல்லுமிடத்து இவை மூன்றும் மிகவும் உயர்ந்தவையாகும். தூய்மை - குற்றமின்மை. சொல்லாடல் - சொல்லுதல். வன்மை - திறமை. அதாவது குற்றமில்லாமல் பேசும் குணம். குற்றமில்லாமல் பேசுதல் அரிதாகையால், ‘சொல்லாடல் வன்மையும்’ என்றார். ஆற்றல் - துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் திறமை. காய்தல் - வெறுத்தல். காய்வு - காய்பவர். வேற்றுமை - மாறுபாடு பகை. கொண்டாடல் - மேற் கொள்ளல். மெய்ம்மை - உண்மை. இங்கு உண்மைத் தன்மை. அதாவது தம்மை வெறுப்பவரிடத்தும் பகை கொள்ளக் கூடாது என்னும் உண்மையை உணர்ந்து அதனை மேற் கொள்ளும் தன்மை சால - மிக. உயர்வு - சிறப்பு. குற்றமில்லாமல் பேசுதலும், துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதலும் வெறுப்பவரிடத்தும் பகை பாராட்டாமையும் சிறந்த ஒழுக்கமுடைமையாகும். வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தி னுள்ளக் கெடும். (குறள்) அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய செறுவார்க்குஞ் செய்யா கெடும். (குறள்) (45) 101. வெம்மையுடைய தடிசில் விழும்பொருட்கண் செம்மை யுடையதாஞ் சேவகம் - தம்மைப் பிறர்கருதி வாழ்வதாம் வாழ்க்கையிம் மூன்றும் உறவருவ தோர்வதா மோர்ப்பு. (அற) வெம்மை உடையது அடிசில் - சூடாக இருப்பதே சிறந்த உணவாகும், விழுப் பொருட்கண் செம்மை உடைய தாம் சேவகம் - மிக்க வருமானத்தோடு நடுவு நிலைமை தவறாமல் இருப்பதே அலுவலாகும், தம்மைப் பிறர் கருதி வாழ்வதாம் வாழ்க்கை - தம்மைப் பிறர் எண்ணி வாழ்வதற் கேற்ற ஈகைக் குணத்தோடு வாழ்வதே சிறந்த வாழ்க்கை யாகும், இம் மூன்றும் உற வருவது ஓர்வதாம் ஓர்ப்பு - இம்மூன்றும் பொருந்தும்படி எண்ணித் துணிவதே துணிவாகும். வெம்மை - வெப்பம், சூடு. அடிசில் - உணவு. விழுமம் - சிறப்பு. செம்மை - நடுவு நிலைமை. சேவகம் - அரசியல், அலுவல், உத்தியோகம். கருதி - எண்ணி, பொருள் தருவார் என்று எண்ணி. உற - பொருந்த. ஓர்தல் - நினைத்தல்; இங்கு எண்ணித் துணிதலை உணர்த்திற்று. ஆறிய உணவில் நச்சுப்புழுக்கள் உண்டாகி உடல் நலத்தைக் கெடுக்குமாகையால், சூடான உணவு சிறந்த உணவு எனப்பட்டது. “முன்னைநாள் செய்தகறி அமுதெனினும் அருந்தோம்” என்பது தேரையார் வாகடம். ஒழுக்கத்தோடு வாழ்வதற்கு உடல் நலம் இன்றியமையாததாகும். அலுவலர் மிக்க ஊதியம் அடைய முயல்வதோடு நடுவு நிலைமை தவறாமல் இருக்க வேண்டும். இங்ஙன மன்றி, நடுவு நிலைமை தவறி கைக்கூலி பெற்றுப் பொருள் சேர்க்க முயலுதல் கூடாது. கைக்கூலி - லஞ்சம். “இரப்பார்க்கொன்றீவார்மேல் நிற்கும் புகழ்” (குறள் - 232) ஆகையால், புகழுக்கேதுவாகிய ஈகைக் குணத்தோடு வாழ்வதே வாழ்வு எனப்படும். உடல் நலத்துக்கேற்றவாறு உணவுண்பதும், நடுவு நிலைமை தவறாது ஊதிய உயர்வுக் கேற்றவாறு நேர்மையுடன் அலுவல் பார்ப்பதும், கொடைக்குணமுடையராய் வாழ்வதும் நல்வாழ் வாகும் என்பதாம். (46) 102. ஒழுக்க மிலனாகி யோர்த்துடைய னேனும் புழுப்பொதிந்த புண்ணிற் கொடிதாம் - கழுக்கிரையை ஓம்பின்மற் றென்னை உறுதிக்க ணில்லாக்கால் தேம்பி விடுதலே நன்று. (அற) ஓர்த்து உடையனேனும் - அற நூல்களை ஆராய்ந்தறிந்த அறிவினனேயெனினும், புழுப் பொதிந்த புண்ணில் கொடிதாம் கழுக்கிரையை - புழுக்கள் நிறைந்த புண்ணினும் இழிந்ததும் கழுகுகளுக்கு இரையாவதுமாகிய உடலை, ஒழுக்கம் இலனாகி ஓம்பின் என்னை - தீய ஒழுக்கத்தை மேற்கொண்டு வளர்த்து வருவானாயின் அவ்வறிவாலாகிய பயன் என்ன? உறுதிக்கண் நில்லாக்கால் தேம்பி விடுதலே நன்று - நன்னெறிக்கண் நில்லாத விடத்து அவன் அழிந்து விடுதலே நல்லது. ஓர்த்தல் - ஆராய்தல்; இங்கு ஆராய்ந்தறிந்த அறிவுக் கானது. பொதிதல் - நிறைதல். கொடிது - இழிந்தது. கழுக்கு - கழுகுக்கு; தொகுத்தல் விகாரம். ஓம்புதல் - பாதுகாத்தல். மற்று - அசை. என்னை - என்ன. உறுதி - நன்னெறி, ஒழுக்கம். தேம்புதல் - அழிதல், சாதல். எத்தகைய அறிவுடையனேனும் நல்லொழுக்கமின்றித் தீய ஒழுக்கமுடையனாய் வாழ்வதில் பயனில்லை. அவன் அவ்வாறு வாழ்வதைவிட இறந்து விடுதலே மேல் என்பதாம் ஒழுக்கத்தி னொல்கா ருரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து. (குறள்) ஒருவன் உடலோடு கூடி உயிர் வாழ்தலின் பயன் நல்லொழுக்க முடையனாய் வாழ்தலே யாதலின், தீய வழியில் வளர்க்கும் உடம்பினை, ‘புழுப் பொதிந்த புண்ணிற் கொடி தாம் கழுக்கிரை’ என்று இழித்துக் கூறினார். (47) 103. கற்றுப் பிறர்க்குரைத்துத் தாநில்லார் வாய்ப்படூஉம் வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை - சொற்றநீர் நில்லாத தென்னென்று நாணுறைப்ப நேர்ந்தொருவன் சொல்லாமே சூழ்ந்து கொளல். (நீநெ) கற்றுப் பிறர்க்கு உரைத்து - நூல்களைக் கற்றுக் கற்றதன் படி ஒழுக வேண்டும் என்று பிறர்க்கு எடுத்துக் கூறி, தாம் நில்லார் வாய்ப்படும் வெற்று உரைக்கு உண்டு ஓர் வலி உடைமை உண்டு - கூறியபடி தாங்கள் ஒழுகாதவருடைய வாயில் உண்டாகும் பயனில் லாத அச்சொல்லுக்கு ஒரு வலியுடைமை உண்டு. அது, சொற்ற நீர் நில்லாதது என் என்று நாண் உறைப்ப நேர்ந்து ஒருவன் சொல்லாமே - எங்களைக் கற்றதன் படி ஒழுகவேண்டும் என்று சொல்லிய நீர் அங்ஙனம் ஒழுகாதது ஏனோ என்று வெட்கம் மிகும்படி எதிர்த் தொருவன் இகழ்ந்து சொல்லாதபடி, சூழ்ந்து சொலல் - ஆராய்ந்து சொல்லுதலாம். சூழ்ந்து சொல்லலாவது - ‘நீங்கள் அவ்வாறு நடத்தல் வேண்டும்’ என எதிரில் இருப்பாரை மட்டும் சுட்டிச் சொல் லாமல் தன்னையும் அவர்களோடு சேர்த்துக் கொண்டு, ‘நாம் எல்லாம் அவ்வாறு நடத்தல் வேண்டும்’ எனத் தன்மைப் பன்மையால் கூறுதலாம். இங்ஙனம் கூறுவதும் உண்டென்று, அப்பொய் யொழுக்கத்தை இழித்துக் கூறியபடியாம். பொய் யொழுக்கம் - பிறரை ஒழுகும்படி கூறித் தாம் அவ்வாறு ஒழுகாமை. வெற்றுரை - பயனற்ற சொல். வாய்ப்படும் உரை - வாயால் சொல்லும் சொல், ‘வாய்’ என வேண்டா கூறினது, அவ்வாறு வெற்றுரை கூறும் வாயினது இழிவு தோன்ற நின்றது. படூஉம் - இன்னிசையளபெடை. வலியுடைமை - இங்கே மதிப்பு. சொற்ற - சொன்ன. நாண் - வெட்கம். உறைத்தல் - மிகுதல். மிக்க நாணும்படி கூறுதல். நேர்ந்து - எதிர்த்து. சூழ்தல் - ஆராய்தல். கற்றதன்படி தான் ஒழுகாது பிறரை ஒழுகும்படி கூறுதல் பழித்தற்குரிய தொன்றாகுமாகையால், தான் கற்றதன்படி ஒழுகுவதே ஒழுக்கமுடைமையாகும் என்பது கருத்து. கற்றபின் நிற்க அதற்குத் தக (குறள்) (48) 104. பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும் எய்தாமை சொல்லின் வழுக்காத்து - மெய்யிற் புலமைந்துங் காத்து மனமா சகற்றும் நலமன்றே நல்லா றெனல். (நீநெ) பொய் குறளை வன்சொல் பயனில என்று இந்நான்கும் எய்தாமை சொல்லின் வழுக்காத்து - பொய்யும் புறங்கூற்றும் கடுஞ்சொல்லும் பயனில சொல்லும் என்று இந்நான்கும் பொருந் தாமல் சொற்குற்றத்தைக் காத்து, மெய்யில் புலம் ஐந்தும் காத்து - பொறிகளின்கட் செல்லாமல் ஐம்புலன் களையும் காத்து, மனம் மாசு அகற்றும் நலம் அன்றே - மனக் குற்றத்தையும் நீக்கும் நற்செயலல்ல வோ, நல் ஆறு எனல் - நன்னெறி என்று சொல்லத்தகும். குறளை - புறங்கூறுதல். பயனில் சொல் - சொல் வோனுக்கும் கேட்போனுக்கும் யாதொரு பயனும் பயவாத சொல். எய்தாமை - பொருந்தாமல், சேராமல்; எதிர் மறை வினையெச்சம். வழு - குற்றம். இவை நான்குஞ் சொற்குற்றம். மெய் - உடம்பு. அது மெய் முதலிய ஐம்பொறிகளையும் குறித்தது. மெய்வாய் கண் மூக்குச் செவி என்பன ஐம்பொறிகள். சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன ஐம்புலன்கள் ஆகும். மாசு - குற்றம். மனமாசு - காமம் வெகுளி மயக்கம். நலம் - நற்செயல். ஆறு - வழி. மனம் மொழி மெய் என்னும் மூன்றும் குற்றமின்றித் தூய்மை யாக இருத்தலே நல்லொழுக்கமாகும் என்பது கருத்து. மனமாசு அகற்றல் - மனக்குற்ற மொழிதல். பொய் முதலிய நான்கும் பொருந்தாமல் சொல்லின் வழுக்காத்தல் - மொழிக்குற்ற மொழிதல். மெய்யில் புலமைந்துங்காத்தல் - மெய்க்குற்ற மொழிதல். அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம் (குறள்) மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன். (குறள்) (49) 105. திருவொக்கும் தீதில் ஒழுக்கம். (நான்) தீது இல் ஒழுக்கம் - தீமை கலவாத நல்லொழுக்கம், திரு ஒக்கும் - செல்வத்தை ஒக்கும். தீமை - குற்றம். திரு - செல்வம். நல்வாழ்க்கைக்குச் செல்வம் இன்றியமையாத தாகையால், நல்வாழ்க்கைக்குக் காரணமாகிய நல்லொழுக்கத்தைச் செல்வத்தோ டொக்கும் என்றார். செல்வம் பிறர் மதித்தற்குரியதாதலுங் கொள்க. (50) 106. இனிய னெனப்படுவான் யார்யார்க்கே யானும் முனியா ஒழுக்கத் தவன். (நான்) யார்யார்க்கேயானும் - எவரிடத்திலாயினும், முனியா ஒழுக்கத்தவன் - வெறுக்கப் படாத ஒழுக்கத்தையுடையவன், இனியன் எனப்படுவான் - இனிமையானவன் என்று சொல்லப் படுவான். இனிமையானவன் - நல்லவன். யார்யார்க்கு என்னும் அடுக்கு ஒருவரிடத்துங்கூட - என்னும் பொருள்பட நின்றது. முனியா - முனியாத. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். முனியாத - பிறரால் வெறுக்கப்படாத. எல்லோரு விரும்பும்படி நடந்துகொள்பவன் பெரியோர் களால் நல்லவன் என்று சிறப்பித்துக் கூறப்படுவான். (51) 107. ஆர்கலி யுலகத்து மக்கட்கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை. (முது) ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் - கடல் சூழ்ந்த உலகத்தின் கண் வாழும் மக்கள் எல்லார்க்கும், ஓதலின் சிறந்தன்று ஒழுக்க முடைமை - நூல்களைக் கற்றலைக் காட்டிலும் சிறந்தது ஒழுக்க முடைமை. ஆர்கலி - கடல். நிறைந்த ஓசையையுடையது என்பது பொருள். ஆர்தல் - நிறைதல். கலி - ஓசை. சிறந்தன்று - சிறந்தது. ஒழுக்கமில்லார் கல்வியால் பயனில்லை யாகையால், ஒழுக்கம் கல்வியினும் சிறப்புடையதாயிற்று. (52) 108. வறிஞர்க் கழகு வறுமையிற் செம்மை. (வெற்) வறிஞர்க்கு அழகு - வறுமையுற்றோர்க்கு அழகாவது, வறுமையில் செம்மை - அவ்வறுமைக் காலத்திலும் ஒழுக்கந் தவறாதிருத்தலாம். அழகு - சிறப்பு, செம்மை - ஒழுக்கம். வாழ்க்கை நடத்த முடியாத நிலையில் மிக்க வறுமை யுற்ற போதும், தீய வழியில் பொருள் தேடி வாழ முயலாமல் இருக்க வேண்டும் என்பதாம். (53) 108. பெருமையும் சிறுமையும் தான்தர வருமே. (வெற்) பெருமையும் - உயர்வும், சிறுமையும் - தாழ்வும், தான்தர வரும் - ஒருவன் நடக்கும் நடக்கையால் அவனுக்கு உண்டாகும். உயர்வும் தாழ்வும் அவரவர் ஒழுக்கத்தால் உண்டாகும் என்பதாம். நல்லொழுக்கத்தால் உயர்வும், தீய ஒழுக்கத்தால் தாழ்வும் உண்டாகும். எனவே, நல்லொழுக்கமொழுகிப் பெருமை யுடன் வாழவேண்டும் என்பது கருத்து. (54) 110. இயல்பலா தனசெயேல். (ஆத்) இயல்பு அலாதன - செய்யத்தகாத செயல்கள் - செய்யத் தகாத செயல்களைச் செய்யக்கூடாது. அங்ஙனம் செய்வது ஒழுக்க முடைமை ஆகாது என்பதாம். செயேல் - செய்யாதே. (55) 111. அழகலா தனசெயேல் (ஆத்) அழகு அலாதன - இழிவான செயல்கள். அதாவது பிறர் பழிக்கத்தக்க செயல்கள். -பிறர் பழிக்கத்தக்க இழி செயல்கள் செய்யக்கூடாது. ஈன்றாள் பசிகாண்ப னாயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. (குறள் 56) 112. சையெனத் திரியேல். (ஆத்) சை என - பெரியோர்கள் ‘சீ’ என்று அருவருத்து இகழும் படி, திரியேல் - நீ கெட்டவனாகத் திரியாதே. சை - இகழ்ச்சி குறிக்கும் இடைச் சொல். திரிதல் - தீச்செயல் புரிவதையே கடமையாகக் கொண்டிருத்தல். (57) 113. நாடொப் பனசெய். (ஆத்) நாடு ஒப்பன - நாட்டிலுள்ளோர் எல்லோரும் ஒத்துக் கொள்ளத்தக்க நல்ல காரியங்கள். நாடு - நாட்டு மக்கள்; இடவாகு பெயர். நாட்டு மக்கள் விரும்பாத தீயனவற்றைச் செய்யக் கூடா தென்பதாம். (58) 114. நேர்பட ஒழுகு. (ஆத்) நேர்பட - ஒழுங்காக, ஒழுகு - நட. நல்லொழுக்க முடைய வனாக நடந்து கொள் என்பதாம். (59) 115. நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு. (கொன்) நூல் முறை தெரிந்து - அற நூல்களிற் கூறப்படும் செய்வன தவிர்வனவற்றை ஆராய்ந்தறிந்து, சீலத்து ஒழுகு - செய்வன செய்து தவிர்வன தவிர்த்து நல்லொழுக்கமுடைய வனாக நட. செய்வன தவிர்வன, விதிவிலக்கு, நன்மை தீமை என்பன ஒரு பொருட் சொற்கள். செய்வன தவிர்வனவற்றை அறிதல் - அறம் எனப்படும். அதன்படி நடத்தல் - ஒழுக்கம் எனப்படும். சீலம் - நல்லொழுக்கம். செய்தக்க அல்ல செயக்கெடும், செய்தக்க செய்யாமை யானும் கெடும். (குறள்) 116. பையச் சென்றால் வையந் தாங்கும். (கொன்) பையச் சென்றால் - ஒருவன் மெள்ளத் தகுதியான வழியிலே நடந்தால், வையம் தாங்கும் - உலகத்தார் அவனை மேலாகக் கொள்வர். பைய - மெல்ல, மெதுவாக. அதாவது நன்மை தீமை களை ஆராய்ந்து பார்த்து. வையம் - உலகம், உலகத்து மக்கள்; இடவாகு பெயர். தாங்குதல் - மேலாகக் கொள்ளுதல்; நன்கு மதித்தல். நல்ல வழியில் நடப்பவன் உலகத்தாரால் நன்கு மதிக்கப் படுவான். (61) 117. பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம். (உல) பொது நிலம் - பலர்க்கும் பொதுவாகிய இடம். பலர்க்கும் பொதுவாகிய இடத்தில் வீடுகட்டிக்கொண்டு அதைத் தனக்கு உரியதாக்கிக் கொண்டு இருத்தல் கூடாது. அது ஒழுக்கமன்று என்பதாம். (62) 118. இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம். (உல) இருதாரம் - முதல் மனைவியிருக்க இரண்டாந்தாரம். முதல் மனைவியிருக்க இரண்டாவது ஒருத்தியை இளைய தாரமாக மணந்து கொள்ளுதல். தாரம் - மனைவி. தேடுதல் - விரும்பி மணத்தல். இப்போது அவ்வாறு செய்யக்கூடாதெனச் சட்டமே செய்யப் பட்டுள்ளது. (63) 3. அழுக்காறாமை அதாவது, பொறாமை கொள்ளாதிருத்தல். அழுக்காறு - பொறாமை. அதாவது பிறர் செல்வ முதலிய பெருமை கண்டு மனம் பொறாமை. அழுக்காறு + ஆ + மை. ஆ - எதிர்மறை இடைநிலை. 119. அவ்வித் தழுக்கா றுரையாமை முன்னினிது. (இனி) அவ்வித்து - பிறர் பெருமை கண்டுமனம் பொறாது, அழுக்காறு உரையாமை முன் இனிது - பொறாமைச் சொற் களைச் சொல்லா திருத்தல் மிகவும் நல்லது. அவ்வியம் - பொறாமை. அவ்வித்து - பொறாமை கொண்டு. பிறர் செல்வ முதலிய பெருமையைக் கண்டு மனம் பொறாது அதை வாய்விட்டுக் கூறாதிருத்தல் வேண்டும் என்பதாம். பொறாமை கொள்ளுதலும் கூறுதலும் கூடாவென்பது கருத்து. அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்து விடும். (குறள்) (1) 120. ஒளவியம் பேசேல். - (ஆத்) ஒளவியம் - பொறாமைச் சொற்கள். (2) 121. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவு. (கொன்) ஆக்கம் - செல்வம். அழிவு - கேடு. பொறாமைக் காரனுக்கு ஒருவரும் உதவாராகையால் அவன் செல்வம் கெடுவதாயிற்று. அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும். (குறள்) (3) 4. சினமின்மை அதாவது, சினங் கொள்வதற்குக் காரணமாகிய குற்றம் ஒருவர் செய்தவிடத்தும் சினங்கொள்ளாமல் இருப்பது. 122. மதித்திறப் பாரு மிறக்க மதியா மிதித்திறப் பாரு மிறக்க - மிதித்தேறி ஈயுந் தலைமே லிருத்தலா லஃதறிவார் காயுங் கதமின்மை நன்று. (நால) மதித்து இறப்பாரும் இறக்க - தம்மை மதித்து நடப் பாரும் நடக்க, மதியா மிதித்து இறப்பாரும் இறக்க - மதியாமல் கீழ்படுத்து நடப்பவரும் நடக்க, ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் இருத்தலால் - சிற்றுயிராகிய ஈயும் யாவரையும் மிதித்து ஏறி அவர் தலையின் மேல் இருத்தலால், அஃது அறிவார் காயும் கதம் இன்மை நன்று - ஈயின் செயலை அறிந்தவர்கள் தம்மையும் பிறரையும் சுடும்படியான சினங் கொள்ளாமல் இருத்தல் நல்லது. இறத்தல் - கடத்தல்; இங்கு நடத்தல். இறக்க - நடக்க. மதித்து இறத்தல் - மதித்து நடத்தல். மதியா - மதியாமல்; ஈறுகெட்ட எதிர் மறை வினையெச்சம். மிதித்தல் - தாழ்த்தல். மிதித்து இறத்தல் -தாழ்வாகக் கருதி நடத்தல். மிதித்து - காலால் மிதித்து. அஃது அறிதல் - ஈ மிதித்தேறித் தலைமேல் இருத் தலையும், அதற்காக எவரும் அதனைச் சினக்காமையு மாகிய உண்மையை அறிதல். காய்தல் - சுடுதல். கதம் - சினம். அறிவுடையோர் பிறரை மதித்து நடப்பர் அறிவிலாரோ பிறரை மதியாது இகழ்வர். அறிவிலார் நடத்தைக்கு ஈயின் செயலே எடுத்துக்காட்டாகும். ஈ தலைமேல் ஏறியிருத்தற்காக யாரும் அதன் மேல் சினங்கொள்வதில்லை. அவ்வாறே, அறிவிலார் மதியாது இகழின் அதற்காக அவர்மேல் சினங் கொள்ளுதல் கூடாது என்பதாம். இணரெரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. (குறள்) 123. நெடுங்கால மோடினும் நீசர் வெகுளி கெடுங்கால மின்றிப் பரக்கும் - அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போற் றானே தணியுமே சீர்கொண்ட சான்றோர் சினம். (நால) நீசர் வெகுளி நெடும் காலம் ஓடினும் - கீழ்மக்களது சினம் பலகாலஞ் சென்றாலும், கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அழியுங் காலமில்லாமலே மேன்மேல் வளரும், சீர்கொண்ட சான்றோர் சினம் - சிறப்புப் பொருந்திய பெரியோர்கள் சினமோ வெனில், அடுங்காலை நீர்கொண்ட வெப்பம் போல் தானே தணியும் - காய்ச்சப்பட்ட காலத்தில் நீர்கொண்ட சூடுபோலப் பிறர் தணிக்காமல் தானாகவே விரையில் தணிந்து போகும். ஓடுதல் - செல்லுதல்; எவ்வளவு காலமானாலும் என்றபடி. நீசர் - கீழ்மக்கள். கெடுதல் - அழிதல், தீர்தல். பரத்தல் - மேன்மேல் வளர்தல்; நாளாகாக அதிகமாதல். அடுதல் - காய்ச்சுதல். சீர் - சிறப்பு. ‘அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல்’ என்றதால். சான்றோர் இயற்கையில் தண்மையான அருளுடையவ ரென்பதும், பிறர் செய்யும் தீங்கு பற்றியே அவர்க்குச் சின முண்டாகும் என்பதும், அதுவும் பிறர் தணிக்காமல் தாமாகவே விரையில் தணிந்து விடும் என்பதும் பெற்றாம். இதனால், கீழ்மக்கள் கொண்ட சினம் எவ்வளவு கால மானாலும் பிறர் தணிக்கவும் தணியா தென்பதும் பெற்றாம். ஏதாவது காரணம்பற்றிச் சினங்கொள்ளினும் உடனே தணிவதே அறிவுடைமை என்பதாம். (2). 124. இறப்பச் சிறியவர் இன்னா செயினும் பிறப்பினால் மாண்டார் வெகுளார் - திறத்துள்ளி நல்ல விறகின் அடினும், நனிவெந்நீர் இல்லஞ் சுடுகலா வாறு. (பழ) இறப்பச் சிறியவர் இன்னா செயினும் - மிகவுஞ் சிறியவர்கள் துன்பஞ் செய்தாராயினும், பிறப்பினால் மாண்டார் வெகுளார் - நற்குடியில் பிறந்தவர் அவரைச் சிறிதும் வெகுளார், (அது), திறத்து உள்ளி நல்ல விறகின் அடினும் - நன்கு பார்த்து நல்ல விறகினால் காய்ச்சினாலும், நனி வெந்நீர் இல்லம் சுடுகலா ஆறு - மிகவும் சூடான நீரும் வீட்டைச் சுடாதது போலாம். இறப்ப -மிக. இன்னா - துன்பம். பிறப்பினால் மாண்டார் - உயர் குடிப் பிறந்தவர். மாண்டார் - மாட்சிமையுடையார். நற்குடியில் பிறந்த மாட்சிமையுடையார்எனவுங் கொள்ளலாம். திறம் -வகை. உள்ளுதல் - ஆராய்ந்து பார்த்தல். திறத்துள்ளல் - பல விறகுகளிலும் ஆராய்ந்து பார்த்து நல்ல விறகாக எடுத்தல். வேலான், புளி, வேம்பு போன்ற விறகுத் தீயினால் விரைவில் தண்ணீர் காயும். அடுதல் - காய்ச்சுதல். நனி - மிக. நனி வெந்நீர் - மிக்க சூடான வெந்நீர். சுடுகலா ஆறு - சுடுதலில்லாத, சுடாத தன்மை. ஆறு - தன்மை. சுடுகல் ஆ. கல் - ஆற்ற லுணர்த்தும் இடைநிலை. சுடுஆ - சுடா - சுடாத; ஈறு கெட்டது. எவ்வளவு சூடான வெந்நீரினாலும் வீடு வேகாதவாறு போல, கீழ்மக்கள் எவ்வளவு துன்பஞ் செய்யினும் மேன்மக்கள் வெகுளார் என்பதாம். (3) 125. உற்றதற் கெல்லாம் உரஞ்செய்ய வேண்டுமோ கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும் நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல நெடும்பகை தற்செய்யத் தானே கெடும். (பழ) நெல் செய்யப் புல் தேய்ந்தால் போல - நெற்பயிர் செய்ய அவ்வயலில் முளைத்திருந்த புற்கள் தாமே அழிந் தொழிவது போல், தன் செய்ய நெடும்பகை தானே கெடும் - ஒருவன் தன்னை வலியுடையவனாகச் செய்யின் பெரிய பகை தானே கெட்டு விடும், (ஆதலால்), உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ - நேரிட்ட துன்பங்களுக்கெல்லாம் தனித்தனியே தம்மை வலியுடைய ராகச் செய்ய வேண்டுமோ? வேண்டியதில்லை. கற்றறிந்தார் வெகுளாமை தம்மைக் காப்பு அமையும் - கற்றறிந்தவர்கள் வெகுளாமல் தம்மைக் காப்பதே போதும். உற்றதற்கு - நேர்ந்த துன்பத்திற்கு. உரம் - வலிமை. காப்பு - காவல். அமையும் - போதும். அக்காவலேபோதும். தேய்தல் - அழிதல். தன் செய்தல் - தன்னை மனவுறுதியுடைய வனாகச் செய்தல். வயலை உழுது நெற்பயிர் செய்தால் அவ்வயலில் முன்பு முளைத்திருந்த புற்கள் தாமே அழிந்தொழிவது போல, ஒருவன் தன்னைப் பொருள் படை முதலியவற்றால் வலியுடை யனாக்கிக் கொண்டால் அவனது பெரிய பகை தானே கெட்டுவிடும். ஆதலால், துன்பங்கள் உண்டாகும் போ தெல்லாம் தம்மைத் தனித்தனியே - அவ்வப்போது - வலி செய்து கொள்ள வேண்டிய தில்லை. வெகுளியை விட்டால் யாதொரு துன்பமும் நேராதென்பதாம். ஒருவன் பகை நேரும் ஒவ்வொரு காலும் தன்னை வலி யுடையனாகச் செய்துகொள்ள வேண்டியதில்லை. எப்போதும் வலியுடையனாக இருத்தலே பகையணுகாமல் இருத்தற்குப் போதும். அதுபோல, ஒருவன் அடிக்கடி துன்பம் வராமல் காத்துக் கொள்ள வேண்டியதில்லை. துன்பம் வருவதற்குக் காரணமான வெகுளி வராமல் தன்னைக் காத்துக் கொண்டால் அதுவே போதும் துன்பம் வராமல் இருத்தற்கு என்பதாம். வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கட் பட்ட செருக்கு. (குறள்) மறத்தல் வெகுளியை யார்மாட்டம் தீய பிறத்தல் அதனான் வரும். (குறள்) (4) 126. எய்தா நகைச்சொல் எடுத்துரைக்கப் பட்டவர் வைதாராக் கொண்டு விடுவர்மன் அஃதால் புனற்பொய்கை யூர! விளக்கெலி கொண்டு தனக்குநோய் செய்து விடல். (பழ) புனல் பொய்கை ஊர - நீர் நிறைந்த குளங்களையுடைய ஊரையுடையவனே, எய்தா நகைச் சொல் எடுத்துரைக்கப் பட்டவர் - பொருந்தாத இகழ்ச்சிச் சொல்லை இன்னார் சொன்னார் என்று எடுத்துச் சொல்லப்பட்டவர், வைதாராக் கொண்டு விடுவர் - அவரே தம்மை வைதாராகக் கொண்டு வெகுள்வர் அறிவில்லார், அஃது எலி விளக்குக் கொண்டு தனக்கு நோய் செய்துவிடல் - அச் செய்கை எலி விளக்கினை எடுத்துக் கொண்டு மேலேறித் தனக்குத் துன்பஞ் செய்து கொண்டதனோ டொக்கும். எய்தா - எய்தாத - பொருந்தாத; ஈறுகெட்டது. நகை - இகழ்ச்சி. எடுத்துரைக்கப் பட்டவர் - இன்னார் உம்மை இவ்வாறு திட்டினார் என்று சொன்னவர். வைதல் - திட்டுதல். வைதார - வைதாராக - அவரே தம்மை அவ்வாறு திட்டின தாக. மன், ஆல் - அசை. அஃது - அவ்வாறு சொல்லுதல். புனல் - நீர். பொய்கை - குளம், கிணறு. பொய்கை ஊர - ஆடூஉ முன்னிலை. எலி விளக்குத் திரியினை எடுத்துக்கொண்டு கூரை மேலேறி னால் அதன் மேல் தீப்பற்றி வருந்த நேரும். மேலும், வீட்டுக் கூரையில் தீப்பற்றினால் இறக்கவும் நேரும். ஒருவர் சும்மா இருக்காமல் அறிவிலாரிடம் சென்று இன்னார் உம்மை இவ்வாறு திட்டினார் என்று அவர் திட்டின படியே சொன்னால், அச்சொன்னவரே அவ்வாறு தம்மைத் திட்டினதாகக் கொண்டு அவர்மேல் சினங்கொள்வர். அச்செயல், எலி சும்மா இருக்காமல் விளக்குத் திரியினை எடுத்துக்கொண்டு கூரைமே லேறித் தன்னைத் தீயால் சுட்டுக் கொண்டு வருந்தினதோ டொக்கும் என்பதாம். பிறர்க்குச் சினமுண்டாகும்படி ஒன்றைக் கூறுதல் கூடா தென்பதோடு, உண்மையறியாது தொட்டதற்கெல்லாம் சினத்தல் கூடாதென்பது கருத்து. அடாது சொன்னவனையும் வெகுளக் கூடா தென்பதுமாம். (5) 127. ஆய்ந்த வறிவின ரல்லாதார் புல்லுரைக்குக் காய்ந்தெதிர் சொல்லுபவோ கற்றறிந்தார் - தீந்தேன் முசுக்குத்தி நக்கு மலைநாட! தம்மைப் பசுக்குத்தின் குத்துவா ரில். (பழ) தீம்தேன் முசுக்குத்தி நக்கும் மலைநாட - இனிய தேன் கூட்டைக் குரங்குகள் குத்தித் தேனைக் குடிக்கும் மலை நாடனே, தம்மைப் பசுக்குத்தின் குத்துவார் இல் - தம்மை மாடு முட்டினால் தாமும் அதனை முட்டுவார் ஒருவரும் இல்லை, (ஆதலால்), ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல் உரைக்கு - ஆராய்ந்தறிந்த அறிவினரல்லாத மூடர்கள் தம்மை சொல்லிய புல்லுரைக்கு மாறாக, கற்றறிந்தார் காய்ந்து எதிர்சொல்லுபவோ - கற்றறிந்த மேலோர் வெகுண்டு எதிருரை சொல்லுவாரோ? சொல்லார் என்றபடி. ஆய்ந்த - ஆராய்ந்து கற்ற. புல்உரை - புன்மையான சொல், கீழ்த்தரமான சொல், இகழுரை. காய்தல் - சினத்தல். எதிர் - அம்மூடர் சொல்லுக்கு எதிராக. தேன் - தேன்கூடு. முசு - குரங்கு. மலைநாட - ஆடூஉ முன்னிலை. குத்துதல் - கொம் பால் முட்டுதல், இடித்தல். மாடு முட்டினால் திருப்பி அதனை முட்டுவாரில்லை. அதுபோல, அறிவிலார் தம்மைப் பழித்துக் கூறினால், அறிவுடையார் அதனைப் பொறுத்துக் கொள்வதன்றி வெகுண்டு, அதற்கெதிராகத் தாமும் அவரைப் பழித்துரை யார் என்பதாம். நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளார் விழுமியோர் (நால - 64) கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டுந் தம்வாயால் பேர்த்துநாய் கௌவினா ரீங்கில்லை (நால - 70) மூடர்கள் நம்மைப் பழித்தால் அதற்காகச் சினந்து நாமும் பழிக்கக் கூடாது. (6). 128. நோவ வுரைத்தாரைத் தாம்பொறுக்க லாகாதார் நாவின் ஒருவரை வைதால் வயவுரை பூவிற் பொலிந்தகன்ற கண்ணாய்! அதுவன்றோ தீயில்லை யூட்டுந் திறம். (பழ) பூவின் பொலிந்து அகன்ற கண்ணாய் - தாமரைப் பூவைப் போல விளங்கி அகன்ற கண்ணையுடையவளே, நோவ உரைத் தாரைத் தாம் பொறுக்கலாகாதார் - தமது மனம் நோகும்படி ஒருவர் திட்டினால் அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டாதவர், நாவின் ஒருவரை வயவுரை வைதால் - தமது நாவினால் அவரைச் சினந்து வயவுரை சொல்லித் திட்டினால், அது தீ இல்லை ஊட்டும் திறம் அன்றோ - அச்செய்கை தமது வீட்டினைத் தாமே தீக்கு உணவாக ஊட்டிய செயலோ டொக்குமல்லவா? வைதல் - திட்டுதல். வயவுரை - இகழ்ச்சிச் சொல், இகழ்ந்து கூறுதல். பொலிதல் - விளங்குதல். கண்ணாய் - மகடூஉ முன்னிலை. திறம் - தன்மை, செயல். தம்மை ஒருவர் திட்டினால் அதைப் பொறுத்துக் கொள்ளாமல் தாமும் அவரைத் திட்டுதல் அறிவுடைமை யாகாது. அச்செய்கை குடியிருக்கும் வீட்டில் தாமே கொள்ளி வைப்பதனோ டொக்கும். பிறர் திட்டுவதைப் பொறுத்துக் கொள்ளாமல் தாமும் அவரை வைவது, தமது பெருமையைத் தாமே கெடுத்துக் கொள்வதாகும் என்பதாம். தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் நீரயத்து வீழ்வர்கொல் லென்று பரிவதூஉஞ் சான்றோர் கடன். (நாலடி - 58) ஆகையால், தம்மை இகழ்ந்தாரைச் சினந்து எதிரிகழ்தல் அறிவுடை யோர்க்குத் தகுதியன்றென்பது கருத்து. (7). 129. உயிரு முடம்பும் பிரிவுண்மை யுள்ளிச் செயிருஞ் சினமுங் கடிந்து - பயிரிடைப் புற்களைந்து நெற்பயன் கொள்ளு மொருவன்போல் நற்பயன் கொண்டிருக்கற் பாற்று. (அற) உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளி - உயிரும் உடம்பும் வெவ்வேறாகப் பிரிவது உண்மை என்பதை அறிந்து, பயிரிடைப் புல் களைந்து நெல் பயன் கொள்ளும் ஒருவன் போல் - பயிர்களின் இடையே முளைத்துள்ள புற்களைப் பிடுங்கி எறிந்துவிட்டு நெல்லாகிய பயனை அடையும் உழவன் போல, செயிரும் சினமும் கடிந்து - அறியாமை யினையும் சினத்தினையும் நீக்கி, நற்பயன் கொண்டு இருக்கற் பாற்று - இன்பத்துக்குக் காரணமான நற்செயல்களை மேற் கொண்டிருத்தல் நல்லது. உள்ளி - அறிந்து, செயிர் - குற்றம். இங்கு அறியாமை. கடிந்து - நீக்கி. களைந்து - நீக்கி. புல்லைக் களைவதனா லேயே அதற்குக் ‘களை’ என்று பெயர் ஏற்பட்டது. நெல்பயன் - நெல்லாகிய பயன் - நெல். நற்பயன் - நற்செயல். இருக்கற் பாற்று - இருத்தல் நல்லது. உயிரும் உடம்பும் பிரிவுண்மை - யாக்கை நிலை யாமை. யாக்கை நிலையாமையை அறிந்து, பயிரிட முளைத் துள்ள களையைக் களைந்து நெல்லாகிய பயனைக் கொள்வது போல, அறியாமையையும் சினத்தையும் களைந்து, நற்செயல் செய்ய வேண்டும் என்பதாம். அறியாமையினாலேயே ஒருவன் சினங்கொள்கிறா னாகையால், சினத்துக்குக் காரணமான அதையும் நீக்க வேண்டியதாயிற்று. புல் - சினத்திற்கும், நெல் - நற்பயனுக்கும் உவமை. (8) 130. கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே - விற்பிடித்து நீர்கழிய வெய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம். (வாக்) கயவர் கடுஞ்சினத்துக் கல் பிளவோடு ஒப்பர் - கீழ்மக்கள் மிக்க சினமுண்டான விடத்துக் கல்லினது பிளவுகளைப் போலாவர், பொன் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - பொன்னினது பிளவுகளோடு ஒப்பாரும் உண்டு, சீர் ஒழுகு சான்றோர் சினம் - சிறப்பு மிக்க பெரியோர்களுடைய சினமானது, வில் பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறும் - வில் பிடித்து நீர் பிளக்கும்படி அம்பெய்த பிளவு போல உடனே நீங்கும். பிளவு - உடைந்த சிறுதுண்டு. கயவர் - கீழ்மக்கள். ஒப்பாரும் போல்வார் - ஒப்பார். வடு - பிளவு. சீர் ஒழுகு - சிறப்பு மிக்க. ஒழுகுதல் - மிகுதல். பிளந்த கல்துண்டுகள் மறுபடியும் ஒன்று சேராமை போல, கீழ்மக்கள் கொண்ட சினம் தணிக்கவுந் தணியாது. பொன் உடைந்தால் பின்ஒன்று கூடுவது போல, ஒருசிலர் கொண்ட சினம் தணிக்கத் தணியும். அறிவாளிகள் கொண்ட சினம், தண்ணீரில் உண்டான அம்புப் பிளவு போலத் தானே அப்போதே தணிந்துவிடும் என்பதாம். கடையாயார் சினம் எப்போதும் எவராலும் தணியாது. இடையாயார் சினம் தணிக்கத் தணியும். தலையாயார் சினம் அப்போதே தானே தணியும் என்பது கருத்து. எப்படியாவது சினங்கொள்ள நேரினும் அப்போதே அச்சினம் தணிவது நன்றென்பதாம். (9) 131. உள்ளங் கவர்ந்தெழுந் தோங்கு சினங்காத்துக் கொள்ளுங் குணமே குணமென்க - வெள்ளந் தடுத்த லரிதோ தடங்கரைதான் பேர்த்து விடுத்த லரிதோ விளம்பு. (நன்) வெள்ளம் தடுத்தல் அரிதோ - கரைபுரண்டு வரும் வெள்ளத்தை உயர்ந்த கரைகட்டித் தடுத்தல் அருமையோ, தடம் கரை பேர்த்து விடுத்தல் அரிதோ விளம்பு - அல்லது பெரிய கரையை உடைத்துக் கரையின் உள்ளே அடங்கி யிருக்கும் நீரை வெளியே போகும்படி செய்தல் அருமையோ நீ சொல்வாயாக, (தடுத்தலே அருமை. அதுபோல), உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் - மனத்தைத் தனதாக்கிக் கொண்டு கொதித்தெழும் மிகுந்த சினத்தை, காத்துக் கொள்ளும் குணமே குணம் என்க - அடக்கிக் கொள்ளும் குணத்தையே அருமையான குணம் என்று சொல்லுக. உள்ளம் - மனம். கவர்தல் - இழுத்துக் கொள்ளல் - தனதாக்கிக் கொள்ளல். எழுதல் - கொதித்தெழுதல். ஓங்குதல் - மிகுதல். தடம் - பெரிது. பேர்த்தல் - உடைத்தல். விளம்புதல் - சொல்லுதல். பெருகிவரும் வெள்ளத்தைக் கரை கட்டித் தடுத்தலே அருமை. தேங்கி நிற்கும் நீரைக் கரையை உடைத்து வெளியே போகும்படி செய்தல் அருமையன்று. அதுபோல, மனத்தின் கண் பொங்கி யெழும் சினத்தை அடக்குதலே அருமை யாகும். அதை அடக்காது விட்டு விடுதல் அருமையன்று என்பதாம். மிகுந்த சினம் உண்டாயினும் அதை அடக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்பது கருத்து. (10). 132. செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிது. (இனி) செவ்வியனாய் - மனக்கோட்ட மிலனாய், சினம் செற்று கடிந்து வாழ்வு இனிது - சினத்தை பகைத்து நீக்கி வாழ்வது நல்லது. மனக்கோட்டம் - மனங்கோணுதல்; தமக்குப் பிறர் செய்யும் தீங்கு குறித்து மனங்கோணுதல்; மனங்கோணிச் சினங்கொள்ளுதல். செற்று - பகைத்து. (11) 133. சிறியார்மேற் செற்றங் கொளலின்னா. (இன்) சிறியார்மேல் - தம்மினும் சிறியவர்மீது, செற்றம் கொளல் இன்னா - சினம் கொள்ளுதல் துன்பந் தருவதாகும். சிறியார் - தம் சினம் செல்லுதற்குரிய எளியார். செற்றம் - சினம். இன்னா - துன்பம். தம்மினும் மெலியார் மீது சினங்கொள்ளுதல் உலகப் பழிப்புக் கேதுவாதலால், சிறியார்மேல் கொள்ளுஞ் சினம் துன்பந்தருவ தாயிற்று. செல்லா விடத்துச் சினந்தீது, செல்லிடத்தும் இல்லதனிற் றீய பிற. (குறள்) (12) 134. எல்லாம் வெகுண்டார்முற் றோன்றாக் கெடும். (நான்) எல்லாம் - எல்லா நன்மைகளும், வெகுண்டார்முன் தோன்றா கெடும் - சினங்கொள்வாரிடத்துத் தோன்றாமல் கெட்டொழியும். தோன்றாமல் கெடுதல் - சிறிதும் இன்றாதல். தோன்றா - தோன்றாமல்; ஈறுகெட்ட எதிர்மறை வினை யெச்சம். நகையும் உவகையுந் கொல்லுஞ் சினத்திற் பகையு முளவோ பிற. (குறள்) (13) 135. என்றும் விடல்வேண்டுந் தங்கண் வெகுளி. (நான்) தம்கண் வெகுளி - தம்மிடம் உண்டாகும் சினத்தை, என்றும் விடல் வேண்டும் - எப்பொழுதும் நீக்குதல் வேண்டும். சினக்கப்பட்டாரால் ஒன்றுஞ் செய்ய முடியாத விடத்தும் பழி உண்டாவதனாலும், சினம் நல்லியல்பைக் கெடுத்துவிடு மாதலாலும் ‘ என்றும் விடல் வேண்டும் என்றார். தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொள்ளுஞ் சினம். (குறள்)(14) 136. வெல்வது வேண்டின் வெகுளி விடல் (நான்) வெல்வது வேண்டின் - பிறரை வெல்ல விரும்பினாள், வெகுளி விடல் - சினத்தை விடுக. உள்ளிய தெல்லா முடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின். (குறள்) என்பதால் ‘வெல்வது வேண்டின் வெகுளி விடல், என்றார். (15). 137. கெடுப்பின் வெகுளி கெடுத்து விடல். (நான்) கெடுப்பின் - ஒன்றைக் கெடுக்க விரும்பினாள், வெகுளி கெடுத்துவிடல் -சினத்தைக் கெடுக்க. சினம் எல்லா நன்மைகளையும் கெடுப்பதனால், நன்மை யை விரும்புவோர்அதனை விடவேண்டும் என்பதாம். (16) 138. சுருக்குக செல்லா விடத்துச் சினம். (நான்) சுருக்குதல் - தணித்தல். செல்லா இடம் - தம்மின் மெலியார் மாட்டென்க. செல்லா - செல்லாத, செல்லத் தகாத இடம். செல்லிடத்துக்கு காப்பான் சினங்காப்பான். (குறள் 17) 139. ஆறுவது சினம் (ஆத்) ஆறுவது - ஒருவன் உள்ளத்துள் தணிய வேண்டுவது, சினம் - சினமாகிய தீயேயாம். சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். (குறள்) என்பதால், சினத்தைத் தீயாக உருவகித்தார். அழுக்காறு, அவா, கள்ளம் முதலிய எல்லாக் குற்றங்களினும் கொடிய தாகையால், ‘ஆறுவது சினம்’ என்றார். (18) 140. தீராக் கோபம் போரா முடியும். (கொன்) தீராக்ககோபம் - நீங்காத சினமானது. போரா முடியும் - போராக முடிந்து விடும். தீரா - தீராத. போரா - போராக. போர் - சண்டை. ஆறாத சினம்போரை விளைவிக்கும். போர் உண்டாதற்குக் காரணமாகும் என்பதாம். இருவர் கொண்ட நீங்காத சினம் அவ்விருவர்க்கும் சண்டையை உண்டாக்கும் என்பதாம். (19) 141. சினந்தேடி அல்லலையுந் தேட வேண்டாம். (உல) சினம்தேடி - சினத்தை அடைந்து, அல்லலையும் தேட வேண்டாம் - அதனால் வரும் துன்பத்தையும் தேடிக் கொள்ளாதே. அல்லல் - துன்பம். மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்த லதனால் வரும். (குறள்) (20) 5. அடக்கமுடைமை அதாவது, மனம் மொழி மெய்கள் தீநெறிக்கட் செல்லாது அடங்கி நடத்தல், அடங்காமையால் தீமை பலவும் உண்டாவ தால், நல்வாழ்வு வாழ அடங்கி வாழ வேண்டுமென்பதாம். ஐம்புல அடக்கமுங் கொள்க. 142. தொல்லவையுட் டோன்றுங் குடிமையும் தொக்கிருந்த நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் - வெல்சமத்து வேந்துவப்ப வட்டார்ந்த வென்றியும் இம்மூன்றும் தாந்தம்மைக் கூறாப் பொருள். (திரி) தொல் அவையுள் தோன்றும் குடிமையும் - தொன்று தொட்ட மரபினையுடைய நல்லோர் கூடியுள்ள அவையிடத் தே விளங்கித் தோன்றும் குடிப்பிறப்பும், தொக்கு இருந்த நல் அவையுள் மேம்பட்ட கல்வியும் - பலவகை அறிஞரும் கூடியிருந்த நல்ல அவையினி டத்தே மேன்மைப்பட்ட கல்வியும், வெல்சமத்து வேந்து உவப்ப - அட்டு ஆர்ந்த வென்றியும் - வெல்லும் போரிடத்தே அரன் மகிழும்படி பகைவரை வென்று மேம்பட்ட வெற்றியும், இம்மூன்றும் தாம் தம்மைக் கூறாப் பொருள் - ஆகிய இம்மூன்றும் தாமே தம்மைப் புகழ்ந்து கூறக் கூடாத பொருள்களாம். தொல் அவை - தொன்மையுடையோர் கூடிய அவை. தொன்மை - தொன்று தொட்ட மரபு. தொன்று தொட்ட மரபு - வழிவழியாக வந்த நன்மரபு. குடிமை - நற்குடிப் பிறப்பு. தொல்ல வையுள் தோன்றுதல் - பெரியோர் புகழ்ந்து பேசும் படியான நற்குடியில் பிறத்தல். தொக்கு இருத்தல் - கூடியிருத்தல். மேம்படுதல் - சிறப்பித்துக் கூறப்படுதல். சமம் - போர். சமத்து - சமம் அத்து. அத்து - சாரியை. வேந்து - அரசன். உவத்தல் - மகிழ்தல். அடுதல் - வெல்லுதல். அட்டு ஆர்ந்த - வென்று மேம்பட்ட. அரசன் மகிழும் படி அடைந்த வெற்றி. பெரியோர்கூடிய அவையில் புகழ்ந்து பேசப்படும் ஒருவன் குடியே நற்குடியாகும்; கற்றோர் கூடிய அவையில் பாராட்டப் படும் ஒருவன் கல்வியே சிறந்த கல்வியாகும்; வேந்தன் மகிழும்படி வென்ற ஒருவன் வெற்றியே சிறந்த வெற்றியாகும் என்பதாம். தம் குடிப்பிறப்பின் பெருமையையும், கல்விச் சிறப்பையும், வெற்றிச் சிறப்பையும் தாமே புகழ்ந்து கூறுதல் தகுதியல்ல. அங்ஙனம் கூறாது அடக்கமாக இருக்க வேண்டும் என்பதாம். இது மொழி யடக்கமாகும். யாகாவா ராயினும் நாகாக்க. (குறள்) (1). 143. தன்னைத்தன் னெஞ்சங் கரியாகத் தானடங்கின் பின்னைத்தா னெய்தா நலனில்லை - தன்னைக் குடிகெடுக்குந் தீநெஞ்சிற் குற்றேவல் செய்தல் பிடிபடுக்கப் பட்ட களிறு. (அற) தன்னைத் தன்நெஞ்சம் கரியாகத் தான் அடங்கின் - தான் செய்யும் செயல்களுக்குத் தன் மனத்தினையே சான்றாகக் கொண்டு ஒருவன் அடங்கி நடப்பானாயின், பின்னைத் தான் எய்தா நலன் இல்லை - பின்பு அவனால் அடைய முடியாத நன்மை ஒன்று மில்லை, தன்னைக் குடிகெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவல் செய்தல் - ஒருவனை அவன் பிறந்த குடியோடு கெடுக்கின்ற தீய நெஞ்சினுக்குத் தொண்டு செய்தல், பிடி படுக்கப்பட்ட களிறு - பார்வை விலங்காக நிறுத்தப் பெற்ற பெண் யானையை விரும்பிப் படுகுழியிலகப்பட்ட ஆண் யானைப்போல் எப்போதும் வருந்துதற்குக் காரணமாகும். தன்னை - தான் செய்யும் செயல்களே. கரி - சான்று, சாட்சி, பின்னை - பின்பு. எய்துதல் - அடைதல். நலன் - நன்மை. தன்னை குடி - தன்னையும் தன் குடியையும். குற்றேவல் - இட்ட கட்டளைப் படி நடத்தல். குறு ஏவல் - குற்றேவல். பிடி - பெண்யானை. களிறு - ஆண்யானை. பார்வை விலங்கு - பழக்கப்பட்ட விலங்கு. காட்டு விலங்கு களைப் பிடிக்கப் பழக்கப்பட்ட விலங்குகளுக்குப் பார்வை விலங்கு என்பது பெயர். பிடிபடுக்கப்பட்ட - பிடியால் படுக்கப்பட்ட. படுக்கப் படுதல் - படுகுழியில் விழும்படி செய்தல். காட்டில் யானை களைப் பிடிப்போர், காட்டில் ஓரிடத்தில் ஆழமான குழி வெட்டி அதில் பழகிய பெண் யானையை விட்டு வைப்பர். காட்டில் வாழும் ஆண் யானை அப் பெண்யானையை விரும்பிக் குழியில் விழுந்து மேலே ஏற முடியாமல் வருந்தும். பின்னர் அதைப் பிடித்து வருவர். அக்குழி - படுகுழி எனப்படும். மனத்தைத் தன்வழிப் படுத்தி நடக்காமல், மனம் போன போக்கில் நடத்தல், குழியினுள் நிற்கும் பிடியை விரும்பிய மனத்தை அடக்காமல் அம்மனம் போன போக்கில் நடந்து குழியில் விழுந்து வருந்தும் களிறு போல் துன்பப்பட நேரும் என்பதாம். ஒருவன் தான் செய்யும் செயல்களுக்குத் தன் மனத்தையே சான்றாக்குதலாவது - மனமறியக் கெட்ட காரியங்கள் செய்யா திருத்தல். வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் அஞ்சு மகத்தே நகும் (குறள்) ஆதலின், மனமறிந்த தீமையைச் செய்யக் கூடாதென்பதாம். அவ்வாறு மனமறிந்த தீமையைச் செய்யாது அடங்கி நடந்தால், அவ்வடக்கம் எல்லா நன்மையும் தரும் என்பார், ‘எய்தா நலன் இல்லை’ என்றார். காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை யுயிர்க்கு (குறள்) மனமறியத் தீமை செய்யாமல் அடங்கி நடந்தால் எல்லா நன்மையும் உண்டாகும். மனம்போனபடி நடந்தால் எல்லாத் துன்பமும் உண்டாகும் என்பது கருத்து. இது மன வடக்கம் கூறியது. (2) 144. முற்று முணர்ந்தவ ரில்லை முழுவதூஉங் கற்றன மென்று களியற்க - சிற்றுளியாற் கல்லுந் தகருந் தகரா கனங்குழாய்! கொல்லுதலைக் கூடத்தி னால். (நீநெ) கனம் குழாய் - கனமான காதணியை யுடையவளே, முற்றும் உணர்ந்தவர் இல்லை - எல்லாந் தெரிந்தவர் உலகில் ஒருவரும் இல்லை, முழுவதும் கற்றனம் என்று களியற்க - (ஆதலால்), எல்லா வற்றையும் கற்று விட்டோம் என்று செருக்குக் கொள்ளாதே, ஏனெனில், கொல் உலைக் கூடத்தினால் தகரா கல்லும் - கொல்லம் பட்டறையில் உள்ள சம்மட்டி யினால் உடையாத மலையும், சிறு உளியால் தகரும் - மிகச் சிறிய உளியினால் உடையும். களித்தல் - செருக்குக் கொள்ளுதல். உளி - கல் பிளக்கும் உளி. கல் - மலை; பெரிய பாறைக்கல் எனினுமாம். தகர்தல் - உடைதல். தகரா - உடையாத; ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். கனங்குழாய் - மகடூஉ முன்னிலை. கொல் உலை - கொல்லம் பட்டறை. கூடம் - சம்மட்டி. கூடத்தினால் தகராத கல்லும் சிற்றுளியால் தகரும் எனக் கூட்டுக. முதலிரண்டடிக்குப் பின்னிரண்டடியின் உவமையால் காரணங் கூறினார். அவ்வுவமை, சிறிது கற்றாரும் பெரிய கல்வியறி வுடையவரை வென்றுவிடுவர் என்னும் வேறொரு பொருளை உட்கொண்டு நின்றது. சிற்றுளியால் கல்லும் தகரும்; ஆகையால். மிகவும் கற்றனம் என்று களியற்க, எனச் செருக்கின்றி அடக்கமாக இருத்தற்குக் காரணங் கூறியவாறு. மற்றொன்று பெரிய சம்மட்டியால் உடையாத கல்லும் சிற்றுளியால் உடைவதுபோல, பெருங் கல்வியறிவுடையரால் வெல்ல முடியாத சிறந்த கல்வியறிவுடையரும் சிறிது கல்வி கற்றாரால் வெல்லப்படுவர் என்பதாம். இது பிறிது மொழிதல் என்னும் அணியின் பாற்படும். ‘துளக்க லாகா நிலையினையுடைய மலை போன்றவர்’ என்பர் நன்னூலார். துளக்கலாகா - பிறரால் அசைக்க முடியாத அத்தகு கல்விச் சிறப்புடையவர். துளங்குதல் - அசைதல். தம் போன்ற கல்வியறியுடையரால் வெல்ல முடியாத சிறந்த கல்வியறிவுடையரும், சிறிது கற்றோரால், ஏதாவ தொன்றில் வெல்லப்படுதல் கூடும். ஆகையால், ‘முற்றும் உணர்ந்தவர் இல்லை, முழுவதூஉம் கற்றனம் என்று களியற்க’ என அடக்கத்திற்குக் காரணங் கூறியவாறாம். (3) 145. தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினுங் கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லா மெற்றே யிவர்க்குநா மென்று. (நீநெ) தம்மின் மெலியாரை நோக்கி- தம்மினும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களைப் பார்த்து, தமது உடைமை அம்மா பெரிது என்று அகம் மகிழ்க - தமது செல்வம் மிகவும் பெரிது என்று எண்ணி மனமகிழ்ச்சி கொள்க, தம்மினும் கற்றாரை நோக்கி - தம்மைவிட மிகுதியாகக் கற்றவர்களைப் பார்த்து, நாம் கற்றது எல்லாம் எற்றே இவர்க்கு என்று - நாம் கற்ற கல்வி யெல்லாம் இவர் கல்விக்கு எத்துணையது என்று எண்ணி, கருத்து அழிக - மிகுந்த கல்வியறி வுடையோம் என்று முன் எண்ணிய எண்ணத்தை விட்டுவிடுக. மெலியர் - எளியர், வறியர். நோக்கி என்பது - இரண்டி டத்தும் ‘எண்ணிப் பார்த்து’ என்னும் பொருளது. உடைமை - செல்வம் கல்வி இரண்டற்கும் பொது. “கல்வியுடைமை பொருளு டைமை என்றிரண்டு செல்வமும் செல்வம் எனப்படும்” (16) என, இவரே கூறுதல் காண்க. அம்மா - வியப்பிடைச் சொல். கருத்து - எண்ணம். அழிதல் - விட்டுவிடுதல். எற்று - எத் துணையது, எவ்வளவினை யுடையது. இவர் கல்விக்கு நம் கல்வி எம்மாத்திரம் என்பதாம். இவர்க்கு என்பது - இவர் கற்ற கல்விக்கு என்னும் பொருளது; பொருளாகு பெயர். கல்வி யோடு செல்வத் தையும் குறிக்கும். செல்வச் செருக்கு, கல்விச் செருக்கு இரண்டும் இன்றி, அடக்கமாக இருக்க வேண்டும் என்கின்றது இப்பாட்டு. முன்னி ரண்டடியைக் கல்விக்கும், பின்னிரண்டடியைச் செல்வத்திற்கும் எதிர்மறுத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும். தம்மினும் ஏழ்மை நிலையில் உள்ளவரைப் பார்த்துச் செருக்குக் கொள்ளாமல் இரக்கங்கொண்டு, தமது செல்வம் மிகவும் பெரிது என்று மன மகிழ்ச்சி கொள்ளுதல் போலவே, தம்மினும் குறைந்த கல்வியுடையாரைப் பார்த்துச் செருக்குக் கொள்ளாமல் இரக்கங் கொண்டு, தமது கல்வி மிகவும் பெரிது என்று மனமகிழ்ச்சி கொள்ளுதல் வேண்டும். இங்ஙனமே, தம்மினும் கற்றாரைப் பார்த்து, நாம் கற்ற கல்வி யெல்லாம் இவர் கல்விக்கு எத்துணையது என்று எண்ணி, மிகுந்த கல்வியறி வுடையோம் என்று முன் கொண்டிருந்த செருக்கினை விட்டு விடுதல் போலவே. தம்மினும் செல்வ முடையாரைப் பார்த்து, நமது செல்வமெல்லாம் இவர் செல்வத்திற்கு எத்துணையது என்று எண்ணி, மிகுந்த செல்வ முடையோம் என்று முன்கொண்டி ருந்த செருக்கினை விட்டு விடுதல் வேண்டும் என்பதாம். (4) 146. கற்பன வூழற்றார் கல்விக் கழகத்தாங் கொற்கமின் றூத்தைவா யங்காத்தல் - மற்றுத்தம் வல்லுரு வஞ்சன்மின் என்பவே மாபறவை புல்லுரு வஞ்சுப போல். (நீநெ) கற்பன ஊழ் அற்றார் - கற்கப் படுவனவற்றைக் கற்கும் முறைமை தவறியவர்கள், கல்விக் கழகத்து ஒற்கம் இன்று ஊத்தை வாய் அங்காத்தல் - கற்றோர் கூடியுள்ள அவையில் அடக்கம் இல்லாமல் தமது அழுக்குப் பிடித்த வாயைத் திறந்து பேசுதல், மாபறவை புல் உரு அஞ்சுவ போல் - விலங்குகளும் பறவைகளும் புல்லினாற் செய்யப்பட்ட பொய் உருவத்திற்கு அஞ்சுவதுபோல, தம் வல் உரு அஞ்சன் மின் என்பவே - தம்முடைய வலிய உருவத்துக்கு அஞ்சாதீர்கள் என்று சொல்வனவேயாம். கற்பன என்னும் பன்மை - கல்வியின் பல வகையினை யுங் குறித்தது. ஊழ் - முறைமை. கற்பன ஊழ் -கற்கும் முறை. அதாவது, இளமைப் பருவத்தில் ஆசிரியரை அடுத்து வருந்திக் கற்றல். ஊழ் அற்றார் - அவ்வாறு கல்லாதவர். கழகம் - கூட்டம். கல்விக் கழகம் - கற்றோர் அவை. ஆங்கு - அசை. ஒற்கம் - அடக்கம். ஊத்தை - அழுக்கு. ‘ஊத்தை வாய் என்றது - கல்லாதார் வாயின் இழிவு குறித்தவாறு. அங்காத்தல் - திறத்தல், திறந்து பேசுதல். மற்று - அசை. அஞ்சன்மின் - ஏவற் பன்மை வினைமுற்று. மா - விலங்கு. மாபறவை -உம்மைத் தொகை. புல் உரு - புல்லினால் செய்யப்பட்ட உருவம். அஞ்சுவ - அஞ்சுவது - அஞ்சுதல், தொழிற் பெயர்; கடைக் குறை. புல்லுரு என்பது - கம்பு, சோளம் முதலிய பயிர்கள் விளைந்து கதிர் முற்றியபோது, விலங்குகளும் பறவைகளும், ‘காவற்காரன் கையில் தடி வைத்துக் கொண்டு நிற்கிறான்’ என்று அஞ்சித் தின்னாமல் இருக்கும் பொருட்டு, அந்நிலத்துக் குரியவர் வைக்கப் புல்லினால் செய்துவைக்கும் ஆணுருவம். கதிரைத் தின்னவரும் விலங்குகளும் பறவைகளும் அப் பொய்வுருவத்தை உண்மையான ஆள் என்று அஞ்சுவது போல, எம் வல்லுருவத்தைக் கண்டு நீங்கள் அஞ்சாதீர்கள். மாபறவை அப் புல்லுருவத்தின் உண்மையை அறிந்தால் எங்ஙனம் அஞ்சாவோ, அவ்வாறே நீங்களும் யாம் கல்வியறி வில்லேம் என்பதை அறிந்தால் அஞ்சமாட்டீர்கள் என்று சொல்வது போன்றதாம் அவர்கள் பேசுவது என்பதாம். புல்லுரு - கல்லாதார்க்கும், மாபறவை - கற்றவர்க்கும் உவமை. கற்றவர்கள் போன்ற தோற்றப் பொலிவையும், கற்றவர்கள் பேசுவது போன்ற எழுவாய்களுக் கேற்ப, ‘என்ப’ எனப் பன்மையாற் கூறினார். கற்றார் அவையில் கல்லார் எனப் பயனற்ற பேச்சைப் பேசாமல் அடங்கியிருக்க வேண்டும் என்பது கருத்து. (5) 147. அல்லன செய்யினு மாகுலங் கூழாக்கொண் டொல்காதார் வாய்விட் டுலம்புப - அல்லால் பிறர்பிறர் செய்பபோற் செய்தக்க செய்தாங் கறிமடம் பூண்டுநிற்பா ரார். (நீநெ) ஒல்காதார் அல்லன செய்யினும் - அடக்கமில்லாதவர் பிறர்க்குப் பயன்படாதவற்றைச் செய்யினும், ஆகுலம் கூழ் ஆ கொண்டு - (பிறர்க்குப் பயன்படக் கூடிய செயல்களைச் செய்து விட்டது போல) ஆரவாரத்தையே பயனாகக் கொண்டு, வாய் விட்டு உலம்புப - பலரறியத் தாம் செய்தவற்றைக் கூறி முழங்குவர். பிறர்பிறர் செய்பபோல் செய்தக்க செய்து -எவரேனுமொருவர் பிறர்க்குப் பயன்படும் செயல்கள் செய்து, அறிமடம் பூண்டு நிற்பார் ஆர் - (தாம் செய்த அப்பயன்படும் செயல்களைத் தாம் நன்குணர்ந்தும் உணராததுபோல) அறியாமையை மேற்கொண் டிருப்பவர் யாவர்? எவரும் அரிது என்பதாம். அல்லன - பிறர்க்குப் பயன்படாதன. தமக்கு மட்டும் பயனுடையன. ஆகுலம் - ஆரவாரம். கூழ் - பயன். கூழா - கூழாக. ஒல்காதார் - அடக்கமில்லாதார். உலம்புதல் - முழங்குதல். பிறர் பிறர் என்னும் அடுக்கு - எவரேனும் ஒருவர் என்னும் பொருட்டு. செய்பபோல் செய்தக்க - பிறர்க்குப் பயன்படத் தக்க செயல்கள். ஆங்கு - அசை. அறிமடம் - அறிந்தும் அறியாதது போன்ற தன்மை. பூணல் - மேற் கொள்ளல். ஆர் என்பது யார் என்பதன் திரிபு. அடக்க மில்லார் பிறர்க்குப் பயன்படாத செயலொன்று செய்யினும், அதைப் பலரும் அறிய எடுத்துக் கூறுவர் என்பதாம். தாம் செய்த ஒரு சிறு காரியத்தையும் பெரிதாகக் கூறித்திரியும் அடக்கமிலார் இவ்வுலகில் பலர் உளர். ஆனால், தாம் செய்த பொதுநலச் செயலைப் பிறரறியாதவாறு அடங்கி நடக்கும் அடக்க முடையாரைக் காண்டல் அரிது என்பதாம். பிறர்க்குச் செய்த நன்மையைத் தாமே கூறாமல் இருப்பதே அடக்க முடைமையாகும் என்பது கருத்து. இது மொழி யடக்க மாகும். காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை யுயிர்க்கு. (குறள்) (6) 148. அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில் ஓடுமீ னோட உறுமீன் வருமளவும் வாடி யிருக்குமாங் கொக்கு. (வாக்) கொக்கு மடைத்தலையில் - கொக்கானது நீர்நிலையின் கண், ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்கும் - ஓடுகின்ற சிறுமீன்கள் ஓடப் பெரிய மீன் வருகிற வரைக்கும் சோர்ந் திருக்கும், (அதுபோல), அடக்கம் உடையார் அறிவு இலர் என்று எண்ணி - ஏற்ற காலம் வரும் வரை அடங்கி யிருப்பவர்கள் அறிவில்லாதவர் என்று கருதி, கடக்கக் கருதவும் வேண்டா - அவரை வெல்லுவதற்கு நினைக்கவும் வேண்டா. கடக்க - வெல்ல. மடை - ஏறி, குளம், ஆறு முதலிய நீர்நிலை. தலை - இடம்; ஏழாம் வேற்றுமை உருபு. ஓடு மீன் - சிறுமீன். உறுமீன் - பெரிய மீன். உறு - மிகுதி குறிக்கும் உரிச்சொல். தன் உணவுக்குப் போதுமான பெரிய மீன். வாடுதல் - சோர்தல், மீன்களைப் பிடியாமல் சும்மா இருத்தல். கொக்கானது, தனக்குப் போதுமான உணவாகும் பெரிய மீன் வருமளவும் பக்கத்தில் வந்துவந்து போகும் சிறுமீன் களைப் பிடியாமல் சும்மா இருப்பதுபோல, அடக்க முடையார், தகுந்த பகைவர் வரும்வரைச் சிறுபகைவர்களைப் பொருட்படுத்தாது அடங்கியிருப்பர். அதனால், அவரை அறிவில்லாதவர் வெல்லக் கருதிய சிறு பகைவரும் கெடுவர் என்பதாம். கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து. (குறள்) செயல் முடிக்கும் காலம் கைகூடும் வரை அடங்கி யிருப்பதே அறிவுடைமையாகும் என்பது கருத்து. (7) 149. சிற்றுணர்வோ ரென்றுஞ் சிலுசிலுப்ப ரான்றமைந்த முற்றுணர்வோ ரொன்று மொழியாரே - வெற்றிபெறும் வெண்கலத்தி னோசை மிகுமே விரிபசும்பொன் ஒண்கலத்தி னுண்டோ வொலி. (நீநெ) வெற்றி பெறும் வெண்கலத்தின் ஓசை மிகும் - உயர்ந்த வெண்கலத்தின் ஒலி மிகுதியாகும். விரி பசும்பொன் ஒண் கலத்தின் ஒலி உண்டோ - மாற்றுயர்ந்த பொன்னாற் செய்த அழகிய ஏனத்தில் மிகுதியான ஓசை உண்டோ? இல்லை. (அதுபோல), சிற்றுணர் வோர் என்றும் சிலுசிலுப்பர் - சிற்றறி வுடையோர் எப்போதும் அளவு கடந்து பேசுவர், ஆன்று அமைந்த முற்றுணர் வோர் ஒன்றும் மொழியார் - கல்வி கேள்விகளில் நிறைந்து அடங்கிய பேரறிவுடை யோர் அளவு கடந்து ஒன்றும் பேசார். உணர்வு - அறிவு. சிலுசிலுத்தல் - அடக்கமின்றிப் பேசுதல். சிலுசிலுத்தல் - இரட்டைக்கிளவி. ஆன்று - நிறைந்து. அமைதல் - அடங்குதல், கற்றதற்குத் தக நிற்றல். முற்று உணர்வு - முற்றிய அறிவு, பேரறிவு. வெற்றி - உயர்வு. வெண்கலம் மிகுந்த ஓசை உடையது. வெண்கலம் - வெண் கலத்தினால் செய்த ஏனத்தைக் குறித்தது. ஏனம் - பாத்திரம். பசும்பொன் - சிறந்த பொன். கலம் - ஏனம். ஒண்கலம் - சிறந்த கலம். வெண்கல ஏனத்தில் அதிக ஓசை உண்டாவது போல, சிற்றறிவுடையோர் அடக்கமின்றி அளவுகடந்து பேசுவர். பொற் கலத்தில் ஓசை உண்டாகாதவாறு போல, பேரறி வுடையோர் அளவு கடந்து பேசார் என்பதாம். பெருமை பெருமித மின்மை சிறுமை பெருமித மூர்ந்து விடல். (குறள்) (8) 150. ஐவாய வேட்கை அவாவடக்கல் முன்னினிது. (இனி) ஐவாய வேட்கை அவா அடக்கல் - ஐந்து வழியான் உண்டா கின்ற விருப்பத்தாலாகிய ஆசையினை அடக்குதல், முன் இனிது - மிகவும் நல்லது. ஐந்து - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறி. ஐவாய வேட்கை - இவ் வைம்பொறிகளும் ஐம்புலவின்பம் நுகர விரும்புதல். வேட்கை - விருப்பம். ஐம்புலன் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன. அவா - ஆசை. வேட்கை அவா - விருப்பத் தாலாகிய ஆசை. முன் - மிகவும். கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் இன்புற விரும்பும் ஆசை ஐந்தினையும் அளவு கடவாமல் அடக்குதல் நல்வாழ்வுக்கு ஏற்றதாகும் என்க. இது மனவடக்கம். அவாவில்லார்க் கில்லார்க்கும் துன்பம் (குறள்) மெய்வாய்க்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற ஐவாய வேட்கை அவா. (நாலடி) ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றின் எழுமையு மேமாப் புடைத்து. (குறள்) (9) 151. தன்னைத்தான் போற்றா தொழுகுதல் நன்கின்னா. (இனி) தன்னைத்தான் போற்றா தொழுகுதல் - ஒருவன் தன்னைத் தானே காத்துக் கொள்ளாது நடத்தல், நன்கு இன்னா - மிகவும் துன்பந் தருவதாம். போற்றுதல் - காத்தல். தன்னைத்தான் போற்றுதலாவது - மன மொழி மெய்கள் தீய வழியிற் செல்லாது அடக்குதல். நன்கு - மிகவும். இன்னா - துன்பம். தீய எண்ணமும் தீய செயலும் இன்றி அடங்கி வாழ வேண்டும் என்பதாம். (10) 152. அறிஞர்க் கழகு கற்றுணர்ந் தடங்கல் கற்று உணர்ந்து அடங்கல் - நல்ல நூல்களைக் கற்றுத் தெளிந்து மனமொழி மெய்கள் தீய வழியிற் செல்லாமல் அடங்கி நடத்தல், அறிஞர்க்கு அழகு - அறிவுடையோர்க்கு அழகாகும். கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. (குறள்) அடக்கமுடைமையே கல்வியறிவுடைமையின் பயனாகு மென்பதாம். (11). 153. தறுகண் யானை தான்பெரி தாயினும் சிறுகண் மூங்கிற் கோற்கஞ் சும்மே. (வெற்) தறுகண் யானை தான் பெரிது ஆயினும் - அஞ்சாமை யை யுடைய யானையானது எல்லா விலங்குகளையும் விட உருவத்தால் பெரிதாயினும், சிறுகண் மூங்கில் கோற்கு அஞ்சும் - சிறிய கணுக்களையுடைய மூங்கில் தடிக்கு அஞ்சும். தறுகண்மை - அஞ்சாமை. அஞ்சும்மே என்பது விரித்தல் விகாரம். கண் - கணு. கணுக்களையுடைய சிறிய மூங்கிற் கோல். அஞ்சாமையை உடையதும் உருவத்தால் பெரியதுமான யானை சிறிய மூங்கிற் கோலுக்கு அஞ்சி அடங்கி நடக்கும். அதுபோல, மிக்க திறமையுடையவரும் பெரிய உருவமும் பருவமும் உடையவரும் சிறு பருவ முதலியவுள்ள தலைவர் கட்கும் மேலதி காரிகட்கும் அடங்கி நடக்க வேண்டும் என்பதாம். பிறிதுமொழி தலணி. (12). 154. குன்றுடை நெடுங்கா டூடே வாழினும் புன்றலைப் புல்வாய் புலிக்குஞ் சும்மே. குன்று உடை நெடுங்காடு ஊடே வாழினும் - மலையின் கண் உள்ள பெரிய காட்டினிடத்தே வாழ்ந்தாலும், புல்தலை புல்வாய் புலிக்கு அஞ்சும் - சிறிய தலையையுடைய மானானது அஞ்சி அடங்கி வாழும். ஊடு - இடை, நடு. புல்லிய - சிறிய. புல்வாய் - மான். பெரிய காட்டின்கண் வாழினும் சிறிய மானானது பெரிய புலிக்கு அஞ்சி அடங்கி வாழும். அதுபோல, பெரிய நாட்டின்கண் வாழினும் பெரியோர்களுக்கு அஞ்சி வாழ வேண்டும் என்பதாம். இதுவும் அவ்வணியே. (13) 155. மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம். (உல) மனம்போன போக்கு எல்லாம் - மனம் சென்ற வழிகளி லெல்லாம், போக வேண்டாம் - செல்ல வேண்டாம். மனம் விரும்பியதை யெல்லாம் செய்ய விரும்பாமல் மனத்தை அடக்கி நடக்க வேண்டும் என்பதாம். மனம்போன போக்கு - மனம் விரும்பிய தீயவழிகள். (14). 6. பொறையுடைமை அதாவது, பிறர் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளுதல். ஒருவர் அறியாமையினாலோ, அறிந்தோ ஏதாவது தீமை செய்தல் தாமும் அவருக்குத் தீமை செய்தல் அறிவுடைமை யாகாது. பிறர் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளுதலே அறிவுடைமை யாகும். 156. இளையா னடக்க மடக்கம் கிளைபொருள் இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம் ஒறுக்கு மதுகை யுரனுடை யாளன் பொறுக்கும் பொறையே பொறை. (நால) இளையான் அடக்கம் அடக்கம் - இளமைப் பருவ முடையவன் அடங்கி நடத்தலே சிறந்த அடக்கமாகும். கிளை பொருள் இல்லான் கொடையே கொடைப்பயன் - மிக்க பொருள் வருவாய் இல்லாதவன் கொடுக்கும் கொடையே சிறந்த கொடைப் பயனாகும். (அவை போல), எல்லாம் ஒறுக்கும் மதுகை உரன் உடையாளன் - எத்தகை யோரையும் ஒறுக்கவல்ல மிக்க வலி யுடையவன், பொறுக்கும் பொறையே பொறை - பிறர் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்கின்ற பொறையே சிறந்த பொறையாகும். கிளைபொருள் - மேன்மேல் வளரும்படியான மிக்க பொருள். கிளைபொருள் - வினைத்தொகை. கிளைத்தல் - வளர்தல். ஒறுத்தல் - தண்டித்தல், கெடுத்தல். மதுகை - வலிமை. உரன் - வலிமை. மதுகை உரன் - மிக்கவலிமை; ஒருபொருட் பன்மொழி. முதுமைப் பருவ முடையவன் வலிமை யின்மையால் அடங்கி யிருத்தலும், மிகுந்த செல்வமுடையவன் அச்செல்வத்தின் மிகச்சிறிய தொரு பகுதியைப் பிறர்க்குக் கொடுத்தலும், பிறரை வருத்துதற்கு ஏற்ற வலிமையில்லாதவன் பொறுத்திருத்தலும் இயல்பே யாதலால், அவை சிறந்த குணமென்று கொண்டாடத் தக்கவனல்ல. பொறி களை வெல்லுதற்கரிய இளமைப்பருவ முடையவன் அடங்கி யிருத்தலும், வறியவன் தான் தேடிய பொருளில் சிறிது பிறர்க்குக் கொடுத்தலும், எத்தகைய மேம்பட்டோரையும் வருத்த வல்ல வலிமையுடையவர் பொறுத்தலுமே அரியன வாதலால் கொண்டா டத்தக்க சிறப்பு டையனவாகும் என்பதாம். இப்பாட்டில் பொதுப்பட மூன்று பொருள் கூறப்பட்டி ருப்பினும், அதிகாரத்திற் கேற்ப, முதலிரண்டையும் உவமை யாகவும், மூன்றாவதைப் பொருளாகவுங் கொள்க. இது எடுத்துக் காட்டுவமை யணியின் பாற்படும். (1). 157. கோதை யருவிக் குளிர்வரை நன்னாட! பேதையோ டியாது முரையற்க - பேதை உரைப்பிற் சிதைந்துரைக்கு மொல்லும் வகையான் வழுக்கிக் கழிதலே நன்று. (நால) கோதை அருவிக் குளிர் வரை நல் நாட - மாலைபோல விழுகின்ற அருவிகளையுடைய குளிர்ச்சி பொருந்திய மலை களையுடைய சிறந்த நாட்டையுடையவனே, பேதையோடு யாதும் உரையற்க - அறிவில்லாதவனோடு, எதையும் சொல்லற்க, உரைப்பின் பேதை சிதைந்து உரைக்கும் - சொன்னால் அறிவில்லாதவன் வரம்பு கடந்து பேசுவான், (ஆதலால்), ஒல்லும் வகையான் வழுக்கிக் கழிதலே நன்று - இயன்ற வகையில் ஒன்றும் சொல்லாமல் இருத்தலே நல்லது. கோதை - மாலை. அருவி - மலையாறு. வரை - மலை. நன்னாட - ஆடூஉ முன்னிலை. பேதை - அறிவில்லாதவன். உரைத்தல் - சொல்லுதல். உரையற்க - எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. சிதைந்து - அழிந்து - வரம்பு கடந்து. ஒல்லுதல் - இயலுதல். ஒல்லும் வகையான் - கூடிய மட்டிலும். வழுக்குதல் - தப்புதல். கழிதல் - நீங்குதல். வழுக்கிக் கழிதல் - அவனிடத்தி லிருந்து தப்பி நீங்குதல். அறிவில்லாதவ னொருவன் தமக்கு ஏதாவதொரு பிழை செய்தால் அதற்காக அவனை ஒன்றுஞ் சொல்லலாகாது; சொன்னால் அவன் திருப்பிச் சொல்வதோடு மேலும் பேசி இகழ்வான். ஆதலால், அவன் இகழாமல் இருக்கும்படி இயன்ற மட்டிலும் தப்பித்துக் கொள்வதே நல்லது என்பதாம். தப்பித்துக் கொள்ளுதலாவது - அவன் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்ளுதலாம். அதாவது அவனை ஒன்றும் சொல்லாமல் இருத்தலாம். மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல் (குறள்) அறிவில்லாதார் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்வதே அறிவுடைமையாகும் என்பது கருத்து. (2) 158. நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது தாரித் திருத்தல் தகுதிமற் - றோரும் புகழ்மையாக் கெள்ளாது பொங்குநீர் ஞாலஞ் சமழ்மையாக் கொண்டு விடும். (நால) நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக் கால் - தமக்கு ஒப்பா காதவர் தகுதியில்லாத சொற்களைச் சொன்னால், அது தாரித்து இருத்தல் தகுதி - அவ்வாறு சொன்னதைப் பொறுத் திருத்தலே தக்கதாம், மற்று - அதற்கு வேறாகிய பொறுமை யின்மையை, பொங்குநீர் ஞாலம் புகழ்மையாக் கொள்ளாது - மிக்க நீரையுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகிணர் புகழுக்குக் காரணமாக எண்ணாமல், சமழ்மையாக் கொண்டு விடும் - பழித்தற்குக் காரணமாக எண்ணி விடுவர். நேர் - ஒப்பு. நேர் அல்லார் - தம் தகுதிக்கு ஒவ்வாதவர்; கீழ் பட்டவர் என்றபடி. நீர் அல்ல - தகுதியில்லாத சொற்கள். மற்று - அசை. தாரித்து - தரித்து - பொறுத்து. மற்று - அவ்வாறு பொறுத் திராமல் தாமும் அத்தகைய சொற்களை எதிரே சொன்னால் அது என்னும் பொருளைத் தருதலால், பிறிது என்னும் பொருளது. ஓரும் - அசை. ஆ - ஆக. கொள்ளாது - கொள்ளாமல்; எதிர்மறை வினை யெச்சம். பொங்குதல் - மிகுதல். ; நீர் - நீரையுடைய கடல். ஞாலம் - உலகம். இங்கு உலகத்தவர்; இடவாகு பெயர். சமழ்மை - பழிப்பு. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே (வெற்றி வேற்கை) என்றபடி, கீழோர் சொன்ன தகுதியில்லாத சொற்களைப் பொறுத்தலே புகழாம்; பொறாது தாமும் தகுதியில்லாத சொல்லைச் சொன்னால் அது பழிப்புக்கு இடமாகு மென்பதாம். அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (குறள்) (3) 159. தெரியா தவர்தந் திறனில்சொல் கேட்டால் பரியாதார் போல விருக்க - பரிவில்லா வம்பலர் வாயை அவிப்பான் புகுவாரே அம்பலந் தாழ்க்கூட்டு வார். (பழ) தெரியாதவர் தம் திறனில்சொல் கேட்டால் - அறிவில் லாதவர் தம்மைச் சொல்லும் தகுதியில்லாத சொற்களைக் கேட்டால், பரியாதார் போல இருக்க - அதற்குத் துன்புறாத வராய்ப் பொறுத்துக் கொள்க, பரிவு இல்லா வம்பலர் வாயை அவிப்பான் புகுவார் - அன்பில்லாத அயலார் வாயை அடக்கப் புகுவார், அம்பலம் தாழ்க் கூட்டுவார் - பலருங் கூடுவதான பொதுவிடத்தின் கதவைத் தாழிடுவாரோ டொப்பர். தெரியாதவர் - அறிவில்லாதவர். திறன் - தகுதி. பரிதல் - துன்புறுதல். பரியாதார் - துன்புறாதவர். பரிவு - அன்பு. வம்பலர் - அயலார். அவித்தல் - அடக்குதல்; பேசாமல் இருக்கச் செய்தல். அவிப்பான் - அவிக்க. பலரும் கூடுவதான பொது இடம். தாழ்க் கூட்டுதல் - தாழிடுதல். பலரும் வந்து கூடும் நூலகம், படிப்பகம், மனமகிழ் மன்றம். போன்ற பொதுவிடத்தில் ஒருவரும் வராத வண்ணம் கதவைச் சார்த்தித் தாழிட துணிதல் முடியாத காரியமாகும். அதுபோல, மூடருடைய வாயை அடக்கத் துணிதலும் முடியாத காரியமே. ஆகையால், அறிவிலார் கூறும் பழிச் சொல்லைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதாம். அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை (குறள் 4) 160. இடிப்பதென் றெண்ணி யிறைவானைக் காயார் முடிப்ப ருயிரெனினு முன்னார் - கடிப்பக் கன்றமர்ந்து தீம்பால் கலுழுமே நீண்மோத்தை யொன்ற வுணராத ரூங்கு. (இன்னி) இடிப்பது என்று எண்ணி - காது செவிடும்படி இடிக் கின்றது என்று எண்ணி, இறைவனைக் காயார் - மழை பெய்கின்ற முகிலை உழவர்கள் வெறுக்கார், (அதுபோல), உயிர் முடிப்பர் எனினும் முன்னார் - பிறர் தமது உயிரை நீக்குவரெனினும் பெரியோர் அவருயிரை நீக்க நினையார், கன்று கடிப்பத் தீம்பால் அமர்ந்து கலுழும் - கன்றானது மடியினைக் கடிக்கவும் அதற்கு இனிமையான பாலைத் தாய் அன்போடு அளிக்கும். ஒன்ற உணராதார் நீள் மோத்தை ஊங்கு - (தமக்குத் தீமை செய்தார்க்கும் தாம் நன்மையே செய்ய வேண்டும் என்பதை) பொருந்த அறியாதவரினும் முதிர்ந்த வெள்ளாட்டுக் கிடாய் சிறந்ததாம். இறைவான் - இறைக்கும் வான். நீரைச் சிந்தும் - மழை பெய்யும் வான். இறைத்தல் - சிந்துதல், பெய்தல். வான் - முகில். காயார் - வெறுக்கார். முடித்தல் - கொல்லுதல். முன்னுதல் - நினைத்தல். அமர்ந்து - விரும்பி, அன்போடு. தீம்பால் - இனிமை யான பால். கலுழும் - ஒழுகும். இங்கு பால் சுரந்து கொடுத்தல். மோத்தை - வெள்ளாட்டுக் கிடாய். ஒன்ற - பொருந்த, நன்கு - ஊங்கு - மிக, சிறப்பு. இடி இடிக்கின்ற தென்று உழவர்கள் மழை பெய்யும் முகிலை வெறுப்பதில்லை. அதுபோல, கீழ்மக்கள் தம்முயிரை நீக்குவரென்று தெரியினும் மேன் மக்கள் அவருயிரை நீக்க நினையார், பொறுத்துக் கொள்வரென்பதாம். மாட்டுக் கன்று மடியைக் கடித்தாலும் தாய் விரும்பி அதற்கு இனிய பாலைச் சுரந்து கொடுக்கும்; அதுபோல, தமக்குத் தீமை செய்வோர்க்கும் மேன்மக்கள் விரும்பி நன்மையே செய்வர். தீமை செய்வோர்க்கும் நன்மையே செய்ய வேண்டும் என்பதை அறியாத வரை விட முதிர்ந்த வெள்ளாட்டுக் கிடாய் சிறந்ததாகும் என்பதாம். ‘கன்று கடிப்பத் தீம்பால் அமர்ந்து கலுழும்’ என்பது பிறிது மொழிதலணி. வெள்ளாட்டுக் கிடாய் தம்மைக் கொன்றவர்க்கும் மருந்தாக உதவி நோய் தீர்ப்பதால், தீமை செய்வோர்க்கும் நன்மையே செய்ய வேண்டும் என்பதை அறியாதவரைவிட வெள்ளாட்டுக் கிடாய் சிறந்தது என்றார். முன்னிரண்டடியின் பொருட்குப் பின்னிரண்டடியின் பொருள் ஏதுவாகக் கூறப்பட்டது. ஈற்றடியின் கருத்து மூன்றாவ தடியின் கருத்தை வலியுறுத்திற்று. தமக்குப் பிறர் தீமை செய்யினும் அதைப் பொறுத்துக் கொண்டு தாம் அவர்க்கு நன்மையே செய்ய வேண்டும் என்பது கருத்து. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்தவோ சால்பு. (குறள்) சாந்தனையு தீயெனவே செய்திடினுந் தாமவரை ஆந்தனையுங் காப்பர் அறிவுடையோர் - மாந்தர் குறைக்குந் தனையுங் குளிர் நிழலைத் தந்து மறைக்குமாங் கண்டீர் மரம். (வாக்குண்டாம்) (5) 161. எள்ளிப் பிறருரைக்கு மின்னாச் சொல் தன்னெஞ்சிற் கொள்ளிவைத் தாற்போற் கொடிதெனினும் - மெள்ள அறிவென்னு நீரால் அவித்தொழுக லாற்றின் பிறிதொன்றும் வேண்டா தவம். (அற) பிறர் எள்ளி உரைக்கும் இன்னாச் சொல் - தன்னைப் பிறர் இகழ்ந்து கூறும் கடுஞ் சொல், கொள்ளி வைத்தால் போல் தன் நெஞ்சில் கொடிது எனினும் - தீயினால் சுட்டாற் போலத் தன் மனத்தில் துன்பத்தை மிகுவிப்பதாயினும், அறிவு என்னும் நீரால் மெள்ள அவித்து ஒழுகல் ஆற்றின் - அறிவாகிய நீரால் மெதுவாக அத்துன்பத்தைக் கெடுத்து நடப் பாரானால், பிறிது தவம் ஒன்றும் வேண்டாம் - வேறு அறம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. எள்ளி - இகழ்ந்து. இன்னாச் சொல் - கடுஞ் சொல். கொள்ளி - எரிகின்ற கொள்ளிக் கட்டை. மெள்ள - மெதுவாக - அமைதியாக. அவித்தல் - கெடுத்தல். ஒழுகல் ஆற்றின் - ஒழுக வல்லானானால், ஒழுகுவானானால், தவம் - அறம் - நற்செயல். இன்னாச் சொல்லைக் கொள்ளி யாகவும், அறிவை நீராகவும் உருவகித்தார். பிறர் தன்னை இகழ்ந்துரைக்கும் கடுஞ்சொல் தனது மனத்தை மிகவும் துன்புறுத்தினாலும், தன் அறிவைக் கொண்டு அத்துன்பத் தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். அதைவிட வேறு அறம் இல்லை என்பதாம். (6) 162. ஒறுப்பாரை யானொறுப்பன் தீயார்க்குந் தீயேன் வெறுப்பார்க்கு நான்மடங்கே யென்ப - ஒறுத்தியேல் ஆர்வம் மயக்கம் குரோதம் இவைமூன்றும் ஊர்பகை நின்கண் ணொறு. (அற) மனமே! ஒறுப்பாரை யான் ஒறுப்பன் - என்னைத் துன்பு றுத்துகின்றவர்களையான் துன்புறுத்துவேன், தீயார்க்கும் தீயேன் -கொடியவர்களுக்குக் கொடியவனாவேன், வெறுப் பார்க்கு நான் மடங்கே என்ப - வெறுப்பவர்களை நான்கு மடங்கு வெறுப்பேன் என்று உலகத்தார்கூறுவர், ஒறுத்தியேல் - நீ அவ்வாறு பிறரை அடக்கக் கருதுவாயாயின், ஆர்வம் மயக்கம் குரோதம் இவை மூன்றும் ஊர் பகை - ஆசை அறியாமை வெகுளி என்னும் மூன்றும் நின்னை மேற் கொள்ளும் பகை களாகும். நின்கண் ஒறு - ஆதலின், உன்னை மேற்கொள்ளாத வாறு அவற்றை அடக்கு. மனமே என்னும் சொல் வரவழைக்கப்பட்டது. ஒறுத்தல் - துன்புறுத்தல். நான் மடங்கு - நான்கு மடங்கு. என்ப - என்று கூறுவர்; உயர்திணைப் பலர்பால் வினைமுற்று. ஆர்வம் - ஆசை. மயக்கம் - அறியாமை. குரோதம் - சினம். ஊர்பகை - ஊரும் பகை, மனத்தை அடக்கியாளும் பகை. ஊர்பகை - வினைத்தொகை. ஒறுத்தல் - அடக்குதல். என்னைத் துன்புறுத்துவோரை யானும் துன்புறுத்து வேன் எனவும், கொடியார்க்கு யானும் கொடியனாவேன் எனவும், வெறுப்பாரை நான்கு மடங்கு வெறுப்பேன் எனவும் கூறுங் கூற்று -அத்தகைய கொள்கை - மக்களிடை பெருங் குழப்பத்தினை உண்டாக்குமாகலின், இத்தகைய கொள் கைக்குக் காரணமான ஆசை அறியாமை சினம் ஆகிய முன்றையும் அடக்கிப் பொறுமை யினை மேற்கொள்ளல் வேண்டுமென்பதாம். காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமங் கெடக்கெடு நோய் (குறள்) “பழிக்குப் பழி, அடிக்கு அடி, வெட்டுக்கு வெட்டு - என்ற கொள்கை மக்கட் பண்பாகாதென்பது கருத்து. (7) 163. சாந்தனையு தீயனவே செய்திடினுந் தாமவரை ஆந்தனையுங் காப்பரறிவுடையோர் - மாந்தர் குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாங் கண்டீர் மரம். (வாக்) மரம் மாந்தர் குறைக்கும் தனையும் - மரமானது மக்கள் தன்னை வெட்டுமளவும், குளிர் நிழலைத் தந்து மறைக்கும் - குளிர்ச்சி பொருந்திய நிழலைக் கொடுத்து அவர்கள் மேல் வெயில் படாமல் காக்கும்; (அதுபோல), அறிவுடையோர் சாம் தனையும் தீயனவே செய்திடினும், தாம் அவரை ஆம்தனையும் காப்பர் - பிறர் தமக்குச் சாகுமளவும் தீமை களையே செய்தாலும் தாம் அவர்களைத் தம்மால் ஆகுமளவும் பாதுகாப்பர். சாம் - சாகும் என்பதன் இடைக்குறை. தனையும் - மட்டும். ஆம் - ஆகும். ஆம் தனையும் - இயன்ற அளவும், மட்டும். குறைத்தல் - வெட்டுதல். மறைத்தல் - வெயில் வருத்தாமல் காத்தல். ஆம், கண்டீர் - அசை. மரம் தன்னை வெட்டிக் கீழே சாய்க்குமட்டும் குளிர்ந்த நிழலைத் தந்து, வெட்டுவோரை வெயில் வருத்தாமல் பாது காப்பது போல, அறிவுடையோர் பிறர் தமக்கு எப்போதும் தீமையே செய்யினும் அதனைப் பொறுத்துக் கொண்டு தம்மால் இயன்ற மட்டிலும் அவர்க்கு நன்மையே செய்வர் என்பதாம். அறிவிலார் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொண்டு, தம்மால் இயன்ற மட்டிலும் அவர்க்கு நன்மையே செய்தல் அறிவுடையார் கடமை என்பது கருத்து. (8) 164. சீலமில்லா னேதேனுஞ் செப்பிடினுந் தானந்தக் கால மிடமறிந்து கட்டுரைத்தே - ஏலவே செப்புமவ னுந்தானே சிந்தைநோ காதகன்று தப்புமவ னுத்தமனே தான். (நீவெ) சீலம் இல்லான் ஏதேனும் செப்பிடினும் - ஒழுக்க மில்லாதவன் எத்தகைய கெட்ட சொல் சொன்னாலும், தான் அந்தக் காலம் இடம் அறிந்து கட்டுரைத்து - தான் அந்தக் காலத்தையும் இடத்தையும் அறிந்து அறிவுரை கூறி, ஏல செப்பு மவனும் - அதனை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு சொல்வோனும், சிந்தை நோகாது அகன்று தப்புமவனும்தான் உத்தமன் - மனம் வருந்தாமல் அவ்விடத்தை விட்டுச் சென்று அவன் கடுஞ் சொல்லுக்குத் தப்புவோனுமே மேலான வனாவான். சீலம் - ஒழுக்கம். ஏதேனும் - எத்தகைய கெட்ட சொல் என்ற படி. கட்டுரைத்தல் - அறிவுரை கூறுதல். அதாவது தீச் சொல் சொல்லுதலின் தீமையை எடுத்துக் கூறுதல். ஏல - பொருந்த. அகன்று - விலகி. உத்தமன் - மேலானவன், நல்லவன். செப்புமவனும் சிந்தை நோகாது அகன்று தப்புமவனுந் தான் உத்தமன் என்க. காலம் - கடுஞ்சொல் சொல்லுவோன் இருக்கும் நிலைமை யினைக் குறிக்கும் காலம். அதாவது, தானும் எதிர் பேசினால் அவன் அடங்காமல் எதிர்த்துப் பேசும் நிலையில் இருக்குங் காலம். இடம் - பலர் கூடியுள்ள இடம். பலர் கூடியுள்ள இடத்தில் கெட்டவன் ஒருவன் திட்டினால் எதிர்த்துப் பேசுதல் அறிவுடை யோர்க்குத் தகுதியின்றாதலை யறிக. ஒழுக்கமில்லாத கீழ்மகனொருவன் திட்டினால், காலத்தையும் இடத்தையும் நோக்கி அதனைப் பொறுத்து கொள்ள வேண்டும். அல்லது அறிவுரை கூறிப் பார்க்க வேண்டும். அதற்கும் அவன் அடங்கானாயின் அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட வேண்டும். இங்ஙனமன்றி, அவன் கூறுங் கடு மொழியைப் பொறாது எதிர்த்துப் பேசக்கூடா தென்பதாம். அங்கேயே இருந்தால் அவன் மேலும் மேலும் பேசுவா னாகையால், அவ்விடத்தை விட்டுச் செல்லுதல் அவன் பேசாமல் இருத்தற்கு ஏதுவாகுமாதலான், ‘அகன்று தப்பும வனும் உத்தமன்’ என்றார். கெட்டவர் பேசும் கெட்ட சொல்லைப் பொறுத்துக் கொண்டு, அவ்வாறு பேசுதலின் தீமையை எடுத்துக் கூற வேண்டும். அவர் கேட்காவிடின் அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட வேண்டும் என்பது கருத்து. பிறர் கூறும் கடுஞ்சொல்லைப் பொறுத்துக் கொண்டு நேரிலேயே இருத்தல்; பொறுத்துக் கொண்டே கூறுதல்; அக் கடுஞ் சொல்லைக் கேளாதபடி அவ்விடத்தை விட்டுச் சென்று விடுதல் எனப் பொறுமையின் மூன்றுபடி கூறியது இப்பாட்டு. (9) 165. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே. (வெற்) பெரியோராயின் - பெரியோராயிருப்பவர்கள் - பெரி யோர்கள். சிறியோர் செய்த சிறு குற்றங்களைப் பொறுத்துக் கொள்வது பெரியோர் கடமையாகும். நிறையுடைமை நீங்காது வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும். (குறள் - 10) 7. நாணுடைமை தமக்கு ஒவ்வாத செயல் செய்ய நாணுடையராதல். அதாவது, இழிந்த செயல்கள் செய்ய நாணுதல். 166. நலத்தகையார் நாணாமை யின்னா. (இன்) நலத்தகையார் - நற்குணமுடையவர்கள்? நாணாமை இன்னா - பழிபாவங்களை நாணாமல் செய்தல் துன்பந் தருவதாம். பழி - பிறர் பழித்தற்கேதுவாகிய செயல்கள். பாவம் - குற்றம். இன்னா - துன்பம். நற்குணமுடையவர்கள் கெட்ட செயல்கள் செய்ய நாண வேண்டும், நாணாது கெட்ட செயல்கள் செய்வது துன்பத்திற் கேதுவாகும் என்பதாம். கருமத்தால் நாணுதல் நாணு. (குறள் 1011) 167. பொறிகெடும் நாணற்ற போழ்தே (நான்) நாண் அற்ற போழ்தே - ஒருவனுக்கு நாணம் என்பது நீங்கின போதே, பொறிகெடும் - அவனது செல்வம் அழியும். பொறி - செல்வம். போழ்து - பொழுது. நாணமின்றித் தீச்செயல் புரிவார்க்குப் பலரும் பகையாவ ராதலால், அவர்கள் மேற்கொண்ட செயல்கள் இனிது நிறை வேறாமையால் செல்வம் கெட நாணின்மை காரணமாயிற்று. (2) 168. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று (முது) நாணு - நாணுடைமையானது. நலன் உடைமையின் சிறந் தன்று - ஒருவன் அழகுடையவனாய் இருத்தலைக் காட்டிலும் மிக்க சிறப்புடையது. நலன் - அழகு. சிறந்தன்று - சிறந்தது. ஒருவன் சிறந்த கட்டழகுடையவனாய் இருந்தும், பழி பாவங்களை நாணாது செய்வானாயின் அவனை யாரும் மதியாராகை யால், ‘நலனுடைமையின் நாணுச் சிறந்தது’ என்றார். அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு (குறள்) நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை. (குறள்) 169. நாணில் வாழ்க்கை பசித்தலிற் றுவ்வாது. (முது) நாண் இல் வாழ்க்கை - வெட்கங் கெட்டு உண்டு வாழும் உயிர் வாழ்க்கையானது, பசித்தலின் துவ்வாது - பசித்தலாலாகிய துன்பத்தின் நீங்காது. துவ்வாது - நீங்காது. கெட்ட காரியங்களை வெட்கமின்றிச் செய்து உண்டு உயிர் வாழ்தலால் உண்டாகின்ற துன்பம், பசித்தலால் உண்டா கின்ற துன்பத்தின் வேறன்று. அதனோடொத்ததே. துன்பம் என்னும் பெயரால் இரண்டும் ஒக்குமாயினும், பசித் துன்பத் திற்குக் கழுவாயுண்டு. உணவுண்டு பசித் துன்பத்தைப் போக்கிக் கொள்ள லாம். ஆனால், நாணற்ற துன்பத்திற்கு உயிர் விடுதலின்றி வேறு கழுவாயில்லை என்பதாம். கழுவாய் - பரிகாரம். உயிரினும் சிறந்தன்று நாணே (தொல்காப்பியம்) நாணால் உயிரைத் துறப்பர் உயிர்பொருட்டால் நாண்துறவார் நாணாள் பவர் (குறள்) வெட்கமின்றிக் கெட்ட காரியங்கள் செய்து உயிர் வாழ்வது பெருந்துன்பத்திற் கேதுவாகு மாதலால், அவ்வாறு வாழ்வதை விடச் சாதலே நன்று என்பது கருத்து. செத்தால் ‘நாணிலி’ என்ற பழிச்சொல் இன்றாகும் என்பதாம். (4) 8. தீவினையச்சம் அதாவது, கெட்ட காரியங்கள் செய்வதற்கு அஞ்சுதல். வினை - செயல். தீவினை - தீச்செயல் - கெட்ட காரியம். தீய காரியம் தமக்கும் பிறர்க்கும் தீமை பயத்தலான் அதற்கு அஞ்சிச் செய்யா திருத்தல். 170. பகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற பெற்றதுட் கோலின்றிச் சேறலும்; - முற்றன்னைக் காய்வானைக் கைவாங்கிக் கோடலும் இம்மூன்றும் சாவ வுறுவான் தொழில். (திரி) பகை முன்னர் வாழ்க்கை செயலும் - தன் பகைவர் முன்னே வாழ்க்கை நடத்தலும், தொகை நின்ற பெற்றத்துள் கோல்இன்றிச் சேறலும் - மாட்டுக் கூட்டத்தின் நடுவே கையில் தடி இல்லாமல் செல்லுதலும், முன் தன்னைக் காய்வானைக் கை வாங்கிக் கோடலும் - முன்னின்று தன்னை வெறுப்பவனை முன்பு நீக்கி விட்டுப் பின்னர் நட்பாக்கிக் கொள்ளுதலும், இம்மூன்றும் சாவ உறுவான் தொழில் - ஆகிய இம்மூன்று செயல்களும் சாக வேண்டியவனுடைய செயல் களாம். பகை - பகைவர். தொகை - தொகுதி - கூட்டம். தொகை நிற்றல் - கூடி நிற்றல். பெற்றம் - மாடு. சேறல் - செல்லுதல். காய்தல் - வெறுத்தல். கை வாங்கல் - நீக்கல். கோடல் - கொள்ளல். கை வாங்கிக் கோடல் - நீக்கி விட்டுச் சேர்த்துக் கொள்ளல். சாவ உறுவான் -சாகும் படி துன்பம் அடைவான். பகைவர்க்கு எதிரில் - பக்கத்தில் - வாழ்ந்தால் கெடுக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டே இருந்து கெடுப்பர். மாடு கொம்பினால் முட்டக்கூடிய இயல்புடையதாகையால், மாடு களுக்கு இடையே கையில் தடியின்றிப் போனால் முட்டும்; காலால் உதைக்கவும் கூடும். தன்னை வெறுப்ப வனை முதலில் பகைத்து நீக்கிவிட்டுப் பின்னர் நட்புக் கொண்டால் அவன் கேடு செய்வான். பகைவர்க்குப் பக்கத்தில் குடியிருத்தலும், மாடுகளுக்கு இடையே கையில் தடியில்லாமல் செல்லுதலும், ஒருவனோடு பகை கொண்டு நட்புக் கொள்ளுதலும் பெருந் துன்பத்திற் கேதுவான செயல்கள் என்பதாம். இவை தீமையைத் தருஞ் செயல்களா கையால், அவ்வாறு நடந்து கொள்ளக் கூடா தென்பது கருத்து. (1) 171. வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கும், ஒப்ப விழைவிலாப் பெண்டீர்தோள் சேர்வும், - உழந்து விருந்தினனாய் வேற்றூர் புகலுமிம் மூன்றும் அருந்துயரங் காட்டு நெறி. (திரி) வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும் - எவரும் இறங்கிப் பாராத புதிய துறையில் இறங்கி ஆற்று வெள்ளத்தைக் கடத்தலும், ஒப்ப விழைவு இல்லாப் பெண்டீர் தோள் சேர்வும் - ஒத்த அன்பில்லாத விலைமகளிர் தோளைச் சேர்தலும், விருந்தினனாய் உழந்து வேற்றூர் புகலும் - உணவின் பொருட்டு விருந்தாளியாக வருத்தப் பட்டு அயலூர்க்குச் செல்லுதலும், இம்மூன்றும் ஒருவனுக்கு அரிய துன்பத்தைக் காட்டும் வழிகளாம். வழங்கா - வழங்காத; இதற்கு முன் யாரும் இறங்கிப் பாராத. இழிதல் - இறங்குதல். நீர்ப்போக்கு - வெள்ளத்தைக் கடத்தல். விழைவு - விருப்பம், அன்பு. இலா- இலாத. ஒத்த அன்பிலாப் பெண்டீர் - விலைமகளிர். தோள் சேர்தல் - கூடி வாழ்தல். உழத்தல் - வருந்துதல். விருந்தினனாய் - விருந்துண்ண வேண்டியவனாய். அருந்துயரம் - மிக்க துன்பம். காட்டும் வழி - உண்டாக்கும் வழிகள். முன்னொருவரும் இறங்கிப் பாராத புதிய இடத்தில் இறங்கி ஆற்று வெள்ளத்தைக் கடத்தலும், ஒத்த அன்பில்லாத விலை மகளிரைக் கூடி வாழ்தலும், உணவின் பொருட்டு விருந்தாளியாக ஊரூராய்ச் செல்லுதலும் மிக்க துன்பந் தரும் என்பதாம். வழங்காத் துறை இழிதல் - இறக்கவுங் கூடும். விலை மகளிரைக் கூடி வாழ்வோர் செல்வமிழந்து சீரழிய நேரும். கோவலன் வரலாறு காண்க. விருந்தினனாய் வேற்றூர் புகல் - ஊரூராகச் சென்று, தெரிந்தவர்கள் வீட்டில் இரண்டு மூன்று நாளைக்குத் தங்கி உண்டு காலங் கழித்தல். ஊரூராக அலைந்து வருந்த வேண்டியிருத்தலான். ‘உழந்து வேற்றூர் புகல்’ என்றார். ‘மானம்’ என்னும் தலைப்பில் ‘பிச்சைக்கு’ என்னும் பாட்டுரை பார்க்க. இவை மூன்றும் மிக்க துன்பத்தைத் தருஞ் செயல்களா கையால், இத் தீச்செயல்களைச் செய்யக்கூடாதென்பது கருத்து. தீயவை தீய பயத்தலான் தீயவை தீயினு மஞ்சப் படும். (குறள் 2) 172. விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக் களியாதான் காவா துரையும், - தெளியாதான் கூரையுட் பல்காலுஞ் சேறலும் இம்மூன்றும் ஊரெல்லாம் நோவ துடைத்து. (திரி) விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் - தன்னை அழையா தவன் ஆட்டுவிக்கும் கூத்தாட்டத்தைச் சென்று பார்த்தலும், வீழக் களியாதான் காவாது உரையும் - தளர்ந்து விழும்படி கள்ளுண்டு களியாதவனாக இருந்தும் வழுப்படப் பேசுதலும், தெளியாதான் கூரையுள் பல்காலும் சேறலும் - தன்னை நம்பாதவன் வீட்டினுள் பல முறையும் செல்லுதலும், இம் மூன்றும் ஊர் எல்லாம் நோவது உடைத்து - ஆகிய இம்மூன்றும் ஊரிலுள்ளோரெல்லாம் வருந்து வதற்குக் காரண மான குற்றங்களாம். விளித்தல் - அழைத்தல். கூத்து - நாடகம். காண்டல் - காணுதல். வீழ - கால்கள் நிலை நிற்க முடியாதவாறு தளர்ந்து விழும்படி. இது குடி வெறியால் ஏற்படுவது. காவாது உரை - பாதுகாவாமல் சொல்லுதல், கண்டபடி உளறுதல். தெரியாதவன் - நம்பாதவன், இவன் நடத்தையில் ஐயங் கொள்பவன். கூரை - வீடு. கூரையுள் - வீட்டினுள், வீட்டிற்கு என்றுமாம். பலகாலும் - பல முறையும் - அடுத்தடுத்து என்றபடி. சேறல் - செல்லல். ஊரெல்லாம் நோவது - ஊரினரெல்லாம் வருந்துதற்குக் காரணமான குற்றம், பெருங் குற்றம் என்றபடி. நோவது - குற்றம். கூத்தாட்டு என்பது இனவிலக்கணத்தால், விருந்து முதலிய வற்றையும் குறிக்கும். அழையாதவன் நடத்தும் நாடகம், இசை யரங்கு, விருந்து முதலிய சிறப்புக்களுக்குச் செல்லுதல் தகாது என்பதாம். குடித்து வெறி கொள்ளாமல் இருந்தும், குடி வெறியன் போல் கண்டபடி உளறுதல் குற்றமுடையதாம். தனது நடத்தையில் ஐயுற்றவன் வீட்டுக்கு அடிக்கடி செல்லுதல் தகாது என்பதாம். இத்தகைய தீச்செயல்களுக்கு அஞ்சி இவற்றைச் செய் யாமல் இருக்கவேண்டும் என்பது கருத்து. (3) 173. இழுக்க லியல்பிற் றிளமை, பழித்தவை சொல்லுதல் வற்றாகும் பேதைமை, - யாண்டும் செறுவொடு நிற்குஞ் சிறுமையிம் மூன்றுங் குறுகா ரறிவுடை யார். (திரி) இளமை இழுக்கல் இயல்பிற்று - இளமைப் பருவம் வழுவு தலை இயல்பாக உடையது, பேதைமை பழித்தவை சொல்லுதல் வற்றாகும் - அறியாமை அறிவுடையோரால் பழித்து விலக்கப் பட்டவற்றைச் சொல்லுதலில் வல்லாதாகும், சிறுமை செறுவொடு நிற்கும் - சிறுமைத் தன்மை எப்போதும் சினத்தோடு நிற்பதாகும், (ஆதலால்), இம்மூன்றும் அறிவுடை யார் குறுகார் - இம்மூன்றி னையும் அறிவுடையார் நெருங்கார். இழுக்கல் - வழுவுதல், தவறுதல். இயல்பிற்று - இயல்பாக வுடையது. பழித்தவை - பழித்து விலக்கப்பட்ட கடுஞ் சொற்கள்; பலவின்பால் வினையாலணையும் பெயர். வற்றாகும் - வல்லதாகும். யாண்டும் - எப்போதும். செறு - சினம். சிறுமை - சிறுமைத் தன்மை. குறுகுதல் - நெருங்குதல், அணுகுதல். இயல்பாக வழுவதலையுடையது இளமைத்தன்மை. பெரி யோர்கள் வெறுப்பனவற்றைச் சொல்லுதல் மூடத்தன்மை. எப்போதும் சினத்தோடிருப்பது சிறுமைத் தன்மை. இக் குண முடையோரைப் பெரியோர்கள் சேரார் என்பதாம். எனவே, இத்தீக்குணங் களில்லாமல் இருக்க வேண்டுமென்பது கருத்து. இயல்பாக வழுவுதல் - எண்ணிப் பாராமல் இயல் பாகவே குற்றம் செய்தல். இது இளமைப் பருவத்தின் இயல் பாதலால், இக்குணமுடைமையை இளமை என்றார். அறிவுடையோர் பிறர் பழிப்பனவற்றைச் சொல்லாராகையால், அங்ஙனம் சொல்லு தலைப் பேதைமை என்றார். சினங் கொள்ளுதல் பெருமைத் தன்மை யாகாதாகையால், அங்ஙனம் கொள்ளுதலைச் சிறுமை என்றார். இயல்பாகக் குற்றஞ் செய்யாமலும், பழிப்பனவற்றைச் சொல்லாமலும், சினங் கொள்ளாமலும் இருக்க வேண்டு மென்ப தாம். (4) 174. வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும் இல்லது காமுற் றிருப்பானும் - கல்வி செவிக்குற்றம் பார்த்திருப் பானுமிம் மூவர் உமிக்குத்திக் கைவருந்து வார். (திரி) வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பு இலியும் - சொல்வென்றியை விரும்பி உண்மை உரைப் போரைச் சினந்து சொல்லுகின்ற அடக்கமில்லாதவனும், இல்லது காமுற்று இருப் பானும் - கிடைத்தற்கரிய பொருளை விரும்பி இருக்கின்றவனும், கல்வி செவிக் குற்றம் பார்த்திருப் பினும் - பிறர் கற்ற கல்வியில் செவியினால் குற்றத்தை ஆராய்ந்து பார்க்கின்றவனும், இம்மூவர் உமிக் குத்திக் கைவருந்துவார் - இம் மூவரும் உமியைக் குத்திக் கைவருந்து வோரை ஒப்பர். வேண்டி - விரும்பி. வெகுளி - சினம். வெகுண்டு உரைத்தல் - எதிரி கூறும் உண்மைப் பொருளை மறுத்துச் சினந்து கூறுதல். நோன்பு - நோன்மை - பிறர் கூறுதலைத் தாங்கிக் கொள்ளும் மனவலி. நோன்பு இலி - அம் மனவலி இல்லாதவன். இல்லது - தனக்குக் கிட்டாதது - கிடைத்தற் கரியது. காமுறுதல் - விரும்புதல். கல்வி செவிக் குற்றம் பார்த்தல் - பிறர் கற்ற கல்வியின் குணத்தைக் கேளாது குற்றத்தை மட்டும் கேட்டு அதைக் கூறுதல். உமி - நெல்லுமி. சினந்து கூறிப் பிறரைச் சொற்போரில் வெல்லக் கருதுதலும், கிட்டாத பொருளைப் பெற முயலுதலும், ஒருவனது கல்வியின் குணத்தை விட்டுக் குற்றத்தை மட்டுங் கூறுதலும் உமியைக் குத்துதல் போலத் துன்பமும் பயனின்மையுமே ஆகுமென்ப தாம். நெல்லைக் குத்திக் கைவருந்தினால் அரிசி கிடைக்கும். அதுபோல, உள்ளபடி பேசிச் சொற்போரில் வென்றால் புகழும், கிடைத்தற்கரிய பொருளைப் பெற முயன்றால் அப்பொருளும், பிறர் கல்வியின் குணத்தைக் கூறினால் பெருமையும் கிடைக்கும். இங்ஙனமின்றி. வெகுண்டு வெல்லக் கருதுதலும், கிட்டாத பொருளைப் பெற முயலுதலும், ஒருவனது கல்வியின் குற்றத்தை மட்டும் கூறுதலும் தீச்செயல் களோடு பயனின்மையுமாதலால், ‘உமிக்குத்திக் கைவருந்து வார்’ என்றார். வெல்வது வேண்டின் வெகுளிவிடல் (நான்மணி) கிட்டா தாயின் வெட்டென மற (கொன்றை) காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதாம் (அறநெறி) 175. தன்னை வியந்து தருக்கலும், தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய பல்பொருள் வெஃகுஞ் சிறுமையு மிம்மூன்றுஞ் செல்வ முடைக்கும் படை. (திரி) தன்னை வியந்து தருக்கலும் - ஒருவன் தன்னைத் தானே நன்கு மதித்துச் செருக்குக் கொள்ளுதலும், தாழ்வு இன்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் - அடக்கமில்லாமல் வீணாகச் சினத்தைப் பெருகச் செய்தலும், முன்னிய பல்பொருள் வெஃகும் சிறுமையும் - கருதிய பல பொருள்களையும் விரும்புகின்ற சிறுமைத் தன்மையும். இம் மூன்றும் செல்வம் உடைக்கும் படை - ஆகிய இம்மூன்று செயலும் ஒருவனது செல்வத்தை அழிக்கும் கருவிகளாம். வியத்தல் - தற்புகழ்ச்சி கொள்ளுதல். தருக்கு - செருக்கு. தாழ்வு இன்றி - தாழாமல் - அடங்காமல். கொன்னே- வீணாக, பயனின்றி. பெருக்கல் - பெருகச் செய்தல், மிகச் சினங் கொள் ளுதல். முன்னுதல் - கருதுதல், நினைத்தல். வெஃகுதல் - விரும்புதல். உடைத்தல் - அழித்தல். படை - கருவி. தன்னைத்தானே நன்கு மதித்துச் செருக்குக் கொள்வதால், அடக்கமின்றி எண்ணியதைச் செய்யத்துணிந்து பல்லோர் பகை கொள்ளுதலால் செல்வம் அழியும். வீணாகத் தணியாத சினங் கொண்டு பிறர்க்குத் தீமை செய்வதால் பலரும் பகை கொள்வா ராகையாலும், வம்பு வழக்குகளாலும் செல்வம் அழியும். கண்ட கண்ட பொருளையெல்லாம் விரும்பினால் அதனால் செல்வம் அழியும். எனவே, இம்முன்றும் செல்வம் உடைக்கும் படைகளாயின. இம்மூன்று செயலும் செல்வத்தை அழிப்பதால் ‘படை’ என்று உருவகம் செய்யப்பட்டது. தற்புகழ்ந்து செருக்குக் கொள்வதும், வீணாகச் சினங் கொள் வதும், கண்ட பொருளை யெல்லாம் விரும்புவதும் செல்வத்தைப் போக்கும் தீச்செயல்களாகையால், அவற்றைச் செய்யக்கூடா தென்பது கருத்து. (6) 176. கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும் இல்லிருந் தெல்லை கடப்பாளு மிம்மூவர் வல்லே மழையருக்குங் கோள். (திரி) கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் - தான் கொள்ளுதற் குரிய பொருளை விரும்பிக் குடிகளை வருத்துகின்ற அரசனும், உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும் - உண்மை நிகழ்ச்சியைச் சொல்லாமல் பொய் பேசுகின்றவரும், இல் இருந்து எல்லை கடப்பாளும் - ஒருவனுக்கு மனைவியாய் இருந்து அம்மனைவி என்னும் எல்லையைக் கடந்து நடப்பவளும், இம்மூவர் வல்லே மழை அருக்கும் கோள் - இம்மூவரும் விரைந்து மழையைக் குறைக்கின்ற கோள்களாம். கொள்பொருள் - இறை - வரி. வெஃகி - விரும்பி. அலைத்தல் - வருத்தல். உள்பொருள் - உண்மையான பொருள். சொல்லா - சொல் லாமல். சலம்மொழி. சலம் - பொய், உண்மையைச் சொல்லாமல் பொய் சொல்லுதல். இல் - மனைவி. இல் இருத்தல் - மனைவி யாயிருத்தல். எல்லை கடத்தல் - மனைவிக்குரிய நற்குண நற்செய்கை களைச் கடந்து நடத்தல். அதாவது நற்குண செய்கை யின்றி யிருத்தல். வல்லே - விரைவில். அருக்கும் - சுருக்கும், குறைக்கும். இது அருகும் என்பதன் பிறவினை. அருகும் - சுருங்கும். வெள்ளி முதலிய கோள்கள் (கிரகங்கள்) திசை மாறினால் மழைபெய்யாது என்பது நூற்றுணிபு. அதனால், குடியலைக்கும் வேந்தன் முதலியவர்களை, ‘மழையருக்கும் கோள்’ என்றார். அதிக வரி வாங்கிக் குடிகளை வருத்தும் அரசனும், உண்மையை மறைத்துப் பொய்யே பேசுகிறவரும், நற்குண நற் செய்கையில்லாத மனைவியும் கொடியவர்கள் என்பதாம். இத்தகைய குணம் அல்லது செய்கையை அஞ்சி நடக்க வேண்டும் என்றபடி. இன்று முடியரசு இன்மையால், அதிக வரி வாங்கிக் குடி மக்களை வருத்தும் ஆள்வோர்க்கு இது பொருந்தும். கொலைமேற் கொண்டாரிற் கொடிதே அலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து. (குறள்) முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். (குறள்) எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. (குறள்) மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினு மில். (குறள்). 177. அருமறை காவாத நட்பும், பெருமையை வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் - யாண்டாலும் செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பு மிம்மூவர் ஒற்றா ளெனப்படு வார். (திரி) அருமறை காவாத நட்பும் - பிறரிடம் சொல்லக் கூடாத மறை மொழியைப் பாதுகாவாத நட்பாளனும், பெருமையை வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் - பெருமைக் குணத்தை விரும்பாமல் விட்டுவிட்ட பெண்ணும், யாண்டானும் செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும் - எங்காயினும் சினங் கொண்டு தலைவன் மேல் குற்றம் கூறுகின்ற குற்ற ஏவலாளனும், இம்மூவர் ஒற்றாள் எனப்படு வார் - ஆகிய இம்மூவரும் ஒற்றர்களைப் போல்வர். அருமறை - அருமறையாகிய மறைமொழி - ரகசியம். பெருமை - பெருமைக் கேதுவாகிய குணம். அது கற்பென்னுந் திண்மை. வேண்டுதல் - விரும்புதல். யாண்டானும் - எந்த இடத்திலும்; நண்பர், உறவினர், பகைவர் முதலியோர் உள்ள விடத்தும். செற்றம் - சினம். ஆடுதல் - பேசுதல். ஒற்று ஆள் - ஒற்றன்; இரு பெயரொட்டு எனப்படுவார் - என்று சொல்லப் படுவார் என்பதாம். தன் நண்பன் தன்னிடம் கூறிய மறைமொழியைப் (ரகசியத்தை) பிறரிடம் கூறுபவனும், கற்பென்னும் திண்மையை விரும்பா தொழுகும் பெண்ணும், தலைவனிடம் பகை பாராட்டும் வேலைக் காரனும் ஒற்றரைப் போன்ற வராவர் என்பதாம். ஒற்றராவார் - துறவியர், வணிகர் முதலியவரைப் போலப் பகைவரிடம் நடித்து, அவர் நம்பிக்கையைப் பெற்று, அங்கு நடப்பவற்றை அறிந்து வந்து தமது அரசனுக்கு உரைப்பவர். ஒற்றர் - சி . ஐ. டி. - உளவறிவோர். அவ்வொற்றர் போன்றவரே மறையை வெளிப்படுத்தும் நண்பர் முதலிய மூவரும். தன் நண்பனது மறையை வெளிப்படுத்திப் பகைவரால் அவனுக்குக் கேடுண்டாகும்படி செய்வதால், அருமறை காவா தான் நண்பனுக்கு ஒற்றுப் போல்வான். கற்பிலாத மனைவி கணவனுக்குக் கேடுசூழவுங் கூடுமாகையால் கணவனுக்கு அவள் ஒற்றுப் போல்வாள். தலைவனிடம் பகை பாராட்டும் வேலைக் காரன் தலைவனது உளவினை அவன் பகைவரிடம் கூறி இடை யூறு உண்டாக்குவானாகையால் அவன் தலைவனுக்கு ஒற்றுப் போல்வான் என்பதாம். நண்பனது மறையை வெளிப்படுப்பதும், கற்பைக் காவா மையும், தலைவனிடம் பகை பாராட்டுதலுந் தீச்செயல்கள் என்பதாம். (8) 178. கிளைஞர்க் குதவாதான் செல்வமும், பைங்கூழ் விளைவின்கண் போற்றா னுழவும் - இளைஞனாய்க் கள்ளுண்டு வாழ்வான் குடிமையு மிம்மூன்றும் உள்ளன போலக் கெடும். (திரி) கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் - சுற்றத்தார்க்கு உதவாதவனுடைய செல்வமும், பைங்கூழ் விளைவின்கண் போற்றான் உழவும் - நெல் முதலிய பயிர் பயன் கொடுக்கும் காலத்தில் பாதுகாவாதவனுடைய உழவுத் தொழிலும், இளைஞனாய் கள் உண்டு வாழ்வான் குடிமையும் - இளமைப் பருவத்திலேயே கள்ளுண்டு வாழ்பவனுடைய குடிப்பிறப்பும், இம் மூன்றும் உள்ளன போலக் கெடும் - ஆகிய இம்மூன்றும் உள்ளன போலத் தோன்றி யழியும். கிளைஞர் - சுற்றத்தார். பைங்கூழ் - நெல், கம்பு முதலிய வற்றின் பயிர். விளைவு - கதிர் முற்றுதல். போற்றுதல் - கதிரை விலங்கு, பறவை முதலியன தின்னாமல் பாதுகாத்தல். இளைஞ னாய் - இளமைப் பருவத்திலேயே. குடிமை - குடிப்பிறப்பு. உள்ளன போலக் கெடுதல் - பயனின்று விரைவில் கெடுதல். சுற்றத்தார்க்கு உதவாதவன் செல்வம், அவனை யாவரும் வெறுப்பதாலும், அவன் எடுத்த காரியம் முற்றுப் பெறாமை யாலும் பகை பெருகுவதாலும் கெடுமென்க. விளைவின் பயனாகிய கதிரைப் பாதுகாவாதவன் வறுமையுற்று - உழவுத் தொழில் செய்ய முடியாது போவான். வாழ்வு கெடும் என்றுமாம். இளமையிலேயே குடித்துப் பழகினவன் இழி மகனாகக் கருதப் படுவான். அதனால், அவன் குடிப்பிறப்பு இழிவடையும். செல்வர்கள் சுற்றத்தார்க்கு உதவ வேண்டும். உழவர்கள் பயிரையும் விளைவையும் பாதுகாக்க வேண்டும். குடித்துப் பழகக் கூடாது. செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல் (வெற்றி வேற்கை) ஏரினு நன்றால் எருவிடுதல், நட்டபின் நீரினு நன்றதன் காப்பு. (குறள்) உண்ணற்க கள்ளை உணிலுன்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார். (குறள்) (9) 179. நன்றிப் பயறூக்கா நாணிலியும், - சான்றோர்முன் மன்றில் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி வைத்த வடைக்கலங் கொள்வானு மிம்மூவர் எச்ச மிழந்துவாழ் வார். (திரி) நன்றிப் பயன் தூக்கா நாண் இலியும் - ஒருவன் தனக்குச் செய்த உதவியின் பயனை எண்ணிப் பார்க்காத நாணமில்லா தவனும், சான்றோர் முன் மன்றில் கொடும்பாடு உரைப்பானும் - பெரியவர்கள் முன்னே அறங் கூறவையில் பொய் சொல்கின்ற வனும், நன்று இன்றி வைத்த அடைக்கலம் கொள்வானும் - நற்குணமில்லாதவனாய் ஒருவன் தன்னிடம் வைத்த அடைக் கலப் பொருளை வைத்துக் கொள்பவனும், இம்மூவர் எச்சம் இழந்து வாழ்வார் - ஆகிய இம்மூவரும் மக்கட்பேறின்றி ‘மலடர்’ என உலகம் பழிக்க வருந்தி வாழ்வர். நன்றி - உதவி. நன்றிப்பயன் - நன்றியினது பயன். ஒருவன் செய்த உதவியால் தனக்குண்டான நன்மை. தூக்குதல் - ஆராய்ந்து பார்த்தல். தூக்கா - தூக்காத. அவ்வுதவியின் அளவையும் காலத்தையும் அதனால் தானடைந்த நன்மை யையும் அளவிட்டுப் பார்த்தல். நாணிலி - நாணமில்லா தவன். மன்று - அறங்கூறவையம் - நீதிமன்றம். கொடும்பாடு - பொய், பொய்ச்சான்று. நன்று - நற் குணம். அடைக்கலம் - பின்னர் வந்து பெற்றுக்கொள்வதாக ஒருவர் தன்னிடம் வைத்துச் சென்ற பொருள். எச்சம் - மக்கட் பேறு. உலக வாழ்க்கையின் பயன் மக்களைப் பெற்று வழி வழி சிறக்க வாழ்வதே யாகும். மக்கட்பேறில்லாதவர்க்கு வாழ்க் கையில் சிறிதும் இன்பம் இல்லை. மக்கட்பேறில்லாத வர்களை ‘மலடர்’ என்று உலகம் வேறு பழிக்கும். அதனால், பிள்ளைப் பேறில் லாதவர் தம் வாழ்க்கை குறையுடையதாக எண்ணி வருந்துவர். பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற் றென்னுடைய ரேனு முடையரோ? - இன்னடிசில் புக்களையுந் தாமரைக்கை பூநாறுஞ் செய்யவாய் மக்களையீங் கில்லா தவர். (நளவெண்பா) படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வத்த ராயினும் இடைப்பட குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கல்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்ந்தும் மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லை தாம் வாழு நாளே. (புறநானூறு) என மக்கட் பேற்றின் இன்றியமையை யுணர்க. பிறர் செய்த நன்றியை எண்ணிப் பாராதவனும், பொய்ச் சான்று சொல்வோனும், அடைக்கலப் பொருளை இல்லை யென் போனும் கொடியவர்கள் என்பதாம். மக்கட் பிறப்பின் இன்றியமையாமை தோன்ற, ‘எச்ச மிழந்து வாழ்வார்’ என்றார். வள்ளுவர், ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்றாற் போல. (10) 180. அச்ச மலைகடலிற் றோன்றலும், ஆர்வுற்ற விட்டகல கில்லாத வேட்கையும், - கட்டிய மெய்ந்நிலை காணா வெகுளியு மிம்மூன்றும் தந்நெய்யில் தாம்பொரியு மாறு. (திரி) அலைகடலின் அச்சம் தோன்றலும் - அலைகின்ற கடலைப் போல ஒருவருள்ளத்தில் மாறிமாறி மிகுந்த அச்சந் தோன்றுதலும், ஆர்வுற்ற விட்டு அகலகில்லாத வேட்கையும் - நுகர்ந்தவற்றை விட்டு நீங்கமாட்டாத விருப்பமும், கட்டிய மெய்நிலை காணா வெகுளியும் - அறிவுடையோரால் செய்யப் பட்ட செய்யுட்களின் உண்மைப் பொருளை அறிய முடியாமை யால் உண்டாகும் சினமும், இம்மூன்றும் தம் நெய்யில் தாம் பொரியும் ஆறு - ஆகிய இவை மூன்றும் ஆடு முதலானவை தம்மிடத்திலுண்டாகிய நெய்யிலே தாம் பொரிகின்ற வாறு போல, எவரிடத்து உண்டா கின்றனவோ அவரை வருந்தச் செய்வனவாம். அலைகடலின் - அலைகின்ற கடல்போல மாறிமாறி எப்போதும். இன் - ஐந்தாவது ஒப்புப் பொருள். ஆர்தல் - நுகர்தல், அனுப வித்தல். ஆர்வுற்ற - நுகர்ந்தவை. பலவின்பால் வினையாலணையும் பெயர். அகலுதல் - நீங்குதல். அகல கில்லாத - அகலாத. கில் - ஆற்றலுணர்த்தும் இடைநிலை. வேட்கை - விருப்பம், ஆசை. கட்டிய - கட்டப்பட்ட செய்யுட்கள். பலவின்பால் வினையாலணையும் பெயர். கட்டுதல் - எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் உறுப்புக்களைக் கொண்டு செய்யுள் செய்தல். இவை செய்யுள் உறுப்புக்களாகும். மெய்நிலை - உண்மை நிலை - உண்மைப் பொருள், அச் செய்யுட்களின் உண்மைப் பொருள். காணாவெகுளி - காணமுடியாமையால் உண்டாகும் சினம்; செய்யுளின் உண்மைப் பொருள் தெரியாமையால், உண்மைப் பொருளை அறிய முடியாமையால், அச் செய்யுள் செய்தார் மேல் சினம் கொள்ளுதல். பழந்தமிழ்ச் செய்யுட் களைக் கடினம் என்பார்க்கு இது எடுத்துக்காட்டாகும். பொரிதல் - வேகுதல். ஆடு முதலிய வற்றின் கறியை நெய்யால் வறுத்தல் உண்டு. நீங்காத அச்சமும், மிகுந்த ஆசையும், உண்மையுண ராமை யாலுண்டாகும் சினமும் ஒருவனுக்கு மிகுந்த துன்பத்தைத் தரும் என்பதாம். ஆடு முதலியன தம்மிடத்தில் உண்டாகிய - தமது - நெய்யில் தாம் பொரிவதைப் போல, தம்மிடத்திலுண்டாகிய இம் முக்குணங் களால் தாம் வருந்துவரென்பது கருத்து. அச்சமே கீழ்கள தாசாரம் (குறள்) அவாவில்லார்க் கில்லாகும் துன்மஃ துண்டேல் தவாஅது மேன்மேல் வரும் (குறள்) (11) 181. தோள்வழங்கி வாழுந் துறைபோற் கணிகையும் நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும் வாசிகொண் டொண்பொருள் செய்வானு மிம்மூவர் ஆசைக் கடலுளாழ் வார். (திரி) துறைபோல் தோள் வழங்கி வாழும் கணிகையும் - பலர்க்கும் பொதுவாயிருந்து தன்னிடத்து நீரைக்கொடுக்கும் துறையினைப் போல பலர்க்கும் பொதுவாயிருந்து தனது தோளைக் கொடுத்து வாழ்கின்ற கணிகையும், நாள் கழகம் பார்க்கும் நயம் இலாச் சூதனும் - ஒவ்வொருநாளும் சூதாடும் இடத்தைத் தேடி ஆடுகின்ற ஒழுக்கமில்லாத சூதாடியும், வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும் - மிக்க வட்டி வாங்கி மிகுந்த பொருளைத் தேடுவானும், இம்மூவர் ஆசைக் கடலுள் ஆழ்வார். ஆகிய இம்மூவரும் ஆசை யாகிய கடலில் அழுந்துவாராவர். தோள் வழங்குதல் - இன்பந்தருதல். துறை - நீர்த்துறை. கணிகை - விலை மகள். நாள் - நாளும். முற்றும்மை தொக்கது. கழகம் - சூதாடுமிடம். நயம் - ஒழுக்கம். இலா - இல்லாத. வாசி - வட்டி. இங்கு மிகுந்தவட்டியைக் குறித்தது. ஒண் பொருள் - மிக்க பொருள். ஆசைக்கு முடிவின்மையால், அதனைக் கடலாக உருவகித் தார். ஆசைக் கடலுள் ஆழ்தல் - பேராசை கொள்ளுதல். பொது மகளிரும், சூதாடியும், மிகுந்த வட்டி வாங்கிப் பொருளீட்டுவானும் பேராசை பிடித்தவர் என்பதாம். அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்தொடியார் ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர் (குறள்) பொருட் பெண்டிரை விரும்புவதும், சூதாடுவதும், மிகுந்த வட்டி வாங்குவதும் கெட்ட செய்கைகள் என்பது கருத்து. (12). 182. அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல், கற்புப் பெரும்புணை காதலிற் கைவிடுதல், நட்பின் நயநீர்மை நீங்க லிவைமூன்றும் குற்றந் தரூஉம் பகை. (திரி) அன்பு பெருந்தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல் - அன்பாகிய பெரிய தளையினது முடிச்சு அவிழ்ந்து தன்னை விட்டு நீங்குதலும், கற்பு பெரும்புணை காதலின் கை விடுதல் - கல்வியாகிய பெரிய புணையைப் பொருளாசையால் விட்டு விடுதலும், நட்பின் நயம் நீர்மை நீங்கல் - ஒருவரிடத்துக் கொண்ட நட்பினால் நீதி நெறி யினின்று நீங்குதலும், இம் மூன்றும் குற்றம்தரும் பகை - ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்குக் குற்றங்களைத் தருகின்ற பகைகளாம். அற்பு - அன்பு - வலித்தல் விகாரம். தளை - கட்டு. யாப்பு - அக்கட்டின் முடிச்சு. நெகிழ்ந்தொழிதல் - முடிச்சு அவிழ்ந்து போதல். அதாவது அன்பறுதல். கற்பு - கல்வி. புணை - தெப்பம். காதல் - விருப்பம். அது பொருளாசை யைக் குறித்தது. கைவிடுதல் - விட்டு விடுதல். நட்பின் - நட்பினால். நயம் - முறை, நீதி. நீர்மை - தன்மை. நயம் நீர்மை - நீதித்தன்மை, நீதிநெறி. தரூஉம் - இன்னிசை அளபெடை. குற்றம் தரூஉம் பகை - பலவகைக் குற்றங்களையும் செய்யும் படி செய்யும் பகைகளாகும். அன்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல் - உயிர் களிடத்து அன்பற்றிருத்தல். அறியாமை என்னும் கடலைக் கடக்க உதவுவதால், கல்வியைப் ‘பெரும்புணை’ என்றார். நட்பின் நயம் நீர்மை நீங்கல் - நண்பருக்காக நீதி தவறிப் பொய்ச்சான்று கூறுதலும், பொய்த்தீர்ப்புக் கூறுதலுமாம். உயிர்களிடத்து அன்பின்றியிருத்தலும், பொருளாசை யால் பொருளீட்டுதலில் ஈடுபட்டுக் கல்லாமல் இருத்தலும், கற்றதை மறத்தலும், நண்பருக்காக நீதி தவறுதலும் தீச் செயல்களாகும் என்பதாம். என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை யறம் (குறள்) கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்சம் நடுவொரீஇ யல்ல செயின் (குறள்) (13) 183. அறிவழுங்கத் தின்னும் பசிநோயும், மாந்தர் செறிவழுங்கத் தோன்றும் விழைவும், - செறுநரின் வெவ்வுரை நோனா வெகுள்வும் இவைமூன்றும் நல்வினை நீக்கும் படை. (திரி) அறிவு அழுங்க தின்னும் பசி நோயும் - அறிவு கெடும் படி வருத்துகின்ற கடும்பசியும், மாந்தர் செறிவு அழுங்கத் தோன்றும் விழைவும் - மக்களின் அடக்கம் கெடும்படி தோன்றுகின்ற விருப்பமும், செறுநரின் வெவ்வுரை நோனா வெகுள்வும் - பகைவர் கூறும் கொடிய சொற்களைப் பொறுக் காது தோன்றும் சினமும், இவை மூன்றும் நல்வினை நீக்கும் படை - ஆகிய இவை மூன்றும் அறச் செயலை நீக்குகின்ற கருவிகளாம். அழுங்க - கெட. தின்னுதல் - வருத்துதல். பசி நோய் - பசியாகிய நோய், கடும்பசி. மாந்தர் - மக்கள். செறிவு - அடக்கம். விழைவு - விருப்பம், பேராசை. செறுநர் - பகைவர். வெவ்வுரை - கடுஞ்சொல், நோனா - நோனாத - பொறாத. நோன்மை - பொறுமை. வெகுள்வு - சினம். நல்வினை - அறம், படை - கருவி. கடும்பசியால் அறிவு கெட்டுச் செய்யத்தகாத செயல்கள் செய்யக் கூடுமாகையால், அது அறத்தை நீக்கும் கருவியா யிற்று. மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை தானந் தவமுயற்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் போம் பறந்து (நல்வழி) குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் நாணணி களையும் மாணெழில் சிதைக்கும் பூணணி மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி என்னும் பாவி (மணிமேகலை) எனப் பசிநோய் அறத்தைக் கெடுத்தல் காண்க. ஆசையை அடக்குதல் வேண்டும். ஆனால், பேராசை அடக்கத்தைக் கெடுத்து மேலெழும், அதனால், அது நல்வினை நீக்கும் படையாயிற்று. பகைவர் கூறும் கடுஞ்சொல்லைப் பெறாமல் சினத்தல் அறிவுடைமையாகாது. காலம் இடம் முதலியன வாய்க்காத போது, பகைவர் சொல்லைப் பொது வெகுளின் போரில் தோற்க ஏதுவாகும். கடும் பசியாலும், பெரு விருப்பாலும், கடு மொழி பொறாத சினத்தாலும் அறநெறி கெடும் என்பதாம். (14) 184. அஃகுநீ செய்ய லெனவறிந் தாராய்ந்தும் வெஃகல் வெகுடவே தீக்காட்சி - வெஃகுமால் கள்ளத்த வல்ல கருதி னிவைமூன்றும் உள்ளத்த வாக வுரை. (ஏலா) வெஃகல் அஃகு - பிறர் பொருளைக் கவர விரும்பு தலைக் குறை. வெகுடல் நீ - சினத்தலை விடு, தீக்காட்சி செய்யல் - தீமையைத் தரும் பொருள்களைக் காண்பதைச் செய்யாதே, என ஆராய்ந்து அறிந்தும் - என்று அறிவுடை யோர் சொல்லுதலை ஆராய்ந்து அறிந்தும், வெஃகுமால் - ஒருவன் விரும்புவானானால், இவை மூன்றும் - வெஃகல் வெகுடல் தீக்காட்சி ஆகிய மூன்றும், கருதின் கள்ளத்த அல்ல உள்ளத்த ஆக உரை - ஆராயின் வஞ்ச முடையன அல்ல மனத்தில் உள்ளனவாக நீ சொல். அஃகுதல் - குறைதல், சுருங்குதல். நீ - நீக்கு, விடு, நீக்கிவிடு என்ற படி. வெஃகல் - விரும்புதல். வெகுடல் - வெகுள்தல் - சினத்தல். தீக்காட்சி - தீய காட்சி. தீமை தருவனவற்றைக் காணுதல். வெஃகும் ஆல் - விரும்பும் வானானால். ஆல் - ஆனால் என்பதன் இடைக்குறை. கள்ளம் - வஞ்சனை. கள்ளத்த - வஞ்சனையுடையன. கருதின் - ஆராயின். உள்ளம் - மனம். வெஃகல், வெகுடல், தீக்காட்சி என நிறுத்தி, அஃகு, நீ, செய்யல் என முறையே கொண்டு பொருள் கொள்ள வைத்த மையால் இது முறை நிரனிறைப் பொருள்கோள். அஃகு, நீ - முன்னிலை ஏவ லொருமை வினை. செய்யல் - செய்யற்க - எதிர்மறைவினை முற்று. வெஃகல், வெகுடல், தீக்காட்சி என்னும் மூன்றும் புறத்தில் செய்யப்படாமையால், ‘கள்ளத்த அல்ல உள்ளத்த’ என்றார். கள்ளம் - ஒன்றை எண்ணிக் கொண்டு வேறொன்றைச் சொல்லுதலும் செய்தலும். இவை செயல்படாமையால், வஞ்சனையுடையவை யல்ல, மனத்தின் கண் நிகழ்வன. ஆகையால் இவை மனத்தின்கண் நிகழாமல் நீக்க வேண்டும் என்பதாம். தீக்காட்சி காணவிரும்புதல் - மகளிர் ஆடல், மகளிர் அற்றம், ஒருவர் எதையாவது வைத்து ஏமாந்திருத்தல் முதலியவற்றைக் காண விரும்புதல். பிறர் பொருளைக் கவர விரும்புதலும், சினங் கொள்ளு தலும், தீக்காட்சி காணவிரும்புதலும் உள்ளத்தில் நிகழாமல் காக்க வேண்டுமென்பது கருத்து. உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வே மெனல் (குறள்) மறத்தல் வெகுளியை யார்மாட்டும் (குறள்) (15) 185. ஆர்வமே செற்றங் கதமே யறையுங்கால் ஓர்வமே செய்யு முலோபமே - சீர்சாலா மானமே மாய வுயிர்க்கூன மென்னுமே ஊனமே தீர்ந்தவ ரோத்து. (ஏலா) ஊனம் தீர்ந்தவர் நூற்கள், ஆர்வம் செற்றம் கதம் - பேராசையும் பகை பாராட்டுதலும் சினமும், அறையுங்கால் ஓர்வம் - நீதி கூறுமிடத்து ஒருபக்கம் சார்தலும், செய்யும் உலோபம் - மனத்தால் செய்யப்படும் இவறன்மையும், சீர் சாலா மானம் - சிறப்பில்லாத பெருமையும் ஆகிய இவை யாறும், மாய உயிர்க்கு ஊனமே என்னும் - மாயத்துட்பட்ட மக்களுக்குக் கெடுதியைச் செய்வனவே யாகும் என்று சொல்லும். ஆர்வம் - பற்றுள்ளம், பேராசை. செற்றம் - பகை. கதம் - சினம். ஓர்வம் - ஒரு பக்கம். அறைதல் - நீதி வழங்கல். உலோபம் - உலுத்தத்தன்மை. சீர் - சிறப்பு, சாலா - நிரம்பாத. சீர்சாலா - சிறப்பில்லாத. மானம் - பெருமை. சீர்சாலா மானம் - சிறப்பில்லாத - பெருமை சிறப்பில்லாத பெருமை யாவது - கல்வி, ஒழுக்கம் முதலிய சிறப்பில்லாத ஒருவன், குலம், செல்வம் முதலிய சிறப்பில்லாதவற்றால் தன்னை உயர்ந்தவனென்று கூறிக் கொள்ளுதல். மாய உயிர் - இவ்வுலக மாயத்துட்பட்டுள்ள உயிர். ஊனம் - குற்றம், கெடுதி. ஓத்து - நூல்; ஓதப்படுவது என்னும் பொருட்டு. குற்றந் தீர்ந்த பெரியோர்கள் செய்த நூற்கள், பேராசை, பகை பாராட்டல், சினம், ஓரஞ் சொல்லல், இவறன்மை, வீண்பெருமை ஆகிய ஆறும் மக்கட்குக் கெடுதியைச் செய்வன வாகுமென்று சொல்லும் என்பதாம். இவையாறும் தீச்செயல் கள் என்பது கருத்து. (16) 186. தீய செயற்செய்வா ராக்கம் பெருகினும் தீயன தீயனவே வேறல்ல - தீயன நல்லன வாகாவாம் நாவின் புறநக்கிக் கொல்லுங் கவயமா போல். (நீநெ) தீய செயல் செய்வார் ஆக்கம் பெருகினும் - தீய செயல்கள் செய்வோரின் செல்வம் ஒரு கால் பெருகினும், தீயன - தீயசெயல் களால் தேடிய அப்பொருள்கள், நா இன்புற நக்கிக்கொல்லும் கவயமாபோல் - நாவினால் இன்பமுண்டாகும் படி நக்கிப் பின்னர்க் கொல்லுகின்ற காட்டு மாட்டைப்போல், தீயனவே வேறுஅல்ல - தீமை பயப்பனவேயன்றி வேறாகா, (ஏனெனில்), தீயனநல்லன ஆகா - தீயசெயல்கள் நற்செயல்கள் ஆகமாட்டா. ஆக்கம் - செல்வம். தீயன - தீயசெயல்களால் தேடிய பொருள்கள். நாவின் - நாவினால். கவயமா - காட்டுமாடு. காட்டுமாடு, தான் கொல்ல விரும்பும் ஒன்றை முதலி லேயே கொல்லாமல், முதலில் அவ்வுயிர்க்கு இன்பம் உண்டாகும் படி நாவினால் நக்கிக் கொண்டேயிருந்து, அவ்வின்பத்திலீடுபட்டு அவ்வுயிர் அசைவற்றிருக்கையில் திடீரெனப் பாய்ந்து அதனைக் கொல்லும். அதுபோல, தீயவழியில் திரட்டிய பொருள் முதலில் இன்பந் தருவதாய்த் தோன்றினும் முடிவில் தீமையே பயக்கும் என்பதாம். இதனாற்றான் அப்பொருள், ‘காட்டு மாட்டினைப் போலத் தீயனவேயன்றி வேறல்ல, தீயன என்றும் நல்லன ஆகா’ என்றார். தீய காட்டுமாடானது முதலில் இன்ப முண்டாகும் படி நாவினால் நக்கிப் பின் கொல்வதைப் போல, தீய வழியில் தேடிய செல்வம் முதலில் பெருகி இன்பமுற வாழச் செய்தாலும், அது, தீமை பயப்பதேயன்றி வேறாகாது. தீயனவென்றும் நல்ல ஆகாமாட்டா. இலனென்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. (குறள்) (17) 187. அறம்புரிந் தல்லவை நீக்க லினிது. (இனி) அறம் புரிந்து - அறத்தைச் செய்து, அல்லவை நீக்கல் இனிது - கெட்ட காரியங்களைச் செய்யாமல் இருத்தல் நல்லது. அல்லவை - அறமல்லாதவை, கெட்ட செயல்கள். செயற்பால தோரும் அறனே, ஒருவற் குயற்பால தோரும் பழி. (குறள்) (18) 188. யார்மாட்டும் பொல்லாங் குரையாமை நன்கு. (இனி) யார் மாட்டும் - யார் மீதும், பொல்லாங்கு உரையாமை நன்கு - குற்றங் கூறாமல் இருப்பது நல்லது. மாட்டும் - இடத்தும் - மீதும். பொல்லாங்கு - குற்றம். நன்கு - நல்லது. எவர் மீதும் குற்றம் கூறாமல் இருப்பது நல்லது. (19) 189. நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா. (இன்) நெடு மரம் - உயர்ந்த மரத்தினது, நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா - நீண்ட கிளையின் உயரத்தில் ஏறுதல் துன்பந்தரும். நீண்ட கிளையின் உயரத்திலேறிக் குதித்தலுங் கொள்க. கைகால் ஒடிதலோடு உயிர் போதலுங் கூடும். நுனிக்கொம்ப ரேறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும் (குறள்) என்கின்றார் வள்ளுவரும். (20) 190. துறையறியான் நீரிழிந்து போகுத லின்னா (இன்) துறை அறியான் - துறையின் ஆழத்தை அறியாதவன், நீர் இழிந்து போகுதல் இன்னா - நீரில் இறங்கிச் செல்லுதல் துன்பந் தரும். இழிதல் - இறங்குதல். யாரும் என்றும் இறங்கியறியாத துறையில் இறங்கி ஆற்றைக் கடத்தல் துன்பந்தரும் செயல் என்பதாம். “வழங்காத் துறையிழிந்து நீர்ப் போக்கு அருந்துயரம் காட்டும் நெறி” என்பது திரிகடுகம். (21) 200. அடல்வேண்டும் ஆக்கச் சிதைக்கும் வினை. (நான்) ஆக்கம் சிதைக்கும் வினை - முற்போக்கைக் கெடுக்கும் செயலை, அடல் வேண்டும் - ஒழித்தல் வேண்டும். ஆக்கம் - ஆதல், முன்னேறுதல். கல்வி, செல்வம், ஒழுக்கம், புகழ் முதலியவற்றில் மேம்படுதலே ‘ஆக்கம்’ எனப்பட்டது. அதற்குத் தடையாகிய சோம்பல், ஒழுங் கின்மை, பொறாமை முதலிய தீச்செயல்கள் ‘சிதைக்கும் வினை’ எனப்பட்டன. அடுதல் - கெடுத்தல். (22) 201. மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம் அல்லவை செய்வார்க் கறங்கூற்றம். மெல் இலை வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் - மெல்லிய இலைகளையுடைய வாழை மரத்துக்கு அது ஈனிய குலையே கூற்றுவனாகும்; (அது போல), அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் - தீயவை செய்வார்க்கு அறமே கூற்றுவனாகும். கூற்றம் - கூற்றுவன்; உடலும் உயிரும் கூறுபடும் - வேறாகும் நேரத்தை - கூற்று, கூற்றம், கூற்றுவன், காலன் என்பது நூன் மரபு. திருக்குறள் குழந்தையுரை முகவுரை பார்க்க. வாழை மரம் குலை ஈனினால் மரத்தை வெட்டி விடுவ ராதலால், ‘வாழைக்குத் தானீன்ற காய் கூற்றம்’ என்றார். அல்லவை செய்வோரை நல்லவை மனத்தின் கண் தோன்றி வருத்து மென்றபடி. தீமை செய்வாரை நல்லோர் வெறுப்பரா தலால் இவ்வாறு கூறினார். அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மானென்னும் பல்லவையோர் சொல்லும் பழுதன்றே (சிலப்) (23) 202. அஃகம் சுருக்கேல். (ஆத்) அஃகம் - நெல் முதலிய தவசங்களை, சுருக்கேல் - குறைத்து அளக்காதே. அஃகம் - தவசம். இன விலக்கணத்தால் மற்ற பொருள் களையும் குறிக்கும். சுருக்குதல் - அதிக ஊதியத்திற்கு ஆசைப் பட்டு, உள்ள அளவில் குறைத்து அளத்தல் அதாவது அதிக விலைக்கு விற்றல். இன்று ஒரு சில கடைக்காரர்கள், சர்க்கரை முதலிய பொருள் களைக் கட்டுப்பாட்டு விலையைவிட அதிகமான விலைக்கு விற்றல் காண்க. இவ்வாறு விற்றல் கொடுமை என்றபடி. அளவிற் குறைத்து அளத்தலுங் கொள்ளப்படும். அதாவது சிறுபடியில் அளத்தல். (24) 203. மண்பறித் துண்ணேல். (ஆத்) மண் பறித்து - பிறருடைய நிலம் முதலியவற்றை வலியவும் முறையின்றியும் வஞ்சித்தும் பறித்து, உண்ணேல் - நீ வாழாதே. மண் - நிலம். அது வீடு முதலிய மற்ற பொருள்களையும் குறிக்கும். உண்ணல் - உண்டுவாழ்தல். (25) 204. கெடுப்ப தொழி. (ஆத்) பிறருக்குக் கேடு செய்வதை விட்டுவிடு. ஒரு வருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்பதாம். தீங்கு செய்ய நினைக்கக் கூடா தென்றுமாம். மறந்தும் பிறன்கேடு சூழற்க (குறள்) (26) 205. கோதாட் டொழி. (ஆத்) கோது ஆட்டு - குற்றம் பொருந்திய செய்கையை, ஒழி - விட்டுவிடு. கோது - குற்றம். ஆட்டு - செய்கை. குற்றம் பொருந்திய செய்கை - தீய செயல். (27) 206. கௌவை யகற்று. கௌவை - பழியை - பெரியோர்கள் பழிக்கும் படியான செயலை, அகற்று - விலக்கு, செய்யாதே. (28) 207. தீவினை யகற்று. (ஆத்) தீவினை - பிறருக்குத் துன்பம் உண்டாகும்படியான செயல் களை, அகற்று - விட்டுவிடு, செய்யாதே. (29) 208. நைவினை நணுகேல். (ஆத்) நைவினை - பிறர் கெடுதற்குக் காரணமான செயல் களை, நணுகேல் - ஒரு போதும் செய்ய நெருங்காதே, செய்யாதே. நைதல் - கெடுதல். நணுகுதல் - நெருங்குதல். அணுகுதல். அதாவது செய்தல். பிறரைக் கெடுக்கக் கூடாது என்றபடி. (30) 209. பொல்லாங் கென்பவை எல்லாந் தவிர். ( கொன்) பொல்லாங்கு - தீங்கு, தீமை. பொல்லாங்கு என்பவை எல்லாம் - பெரியோர்கள் தீமைகள் என்று சொல்லப் பட்டவை எல்லாவற்றையும், தவிர் - செய்யாதே. தவிர்தல் - விட்டுவிடுதல். (31) 210. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். (கொன்) முற்பகல் - காலை. பிற்பகல் - மாலை. காலையில் ஒருவனுக்குத் தீங்கு செய்தால் மாலையில் அது செய்தவனுக்கு உண்டாகும் என்பதாம். முற்பகல் பிற்பகல் என்பன, முன் பின் என்றபடி. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் (குறள்) பிறர்க்குத் தீமை செய்வோர் தாமும் அத்தீமைக் காளாவர் என்பது கருத்து. (32) 211. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். (கொன்) ஊருடன் பகைக்கின் - ஒருவன் ஊராருடன் பகை கொண் டால், வேருடன் கெடும் - அவன் குடும்பத்துடன் கெடுவான். வேருடன் கெடுதல் - செல்வ முதலியன வெல்லாம் அடியோ டழிந்து ஊரைவிட்டே ஓடும் நிலையை அடைதல். ஒருவன் தான் குடியிருக்கும் ஊராருடன் பகைத்துக் கொள் வானானால், அவன் அடியோடு கெடுவான் என்பதாம். ஊராருடன் பகைகொள்ளக் கூடாது. (33) 212. புலையுங் கொலையுங் களவுந் தவிர். (கொன்) புலை, கொலை, களவு என்னும் தீச்செயல்களை விட்டு விடுக. புலை - இழிவு. புலை - புலைத்தொழில் - இழிசெயல் - பிறர் பழிக்கக்கூடிய கெட்ட காரியம். கொலை களவு - வீட்டாரைக் கொன்று களவாடுதல். தவிர்த்தல் - நீக்குதல், விட்டுவிடுதல். புலை முதலிய கெட்ட காரியங்கள் செய்யக்கூடா தென்பதாம். (34) 213. ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம். (உல) ஒருவரையும் - ஒருவர் மேலும், பொல்லாங்கு சொல்ல வேண்டாம் - குற்றம் சொல்ல வேண்டாம். பொல்லாங்கு - குற்றம். யார் மீதும் குற்றங் கூறக் கூடாது. (35) 214. போகாத இடந்தனிலே போக வேண்டாம். (உல) போகாத இடந்தனிலே - போகத் தகாத இடத்திற்கு, போக வேண்டாம். போகத்தகாத இடம் - கீழ் மக்கள் கூடியுள்ள இடம். சூதாடு மிடம், வாய்ப்போர், கலகம் முதலியன நடக்கும் இடம் முதலி யனவாம். (36) 215. அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம். (உல) அஞ்சாமல் - அச்சம் இல்லாமல், தனிவழியே - துணை யில்லாமல் தனியாக, போக வேண்டாம். தனிவழி - வழியில் தனியாக என்றபடி. இரவில் துணை யின்றித் தனியாகப் போகக்கூடாது. (37) 216. நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம். (உல) நிலை இல்லாக் காரியத்தை - உறுதியில்லாத ஒரு செய்தியை, நிறுத்த வேண்டாம் - உறுதி உள்ளதாகச் செய்ய வேண்டாம். உறுதி - உண்மை. காரியம் என்பது வழக்கினைக் குறிக்கும். ஒரு வழக்கில் பொய்ச்சான்று கூறி உண்மையில்லாத செய்தியை உண்மையென நம்பும்படி செய்து ஒருவரைக் கெடுக்கக்கூடாது என்பதாம். (38) 217. நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம். (உல) பாம்பு, தேள் முதலிய நச்சுயிர்களோடு எப்போதும் பழகக் கூடாது. பழகினால் கடித்துக் கேடுண்டாக்கும். நஞ்சு - நஞ்சுடைய உயிர்களைக் குறிக்கும்; சினையாகுபெயர். நச்சுயிர்கள் போன்ற வஞ்சகருடன் ஒருநாளும் பழகக் கூடாது என்பது கருத்து. (39) 218. சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம். (உல) சினந்திருந்தார் வாசல்வழி - உன்மீது சினத்துடன் இருப்பவர் களுடைய வீட்டுப் பக்கம், போகவேண்டாம். முன் சினந்திருந்து இப்போது சினந் தணிந்திருப்பார் வாசல் வழி எனினுமாம். போதல், சினமிகுதற்கு ஏதுவாகு மென்பதாம். வாசல் - வீட்டைக் குறித்தது. (40) 219. தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்லவேண்டாம். (உல) தாழ்ந்தவரை - எளியவர் மேல், பொல்லாங்கு சொல்ல வேண்டாம் - குற்றம் சொல்ல வேண்டாம். எளியவர்மேல் வீண்குற்றம் சுமத்தக்கூடாது. (41) 220. பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம். (உல) பேர் ஆன காரியத்தை - புகழ்தரத்தக்க நல்ல காரியத்தை, தவிர்க்க வேண்டாம் - இடையில் கைவிட்டு விட வேண்டாம். பேர் - புகழ். தவிர்த்தல் - விட்டு விடுதல். புகழுக் கேதுவாகிய காரியத்தை, அது செய்வதனால் உண்டாகும் வருத்தத்தைக் கருதி இடையில் விட்டு விடக் கூடாது. துன்ப முறவரினுஞ் செய்க, துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை (குறள்) (42) 221. மனஞ்சலித்துச் சிலுகிட்டுத் திரிய வேண்டாம். (உல) மனம் சலித்து - மனம் தளர்ந்து, சிலுகு இட்டுத் திரிய வேண்டாம் - எல்லாரோடும் சண்டை செய்து கொண்டு அலைய வேண்டாம். சலிப்பு - தளர்ச்சி. சிலுகு - சண்டை. மனவுறுதியின்றி எல்லாரோடும் சண்டையிட்டுத் திரியக்கூடாது. (43) 222. திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம். (உல) திறம் பேசி - வல்லமை பேசி, கலகம் இட்டுத் திரிய வேண்டாம் - கலகஞ்செய்து கொண்டு திரிய வேண்டாம். தனது வல்லமையைப் பேசிக் கலகஞ்செய்து கொண்டு திரியக் கூடாது. (44) 223. கூறாக்கி யொருகுடியைக் கெடுக்க வேண்டாம். (உல) ஒரு குடியை - ஒரு குடும்பத்தை, கூறு ஆக்கிக் கெடுக்க வேண்டாம் - இரு கூறு செய்து கெடுக்க வேண்டாம். ஒற்றுமையாக வாழும் ஒரு குடும்பத்தாரை இரண்டாகப் பிரிந்து சண்டை செய்து கொள்ளும்படி செய்து, அக் குடும்பத்தைக் கெடுக்கக்கூடாது. (45) 9. நடுவுநிலைமை அதாவது, ஒருவர் பக்கம் சேராமல் இருவர்க்கும் நடுநிலை உடையராய் இருத்தல். இது பெரும்பாலும் வழக்குத் தீர்ப் போர்க்கு உரிய ஒழுக்கமாகும். எனினும், இல்வாழ்வார் ஒவ்வொருவரும் நடுவுநிலை உடையராக நடந்து கொள்ளுதல் வேண்டும். 224. காய்த லுவத்த லகற்றி ஒருபொருட்கண் ஆய்த லறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண் உற்றகுணந் தோன்றாத தாகும் உவப்பதன்கண் குற்றமுந் தோன்றாக் கெடும். (அற) காய்வதன்கண் உற்ற குணம் தோன்றாததாகும் - வெறுக்கப் படும் பொருளிலுள்ள குணம் ஆராய்வானுக்குத் தோன்றாது, உவப்பதன் கண் குற்றமும் தோன்றாக் கெடும் - விரும்பப் படும் பொருளிலுள்ள குற்றமும் தோன்றாது மறையும், (ஆதலால்), காய்தல் உவத்தல் அகற்றி - வெறுப்பு விருப்பு இல்லாமல், ஒரு பொருட்கண் ஆய்தல் - ஒரு பொருளிலுள்ள குணங்களை ஆராய்ந்தறிதல், அறிவுடையார் கண்ணதே - அறிவுடையார் கடமையாகும். காய்தல் - வெறுத்தல். உவத்தல் - விரும்புதல். ஆய்தல் - ஆராய்தல். உற்ற குணம் - உள்ளகுணம். தோன்றாது அது. அது - அசை. தோன்றா - தோன்றாது. ஒரு நூலை ஆராய்வோர் வெறுப்பு விருப்பு இல்லாமல் நடுநிலைமையுடன் ஆராயவேண்டும். வெறுத்தால் குணமும், விரும்பினால் குற்றமும் தோன்றா என்பதாம். எதையும் வெறுப்பு விருப்பின்றி ஆராயவேண்டும். (1) 225 வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரஞ் சொன்னார் மனை. (நல்) மன்று ஓரம் சொன்னார் மனை - நீதிமன்றத்தில் ஒரு பக்க மாகச் சான்று சொன்னவர்களுடைய வீட்டில், வேதாளம் சேரும் - பேய்கள் தங்கும், வெள்ளெருக்குக்குப் பூக்கும் - வெள்ளெருக்கு முளைத்துத் தழைத்துப் பூக்கும், பாதாள மூலி படரும் - பாதாள மூலி என்னும் கொடி முளைத்துப் படரும், மூதேவி சென்று இருந்து வாழ்வாள் - மூதேவி போயிருந்து மகிழ்ச்சியாக வாழ்வாள், சேடன் குடிபுகும் - பாம்புகள் வந்து தங்கும். வேதாளம் - பேய். பேய் - அச்சம். அச்சத்தைப் பேயென்பது மரபு. திருக்குறள் குழந்தையுரை முகவுரை பார்க்க. அம்மரபுபற்றிப் பேய்கள் தங்கும் என்றார். வெள்ளெருக்கு - ஒருவகை எருக்கிலை. பாதாள மூலி - ஒருவகைக் கொடி. நெருஞ்சி போன்ற கொடி எனினுமாம். மூதேவி - வறுமை. செல்வத்தைச் சீதேவி எனவும், வறுமையை மூதேவி எனவும் கூறுதல் மரபு. சேடன் - பாம்பு. மன்று - நீதிமன்றம். மன்றோரம் சொல்லுதல் - ஒருபக்கமாகச் சான்று கூறுதல். ஒரு பக்கமாகத் தீர்ப்புக் கூறுதலும் கொள்க. அன்னார் வறுமையுற்று ஊரைவிட்டே ஓட, அவர் குடியிருந்த வீடு இடிந்து குட்டிச் சுவராகும் என்பதாம். நடுவுநிலைமை தவறி, ஒரு பக்கமாகச் சான்று கூறு வோரும், தீர்ப்புக் கூறுவோரும் வறுமையுற்று வருந்துவர் என்பது கருத்து. (2) 226. ஒருவர்பங் காகாத ஊக்க மினிது. (இனி) ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் - ஒருவர்க்குச் சார்பாகச் சான்றும் தீர்ப்பும் கூறாமலிருத்தல், இனிது - நல்லது. பங்கு - பக்கம், சார்பு. ஊக்கம் - ஒருபக்கஞ் சார முயலுதல். நம்பினவர் இருவரில் ஒருவர்க்கு உதவ முயலுதலும், போட்டி விளையாட்டில் நடுவராயிருப்போர், ஒரு கட்சி வெற்றி பெற உதவுதலுங் கொள்க. 227. மன்றிற் கொடும்பா டுரையாத மாண்பினிது. (இனி) மன்றில் - நீதிமன்றத்தில், கொடும்பாடு உரையாத மாண்பு இனிது - ஓரஞ்சொல்லாத குணம் நல்லது. கொடும் பாடு - ஓரம். சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி (குறள்) (4) 228. இருவர்தஞ் சொல்லையு மெழுதரங் கேட்டே இருவரும் பொருந்த உரையா ராயின் மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம் மனமுற மறுகிநின் றழுத கண்ணீர் முறையுறத் தேவர் மூவர் காக்கினும் வழிவழி யீர்வதோர் வாளா கும்மே. (வெற்) இருவர்தம் சொல்லையும் எழுதரம் கேட்டு - இருதிறத்தினர் சொல்வதையும் பலமுறை கேட்டு, இருவரும் பொருந்த - இருதிறத் தாரும் ஒத்துக் கொள்ளும்படி, மனுமுறை நெறியின் - மனுநூலின் வழிப்படி, உரையார் ஆயின் - தீர்ப்புக் கூறா ரானால், வழக்கு இழந்தவர்தாம் - வழக்கினை இழந்தோர், மனம் உறமறுகி நின்று அழுத கண்ணீர் - மனம் மிகவும் கலங்கி நின்று அழுதலால் உண்டாகிய கண்ணீரானது, முறை உற தேவர் மூவர் காக்கினும் - வரிசையாக மூன்று தேவர் களும் காத்தாலும், வழிவழி ஈர்வது ஓர் வாளாகும் - அந்நடு வரையே யன்றி, அவர்வழி வருவோர்களையும் அறுப்பதாகிய ஒப்பற்ற வாளாகும். இருதிறத்தார் - வழக்காளி, எதிர்வழக்காளி. எழுதரம் - பலமுறை. பொருந்த - ஒத்துக்கொள்ளும்படி. மனுமுறை - மனுநூல் நெறி வழி; அந்நூலில் சொல்லுகின்ற முறைப்படி. வழக்கு இழந்தவர் - முறைதவறித் தீர்ப்புக் கூறப்பட்டவர். அதாவது குற்ற மின்றியும் குற்றஞ் சாட்டப்பெற்றவர். மறுகுதல் - கலங்குதல். உற - மிக. முறைஉற - வரிசையாக, ஒருவர்பின் ஒருவராக. தேவர் மூவர் - அயன், அரி, அரன் என்னும் முத்தேவர்கள், வழிவழி - மரபு. ஈர்த்தல் - அறுத்தல். கண்ணீர் ஈர்வதோர் வாளாகும் என்க. இருதிறத்தார் சொல்வதையும் பலமுறை கேட்டு, அவ்விரு திறத்தாரும் ஒத்துக் கொள்ளும்படி, அறநூல்களின் வழியில் நடுநிலைதவறாது தீர்ப்புக்கூற வேண்டும். அங்ஙனம் கூறா விட்டால், அவ்விருதிறத்தாரில் வழக்கிழந்தவர் மனம் வருந்தி அழுத கண்ணீ ரானது தப்பாது அத்தீர்ப்புக் கூறியவ னோடு அவன் மரபினையும் அறுக்கும் வாளாகும் என்பதாம். நடுவு நிலைமை தவறித் தீர்ப்புக் கூறினோர் கெடுவர் என்ற படி. நடுவு நிலைமை தவறித் தீர்ப்புக் கூறினோர் தப்பாது கெடுவர் என்பர், ‘தேவர் மூவர்காக்கினும்’ என்றார். அயன், அரி, அரன் என்போர் புராணக் கடவுள்கள். நடுவுநிலைமை தவறக் கூடா தென்பது இவ்வாறு அறிவுறுத்தப்பட்டது. மனு - நூல் - ஒரு வடமொழி நீதி நூல். அது ஒரு குலத்துக் கொரு நீதி சொல்வது. வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி (மனோன்மணீயம்) என்கின்றார் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை. குறளைக் குற்றமற நன்குணர்ந்தவர்கள், ஒரு குலத்துக் கொரு நீதி சொல்லும் மனுவாதி நூல்களை உள்ளுவரோ! எனக் காண்க. (5) 229. தோற்பன தொடரேல். (ஆத்) தோற்பன - தோல்வியடையக் கூடிய, வழக்குகளிலே - பொய் வழக்குகளிலே, தொடரேல் - நீ தொடர்பு கொள்ளாதே. பொய் வழக்குகளில் தலையிடவேண்டாம் என்பதாம். ஒரு சிலர், வழக்கறிஞர்களின் கையாட்களாய், வழக்குப் பார்த்துத் தருவதையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். அவர்கள் பொய் வழக்குகளையும் மெய் வழக்கெனக் கூறி வென்று தர முயல்வர். சிலர் ஒருவரை ஏமாற்றிப் பொய்முறி எழுதிவாங்கி வழக்குத் தொடுப்பர். சிலர் வேண்டுமென்றே பிறர் மீது பொய் வழக்குத் தொடுப்பர். அத்தகையோரைக் குறித்தது இது. வழக்கறி ஞர்கள் பொய் வழக்குகளை எடுத்துக் கொண்டு வெற்றிபெற முயல்வதும் கூடாதென்க. (6) 230. ஓரஞ் சொல்லேல். (ஆத்) எந்த வழக்கிலும் நடுவு நிலைமை தவறி ஒரு பக்கமாகப் பேசக்கூடாது என்பதாம். ஒரு பக்கமாகச் சான்று கூறுதலும், தீர்ப்புக் கூறுதலும் கொள்க. (7) 231. மண்ணினின்று மண்ணோரஞ் சொல்ல வேண்டாம். (உல) மண்ணில் நின்று - மண்ணின் மேல் நின்று கொண்டு, மண் ஓரம் சொல்ல வேண்டாம் - மண்ணின் மேல் வாழ்பவர்க்கு ஓரம் சொல்ல வேண்டாம். மண் - மண்ணில், உலகில் வாழ்வோரைக் குறித்தது; இடவாகு பெயர். யார் மேலும் ஓரம் சொல்லக் கூடாது என்பதாம். (8) 10. பொய்யாமை பொய்யாமை - பொய்சொல்லாதிருத்தல். அது உண்மைக்கு மாறாகப் பேசுதலாகும். மனம் அல்லது உள்ளத்தால் பொய்யாமை - உண்மை எனப்படும். வாயால் பொய்யாமை - வாய்மை எனப்படும். மெய்யால் பொய்யாமை - மெய்மை எனப்படும். 232. பொய்சிதைக்கும் பொன்போலு மேனியை. (நான்) பொய் - பொய்ம்மையான ஒழுக்கம், பொன்போலும் மேனியைச் சிதைக்கும் - பொன் போன்ற நிறத்தினையுடைய அழகிய உடம்பை வாடச் செய்யும். பொய் - பொய்யொழுக்கம். சிதைத்தல் - கெடுத்தல், உடல் நலம் கெடும்படி செய்தல். வெளிக்கு நல்லவன் போல நடித்துக் காணாமல் தீய ஒழுக்கம் ஒழுகுவோன் உடல் நலம் கெடும் என்பதாம். இது மெய்ம்மை. “பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்” (குறள் - 293) என்பதால், உடல் நலம் கெடுதலுங் கொள்க. வேண்டு மென்றே பொய் பேசினவன், அதை எண்ணியெண்ணி மனங்கலங்கி உடல் நலன் குன்றி உடல் இளைத்து விடுதல் இயல்பு. (1) 233. புகழ்செய்யும் பொய்யா விளக்கம். (நான்) பொய்யா விளக்கம் - பொய்யாமை யாகிய ஒளி, புகழ் செய்யும் - எங்கும் புகழை விளங்கும்படி செய்யும். பொய்யா விளக்கம் - பொய்யாமையாகிய விளக்கம். பொய்யாமையை ஒளியாக உருவகம் செய்தார், பொய் யாதவர் புகழை அது எங்கும் விளங்கும்படி செய்வதால். எண்ணம், சொல், செயலாகிய பொய்யாமை மூன்றும் அடங்கும். பொய்யாமை யன்ன புகழில்லை பொய்யா விளக்கே விளக்கு (குறள்) பொய்யாமை புகழை விளங்கச் செய்யும் என்பதாம். (2) 234. உற்ற துரையாதார் செற்றாரைச் சேர்ந்தவர். (நான்) உற்றது உரையாதார் - உண்மையைச் சொல்லாதவர்கள், செற்றாரைச் சேர்ந்தவர் - பகைவரை ஒப்பர். உற்றது - உண்மை. செற்றார் - பகைவர். சேர்ந்தவர் - போல்வர். உண்மையை உரையாத நண்பர்கள் பகைவரைப் போல்வர் என்பதாம். நண்பரிடம் பொய் கூறினால், நட்புப் பகையாகி விடும் என்பது கருத்து. (3) 235. வண்மையிற் சிறந்தன்று வாய்மை யுடைமை. (முது) வாய்மை உடைமை - உண்மையுடைமை, வண்மையின் சிறந்தன்று - செல்வமுடைமையைக் காட்டிலும் சிறந்தது. வண்மை - செல்வம். கொடை என்றுமாம். செல்வத்தா லுண்டாகும் சிறப்பைவிடப் பொய்யாமை யால் உண்டாகும் சிறப்புச் சிறந்தது என்பதாம். வண்மை - கொடையெனில். ஈகையாலுண்டாகும் புகழை விடப் பொய்யாமையாலுண்டாகும் புகழ் சிறந்தது என்றபடி. பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று (குறள்) (4) 236. கண்டொன்று சொல்லேல். (ஆத்) கண்டு - ஒன்றைக் கண்டு, ஒன்று - வேறொன்றை, சொல்லேல் - சொல்லாதே. ஒரு வழக்கில் சான்று சொல்லும் போது ஒன்றைக் கண்டு, அதைவிட்டு வேறொன்றைச் சொல்லக்கூடாது. பொய்ச் சாட்சி சொல்லக் கூடாது. (5) 237. சித்திரம் பேசேல். (ஆத்) சித்திரம் - மெய்போலத் தோன்றும் பொய்மொழி களை, பேசேல். உள்ளதையே பேச வேண்டும். பொய்யை மெய்போலப் புனைந் துரைக்கக் கூடாது என்பதாம். புராணங்களில் வரும் நிகழ்ச்சிக ளெல்லாம் இவ்வாறு புனைந்து கூறப்பட்டன வேயாம். (6) 238. நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை. (கொன்) நிற்கக் கற்றல் - அறிவு நிலை பெறும்படி கற்றலின் பயனாவது, சொல்திறம் பாமை - பொய்பேசாமையேயாகும். நிற்க - நிலைபெற. திறம்புதல் - தவறுதல், மாறுதல். பொய் பேசாமையே கல்வி யறிவின் பயனாகும். (7) 239. நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை. (கொன்) நெஞ்சை ஒளித்து - மனத்துக்குத் தெரியாமல் மறைத்து வைத்த, ஒரு வஞ்சகம் இல்லை - ஒரு பொய்யும் இல்லை. மன மறியாத பொய் ஒன்றும் இல்லை. ஆகையால், மனமாரப் பொய் பேசக்கூடாதென்பதாம். (8) 240. நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் (உல) நெஞ்சார - மனமறிய, பொய்சொல்லக் கூடாது. (9) 241. காணாத வார்த்தையைக்கட் டுரைக்கவேண்டாம். (உல) காணாத வார்த்தையை - கண்ணால் காணாத ஒன்றைப் பற்றிய பேச்சுக்களை, கட்டுரைக்கவேண்டாம் - கண்டதாகப் பொய்கூற வேண்டாம். கட்டுரைத்தல் - கண்டதாகக் கூறுதல். காணாததைக் கண்ட தாகப் பொய்பேசக் கூடாது. (10) 242. இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம். (உல) இறந்தாலும் - பொய் சொல்லாவிடின் இறக்க நேர்ந் தாலும், பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் - பொய் சொல்ல வேண்டாம். உண்மையைச் சொன்னால் உயிர் போவதாயிருந்தாலும் உண்மையே சொல்ல வேண்டும்; பொய் சொல்லக் கூடாது என்பதாம். (11) 11. புறங்கூறாமை அதாவது, ஒருவரைக் கண்டவிடத்துப் (நேரில்) புகழ்ந்து கூறிக் காணாதவிடத்து இகழ்ந்து கூறாமை. புறங்கூறல் - கோட் சொல்லுதல். இது மொழிக் குற்றம். 243. முன்னின் றொருவன் முகத்தினும் வாயினும் கன்னின் றுருகக் கலந்துரைத்துப் - பின்னின் றிழித்துரைக்குஞ் சான்றோரை யஞ்சியே தேவர் விழித்திமையார் நின்ற நிலை. (அற) தேவர் விழித்து இமையார் நின்ற நிலை - தேவர்கள் விழித்த கண் மூடாமல் இருப்பதற்குக் காரணம், ஒருவன் முன் நின்று - ஒருவன் எதிரில் நின்று, கல் நின்று உருக முகத்தினும் வாயினும் கலந்து உரைத்து - கல்லும் உருகுமாறு முகமலர்ந்து வாயால் அவனைப் புகழ்ந்து கூறி, பின் நின்று இழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே - அவன் சென்ற பின்னர் இகழ்ந்து கூறுகின்ற கயவர் களைக் கண்டு, கண்களை மூடினால் தம்மையும் அவ்வாறு இகழுவர் - புறங் கூறுவர் - என்று அஞ்சினமையே யாகும். முன்நின்று - நேரில். கல்நின்று உருக - கல்லும் உருகுமாறு. கல் போன்ற மனமும் உருகுமாறு என்றபடி. முகத்தினும் வாயினும் கலந்து உரைத்தல் - முகமலர்ந்து இன்சொல் கூறல். பின் நின்று - அவன் சென்ற பின்னர். பின் இன்று - பின்னர் அவன் இல்லாத போது என்றுமாம். இழித்து உரைத்தல் - பழித்துக் கூறுதல். சான்றோர் என்றது கயவர்களை. கயவர் களைச் சான்றோர் என்றது வஞ்சப் புகழ்ச்சியணி. தேவர்கள் இமைப்பதில்லை என்பது புராணம். இமை யாததால்தான் இமையவர் என்று பெயர் உண்டானது என்பர். இமய மலையின் வடபகுதியில் வாழ்ந்ததால் இமயவர் எனப் பெயர் பெற்றனர் எனவுங் கூறுப. திருக்குறள் குழந்தையுரை முகவுரை பார்க்க. இயல்பாகவே கண் இமையாத தேவர்களை, பலரைப் பற்றியும் புறங்கூறித் திரியும் கயவர்கள் கண் இமைத்தால் அப்போது தங்களைப் பற்றியும் பிறரிடம் புறங்கூறி விடுவர் என்று அஞ்சியே கண் இமையாமல் இருக்கிறார்கள் என நயம்படக் கூறினார் புறங்கூறலின் கொடுமைதோன்ற. இது தற்குறிப்பேற்ற அணி. புறங்கூறுதல் கயவர்களின் இயற்கைக் குணமாகும். உடுப்பதூஉம் உண்பதூஉம் காணிற் பிறர்மேல் வடுக்காண வற்றாகுங் கீழ். (குறள்) (1) 244. பொய்மேற் கிடவாத நாவும் புறனுரையைத் தன்மேற் படாமைத் தவிர்ப்பானும் - மெய்ம்மேற் பிணிப்பண் பழியாமை பெற்ற பொழுதே தணிக்கு மருந்து தலை. (அற) புறனுரையைத் தன்மேல் படாமைத் தவிர்ப்பான் - புறங் கூறலாகிய நோய் தன்கண் நிகழாமல் நீக்குபவன், பொய்மேல் கிடவாத நாவும் - பொய்யை மேற்கொள்ளாத நாவையும், மெய் மேல் பிணிபண்பு அழியாமையும் - மெய்பேசுதலில் கட்டுண்டி ருக்கும் பண்புடைமை நீங்காமை யையும், பெற்றபொழுதே - பெற்ற அப்போதே, தணிக்கும் மருந்துதலை - அப்புறங்கூறல் என்னும் பிணியைத் தீர்க்கும் தலையாய மருந்தைப் பெற்றவனா வான். மேல் கிடத்தல் - நாவின் மேல் இருத்தல். பொய் மேல் கிடவாத நா - பொய் பேசாமை. புறனுரை - புறங் கூற்று. தன்மேல் படாமை - தன்கண் நிகழாமல், தன்னை வருத்தாமல். தவிர்த்தல் - நீக்குதல். பிணி - பிணித்தல், கட்டுதல்.மெய்வேல் பிணி பண்பு - மெய் பேசுதலின் கண் கொண்டிருக்கும் பண்பு. அதாவது, மெய் தன்னிடத்தினின்று நீங்காத பண்பு; மெய்யே பேசுங் குணம். பிணி பண்பு என்பது எதுகை நோக்கிப் ‘பிணிப்பண்பு’ என வலி மிக்கது. பிணி பண்பு - வினைத்தொகை. தணித்தல் - நீக்குதல், தீர்த்தல். மருந்துதலை - தலையாய மருந்து. ‘தவிர்ப்பானும்’ என்பதன் கண் உள்ள உம்மையை, ‘அழியாமை’ என்பதனோடு கூட்டுக. புறங்கூறுவோன் பொய்யை மெய்யாகப் புனைந்துரைப் பானாகையால், புறங்கூறாதவன் பொய் பேசாத நாவைப் பெற்ற வனாவன். பொய் பேசாதவன் உண்மையே பேசுவானா கையால், மெய்பேசுதலை நீங்காதவனாவான். பொய் பேசாமை யையும் மெய் பேசுதலையும் உடையவன் புறங்கூறான். எனவே, புறங் கூறலை நோயாகவும், பொய் பேசாமையையும் மெய் பேசுதலையும் மருந்துகளாகவும் உருவகித்தார். பொய் பேசாது மெய்யே பேசு வோன் புறங்கூறான் என்பதை, புறங்கூறல் என்னும் நோயைத் தன்னிடத்தினின்றும் நீக்க விரும்புவோன், பொய் பேசாத நாவையும், மெய் பேசுகின்ற பண்பையும் பெற்ற அப் பொழுதே அந்நோய் தீர்க்கும் தலையாய மருந்தைப் பெற்றவ னாவான் என நயம்படக் கூறினார். பொய் பேசாமையும் மெய் பேசுதலுமே அம்மருந்துகள். பொய் பேசாமை எனவே மெய்பேசுதல் என்பது பெறப் படுதலின், பொய் பேசாமை மெய் பேசுதல் என இரண்டை யும் கூறினது, புறங்கூறலின் கொடுமை விளங்குதற் பொருட் டாகும். (2) 245. பகையின்று பல்லார் பழியெடுத் தோதி நகையொன்றே நற்பயனாக் கொள்வான் - பயமின்று மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல்வான்போற் கைவிதிர்த் தஞ்சப் படும். (நீநெ) பகை இன்று பல்லார் பழி எடுத்து ஓதி - ஒரு பகையும் இல்லாமல் பலருடைய குற்றங்களை எடுத்துச் சொல்லி, நகை ஒன்றே நல்பயனாக் கொள்வான் - இகழ்வொன்றையே நற் பயனாகக் கொண்டு திரியும் மூடன், பயம் இன்று - வேறொரு பயனும் இல்லாமல், மெய்விதிர்ப்புக் காண்பான் - உடலில் ஏற்படும் நடுக்கத்தைக் காணவிரும்பி, கொடிறு உடைத்துக் கொல்வான்போல் - பிறனொருவனுடைய கன்னத்தை உடைத்து வருத்தும் இயல்புடையவனைக் கண்டு பிறர் அஞ்சுதல் போல், கைவிதிர்த்து அஞ்சப்படும் - பிறரால் கைந்நடுக்கத்துடன் அஞ்சப் படுவான். பழி - குற்றம். நகை - இகழ்ச்சி. நற்பயன் - சிறந்த பயன். பழி எடுத்தோதி இகழ்தலையே வாழ்க்கைப் பயனாகக் கொள்வான் என்க. பயம் - பயன். மெய் விதிர்ப்பு - உடல் நடுக்கம். விதிர்ப்பு - நடுக்கம். காண்பான் - காண; வினை யெச்சம். கொடிறு - கன்னம். கொள்வான், கொல்வான் - வினையாலணையும் பெயர்கள். வேறொரு பயனுமின்றி, உடல் நடுக்கத்தைக் கண்டு களிப்ப தையே பயனாகக் கருதி, ஒருவனுடைய கன்னத்தை உடைத்து வருத்தும் இயல்புடையவனைக் கண்டு பிறர் அஞ்சுதல் போலவே, பகை சிறிதுமின்றிப் பிறருடைய குற்றங் களை எடுத்துக்கூறி இகழ்தலையே பயனாகக் கொண்டு திரியும் மூடனைக் கண்டு பிறர் கை கால் நடுக்கத்துடன் அஞ்சுவர் என்பதாம். எக்காரணமுமின்றிப் பிறர் பழிகூறுதலையே தொழி லாகக் கொண்டவனைக் கண்டதும் யாவரும் அஞ்சியகலுவர்; எனவே, கொலைஞனைவிடப் புறங்கூறுவோன் கொடியன் என்பது கருத்து. (3) 246. நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனியினிது. (இனி) நட்டார் புறங்கூறான் - தன்னிடம் நட்புக் கொண்ட வரைப் புறங்கூறாதவனாய், வாழ்தல் நனி இனிது - ஒருவன் வாழ்வது மிகவும் நல்லது. நட்டார் - நண்பர், புறங்கூறாமல் என முற்றெச்ச மாகவுங் கொள்ளலாம். நனி - மிக. இனிது - நல்லது. நண்பரைப் பற்றிப் புறங்கூறினால் நட்புக் கெட்டு விடு மாதலால், புறங்கூறாமல் இருத்தல் மிகவும் நல்லது என்றார். பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். (குறள்) (4) 247. முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா. (இன்) முன்னை உரையார் - நேரில் கூறாமல், புறமொழிக் கூற்று இன்னா - ஒருவன் இல்லாத போது அவனைப் பற்றிப் பழித்துக் கூறும் புறங்கூற்றுத் துன்பந் தரும், கெட்டது. முன்னை - முன் - நேரில், உரையார் - உரையாமல் - முற் றெச்சம். மொழிக் கூற்று - சொல்லும் சொல். ஒருவன் இல்லாதபோது பழித்துக் கூறுதல் கெட்டது. கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல். (குறள்) (5) 248. கொலையொக்குங் கொண்டுகண் மாறல். (நான்) கொண்டு கண்மாறல் - ஒருவனோடு நட்புக் கொண்டு பின்பு அந்நட்பு மாறிப் புறங்கூறுதல், கொலை ஒக்கும் - அவனைக் கொலை செய்தலைப் போன்றதாகும். கண்மாறல் - புறங்கூறுதல். ஒருவனோடு நட்புக் கொண்டு, பின் நட்பு நீங்கின தோடு அமையாமல், அவனைப் பற்றிப் பிறரிடம் பழித்துக் கூறுதல் அவனைக் கொலை செய்தலைப் போன்றதாகும். இன்று ஒரு கட்சியில் முன்னோடும் பிள்ளையாக இருந்து, பின் அக்கட்சியை விட்டு நீங்கி, வேறொரு கட்சியில் சேர்ந்து கொண்டு தனது பழைய கட்சியைப் பற்றிக் குறை கூறித் திரிவோர் இதற்கு எடுத்துக்காட்டாவர். ஒருவர் நட்பினை விட்டபின் அவரைப் பற்றிக் குறை கூறக் கூடாதென்பதாம். (6) 249. குறளைவெய் யோர்க்கு மறைவிரி யெளிது. (முது) குறளை வெய்யோர்க்கு - கோட் சொல்லுதலை விரும்பி னோர்க்கு, மறை விரி எளிது - பிறருடைய மறையை வெளிப் படுத்துதல் எளிதாம். குறளை - புறங்கூறல். வெய்யோர் - விரும்பினோர். மறை - மறைவானது - ரகசியம். விரி - விரித்தல் - வெளிப் படுத்தல், பலரறியச் செய்தல். புறங்கூறும் இயல்புடையோர் பிறருடைய மறைகளை (இரகசியங்களை) எளிதில் வெளியிடுவர். இது இரட்டைக் குற்றம். (7) 250. கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு. (கொன்) கோள்செவி - கோள் கேட்குங் குணமுள்ளவனது காதிலே, குறளை - (பிறர்மேல் ஒருவன் வந்து சொன்ன கோளானது, காற்றுடன் நெருப்பு - காற்றுடன் சேர்ந்த நெருப்பைப் போல மூளும். கோள், குறளை - ஒருபொருட் கிளவி. பிறர் சொல்லும் கோளைக் கேட்டலை விருப்பமாக உடை யவனது காதிலே ஒருவன் வந்து சொல்லும் கோளானது காற்றும் தீயும் கலந்தாற் போலப் பிறர்க்குத் தீமையை விளைவிக்கும். கேட்பாரில்லாவிடில் சொல்லமுடியாதாகையால், புறங் கூறலைக் கேட்டலும் புறங்கூறுதல் போன்ற குற்ற முடையதே யாகும். (8) 251. கௌவை சொல்லின் எவ்வருக் கும்பகை. (கொன்) கௌவை சொல்லின் - ஒருவன் பிறர் பழியை எடுத்துச் சொல்லித் திரிவானாயின், எவருக்கும் பகை - எல்லாருக்கும் பகைவனாவான். கௌவை - பழிச்சொல், பிறரைப் பழித்து, இகழ்ந்து கூறுதல். எவருக்கும் என்பது எவ்வருக்கும் என விரித்தல் விகாரம். புறங்கூறுவோன் எல்லார்க்கும் பகைவனாவான். (9) 252. போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம். (உல) போகவிட்டு - ஒருவன் அங்கிருந்து சென்ற பின்பு, புறஞ் சொல்லித் திரிய வேண்டாம் - அவன்மேல் புறங்கூறித் திரிய வேண்டாம். போகவிட்டு - அங்கிருந்து போகவிட்டு - போன பின்பு என்ற படி. ஒருவன் நேரில் இல்லாதபோது அவன்மேல் குற்றங் கூறக் கூடாது. (10) 253. குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம். (உல) குற்றம் ஒன்றும் - பிறருடைய குற்றம் ஒன்றையும், பாராட்டித் திரிய வேண்டாம் - பிறரிடம் சொல்லிக் கொண்டு திரிய வேண்டாம். பாராட்டுதல் - பெரிதாக்கிக் கூறுதல். ஒருவரது சிறு குற்றத் தையும் பிறரிடம் சொல்லக்கூடாதென்பதாம். (11) 254. ஊரோடுங் குண்டுணியாய்த் திரிய வேண்டாம். (உல) ஊரோடும் - ஊரார் ஒருவரைப் பற்றி ஒருவரோடு, குண்டுணி யாய்த் திரிய வேண்டாம் - கோட்சொல்லு பவனாய்த் திரிய வேண்டாம். ஊர் - ஊரிலுள்ளாரைக் குறித்தது. இடவாகு பெயர். குண்டுணி - கோள். ஊரார் ஒருவரைப் பற்றி ஒருவரிடம் கோட் சொல்பவன், ஊரினர் எல்லாராலும் வெறுக்கப்படுவான். என்பதாம். (12) 12. இன்னாசொல்லாமை அதாவது, பிறர்க்குத் துன்பந் தரும் கடுஞ்சொற்களைச் சொல்லாதிருத்தல். 255. காவா தொருவன்றன் வாய்திறந்து சொல்லுஞ்சொல் ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே ஆய்ந்தமைந்த கேள்வி யறிவுடையா ரெஞ்ஞான்றுங் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. (நால) ஒருவன் தன் வாய் காவாது திறந்து சொல்லும் சொல் - பிற னொருவன் தனது வாயைப் பாதுகாவாது திறந்து சொல்லு கின்ற தீச்சொல், ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஒழியாமல் தன்னை வருத்துதலினால், ஓவாதே ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவு உடையார் - ஒழிவில்லாமல் நூல்களை ஆராய்ந்து கற்று நிரம்பிய கல்வியறிவினையுடையார், எஞ்ஞான்றும் கறுத்துகாய்ந்து அமைந்த சொல்லார் - எப்பொழுதும் வெகுண்டு சுடுசொற்களைச் சொல்ல மாட்டார். காவாது - பாதுகாவாது. ஓவாது - ஒழியாது - தவறாது. ஓவாது - ஒழிவில்லாமல் - முற்ற. அமைந்த - நிரம்பிய. கேள்வி - கல்வி. எஞ்ஞான்றும் - எப்போதும். காய்ந்து அமைந்த - கடுமையாக உள்ள சொற்கள். கறுத்து - வெகுண்டு. பிறர் கூறிய கடுஞ்சொல் தமக்குத்துன்பந் தருதலையே எடுத்துக்காட்டாகக்கொண்டு, தாம் கூறும் கடுஞ்சொல்லும் அங்ஙனமே பிறரை வருத்துமென்பதை உணர்ந்து, அறிவுடை யோர் சினந்து கடுஞ்சொல் சொல்லார் என்பதாம். தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு (குறள்) தனக்குள்ளது பிறர்க்கும் உண்டு என்பதை அறிந்தோர் கடுஞ்சொல் சொல்லார் என்பது கருத்து. (1) 256. கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டுந் தம்வாயாற் பேர்த்துநாய் கௌவினா ரீங்கில்லை - நீர்த்தன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ மேன்மக்கள் தம்வாயால் மீட்டு. (நால) நாய் கூர்த்து கௌவிக் கொளக் கண்டும் - நாயானது வெகுண்டு தம் உடம்பைக் கடிக்கக் கண்டும், தம் வாயால், பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை - திருப்பி நாயைக் கடித்தவர்கள் இவ்வுலகத்தில் இல்லை, (அது போல), கீழ் மக்கள் நீர்த்து அன்றிக் கீழாய சொல்லியக்கால் - கீழ் மக்கள் தன்மையின்றிக் கடுஞ் சொற்களைச் சொன்னால், மேன்மக்கள் தம் வாயால், மீட்டுச் சொல்பவோ - திருப்பி அத்தகைய சொற்களைச் சொல்வார்களோ? சொல்லார் என்றபடி. கூர்த்து - வெகுண்டு. கௌவிக் கொளல் - கடித்தல். பேர்த்து - திருப்பி. ஈங்கு - இவ்வுலகத்தில். நீர்த்து அன்றி - பெருந்தன்மை யில்லாமல். நீர்மை - தன்மை. கீழாய - தாழ்வான. சொற்கள் - கடுஞ் சொற்கள். மீட்டு - திருப்பி. கீழோர் தம்மைத் திட்டினால் மேலோரும் சினந்து அவரைத் திட்டுதல், நாய் கடித்தால் அதனைத் திருப்பிக் கடித்தல் போலத் தகுதியற்ற தென்பதாம். ஒழுக்க முடையார்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல் (குறள்) (2) 257. நம்மைப் பிறர்சொல்லுஞ் சொல்லிவை நாம்பிறரை எண்ணாது சொல்லு மிழுக்கிவை யென்றெண்ணி உரைகள் பரியா துரைப்பாரில் யாரே களைகண தில்லா தவர். (அற) நம்மைப் பிறர் சொல்லும் சொல் இவை - நம்மைக் குறித்துப் பிறர் இவ்வாறு சொல்ல வேண்டும் என்று நாம் கருதும் சொற்கள் இவை, நாம் எண்ணாது பிறரைச் சொல்லும் இழுக்கு இவை - நாம் ஆராயாது பிறரைக் குறித்து இகழ்ந்து கூறும் சொற்கள் இவை, என்று எண்ணி - என்று ஆராய்ந்து, பரியாது உரைகள் உரைப்பாரில் - பிறர்பால் இரக்கங் கொள்ளாது கடுஞ்சொற் சொல்வாரைப் போல், களைகணது இல்லாதவர் யாரே - பற்றுக் கோடற்றவர் யார்? ஒருவருமிலர் என்றபடி. பிறர் சொல்லும் சொல் - பிறர் சொல்லவேண்டும் என்று கருதும் சொற்கள். எண்ணாது - ஆராயாது, சொல்லும் இழுக்கு - இகழ்ந்து. பரியாது - இரங்காது - இரக்கங் கொள்ளாது. பரிவு - இரக்கம். உரைப்பாரில் - உரைப்பாரைப் போல. களைகண் - பற்றுக்கோடு - துணை. அது - பகுதிப் பொருள் விகுதி. நம்மைப் பற்றிப் பிறர் எவ்வாறு பேசவேண்டும் என்று நாம் எண்ணுகிறோமோ அவ்வாறுதானே பிறரும் தம்மைப் பற்றிப் பிறர் இவ்வாறு பேசவேண்டும் என்று எண்ணுவர்? தமக்குள்ளது தானே பிறர்க்கும்? ஆகையால், நம்மைப் பற்றிப் பிறர் கடுஞ்சொற் கூறக்கூடாது என்று எண்ணுகின்ற நாம், பிறரைப் பற்றிக் கடுஞ் சொற் கூறாதிருப்பதுதானே அறி வுடைமை? அங்ஙனமின்றி நம்iமப்பற்றிப் பிறர் கடுஞ் சொற் கூறக்கூடாது என்று எண்ணு கின்ற நாம், பிறரைப் பற்றிக் கடுஞ்சொற் கூறலாமோ? அவ்வாறு தம்மைப் பற்றி எண்ணிப் பிறரைப் பற்றிக் கடுஞ் சொற்கூறு வோர்க்கு எல்லோரும் பகையாவர். ஆதலால், அவர்க்குத் துணை ஒருவரும் இலராவர் என்பதாம். இதனையே, ‘உரைப்பாரில் களைகணது இல்லாதவர் யாரே’ என்றார். நம்மைப் பற்றிப் பிறர் சொல்லும் இன்னாச் சொல் நமக்குத் துன்பந் தருவது போலவே, நாம் பிறரைப் பற்றிக் கூறும் இன்னாச் சொல்லும் அவர்க்குத் துன்பந் தரும் என்பதை உணர்ந்து, பிறரைப் பற்றி இன்னாச் சொல் சொல்லக்கூடாது என்பது கருத்து. (3) 258. வெய்யோன் கிரண மிகச்சுடுமே வெய்யவனிற் செய்யோன் கிரணமிகத் தீதாமே - வெய்யகதிர் எல்லோன் கிரணத் தெரியினிலும் மெண்ணமிலார் சொல்லே மிகவுஞ் சுடும். (நீவெ) வெய்யோன் கிரணம் மிகச் சுடும் - ஞாயிற்றின் கதிர் மிகவும் சுடும், செய்யோன் கிரணம் - தீயின்கதிர், வெய்ய வனில் மிகத் தீது ஆம் - ஞாயிற்றின் கதிரைவிட மிகவும் கொடியதாம், வெய்யகதிர் எல்லோன் கிரணத்து எரியினிலும் - வெப்பந் தரும் ஒளியை யுடைய ஞாயிற்றின் கதிரையும் தீயையும்விட, எண்ணம் இலார் சொல்லே மிகவும் சுடும் - அறிவில்லாத மூடர்களுடைய கடுஞ் சொல்லே மிகவும் சுடும். வெய்யோன் - ஞாயிறு - சூரியன். கிரணம் - கதிர், வளி. செய்யோன் - தீ, நெருப்பு. தீது - கொடியது, மிகவும் சுடுவது. எல்லோன் - பகலவன் - சூரியன். கிரணத்து எரியினிலும் - கிரணத் தினிலும் எரியினிலும். எரி - தீ, நெருப்பு. எண்ணம், இலார் - அறிவிலார்; மூடர் என்றபடி. சொல் - கடுஞ்சொல். சூரிய வெப்பத்தினும் கொடியது தீயின் சூடு. தீயினும் கொடியது அறிவிலார் கூறும் கடுஞ்சொல் என்பதாம், தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. (குறள்) எனக் காண்க. (4) 259. ஆக்க மழியினு மல்லவை கூறாத தேர்ச்சியில் தேர்வினிய தில். (இன்) ஆக்கம் அழியினும் - (அவ்வாறு கூறாவிடின்) செல்வம் அழிவதாயிருந்தாலும், அல்லவை கூறாத தேர்ச்சியின் - பிறர்க்குத் துன்பந்தருஞ் சொற்களைச் சொல்லாத மனவுறுதி யினும், தேர்வு இனியது இல் - மிகவும் நல்லது வேறொன்று மில்லை. ஆக்கம் - செல்வம். அல்லவை - பிறர்க்குத் துன்பந் தரும் சொற்கள். இன்பந் தருஞ் சொற்களாகிய நல்லவை அல்லாதவை. தேர்ச்சி - தெளிவு - மனவுறுதி. தேர்வு இனியது - மிகவும் இனியது. செல்வம் அழிவதாயிருந்தாலும் பிறர் மனம் வருந்தும் படி கடுஞ்சொற்சொல்லக் கூடாது. (5) 260. அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா. (இன்) அறமனத்தார் கூறும் - அறத்தை விரும்பும் மனத்தினார் கூறுகின்ற, கடுமொழியும் இன்னா - கடுஞ்சொல்லும் துன்பந் தருவதாம். அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா வியன்ற தறம். (குறள்) என்பதால், இன்னாச் சொல் சொல்வது அறத்தின் புறத் தாகலின் அது துன்பந்தரும் என்பதாம். (6) 261. சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றம். (நான்) சொலல் பால அல்லாத - சொல்லத் தகாதனவாகிய கடுஞ் சொற்களை, சொல்லுதலும் குற்றம் - சொல்லுதல் குற்றமுடைய தாகும். பால - வகையின. சொலல் பால - சொல்லும் வகையின அல்லனவாகிய. சொற்கள் - சொல்லத் தகாதனவாகிய கடுஞ் சொற்கள். சொல்லத் தகாததான கடுஞ்சொல் சொல்வது குற்ற முடைய தாகும். (7) 262. முனிதக்கா னென்பான் முகனொழிந்து வாழ்வான் (நான்) முனி தக்கான் என்பான் - எல்லாராலும் வெறுக்கத் தக்கவ னென்று சொல்லப்படுபவன், முகன் ஒழிந்து வாழ்வான் - முக மலர்ச்சியில்லாமல் கடுமொழி புகன்று கடுகடுப்பாய் வாழ்பவ னாவான். முனியத் தக்கான் என்பது - முனி தக்கான் என நின்றது. முகன் - முகமலர்ச்சி. கடு மொழி கூறலே முகமலர்ச்சி யின்மைக்குக் காரணமாகும். முகத்தான் அமர்ந்தினிது நோக்கி யகத்தானாம் இன்சொ லினதே யறம். (குறள்) முகமலர்ச்சியின்றிக் கடுமொழி கூறுவோன் பலராலும் வெறுக்கப்படுவான். (8) 263. வஞ்சகம் பேசேல். (ஆத்) வஞ்சகப் பேச்சுக்களைப் பேசாதே. வஞ்சகம் பேசுதல் - மனத்தில் ஒன்றை எண்ணி வாயில் ஒன்று பேசுதல். அது கேட்போர்க்கு அப்போது துன்பந் தரா விடினும் பின்னர்த் துன்பந் தருதலால், இன்னாச் சொல்லே யாகும். உள்ளோன்று வைத்துப் புறமொன்று பேசுதல் கூடாது. (9) 264. கடிவது மற. (ஆத்) கடிவது - கடிந்து பேசுவது. கடிந்து பேசுதல் - பிறர் துன்புறும் படி கடுகடுத்துப் பேசுதல். அறவே பேசக் கூடாது என்பார், ‘மற’ என்றார். (10) 265. சுளிக்கச் சொல்லேல். (ஆத்) சுளித்தல் - சினத்தல், வருந்தல். பிறர் மனம் வருந்திச் சினங் கொள்ளும்படி கடுஞ்சொல் சொல்லக் கூடாது. (11) 266. பழிப்பன பகரேல். (ஆத்) பழிப்பன - பெரியோர்களால் பழிக்கப்படுவனவாகிய இழிவான பேச்சுக்களை, பகரேல் - பேசாதே. இழிவான பேச்சு - வாய்க்கு வந்தபடி பேசுதல். (12) 267. நைபவ ரெனினும் நொய்ய வுரையேல். (கொன்) நைபவர் எனினும் - எதிர்த்துப் பேச முடியாமல் வருந்து வோராயினும் - எதிர்த்துப் பேசத் தகுதியில்லாதவராயினும், நொய்ய உரையேல் - புன்மையான சொற்களைச் சொல்லாதே. நைதல் - மனம் குழைதல், வருந்துதல்; இழி சொற் களைத் தாங்க முடியாது மனம் வருந்துதல். நொய்ய - புன்மையான, கீழ்மையான சொற்கள். எதிர்த்துப் பேச முடியாத எளியவரையும் கீழ்த்தரமாகப் பேசக்கூடாது. (13) 268. புண்படவே வார்த்தைதனைச் சொல்ல வேண்டாம். (உல) புண்படவே - கேட்போர் மனம் புண்ணாகும்படி, வார்த்தை தனை - சொல்லை, சொல்ல வேண்டாம். கேட்போர் மனம் புண்ணாகும்படி கடுஞ்சொற் கூறக் கூடாது. (14) 13. பயனில சொல்லாமை அதாவது, தமக்கும் பிறர்க்கும் யாதொரு பயனும் பயவாத - இல்லாத - சொற்களைச் சொல்லாதிருத்தல். வீண் பேச்சுப் பேசாமை. 269. இனியவ ரென்சொலினு மின்சொல்லே யின்னார் கனியு மொழியுங் கடுவே - அனல்கொளுந்தும் வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கு மெய்பொடிப்பச் சிங்கி குளிர்ந்துங் கொலும். (நீநெ) அனல் கொளுந்தும் வெங்காரம் - தீயைப் போலச் சுடும் வெங்காரமானது, வெய்து எனினும் நோய் தீர்க்கும் - வெம்மை யுடையதாய்த் தோன்றினும் நோயினைத் தீர்த்து நலமுண் டாக்கும், சிங்கி மெய்பொடிப்பக் குளிர்ந்தும் கொலும் - நஞ்சானது உடல் புளகம் கொள்ளும்படி குளிர்ச்சியைக் கொடுத்தாலும் பின்னர்க் கொன்றுவிடும்; (அது போல), இனியவர் என் சொலினும் - நல்லோர் என்ன சொன்ன போதிலும், அதாவது கேட்பவர்க்கு விருப்பமில்லாத கடுஞ் சொற்களைச் சொன்ன போதிலும், இன் சொல்லே - அவை பின்னர் நன்மை தருதலால் இனிய சொற்களே யாகும்; இன்னார் கனியும் மொழியும் கடுவே - கெட்டவருடைய கனிந்த சொல்லும் பின்னர் தீமை விளைக்குமாதலால் நஞ்சே யாகும். இனியவர் - நல்லோர், இன்னார் - கெட்டவர். கனியும் - கனிந்த - இனிமையான. கடு - நஞ்சு. அனல் - தீ. கொளுந்துதல் - சுடுதல். வெங்காரம் - ஒருவகை மருந்துச் சரக்கு. வெய்து - வெம்மை - சூடு. பொடித்தல் - புளகங்கொள்ளல். அதாவது மயிர்க் கூச்செறிதல், உடல் சிலிர்த்தல் . குளிர்ச்சியால் மெய் சிலிர்க்கும். சிங்கி - நஞ்சு. தீயைப் போலச் சுடுகின்ற வெங்காரமானது வெம்மை யுடையதெனினும் நோயைத் தீர்த்துப் பின்னர் நன்மை யுண்டாக்கும். அது போல, நல்லோர்கள் கடுஞ்சொற்களைச் சொன்ன போதிலும், அவை பின்னர் நன்மை தருதலால் இனிய சொற்களேயாகும். நஞ்சானது உடல் புளகங்கொள்ளும் படி குளிர்ச்சியுடையதாயிருந் தாலும் பின்னர்க் கொன்று விடும். அது போல, கீழ் மக்கள் சொல்லுகின்ற இனிய சொல்லும் பின்னர் தீமை விளைத்தலால் வன்சொல்லே யாகும் என்பதாம். மேலோர் பயனில சொல்லார்; கீழோர் பயனில சொல்லுவர் என்பதாம். சொல்லுக சொல்லிற் பயனுடைய, சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் (குறள் 1) 270. செயக்கடவ வல்லனவுஞ் செய்துமன் னென்பார் நயத்தகு நாகரிக மென்னாம் - செயிர்த்துரைப்பின் நெஞ்சுநோ மென்று தலைதுமிப்பான் றண்ணளிபோல் எஞ்சா தெடுத்துரைக்கற் பாற்று. (நீநெ) செயக்கடவ அல்லனவும் செய்தும் என்பார் - செய்தற் கரிய செயல்களையும் செய்து முடிப்போம் என்று வாயளவில் சொல்வார், நயத்தகு நாகரிகம் என் ஆம் - விரும்பத் தக்க முகமன் மொழிகளால் என்ன பயன்? இச்செய்கை, செயிர்த்து உரைப்பின் நெஞ்சு நோம் என்று - ஒருவரை வெகுண்டு சொன்னால் அவருக்கு மன வருத்தம் உண்டாகுமென்று, தலை துமிப்பான் தண்ணளி போல் - அவர் தலையை வெட்டும் அருட்டிறனா மென்று, எஞ்சாது எடுத்து ரைக்கல் பாற்று - கூசாமற் கூறுந் தன்மையதே. நயத்தகு - விரும்பத்தக்க. நாகரிகம் - முகமன் - உபசாரம். செயிர்த்து - சினந்து. துமித்தல் - வெட்டுதல். தண்ணளி - இரக்கம். தண்ணளி போன்றதென்று. எஞ்சாது - ஒழியாமல், குறையாமல். பாற்று - பான்மையது, தன்மையது. உரைக்கற் பாற்று - உரைக்குந் தன்மையது. ஒருவன் தன்னிடம் ஓர் உதவி நாடி வந்தவனிடம், தன்னால் செய்ய முடியாத காரியத்தையும் செய்து முடிப்பேன் என்று பெருமையாகக் கூறி, அங்ஙனம் செய்ய முடியாதவன் வீண் பேச்சு இகழப்படும் என்பதாம். ஒருவன் தன்னிடம் ஓர் உதவி நாடி வந்தால், தன்னால் அவ்வுதவி செய்ய முடியாததாயின், என்னால் முடியாது என்று சொல்லிவிட வேண்டும். அவ்வாறு சொல்லிவிட்டால், அவன் வேறொருவரிடம் செல்வான். அங்ஙனமின்றித் தானும் உதவாமல். பிறரிடம் சென்று உதவி பெறவும் விடாமல் கெடுத்தலால், ‘நெஞ்சு நோம் என்று தலை துமிப்பான் தண்ணளிபோல்’ என்றார். ஒருவரை வெகுண்டுரைத்தால் அவர்க்கு மன வருத்தம் உண்டாகுமென்று இரக்கங்கொண்டு, அவர் தலையை வெட்டு கின்ற அருள் திறத்தைப் போன்றது அச்செய்கை என இகழ்ந்தபடி. தலை துமிப்பான் தண்ணளி போன்றது அச்செய்கை என உறுதியாக எடுத்துரைக்கத் தக்கது என்பதாம். தன்னால் செய்ய முடியாததைச் செய்வதாகப் பயனில் சொல் கூறுதல், ஒருவரைச் சினந்து கூறினால் அவர்க்கு மன வருத்தம் உண்டாகுமென்று, அவர் தலையை வெட்டும் கொடுமையினோ டொக்கும் என்பதாம். பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல். (குறள்) (2) 271. நொய்ய வுரையேல். (ஆத்) நொய்ய - பயனில்லாத புன்சொற்களை. உரையேல் - சொல்லாதே. வீண் பேச்சுப் பேசிக் காலங் கழிக்கக்கூடாது. (3) 372. வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம் (உல) வார்த்தை சொல்வார் வாய்பார்த்து - வீண் பேச்சுப் பேசுகின்றவர் வாயைப் பார்த்துக்கொண்டு, திரிய வேண்டாம் - அலைய வேண்டாம். வீண் பேச்சுப் பேசுவதேயன்றி, வீண் பேச்சைக் கேட்பதும் குற்றம் என்பதாம். (4) 14. இன்னா செய்யாமை அதாவது பிறர்க்குத் துன்பந் தரும் தீச் செயல்களைச் செய்யா திருத்தல், தனக்குத் துன்பந் தருதலுங் கொள்க. இன்னா சொல்லாமை யேயன்றி, இன்னா செய்யாமையுங் கூடாதென்றபடி. 273. மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை ஆற்றாமை யென்னா ரறிவுடையார் - ஆற்றாமை நேர்த்தின்னா மற்றவர் செய்தக்காற் றாமவரைப் பேர்த்தின்னா செய்யாமை நன்று. (நால) மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை - பகைவர் களாயிருந்து தம் பகைமைக்குரிய செயல்களை மேற் கொண் டார்க்குத் தாமும் அவற்றை மேற்கொள்ளாமலிருப் பதை, அறிவுடை யார், ஆற்றாமை என்னார் - திறமையில்லா மை யென்று இகழார், (ஆதலால்), அவர் ஆற்றாமை நேர்த்து இன்னா செய்தக் கால் - அப்பகைவர் பொறுமையில்லாமல் எதிர்த்துத் துன்பந் தருவன வற்றைத் தமக்குச் செய்தால், தாம் அவரைப் பேர்த்து இன்னா செய்யாமை நன்று - தாமும் அவர்கட்கு மீட்டும் அக் கொடுமை களைச் செய்யாதிருத்தல் நல்லது. மாற்றார் - பகைவர். மாறு ஏற்றல் - பகைவர்க்குச் செய்யும் கொடுமைகளைச் செய்தல். ஏலாமை - அக்கொடுமை களைத் திருப்பிச் செய்யாமை. ஆற்றாமை - வலியின்மை, திறமையின்மை. ஆற்றாமை - ஆற்றாமல் - பொறுமை யில்லாமல். நேர்த்து - எதிர்த்து. இன்னா - துன்பந் தருவன. மற்று - அசை. பேர்த்து - மீட்டு, திருப்பி. பகைவர் செய்யுங் கொடுமைகளைத் தாமும் செய்யாம லிருப்பதை வலியின்மை யென்று இகழார் அறிவுடையோர். ஆதலால், அப்பகைவர் தமக்குத் துன்பஞ் செய்தால் தாமும் திருப்பிச் செய்யாதிருப்பது நல்லது. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. (குறள்) (1) 274. வினைப்பய னொன்றின்றி வேற்றுமை கொண்டு நினைத்துப் பிறர்பனிப்பச் செய்யாமை வேண்டும் புனப்பொன் னவிர்சுணங்கிற் பூங்கொம்ப ரன்னாய்! தனக்கின்னா வின்னா பிறர்க்கு. (பழ) புனம் பொன் அவிர் சுணங்கின் பூங்கொம்பர் அன்னாய் - வயலில் உண்டாகும் பொன் போல விளங்கும் தேமலை யுடைய பூங்கொம்பைப் போன்றவளே, தனக்கு இன்னா பிறர்க்கு இன்னா - தனக்குத் துன்பமாகத் தோன்றுவது பிறர்க்கும் துன்பமாம், (ஆதலால்), வினைப் பயன் ஒன்று இன்றி - தான் செய்யத் தொடங்கும் செயலினாலே ஒரு பயனுமில்லாமல், (அதாவது வீணாக) வேற்றுமை கொண்டு - பகை கொண்டு, பிறர் பனிப்ப, நினைத்துச் செய்யாமை வேண்டும் - பிறர் துன்புறத் தக்கவற்றை ஆராய்ந்து செய்யா தொழிதல் வேண்டும். வினைப் பயன் - வினையினால் உண்டாகும் பயன். வினை - செயல். வேற்றுமை - பகைமை. நினைத்து - எண்ணி - ஆராய்ந்து. பனிப்ப - பனிக்கத்தக்க செயல்கள். பனித்தல் - நடுங்கல், வருந்தல். புனம் - வயல்; பொன் விளையும் இடம். மைசூர் நாட்டிலுள்ள தங்க வயலைக் காண்க. அவிர்தல் - விளங்குதல். சுணங்கு - தேமல். பெண்கள் உடம்பில் உண்டாகும் ஒருவகைப் பசுமை நிறம். பசலை, பசப்பு எனவும் படும். இது பிரிவாற்றாமையால் உடம்பில் உண்டாகும் நிற வேறுபாடு. கொம்பு - கொம்பர் - போலி. கொம்பரன்னாய் - மகடூஉ முன்னிலை. இன்னா - துன்பம். வினைப் பயன் ஒன்று இன்றி - தான் பிறர்க்குச் செய்யும் துன்பத்தால் தனக்கு யாதொரு பயனு மின்றி, வீணாக என்றபடி. தனக்குத் துன்பந் தருவது பிறர்க்கும் துன்பந் தருவதே. பிறர் தமக்குத் துன்பஞ் செய்வதை எவரும் விரும்பார். அவ்வாறே தாம் பிறர்க்குச் செய்யும் துன்பத்தை அவரும் விரும்பார் என்பதை யுணர்ந்து, பிறர்க்குத் துன்பஞ் செய்யக் கூடாது என்பதாம். வீணாகப் பகை கொண்டு பிறர்க்குத் துன்பஞ் செய்யக் கூடா தென்பது கருத்து. தன்னுயிர்க் கிண்ணாமை தானறிவா னென்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல் (குறள்) (2) 275. ஆற்றா ரிவரென் றடைந்த தமரையும் தோற்றத்தா மெள்ளி நலியற்க - போற்றான் கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கௌவி விடும். (பழ) போற்றான் கடை அடைத்து வைத்துப் புடைத்தக் கால் - பாதுகாவாமல் வாயிலை அடைத்துவைத்துக் கொண்டு அடித்தால், நாயும் உடையானைக் கௌவி விடும் - வளர்த்த நாயும் வளர்த்த வனையே கடித்து விடும்; (ஆகவே), அடைந்த தமரையும் இவர் ஆற்றார் என்று - தம்மையடையந்த உறவினரை யாயினும் இவர் வலியிலரென்று, தோற்ற தாம் எள்ளி நலியற்க - பிறரறியத் தாம் இகழ்ந்துரைத்து வருத்தாதொழிக. ஆற்றார் - வலியிலர், எளியர். தமர் - உறவினர். தோற்ற - பிறரறிய - வெளிப்படையாய். எள்ளுதல் - இகழ்தல். நலிதல் - வருத்துதல். போற்றான் - போற்றாமல் - பாதுகாவாமல்; முற் றெச்சம். கடை - வாயில், கதவு. புடைத்தல் - அடித்தல். கௌவுதல் - கடித்தல். நன்றாய்ச் சோறுபோட்டுப் பாதுகாவாமல், கதவை மூடி வைத்துக் கொண்டு அடித்தால் வளர்த்த நாயும் வளர்த்த வனைக் கடிக்கும். அதுபோல, தம்மை அடைந்த உறவினரை எளியரென்று பலரறிய இகழ்ந்து வருந்தும் படி செய்தால், அவரும் தம்மை இகழ்ந்து வருத்துதல் கூடும் என்பதாம். தான் வளர்த்த நாயெனினும் அடித்து வருத்தினால் கடிக்கும். தன் உறவினனெனினும் இகழ்ந்து வருத்தினால் அவரும் வருத்துவர் என்பது கருத்து. (3) 276. நெடியது காண்கிலாய் நீயெளியை நெஞ்சே கொடியது கூறினாய் மன்ற - அடியுளே முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் கண்டு விடும். (பழ) நெஞ்சே! - நெடியது காண்கிலாய் - பின்பு மிக்கு வரும் துன்பத்தை அறியமாட்டாமல், கொடியது கூறினாய் - (பிறருக்குக் கேடு செய்வோமென்று) கொடியதைக் கூறினாய், நீ எளியை - நீ ஒன்றும் அறியாய், பிறன்கேடு முன் பகல் கண்டான் - பிறனொருவன் கெடும் கேட்டினை முன்பொழுது கண்டவன், அடியுளே தன்கேடு பின்பகல் மன்ற கண்டுவிடும் - அந்நிலையில் தான் கெடும் கேட்டினைப் பின்பொழுது உறுதியாகக் காணுவான். நெடியது - மிக்க துன்பம். காண்கில் ஆய் - காணாய். கில் - ஆற்றலுணர்த்தும் இடைநிலை. எளியை - அறிவிலாய், அறியாய். மன்ற - உறுதியாக. அடியுளே - அந்நிலையில் - அவ்வாறே என்ற படி. கண்டுவிடும் - காண்பான். நெஞ்சே! பின்வரும் பெருந் துன்பத்தை அறிய மாட்டாமல் பிறரைக் கெடுப்போமென்று கொடியதைச் சொன்னாய், நீ அறிவிலாய். பிறன் கேட்டை முற்பகல் கண்டான் தன் கேட்டைப் பிற்பகல் காண்பான். ஆகையால், அவ்வாறு பிறரைக் கெடுப்போ மென்று - பிறர்க்குக் கேடு செய்வோமென்று. கொடியது கூறாதே என்பதாம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ஆதலால், பிறர்க்கு இன்னா செய்யக்கூடாதென்பது கருத்து. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும். (குறள்) (4) 277. தோற்றத்தாற் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார் மாற்றத்தாற் செற்றா ரெனவலியா ராட்டியக்கால் ஆற்றா தவரழுத கண்ணீ ரவையவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்து விடும். (பழ) தோற்றத்தால் பொல்லார் - தாழ்ந்த குலத்தில் பிறந்தவர், துணை இல்லார் - யாதொரு துணையும் இல்லாதவர், நல்கூர்ந்தார் - வறியவர், மாற்றத்தால் செற்றார் என - சொல்லும் சொற்களால் நமக்குப் பகைவர் ஆவர் என்று எண்ணி, வலியார் ஆட்டியக்கால் - அவரை விட வலியவர் அவரை நலிந்தால், ஆற்றாது அவர் அழுத கண்ணீர் அவை - அந்நலிவினைப் பொறுக்க முடியாமல் அந்நலியப் பட்டவர் அழுத கண்ணீராகிய அவை, அவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்து விடும் - அந்நலிந்தார்க்குக் கூற்றமாய் வீழும். தோற்றம் - பிறப்பு. தோற்றத்தால் பொல்லார் - தாழ்ந்த குலத்தில் பிறந்தவர். நல்கூர்தல் - வறுமையுறுதல். மாற்றம் - சொல். செற்றார் - பகைவர். ஆட்டுதல் - வருத்துதல். வீழ்ந்துவிடும் - வீழும். கண்ணீர் ஓயாமல் ஒழுகுதல் பற்றி, ‘அவை’ எனப் பன்மை கூறினார். இவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர், ஒருவருந்துணையில்லாதவர், வறியவர், பகைவரைப் போல் பேசுகின்றார் என்று எண்ணி எளியரை வலியர் நலிந்தால், அவ்வெளியர் ஓயாது அழுத கண்ணீர் அந்நலிந்தார்க்குக் கூற்றமாக விழும் என்பதாம். அக் கண்ணீரே இவர்க்குக் கூற்றமாகும் என்றபடி. வலியாரால் நலியப்பெற்ற எளியார் அழுத கண்ணீர் அவ் வலியார்க்கு மிக்க துன்பத்தைச் செய்யும் என்பதாம் - எளியாரை நலிவோரை மற்றெல்லோரும் வெறுப்பதால் அவர் துன்புறுவா ராயினர். ஏழை யழுத கண்ணீர் கூரிய வாளொக்கும் - பழமொழி. (5) 278. மிக்குடைய ராகி மிகமதிக்கப் பட்டாரை ஒற்கப் படமுயறு மென்ற லிழுக்காகும்; நற்கெளி தாகி விடினும் நளிர்வரைமேற் கற்கிள்ளிக் கையுய்ந்தா ரில். (பழ) நற்கு எளிது ஆகிவிடினும் - மிகவும் சிறிதாய் எளிதாயிற்றா யினும், நளிர் வரைமேல் கல் கிள்ளி கை உய்ந்தார் இல் - பெரிய மலை மேலுள்ள கல்லைக் கிள்ளிக் கை வருந்துதலைத் தப்பினாரில்லை, (ஆதலால்), மிக்கு உடையராகி - செல்வம் வலி முதலியன மிக்குடையராகி, மிக மதிக்கப்பட்டாரை - மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட வரை, ஒற்கப்பட முயறும் என்றல் இழுக்கு அகும் - கெடும்படி முயல்வோம் என்று நினைத்தல் குற்றமாகும். மிக்கு - செல்வம் வலி முதலியவற்றில் மிக்கு. ஒற்கம் - தளர்ச்சி - தளர. ஒற்கப்பட - கெட - கெடுக்க. முயல்தும் - முயறும் - முயல்வோம் - தன்மைப் பன்மை வினைமுற்று. தும் - தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி. இழுக்கு - குற்றம். நன்கு என்பது - நற்கு என வலிந்தது. நளிர் - பெரிது. உய்தல் - தப்புதல். மலைமேல் உள்ள கல் மிகவும் சிறிதாகவும் கிள்ளுதற்கு எளிதாகவும் இருந்தாலும் அக்கல்லைக் கிள்ளிக் கை வருந்தாமல் - நோகாமல் - தப்பினாரில்லை. அது போல, செல்வம் வலி முதலிய வற்றில் மிக்குப் பிறரால் நன்கு மதிக்கப்பட்டாரைக் கெடுக்க முயலுதல் குற்றமாகும். கல்லைக் கிள்ளினால் கை வருந்துதல் போல, வலியார்க்கு இன்னாசெய்தார் வருந்த நேரும் என்பதாம். கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க் காற்றதா ரின்னா செயல். (குறள்) தங்கண் மரபில்லார் பின்சென்று தாமவரை எங்கண் வணக்குது மென்பவர் - புன்கேண்மை நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப கற்கிள்ளிக் கையிழந் தற்று. (நாலடி) (6) 279. நீர்த்தக வில்லார் நிரம்பாமைத் தந்நலியின் கூர்த்தவரைத் தாநலிதல் கோளான்றால் சான்றவர்க்குப் பார்த்தோடிச் சென்று கதம்பட்டு நாய்கவ்வின் பேர்த்துநாய் கவ்வினா ரில். (பழ) நாய் கதம்பட்டுக் கவ்வின் - நாய் வெகுண்டு கடித்தால், பார்த்து ஓடிச் சென்று பேர்த்து நாய் கவ்வினார் இல் - அதனைப் பார்த்துத் தொடர்ந்தோடிச் சென்று திருப்பி அந்நாயைக் கடித்த வர்கள் இல்லை; (அங்ஙனமே), நீர் தகவு இல்லார் நிரம்பாமை தம் நலியின் - நற்குணமில்லாதவர் அறிவு நிரம் பாமையால் தம்மை வருத்தினாராயின், கூர்த்து தாம் அவரை நலிதல் சான்றவர்க்குக் கோள் அன்று - மிகவும் தாம் அவரை வருத்துதல் சான்றோர்க்குக் கோட்பாடன்று. நீர் - நீர்மை. தகவு - தகுதி. நீர்தகவு - நற்குணம். நிரம் பாமையால். நலிதல் - வருத்துதல் - இன்னா செய்தல். கூர்த்து - மிக்கு; மிகவும் என்றபடி. கோள் - கொள்கை, கோட்பாடு. ஆல் - அசை. ஓடி, சென்று - ஒரு பொருட் பன்மொழி. பின் தொடர்ந்து சென்று என்றபடி. நாய் கடித்து விட்டு ஓடும் ஆகையால், ‘பார்த்து ஓடிச் சென்று’ என்றார். கதம் - சினம். பேர்த்து - திருப்பி. கவ்வுதல் - கடித்தல். நாய் சினந்து கடித்தால் அதைத் தொடர்ந்து சென்று பிடித்துத் திருப்பிக் கடித்தவர் இல்லை. அது போல, நற்குண மில்லாத மூடர்கள் தம்மை வருத்தினால் சான்றோர்கள் தாமும் அவரை வருத்துதல் முறையன்று என்பதாம். (7) 280. காழார மார்ப! கசடறக் கைகாவாக் கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர் உள்ளத்துக் கொண்டுநேர்ந் தூக்கல் குறுநரிக்கு நல்லநா ராயங் கொளல். (பழ) காழ் ஆரம் மார்ப - வடமாகக் கோக்கப்பட்ட முத்து மாலையையுடைய மார்பனே, கசடுஅற கைகாவாக் கீழாயோர் செய்த பிழைப்பினை - குற்றமற ஒழுக்கங்களைப் பாதுகாவாத கீழ் மக்கள் செய்த தவறுகளை, மேலாயோர் உள்ளத்துக் கொண்டு நேர்ந்து ஊக்கல் - மேன்மக்கள் தம் மனத்தில் கொண்டு அக் கீழோரை எதிர்த்து அவர்க்குத் தீங்கு செய்ய முயலுதல், குறுநரிக்கு நல்ல நாராயம் கொளல் - சிறிய நரியை எய்யச் சிறந்த அம்பினை எடுத்ததனோ டொக்கும். காழ் - வடம் - சாரம். ஆரம் - முத்து. காழாரம் - முத்துவடம். கை - ஒழுக்கம். காவா - காவாத. பிழைப்பு - தவறு; நேர்தல் - எதிர்த்தல். ஊக்கல் - முயலுதல். குறுநரி - சிறுநரி; குள்ளநரி எனப்படும். நல்ல - சிறந்த. நாராயம் - அம்பு. நரியின்மேல் நாராயம் தொடுப்பதைப் போலும், கீழோர் தீங்கு செய்தால் மேலோரும் அதைத் திருப்பிச் செய்ய முயலுதல். கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள். (குறள்) (8) 281. பிறர்க்கின்னா செய்தலிற் பேதைமை யில்லை பிறர்க்கின்னா தென்றுபே ரிட்டுத் - தனக்கின்னா வித்தி விளைத்து வினைவிளைப்பக் காண்டலிற் பித்து முளவோ பிற. (அற) பிறர்க்கு இன்னா செய்தலின் பேதைமை இல்லை - பிறர்க்குத் துன்பம் செய்தலைக் காட்டிலும் அறியாமை வேறொன்று மில்லை, பிறர்க்கு இன்னாது என்று பேர் இட்டு - மற்றவர்க்குச் செய்யும் துன்பம் என்று பெயர் வைத்து, தனக்கு இன்னாவித்தி விளைத்து வினை விளைப்பக் காண்டலின் - தனக்குத் துன்பத்தை விதைத்துப் பயிர் செய்து வினையாகிய பலனைக் கொடுக்குமாறு செய்து கொள்ளுதலைக் காட்டிலும், பிற பித்தும் உளவோ - வேறு அறியாமையும் உண்டோ? இல்லை என்றபடி. இன்னா - துன்பம். பேதைமை - அறியாமை. வித்தல் - விதைத்தல். விளைத்தல் - பயிரை நீர்பாய்ச்சிப் பாதுகாத்து வளர்த்தல். வினை - துன்பத்தின் பயன். விளைத்தல் - கதிர் அறுத்தல். காண்டல் - செய்தல். பித்து - அறியாமை. பிறர்க்குச் செய்யும் துன்பத்தால் பழி பாவம் என்பவை நிலைத்து விடுதலால், ‘இன்னா வித்தி விளைத்து வினை விளைப்பக் காண்டலின்’ என்றார். வினை என்றது, பிறர்க்குச் செய்யும் துன்பத் தால் வரும் பழிபாவங்களை. பழி - பிறர் பழித்தல் - பாவம் - குற்றம். பிறர்க்குச் செய்யுந் துன்பத்தால் பழியும் பாவமும் நிலைத்து விடுவதால், பேருக்குத்தான் பிறர்க்குத் துன்பஞ் செய்தலே யன்றி, உண்மையில் தனக்கே துன்பஞ் செய்து கொள்கிறான் ஆகையால், பிறர்க்குத் துன்பஞ் செய்வது அறிவின்மை என்பதாம். (9) 282. ஆற்றானை யாற்றென் றலையாமை முன்னினிது. (இனி) ஆற்றானை - ஒருதொழிலைச் செய்ய மாட்டாதவனை, ஆற்று என்று அலையாமை முன்இனிது - அதனைச் செய் யென்று வருத்தாம லிருத்தல் மிகவும் நல்லது. ஒரு தொழிலைச் செய்யும் தகுதியும் திறமையும் இல்லா தவனை அத்தொழிலைச் செய்யும்படி வற்புறுத்தினாலும் அவனால் அதைச் செய்ய முடியாதாகையால், அவ்வாறு தகுதியும் திறமையும் இல்லாதவனைச் செய் என்று வற் புறுத்துதல் கூடாது என்பதாம். ஆற்றானை ஆற்றென் றலைப்பானும் (திரிக) (10) 283. அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம். (உல) அடுத்தவரை - உன்னைத் துணையாக நம்பி அடைந்த வரை, ஒரு நாளும் கெடுக்க வேண்டாம் - எப்போதும் கெடுத்துவிட வேண்டாம். கெடுத்தல் - கேடு செய்தல். நம்பினவர்க்குத் துன்பஞ் செய்யக்கூடாது. (11) 284. எளியாரை யெதிரிட்டுக் கொள்ள வேண்டாம். (உல) எளியாரை - ஏழைகளை, எதிரிட்டுக் கொள்ள - பகையாகக் கொண்டு கெடுதிசெய்ய, வேண்டாம் - விரும்ப வேண்டாம். எதிரிட்டுக் கொள்ளல் - பகையாகக் கொண்டு கெடுதி செய்தல். கெடுதி செய்ய எண்ண வேண்டாம் என்பதாம். (12) 15. பயனில செய்யாமை அதாவது, தமக்கும் பிறர்க்கும் பயனில்லாத செயலைச் செய்யாதிருத்தல். பயனில சொல்வதேயன்றிச் செய்வதும். குற்றம் என்பதாம். 285 கணக்காய ரில்லாத வூரும் பிணக்கறுக்கும் மூத்தோரை யில்லா வவைக்களனும் - பாத்துண்ணும் தன்மையி லாள ரயலிருப்பு மிம்மூன்றும் நன்மை பயத்த லில. (திரி) கணக்காயர் இல்லாத ஊரும் - ஆசிரியர் இல்லாத ஊரில் குடியிருத்தலும், பிணக்கு அறுக்கும் மூத்தோரை இல்லாத அவைக் களனும் - வழக்குத் தீர்க்கும் அறிவு முதலிய வற்றில் முதிர்ந்தவரை இல்லாத அறங்கூறவையில் வழக்குத் தொடுத்தலும், பாத்து உண்ணும் தன்மை இலாளர் அயல் இருப்பும் - பகுத்து உண்ணும் குணம் இல்லாதவர் பக்கத்தில் குடியிருத்தலும், இம் மூன்றும் நன்மை பயத்தல் இல - ஆகிய இவை மூன்றும் நன்மை தருவன அல்லவாம்; பயனில்லாதவை என்றபடி. கணக்காயர் - ஆசிரியர். பிணக்கு - வழக்கு. அறுத்தல் - தீர்த்தல். மூத்தோர் - கல்வி கேள்வி அறிவு ஆண்டு பழக்கம் ஆகியவற்றில் முதிர்ந்த நடுவர். கரிகாலன் நரை முடித்து வழக்குத் தீர்த்த வரலாற்றை அறிக. இல்லா - இல்லாத. அவைக்களன் - அறங்கூறவையம் - நீதி மன்றம். பாத்தல் - பகுத்தல். பாத்து உண்டல் - பிறர்க்குக் கொடுத் துண்டல். தன்மை - குணம். அயல் இருப்பு - ஒரே வீட்டில் ஒட்டுக் குடியிருத்தல். நன்மை பயத்தல் இல - பயனில்லாதவை. இன்று போல் அன்று பொதுப் பள்ளிகள் இல்லை. ஆசிரியர் வீட்டுத் திண்ணைதான் பள்ளிக்கூடம். அதனாற்றான் அக்காலப் பள்ளிகள் ‘திண்ணைப் பள்ளி’ என்பதும் இப் பொருளதே. குலம் - வீடு. எனவே, ஆசிரியர் இல்லாத ஊரில் குடியிருந்தால் படிக்க முடியாது. முதிர்ந்த நீதிபதியில்லாத நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தால் நல்ல தீர்ப்புக் கிடைக்காது. “உரை முடிவு காணான்” என்னும் 16-ஆம் பாட்டின் உரை பார்க்க. ஒரு வீட்டில் இருவர் ஒட்டுக் குடியிருந்தால், ஒரு வீட்டார் ஏதாவது தின்பண்டம் செய்தால் அடுத்த வீட்டுக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடா விட்டால் அக் குழந்தைகள் ஏங்கிப் போகும்; தாயாரிடம் அது வேண்டுமென்று கேட்டழும். ஆகையால், அத்தகை யாருடன் ஒட்டுக் குடியிருக்கக் கூடாது. எனவே, ஆசிரியர் இல்லாத ஊரில் இருத்தலும், மூத்தோர் இல்லாத நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தலும், பாத் துண்ணும் குணம் இல்லாதவர் பக்கத்தில் குடியிருத்தலும் பயனில்லாதவை என்பதாம். (1) 286. விருந்தின்றி யுண்ட பகலும் திருந்திழையார் புல்லப் புடைபெயராக் கங்குலும் - இல்லார்க்கொன் றீயா தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும் நோயே யுரனுடையார்க் கு. (திரி) விருந்து இன்றி உண்ட பகலும் - விருந்தினர் இல்லாமல் தனித்து உண்ட பகலும், திருந்து இழையார் புல்லப் புடை பெயராக் கங்குலும் - திருந்திய அணிகலன்களை அணிந்த மனைவியைக் கூடாமல் கழிந்த இரவும், இல்லார்க்கு ஒன்று ஈயாது ஒழிந்து அகன்ற காலையும் - வறியவர்க்கு ஒன்றைக் கொடாது கழிந்த நாளும், இம்மூன்றும் உரனுடையார்க்கு நோயே - ஆகிய இம்மூன்றும் அறிவுடையார்க்குப் பயனில் லாத செயல்களாம். விருந்து - விருந்தினர். சுற்றத்தாரையும் நண்பரையும் குறிக்கும். இழை - நகை. திருந்து இழை - சிறந்த வேலைப் பாடுடைய நகை. புல்ல - கூட. புடை பெயர்தல் - கழிதல். பெயரா - பெயராத. கூடக் கழியாத இரவு - கூடாமல் கழிந்த இரவு. ஒழிந்து, அகன்ற - ஒழிந்த, கழிந்த. ஒருபொருட் பன்மொழி. நோய் - துன்பம். உரன் உடையார் - அறிவுடை யார். விருந்தினரைப் போற்றாமையும், மனைவியைக் கூடாமையும், வறியவர்க்கு ஈயாமையும் பயனில் செய்கைகள் என்பதாம். இவற்றையே, ‘உண்ட பகலும், பெயராக் கங்குலும், அகன்ற காலையும்’ என வேறு வகையாகக் கூறினார். விருந்தினர், உறவினர் ஆகியோரைப் புறக் கணித்துத் தாமாகவே உண்டு வாழ்தலும், மனைவியோடு கூடி வாழாமல் அவளை விட்டுத் தீய ஒழுக்க மொழுகுதலும், இல்லார்க்கு ஈயாத இறவன்மை யுடையவராய்ப் பொருள் காத்தலும் பயனில்லாத செயல்கள் என்பதாம். விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டாற் பாற் றன்று (குறள்) கற்புடையாள், பூப்பின்கண் சாராத் தலைமகனும் (திரி - 17) இரத்தலி னின்னாது மன்ற, நிரப்பிய தாமே தமிய ருணல். (குறள்) (2) 287. ஏவாது மாற்று மிளங்கிளையும், காவாது வைதெள்ளிச் சொல்லுந் தலைமகனும் - பொய்தெள்ளி அம்மனை தேய்க்கும் மனையாளு மிம்மூவர் இம்மைக் குறுதியில் லார். (திரி) ஏவு ஆதும் மாற்றும் இளங்கிளையும் - பெற்றோரால் ஏவப்பட்ட எந்தச் செயலையும் செய்ய மறுக்கும் மகனும், காவாது வைது எள்ளிச் சொல்லும் தலைமகனும் - மனைவி யைக் காவாமல் மிகவும் இகழ்ந்து பேசுகின்ற கணவனும், பொய் தெள்ளி அம்மனை தேய்க்கும் மனையாளும் - பொய் மொழியை ஆராய்ந்து சொல்லித் தனது வீட்டின் செல்வத்தை அழிக்கும் மனைவியும், இம்மூவர் இம்மைக்கு உறுதியில்லார் - ஆகிய இம்மூவரும் இம்மையில் எவருக்கும் பயனில்லாதவர் ஆவர். ஏவு - ஏவுதல். ஆதும் - எதையும் - எந்த ஒரு தொழிலை யும், மாற்றுதல் - மறுத்தல். இளங்கிளை - மகன். காவாது - குடும்பச் செலவுக்கு வேண்டிய பணம் கொடாமலும், வாழ்க்கையில் இன்பங் கொடாமலும் நடந்து கொள்ளுதல். வைது எள்ளி - ஒரு பொருட் பன்மொழி; மிகவும் இகழ்ந்து. தெள்ளுதல் - ஆராய்தல். அம்மனை - வீடு. இங்கு வீட்டின் செல்வத்தைக் குறித்தது; இட வாகு பெயர். தேய்த்தல் - அழித்தல். இம்மை - உயிரோடு வாழும் இப்போது. உறுதி - பயன். மக்கள் பெற்றோர் சொல்லைத் தட்டுதலும், மனைவி யைப் போற்றாமல் மிகவும் இகழ்தலும், கணவனிடம் பொய் பேசிச் செல்வத்தை அழித்துக் குடும்பத்தைக் கெடுத்தலும் பயனற்ற செயல்கள் என்பதாம். ஏவது மாறா இளங்கிளைமை முன்னினிது (இனி) காழ்கொண்ட இல்லாளைக் கோலால் புடைத்தலும் (திரி) இப்பாட்டு, ஒருகுடும்பத்தினரான பிள்ளை, கணவன், மனைவி ஆகியோரின் பயனற்ற செயலைக் கூறியது. (3) 288. நோவஞ்சா தாரோடு நட்பும் விருந்தஞ்சும் ஈர்வளையை யில்லத் திருத்தலும் - சீர்பயவாத் தன்மையி லாளர் அயலிருப்பு மிம்மூன்றும் நன்மை பயத்த லில. (திரி) நோ அஞ்சாதாரோடு நட்பும் - தமக்குண்டான துன்பத் தைக் கண்டு வருத்தப்படாதவரோடு கொண்ட நட்பும், விருந்து அஞ்சும் ஈர்வளையை இல்லத்து இருத்தலும் - வீட்டுக்கு வரும் விருந்தி னர்க்கு உணவிட அஞ்சுகின்ற பெண்ணை மனைக்குரி யாளாக வைத்தலும், சீர் பயவாத் தன்மை இலாளர் அயல் இருப்பும் - சிறப்பைத் தராத தன்மையையுடைய இல்வாழ் வாருக்கு அயலில் குடியிருத் தலும், இம்மூன்றும் நன்மை பயத்தல் இல - ஆகிய இம் மூன்றும் நன்மை தருவன அல்லவாம்; பயனில்லாதவை என்றபடி. நோ - துன்பம். அஞ்சுதல் - அஞ்சி வருந்துதல். விருந்து அஞ்சுதல் - விருந்தினரைக் கண்டஞ்சுதல்; விருந்தினர்க் கிட்டால் குறையுமென்றஞ்சுதல். ஈர்வளை - ஈர்ந்த வளை யினையுடையாள். வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. சீர் - சிறப்பு; பயவாத - தராத. தமக்கு உண்டான துன்பத்தைக் கண்டு வருத்தப் படாதவ ரோடு நட்பினராயிருத்தலும், விருந்திரைக் கண்டஞ்சு கின்றவளை விருந்தோம்பாதவளை - மனைவியாகப் பெற்றி ருப்பதும். நற்குண மில்லாதவரோடு ஒட்டுக் குடியிருத்தலும் பயனிலாதவை என்பதாம். (4) 289. நாணிலான் சால்பும் நடையிலான் நன்னோன்பும் ஊணிலான் செய்யும் உதாரதையும் - ஏணிலான் சேவகமுஞ் செந்தமிழ் தேறான் கவிசெயலும் நாவகமே நாடி னகை. (சிறு) நாண் இலான் சால்பும் - நாணம் இல்லாதவனது மன அமைதியும், நடை இலான் நல் நோன்பும் - நல்லொழுக்கம் இல்லாதவனது நல்ல நோன்பும், ஊண் இலான் செய்யும் உதார தையும் - தனக்கே உணவுப் பொருளில்லாதவன் செய்யும் ஈகையும், ஏண் இலான் சேவகமும் - வலிமை யில்லாதவன் வீரச் செயலும், செந்தமிழ் தேற்றான் கலி செயலும் - தமிழில் சிறந்த தேர்ச்சி யில்லாதவன் செய்யுள் செய்தலும், நா அகமே நாடின் நகை - நாவினால் ஆராயின் சிரிப்புக் கிடமாகும். நாண் - நாணம் - குற்றமுடையன செய்ய நாணுதல். சால்பு - அமைதி. நடை - ஒழுக்கம். நோன்பு - நற்செயல். ஊண் - உண்டி. இங்கு உணவுப் பொருளைக் குறித்தது. சோற்றுக்கு இல்லாதவன் எனினுமாம். உதாரதை - ஈகை, பெருங்கொடை. ஏண் - வலிமை. சேவகம் - வீரம். தேற்றா தான் - தேறாதான் - தேர்ச்சியில்லாதவன். நாடுதல் - ஆராய்தல். குற்றங்கள் செய்ய வெட்கப்படாதவன் மனம் அமைதி யாக இருக்க முயல்வதும், நல்லொழுக்க மில்லாதவன் ஏதாவதொரு நோன்பைக் கடைப்பிடிக்க முயல்வதும், உண்ணவே உண வில்லாதவன் இல்லார்க்குக் கொடுக்க எண்ணுவதும், வலிமை யில்லாதவன் வீரத்தொழில் செய்யத் தலைப்படுதலும், தமிழில் நல்ல தேர்ச்சி யில்லாதவன் - காரிகை கூடக் கல்லாதவன் - கவி செய்ய முற்படு வதும் பயனறற்ற செயல்கள் என்பதாம். அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையென் றைந்துசால் பூன்றிய தூண். (குறள்) என, அன்பு முதலிய குணங்களால் நிறைந்தது சால்பு என்பது. சால்பினை ஆக்கும் குணங்கள் ஐந்தனுள் நாணம் ஒன்றாக லால், இழிதொழிலைச் செய்ய நாணாதவனுக்குச் சால்புடை மை - மன அமைதி - அமையாதென்பதாம். ஏதாவது ஒரு நற்செயலைத் தொடர்ந்து செய்வது நோன்பு எனப்படும். நல்லொழுக்க மில்லாதவன் நற்செயலை, அதுவும் இடை விடாமல் செய்ய முடியாதாகையால், நடையிலான் நோன்பு பயனில் செயலா யிற்று. மற்றவை வெளிப் படை. (5) 16. பணிவுடைமை அதாவது, பிறரிடம் தாழ்மையாக நடந்து கொள்ளுதல். செல்வ முதலிய மிகுதியால் செருக்குக் கொள்ளாமல் பணி வாக நடந்துக் கொள்ளுதலாம். 290. கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு செல்வமுஞ் செல்வ மெனப்படும் - இல்லார் குறையிரந்து தம்முன்னர் நிற்பபோற் றாமுந் தலைவணங்கித் தாழப் பெறின். (நீநெ) இல்லார் குறையிரந்து தம் முன்னர் நிற்ப போல் - கல்வியும் செல்வமும் இல்லாதவர்கள் அவ்விரண்டையும் வேண்டி அவ் விரண்டுமுடைய தமக்கு முன்னால் எவ்வாறு நிற்பார்களோ அதுபோல, தாமும் தலைவணங்கித் தாழப் பெறின் - தாங்களும் தலையால் வணங்கித் தாழ்ந்து நிற்கப் பெற்றால், கல்வியுடைமை பொருளுடைமை என்று இரண்டு செல்வமும் செல்வம் எனப் படும் - தாங்கள் பெற்ற கல்விச் செல்வம் பொருட் செல்வம் என்னும் இரண்டு செல்வங் களும் உண்மையான செல்வங்க ளென்று உயர்ந்தோரால் சிறப்பித்துக் கூறப்படும். உடைமை - செல்வம். இல்லார் - கல்வியும் செல்வமும் இல்லார். குறை இரத்தல் - வேண்டுதல். தாழ்தல் - பணி வுடைய ராதல். கல்வியும் செல்வமும் இல்லாதவர்கள். அவ்விரண்டையும் வேண்டி அவ்விரண்டும் உடையார் முன்னால் எவ்வாறு பணிவாக நிற்பார்களோ அவ்வாறே, அவ்விரண்டும் உடைய வர்களும் பணிவுடையராக நடந்து கொண்டால், கல்வி செல்வம் என்னும் இரண்டும் சிறந்த செல்வங்களென்று பெரியோர்களால் போற்றப் படும் என்பதாம். கல்வி இல்லார் ஆசிரியர் முன்னும், செல்வம் இல்லார் செல்வர் முன்னும் குறையிரந்து நிற்பபோல் தாமும் நிற்கப் பெறின் என்க. கல்வியும் செல்வமும் உடையோர், அவை இல்லாரி டத்துப் பணிவாக நடந்துகொள்ள வேண்டும் என்பது கருத்து. (1) 291. ஆக்கம் பெரியார் சிறியா ரிடைப்பட்ட மீச்செலவு காணின் நனிதாழ்ப - தூக்கின் மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்ல வலிதன்றே தாழுந் துலைக்கு. (நீநெ) துலைக்குத் தூக்கின் - தராசுத் தட்டில் வைத்து நிறுத்தால், மெலியது மேல்மேல் எழச் செல்லச் செல்ல - மெல்லிய பொருளுள்ள தட்டு மேலே உயர்ந்து போகப்போக, வலிது அன்றே தாழும் - பாரமான பொருள் உள்ள தட்டல்லவோ கீழே தாழ்ந்துபோகும், (அதுபோல), ஆக்கம் பெரியார் - கல்வி செல்வம் இரண்டிலும் மிக்கவர்கள், சிறியார் இடைப் பட்ட மீச்செலவு காணின் நனிதாழ்ப - அவ்விரண்டினும் குறைவுடை யாரிடத்திலுள்ள செருக்கைக் கண்டால் மிகவும் தாழ்வாக - பணிவாக - நடந்து கொள்வார்கள். ஆக்கம் - கல்வி செல்வம் இரண்டையும் குறிக்கும். சிறியார் - அவ்விரண்டும் குறைவாக உடையவர்கள். மீச்செலவு - மேலாகிய செலவு - செருக்கு. நனி - மிக. தாழ்ப - பணிவாக நடந்து கொள்வர். தூக்கின் - தூக்கினால் - நிறுத்தால். மேல் மேல், செல்ல செல்ல - அடுக்கு மிகுதி குறித்தன. தாழ்தல் - கீழே போதல். துலை - தராசு. இங்கு தராசுத் தட்டைக் குறித்தது. துலைக்கு - துலையில் - வேற்றுமை மயக்கம். தராசுத் தட்டில் வைத்து நிறுத்தால், குறைந்த பாரமுள்ள பொருளுள்ள தட்டு மேலே போகப்போக மிகுந்த பாரமுள்ள பொருளுள்ள தட்டுக் கீழே போவது போல, குறைந்த கல்வியும் செல்வமும் உடையவர்களது செருக்கைக் கண்டால் நிறைந்த கல்வியும் செல்வமும் உடையவர்கள் தாழ்ந்துபோக வேண்டும் என்பதாம். தம்மிடம் தாழ்ந்து நடவாதவரிடத்தும் தாழ்ந்து நடத்தலே நன்று என்பது கருத்து. (2) 292. பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர்பிறர் சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்தி யார்யார்க்குந் தாழ்ச்சி சொலல். (நீநெ) பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் - பிறரால் நன்கு மதிப்பை விரும்புமொருவன், யாண்டும் மறவாமே நோற்பது ஒன்று உண்டு - எப்பொழுதும் மறவாமல் செய்யத்தக்கது ஒன்று உண்டு; அது, பிறர்பிறர் சீர் எல்லாம் தூற்றி - மற்ற வருடைய பெருமை களையெல்லாம் மறைக்காமல் எடுத் துரைத்து, சிறுமை புறங்காத்து - அவர்கள் சிறுமைகளை அங்ஙனம் எடுத்துரைக் காமல் பாதுகாத்து, யார் யார்க்கும் தாழ்ச்சி சொலல் - எல்லாரி டத்திலும் பணிவாகப் பேசுதலாம். பெருஞ்சுட்டு - நன்மதிப்பு. யாண்டும் - எப்போதும். நோற்பது - செய்வது. சீர் - சிறப்பு, பெருமை. தூற்றுதல் - பலரறியச் சொல்லுதல். சிறுமை - குற்றம். புறங்காத்தல் - வெளியிடாமல் காத்தல். தாழ்ச்சி- தாழ்வு, பணிவு. பிறர்பிறர், யார்யார் - அடுக்கு - எல்லாருடைய, எல்லார்க்கும் என்னும் பொருட்டு. புறங்காத்தி யார்யார்க்கும் - குற்றியலிகரம். புறங்காத்து. பிறரால் நன்மதிப்பைப் பெறவிரும்புகிறவன். பிறர் தன்னை நன்கு மதிக்கவேண்டுமென்று விரும்புகிறவன், பிறருடைய பெருமை களை மட்டும் எடுத்துக் கூறிச் சிறுமை களைச் சொல்லாமையோடு, எல்லாரிடத்திலும் பணிவாகப் பேச வேண்டும் என்பதாம். தூற்றுதல் என்பது, பெரும்பாலும் பிறருடைய குற்றங் களைப் பலரறியச் செய்தற்கே வரும். பிறர் குற்றத்தைப் பரப்புவதுபோல அவ்வளவு ஆவலோடும் விரைவாகவும் பிறர் குணத்தையும் பரப்ப வேண்டுமென்பதற்கு, ‘பிறர்பிறர் சீரெல்லாம் தூற்றி’ என்றார். பிறருடைய குற்றத்தைப் பற்றிப் பேசாமல், குணத்தைப் பற்றி மட்டும் பேசுவதோடு, எல்லாரிடத்தும் பணிவாகப் பேசுபவனை எல்லோரும் நன்கு மதிப்பர் என்பது கருத்து. (3) 293. பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன்னினிது. (இனி) பட்டாங்கு பேணி - உண்மையைக் கடைப்பிடித்து, பணிந்து ஒழுகல் முன்இனிது - பிறரிடம் பணிவாக நடந்து கொள்ளுதல் மிகவும் நல்லது. பட்டாங்கு - உண்மை. பேணுதல் - கடைப்பிடித்தல். உண்மையைக் கடைப்பிடித்தலாவது - பணிவாக நடந்து கொள்ளுதல் நல்லது என்னும் உண்மையைக் கடைப் பிடித்தல். முன் - மிக. பணிவாக நடத்தலின் நன்மையை யுணர்ந்து பணிவாக நடத்தல் மிகவும் நல்லது என்பதாம். (4) 294. சிறுமைநோ னாதோன் பெருமை வேண்டல்பொய். (முது) சிறுமை நோனாதோன் - பிறரிடம் தான் பணிவாக நடந்து கொள்ளுதலைப் பொறாதவன், பெருமை வேண்டல் பொய் - பெருமையை விரும்புதல் பொய்யாம். சிறுமை - பணிவுடைமை, நோன்றல் - பொறுத்தல், தாங்கிக் கொள்ளுதல். வேண்டல் - விரும்பல். பொய் - இன்மை குறித்தது. பெருமையை விரும்புகிறவன் பிறரிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதாம். பெருமை பெருமிதம் இன்மை. (குறள்) (5) 295. கீழோ ராயினுந் தாழவுரை. (கொன்) கீழோர் ஆயினும் - உன்னிலும் கீழ்ப்பட்டவராக இருந்தாலும், தாழ உரை - பணிவாகப் பேசு. தம்மினும் தாழ்ந்தவரிடத்தும் பணிவாகப் பேச வேண்டும் என்பதாம். (6) 17. கள்ளாமை அதாவது, பிறர் பொருளை வஞ்சனையாகக் கொள்ளக் கருதாமை; திருட நினையாமை. 296. பிறன்கைப் பொருள்வௌவான் வாழ்தலினிது. (இனி) பிறன் கைப்பொருள் வௌவான் - பிறனுடைய பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதாமல், வாழ்தல் இனிது - வாழ்வது நல்லது. கைப்பொருள் - பொருள். பிறனுக்கு உரிய பொருள் எனினு மாம். வௌவுதல் - வஞ்சித்துக் கொள்ளக் கருதுதல். வௌவான் - வௌவாமல் - முற்றெச்சம். பிறர் பொருளை ஏமாற்றிப் பறித்துக்கொள்ள எண்ணாமல் இருப்பது நல்லது. உள்ளத்தா லுள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வே மெனல். (குறள்) (1) 297. கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று வவ்வார் விடுத லினிது. (இனி) தாம் கண்டது கவ்விக்கொண்டு காமுற்று - தாங்கள் கண்ட பொருளைப் பறித்துக் கொள்ள விரும்பி, வவ்வார் விடுதல் இனிது - வஞ்சித்துக் கொள்ளக் கருதாமலிருத்தல் நல்லது. கண்டது - கண்ட பொருள். கவ்விக்கொண்டு - கவ்விக் கொள்ள. கொண்டு - கொள்ள - வினையெச்சத் திரிபு. வவ்வுதல் - வஞ்சித்துக் கொள்ளுதல். வவ்வார் - வவ்வாமல். தாங்கண்ட பிறர் பொருளைக் கொள்ள விரும்பி, அதனை வஞ்சித்துக் கொள்ளக் கருதாமல் இருத்தல் நல்லது. களவின்கட் டோன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமந் தரும். (குறள்) (2) 298. கடிய வருதலால் கள்ளாமை வேண்டும். (நான்) கடிய வருதலால் - கடுந்துன்பங்கள் பின்பு வருதலால், கள்ளாமை வேண்டும் - பிறர் பொருளைத் திருடாதிருத்தல் வேண்டும். கடிய - கடுமையான துன்பங்கள். அடியுதை, பழி, சிறை முதலியன. கள்வமென் பார்க்கும் துயிலில்லை (நான்) எனத் திருடும்போதுண்டாகுந் துன்பமுங் கொள்க. (3) 299. கொள்ளை விரும்பேல். (ஆத்) கொள்ளை - பிறர் பொருளைக் கொள்ளையிட, விரும் பேல் - நீ விரும்பாதே. பிறர் பொருளைக் கொள்ளையிட விரும்பக்கூடாது. (4) 18. குடியாமை அதாவது, கள் முதலிய அறிவை மயக்கும் பொருள் களைக் குடியாதிருத்தல். குடியன். குடிகாரன் என்னும் வழக்கே குடியின் தீமையை உணர்த்தும். 300. ஒளியு மொளிசான்ற செய்கையுஞ் சான்றோர் தெளிவுடைய ரென்றுரைக்குந் தேசும் - களியென்னும் கட்டுரையால் கோதப் படுமே லிவையெல்லாம் விட்டொழியும் வேறாய் விரைந்து. (அற) களி என்னும் கட்டுரையால் கோதப்படுமேல் - குடியன் என்னும் பழிச்சொல்லால் ஒருவன் குற்றப்படுத்தப்படு வானானால், ஒளியும் - நன்மதிப்பும், ஒளி சான்ற செய்கையும் - அந்நன்மதிப்புக் கேற்ற செயலும், சான்றோர் தெளிவுடை யார் என்று உரைக்கும் தேசும் - பெரியோர்களால், ‘இவர் தெளிந்த அறிவினை யுடையவர்’ என்று கூறும் புகழும், இவை எல்லாம் - ஆகிய இவை அனைத்தும், வேறாய் விரைந்து விட்டொழியும் - வேறுபட்டு விரைவில் அவனைவிட்டு நீங்கும். ஒளி - நன்மதிப்பு. ஒளி சான்ற செயல் - அந் நன்மதிப் பிற் கேற்ற நற்செயல். அந்நற்செயல்களாலேயே நன்மதிப் பேற் பட்ட தால், அச் செயல் ‘ஒளி சான்ற செயல்’ எனப்பட்டது. நன் மதிப்பு மிக்க நற்செயல் எனினுமாம். தேசு - புகழ். களி என்னும் கட்டுரை - குடியன் என்று பழித்துக் கூறும் சொல். கோதப்படல் - குற்றப் படுத்தப்படல். கோது - குற்றம். குடியன் என்ற குற்றஞ் சுமத்துதல். கள் + இ - களி - கட்குடியன். வேறாய் - அவனோடு வேறுபட்டு - மாறுபட்டு, பகைத்து என்றபடி. ஒருவன் குடியன் என்று பெயர் பெறுவானானால் - குடிப் பானானால் - அவனுடைய நன் மதிப்பு, நற்செயல், அறிவு, புகழ் அனைத்தும் பகை கொண்டு விரைவில் அவனை விட்டு நீங்கும் என்பதாம். . . . . ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகுவார் (குறள்) உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார். (குறள்) (1) 301. கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா. (இன்) கள் உண்பான் கூறும் - கட்குடியன் கூறுகின்ற, கருமப் பொருள் இன்னா - செயலின் பயன் துன்பந் தரும். கருமம் - காரியம், செயல், பொருள் - பயன். குடியன் சொல்லுகின்ற காரியத்தைச் செய்தால் அதனால் துன்புற நேரும் என்பதாம். குடிகாரன் பேச்சைக் கேட்டால் தீங்கு நேரும் என்பது கருத்து. (2) 19. நலவழி அதாவது, நோய் இல்லாமல் உடல் நலத்துடன் இருக்கும் வழி - சுகாதாரம். 302. ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே! இருபோது போகியே யென்ப - திரிபோது ரோகியே நான்குபோ துண்பா னுடல்விட்டுப் போகியே யென்று புகல். (நீவெ) ஒண் தளிர்க் கை மாதே - அழகிய தளிர் போன்ற கையை யுடைய பெண்ணே, ஒரு போது யோகி - ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகியாவான், இரு போது போகி என்ப - இரண்டு வேளை உண்பவன் இன்ப வாழ்வினன் ஆவான் என்று பெரியோர்கள் சொல்லுவர், திரி போது ரோகி - மூன்று வேளை உண்பவன் நோயாளியாவான், நான்கு போது உண்பான் உடல் விட்டுப் போகி என்று புகல் - ஒரு நாளைக்கு நான்கு வேளை உண்பவன் உயிர் உடலை விட்டுப் போகிறவன் ஆவான் என்று நீ சொல்வாயாக. போது - வேளை, நேரம். யோகி - மூச்சை அடக்கி நினை வாற்றலைப் பெருக்குவோன். தளிர் - கொழுந்து, தளிர்க்கை மாது - மகடூஉ முன்னிலை, போகி - இன்ப வாழ்வினன், என்ப - என்று சொல்வர், திரி - மூன்று. ரோகி - நோயாளி. ரோகம் - நோய். உடல் விட்டுப் போதல் - இறத்தல். புகலுதல் - சொல்லுதல். நாளொன்றுக்கு ஒரு வேளை மட்டும் உண்பவன் யோகிகள் போல் நோய் நொடியின்றி நீண்ட நாள் இன்புற்று வாழ்வான். நாளைக்கு இரண்டு வேளை உண்பவன் நோயின்றி நலத்துடன் வாழ்வான். மூன்று வேளை உண்பவன் நோய்க் காளாகி வருந்து வான். நான்கு வேளை உண்பவன் தீராத நோய்களால் இறந்து விடுவான் என்பதாம். மூன்று வேளை என்பது மிகுதியான உணவைக் குறித்தது. நான்கு வேளை என்பது எப்போதும் ஏதாவது தின்று கொண்டே இருப்பதைக் குறித்தது. அளவுக்கு மீறியும், பசியாமலும், அடிக் கடியும் உண்பதினாலேயே நோய்கள் வருகின்றன என்பதைத் திருக்குறள் ‘மருந்து’ என்னும் அதிகாரத்திற் காண்க. இரு போது என்பது, காலைச் சிற்றுணவல்லாத இருவேளை உணவினைக் குறிக்கும். திரி போது என்பது, அவற்றிற் கிடையிடையே சிற்றுண்டியும் தேநீரும் அடிக்கடி அருந்துவதைக் குறிக்கும். அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு. (குறள்) தீயள வின்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப்படும் (குறள்) அளவாக உண்டால் நோயில்லாமல் நெடிது இன்புற்று வாழலாம் என்பது கருத்து. (1) 303. உண்டி வெய்யோர்க் குறுபிணி யெளிது. (முது) உண்டி வெய்யோர்க்கு - உணவை மிகுதியாக விரும்பி உண்போர்க்கு, உறு பிணி எளிது - மிக்க நோய்கள் எளிதில் உண்டாகும். வெய்யோர் - விரும்புவோர். வெம்மை - விருப்பம். உறு பிணி - மிக்க நோய் - பலவகையான பெரு நோய்கள். எளிது - எளிதில் உண்டாகும். நீரிழிவு போன்ற தீராத கொடிய நோய் களும் கொள்க. சிற்றுண்டி பேருண்டிகளை அடிக்கடி விரும்பி உண் பார்க்குப் பலவகை நோய்களும் எளிதில் வரும் என்பதாம். இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபே ரிரையான்கண் நோய். (குறள்) (2) 304. நுண்மை நுகரேல். (ஆத்) நுண்மை - நோயைத் தரும் சிற்றுண்டிகளை, நுகரேல் - அடிக்கடி உண்ணாதே. நுண்மை - சிறிது - சிறிய உணவு - சிற்றுண்டி; வடை முதலியன. நுகர்தல் - உண்ணல். வடை முதலிய சிற்றுண்டிகளை - தின்பண்டங்களை - அடிக்கடி உண்டால் நோயுண்டாகும் என்பதாம். மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபா டில்லை யுயிர்க்கு (குறள்) (3) 305. நோய்க்கிடங் கொடல். (ஆத்) இடங் கொடாமையாவது - உண்டி சுருக்கல், சிற்றுண்டி யை அடிக்கடி நுகராமை, மாறுபாடில்லாத உணவை உண்டல், அற்றால் அளவறிந் துண்டல் முதலியவற்றால் நோய் வராமல் காத்தல். பகலில் தூங்குவதும் இரவில் நெடுநேரம் விழித்திருத் தலும் நோய் வருதற்கேதுவாம். மலசல மடக்குதலும் நோய்க் கேதுவாம். மூலஞ்சேர் கறிநுகரோம் மூத்ததயி ருண்போம் முன்னைநாள் செய்தகறி அமுதெனினும் அருந்தோம் ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம் நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே. (தேரையார் வாகடம்) (4) 306. மீதூண் விரும்பேல். (ஆத்) மீது ஊண் - அதிகமாக அளவுக்கு மீறி உண்ண, விரும் பாதே. அவ்வாறு உண்டால் நோயுண்டாகும் என்பதாம். ‘கழிபேர் இரையான்கண் நோய் நிற்கும்’ (குறள் - 946) என்றார் வள்ளுவரும். (5) 307. உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு (கொன்) உண்டி சுருங்குதல் - வேளைக்கு வேளை மிகுதியாக உண்ப தோடு, அடிக்கடியும் உண்ணாதிருத்தல், பெண்டிர்க்கு அழகு - பெண்களுக்கு அழகாகும். பெண்கள் வீட்டிலேயே இருத்தலானும், தாமே உணவு வகைகளைச் செய்வதாலும் அளவுக்கு மீறி அடிக்கடி உண்ண வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால், உடம்பில் வீண் சதை உண்டாகிப் பெண்களின் உடலழகை - கட்டழகை - கெடுத்து விடுகிறது. ஆதலால், அளவுக்கு மீறி அடிக்கடி உண்டு உடலழ கைக் கெடுத்துக் கொள்ளாமல் இருத்தல் வேண்டும் என்பதாம். (6) 308. பாலோ டாயினுங் கால மறிந்துண். (கொன்) பாலோடு ஆயினும். பாலோடு கலந்த சோற்றை உண்ப தானாலும், காலம் அறிந்து உண் - உண்ணத்தகும் காலத்தை அறிந்து உண்பாயாக. பாலோடு கலந்த சோறு - பாற்சோறு. காலம் - முன் உண்ட உணவு நன்கு செரித்து மிகப் பசியானபின் உண்பது. அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து (குறள்) என்றார் வள்ளுவரும். (7) 20. சூது 309. ஓதலு மோதி யுணர்தலுஞ் சான்றோரால் மேதை யெனப்படும் மேன்மையும் - சூது பொருமென்னுஞ் சொல்லினாற் புல்லப் படுமேல் இருளா மொருங்கே யிவை. (அற) சூது பொரும் என்னும் சொல்லினால் புல்லப்படுமேல் - சூதாடுவான் என்னும் பழிச்சொல்லால் ஒருவன் பற்றப் படு வானானால், ஓதலும் - நூல்களைக் கற்றலும், ஓதி உணர்தலும் - கற்றவற்றை ஆராய்தலும், சான்றோரால் மேதை எனப்படும் மேன்மையும் - பெரியோர்களால் அறிவுடையவன் என்று கூறப் படும் பெருமையும், இவை ஒருங்கே இருளாம் - ஆகிய இவை அவனை விட்டு மறையும். மேதை - அறிவுடையவன். மேன்மை - பெருமை. சூது பொரும் - சூதாடுவான். பொருதல் - ஆடுதல். சொல்லினால் புலப்படுதல் - சூதாடுவான் என்று பழித்துக் கூறுதல். இருள் - இருட்டாதல் - மறைதல். ஒருவன் சூதாடி என்று பெயர் பெற்றால் கல்வி ஆராய்ச்சி அறிவுடைமை எல்லாம் போய்விடும் என்பதாம். சூதாடுவோன் கற்கவோ, ஆராயவோ, அறிவைத் தேடவோ முயலானாகையால் அவை மழுங்கிவிடும் என்பது கருத்து. உடைசெல்வ மூணொலி கல்வியென் றைந்தும் அடையாவாம் ஆயங் கொளின் (குறள்) (1) 310. பாவமு மஞ்சாராய்ப் பற்றுந் தொழின்மொழிச் சூதரைச் சோர்த லினிது. (இனி) பாவமும் அஞ்சாராய் - பழிக்கேயன்றிப் பாவத்திற்கும் அஞ்சாதவராய், பற்றும் தொழில் மொழிச் சூதரை - அப்பழி பாவங்களைப் பற்றுகின்ற தொழிலையும் சொல்லையும் உடைய சூதரை, சோர்தல் இனிது - சேராமல் இருத்தல் நல்லது. பாவம் - குற்றம். ‘பாவமும்’ என்ற உம்மையால் பழியும் கொள்ளப்பட்டது. பற்றும் தொழில் மொழி - அப்பழி பாவங் களைப் பற்றும் தொழிலும் சொல்லும். பழியும் பாவமும் உடைய தொழிலும் சொல்லும் என்றபடி. சூதாடுதல் பழியும் பாவமும் உடையது. சூதாடும் போது சொல்லும் சொல்லும் அத் தகையதே என்பதாம். சோர்தல் - நீங்குதல். ஒருவர் செய்யும் கெட்ட காரியத்தால் பழியும் பாவமும் உண்டாகும். பழி - பிறர் பழித்தல். பாவம் - குற்றம். பழி பாவங் களுக் கஞ்சாமல் சூதாடுகின்றவரைச் சேரக் கூடாது என்பதாம். உருவழிக்கு முண்மை யுயர்வழிக்கும் வண்மைத் திருவழிக்கும் மானம் சிதைக்கும் - மருவும் ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல சூது பொருவரோ தக்கோர் புரிந்து (நளவெண்பா) ஐயநீ யாடுதற் கமைந்த சூதுமற் றெய்துநல் குரவினுக் கியைந்த தூதுவெம் பொய்யினுக் கருந்துணை புன்மைக் கீன்றதாய் மெய்யினுக் குறுபகை யென்பர் மேலையோர் (நைடதம்) (2) 311. சூது விரும்பேல். (ஆத்) சூது - சூதாடலை, விரும்பேல் - நீ விரும்பாதே. (3) 312. சூதும் வாதும் வேதனை செய்யும். (கொன்) சூதும் - சூதாடுதலும், வாதும் - ஆட்டத்தில் வெல்வதற் காக வாதாடுதலும், வேதனை செய்யும் - துன்பத்தை உண்டு பண்ணும். வாது - வாதாடுதல் - தர்க்கித்துப் பேசுதல், அதாவது, தான் ஆடியதுதான் சரியென்றும், பிறர் ஆடியது தப்பென்றும் அழி வழக்குப் பேசுதல். (4) 21. அறிவுடைமை இயற்கையறிவு, செயற்கையறிவு என அறிவு இரு வகைப் படும். செயற்கை யறிவு - கல்வி கேள்விகளாலாகிய அறிவு. செயற்கையறிவு, இயற்கையறிவு வளர்தற்குத் துணை செய்யும். அவ்விருவகையறிவையும் நல்வழியிற் செலுத்துவதே அறிவுடைமை யாகும். 313. அறிவ தறிந்தடங்கி யஞ்சுவ தஞ்சி உறுவ துலகுவப்பச் செய்து - பெறுவதனால் இன்புற்று வாழு மியல்புடையா ரெஞ்ஞான்றும் துன்புற்று வாழ்த லரிது. (நால) அறிவது அறிந்து அடங்கி - அறிய வேண்டியவற்றை யெல்லாம் அறிந்து அடக்க முடையராய், அஞ்சுவது அஞ்சி - அஞ்சத்தக்க பழிபாவங்கட்கு அஞ்சி, உறுவது உலகு உவப்பச் செய்து - தாம் செய்யும் செயல்களையெல்லாம் உலகத்தார் மகிழும்படி செய்து, பெறுவதனால் இன்புற்று வாழும் இயல்பு உடையார் - அச்செயல் களினால் பெறும் பயன் களால் இன்ப மடைந்து வாழும் தன்மையை யுடையவர், எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது - எப்போதும் துன்புற்று வாழ்தல் இல்லை. அறிவது, அஞ்சுவது, உறுவது, பெறுவது என்பன பன்மைப் பொருள் குறித்து நிற்கும் ஒருமைச் சொற்கள். இவை சாதி யொருமை எனப்படும். உவப்ப - மகிழ, இயல்பு - தன்மை. அரிது - இல்லை. அடங்குல். கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (குறள்) என்றபடி, கற்றதற் கேற்ப அடங்கி நடத்தல். பழி - பிறர் பழிக்கத் தக்க செயல். பாவம் - பிறர்க்குக் கேடு பயக்கும் செயல் - தீமை. உறுவது - செய்யும் செயல். அறிய வேண்டியவற்றை அறிந்து, அவற்றின்படி நடந்து, பழிபாவங்களுக்கு அஞ்சி, செய்யுங் காரியங்களைப் பிறர் மகிழும் படி செய்து, அக்காரியத்தின் பயனால் இன்புற்று வாழும் அறிவுடை யார் என்றும் துன்புறார் என்பதாம். அறிவுடையா ராவதறிவார். (குறள்) அஞ்சுவ தஞ்சாமை பேதைமை, அஞ்சுவ தஞ்ச லறிவார் தொழில். (குறள்) உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும் கல்லா ரறிவிலா தார். (குறள்) அறிவதறிவதும், அதன்படி நடப்பதும், அஞ்சுவதஞ்சு வதும், செய்வதை உலகுவப்பச் செய்வதும், அச்செயற் பயனால் இன்புற்று வாழ்வதும் அறிவுடைமையாகும் என்பது கருத்து. (1) 314. நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானுந் தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும் - நிலையினும் மேன்மே லுயர்த்து நிறுப்பானுந் தன்னைத் தலையாகச் செய்வானுந் தான். (நால) நல் நிலைக்கண் தன்னை நிறுப்பானும் - நல்ல நிலையி லேயே தன்னை நிறுத்துபவனும், தன்னை நிலைகலக்கிக் கீழ் இடுவானும் - தான் நின்ற நிலையினின்று கலங்கச் செய்து தன்னைக் கீழ்ப்பட்ட நிலையில் சேர்க்கின்றவனும், நிலை யினும் மேல் மேல் உயர்த்து நிறுப்பானும் - தான் நின்ற நிலையினும் தன்னை மிக மேலான நிலையில் நிற்கச் செய்பவனும், தன்னைத் தலையாகச் செய்வானும் தான் - தன்னை மற்றவரினும் முதன்மையாகச் செய்பவனும் தானே யாவான். நிறுப்பானும் தான், இடுவானும்தான், உயர்த்து நிறுப் பானும் தான், என, ஈற்றிலுள்ள தான் என்பதை ஏனைய வற்றோடும் கூட்டுக. நிலைகலக்கல் - நின்ற நிலையிருந்து கீழே இறங்கச் செய்தல். ஒருவனுடைய உயர்வு தாழ்வுக்கு அவனுடைய அறிவும் அறிவின்மையுமே காரணமாகும் என்பதாம். காந்தியடிகள் தம் அறிவுத்திறத்தால் தம்மை மக்கள் தலைவராக ஆக்கிக் கொண்டதும், சில அதிகாரிகள் தம் அறி வின்மையால் உயர்நிலையிலிருந்து கீழ்நிலைக்குத் தம்மைத் தாழ்த்திக் கொள்வதும், சிலர் தம் அறிவுத்திறத்தால் உயர் நிலையடைவதும், பெருஞ் செல்வராதலும், சில பெருஞ் செல்வர்கள் அச்செல்வத்தையழித் தொழித்து ஏழைக் கூலி களாய் அலைவதும் அறிக. ஒவ்வொருவரும் உயர்நிலையடைய முயலவேண்டும்; எக் காரணங் கொண்டும் நின்ற நிலையினின்றும் தாழ் நிலையை அடையக் கூடாது. அதுவே அறிவுடைமை என்பது கருத்து. அறிவுடையா ரெல்லா முடையார்; அறிவிலார் என்னுடைய ரேனு மிலர். (குறள்) (2) 315. கரும வரிசையாற் கல்லாதார் பின்னும் பெருமை யுடையாருஞ் சேறல் - அருமரபின் ஓத மரற்று மொலிகடற் றண்சேர்ப்ப! பேதைமை யன்ற தறிவு. (நால) அருமரபின் - பிறநாடுகளில் இல்லாத சிறப்புத் தன்மை யையுடைய, ஓதம் அரற்றும் ஒலிகடல் தண் சேர்ப்ப - அலைகள் மிக்கொலிக்கின்ற கடலினது குளிர்ச்சியான துறை முகத்தை யுடையவனே! கரும வரிசையால் - காரியத்தின் பொருட்டு, கல்லாதார் பின்னும் பெருமை உடையாரும் சேறல் - கல்லாத மூடர்கள் பின்னர் பெருமையுடைய அறிவாளர்களும் செல்லுதல், பேதைமை அன்று அது அறிவு - அறிவின்மை அன்று அது அறிவுடைமை யேயாகும். கருமம் - காரியம். வரிசை - முறை, ஆக, பொருட்டு. அருமரபின் என்பது துறைமுகத்துக்கு அடை. மரபு - தன்மை. அருமரபு - சிறப்புத்தன்மை. தமிழ் நாட்டுத் துறைமுகம் மற்ற நாடு களிலில்லாத சிறப்பினையுடையது என்பதாம். சேர்ப்பு - கரை. இங்கு துறைமுகம். பேதைமை - அறிவின்மை. இன்றியமையாத ஒரு காரியத்தின் பொருட்டு அறிவில்லாத செல்வர் பின் அறிவுடையார் செல்வதும் அறிவுடைமையே யாகும் என்பதாம். அறிவுடைய செல்வரிடமே யன்றி அறிவில்லாத செல்வ ரிடமும் சென்று காரிய முடிப்பது அறிவுடைமை என்பது கருத்து. அறிவுடையார் பின்னேயன்றி மூடர் பின்னும் எனவே, பின்னும் என்பதன் உம் - இறந்தது தழுவலோடு இழிவு சிறப்பு. பெருமையுடையாரும் என்பதன் உம் - உயர்வு சிறப்பு. மூடர்களே யன்றிப் பெருமையுடையாரும் என, உம் - இறந்தது தழுவிய எச்சவும்மை. இது காரியமுடிக்கும் அறிவுத்திறமை கூறியது. (3) 316. கருமமு முட்படாப் போகமுந் துவ்வாத் தருமமுந் தக்கார்க்கே செய்யா - ஒரு நிலையே முட்டின்றி மூன்று முடியுமே லஃதென்ப பட்டினம் பெற்ற காலம். (நால) கருமமும் உட்படா - வருவாய்க்குத் தக்க தொழில் களையும் செய்து, போகமும் துவ்வா - அவற்றால் உலக இன்பங்களையும் நுகர்ந்து, தருமமும் தக்கார்க்கே செய்யா -ஈகை முதலிய அறங் களையும் தகுதியுடையார்க்கே செய்து, மூன்றும் ஒரு நிலையே முட்டு இன்றி முடியுமேல் - ஒருவனுக்கு இம்மூன்று காரியங்களும் ஒரு படித்தாய் தடையில்லாமல் நிறைவேறுமாயின், அஃது பட்டினம் பெற்ற கலம் என்ப - அந்நிலைமை, வெளிநாடுகளுக்குச் சென்று வணிகம் செய்து ஊதியம் பெற்று மீண்டும் தமது பட்டினத்தை யடைந்த மரக்கலத்தை யொக்கும் என்று சொல்லுவர் அறிவுடை யோர். கருமம் - காரியம். உட்படா - உட்பட்டு. செய்வது. போகம் - உண்டுடுத்து இன்புற்று வாழ்தல். துவ்வா - துய்த்து - நுகர்ந்து. தருமம் - இங்கு கொடையைக்குறித்தது. தக்கார் - தகுதியுடையார் - ஏற்கத்தக்கவர் - எளியவர். ஓயாமல் உழைத்தும் உண்ண உணவும் உடுக்க உடையும் இன்றி வருந்துவோரே எளியராவர். அன்னார்க்குக் கொடுப்பதே செல்வர் கடமையாகும். செய்யா - செய்து. ஒரு நிலை - ஒரு சேர, ஒன்றாக. முட்டு - தடை. மூன்றும் - கருமமும் போகமும் தருமமும். பட்டினம் - நெய்தல் நிலத்தூர், துறைமுகப் பட்டினம். உட்படா, துவ்வா, செய்யா என்னும் மூன்றும் செய்யா என்னும் வாய்ப்பாட்டு உடன்பாட்டு வினை யெச்சங்கள். வருவாய்க்குத் தக்க நல்ல தொழில் செய்தல், அவ் வருவாயால் இன்ப நுகர்தல், எளியார்க்கு உதவுதல் ஆகிய இம் மூன்றும் ஒருவர்க்கு ஒருங்கே வாய்க்கப் பெற்றால், அது வெளி நாடுகளுக்குச் சென்று சரக்கேற்றி வரும் கப்பலைப் போலச் சிறப்புடைத் தென்பதாம். முயன்று பொருளீட்டல், நன்கு உண்டு டுத்து வாழ்தல், எளியார்க் கீதல் ஆகிய மூன்றையும் முட்டின்றிச் செய்வதே அறிவுடைமையாகும் என்பது கருத்து. ‘பட்டினம் பெற்ற கலம்’ என்பதால், அக்காலத்தே தமிழ் நாட்டுக் கப்பல்கள் வெளிநாடுகள் பலவற்றிற்கும் சென்று வணிகம் செய்து பொருளீட்டி வந்தமை பெறப்படும். ( 4) 317. அறிவினால் மாட்சியொன் றில்லா வொருவன் பிறிதினால் மாண்ட தெவனாம் - பொறியின் மணிபொன்னுஞ் சாந்தமும் மாலையு மின்ன அணியெல்லாம் ஆடையின் பின். (பழ) பொறியின் - உடம்பின்கண் அணியப்படும், மணி பொன்னும் - மணிகளாற் செய்த நகையும் பொன்னாற் செய்த நகையும், சாந்தமும் மாலையும் - சந்தனமும் பூமாலையும், இன்ன அணி எல்லாம் ஆடையின் பின் - இவை போன்ற அணிக ளெல்லாம் ஆடைக்குப் பின்னரே விரும்பப்படுவன; (அதுபோல), அறிவினால் ஒன்று மாட்சி இல்லா ஒருவன் - அறிவினால் ஒரு பெருமையும் இல்லாத ஒருவன், பிறிதினால் மாண்டது எவன் - மற்றைச் செல்வம் அழகு முதலியவற்றால் பெருமையுறுதல் இல்லை. மாட்சி - பெருமை, சிறப்பு. மாண்டது - மாட்சிமைப் பட்டது. என் - என்ன, இல்லை என்றபடி. ஆம் - அசை. பொறி - மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறி. மணி - முத்து, பவளம், நீலம், வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், கோமேதகம், புட்பராகம் என்னும் ஒன்பான் மணிகள். மணியும் பொன்னும் அவற்றாலாய அணிகலன் களைக் குறித்தன. அணியப் படுவது - அணி. அறிவினால் ஒன்று மாட்சி இல்லா ஒருவன் - மாட்சிமைப்பட்ட - சிறந்த அறிவில்லாத ஒருவன். ஒருவர்க்கு ஆடைக்குப் பின்னரே அணிகள் பெருமை யளிப்பதுபோல, அறிவுக்குப் பிறகே செல்வ முதலியன பெருமை யளிக்கும் என்பதாம். அணிகலன்களைக் காட்டிலும் ஆடையே சிறந்தது; செல்வம் அழகு முதலியவற்றைக் காட்டிலும் அறிவே சிறந்தது என்பது கருத்து. அறிவுடையார் எல்லா முடையார்; அறிவில்லார் என்னுடைய ரேனு மிலர். (குறள்) ‘ஆடையில்லாதவன் அரைமனிதன் - பழமொழி (5) 318. ஆயிரவ ராயினு மறிவிலார் தொக்கக்கால் மாயிரு ஞாலத்து மாண்பொருவன் போல்கலார்; பாயிருள் நீக்கு மதியம்போற் பன்மீனும் காய்கலா வாகு நிலா. (பழ) பன்மீனும் - வானின்கண் உள்ள பல விண்மீன்களும், பாய் இருள் நீக்கும் மதியம்போல் நிலா காய்கலா ஆகும் - பரந்த இருளை நீக்கும் திங்களைப் போல் ஒளி வீச மாட்டா; (அது போல), மா இரு ஞாலத்து - மிகப் பெரிய இவ்வுலகில், அறிவிலார் ஆயிரவரானும் தொக்கக்கால் - அறிவில்லாதவர் ஆயிரம்பேர் திரண்டாராயினும், மாண்பு ஒருவன் போல் கலார் - அறிவால் மாட்சிமைப் பட்ட ஒருவன் போல் விளங்க மாட்டார். தொக்கல் - தொகுதல் - திரளுதல். மாஇரு - மிகப் பெரிய. ஞாலம் - உலகம். பாய்இருள் - பரந்த இருள். பரந்த - மிகுந்த. நிலா - ஒளி. காய்தல் - வீசுதல். நிலாக் காய்தல் - ஒளி வீசுதல். காய்கலா - காயா - ஒளிவீசா. கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒன்று கூடினாலும் ஒரு திங்கள் போல ஒளி வீசமாட்டா. அதுபோல, அறிவிலார் பலர் கூடினும் அறிவுடைய ஒருவனைப் போல் விளங்க மாட்டார். (6) 319. நற்கறி வில்லாரை நாட்டவு மாட்டதே சொற்குறி கொண்டு துடிபண் ணுறுத்துவபோல் வெற்பறைமேற் றாழும் இலங்கருவி நன்னாட! கற்றறிவு போகா கடை. (பழ) வெற்பு அறைமேல் தாழும் இலங்கு அருவி நல்நாட - மலை யினின்றும் பாறைமேல் விழுகின்ற விளங்கும் அருவி களை யுடைய நல்ல நாடனே, கற்றறிவு கடைபோகா(து) - இயற்கை யறிவன்றிக் கல்வியானாய அறிவு நிரம்பாது; (ஆதலால்), சொல்குறி கொண்டு - பாட வல்லார் சொல்லும் சொற்குறிகளைக் கொண்டு, துடிபண் உறுத்துவ போல் - பண்ணமையாத உடுக்கையில் பண்ணு றுத்துதல் போல, நன்கு அறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாது - இயற்கை அறிவு இல்லாதவரை அறிவுடையராக்கவும் முடியாது. நற்கு - நன்கு - வலித்தல் விகாரம். நன்கு அறிவு - இயற்கை யறிவு. நாட்டுதல் - அறிவுடையராக்குதல். மாட்டாது - முடியாது. சொல்குறி - பாடும் இசை. துடி - உடுக்கை. பண் உறுத்தல் - இசையமைத்தல். வெற்பு - மலை. அறை - பாறை. தாழ்தல் - வீழ்தல். இலங்குதல் - விளங்குதல். அருவி - மலையாறு. கற்ற அறிவு - கல்வி யறிவு. கடைபோதல் - நிரம்புதல். போகா - போகாது; கடைக்குறை. நாட - ஆடூஉ முன்னிலை. இயல்பாகப் பண் அமையாத உடுக்கையில் பாட்டின் இசை யைக் கொண்டு இசையமைப்பது போல, இயற்கையறி வில்லாத கற்றறி மூடர்களை நுண்ணறிவினராக்குதல் இயலாது என்பதாம். பண் - இசை. இயற்கையில் பண்ணமைந்த உடுக்கையை யடித்துக் கொண்டு பாடினால்தான் பாட்டின் இசை விளங்கும். அது போல, இயற்கை யறிவுடையோர்க்குத்தான் கல்வியறிவு விளங்கும் என்றபடி. இயற்கை யறிவோடு கல்வி யறிவும் அமைவதே சிறந்த அறிவாகும் என்பது கருத்து. (7) 320. பரந்த திறலாரைப் பாசிமே லிட்டுக் கரந்து மறைக்கலு மாமோ - நிரந்தெழுந்து வேயிற் றிரண்டதோள் வேற்கண்ணாய்! விண்ணியங்கும் ஞாயிற்றைக் கைம்மறைப்பா ரில். (பழ) நிரந்து எழுந்து வேயின் திரண்ட தோள் - ஒழுங்காக நீண்டு மூங்கில்போலத் திரண்ட தோளையும், வேல் கண்ணாய் - வேல் போன்ற கண்ணையும் உடையவளே, விண் இயங்கும் ஞாயிற்றைக் கைமறைப்பார் இல் - வானின் கண் செல்லும் கதிரவனைக் கையால் மறைப்பார் இல்லை; (அதுபோல), பரந்த திறலாரை - விரிந்த அறுவுத்திறமை யுடையவர்களை, பாசிமேல் இட்டு - பொய்ச் சொற்களைச் சொல்லி, கரந்து மறைக்கலும் ஆமோ - பிறரறியாமல் மறைத்து வைக்க முடியுமோ? முடியாது. பரந்த - விரிந்த - மிக்க. திறல் - அறிவுத் திறமை. பாசி - நீர்ப்பாசி. பாசி - பாசம். பாசி மேலிடல் - பொய் கூறல். கரத்தல், மறைத்தல் - ஒருபொருட் சொற்கள். நிரல் - ஒழுங்கு. நிரந்து - ஒழுங்காக - கோணலில்லாமல். வேய் - மூங்கில். திரண்டு - உருண்டு. வேல் கண்ணாய் - மகடூஉ முன்னிலை. இயங்குதல் - செல்லுதல். ஞாயிறு - சூரியன். நீரைப் பாசியால் மறைத்தால் பாசி விலகியதும் நீர் வெளிப் பட்டுத் தோன்றுதல் போல, உலகெங்கும் பரவிய அறிவுடை யவரை அறிவிலரெனப் பொய் கூறி மறைத்தால் அப்பொய் தெரிந்ததும் அவ்வறிவுடையோர் வெளிப்பட்டுத் தோன்றுவர் என்பதாம். ஒருவர் அறிவுத்திறனைப் பொய்யால் மறைப்பது, நீரைப் பாசியால் மறைப்பது போலும். ஞாயிற்றைக் கையால் மறைக்க முடியாததுபோல, அறிஞர் களைப் பொய்யால் மறைக்க முடியாது; பிறிது மொழிதலணி. (8) 321. அருவிலை மாண்கலனு மான்ற பொருளும் திருவுடைய ராயின் திரிந்தும் - வருமால் பெருவரை நாட! பிரிவின் றதனால் திருவினும் திட்பம் பெறும். (பழ) பெருவரை நாட - பெரிய மலைநாடனே. திரு உடைய ராயின் - ஒருவர் செல்வமுடையரானால், திரிந்தும் - அவர் தகுதி யில்லாதவராயிருந்தும், அருவிலை மாண்கலனும் - அரிய விலை யுள்ள சிறந்த அணிகலன்களும், ஆன்ற பொருளும் வரும் - மிகுந்த நுகர்பொருள்களும் வந்து சேரும், (செல்வம் தீர்ந்தால் அவையும் போய்விடும்) அதனால் - ஆதலால், திருவினும் - இத்தகைய செல்வத்தைக் காட்டிலும், திட்பம் பெறும் மனவுறுதியைத் தரும் அறிவுச் செல்வம் நல்லது, பிரிவின்று - அது நிலை பேறுடையது. அருவிலை - மிக்கவிலை, மாண்கலம் - சிறந்த அணிகலம் - நகை. ஆன்ற - மிக்க. பொருள் - உடை, ஊர்தி முதலிய நுகர் பொருள்கள். திரு - செல்வம் திரிந்தும் - மாறுபட்டும் - தகுதி யில்லாதவரிடத்தும். ஆல் - அசை. பெருவரை நாட - ஆடூஉ முன்னிலை. பிரிவு இன்று நீங்குதல் இல்லை - நிலை பேறுடையது. திட்பம் - உறுதி. இங்கு மனவுறுதியைத் தரும் அறிவைக் குறித்தது. திட்பம் பெறும் - திட்பம் நன்று - திட்பத்தைத் தரும் அறிவு நல்லது. ஒருவர் செல்வமுடையரானால் அவர் தகுதியில்லாத வராயிருந் தாலும் அணிகலன்களையும் மற்ற நுகர் பொருளையும் மிகுதியாக உடையராவர். அச்செல்வம் அழிந்தால் அவற்றை யும் இழப்பர். ஆதலால், இத்தகைய செல்வத்தைக் காட்டிலும் அறிவு சிறந்தது; அது அழியாதது என்பதாம். “பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள.” (குறள்-241) என்பதால், தகுதியில்லாதவரிடத்தும் வந்து சேரும் என்றார். தகுதியில்லாதவர் - செல்வத்தின் பயனாகிய ஈகை முதலிய குண மில்லாதவர். பொருட் செல்வம் வருவதும் போவதுமுடையது. அறிவுச் செல்வம் அங்ஙனமின்றி, நிலைபேறுடையது. எனவே, பொருட் செல்வத்தினும் அறிவுச் செல்வம் சிறந்தது என்பது கருத்து. (9) 322. பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற் குன்றாமை கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை மண்விழைந்து வாழ்நாள் மதியாமை யிம்மூன்றும் நுண்விழைந்த நூலவர் நோக்கு. (திரி) பெண் விழைந்து பின் செலினும் தன் செலவில் குன்றாமை - ஒரு பெண் தன்னை விரும்பிப் பின் சென்றாலும் தனது நடக்கையில் குறையாமையும், கண் விழைந்து கை உறினும் பொருட்குக் காதல் இன்மை - தன் இருக்குமிடந் தேடி விரும்பி வந்து கைப்பட்டாலும் பொருளினிடத்தே ஆசையில்லா திருத்தலும், மண் விழைந்து வாழ் நாள் மதியாமை - மண்ணை விரும்பி வாழ்கின்ற காலத்தை நன்றென எண்ணாமையும், இம்மூன்றும் நுண் விழைந்த நூலவர் நோக்கு - ஆகிய இம் மூன்றும் நுட்பமாக விரும்பிக் கற்ற நூலறி வினையுடையோர் கொள்கையாம். விழைந்து - விரும்பி. பின் செல்லல் - தொடர்ந்து செல்லல்; வற்புறுத்தல் என்றபடி. செலவு - நன்னடக்கை, ஒழுக்கம். குன்றுதல் - குறைதல். தவறுதல். கண் - இடம். கண் விழைதல் - இருக்குமிடந் தேடி விரும்பி வருதல். மண் - காடு, வீடு முதலிய நிலம் மண்ணாளு தலை விரும்பி அதனால் நீண்ட நாள் இருக்க வேண்டும் என்று எண்ணாமையுமாம். நுண் - நுண்மை - நுட்பம். நூல் - நூலறிவு. முறையின்றித் தன்னை வலியச் சேர விரும்பும் பெண்ணைச் சேராமையும், பிறர் பொருள் வலிய வந்தாலும் - எளிதில் கிடைத் தாலும் - அதைக் கைக்கொள்ளாமையும், வீடு, நிலம் முதலிய சொத்தினை விரும்பி வாழ்நாளை மதியாமையும் அறிவுடையோர் கொள்கை என்பதாம். பெண் - பிறர் மனைவியும், பொருள் - பிறர் பொருளும் எனக் கொள்க. இவ்விரண்டும் வலிய வந்தால் - எளிதில் அடைய முடிந்தால் - விரும்பாமை அறிவுடையார்க்கே முடியும். மண் விழைந்து வாழ்நாள் மதித்தல் - வீடு, நிலம் முதலிய தன் செல்வத்தை விரும்பி, அதனை நுகர்ந்து வாழ்தலிற் செருக்குக் கொள்ளுதல். பிறர் மனைவியையும் பிறர் பொருளையும் விரும்பாமையும், தன் செல்வத்தை விரும்பிச் செருக்குக் கொள்ளாமையும் அறிவு டைமை யாகும் என்பது கருத்து. (10) 323. வெகுளி நுணுக்கும் விறலும் மகளிர்கட் கொத்த வொழுக்க முடைமையும் - பாத்துண்ணும் நல்லறி வாண்மை தலைப்படலு மிம்மூன்றும் தொல்லறி வாளர் தொழில். (திரி) வெகுளி நுணுக்கும் விறலும் - சினத்தைச் சுருங்கச் செய்யும் வலிமையும், மகளிர் கட்கு ஒத்த ஒழுக்கம் உடைமையும் - பெண்களுக்கு இயைந்த நடையை உடையராயிருத்தலும், பாத்து உண்ணும் நல்லறிவு ஆண்மை தலைப்படலும் - பகுத்துக் கொடுத்து உண்ணும் நல்லறிவை ஆளுந்தன்மையை மேற் கொள்ளலும், இம்மூன்றும் தொல் அறிவாளர் தொழில் - ஆகிய இம்மூன்றும் பழமையாகிய நூலறிவினையுடையோர் செயல்களாம். வெகுளி - சினம். நுணுக்குதல் - சுருக்குதல், குறைத்தல், தணித்தல். சினம் உண்டாகுதல் இயல்பு,. அதை அடக்குதல் எளிதன்று. எனவே, சினத்தை அடக்குதற்கு வலிமை வேண்டிய தாயிற்று. வலிமை - மன வலிமை விறல் - வலிமை. மகளிர் கட்கு ஒத்த ஒழுக்கமாவது - அவர் தம்மோடு இயைந்து நடக்கும் படி செய்தலும், தாம் அவரோடு இயைந்து நடத்தலு மாம். மகளிர் - மனைவியர். பாத்தல் - பகுத்தல். நல்லறிவை ஆளுந் தன்மையை மேற்கொள்ளல் - நல்லறிவுடையராதல். எழுந்த சினத்தை அடக்குதலும், மனைவியுடன் இயைந்து நடத்தலும், இல்லார்க்குக் கொடுத்துண்டலும் அறிவுடைமை என்பதாம். செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள்) பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை (குறள்) (11) 324. வைததனை இன்சொல்லாக் கொள்வானும், நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் - ஊறிய கைப்பதனைக் கட்டியென் றுண்பானு மிம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார். (திரி) வைததனை இன்சொல்லாக் கொள்வானும் - பிறர் வைத வசைச் சொல்லை இன்சொல்லாகக் கொள்கின்றவனும், நெய் பெய்த சோறு என்று கூழை மதிப்பானும் - நெய்யூற்றிச் சமைத்த சோறென்று கூழை மதிப்பவனும், ஊறிய கைப்ப தனைக் கட்டி என்று உண்பானும் - மிகுந்த கசப்பான பொருளை வெல்லக் கட்டி யென்று உண்கின்றவனும், இம்மூவரும் உண்மைப் பொருளைக் கண்டு வாழ்பவர் ஆவர். வைதல் - திட்டுதல், வன்சொல் சொல்லுதல், வைத்து - வன்சொல். சொல்லா - சொல்லாக. கூழ் - கேழ்வரகுமா சோளமா இவற்றால் காய்ச்சிய கூழ். ஊறிய - மிக்க கைப்பு - கசப்பு. கட்டி - வெல்லக்கட்டி. மெய்ப்பொருள் - உண்மைப் பொருள், உண்மை. ஒருவன் வைதால், அவன் அறியாமையால் வைதா னென்று அவ்வன்சொல்லை இன்சொல்லாகக் கொண்டு பொறுத்துக் கொள்பவனும், ஒருவர் வீட்டில் கூழ்தான் இருந்து ஊற்றினால் அதை நெய்யூற்றி ஆக்கிய சோறென்று மதித்து ஏற்றலும், கசப்பு மருந்து முதலியவற்றை வெல்லக் கட்டியென் றெண்ணி உண்டலும் உண்மையை அறிந்தோர் தன்மையாகையால், இம்மூவரும் உண்மையை உணர்ந்து அதன்படி வாழ்பவர் ஆவர். இம்மூன்று செயலும் அறிவுடையார்க்கே இயலும் என்பது கருத்து. (12) 325. கண்ணுக் கணிகலங் கண்ணோட்டம், காமுற்ற பெண்ணுக் கணிகலம் நாணுடைமை - நண்ணும் மறுமைக் கணிகலங் கல்வியிம் மூன்றும் குறியுடையார் கண்ணே யுள. (திரி) கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் - கண்ணுக்கு அணியத்தக்க அணிகலனாவது கண்ணோடுதல், காமுற்ற பெண்ணுக்கு அணிகலம் நாணுடைமை - கணவனால் விரும்பப் பட்ட குலம கட்கு அணிகலனாவது நாணுடைய வளாயிருத்தல், நண்ணும் மறுமைக்கு அணிகலம் கல்வி - எதிர்காலத்துப் பொருந்தும் மறுமைக்கு அணிகலனாவது கல்வியறிவு, இம் மூன்றும் குறியுடை யார் கண்ணே உள - ஆகிய இம்மூன்றும் அறிவாளிகளிடத்தே உண்டு. அணிகலம் - நகை. கண்ணோட்டம் - தன்னோடு பழகினவர் சொன்னதை மறுக்க மாட்டாமை, இரக்கம். காமுறுதல் - விரும்புதல். நாணம் - காமக்குறிப்பு நிகழும் போது ஏற்படும் மனவொடுக்கம். அதாவது வெட்கம். நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்பன பெண்மைக் குணங்களாகும். “நாற்குணமும் நாற்படையா” (நள வெண்பா) என்றார் புகழேந்தியார். மடம் - சொன்னதை ஏற்று அதை விடாமல் கடைப்பிடித்தல். அச்சம் - கணவன் மீதுள்ள அன்பு காரணமாக மனைவிக்குத் தோன்றும் அச்சம். பயிர்ப்பு - புதிதாக ஒன்றைக் கண்டால் மனங் கொள்ளாமை. நண்ணுதல் - அடைதல். மறுமை எதிர் காலத்த தாகலின், ‘நண்ணும் மறுமை’ என்றார். மறுமை ஒருவர் இறந்த பிறகு அவரைப் பற்றி இங்கு பேசுவது. குறி - அறிவு. முகத்துக்கு அழகு செய்வது கண்ணேயெனினும், கண்ணோட்ட மில்லாத கண் பழிக்கப்படும். கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம்; அஃதின்றேல் புண்ணென் றுணரப் படும் (குறள்) ஒரு பெண் தன்னை ஆடையணிகளலால் எவ்வளவு அழகு படுத்திக் கொள்ளினும், குலமகளிர்க்குரிய நாணம் இன்றெனில் பழிக்கப்படுவாள். காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை யென்னும் புணை (குறள்) கல்லாதவன் தன்னை ஆடையணிகளால் அழகு படுத்திக் கொண்டு மதிப்புடன் இருந்தாலும், மறுமைச் செல்வமாகிய புகழ் தேடுதற்குரிய கல்வி இன்றேல் பழிக்கப்படுவான். நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழினலம் மண்மான் புனைபாவை யற்று. (குறள்) பிறரிடம் கண்ணோட்டம் காட்ட வேண்டும், மகளிர் நாணுடையராய் இருத்தல் வேண்டும், ஒவ்வொருவரும் கட்டாயம் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும். இம்மூன்றும் அறிவுடைமையின் பாற்படும் என்பதாம். (13) 326. இல்லார்க்கொன் றீயு முடைமையும், இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையு மிம்மூன்றும் நன்றறியு மாந்தர்க் குள. (திரி) இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும் - வறியவர்க்கு ஏதாவதொன்றைக் கொடுக்கும் செல்வமுடைமையும், இவ்வுலகில் நில்லாமை உள்ளும் நெறிப்பாடும் - இவ்வுல கத்துப் பொருள்களின் நிலையாமையை ஆராய்ந்து பார்க்கும் நெறியின்கட் படுதலும், எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையும் - எந்த ஓருயிர்க்கும் துன்பம் அடைதற்குக் காரணமான செயல்களைச் செய்யாத தூய தன்மையும், இம்மூன்றும் நன்று அறியும் மாந்தர்க்கு உள - ஆகிய இவை மூன்றும் அறத்தை அறியும் அறிவுடை யோர்க்கே உண்டு. ஒன்று - இயன்றதொரு பொருள். உடைமை - செல்வம். நில்லாமை - நிலையாமை. செல்வ நிலையாமை - இளமை நிலையாமை யாக்கை நிலையாமை என நிலையாமை மூன்று வகைப்படும். ‘நிலையாமை’ என்னும் தலைப்பைப் பார்க்க. நெறிப்பாடு - நெறியின்கட்படுதல், ஆராய்ந்து பார்த்தல். உள்ளுதல் - நினைத்துப் பார்த்தல். தூய்மை - எண்ணம், சொல், செயல் மூன்றும் தூயவாதல். நன்று - அறம். செல்வத்தின் பயன் தான் மட்டும் துய்ப்பது அன்று இல்லார்க்குக் கொடுப்பதும் ஆகும். செல்வத்துப் பயனே ஈதல் (புறநானூறு) ஈதற்குச் செய்க பொருளை (திரிகடுகம்) வறியார்க்கொன் றீவதே ஈகை (குறள்) நிலையாமையை ஆராய்ந்தறியும் அறிவுடையோரே நிலை யில்லாத செல்வம், இளமை யாக்கை இவற்றின்கட் பற்றில்லாமல் அவற்றின் பயன் துய்த்து, அவற்றால் உண்டாகும் துன்பத்திற்கு வருந்தாமல் வாழ்வர். நில்லாதவற்றை நிலையின வென்றுணரும் புல்லறி வாண்மை கடை (குறள்) உயிர்க்குத் துன்புறுவ செய்யாமை எனவே, உயிர் களுக்கு இன்பம் பயக்கும் செயல்களையே செய்ய வேண்டும் என்ப தாயிற்று. உயிரென்றது மக்களை. பிறர் துன்புறத்தக்க செய்யாத தூய்மை என்க. ‘துன்புறுவ செய்யாத’ என்றா ரேனும், துன்புறுவ எண்ணாமையும் சொல்லாமையும் கொள்க. அறிவினான் ஆவதொன் றுண்டோ பிறிதின்னோய் தன்நோய்போற் போற்றாக் கடை. (குறள்) இல்லார்க்கு இயன்றதைக் கொடுப்பதும், நிலையா மையை எண்ணிப் பார்த்து அதற்குத் தக வாழ்வதும், பிறர்க்குத் துன்பம் செய்யாமையும் அறிவுடைமையாகும் என்பதாம். (14) 327. பூவாது காய்க்கு மரமுள நன்றறிவார் மூவாது மூத்தவர் நூல்வல்லார் - தூவா விதையாமை நாறுவ வித்துள மேதைக் குரையாமை செல்லு முணர்வு. (சிறு) பூவாது காய்க்கும் மரம் உள - பூக்காமலே காய்க்கும் மரங்களும் உண்டு. (அதுபோல), நன்று அறிவார் மூவாது மூத்தவர் - நன்மையை அறிபவர் ஆண்டல் முதிராதவரா யினும் அறிவில் மூத்தாரோ டொப்பர், நூல் வல்லார் - நூல்களைக் கற்று வல்லவரும் அத்தன்மையரே; தூவா விதை யாமை நாறுவ வித்து உள - தூவி விதைக்காமலே முளைப் பனவாகிய விதைகளும் உண்டு. (அது போல), மேதைக்கு உரையாமை உணர்வும் செல்லும் - அறிவுடைய வனுக்குப் பிறர் எடுத்துரைக்காமலே உணரும் ஆற்றல் உண்டாகும். நன்று - நன்மை. தூவா - தூவி - உடன்பாட்டு வினை யெச்சம். நாறுதல் - முளைத்தல். மேதை - பேரறிவுடையவன். உணர்வு - அறிவு. பூவாது காய்க்கும் மரங்கள் - ஆல், அரசு, அத்தி, பலா முதலியன. இம்மரங்களின் பூக்கள் இதழ் விரியாமல் மூடிய புறவிதழுக் குள்ளாகவே மலர்ந்து கருவாகும்; மற்ற மரங் களின் பூக்கள் போல் இதழ் விரிந்து மலர்ந்து வெளியில் தெரிவதில்லை, இதையே ‘பூவாது’ என்றார். பெரியவர் சிறியவர் என்பதற்கு ஆண்டினையே ஏது வாகக் கொள்வது வழக்கம். ஆனால், சிலர் இளமைப் பருவத்தி லேயே இயற்கையறிவு நூலறிவு என்னும் அறிவிற் சிறந்து விளங்குவதும் உண்டு. இவர்க்குப் பூவாது காய்க்கும் மரங்கள் உவமையாயின. பூத்துக் கருவுற்றுக் காய்ப்பதேயன்றிப் பூவாது காய்த்தல்போல, தக்க பருவத்தே அறிவுடையராத லேயன்றி இளமையிலேயே அறிவுடைய ராதலாம். நூல்வல்லார் மூவாது மூத்தவர் எனக் கூட்டுக. நூல் களைக் கற்று வல்லவரும் மூவாது மூத்தவரே யாவர் என்ப தாம். நூல் வல்லார் - பிறர் கற்பிக்காமலே தாமாகவே கற்க வேண்டிய நூல்களைக் கற்றுவல்லவர் என்க. தூவுதல் - பாத்தியில் விதையைத் தூவுதல், தெளித்தல். விதைத்தல் - சிறு சட்டி அல்லது கூடை மேற்பட்டுச் சிதறி நிலத்தில் விழும்படி விதையை வீசுதல். விதையாமல் முளைக்கும் விதை - காற்று மழை பறவை விலங்கு முதலியவற்றால் பரவி தாமாகவே முளைக்கும் விதைகள், விதையாமல் தாமாகவே முளைக்கும் விதைபோல, பேரறிவுடையோர் பிறர் உரையாமலே எதையும் உணர்ந்து கொள்வர் என்பதாம். இது எடுத்துக் காட்டுவமையணி. நல்லனவற்றை அறிதலும் எதையும் தாமாகவே அறிந்து கொள்ளுதலுமே அறிவுடைமையாகும் என்பதாம். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள்) (15) 328. நல்ல வெளிப்படுத்துத் தீய மறந்தொழிந் தொல்லை யுயிர்க்கூற்றங் கோலாகி - ஒல்லுமெனின் மாயம் பிறர்பொருட்கண் மாற்றியே மானத்தான் ஆயி னழித லறிவு. (சிறு) நல்ல வெளிப்படுத்து - ஒருவன் பிறர் தனக்குச் செய்த நல்ல வற்றைப் பலர்க்கும் எடுத்துரைத்தலும், தீய மறந்து ஒழிந்து - பிறர் செய்த தீமைகளை அறவே மறந்து விடுதலும், ஒல்லும் எனின் உயிர்க்கு ஒல்லை ஊற்றங்கோல் ஆகி - தன்னால் இயலுமானால் துன்பத்துக்குட்பட்ட உயிர்களுக்கு விரைவில் ஊன்று கோல் போல் உதவுதலும், பிறர் பொருட் கண் மாயம் மாற்றி - பிறர்க்குரிய பொருளிடத்து வஞ்சகச் செயலை நீக்குதலும், மானத்தான் ஆயின் அழிதல் அறிவு - மான முடையவனானால் தாழ்வு வந்தவிடத்து உயிர் விடுதலும் அறிவுடைமையாகும். நல்ல - நல்லவை. மறந்து ஒழிதல் - அறவே மறத்தல்; அதாவது மனத்தில் நினைத்திராமல் மறத்தல். ஒல்லை - விரைவு. ஊன்று கோல் என்பது வலிந்து ‘ஊற்று’ என்றாகி, அம் சாரியை பெற்று ‘ஊற்றம்’ என்றானது. ஊன்று கோல் - நடக்க முடியாதவர், வழுக்கு நிலத்தில் நடப்போர், முதியோர் முதலியோர் உதவியாக ஊன்றுங்கோல். இது உதவி குறித்தது. ஒல்லுதல் - இயலுதல், முடிதல். மாயம் - வஞ்சனை. பிறர் பொருட்கண் மாயம் - பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதுதல். ஆயின் - ஆனால். அழிதல் - இறத்தல் ‘மானத்தான் ஆயின் அழிதல்’ என்றதால், ‘தாழ்வு வந்த விடத்து’ என்பது வரவழைக்கப்பட்டது. பிறர் தனக்குச் செய்த நன்மைகளைப் பிறர்க்குக் கூறுதலும், தீமைகளைக் கூறாமையும். பிறர்க்குத் துன்பம் வந்த விடத்து உதவுதலும், பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதாமையும், மானங்கெடவரின் உயிர் விடுதலும் அறிவுடைமை யாகும். பிறர்பிறர் சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்து (நீதிநெறி) இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்று (குறள்) அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். (குறள்) மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் (குறள்) மானம் அழிந்தபின் வாழாமை முன்னினிது. (இனி) (16) 329. கட்டளை கோடித் திரியிற் கருதிய இட்டிகையுங் கோடு மதுபோலும் - ஒட்டிய காட்சி திரியி னறந்திரியு மென்றுரைப்பர் மாட்சியின் மிக்கவர் தாம். (அற) கட்டளை கோடித் திரியின் - செங்கல் அறுக்குங் கருவி கோணலானால், கருதிய இட்டிகையும் கோடும் அது போலும் - அதனால் அறுக்கக் கருதிய செங்கல்லும் கோணலாகும் அது போல, ஒட்டிய காட்சி திரியின் அறம் திரியும் என்று - பொருந்திய அறிவு வேறுபடின் அறமும் வேறுபடும் என்று, மாட்சியின் மிக்கவர் உரைப்பர் - பெரியோர்கள் கூறுவர். கட்டளை - செங்கல் அறுக்கும் கருவி. கோடுதல் - கோண லாதல். திரிதல் - மாறுபடுதல். கோடித் திரிதல் -ஒரு பொருள். இட்டிகை - செங்கல். ஒட்டிய - பொருந்திய. காட்சி - அறிவு., மாட்சியின் மிக்கவர் - மாட்சிமையுடைய பெரியோர். தாம் - அசை. செங்கல் அறுக்கும் கருவி கோணலானால், அதனால் அறுக்கப் படும் செங்கல்லும் கோணலாதல் போல, அறிவு வேறுபடின் அதனால் செய்யப்படும் அறமும் வேறுபடும் என்பதாம். அறத்திற்கு இன்றியமையாதது அறிவே என்பது கருத்து. (17) 330. பொய்ப்புலன்க ளைந்துநோய் புல்லியர்பா லன்றியே மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பிற் சுழற்றுங்கொல் கற்றூணைச் சூறா வளிபோய்ச் சுழற்றுஞ் சிறுபுன் றுரும்பு. (நன்) சூறாவளி போய் துப்பின் சிறு புன்துரும்பு சுழற்றும் - சுழல் காற்றுச் சென்று தன் வன்மையினால் மிகச்சிறிய துரும்பை எடுத்துச் சுழற்றும், கல் தூணைச் சுழற்றுங் கொல் - ஆனால் அக் காற்று கல் தூணை எடுத்துச் சுழற்றுமோ? சுழற்ற முடியாது; (அதுபோல), பொய் புலன்கள் ஐந்தும் - பொய் யாகிய புலன்கள் ஐந்தும், புல்லியர்பால் அன்றி - மூடர் களிடத்திலல்லாமல், மெய்ப்புலவர் பால் நோய் விளையா - உண்மையான அறிவுடைய வரிடத்தில் துன்பத்தைச் செய்யா. புலன்கள் ஐந்து - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன. நோய் - துன்பம். புல்லியர் - அறிவிலார். பால் - இடம். மெய்ப் புலவர் - உண்மையறிவுடையோர். புலம் - அறிவு. புலவர் - அறிவு டையோர். தம் - அசை, விளையா - செய்யா. எதிர்மறைப் பலவின்பால் வினை முற்று. ஆம் - அசை. துப்பு - வலி. சூறாவளி - சுழல் காற்று. சிறு புன் - ஒரு பொருட் பன்மொழி. சுழல் காற்றானது ஓலை, சருகு போன்ற மெல்லிய பொருள்களை எடுத்துச் சுழற்றுமே யல்லாமல் மிகுந்த பாரமுள்ள கற்றூணை எடுத்துச் சுழற்றமாட்டாது. அது போல, ஐம்புலன்களும் மூடர் களுக்குத் துன்பஞ் செய்யுமே யன்றி உண்மை யறிவுடையார்க்குத் துன்பஞ்செய்யா. துன்பஞ் செய்தல் - கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் இன்புற விரும்புதல். அவ்விருப்பத்தை மூடர்களால் அடக்க முடியாது. அறிவுடையோர் ஐம்புலன்களின் விருப்பத்தை அடக்கி வாழ்வர் என்பதாம். புலன்களை அடக்கியாள்வதே அறிவுடைமை என்பது கருத்து. (18) 331. ஆக்கு மறிவா னலது பிறப்பினால் மீக்கொ ளுயர்விழிவு வேண்டற்க - நீக்கு பவரா ரரவின் பருமணிகண் டென்றுங் கவரார் கடலின் கடு. (நன்) அரவின் பருமணி கண்டு நீக்குபவர் ஆர் - நஞ்சுள்ள பாம்பி னிடத்திலுண்டான பெரிய மாணிக்கத்தைப் பார்த்து வேண்டா மென்று சொல்பவர் யார்? ஒருவருமில்லை; ஆனால், கடலின் கடு என்றும் கவரார் - கடலில் உண்டான நஞ்சை எந்நாளும் கொள்ளார்; (ஆகையால்), மீக்கோள் உயர்வு இழிவு - மேலாகக் கொள்ளும் உயர்வையும் கீழாகக் கொள்ளும் இழிவையும், ஆக்கும் அறிவால் அலது பிறப்பினால் வேண்டற்க - நற்குணங்களை உண்டாக்குகின்ற கல்வியறி வால் அல்லாமல் உயர்ந்த பிறப்பை எண்ணி விரும்பா திருப்பீராக. ஆக்குதல் - உண்டாக்குதல். மீ - மேல், மேன்மை. மீக்கொள் - மேலாகக் கொள்ளுதல். இழிவு - தாழ்வு. அரவு - பாம்பு. பருமணி - பெரிய மாணிக்கம். கவர்தல் - எடுத்துக் கொள்ளுதல். கடல் - பாற் கடல். கடு - நஞ்சு. மந்தரமலையில் வாசுகி என்னும் பாம்பைக் கடை கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது அப்பாம்பு நஞ்சைக் கக்கிற்றென்பது புராணக் கதை. கொடிய நஞ்சுள்ள பாம்பினிடத்தில் உண்டான மாணிக்கத் தை யாரும் விரும்புவர். ஆனால், உயர்ந்த பாற் கடலில் தோன்றிய நஞ்சை எப்போதும் யாரும் விரும்பார். அதுபோல, தாழ்ந்த குலத்தில் பிறந்தவரானாலும் கல்வி அறிவுடையவர் உயர்ந்தவ ராவர். உயர்ந்த குலத்தில் பிறந்தவரானாலும் கல்வி யறிவில்லாதவர் தாழ்ந்தவராவர். ஒருவருடைய உயர்வுக்குக் காரணம் அறிவேயாகும்; சாதியு யர்வு உயர்வாகாது. மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றா ரனைத்திலர் பாடு. (குறள்) (19) 332. இல்லது காமுற் றிரங்கி யிடர்ப்படார் செய்வது செய்த லினிது. (இனி) இல்லது காமுற்று - தம்மிடத்தில் இல்லாத பொருளை விரும்பி, இரங்கி இடர்ப்படார் - அது பெறாமையால் மனம் ஏங்கித் துன்பப்படாதவராய், செய்வது செய்தல் இனிது - உள்ளது கொண்டு செய்யத்தக்க காரியத்தைச் செய்வது நல்லது. இல்லது - தம்மிடம் இல்லாத பொருள். காமுற்று - விரும்பி. இரங்கி இடர்ப்படல் - மிகவும் வருந்துதல். படார் - படாராய் - முற்றெச்சம். இல்லாததை எண்ணி வருந்தாமல் உள்ளதைக் கொண்டு அமைதியுடன் வாழ்வதே அறிவுடைமையாகும் என்பதாம். இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக் கிடும்பை படாஅ தவர். (குறள்) (20) 333. கற்ற துடைமை காட்சியி னறிப. (முது) கற்றது உடைமை - ஒருவன் கல்வியுடையவனாயிருத் தலை, காட்சியின் அறிப - அவனுடைய கூரிய அறிவினாலே அறிவர். காட்சி - அறிவு. கல்வியின் பயன் சிறந்த அறி வுடைமையே ஆகும். (21) 334. அறிவுடை யொருவனை அரசனும் விரும்பும். (வெற்) கல்வி யறிவுடைய ஒருவனை அரசனும் விரும்புவான். ‘அரசனும்’ என்ற உம்மையால், மற்றவர் விரும்புவது சொல் லாமலே யமையும். ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னா தவருள் அறிவுடை யோனா றரசுஞ் செல்லும். (புறம்) ஆள்வோரும் தலைவர்களும் விரும்புதலுங் கொள்க. (22) 335. கிட்டா தாயின் வெட்டென மற. (கொன்) கிட்டாது ஆயின் - விரும்பிய ஒரு பொருள் கிடைக்கா விட்டால், வெட்டென மற - விரைவில் அதை மறந்து விடு. விரும்பிய ஒரு பொருள் கிடைக்கா விட்டால் அதைப் பற்றி நினைத்துக் கொண்டே இராமல் அப்போதே அதை மறந்து விடுவதே அறிவுடைமையாகும் என்பதாம். (23) 22. அவையறிதல் அதாவது, அவையினர் தன்மையினை அறிந்து அதற் கேற்பப் பேசுதல். 335. மெஞ்ஞானக் கோட்டி யுறழ்வழி விட்டாங்கோர் அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க் கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன் சொன்ஞானஞ் சோர விடல். (நால) மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ் வழி விட்டு - உண்மை யறிவுடையார் அவையிலே பழகு முறையை விட்டு, ஆங்கு ஓர் அஞ்ஞானம் தந்திட்டு - அங்கே அறிவின்பாற் படாத தொரு சொல்லைச் சொல்லி, அது ஆங்கு அறத்துழாய் - அந்த அஞ் ஞானச் சொல்லை அவ்வவையிலே மிகுதியாகப் பரப்பி, கைஞ் ஞானம் கொண்டு ஒழுகும் கார் அறிவாளர் முன் சிற்றறிவைக் கொண்டு நடக்கின்ற பழிக்கத்தக்க அறிவினை யுடைய மூடர் களின் முன்பு, சொல் ஞானம் சோர விடல் - சொல்லத்தக்க அறிவுரையை அறிவுடையோர் சொல்லா திருக்கக் கடவர். மெய்ஞ்ஞானம் - உண்மையறிவு, கோட்டி - கூட்டம், அவை. உறழ்தல் - கூடிப் பழகுதல். உறழ்வழி - கூடிப்பழகு முறை. கற்றவரோடு கூடிப் பழகு முறையாவது - அடக்கமாக இருந்து அவர்கள் சொல்வதைக் கருத்துடன் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல். அஞ்ஞானம் - அறிவின்மை. இங்கே அறிவில்லாது சொல்லும் சொல்லை யுணர்த்திற்று. தந்திட்டு- சொல்லி. அற - மிக. துழாய் - துழாவி - பரப்பி; சொன்னதை விளங்கச் செய்து என்ற படி. கைஞ்ஞானம் - சிற்றறிவு. காரறிவு - பிறர் பழிக்கத்தக்க அறிவு, புல்லறிவு. சொல்ஞானம் - சொல்லும் அறிவுரை. ஞானம் அறிவு; அறிவுரையைக் குறித்தது. சோர விடுதல் - சொல்லாமல் இருத்தல். அறத் துழாவுதல் - அறிவின்பாற்படாத சொல்லைச் சொல்லி, அதை வலிய நிலைநாட்ட முற்படுதல். முதல் மூன்றடிகளில் மூடர்களின் இயல்பும், ஈற்றடியில் அன்னார் கூடியுள்ள கூட்டத்தில் அறிஞர்கள் பேசக்கூடாது என்பதும் கூறப்பட்டன. மூடர்கள், அறிவாளிகள் கூடிய அவையிலே சென்று அடக்க மாக இருந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதை விட்டு, அங்கே தமது அறிவற்ற பேச்சைப் பேசத் தொடங்கி, அதை நிலைநாட்டவும் முற்படுவர். அத்தகைய மூடர்கள் முன்னிலையில் அறிவுடையோர் ஒன்றும் பேசக் கூடாது என்பதாம். புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க, நல்லவையுள் நன்கு செலச் சொல்லு வார். (குறள்) அவையின் தன்மை யறிந்து அதற்குத் தகப் பேச வேண்டும். மூடர்கள் முன் ஒன்றும் பேசக்கூடாது என்பது கருத்து. (1) 337. நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்கும் தீப்புலவற் சேரார் செறிவுடையார் - தீப்புலவன் கோட்டியுட் குன்றக் குடிபழிக்கும், அல்லாக்கால் தோட்புடைக் கொள்ளா வெழும். (நால) நாப்பாடம் சொல்லி நயம் உணர்வார் போல் செறிக்கும் - வாய்க்கு வந்த பொருள்களை எடுத்துச் சொல்லி நூற் பொருளை நன்கு உணர்ந்தவர் போலத் தன்னைக் காட்டிக் கூட்டஞ் சேர்க்குந் தன்மையுள்ள, தீப்புலவன் செறிவுடையார் சேரார் - தகுதியில்லாத புலவனை அடக்கமுள்ள நற்புலவர் கள் சேரமாட்டார்கள்; (ஏனெனில்), தீப்புலவன் கோட்டியுள் குன்றக் குடி பழிக்கும் - அவ்விழி குண முடைய புலவன் அவையிலே கேட்பவர் மனம் வருந்தும்படி நற்புலவர்களின் குடியைப் பழிப்பான், அல்லாக் கால் தோள்புடைக் கொள்ளா எழும் - இல்லா விட்டால் தோள்களைத் தட்டிக் கொண்டு போர்க்கு எழுவான். பாடம் - பொருள். நயம் - செய்யுள். நயம் - சிறந்த பொருள். செறித்தல் - கூட்டஞ் சேர்த்தல். செறிதல் - கூட்டுதல், செறிவு - அடக்கம். கோட்டி - கூட்டம். குன்ற - குன்றும்படி, வருந்தும்படி. குடி - பிறந்தகுடி. குடியின் முன்னோரைப் பழிப்பான். புடைக் கொள்ளா - புடைக் கொண்டு - தட்டிக் கொண்டு. புடைத்தல் - தட்டுதல். வாய்க்கு வந்ததைச் சொல்லித் தன்னை நன்கு படித்தவ னென்று பிறர் நம்பும்படி செய்து, அந்த ஆடம்பரத்தால் மக்களைக் கூட்டுகின்ற போலிப் புலவனிடம், அறிவுடை யோர் சென்று பேசுதல் தகாது. ஏனெனில், அவன் வாய்க்கு வந்தபடி பேசுவதற்கு இவர்கள் ஏதாவது மறுப்புச் சொன்னாலும் அதற்கு ஏற்ற மறுமொழி சொல்ல மாட்டாமையால் அவன் சினங் கொண்டு இவர்கள் குலத்தைப் பற்றிப் பழித்துக் கூறுவான். அல்லது சினமிகுதியால் தோள்களைத் தட்டிக் கொண்டு போருக்குக் கிளம்பினாலும் கிளம்புவான் என்ப தாம். முன்னிரண்டடிகளில் கூறிய செய்தியைப் பின்னிரண்டடிகளில் காரணங்காட்டி விளக்கியது ஏதுவணியாகும். ‘நாப்பாடம்’ என்றது - நெட்டுருச் செய்து வைத் திருக்கும் தனக்குத் தெரிந்த செய்தி எனினுமாம். (2) 338. சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர் கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார் - கற்ற செலவுரைக்கு மாறறியார் தோற்ப தறியார் பலவுரைக்கு மாந்தர் பலர். (நால) சொல் தாறு கொண்டு - சொல்லாகிய தாற்றுக் கோலைக் கொண்டு, சுனைத்து எழுதல் காமுறுவர் - தினவு கொண்டு சொற்போர் செய்ய எழுதலை விரும்புவர், கற்ற ஆற்றல் வன்மையும் தாந்தேறார் - பிறருடைய கல்வித் திறமையையும் பேச்சு வன்மை யையும் அறியார், கற்ற செல உரைக்கும் ஆறு அறியார் - தாங்கற் றறிந்தவற்றைப் பிறர் மனத்திற் புகும்படி பேசும் வழியையும் அறியார், தோற்பது அறியார் - சொற் போரில் தாம் தோல்வியடை தலையும் அறியார், பல உரைக்கும் மாந்தர் பலர் - வீணாகப் பல சொற்களைச் சொல்லுகின்ற மக்கள் உலகத்தில் பலர் இருக்கின்றனர். தாறு - தாற்றுக்கோல் - முட்கோல். வண்டி மாடு, உழவு மாடுகளை அடித்தோட்டும் சாட்டைக் கோலின் முனையில் கூரிய இரும்பு முள் அடித்திருப்பர், அக்கோலுக்குத் தாற்றுக் கோல் என்று பெயர். அம்முள்ளால் குத்தினால் மாடு சுருசுருப் பாகப் போகும். சொல் தாறு - உருவகம். தாம் செய்யும் சொற் போர்க்குத் தமது புன் சொற்களாகிய தாற்றுக் கோலையே கருவியாகக் கொள்வதால், ‘சொற்றாற்றுக் கொண்டு’ என்றார். சுனைத்தல் - சொறிதல். இங்கு அதற்குக் காரணமாகிய தினவை உணர்த்திற்று. சுனைத்து எழுதல் - உடல் தினவு கொண்டு தோள் தட்டிக் கொண்டெழுதல். கற்ற ஆற்றல் - கல்வித் திறம். வன்மை - சொல் வன்மை. கற்ற - கற்றவற்றை. செல - கேட்போர் மனத்துட் புகும்படி. பல உரைத்தல் - பயனில்லாத பல சொற்களை உரைத்தல். காமுறுவர், தேறார், அறியார் யென்பன முற்றெச்சங்கள். காமுறுபவராய், தேறாதவராய், உரைக்குமாறறியாதவராய், தோற்பதறியாதவராய்ப் பலவுரைக்கும் மாந்தர் என்க. உலகில் அறிவில்லார் பலர், அவையில் தாமும் ஏதாவ தொன்றை எடுத்துரைத்து, சொற் போர் புரிந்து வெற்றி கொள்ள வேண்டும் என்று விருப்பங் கொண்டு கிளம்புவர்; ஆனால், அறிவில்லாத அவர்கட்கு, எதிர்த்துப் பேசுவோரின் கல்வித் திறம் பேச்சுத் திறம் முதலியனவுந் தெரியாது. தமக்குத் தெரிந்த செய்தி களை ஒழுங்குபடச் சொல்லவுந் தெரியாது. தமது தோல்வியுந் தெரியாது; எனினும், மேன்மேல் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பர். அத்தகைய பயனில் சொல் பாராட்டுந் தன்மை யுடையார் அவைக்குரியர் அல்லர் என்பதாம். அடக்கமாக, பிறர் வன்மையை அறிந்து, தமது தோல்வி யையும் அறிந்து, கேட்போர் மனத்தில் நன்கு பதியும்படி பேசுவதே பேச்சாகும் என்பது கருத்து. அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். (குறள்) அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉ மில். (குறள்) (3) 339. வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார் கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோ - டொன்றி உரைவித் தகமெழுவர் காண்பவே கையுட் சுரைவித்துப் போலுந்தம் பல். (நால) வென்றிப் பொருட்டால் மெய் கொள்ளார் - தாம் வெல்வது காரணமாக உண்மைப் பொருளை ஏற்றுக்கொள் ளாதவராய், விலங்கு ஒத்து கன்றி கறுத்து எழுந்து காய்வா ரோடு ஒன்றி - விலங்குகளைப் போன்று மிகச் சினந்து போர்க் கெழுந்து மனங் கொதிப்பவர்களோடு, சேர்ந்து உரை வித்தகம் எழுவார் - தமது சொல்வன்மையைக் காட்ட முற்படுபவர், சுரைவித்துப் போலும் தம் பல் கையுள் காண்ப - சுரை விதை போன்ற தம் பற்களை உடனே தங்கள் கையில் காண்பார்கள். வென்றி - வெற்றி. மெய் - உண்மை. கன்றி, கறுத்து - வெகுண்டு; ஒரு பொருட் பன்மொழி. விலங் கொத்துக் கன்றிக் கறுத் தெழுந்தென்க. காய்தல் - மனங் கொதித்தல். கன்றுதல், கறுத்தல், காய்தல் - மூன்றும் சினத்தலேயாம். ஒன்றி - அவரைத் தம்மோ டொத்தவராகக் கருதி, அவரோடு சேர்ந்து. உரை வித்தகம் - சொல்வன்மை. வித்து - விதை. தாம் வெல்லும் பொருட்டுப் பிறர் சொல்லும் உண்மை யை ஏற்றுக் கொள்ளாமல், விலங்குகளைப் போல முரட்டுத் தனமாய் மிகவும் வெகுண்டெழுந்து மனங்கொதிக்கும் புல்லறிவாளர் களோடு அறிவாளிகள் எதிர்த்துப் பேசக் கூடாது. பேசினால் அம்முரடர்கள் இவர்கள் சொல்லை மதியாததோடு, கன்னத்தில் அறைந்து பற்களை உதிர்த்து விடுவார்கள் என்பதாம். இத்தகைய மூடர்கள் கூடிய கூட்டத்தில் பேசக் கூடா தென்பது கருத்து. (4) 340. பாடமே யோதிப் பயன்றெறிதல் தேற்றாத மூடர் முனிதக்க சொல்லுங்கால் - கேடருஞ்சீர்ச் சான்றோர் சமழ்ந்தனர் நிற்பவே மற்றவரை ஈன்றாட் கிறப்பப் பரிந்து. (நால) பாடமே ஓதி - ஒரு பாட்டை மாத்திரம் சொல்லி, பயன் தெரிதல் தேற்றாத மூடர் - அப்பாட்டின் பொருளை அறிய மாட்டாத அறிவில்லாதவர், முனிதக்க சொல்லுங்கால் - கேட்பவர் வெறுக்கத்தக்க குற்றமான சொற்களைச் சொன்னால், கேடு அருஞ் சீர் சான்றோர் - அழிவில்லாத புகழையுடைய பெரியோர்கள், அவரை ஈன்றாட்கு இறப்பப் பரிந்து சமழ்த்தனர் நிற்ப - அவர் களைப் பெற்ற தாய்க்காக மிகவும் இரங்கி அவர்களை அவமானப் படுத்துவதற்கு நாணங் கொண்டவர்களாய் நிற்பார்கள். பாடம் - மூலபாடம் - பாட்டு, பயன் - பாட்டின் பொருள், கருத்து. தேற்றாத - தெரியாத. முனிதக்க - முனியத் தக்க - வெறுக்கத் தக்க. கேடு அறும் - கெடாத. சீர் - புகழ். சமழ்ப்பு - நாணம். இறப்ப - மிக. பரிவு - இரக்கம். பாட்டின் கருத்தை யறியாத மூடனொருவன் தவறாக எதைச் சொன்னாலும் அறிவாளிகள் கேட்டுக் கொண்டிருத்தல், இவனைப் பெற்ற தாய், இவன் நம்மால் அவமானப் படுத்தப் பட்டதை கேள்விப்பட்டால் வருந்துவாளே என்று எழுந்த இரக்கத்தினாற் போலும் என்பதாம். பெரியோர்கள் தமக்கு இயல்பாக உள்ள பொறுமைக் குணத்தினால், மூடர்கள் கூறும் மிகையைப் பொறுத்துக் கொள்ளு தலை, அவர் தம் ஈன்றாட்கு இரங்கிப் பொறுத்துக் கொள்வர் எனக் கூறியது - ஏதுத் தற்குறிப்பேற்றவணி. தாயின் தகுதியை நோக்கிப் பொறுத்தல் கூடுமேயல்லது. இவன் பிழையை நோக்கினால் பொறுக்க முடியா தென்பது குறிப்பு. அவையினர் தன்மையறியாமல் பேசக்கூடாது என்பது கருத்து. நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. (குறள்) (5) 341. கேட்பாரை நாடிக் கிளக்கப்படும்பொருட்கண் வேட்கை யறிந்துரைப்பார் வித்தகர் - வேட்கையால் வண்டு வழிபடரும் வாட்கண்ணாய் தோற்பன கொண்டு புகாஅ ரவை. (பழ) வேட்கையால் வண்டு வழி படரும் வாள் கண்ணாய் - தம்முடைய விருப்பத்தாலே வண்டுகள் பூவென்று பின் செல்லுகின்ற ஒளி பொருந்திய கண்ணையுடையவளே, கேட்பாரை நாடி - தாம் உரைப்பதைக் கேட்கத்தக்க வரை ஆராய்ந்து பார்த்து, கிளக்கப் படும் பொருள்கண் வேட்கை அறிந்து - தம்மால் சொல்லப்படும் பொருளின்கண் அவருக் குள்ள விருப்பத்தை அறிந்து, உரைப்பர் வித்தகர் - சொல்லுவர் அறிவுடையோர், தோற்பன கொண்டு அவை புகார் - தோற்கக் கூடிய பொருள்களைப் பற்றிப் பேச அவையின்கண் புகார். நாடி - ஆராய்ந்து. கிளத்தல் - சொல்லுதல். வேட்கை - விருப்பம். வித்தகர் - அறிஞர். வழிபடரல் - பின் செல்லல். கண்களைத் தாமரை குவளை முதலிய பூக்கள் என்று கருதி தேனுண்ணும் பொருட்டு வண்டுகள் பின் செல்லுமென்க. தோற்பன - தோற்கக் கூடிய பொருள்கள், அவைக்கு ஏலாத பொருள்கள். வாட்கண்ணாய் - மகடூஉ முன்னிலை. அவையில் ஒன்றைப் பற்றிப் பேசப்புகுமுன், அவ்வவை யில் அதைக் கேட்கத் தக்கவர் உள்ளனரா, அதைக் கேட்க அவருக்கு விருப்பம் உள்ளதா என்பனவற்றை அறிந்து பேச வேண்டும். அப்போதுதான் அவர் பேச்சில் வெற்றி பெறுவர். அதாவது, அவரைச் சிறந்த பேச்சாளரென்று மக்கள் போற்றுவர். அவ் வாறன்றிக் கேட்கத் தக்கவர் இல்லாமலும், இருந்தும் கேட்க விருப்பம் இல்லாமலும் உள்ள அவையில் பேசினால் - பேச்சில் வெற்றி பெற முடியாது, தோல்வியே உண்டாகும். அறிஞர்கள் அவ்வாறு தோல்வியுண்டாகும்படி பேச மாட்டார்கள் என்பதாம். அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். (குறள்) (6) 342. துன்னி யிருவர் தொடங்கிய மாற்றத்திற் பின்னை யுரைக்கப் படற்பாலார் - முன்னி மொழிந்தால் மொழியறியான் கூறல் முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு. (பழ) இருவர் துன்னித் தொடங்கிய மாற்றத்தின் - வினாவு வானும் விடை கூறுவானும் ஆகிய இருவரும் தம்முட் கூடிப் பேசத் தொடங்கிய பேச்சின்கண், பின்னை உரைக்கற்படப் பாலான் முன்னி மொழிந்தால் - மற்றவன் வினாவுக்கு விடை கூறிவிட்டுப் பின்னால் வினாவுவான் விடை கூறாது முன்னால் வினாவினால், மொழியறியான் கூறல் - அதன் விடையை அறியாத மற்றவன் வேறொன்றை விடையாகக் கூறுதலானது, முழந்தாள் கிழிந்தானை மூக்குப் bபாதிவு - முழந்தாள் உடைந்து புண்பட்டவனுக்கு மூக்கில் கட்டுக் கட்டுவதனோ டொக்கும். துன்னி - கூடி. மாற்றம் - பேச்சு. இங்கு வினாவிடையாக உரையாடல். பின்னை - பின்பு. முன்னி - முன்னால். மொழிதல் - வினாதல். மொழி அறியான் - விடையை அறியாதவன். கூறல் - வேறொன்றைக் கூறுதல். கிழிதல் - உடைதல். பொதிதல் - புண்ணை மூடிக் கட்டுதல். இருவர் சொற்போரிடும் போது, ஒருவன் வினாவுக்கு விடை கூறிவிட்டுப் பின் தான் வினாவுதல் முறையாகும். அவ்வாறின்றி அவன் வினாவுக்கு விடை கூறாமல் மற்றவன் வினா வினால் அவ்வினாவுக்கு விடையறியாத அவன் வே றொன்றை விடையாகக் கூறுதல், முழந்தாள் உடைந்த வனுக்கு மூக்கில் கட்டுக் கட்டு வதனோடொக்கும் என்பதாம். எதிரி வினாவுக்கு விடை கூறிவிட்டுத் தான் அவனை வினவுதலே சொற்போரின் முறையாகும். முன்னுக்குப் பின்னாக வினாவுதல் முறையாகாது என்பதாம். முறையாகச் சொற்போர் நடத்துவதும் அவையறிதலேயாகும். முறை தவறிச் சொற்போர் நடத்துவோர் அவையோரால் வெறுக்கப் படுவர் என்பது கருத்து. (7) 34. அகல முடைய வறிவுடையார் நாப்பண் புகலரியார் புக்கவர் தாமே - இகலினால் வீண்சேர்ந்த புன்சொல் விளம்பல் அதுவன்றோ பாண்சேரிப் பற்கிளக்கு மாறு. (பழ) அகலம் உடைய அறிவுடையார் நாப்பண் - விரிந்த அறி வுடையார் நடுவிலே, புகழ் அரியார்புக்கு - புகுதற்குத் தகுதி யில்லாதார் புகுந்து, அவர் தாமே இகலினால் வீண் சேர்ந்த புன் சொல் விளம்பல் அது - அவர் தாமாகவே வலியப் பகையினால் பயனில்லாத புன் சொற்களைச் சொல்லு தலானது, பாண்சேரி பல்கிளக்கும் ஆறு அன்றோ - பாணர் சேரியில் இசையறி வில்லாத ஒருவன் புகுந்து, தான் பாடுவதாகப் பல் தோன்ற வாயைத் திறப்பது போலாகு மன்றோ? அகலம் - விரிவு. அகலமுடைய அறிவு - பேரறிவு, விரிந்த அறிவு. நாப்பண் - நடு. புகல் - புகுதல். புகலறியார் - புகத்தகாதவர் - அறிவிலார். இகல் - பகை. வீண் - பயனின்மை. வீண் சேர்ந்த - பயனில்லாத. பாண் - பாணர்; பாடுந் தொழிலையுடையார். இவர் இசைத்தமிழ் வகுப்பினர். பல்திறத்தல் - பல் தெரிய வாயைத் திறத்தல். கிளத்தல் - சொல்லுதல் - பாடுதல்; வாயைத் திறந்து பாடுதல். ‘பல்லைக் காட்டாதே’ என்னும் வழக்கை யறிக. பாட்டில் வல்ல பாணர் சேரியில் பாடத் தெரியாத ஒருவன் சென்று பாடத் தொடங்குவது எங்ஙனம் பயனற்ற தோ, அங்ஙனமே அறிவுடையார் அவையில் அறிவிலான் சென்று ஒன்றைப் பேசுவதும் பயனற்றதாகும் நன்றென்ற வற்றுள்ளு நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. (குறள்) அவையோர் விரும்பாமல், ஒருவன் பகையினால் தானாகவே வலியப் பயனில்லாத புன்சொல்லைச் சொல்லுதல் தகாது என்பது கருத்து. (8) 344. அல்லவையுட் டோன்றி யலவலைத்து வாழ்பவர் நல்லவையுட் புக்கிருந்து நாவடங்கக் - கல்வி அளவிறந்து மிக்கா ரறிவெள்ளிக் கூறல் மிளகுளு வுண்பான் புகல். (பழ) அல்லவையுள் தோன்றி அலவலைத்து வாழ்பவர் - நல்ல தல்லாத அவைக்கண் புகுந்து நாணங்கெட்டு வாழ்பவர், நல்லவை யுள் புக்கிருந்து - நல்லோர் கூடிய அவையின்கண் புகுந்திருந்து, நா அடங்க கல்வி அளவு இறந்து மிக்கார் - பிறர் நா அடங்கும்படி மிகுந்த கல்வி யறிவினையுடையாரது. அறிவு எள்ளிக் கூறல் - அறிவினை இகழ்ந்து கூறுதல், மிளகு உளு உண்பான் புகல் - மிளகினை உண்ணாமல் மிளகின் உளுவினை உண்ணப் புகுவத னோடொக்கும். அல்லவை - அறிவிலார் கூடிய கூட்டம். தோன்றி - புகுந்து, சென்று. அலவலைத்தல் - நாணங்கெடல். அளவு இறந்து - அளவு கடந்து - மிகவும் என்றபடி. கல்வி அள விறந்து மிகுதல் - மிகுந்த கல்வியறிவுடையராதல்; எள்ளி - இகழ்ந்து. உளு - புழு. உண்பான் - உண்ண; வினையெச்சம். மிளகு, ஏலக்காய், சாதிக்காய் முதலிய வற்றிலுள்ள புழுவை அறியாதுண்டவர் மயக்கமுற்று வருந்துவர்; இறத்தலுங் கூடுமென்பர். அறிவில்லார் கூட்டத்துட் கூடித் தகாதன பேசிப் பழகினவர், அறிஞர் அவையின்கண் சென்று, கல்வியறிவின் மிக்காரை இகழ்ந்து கூறுதல், மிளகை யுண்ணாது மிளகின் புழுவை உண்டார்போல் வருந்துவர் என்பதாம். மிளகை உண்பார் நோய் நீங்கி உடல் நலம் பெற்று இன்புறுதல் போல, அறிஞரின் அறிவைப் போற்றினால் அறியாமை நீங்கி அறிவைப் பெற்று இன்புறுவர்; மிளகின் புழுவை உண்பார் நோயுற்று வருந்துதல் போல, அறிஞரின் அறிவை இகழ்ந்தார் அவமதிப்புற்று வருந்துவர் என்பது, ‘மிளகுளு வுண்பான் புகல்’ என்னும் உவமை யால் கொள்ளப் படும். கற்றோர் அவையில் சென்று, கல்வியறிவு மிக்காரை இகழ்ந்து கூறுதல் தகாது என்பது கருத்து. ஆற்றி னிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்ன ரிழுக்கு. (குறள்) (9) 345. நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி, நன்றுணராப் புல்லவையுட் டம்மைப் புகழ்ந்துரைத்தல் - புல்லார் புடைத்தறுகண் ணஞ்சுவா னில்லுள்வில் லேற்றி இடைக்கலத் தெய்து விடல். (பழ) நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி - கற்றறிந்தவரவை யைக் கண்டால் ஒன்றும் பேசாமல் தம்முடைய நாவை மடக்கி, நன்று உணராப் புல்லவையுள் தம்மைப் புகழ்ந்து உரைத்தல் -நன்றறியாத புல்லறிவாளரவையில் தம்மைத் தாமே புகழ்ந்து பேசுதலானது, புல்லார் புடை தறுகண் அஞ்சுவான் - தன் பகைவரிடத்துள்ள அஞ்சாமையைக் கண்டஞ்சுவான் ஒருவன், வில் ஏற்றி இல்லுள் கலத்து இடை எய்து விடல் - வில்லை ஏற்றித் தன் வீட்டினுள் உள்ள சட்டிபானைகளின் மேல் அம்பை எய்வதனோடொக்கும். சுருட்டல் - மடக்கல். ‘பாயைச் சுருட்டு’ எனக் காண்க. நாச் சுருட்டல் - பேசாதிருத்தல். உணரா - உணராத - அறியாத. புல் அவை - அறிவிலார் கூடிய அவை. புல்லார் - பகைவர். புடை - இடம். புல்லார் புடை - பகைவரிடத்து. தறுகண் - அஞ்சாமை. எதிரியைக் கண்டஞ்சாமை; அதாவது வீரம். பகைவர் வீரம். இல் - வீடு கலத்து இடை - கலத்தின் கண். வில் - உண்டை வில்லுமாம். நல்லோ ரவையில் பேச அஞ்சி, புல்லார் அவையில் தம்மைப் புகழ்ந்துரைத்தலானது, பகைவருடைய வீரத்துக்கு அஞ்சுவா னொருவன் வீட்டில் உள்ள சட்டிபானைகள் மேல் அம் பெய்வத னோ டொக்கும் என்பதாம். “அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வி, பூத்தலிற் பூவாமை நன்று” என்றார் நீதிநெறி விளக்கத்தார். பகையகத்துப் பேடிகை யொள்வாள் அவையகத் தஞ்சு மவன்கற்ற நூல். (குறள்) (10) 346. நடலை யிலராகி நன்றுணரா ராய முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள் உடலா வொருவர்க் குறுதி யுரைத்தல் கடலுளால் மாவடித் தற்று. (பழ) நடலை இலராகி - மனத்தில் கவலை இல்லாதவராய், நன்று உணரார் ஆய - நன்மையை அறியாராகிய, முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள் - மனவலிமையுள்ள மூடர்கள் கூடியுள்ள அவையில், ஒருவற்கு உடலா உறுதி உரைத்தல் - ஒருவனுக்கு உடலாக உறுதிகளை உரைத்த லானது, கடலுள் மாவடித்தால் அற்று - கடலினுள்ளே மாங்கனியைப் பிழிந்தாற் போலும். நடலை - கவலை, கருத்து; கேட்டறிவதில் அக்கறை. முடலை - வலிமை. பெரியோர்கள் சொற்கேட்டு இளகாத மனவலிமை. முழுமக்கள் - மூடர்கள். மொய் கொள்ளுதல் - மொய்த்தல் - ஒன்று கூடுதல். ‘ஈ மொய்த்தல்’ எனக் காண்க. உடலா - உடலாக. அறிவாகிய உயிர்க்கு உடம்பு போல. உறுதி - உறுதிச் சொல் - பயனுடைய சொல். கடலுள் மாவடித்தால் அற்று என, ஆலைப் பிரித்துக் கூட்டுக. கேட்பதிற் கருத்திலராய், சொல்லும் நன்மையையும் அறி யாராகிய வலிய மனத்தையுடைய மூடர்கள் கூடியுள்ள கூட்டத்தில் இன்றியமையாத அறிவுரை கூறுதல் கடலுள் மாம்பழத்தைப் பிழிந்ததனோ டொக்கும். கேட்பதில் அக்கறையும் நன்மையை யறியுந் தன்மை யும் இல்லாத வலிய மனத்தையுடைய மூடர் என்க. கிண்ணத்தில் மாம்பழத்தைப் பிழிவது போல் நல்லோ ரவையில் அறிவுரை கூறினால் அது பயன்படும். கடலில் மாம் பழத்தைப் பிழிவது எவ்வாறு பயனற்றதோ அவ்வாறே மூடர் களுக்கு அறிவுரை கூறுதலும். பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால் நன்றறியா மாந்தர்க் கறத்தா ருரைத்தல் (நாலடி) ‘நுழையன் அறிவானா இரத்தினத்தின் பெருமையை’ - பழமொழி. (11) 347. அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார் அவையஞ்சா வாகுலச் சொல்லும் - நவையஞ்சி ஈத்துண்ணார் செல்வமு நல்கூர்ந்தார் இன்னலமும் பூத்தலிற் பூவாமை நன்று. (நீநெ) அவை அஞ்சி மெய் விதிர்ப்பார் கல்வியும் - கற்றோர் அவையைக் கண்டு அஞ்சி உடம்பு நடுங்குவோருடைய கல்வி யறிவும், கல்லார் அவை அஞ்சா ஆகுலச் சொல்லும் - கல்லா தவருடைய அவையைக்கண் டஞ்சாத ஆரவாரச் சொல்லும், நவை அஞ்சி ஈத்து உண்ணார் செல்வமும் - செல்வங் குறைதற்கு அஞ்சிக் கொடுத்துண்ணாதவர்கள் செல்வமும், நல்கூர்ந்தார் இன்னலமும் - வறியவருடைய கொடைக்குணமும், பூத்தலின் பூவாமை நன்று - உண்டாவதைவிட உண்டாகாமல் இருப்பதே நல்லது. விதிர்த்தல் - நடுங்குதல். கல்வி - கல்வியறிவு. ஆகுலம் - ஆர வாரம் - ஆடம்பரம். ஆகுலச் சொல்- ஆரவாரச் சொல் - வீண் பேச்சு. நவை - குற்றம். இங்கு குறைதல். ஈத்து - ஈந்து - வலித்தல் விகாரம். நல்கூர்ந்தார் - வறுமையுற்றார். இன்நலம் - கொடைக் குணம். பூத்தல் - உண்டாதல். கற்றோர் அவையைக் கண்டஞ்சுவோரின் கல்வியறிவும், கல்லாதவர் அஞ்சாமல் பேசும் ஆரவாரச் சொல்லும், ஈயார் செல்வமும், வறியவர் கொடைக்குணமும் பயனற்றவை என்பதாம். ஈயார் செல்வமும் வறியவர் கொடைக்குணமும் பயனற்றவை போல, அஞ்சுவார் கல்வியறிவும் கல்லார் ஆரவாரச் சொல்லும் பயனற்றவை என்றபடி. கற்றார் அவையைக் கண்டஞ்சக் கூடாது. கல்லார், கற்றாரவை யின்கண் சென்று வீண் பேச்சுப் பேசக் கூடாது என்பது கருத்து. கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். (குறள்) கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார். (குறள்) (12) 348. நெடும்பகற் கற்ற வவையத் துதவா துடைந்துளா ருட்குவருங் கல்வி - கடும்பகல் ஏதிலான் பாற்கண்ட வில்லினும் பொல்லாதே தீதென்று நீப்பரி தால். (நீநெ) நெடும் பகல் கற்ற - பல நாளாகக் கற்கப்பட்ட கருத்துக்கள், அவையத்து உதவாது உடைந்து உளார் உட்கு வரும் கல்வி - ஒரு கூட்டத்தில் பேசும்போது நினைவுக்கு வாராமல் தோல்வியுற்றவர் அஞ்சுதற்குக் காரணமான கல்வி யனாது, தீது என்று நீப்பு அரிதால் - கொடியது என்று மனத்தை விட்டு நீக்க முடியாமையால், கடும் பகல் ஏதிலான் பால் கண்ட - நண்பகலில் அயலானிடம் இருக்கக் கண்ட, இல்லினும் பொல்லாது - மனைவியை விடக் கொடிய தாகும். பகல் - நாள். நெடும் பகல் - இளமையிலிருந்து. கற்ற - கற்ற கருத்துக்கள். கற்றவை - வினையாலணையும் பெயர். உதவாமை - நினைவுக்கு வராமை. உடைந்துளார் - தோல்வி யுற்ற பேச்சாளர். உட்குதல் - அஞ்சுதல். ஏதிலான் - அயலான். பால் - இடம். இல் - மனைவி. பொல்லாது - கொடியது. நீப்பு - நீத்தல் - நீக்குதல். அரிது - முடியாது. கணவனுக்கு உதாவது அயலான்பால் சென்ற மனைவி யை விட. அவையில் பேசும் போது நினைவுக்கு வராத கல்வி கொடிய தாகும். ஏனெனில், உதவாத கெட்ட மனைவியைத் தீயவள் என்று நீக்கிவிடலாம். ஆனால், கல்வியை அவ்வாறு மனத்தி லிருந்து நீக்கி - அகற்ற - முடியாது. கற்ற கல்வியை அடிக்கடி நினைவு கூர்ந்து மறவாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு கூட்டத்தில் பேசும் போது அது பயன்படும். கற்றதை மறந்தவன் கல்வித் திறங் காட்டிப் பேச முடியாதாகையால் அவையோரால் இகழப் படுவான் என்பதாம். உதவாத மனைவியை யுடையவன் இகழப்படுதல் போல, உதவாத கல்வியாளனும் இகழப்படுவான் என்றபடி. பேச்சாளர்கள் பேச வேண்டிய செய்தியைத் தடை யின்றிக் கருத்துச் செறிவுடன் விளக்கமாகப் பேச வேண்டு மென்பது கருத்து. (13) 349. கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉம் குற்றந் தமதே பிறிதன்று - முற்றுணர்ந்து தாமவர் தன்மை யுணராதார் தம்முணரா ஏதிலரை நோவ தெவன். (நீநெ) தாம் கற்றன கல்லார் செவி மாட்டி - தாம் கற்றவற்றைக் கல்லாத மூடர்களுடைய காதில் நுழைப்பதனால், கை உறும் குற்றம் தமதே பிறிது அன்று - தம்மையடையும் குற்றம் தம் முடையதே வேறொருவருடையதன்று, முற்றும் உணர்ந்தும் அவர்தன்மை உணராதார் - எல்லாந் தெரிந்திருந்தும் அம் மூடர்களின் தன்மையை உணராதவர்கள், தம் உணரா ஏதிலரை நோவது எவன் - தம்மைக் கற்றவர்களென்று அறிந்துகொள்ளாத அம்மூடர்களை நொந்து கொள்வது ஏன்? செவிமாட்டால் - வலிந்து அறிவுறுத்துதல். மாட்டி - மாட்டுத லால். கையுறுதல் - அடைதல். பிறிது அன்று - அக் கல்லாதவருடைய தன்று. உணர்தல் - தெரிதல், அறிதல். அவர் - கல்லார். தம் உணரா - தம் கல்விச் சிறப்பைத் தெரிந்து கொள்ளாத. உணரா - உணராத. ஏதிலர் - அக்கல்லார். எவன் - ஏன் - என்கருதி என்றபடி. கல்வியின் சிறப்பை யறியாத கல்லாத மூடர்களிடம் ஒன்றை வலிய அறிவுறுத்தினால், அவர்கள் இகழ்வர். அக்குற்றம், அம் மூடர்களின் தன்மையை உணராமல் வலிய அறிவுறுத்திய பேச்சாள ரைச் சேருமே அல்லாமல் அம்மூடர் களைச் சேராது என்பதாம். மூடர்கள் கூடிய கூட்டத்தில் அவர்களுக்குப் புரியாத - விரும்பாத தொன்றை வற்புறுத்திக் கூறக் கூடாது. அவர்கள் அதனைக் கேளாததோடு இகழ்வர் என்பது கருத்து. ஒளியார்முன் ஒள்ளிய ராதல், வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல். (குறள்) (14) 350. கழறு மவையஞ்சான் கல்வி யினிது. (இனி) கழறும் அவை அஞ்சான் - பேசுகின்ற அவைக்கு அஞ்சாத வனுடைய, கல்வி இனிது - கல்வியானது நல்லது. கழறுதல் - சொல்லுதல், பேசுதல், அஞ்சுவோன் கற்ற கல்வியால் பயனில்லை யாகையால், ‘அஞ்சான் கல்வி இனிது’ என்றார். அவையைக் கண்டஞ்சாமல் கூற வேண்டியதை விளங்கக் கூறுவதே கல்வியறிவுடைமையாகும் என்பது கருத்து. உளரெனினு மில்லாரோ டொப்பார் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். (குறள்) (15) 351. கற்றார்முன் கல்வி யுரைத்தல் மிகவினிது. (இனி) கற்றார் முன் - கற்றார் கூடிய கூட்டத்தில், கல்வி உரைத்தல் மிக இனிது - ஒருவன் தான் கற்ற கல்வியை எடுத்துரைத்தல் மிகவும் நல்லது. இவன் கற்றவற்றிலுள்ள குற்றங்குறைகளை எடுத்துக் காட்டித் திருத்துவாராகையால், கற்றார் முன் கல்வி உரைத்தல் இனிதாயிற்று. கவியரங் கேற்றல், இசையரங் கேற்றல் இப்பயன் கருதியே யாகும். கற்றோரவையில் பேசிப்பழகினால் சிறந்த பேச்சாள ராகலாம் என்பதுங் கொள்க. கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச் சொற்றெரிதல் வல்லா ரகத்து. (குறள்) (16) 352. பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா. (இனி) பொருள் உணர்வார் இல்வழி - பாட்டின் பொருளை அறியும் அறிவுடையார் இல்லாத இடத்தில், பாட்டு உரைத்தல் இன்னா - பாட்டுக்களைச் சொல்லுதல் துன்பந் தரும். கல்வியறிவில்லார் கூடிய கூட்டத்தில் பேசும் போது பேச்சின் இடையே செய்யுட்களை எடுத்துக் காட்டிப் பேசினால், அச் செய்யுட்களின் பொருளை யறியாமையால் பேச்சை விரும்பிக் கேளார் ஆகையால், பேசுவோர்க்கு அது துன்பந் தருவதாயிற்று. இனிப் புதிய செய்யுள் செய்து அதன் பொருளைக் கூறுதல் எனினுமாம். பாட்டின் பொருளை அறியும் அறிவில் லாரிடத்துப் பாட்டைக் கூறுதல் பயனற்ற தென்பதாம். இருபொருளுங் கொள்க. (17) 353. சொற்செல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று. (முது) சொல் செல்லாவழி - தன் சொல் செல்லாத இடத்து, சொலவு நல்கூர்ந்தன்று - ஒன்றைச் சொல்லுதல் பயனற்ற தாகும். செல்லா - செல்லாத. வழி - இடம். நல்கூர்தல் - வறுமை யுறுதல். நல்கூர்ந்தன்று - வறுமையுடையது - பயனற்றது. சொல் செல்லாத இடம் - தன் சொல்லை ஏற்றுக்கொள்ளாத கூட்டம். தன்பேச்சைக் கேட்க விரும்பாத கூட்டத்தில் ஒருவன் பேசுதல் பயனற்றதாகும் என்பதாம். (18) 23. குறிப்பறிதல் அதாவது, ஒருவர் உள்ளக் கருத்தை அவர் கூறாமல் அறிதல். அதாவது, பிறர் மனக் குறிப்பை அவர் முகக்குறிப் பால் அறிதல். அவையினர் தன்மையை யறிந்து அதற்கேற்ப பேசுவோர்க்கு இஃது இன்றியமையாததாகும். 354. செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச் செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல் வயனிறையக் காய்க்கும் வளவய லூர! மகனறிவு தந்தை யறிவு. (நால) செந்நெல்லால் ஆய செழுமுளை - செந்நெற்களால் உண்டாகிய செழிப்பான முளைகள், மற்றும் அச்செந்நெல்லே ஆகி விளைதலால் - பின்னும் அச் செந்நெற் பயிர்களே ஆகி விளைதலினால், அந்நெல் வயல் நிறையக் காய்க்கும் வளவயல் ஊர - அத்தகைய செந்நெற் பயிர்கள் வயல்கள் நிறையும்படி விளைகின்ற செழிப்பையுடைய வயல்களால் சூழப்பட்ட ஊர்களை யுடையவனே, தந்தை அறிவு மகன் அறிவு - தந்தையினது அறிவே மகனது அறிவாகும். செந்நெல் - ஒருவகைச் சிறந்த நெல். இது ‘செஞ்சாலி’ எனப் படும். சாலி - நெல். வயலூர் - மருத நிலத்தூர். வயலூர - ஆடுஉ முன்னிலை. காய்த்தல் - விளைதல். வயல் நிறைய விளைதல் - ஒரு பிடி துஞ்சும் இடம் எழுகளிறு புரக்கும் நாடு (புறம்) என்றபடி, நிறைய விளைதல். ‘யானைகட்கும் தூறு வான மட்டும் போர் விழும்’ என்பது நாட்டுப்பாடல். நெல்லின் முளையினால் அந்த நெல்லே விளைவது போல, தந்தையின் குணமே மைந்தனுக்கும் அமையும் என்பது. தந்தை நற்குண முடையவனாயிருந்தால் அவன் மைந்தனுக்கும் அவ்வாறே நற்குணம் உண்டாகும் என்பதாம். தந்தையினது அறிவே மைந்தனது அறிவு என்று எண்ணி யறியப்படும் என்றபடி. ‘மகனுரைக்குந் தந்தை நலத்தை’ எனபது நோக்கத் தக்கது. இது ஒரு வகைக் குறிப்பறிதல். பெற்றோரின் பழக்க வழக்கங்களைக் கொண்டு அவர் தம் மக்களும் அவ்வாறே தான் இருப்பர் என்று எண்ணியறிதல் இன்றும் உண்டு. ‘தாயைத் தண்ணீர்த் தடத்தில் பார்த்தால் பிள்ளையைப் பார்க்க வேண்டியதில்லை’ - பழமொழி. இச்செய்யுளின் ஈற்றடி, ‘நோக்கி யறிகில்லா’ என்னும் பழமொழிச் செய்யுளின் ஈற்றடியாக அமைந்துள்ளது. (1) 355. பேருலையுட் பெய்த அரிசியை வெந்தமை ஓர்மூழை யாலே யுணர்ந்தாங் கியார்கண்ணும் கண்டதனால் காண்டலே வேண்டுமாம்; யார்கண்ணும் கண்டது காரணமா மாறு. (பழ) பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமை - கொதிக் கின்ற பெரிய உலையில் போட்ட அரிசி வெந்து விட்டதா என்பதை, ஓர் மூழையாலே உணர்ந்தாங்கு - ஓர் அகப்பை அரிசியால் அறிந்தவாறு போல, யார்கண்ணும் கண்டது காரணம் ஆமாறு - யாரிடத்தும் காணப்பட்ட குணமே காணாத குணங்களை அறிவதற்குக் காரண மாம். (ஆதலால்), யார் கண்ணும் கண்டதனால் காண்டல் வேண்டும் - யாரிடத்தும் கண்ட குணத்தைக் கொண்டே அவரிடமுள்ள மற்ற குணங் களையும் அறிய வேண்டும். உலை - உலைநீர். பெய்தல் - இடுதல். மூழை - அகப்பை. கண்டது - வெளிப்படையாகக் காணப்படும் குணம். அதாவது கண்ட குணம். உணர்ந்தாங்கு யார் - உணர்ந்தாங்கி யார்- குற்றிய லிகரம். உலையில் போட்ட அரிசி வெந்து விட்டதா என்பதை, அகப்பையால் கொஞ்சம் அரிசியை எடுத்துப் பதம் பார்க்கி றோம். அந்தக் கொஞ்சம் அரிசி வெந்ததைக் கொண்டே உலையில் உள்ள மற்ற அரிசியும் வெந்திருக்கும் என்று குறிப்பால் அறிந்து கொள் கிறோம். ‘ஒரு பானை சோற்றுக்கு ஓரரிசி பதம்’ என்பது பழமொழி. மூழை என்பது, மூழையால் எடுத்துப் பார்க்கும் அரிசியைக் குறித்தது. உலையிலுள்ள அரிசி வெந்தமையைச் சில அரிசியால் அறிவதுபோல, ஒருவனுடைய குணங்களை அவரிடம் கண்ட ஒரு குணத்தால் அறியலாம் என்பதாம். யாரிடத்தும் காணப்பட்ட குணமே காணாத குணங் களுக்குக் காரணமாதலால், ஒருவரிடம் கண்ட குணத்தைக் கொண்டு அவரிடமுள்ள மற்றைக் குணங்களையும் அறிய வேண்டும் என்றபடி. குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண். (குறள்) (2) 356. வெள்ளம் வருங்காலை ஈரம்பட் டஃதேபோல் கள்ள முடையாரைக் கண்டே யறியலாம்; ஒள்ளமர் கண்ணாய்! ஒளிப்பினும் உள்ளம் படர்ந்ததே கூறு முகம். (பழ) ஒள் அமர் கண்ணாய் - ஒளி பொருந்திய கண்ணை யுடை யவளே, வெள்ளம் வருங்காலை ஈரம்பட்டு அஃதே போல் - வெள்ளம் வருகிற காலத்தில் ஆற்று மணலில் ஈரம் உண்டாவதைக் கொண்டு வெள்ளம் வரப்போகிறதென்று அறிவது போல, கள்ளம் உடையாரைக் கண்டே அறியலாம் - வஞ்சக எண்ணம் உடைய வரை முகத்தைக் கொண்டே அவ்வெண்ணத்தை அறிதல் கூடும் - (எங்ஙனமெனில்), ஒளிப்பினும் உள்ளம் படர்ந்ததே முகம் கூறும் - ஒருவர் தம் கருத்தை வெளிக்குத் தோன்றாமல் மறைப்பா ராயினும் அவர் மனத்தில் நினைப்பதையே அவர் முகம் வெளிப் படுத்தும். படுதல் - உண்டாதல். கள்ளம் - வஞ்சனை. ஒள் - ஒளி. அமர்தல் - பொருந்துதல். படர்தல் - நினைத்தல். கண்ணாய் - மகடூஉ முன்னிலை. வெள்ளம் வருமுன் ஆற்று மணலில் ஈரம் உண்டாகும். காய்ந்த மணலில் ஈரம் உண்டானால் வெள்ளம் வருகிற தென்பதை அறிந்து கொள்ளலாம். அதுபோல, ஒருவர் முகக் குறிப்பைக் கொண்டே மனத்தில்உள்ள வஞ்சனையை அறிந்து கொள்ளலாம். அவர் மறைத்தாலும் அவர் முகம் வெளிப்படுத்திவிடும். ஒருவர் தம் உள்ளக் கருத்தை மறைத்தாலும் முகம் வெளிப் படுத்துமாதலான், ஒருவர் முகக் குறிப்பைக் கொண்டே அகக் குறிப்பை அறிந்து கொள்ளலாமென்பது கருத்து. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். (குறள்) முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினுந் தான்முந் துறும். (குறள்) (3) 357. நோக்கி யறிகல்லாத் தம்முறுப்புக் கண்ணாடி நோக்கி யறிப; அதுவேபோல் - நோக்கி முகமறிவார் முன்ன மறிப வதுவே மகனறிவு தந்தை யறிவு. (பழ) நோக்கி அறகல்லாத் தம் உறுப்பு - தம் கண்ணால் பார்த்து அறிய முடியாத தம் உறுப்பாகிய முகத்தை, கண்ணாடி நோக்கி அறிப - கண்ணாடியில் பார்த்து அறிவர்; அதுவே போல் - அது போலவே, முகம் நோக்கி அறிவார் முன்னம் அறிவார் - ஒருவர் முகத்தை நோக்கி அறிவார் அவர் கருத்தை யறிவார், அது மகன் அறிவு தந்தை அறிவு - அத்தன்மை மகனறிவு அவன் தந்தையின் அறிவு போன்றிருக்கும். அறிகல்லா - அறியமுடியாத. முன்னம் - கருத்து. அறிய இரண்டும் - உயர்திணைப் பலர்பால் வினைமுற்று. மகனறிவை அறிதற்கு அவன் தந்தை யறிவை யறிவது போதும். அதுபோல, ஒருவர் மனக்குறிப்பை அறிதற்கு அவர் முகக் குறிப்பை அறிவது போதும். கண்ணாடி முகத்தைக் காட்டுவது போல, முகம் அகத்தைக் காட்டும் என்பதாம். அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் (குறள்) ‘செந்நெல்லா லாய, என்னும் நாலடியாரில், இப்பழ மொழியின் ஈற்றடி அப்படியே வந்திருத்தலை அறிக. (4) 358. அகம்பொதிந்த தீமை மன முரைக்கும், முன்னம் முகம்போல முன்னுரைப்ப தில். (நான்) அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும் - மனத்தின் கண் தங்கிய தீமைகளை அவன் மனமே அவனுக்கு அறிவிக்கும், முன்னம் - ஒருவன் உள்ளக் குறிப்பை, முகம் போல முன் உரைப்பது இல் - அவன் முகத்தைப் போல முற்படத் தெரிவிப்பது வேறொன்று மில்லை. அகம் - மனம். பொதிதல் - தங்குதல், நிறைதல். முன்னம் - குறிப்பு. முன் - முதலில். ஒருவன் நெஞ்சில் உள்ள தீமையை அவன் நெஞ்சமே அவனுக்கு அறிவிக்கும். அவ்வாறே உள்ளக் குறிப்பை - மனங் கருதியதை - முகம் அறிவித்துவிடும். தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னஞ்சே தன்னைச் சுடும். (குறள்) முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினுந் தான்முந் துறும். (குறள்) என்பதால், ‘அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும்’ என்றார். ஒருவர் முகக் குறிப்பைக் கொண்டு அவர் அகக் குறிப்பை அறிய வேண்டும் என்பது. (5) 24. சொல்வன்மை அதாவது பேச்சு வன்மை, பேச்சுத் திறமை, அவை யறிந்து, அவையோர் குறிப்பறிந்து பேசினும் பேச்சுவன்மை இருந்தால் தான் கேட்போர் விரும்பிக் கேட்பர்; பேசுவோர் பேச்சின் பயன் கொள்ளமுடியும். இது ஒரு தனிக்கலை. எவ்வளவு கல்வியறி வுடையரேனும் பேச்சு வன்மை இக்காலத்திற்கு மிகமிக இன்றிமை யாததாகும். திருக்குறள் சொல்வன்மை என்னும் அதிகாரம் பார்க்க. 359. விரைந்துரையார் மேன்மே லுரையார்பொய் யாய பரந்துரையார் பாரித் துரையார் - ஒருங்கெனைத்தும் சில்லெழுத்தி னாலே பொருளடங்கக் காலத்தால் சொல்லுக செவ்வி யறிந்து. (ஆசா) விரைந்து உரையார் - விரைவாகச் சொல்லார், மேன் மேல் உரையார் - சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லார், பொய்யாய பரந்து உரையார் - பொய்யாய சொற்களை மிகுதி யாகச் சொல்லார், பாரித்து உரையார் - சொல்வதை மிகுதியாக விரித்துச் சொல்லார், சில் எழுத்தினாலே பொருள் ஒருங் கெனைத்தும் அடங்க - சுருக்க மாகப் பொருள் முழுவதும் விளங்கும்படி, காலத்தால் செவ்வி அறிந்து சொல்லுக - காலத்தோடு பொருந்த கேட்பவர் விருப்ப மறிந்து சொல்லுக. விரைவு - அவசரம். பரந்து - மிகுதியாக. பாரித்து உரைத்தல் - மிக விரித்துரைத்தல்: அளவுக்கு மீறி விரித்துக் கூறுதல். ஒருங்கு எனைத்தும் - முழுவதும் - ஒரு பொருள். சில் எழுத்தில் - சில எழுத்தில் - சுருக்கமாக. காலம் - சொல்லத்தக்க காலம். செவ்வி - ஏற்ற பொழுது, அதாவது விரும்பிக் கேட்கும்போது. அவசரமில்லாமல் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லாமல், பொய்யை மிகுதியாகக் கலந்து பேசாமல், பேச வேண்டிய அளவுக்கு மேல் பேசாமல் பொருள் முழுதும் விளங்கும் படி சுருக்கமாகக் காலத்தையும் பொழுதையும் அறிந்து பேசுவதே சொல்வன்மை யாகும் என்பதாம். விரைந்து பேசினால் கேட்போர்க்கு விளங்காது. சொன்ன தையே திருப்பித் திருப்பிச் சொன்னால் கேட்பவர் வெறுப்பர். பொய்யை விரும்பிக் கேளார். செய்தி விளக்கத்துக்குத் தேவை யில்லாதவற்றைக் கேட்கின் அலுப்புத் தட்டும். சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச் செவ்வ னாடியிற் செறித்தினிது விளக்கும் (நன்னூல்) பலசொல்லக்க காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர். (குறள்) சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது அழ காகும். (1) 360. எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந் துய்த்துணர் வில்லெனி னில்லாகும் - உய்த்துணர்ந்தும் சொல்வன்மை யின்றெனி னென்னா மஃதுண்டேல் பொன்மலர் நாற்ற முடைத்து. (நீநெ) கல்வி, எத்துணைய ஆயினும் - கற்ற கல்வி எவ்வளவு பெரிதே யாயினும், இடம் அறிந்து உய்த்து உணர்வு இல் எனின் இல்லாகும் - நூலின் இடம் தெரிந்து ஆராய்ந்து உணரும் அறிவு இல்லையானால் அக்கல்வி பயனற்றதாகும்; உய்த்தும் உணர்ந்தும் சொல்வன்மை இன்று எனின் என்னாம் - அங்ஙனம் ஆராய்ந்தாலும் பிறர்க்கு எடுத்துரைக்கும் வல்லமை யில்லை யானால் அக்கல்வியால் என்ன பயன் உண்டு, அஃது உண்டேல் பொன்மலர் நாற்றம் உடைத்து - அச்சொல் வன்மையிருக்குமானால் அது பொன்னாற் செய்யப் பட்ட மலர் மணம் வீசுவது போலாம். துணை - அளவு. இடம் - நூலில் அக்கருத்து வந்துள்ள இடம். உய்த்து உணர்தல் - அராய்ந்தறிதல். இடம் அறிந்து உய்த்து உணர்தல் - இடத்திற்கேற்றவாறு கருத்துக் கொள்ளுதல். இனி, பேசும் இடத்தை அறிந்து, பேசும் பேச்சை ஆராய்ந்து அறியும் அறிவு இல்லையானால் அக்கல்வி பயனற்றதாகும் எனச் சொல்வன்மைக் கேற்பப் பொருளுரைத்தலுமாம். ‘இடமறிந்து’ என்பதை, நூலின் இடம், பேசும் இடம் இரட்டுற மொழி தலாகவே கொள்க. இடமறிந்து உய்த்துணர்தலும், சொல்வன்மையும் இல்லை யானால் ஒருவன் கற்ற கல்வியால் பயனில்லை என்பதாம். ‘என்னாம்’ என்பது - படித்தும் பயனில்லை என்பதாம். கற்றவனுக்குப் பொன்னும், கல்விக்குப் பொன்மலரும், சொல் வன்மைக்கு மணமும் உவமையாம். மலர் வாடும், பொன்மலர் வாடாது. அதுபோல, கல்வி அழியாது. மலரினும் பொன் சிறந்தது. மணமும் உண்டேல் அதன் பெருமையைச் சொல்ல வா வேண்டும்? அவ்வாறே, கல்வியினும் உய்த்துணர்வு சிறந்தது. அதோடு சொல் வன்மையும் உண்டேல் அதன் பெருமையைச் சொல்லவா வேண்டும்? பொன்மலர் நாற்றம் - இல் பொருளுவமை. அஃது என்னும் ஆய்தம் அலகு பெற்றது. இணரூழ்ந்து நாறா மலரனையர் கற்ற துணர விரித்துரையா தார். (குறள்) விரைந்து தொழில்கேட்கு ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். (குறள்) (2) 361. சொல்வன்மை யுண்டெனிற் கொன்னே விடுத்தொழிதல் நல்வினை கோறலின் வேறல்ல - வல்லைத்தம் ஆக்கங் கெடுவ துளதெனினும் அஞ்சுபவோ வாக்கின் பயன்கொள் பவர். (நீநெ) சொல்வன்மை உண்டெனில் கொன்னே விடுத்து ஒழிதல் - ஒருவர்க்குச் சொல்வன்மை வாய்த்திருக்கின் அதைப் பயன் படுத்தாது வீணாகக்கைவிடுதல், நல்வினை கோறலின் வேறு அல்ல - நற்காரி யங்களைக் கெடுத்தலினும் வேறாகா, வாக்கின் பயன் கொள்பவர் - சொல்வன்மையால் பெறப் படும் பயனை அறிந்தோர், வல்லை தம் ஆக்கம் கெடுவது உளது எனினும் அஞ்சுபவோ - அதனால் விரைவில் தமது பொருளெல்லாம் கெட்டொழியுமாயினும் அதற்காகப் பேச அஞ்சுவார்களோ? ஒரு போதும் அஞ்சார். கொன்னே - வீணாக, விடுத்தொழிதல் - பேசாதிருத்தல். நல் வினை - அறச்செயல், கோறல் - கொல்தல் - கொல்லுதல் - கெடுத்தல். வல்லை - விரைவாக. ஆக்கம் - செல்வம். வாக்கு - சொல்வன்மை. பேச்சுத் திறம் எல்லோர்க்கும் எளிதில் வாய்த்தல் அரிது. அது கவித்திறம் போன்றது. எல்லோர்க்கும் எளிதில் கவி பாடும் ஆற்றல் அமையாதல்லவா? அவ்வாறே சொல் வன்மையும் அமையாது. சொல்வன்மை வாய்க்கின் அதைப் பயன்படுத்தாதது, பொது மக்கட்குப் பயன்படும்படி செய்யா திருத்தல் - பேசா திருத்தல் - அறங்களைக் கெடுப்பதனோ டொக்கும். ஒருவனுக்குப் பொருள் வாய்க்கப் பெற்றும் அப்பொருளைக் கொண்டு அவன் அறஞ் செய்யாதிருத்தல் எப்படி அறத்தைக் கெடுப்பது போன்றதோ அப்படியே பேச்சுவன்மையிருந்தும் பேசாதொழிதல். அவ்வாறு பேசுவதால் விரைவில் தமது செல்வம் முழுதும் அழிந்தொழியும் எனினும், சொல்வன்மையாற் பெறப்படும் பயனையறிந்தோர் பேசுதற்கு அஞ்சமாட்டார்; பேசிப் பேச்சின் பயனையடைவர் என்பதாம். பேச்சின் பயன் - கேட்போர் அறிவு பெறுதலும், தாம் புகழ் பெறுதலுமாம். பொருள் பெறுதலுங் கொள்க. இன்று பேச்சாளர்கள் கல்லடியும் சொல்லடியும் பட்டுங் கூட அச்சொல்வன்மையின் பயனை அறிந்த தனாலன்றோ தமது பேச்சைக் கைவிடாது பேசி வருகின்றனர்? இதுவே, வாக்கின் பயன் கொள்வோர் அஞ்சாமைக்குச் சான்றாகும். தனக்கு வரும் இடையூறுகளைப் பொருட்படுத்தாது பேச வேண்டும். பேச்சுத் திறமை வாய்க்கப் பெற்றும் பேசா திருத்தல் முறையன்று என்பது கருத்து. நாநல மென்னு நலனுடைமை யந்நலம் யாநலத் துள்ளதூஉ மன்று. (குறள்) (3) 362. சிறந்தமைந்த கேள்விய ராயினு மாராய்ந் தறிந்துரைத்த லாற்ற லினிது. (இனி) சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும் - மிக நிறைந்த நூற் கேள்வி யறிவினையுடையரானாலும், ஆராய்ந்து அறிந்து உரைத்தல் ஆற்ற இனிது - ஆராய்ந்தறிந்தே ஒன்றைச் சொல்லு தல் மிகவும் நல்லது. சிறந்த கல்வியறிவுடையரேனும் சொல்ல வேண்டிய தை நன்கு ஆராய்ந்து பார்த்தே சொல்லவேண்டும் என்பதாகும். அவ்வாறு சொல்வதே சொல்வன்மையாகும் என்பது கருத்து. அறியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை யரிதே வெளிறு. (குறள்) எனக் கல்வி கேள்விகளிற் சிறந்தாரிடத்தும் ஆராயுங்கால் அறியாமை யுளதாகலின், ‘ஆராய்ந்தறிந்துரைத்தல் இனிது’ என்றார். (4) 363. சொல்லுங்காற் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பினிது. (இனி) சொல்லுங்கால் - ஒரு கூட்டத்தில் பேசும்போது, சோர்வு இன்றிச் சொல்லுதல் - மறதியில்லாமல் சொல்லுதல், மாண்பு இனிது - மிகவும் நல்லது. சோர்வு - மறதி. பேசும்போது, பேசவேண்டியதொன்றையும் மறவாமல் பேசவேண்டும் என்பதாம். இனிச் சோர்வு - குற்றம் எனின், சொற்குற்றம் பொருட் குற்றம் இல்லாமல் பேசுதல் மிகவும் நல்லது என்க. (5) 364. கல்விக் கழகு கசடற மொழிதல் (வெற்) கசடு - குற்றம். கசடுஅற - குற்றம் நீங்க - குற்றம் இல்லாமல். குற்றம் இல்லாமல் பேசுதலே ஒருவன் கற்ற கல்விக்கு அழகாகும். (6) 365. பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே. (வெற்) பொய்யுடை ஒருவன் - பொய்பேசும் ஒருவன், சொல் வன்மையினால் - அவனது பேச்சுத்திறமையால், மெய்போலும் மெய்போலும் - அப்பொய் மெய்போலவே தோன்றும். சொல்வன்மை யுடையவன் பொய்யையும் மெய்யென நம்பும்படி பேசுவான் என்பதாம். மெய்போலும் மெய் போலும் என்னும் அடுக்குத் தெளிவு குறித்தது. (7) 366. மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையால் பொய்போ லும்மே பொய்போ லும்மே. (வெற்) மெய்யுடை ஒருவன் - உண்மை பேசும் ஒருவன், சொல மாட்டாமையால் - சொல்வன்மை யின்மையான், பொய் போலும் பொய்போலும் - அவ்வுண்மை பொய்போலவே தோன்றும். சொல்வன்மையில்லாதவன் பேசும் மெய்யும் பொய் யாகவே தோன்றும். பொய்போலும் என்னும் அடுக்குத் தெளிவு குறித்தது. (8) 367. சொற்சோர்வு படேல் (ஆத்) பேசும்போது பேசவேண்டியதை மறவாமல் பேச வேண்டும்; சோர்வுபடக் கூடாது. (9) 368. பிழைபடச் சொல்லேல். (ஆத்) பிழைபட - குற்ற முண்டாகும்படி, சொல்லேல் - பேசாதே. கூட்டத்தில் பேசும்போது குற்றமில்லாமல் பேச வேண்டும். ஒருவரிடம் பேசும்போதும் குற்றமில்லாமல் பேசுதல் வேண்டும். (10) 369. மிகைபடச் சொல்லேல். (ஆத்) மிகைபட - செய்தியை விளக்கும் சொற்கள் சுருங் காமல் அதிகமாக விரியும்படி, சொல்லேல் - நீ பேசாதே. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கவேண்டும். (11) 370. மொழிவ தறமொழி. (ஆத்) மொழிவது - பேசப்படும் பொருளை, அறமொழி - ஐயுறவு நீங்கும்படி சொல். கேட்போர்க்கு ஐயந்தோன்றாதபடி தெளிவாகப் பேச வேண்டும். (12) 25. நட்பு நட்பின் தன்மை. 371. பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும் - வரிசையால் வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே தானே சிறியார் தொடர்பு. (நால) பெரியவர் கேண்மை - பெரியோர்களது நட்பு, பிறை போல நாளும் வரிசை வரிசையா நந்தும் - இளம் பிறை போல நாடோறும் முறையே வளரும், சிறியார் தொடர்பு - சிறியவர் களது நட்போ, வான் ஊர் மதியம் போல் - வானின்கண் செல்லும் முழுமதிபோல, வைகலும் வரிசையால் தானே தேயும் - நாடோறும் முறையாகத் தானாகவே குறைந்துவிடும். கேண்மை - நட்பு. பிறை - உவாவுக்குப் பின்னுள்ள பிறைத் திங்கள். உவா - அமாவாசை. வரிசையா - வரிசையாக - முறையாக. நந்துதல் - வளர்தல். ஊர்தல் - செல்லுதல். வைகல் - நாள். தொடர்பு - நட்பு. அறிவுடையார் தமக்குட் கொண்ட நட்பானது உவாவுக்குப் பின் பிறைத்திங்கள் நாடோறும் வளர்வது போல வளர்ந்து கொண்டே போகும். அறிவிலார் தமக்குட் கொண்ட நட்போவெனில், மதியத் திற்குப் பின் திங்கள் தேய்வது போலத் தேய்ந்து கொண்டே போய் முடிவில் நட்பே இல்லாமல் போய்விடும் என்பதாம். இவ்வாறு பெரியோர்கள் நட்பு வளர்வதற்கும், சிறி யோர்கள் நட்புத் தேய்வதற்கும் அறிவுடைமையும் அறி வின்மையுமே காரணமாகும். நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு (குறள்) (1) 372. கனைகடற் றண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை நுனியிற் கரும்புதின் றற்றே - நுனிநீக்கித் தூதிற்றின் றன்ன தகைத்தரோ பண்பிலா ஈரமி லாளர் தொடர்பு. (நால) கனை கடல் தண் சேர்ப்ப - ஒலிக்கின்ற கடலினது குளிர்ச்சி யான துறையை யுடையவனே, கற்று அறிந்தார் கேண்மை - கற்றறிந்தவர்களுடைய நட்பானது, நுனியில் கரும்பு தின்று அற்று - கரும்பை நுனியிலிருந்து அடிவரை தின்றாற் போலப் போகப் போக இனிக்கும் தன்மை யுடையது, பண்பு இலா ஈரம் இலாளர் தொடர்பு - அக்கல்வி யறிவாகிய குணமும் அன்பும் இல்லாதவர்களுடைய நட்பானது. நுனி நீக்கி தூரின் தின்று அன்னதகைத்து - அக்கரும்பை நுனியிலிருந்து தின்னுதலை ஒழித்து அடியிலிருந்து நுனி வரை தின்றாற் போலப் போகப் போக இனிமை குறையுந் தன்மை யையுடையது. சேர்ப்ப - ஆடூஉ முன்னிலை. கனைத்தல் - ஒலித்தல். தண்மை - குளிர்ச்சி. சேர்ப்பு - கடற்கரை, துறை. கேண்மை - நட்பு. அற்று - அத்தன்மையது. தூர் - அடி. அன்ன - போன்ற. தகைத்து - தன்மையை யுடையது. அரோ - அசை. பண்பு - குணம். இலா - இல்லாத. ஈரம் - அன்பு. பண்பும் அன்பும் இல்லாதவர். தொடர்பு - நட்பு. இனித்தல் - இன்பந் தருதல். கரும்பை நுனியிலிருந்து அடிவரை தின்பது போல அறிவு டையார் கொண்ட நட்புப் போகப் போக இன்பந் தரும். கரும்பை அடியிலிருந்து நுனி வரை தின்பது போல அறிவிலார் கொண்ட நட்புப் போகப் போக இன்பங் குறையும் என்பதாம். (2) 373. கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றும் குருத்திற் கரும்புதின் றற்றே - குருத்திற் கெதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ வென்றும் மதுரமி லாளர் தொடர்பு. (நால) கருத்து உணர்ந்து கற்றறிந்தார் கேண்மை - நூல்களின் உட் பொருளை அறிந்து கற்றுத் தெரிந்தவர்களது நட்பு. எஞ்ஞான்றும் குருத்தின் கரும்பு தின்று அற்று - எப்பொழுதும் கரும்பை நுனியி லிருந்து அடிவரை தின்றாற் போலப் போகப் போக இன்பந் தரும்; மதுரம் இலாளர் தொடர்பு - கல்வியறி வாகிய இனிய தன்மை யில்லாதவர்களுடைய நட்பு, என்றும் குருத்திற்கு எதிர் செலத் தின்று அன்ன தகைத்து - எப்போதும் கரும்பை அடியிலிருந்து நுனிவரை தின்றாற் போலப் போகப் போக இனிமை குறையுந் தன்மையை யுடையது. ‘கனைகடற் றண்சேர்ப்ப’ என்ற முன்னைய பாட்டின் கருத்து டையதே இப்பாட்டும். அதன் விளக்கமே இதற்கும் கொள்க. கருத்து - பாட்டின் கருத்து, உட்பொருள். எஞ்ஞான்றும் - எப்போதும். குருத்து - நுனி. குருத்திற்கு எதிர் செல - குருத்திற்கு எதிர்ப் பக்கத்திலிருந்து குருத்துப் பக்கம் செல்லும்படி; அதாவது அடியிலிருந்து குருத்துவரை. அரோ - அசை. மதுரம் - இனிமை, இனியதன்மை. (3) 374. நளிகடற் றண்சேர்ப்ப நாணிழற் போல விளியுஞ் சிறியவர் கேண்மை - விளிவின்றி அல்கு நிழல்போ லகன்றகன் றோடுமே தொல்புக ழாளர் தொடர்பு. (நால) நளி கடல் தண் சேர்ப்ப - பெரிய கடலினது குளிர்ந்த துறையை யுடையவனே, சிறியவர் கேண்மை - கீழ் மக்களது நட்பு, நாள் நிழல் போல விளியும் - காலை நிழல் போல வர வரச் சுருங்கும், தொல்புகழ் ஆளர் தொடர்பு - தொன்று தொட்ட புகழையுடைய பெரியோர்களது நட்பு, விளிவு இன்றி - அங்ஙனம் சுருங்குதலில்லாமல், அல்கு நிழல் போல் அகன்று அகன்று ஓடும் - சாயுங்காலத்து நிழல் போல மிகவும் நீண்டு வளரும். நளி - பெரிய. நாள் - காலை -முற்பகல். விளிதல் - சுருங்குதல், கெடுதல், அல்கு - மாலைப் பொழுது - சாயுங் காலம். அகன்று அகன்று - மிக அகன்று. ஓடும் - நீளும். தொல் புகழ் - பழமையான புகழ், தொன்றுதொட்ட புகழ். சேர்ப்ப - ஆடூஉ முன்னிலை. காலை நிழல் வர வரச் சுருங்குவது போலச் சிறியவர் நட்பு வரவரச் சுருங்கும். மாலை நிழல் பெருகுவதுபோலப் பெரியவர் நட்பு மிகவும் பெருகும். எனவே, பெரியோர் நட்பைக் கொள்க, சிறியோர் நட்பைக் கொள்ளற்க என்ற படி. (4) 375. நறுமலர்த் தண்கோதாய் நட்டார்க்கு நட்டார் மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ - இறுமளவும் இன்புறுவ வின்புற் றெழீஇ யவரோடு துன்புறுவ துன்புறாக் கால். (நால) நறுமலர் தண் கோதாய் - மணமுள்ள மலர்களால் தொடுத்த குளிர்ந்த மாலையை யுடையவளே, நட்டார்க்கு நட்டார் - நண்பர்கள் ஒருவருக் கொருவர், இறும் அளவும் - இறக்கும் வரையிலும், அவரோடு இன்புறுவ இன்புற்று எழீஇ - தம் நண்பர் களுடனே இன்பமடையத் தக்கவற்றிற்கு இன்ப மடைந்து, துன்புறுவ துன்புறாக்கால் - துன்பமடையத் தக்கவற் றிற்குத் துன்பமடையா விட்டால், மறுமையும் செய்வது ஒன்று உண்டோ - இறந்தபின் செய்வதோர் உதவி ஒன்றுண்டோ? இல்லை யென்றபடி. நறுமை - மணம். கோதை - மாலை; மயிர் என்றுமாம். கோதாய் - மகடூஉ முன்னிலை. நட்டார் - நண்பர். மறுமை - இறந்தபின். இறுதல் - இறத்தல். இன்புறுவ - இன்புறத் தக்கவற்றிற்கு. இன்புற்று எழீஇ - இன்புற்று. எழீஇ - எழுந்து - மிக்கு என்றபடி. எழீஇ - சொல்லிசையளபெடை. துன்புறுவ - துன்புறத் தக்கவற்றிற்கு. நண்பர்கள் ஒருவருக்கொருவர் சாகுமளவும் தம் நண்பர் இன்புறும் போது தாமும் இன்புற்று, தம் நண்பர் துன்புறும் போது தாமும் துன்புற்று - அதாவது இன்ப துன்பங்களிற் பங்கு கொண்டு - வாழ வேண்டும். இதுவே நட்புத் தன்மை யாகும். இங்ஙனம் ஒழுகாவிட்டால் அந்நட்பினால் பயனி ல்லை என்பதாம். ‘உடுக்கை இழந்தவன் கை போலத் தம் நண்பர்க்குற்ற இடுக்கண் களைந்து’ இன்புறச் செய்து வாழ்வதே நட்புரிமை யாகு மன்றி, இடுக்கண் களையாது, அவ்விடுக்கணுள் வருந்தி இறந் தொழியும்படி செய்வது நட்புரிமை யாகாது என்பார், ‘மறுமையும் செய்வதொன் றுண்டோ’ என்றார். ‘மறுமையும்’ என்ற இறந்தது தழுவிய இழிவு சிறப்பு ம்மை, ஒருவன் உயிரோடிருந்தபோ தெல்லாம் உதவாமல் அவன் இறந்த பின்பு உதவுவதென் என்பது குறித்தது. (5) 376. இனியார்தந் நெஞ்சத்து நோயுரைப்ப வந்நோய் தணியாத வுள்ள முடையார் - மணிவரன்றி வீழு மருவி விறன்மலை நன்னாட வாழ்வின் வரைபாய்த னன்று. (நால) மணிவரன்றி வீழும் விறல் மலை நல்நாட - மணிகளை வாரிக் கொண்டு விழுகின்ற அருவிகளையுடைய சிறந்த மலை களையுடைய நல்ல நாட்டையுடையவனே, இனியார் தம் நெஞ்சத்து நோய் உரைப்ப - நண்பர்கள் தமது மனத் திலுள்ள வருத்தத்தை எடுத்துக் கூறிய பிறகும், அந்நோய் தணியாத உள்ளம் உடையார் - அந்த வருத்தத்தை நீக்க முற்படாத வலிய மனமுடையவர்கள், வாழ்வின் வரை பாய்தல் நன்று - உயிர் வாழ்வதைக் காட்டிலும் மலையின் மீது ஏறி விழுந்து உயிர் விடுதல் நல்லது. இனியார் - நண்பர். நோய் - வருத்தம். தணியாத - தீர்க்காத. உள்ளம் - மனம். மணி- வைரம் முதலிய மணிகள். வரன்றுதல் - வாருதல். விறல் - சிறப்பு; அதாவது பல்வகை வளமும் நிறைந் திருத்தல். நாட - ஆடூட முன்னிலை. வரை - மலை. தம் நண்பர்க்கு ஏதாவது துன்பம் வந்தால் அவர் கூறாமலே குறிப்பறிந்து, “உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” (குறள்) என்றபடி, தாமாகவே உதவவேண்டி யிருக்க, அவர் கூறிய பின்னரும் உதவாத வன்மனமுடையவர் வலுவில் உயிர் விடுதலே நல்லது என்பதாம். நண்பர்களின் துன்பங் களையாது பிறர் பழிப்ப உயிர் வாழ்வதை விட உயிர் விடுதலே மேல் என்றபடி. தம்மால் அத்துன்பத்தை நீக்கக்கூடியதா யிருந்தும் நீக்க முற்படாத கன்மனத்தர் என்பது தோன்றத் ‘தணியாத உள்ள முடையார்’ என்றார். (6) 377. இனியாரை யுற்ற விடர்தீ ருபாயம் முனியார் செயினு மொழியால் முடியா; துனியால் திரையுலாந் தூங்குநீர்ச் சேர்ப்ப! பனியால் குளநிறைத லில். (பழ) திரை துனியால் உலாம் தூங்கு நீர் சேர்ப்ப - அலை கடுமை யாக உலாவுகின்ற கடற்கரையை உடையவனே, பனியால் குளம் நிறைதல் இல் - மழை பெய்தாலன்றிப் பனியால் குளம் நிறையாது; (அதுபோல), இனியாரை உற்ற இடர் - தம் நண்பருக்குண்டான துன்பம், தீர் உபாயம் முனியார் மொழியால் செயினும் முடியா - தீரும் முயற்சியை வெறுக்காமல் மொழியாலே செய்தாலும் நீங்காது. இனியார் - நண்பர். இடர் - துன்பம். தீர் - தீர்தல். உபாயம் - முயற்சி. முனியார் - வெறுக்காமல்; முற்றெச்சம். முடியா - முடியாது. துனி - கடுமை. திரை - அலை. உலாம் - உலாவும். வு - தொகுத்தல். தூங்குநீர் - மிக்க நீர் - கடல். சேர்ப்பு - கரை. பனிப் பெய்து குளம் நிறையாது; மழை பெய்தே நிறையும். அதுபோல, நண்பர்க்குத் துன்பம் உண்டானால் வாயினிக்கப் பேசுவதால் பயனில்லை; பொருளுதவி செய்ய வேண்டும் என்பதாம். நண்பர்க்குற்ற இடர் மொழியால் தீராது; பொருளால் தீரும் என்பது கருத்து. (7) 378. சாதல் பொருள் கொடுத்த லின்சொற் புணர்வுவத்தல் நோதற் பிரிவிற் கவறலே - ஓதலின் அன்புடையார்க் குள்ளன வாறு குணமாக மென்புடையார் வைத்தார் விரித்து. (ஏலா) சாதல் - தம் நண்பர்கள் இறந்தால் தாமும் இறத்தலும், பொருள் கொடுத்தல் - நண்பர்கட்கு வேண்டும்போது பொருள் கொடுத்தலும், இன்சொல் - இன்சொற் சொல்லு தலும், புணர்வு உவத்தல் - அவர்களோடு கூடி அளவளாவ விரும்புதலும், நோதல் - அவர்கள் வருந்தினால் தாமும் வருந்துதலும், பிரிவில் கவறல் - அவர்களை விட்டுப் பிரிய நேரில் மனங்கலங்குதலும் ஆகிய, ஆறு குணம் அன்புடை யார்க்கு உள்ளனவாக ஓதலின் - இவ்வாறு குணங்களும் உண்மையான நண்பர்களிடத்தில் உள்ளனவாக அறிஞர்கள் கூறுதலால், மென்புடையார் விரித்து வைத்தார் - புலவர்கள் விளக்கமாகத் தம் நூல்களிற் கூறியுள்ளார்கள். புணர்வு - புணர்தல் - ஒன்று கூடுதல். உவத்தல் - மகிழ்தல், விரும்புதல், கவறல் - மனங்கலங்குதல். மென்பு உடையார் - மென்மைத் தன்மையுடையார் - புலவர்கள். விரித்து வைத்தல் - விளக்கமாகக் கூறுதல். பாரி யிறக்கக் கபிலர் இறந்ததும், கோப்பெருஞ் சோழனுடன் பிசிராந்தையார் இறந்ததும் நண்பர்கள் உடனிறத்தற்கு எடுத்துக் காட்டாகும். உடனிறத்தல், பொருள் கொடுத்தல், இன்சொற் சொல்லல், கூடியிருக்க விரும்புதல், உடன்வருந்துதல், பிரியக் கவலுதல் ஆகிய ஆறு குணங்களும் நண்பர்களுக்கு உள்ளன வாக அறிஞர்கள் கூறுதலால், புலவர்கள் அவற்றை விளக்கமாகத் தம் நூல்களில் கூறியுள்ளார்கள் என்பதாம். உடனிறத்தல் முதலிய ஆறுகுணங்களும் உடையராயிருத்தலே உண்மையான நட்புரிமையாகும் என்பது கருத்து. (8) 379. பண்டு முளைப்ப தரிசியே யானாலும் விண்டுமி போனால் முளையாதாம் - கொண்டபே ராற்ற லுடையார்க்கு மாகா தளவின்றி ஏற்ற கருமஞ் செயல். (வாக்) பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் - உமி நீங்குவதற்கு முன்னே முளைப்பது அரிசியே யாயினும். உமி விண்டு போனால் முளையாதாம் - உமி நீங்கிப் போனால் அந்த அரிசி முளையாது; (அதுபோல), கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் - மிகுந்த வல்லமை யுடையார்க்கும், அளவு இன்றி ஏற்ற கருமம் செயல் முடியாது - நண்பர்களின் துணையில்லாமல் எடுத்துக்கொண்ட காரியங்களை எளிதில் செய்து முடிக்க முடியாது. பண்டு - முன்பு. விண்டு - நீங்கி. கொண்ட - பொருந்திய. அளவு - துணைவலி, நண்பர்களின் உதவி. கருமம் - காரியம். நெல்லிலுள்ள உமி நீங்குவதற்கு முன்பு முளைப்பதும் அரிசியே யானாலும் உமி நீங்கி விட்டால் - உமியின் துணை யில்லாவிட்டால் அந்த அரிசி முளையாது. அது போல, மிக்க ஆற்றலுடையவர்க்கும் நண்பர்களின் உதவியில்லாமல் எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடிக்க முடியாது என்பதாம். அரிசி தானே முளைத்தல் - இவர்தம் பேராற்றலுக்கு உவமை. பலரை நண்பர்களாக உடையவன் எடுத்த காரியங் களை யெல்லாம் எளிதில் முடிக்கப் பெறுவான் என்பது கருத்து. (9) 380. பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா. (இன்) பெரியாரோடு யாத்த - பெரியவர்களுடன் கொண்ட, தொடர்விடுதல் இன்னா - தொடர்ச்சியை விடுவது துன்பமாம். யாத்த - கொண்ட. தொடர் - நட்பு. பெரியார் நட்புக் கிடைத்தல் அரிது. அவ்வாறு அரிதிற் கிடைப்பின் அன்னார் நட்பை விட்டுவிடக் கூடாது என்பதாம். பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். (குறள்) (10) 381. மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத் தேறிய பின்னறிப மாநலம் மாசறச் சுட்டறிப பொன்னி னலங்காண்பார் கெட்டறிப கேளிரா னாய பயன். (நான்) மணி நலம் - மாணிக்கம் முதலிய மணிகளின் இயல்பினை, மண்ணி அறிப - கழுவி யறிவார்கள், மாநலம் - குதிரையின் இயல்பினை, பண் அமைத்து ஏறிய பின் அறிப - சேணம் கட்டி ஏறிய பின் அறிவார்கள், பொன்னின் நலம் காண்பார் - பொன்னின் மாற்றினை அறிவார், மாசுஅற சுட்டு அறிப - குற்றமற அதனை உருக்கி அறிவார்கள்; (அதுபோல), கேளிரான் ஆய பயன் கெட்டு அறிப - நண்பர்களால் உண்டாகும் பயனை வறுமை யுற்றபோது அறிவார்கள். மண்ணுதல் - கழுவுதல். அறிப - அறிவார்கள் - உயர் திணைப் பலர்பால் வினைமுற்று. நலம் - இயல்பு தன்மை. பண் - சேணம். மா - குதிரை. மாசு - குற்றம். சுடுதல் - உருக்குதல். கெடுதல் - செல்வங் கெடுதல், வறுமையுறுதல். கேளிர் - உறவினர், நண்பர். மணியின் நலத்தினைக் கழுவியும், குதிரையின் நலத்தினை ஏறியும். பொன்னின் நலத்தினைச் சுட்டும் அறிதல்போல, வறுமை யுற்றபோது நண்பரின் இயல்பினை அறிய வேண்டும் என்பதாம். கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை நீட்டி யளப்பதோர் கோல். (குறள்) கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை உள்ளினு முள்ளஞ் சுடும். (குறள்) வறுமை யுற்றபோது உதவி செய்வோரே உண்மையான நண்பர்கள் ஆவர் என்பது கருத்து. (11) 382. பசைந்தாரிற் றீர்தலின் தீப்புகுதல் நன்று. (நான்) பசைந்தாரின் தீர்தலின் - தம்மிடம் நட்புக் கொண்டாரி னின்றும் நீங்கி உயிர்வாழ்தலைவிட, தீப்புகுதல் நன்று - தீயில் வீழ்ந்து உயிர் விடுதல் நல்லது. பசை - அன்பு. தீர்தல் - நீங்குதல். தம்மை விரும்பி நட்புக் கொண்டாரை இடையில் விட்டு நீங்குதல் தகாது என்பது கருத்து. (12) 383. செல்லுந் திசைக்குப்பாழ் நட்டோரை யின்மை. (நான்) செல்லும் திசைக்குப் பாழ் - தான் செல்லுகின்ற வெளியூர் களுக்குப் பயனின்மை யாவது, நட்டோரை இன்மை - அங்கு நண்பர்களில்லாமையாகும். பாழ் - பயனின்மை. நண்பர்கள் இல்லாத வெளியூர்களுக்குச் செல்லுதல் பயனு டையதாகா தென்பதாம். நாடெங்கும் நண்பர்களை ஆக்கிக் கொள்ள வேண்டுமென்பது கருத்து. (13) 384. நகைநலம் நட்டார்கண் நந்தும். (நான்) நகை நலம் - மகமலர்ச்சியின் நன்மை, நட்டார் கண் நந்தும் - நண்பர்கள் பால் சிறக்கும். நகை நலமாவது - நண்பரைக் கண்டவிடத்துத் தம் முகத்திற் றோன்றும் புன்னகையும் நன்னோக்குங் கூடிய முகமலர்ச்சி. இது, உளங் கலந்த உண்மை நண்பர்கள்பாலன்றி மற்றவர்பால் அங்ஙனம் மலர்ச்சி பெறாது. நண்பர்கள் அடிக்கடி வரினும் முகமலர்ச்சி குன்றாமலி ருப்பதே உண்மை நட்பாகும் என்பதாம். (14) 385. நலமாறின் நண்பினார் நண்பு கெடும். (நான்) நலம் மாறின் - உற்றுழி யுதவியாகிய நலம் மாறினால், நண்பினார் நண்பு கெடும் - நண்பரின் நட்பியல்பு கெட்டு விடும். உற்றுழி உதவல் - நண்பர்க்குத் துன்பம் உண்டான போது உதவுதல். உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே இடுக்கண் களைவதாம் நட்பு (குறள்) என்றபடி, நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு வாழ்வதே நட்பின் பயனாதலால், ஒருவர்க் கொருவர் உதவா விட்டால் நட்புக் கெடுவதாயிற்று. (15) 386. சோரா நன்னட் புதவியி னறிப. (முது) சோரா நல் நட்பு - ஒருவன் தளராத நல்ல நட்புடையவன் என்பதை, உதவியின் அறிப - அவன் தன் நண்பர்களுக்குச் செய்யும் உதவியினால் அறிவர். சோர்தல் - தளர்தல். சோரா - சோராத - தளராத - உறுதி யுள்ள. ஒருவர் ஒருவரோடு உறுதியான நட்புடையவர் என்பதற்கு அவர் அவருக்குச் செய்யும் உதவியே அறிகுறியாகும். ஒருவர்க் கொருவர் உதவி செய்து கொள்வதே சிறந்த நட்பாகும். (16) 387. ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே. (வெற்) ஒரு நாள் பழகினும் - ஒரு நாட் பழகினபோதிலும், பெரியோர் கேண்மை - பெரியோருடைய நட்பானது, இருநிலம் பிளக்க வேர் வீழக்கும் - பெரிய நிலம் வெடிக்கும் படி வேர் ஊன்றும். பெரியோர்களுடன் ஒரு நாள் பழகின போதிலும் அவர்கள் நட்பானது நிலம் பிளக்கும்படி ஆழமாக வேரூன்றிய மரம்போல நிலைத்து நிற்கும் என்பதாம். ஆழமாக வேரூன்றாத மரம் சிறு காற்றடித்தாலும் வீழ்ந்து விடும். ஆழமாக வேரூன்றிய மரம் எவ்வளவு காற்றடித் தாலும் வீழாது. அதுபோல, பெரியோர்களுடன் கொண்ட நட்பு உறுதி பெறும் என்பதாம். காற்றடித்தலைத் துன்பத்திற்கு உவமையாகக் கொள்க. (17) 388. கூடிப் பிரியேல். (ஆத்) கூடி - ஒருவரோடு நட்புக் கொண்டு, பிரியேல் - பின் அவரை விட்டு நீங்காதே. ஒருவரோடு நட்புக்கொண்டால் பின் அவரைவிட்டு நீங்காமல் இருக்கவேண்டும். இவ்வாறு கூடிக் கூடிப் பிரிந்தால் பின் யாரும் நட்புக் கொள்ள விரும்பமாட்டார் என்பதாம். (18) 389. தொன்மை மறவேல். (ஆத்) தொன்மை - பழமையான நட்பை, மறவேல் - ஏதாவது காரணம் பற்றி மறந்துவிடாதே. தொன்று தொட்டு வரும் நட்புரிமையை எக்காரணங் கொண்டும் விட்டுவிடக் கூடாது. அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின் வழிவந்த கேண்மை யவர். (குறள்) ஆகையால், பழமையான நட்பினை விட்டுவிடக் கூடாது. (19) 390. வீரன் கேண்மை கூரம் பாகும். (கொன்) வீரன் கேண்மை - வீரனுடைய நட்பானது, கூர்அம்பு ஆகும் - ஒருவனுக்குத் தன் பகையை வெல்லுதற்குரிய கூரிய அம்புக்கு ஒப்பாகும். மிக்க ஆண்மையுடையவனை ஒருவன் நட்புக் கொண்டால் அவனை யாரும் பகைகொண்டு வெல்லக் கருதார் என்பதாம். செல்வம் முதலிய ஏனைய மிகுதியாக உடையார் நட்புங் கொள்க. (20) 26. நட்பாராய்தல் அதாவது, ஒருவருடைய குணஞ் செயல்களை, முன்னைய நடத்தையை ஆராய்ந்தறிந்த பின்னரே அவரோடு நட்புக் கொள்ள வேண்டுமென்பது. நட்ட பின் விட்டுப் பிரியக் கூடாதா கையால், ஆராய்ந்து நட்புக் கொள்ளல் ஏற்புடைத் தாகும். 391. சான்றோ ரெனமதித்துச் சார்ந்தாய்மற் சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்க ணில்லாயிற் - சார்ந்தாய்கேள் சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன் பாம்பகத்துக் கண்ட துடைத்து. (நால) சார்ந்தாய் கேள் - அவரோடு நட்புக் கொண்டவனே கேட்பாயாக, சான்றோர் என மதித்துச் சார்ந்தாய் - இவர் நிறைந்த குணமுடையவரென்று மதித்து அவரோடு நட்புக் கொண்டாய், சார்ந்தாய்க்கு - அவ்வாறு எண்ணி நட்புக் கொண்ட உனக்கு, சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் - அக்குணம் உன்னால் நட்புக் கொண்டவரிடத்து இல்லாமல் போனால் அது, ஒருவன் - சாந்து அகத்து உண்டு என்று செப்புத் திறந்து - சாந்து அதனுள்ளே இருக்கிறதென்று எண்ணி ஒரு சிமிழைத் திறந்து, அகத்து பாம்பு கண்டது உடைத்து - அதனுள்ளே பாம்பிருக்கக் கண்ட தன்மையை யுடையது. ஆராயாது தீயோரிடம் நட்புக் கொண்ட ஒருவனைப் பார்த்துக் கூறியதாகச் செய்யப்பட்டது இச் செய்யுள். சான்றோர் - நற்குணங்களால் நிறைந்தவர், எல்லா நற் குணங்களும் பொருந்தியுள்ளவர் என்றபடி. மதித்து - நன்கு மதித்து, எண்ணி என்றுமாம். மன் - அசை. சார்ந்தாய்க்கு - நட்புக் கொண்ட உனக்கு, சாந்து - மணப்பொருள். செப்பு - சிமிழ். நன்கு ஆராயாமல் நட்புக் கொள்ளுதல் பெருந்தீமை யுண்டாகு மென்பதை உவமையால் விளக்கினார். சான்றோர் என எண்ணிச் சார்தலுக்கு - சாந்து அகத்துண்டென்று செப்புத் திறத்தலும், அவரிடம் சான்றாண்மை யின்மையைக் காணுதற்கு - பாம்பை அச்சிமிழினகத்துக் காணுதலும் உவமையாகும். ஆராய்ந்து பாராது ஒருவருடன் நட்புக் கொள்ளுதல் தீமையைத் தரும் என்பதாம். (1) 392. தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும் பிரியப் பெரும்படர்நோய் செய்யும் - பெரிய உலவா விருங்கழிச் சேர்ப்பயார் மாட்டுங் கலவாமை கோடி யுறும். (நால) பெரிய, உலவா இருங்கழிச் சேர்ப்ப - நீர்வற்றாத மிக்க கழியையுடைய கடலின் கரையை யுடையவனே, தெரியத் தெரியும் தெரிவு இலார் கண்ணும் - விளக்கமாக ஆராயும் ஆராய்ச்சியறி வில்லாதவரிடத்தும், பிரியப் பெரும் படர் நோய் செய்யும் - ஒருவன் கூடிப் பிரியின் அப்பிரிவு அவனுக்கு மிகுந்த மன நோயைச் செய்யும், (ஆதலால்), யார் மாட்டும் கலவாமை கோடி உறும் - எவரிடத்தும் நட்புக் கொள்ளாமலிருத்தல் நட்புக் கொண்டு பிரிதலினும் பல மடங்கு நல்லது. தெரிய - விளங்க. தெரிதல் - ஆராய்தல். தெரியத் தெரியும் தெரிவிலார் - கல்வியறிவிலார் என்றபடி. படல் நோய் - மன வருத்தம். உலவா - உலவாத - வற்றாத. கழி - உப்பங் கழி. சேர்ப்பு - கடற்கரை. சேர்ப்ப - ஆடூஉ முன்னிலை. கலத்தல் - நட்புக் கொள்ளுதல். கோடி - பல என்றபடி கோடி உறும் - பல மடங்கு நல்லது. அறிவில்லாரோடு கூடிப் பிரியினும் பெருந்துன்ப முண் டாகு மாதலால், அறிவுடைய பெரியார்களோடு கூடிப் பிரிதலா லுண்டாகும் துன்பத்திற்கு ஓரெல்லையேயில்லை யாகுமா தலால், நட்புச் செய்து பிரிதலினும் நட்புச் செய்யாமை நல்லது என்பதாம். நட்புக் கொள்வதற்கு முன்பே நன்கு ஆராய்ந்து ஒருவ ரோடு நட்புக் கொள்ளவேண்டும். நட்புக்கொண்ட பின்பு பிரிதலாகாது என்பது கருத்து. (2) 393. யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லு மெறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கு நாய். (நால) யானை அனையவர் நண்பு ஒரீஇ - யானையைப் போன்ற வர்களது நட்பை விட்டு, நாய் அனையார் கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும் - நாயைப் போன்றவர்களது நட்பைத் தழுவிக் கொள்ளுதல் வேண்டும், (ஏனெனில்), யானை - அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும் - பல காலம் பழகியிருந்தும் தனக்கு உணவு கொடுத்துக் காத்து வரும் பாகனையே கொல்லும், நாய் - எறிந்த வேல் மெய்யது ஆ வால் குழைக்கும் - தன்னை வளர்ப்பவன் சினந்து எறிந்த வேல் தன் உடம்பில் தைத்திருக்கையிலும் வாலை ஆட்டிக் கொண்டு தன் அன்பைக் காட்டி நிற்கும். ஒரீஇ - நீங்கி, விட்டு. ஒருவி என்பது ஒரீஇ எனத் திரிந்து அளபெடுத்தது. கேண்மை - நட்பு. கெழீஇ - தழுவி. கெழுமி என்பது கெழீஇ என அளபெடுத்தது. அறிந்தறிந்தும் - பல காலம் பழகியிருந்தும். வேல் - தடியையும் குறிக்கும். மெய்யதுஆ. ஆ - ஆக. குழைத்தல் - ஆட்டுதல். முன்னிரண்டு அடியின் பொருளைப் பின்னிரண்டடி யால் காரணங் காட்டி விளக்கினார். பல காலம் பழகியிருந்தும் அன்போடு உணவூட்டி வளர்த்து வரும் பாகன் ஏதாவது சிறு தவறு செய்யின், அதை மறவாது மனத்தில் வைத்திருந்து அற்றம்பார்த்துப் பாகனையே கொல்லும் இயல்புடையது யானை. அது போல, பல காலம் நண்பரா யிருந்தும், பற்பல உதவிகளைப் பெற்றிருந்தும் தம் நண்பர் ஏதாவது சிறு தவறு செய்யின், அதை முதன்மையாகக் கொண்டு, முன் செய்த நன்மைகளை யெல்லாம் அடியோடு மறந்து அற்றம் பார்த்துக் கெடுக்குந் தன்மையுடையாரோடு நட்புக் கொள்ளக் கூடாது என்பதாம். தன்னை அன்போடு வளர்ப்பவன், ஏதாவது காரணம் பற்றி வெகுண்டு தடியால் அடித்தால், அதைப் பொருட்படுத் தாது, அன்போடு வளர்த்து வருதலை எண்ணி, அவன் அடிக்க அடிக்க வாலை ஆட்டிக்கொண்டு தன் அன்பைக் காட்டும் இயல் புடையது நாய். அதுபோல, தமக்குச் செய்யும் இன்னல் களைப் பொருட் படுத்தாது, முன்பு அவர் தமக்குச் செய்த நன்மையை எண்ணி நட்புரிமை பாராட்டுந் தன்மையுடை யாரோடு நட்புக் கொள்ள வேண்டும் என்பதாம். இங்ஙனம் மற்ற நண்பர்களிடம் நடந்து கொள்ளுதலை ஆராய்ந்தறிந்து யானை யனையாரோடு நட்புக் கொள்ளாது, நாயனையாரோடு நட்புக் கொள்ள வேண்டுமென்பது கருத்து. யானை, நாயின் குணங்களே சிறியார்க்கும் பெரி யார்க்கும் உவமை. (3) 394. கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதா நட்பாட்சி - தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாரு நட்பாரு மில். (நால) கோடு பூப்போல - மரக்கிளையில் மலர்கின்ற மலர் போல, மலர்ந்து பின் கூம்பாது - முன்னே முகமலர்ச்சி யுற்றுப் பின் அம்மலர்ச்சி குவியாமல், வேட்டதே வெட்டது நட்பாட்சி ஆம் - முன் ஒருவரோ டொருவர் விருப்பங் கொண்டதுவே விருப்ப மாயிருப்பது நட்புரிமையைக் காத்தலாகும், தோட்ட கயப் பூப்போல் - தோண்டப்பட்ட குளத்தில் மலர்கின்ற மலர்கள் போல, முன்மலர்ந்து பின் கூம்பு வாரை - முதலில் முகமலர்ச்சி காட்டிப் பின் அம்மலர்ச்சி யொழிந்து முகஞ் சுருங்குபவர்களை, நயப்பாரும் நட்பாரும் இல் - விரும்புபவர்களும் நட்புக் கொள்பவர்களும் இல்லை. கோடு - கிளை. கோட்டுப் பூ - மரக் கிளைகளில் பூக்கும் பூ. கூம்புதல் - குவிதல். வேட்டல் - விரும்புதல். வேட்டதே வேட்டது - முதலில் விரும்பியது போலவே எப்போதும் விரும்புவது. ஆட்சி - ஆளுதல், பாதுகாத்தல். இருவரிடை நின்று நட்பை நீங்காமல் காத்தல். தோட்ட - தோண்டிய. கயம் - குளம். கயப்பூ - நீர்ப்பூ. நயத்தல் - விரும்புதல். கோட்டுப் பூ, கொடிப் பூ, நீர்ப் பூ, நிலப் பூ எனப் பூ நான்கு வகைப்படும். கோங்கு, சண்பகம், மகிழ் - கோட்டுப் பூ. மல்லிகை, முல்லை - கொடிப் பூ. தாமரை, குவளை - நீர்ப் பூ. தும்பை, செவ்வந்தி - நிலப் பூ. நிலப் பூ - புதர்ப் பூ எனவும் படும். புதர் - சிறு செடிகள். கோட்டுப்பூப் போல முதலில் கொண்ட விருப்பம் எப்போதும் மாறாமல் இருப்பதே நட்புரிமையாகும். நீர்ப்பூப் போல முதலில் கொண்ட விருப்பம் வர வரக் குறைவது நட்புரிமையாகாது. எனவே, கோட்டுப் பூப் போன்ற குண முடை யாரிடமே நட்புக் கொள்ள வேண்டும். நீர்ப்பூப் போன்ற குணமுடையாரிடம் நட்புக் கொள்ளக் கூடாது என்பதாம். (4) 395. கடையாயார் நட்பிற் கமுகனைய ரேனை இடையாயார் தெங்கி னனையர் - தலையாயார் எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே தொன்மை யுடையார் தொடர்பு. (நால) கடை ஆயார் நட்பில் கமுகு அனையர் - கீழ்த்தர மானவர்கள் நட்புரிமையில் பாக்கு மரத்தை ஒப்பர், ஏனை இடையாயார் தெங்கின் அனையர் - மற்றை நடுத் தரமானவர்கள் தென்னை மரத்தை ஒப்பர், தலையாயார் - முதற்றரமான வர்களாகிய, தொன்மை உடையார் தொடர்பு - பழமை யாகிய குடிப் பிறப்பினையுடைய மேன் மக்களது. நட்பு, எண் அரும் பெண்ணை போன்று - நினைத்தற்கும் அரிய சிறப் பினையுடைய பனை மரத்தை ஒத்து, இட்ட ஞான்று இட்டதே - நட்டபோது நட்ட அளவினதே யாகும். கமுகு - பாக்கு மரம். தெங்கு - தென்னை மரம். எண் அரும் - எண்ணுதற்கரிய சிறப்பு. பெண்ணை - பனைமரம். இடுதல் - நடுதல். ஞான்று - நாள். இட்டதே - நட்டது மட்டுமே. தொன்மை - பழமை. இங்கு பழங்குடியைக் குறித்தது. தொடர்பு - நட்பு. பாக்கு மரம் அடிக்கடி நீர் பாய்ச்சாவிட்டால் காய்க்காது. தென்னை மரம் இடையிடையே நீர் பாய்ச்சாவிட்டால் காய்க்காது. பனை மரம் கொட்டையை ஊன்றிவிட்டால் போதும், நீர் பாய்ச்ச வேண்டிது இல்லை; காய்த்துப் பழந் தரும். பாக்குமரம் போல ஒருநாள் வரவேற்புத் தவிர்ந்தாலும் நட்புரிமை கெடுபவர் கீழ்த்தரமானவர்; தென்னை மரம் போல இடையிடையே வரவேற்பு இல்லாமற் போனால் நட்புரிமை கெடுபவர் நடுத்தரமானவர்; பனை மரம்போல் நட்புக் கொண்டது மட்டுமே யன்றி யாதொரு வரவேற்பும் வேண்டாமல் என்றும் ஒரேதன்மையாய் நட்புரிமையுடையவர் முதல்தரமானவர் என்பதாம். இத் தன்மை யுடையாரை அறிந்து நட்புக்கொள்ள வேண்டு மென்பது கருத்து. (5) 396. நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும் ஈக்காற் றுணையு முதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானுஞ்சென்று கொளல்வேண்டுஞ் செய் விளைக்கும் வாய்க்கா லனையார் தொடர்பு. (நால) நாய் கால் சிறு விரல் போல் நன்கு அணியர் ஆயினும் - நாயின் கால்களிலுள்ள சிறிய விரல்கள் போல மிக அருகில் நெருங்கி யுள்ளவரானாலும், ஈக்கால் துணையும் உதவாதார் நட்பு என் ஆம் - ஈயின் காலளவாகிலும் உதவி செய்யாதவர் களது நட்பு யாது பயன் உடைத்தாம்? ஒரு பயனும் இல்லை என்றபடி. செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு - வயலில் பயிர் விளையும்படி செய்கின்ற வாய்க் காலைப் போல உதவுபவர்களது நட்பை, சேய்த்து ஆனும் சென்று கொளல் வேண்டும் - தொலைவிலுள்ள தாயினும் போய்ப் பெறவேண்டும். நன்கு - மிக. அணியர் - பக்கத்திலுள்ளவர். துணை - அளவு. சேய்த்து தொலைவு. செய் - வயல். நாயின் கால் விரல்கள், மிகப் பக்கத்தில் உள்ள நண்பர்க்கு எடுத்துக்காட்டு. ஈக்கால் - சிறுமைக்கு எடுத்துக்காட்டு. தொலைவி லுள்ள அணையிலிருந்து வந்து வயலுக்கு நீர்பாய்ச்சி நெல் விளையும் படி செய்யும் வாய்க்கால், தொலைவிலுள்ள உதவிக் குண முள்ளார்க்கு உவமை. பக்கத்தேயிருப்பினும் உதவாதார் நட்பை விட்டு, தொலைவில் இருப்பினும் உதவுவோர் நட்பைக் கொள்ள வேண்டு மென்ப தாகும். நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி ஒல்லும்வா யூன்று நிலை. (குறள்) ‘செய்விளைக்கும் வாய்க்காலனையார்’ என்பது, நாட்டு நலத்திற்கு நீர்வளத்தின் இன்றியமையாமையோடு, பழந் தமிழ்ப் புலவர் பெருமக்கள் நாட்டு நலத்திற் கொண்டிருந்த அக்கறை யையும் குறிப்பதாகும். (6) 397. மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப் பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்; பரீஇ யுயிர்செகுக்கும் பாம்பொடு மின்னா மரீஇஇப் பின்னைப் பிரிவு. (நால) பலரோடு மரீஇ பல்நாள் பொரீஇ முயங்கி - பலரோடு சேர்ந்து பல நாள் மனமொத்துக் கலந்திருந்து, பொருள் தக்கார் கோடலே வேண்டும் - பொருளாகக் கொள்ளத் தக்கவர்களை நட்புக் கொள்ளுதலே தகுதியாகும்; (ஏனெனில்), பரீஇ உயிர் செகுக்கும் பாம்பொடும் - கடித்து உயிரைப் போக்குகின்ற பாம்போடாயினும், மரீஇப் பின்னைப் பிரிவு இன்னா - நட்புச் செய்து பின் விட்டு நீங்குதல் துன்பந் தரும். மரீஇ - சேர்ந்து. முயங்கி - கலந்து. பொரீஇ - மனமொத்து பொருள் தக்கார் - நட்புக்கொள்ளத் தக்கவர். கோடல் - கொள்ளல். பரீஇ - கடிந்து. செகுக்கும் - போக்கும், ஒழிக்கும். இன்னா - துன்பம். மருவி, பொருவி, பரிந்து என்னும் வினையெச்சங்கள் மரீஇ, பொரீஇ பரீஇ எனத் திரிந்து அளபெடுத்தன. மரீஇஇ - ஈரள பெடை, நான்கடியிலும் முதற்சீரில் அளபெடை வந்தது அளபெடைத் தொடை. கடித்துக் கொல்லுந் தன்மை யுடைய பாம்போடு பழகினும் பின் பிரிதல் துன்பந் தருமாகையால், பலரோடு பலநாள் மன மொத்துக் கலந்து பழகி, பின் நட்புக் கொள்ளத் தக்கவரோடு நட்புக்கொள்ளுதல் வேண்டும் என்பதாம். பாம்பாட்டி தான் வளர்த்துவரும் பாம்பு இறந்தால் வருந்துதல், இதற்கு எடுத்துக்காட்டாகும். பலரோடு பலநாள் நன்கு பழகி, பின்பு நட்புக் கொள்ளத் தக்கதவரோடு நட்புக்கொள்ள வேண்டும் என்பது கருத்து. (7) 398. தாளாள னென்பான் கடன்படா வாழ்பவன் வேளாள னென்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாள னென்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்த லினிது. (திரி) தாள் ஆளன் என்பான் கடன்படா வாழ்பவன் - முயற்சி யுடையவன் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் கடன் படாமல் வாழ்பவனாவான். வேள்ஆளன் என்பான் விருந்து இருக்க உண்ணா தான் - உதவியுடையவன் என்று சொல்லப் படுபவன் வந்த விருந்தினர் பசித்திருக்கையில் தான் மட்டும் உண்ணாதவனாவான், கோள் ஆளன் என்பான் மறவாதான் - பிறர் சொல்வதைக் கேட்டுக் கொள்பவன் என்று சொல்லப் படுபவன் கேட்டதை மறவாதவனா வான், இம்மூவர் கேள் ஆக வாழ்தல் இனிது - ஆகிய இம் மூவரையும் நட்பினராகக் கொண்டு வாழ்தல் நல்லது. தாள் - முயற்சி. தாளாளன் - முயற்சியுடையவன். வேள் - உதவி. கோள் - கொள்ளுதல்; பிறர் சொல்லும் குறைபாட்டைக் கேட்டுக் கொள்ளுதல். கேள் - நட்பு. கடன்படாது வாழ்பவனே முயற்சியுடையவனாவான்; வந்த விருந்தினருடன் உண்பவனே உதவியாளனாவான்; பிறர் சொன்னதை மறவாதவனே பிறர் சொல்வதை உண்மையாகக் கேட்பவனாவான். பலரிடம் பல்லாயிரக் கணக்கில் கடன் வாங்கிப் பெருந் தொழில் அல்லது வாணிகம் செய்து பொருளீட்ட முயல்வ தினும், கடன்படாமல் முயன்று பொருளீட்டி வாழ்வதே நல்லது என்பதாம். ஒருவர் ஏதாவது ஒன்று பற்றி ஒருவரிடம் பரிந்துரை கூறும் படி கேட்பதைச் சரியென்று கேட்பவர் அதை மறவாமல் அவரிடன் கூற வேண்டும். கூறுவதாக உறுதி கூறி விட்டுக் கூறாமல் மறந்து விடுவதை விட, அவர் சொன்ன போது என்னால் முடியாது என்று கூறிவிடுதலே மேல் என்பதாம். உதவி செய்வதாகக் கூறிவிட்டுச் செய்ய மறக்கக் கூடா தென்பது கருத்து. கடன்படாது வாழ்பவனோடும், உதவியாளனோடும், கேட்டதை மறவாதவனோடும் நட்புக் கொள்ளுதல் நல்லது என்பது கருத்து. (8) 399. தூர்ந்தொழுகிக் கண்ணுந் துணைகள் துணைகளே சார்ந்தொழுகிக் கண்ணுஞ் சலவர் சலவரே ஈர்ந்தகல் லின்னாக் கயவர் இவர்மூவர் சேர்ந்தக்கால் தோன்றும் பொருள். (திரி) தூர்ந்து ஒழுகிக் கண்ணும் துணைகள் துணைகளே - பொருள் வருவாய் அடைபட்டு வாழுமிடத்தும் நண்பர் நண்பரே யாவர், சார்ந்து ஒழுகிக் கண்ணும் சலவர் சலவரே - மனமொத்து நடந்த விடத்தும் பகைவர் பகைவரே யாவர், இன்னா கயவர் ஈர்ந்த கல் - துன்பஞ் செய்யுங் குணமுள்ள கீழ்மக்கள் பிளக்கப்பட்ட கல்லை ஒப்பர், இவர் மூவர் சேர்ந்தக் கால் தோன்றும் பொருள் - ஆகிய இவர் மூவரும் ஆராயுமிடத்து வெளிப்படும் பொருள்க ளாவர். தூர்தல் - வரும்வழி அடைபடுதல், மண்மூடிய கிணற்றை - கிணறு தூர்ந்து போயிற்று எனல் காண்க. ஒழுகியக் கண்ணும் என்பது - ஒழுகிக் கண்ணும் எனத் தொக்கது. துணை - நட்பு. துணைகள் - நண்பர். சார்தல் - இசைதல். சார்ந்தொழுகல் - ஒத்து நடத்தல். சலவர் - பகைவர். ஈர்ந்த - பிளந்த, பிளக்கப் பட்ட. இன்னாக் கயவர் - துன்பஞ் செய்யுங் குணமுள்ள கயவர். கயவர் - கீழ்மக்கள். தேர்தல் - ஆராய்தல். தோன்றுதல் - தெரிதல்; அவர்கள் தன்மை - இயல்பு - தெரியும் என்றபடி. வறுமைக் காலத்தும் நண்பர்கள் உதவி புரிவர்; எவ்வளவு நெருங்கிப் பழகினாலும் பகைவர் கெடுக்கவே நினைப்பர்; கற்பிளவைப் போல் என்றும் ஒன்று கூடாத இயல்புடையவர் கீழ்மக்கள்; இவர்கள் நன்மைகளை ஆராய்ந்து அறிந்து நட்புக் குணமுள்ளவரோடு நட்புக் கொள்ள வேண்டும் என்பதாம். (9) 400. ஒட்டாரை யொட்டிக் கொளலதனின் முன்னினிது. (இனி) ஒட்டாரை - பகைவரோடு சேராதவரை, ஒட்டிக் கொளல் - தம்மோடு நட்பாக்கிக் கொள்ளுதல், அதனின்முன் இனிது - நண்பர்க்கு நல்லன செய்தலைவிட மிகவும் நல்லது. ஒட்டார் - தம் பகைவரோடு சேராதவர். ஒட்டிக் கொளல் - நண்பராக்கிக் கொள்ளுதல். அதனின் என்பது - நண்பர்க்கு நல்லன செய்தலைவிட என்பது. நமது நண்பர்கள் நம்மிடத்தினின்று நீங்காமல் பார்த்துக் கொள்வதைவிட, நம் பகைவருடன் சேராமல் இருப்போர் யாரென ஆராய்ந்து பார்த்து அவர்களை நண்பராக்கிக் கொள்வது மிகவும் நல்லது என்பதாம். நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை யொட்டிக் கொளல் (குறள்) (10) 401. இணக்கமறிந் திணங்கு. (ஆத்) இணக்கம் அறிந்து - நட்புக்கொள்ளத் தக்கவரை ஆராய்ந் தறிந்து, இணங்கு - பின் நட்புக்கொள். நட்புக் கொள்ளத் தக்கவரா என்று ஆராய்ந்து பார்த்தே ஒருவரோடு நட்புக்கொள்ள வேண்டும் என்பதாம். ஆராய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாந் துயரந் தரும். (குறள்) (11) 402. சேரிட மறிந்துசேர். (ஆத்) சேர் இடம் அறிந்து - நட்புக் கொள்ளத் தக்க இடத்தை ஆராய்ந்தறிந்து, சேர் - நீ நட்புக் கொள். இவர் நட்புக் கொள்ளத் தக்கவரா என்பதை அறிந்தே ஒருவரிடம் நட்புக் கொள்ள வேண்டும். (12) 403. மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம். (உல) மாற்றானை - பகைவனை, உறவு என்று நம்ப வேண்டாம் - நண்பன் என்று நம்ப வேண்டாம். பகைமைக் குணமுள்ளவனின் சொல் செயல்களைக் கண்டு, நட்புக்குணமுள்ளவன் என்று நம்பக்கூடாது. (13) 27. பழமை அதாவது, நண்பரது பழமை குறித்து அவர் பிழை பொறுத்தல்; பழைய நண்பரது பிழை பொறுத்தல் என்ற படி. 404. நல்லா ரெனத்தா நனிவிரும்பிக் கொண்டாரை அல்லா ரெனினு மடக்கிக் கொளல்வேண்டும்; நெல்லுக் குமியுண்டு நீர்க்கு நுரையுண்டு புல்லிதழ் பூவிற்கு முண்டு. (நால) நல்லார் என தாம் நனி விரும்பிக் கொண்டாரை - நற்குண நற்செய்கை யுடையாரென்று ஆராய்ந்தறிந்து தம்மால் மிகவும் விரும்பி நட்புக் கொண்டவரை, அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும். பின்னொரு காலத்தே அவர் ஏதாவது தவறு செய்தாலும் அத் தவற்றைப் பிறர் அறியாத படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; (ஏனெனில்), நெல்லுக்கு உமி உண்டு - சிறந்த உணவுப் பொருளாகக் கொள்ளப்படும் நெல்லுக்கும் உமியாகிய குற்றம் உள்ளது; நீர்க்கு நுரை உண்டு - விரும்பி யுண்ணுகின்ற நீருக்கும் நுரையாகிய குற்றம் உள்ளது; பூவிற்கும் புல் இதழ் உண்டு - மணமுள்ள அழகிய மலருக்கும் அம் மலர்மேல் பொருந்தி யுள்ள புறவிதழாகிய குற்றம் உள்ளது. நனி - மிக. அல்லார் - நல்லவரல்லார்; அதாவது குற்றம் செய்கிறவர். அடக்கிக் கொளல் - பிறரிடம் சொல்லாம லிருத்தல்; பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றபடி. புல் இதழ் - புல்லிய இதழ், புன்மையாகிய இதழ் என இரு பொருளும் கொள்க. புல்லிய - பொருந்திய. புன்மை - இழிவு. முன்னது வினைத்தொகை, பின்னது பண்புத்தொகை. பல சிறந்த குணங்களையுடைய உயர்ந்த பொருள் களிலும் சில குற்றங்கள் இருத்தல் இயல்பே யாதலால், பல நற்குணங்களும் பொருந்தியுள்ளவரிடத்தும் சில குற்றங் களிருத்தல் இயல்பே. அல்லது பின் ஒரு காலத்தே குற்றம் செய்தலும் இயல்பே. ஆகை யால், தம் நண்பர்கள் ஏதாவது குற்றம் செய்தால், அவர்தம் பழமையும் பயனும் நோக்கி அக்குற்றத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதாம். பின்னிரண்டடிகளில் கூறிய மூன்று உவமைகளும் எவ்வளவு நற்குணமுடையாரிடத்தும் குற்றங்கள் காணக் கூடும் என்னும் பொருளைத் தருதலான், பிறிது மொழிதல் அணியாகும். இவ்வுவமைகள் நண்பர்கள் செய்யும் குற்றத் தினைப் பொறுத்துக் கொள்ளற்குக் காரணங்களாகக் கூறப் பட்டன. நண்பர்கள் ஏதாவது குற்றம் செய்தால் நட்புரிமையை எண்ணி அதனைப் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்பது கருத்து. (1) 405. செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார் மறுத்துஞ் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்; வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு. (நால) நீர் நசைஇ வாழ்நர் - தண்ணீரின் பயன் கொள்ள விரும்பி வாழ்பவர்கள், செறுதோறு உடைப்பினும் - தாங்கள் அடைக்குந் தோறும் உடைத்துக்கொண்டு போவதாயினும், செம்புனலோடு ஊடார் - நல்ல நீருடனே சினங்கொள்ளா ராய், மறுத்தும் சிறை செய்வர் - மறுபடியும் மறுபடியும் கரைகட்டி அந்நீரைத் தடுத்து வைப்பார்; (அதுபோல), வெறுப்ப வெறுப்பச் செயினும் - வெறுக்கத்தக்க குற்றமான செயல்களை ஒருவர் வெறுப்புண் டாகும்படி மிகுதியாகச் செய்தாலும், தாம் வேண்டித் தொடர்பு கொண்டார் பொறுப்பர் - தாம் விரும்பி நட்புக் கொண்டவர் அப் பிழையைப் பொறுத்துக் கொள்வர். செறுத்தல் - அடைத்தல், கரைகட்டித் தடுத்தல். செம் புனல் - நல்ல நீர்; புதுவெள்ளம் எனினுமாம். புனல் - நீர். ஊடுதல்- சினங் கொள்ளுதல், வெறுப்புக் கொள்ளுதல். ஊடார் - முற்றெச்சம். மறுத்தும் - மறுபடியும். சிறைசெய்தல் - தடுத்தல். நசைஇ - விரும்பி. வெறுப்ப - வெறுக்கத் தக்க வற்றை. வெறுப்ப - வெறுக்கும்படி. வெறுப்ப வெறுப்ப செய்யினும் - வெறுக்கத்தக்கவற்றை - குற்றங் களை - வெறுக்கும்படி மிகுதியாகச் செயினும். வேண்டி - விரும்பி. தொடர்பு - நட்பு. கரையை உடைத்துக் கொண்டு போகும் தண்ணீரைக் கரை கட்டித் தடுப்போர் வெறுக்கும்படி மறுபடியும் மறு படியும் கரையை உடைத்துக் கொண்டு போனாலும் மறுபடியும் மறுபடியும் கரைகட்டித் தடுப்பார்களே யல்லாமல் அத் தண்ணீரின் பயனை விரும்புவோர், அத் தண்ணீரோடு வெகுளார்; வெகுண்டு தொலைந்து போ என்று விட்டு விடார். அதுபோல, நண்பர்கள் வெறுக்கத்தக்க குற்றங்களை அடுத் தடுத்துச் செய்தாலும் தாம் விரும்பி நட்புக் கொண்டவர் பொறுத்துக் கொள்வர் என்பதாம். தண்ணீரின் பயனை விரும்புவோர் தண்ணீர் செய்யும் குற்றத்தைப் பொறுப்பதுபோல, நண்பரின் நட்பை விரும்பு வோர் நண்பர் செய்யும் குற்றத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றபடி. அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர். (குறள்) (2) 406. இறப்பவே தீய செயினுந்தன் னட்டார் பொறுத்தல் தகுவதொன் றன்றோ - நிறக்கோங் குருவவண் டார்க்கு முயர்வரை நாட! ஒருவர் பொறையிருவர் நட்பு. (நால) நிறம் கோங்கு உருவம் வண்டு ஆர்க்கும் - நல்ல நிறமுள்ள கோங்க மரத்தின் மலர்களிலே அழகிய வடிவமுடைய வண்டுகள் ஒலிக்கின்ற, உயர்வரை நாட - உயர்ந்த மலைகளை யுடைய நாடனே, தன் நாட்டார் இறப்பவே தீயசெயினும் - தனது நண்பர் மிகவும் தீங்குகளையே செய்தாராயினும், பொறுத்தல் தகுவது ஒன்று அன்றோ - அப்பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுதல் தகுதியுடைய தாகுமன்றோ? (ஏனெனில்), ஒருவர் பொறை இருவர் நட்பு - ஒருவருடைய பிழையைப் பொறுத்துக் கொள்ளுதலே இருவரது நட்புக்குக் காரணமாகும். இறப்ப - மிக. தீய - தீமைகள். நட்டார் - நண்பர். தகுவது - தக்கது. தகுவது ஒன்று அன்றோ - தக்கதாகும். கோங்கு - கோங்க மரம். இங்கு அதன் மலரை யுணர்த்திற்று. உருவம் - வடிவம். வரை நாட - ஆடூஉ முன்னிலை. இரு நண்பர்களில் ஒருவருடைய பிழையை மற்றொருவர் பொறுத்துக் கொள்ளுதலே அவ்விருவருடைய நட்புக்குக் காரணமா கையால், ஒருவர் தன் நண்பர் எத்தகைய தீங்கு செய்யினும் பொறுத்துக் கொள்ளுதலே வேண்டும் என்பதாம். இச்செய்யுளின் ஈற்றடி அப்படியே ‘தந் தீமையில்லா தார்’ என்னும் பழமொழியின் ஈற்றடியாக வந்துள்ளமை காண்க. (3) 407. இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப் பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் - பொன்னொடு நல்லிற் சிதைத்ததீ நாடொறு நாடித்தம் இல்லத்தி லாக்குத லால். (நால) இன்னா செயினும் விடல் பாலர் அல்லாரை - துன்பங்கள் பல செய்தாராயினும் விடத்தக்கவரல்லாதவரை, பொன் ஆகப் போற்றிக் கொளல் வேண்டும் - பொன்னைப் போல மென்மை யாகக் கொள்ளுதல் வேண்டும்; (ஏனெனில்), பொன்னொடு நல்இல் சிதைத்த தீ - பொன் முதலிய நல்ல பொருள்களுடனே சிறந்த வீட்டையும் எரித்தழித்திட்ட நெருப்பை, நாள்தொறும் நாடித் தம் இல்லத்தில் ஆக்குதலால் - நாடோறும் விரும்பித் தமது வீட்டில் பற்ற வைத்தலால். இன்னா - துன்பம். விடல்பாலர் அல்லார் - விட்டுவிடத் தக்கவரல்லாத நண்பர்கள், பழைய நண்பர்கள். நல் - நல்ல பொருள்கள் - சிறந்த பொருள்கள். இல் - வீடு. சிதைத்தல் - எரித்தழித்தல். நாடி - விரும்பி. ஆக்குதல் - உண்டாக்குதல், பற்ற வைத்தல். சமையல் செய்யத் தீயெரித்தலென்க. வீட்டில் தீப்பிடித்து அவ் வீட்டோடு, அவ்வீட்டிலுள்ள பொன் முதலிய சிறந்த பொருள்களையும் எரித்தழித்தாலும், அதற்காகத் தீயை விட்டொழியாமல் நாடோறும் சமையல் செய்யத் தீ யெரிக்கிறோம். அதுபோல, பழைய நண்பர்கள் துன்பங்கள் செய்தாலும் பொறுத்துக் கொண்டு அன்னார் நட்பை விடக்கூடாது என்பதாம். தீயின் உவமையால், பழைய நண்பர்கள் கொடிய குற்றம் செய்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது பெறப் படும். அழிவந்த செய்யினு மன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர் (குறள்) (4) 408. இன்னா செயினும் விடுதற் கரியாரைத் துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர் விண்குத்து நீள்வரை வெற்ப களைபவோ கண்குத்திற் றென்றுதங் கை. (நால) துன் அருஞ்சீர் - சேர்தற்கரிய சிறப்புக்களைத் தம் மிடத்தே உடைய, விண் குத்தும் நீள் வரை வெற்ப - வானத்தைக் குத்துகின்ற நீண்ட மூங்கில்களை யுடைய மலைகளையுடை யவனே, கண் குத்திற்று என்று தம் கை களைபவோ - தமது கண்ணைக் குத்தி விட்டதென்று தமது கையை வெட்டி யெறிவார்களோ? எவரும் வெட்டார்; (அதுபோல), இன்னா செயினும் - துன்பங்கள் செய்தாலும், விடுதற்கு அரியாரை - விடத் தகாதவர்களை, துன்னா துறத்தல் தகுவதோ - சேர்க்காமல் நீக்கிவிடுதல் தகுமோ? தகாது என்றபடி. துன்னாத் துறத்தல் - துன்னாமல் துறத்தல் - தம்மைச் சேராமல் நீக்கிவிடுதல்; நட்பை விட்டுவிடுதல் என்றபடி. துன்னுதல் - சேர்தல், பொருந்துதல். சீர் - சிறப்பு. துன்அரும் சீர் - சேர்தற்கு அரிய சிறப்பு. அதாவது வேறு இடங்களில் இல்லாத அத்தகு சிறப்பு என்றபடி. வரை - மூங்கில். வெற்பு - மலை. வெற்ப - ஆடூஉ முன்னிலை. களைதல் - நீக்குதல். ஒருவன் உறுப்புக்களுள் ஒன்றான கை, அவன் உறுப்புக் களுள் ஒன்றான கண்ணைக் குத்திவிட்டால், அதற்காக அவன் அக் கையை வெட்டிவிடமாட்டான்; அது போலவே, அவ் வுறுப்புக்கள் போன்ற உரிமையுடைய நண்பர்கள் ஏதாவது குற்றஞ் செய்தால் அதற்காக அவர் நட்பை விட்டுவிடக் கூடாது என்பதாம். உறுப்புக்களுள் ஒன்றில் மற்றொன்று தவறுதலாகப் பட்டுத் துன்பமுண்டாக்கினால் அதற்காக அவ்வுறுப்பைக் களைபவரில் லாமை போல, சோர்வினால் - தவறுதலாக - நண்பர்கள் செய்யும் தீமைக்காக அவரை நீக்கக் கூடாது என்பது கருத்தாகும். (5) 409. தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத் தமரன்மை தாமறிந்தா ராயி னவரைத் தமரினு நன்கு மதித்துத் தமரன்மை தம்மு ளடக்கிக் கொளல். (நால) தமர் என்று தாம் கொள்ளப்பட்டவர் தம்மை - தமது நண்பர் என்று தம்மால் விரும்பி நட்புக் கொள்ளப்பட்ட வர்களை, தமர் அன்மை தாம் அறிந்தார் ஆயின் - நட்புக் குணம் இல்லாதவர் என்பதைத் தாம் பின்னர் அறிந்தாரா னால், அவரை தமரினும் நன்கு மதித்து - அவர்களைத் தமது உண்மையான நண்பரினும் மேன்மை யாக மதித்து, தமர் அன்மை தம்முள் அடக்கிக் கொளல் - அவரிடங் காணப் பட்ட நண்பராதற்கேலாத தன்மையைத் தமது மனத் தினுள்ளேயே அடக்கிவைத்துக் கொள்க. தமர் - நண்பர் - நட்புக் குணமுள்ளவர். தமர் அன்மை - நட்புக் குணம் இல்லாமை. தம்முள் அடக்கல் - வெளியிடா திருத்தல். அத் தமரல்லார்க்கும் பிறர்க்கும் தெரியாமல் இருத்தல். இப்பாட்டில், ‘தமர்’ என்னும் சொல் ஒரே பொருள் படப் பன்முறை வந்தமை யால், சொற்பொருட் பின்வரு நிலையணி. தமரினும் நன்கு மதித்தல் - அந் நட்புக் குணமில்லார் தமது குணத்தைப் பார்த்தாயினும் தம் குற்றம் ஒழிதற் பொருட்டும், மீண்டும் குற்றம் செய்யாமலிருத்தற் பொருட்டும், நட்புக் குணங் கொள்ளற் பொருட்டு மென்க. குற்றத்தை வெளிக்குக் காட்டாமல், நட்புரிமை பாராட்டி அவரை நல்வழிப்படுத்த வேண்டும் என்பது கருத்து. பழைய நண்பரிடம் ஏதாவது தவறு கண்டால், அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், அவரை முன்னிலும் நன்கு மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதாம். (6) 410. குற்றமு மேனைக் குணமு மொருவனை நட்டபி னாடித் திரிவேனேல் - நட்டான் மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க அறைகடல்சூழ் வைய நக. (நால) ஒருவனை நட்டபின் - ஒருவனை நட்புக் கொண்டபின், குற்றமும் ஏனைக் குணமும் நாடித் திரிவேனேல் - அவனிடத் திலுள்ள குற்றங்களையும் குணங்களையும் ஆராய்ந்து திரிவே னானால், அறை கடல் சூழ் வையம் நக - ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இவ்வுலகத்தார் யாவரும் என்னை இகழும் படி, நட்டான் மறைகா வாவிட்டவன் செல்வுழிச் செல்க - நண்பனது மறையைப் பாது காவாமல் வெளியிட்டவன் செல்லும் இழி நிலைக்குச் செல் வேனாக. ஏனை - குற்றத்திற்கு எதிரான. நடுதல் - நட்புக் கொள்ளல். நாடி - ஆராய்ந்து. மறை - இரகசியம். காவா - காவாமல். செல்வுழி - செல்லும் இடத்திற்கு. அதாவது நண்பனின் மறையை வெளி யிட்டவனை யாரும் நட்புக் கொள்ளாமல் இகழ்ந்து ஒதுக்குவர். அவன் ஓரியாக அலைவான் என்றபடி. இச்செய்யுள் நட்பிற் பிழை பொறுக்கும் இயல்புடை யா னொருவன் கூறும் உறுதிமொழி மூலம், அக்குணத்தின் சிறப்புக் கூறப்பட்டது. நண்பனுக்குக் துன்பந் தரக்கூடிய மறைகளை வெளியிட்ட வனை எல்லோரும் இகழ்ந்தொதுக்குதல் போல, ஒருவருடன் நட்புக் கொண்ட பின் அவருடைய குற்றங் குணங்களை ஆராய்ந்து குற்றம் பாராட்டுபவனையும் எல்லோரும் இகழ்ந் தொதுக்குவ ரென்பதாம். நட்டபின் குற்றமும் குணமும் நாடித் தகாதென்றமை யின், நட்பதற்கு முன்னரே இவற்றை நாட வேண்டு மென்பதும், நட்டபின் குற்றத்தையும் குணமாகவே கொள்ள வேண்டும் என்பதும் கூறிய படியாம். இதில் நண்பரது மறை காத்தலும் குற்றம் பொறுத்தலு மாகிய இரு குணங்கள் கூறப்பட்டன. கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின். (குறள்) (7) 411. கொழித்துக் கொளப்பட்ட நண்பி னவரைப் பரித்துப் பலர்நடுவண் சொல்லாடார்; என்கொல் விழித்தலரு நெய்தற் றுறைவா! உரையார் இழித்தக்க காணிற் கனா. (பழ) விழித்து அலரும் நெய்தல் துறைவா - கண்விழித்தாற் போல அலர்கின்ற நெய்தலையுடைய கடற் றுறைவனே, கொழித்துக் கொளப்பட்ட நண்பினவரை - ஆராய்ந்து கொள்ளப்பட்ட நண்புடையாரை, பலர் நடுவண் பழித்துச் சொல்லாடார் - பலர் முன்னே பழித்துக் கூறார் அறிவுடை யோர், என்கொல் - ஏனெனில், இழித்தக்க கனா காணின் உரையார் - பிறர்க்கு உரைக்கத் தகாத இழிக்கத் தக்கன வற்றைக் கனாவின் கண் காணின் அவற்றைப் பிறர்க்கு உரையார் அதுபோல. கொழித்தல் - ஆராய்தல். நண்பின் அவர் - நண்பர். சொல் லாடார் - சொல்லார். நெய்தல் - ஒரு கடற்கரைப் பூச்செடி. இழித் தக்க - இழிக்கத்தக்க - பிறர் பழிக்கத்தக்க. துறைவா - ஆடூஉ முன்னிலை. பிறர் பழிக்கத் தக்கவற்றைக் கனவில் கண்டால் அவற்றைப் பிறரறியக் கூறார். அங்ஙனமே, பழைய நண்பர்கள் ஏதாவது தகாத செய்தால் பிறரிடம் கூறக்கூடாது என்பதாம். தீக் கனாவைப் பிறரிடன் கூறாமை போல, நண்பர் களிடம் காணும் தீமையையும் பிறரிடங் கூறக் கூடா தென்பது கருத்து. (8) 412. நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட் டார்களைக் கண்கண்ட குற்றம் உளவெனினுங் காய்ந்தீயார்; பண்கொண்ட தீஞ்சொல் பணைத்தோளாய்! யாருளரோ தங்கன்று சாக்கறப் பார். (பழ) பண் கொண்ட தீம் சொல் பணைத்தோளாய் - பண் போன்ற இனிமையான சொல்லையும் மூங்கில் போன்ற தோள்களையும் உடையவளே, நண்பு ஒன்றித் தம்மாலே நாட்டப் பட்டார்களை - நட்புக் கொண்டு தம்மாலே உண்மை நண்பர்களாகக் கொள்ளப் பட்டவர்களை, கண் கண்ட குற்றம் உள எனினும் காய்ந் தீயார் - வெளிப் படையான குற்றம் அவரிடம் இருந்தாலும் வெகுளார்; தம் கன்று சாக் கறப்பார் யார் உளர் - தம் கன்றிற்குப் பால் விடாமல் அது சாகும்படி பால் கறப்பவர் ஒருவரும் இலர். ஒன்றி - பொருந்தி. நாட்டப் பட்டார் - நட்புக் கொள்ளப் பட்டார். கண்கண்ட - நேரில் கண்ட - வெளிப்படையாகக் கண்ட. காய்ந் தீயார் - காயார் - வெகுளார். இதில் காய்ந்தீ - பகுதி. காய்ந்தீ என்பது காய் என்னும் முன்னிலை ஏவல் திரிசொல். காய்ந்தீ ஆர் - காய்ந்தீயார். பண் - இசை. தீஞ்சொல் - இனிமையான சொல். பணை - மூங்கில். சாக - கறப்பார் என்பது, சாக்கறப்பார் எனத் தரம் தொக்கது. பணைத் தோளாய் - மகடூஉ முன்னிலை. தம் கன்றிடம் குற்றங் கண்டு வெறுப்புற்று அதற்குப் பால் விடாமல் அது சாகும்படி இரக்கமின்றி எவரும் அதன் தாயினைப் பால் கறவார். அதுபோல, தம்மால் நட்புக் கொள்ளப் பட்டவரிடம் குற்றங் கண்டு வெறுப்புற்று அவர் கெடுறுமாறு எவரும் இரக்க மின்றிச் சினங் கொள்ளார் என்பதாம். ‘கன்று சாகப் பால் கறப்பரா’ - பழமொழி. நண்பர் செய்யுங் குற்றத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டு மென்பது கருத்து. (9) 413. தந்தீமை யில்லாதார் நட்டவர் தீமையையும் எந்தீமை யென்றே யுணர்பதாம் - அந்தண் பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப! ஒருவர் பொறையிருவர் நட்பு. (பழ) பொரு அம் தண் திரை வந்து உலாம் - கரையோடு பொருகின்ற அழகிய குளிர்ந்த அலைகள் வந்து உலாவும், பொங்கு நீர்ச் சேர்ப்ப - மிக்க நீரையுடைய கரையையுடை யவனே, ஒருவர் பொறை இருவர் நட்பு - நண்பர் இருவருள் ஒருவர் பொறுத்துக் கொள்ளுதல் இருவருடைய நட்புக்குக் காரணமாகும்; (ஆதலால்), தம் தீமை இல்லாதார் - நண்பர்க்குத் தம்மால் செய்யப்பட்டதொரு தீமையும் இல்லா தார், நட்டவர் தீமையையும் எம் தீமை என்றே - தமக்கு நண்பர் செய்த தீமையையும் எம்மால் செய்யப் பட்ட தீமை என்றே எண்ணி, தாம் உணர்ப - தாம் பொறுப்பர். நட்டவர் - நட்புக் கொள்ளப்பட்டவர். உணர்ப - உணர்ந்து பொறுப்பர். உணர்பதாம் - தாம் உணர்ப. அம் - அழகிய. தண் குளிர்ச்சியான. பொருதல் - கரையோடு பொருதல் - மோதல். உலாம் - உலாவும். பொங்கு நீர் - மிக்க நீர். சேர்பு - கரை. சேர்ப்ப - ஆடூஉ முன்னிலை. ‘இறப்பவே’ என்னும் செய்யுளின் ஈற்றடி, இச் செய்யுளின் ஈற்றடி போலவே அமைந்திருத்தலை அறிக. நண்பர்க்குத் தாம் யாதொரு தீமையும் செய்யா திருக்கவும், அவர் தமக்குத் தீமை செய்தால் அத்தீமை தம்மால் வந்ததாகவே எண்ணிப் பொறுப்பர் நல்லோர் என்பதாம். பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க நோதக்க நட்டார் செயின். (குறள்) (10) 414. நீக்க மறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும் நோக்கி னவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்! நெல்லி னுமிசிறிது நிங்கிப் பழமைபோற் புல்லினுந் திண்மைநிலை போம். (நன்) பூ குழலாய் - பூவை யணிந்த கூந்தலை யுடையவளே, நெல்லின் உமி சிறிது நீங்கி பழமை போல் புல்லினும் - நெல்லி லுள்ள உமியானது கொஞ்சம் பிரிந்து முன்போலவே கூடினாலும், திண்மை நிலை போம் - அந்நெல் முளைப்ப தற்குக் காரண மாயிருந்த வலிமை போய் விடும்; (அதுபோல), நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும் - பிரிதலில்லாத இரு நண்பர்கள் பகை கொண்டு சிறிது காலம் விலகி யிருந்து மறுபடியும் முன் போல் ஒன்று சேர்ந்தாலும், நோக்கின் அவர் பெருமை நொய்து ஆகும் - எண்ணுமிடத்து அவ்விருவருடைய பெருமையும் குறைவுடைய தாகும். புணர்தல் - கூடுதல், சேர்தல். நோக்கின் - எண்ணு மிடத்து. நொய்து - சிறிது, குறைவு. பூக்குழலாய் - மகடூஉ முன்னிலை. புல்லுதல் - பொருந்துதல். திண்மை நிலை - முளைக்கும் வலிமை. நெல்லினது உமி சிறிது நீங்கி மறுபடியும் முன் போல் ஒன்று சேர்ந்தாலும் அந்த நெல் முளையாது. அது போல, நண்பர்களிருவர் ஏதாவது காரணத்தால் பிரிந்து சிறிது காலம் கழித்து மறுபடியும் நட்புக் கொண்டால், அவர்களுக்குள் இருந்த பழைய நட்புரிமை உண்டாகாது என்பதாம். நண்பர்கள் எக்காரணங் கொண்டும் பிரிய நேரும்படி நடந்துகொள்ளக் கூடாது என்பது கருத்து. உவமையால், நண்பர்கள் சிறிது மனவேறுபாடு உண்டாகும் படிகூட நடந்துகொள்ளக் கூடாது. என்பது பெறப்படும். (11) 415. செயத்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார். (முது) செயத்தக்க நல் கேளிர் - தமக்கு உதவி செய்தற்குரிய நல்ல நண்பர்கள், செய்யாமை பழியார் - அங்ஙனம் உதவி செய்யா மையைப் பிறரிடம் பழித்துரையார் நல்லோர். நண்பர்கள் உதவி செய்திலர் என்று பழியாமல் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதாம். கேளிர் - உறவினர் என்றுங் கொள்ளலாம். (12) 28. கூடா நட்பு அதாவது, மனத்தால் கூடாமை சொல் செயல்களால் கூடி ஒழுகுவார் நட்பின் தன்மை; உள்ளுக்கு நட்புரிமை கொள்ளாமல் தமது காரியம் ஆகும் வரை வெளிக்கு நட்டார் போல் நடித்தல். தீ நட்புங் கொள்க. 416. நெருப்பழற் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம் எரிப்பச்சுட் டெவ்வநோ யாக்கும் - பரப்பக் கொடுவினைய ராகுவர் கோடாருங் கோடிக் கடுவினைய ராகியார்ச் சார்ந்து. (நால) நெய் போல்வதூஉம் - நெய்யும், நெருப்பு அழல் சேர்ந்தக் கால் - நெருப்பினது வெப்பத்தைச் சேர்ந்தால், எரிப்ப சுட்டு எவ்வ நோய் ஆக்கும் - உடம்பை எரிக்கும் படி சுட்டுத் துன்பந் தரும் நோயை உண்டாக்கும்; (அது போலவே), கோடாரும் - நல்லவர் களும், கடுவினையர் ஆகியார் சார்ந்து - தீய செயல்கள் செய்யும் கீழ்மக்களைச் சேர்ந்தால், கோடி பரப்ப கொடுவினையர் ஆகுவர் - அச்சேர்க்கையால் தம் ஒழுக்கத்தில் தவறி மிகவும் தீச் செயல் செய்பவராவர். அழல் - வெப்பம். நெய் போல்வது - நெய். எரிப்ப - வேகும் படி. எவ்வம் - துன்பம். பரப்ப - மிகவும். கொடு வினை - தீயசெயல். கோடுதல் - தவறுதல். கோடார் - நல்லொழுக்கத்தில் தவறாதவர். கோடி - தவறி. கடுவினை - தீய செயல். உடம்புக்கு உறுதியும் நலமும் தருவதாகிய நெய்யும் நெருப்பைச் சேர்ந்தால் அவ்வுடம்பையே எரிப்பது போல, தீச் சொல் உடை யாரைச் சேர்ந்தால் நல்லவரும் அத் தீச்செயல் செய்பவராவ ரென்பதாம். தீயோர் நட்பினால் வருந் தீமை இதனால் கூறப்பட்டது. (1) 417. சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய் மாரிபோன் மாண்ட பயத்ததாம் - மாரி வறந்தக்காற் போலுமே வாலருவி நாட! சிறந்தக்காற் சீரிலார் நட்பு. (நால) வால் அருவி நாட - வெண்மையான மலை யருவிகளை யுடைய நாட்டை யுடையவனே, சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்று ஆய் - சிறப்புடையாரது நட்பு மிகுந்த சிறப்புள்ள தாய், மாரிபோல் மாண்ட பயத்தது ஆம் - பெய்யும் மழை போலச் சிறந்த பயனை யுடையதாம், சீர்இலார் நட்பு - சிறந்த குணமில்லா வரது நட்பு, சிறந்தக்கால் மாரி வறந்தக்கால் போலும் - மிகுந்தால் மழை பெய்யாமல் வறந்து போனாற் போலப் பயனற்றதாம். சீரியார் - சிறந்தவர், நல்லவர். கேண்மை - நட்பு. சிறப்பிற்று - சிறப்புள்ளது, மாரி - மழை, மாண்ட - மாட்சிமையுடைய, சிறந்த. பயத்தது - பயனுடையது. வறத்தல் - பெய்யாதிருத்தல். வால் - வெண்மை; தூய்மை எனினுமாம். நாட - ஆடூஉ முன்னிலை. சீரிலார் - சிறப் பில்லாதவர், தீயோர் என்றபடி. பெரியாரது நட்பு மிகுந்த சிறப்புடையதாய் மழை போலச் சிறந்த பயனுடையதாம். சிறியாரது நட்பு மிகுந்தால் மழை வறண்டு போனாற்போல பயனற்றதாம். சிறியார் நட்பின் பயனின்மை கூறுவார் பயனுடைய பெரி யார் நட்பு உடன் கூறினார். (2) 418. பெருகுவது போலத் தொன்றிவைத் தீப்போல் ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும் - அருகெல்லாம் சந்தன நீள்சோலைச் சாரல் மலைநாட பந்தமி லாளர் தொடர்பு. (நால) அருகு எல்லாம் - பக்கங்களிலெல்லாம், சந்தனம் நீள் சோலை சாரல் மலை நாட - சந்தன மரங்களின் பெரிய சோலைகளை யுடைய சாரலையுடைய மலை நாடனே, பந்தம் இல் ஆளர் தொடர்பு - மனத்தில்அன்பில்லாதவரது நட்பு, பெருகுவது போலத் தோன்றி - முதலில் வளர்வது போலக் காணப்பட்டு, வைத் தீ போல் ஒரு பொழுதும் செல்லாதே நந்தும் - வைக்கோலிற் பற்றிய நெருப்புப் போலச் சிறிது பொழுதுகூட நிலைத்திராமல் அழியும். பெருகுதல் - வளர்தல். வை - வைக்கோல். ஒரு பொழுதும் - சிறிது பொழுதும் நந்துதல் -அழிதல். அருகு - பக்கம். நீள்சோலை - பெரிய சோலை. சாரல் - பக்க மலை - மலைச் சாரல். மலைநாட - ஆடூஉ முன்னிலை. பந்தம் - அன்பு. தொடர்பு - நட்பு. வைக்கோலில் பற்றிய தீ, பற்றினதும் திடீரென்று கொழுந்து விட்டு எரிந்து உடனே அவிந்துவிடும். அதுபோல, அன்பில் லாதவர் நட்பும், நட்புக் கொண்ட போது மிகச் சிறப்பாகத் தோன்றிச் சில நாளில் தீர்ந்து விடும். அத்தகை யோரிடம் நட்புக் கொள்ளக் கூடாது என்பதாம். (3) 419. முட்டுற்ற போழ்தின் முடுகியென் னாருயிரை நட்டா னொருவன்கை நீட்டேனேல் - நட்டான் கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க நெடுமொழி வைய நக. (நால) முட்டு உற்ற போழ்தின் - (நண்பனுக்குத்) துன்பம் நேர்ந்த பொழுது, முடுகி என் ஆர்உயிரை - விரைந்து எனது அருமையான உயிரை, நட்டான் ஒருவன் கை நீட்டேனேல் - (அத்துன் பத்தினின்றும் அவனைக் காக்கும் பொருட்டு) அந் நண்பனொருவ னிடத்தில் கொடாமற் போவேனானால், வையம் நெடுமொழி நக - இவ்வுலகம் என்னை மிகவும் இகழ்ந்து சிரிக்க, நட்டான் கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க - நண்பனது காவலை யுடைய வீட்டைத் தீ வைத்தோ இடித்தோ அழித்தவன் செல்லும் இழி நிலைக்குச் செல்வேனாக. முட்டு - தடை, இடையூறு, துன்பம். முடுகி - விரைந்து. நட்டான் - நண்பன். கை - இடம். உயிரை ஒருவன் கைநீட்டல் - உயிரை அவனிடம் ஒப்படைத்தல். உயிரைக் கொடுத்தேனும் - விட்டேனும் - அத்துன்பத்தைத் தீர்த்தல் என்றபடி. கடி - காவல்; உரிச்சொல். கட்டழித்தல் - உருக் குலைத்தல், அடியோ டழித்தல் என்றபடி. செல்வுழிச் செல்லல் - இழிநிலையை அடைதல். மொழி - மொழிதல். மொழிக - மொழிந்து - இகழ்ந்து சிரிக்க. நண்பன் துன்பமுற்ற போது தனது உயிரைக் கொடுத் தேனும் அவன் துன்பத்தைப் போக்குவது ஒருவனது கடமை யாகும். அவ்வாறு துன்பத்தைப் போக்காதவன், நண்பனது வீட்டை யழித்தவன் எவ்வாறு உலகத்தாரால் இகழப்பட்டு இழிநிலையை அடைவானோ, அவ்வாறே உலகத்தாரால் மிகவும் இகழ்ந்து சிரிக்கப் பட்டு இழிநிலையை அடைவான் என்பதாம். இது, உண்மை நண்பனொருவன் கூறுவதாகக் கூடா நட்பின் இழிவு கூறப்பட்டது. வெளிக்கு நண்பர்போல் நடித்து வீட்டுக்குத் தீ வைத்தல், வைப்போருக்குத் தீ வைத்தல் முதலியன செய்து கெடுக்கும் கீழ்மக்களும் உண்டு. கடிமனை கட்டழித்தல் - காவலையுடைய வீட்டின் கட்டு மானத்தைப் போக்குதல் என்றுமாம். அதாவது நம்பிக்கையுடைய ராக நடித்து இரவில் வீட்டில் புகுந்து கொள்ளை யிட்டுச் செல்வதற்கு உடந்தையாக இருத்தலாம். நம்பிக்கையுள்ள வேலைக் காரரும் இவ்வாறு செய்தல் உண்டு. கட்டு - கட்டுமானம். (4) 420. ஆன்படு நெய்பெய் கலனு ளதுகளைந்து வேம்படு நெய்பெய் தனைத்தரோ - தேம்படு நல்வரை நாட நயமுணர்வார் நண்பொரீஇ புல்லறிவி னாரொடு நட்பு. (நால) தேம்படு நல்வரை நாட - தேன் மிக்க சிறந்த மலை நாடனே, நயம் உணர்வார் நண்பு ஒரீஇ - நல்லவர்கள் நட்பை விட்டு, புல் அறிவினாரொடு நட்பு - புல்லறி வுடையாரோடு நட்புக் கொள்ளுதல், ஆன்படு நெய்பெய் கலனுள் - மாட்டு நெய்யை ஊற்றி வைத்திருந்த ஏனத்தில், அது களைந்து - அதை வேறொன்றில் ஊற்றிவிட்டு, வேம்பு அடு நெய்பெய்து அனைத்து - வேப் பெண்ணெயை ஊற்றி வைத்தாற் போலும். ஆன் - மாடு. படுதல் - உண்டாதல். ஆன்படுநெய் - மாட்டுப் பாலிலிருந்து உண்டாகும் நெய். பெய்தல் - ஊற்றி வைத்தல். கலன் - ஏனம் - பாத்திரம். களைதல் - நீக்குதல். வேம்பு அடு நெய் - வேப்பங் கொட்டையிலிருந்து எடுத்த வேப்பெண்ணெய். அனைத்து - அத்தன்மைத்து - போலும். அரோ - அசை. தேம் - தேன். தேம்படு - தேன் உள்ள. வரை - மலை. நயம் உணர்வார்- நட்பின் தன்மையை அறிவார் - நல்லவர்கள். ஒரீஇ - ஒருவி - நீக்கி. சொல்லிசை அள பெடை. புல் அறிவினார் - சிற்றறிவுடையவர் - கீழ்மக்கள். நல்லார் நட்பை விட்டுப் பொல்லார் நட்பைக் கொள்ளுதல், நெய்யை ஊற்றி விட்டு நெய் இருந்த ஏனத்தில் வேப் பெண்ணெயை ஊற்றி வைத்ததனோடொக்கும் என்பதாம். தகாது என்றபடி. கெட்டவர் நட்பைக் கொள்ளுதல் கூடாதென்பார், நல்லவர் நட்பை விடுதலுங் கூடாதென்றார், அதன் இன்றி யமையாமை கருதி. கெட்டவர்க்கு வேப்பெண்ணெயை உவமை கூறியது. அதன் கைப்புச் சுவை போல மனங் கைக்கும் படி நடந்து கொள்வர் என்பதை அறிவித்தற் கென்க. (5) 421. உருவிற் கமைந்தான்க ணூராண்மை யின்மை பருகற் கமைந்தபால் நீரளா யற்றே; தெரிவுடையார் தீயினத்தா ராகுதல் நாகம் விரிபெடையோ டாடிவிட் டற்று. (நால) உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை இன்மை - பெருமைக் குரிய நற்குணங்களை யுடையவனிடத்து உதவி செய்யுங் குண மில்லாதிருத்தல், பருகற்கு அமைந்த பால் நீர் அளாய் அற்று - குடிப்பதற்கு ஏற்ற இன்சுவையுடைய பாலில் நீர் கலந்தாற் போலும்; தெரிவு உடையார் தீ இனத்தவர் ஆகுதல் - அறிவுடையார் கெட்டவர்களோடு நட்புக் கொள்ளுதல், நாகம் விரிபெடையோடு ஆடி விட்டு அற்று - நாகப் பாம்பு பெண் விரியனைச் சேர்ந்தாற் போலும். உருவு - பெருமை. உருவு இன் கு. உருவிற்கு அமைந்தான் - பெருமைக்குரிய நற்குணங்களோடு பொருந்தியவன். ஊராண்மை - உதவிக்குணம். பருகல் - குடித்தல். அளாவுதல் - கலத்தல். அற்று - போலும். தெரிவுடையார் - அறிவுடை யார். தீ இனத்தார் - கெட்டவர் விரி - விரியன் பாம்பு. பெடை - பெண் பாம்பு. ஆடுதல் - கூடுதல். ஆடி விடுதல் - ஆடுதல். இன்சுவையுள்ள பாலில் நீர் கலந்தால் அவ்வின்சுவை கெடுதல் போல. நற்குண முடையானிடம் உதவாமை யுண் டானால் அந்நற்குணங் கெடும். நாகப் பாம்பு பெட்டை விரியனைக் கூடினால் அழிதல் போல, நல்லவர்கள் கெட்ட வர்களோடு கூடினால் - நட்புக் கொண்டால் - கெடுவர் என்பதாம். முன்னிரண்டடிகளில் கூறிய பொருள், பின்னிரண்டடி களில் கூறப்படும் எடுத்துக்கொண்ட பொருளை விளக்க வந்தவை யாகும். உதவாமை என்னும் கெட்ட குணத்தோடு சேர்ந்தால் நட்பு முதலிய நல்ல குணங்கள் கெடுதல் போல, கெட்டவர்களோடு சேர்ந்தால் நல்லவர்கள் கெடுவர் என உவமைமேல் உவமை கூறி விளக்கிய வாறாம். (6) 422. எய்ப்புழி வைப்பா மெனப்போற்றப் பட்டவர் உற்றுழி யொன்றுக் குதவலார், - பைத்தொடீஇ! அச்சிடை யிட்டுத் திரியின் அதுவன்றோ மச்சேற்றி யேணி களைவு. (பழ) பைந்தொடீஇ - பச்சை வளையல்களை அணிந்தவளே, எய்ப்பு உழி வைப்பு ஆம் எனப் போற்றப்பட்டவர் - தளர்வு வந்த காலத்து உதவியாம் என்று எண்ணி நட்புக் கொள்ளப் பட்டவர், உற்ற உழி ஒன்றுக்கு உதவலார் - ஓர் இடர் உற்ற போது ஒன்றிற்கும் உதவாராய், அச்சு இடையிட்டுத் திரியின் அது - உதவ முடி யாமைக்கு வேறோர் காரணங் கூறித் திரியின் அச்செய்கை, மச்சு ஏற்றி ஏணிகளைவு அன்றோ - ஒருவனை ஒருவன் மச்சின்மீது ஏற்றிவிட்டு ஏணியை எடுக்கும் செய்கை யோ டொக்கு மல்லவா? எய்ப்பு - தளர்வு. உழி - இடம். வைப்பு - பொருள் - நிதி. எய்ப்பு உழி வைப்பு - தளர்வு வந்த காலத்து உதவுவதற் காகச் சேர்த்து வைக்கும் பொருள். இது ‘எய்ப்பினில் வைப்பு’ எனவும் வழங்கும். எய்ப்புழி வைப்பு - உற்றுழி உதவல். உற்றஉழி - உற்றுழி - இடையூறுற்ற போது. ஒன்றிற்கு - சிறிதும். உதவலார் - உதவாராய். முற்றெச்சம். பைந்தொடி என்பது, எதுகை நோக்கிப் ‘பைத்தொடி’ என வலித்தல் விகாரம் பெற்றது. தொடி - வளையல். இது மகடூஉ முன்னிலை. அச்சு - அச்சம். இடையிடுதல் - இடையே கூறுதல். அச்சு இடையிடுதல் - உதவமுடியாமைக்கு வேறொரு காரணங் கூறுதல். உதவ அஞ்சுதற்கு இது காரணம் எனக்கூறி உதவா தொழிதல். மச்சு - மாடி. படியில்லாத மாடி. களைதல் - எடுத்தல். ஏதாவது இடையூறுவரின் உதவுவார் என நட்புக் கொள்ளப் பட்டவர், ஓர் இடையூறு வந்தபோது உதவாமல், இன்ன காரணத் தினால் உதவ முடியவில்லை யென்று பொய்க் காரணங் கூறுவோர் செயல், மாடிமேல் ஏற்றி விட்டு ஏணியை எடுத்ததனோ டொக்கும் என்பதாம். ஏறி இறங்கும் வரை ஏணியைப் பிடிப்பாரென்று நம்பி, ஏணியைப் பிடிக்கச் சொல்லி ஏணிமேல் ஏறி மாடி சென்ற பின் ஏணியை எடுத்து இறங்க முடியாமல் தவிக்க விட்டது போன்றது, இடையூறுற்றபோது உதவுவாரென்று நம்பி நட்புக் கொள்ளப் பட்டவர், இடையூறுற்றபோது உதவாமை என்பதாம். ‘ஏறவிட்டு ஏணியை வாங்கினாற் போல’ பழமொழி. (7) 423. இடையீ டுடையார் இவரவரோ டென்று தலையாயார் ஆராய்ந்துங் காணார் - கடையாயார் முன்னின்று கூறுங் குறளை தெரிதலால் பின்னின்னா பேதையார் நட்பு. (பழ) தம் நண்பர்மேல் பிறர் கோட் சொன்னால், தலையா யார் இவர் அவரோடு இடையீடு உடையார் என்று தலையா யினர் இவர் அவரோடு பகையுடையர் அதனால் கோட் சொல்லுகிறார் என்று எண்ணி, ஆராய்ந்தும் காணார் - அச்சொல்லை ஆராய்ந்தும் பாரார், கடையாயார் முன் நின்று கூறும் குறளை தெரிதலால் - கடையாயினார் தம் நண்பர் மேல் பிறர் வந்து கூறும் கோளை மெய்யென்று கொள்வர் ஆதலால், பேதையார் நட்பு பின் இன்னா - அறிவிலாரோடு கொண்ட நட்பு முடிவில் துன்பந்தரும். இடையீடு - இடையே நட்பை விடுதல் - பகை. அவர் என்றது தம் நண்பரை. இவர் என்றது - கோட் சொல்லுவாரை. தலையாயார் - மேன்மக்கள். ஆராய்ந்தும் காணார் - கேளார் என்றபடி. கடை யாயார் - கீழ்மக்கள். குறளை - கோள். தெரிதல் - உண்மை யென்று நம்புதல். பேதையார் - அறிவிலார், கீழ்மக்கள். மேன்மக்கள் தம் நண்பர் மீது பிறர் சொல்லும் கோளைக் கேளார். கீழ்மக்களோ, சொல்வதை உண்மையென்று நம்பி நட்பை விடுவர். ஆதலால், கீழ்மக்களோடு கொண்ட நட்பு முடிவில் துன்பந்தரு மென்பதாம். (8) 424. கண்டறிவார் போலார் கெழீஇயின்மை செய்வாரைப் பண்டறிவார் போலாது தாமு மவரேபோல் விண்டொரீஇ மாற்றி விடுதல் அதுவன்றோ விண்டற்கு விண்டல் மருந்து. (பழ) கண்டு அறிவார் போலார் - தம்மை முன்பு அறிந் திருந்தும் அறிவார் போலாது, கெழீஇயின்மை செய்வாரை - நட்பின்மை செய்வாரை, தாமும் பண்டு அறிவார் போலாது - தாமும் அவரை முன்பு அறிவார் போலாகாமல், அவரே போல் விண்டு ஒரீஇ - அவரைப் போலவே பிரிந்து நீங்கி, மாற்றி விடுதல் - நட்பினை மாற்றி விடுக; அது விண்டற்கு விண்டல் மருந்து அன்றோ - அச் செய்கை ஒருவன் அன்பு நீங்கினதற்குத் தானும் அன்பு நீங்குதல் மருந்தாவது போலு மன்றோ? கண்டு - முன்பு அறிந்திருந்தும். அறிவார் போலார் - அறியாதவர் போல் என்றபடி. போலார் - போலாமல். கெழீஇ - நட்பு. பண்டு - முன். அறிவார் போலாது - அறியாதவர் போல. விண்டு - நீங்கி. ஒரீஇ - நீங்கி. விண்டு ஒரீஇ - ஒரு பொருட் பன்மொழி. ஒரீஇ - ஒருவி. மாற்றி விடுதல் - நட்பினை விட்டு விடுதல். விடுதல் - விடுக - வியங்கோள் வினைமுற்று. மருந்து - காரணம். முன்னமே நம்மை அறிந்திருந்தும் அறியார்போல நட்பின்றி யிருப்பாரிடம் நாமும் அவரை அறியார்போல அவரிடம் நட்பின்றி யிருக்க வேண்டும். (9) 425. பெரியநட் டார்க்கும் பகைவர்க்குஞ் சென்று திரிவின்றித் தீர்ந்தாற்போற் சொல்லி யவருள் ஒருவரோ டொன்றி யொருப்படா தாரே இருதலைக் கொள்ளியென் பார். (பழ) பெரிய நட்டார்க்கும் பகைவர்க்கும் சென்று - தம்மோடு மிகவும் நட்புக் கொண்டவரிடத்தும் அவருடைய பகைவரி டத்தும் சென்று, திரிவின்றித் தீர்ந்தார் போல் சொல்லி - மன மொத்த நண்பினர் போல இருவரிடத்தும் இருவரையும் வேறுபடுக்கும் சில சொற்களைச் சொல்லி, அவருள் ஒருவரோடு ஒன்றி ஒருப்படா தாரே - அவ்விருவருள் ஒருவ ரோடும் மனம் பொருந்தி ஒன்று பட்டு நடவாதவரே, இரு தலைக் கொள்ளி என்பார் - இரண்டு தலை யானும் சுடுகின்ற கொள்ளியோ டொப்பர். பெரிய - மிக. நட்டார் - நண்பர். சென்று - இரு வரிடத்தும் சென்று. திரிவு இன்றித் தீர்ந்தார் போல் - வேறுபாடு சிறிதும் இன்றி மிகவும் நட்புக் கொண்டவர் போல - மனமொத்த நண்பினர்போல. ஒன்றி - பொருந்த. ஒருப் படுதல் - ஒன்றுபடுதல். தலை - கொள்ளிக் கட்டையின் ஒரு பக்கம். இருதலை - இரு பக்கம். தமது நண்பரிடத்தும் அவருடைய பகைவரிடத்தும் சென்று தனித்தனியே இருவரிடத்தும் நட்பினர் போல நடித்து, அவ்விரு வருடைய பகையை மிகுதிப்படுத்துவதன்றி, அவ் விருவருள் ஒருவரிடத்தேனும் மனம் பொருந்தி யிராதவர், இரு பக்கத்திலும் சுடுகின்ற கொள்ளியோ டொப்பர். இத்தகைய இயல்புள்ளவரோடு நட்புக் கொள்ளக் கூடாதென்பதாம். இவ்வாறு இருவரைக் குத்திவிட்டுக் கூத்துப் பார்ப்பது ஒரு சிலரின் இயல்பு. இன்னார் இவ்வாறு இருவர்க்கு வீண் பகையை உண்டாக்குவதன்றி, இருவரில் ஒருவரோடு ஒன்றி யிருந்து தாமும் பயன்பெற மாட்டார். இத்தகைய இயல்பு டையாருடன் சேர்ந்தால் நமக்கும் அதையே செய்வர் ஆதலால், அன்னாருடன் நட்புக் கொள்ளக் கூடா தென்பதாம். (10) 426. பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து தாழ்விடத்து நேர்கருதுந் தட்டையும் - ஊழினால் ஒட்டி வினைநலம் பார்ப்பானு மிம்மூவர் நட்கப் படாஅ தவர். (திரி) பொய் வழங்கி வாழும் பொறி அறையும் - பொய் பேசி அதனால் வாழ்கின்ற செல்வ மில்லாதவனும், கை திரிந்து தாழ் விடத்து நேர் கருதும் தட்டையும் - முறை தவறி ஒருவர் செல்வ மிழந்து தாழ்வுற்ற விடத்து அவரைத் தனக்குச் சமனாக நினைக்கின்ற அறிவில்லாதவனும், ஊழினால் ஒட்டி வினை நலம் பார்ப்பானும் - ஒருவனோடு முறையாக நட்புக் கொண்டு அவன் காரியத்திலே தனக்குப் பயன் பார்க் கின்றவனும், இம் மூவர் நட்கப் படாதவர் - ஆகிய இம் மூவரும் யாராலும் நட்புக் கொள்ளத் தகாதவராவர். வழங்கி - சொல்லி. பொறி - செல்வம். பொறி அறை - செல்வமில்லாதவன். கை திரிந்து - முறை தவறி. தாழ் விடம் - வறுமையுற்ற போது. நேர் கருதல் - தனக்குச் சமனாக எண்ணுதல். தட்டை - மூங்கில்; மூங்கில் போல் புரைபட்ட மனத்தை யுடையவன் - அறிவில்லாதவன். ஊழ் - முறை. ஒட்டி - நட்புக் கொண்டு. வினைநலம் பார்த்தல் - நண்பனது காரியத்தில் தான் பயனடையப் பார்த்தல். நட்க - நட்புக் கொள்ள. பொய் பேசுபவனிடம் செல்வம் நிலையாதாகையால், ‘பொய் வழங்கி வாழும் பொறியறை’ என்றார். தனக்கு மேலான நிலையி லிருந்தவர் தாழ்வுற்ற காலத்தும் மேலாகவே கருத வேண்டுமே யன்றித் தனக்கு நேராக - சமனாக - கருதக் கூடாது. பொய் பேசுபவனோடும், தனக்கு மேலான நிலை யிலிருந்தவர் தாழ்ந்த இடத்துத் தனக்கு நேராகக் கருதுபவ னோடும், நண்பரிட மிருந்து பயனை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பவனோடும் நட்புக்கொள்ளக் கூடாதென்பதாம். உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது கொள்வாருங் கள்வரு நேர். (குறள்) (11) 427. காய வுரைத்துக் கருமஞ் சிதையாதார் தாயரோ டொவ்வாரோ தக்கார்க்கு - வாய்பணிந் துள்ள முருக வுரைத்துப் பொருள்கொள்வார் கள்ளரோ டொவ்வாரோ தாம். (அற) காய உரைத்து கருமம் சிதையாதார் - தவறுகண்ட விடத்து இடித்துரைத்து மேற்கொண்ட செயலை முடிக்கு மாறு செய்ப வர்கள், தக்கார்க்கு - பெரியோர்களுக்கு, தாயரோடு ஒவ்வாரோ - தாயை நிகர்வர், உள்ளம் உருக வாய் பணிந்து உரைத்து - கேட் போர் மனம் உருகுமாறு வாயளவில் பணிவாகச் சொல்லி, பொருள் கொள்வார் கள்வரோடு ஒவ்வாரோ - உள்ள பொருளைக் கவர்ந்து பின் நீங்குகின்ற வர்கள் திருடரை நிகர்வர். காய உரைத்தல் - மனத்தைச் சுடும்படி கடுஞ்சொற் கூறுதல். காய - சுட. அதாவது, நண்பரிடம் தவறு கண்ட விடத்துக் கடிந்து கூறித் திருத்துதல். இது, ‘இடித்துரைத்தல்’ எனப்படும். கருமம் - காரியம். சிதைதல் - கெடுதல். கருமம் சிதையாதார் - காரியங் கெடாமல் செய்பவர். ஒவ்வாரோ - ஒப்பர். ஒவ்வார் ஓ என்னும் இரண்டு எதிர்மறை உடன் பாட்டை யுணர்த்தின. தக்கார் - பெரியோர் தக்கார்க்குத் தாயரோ டொப்பர் என்க. வாய் - வாயளவில். பணிந்து - பணிவாக. தாம் - அசை. தவறுகண்ட விடத்து இடித்துரைத்துத் திருந்துவோர் தாயை யொப்பர். கேட்போர் மனமுருகும்படி வாயளவில் பணிவாக உரைத்துப் பொருளைப் பறித்துக் கொண்டு நீங்குபவர் திருடரோ டொப்பர். எனவே, முன்னவர் நட்பைக் கொண்டு, பின்னவர் நட்பை விட்டு விடவேண்டும் என்பதாம். இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர். (குறள்) கனவினு மின்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. (குறள்) (12) 428. குற்றத்தை நன்றென்று கொண்டு குணமின்றிச் செற்ற முதலா வுடையவரைத் - தெற்ற அறிந்தாரென் றேத்து மவர்களைக் கண்டால் துறந்தெழுவர் தூய்க்காட்சி யார். (அற) குற்றத்தை நன்று என்று கொண்டு - தீமையை நன்மை யாகக் கருதி, குணம் இன்றி - நற்குணம் என்பது சிறிதும் இல்லாமல், செற்றம் முதலா உடையவரை - வெகுளி முதலியன உடையவர் களை, தெற்ற அறிந்தார் என்று ஏத்துமவர்களைக் கண்டால் - தெளிவாக அறிவாளிகள் என்று கருதித் துதிப்பவர் களைப் பார்த் தால், தூய்க் காட்சியார் துறந்து எழுவார் - நல்லறிவுடையோர் அவர்களை விட்டு நீங்குவர். செற்றம் - வெகுளி. முதலா - முதலியன. தெற்ற - தெளிவாக, நன்கு என்றபடி. ஏத்துதல் - துதித்தல் - பாராட்டுதல். காட்சி - அறிவு. தூய்க் காட்சி - நல்லறிவு. தூய்க்காட்சியார் துறந்தெழுவர் எனக் கூட்டுக. குற்றத்தைக் குணமாகக் கருதி, குணம் என்பதொன்று மின்றி, சினம் முதலிய குற்றங்களை உடையவர்களை நல்ல அறிவாளிகள் என்று எண்ணிப் பாராட்டுபவர்களைக் கண்டால் நல்லறி வுடை யோர் அவர்களை விட்டு நீங்குவர் என்பதாம். குணம் சிறிதுமின்றிக் குற்றமே உடையவர்களை அறிவாளிகள் என்று பாராட்டும் மூடர்களை விட்டு அறிவாளிகள் நீங்குவர் என்றபடி. (13) 429. புறநட் டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை வெளியிட்டு வேறாதல் வேண்டும் - கழிபெருங் கண்ணோட்டஞ் செய்யேல் கருவியிட் டாற்றுவார் புண்வைத்து மூடார் பொதிந்து. (நீநெ) புண் கருவி இட்டு ஆற்றுவார் - புண்ணைக் கருவி யினால் அறுத்துக் குணப்படுத்துவார்களே யன்றி, பொதிந்து வைத்து மூடார் - மறைத்து மூடிவையார்; (அது போல), புறம் நட்டு அகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை - வெளிக்கு நட்புக்கொண்டு உள்ளே வெகுள்வாரது நஞ்சு போலும் கொடிய பகையை, வெளியிட்டு வேறு ஆதல் வேண்டும் - வெளியாக்கி நீக்கல் வேண்டும்; கழிபெரும் கண்ணோட்டம் செய்யேல் - அத்தகைய பகைவர்பால் மிகுந்த அன்பு செய்யக் கூடாது. புறம் நடுதல் - வெளிக்கு நட்பினர்போல் நடித்தல். அகம் - உள் - மனம். வேர்த்தல் - வெகுளல். நச்சு - நஞ்சு. கழிபெரும் - மிகப் பெரிய; ஒருபொருட் பன்மொழி. கண்ணோட்டம் - இரக்கம்; அதாவது பழகினவரிடம் இரக்கங் கொள்ளுதல். கருவி - கத்தி முதலிய அறுப்புக் கருவிகள். இட்டு - அறுத்து. பொதிதல் - மூடுதல், மறைத்தல். உடம்பில் தோன்றிய கட்டியைக் கத்தியால் கிழித்துச் சீயைப் பிதுக்கி மருந்து போட்டுப் புண்ணை ஆற்றுவார்களே யன்றி, அதனை மறைத்து மூடி வையார். அதுபோல, வெளிக்கு நட்புக் கொண்டு உள்ளே பகைமைக் குணமுள்ளாரது நஞ்சு போன்ற கொடிய அவ் வுட்பகையை வெளிப்படுத்தி அவர் நட்பை நீக்க வேண்டும். அன்னாரிடம் மிகுந்த இரக்கம் காட்டக் கூடாது. கருவியினால் அறுத்து ஆற்றவேண்டிய சிலந்தியை மூடி வைத்தால், அது உள்ளே சீப்பிடித்துக் கெடுதி விளைத்தல் போல, உட்பகையும் வெளியுறவும் உடையவரால் தப்பாமல் கேடு விளையு மாதலால், அவ் வுட்பகையை வெளிப்படுத்தி அவர் நட்பை விட்டுவிடவேண்டும். பழகினவரென்றும் அவரிடம் இரக்கங் காட்டக் கூடாது என்பதாம். முகத்தி னினிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை யஞ்சப் படும். (குறள்) உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவோர் உறவுகல வாமை வேண்டும். (அருட்பா) (14) 430. நட்பிடைக் குய்யம்வைத் தெய்யா வினைசூழ்ந்து வட்கார் திறந்தராய் நின்றார்க்குத் - திட்பமா நாளுலந்த தன்றே நடுவன் நடுவின்மை வாளா கிடப்பன் மறந்து. (நீநெ) நட்பு இடை குய்யம் வைத்து - நண்பரிடத்து வஞ்சகஞ் செய்ய எண்ணி, எய்யா வினைசூழ்ந்து - அவர் அறியாமல் அவர்க்குத் தீங்குசெய்யக் காலம் பார்த்து, வட்கார் திறத்தராய் நின்றார்க்கு - அவரது பகைவரோடும் சேர்ந்து கொண்டு நிற்பவர்க்கு, திட்பம் ஆம் நாள் உலந்தது அன்று - வலிமை யான வாழ்நாள் முடிந்த தில்லை, நடுவன் நடுவின்மை மறந்து வாளா கிடப்பன் - நமன் நடுவுநிலைமை யுடையவனா கையால் அத்தகைய வஞ்சகரின் நடுவு நிலைமை இல்லாத தீச்செயல்களை நினையாமல் சும்மா இருப்பன். குய்யம் - வஞ்சகம். எய்யா - எய்யாமல் - அறியாமல். வினை - தீங்கு. வட்கார் - பகைவர். திறம் - பக்கம். திட்பம் - வலிமை. நாள் - வாழ்நாள். உலத்தல் - தீர்தல். உலந்து அன்று - தீரவில்லை. நடுவன் - யமன். உயிரும் உடலும் பிரியும் அக் காலத்தையே கூற்றம். கூற்றுவன், நமன் என்றெல்லாம் கற்பித்தனர். திருக்குறள் குழந்தை யுரை முன்னுரை பார்க்க. வாளா - சும்மா. கிடப்பன் - இருப்பன். யமன் நடுவுநிலைமை யுடையோனாதலால், தன்னைப் போலவே பிறரையும் எண்ணி, அவ்வஞ்சகரின் நடுவு நிலைமை யில்லாது செய்யும் தீச்செயல்களை நினையாது சும்மா இருப்பன். ஆகையால், அவன் நினைக்குமட்டும் இவர் உயிரோடிருந்து கொண்டிருப்பர் என இகழ்ந்தவாறு. நண்பர்களிடத்து வஞ்சகம் செய்ய எண்ணி, அவர் அறியாமல் அவர்க்குத் தீங்கு செய்யக் காலம் பார்த்தலோடு அவர்தம் பகைவ ரோடும் சேர்ந்துகொண்டு நிற்பவர் விரைவில் அழிந்தொழிவர் என்பதை, அவர்கட்கு வலிய வாழ்நாள் முடிய வில்லை. யமன் நடுவனாகையால் அவரைக் கொல்ல மறந்து விட்டான் என, வேறு வகையாகப் பழித்துக் கூறினார். அத்தகையார் நட்பை உடனே விட்டுவிட வேண்டு மென்ப தாம். கனவினு மின்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. (குறள்) (15) 431. நல்லார் செயுங்கேண்மை நாடோறு நன்றாகும் அல்லார் செயுங்கேண்மை யாகாதே - நல்லாய்கேள் காய்முற்றிற் றின்றீங் கனியா மிளந்தளிர்நாள் போய்முற்றி னென்னாகிப் போம். (நன்) நல்லாய் கேள் - நற்குணமுடையவளே கேட்பாயாக, காய் முற்றின் தின் தீம் கனி ஆம் - காயானது முற்றினால் தின்பதற்குரிய இனிமையான பழம் ஆகும், இளம் தளிர் நாள் போய் முற்றின் என் ஆகிப்போம் - இளமையான இலை நாள் சென்று முற்றினால் என்னாகும்? (அதுபோல), நல்லார் செயும் கேண்மை நாடோறும் நன்று ஆகும் - நல்லவர்கள் செய்கின்ற நட்பானது ஒவ்வொரு நாளும் நன்றாக வளரும், அல்லார் செயும் கேண்மை ஆகாது - கெட்டவர்கள் செய்கின்ற நட்பு நன்மையைத் தராது. கேண்மை - நட்பு. அல்லார் - நல்லவரல்லார் - கெட்டவர். நல்லாய் - மகடூஉ முன்னிலை. தீங்கனி - இனிமையான கனி. இளந்தளிர் - குருத்திலை. நாள் போய் - நாளாகி. இளங்காய் நாளாகி முற்றினால் இனிமையான பழம் ஆவது போல, நல்லவர்கள் கொண்ட நட்பு நாளாகாக முதிர்ந்து இன்பந் தரும். இளந்தளிர் நாளாகி முற்றினால் பழுத்து உதிர்ந்து போவது போல, கெட்டவர்கள் கொண்ட நட்பு நாளாகாக நலிந்து நீங்கி விடும். (16) 432. கற்றறியார் செய்யுங் கடுநட்புந் தாங்கூடி உற்றுழியுந் தீமைநிகழ் வுள்ளதே - பொற்றொடீ! சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த அன்றே மணமுடைய தாம். (நன்) பொன் தொடீ - பொன்னாற் செய்யப்பட்டவளையல் களை உடையவளே, சென்று படர்ந்த செழும் கொடி மென் பூ - பந்தலின் மேல் ஏறிப் படர்ந்த செழுமையான கொடியின் மெல்லிய பூவானது, மலர்ந்த அன்றே மணம் உடையது ஆம் - பூத்த அன்றைக்கு மட்டுமே மண முடையதாகும், (பின் மணம் கெட்டு விடும். அது போல), கற்று அறியார் செய்யும் கடு நட்பும் - கல்வி யறிவில்லாத மூடர்கள் கொண்ட மிக்க நட்பும். தாம் கூடி உற்ற உழியும் - அவர்கள் கூடியிருந்த போதிலும் தீமை நிகழ்வே உள்ளது - கேடுண்டாதலை யுடைய தாகும். கடு நட்பு - மிகுந்த நட்பு. கூடி உற்ற உழியும் - கூடி இருந்த விடத்தும் - இருந்த போதிலும். தீமை. தீங்கு - கெடுதல். நிகழ்வே உள்ளது - நிகழும், உண்டாகும். தொடி - வளையல். பொற்றொடீ - மகடூஉ முன்னிலை. சென்று - ஏறி. அன்றே - அன்று மட்டும். அப்போது மட்டும். பூத்த அன்று மட்டும் பூ மணமுடையதாயிருந்து மறுநாள் வாடிப் போகிறது. அதுபோல, மூடர்கள் கொண்ட நட்பும் முதலில் நல்லதாகக் காணப்பட்டாலும் பின்பு துன்பத்தை யே தருமென்ப தாம். பூத்தபோது பூ பொலிவும் மணமும் உடையதாயிருந்து, மறுநாள் வாடிவதங்கிப் பொலிவும் மணமும் இழந்து கெடுதல் போல, மூடர்கள் கொண்ட நட்பும் முதலில் சீருஞ் சிறப்பும் உடையதாகத் திகழ்ந்து விரைவில் சீருஞ் சிறப்புமிழந்து தீமையையுந் தந்துவிடுமென்பதாம். (17) 433. புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை கொள்ளா விடுத லினிது. (இனி) புல்லிக் கொளினும் - வலிய வந்து நட்புக் கொள்ளினும், பொருள் அல்லார்தம் கேண்மை - ஒரு பொருளாக மதிக்கத் தகா தவருடைய நட்பினை, கொள்ளா விடுதல் இனிது - கொள்ளாது நீக்குதல் நல்லது. புல்லுதல் - பொருந்துதல் - நட்புக் கொள்ளுதல். பொருள் அல்லார் - ஒரு பொருளாக மதிக்கத்தகாத நற்குண மில்லார். தாமாகவே வலிய வந்து நட்புக் கொண்டாலும் நற்குண மில்லாதவருடன் நட்புக் கொள்ளாதிருத்தல் நல்லது என்பதாம்.(18) 434. நயமில் மனத்தவர் நட்பின்னா. (இன்) 435. நன்மையி லாளர் தொடர்பின்னா. (இன்) 436. கள்ள மனத்தார் தொடர்பின்னா. (இன்) 437. இழித்த தொழிலவர் நட்பின்னா. (இன்) 438. கெடுமிடங் கைவிடுவார் நட்பின்னா. (இன்) 434. நயம் - நீதி. 435. நன்மை - நற்குணம். 436. தொடர்பு. நட்பு. 437. இழித்த தொழில் - பெரியோரால் பழிக்கப்படும் தொழில். 438. கெடும் இடம் - வறுமையுற்ற போது. இத்தகையா ரோடு நட்புக் கொள்ளுதல் துன்பந்தரும் என்பதாம். (23) 439. குலஞ்சிதைக்குங் கூடார்கண் கூடிவிடின். (நான்) கூடார்கண் கூடிவிடின் - நட்புக் கொள்ளத் தகாதவ ரோடு நட்புக் கொண்டுவிட்டால், குலம் சிதைக்கும் - அந்நட்பு அவன் குடிப்பிறப்பின் பெருமையைக் கெடுத்து விடும். குலம் - குடிப்பிறப்பு. சிதைத்தல் - கெடுத்தல், அழித்தல். கூடார் - கூடத்தகாதவர் - கெட்டவர் என்றபடி. கண் - இடம் - இடத்து. கெட்டவர்களோடு நட்புக் கொண்டால் குடிப் பெருமை கெடும். (24) 440. கொண்டுகண் மாறல் கொடுமையிற் றுவ்வாது. (முது) கொண்டு கண் மாறல் - ஒருவரோடு நட்புக் கொண்டு பின்பு அவரிடம் கண்ணோட்டம் ஒழிதல், கொடுமையின் துவ்வாது - அவருக்குக் கொடுமை செய்தலின் வேறாகாது; கொடுமை செய்தலோ டொக்கும் என்றபடி. கண்ணோட்டம் - நண்பர்கள் கூறியதை மறுக்காமை. அதாவது நண்பரிகளிடம் இரக்கங் காட்டுதல். துவ்வாது - நீங்காது, வேறாகாது. ஒருவரோடு நட்புக் கொண்ட பின் அவரிடம் கண்ணோ டாதவர், இரக்கங் காட்டாதவர், அவருக்குக் கொடுமை செய்தவரே யாவர். நண்பரிடத்துக் கண்ணோடுவதே நட்பின் தன்மையாகும். (25) 441. நேரா நெஞ்சத்தோன் நட்டோ னல்லன். (முது) நேரா நெஞ்சத்தோன் - ஒற்றுமைப்படாத மனத்தை யுடையவன், நட்டோன் அல்லன் - நண்பன் ஆகான். நேரா - நேராத - ஒன்று படாத. நெஞ்சம் - மனம். மனம் ஒன்று படாத நண்பன் நண்பன் ஆகான். மனம் ஒன்று படாதவர் நட்பை விட்டுவிட வேண்டும் என்பதாம். (26) 442. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள்ளாதே. (வெற்) நூறு ஆண்டு பழகினும் - பல ஆண்டுகள் பழகினாலும், மூர்க்கர் கேண்மை - மூடருடைய நட்பு, நீர்க்குள் பாசி போல் - தண்ணீரிலுள்ள பாசி போல, வேர் கொள்ளாது - வேரூன்றாது; உறுதிப்படாது என்றபடி. நூறு - பல என்றபடி. மூர்க்கர் மூடர், சினமுடையவர் என்றுமாம். பாசி - பாசம். கேண்மை வேர்க்கொள்ளாது என்க. பல ஆண்டுகள் பழகினாலும் மூடர்கள் நட்பு உறுதியுடைய தாகாது. அத்தகையார் நட்பை விட்டுவிட வேண்டு மென்பது கருத்து. (27) 443. பாம்பொடு பழகேல். (ஆத்) பாம்பொடு - பாம்பு போன்ற கொடியவர்களுடன், பழகேல் - நீ நட்புக் கொள்ளாதே. பாம்பு - கொல்லுந் தன்மை வாய்ந்த நஞ்சையுடையது; கடித்துக் கொல்லுங் குணமுடையது. பாம்பு போன்ற கொடி யரைப் பாம்பு என்றார். பாம்பு போன்ற அத்தகைய கொடிய வர்களோடு நட்புக் கொள்ளக் கூடாது என்பதாம். (28) 444. கெடுவது செய்யின் விடுவது கருமம். (கொன்.) கெடுவது செய்யின் - நண்பன் கெடுதி செய்வானானால் விடுவது கருமம் - அவன் நட்பை விட்டுவிடுவதே நல்ல காரிய மாகும். கெடுவது - கெடுதி - தீங்கு. கருமம் - நல்லது என்ற படி. கெடுதி செய்பவன் நட்பை விட்டு விடுவதே நல்லது. முகத்தினினிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை யஞ்சப் படும் (குறள்) (29) 445. நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும். (கொன்.) நல் இணக்கம் அல்லது - நல்ல நட்பு அல்லாதது; அதாவது கெட்ட நட்பு, அல்லல் படுத்தும் - துன்பத்தையே உண்டாக்கும். இணக்கம் - இணங்குதல் - நட்புக் கொள்ளுதல். நல்லிணக்கம் அல்லது - கெட்டவர் நட்பு. அல்லல் - துன்பம். படுத்தும் - உண்டாக்கும். கெட்டவரோடு நட்புக் கொள்ளுதல் துன்பத்தை உண் டாக்கும். (30) 446. வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம். (உல.) வஞ்சகரோடு நட்புக் கொள்ளக் கூடாது. (31) 447. நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம் (உல.) நல் இணக்கம் இல்லாரோடு - நல்ல நட்புக் குணம் இல்லாத வருடன், இணங்க வேண்டாம் - நட்புக் கொள்ள வேண்டாம்: நல்ல குணம் இல்லாதவரோடு நட்புக் கொள்ளக் கூடாது. (32) 448. முன்கோபக் காரரோ டிணங்க வேண்டாம். (உல.) முன் கோபம் - எண்ணிப் பாராமல் எளிதில் சினங் கொள்ளுதல். (33) 29. சிற்றினஞ் சேராமை அதாவது, கீழ்மக்களோடு சேராமல் இருத்தல். 449. பெருமை புகழறம் பேணாமை சீற்றம் அருமைநூல் சால்பில்லார்ச் சாரின் - இருமைக்கும் பாவம் பழிபகை சாக்காடே கேடச்சம் சாபம்போற் சாருஞ் சலித்து. (ஏலா) பெருமை புகழ் அறம் சீற்றம் பேணாமை அருமை நூல் சால்பு இல்லார் சாரின் - பெருமையும் புகழும் அறமும் சினங் கொள்ளா மையும் அரிய நூலறிவும் சால்பும் இல்லாதவர் களை ஒருவன் சேர்ந்தால், இருமைக்கும் - இம்மை மறுமை இரண்டிலும், பாவம் பழி பகை சாக்காடு கேடு அச்சம் - குற்றமும் பழியும் பகையும் சாவும் பொருள் முதலியவற்றின் அழிவும் அச்சமும், சாபம் போல் சலித்து சாரும் - பெரியோர் கூறும் தீ மொழி போல அவனைச் சினந்து வந்தடையும். சீற்றம் - சினம். சீற்றம் பேணாமை - சினங்கொள்ளா மை - சினமின்மை, அருமை நூல் - அரிய நூலறிவு. சால்பு நிறைந்த குணம். அதாவது பல நல்ல குணங்களும் பொருந்து வது சால்பு எனப்படும். இருமை - இம்மை மறுமை. இம்மை - ஒருவர் இவ் வுலகில் வாழ்தல். மறுமை - ஒருவர் இறந்தபின் இங்கு அவரைப் பற்றிப் பேசுதல். பாவம் - குற்றம். பழி - பிறர் பழிக்கத் தக்க செய்தல், பழித்தல். சாக்காடு - சாவு கேடு - பொருட்கேடு, நலக்கேடு முதலியன. சாபம் - தீமொழி. பெரியோர்கள் வெகுண்டு கூறுவது அப்படியே நடக்கும் என்பது நம்பிக்கை. சலிப்பு - சினம், வெறுப்பு. சலித்துச் சாரும் - அவனை வெறுத்து அல்லது சினந்து கெடுக்கச் சேரும் என்றபடி. பெருமை, புகழ் முதலிய குணமில்லாதவர்களை ஒருவன் சேர்ந்தால் அவனைப் பாவம் பழி முதலியன சேரும் என்ப தாம். அத்தகைய சிற்றினம் சேரக்கூடாது என்பது கருத்து. நல்லினத்தி னூங்கு துணையில்லை தீயினத்தின் அல்லற் படுத்தூஉ மில். (குறள்) (1) 450. தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற தீயார்சொல் கேட்பதுவுந் தீதேயாம் - தீயார் குணங்க ளுரைப்பதுவுந் தீதே யவரோ டிணங்கி யிருப்பதுவுந் தீது. (வாக்) தீயாரைக் காண்பதுவும் தீது - கெட்டகுண முடையவர் களைப் பார்ப்பதும் கெடுதலாம், திரு அற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீது - மேன்மையில்லாத கெட்டவர் சொல்வதைக் கேட்பதும் கெடுதலாம், தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீது - கெட்டவருடைய கெட்ட குணங்களைப் பேசுவதும் கெடு தலாம், அவரோடு இணங்கி இருப்பதுவும் தீதே - அக்கெட்ட வரோடு நட்புக் கொண்டிருப்பதும் கெடுதலாம். தீயார் - கெட்ட குணஞ் செயல்களையுடையார்; கொடியர் என்றபடி. தீது - கெடுதல்; குற்றம் எனினுமாம். திரு - மேன்மை, பெருமை. இணங்கி - நட்புக் கொண்டு. கெட்டவர்களைப் பார்ப்பதும், அவர்கள் சொல்லைக் கேட்பதும், அவருடைய குணங்களைச் சொல்வதும், அவரோடு நட்புக் கொள்வதும் கெடுதலைத் தரும் என்பதாம். (2) 451. கல்லா வறிவிற் கயவர்பாற் கற்றுணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணாரே - வில்லார் கணையிற் பொலியுங் கருங்கண்ணாய்! நொய்தாம் புணையிற் புகுமொண் பொருள். (நன்) வில் ஆர் கணையில் பொலியும் கருங்கண்ணாய் - வில்லிற் பொருந்திய அம்புபோல விளங்குகின்ற கரிய கண்களையுடைய வளே, புணையில் புகும் ஒண்பொருள் நொய்து ஆம் - மெல்லிய தெப்பத்தைச் சேரும் வலுவான பொருளும் மெலி தாகும்; (அது போல), கல்லா அறிவில் கயவர்பால் - கல்லாத அறிவில்லாத மூடரைச் சேர்ந்தால், கற்று உணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணார் - கற்றறிந்த பெரியோர் தங்கள் பெருமையை இழந்து விடுவர். கல்லா - கல்லாத. அறிவுஇல் - அறிவில்லாத. கயவர் - மூடர். கனம் - பெருமை. நண்ணார் - அடையார், இழந்து விடுவர் என்றபடி. ஆர் - பொருந்தி. கணை - அம்பு. பொலிதல் - விளங்குதல். கண்ணாய் - மகடூஉ முன்னிலை. நொய்து - மெலிது. புணை - தெப்பம். ஒண்பொருள் - பாரமான பொருள். தண்ணீரில் மிதக்கும் பாரமில்லாத படகில் வைத்தால் பாரமான பொருளும் தன் பாரத்தை இழந்து விடுதல் போல, கல்வியறிவில்லாத மூடர்களைச் சேர்ந்தார் கல்வியறிவுடைய பெரியோர்கள் தங்கள் பெருமையை இழந்து விடுவர் என்பதாம். (3) 452. பேதையரைக் கண்டாற் பெரியோர் வழிவிலகி நீதியொடு போதல் நெறியன்றோ - காதுமத மாகரத்த யானை வழிவிலகல் புன்மலந்தின் சூகரத்துக் கஞ்சியோ சொல். (நீவெ) காதும் மதம் மாகரத்த யானை வழிவிலகல் - வெகுளும் இயல்பையும் வெறியையும் நீண்ட துதிக்கையையும் உடைய யானை வழி விலகி போதல், புன் மலம் தின்சூகரத்துக்கு அஞ்சியோ சொல் - இழிந்த மலத்தைத் தின்னுகின்ற பன்றிக்கு அஞ்சியோ நீ சொல்வாயாக, (அதுபோல), பேதையரைக் கண்டால் - மூடரைக் கண்டால், பெரியோர் நீதியொடு வழி விலகிப் போதல் நெறி அன்றோ - பெரியோர்கள் ஒழுங்காக ஒதுங்கிச் செல்லுதல் முறையாகு மன்றோ? பேதையர் - மூடர். நீதி - ஒழுங்கு. நெறி - முறை. காதுதல் - வெகுளுதல். மதம் - வெறி. மா - பெரிய - நீண்ட. கரம் - கை. சூகரம் - பன்றி. பன்றியைக் கண்டு யானை விலகிச் செல்வது அதற்கு அஞ்சி யன்று; அப் புன்மலந்தின் பன்றியோடு சேரக் கூடாது, சேர்ந்தால் தனது பெருமை குன்றும் என்று எண்ணியே விலகிச் செல்கிறது. அதுபோல, மூடர்களைக் கண்டால் அவர்களோடு சேராமல் விலகிச் செல்வதே பெரியோர்களுக்கு முறையாகும். அம்மூடர் களொடு சேர்ந்தால் பெரியோர் களின் பெருமை குன்றும் என்பதாம். (4) 453. தீயவர்பாற் கல்வி சிறந்தாலு மற்றவரைத் தூயவரென் றெண்ணியே துன்னற்க - சேயிழையே! தண்ணொளிய மாணிக்கஞ் சர்ப்பந் தரித்தாலும் நண்ணுவரோ மற்றதனை நாடு. (நீவெ) சேயிழையே - அழகிய நகைகளை யணிந்தவளே, சர்ப்பம் தண் ஒளிய மாணிக்கம் தரித்தாலும் - பாம்பானது குளிர்ந்த ஒளியையுடைய மாணிக்கத்தை உடையதாயிருந் தாலும், அதனை நண்ணுவரோ நாடு - அப்பாம்பினை ஒருவர் நெருங்குவாரோ நீ எண்ணிப்பார், (அது போல), தீயவர் பால் கல்வி சிறந்தாலும் - கெட்டவர்களிடத்துக் கல்வியறிவு மேம்பட்டிருந்தாலும், அவரை தூயவர் என்று எண்ணித் துன்னற்க - அவர்களை நல்லவர்கள் என்று எண்ணிச் சேரற்க. பால் - இடத்து. துன்னுதல் - சேர்தல். சேயிழை - செம்மை யாகிய நகையினையுடையவள்; பண்புத் தொகைப் புறத்தும் பிறந்த அன்மொழித் தொகை; மகடூஉ முன்னிலை. தண் - குளிர்ச்சி சர்ப்பம் - பாம்பு. தரித்தல் - வைத்திருத்தல். மற்று - அசை. நாடு - ஆராய்ந்து - எண்ணிப்பார். கொல்லுந் தன்மையுள்ள நஞ்சுடைய பாம்பினிடம் மாணிக்கம் இருந்தாலும் அதனை ஒருவரும் அணுகார். அது போல, கெட்ட குண முள்ளவரிடம் கல்வியறி விருந்தாலும் சேரக் கூடாது என்பதாம். (5) 454. நிந்தையிலாத் தூயவரு நிந்தையரைச் சேரிலவர் நிந்தையது தம்மிடத்தே நிற்குமே - நிந்தைமிகு தாலநிழற் கீழிருந்தான் றன்பா லருந்திடினும் பாலதெனச் சொல்லுவரோ பார். (நீவெ) நிந்தை மிகு தாலம் நிழல் கீழ் இருந்து - இழிவு மிகுந்த கள்ளையுடைய பனைமரத்தின் நிழலிலிருந்து, ஆன்பால் அருந் திடினும் - மாட்டுப் பாலைக் குடித்தாலும், அது பால் எனச் சொல்லுவரோ பார் - அது பால் என்று சொல்லுவார் களோ எண்ணிப்பார்; (அதுபோல), நிந்தை இல்லாத் தூயவரும் - பழிப் பில்லாத மேலோரும், நிந்தையரைச் சேரிந் - இழிந்த வர்களைச் சேர்ந்தால், அவர் நிந்தையது தம் இடத்தே நிற்கும் - அவர்களுடைய இழிவானது அம்மேலோர் களிடத்து நிலைத்து விடும். நிந்தை - பழிப்பு, இழிவு. இலா - இலாத. தாலம் - பனை. ஆன் - மாடு. தன் - அசை. கள் - கெட்டதெனப் பெரியோர்களால், பழிக்கப்படுதலால், கள்ளைத்தரும் பனையை “நிந்தை மிகுதலாம்”, என்றார். பனைமரத்தின் கீழ் இருந்து பாலைக் குடித்தாலும் கள் குடிப்பதாகச் சொல்லுவார்களே யல்லாமல், பால் குடிப்ப தாகச் சொல்லார். அதுபோல, பழிக்கத்தக்க இழிகுண முடையவரைச் சேர்ந்தால் மேலோர்களும் பழிக்கப்படு வார்கள் என்பதாம். (6) 455. நல்லொழுக்க மில்லா ரிடஞ்சேர்ந்த நல்லோர்க்கும் நல்லொழுக்க மில்லாச்சொல் நண்ணுமே - கொல்லும்விடப் பாம்பெனவுன் னாரோ பழுதையே யானாலுந் தூம்பமரும் புற்றடுத்தாற் சொல். (நீவெ) பழுதையே ஆனாலும் - வைக்கோற் புரியே யானாலும், தூம்பு அமரும் புற்று அடுத்தால் - துளையையுடைய புற்றுக்குப் பக்கத்தில் கிடந்தால், கொல்லும் விடப் பாம்பு என உன்னாரோ சொல் - கொல்லுகின்ற நஞ்சினையுடைய பாம்பு என்று நினைக்க மாட்டார்களோ? நீ சொல்; (அதுபோல), நல்லொழுக்கம் இல்லார் இடம் சேர்ந்த நல்லோர்க்கும் - நல்லொழுக்க மில்லாத வரைச் சேர்ந்த நல்லொழுக்க முள்ளவர்க்கும், நல்லொழுக்கம் இல்லாச் சொல் நண்ணுமே - கெட்டவர் என்ற பெயர் உண்டாகும். இல்லா - இல்லாத. நண்ணும் - பொருந்தும் - உண்டாகும். உன்னுதல் - நினைத்தல். பழுதை - வைக்கோற் புரி. தூம்பு - துளை - புற்றுக்கண். அமர்தல் - பொருந்துதல். வைக்கோற்புரி புற்றுக்குப் பக்கத்தில் கிடந்தால் பாம் பென்று நினைத்தல் போல. கெட்டவரைச் சேர்ந்த நல்லவரும் கெட்டவ ரெனப்படுவர் என்பதாம். கெட்டவராகவே மதிக்கப் படுவர் என்றபடி. (7) 456. சந்தனத்தைச் சார்தருவுந் தக்க மணங்கமழும் சந்தனத்தைச் சார்வேய் தழல்பற்ற - அந்தவனந் தானுமச் சந்தனமுந் தன்னினமு மாய்வதன்றித் தானுங் கெடச்சுடுமே தான். (நீவெ) சந்தனத்தைச் சார் தருவும் - சந்தன மரத்தைச் சேர்ந்த மற்ற மரங்களும், தக்க மணம் கமழும் - சிறந்த அச் சந்தன மணத்தைத் தாமும் பெற்று மணக்கும்; சந்தனத்தைச் சார் வேய் தழல் பற்ற - அச் சந்தன மரத்தை அடுத்த மூங்கிலில் நெருப்புப் பிடிக்க. (அந் நெருப்பினால்), அந்த வனம்தானும் - அந்தக் காடும், அச் சந்தனமும் - அந்தச் சந்தன மரமும், தன் இனமும் - அந்த மூங்கிலின் இனமும், மாய்வது அன்றி - எரிந்தொழிவ தல்லாமல், தானும் கெடச் சுடுமே - அந்த மூங்கிலும்அழியும்படி சுடும். தரு - மரம். தக்க - சிறந்த. கமழும் - மணக்கும். வேய் - மூங்கில். தழல் - நெருப்பு. வனம் - காடு. தன் இனம் - மற்ற மூங்கில். மாய்தல் - வெந்து போதல். தானும் - தீப்பிடித்த அந்த மூங்கிலும். தான் - அசை. சந்தன மரத்தை அடுத்த மற்ற மரங்களும் மணம் வீசுதல் போல, பெரியோரைச் சேர்ந்தவர்களும் பெருமை பெறுவர். சந்தன மரத்தை அடுத்த மூங்கிலில் தீப் பிடிக்க, அதனால் அந்தக் காடும், அச்சந்தன மரமும், மூங்கில் தூறும், அம் மூங்கிலும் வெந்தொழிதல் போல, தீயார், அவரைச் சார்ந்த வரைக் கெடுப்ப தன்றித் தாமும் கெடுவர் என்பதாம். இது பிறிதுமொழிதல் அணி. (8) 457. மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல் எனை மாண்புந் தானினிது நன்கு. (இனி) மாண்பு - மாட்சிமை - நன்மை. அகறல் - நீங்குதல். எனை - எல்லா. தான் - அசை. இனிது நன்கு - நன்கு இனிது - மிகவினிது. கெட்டவர்களைச் சேராதிருத்தல் எல்லா நன்மை களிலும் மிகநல்லது; மிக மிக நல்லது என்றபடி. (9) 458. சலவரைச் சாரா விடுத லினிது. (இனி) சலவர் - வஞ்சகர். சாரா - சாராமல். விடுதல் - விட்டு விடுதல் - சேராமலிருத்தல். வஞ்சகரைச் சேராமலிருப்பது நல்லது. (10) 459. மறந்தேயு மாணா மயரிகட் சேராத் திறந்தெரிந்து வாழ்த லினிது. (இனி) மறந்தேயும் மாணா மயரிகள் சேராத் திறம் - மறந் தாயினும் மாட்சிமைப் படாத அறிவிலிகளைச் சேராத வழிகளை, தெரிந்து வாழ்தல் இனிது - ஆராய்ந்தறிந்து வாழ்வது நல்லது. மறந்தேயும் - மறந்தும். மாணா - மாட்சிமைப்படாத - நற் குணம் இல்லாத. மயரிகள் - அறிவில்லாதவர். சேரா - சேராத. திறம் - வழி வகை. தெரிதல் - ஆராய்ந்தறிதல். கெட்டவர்களைச் சேராத வழிகளை ஆராய்ந்தறிந்து, மறந்துங் கூட அவர்களைச் சேராமல் இருப்பது நல்லது என்பதாம். (11) 460. கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கட் டீர்வினிது. (இனி) கைவாய் பொருள் பெறினும் - கையினிடத்து நிற்கக் கூடிய பொருளைப் பெறுவதானாலும், கல்லார் கண் தீர்வு இனிது - அறிவில்லாதவரைச் சேராமல் இருத்தல் நல்லது. வாய் - ஏழனுருபு. கைவாய் - கையின் கண். கை வாய்ப் பொருள் - கைப் பொருள் - மிச்சமாகும் மிகுந்த பொருள். கல்லார் - அறிவிலார். தீர்தல் - சேரா திருத்தல். அவரால் மிகுந்த பொருள் பெறுவதானாலும் அறி வில்லாத வருடன் சேரக்கூடாது. (12) 461. நில்லாத காட்சி நிறையின் மனிதரைப் புல்லா விடுத லினிது. (இனி) நில்லாத காட்சி - நிலையில்லாத அறிவினையுடைய, நிறை இல் மனிதரை - மனத்தை ஒரு நிலையில் நிறுத்துத லில்லாதவரை, புல்லா விடுதல் இனிது - சேராமல் இருத்தல் நல்லது. காட்சி - அறிவு. நில்லாத காட்சி - உறுதியில்லாத அறிவு; ஒன்றிலும் உறுதியில்லாத மயங்கும் அறிவு. நிறை - மனத்தை ஒரு நிலையில் நிறுத்துதல். அதாவது மனஞ்சென்ற வழியெல்லாம் செல்லாமல் நிறுத்தல். புல்லா - புல்லாமல் - சேராமல். மனிதர் - மக்கள். கற்பவை கற்றிருந்தும் மயக்க அறிவும். மனம் போன போக் கெல்லாம் போதலாகிய நிறையின்மையும் உடையவ ரோடு சேராமல் இருப்பது நல்லது என்பதாம். (13). 462. கயவரைக் கைகழிந்து வாழ்த லினிது. (இனி) கயவரை - கீழ்மக்களை, கை கழிந்து வாழ்தல் இனிது - நீங்கி வாழ்வது நல்லது. கயவர் - கீழ்மக்கள். கைகழிதல் - நீங்குதல், விடுதல். இது வழக்கில், ‘கை கழுவுதல்’ என வழங்கும். கீழ்மக்களைச் சேராமல் வாழ்தல் நல்லது. (14) 463. கற்றா னொருவனும் பாடிலனே கல்லாதார் பேதையார் முன்னர்ப் படின். (நான்) கல்லாதார் பேதையார் முன்னர்ப்படின் - கல்லாத வருடனும் அறிவில்லாதவருடனும் சேர்ந்தால், கற்றான் ஒருவனும் பாடிலனே - கல்வியறிவுடையவனும் பெருமை யில்லதவனாவான். பாடு - பெருமை. முன்னர்ப் படுதல் - சேர்தல். கல்லாதார் - கல்வியறிவில்லாதார். பேதையார் - முழுமூடர். யாதொன்றை யும் அறியாத்தன்மை - பேதைமை. கல்லாதவரும் முழு மூடருமாகிய சிற்றினத்தாரைச் சேரின் அறிவுடையாரும் பெருமையிழப்பர் என்பதாம். (15) 464. அறிவிலி துணைப்பாடு தணிமையிற் றுவ்வாது. (முது) அறிவிலி துணைப்பாடு- அறிவில்லதாவனை ஒருவன் துணை யாகக் கொள்ளுதல், தனிமையில் துவ்வாது - தனித் திருத்தலின் வேறாகாது. துணைப்பாடு - துணையாகக் கொள்ளுதல். துவ்வாது - நீங்காது, வேறாகாது. தணித்திருத்தலோ டொக்கும் என்றபடி. அறிவில்லாதவன் யாதொரு உதவியும் செய்யானாகை யால், அவனோடு சேர்ந்து வாழ்தலினும் தனித்து வாழ்தலே மேலென்பது கருத்து. (16). 465. பையலோ டிணங்கல். (ஆத்) இணங்குதல் - சேர்தல். பையல் - சிறு பிள்ளை; இங்குச் சிறு பிள்ளைத் தன்மையை உணர்த்திற்று. சிறு பிள்ளைகள் கடமை யுணர்ச்சியும் பொறுப்புணர்ச்சியும் இல்லாதவர்; உறுதியான உள்ளம் பெறாதவர். அத்தகு சிறுபிள்ளைத் தன்மை யுடை யாரோடு சேரக்கூடாது. (17) 466. மூர்க்கரோ டிணங்கல். (ஆத்) மூர்க்கர் - அறிவில்லாதவர். அறிவில்லாதவரோடு சேர்ந்து வாழக் கூடாது. (18) 467. கொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம். (உல) கொலை - மக்கட் கொலையைக் குறிக்கும். களவு - திருட்டு. கொலையும் - களவும் செய்வாரோடு சேரக் கூடாது. (19) 468. வழிபறித்துத் திரிவாரோ டிணங்க வேண்டாம். (உல) வழிபறித்துத் திரிதல் - வழியில் செல்கிறவர் பொருளைப் பிடுங்கித் திரிதல். வழிபறி கொள்ளைக்காரரோடு சேரக் கூடாது. வேலோடு நின்றான் இடுவென் றதுபோலும் (குறள்) என்பதால், வள்ளுவர் காலத்துக்கு முன்னரே, வழிச் செல் வோரிடம் கொள்ளையிட்டு வந்த கொடுமை இருந்த தென்பது தெரிகிறது. இது கொடுமையினும் கொடுமை யாகும். இத்தகைய கொடியாரோடு சேர்ந்து அத்தகைய கொடுந் தொழிலைச் செய்யக் கூடாதென்பது இதன் கருத்தாகும். (20) 469. சேராத விடந்தனிலே சேர வேண்டாம். (உல) சேராத இடம்தனில் - கெட்டவருடன். கெட்டவர் களோடு சேரக் கூடாது. (21) 470. புறஞ் சொல்லித் திரிவாரோ டிணங்க வேண்டாம். (உல) புறம் சொல்லல் - கோட் சொல்லுதல். கோட் சொல்லு வாருடன் சேரக் கூடாது. (22) 471. மறம்பேசித் திரிவாரோ டிணங்க வேண்டாம். (உல) மறம் - வீரம். மறம்பேசுதல் - வீரம் பேசுதல். வீணாக வீரம் பேசித் திரிகின்றவரோடு சேரக் கூடாது. (23) 472. ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம். (உல) ஏசல் - இகழ்தல். ஏசல் இடுதல் - இகழ்ந்து பேசுதல். உற்றார் - சுற்றத்தார். நத்துதல் - விரும்புதல். இகழ்ந்து பேசுகின்ற சுற்றத்தாருடன் சேரக் கூடாது. (24) 473. துர்ச்சனராய்த் திரிவாரோ டிணங்க வேண்டாம். (உல) துர்ச்சனம் - குறும்புத்தனம் - பிறரோடு வலியச் சண்டைக்குப் போதல், சும்மா இருப்போரைத் திட்டுதல், அடித்தல் முதலியன செய்தல். அத்தகையாரோடு சேரக் கூடாது. (25) 30. கல்லாமை இது, கல்வியின் மறுதலை. கல்லாமையின் குற்றங் கூறுதல். 474. கல்வியா னாய கழிநுட்பங் கல்லார்முன் சொல்லிய நல்லவுந் தீயவாம் - எல்லாம் இவர்வரை நாட! தமரையில் லார்க்கு நகரமுங் காடுபோன் றாங்கு. (பழ) எல்லாம் இவர் வரை நாட - எல்லாப் பொருள்களும் விரும்புதற்கு இடமான மலைநாடனே, தமரை இல்லார்க்கு நகரமும் காடு போன்றாங்கு - உறவினரை இல்லாதவர்க்கு நகரமும் காடு போலாவது போல, கல்வியான் ஆய கழி நுட்பம் - கல்வியா லாகிய மிக நுட்பமான அறிவால், கல்லார் முன் சொல்லிய நல்லவும் தீயவாம் - கல்லாதவரிடம் சொல்லிய நல்ல பொருள்களும் தீயனவாம். கழி - மிக. நுட்பம் - நுட்பமான அறிவு. இவர்தல் - விரும்புதல். வரை - மலை. தமர் - உறவினர். போன்று ஆங்கு - போன்றது போல. ஆங்கு, போல - உவம உருபு. இவர்வரை - பொருள்கள் விரும்பித் தங்கியிருக்கும் மலை. எல்லாப் பொருள் களும் குறைவின்றி நிறைந்த மலை என்றபடி. கல்லாரிடம் நுண்ணிய அறிவினால் ஆராய்ந்து சொல்லிய நல்ல கருத்துக்களும் அக் கல்லாரால் தீயனவாகக் கொள்ளப்படும் என்பதாம். காட்டை அடைந்தவர் திசை தடுமாறி, அஞ்சி இடர்ப் படுவர்; கேட்டுக்கும் உள்ளாவர். அவ்வாறே உற்றார் இல்லாத ஊரை யடைந்தவரும் இன்ன இடத்தில் தங்குவது, இன்ன இடம் செல்வது, இன்ன செய்வது என்றறியாமல் இடர்ப் படுவர்; கேட்டுக்கும் உள்ளாவர். உற்றார் உள்ள ஊரை அடைந்தவர் யாதொரு இடையூறுமின்றி இனிதிருப்பர். எனவே, உறவினரை யில்லாத நல்ல நகரமும் காடு போன்ற தாகும். இங்ஙனமே, கல்லாரிடம் உரைக்கும் நல்லனவும் தீயனவாகவே முடியும். ஆகையால், நல்ல கருத்துக்களைக் கல்லாரிடம் சொல்லக் கூடாது என்பதாம். அங்கணத்து ளுக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல். (குறள்) இன்னா தினனில்லூர் வாழ்தல். (குறள்) உற்றார் இல்லாத ஊரும் ஊரோ - பழமொழி. (1) 475. கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாத தில்லை யொருவற்கு - நல்லாய்! இழுக்கத்தின் மிக்க இழிவில்லை, இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு. (பழ) நல்லாய் - ஒருவற்கு இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை - ஒருவனுக்கு இழுக்கத்தைவிட மிக்கதோர் இழிவும் இல்லை, ஒழுக்கத்தின் மிக்க உயர்வு இல்லை - ஒழுக்கத்தை விட மிக்கதோர் உயர்வும் இல்லை; (ஆதலால்), கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாதது இல்லை - கல்லாதார் முன் ஒன்றைச் சொல்வதை விட மிக்கதொரு கெடுதல் வேறில்லை. கட்டுரை - சொல். பொல்லாதது - கெட்டது. நல்லாய் - மகடூஉ முன்னிலை. இழுக்கம் - இழிவு. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. (குறள்) என்ற உண்மையைக் கற்றார் அறிவர். கல்லாதாரிடம் இதனை உரைத்தால் அது தீமையாகவே முடியும். அதாவது, கல்லா தாரிடம் ஏதாவது கூறினால் அவர் இகழ்வர் என்றபடி. கல்லாதவரிடம் ஒன்றைக் கூறி இழிவைத் தேடிக்கொள்வதை விடச் சும்மா இருப்பது மேல் என்பதாம். இதனால், கல்லாமையின் இழிவு கூறப்பட்டது. (2). 476. கற்றாற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதார் சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் - ஏற்றெனின் தானு நடவான் முடவன் பிடிப்பூணி யானையோ டாடல் உறவு. (பழ) கற்று ஆற்றுவாரைக் கறுப்பித்து - கற்றுவல்லாரைச் சின மூட்டி, கல்லாதார் சொல் தாறு கொண்டு சுனைத்து எழுதல் - கல்லாதார் சொல்லாகிய தாற்றுக் கோலினைக் கொண்டு தினவு கொண்டெழுதல், எற்று எனின் - எத்தன்மைய தென்றால், தானும் நடவான் முடவன் - தானும் நடக்க முடியாத முடவனாய், பிடிப்பூணி - கைப்பாணி கொண்டு தவழ்வானொருவன், யானை யோடு ஆடல் உறவு - யானை யோடு விளையாடுதலோ டொக்கும். கற்று ஆற்றுதல் - கற்றுப் பிறர்க் கெடுத்துரைக்கும் ஆற்றலு டையராதல். கறுப்பித்தல் - சினமூட்டல். தாறு - முட்கோல். வண்டிமாடு, உழ மாடுகளைக் குத்தி ஓட்டும் தாற்றுக்கோல். தாறு - இருப்புமுள். அது அம்முள் அடித்துள்ள கோலைக் குறித்தது. கொரடா அல்லது சாட்டைக் கோலின் ஒரு முனையில் சிறு இரும்பு முள் அடித்துக் கொள்வர். சுனைத்தல் - சொறிதல். இங்கு தினவைக் குறித்தது. சுனைதெழுதல் - தினவு கொண்டெழுதல். சொல்லாகிய தாற்றுக்கோல் - உருவகம். சொல் தாற்றுக் கொண்டு சுனைத் தெழுதல் - சொல்லாகிய தாற்றுக் கோலைக்கொண்டு கற்றவர்களை அடக்க முனைந் தெழுதல். அதாவது, கற்றார்க்குச் சினமுண்டாகும்படி அடக்க மின்றிப் பேசுதல். பிடிப்பு பூணி பிடிப்பு - கையூன்றிச் செல்லும் முடவன், கை தேயாம லிருக்கப் போட்டுக்கொள்ளும் மரக்கட்டை. இது தோலிலும் செய்வதுண்டு. பூணி - பூண்டவன். கைப்பாணி கொண்டு தவழ்தல் - கையூன்றித் தவழ்தல். பாணி - கை. கைப்பாணி - கையாகிய பாணி. உறவு - உறுதல். ஆடல் உறவு - ஆடுதல். கல்லாதவன் கற்றாரைச் சொற்போரில் வெல்ல முயலுதல், கையூன்றித் தவழ்கின்ற முடவன் யானையோடு விளையாடுவது போலாம். முடவன் உயிரிழப்பான்; கல்லாதவர் அவமானமடைவர். சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர் கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார். (நாலடி) கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின். (குறள்) (3) 477. பொன்பெறுங் கற்றான் பொருள்பெறு நற்கவி என்பெறும் வாதி யிசைபெறும் - முன்பெறக் கல்லார்கற் றாரினத்த ரல்லார் பெறுபவே நல்லா ரினத்து நகை. (சிறு) கற்றான் பொன்பெறும் - கல்வியறி வுடையவன் பொன்னைப் பெறுவான், நல்கவி பொருள் பெறும் - நல்ல கவி பாட வல்லவன் பொருளைப் பெறுவான், வாதி என் பெறும் இசை பெறும் - வாது செய்து வெல்ல வல்லவன் என்ன பெறுவானெனில், வென்றவன் என்னும் புகழைப் பெறுவான், முன்பெறக் கல்லார் - இளமையில் கல்லாதவரும், கற்றார் இனத்தர் அல்லார் - கற்றார் கூட்டத்தைச் சாராதவரும், நல்லோர் இனத்து நகைபெறும் - நல்லோர் கூட்டத்தின் நடுவே இகழப்படுதலைப் பெறுவர். பொன், பொருள் - ஒருபொருட் கிளவி. கற்றவரும் கவி பாடுவோரும் பொருள் பெறுவர் என்றபடி. பெறும் - செய்யு மென் முற்று ஆண்பாலில் வந்தது. வாதி - வாதஞ் செய்வோன். சொற் போரிடுவோன். இசை - புகழ். முன் பெற - முன்னால் - இளமையில். நகை - இகழ்ச்சி. கற்றவன் பொன்னைப் பெறுவான், கவிஞன் பொருளைப் பெறுவான், வாதி வென்றான் என்னும் புகழைப் பெறுவான், இளமையில் கல்லாதவரும், கற்றாரைச் சார்ந்து வாழாதவரும் நல்லோரால் நகைக்கப்படுவர் என்பதாம். இளமையில் கற்பன கற்று, பின் கற்றாரைச் சார்ந்து வாழவேண்டும். (4) 478. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சவைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டா தவனன் மரம். (வாக்) கவை ஆகி கொம்பு ஆகி - கவைகளையுடையன வாகியும் கொம்புகளையுடையனவாகியும், காடு அகத்தே நிற்கும் அவை நல்ல மரங்கள் அல்ல - சபை நடுவே நீட்டு ஓலை வாசியா நின்றான் - ஓர் அவையின்கண் ஒருவர் கொடுத்த ஓலையைப் (ஏட்டை) படிக்கத் தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றவனும், குறிப்பு அறிய மாட்டாதவன் நல்மரம் - ஒருவனுடைய கருத்தை அறிய மாட்டாதவனும் நல்ல மரங்கள் ஆவர். கவை - கிளை. கொம்பு - கிளையிலுள்ள இளங்கிளை. ஓலை - நூல். வாசியா - வாசியாமல்; ஈறுகெட்ட எதிர்மறை வினை யெச்சம். நீட்டோலை வாசியாதவன் - படிக்கத் தெரியாதவன் - கல்லாதவன். குறிப்பறிதல் - ஒருவருடைய மனக் கருத்தை முகக் குறிப்பால் அறிதல். இது அறிவுடை யார்க்கே முடியும். படியாதவரும், ஒருவர் குறிப்பை யறியாதவரும் மக்களாக இருந்தும் மரத்தினும் கடையராகவே மதிக்கப் படுவர் என்பதாம். கல்வியறிவும் குறிப்பறிவும் மக்கட்கு இன்றியமையாதன என்றபடி. நுண்மான் நுழைபுலம் இல்லான் எழினலம் மண்மாண் புனைபாவை யற்று. (குறள்) (5) 479. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானு மதுவாகப் பாவித்துத் - தானுந்தன் பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி. (வாக்) கல்லாதான் கற்ற கவி - முறையாகப் படியாதவன் கவி பாடுதலானது, கான மயில் ஆட - காட்டிலுள்ள மயிலானது தன் அழகிய தோகையை விரித்து ஆட, கண்டு இருந்த வான் கோழி - அதைப் பார்த்துக் கொண்டிருந்த வான் கோழி யானது, தானும் அது ஆகப் பாவித்து - தன்னையும் அந்த மயிலாகவே எண்ணி, தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினால்போலும் - அதுவும் தன் அழகில்லாத சிறகுகளை விரித்துக் கொண்டு ஆடினதை ஒக்கும். கானம் - காடு. வான்கோழி - ஒருவகைக் காட்டுக் கோழி. பாவித்தல் - எண்ணுதல். பொல்லா - பொல்லாத - அழகில்லாத. யாப்பு முதலிய இலக்கணங்களை நன்கு கற்றுவல்ல புலவர்கள் நன்றாகப் பாடிய பாட்டுக்களைப் பார்த்து, ஆசிரி யரிடம் முறையாக இலக்கிய இலக்கணங்களைப் படியாத ஒருவன், தானும் தன்னை ஒரு புலவனாக எண்ணி, அப்பாட்டுக் களைப் போலவே பாடக் கருதி, அரைகுறையாக - யாப்புக் குற்றத்துடன் - பாடு தலானது, இளமையிலிருந்தே தாயாடத் தானாடிப் பழகிய மயிலானது தன் அழகிய தோகையை விரித்து அழகாக ஆட, அதைப் பார்த்து, அவ்வாறு ஆடிப் பழகாத, அழகிய தோகை யில்லாத ஒரு வான்கோழியானது தன்னை அம்மயிலாக எண்ணித் தனது அழகில்லாத சிறகு களை விரித்து அரைகுறையாக ஆடினது போலும் என்பதாம். இன்று, யாப்பிலக்கணங்கல்லாத ஒரு சில இளங் கவிஞர்கள் ‘செய்யுள்’ என்னும் பெயருக்கே புறம்பாக, சிறிதும் யாப்பமைதி யில்லாமல், கவிகள் பாடி, அவற்றை வானொலி முதலிய இடங் களில் அரங்கேற்றுவதும், இதழ் களில் வெளியிடுவதும், தனி நூலாக அச்சிடுவதும் போலவே, அன்றும் சிலர் செய்து வந்ததை மறுத்துக் கூறுவதே இப்பாட்டு. இத்தீமை யொழிந்தாலல்லாமல் தமிழ் மொழி நன்னிலை யெய்தாது. இலக்கிய இலக்கணப் பயிற்சி பெற்று, யாப்பிலக் கணப் படியே பாட்டுப்பாட வேண்டும்; அரைகுறையாகப் பாட்டுப் பாடுதல் கூடாது. இது கல்லார் செய்யுந்தவற்றை எடுத்துக் காட்டியது. (6) 480. கல்லார் பலர்கூடிக் காதலித்து வாழினு நூல் வல்லா னொருவனையே மானுவரோ - அல்லாரும் எண்ணிலா விண்மீ னிலகிடினும் வானகத்தோர் வெண்ணிலா வாமோ விளம்பு. (நீவெ) அல்வானகத்து ஆரும் எண்இலா விண்மீன் இலகிடினும் - இரவில் வானின்கண் உள்ள அளவில்லாத வீண்மீன்கள் ஒளி வீசினும், ஓர் வெண்ணிலா ஆமோ - ஒரு வெண்மையாகிய நிலாவுக்கு ஒப்பாகுமோ? (ஆகா; அதுபோல), கல்லார் பலர்கூடிக் காதலித்து வாழினும் - படியாத மூடர்கள் பலர்கூடி ஒருவரை யொருவர் விரும்பி வாழ்ந்தாலும், நூல் வல்லான் ஒருவனை மானுவரோ விளம்பு - கல்வியறிவிற் சிறந்தவனை ஒப்பாவாரோ சொல்வாயாக. காதலித்து - விரும்பி , அன்பு கொண்டு என்றுமாம். நூல் - கல்வி. மானுதல் - ஒத்தல். அல் - இரவு ஆர்தல் - பொருந்துதல், இருத்தல். இலா - இல்லாத. இலகுதல் - விளங்குதல், ஒளி வீசுதல். விளம்பு - சொல். இரவில் அளவில்லாத விண்மீன்கள் ஒளிவீசுகின்றன. ஆனால், அவை ஒரு திங்களுக்கு ஒப்பாகுமோ? அதுபோல, கல்லாதவர் பலர் ஒன்றுகூடினும் கற்றார் ஒருவருக்கு ஒப்பா வாரோ; ஆகார் என்றபடி. (7) 481. கல்லா ருரைக்கும் கருமப் பொருளின்னா. (இனி) கல்லா ருரைக்கும் - கல்வியறி வில்லாதவர் கூறும். கருமப் பொருள் இன்னா - காரியத்தின் பயன் துன்பந் தரும். கருமம் - காரியம். காரியத்தின் பயன் - ஒரு காரியஞ் செய்வதனால் உண்டாகும் பயன். இன்ன காரியம் செய்வதால் இன்ன பயன் அடையலாம் என்று கல்லார் சொன்னால், அதன் படி அக்காரியத்தைச் செய்தால் அவர் சொன்ன பயன் உண்டாகாது என்பதாம். ஒன்றைச் செய்தும் பயன் இல்லாமை யால், செய்த வேலைதான் மிச்சம் என்பது கருத்து. கல்லார் சொல்லும் காரியம் பயன்படாது என்பதாம். (8) 482. குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா. (இன்) குலத்துப் பிறந்தவன் - நற்குடியிற் பிறந்த ஒருவன், கல்லாமை இன்னா - கல்லாதிருத்தல் துன்பந் தரும். குலம் - நற்குடி. வழிவழியாக நல்லொழுக்க முடைய குடி - நற்குடி எனப்படும். நற்குடிப் பிறந்த ஒருவன் கல்லா னாயின், அக்குடிப் பெருமை குன்றும். (9) 483. தனக்குப்பாழ் கற்றறி வில்லா உடம்பு. (நான்) தனக்குப் பாழ் - ஒருவனுக்குப் பயனின்மையாவது, கற்றிறிவு இல்லா உடம்பு - கல்வியறிவு பெறாத வெற்று டம்பை உடைய னாயிருத்தலாகும். பாழ் - பயனில்லாதது. கல்வியறி வில்லாதவனை, ‘கற்றறி வில்லா உடம்பு’ என்று இகழ்ந்தவாறு. இல்லா - இல்லாத. கல்வியறிவில்லாதவன் பிறப்புப் பயனற்றது என்பதாம். (10) 484. குலனுங் குடிமையுங் கல்லாமைக் கீழ்ச்சாம். (நான்) குலனும் குடிமையும் - குடிப்பிறப்பும் அக்குடிக்குரிய ஒழுக்கமும், கல்லாமைக்கீழ் - கல்லாமையின்கண், சாம் - சாகும் - கெடும். குலம் - குடிப்பிறப்பு - நற்குடிப்பிறப்பு. குடிமை - அக்குடிப் பிறப்பிற்குரிய ஒழுக்கம். கீழ் - ஏழனுருபு. குலத்துப் பிறந்த ஒருவன் கல்லாவிட்டால் இவன் குடிப் பெருமையும் அக்குடிக்குரிய ஒழுக்கமும் கெடும் என்பதாம். (11) 485. கல்லா வொருவர்க்குத்தம்வாயிற் சொற்கூற்றம். (நான்) கல்லா ஒருவர்க்கு - கல்வியறிவில்லாத ஒருவருக்கு, தம் வாயின் சொல் கூற்றம் - தமது வாயிலிருந்து வரும் சொல்லே கூற்றுவனாகும். கல்லா - கல்லாத. வாயின் சொல் - சொல்லும் சொல். கல்லார்வாய் எப்போதும் கெட்ட சொற்களே பயில்வதால், ‘வாயிற் சொல்’ என்றார். அவை - பொய், குறளை, வன்சொல், பயனில சொல் முதலியன. கூற்றம் - கேடு தருவது என்னும் பொருட்டு. கல்லாதவர் பேசுகின்ற பொய் குறளை முதலிய சொற்களே அவர்க்குக் கேடு தரும் என்பதாம். (12) 486. இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம். (நான்) “இளமையிற் கல்” என்ற ஒளவை மூதாட்டியாரின் சொற் படி, கற்கும் பருவமாகிய இளமைப் பருவத்தே கல்லாமை குற்ற முடைய தாகும். (13) 487. மக்களைக் கல்லா வளர விடல்தீது. (நான்) மக்களைக் கல்லா வளரவிடல் - மக்களைக் கல்லாமல் வளரும்படி விடுதல் - கல்லாமல் வளர்த்தல், குற்றமாம். மக்கள் - ஆண் பெண் இரு மக்களையும் குறிக்கும். கல்லா - கல்லாமல். தீது - தீமை - குற்றம். கல்லாமல் பிள்ளைகளை வளர்க்கக் கூடாது. (14). 488. கல்லா வொருவன் குலநலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதரா கும்மே. (வெற்) கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் - கல்லாத ஒருவன் தன் குலப் பெருமை பேசுதல், நெல்லினுள் பிறந்த பதர் ஆகும் - நல்ல நெல்லோடு விளைந்த பதருக்கு ஒப்பாகும். கல்லா - கல்லாத. குலநலம் - குலப்பெருமை. நெல்லின் உள் - நெல்லினோடு. பதர் - பாளை - அரிசியில்லாதது. பதரை நெல்லோடு ஒன்றாகக் கொள்ளாது பயனற்றதாகக் கொண்டு எறியப்படும். அதுபோல, கல்லாதவரும் அக்குலத்துக் கற்றவரோடு ஒன்றாகக் கொள்ளாமல் - மதியாமல் தாழ்த்தப்படுவர் என்பதாம். நெல்லோடு பிறந்த பதர்போலக் கல்லாதவர் மதிக்கப் பட்டார் என்பதாம். (15) 489. நாற்பாற் குலத்தின் மேற்பா லொருவன் கற்றில னாயின் கீழிருப் பவனே. (வெற்) நாற்பால் குலத்தின் - நான்கு வகைப்பட்ட குலத்தினுள், மேற்பால் ஒருவன் கற்றிலன் ஆயின் - மேற்குலத்திற் பிறந்த ஒருவன் கற்றிலனானால், கீழ் இருப்பவனே - அவன் தாழ்ந்த வனாக மதிக்கத் தக்கவனே யாவான். நாற்பால் குலம் - பார்ப்பனர், உயர் குலத்தோர், தாழ் குலத்தோர், தாழ்த்தப்பட்டவர்கள் என்பன. 5-ஆம் பாட்டின் உரை பார்க்க. மேற்பால் ஒருவன் - உயர் குலத்தில் பிறந்த ஒருவன். கீழ் இருத்தல் - கீழாக மதிக்கப்படுதல். உயர் குலத்தில் பிறந்த போதினும் கல்லாதவன் தாழ்ந்தவ னாகவே மதிக்கப்படுவான் என்பதாம். (16) 490. ஓதாதார்க் கில்லை உணர்வோ டொழுக்கம். (கொன்) ஓதாதார்க்கு - படியாதவர்களுக்கு, உணர்வோடு ஒழுக்கம் இல்லை - அறிவும் ஒழுக்கமும் உண்டாதல் இல்லை உணர்வு - அறிவு. அறிவு நூல்களைக் கல்லாதவர்களுக்கு நல்ல அறிவும் நல்ல ஒழுக்கமும் உண்டாகா என்பதாம். (17) 31. அறிவின்மை அதாவது, அறிவின்மையின் இழிவு கூறுதல். அறிவின்மையின் சிறப்புக் கூறுதல் எனினுமாம். 491. கல்லென்று தந்தை கழற வதனையோர் சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன் - மெல்ல எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா வழுக்கோலைக் கொண்டு விடும். (நால) தந்தை கல் என்று கழற - தந்தை படியென்று வற் புறுத்திக் கூற, அதனை ஓர் சொல் என்று கொள்ளாது இகழ்ந்தவன் - அச்சொல்லைத் தனக்கு உறுதியைத் தருவதொரு சொல்லென்று கொண்டு படியாமல் இளமையில் இகழ்ந் திருப்பவன், பல்லார் முன் எழுத்தோலை மெல்ல நீட்ட - பல பேர் கூடிய அவையில் எழுத்தெழுதப்பட்டுள்ள ஓலையை ‘இதனைப் படி’ என்று மெதுவாக ஒருவர் நீட்ட, விளியா வழுக்கோலைக் கொண்டு விடும் - அதற்கு வெகுண்டு அடித்தற்குக் கோலை எடுப்பான். கழறல் - வற்புறுத்திக்கூறல். எழுத்தோலை - ஏடு. விளியா - விளித்து. விளித்தல் - சினத்தல். வழு - குற்றம். வழுக்கோல் - அடித்த லாகிய குற்றத்தைச் செய்யுங் கோல். இளம்பருவத்தில் படிக்கும்படி பெற்றோர் எவ்வளவோ வற்புறுத்திக் கூறியும் படியாது இளமையைக் கல்லாமற் கழித்த அறிவில்லாதவன், ஓரவையில் படிக்கும்படி ஒருவர் ஒரு நூலைக் கொடுத்தால், அதைப் படிக்க முடியாமையால் பலர் முன்னர் மானக்கேடடைவதைப் பொறுக்க முடியாத அவ்வறிவிலி சினங் கொண்டு,அம்மானக்கேட்டுக்குக் காரண மானவனை - நூல் கொடுத்தவனை - அடித்தற்குத் தடியை எடுப்பான் என்பதாம். அள்ளிக் கொடுக்கின்ற செம்பொனும் ஆடையும் ஆதரவாக் கொள்ளிக்கும் பட்ட கடனுக்கு மென்னைக் குறித்த தல்லால் துள்ளித் திரிகின்ற காலத்தி லேயென் துடுக்கடக்கிப் பள்ளிக்கு வைத்தில னேதந்தை யாகிய பாதகனே. இது இளமையில் கல்லாத மூடனொருவன் தன்னிலைக் கிரங்கிப் பாடியதுபோல் பாடப்பட்ட பாட்டு. தந்தை மகற்காற்றும் நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல். (குறள்) சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே. (புறம்) மைந்தனைக் கல்வியறிவுடையவனாக்குதலைக் கடனாகக் கொண்ட தந்தையின்சொல், “தந்தை சொல்மிக்க மந்திர மில்லை” என்ற ஒளவை சொற்படி தலைமேற் கொண்டு நன்கு போற்றத்தக்க தொன்றாகலின், அச் சிறப்புத் தோன்ற அதனை ‘ஓர் சொல்’ என்றார். ஓர் சொல் - ஒப்பற்ற சொல், இன்றி யமையாத சொல். அத்தகைய தந்தை சொல்லை. ‘மூத்தோர் சொல் வார்த்தை அமிழ்தமாகக் கொள்ளா’ திகழ்ந்தவன், அவையில் படிக்கத் தெரியாமல் அவமானப் படுவானென்க. ‘இகழ்ந்தவன்’ என்ற இறந்த காலம், கற்றற்குரிய இளமைக் காலத்தே கல்லாதவன் என்பதைப் புலப்படுத்தும். (1) 492. கல்லாது நீண்ட வொருவன் உலகத்து நல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல இருப்பினும் நாயிருந் தற்றே யிராஅ துரைப்பினு நாய்குரைத் தற்று. (நால) கல்லாது நீண்ட ஒருவன் - கல்லாமல் வளர்ந்த ஒருவன், உலகத்து நல்லறிவாளர் இடைப்புக்கு - உலகத்தில் நல்ல அறிவுடை யவர்கள் நடுவிலே போய், மெல்ல இருப்பினும் நாய் இருத்தற்றே - பேசாமல் இருந்தாலும் அப்படியிருப்பது நாய் இருந்தாற் போன்ற தாம், இராது உரைப்பினும் நாய் குரைத்தற்று - பேசாதிராமல் யாதானுமொன்றை எடுத்துரைத் தாலும் அது அந்நாய் குரைத்தாற் போலும். நீண்ட - வளர்ந்த. மெல்ல இருத்தல் - சும்மா இருத்தல், பேசாமல் இருத்தல். தூய்மையான இடத்தில் தூய்மையில்லாத நாய் புகுந்தால் அவ்விடம் தூய்தன்மையாவது போல நல்லறிவாளர் கூடிய கூட்டத்தில் அறிவிலான் புகுந்தால் அக்கூட்டம் மாசடையும். அதன் மேலும் அவன் வாய்திறந்து ஏதாவது பிழைபடப் பேசினால், அது ஒரு நாய் ஓரவையில் புகுந்து குரைத்தாற்போல வெறுக்கப் படும் என்பதாம். அறிவிலாரின் இழிவு நன்கு விளங்குதற் பொருட்டு நாயை உவமை கூறினார். கல்லாதவர் கற்றோர் கூடிய கூட்டத்திற்குப் போகக் கூடாது. தவறிப் போனாலும் யாதொன்றும் பேசாமல் இருக்க வேண்டும் என்பது கருத்து. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின். (குறள்) (2) 493. கற்றறிந்த நாவினார் சொல்லார்தஞ் சோர்வஞ்சி மற்றைய ராவார் பகர்வர் பனையின் மேல் வற்றிய வோலை கலகலக்கு மெஞ்ஞான்றும் பச்சோலைக் கில்லை யொலி. (நால) கற்றறிந்த நாவினார் தம் சோர்வு அஞ்சிச் சொல்லார் - கற்றவர்கள் தாம் சொல்லும் சொற்களில் ஏதாவது பிழை நேரிடு மோ வென்று அஞ்சி கண்டபடி மிகுதியாகப் பேச மாட்டார்கள், மற்றையராவார் - கல்லாதவர்கள் சொற் சோர்வுக்கு அஞ்சாமல் ஆராயாது தோன்றிய படியெல்லாம் பேசுவர்; (அது எதுபோல வெனில்), எஞ்ஞான்றும் பனையின் மேல்வற்றிய ஓலை கலகலக்கும் - எப்பொழுதும் பனை மரத்தின் மேல் உள்ள வறண்ட ஓலைகள் கலகலவென்று ஒலிக்கும், பச்சோலைக்கு ஒலி இல்லை - அப்பனை மரத்தின் மேலுள்ள பச்சையாகவுள்ள - வறளாத- ஓலைக்கு ஓசை யில்லை. கற்றறிந்த நாவினார் - கற்றவர். சோர்வு - பிழை. சொல் சோர்வு - சொற் குற்றம். மற்றையர் - கல்லாதவர். வற்றிய - வறண்ட. கலகலக்கும் - இரட்டைக்கிளவி. எஞ்ஞான்றும் - எந்நாளும் . பச்சை - ஈரம். வறண்ட ஓலைகள் மிகவும் சலசலவென்று ஒலிப்பது போல, அறிவில்லாதவர்கள் மிகவும் வழவழவென்று பேசுவார். பச்சோலை ஒலியாதவாறு போல, அறிவுள்ளவர்கள் பேசாமல் இருப்பர். அறிவுக்கு ஓலையின் ஈரம் உவமை. ஆக்கமும் கேடும் அதனால் வருதலான் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (குறள்) யாகாவா ராயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (குறள்) என்ற உண்மைகளை உள்ளபடி உணர்ந்தவராதலால் கற்றறிந்தவர் சோர்வஞ்சிப் பேசார். கல்லாதவர் இவ்வுண்மை களை யறியாதவராதலால் மானம், நாணம், அச்சம் முதலியன இன்றிப் பேசுவாரென்க. வெண்கலத்தி னோசை மிகுமே விரிபசும்பொன் ஒண்கலத்தி னுண்டோ ஒலி (நீதி வெண்பா) என்பதனோடு. பின்னிரண்டடிகளை ஒப்பிடுக. (3) 494. பன்றிக்கூழ்ப் பத்தரிற் றேமா வடித்தற்றால் நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால் குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து சென்றிசையா வாகுஞ் செவிக்கு. (நால) நன்று அறியா மாந்தர்க்கு அறத்து ஆறு உரைக்குங்கால் - நன்மையை அறியமாட்டாத மக்களுக்கு அறநெறிகளைச் சொன்னால் அது, பன்றிக் கூழ்ப் பத்தரில் தேமா வடித்து அற்று - பன்றிக்குச் சோறூற்றுகின்ற தொட்டியில் தேமாம் பழத்தின் சாற்றைப் பிழிந்தாற் போலும்; அன்றியும், குன்றின் மேல் கொட்டும் தறிபோல் தலை தகர்ந்து - மலை மேலுள்ள பாறையின் கண் அடிக்கப்படும் கட்டுத்தறி போல் அவ்வற நெறிகள் தலை சிதறி, செவிக்குச் சென்று இசையா ஆகும் - அன்னார் காதுகளுட் போய்ப் பொருந்தாதன வாகும். கூழ் - மாவால் காய்ச்சியது. பத்தர் - பத்தல் என்பதன் போலி. பத்தல் - தொட்டி. தேமா - ஒருவகை மாமரம். வடித்தல் - ஊற்றுதல். அற்றால். ஆல் - அசை. நன்று - நன்மை. அறத்தாறு- அறநெறி. குன்று - மலை. இங்கு மலைமேலுள்ள பாறையைக் குறித்தது. தறி - மாடு குதிரை முதலியன கட்ட நிலத்தில் அடிக்கும் மரமுளை. கொட்டுதல் - அடித்தல். தலை - முனையின் நுனி. தகர்தல் - சிதறல், இசைதல் - பொருந்துதல். பாறைக் கல்லின்மேல் மரமுளையை அடித்தால் அது முனை நொறுங்கிப் பிளந்து போகுமேயன்றி எவ்வாறு பாறை யினுள்ளே செல்லாதோ அவ்வாறே, அறிவிலார் செவியினுள் அறவுரை செல்லாமல் பயனற்றுப் போகும் என்பதாம். பன்றிக்குக் கூழின் சுவை தெரியுமே யன்றித் தேமாவின் சுவை தெரியாது. அதுபோல, அறிவிலார்க்கு மறவழிகளின் தன்மை தெரியுமேயன்றி அறவழிகளின் தன்மை தெரியாது. ஆகையால், அவர்கட்கு உரைக்கும் அறவுரை, பாறைமேல் வலிகொண்டு அடிக்கும் மரக்கட்டுத் தறி அக்கல்லினுட் செல்ல முடியாமல் முனை சிதறி முறிந்து பயனற்றுப் போவது போல, அவர்கள் காதினுட் செல்ல முடியாமல் தடைப் பட்டுப் பயனற் றொழியும் என்பதாம். அறத்தின் பயனை உணராத அறிவிலிகளுக்கு அறவுரை கூறுதல் பயனற்றதென்பது கருத்து. அங்கணத்து ளுக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முற் கோட்டி கொளல். (குறள்) என்பதனோடு முன்னிரண்டடியை ஒப்பிடுக. (4). 495. பாலாற் கழிஇப் பலநா ளுணக்கினும் வாலிதாம் பக்க மிருந்தைக் கிருந்தன்று; கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா நோலா வுடம்பிற் கறிவு. (நால) பல நாள் பாலால் கழிஇ உணக்கினும் - பல நாட்கள் வெண்ணிறமான பாலினாலே கழுவி உலர்த்தி வைத்தாலும், இருந்தைக்கு வாலிது ஆம் பக்கம் இருந்தன்று - இயற்கையில் கருநிறமுடைய கரிக்கு வெண்ணிறம் உண்டாகாது; (அது போல), கோலால் கடாய் குறினும் - தடியால் அடித்து அதட்டிச் சொன் னாலும், நோலா உடம்பிற்கு அறிவு புகல் ஒல்லா - இயற்கை யறிவில்லாத ஒருவனுக்கு அறிவு உண்டா காது. கழீஇ - கழுவி - சொல்லிசையளபெடை. உணக்குதல் - உலர்த்துதல், காய வைத்தல். வால் - வெண்மை. வாலிது ஆம். பக்கம் - வெண்மைத் தன்மை, வெள்ளை நிறம். பக்கம் - தன்மை. இருந்தை - கரி. கடாய் - கடவி - அதட்டி. கூறினும் என்பது குறினும் எனக் குறுக்கல் விகாரம். புகல் - புகுதல், ஒல்லா - ஒல்லாது - ஆகாது; ஈறுகெட்டது. நோலா- நோலாத - முயலாத. அடுப்புக் கரியைப் பாலால் பலமுறை கழுவினாலும் வெள்ளை நிறம் ஆகாதது போல, இயற்கையறிவில்லாத வனுக்கு எவ்வளவு எடுத்துரைத்தாலும் அறிவுண்டாகாது என்பதாம். கோலால் கடாய்க் கூறினும் - தடியால் அடித்து அதட்டிச் சொன்னாலும். நோலா உடம்பு - இளமையில் முயன்று கல்லா தவன். அறிவில்லாதவன் உயிரோடிருந்தும் பயனில்லை என்பார். ‘உடம்பிற்கு’ என்றார் இழிவு தோன்ற. அறிவில்லாத இவனிடத்து உணருந் தன்மையதான உயிரிருந்தும், அதன் தன்மை தலை யெடாமல், உணருந்தன்மை யில்லாத உடம்பின் தன்மையே தலையெடுத்து நின்றமை தோன்ற ‘உடம்பிற்கு’ எனக் கூறினார் எனவுங் கொள்ளலாம். (5) 496. பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லா திழிந்தவை காமுறூஉ மீப்போல் - இழிந்தவை தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகுந் தக்கார்வாய்த் தேன்கலந்த தேற்றச்சொற் றேர்வு. (நால) பொழிந்து இனிது நாறினும் - தேனைச் சொரிந்து இனிதாக மணந்தாலும், பூ மிசைதல் செல்லாது இழிந்தவை காமுறும் ஈ போல் - பூவிலுள்ள தேனை உண்ணுதற்குச் செல்லாமல் கெட்ட நாற்றமுள்ள இழிவான பொருள்களை விரும்புகின்ற ஈயைப் போல, இழிந்தவை தாம் கலந்த நெஞ்சினார்க்கு - (உயர்ந்த பொருள்கள் இருக்கவும் அவற்றை விட்டு) இழிவானவை பொருந்திய மனத்தையுடைய அறிவிலி களுக்கு, தக்கார்வாய்த் தேன் கலந்த தேற்றச் சொல் தேர்வு என் ஆகும் - தகுதியுடைய பெரியோர்கள் வாயிற் பிறக்கின்ற தேன் போன்ற தெளிவை உண்டாக்கும் உறுதிச் சொற்களாகிய தெளிவு யாது பயனைத் தரும்? ஒரு பயனுந் தாரா என்றபடி. பொழிதல் - சொரிதல், சொட்டுதல். ‘மழை பொழிந்தது’ எனக் காண்க. நாறுதல் - மணத்தல். மிசைதல் - உண்ணுதல். இழிந்தவை - மல முதலிய இழிந்த பொருள். காமுறுதல் - விரும்புதல். இழிந்தவை - இழிந்த எண்ணங்கள். தக்கார் - அறி வொழுக்கங்களில் தகுதி யுடையவர். தேற்றம் - தெளிவு, தெளி வானது. தேர்வு - தெளிவு. பனை, தென்னை மரங்களில் இறக்கும் தெளிவு, பதனி. தேன் கலந்த தேற்றச் சொல் தேர்வு - தேன்போலத் தெளிந்த சொற்களாகிய தெளிவு என்க. இனிமையான தெளிவு நாவுக்கு இனிமை தந்து உடல் நலந் தருதல் போல, இனிமையான சொல் செவிக்கு இனிமை தந்து மனத்துக்கு உறுதியளிக்கு மென்க. தாமாகவும் உணராமல் பிறர் சொன்னாலும் கேளாத அறிவிலிகளுக்கு அஃறிணைப் பொருளிலொன்றான இழி வுடைய ஈயை உவமை கூறி அவர்தம் சிறுமையை விளக்கினார். ஈ நல்லதை விட்டுக் கெட்டதை விரும்புவது போல, அறிவிலி களும் பெரியோர் கூறும் உறுதிச் சொல்லைக் கேளாது மூடர்கள் கூறும் சொல்லைக் கேட்பர் என்பது கருத்து. (6) 497. கற்றா ருரைக்குங் கசடறு நுண்கேள்வி பற்றாது தன்னெஞ் சுதைத்தலான் - மற்றுமோர் தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர் புன்கோட்டி கொள்ளுமாங் கீழ். (நால) கற்றார் உரைக்கும் கசடு அறு நுண்கேள்வி - கற்றறிந் தவர்கள் சொல்லும் குற்றமற்ற நுட்பமான அறிவுரைகளை, பற்றாது தன் நெஞ்சு உதைத்தலால் - உறுதியாக உட் கொள்ளாமல் தனது மனம் இகழ்ந்து தள்ளிவிடுதலினால், கீழ் தன்போல் மற்றும் ஒருவன் முகம் நோக்கி - கீழ்மகன் தன்னைப் போன்ற வேறொரு கீழ்மகனது முகத்தைப் பார்த்து, தானும் ஓர் புன்கோட்டி கொள்ளும் - அவனும் ஓர் இழிவான பேச்சைப் பேசுவான். கசடு - குற்றம். கேள்விக் குற்றம் - ஐயந் திரிபுகள். கேட்கப் படுகின்ற பொருள்களின் நுட்பத்தைக் கேள்வி மேலேற்றி, ‘நுண் கேள்வி’ என்றார். பற்றாது - பற்றிக் கொள்ளாது. உதைத்தல் - வெளியே தள்ளுதல். உள்ளே போகும் உரையை வெளியே தள்ளுதல். ஓர் - அசை. கோட்டி - கூட்டம். அது அங்கு பேசும் பேச்சைக் குறித்தது. புன்கோட்டி - புன்மையான - இழிவான பேச்சு. ஆம் - அசை. கீழ் - கீழ்மகன். நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் (குறள்) அல்லார்முன் கோட்டி கொளல் (குறள்) புல்லா எழுத்தில் பொருளில் வறுங்கோட்டி (நாலடி) கற்றவர் கூறும் அறிவுரையைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் அறிவில்லாதவன், கற்றவர் பேசுவதைக் கண்டு பொறாமை கொண்டு, தன் போன்ற ஒருவனிடம் தானும் ஏதாவது உளறுவான் என்பதாம். தன் போன்ற அறிவிலிகள் சிலரைக் கூட்டி வைத்துப் பேசுவான் எனினுமாம். (7) 498. கல்லார்க் கினனா யொழுகலும், காழ்கொண்ட இல்லாளைக் கோலால் புடைத்தலும் - இல்லம் சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும் அறியாமை யான்வருங் கேடு. (திரி) கல்லார்க்கு இனனாய் ஒழுகலும் - கல்லாதவர்க்கு உறவி னனாய் நடத்தலும், காழ் கொண்ட இல்லாளைக் கோலால் புடைத்தலும் - மனவுறுதி கொண்ட மனைவியைத் தடியினால் அடித்தலும், இல்லம் சிறியாரைக் கொண்டு புகலும் - தமது வீட்டினுள் சிற்றறிவினரை உடன்கொண்டு புகுதலும், இம் மூன்றும் அறியாமையான் வரும் கேடு - ஆகிய இம்மூன்று செயல்களும் அறியாமையினாலே உண்டாகின்ற கேட்டைத் தரும் செயல் களாகும். காழ் - உறுதி, மனத்திண்மை, கற்பு. கணவன்மீது கொண்ட மனவுறுதி. புடைத்தல் - அடித்தல். இல்லம் - வீடு. கேடு - கெடுதல். கல்லார்க்கு இனனாய் ஒழுகல் - மூடர்களுடன் சேர்ந்து அவர் தன்மைப்பட்டு வாழ்தல். அதாவது சிற்றினம் சேர்தல். அறிவிலாரைத் தம்மோடு சேர்த்து, அன்னாரின் அறி வின்மை யைப் போக்கி அறிவுடையராக்குதல் அறிவுடையார் கடமை யாகும். ஆனால், அறிவிலாரோடு தாம் சேர்ந்து அவர் தன்மைப்பட்டு நடத்தல் கூடாது. இதனால் அறிவுடையார் அறிவொடு பெருமையும் கெட ஏதுவாகும். காழ்கொண்ட இல்லாள் - கணவன்மீது மனவுறுதி கொண்ட மனைவி. இதுவே கற்பு எனப்படும். ‘கற்பு என்னும் திண்மை’ (குறள் - 54) எனல் காண்க. கணவன்மீது மனைவியும், மனைவிமீது கணவனும் மனவுறுதி பூண்டு, இருவரும் ஒரு மனப்பட்டு வாழ்வதே வாழ்க்கை எனப்படும். இருவர்க்கும் ஏதாவது மனவேறுபாடுண்டானால் (ஊடல்) கணவனை மனைவி அடிக்கும் வழக்கம் இல்லாதிருக்க மனைவியை மட்டும் கணவன் அடிப்பது முறையற்ற தன்மையே யாகும். கோலால் புடைத்தல், எனவே, கையால், காலால் உதைத்தலும் அமையும். இது மனைவியின் அன்பைக் கெடுப்பதோடு தற்கொலைக்கும் ஏதுவாகு மாகையால், அறியாமையான் வருங் கேடாதலறிக. சிறியார் - ஒழுக்கமில்லாத கீழ்மக்கள். கொண்டு புகல் - அடிக்கடி உடனழைத்துச் சென்று வீட்டினுள் தாராளமாகப் பழகவிடுதல். அதாவது, தானில்லாத போதும் தனியாக வீட்டினுள் சென்று பழகுதல். இது பெருந் தவறாகும். எனவே, இம்மூன்று செயல்களும் கேட்டைத் தருவன. இக் கேடுகள் ஒருவனது அறியாமையால் வருவனவாம். மூடரோடு பழகுதலும், மனைவியை அடித்தலும், கீழ்மக்களை வீட்டில் பழகும்படி செய்தலும் அறியாமை யாகும். (8) 499. இருளாய்க் கழியும் உலகமும் யாதும் தெரியா துரைக்கும் வெகுள்வும் - பொருளல்ல காதற் படுக்கும் விழைவு மிவைமூன்றும் பேதைமை வாழு முயிர்க்கு. (திரி) இருளாய் கழியும் உலகமும் - அறிவில்லாதவர்க் கிடமாய் நாள் கழிகின்ற உலகமும், யாதும் தெரியாது உரைக்கும் வெகுள்வும் - நன்மை தீமைகளில் ஒன்றும் தெரி யாமல் பேசுகின்ற வெகுளியும், பொருள் அல்ல காதல் படுக்கும் விழைவும் - நல்ல தல்லாதவற்றில் அன்பு வைக்கச் செய்யும் விருப்பமும், இவை மூன்றும் - வாழும் உயிர்க்குப் பேதைமை - உயிர்வாழ்கின்ற மக்கட்கு அறியாமையைத் தருவனவாகும். இருள் - அறியாமை. இருள்போன்ற அறியாமையை, இருள் என்றது உவமையாகுபெயர். யாதும் - எதுவும். வெகுள்வு - வெகுளி. பொருள் அல்ல - நல்லதல்லாதவை - கெட்டவை. காதல் - அன்பு. படுத்தல் - வைத்தல். விழைவு - விருப்பம். பேதைமை - அறியாமை. மக்களின் தன்மையை, மக்கள் வாழும் இடத்தின் மேலேற்றி, ‘இருளாய்க் கழியும் உலகமும்’ என்றார். இருளாய்க் கழிதல் - அறிவிலாரோடு சேர்ந்து நாட்களைக் கழித்தல். அதாவது அறிவில்லாதவர் இருக்கும் இடத்தில் இருத்தல். அறிவில்லாதவர் இருக்கும் இடத்தில் வாழ்தலும், நன்மை தீமை தெரியாது வெகுண்டுரைத்தலும், தீயவைகளில் செல்லும் விருப்பமும் மேன்மேலும் அறியாமையை உண்டாக்கு வதற்கு ஏதுவான செயல்களாம். (9) 500. ஆற்றாமை யூர வறிவின்றி யாதொன்றும் தேற்றா னெனப்பட்டு வாழ்தலின் - மாற்றி மனையி னகன்றுபோய் மாபெருங் காட்டில் நனையி லுடம்பிடுதல் நன்று. (அற) யாதொன்றும் தேற்றான் எனப்பட்டு - யாதொன்றும் தெரியாதவன் எனப் பலராலும் இகழப்பட்டு, ஆற்றாமை ஊர அறிவின்றி வாழ்தலின் - துன்பம் மிக அறிவில்லாமல் வாழ்தலினும், மனையின் மாற்றி அகன்று - வீட்டை விட்ட கன்று, மா பெருங் காட்டில் போய் - விலங்குகள் வாழும் பெரிய காட்டின்கண் சென்று, நனையில் உடம்பு இடுதல் நன்று - இன்பம் பயவாத அவ்வுடலினை விடுதல் நல்லது. ஆற்றாமை - துன்பம். ஊர - மிக. தேற்றான் - தெரியான். எனப்பட்டு - என்று இகழப்பட்டு. மாற்றி - விட்டு, மனை - வீடு. அகன்று - விலகி. மா - விலங்கு. நனை - தேன். இங்கு இன்பத்தைக் குறித்தது. இடுதல் - போடுதல். யாதொன்றும் தெரியாதவன் - முழுமூடன். ஒன்றுந் தெரியாதவன் எனப் பலரும் இகழ்தலான் துன்பம் மிக்க தென்க. அவ்வாறு அறிவில்லாதவன் எனப் பலராலும் இகழப் பட்டுத் துன்புற்று வாழ்வதைவிட இறந்து விடுதல் நல்லது என்பதாம். அறிவில்லாதவன் வாழ்க்கையில் யாதொரு இன்பமும் இல்லையாகையால், ‘நனைஇல் உடம்பு’ என்றார். பயனில்லாத அவன் வீட்டில் இறப்பதினும், விலங்குகள் வாழும் காட்டில் சென்று இறந்தால் அவன் உடம்பாவது அவ்விலங்குகட்குப் பயன்படும் ஆகையால், ‘மா பெருங் காட்டில் போய் உடம் பிடுதல் நன்று’ என்றார். முழுமூடன் என்று பலராலும் இகழப்படும் அறிவிலி ஒருவன் இருந்து துன்புறுவதைவிட இறந்துவிடுதல் நல்லது என்பது கருத்து. (10) 501. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங் காவிதான் போனபின் யாரே யனுபவிப்பார் பாவிகா ளந்தப் பணம். (நல்) பாடுபட்டுப் பணத்தைத் தேடி - வருத்தப்பட்டுப் பணத்தைத் தேடி, புதைத்து வைத்து - (நீங்கள் பயன் படுத்தாமல், பிறருக்குங் கொடாமல்) மண்ணில் புதைத்து வைத்துவிட்டுச் சாகும், கேடு கெட்ட மானிடரே கேளுங்கள் - அறிவில்லாத மக்களே நான் சொல்வதைக் கேளுங்கள், கூடுவிட்டு ஆவிபோனபின் - உடம்பை விட்டு உயிர் நீங்கின பின்பு, பாவிகாள் - அட பாவிகளே, அந்தப் பணம் இங்கு யார் அனுபவிப்பார் - அந்தப் பணத்தை உலகில் யார் பயன் படுத்துவார்? பாடுபட்டு - மிகவும் முயன்று என்றபடி. கேடுகெட்ட - அறிவில்லாத. கேடு கெட்டவன் - அறிவில்லாதவன். மானிடர் - மக்கள். கேளுங்கள் - நான் சொல்வதைக் கேட்டு எண்ணிப் பாருங்கள் என்பதாம். கூடு - உடம்பு. ஆவி - உயிர். தான் - ஆசை. அனுபவித்தல் - பயன்படுத்தல். பாவிகள் என்றது - அவர்தம் அறியாமையை இகழ்ந்தவாறு. முன்னெல்லாம் பணத்தை மண்ணில் புதைத்து வைக்கும் வழக்கம் இருந்து வந்தது. பிறருக்குத் தெரியாமல் புதைத்து வைத்துவிட்டு அவர் இறந்து விட்டால் அப்பணம் பிறர்க்குப் பயன்படாமல் போய்விடும். பின்னொரு காலத்தே அவ்விடத் தை வெட்டுவோருக்கு அது கிடைக்கும். அப்புதையலை எடுத்தவர் அரசர்க்குக் கொடுத்துவிட வேண்டும் என்பது, ‘உறுபொருளும்’ (குறள் - 756) என்னும் குறளால் தெரிகிறது. மிகவும் வருந்தித் தேடிய பொருளைத் தாமும் பயன் படுத்தாமல், பிறருக்குங் கொடாமல் மண்ணில் புதைத்து வைத்து விட்டு இறந்துபோகும் அறியாமையைக் கண்டிக்கிறது இப்பாட்டு. யார் அனுபவிப்பார்? ஒருவரும் இல்லை. வருந்தித் தேடிய பொருளை இவ்வாறு ஒருவருக்கும் பயன்படாமல் மண்ணுக்கிரையாக்கலாமோ? என்று இரங்கிக் கூறியவாறு. இன்று, பயன்படுத்தாது பணத்தைச் சேர்த்துப் பெட்டியில் போட்டுப் பூட்டிவைப்போர்க்கும் இஃது பொருந்தும். மிகவும் வருத்தப்பட்டுப் பணத்தைத் தேடி, தாமும் உண்டு டுத்து இனிது வாழாமல், பிறருக்குங் கொடாமல் அப்பணத்தை மண்ணில் புதைத்து வைத்துவிட்டு - பெட்டியில் போட்டுப் பூட்டி வைத்துவிட்டு - இறப்பது அறிவின்மை என்பதாம். (11) 502. ஆன முதலில் அதிகம் செலவானால் மான மிழந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்குங் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. (நல்) ஆன முதலில் அதிகம் செலவானால் - ஒருவன் வரவுக்கு மேல் செலவு செய்வானானால், மானம் இழந்து மதிகெட்டு - அதனால் அவன் மானத்தை இழந்து அறிவு கெட்டு, போன திசை எல்லார்க்கும் கள்ளனாய் - (அவன் பிழைப்பதற்காகப்) போன இடங்களி லெல்லாம் எல்லார்க்கும் திருடனாய், ஏழ்பிறப்பும் தீயனாய் - எழு வகையான உயிர்களிலும் கொடியவனாய், நல்லார்க்கும் பொல்லனாம் நாடு - அன்புள்ள தன் மனைவிக்கும் வெறுக்கத்தக்கவனாவான் என்பதைத் தெரிந்துகொள். ஆனமுதல் - வருவாய். மதி - அறிவு. திசை - இடம். ஏழ்பிறப்பு - எழுவகை உயிர். அவை - மரவகை, ஊர்வன, பறப்பன, நடப்பன, நீர்வாழ்வன, மக்கள், தேவர் என்பன. இவ்வெழுவகை உயிரினும் கொடியனவாய் மதிக்கப்படு வான் என்பதாம். தீயன் - கொடியவன். நல்லார் - மனைவி. பொல்லான்- வெறுக்கத்தக்கவன். நாடு - தெரிந்துகொள். வரவுக்கு மீறிச் செலவு செய்பவன் மானம் இழந்து, அறிவு கெட்டு, பிழைக்கச் சென்ற இடங்களிலெல்லாம் அங்குள்ள அனைவர்க்கும் திருடனாய், எல்லா உயிர்களினும் கொடியனாய், மனைவியாலும் வெறுக்கத் தக்கவனாவான் என்பதாம். ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை. (குறள்) என்கின்றார் வள்ளுவரும். ஒருவன் உள்ளூரில் பிழைக்க முடியாமை யால், மானத்தை விட்டு, அறிவை யிழந்து அயலூர்க்குப் பிழைக்கச் சென்றால், அவ்வூரினர் அவனைக் கள்வனாகக் கருதி ஒதுக்கி வைப்பர்; பிறரால் உயிரில்லாப் பொருள்கள் போல மதிக்கப்படு வான். மனைவியாலும் வெறுக்கப்படுவான் என்பதாம். வரவுக்கு மீறிச் செலவு செய்பவன் அறிவிலி என்பதாம். (12) 503. பன்னும் பனுவற் பயன்றே ரறிவிலார் மன்னு மறங்கள் வலியிலவே - நன்னுதால்! காழொன் றுயர்திண் கதவு வலியுடைத்தோ தாழொன் றிலதாயிற் றான். (நன்) நல்நுதால் - அழகிய நெற்றியை யுடையவளே, காழ் ஒன்று உயர்திண் கதவு - வயிரம் பொருந்திய மரத்தால் செய்யப்பட்ட உயர்ந்த வலிமை பொருந்திய கதவானது, தாழ் ஒன்று இலதாயின் வலி உடைத்தோ - ஒரு தாழ்க் கோல் இல்லாவிட்டால் வலிமையை யுடையதாகுமோ? ஆகாது; (அதுபோல), பனுவல் பன்னும் பயன்தேர் அறிவு இலார் - நூல்களிற் கூறப்படும் பொருள்களை அறியத்தக்க அறி வில்லாதவர்கள், மன்னும் அறங்கள் வலி இலவே - செய்யும் அறச்செயல்கள் உறுதியில்லாதனவேயாம். பன்னும் - கூறப்படும். பனுவல் - நூல். பயன் - பொருள். தேர்தல் - அறிதல். மன்னும் - நிலையாகச் செய்யும். அறங்கள் - அறச்செயல்கள். வலி - உறுதி. நன்னுதால் - மகடூஉ முன்னிலை. காழ் - வைரம் - சேவு. ஒன்றுதல் - பொருந்துதல். திண்மை - வலிமை. தாழ் - தாழ்ப்பாள். தான் - அசை. வைரம் பொருந்திய மரத்தால் செய்யப்பட்டதாயினும் தாழில்லாத கதவு பயன்படாததுபோல, அறிவில்லாதவர்கள் செய்யும் அறங்களும் பயன்படா என்பதாம். தாழில்லாத கதவு வீட்டைக் காக்கப் பயன்படாது. அறிவிலார் செய்த அறங்கள் பிறர்க்குப் பயன்படா என்றபடி. (13) 504. அறிவுடையா ரன்றி யதுபெறார் தம்பாற் செறிபழியை யஞ்சார் சிறுதும் - பிறைநுதால்! வண்ணஞ்செய் வாள்விழியே யன்றி மறைகுருட்டுக் கண்ணஞ்சு மோவிருளைக் கண்டு. (நன்) பிறை நுதால் - இளம் பிறை போன்ற நெற்றியை யுடை யவளே, வண்ணம் செய் வாள் விழியே அன்றி - முகத்திற்கு அழகு செய்கின்ற ஒளிபொருந்திய கண்களே யல்லாமல், மறை குருட்டுக் கண் இருளைக் கண்டு அஞ்சுமோ - ஒளி மறைந்த குருட்டுக் கண்கள் இருளைக் கண்டு அஞ்சுமோ? அஞ்சா; (அதுபோல), அறிவுடையார் அன்றி - அறிவுடை யவர்கள் அல்லாமல், அது பெறார் தம்பால் செறி பழியைச் சிறிதும் அஞ்சார் - அவ்வறிவைப் பெறாதவர்கள் தங்களிடம் நெருங்கி வரும் பழிக்குச் சிறிதும் அஞ்மாட்டார்கள். செறிதல் - மிகுதல். செறிபழி - மிக்கபழி. தம்பால் செறிபழி - தம்மிடம் நெருங்கி - மிகுந்து - வரும்பழி. பழி - பழிக்கத்தக்க தீச் செயல். பிறை நுதால் - மகடூஉ முன்னிலை. வண்ணம் - அழகு. வாள் - ஒளி. மறை குருட்டுக் கண் - ஒளியில்லாத குருட்டுக் கண். குருட்டுக் கண் இருட்டுக் கஞ்சாதது போல, அறிவிலார் பழிக்கஞ்சார். ஒளியுடைய கண் இருட்டைக் கண்டு அஞ்சுவது போல, அறிவுடையார் பழிக்கஞ்சுவர் என்பதாம். தீவினையா ரஞ்சார் விழுமியோ ரஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு. (குறள்) (14) 505. உணர்வில னாதலிற் சாக்கா டில்லை. (முது) உணர்வு இலன் ஆதலின் - அறிவில்லாதவன் ஆதல் போல, சாக்காடு இல்லை - ஒருவனுக்குச் சாவு வேறில்லை. உணர்வு - அறிவு. ஆதலின் - ஆதலைப் போல. இன் - ஐந்தாவது ஒப்புப் பொருள். சாக்காடு - சாவு. அறிவில்லாதவன் ஆதல்போல ஒருவனுக்குச் சாவு வேறில்லை ஆதலான், அறிவில்லாதவன் செத்த பிணத்தை ஒப்பான் என்பதாம். அறிவில்லாதவன் உயிரோடிருப்பதில் பயனில்லை என்பது கருத்து. (15) 506. அச்சமு நாணமும் அறிவிலோர்க் கில்லை. (வெற்) அறிவிலோர்க்கு - அறிவில்லாதவருக்கு, அச்சமும் - தீச் செயல் செய்ய அஞ்சுதலும், நாணமும் - தகாதன செய்ய நாணுதலும், இல்லை - இல்லை. அறிவில்லாதவர்கள் தீச் செயல்கள் செய்ய அஞ்ச மாட்டார்; தகாதன - பிறர் பழிக்கத்தக்க - செயல்கள் செய்ய வெட்கப்பட மாட்டார். அறிவிலார் தீச்செயல் செய்ய அஞ்சார், இழிந்தன செய்ய நாணார் என்பதாம். (16) 507. தனந்தேடி யுண்ணாமல் புதைக்க வேண்டாம். (உல) தனம் - பொருள். புதைத்தல் - மண்ணில் புதைத்து வைத்தலும், பெட்டியில் போட்டுப் பூட்டி வைத்தலுமாம். பொருளைத் தேடி உண்டுடுத்து இன்புற்று வாழாமல் இருத்தல் அறிவின்மை என்பதாம். 32. புல்லறிவாண்மை அதாவது, புல்லிய அறிவினை ஆளுந்தன்மை. தான் சிற்றறி வுடையனாய் இருந்தும், தன்னைப் பேரறிவுடை யனாக மதித்து உயர்ந்தோர் கூறும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமை புல்லறி வுடைமையாகும். அறிவை நல்வழியில் செலுத்தாமையும் புல்லறிவே யாம். 508. அருளி னறமுரைக்கு மன்புடையார் வாய்ச்சொல் பொருளாகக் கொள்வர் புலவர் - பொருளல்லா ஏழை யதனை யிகழ்ந்துரைக்கும் பாற்கூழை மூழை சுவையுணரா தாங்கு. (நால) அருளின் அறம் உரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல் - மக்களிடத்திலுள்ள அருளினால் அறநெறிகளை எடுத்துச் சொல்கின்ற அன்புள்ளவர்களது வாயிலிருந்து வரும் சொல்லை, புலவர் பொருளாகக் கொள்வர் - அறிவுடையோர் பயனுடைய சொல்லாகக் கொள்வர், பொருள் அல்லா ஏழை - ஒரு பொருளாக மதிக்கப்படாத புல்லறி வுடையவன், பால் கூழ் சுவையை மூழை உணராது ஆங்கு - பாற் சோற்றினது சுவையை அகப்பை அறியாததுபோல, அதனை இகழ்ந்து உரைக்கும் - அச்சொல்லைப் பழித்துப் பேசுவான். அருளின் - அருளினால். பொருளாக - பயனுடையதாக - இன்றியமையாததாக. புலவர் - அறிவுடையார். ஏழை - அறிவில் லாதான். இங்கு புல்லறிவாளன். இகழ்தல் - பழித்தல். கூழ்ஐ - கூழை. ஐயைச் சுவை என்பதனோடு கூட்டுக. கூழ் - சோறு. பாற்சோறு - பாயாசம். மூழை - அகப்பை. உயர்தல் - அறிதல். ஆங்கு - போல. எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே (தாயுமானவர்) யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் (மாணிக்கவாசகர்) என்றபடி, தம்மைப் போலவே பிறரும் நல்வழியில் நடந்து நல்வாழ்வு வாழ வேண்டும் என்னும் பெரு நோக்குடைய நல்லோர், அவ்வரு ளினால் பொதுமக்கட்கு அறநெறிகளை எடுத்துரைப்பர் என்க. பாற்சோற்றின் சுவையினை அகப்பை யறியாதது போல, அறிவுடையோர் கூறும் அறவுரைகளின் சிறப்பினைப் புல்லறி வாளர் அறியார் என்பதாம். அகப்பை சுவையறியா தென்ப தனை, சுட்டசட்டி சட்டுவங் கறிச்சுவை யறியுமோ என்ற சித்தர் உரையால் அறிக. அவரென்ன சொல்வது, நாமென்ன கேட்பது என்ற எண்ணத்தால், புல்லறிவாளர் அறிவுடையார் கூறும் அறவுரையை ஏற்றுக் கொள்வ தில்லை போலும். (1) 509. அவ்விய மில்லா ரறத்தா றுரைக்குங்காற் செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார் கவ்வித்தோல் தின்னுங் குணங்கர்நாய் பாற்சோற்றின் செவ்வி கொளறேற்றா தாங்கு. (நால) தோல் கவ்வித் தின்னும் குணங்கர் நாய் - தோலைக் கடித்துத் தின்னும் இயல்புடைய புலையர்களுடைய நாய்கள், பால் சோற்றின் செவ்வி கொளல் தேற்றாது ஆங்கு - பாற் சோற்றினது இனிய சுவையைக் கொள்ளுதலை அறியாதவாறு போல, அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால் - பொறாமைக் குணமில்லாத பெரியோர்கள் அறவழிகளை எடுத்துச் சொல்லும் போது, செவ்வியர் அல்லார் செவி கொடுத்தும் கேட்கலார் - நல்லறி வுடையவ ரல்லாதார் - புல்லறிவாளர் - அவற்றைக் காது கொடுத்துங் கேட்க மாட்டார். அவ்வியம் - பொறாமை. இது பிற கெட்ட குணங் கட்கும் இன விலக்கணம். யாதொரு குற்றமும் இல்லாதவர் என்பதாம். பொறாமையே ஏனைக் கெட்ட குணங்களுக் கெல்லாம் காரண மாகையால், அதனை எடுத்தோதினார். செவ்வி - நல்லறிவு. கேட்கலார் - கேளார். கவ்வி - கடித்து. குணங்கர் - புலையர்; புலா லுண்டு வாழ்வோர். நரிக்குறவர் எடுத்துக்காட்டாவர். செவ்வி - சுவை. தேற்றாது - அறியாது. ஆங்கு - போல். செல்வர் நாய் எனில் பாற்சோறுண்டு பழக்கமிருக்கும். இது அத்தகைய தன்று என்பதற்கு, ‘குணங்கர் நாய்’ என்றார். புல்லறி வாளரின் தன்மையை விளக்கக் குணங்கர் நாயை உவமை கூறினார். தோலைக் கடித்துத் தின்று வாழும் நாய் பாற்சோற்றின் சுவை யுணராதவாறுபோல, கீழோர் கூறும் மறவுரைகளைக் கேட்டு வாழும் புல்லறிவாளர், மேலோர் கூறும் அறவுரை களைக் கேளார் என்பதாம். (2) 510. இமைக்கு மளவிற்றம் இன்னுயிர்போ மார்க்கம் எனைத்தானுந் தாங்கண் டிருந்தும் - தினைத்துணையும் நன்றி புரிகல்லா நாணின் மடமாக்கள் பொன்றிலென் பொன்றாக்கா லென். (நால) இமைக்கும் அளவில் தம் இன்னுயிர் போம் மார்க்கம் - இமைப்பொழுதினில் தமது இனிய உயிர் நீங்கிப் போகும் படியான வழியை, எனைத்தானும் தாங்கண்டு இருந்தும் - எல்லா வகை யாலும் தாம் அறிந்திருந்தும், தினைத்துணையும் நன்றி புரிகல்லா நாணில் மடமாக்கள் - தினையளவாயினும் நல்ல காரியம் செய்யாத வெட்கமில்லாத புல்லறிவாளர்கள், பொன்றில் என் பொன்றாக்கால் என் - இறந்தால் வருங் கேடென்ன, இறவா திருந்தால் வரும் நன்மை என்ன? இமைக்கும் அளவு - ஒரு மாத்திரைப் பொழுது. உயிரினும் இனியது வேறில்லை யாதலால் ‘இன்னுயிர்’ என்றார். மார்க்கம் - வழி. நன்றி - நற்செயல். புரி கல்லா - செய்யாத. நாண் - நாணம் - தகாத காரியம் செய்ய நாணுதல். மடம் - அறியாமை. மா - விலங்கு. இதன் பன்மையாய் மாக்கள்’ என அறிவிலி களுக்கு வழங்குவது போலும். பொன்றல் - இறத்தல். எனைத்தானும் - காட்சி, கருத்து, நூல் என்னும் மூவகை அளவைகளானும் என்றபடி. காட்சி யளவை - பூவும் பிஞ்சும் காயும் உதிர்வன போல மக்கள் இறத்தலைக் கண்டறிதல். கருத் தளவை - யாக்கை நிலையாதென்பதை எண்ணியறிதல். நூலளவை - நூல் களில் கற்றறிதல். உயிர் உடம்பில் நிலைத்திராமையை அறிந்திருந்தும் தமது வாழ்நாளில் நல்ல காரியம் ஒன்றும் செய்யாத புல்லறி வாளர்களால் உலகத்திற்குச் சிறிதும் பயனிiலை என்பதாம். (3) 511. தாமேயு மின்புறார் தக்கார்க்கும் நன்றாற்றார் ஏமஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார் - தாமயங்கி ஆக்கத்துட் டூங்கி யவத்தமே வாழ்நாளைப் போக்குவார் புல்லறிவி னார். (நால) புல்லறிவினார் - தாமேயும் இன்புறார் - செல்வத்தைக் கொண்டு தாமும் இன்பமாக வாழார், தக்கார்க்கு நன்று ஆற்றார் - தகுதியுடையவர்களுக்குக் கொடுக்கவும் மாட்டார், ஏமஞ்சார் நல் நெறியும் சேர்கலார் - பாதுகாப்பாகப் பொருந்திய நல்ல அறவழி யையும் அடையமாட்டார், தாம் மயங்கி - இளமை யாக்கை முதலியவற்றின் நிலையாமையை யறியாமல் மயக்கங் கொண்டு, ஆக்கத்துள் தூங்கி வாழ் நாளை அவத்தமே போக்குவர் - செல்வச் செருக்கிலாழ்ந்து தமது வாழ்நாளை வீணாகவே கழிப்பர். தக்கார் - ஏற்கத்தக்கவர் - எளியவர். நன்று - உதவி. இங்கு ஏதாவது கொடுத்தலைக் குறித்தது. ஏமம் - பாதுகாப்பு. ஏமம் சார் நல்நெறி - பாதுகாப்பான நல்வழி. நல்வழியில் நடப்பவனுக்குத் தீமைகள் நேராவாகலான், அது ஏமஞ்சார் நல்நெறி எனப் பட்டது. நல்வழியில் நடப்போன் யாதொரு இடையூறுமின்றி இன்புற்று வாழ்வான் என்றபடி. சேர்கலார் - சேரார். செல்வம் இளமை யாக்கை ஆகிய நிலையாதவற்றை நிலையென மயங்கி என்பதாம். ஆக்கம் - செல்வம். தூங்குதல் - நிலையாகத் தங்குதல் - அழுந்துதல், செல்வக் களிப்பால் ஒன்றும் தோன்றாமல் இருத்தல். அவத்தம் - வீண். புல்லறிவாளர்கள் செல்வத்தைத் தாமும் பயன் படுத்தாமல், பிறர்க்குங் கொடாமல், நல்வழியில் நடவாமல், நிலையில்லாத வற்றை நிலையென மயங்கிச்செல்வச் செருக்கில் அழுந்தி, வாழ் நாளை வீணாகப் போக்குவார் என்பதாம். இவறன்மை, ஈயாமை, நன்னெறியில் நடவாமை, உண்மை யுணராமை, செல்வச் செருக்கு ஆகிய இத்தனை குற்றமும் ஒருங் குடையவர் புல்லறிவினார். இவறன்மை - உலோபத்தன்மை. வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை உடையம்யா மென்னுஞ் செருக்கு. (குறள்) (4) 512. சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப் பின்னறிவா மென்றிருக்கும் பேதையார் கைகாட்டும் பொன்னும் புளிவிளங்கா யாம். (நால) சிறுகாலையே - இளமைப் பருவத்திலேயே, தமக்குச் செல்வுழி வல்சி - தமக்கு மறுமையிடத்துக்கு உரிய அறமாகிய சோற்றை, இறுக இறுக தோட்கோப்புக் கொள்ளார் - மிகவும் கெட்டியாகக் கட்டுச்சோறாகக் கட்டிக் கொள்ளாதவர் களாய், இறுகி இறுகிப் பின் அறிவாம் என்று இருக்கும் பேதையர் - மிகவும் சிக்கனமு டையவராய் அறச்செயலைப் பின்பு பார்த்துக் கொள்வோம் என்றிருக்கின்ற புல்லறி வாளர்கள், கைகாட்டும் பொன்னும் புளிவிளங்காய் ஆம் - (இறக்கும்போது பேச நா வெழாமையால்) தம் கையால் குறித்துக் காட்டுகின்ற பொன்னு ருண்டையும் புளிப்புச்சுவை யுள்ள விளங்காயாகும். சிறுகாலை - இளமைப் பருவம். செல்வுழி - செல்லுமிடம். வல்சி - சோறு. இறுக இறுக - மிகக் கெட்டியாக, உறுதியாக. அடுக்கு மிகுதி குறித்தது. இறுகிறுக என்பது மது. தோட் கோப்பு - கட்டுச் சோறு. கட்டுச் சோற்றைப் பற்றிய விளக்கத் தை 12- ஆம் பாட்டுரையில் காண்க. இறுக இறுக - மிகச் சிக்கனமாக. பின் - பிற்காலத்தே. பேதையார் - புல்லறிவினார். கை காட்டல் - கையால் குறிகாட்டல் - சாடை காட்டல். இளமைப் பருவத்திலேயே மறுமைக்குத் துணையாக அறஞ் செய்யாமல், பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று பணத்தைச் சேர்த்து வைக்கும் புல்லறிவாளர். இறக்கும் போது பேச நா எழாமல் போகவே, தாம் சேர்த்து வைத்துள்ள பொற்கட்டிகளை எடுத்து வரும்படி மனைவி மக்களிடம் கையால் அப் பொற் கட்டிகளின் உருவத்தைக் குறித்துக் காட்டவே, அவர்கள் அக் குறிப்பை அறியாமல் இவர் புளி விளங்காய் வேண்டுமென்கிறார் என்றெண்ணி, புளிவிளங் காய் கொண்டு வந்து கொடுப்பர் என்பதாம். இம்மை மறுமை விளக்கத்தை 2-ஆம் பாட்டுரையில் காண்க. இறக்கும் நிலையில் உள்ளவர் விரும்புவதைக் கொடுப்பது வழக்கம். புல்லறிவினார் சேர்த்து வைத்த பொன்னும் புளிவிளங் காயாப் போயிற்று என இகழ்ந்தவாறு. (5) 513. வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும் மறுமை மனத்தாரே யாகி - மறுமையை ஐந்தை யனைத்தானு மாற்றிய காலத்தே சிந்தியார் சிற்றறிவி னார். (நால) சிறு அறிவினார் - புல்லறிவினார், வெறுமை இடத்தும் விழுப்பிணிப் போழ்தும் - வறுமையுற்றபோதும் மிக்க நோய் வந்தபோதும், மறுமை மனத்தாரே ஆகி - மறுமைக்கு உரிய அறத்தைச் செய்யுங் கருத்துடையராய், ஆற்றிய காலத்து - நினைத்ததைச் செய்யக் கூடிய செல்வமும் உடல் நலமும் உள்ள காலத்தே, மறுமையை ஐந்தை அனைத்தானும் சிந்தியார் - மறுமைக்குரிய அறத்தைச் சிறுகடுகு அளவாயினும் நினைக்க மாட்டார். வெறுமை - வறுமை. இடம் - இங்கு காலம். விழுப்பிணி - மிக்கநோய். மறுமை மனம் - அறஞ் செய்யும் எண்ணம். ஐந்தை - சிறுகடுகு. அனைத்து - அளவு. ஆற்றிய காலம் - வறுமையும் நோயுமில்லாதிருந்த நல்ல காலம். வறுமையுற்றபோது பிறருக்கு இதைச் செய்ய வேண்டும். அதைச் செய்ய வேண்டும் என்று எண்ணுவதும் சொல்வதும் மக்கட்கு இயல்பு. ஆனால், அங்ஙனம் செய்யக்கூடிய செல்வக் காலத்தே ஒருவர் செய்யென்றாலும் செய்யாமை இயல்பு. இவ்வாறே, கொடிய நோய் வந்தபோது ஏதாவது அறஞ் செய்தால் அந்நோய் தீருமென்று எண்ணுவது மக்கள் இயல்பு. நோயில்லாத காலத்தே அந்நினைப்புத் தோன்றுவதில்லை. ஒரு குடியானவன் மனைவிக்கு நோய் வந்தபோது, பட்டியி லுள்ள ஆடுகளையெல்லாம் சாமிக்கு வெட்டுவதாக வேண்டிக் கொண்டானாம். அவன் பையன், ‘ஏப்பா! எல்லா ஆடுகளையும் வெட்டி விட்டால் பட்டிக்கு ஆட்டுக்கு என்ன செய்வது?’ என்றானாம். ‘போடா போ! ஆடுகளை யெல்லாம் வெட்ட எனக்கென்ன பித்தா! அம்மாளுக்கு நல்லாகட்டும், அதற்காக வேண்டினேன். நல்லானா நானெதற்கு வெட்டு கிறேன்?’ என்றானாம். என்னும் பாட்டி கதை இதற்கு எடுத்துக் காட்டாகும். புல்லறிவாளர்கள் வறுமையில் வாடும் போதும், நோயால் வருந்தும் போதும் மட்டும் அற நினைவுடையவராவர், அத்துன்பங் களில்லாத காலத்தே அந்நினைப்பே இல்லாதவராவர் என்பதாம். (6) 514. ஆர்த்த வறிவின ராண்டிளைய ராயினுங் காத்தோம்பித் தம்மை யடக்குப - மூத்தொறூஉந் தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோற் போத்தறார் புல்லறிவி னார். (நால) ஆர்த்த அறிவினர் ஆண்டு இளையர் ஆயினும் - கல்வி கேள்விகளால் நிறைந்த அறிவினையுடையவர் ஆண்டில் சிறிய ராயிருந்தாலும், காத்து ஓம்பித் தம்மை அடக்குப - புலன்களைப் பொறிவழியே செல்லாது தடுத்துப் பாதுகாத்துத் தம்மை அடக்கிக் கொள்வர், புல்லறிவினார் மூத்தொறும் - தீத்தொழிலே கன்றித் திரிதந்து - தீய செயல்களிலேயே உழன்று திரிந்து, எருவைபோல் பொத்து அறார் - கொறுக்கை யைப் போல உள் துளையாய் இருப்பது நீங்கமாட்டார். ஆர்த்த - நிறைந்த. காத்தல் - புலன்களைப் பொறிவழிச் செல்லாமல் காத்தல். அதாவது தீயவழியில் செல்லாமல் தடுத்தல். ஓம்பல் - பாதுகாத்தல். செல்லாமல் தடுத்து மீண்டும் செல்லாமல் பாதுகாத்தல். தம்மை அடக்குதல் - மனம் போன போக்கெல்லாம் போகாமல் அடக்குதல். அடக்குப - அடக்குவர், மூத்தொறும் - மூ - பகுதி. கன்றுதல் - முதிர்தல். திரிதந்து - திரிந்து. எருவை - நாணல். பொத்து என்பது எதுகை நோக்கி போத்து என நீண்டது. பொத்து - குற்றம். நாணலுக்குக் குற்றம் உள்ளே கெட்டியில்லாமல் துளையாக இருத்தல். பொந்து - பொத்து - போத்து எனத் திரிந்த தெனினுமாம். அறிவுள்ளவர் ஆண்டில் இளையராயினும் இளமை முதற் கொண்டே ஐம்பொறிகளின் வயப்பட்டுத் தீய காரியங் களைச் செய்யாமல் நல்ல காரியங்களையே செய்துவருவர். புல்லறி வாளரோ வெனில், அங்ஙனமின்றித் தம் வாழ்நாள் முழுவதும் தீய செயல்களையே செய்து வீண்காலங் கழிப்பர் என்பதாம். நாணல் தண்டு எவ்வளவு காலம் சென்றாலும் மேல் தோற்றத்தில் பளபளப்பாகவும் கெட்டியாகவும் இருந்தும், உள்துளை (பொந்து) நீங்காதவாறுபோல, புல்லறிவாளரும் எவ்வளவு காலமானாலும் மேல் தோற்றத்தில் நல்லவர்போல் இருப்பாரேயன்றி மனக்குற்றம் நீங்கப் பெறார் என்பதாம். இது புல்லறிவாளரின் இயல்பு. (7) 515. பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக் கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ பயனில் பொழுதாக் கழிப்பரே நல்ல நயமி லறிவி னவர். (நால) நல்ல நயம் இல் அறிவினவர் - நல்ல தன்மையில்லாத அறிவையுடையவர், பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரை - நிரம்பப் பொன்னைக் கொடுத்தாலும் நட்புக் கொள்ளற்கு அரிய ரான பெரியோர்களை, கொன்னே தலைக் கூடப் பெற்றிருந்தும் - ஒன்றுந் தாராமலே நட்புக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருந்தும், அன்னோ - ஐயோ, பயன்இல் பொழுதுஆ கழிப்பாரே - நட்புச் செய்து கொள்ளாமல் பயனில்லாத காலமாகக் கழிப்பர். புணர்தல் - நட்புக் கொள்ளல். கொன்னே - சும்மா என்றபடி. தலைக்கூடல் - நட்புக்கொள்ளல். பொழுதுஆ. ஆ - ஆக. நயம் இல் அறிவினர் - புல்லறிவினர். நட்புச் செய்தற்கரிய பெரியோர் வலிய வந்தாலும் நட்புச் செய்து பயன்பெறார் புல்லறிவினர் என்பதாம். கிடைத்தற்கரிய பெரியார் நட்பு எளிதில் கிடைத்தும், அதைப் பயன்படுத்திக் கொள்ளாது வீண் காலங் கழிக்கும் புல்லறிவினார் தன்மைதான் என்னே என்றபடி. (8) 516. தன்பயந் தூக்காரைச் சார்தலும், தாம்பயவா நன்பயங் காய்வின்கண் கூறலும், - பின்பயவாக் குற்றம் பிறர்மேல் உரைத்தலும் இம்மூன்றும் தெற்றென வில்லார் தொழில். (திரி) தன் பயம் தூக்காரைச் சார்தலும் - தனக்கு வரும் பயனை ஆராய்ந்து அதற்கு உதவி செய்யாதாரை அடுத்தலும், காய்வின் கண் தாம் பயவா நல்பயம் கூறலும் - ஒருவன் சினமுற்ற காலத்து தாம் பயன்படாமல் போவனவாகிய நல்ல பயனைத் தரும் மொழிகளைக் கூறலும், பின் பயவாக் குற்றம் பிறர்மேல் உரைத்தலும் - பின்னே பயன்படுதல் இல்லாத குற்றங்களை மற்றவர்கள்மேல் சொல்லு தலும், இம்மூன்றும் தெற்றெனவு இல்லார் தொழில் - ஆகிய இம்மூன்றும் இன்னது இன்ன பயனைத் தரும் என்னும் தெளிவு இல்லாதவருடைய செய்கையாம். பயம் - பயன். தூக்குதல் - ஆராய்தல். தூக்கார் - வினை யாலணையும் பெயர். பயவா - பயன்படாத. நல்பயன் - நல்ல பயன். காய்வு - சினம். தெற்றெனவு - தெளிவு. தெற்று - பகுதி. பயன்படாமல் போவனவாகிய நல்ல பயனைத் தரும் மொழிகள் - பயனற்ற மொழிகள். பயனைத் தரும் மொழி சின முற்றவரிடம் பயன்படாதாகையால், அது பயனற்ற மொழி யாயிற்று. பயன்படுதலில்லாத குற்றம் - வீணாகச் சாட்டுங் குற்றம் - வீண் குற்றம். குற்றம் செய்யாதிருந்தும் வீணாகச் சாட்டுங் குற்றம். தனக்கு உதவாதவரை அடுத்தலும், ஒருவர் சினமுற்ற போது அவரிடம் பயனற்ற சொற்களைப் பேசுதலும், வீணாக ஒருவர் மேல் குற்றம் சாட்டுதலும் ஆகிய இவை மூன்றும் புல்லறிவாளர் செயல் களாம். (9) 517. மையேர் தடங்கண் மயிலன்னாய் சாயலே மெய்யே யுணர்ந்தார் மிகவுரைப்பர் - பொய்யே குறளை கடுஞ்சொற் பயனிலசொன் னான்கும் மறலையின் வாயினவா மற்று. (ஏலா) மை ஏர் தடங்கண் மயில் அன்னாய் - மையெழுதிய அழகு பொருந்திய பெரிய கண்களையுடைய மயில் போன்ற வளே, உணர்ந்தார் - அறிவுடையோர், சாயலே மெய்யே மிகவு உரைப்பர் - மேம்பாடான சொல்லையும் உண்மை யையும் பெருமையாகச் சொல்வர், பொய் குறளை கடுஞ் சொல் பயனில சொல் நான்கும் - பொய்யும் புறங்கூறலும் கடுஞ்சொல்லும் பயனில சொல்லும் ஆகிய நான்கும், மறலையின் வாயின ஆம் - புல்லறிவுடையானது வாயி னிடத் தனவாம். ஏர் - அழகு. தடம் - பெரிய. மயிலன்னாய் - மகடூஉ முன்னிலை. சாயல் - மேம்பாடு, இங்கு மேம்பாடான - மேன்மை யான சொல்லை உணர்த்திற்று. மேம்பாடான சொல் - உயர்ந்த பொருளுடைய சொல். உணர்ந்தார் - அறிவுடையார் - வினையா லணையும் பெயர். மிகவு - பெருமை. குறளை - கோட்சொல்லல். மறலை - புல்லறி வாளன். வாயின - வாயின்கட் பிறப்பன. அறிவுடையார் மேன்மையாகவும் உண்மையாகவும் பேசுவர், ஆனால், புல்லறிவாளரோ பொய்யும் குறளையும் வன்சொல்லும் பயனில சொல்லுமே பேசுவர். பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும் எய்தாமை சொல்லின் வழுக்காத்து. (நீதிநெறி) அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொன் னான்கும் இழுக்கா வியன்ற தறம். (குறள்) (10) 518. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி ஆங்கதனுக் காகார மானாற்போல் - பாங்கறியாப் புல்லறி வாளர்க்குச் செய்த வுபகாரம் கல்லின்மே லிட்ட கலம். (வாக்) வரி வேங்கைப்புலி நோய்தீர்த்த விடகாரி - வரிகளை யுடைய வேங்கைப் புலிக்கு நச்சுநோயைப் போக்கிய நச்சு மருத்துவன், ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால் போல் - அப்பொழுதே அந்தப் புலிக்கு இரையானாற் போல, பாங்கு அறியாப் புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம் - செய்ந்நன்றி யறியாத புல்லறி வாளர்க்குச் செய்த உதவியானது, கல்லின் மேல் இட்ட கலம் - கல்லின்மேல் போடப் பட்ட மட்கலம் போல உடனே கெட்டு விடும். வேங்கைப்புலி - வேங்கையாகிய புலி - இருபெய ரொட்டு. வேங்கை - ஆண்புலி. வரி - கோடு. விடகாரி - விடத்தைப் போக்குபவன். விடம் - நஞ்சு. ஆங்கு - அப்பொழுதே. பாங்கு - நன்றி. உபகாரம் - உதவி. கலம் - மட்கலம் - சட்டி. ஒரு வேங்கை பாம்பு கடித்து நஞ்சு தலைக்கேறி மயங்கிக் கிடந்தது. அவ்வழியே சென்ற நச்சு மருத்துவன் ஒருவன் அவ்வேங் கையின் நஞ்சைப் போக்கினான். நஞ்சகன்று மயக்கந் தெளிந் தெழுந்ததும் அப்புலி, அவன் செய்த உதவியை எண்ணிப் பாராமல் அவனைக் கொன்று தின்றது. அது போன்றே புல்லறி வாளர்க்கு ஏதாவது நன்மை செய்தால் அவர்கள் அதை எண்ணிப் பாராமல் அப்போதே தீமை செய்வர் என்பதாம். அதனால், அவர்க்குச் செய்த உதவி கல்லின்மேல் போட்ட மட்கலம் போலப் பயனற்றுப் போகும் என்பது. வேங்கையின் தன்மை புல்லறிவாளர் தன்மைக்கும், கல்லின் மேலிட்ட கலம் அவர்க்குச் செய்த உதவிக்கும் உவமை. புல்லறிவாளர் தமக்கு நன்மை செய்தோர்க்கும் தீமையே செய்வர் என்பது கருத்து. (11) 519. . . . . . . . . . உள்கரந்து பாம்புறையும் புற்றன்னர் புல்லறிவி னார். (நன்) புல்லறிவினார் - பாம்பு உள்கரந்து உறையும் புற்று அன்னர் - பாம்பு உள்ளே மறைந்து வாழும் புற்றை ஒப்பர். கரந்து - மறைந்து. உறைதல் - இருத்தல். கொல்லுங் குணமுடைய பாம்பு வாழும் புற்றைப் போல, உள்ளத்தே பல தீமைகளையுடையவர் புல்லறிவினார் என்பதாம். பாம்பு இருப்பதை அறியாது புற்றண்டை சென்று தங்கி னால் பாம்பு கடித்துக் கொல்வதுபோல, புல்லறிவினாரின் தீக் குணத்தை யறியாது அவரிடம் சேர்ந்திருந்தால் கெடுத்து விடுவர் என்பதாம். பாம்பினும் கொடியவர் புல்லறிவாளர் என்பது கருத்து. (12) 33. பேதைமை அதாவது, யாதொன்றையும் அறியாமை; முழு மூடத்தனம். 520. குலந்தவங் கல்வி குடிமைமூப் டைந்தும் விலங்காம லெய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற மையறு தொல்சீர் உலக மறியாமை நெய்யிலாப் பாற்சோற்றி னேர். (நால) குலம் தவம் கல்வி குடிமை மூப்பு ஐந்தும் - குடிப் பிறப்பும் செயற்றிறமும் கல்வியும் குடும்ப வளமும் பருவ முதிர்ச்சியும் ஆகிய ஐந்தும், விலங்காமல் எய்தியக் கண்ணும் - ஒருவனுக்குத் தவறாமல் அமைந்தவிடத்தும், நலம் சான்ற மைஅறு தொல்சீர் உலகம் அறியாமை - பெருமை மிக்க குற்றமற்ற பழமையான சிறப்பினை யுடைய உலகியலை அறியாதிருத்தல், நெய் இலாப் பால் சோற்றின் நேர் - நெய்யில்லாத வெண்ணிறமான சோற்றுக்கு ஒப்பாகும். குலம் - குடிப்பிறப்பு. அதாவது வழிவழியாக வந்த உயர் குடியில் பிறத்தல். தவம் - செயற்கரிய செயல்கள் செய்யும் திறமை. அதாவது வினைசெயலால் உண்டாகும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல். குடிமை - குடும்ப வாழ்வுக்கு வேண்டிய செல்வச் சிறப்பு. மூப்பு - எளிதில் புலன்களடங் குதலும் முதிர்ந்த பயிற்சியுமுடைய முதிர்ந்த பருவம். அதுவே எளிதில் நற்செயல் செய்தற்கேற்ற காலமாகும். விலங்காமல் - நீங்காமல், தவறாமல். எய்தல் - அமைதல். நலம் - பெருமை. சான்ற - மிக்க. மை - குற்றம். தொன்மை - பழமை. சீர் - சிறப்பு. உலகம் - உலகியல். “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” (திவாகரம்) என்பதால், உலகம் என்பது உயர்ந் தோரைக் குறிக்கும். இங்கு உயர்ந்தோர் ஒழுகும் ஒழுக்க நெறியாகிய உலகியலைக் குறித்தது. பெருமைமிக்க குற்ற மற்ற பழமையான சிறப்பினையுடைய உயர்ந்தோர் ஒழுகிய ஒழுக்கம் எனக் கொள்க. பால் - வெண்மை. பால்சோறு - பால் போன்ற வெண்மையான சோறு. நேர் - உவம உருபு. நன்னெறியில் நடத்தற்கேற்ற குடிப்பிறப்பும் செயற்றிறமும் கல்வியும் குடிவளமும் முதிர்பருவமும் ஒருங்கு அமைந்திருக் கினும் பேதையர் நன்னெறியில் நடவார் என்பதாம். சோறு வெண்ணிறமாக இருந்தும் நெய்யில்லா விட்டால், ‘நெய்யில்லா உண்டிபாழ்’ என்று இகழப்படுதல் போல, குடிப் பிறப்பு முதலியன அமைந்திருந்தும் உலகியலை யறிந்து அதன்படி நடவாத பேதை இகழப்படுவான் என்பதாம். உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும் கல்லா ரறிவிலா தார் (குறள்) (1) 521. கன்னனி நல்ல கடையாய மாக்களிற் சொன்னனி தாமுணரா வாயினும் - இன்னினியே நிற்ற லிருத்தல் கிடத்த லியங்குதலென் றுற்றவர்க்குத் தாமுதவ லான். (நால) சொல் நனிதாம் உணரா ஆயினும் - பிறர் சொல்லும் சொற்களை நன்றாகத் தாம் கேட்டு அறிந்துகொள்ள மாட்டா வாயினும், உற்றவர்க்கு இன்னினியே - தம்மை அடைந்த வர்க்கு அப்பொழுதே, நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதல் என்று தாம் உதவலான் - மேலே நிற்றல் உட்காருதல் படுத்தல் நடத்தல் என்ற காரியங்கட்குத் தாம் இடமாகப் பயன்படு தலினாலே, கல் கடையாய மாக்களின் நனி நல்ல - கற்கள் முழு மூடர்களைக் காட்டிலும் மிகவும் நல்லவையாகும். கல் - நனி. நனி - மிக. கடையாய மாக்கள் - முழுமூடர். இன்னினியே - அப்பொழுதே. பிறர் சொல்வதை அறியாத தன்மையில் மூடரும் கல்லும் ஒப்பாயினும், தன்னிடம் வந்தவர்க்கெல்லாம் நிற்கவும் உட்காரவும் படுக்கவும் நடக்கவும் ஆகப் பல வகையிலும் விரும்பியவா றெல்லாம் பயன்படுகிற கல்லினும் பிறர்க்கு எவ்வகையிலும் உதவாத பேதையர் கீழ்ப்பட்டவர் என்பதாம். பேதையர் பிறர்க்கு எவ்வகையிலும் பயன்படார் என்றபடி (2) 522. பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக் கறுவுகொண் டேலாதார் மாட்டுங் - கறுவினாற் கோத்தின்னா கூறி யுரையாக்காற் பேதைக்கு நாத்தின்னு நல்ல சுனைத்து. (நால) பெறுவது ஒன்று இன்றியும் - பெறப்படும் பயன் சிறிதும் இல்லா திருந்தும், பெற்றானே போல ஏலாதார் மாட்டும் கறுவு கொண்டு - ஒரு பயனைப் பெற்றவன் போலத் தகாதவரிடத்திலும் சினங் கொண்டு, கறுவினால் இன்னா கோத்து கூறி உரையாக்கால் - தணியாத அச்சத்தினால் துன்பம் தருஞ் சொற்களைத் தொடர்ச்சிப் படுத்தி விளக்க மாகச் சொல்லா விட்டால், பேதைக்கு நல்ல சுனைத்து நா தின்னும் - மூடனுக்கு நல்ல தினவானது நாக்கை வருத்தும் போலும். பெறுவது - செய்யும் செயலினால் பெறப்படும் பயன். கறுவு - சினம். ஏலாதார் - செல்வம் அதிகாரம் பெருமை முதலியவற்றால் தம்மினும் மேம்பட்டவர். அதாவது, தாம் சினந்துரைப்பதற்குத் தகுதியில்லாத - மேலோர். மாட்டும் - இடத்தும். கோத்துக் கூறல். இன்னா - துன்பம். கூறுதல், உரைத்தல் - ஒருபொருட்பன்மொழி. தின்னுதல் - வருத்துதல். சுனைத்து - தினவு. கறுவினால் இன்னா கோத்து கூறி உரைத்தல் - மிகச் சினந்து வாய்க்கு வந்தபடி, பிறர்க்குத் துன்பந் தருஞ் சொற்கள் அத்தனையும் வரிசையாக விளங்கக் கூறுதல். அதாவது, நாத்தினவு தீரச் சும்மா திட்டுதிட்டென்று திட்டுதல். வெய்யன் பதகன் பரதார விருப்பன் வீணன் பொய்யன் நிறையும் பொறையுஞ் சிறிதுமில் புல்லன் கையன் கபடன் கயவன் (அரிச்சந்திரப் புராணம்) எனக் கோசிகன் அரிச்சந்திரனைத் திட்டுதல் போலத் திட்டுதல். காரணமில்லாமல் பிறரைத் திட்டுதல் பேதையர் இயல்பு என்பதாம். ஒரு பயனுமின்றி, பெரும் பயன் பெற்றவன் போல தன்னிலும் மேம்பட்டவரிடத்திலும் சினங்கொண்டு, அச் சினத்தினால் துன்பந் தரும் சொற்களை வரிசைப்படுத்திக் கூறித் திட்டுதல் பேதையர் செயல் என்பதாம். உடல் தினவெடுத்தால் சொறிந்து கொள்வது போல, நாத் தினவு தீரக் கண்டபடி பேசித் தினவைத் தீர்த்துக் கொள்வ ரென்க. (3) 523. தங்கண் மரபில்லார் பின்சென்று தாமவரை எங்கண் வணக்குது மென்பவர் - புன்கேண்மை நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப கற்கிள்ளிக் கையிழந் தற்று. (நால) நல் தளிர் புன்னை மலரும் கடல் சேர்ப்ப - அழகிய தளிர்களை யுடைய புன்னை மரங்கள் மலரும் கடற்கரையை யுடைவனே, தம் கண் மரபு இல்லார்பின் தாம் சென்று - தம் மிடத்து அன்பில்லாத வர்களிடத்தே தாம் சென்று, அவரை எம் கண் வணக்குதும் என்பவர் புன்கேண்மை - அவர்களை எம் மிடத்து அன்பு கொள்ளச் செய்வேம் என்பவர் புல்லிய சேர்க்கை, கல் கிள்ளி கை இழந்து அற்று - கல்லைக் கிள்ளிக் கையைப் போக்கிக் கொண்டது போலாம். தம்கண் - தம்மிடம். மரபு - அன்பு. இல்லார் பின் - இல் லாரிடம். எம்கண் - எம்மிடம். வணக்குதல் - அன்புடைய ராக்குதல் - தம் வயமாக்குதல், புல்கேண்மை - புல்லிய சேர்க்கை. முன் அவரிடம் சென்று சேர்ந்த அச் சேர்க்கை. தளிர் - கொழுந்து. சேர்ப்பு - கரை. சேர்ப்ப - ஆடூஉ முன்னிலை. இழத்தல் - நல மிழத்தல் - நோதல். அற்று - போலும். புன் கேண்மையாவது - அவர்க்கு இவரிடம் நட்பில்லாமல் இவர்மட்டும் அவரிடம் கொள்ளும் ஒருதலை நட்பு. தம்மிடம் சிறிதும் அன்பில்லாதவரிடம் சென்று சேர்ந்து, அவரைத் தம்மிடம் அன்பு கொள்ளச் செய்வோம் என்று சொல் பவருடைய அப்புல்லிய சேர்க்கை - அவ்வாறு செய்ய முயலுதல், கல்லைக் கிள்ளிக் கை நொந்தாற் போல, பயனின் மையோடு வீண் முயற்சியும் ஆகும் என்பதாம். அவ்வாறு செய்ய முயலுதல் பேதைமை என்பதாம். தம்மிடம் நட்புக் கொள்ள விரும்பாரை வலிய நட்பாள ராக்க முயல்வது பேதைமை என்பதாம். (4) 524. ஆகா தெனினு மகத்துநெய் யுண்டாகிற் போகா தெறும்பு புறஞ்சுற்றும் - யாதுங் கொடாஅ ரெனினு முடையாரைப் பற்றி விடாஅ ருகலத் தவர். (நால) ஆகாது எனினும் - தம்மால் உண்ண முடியா தென் றாலும், அகத்து நெய் உண்டு ஆகின் - ஓர் ஏனத்தினுள்ளே நெய் இருக்கு மானால், எறும்பு போகாது புறம் சுற்றும் - எறும்புகள் அவ் வேனத்தை விட்டு நீங்காமல் அதன் வெளிப் பக்கத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும்; (அதுபோல), யாதும் கொடார் எனினும் - யாதொரு பொருளையும் கொடாதவர் களானாலும், உடையாரை உலகத்தார் பற்றி விடார் - செல்வ முடையவர்களை உலகத்தவர் விட்டு நீங்கவே மாட்டார்கள். ஆகாது - கிடைக்காது - உண்ணமுடியாது. அகத்து - உள்ளே - ஏனத்தினுள்ளே. ஏனம் - பாத்திரம். புறம்- வெளியே. உடையார் - செல்வர். உலகத்தவர் என்றது - பேதையரை. உட்புகுந்து உண்ண முடியாதிருந்தும் ஆசையினால் நெய்யுள்ள ஏனத்தை எறும்புகள் சுற்றிக்கொண்டே இருப்பது போல, ஒன்றுங் கொடாதவராய் இருந்தாலும் செல்வ முடையவரைப் பேதையர் நீங்காமல் சுற்றிக் கொண்டே இருப்பர் என்பதாம். இது பேதையரின் இயல்பு. (5) 525. கற்றனவுங் கண்ணகன்ற சாயலு மிற்பிறப்பும் பக்கத்தார் பாராட்டப் பாடெய்துந் தானுரைப்பின் மைத்துனர் பல்கி மருந்திற் றணியாத பித்தனென் றெள்ளப் படும். (நால) கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இல்பிறப்பும் - ஒருவன் கற்ற கல்விகளும் அவனிடத்து மிகுதியாகவுள்ள மென்மைக் குணமும் உயர்குடிப்பிறப்பும் இவை போன்ற பிறவும், பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும் - அயலார் பாராட்டப் பெருமை பெறும், (அங்ஙனமன்றி), தான் உரைப்பின் - அவனே எடுத்துச் சொன்னால், மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத பித்தன் என்று எள்ளப்படும் - பகடிகள் பலர் ஏற்பட்டு மருந்தினால் தீர்க்க முடியாத பித்தன் என்று இகழப்படுவான். கண் அகன்ற - இடமகன்ற - மிக்க. ‘சாயல் மென்மை’ என்பது தொல்காப்பியம். அது மென்மையான குணத்தை யுணர்த் திற்று. அதாவது சாதுத் தன்மை. இல்பிறப்பு - உயர்குடிப்பிறப்பு. பக்கத்தார்- அயலார், பிறர். பாடு - பெருமை. மைத்துனர் - மனைவியின் உடன் பிறந்தார் - கேலி பேசுவோர். இங்கு ஏளனம் செய்வோரை உணர்த்திற்று. பகடி - ஏளனம் - ஏளனம் செய்வோன். பல்கி - பெருகி. மருந்தினால் தீர்க்க முடியாத பித்தன். எள்ளல் - இகழ்தல். தனது சிறப்பினைப் பிறர் கூறினால் பெருமையுண்டு; தானே கூறிக்கொள்ளுதல் கேலிக்கிடமாகு மென்பதாம். தமது பெருமை யைத் தாமே புகழ்தல் பேதைமை என்பது கருத்து. (6) 526. பெருமை யுடையா ரினத்தி னகறல் உரிமையிற் பெண்டீரைக் காமுற்று வாழ்தல் விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும் முழுமக்கள் காத லவை. (திரி) பெருமை உடையார் இனத்தின் அகறல் - பெரியோர் களின் நட்பைவிட்டு நீங்குதலும், உரிமை இல் பெண்டீரைக் காமுற்று வாழ்தல் - தமக்கு உரியரல்லாத மகளிரை விரும்பி வாழ்தலும், விழுமிய அல்ல துணிதல் - சிறந்தவை அல்லாத வற்றைச் செய்தலும், இம் மூன்றும் முழுமக்கள் காதல் அவை - ஆகிய இம்மூன்றும் மூடர்கள் விரும்புவனவாம். பெருமையுடையார் இனம் - பெரியோர் கூட்டம். அகல்தல் - நீங்கல். உரிமைஇல் பெண்டீர் - தன்மனைவி அல்லாத பிறர் மனைவியர். உரிமை - மனைவி. காமுறுதல் - விரும்புதல். விழுமிய - சிறந்தவை. விழுமிய அல்ல - சிறப் பில்லாதவை. துணிதல் - சிறப்பில்லாதவற்றைச் சிறப்புடைய தெனக் கொண்டு செய்ய முயலுதல். முழு மக்கள் - மூடர் - பேதையர். காதல் - விருப்பம். காதலவை - விரும்புபவை. பெரியோர் நட்பை விடுதலும், அயலார் மனைவியரை விரும்புதலும், பயனற்ற செயல்களைச் செய்தலும் மூடர்கள் செயல்களாம். (7) 527. ஆசை பிறன்கட் படுதலும் பாசம் பசிப்ப மடியைக் கொளலுங் - கதித்தொருவன் கல்லானென் றெள்ளப் படுதலும் இம்மூன்றும் எல்லார்க்கு மின்னா தன. (திரி) பிறன்கண் ஆசைப்படுதலும் - பிறனிடத்துள்ள பொருளுக்கு ஆசைப்படுதலும், பாசம் பசிப்ப மடியைக் கொளலும் - தன் சுற்றத்தார் பசித்திருக்கச் சோம்பலைக் கொள்ளுதலும், கதித்து ஒருவன் கல்லான் என்று எள்ளப் படுதலும் - வெறுத்து ஒருவன் கல்லாதவன் என்று இகழப் படுதலும், இம் மூன்றும் எல்லார்க்கும் இன்னாதன - ஆகிய இம்மூன்றும் யாவர்க்கும் துன்பந் தருவன வாம். பிறன்கண் - பிறனிடத்துள்ள பொருள். பாசம் - சுற்றம் - மனைவி மக்கள் முதலியவர். மடி - சோம்பல். கதித்தல் - வெறுத்தல். எள்ளல் - இகழ்தல். இன்னாதன - துன்பந் தருவன. பிறர் பொருளுக்கு ஆசைப்படுதலும், குடும்பத்தார் பசியால் வருந்தும்படி சோம்பேறியாய் இருத்தலும், இவன் கல்லாதவன் என்று வெறுத்து இகழும்படி கல்லாமல் இருத்தலும் முழுமூடத் தன்மை என்பதாம். குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும். (குறள்) விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர் (குறள்) (8) 528. கொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக் ககன்ற வினம்புகு வானும் இருந்த விழுநிதி குன்றுவிப் பானுமிம் முவர் முழுமக்க ளாகற்பா லார். (திரி) அஞ்சான் கொல்வது வேண்டலும் - அஞ்சாமல் பிற உயிரைக் கொல்வதற்கு விரும்புதலும், கல்விக்கு அகன்ற இனம் புகுவானும் - கல்லாதார் கூட்டத்தோடு சேர்கின்ற வனும், இருந்த விழுநிதி குன்றுவிப்பானும், முன்னோர் தேடிவைத்திருந்த பெருஞ் செல்வத்தைக் கண்டபடி செலவு செய்து குறைவிப்பானும், இம் மூவர் முழுமக்கள் ஆகற் பாலார் - ஆகிய இம்மூவரும் மூடர்கள் ஆவார்கள். கொல்வது - கொல்லுதல்; தொழிற்பெயர். தான் - அசை, அஞ்சான். அஞ்சாமல் - முற்றெச்சம். வேண்டல் - விரும்பல். கல்விக்கு அகன்ற இனம் - கல்லார் கூட்டம். விழுநிதி - பெருஞ் செல்வம். குன்றுவித்தல் - அழித்தல் என்றபடி. முழுமக்கள் - மூடர்கள். ஆகற்பாலார். ஆகுந் தன்மையை யுடையார் - ஆவார்கள் என்றபடி. அஞ்சாமல் ஓருயிரைக் கொலை புரியக் கருதுதலும், கல்லா ரோடு சேர்வதும், முன்னோர் தேடி வைத்த செல்வத்தை அழிப்பதும் மூடர்கள் செய்கை என்பதாம். தான் தேடாவிட்டாலும் முன்னோர் தேடி வைத்த செல்வத்தை அழிக்காமல் இருப்பதே அறிவுடைமையாகும் என்பதாம். (9) 529. பூத்தாலுங் காயா மரமுமுள நன்றறியார் மூத்தாலு மூவார்நூல் தேற்றாதார் - பாத்தி புதைத்தாலு நாறாத வித்துள பேதைக் குரைத்தாலுஞ் செல்லா துணர்வு. (சிறு) பூத்தாலும் காயா மரமும் உள - பூத்தும் காய்க்காத மரங்களும் உண்டு, (அதுபோல), நன்று அறியார் மூத்தாலும் மூவார் - நன்மையை அறியாதவர் ஆண்டில் முதிர்ந்தாலும் அறிவில் முதிரார், நூல் தேற்றாதார் - நூல்களைக் கற்றுத் தெளியாதவரும் அத்தகையரே யாவர், பாத்தி புதைத்தாலும் நாறாத வித்து உள - பாத்தியில் ஊன்றினாலும் முளைக்காத விதைகளும் உண்டு, (அது போல), பேதைக்கு உரைத்தாலும் உணர்வு செல்லாது - மூடனுக்கு நன்மையை எடுத்துக் கூறினாலும் அறிவு தோன்றாது. காயா - காயாத - காய்க்காத. நன்று - நன்மை. மூவார் - முதிரார். தேற்றுதல் - தெளிதல், கற்றறிதல். தேறாதார் என்பது தேற்றாதார் என றகரம் இரட்டியது. புதைத்தல் - மண்ணுக்குள் மறைத்தல் - ஊன்றுதல். நாறுதல் - முளைத்தல். பேதை - அறிவிலான். உணர்வு - அறிவு. பூத்தும் காய்க்காத மரம் - பாதிரி முதலியன. ஆண்டில் முதிர்ந்திருந்தும் அறிவு முதிராதவரும், நூல்களைக் கற்றுத் தெளியாதவரும் பூத்தாலும் காய்க்காத மரத்தைப் போல்வர்; மண்ணில் ஊன்றினாலும் முளைக்காத விதையைப் போல அறிவில் லாதவனுக்கு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அறிவுண்டாகாது. பூவாதே காய்க்கும் மரமுமுள. (நல்வழி) என்பது இதன் எதிரானது. (10) 530. உண்பது நாழி யுடுப்பது நான்குமுழம் எண்பது கோடிநினைந் தெண்ணுவன - கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்தனையுஞ் சஞ்சலமே தான். (நல்) உண்பது நாழி - உண்பது ஒரு படி அரிசியேயாம். உடுப்பது நான்கு முழம் - உடுத்துவது நான்கு முழத் துணியே யாம், நினைந்து எண்ணுவன எண்பது கோடி - மனதில் நினைந்து எண்ணுவன எண்பது கோடி எண்ணங்களாம். கண்புதைந்த மாந்தர் குடி வாழ்க்கை - இத்தகைய மூடர்களின் வாழ்க்கை யானது, மண்ணின் கலம் போலச் சாந்தனையும் சஞ்சலமே - மட்கலத்தைப்போல இறக்குமட்டும் துன்பமே யாகும். உண்பது - உண்ணல்; உடுப்பது - உடுத்தல்; தொழிற் பெயர். நாழி - படி. படியும் முழமும் அளவையாகு பெயராய்ப் படி யரிசியையும் முழத் துணியையும் குறித்தன. எண்பது கோடி - மிக மிகப் பல என்றபடி. கோடி - கோடி எண்ணங் களைக் குறித்தது. எண்பது கோடி நினைந்து எண்ணல் - அளவு கடந்து ஆசைப் படல். நினைந்து எண்ணுதல் - மிகவும் எண்ணுதல்; ஒரு பொருட் பன்மொழி. கண் புதைந்த - கண் மூடிய - கண்தெரியாத - அறி வில்லாத. கண் புதைந்த மாந்தர் - அறிவிலார் - மூடர். குடி வாழ்க்கை - உயிர் வாழ்வது. மண்ணின் கலம் - மட்கலம். அதாவது, வீட்டில் புழங்கும் சட்டி பானை முதலிய மட்கலம். சாம் தனையும்- சாகும் மட்டும். சஞ்சலம் - துன்பம். தான் அசை. உண்பதும் உடுப்பதுமே உயிர்வாழ்வின் பயனாக இருக்கவும் மூடர்கள் அளவுக்கு மீறிய ஆசையால் எண்ணாதன வெல்லாம் எண்ணி யெண்ணிச் சாகுமட்டும் துன்புறுவர் என்பதாம். ‘மண்ணின் கலம் போலச் சாந்தனையும் சஞ்சலமே’ என்றது - சமையல் செய்யும் சட்டி பானைகளை உடையு மட்டும் சோறு சாறாக்கி யாக்கி உடைந்ததும் எடுத்தெறிவது போல, மூடர்களும் இறக்குமட்டும் எண்பது கோடி நினைந் தெண்ணி யெண்ணி இறந்தொழிவ ரென்பதாம். (11) 531. பூவாதே காய்க்கு மரமுமுள மக்களுளும் ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா விரைத்தாலு நன்றாகா வித்தெனவே பேதைக் குரைத்தாலுந் தோன்றா துணர்வு. (நல்) பூவாதே காய்க்கும் மரமும் உள - பூக்காமலே காய் காய்க்கின்ற மரங்களும் உள்ளன; (அதுபோல), மக்களும் ஏவாதே நின்று உணர்வார் உளர் - மக்களுக்குள்ளேயும் ஏவாமலே தாமாகவே செய்தியை ஆராந்தறிபவர்களும் உள்ளனர்; தூவா விரைத்தாலும் நன்று ஆகா வித்து எனவே - தூவி விதைத் தாலும் முளைக்காத விதையைப் போல, பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்றாது - மூடனுக்கு நன்கு அறிவுரை கூறினும் கொஞ்சமும் அறிவு உண்டாகாது. பூவாதே காய்க்கும் மரம் - அத்தி, ஆல், அரசு, பலா முதலியன. இவை மற்றப் பூக்கள் போல் வெளியில் தெரியும் படி மலராமல் உள்ளுக்குள் மலர்ந்து காய்க்கும் தன்மையன. பூவாது காய்க்கும் மரமுள (சிறுபஞ்ச) ஏவாது - சொல்லாமலே என்றபடி. தாமாகவே உணர்வர் என்பதாம். தூவா - தூவி - உடன்பாட்டு வினையெச்சம். தூவுதல் - தெளித்தல். விரைத்தல் - விதை விதைத்தல். தூவி விதைத்தல் - விதைகள் நன்கு பரவும்படி விதைத்தல். நன்றாகா - நன்றாகாத - முளையாத. வித்து - விதை. முளையாத விதை பாளை விதை. உணர்வு - அறிவு. பூவாமல் காய்க்கும் மரங்கள் போலச் சொல்லாமலே தாமாகவே அறிந்து செய்வோர்களும் உண்டு. நன்கு பரவும் படி விதைத்தாலும் முளையாத விதைகள் போல, மூடர் களுக்குச் சொன்னாலும் அறிவு உண்டாகாது. அறிவுடையோர் சொல்லாமலே செய்வன தவிர்வன வற்றை அறிந்து கொள்வர்; அறிவிலார் சொன்னாலும் அறிந்து கொள்ளார் என்பதாம். (12) 532. தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப் பின்பவட் பாராப் பேதையும் பதரே. (வெற்) தன் மனையாளத் தாய் மனைக்கு அனுப்பி - தன் மனைவியை அவள் தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு, பின்பு அவள் பாரா பேதையும் பதரே - பின்னர் அவளைக் கவனி யாமல் இருக்கின்ற மூடனும் பதராவான். பாரா - பாராத - அழைத்துவர நினைக்காத. பதர் - பய னற்றவன். அகற்றி என்பது பிறவினை யாகையால். வலியத் தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு - முடுக்கி விட்டு - என்பதாம். அதாவது, இனி இங்கு வராதே என்று திட்டி அல்லது அடித்துத் தூரத்தி விட்டு என்றபடி. வாழ்க்கைத் துணையாகிய மனைவியை, அன்போடு மணந்து கொண்ட மனைவியைத் தாய் வீட்டுக்குத் துரத்தி விடுவதும், ஏதோ சினத்தினால் அவ்வாறு துரத்திவிட்டாலும் பின்பு போய் அழைத்துக் கொண்டு வராமல் இருப்பதும் பேதைமை என்பதாம். (13) 533. தன்னா யுதமும் தன்கையிற் பொருளும் பிறன்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே. (வெற்) ஆயுதம் - படைக்கலம் - வாள், வேல், வெடி, தடி முதலியன. தன் கையில் பொருளும் - தன் கையிலுள்ள பொருள். பிறன் கையில் - பிறனிடம். பிறன் - நண்பனல் லாதவன். தன் படைக்கலங்களையும் பொருளையும் பிறரிடம் கொடுப்பது பேதைமையாகும். (14) 534. பேதைமை யகற்று. (ஆத்) பேதைமை - அறியாமை. அகற்றுதல் - நீக்குதல். மூடத் தனத்தைப் போக்க முயல வேண்டும். பேதைமை யுடையார் நட்பை அகற்று எனவுங் கொள்ளலாம். (15) 34. தற்புகழ்ச்சி அதாவது, தன்னைத் தானே புகழ்ந்து கூறுதல். தனது பெருமை யைத் தானே புகழ்தல் என்றபடி. 535. எம்மை யறிந்திலிர் எம்போல்வா ரில்லென்று தம்மைத்தாங் கொள்வது கோளன்று - தம்மை அரியரா நோக்கி யறனறியுஞ் சான்றோர் பெரியராக் கொள்வது கோள். (நால) எம்மை அறிந்திலிர் - எமது சிறப்பை நீர் அறிந்திலீர், எம் போல்வார் இல் என்றார் - எம்மைப் போற் சிறப்புடையவர் இவ் வுலகத்தில் இல்லை என்று, தம்மைத் தாம் கொள்வது கோள் அன்று - தம்மைத் தாமே சிறப்பித்துக் கூறிக் கொள்வது பெருமை யாகாது; அறன் அறியும் சான்றோர் - அறத்தினை அறிந்த பெரியோர்களால், தம்மை அரியர் ஆ நோக்கி - தம்மைப் பிறரை விட அருமையான குணங்களையுடைய வராக எண்ணி, பெரியார் ஆ கொள்வது கோள் - பெரியவராக மதிக்கப்படுவதே பெருமை யாகும். எம்மை - எமது சிறப்பை. கொள்வது - சிறப்பித்துக் கூறிக் கொள்வது. கோள் - பெருமை. அரியர் - அருமையான குணங் களையுடைவர். ஆ - ஆக. நோக்கி - எண்ணி. பெரியர் ஆ. ஆ - ஆக. கோள் - பெருமை. எமது சிறப்பை நீர் அறிந்திலீர், எம்மைப்போற் சிறப்பு டையவர் இவ்வுலகத்தில் இல்லை என்று தம்மைத் தாமே சிறப்பித்துக் கூறிக் கொள்வது பெருமையாகாது. பெரியோர் களால் சிறந்தவர் என மதிக்கப்படுவதே பெருமையாகும். வியவற்க எஞ்ஞான்றும் தன்னை (குறள்) (1) 536. ஒருவ னறிவானு மெல்லாம்யா தொன்றும் ஒருவ னறியா தவனும் - ஒருவன் குணனடங்கக் குற்றமில் லானு மொருவன் கணனடங்கக் கற்றானு மில். (சிறு) எல்லாம் அறிவான் ஒருவனும் - எல்லாவற்றையும் அறிவா னொருவனும், யாது ஒன்றும் அறியாதவன் ஒருவனும் - யாதொன்றையும் அறியாதவனொருவனும், குணன் அடங்க இல்லான் ஒருவன் - நற்குணம் முழுதும் இல்லாதவனொரு வனும், குற்றம் இல்லான் ஒருவனும் - ஒரு குற்றமும் இல்லானொ ருவனும், கணன் அடங்கக் கற்றான் ஒருவனும் இல் - நூல்கள் முழுவதும் கற்றானொருவனும் இவ்வுலகத்தில் இல்லை. ‘அறிவானும்’ என்பதிலுள்ள உம்மையை எடுத்து ஒருவன் என்பதனோடு கூட்டுக - இவ்வாறே எல்லா உம்மைகளையும் எடுத்து எல்லா ஒருவனோடும் கூட்டுக. அடங்க - முழுவதும். கணன் - தொகுதி. அதாவது, ஒரு மொழியிலுள்ள எல்லா நூல் களையும் குறிக்கும். எல்லாவற்றையும் அறிந்தவனும், யாதொன்றும் அறியா தவனும், ஒரு குணமும் இல்லாதவனும், ஒரு குற்றமும் இல்லா தவனும், எல்லா நூல்களையும் கற்றவனும் இவ்வுலகத்தில் இல்லை என்பதாம். ஒருவர் தாம் எல்லாச் சிறப்பு முடையராக எண்ணித் தற் பெருமை கொள்ளக் கூடாது என்பது கருத்து. (2) 537. அறிவுடைமை மீக்கூற்ற மான குலனே உறுவலி நற்றவ மோங்கிய செல்வம் பொறிவனப்பி னெம்போல்வா ரில்லென்னு மெட்டும் இறுதிக்க ணேமாப் பில. (அற) அறிவுடைமை - சிறந்த அறிவு, மீக்கூற்றம் - புகழ், ஆனகுலன் - உயர்குடிப் பிறப்பு, உறுவலி - மிக்க உடல் வலி, நல்தவம் - செயற்றிறம், ஓங்கிய செல்வம் - மிக்க செல்வம், பொறி - உடற் கட்டு, வனப்பின் மேனியழகு ஆகியவற்றில், எம்போல்வார் இல் என்னும் எட்டும் - எம்மைப் போன்றவர் இல்லையென்றும் கூறி மகிழும் எட்டு வகையான செருக்கும், இறுதிக்கண் ஏமாப்பு இல - முடிவில் இன்பஞ் செய்யாவாம். ‘வனப்பின்’ என்பதிலுள்ள இன்னை. அறிவுடைமையின், மீக்கூற்றத்தின் என ஏனை ஏழனோடும் கூட்டுக. அறிவாலும் புகழாலும் என இன்னை ஆனாகக் கொள்க. மீக்கூற்றம் - புகழ். ஆன - உயர்ந்த. குலன் - குடிப் பிறப்பு. உறுவலி - மிக்க வலி - மிகுந்த உடல் வலிமை. தவம் - செயற்கருஞ் செயல் செய்யுந் திறம். ஓங்கிய மிக்க. பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளும் நன்கு அமைந்த உடற் கட்டைக் குறித்தது. இது கட்டழகு எனப்படும். வனப்பு - மேனி யழகு. போல்வார் இல் என்றல் - தற்புகழ்தல். இறுதி - முடிவு. ஏமாப்பு - பாதுகாப்பு. பாதுகாப்பு இல எனவே, அவ்வாறு கூறுதல் முடிவில் துன்பத்திற்குக் காரணமாகும் என்றபடி. அறிவும் புகழும் உயர்குடிப் பிறப்பும், உடல்வலியும், செயற் றிறமும், பெருஞ் செல்வமும், உடற்கட்டும், மேனி யழகும் உடையவர்கள் அவற்றையுடையேம் என்று செருக்குக் கொள்ளக் கூடாது. தாமே புகழ்ந்து கூறுதல் ஆகாது என்பதாம். இவ்வாறு தற்புகழ்வோர் பிறரால் இகழப்பட்டு முடிவில் துன்புறுவர் என்பது கருத்து. (3) 538. பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையுங் காக்கும் சிலகற்றார் கண்ணு முளவாம் பலகற்றார்க் கச்சாணி யன்னதோர் சொல். (அற) அலர் கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும் - பரந்த கதிர்களையுடைய பகலவனைச் சிறிய குடையும் மறைக்கும்; (ஆதலால்), யாம் பல கற்றோம் என்று தற்புகழ வேண்டா - யாம் பல நூல்களையும் கற்றுள்ளோம் என்று ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளலாகாது, பல கற்றார்க்கு அச்சாணி அன்னது ஓர் சொல் - பல நூல்களையும் கற்றறிந்தவர்கட்கு அச்சாணி போன்ற இன்றியமையாத ஒரு சொல், சில கற்றார் கண்ணும் உளவாம் - சில நூல்களைக் கற்றவர்களிடத்து உளவாதலும் உண்டு. அலர் கதிர் - பரந்த கதிர். கதிர் - ஒளி. ஞாயிறு - சூரியன். கைக் குடை - சிறிய குடை. காத்தல் - சூரியன் வெயில் மேல்படாமல் மறைத்தல். அச்சாணி - வண்டியின் கடையாணி. இது சக்கரம் கழலாமல் சக்கரத்தில் வெளிப்புறத்தில் அச்சு அல்லது இருசின் துளையில் இடப்படுவதால் அச்சாணி எனப் பெயர் பெற்றது. இது இல்லாவிட்டால் சக்கரங்கள் கழன்று விழுந்துவிடும். இத்தகைய இன்றியமையாத சொல் என்பதாம். சூரியனது பரந்த ஒளியைச் சிறுகுடை காக்கும் ஆகையால் யாம் பல கற்றோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக் கூடாது. ஏனெனில், பல நூல்களைக் கற்றறிந்தவர் கட்குத் தெரியாத இன்றியமையாத ஒன்று சில நூல்களைக் கற்றவர்க்குத் தெரிதலும் உண்டு. ஒரு சிறுவன் ஒரு கையில் மண்ணை எடுத்து இது எவ்வளவு மண் என்று ஒளவையாரிடம் கேட்கவே, ஒளவை யார் அதனை அறியாமல் அவனையே திருப்பிக் கேட்க, அச்சிறுவன், இது தெரியாதா? ஒரு பிடி மண் என்று ஒளவை யாரை வியப்புறச் செய்தான் என்பது இதற்கு எடுத்துக் காட்டாகும். (4) 539. விலக்கிய வோம்பி விதித்தனவே செய்யும் நலத்தகையார் நல்வினையுந் தீதே - புலப்பகையை வென்றன நல்லொழுக்கி னின்றேம் பிறவென்று தம்பாடு தம்மிற் கொளின். (நீநெ) புலப்பகையை வென்றனம் - ஐம்புலமாகிய பகையை வென்று விட்டோம், நல் ஒழுக்கில் நின்றோம் என்று - நல்லொழுக்கத்தில் தவறாமல் நின்றோ மென்று, தம்பாடு தம்மில் கொளின் - தம் பெருமையைத் தாமே கூறிக் கொள் வாராயின், விலக்கிய ஓம்பி - செய்யத் தகாதவை என்று விலக்கப்பட்ட செயல்களைச் செய்யாமல் காத்து, விதித்தனவே செய்யும் - செய்யத் தக்கவை யென்று வரையறுக்கப்பட்ட வற்றையே செய்யும், நலத்தகையார் நல் வினையும் தீதே - நல்லோர்களுடைய நல்லசெயலும் தீதே யாகும். விலக்கிய - செய்யத் தகாதவை. ஓம்புதல் - செய்யாமல் பாதுகாத்தல். விதித்தன - செய்யத்தக்கவை. விதித்தன விலக்கியன - செய்வன தவிர்வன - விதிவிலக்கு. விதித்தன செய்து விலக்கியன தவிர்தலே - அறம் எனப்படும் நலத்தை யார் - நல்லோர் - நன்மையாகிய தன்மையையுடையார். வினை - செயல். தீது - தீதென்று இகழப்படும் என்றபடி. புலம் - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐம்புலம். புலன்கள் பொறிவழியே சென்று கேடு பயத்தலின், புலப்பகை என்றார். வென்றனம், நின்றோம் - தன்மைப் பன்மை வினை முற்றுக்கள். பிற - அசை. பாடு - பெருமை. தம்மில் கொளல்- தாமே கூறல். தவிர்வன தவிர்த்து, செய்வன செய்யு நல்லோர்களும், ஐம்புலன்களையும் வென்றனம் நல்லொழுக்கின் கண் நின்றேம் என்று தமது பெருமiயத் தாமே கூறின், அவர்கள் செய்யும் நற்செயலும் தீச் செயலாகக் கொண்டு இகழப்படுவர் என்பதாம். சிறந்த நல்லொழுக்கமுடையோரும் தற்புகழ்ச்சி கொள்ளல் தீது என்பது கருத்து. (5) 540. தன்னை வியப்பிப்பான் றற்புகழ்தல் தீச்சுடர் நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் - தன்னை வியவாமை யன்றே வியப்பாவ தின்பம் நயவாமை யன்றே நலம். (நீநெ) தன்னை வியப்பிப்பான் தன்புகழ்தல் - தன்னைப் பிறர் மதிக்கும்படி செய்வதற்காகத் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல், நல்நீர் சொரிந்து தீச்சுடர் வளர்த்தற்று - தண்ணீரை ஊற்றி விளக்கை எரித்தது போலாம்; (ஆதலால்), இன்பம் நயவாமை அன்றே நலம் - இன்பத்தை விரும்பாமை யல்லவா இன்பமாகும்; (அது போல) தன்னை வியவாமை அன்றே வியப்பாது - தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளா மையல்லவா நன்மதிப்பாகும். வியப்பிப்பான் - வியப்பிக்க - வினையெச்சம். வியத்தல் - மதித்தல். தீச்சுடர் - விளக்கு. நன்னீர் - தண்ணீர். சொரிதல் - ஊற்றுதல். வளர்த்தல் - எரித்தல். அற்று - போலும். நயத்தல் - விரும்புதல். நலம் - இன்பம். ஒருவனைப் பற்றிப் பிறர் புகழ்ந்து கூறும் நன்மதிப் பாகுமே யன்றி, அவன் தன்னைத்தானே புகழ்ந்து கூறுதல்,. எரியும் விளக்கு கெடாமல் எரிவதற்கு எண்ணெயை ஊற்று வதன்றித் தண்ணீரை ஊற்றுவதனோடொக்கும். தண்ணீரை ஊற்றினால் எரியும் விளக்கு கெடுவது போலத் தன்னைத்தான் புகழ்ந்தால் உள்ள மதிப்பும் போய் விடும். ஆதலால், இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்ப முறுத லிலன். (குறள்) எனவே, இன்ப முறுவான் என்பது பெறப்படுதலின், இன்பத்தை விரும்பாதவன் இன்புறுதல் போல, தன்னைத் தான் புகழ்ந்து கொள்ளாமையே நன்மதிப்பாகும் என்பதாம். தற்புகழ்ச்சியால் உள்ள மதிப்பும் போய்விடும் என்பது கருத்து. (6) 541. அரியவை செய்து மெனவுரைத்த லின்னா. (இன்) அரியவை செய்தும் என உரைத்தல் - செய்தற்கரிய காரியங் களைச் செய்வோம் என்று பெருமை பேசுதல், இன்னா - துன்பந் தரும். அரியவை - செய்தற் கரிய செயல்கள். செய்தும் - தன்மைப் பன்மை வினைமுற்று. தன்னால் செய்ய முடியாததைச் செய்து விடுவேன் என்று தற்பெருமை பேசுதல் கூடாதென்பதாம். (7) 542. உடையது விளம்பேல். (ஆத்) உடையது - உனக்குள்ள சிறப்பினை, விளம்பேல் - நீயே புகழ்ந்து கூறாதே. தனது பெருமையைத் தானே புகழ்ந்து கூறுதல் கூடாது. (8) 543. வல்லமை பேசேல். (ஆத்) வல்லமை - உனது திறமையை, பேசேல் - நீயே புகழ்ந்து பேசாதே. தனது திறமையைத் தானே புகழ்ந்து பேசக் கூடாது. (9) 544. கூரம் பாயினும் வீரியம் பேசேல். (கொன்) கூர் அம்பு ஆயினும் - உன் கையிலிருப்பது கூர்மை பொருந்திய அம்பேயானாலும், வீரியம் பேசேல் - என்னை யாரால் வெல்ல முடியும் என்று செருக்குக் கொண்டு பேசாதே. எதிரி வெறுங்கையுடன் இருந்து, தனது கையில் கூர்மை பொருந்திய அம்பிருந்தாலும், அதனால் செருக்குக் கொண்டு ஒருவன் தனது வீரத்தன்மையைத் தானே புகழ்ந்து பேசக் கூடாது என்பதாம். (10) 35. பிறனில் விழையாமை அதாவது, பிறனுடைய மனைவியை விரும்பாமை. வாழ்க்கையின் உரிமைகள் அனைத்தையும் தாங்களே வைத்துக் கொண்டு, பெண் மக்களை அடிமைகளாய் நடத்தி வருவதால் ஆண் மக்களே இக்குற்றம் செய்தற்குரியராகையால், ‘பிறன் இல்’ என ஆண்பாலாற் கூறப்பட்டது. 545. அச்சம் பெரிதா லதற்கின்பஞ் சிற்றளவால் நிச்ச நினையுங்காற் கோக்கொலையால் - நிச்சலுங் கும்பிக்கே கூர்த்த வினையாற் பிறன்றாரம் நம்பற்க நாணுடை யார். (நால) அச்சம் பெரிது - (பிறன்மனைவியை விரும்பும்போ துண்டாகின்ற) அச்சம் பெரிது, அதற்கு இன்பம் சிற்றளவு - அவ் வச்சத்தை விடத் தம்மால் நுகரப்படும் இன்பம் சிறிய அளவினையுடையது; நிச்சம் நினையுங்கால் கோக்கொலை - உண்மையை ஆராயுமிடத்து அரசனால் கொலைத் தண்டனை உண்டாதலுங் கூடும்; நிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினையால் - எப்போதும் துன்பத்திற்கே கூர்த்த வினையால் - எப்போதும் துன்பத்திற்கே காரணமான கொடுஞ் செயலாகையால், நாண் உடையார் பிறன் தாரம் நம்பற்க - நாணத்தையுடையவர் பிறன் மனைவியை விரும்பாதிருக்கக் கடவர். அதற்கு - அவ்வச்சத்திற்கு. அவ்வச்சத்திற்கு இன்பம் சிறிது - அவ்வச்சத்தைவிட இன்பம் சிறிது. அச்சத்தின் என்னும் ஐந்தனுருபு, அச்சத்திற்கு என நான்கனுருபானது உருபு மயக்கம். நிச்சம், உண்மை. நினைத்தல் - ஆராய்தல், கோ - அரசன். கொலை - கொலைத் தண்டனை, பெரிதால், சிற்றளவால், கொலையால், ஆல் மூன்றும் அசை. நிச்சலும் - எப்போதும். கும்பி - இங்கே துன்பம், கூர்த்த வினை - கொடுஞ் செயல். நம்புதல் - விரும்புதல். நம்பற்க - எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. நாண - தகாதன செய்தற்கு நாணுதல். பிறன் மனைவியை விரும்பும் போதுண்டாகின்ற அச்சம் பெரிது. அவ்வின்பமோ அவ்வச்சத்தைவிடச் சிறிது. அரசனால் கொலைத் தண்டனையும் கிடைக்கும். பிறர்மனை நயத்தல் எப் போதும் துன்பத்திற்கே காரணமான கொடுஞ்செயல் ஆகையால், நாணுடையார் பிறன்மனைவியை விரும்பக் கூடாது என்பதாம். பிறன் மனை நயப்போனுக்கு பிற தண்டனைகளே யன்றிக் கொலைத் தண்டனையும் கிடைக்கும் என்பதாம். இதனால், அக் காலத்தே பிறன்மனை விரும்புதல் கொலைக் குற்றத்திற்கு ஒப்பாகக் கருதப்பட்டு வத்மை பெறப்படும். எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந் தேறான் பிறனில் புகல். (குறள்) (1) 546. அறம்புகழ் கேண்மை பெருமையிந் நான்கும் பிறன்றார நச்சுவார்ச் சேரா - பிறன்றாரம் நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென் றச்சத்தோ டிந்நாற் பொருள். (நால) பிறன் தாரம் நச்சுவார் - பிறன் மனைவியை விரும்பு வாரை, அறம் புகழ் கேண்மை பெருமை இந்நான்கும் சேரா - அறமும் புகழும் நட்பும் பெருமையும் ஆகிய இந்நான்கும் ஒருபோதும் சேராவாம்; பிறன் தாரம் நச்சுவார் - பிறன் மனைவியை விரும்பு வாரை, பகை பழிபாவம் அச்சத்தோடு இந்நாற் பொருள் சேரும் - பகையும் பழியும் பாவமும் அச்சமும் ஆகிய இந்நான்கு பொருள் களும் சேரும். கேண்மை - நட்பு. நச்சுதல் - விரும்புதல். நச்சுவார் - நச்சுவாரை. பழி - பிறர் பழித்தல். பழிப்பு. பாவம் - குற்றம். பிறன் மனைவியை விரும்புவாரை அற முதலிய நான்கும் சேரா, பகை முதலிய நான்கும் சேரும் என்பதாம். அறத்திற்குப் பாவமும், புகழுக்குப் பழியும், கேண்மைக்குப் பகையும் மறுதலை. பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். (குறள்) (2) 547. புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம் துய்க்கு மிடத்தச்சந் தோன்றாமற் காப்பச்சம் எக்காலு மச்சந் தருமா லெவன்கொலோ உட்கான் பிறனில் புகல். (நால) புக்க இடத்து அச்சம் - பிறன்மனையாளிடம் போகும் போதும் அச்சம் உண்டாகின்றது, போதரும் போது அச்சம் - மீண்டு வரும்பொழுதும் அச்சம் உண்டாகின்றது, துய்க்கும் இடத்து அச்சம் - இன்பம் நுகரும் போதும் அச்சம் உண்டா கின்றது, தோன்றாமல் காப்பு அச்சம் - அதனைப் பிறரறி யாமல் காக்கும் போதும் அச்சம் உண்டாகின்றது; எக்காலும் அச்சம் தரும் - இவ்வாறு எப்போதும் அச்சத்தையே தருகின்றது; (இங்ஙன மிருக்க), உட்கான் பிறன் இல்புகல் எவன் கொலோ - ஒருவன் அஞ்சாமல் பிறன் மனையாளிடம் செல்லுதல் எவ்வாறோ? புகும் என்பது புக்க எனத் திரிந்தது. புக்க - போன என்றுங் கொள்ளலாம். போதரல் - வருதல், போது - பொழுது. துய்த்தல் - இன்பந் துய்த்தல். தோன்றாமல் - பிறரறியாமல், காப்பு - காத்தல். எக்காலும் - எப்போதும். தரும் ஆல். ஆல் - அசை. எவன் - எவ்வாறு. கொல் - இழிவையும், ஓ - இரக்கத் தையும் உணர்த்தும், உட்குதல் - அஞ்சுதல். இல் - இல்லாள் - மனைவி. புகல் - செல்லுதல் - இடக்கரடக்கல். பிறன் மனை விரும்புபவனுக்கு நேரும் பகை முதலிய குற்றங்கள் நான்கனுள் இதில் அச்சத்தின் தன்மை கூறப் பட்டது. பிறன் மனை நயப்பவன் அச்சத்தால் இன்பத்தையும் இழத்தலின் அச்சத்தின் கொடுமை தனியே கூறப்பட்டது. பிறன் மனைவியிடம் போகும்போதும், இன்பந் துய்க்கும் போதும், மீண்டு வரும் போதும், அத்தகாச் செயலைப் பிற ரறியாமல் காக்கும் போதும், இவ்வாறு எப்போதும் அச்சத் தையே தருதலான், ஒருவன் அஞ்சாமல் பிறன் மனைவியிடம் செல்லுதல் எவ்வாறோ? என ஒருவன் இரங்கிக் கூறியவாறு இச்செய்யுள் செய்யப்பட்டது. பிறன் மனை நயத்தல் எப்போதும் அச்சமே யாதலால் அவ்வாறு அஞ்சியஞ்சி எய்தும் இன்பம் என்? என்பது கருத்து. (3) 548. பல்லா ரறியப் பறையறைந்து நாட்கேட்டுக் கல்யாணஞ் செய்து கடிபுக்க - மெல்லியற் காதன் மனையாளு மில்லாளா வென்னொருவன் ஏதின் மனையாளை நோக்கு. (நால) நாள் கேட்டு - நல்ல நாளைக் கேட்டு, (அந்நாளில்), பல்லார் அறியப் பறை அறைந்து - பலரும் அறியும்படி பறை முதலிய மங்கல இயங்களை முழக்கி, கல்யாணம் செய்து கடி புக்க - கல்யாணஞ் செய்யப்பட்டுத் தன் காவலையுடைய மனையின் கண் புகுந்த, மெல் இயல் காதல் மனையாளும் இல்லாள்ஆ - மென்மையான குணங் களையும் விருப்பத்தையும் உடைய மனைவியும் தன் வீட்டில் உள்ளவளாக, ஒருவன், ஏதில் மனையாளை நோக்கு என் - அயலானது மனைவியைப் பார்ப்பது என்ன காரணத்தினாலோ? பறை - மத்தளம், நாதசுரம் முதலிய மற்ற இயங்களையுங் குறிக்கும். அறைந்து - அறைவித்து எனப் பிறவினை வினை யெச்சம். கடி - காவலை யுணர்த்தும் உரிச்சொல். இங்கு புக்க என்றதால் காவலையுடைய மனையைக் குறித்தது. இயல் - தன்மை. காதல் - விருப்பம், அன்பு. இல்லாள்ஆ - இல்லில் உள்ளவளாக - வீட்டி லிருக்க. ஆ - ஆக. ஏதில் - அயல். இது ஏதிலனைக் குறித்தது. நோக்கு - இடக்கரடக்கல். தன் மனைவியிருக்க அயலான் மனைவியை விரும்பு தலின் குற்றத்தை விளக்க இங்ஙனங் கூறினதேயன்றி, மனைவி யில்லாதவன் - திருமணம் ஆகாதவன் பிறன் மனைவியை விரும்பலாம் என்று கூறியதன்றெனக் கொள்க. குலமகட்குரிய நற்குணங்களெல்லாம் அமையப் பெற்றவள் என்பது தோன்ற, ‘மெல்லியல், காதல்’ என்னும் அடை மொழிகள் கொடுத்தார். அத்தகைய நன் மனைவி யிருக்கப் பிறன் மனைவியை விரும்புதல் இழி செயல் என்பது கருத்து. இன்பத்திற்குரிய மனைவி - அதுவும் காதல் மனைவி - வீட்டில் இருக்கவும், இன்பத்திற்காக அயலானது மனைவியை விரும்புதல் காரணமற்ற செயலாதலால், ‘என்னொருவன் ஏதில் மனையாளை நோக்கு’ என்றார். (4) 549. அம்ப லயலெடுப்ப வஞ்சித் தமர்பரீஇ வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று - நம்பும் நிலைமையில் நெஞ்சத்தான் றுப்புரவு பாம்பின் தலைநக்கி யன்ன துடைத்து. (நால) அயல் அம்பல் எடுப்ப - அயலார் பழிக்கவும், தமர் அஞ்சி பரீஇ - உறவினரும் நண்பரும் என்ன நேருமோ வென்று அஞ்சி வருந்தவும், வம்பலன் பெண் மரீஇ மைந்துற்று - அயலானது மனைவியைச் சேர்ந்து களிப்புற்று, நம்பும் நிலைமை இல் நெஞ்சத் தான் துப்புரவு - நம்பத்தக்க நிலைமை யில்லாத மனத்தை யுடையவனது இன்ப நுகர்ச்சியானது, பாம்பின் தலை நக்கி அன்னது உடைத்து - பாம்பினது தலையை நக்கினாற் போன்ற தன்மையுடையது. அம்பல் - ஒருவனது கெட்ட நடத்தையை வெளிப் படை யாகச் சொல்லாமல் முணுமுணுப்பது. வெளிப்படை யாகப் பழித்துக் கூறுவது - அலர் எனப்படும். அயல் - அயலார். தமர் - உறவினரும் நண்பரும். பரீஇ - பரிய - வருந்த - என்னும் செய வெனெச்சத்தின் திரிபாகிய பரிந்து என்பது திரிந்து அள பெடுத்தது. வம்பலன் - அயலவன். மரீஇ - மருவி. மைந்துற்று - மகிழ்ந்து - களித்து. நம்பும் நிலைமையில் நெஞ்சத்தான் - நம்ப முடியாத மனத்தையுடையவன். துப்புரவு - இன்ப நுகர்ச்சி. அன்னது - போன்றது. பளபளப்பாயிருக்கிறதென்று பாம்பின் தலையை நக்கினால் நஞ்சு கலந்து இறத்தற்கு ஏதுவாவது போல, இன்பமாயிருக்கிற தென்று பிறர் மனைவியைச் சேர்ந்தால் குற்றம் பொருந்திப் பெருந் துன்பத்திற்கு ஏதுவாகுமென்பது கருத்து. அயலார் பழிக்கவும், சுற்றத்தாரும் நண்பரும் வருந்தவும், அயலான் மனைவியைச் சேர்ந்து களிப்புற்றிருப்பவன் பாம்பின் தலையை நக்கி இறப்பவன்போல விரைவில் கெடுவான் என்பதாம். (5) 550. அம்பு மழலும் அவிர்கதிர் ஞாயிறும் வெம்பிச் சுடினும் புறஞ்சுடும் - வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலாற் காமம் அவற்றினு மஞ்சப்படும். (நால) அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும் - அம்பும் நெருப்பும் விளங்குகின்ற ஒளியையுடைய ஞாயிறும், வெம்பி சுடினும் புறம் சுடும் - வெப்பங் கொண்டு சுட்டாலும் உடம்பை மட்டும் சுடவல்லனவாம்; காமம் வெம்பி மனத்தைக் கவற்றிச் சுடுதலால் - பிறனில் விழைதலோ வென்றால் வெப்பம் கொண்டு மனத்தைக் கவலைப்படுத்திச் சுடுதலால், அவற்றினும் அஞ்சப்படும் - அம்பு முதலியவற்றினும் மிகவும் அஞ்சப்படும். அழல் - தீ. அவிர்தல் - விளங்குதல். கதிர் - ஒளி வெம்பி - வெப்பங் கொண்டு. புறம் - உடம்பு. கவற்றல் - கவலைப் படுத்தல். கவல் - கவலை. காமம் - பிறனில் விழைதல். புறத்தையே சுடும் அம்பு முதலியவற்றினும் அகத்தைச் சுடும் காமம் கொடியது என்பதாம். எனவே, அத்தகைய கொடியதாகிய பிறனில் விழையக் கூடாது என்பது கருத்து. அம்பு முதலியவற்றி லிருந்து தப்பினாலும் தப்பலாம்; ஆனால், காமத்தின் கொடுமையி லிருந்து தப்ப முடியாது என்பது குறிப்பு. (6) 551. அறனு மறனறிந்த செய்கையுஞ் சான்றோர் திறனுடைய னென்றுரைக்குந் தேசும் - பிறனில் பிழைத்தா னெனப்பிறராற் பேசப்படுமேல் இழுக்கா மொருங்கே யிவை. (அற) பிறனில் பிழைத்தான் என - அயலான் மனைவியை விரும்பி னான் என்று, பிறரால் பேசப்படுமேல் - மற்றவர் களால் ஒருவன் பேச்சப்படுவானானால், அறனும் - அறன் அறிந்த செய்கையும் - அறச்செயலும், சான்றோர் திறன் உடையவன் என்று உரைக்கும் தேசும் - பெரியோர்கள் நல்லொழுக்க முடையவன் என்று கூறும் புகழும், இவை ஒருங்கே இழுக்கு ஆம் - ஆகிய இவை முழுதும் பழிக்கப் படுவனவாம். அறம் - செய்வன தவிர்வன. அறன் அறிந்த செய்கை - அறச் செயல். அதாவது செய்வன செய்து தவிர்வன தவிர்தல். சான்றோர் - பெரியோர் திறன் - வகை; நன்மை தீமையின் வகை. இங்கு நல்லொழுக்கத்தைக் குறித்தது. தேசு - புகழ். இல் - இல்லாள். பிழைத்தல் - விரும்புதல். அதாவது பிறன் மனைவியை விரும்பு தலாகிய தவறு செய்தல். இழுக்கு - பழிப்பு. ஒருங்கே - முழுவதும். ஒருவன் பிறனில் விரும்புவானானால், அவன் மேற் கொண்ட அறமும், அறச்செயலும். பெரியோர்களால் நல்லவ னென்று பேசப்படும் புகழும் இல்லையாகும் என்பதாம். (7) 552. பிறன்வரைநின்றாள் கடைத்தலைச் சேறல் அறனன்றே யாயினு மாக - சிறுவரையும் நன்னலத்த தாயினுங் கொள்க நலமன்றே மெய்ந்நடுங்க வுண்ணடுங்கு நோய். (நீநெ) பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல் - பிறன் மனைவியின் வீட்டுவாயிலை யடைதல், அறன் அன்றே ஆயினும் ஆக - நற் செயல் ஆகாது, நற்செயலே ஆயினும் ஆகட்டும், சிறுவரையும் நல் நலத்தது ஆயினும் கொள்க - அச்செயலில் நொடிப் பொழுதாயினும் தனக்கு நல்ல இன்பம் இருக்குமாயின் அதைக் கொள்க, நலம் அன்று மெய் நடுங்க உள் நடுங்கும் நோய் - அச்செயலால் வருவது இன்பமன்று, உடல் நடுங்க மனம் நடுங்குதற்குக் காரணமாகிய துன்பமே யாகும். பிறன்வரை நின்றாள் - பிறன் மனைவி. வரை - எல்லை. நின்றால் - வினையாலணையும் பெயர். கடைத்தலை - வாயில். நின்றாள் கடைத்தலைச் சேறல் - பிறனில் விழைதல். அறன் - நற்செயல். ஆயினும் ஆக - ஆயினும் ஆகட்டும். சிறுவரை - சிறிது நேரம் - நொடிப்பொழுது. நலம் - இன்பம். உள் - மனம். நோய் - துன்பம். பிறன் மனைவியை விரும்புதல் நற்செயலன்று. அது நற்செயலே ஆயினும் ஆகட்டும். அச்செயலில் சிறுபொழு தாயினும் இன்பம் இருக்குமாயின் அதைக் கொள்ளலாம். ஆனால், அச்செயலால் வருவது இன்பம் இல்லை, உடலும் உளமும் நடுங்குதற்குக் காரணமாகிய துன்பமேயாகும். பிறன் மனைவிரும்புதல் அறமன்று, அறமென்றே கூறுவார் கூறினும் அது கொள்ளற்க என்பார் ‘ஆயினும் ஆக’ என்றார். பிறன் மனைக்குச் செல்வான், செல்லுங்கால் மெய் நடுங்கிக் கொண்டு செல்வனென்றும், பிறன் மனையிலிருக் கையில் உடையவன் கண்டால் என்னாகுமோ என்று உடல் நடுக்கத்தோடு உள நடுக்கமும் கொள்வானாகையால், ‘மெய்ந் நடுங்க உள் நடுங்கும் நோய்’ என்றார். பிறன்மனை விரும்புதல் நற்செயலாகாது. நற்செயலே ஆயினும் ஆகட்டும். பிறன்மனை நயத்தலில் இன்பந்தான் உண்டா என்றால் அதுவுமில்லை. புக்க இடத்தச்சம், போதரும் போதச்சம், துய்க்கும் இடத்தச்சம், தோன்றாமல் காப்பச்சம், எக்காலும் அச்சம் தருமால். (நால) என, அச்சத்தால் உடலும் உள்ளமும் நடுங்குதலான் துன்பமே யாகும் என்பதாம். நற்செயலும் இன்பமுமின்றி, தீச்செயலும் துன்பமும் ஆன பிறன்மனை நயத்தல் தகாது என்பது கருத்து. (8) 553. கொலையஞ்சார் பொய்ந்நாணார் மானமும் ஓம்பார் களவொன்றோ வேனையவுஞ் செய்வார் - பழியொடு பாவமிஃ தென்னார் பிறிதுமற் றென்செய்யார் காமங் கதுவப்பட்டார். (நீநெ) காமம் கதுவப்பட்டார் - காமத்தால் பற்றப்பட்டவர் - பிறன் மனை விரும்புவோர், கொலை அஞ்சார் - கொலை செய்ய அஞ்ச மாட்டார், பொய் நாணார் - பொய் பேசக் கூசார், மானமும் ஓம்பார் - மானத்தையும் பாதுகாவார், களவு ஒன்றோ ஏனையவும் செய்வார் - திருடுதல் மட்டுமா மற்று முள்ள பல வகையான தீச் செயல்களையும் செய்வார், இஃது பழியொடு பாவம் என்னார் - இப்பிறர்மனை நயத்தல் பழியும் பாவமுமாம் என்றும் நினையார், பிறிது என் செய்யார் - வேறு யாதுதான் செய்யமாட்டார்? எல்லாத் தீச்செயல்களும் செய்வார் என்றபடி. ஓம்புதல் - பாதுகாத்தல். ஒன்றே - எண்ணிடைச் சொல். களவு ஒன்றோ - களவும் ஏனையவும் என்பது பொருள். ஏனைய - பிற தீச்செயல்களை. பழி - பிறர் பழித்தல். பாவம் - குற்றம். பழிஒடு. ஒடு - உடனிகழ்ச்சி. பழியும் பாவமும். இஃது - பிறன்மனை நயத்தல். பிறிது - வேறு. மற்று - அசை. காமம் - இங்கு பிறன்மனை நயத்தல். கதுவுதல் - பற்றுதல். அஞ்சார், நாணார், ஓம்பார் - எதிர்மறைப் பலர்பால் வினை முற்றுக்கள். செய்வார் - உடன்பாட்டு வினைமுற்று. செய்யார் - உடன்பாட்டில் வந்த எதிர்மறை வினைமுற்று. பிறன்மனை நயப்போர், கொலை செய்ய அஞ்ச மாட்டார், பொய் பேச நாணமாட்டார், மானத்தைப் பாது காக்க மாட்டார், களவோடு மற்ற எல்லாத் தீச்செயல் களையும் செய்வார், இது பிறர் பழித்தற்குரியது, குற்றமானது என்று நினையார், வேறு என்னதான் செய்யமாட்டார்? எல்லாத் தீச்செயல்களும் செய்வார் என்பதாம். காமங் கதுவப்பட்டார் எல்லாத் தீச்செயல்களும் செய்வார் என்பது கருத்து. பகைபாவ மச்சம் பழியென நான்கும் இகவாவா மில்லிறப்பான் கண். (குறள்) (9) 554. திருவினு நல்லாள் மனைக்கிழத்தி யேனும் பிறர்மனைக்கே பீடழிந்து நிற்பர் - நறுவிய வாயின வேனு முமிழ்ந்து கடுத்தின்னும் தீய விலங்கிற் சிலர். (நீநெ) நறுவிய வாயின ஏனும் - இனிய பொருள்கள் தமது வாயிலகப் பட்டன வாயினும், உமிழ்ந்து கடுத்தின்னும் தீய விலங்கின் சிலர் - அவற்றைக் கக்கிவிட்டுக் கைப்புள்ள பொருள்களைத் தின்னும் கொடிய விலங்கு போலச் சில தீயோர், மனைக்கிழத்தி திருவினும் நல்லாள் ஏனும் - மனைவி திரு மகளினும் சிறந்த அழகுடையவளா யிருப்பினும் அவளை விட்டு, பிறர் மனைக்கே பீடு அழிந்து நிற்பர் - பிறன் மனைவியை விரும்பித் தமது பெருமை கெட்டு நிற்பர். திரு - திருமகள். செல்வத்தைத் திருமகள் என்பதும், அவள் மிக்க அழகுடையவள் என்பதும் நூன்மரபு. திருக்குறள் குழந்தை யுரை முகவுரை பார்க்க. நல்லாள் - அழகுடையவள். மனைக் கிழத்தி - மனைவி. பீடு - பெருமை. நறுவிய - கரும்பு போன்ற இனிய பொருள்கள். வாயின - வாயில். அகப் பட்டாலும் - அதாவது தீனி தின்னும் போது வாயிலகப் பட்டாலும் என்றபடி. உமிழ்ந்து - உமிழ்ந்துவிட்டு. கடு - கசப்பு - வேப்பிலை போன்றவை. தீய - கொடிய - கீழ்த்தர மான என்றபடி. பேரழகுடைய தமது மனைவியை விட்டுப் பிறன் மனைவியை விரும்பும் அறிவிலிகள், இனிய பொருளைத் தின்னாது கசப்பான பொருளைத் தின்னும் விலங்குகளுக் கொப்பாவர் என்பதாம். சில விலங்குகள் இனிய இலை தழைகள் இருக்கவும் அவற்றைத் தின்னாது வேப்பிலை, எருக்கிலை போன்ற கசப்பான இலைகளைத் தின்பதுபோல, மக்களுள்ளும் ஒரு சிலர் அழகிய மனைவி இருக்கவும் அவளை விரும்பாது, அருவருக்கத்தக்க - அழகில்லாத - அயலான் மனைவியை விரும்புவர் என்பதாம். அழகோடு குணமுங் கொள்க. ஒட்டகம் வேப்பிலையை விரும்பித் தின்னும்; வெள்ளாடு எருக் கிலையை விரும்பித் தின்னும். ஆத்த மனையா ளகத்தி லிருக்கவே காத்த மனையாளக் காமுறுங் காளையர் காய்த்த பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே. (திருமந்திரம்) (10) 555. நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில் கொண்ட கருவழிக்குங் கொள்கைபோல் - ஒண்டொடீஇ போதந் தனங்கல்வி பொன்றவருங் காலத்தே மாதர்மேல் வைப்பார் மனம். (நல்) ஒள் தொடீஇ - ஒளி பொருந்திய வளையல்களை யுடையவளே, நண்டு சிப்பி வேய் கதலி நாசம் உறுங் காலத்தில் - நண்டும் சிப்பியும் மூங்கிலும் வாழையும் கேடடையும் போது, கொண்ட கரு அழிக்கும் கொள்கை போல் - அவை கொண்ட கருவே அவற்றைக் கெடுக்கும் தன்மையைப் போல, போதம் தனம் கல்வி பொன்றவரும் காலத்து - அறிவும் செல்வமும் கல்வியும் கெட வருகின்ற காலத்து, மாதர்மேல் மனம் வைப்பர் - பிறர் மனைவியரை விரும்புவர். சிப்பி - முத்துச்சிப்பி. வேய் - மூங்கில். கதலி - வாழை. நாசம் உறுதல் - கெடுதல், கேடடைதல். அழிக்கும் - கெடுக்கும். தொடி - வளையல். ஒண்டொடி - மகடூஉ முன்னிலை. போதம் - அறிவு. தனம் - செல்வம். பொன்றுதல் - கெடுதல், அழிதல். நண்டு - குஞ்சு பொரித்தால் இறந்துவிடும். சிப்பி முத் தீன்றால் இறந்துவிடும். மூங்கிலும் வாழையும் காய்த்தால் அழிந்து விடும். மூங்கில் வறண்டு போகும். வாழையை வெட்டிவிடுவர். நண்டும் சிப்பியும் மூங்கிலும் வாழையும் தாம் கொண்ட கருவினால் கெடுவதுபோல, பிறன்மனை நயப்போர் அந்நயப்பால் கெடுவர் என்பதாம். பிறன் மனை விரும்புவோர் அறிவும் செல்வமும் கல்வியின் பயனும் இழந்து கேடடைவர் என்பது கருத்து. (11) 556. பிறன்மனை பின்னோக்காப் பீடினிது. (இனி) பிறன் மனை பின் நோக்கா - பிறன் மனைவியைத் திரும்பிப் பாராத, பீடு இனிது - பெருமை நல்லது, நோக்கா நோக்காத, பின் நோக்குதல் - விரும்புதல், பீடு - பெருமை. பிறன் மனைவியை விரும்பாமை பெருமையுடைத் தாகும். (12) 557. பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா. (இன்) பிறன் மனையாள் பின்னோக்கும் - மேல் ‘பிறன்மனை பின் நோக்கா’ என்பதன் உடன்படாகக் கொள்க. அப்பொருளதே. பேதைமை - அறியாமை. இன்னா - துன்பம். பிறன்மனைவியை விரும்புகின்ற அறிவின்மை துன்பந் தரும். (13) 558. கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம். (உல) கற்புடைய மங்கையரை - பிறர் மனைவியரை, கருத வேண்டாம் - விரும்ப வேண்டாம். கற்புடைய மங்கையர் - ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு இல்லறம் நடத்தும் பெண்கள். (14) 36. அறன்வலியுறுத்தல் அறமாவது - செய்வன தவிர்வனவாம். செய்வன - விதி எனவும், தவிர்வன - விலக்கு எனவும் கூறப்படும். வலியுறுத்தல் - அறத்தின் இன்றியமையாச் சிறப்பினை வலியுறுத்தல், வற்புறுத்தல். அறம் என்பது பெரும்பாலும் பிறர்க்கு உதவுதல் முதலிய நற்செயல் களைக் குறிக்கும். 559. ஆவாநா மாக்க நசைஇ யறமறந்து போவாநா மென்னாப் புலைநெஞ்சே - ஓவாது நின்றுஞற்றி வாழ்தி யெனினுநின் வாழ்நாட்கள் சென்றன செய்வ துரை. (நால) புலை நெஞ்சே - கீழ்மைத் தன்மையை யுடையமனமே, ஆக்கம் நசைஇ - செல்வத்தை விரும்பி, நாம் ஆவாம் அறம் மறந்து போவாம் என்னா - நாம் மேன் மேலும் செல்வ முடையராவோம் (அச்செல்வம் குறைதற்குக் காரணமான) அறத்தை விட்டு விடுவோம் என்று எண்ணி, ஓவாது நின்று உஞற்றி வாழ்தி எனினும் - ஓய்வில்லாமல் அச்செல்வந் தேடப் பல வழியிலும் முயன்று வாழ்வாயானாலும், உன் வாழ் நாள்கள் சென்றன - உனது வாழ்நாட்கள் கழிந்து விட்டன, செய்வது உரை - இனி நீ செய்வதைச் சொல். ஆவாம் - செல்வமுடையராவோம் - தன்மைப் பன்மை வினைமுற்று. ஆக்கம் - செல்வம். நசைஇ - விரும்பி, மறந்து போவாம் - மறப்பாம். மறத்தல் - இங்கே விட்டுவிடுதல் - செய்யா திருத்தல். என்னா - என்று எண்ணி. புலை - கீழ்மை. நெஞ்சே - நெஞ்சறிவுறுத்தல். ஆடூஉ, மகடூஉ முன்னிலை போல, இது நெஞ்சை முன்னிலை யாக்கிக் கூறியது. ஓவாது - ஓயாது. நின்று உஞற்றல் - பலவாறு - பல வழியிலும் - முயலுதல். உஞற்றுதல் - செய்தல் - இங்கு முயலுதல். வாழ்தி - வாழ்வாய் - வாழ்கின்றாய் என்றபடி. செய்வது உரை - இனி என்ன செய்யப் போகின்றாய் சொல் என்றபடி. வாழ்நாள் முழுவதும் செல்வத்தை முயன்று தேடித் தேடி, அதை நல்வழியில் சிறிதும் செலவிடாமல் முதுமைப் பருவத்தை யடைந்த ஒருவன், அச்செல்வத்தை விட்டுவிட்டுப் போகும் நிலையை எண்ணி யிரங்கித் தன் மனத்தை நோக்கிக் கூறியதாகச் செய்யப்பட்டது இச்செய்யுள். செல்வத்தின் பயன் தாம் உண்டுடுத்து இனிது வாழவும் நல் வழியில் செலவு செய்யவுமே என்பதை அறியாத அறி விலிகள், பலவாறு முயன்று தேடிய செல்வத்தைக் கொண்டு அறஞ் செய்யாது வீணே இறத்தல் இரங்கத்தக்கது என்பதாம். பல வழியிலும் முயன்று செல்வந் தேடவேண்டியதே. பொருளில் லார்க்கு இவ்வுலகில் இன்பமில்லையல்லவா? ஆனால், அவ்வாறு தேடிய செல்வத்தை நல்வழியில் செலவு செய்தால் கெடுமென்று வீணே காத்து வந்து இறத்தல் அறிவின்மை என்பதாம். (1) 560. அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால் பெரும்பயனு மாற்றவே கொள்க - கரும்பூர்ந்த சாறுபோற் சாலவும் பின்னுதவி மற்றதன் கோதுபோற் போகு முடம்பு. (நால) பெறல் அரும் யாக்கையைப் பெற்ற பயத்தால் - பெறு தற்கரிய மக்களுடம்பை அடைந்த பயனால். பெரும் பயனும் ஆற்றவே கொள்க - பெரிய பயனான அறத்தையும் மிகுதி யாகவே செய்து வைத்துக் கொள்க, உடம்பு கரும்பு ஊர்ந்த சாறுபோல் சாலவும் உதவி - மக்கள் உடம்பானது கரும்பு உதவிய சாற்றைப் போல அறமாகிய பயனை மிகவும் உதவி, பின் அதன் கோதுபோல் போகும் - பின்பு அக்கரும் பினது சக்கைபோலப் பயனற்றுப் போகும். அரும்பெறல் - பெறல் அரும் என மாற்றுக. பயன் - அறம். யாக்கை யெடுத்ததன் பயன் அறஞ் செய்தலேயாம் என்றபடி. ஆற்ற - மிக. ஊர்தல் - வடிதல். ஊர்ந்த - வடித்த. சாலவும் - மிகவும். மற்று - அசை. கோது - சக்கை. ‘அரும்பெறல் யாக்கை’ என்றது மக்கட் பிறப்பினை. மக்கட் பிறப்பு செய்வன தவிர்வன அறிந்து நடக்கும் பகுத்தறிவுள்ள பிறப்பாதலால், ‘அரும்பெறல் யாக்கை’ என்றார். ‘அரிது அரிது மானிடராப் பிறத்தலரிது’ என்றார் ஒளவை யாரும். உயர்குடி நனியுட் டோன்றல் ஊனமில் யாக்கை யாதல் மயர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்லராதல் பெரிதுண ரதுவே யாதல் பேரறங் கோட லென்றாங் கரிதிலை பெறுத லேடா பெற்றவர் மக்க ளென்பார் (வளையாபதி ) தோன்றிற் புகழொடு தோன்றுக (குறள்) என்றபடி, மறுமைப் பயனாகிய புகழைத் தரும் அறத்தைச் செய்து கொள்வதே மக்கட் பிறப்பின் பயனாகும். கரும்பிலுள்ள சாறுபிழிந்தபின், சாரத்தையிழந்த சக்கை யைத் தீயிலிட்டு எரிப்பது போலவே, உயிர் நீங்கிய பின் உடம்பு தீயிலிட்டு எரிக்கப்படும். அதற்குள் - உடல் அழி வதன் முன் - மறுமைப் பயனாகிய அறத்தைச் செய்து கொள்ள வேண்டும் என்பதாம். கரும்புச் சக்கை போன்றது - உடம்பு. சாறு போன்றது - அறம். அறம் மிகவும் சிறந்தமையால், ‘பெரும் பயன்’ என்றார். கரும்பு சாற்றை உதவுவதுபோல் உடல் அறத்தை உதவுகிறது. (2) 561. கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேங்காற் றுயராண் டுழவார் வருந்தி யுடம்பின் பயன்கொண்டார் கூற்றம் வருங்காற் பரிவ திலர். (நால) கரும்பு சிறுகாலை ஆட்டி கட்டி கொண்டார் - கரும்பை அதன் பதங்கெடு முன்னரே ஆலையில் வைத்து ஆட்டி அதன் சாற்றினாலாகிய வெல்லக் கட்டியைக் கொண்டவர்கள், துரும்பு எழுந்து வேம்கால் ஆண்டு துயர் உழவார் - அதன் சக்கை நெருப்பில் கொழுந்து விட்டு வேகும்போது அங்கே அதனைக் கண்டு துன்பப்படமாட்டார்கள், (அதுபோலவே), வருந்தி உடம்பின் பயன் கொண்டார் - முயன்று இவ்வுடம் பெடுத்ததன் பயனாகிய அறத்தைச் செய்து கொண்டவர், கூற்றம் வருங்கால் பரிவது இலர் - கூற்றுவன் உயிரைக் கொண்டு போதற்கு வரும்பொழுது அவ்வுடம் பின் அழிவைப் பற்றி வருந்துதல் இலராவர். ஆட்டி - சாறுபிழிந்து. கட்டி - வெல்லக்கட்டி. சிறு காலை - சிறு பருவம், அதாவது மிக முதிராமல் வெல்லங் காய்ச்சுதற் கேற்ற இளம்பருவம். துரும்பு - சக்கை. எழுந்து - தீப்பிடித்துச் சுடர்விட்டு. வேம் - வேகும்; இடைக்குறை. ஆண்டு - வேகும் அவ்விடத்தே. துயர் உழத்தல் - வருத்தப் படல். உழவார் - வருந்தார். வருந்தி - முயன்று. உடம்பின் பயன் - அறம். கூற்றம் - உயிரும் உடலும் கூறுபடும் - வேறாகும் நேரத்தைக் கூற்றம், கூற்றுவன் என்பது நூன்மரபு, கூற்றுவனுக்குப் பெண்டு பிள்ளை, இருப்பிடம் முதலியன கற்பிப்பது புராணம். பரிதல் - வருந்துதல். பரிவது - வருந்துவது. கரும்பைச் சாறு பிழிந்து கொண்டபின், அச்சாற்றைக் காய்ச்சும் அடுப்பில் அச்சக்கையை விறகாகப் பயன் படுத்துவர். முன்னர்க் கரும்பை நரி முதலியன தின்றால் வருந்தும் குடியானவன், அக்கரும்புச் சக்கை தீயில் வேவது கண்டு வருந்தமாட்டான். கரும்பின் பயனாகிய சர்க்கரையைக் கொண்டவன் அச்சக்கை வேவதற்கு எதற்காக வருந்துகிறான்? அதுபோலவே, இளமையில் உடம்புக்கு ஏதாவது நோய் வந்தால் வருந்துபவர், உடம்பின் பயனாய அறம் செய்து முதுமையடைந்த உடம்பு அழிவதற்காக வருந்தார் என்பதாம். கரும்பு உடலுக்கும், அதனை ஆட்டுதல் உடலை வருத்தி முயலுதற்கும். கருப்பஞ்சாற்றுக் கட்டி அறத்திற்கும், சிறுகாலை இளமைப் பருவத்திற்கும், கருப்பங்கட்டி கொண்டார் யாக்கையின் பயன் கொண்டவர்க்கும், துரும் பெழுந்து வேதல் உடம்பழிதற்கும், கருப்பங்கட்டி கொண்டார் துயருறாமை யாக்கையின் பயன் கொண்டார் துயருறா மைக்கும் உவமை. தக்க காலத்தே அறஞ் செய்து பிறப்பின் பயன் அடைய வேண்டும் என்பது கருத்து. (3) 562. இன்றுகொ லன்றுகொ லென்றுகொ லென்னாது பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி ஒருவுமின் றீயவை யொல்லும் வகையான் மருவுமின் மாண்டா ரறம். (நால) இன்று கொல் அன்று கொல் என்று கொல் என்னாது - இன்றைக்கோ அன்றைக்கோ என்றைக்கோ என்று ஐயப் படாமல், கூற்றம் பின்றையே நின்றது என்று எண்ணி கூற்றம் உயிரைக் கொண்டு போதற் பொருட்டுப் பின்னேயே வந்து மறைந்து காத்துக் கொண்டு நிற்கின்றது என்று எண்ணி, தீயவை ஒருவுமின் - தீய செயல்களைச் செய்யாமல் நீக்குங்கள், மாண்டார் அறம் ஒல்லும் வகையால் மருவுமின் - மாட்சி மைப்பட்ட பெரியோர்கள் கூறியுள்ள அறங்களை இயன்ற மட்டிலும் செய்யுங்கள். இன்று அன்று என்றது - இளமை முதுமைகளை. கொல் - ஐயம். பின்றை - நமது பின்புறத்தைக் குறித்தது. கூற்றம் - முன்னைய பாட்டுரை பார்க்க. ஒருவுதல் - நீக்குதல். ஒல்லும் வகை - இயன்ற மட்டிலும். மருவுதல் - பொருந்துதல் - செய்தல். மாண்டார் - மாட்சிமைப்பட்டார் - நல்லொழுக்க முள்ள அறிஞர்கள். மாண் - பகுதி. கூற்றம் உடலும் உயிரும் கூறுபடும், பிரியும் நேரம். எப்போதும் இறப்போம் என்று எண்ணாமல், எப்போதும் இறப்புள்ளது என்றுணர்ந்து, தீச்செயல்களைச் செய்யாது நற்செயல் களையே செய்யவேண்டும் என்பதாம். இப்பாட்டு, தவிர்த்துச் செய்வன செய்ய வேண்டும் என்னும் அறத்தை வற்புறுத்துகிறது. ஒல்லும் வகையான் அறவினை யோவாதே செல்லும்வா யெல்லாம் செயல் (குறள்) (4) 563. உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி இறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனுந் தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும். (நால) உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி - மிகச் சிறிய அளவுள்ளதாகிய ஓர் ஆலம்விதை முளைத்து வளர்ந்து, இறப்ப நிழல் பயந்தாங்கு - மிக்க நிழலைத் தருதல்போல, அறப்பயனும் தான் சிறிது ஆயினும் - அறத்தின் பயனானது மிகவும் சிறிய தாயிருந்தாலும், தக்கார் கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும் - தகுதியானவர்க்குக் கொடுத் தால் அது மிகப் பெரிய ஆகாயமும் சிறிதென்னும்படி அவ்வளவு பெரிதாகப் பெருகிவிடும். உறக்கும் துணையது - கிள்ளியெடுக்கும் அளவுள்ளது. உறக்குதல் - கிள்ளுதல். வித்து - விதை. ஈண்டுதல் - வளர்தல். இறப்ப - மிக. ஆங்கு - போல். அறப்பயன் - புகழ். தக்கார் - ஏற்கத் தகுதியுடைய எளியவர். கைப்படல் - தக்கார் கையுறல் - அவர் பெறுதல். போர்த்தல் - மூடுதல். வான்சிறிதாகும்படி மூடிவிடும் எனவே, வானைவிடப் பரந்து விளங்கு மென்றபடி. தக்கவர்க்குச் செய்யும் அறம் மிகச் சிறியதாயினும் அவர் அதைப் பெரிதாக மதிப்பர் என்பதாம். மண்ணில் முளைத்த மிகச் சிறிய ஆலம்விதை கிள்ளி யெடுக்கும் அவ்வளவு சிறியதாயினும், வளர்ந்து மரமானால் பெரிய நிழல் தருதல் போலத் தக்கார்க்குச் செய்த அறப்பயன் மிகச் சிறியதாயினும் அதன்பயன் மிகவும் பெரிதாகப் பெருகும் என்பதாம். தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே (வெற்றிவேற்கை) தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்றெறி வார் (குறள்) (5) 564. வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர் வைகலும் வைகற்றம் வாழ்நாள்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார் (நால) வைகலும் வைகல் தம் வாழ்நாள்மேல் வைகுதல் வைத்து வைகலை உணராதார் - நாடோறும் பொழுது கழிதலைத் தமது வாழ்நாளிலே கழிதலாக வைத்து நாள் கழிதலின் உண்மை நிலையை அறியாதவர்கள், வைகலும் வைகல் வரக் கண்டும் அஃது உணரார் - நாடோறும் நாள் கழிதல் வந்து கொண்டே இருக்க அதனை நேரில் பார்த்திருந்தும் அதன் உண்மையை அறிந்து விரைவில் அறஞ் செய்யாதவர்களாய், வைகலும் வைகலை வைகும் என்று இன்புறுவர் - நாடோறும் தம் வாழ்நாள் கழிதலை மேன்மேல் இருக்கிறதென்று எண்ணி இன்புறுவார்கள். வைகல் என்பது - நாள் கழிதற்குக் காரணமான ஞாயிற்றின் தோற்ற மறைவுகளை. வைகுதல் - கழிதல், தங்குதல். வைகும் என்று - நிலைத்திருக்கும் என்று. வந்த சொல்லும் பொருளும் பின்னரும் வந்ததால், இது சொற்பொருள் பின்வருநிலையணி. உணரார் - முற்றெச்சம். நாடோறும் பொழுது (நாள்) கழிதலைத் தமது வாழ் நாளின் நாட்கள் கழிதலாக எண்ணி, நாள் கழிதலின் உண்மையை அறியாத வர்கள். நாடோறும் நாள் கழிந்து கொண்டே இருத்தலை நேரில் பார்த்துக் கொண்டே யிருந்தும், அதன் உண்மையை உணர்ந்து அறஞ் செய்யாமல், நாடோறும் வாழ்நாள் கழிதலை மேன்மேல் இருக்கிற தென்று எண்ணி மகிழ்வர் என்பதாம். ஞாயிற்றின் தோற்ற மறைவே ஒரு நாள் ஆகும். ஞாயிறு தோன்றி மறைந்து கொண்டே இருக்கிறது. எனவே, தமது வாழ்நாளில் உள்ள நாட்களும் கழிந்து கொண்டே இருக் கின்றன. இவ்வுண் மையை அறிந்து, நாள் கழிதற்குள் அறஞ் செய்து புகழடைய வேண்டும் என்பது கருத்து. தோற்றஞ்சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்ற மளந்துநும் நாளுண்ணும் - ஆற்ற அறஞ்செய் தருளுடையீ ராகுமின் (நாலடி) என நாள் கழிதற்குக் காரணங் கூறுதல் காண்க. கூற்றுவன் ஞாயிற்றைப் படியாகக் கொண்டு வாழ்நாளாகிய அரிசியை அளந்துண்கின்றானாம். என்னே உருவகம்! (6) 565. ஆவே றுருவின வாயினு மாபயந்த பால்வே றுருவின வல்லவாம் - பால்போல் ஒருதன்மைத் தாகு மறநெறி யாபோல் உருவு பலகொள லீங்கு. (நால) ஆவேறு உருவின ஆயினும் - ஆக்கள் வெவ்வேறு நிறத்தை யுடையனவா யிருந்தாலும், ஆ பயந்த பால் வேறு உருவின அல்லஆம் - அவ்வாக்கள் கறந்த பால் வெண்ணிற மேயன்றி வெவ்வேறு நிறத்தையுடையவை ஆகமாட்டா, பால்போல் அறம் ஒரு தன்மைத்து ஆகும் - அந்தப்பால் போல அறம் ஒரே தன்மையை யுடையதாம், நெறி ஆபோல் உருவு பல கொளல் - அவ்வறத்தின் வழிகள் அந்த ஆக்களைப் போலப் பல உருவங்களைக் கொண்டிருத்தல் ஆகும். ஆ - மாடு. உரு - நிறம். பயந்த - கறந்த. அறம்நெறி - அறமும் நெறியும் - உம்மைத்தொகை. நெறி - அறம் செய்யும் வழிகள். ஈங்கு - அசை, இவ்வுலகில் எனவுமாம். மாடுகள் பல நிறமுடையனவாய் இருத்தல் போல அறஞ் செய்யும் வழிகளும் பலவாம். அப்பல நிற மாடுகளின் பாலும் ஒரே வெண்மை நிறமாக இருத்தல் போல அப்பல வழிகளில் செய்யப்படும் அறம் ஒன்றே யாகும் என்பதாம். உவமையணி. உடை கொடுத்தல், பணங்கொடுத்தல், ஆடு மாடு கொடுத்தல், நிலங் கொடுத்தல், திருமணஞ் செய்து வைத்தல், படிக்கவைத்தல், இன்னும் வேறுவகையான உதவிகளெல்லாம் அறம் எனவே படும். இங்ஙனம் பல வேறு வகைப்பட்டாலும் அவற்றின் பயன் ஒன்றே என்பது கருத்து. (7) 566. மூப்புமேல் வாராமை முன்னே யறவினையை ஊக்கி யதன்கண் முயலாதான் - நூக்கிப் புறத்திரு போகென்னு மின்னாச்சொல் லில்லுட் டொழுத்தையாற் கூறப் படும். (நால) மூப்பு மேல் வாராமை முன்னே - கிழத்தனம் நெருங்கி வருவதற்கு முன்னமே, அறவினையை ஊக்கி அதன்கண் முயலா தான் - அறச்செயலைச் செய்யத் தொடங்கி அதுபற்றி முயற்சி செய்யாதவன், இல்லுள் நூக்கி - தன் வீட்டிலிருந்து தள்ளப்பட்டு, புறத்திரு போகு என்னும் இன்னா சொல் - ‘வெளியிலே இரு, இவ்விடத்தைவிட்டுப் போ’ என்கின்ற கடுஞ்சொற்களை, தொழுத் தையால் கூறப்படும் - வேலைக் காரியாலும் சொல்லப்படுவான். மூப்பு - கிழத்தன்மை. மேல் வருதல் - நெருங்கி வருதல் - உடம்பை ஒடுக்குதல். ஊக்குதல் - செய்யத் தொடங்குதல். நூக்குதல் - தள்ளுதல். புறம் - வெளி. போகு - போ. இன்னாச் சொல் - துன்பந்தருஞ்சொல். இல் - வீடு தொழுத்தை - வேலைக்காரி; தொழும்பன் என்பதன் பெண்பால். உடம்பை ஒடுக்குகின்ற முதுமைப் பருவம் வருவதற்கு முன்னரே, இடம் பொருள் ஏவல்கள் தன் வழியில் இருக்கும் போதே, ஒருவன் மறுமைப் பயனாகிய அறங்களைச் செய்து வைத்துக் கொள்ளவேண்டும். முதுமை வந்த பொழுது இவன் சொன்னபடி எவரும் நடவார். வேலைக்காரியும் இவன் சொல்லைப் பொருட்படுத்த மாட்டாள். முதுமை வருமுன் அறஞ்செய்ய வேண்டும் என்பது கருத்து. (8) 567. பெருங்கட லாடிய சென்றா ரொருங்குடன் ஓசை யவிந்தபின் ஆடுது மென்றற்றால் இற்செய் குறைவினை நீக்கி யறவினை மற்றறிவா மென்றிருப்பார் மாண்பு. (நால) இல் செய் குறைவினை நீக்கி - குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் செய்து, மற்று அறவினை அறிவாம் என்றிருப்பார் மாண்பு - பின்பு அறச்செயலினைச் செய்வோம் என்று எண்ணியிருப்பாரது தன்மையானது, பெருங் கடல் ஆடிய சென்றார் - பெரிய கடலில் நீராடு வதற்குச் சென்றவர், ஓசை ஒருங்கு உடன் அவிந்தபின் ஆடுதும் என்று அற்று - இக்கடலின் ஒலி முழுதும் ஒரு சேர அடங்கின பின்பு நீராடுவோம் என்று காத்திருப்பதனோ டொக்கும். ஆடிய - ஆட. ஒருங்கு உடன் - ஓசை சிறிதுமின்றி முழுவதும், ஒருங்குடன் - ஒருபொருட் பன்மொழி. அவிதல் - அடங்குதல். அற்று - அத்தன்மையது. ஆல் - அசை. இல் - குடும்பம். குறைவினை - வினைக்குறை - காரியக்குறை. குறைவினை நீக்கல் - காரியம் முடித்தல். அறவினை - அறச்செயல். மற்று - பின்பு. அறிவாம் - செய்வாம். மாண்பு - தன்மை. கடலின் ஒலி ஓயாதவாறு போலக் குடும்பத் தொழிலும் குறையின்றி முழுவதும் முடியாதாதலால், குடும்பத் தொழிலைக் குறையின்றி முடித்து அறஞ்செய்வோம் என்று எண்ணுவது அறி யாமையாகும் என்பதாம். ஒலியுள்ளபோதே கடலாடுதல் போல, குடும்பத் தொல்லைக் கிடையே அறஞ்செய்ய வேண்டுமென்பது கருத்து. (9) 568. வைத்ததனை வைப்பென் றுணரற்க, தாமதனைத் துய்த்து வழங்கி யிருபாலும் - அத்தகத் தக்குழி நோக்கி யறஞ்செய்யின் அஃதன்றோ எய்ப்பினில் வைப்பென் பது. (பழ) வைத்ததனை வைப்பென்று உணரற்க - தாம் தேடிப் பாது காப்பாக வைத்த பொருளைத் தமக்குதவும் பொரு ளென்று எண்ணற்க. அதனை தாம் தூய்த்து வழங்கி - அப்பொருளைத் தாமும் தூய்த்துப் பிறருக்கும் கொடுத்து, இருபாலும் அத்தக தக்குழி நோக்கி அறம் செய்யின் - தமக்கும் பிறர்க்கும் அவ்வாறு பயன் படத் தக்க வழியை ஆராய்ந்து அறஞ் செய்யின், அஃது அன்றோ எய்ப்பினில் வைப்பு என்பது - அங்ஙனம் செய்வதன்றோ தளர்ந்த காலத்துத் தமக்குதவும் பொருளென்று சொல்லப்படுவது? வைப்பு - வேண்டும் போது உதவுவதற்காக உள்ள பொருள், அதற்காகச் சேர்த்து வைப்பதால் இது இப்பெயர் பெற்றது. உணரற்க - எண்ணற்க - எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. துய்த்து - நுகர்ந்து - அனுபவித்து. இருபால் - கொடுப்போன் கொள்வோன் என்னும் இருபால். அத்தக - அவ்வாறு. தக்குழி - பயன் படத்தக்க வழி. நோக்கி - எண்ணிப் பார்த்து. எய்ப்பினில் வைப்பு - தளர்ந்த காலத்து உதவும் பொருள் - சேமநிதி. செல்வம் நிலையாதாகையால், தேடி வைத்த செல்வத்தைத் தமக்கு உதவும் பொருளென்று எண்ணக்கூடாது. செல்வம் உள்ள போதே தாமும் நுகர்ந்து பிறர்க்கும் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் பொருள் தான் தளர்ந்த காலத்து உதவும் பொருளாகும் என்பதாம். (10) 569. மல்லற் பெருஞ்செல்வம் மாண்டவர் பெற்றக்கால் செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம் - மெல்லியல் சென்றொசிந் தொல்கு நுசுப்பினாய்; பைங்கரும்பு மென்றிருந்து பாகு செயல். (பழ) மெல் இயல் சென்று ஒசிந்து ஒல்கும் நுசுப்பினாய் - மெல்லிய இயல்பினையும் தேய்ந்து துவண்டு சிறிதான இடையையும் உடைய வளே, மாண்டவர் மல்லல் பெருஞ் செல்வம் பெற்றக் கால் - மாட்சிமையுடையவர் வளமான பெருஞ்செல்வத்தை அடைந்த விடத்து, செல்வுழியும் ஏமாப்பச் செய்வது - இம்மையிலேயன்றி, மறுமையிலும் இன்புறும்படி அறத்தைச் செய்வது, பைங்கரும்பு மென்றிருந்து பாகு செயல் ஆம் - சிறந்த கரும்பைத் தின்பதோடு, மேலும் பயன்படும் பாகைச் செய்வதனோடொக்கும். மல்லல் - வளம் - குறையாத என்றபடி. மாண்டவர் - மாட்சிமைப் பட்டவர் - நற்குணமுடையவர் - அறிவாளிகள். செல்வுழி - மறுமை. இறந்தபின் என்றபடி. ஏமாப்பு. இன்பம். ஏமாப்ப - இன்புற. ஆம் - ஆசை. இயல் - இயல்பு. தன்மை. செல்லல் - தேய்தல் - சிறுத்தல் என்றபடி. ஒசிதல் - துவளுதல் - வளைதல். ஒல்குதல் - சுருங்குதல், சிறுத்தல். நுசுப்பு - இடுப்பு. நுசுப்பினாய் - மகடூஉ முன்னிலை. பைங்கரும்பு - சிறந்த கரும்பு. மென்றிருந்து - மென்று - மென்று தின்று என்றபடி. இருந்து - துணைவினை. உட்கார்ந்திருந்து, படுத்திருந்து என்பவற்றிற் போல. பாகு - கருப்பஞ் சாற்றைக் காய்ச்சிய பாகு. இங்கே வெல்லம், சர்க்கரையைக் குறித்தது. கரும்பு இப்பொழுது தின்பதற்கும் ஆகும், பாகாகக் காய்ச்சி வைத்தால் - வெல்லம், சர்க்கரையாகச் செய்து வைத்தால் - பின்பு தின்பதற்கும் ஆகும். அவ்வாறே, செல்வம் இம்மை யின்பம் பெறுதற்கும் ஆகும், அறம் செய்தால் மறுமையின்பம் பெறுதற்கும் ஆகும் என்பதாம். சர்க்கரை வெல்லம் செய்து வையாமல் விளைந்த போதே கரும்பினைத் தின்றுவிடுவது போல. அறம் செய்யாமல் இம்மையில் மட்டும் செல்வத்தைத் துய்த்து இன்புறுதல் அறிவுடைமையாகாது என்பது கருத்து. (11) 570. உலப்பி லுலகத் துறுதியை நோக்கிக் குலைத்தடக்கி நல்லறங் கொள்ளார்க் கொளுத்தல் மலைத்தழு துண்ணுங் குழவியைத் தாயர் அலைத்துப்பால் பெய்து விடல். (பழ) உலப்பு இல் உலகத்து - முடிவில்லாத இவ்வுலகத்தின் கண், நல் அறம் கொள்ளார் - நல்ல அறநெறியை மேற் கொள்ளாத வரை, உறுதியை நோக்கிக் குலைத்து அடக்கிக் கொள்ளுதல் - அறத்தின் பயனை எண்ணி நல்லோர்கள் அவர்கள் மனத்தை மாற்றி அறநெறியை மேற்கொள்ளும்படி செய்தலானது, மலைத்து அழுது உண்ணாக் குழவியை - மாறுபட்டு அழுது பாலுண்ணாத குழந்தையை, தாயர் அலைத்துப் பால் பெய்து விடல் - தாய்மார் வருத்திப் பாலூட்டு தலோ டொக்கும். உலப்புஇல் - முடிவில்லாத - அழியாத. உலப்பு - அழிவு. உறுதி - நன்மை, பயன். குலைத்தல் - நின்ற நிலை யினின்று மாறச் செய்தல். அடக்குதல் - அடங்கச் செய்தல். மலைத்து - மாறுபட்டு. உண்ணா - உண்ணாத. அலைத்து - வருத்தி. பெய்தல் - ஊட்டுதல். பாலுண்ணாத குழந்தையை வருத்தித் தாய்மார் பாலூட்டுதல் போல, அறநெறியில் நடவாதவரை வற்புறுத்தி நல்லோர் நடக்கும் படி செய்வர் என்பதாம். குழந்தையினிடத்துள்ள அன்பால், தாய் கை கால்களை அமுக்கி, மூக்கைப் பிடித்துப் பால் வார்ப்பதுபோல, மக்களிடத் துள்ள அன்பால், பெரியோர்கள் வற்புறுத்தி அறநெறியைக் கடைப் பிடிக்கும் படி செய்வர் என்பதாம். இது, அறத்தைக் கடைப்பிடித்து நடக்கும்படி பிறரை வற்புறுத்துதல் ஆன்றோர் கடமை என்கின்றது. (12) 571. அலர்ந்தார்க்கொன் றீந்த புகழுந் துளங்கினுந் தன்குடிமை குன்றாத் தகைமையும் - அன்போடி நாணாளு நட்டார்ப் பெருக்கலு மிம்மூன்றும் கேள்வியு ளெல்லாந் தலை. (திரி) அலர்ந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும் - வறுமையால் துன்புற்ற வர்க்கு அவர் வேண்டும் ஒன்றைக் கொடுத்ததனா லாகிய புகழும், துளங்கினும் தன் குடிமை குன்றாத் தகைமையும் - வறுமையால் தளர்ந்த விடத்தும் தன் குடிபிறப்புக்குத் தகுந்த ஒழுக்கங் குறையாத இயல்பும், அன்பு ஓடி நாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும் - அன்புமிக்கு நாடோறும் நண்பர் களைப் பெருகச் செய்தலும், இம்மூன்றும் - கேள்வியுள் எல்லாம் தலை - கேட்கப்படும் அறங்கள் பலவற்றிலும் முதன்மையான அறங்களாம். அலத்தல் - வறுமையுறுதல். ஒன்று - அவர் விரும்பிய தொரு பொருள். ஈந்த புகழ் - ஈந்ததனாலாகிய புகழ். ஈந்து புகழடைதல் என்க. துளங்குதல் - தளர்தல். குடிமை - குலவொழுக்கம். குன்றா - குன்றாத. தகைமை - இயல்பு. ஓடி - மிக்கு. நாள் நாளும் - நாடோறும். நட்டார் - நண்பர் . பெருக்கல் - நண்பர் தொகை பெருகச் செய்தல். கேள்வி அறம். தலை - தலைமை - முதன்மை யானது. வறுமையால் வருந்துவோர்க்கு ஈதலும், வறுமையுற்ற பொழுதும் தன் குடிபிறப்புக்குத் தகாதவற்றைச் செய்யாமையும், அன்பினால் நண்பர்களைப் பெருகச் செய்தலும் சிறந்த அறம் என்பதாம். (13) 572. கழிவிரக்கங் கொள்ளார் கதழ்வாளார் வேர்த்துப் பழிமுறுகக் கோடார் பயன்பேர்த் - தழிமுதலை இல்லங்கொண் டாக்கா ரிடும்பைத் தளைதணப்பர் நல்லறனை நாளணிகொள் வார். (இன்னி) நல் அறனை நாள் அணி கொள்வார் - நல்ல அறத்தை நாடோறும் அணியும் அணியாகக் கொள்பவர், கழிவு இரக்கம் கொள்ளார் - ஆகாத காரியங்களுக்காக இரக்கங் கொள்ளார், கதழ்வு ஆளார் - பகைமையை மேற்கொள்ளார், வேர்த்து பழி முறுகக் கோடார் - வெகுண்டு பழி மிகுமாறு நன்னெறியை விட்டு விலகார், பயன் பேர்த்து அழிமுதலை இல்லம் கொண்டு ஆக்கார் - அறப்பயனை விடுத்து அழியும் பொருளைத் தமது வீட்டில் கொண்டு பெருக்கார், இடும்பைத் தளை தணப்பர் - துன்பமாகிய விலங்கிலிருந்து நீங்குவார். கழிவு - ஆகாத காரியங்களுக்காக, இழந்த பொருளுக் காக என்றுமாம். கதழ்வு - பகை. வேர்த்தல் - விலகுதல். முறுக - மிக. கோடுதல் - கோணுதல் - விலகுதல். அதாவது நன்னெறியை விட்டு விலகுதல். பயன் - அறப்பயன் - நல்வழி. அறப்பயனை விடுத்துப் பொருளைப் பெருக்கல் - கெட்ட வழியில் பொருளீட்டல். இல் - வீடு. அழி - அழிதல். முதல் - பொருள். அழிமுதல் - வினைத் தொகை. இல்லம் கொண்டு ஆக்கல் - மிகுந்த பொருளை ஈட்டுதல். வீடு நிறையக் குவித்தல் என்றபடி. இடும்பை - துன்பம். தளை - விலங்கு. தணத்தல் - நீங்குதல். இடும்பைத்தளை - உருவகம்; மிக்க துன்பம் என்றபடி. நாள் அணி - நாடோறும் அணியும் அணி - எப்போதும் கழற்றாத அணி. அறத்தை எப்போதும் இடையறாது செய்வார் என்றபடி. எப்போதும் அறச் செயலையே மேற்கொள்பவர், கழிந்ததற் கிரங்க மாட்டார், பிறரோடு பகை கொள்ள மாட்டார், வெகுண்டு நன்னெறியை விட்டு விலகிப் பழிக்கத் தக்க செயல்களைச் செய்யார், நன்னெறியை விட்டுக் கெட்ட வழியில் பொருளீட்டமாட்டார். கற்றார்முன் தோன்றாக் கழிவிரக்கம் (நான்) பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று. (குறள்) மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனால் வரும். (குறள்) சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கலத்துணீர் பெய்தரீஇ யற்று. (குறள்) கழிந்ததற் கிரங்காமையும், பகை கொள்ளாமையும், சினத்தி னால் தீச்செயல் புரியாமையும், கெட்ட வழியில் பொருளீட் டாமையும் அறச் செயல்களாகும். (14) 573. தனக்குத் துணையாகித் தன்னை விளக்கி இனத்து ளிறைமையுஞ் செய்து - மனக்கினிய போகந் தருதலால் பொன்னே! அறத்துணையோ டேகமா நண்பொன்று மில். (அற) பொன்னே - பொன் போன்றவளே, தனக்குத் துணை ஆகித் தன்னை விளக்கி - செய்வானுக்கு இம்மை மறுமைத் துணையாக நின்று அவனைப் பலரும் அறியும்படி செய்து, இனத்துள் இறைமையும் செய்து - சுற்றத்தார் பலருக்கும் தலைவனாகவும் செய்து, மனக்கு இனிய போகம் தருதலால் - மனத்திற்கு இனிமைதரும் செல்வத் தினையும் தருதலால், அறத்துணையோடு ஏகமாம் நட்பு ஒன்று இல் - அறமாகிய துணையோடு ஒன்றாக வைத்து எண்ணுதற் குரிய நட்பினர் ஒருவரும் இல்லை. விளக்குதல் - உலகெங்கும் தெரியும்படி செய்தல். இனம் - சுற்றம். இறைமை - தலைமை. மனத்துக்கு என்பதில் அத்துச் சாரியை தொக்கு மனக்கு என நின்றது. போகம் - இன்பம். அவ்வின்பத் திற்குக் காரணமாகிய செல்வத்தைத் குறித்தது. பொன்னே - மகடூஉ முன்னிலை. ஏகம் - ஒன்று. நண்பர்கள் ஏதாவது ஒன்று உற்றபோது துணை செய்வ தாலேயே ஒருவர்க்கொருவர் நட்புக் கொண்டுள்ளனர். நண்பர்கள் இம்மையில் மட்டும் துணை செய்வர். அறம் மறுமையினும் செய்தவர் பெயரை நிலைபெறச் செய்வதால் சிறந்த நட்பாகும் என்பார், ‘அறத்துணை’ என்றார். அறமானது, செய்வதனுக்கு இம்மையின்பத்தையும் மறுமை யின்பத்தையும் தந்து, அவன் பெயரை உலகெங்கும் தெரியச்செய்து, சுற்றத்தார்க் கெல்லாம் தலைவனாகச் செய்து, பெருஞ் செல்வத் தையும் தருதலால், அறத்தைப்போல ஒருவனுக்குத் துணையாவது வேறொன்றும் இல்லை என்பதாம். அறவோனைச் சுற்றத்தார் நன்கு மதித்துத் தங்கள் தலைவ னாகக் கொள்வர் ஆதலால், அவனுக்குச் செல்வம் பெருகுதலா யிற்று. சிறப்பீனும் செல்வமு மீனும் அறத்தினூஉங் காக்க மெவனோ உயிர்க்கு. (குறள்) (15) 574. இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக வன்சொற் களைகட்டு வாய்மை யெருவட்டி அன்புநீர் பாய்ச்சி யறக்கதி ரீன்றதோர் பைங்கூழ் சிறுகாலைச் செய். (அற) இன்சொல் விளை நிலம் ஆ ஈதலே வித்து ஆக - இனிய சொல்லே விளை நிலமாகவும் ஈகையே விதையாகவும், வன்சொல் களை கட்டு வாய்மை எரு அட்டி - கடுஞ் சொல்லாகிய களையைப் பிடுங்கி உண்மையாகிய எருப் போட்டு, அன்பு நீர் பாய்ச்சி - அன்பாகிய நீரைப் பாய்ச்சி, அறக்கதிர் ஈன்றது ஓர் பைங்கூழ் - அறமாகிய கதிரை ஈனுவ தாகிய ஒப்பற்ற பசிய பயிரை, சிறு காலை செய் - இளமைப் பருவத்திலேயே செய்வாயாக. விளைநிலம் ஆ. ஆ - ஆக. களை கட்டல் - களை பிடுங்குதல். களை - பயிர்க்குள் முளைக்கும் புல். அட்டுதல் - இடுதல் - போடுதல். கூழ் - பயிர். சிறுகாலை - இளமைப் பருவம். இப்பாட்டு உருவகவணி. இன்சொல்லை விளைநில மாகவும், ஈகையை விதை யாகவும், வன்சொல்லைக்களைகளாகவும், உண்மையை எருவாகவும், அன்பை நீராகவும், அறத்தைக் கதிராகவும் உருவகப்படுத்தி யிருத்தல் காண்க. இரவலனைக் கண்டதும் இன்சொல்சொல்லி வரவேற்க வேண்டுமாகையால், அது விளைநிலம் எனப்பட்டது. வன் சொல் அறத்தைக் கெடுத்துவிடு மாகையால் அதனைக் ‘களை’ என்றனர். உண்மைக் கொடையே கொடையாகுமாகையால், உண்மையை ‘எரு’ என்றார். அன்பில்லையேல் அறமில்லை யாகையால், அன்பை ‘நீர்’ என்றார். அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந் தின்சொல னாகப் பெறின். (குறள்) முகத்தா னமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினிதே அறம். (குறள்) என்கின்றார் வள்ளுவரும். வன்சொலின்றி, இன்சொற் சொல்லி, உண்மையாக அன்புடன் ஈவதே சிறந்த அறமாகும். (16) 575. காலைச்செய் வோமென் றறத்தைக் கடைப்பிடித்துச் சாலச்செய் வாரே தலைப்படுவார் - மாலைக் கிடந்தான் எழுத லரிதால்மற் றென்கொல் அறங்காலைச் செய்யாத வாறு. (அற) அறத்தை காலைச் செய்வோம் என்று கடைப்பிடித்து - அறத்தினை இளம்பருவத்திலேயே செய்வோமென்று எண்ணி உறுதி கொண்டு, சாலச் செய்வாரே தலைப்படுவார் - மிகவும் செய்வோரே உயர்ந்தோராவர், மாலை கிடந்தான் எழுதல் அரிது - இரவில் படுத்தவன் காலையில் எழுவது அருமை யாகும்; (ஆகையால்), அறம் காலைச் செய்யாத ஆறு என் கொல் - அறத்தினை இளம் பருவத்திலேயே செய்யாதிருத்தல் என் கருதியோ? காலை - இளமைப்பருவம், அதாவது அறஞ் செய்தற் கேற்ற செல்வாக்குள்ள பருவம். கடைப்பிடித்தல் - உறுதி கொள்ளல். அறஞ் செய்வோம் என்று எண்ணிச் செய்ய உறுதி கொள்ளுதல். சால - மிக. தலைப்படுதல் - தலையாயவர் ஆதல். மாலை - இரவு. கிடத்தல் - படுத்தல். தூங்கையிலே வாங்குவது மூச்சு - அது சுழிமாறிப் போனாலும் போச்சு என்றபடி, இரவில் படுத்தவர் காலையில் எழுவா ரென்பது உறுதியில்லை யாகையால், ‘எழுதல் அரிது’ என்றார். அரிது - அருமை. ஆல், மற்று - அசை. கொல் - ஐயம். செய்யாத ஆறு - செய்யாதிருத்தல். இளமையிலேயே அறஞ் செய்வோமென்றெண்ணி, எண்ணிய படி செய்தற்கு உறுதி பூண்டு மிகுதியாக அறங் களைச் செய்வோர் உயர்ந்தவராவர். யாக்கை நிலையுடைய தன்றாகையால், இளமை யில் அறஞ் செய்யாது வீண் காலம் போக்குவது அறிவின்மையாகும் என்தாம். (17) 576. இன்றுளா ரின்றேயு மாய்வர் அவருடைமை அன்றே பிறருடைமை யாயிருக்கும் - நின்ற கருமத்த ரல்லாத கூற்றின்கீழ் வாழ்வார் தருமந் தலைநிற்றல் நன்று. (அற) இன்று உளார் இன்றேயும் மாய்வர் - இன்றைக் கிருப்பவர் இன்றே இறக்கினும் இறப்பர், அவர் உடைமை அன்றே பிறர் உடைமை ஆயிருக்கும் - அவர் செல்வம் இறந்த அப்பொழுதே பிறருடைய செல்வமாகும்; (இங்ஙனம்), நின்ற கருமத்தர் அல்லாத கூற்றின்கீழ் வாழ்வார் - நிலையான இயல்பை யுடையரல்லாத நிலைமையில் வாழும் மக்கள், தருமம் தலை நிற்றல் நன்று - அறத்தினை மேற்கொண் டொழுகுதல் நல்லது. மாய்வர் - இறப்பர். உடைமை - செல்வம். ஆயிருக்கும் - ஆகும். நின்ற - நிலையான. கருமம் - செயல். இங்கு செயலின் இயல்பைக் குறிக்கிறது - கூற்றின். கூறு இன். கூறு - தன்மை, நிலைமை. கீழ் - ஏழன் உருபு. வாழ்வார் - வினையால ணையும் பெயர். தருமம் - அறம். தலை நிற்றல் - மேற் கொள்ளல் - மேற்கொண்டொழுகுதல். நன்று - நல்லது. வாழ்வு நிலையில்லாதது. இறந்தபின் செல்வத்தின் பயன் கொள்ள முடியாது. இங்ஙனம் வாழ்வும் செல்வமும் நிலையில்லாத நிலையில் வாழ்வோர் இளமையிலேயே அறத்தை மேற்கொண் டொழுகுதல் நல்லது என்பதாகும். நிலையான இயல்பையுடைய ரல்லாத நிலைமையில் வாழ்வார் - நிலையில்லாத நிலைமையில் வாழ்வார். நிலையான - உறுதியான. உயிர் வாழ்வும், செல்வ வாழ்வும் நிலை இல்லாத நிலையில் வாழ்வார் - உறுதியில்லாத நிலையில் - ஐயுறவோடு வாழ்வார் என்றபடி. இது, யாக்கையும் செல்வமும் நிலையாத - உறுதி யில்லாத - நிலையை எடுத்துக் கூறி, அத்தகு நிலையில் வாழு மக்கள் இளமை யிலே அறத்தை மேற்கொள்ளுதல் நன்று என வற்புறுத்துகிறது. (18) 577. திரையவித்து நீராட லாகா வுரைப்பார் உரையவித் தொன்றுஞ்சொ லில்லை - அரைசராய்ச் செய்து மறமெனினு மாகா துளவரையால் செய்வதற்கே யாகுந் திரு. (அற) திரை அவித்து நீராடல் ஆகா - அலைகளை ஒழித்து விட்டுப் பின்னர்க் கடல் நீராடுதல் எவர்க்கும் முடியாதென்று, உரைப்பார் உரை அவித்து ஒன்றும் சொல் இல்லை - உரைப்பவர் உரையை விட்டால் வேறு உண்மையான சொல் ஒன்றும் இல்லை; (ஆதலால்), அரைசராய் செய்தும் அறம் எனினும் ஆகாது - ஒருவர் அரசரைப் போலப் பெருஞ் செல்வம் பெற்றபின் அறத்தினைச் செய்வோம் எனக் கருதின் அது முடியாது; உளவரையால் செய்வதற்கே ஆகும் திரு - பெற்ற அளவினுக்கேற்ப அவ்வப்போது அறஞ் செய்ப வனுக்கே துணையாக நிற்கும் அவனது செல்வம். திரை - அலை. அவித்தல் - அடங்கச் செய்தல். ஆகா - ஆகாது. ஈறு கெட்டது. அவித்து - அவித்தால் - தட்டினால். உரை அவித்து - சொல்லைத் தட்டினால். ஒன்றும் சொல் இல்லை - உண்மையான சொல் இல்லை. அலை அடங்குவ தில்லை. அலை அடங்கின பிறகு கடலாடுவேம் என்பது முடியாது என்று சொல்வது உண்மை. அதைக் கேளா விட்டால் வேறு உண்மையான சொல் இல்லை என்றபடி. அரைசர் - அரசர் என்பதன் போலி. செய்தும் - செய்வோம். உளவரை - உள்ள அளவினுக்கேற்ப. வரை - அளவு. திரு. செல்வம். அலை அடங்கின பிறகு நீராடுவோம் என்பதும் முடியாது. அரசரைப் போலப் பெருஞ் செல்வம் பெற்ற பின் அறஞ்செய்வோம் என்பதும் ஆகாது. அலை வரவும் போகவும் உள்ளது. அலை உள்ளே போனபோது குளிப்பதும் அலை வந்த போது குளியாதிருப்பதும் இயல்பு. அது போல, செல்வங் கிடைத்தபோது அறஞ்செய்வதே முறை என்பதாம். அலை வடிந்தபோது இடையிடையே நீராடுதல் போல, செல்வங்கிடைத்த அவ்வப்போது அறஞ்செய்வேண்டு மென்பது. (19) 578. மக்க ளுடம்பு பெறற்கரிது பெற்றபின் மக்க ளறிவு மறிவரிது - மக்கள் அறிவ தறிந்தா ரறத்தின் வழுவார் நெறிதலை நின்றொழுகு வார். (அற) மக்கள் உடம்பு பெறற்கு அரிது - மக்கள் பிறப்பினை அடைதல் அருமை, பெற்றபின் மக்கள் அறிவும் அறிவு அரிது - மக்களாகப் பிறந்தாலும் மக்களறிவாகிய ஆறறி வினையும் அடைதல் அதனினும் அருமை, மக்கள் அறிவது அறிந்தார் - மக்களாகப் பிறந்து அறிய வேண்டியதை அறிந்தவர், அறத்தின் வழுவார் நெறிதலை நின்றொழுகுவார் - அறநெறியில் சிறிதும் வழுவாமல் அதனை மேற்கொண்டு நடப்பார். மக்கள் உடம்பு - மக்கட் பிறப்பு. மக்கள் அறிவு - ஆறறிவு. அறிவு அரிது - அடைதல் அருமை. அறிவது என்பது அறிவு என நின்றது. வழுவார் - தவறார். நெறி - அறநெறி. தலை நிற்றல் - மேற்கொள்ளல். ஒழுகுதல் - நடத்தல். மரங்கள், புழுப்பூச்சிகள், நீர்வாழ்வன, பறவைகள், விலங்குகள், மக்கள் என உலகில் பல பிறப்புக்கள் உள்ளன. இவற்றுள் மக்கட் பிறப்பே பகுத்தறிவுடைய பிறப்பாகை யால். ‘மக்களுடம்பு பெறற்கரிது’ என்றார். மக்களாய்ப் பிறந்தால் மட்டும் போதாது, பகுத்தறிவுடையராய் இருத்தல் வேண்டும். பகுத்தறிவில்லார் மக்களாய் இருப்பினும் விலங்கோ டொத்தவரேயாவர். எங்ஙன மெனில், அதற்கும் ஐயறிவு, இவர்க்கும் ஐயறிவே. எனவே, பகுத்தறிவு அமைவதே மக்கட் பிறப்பிற்கு உயர்வு - சிறப்பு - தருவதாகும். இக்காரணம் பற்றியே, ‘மக்கள் அறிவும் அறிவரிது’ என்றார். அத்தகைய பகுத்தறிவு வாய்க்கப்பெற்றார், அறத்தின் வழுவாமல் அவ்வற நெறியில் நடப்பர் என்பதாம். மக்கட் பிறப்பின் பயன், பகுத்தறிவுடையராய், அறிவ தறிந்து அறவழியில் நடப்பதே யாகும். (20) 579. உப்புக் குவட்டின் மிசையிருந் துண்ணினும் இட்டுணாக் காலத்துக் கூராதாம் - தொக்க உடம்பும் பொருளு முடையானோர் நன்மை தொடங்காக்கா லென்ன பயன். (அற) உப்புக் குவட்டின் மிசை இருந்து உண்ணினும் - உப்புக் குவியலின் மீது இருந்து ஒருவன் உணவினை உண்டாலும், இட்டு உணாக் காலத்துக் கூராது - அவ்வுணவில் உப்பினை இடாது உண்பானாயின் உப்பு உறைக்காது, தொக்க உடம்பும் பொருளும் உடையான் - பொருந்திய உடம்பினையும் செல்வத்தினையும் உடையவன், ஓர் நன்மை தொடங்காக் கால் என்ன பயன் - சிறந்த அறத்தினைச் செய்யானாயின் அவற்றால் அவன் ஒரு பயனையும் அடையான். குவடு - குவியல். மிசை - மேல். இட்டு - உணவில் போட்டு. உணா - உண்ணாத. கூர்தல் - மிகுதல், உறைத்தல். ஆம் - அசை. தொக்க - பொருந்திய; கிடைத்த என்றபடி. உடம்பு என்றது - மக்கட்பிறப்பினை. ஓர் - ஒப்பற்ற - சிறந்த. நன்மை - அறம். தொடங்குதல் - செய்தல். அவற்றால் - மக்கட்பிறப்பு, பொருள் இரண்டினால். உப்புக் குவியலின் மேல் இருந்து உண்டாலும் உப்பை உணவில் போட்டுக் கொள்ளாவிட்டால் உப்புச் சுவை தோன்றாது - உப்பு உறைக்காது. அதுபோல, மக்கட்பிறப்பும் பெருஞ் செல்வமும் வாய்க்கப் பெற்றிருந்தாலும் அறஞ்செய்யா விட்டால் அவற்றால் பயனில்லை என்பதாம். (21) 580. கொள்ளுங் கொடுங்கூற்றங் கொல்வான் குறுகுதன்முன் உள்ளங் கனிந்தறஞ்செய் துய்கவே - வெள்ளம் வருவதற்கு முன்ன ரணைகோலி வையார் பெருகுதற்க ணென்செய்வார் பேசு. (நன்) வெள்ளம் வருவதற்கு முன்னர் அணைகோலி வையார் - வெள்ளம் வருவதற்கு முன்னரே கரை கட்டிவையாதவர்கள், பெருகுதல் கண் என் செய்வார் பேசு - வெள்ளம் பெருக் கெடுத்து வரும்போது என்ன செய்வார்கள் சொல்; (ஆதலால்), கொள்ளும் கொடும் கூற்றம் கொல்வான் குறுகுதல் முன் - உயிரைக் கொண்டு போகின்ற கொடுமையான கூற்றுவன் கொல்ல வருவதற்கு முன்பே, உள்ளம் கனிந்து அறம் செய்து உய்க - மனம் உவந்து அறங்களைச் செய்து வாழ்வாயாக. கொள்ளும் - உயிரைக் கொண்டு போகின்ற. கூற்றம் - உயிரும் உடம்பும் கூறுபடும் - வேறுபடும் - காலத்தைக் கூற்றம் என்பது மரபு. கொல்வான் - கொல்ல - வானீற்று வினையெச்சம். குறுகுதல் - அணுகுதல். கனிதல் - உவத்தல். உய்தல் - வாழ்தல். அணை - கரை. கோலுதல் - கட்டுதல். மழை பெய்து வெள்ளம் வரு முன்னரே ஏரி குளங்கட்குக் கரை கட்டிப் பழுதுபார்த்து வையாதவர், வெள்ளம் வந்தபின் வருந்துவ தால் பயனில்லை. அதுபோல, இறப்பதற்கு முன்னரே அறஞ் செய்யாதவர் இறக்கும் போது வருந்துவதால் பயனில்லை. வெள்ளம் வருமுன்கரை கட்டி வைப்பதுபோல, சாவு வருமுன் அறஞ்செய்து வைக்கவேண்டும் என்பது. நீரைத் தேக்கிப் பயிர் விளையக் கரை உதவுதல் போல, புகழையுண்டாக்கி இன்பந்தர அறம் உதவும் என்றபடி. (22) 581. ஆற்றுந் துணையா லறஞ்செய்கை முன்னினிது. (இனி) ஆற்றும் துணையால் - இயன்ற மட்டிலும், அறம் செய்கை முன் இனிது - அறம் செய்தல் மிகவும் நல்லது. ஒருவன் தன்னால் இயன்ற மட்டிலும் - தன் பொருளள விற் கேற்ப - அறஞ்செய்தல் மிகவும் நல்லது. ஒல்லும் வகையாலறவினை யோவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல் (குறள்) (23) 582. அறஞ்செய விரும்பு. (ஆத்) அறம் செய - அறத்தை மேற்கொண்டு நடக்க, விரும்பு. இது ஆத்திசூடியின் முதற்பாட்டு. இனிக் கூறப்படும் செய்வன தவிர்வன வற்றை - அறத்தை - செய்ய விரும்பு என இந்நூலில் கூறப்படும் அறங்களை முதற்கண் வலியுறுத்துகிறது இப் பாட்டு. (24) 583. அறனை மறவேல். (ஆத்) அறனை - அறநெறியில் நடப்பதை, மறவேல். அறஞ் செய்வதுங் கொள்க. (25) 584. நன்மை கடைப்பிடி. (ஆத்) நன்மை - அறம். கடைப்பிடித்தல் - மேற்கொண் டொழுகுதல். (26) 585. தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம். (உல) தருமம் - அறம். அறத்தை எப்போதும் மறக்கக் கூடாது. மறவாமல் கடைப்பிடித்து நடக்க வேண்டும். (27) புலவர் குழந்தை படைப்புகள் கவிதை நூல்கள் தொகுதி 1 1 நெருஞ்சிப்பழம் 2 திருநணாச்சிலேடை வெண்பா 3 உலகப்பெரியோன் கென்னடி தொகுதி 2 4 அரசியலரங்கம் தொகுதி 3 5 காமஞ்சரி தொகுதி 4 6 புலவர் குழந்தை பாடல்கள் வரலாற்று நூல்கள் தொகுதி 5 7 கொங்கு குலமணிகள் 8 கொங்கு நாடும் தமிழும் 9 தீரன்சின்னமலை 10 அண்ணல் காந்தி தொகுதி 6 11 தமிழக வரலாறு தொகுதி 7 12 கொங்கு நாட்டு வரலாறு உரைநடை நூல்கள் தொகுதி 8 13 தமிழ் வாழ்க 14 தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் 15 அருந்தமிழ் விருந்து 16 அருந்தமிழ் அமிழ்து தொகுதி 9 17 இந்தி ஆட்சி மொழியானால் 18 ஒன்றே குலம் 19 சங்க இலக்கியச் செல்வம் 20 பூவா முல்லை அறநூல்கள் தொகுதி 10 21 திருக்குறள் குழந்தை உரை 22 திருக்குறளும் பரிமேலழகரும் தொகுதி 11 23 நீதிக்களஞ்சியம் உரை 1 தொகுதி 12 24 நீதிக்களஞ்சியம் உரை 2 இலக்கண நூல்கள் தொகுதி 13 25 தொல்காப்பியம் பொருள் அதிகாரம் தொகுதி 14 26 யாப்பதிகாரம் 27 தொடையதிகாரம் தொகுதி 15 28 வள்ளுவர் தமிழ் இலக்கணம் தொகுதி 16 29 தொல்காப்பியர் காலத் தமிழர் 30 இன்னூல் தொகுதி 17 31 இராவண காவியம்