நூற்றாண்டு நினைவு வெளியீடு புலவர் குழந்தை படைப்புகள் - 10 திருக்குறள் குழந்தை உரை திருக்குறளும் பரிமேலழகரும் அனைத்து நூல்களும் ஒருசேரத் தொகுத்து, பொருள் வழிப்பிரித்து, கால வரிசையில் ஒரே வீச்சில் வெளிவருகின்றன. ஆசிரியர் புலவர் குழந்தை நூற்பெயர் : புலவர் குழந்தை படைப்புகள் - 10 ஆசிரியர் : புலவர் குழந்தை பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 640 = 656 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 410/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906இல் தோன்றி 1973இல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர். தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் பட்ட அவலங்களை எண்ணியெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளை எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு பதிவுகளாக எழுதி வைத்துச் சென்றவர். தமிழ் இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி 1 முதல் 15 படைப்புகளாக ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய முத்து மாலையாகத் தந்துள்ளோம். இவர் நூல்கள் அனைத்தும் தமிழ்மொழி இன நாட்டின் மேன்மைக்கும், வாழ்வுக்கும், வளத்துக்கும் வித்திடுபவை. குறிப்பாக இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிழ் மண்ணில் தன்மானக் கொள்கைகள் நிலைத்து நிற்பதற்கு செயற்கரிய செயல்களைத் தமிழ் இளைஞர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும் எனும் இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்ற தமிழ்ப்பெருமக்களுக்கும், இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும்புலவர் இரா. வடிவேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தமிழ் ஆய்வாளர் களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன் கொள்ளும் வகையில் பிழையற்ற பதிப்பக வெளிவருகின்றது. வாங்கிப் பயனடையுங்கள். (இராவண காவியம் நூலுக்கு மிகச்சிறந்த தெளிவுரை எழுதப்பட்டு வருவதால் இப்படைப்பு வரிசையில் சேர்க்க முடியவில்லை. விரைவில் வெளிவரும்.) கோ. இளவழகன் மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு. புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல்களையும் அரசு டைமையாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது. பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர். அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது. 4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார். அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார். அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார். “இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3). புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தையானாலும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள் தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழுதினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும். விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார். “புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்து வதற்காக எழுதப்பட்டதேயாகும். நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப்படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார். புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனங் களையெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப்படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளையெல்லாம் சாமியாக்குகின்றான். அதுபோல நமக்காகப் பாடுபடுகின்றவர்களை, தொண்டு செய்கிறவர்களை, எழுதுகிறவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன்வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத்துரைத்தார்கள். சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை 1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடைபோட்ட காட்சி கண் கொள்ளாதது. 1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட! எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர். வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது. இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு! கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார். “தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!” நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப்பிட்டதிலிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது. கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள்கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார். “ இனியொரு கம்பனும் வருவானோ? இப்படி யும்கவி தருவானோ? கம்பனே வந்தான்; அப்படிக் கவிதையும் தந்தான் ஆனால், கருத்துதான் மாறுபட்டது” என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது. கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை. தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற் பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இராவண காவிய மாநாடு இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன; முதல் மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டதுண்டு. இத்திசையில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு. தீர்மானங்கள் 28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும். இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும். மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும். இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல் படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005) அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான். மத்திய அரசு தொலைத் தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005). தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது. கலைஞரின் சாதனை! இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார். வாழ்க அப்பெருமகனார்! ‘செந்தமிழ்க் குழந்தை’ பள்ளி சென்று படித்த காலம் 5 ஆண்டு எட்டு மாதம் தான்! ஆனால் திருக்குறளுக்கும், தொல்காப்பியத்துக்கும் உரை எழுதி, பேரிலக்கியம் ஒன்றைப் படைத்து, நாடகக் காப்பியம் உருவாக்கிப் பல இலக்கண நூல்களையும், வரலாற்று நூல்களையும் எழுதியவர் பெரும்புலவர் அ.மு. குழந்தை. ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த ஓல வலசில் 1.7.1906 அன்று முத்துசாமிக் கவுண்டர், சின்னம்மையார் தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர் குழந்தைசாமி; பின்பு தன்னைக் ‘குழந்தை’ என்றே குறிப்பிட்டுக் கொண்டார். ஈரோடு லண்டன் மிஷன் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் “எலிமெண்டரி கிரேடு”, “லோயர் கிரேடு”, ஹையர் கிரேடு” ஆசிரியர் பயிற்சி பெற்ற அவர் திருவையாறு சென்று தேர்வு எழுதி 1934இல் ‘வித்துவான்’ பட்டம் பெற்றார். மொத்தம் 39 ஆண்டுகள் ஆசிரியப் பணிபுரிந்தார். பவானி மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் மட்டும் தொடர்ந்து 21 ஆண்டுகள் பணி புரிந்தார். தொடக்க காலத்தில் கன்னியம்மன் சிந்து, வீரக்குமாரசாமி காவடிச்சிந்து, ரதோற்சவச் சிந்து போன்ற பக்திப் பாடல்களைப் பாடினாலும் 1925க்குப் பின் பெரியாரின் பெருந் தொண்டராகவே விளங்கினார். ‘தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக விளங்கும் நூல் திருக்குறள்; அது மனித வாழ்வின் சட்ட நூல்’ என்ற கொள்கையுடைய குழந்தை 1943, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற திருக்குறள் மாநாடுகளில் பெரும் பங்காற்றினார். தான் எழுதிய பள்ளிப்பாட நூல்களுக்கு ‘வள்ளுவர் வாசகம்’ வள்ளுவர் இலக்கணம்’ என்று பெயரிட்டார். வள்ளுவர் பதிப்பகம் வைத்துப் பல நூல்களை வெளியிட்டார். அவற்றுள் பெரியார் நூல்கள் நான்கு. பள்ளிக்கு வெளியே வந்தவுடன் கருப்புச்சட்டை அணிந்து கடவுள் மறுப்பாளராக விளங்கினாலும் பள்ளிப் பாடங்களில் உள்ள பக்திப் பாடல்களை மிகவும் சுவைபட நடத்துவார். தான் இயற்றிய ‘யாப்பதிகாரம்’ ‘தொடையதிகாரம்’ போன்ற நூல்களில் திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள் பலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அரசியல் அரங்கம், நெருஞ்சிப்பழம், காமஞ்சரி, உலகப் பெரியோன் கென்னடி, திருநணாச் சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல்கள் போன்றவை கவிதை நூல்கள், ‘காமஞ்சரி’ பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மனோண்மனியத்திற்குப் பின் வந்த மிகச் சிறப்பான நாடகக் காப்பியம் ஆகும். தொல்காப்பியர் காலத் தமிழர், திருக்குறளும் பரிமேலழகரும், பூவா முல்லை, கொங்கு நாட்டு வரலாறு, தமிழக வரலாறு, தமிழ் வாழ்க, தீரன் சின்னமலை, கொங்குக் குலமணிகள், கொங்கு நாடும் தமிழும், அருந்தமிழ் அமுது, சங்கத் தமிழ்ச் செல்வம், அண்ணல் காந்தி ஆகியவை உரைநடை நூல்கள். ‘தமிழ் வாழ்க’ நாடகமாக நடிக்கப்பட்டது. தீரன் சின்னமலை பற்றி முதன்முதலில் நூல் எழுதி அவர் வரலாற்றை வெளிக் கொணர்ந்தவர் புலவர் குழந்தை. தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்குப் புதிய எளிய உரை எழுதினார். திருக்குறளுக்குப் புத்துரை எழுதியதுடன் தமிழில் வெளிவந்த அனைத்து நீதி நூல்களையும் தொகுத்து உரையுடன் “நீதிக் களஞ்சியம்” என்ற பெயரில் பெரு நூலாக வெளியிட்டார். தமிழ் அறிந்தவர்கள் அனைவரும் கவிஞராக ‘யாப்பதிகாரம்’, ‘தொடையதிகாரம்’ என்ற யாப்பு நூல்களை எழுதினார். கும்மி, சிந்து ஆகியவற்றிற்கும் யாப்பிலக்கணம் வகுத்துள்ளார். இலக்கணம் கற்க நன்னூல் போல ஒரு நூல் இயற்றி ‘இன்னூல்’ என்று பெயரிட்டார். ‘வேளாளர்’ ‘தமிழோசை’ போன்ற இதழ்களையும் நடத்தினார். வகுப்பில் பாடம் நடத்தும்போது பாடல்களை அதற்குரிய ஓசை நயத்துடன் ஒலிப்பார். உரைநடைபோலத் தமிழாசிரியர்கள் பாடல்களைப் படிக்கக் கூடாது என்பது அவருடைய கருத்தாகும். தமிழைப் பிழையாகப் பேசினாலோ, எழுதினாலோ கண்டிப்பார். ஈரோட்டில் வாழ்ந்த மேனாட்டுத் தமிழறிஞர் ‘பாப்லி’லியுடன் நெருங்கிப் பழகியவர். அவரைப் பற்றிப் ‘பாப்புலி வெண்பா’ என்ற நூலே எழுதியுள்ளார். அவர் படைப்பில் தலையாயது ‘இராவண காவியம்’ ஆகும். பெயரே அதன் பொருளை விளக்கும். 5 காண்டங்கள், 57 படலங்கள், 3100 பாடல்கள். இந்நூல் 1946-ல் வெளிவந்தது. பின் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. தடை நீங்கி 1971-ல் இரண்டாம் பதிப்பும் 1994-ல் மூன்றாம் பதிப்பும் வெளிவந்தது. அண்மையில் நான்காம் பதிப்பை சாரதா பதிப்பகம் (சென்னை - 14) வெளி யிட்டுள்ளது. மிகச்சிறந்த நயமுடைய இராவண காவியத்தைக் கம்பனில் முழு ஈடுபாடு கொண்ட அறிஞர்களும் பாராட்டியுள்ளனர். ‘கம்பன் கவிதையில் கட்டுண்டு கிடந்தேன். இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது’ என்று ரா.பி.சேதுப்பிள்ளை கூறினார். கம்பர் அன்பர் ஐயன்பெருமாள் கோனார் ‘இனியொரு கம்பன் வருவானோ? இப்படியும் கவிதை தருவானோ? ஆம், கம்பனே வந்தான்; கவிதையும் தந்தான்’ என்று புலவர் குழந்தையைப் பாராட்டுவார். அறிவியல் தமிழ் அறிஞர் பெ.நா.அப்புசாமி போன்றோரின் துணையுடன் அரிய செய்திகள் சேகரித்துத் ‘திராவிட காவியம்’ பாட முயன்றபோது 24.9.1972 அன்று புலவர் குழந்தை மறைந்தார். பாரதிதாசன் ‘செந்தமிழ்க் குழந்தை’ என்று பாராட்டியது போலத் தமிழாக வாழ்ந்த அவருடைய நூற்றாண்டு நிறைவு நாள் 1.7.2006 ஆகும்.. பொருளடக்கம் திருக்குறள் : குழந்தை உரை பதிப்புரை iii மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை v செந்தமிழ்க் குழந்தை xii 1. அறத்துப்பால் 7 2. பொருட்பால் 10 3. இன்பத்துப்பால் 15 திருக்குறள் அதிகார அகராதி 17 முகவுரை 20 1. அறத்துப்பால் 32 2. பொருட்பால் 161 3. இன்பத்துப்பால் 398 செய்யுள் முதற்குறிப் பகராதி 482 திருக்குறளும் பரிமேலழகரும் 1. திருக்குறள் 509 2. பரிமேலழகர் உரை 517 3. ஐயமகற்றல் 525 4. உரைப்பாயிர விளக்கம் 536 5. ஆரியக் கொள்கை 559 6. சமயக் கருத்து 591 7. மாறுபட்ட உரை 623 குறள் அகரவரிசை 638 திருக்குறள் : குழந்தை உரை (1949) பால் இயல் அதிகாரம் அறத்துப்பால் (38) 1. முதலியல் (4) 1 இறைநலம் 2. வான்சிறப்பு 3. நீத்தார் பெருமை 4. அறன் வலியுறுத்தல் 2. இல்லறவியல் (20) 5. இல்வாழ்க்கை 6. வாழ்க்கைத் துணைநலம் 7. மக்கட்பேறு 8. அன்புடைமை 9. இன்சொல் 10. விருந்தோம்பல் 11. செய்ந்நன்றியறிதல் 12. ஒழுக்கமுடைமை 13. அடக்கமுடைமை 14. நடுவுநிலைமை 15. பிறனில் விழையாமை 16. பொறையுடைமை 17. அழுக்காறாமை 18. வெஃகாமை 19. புறங்கூறாமை 20. பயனில செல்லாமை 21. தீவினையச்சம் 22. ஒப்புரவறிதல் 22. ஈகை 24. புகழ் 3. துறவறவியல் (13) 25. அருளுடைமை 26. புலான்மறுத்தல் 27. கொல்லாமை 28. வெகுளாமை 29. இன்னா செய்யாமை 30. தவம் 31. கூடாவொழுக்கம் 32. கள்ளாமை 33. நிலையாமை 34. துறவு 35. மெய்யுணர்தல் 36. அவாவறுத்தல் 37. வாய்மை 4. ஊழியல் (1) 38.ஊழ் 2. பொருட்பால் (70) 1. அரசியல் (25) 39. இறைமாட்சி 40. கல்வி 41. கல்லாமை 42. கேள்வி 43. அறிவுடைமை 44. குற்றங்கடிதல் 45. பெரியாரைத் துணைக் கோடல் 46. சிற்றினஞ் சேராமை 47. சுற்றந்தழால் 48. தெரிந்து செயல் வகை 49. வலியறிதல் 50. காலமறிதல் 51. இடனறிதல் 52. பொச்சாவாமை 53. தெரிந்து தெளிதல் 54. தெரிந்து வினையாடல் 55. ஒற்றாடல் 56. செங்கோன்மை 57. கொடுங்கோன்மை 58. வெருவந்த செய்யாமை 59. கண்ணோட்டம் 60. மடியின்மை 61. ஊக்கமுடைமை 62. ஆள்வினையுடைமை 63. இடுக்கணழியாமை 2. அமைச்சியல் (10) 64. அமைச்சு 65. சொல்வன்மை 66. அவையறிதல் 67. அவையஞ்சாமை 68. குறிப்பறிதல் 69. வினைத்தூய்மை 70. வினைத்திட்பம் 71. வினைசெயல்வகை 72. தூது 73. மன்னரைச் சேர்ந் தொழுகல் 3. கூழியல் (1) 74. நாடு 4.அரணியல் (2) 75. அரண் 76. பொருள் செயல்வகை 5. படையியல் (2) 77. படைமாட்சி 78. படைச் செருக்கு 6. நட்பியல் (17) 79. நட்பு 80. நட்பாராய்தல் 81. பழமை 82. தீநட்பு 83. கூடாநட்பு 84. பேதைமை 85. புல்லறிவாண்மை 86. இகல் 87. பகைமாட்சி 88. பகைத்திறந்தெரிதல் 89. உட்பகை 90. பெரியாரைப் பிழையாமை 91. பெண்வழிச்சேறல் 92. வரைவின் மகளிர் 93. கள்ளுண்ணாமை 94. சூது 95. மருந்து 7. குடியியல் (13) 96. குடிமை 97. மானம் 98. பெருமை 99. சான்றாண்மை 100. பண்புடைமை 101. நாணுடைமை 102. இவறன்மை 103. குடிசெயல்வகை 104. உழவு 105. நல்குரவு 106. இரவு 107. இரவச்சம் 108 கயமை 3. இன்பத்துப்பால் (25) 1. களவியல் (7) 109. தகையணங் குறுத்தல் 110. குறிப்பறிதல் 111. புணர்ச்சி மகிழ்தல் 112. நலம்புனைந் துரைத்தல் 113. காதற் சிறப்புரைத்தல் 114. நாணுத்துற வுரைத்தல் 115. அலரறிவுறுத்தல் 2. கற்பியல் (18) 116. பிரிவாற்றாமை 117. படர்மெலிந் திரங்கல் 118. கண்விதுப்பழிதல் 119. பசப்புறுபருவரல் 120. தனிப்படர் மிகுதி 121. நினைந்தவர்புலம்பல் 122. கனவுநிலை யுரைத்தல் 123. பொழுதுகண்டிரங்கல் 124. உறுப்புநலனழிதல் 125. நெஞ்சொடு கிளத்தல் 126. நிறையழிதல் 127. அவர்வயின் விதும்பல் 128. குறிப்பறிவுறுத்தல் 139. புணர்ச்சிவிதும்பல் 130. நெஞ்சொடு புலத்தல் 131. புலவி 132. புலவிநுணுக்கம் 133. ஊடலுவகை அதிகார அடைவு 1. அறத்துப்பால் 1. முதலியல் : முதலியல் முப்பாற்கும் பொதுவாகலின் நூலின் முதலில் வைக்கப்பட்டது. இனி, முதலியலில் கூறப்படும் அதிகாரங்கள் நான்கனுள், மக்கள் அறம் பொருளி ன்பம் என்னும் முப்பாலிலும் முதன்மை யுற்று வாழவேண்டும் என்பதே வள்ளுவர் கருத்தாகலின்,அம் முதன்மையான குணங்களின் உருவகமான இறைநலம்* முதலிலும், அத்தகைய குணங்களுடன் மக்கள் இனிது வாழ மிகமிக இன்றியமையாதது உணவு, அவ்வுணவைத் தருவது மழை ஆகையால், அதன்பின் வான்சிறப்பும், உலகியல் தட்டுத் தடையின்றி இனிது நடைபெற மழை எங்ஙனம் இன்றியமை யாததோ அங்ஙனமே, மக்களை நல்வழியில் இனிது வாழவைப்பதே தங்கள் கடமையாக வுடையராகை யால் அதன்பின் நீத்தார் பெருமையும், செய்வன தவிர்வன முப்பாற்கும் பொதுவும், அறத்துப்பாற்குச் சிறப்பு முடைமை யோடு, அந்நீத்தார் வகுத்த மையாகலின் அறன்வலி யுறுத்தல் இறுதியிலும் வைக்கப்பட்டன. இல்லறம், துறவறம்: இல்லறம் இனிது நடத்தி மூப் பெய்திய பின், இல்லறத்தை நீத்துத் துறவறம் மேற்கொள் வதால் இல்லறம் முன்னும் துறவறம் பின்னும் வைக்கப் பட்டன. 2. இல்லறவியல்: இவ்வியலுக்கு உரியதாகையால் இல் வாழ்க்கை முதலிலும், இல்வாழ்க்கை இனிது நடைபெற இல்லாளின் மாட்சியே காரணமாகையால் இதன்பின் வாழ்க்கைத் துணைநலமும், இல்வாழ்க்கையின் பயனாகிய மக்கட்பேறு அதன் பின்னும் வைக்கப்பட்டன. இனி மனமொழி மெய்களின் நற்பண்பு களான அன்புடைமை, இன்சொல், விருந்தோம்பல் என்னும் மூன்றும் இல்வாழ் வானுக்கு இன்றியமையாச் சிறப் புடையன வாகலின் அவை அம் முறையே வைக்கப்பட்டன. அதாவது இல் வாழ்வான் சுற்றத்திடத்தும், விருந்தினரிடத்தும் முதலில் அன்பு காட்ட வேண்டும்; பின் இன்சொல் சொல்ல வேண்டும்; அதன்பின் விருந்திட்டுப் போற்றவேண்டும் என்பதாம். இனி, இல்வாழ்வாரும் விருந்தினரும் பிறர் செய்த நன்றியை அறிந்து நடத்தல் வேண்டும் ஆகையால், விருந்தோம்பலின் பின் செய்ந் நன்றியறிதல் வைக்கப் பட்டது. அது நல்லொழுக்க முடையார்க்கே அமையுங் குணமாகையால் அதன்பின் ஒழுக்க முடைமையும், ஒழுக்க முடையார்க்கே மனமொழி மெய்கள் தீநெறிக்கட் செல்லாமல் அடக்கியாள முடியுமாகை யால் அதன்பின் அடக்க முடைமையும், மனமொழி மெய்களை அடக்கியாளும் அடக்க முடையாராலேயே எல்லோரிடத்தும் ஒப்ப நடக்க முடியுமாகையால் அதன்பின் நடுவுநிலைமையும், நடுவுநிலைமை என்னும் நற்குணம் உடையாரே தம் மனைவியைப் பிறர் விரும்பினால் தமக்கு எப்படியிருக்குமோ அப்படியே பிறர்க்கும் இருக்கும் என்னும் பொதுமையை உணர்வாரா கையால் அதன்பின் பிறனில் விழையாமையும், தனக்குள்ளது பிறர்க்கும் உண்டு என்னும் நற்குணமே பொறுமைக்கும் காரணம் என்பது தோன்ற அதன்பின் பொறை யுடைமையும், பிறர் குற்றத்தைப் பொறுத்தலே யன்றிப் பிறர் பெருமை கண்டு பொறாமைப் படுதலும் கூடாதாகையால் அதன்பின் அழுக் காறாமையும், பிறர் பொருட்பெருமை கண்டு பொறாமைப் படுதல் பிறர் பொருளை விரும்புதற்குக் காரணமாகு மாதலால் அதன்பின் வெஃகாமையும், காணாதவிடத்தே பிறர் பொருளை விரும்புதல் போல, பிறரைக் காணாத விடத்தே பழித்துக் கூறப்படுதலின் அதன்பின் புறங்கூறாமையும், புறங்கூற்றோ டொத்த சொற்குற்ற முடைமையானும், கேட்போர்க்கும் தமக்கும் பயனின்மையானும் அதன்பின் பயனில சொல்லா மையும், இவையனைத்தினும் குற்றமுடைய தாகலின் தீவினை யச்சத்தை இறுதியினும் வைத்து, இல்வாழ்க்கையின் பயனான பிறர்க்குப் பயன்பட வாழும் ஒப்புரவறிதல், ஈகை என்பனவற்றை அதன் பின்னும், ஒப்புரவறிதல், ஈகையினும் சிறந்ததாகலின் அம் முறையில் வைத்து,அவற்றாலாகும் புகழை ஈகையின் பின்னும் வைக்கப்பட்டது. 3. துறவறவியல்: இல்லறத்திற்குச் சிறந்த அன்பு போலத் துறவறத்திற்கு அருள் சிறந்ததாகலின் முதலில் அருளுடைமையும், புலாலுண்ணல் அருளின்மையாகலான் அதன்பின் புலான் மறுத்தலும், கொலை புலாலுண்ணற்குக் காரணமாகையால் அதன்பின் கொல்லாமையும், சினம் கொலைக்குற்றத்தோ டொத்த தோடு, கொலைக்குக் காரணமு மாகையால் அதன்பின் வெகுளாமையும், வெகுளியால் பிறர்க்குத் துன்பஞ் செய்வதால் அதன்பின் இன்னாசெய்யாமையும், பிறர் தீமை செய்யினும் அதைப் பொறுத்து, திருப்பி அவர்க்குத் தீமை செய்யாமையாகிய மன வடக்கம் உடையானுக்கே துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் வாய்க்கு மாகையால் அதன்பின் தவமும், துறந்து தவ வாழ்க்கை நடத்துவோர் மீண்டும் காமச்சுழலிற் பட்டலையக் கூடாதாகையால் அதன்பின் கூடாவொழுக்மும், பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதுதலும் கூடா வொழுக்கமேயாகலான் அதன்பின் கள்ளாமையும், திருடுதலுக்குக் காரணம் பொருளாசையும், கூடாவொழுக்கத் திற்குக் காரணம் இளமையும், அவ் விரண்டற்கும் காரணம் உடல்மேலுள்ள பற்றுதலுமே யாகலான், அத்தீமைகள் ஒழிய அதன்பின் அம் மூன்றன் நிலையாமை கூறும் நிலையாமையும், நிலையாமை யுணர்ந்து துறத்தலான் அதன்பின் துறவும் துறந்து மெய்யுணர்ந்து ஆசையை விடவேண்டுமாகலான் அதன்பின் முறையே மெய்யுணர்தல், அவாவறுத்தலும், பிறர்க்கு எனைத்தானும் தீமை செய்யாதிருத்தல் துறவிக்கு இன்றியமையாத தாகையால் முடிவில் வாய்மையும் வைக்கப்பட்டன. 4. ஊழியல்: ஊழ் முப்பாற்கும் பொதுவானதேனும், விதி விலக்கறிந்து நடக்கும் அறத்தோடு சார்புடைமையின் அறத்துப் பாலின் ஈற்றில் வைக்கப்பட்டது.  2. பொருட்பால் பொருட்பாலில் கூறப்படும் ஆட்சித் தலைமையுடைமையின் அரசியல் முதலிலும், அரசரோடுடனிருந்து ஆட்சி நடத்தலின் அமைச்சியல் அதன் பின்னும், ஆட்சி நடப்பதற்கடிப்படை யாகலான் கூழியல் (நாடு) அதன் பின்னும், அரசுக்குப் பாது காப்பாக உடைமையான் அரணியல் அதன் பின்னும், அரசோடு அரணுக்கும் பாதுகாப்பாக உடைமையால் படையியல் அதன் பின்னும், படை போல அரசுக்கு ஒருபுடை காப்புடைமையான் நட்பியல் அதன் பின்னும், ஆளப்படுவோராகிய குடிமக்களின் தன்மை கூறும் குடியியல் இறுதியினும் வைக்கப்பட்டன. 1. அரசியல்: அரசியற்கு உரியதாகலின் இறைமாட்சி முதலில் வைக்கப்பட்டது. அரசர்க்கும் ஏனையோர்க்கும் கல்வி பொதுவாகலானும், அரசியல் நடத்தற்கு இன்றியமை யாமையானும், இறை மாட்சியின் பின் கல்வியும், அதன்பின் அதன் மறுதலையான கல்லாமையும், கற்பினும் கற்றோர் பேச்சைக் கேட்கவேண்டும் என அதன்பின் கேள்வியும், அறிவின் சிறப்பிற்குக் கல்வியே காரண மாகையால் அதன் பின் அறிவுடைமையும், அறிவுடை யோர்க்கே குற்றங்களையறிந்து நீக்கி வாழ முடியுமாகையால் அதன்பின் குற்றங்கடிதலும், தங்கண் நிகழும் குற்றங்களை எடுத்துரைத்து அவை செய்யாமல் வாழ்விப்போர் கற்றுணர்ந்த சான்றோரே யாகையால் அதன்பின் பெரியாரைத் துணைக் கோடலும், பெரியார்க்கு மறுதலையான சிறியாரோடு சேரக் கூடாதாகையால் அதன்பின் சிற்றினஞ் சேராமையும், சிற்றினஞ் சேரார், பெரியார் போலவே உற்றிடத்துதவும் சுற்றத்தினரைத் தழுவிக்கொள்ள வேண்டு மாகலின் அதன்பின் சுற்றந்தழாலும், இனி இவ்வாறு கற்றிவைப் பெற்று, பெரியாரைத் துணைக்கொண்டு சிற்றினஞ் சேராது சுற்றந் தழுவிக் கொண்ட பின்னரே அன்னா ரோடும் சூழ்ந்து செய்யவேண்டுவன செய்தலின் அதன்பின் தெரிந்துசெயல் வகையும், அவ்வாறு ஒரு வினையைச் செய்ய மேற்கொள்ளின் அவ்வினை செய்யுந் திறன், காலம், இடம் இவற்றை யறிந்து அவற்றிற் கேற்பச் செய்யவேண்டு மாகலின் அதன்பின் முறையே வலியறிதல், காலமறிதல், இடனறிதல் என்பனவும், இனி வலியும் காலமும் இடனும் அறிந்து செயல் செய்வோன் செய்யும் வகையை மறவாமல் செய்யவேண்டு மாகலின் இடனறிதலின் பின் பொச்சாவாமையும், கால முதலியன வறிந்து மறவாமல் எண்ணிச் செய்வோன் அச்செயல் செய்தற்குத் தகுதியுடையோரைத் தேர்ந் தெடுத்துக் கொள்ள வேண்டுமாகலின் அதன்பின் தெரிந்து தெளிதலும், தெரிந்து தெளிந்தவரில், இவன் இவ்வினையை முடிக்கத் தகுதியுடையவன் என்று பார்த்து, அவனிடம் அவ் வினையை ஒப்படைக்க வேண்டு மாகலின் அதன்பின் தெரிந்து வினையாடலும், ஒற்றாடலும் அதனோ டொத்தலின் அதன்பின் ஒற்றாடலும் வைக்கப்பட்டன. இவ்வாறு கற்று அறிவைப் பெற்றுக் குற்றங் கடிந்து பெரியாரைத் துணைக்கொண்டு செய்யும் வகையை மறவாமல் தெளிந்து தெளிந்தாரைக் கொண்டு உளவறிந்து நாடாள்வோர்க்கு நல்லாட்சிமுறை இன்றியமையாததாகலின் ஒற்றாடலின்பின் செங்கோன்மையும், அதன்பின் அதன் மறுதலையான கொடுங்கோன்மையும், குடிமக்கள் அஞ்சுதற்குக் காரணமான செயல்கள் கொடுங்கோன்மையினும் கொடியதாகலின் அதன்பின் வெருவந்த செய்யாமையும், வெருவந்த செய்தல் காணின் பழகிய நண்பரும் வெருவுவராகலின் அதுவிலக்க அதன்பின் கண்ணோட்டமும் வைக்கப்பட்டன. இனி, கண்ணோடிச் செங்கோல் நடத்தும் அரசன் வினை செய்தற்கண் சோம்பலின்றி, மனமுயற்சி மெய்முயற்சி யுடன் வினை செய்ய வேண்டுமாகலின் அதன்பின் முறையே மடியின்மை, ஊக்க முடைமை, ஆள்வினையுடைமை என்பவை வைக்கப்பட்டன. அவ்வாறு இருவகை முயற்சியுடன் வினை செய்வோன், அதனால் வருந் துன்பத்திற்கு மனமழியக் கூடாதாகையால் அதன்பின் இடுக் கணழியாமை வைக்கப் பட்டது. 2. அமைச்சியல்: அமைச்சியலுக் குரியதாகலின் அமைச்சர் தன்மை கூறும் அமைச்சு முதலிலும், அதன்பின் அமைச்சர்க்கு இன்றியமையாத சொல்வன்மையும், சொல் வன்மையிருக்கினும் அதை அவையின் தன்மையறிந்தே சொல்ல வேண்டுமாகலின் அதன்பின் அவையறிதலும், அவையின் தன்மையறிந்து பேசுவோன், அவ்வகையினரைக் கண்டு அஞ்சினால் பேச்சின் பயன் முழுதும் பெறமுடியா தாகையால் அதன்பின் அவையஞ் சாமையும், ஓரவையின்கட் பேசுவோர் அவ்வையோர் குறிப்பறிந்து பேசுதலே ஏற்புடைத் தாகலின் அதன்பின் குறிப் பறிதலும், குறிப் பறிந்து கூறிச் செய்யும் செயல் நற்செயலாக இருக்கவேண்டுமாகலின் அதன்பின் வினைத்தூய்மையும், தூய்மையான வினையையும் திறமையுடன் செய்யவேண்டு மாகலின் அதன்பின் வினைத் திட்பமும், அவ்வினையை எளிதில் செய்யும் வகையான வினை செயல்வகை அதன் பின்னும் வைக்கப்பட்டன. இனி, அமைச்சரே தூதுக்குரியராகையால் அதன்பின் தூதும், இத்தகைய அமைச்சர், மன்னரிடம் எவ்வாறு பழகவேண்டும் என்பதை அறிந்து அவ்வாறு பழக வேண்டு மாகலின் அதன்பின் மன்னரைச் சேர்ந்தொழுகலும் வைக்கப் பட்டன. 4. அரணியல்: அரண்போலப் பாதுகாப்புடைமையான் அரணுக்குப்பின் பொருள்செயல்வகை வைக்கப்பட்டது. 5. படையியல்: மாட்சிமைப்பட்ட படையே செருக் குற்று வெல்லுமாகையால் படைமாட்சியின் பின் படைச் செருக்கு வைக்கப்பட்டது. 6. நட்பியல்: இவ்வியலுக்கு உரிமையுடைமையின் நட்பு முதலிலும், அந்நட்பை ஆராய்ந்து கொள்ளவேண்டு மாகலின் அதன்பின் நட்பாராய்தலும், அவ்வாறு ஆராய்ந்து கொண்ட பழைய நண்பரது பிழையைப் பொறுத்துக்கொள்ள வேண்டு மாகலின் அதன்பின் பழமையும், அவ்வாறு பொறுக்க முடியாத குற்றம் செய்யும் கெட்ட நண்பர்களை யறிந்து அவர் நட்பைக் களைந்து வாழவேண்டு மாகலின் அதன்பின் தீ நட்பும், தீ நட்புப்போல் வெளிப்பட நடந்து கொள்ளாமல், வெளிக்கு நண்பர்போல் உள்ளுக்குள் நட்புக் கொள்ளாமல் இருப்போர் தன்மையறிந்து விலகுதல் அரிதாகலின் அதன்பின் கூடா நட்பும் வைக்கப்பட்டன. இனி, நட்கப்படாதவற்றிற்கு அடிப்படையாக உள்ளதும், கூடாநட்பை அறிய முடியாமல் இருப்பதும் அறிவின்மையே யாகலான் கூடா நட்பின் பின் பேதைமையும், அறிவில்லாதிருந்தும் அறிவுடையார் போல் நடிப்பதால் அதன் பின் புல்லறி வாண்மையும், பேதைமை, புல்லறிவாண்மையே பகையுண்டாதற்குக் காரணங் களாகையால் புல்லறிவாண்மையின்பின் இகலும், எளிதில் வெல்லும் பகையை அறிந்து வெல்லுதல் வேண்டுமாகலின் அதன்பின் படைமாட்சியும், பகைவரிடம் நடந்துகொள்ள வேண்டிய முறை தெரிந்து நடந்து பகையில்லாமல் இருக்கவேண்டு மாகலின் அதன் பின் பகைத்திறந் தெரிதலும், வெளிப்பகையைத் தெரிந்து அப்பகை தம்மை வெல்லாமல் நடந்து கொள்ளுதல் கூடாமையின் அதன்பின் உட்பகையும், தம்மினும் வலிமிக்க பெரியார்கட்குத் தீங்கு செய்தல் உட்பகையினும் கேடு தருவ தொன்றாகலின் அதன்பின் பெரியாரைப் பிழையாமையும் வைக்கப் பட்டன. இனி, ஆசை காரணமாக நிகழும் ஐந்தனுள், ஒருவன் தன்னுரிமை யின்றி, மனைவிக் கடிமையாய் அவள் கை பார்த்து வாழின், இல்லறத் தார்க்குரிய விருந்தோம்பல் முதலியன செய்து குடும்பம் இனிது நடத்தற் கிடையூறாய்க் குடும்பங் கெடுவதோடு, மதிப்புங் கெட்டுவிடுமாகையால் பெண்வழிச் சேறல் முதலிலும், தமக்குரிய மனைவி போலாது, தமது நலத்தை விலைகொடுப்பார் யாவர்க்கும் வரைவில்லாது விற்கும் பொதுமகளிரை விரும்பல், தமக்குரிய மனைவியான் வருங் குற்றத்தினும் பெரிதாகலின் அதன் பின் வரைவின்மகளிரும், உணர்வைக் கெடுத்து, ஒழுக்கத்தைக் கெடுத்துக் குடியையுங் கெடுப்பதில் அவ்வரைவின் மகளிரோ டொத்தலான் அதன்பின் கள்ளுண்ணாமையும், கள் அறிவை மயக்கிக் குடியைக் கெடுப்பதுபோல், அறிவு மயங்கிச் சூதாடி உள்ளதை யிழந்து குடியைக் கெடுப்பதால் அதன் பின் சூதும், அளவறிந் துண்ணாமல் ஆசைப் பெருக்கால் அறிவு மயங்கி மிக வுண்பதாலும், அடிக்கடி யுன்பதாலும் நோயுண்டாவ தால் அதன்பின் அந்நோய் தீர்க்கும் மருந்தும் வைக்கப் பட்டன. 7. குடியியல்: இவ்வியலுக்கு உரித்தாகலின் குடிமை முதலிலும், குடிப்பிறந்தார்க்குரிய குணங்களில் மிகவும் இன்றி யமையாததாகலின் அதன்பின் மானமும், நின்ற நிலையினின்று மேன்மேல் உயர்வது, நின்ற நிலையினின்றுந் தாழாமையாகிய மானம் உண்டாயவிடத் துள்ளதாகலிள் அதன்பின் பெருமையும், சால்பு என்பது பெருமையுள் அடங்காத குணங்கள் பலவற்றின் தொகுதியாகலின் அதன் பின் சான்றாண்மையும், பல குணங்களும் நிறைந்திருப் பினும் பிறருடைய இயல்பறிந்து நடத்தல் இன்றி யமையாத தாகலின் அதன்பின் பண்புடைமையும், பிறர் இயல் பறிந்து நடக்கும் பண்புடையோர், தமக்கொவ்வாத செயல் செய்வதற்கு நாணாவிடின் முற்கூறிய பண்பு கெடுமாகலின் அதன் பின் நாணுடைமையும், தமது தகுதிக்குத் தகாதன செய்ய நாணு வார்க்குத் தாம் ஈட்டிய செல்வத்தைத் தாமும் பயன்படுத்தாமல் பிறர்க்கும் பயன்படச்செய்யாமல் இவறுதல்தகாததொன்றாகலின் அதன்பின் இவறன்மையும் வைக்கப் பட்டன. இனி, குடிமக்கள் தங்குடியைப் பலவகையிலும் உயரச் செய்தல் இன்றியமையாத தாகையாலும், பிசினன் குடி தாழுமே யின்றி உயராதாகையாலும் இவறன்மையின் பின் குடிசெயல் வகையும், குடியை உயரச் செய்வதற்கும், உரிமையுடன் வாழ் வதற்கும் உழைப்பு இன்றியமையாத தாகும். உழைப்பின் பயனே தொழிலாகும். தொழில்களில் சிறந்தது உழவுத் தொழிலே யாகலின் அதன்பின் உழவும், உழவு முதலிய தொழிலெதுவும் செய்யாதார் வறுமையுறு வாராகையால் அதன்பின் நல்குரவும், வறுமை யுற்றோர் பிறரிடம் சென்று இரக்க நேருமாகையால் அதன்பின் இரவும், இரத்தல் இழிவாகையால், அவ்வாறு ஒருக்கால் மக்கட் பண்பாகலின் அதன்பின் இரவச்சமும், குடிமக்கட் குரிய குணங்கள் ஒன்றுமில்லாத - குடி மக்களாகாத - கீழ்மக்கள் தன்மை கூறும் கயமை இறுதியிலும் வைக்கப்பட்டன.  3. இன்பத்துப்பால் களவும் கற்பும் : களவின் வழிவந்ததே கற்பாகலின் களவியல் முன்னும் கற்பியல் பின்னும் வைக்கப்பட்டன. 1. களவியல் : முதன்முதல் தலைவன் தலைவியைக் கண்டதும் அவள் அழகு வருத்துதலைக் கூறுதலான் தகை யணங்குறுத்தல் முதலிலும், தலைமகன் குறிப்பினையும் தோழி குறிப்பினையும் அறிதலும், தோழி அவ்விருவர் குறிப்பினை யறிதலும் தகையணங் குற்ற தலைமகன் தலைம களைக் கூடுங்கால் நிகழ்வதாகலின் அதன்பின் குறிப்பறிதலும், அங்ஙனம் குறிப்பறிந்து கூடிய தலைமகன் அப்புணர்ச்சி யினை மகிழ்ந்து கூறுதலான் அதன்பின் புணர்ச்சி மகிழ்தலும், புணர்ச்சி மகிழ்ந்த பின்னரே தலைமகன் தலைமகளின் அழகினைச் சிறப்பித்துக் கூறிகின்றானாகலிள் அதன் பின் நலம்புனைந்துரைந்தலும், புணர்ச்சியின்பமும் எழி லின்பமும் பற்றித் தலைமகனும் தலைமகளும் கூறுவதாகலின் அதன்பின் காதற்சிறப்புரைத்தலும், காதல் மிகுந்த விடத்தே தலைமகனும் தலைமகளும் தங்கள் நாண் நீங்கியதைக் கூறுவா ராகையால் அதன்பின் நாணுத்துறவுரைத் தலும், நாண் நீங்கிய வழியே தலைவனும் தலைவியும் ஊரார் கூறும் அலரைக் கூறுவாராகையால் அதன்பின் அலரறிவுறுத் தலும் வைக்கப்பட்டன. 2. கற்பியல்: இனி, கற்பினுள், காமவின்பத்தினை மிகுவிப்பது பிரிவேயாகையால் பிரிவாற்றாமை முதலிலும், தலைவன் பிரிந்து செல்ல, தலைமகள் பிரிவாற்றாது தானுறு கின்ற துன்பத்தினை எப்போதும் நினைந்து அதனால் மெலிதலின் அதன்பின் படர் மெலிந்திரங்கலும், பிரிவாற்றாத வருத்தத்தால் மெலிந்த தலைவியின் கண்கள் தலைவனைக் காண விரைதலின் அதன்பின் கண்விதுப்பழிதலும், தலைம கனைக் காணப்பெறாத வழியே தலைமகள் மேனி, பசந்து வருந்துவாளாகலிள் அதன்பின் பசப்புறு பருவரலும், பசப்புற்று வருந்திய தலைவி, அவ் வருத்தம் தலைவனுக் கில்லை, தனக்கேதான் உண்டெனக் கூறுவதால் அதன்பின் தனிப் படர்மிகுதியும், தலைமகனும் தலைமகளும் தாம் முன் கூடிய இன்பத்தினை நினைந்து வருந்துதல் இருவர்க்கும் பொது வாயினும், படர்மிகுதி தன்கண்ணதாக நினைத்த தலைமகட்குரிய சிறப்புப் பற்றி அதன்பின் நினைந்தவர் புலம்பலும், நனவின்கண் உள்ள நினைவு மிகுதியால் இரவில் கனவு நிகழ்தலின் அதன்பின் நினைந்தவர்புலம்பலும், நனவின் கண் உள்ள நினைவு மிகுதியால் இரவில் கனவு நிகழ்தலின் அதன்பின் கனவுநிலையுரைத்தலும், முன்னாட் கனவுகண்டு ஒருவாறு ஆற்றியிருந்த தலைவி, மாலைப் பொழுது வரவும் தலைவன் வராததால் இரங்குதலின் அதன்பின் பொழுது கண்டிரங்கலும், மிக்க இரக்கத்தினால் கண் முதலிய உறுப்புக்கள் அழகிழக்குமாகலின் அதன்பின் உறுப்புநல னழிதலும், அவ்வாறு உறுப்புக்கள் அழகிழந்த வழி இன்னது செய்வதென்றறி யாது தலைமகள் தன் நெஞ்சொடு கூறுதலின் அதன்பின் நெஞ்சொடு கிளத்தலும், நெஞ்சொடு கிளந்தவள் பின் மனத்தகத் தடக்கக் கூடியதை அடக்கமாட்டாது வாய்விட்டே கூறுதலின் அதன்பின் நிறையழிதலும், இருவரும் வேட்கை மிகுதியால் ஒருவரை யொருவர் காணற்கு விரைதலாலும், தலைமகள் நிறையழிதலின் பின் நிகழ்வதாகலானும் அதன்பின் அவர்வயின் விதும்பலும், பிரிந்து சென்ற தலைவன் வந்துழி, தலைவன் தலைவி தோழி ஆகிய மூவரும் தத்தம் குறிப்பினைக் கூறுதலின் அதன்பின் குறிப்பறிவுறுத்தலும், தலைமகன் பிரிதற் குறிப்பறிவுறுத்த, தலைமகள் புணர விரைதலின் அதன்பின் புணர்ச்சி விதும்பலும், தலைவனிடம் புலக்கக் காரணமுண்டாய் வழியும் புலக்கக் கருதாது புணர்ச்சி விதும்புகின்ற நெஞ்சுடனே தலைமகள் புலக்கின்றா ளாகலின் அதன்பின் நெஞ்சொடு புலத்தலும், புணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகனும் நெஞ்சொடு புலப்பான், நெஞ் சொடுபுலந்தவர் புணர்ச்சி விரும்பாது ஒருவரை யொருவர் புலத்தலின் அதன்பின் புலவியும், புலத்தற்குக் காரணமின்றாகவும் பொய்க்காரணங் கற்பித்துக்கொண்டு புலத்தலின் அதன்பின் புலவி நுணுக்கமும், அப்புலவியாகிய ஊடலால், கூடலிலின்பஞ் சிறத்தலின் அவ்வூடலை இருவரும் உவத்தலான் அதன்பின் ஊடலுவகையும் வைக்கப்பட்டன.  திருக்குறள் அதிகார அகராதி அடக்கமுடைமை 74 அமைச்சு 243 அரண் 75 அருளுடைமை 113 அலரறிவுறுத்தல் 419 அவர்வயின்விதும்பல் 459 அவாவறுத்தல் 148 அவையஞ்சாமை 252 அவையறிதல் 249 அழுக்காறாமை 87 அறன்வலியுறுதல் 45 அறிவுடைமை 174 அன்புடைமை 60 ஆள்வினையுடைமை 236 இகல் 319 இடனறிதல் 199 இடுக்கணழியாமை 239 இரவச்சம் 391 இரவு 387 இல்வாழ்க்கை 49 இவறன்மை 373 இறைநலம் 33 இறைமாட்சி 161 இன்சொல் 63 இன்னாசெய்யாமை 126 ஈகை 106 உட்பகை 329 உழவு 380 உறுப்புநலனழிதல் 450 ஊக்கமுடைமை 233 ஊடலுவகை 478 ஊழ் 155 ஒப்புரவறிதல் 102 ஒழுக்கமுடைமை 72 ஒற்றாடல் 213 கண்ணோட்டம் 227 கண்விதுப்பழிதல் 431 கயமை 394 கல்லாமை 168 கல்வி 164 கள்ளாமை 136 கள்ளுண்ணாமை 344 கனவுநிலையுரைத்தல் 444 காதற்சிறப்புரைத்தல் 412 காலமறிதல் 196 குடிசெயல்வகை 377 குடிமை 355 குறிப்பறிதல் (பொரு) 255 குறிப்பறிதல் (இன்) 402 குறிப்பறிவுறுத்தல் 462 குற்றங்கடிதல் 177 கூடாநட்பு 310 கூடாவொழுக்கம் 133 கேள்வி 171 கொடுங்கோன்மை 220 கொல்லாமை 120 சான்றாண்மை 364 சிற்றினஞ்சேராமை 183 சுற்றந்தழால் 186 சூது 347 செங்கோன்மை 216 செய்ந்நன்றியறிதல் 69 சொல்வன்மை 246 தகையணங்குறுத்தல் 399 தவம் 129 தனிப்படர்மிகுதி 437 தீ நட்பு 306 தீவினையச்சம் 99 துறவு 142 தூது 268 தெரிந்துசெயல்வகை 189 தெரிந்துதெளிதல் 206 தெரிந்துவினையாடல் 210 நடுவுநிலைமை 77 நட்பாராய்தல் 300 நட்பு 296 நலம்புனைந்துரைத்தல் 408 நல்குரவு 384 நாடு 275 நாணுடைமை 370 நாணுத்துறவுரைத்தல் 415 நிலையாமை 139 நிறையழிதல் 455 நினைந்தவர் புலம்பல் 440 நீத்தார் பெருமை 41 நெஞ்சொடு கிளத்தல் 453 நெஞ்சொடு புலத்தல் 468 பகைத்திறந்தெரிதல் 326 பகைமாட்சி 322 பசப்புறுபருவரல் 434 படர்மெலிந்திரங்கல் 427 படைச்செருக்கு 292 படைமாட்சி 289 பண்புடைமை 367 பயனிலசொல்லாமை 96 பழமை 303 பிரிவாற்றாமை 424 பிறனில்விழையாமை 81 புகழ் 109 புணர்ச்சிமகிழ்தல் 405 புணர்ச்சிவிதும்பல் 465 புலவி 471 புலவிநுணுக்கம் 474 புலான்மறுத்தல் 116 புல்லறிவாண்மை 316 புறங்கூறாமை 93 பெண்வழிச்சேறல் 336 பெரியாரைத் துணைக் கோடல் 180 பெரியாரைப் பிழையாமை 333 பெருமை 361 பேதைமை 313 பொச்சாவாமை 203 பொருள்செயல்வகை 284 பொழுது கண்டிரங்கல் 447 பொறையுடைமை 84 மக்கட்பேறு 56 மடியின்மை 230 மருந்து 95 மன்னரைச் சேர்ந்தொழுகல் 271 மானம் 358 மெய்யுணர்தல் 145 வரைவின்மகளிர் 341 வலியறிதல் 192 வாய்மை 151 வாழ்க்கைத் துணைநலம் 52 வான்சிறப்பு 37 விருந்தோம்பல் 65 வினைசெயல் வகை 264 வினைத்திட்பம் 261 வினைத்தூய்மை 258 வெகுளாமை 123 வெஃகாமை 90 வெருவந்தசெய்யாமை 223  முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்கள் திருக்குறளே தலையாய நூலாகும். திருக்குறள், திருவள்ளுவர் என்னும் பழந்தமிழ்ப் பெரியாரால் செய்யப் பட்டது. தமிழ் மக்கள் ஒவ்வொரு வரும் கட்டாயம் படித்துப் பயன்பெற வேண்டிய இன்றியமையாச் சிறப்பினையுடையது திருக்குறள். வள்ளுவர் குறளைப் படிப்போர், வள்ளுவர் கால நிலை, வள்ளுவர் நூல்செய்த முறை, திருக்குறளின் பெருமை, பொருள்கொள்ளும் முறை ஆகியவற்றை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். வள்ளுவர் காலநிலை: வள்ளுவர் காலத்தே, அவர் காலத்திற்குப் பன்னெடுநாள் முன்னர் இமயமலைக்கு வடபாலிருந்து வந்து, இமய மலைக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட நிலமாகிய வடநாட்டில் குடியேறி வாழ்ந்து வந்த வடபுல மக்கள் சிலர் தமிழகத்தில் குடியேறி வாழ்ந்துவந்தனர். தமிழ் மக்கள் அவர்களை அன்புடன் வரவேற்றுப் போற்றி வந்தனர். அவ்வடபுல முதியோர், தமிழ்த் துறவிகளான அந்தணர்களைப்போல மதிக்கப்பட்டு வந்தனர். அக்குடும்பத் தலைவர்களில் பெரும்பாலோர் தமிழ்ச் செல்வர்களிடம் பாங்கத் தொழிலின் ஒரு பகுதியான பார்ப்பனத் தொழிலின் செய்து வந்தனர். வந்தேறிகளான அவ்வடபுல மக்கள் தங்கள் குலத்தொழிலெனக் கொலை வேள்வி செய்து வந்தனர் (259). அவ்வேள்வியால் பெரும் பயன் உண்டாகும் என்னும் அவர் கூற்றினைத் தமிழ் மக்கள் நம்பி வந்தனர் (259). அவ்வடவர் கொள்கைகள் சில தமிழரிடைப் பரவியிருந்தன. அன்னார் கூறிய பல கற்பனைக் கதைகளைத் தமிழ் மக்கள் தெரிந்திருந்தனர்; சில கற்பனைகளை உண்மையென நம்பியும் வந்தனர். அவ்வடபுலப் பிறவி வேற்றுமைப் பிணி தமிழ் மக்களை ஒருவாறு பிணிக்கத் தொடங்கியிருந்தது (972). அதனால், தமிழ் மக்களின் ஒன்றுபட்ட ஒருமை வாழ்வு சிதையத் தலைப் பட்டது. தமிழர் பண்பாட்டை அவ்வடபுலப் பண்பாடு விழுங்கி வந்தது. வடபுலத்தார்: அவ்வடபுல மக்கள், தாங்கள் முன்பு இருந்து வந்த தங்கள் பழைய தாயகத்தில் வாழும் தம்மவர் மேலானவர்; இந்நாட்டு மக்களினும் உயர்ந்தவர்; யாதொரு கட்டுப்பாடுமின்றித் தம் விருப்பம்போல் நடந்து கொள்ளும் இயல்பினர் (1072). அவர்கள் தலைவனான இந்திரன் மிக்க வலியும் பெருமையும் உடையவன் (25). அந்நாடு செவ்வ மிக்க நன்னாடு; துன்பமென்பது அங்கில்லை; இன்ப வடிவானது என்பனபோன்ற தம் இனப் பெருமையைத் தமிழ் மக்கள் நம்பும் படி செய்திருந்தனர். தமிழ் மக்கள் அவ்வடவரின் பழந்தாயகத்தினரான அவ் வடபுலத்தாரை வானோர் (18, 336), விசும்பளார் (25) இமையார் (906), புத்தேளிர் (58, 213, 234, 320, 966), தேவர் (1072), தெய்வம் (50), புலவர் (234) எனவும்; அவ்வடபுலத்தார் வாழ்விடத்தை வானகம் (101), மேலுலகம் (222), புத்தேளுலகம் (213, 234, 320), புத்தேள்நாடு (966, 1323), தாமரைகண்ணானுலகு (1103) எனவும் அழைத்து வந்தனர். வானவர்: மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலின் உயர்ந்த மேட்டு நிலத்திலிருந்து சேரநாட்டை யாண்டுவந்த சேர மன்னரை, வானவர் (புறநானூறு 36, 126), வானவரம்பர் (புறம் 2, பதிற்றுப் பத்து 35, 58) என்று அழைத்து வந்தது போலவே, இமய மலையின் வடபால் உயர்ந்த மேட்டு நிலத்தில் வாழ்ந்து வந்ததால் தமிழ்மக்கள் அவ்வடவரை வானோர் என அழைத்தனர். வான் - உயர்வு. வானகம் - உயர்ந்த இடம். வானவர், வானோர் - உயர்ந்த இடத்தில் வாழ்பவர். இதுபற்றியே வடவர் அன்னாரை 'உயர்ந்தவர்' என்றதும். விசும்புளார்: விசும்பு - வான். விசும்புளார் - விசும்பில் உள்ளவர் - வானகத்தார். மேலுலகம் என்றதும் அப் பொருளதே. திசை பற்றி ஐரோப்பா மேனாடு எனவும், மலேயா முதலிய கிழக்கு நாடுகள் கீழ்நாடு எனவும் வழங்குதல் போல, இடம்பற்றி அது மேலுலகம் எனப்பட்டது. உலகம் என்பது நாட்டைக் குறிக்கும். 'மாயோன் மேய காடுறை உலகமும்'(தொல் : அகத் - 5) என, முல்லை நிலம் உலகம் எனப்படுதல் காண்க. இமயவர்: இமயமலையில் வாழ்பவர் என்னும் காரணப் பெயர் அமச்சு - அமைச்சு என அகரத்திற்கு ஐகாரம் போலி யானாற் போல, இமயவர் என்பது இமையவர் என்றாயது. இமையோர் - இமையவர். கோவை திரு. துடிசைக்கிழார் அவர்கள் பதித்துள்ள திருமந்திரம் 17ஆம் பக்கத்தில், தமிழ் நாட்டின் வடவெல்லை யாகிய இமயமலையின் . . . . . . . இந்திரன், மால், அயன் முதலிய இமயவர்க்கு' என்றெழுதி, இமையவர் - இமயமலை வாசிகள் என்று குறிப்பும் எழுதி யுள்ளார். புத்தேள்: இது, புத்தாள் என்பதன் திரிபு. புது ஆள் -புத்தாள்; புது ஆடை - புத்தாடை என்பது போல. புதியவர் என்பது பொருள். புத்தேளிர் - பன்மை. அவ்வடபுலத்தார் புதிதாக இங்கு வந்தபோது இட்டு வழங்கிய பெயர். இன்றுங்கூட, வேற்றூரிலிருந்து வந்து குடியேறினவனைப் புதுக்குடியான் என்று அழைப்பது வழக்கில் உள்ளது. புத்தேளுலகம், புத்தேள் நாடு - வானகம். தேவர்: மேலானவர், போற்றற்குரியவர் என்னும் பொருளது. முன்னது மேலானவர் என்னும் வடவர் கூற்றினைக் கொண்டு கூறியது. மேலிடத்தினர் என்பது பொருள். பின்னது புதிதாக வரும் வரும் அயல் நாடரை அன்புடன் வரவேற்றுப் போற்றும் தமிழர் பண்பாட்டினால் வந்தது. தேவர் என்னும் பெயர் திருவள்ளுவர் பெயர்களுள் ஒன்றாக இருப்பதும், அருண்மொழித் தேவர் - சேக்கிழார், மெய்கண்ட தேவர் (சிவஞான போத ஆசிரியர்). "மேழித் தேவர் பெருமைக்கு வேறுந் தேவர் கூறேனே" (ஏரெழுபது) என, வேளாண்குடி மக்களுக்குத் தேவர் என்னும் பட்டப்பெயர் வழங்கி வருவதும், மறக்குடி மக்களாகிய தமிழ் மறவர்குலம் தேவர்குலம் என்னும் பெயராலேயே இன்றும் அமைக்கப்பட்டு வருவதோடு, அக்குல மக்களும் தேவர் என்னும் பட்டப் பெயரிட்டு வழங்கி வருவதும், வட மொழியைத் தேவமொழி என்பதும், கிழக்கு நாட்டு மக்கள் நாகர் என அழைக்கப் பட்டது போல, தேவர்களுக்கும் நாகர் என்னும் பெயர் இருப்பதும், இத்தென்னாட்டிலிருந்த அசுரர், அரக்கர் என்போர்க்கும், அத்தேவர்களுக்கும் அடிக்கடி போர் நடந்தது; அசுரரும் அரக்கரும் தேவர்களைச் சிறையிட்டனர். தேவமகளிரை ஏவற்றொழில் செய்ய அமர்த்தி வந்தனர் என்பதும், தேவர் என்போர் மக்களில் ஒருவகையினரே என்பதற்குச் சான்றாகும். தெய்வம்: தெய்வம் என்பதும் மேலானவர் என்னும் பொருளைக் கொண்டு கூறிய பெயரேயாகும். தெய்வம் - மேன்மை, சிறப்பு. தெய்வத்தமிழ், தெய்வப்புலவர், தெய்வப் புலமை, தெய்வத் தாமரை,தெய்வவுத்தி, தெய்வப் புணர்ச்சி எனக் காண்க. தெய்வத் தமிழ் - மேலான, சிறந்த தமிழ். பிறவு மன்ன. "பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து" (குறள் - 978) என்பது போலத் தேவரைத் தெய்வம் என்றார். பெருமை - பெருமை யுடையார், சிறுமை - சிறுமை யுடையார். பெருமை, சிறுமை - பண்புப் பெயர்கள். பண்பால் பண்பியைக் குறித்தல் தமிழில் பெரு வழக்கு தெய்வம் என்னும் சொல்: மலையில் மூங்கில் ஒன்றோ டொன்று தேய்வதனால் தீ உண்டாகிறது. கல்லைச் செதுக்கும் போது தீப்பொறி தோன்றுகிறது. இவற்றிலிருந்தே முதன் மாந்தர் தீக்கடை கோலும், சக்கிமுக்கிக் கல்லும் கண்டு பிடித்திருக்க வேண்டும். பொருள்கள் ஒன்றோ டொன்று தேய்வதனால் தீ யுண்டா வதால், பழங்காலத் தமிழ் மக்கள் தேய் தேய் என்றனர். 'தேயு' வட மொழி. தேய் என்பதே நாளடைவில் தேய் - தே - தீ எனத் திரிந்தது. அயற்சொல்லானதால் வடமொழியில் திரியாது அப்படியே உள்ளது. உணவு சமைத்தல். குளிர் நீக்கல் முதலிய நன்மை குறித்துத் தீயை மேலானது எனப் போற்றிவந்தனர். தேய் என்னும் சொல்லினடியாகப் பிறந்தவையே தேவன், தேவி, தேவர், தெய்வம் என்னும் சொற்கள். தேவன் - ஆண்பால். தேவி - பெண்பால். தேவர் - பலர் பால். தெய்வம் - பண்புப் பெயர்.* அரசனைத் தேவன் என்றதும், அரசியைக் கோப்பெருந் தேவி என்றதும் முதன்மையும் மேன்மையும் பற்றியேயாகும். தெய்வம் என்னும் சொல் குறள் 43, 55, 672 ஆகிய மூவிடத்தும் மேன்மையே குறித்தல் காண்க. புலவர்: புலவர் - புலம் என்பத னடியாகப் பிறந்த சொல். புலம் - புல அர் - புலவர் . ஐம்புல நுகர்ச்சி யுடையோர், மனம் போனபடி நடப்பவர் (1072) என்னும் பொருளது. புலவு அர் - புலவர். புலவு - புலால். கேள்வி மூலம் புலவு உண்பவர் என்பதாம். வடபுலர், வடபுலவர் என்பன முதற்குறைந்து புலவர் என்றாயது எனினுமாம். தாமரைக் கண்ணான் - இந்திரன், ஆயிரங் கண்ணன் என்னும் அவன் பெயர் காண்க. சீனர் முதலிய வெளிநாட்டினர் யாத்திரையாய் அன்று தமிழ் நாட்டிற்கு வந்து போனது போலவே, அவ்வடபுலத்தாரும் அன்று இங்கு வரப்போக இருந்தனர். தமிழ்மக்கள் அவர்களை அன்புடன் வரவேற்றுப் போற்றி வந்தனர் (குறள் 13). தமிழ் மக்களும் அவ்வட புலத்திற்குப் போகவர இருந்திருக்கின்றனர். பாண்டியன் ஒருவன் இந்திரன் அவைக்குப் போயிருப்பதாகக் கூறப்படுவதும், இந்திரன் அவனுக்குச் சிறந்த மாலையொன்றை யணிந்து பெருமைப் படுத்தினதாகக் கூறப்படுவதும்,* பாண்டிநாட்டை யாண்டு வந்த மீனாட்சி என்னும் தமிழரசி, அவ் வடபுலத்திற்குப் படையெடுத்துச் சென்று, சோமசுந்தரன் என்னும் அவ்வட புலத் தரசனை வென்று பின் அவனையே மணஞ் செய்து கொண்டாள் என்பதும், இன்னோ ரன்ன செய்திகள் இதற்குச் சான்றாகும். மீனாட்சி - மீன் ஆட்சி -மீனக் கொடி யுயர்த்திப் பாண்டி நாட்டை யாண்டவள். எனவே, வானோர், வானுலகம், தேவர், மேலுலகம் என்னும் இவ்வரலாற்றுண்மையே காலக் கடப்பால், தமிழ் மக்களின் கருத் தில்லாப் போக்கால், கற்பனை மயக்கால், உட்பகைப் பெருக்கால், சமயச் சார்பால், தன்னுணர் விழப்பால், புராணப் புதுமையால் இன்றையத் தமிழ் மக்கள் எண்ணும் புதிய நிலையை அடைந்து விட்டது. வானுலகம் , மேலுலகம், புத்தேளுலகம் என்பவையும் இம் மண்ணுலகத்தில் உள்ளவையே. வானவர், புத்தேளிர், தேவர் என்ப வரும் நம் போன்ற மக்களே யாவர் என்பதைச் சிறிதும் ஐயமின்றித் தெளிக. வள்ளுவர் நூல் செய்த முறை: வள்ளுவர் ஓர் அறிவு நூற் புலவர்; அரசியலறிஞர்; தமிழர் பண்பாட்டின் பெருமையை நன்குணர்ர்ந்தவர்; தமிழினப்பற்றுடையவர்; தமிழர் வாழ்வின் தகுதிப்பாட்டை வரையறுத்துணர்ந்த மாபெருந்தகையர். ஆகையால், அவ் வடபுல மக்களின் பொய்க் கூற்றுக்களும், போலிக் கொள்கைகளும் தமிழர்மக்களிடைப் பரவி வருவதைத் தடுத்து விலக்கி, மேலும் பரவாமலிருக்க, தமிழ்மக்களின் பழக்கவழக்கங் களாகிய ஒழுக்க முறைகளை அகம்புறப் பாகுபாட்டைத் தழுவி, அறம் பொரு ளின்பம் என முப்பாலாக்கி ஒரு நூல் செய்து, தமிழர் பண்பாட்டை நிலைநிறுத்த எண்ணினார். எனவே, தமிழர் மரபுக் கொவ்வாத அயற் கொள்கைகளை மறுத்தும், அவற்றை நம்பி வாழும் பொதுமக்களுக்கு எளிதில் பொருள் விளங்குதற் பொருட்டுப் பொதுமக்களிடையே பரவியிருந்த அவ் வயற் கொள்கைகளைக் கொண்டு கூறியும். தமிழ் மரபு சிறிதும் கெடாது, தமிழ் இலக்கிய மரபுக் கேற்றவாறு பொருள் விளங்குதற் பொருட்டு உலக வழக்கில் உள்ள சில வழக்காறுகளை நூல்மரபாகக் கொண்டும், செய்யுள் வழக்கில் சிறிதும் குறைவுபடாது, மிகச் சிறு பான்மையான மக்களிடை ஓரொருகால் நடந்து வந்த தீய ஒழுக்கங் களையும் மிகைபடக் கூறி விலக்கியும், தமிழர் ஒழுக்கச் சட்ட நூலாகிய திருக்குறளைச் செய்து முடித்தார். திருக்குறளின் பெருமை: திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூலாகும். திருக்குறள் அயற்கொள்கை எதிர்ப்பு நூலேயன்றி எந்த ஒரு அயற்கொள்கையினையும் உடன்பட்டுக் கூறும் நூலன்று. தமிழர் வாழ்வே திருக்குறள் திருக்குறளே தமிழர் வாழ்வு என்னும் அவ்வளவு இன்றியமையாச் சிறப்பினை யுடைய நூல் திருக்குறள். திருக்குறள், உள்ளதை உள்ளபடியே உயரிய முறையில் எடுத்து ரைக்கும் உண்மை நூல்! தமிழர் வாழ்வின் படப்பிடிப்பு! பழந் தமிழர் நாகரிக நல்வாழ்வை அப்படியே நமக்குக் காட்டும் களங்க மற்ற காலக் கண்ணாடி!. தொன்மையும் எதிர்மையும் ஒருங் கொப்பக் காட்டும் தொலைநோக்காடி! தமிழ்மக்களின் வாழ்க்கைச் சட்டம்! தமிழ் மக்களுக்கு வள்ளுவர் வகுத்தமைத்து வைத்த பாதுகாப்புப் படை! ஏன்? தமிழர்க்கு மட்டுமன்றி, குறள் உலகப் பொதுநூல்! மக்கட் பண்பாட்டுச் சரக்கறை! எக்காலத்துக்கும் உரிய நூல்! இறவா நூல்! காலங்கடந்த நூல்! கன்னித் தமிழ் நூல்! எனல் மிகையாகாது. தமிழ் மக்கள் செய்வன தவிர்வனவாகிய ஒழுக்க முறைகளை வகுத்துக் காட்டுவதால், திருக்குறள் ஓர் ஒப்புயர்வற்ற இலக்கியமே யன்றி, இலக்கணநூலு மாகும். 'அகர முதல' எனத் தமிழ்மொழியின் முதலெழுத்தில் (அ) தொடங்கி, 'கூடி முயங்கிப் பெறின்' என ஈற்றெழுத்தில் (ன்) முடிவதால், தமிழ்மொழியே திருக்குறள்' என்னும் குறிப்புப் பொருளும் கொள்க. குடியியலில், குடிமக்கட் குரியனவாகக் கூறப்படும் நடுவு நிலைமை (951), ஒழுக்கமுடைமை (951), ஈகை, இன் சொல் (953), அன்புடைமை (992), ஒப்புரவறிதல் (983), பொறைமை யுடைமை (987), புறங்கூறாமை (984) முதலியன இல்லற வியலிலும், வாய்மை (952), இன்னா செய்யாமை (987) முதலியன துறவறவி யலிலும், கண்ணோட்டம் (983), ஈகை (952), ஆள்வினை யுடைமை (1022), மடியின்மை (1028) முதலியன அரசியலிலும், வினைத்தூய்மை (954), வினைத் திட்பம் (1027) முதலியன அமைச்சியலிலும் கூறப்படுவதால், அறம் பொருள் என்னும் பொருள் பற்றி, அவை வெவ்வேறி டங்களில் கூறப்படினும், ஆள்வோர் ஆளப்படுவோர் என்னும் இருபாலாரும் இல்லறம் துறவறம் என்னும் இரண்டற்கும் உரியர் என்பதும், குடி மக்கள், அரசரும் அமைச்சரும் ஆதற் குரியர் என்பதும், அரசர் அமைச்சர் குடிமக்கள் யாவரும் பருவ முதிர்ந்தபின் துறந்து பொது நலஞ் செய்தற்குரியர் என்பதும் வள்ளுவர் காலத் தமிழ் மக்கள் வாழ்விய லென்பது அறிந்தின்புறற் பாலது. அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் கூறப்படும் 108 அதி காரங்களையும் செய்வன, தவிர்வன என இருவகை யாகப் பிரிக்கலாம். செய்வன - செய்யத் தக்கவை- கடைப் பிடித்து நடக்கத் தக்கவை. தவிர்வன - செய்யத் தகாதவை - கடைப் பிடித்து நடக்கத் தகாதவை - விலக்கத் தக்கவை. இவை விதிவிலக்கு எனப்படும். செய்யத் தக்கதைச் செய்தும், விலக்கத் தக்கதை விலக்கியும் வாழ்வதே மக்கட் பண்பும் பகுத்தறிவின் பயனுமாகும். மழையின் சிறப்பறிந்து அதைப் பயன்படுத்தி நல்வாழ்வு வாழ்தலும், நீத்தார் பெருமையறிந்து அதற்கேற்ப அவரிடம் நடந்து கொள்ளு தலும், ஊழின் இயல்பறிந்து அதற்கேற்ப நடந்துகொள்ளுதலும், அதாவது ஆகூழெனில் இன்புற்றுப் போகூழெனில் துன்புறாமையும், நாட்டை நன்னாடாக்கி நலமுடன் வாழ்தலும், உழவின் சிறப்பறிந்து அதைச் செய்து வாழ்தலும் செய்வனவேயாம். அவை வருமாறு: செய்வன: அதிகாரம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 22, 23, 24, 25, 30, 34, 35, 37, 38, 39, 40, 42, 43, 45, 47, 48, 49, 50, 51, 53, 54, 55, 56, 59, 61, 62, 64, 65, 66, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 96, 97, 98, 99, 100, 101, 103, 104 - 66. தவிர்வன: அதிகாரம் - 15, 17, 18, 19, 20, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 36, 41, 44, 46, 52, 57, 58, 60, 63, 67, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 102, 105, 106, 107, 108, - 42. (66 + 42 = 108). இந்நூற்றெட்டேயன்றி, அஞ்சாமை (382), துணிவுடைமை (383), காட்சிக்கெளிமை (386), குடியோம் பல் (3900, செருக்கின்மை (431), வியவாமை (439), தெளி வுடமை (533), தாழ்த்தாமை (595), நகை - முகமலர்ச்சி, இகழாமை (953), குன்றுவ செய்யாமை (654), பணிவுடமை (960), பழிப்பன செய்யாமை (970) குற்றங்கூறாமை (980), இனியவே செய்தல் (987) முதலிய செய்வன தவிர்வனவுங் கூறுதலான், கூறியன கொண்டு மக்கள் நல்வாழ்வுக்கு வேண்டிய எல்லா விதிவிலக்கு களையும் உய்த்துணர்ந்து கொள்ள வேண்டு மென்பது வள்ளுவர் கருத்தாகுமென்க. இன்பத்துப்பால் 25 அதிகாரங்களிலும் கூறப்படுவன, ஆண் பெண் இருபாலாரும் கூடிவாழும் வாழ்க்கை முறையாகலின், ஒவ்வோர் ஆண்மகனும் பெண்மகளும் அவற்றைக் கட்டாயம் கற்றுணர்ந்து கடைப்பிடித்து நடக்க வேண்டியவையாகும். அவற்றில் கூறுகிறபடி ஆண் பெண் இருபாலாரும் - வாழ்க்கைத் துணைவர்கள் ஒவ்வொருவரும் - நடக்கத் தலைப்பட்டால் பெண்ணினத்தை இழிவாக எண்ணுதல், பெண்ணை வெறுத்தல், பெண்ணுரிமைத் தடை, பெண்ணடிமை, ஏறுமாறான வாழ்க்கை, மகளிர் இன்பத்தை விற்றுப் பிழைத்தல், ஆடவரின் ஒழுக்க மின்மை முதலிய தீமைகள் ஒழிந்து, நாட்டில் நற்குடும்ப வாழ்க்கை நிலை பெறும். பெண்ணுலகம் தன்னுரிமையுடன் வாழும். ஆண்களின் பரத்தைமை யுணர்ச்சியகலும். நன்மக்கட் பேறு வாய்க்கும். தமிழினம் தனிச் சிறப்புறும். பழந்தமிழ்ப் பண்பாடு புத்துயிர் பெறும். இனி, 26, 27, 30, 33, 34, 55, 56, 57, 72, 75, 77, 78, 87, 88 அதிகாரங்கள் நீங்கலாக மற்றவை யெல்லாம் பொது. இவ்வதிகாரங் களிலும் பொதுப்பொருள் உள்ள குறட் பாக்கள் சில உண்டு. இன்று மக்களாட்சி நடப்பதால், அரசர் அமைச்சர் ஒற்றர், தூதர், மறவர் ஆகியோர் இயல்பு, தகுதி, திறமை, கடமை முதலிய வற்றையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் அரசர் நிலையிற்படுவர். உலகியல்பை யறிந்து இன்பவாழ்வு வாழ்வதற்காக இல் வாழ்வாரும் துறவற அறிவைப்பெறுதல் வேண்டும். இல்லறத் திலிருந்தே பயிலும் துறவற இயல்புகளும் சில உண்டு. மக்களைத் 'தமர் பிறர்' என வேறுபடக் கொள்வது இல்லறம். 'தமர், பிறர்' என வேறுபடுத்தாது எல்லோரையும் ஒப்பக் கொள்வது துறவறம் என்பதை உணரவேண்டும். இறைநலம் முதலிய நான்கதிகாரங்களும் உலகியற்கு அடிப்படை யானவை யாதலால் நூலுக்கு முத லுறுப்பாகும். ஊழ் முப்பாலுக்கும் பொது. பொருட்பாலில் கூறும் அரசியல் முறை பொதுப்படை யாகவே உள்ளதால், எந்த ஓர் அரசியல் முறையை விரும்புவோர்க்கும் ஒப்பவுரியதேயாகும். இன்பத்துப்பால் ஆண் பெண் இருபாலாரின் பொது வுடைமை. எனவே, திருக்குறட்கு வேண்டுவார் வேண்டா தாரின்றி எல்லா மக்களும் உரியராவர். வள்ளுவர் காலத் தமிழர் வாழ்வை நினைவு கூர்ந்தே குறளின் பொருட்பயன் கொள்ளுதல் வேண்டும். பொருள் கொள்ளு முறை : திருக்குறள் இவ்வாறு எல்லோர்க்கும் ஒத்த உடைமையாக உடைய பெருமை யுடைய தேனும், அதன்பால் இயல்களுக்கேற்றவாறு அதிகாரப் பொருளைக் கொண்டு பொருள் கொள்ளுதல் கூடாது. துறவறத்திற்குரிய 'புலால் மறுத்தல், தவம்' நிலையாமை முதலியன அப்படியே இல்லறத் திற்கும், 'அருளுடைமை, கொல்லாமை, வெகுளாமை முதலியன அப்படியே அரசியற்கும், இன்பத்துப்பால் துறவறத் திற்கும் பொருந்தா. 'படைச்செருக்கு', 'பகைமாட்சி' இவற்றின் முன் அருள் நில்லாது. 'பொருள் செயல்வகை' நிலையாமைக்கு முரண். "குடி செய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்" (1028) என்பது, 'காலமறிதல்', 'மானம்' என்னும் அதிகாரங்கட் கொவ்வாமை அறிக. எலி, கொசுக்களைக் கொன்று ஊர்நலம் பேணும் ஊராட்சி மன்றத்தார்க்கும், பயிர்நோய்ப் பூச்சிகளைக் கொன்று பயிர் வளர்த்துல கூட்டும் உழவர்க்கும் 'கொல்லாமை' என்பது எங்ஙனம் பொருந்தும்! வள்ளுவர் ஒற்றனைப் பற்றிக் கூறும்போது அது ஏனைய எல்லாவற்றினும் சிறந்தது என்பர். அதனால், மற்றவை சிறப்பு டையவை யல்ல வென்பது பொருளன்று. ஒவ்வொன்றையும் அவ்வாறு சிறப்புடையதெனக் கூறுதல் ஒவ்வாக் கூற்றெனில், அற்றன்று. ஒன்றனைக் கற்போர் அதில் கருத்தைச் செலுத்தி ஆர்வத்தோடும் அக்கறையோடும் ஊன்றிக் கற்கும் பொருட்டும், அதனை மனத்தில் நன்கு பதித்துக் கொண்டு அதன்படி நடக்கும் பொருட்டுமேயாம். திருக்குறளில் கூறப்படும் ஒவ்வொரு பொருளும் இன்றியமையாச் சிறப்புடையனவேயாகும். எனவே, செய்வனவாகக் கூறப்படும் ஒவ்வொன்றையும் கட்டாயம் கடைப் பிடித்து நடத்தலும், தவிர்வனவாகக் கூறப்படும் ஒவ்வொன்றையும் கட்டாயம் விலக்கி நடத்தலும் தமிழ் மக்களின் இன்றியமையாக் கடப்பாடாகும். வள்ளுவர் கட்டளையை மீறி நடத்தல் தமிழ் மக்களுக்கு மரபுடைத் தன்று. நூன்மரபு: பொருள் குணங்களை ஆண்பாலாகவும் பெண் பாலாகவும் கூறுதல் நூல் மரபாகும். 'நிலமென்னும் நல்லாள்' (1040), 'அழுக்கா றெனவொரு பாவி' (163) என நிலம் என்னும் பொருளைப் பெண்பாலாகவும், அழுக்காறு என்னும் குணத்தை ஆண்பாலாகவும் கூறுதல் காண்க. பாவி - தீயோன். செய்யாள் (94), செய்யவள் (167), தாமரையினாள் (617) எனச் செல்வத்தையும், தவ்வை (167), முகடி (167, 936) என வறுமையையும் பெண்பாலாகக் கூறியவாறு. செய்யவள் - இளையவள். தவ்வை - மூத்தவள். முகடி - மூதேவி - மூத்தவள். செல்வந் தீர்வதே வறுமையாதலால், செல்வத்தை இளையாள் எனவும், வறுமையை மூத்தாள் எனவும் கூறினார். மேலும் செல்வம் விரும்பப்படுதல் பற்றிச் செய்யாள் எனவும், வறுமை வெறுக்கப்படுதல் பற்றிக் கரியாள் (617) எனவும் கூறினார். தாமரையினாள் - திருமகள். திரு - செல்வம். கல்வியும் செல்வமும் மனத்தை விட்டகலா மாண் பொருள்களாதலால் அவற்றைப் பெண்களாக்கி, மனத்தைத் தாமரையாக்கி அதன்மேல் உள்ளனர் என்பது மரபு. பயன் கருதி நிலம் ஆறு முதலியவற்றைப் பெண்ணாகக் கூறுவதும் நூன்மரபே யாகும். கூற்று: உடலும் உயிரும் கூறுபடும் சாவினைக் கூற்று (266, 765, 1083) என உயிருடையதாகக் கூறியவாறு. கூற்று - உடலும் உயிரும் கூறுபடும் நேரம். கூறுபடுதல் - வேறாதல் - பிரிதல். கூறு உ - கூற்று. தொழிற் பெயர். கூற்று அம் - கூற்றம் (299, 894, 1085) என்பதுமது. உடலும் உயிரும் கூறுபடும் காலத்தையும் தொழிலையும் உயிருடைய தாகக் கூறியது. கூற்றுவன் என ஆண்பாலாகக் கூறுதலு மொன்று. அணங்கு,காமன்: ஆண்களை வருத்தும் பெண்பாற் காமத்தை அணங்கு (918, 1081, 1082) எனப் பெண் பாலாகவும், பெண்களை வருத்தும் ஆண்பாற் காமத்தைக் காமன் (1197) என ஆண்பாலாகவும் கூறுதல் நூன்மரபு. அணங்கு - வருத்தம். 'தகையணங்குறுத்தல்' என்னும் 103ஆம் அதிகாரத்தைக் காண்க. எழுமை: 'நாலைந்தெடு, ஏழெட்டுப்பேர்' என்னும் வழக்குப் போல, எழுமை என்னும் எண்ணுப் பெயரைப் பல என்னும் பொருளிலேயே ஆளுகின்றார் வள்ளுவர் (62, 107, 126, 398, 518, 835). 'எழுபது கோடி' (639) என்பதும் பலகோடி - மிகப்பல என்னும் பொருளதே. பிறப்பு: பிறப்பு என்னும் சொல் இருவினைக் கீடாக உயிர் எடுக்கும் பல பிறப்புகளைக் குறிப்பதன்று. மறுபிறப்பு என்பது சமயக் கொள்கை. 10, 347, 972 குறளில் வாழ்க்கை எனவும், 1315 குறளில் இப்பிறப்பில் எனவும், 62, 107 குறளில் தலைமுறை எனவும், 335, 339இல் தோற்றம் எனவும், 351இல் துன்பம் எனவும் பொருள் படும். இம்மை, மறுமை (88): நாம் உயிரோடிருக்கும் நிலை இம்மை எனப்படும். நாம் வாழ்வது இம்மை. நாம் இறந்த பிறகு நம்மைப் பற்றி இங்கு பேசப்படுவது மறுமை எனப்படும். ஒருவன் இறந்த பின்னர் தன்பெயர் இவ்வுலகில் பேசப்படும்படி செய்வதே மறுமைப் பயனாகும். வள்ளுவர் மறுமையில் உள்ளார். அதாவது மறுமை வாழ்வு வாழ்கின்றார். பிற்காலப் புராண சமயப் புலவர்கள் செய்யவள், தவ்வை, கூற்று, அணங்கு, காமன் என்பவற்றைக் கடவுட் சாதியினர் எனவும், எழுமை என்பதை எழுவகைப் பிறப்பு எனவும், பிறப்பு, மறுமை என்பவற்றை மறுபிறப்பு எனவும் கற்பித்து விட்டனர். உரை : இன்றியமையாச் சிறப்பினையுடைய தமிழ்க் கருவூல மாகிய திருக்குறளை, இக்காலத் தமிழ்மக்கள் எல்லோரும் கற்றுப் பயன் பெற முடியாத வகையில் அதன் பழைய உரை அமைந்துள்ளது; வள்ளுவர் கருத்துக்கு மாறாக அயற் கொள்கைகள் பல வலிந்து புதுத்தப்பட்டுத் தமிழ்ப் பண்பாடு மறைக்கப் பட்டுள்ளது.* கருத்து விளக்கமும் உரையின் நடையும் கடினமாக உள்ளன. எனவே, அக் குறைபாடுகளைப் போக்கி, எழுதப் படிக்கத் தெரிந்த எல்லாத் தமிழ் மக்களும் திருக்குறளை எளிதில் படித்துப் பயன் பெறும்படியான ஓர் உரை வேண்டும் என்பது பெரும்பாலான தமிழறிஞர்கள் கருத்து. அக்கருத்தின் நிறைவேற்றமே இவ்வுரை யாகும்.  1. அறத்துப்பால் மக்களின் பழக்கவழக்கங்களாகிய ஒழுக்க முறைகளை அறம் பொருளின்பம் என முப்பாலாக்கி, அம்மூன்றுமே மக்களால் அடையப் பெறும் உறுதிப்பொருள்கள் எனக் கொண்டனர் நம் முன்னையோராகிய பழந்தமிழ் மக்கள். அம் மூன்றனுள் மக்களின் வாழ்க்கைப் பயன் முழுவதையும் அடக்கித் தமிழ்மக்களுக் கேற்ற சிறப்பு வகையில் நூல் செய்தனர் வள்ளுவர். அவற்றுள், அறமாவது - செய்வனவும் தவிர்வனவுமாகிய நடக்கைமுறைகள். அறம் - செய்வன தவிர்வனவற்றை அறுதி செய்யப்பட்டது, வரையறை செய்யப்பட்டது என்னும் பொருளது. அறு - அம் - அறம்; தொழிற்பெயர். பால் - பிரிவு. இலக்கியத் துறையில் அறமும் பொருளும் புறப்பொருள் எனவும், இன்பம் அகப் பொருள் எனவும் வழங்கப் பெறும். அந்நடக்கை முறைகள் இல்லறம், துறவறம் என இரு வகைப்படும். இல்லற மாவது - ஆணும் பெண்ணுமாகிய வாழ்க்கைத் துணைவர்கள் மக்கள் தமருடன் கூடித் தமது முயற்சியால் பொருளீட்டிப் பகுத்துண்டு வாழும் இல்வாழ்க்கை நிலை. துறவற மாவது - இல்லறத்தே இன்புற்று வாழ்ந்து, பருவ முதிர்ந்த விடத்துக் குடும்பத்தைத் தம் மக்களிடம் ஒப்படைத்து விட்டுப் பொருட் பற்றின்றி, அதாவது தன்னல மின்றிப் பொதுநலஞ் செய்து வாழும் துறவு வாழ்க்கை நிலை. இயல் - இலக்கணம். 1. முதலியல் (4) இனி, முதலில் முப்பாலுக்கும் பொதுவாகிய முதலியல் கூறுகின்றார். 1 இறை நலம் அதிகாரம் இறை நலம் - இறையாகிய நலம்; பண்புத் தொகை. இறை - முதன்மை. நலம் - குணம். மக்கள் முதன்மையாகிய குணங்களை அடையவேண்டும் என்பதே இவ்வதிகாரத்தின் உட்கருத்தாகும். மக்களின் வாழ்க்கைப் பயனாகிய அறம் பொருளின்பங் கூறப் புகுந்தார், அம் முப்பாலையும் இனிது நுகரவேண்டின் உயரிய மக்கட் பண்புகளை அடைய வேண்டும் என முதற்கண் அக்குணச் சிறப்புக் கூறுகின்றார். 'அன்பே கடவுள், அறிவே கடவுள், ஆற்றலே கடவுள்' என்னும் கடவுட் கொள்கையும் குணங்களையே குறித்தலான், அக்கடவுட் கொள்கையும் இதனிற் புறம்பானதன்று. கடவுள் - மேலானது, மேன்மையானது, சிறந்தது. 1. முதன்மையானது, 2. உண்மை அறிவு, 3. உயர்ந்த அறிவு, 4. விருப்பு வெறுப்பின்மை, 5. முதன்மையான உண்மைப்புகழ், 6. அவாவின்மை, பொய்தீர் ஒழுக்கம்,7. ஒப்பில்லா உயர் குணம், 8. அறவுணர்ச்சி, செந்தண்மை, 9. எளிமைக் குணம், 10. முதன்மை என்னும் உயர் குணங்களையே ஆசிரியர் இப் பத்துக் குறட் பாவினும் ஆதிபகவன், வாலறிவன்...... இறைவன் என ஆண்பாலாகப் படைத்துக் கூறுகின்றார். பொருள், குணங்களை ஆண்பாலாகவும், பெண்பாலாகவும் கூறுதல் நூன் மரபு. 'நிலமென்னும் நல்லாள்' (1040), 'அழுக்கா றெனவொரு பாவி,' (178) என நிலத்தையும், அழுக்காற்றையும் பெண்ணாகவும், ஆணாகவும் கூறுதல் காண்க. ஓரதிகாரத்தில் வரும் சொல்லையோ, சொற்றொடரையோ, அவ்வதிகாரப் பொருளையோ கொண்டே அவ்வதிகாரத்திற்குப் பெயரிடும் ஆசிரியர் கொள்கைப்படியே இவ்வதிகாரத்தின் பெயரும் அமையப் பெற்றதாகும். முப்பாலாகிய இந் நூலுட் கூறப்படும் உயர்குணங்களின் உருவகமே இவ்வதிகாரம் என்பதை மறுமுறையும் நினைவு கூர்க. 1. அகர முதல வெழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே யுலகு. எழுத்தெல்லாம் அகரம்முதல - எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல, உலகம் ஆதிபகவனை முதலாக உடையது. அகரம் - அ. உலகம் என்றது மக்களை. அகரம் எழுத்துக் களுக்கெல்லாம் முதலானாற்போல, ஆதிபகவன் - மக்களுக் கெல்லாம் முதல்வன் ஆவான். ஆதிபகவன் - முதன்மை யானவன். ஆதி - முதல். பகவு - பகுதி. 'எள்பகவு அன்ன' (889) எனக் காண்க. ஆதிபகவு - முதன்மைப் பகுதி. முதன்மைhனது - குணங்களின் முதன்மைப் பகுதி. அதாவது எல்லாக் குணங்களிலும் முதன்மை யான குணம் என்பது பொருள். ஆதிபகவு + அன் - ஆதிபகவன். முதன்மையான குணத்தையே ஆதிபகவன் என ஆண்பாலால் கூறினார். மக்கள் முதன்மை யான குணமுடையராய் வாழ வேண்டும் என்பது கருத்து. (1) 2. கற்றதனா லாய பயனென்கொல்? வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின். வால் அறிவன் நல்தாள் தொழார் எனின் -உண்மையறி வினை உடையவனது நல்ல தாள்களைத் தொழாராயின், கற்றதனால் ஆய பயன் என் - ஒருவர்க்குக் கற்றதனால் உண்டாகிய பயன் ஒன்று மில்லை. கொல் - அசை குணத்தை உயர்திணை யாண்பாலாகக் கொண்டதற்கேற்ப 'நற்றாள்' என்றார். வருகின்ற பாட்டுக் களில் வரும் 'மாணடி' முதலியவற்றிற்கும் இஃதொக்கும். வால் - உண்மை. உண்மையறிவைப் பெறுவதே கல்வியின் பயனாகும். (2) 3. மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். மலர்மிசை ஏகினான் மாண் அடிசேர்ந்தார் - உயர்ந்த அறிவினை உடையவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தவர், நிலமிசை நீடுவாழ்வார் - உலகத்தில் நிலைபெற்று வாழ்வார். மலர் - உள்ளத்தின் உருவகம். மிசை - மேல். ஏகுதல் - எழுதல். மிசை ஏகுதல் - மேலே எழுதல் - உயர்தல். மலர்மிசை ஏகினான் -உயர்ந்த அறிவன். நிலைபெற்று வாழ்தல் - துன்பமின்றி இன்புற்று வாழ்தல் - துன்ப மின்றி இன்புற்று நெடிது வாழ்தல். உயர்ந்த அறிவினை அடைந்தவர் உலகில் இன்புற்று நெடிது வாழ்வர். (3) 4. வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க் கியாண்டு மிடும்பை யில. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - விருப்பு வெறுப்பற்றவனது அடிகளைச் சேர்ந்தவர்க்கு, யாண்டும் இடும்பை இல - எப்போதும் துன்பம் இல்லை. துன்பத்தின் காரணங்கள் இல்லாதுபோகவே துன்பமும் இல்லையாயிற்று. விருப்பு வெறுப்பற்றவர்க்கு எப்போதும் துன்பம் இல்லை. (4) 5. இருள்சே ரிருவினையுஞ் சேரா; இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ப்பொருள் சேர்ந்த புகழை விரும்பின வரிடத்து, இருள் சேரும் இருவினை சேரா - அறிவின்மையால் உண்டாகும் பெரிய துன்பங்கள் சேரா. மெய்ப்பொருள் சேர்ந்த புகழ் - உண்மைப் புகழ் - இறைவன் - முதல்வன், தலைவன். மக்கள் தலைவனான மன்னனை இறைவன் என்றே வழங்குகிறார் (690, 733, 778). தலைமை இடம்பற்றி அரசனை இறைவன் என்றதும், தலைமைக் குணத்தை இறைவன் என்றதற்குச் சான்றாகும். இறைவன் - முதன்மை குறித்தது. வினை - ஆகு பெயராய்த் துன்பத்தை உணர்த்திற்று. இருள் - அறிவின்மை. முதன்மையான உண்மைப் புகழை விரும்புவோர் அறிவு மயங்கித் துன்பந்தரும் செயல்களைச் செய்யார் என்பது கருத்து. (5) 6. பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். பொறிவாயில் ஐந்து அவித்தான் - ஐம்பொறி வழியே செல்லும் ஐம்புலன்களையும் அடக்கினவனது, பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் - உண்மையான ஒழுக்க நெறியில் நின்றவர், நீடு வாழ்வார் - உலகில் நிலைபெற்று வாழ்வார். ஐம்பொறி - மெய் வாய் கண் மூக்குச் செவி. ஐம்புலன் - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம். ஊறு - தொட்டறியும் உணர்வு. நாற்றம் - மணம். ஐந்தவித்தான் ஆற்றலாகிய (25) அவாவின்மை என்னும் உயர் குணத்தையே 'பொறி வாயில் ஐந்தவித்தான்' என்றார். அவா வின்மையோடு உண்மையான ஒழுக்க நெறியில் நிற்பவர் நெடிது வாழ்வார். (6) 7. தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது. தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - ஒப்பில்லாதவனது தாளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல், மனக் கவலை மாற்றல் அரிது - மற்றையோர்க்கு மனக் கவலையை நீக்க முடியாது. தனக்குமேல் ஒருவன் இருந்தால்தானே தான் அவனிலும் தாழ்ந்தவன் என்னும் கவலை உண்டாகும்? வண்டியில் செல் வோர்க்குத்தானே வானூர்தி இல்லையே என்ற கவலை? வானூர் தியில் செல்வோருக்கு அதற்குமேல் செல்லும் ஓர் ஊர்தியின்மையால் கவலை உண்டாக இடமில்லை என்பதை அறிக. ஒப்பில்லாத உயர்குண முடையோர்க்கு மனக்கவலை இல்லை. (7) 8. அறவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழீ நீந்த லரிது. அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக் கடலாகிய அந்தணனது தாளாகிய புணையைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல் மற்றையோர்க்கு, பிற ஆழி நீந்தல் அரிது - பிற கடல்களைக் கடக்க முடியாது. அறம் - 'மனத்துக்கண் மாசிலன் ஆதல்' (34). அற ஆழி - மிக்க அறம்; உருவகம். அந்தணன் - 'எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுபவன்' (30). ஆழி - கடல். புணை - தெப்பம். அறத்தை ஆழி என்றதனால், பிற என்றது, பொருளையும் இன்பத்தையும், மனத்துக் கண் மாசிலராகி, உயிர்களிடத்துச் செந்தண்மையும் உடையவரே, பொருளின் பங்களை எளிதில் துய்க்க முடியும். (8) 9. கோளிற் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான் தாளை வணங்காத் தலை. எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எளிமை யாகிய குணம் உடையவனது தாளை வணங்காத தலைகள், கோள் இல் பொறியில் குணம் இலவே - புலன்களைக் கொள்ளு தலில்லாத பொறிகள் போலப் பயனில்லாதன வேயாகும். பொறி, புலன்களை 6ஆம் குறளுரையில் காண்க. கோள் இல் பொறி - கேளாக் காது, காணக் கண், பேசா வாய் ஆகிய செவிடு, குருடு, ஊமு. எண்மை - எளிமை (424, 548), செருக்கற்ற தாழ்வான குணம். 'பணியுமாம் என்றும் பெருமை' (978) எனக் காண்க. எளிமையான குணமில்லாதவர் குருட்டுக் கண், செவிட்டுக் காது போலப் பயனற்றவர் ஆவர். எண்ணம், சொல், செயல் மூன்றும் எளிமையாக வேண்டும் என்பார், எளிமைச் செயல் தோன்றத் 'தாளை வணங்காத் தலை' என்றார். (9) 10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார். இறைவன் அடி சேராதார் - இறைவனது அடியாகிய புணையைச் சேராதவர், பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் - இப்பிறவியாகிய பெரிய கடலை எளிதில் கடக்க வல்லராய் இருக்கினும் கடவார். இறைவன் - தலைவன். தலைமையான குணங்களை யெல்லாம் கொள்ள 'இறைவன்' என்றார். பிறவி - வாழ்க்கை. வாழ்க்கை பல துன்பங்களுக்கு உறைவிடமாய் இருப்பதனால் கடல் என்றார். கடத்தல் - வாழ்க்கையில் வறுமை முதலிய துன்பமின்றி வாழ்தல். நீந்துவர் - வினையாலணையும் பெயர். நீந்துபவரும் என்னும் உயர்வு சிறப்பும்மை தொக்கது. தலைமை யான குணங்கள் இல்லாதவர் வாழ்க்கையை எளிதில் நடத்தக் கூடிய செல்வம் முதலியன உடையராய் இருக்கினும் துன்பமின்றி இன்ப வாழ்க்கை வாழ முடியாது என்பதாம். உயர் குணங்களே நல்வாழ்வுக்கு இன்றியமை யாதவை என்பதை எதிர்மறை முகத்தால் விளக்கினார். (10) 2. வான் சிறப்பு வான் - மழை. வான்சிறப்பு - மழையினது சிறப்புக் கூறுதல். அறம்பொருளின்பமாகிய உலகியல் நடத்தற் கேது வாகலின், மழை முப்பாற்கும் பொதுவாயிற்று. மழையின் சிறப்புணர்ந்து அதன் பயன்கொண்டு வாழ்தல் இதன் பயன். 11. வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்த மென்றுணரற் பாற்று. வான் நின்று உலகம் வழங்கி வருதலால் - மழையினால் உலகத்து உயிர்கள் நிலைபெற்று வருவதால், தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று - அம்மழையே உலகத்துயிர்களுக்கு உணவு என்று உணரவேண்டும். நின்று - ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமைக் கருவிப் பொருள். அமிழ்தம் - உணவு. உணவே உயிர் வாழ்க்கைக்குக் காரண மாதலை அறிக. பாற்று - பான்மை உடையது. பான்மை - தன்மை. மழையே உலகம் நடைபெற்று வருவதற்குக் காரணமாகும். (1) 12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை. துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி - உண் பவர்களுக்கு நல்ல உணவை உண்டாக்கி, துப்பார்க்குத் துப்பு ஆயதும் மழை - தண்ணீ ராய் உண்பவர்களுக்குத் தானும் உணவாவதும் மழையே யாகும். து - உண். துப்பு - நல்லது, உணவு. உணவுப்பொருள் விளையவும், தண்ணீராய் உண்ணவும் மழை பயன்படுகிறது. (2) 13. விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி. விண் இன்று பொய்ப்பின் - மழை வேண்டுங் காலத்துப் பெய்யாது போனால், விரிநீர் வியன் உலகத்துள் - விரிந்த கடலால் சூழப்பட்ட பெரிய உலகத்தின்கண், பசி நின்று உடற்றும் - பசி நிலை பெற்று உயிர்களை வருத்தும். விண் - மழையை உணர்த்திற்று. இன்று பொய்ப்பின் - இல்லாமல் போனால். பசி நிலைபெற்று வருத்துதல் - மிக்க உணவுத் தட்டுதல் உண்டாதல். (3) 14. ஏரி னுழாஅ ருழவர்; புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால். புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாயின் வளப்பம் குறையுமாயின், உழவர் ஏரின் ஊழார் - உழவர் ஏரினால் நிலத்தை உழமாட்டார். குன்றியக்கால் என்பது குறைந்து நின்றது. வளம் - வருவாய் பெருகுதல். மழையின்றேல் உழவின்று; உழவின்றேல் விளைவின்று; விளைவின்றேல் பசி வருத்தும் என்பதாம். (4) 15. கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉ மெல்லா மழை. கெடுப்பதும் - நிலத்தில் வாழ்பவரைப் பெய்யாது கெடுப்பதும், கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதும் - கெட்ட வர்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்ததைப் போலவே வாழ்விப்பதும், எல்லாம் மழை - ஆகிய இவை யெல்லாம் செய்யவல்லது மழை. மிகப் பெய்து கெடுப்பதும் என்றுமாம். சார்வு - துணை. மற்று ஆங்கே - முன்போலவே. எடுத்தல் - பொருட் குறைவால் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து தவிப் போரைப் பொருட் பெருக்கால் செல்வத்திடரில் தூக்கி விடுதல். வாழ்வுக்கும் தாழ்வுக்கும் மழையே காரணம். (5) 16. விசும்பிற் றுளிவீழி னல்லால்மற் றாங்கே பசும்புற் றலைகாண் பரிது. விசும்பில் துளி வீழின் அல்லால் - முகிலில் இருந்து மழைத் துளி விழுந்தாலன்றி, ஆங்கே பசும்புல் தலை காண்பு அரிது - அவ்விடத்தே பசும்புல்லின் தலையைக் காண்பது அரிது. விசும்பு - வானம்; முகிலை யுணர்த்திற்று. தலை - நுனி. காண்பு - காண்பது. மற்று - அசை. மழைபெய்யாவிடின் புற்களும் தளிர்க்கா. (6) 17. நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும்; தடிந்தெழிலி தானல்கா தாகி விடின். எழிலி தடிந்து நல்காதாகிவிடின் - முகில் மின்னி மழை பெய்யாவிட்டால், நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் - பெரிய கடலும் தன் இயல்பு குறையும். தடித்து - மின்னல். தடிந்து - மின்னி; வினையெச்சம். கடல் தன் நீர்மை குன்றுதலாவது - மீன் முதலிய நீர்வாழுயிர்கள் பெருகாமையும், முத்து, பவளம் முதலியன உண்டாகாமையு மாம். தான் - அசை. மழைக்குக் காரணமான கடல் வளத்திற்கும் மழையே காரணமாகும். (7) 18. சிறப்பொடு பூசனை செல்லாது; வானம் வறக்குமேல் வானோர்க்கு மீண்டு. வானம் வறக்குமேல் -மழை பெய்யாதாயின், ஈண்டு வானோர்க்கும் சிறப்பொடு பூசனை செல்லாது - இங்கு வரும் தேவர்களுக்கும் சிறப்பாக வழிபாடு நடவாது. வழிபாடு - முகமன் - அன்போடு வரவேற்றுப் போற்றுதல். ஈண்டு என்றது தமிழகத்தை. வானோர் இன்னார் என்பதை முக வுரையில் காண்க. மழை பெய்யா தாயின் அன்போடு அயலாரைப் போற்றும் தமிழர் பண்பாடாகிய அச்செயலும் நடைபெறா தென்பதாம். (8) 19. தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். வானம் வழங்காது எனின் -மழை பெய்யாது விட்டால், வியன் உலகம் - இப்பரந்த உலகத்தில், தானம் தவம் இரண்டும் தங்கா - தானமும் தவமும் ஆகிய இரண்டும் நடைபெறா. தானம் - இல்லார்க்கு இயன்றதைக் கொடுத்தல், தவம் - மன வடக்கம் முதலியன 27ஆம் அதிகாரம் பார்க்க. தானம் இல்லறத் தார்க்கும், தவம் துறவறத்தார்க்கும் உரியன. நாட்டு மக்கள் உணவின்றித் தவிக்கும்போது துறவிகள் மன வமைதி யுடன் இருக்க முடியா தாகையால், துறவறமும் நடைபெறா தென்றார். மழையின் றேல் இல்லறம், துறவறம் இரண்டும் இனிது நடைபெறா. (9) 20. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. யார் யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் எத்தகை யோர்க்கும் தண்ணீரில்லாமல் உலகியல் நடைபெறா தாயின், ஒழுக்கு வான் இன்று அமையாது - அத் தண்ணீரின் வருகையும் மழை யில்லாமல் உண்டாகாது. நீர் இன்றி மக்கள் வாழமுடியாது, மழையின்றி நீரில்லை என வான் சிறப்புக் கூறியவாறு. (10) 3. நீத்தார் பெருமை இல்லற இன்பத்தைத் துறந்து, பொதுநலம் புரியும் பெரியாரது பெருமை கூறுதல். 'தலைவனும் தலைவியும் இல்லறம் இனிது நடத்தி, காமம் தீர்ந்த காலை - முதுமைப் பருவம் அடைந்த பின் - மக்களிடம் குடும்பத்தை ஒப்படைத்து விட்டுப் பொதுநலத் தொண்டு செய்தல், முன்னர் நடத்திய இல்லறத்தின் பயனாகும்'* என்பது இதற்கு இலக்கணம். இவர்கள் உலகியல் இனிது நடத்தற்குத் துணை செய்தலான், இது முப்பாற்கும் பொது வாயிற்று. நீத்தார் பெருமையை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்ளுதல் இதன் பயன். 21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவற் றுணிவு. பனுவல் துணிவு - நூல்களது துணிவு, ஒழுக்கத்து நீத்தார் பெருமை - நல்லொழுக்கத்தில் நின்று தீய ஒழுக்கங்களைத் துறந் தாரது பெருமையையே, விழுப்பத்து வேண்டும் - எல்லாப் பெருமை களிலும் மேலாக விரும்பும். பனுவல் என்றது - பனுவல் செய்த சான்றோர்களை. பனுவல் - நூல். துணிவு - உறுதியாகக் கொள்ளுதல், முடிவு கட்டுதல்; எல்லாப் பெருமைகளிலும் மேலான பெருமையென முடிவு கட்டுதல். அறிவு நூற் புலவர்கள் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமைகளிலும் மேலான பெருமையெனக் கொள்வர். (1) 22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று. துறந்தார் பெருமை துணைக்கூறின் - துறந்தவர்கள் பெருமைக்கு அளவு கூறின், வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டு அற்று - அது உலகத்தில் இறந்தவர்களை இத்தனை பேர் என்று எண்ணியறிவது போன்றது. இறந்தவர் எண்ணிக்கை அளவிலடங்காதது போல், துறந்தவர் பெருமையும் அளவிலடங்காது என்பதாம். அதாவது அளவிட்டுக் கூற முடியாத பெருமையாகும் என்பது. (2) 23. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு. இருமை வகை தெரிந்து - நன்மை தீமைகளின் பாகு பாடுகளை நன்கு அறிந்து, ஈண்டு அறம் பூண்டார் பெருமை - மிக்க அறத்தைக் கொண்டவர் பெருமையே, உலகு பிறங்கிற்று - உலகில் சிறந்தது. ஈண்டுதல் - மிகுதல். ஈண்டறம் - வினைத்தொகை. நன்மை தீமைகளின் பாகுபாடுகளை ஆராய்ந்தறிந்து, நன்மைகளையே மிகுதியும் கைக்கொண்டவர் பெருமையே, உலகில் சிறந்தது. என்பதாம். (3) 24. உரனென்னுந் தோட்டியா லோரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. உரன் என்னும் தோட்டியால் - அறிவு என்னும் குத்துக் கோலால், ஓர் ஐந்தும் காப்பான் - பொறிகளாகிய யானைகள் ஐந்தையும் புலன்கள் மேற்செல்லாமல் காப்பவன், வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - துறவறம் என்னும் சிறந்த நிலத்திற்கு ஒப்பற்ற விதையாவான். உரம் - வலிமை, மனவுறுதி. அறிவே மனவுறுதியை உண் டாக்குவதால் அறிவு எனப்பட்டது. பொறி, புலன்களை 6ஆம் குறளுரையில் காண்க. ஐம்பொறிகளையும் ஐம்புலன்கள் மேல் செல்லாமல் அடக்கியாள்வது அறிவேயாகும். வரம் - சிறந்தது. ஐம்பொறி அடக்கத்தின் வளர்ச்சியே துறவறமாகும். ஐம்பொறி அடக்கம் துறவறத் தொடக்கம். (4) 25. ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. ஐந்து அவித்தான் ஆற்றல் - ஐம்பொறிகளையும் அடக்கின வனது வல்லமைக்கு. அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே - அகன்ற வானுலகத்தார்க்குத் தலைவனாகிய இந்திரனே, சாலும் கரி - தக்க சான்றாவான். சாலும் - பொருந்தும். சான்று - சாட்சி. தேவர் தலை வனாகிய இந்திரன், தமிழர்களின் பெருமை காண மனம் பொறாதவன்; வலிமையும் பெருமையும் தலைமையும் புகழும் உடைய தமிழ்ப் பெரியார்களை ஒழிப்பதையே தனது வாழ்க்கைப் பயனாகக் கொண்டவன்; வரையா ஈகையால் பெரும் புகழோடு வாழ்ந்த 'மாவலி' என்னும் தமிழரசனை வாமனன் என்பானைக் கொண்டு கொல்வித்தவன். பாண்டியர் புகழ் கண்டு பொறாது, பாண்டி நாட்டின் மேல் மழையையும், கடலையும் ஏவினவன் எனப் பல கதை கூறப்படுகின்றன. அன்றும் இத்தகைய பல கதைகள் கூறப்பட்டி ருக்கலாம். அப்பொய்க் கதைகளைத் தெரிந்திருந்தனர் பழந்தமிழ் மக்கள். சிலர் உண்மையென நம்பியும் வந்தனர். துறந்தாரின் பெருமையைப் பலரும் எளிதில் உணரும் பொருட்டு அத்தகு இந்திரனை எடுத்துக்காட்டாகக் காட்டினர் வள்ளுவர். தமிழ் மக்களின் கொடை, புகழ் போன்ற பெருமைக்கே பொறாமைப் படுகிற இந்திரன், ஒழுக்கத்து நீத்து ஐந்தவித்தார் பெருமைக்கு என்படான்? என நித்தார் பெருமையை விளக்கியவாறு. அயல் நாடர் பொறாமை கொள்ளக்கூடிய அவ்வளவு பெருமை. (5) 26. செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர் செயற்கரிய செய்கலா தார். செயற்கு அரிய செய்வார் பெரியர் - செய்தற்கு அரியனவாகிய செயல்களைச் செய்பவர் பெரியார், செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் - செய்தற்கு அரியனவாகிய செயல்களைச் செய்யாதவர் சிறியார். செயற்கரிய - ஒழுக்கத்து நீத்தல், ஐந்தவித்தல் முதலியன. தன்மானத் தந்தை பெரியார் தம் சமூகப் புரட்சி போன்ற செயற்கரிய செயல்களுமாம். ஒருவர் செயலைக் கொண்டே அவரைப் பெரியார், சிறியார் என அறிய வேண்டும் என்பதாம். (6) 27. சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு. உலகு - உலகியலானது, சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் - சுவை முதலிய ஐம்புலன்களின், வகை தெரிவான் கட்டே - வகையை ஆராய்பவனிடத்தே அமைந்துள்ளது. வகை - ஒவ்வொன்றன் தன்மை கட்டே - கண்ணதே. ஐம்புலன்களின் ஐந்தின் தன்மையை அறிந்தவனே உலகி யலை அறிந்த வனாவான். உலகப் பெரியார்களெல்லாரும் ஐம்புலன்களின் தன்மையை உணர்ந்து நடந்து பெருமை பெற்றவரேயாவர். (7) 28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். நிறைமொழி மாந்தர் பெருமை - நீத்தார் பெருமையை, நிலத்து மறைமொழி காட்டிவிடும் - உலகில் அவர்கள் மறை மொழிகளே காட்டிவிடும். நிறைமொழி - உண்மை நிறைந்தமொழி. மறைமொழி - மந்திரம். அது மறைவாகச் சொல்லப்பட்டு வந்ததால் மறை மொழி எனப்பட்டது. மந்திரம் - எண்ணுதல். மெஃச்மெரிசம், இப்நாடிசம் போல, மனவொருமையால், மனநிறைவொடு வாய்க்குள்ளே சொல்லப்படும் அச்சொல் சொன்ன படியாதல். (8) 29. குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது. குணம் என்னுங் குன்று ஏறி நின்றார் வெகுளி - நிறைந்த குணமுடையார்க்கு உண்டாகும் சினம், கணமேயும் - நொடிப் பொழுதுதான் நிற்குமெனினும், காத்தல் அரிது - தடுத்தல் அரிதாகும். குணத்தைக் குன்றாக உருவகித்தார், நிறைந்த குண முடையார் என்பதற்கு. நிறைந்த குணமுடையார்க்குச் சினம் (கோபம்) உண்டாகாது. அப்படி உண்டானாலும் நொடிப் பொழு தேனும் வெகுளப்பட்டாரால் தடுக்க முடியாதென்ப தாம். குன்றன்ன குணமுடையாரிடும் தண்டனையைப் பொதுமக்களே நிறைவேற்றி விடுவராதலால், 'தடுத்தல் அரிது' என்றார். பெரியார்க்குச் சினமுண்டாகும் படி நடந்து கொள்ளக் கூடாது. (9) 30. அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான். எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்களிடத்தும் அருளுடையவராய் நடந்து கொள் வதால், அந்தணர் என்போர் அறவோர் - அந்தணர் என்போர் துறவிகளே யாவர். செந்தண்மை -அருள், இரக்கம். அருளுடையவர்க்கு அந்தணர் என்று பெயர். அருளுடைய தமிழ்த் துறவிகளைக் குறிக்கும் தனித்தமிழ்ச் சொல்லான 'அந்தணர்' என்னும் பெயர், பார்ப்பன இனப்பெயர் ஆவதற்கு எவ்வகையினும் பொருந்தாமை அறிக. துறவிகள் உயிர்களிடத்து அருளுடையராய் நடத்தலினால், அவர்க்கு அந்தணர் என்னும் பெயர் வழங்கலானது. (10) 4. அறன் வலியுறுத்தல் அறத்துப் பாலில் கூறப்படும் பலவகையான அறங்களையும் பொதுவகையால் சிறப்பித்துக் கூறுதல். அறம் - ஒழுக்கம், நன்னடக்கை. வலியுறுத்தல் - வற்புறுத்தல், சிறப்பித்தல். பொருளும் இன்பமும் அறத்தின் வழிப்பட்டு நடக்க வேண்டுதலின், இது ஏனை யிரண்டற்கும் ஒருவாறு பொதுவாகும். 31. சிறப்பீனுஞ் செல்வமு மீனும் அறத்தினூஉங் காக்க மெவனோ வுயிர்க்கு. சிறப்பு ஈனும் - சிறப்பையும் கொடுக்கும், செல்வமும் ஈனும் - செல்வத்தையும் (கொடுக்கும், அறத்தின் ஊங்கு - ஆதலால், அறத்தைவிட, உயிர்க்கு ஆக்கம் எவன் - மக்களுக்கு வேறு சிறப்பு ஒன்றுமில்லை.) சிறப்பு -மதிப்பு. அறத்தைவிடச் சிறந்த பேறு வேறில்லை. (1) 32. அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை மறத்தலி னூங்கில்லை கேடு. அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவர்க்கு அறத்தை விடச் சிறத்ததும் இல்லை, அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை -அவ்வறத்தை மறத்தலைக் காட்டிலும் கேடு தருவது வேறொன்று மில்லை. மறத்தல் - அறத்தைவிட்டு மறத்தைச் செய்தல். மறம் - தீமை. அறம் - நன்மை. (2) 33. ஒல்லும் வகையா னறவினை யோவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல். அறவினை ஓவாது ஒல்லும் வகையான் - அறச் செயலை இடைவிடாது இயன்ற மட்டிலும், செல்லும் வாய் எல்லாம் செயல் - செய்யத்தக்க வழிகளிலெல்லாம் செய்க. இயன்ற மட்டிலும் - எவ்வளவு முடியுமோ அவ்வளவு. கூடுமானவரையிலும் நடக்க முடியும் இடங்களிலெல்லாம் நல்லவனாகவே நடக்கவேண்டும். செயல் - வியங்கோள் வினைமுற்று. (3) 34. மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன் ஆகுல நீர பிற. மனத்துக்கண் மாசு இலன் ஆதல் - மனத்திலே குற்ற மில்லாத வனாகுக, அனைத்து அறன் - அவ்வளவே அறம் என்பது; பிற ஆகுல நீர - மற்றவையெல்லாம் பிறர் அறிவதற் காகச் செய்யும் ஆடம்பரத் தன்மைகளே யாகும். மாசு - குற்றம். ஆகுலம் - ஆடம்பரம். பிற - சொல்லாலும், கோலத்தாலும் (வேடம்) அறவோன் போல் நடித்தல். குற்ற மற்ற மனத்துடன் இருப்பதே அறமாகும்; மாசற்ற நிலையே அறமாம். (4) 35. அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொல் நான்கும் இழுக்கா வியன்ற தறம். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும் - பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கும், இழுக்கா இயன்றது அறம் - இல்லாமல் நடப்பதே அறமாகும். இன்னா - துன்பம். இன்னாச் சொல் - பிறர்க்குத் துன்பந் தரும் சொல். இந் நான்கும் உடைமை அறமாகாது. (5) 36. அன்றறிவா மென்னா தறஞ்செய்க; மற்றது பொன்றுங்காற் பொன்றாத் துணை. அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - பின்பு செய்வோம் என்றிராமல் வாழ்க்கைத் தொடக்கத்திலிருந்தே அறத்தைச் செய்க, அது பொன்றுங்கால் பொன்றாத்துணை - அவ்வறம் இறக்கும் போதும் அழியாத் துணையாகும். அறம் - நல்லொழுக்கம். இளமையிலிருந்தே ஒருவன் நல் லொழுக்கமாக நடக்கின், அவன் இறந்த பிறகும் அவ்வொழுக்கம் அவன் பெயரை உலகில் நிலைபெறச் செய்யும். பெயர் - புகழ். மற்று - அசை. (6) 37. அறத்தா றிதுவென வேண்டா; சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை. சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை - பல்லக்கைச் சுமப்பானிடத்தும், அதில் ஏறிச் செல்வானிடத்தும், இது அறத்தாறு என வேண்டா - இது அறநெறி என வேண்டா. பொறுத்தல் - சுமத்தல். மக்களில் ஒருவரை ஒருவர் சுமக்கும் முறை அறமாகாது. இது மக்கட் பண்பாட்டுக்குத் தகாத முறையாகும். செல்வத்திலும்,தன்மையிலும் இவ்வளவு ஏற்றத்தாழ்வு அறமாகாது என்பதாம். (7) 38. வீழ்நாட் படாமை நன்றாற்றி னஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல். ஒருவன் வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - ஒருவன் எப் போதும் நன்மையே செய்யின், அஃது வாழ்நாள் வழி அடைக்கும் கல் - அது வாழ்நாளில் தீமை வரும் வழியை அடைக்கும் கல்லாகும். வீழ்நாள்படுதல் - நன்மை செய்யாமல் நாட்கள் கழிதல். நன்று - நல்லது, அறம். நல்லதையே செய்து பழகினால் அப்பழக்கம் தீமை செய்ய இடங்கொடா என்பதாம். நற்பழக்கம் தீப்பழக்கத் திற்குத் தடைக்கல். 39. அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம் புறத்த; புகழு மில. அறத்தான் வருவதே இன்பம் - நல்வொழுக்கத்தால் வருவதே இன்பமாகும்; மற்று எல்லாம் புறத்த - அறமல்லாத பிற எல்லாம் துன்பந்தருவனவாம்; புகழும் இல - அவற்றால் புகழும் இல்லை. மற்று - வேறு; அவை கெட்ட செயல்கள். நல்லொழுக்கம் இன்பத்தையும், புகழையும் தரும். (9) 40. செயற்பால தோரு மறனே யொருவற் குயற்பால தோரும் பழி. ஒருவற்கு செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்யத்தக்கது அறமே, உயற்பாலது பழி - செய்யத் தகாதது பழியே. ஓரும் இரண்டும் - அசை. உயல் - நீக்கல். பழி - பிறர் பழிக்கத் தக்க தீமை. நன்மை செய்யத்தக்கது; தீமை விலக்கத்தக்கது. (10) முதலியல் முற்றிற்று 2. இல்லறவியல் (20) 5. இல்வாழ்க்கை இல்லறத்தின் சிறப்புக் கூறுதல். இல்வாழ்க்கை - இல்லறம். 41. இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கும் நல்லாற்றி னின்ற துணை. இல்வாழ்வான் என்பான் - குடும்ப வாழ்க்கை நடத்து பவன் என்று சிறப்பித்துக் கூறப்படுவோன். இயல்புடைய மூவர்க்கும் - இயல்பாகவே அரசுரிமை யுடைய சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர்க்கும், நல்லாற்றின் நின்ற துணை - நல்வழியில் நிலைபெற்ற துணையாவான். இல்வாழ்வான் - குடிமகன். இது, அரச உறுப்புகளுள் ஒன்றான குடியியலை நோக்கிற்று. தமிழகத்தே என்று அரசு தோன்றிற்றோ அன்று தொட்டு இடையறாது தொடர்ந்து வரும் மரபினராகலான், முடியுடை மூவேந்தரை - 'இயல்புடைய மூவர்' என்றார். அரசரும் இல்வாழ் வாரல்லரோவெனின், அந்நிலையில் அவர் ஆட்சிக்குத் துணையாதன் மேற்று. மூவர் என்பது, ஆகுபெயரான் அன்னார் ஆட்சி குறித்து நின்றது. இல்வாழ்வான் இன்றியமை யாமை கூறப் பட்டது. (1) 42. துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வா னென்பான் றுணை. துறந்தார்க்கும் - துறவிகளுக்கும், துவ்வாதவர்க்கும் - வறுமை யினால் உண்ண உண்ணவின்றித் தவிக்கும் ஏழைகட்கும், இறந்தார்க்கும் - பாதுகாப்போர் இல்லாத வர்க்கும், இல்வாழ்வான் என்பான் துணை - இல்வாழ்க்கை நடத்துபவன் துணையாவான். து ஆதவர் - துவ்வாதவர். து - உண். இறத்தல் - கடத்தல். இறந்தார் - கடந்தார், நீங்கினார். இறந்தார் (159) - நன்னெறியைக் கடந்தவர். இறவாநின்ற வளை (1157) - கழலும் வளைகள் என்பன காண்க. குடும்பத்தை விட்டு நீங்கியவர்; யாருமற்றவர் (அனாதை); தாமாக வாழ முடியாத இளையரும், முதியரும். துறந்தார், எளியர், யாருமற்றார் என்னும் மூவர்க்கும் உதவுவது இல்வாழ்வான் கடமை. (2) 43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங் கைம்புலத்தா றோம்பல் தலை. தென்புலத்தார் - தென்னாட்டினர், தெய்வம் -தன் முன்னோர், விருந்து - விருந்தினர், ஒக்கல் - சுற்றத்தார், தான் என்று ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - தான் என்னும் ஐந்திடத்தும் அறவழியைத் தவறாது செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறந்தது. புலம் - இடம். தென்புலத்தார் - தமிழர். வடபுலத் தாரும் இருந்ததால் 'தென்புலத்தார்' என்றார், 'தென் மொழி' என்பது போல. சேர நாட்டைக் குடபுலம் என்றும், சோழ நாட்டைக் குண புலம் என்றும் வழங்குதல் காண்க. 'மன்பதை காக்கும் தென்புலங் காவல்' (சிலப் : 20. 76). தமிழினப் பற்றுக் கொள்ளுதல் வேண்டு மென்பது. தெய்வம் - மேன்மை; தன் முன்னோரின் பெருமை; தன் முன்னோரின் பெயர் விளங்கச் செய்தல். விருந்தினர் - புதியவர். 10 ஆம் அதிகாரம் பார்க்க. தன் உடலையும், ஒழுக்கத்தையும் போற்றுதலும், முன்னோர் பெயர் விளங்கச் செய்தலும் இல் வாழ்வான் கடமையாகும். ஆங்கு - அசை. (3) 44. பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்ச லெஞ்ஞான்று மில். பழி அஞ்சி - பிசினன் என உலகம் பழிக்கும் பழியை அஞ்சி, பாத்து ஊண் உடைத்தாயின் - பிறர்க்குப் பங்கிட்டு உண்ணுவதை உடையதாயின், வாழ்க்கை வழி எஞ்ஞான்றும் எஞ்சல் இல் - இல் வாழ்க்கை நெறி எப்போதும் குறைதல் இல்லை. பிசினன் - உலோபி. வாழ்க்கை வழி எஞ்சல் - வாழ்க்கை நடத்தற்கு வழியாகிய செல்வம் குறைதல். பிறர்க்குக் கொடுத்து வாழும் இல்வாழ்வான் செல்வம் குறையாது. குறையாமைக்குக் காரணம் பிறர் உதவுவது ஆகும். (4) 45. அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை பண்பும் பயனு மது. இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - இல் வாழ்க்கையானது யாவரிடத்தும் அன்பு செய்தலையும், அறஞ் செய்தலையும் உடையதாயின், அது பண்பும் பயனும் - அதுவே இல்வாழ்க்கையின் தன்மையும் பயனுமாகும். அன்பும் அறனும் உடையதே சிறந்த இல்வாழ்க்கையாகும். (5) 46. அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன். அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் - ஒருவன் நல்வழியில் குடும்பம் நடத்துவானாயின், புறத்து ஆற்றில் போய்ப் பெறுவது எவன் - அவன் வேறுவழிகளில் போய் அடைவது ஒன்று மில்லை. நல்வழியில் நடத்தும் குடும்ப வாழ்க்கையைவிடச் சிறந்தது வேறு இல்லை. (6) 47. இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான் முயல்வாரு ளெல்லாந் தலை. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் - நல்ல முறையில் குடும்பம் நடத்திவருபவன், முயல்வாருள் எல்லாம் தலை - முயற்சியுடன் வாழ்வார் யாவரினும் மேம் பட்டவனாவான். முயற்சியுடன் வாழ்தல் - மேன்மேலும் பொருளீட்டி வாழ்தல். நல்லமுறையில் குடும்பம் நடத்துபவனே சிறந்த வனாவான். (7) 48. ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை யுடைத்து. ஆற்றின் ஒழுக்கி - பிறரையும் நல்ல வழியில் நடக்கச் செய்து, அறன் ஒழுக்கா இல்வாழ்க்கை - தானும் தன் ஒழுக்கத்தில் தவறாது வாழ்வான் இல்வாழ்க்கை யானது, நோற்பாரில் நோன்மை உடைத்து - தவம் செய்வோர் நிலையைக்காட்டிலும் வலியுடையது. நோன்மை - வலிமை. தவம் செய்வோர் தமக்கு மட்டும் பயனுடையார்; இவர் பிறர்க்கும் பயன்பட வாழ்தலால், இல் வாழ்க்கை தவத்தைவிட வலியுடையதாயிற்று. பிறர்க்குப் பயன் பட வாழும் இல்வாழ்க்கையே சிறந்தது. (8) 49. அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை; யஃதும் பிறன்பழிப்ப தில்லாயி னன்று. அறன் எனப்பட்டது இல்வாழ்க்கையே - அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது இல்வாழ்க்கையே; அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று - அவ்வில்வாழ்க்கையும் வேறொரு வனால் பழிக்கப்படுவ தில்லையாயின் நல்லதாகும். பிறரால் பழிக்கப்படாது நல்லவழியில் நடக்கும் இல் வாழ்க்கையே பெரியோரால் அறம் எனச் சிறப்பித்துக் கூறப்படும். ஒருவரும் பழிக்கக்கூடா தென்பார், 'பிறன்' என ஒருமையால் கூறினார். பிறர் பழிக்காதபடி குடும்பம் நடத்த வேண்டும். (9) 50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - உலகில் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துபவன், வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - வானுலகில் வாழும் தேவர் களைப் போலச் சிறப்பாக மதிக்கப் படுவான். தேவர்கள் யாரென்பதை முகவுரையில் காண்க. நல்ல முறையில் குடும்பம் நடத்துபவன் நன்கு மதிக்கப்படுவான். (10) 6. வாழ்க்கைத்துணை நலம் வாழ்க்கைத்துணை - மனைவி. நலம் - தன்மை. மனைவியின் தன்மை கூறுதல், முன்னதிகாரத்தில் கணவன் தன்மை கூறப்பட்டது. 51. மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. மனைத்தக்க மாண்பு உடையள்ஆகி - மனையறத் திற்குத் தக்க நற்குண நற்செய்கை உடையளாகி, தன்கொண்டான் வளத்தக்காள்- தன்னை மனைவியாகக் கொண்டவனது வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்பவளே, வாழ்க்கைத் துணை - நல்ல மனைவியாவாள். மனை - மனையறம் - இல்லறம். நற்குணம் - சுற்றத்தார், விருந்தினர் முதலியோரிடம் கொள்ளும் அன்பு முதலியன. நற் செய்கை - இல்லறம் நடத்தும் திறமை முதலியன - மாண்பும், வளத் தக்க நிலையும் ஆண்பாலுக்கும் பொருந்தும். இவ்வதி காரத்தையே இருவர்க்கும் கொள்க. நற்குண நற்செய்கை யுடையவளாய், வரவறிந்து செலவு செய்பவளே நல்ல மனைவி யாவாள். (1) 52. மனைமாட்சி யில்லாள்கண் ணில்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினு மில். இல்லாள்கண் மனைமாட்சி இல்லாயின் - ஒருவன் மனைவியிடத்து இல்லறத்துக்கு வேண்டிய நல்லொழுக்கம் இல்லையாயின், வாழ்க்கை எனை மாட்சித்து ஆயினும் இல் - அவ்வில் வாழ்க்கை எவ்வளவு பெருமையுடையதாயினும் உடையதன்று. பெருமை - செல்வப் பெருக்கு முதலியன. நல்ல மனைவியை இல்லாதான் குடும்பம் எவ்வளவு செல்வாக்கு டையதாயினும் பிறர் மதிக்கமாட்டார். (2) 53. இல்லதெ னில்லவன் மாண்பானா லுள்ளதென் இல்லவள் மாணாக் கடை. இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் - மனைவி நற்குண நற்செய்கை உடையவளானால் ஒருவனுக்கு இல்லாதது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என் - மனைவி நற்குண நற் செய்கை இல்லாதவளானால் அவனுக்கு உள்ளது யாது? ஒன்று மில்லை. நல்ல மனைவி வாய்க்கப் பெறாதவனுக்கு என்னிருந்தும் இல்லாமையே யாகும். நாளும் இருவரும் கையுழைத்துக் கஞ்சி குடித்து வந்தாலும், நல்ல மனைவியை உடையவன் இன்புற்று வாழ்வான். (3) 54. பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின். கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - கற்பு என்னும் மனவுறுதி உண்டானால், பெண்ணின் பெருந்தக்க யாவுள -மனைவியைவிட மேம்பட்ட பொருள் ஒருவனுக்கு எவை உள்ளன? ஒன்றுமில்லை. கற்பு - புதிய கூட்டுறவான கணவனே இனி உயிர்த் துணைவன் எனவும், கணவனோடு கூடி வாழும் இல்வாழ்க் கையே சிறந்த தெனவும் கொள்ளும் மனவுறுதி. கற்பு - இல்லறம்; இல்லறத்தில் மனவுறுதி. இதனையே 'கற்பென்னும் திண்மை' என்றார். இம் மனவுறுதி ஆண் பெண் இருவர்க்கும் உண்டானால்தான் அவர்கள் என்றும் இணை பிரியாமல் இன்ப வாழ்வு வாழ்வார்கள். புதிய உறவிலும், புதிய வாழ்விலும் ஏற்படும் உறுதியான ஒருமனப்பாடே கற்பு எனப்படும். இத்திண்மை ஆணுக்குண்டாயின், ஆணைவிடச் சிறந்த பொருள் பெண்ணுக்கில்லை என்பதுங் கொள்க. (4) 55. தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை. தெய்வம் தொழாள் - தங் கணவனைவிட மேலானதென ஒன்றை எண்ணாள், கொழுநன் தொழுது எழுவாள் - தன் கணவனையே எண்ணி அவ்வெண்ணம் மிகுவாள், பெய் என மழை பெய்யும் - பெய்யென்று கூறினால் மழை பெய்யும். தொழுதல் - எப்போதும் கணவனையே நினைத்திருத்தல். எழுதல் - மிகுதல், வளர்தல். அந்நினைப்பு மேன்மேலும் வளர்ந்து, 'தான் அவன்' என்னும் இரண்டற்று, 'நாம்' என ஒன்றாதல். அவள் மனவுறுதியின் சிறப்புக் கூறுவார், வாழ்க்கைக்கு மிகமிக இன்றி யமையாத தொன்றான 'மழை பெய்யெனப் பெய்யும்' என்றார். இது கணவனுக்கும் பொருந்தும். தெய்வம் - மேலானது, மேன்மை யானது. கணவனைத் தானாகவே எண்ணுபவளே சிறந்த மனைவி யாவாள். அத்தகைய மனைவி தன் கணவனுக்கு, பெய் எனப் பெய்யும் மழை - மக்கள் பெய் என்னும் பருவ காலத்தே பெய்யும் மழை போல்வாள் என்றுமாம். (5) 56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். தன்காத்து - மனவுறுதியால் தன்னைக் காத்து, தன் கொண்டான் பேணி - கணவனைப் போற்றி, தகை சான்ற சொல் காத்து - தகுதி மிக்க புகழையும் காத்து, சோர்வு இலாள் பெண் -மனச்சோர்வு இல்லாதவளே நல்ல மனைவியாவாள். கணவனைப் பேணல் - காலத்துக் கேற்ற உணவூட்டியும், அன்பூட்டியும், இன்பூட்டியும் பேணல். புகழ் - 'நல்ல குடும்பம்' என்னும் புகழ். சோர்வு இன்மை - வறுமைகண்டு மனந்தளராமை. மனவுறுதி யுடையவளும், கணவனையும், புகழையும் காப்பவளும், மனச்சோர்விலாதவளுமே நல்ல மனைவியாவாள். (6) 57. சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை. சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - பெண்களை வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளே வைத்துக் காப்பதால் பயனில்லை, மகளிர் நிறை காக்கும் காப்பே தலை - பெண்கள் மனவுறுதியால் தங்களைக் காத்துக்கொள்ளும் காவலே சிறந்தது. பெண்களுக்கு உறுதியான மன வொருமைப் பாடு வேண்டும். (7) 58. பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழு முலகு. பெற்றார்ப் பெறின் - கணவரை மனவுறுதி உடைய ராகப் பெற்றால், புத்தேளிர் வாழும் உலகு - தேவருலகில், பெண்டிர் பெருஞ் சிறப்புப் பெறுவர் - பெண்கள் பெரும் சிறப்பை அடைவர். பெற்றார் - பெண்களை மனைவியராகப் பெற்றவர், கணவர். கணவரும் மனவுறுதியுடையராகப் பெற்றால், ஒருமனப் பட்டு உயரிய வாழ்க்கை நடத்தி அயல் நாடரும் புகழும் பெருஞ் சிறப்பினைப் பெறுவர் என்பதாம். புத்தேளிர் இன்னார் என்பதை, முகவுரையில் காண்க. கணவர் மனமொத்து நடக்கும்படி நடந்து கொள்வது பெண்கள் கடமையாகும். (8) 59. புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன் ஏறுபோற் பீடு நடை. புகழ் புரிந்து இல் இலோர்க்கு - புகழை விரும்பிய மனைவியை அடையாதவர்க்கு, இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை இல்லை - தம்மைப் பழிப்பார்முன் அரியேறுபோல நடக்கும் பெருமித நடை இல்லை. அரியேறு - சிங்கம். பீடு - பெருமை. பீடுநடை - தலை நிமிர்ந்து நடக்கும் நடை. பிறர் பழிக்கும்போது எதிர்த்துப் பேச முடியாது தலை குனிவான் என்பதாம். நல்ல மனைவியை இல்லாதவன் நாலுபேர்க்கு நடுவில் மதிக்கப்படான். (9) 60. மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. மனைமாட்சி மங்கலம் என்ப - மனைவியின் நல் லொழுக்கத்தை மனையறத்திற்கு மங்கலம் என்பர், நல் மக்கள் பேறு அதன் நன்கலம் என்ப - நல்ல மக்களைப் பெறுதலை அம் மனை யறத்தின் அணிகலம் என்பர் அறிவுடையோர். மங்கலம் - பொலிவு. அணிகலம் - அழகு. 'நன்மக்கட் பேறு' அடுத்த அதிகாரத்திற்குத் தோற்றுவாய். நல்ல மனைவியும், நன் மக்களும் இல்வாழ்க்கைக்குப் பொலிவும், அழகும் ஆவர். (10) 7. மக்கட்பேறு நன்மக்கட் பேற்றின் சிறப்புக் கூறுதல். இது இல் வாழ்க் கையின் பயனும் உலகியல் நடத்தற்குக் காரணமு மாகும். நன்மக்களாக வளர்த்தல் இதன் பயன். 61. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த மக்கட்பே றல்ல பிற. பெறும் அவற்றுள் - நாம் பெறும் பேறுகளுள், அறிவு அறிந்த மக்கள் பேறு அல்ல பிற - அறிவுடைய மக்கட் பேற்றை விடச் சிறந்த பேறு வேறொன்றிருப்பதாக, யாம் அறிவதில்லை - நாம் கண்ட தில்லை. பேறு - அடையும் பயன். கல்வி, செல்வம் எல்லாம் பேறுகளே யாகும். நன்மக்கட் பேறே சிறந்த பேறாகும். (1) 62. எழுபிறப்புத் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். பழி பிறங்காப் பண்புடை மக்கள் பெறின் - குற்றமற்ற நன் மக்களைப் பெற்றால், எழுபிறப்பும் தீயவை தீண்டா - எழு தலை முறைகளிலும் தீமைகள் சேரா. பழி பிறங்கா - பழி பொருந்தாத. பழி - பிறர்பழிக்கத் தக்க கெட்ட குணம் செயல். பண்பு - நற்குண நற்செயல். ஒருவன் தன்மை ஏழு தலைமுறை வரையிலும் இருக்கும் என்னும் அறிவிய லறிஞர் ஆராய்ச்சி முடிவு இங்கு நோக்கற் பாலது. நல்லோர் பிறந்த குடி பல தலைமுறை மதிக்கப் படுதலை அறிக. ஏழ் என்னும் எண்ணுப் பெயர் பல என்னும் பொருளது. நன்மக்கள் பிறந்த குடும்பம் பல தலைமுறை மதிப்புப் பெறும். (2) 63. தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொருள் தந்தம் வினையான் வரும். அவர் பொருள் - மக்கள் தேடும் பொருள், தம்தம் வினையான் வரும் - அவரவர் தொழிலுடனே பெற்றோர்பால் வரும். ஆதலால், தம் மக்கள் பொருள் என்ப - தம் மக்களை தம் பொருள் என்பர் அறிவுடையோர். மக்கள் தேடும் பொருளும்,அவர் செய்யும் தொழிலும் பெற்றோரையே சேர்தலால், மக்களைத் தம் பொருள் என்பர். மக்கள் எனும் பன்மைக்கேற்பத் 'தந்தம்' எனப் பன்மை கூறினார். தம்தம் வினை -தமது தமது தொழில்; அவரவரது தொழில். வினையான் - வினையொடு. ஒடு - உடனிகழ்ச்சி. வினையும் பொருளும் வரும். வருதல் - சேர்தல். பெற்றோர்க்கு மக்களே பெருஞ்செல்வம். (3) 64. அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள் சிறுகை யளாவிய கூழ். தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தம் குழந்தைகள் சிறிய கைகளால் கலக்கிய கூழ், அமிழ்தினும் ஆற்ற இனிதே - பாற் சோற்றைவிட மிக இனிமையாக இருக்கும். கூழ் - மாவால் காய்ச்சிய கூழ். அமிழ்து - பாற்சோறு (பாயசம்). (4) 65. மக்கள்மெய் தீண்ட லுடற்கின்பம் மற்றவர் சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு. மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் - மக்கள் தமது உடம்பைத் தீண்டுதல் உடலுக்கு இன்பம் தரும், அவர் சொல் கேட்டல் செவிக்கு இன்பம் - மக்கள் மழலைச் சொல்லைக் கேட்டல் காதுக்கு இன்பந் தரும். (5) 66. குழலினிதி யாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொற் கேளா தவர். தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - தம் மக்களுடைய மழலைச் சொல்லைக் கேளாதவர், குழல் இனிது யாழ் இனிது என்ப - குழலின் இசை, யாழின் இசை இனிது என்பர். மக்களின் சொற்களே பெற்றோரை மகிழ்விக்கும் இன்னிசை யாகும். குழந்தைகளின் குதலைச் சொல் பெற்றோர்க்கு அவ்வளவு இன்பந் தரும்! இனிது + யாழ் -இனிதி யாழ்; குற்றியலிகரம். (6) 67. தந்தை மகற்காற்றுநன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல். தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை மகனுக்குச் செய்யும் உதவியானது, அவையத்து முந்தி இருப்பச் செயல் - அவனைப் பெரியோர் அவையின்கண் யாவர்க்கும் முன்பு தலைவனாக வீற்றிருக்கச் செய்வதே. ஒருமைபற்றி ஆண்பாலால் கூறினார்; பெண்பாற்கும் கொள்க. மக்களைக்கல்வியில் சிறந்தவராக்குவதே பெற்றோர் மக்களுக்குச் செய்யும் உதவியாகும்; ஏனை இடம், பொருள், ஏவல் முதலியன மட்டும் அல்ல. (7) 68. தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லா மினிது. தம்மில் தம் மக்கள் அறிவுடைமை - பெற்றோராகிய தம்மை விடத் தம் மக்கள் அறிவுடையவராய் இருத்தல், மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது - இப் பெரிய உலகில் வாழும் மக்கள் யாவர்க்கும் இன்பந்தரும். மன்னுயிர் என்றது அப் பெற்றோரை. தம்மைவிடத் தம் மக்கள் அறிவுடையவராய் இருத்தல் பெற்றோர்க்கு இன்பந் தரும். படியாதவரும் தம் மக்களைடப் படிப்பித்தல் காண்க. (8) 69. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச் சான்றோ னெனக்கேட்ட தாய். தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் - தன் மகனை அறிவில் நிறைந்தோனென்று அறிவுடையோரால் சொல்லக் கேட்ட தாய், ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும் - அவனைப் பெற்ற பொழுதைவிடப் பெரிதும் மகிழ்வாள். தந்தையைவிடத் தாயே மக்கள் பெருமை கண்டு மிகவும் மகிழ்வாளாதலால் 'தாய்' என்றார். தந்தை மகிழ்தலுங் கொள்க. ஒருமைபற்றி 'மகன்'என்றார். மகளுங் கொள்க. அறிவுடை யோரால் உங்கள் மகன் சிறந்த அறிவுடையவன் என்று சொல்லக் கேட்ட பெற்றோர் மிக மகிழ்வர். (9) 70. மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை என்னோற்றான் கொல்லெனுஞ் சொல். மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி - மகன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறாவது, இவன் தந்தை என் நோற்றான் கொல் என்னும் சொல் - இவனைப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன நன்மை செய்தானோ? என்று அறிவுடையோர் புகழ்ந்து சொல்லும் சொல்லேயாகும். முன் 'தாய் பெரிதுவக்கும்' என்றார். இதில் 'தந்தை என் நோற்றான் கொல்'என்றார். நோற்றல் - செய்தல். சிறந்த அறிவொழுக்க முடையாரைக் கண்டால், 'இவரைப் பெறுவதற்கு இவர் பெற்றோர் என்ன நன்மை செய்தாரோ' என்னும் வழக்கு இன்றும் உளது. சிறந்த அறிவொழுக்க முடையவராதலே தம்மைக் கல்வியறிவுடையவ ராக்கிய பெற்றோர்க்கு மக்கள் செய்யும் எதிருதவியாகும். அவையத்து முந்தியிருப்பச் செய்தமைக்குச் (67) செய்யும் உதவி இது. (10) 8. அன்புடைமை நமக்குத் தொடர்புடையாரிடத்துக் கொள்ளும் பற்று, அல்லது காதல் அன்பு எனப்படும். இவ்வன்பே ஒருவரோ டொருவர் தொடர் பறாமல் பிணித்து வைத்திருக்கும் பிணிப் பாகும். பிணிப்பு - கட்டு. பின்னர்க் கூறும் (25) அருள் என்பது - வருந்தும் உயிர்கட்கெல்லாம் தொடர்பு பற்றாது இயல்பாகவே இரங்குவதாகும். 757 ஆம் குறளுரை பார்க்க. 71. அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர் புன்கணீர் பூசல் தரும். அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ - அன்பை அடைத்து வைக்கும் தாழ்ப்பாளும் உண்டோ? ஆர்வலர் புன் கண் நீர் பூசல் தரும் - தம் அன்பரது துன்பங்கண்ட விடத்து, அன்புடையார் கண்களிலிருந்து ஒழுகுகின்ற புல்லிய கண்ணீரே அவரிடத்துள்ள அன்பைப் பலரு மறியச் செய்யும். ஆர்வலர் - அன்பர். பூசல் - பலரறிதல். அன்பைப் பிறரறி யாமல் அடைத்துவைக்க முடியாது. (1) 72. அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையார் என்பு முரியர் பிறர்க்கு. அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பில்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரியராவர்; அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர் - அன்புடையர் அப்பொருள்களே யன்றி உடம்பினையும் பிறர்க்கு உரியராக உடையர். எல்லாம் - இடம், பொருள் முதலிய செல்வம். என்பு - உடம்பு. உடம்பு உரியராவது - தம் அன்பருக்காக உயிர் விடுதல். வண்டார் குழலி, கோப்பெருந்தேவி முதலிய பழந்தமிழ் மகளிர் தம்மால் அன்பு செய்யப்பட்ட கணவன்மார் (இராவணன், நெடுஞ்செழியன்) இறந்ததும் தாமும் இறந்ததும், கணவருடன் மகளிர் உடன்கட்டை ஏறினதும், கோப்பெருஞ்சோழன் இறக்கப் பிசிராந்தையார் உயிர் விட்டதும் இதற்கு எடுத்துக் காட்டுக் களாகும். (2) 73. அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு. ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - அருமையான நம் உயிர்கட்கு உடம்போடு பொருந்திய நட்பை, அன்போடு இயைந்த வழக்கு என்ப - அன்போடு பொருந்திய செயல் என்பர் அறிவுடையோர். உயிருக்கும் உடம்புக்கும் உண்டான அன்பே அவை ஒன்று பட்டு வாழ்வதற்குக் காரணமாகும். (3) 74. அன்பீனு மார்வ முடைமை யதுவீனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு. அன்பு ஆர்வம் உடைமை ஈனும் - நாம் பிறரிடம் காட்டும் அன்பு அவர்க்கு நம்மீது விருப்பத்தை உண்டு பண்ணும், அது நண்பு என்னும் நாடாச் சிறப்பு ஈனும் - அவ்விருப்பம் நட்பு என்னும் மிக்க சிறப்பினைத் தரும். அன்பே நட்புக்குக் காரண மாகும். (4) 75. அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத் தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு. வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு - உலகத்தில் இன்பம் துய்ப்பவர்கள் பெறும் சிறப்பினை, அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப - பிறரிடம் அன்புடையராய்ப் பொருந்தியிருந்த செயல் என்பர். குடும்பத்தாரிடத்தும், பிறரிடத்தும் அன்புடைய வர்களே வாழ்க்கையில் இன்புறுவதோடு, பெருஞ் சிறப்பினையும் பெறுவர். (5) 76. அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார் மறத்திற்கு மஃதே துணை. அறியார் அறத்திற்கே அன்பு சார்பு என்ப - உண்மை யுணராதவர் நன்மையைச் செய்வதற்கே அன்பு துணையாகும் என்பர், மறத்திற்கும் அஃதே துணை - தீமையைப் போக்கு வதற்கும் அவ்வன்பே துணையாகும். பகைவரையும் அன்பினால் நண்பராக்கலா மாகையால், 'மறத்திற்கும் அஃதே துணை' என்றார். தீயரையும் அன்பினால் நல்ல வராக்கலாம். அன்பினால் நன்மையை ஆக்கலாம், தீமையைப் போக்கலாம். (6) 77. என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை யறம். என்பு இலதனை வெயில்போல - எலும்பில்லாத புழுப் பூச்சிகளை வெயில் சுடுவதுபோல, அன்பு இலதனை அறம் காயும் - அன்பில்லாதவர்களை அறநெறி சுடும். மக்கட் பண்பாகிய அன்பின் மேன்மையைக் குறிக்க மக்களை 'அன்பிலதனை' என அஃறிணையாற் கூறினார். அறம் காய்தலாவது - அன்பிலாரை உலகோர் தம்மோடு சேர்த்துக் கொள்ளாது புறம்பாக ஒதுக்குதல். அதாவது அன்பிலார்க்கு உதவாததோடு, அவரை வெறுத் தொதுக்குவர் என்பதாம். (7) 78. அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை - உள்ளன் பில்லாதவர் வாழும் வாழ்க்கையானது, வன்பால்கண் வற்றல் மரம் தளிர்த்து அற்று - வலிய நிலத்தின்கண் வறண்ட மரம் தளிர்த்தாற் போன்றது. அகம் - நெஞ்சு. வன்பால் - வன்னிலம் - நீர்வள மற்ற கெட்டி யான மேட்டு நிலம். வறண்ட மரம் தளிர்க்காதது போல, அன்பில் லாரின் வாழ்க்கையும் இனிது நடைபெறாது என்பதாம். அன்பே நல்வாழ்வுக்குக் காரணம். (8) 79. புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு. யாக்கை அகத்து உறுப்பு அன்பு இல் அவர்க்கு - உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு, புறத்து உறுப்பெல்லாம் எவன் செய்யும் - வெளியுறுப்புக்க ளெல்லாம் பிறர்க்கு என்ன நன்மை செய்யும்? ஒன்றும் செய்யா. புறத்துறுப்பு - கை, கால் முதலியன. அகத்து அன்பில்லை யேல் பிறர் துன்பங் கண்ட விடத்துப் புறத்துறுப்புக்கள் யாதொரு உதவியும் செய்ய முயலா. (9) 80. அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க் கென்புதோல் போர்த்த வுடம்பு. அன்பின் வழியது உயிர் நிலை - அன்போடு பொருந்திய உடம்பே உயிர் நிலைபெற்ற உடம்பாகும், அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த - அவ்வன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்புகள் எலும்பைத் தோலால் மூடியவையேயாகும். உயிர்நிலை - உடம்பு. அன்பே உயிர். (10) 9. இன்சொல் பிறரிடம் இனிமையாகப் பேசுதல். 81. இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். ஈரம் அளைஇ - அன்புகலந்து, படிறுஇலவாம் - வஞ்சனை இல்லாது, செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் - அறத்தினை யுணர்ந்தவர் வாயிலிருந்து வரும் சொல்லே, இன்சொல் - இன் சொல்லாகும். ஈரம் - அன்பு. அளைஇ - அளவி - கலந்து. இன் சொலால்; ஆல் - அசை. அன்போடு, வஞ்சனையில்லாமல் உண்மை யாகப் பேசுவதே இன்சொல்லாகும். (1) 82. அகனமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந் தின்சொல னாகப் பெறின். முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப்பெறின் - முகம் இனியனாய் இன்சொல்லும் சொல்வானானால், அகன் அமர்ந்து ஈதலின் நன்றே - மனம் உவந்து ஒருவர்க்கு ஒன்றைக் கொடுப்பதை விட நல்லது. கொடையினும் மகிழ்விப்பது இன்சொல்லே யாகும். (2) 83. முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானாம் இன்சொ லினதே யறம். முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - ஒருவரைக் கண்ட பொழுதே முகமலர்ந்து இனிமையாகப் பார்த்து, அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் - மனத்தொடு பொருந்திய இனிய சொற்களைச் சொல்லுவதே அறமாகும். இன்சொல்லே ஒருவர்க்குச் செய்யும் முதலறமாகும். (3) 84. துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டும் இன்புறூஉ மின்சொ லவர்க்கு. யார் மாட்டும் இன்புறும் இன்சொல் அவர்க்கு - எவரி டத்தும் இன்பந்தரும் இன்சொல்லைச் சொல்லுபவருக்கு, துன்புறும் துவ்வாமை இல்லாகும் - துன்பத்தைத் தரும் வறுமை இல்லை யாகும். துவ்வாமை - உண்மை, உண்ணும் உணவின்மை - வறுமை. இன்சொல் சொல்வார்க்கு யாவரும் நண்பராவ ராகையால், எண்ணியவை இனிது முடியும். ஆகவே, வறுமை இல்லாகும். (4) 85. பணிவுடைய னின்சொல னாத லொருவற் கணியல்ல மற்றுப் பிற. பணிவு உடையன் இன்சொல்லன் ஆதல் ஒருவற்கு அணி - தாழ்மையுடையவனாய் இன்சொல் சொல்லுவதே ஒருவனுக்கு அழகாகும், பிற அல்ல - மணி பொன்னணி யெல்லாம் அழகல்ல. இன்சொல்லே ஒருவனுக்குச் சிறந்த அழகாகும். மற்று - அசை. (5) 86. அல்லவை தேய வறம்பெருகும் நல்லவை நாடி யினிய சொலின். நல்லவை நாடி இனிய சொலின் - நன்மையை ஆராய்ந்து இன்சொல் சொல்லின், அல்லவை தேய அறம் பெருகும் - தீமை கெட அறம் வளரும். யாவரும் இன்சொல்லே சொல்லின் உலகில் தீமை கெட நன்மை பெருகும். (6) 87. நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று பண்பிற் றவைப்பிரியாச் சொல். பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - கேட் போர்க்குப் பொருட்பயனைத் தந்து இனிய குணத்தினின்றும் நீங்காத சொல், நயன் ஈன்று நன்றி பயக்கும் - இன்பத்தைத் தந்து நன்மையைக் கொடுக்கும். இன்சொல், எல்லா நன்மைகளையும் தரும். (7) 88. சிறுமையுள் நீங்கிய வின்சொல் மறுமையும் இம்மையு மின்பந் தரும். சிறுமையுள் நீங்கிய இன்சொல் - புன்மையினின்றும் நீங்கிய இன்சொற்கள், இம்மையும் மறுமையும் இன்பந் தரும் - இப் போதும் பின்பும் இன்பந்தரும் சிறுமை - கீழ்மை, இழிவு. நாம் உயிரோடு இருக்கும் நிலை - இம்மை, இம்மை வாழ்வு எனப்படும். நாம் இறந்த பிறகு நம்மைப் பற்றிஇங்கு பேசப்படுவது - மறுமை, மறுமை வாழ்வு எனப்படும். வள்ளுவர் மறுமையில் உள்ளனர். இன்சொல் எப்போதும் இன்பந் தரும். (8) 89. இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ வன்சொல் வழங்கு வது. இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இனிய சொற்கள் தனக்கு இன்பந் தருதலை அறிபவன், வன்சொல் வழங்குவது எவன் கொல் - கடுஞ்சொல் சொல்வது என் கருதியோ? பிறர் கூறும் இன்சொல் நமக்கு இன்பந் தருதலைக் கொண்டு நாமும் பிறரிடம் இனிமையாகப் பேசவேண்டும். (9) 90. இனிய வுளவாக வின்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. இனிய உளவாக இன்னாத கூறல் - இன்சொற்கள் தன்னிடத்தே இருக்க அவற்றைக் கூறாமல் ஒருவன் கடுஞ் சொற்களைக் கூறுதல், கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - சுவையுள்ள பழங்கள் இருக்க அவற்றைவிட்டுச் சுவையில்லாத காய்களைத் தின்ன விரும்புவதை ஒக்கும். இன்சொல் இருக்க வன்சொல் கூறுதல், கனி இருக்கக் காயை விரும்புதலோடொக்கும். (10) 10. விருந்தோம்பல் விருந்து - புதுமை. அது ஆகுபெயராய் விருந்தினரை உணர்த் திற்று. விருந்தினர் - புதியவர். நட்பும் சுற்றமும் அல்லாது புதிதாக நம் வீட்டுக்கு வருபவர். ஓம்பல் - அன்புடன் வரவேற்று உணவிடுதல். 91. இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - வீட்டின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழ்வதெல்லாம், விருந்து ஓம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு - வந்த விருந்தினரைப் போற்றி அவர்க்கு உதவி செய்வதற்காகவே. ஓம்புதல் - பாதுகாத்தல். வேளாண்மை - உதவி. விருந்தினரைப் போற்றுதலே இல்வாழ்வாரின் முதற்கடமை யாகும். (1) 92. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. விருந்து புறத்ததாத் தான் உண்டல் - தன் வீடுதேடி வந்த விருந்தினர் திண்ணையில் இருக்கத் தான்மட்டும் உண்ணுவது, சாவா மருந்து எனினும் வேண்டல் பாற்று அன்று - சாவாமைக்கு உண்ணும் மருந்து எனினும் அது விரும்பத் தக்கதன்று. வீடுதேடி வந்த விருந்தினரை விட்டு நாம் மட்டும் உண்ணக் கூடாது. உண்டிக் கழகு விருந்தோடுண்டல். (2) 93. வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுத லின்று. வைகலும் வருவிருந்து ஓம்புவான் வாழ்க்கை - நாடோறும் வரும் விருந்தினர்களைப் போற்றுபவன் வாழ்க்கை யானது, பருவந்து பாழ்படுதல் இன்று - வறுமையால் துன்புற்றுக் கெடுதல் இல்லை. பருவருதல் - துன்புறுதல். (3) 94. அகனமர்ந்து செய்யா ளுறையும் முகனமர்ந்து நல்விருந் தோம்புவா னில். முகன் அமர்ந்து நல் விருந்து ஓம்புவான் இல் - முகம் இனியனாய் நன்றாக விருந்தினரைப் போற்றுபவன் வீட்டில், செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - செய்யவள் மன மகிழ்ந்து வாழ்வாள். செய்யாள் என்றது செல்வத்தை. முகவுரை பார்க்க. விருந்தினரை வரவேற்றுப் போற்றுவார்க்குப் பலரும் உதவு வதால் செல்வம் குறையாது. (4) 95. வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - வந்த விருந்தினரை உண்பித்து மிகுந்ததைத் (மிச்சம்) தான் உண்பவனது நிலத்தில், வித்தும் இடல்வேண்டும் கொல் - அவன் தானே சென்று விதைக்கவும் வேண்டுமோ? வேண்டியதில்லை. பலரும் உதவுவர். (5) 96. செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு. செல்விருந்து ஓம்பி - வந்த விருந்தினரை உண்பித்து, வரு விருந்து பார்த்திருப்பான் - வரும் விருந்தினரை எதிர் நோக்கி இருப்பவன், வானத்தவர்க்கு நல்விருந்து - வானோர்க்கும் நல்ல விருந்தினன் ஆவான். செல்விருந்து - வீட்டுக்குச்சென்ற, அதாவது வந்த விருந்து. வானோர் -அயல்நாடர். முகவுரை பார்க்க. நல்ல விருந்தினன் ஆவான் - நன்கு போற்றப் படுபவன் ஆவான். எப்போதும் விருந்தோம்புவான் அயல்நாடராலும் போற்றப் படுவான். 'வானத்தவர்க்கும்' என்னும் இறந்தது தழுவிய எச்சவும்மை தொக்கது. (6) 97. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். வேள்விப் பயன் இனைத்துணைத்து என்பது ஒன்றில்லை - விருந்தோம்பலின் பயன் இன்ன அளவினது என்று கூறும் ஓர் அளவினை உடையதன்று, விருந்தின் துணைத்துணை - அவ் விருந்தினரது தகுதியின் அளவே அதற்கு அளவாகும். வேள்வி - உதவி. விருந்தினர் உவக்கும் உவகையின் அளவே விருந்தின் பயனாகும். (7) 98. பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் - விருந்தினரைப் போற்றி விருந்தோம்புதலைச் செய்யாதவர், பரிந்து ஓம்பி பற்றற்றேம் என்பர் - தாம் ஈட்டிய பொருளை வருந்திக் காத்து அப்பொருள் அழிந்த போது பொருளாசை அற்றேம் என்பர். பயனின்றிச் செல்வத்தை யிழந்து வருந்துவதால் பயனில்லை என்பதாம். (8) 99. உடைமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா மடமை மடவார்க ணுண்டு. உடைமையுள் இன்மை - பொருள் உள்ள காலத்து வறுமை யாவது, விருந்தோம்பல் ஓம்பா மடமை - விருந்தோம்பலைச் செய்யாத அறிவின்மையாகும், மடவார் கண் உண்டு - அது அறிவில் லாதாரிடம் உள்ளது. மடமை - அறிவின்மை. மடவார் - அறிவில்லார். விருந்தோம் பாதான் செல்வனே யாயினும் வறியவன் போன்றவனே. (9) 100. மோப்பக் குழையு மனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. அனிச்சம் மோப்பக் குழையும் - எல்லாப் பூக்களிலும் மெல்லியதாகிய அனிச்சப் பூ மோந்தால்தான் வாடும், விருந்து முகம்திரிந்து நோக்கக் குழையும் - ஆனால், விருந்தினரோ முகம் வேறுபட்டுப் பார்த்தவுடனேயே வாடிவிடுவர். அனிச்சம் - ஒருவகை நீர்ப்பூ. விருந்தினர் மிக மெல்லியர் என்பதாம். (10) 11. செய்ந்நன்றி அறிதல் பிறர் செய்த நன்மையை மறவாமை. 101. செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும் வானகமு மாற்ற லரிது. செய்யாமல் செய்த உதவிக்கு - தான் முன்பு ஓர் உதவி செய்யாதிருக்கத் தனக்கு ஒருவன் செய்த உதவிக்கு, வையகமும் வானகமும் ஆற்றல் அரிது - வையகத்தையும் வானகத்தையும் கைம்மாறாகக் கொடுக்கினும் ஒப்பாகாது. வானுலகம் இன்னதென்பதை முகவுரையில் காண்க. செய்யாமல் செய்த உதவிக்கு ஒப்பதில்லை. (1) 102. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் - தக்க காலத்தில் செய்த உதவி சிறிதாயிருப்பினும், ஞாலத்தின் மாணப் பெரிது - பயனை நோக்க உலகத்தைவிட மிகப் பெரியதாகும். உலகம் பெருமைக்கு எடுத்துக்காட்டு. அடிபட்டு மயங்கிக் கிடப்பவனுக்கு ஒரு கை தண்ணீர் உயிர் கொடுத் தலை அறிக. (2) 103. பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கின் நன்மை கடலிற் பெரிது. பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் - தனக்குப் பின்வரும் பயனை நோக்காராய்ப் பிறர்க்குச் செய்த உதவியின் மேன்மையை ஆராய்ந்து பார்க்கின், நன்மை கடலில் பெரிது - அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும். தூக்குதல் - ஆராய்தல். கடல் பெருமைக்கு எடுத்துக் காட்டு. பின்வரும் பயனை நோக்காமல் செய்த உதவியின் பயன் கடலை விடப் பெரிதாகும். (3) 104. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்றெரி வார். தினைத் துணை நன்றி செயினும் - தினையளவு உதவி செய்யினும்,பயன் தெரிவார் -அவ்வுதவியின் பயனை அறிபவர், பனைத்துணையாக் கொள்வர் - அதைப் பனையள வாகக் கொள்வர். தினை, பனை - சிறுமை, பெருமைகட்கு எடுத்துக் காட்டுக்கள். உதவியின் பயன் தெரிவார் சிறிய உதவியையும் பெரிதாகக் கொள்வர். (4) 105. உதவி வரைத்தன் றுதவி; யுதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. உதவி உதவி வரைத்தன்று - ஒருவர் செய்த உதவி அவ் வுதவியின் அளவினதன்று, உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - அவ்வுதவியைப் பெற்றவரது தன்மையின் அளவின தாகும். உதவியைப் பெற்றவர் தன்மைக்குத் தக்கவாறே உதவி சிறிது, பெரிது என மதிக்கப்படும். உதவியில் சின்ன உதவி, பெரிய உதவி என்பதில்லை. (5) 106. மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க துன்பத்துட் டுப்பாயார் நட்பு. மாசு அற்றார் கேண்மை மறவற்க - குற்றமற்றவரது நட்பை மறவற்க, துன்பத்துள் துப்பாயார் நட்பு துறவற்க- துன்பம் வந்த காலத்து உதவினாரது நட்பை விட்டுவிடற்க. மறவற்க - மறவாதீர். துறவற்க - விட்டுவிடாதீர் எதிர் மறை வியங்கோள் வினைமுற்றுக்கள். மாசற்றார் காலத்தே உதவுவ ராகையால் அதையும் உடன் கூறினார். காலத்தே உதவினவரை எப்போதும் மறக்கக் கூடாது. துப்பு - உதவி. (6) 107. எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு. தம்கண்விழுமம் துடைத்தவர் நட்பு - தமக்குற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை, எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் - அறிவாளிகள் எப்போதும் நினைப்பர். விழுமம் - துன்பம். எழுமை எழுபிறப்பு - பல தலைமுறை. 62 -ஆம் குறளுரை பார்க்க. கோவலன், பல தலைமுறைக்கு முற்பட்ட தன் முன்னோனொருவனைக் கடலினின்று கரையேற்றிக் காத்த மணிபல்லவத்து அரசியான மணிமேகலையின் நன்றியை மறவாது, தன் மகளுக்கு 'மணிமேகலை'என அவள் பெயரை இட்டமை அறிக. (7) 108. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று. நன்றி மறப்பது நன்றன்று - பிறர் செய்த உதவியை மறப்பது நல்லதன்று, நன்று அல்லது அன்றே மறப்பது நன்று - தீமையை அப்போதே மறந்து விடுவது நல்லது. பிறர் செய்த நன்மையை எப்போதும் மறக்கக் கூடாது. பிறர் செய்த தீமையை அப்போதே மறந்துவிட வேண்டும். (8) 109. கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும். கொன்று அன்ன இன்னா செயினும் - முன்பு தமக்கு உதவி செய்தவர் பின்பு கொன்றாலன்ன தீமைகள் செய்தாராயினும், அவர் செய்த ஒன்று நன்று உள்ளக் கெடும் - அவர் முன்பு செய்த ஓருதவியை நினைக்க அத்தீமைகள் அனைத்தும் கெடும். கொன்று அன்ன இன்னா - உயிருக்குக் கேடுண்டாக்கத் தக்க துன்பம். முன் உதவி செய்தார். பின் தீமைகள் பல செய்தாலும் அத் தீமைகளை அப்போதே மறந்து விட வேண்டும். தீமையை மறப்பதற்கு வழி கூறியது. (9) 110. எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் - எவ்வகைப் பட்ட அறங்களைக் கெடுத்தவர்க்கும் பின்பேனும் பிழைப்பு உண்டாகும், செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை - ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்கு எப்போதும் பிழைப்பு இல்லை. பிழைப்பு - நல்வாழ்வு. உதவி கொன்றவனை எல்லோரும் வெறுப்பதால் நல்வாழ்வு இல்லை என்றார். (10) 12. ஒழுக்கமுடைமை ஒழுக்கம் - நல்ல நடக்கை. ஒழுக்கம் உடைமை - நன்னடக்கை யுடையராய் நடந்துகொள்ளுதல். ஒழுகுதல் - ஒழுக்கம். 111. ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்கம் உயிரினு மோம்பப் படும். ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம் சிறப்பைத் தருதலால், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - அவ்வொழுக்கம் உயிரைக் காட்டிலும் பாதுகாக்கப்படும். ஒழுக்கமில்லாதவன் மதிக்கப்படாமையால், 'ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' என்றார். ஒழுக்கம் - நன்னடக்கை. (1) 112. பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை. பரிந்து ஓம்பி ஒழுக்கம் காக்க - வருந்திப் போற்றி ஒழுக்கத்தைக் காக்கவேண்டும், தெரிந்து ஓம்பித் தேரினும் அஃதே துணை - அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து போற்றி முடிவு காணினும் அவ்வொழுக்கமே ஒருவனுக்கு உற்ற துணையாகும். பரிந்து ஓம்பிக் காத்தல் - எப்படியேனும் காத்தல். ஒழுக்கமே நல்வாழ்வுக்கு ஏற்ற துணையாகும். (2) 113. ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். ஒழுக்கம் உடைமை குடிமை - நல்லொழுக்கம் உடைமையே உயர்குடித் தன்மையாகும், இழுக்கம் இழிந்த பிறப்பாய்விடும் - ஒழுக்கமின்மை தாழ்குடித்தன்மை யாகிவிடும். குடிமை - உயர்குடித்தன்மை. இழிந்த பிறப்பு - தாழ்குடித் தன்மை. இழுக்கம் - தீய ஒழுக்கம். நல்லொழுக்க மின்மையே தீய ஒழுக்கமாகும். நடக்கையைக் கொண்டே ஒருவன் உயர்வு தாழ்வு மதிக்கப்படும். (3) 114. மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். பார்ப்பான் மறப்பினும் ஓத்துக் கொளலாகும் - நூல்களை ஆராய்ந்து பார்ப்பவன் அவற்றை மறப்பினும் மறுபடியும் கற்றுத் தெரிந்து கொள்ளலாம், பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் - ஆனால், மக்கட் பிறப்புக்குரிய உயரிய ஒழுக்கம் குறையுமானால் அவன் கெடுவான். விலங்கு முதலிய மற்றைப் பிறப்புக்கு ஒழுக்கமின்மை யால் தான் அவை அஃறிணை எனப்பட்டன. கற்றதை மறந்தாலும் பின் கற்றுக் கொள்ளலாம், ஒழுக்கங் குன்றினால் மறுபடியும் தேடிக் கொள்ள முடியாது. (4) 115. அழுக்கா றுடையான்க ணாக்கம்போன் றில்லை ஒழுக்க மிலான்க ணுயர்வு. அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - பொறாமை உடையவனிடத்துச் செல்வம் இல்லாமை போல, ஒழுக்கம் இலான் கண் உயர்வு இல்லை - ஒழுக்கம் இல்லாத வனிடத்து உயர்ச்சி இல்லை. பொறாமைக்காரனுக்குச் செல்வம் பெருகாது. ஒழுக்க மில்லாதவன் மதிக்கப்படான். (5) 116. ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து. இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - ஒழுக்கந் தவறுதலால் குற்றம் உண்டாதலை அறிந்து, உரவோர் ஒழுக்கத்தின் ஒல்கார் - மனவலிமையுடையோர் நல்லொழுக் கத்தினின்றும் சுருங்கார். ஏதம் - குற்றம், இழிவு. படுபாக்கு - படுதல். ஒல்குதல் - சுருங்குதல், குறைதல். ஒழுக்கக்கேட்டால் இழிவுண்டாதலை அறிந்து அறிஞர்கள் ஒழுக்கந் தவறார். (6) 117. ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தின் எய்துவ ரெய்தாப் பழி. ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - நல்லொழுக்கத் தினால் மேன்மை அடைவர், இழுக்கத்தின் எய்தாப் பழி எய்துவர் - தீய ஒழுக்கத்தால் அடாத பழியை அடைவர். நல்லொழுக்கம் மேன்மையையும், தீய ஒழுக்கம் கீழ்மையையும் தரும். (7) 118. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்று மிடும்பை தரும். நல்லொழுக்கம் நன்றிக்கு வித்தாகும் - நல்லொழுக்கம் நன்மைக்குக் காரணமாகும், தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய ஒழுக்கம் எப்போதும் துன்பந்தரும். நல்லொழுக்கம் இன்பமும், தீய ஒழுக்கம் துன்பமும் தரும். (8) 119. ஒழுக்க முடையவர்க் கொல்லாதே தீய வழுக்கியும் வாயாற் சொலல். வழுக்கியும் தீய வாயால் சொலல் - மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லுதல், ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாதே - நல்லொழுக்க முடையவர்க்கு முடியாது. நல்லொழுக்கமுடையவர் மறந்தும் தீயன பேசார். (9) 120. உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார். பலகற்றும் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - பல நூல்களைக் கற்றிருந்தும் உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதவர், அறிவிலாதார் - அறிவில்லாதவர் ஆவர். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் - காலத்திற்கேற்றவாறு நடத்தல், காலத்துக் கேற்றவாறு நடக்க அறியா தவர் பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாத தவரே யாவர். (10) 13. அடக்கமுடைமை மனமொழி மெய்கள் தீநெறிக்கட் செல்லாது அடங்கி நடத்தல். 121. அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை ஆரிரு ளுய்த்து விடும். அடக்கம் அமர் அருள் உய்க்கும் - அடக்கம் மிக்க மேன்மையைக் கொடுக்கும், அடங்காமை ஆர் இருள் உய்த்து விடும் - அடக்கமின்மை மிக்க துன்பத்தைக் கொடுத்து விடும். அடக்கம் - மன, மொழி மெய் அடங்குதல். அருள் - மேன்மை. இருள் - துன்பம். அடக்கம் இன்பத்தையும், அடங்காமை துன்பத்தையும் தரும். (1) 122. காக்க பொருளா வடக்கத்தை யாக்கம் அதனினூஉங் கில்லை யுயிர்க்கு. அடக்கத்தைப் பொருளாக் காக்க - ஒருவன் அடக்கத்தைச் சிறந்த பொருளாக எண்ணிக் காக்கக் கடவன், உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை - உயிர்கட்கு அவ்வடக்கத்தைவிட மேலான செல்வம் வேறில்லை. உயிர் -மக்கள். அதனின் ஊங்கு -அதைவிட. அடக்கமே சிறந்த செல்வமாகும். (2) 123. செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந் தாற்றி னடங்கப் பெறின். அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப்பெறின் - அடக்கமாக வாழ்தலே அறிவு என்பதை அறிந்து நல்வழியினால் ஒருவன் அடங்கப்பெற்றால், செறிவு அறிந்து சீர்மை பயக்கும் - அவனுடைய அடக்கத்தை உலகம் அறிந்து அவனுக்கு மேன்மை யளிக்கும். செறிவு - அடக்கம். சீர்மை - மேன்மை. அடக்கமாக வாழ்தலே அறிவுடைமையாகும் என்பதை ஒருவன் அறிந்து அடங்கி நடப்பானாயின், உலகத்தார் அவனை மேலாக மதிப்பர். (3) 124. நிலையிற் றிரியா தடங்கியான் றோற்றம் மலையினும் மாணப் பெரிது. நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் - ஒழுக்க நிலையில் நின்றும் மாறுபடாது அடங்கினவனுடைய உயர்ச்சி, மலையினும் மாணப் பெரிது - மலையை விட மிகப் பெரிது. உயர்ச்சி - மதிப்பு. மலை - மதிப்பின் உயர்வுக்கு எடுத்துக் காட்டு. அடக்குமுடையவன் மிகுந்த மதிப்புப் பெறுவான். (4) 125. எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ் செல்வர்க்கே செல்வந் தகைத்து. பணிதல் எல்லார்க்கும் நன்றாம் - அடங்குதல் பொதுவாக உலக மக்கள் யாவர்க்கும் நல்லதாகும், அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து - யாவரினும் செல்வமுடைய வர்க்கோ அவ் வடக்கம் பிறிதொரு செல்வமாகும் சிறப்பினை யுடையது. செல்வம் தகைத்து - செல்வமாகும் தகுதியை உடையது. பொதுவாக எல்லார்க்கும் அடக்கம் நல்லது. செல்வர்க்கோ பிறிதொரு செல்வம்போல நல்லதாகும். செல்வர்களுக்கு அடக்கம் மிகமிக இன்றியமையாதது. (5) 126. ஒருமை யுளாமைபோ லைந்தடக்க லாற்றின் எழுமையு மேமாப் புடைத்து. ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஒரு கூட்டினுள் ஐந்துறுப்பினையும் அடக்கும் ஆமையைப் போல, ஐம்பொறிகளும் ஐம்புலன்கள் மேலும் விரும்பியவாறு செல்லாமல் அடக்க வல்லவனாகில், எழுமையும் ஏமாப்பு உடைத்து - அச்செயல், பல தீமைகளும் அணுகாத பாது காப்பாக உடையது. ஏழு என்னும் எண்ணுப் பெயர் - பல என்னும் பொருளது. 'எழுபதுகோடி உறும்' (639), 'பத்தடுத்த கோடி' (817) என்பனபோல். ஒருமை உள் - ஒன்றில். ஐம்பொறி யடக்கமே துன்பம் அணுகாமைக்குக் காரணமாகும். காணவேண்டும், கேட்கவேண்டும், சுவைக்க வேண்டும், துய்க்க வேண்டும் என்னும் விருப்பமே துன்பத்துக்குக் காரணமாதலை அறிக. (6) 127. யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. யாகாவார் ஆயினும் நாகாக்க - பிற பொறிகளைக் காவாராயினும் நாவைமட்டும் காக்கக் கடவர், காவாக்கால் சொல் இழுக்குப்பட்டு சோகாப்பர் - நாவைக் காவாராயின் சொற் குற்றத்திலகப்பட்டுத் துன்பப்படுவர். இது மொழியடக்கம். யா - நாவொழிந்த நாற் பொறிகளையுங் குறித்தலால் அஃறிணைப் பலவின்பால் பெயர். இழுக்கு - குற்றம். சோகாத்தல் - துன்புறுதல். நாவடக்கமே சிறந்த அடக்கமாகும். (7) 128. ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயின் நன்றாகா தாகி விடும். ஒன்றானும் தீச்சொல் பொருள் பயன் உண்டாயின் - ஒருவன் சொல்லும் சொற்களில் ஒன்றாயினும் தீயசொல்லினது பொருளின் பயனைத் தருமாயின், நன்று ஆகாது ஆகிவிடும் - அது தீதாகிவிடும். தீயசொல்லின் பொருள் - தீமை. பொருள் பயன் - பிறர்க்குத் தீமை தருதல். நன்று ஆகாது - தீது. ஒருவன் பேசும் பேச்சில் பிறர் மனத்தைச் சுடும் ஒரு கடுஞ்சொல் இருக்கினும் அப்பேச்சுத் தீய பேச்சாகிவிடும். தீச்சொற்கள் சிறிது கலந்தும் பேசலாகாது. இதுவும் மொழியடக்கம். (8) 129. தீயினாற் சுட்டபுண் ணுள்ளாறு மாறாதே நாவினாற் சுட்ட வடு. தீயினாற் சுட்ட புண் உள் ஆறும் - தீயினால் சுட்ட புண் உடலின்கண் ஆறாதிருக்கினும் மனத்தின்கண் ஆறிவிடும். நாவினால் சுட்ட வடு உள் ஆறாது - நாவினால் சுட்ட தழும்பு எப்போதும் மனத்தின்கண் ஆறாது. உள் ஆறுதல் - தீச்சுட்ட புண் கொஞ்சம் ஆறினதும் வலி யடங்குதல். உடலில் ஆறாமை - தழும்பாதல். உள் ஆறாமை - கடுஞ் சொல்லால் உண்டான வருத்தம் என்றும் மனத்தை விட்டு நீங்காமை. (9) 130. கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி அறம்பார்க்கு மாற்றி னுழைந்து. கதம் காத்து - சினத்தைக் காத்து, கற்று அடங்கல் ஆற்று வான் செவ்வி - கற்க வேண்டியவற்றைக் கற்று அடக்கத்தைக் கைக்கொள்ள வல்லவனது காலத்தை, ஆற்றின் நுழைந்து அறம் பார்க்கும் - அவனை யடையும் வழியில் சென்று அறம் பார்க்கும். செவ்வி - மனமொழி முகங்கள் இனியனாகுங் காலம். அடையும் வழியில் சென்று செவ்வியை அறம் பார்க்கும். அறம் - நன்மை. அடக்கமுடையவருக்கு அறம் வளரும். (10) 14. நடுவுநிலைமை ஒருவர் பக்கம் சேராமல் இருவர்க்கும் நடுவுநிலைமை உடையனாய் இருத்தல். இது பெரும்பாலும் வழக்குத் தீர்க்கும் நடுவர்கட்கு (நீதிபதி முதலியோர்) உரிய அறமாகும். எனினும், இல்வாழ்வார் ஒவ்வொருவரும் நடுவுநிலைமை யுடையவராக நடந்து கொள்ளுதல் வேண்டு மென்பது. 131. தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின். பகுதியால் - நட்பு, பகை, நொதுமல் என்னும் பகுதி தோறும், பால்பட்டு ஒழுகப்பெறின் - ஒவ்வொருவர் பக்கமும் சார்ந்து நடக்க நேரிட்டால், தகுதி என ஒன்று நன்றே - நடுவு நிலைமை என்று கூறப்படும் ஒன்று நல்லதே. நண்பர், பகைவர், நொதுமலர் என்னும் மூவர் பக்கமும் பழக நேரிட்டால் நடுவுநிலைமை தவறாது நடந்து கொள்ளுதல் நல்லது. இது நடுவுநிலைமையின் சிறப்புக் கூறப்பட்டது. பகுதி - பிரிவு. பகுதியால் - பகுதி தோறும். தகுதி உடைய நடுவுநிலை மையைத் 'தகுதி' என்றார். நொதுமல் - பகையும் நட்புமல்லாத பொதுத் தன்மை. நொதுமலரிடம் நடந்து கொள்ளுதல் போலவே நண்பர், பகைவர் என்னும் இருவரிடமும் நடந்து கொள்ளுதல் வேண்டும். (1) 132. செப்ப முடைய னாக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து. செப்பம் உடையவன் ஆக்கம் - நடுவுநிலைமை யுடையவன் செல்வம், சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - கெடுதலின்றி அவன் வழிவருவோர்க்கும் பாது காவலை உடையது. செப்பம் - நடுவுநிலைமை. எச்சம் - வழிவழி மக்கள். ஏமாப்பு - பாதுகாப்பு. நடுவுநிலைமை உடையவன் செல்வம், அவன் வாழ்நாள் முழுதுமே யன்றி அவன் வழிவருவோர்க்கும் பயன்படும் என்பதாம். (2) 133. நன்றே தரினும் நடுவிகந்தா மாக்கத்தை அன்றே யொழிய விடல். நன்றே தரினும் - நன்மையே தரினும், நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை - நடுவுநிலைமை தவறுதலால் உண்டாகும் செல்வத்தை, அன்றே ஒழிய விடல் - அச்செல்வம் வரத் தொடங்கும் அப்போதே விட்டுவிடுக. விடல் - வியங்கோள் வினைமுற்று. நடுவுநிலைமை தவறிச் செல்வந் தேடக்கூடாது. (3) 134. தக்கார் தகவில ரென்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும். தக்கார் தகவு இலர் என்பது - இவர் நடுவுநிலைமை யுடையார் இவர் நடுவுநிலைமை இல்லார் என்பது, அவரவர் எச்சத்தால் காணப்படும் - அவரவருடைய மக்களின் ஒழுக்கத்தைக் கொண்டு அறியப்படும். எச்சம் - மக்கள்; மக்கள் ஒழுக்கத்தை உணர்த்திற்று. பெற்றோர் ஒழுக்கத்தையே மக்கள் பின்பற்றுவ ராகையால் பெற்றோர் தகுதியை அறிய மக்கள் தகுதி காரணமாயிற்று. நடுவுநிலைமை யுடையார் வீட்டுச் சிறுவர்களும் நடுவு நிலைமை உடையராகவே இருப்பர். (4) 135. கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. கேடும் பெருக்கமும் இல் அல்ல - கேடு உண்டாதலும் ஆக்கம் உண்டாதலும் உலகத்தில் இல்லாதவை அல்ல, நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி - கேடும் பெருக்கமும் உண்டாகும் காலங்களில், அவை காரணமாகத் தம்மனம் நடுவுநிலைமை திறம்பாதிருப்பது பேரறிஞர் களுக்கு அழகாகும். கேடு - செல்வக்கேடு, வறுமை. பெருக்கம் - செல்வப் பெருக்கம். ஆக்கம் - செல்வம். இன்ப துன்பம் இரண்டிலும் நடுவு நிலைமையைக் கைவிடக்கூடாது. (5) 136. கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்சம் நடுவொரீஇ யல்ல செயின். தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - தன் மனம் நடுவு நிலையினின்றும் நீங்கி நடுவல்லவற்றைச் செய்ய நினைக்கு மாயின், யான் கெடுவல் என்பது அறிக - 'நான் கெடக்கடவேன்' என்பதை அவன் அறிவானாக. நினைத்தலும் செய்தலோ டொத்தலின் 'அல்ல செயின்' என்றார். நடுவுநிலைமை தவறியவன் கெடுவது உறுதி. (6) 137. கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கட் டங்கியான் றாழ்வு. நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவுநிலை மையுடன் அறநெறியில் நின்றவன் கெடுவானாயின் அவன் கேட்டை, உலகம் கெடுவாக வையாது - உலகத்தார் கேடாக எண்ணார். தாழ்வு - வறுமை. நடுவுநிலைமை யுடையான் வறுமை யுறுவானானால் அதை உலகத்தார் வறுமையாகக் கொள்ளார். ஆகவே, நடுவுநிலைமை தவறக்கூடாது. (7) 138. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து - தான் சமனாக இருந்து, தன்மீது வைக்கும் பொருளைச் சமனாக நிறுத்துக் காட்டும் துலாக்கோல் போல நடுநிலையுடையரா யிருந்து, ஒருபால் கோடாமை - ஒரு பக்கமாகச் சேராமையே, சான்றோர்க்கு அணி - அறிவுடையோர்க்கு அழகாகும். சீர் தூக்கல் - நிறுத்தல். துலாக்கோல் - தராசு. இது வழக்குத் தீர்ப்போர்க்கு உரிய அறமாகும். 'இரண்டு கண்ணுக்கு மூக்குப் பிறந்தாற்போல்' நடுவுநிலைமை திறம்பாது வழக்குத் தீர்க்க வேண்டும் என்பதாம். (8) 139. சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா உட்கோட்ட மின்மை பெறின். உள் கோட்டம் இன்மை ஒரு தலையாப் பெறின் - மனத்தின் கண் கோணுதல் இல்லாமையைத் திண்மையாகப் பெறுவாராயின், சொல் கோட்டம் இல்லது செப்பம் - பின்னர்ச் சொல்லின்கண் கோணுதல் இல்லாததே நடுவு நிலைமை யாகும். கோணுதல் - ஒருபக்கம் சேர்தல். திண்மை - உறுதி. மனமும் சொல்லும் கோணுதலில்லாமையே நடுவுநிலைமை யாகும். (9) 140. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுந் தம்போற் செயின். பிறவும் தம்போல் பேணிச் செயின் - பிறர் பொருளையும் தமது பொருள்போல் எண்ணி வாணிகம் செய்தால், வாணிகம் செய்வார்க்கு வாணிகம் - வாணிகம் செய்வார்க்கு நல்ல ஊதியமாகும். பிறவும் தம்போல் பேணலாவது - தம் பொருளை விற்கும் போது எப்படி விற்கவேண்டும் என எண்ணுகிறாரோ அப்படியே பிறர்பொருளைத் தாம் வாங்கும்போது எண்ணுதல். கொள்வது மிகையும் கொடுப்பது குறையு மாகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இது வணிகர்க்குரிய தகுதியாம். (10) 15. பிறனில் விழையாமை பிறனுடைய மனைவியை விரும்பாமை. வாழ்க்கையின் உரிமைகள் அனைத்தையும் தாங்களே வைத்துக் கொண்டு, பெண் மக்களை அடிமைகளாய் நடத்திவருவதால், ஆண் மக்களே இக் குற்றம் செய்தற்குரியராகையால், 'பிறன் இல்' என ஆண்பாலால் கூறினார். பெண்பாலுக்கும் கொள்க. முன் (6) பெண்மக்களின் மனத் திண்மை கூறினார். இங்கு ஆண் மக்களின் மனத்திண்மை கூறினார் எனினுமாம். 141. பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்க ணில். பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - பிறனுக்கு உரிமையானவளை விரும்பி நடக்கின்ற அறியாமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார்கண் இல் - உலகத்தில் அறத்தையும் பொருளையும் அறிந்தவரிடம் இல்லை. பெட்பு - விருப்பம். பெட்டு - விரும்பி. அறம் பொருள்- அறநூலும், பொருள் நூலும். அறநூலையும் பொருQலை யும் அறிந்தவர்கள் இத் தகாச்செயலை இன்பமெனக் கருதார்கள் என்பதாம். பிறன்மனை விரும்புதல் அறிவுடை மையாகாது. (1) 142. அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில். அறன்கடை நின்றாருள் எல்லாம் - தீமையின்கண் நின்றவர் எல்லாருள்ளும், பிறன் கடை நின்றாரில் பேதையார் இல் - பிறனது மனையாளை விரும்பி அவன் வீட்டு வாயிலில் நின்றவர் போல் அறிவிலிகள் இல்லை. அறன்கடை - தீமை. பிறன்கடை - பிறன்மனை வாயில். பிறன்மனை விரும்புவோர் கொடியரினும் கொடியர். (2) 143. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்தொழுகு வார். தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை நல்லவர் என்று நம்பினவர் வீட்டில் தீமை செய்தலை விரும்பி நடப்பவர், விளிந்தாரின் வேறு அல்லர் - இறந்தவரினும் வேறாகார். தெளிந்தார் இல் தீமை புரிதல் - நம்பினவர் மனைவியை விரும்புதல். விளிதல் - சாதல். நம்பினவர் வீட்டில் தீமை செய்பவர் பிணத்திற்கு ஒப்பாவார். உடையான் காணின் இறப்பார் என்றுமாம். (3) 144. எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந் தேரான் பிறனில் புகல். தினைத்துணையும் தேரான் பிறன் இல் புகல் - தினையளவு கூடத் தம் பிழையை எண்ணிப்பாராது பிறனுடைய மனையின்கட் புகுதல், எனைத்துணையர் ஆயினும் என் ஆம் - எவ்வளவு பெருமை யுடையோராயினும் யாதாகும்? பிறனில்புகல் - பிறன்மனையாளை விரும்புதல். 'எனைத் துணையர், தேரான்' - என இழித்தற்கண் பன்மை ஒருமை மயங்கிற்று. பிறனில் புகுவோன் எவ்வளவு மதிப்புடையோ னாயினும் சிறிதும் மதிக்கப்படான். (4) 145. எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. எளிது என இல் இறப்பான் - அடைதல் எளிதென எண்ணிப் பிறனில் விழைவான், எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி எய்தும் - எந்நாளும் அழியாது நிற்கும் பழியை அடைவான். விளிதல் - கெடுதல். பிறன்மனை விரும்புவோன் என்றும் உலகப்பழிக் காளாவான். (5) 146. பகைபாவ மச்சம் பழியென நான்கும் இகவாவா மில்லிறப்பான் கண். இல் இறப்பான் கண் - பிறனில் விழைவானிடத்து, பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம் - பகை, தீமை, அச்சம், பழி என்னும் நான்கும் எப்போதும் நீங்காவாம். பகை - அவ்வீட்டுக்குடையான் பகை. பாவம் - அத் தீத் தொழிலாகிய குற்றம். அச்சம் - அத்தீமை புரியுங்கால் உண்டாகும் அச்சம். பழி - உலகப்பழி. காணிற் குடிப்பழியாம், கையுறிற் கால்குறையும், மாணின்மை செய்யுங்கால் அச்சமாம். (நாலடி 84) என்னும் நாலடியாரைக் காண்க. (6) 147. அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன். அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறநெறிப்படி இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன், பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்குரியவளது பெண்மையை விரும்பாதவனாவான். பிறன்மனை நோக்காதவனே நற்குடி மகனாவான். (7) 148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனொன்றோ வான்ற வொழுக்கு. பிறன்மனை நோக்காத பேராண்மை - பிறன்மனை யாளை மனத்தாலும் எண்ணாத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு - அறிஞர்களுக்கு அறிவு மட்டுமா? சிறந்த ஒழுக்கமுமாகும். அறமும் ஒழுக்கமும் உடையார் பிறன் மனைவியை மனத் தாலும் நினையார். (8) 149. நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பிற் பிறற்குரியா டோடோயா தார். நாமநீர் வைப்பில் - அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில், நலக்கு உரியார் யார் எனின் - நன்மை எய்துதற்குத் தகுதியானவர் யார் என்றால், பிறற்கு உரியாள் தோள் தோயாதார் - பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதாராவர். நாமம் - அச்சம். நலத்துக்கு - அத்துச் சாரியை தொக்கு 'நலக்கு' என நின்றது. பிறன்மனை விரும்பாதவரே பல நன்மையும் பெறுவர். (9) 150. அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. அறன் வரையான் அல்ல செயினும் - அறத்தைச் செய்யாது அறமல்லாதவற்றைச் செய்யினும், பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று - பிறன் எல்லையில் நிற்பவளது பெண்மையை விரும்பாமை நல்லது. அறன் வரையான் - அறத்திற்கு உட்பட்டு நடவான். வரையான் - வரையாது - வினையெச்சம். தீமையினும் தீமை பிறன்மனை நயத்தல். (10) 16. பொறையுடைமை ஒருவர் காரணம் பற்றியாதல், அறிவின்மையானாதல் தமக்கு ஏதாவது துன்பஞ் செய்தால், தாமும் அதனை அவர்க்குச் செய்யாது பொறுத்துக் கொள்ளுதல். 151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல - தன்னைத் தோண்டு பவர்களை வீழாமல் தாங்கும் நிலம்போல, தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை - தம்மை இகழ்பவர்களைப் பொறுத்தல் தலைமையாகிய அறம். அகழ்தல் - தோண்டுதல். தன்மீது நின்றுகொண்டே தன்னைத் தோண்டி வருத்துவோர்களைக் கீழே விழாமல் தாங்கும் நிலம் போலத் தன்னை இகழ்வாரைப் பொறுத்தல் வேண்டும். பழிக்குப்பழி வாங்காதிருத்தலே சிறந்த குணமாகும். (1) 152. பொறுத்த லிறப்பினை யென்று மதனை மறத்த லதனினும் நன்று. என்றும் இறப்பினை பொறுத்தல் - எப்போதும் பிறர் செய்த குற்றத்தைப் பொறுக்க, அதனை மறத்தல் அதனினும் நன்று - அக் குற்றத்தை அப்பொழுதே மறத்தல் அப்பொறுமை யைவிட நல்லது. இறப்பு - மிகைபடச் சொல்லுதலும் செய்தலும்; அளவுக்கு மிஞ்சியது, குற்றம். பொறுத்தல் - வியங்கோள் வினைமுற்று. பிறர் செய்த குற்றத்தைப் பொறுத்தலினும், மறத்தல் நல்லது. மறவா திருப்பின் பின்னர்ப் பழிவாங்கவும் செய்யும். (2) 153. இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. இன்மையுள் இன்மை விருந்து ஒரால் - ஒருவனுக்கு வறுமை யுள் வறுமையாவது வீடுதேடி வந்த விருந்தினரை நீக்குதல், வன்மையுள் வன்மை மடவார்ப்பொறை - அது போல, வன்மையுள் வன்மையாவது அறியாதார் செய்த குற்றத்தைப் பொறுத்தல். ஒருவுதல் - நீக்குதல். அறிவிலிகள் செய்த குற்றத்தைப் பொறுப்பதே மிக்க வல்லமையாகும். (3) 154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும். நிறை உடைமை நீங்காமை வேண்டின் - ஒருவன் தன் பெருங் குணம் தன்னைவிட்டு நீங்காதிருக்க விரும்பினால், பொறை யுடைமை போற்றி ஒழுகப் படும் - பொறுமையைப் பாதுகாத்து நடக்க வேண்டும். பெருங்குணம் - சால்பு. பொறையுடையார்க்கே சால்பு என்னும் பெருங்குணம் அமையும். 99ஆம் அதிகாரம் பார்க்க. (4) 155. ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் தமக்குச் செய்த தீமையைப் பொறாது அவனைத் தண்டித்தவர்களை ஒரு பொருளாக உலகோர் மதியார், பொறுத்தாரைப் பொன் போல் பொதிந்து வைப்பர் - அவன் செய்த தீமையைப் பொறுத்த வர்களைப் பொன்னைப் பாங்காகப் போற்றுதல் போலப் போற்றுவர். பொதிந்து வைத்தல் - பெட்டியிலிட்டு மூடிவைத்தல். அது போல் பொறுத்தாரை இடைவிடாது நினைத்தல். ஒறுத்தாரை மதியார், பொறுத்தாரை மதிப்பர் உலகோர். (5) 156. ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் - தமக்குத் தீமை செய் தவனை ஒறுத்தவர்க்கு அவ்வொரு நாள் இன்பமே, பொறுத் தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் - பொறுத்தவர்க்கு இறக்கு மளவும் புகழ் நிலைக்கும். ஒருநாளை இன்பம் - அவ்வொரு நாளும் கருதியது முடித்தோ மெனச் செருக்கியிருக்கும் பொய்யின்பம். பொன்றுந் துணையும் புகழ் - அவரைப் பார்த்தபோதெல்லாம், 'இவரே பொறையுடை யார்' என உலகோர் புகழும் புகழ். (6) 157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந் தறனல்ல செய்யாமை நன்று. திறன் அல்ல தன் பிறர் செய்யினும் - தகுதியில்லாத வற்றைத் தனக்குப் பிறர் செய்தாலும், நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று - அவற்றைத் திருப்பிச் செய்தால் அவர்க்கு உண்டாகும் துன்பத்திற்கு நொந்து அறமல்லாத வற்றை அவர்க்குச் செய்யாம லிருப்பது நல்லது. நோநொந்து - நோவுக்கு நொந்து. நோ - துன்பம். அறனல்ல - தீமை. பழிக்குப்பழி செய்யாதிருப்பது பெரியோர் கடமை. (7) 158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியால் வென்று விடல். மிகுதியான் மிக்கவை செய்தாரை - தம்மைவிடச் செல்வம், உடல்வலி முதலியன மிகுதியால் தமக்குத் தீங்கிழைத்தவரை, தாம் தம் தகுதியான் வென்றுவிடல் - தாம் தமது பொறையால் வெல்லக் கடவர். செருக்கினால் செய்த தீங்கையும் பொறுத்துக் கொள்ளுதலே பொறையாகும். (8) 159. துறந்தாரிற் றூய்மை யுடைய ரிறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். இறந்தவர்வாய் இன்னாச்சொல் நோற்கிற்பவர் - நன் னெறியைக் கடந்தவரது வாயிலிருந்து வரும் தீச்சொற்களைப் பொறுப்பவர், துறந்தாரில் தூய்மையுடையர் - தீயவற்றைத் துறந் தோரினும் தூய்மையுடையவராவர். இறந்தார் - ஒழுக்க வரம்பைக் கடந்தார், ஒழுக்க மில்லார். நோற்கிற்பவர் - நோற்பவர். கில் - ஆற்றலுணர்த்தும் இடைநிலை. துறவினும் பொறை சிறந்தது. (9) 160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரிற் பின். பிறர் சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின் - பிறர் கூறும் கடுஞ்சொற்களைப் பொறுப்பவருக்குப் பிறகே, உண்ணாது நோற்பார் பெரியர் - உணவை நீக்கியதால் உற்றநோயைப் பொறுப்பவர் பெரியராவர். உண்ணாது நோற்பவர் - பசியைப் பொறுத்துக் கொண்டு தவம் செய்பவர். பசி முதலியவற்றைப் பொறுப்பதை விடத் தீச் சொல்லைப் பொறுப்பதே சிறந்த பொறையாகும். (10) 17. அழுக்காறாமை அழுக்காறு - பொறாமை. அதாவது பிறர் பெருமை கண்டு மனம் பொறாமை. அழுக்காறாமை - பொறாமை யின்மை. 161. ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் நெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு. ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு - ஒருவன் தன மனத்தின்கண் பொறாமை இல்லாத தன்மையை, ஒழுக்க ஆறாக் கொள்க - ஒழுக்க நெறியாக் கொள்ளக் கடவன். பொறாமையின்மையே நல்லொழுக்கமாகும். (1) 162. விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையார் மாட்டும் அழுக்காற்றி னன்மை பெறின். யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் - யாரிடத்தும் பொறாமையின்மையை ஒருவன் பெறுவானானால், விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை - சிறந்த பேறுகளுள் அதற்கு நிகரானது இல்லை. பேறு - அடையும் பயன். கல்விப்பேறு, செல்வப்பேறு, மக்கட்பேறு எனக் காண்க. பொறாமை கொள்ளாமையை விடச் சிறந்த பயன் வேறொன்றுமில்லை. (2) 163. அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம் பேணா தழுக்கறுப் பான். அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் - அறமும் பொருளும் தனக்கு வேண்டாதவன் என்று சொல்லப்படு வான், பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான் - பிறன் செல்வங்கண்டு பொறாது பொறாமைப்படுவான். அறன் ஆக்கம் - உம்மைத் தொகை. ஆக்கம் - செல்வம். அழுக்கறுத்தல் - அழுக்காறு கொள்ளுதல். பொறாமைக் காரனை உலகோர் வெறுப்பதால் அவன் அறமும் பொருளும் உடையன் ஆகான் என்பதாம். அழுக்காறுடையவன் நன்மையடையான். (3) 164. அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றின் ஏதம் படுபாக் கறிந்து. இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து - தீயவை செய்யின் குற்றம் உண்டாதலை அறிந்து, அழுக்காற்றின் அல்லவை செய்யார் - பொறாமையினால் அறமல்லாத வற்றைச் செய்யார். இழுக்கு - அறமல்லாதவை, தீயவை. ஏதம் - குற்றம். படுபாக்கு - படுதல், உண்டாதல். அறிவுடையோர் பொறாமை யினால் பிறர்க்குத் தீயவை செய்யார். (4) 165. அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார் வழுக்கியுங் கேடீன் பது. ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது - அழுக்காறு, பகைவரை விடக் கேடு தருவ தொன்றாகலின், அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - பொறாமை யுடையார்க்குக் கேடு தருவதற்குப் பகைவர் வேண்டியதில்லை, அப் பொறாமையே போதும். ஒன்னார் வழுக்கியும் - பகைவர் தவறினாலும் தவறாது. கேடு ஈன்பது - கேடு தருவது. பகைவரைவிடப் பொறாமை கேட்டை உண்டாக்கும். (5) 166. கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉம் உண்பதூஉ மின்றிக் கெடும். கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் - பிறர்க்குக் கொடுக்கும் பொருளைக் கண்டு பொறாமைப்படுபவனது சுற்றமும், உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் - உடையும் உணவும் இன்றிக் கெடும். பொறாமைக்காரனே யன்றி அவன் சுற்றத்தாரும் கெடுவர் என்பதாம். சுற்றமும் - என்பதன் இறந்தது தழுவிய எச்ச உம்மைத் தொக்கது. "ஈவது விலக்கேல்." (6) 167. அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். அழுக்காறு உடையானை - பொறாமை யுடையவனை, செய்யவள் அவ்வித்து தவ்வையைக் காட்டி விடும் - இளையவள் பொறாமைப்பட்டு மூத்தவளுக்குக் காட்டித் தான் நீங்குவாள். அவ்வித்து - பொறாமைகொண்டு. தவ்வை -மூத்தவள், மூதேவி (மூத்ததேவி), வறுமை, முகவுரை பார்க்க. பொறாமைக் காரன் செல்வமிழந்து வறுமை யுறுவான் என்பதை, பொறாமைக் காரனை மூத்தாளுக்குக் காட்டிவிட்டு இளையவள் நீங்கிக் கொள்வாள் என நகைச்சுவை தோன்றக் கூறினார். தவ்வையை - தவ்வைக்கு - உருபு மயக்கம். செய்யவள் - செல்வம். (7) 168. அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்து விடும். அழுக்காறு என ஒரு பாவி - பொறாமை என்னும் ஒப்பற்ற தீயோன், திருச்செற்று தீஉழி உய்த்து விடும் - செல்வத்தையுங் கெடுத்துத் தீமையுள் செலுத்தி விடுவான். அழுக்காற்றைப் 'பாவி' என ஆண்பாலால் கூறியது, மேல் (167) செல்வத்தையும் வறுமையையும் பெண்பாலால் கூறியது போன்றது. அழுக்காறு செல்வத்தைப் போக்கித் தீமையையுந் தரும். (8) 169. அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான் கேடு நினைக்கப் படும். அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் - பொறாமைக் காரனது ஆக்கமும், செவ்வியான் கேடும் - பொறாமை யில்லாதவனது கேடும், நினைக்கப்படும் - ஆராயத்தக்கது. ஆக்கக் கேடு - செல்வ வறுமை. பொறாமைக்காரன் செல்வமுறுதலும், பொறாமையில்லாதவன் வறுமை யுறுதலும் கூடுமாயின், அறிவுடையோரால் அதன் காரணம் ஆராயத் தக்கது என்றார். அழுக்காறுடையான் ஆக்க முறுதலும், அழுக்காறிலான் கேடுறுதலும் இல்லை. (9) 170. அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார் பெருக்கத்திற் றீர்ந்தாரு மில். அழுக்கற்று அகன்றாரும் இல்லை - பொறாமைப் பட்டுப் பெருக்க மடைந்தவரும் இல்லை, அஃதில்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் - பொறாமை இல்லாதவருள் பெருக்கத்தினின்று நீங்கினவரும் இல்லை. பெருக்கத்தில் தீர்தல் - சுருக்கமடைதல். பெருக்கம் சுருக்கம் - ஆக்கக் கேடுகளைக் குறித்தன. அகலுதல் - பெருகுதல். பொறாமைப் பட்டுச் செல்வரானவரும், பொறாமையின்றி வறியரானவரும் இல்லை. (10) 18. வெஃகாமை வெஃகுதல் - விரும்புதல். வெஃகாமை - பிறர் பொருளை விரும்பாமை. பின்னர் (32) கள்ளாமை என்பது பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதாமை. 171. நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமு மாங்கே தரும். நடு இன்றி நன்பொருள் வெஃகின் - நடுவு நிலைமை இல்லாது பிறர்க்குரிய நல்லபொருளை ஒருவன் விரும்பினால், குடிபொன்றி குற்றமும் ஆங்கே தரும் - அவ்விருப்பம் அவன் குடியைக் கெடுத்துப் பல குற்றங்களையும் அப்போதே தரும். வெஃகாமை - பிறர் பொருளைக் கொள்ளக் கருதாமை. குடி பொன்றி - 'பொன்று வித்து' எனப் பிறவினையாகக் கொள்க. பிறர் பொருளைக் கொள்ளவிரும்பின் குடிகெட்டுப் பல குற்றமும் உண்டாகும். (1) 172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். நடு அன்மை நாணுபவர் - நடுவு நிலைமை அல்லாமைக்கு அஞ்சுவோர், படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் - தமக்கு உண்டாகும் பயனை விரும்பிப் பழியொடு படுவனவற்றைச் செய்யார். நடு அன்மை - முறையின்மை. படுபயன் - வினைத் தொகை. பழியொடுபடுவன - தீயவை. நல்லவர்கள் பிறர் பொருளைக் கொள்ளக் கருதார். (2) 173. சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். மற்று இன்பம் வேண்டுபவர் - பேரின்பத்தை விரும்பு வோர், சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - பிறர் பொருளைக் கவர்தலால் உண்டாகும் சிற்றின்பத்தை விரும்பி அறம் அல்லாத வற்றைச் செய்யார். மற்று - சிற்றின்பத்தின் மறுதலையான பேரின்பத்தை யுணர்த்திற்று. சிற்றின்பம் - சிறிதுகாலம் நிலைக்கும் இன்பத்தையும், பேரின்பம் - நிலையான இன்பத்தையும் குறித்தன. நிலையான இன்பத்தை விரும்புவோர் நிலையற்ற இன்பத்தை விரும்பிப் பிறர் பொருள் கொள்ளக் கருதார். (3) 174. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர். புலம் வென்ற புன்மையில் காட்சியவர் - ஐம்புலன் களையும் வென்ற குற்றமற்ற அறிவினையுடையவர், இலம் என்று வெஃகுதல் செய்யார் - தாம் 'வறியேம்' என்று பிறர் பொருளை விரும்புதல் செய்யார். புலம் வெல்லுதல் - ஐம்புலன்களையும் பொறிமேற் செல்லாது அடக்குதல், மனவடக்கம். காட்சி - அறிவு. பெரியோர் பொரு ளில்லை யென்று பிறர் பொருளை விரும்பார். (4) 175. அஃகி யகன்ற வறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். வெஃகி யார்மாட்டும் வெறிய செயின் - பொருளை விரும்பி எல்லாரிடத்தும் அறிவோடு பொருந்தாத செயல்களை அறிவு டையோன் செய்வானாயின், அஃகி அகன்ற அறிவு என் ஆம் - அவனது கூரிய பரந்த அறிவால் யாது பயன்? அஃகுதல் - சுருங்குதல். இங்கே நுண்ணியதாதல். நுண்மை - கூர்மை. 'நுண்மாண் நுழைபுலம்'(407). பிறர் பொருள் வவ்வின் பகுத்தறிவால் பயனில்லை. (5) 176. அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான் - அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பொருளை விரும்பி அதைக் கொள்ளும் தீய வழி களை எண்ணக் கெடுவான். ஆறு - நல்லவழி. சூழ்தல் - எண்ணுதல். பிறர் பொருளை விரும்பி எண்ணுவோன் கெடுவான். (6) 177. வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன். வெஃகிஆம் ஆக்கம் வேண்டற்க - பிறர் பொருளைக் கவர்ந்து அதனால் உண்டாகும் செல்வத்தை விரும்பா தொழிக, விளைவயின் பயன் மாண்டற்கு அரிது ஆம் - அதைத் துய்க்கும் போது அதன் பயன் நன்றாதல் இல்லை. மாண்டற்கு, மாண் - பகுதி. மாண் - மாட்சிமை, நல்லது. துய்த்தல் - அனுபவித்தல். பிறர் பொருளால் உண்டான செல்வம் நல்ல பயன்தராது. (7) 178. அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் - ஒருவனது செல்வம் குறையாமலிருப்பதற்குக் காரணம் யாதெனில், பிறன் கைப்பொருள் வெஃகாமை வேண்டும் - பிறனுடைய கைப்பொருளை விரும் பாமையே யாகும். செல்வம் குறையுந்தன்மையை யுடையது. அது குறையாமல் இருக்க வேண்டு மானால் பிறன் பொருளை விரும்பாமல் இருக்க வேண்டும். வெஃகாதான் செல்வம் அஃகாது. கியாதெனின் - குற்றியலிகரம். (8) 179. அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேரும் திறனறிந் தாங்கே திரு. அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் - வெஃகாமையே அறமென அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை, திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் - செல்வம் அவர் தகுதியறிந்து அப்போதே சேரும். பிறர் பொருளை விரும்பாதவர்களுக்குப் பலரும் நண்ப ராவராதலால் எடுத்த செயல் முடிந்து செல்வம் சேரும். (9) 180. இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு. எண்ணாது வெஃகின் இறல் ஈனும் - எண்ணிப்பாராது பிறர்பொருளை ஒருவன் விரும்பின் அது அவனுக்கு அழிவைத் தரும், வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் - அப்பொருளை விரும்பாமை என்னும் பெருங்குணம் வெற்றியைத் தரும். இறல் - இறுதல், முடிதல், அழிதல். தொழிற்பெயர். பிறர் பொருளை விரும்பமையாகிய பெருங்குணம் ஒருவனுக்குச் செருக்கைத் தருதலின் 'செருக்கு' என்றார். விறல் - வெற்றி, செல்வம். விறல் ஈனும் - செல்வம் பெருகும். (10) 19. புறங்கூறாமை பிறரைக் கண்டவிடத்துப் (நேரில்) புகழ்ந்து கூறி, காணாத விடத்து இகழ்ந்து கூறாமை. புறங்கூறல் - கோட் சொல்லுதல். இது மொழிக்குற்றம். 181. அறங்கூறா னல்ல செயினு மொருவன் புறங்கூறா னென்ற லினிது. ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறம் என்று கூறுவதும் இல்லானாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், புறங்கூறான் என்றல் இனிது - ஒருவனைக் காணாத விடத்தில் இகழ்ந்து பேசான் என்று உலகோரால் சொல்லப்படுதல் நல்லது. அறம் என்று வாயினாலும் கூறாது தீமையே செய்பவன். புறங்கூறுதல் - ஒருவனைக் கண்டவிடத்துப் புகழ்ந்து பேசிக் காணாதவிடத்து இகழ்ந்து பேசுதல். புறங் கூறுதல் எல்லாக் குற்றத்தினும் கொடியது. (1) 182. அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே புறனழீஇ பொய்த்து நகை. புறன் அழீஇ பொய்த்து நகை - ஒருவனைக் காணாத விடத்து இகழ்ந்து பேசிக் கண்டவிடத்துப் புகழ்ந்து பேசுதல், அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே - அறத்தைக் கெடுத்து அறமல்லாத வற்றைச் செய்தலினும் தீதாகும். நகை - நகைத்தல், பழித்தல். புறங்கூறுதல் கொடுமை யினும் கொடுமை. (2) 183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறு மாக்கந் தரும். புறங்கூறிப் பொய்த்து உயிர்வாழ்தலின் - ஒருவனைக் காணாதவிடத்து இகழ்ந்துகூறிக் கண்டவிடத்துப் புகழ்ந்து கூறி உயிர் வாழ்வதைவிட, சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும் - அவ்வாறு செய்யாமல் இறத்தல் அற நூல்கள் சொல்லுகின்ற எல்லாப் பெருமையும் தரும். பின் அத்தீமை புரியாமையின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தருவதாயிற்று. புறங்கூறுதலினும் சாதலேமேல். (3) 184. கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல். கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவனெதிரே நின்று கண்ணோட்டமில்லாமல் கடுஞ்சொற்களைச் சொன்னாலும், முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - ஒருவனைக் காணாத விடத்து பின்பு அவனைப் பார்க்க முடியாத பழிச்சொற்களைச் சொல்லற்க. கண்ணோட்டம் - இரக்கம். பின் நோக்காச்சொல் - புறங் கூறியபின் வருந் தீங்கினை எண்ணிப்பாராத சொல் என்றுமாம். நேரில் திட்டினாலும் குற்றமில்லை, புறங் கூறல் கூடாது. (4) 185. அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனத்தையுடையவன் அல்லாமை, புறஞ்சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் புறங்கூறும் புல்லிய குணத்தினால் அறியப்படும். சொல்லும் - சொல்ல நினைக்கின்ற. புறங்கூறுதலி லிருந்து அறவோன் அல்லன் என்பதை அறியலாம். (5) 186. பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந் திறன்றெரிந்து கூறப் படும். பிறன் பழி கூறுவான் தன் பழி உள்ளும் - பிறனுடைய பழிகளை அவனைக் காணாதவிடத்துக் கூறுபவனுடைய பல பழிகளுள்ளும், திறன் தெரிந்து கூறப்படும் - அவன் வருந்துதற் குரிய கொடும்பழிகளை ஆராய்ந்தறிந்து அப் பிறனால் கூறப்படும். திறன் - வகை. பொதுவான பழி, கொடும் பழி என்னும் வகை. பிறர்மீது ஒருபழி சொன்னால், அவர் நம்மீது பல பெரும் பழிகளைச் சொல்வர். (6) 187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். நகச்சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் - கூடிமகிழுமாறு இன்சொல் சொல்லி அயலாரோடும் நட்புச் செய்தலை நன்மை என்று அறியாதவர், பகச்சொல்லி கேளிர் பிரிப்பர் - தம்மை விட்டு நீங்கும்படி புறங்கூறி உறவினரையும் பிரிப்பர். பக - பிரிய. கேளிர் - நட்பும் சுற்றமும். உறவின் பயன் அறியாரே புறங் கூறுவர். (7) 188. துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - உறவினர் குற்றத்தையும் காணாதவிடத்துத் தூற்றும் இயல்பினர், ஏதிலார் மாட்டு என்னை கொல் - பகைவரிடத்துச் செய்வது யாதோ? துன்னுதல் - செறிதல், நெருங்குதல். தூற்றுதல் - பலரறியச் சொல்லுதல். புறங்கூறுவானுக்கு இன்னாரென் றில்லை. (8) 189. அறநோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை. புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் இல்லாதவிடம் பார்த்துப் புறங்கூறுவான் உடற் சுமையை, வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் - இவ்வுலகம் 'இக் கொடுமையைச் சுமத்தலே எனக்கு அறம்' என்று நினைத்துச் சுமக்கிறது போலும்! புறங் கூறுவான் நிலத்துக்குச் சுமையாவான். (9) 190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னு முயிர்க்கு. ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் - அயலாரது குற்றத்தைப் போலத் தம் குற்றத்தையும் காணவல்லராயின், மன்னும் உயிர்க்கு தீது உண்டோ - நிலை பெற்ற உயிர்க்குத் தீமை உண்டோ? இல்லை. காண்கிற்பின் - காண்பின். கில் - ஆற்றலுணர்த்தும் இடை நிலை. மன் - நிலைபேறு, நிலையான. மன்னும் உயிர் - மக்கள். பிறர் குற்றத்தைப்போல் தங் குற்றத்தையும் எண்ணிப்பார்த்தலே புறங்கூறா திருத்தற்கு ஏதுவாகும். (10) 20. பயனில சொல்லாமை தமக்கும் பிறர்க்கும் யாதொரு பயனும் பயவாத சொற்களைச் சொல்லாமை. 191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரு மெள்ளப் படும். பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான் - பலர் வெறுக்கும் படி பயனில்லாதவற்றைச் சொல்லுபவன், எல்லாரும் எள்ளப்படும் - எல்லோராலும் இகழப்படுவான். பயன் இலசொல் - பேசுவோர்க்கும் கேட்போர்க்கும் யாதொரு பயனுமில்லாத வீண்பேச்சு. பயன் - அறம் பொருளின்பம். எல்லோரும் 'ஆல்' உருபு தொக்கது. பயனில சொல்வோன் பழிக்கப் படுவான். (1) 192. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கட் செய்தலிற் றீது. பயன்இல பல்லார்முன் சொல்லல் - பயனில்லாத வற்றைப் பலர்முன்பு கூறுதல், நயன்இல் நாட்டார்கண் செய்தலின் தீது - விருப்பமில்லாதவற்றைத் தன் நண்பரிடத்துச் செய்தலினும் தீதாகும். விருப்பமில - வெறுப்பன. நண்பருக்கு வெறுக்கத் தக்கன செய்பவன் இகழப்படுதல்போல பலர்முன் பயனில சொல்வோனும் இகழப்படுவான். (2) 193. நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கு முரை. பயன்இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இல்லாத வற்றை விரித்துப் பேசும் பேச்சே, நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நன்மை இல்லாதவன் என்பதை அறிவித்துவிடும். நன்மை இல்லாதவன் - சாரமற்றவன். பயனற்றவன் என்பதை அவன் பேசும் பேச்சாலே அறியலாம். (3) 194. நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப் பண்பில்சொற் பல்லா ரகத்து. பல்லார் அகத்து பயன் சாராப் பண்புஇல் சொல் - பலர் கூடிய கூட்டத்துள் கூறும் பயனுடன் கூடாத பண்பற்ற சொற்கள், நயன் சாரா நன்மையின் நீக்கும் - அறத்தோடு பொருந்தா தவையாகி அவனை நன்மையினின்று நீக்கும். பயன் சாரா - பொருளில்லாத. பண்பு - இனிமை, உண்மை முதலிய சொல்லின் குணங்கள். அறத்தோடு பொருந்தாத வையாதல் - நல்லதல்லவாதல். பயனற்ற, பண்பற்ற, நலமற்ற, சொல்லைச் சொல்லக்கூடாது. (4) 195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். பயனில நீர்மை உடையார் சொலின் - பயனற்ற சொற்களைப் பெருந்தன்மை யுடையார் சொன்னால், சீர்மை சிறப்பொடு நீங்கும் - சீர்மையும் சிறப்பும் நீங்கிவிடும். சீர்மை - பெருமை. சிறப்பு - மதிப்பு. சீர்மை சிறப்பொடு - சீர்மையும் சிறப்பும். பெருந்தன்மை யுடையார் பயனில சொல் சொன்னால் அவர் பெருந்தன்மை நீங்கும். (5) 196. பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல். பயன்இல் சொல் பாராட்டுவானை - பயனற்ற சொற்களை மேன்மேலும் பேசுபவனை, மகன் எனல் - மகன் என்று சொல்லற்க, மக்கள் பதடி எனல் - மக்களில் பதர் என்று சொல்லுக. முதல் எனல் - எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. இரண் டாவது எனல் உடன்பாட்டு வியங்கோள் வினைமுற்று. நெல் முதலியவற்றின் பதரை நீக்கிவிடுதல் போல, பயனில் சொல் பாராட்டுவானும் மக்கட் கூட்டத்திலிருந்து நீக்கப்படுவான். எவரும் மதியார் என்பதாம். (6) 197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. சான்றோர் நயன்இல சொல்லினும் சொல்லுக - சான்றோர் அறமல்லாதவற்றைச் சொல்லினும் சொல்லக்கடவர், பயன் இல சொல்லாமை நன்று - பயனற்ற சொற்களைச் சொல்லாமலிருத்தல் நல்லது. சான்றோர் - அறிவு நிறைந்தோர். கெட்டதைச் சொன்னாலும் பயனற்ற சொல்லைச் சொல்லக் கூடாது. (7) 198. அரும்பய னாயு மறிவினார் சொல்லார் பெரும்பய னில்லாத சொல். அரும்பயன் ஆயும் அறிவினார் - அரிய பயனை ஆராயும் அறிவினை யுடையார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிகுந்த பயனளிக்காத சொற்களைச் சொல்லார். அரும்பயன் - உண்மையும் நன்மையும். (8) 199. பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்ந்த மாசறு காட்சி யவர். மருள் தீர்ந்த மாசறு காட்சியவர் - மயக்கந் தீர்ந்த குற்றமற்ற அறிவினை யுடையோர், பொருள் தீர்ந்த பொச் சாந்தும் சொல்லார் - பயனற்ற சொற்களை மறந்தும் சொல்லார். பொச்சாத்தல் - மறத்தல். மயக்கம் - ஒன்றும் தோன்றா நிலை. அறிவாளிகள் மறந்தும் பயனற்ற சொல் சொல்லார். (9) 200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். சொல்லில் பயனுடைய சொல்லுக - சொற்களில் பயனுடைய வற்றைச் சொல்லுக, சொல்லில் பயன் இலாச் சொல் சொல்லற்க - சொற்களில் பயனில்லாத சொற்களைச் சொல்லா தொழிக. சொல் என்னும் சொல் பன்முறை வந்தது - சொற் பொருட் பின்வருநிலையணி. (10) 21. தீவினையச்சம் தீச்செயல் புரிய அஞ்சுதல். தீவினை - தீசெயல் - தீமை. பிறர்க்குத் தீமை செய்வதால் வரும் குற்றத்திற்கு அஞ்சி அது செய்யாமல் இருத்தல். நாணுடைமை (101) என்பது - இழிந்த செயல் செய்ய நாணுதல். 201. தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு. தீவினை என்னும் செருக்கு - தீச்செயல் என்னும் களிப்பை, தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் - தீச்செயலுடையார் அஞ்சார், சீரியர் அஞ்சுவர். களிப்பு - தீச்செயல் புரிந்ததால் ஏற்படும் மிகு மகிழ்ச்சி. தீவினை - கெட்ட காரியம். தீவினையார் - தீச்செயல் புரிந்து பழகினவர். (1) 202. தீயவை தீய பயத்தலாற் றீயவை தீயினு மஞ்சப் படும். தீயவை தீய பயத்தலால் - தீச்செயல்கள் தீமை தருவ தனால், தீயவை தீயினும் அஞ்சப்படும் - அத்தீச் செயல் களைத் தீயைவிட மிகுதியாக அஞ்சவேண்டும். தீச்செயல்கள் தீயினும் கொடியவை. இக்குறள் - சொற் பொருட் பின்வருநிலையணி. (2) 203. அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய செறுவார்க்குஞ் செய்யா விடல். செறுவார்க்கும் தீய செய்யாவிடல் - தம்மை வருத்து வோர்க்கும் தீயவை செய்யாமல் விடுவதை, அறிவினுள் எல்லாம் தலை என்ப - தமக்கு நன்மையை நாடும் அறிவுகள் யாவற்றினும் முதன்மையான அறிவு என்று சொல்வர் பெரியோர். தமக்குத் துன்பஞ் செய்வோர்க்கும் துன்பஞ் செய்யாமையே சிறந்த அறிவுடைமையாகும். (3) 204. மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின் அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு. மறந்தும் பிறன்கேடு சூழற்க - மறந்தும் பிறனுக்குத் தீமை செய்ய எண்ணாதிருக்கக்கடவன்; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் - எண்ணினால், அவ்வாறு எண்ணின வனுக்குத் தீமை செய்ய அறம் எண்ணும். அறம் - ஒழுக்கச்சட்டம். தீமை செய்ய எண்ணுபவன் தீமை எய்துவான். (4) 205. இலனென்று தீயவை செய்யற்க; செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. இலன் என்று தீயவை செய்யற்க - ஒருவன் யான், 'எளியவன்' என்று எண்ணி அவ்வெளிமை தீர்தற் பொருட்டுப் பிறனுக்குத் தீமையைச் செய்யாதிருக்கக் கடவன், செய்யின் மற்றும் பெயர்த்து இலன் ஆகும் - செய்தால் மீட்டும் எளிய வனாவான். மீட்டும் எளியவனாதல் - பொருளாலன்றி, நற்குண நற்செய்கைகளாலும் எளியவனாதல். எளிமை - வறுமை. வறுமையைப் போக்கிக் கொள்ளவும் பிறனுக்குத் தீமை செய்யக் கூடாது. (5) 206. தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால தன்னை யடல்வேண்டா தான். நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் - துன்பங்கள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தான் பிறர்கண் தீப்பால செய்யற்க - தான் பிறருக்குத் தீமை செய்யாதிருக்கக் கடவன். நோய்ப்பால - துன்பத்தின் வகைகள்; பல துன்பங்கள். தீப்பால - தீமையின் வகைகள். துன்பத்தை விரும்பாதவன் பிறர்க்குத் தீங்கு செய்யக்கூடாது. (6) 207. எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும். எனைப் பகை உற்றாரும் உய்வர் - எவ்வளவு பெரிய பகை உற்றாரும் தப்புவர், வினைப்பகை வீயாது பின்சென்று அடும் - ஆனால், தீவினையாகிய பகை நீங்காது பின்தொடர்ந்து கெடுக்கும். தீச்செயல் செய்தோர் தப்பாது கெடுவர். (7) 208. தீயவை செய்தார் கெடுதல் நிழறன்னை வீயா தடியுறைந் தற்று. தீயவை செய்தார் கெடுதல் - பிறர்க்குத் தீயவை செய்தவர் கெடுதல், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று - ஒருவனது நிழல் அவன் எவ்வளவு தொலைவு செல்லினும் விடாது வந்து அவன் அடியின்கீழ்த் தங்கிய தன்மையது. நிழல் தன் அடியின் கீழே தங்கினாற்போல, அவன் கேடும் அத்தீயவைக்கண்ணே உளது என்பதாம். தீச்செயலாளர் தப்பாது கெடுவர். (8) 209. தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றுந் துன்னற்க தீவினைப் பால். தன்னைத்தான் காதலன் ஆயின் - ஒருவன் தன்னைத் தான் விரும்புவானாயின், எனைத்தொன்றும் தீவினைப் பால் துன்னற்க - எத்தகைய சிறிய தொன்றாயினும் தீச்செயல்களைப் பிறர்க்குச் செய்யாதிருக்கக் கடவன். தன்னைத்தான் காதலித்தல் - தனக்கு அழிவு வராதபடி காக்க விரும்புதல். அழிவு வேண்டாதவன் தீச்செயல் புரியா திருக்க வேண்டும். (9) 210. அருங்கேட னென்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யா னெனின். மருங்கு ஓடி தீவினை செய்யான் எனின் - ஒருவனிடம் சென்று அவனுக்குத் தீச்செயல்களைச் செய்யாதிருப்பானானால், அருங் கேடன் என்பது அறிக - அவன் கேடில்லாதவன் என்பதை அறியக் கடவன். மருங்கு - பக்கம். அருங்கேடன் - கேடரியன் - கேடில்லாதவன். பிறர்க்குத் தீங்கு செய்யாதவன் கெடான். (10) 22. ஒப்புரவறிதல் ஒப்புரவு - உலகநடை. ஒப்புரவு அறிதல் - உலகம் ஒழுங்காக நடைபெறும் வழியை அறிதல். உலகம் ஒழுங்காக நடைபெறல் - உலக மக்கள் எல்லோரும் உண்டுடுத்து ஒழுங்காக வாழ்தல். அவ்வாறு வாழும்படி செய்தலே ஒப்புரவு செய்தல் ஆகும். அதாவது உலக வாழ்வைச் சமன் செய்தல். ஒப்புரவு - சமன். ஒப்புரவு செய்தல் - சமன் செய்தல். விதைத்த நிலத்தில் பாத்தி கட்டுவோர், தண்ணீர் சமனாகப் பாயும் பொருட்டு மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டுச் சமன் செய்வது - ஒப்புரவு செய்தல் எனப்படும். அவ்வாறே, உள்ளவர் இல்லார்க்கு உதவி உலக வாழ்வைச் சமன் செய்வது ஒப்புரவு செய்தலாகும். அவ்வாறு உலக நடையைச் சமன் செய்வது - ஒப்புரவு செய்தல் உடையோர் கடன் என்பதை அறிதல் - ஒப்புரவறிதல் ஆகும். இல்லார்க்குக் கொடுத்தல் உள்ளார் கடன் என்பதை உணர்ந்து கொடுத்தல் ஒப்புரவு செய்தல். ஈகை (23) என்பது - தம்மிடம் வந்து இரப்போர்க்குக் கொடுத்தல். 211. கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு. மாரிமாட்டு உலகு என் ஆற்றும் - மழைக்கு உலகம் என்ன கைம்மாறு செய்கின்றது? ஒன்றும் இல்லை; கடப்பாடு கைம்மாறு வேண்டா - அதுபோல, உதவிசெய்யும் போது எதிருதவிகளை எண்ணவேண்டாம். உலகம் - மக்களை உணர்த்திற்று. கடப்பாடு - ஒப்புரவு. எதிருதவியை நாடாமல் உதவுவதே மக்கள் கடமை. (1) 212. தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம், தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு - தகுதியுடையார்க்கு உதவுவதற்காகவே. தாள் - முயற்சி. தாள் ஆற்றி - முயன்று. தக்காராவார் - ஓயாது உழைத்தும் உண்ண உணவும் உடுக்க உடையும், உறையக் குடிசையும் இல்லாத ஏழைப் பாட்டாளி மக்கள். உலக வாழ்க்கையின் அச்சாணி போன்ற ஏழைப் பாட்டாளிகளே ஏற்கத் தக்கவராவர். அன்னாரின் ஓயா உழைப்பால் வந்ததே செல்வரின் செல்வமாதலால் அப்பாட்டாளி மக்களுக்குக் கொடுத்தலே செல்வர் கடமையாகும். வேளாண்மை - உதவி. (2) 213. புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே ஒப்புரவி னல்ல பிற. ஒப்புரவின் நல்ல பிற - ஒப்புரவைக் காட்டிலும் நல்ல வேறு செயல்களை, புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிது - வானு லகத்தும் மண்ணுலகத்தும் பெறமுடியாது. புத்தேள் உலகத்தை முகவுரையில் காண்க. எதிர் நாடா உதவியைவிட நல்லதொன்று எங்கும் இல்லை. (3) 214. ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் - ஒப்புரவை அறிந்து செய்பவனே உயிருடன் கூடி வாழ்பவனாவான், மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - ஒப்புரவு செய்யாதவன் உயிருடன் இருப்பினும் இறந்தவருள் ஒருவனாகவே கருதப்படுவான். ஒத்தது - ஒப்புரவு. உயிரின் அறிவும் செயலும் இன்மையின் 'செத்தாருள் வைக்கப்டும்' என்றார். கடமையைச் செய்யான் மதிக்கப்படான். (4) 215. ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் றிரு. உலகு அவாம் பேரறிவாளன் திரு - ஒப்புரவு செய்தலை விரும்பும் பெரிய அறிவாளனது செல்வம், ஊருணி நீர் நிறைந்தற்று - ஊரார் குடிக்கின்ற கிணறு நீர் நிறைந்தாற் போலும். உலகு - ஒப்புரவு. அவாவுதல் - விரும்புதல். ஊருணி - ஊர்க் கிணறு. பேரறிவாளன் செல்வம் பலருக்கும் பயன்படும். வேண்டி யவர்கள் உரிமையுடன் பெற்றுக்கொள்ளலா மென்பதாம். (5) 216. பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வம் நயனுடை யான்கட் படின். செல்வம் நயன் உடையான் கண்படின் - செல்வம் ஒப்புரவு செய்பவனிடத்து உண்டாகுமாயின், பயன் மரம் ஊர் உள் பழுத் தற்று - அது யாவர்க்கும் பயன்படும் ஓர் மரம் ஊர் நடுவே பழுத் தாற்போலும். நயன் - ஒப்புரவு. உள் ஊர் - ஊர் உள். ஊர் நடுவே பழுத்த மரம் எல்லார்க்கும் பயன்படுதல் போல ஒப்புரவறிவான் செல்வமும் எல்லார்க்கும் பயன்படும். (6) 217. மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம் பெருந்தகை யான்கட் படின். செல்வம் பெருந்தகையான் கண் படின் - செல்வம் பெருங் குணம் உடையோனிடம் சேருமாயின், மருந்தாகித் தப்பா மரத்தற்று - அது, பிணிக்கு மருந்தாகித் தப்பாத மரத்தை ஒக்கும். தப்புதல் - கொள்ளுதற்கரிய இடத்தில் இருத்தல், மறைவில் இருத்தல், பூ வேண்டும்போது பூக்காமை முதலியன. மருந்து மரம் - இலை, பூ, காய், பட்டை, வேர் முதலிய பறிக்கப்பட்டுப் பயன்பட நிற்பதுபோலப் பெரியோர் செல்வமும் பயன்பட்டு நிற்கும். (7) 218. இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர். கடன் அறி காட்சியவர் - செய்யத்தக்கவற்றை அறிந்த அறிவினர், இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் - செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்வதற்குத் தயங்கார். கடன் - ஒப்புரவு. இடன் - செல்வம். இடன் இல் பருவம் - தம் வாழ்க்கைக்கு வேண்டிய அளவு செல்வம் இல்லாத வறுமைக் காலம். கடனறி காட்சியார் வறுமையுற்ற காலத்தும் ஒப்புரவு செய்யத் தவறார். (8) 219. நயனுடைய னல்கூர்ந்தா னாதல் செயுநீர செய்யா தமைகலா வாறு. நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவு செய்பவன் வறியவனாவது, செயும்நீர செய்யாது அமைகலா ஆறு - செய்யத் தக்கவற்றைச் செய்யாது முடியாத வழியாம். நயன் - ஒப்புரவு. நல்கூர்தல் - வறுமையுறுதல். செயும் நீர - செய்யுந்தன்மைய - ஒப்புரவு. செய்யாது முடியாதவழி - செய்தே - தீர வேண்டியவழி. செய்யாது - எதிர்மறை வினை யெச்சம். அமைகலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ஒப்புரவு செய்பவன் வறியவனாவது - செய்ய வேண்டியவற்றைச் செய்தே தீரவேண்டிய வழியேயாகும். ஒப்புரவு செய்யமுடியாத நிலையே வறுமையன்றி, வாழ்க்கைக்கு வேண்டுவன இல்லாமை யல்ல என்பதாம். நயனு டையான் வறுமையினும் ஒப்புரவு செய்வான். (9) 220. ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன் விற்றுக்கோட் டக்க துடைத்து. ஒப்புரவினால் கேடுவரும் எனின் - ஒப்புரவு செய்தலினால் பொருட்கேடு வரும் என்றால், அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து - அக்கேடு, ஒருவன் ஒன்றை விற்று மற்றொன்றைக் கொள்ளும் தகுதியையுடையது. ஒன்றைவிற்று ஒன்றைக் கொள்ளுதல் - வாணிகம், வாணி கத்தில் ஒன்றை விற்று மற்றொன்றைக் கொள்வது போல, ஒப்புரவைச் செய்து உயர்வை அடைகிறார்கள். ஆகவே, அக் கேட்டைக் கேடாகக் கொள்ளல் கூடாது. ஒப்புரவு செய்வோர் பொருளைக் கொடுத்து நன்மையை அடைகின்றனர். இவ்வதி காரத்திற்கிலக்காக இக்காலச் செல்வர்கள் நடந்துகொள்ளப் பழகிக்கொண்டால், பணக்காரர், முதலாளி என்னும் சொற்கள் மக்கள் வாயிடத்தைப் பொருந்தா. (10) 23. ஈகை இல்லையென்று இரப்போர் யாவர்க்கும் இல்லை என்னாது கொடுத்தல். 221. வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பு நீர துடைத்து. வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - இல்லாதவர்க்கு ஒன்றைக் கொடுப்பதே கொடை; மற்றெல்லாம் குறியெதிர்ப்பு நீரது உடைத்து - மற்றவர்க்குக் கொடுப்பனவெல்லாம் குறியெதிர்ப்புத் தன்மையை யுடையது. குறியெதிர்ப்பு - அளந்துவாங்கி அவ்வளவே கொடுப்பது. இன்றும் அரிசி, பருப்பு, உப்பு, புளி, எண்ணெய் முதலிய உணவுப் பொருள்களைக் குறியெதிர்ப்புக் கொடுத்து வாங்கி வருகிறார்கள். இது உலக வழக்கில் 'குறியாப்பு' என மருவி வழங்குகிறது. மற்ற வர்க்குக் கொடுப்பன - வறியரல்லாதார்க்கு ஒரு பயனோக்கிக் கொடுப்பன. (1) 222. நல்லா றெனினுங் கொளறீது மேலுலகம் இல்லெனினு மீதலே நன்று. கொளல் நல் ஆறு எனினும் தீது - ஒருவனிடமிருந்து ஒரு பொருளைக் கொள்ளுதல் நல்ல வழி என்றாலும் அது தீதாகும்; மேலுலகம் இல்லெனினும் ஈதல் நன்று - கொடுத்தால் மேலுலகில் மதிப்பு இல்லை என்றாலும் கொடுத்தல் நல்லது. கொடுத்தாரை அயல்நாடர் மதியார் எனினும் கொடுத்தல் நல்லது என, ஈகையின் சிறப்புக் கூறியது. மேலுலகை முகவுரையில் காண்க. கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்று. (2) 223. இலனென்னு மெவ்வ முரையாமை யீதல் குலனுடையான் கண்ணே யுள. இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் - இரப்பவரிடம் 'நான் இலன்' என்னும் துன்ப மொழியைக் கூறாது கொடுத்தல், குலன் உடையான் கண்ணே உள - குடிப்பிறந்தானிடமே உள்ளது. இலன் - வறியன். எவ்வம் - துன்பம். குடிப்பிறத்தல் - வழி வழியாக வந்த நல்லொழுக்கமுடைய குடியிற் பிறத்தல். வழிவழி - பரம்பரை. நன்மக்கள் இரப்போர்க்கு இலன் என்று கூறார். (3) 224. இன்னா திரக்கப் படுத லிரந்தவர் இன்முகங் காணு மளவு. இரந்தவர் இன்முகம் காணும் அளவு - ஒரு பொருளை இரந்தவர் அது பெற்றதனால் அவர்க்குண்டாகிய் இனிய முகத்தைக் காணும் வரையில், இரக்கப்படுதல் இன்னாது - இரத்தலேயன்றி, ஈகைக் குணமும் இனிதன்று. இரக்கப்படுதல் - ஈகை. அது, ஈகைக் குணத்தை உணர்த்திற்று. இரக்கப்படுதல் - செயப்பாட்டுவினை. இரத்தல் - செய்வினை. இரந்தவர் வேண்டுவனவற்றை யெல்லாம் கொடுக்க எவராலும் முடியாது. எனவே, தம்மிடம் வந்து இரந்தவருடைய இனிய முகத்தைக் காணும் வரையில் கொடுப்போர் மனம் அமைதி பெறாதாகையால் 'இரக்கப் படுதலும் இன்னாது' என்றார். இரப்போர் விரும்பிய பொருளையெல்லாம் ஈய வேண்டும். (4) 225. ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின். ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் - நோன்பு நோற்பார்க்கு வலியாவது பசியைப் பொறுத்தல்; அப்பசியை மாற்றுவார் ஆற்ற லின்பின் - அவ்வலிதான், பொறுத்தற்கரிய பசியை ஈகையால் நீக்குவாரது வலிக்குப் பின்பு. தாமும் பசித்துப் பிறர் பசியையும் தீர்க்கமாட்டாரது ஆற்றலைவிட, தாமும் பசியாது பிறர் பசியையும் தீர்ப்பாரது ஆற்றல் சிறந்தது என்பதாம். பசியைப் பொறுப்பவரை விடப் போக்குபவரே சிறந்தவராவர். (5) 226. அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. அற்றார் அழிபசி தீர்த்தல் - பொருள் அற்றவரது மிக்க பசியைத் தீர்க்கக்கடவன்; அஃது பொருள் பெற்றான் ஒருவன் வைப்புழி - அது பொருள் பெற்றவன் ஒருவன் அப்பொருளை வைக்கும் இடமாகும். தீர்த்தல் - வியங்கோள் வினைமுற்று. பிறர் பசி தீர்த்தல் ஒருவனுக்கு எய்ப்பினில் வைப்பாகும். எய்ப்பினில் வைப்பு - சேமநிதி. (6) 227. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது. பாத்து ஊண் மரீஇயவனை - பங்கிட்டு உண்ணுதலைப் பழகியவனை, பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது - பசி என்னும் தீயநோய் தீண்டுதல் அரிது - பசி என்னும் தீய நோய் தீண்டுதல் இல்லை. பாத்தல் - பகுத்தல். தீண்டுதல் - பற்றுதல். பகுத்துண் பவனுக்குப் பலரும் உதவுவ ராகையால் பசிநோய் வருத்துதல் இல்லை. (7) 228. ஈத்துவக்கு மின்ப மறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் - தமது பொருளைக் கொடாதுவைத்துப் பின் இழக்கின்ற அருளிலாதார், ஈத்து உவக்கும் இன்பம் அறியார் கொல் - பிறர்க்குக் கொடுத்து அதனால் அவர்க்குண்டாகும் முகமலர்ச்சியினால் தாம் அடையும் இன்பத்தைக் கண்டறியாரோ? வன்கண் - அருளின்மை. ஈத்துவக்கும் இன்பத்தை அறிந்தால் ஈவர் என்பதாம். (8) 229. இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல். நிரப்பிய தாமே தமியர் உணல் - தேடிய பொருளைத் தாமே தமியராக உண்ணல், மன்ற இரத்தலின் இன்னாது - உறுதியாக இரத்தலைக் காட்டிலும் கொடியது. நிரப்பிய - தேடிக் குவித்த. தாமே உண்ணல் இரத்தலை விடக் கொடியது. (9) 230. சாதலி னின்னாத தில்லை; யினிததூஉம் ஈத லியையாக் கடை. சாதலின் இன்னாதது இல்லை - இறப்பதைக் காட்டிலும் துன்பந் தருவ தொன்றில்லை; ஈதல் இயையாக் கடை அதும் இனிது - பிறர்க்குக் கொடுக்க முடியாத விடத்து அச்சாதலும் இன்பந் தருவதாகும். ஈயாமையிலும் இழிந்தது வேறொன்று மில்லை. (10) 24. புகழ் புகழ்பட வாழ்தல் 231. ஈத லிசைபட வாழ்த லதுவல்ல தூதிய மில்லை யுயிர்க்கு. இசைபட வாழ்தல் ஈதல் - புகழுண்டாக வாழ்தலாவது கொடுத்தல், உயிர்க்கு ஊதியம் அதுவல்லது இல்லை - உயிர்கட்கு ஊதியம் அப்புகழல்லது இல்லை. இசை - புகழ். ஈதல் - வறியார்க்கு ஈதல். ஊதியம் - இலாபம். இசைபட வாழக் கல்வி, ஆண்மை முதலிய பிற காரணங்கள் உண்டெனினும், இவ்வுடல் உணவை முதலாக உடையதால் கொடையே புகழுக்குச் சிறந்த காரணமாயிற்று. புகழ்பட வாழ். (1) 232. உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன் றீவார்மே னிற்கும் புகழ். உரைப்பார் உரைப்பவை எல்லாம் - சொல்லுவார் சிறப் பித்துச் சொல்லுவனவெல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் -இரப்பார்க்கு ஒரு பொருளைக் கொடுப்பவர் மீது நிற்கும் புகழாம். கொடையாளர் புகழே யாவராலும் சிறப்பித்துப் பேசப்படும். (2) 233. ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில். உயர்ந்த புகழ் அல்லால் - பெரும்புகழ் அல்லாது, உலகத்து ஒன்றா பொன்றாது நிற்பது ஒன்று இல் - உலகத்தில் இணையின்றி அழியாது நிலைத்து நிற்பது வேறொன்றில்லை. ஒன்றுதல் - ஒத்தல். உலகில் பெறுதற்கரிய பெரும் பொருள் புகழேயாகும். (3) 234. நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு. நிலவரை நீள்புகழ் ஆற்றின் - நிலமுழுவதும் ஒருவன் நெடிய புகழைச் செய்வானாயின், புத்தேள் உலகு புலவரைப் போற்றாது - வானுலகம் தேவர்களைப் போற்றாது. வரை - எல்லை. நிலவரை - நிலத்தின் எல்லையளவும் - நில முழுவதும். தேவருலகம் அங்கு வாழும் தேவர்களைப் போற்றாது மிகப்புகழுடைய இவனையே போற்றும் என்பதாம். புலவர் - தேவர். முகவுரை பார்க்க. புகழுடையோரை வெளியுலகம் புகழும். 25 உரை பார்க்க. மாவலியின் புகழை வானவர் போற்றியதால் இந்திரன் பொறாமை கொண்டானென்னும் கதையை நினைவுகூர்க. (4) 235. நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லா லரிது. நத்தம் ஆகும் கேடும் - புகழுடம்பிற்கு ஆக்கம் ஆகும் கேடும், உளது ஆகும் சாக்காடும் - புகழுடம்பு உளது ஆகும் சாவும், வித்தகர்க்கு அல்லால் அரிது - அறிவாளிகட்கல்லது பிறர்க்கு இல்லை. போல் - அசை. 'உளதாகும்' - என்பதில் உள்ள 'ஆகும்' என்பது முன்னுங் கூட்டப்பட்டது. வருந்து அம் - வருத்தம், பொருந்து அம் - பொருத்தம் என்றாயினாற் போல, நந்துஅம் - நத்தம் என்றாயது. நத்தம் - தொழிற் பெயர். நந்தம் - நந்துதல், உண்டாதல். ஆக்கம் ஆகும் கேடு - புகழுடம்பு செல்வமெய்தப் பூதவுடம்பு வறுமை எய்துதல். உளதாகும் - சாவு - புகழுடம்பு நிற்கப் பூதவுடம்பு அழிதல். அதாவது புகழ்வளர வறுமையுறு தலும், புகழை நிலைநிறுத்தி இறத்தலும் அறிவாளிகட்கே முடியும். கொடுத்து வறுமையுற்றார் பொருளிழந்தா ராயினும் புகழ்வளரப் பெறுவர்; புகழுடையார் இறந்தாலும் புகழ் இறவாது நிற்கும். புகழுடம்பு - புகழ். பூதவுடம்பு - நிலம் நீர் தீ காற்று வெளி என்னும் ஐம்பெரும் பூதத்தால் ஆகிய மக்கள் உடம்பு. புகழை - புகழுடம் பென்பது நூன் மரபு. வறுமையுறினும் கொடுத்துப் புகழை வளர்த்தலும், உலகில் புகழை நிலைநாட்டி இறத்தலும் அறிஞர் கடமை. (5) 236. தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார் தோன்றலிற் றோன்றாமை நன்று. தோன்றின் புகழொடு தோன்றுக - மக்களாய்ப் பிறந்தால் புகழத்தக்க குணத்தோடு பிறக்க வேண்டும்; அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று - அக்குணம் இல்லாதவர் பிறத்தலினும் பிறவாமை நல்லது. புகழ் - புகழ் எய்துதற்குரிய குணம். புகழொடு தோன்று தலும், புகழில்லார் தோன்றாமல் இருத்தலும் முடியக் கூடியனவோ? இல்லை. மக்களாய்ப் பிறந்தார் புகழொடு வாழ வேண்டும். புகழொடு வாழாதார் பிறந்தும் பிறவாதவரே. அதாவது மக்கட் பிறப்பின் பெரும் பயனாகிய புகழ் தேடாதாரது பிறப்பினால் பயனில்லை என்பதை இவ்வாறு பிறப்பின்மேல் ஏற்றிக் கூறினார். புகழொடு வாழ்வதே மக்கட் பிறப்பின் பயன். (6) 237. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன். புகழ்பட வாழதார் - தமக்குப் புகழுண்டாகும் படி வாழ மாட்டாதார், தம் நோவார் - அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவிடத்து இவ்விகழ்ச்சி நம்மால் வந்ததென்று தம்மை நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்வாரை நோவது எவன் - தம்மை இகழ்வாரை நொந்து கொள்வது எகற்காக? புகழ்பட வாழாதார் பழிக்கப் படுவர். பிசினன் எனப் பிறர் பழியாமல் ஈந்து புகழுடன் வாழ வேண்டு மென்பதாம். (7) 238. வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு மெச்சம் பெறாஅ விடின். இசை யென்னும் எச்சம் பெறாவிடின் - புகழ் என்னும் எச்சத்தைப் பெறாவிட்டால், வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப - உலகத்தார்க் கெல்லாம் அதுவே பழிப்பாகும் என்பர் அறிவோர். வசை - பழிப்பு. எச்சம் - மிச்சம். நாம் இறக்கினும் நாம் தேடிய புகழ் அழியாது நிற்றலால் புகழை 'எச்சம்' என்றார். 239. வசையிலா வண்பயன் குன்று மிசையிலா யாக்கை பொறுத்த நிலம். இசை இலா யாக்கை பொறுத்த நிலம் - புகழடையாத உடம்பைச் சுமந்த நிலம், வசை இலா வண்பயன் குன்றும் - பழிப்பில்லாத வளப்பத்தையுடைய விளைவு குறையும். இசையிலா யாக்கை - புகழ்பட வாழாதவன் புகழ்பட வாழ்தலாகிய உயிர்க்குணமின்மையால் 'யாக்கை' என்றார். வசை இலா வண்பயன் - பழுதில்லாத நல்ல விளைவு. புகழ் பட வாழாதவன் தன் கடமையைச் செய்யாதவனாகையால், தன் நிலத்தையும் நன்கு பேணமாட்டான். அதனால், விளைவு குன்றும். உழுதொழிலுக்கு வேண்டிய பிறர் உதவி பெறாமையும் குறைவுக்குக் காரணமாகும். (9) 240. வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய வாழ்வாரே வாழா தவர். வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் - பழிப்பு நீங்க வாழ்பவரே உயிருடன் கூடி வாழ்பவர் ஆவர்; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் - புகழ் நீங்க வாழ்பவர் உயிருடன் இருப்பினும் வாழாத வராவர். வாழாதவர் - வாழ்வின் பயனடையாதவர். பழிப்பின்றிப் புகழுடன் வாழ்வதே வாழ்வாகும். (10) இல்லறவியல் முற்றிற்று 2. துறவறவியல் (13) இல்லறம் இனிது நடத்தி ஒழுக்கத்து நீத்தார் ஒழுகும் ஒழுக்கம். இல்லற இன்பத்தைத் துறந்து, தம் இல்லிருந்தே பொது நலம் செய்வதும் துறவறமே யாகும். 25. அருளுடைமை உயிர்கள் மாட்டு அருளுடையராதல். அருள் - இரக்கம், அன்பு (8) தொடர்பு பற்றி நிகழ்வது. அருள் தொடர்பு பற்றாது நிகழ்வது. அன்பின் முதிர்ச்சியே அருள். 758ஆம் குறளுரை பார்க்க. இல்லறத்திற்கு அன்புடைமை போல, அருளுடைமை துறவறத் திற்குச் சிறந்தது. 241. அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள. செல்வத்துள் செல்வம் அருள்செல்வம் - செல்வங்களுள் சிறந்த செல்வமாவது அருளாகிய செல்வம்; பொருள் செல்வம் பூரியார் கண்ணும் உள - பொருட் செல்வம் கீழோரிடத்தும் உள்ளது. அருள் - இரக்கம், பிற உயிரின் துன்பங் கண்டு உள்ளம் உருகுதல். கீழோர் - நற்குணமும் நல்லொழுக்கமும் இல்லாதவர். அருளுடைமை யே துறவிக்குச் சிறந்த செல்வம். (1) 242. நல்லாற்றா னாடி யருளாள்க; பல்லாற்றால் தேரினு மஃதே துணை. நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க - நல்ல வழிகளால் ஆராய்ந்து அருளைக் கைக்கொள்க; பல்லாற்றால் தேரினும் அஃதே துணை - பல வழிகளால் ஆராயினும் அவ்வருளே துணையாகும். நல்ல வழிகளால் ஆராய்தல் - எந்தெந்த வழியில் பிறவு யிர்க்கு நன்மை செய்யலாமென ஆராய்தல். அருளுடைமையே துற வறத்திற்குத் துணையாகும். (2) 243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த இன்னா வுலகம் புகல். இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல் - அறியாமை பொருந்திய துன்ப வுலகத்தில் புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் பொருந்திய மனத்தை யுடையார்க்கு இல்லை. துன்பவுலகத்தில் புகுதல் - துறவறத்திற்கு இன்றியமை யாததான அருளின்மையால், துன்புறுவோர் கூட்டத்தில் சேர்தல். அதாவது மிக்க துன்புறுதல். அருளுடையாரைத் துன்பங்கள் அணுகா. (3) 244. மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சும் வினை. மன் உயிர் ஒம்பி அருள் ஆள்வாற்கு - பிற உயிர்களைக் காத்து அவற்றினிடம் அருள் கொள்வானுக்கு, தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தனது உயிரைப் பற்றி, அஞ்சும் தொழில் இல்லை என்பர் பெரியோர். அஞ்சும் தொழில் - அஞ்சவேண்டிய வேலை, அஞ்ச வேண்டியது. பிற உயிர்க்குத் தீமை செய்யாதவர்க்கு எவரும் தீமை செய்யாராகையால், அருளாளர் தம் உயிரைப் பற்றி அஞ்சவேண்டிய தில்லை. அருளாளர்க்கு அச்சம் இல்லை. (4) 245. அல்ல லருளாள்வார்க் கில்லை; வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி. அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளுடை யார்க்குத் துன்பம் இல்லை; வளிவழங்கும் மல்லல் மாஞாலம் கரி - காற்று உலாவுகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தினர் இதற்குச் சான்று. அருளுடையார் துன்புறுதலை எக்காலத்தும் எவ்விடத்தும் எவருங் கண்டறியாராதலின், இன்மை முகத்தான் 'உலகத்தார் சான்று' என்றார். அருளுடையார்க்குத் துன்பமில்லை. (5) 246. பொருணீங்கிப் பொச்சாந்தா ரென்ப ரருணீங்கி அல்லவை செய்தொழுகு வார். அருள் நீங்கி அல்லவை செய்தொழுகுவார் - தம்மனத் திருந்த அருள் நீங்கி தகுதியல்லாதவற்றைச் செய்தொழுகு வாரை, பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - அறத்தையும் இழந்து தம் கடமை யையும் மறந்தவர் என்பர் உலகோர். அல்லவை - கொடுமைகள். பொச்சாந்தல் - மறத்தல். அரு ளின்றிக் கொடுமை செய்வோர், துறவறத்தையும் கடமையையும் இழந்தவராவர். அருளுடையராய் உயிர்கட்கு நன்மை செய்வதே நீத்தார் கடமையாகும். (6) 247. அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க் கிவ்வுலக மில்லாகி யாங்கு. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு - பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லை யானாற் போல, அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு மறுமையின்பம் இல்லை. பொருள் - இடம் பொருள் ஏவல் முதலிய செல்வப் பொருள். 'இவ்வுலகம்' என்பது உயிர்வாழும் இன்றைய உலகத் தையும், 'அவ்வுலகம்' என்பது இறந்தபின்னுள்ள மறுமையான அன்றைய உலகத்தையும் குறிக்கும். மறுமை இன்னதென்பதை 98ஆம் குறளுரையில் காண்க. அருளிலார்க்கு இறந்தபின் நிகழும் மறுமை யின்பம் இல்லை. (7) 248. பொருளற்றார் பூப்ப ரொருகா லருளற்றார் அற்றார்மற் றாத லரிது. பொருள் அற்றார் ஒருகால் பூப்பர் - பொருளை இழந்தவர் எப்போதேனும் பொருளுண்டாகப் பெறுவர்; அருள் அற்றார் மற்று ஆதல் அரிது - அருளை இழந்தவர் இழந்தவரே; ஒருபோதும் அதனைப் பெற முடியாது. அருளையிழந்தவர் துறவறத்தையே இழந்தவராகை யால் மறுபடிப் பெறமுடியாது என்றார். துறவறத்திற்கு அருளே அடிப்படை என்பதாம். (8) 249. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரின் அருளாதான் செய்யு மறம். தேரின் - ஆராயுங்கால், அருளாதான் செய்யும் அறம் - உயிர் களிடத்து அருளில்லாதவன் செய்யும் துறவறமானது, தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்று - தெளிந்த அறிவில்லா தவன் உண்மைப் பொருளைக் கண்டதுபோலும். தெருளாதான் உண்மைப்பொருளைக் காண முடியாமை போல, அருளில்லாதான் செய்யும் துறவறமும் உண்மையற மாகாது. (9) 250. வலியார்முற் றன்னை நினைக்கத்தான் தன்னின் மெலியார்மேற் செல்லு மிடத்து. தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து - தான் தன்னிலும் வலியில்லார்மேல் வெகுண்டு செல்லும் பொழுது, வலியார்முன் தன்னை நினைக்க - தன்னிலும் வலியார் முன்பு தான் அஞ்சிநிற்கும் நிலையை எண்ணிப் பார்க்கக் கடவன். அருளின்றித் தன்னைவிட மெலியோரை வருத்தும் போது, தன்னை ஒரு வலியன் வருத்தினால் தனக்கு எப்படி யிருக்குமோ அந்நிலையை எண்ணிப்பார்த்து அருளுடை யானாக வேண்டும். 'தனக்குள்ளது பிறர்க்கும் உண்டு' என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். (10) 26. புலால் மறுத்தல் புலாலுண்ணல் கொலைக்குக் காரணமாகையால் அதை உண்ணாமையே அருளுடைமையாகும், எனத் துறவறத் தார்க்குப் புலாலுண்ணல் விலக்கப்பட்டது. 251. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙன மாளு மருள். தன் ஊன் பெருக்கற்குத் தான் பிரிது ஊன் உண்பான் - தனது உடம்பை வளர்த்தற்குத் தான் வேறோர் உயிரின் உடம்பை உண்பவன், அருள் எங்ஙனம் ஆளும் - அருளை எவ்வாறு ஆள்வான்? அருளிலி என இகழ்ந்தவாறு. தன் உடம்பை வளர்க்கப் பிறிதோருடம்பை யுண்பது அருளாகாது. (1) 252. பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி ஆங்கில்லை யூன்றின் பவர்க்கு. பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை - பொருளை ஆளுதல் அதனைக் காவாதாருக்கு இல்லை; ஆங்கு ஊன் தின்பவர்க்கு அருள் ஆட்சி இல்லை - அவ்வாறே ஊன்தின்ப வர்க்கு அருளை ஆளுதல் இல்லை. ஆளுதல் - குறையாது வைத்திருத்தல். காவாரின் பொருள் குறைதல் போல, ஊன் தின்பாரின் அருள் குறையும். (2) 253. படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்ற னுடல்சுவை யுண்டார் மனம். படைகொண்டார் நெஞ்சம்போல் - கொலைக் கருவியைக் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யுங் கொலையையே நோக்குவதல்லது, அருளை நோக்காதவாறு போல, ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது - வேறோருயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குவ தல்லது அருளை நோக்காது. நன்று - அருள். ஊக்குதல் - அருள்கொள்ள முயலுதல். ஊனுண்பார் அருளுடையாராதல் முடியாது. (3) 254. அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் றினல். அருள் யாதெனின் கொல்லாமை - அருள் யாதெனின் கொல்லாமை; அல்லது யாதெனில் கோறல் - அருள் அல்லது யாதெனின் கொல்லுதல்; அவ்வூன் தினல் பொருள் அல்லது - ஆதலால், கொல்லுதலால் வரும் அவ்வூனைத் தின்பது அறமன்று. 'யாதெனின்' என்பது அருளுடனும் கூட்டப்பட்டது. அருளல்லது - கொடுமை. கொல்லாமை அருள்; கொல்லுதல் கொடுமை; ஆதலால், ஊன் தின்னல் கெட்டது. தியாதெனின் - குற்றியலிகரம். (4) 255. உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு. உயிர் நிலை ஊன் உண்ணாமை உள்ளது - சில உயிர் இன்னும் உடம்பின்கண் நிலைபெற்றிருத்தல் ஊனுண்ணாமை என்னும் அறத்தினால் உள்ளது, ஊன் உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது - அவ்வறத்தைக் கெடுத்து ஒருவன் ஊனுண்பானாயின் அவனை விழுங்கிய அளறு பின் உமிழ்தற்கு வாயைத் திறவாது. நிலை - நிலைத்திருத்தல். உண்ணப்பட்ட உயிர் பலவாகலின் நிற்பன சிலவாயின. 'ஊனுண்ணாமை' என்னும் அறத்தினால் தான் அச்சில உயிரும் உடம்பில் நிலைத்திருக் கின்றன; அவ்வற மின்றேல் அச்சிலவும் இரா என ஊனுண்டலின் கொடுமை கூறினார். அண்ணாத்தல் - வாயைத் திறத்தல். அளறு - தீநாற்ற முடைய குழைந்த சேறு. தீராத பெருந் துன்பத்தைச் 'சேற்றில் அழுந்துதல்' என்னும் வழக்கை, இழிகாமத்தைக் 'காமச்சேறு' என்பதால் அறிக. தான் மேற்கொண்டுள்ள துறவறத்தையும், அவ்வறத்திற்குரிய அருளையும் எண்ணிப்பாராது ஒருவன் ஊனுண்பானாயின், அவன் மீளாத் துயரத்தில் ஆழ்வான் என்பதாம். ஊன் என்பது முன்னுங் கூட்டப்பட்டது. (5) 256. தினற்பொருட்டாற் கொள்ளா துலகெனின் யாரும் விலைப்பொருட்டா லூன்றருவா ரில். தினற் பொருட்டு உலகு கொள்ளாது எனின் - தின்னு வதற்காக உலகத்தார் வாங்காராயின், விலைப்பொருட்டு ஊன் தருவார் யாரும் இல் - விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லை. வாங்குவா ரில்லையேல் கொன்று விற்பாரும் இல்லை. ஆல் இரண்டும் அசை. 'யாம் கொல்லுவதில்லை; விலைக்கு வாங்கி யுண்கிறோம்' என்பார்க்கு, 'நீங்கள் வாங்கா விட்டால் அவர் கொல்ல மாட்டார். ஆகையால், கொலைக் குற்றம் புலாலுண்ணும் உங்களையே சாரும்' எனப் புலாலுண்பதன் குற்றங் கூறப்பட்டது. (6) 257. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின். புலால் பிறிது ஒன்றன் புண் - ஊன் வேறோர் உடம்பின் புண்ணாகும்; அது உணர்வார் பெறின் உண்ணாமை வேண்டும் - இந்த உண்மையை உணர்வாராயின் அவ்வூனை உண்ணாதிருக்க வேண்டும். புலாலை நம் உடலில் தோன்றிப் பெருத்துப் பழுத்துக் கிழித்துச் சீயொழுகிக் கொண்டிருக்கும் பெரிய புண் என உணர்வோர் உண்ணாமை வேண்டும். இது அருவருப்புத் தோன்றக் கூறி விலக்கப்பட்டது. (7) 258. செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணார் உயிரிற் றலைப்பிரிந்த வூன். செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - குற்றத்தினின்று நீங்கிய அறிவினையுடையார், உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் - உயிரினின்று நீங்கிய உடம்பை உண்ணார். செயிர் - குற்றம். காட்சி - அறிவு. தலைப்பிரிதல் - ஒரு சொல். குற்றமற்ற அறிவினையுடையோர் உயிரைவிட்டு நீங்கிய உடம்பை உண்ணார். (8) 259. அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி செய்தலினும், ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒன்றன் உயிரைப் போக்கி அதன் ஊனை யுண்ணாமை நல்லது. அவி - வேள்வித்தீயில் இடும் பொருள். சொரிதல் - ஊற்றுதல், இடுதல். ஆயிரம் - பல. இதுகொலை வேள்வியை மறுத்தது. வேள்வி மூலம் கொன்றுண்பது குற்றமன்று; நல்லது என்பார்க்கு, கொலை வேள்விகள் பல செய்தலைவிட ஓருயிரைக் கொன்று ஊனுண் ணாமல் இருப்பது நல்லது எனக் கூறியது. 268ஆம் குறளுரை பார்க்க. கொன்றூனுண்டு அடையும் பயன் இல்லை; ஊனுண் ணாமையே நல்லது. (9) 260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா வுயிருந் தொழும். கொல்லான் புலாலை மறுத்தானை - ஓருயிரையும் கொல்லா தவனாய்ப் புலாலையும் உண்ணாதவனை, எல்லா உயிரும் கை கூப்பித் தொழும் - எல்லா உயிர்களும் கைகுவித்துத் தொழும். அருட் பெருக்கினால் உயிர்களிடத்து மிக்க அன்புடன் நடந்து கொள்ளும் அறவோனிடம் உயிர்கள் அச்சம் அன்றி அருக ணைந்து அன்புடன் அளவளாவி வாழும். இதையே நயம்படக் 'கைகூப்பித் தொழும்' என்றார். (10) 27. கொல்லாமை இது துறவறத்திற்குச் சிறந்தது. கொலை அருளுடைமை யன்மையின் இது துறவறத்திற்கு விலக்கப்பட்டது. 261. அறவினை யாதெனிற் கொல்லாமை; கோறல் பிறவினை யெல்லாந் தரும். அறவினை யாதெனில் கொல்லாமை - அறச்செயல் யாதென்றால் ஓருயிரையும் கொல்லாமையாகும்; கோறல் பிறவினை எல்லாம் தரும் - கொல்லுதல் அறமல்லாத கெட்ட செயல்களின் பயனை யெல்லாம் தரும். கொல்லாமை அறச்செயலாகும். கொல்லுதல் அறமல்லாத செயல்; அச்செயலின் பயன் துன்பம். எனவே, கொல்லுதல் எல்லாத் துன்பங்களையும் தரும். (1) 262. பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவாற்று ளெல்லாந் தலை. பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் - உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்துப் பிறகு தானுண்டு பல உயிர் களையும் காத்தல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - அற நூலோர் தொகுத்த அறங்கள் எல்லா வற்றிலும் தலையாய அறம் ஆகும். உயிர்கள் பசித்தலறப் பார்த்துக்கொண்டே உண்பதும் கொலையோடொக்கும். உயிரோம்பல் - உயிர்களைக் கொல்லாமை. (2) 263. ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று. ஒன்றாக நல்லது கொல்லாமை - ஒப்பின்றித் தனியாக நல்லது கொல்லாமை; அதன் பின்சாரப் பொய்யாமை நன்று - அதற்கு அடுத்தபடியாகப் பொய் பேசாமை நல்லது. அறங்கள் பலவற்றுள்ளும் முதலாவது அறம் கொல்லாமை; இரண்டாவது அறம் பொய்யாமை. பொய்யும் கொலை போல் கொடியதாகலின் உடன் கூறினார். கொன்று விட்டுக் கொல்ல வில்லை என்று பொய் கூறலுமாம். (3) 264. நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் கொல்லாமை சூழும் நெறி. நல் ஆறு எனப்படுவது யாதெனின் - நல்லவழி என்று சொல்லப்படுவது எது என்றால், யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி - எவ்வகை உயிரையும் கொல்லமையைக் கருதும் நெறி. ஓருயிரையும் கொல்லக் கருதாமையே நல்வழி. தியாதெனின் - குற்றியலிகரம். 265. நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் றலை. நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - தீமை நிலைக்கு அஞ்சி அத்தீமையை விட்டவர்கள் எல்லோரிலும், கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை - கொலைப் பழிக்கு அஞ்சிக் கொல்லாமையாகிய அறத்தைக் கருதுபவன் முதன்மையானவனா வான். தீமை புரிந்து வாழும் நிலை - தீமை நிலை. தீமைகளுக்கு அஞ்சி அவற்றை விட்டவர் பலரினும், கொலைக் கஞ்சிக் கொலையை விட்டவரே சிறந்தவராவர். (5) 266. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேற் செல்லா துயிருண்ணுங் கூற்று. கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் - கொல்லாமையாகிய நோன்பை மேற்கொண்டு நடப்பவன் வாழ் நாளின்மேல், உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது - உயிரை உண்ணும் கூற்றுச் செல்லாது. 299ஆம் குறளுரை பார்க்க. கூற்று உயிருண்ணச் செல்லாமை - தகுந்த காலத்தன்றிச் சாவாமை. எனவே, நீடுவாழ்ந்து புகழை நிலை நாட்டுவான் என்பது. கொல்லா அற முடையோனை உலகம் மறவாது. (6) 267. தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை. தன் உயிர் நீப்பினும் - பிறிதோர் உயிரைக் கொல்லா விடின் தனது உயிர் உடம்பைவிட்டுப் போய்விடுமாயினும், தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை செய்யற்க - தான் வோறொன்றன் உயிரை அதன் உடம்பினின்றும் நீக்கும் செயலைச் செய்யா திருக்கக் கடவன். நோய்க்கு மருந்தாகவும், உடல் வலிக்காகவும் ஊனுண்ணக் கொல்லுதல். கடுநோயுடையோன் ஒருவன் ஒன்றன் ஊனை (கறி) யுண்டால்தான் அந்நோய் தீரும்; இல்லையேல் இறந்துவிடுவான் எனினும், அவ்வூனுண்டு உயிர்வாழ அவ்வுயிரைக் கொல்லா திருத்தல். ஒவ்வொரு உயிரும் தன்னுயிரை அருமையாகப் பாதுகாக்க விரும்பு மாகையால் 'இன்னுயிர்' எனப்பட்டது. தன்னுயிர் காக்கப் பிறவுயிர் கொல்லேல். (7) 268. நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் கொன்றாகு மாக்கங் கடை. நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் - வேள்விக்கண் கொன்றால், நன்மையைத் தரும் செல்வம் பெரிது ஆகும் என்று பிறர் கூறினும், கொன்று ஆகும் ஆக்கம் சான்றோர்க்குக் கடை - ஓர் உயிரைக் கொல்வதால் வரும் செல்வம் பேரறிவினர்க்கு இழிந்த தாகும். நன்று ஆகும் ஆக்கம் - நன்மையைத் தரும் வேள்விப் பயன். கொலை வேள்வியால் வரும் பயன் பெரிது என்று பிறர் கூறினும், துறவிகளுக்கு அப்பயன் கடைப்பட்டதாகும். முன் (259) கொலை வேள்வியின் மூலம் புலாலுண்பதைக் கண்டித்தார். இதில் வேள்விக் கொலையைக் கண்டிக்கிறார். இது அயற் கொள்கை மறுப்பு. (8) 269. கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து. கொலைவினையர் ஆகிய மாக்கள் - கொலைத் தொழிலை யுடையோராகிய மக்கள், புன்மை தெரிவாரகத்துப் புலை வினையர் - அக் கொலைத் தொழிலின் கீழ்மையை அறிவாரது உள்ளத்தில் புலைத்தொழிலையுடையோராகத் தோன்றுவர். மாக்கள் - ஆறாவதறிவாகிய பகுத்தறிவில்லாத ஐயறிவினர். புலை - தாழ்வு, இழிவு. புலைவினை - இழிதொழில். (9) 270. உயிருடம்பி னீக்கியா ரென்பர் செயிருடம்பிற் செல்லாத்தீ வாழ்க்கை யவர். செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - குற்றமான உடம்புடன் வறுமை மிகுந்த இழிந்த வாழ்க்கை உடையவரை, உயிர் உடம்பின் நீக்கியார் என்பர் - உயிரை உடம்பினின்று நீக்கினவர் என்று கூறுவர் பெரியோர். செயிர் - குற்றம். செயிர் உடம்பு - உறுப்புக் குறையும், கண்ணால் பார்க்கமுடியாத கொடிய நோயும் உடைய உடம்பு. செல்லா - செல்லாத. தீ வாழ்க்கை - மிக இழிந்த வாழ்க்கை. உயிரைக் கொன்றவரே கொடிய நோய்க்காளாய் இழிந்த வாழ்க்கை வாழ்பவர் என்றது, கொலைக் குற்றம் கொடிதென்பதை விளக்கக் கூறியது. (10) 28. வெகுளாமை வெகுளி - சினம். வெகுளாமை - சினங்கொள்ளாமை. வெகுளும்படி பிறர் நடந்துகொள்ளினும் வெகுளாமையே அருளு டைமையாகும். 271. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக் காக்கிலென் காவாக்கா லென். சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான் - வெகுளி செல்லு மிடத்தில் அதைத் தடுப்பவனே தடுப்பவனாவான்; அல் இடத்துக் காக்கில் என் காவாக்கால் என் - சினம் செல்லாத இடத்தில் தடுத்தால் என்ன? தடுக்காவிட்டால் என்ன? செல்லிடம் - தன்னினும் மெலியார். செல்லாவிடம் - தன்னினும் வலியார். தன்னினும் மெலியார் மேல் வெகுளியை விடாமல் தடுப்பவனே வெகுளியைத் தடுப்பவனாவான். வலியார் மேல் சினந்து செய்வதொன்றுமில்லை. (1) 272. செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்லதனிற் றீய பிற. செல்லா இடத்து சினம் தீது - தன்னால் யாதொன்றும் செய்யமுடியாத வலியார்மேல் எழும் வெகுளி தனக்கே தீதாம்; செல் இடத்தும் அதனில் தீய பிறஇல் - மெலியார் மேலெழினும் அதை விடத் தீயவை பிற இல்லை. தனக்கே தீது - அவ் வலியாரால் தான் துன்புறுத்தப் படுதல். செத்த பாம்பை அடிப்பதுபோல் மெலியார்மீது சினப்பது உலகப் பழிப்புக்கு ஆளாக்கும். சினம் எவ்வகையிலும் கொடியது. (2) 273. மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்த லதனால் வரும். வெகுளியை யார்மாட்டும் மறத்தல் - வெகுளியை யாரிடத்தும் ஒழிக; அதனால் தீய பிறத்தல் வரும் - அவ்வெகுளியால் தீயவை உண்டாகும். வலியார் மெலியார் ஒப்பார் என்னும் எவரிடத்தும் வெகுளி கூடாதென்பார் 'யார் மாட்டும்' என்றார். பிறத்தல் வரும் - பிறக்கும். சினத்தால் பல தீங்குகள் உண்டாகும். (3) 274. நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற் பகையு முளவோ பிற. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - சிரிப்பையும் மகிழ்ச்சியையும் போக்கும் சினத்தைப்போல, பிற பகையும் உளவோ - ஒருவனுக்கு வேறு பகையும் உண்டோ? இல்லை. சிரிப்பையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கும் நட்பைப் போக்கிப் பகையை யுண்டாக்கும் சினம். (4) 275. தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம். தன்னைத்தான் காக்கின் சினம் காக்க - ஒருவன் தன்னைத் தானே காக்க நினைக்கின் சினமெழாதபடி தடுக்கக் கடவன்; காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - தடுக்காவிடின் அவ்வெகுளி அவனையே மிகவும் துன்புறுத்தும். பெருந்துன்பத்துக் குள்ளாக்கும் சினமெழாமல் காப்பவனே தன்னைத் துன்பமே அணுகாமல் காப்பவனாவான். (5) 276. சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னும் ஏமப் புணையைச் சுடும். சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - சினம் என்னும் நெருப்பு, இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும் - துன்பக் கடலில் அழுந்தாமல் தன்னைக் கரையேற்றவல்ல இனமாகிய பாதுகாப்புப் புணையையும் சுடும். சேர்ந்தாரைக் கொல்லி - தன்னைச் சேர்ந்தாரைக் கொல்லுந் தொழிலை யுடையது. இனம் - துணைவர். புணை - தெப்பம். சினத்தைத் தீயென்று உருவகித்ததற்கேற்பச் 'சுடும்' என்றார். சுடுதல் - அகற்றுதல். சினம் தன்னைத் துன்புறுத்தலே யன்றித் தனக்கு இனமா யினாரையும் தன்னைவிட்டுப் பிரிக்கும் என்பதாம். (6) 277. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு - வெகுளியைத் தனக்குரிய குணமென்று கொண்டவன் கெடுதல், நிலத்து அறைந்தான் கை பிழையாதற்று - நிலத்தில் அடிப்பவன் கை அந் நிலத்தில் படுதல் தப்பாதது போல் தப்பாது. சினங்கொண்டவன் கெடுதல் கைபடுதல் தப்பாதது போல் தப்பாது. கை கட்டாயம் நிலத்தில் பட்டுக் கெடுவதுபோல், அவனுங் கட்டாயம் கெடுவான் என்பதாம். (7) 278. இணரெரி தோய்வன்ன வின்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - கொழுந்து விட்டெரியும் தீப்பந்தத்தால் சுடுவதுபோன்ற துன்பங்களை ஒருவன் மேன்மேலும் செய்தாலும், புணரின் வெகுளாமை நன்று - பின்னர் வருவானாயின் வெகுளா திருப்பது நல்லது. இணர் - பூங்கொத்து. இணர் எரி - தீப்பந்தத்திலிருந்து கொத்துக் கொத்தாக எண்ணெய்ச் சுடர் சிதற எரியுந் தீ. விறகுத் தீயைவிட இது மிகவும் சுடும். திருடர் முதலிய கொடியவர்களைப் பந்தத்தால் சுட்டொறுப்பது வழக்கம். புணர்தல் - தான் செய்த குற்றத்திற்கு வருந்திப் பின்னர் உறவு கொள்ள வருதல். அவ்வாறு வருவானை அவன் செய்த இன்னாமையை மறந்து அவனைத் தம்மோடு சேர்த்துக் கொள்ளுதல். "இன்னாசெய் தாரை ஒறுத்தல்" என்னும் 284ஆம் குறளைப் பார்க்க. துன்பஞ் செய்தாரும் பின்வந்தால் வெகுளாமல் சேர்த்துக் கொள்வதே பெருங்குணம். (8) 279. உள்ளிய தெல்லா முடனெய்து முள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின். உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின் - ஒருவன் தன் நெஞ்சில் வெகுளியை நினையான் என்றால், உள்ளியது எல்லாம் உடன் எய்தும் - அவன் எண்ணியயாவும் ஒருங்கே பெறுவான். வெகுளியற்றவன் யாவர்க்கும் நண்பனாவதால் எண்ணிய வெல்லாம் ஒருங்கெய்தப் பெறுவான். (9) 280. இறந்தா ரிறந்தா ரனையர்; சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. இறந்தார் இறந்தார் அனையர் - மிக்க சினத்தை யுடையவர் உயிருடன் இருப்பினும் செத்தாரை ஒப்பர்; சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை - வெகுளியைத் துறந்தார் சாகுந் தன்மையரா யினும் அச்சாவை ஒழிந்தாரை ஒப்பர். இறந்தார் - வெகுளியில் அளவுகடந்தவர். இறத்தல் - மிகுதல், அளவுகடத்தல். செத்தாரை ஒத்தல் - சினத்தால் கேடுறுதல். சாவை ஒழிதல் - புகழுடம் பெய்தல். சினமிக்கவர் கெடுவர்; சினமற்றவர் புகழெய்துவர். (10) 29. இன்னா செய்யாமை இன்னா - துன்பம். பிறர்க்கு எக்காரணம் பற்றியும் இன்னா செய்யாமையே அருளுடைமையாகும். 281. சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள். சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் - சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெற்றாலும், பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - பிறர்க்குத் துன்பஞ் செய்யாதிருத்தல் குற்ற மற்றவரது கொள்கை. சிறப்பீனும் செல்வம் - மிக்க செல்வம். செல்வச் செருக்கால் பிறர்க்குத் துன்பம் செய்யக்கூடாது. இன்னா - துன்பம். (1) 282. கறுத்தின்னா செய்தவற் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள். கறுத்து இன்னா செய்தவன் கண்ணும் - வெகுண்டு தமக்குத் துன்பஞ் செய்தவனிடத்தும், மறுத்து இன்னா செய்யாமை - திருப்பி அவனுக்குத் துன்பஞ் செய்யாமல் இருப்பதே, மாசு அற்றார் கோள் - குற்றமற்றவர் கொள்கை. தீமைக்குத் தீமை செய்யாமலிருப்பதே பெரியோர் கொள்கை. (2) 283. செய்யாமற் செற்றார்க்கு மின்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும். செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் - தானொரு குற்றமும் செய்யதிருக்கத் தனக்குத் துன்பஞ் செய்தவருக்கும் தாம் துன்பஞ் செய்வராயின், உய்யா விழுமம் தரும் - அச்செயல் அவர்க்குக் கடக்க முடியாத துன்பத்தைத் தரும். உய்யா - உய்ய முடியாத, தப்ப முடியாத. தனக்குக் கெடுதி செய்தவர்க்கும் கெடுதி செய்யலாகாது. (3) 284. இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண நன்னயஞ் செய்து விடல். இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்குத் துன்பஞ் செய்த வரைத் தண்டித்தலாவது, அவர் நாண நல்நயம் செய்து வி டல் - அவர் வெட்கப்படும்படி நல்ல நன்மைகளைச் செய்து அவர் செய்த தீமையையும், தாம் செய்த நன்மையையும் மறந்து விடுவதே. மறவாவிடின் - அவர் செய்த தீமை மனத்தை யுறுத்திக் கொண்டே யிருக்கும்; தாஞ் செய்த நன்மையால் 'இன்ன செய்தோம்' என்னும் செருக்குணர்ச்சி தோன்றும். இன்னா செய்தவர், தமக்குச் செய்யும் நன்மையைக் கண்டு இவர்க்கு இன்னா செய்தோமே என்று நாணுதல். தீமை செய்தவர்க்கும் நன்மை செய்து அவரை நல்லவராக்குவதே பெரியோர் கடமை. (4) 285. அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய் தந்நோய்போற் போற்றாக் கடை. பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக் கடை - பிறிதோர் உயிர்க்குண்டாகும் நோயைத் தமக்குற்ற நோய் போல எண்ணிக் காவாத இடத்து, அறிவினான் ஆகுவது உண்டோ - அறிவினால் ஆவதொரு பயனுண்டோ? இல்லை. பிறவுயிர்க்கு உண்டான துன்பத்தைத் தமக்கு உண்டானது போல எண்ணி, அத்துன்பந் தீர்த்துக் காப்பதே அறிவின் பயனாகும். (5) 286. இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல். இன்னா எனத் தான் உணர்ந்தவை - இவை துன்பந் தருவன வென்று தான் அறிந்தவற்றை, பிறன்கண்செயல் துன்னாமை வேண்டும் - பிறனிடத்துச் செய்தலைப் பொருந் தாமை வேண்டும். தான் தீயவை என்று அறிந்தவற்றைப் பிறர்க்குச் செய்யக் கூடாது. (6) 287. எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் - எவ்வகை யாலும் எப்போதும் எவர்க்கும், மனத்தான் ஆம் மாணா செய்யாமை தலை - மனமறியத் துன்பந்தரும் செயல்களைச் செய்யாமை முதன்மை யானது. மாணா - மாட்சிமையல்லாத - துன்பச் செயல். மனமறியச் செய்தல் - வேண்டுமென்றே செய்தல். (7) 288. தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல். தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் - தனக்குப் பிறர் செய்யும் துன்பத்தை அறிகின்ற ஒருவன், மன் உயிர்க்கு இன்னா செயல் என்கொல் - பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்தல் என் நினைந்தோ? மன் உயிர் - நிலைபெற்ற உயிர். தனக்குள்ளதுபோலவே பிறர்க்கும் உண்டு என உணர்ந்து பிறர்க்கு இன்னா செய்யாதிருக்க வேண்டும். (8) 289. பிறர்க்கின்னா முற்பகல் செய்யிற் றமக்கின்னா பிற்பகற் றாமே வரும். பிறர்க்கு முற்பகல் இன்னா செய்யின் - பிறர்க்கு முற்பொழுது துன்பஞ் செய்தால், தமக்கு பிற்பகல் தாமே வரும் - தமக்குப் பிற் பொழுது துன்பம் தாமே வரும். பிறர்க்குத் தான் வருத்தப்பட்டுச் செய்ததுபோலன்றி வரும் பொழுது சிறிதும் வருத்தமில்லாமல் வருமென்பார், 'தாமே வரும்' என்றார். முற்பகல் பிற்பகல் - முன், பின். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். (9) 290. நோயெல்லா நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் - இப்போதுள்ள துன்பமெல்லாம் முன்பு பிறர்க்குத் துன்பஞ் செய்தார் மீதே உள்ளன; நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் - ஆதலால், பின்பு துன்பப்படாமையை விரும்பு கின்றவர்கள் இப்போது பிறர்க்குத் துன்பஞ் செய்யமாட்டார். 289ஆம் குறளுக்கு விளக்கங் கூறியது இது. முன்பு பிறர்க்குத் துன்பம் செய்தவர் இப்போது துன்புறுகின்றனர். ஆதலால், பின்பு துன்புறாமல் இருக்க விரும்புவோர் இப்போது பிறர்க்குத் துன்பஞ் செய்யார். (10) 30. தவம் தவமாவது - மனவடக்கத்தின் பொருட்டு ஊணும் உறக்கமும் குறைத்தல், உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தல், பிற உயிர்களைப் போற்றுதல் முதலிய நோன்பு நோற்றல். 291. உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. உற்றநோய் நோன்றல் - தமக்கு உற்ற நோயைப் பொறுத் தலும், உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே - பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமையும் ஆகிய அவ்வளவே, தவத்திற்கு உரு - தவத்தின் வடிவம். நோய் - பசி, பிறர் புரியும் இன்னல் முதலியன. தந்நோயைப் பொறுத்தலும், பிறவுயிர்க்குத் துன்பஞ் செய்யாமையுமே தவமாகும். (1) 292. தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை அஃதிலார் மேற்கொள் வது. தவமும் தவமுடையார்க்கு ஆகும் - துறவு பூண்டு நோன்பு நோற்றலும் இல்லறவொழுக்கங்களை நன்கு கடைப்பிடித்து ஒழுகி யவர்க்கே முடியும்; அஃதிலார் அதனை மேற்கொள்வது அவம் - அம் முற்றவம் இல்லாதவர் அதை மேற்கொள்வது வீணாகும். இல்லறவொழுக்கங்களை நன்கு கடைப்பிடித்து ஒழுகாதவர் மேற்கொண்டு செய்யும் தவங்கள் தப்புமாகை யால், 'தவமும் தவமுடையார்க்கு ஆகும்' என்றார். இல்லறம் நன்கியற்றித் துறவு பயிலவேண்டும். (2) 293. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம். துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி - துறந்தவர்களுக்கு வேண்டுவன உதவுதலை விரும்பி, மற்றையவர்கள் தவம் மறந்தார் கொல் - இல்வாழ்வார் தவம் செய்தலை மறந்தனர் போலும். துப்புரவு - நுகர்ச்சி. அவை - ஊண், உடை, மருந்து, உறையுள் என்பன. துறவிகளுக் குதவுதலை 42ஆம் குறளில் காண்க. "வேண்டிய வேண்டியாங் கெய்தலால்" (295) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாஞ்செய்யும் தானத்தின் மேலுள்ள விருப்ப மிகுதியால் மறந்தார் போலும். எனவே தானத்தில் தவம் சிறந்ததென்பது. (3) 294. ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலும் எண்ணிற் றவத்தான் வரும். எண்ணின் - தவஞ்செய்வோர் நினைப்பாராயின், ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும் - பகைவரைக் கெடுத்தலும் நண்பரை ஆக்கலும், தவத்தான் வரும் - தவத்தால் நடக்கும். எண்ணின் என்றது, அவர்க்கு அவ்வாறு எண்ணாமை இயல் பென்பது. துறவிகளுக்கு ஒன்னாரும் உவந்தாரும் இன்மையால் தவத்தின் மேலேற்றி அதன் சிறப்புக் கூறப்பட்டது. துறவிகளுக்கு இல்லறத்தார் வேண்டிய உதவி செய்யப் பெறுதலால் அவர் எண்ணியதைச் செய்ய வல்லவராகின்றனர். குறள் 42 பார்க்க. (4) 295. வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவம் மீண்டு முயலப் படும். வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் - விரும்பிய வற்றை விரும்பியபடியே அடைதலால், செய்தவம் மீண்டும் முயலப் படும் - செய்கின்ற தவம் மேன்மேலும் முயற்சிக்கப் படும். வேண்டிய வேண்டியாங் கெய்தல் 42, 294ஆம் குறளுரை பார்க்க. (5) 296. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வா ராசையுட் பட்டு. தவம் செய்வார் தங் கருமம் செய்வார் - தவம் செய்பவரே தம் தொழிலைச் செய்பவராவர், மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - அவரை யொழிந்தார் ஆசையில் சிக்குண்டு பயனில்லாத வற்றைச் செய்பவராவர். ஆசையுள்பட்டு அவம் செய்வார் - துறந்ததும் மனத்தை யடக்கி நோன்பு நோற்காமல் பழைய ஆசையால் துறவு நிலைக்கு ஏலாதவற்றைச் செய்து காலத்தை வீணாகக் கழிப்பவர். தவமே துறவறத்தின் சிறந்த உறுப்பு. (6) 297. சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. சுட சுடரும் பொன்போல் - தீயிலிட்டுச் சுடச் சுட மாசற்று ஒளிமிகும் பொன்னைப்போல, நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளிவிடும் - தவம் செய்வார்க்குத் துன்பம் வருத்த வருத்தத் தீமை நீங்கி அறிவு மிகும். சுடருதல் - ஒளிவிடுதல். துன்பங்களைப் பழகி அவை இன்ப மாகத் தோன்றும் நிலைபெறுவதே அறிவொளி பெறுவ தாகும். (7) 298. தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய மன்னுயி ரெல்லாந் தொழும். தன் உயிர் தான் அறப்பெற்றானை - தனது உயிரைத் 'தான்' என்று கருதுங் கருத்து நீங்கப் பெற்றவனை, ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் - பிற உயிர்களெல்லாம் போற்றும். தான் அறுதல் - தான் என்னும் செருக்கறுதல். தான் என்னும் செருக்கற்றவனை உலக மக்களெல்லாம் போற்றுவர். (8) 299. கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - தவவலிமை கைகூடியவர்க்கு, கூற்றம் குதித்தலும் கைகூடும் - கூற்றத்தைத் தப்புதலும் உண்டாகும். நோற்றலின் ஆற்றல் கைகூடல் - தவப்பயிற்சி நிறைவுறுதல். கூற்றத்தைத் தப்புதல் - தவத்தால் உடல்வலுப் பெற்று நீண்டநாள் உயிரோடிருத்தல். உடலும் உயிரும் கூறுபடும் இறப்பினைக் கூற்றம் என்றார். கூற்றம் - உடலும் உயிரும் கூறுபடும் நேரம். கூறுபடுதல் - வேறாதல், பிரிதல். முகவுரை பார்க்க. (9) 300. இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்தில் செல்வர்கள் சிலராக வறியவர்கள் பலராதற்குக் காரணம் யாதெனில், நோற்பார் சிலர் நோலாதவர் பலர் - தவஞ்செய்வார் சிலரும் தவஞ் செய்யார் பலருமாயிருத்தலேயாகும். உண்மையறிவும், ஊக்கமும் இன்றித் தவஞ்செய்யாது பலர் இருப்பதுபோலவே, பொருளீட்டுதற் குரிய அறிவும், முயற்சியும் இல்லாததால் இலர் பலராக உள்ளனர். முயன்று தவம் செய்து பயன்பெற வேண்டும் என்பதாம். (10) 31. கூடாவொழுக்கம் கூடாவொழுக்கமானது - மனவலி யின்மையால், முன் விட்ட காமவின்பத்தைப் பின்னும் விரும்பி மறைந்தொழுகும் தீய வொழுக்கம். கூடாத - தகாத ஒழுக்கம். 301. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்து மகத்தே நகும். வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் - கள்ள மனத்தினனது தீயவொழுக்கத்தை, பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் - உடம்பாக அமைந்துள்ள பூதங்கள் ஐந்தும் கண்டு தமக்குள்ளே சிரிக்கும். படிற்றொழுக்கம் - பொய்யொழுக்கம். நல்லவன் போல நடித்துத் தீயன செய்தொழுகுதல். ஐம்பூதம் - நில நீர் தீ காற்று வெளி. இவ்வைம்பெரும் பூதங்களாலானதே உடம்பு. மனவலி யின்மையால் தீயவொழுக்கம் ஒழுகினவன் பின்தானே வருந்துவா னென்பதற்குப் 'பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்' என்றார். (1) 302. வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சத் தானறி குற்றப் படின். தன் நெஞ்சம் தான் அறி குற்றப்படின் - ஒருவன் மனம் அவனறிந்த குற்றத்தின்கண் படின், வான் உயர் தோற்றம் எவன் செய்யும் - மிகவுயர்ந்த துறவுக்கோலம் யாது பயனைத் தரும்? நெஞ்சம் தான் அறி குற்றப்படுதல் - குற்றமென்று தெரிந்தே செய்தல். கூடாவொழுக்க மின்றி யிருப்பதே துறவுக்கு மேன்மை. (2) 303. வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று. வலியில் நிலைமையான் வல்லுருவம் - மனத்தைத் தன் வழிப்படுத்தும் வலியில்லாத நிலைமையை யுடையவனது வலியுடையார் போன்ற தவக்கோலம், பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று - மாடு புலித்தோலைப் போர்த்துப் பயிரை மேய்வது போலாகும். அச்சத்தால், புலி புல் தின்னாதென்பதனாலும் நிலத்துக் குரியவன் ஓட்டாதவாறு போல, உலகத்தார் ஐயுறாதபடி வல்லுருவங் கொண்டான். மாடு தனக்குரிய புல்லைவிட்டுப் பசிபொறுக்கும் வலியுமின்றி நிலத்துக்குரியவன் ஐயுறாதபடி புலித்தோல் போர்த்துப் பிறர்க்குரிய பயிரை மேய்வதுபோல, தனக்குரிய மனையாளையுந் துறந்து, மனத்தை யடக்கும் வலியுமின்றிப் பிறர் ஐயப்படாத வல்லுருவமுங் கொண்டு தவமறைந்து பிறர்க்குரிய மகளிரை விரும்புவர் என்பதாம். (3) 304. தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று. தவம் மறைந்து அல்லவை செய்தல் - ஒருவன் தவக் கோலத்தில் மறைந்து நின்று கூடா வொழுக்கம் ஒழுகுதல், வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று - வேடன் புதரில் மறைந்து பறவைகளைப் பிடிப்பது போன்றது. புள் - பறவை. சிமிழ்த்தல் - வலை அல்லது பொறி யினால் பிடித்தல். (4) 305. பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென் றேதம் பலவுந் தரும். பற்று அற்றேம் என்பார் படிற்றொழுக்கம் - யாம் ஆசை யற்றேம் என்பவரது பொய்யொழுக்கம், எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும் - பிறர் கண்டு பழித்து வருத்தினால் 'என் செய்தோம், என் செய்தோம்' என்று இரங்குமாறு துன்பம் பலவுந் தரும். பற்றறாமல் பற்றற்றேம் என்று சொல்லி ஏமாற்றுதல். கூடா வொழுக்க முடையோர் அது வெளிப்படின் துன்புறுவர். (5) 306. நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணா ரில். நெஞ்சில் துறவார் - மனத்தில் பற்றறாது, துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - துறந்தவரைப் போலப் பிறரை ஏமாற்றி வாழ்வாரைப்போல, வன்கணார் இல் - கொடியவர் எவரும் இல்லை. இவ்வஞ்சகர் இல்லறத்ததாரை ஏமாற்றியதாலும், உழையாது இருந்து உண்டதாலும், குற்றவாளிகளாயிருந்து பெரியாரைப் போற்றுவது போன்ற போற்றுதலுக்குரியராக நின்றதாலும் 'வன் கணார் இல்' என்றார். பொய்த் துறவி களைப் போலக் கொடியர் யாரும் இல்லை. (6) 307. புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து. புறம் குன்றி கண்டனையரேனும் - புறத்தே குன்றி மணியின் நிறம்போன்ற தூய தவக்கோல முடையரா யிருப்பினும், அகம் குன்றி மூக்கில் கரியார் உடைத்து - அகத்தே குன்றி மூக்குப் போலக் கரியராய் இருப்பாரை இவ்வுலகம் உடையது. குன்றி - குன்றி மணி. குன்றி மணியின் செம்மையும் கருமையும் நிறத்தைவிட்டுத் தூய துறவுக்கோலத்தையும், வஞ்ச னையையும் குறித்தன. உலகில் போலிக் கோலத் துறவிகளும் உண்டு. அக்கோலங் கண்டு ஏமாறாதீர் என்பதாம். (7) 308. மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி மறைந்தொழுகு மாந்தர் பலர். மாசு மனத்தது ஆக - குற்றம் மனத்தின்கண் இருக்க, மாண்டார் நீர் ஆடி - பெரியார்களின் தன்மையைப் பூண்டு, மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - தீய வழிகளில் மறைந் தொழுகும் மாந்தர் பலர் உலகத்தில் உள்ளனர். நீர் - தன்மை. ஆடி - ஆண்டு, மேற்கொண்டு. உலகில் வஞ்சகத் துறவிகள் பலர் உண்டு. எச்சரிக்கையாய் இருங்கள் என்பதாம். (8) 309. கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்னார் வினைபடு பாலாற் கொளல். கணை கொடிது - அம்பு நேராக இருப்பினும் செயலால் கொடியது; யாழ்கோடு செவ்விது - யாழின் தண்டு வளைந் திருப்பினும் செயலால் செவ்விது; ஆங்கு அன்னார் வினைப்படு பாலால் கொளல் - அவ்வாறே தவஞ்செய் வோரையும் கொடியர் செவ்வியர் என்பது அவர்களது வடிவால் கொள்ளாது அவர்கள் செய்யும் செயலின் பகுதியால் அறிந்து கொள்க. வினைபடுபால் - செயற்பாகுபாடு. கணைக்குச் செயல் கொலை; யாழுக்குச் செயல் இசையா லின்பந்தருதல். அவ்வாறே செயல் கொடியதாயின் கொடியரெனவும், நல்லதாயின் செவ்விய ரெனவும் கொள்ளவேண்டு மென்பதாம். செவ்விது - இசையா லின்பந்தருவது. (9) 310. மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம் பழித்த தொழித்து விடின். உலகம் பழித்தது ஒழித்துவிடின் - உயர்ந்தோர் துறவறத் திற்காகாதெனக் குற்றங்கூறிய ஒழுக்கத்தை நீக்கி விட்டால், மழித்தலும் நீட்டலும் வேண்டா - தலைமயிரைச் சிரைத்தலும் வளர்த்தலும் வேண்டியதில்லை. உயர்ந்தோரால் உண்மைத் துறவிகளென மதிக்கப் படின், பொய்த்தவக்கோலம் செலவில்லை. 'மழித்தலும் நீட்டலும்' என்பது - பௌத்த சமண சைவ வைணவ சமய வேறுபாட்டுக் கோலத்தைச் சுட்டியது. (10) 32. கள்ளாமை பிறர்பொருளை வஞ்சனையாகக் கொள்ளக் கருதாமை. 311. எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் னெஞ்சு. எள்ளாமை வேண்டுவான் என்பான் - பிறரால் இகழாமையை விரும்புவோனென்பான், எனைத்தொன்றும் கள்ளாமை தன் நெஞ்சு காக்க - யாதொரு பொருளையும் திருட நினையாதபடி தன் நெஞ்சைக் காக்கக் கடவன். திருடுவோனை உலகத்தார் இகழ்வர். (1) 312. உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தாற் கள்வே மெனல். பிறன்பொருளை உள்ளத்தால் உள்ளலும் தீதே - பிறனுடைய பொருளைத் திருடுவதற்குத் தன் நெஞ்சினால் நினைப்பதும் தீதாம்; கள்ளத்தால் கள்வேம் எனல் - ஆதலால், அதை அவன் அறியாதபடி வஞ்சித்துக் கொள்ள முயலா திருக்க. எனல் - எதிமறை வியங்கோள் வினைமுற்று. பிறர் பொருளைக் கொள்ள நினைப்பதும் முயல்வதும் குற்றமாம். (2) 313. களவினா லாகிய வாக்க மளவிறந் தாவது போலக் கெடும். களவினால் ஆகிய ஆக்கம் - களவினால் உண்டாகிய செல்வம், அளவு இறந்து ஆவதுபோலக் கெடும் - மேன்மேலும் வளர்வது போலத் தோன்றிப் பின் கெடும். திருட்டுப் பொருள் நிலையாது. (3) 314. களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமந் தரும். களவின்கண் கன்றிய காதல் - களவினிடத்து உண்டாகும் மிகுந்த விருப்பமானது, விளைவின்கண் வீயா விழுமம் தரும் - பயனளிக்கும்போது தொலையாத துன்பந்தரும். கன்றுதல் - மிகுதல். விளைவு - கையுங் களவுமாய்ப் பிடிபட்டுத் தண்டிக்கப்படுதல். களவு பெருந்துன்பத்துக் குள்ளாக்கும். (4) 315. அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்க ணில். பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார் கண் - பிறர் பொருளைத் திருட நினைத்து அவரது மறதியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்க்கு, அருள் கருதி அன்புடையர் ஆதல் இல் - அருளை எண்ணி உயிர்களிடம் அன்புடையராகும் குணம் உண்டாகாது. களவு செய்வார்க்குப் பிறரிடம் அன்பில்லை. (5) 316. அளவின்க ணின்றொழுக வாற்றார் களவின்கட் கன்றிய காத லவர். களவின்கண் கன்றிய காதலவர் - களவினிடத்து மிகுந்த ஆசை யுடையவர், அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் - நேர்மையாய் நடந்துகொள்ளமாட்டார். அளவு - வரையறை செய்யப்பட்ட ஒழுக்கம், நேர்மை. பிறர் பொருளின்மேல் ஆசையுள்ளவர் நேர்மையாய் நடந்து கொள்ள மாட்டார். (6) 317. களவென்னுங் காரறி வாண்மை யளவென்னும் ஆற்றல் புரிந்தார்க ணில். அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் - நேர்மை என்னும் பெருமையை விரும்பினவரிடம், களவு என்னும் கார் அறிவாண்மை இல் - களவு என்னும் இருண்ட அறிவுடைமை இல்லை. ஆற்றல் - பெருமை. புரிதல் - விரும்புதல். கார்அறிவு - வஞ்சக அறிவு. நேர்மையை விரும்புவாரிடம் திருட்டுக் குணம் உண் டாகாது. (7) 318. அறவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங் களவறிந்தார் நெஞ்சிற் கரவு. அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல - நேர்மையை அறிந்தாரது நெஞ்சத்தில் அறம் நிற்பதுபோல, களவு அறிந்தார் நெஞ்சில் கரவு நிற்கும் - களவுசெய்ய அறிந்தவர் நெஞ்சில் வஞ்சனை நிற்கும். அறம் - அறவுணர்ச்சி. கரவு - வஞ்சனை. கள்ளர் மனத்தில் கரவு குடிகொள்ளும். (8) 319. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். களவு அல்ல மற்றைய தேற்றாதவர் - களவல்லாத வேறொன்றையும் அறியாதவர், அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் - நேர்மை அல்லாதவற்றைச் செய்து அப்போதே கெடுவர். மற்றைய - நல்லறங்கள். களவல்ல மற்றைய தேற்றாதவர் - களவையே கடமையாகச் செய்பவர். கள்வர்கள் தகாதன செய்து துன்புறுவர். (9) 320. கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு. கள்வார்க்கு உயிர்நிலை தள்ளும் - திருடுவோர்க்கு உடம்பும் தவறிப்போகும்; கள்ளார்க்கு புத்தேள் உலகு தள்ளாது - திருடா தார்க்குத் தேவருலகமும் தவறாது. திருடுவோர்க்குத் தண்டனை முதலியவற்றால் உடம்பு தவற நேரும். 'கள்ளார்க்குப் புத்தேளுலகு தள்ளாது' என்றது, திருடா தாரை அயலாரும் போற்றுவர் என்பது. புத்தேளுலகு - முகவுரை பார்க்க. (10) 33. நிலையாமை செல்வமும், இளமையும், உடம்பும் நிலையுடையன வல்ல என்பதை உணர்ந்தால்தான் 'யான் எனது' என்னும் பற்று நீங்கவும், பொதுநலம் புரியவும் கூடுமாகையால், துறவறத் தார்க்கு இவ்வுணர்வு இன்றியமையாதது. 321. நில்லா தவற்றை நிலையின வென்றுணரும் புல்லறி வாண்மை கடை. நில்லாதவற்றை நிலையின என்று உணரும் - நிலையில்லாத வற்றை நிலையுள்ளவை என்று நினைக்கும், புல்லறிவாண்மை கடை - புல்லறிவுடைமை இழிவானது. புல்லறிவு - சிற்றறிவு. இம் மயக்க அறிவை யொழித்து உண்மை யறிவைப் பெறவேண்டும். (1) 322. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கு மதுவிளிந் தற்று. பெரும் செல்வம் கூத்தாட்டு அவைக் குழாத்து அற்று - பெரிய செல்வம் வருதல் கூத்தாடும் அவையில் உள்ள கூட்டம் போன்றது; போக்கும் அது விளிந்து அற்று - அச்செல்வத்தினது போக்கும் அக்கூட்டம் கூத்து முடிந்தவுடன் கலைந்து போவது போன்றது. கூத்தாட்டவைக் குழாம்போல, வருங்காலத்து வலிதில் வந்து போங்காலத்துத் திடீரென மறையுங் தன்மை கொண்டது செல்வம். (2) 323. அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றால் அற்குப வாங்கே செயல். செல்வம் அல்கா இயல்பிற்று - செல்வம் நிலையில்லாத இயல் பினையுடையது; அது பெற்றால் அல்குப ஆங்கே செயல் - அச் செல்வத்தைப் பெற்றால் நிலையுள்ளனவாகிய அறங்களை அப்பொழுதே செய்க. அல்குதல் - நிலைத்து நிற்றல். செல்வம் நிலையில்லாத தாகையால் முயற்சியால் செல்வம் பெற்றவுடன் நிலையான அறங்களைச் செய்யவேண்டும். இவை இரண்டு பாட்டும் செல்வ நிலையாமை கூறின. (3) 324. நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும் வாள துணர்வார்ப் பெறின். நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர் - நாள் என்று காலத்தைப் பிரிக்கும் காலவரையறை போலத் தன்னைக் காட்டி அறுக்கும் வாளினது வாயினிடத்தது உடம்பு; உணர்வார்ப் பெறின் - அதை உணர்வாரைப் பெற்றால். காலத்தைப் பல கூறாகப் பிரிக்கும் காலவரையறை போலத் தன்னைக் காட்டி உடம்பை அறுக்கும் வாளே நாள். அந்நாளின் வாயின்கண் ணுள்ளது உடம்பு. ஒவ்வொரு நாளும் உயிரோடு கூடிவாழும் வாழ்நாளைக் குறைப்பதால் அந்நாளை உடம்பை யறுக்கும் வாள் என்றார். நாள் என்னும் வாள் உடம்பை அறுத்துக் கொண்டே வருகிறது. வாள் ஆகுபெயராய் அதன் வாயை உணர்த் திற்று. உயிர் - உடம்பை உணர்த்திற்று. உடம்பின் இளமை குறைந்து கொண்டே வருகிறது. இது இளமை நிலையாமை கூறிற்று. அறி வாளிகள் நாளை உடம்பின் வாழ்வை யறுக்கும் வாள் என்று கொள்வார்கள். (4) 325. நாச்செற்று விக்குண்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும். நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் - பேச முடியாதவாறு நாவை அடக்கி விக்கல் மேலே எழுவதற்குமுன்னே, நல்வினை மேல் சென்று செய்யப்படும் - நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும். நாச்செற்று விக்குள் மேல்வருதல் - சாத்துன்பம். உயிர் போகும் நிலையிலுள்ள அப்போது நற்செயல்களைச் செய்ய முடியாததோடு சொல்லவும் முடியாதாகையால், அச்சாத் துன்பம் வருவதற்கு முன் விரைந்து நல்வினை செய்யவேண்டு மென்றார். (5) 326. நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும் பெருமை யுடைத்திவ் வுலகு. ஒருவன் நெருநல் உளன் - ஒருவன் நேற்று இருந்தான்; இன்று இல்லை - அவனே இன்று இல்லை; என்னும் பெருமை இவ்வுலகு உடைத்து - என்னும் பெருமையை இவ்வுலகம் உடையது. பெருமை என நிலையாமையைப் பழித்தவாறு. உலக வாழ்வு நிலையற்றது. (6) 327. ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியு மல்ல பல. ஒருபொழுதும் வாழ்வது அறியார் - ஒரு பொழுதேனும் உயிருடன் கூடியிருத்தலை அறியமாட்டார்; கோடியும் அல்ல பல கருதுப - கோடியளவின்றி அதன்மேலும் பல எண்ணங்களை எண்ணுவர் அறிவில்லாதார். பொழுதும் என்ற உம்மை நொடிப்பொழுதை யுணர்த் திற்று. "உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம் எண்பது கோடி நினைந் தெண்ணுவன" என்பது காண்க. உயிர் எந்த நேரத்தில் பிரியு மென்பதை அறியாது பலப்பல கருதுவர் அறியார். அறிவுடையோர் நிலையாமையுணர்ந்து உள்ள போதே நல்லன செய்வர். (7) 328. குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு. உடம்போடு உயிர் இடை நட்பு - உடம்புடன் உயிருக் குள்ள நட்பானது, குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்து அற்று - முட்டை தனித்துக்கிடக்க அதனுள்ளிருந்த பறவைக் குஞ்சு வெளிப் போதலைப் போன்றது. மக்களுடம்பு போலத் தாய்வயிற்றி லிருந்தே வந்தது முட்டையே யாதலால் முட்டை உடம்புக்கு உவமையாயிற்று. முட்டைக்குள்ளிருந்து வெளிப் போந்தபின் திரும்பி முட்டைக் குட் புகாமையால் குஞ்சு உயிர்க்கு உவமையாயிற்று. பறத்தல் - முட்டையினின்று நீங்குதல் குறித்து நின்றது. உயிர் செல்லுங் காலத்துச் சொல்லாது சென்றுவிடும். (8) 329. உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு. சாக்காடு உறங்குவது போலும் - சாவு தூங்குவது போலும்; பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - பிறப்பு தூங்கி விழிப்பது போலும். உலகில் தூக்கமும் விழிப்பும் நடத்தல் போலவே இறப்பும் பிறப்பும் நடக்கின்றன என்பதாம். உலகில் சாவும் பிறப்பும் நடத்தல் இயற்கை என்னும் நிலையாமையை உணர வேண்டும். (9) 330. புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுள் துச்சி லிருந்த வுயிர்க்கு. உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - உடம்பினுள்ளே ஒதுக்குக் குடியாக இருந்த உயிர்க்கு, புக்கில் அமைந்தின்று கொல் - எப்போதும் இருப்பதோர் இல் அமையவில்லைப் போலும். துச்சில் - சிறிதுபோது தங்கும் இடம். குடிக்கூலி வீடு எனினு மாம். நோய்களுக்குச் சொந்தமானது உடம்பு. அந்நோய்கள் இருக்க வென்ற அளவும் இருந்து வெகுண்டவுடன் உடம்பை விட்டு உயிர் போகவேண்டியதாகையால் 'துச்சில் இருந்த உயிர்' என்றார். உடம்பு, உயிரின் ஒதுக்கிடம். (10) 34. துறவு தன்னை 'யான்' என்னும் அகப்பற்றையும், செல்வம் முதலிய வற்றை 'எனது' என்னும் புறப்பற்றையும் விடுதல். துறவு - துறத்தல். 331. யாதனின் யாதனி னீங்கியா னோதல் அதனி னதனி னிலன். யாதனின் யாதனின் நீங்கியான் - ஒருவன் எந்தெந்தப் பொருளின்மீதுள்ள பற்றினை நீங்குகிறானோ, அதனின் அதனின் நோதல் இலன் - அவன் அந்த அந்தப் பொருளினால் துன்புறுதல் இல்லை. யாதனின், யாதனின் அதனின் அதனின் - அடுக்குகள் பன்மை குறித்தன. பொருளை ஈட்டல், காத்தல், குறைதல், பிறர் கவர்தல் முதலியவற்றால் வருந் துன்பங்கள் பொருட்பற்றற்ற வர்க்கு இல்லை. (1) 332. வேண்டினுண் டாகத் துறக்க; துறந்தபின் ஈண்டியற் பால பல. துறந்தபின் ஈண்டு இயற்பால பல - துறந்த பிறகு இங்கு நுகரக்கூடிய இன்பங்கள் பலவாம்; உண்டாக வேண்டின் துறக்க - அவற்றை யெல்லாம் நுகர விரும்பின் துறக்க வேண்டும். இன்பங்களாவன - மனவடக்கத்தாலும், நன்னெறிக் கண் நிற்றலானும் உண்டாகும் இன்பங்களும், வேண்டிய வேண்டியாங் கெய்தலான் (295) வரும் இன்பமும். (2) 333. அடல்வேண்டும் மைந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லா மொருங்கு. ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - ஒருவன் ஐம்புலன் களையும் வெல்லவேண்டும்; வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் - தான் விரும்பிய பொருள்கள் யாவற்றையும் ஒருங்கே விட்டுவிட வேண்டும். புலன்களை வெல்லுதல் - அவை பொறிவழிச் செல்லாமல் அடக்குதல். ஐம்புல நுகர்ச்சிகளையும், பிறபொருள்களின் பற்றையும் துறப்பதே துறவாகும். (3) 334. இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து. ஒன்று இன்மை நோன்பிற்கு இயல்பு ஆகும் - யாதொரு பொருட்பற்றும் இல்லாமை துறவின் இலக்கணமாகும்; உடைமை மற்றும் பெயர்த்து மயலாகும் - ஏதேனும் ஒரு பற்றுடைமை மீண்டும் மீண்டும் பொருளாசையை உண்டு பண்ணும். துறவி ஒருவர் துணிவைத்திருந்த கதை இதற்குச் சான்றாகும். துணியை எலி கடித்தது. எலிக்குப் பூனை, பூனைக்குப் பால், பாலுக்கு மாடு, மாடு மேய்க்க ஆள். இப்படியே போகும் ஆசைப் பெருக்கு. (4) 335. மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை. பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பு மிகை - தீமையின் தோற்றங்களை நீக்கலுற்றார்க்கு உடம்பு மிகையாயிருக்க, மற்றும் தொடர்ப்பாடு எவன் - பின்னும் பற்றுதற்குரிய பொருள் யாது? ஒன்றுமில்லை. பிறப்பு - தோற்றம்; தொழிற்பெயர். தீமையின் தோற்றம் - பற்று. துறவிக்குப் பொருட்பற்றுத் தீமையை உண்டாக்குவதால், தீமையின் தோற்றம் எனப்பட்டது. பற்றறுக்கலுற்றார்க்கு உடம் பொன்றே மிச்சமாக இருப்ப தன்றி, வேறு பற்றெதுவும் இல்லை என்பதாம். உடம்பின் மீதும் பற்றில்லாதிருப்பவனே உண்மைத் துறவியாவான். (50 336. யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும். யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் - யான் என்னும் அகப்பற்றையும் எனது என்னும் புறப்பற்றையும் நீக்குபவன், வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும் - வானோரும் அடைய முடியாத மேலான உலகத்தை அடைவான். தன்னை யான் என்பது அகப்பற்று; தனக்குரிய பொருளை எனதென்பது புறப்பற்று. இவ்விருவகைப் பற்றினையும் விட்டவனே சிறந்த துறவியாவான். அவனை உலகத்தார் வானோரினும் மேலானவனாக மதிப்பர். வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகல் - வானோரினும் மேலான மதிப்பைப் பெறுதல். வானோர்க்கும் - உம்மை தொக்கது. வானோர் மேலானவர் என்பதைக் கொண்டு கூறியது. முகவுரை பார்க்க. (6) 337. பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு. பற்றினைப் பற்றி விடாதவர்க்கு - பொருளின்மீதுள்ள ஆசையை விடாதவரை, இடும்பைகள் பற்றி விடா - துன்பங்களும் அவரைப் பற்றிக்கொண்டு விடா. யானெனதென்னும் செருக்குடையவர் துன்புறுவர். பற்று - பற்றுதற்குரிய பொருள். (7) 338. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். தீரத்துறந்தார் தலைப்பட்டார் - முற்றத்துறந்தவர்களே பெருமையுடையவர்கள்; மற்றையவர் மயங்கி விலைப்பட்டார் - முற்றத் துறவாதவர் மயக்கமெய்தித் துன்ப வலையில் அகப்பட்டவ ராவர். தலைப்படுதல் - முதன்மையான மதிப்பைப் பெறுதல். முற்றத் துறந்தவர் இன்புறுவர்; அவ்வாறு துறவாதவர் துன்புறுவர். (8) 339. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும். மற்று நிலையாமை காணப்படும் - துறவிக்குப் பொருளாசை நீங்காதபோது அப்பொருள்களின் நிலையாமை காணப்படும்; பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் - அந்நிலையாமை யுணர்ந்து பொருள்மீதுள்ள ஆசையை விட்ட உடனே அவ்வாசை யின்மை, அவ்வாசையால் உண்டாகும் துன்பங்களின் தோற்றத்தை அறுக்கும். தோன்றாமல் செய்யும். மற்று - வினைமாற்று. பிறப்பு - தோற்றம். நிலை யாமையை யுணர்ந்து பற்றற்றவனுக்குத் துன்பம் இல்லை. (9) 340. பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. பற்றற்றான் பற்றினைப் பற்றுக - பற்றற்றவனது அன்பை மனத்துட் கொள்க; பற்றுவிடற்கு அப்பற்றைப் பற்றுக - ஆசையை ஒழித்தற்கு அவ்வன்பையே உறுதியாகக் கொள்க. முற்றத் துறந்தவனது அன்பே பற்றறுதலுக்குக் காரண மாகும். அவனது நிலையை எண்ணஎண்ணப் பற்று நீங்கு மென்பதாம். (10) 35. மெய்யுணர்தல் உண்மையை ஆராய்ந்து கண்டறிதல், உள்ளதை உள்ளபடி அறிதல். 341. பொருளல் லவற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் - மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று எண்ணும் மயக்க அறிவினையுடையவன், மாணாப் பிறப்பு ஆம் - மாண்பில்லாத பிறப்பினன் ஆவான். மருள் - மயக்கவுணர்வு. மருளான் - மருளையுடையவன். மாணா - மாணாத, மாண்பில்லாத பிறப்பினன் - சிறப்பில்லா தவன், இழிந்தவன். பொய்ப்பொருளை மெய்ப்பொரு ளென்று உணர்பவன் இழிந்தவனாவான். (1) 342. இருணீங்கி யின்பம் பயக்கும் மருணீங்கி மாசறு காட்சி யவர்க்கு. மருள் நீங்கி மாசுஅறு காட்சி யவர்க்கு - மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, இருள் நீங்கி இன்பம் பயக்கும் - அவ்வறிவு, அறியாமையை நீக்கி இன்பத்தைக் கொடுக்கும். இருள் - அறியாமை. இருள் நீங்கி - 'நீக்கி' எனப் பிறவினை. மயக்கமும் குற்றமும் அற்ற அறிவு. மயக்கற்ற நல்லறிவினர் அறியாமை நீங்கி இன்புறுவர். (2) 343. ஐயத்தி னீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து. ஐயத்தின் நீங்கித் தெளிர்ந்தார்க்கு - ஐயத்தினின்றும் நீங்கி உண்மைப் பொருளை உணர்ந்தவர்க்கு, வையத்தின் வானம் நணியது உடைத்து - வையத்தைவிட வானம் பக்கத்தில் உள்ளது. ஐயம் - இதுவோ அதுவோ என்று ஐயப்படுதல். வானம் பக்கத்தில் உள்ளதாவது - உண்மையறிவாளர்க்குப் பக்கத்திலுள்ள காணும் பொருளையே யன்றித் தொலைவிலுள்ள பொருளையும் கண்டறிய முடியும் என்பதாம். அறிவியலாரைக் (விஞ்ஞானிகள்) காண்க. (3) 344. ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு. மெய் உணர்வு இல்லாதவர்க்கு - உண்மை அறிவு இல்லா தவர்க்கு, ஐ உணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்று - ஐந்தாகிய அறிவை அடைந்த விடத்தும் ஒரு பயனுமில்லை. ஐந்தாகிய அறிவு - "கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும்" (1101) ஐந்தறிவு. உண்மை அறிவு - பகுத்தறிவு. (4) 345. எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் - ஒரு பொருள் எவ்வாறு காணப்பட்டாலும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் உண்மைத் தன்மையைக் காண்பதே அறிவாம். பொடியுப்பும், சர்க்கரையும் (அஃச்கா) ஒரே நிறம், வடிவம்; ஆனால், சுவை உவர்ப்பும், இனிப்பும். இவ்வாறு பொருளின் உண்மைத் தன்மையை அறிதலாம்; அறிவியலார் பொருளின்கண் உண்மைத் தன்மையை ஆராய்ந்து காண்பது போல். (5) 346. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. ஈண்டு கற்று மெய்ப்பொருள் கண்டார் - இங்கு கற்று உண்மைப் பொருளை அறிந்தவர்; மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - திரும்பி இங்கு வாராத துறவற நெறியை அடைவர். இங்கு என்றது இல்லறத்தை. இல்வாழ்க்கையிலிருந்த போதே அறநூல்கள் கற்று உண்மையை யுணர்ந்து துறந்தவர்கள் மறு படியும் பொருட்பற்றுடையராகார் என்பதாம். (6) 347. ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. உள்ளம் உள்ளது ஓர்த்து ஒருதலையா உணரின் - ஒருவன் உள்ளமானது உண்மைப்பொருளை ஆராய்ந்து உறுதியாக உணரு மாயின், பேர்த்து பிறப்பு உள்ள வேண்டா - பின்னர் இப்பிறப்பைப் பற்றி எண்ணவேண்டிய தில்லை. உண்மைப்பொருளை ஆராய்ந்து உண்மை அறிவு பெறுவதே மக்கட் பிறப்பின் பயன் ஆதலால், 'பேர்த்து பிறப்பு உள்ள வேண்டா' என்றார். உண்மையுணர்வே மக்கட் பிறப்பின் பயன். (7) 348. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு. பிறப்பு என்னும் பேதைமை நீங்க - பிறவி என்னும் அறியாமை நீங்க, சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு - சிறப்பு என்னும் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவாகும். பிறப்பு என்னும் பேதைமை - பிறவியுடன் பிறந்த அறியாமை ஒருவன் பிறக்கும்போதே உடன் பிறந்த அறியாமை நீங்கச் சிறந்த உண்மைப் பொருளைக் காண்பதே அறிவு. (8) 349. சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய். சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் - ஒருவன் தன்னைச் சாரக்கூடிய பொருள்களை அறிந்து அவற்றின்மேல் பற்றில்லாமல் நடப்பானாயின், சார்தரும் நோய் அழித்து மற்றுச் சார்தரா - அவனைச் சாரக்கூடிய துன்பங்கள் அவ்வறி வையும் ஒழுக்கத் தையும் கெடுத்துப்பின் சாரமாட்டா. தான் பற்றுக்கொள்ளும் பொருள்களை யுணர்ந்து, அவற்றின் மீதுள்ள பற்றை நீக்கினார்க்குத் துன்பங்கள் இல்லை. சார்பு - சாரும் பொருள். (9) 350. காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன் நாமங் கெடக்கெடும் நோய். காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெட - ஆசை சினம் மயக்கவறிவு என்னும் இவை மூன்றினது பெயர் கெட்ட உடனே, நோய் கெடும் - துன்பங்கள் நீங்கும். நாமங்கெடல் - இம்மூன்றையும் அடியுடன் மறந்து விடுதல். இவையே துன்பங்களுக்குக் காரணமாகையால் இவற்றை மறந்தால் துன்பம் நீங்கும் என்பதாம். (10) 36. அவாவறுத்தல் அவா - பேராசை. அதாவது உள்ளம் புலன்கள் மாட்டுச் செல்வதால், 'பொறிவாயில் ஐந்தவிக்க மாட்டாமை'. (6) அறுத்தல் - அடக்குதல். 351. அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து. எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவா பிறப்பு ஈனும் வித்து - எல்லா உயிர்கட்கும் எப்போதும் கெடாத துன்பத்தை விளைவிக்கும் விதையை, அவா என்ப - அவா என்று சொல்லுவர் பெரியோர். அவா - பேராசை. தவாத - கெடாத. பிறப்பு - அவாவினால் உண்டாகும் துன்பம். அவாவே துன்பங்களுக்குக் காரண மாகும். வித்து - காரணம். (1) 352. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது வேண்டாமை வேண்ட வரும். வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் - ஒருவன் வேண்டும் போது துன்பமில்லாமையே வேண்டுவான்; மற்றது வேண்டாமை வேண்ட வரும் - அத் துன்பமில்லாமை அவாவின்மையை விரும்ப வரும். இங்கும் பிறப்பு, அவாவினால் பிறக்கும் துன்பத்தை யுணர்த் திற்று. எவரும் துன்பமின்மையையே - இன்பத் தையே விரும்புவர். அவ்வின்பம் அவாவின்மையால் வரும். (2) 353. வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை யாண்டு மஃதொப்ப தில். வேண்டாமை அன்ன விழுச் செல்வம் - அவாவின்மையைப் போன்ற சிறந்த செல்வம், ஈண்டு இல்லை - இவ்வுலகத்தில் இல்லை, யாண்டும் அஃது ஒப்பது இல் - வேறெங்கும் அதைப் போல்வது இல்லை. வேறெங்கும் இல்லை என்பது எங்குமே இல்லை என்பதாம். அவாவின்மையே துறவிக்குச் சிறந்த செல்வமாகும். (3) 354. தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். தூய்மை என்பது அவா இன்மை - தூய்மை என்று சொல்வது அவாவில்லாமை, மற்றது வாய்மை வேண்ட வரும் - அவாவின்மை யானது உண்மையை விரும்ப வரும். தூய்மை - மனத்தூய்மை. உண்மையை விரும்பினால் அவா அறும்; அவா அற்றால் மனத்தூய்மை உண்டாகும். (4) 355. அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையார் அற்றாக வற்ற திலர். அற்றவர் என்பார் அவா அற்றார் - பற்றற்றவர் என்பார் ஆசையை நீக்கினவர்களே; மற்றையார் அற்று ஆக அற்றது இலர் - ஆசையை நீக்காதவர் அவ்வாறாகப் பற்றற்றவர் இல்லை. சிலர் பொருளை வெறுத்துப் பேசலாம், அல்லது நீக்கலாம். ஆயினும் மனத்தில் அவா இருக்கலாம். மனமாரத் துறவாத வர்கண் துறவிகளாகார். அற்றாக - முழுமையுமாக. ஆசை அற்றவர்களே உண்மைத் துறவிகள். (5) 356. அஞ்சுவ தோரும் அறனே யொருவனை வஞ்சிப்ப தோரு மவா. ஒருவனை வஞ்சிப்பது அவா - ஒருவனை வஞ்சிப்பது அவா; அஞ்சுவது அறனே - ஆதலால், அவ்வவாவை அஞ்சிக் காப்பதே அறமாகும். ஓரும் இரண்டும் அசை. அவாவை அஞ்சி நீக்குவதே துறவியர் கடமையாகும். (6) 357. அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை தான்வேண்டு மாற்றால் வரும். அவாவினை ஆற்ற அறுப்பின் - அவாவை முழுதும் நீக்கினால், தவாவினை தான் வேண்டும் ஆற்றல் வரும் - கெடாத நற்செயல் தான் விரும்புகின்றபடி யுண்டாகும். கெடாத நற்செயல் - அறம். ஆசை முற்றும் நீங்கினால் அறம் ஓங்கும். (7) 358. அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல் தவாஅது மேன்மேல் வரும். அவா இல்லார்க்கு துன்பம் இல்லாகும் - ஆசை அற்றவர்க்குத் துன்பம் இல்லையாகும்; அஃது உண்டேல் தவாது மேல்மேல் வரும் - ஆசை யுண்டாயின் முடிவில்லாமல் மேலும் மேலும் வரும். ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லை. ஆசை யுள்ளார்க்குத் துன்பம் மேல்மேல் வரும். (8) 359. இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந் துன்பத்துட் டுன்பங் கெடின். அவா என்னும் துன்பத்துள் கெடின் - அவா என்னும் துன்பங்களுள் மிக்க துன்பமானது கெடுமாயின் இன்பம் இடை யறாது ஈண்டும் - இன்பம் இடைவிடாது வந்து சேரும். துன்பத்துள் துன்பம் - எல்லாத் துன்பங்களிலும் கொடிய துன்பம். ஈண்டுதல் - மிகுதல். எப்போதும் இன்பம் பெருகும். (9) 360. ஆரா வியற்கை யவாநீப்பின் னந்நிலையே பேரா வியற்கை தரும். ஆரா இயற்கை அவா நீப்பின் - நிரம்பாத இயல்புடைய அவாவை ஒருவன் நீக்குவானாயின், அந்நிலையே பேரா இயற்கை தரும் - அப்போதே அவனுக்கு அது அசையாத தன்மையைக் கொடுக்கும். நிரம்பாமை - போதுமென்னும் முடிவில்லாமை. பேரா - பேராத, உறுதியான. அசையாத தன்மை - மீண்டும் பொருளின்மேல் பற்றுண்டாகாத தன்மை. ஆசை முழுவதும் நீங்குவதே உண்மைத் துறவாகும். (10) 37. வாய்மை உண்மையின் தன்மை. இது இல்வாழ்வார்க்கும் உரியதேனும், பெரும்பான்மையும் பொருள் பற்றி நிகழும் பொய்யை விலக்கலின் துறவறத்திற்குச் சிறந்ததாயிற்று. 361. வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந் தீமை யிலாத சொலல். வாய்மை எனப்படுவது யாதெனின் - உண்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாதென்றால், தீமை யாதொன்றும் இலாத சொலல் - பிறர்க்குத் தீங்கு சிறிதும் உண்டாகாத சொற்களைச் சொல்லுதல். வாய்மை யாதென்றார்க்கு இது கூறப்பட்டது. நடந்ததைக் கூறினால் அதுவும் பிறர்க்குத் தீமைதரின் பொய்மையாம்; நன்மை தரின் வாய்மையாம். நடந்தது, நடவாதது எதுவானாலும் பிறர்க்குத் தீமைதராதாயின் கூறலாம்; தீமை தருவதாயின் கூறக்கூடாது. தியாதெனின் - குற்றியலிகரம். (1) 362. பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின். புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - குற்றம் நீங்கிய நன்மையைத் தருமாயின், பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்ம்மைச் சொற்களும் உண்மைச் சொற்களாகும். புரைதீர்ந்த - குற்றமற்ற. வேலனை நீலன் அடிக்க முயற்சிக் கிறான். வேலன் நம்மிடம் அடைக்கலம் புகுகிறான். நாம் அவனை அறைக்குள் மறைத்து வைத்திருக்கிறோம். வேலனைத் தேடிவந்த நீலன் நம்மைப் பார்த்து, 'வேலன் இங்கு வந்தானா? கண்டீர்களா?' என்கிறான். நாம் அவன் இங்கு வரவில்லை. நாங்கள் காணவில்லை என்று பொய் பேசுகிறோம். நீலன் திரும்பிப் போய்விடுகிறான். வேலன் அடியில்லாமல் தப்புகிறான். இப்பொய் வேலனுக்கு நன்மை பயந்ததல்லவா? உண்மையைச் சொல்லி யிருந்தால் வேலன் அடிபட்டிருப் பானல்லவா? (2) 363. தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். தன்நெஞ்சு அறிவது பொய்யற்க - ஒருவன் தன் நெஞ்சு அறிந்த தொன்றை மறைத்துப் பொய் சொல்லாதிருக்க; பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் - பொய் சொன்னபின் அதை அறிந்த தனது நெஞ்சமே தன்னை வருத்தும். நெஞ்சு வருத்துதல் - மனமறிந்து பொய் சொன்னோ மென்று பின்பு அவனே வருந்துதல். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். இது பிறர்க்குத் தீமை பயக்கும் பொய். (3) 364. உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தார் உள்ளத்து ளெல்லா முளன். உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - மனமறிய ஒருவன் பொய் பேசாது இருப்பானானால், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - அவன் உலகத்தார் எல்லாருடைய மனத்தினும் இருப்பான். உலகினர் எல்லாரும் மனமார அவனைப் போற்று வார்கள். உண்மையுடையோனை உலகம் போற்றும். காந்தியடிகள் இதற்குச் சான்றாவர். (4) 365. மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு தானஞ்செய் வாரிற் றலை. மனத்தொடு வாய்மை மொழியின் - ஒருவன் தன் மனமார உண்மையைச் சொல்வானாயின், தவத்தொடு தானம் செய்வாரின் தலை - அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையவன் ஆவான். தவம் - துறவொழுக்கம். தானம் - கொடை. உண்மை பேசுவோனே உலகில் உயர்ந்தவன். (5) 366. பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை எல்லா வறமுந் தரும். பொய்யாமை அன்ன புகழ் இல்லை - பொய் சொல்லாமையைப் போன்ற புகழ் வேறு இல்லை; எல்லா அறமும் எய்யாமை தரும் - பொய் பேசாமை அவனுக்கு, எல்லா அறங்களையும் ஒழியாமல் தரும். எய்யாமை - ஒழியாமை, தவறாமை. உண்மை எல்லா நலன் களையும் தரும். (6) 367. பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் - ஒருவன் எப்போதும் பொய் சொல்லாதிருப்பின், பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று - அவன் வேறு அறங்கள் செய்யாமை நன்று. பொய்பேசின் பிற அறங்களின் பயன் கெடும். பொய் பேசாமை என்னும் அறம், மற்ற எல்லா அறங்களின் பயனையும் தருதலால், 'அறம்பிற செய்யாமை நன்று' என்றார். பொய்யாமை பொய்யாமை என்னும் அடுக்கு இடைவிடாமை யையும், செய்யாமை செய்யாமை என்னும் அடுக்குத் துணிவையும் குறிக்கும். உண்மையே அறங்களின் ஆணிவேர்; அறமண்டபத்தின் அடிப்படை. (7) 368. புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும். புறம் தூய்மை நீரான் அமையும் - உடம்பு தூய்தாதல் தண்ணீரால் உண்டாகும்; அகம் தூய்மை வாய்மையால் காணப் படும் - அதுபோல, மனம் தூய்தாதல் ஒருவன் சொல்லும் உண்மையால் காணப்படும். தூய்தாதல் - சுத்தமாதல். ஒருவன் பேசும் உண்மையிலிருந்து அவன் மனத்தூய்மை யுடையவன் என்பதையறியலாம். (9) 369. எல்லா விளக்கும் விளக்கல்ல; சான்றோர்க்குப் பொய்யா விளக்கே - விளக்கு. எல்லா விளக்கும் விளக்கு அல்ல - புறத்திருளைப் போக்கும் ஞாயிறு, திங்கள், தீ, மின்சாரம் முதலிய விளக்கு களெல்லாம் விளக்கல்ல; சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு - பெரியோர்களுக்கு அகத்திருளைப் போக்கும் பொய்யாமை யாகிய விளக்கே விளக்காகும். அகத்திருள் - அறியாமை. உண்மையே மனவொளியாகும். (9) 370. யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும் வாய்மையி னல்ல பிற. யாம் மெய்யாக் கண்டவற்றுள் - நாம் உண்மையாகக் கண்ட அறங்களுள், வாய்மையின் நல்ல பிற எனைத்து ஒன்றும் இல்லை - உண்மை சொல்லுதலினும் நல்ல பிற அறங்கள் வேறு எவையும் இல்லை. உண்மை எல்லா அறங்களிலும் சிறந்த அறமாகும். (10) துறவறவியல் முற்றிற்று. t t t 4. ஊழியல் (1) ஊழ் முப்பாலுக்கும் பொதுவாகையால் தனியியலா யிற்று. பொதுவாயினும், அறத்தோ டியைபுடைமையான் அறத்துப் பாலை அடுத்து வைக்கப்பட்டது. 38. ஊழ் ஊழ் - முறைமை; உலகியல் நிகழும் முறைமை; உலகியலின் இயற்கை நிகழ்ச்சி. அதாவது - பொருளும் காலமும் செயற்படும் தகுதியும், சுற்றுச் சார்பின் தகுதியும், நமது எண்ணத்தின் முயற்சியின், செயலின் தகுதிக்கு ஒத்து வருதலும் ஒவ்வாது வருதலுமாம். ஒத்து வருதல் - ஆகூழ் எனவும், ஒவ்வாது வருதல் - போகூழ் எனவும் படும். செயற்படுதல் - நிகழுதல். மக்களின் எண்ணம் முதலிய வற்றினுள் அடங்காமல் அப்பாற்பட்டு இயற்கையாக நிகழும் நிகழ்ச்சி ஊழ் எனப்படும். அந்நிகழ்ச்சியின் போக்கில் நாம் செய்வன ஆகும். அதற் கெதிரிடையாகச் செய்வன ஆகா. ஒருவன் பனந்தோப்பிற்குப் பனம்பழத்திற்குச் செல்கிறான். பழம் விழுந்து கிடந்தால் எடுத்து வருவான்; விழாமலிருந் தாலோ, அல்லது முன்னமே ஒருவன் வந்து எடுத்துச் சென்றிருந்தாலோ வெறுங்கையோடு திரும்புவான்; திரும்பி வரும் வழியில் தொப்பென்று ஒரு பழம் விழுந்தால் ஆவலோடு எடுத்துச் செல்வான். பழமெடுத்து வரும்போது பனைக்குடையவன் கண்டு பிடுங்கிக் கொண்டாலும் கொள்வான். 'வந்துவிட்டுச் சும்மா போகிறாய், பாவம்! இந்தா!' என அவன் தான் எடுத்து வந்ததில் ஒன்று கொடுத் தாலும் கொடுப்பான். பனம்பழம் கிடைக்காமல் வரும் வழியில் மாம்பழம் கிடைத்தாலுங் கிடைக்கும். திருட னென்று பிடிபட்டாலும் படுவான். அடியுதை தின்றாலும் தின்பான். நாயோ, பாம்போ கடித்தாலும் கடிக்கலாம். வழியிலே இறந்தாலும் இறக்கலாம். ஒருவன் மாடு வாங்கச் சந்தைக்குப் போகிறான். அவன் குறித்துச் சென்ற தகுதியுள்ள மாடு சந்தைக்கு வந்திருக்காது. வந்திருந்தாலும் விலை இசையாது. விலை முடியும்போது மற்றொருவன் வாங்கிக்கொள்ளலாம். குறித்துச் சென்ற மாடு குறித்த விலையில் கிடைத்தாலும் கிடைக்கலாம். மாடு வாங்கப் போய் ஆடோ, அல்லது எருமையோ வாங்கி வந்தாலும் வரலாம். மாடும் கிடைக்காமல் மாடு வாங்கக் கொண்டுபோன பணத்தையும் இழந்து வெறுங்கையோடு வீட்டுக்கு வந்தாலும் வரலாம். திருட்டு மாட்டை வாங்கித் திருடனென்று பிடிபட்டாலும் படலாம். மாடு முட்டி இறந்தாலும் இறக்கலாம். இவையெல்லாம் பொருளும் காலமும் செயற்படும் தகுதியும், ஒருவன் எண்ணம், முயற்சி, செயல் இவற்றின் தகுதியும் ஒத்துவருதலும், ஒத்து வராமையும் ஆகிய ஆகூழும், போகூழுமாகும். ஒருவனிடம் ஏதாவதொன்றை வேண்டி ஒருவன் செல்கிறான். அவன் அமைதியாக இருந்தால் அன்போடு வரவேற்பான். அன்பிருந்தால் வேண்டுவன செய்வான். அவன் ஏதோ மனக் கவலையுடன் இருந்தால் பார்க்க உடன்படான். உடன்படினும் கடுகடுத்துப் பேசுவான். வேண்டுவனவும் செய்யான். செய்ய முன் வரும்போது ஒருவன் குறுக்கே வந்து தடுத்தாலும் தடுக்கலாம். அவனை உதவும்படி தூண்டினாலும் தூண்டலாம். விரும்பிச் சென்ற பொருள் அவனிடம் இல்லா திருந்தாலும் இருக்கலாம். அவன் எண்ணிச் சென்றிருக்க வேறொரு காரியம் ஆனாலும் ஆகலாம். இன்ன பிற வெல்லாம் சுற்றுச்சார்பின் தகுதி, நமது எண்ணம், முயற்சி, செயலின் தகுதிக்கு ஒத்து வருதலும், வராமையுமாகும். உலகியலின் இயற்கை நிகழ்ச்சியாகிய இவ்வுண்மையை அறியாது, எண்ணியது முடிந்தால் மகிழ்வதும், முடியா விட்டால் வருந்துவதும் அறிவுடைமை ஆகாது என அவ்வூழின் தன்மை கூறுகிறார் இவ்வதிகாரத்தில். இனி, ஒருவன் நல்லனவே செய்கிறான். ஒருவன் தீயனவே செய்கிறான். ஒருவன் நல்லனவும் தீயனவும் கலந்து செய்கிறான். ஒருவன் எப்போதும் சோம்பலுடையவனாகவே இருக்கிறான். விடாப்பிடி, விட்டுக்கொடுத்தல், முரட்டுத்தனம், எளிமைத்தனம், விருப்பு, வெறுப்பு, ஒழுக்கம், ஒழுக்கமின்மை, வாய்மை, பொய்மை, தன்னலம், பொதுநலம், பொறாமை, பொறுமை, ஆசை, அமைதி, நட்பு பகை ஆகிய இன்ன பலவெல்லாம் மக்களின் உடலமைப்புக் கேற்றவாறு அமையும் தனிப்பட்ட குணங்களாகும். இவை பிறவிக் குணம், இயற்கைக்குணம் எனப்படும். இக் குணமும் உலகியலின் இயற்கை நிகழ்ச்சியாகிய ஊழுக்குத் துணை செய்யும். இவ்வூழ் மக்களின் இயற்கைக்கு மேற்பட்ட தாகலின் தெய்வம் (619) எனவும் பெயர் பெறும். தெய்வம் - மேலானது. ஊழின் இயல்பறிந்து அதற்குத்தக நடந்து கொள்ளுதலும், போகூழ்க்கு வருந்தாமையும் இதன் பயன். 371. ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள் போகூழாற் றோன்று மடி. கைப் பொருள் ஆகு ஊழால் அசைவின்மை தோன்றும் - கைப்பொருள் உண்டாகும் ஊழினால் முயற்சி தோன்றும்; போகு ஊழால் மடி தோன்றும் - கைப்பொருள் குறையும் ஊழினால் சோம்பல் தோன்றும். முயற்சியும் சோம்பலுமே கைப்பொருள் ஆகுதல் போகு தலின் ஊழ் என்பதாம். முயன்றால் "ஊழையும் உப்பக்கம் காணலாம்" (620). முயன்றும் ஆகாவிடின் தகுதி ஒவ்வாமையாம். முயலாமலே ஆகின் தகுதி ஒத்ததாம். முயற்சி, சோம்பல் என்னும் இயற்கைக் குணங்களும் துணையாதல் கொள்க. (1) 372. பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்றும் ஆகலூ ழுற்றக் கடை. இழவு ஊழ் பேதைப் படுக்கும் - கைப் பொருளைக் கெடுக்கும் ஊழ் அறியாமையை உண்டாக்கும்; ஆகல் ஊழ் உற்றக்கடை அறிவு அகற்றும் - கைப்பொருளை ஆக்கும் ஊழ் பொருந்திய விடத்து அறிவை அகலப்படுத்தும். இழவு - இழத்தல். அகலுதல் - விரிதல். அறிவின் விரிவும், அறியாமையுமே ஆக்கக் கேட்டுக் காரணங்களாகும். (2) 373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும். நுண்ணிய பல நூல் கற்பினும் - ஒருவன் நுட்பமான பல நூல்களைக் கற்றாலும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - பின்பும் தனது இயற்கை அறிவே மேற்படும். இது, இளமையிலிருந்து தன் குடும்பத்துடனும், பக்கத் தாருடனும் பழகும் பழக்கமாகிய சுற்றுச் சார்பும், பிறவிக் குணமும் ஒத்தல். கல்லூரிப்பட்டம் பெற்ற ஓர் அறிவியலா சிரியர், நிலமும் திங்களும் ஞாயிற்றைச் சுற்றுவதால் நிழற்பாடு (கிரகணம்) உண்டாகிறது என மாணாக்கர்க்குக் கற்பித்து விட்டு, அஃதுண்டானதும் 'ஞாயிற்றையும் திங்களையும் பாம்பு கடிக்கிறது' என்னும் உலக வழக்கைப் புராணக் கூற்றின் பால் வைத்து, நீரில் மூழ்கல், உண்ணாதிருத்தல் முதலியன செய்தல் இதன் பாற்படும். (3) 374. இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு. உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்தின் இயல்பு இரு கூறாக உள்ளது; திரு ஆதலும் வேறு தெள்ளியர் ஆதலும் வேறு - செல்வமுடையவர் ஆதலும் வேறு, அறிவுடையவர் ஆதலும் வேறு. உலகியல்பு - ஊழ். செல்வந்தேடுவோர் எண்ணம், முயற்சி, செயலெல்லாம் அறிவின்பால் செல்வதில்லை. அறிவு தேடுவோர் எண்ணம் முதலியன வெல்லாம் செல்வத்தின்பால் செல்வதில்லை. இவ்விரண்டும் வெவ்வேறு தகுதியை உடையன. இவற்றை உலகியலில் வெளிப்படையாகக் காணலாம். இது, பிறவிக்குணம் ஒத்தது. (4) 375. நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும் நல்லவாஞ் செல்வஞ் செயற்கு. செல்வம் செயற்கு - செல்வந் தேடுங்கால், நல்லவை எல்லாம் தீயவாம் - போகூழானால், ஒருவனுக்கு முன்பு நல்லன வாய் இருந்தன வெல்லாம் தீயனவாகும்; தீயவும் நல்லவாம் - ஆகூழானால், முன்பு தீயனவாய் இருந்தன வெல்லாம் நல்லனவாகும். நல்லவை, தீயவை - பொருளும், காலமும், செயலும், சுற்றுச் சார்பும். நல்லவை தீயவையாதல் போகூழ், தீயவை நல்லவை யாதல் ஆகூழ் எனக் கொள்க. ஒத்து வருதல், ஒத்து வராமையை அறிந்து, ஏற்றவாறு நடந்து கொள்ளலே முறையாகும். (5) 376. பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச் சொரியினும் போகா தம. பால் அல்ல பரியினும் ஆகாவாம் - தமக்கு உரிமை யல்லாதவை வருந்தித் தேடினும் ஆகாவாம்; தம உய்த்துச் சொரியினும் போகா - தமக்கு உரிமை உடையவை வெளியில் கொண்டு போய்க் கொட்டினும் போகாவாம். பால் - பக்கம். பால் அல்ல - தம் பக்கம் அல்லாதவை, தமக்குரிமை யல்லாதவை - ஆகுந் தகுதியில்லாதவை. உய்த்துச் சொரிதல் - கொண்டு போய் எறிதல், வேண்டா மெனில். ஆகுந் தகுதியில்லாதவை வருந்தினும் ஆகா; ஆகுந் தகுதியுள்ளவை சும்மா இருந்தாலும் ஆகும். (6) 377. வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது. கோடி தொகுத்தார்க்கும் - கோடியளவு நுகரப்படும் பொருள்களைச் சேர்த்து வைத்தவர்களுக்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - அப்பொருள்களை உண்டாக்கி யவர்களது வகைப்படியல்லாமல் வேறு வகையினால் நுகர்தல் முடியாது. நுகர்பொருள்கள் பலவாகலின், ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வகையினர், ஒவ்வொரு வகையாகச் செய்தனர் என்பது தோன்ற, 'வகுத்தான்' என ஒருமையால் கூறினார். குளிருக்குரிய கம்பளி வெயிலுக்காகாது. பனிநீரும், தேம்பாகும் சளிப்பிடித்தவனுக்காகா, என நுகர்பொருள் களின் தகுதியும், நுகர்வோன் தகுதியும் ஒவ்வாமை கூறினார். பொருள்களின் தகுதிக்கு மாறாக நுகரப்படா தென்பது கருத்து. அல்லதூஉம், 'வகுத்தான்' என்பதை ஊழ் எனக் கொண்டு, வகுத்தான் வகுத்த வகையல்லால் - ஊழின்படியல்லாமல் எனினுமாம். செல்வ மிருந்தும் நோயாளர் அதை நுகர முடியாமை காண்க. (7) 378. துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால ஊட்டா கழியு மெனின். உறல் பால ஊட்டா கழியும் எனின் - தமக்கு வருந் துன்பங்கள் வராமல் போகுமானால், துப்புரவு இல்லார் துறப்பார் - வறுமையால் நுகரப்படும் பொருளில்லாதவர் துறப்பார். துன்பங்கள் - காமம் வெகுளி மயக்கம் முதலியன (350). ஒருவன் துறக்க எண்ணினும் காமம் முதலியன அவனைத் துறக்க விடாமல் செய்யும். அவை தோன்றாவாயின் எளிதில் துறப்பான். ஊட்டா - ஊட்டாது. ஆசையற்றவர் வறுமையுற்றால் துறப்பர் என்பது கருத்து. பற்றறினும் இயற்கை நிகழ்ச்சி பின்னும் துன்புறுத்து கிறது என்பது ஒழிந்து நிற்றலின், மன் ஒழியிசை. (8) 379 நன்றாங்கால் நல்லவாக் காண்பவ ரன்றாங்கால் அல்லற் படுவ தெவன். நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் - நல்லவை உண்டாகும் போது அவற்றை நல்லவை என்று துய்த்து இன்புறுகின்றவர்கள், அன்று ஆங்கால் அல்லல்படுவது எவன் - தீயவை உண்டாகும் போது துன்பப்படுவது எதற்காக? உலகியல்புப்படி இன்பத்தை நுகர்ந்தவர் அவ்வாறே துன்பத்தையும் நுகர வேண்டும். (9) 380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். மற்றொன்று சூழினும் தான் முந்துறும் - ஊழை நீக்க வேறொன்றை ஆராய்ந்தாலும் அவ்வூழ் முன்னே வந்து நிற்கும்; ஊழிற் பெருவலி யாஉள - ஆதலால், ஊழைவிட மிக்க வலி வுடையவை எவையுள்ளன? ஒன்றுமில்லை. உலகியல்பு வேறாக இருக்க நாமொன்றைச் செய்தால் அவ்வுலகியல்புப்படியே நடக்குமாகையால், அவ்வுல கியல்பை விட வலியுடைய பொருள் இல்லை என்றார். (10 அறத்துப்பால் முற்றிற்று 2. பொருட்பால் பொருளாவது - அறமும் இன்பமும் துய்த்து இனிது வாழ்வதற் கேதுவாகிய இடமும் பொருளும் நுகர் பொருளும். இம்மூவகைப் பட்ட பொருளைக் கொண்டு அறமும் இன்பமும் துய்த்து, தத்தம் உரிமையுடன் வாழ்வதற்குத் துணை செய்வது அரசுமுறை ஆகலின், அதனையே பொருளெனப் படைத்துக் கூறுகின்றார் ஆசிரியர். அரசு - காவல். அரசுமுறை - காவலை நடத்தும் முறைமை. அது, 1. அரசியல், 2. அமைச்சியல், 3. கூழியல், 4. அரணியல், 5. படையியல், 6. நட்பியல், 7. குடியியல் என எழு வகைப்படும். 1. அரசியல் (25) அரசியல் - அரசனது இயல்பு; நல்லரசின் இலக்கணம். இவ்வியலிற் கூறப்படும் இலக்கணங்கள் எல்லா அரசியல் தலைவர்க்கும் பொருந்தும். 39. இறைமாட்சி அரசனது நற்குண நற்செய்கைகள். இறை - அரசன், தலைவன். மாட்சி - நன்மை. 381. படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும் உடையா னரசரு ளேறு. படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் - இவ்வாறு உறுப்புக்களையும் உடையவன், அரசருள் ஏறு - அரசர்களுள் அரியேறு (சிங்கம்) போல்வான். குடி - குடிமக்கள். கூழ் - உணவுப் பொருள். அது 'தள்ளா விளைவு' (731) உள்ள நாட்டையுணர்த்திற்று. படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்னும் ஆறும், அமைச்சு கூழ் அரண் படை நட்பு குடி என முறைப்படும். இவை இப்பாலின் இயல்களின் தோற்றுவாயாகும். 'ஆறும்' என்ற உம்மையால், இவ்வாறும் குறைவின்றி நன்கு அமைந்திருக்க வேண்டும் என்பதாம். அமைச்சு முதலிய உறுப்புக்கள் ஆறும் நன்கு அமையப் பெற்றவனே சிறந்த அரசனாவான். (1) 382. அஞ்சாமை யீகை யறிவூக்க மிந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு. அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை - மனவுறுதி கொடை அறிவு முயற்சி என்னும் இந்நான்கு குணமும் குறையாமல் அமைந்திருத்தல், வேந்தற்கு இயல்பு - அரசனுக்கு இயல்பாகும். எஞ்சாமை - எப்போதும் குறையாமை. (2) 383. தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு. நிலன் ஆள்பவற்கு - நிலத்தை ஆளும் அரசனுக்கு, தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா - சோம்பலின்மை, கல்வி, ஆண்மை ஆகிய இம் மூன்றும் எப்பொழுதும் நீங்காமலிருக்க வேண்டும். அரசனுக்குச் சோம்பலின்மை முதலிய மூன்று குணங்களும் எப்போதும் அமைந்திருக்கவேண்டும். (3) 384. அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு. அறன் இழுக்காது - அறநெறி தவறாது, அல்லவை நீக்கி - அற மல்லாத குற்றங்களை நீக்கி, மறன் இழுக்கா மானம் உடையது அரசு - வீரத்தினின்று தவறாத மானத்தையுடையவனே அரசனாவான். அறநெறி தவறாது, குற்றங்களின்றி, குற்றமற்ற மானமுடை யவனே அரசனாவான். (4) 385. இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த வகுத்தலும் வல்ல தரசு. இயற்றலும் - பொருள் வரும் வழிகளை மேன்மேல் உண்டாக்கலும், ஈட்டலும் - அவ்வழிகளில் பொருள்களை ஈட்டிச் சேர்த்து வைத்தலும், காத்தலும் - அவற்றைக் காப்பாற்று தலும், காத்த வகுத்தலும் - அப்படிக் காப்பாற்றிய வற்றை நாட்டுமக்கள் நலத்தில் செலவிடுதலும், வல்லது அரசு - வல்லவனே அரசனாவான். காத்த - காக்கப்பட்ட பொருள். பொருள் வரும் வழிகளை ஆராய்ந்து பொருளீட்டிக் காத்து நாட்டு நலம்புரிய வல்லவனே அரசனாவான். (5) 386. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல் மீக்கூறும் மன்ன னிலம். காட்சிக்கு எளியன் - காண்பதற்கு எளியனாய், கடும் சொல்லன் அல்லனேல் - எவரிடத்தும் கடுஞ்சொல் சொல்லாத வனாகில், மன்னன் நிலம் மீக்கூறும் - அம் மன்னனை உலகத்தார் உயர்த்திக் கூறுவர். காண்பதற்கு எளியனாதல் - குடிமக்கள் எவரும் தாமே நேரில் சென்று பார்த்துத் தம் குறையையும் முறையையும் கூறிக்கொள்ளும் நிலையில் உள்ளவனாதல். குறை - வேண்டுவன. முறை - வழக்கு. பிறர் மூலம் கூறின் உள்ளபடி கூறார்; நேரில் கூறுவதுபோல் இராது. காட்சிக் கெளியனாயினும், கடுஞ் சொல்லுடையனாயின் குடிமக்கள் தங்கள் குறையை உள்ளபடி கூறிக்கொள்ள முடியாது. நிலம் - நிலம் வாழ் மக்கள். மீக்கூறுதல் - உயர்த்திக் கூறுதல். மீ - மேல், உயர்வு. (6) 387. இன்சொலா லீத்தளிக்க வல்லாற்குத் தன்சொலாற் றான்கண் டனைத்திவ் வுலகு. இன் சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடனே வேண்டியதைக் கொடுத்துக் காக்கக்கூடிய அரசனுக்கு, இவ்வுலகு தன் சொலால் தான் கண்டு அனைத்து - இவ்வுலகம் தன் ஏவலினாலே தான் எண்ணியபடி நடக்கும். இன்சொல்லோடு கொடுத்துக் காப்பாற்றவல்ல அரசன் சொற்படி நாட்டு மக்கள் நடப்பர். தான் கண்டு அனைத்து - தான் எண்ணியபடியாகும். (7) 388. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும். முறை செய்து காப்பாற்றும் மன்னவன் - குற்றஞ் செய்தாரைத் தண்டித்து முறை செய்து, நாட்டு மக்களைக் காக்கும் அரசன், மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - மக்களுக்குத் தலைவன் என்று கருதப்படுவான். குற்றங்கடிந்து குறைதீர்ப்பது முறை செய்தலாகும். தலைவன் என்று மக்களால் மதிக்கப்படுவோனே நல்லரசனா வான். (8) 389. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு. செவி கைப்பச் சொல் பொறுக்கும் பண்புடை வேந்தன் - காது வெறுக்கும்படி பிறர் சொல்லும் கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் குணமுடைய அரசனது, கவிகைக் கீழ் உலகு தங்கும் - குடையின்கீழ் உலகம் தங்கும். பிறர்சொல் - பெரியார் கூறும் உறுதிச் சொல்லும் (447, 448) குடிகள் முறையீடும். கவிகைக் கீழ் தங்கல் - அவன் ஆணைப்படி நடத்தல். குடிமக்கள் அவன் ஆட்சியை விரும்பி நடத்தல். (9) 390. கொடையளி செங்கோல் குடியோம்ப னான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி. கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும் உடையான் - வேண்டுவோர்க்கு வேண்டுவன கொடுத்தல், முகமலர்ந்து இனிய கூறல், செங்கோன்மை, குடிகளைப் பாதுகாத்தல் என்னும் நான்கையும் உடையவன், வேந்தர்க்கு ஒளி ஆம் - அரசர்களுக் கெல்லாம் விளக்காவான். கொடுத்தல் - தளர்ந்த குடிகட்கு வேண்டுவன கொடுத்தல். செங்கோன்மை - முறைமை. குடியோம்பல் - தளர்ந்த குடிகட்கு இறைகழித்தல் (வரிநீக்கம்). விளக்காதல் - முதல்வனாதல். (10) 40. கல்வி கற்க வேண்டிய கலைகளைக் கற்றுணர்தல். அரசர்க்குக் கூறினும் ஏனையோர்க்கும் உரியதாகும். 391. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க வதற்குத் தக. கற்பவை கசடு அற கற்க - ஒருவன் கற்கவேண்டிய வற்றைக் குற்றமறக் கற்க வேண்டும்; கற்றபின் அதற்குத் தக நிற்க - அவ்வாறு கற்றபின் அக்கல்விக்குத் தகுதியாக நடக்க வேண்டும். கல்விக்குத் தகுதியாக - கற்றபடி. இக்குறட்பா வொன்றாலே ஒருவனுக்கு வேண்டிய வெல்லாம் அடங்கின இதையே தமிழ் விடு தூதுடையார், "கற்க . . . தக வென்ற - சொற்குள்ளே - எல்லார்க்கும் புத்தி இயம்பிக் கரையேற்ற வல்லாய்! உனக் குரைக்க வல்லனோ?" என்றார். கசடு அறக்கற்றல் - ஐயந்திரிபு அறக் கற்றல். ஐயம் - இதுவோ அதுவோ என்றையுறுதல். திரிபு - உண்மைப் பொருளை விட்டு வேறுபொருள் கொள்ளுதல். கற்றபடி நடப்பதே கல்வியின் பயன். (1) 392. எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு. எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் - எண்ணென்று சொல்வனவும், மற்றை எழுத்து என்று சொல்வனவும் ஆகிய இவ்விரண்டும், வாழும் உயிர்க்குக் கண் என்ப - மக்களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவுடையோர். எண் - பொருள்களைப் பலவகை அளவைகளால் எண்ணி அறிதல். எண் - எணுதல். எழுத்து - இலக்கியமும் இலக்கணமும். எழுதுதல், படித்தல் இரண்டும் 'எழுத்து' என்பதில் அடங்கும். எண்ணும் எழுத்தும் பலவாகலின் 'என்ப' எனப் பன்மையாற் கூறினார். இவ்விரண்டும் கல்வியின் கருவிகளாகும். (2) 393. கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். கண்ணுடையர் என்பவர் கற்றோர் - கண்ணுடையார் என்று உயர்த்துச் சொல்லப்படுபவர் கற்றவரே; கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர் - கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்களை உடையவராவர். அயல் நாட்டைப் பற்றியும், பழங்காலத்தைப் பற்றியும் அறியும் அறிவுக்கண்ணுடைமையான் கற்றாரைக் கண்ணு டையர் என்றும், நோய் வருதல், பீளை தோன்றுதல் முதலிய துன்பஞ் செய்யும் ஊனக்கண்ணே உடைமையின் கல்லாரை முகத்திரண்டு புண்ணு டையர் என்றும் கூறினார். கற்று அறிவுக்கண் பெற வேண்டும். (3) 394. உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். உவப்பத் தலைக்கூடி - யாவரும் மகிழும்படி கூடி, உள்ளப் பிரிதல் அனைத்தே - இனி என்று இவரைக் கூடுவோம் என்று அவர்கள் நினைக்கும்படி நீங்குதலாகிய தன்மையதே, புலவர் தொழில் - கற்றோரது கொள்கை. பொதுமக்கள், கற்றார் கூட்டுறவுக்கு மகிழ்ந்து, அவர் பிரியும் போது இனி என்று வருவார் என்று எண்ணுவதால், கல்வி சிறப்புடையதொன்றாகும். கற்றாரிடம் எல்லாரும் அன்பு கொள்வர். (4) 395. உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் - செல்வர் முன் வறியர் விரும்பி நிற்பதுபோல ஆசிரியரிடம் விரும்பி நின்றும் கற்றவரே உயர்ந்தவராவர்; கல்லாதவர் கடையரே - அவ்வாறு கல்லாதவர் தாழ்ந்தவராவர். ஏக்கறுதல் - விரும்பி நிற்றல். செல்வர்முன் வறியர் தமக்கு வேண்டியதை விரும்பி நிற்பதுபோல, ஆசிரியரிடம் கல்வியை விரும்பி நின்று கற்க வேண்டும். உயர்வு தாழ்வு - மதிப்பு மதிப்பின்மை. (5) 396. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறு மறிவு. மணல் கேணி தொட்டனைத்து ஊறும் - ஊற்று தோண்டிய அளவு நீர் சுரக்கும்; மாந்தர்க்குக் கற்று அனைத்து அறிவு ஊறும் - அதுபோல, மக்கட்குக் கற்ற அளவு அறிவு உண்டாகும். ஊற்று - ஆறு, நீரோடைகளில் தோண்டும் ஊற்று. ஊற்றுத் தோண்ட நீர் ஊறுவதுபோல, கற்கக் கற்க அறிவு வளரும். (6) 397. யாதானு நாடாமா லூராமா லென்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. யாதானும் நாடாம் ஊராம் - கற்றவனுக்கு எந்த நாடும் தன்னாடாகும்; எந்த ஊரும் தன்னூராகும், ஒருவன் சாம் துணையும் கல்லாத ஆறு என் - ஆகையால், ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் இருப்பது என் கருதி? கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாம் சிறப்பு. ஆல் - இரண்டும் அசை. (7) 398. ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற் கெழுமையு மேமாப் புடைத்து. ஒருவற்கு ஒருமைக்கண் தான் கற்ற கல்வி - ஒருவனுக்கு ஓரிடத்தில் தான் கற்ற கல்வியானது, எழுமையும் ஏமாப்பு உடைத்து - பலவிடங்களிலும் சென்று உதவுதலை யுடைத்து. எழுமை என்னும் பெயர் பல என்னும் பொருளது; 62 ஆம் குறளுரை பார்க்க. ஒருவன் ஓரிடத்திலிருந்து கற்கிறான். அவனால் செய்யப்பட்ட நூற்கள் பல இடங்களிலும் (உலகெல்லாம்) பரவி அவனைச் சிறப்பிக்கிறது. (8) 399. தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். தான் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு - தாம் இன்புறும் கல்வியால் உலகத்தார் இன்புறுதலைக் கண்டு, கற்றறிந்தார் காமுறுவர் - கற்றறிந்தவர்கள் மேலும் மேலும் கற்க விரும்புவர். தாம் இன்புறுதல் - சொற்பொருளின் சுவை நுகர்ந்து இன்புறுதலும், தம் அறிவையும், ஆராய்ச்சியையும், இயற்றிய நூல்களையும் எண்ணி இன்புறுதலுமாம். உலகு இன்புறுதல் - அறிவு ஆராய்ச்சித் திறனையும், இயற்றிய நூலின் நுட்பத் தையும் கண்டும், சொல்லைக் கேட்டும் இன்புறுதல். (9) 400. கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. ஒருவற்கு கேடு இல் விழுச்செல்வம் கல்வி - ஒருவனுக்கு அழிவற்ற சிறந்த செல்வமாவது கல்வி, மற்றையவை மாடு அல்ல - மற்றவை யெல்லாம் பொருளல்ல. கல்வியே சிறந்த பொருளாகும். மாடு - பொருள். (10) 41. கல்லாமை கல்லாமை என்றது - கல்லாமையால் வரும் இழிவினை. கல்வியின் சிறப்பு முன் நேர்முகமாகக் கூறிய அளவில் முற்றுப் பெறாமையால் எதிர்மறை முகத்தால் கூறுகின்றார். 401. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். நிரம்பிய நூல் இன்றிக் கோட்டி கொளல் - நிறைந்த நூல்களைக் கல்லாமல் அவையின்கண் ஒன்றைச் சொல்லுதல், அரங்கு இன்றி வட்டு ஆடி அற்றே - சூதாடுதற்குரிய இடத்தை அமைக்காமல் சூதாடு கருவியை உருட்டினால் போன்றது. நிரம்புதல் - அறியவேண்டுவன வெல்லாம் அறிதல். கோட்டி - அவை. அரங்கு சூதாடுமிடம். அதாவது தாயக்கரம் போன்றது. வட்டு - சூதாடு கருவி. கல்லாதார் ஒன்றைச் சொல்லுதல் தப்பு. (1) 402. கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. கல்லாதான் சொல் காமுறுதல் - கல்வி யில்லாதவன் அவையில் பேசுதலை விரும்புதல், முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்று அற்று - இரண்டு முலையும் இல்லாதவள் பெண்மையை விரும்புவது போலும். இல்லதாள் பெண்மையை இளைஞர் விரும்பாதது போல, கல்லாதான் சொல்லை அறிஞர் விரும்பார். இல்லாதாள் தன் பெண்மையை விரும்புவது போன்றது, கல்லதான் தன் சொல்லைக் காமுறுதல். அவையோர் அவன் பேச்சைச் சிறிதும் விரும்பார் என்பதாம். (2) 403. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முற் சொல்லா திருக்கப் பெறின். கற்றார் முன் சொல்லாது இருக்கப்பெறின் - கற்றவர் முன்பு பேசாதிருப்பாராயின், கல்லாதவரும் நனி நல்லர் - கல்லாதவரும் மிகவும் நல்லவராவர். சொல்லாதிருந்தால் இவர் அறியாமை வெளிப்படாதென்பதாம். (3) 404. கல்லாதா னொட்பம் கழியநன் றாயினுங் கொள்ளா ரறிவுடை யார். கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் - கல்லாதவ னுடைய அறிவு மிகவும் நன்றாயிருப்பினும், அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அதனை அறிவாகக் கொள்ள மாட்டார். ஒட்பம் - ஒண்மை, அறிவுடைமை. அவ்வறிவு நல்லறி வாகாது. ஆயினும், சேற்றின் மீது உள்ள நண்டின் தாரையை எழுத்தென்பது போன்றதே யாகும். (4) 405. கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். கல்லா ஒருவன் தகைமை - கல்லா ஒருவனது பெருமை, தலைப்பெய்து சொல்லாடச் சொர்வு படும் - கற்றானொருவன் வந்து உரையாட மறைந்துவிடும். தலைப்பெய்தல் - ஒன்று கூடுதல். "பேச்சுப்பேச்சென்னும் பெரும் பூனை வந்தக்கால் கீச்சுக்கீச் சென்னும் கிளி" என்பது காண்க. (5) 406. உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக் களரனையர் கல்லா தவர். கல்லாதவர் உளர் என்னும் மாத்திரையர் அல்லால் - கல்லாதவர் இருக்கின்றனர் என்னும் அளவினை உடையவர் அல்லாது, பயவாக் களர் அனையர் - விளையாத களர் நிலத்தை ஒப்பர். உளர் என்னும் மாத்திரையர் - பேருக்கு இருப்பவர், அல்லது எண்ணிக்கைக்கு இருப்பவர். களர் - உவர் நிலம். அதில் புல்லும் முளையாது. களர் நிலம் போலப் பேருக்கு இருப்பவரே கல்லாதவர்; பயன் சிறிதும் இல்லை. (6) 407. நுண்மா ணுழைபுல மில்லா னெழினலம் மண்மாண் புனைபாவை யற்று. நுண்மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் - நுட்பமான நல்ல பல நூல்களிலும் நுழைந்து பார்க்கும் அறிவு இல்லாத வனுடைய தோற்றமும் அழகும், மண்மாண் புனைபாவை அற்று - மண்ணால் நன்றாகச் செய்த பொம்மையின் தோற்றமும் அழகும் போலும். அறிவில்லாதவர் பொம்மை போன்றவரே. நுழை புலம் - நுட்பமான பொருளிலும் நுழையும் அறிவு. (7) 408. நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே கல்லார்கட் பட்ட திரு. கல்லார்கண் பட்ட திரு - கல்லாதவரிடத்து நின்ற செல்வம், நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாது - கற்றவரிடத்து நின்ற வறுமையைவிடத் துன்பந் தருவதாகும். உடையானை வருத்துதலும், உலகை வருத்துதலும் திரு, வறுமை இரண்டிற்கும் ஒக்குமாயினும், திரு கல்லாரைக் கெடுக்கும்; வறுமை கற்றாரைக் கெடுக்காது நிற்றலான், வறுமையினும் திரு இன்னாது என்றார். (8) 409. மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு. கல்லாதார் மேல் பிறந்தார் ஆயினும் - கல்லாதவர் உயர் குடியில் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்து பாடு இலர் - தாழ்குடியில் பிறந்தும் கற்றாரைப் போலப் பெருமை இல்லாதவராவர். உயர்குடி - வழிவழியாக நல்லொழுக்க முள்ள குடி. தாழ்குடி - நல்லொழுக்க மில்லாத குடி. கல்வியே ஒருவன் பெருமைக்குக் காரணம். (9) 410. விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல் கற்றாரோ டேனை யவர். இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர் - விளங்கிய நூல்களைக் கற்றவரோடு கல்லாதவரை ஒப்பிட்டுப் பார்க்கின், விலங்கொடு மக்கள் அனையர் - விலங்குகளுடன் மக்களை ஒப்பிட்டுப் பார்க்கின் உள்ள வேறுபாடுடைய வராவர். விலங்குக்கும் மக்களுக்கும் உள்ள வேறுபாடே நூலைக் கற்றவருக்கும் கல்லாதவருக்கும் உள்ள வேறுபாடு. கல்லாதவர் விலங்கினை ஒப்பர். (10) 42. கேள்வி ஒருவன் தான் கற்றதோடு நில்லாது, கற்றறிந்த பெரியோர் கூறுவதைக் கேட்கவேண்டும் என்பது. 411. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை. செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் - செல்வங்களுள் சிறந்த செல்வமாவது கேள்வி; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - அக் கேள்விச் செல்வமானது மற்றைச் செல்வங்கள் எல்லா வற்றினும் முதன்மையானது. நிலையில்லாத பொருட்செல்வங்களினும் நிலையான கேள்விச் செல்வம் சிறந்தது. (1) 412. செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கு மீயப் படும். செவிக்கு உணவு இல்லாத போழ்து - செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாத போது, வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் - வயிற் றுக்கும் சிறிது கொடுக்கப்படும். மிகுதியாக உண்டால் கேள்வியை விரும்பாது, தீமையை விரும்புமாதலான் 'சிறிது' என்றார். ஈயப்படும் என்பது வயிற்றின் இழிவு தோன்ற நின்றது. உணவினும் கேள்வி இன்றியமையாதது. (2) 413. செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையவர், நிலத்து அவி உணவின் ஆன்றாரோடு ஒப்பர் - நிலத்தில் குறைந்த உணவினையுடைய நிறைந்த அறிவினை யுடையவரை ஒப்பர். அவிதல் - குறைதல். அவி உணவு - வினைத்தொகை. ஆன்றோர்கள், நிறையுணவினை விரும்பாது குறையுணவுண்டு புலன டக்கிப் புத்தொளி பெறுவராகை யால் 'அவியுணவின் ஆன்றோர்' என்றார். கேள்விச் செல்வ முடையோர் ஆன்றோர் போல மதிக்கப் பெறுவர். (3) 414. கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற் கொற்கத்தி னூற்றாந் துணை. கற்றிலன் ஆயினும் கேட்க - கற்க வேண்டிய நூல்களைக் கற்றிலனாயினும் அவற்றைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்க வேண்டும்; அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை - அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்தபோது ஊன்றுகோல் போன்ற துணையாகும். ஒற்கம் - தளர்ச்சி. தளர்ச்சி - வறுமையாலோ, அறியாமை யாலோ துன்பம் வந்தவிடத்து மனந்தளர்தல். ஊற்று - ஊன்று - ஊன்றுகோல். கேள்விச் செல்வம் இடையூறு வந்தபோது உதவும். ஆய்தம் - குறில்போல அலகு பெற்றது. (4) 415. இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல். ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல் - நல்லொழுக்கம் உடைய வரது வாயிலிருந்து வரும் சொல், இழுக்கல் உடை உழி ஊற்றுக் கோல் அற்று - வழுக்குதலையுடைய இடத்தில் நடப்பார்க்கு ஊன்று கோல் போன்றது. கல்வியுடையரேனும் ஒழுக்க மில்லாதார் அறிவிலராகலின் அவர் வாய்ச்சொற் கேட்கப்படாது. ஒழுக்க முடையார் சொல்லே கேட்கத்தக்கது. (5) 416. எனைத்தானு நல்லவை கேட்க வனைத்தானும் ஆன்ற பெருமை தரும். எனைத்தானும் நல்லவை கேட்க - எவ்வளவு சிறிதாயினும் நல்ல கேள்விகளைக் கேட்க; அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - அவ்வளவே ஆயினும் அக்கேள்விகள் மிகுந்த பெருமையைக் கொடுக்கும். சிலவாயினும் நல்ல கேள்விகளையே கேட்க வேண்டும். (6) 417. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியர் - நுண்ணிதாக ஆராய்ந்தறிந்ததோடு மிகுந்த கேள்வியறிவினையும் உடையவர்; பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் - தப்பாக உணர்ந் தாலும் அறிவுக்குப் பொருந்தாத சொற் களைச் சொல்லார். பிழைத்து உணர்ந்தும் என்னும் உம்மை, அவ்வாறு உணர மாட்டார்; தவறி உணரினும் தப்பாகப் பிறர்க்குச் சொல்ல மாட்டார் என்பது குறித்தது. கல்வி கேள்வியுடையார் அறிவுக்குப் பொருந்தாத சொற்களைச் சொல்ல மாட்டார். (7) 418. கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற் றோட்கப் படாத செவி. கேள்வியால் தோட்கப் படாத செவி - பெரியோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவிகள், கேட்பினும் கேளாத் தகையவே - கேட்பினும் செவிடாந் தன்மையே யாகும். செவிடாந்தன்மை - செவிட்டுக்காது. ஆன்றோர் அறி வுரைகளைத் கேட்கும் செவியே கேட்கும் செவியாகும். (8) 419. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராத லரிது. நுணங்கிய கேள்வியர் அல்லார் - நுட்பமாகிய கேள்வியைக் கேளாதவர், வணங்கிய வாயினர் ஆதல் அரிது - பணிந்த மொழியை உடையர் ஆவது இல்லை. பணிந்த மொழி - அடக்கமாகப் பேசுதல். கேள்விச் செல்வ முடையவரே பணிவாகப் பேசுவர். (9) 420. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினு மென். செவியில் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் - காது களால் நுகரும் இன்பத்தை உணராது வாயால் நுகரும் இன்பத்தை மட்டும் உணர்வார், அவியினும் வாழினும் என் - இறந்தாலும் வாழ்ந்தாலும் உலகத்தாருக்கு வருவது என்ன? வாயுணர்வு - இனிப்பு. புளிப்பு முதலிய சுவைகளை உணரும் உணர்வு. கேள்வியறிவில்லார் இறப்பதும் இருப்பதும் ஒன்றே. (10) 43. அறிவுடைமை அறிவின் தன்மையும் சிறப்பும். 421. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா வரண். அறிவு அற்றம் காக்கும் கருவி - அறிவே அழிவு வராமல் காவல் செய்யும் கருவியாகும்; செறுவார்க்கும் உள் அழிக்கல் ஆகா அரண் - பகைவர்க்கும் உட்புகுந்து அழிக்க முடியாத அரணுமாகும். அற்றம் - அழிவு. அரண் - கோட்டை. அழிவு வராமல் காக்கும் கருவியும், பகைவரால் அழிக்க முடியாத கோட்டையும் அறிவே யாகும். (1) 422. சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு. சென்ற இடத்தால் செலவிடா - மனம் சென்ற விடத்தில் அதைச் செல்லவிடாது, தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு - தீமையை விட்டு நீக்கி நன்மையின் பால் செலுத்துவது அறிவாகும். விடாது - ஈறு கெட்டது. ஒரீஇ - ஒருவி - நீக்கி. மனம் போன போக்கில் விடாது, தீமையின்பால் செல்ல விடாது, நன்மையின்பால் செலுத்துவது அறிவாகும். மனம் போனபடி நடக்காமல் தீமை செய்யாது நன்மை செய்வதே அறிவாகும். (2) 423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் - யாதொரு பொருளை யார்யார் சொல்லக் கேட்பினும், அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவாகும். ஒருவர் பேசும் பேச்சிலுள்ள உண்மையைக் காண்பதே அறிவாகும். யார்யார் என்னும் அடுக்குப் பன்மை குறித்தது. (3) 424. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. தான் எண்பொருள ஆகச் செலச் சொல்லி - தான் சொல்வன அரிய பொருளுடையன வாயினும் எளிய பொருளுடையனவாகக் கேட்போர் மனங் கொள்ளும்படி சொல்லி, தான் பிறர்வாய் நுண் பொருள் காண்பது அறிவு - தான் பிறர் பேசும் பேச்சின் நுண்ணிய பொருள்களைக் காண்பதே அறிவாகும். தான் பிறர்க்கு எளிதில் விளங்கும்படி பேசிப் பிறர் பேச்சின் நுண்ணிய பொருளைக் காண்பதே அறிவாகும். எண்மை - எளிமை. (4) 425. உலகந் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலு மில்ல தறிவு. உலகம் தழீஇயது ஒட்பம் - உயர்ந்தோரை நட்பாக்குவது அறிவுடைமை; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - அந்நட்பி னிடம் விரிதலும் குவிதலும் இல்லாது ஒரு தன்மையனாவது அறி வுடைமையாகும். ஒட்பம் - அறிவு. முன் பெருகிப் பின் சுருங்காமல் இருக்க வேண்டும். எப்போதும் ஒரே தன்மையாகப் பெரியாரிடம் நட்புக் கொள்வதே அறிவுடைமையாகும். (5) 426. எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு. உலகம் எவ்வது உறைவது - உலகம் எவ்வாறு நடக்கிறது; உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்துடன் அவ்வாறு நடப்பதே அறிவாகும். உலகம் - உயர்ந்தோர். உலகத்தோடு ஒத்து நடப்பதே அறி வுடைமையாகும். (6) 427. அறிவுடையா ராவ தறிவா ரறிவிலார் அஃதறி கல்லா தவர். ஆவது அறிவார் அறிவுடையார் - பின் வருவதனை முன்னதாக அறியவல்லவரே அறிவுடையராவர்; அஃது அறிகல்லாதவர் அறி விலார் - அவ்வாறு அறியமாட்டாதவர் அறிவில்லாதவர் ஆவர். பின் வருவதனை முன்னமே எண்ணி யறியவல்லாரே அறி வுடையாராவர். அவ்வாறு எண்ணியறிய மாட்டடாதார் அறிவி லாதவர் ஆவர். (7) 428. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை; யஞ்சுவ தஞ்ச லறிவார் தொழில். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - அஞ்ச வேண்டி யதற்கு அஞ்சாமை அறிவின்மையாகும்; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் - அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல் அறிவுடை யார் செயலாகும். அஞ்ச வேண்டியது - தீமை. அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவதே அறிவுடைமை யாகும். (8) 429. எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு - பின் வருவனவற்றை முன் அறிந்து காக்கும் அறிவுடையோர்க்கு, அதிர வருவதோர் நோய் இல்லை - நடுங்கும்படி வருவதொரு துன்பம் இல்லை. பின் வருவதை முன்னறிந்து காக்கும் அறிவுடை யோர்க்குத் துன்பம் இல்லை. (9) 430. அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலார் என்னுடைய ரேனு மிலர். அறிவுடையார் எல்லாம் உடையார் - அறிவுடையோர் எல்லாம் உடையவராவர்; அறிவிலார் என் உடையரேனும் இலர் - அறி வில்லாதவர் எல்லா முடையராயினும் ஒன்று மில்லாத வராவர். எல்லாம் - செல்வம் அறிவால் படைத்துக் காக்கப்படுதலின் அறிவுடையார் எல்லாச் செல்வமும் உடையர் என்றும், அறிவிலார் ஒன்றும் இலர் என்றும் கூறினார். (10) 44. குற்றங் கடிதல் அறிவுடையோரால் குற்றமெனக் கடியப்பட்ட வற்றைத் தன் கண் நிகழாமல் கடிதல். - நீக்குதல். தன்பால் குற்றம் அணுகாமல் காத்தல். 431. செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - செல்வச் செருக்கும் சினமும் சிறுமைக் குணமும் இல்லாத வருடைய செல்வம், பெருமித நீர்த்து - மேம்பாடான தன்மையது. மேம்பாடான தன்மையது - மேம்பாடுடையது. மேம்பாடு - நிலையும் மதிப்பும் உடைமை. (1) 432. இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையு மேத மிறைக்கு. இவறலும் - ஈயாத தன்மையும், மாண்பு இறந்த மானமும் - நன்மையின் நீங்கிய மானமும், மாணா உவகையும் - அளவு கடந்த மகிழ்ச்சியும், இறைக்கு ஏதம் - அரசனுக்குக் குற்றமாகும். மாண்பிறந்த மானம் - முறைகேடான மானம்; செய்யத் தகாததைச் செய்து முடிக்கவேண்டு மென்னும் மானம். மாணா - மாணாத - நல்லதல்லாத. ஈயாத்தன்மை, முறை கெட்ட மானம், மிகுமகிழ்ச்சி ஆகிய மூன்றும் அரசனுக்குக் கூறினாராயினும் மக்கட்கும் கொள்க. (2) 433. தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். பழி நாணுவார் - பழிக்கு அஞ்சுபவர், தினைத் துணையாம் குற்றம் வரினும் - தினையளவு குற்றம் வந்தாலும், பனைத் துணையாக் கொள்வர் - அதைப் பனையளவாகக் கொள்வர். சிறு குற்றத்தையும் பெரிதாக எண்ணுவது பெரியாரி யல்பு. (3) 434. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் தரூஉம் பகை. அற்றம் தரூஉம் பகை குற்றமே - தனக்கு முடிவைத் தரும் பகை குற்றமேயாகும், குற்றம் பொருளாகக் காக்க - ஆதலால், அக் குற்றத்தை ஒரு பொருளாகக் கொண்டு காக்க வேண்டும். முடிவு - அழிவு. குற்றம் அழிவைத் தருவதால் குற்றம் வராமல் காக்க வேண்டும். (4) 435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குற்றம் வருமுன்னே அதைக் காவாதவனது வாழ்க்கையானது, எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும் - நெருப்பின் முன்னுள்ள வைக்கோற் போரைப் போல அழியும். தூறு - குவியல், போர். உவமையால் தப்பாது எளிதில் கெடும் என்பதாம். (5) 436. தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகு மிறைக்கு. தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின் - முதலில் தன் குற்றத்தை நீக்கிப் பிறகு பிறருடைய குற்றத்தைக் காண்பானாயின், இறைக்கு என் குற்றம் ஆகும் - அரசனுக்கு என்ன குற்றம் உண் டாகும்? ஒன்றுமில்லை. காண்கிற்பின் - காண்பின். இறைக்குக் கூறினும் பொதுவாகக் கொள்க. தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் பார்ப்பவன் குற்ற மற்றவனாவான். (6) 437. செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். செயற்பால செய்யாது இவறியான் செல்வம் - பொருளால் செய்யவேண்டியவற்றைச் செய்யாமல் அதன் மீது பற்றுள்ளம் வைத்தவனது செல்வம், உயற்பாலது அன்றிக் கெடும் - பின் நிலைக்குந் தன்மையின்றிக் கெடும். பற்றுள்ளம் - பிசினத் தன்மை (உலோபம்). உயல் - நிலைத்தல். செய்யவேண்டியவற்றைச் செய்யாது காக்கும் பொருள் அழியும். செய்யவேண்டியவை - அறமும் இன்பமும். (7) 438. பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று. பற்றுள்ளம் என்னும் இவறன்மை - பொருளைச் செலவிட வேண்டிய இடத்துச் செலவு செய்யாத பற்றுள்ளம் என்னும் ஈயாத்தன்மை, எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்றன்று - எதனோடும் சேர்த்து எண்ணப்படுவதொன்றன்று. ஈயாமை ஒரு பொருளாக எண்ணப்படமாட்டாது. ஈயாமை கொடிய குற்றமாகும். (8) 439. வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை; நயவற்க நன்றி பயவா வினை. தன்னை எஞ்ஞான்றும் வியவற்க - ஒருவன் தன்னைத் தானே எப்போதும் பாராட்டாதிருக்கக்கடவன்; நன்றி பயவா வினை நயவற்க - நன்மையைத் தராத செயலை விரும்பா திருக்கக்கடவன். தன்னைத்தானே புகழ்தலும், நன்மை தராத செயலை விரும் புதலும் குற்றமாகும். (9) 440. காதல காத லறியாமை யுய்க்கிற்பின் ஏதில வேதிலார் நூல். காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் - தான் விரும்புவன வற்றின் மீதுள்ள தனது விருப்பத்தைப் பிறர் அறியாதபடி நடந்து கொள்வானாயின், ஏதிலார் நூல் ஏதில - பகைவரது கெடுக்க நினைக்கும் நினைப்புப் பழுதாகும். காதல - விரும்புவன. பலவின்பால் வினையாலணையும் பெயர். நூல் என்றது அவர் கற்ற கல்வியை. அறிந்தால் அதன் மூலம் கெடுக்க நினைப்பர். ஒருவன் தான் விரும்பு வதைப் பிறர் அறியாமல் நடந்து கொள்வானானால் பகைவ ரால் அவனை ஒன்றுஞ் செய்ய முடியாது. பிறரறிய நடத்தல் குற்றமாகும். (10) 45. பெரியாரைத் துணைக்கோடல் இது அரசனுக்குச் சொல்லினும் பொதுவாக எல்லார்க்குங் கொள்க. கோடல் - கொள்ளுதல். 441. அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தின் கூறுபாட்டை அறிந்து முதிர்ந்த அறிவுடையாரது நட்பை, திறன் தேர்ந்து அறிந்து கொளல் - கொள்ளும் வகையை ஆராய்ந்து அறிந்து கொள்க. அறத்தின் கூறுபாடு - பலவகை அறங்கள். பெரியார் நட்பைக் கொள்ளும் வகையறிந்து கொள்ள வேண்டும். (1) 442. உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். உற்ற நோய் நீக்கி - தனக்கு உற்ற துன்பத்தை நீக்கி, உறாமை முன் காக்கும் பெற்றியார் - அது பின்னும் உறாமல் முன்னறிந்து காக்கும் தன்மையரை, பேணிக்கொளல் - விரும்பித் துணையாகக் கொள்க. வந்த துன்பத்தை நீக்கி, அது பின்னர் வராமல் காக்கும் பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும். (2) 443. அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - பெரியோர் களை விரும்பித் தமக்குத் துணையாகக் கொள்ளுதல், அரியவற்றுள் எல்லாம் அரிதே - எல்லாவற்றிலும் அரியதாகும். பெரியாரைத் துணைக்கோடல் முதன்மையானதாகும். (3) 444. தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. தம்மில் பெரியார் தமரா ஒழுகுதல் - தம்மைக் காட்டிலும் அறிவிற் பெரியவர்களைத் தமக்குத் துணையாகக் கொள்ளுதல், வன்மையுள் எல்லாம் தலை - எல்லா வலியினும் முதன்மை யானது. எல்லா வலி - பொருள்வலி, படைவலி, அரண்வலி, மனவலி முதலியன. இவ்வலிகளினும் பெரியார் துணைவலி சிறந்ததாகும். (4) 445. சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். மன்னவன் சூழ்வார் கண்ணாக ஒழுகலான் - அரசன் அமைச்சரைக் கண்ணாகக்கொண்டு ஆட்சி புரிவதால், சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் - அமைச்சர்களை ஆராய்ந்து தனக்குத் துணை யாகக் கொள்ளக்கடவன். சூழ்தல் - ஆராய்தல், சூழ்வார் - அரசனுக்கு ஆய்வுரை கூறும் அமைச்சர். ஆய்வுரை - யோசனை. கண்ணா - கண் போல - முதன்மை யாக. அரசன் கண்போன்ற அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணைக்கொள்ள வேண்டும். (5) 446. தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானை - பெரி யாரைத் தனக்குத் துணையாகக் கொண்டு நடக்க வல்ல அரசனுக்கு, செற்றார் செயக்கிடந்தது இல் - பகைவரால் செய்யப்படும் தீங்கு ஒன்றுமில்லை. பெரியாரைத் துணைக்கொண்ட அரசனைப் பகைவர் ஒன்றுஞ் செய்ய முடியாது. (6) 447. இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர். இடிக்குந் துணையாரை ஆள்வாரை - குற்றங் கண்டால் கண்டித்துரைக்கும் பெரியாரைத் துணையாகக் கொண்ட வரை, கெடுக்கும் தகைமையவர் யார் - கெடுக்கும் பெருமையுடைய பகைவர் யார்? ஒருவருமில்லை. இடிக்கும் துணையார் - இடித்துரைக்குந்தன்மையர். ஆளுதல் - துணைக்கொள்ளுதல். தீய செயல் புரியத் தொடங்கும்போது கண்டித்துக்கூறி அதைச் செய்யாமல் தடுக்குந் தன்மையுடைய பெரியாரைத் துணைக்கொண்ட அரசர்களை வெல்லக்கூடியவர் ஒருவருமில்லை. (7) 448. இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - இடித்துரைப் போரை இல்லாத அரசன், கெடுப்பார் இலானும் கெடும் - தனக்குப் பகைவர் இல்லையாயினும் தானே கெடுவான். ஏமருதல் - காக்கப்படுதல். ஏமரா - ஏமராத - காக்கப்படாத. தானே கெடுதல் - தீயவழியில் சென்று கெடுதல். இடித்துரைப் பாரை இல்லா இறைவன் தானே கெடுவான். பொதுவாகவும் கொள்க. (8) 449. முதலிலார்க் கூதிய மில்லை; மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை. முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை - முதற்பொருள் இல்லாத வணிகருக்கு ஊதியம் இல்லை. மதலையாம் சார்பு இலார்க்கு நிலையில்லை - அதுபோல, தன்னைத் தாங்கும் துணையிலார்க்கு நிலைத்து நிற்கும் நிலை இல்லை. மதலை - தூண். மதலையாம் சார்பு - மதலையாகிய சார்பு. சார்பு - துணை. முதற்பொருளில்லாத வணிகர்க்கு ஊதியம் (லாபம்) இல்லாததுபோல, தன்னைத் தாங்கும் பெரியாராகிய துணை இல்லார்க்கு நிலை இல்லை. கெடுவார் என்பதாம். (9) 450. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். நல்லார் தொடர்கைவிடல் - நல்லாரது நட்பை விட்டு விடுவது, பல்லார் பகை கொளலின் பத்தடுத்த தீமைத்தே - பலருடன் பகைமகொள்வதை விடப் பதின்மடங்கு தீமையை யுடையதாகும். அரசன் பெரியாரது நட்பைக் கைவிடுதல் பலருடன் பகை கொள்ளுதலைவிட மிக்க தீமையுடையதாகும். (10) 46. சிற்றினஞ்சேராமை 451. சிற்றின மஞ்சும் பெருமை; சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். பெருமை சிற்றினம் அஞ்சும் - பெரியார் சிற்றினத்தைச் சேர அஞ்சுவார்கள்; சிறுமைதான் சுற்றமாச்சூழ்ந்து விடும் - சிறியோர் அதைச் சுற்றமாகக் கொள்வர். பெருமை - பெரியார். சிற்றினம் - கீழ்மையாகிய குணஞ் செய லுள்ளவர். கீழ் மக்கள் எனப்படுவர். சிற்றினத்தைப் பெரியார் சேரார்; சிறியார் சேர்வர். (1) 452. நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகு மாந்தர்க் கினத்தியல்ப தாகு மறிவு. மாந்தர்க்கு இனத்து இயல்பது ஆகும் அறிவு - மக்களுக்கும் தாஞ் சேர்ந்த இனத்தின் தன்மையதாகும் அறிவானது, நிலத்து இயல்பால் நீர் திரிந்து அற்றாகும் - நிலத்தின் தன்மையால் நீரின் தன்மை மாறுபடுவதை ஒக்கும். வானிலிருந்து வரும் தூய்மையான நீர் நிலத்திற் கேற்றவாறு நிறம், சுவை மாறுபடுவது போல், தாஞ்சேர்ந்த இனத்திற் கேற்றவாறு மக்களின் தன்மை மாறுபடும். (2) 453. மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி; யினத்தானாம் இன்னா னெனப்படுஞ் சொல். மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் - மக்களுக்குப் பொது அறிவு மனத்தினால் உண்டாகும்; இன்னான் எனப்படும் சொல் இனத்தான் ஆம் - உலகத்தாரால் இத்தகையன் என்று சொல்லப் படும் சொல்லானது இனத்தினால் உண்டாகும். இத்தகையன் - இப்பேர்ப்பட்டவன். நல்லினம் சேர்ந்தால் 'நல்லவன்' எனவும், சிற்றினம் சேர்ந்தால் 'கெட்டவன்' எனவும் சொல்லப்படுவான். தான் சேர்ந்த இனத்தினாலே ஒருவன் நல்லவன், கெட்டவன் என்னும் பெயரெடுப்பதால் அச்சிறப்புக்கு இனம் காரணமாயிற்று. (3) 454. மனத்து ளதுபோலக் காட்டி யொருவற் கினத்துள தாகு மறிவு. அறிவு - அச்சிறப்பறிவு, ஒருவற்கு மனத்து உளதுபோலக் காட்டி - ஒருவனுக்கு மனத்தில் உள்ளது போலத் தன்னைக் காட்டி, இனத்து உளதாகும் - அவன் சேர்ந்த இனத்தினால் உண்டாகும். 'இன்னான்' எனப்படும் சிறப்பறிவு மனத்தின் உள்ளது போலக் காணப்படினும், அவன் சேர்ந்த இனத்தினால்தான் உண்டாகிறது. இது செயற்கை அறிவு; அவ்வினப் பழக்கத்தால் உண்டாவது. (4) 455. மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டும் இனந்தூய்மை தூவா வரும். மனம் தூய்மை செய்வினை தூய்மை யிரண்டும் - மனம் தூய்மை செய்யும் வினைத் தூய்மை ஆகிய இரண்டும், இனம் தூய்மை தூவா வரும் - தான் சேர்ந்த இனத்தின் தூய்மையைத் துணையாகக் கொண்டுவரும். தூய்மை - நல்லதாதல் (சுத்தம்). தூ ஆ; ஆ - ஆக. தூ - பற்றுக் கோடு - ஊன்றுகோல், துணை. வினை - தொழில். மன நன்மையும் வினை நன்மையும் தான்சேர்ந்த இனத்தின் நன்மையைத் துணையாகக் கொண்டு வரும். மன நன்மைக்கும் வினை நன்மைக்கும் இன நன்மையே காரணம். (5) 456. மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க் கில்லைநன் றாகா வினை. மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும் - மனம் தூய்மையான வர்களுக்குப் பின்பு எஞ்சி நிற்பது நல்லதாகும்; இனம் தூயார்க்கு நன்றாகா வினை இல்லை - இனம் தூய்மையானவர்க்கு நன்றாகாத செயல் எதுவு மில்லை. எஞ்சி நிற்பது - அவர் இறந்த பிறகு மிச்சமாகும் புகழ். நன்மன முடையார்க்கு நற்புகழ் உண்டாகுமென்பதாம். நல்லினம் சேர்ந்தார் செயலெல்லாம் நல்லனவாகும். (6) 457. மனநலம் மன்னுயிர்க் காக்க மினநலம் எல்லாப் புகழுந் தரும். மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் - மக்களுக்கு மனத்தின்கண் உள்ள நலம் செல்வமாகும்; இனநலம் எல்லாப் புகழும் தரும் - இனத் தினது நலம் அம் மனநலத்தோடு எல்லாப் புகழையும் தரும். நலம் - மனம் நன்றாக விருத்தல். இனநலம் மனநலத்தோடு புகழையும் தரும். (7) 458. மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநல மேமாப் புடைத்து. மனம் நலம் நன்கு உடையர் ஆயினும் - மனநலம் மிகவுடைய ராயினும், சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து - அறிவாளி கட்கு இனநலம் அதற்குக் காவலாதல் உடையது, காவலாகும். மனநலத்தினும் இனநலம் சிறந்தது. (8) 459. மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும் இனநலத்தி னேமாப் புடைத்து. மனநலத்தின் மறுமை ஆகும் - மனநலத்தினால் மறுமை யின்பம் உண்டாகும்; மற்று அஃதும் இனநலத்தின் ஏமாப்பு உடைத்து - அதற்கு அச்சிறப்பும் இனநலத்தினால் வலி பெறுதலை யுடையது. ஒருவன் இறந்த பிறகு அவன் பெயர் இங்கு நிலவுதல் மறுமை எனப்படும். 98ஆம் குறளுரை பார்க்க. மனநலத் தினால் உண்டாகும் மறுமை யின்பமும் இனநலத்தினால் வலிபெறும்.(9) 460. நல்லினத்தி னூங்குத் துணையில்லை; தீயினத்தின் அல்லற் படுப்பதூஉ மில். நல்ல இனத்தின் ஊங்குத் துணைஇல்லை - ஒருவனுக்கு நல்ல இனத்தைப் பார்க்கினும் மிக்க துணையும் இல்லை; தீஇனத்தின் அல்லல் படுப்பதும் இல் - தீய இனத்தைப் பார்க்கினும் துன்பப் படுத்துவதும் வேறொன்றும் இல்லை. இனம் - இனச் சேர்க்கை. (10) 47. சுற்றந்தழால் சுற்றத்தாரைத் தழுவிக்கொள்ளுதல். தழுவல் - தன்னை நீங்காமல் இருக்கச் செய்தல். தழால் - தழுவுதல். அரசர்க்கேயன்றி ஏனையோர்க்கும் இது பொருந்தும். 461. பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள. பற்று அற்ற கண்ணும் பழமை பாராட்டுதல் - ஒருவன் செல்வமிழந்து வறியவனானபோதும் அவனுடைய பழைய நிலைமையைப் பாராட்டி உடன் வாழுந்தன்மை, சுற்றத்தார் கண்ணே உள - சுற்றத்தாரிடமே உண்டு. வறுமையினும் கைவிடாத்தன்மை சுற்றத்தார்க்கே உண்டு. (1) 462. விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா ஆக்கம் பலவுந் தரும். விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைக்குமாயின், அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - அது கிளைத்தல் நீங்காத பல செல்வங்களையும் கொடுக்கும். அரும்பு - அருப்பு என வலிந்தது. அரும்புதல் - கிளைத்தல், ஒன்று பலவாதல் விருப்பு அறாச் சுற்றம் - உட்பகை சிறிதுமில்லாத சுற்றம். அறா - அறாத. அன்புடைய சுற்றத்தையுடையவர்க்குப் பல நன்மையும் உண்டாகும். (2) 463. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. அளவளாவு இல்லாதான் வாழ்க்கை - சுற்றத்தாரோடு மனங் கலந்து வாழா தவனது வாழ்க்கையானது, குளவளாகோடு இன்றி நீர் நிறைந்தற்று - குளத்தினது பரப்பு கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது. கரையில்லாத குளப்பரப்பு நீர் நிறைந்தால் அக்குளம் கெட்டு விடும். அதுபோல, அவள் வாழ்க்கையும் கெடுமென் பதாம். வளா - பரப்பு. (3) 464. சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன். செல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் - செல்வம் பெற்றதால் அடைந்த பயனாவது, சுற்றத்தால் தான் சுற்றப்பட ஒழுகல் - ஒருவன் தனது சுற்றத்தினால் தான் சூழப்படும்படி நடத்தலாம். சுற்றத்திற்கு அழகு சூழவிருத்தல். நன்மை தீமைகளில் சூழப் பட்டு - சுற்றப்பட்டு - இருப்பதனாலேயே சுற்றம் எனப் பெயர் ஆனது. சுற்று அம் - சுற்றம். பெற்ற அதனால் என்பது - பெற்றத் தால் என்றாயது. (4) 465. கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய சுற்றத்தாற் சுற்றப் படும். கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் - ஒருவன் வேண்டுவன கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலும் செய்வானாயின், அடுக்கிய சுற்றத்தால் சுற்றப்படும் - அவன் தொடர்ந்த சுற்றத்தால் சூழப் படுவான். தொடர்ந்த சுற்றம் - சுற்றத்தினது சுற்றம். கொடையும் இன் சொல்லும் உடையான் பல சுற்றஞ்சூழ வாழ்வான். (5) 466. பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின் மருங்குடையார் மாநிலத் தில். பெருங் கொடையான் வெகுளி பேணான் - மிகுந்த கொடையையுடையவனாய் வெகுளியை விரும்பாதவனாயின், அவனின் மருங்கு உடையார் மாநிலத்தில் இல் - அவனைப் போலச் சுற்ற முடையார் இவ்வுலகத்தில் இல்லை. மருங்கு - பக்கம். பக்கத்தாரான சுற்றத்தாரை யுணர்த்திற்று. பெருங்கொடையாலும், சினமின்மையாலும் சுற்றஞ் சூழ வாழ்வன். (6) 467. காக்கை கரவாக் கரைந்துண்ணு மாக்கமும் அன்னநீ ரார்க்கே யுள. காக்கை கரவா கரைந்து உண்ணும் - காக்கையானது இரையைக் கண்டதும் மறைக்காது தன் இனத்தை அழைத்து உண்ணும்; ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள - செல்வங்களும் அத்தகைய இயல்பினர்க்கே உள்ளனவாகும். ஆக்கமும் என்னும் எச்சவும்மையால், அறமும் இன்பமுமே யன்றிப் பொருளும் எய்தும் என்பதாம். அத்தகைய இயல்பினர் - தாம் துய்ப்பனவெல்லாம் தம் சுற்றமும் துய்க்குமாறு செய்பவர். கரவா - கரவாது . கரத்தல் - மறைத்தல், ஒளித்தல். (7) 468. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். வேந்தன் பொது நோக்கான் வரிசையா நோக்கின் - அரசன் எல்லோரையும் ஒரு தன்மையாக நோக்காது அவரவர் தகுதிக்கேற்ப நோக்குவானாயின், அது நோக்கி பலர் வாழ்வார் - அச்சிறப்பை நோக்கிப் பல சுற்றத்தார் அவனைச் சூழ்ந்து வாழ்வார். தக்கோர் விலகாதிருக்கப் பொது நோக்கை விலக்கி, எல்லாரும் விடாது சூழ்ந்து வாழ்தலை நோக்கி வரிசை நோக்கை விதித்தார். தகுதிக்கேற்ப நடந்து கொள்வானைப் பலரும் சூழ்ந்து வாழ்வார். (8) 469. தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக் காரண மின்றி வரும். தமராகி - முன்னே சுற்றத்தாராக இருந்து, தன் துறந்தார் சுற்றம் - யாதானுமொரு காரணத்தால் தன்னொடு பொருந்தாது தன்னை விட்டுப் பிரிந்துபோனவர் பின்னும் வந்து சுற்றமாதல், அமராமைக் காரணம் இன்றி வரும் - அப்பொருந்தாமைக்குக் காரணம் இப் போது தன்னிடம் இல்லையாக உண்டாகும். முன் தன்னைவிட்டு அவர் பிரிந்து போனதன் காரணம் இப்போது இல்லாதவனானால் பிரிந்துபோன சுற்றத்தார் தாமாகவே மறுபடியும் வந்து சுற்றமாவர். (9) 470. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந் தெண்ணிக் கொளல். உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை - தன்னிட மிருந்து பிரிந்துபோய்ப் பிறகு ஒரு நோக்கங் கொண்டு தன்னிடம் வந்தவனை, வேந்தன் இழைத்து இருந்து எண்ணிக் கொளல் - அரசன் அந் நோக்கத்தை நிறைவேற்றி வைத்து ஆராய்ந்து தழுவிக்கொள்ள வேண்டும். ஒரு காரணமுமின்றிப் பிரிந்துபோனவர் ஏதேனும் ஒன்றை எண்ணி மறுபடியும் வரின், அவ்வெண்ணத்தை நிறைவேற்றிச் சுற்றமாக்கிக் கொள்ள வேண்டும். இல்லை யேல் மறுபடியும் பகைவரோடு சேர்ந்துகொள்வர். அன்பின்றிப் போய் மறுபடியும் வருவோரை ஆராய்ந்து பார்த்துச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிரிந்துபோன சுற்றத்தாருள் தனக்குத் தீமை செய்யப்போய் அதைச் செய்யாது வருவாரும், சும்மா பிரிந்துபோய்ப் பின் நன்மை செய்ய வருவாரும் ஆகிய இருதிறத்தாரையுமே தழுவிக் கொள்ள வேண்டும். (10) 48. தெரிந்து செயல்வகை செய்யும் செயல்களை ஆராய்ந்து செய்யும் வகை. 471. அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கும் ஊதியமுஞ் சூழ்ந்து செயல். அழிவதும் - ஒருவினை செய்து முடித்தற்கு அப்போது செல வாகும் பொருளும், ஆவதும் ஆகி - அவ்வினை செய்து முடித்தால் உண்டாகும் பொருளுமாகி, வழி பயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் - அவ்வினையால் பிறகு உண்டாகும் ஊதியமும் ஆகிய இம் மூன்றனையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். ஆராய்ந்து செய்வதாவது - அழிவினும் ஆவது மிக்கு ஊதி யமும் மிகுதல். அழிவதும் ஆவதும் சரிநிக ரானாலும் ஊதியம் உண்டாவதால் அவ்வினையைக் கைவிடக் கூடாதென்பதாம். அழிவது - செலவு. ஆவது - வரவு. (1) 472. தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க் கரும்பொருள் யாதொன்று மில். தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு - தாம் ஆராய்ந்துகொண்ட இனத்துடனே செய்யும் வினையை ஆராய்ந்து, பின் தாமும் எண்ணிச் செய்பவர் களுக்கு, அரும்பொருள் யாதொன்றும் இல் - பெறமுடியாத பொருள் யாதொன்றும் இல்லை. ஆராய்ந்துகொண்ட இனம் - முன் ஆராய்ந்து பார்த்துத் தமக்குத் துணையாகக் கொண்டவர்கள். துணைவரோடு ஆராய்ந்து, பின் தாமும் ஆராய்ந்து செய்தால் ஆகாத செயல் ஒன்றுமில்லை. (2) 473. ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை ஊக்கா ரறிவுடை யார். ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - இனி உண்டாகக் கூடிய ஊதியத்தை எண்ணி, முன்புள்ள முதலையும் இழக்கும் செயலை, அறிவுடையார் ஊக்கார் - அறிவுடை யார் செய்ய முயல மாட்டார். ஆக்கமேயன்றி முதலையும் இழக்கும் வினையைச் செய்ய அறிவுடையோர் எண்ணார். எண்ணுதல் - வலியுங் காலமும் இடமும் அறியாது பிறர் நாடுபிடிக்கச் சென்று தன்னாட்டையும் இழக்கும் செயலோடொக்கும். (3) 474. தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னும் ஏதப்பா டஞ்சு பவர். இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இகழ்ச்சி என்னும் குற்றத்திற்கு அஞ்சுபவர், தெளிவு இல் அதனைத் தொடங் கார் - ஆராய்தலில்லாத செயலைத் தொடங்கமாட்டார். ஏதப்பாடு - குற்றம். இளிவு என்னும் ஏதப்பாடு - இளிவாகிய குற்றம். பிறரால் இகழப்படும் குற்றத்திற்கு அஞ்சுபவர் ஆராயாமல் ஒரு செயலைச் செய்யத் தொடங்க மாட்டார். (4) 475. வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. வகை அறச் சூழாது எழுதல் - சென்றால் உண்டாகும் வகையை நன்கு எண்ணிப்பாராது அரசன் போர்க்கு எழுதல், பகைவரைப் பாத்திப் படுப்பதோர் ஆறு - பகைவராகிய பயிரை வளரும் நிலத்தில் நிலைபெறச் செய்வதாகிய ஒரு வழியாம். வகை - வலி, காலம், இடம் இவற்றால் தனக்கும் பகைவர்க்கும் உள்ள நிலைமைகளும், செயல் தொடங்கும் வழியும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்கும் வழியும், வெல்லும் வழியும், அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில குறையினும் பகைவர்க்கு எளிதாகையால் 'அறச்சூழ்ந்து' என்றார். வெல்லும் வகையை நன்கு ஆராய்ந்து முடிவுகட்டாது போர்க் கெழும் அரசன் பகை வரை வலிவுடைய ராக்கியவனாவான். (5) 476. செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும். செய்தக்க அல்ல செயக் கெடும் - ஒருவன் செய்யத்தகாத வற்றைச் செய்தாலும் கெடுவான்; செய்தக்க செய்யாமையானும் கெடும் - செய்யத் தக்கவற்றைச் செய்யாமையாலும் கெடுவான். செய்யத்தகாதவை - பெருமுயற்சியும், செய்தாற் பயனில்லா தனவும், ஐயமுடையனவும், பின் துயர் விளைப் பனவும் ஆகியவை. செய்யத்தக்கவை - இவற்றின் மறுதலை யானவை. செய்வன செய்து, ஒழிவன ஒழியவேண்டும். இல்லையேல் அறிவு, ஆண்மை, பெருமை என்னும் மூவகையாற்றலுள் பொருள், படை என்னும் பெருமை சுருங்கிப் பகைவரால் வெல்லுதற்கு எளியனாவான். (6) 477. எண்ணித் துணிக கருமந் துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு. கருமம் எண்ணித் துணிக - செய்யத்தக்க செயலையும் எண்ணித் தொடங்குக, துணிந்தபின் எண்ணுவம் என்பது குற்றமாகும். முடிக்கும் வழி, பயன் முதலியவற்றை ஆராய்ந்து பார்த்து ஒரு வினையைத் தொடங்க வேண்டும். தொடங்கிய பின் ஆராய்வோம் என்றெண்ணுவது தப்பு. (7) 478. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும். ஆற்றின் வருந்தா வருத்தம் - வினை முடியும் வழியில் முயலாத முயற்சியானது, பலர் நின்று போற்றினும் பொத்துப் படும் - பலர் நின்று குற்றம் வராது காப்பினும் குற்றப்படும். வருத்தம் - முயற்சி. முடிக்கும் வழியை எண்ணி ஒரு வினையைச் செய்ய முயலாவிட்டால் அது குற்ற முடைய தாகும். (8) 479. நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவருடைய இயல்பை அறிந்து அதற்குப் பொருந்தச் செய்யாத விடத்து, நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு - நன்கு செய்த விடத்தும் குற்ற முண்டாகும். அவரவர் என்றது பகைவரை. நன்று ஆற்றல் - வினை முடிக்கும் வழியறிந்து செய்தல். முடிக்கும் வழியறிந்து செய்யினும் பகையரசரின் இயல்பை யறிந்து செய்ய வேண்டும். (9) 480. எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு. தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது - அரசர் தம் நிலைக்குப் பொருந்தாதவற்றைச் செய்வாராயின் உலகம் இகழும், எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் - ஆகையால், உலகம் இகழா தவற்றை ஆராய்ந்து செய்யவேண்டும். கொள்ளாது - ஏற்றுக் கொள்ளாது; இகழும். தந்தகுதிக் கேற்ற செயலையே செய்யவேண்டும். (10) 49. வலியறிதல் பகையை வெல்லுதற் கேற்ற வலியினை அறிதல். வலி - திறமை. 481. வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியுந் துணைவலியுந் தூக்கிச் செயல். வினைவலியும் - தான் செய்யக் கருதிய வினையின் வலியையும், தன் வலியும் - தனது வலியையும், மாற்றான் வலியும் - தனது பகைவனது வலியையும், துணை வலியும் - தனக்கும் தன் பகை வனுக்கும் துணை வருவோர்களது வலியையும், தூக்கிச் செயல் - ஆராய்ந்து பார்த்துத் தன் வலி மிகுமாயின் அச் செயலைச் செய்க. வினைவலி - மதில் முற்றல் முதலிய தொழில் வலி. தன் வலி - பொருள் வலி, படைவலி, அரண்வலி, மனவலி என்பன. இவற்றுள் வினைவலி, தன்வலி, துணைவலி என்னும் மூவகை வலியும் தனக்கு மிகுமாயின் செய்க வென்பதாம். (1) 482. ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச் செல்வார்க்குச் செல்லாத தில். ஒல்வது அறிவது அறிந்து - ஒரு தொழிலை முடிக்குந் தன் திறத்தையும் அதற் கறிய வேண்டிய வலியையும் அறிந்து, அதன்கண் தங்கிச் செல்வார்க்கு - எப்பொழுதும் தம் கருத்தை அவ்வினை யிடத்தே வைத்துப் பகைவர் மேல் செல்லும் அரசர்க்கு, செல்லாதது இல் - முடியாதது ஒன்றும் இல்லை. எளிதில் வெல்வர். (2) 483. உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி இடைக்கண் முரிந்தார் பலர். தம் உடை வலியறியார் - தம்முடைய வலியினளவை அறி யாது, ஊக்கத்தின் ஊக்கி - மனவெழுச்சியால் ஒரு வினையைத் தொடங்கி, இடைக்கண் முரிந்தார் பலர் - வினை முடிவதன் முன்னே கெட்டவர் பலராவர். தம் வலியறியாது தொடங்குவார் இடையில் தோற்பர். தம் வலியறிந்தே வினை தொடங்க வேண்டும். (3) 484. அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை வியந்தான் விரைந்து கெடும். ஆங்கு அமைந்து ஒழுகான் - அயலாரோடு பொருந்தி ஒழுகாதவனாகி, அளவு அறியான் - தன் வலியின் அளவை அறியாது, தன்னை வியந்தான் விரைந்து கெடும் - தன்னைப் பெரிதாக எண்ணிப் பிறரைப் பகைத்தவன் விரைவில் கெடுவான். பொருந்தி யொழுகுதல் - தன்வலி குறைவாயுள்ள போது அயலார்களுடன் நட்பாக இருத்தல், தன்வலி மிகின் பகை கொள்ளல் என்னும் இரண்டில் நட்பாக இருத்தல். தன்வலி யறியாது அயலாரோடு பகைத்தவன் விரைந்து கெடுவான். (4) 485. பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின். பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - மிகவும் மெலியதான மயி லிறகை ஏற்றிய வண்டியும் அச்சு முறியப் பெறும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அம்மயிலிறகை மிகவும் மிகுதியாக ஏற்றினால். அச்சு - சக்கரங்களைத் தாங்கும் இரும்பு. எவ்வளவு வலியுடை யோரும் பலருடன் எதிர்த்தால் தோற்பர் என்பதாம். உவமையைக் கூறிப் பொருளைப் பெறவைத்ததால், இது பிறிது மொழிதல் என்னும் அணி. அடுத்த பாட்டும் இவ்வணியே. மாற்றான் வலியும், அவன் துணைவலியும் அறியாமை குற்றமாகும். (5) 486. நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும். கொம்பர் நுனி ஏறினார் அஃது இறந்து ஊக்கின் - மரக் கிளையின் நுனியில் ஏறி நின்றவர் அவ்வளவைக் கடந்து மேலும் ஏற முயல்வாராயின், உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - அம் முயற்சி அவர்களது உயிர்க்கு முடிவாகிவிடும். நுனிக் கொம்பர் - கொம்பர் நுனி - கொம்பரினது நுனி பின் முன்னாகத் தொக்க ஆறாம்வேற்றுமைத் தொகை. கொம்பு - கொம்பர் - போலி. மேலும் ஏறினால் கிளை முறிந்து விழுந்து இறந்து விடுவர். பகைமேல் செல்லு மளவும் சென்று நின்றா னொருவன், அவ்வளவில் நில்லாது மனவெழுச்சியால் மேலும் செல்வானாயின் தோல்வி யுறுவான். (6) 487. ஆற்றி னளவறிந் தீக; வதுபொருள் போற்றி வழங்கு நெறி. அளவு அறிந்து ஆற்றின் ஈக - தமக்குள்ள பொருளின் அளவை யறிந்து அதற்கேற்ப கொடுக்க வேண்டிய வழிகளில் கொடுக்க; அது பொருள் போற்றி வழங்கும் நெறி - அச்செய்கை பொருளை ஈட்டி வழங்கும் வழியாகும். பொருளைச் செலவிட வேண்டிய வழிகளில் தம்தம் அளவுக் கேற்பச் செலவிடுவதே பொருளைத் தேடி வழங்கும் முறையாகும். பொருளினது வலியறிந்து அதற்குத்தகச் செலவு செய்ய வேண்டும். (7) 488. ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை. ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை - பொருள் வரும் வழி சிறிதாயிருப்பினும் கெடுதியில்லை; போகு ஆறு அகலாக் கடை - அப்பொருள் போகும் வழியின் அளவு அதனிலும் விரியா தாயின். இட்டிது - சிறிது. ஒரு குளத்திற்குத் தண்ணீர் வரும் வழி சிறிதாக இருப்பினும், தண்ணீர் வெளியே போகும் வழி (மதகு) அதைவிடச் சிறிதாக இருந்தால் தண்ணீர் குறையாது இருக்கும். வரும் வழியைவிடப் போகும் வழி பெரிதாக இருப்பின் குளத்தில் தண்ணீரே தேங்காதது போல, வரவைவிடச் செலவு குறைவாக இருக்க வேண்டும். இதுவும் பொருள் வலியை அறிந்து செய்ய வேண்டும் மென்பது. (8) 489. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தனக்குள்ள பொருளின் அளவைத் தெரிந்து அதற்கேற்ப வாழாதவன் வாழ்க்கையானது, உள போல இல்லாகித் தோன்றாக் கெடும் - உள்ளது போலத் தோன்றி, உண்மையாக இல்லையாய், பின்பு அத்தோற்றமும் இல்லாமல் கெட்டுவிடும். தோன்றா - தோன்றாது . அளவறிந்து வாழ்தலாவது - வரவிற் செலவு சுருங்கி வாழ்தல்; இல்லையேல் ஒப்பவாகினும் செலவு செய்து வாழ்தல். வரவறிந்து செலவு செய்யாதவன் வாழ்க்கை, முதலில் உள்ளது போலத் தோன்றும்; ஆனால், உண்மையாக இல்லையாய்ப் பின்பு அப் பொய்த் தோற்றமும் இல்லாமல் கெட்டு விடும். (9) 490. உளவரை தூக்காத வொப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை - தனக்குள்ள பொருளின் அளவை எண்ணிப்பாராத கொடையால், வள வரை வல்லைக்கெடும் - ஒருவனது பொருளின் அளவு விரைவாகக் கெட்டு விடும். வரை - அளவு. தூக்குதல் - ஆராய்ந்து பார்த்தல். ஒப்புரவு ஆண்மை - கொடைக் குணம். வளம் - செல்வம். தனக்குள்ள பொருளின் அளவறியாது செய்யப்படும் கொடையால் செல்வம் விரைவில் அழிந்து விடும். (10) 50. காலமறிதல் வினை செய்வதற்கு ஏற்ற காலத்தை அறிதல். 491. பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. காக்கை கூகையைப் பகல் வெல்லும் - காக்கை தன்னிலும் வலிய கோட்டானைப் பகலில் வெல்லும்; இகல் வெல்லும் வேந்தர்க்குப் பொழுது வேண்டும் - அதுபோல பகைவரை வெல்லக் கருதும் அரசர்கட்கு அதற்கேற்ற காலம் இன்றியமை யாததாகும். கூகை காக்கையை இரவில் வெல்லும். அதற்கேற்ற காலம் அது. ஏற்ற கால மில்லாதவழி வலியால் பயனில்லை. காலமாவது - தட்பவெப்ப நிலை தம்முள் ஒத்து நோய் செய்யாது, தண்ணீர் உணவு முதலியன உடைத்தாய்ப் படை வருந்தாது செல்லும் இயல்புடைய காலம். (1) 492. பருவத்தோ டொட்ட வொழுகல் திருவினைத் தீராமை யார்க்குங் கயிறு. பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - காலத்தோடு பொருந்தத் தொழில் செய்தல், திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - செல் வத்தை நீங்காமல் கட்டும் கயிறாகும். தொழில் வெற்றி பெறுவதால் செல்வம் தீராதென்பது. (2) 493. அருவினை யென்ப வுளவோ கருவியாற் கால மறிந்து செயின். கருவியால் காலம் அறிந்து செயின் - வினைசெய் வதற்குரிய கருவிகளுடன் ஏற்ற காலத்தை அறிந்து செய்தால், அருவினை என்ப உளவோ - செய்தற்கரிய வினைகள் என்பன உண்டோ? இல்லை. கருவி - வினை செய்யும் முறைகள். செய்யும் முறையோடு ஏற்றகாலத்தை யறிந்து செய்தால் ஆகாதது ஒன்றும் இல்லை. (3) 494. ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங் கருதி யிடத்தாற் செயின். காலம் கருதி இடத்தால் செயின் - ஒருவன் செய்யும் வினையை ஏற்ற காலமறிந்து ஏற்ற இடத்துடன் பொருந்தச் செய்வானாயின், ஞாலம் கருதினும் கைகூடும் - இவ்வுலக முழுவதையும் பெற நினைத்தாலும் அவன் பெறக்கூடும். காலமும் இடமும் அறிந்து முயன்றால் உலக முழுவதுங் கூட ஒருவன் பெறக்கூடும், முடியாத தொன்றில்லை என்பதாம். (4) 495. காலங் கருதி யிருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர். ஞாலம் கருதுபவர் - உலக முழுவதையும் கைப்பற்றக் கருதும் அரசர், காலம் கருதிக் கலங்காது இருப்பர் - ஏற்ற காலத்தை எதிர் பார்த்துக் கொண்டு அது வருமளவும் மனந்தளராமல் இருப்பர். இருத்தலாவது - பகைமேற் செல்லாமல் இருத்தல். ஏற்ற காலம் வருமளவும் காத்திருப்பதே வெற்றிக்குரியதாகும். (5) 496. ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து. ஊக்கம் உடையான் ஒடுக்கம் - ஊக்கமுடையான் பகைமேல் செல்லாது ஒடுங்கியிருப்பது, பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - போர் செய்யும் செம்மறிக்கடா நன்றாகத் தாக்குதற்காகப் பின்னே கால்வாங்கும் தன்மையை ஒத்தது. கால் வாங்குதல் - விரைவாக ஓடிவந்து வலிகொண்டு தாக்குவதற்காகப் பின்னாலே போதல். ஒரு கடாவையோ அல்லது நம்மையோ முட்டவரும் செம்மறிக்கடாப் பின்னால் சென்று விரைந்து வந்து முட்டும். ஏற்ற காலம் வருமளவும் இருப்பது கடா பின்செல்வது போன்றது. அச்சத்தினாலன்று. 497. பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்ப ரொள்ளி யவர். ஒள்ளியவர் ஆங்கே பொள்ளென புறம் வேரார் - அறிவுடையோர் பகைவர் தீமைசெய்த அப்போதே திடீரென வெளிப்படை யாக வெகுளியைக் காட்ட மாட்டார், காலம் பார்த்து உள்வேர்ப்பர் - ஏற்ற காலத்தை எதிர்பார்த்து மனத்தில் சினங் கொண்டிருப்பர். வேர்த்தல் - வெகுளல். காலம் பாராது பகைவர் தீமை செய்த உடனே சினந்து செல்லுதல் முழு வெற்றிதராது. (7) 498. செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை காணிற் கிழக்காந் தலை. செறுநரைக் காணின் சுமக்க - தாம் வெல்லுதற் கேற்ற காலம் வரும்வரை, தாம் செல்லக் கருதிய பகை யரசரைக் கண்டால் பணிதல் வேண்டும்; இறுவரை காணின் தலை கிழக்கு ஆம் - அப் பகைவருக்கு முடிவுகாலம் வந்தால் தலை கீழே விழும். தலை கீழே விழும் - அழிவர். காலம் வரும்வரை மிகவும் தாழ்க வென்பார், 'சுமக்க' என்றார். காலம் வரும்வரைத் தம் பகை வெளிப்படாமல் இருக்க வேண்டும். (8) 499. எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே செய்தற் கரிய செயல். எய்தற்கு அரியது இயைந்தக்கால் - ஏற்ற காலம் வந்தால், அந் நிலையே செய்தற்கு அரிய செயல் - அப்போதே தாம் செய்யக் கருதிய செயலைச் செய்து முடித்தல் வேண்டும். செய்தற்கு அரிய - அரிய செயல்கள். காலமின்றித் தம் ஆற்ற லினால் செய்ய முடியாமையின் எய்தற் கரிய வென்றும், காலம் இன்றிச் செய்ய முடியாமையின் செய்தற்கரிய வென்றும் கூறினார். காலம் வந்ததும் விரைந்து செய்ய வேண்டும் என்பதாம். (9) 500. கொக்கொக்க கூம்பும் பருவத்து; மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து. கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க - வினைமேற் செல்லாது அடங்கியிருக்கும் காலத்தில் கொக்கைப்போல இருக்க வேண்டும்; மற்று சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க - பின் வினைமேற் செல்லுங் காலத்தில் அக்கொக்குக் குத்துவது போலத் தப்பாமல் செய்து முடிக்கவேண்டும். வினை - போர்த் தொழில். கூம்புதல் - அடங்கி யிருத்தல் குளக்கரையில் மீன் பிடிக்க இருக்கும் கொக்கு அது வருமளவும் உயிரில்லாததுபோல இருக்கும் மீன் வந்ததும் அது ஓடுவதற்கு முன்னே விரைந்து பிடித்துக் கொள்ளும். அதுபோல இருந்து வெல்ல வேண்டும் என்பதாம். 1938 - 42இல் நடந்த இரண்டாவது உலகப்பெரும் போரில் உரசையர் (ரஷ்யர்) அவ்வாறு இருந்து, செர்மனியரை வென்றது எடுத்துக்காட்டாகும். (10) 51. இடனறிதல் வலியும் காலமு மறிந்து பகைமேற் செல்வான், தான் செல்லு தற்கேற்ற இடத்தினை அறிதல். 501. தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்னல் லது. முற்றும் இடம் கண்டபின் அல்லது - பகைவரை வளைத்துக் கொள்ளுதற் கேற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல், எவ் வினையும் தொடங்கற்க - யாதொரு செயலையும் தொடங்கா திருக்க வேண்டும்; எள்ளற்க - பகைவரைச் சிறியரென்று இகழா திருக்க வேண்டும். வளைத்தற்கேற்ற இடமாவது - வாயில்களிலும், துளை களிலும் பகைவர் போக்கு வரவின்றி மதிலைச் சூழ்ந்து, நலிவின்றிப் பலபடை இருத்தற்கும், அரசிருக்கைக்கும் ஏற்ற இடம். இடம் பெற்ற பிறகு செயல் தொடங்கிப் பகை வெல்ல வேண்டும். (1) 502. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும். முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மிக்க வலியுடைய வர்க்கும், அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும். ஆக்கம் - ஆக்கத்தைத் தரும் முற்றுகை. பயன்கள் - பகைவரால் தமக்கு நலிவின்மையும், தாம் நிலை பெற்று நின்று அவரை நலிதலும் முதலாயின. அரண் - மதில். (2) 503. ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து போற்றார்கட் போற்றிச் செயின். போற்றார்கண் இடன் அறிந்து போற்றிச் செயின் - பகை வரிடம் வினை செய்யும் இடத்தை அறிந்து தம்மைக் காத்து வினை செய்வாராயின், ஆற்றாரும் ஆற்றி அடுப - வலியில்லா தாரும் வலிமை பெற்று வெல்வர். இடம் அறிந்து செய்யின் வலியில்லாதாரும் வெல்வர். காத்தல் - பகைவரால் நலிவு வராமல் அரணாலும் படையாலும் காத்தல். (3) 504. எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து துன்னியார் துன்னிச் செயின். இடன் அறிந்து துன்னியார் - தாம் வினைசெய்தற்கேற்ற இடத்தை யறிந்து மேற்சென்றவர்கள், துன்னிச்செயின் - அவ் விடத்தைப் பொருந்தி வினை செய்வாராயின், எண்ணியார் எண்ணம் இழப்பர் - வெல்வதாக எண்ணியிருந்த பகைவர் அவ் வெண்ணத்தை இழப்பர். இடமறிந்து, அறிந்த இடத்திற் பொருந்தி நின்று வினை செய்யின் பகைவர் கட்டாயம் தோற்பர். (4) 505. நெடும்புனலுள் வெல்லும் முதலை யடும்புனலின் நீங்கி னதனைப் பிற. முதலை நெடும் புனலுள் வெல்லும் - முதலை ஆழமுள்ள நீரில் பிற உயிர்களை வெல்லும்; புனலின் நீங்கின் பிற அதனை அடும் - நீரினின்றும் வெளியேறினால் பிற அம்முதலையை வெல்லும். வெளியேறல் - நிரைவிட்டு நிலத்தின்கண் வருதல். பகை மேற் செல்வோர், பகைவர் எதிர்நிற்க முடியாத இடத்தை யறிந்து செல்வாராயின் அவரை வெல்வர்; தாம் எதிர்த்து நிற்க முடியாத இடத்துச் செல்லின் அவர் வெல்வர் என்பதாம். இது பிறிது மொழிதல் அணி. (5) 506. கடலோடாக் கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயு மோடா நிலத்து. வல்கால் நெடுந்தேர் கடல் ஓடா - வலிய உருளை யுடைய பெரிய தேர்கள் கடலில் ஓட மாட்டா, கடல் நாவாயும் நிலத்து ஓடா - கடலில் ஓடும் கப்பல்களும் நிலத்தில் ஓட மாட்டா. உருள் - சக்கரம். மேற்சென்றார் இடமறிந்து வினை செய்ய வேண்டும் என்பது. இதுவும் பிறிதுமொழிதல் அணி. (6) 507. அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை எண்ணி யிடத்தாற் செயின். எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின் - வினை செய்யும் வழிகளை யெல்லாம் குறையாமல் எண்ணி இடத்தோடு பொருந்த வினை செய்தால், அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - அச் செயலுக்குத் தம் மனவுறுதியல்லாமல் வேறு துணை வேண்டுவ தில்லை. நன்கு ஆராய்ந்து இடத்தோடு, மனவுறுதியோடு வினை செய்யின் வெல்வதுறுதி. (7) 508. சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையான் ஊக்க மழிந்து விடும். உறுபடையான் சிறுபடையான் செல்இடம் சேரின் - பெரிய சேனையையுடையான் சிறிய சேனையையுடைய வனை வெல்லக் கருதி அவனுக்குத் தகுதியான இடத்தைச் சேர்ந்தால், ஊக்கம் அழிந்துவிடும் - அச்சிறு படையோனால் தன் பெருமையை இழப்பான். தன்படைப் பெருமை நோக்கி இடம் நோக்காது செல்வானாயின், அவ்விடம் அப்படை ஒருங்குதங்கி வினை செய்ய முடியாமையால் அழியும். இடம் நோக்காது படைப் பெருமைமட்டும் நோக்கிச் செல்பவன் அழிவான். (8) 509. சிறைநலனுஞ் சீரு மிலரெனினும் மாந்தர் உறைநிலத்தோ டொட்ட லரிது. சிறை நலனும் சீரும் இலர் எனினும் - அழித்தற்கரிய அரணும் பெருமையும் இல்லா தவராயினும், மாந்தர் உறை நிலத்தோடு ஒட்டல் அரிது - பகையரசரை அவர் உறைகின்ற இடத்தில் சென்று வெல்லுதல் அரிது. பெருமை - பொருள்வலி, படைவலி முதலிய பெருமை. உறை நிலத்தோடு ஒட்டல் - பகைவர் இருப்பிடத்தில் சென்று தாக்குதல். இருப்பிடத்தில் சென்று தாக்கினால் அவர் அதை விட்டுப் போகத் துணியாமல் சாகத் துணிவாராதலால் அவருக்குப் பெரும்படை உடையும். இடம் - உரிய இடம். சிறந்த அரணும் பெருமையும் இல்லாரையும் அவர் இடத்தில் சென்று வெல்லுதல் அரிது. (9) 510. காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா வேலாழ் முகத்த களிறு. கண் அஞ்சா வேல்ஆழ் முகத்த களிறு - பாகர்க்கு அடங் காதவையும், வேல்தைத்த முகத்தையுடையவையுமாகிய ஆண் யானைகளை, கால் ஆழ் களரின் நரி அடும் - கால்கள் புதையும் சேற்றுநிலத்தில் பட்டபோது நரிகள் கொல்லும். கண் - பாகர்; யானையினிடத்தே யுள்ளவர். அஞ்சா - அஞ்சாத. வேல் தைத்த முகத்தையுடையவை - போர் யானைகள். ஆண்மையும் பெருமையும் உடையோரும் தமக்கேலா நிலத்துச் செல்லின், அவ் வாண்மையாலும் பெருமையாலும் பயனின்றி மிகவும் சிறியரால் அழிவர். பிறிது மொழிதல் அணி. (10) 52. பொச்சாவாமை பொச்சாவாமை - மறவாமை; செய்யவேண்டிய வற்றைச் செய்தலில் மறதியின்மை. 511. இறந்த வெகுளியிற் றீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு - மிகுந்த உவகைக் களிப்பால் வரும் மறதியானது, இறந்த வெகுளியில் தீது - அளவிறந்த வெகுளியைக் காட்டிலும் தீதாகும். மிக்க உவகை - பெருஞ் செல்வம், பேரின்பம் முதலிய வற்றால் வருவது. அளவிறந்த வெகுளி ஒரு வேளை பகைவரைக் கொல்லப் பயன்படும். இம்மறதி தன்னையே கொல்லுதலின் அதனினும் தீ தாயிற்று. (1) 512. பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. நிச்ச நிரப்பு அறிவினைக் கொன்று ஆங்கு - நாள்தோறும் உள்ள வறுமை அறிவைக் கெடுத்தல் போல, பொச்சாப்பு புகழைக் கொல்லும் - மறதியானது புகழைக் கெடுக்கும். நிச்ச நிரப்பு - ஒவ்வொரு நாளும் இரந்து தன் வயிறு வளர்க்கும் கொடிய வறுமை. நிச்ச நிரப்பு அறிவுடையான் மதிப்பைக் கெடுப்பதுபோல, மறதி தற்காவாமையாலும், செயற் கேட்டாலும் இகழ்வை யுண்டாக்கி நன்மதிப்பைக் கெடுக்கும். (2) 513. பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத் தெப்பானூ லோர்க்குந் துணிவு. பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - மறதி உடை யார்க்குப் புகழ் இல்லை; அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அது உலகத்திலுள்ள எத்தகைய நூலுடையார்க்கும் ஒப்ப முடிந்தது. மறதியுடையோர் புகழுடன் வாழமாட்டார் என்பது எல்லா அறிஞர்களும் கண்ட முடிவு. அரசர்க்கேயன்றி யாவர்க்கும் பொருந்த 'எப்பால் நூலோர்க்கும்' என்றார். (3) 514. அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு. அச்சம் உடையார்க்கு அரண் இல்லை - அச்சம் உடைய வர்க்குக் காவல் இருந்தும் பயனில்லை; ஆங்கு பொச்சாப்பு உடையவர்க்கு நன்கு இல்லை - அதுபோல, மறதியுடையோர்க்குச் செல்வங்கள் இருந்தும் பயனில்லை. அரண் - மதில். நன்மையைத் தருதலின் செல்வம் நன்கு எனப் பட்டது. அச்சமுடையார் இருந்த அரணழிவதுபோல, மறதியுடையார் செல்வம் அழியும். (4) 515. முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழை பின்னூ றிரங்கி விடும். முன் உறக் காவாது இழுக்கியான் - தன்னால் காக்கப் படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந் திருந்தவன், பின் ஊறு தன் பிழை இரங்கி விடும் - பின்பு துன்பங் களுற்றபோது காக்கலாகாமையான் தன்னுடைய தவறுதலை நினைந்து இரங்குவான். காக்கப்படுந் துன்பங்கள் - மறதி பார்த்துப் பகைவர் செய்வன. ஊறு - உறுதல். பின்னிரங்குவதாற் பயனில்லை. (5) 516. இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை வாயி னதுவொப்ப தில். இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் - மறவாமலிருக்கும் குணம் யாரிடத்தும் எப்போதும் தப்பாமல் வாய்க்குமாயின், அது ஒப்பதுஇல் - அதை ஒப்பது வேறொன்று மில்லை. பகைவரேயன்றிச் சுற்ற முதலிய தம்மவரிடத்தும் மறதி கூடாது என்பார் 'யார் மாட்டும்' என்றார். வழுக்குதல் - இடையே மறத்தல். யாரிடத்தும் எப்போதும் தப்பாமல் மறதியின்றி இருக்க வேண்டும். (6) 517. அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக் கருவியாற் போற்றிச் செயின். பொச்சாவாக் கருவியால் போற்றிச் செயின் - மறவாமை யாகிய கருவியால் பாதுகாத்துச் செய்தால், அரிய என்று ஆகாத இல்லை - இவை செய்தற்கு அரியனவென்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை. மறவாமல் செய்யின் எச்செயலும் ஆகும். மறதியினால் செயல் முடியாமல் போவதால், செயல் முடித்தற்கு மறவா மையைக் கருவியாகக் கூறினார். போற்றுதல் - இடையே தவறாமல் காத்தல். (7) 518. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில். புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் - பெரியோ ரால் புகழ்ந்து கூறப்பட்டவைகளைக் கண்டுபிடித்துச் செய்தல் வேண்டும், செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - அவ்வாறு செய்யாது மறந்தவருக்கு எப்போதும் நன்மை இல்லை. புகழ்ந்தவை - செய்யத்தக்கவையென்று பெரியோரால் சிறப்பித்துக் கூறப்பட்டவை. எழுமை - பல. 63ஆம் குறளுரை பார்க்க. பல நாளும் என்பது. எழுமையும் என்ற உம்மையால் எப்போதும் எனப் பொருள்பட்டது. பெரியோரால் செய்யத் தக்கவையென்று புகழ்ந்து கூறப்பட்டவைகளை மறந்தார்க்கு எப்போதும் நன்மை இல்லை. (8) 519. இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. தம் மகிழ்ச்சியின் தாம் மைந்துறும் போழ்து - தமது மகிழ்ச்சியால் தாம் செருக்குறும்போது, இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக - முன்பு அம்மிகு மகிழ்ச்சியாலுண் டாகிய மறதியால் கெட்ட வர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். மைந்து - வலிமை. மகிழ்ச்சியின் வலிமை - மிகு மகிழ்ச்சி - செருக்கு. தாம் மகிழ்ச்சியுற்றுச் செய்யவேண்டியவற்றை மறந்திருக்கும் போது, அம்மறதியால் முன்பு கெட்டவரை எண்ணிப் பார்க்க வேண்டும். பார்த்தால் மறதி நீங்கும். (9) 520. உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தான் உள்ளிய துள்ளப் பெறின். உள்ளியது மற்றும் உள்ளப் பெறின் - நினைத்த பொருளையே பின்னும் நினைக்கப் பெற்றால், தான் உள்ளியது எய்தல் எளிது - தான் அடைய நினைத்த பொருளை அவ்வாறே அடைதல் எளிதாகும். நினைத்த பொருளையே நினைத்தல் - மறதியின்று அதனை முயலுதல். அதுதான் முடியாது என்பது ஒழிந்து நின்றமையின், மன் ஒழியிசை. (10) 53. தெரிந்து தெளிதல் அமைச்சர் முதலாயினாரை அறிவு குணஞ் செய லென்பன வற்றை ஆராய்ந்து தெளிதல். தெளிதல் - அறிதல். ஆராய்ந்தறிந்து தேர்ந்தெடுத்தல். இன்று அரசியல் அதிகாரிகளையும், பண்ணையம், கடை முதலியவற்றிற்கு ஆட்களையும் தேர்ந்தெடுத்தலுக்கும் இஃதொக்கும். 521. அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறம் தெரிந்து - அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமும் என்னும் நான்கின் கூறுபாட்டையும் ஆராய்ந்தறிந்து, தேறப்படும் - பின்பு ஒருவனைத் தெளியவேண்டும். உயிரச்சம் - தன் உயிருக்காக அஞ்சும் அச்சம். தன் உயிருக்குண்டாகும் கேட்டுக்கு அஞ்சுதல். தன் உயிருக்கு அஞ்சிக் கடமையில் தவறுதல். அதாவது அறம் பிறழாமலும், பொருளுக்காகக் கடமை தவறாமலும், இன்பத்தின் பொருட்டு ஒழுக்கந் தவறாமலும், உயிர்க்கு உண்டாகும் கேட்டிற்கு அஞ்சிக் கடமை தவறாமலும் உள்ளவனையே தேர்ந்தெடுக்க வேண்டும். உயிரச்சம் - தமது கடமைக்கு மாறாக ஒன்றைச் செய்யா விட்டால் உன்னைக் கொல்வே னென்றாலோ, வருத்தினாலோ அதற்கு அஞ்சிக் கடமையில் தவறுதல். இந்நான்கு வகையிலும் ஆராய்ந்து பார்த்து, இந்நான்கினும் தவறாதவனையே வேலைக்கு அமர்த்திக்கொள்ள வேண்டும். தேறுதல் - தெளிதல் - தகுதியுடையவனென்று முடிவு செய்தல். (1) 522. குடிப்பிறந்து குற்றத்தி னீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு. குடிப்பிறந்து - நற்குடியில் பிறந்து, குற்றத்தின் நீங்கி - குற்றங் களினின்று நீங்கி, வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு - பழிக்கு அஞ்சும் நாணுடையவனிடத்தே அரசன் தெளிவு வேண்டும். நாணுடையவனையே தேர்ந்தெடுக்க வேண்டும். நற்குடி - வழிவழி ஒழுக்கமுடைய குடி, அந்நாட்டுப் பழங்குடி. குற்றத்தினீங்கி - குற்றமற்றவனாய். பழி - பழிப்பு. பரிதல் - அஞ்சுதல். குடிப்பிறப்பு முதலியவற்றை உடையனையே அரசன் தேர்ந்தெடுக்க வேண்டும். (2) 523. அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை யரிதே வெளிறு. அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும் - அருமையான நூல்களைக் கற்றுக் குற்றமற்றவர்களாய் உள்ளவரிடத்தும், தெரியுங்கால் வெளிறு இன்மை அரிதே - நன்கு ஆராயு மிடத்துக் குற்றமின்மை அரிதாகும். வெளிறு - அறியாமை. அவர்களுக்கு இது ஒவ்வொருகால் உண்டாகுமாகையால் தெரியுங்கால் என்றார். கற்பவை கற்றுக் குற்றமற்றவரிடத்தும் ஏதேனும் குறைகாணப்படு மாகையால் நன்கு ஆராய்தல் வேண்டும். (3) 524. குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். குணம்நாடி குற்றமும்நாடி - ஒருவனுடைய குணங் குற்றங் களை ஆராய்ந்து, அவற்றுள் மிகைநாடி - அக்குணங் குற்றங்களில் மிகுந்தவற்றை ஆராய்ந்து, மிக்ககொளல் - அம் மிகுந்தவற்றைக் கொண்டு ஒருவனைத் தோர்ந்தெடுக்க வேண்டும். குணம் மிகுந்தால் நல்லவன் எனவும், குற்றம் மிகுந்தால் கெட்டவன் எனவும் அறியவேண்டும். மிகுந்த குணமுடை யோனையே கொள்ளவேண்டும். குணங்குற்றங்களுள் ஒன்றே யுடையோர் உலகத்தின்மையின் மிகுந்ததைக் கொண்டு தெளிய வேண்டும் என்பதாம். (4) 525. பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் - மக்களடையும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும், தம்தம் கருமமே கட்டளைக் கல் - தாம்தாம் செய்யும் செயல்களே உரை கல்லாகும். செயலை உரைகல்லாக உருவகித்து, பெருமை சிறுமை யைப் பொன்னாக உருவகியாததால் இது ஒருகூற்றுருவகம். உரைகல் - பொன்னின் மாற்றை அறிவிக்குங்கல்; பொற் கொல்லரிடம் இருக்கும். ஒருவன் செயலைக் கொண்டே உயர்வுதாழ்வை அறியலாம். (5) 526. அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி. அற்றாரைத் தேறுதல் ஓம்புக - சுற்றம் இல்லதவரைத் தெளிதலை ஒழிக; அவர் மற்று பற்று இலர் - அவர் உலகத் தோடு தொடர்பில்லாதவராவர்; பழிநாணார் - ஆகையால் பழிக்கஞ்சார். நெருங்கிய சுற்றமில்லாதவர் ஓரிடத்திருக்கவும், பொறுப் போடு தனது கடமையைச் செய்யவும், பழிப்பன ஒழித்துப் புகழ்வன செய்யவும் உறுதி கொள்ளார். மக்கள் நம்பிக்கைக் குரியவராகவும் நடந்து கொள்ளார். ஆகையால், சுற்றமில்லாரைத் தெளியக்கூடாது. சுற்றம் - மனைவி மக்கள் முதலியோர். இன்றும் மணமாகாதவரை நம்பி யாரும் தம் வீட்டில் குடிவைக்க முன்வருவ தில்லை. (6) 527. காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல் பேதைமை யெல்லாந் தரும். காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல் - அன்பு டைமையைத் துணையாகக் கொண்டு அறிய வேண்டிய வற்றை அறியாதாரைத் தெளிதல், பேதைமை எல்லாம் தரும் - ஒருவனுக்கு எல்லா அறியாமையையும் தரும். காதன்மை - அன்புடைமை. தந்து - பற்றுக்கோடு - துணை. அன்பு பற்றி அறிவில்லாதவனைத் தேர்ந்தேடுப்பது அறியாமை யாகும். அறிவின்மையால் அவர் செய்யும் செயல்கள் நல்லதாகா. (7) 528. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா விடும்பை தரும். பிறனைத் தேரான் வழிமுறை தெளிந்தான் - பிறனை ஆராயாது தன் குலத்தினன் என்று தெளிந்தவனுக்கு, தீரா இடும்பை தரும் - அத்தெளிவு முடிவில்லாத துன்பத்தைக் கொடுக்கும். வழிமுறை - தன் குலத்தினன். குலம் - ஒரே குடும்பத்தி லிருந்து பெருகிய கூட்டம். தன் குலத்தானென்றும் ஆராயாது ஒருவனைத் தெளியக்கூடாது. (8) 529. தேறற்க யாரையுங் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். யாரையும் தேராது தேறற்க - யாரையும் ஆராயாது தெளியா தொழிக; தேர்ந்தபின் தேறும் பொருள் தேறுக - ஆராய்ந்த பின்பு அவரால் தெளியப்படும் பொருள்களை ஐயுறாதொழிக. தேர்தல் - ஆராய்தல். தேறுதல் - தெளிதல், நம்புதல். ஆராயாது யாரையும் வேலைக்கமர்த்தக் கூடாது: ஆராய்ந்து வேலைக் கமர்த்தின பின்பு அவர்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். தேறும் பொருள் தேறுக - அவர்கள் கூறுவதை நம்புக. (9) 530. தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந் தீரா விடும்பை தரும். தேரான் தெளிவும் - ஆராயாது தெளிதலும், தெளிந்தான் கண் ஐயுறவும் - ஆராய்ந்து தெளிந்தவனிடத்து ஐயப்பாடு கொள்ளு தலும், தீரா இடும்பை தரும் - நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். ஆராய்ந்து தெளிந்தவனிடத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டும். (10) 54. தெரிந்து வினையாடல் ஆராய்ந்து தெளியப்பட்டவரை, அவர் செய்யவல்ல வினை களை யறிந்து, அவற்றை அவரிடம் ஒப்படைத்தல். அவரை அவ் வினைக்கண் அமர்த்தல். ஆடல் - ஆள்தல், ஆளுதல், வினையைச் யெய்யும்படி ஏற்படுத்தல். 531. நன்மையுந் தீமையு நாடி நலம்புரிந்த தன்மையா னாளப் படும். நன்மையும் தீமையும் நாடி - நன்மை பயக்கும் வினையையும் தீமை பயக்கும் வினையையும் ஆராய்ந்து, நலம் புரிந்த தன்மையான் ஆளப்படும் - நன்மையை விரும்பிய இயல்புடையான் சிறந்த வினைகளுக்கு அமர்த்தப்படுவான். புரிதல் - விரும்புதல். ஆளப்படும் - அவ்வேலையில் அமர்த்தப் படுதல், அவ்வேலையைச் செய்யும்படி செய்தல். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையில், நல்லன தீயனவற்றை ஆராய்ந்து, தீயன விலக்கி நல்லன செய்வோனையே சிறந்த வேலையில் அமர்த்த வேண்டும். (1) 532. வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை ஆராய்வான் செய்க வினை. வாரி பெருக்கி - பொருள் வரும் வழிகளைப் பெருக்கி, வளம்படுத்து - அதனால் பொருள் வளத்தை உண்டாக்கி, உற்றவை - ஆராய்வான் வினை செய்க - அப்பொருள் வரும் வழிகட்கும் பொருட்குமுற்ற இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனை அரசன் தொழிலில் அமர்த்த வேண்டும். (2) 533. அன்பறிவு தேற்ற மவாவின்மை யிந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. அன்பு அறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் - அன்பு, அறிவு, ஆராய்ந்து துணிதல், பேராசையின்மை ஆகிய இந் நான்கையும், நன்கு உடையான் கட்டே தெளிவு - நிலையாக உடையவனிடமே தெளிவு வேண்டும். (3) 534. எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையால் வேறாகு மாந்தர் பலர். எனை வகையால் தேறியக் கண்ணும் - எல்லா வகை யாலும் ஆராய்ந்து தெளிந்தவிடத்தும், வினைவகையால் வேறாகும் மாந்தர் பலர் - செய்யும் செயலின் வகையினால் மனம் வேறுபடும் மக்கள் உலகில் பலராவார். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட வினைக்குத் தகுந்தபடி ஆசைக்காளாவோரும் உண்டாகையால் 'வேறாகுமாந்தர் பலர்' என்றார். ஆராய்ந்து தெளிந்தவர் என்று இராமல் அவர் வினை செய்யும்போது இடையிடையே ஆராய்ந்த கொண்டே வர வேண்டும். (4) 535. அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் சிறந்தானென் றேவற்பாற் றன்று. வினைதான் அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் - தொழிலானது செய்யும் வழிகளை அறிந்து வருந்துன்பங் களைப் பொறுத்துச் செய்பவனை அல்லாமல், சிறந்தான் என்று ஏவல் பாற்று அன்று - இவன் சிறந்தவன் என்று ஒருவனை ஏவும் தன்மையது அன்று. செய்யும் வழிகளை அறிந்து, துன்பங்களைப் பொறுத்துச் செய்பவனையல்லாமல், சிறந்தவனென்று ஒருவனை வினை செய்ய அமர்த்தக்கூடாது. (5) 536. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ டெய்த வுணர்ந்து செயல். செய்வானை நாடி - தொழில் செய்பவனது தன்மையை ஆராய்ந்து, வினை நாடி - அத்தொழிலின் இயல்பையும் ஆராய்ந்து, காலத்தோடு எய்த உணர்ந்து செயல் - அத்தொழில் முடிவுபெறுங் காலத்தோடு பொருந்த அறிந்து அத்தொழிலைச் செய்யக்கடவன். வினைசெய்வான் தன்மை, வினை, காலம் மூன்றையும் ஆராய்ந்து வினைசெய்ய அவனை அமர்த்தவேண்டும். (6) 537. இதனை இதனா லிவன்முடிக்கு மென்றாய்ந் ததனை யவன்கண் விடல். இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து - இச் செயலை இக்கருவியால் இத்தகையவன் முடிப்பான் என்று ஆராய்ந்து, அதனை அவன் கண் விடல் - அச்செயலை அவனிடம் விடுக. கருவி - பொருளும் துணைவரும் முதலியன. ஒன்றைச் செய்யத் தகுதியுடையவனை அதற்கு ஏற்படுத்த வேண்டும். (7) 538. வினைக்குரிமை நாடிய பின்றை யவனை அதற்குரிய னாகச் செயல். வினைக்கு உரிமை நாடிய பின்றை - ஒருவனை ஒரு தொழில் செய்வதற்கு உரியவனாக ஆராய்ந்து தெளிந்த பிறகு, அவனை அதற்கு உரியன் ஆகச் செயல் - அவனை அத்தொழிற்கு உரிமை யுடையவனாகச் செய்யவேண்டும். உரிமையுடையவன் - அத்தொழில் செய்பவன். தெளிந்த பின் அவனை அச்செயலாளனாக்க வேண்டும். (8) 539. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்குந் திரு. வினைக்கண் வினையுடையான் கேண்மை - எப்பொழுதும் தன் தொழிலின்கண் முயற்சியுடையவனது நட்பை, வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் - வேறுபாடாக நினைப்பவனை விட்டுச் செல்வம் நீங்கிவிடும். பிறர் பேச்சைக் கேட்டு வேறுபட எண்ணக்கூடாது. தொழில் முயற்சி யுடையவனைப் பிறர் பேச்சைக்கேட்டு வேறாக எண்ணி னால் பின் யாரும் முயலமாட்டார். அதனால், அரசனது செல்வம் குறையும். (9) 540. நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. வினைசெய்வான் கோடாமை உலகு கோடாது - தொழில் செய்பவன் கோணாதிருக்க உலகமும் கோணாது; மன்னன் நாள் தோறும் நாடுக - ஆதலால், மன்னவன் தன் தொழிலை நாடோறும் ஆராயக்கடவன். கோணுதல் - நெறி தவறுதல். தொழில் செய்வார் நெறி தவறாமல் நடக்கும்படி அரசன் நாடோறும் ஆராய் வானானால் அத்தொழிலால் நடைபெறும் உலகமும் நெறி தவறாது என்பதாம். அதிகாரிகள் முதலியோரை அடிக்கடி மேற்பார்த்து வரவேண்டு மென்பதாம். (10) 55. ஒற்றாடல் தன்னாட்டினும் பகைவர் நாட்டினும் நிகழ்வனவற்றை மறைந்து நின்று அறியும் ஒற்றரை ஆளும் திறம். ஒற்றர் - கரந்துறை காப்பாளர். (சி. ஐ. டி.) 541. ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும் - ஒற்றரும் புகழ் மிக்க அறநூலும் ஆகிய இரண்டையும், மன்னவன் கண் தெற்றென்க - மன்னவன் தன்னுடைய இரண்டு கண்களாகத் தெளியக் கடவன். தெற்றெனல் - தெளிதல். (1) 542. எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் றொழில். எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல் அறிதல் - எல்லாரிடத்தும் நிகழ்பவை அனைத்தையும் நாடோறும் ஒற்றரால் விரைவில் அறிதல், வேந்தன் தொழில் - அரசனுக்குரிய தொழிலாகும். நிகழ்பவை எல்லாம் - நல்லவும் தீயவுமாகிய சொற்களும் செயல்களும். ஒற்றரால் என்பது அதிகாரத்தால் வந்தது. நாட்டில் நிகழ்வனவற்றை யெல்லாம் நாடோறும் ஒற்றரைக் கொண்டு அறிதல் அரசன் கடமையாகும். (2) 543. ஒற்றினா னொற்றிப் பொருடெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்த தில். ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் - ஒற்றர் களைக் கொண்டு எல்லோரிடத்தும் நிகழ்வனவற்றை அறிந்துவரச் செய்து அதன் பயனை ஆராயாத அரசன், கொற்றம் கொளக் கிடந்தது இல் - வெற்றி கொள்ளுதல் இல்லை. கொளக்கிடந்தது - கொள்வது. ஒற்றுதல் - ஒற்றரால் நாட்டில் நிகழ்வனவற்றை அறிதல். பயன் - நன்மை தீமை. (3) 544. வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங் கனைவரையு மாராய்வ தொற்று. தம் வினை செய்வார் சுற்றம் வேண்டாதார் என்று அனைவ ரையும் ஆராய்வது - தமது காரியம் செய்வார், சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட அனைவரையும் ஆராய்வானே, ஒற்று - ஒற்ற னாவான். தம் என்றது அரசனையும் உளப்படுத்தி. இம் மூவகை யினர் சொல்செயல்களை ஆராய்தல். இம்மூவரும் செய்வன அறிந்து அவற்றிற்கேற்றன செய்ய வேண்டுதலின், இம் மூவகை யாரையும் விடாமல் ஆராயவேண்டு மென்பார் 'அனைவரையும் ஆராய்வது' என்றார். (4) 545. கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டும் உகாஅமை வல்லதே யொற்று. கடா உருவொடு - பிறர் ஐயப்படாத உருவத்துடன், கண் அஞ்சாது - ஐயப்பட்டு வெகுண்டு நோக்கினால் அந் நோக்குக்கு அஞ்சாது நின்று, யாண்டும் உகாமை வல்லதே ஒற்று - எவ்வளவு வருத்தினாலும் எப்போதும் நெஞ்சில் உள்ளவற்றை வெளிப்படுத் தாமையில் வல்லவனே ஒற்றனா வான். கடுத்தல் - ஐயுறுதல். கடா - கடாத. ஐயப்படாத உருவமும், அஞ்சாமையும், எவ்வளவு வருத்தினாலும் உண்மையை வெளியிடா தவனுமே ஒற்றனாவான். (5) 546. துறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்ந் தென்செயினுஞ் சோர்வில தொற்று. துறந்தார் படிவத்தர் ஆகி - துறவுக்கோல முடையராகி, இறந்து ஆராய்ந்து - செல்லுதற்கரிய உள்ளிடங்களி லெல்லாம் புகுந்து ஆராய்ந்து, என்செயினும் சோர்வு இலது ஒற்று - ஐயுற்றுப் பிடித்து எவ்வளவு துன்பஞ் செய்தாலும் தன்னை இன்னானென்று வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான். படிவம் - வடிவம். தவக்கோலத்தினரைப் பகைவர் ஒன்றும் செய்யாராகையால் "செயினும்" என்றார். (6) 547. மறைந்தவை கேட்கவற் றாகி யறிந்தவை ஐயப்பா டில்லதே யொற்று. மறைந்தவை கேட்க வற்று ஆகி - பிறர் மறைவாகச் செய்த செயல்களை அவர்க்கு வேண்டியவர்களால் கேட்டறிய வல்ல வனாய், அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று - அவ்வாறு அறிந்தவைகளை ஐயமின்றித் தீர அறிய வல்லவனே ஒற்றனாவான். மறைவாகப் பேசும் பேச்சுங்கொள்க. மறைந்தவை சொல்லு வாரையறிந்து, ஐயப்படாமல் சென்று கேட்க வேண்டும். விளக்க மாக அறிந்து வரவேண்டும். (7) 548. ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோர் ஒற்றினா லொற்றிக் கொளல். ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஓரொற்றன் ஒற்றி வந்து சொன்ன பொருளையும், மற்றும் ஓர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் - வேறோர் ஒற்றனாலும் அறிந்துவரச் செய்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒற்றி வந்து - அறிந்து வந்து. ஒற்றப்பட்டார்க்கு உடந்தை யாகி மாறுபடக் கூறவுங் கூடுமாகையால், ஒருவன் சொல்லை நம்பக் கூடாது என்பதாம். (8) 549. ஒற்றொற் றுணராமை யாள்க வுடன்மூவர் சொற்றொக்க தேறப் படும். ஒற்று ஒற்று உணராமை ஆள்க - ஓர் ஒற்றன் வேறோ ரொற்றனை அறியாமல் ஆளவேண்டும்; உடன் மூவர் சொல் தொக்க தேறப்படும் - அத்தகைய ஒற்றர் மூவரை ஒன்றை அறிந்துவர வேறு வேறு விட்டால் அம்மூவர் சொல்லும் ஒத்தன வாயின் அது உண்மை யென்று நம்பவேண்டும். ஆளுதல் - நடத்துதல். தொக்க - ஒத்தன. ஒருவனை ஒருவன றியின் தம்முள் ஒத்து ஒரே படித்தாகக் கூறுவாராகையால் உணராமை யாளவேண்டியதாயிற்று. உண்மையல்லாததை மூவரும் ஒன்றுபோல் சொல்லுதல் இயலாதாகையால் தனித் தனியே ஆள வேண்டியதாயிற்று. (9) 550. சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க செய்யிற் புறப்படுத்தா னாகு மறை. ஒற்றின்கண் சிறப்பு அறியச் செய்யற்க - ஒற்றனுக்குச் செய்யப் படும் சிறப்பைப் பிறர் அறியச் செய்யக்கூடாது; செய்யின் மறை புறப்படுத்தான் ஆகும் - செய்தால் அவன் ஒற்றனாயதும், அவன் கூறியதுமான மறையைத் தானே வெளிப் படுத்தினவனாவான். சிறப்பு - பட்டமும், பரிசும், பதவியும் தருதல். சிறப்புப் பெற்ற இவன் யாவன்? இது பெறுதற்குக் காரணமென்ன? என்று கேட்பாரும், விடை கூறுவாரும் அயலாராகையால் புறப்படுத்தல் ஆகும். (10) 56. செங்கோன்மை செங்கோல் - முறை செய்தல். செங்கோன்மை - முறை செய்தலின் தன்மை. குற்றமும் குணமும் அளந்து ஆராய்தலால் கோல் ஆயிற்று. கோடுதல் - கொடுங்கோல். 551. ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந் தேர்ந்துசெய் வஃதே முறை. ஓர்ந்து - ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து, யார் மாட்டும் கண்ணோடாது - யாரிடத்தும் இரக்கங்காட்டாமல்; இறை புரிந்து - தலைமை பொருந்தி, தேர்ந்து செய்வஃதே முறை - குற்றத்திற்குத் தக்க தண்டனையை ஆராய்ந்து செய்தலே முறையாகும். நெருங்கிய சுற்றத்தாரிடத்தும் கண்ணோடக் கூடா தென்பார் 'யார் மாட்டும்' என்றார். தலைமைக் குண முள்ளவர்க்கே நடுவு நிலையாக நின்று குற்றத்தை ஆராய முடியுமாகையால் 'இறை புரிந்து' என்றார். இறை - இறைமை - தலைமைக் குணம். (1) 552. வானோக்கி வாழு முலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி. உலகு எல்லாம் வான்நோக்கி வாழும் - உலகத்து உயிரெல்லாம் மழையை எதிர்பார்த்து வாழும், குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிமக்கள் மன்னவனது செங்கோலை எதிர்பார்த்து வாழ்வார். மழையின்றேல் உயிர்வாழ முடியாதாகையால் அம் மழை தவறாது பெய்ய வேண்டுமென மக்கள் எப்போதும் எதிர்நோக்கிக் கொண்டே இருப்பர். அரசன் கொடுங் கோலனானால் தாம் துன்புற நேருமாகையால் குடிமக்கள் அரசன் செங்கோலனாக இருக்க வேண்டுமென்பதையே எப்போதும் எண்ணிக்கொண்டு வாழ்வார். நோக்குதல் - இன்றுபோல் என்றும் இருக்கவேண்டு மென எதிர்நோக்குதல். மழை வேண்டும்போது பெய்யினும் அரசன் முறை தவறின் குடிமக்கள் துன்புறுவராதலால் மழையினும் செங்கோல் சிறந்ததெனப்பட்டது. (2) 553. அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல். அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - அறவோர் செய்த நூலுக்கும் அந் நூலில் கூறப்படும். அறத்திற்கும் அடிப் படையாய் நின்றது, மன்னவன் கோல் - அரசனது செங்கோல். அரசன் முறை செய்யாவிட்டால் அறவோரின் நூல்களைப் போற்றுவாரும் அறத்தைக் கடைப்பிடித்து நடப்பாரும் நாட்டில் குறைவாராதலால் அவ்விரண்டிற்கும் அடிப்படையாய் நிற்பது மன்னவன் கோல் என்றார். அறவோர் செய்த பலதுறை நூல்களில் அறநூல்களில் கூறப்படும் அறங்கள் திருக்குறள் அறத்துப்பாலில் கூறப்படும் அறங்கள். வள்ளுவர் அறவோராவர். அரசன் முறை செய்யாவிடின் அறவோர் நூல் போற்றாமையோடு, அறவோர் நூல் செய்யவும் முடியாது என்றுமாம். ஆதி - முதல், அடிப்படை. (3) 554. குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன் அடிதழீஇ நிற்கு முலகு. குடிதழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி - குடி மக்களைத் தழுவிச் செங்கோல் செலுத்தும் பெருநில மன்னவனது அடியை, தழீஇ நிற்கும் உலகு - தழுவி நிற்பர் உலகத்தார். தழீஇ - தழுவி. குடிகளைத் தழுவுதல் - குடிகட்கு வேண்டுவன கொடுத்தல், வரிநீக்கல், இன்சொல் சொல்லுதல் முதலியன. மன்னன் அடியைத் தழுவுதல் - அவனிடம் நீங்காத அன்புடைய ராதல். உலகத்தார் - குடிமக்கள். குடிகளைத் தழுவி முறை செய்யும் மன்னனை மக்கள் விரும்புவர். (4) 555. இயல்புளிக் கோலோச்சும் மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு. பெயலும் விளையுளும் தொக்கு - பருவ மழையும் குறையாத விளைவும் ஒன்று சேர்ந்து, இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட - அறநூல்களில் சொல்லிய முறைப்படி செங்கோல் செலுத்தும் மன்னவனது நாட்டில் உளவாகும். நாட்ட - நாட்டின்கண் உள. பெயலும் விளைவும் ஒன்று சேர்ந்து அந்நாட்டின்கண் உள என்பதாம். பருவ மழையும் குறையாத விளைவும் மிகவும் இன்றியமையாதனவாகை யால் மிகவும் இன்றியமையாத செங்கோலை அவைமேல் வைத்துச் செங்கோல் மன்னன் நாட்டில் அவை இரண்டும் சேர்ந்து நாட்டு மக்களை வாழ் விக்கும் எனக் கூறினார். இயல்பு உளி - இயல்பால். (5) 556. வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின். மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - அரசனுக்கு வெற்றியைத் தருவது அவன் வேல் அன்று; செங்கோலாகும்; அதூஉம் கோடாது எனின் - அச்செங் கோலும் வெற்றியைத் தரு வதுதான், கோணாதிருக்குமாயின். மன்னவனுக்கு - நான்கன் உருபு தொக்கது. கோணுதல் - முறை தவறுதல். என்றும் முறைதவறாத அரசனிடம் நாட்டு மக்கள் நீங்கா அன்புடையராய் இருத்தலால் அது அவன் வெற்றிக்குக் காரண மாயிற்று. (6) 557. இறைகாக்கும் வையக மெல்லா மவனை முறைகாக்கு முட்டாச் செயின். இறை வையகம் எல்லாம் காக்கும் - அரசன் உலகத்தை யெல்லாம் காப்பான்; முட்டாச் செயின் அவனை முறை காக்கும் - முறை தவறாமல் செங்கோல் செலுத்தினால் அவனை அச்செங் கோலே பாதுகாக்கும். முட்டா - முட்டாது செய்ததைக் கோவலனை ஆராயாது கொன்றதற்காக அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ் செழியன் வரலாற்றில் காண்க. அது அவன் புகழைக் காத்தது. அரசனது செங்கோன்மையினால் நாட்டு மக்கள் அவனிடம் நீங்கா அன்புடையராவராதலால் அது அவனைக் காக்கும் என்றார். (7) 558. எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தாற் றானே கெடும். எண்பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன் - முறை வேண்டி வந்தாரின் காட்சிக்கு எளியனாய் அவர் கூறியவற்றை நன்கு ஆராய்ந்து முறை செய்யாத அரசன், தண் பதத்தால் தானே கெடும் - காலந் தாழ்த்தும் நிலையால் தானே கெடுவான். எண்பதம் - முறை வேண்டி வந்தவர் தங்கள் குறையைச் சொல்வதற்கு ஏற்ற காலம். எண்பதம் - எளியநிலை. எண்பதத்தான் - முற் றெச்சம். ஓரா - ஓர்ந்து. எண்பதத்தானாய் ஓர்ந்து செய்யாத மன்னவன். தண்பதம் - குறையைச் சொல்வதற்குத் தாழ்க்குங் காலம். தண்பதம் - தாழ்நிலை, தாழ்க்கும் நிலை. குறை கேட்டு முறை செய்தற்குக் காலந் தாழ்க்கும் அரசனிடம் மக்கள் அன்பு நீங்குவராதலின் 'தானே கெடும்' என்றார். (8) 559. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் றொழில். குடிபுறங்காத்து - குடிகளைப் பிறர் வருத்தாமல் காத்து, ஓம்பி - தானும் வருத்தாமல் காத்து, குற்றம் கடிதல் - குடிகள் குற்றம் செய்தால் ஒறுத்து அக்குற்றத்தை நீக்குதல், வடுஅன்று - அரசனுக்குக் குற்றமாகாது, வேந்தன் தொழில் - அரசனது தொழிலாகும். புறங்காத்தல் - பாதுகாத்தல். ஒறுத்தல் - தண்டித்தல். பின்னும் அத்தகைய குற்றம் செய்யாமலும், பிறரும் அவ்வாறு செய்யாமலும் ஒறுத்தல். தொழில் - கடமை. குடிகளைப் பாதுகாத்துக் குற்றம் செய்யாமல் காப்பது அரசன் கடமை. (9) 560. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். வேந்து கொலையில் கொடியாரை ஒறுத்தல் - அரசன் கொலையினால் கொடியவர்களைத் தண்டித்தல், பைங்கூழ் களை கட்டதனொடு நேர் - உழவன் பயிர்நிலத்தில் முளைக்கும் களையைக் களைந்து பயிரை வளர்த்தற்கு ஒப்பாகும். கொலையில் ஒறுத்தல் - தூக்குத் தண்டனை கொடுத்தல். களை - புற்கள். கொடியாரைத் தூக்கிக் கொன்று மக்களைக் காத்தல் களைகளைந்து பயிரைக் காத்தலோ டொக்கும். இதுவும் வேந்தன் தொழில். (10) 57. கொடுங்கோன்மை 561. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே யலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து. அலைமேற் கொண்டு அல்லவை செய்து ஒழுகும் வேந்து - பொருளை விரும்பிக் குடிகளை வருத்தும் தொழிலை மேற் கொண்டு அறமல்லாதவற்றைச் செய்து நாடாளும் அரசன், கொலை மேற்கொண்டாரின் கொடிது - பகைமை பற்றிக் கொல்லுந் தொழிலை மேற்கொண்டொழுகுவாரினும் கொடியனாவான். அலை - அலைத்தல். அல்லவை - கொடுமை. பொருளை விரும்பிக் குடிகளை வருத்துதல் - பல வரி போட்டுக் குடிகளை வருத்துதல், தளர்ந்த காலத்தில் வரி நீக்காமை முதலியன. கொலை மேற்கொண்டோர் செய்வது ஒரு பொழுது துன்பம். இவன் செய்வது எப்பொழுதும் துன்பமாகும் என்பது பற்றி அவரினும் கொடியன் என்றார். கொடிது - பால் மயக்கம். அலை, கொலை யினுங் கொடிது. கொடுங்கோன்மை - செங்கோன்மையின் மறுதலை; முறையின்மை. (1) 562. வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங் கோலொடு நின்றா னிரவு. கோலொடு நின்றான் இரவு - கொடுங்கோலரசன் குடிகளிடம் இரத்தல், வேலொடு நின்றான் இடு என்றது போலும் - வழியில் வேலொடு நின்ற கள்வன், வழிச்செல் வோனைப் பாத்துக் கையிலுள்ள பொருளைக் கொடு என்று கேட்பது போலும். 'இரவு' என்றதனால், இறைப்பொருள் (வரி) அல்ல வாயிற்று. வருத்தி வாங்குதலால் இரத்தலும் கொடுங் கோலாயிற்று. அர சிறைக்குமேல் குடிகளை வருத்திப் பொருள் பறித்தல் வழிபறிப் பதனோடொக்கும். (2) 563. நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறு நாடு கெடும். நாள் தொறும் நாடி முறை செய்யா மன்னவன் - நாள் தோறும் தன் நாட்டில் உண்டாகும் தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத மன்னவன், நாள்தொறும் நாடு கெடும் - நாளுக்கு நாள் தன் நாட்டை இழப்பான். இழத்தல் - பயனை இழத்தல். முறை செய்யா மன்னவன் நாடு நாள்தோறும் சீர்கெடும் என்றுமாம். (3) 564. கூழுங் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச் சூழாது செய்யு மரசு. சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - பின் விளைவதை எண்ணாமல் முறை தவற ஆட்சி செய்யும் அரசன், கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - பொருளையும் குடிகளையும் ஒருங்கு இழப்பான். கோட என்பது கோடி எனத் திரிந்தது. குடிகளை இழத்தல் - குடிகள் அவனிடம் அன்பின்றி வெறுப்புக் கொள்ளல்; பகைவனைச் சேர்தலுங் கூடும். கூழ் - நாடெனக் கொண்டு நாட்டையும் இழப்பான் என்றுமாம். ஆராயாது முறை தவறி ஆட்சி செய்யும் அரசன் கெடுவான். (4) 565. அல்லல்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்கமாட்டாமல் அழுத கண்ணீர் அன்றோ, செல்வத்தைத் தேய்க்கும் படை - அரசனது செல்வத்தைக் குறைக்கும் கருவியாகும். கண்ணீரைக் கருவியாக்கிச் செல்வத்தை மரமாக உருவகி யாதது ஒருகூற் றுருவகம். கண்ணீர்விட்டழுவோர் விரும்புவன கொடாராகையால் செல்வங் குறைவதாயிற்று. (5) 566. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேல் மன்னாவா மன்னர்க் கொளி. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்கு நிலைத் திருப்பது செங்கோன்மையாகும், அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோன்மை இல்லா விட்டால் அவர் களுக்குப் புகழ் நிலையாவாம். ஒளி - புகழ், கொடுங்கோலர சர்க்குப் புகழ் இல்லை. (6) 567. துளியின்மை ஞாலத்திற் எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழு முயிர்க்கு. வாழும் உயிர்க்கு வேந்தன் அளி இன்மை - தன்னாட்டில் வாழும் மக்களுக்கு அந்நாடாள் வேந்தனது அருள் இல்லாமை யானது, ஞாலத்திற்கு துளி இன்மை எற்று அற்றே - உலகத்திற்கு மழையின்மை எத்தகையதோ அத்தகைய தாகும். மழையில்லாத நாட்டில் வாழ்வது போன்றது அருளில்லாத அரசன் நாட்டில் வாழ்வது. அளியின்மை - கொடுங்கோன்மை. (7) 568. இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். முறை செய்யா மன்னவன் கோல்கீழ்ப் படின் - முறை செய்யாத அரசனது கொடுங்கோலின்கீழ் வாழ்வது, உடைமை இன்மையின் இன்னாது - செல்வ முடைமை வறுமையைக் காட்டிலும் துன்பந் தருவதாகும். கோலின் கீழ் வாழ்தல் - அவன் ஆட்சிக் கீழ் வாழ்தல். வருத்திப் பொருள் பறித்தலால் செல்வம் வறுமையினும் துன்பந் தருவ தாயிற்று. (8) 569. முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி ஒல்லாது வானம் பெயல். மன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் முறை தவறிச் செய்வானாயின், உறை கோடி வானம் பெயல் ஒல்லாது - பருவ மழை இல்லையாகும்படி மேகம் மழை பெய்யாது. கோட என்பது இரண்டிடத்தும் கோடி எனத் திரிந்தது. உறை - மழைத்துளி. 555ஆம் குறளுரையைப் பார்க்க. அதற்கு எதிரிடை இது. (9) 570. ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின். காவலன் காவான் எனின் - அரசன் முறை செய்யா னாயின், ஆ பயன் குன்றும் - அவன் நாட்டின் கண் வாழும் மக்களது முயற்சியால் ஆகும் பயன் குறையைப் பெறும், அறு தொழிலோர் நூல் மறப்பர் - முதன்மையான தொழி லுடையோர் தம் தொழிலுக் குரிய அறிவை மறந்து விடுவர். ஆபயன் - வினைத்தொகை. ஆன பயன், ஆகின்ற பயன், ஆகும் பயன் எனவிரியும். ஆ - ஆதல். அறு தொழில் - வினைத் தொகை. அறுத்த, அறுக்கின்ற அறுக்குந் தொழில். அறுத்தல் - அறுதி செய்தல், வரையறை செய்தல். இன்றியமை யாத சிறந்த தொழிலென அறுதி செய்யப்பட்ட தொழில். அத் தொழில்களாவன - உழவு, வாணிகம், நெசவு, தச்சு, கொல் முதலிய முதன்மையான தொழில்கள். கொடுங்கோலரசன் நாட்டில் அமைதியிராதா கையால் இத்தொழில்கள் ஒழுங்காக நடைபெறா வென்பதாம். மறத்தல் - முயன்று செய்யாமை. நூல் - அத்தொழில்களின் நுட்ப அறிவை யுணர்த்திற்று. கொடுங்கோலன் நாடு கெடும். (10) 58. வெருவந்த செய்யாமை குடிமக்கள் அஞ்சத்தக்கவற்றைச் செய்யாதிருத்தல். வெருவுதல் - அஞ்சுதல். வெருவந்த - அஞ்சத்தக்க செயல்கள். 571. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங் கொறுப்பது வேந்து. தக்காங்கு நாடி - ஒருவன் செய்த குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து, தலைச் செல்லா வண்ணத்தால் - பின்னும் அது செய்யாமல் இருத்தற்காக, ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து - அக் குற்றத்திற்கு ஏற்றவாறு ஒறுப்பவனே அரசனாவான். தக்கவாறு நாடாமையும், யாதானு மொரு காரணம் பற்றி மிக வொறுத்தலும் குடிகளஞ்சும் வினையாயின. (1) 572. கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர். ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர் - செல்வம் தம்மிடம் நெடுங்காலம் நிலை பெறுதலை விரும்புபவர், கடிது ஓச்சி மெல்ல எறிக - அளவுகடந்து செய்வார் போல் தொடங்கி, செய்யுங்கால் அளவுகடவாமல் செய்ய வேண்டும். ஓச்சி - செய்து, இங்கே செய்யத் தொடங்குதல். அளவு கடந்து செய்வார் போல் காட்டித் தக்காங்கு ஒறுக்க வேண்டும். அதாவது குறைந்த தண்டனை கொடுக்க வேண்டும். (2) 573. வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்த மொல்லைக் கெடும். வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் - குடி மக்கள் அஞ்சத்தக்க செயல்களைச் செய்யும் அரசன், ஒருவந்தம் ஒல்லைக் கெடும் - கட்டாயம் விரைவில் கெடுவான். ஒருவந்தம் - உறுதி. குடிகளஞ்சும் செயல் செய்வான் கட்டாயம் விரைவில் கெடுவான். (3) 574. இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த னுறைகடுகி யொல்லைக் கெடும். இறைகடியன் என்று உரைக்கும் இன்னாச் சொல் வேந்தன் - குடிமக்களால் நம் அரசன் பொல்லாதவன் என்று சொல்லப்படும் துன்பந்தரும் சொல்லையுடைய அரசன், உறை கடுகி ஒல்லைக் கெடும் - வாழ்நாள் குறைந்து விரைவில் கெடுவான். உறை - முதல்நிலைத் தொழிற்பெயர். அது தொழிலாகு பெயராய் உறைதலைச் செய்யும் வாழ்நாளுக்காயிற்று. குடி மக்கள் பழி தூற்றுங் கவலையால் வாழ்நாட் குறைந்து கெடுவான். (4) 575. அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்ன துடைத்து. அரும் செல்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் - தன்னைக் காண வேண்டி வந்தோர்க்கு அரிய செவ்வியையும் கண்டால் இனிமையில்லாத முகத்தையும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு அன்னது உடைத்து - அச்சந் தரும் பொருளைக் கண்டதுபோல அச்சந்தருதலை உடையது. செவ்வி - தக்க காலம். அருஞ் செவ்வி - காணமுடியாத காலம். பேய் - அச்சம். இங்கே அச்சந்தரும் பொருளைக் குறித்தது. பேயிருள் - அச்சந்தரும் இருள். பேய்க் காய்ச்சல் - அச்சந்தரும் காய்ச்சல். அச்சத்தைப் பேயென்பது உலக வழக்கு. ஒருவனுடைய அச்சமே அவன் எண்ணும் உரு வெளித் தோற்றமாகி அவனை அச்சுறுத்தும். அவ்வச்சம் வெறிநோயை உண்டாக்கும். பெரும் பாலும் பெண்களே, அவர்களிலும் இரவில் வெளிச் செல்லாத பெண்களே பேய் பிடித் தாடல் காண்க. பேய்பிடித்தல் - அச்சநோய் கொள்ளல். இரவில் வெளிச் சென்று தொழில் செய்து வரும் சக்கிலிப் பெண்கள் போன்றாரைப் பேய் பிடியாமை யறிக. பேய் - பொய்த் தோற்றம், போலித் தோற்றம் என்பதை - பேய்க் கரும்பு, பேய்ச்சுரை, பேய்த்தேர் என்னும் வழக்காலறிக. அருஞ் செவ்வியும் இன்னா முகமும் உடையான் செல்வம் அச்சத்தால் அடைய முடியாதாகையால், பேய் கண்டன்னது என்றார். 850இல் வரும் அலகை என்பதும் இது. (5) 576. கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம் நீடின்றி யாங்கே கெடும். கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் - ஒருவன் கடுமையான சொற்களையுடையவனும் இரக்கம் இல்லாத வனும் ஆனால், நெடும் செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும் - அவனது பெரிய செல்வம் நிலைக்காமல் அப்போதே கெடும். கண் - இரக்கம். இவ்விருவகைக் குணமுமுடையவனை மக்கள் விரும்பாததால் செல்வம் கெடும். (6) 577. கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் டேய்க்கு மரம். கடுமொழியும் கை இகந்த தண்டமும் - கடுஞ் சொல்லும் குற்றத்திற்கு மிக்க தண்டனையும், வேந்தன் அடும் முரண் தேய்க்கும் அரம் - அரசனது பகையை வெல்லும் வலிமையாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாகும். அடுதல் - வெல்லுதல். இவ்விரு குணமுடையோரை மக்கள் வெறுப்பதால் வலிகுறைவதாயிற்று. (7) 578. இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகுந் திரு. இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் - அரசியல் காரியத்தை அமைச்சரோடு கலந்து ஆராயாத அரசன், சினத்து ஆற்றிச் சீறின் - அத்தவறுதலால் தன்காரியந் தப்பிய விடத்துத் தன்னைச் சினமாகிய குற்றத்தின் கண்ணே செலுத்தி அவ்வமைச்சரை வெகுளுவானாயின், திருச்சிறுகும் - அவன் செல்வஞ் சுருங்கும். இனம் - அமைச்சர். சினமாகிய குற்றத்தின் கண்ணே செலுத்தல் - சினங்கொள்ளல். தன் குற்றத்தை அறியாது அவரைச் சினக்கின் அவர் அஞ்சி நீங்குவர். நீங்கவே அரசியல் இனிது நடை பெறாமையால் திருச்சிறுகும் என்றார். அமைச்சரோடு கலந்தா ராயாத ஒரு காரியந் தப்பின், அதற்காக அமைச்சரைச் சினப்போன் செல்வஞ் சுருங்கும். இது அமைச்சரஞ்சும் வினை. (8) 579. செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். சிறைசெய்யா வேந்தன் - போர் வருவதற்கு முன்னே தனக்குப் பாதுகாப்புச் செய்து கொள்ளாத அரசன், செரு வந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் - போர் வந்த போது பாதுகாப் பின்மையால் அஞ்சி விரைவிற் கெடுவான். அரண் இன்மையால் பகையை அஞ்சித் தம்மவர் நீங்கு தலான் தனியனாய்த் தானும் அஞ்சிப் பகைவரைப் பணிவான் என்பதாம். இது தானஞ்சும் வினை. (9) 580. கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல தில்லை நிலக்குப் பொறை. கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும் - கொடுங்கோலரசன் கல்லா தவர்களைத் தனக்கு உறுப்பாகக் கூட்டிக் கொள்வான், அது அல்லது நிலக்குப் பொறை இல்லை - அது வல்லாமல் நிலத்திற்கு மிகுந்த சுமை வேறு இல்லை. நிலத்திற்கு என்பதன் அத்துச் சாரியை தொக்கது. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோலன் நிலத்திற்குச் சுமையேயன்றி இருப்பதிற் பயனில்லை. பிணித்தல் - நட்பாக்கிக் கொள்ளல். (10) 59. கண்ணோட்டம் பழக்கமுடையார் சொல்லை மறுக்க முடியாமல் இரக்கங் காட்டுதல். 581. கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை உண்மையா னுண்டிவ் வுலகு. கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை உண்மையான் - கண்ணோட்டம் என்னும் மிகவும் பெரிய அழகு உண்டா யிருத்தலால், இவ்வுலகு உண்டு - இவ்வுலகம் நிலை பெற்றிருக்கிறது. அஃதில்லையேல் உலகு கெடும் என்பதாம். கண்ணோட்டம் - இரக்கம். கண்ணோட்டமுள்ள அரசனது நாட்டு வாழ்வார் அச்சமின்றி வாழ்வாராகையால் உலகு உண்டு என்றார். (1) 582. கண்ணோட்டத் துள்ள றுலகிய லஃதிலார் உண்மை நிலக்குப் பொறை. உலகியல் கண்ணோட்டத்து உள்ளது - உலகநடை கண் ணோட்டத்தினால் நடைபெறுகிறது, அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை - அக் கண்ணோட்டம் இல்லாதவர் இருப்பது நிலத்திற்குச் சுமையாகும். நிலக்கு - நிலத்துக்கு. கண்ணோட்டமில்லாதவர் நிலத்துக்குச் சுமையாவர். (2) 583. பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாம் கண்ணோட்ட மில்லாத கண். பண் பாடற்கு இயைபு இன்றேல் என்னாம் - இசையானது பாட்டோடு பொருந்தாவிட்டால் என்ன பயனுடையதாகும்? கண் கண்ணோட்டம் இல்லாதகண் என்னாம் - அதுபோல, கண்ணானது கண்ணோட்டம் இல்லாதவிடத்து என்ன பயனுடைய தாகும்? இல்லாதகண்; கண் ஏழனுருபு. பாட்டோடு பொருந்தாத இசை பயனற்றதுபோல, கண்ணோட்டத்தோடு பொருந்தாத கண்ணால் பயனில்லை. (3) 584. உளபோல் முகத்தெவன் செய்யு மளவினாற் கண்ணோட்ட மில்லாத கண். அளவினால் கண்ணோட்டம் இல்லாதகண் - அளவைக் கடவாத கண்ணோடுதலை யுடையதல்லாத கண்கள், முகத்து உள போல் எவன் செய்யும் - முகத்தில் உள்ளனபோல் தோன்றுவதன்றி வேறு என்ன பயனைச் செய்யும்? கழிகண்ணோட்டத்தில் நீக்குதற்கு 'அளவினால்' என்றார். ஒரு பயனையும் செய்யா வென்பதாம். (4) 585. கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேற் புண்ணென் றுணரப் படும். கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் - ஒருவனது கண்ணுக்கு அணியும் அணிகலமாவது கண்ணோட்டமாகும், அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் - அவ்வணிகலம் இல்லா விட்டால் புண் என்று அறியப்படும். நோய்களாலும் புலன் பற்றுதலாலும் துயர்விளைத் தலான் புண் என்றார். அணிகலம் - நகை. கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம். (5) 586. மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர். கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர் - கண்ணிருந்தும் கண்ணோடாதவர், மண்ணோடு இயைந்து மரத்து அனையர் - மண்ணோடு பொருந்தியிருக்கும் மரத்திற்கு ஒப்பாவர். கண்ணோடாதவர் மரத்திற்கொப்பாவர். (6) 587. கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்ட மின்மையு மில். கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் - கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணில்லாதவரேயாவர், கண்ணுடையார் கண் ணோட்டம் இன்மையும் இல் - கண்ணுடையார் கண்ணோட்டம் இல்லாதவராதலும் இல்லை. கண்ணுடையவர் கண்ணோடவேண்டும் என்பதாம். (7) 588. கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க் குரிமை யுடைத்திவ் வுலகு. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு - தம் தொழில் கெடாமல் கண்ணோட வல்லவர்க்கு, இவ்வுலகு உரிமை உடைத்து - இவ்வுலகம் உரிமை யுடையதாகும். தொழில் - முறைசெய்தல். பிறர்க்குத் துன்பஞ் செய்த நண்பர் மீது கண்ணோடித் தண்டிக்காது விடுவது முறை கேடாகும் (551). ஆகையால், முறைகெடாமல் கண்ணோட வேண்டு மென்றார். முறைகெட வரும்போது கண்ணோடாமையும், முறைகெடாவழிக் கண்ணோடலும் ஒருவர்க்கு அமைதலரு மையால் 'கண்ணோட வல்லார்க்கு' என்றார். (8) 589. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் - தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்தும், கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை - கண்ணோட்டம் செய்து அவர் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையே முதன்மையானது. தீமை செய்தாரிடத்தும் கண்ணோடுதல் சிறப்புடைமை யாகும். (9) 590. பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - எல்லோராலும் விரும்பத் தக்க கண்ணோட்டத்தை வேண்டுபவர், நஞ்சு பெயக் கண்டும் உண்டு அமைவர் - பழகினவர்கள் தமக்கு நஞ்சை ஊற்றி வைக்கக் கண்டும் கண்ணோட்டத்தினால் அதனை யுண்டு மறுபடியும் அவரோடு பொருந்தி யிருப்பர். நயக்கத்தக்க என்பது நயத்தக்க என நின்றது. நாகரிகம் - கண்ணோட்டம். பெய்தல் - ஊற்றுதல். பழக்க முள்ளவர்கள் உண்ணும் உணவுடன் நஞ்சைக் கலப்பதைப் பார்த்தும், அவரை வருத்தாது அவர்மீது கண்ணோடி அந் நஞ்சையுண்டு, பின்னும் அவருடன் கூடிவாழ்வார். இவை இரண்டு பாட்டும் தமக்குத் தீங்கு செய்தாரைத் தண்டிக்காது கண்ணோட வேண்டுமென்பது கூறப் பட்டது. நஞ்சூட்டுதல் - கொடுந்துன்பம் செய்தற்கு எடுத்துக்காட்டு. (10) 60. மடியின்மை வினை செய்தற்கண் சோம்பலின்மை. மடி - சோம்பல். 591. குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும். குடி என்னும் குன்றா விளக்கம் - தான் பிறந்த குடியாகிய அணையா விளக்கு, மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும் - ஒருவனது சோம்பலாகிய இருள் அடர அணைந்து போகும். உலகநடை உள்ளளவும் இடையறாது தன்னுட் பிறந்தாரை விளக்குதலின் குடியை 'விளக்கம்' என்றார். உலக நடை - ஒரு குடி அழியாது இருப்பது. குடி - குடும்பம். சோம்பேறி பிறந்த குடி பெயர் கூட இல்லாமல் கெட்டுவிடும் என்பதாம். (1) 592. மடியை மடியா வொழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர். குடியைக் குடியாக வேண்டுபவர் - தாம் பிறந்த குடியை மேன்மேல் உயருங்குடியாக விரும்புபவர், மடியை மடியா ஒழுகல் - சோம்பலைச் சோம்பலாகவே கொண்டு முயற்சியுடன் நடப்பாராக. பாம்பைக் கயிறாகக் கொள்ளாது, பாம்பைப் பாம்பாகவே கொண்டு அஞ்சி அகலுதல்போல, மடியை மடியாகவே கொண்டு மடியைவிட்டு முயற்சியைக் கைக்கொள்ள வேண்டு மென்பதாம். மடிநீங்கக் குடியுயரும். (2) 593. மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியுந் தன்னினு முந்து. மடி மடிக் கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி - விலக்கத் தக்க சோம்பலைத் தன்னுள்ளே கொண்டு நடக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடியானது, தன்னினும் முந்து மடியும் - அவனுக்கு முன்பே மடிந்துவிடும். மடி மடி - மடிக்கத்தக்க மடி; வினைத்தொகை. மடித்தல் - அழித்தல்; விலக்கத்தக்க மடி என்பதாம். மடிக்கொண்டு - மடியைக் கொண்டு. இரண்டன் தொகை. அச்சோம்பேறியால் பாதுகாக்கப் படுதலின் அவன் குடும்பம் அவனிலும் முன்னரே அழிந்துவிடும் என்பதாம். (3) 594. குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட வுஞற்றி லவர்க்கு. மடிமடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு - சோம்பலின் கண்ணே வீழ்ந்ததால் சிறந்த முயற்சி இல்லாதவர்க்கு, குடிமடிந்து குற்றம் பெருகும். குடியும் அழிந்து குற்றமும் பெருகும். மடிமடிந்து - ஏழாம் வேற்றுமைத்தொகை. மடிந்ததால் என்னும் வினையெச்சம் மடிந்து எனத் திரிந்தது. மடிமடிந்து - சோம்பேறியின் குடியழிவதோடு, குற்றமும் பெருகும். (4) 595. நெடுநீர் மறவி மடிதுயி னான்குங் கெடுநீரார் காமக் கலன். மடிநெடுநீர் மறவி துயில் நான்கும் - சோம்பலும் தாழ்த்தலும் மறதியும் தூக்கமும் ஆகிய நான்கும், கெடும் நீரார் காமக்கலன் - அழியும் இயல்பினையுடையார் விரும்பியேறும் கப்பலாகும். தாழ்த்தல் - விரைந்து செய்வதனை நீட்டித்துச் செய்யுமியல்பு. தூக்கம் - விழிப்பின்மை. காமம் - விருப்பம். இந்நான்கு செயலு முடையவர் கெடுவர். (5) 596. படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார் மாண்பய னெய்த லரிது. படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் - நிலத்தை ஆள்பவரது செல்வம் தம்மை அடைந்த போதும், மடி உடையார் மாண்பயன் எய்தல் அரிது - சோம்பலுடையவர் அச்செல்வத்தால் சிறந்த பயனை அடைதல் இல்லை. பற்று - செல்வம். படிஉடையார் பற்று - அரசச் செல்வம். படிஉடையார் பற்று அமைந்தக் கண்ணும் - அரசச் செல்வம் கிடைத்த போதும். முயற்சியின்மையால் அச்செல்வமும் அழியும். அரசும் அழியும் என்பதாம். (6) 597. இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து மாண்ட வுஞற்றி லவர். மடி புரிந்து மாண்ட உஞற்று இலவர் - சோம்பலை விரும்புவதால் சிறந்த முயற்சி இல்லாதவர், இடிபுரிந்து எள்ளும் சொல் கேட்பர் - தமது நண்பர்களால் இடித்துரைத்தும் பயன் படாமையால் பின் இகழ்ந்துரைக்கும் சொல்லைக் கேட்பர். இடித்துரைத்தல் - கடிந்து கூறுதல். தம் நண்பனைச் சோம்பலை விட்டு முயற்சியுடன் நடக்கும்படி கடிந்துகூறியும் அவன் கேளாத தால் முடிவில் இகழ்வர் என்பதாம். நண்பரே இகழின் பிறர் இகழ்தல் கூற வேண்டியதில்லை. சோம்பர் இகழப்படுவர். (7) 598. மடிமை குடிமைக்கட் டங்கிற்றன் னொன்னார்க் கடிமை புகுத்தி விடும். மடிமை குடிமைக்கண் தங்கின் - சோம்பலானது குடி செய்வானிடம் தங்குமாயின், தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் - அது அவனைத் தன் பகைவர்க்கு அடிமை யாக்கிவிடும். ஒன்னார்க்கு என்றதனால் அரசனைக் குறித்தது. சோம்பலுள்ள அரசன் தோற்றுப் பகைவர்க் கடிமையாவான். குடி செய்வானுக்கு மடி கூடாது. குடிசெய்தல் - குடி யோம்பல். (8) 599. குடியாண்மை யுள்வந்த குற்ற மொருவன் மடியாண்மை மாற்றக் கெடும். ஒருவன் மடி ஆண்மை மாற்ற - ஒருவன் சோம்பலை ஒழித்து விடின், குடி ஆண்மையுள் வந்த குற்றம் கெடும் - அவன் குடியை யாளும் தன்மையில் வந்த குற்றங்கள் பலவும் நீங்கும். மடி ஆண்மை - சோம்பலை ஆளுந்தன்மை - சோம் பலுடைமை. குடியாண்மை - குடியோம்பல். சோம்பலில்லை யேல் குடிசெயலால் வரும் குற்றமில்லை. (9) 600. மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான் றாஅய தெல்லா மொருங்கு மடிஇலா மன்னவன் - சோம்பலில்லாத அரசன், மடி அளந்து ஆன்றாயது எல்லாம் - சோம்பலடைந்ததால் முன்பு தன்னைவிட்டு நீங்கிய செல்வத்தை யெல்லாம், ஒருங்கு எய்தும் - ஒருங்கே அடைவான். அளத்தல் - கலத்தல். மடி அளந்து - சோம்பலைக் கலந்து சோம்பலடைந்து. ஆன்று - நீங்கி. முடிந்தது - முடிந்தாயது என நிற்பதுபோல, ஆன்றது - ஆன்றாயது என நின்றது. ஆன்றது - வினையாலணையும் பெயர். நீங்கிய செல்வத்தைக் குறித்தது. 'மடியளந்து' என்றதால், 'மடியிலான்' என்றது மடியை நீக்கினவன் என்பதாம். சோம்பலில்லாத அரசன், முன்பு சோம்பலடைந்ததால் இழந்த செல்வத்தை யெல்லாம் ஒருங்கடைவான் - இது மடியிலாதான் அடையும் பயன் கூறியது. (10) 61. ஊக்கமுடைமை ஊக்கம் உடைமை - வினை செய்தற்கண் மனந்தள ராமை. ஊக்கம் - மனமுயற்சி. ஆள்வினை (62) என்பது - மெய் முயற்சி. 601. உடைய ரெனப்படுவ தூக்கமஃ தில்லார் உடைய துடையரோ மற்று. உடையர் எனப்படுவது ஊக்கம் - ஒருவரை உடையர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது ஊக்கம்; அஃது இல்லார் மற்று உடையது உடையரோ - அவ்வூக்கம் இல்லாதவர் வேறு பொருளை உடைமை தானும் உடையவர் ஆவரோ? ஆகார். ஊக்கமில்லாதவர் அப்பொருளைக் காக்கும் ஆற்றல் இலர் ஆகையால் அதுவும் இழப்பர் என்பதாம். ஊக்க முடைமையே உடைமையாகும். (1) 602. உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். உள்ளம் உடைமை உடைமை - ஊக்கமுடைமையே ஒருவனுக்கு நிலையான உடைமையாகும், பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - ஏனைப் பொருளுடைமையோ நிலை பெற்று நில்லாது நீஙகிவிடும். உள்ளம் - ஊக்கம். (2) 603. ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்கம் ஒருவந்தங் கைத்துடை யார். ஒருவந்தம் ஊக்கம் கைத்து டையார் - உறுதியான ஊக் கத்தைக் கைப்பொருளாக உடையார், ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் - இழந்தாராயினும், 'கைப்பொருளை இழந்தேம்' என்று வருந்தமாட்டார். ஒருவந்தமாய ஊக்கம். அவ்வூக்கமுடைமையால் பின் ஈட்டிக் கொள்ளலா மாகையால் இழந்தேமென்று வருந்தார். (3) 604. ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா ஊக்க முடையா னுழை. அசைவு இலா ஊக்கம் உடையான் உழை - தளராத ஊக்க முடையவனிடத்து, ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் - செல்வ மானது தானே வழி கேட்டுக் கொண்டு செல்லும். வழிகேட்டுக் கொண்டு செல்வார் போலச் செல்வம் தானே சேரும். தானே சேரல் - ஊக்கமிகுதியால் எண்ணிய எண்ணியாங் கெய்துதல். (696). (4) 605. வெள்ளத் தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு. மலர் நீட்டம் வெள்ளத்து அனைய - நீர்ப்பூக்களின் தாள் களின் நீளம் அவை நிற்கும் நீரினது ஆழத்தின் அளவின வாகும், மாந்தர்தம் உயர்வு உள்ளத்து அனையது - அதுபோல, மக்களது உயர்ச்சி அவரது ஊக்கத்தின் அளவினதாகும். மலர் - ஆகுபெயராய் அதன் தாளைக் குறித்தது. நீர் மிக மிக மலர்த்தாளும் நீளும். உயர்தல் - பொருள் முதலிய வற்றால் மிகுதல், தாள் - காம்பு. (5) 606. உள்ளுவ தெல்லா முயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் - ஒருவன் கருதுவதெல்லாம் தன் உயர்ச்சியையே கருதக் கடவன், அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து - அவ்வுயர்ச்சி கைகூடா விடினும் கூடிய தன்மையது. அது ஆகாவிடினும் ஊக்கமுடைமையால் நல்லோர் பழியார் என்பதாம். (6) 607. சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு. களிறு புதை அம்பில் பட்டுப் பாடு ஊன்றும் - யானை யானது பல அம்புகளால் புண்பட்டபோதும் தளராது தன் பெருமையை நிலை நிறுத்தும், உரவோர் சிதைவிடத்து ஒல்கார் - அதுபோல, ஊக்கமுடையவர் தமது முயற்சிக்கு அழிவு வந்தபோது மனந் தளராது தம் பெருமையை நிலைநிறுத்துவர். சிதைதல் - கெடுதல். ஒல்குதல் - மனந்தளர்தல். புதை - அம்புக் கட்டு. பாடு - பெருமை. கருதியது ஆகாவிடினும் மனந் தளராது முயன்று அதை முடிக்க வேண்டும். (7) 608. உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து வள்ளிய மென்னுஞ் செருக்கு. உள்ளம் இலாதவர் - ஊக்க மில்லாதவர், உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார் - இவ்வுலகத்தாருள் யாம் வண்மை யுடையேம் என்னும் மதிப்பை அடைய மாட்டார்கள். வண்மை - கொடை. ஊக்கமில்லார் பொருளீட்டிப் பொருளைக் கொடுத்துச் செருக்கெய்த முடியாது. செருக்கு - மதிப்பு. (8) 609. பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். யானை பரியது கூர்ங் கோட்டது ஆயினும் - யானை எல்லா விலங்குகளிலும் பெரியதும் கூர்மையான கொம்பு களையுடையதும் ஆயினும், புலிதாக்குறின் வெரூஉம் - புலியினால் தாக்கப்பட்டால் அதற்கஞ்சும். புலியைவிட உடல்வலியும் கொம்பும் உடையதாயினும் யானை ஊக்க மின்மையால் அஃதுடைய புலிக்கஞ்சு மென்ற இது, பகைவரை விட உடல் வலியும் சிறந்த கருவியும் உடையராயினும் ஊக்கம் இலராயின் அஃதுடையவருக் கஞ்சுவர் என்பது பெற நின்றமையால், பிறிது மொழிதலணி. (9) 610. உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார் மரமக்க ளாதலே வேறு. ஒருவற்கு உரம் உள்ள வெறுக்கை - ஒருவனுக்குச் சிறந்த அறிவானது ஊக்கமிகுதி, அஃது இல்லார் மரம் - அவ்வூக்கம் இல்லாதவர் மரத்துக்கு ஒப்பாவர், மக்கள் ஆதலே வேறு - மக்கள் வடிவாதலே அம்மரத்திற்கும் இவருக்குமுள்ள வேறுபாடு வேறில்லை. ஊக்கமில்லாதவர் மரத்தோடொப்பர். (10) 62. ஆள்வினையுடைமை இடைவிடாத மெய்முயற்சி யுடையவனாதல். இடை விடாத முயற்சி - விடா முயற்சி. முன் (61) ஊக்கம் என்றது - மன முயற்சியை. 611. அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - இச் செயல் நம்மால் செய்தற்கு அருமையுடையது என்று எண்ணி மனந்தளரா திருத்தல் வேண்டும், பெருமை முயற்சி தரும் - அதை முடித்தற்கேற்ற பெருமையை நமக்கு முயற்சியானது உண்டாகும். இச்செயல் நம்மால் செய்ய முடியாதென்று மனந்தளரக் கூடாது. முயன்றால் முடியும். அசா - தளர்ச்சி. உடல் வருந்தும் என மனந்தளர்தல். (1) 612. வினைக்கண் வினைகெட லோம்பல்; வினைக்குறை தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு. வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தன்று - வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது; வினைக்கண் வினைகெடல் ஓம்பல் - ஆதலால், செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக. வினைக்குறை - ஒரு காரியத்தைச் செய்து முடிக்காது அரை குறையாக விடுதல். ஒரு காரியத்தைச் செய்து முடிக்காது விடுப வர்க்கு உலகவாழ் வில்லை. ஆதலால், ஒரு வினையை முடியாது அரைகுறையாக விடுதலை ஒழிய வேண்டும். ஓம்புதல் - ஒழிதல். ஒரு காரியத்தைச் செய்வோர் இடையில் மெய்ம்முயற்சியின்றி அக் காரியத்தை விடக் கூடாது. (2) 613. தாளாண்மை யென்னுந் தகைமைக்கட் டங்கிற்றே வேளாண்மை யென்னுஞ் செருக்கு. வேளாண்மை என்னும் செருக்கு - எல்லோர்க்கும் உதவி புரிதல் என்னும் மேம்பாடு, தாளாண்மை என்னும் தகைமைக் கண் தங்கிற்று - முயற்சி என்னும் உயர்ந்த குணத்தின்கண் தங்கியுள்ளது. செருக்கு - மேம்பாடு. வேளாண்மை - உதவியுடைமை. தாளாண்மை - முயற்சியுடைமை. உதவி மேம்பாட்டைத் தருதலான் 'வேளாண்மை என்னுஞ் செருக்கு' என்றார். முயற்சியுடையோர் தாம் பெரும் பொருளீட்டி எல்லார்க்கும் உதவ முடியுமாகையால், அவ்வுதவியை முயற்சி என்னும் உயர்ந்த குணத்தின்கண் தங்கிற்று என்றார். (3) 614. தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும். தாளாண்மை இல்லாதான் வேளாண்மை - முயற்சி யில்லா தவன் உதவியாளனாகுந்தன்மை, பேடிகை வாள் ஆண்மை போலக் கெடும் - படையைக் கண்டஞ்சும் பேடி தன் கையிலுள்ள வாளை ஆளுந்தன்மை இல்லாதது போல இல்லையாகும். பேடிகை வாளால் பயனின்மைபோல, முயற்சி யில்லாதவன் உதவ நினைப்பதும் பயனின்மையே ஆகும். பேடி - அலி. ஆண்மையும் பெண்மையும் இல்லாத தன்மை அலித்தன்மை. பெண் தன்மை மிக்கு ஆணுறுப்புடையவள் பெண்ணலி. ஆண்தன்மை மிக்குப் பெண்ணுறுப்புடையவன் ஆணலி. ஆணலி மிகக் குறைவு. (4) 615. இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர் துன்பந் துடைத்தூன்றுந் தூண். இன்பம் விழையான் வினை விழைவான் - தனக்கு இன்பத்தை விரும்பாதவனாய் வினைமுடித்தலையே விரும்புவோன், தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - தன் உறவினரது துன்பமாகிய சுமையை நீக்கி அவரைத் தாங்கும் தூணாவான். துன்பத்தைச் சுமையாகக் கூறாததால், ஒரு கூற்றுரு வகம். ஊன்றுதல் - தாங்குதல். கேளிர் - நட்பும் சுற்றமும். முயற்சி யுடையவன் தன் உறவினரது வறுமையைத் தீர்த்து அவர்க்குப் பாதுகாப்பும் செய்வான். (5) 616. முயற்சி திருவினை யாக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். முயற்சி திருவினை ஆக்கும் - முயற்சி செல்வத்தை வளர்க்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்திவிடும் - முயற்சியில்லாமை வறுமையுள் செலுத்திவிடும். முயற்சி செல்வத்தையும், முயற்சியின்மை வறுமையையும் உண்டாக்கும். (6) 617. மடியுளாள் மாமுகடி யென்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள். மாமுகடி மடி உளாள் - கரிய மூதேவி ஒருவனது சோம்பலின் கண்ணே இருப்பாள்; தாமரையினாள் மடி இலான் தாள் உளாள் என்ப - திருமகள் சோம்பலில்லாதவன் முயற்சியின் கண்ணே இருப்பாள் என்று கூறுவர் அறிவுடை யோர். செல்வத்தை இளையவள், செய்யவள் என்றும், வறுமையை மூத்தவள், கரியவள் என்றும் கூறுதல் நூல்மரபு. முகவுரை பார்க்க. சோம்பல் வறுமையை உண்டாக்கும்; முயற்சி செல்வத்தை உண்டாக்கும். (7) 618. பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை யின்மை பழி. பொறி இன்மை யார்க்கும் பழியன்று - செல்வ மில்லாமை யாவர்க்கும் பழியாகாது, அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி - அறிய வேண்டுவனவற்றை அறிந்து முயற்சி யில்லா திருத்தலே பழி யாகும். பழி - குற்றம், பழிப்பு. செல்வமின்மை குற்றமும் பழிப்பும் ஆகா. முயற்சியின்மையே அவ்விரண்டு மாகும். (8) 619. தெய்வத்தா னாகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். முயற்சி தெய்வத்தான் ஆகாது எனினும் - முயற்சி ஊழின்படி கருதிய பயனைக் கொடுக்காதாயினும், தன் மெய்வருத்தக் கூலிதரும் - தன் உடம்பை வருத்திய வருத்தத்தின் அளவு கூலி கொடுக்கும்; வீண்போகாது. தெய்வம் - ஊழ். 38ஆம் அதிகாரம் பார்க்க. ஊழின்படி ஆகா விடினும் முயலவேண்டும். ஊழை வெல்லும் வழி அடுத்த பாட்டில் கூறுகிறார். (9) 620. ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித் தாழா துஞற்று பவர். உலைவு இன்றி தாழாது உஞற்றுபவர் - தளர்வில்லாமல் குறையாது முயற்சி செய்பவர், ஊழையும் உப்பக்கம் காண்பர் - ஊழையும் புறங்காட்டி ஓடச்செய்வர். உலைதல் - வினை முடியாமைக்கு மனம் தளர்தல். குறைதல் - குன்றுதல். ஆகாமைக்காக மனந்தளராது, இடை விடாது முயற்சி செய்பவர், ஊழைத் தோற்றோடும்படி செய்வர். உப்பக்கம் காணுதல் - புறங்காணுதல். புறம் - முதுகு. முதுகு காட்டி ஓடும்படி செய்தல். (10) 63. இடுக்கணழியாமை துன்பம் வந்தால் அதற்கு மனங்கலங்காமை. இடுக்கண் - துன்பம். அழிதல் - மனங்கலங்குதல். 621. இடுக்கண் வருங்கால் நகுக வதனை அடுத்தூர்வ தஃதொப்ப தில். இடுக்கண் வருங்கால் நகுக - துன்பம் வரும்போது மன மகிழ்க, அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் - அத் துன்பத்தை மேன்மேலும் எதிர்க்கவல்லது அம் மகிழ்ச்சி போன்றது வேறு இல்லை. அம்மகிழ்ச்சி மனவெழுச்சியை உண்டாக்கி, அத்துன்பத்தைக் கடந்து வினை முடிக்க உதவும். அடுத்து ஊர்தல் - மேன்மேலும் எதிர்த்தல். இடுக்கண் - துன்பம். (1) 622. வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையாள் உள்ளத்தி னுள்ளக் கெடும். வெள்ளத்து அனைய இடும்பை - வெள்ளம் போன்ற மிகுந்த துன்பங்களெல்லாம், அறிவுடையான் உள்ளத்தில் உள்ளக் கெடும் - அறிவுடையவன் நெஞ்சினால் அவற்றை மாறுபட நினைத்தவுடன் கெடும். மாறுபட நினைத்தல் - அத்துன்பங்களையே நினைத்துக் கொண்டிராமல் மனத்தை வேறுவழியில் செலுத்தி முயலுதல். துன்பம் என்பது மனத்தில் தோன்றும் திரிபெண்ணமே யாகும். அதாவது கருதியது முடியாமை, ஒன்றை யிழத்தல், ஒன்றுறுதல் ஆகியவைபற்றி உள்ளத்தே கொள்ளும் ஒருவகை மாறுபட்ட கொள்கை. ஆகவே, மாறுபட நினைக்க அக்கொள்கை அகலும். (2) 623. இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக் கிடும்பை படாஅ தவர். இடும்பைக்கு இடும்பை படாதவர் - துன்பத்திற்கு வருந்தா தவர், இடும்பைக்கு இடும்பை படுப்பர் - துன்பத்திற்குத் துன்பத்தை உண்டாக்குவர். துன்பத்திற்கு வருந்தாதவர் துன்பங்கெடும். (3) 624. மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற இடுக்க ணிடர்ப்பா டுடைத்து. மடுத்தவாய் எல்லாம் பகடு அன்னான் - தடை உண்டான இடங்களிலெல்லாம் தளர்வின்றி வண்டியை இழுத்துச் செல்லும் எருதுபோலத் தளர்வின்றித் தொழில் செய்ய வல்லவனை, உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து - உற்றதுன்பம் தானே துன்பப் படுதலை உடையது. மடுத்தல் - இடையூறு தோன்றுதல். மடுத்தவாய் - இடையூறு தோன்றிய இடம். அது - மணலிலேனும் சேற்றிலேனும் வண்டிக் கால்கள் (சக்கரம்) புதைதல். இடையூறு தோன்றியபோது எருது - பக்கத்தே சாய்ந்தும், மூக்கை நிலத்தில் ஊன்றியும், மண்டியிட்டும், ஆன்ற அறிவுடனும், விடாப் பெருமுயற்சியுடனும் முனைந்து இழுத்து அவ்விடையூற்றைக் கடக்கும். அதுபோல், முயன்று வினை முடிக்க வேண்டும் என்பதாம். (4) 625. அடுக்கி வரினு மழிவிலா னுற்ற இடுக்க ணிடுக்கட் படும். அடுக்கி வரினும் - இடைவிடாது மேன்மேல் வந்தாலும், அழி விலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும் - மனவுறுதியை விடா தவனை உற்ற துன்பங்கள் துன்பப் பட்டுப் போகும். ஒரு துன்பமே பலகால் வருதலும், வெவ்வேறு துன்பங்கள் கலந்து வருதலும் அடங்க, 'அடுக்கிவரினும்' என்றார். (5) 626. அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென் றோம்புத றேற்றா தவர். பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர் - செல்வம் வந்து குவிந்த காலத்தில் அதைப் 'பெற்றேம்' என்று போற்றி வைத்தலை அறியாதவர், அற்றேம் என்று அல்லல் படுபவோ - வறுமைக் காலத்தில் 'பொருள் அற்றேம்' என்று துன்பப் படுவார்களோ? பட மாட்டார். செல்வக் காலத்து ஈயாத்தன்மை யில்லாதவர் (ஈவோர்) வறுமைக் காலத்து மனத்துயரங்கொள்ளார். (6) 627. இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதா மேல். உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று - உடம்பு துன்பமாகிய வாளுக்கு இலக்கு என்று அறிந்து, கலக்கத்தைக் கையாறாக் கொள் ளாதாம் மேல் - துன்பத்தைத் துன்பமாகக் கொள்ளார் அறிவு டையோர். இலக்கு - குறிப்பொருள். வெடியால் (துப்பாக்கி) ஒரு பொருளைக் குறிபார்த்துச் சுடுதலை அறிக. கலக்கம், கையாறு - துன்பம் . கையாறுஆ - கையாறாக. உடம்பைக் குறிபொருளாக்கித் துன்பத்தை வாளாக்காததால் ஒருகூற் றுருவகம். துன்பமுறுதல் இயல்பென்று அறிந்தார் துன்பத்திற்கு வருந்தார். (7) 628. இன்பம் விழையா னிடும்பை யியல்பென்பான் துன்ப முறுத லிலன். இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் - இன்பத்தை விரும்பாமல் துன்பத்தை இயல்பென்று அறிபவன், துன்பம் உறுதல் இலன் - எப்போதும் துன்ப மடைய மாட்டான். (8) 629. இன்பத்து ளின்பம் விழையாதான் றுன்பத்துட் டுன்ப முறுத லிலன். இன்பத்துள் இன்பம் விழையாதான் - இன்பம் உற்றபோது இவ்வின்பத்தை விரும்பாதவன், துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் - துன்பம் உற்றபோதும் அத்துன்பத்தால் துன்புறான். இன்ப துன்ப முறுதல் இயல்பென்று இரண்டையும் ஒரு தன்மையாக மதிக்கவேண்டும். (9) 630. இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு. இன்னாமை இன்பம் எனக் கொளின் - ஒருவன் துன்பத்தை இன்பமாகக் கொள்வானாயின், தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - அது தன் பகைவரும் விரும்பத்தக்க சிறப்பாகும். துன்பத்தை இன்பமாகக் கொள்ளவே, மனமகிழ்ச்சியுடை யனாய்த் தொடங்கிய வினை முடிக்கும் ஆற்றலுடை யனாவதால், பகைவர் விரும்பும் உயர்ச்சியை அடைவான் என்றார். (10) அரசியல் முற்றிற்று 2. அமைச்சியல் (10) அமைச்சு இயல் - அமைச்சரது இலக்கணம். தூதரும் (72) அமைச்சர் குழுவினரே யாவர். 64. அமைச்சு அமைச்சனது தன்மை. அவன் குணஞ் செயல்கள். 631. கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யும் அருவினையு மாண்ட தமைச்சு. செய்யும் அருவினையும் - செய்யப்படும் அரிய செயலும், கருவியும் - அதற்கேற்ற கருவியும், காலமும் - காலமும், செய்கையும் மாண்டது அமைச்சு - அச்செயலைச் செய்யுமாறும் பொருந்த எண்ணியறிய வல்லானே அமைச்ச னாவான். கருவி - பொருளும் படையும். செய்யுமாறு - வினையைத் தொடங்கும் வழியும், இடையூறின்றி முடிக்கும் வழியும். மாண்டது - மாட்சிமைப்பட்டது. மாட்சிமை யுடையவன் என்பதாம். (1) 632. வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு. வன்கண் - அஞ்சாமையும், குடி காத்தல் - குடிகளைக் காத்தலும், கற்றறிதல் - அற நூல்களைக் கற்றறிதலும், ஆள் வினை யோடு - முயற்சியும் ஆகிய நான்கும், ஐந்துடன் மாண்டது அமைச்சு - ஐம்பொறிகளின் தூய்மையுடன் திருந்த உடையவனே அமைச்ச னாவான். வன்கண் முதலிய நான்கும், ஐம்பொறித் தூய்மையுடன் திருந்த உடையவனே அமைச்சனாவான். ஐந்து - தொகைக் குறிப்புச் சொல். வன்கண் முதலிய நான்கனோடு ஐம்பொறித் தூய்மையும் உடையனென்க. (2) 633. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு. பிரித்தலும் - பகைவர்க்குத் துணையாயினாரை அவரி னின்றும் பிரித்தலும், பேணிக்கொளலும் - தம்மவரைத் தம்மை விட்டுப் பிரிந்து போகாமல் காத்துக் கொள்ளுதலும், பிரிந்தார்ப் பொருத்தலும் - தம்மிடமிருந்து பிரிந்தவர்களை மீண்டும் தம்மோடு சேர்த்தலும், வல்லது அமைச்சு - வல்லவனே அமைச் சனாவான். (3) 634. தெரிதலுந் தேர்ந்து செயலு மொருதலையாச் சொல்லலும் வல்ல தமைச்சு. தெரிதலும் - ஆராய்ந்து அறிதலும், தேர்ந்து செயலும் - ஆராய்ந்து செய்தலும், ஒரு தலையாச் சொல்லும் - ஐயுறாமல் துணிந்து சொல்லுதலும், வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான். அரசனிடத்து ஒன்றைச் சொல்லும்போதும், பிரித்தல், பொருத்தல் (633) செய்யும்போது அன்னார் ஐயுறாது துணிந்து சொல்லுதலுமாம். (4) 635. அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந் திறனறிந்தான் றேர்ச்சித் துணை. அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் - அறங்களை அறிந்து, அறிவால் நிறைந்து அமைந்த சொல்லை யுடையவனாய், எஞ்ஞான்றும் திறன் அறிந்தான் - எப்போதும் வினைசெய்யுந் திறங்களை அறிந்தவனே, தேர்ச்சித் துணை - மன்னனுக்குச் சூழ்ச்சித் துணையாவான். அறிவால் நிறைந்து அமைந்த சொல் - பொருளமைந்த சொல். திறம் - வகை. சூழ்ச்சி - ஆலோசனை. அறனறிவும், ஆன்றமைந்த சொல்லும், வினை செய்யுந் திறனு முடையவனே அமைச்சனாவான். (5) 636. மதிநுட்ப நூலோடு டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை. மதி நுட்பம் நூலோடு உடையார்க்கு - நுண்ணறிவை நூலறிவுடன் உடையவராகிய அமைச்சருக்கு, அதி நுட்பம் முன் நிற்பவை யாஉள - மிக்க நுட்பமானவைகளாய் முன்னிற் பவை எவையுள்ளன? ஒன்றுமில்லை. மதி நுட்பம் - நுட்பமதி. நூலறிவோடு நுண்ணறிவையுடைய அமைச்சர்க்கு ஆகாதது ஒன்றுமில்லை. பகைவர் எண்ணங்களை அறிந்து அவை கைகூடாமல் செய்து அவரறிந்து தடுக்காதபடி தாம் சூழ்வர் என்பதாம். சூழ்தல் - ஆலோசித்தல். (6) 637. செயற்கை யறிந்தக் கடைத்து முலகத் தியற்கை யறிந்து செயல். செயற்கை அறிந்தக் கடைத்தும் - நூல் வழியாகக் தொழில் செய்யும் முறைகளை அறிந்தவிடத்தும், உலகத்து இயற்கை அறிந்து செயல் - அப்போது நடைபெறும் உலக நடையை அறிந்து அதற்குப் பொருந்தச் செய்யவேண்டும் அவ்வப்போது நடக்கும் உலக நடைக் கேற்றவாறு செய லாற்றுவதே நூலறிவின் பயனாகும். சட்டங்களின்படி நடவாமல், உலகநடைக் கேற்றவாறு சட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டு மென்பதாம். (7) 638. அறிகொன் றறியா னெனினு முறுகி உழையிருந்தான் கூறல் கடன். அறி கொன்று அறியான் எனினும் - அறிந்து சொல்வோரது அறிவையும் ஏற்காமல் தானும் அறியானாயினும், உறுதி கூறல் உழையிருந்தான் கடன் - அம்மன்னனுக்கு உறுதிமொழி களைக் கூறுவது அமைச்சனது கடமையாகும். அறி - முதல்நிலைத் தொழிற்பெயர்; அறிவு என்னும் விகுதி பெற்ற தொழிற்பெயரின் பொருளை உணர்த்திற்று. அரசன் சொற் பேச்சையுங் கேளாமல், தானும் அறியாமல் இருந்தாலும் அவனுக்கு உறுதி கூறுவது அமைச்சர் கடமையாகும். (8) 639. பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட் டெவ்வோர் எழுபது கோடி யுறும். பக்கத்துள் பழுது எண்ணும் மந்திரியின் - பக்கத்தி லிருந்து தீங்கு நினைக்கும் அமைச்சனொருவனுக்கு, ஓர் எழுபது கோடி தெவ் உறும் - எழுபது கோடி பகைவர் ஒப்பாவர். மந்திரியின் - மந்திரிக்கு; உருபுமயக்கம். எழுபது கோடி - மிகப் பல. வெளிப்படையான பகைவர் மிகப்பலராயினும் காக்கப்படுவர்; உட்பகை ஒருவனேனும் காக்கப்படான் என்பதற்கு இவ்வாறு கூறினார். பல வெளிப்பகையினும் ஓருட்பகை கொடியது என்பதாம். இவர் விலக்கத்தக்கவர். (9) 640. முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் திறப்பா டிலாஅ தவர். திறப்பாடு இலாதவர் - வினைசெய்யுந் திறமை இல்லாதவர், முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் - முன்னரே அடைவு பட எண்ணியிருந்தும் அவை செய்யுங் கால் முடிவிலவாகவே செய்வர். அடைவுபட எண்ணுதல் - வினை செய்யும் வழிகளை ஒழுங்கு பட ஆராய்ந்து முடிவு செய்தல். முடிவிலவாகச் செய்தல் - ஒன்றும் முற்றுப் பெறாமல் அரைகுறையாகச் செய்தல். 612 குறளுரை பார்க்க. எண்ணவல்லராய் இருந்தும் வினைசெய்ய மாட்டாதவ ரென்பதாம். இருவரும் விலக்கத் தக்கவராவர். 65. சொல்வன்மை பேச்சுத் திறமை. அமைச்சர்க்கு இது இன்றியமையாதது. 641. நாநல மென்னு நலனுடைமை யந்நலம் யாநலத் துள்ளதூஉ மன்று. நாநலம் என்னும் நலன் உடைமை - நாநலம் எனச் சிறப்பித்துச் சொல்லப்படும் நலம் ஒருவனுக்கு உடைமை யாகும், அந்நலம் யா நலத்து உள்ளதும் அன்று - அந்நலம் பிற எல்லா நலங்களினுள்ளும் அடங்குவதன்று; அவற்றின் மிக்கதாகும். நாநலம் - சொல்வன்மை. நாநலம் என்பது - நாவினது நலம், நாவின்கண் உள்ள நலம், நாவாலாகிய நலம் என விரியும். உடைமை - செல்வம். இது சொல்வன்மைச் செல்வம். (1) 642. ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் - வாழ்வும் தாழ்வும் அச் சொல்லினால் வருவதால், சொல்லின்கண் சோர்வு காத்து ஓம்பல் - சொல்லின்கண் சோர்வுபடுதல் தம்மிடம் இல்லாமல் போற்றிக் காக்க வேண்டும். சோர்வுடன் - பிழைபடல். நற்சொல்லால் வாழ்வும், தீச் சொல்லால் தாழ்வும் வரும். சொற்சோர்வு படேல். (2) 643. கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல். கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் - கேட்டவர் மனத்தைக் கவர்ந்துகொள்ளும் தன்மையை யுடையனவாய், கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் - நேரில் கேளாத வரும் இனி எப்போது கேட்போம் என்று விரும்பும்படி பேசுவதே சொல்லாகும். கேட்டார் - நேரில்பேசக் கேட்டவர். கேளார் - நேரில் கேளாது கேட்டார் சொல்லக் கேட்டவர். நேரில் கேட்டவரே யன்றிக் கேட்டார்வாய்க் கேட்டாரும் கேட்க விரும்பும்படி பேசுவதே சொல்வன்மையாகும். 6 - 3 - 67 இல் பதவியேற்ற, தமிழக முதலமைச்சர், அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சு இதற்கு எடுத்துக்காட்டாகும். (3) 644. திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும் பொருளு மதனினூஉங் கில். சொல்லை திறன் அறிந்து சொல்லுக - சொல்லை வகை யறிந்து சொல்லுக, அதனின் ஊங்கு அறனும் பொருளும் இல் - அப்படிச் சொல்லுதற்கு மேற்பட்ட அறமும் பொருளும் இல்லை. வகை - கேட்போர் விரும்புவனவும், ஏற்பனவுமான சொற்கள். திறமறிந்து சொல்லுதலின் அறமாயிற்று. தஞ்சொல்லை அவர் கேட்பதால் தங்காரிய முடித்தலின் பொருளாயிற்று. (4) 645. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை வெல்லுஞ்சொ லின்மை யறிந்து. சொல்லை வெல்லும் சொல் பிறிது ஓர் சொல் இன்மை அறிந்து - சொல்லக் கருதிய சொல்லை வெல்லக்கூடிய சொல் வேறொரு சொல் இல்லாமையை அறிந்து, அச்சொல்லைச் சொல்லுக - பிறகு அச்சொல்லைச் சொல்லுக. பிறிதோர் சொல் - தஞ்சொல்லை மறுத்துக்கூறும் அயலார் சொல். அவ்வாறு அவர்கள் கூறமுடியாமல், அதாவது தஞ் சொல்லை வேறொரு சொல் வெல்ல முடியாமல் நன்கு ஆய்ந்து பேசவேண்டும். இது சொற்பொருட் பின்வருநிலை. (5) 646. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். வேட்பத் தாம் சொல்லி - தாம் சொல்லும்போது பிறர் விரும்பு மாறு சொல்லி, பிறர் சொல் பயன் கோடல் - பிறர் சொல்லும்போது அவர்களது சொல்லின் பயனைத் தெரிந்து கொள்ளுதல், மாட்சியில் மாசு அற்றார் கோள் - சிறந்த குணங் களுடன் குற்றமற்றாரது கொள்கையாகும். பிறர் விரும்பும்படி சொல்லிப் பிறர் சொல்லின் கருத்தை அறிவதே அறிஞர் கடமையாகும். மாட்சி - நற்குணம். மாட்சியில் மாசு அற்றார் - குற்றமற்ற நற்குணமுள்ளவர். (6) 647. சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை இகல்வெல்லல் யார்க்கு மரிது. சொலல் வல்லன் சோர்வு இலன் அஞ்சான் - தான் எண்ணியதைப் பிறர்க்குச் சொல்லுதலில் வல்லவனாகி, அச்சொல்வதில் சோர்வில்லாதவனாய், யார்க்கும் அஞ்சாத வனாயின், அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது - அவனைச் சொற் போரின்கண் வெல்லுதல் எவராலும் முடியாது. சோர்வு - சொல்லவேண்டியதை ஒழுங்காகச் சொல்லா மையும், மறத்தலும். யார்க்கும் என்றது அவையோரையும் எதிர் பேசுவோரையும். அஞ்சாமல், சோர்வு படாமல் சொல்லவல்ல வனை எவராலும் வெல்ல முடியாது. (7) 648. விரைந்து தொழில்கேட்கு ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் - சொல்லப் படுவனவற்றை வரிசைப்படுத்தி இனிதாகச் சொல்லுதலில் வல்லாரைப் பெற்றால், ஞாலம் விரைந்து தொழில்கேட்கும் - உலகத்தார் அவற்றை விரைந்து ஏற்றுக் கொள்வர். நிரந்து - வரிசையாக. நிரல் - வரிசை. தொழில் கேட்டல் - ஏற்றுக்கொள்ளல். சொல்லுவதை வரிசையாகவும் இனிமை யாகவும் சொன்னால் கேட்போர் தயங்காமல் விரைந்து ஏற்றுக் கொள்வர். (8) 649. பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர். மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர் - குற்றமற்றன வாகச் சில சொற்களைத் தெளிவாகச் சொல்ல அறியாதவர், பல சொல்ல மன்ற காமுறுவர் - பல சொற்களைச் சொல்ல மிகவும் விரும்புவர். சுருங்கச் சொல்லி விளங்கவைக்க வேண்டும். (9) 650. இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற துணர விரித்துரையா தார். கற்றது உணர விரித்து உரையாதார் - தாம் கற்றவற்றைப் பிறர் அறியுமாறு விளக்கமாகச் சொல்ல மாட்டாதவர், இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் - கொத்தில் மலர்ந்தும் மணக்காத பூவை ஓப்பர். இணர் - பூங்கொத்து. ஊழ்த்தல் - மலர்தல். மலர்ந்தும் மணமில்லாத பூச் சூடப்படாதவாறு போலக் கற்றிருந்தும் சொல்லமாட்டாதவர் நன்கு மதிக்கப்படார் என்பதாம். (10) 66. அவையறிதல் அவையின் இயல்பு அறிந்த சொல்லுதல். அவை - அறிஞர் கூட்டம், அரசவை. 651. அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். சொல்லின் தொகை அறிந்து தூய்மையவர் - சொல்லின் தொகையை அறிந்த தூயவர், அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக - அவையின் தன்மையை அறிந்து அதற்கேற்றவாறு ஆராய்ந்து சொல்லவேண்டும். சொல்லின் தொகை - சொற்கூட்டம். அவையோர் தன்மையை அறிந்து அதற்கேற்றவாறு சொல்லவேண்டும். (1) 652. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். சொல்லின் நடை தெரிந்த நன்மையவர் - சொற்களின் நடை தெரிந்த நல்லோர், இடை தெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக - அவையின் செவ்வியை ஆராய்ந்தறிந்து மிகவும் தெளிந்து சொல்லக் கடவர். சொல்லின்நடை - இனிமை யுண்டாகும்படி சொற்களை அடுக்கிப் பேசுதல். செவ்வி - கேட்பதற்கு விருப்புடைய காலம். தெளிந்து - சொல்லும் முறையை அறிந்து. அவையின் செவ்வி யறிந்து தெளிவாகச் சொல்லவேண்டும். (2) 653 அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉ மில். அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் - அவையின் தன்மையை அறியாது ஒன்று சொல்லத் தொடங்குவோர், சொல்லின் வகை அறியார் வல்லதும் இல் - சொல்லும் வகையும் அறியார், கற்று வல்ல கல்வியும் அவர்க்கில்லை. ஓரவையில் பேசும் வகையும் கல்வி வன்மையும் இல்லாத வரே அவையின் தன்மையை அறியாது பேசப்புகுவர். (3) 654. ஒளியார்முன் னொள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல். ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் - அறிவுடையார் கூடிய அவை யில் தாமும் அறிவுடையராக வேண்டும், வெளியார் முன் வான்சுதை வண்ணம் கொளல் - அறிவிலார வையில் வெண்மையான சுண்ணாம்பின் நிறத்தைக் கொள்ள வேண்டும். ஒள்ளியார் என்பது ஒளியார் என்றாயது. காழில்லாத மரத்தை வெளிறு என்னும் வழக்குப்பற்றி, அறிவிலாரை 'வெளியார்' என்றார். (காழ் - வயிரம், சேவு) அறிவிலார் மதிக்கும்படி அவரினும் வெண்மையுடையவராக வென்பார் 'வான்சுதை வண்ணம் கொளல்' என்றார். வான் - வெண்மை. சுதை - சுண்ணாம்பு. (4) 655. நன்றென்ற வற்றுள்ளு நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. முதுவருள் முந்து கிளவாச் செறிவு - தம்மினும் சிறந்த அறிஞர் கூடிய அவையில் அவருக்கு முன்னதாகப் பேசாத அடக்கமானது, நன்று என்றவற்றுள்ளும் நன்றே - நற்குணங்கள் என்று சொல்லப் பட்ட எல்லாவற்றிலும் மிக நல்ல குணமாகும். முதுவர் - மிக்க அறிவு டையவர். (5) 656. ஆற்றி னிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்ன ரிழுக்கு. வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - விரிந்த நூற் பொருளைக் கேட்டு அறியவல்லார் முன்னிலையில் குற்றமுண் டாகும்படி சொல்லுதல், ஆற்றின் நிலை தளர்ந்து அற்று - நல்ல வழியில் நின்றவன் அதனினின்றும் தவறியது போலும். நன்னெறியில் நடப்பவன் தவறுவது போலும் நல்லோ ரவையில் பொல்லாத சொல்லுதல். பயனிழத்தலோடு இகழவும் படுவ ரென்பதாம். (6) 657. கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச் சொற்றெரிதல் வல்லா ரகத்து. கசடு அற சொல் தெரிதல் வல்லாரகத்து - குற்றமறச் சொற்களை அறிதலில் வல்லாரது அவையில் சொன்னால், கற்று அறிந்தார் கல்வி விளங்கும் - கற்றறிந்தவருடைய கல்வியானது விளங்கும். சொல்லும் சொற்களின் பயனை அறிவாரவையில் சொல் வோர் கல்வி சிறப்புறும். (7) 658. உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன் பாத்தியு ணீர்சொரிந் தற்று. உணர்வது உடையார் முன் சொல்லல் - தாமே உணர வல்ல அறிவுடையார் முன்னிலையில் ஒன்றைச் சொல்லுதல், வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று - தானாக வளரும் பயிரையுடைய பாத்தியில் நீரை ஊற்றினாற்போலும். பயிர் வளர்வதுபோல, சொல்வோன் அறிவு வளருமென்பதாம். (8) 659. புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார். நல் அவையுள் நன்கு செலச் சொல்லுவார் - நல்லார வையில் நல்ல பொருள்களை அவர் மனங் கொள்ளும்படி சொல்ல வல்லவர், புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க - புல்லியா ரவையில் மறந்தும் அவற்றைச் சொல்லற்க. புல்லியார் - நல்லவரல்லாதவர், அறிவில்லார். புல்லவையுள் நல்லவைகளைச் சொல்லுவதால் பயனில்லை. (9) 660. அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற் றங்கணத்தர் அல்லார்முற் கோட்டி கொளல். தம் கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல் - நல்லவர், தம் இனத்தவர் அல்லாதார்முன் ஒன்றையும் சொல்லுதல் கூடாது; அங்கணத்துள் உக்க அமிழ்து அற்று - சொல்லின், அது சலதாரையில் ஊற்றிய அமிழ்தம் போலும். தம் இனத்தவர் - தம்மோடொத்தவர், அறிஞர். அமிழ்தம் - பால். கோட்டி - பேச்சு. கொளல் - கொள்ளற்க; எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. அறிவிலாரிடம் ஒன்றைச் சொல்லுதல் சாக்கடையில் ஊற்றிய பால் போல் பயனற்றதாகும். (10) 67. அவையஞ்சாமை அவையைக் கண்டு அஞ்சாமை, அல்லது அவையை அஞ்சாமை. 661. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொற்களது தொகையை அறிந்த தூயவர், வகை அறிந்து - கற்று வல்ல அவை, அல்லா அவை என்னும் அவையின் வகையை அறிந்து, வல் அவை வாய் சோரார் - கற்றுவல்லார் அவையில் ஒன்றைச் சொல்லுங்கால் அச்சத்தால் பிழைபடச் சொல்லார். சொல்லின் தொகை - சொற்கூட்டம். அவை அஞ்சுவான் பிழையில்லாமல் பேசமுடியாது. புதிதாகப் பேசுவோர் அவை யஞ்சிப் பேச முடியாமல் தடுமாறுதல் காண்க. (1) 662. கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முற் கற்ற செலச்சொல்லு வார். கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - கற்றார் முன்னி லையில் தாம் கற்றவற்றை அவர் மனத்தில் கொள்ளுமாறு சொல்ல வல்லவர், கற்றாருள் கற்றார் எனப்படுவர் - கற்றவர்களில் இவர் நன்குகற்றவர் என்று பெரியோரால் சொல்லப்படுவர். கற்றவர் ஏற்கும் வகையில் சொல்ல வல்லாரே நன்கு கற்றவராவர். (2) 663. பகையகத்துச் சாவா ரெளிய ரரியர் அவையகத் தஞ்சா தவர். பகை அகத்துச் சாவார் எளியர் - பகைவர்களிடம் அஞ்சாது புகுந்து இறப்பார் பலர்; அவை அகத்து அஞ்சாதவர் அரியர் - அவை யினிடம் அஞ்சாது புகுந்து சொல்லவல்லவர் சிலர். எளியர் அரியர் என்பன - பலர் சிலர் என்னும் பொருளன. பகையச்சத்தினும் அவையச்சம் பெரிதென்ப தாம். (3) 664. கற்றார்முற் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற மிக்காருள் மிக்க கொளல். கற்றார் முன் கற்ற செலச்சொல்லி - கற்றவரவை முன் தாம் கற்றவற்றை அவர் மனங்கொள்ளுமாறு சொல்லி, தாம்கற்ற மிக்க மிக்காருள் கொளல் - தாம் கற்றவைகளிலும் மிகுதியானவை களைத் தம்மினும் மிகுதியாகக் கற்றவர்களிடமிருந்து அறிந்து கொள்ளக் கடவர். ஒருவரால் எல்லாவற்றையும் கற்றல் முடியாதாகையால் வெவ்வேறு கல்வியுடையார் முன் சொல்லி அவற்றை யெல்லாம் அவரிட மிருந்து கற்க வேண்டுமென்பதாம். சொல்வதோடு கேள்வியும் உடன் கூறினார். (4) 665. ஆற்றி னளவறிந்து கற்க வவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு. அவை அஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு - அவையை அஞ்சாது மறுமொழி சொல்லுதற் பொருட்டு ஆற்றின் அளவு அறிந்து கற்க - முறையாகக் கற்க வேண்டிய நூல்களை அறிந்து நன்கு கற்க வேண்டும். (5) 666. வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென் நுண்ணவை யஞ்சு பவர்க்கு. வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என் - வீரம் இல்லா தார்க்கு வாளுடன் என்ன தொடர்பு இருக்கிறது? நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலொடு என் - அதுபோல, நுண்ணறிவுடையோரது அவையை அஞ்சுபவர்க்கு நூலுடன் என்ன தொடர்பிருக்கிறது? ஒன்று மில்லை என்பதாம். நூல் - நூலறிவு. வீரமில்லாதவர்க்கு வாளால் பயனில்லாதது போல், அவையஞ்சுவார்க்கு நூலறிவால் பயனில்லை. (6) 667. பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத் தஞ்சு மவன்கற்ற நூல். அவை அகத்து அஞ்சுமவன் கற்ற நூல் - அவை நடுவே நின்று அதனைக்கண்டு அஞ்சுபவன் கற்ற நூலானது, பகை அகத்துப் பேடிகை ஒள்வாள் - பகை நடுவே நின்று அதனைக் கண்டு அஞ்சும் பேடி தன்கையில் பிடித்த கூரிய வாளைப் போலும். பேடி - அலி. 614 குறளுரை பார்க்க. பேடி பிடித்த வாள் சிறப்பில்லாதது போல, அஞ்சுபவன் கற்ற நூலும் சிறப்பில்லாத தாயிற்று. (7) 668. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். நல் அவையுள் நன்கு செலச் சொல்லாதார் - நல்லா ரவையில் நல்ல பொருள்களை அவர் மனங் கொள்ளும்படி சொல்லமாட்டா தவர், பல்லவை கற்றும் பயம் இலரே - பல நூல்களைக் கற்றிருந்தும் பயனில்லாதவரே ஆவர். அறிவார்முன் சொல்லாமையால் அவர் கல்வியின் பெருமை தெரிந்து போற்றுவார் இல்லையாகையால் பயன் இல்லாதவரா யினார். பயம் - பயன். (8) 669. கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார். கற்று அறிந்தும் நல்லார் அவை அஞ்சுவார் - கற்றறிந் திருந்தும் நல்லோர் அவையை அஞ்சுவோரை, கல்லாதவரில் என்ப - கல்லா தவரினும் கடை என்று சொல்லுவார் அறிவோர். கல்வியறிவால் தாமும் பயனடையாது பிறர்க்கும் பயன்படச் செய்யாது வீண்படச் செய்தலின் 'கல்லாதவரில் கடை' என உலகம் பழிக்கும். (9) 670. உளரெனினு மில்லாரோ டொப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். களன் அஞ்சிக் கற்ற செலச் சொல்லாதார் - அவைக் களத்தை அஞ்சித் தாங் கற்றவற்றை அவ்வவைக் கேற்பச் சொல்லமாட்டாதார், உளர் எனினும் இல்லாரோடு ஒப்பர் - உயிருடன் இருப்பினும் இறந்தவரோடு ஒப்பர். மக்களுள் ஒருவராக மதிக்கப்படார் என்பதாம். (10) 68. குறிப்பறிதல் ஒருவர் உள்ளக் கருத்தை அவர் கூறாமல் அறிதல். 671. கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி. குறிப்பு கூறாமை நோக்கி அறிவான் - ஒருவன் குறிப்பை அவன் கூறாமலே அவனை நோக்கி அறிபவன், எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - எப்போதும் வற்றாத நீரால் சூழப்பட்ட உலகத் திற்கு அணிகலமாவான். கூறாமல் அறிதல் - அவன் கண்ணையும் முகத்தையும் உற்று நோக்கியறிதல். நீர் - கடல். வையத்துக்கு - அத்துச் சாரியை தொக்கது. அணி - நகை. முகக் குறிப்பால் அகக் குறிப்பை அறிபவனே சிறந்தவனாவான். (1) 672. ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல். அகத்தது ஐயப்படாது உணர்வானை - ஒருவன் மனத்தி லுள்ளதை ஐயமற அறியவல்லவனை, தெய்வத்தோடு ஒப்பக் கொளல் - மேன்மையாக மதிக்கவேண்டும். தெய்வத்தோடு ஒப்பக்கொளல் - நன்கு மதித்தல். தெய்வத் தமிழ் என்பதுபோலத் தெய்வம் மேன்மைக்கு எடுத்துக் காட்டு. முகவுரை பார்க்க. (2) 673. குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள் யாது கொடுத்துங் கொளல். குறிப்பின் குறிப்பு உணர்வாரை - தம் குறிப்பு நிகழ்வதை அறிந்த பழக்கத்தினால் பிறர் குறிப்பை அறிய வல்லவரை, உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் - அரசர் தம் உறுப்புக் களுள் அவர் விரும்புவதொன்றைக் கொடுத்தாயினும் தமக்குத் துணையாகக் கொள்ளவேண்டும். மனநிகழ்ச்சி எல்லார்க்கும் ஒரே வகையாக நிகழு மாகையால், பிறர் குறிப்பு அறிவதற்குத் தங் குறிப்புக் கருவியாயிற்று. உறுப்பு - நாடு, யானை, குதிரை, பொருள் முதலியன. (3) 674. குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை யுறுப்போ ரனையரால் வேறு. குறித்தது கூறாமைக் கொள்வாரோடு - ஒருவன் மனத்தில் கருதியதை அவன் சொல்லாமல் அறியவல்லா ரோடு, ஏனை உறுப்பு ஓரனையர் - குறிப்புணரமாட்டாதார், கைகால் முதலிய உறுப்புக் களினால் ஒரு தன்மையர் ஆயினும், வேறு - அறிவால் வேறு பட்டவரே யாவர். குறிப்புணர மாட்டாதார் உறுப்பால் மக்களை யல்லாமல் அறிவால் வேறாவார். விலங்கென்னும் கருத்தால் வேறென்றார். ஆல் - அசை. (4) 675. குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினுள் என்ன பயத்தவோ கண். குறிப்பின் குறிப்பு உணராவாயின் - எதிர்ப்பட்டதைக் காண வல்ல தம் காட்சியறிவினால், பிறர் முகக் குறிப்பைக் கொண்டு அவர் மனக்கருத்தை உணரமாட்டாவாயின், உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ - ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறு என்ன பயனைச் செய்வனவோ அறியேன். குறிப்பிற் குறிப்புணராத கண்களால் பயனில்லை. (5) 676. அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங் கடுத்தது காட்டும் முகம். அடுத்தது காட்டும் பளிங்குபோல் - தன்னையடுத்த பொருளின் உருவத்தைத் தானே கொண்டுகாட்டும் கண்ணாடி போல, நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும் - ஒருவனது நெஞ்சில் மிகுந்த எண்ணத்தை அவன் முகம் தானே கொண்டு காட்டி விடும். கடுத்தல் - மிகுதல். நெஞ்சங்கடுத்தது - நெஞ்சில் நினைத்தது; அதாவது மனக்கருத்து. தன்னையடுத்த பொருளின் உருவத்தைக் காட்டும் கண்ணாடி போல் மனக்கருத்தை முகங்காட்டும். கொண்டு காட்டல் - அதைத் தான் கொண்டு தன்னிடத்தே காட்டுதல். (6) 677. முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங் காயினுந் தான்முந் துறும். உவப்பினும் காயினும் தான் முந்துறும் - ஒருவன் மகிழ்ந் தாலும் சினந்தாலும் அவற்றைத் தான் முதலில் தெரிவிக்கு மாகலான், முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ - முகத்தைப் போல அறிவு மிக்கது வேறொன்று உண்டோ? இல்லை. முதுக்குறைவு - அறிவு. முதுக்குறைந்தது - அறிவு மிக்கது. ஒருவன் மனத்தில் தோன்றும் விருப்பு வெறுப்பை முதலில் பிற ரறியச் செய்வது முகமே யாகும். ஆகவே, முகக் குறிப்பால் அக் குறிப்பை அறியவேண்டும். (7) 678. முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி உற்ற துணர்வார்ப் பெறின். அகம்நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் - தன் மனத்தைக் குறிப்பால் நோக்கித் தானுற்றதனை அறிய வல்லாரை ஒருவன் பெற்றால், முகம் நோக்கி நிற்க அமையும் - அவர் தன் முகத்தைப் பார்க்கும்படி தான் அவர் முகத்தை நோக்கிக் கொண்டு நிற்றலே போதும். முகக்குறிப்பால் அகக்குறிப்பை அறிவார் முன், தன் முகத்தை அவர் பார்க்கும்படி நின்றால் போதும், குறிப்பறிந்து ஆவனசெய்வர். தன் மனம் என்றது - ஒன்று வேண்டி நிற்பான். மனத்தை. (8) 679. பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின் வகைமை யுணர்வார்ப் பெறின். கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் - பிறர் பார்வை வேறுபாட்டை அறிய வல்லார்க்கு, பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் - பிறர் மனத்துள்ள பகையையும் நட்பையும் அவர் சொல்ல வேண்டியதில்லை; அவர் கண்களே சொல்லும். கண்ணின் வகைமை - கண்பார்க்கும் பார்வை வேறுபாடு கண் - ஆகுபெயர். கண்ணின் பார்வை வேறுபாட்டை அறிய வல்லவர், பிறர் நெஞ்சிலுள் வெறுப்பு விருப்பை அவர் கண்களால் அறிவர். (9) 680. நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்ல தில்லை பிற. நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் - யாம் நுண்ணறி வுடையேம் என்பவர் பிறர் கருத்தினை அளக்கும் கோலாவது, காணுங்கால் கண் அல்லது பிற இல்லை - ஆராயுங்கால் அவர் கண் ணல்லது வேறில்லை. ஒருவர் கருத்தை அளக்கும் அளவுகோல் அவர் கண்ணே யாகும். ஒருவர் கண்ணின் வேறுபாட்டைப் பார்த்துக் கருத்து வேறுபாட்டை அறியவேண்டும் என்பது கருத்து. (10) 69. வினைத்தூய்மை செய்யுஞ் செயலைக் குற்றமில்லாமல் செய்தல். அதாவது நல்லனவாகச் செய்தல். 681. துணைநல மாக்கந் தரூஉம் வினைநலம் வேண்டிய வெல்லாந் தரும். துணைநலம் ஆக்கம் தரும் - ஒருவனுக்குத் துணைவர் களது நன்மை செல்வத்தை மட்டும் கொடுக்கும், வினை நலம் வேண்டிய எல்லாம் தரும் - ஆனால், வினையினது நன்மை அவன் விரும்பும் எல்லாவற்றையும் கொடுக்கும். துணைநலம் - துணைவர்களது உதவி. வினைநலம் - வினைத் தூய்மை. (1) 682. என்று மொருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. புகழொடு நன்றி பயவா வினை - புகழையும் நன்மையை யும் தராத தொழில்களை, என்றும் ஒருவுதல் வேண்டும் - எப்போதும் செய்யாதிருக்க வேண்டும். ஒருவுதல் - நீக்குதல். கெட்ட காரியத்தை ஒரு நாளும் செய்யக் கூடாது. (2) 683. ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை யாஅது மென்னு மவர். ஆதும் என்னுமவர் - மேலாக உயரக் கடவேம் என்று எண்ணு பவர், ஒளிமாழ்கும் செய்வினை ஓதல் வேண்டும் - புகழைக் கெடுக்கும் செயல்களைச் செய்யாதிருக்க வேண்டும். ஓவுதல் என்பது குறைந்து நின்றது. ஓவுதல் - நீக்குதல். முன்னேற வேண்டும் என்றெண்ணுவோர் புகழைக்கெடுக்கும் கெட்ட செயல்களைச் செய்யக்கூடாது. (3) 684. இடுக்கட் படினு மிளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர். நடுக்கு அற்ற காட்சியவர் - தெளிவான அறிவினை யுடையவர், இடுக்கண்படினும் இளிவந்த செய்யார் - துன்பத்தில் அகப்பட் டாலும் இழிவான தொழில்களைச் செய்யமாட்டார். நடுங்குதல் - அசைதல். நடுக்கு அற்ற - அசையாத, தெளிவான. காட்சி. நல்லறிவுடையார் துன்பமுற்றாலும் அது தீர்தற் பொருட்டுக் கெட்ட காரியங்களைச் செய்யார். (4) 685. எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று. எற்று என்று இரங்குவ செய்யற்க - 'யான் செய்தது எத் தகையது' என்று பின் தானே நினைந்து வருந்தக்கூடிய செயல்களை ஒருபொழுதும் செய்யாதிருக்கவேண்டும்; செய்வானேல் மற்று அன்ன செய்யாமை நன்று - ஒருக்கால் தவறி ஒருவன் செய்வானாயின், அதிலிருந்து அத்தகைய செயல்களைச் செய்யாதிருத்தல் நல்லது. தானே இரங்கத்தக்க செயலை ஒருமுறை தவறிச் செய்தாலும், பின்னும் அத்தகைய செயலைச் செய்யக் கூடாது. (5) 686. ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் - தன்னைப்பெற்ற தாயின் பசிநோயைக் கண்டானாயினும், சான்றோர் பழிக்கும் வினை செய்யற்க - அறிவுடையோர் பழிக்கும் செயல்களைச் செய்யா திருக்க வேண்டும். தாயின் பசியைப் போக்குவதற்காகவும் தீச்செயல் புரியக் கூடாது. (6) 687. பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை. பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் - தீய காரியங்களைச் செய்து அதனால் பழியை மேற்கொண்டு பெற்ற செல்வத்தை விட, சான்றோர் கழி நல்குரவே தலை - பழியை மேற் கொள்ளாத சான்றோரது மிகுந்த வறுமையே மேலானதாகும். நிலையாத செல்வத்தின் பொருட்டு நிலையான பழியைத் தேடிக்கொள்ளக்கூடாது. மலைந்து - மேற்கொண்டு. கழி - மிக. நல்குரவு - வறுமை. (7) 688. கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம் முடிந்தாலும் பீழை தரும். கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - அறிஞர்கள் செய்யத் தகாதவையென விலக்கிய செயல்களைத் தாமும் விலக்கி விடாமல் செய்தவர்களுக்கு, அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் - அச்செயல்கள் முடிந்தாலும் பின் துன்பத்தையே கொடுக்கும். கடிந்த - கடிந்த செயல்கள். கடிதல் - விலக்குதல், நீக்குதல், ஓரார் - நீக்கார். ஒருவு ஆர் என்பதன் வு கெட்டது. பெரியோரால் விலக்கப்பட்ட தீச்செயல்களைச் செய்தால் துன்பந்தரும். (8) 689. அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும் பிற்பயக்கு நற்பா லவை. அழக் கொண்ட எல்லாம் அழப்போம் - பிறர் அழுமாறு துன் புறுத்திக் கொண்ட பொருளெல்லாம் தான் அழுமாறு தன்னை விட்டுப் போய்விடும், நற்பாலவை இழப்பினும் பின் பயக்கும் - நல்ல செயல்கள் முதலில் இழப்பைத் தரினும் பின்பு நன்மை பயக்கும். நேர்மையான செயல்களால் மிகுந்த பொருள் கிடைக்கா விட்டாலும், பின்னர் அந்நேர்மையால் எல்லாக் காரியமும் முடியு மாகையால் 'நற்பாலவை இழப்பினும் பின் பயக்கும்' என்றார் இழப்பைத் தருதல் - உழைப்புக்கேற்ற ஊதியம் பெறாமை. (9) 690. சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கலத்துணீர் பெய்திரீஇ யற்று. சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் - தீய செயல்களால் பொருள் தேடி அதைக்கொண்டு ஒருவன் தனக்குப் பாதுகாப்புச் செய்துகொள்ளல், பசுமண் கலத்துள் நீர் பெய்து இரீஇயற்று - பச்சை மண்ணாலாகிய கலத்தினுள் நீரை ஊற்றிக் காத்தலோடொக்கும். சலம் - வஞ்சனை என்றுமாம். பசு மட்கலம் - சுடாத மட்கலம். பச்சை மண் பாண்டத்தில் நீரை ஊற்றிவைத்தால் நீர் நில்லாததோடு அப்பாண்டமும் அழிந்து போவதுபோல், தீய செயல்களால் தேடிய பொருள் அழிவதோடு அவனும் கெடுவான் என்பதாம். ஏமம் ஆர்த்தல் என்பது, குறைந்து நின்றது. ஏமம் - காவல். ஆர்த்தல் - செய்தல். (10) 70. வினைத்திட்பம் செயல் முடிப்பதற்கான மன உறுதி. 691. வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்பம் மற்றைய வெல்லாம் பிற. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - மேற் கொண்ட செயலைத் தப்பாமல் முடித்தற்குரிய வன்மை என்பது ஒருவனது மன வன்மையேயாகும்; மற்றைய எல்லாம் பிற - மன வன்மை யொழிந்தனவெல்லாம் அவ்வினை முடித்தற்குரிய வன்மையாகா. திட்பம் - திண்மை, வன்மை, உறுதி. ஒழிந்தன - படை, பொருள், நட்பு முதலியவற்றின் வன்மை. மனத் திட்பமே வினைத் திட்பமாகும். (1) 692. ஊறொரா லுற்றபி னொல்காமை யிவ்விரண்டின் ஆறென்ப ராய்ந்தவர் கோள். ஆய்ந்தவர் கோள் - நூல்களை ஆராய்ந்தறிந்த அறிவுடை யோர் கொள்கையாவது, ஊறு ஒரால் - தீய காரியங்களைச் செய்யா மையும், உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறு என்பர் - மேற் கொண்ட செயல் பழுதுபட்டால் அதற்கு மனந்தளராமையும் ஆகிய இவ்விரண்டின் வழியாகுமென்பர் அறிவோர். ஊறு - தீமை. ஓரால் - ஒருவுதல், நீக்குதல். பழுது படல் - முடியாது போதல். தீயசெயல்களைச் செய்யாமல் நீக்குதலும் மேற்கொண்ட செயல் முடியா விட்டால் மனந்தளராமையும் அறிவுடையோர் கொள்கையாகும். 'ஊறொரால்' என வினைத் தூய்மையும் உடன் கூறினார். (2) 693. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும். கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை - செய்யுந் தொழிலை முடிவில் வெளிப்படும்படி முன்பெல்லாம் மறைவாகச் செய்வதே ஆண்மையாகும்; இடைக் கொட்கின் எற்றா விழுமம் தரும் - இடையே அச்செயல் வெளிப்படு மாயின் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். கொட்குதல் - வெளிப்படுதல், பிறர்க்குத் தெரிதல். ஒரு தொழில் முடியும் வரை பிறருக்குத் தெரியாமல் மறைவாகச் செய்யவேண்டும். இடையில் தெரிந்தால் அத்தொழில் முடியா மலும், துணை செய்வாரை உதவாமலும் செய்வர். மறைத்துச் செய்வ தாவது - சொல், செயல், குறிப்பு முதலியவற்றால் பிறரறியாமல் செய்தல். (3) 694. சொல்லுதல் யார்க்கும் மெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல். சொல்லுதல் யார்க்கும் எளிய - யாம் இத்தொழிலை இவ்வாறு செய்வோம் என்று சொல்லுதல் எவருக்கும் எளியவாகும், சொல்லிய வண்ணம் செயல் அரியவாம் - சொன்ன படி செய்தல் எவருக்கும் அரியவாகும். (4) 695. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி யுள்ளப் படும். வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம் - எண்ணத்தால் சிறப் பெய்தி வினைசெய்தற் குரிய பிற இலக்கணங்களாலும் மாட்சிமைப் பட்டவர்களது வினைத்திட்பமானது, வேந்தன் கண் ஊறு எய்தி உள்ளப்படும் - வேந்தனிடத்தில் உறுதலைச் செய்தலான் எல்லா ராலும் நன்கு மதிக்கப்படும். எண்ணத்தில் சிறப்பெய்தல் - நன்கு எண்ணியறிதல். பிற இலக்கணம் - அடுத்து அதிகாரமான வினைசெயல் வகையில் சொல்லப்படுவனவும் பிறவும். ஊறு - உறுதல். முதனிலைத் திரிந்த தொழிற் பெயர். வேந்தன்கண் ஊறு எய்தல் - மேற்கொண்ட வினை அத்திட்பத்தால் முற்றுப் பெற்றுச் செல்வமும் புகழும் அரசனைச் சேர்தல். அது கண்ட மக்கள் அத்தொழில் முடித்தானை நன்கு மதித்தல். (5) 696. எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார் திண்ணிய ராகப் பெறின். எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் - வினை செய்ய எண்ணியவர் வினைத்திட்பம் உடையவரானால், எண்ணிய எண்ணியாங்கு எய்துப - எண்ணிய பொருளை எண்ணிய படியே அடைவர். எளிதின் எய்துவர் என்பதாம். (6) 697. உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னா ருடைத்து. உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து - உருளு கின்ற பெரிய தேருக்கு அமைந்த சிறிய அச்சாணிபோல உருவிற் சிறியராய்க் காரிய முடித்தலில் மிக்க வன்மை உடைய வர்களை உலகம் உடையது, உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - ஆகையால், அவர்களது வடிவத்தைக் கண்டு அவர்களை இகழா திருக்க வேண்டும். அச்சாணி - கடையாணி. அச்சாணி வடிவால் சிறிதா யிருந்தும் பெரிய தேரோட உறுதியுடையதா யிருப்பது போல, வடிவால் சிறியோரும் பெரிய வினையை முடிக்கும் திட்ப முடையராவர் என்பதாம். (7) 698. கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது தூக்கங் கடிந்து செயல். கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தெளிந்து செய்யத் துணிந்த தொழிலினிடத்து, துளங்காது தூக்கம் கடிந்து செயல் - மனந்தளராமல் தாழ்ச்சியின்றிச் செய்ய வேண்டும். நன்கு எண்ணிச் செய்யத் துணிந்த வினையைத் தளர்ச்சியும் தாழ்ச்சியு மின்றிச் செய்யவேண்டும். தளர்ச்சி - வினை செய்யும் போது நேரும் துன்பத்தால் மனம் தளர்தல். (8) 699. துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி யின்பம் பயக்கும் வினை. துன்பம் உறவரினும் - முதலில் துன்பம் மிகுதியாக வரினும், இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க - முடிவில் இன்பந் தரக்கூடிய தொழிலை உறுதியுடையராய்ச் செய்க. முதலில் பெருந்துன்பந் தருமாயினும் முடிவில் இன்பந் தரும் வினையை மனவுறுதியுடன் செய்யவேண்டும். (9) 700. எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு. வினைத்திட்பம் வேண்டாரை - தொழில் வன்மையை விரும் பாதவரை, எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் - வேறு எல்லா வகைத் திண்மையும் பொருந்திய விடத்தும், உலகு வேண்டாது - உயர்ந்தோர் நன்கு மதிக்க மாட்டார். வேறு திண்மை - படை, அரண் முதலியவற்றின் திண்மை. வினைத்திட்பத்தை விரும்பாதவர் எனைத்திட்ப முடையராயினும் உலகம் அவரை மதியாது. (10) 71. வினைசெயல்வகை வினையைச் செய்யும் வகை. 701. சூழ்ச்சி முடிவு துணிவெய்த லத்துணிவு தாழ்ச்சியுட் டங்குதல் தீது. சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் - ஆராய்ச்சியின் முடிவு தெளிவான உறுதியைப் பெறுவதாகும், அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது - அவ்வாறு உறுதிபெற்ற பின் காரியத்தைச் செய்யாமல் காலந் தாழ்த்துவது குற்றமாகும். தெளிவான உறுதி - ஐயமற்ற உறுதி. ஆராய்ந்து முடிவு செய்த காரியத்தை உடனடியாகச் செய்து முடிக்கவேண்டும். காலந் தாழ்த்துவது காலக்கழிவோடு, பகைவர் அறிந்து அழித்தற்கும் ஏதுவாகலான் தீது என்றார். (1) 702. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. தூங்கிச் செயற்பால தூங்குக - நீட்டித்துச் செய்ய வேண்டிய செயல்களை நீட்டித்துச் செய்க, தூங்காது செய்யும் வினை தூங்கற்க - நீட்டியாது செய்யும் செயல்களை விரைவில் செய்க. தூங்குதல் - நீட்டித்தல், காலந்தாழ்த்தல். வலியும் காலமும் ஒத்தலும் ஒவ்வாமையுமே நீட்டாமைக்கும் நீட்டித்தலுக்கும் காரணங்களாகும். (2) 703. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே யொல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல். ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்று - இயலும் இடத் தெல்லாம் வினை செய்தல் நல்லது; ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல் - இயலாத இடத்து அது முடியும் இடம் பார்த்துச் செய்க. இயலுமிடம் - காரியம் எளிதில் கைகூடுங்காலம். இயலாத இடம் - காரிய முடிக்கும் வலியில்லாத காலம். முடியும் இடம் - காரியம் முடியும் வழி. காரியம் எளிதில் கைகூடும் காலத்து முடிக்கும் வழியை ஆராய்ந்து பார்த்துச் செய்து முடிக்க வேண்டும். (3) 704. வினைபகை யென்றிரண்டி னெச்சம் நினையுங்காற் றீயெச்சம் போலத் தெறும். வினை பகை என்று இரண்டின் எச்சம் - செய்யத் தொடங்கிய வினையும், களையத் தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது மிச்சமும், நினையுங்கால் தீ எச்சம் போலத் தெறும் - ஆராயுங்கால் அவித்தபின் அவியாதிருந்த நெருப்பின் குறையைப் போல வளர்ந்து கெடுக்கும். குறை - செய்யாமல் விட்ட மிச்சம். வினையை முடியாதும் பகையை வெல்லாதும் குறையாக விடுதல் கூடாது. 612 குறளுரை பார்க்க. களை களையும்போது நன்றாகக் களையாது விட்டால் விட்ட புற்கள் வளர்ந்து பயிரைக் கெடுத்தல் இதற்குக் காட்டாகும். (4) 705. பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும் இருடீர வெண்ணிச் செயல். பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் - வினை செய்யும்போது, பொருளும் கருவியும் காலமும் வினையும் இடமும் ஆகிய இவ்வைந்தையும், இருள்தீர எண்ணிச் செயல் - ஐயந்தீர எண்ணிச் செய்ய வேண்டும். பொருள் - அழியும் பொருளும் ஆகும் பொருளும். கருவி - தன்படையும் மாற்றார் படையும். காலம் - தனக் காகுங் காலமும் அவர்க்காகுங் காலமும். வினை - தான் வினைவல்லனாதலும் அவர் வினைவல்ல ராதலும். இடம் - தான் வெல்லுமிடமும் அவர் வெல்லு மிடமும். இவ்வைந்தையும் தான் வெற்றிபெறும் வகையில் நன்கு எண்ணிச் செய்யவேண்டும். (5) 706. முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும் படுபயனும் பார்த்துச் செயல். முடிவும் - வினை செய்யுங்கால் அது முடிதற்கு வேண்டிய முயற்சியும், இடையூறும் - அவ்வினை முடிவிற்கு வரும் இடை யூறும், முற்றியாங்கு எய்தும் படுபயனும் - அவ்விடையூறு நீங்கி வினை முடிந்தால் எய்தும் பெரும் பயனும், பார்த்துச் செயல் - எண்ணிப் பார்த்துச் செய்ய வேண்டும். முயற்சி இடையூறுகளைவிடப் பயன் பெரிதாயின் செய்ய வேண்டும். (6) 707. செய்வினை செய்வான் செயன்முறை யவ்வினை யுள்ளறிவா னுள்ளங் கொளல் செய்வினை செய்வான் செயல்முறை - செய்யப்படும் வினையைச் செய்யத் தொடங்கினவன் செய்யும் முறையாவது, அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல் - அத்தகைய வினை செய்வதன் பழக்கத்தைத் தானறிந்து செய்வதே யாகும். உள் அறிவான் - முன் செய்து பழக்கமுள்ளவன். உள்ளம் - பழக்கம். அவன் பழக்கத்தை யறியவே தானும் அவ்வாறு பயன் அடைவான். (7) 708. வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று. வினையான் வினை ஆக்கிக் கோடல் - செய்கின்ற வினையி னாலே மற்றோர் வினையை முடித்துக் கொள்க, நனைகவுள் யானையால் யானை யாத்தற்று - அவ்வாறு செய்தல், வெறி நீரால் நனைந்த கன்னத்தினையுடைய யானையாலே மற்றொரு யானையைக் கட்டியது போலாகும். செய்கின்ற வினையால் வேறொரு வினையை முடித்தற்கு வழிகாணின், அவ்வாறே பல வினையும் எளிதில் முடியும். ஒரு வினையின் பழக்கமே மற்ற வினைகள் செய்வதற்குப் பயன்படும் என்பதாம். (8) 709. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை யொட்டிக் கொளல். நட்டார்க்கு நல்ல செயலின் - நண்பர்க்கு நல்லவை செய்வதைக் காட்டிலும், ஒட்டாரை ஒட்டிக் கொளல் விரைந்ததே - பகைவர்க்குப் பகைவரை நண்பராக்கிக் கொள்ளுதல் விரைந்து செய்யத்தக்கதாகும். வினை செய்யுந் திறமாகலின் ஒட்டார் - பகைவர்க்குப் பகை வராயினார். நண்பர்க்கு நல்ல செய்வதினும் பகைவர்க்குப் பகைவரை நண்பராக்கிக் கொள்ளுதல் இன்றியமையாத தாகையால், விரைந்து செய்யவேண்டியதாயிற்று. (9) 710. உறைசிறியா ருண்ணடுங்க லஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து. உறை சிறியார் - ஆளுமிடம் சிறிதாக உள்ளவர், உள் நடுங்கல் அஞ்சி - தம்மினும் வலியார் எதிர்த்த போது, தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி, குறைபெறின் - தாம் எண்ணியபடி உடன்பாடு செய்து கொள்ள இசைவாரானால், பெரியார்ப் பணிந்து கொள்வர் - அவ் வலியாரைப் பணிந்து கொள்வர். உள் - தந்நாட்டாகத்துள்ளார். வலியாரோடு எதிர்த்து அழிவதைவிட உடன்பாடு செய்து கொள்ளுதலே முறையாகும். (10) 72. தூது அயல் வேந்தரிடம் தூது செல்வார் தன்மை. பொது மக்களுக்கும் கொள்க. 711. அன்புடைமை யான்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. அன்பு உடைமை - தம்மவரிடத்து அன்புடையவனா யிருத்தலும், ஆன்ற குடிப்பிறத்தல் - சிறந்த நற்குடியில் பிறத்தலும், வேந்து அவாம் பண்பு உடைமை - அரசன் விரும்பும் குணம் உடையவனா யிருத்தலும், தூது உரைப்பான் பண்பு - இவை மூன்றும் தூதுரைப்பவனது இலக்கணமாகும். நற்குடி - வழி வழியாக வந்த குடி. (1) 712. அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க் கின்றி யமையாத மூன்று. அன்பு - தம்மரசனிடத்து அன்புடைமையும், அறிவு - ஆவன அறியுமறிவும், ஆராய்ந்த சொல்வன்மை - ஆராய்ந்து சொல்லும் சொல்வன்மையும் என, தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று - தூதுரைப்பார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்றாகும். (2) 713. நூலாருள் நூல்வல்லா னாகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு. வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - வேலை யுடைய வேற்றரசரிடைச் சென்று தன்னரசனுக்கு வெற்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது, நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் - அறநூலை அறிந்தவர் களுள் தான் அந்நூலில் வல்லவனாதல். அற நூலில் மிகுந்த பயிற்சியுடையவனாதல் தூதுவன் இலக்கணமாகும். (3) 714. அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. அறிவு - இயற்கையறிவும், உருவு - கண்டார் விரும்பும் தோற்றப் பொலிவும், ஆராய்ந்த கல்வி - பலரோடும் பலகாலும் ஆராய்ந்து கற்ற கல்வியுமென, இம்மூன்றன் செறிவு உடையான் வினைக்குச் செல்க - இம்மூன்றும் நன்கு அமையப்பெற்றவனே வேற்று வேந்தரிடம் தூது செல்க. இயற்கையறிவு - பகுத்தறிவு. அறிவு, உருவு, கல்வி மூன்றும் அமையப் பெற்றவனே தூது போகத் தக்கவனாவன். (4) 715. தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது. தொகச் சொல்லி - சுருங்கச் சொல்லியும், தூவாத நீக்கி நகச் சொல்லி - கடுஞ் சொற்களை விலக்கி இனிய சொற்களால் கேட்போர் மனமகிழச் சொல்லியும், நன்றி பயப்பது தூதாம் - தன்னரசனுக்கு நன்மையை உண்டாக்குபவனே தூதனாவான். சுருக்கமாக, கடுஞ்சொல்லின்றி, இனிமையாக, கேட்பவர் மகிழும்படி. சொல் உடன்பாடு செய்பவனே தூதனாவான். (5) 716. கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தாற் றக்க தறிவதாந் தூது. கற்று - அற நூல்களைக் கற்று, செலச்சொல்லி - பகைவர் மனங்கொள்ளும்படி சொல்லி, கண் அஞ்சான் - பகைவர் சினந்து பார்த்தால் அப்பார்வைக்கு அஞ்சாது, காலத்தால் தக்கது அறிவது தூதாம் - காலத்தோடு பொருந்த அவ்வினை முடிக்கத் தக்க வழியறிபவனே தூதனாவான். காலத்தோடு பொருந்துதல் - ஏற்ற காலமறிந்து சொல்லுதல். காலம் - செவ்வி. செலச்சொல்லல் - ஏற்றுக் கொள்ளும் படி சொல்லுதல். (6) 717. கடனறிந்து காலங் கருதி யிடனறிந் தெண்ணி யுரைப்பான் றலை. கடன் அறிந்து - வேற்றரசரிடம் தான் நடந்துகொள்ளு முறை யறிந்து, காலம் கருதி - அவர் செவ்வி பார்த்து, இடம் அறிந்து - சொல்லுதற் கேற்ற இடம் அறிந்து, எண்ணி உரைப்பான் தலை - சொல்லவேண்டியதை ஆராய்ந்து சொல்வான் தூதரில் சிறந்தவ னாவான். வேற்றரசரிடம் நடந்து கொள்ளும் முறையையும் காலத்தையும் இடத்தையும் அறிந்து ஆராய்ந்து சொல்பவனே தூதரில் மிக்கானாவான். (7) 718 தூய்மை துணைமை துணிவுடைமை யிம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு. தூய்மை - மனத்தூய்மையும், துணைமை - அவ்வேற்று வேந் தரது அமைச்சர் துணையும், துணிவுடைமை - அஞ்சாத மன வுறுதியும், இம்மூன்றின் வாய்மை - ஆகிய இம்மூன்றையும் உண்மையாக உடைமை, வழியுரைப்பான் பண்பு - தூதுவன் இலக்கணமாகும். தன்னரசனைப் புகழ்ந்து கூறும்போது பகைவர் வெகுளின், இது தூதர் கடமையெனக் கூறி அவர் வெகுளி நீக்குதற்காக அவரமைச்சர் துணைவேண்டும். வழியுரைப்பான் - தூதன். (8) 719. விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன். வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் - தனக்கு வருந் துன்பத்திற் கஞ்சித் தன்னரசனுக்கு இழிவைத் தரும் சொற்களைத் தவறியும் சொல்லாத திண்மையுடையவனே, விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் - தன்னரசன் சொல்லி விட்ட சொல்லை வேற்றரசனுக்குச் சென்று உரைப்பவனாவான். வடு - இழிவு. விடுமாற்றம் - இறந்த கால வினைத்தொகை. விடுமாற்றம். சொல்லிவிட்ட சொல். மாற்றம் - சொல். பகைவரால் தனக்கு வரும் துன்பத்திற் கஞ்சித் தவறியும் தன்னரசனுக்குப் பழி யுண்டாகுமாறு பேசாதவனே தூதனாவான். (9) 720 இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற் குறுதி பயப்பதாந் தூது. இறுதி பயப்பினும் எஞ்சாது - தான் சொல்லும் சொல் தன்னுயிர்க்கு முடிவைத் தருமாயினும் அதற்கஞ்சிச் சொல்லுதல் ஒழியாது, இறைவற்கு உறுதி பயப்பது தூதாம் - தன்னரசனுக்கு நன்மையைத் தரும் சொற்களைச் சொல் பவனே தூதனாவான். உறுதி பயப்பது - உறுதியைத் தரும் சொற்களைச் சொல்வது. உறுதி - நன்மை. தான் சொல்கின்ற சொல்லால் பகைவர் வெகுண்டு கொல்லத்துணிவாரெனத் தெரியினும் அஞ்சாது சொல்பவனே தூதனாவான். (10) 73 மன்னரைச் சேர்ந்தொழுகல் அரசரோடு பழகுதல். அரசியல் தலைவர்களைச் சேர்ந் தொழுகுதலுங் கொள்க. 721 அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் - இகலும் அரசரைச் சேர்ந்து வாழ்பவர், அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க - அவரை மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் தீக்காய்வார் போல இருக்க வேண்டும். இகல்வேந்தர் - விரைவில் வெகுளுந் தன்மையுடைய அரசர். இகல் - பகைமைக்குணம். மிக அகன்றால் பயன் கொடாது, மிக அணுகினால் மதியாமை பற்றித் தண்டிக்கும் வேந்தர்க்கு, மிக அகன்றால் குளிர் நீக்காது மிக அணுகினால் சுடுவதாய தீ தொழிலுவமம். தீக்காய்தல் - குளிர் காய்தல். (1) 722. மன்னர் விழைப விழையாமை மன்னரான் மன்னிய வாக்கந் தரும். மன்னர் விழைப விழைhயாமை - மன்னர் விரும்புவன வற்றைத் தாம் விரும்பாதிருத்தல், மன்னரால் மன்னிய ஆக்கம் தரும் - அம் மன்னராலேயே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும். தாம் விரும்புவனவற்றை விரும்பாமைக்கு மகிழ்ந்து அம் மன்னரே எல்லாச் செல்வமும் தருவர் என்பதாம். (2) 723. போற்றி னரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கு மரிது. மன்னரைச் சேர்ந்தொழுகுவார், போற்றின் அரியவை போற்றல் - தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தம்மிடம் வராமல் காக்கக் கடவர், கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது - அரிய பிழைகள் செய்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் எவராலும் முடியாது. அரிய பிழைகளாவன - பகைவரோடு சேர்தல், அரும் பொருள் கொள்ளல் முதலாயின. காத்தலாவது - ஒருவன் சொன்னால் அரசன் அதை நம்பாமலிருக்கும்படி நடந்து கொள்ளுதல். ஒருவாறு தெளிவித்தாலும் கண்டபோதெல்லாம் அந்நினைவு வருமாதலின் யார்க்கும் அரிது' என்றார். (3) 724. செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையு மவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து. ஆன்ற பெரியார் அகத்து - சிறந்த அரசர் பக்கத்திலிருந் தால், செவிச் சொல்லும சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் - அவர் காண ஒருவன் காதின்கண் சொல்லுதலையும், ஒருவன் முகம் நோக்கிச் சிரிப்பதையும் ஒழித்து நடக்க வேண்டும். அவை செய்யின், அரசர் தங்குற்றங் கண்டு அவை செய்தன வாகக் கருதுவ ரென்பதாம். (4) 725. எப்பொருளு மோரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்காற் கேட்க மறை. மறை - அரசன் பிறரோடு மறைவாகப் பேசிக் கொண்டி ருக்கும் போது, எப்பொருளும் ஓரார் - யாதொரு பொருளையும் செவி கொடுத்துக் கேளாமலும், தொடரார் - அவனை விரைந்து வினவாமலும். அப்பொருளை விட்டக் கால் கேட்க - அப் பொருளை அவனே சொன்னால் மட்டும் கேட்கக் கடவர். செவி கொடுத்துக் கேட்டால் ஐயுறுவான். வினாவினால் வெகுளுவான். இது அரசன் ஒருவரோடு மறை (இரகசியம்) பேசும் போது நடந்து கொள்ளும் முறை. (5) 726. குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல். குறிப்பு அறிந்து - அரசன் குறிப்பை யறிந்து, காலம் கருதி - ஏற்ற காலத்தையும் நோக்கி, வெறுப்பு இல வேண்டுப வேட்பச் சொலல் - வெறுப்பில்லாதவைகளும் விரும்பப்படு பவைகளு மாகிய செயல்களை அவன் விரும்புமாறு சொல்லக் கடவர். வேட்பச் சொலல் - சுருக்கமாய் விளக்கமாய் இனிமை யாய்ச் சொல்லுதல். (6) 727. வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றுங் கேட்பினுஞ் சொல்லா விடல். வேட்பன சொல்லி - அரசன் விரும்பப்படுவனவற்றைச் சொல்லி, எஞ்ஞான்று வினைஇல கேட்பினும் சொல்லா விடல் - எப்போதும் பயனில்லாதவற்றை அரசனே கேட்டாலும் சொல்லாது விட வேண்டும். வினை - பயன். (7) 728. இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற ஒளியோ டொழுகப் படும். இளையர் இனமுறையர் என்று இகழார் - இவர் எம்மினும் இளையவரென்றும், எமக்கின்ன முறையினை யுடையவரென்றும் அரசரை இகழாமல், நின்ற ஒளியோடு ஒழுகப்படும் - நிலைபெற்ற தலைமையோடு பொருந்த நடந்து கொள்ள வேண்டும். அரசர் இளையராகவும், இளைய முறையுடையராகவும் இருந்தாலும் அரசன் என்னும் தலைமைக்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். ஒளி - அரசர் தூங்கினும் இவ்வுலகங் காக்கும் அவர் தலைமைத் தன்மை. இளையமுறை - தம்பி போன்ற முறை. தலைவர்களிடமும் அதிகாரிகளிடமும் இவ்வாறே நடந்து கொள்ள வேண்டும். (8) 729. கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர். கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார் - அரசனால் யாம் நன்கு மதிக்கப்பட்டோம் என்று நினைத்து அவன் விரும்பாதவைகளைச் செய்யமாட்டார், துளக்கு அற்ற காட்சியவர் - அசைவற்ற அறிவினையுடையவர். (9) 730. பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங் கெழுதகைமை கேடு தரும். பழையம் எனக் கருதி - அரசனுக்கு யாம் பழைய நண்பர் என்று எண்ணி, பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை - தமக்கு இயல்பல்லாதவை செய்யும் உரிமையானது, கேடு தரும் - கெடுதியைத் தரும். தகாதன செய்தால் பழமை நோக்கிக் கண்ணோடாது தண் டிப்பான் என்பது கருத்து. கெழுதகைமை - உரிமை. (10) அமைச்சியல் முற்றிற்று 3. கூழியல் (1) கூழ் - உணவு. இங்கு உணவுப் பொருள் முதலிய விளை பொருள்களைக் குறிக்கும். 'தள்ளா விளையுளையுடையதே நன் னாடாகையால்' (731), நாட்டை விளைபொருளின் பேரால் 'கூழ்' (381) என்றார். கூழியல் - நாட்டியல்; நாட்டின் இலக்கணம். 74. நாடு நன்னாட்டின் சிறப்புக் கூறுதல். நன்னாட்டின் சிறப்புணர்ந்து அவ்வாறு நாட்டைச் சிறப்புறச் செய்தல் இதன் பயன். 731. தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு. தள்ளா விளையுளும் - தப்பாது விளையும் விளை நிலங்களும், தக்காரும் - பொதுநலம் புரியும் சான்றோர் களும், தாழ்வு இலாச் செல்வரும் - குறையாத செல்வமுடை யோரும், சேர்வது நாடு - ஒன்று சேர்ந்ததே நாடாகும். தள்ளாத விளையுள் - எல்லா வகை யுணவுப் பொருள்களும் போட்டது போட்டபடி நிறைய விளையும் நிலம். தள்ளா - தள்ளாத. தாழ்விலாச் செல்வர் - கொடுக்கக் கொடுக்கக் குறையாத வருவாயை யுடைய செல்வர். நாடு குறைவின்றி விளைந்தாலும் நாட்டு மக்க ளுக்கு நல்லுரை கூறத் தக்காரும், பொது நலச் செலவு செய்யப் பெருஞ் செல்வரும் வேண்டும். (1) 732. பெரும்பொருளாற் பெட்டக்க தாகி யருங்கேட்டா லாற்ற விளைவது நாடு. பெரும் பொருளால் பெட்டக்கது ஆகி - நெல் விளைவால் விரும்பத்தக்கதாகி, அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு - கேடின்மையுடன் கூடி மிகுதியாக விளைவதே நாடாகும். பெட்டக்கது - விரும்பத்தக்கது. பெட்பு - விருப்பம். கேடா வது - மிக்க மழை, மழையின்மை, புழுப்பூச்சி, பயிர் நோய் முதலியன. பெரும் பொருள் - நெல். கம்பு, சோளம் முதலிய தவசங்களைச் சிறுதவசம் என்னும் வழக்கால், நெல் 'பெரும் பொருள்' எனப் பட்டது. வயல் சூழ்ந்த இடங்களில் வாழவே மக்கள் விரும்புதல் இயல்பு. "அலகுடை நீழலவர்" (1034) என்பதன் உரை பார்க்க. கம்பு மிகுதியாக விளையும் மேட்டுக் காட்டுப் பக்கங்களில் கம்பைப் பெரிய வேளாண்மை என்பர். நெல்லோடு மற்றத் தவசங்களும் கேடின்றி மிகுதியாக விளைவதே நாடாகும். (2) 733. பொறையொருங்கு மேல்வருங்காற் றாங்கி யிறைவற் கிறையொருங்கு நேர்வது நாடு. பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி - இறையல்லாத அரசியற் செலவு பல ஒருங்கே தன்னிடத்து வருங்கால் அவற்றைத் தாங்கி, இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு - அதோடு தன் அரசற்கு இறைப்பொருள் முழுவதையும் கொடுக்கும் ஆற்றலு டையதே நாடாகும். பொறை - சுமை. அயல் நாட்டோடு நடக்கும் போர்ச் செலவுக்கோ, நாட்டின் ஒரு பகுதியில் உண்டாகிய பஞ்ச நீக்கத் திற்கோ, அணைக்கட்டு முதலிய நாட்டுச் செலவுகளுக்கோ குடி களிடம் வாங்கும் வரி. இறை - நிலவரி முதலிய அரசிறை. இவ்வாறு பலமுறை அடுத்தடுத்துக் கொடுக்க நேரினும் கொடுத்து, முறை யாகக் கொடுக்கும் வரியையும் கொடுக்க வல்லதே நாடாகும். அத்தகைய மக்களையுடைய நாடென்பதாம். (3) 734. உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ் சேரா தியல்வது நாடு. உறுபசியும் - மிக்க பசியும், ஓவாப் பிணியும் - நீங்காத நோயும், செறுபகையும் சேராது - அயல் நாட்டிலிருந்து வந்து அழிவு செய்யும் பகையும் இன்றி, இயல்வது நாடு - அமைந்ததே நாடாகும். நீங்காத நோய் - தொத்து நோய்கள். நல்ல காற்றும், ஏற்ற தட்ப வெப்ப நிலையும், பழுதுபடாத உணவுப் பண்டங்களும் உண்மை யால் நோய் சேராதாயிற்று. அரசனது ஆற்றலும், நிலைப்படையும், அரணும் உடைமையால் செறுபகை இல்லாத தாயிற்று. (4) 735. பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங் கொல்குறும்பு மில்லது நாடு. பல்குழுவும் - மாறுபட்ட பல கூட்டமும், பாழ் செய்யும் உட்பகையும் - உடனுறைந்தே கெடுக்கும் உட்பகையும், வேந்து அலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு - அரசனை வருத்து கின்ற கொலைத்தொழிலையுடைய சிற்றரசும் இல்லாததே நாடாகும். பல்குழு - செல்வாக்குள்ள சிலர், தங்கள் தலைமையின் கீழ் ஊர் மக்களை வெவ்வேறாகப் பிரித்து வைத்து ஊரைக் கெடுக்கும் ஊர்க்கட்சிகள். இவை இன்னும் பெரும்பாலும் எல்லா ஊர் களிலும் இருத்தலை அறிக. இவை இன்றுள்ள அரசியல் வகுப்புக் கட்சிகள் போல நாட்டுக்குக் கேடு சூழ்வன. உட்பகை - வழி பறிப்போர், திருடர் முதலியோர். சிற்றரசுகள் - தங்களுக்குள் போரிட்டும், பலர் கூடிப் பேரரசை எதிர்த்தும் அரசனுக்குத் துன்பந்தருதல். இவை மூன்றும் அரசனாலும், மக்களாலும் நீக்கப்பட்டு அமைதியாக உள்ளதே நாடாகும். (5) 736. கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் றலை. கேடு அறியா - பயிர்நோய் முதலியவற்றால் கெடுதலை அறியாததாய், கெட்டவிடத்தும் வளங்குன்றா நாடு - ஓரிரு போகம் கெட்டதாயினும் வளங்குன்றாத நாட்டினை, நாட்டின் தலை என்ப - எல்லா நாடுகளிலும் முதன்மையான நாடென்று சொல்லுவர் அறிவுடையோர். அறியாத, குன்றாத என்பன ஈறுகெட்டன. ஒரு கெடுதலு மின்றி விளையும் நாடே நன்னாடாகும். மழையின்மை, மிகு மழை, பயிர்நோய் முதலியவற்றால் ஒன்றல்லது இரண்டு போகம் விளைவு கெட நேரினும், அதனால் உணவுத் தட்டுதல் உண்டா காதபடி மிகுதியாக விளையும் நாடே சிறந்த நாடென்பார், 'கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடு நாட்டின் தலை' என்றார். (6) 737. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணு நாட்டிற் குறுப்பு. இருபுனலும் - மேல்நீரும் கீழ்நீரும் ஆகிய இரண்டு நீரும், வாய்ந்த மலையும் - பயன்படும் மலையும், வருபுனலும் - அம் மலையிலிருந்து வருகின்ற நீரும், வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு - வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புக் களாகும். மேல்நீர் - மழைநீர். கீழ்நீர் - கிணற்று நீர். கீழிருந்து ஊறி வருவதால் கீழ்நீர் எனப்பட்டது. வருபுனல் - ஆறு. மழை, கிணறு, மலை, அரண் என்னும் இவை ஐந்தும் பொருந்தியதே சிறந்த நாடாகும். மழைபொருந்தல் - பருவ மழை பெய்யும் வகையில் நாடு அமைந்திருத்தல். (7) 738. பிணியின்மை செல்வம் விளைவின்ப மேமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. பிணிஇன்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் இவ்வைந்து - நோயின்மையும் செல்வமும் விளைவும் இன்பமும் காவலுமாகிய இவ்வைந்தினையும், நாட்டிற்கு அணி என்ப - நாட்டிற்கு அழகு என்று சொல்வர் அறிவுடையோர். இவ்வாறு நாடு அழகுடன் அமைய வேண்டுமென்பது. இன்பம் - வறுமை பகை முதலிய துன்பமில்லாதது. (8) 739. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு. நாடா வளத்தன நாடு என்ப - வருந்தாமல் வளந்தரும் நாடுகளே நல்ல நாடுகள் என்று சொல்வர் அறிவுடையோர், நாட வளம் தரும் நாடு நாடு அல்ல - வருந்த வளந்தரும் நாடுகள் நாடுகளாக மாட்டா. நாடுதல் - வருந்தித் தேடுதல். வளம் - விளைவு. நிலவளமும் நீர்வளமும் பொருந்தி, கெடுதி இல்லாமல், தள்ளா விளைவு விளையும் நாடே அறிவுடையோர் விரும்பும் நாடாகையால், வருந்தித் தேடாமல் வளம் தரும் நாட்டை நல்ல நாடு என்றார். போகத்துக்குப் போகம் எருப்போட்டு வருந்த வளந் தருவதும் நீர் வளமற்றதுமான நாடு - நாட வளம் தரும் நாடு ஆகும். (9) 740. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. வேந்து அமைவு இல்லாத நாடு - அரசனோடு பொருந்தாத நாடானது, ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே - மேற்கூறிய இலக்கணங்களால் நிறைந்திருப் பினும் பயனுடைய தன்று. எல்லாச் சிறப்பும் பொருந்தியிருக்கினும் அரசனில்லாத நாடு நாடாகாது. (10) கூழியல் முற்றிற்று \ 4. அரணியல் (2) அரண் - காவல். அரண் இயல் - அரணினது இலக்கணம். அக மதில், இடைமதில், புறமதில் என்னும் மும்மதிலும், அம்மதில் சூழ்ந்த அகழும் பொருந்திய கோட்டையே அரசர்க்குச் சிறந்த அரணாகும். அரண்போலவே அரசுக்குக் காவலாய் அமைவதும் (751), பகைவரை அழிக்கும் கருவியும் (753, 759) பொருளே யாகையால், பொருளும் அரணில் அடங்கும். எனவே, அரண், பொருள் செயல்வகை இரண்டு அரணியலாயின. 75. அரண் அரணினது சிறப்புக் கூறுதல். அரணின் சிறப்பறிந்து வாழ் விடத்தை அரண் செய்து கொள்ளுதல் இதன் பயன். 741. ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். அரண் - கோட்டையானது, ஆற்றுபவர்க்கும் பொருள் - பகை மேற்செல்லும் வலியுடையார்க்கும் சிறந்தது, அஞ்சித் தன் போற்று பவர்க்கும் பொருள் - தம்மேல் வருவார்க்கு அஞ்சித் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள எண்ணுவார்க்கும் சிறந்தது. பகைமேற் செல்வோர் குடும்பம், பொருள் முதலிய வற்றைப் பாதுகாப்பில் வைத்துச் செல்ல வேண்டியிருப்பதால் அரண் பொரு ளாயிற்று. ஆற்றுபவர் - வலியுடையவர். தன்னைப் போற்றுபவர் - வலியிலார்; கோட்டைக் குள்ளிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்பவர். (1) 742. மணிநீரும் மண்ணும் மலையு மணிநிழற் காடு முடைய தரண். மணிநீரும் - மணி போன்ற நிறத்தினையுடைய தெளிந்த நீரும், மண்ணும் - நீரும் நிழலுமற்ற நிலமும், மலையும் - மலையும், அணி நிழல் காடும் உடையது அரண் - குளிர்ந்த நிழலையுடைய காடும் உடையது அரணாகும். மணிநீர் என்றது - எப்போதும் வற்றாத ஆழமான தெளிந்த அகழ் நிரை. அகழ் - மதிலைச் சுற்றியுள்ள கிடங்கு. மண் - நீரும் நிழலும் இல்லாத வெள்ளிடை நிலம். இது மரு நிலம் எனப்படும். இது பகைவர் மதிலை அணுகாமல் பார்த்துக் கொள்ள அகழிக்கு வெளியே உள்ள நிலம். அடர்ந்த காடு என்பார் 'அணிநிழல் காடு' என்றார். இது காவற்காடு எனப்படும். சில கோட்டைகளுக்குத்தான் மலையரண் அமையும். நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என்னும் இந்நான்கரணுஞ் சூழப்படுவது அரண் ஆகும். அரண் - கோட்டை. கோட்டையை - மதிலரண் எனலாம். (2) 743. உயர்வகலந் திண்மை யருமையிந் நான்கின் அமைவர ணென்றுரைக்கு நூல். உயர்வு அகலம் திண்மை அருமை இந்நான்கின் அமைவு - உயரமும் அகலமும் வலுவும் அருமையும் ஆகிய இந்நான்கும் அமையப் பெற்றது, அரண் என்று உரைக்கும் நூல் - மதில் என்று சொல்லுவர் நூலோர். உயரம் - ஏணிக்கு எட்டாத உயரம். அகலம் - பகைவரால் வெளியிலிருந்து துளைசெய்ய முடியாத அடியகலமும். அகத்தோர் நின்று போர் செய்யக் கூடிய முடியகலமும். திண்மை - கருங்கல்லாலும், செங்கல்லாலும் சுண்ணாம்பு முதலியன கலந்து கட்டப்பட்டதால் இடிக்க முடியாமை. திண்மை - கெட்டி. அருமை - பொறிகளும் கருவி களும் மறவருமுடைமை யால் அணுகுதற் கருமை. மதிலுறுப்புக் களையும் பொறிகளையும் கருவிகளையும் சிலப்பதிகாரம், அடைக்கலக் காதை 207 - 216 அடிகளிலும், இராவண காவியம், இலங்கைப் படலம் 129 - 148 செய்யுட்களிலும் காண்க. (3) 744. சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை ஊக்க மழிப்ப தரண். சிறுகாப்பின் பேர் இடத்தது ஆகி - காக்க வேண்டிய இடம் சிறியதாய் மதிலகம் பெரிய இடத்தை உடையதாய், உறுபகை ஊக்கம் அழிப்பது அரண் - மதில் முற்றிய பகைவரது ஊக்கத்தைக் கெடுப்பதே அரணாகும். சிறுகாவல் - வாயிலொழிந்த இடங்கள் ஓரிருபக்கம் மலையும், சுற்றிலும் நீரும், காடும் அமைந்திருத்தல். மதிலகம் - மதிலின் உட் புறம். தமது வலியைமட்டும் நோக்கி விரைவில் அழித்துவிடலா மென்று வரும் பகைவர் வந்து கண்டதும் அம்முயற்சி யொழிதலுக் கேற்ற வலிபொருந்திய அரண். (4) 745. கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார் நிலைக்கெளிதா நீர தரண். கொளற்கு அரிதாய் - புறத்தாரால் கைக்கொள்வதற்கு அரிதாய், கொண்ட கூழ்த்தாகி - அகத்தார்க்கு நெடுநாளைக்கு வேண்டிய உணவைத் தன்னகத்தே கொண்டதாய், அகத்தார் நிலைக்கு எளிதாம் நீரது அரண் - அகத்தாரது போர் நிலைக்கு எளிதாய தன்மையை உடையதே அரணாகும். புறத்தார் - மதில் முற்றுவோர். அகத்தார் - மதிலுக்குடை யோர். கொள்ளுதற் கருமை - கிடங்கு, காவற்காடு, பொறிகள், மதிலின் உயர அகல வலி இவற்றால் கொள்ளுதற்கரிதாதல். உணவில் நீரும் அடங்கும். நிலைக்கு எளிதாம் நீர்மையாவது - அகத்தார் விட்ட படைக்கல முதலியன புறத்தார் மேல் எளிதில் சேறலும், புறத்தார் விட்டவை அகத்தார் மேற் சேறாமையும், மதிலின் மேலிடம் பரப்புடையதும் முதலாயின. (5) 746. எல்லாப் பொருளு முடைத்தா யிடத்துதவு நல்லா ளுடைய தரண். எல்லாப் பொருளும் உடைத்தாய் - அகத்தார்க்கு வேண்டும் பொருள்களெல்லாவற்றையும் உள்ளே உடையதாய், இடத்து உதவும் நல்ஆள் உடையது அரண் - புறத்தோரால் மதில் அழிவெய்த நேரும்போது அழிவெய்தாமல் உதவிக் காக்கும் வல்ல வீரரையு முடையதே அரணாகும். மதில் முற்றுதலும் காத்தலும் உழிஞைத் திணை எனப்படும். அரசனிடத்தன்பும், நாட்டுப் பற்றும், மானமும், மறமும், சோர் வின்மையும் முதலிய நற்குணங்கள் உடைமை பற்றி 'நல்லாள்' என்றார். (6) 747. முற்றியு முற்றா தெறிந்து மறைப்படுத்தும் பற்றற் கரிய தரண். முற்றியும் - புகலொடு போக்கொழியும் வகை நெருக்க மாகச் சூழ்ந்தும், முற்றாது எறிந்தும் - அங்ஙனம் சூழாமல் தளர்ந்த இடம் பார்த்து ஒருமுகமாகப் பொருதும், அறைப் படுத்தும் - நம்பிக்கை யுடையோரை விட்டு அகத்தோர் மனத்தை மாற்றி வாயிற் கதவைத் திறப்பித்தும், பற்றற்கு அரியது அரண் - புறத்தோரால் கொள்ளுதற் கரியதே அரணாகும். புகலொடு போக்கொழிதல் - அகத்தோர் உள்ளே வரவும் வெளியே போகவும் முடியாதபடி முற்றுதல். இதனால் உணவுப் பொருள் முதலியன இல்லாக்குறை ஏற்படும். எல்லாப் பொருளும் உடைமையால் அக்குறை இல்லை. தளர்ந்த இடம் - அகத்தோர் எதிர் நிற்க முடியாது தளர்ச்சியுள்ள வாயில் வழி. முற்றாதெறி தலும், அறைப் படுத்தலும் நல்லாளுடைமையால் முடியாததாயின. அறைப் படுத்தல் - எதிரி படைஞரை வஞ்சித்துத் தம்மொடு சேர்த்துக் கொள்ளல்; தமக்கு உதவச் செய்தல். அறைபோதல் - பகைவரைச் சேறல். பீடணன் வரலாறு இதற்கு எடுத்துக் காட்டாகும். (7) 748. முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வ தரண். முற்று ஆற்றி முற்றியவரையும் - படைப்பெருமையால் மதிலை முற்றவல்லராய் வந்து முற்றிய புறத்தோரையும் பற்றியார் பற்றி ஆற்றி வெல்வது அரண் - தன்னைப் பற்றி நின்று காக்கவல்ல அகத்தோர் தாம் பற்றி நின்ற இடத்தை விட்டுப் பெயராமல் நின்று பொருது வெல்வதே அரணாகும். பற்று - ஆகுபெயராய்ப் பற்றி நின்ற இடத்தைக் குறித்தது. பற்று ஆற்றி - பற்றின்கண் ஆற்றி - பற்றி நின்ற இடத்தில் உறுதியாக நின்று. பெரும்படையானைச் சிறுபடையான் எதிர்த்து நிற்கும்படி அமைந்ததே யன்றி, வெல்லும்படியும் அமைந்ததே அரண் என்பதாம். (8) 749. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண். முனைமுகத்து மாற்றலர் சாய - போர் தொடங் கினவுடனே பகைவர் மனந்தளர்ந்து ஓடும்படி, வினைமுகத்து வீறு எய்தி அகத்தோர் செய்யும் வினைவேறுபாடுகளால் சிறப்புற்று, மாண்டது அரண் - மற்றும் வேண்டிய மாட்சி யுடையதே அரணாகும். தொடக்கத்தில் எதிர் நிற்க முடியாது மனமுடைந்தோடி னோர் பின்னும் வந்து பொருதல் கூடாமையால் 'முனை முகத்துச் சாய' என்றார். சாய்தல் - தோற்றோடுதல். வினை வேறுபாடு களாவன - பகைவர் தொடங்கிய போரின் வகையை அறிந்து எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல் முதலிய வினைகளில் பகைவர் தொடங்கிய போரைத் தோற்கடிக்கக் கூடியன செய்தல். மற்றும் வேண்டிய மாட்சி - புறத் தோரறியாமல் புகுதற்கும் போதற்குமுரிய சுருங்கை வழி முதலாயினவுடையதால். (9) 750. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி யில்லார்க ணில்ல தரண். எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் - எவ்வளவு பெருமை யுடைய தாகிய விடத்தும், வினைமாட்சி இல்லார் கண் அரண் இல்லது - செயலாற்றும் திறமை இல்லாதாரிடம் அவ்வரண் இல்லா ததாகும். பகைவரால் கொள்ளப்படும். எவ்வளவு சிறந்த காவலையுடையதாயினும் செய லாற்றுந் திறமை யில்லாதார்க்கு அதனால் பயனில்லை என்பதாம். (10) 76. பொருள்செயல்வகை பொருளைத் தேடும்வகை; பொருளின் சிறப்பு. 751. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருள் அல்லது - ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் மதிக்கப் படுவாராகச் செய்யவல்ல பொருளை யல்லது, பொருள் இல்லை - சிறந்த பொருள் வேறு இல்லை. மதிக்கப்படார் - அறிவில்லாரும், நல்லொழுக்க மில்லாரும். பொருளுடையாரை யாவரும் மதிப்பர். (1) 752. இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை எல்லாருஞ் செய்வர் சிறப்பு. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - நல்லோராயினும் பொரு ளில்லாதவரை எல்லோரும் இகழ்வார்கள்; செல்வரை எல்லாம் சிறப்புச் செய்வர் - தீயோராயினும் பொருளுடைய வரை எல்லோரும் போற்றுவார்கள். (2) 753. பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. பொருள் என்னும் பொய்யா விளக்கம் - பொருள் என்னும் அணையா விளக்கு, எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும் - தன்னை யுடையார் நினைத்த இடத்தில் சென்று பகையென்னும் இருளைக் கெடுக்கும். பகையை இருள் என்னாததால், இது ஒருகூற்றுருவகம். ஏனை விளக்கு இருந்த இடத்தில்தான் இருளறுக்கும். இது எண்ணிய இடத்தில் சென்று இருளறுப்பதால் அதை விட இது சிறந்த தாயிற்று. பகை கெடுக்கவும் பொருள் வேண்டும். (3) 754. அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். திறன் - அறிந்து, தீது இன்றி வந்த பொருள் - செய்யுந் திறத் தினையறிந்து பிறருக்குத் தீமை பயத்தல் இன்றி வந்த பொருளானது, அறன் ஈனும் இன்பமும் ஈனும் - அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையுங் கொடுக்கும். திறன் - பொருள் செய்யும் வகை. நல்லன பல செய்யவும் புகழீட்டவும் கூடலின் அறனீனும் என்றும், நெடுங்காலம் நின்று துய்க்கப்படுதலின் இன்பமும் ஈனுமென்றுங் கூறினார். குறள் 760 பார்க்க. 'அழக்கொண்ட வெல்லாம் அழப்போம்' (689) ஆகையால், தீதின்றி வந்த பொருள் என்றார். (4) 755. அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் - தம் குடிகளிடம் செலுத்தும் அருளுடனும் அவர் தம்மிடம் செலுத்தும் அன்புடனும் வாராத பொருளீட்டத்தை, புல்லார் புரளவிடல் - அரசர் பொருந்தாது போகவிட வேண்டும். குடிகளை வருத்தாது அவர் உவந்து கொடுக்கும் வகையில் பொருளீட்டவேண்டும். அருளும் அன்பு மின்றிப் பொருளீட்டுதல் கூடாது; அவ்வெண்ணத்தை விட்டுவிட வேண்டும். புல்லார் - பொருந்தாராய். அவ்வாறு ஈட்டிய பொருள் பசுமட்கலத்துள் நீர்போல் (690) அவனொடுங் கெடும். (5) 756. உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். உறுபொருளும் - உடையவ ரில்லாமையால் தானே வந்து சேர்ந்த பொருளும், உல்கு பொருளும் - சுங்கவரியாகிய பொருளும், தன் ஒன்னார்த் தெறு பொருளும் - தன் பகைவரை வென்று திறையாகக் கொள்ளும் பொருளும், வேந்தன் பொருள் - அரசனுக் குரிய பொருளாகும். உறுபொருள் - நிலத்தில் புதைத்து வைத்தவர் இறந்து போக நெடுங்காலத்திற்குப் பிறகு கண்டெடுத்த பொருளும் (புதை பொருள்), பங்காளிகள் பெறாத பொருளும். சுங்கம் - கப்பலிலும் வண்டி முதலியவற்றிலும் வரும் பண்டங்கட்கு வாங்கும் வரி. இது குடியிறைப் பொருள் அல்லாமல் வரும் வருவாய் கூறியவாறு. (6) 757. அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ் செல்வச் செவிலியா லுண்டு. அன்பு ஈன் அருள் என்னும் குழவி - அன்பினால் பெறப்படும் அருள் என்னும் குழந்தையானது, பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு - பொருள் என்னும் செல்வமாகிய வளர்ப்புத் தாயால் வளரும். நமக்குத் தொடர்புடைய பொருள்மீதுள்ள பற்று அன்பு எனப்படும். தொடர்பு பற்றிச் செல்வது அன்பு. தொடர்பு பற்றாது இயல்பாகவே வருந்தும் உயிர்கட்கெல்லாம் இரங்குவது அருள் எனப்படும். தொடர்பு பற்றாது செல்வது அருள். தொடர்பு பற்றாது செல்லும் அருள், தொடர்புபற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்த விடத்து உண்டாவதாகலின், அருளை 'அன்பீன் குழவி' என்றார். அவ்வருள் வறியார்மேற் செல்வது அவ்வறுமையை நீக்கும் எண்ணங் கொண்ட வர்க்காதலால், அவ்வருளுடையார் பொருளை அவ் வருளுக்குச் செவிலி என்றார். பொருளுடை யார்க்கே வறியார்க்கீய முடியுமென்பதாம். (7) 758. குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை. தன்கைத்து உண்டாக ஒன்று வினை செய்வான் - தன்கையில் பொருள் உண்டாக ஒரு செயலைச் செய்தல், குன்று ஏறி யானைப் போர் கண்டற்று - மலைமேல் ஏறி நின்று யானைப்போரைக் கண்டதனோ டொக்கும். குன்றேறியவன் அச்சமும் வருத்தமும் இன்றி யானைப் போரைக் காண்பது போல, பொருளுடையானும் அச்சமும் வருத்தமும் மின்றி பிறரைக் கொண்டு வினைமுடிப்பா னென்பதாம். கைத்து உண்டாக - பொருள் உடையவனாக. (8) 759. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில். பொருளைச் செய்க - தமக்குச் சிறப்பு வேண்டுபவர், பொருளை ஈட்டுக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு - பகைவர் செருக்கை அறுக்கும் படைக்கலம் ஆகும் அது; அதனில் கூரியது இல் - அச் செருக்கறுக்க அப்பொருளைப் போலக் கூரிய படைக்கலம் வேறில்லை. செருக்கு - தம் வலியால் மிகமகிழ்ந்திருத்தல். பொருளைச் செய்யவே பெரும்படையும் நட்பும் உண்டாகும். அதனால் பகைவர் செருக்கொழிந்து தானே அடங்குவர். (9) 760. ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொருள் ஏனை இரண்டு மொருங்கு. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு - நல்ல பொருளை மிகப் படைத்தவர்க்கு, ஏனை இரண்டும் ஒருங்கு எண் பொருள் - மற்றைய அறனும் இன்பமும் ஒருங்கே எளிய பொருள்களாகும். நல்ல பொருள் - நல்வழியில் வரும்பொருள். காழ்த்தல் - முதிர்தல். காழ்ப்ப இயற்றல் - மிகமிக ஈட்டல். "வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணது எய்த இருதலையும் எய்தும்" (நாலடியார் - 141) என்பதும் இக்கருத்தே. குறள் 754 பார்க்க. (10) அரணியல் முற்றிற்று t t t 5. படையியல் (2) படையினது இலக்கணம். படையாவது - யானை, குதிரை, தேர், காலாள் ஆகிய நான்கன் தொகுதி. 77. படைமாட்சி படைமாட்சி - படையினது சிறப்பு. 761. உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாந் தலை. உறுப்பு அமைந்து - யானை முதலிய நால்வகை உறுப்புக் களும் நிறைந்து, ஊறு அஞ்சா வெல்படை - போரின்கண் உண்டாகும் துன்பத்திற்கு அஞ்சாது நின்று பகையை வெல்லும் படையானது, வேந்தன் வெறுக்கையுள் எல்லாந் தலை - அரசனுடைய செல்வங்க ளெல்லா வற்றுள்ளும் தலையாய செல்வமாகும். துன்பத்திற்கு அஞ்சினால் வெல்லமுடியா தாகையால், ஊறஞ்சா என்றார். மற்ற செல்வங்களுக்கும் படை காவலாதலின் செல்வங்களுள் தலை என்றார். ஊறு - துன்பம். (1) 762. உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத் தொல்படைக் கல்லா லரிது. தொலைவிடத்து உலைவிடத்து ஊறுஅஞ்சா வன்கண் - தான் குறைந்த விடத்தும் போரில் அழிவு வந்தபோது தன் மீது காயம் படுவதற்கு அஞ்சாத வீரம், தொல்படைக்கு அல்லால் அரிது - மூலப் படைக் கல்லால் பிறபடைக்கு உண்டாகாது. தொலைதல் - போரில் அழிந்து படை சுருங்குதல். அழிவு வருதல் - எதிர்த்து நிற்கமுடியாது தன்படை நிலை குலைதல். உறு - உறுதல் - காயம்படுதல். மூலப்படை - வீரன் மகன் வீரனாக வரும் படை. மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப் படை, துணைப்படை, பகைப்படை என்னும் ஆறு வகைப் படையுள் சிறப்புடையது மூலப் படையே யாகும். கூலிப்படை - போர்க் காலத்து மட்டும் கூலிக்காகச் சேர்ந்தபடை. பகைப் படை - பகைவரிடத் திருந்து பிரித்து வந்த படை. (2) 763. ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை நாக முயிர்ப்பக் கெடும். எலிப்பகை உவரி ஒலித்தக்கால் என்னாம் - எலியாகிய பகை திரண்டு கடல்போல ஒலித்தால் நாகபாம்புக்கு என்ன துன்பம் வரும்? நாகம் உயிர்ப்பக் கெடும் - அப்பாம்பு மூச்சு விட்டவுடனே அவ்வெலிக் கூட்டம் ஓடிவிடும். வீரரல்லாதார் பலர் திரண்டு கூச்சலிட்டால் அதற்கு வீரன் அஞ்சான். அவன் எழுந்தவுடனே அப்பேடிகள் தாமாகக் கெடுவர் என்பதாம்; பிறிது மொழிதல் அணி. அரசனுக்கு மற்றைய உறுப்புக்களுள் படை சிறந்தது. அதனுள்ளும் மூலப்படை சிறந்தது. அதைவிட வீரன் சிறந்தவன். வீரரல்லார் பலரினும் வீர னொரு வனைக் கொளல் நன்றென்பதாம். (3) 764. அழிவின் றறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை. அழிவு இன்று - போரில் கேடடையாமலும், அறை போகா தாகி - பகைவரால் வஞ்சித்து மாறுபடுத்தப் படாமலும், வழி வந்த வண்கணதுவே படை - தொன்று தொட்டு வந்த அஞ்சாமையை உடையதே படையாகும். அழிவின்மையால் மறமும் மானமும் உடைமையும், அறை போகாமையான் அரசனிடத்து அன்புடைமையும் பெறப்பட்டன. வழிவந்த வன்கண்மை - வீரன்மகன் வீரனாக வருதல். (4) 765. கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை. கூற்று உடன்று மேல்வரினும் - கூற்றமே வெகுண்டு எதிர்த்துப் போர் செய்ய வந்தாலும், கூடி எதிர்நிற்கும் ஆற்றலதுவே படை - நெஞ்சொத்து அதன் எதிர் நின்று போர் செய்யும் வல்லமை யுடையதே படையாகும். கூற்று - உடலும் உயிரும் கூறுபடும் சாவைக் கூற்று என உயிருடையதுபோல் கூறல் நூன்மரபு. முகவுரை பார்க்க. தன்னை அடியோடொழிக்கக்கூடிய அவ்வளவு பெரியபடை வந்தாலும் என்பதை இவ்வாறு கூறினார். நெஞ்சொத்தல் - எல்லோரும் ஒரே முகமாய் எதிர்த்தல். (5) 766. மறமான மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே யேமம் படைக்கு. மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே - வீரமும் மானமும் முன்னோர் சென்ற நல்லவழியில் நடத்தலும் அரசனுடைய நம்பிக்கையைப் பெறுதலும் என்னும் இந்நான்கு குணமுமே, படைக்கு ஏமம் - படைக்கு அரணாகும். அரண் - காவல். (6) 767. தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்குந் தன்மை யறிந்து. தலைவந்த போர் தாங்கும் தன்மை அறிந்து - தன்மேல் வந்த போரைத் தடுக்கும் தன்மையை அறிந்து, தார் தாங்கிச் செல்வது தானை - அப்பகைவரது முன்னணிப் படையைத் தன் மேல் வராமல் தடுத்துத் தான் அவர்மேல் செல்வதே படையாகும். தன்மேல் வந்த - தன்னை எதிர்த்த. முன்னணிப்படை, கொடிப் படை, தூசிப்படை என்பன ஒரு பொருட் சொற்கள். அது கலப் பையில் கொழுமாட்டும் ஒண்டிபோல் அமைந்தது. (7) 768. அடற்றகையு மாற்றலு மில்லெனினுந் தானை படைத்தகையாற் பாடு பெறும். தானை - படையானது, அடல்தகையும் - போர் செய்யும் வீரமும், ஆற்றலும் இல் எனினும் - பகைவர் தன்மேல் வந்தால் எதிர்த்து நிற்கும் வலியும் இல்லை யென்றாலும், படைத்தகையால் பாடுபெறும் - தன் படைத்தன்மையாலே பெருமை பெறும். அடுதல் - போர்செய்தல். படைத்தகை - அப்படையி லுள்ள மறவர்கள் ஒன்றுபட்டுச் செய்யும் போர்த்தொழில் தன்மை. தகை - தகுதி. அத்தகைய தகுதியுடைய படையே சிறந்த படையாகும். (8) 769. சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையு மில்லாயின் வெல்லும் படை. சிறுமையும் - அளவில் குறைதலும், செல்லாத் துனியும் - மனத் தினின்றும் நீங்காத வெறுப்பும், வறுமையும் இல்லாயின் - வறுமையும் இல்லையானால், படைவெல்லும் - படை பகையை வெல்லும். வீரர்கள் படையை விட்டுப் போவதும், வறுமையும் அரசன் பொருள் கொடாமையால் வருவன. நீங்காத வெறுப்பு அரசன் தகாதன செய்தலால் வருவது. இவை மூன்றும் உண்டாயின் அரச னிடத்தில் அன்பின்றிப் படை எதிர்த்துப் பொராமையின், இல்லாயின் வெல்லு மென்றார். (9) 770. நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை தலைமக்க ளில்வழி யில். நிலைமக்கள் சால உடைத்தெனினும் - போரில் நிலைத்து நிற்கும் வீரரை மிகுதியாக உடையதாயினும், தலை மக்கள் இல் வழித் தானைஇல் - தனக்குத் தலைவராகிய வீரரை இல்லாத விடத்துப் படையானது போரில் நிலைத்து நிற்காது. படைத்தலைவர் இல்லாவிட்டால் படை எதிர்த்துப் பொராது. (10) 78. படைச் செருக்கு படையினது மறமிகுதி. மறம் - வீரம். 771. என்னைமுன் நில்லன்மின் றெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர். தெவ்விர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர் - பகைவர்களே! முன்பு என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நின்று அவனால் இறந்து நடுகல்லாயினார் பலராவர்; என் ஐ முன் நில்லன்மின் - ஆதலால், நீங்கள் உயிருடன் இருக்க வேண்டின், என்னுடைய தலைவன் எதிரில் போரேற்று நில்லா தீர்கள். இது ஒரு வீரன் கூற்று. நடுகல்லாதல் - வீரனுடைய பேரும் புகழும் உருவும் பொறித்து நடுங்கல். இது நடுகல், வீரக்கல் என வழங்கும். நடுகல்லின் இலக்கணத்தை, தொல். பொருள் - புறத்திணை 5ஆம் சூத்திரவுரையில் காண்க. நின்றால் நீரும் இறப்பீர் என்பது கருத்து. (1) 772. கான முயலெய்த வம்பினில் யானை பிழைத்தவே லேந்த லினிது. கான முயல் எய்த அம்பினில் - காட்டின்கண் ஓடும் முயலைத் தப்பாமல் எய்த அம்பை ஏந்துவதைவிட, யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது - வெட்டவெளியில் நின்ற யானையை எறிந்து தப்பிய வேலை ஏந்துதல் நல்லது. இது மாற்றரசன் படையொடு பொருத ஓர் வீரன், அப்படை புறங்கொடுத் தோடுதற்கு நாணி, பின் அப்படைத் தலைவனோடு பொரச்செல்லலுற்றான் சொல்லியது. தோற்றோடுகின்ற படையைத் துரத்துதல் வீரர்க்கழகன்று. (2) 773. பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கால் ஊராண்மை மற்றத னெஃகு. தறுகண் பேராண்மை என்ப - பகைவர்மேல் கண்ணோ டாது பொரும் வீரத்தை நூலோர் மிகுந்த ஆண்மையென்று சொல்லுவர், ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு என்ப - பகைவர்க்கு ஒரு தாழ்வு நேர்ந்தபோது கண்ணோடி அத்தாழ்வு தீர உதவுதலை அப்பேராண்மைக்குக் கூர்மை யென்று சொல்வர். கண்ணோட்டம் - இரக்கம். கூர்மை - மிக்க ஆண்மை. இரக்க மின்றிப் பொரும் வீரம் பேராண்மையும், பகைவர்க்கு உதவுதல் பெரும்பேராண்மையும் ஆகும். (3) 774. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். கைவேல் களிற்றொடு போக்கி - தன் கையிலிருந்த வேலைத் தன்னை எதிர்த்த யானையின்மேல் எறிந்து, வருபவன் - அடுத்து வருகின்ற மற்றொரு யானைமேல் எறிவதற்கு வேலைத் தேடிக் கொண்டு திரிகின்ற ஒரு வீரன், மெய்வேல் பறியா நகும் - தன் மார்பில் தைத்திருந்த வேலைக் கண்டு பிடுங்கி வேல் கிடைத் தமைக்காக மகிழ்வான். சின மிகுதியாலும், போர் விருப்பாலும், கடனாற்றுதலி னாலும் மார்பில் வேல் பாய்ந்ததை அறிந்திலன். (4) 775. விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பின் ஓட்டன்றோ வன்க ணவர்க்கு. விழித்தகண் - பகைவரை வெகுண்டு நோக்கிய கண்ணை, வேல்கொண்டு எறிய அழித்து இமைப்பின் - அப்பகைவர் வேலால் எறிய அதற்கஞ்சி மூடித்திறப் பாராயின், வன்கணவர்க்கு ஓட்டு அன்றோ - அதுவும் வீரர்க்குப் புறங் கொடுத்தலோ டொக்கும். முன்பு நாட்டுப்புறச் சிறுவர்கள் ஒருவனை நன்கு விழித்துப் பார்க்கும்படி செய்து, ஒருவன், 'இத்தச் சோட்டு வெண்ணெய் போட்டு இத்தனே மோரூற்றுகிறேன். நரி வந்தால் பயந்துக்காதே' என்று அவன் கண்ணில் ஊதுவான். அவன் கண்ணை இமைத்தால். எல்லாச் சிறுவர்களும் அவனைச் சுற்றி வந்து பழித்துரையாடி விளையாடிய இவ்வீரக் குறிப்பை நினைவு கூர்ந்து வந்தனர். (5) 776. விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள் வைக்குந்தன் னாளை யெடுத்து. தன் நாளை எடுத்து - ஒரு வீரனானவன் முன்சென்ற தன் வாழ் நாட்களை எடுத்தெண்ணி, விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக் கினுள் வைக்கும் - அந்நாட்களில் விழுப்புண் படாத நாட்களை யெல்லாம் வீணாகக் கழிந்த நாட்களாக எண்ணி வைப்பான். எடுத்தெண்ணுதல் - நினைத்துப் பார்த்தல். விழுப்புண் - முகத் தினும் மார்பினும் பட்டபுண், சிறந்தபுண். புண்படாத நாட்களை வீணாகக் கழிந்த நாளாக எண்ணி வருந்துவான். (6) 777. சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார் - உலகத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை விரும்பி உயிர்வாழ்தலை விரும்பாத வீரர், கழல் யாப்புக் காரிகை நீர்த்து - வீரக்கழலைக் காலில் கட்டுதல் அழகுடையது! அவ்வீரமே பெரும் புகழைத் தருதலான் அழகுக்காகக் கழல் கட்டுதல் வேண்டியதில்லை யென்பது. காரிகை - அழகு. (7) 778. உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன் செறினுஞ்சீர் குன்ற லிலர். உறின் உயிர் அஞ்சா மறவர் - போர் உற்றால் தம் உயிருக்கு அஞ்சாது போர்க்குச் செல்லும் வீரர், இறைவன் செறினும் சீர் குன்றல் இலர் - தம் அரசன் போர் வேண்டா மென்று முனிந்தாலும் அவ்வீரம் குறையார். போரில்லாதிருந்தவர் அதுவரவே அரசன் தடுப்பினும் நில்லா ரென்பதாம். (8) 779. இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர். இழைத்தது இகவாமைச் சாவாரை - தாங்கூறிய வஞ்சினம் தப்பாமல் இருத்தற்பொருட்டுப் போருக்குச் சென்று சாவக்கூடிய வீரரை, பிழைத்தது ஒறுக்கிற்பவர் யார் - அவ்வஞ்சினந் தப்பினா ரென்று சொல்லிப் பழிப்பவர் யார்? இழைத்தல் - இன்னது செய்யேனாயின் இன்னனாவேன் என வஞ்சினங் கூறுதல். 'தமிழரைப் பழித்த தகவிலோன் முடித்தலை துணியேனாயின் துணிக்குவேன் என்னுயிர்' எனக் கூறல். பிழைத்தல் - தவறுதல். ஒறுத்தல் - பழித்தல். (9) 780. புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா டிரந்துகோட் டக்க துடைத்து. புரந்தார் கண் நீர்மல்கச் சாகிற்பின் - தம்மைக் காத்த அரசர் கண்களில் நீர் பெருகும்படி போர்செய்து சாகவல்லா ராயின், சாக்காடு இரந்து கோட்டக்கது உடைத்து - அச்சாவு எல்லோராலும் இரந்தாயினும் கொள்ளுந் தகுதியை உடையது. தமக்குச் செய்த நன்மைகளை நினைந்து அரசர் கண்ணீர் விடுவர். அச்சாவு புகழைத் தருதலான் அதைவிட நல்ல சாவு இல்லை யென்பதாம். (10) படையியல் முற்றிற்று 6. நட்பியல் (17) படைபோல அரசுக்கு உதவுவதாய நட்பின் இலக்கணம். இது அரசுக்கு உறுப்பாகக் கூறினும், பொதுவாகக் குடிமக்கட்கும் பொருந்தும். இதில், முதல் 5 அதிகாரம் (79 - 83) உடன் பாடாகவும், பின் 12 அதிகாரம் (84 - 95) எதிர்மறையாகவும் கூறப்படுகின்றன. உடன்பாடு - நட்கப்படுவது. எதிர்மறை - நட்கப்படாதது. நட்டல் - நட்புக்கொள்ளல். தீ நட்பும், கூடா நட்பும் நட்டபின்னரே விலக்கப்படுதலின், நட்கப்படுவனவே யாகும். இகல் முதலிய நட்கப் படாதவையும் அறிவிலிகளால் மேற்கொள்ளப் படுதலின், நட்பி யலின் பாற்பட்டன. இனி, அவ்வெதிர்மறை பன்னிரண்டனுள் பேதைமையும், புல்லறிவாண்மையும் அறியாமையாய் ஏனைப் பத்துக்கும் அடிப் படையாயின. இகல் முதலிய ஐந்தும் வெகுளியானும், பெண்வழிச் சேறல் முதலிய ஐந்தும் அவாவினானும் வருவனவாம் . 79. நட்பு நட்பின் தன்மை. 781. செயற்கரிய யாவுள நட்பி னதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. நட்பின் செயற்கரிய யா உள - நட்புப் போலச் செய்து கொள்ளுதற்கு அரிய பொருள்கள் எவை உள்ளன? அதுபோல் வினைக்கு அரிய காப்பு யா உள - செய்துகொண்டால், அந் நட்பு போலப் பகைவர் செய்யும் வினைக்கு அரிய காவல்கள் எவை உள்ளன? ஒன்றுமில்லை. பகைவர் செய்யும் வினைக்கு அரிய காவல்- அவர் செய்யும் வினை நம்மை அணுகாமல் காக்கும் அரியகாவல். வினை - போர். நட்புச் செய்துகொண்டால் பகைவர் அஞ்சிப் போர் தொடங்கார் என்பதாம். (1) 782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பன்னீர பேதையார் நட்பு. நீரவர் கேண்மை பிறை நிறை நீர - அறிவுடையோர் நட்புக்கள் பிறை நிறையுந் தன்மைபோல நாடோறும் நிறையுந் தன்மையவாம்; பேதையார் நட்பு மதி பின் நீர - அறிவிலார் நட்புக்கள் முழுமதி பின் குறையுந் தன்மைபோல நாடோறும் குறையுந் தன்மையவாம். அறிவுடையாரும் அறிவுடையாரும் கொண்ட நட்பு முன் சுருங்கிப் பின் பெருகும்; பேதையாரும் பேதையாரும் கொண்ட நட்பு முன் பெருகிப் பின்சுருங்கும். நீர்மை - தன்மை. (2) 783. நவிறொறு நூனயம் போலும் பயிறொறும் பண்புடை யாளர் தொடர்பு. பண்புடையாளர் தொடப்பு பயில்தொறும் - நற்குண முடையவர் நட்பானது பழகுந்தோறும் அவர்க் கின்பஞ் செய்தல், நூல் நவில்தொறும் - நூற் பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பஞ் செய்தலை ஒக்கும். நல்லோர் கொண்ட நட்புப் பழகப்பழக இன்பந் தரும். (3) 784. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு. நட்டல் நகுதற் பொருட்டன்று - ஒருவரோடொருவர் நட்புக் கொள்ளுதல் கூடிப்பேசி மகிழ்வதன் பொருட்டன்று; மிகுதிக்கண் மேல் சென்று இடித்தற் பொருட்டு - ஒருவர் தகாத செயலைத் தொடங்கியபோது மற்றொருவர் முற்பட்டு இடித் துரைத்தற் பொருட்டேயாகும். தகாத செய்கை துன்பம் பயத்தலால் வேண்டப்படுவ தன்மையின் அதனை 'மிகுதி' என்றார். இடித்துரைத்தல் - கடுஞ் சொற் சொல்லித் திருத்துதல். குற்றஞ் செய்யாமல் தன் நண்பனைக் காப்பதே ஒருவன் கடமையாகும். (4) 785. புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும். புணர்ச்சி பழகுதல் வேண்டா - ஒருவரோடொருவர் நட்பாவதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டியதில்லை; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் - இருவர்க்கும் ஒத்த உணர்ச்சியே நட்பாகிய உரிமையைக் கொடுக்கும். புணர்ச்சி - ஒரே இடத்தினராதல். இடம் - ஊர், கூற்றம், கோட்டம், நாடு முதலியன. பழகுதல் - பலகால் கண்டும் பேசியும் பழகுதல். நட்பிற்குப் புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சி யொத்தல் என்னும் காரணம் மூன்றனுள்ளும் உணர்ச்சி யொத்தலே சிறப்புடையதாகும். உணர்ச்சி யொத்தல் - குண வொற்றுமையால் இருவரும் ஒருமனப்படுதல். உறையூரிலிருந்த கோப்பெருஞ் சோழனும், மதுரையிலிருந்த பிசிராந்தையாரும் ஒருவரை யொருவர் புலவர் வாயிலாய் அறிந்து, உணர்ச்சி யொத்ததால் நண்பர்களாயிருந்து, கோப்பெருஞ்சோழனிறக்கப் பிசிராந்தை யாரும் உடனுயிர் நீத்தது இதற்கு எடுத்துக்காட்டாகும். (5) 786. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பது நட்பு. முகம் நக நட்பது நட்பன்று - அகமலராமல் கண்டபோது, முக மாத்திரம் மலரும்படி நட்பது நட்பாகாது, நெஞ்சத்தகம் நக நட்பது நட்பு - அகமு மலர நட்பதே நட்பாகும். அகமும் முகமும் மலர நட்பதே நட்பாகும். (6) 787. அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்கண் அல்ல லுழப்பதா நட்பு. அழிவினவை நீக்கி ஆறு உய்த்து - கேட்டினைத் தரும் தீய வழிகளில் செல்லுங்கால் விலக்கி நல்ல வழிகளில் செல்லாக்கால் செல்லும்படி செய்து, அழிவின் கண் அல்லல் உழப்பது நட்பாம் - தம்மால் விலக்க முடியாத கெடுதி வந்த போது தானும் உடன் துன்புறுவதே ஒருவனுக்கு நட்பாகும். தன் நண்பனைக் கெட்ட வழியில் செல்லவிடாது, நல்ல வழியில் செலுத்தித் துன்பத்தைப் பங்கிட்டுக் கொள்வதே நட்பாகும். தவிர்க்க முடியாத துன்பம் வரின் அதைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். (7) 788. உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. உடுக்கை இழந்தவன் கைபோல - ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டு நிற்கையில் ஆடை அவிழ்ந்தால் உடனே நமது கை தானாகவே சென்று அவ்வாடையை உடுத்தி மானத்தைக் காப்பது போல, ஆங்கே இடுக்கண் களைவது நட்பு ஆம் - நண்பனுக்கு துன்பம் வந்தால் அவ்வாறே தானே முன் வந்து அத்துன்பத்தைப் போக்குவதே நட்பாகும். (8) 789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி ஒல்லும்வா யூன்று நிலை. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் - நட்புக்கு அரசிருக்கை எது வென்றால், கொட்பு இன்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - எப் போதும் மன வேறுபாடில்லாமல் தன்னால் இயலும் வழிகளி லெல்லாம் உதவித் தன் நண்பனைத் தாங்கும் நிலையேயாகும். அரசிருக்கை - எல்லார்க்கும் மேம்படவிருத்தல். எப்போதும் தன் நண்பனோடு மனவேறுபடில்லாமல் தன்னால் முடியும் வழிகளி லெல்லாம் உதவுவதே நட்பின் முடிந்த எல்லை ஆதலின், அதை நட்பிற்கு வீற்றிருக்கை என்றார். இதைவிட நண்பனுக்கு நண்பன் செய்வது வேறு இல்லை என்பதாம். கொட்பு - வேறுபாடு. (9) 790. இனைய ரிவரெமக் கின்னம்யா மென்று புனையினும் புல்லென்னு நட்பு. இவர் எமக்கு இனையர் யாம் இன்னம் என்று புனையினும் - இவர் நமக்கு இத்தகைய அன்பினர், நாம் இவர்க்கு இத்தன் மையம் என்று ஒருவரை யொருவர் புகழ்ந்து கூறினும், நட்புப் புல்லென்னும் - நட்பின் பெருமை குறைந்து விடும். தான் அவர் என்னும் வேறுபாடின்றி நண்பரைத் தன்னைத் தான் நினைக்குமாறு போலவே நினைக்க வேண்டும். சிறிது வேறு படுத்து நினைக்கினும் நட்பின் பெருமை குறைந்து விடும். (10) 80. நட்பாராய்தல் ஒருவருடைய குணஞ் செயல்களை ஆராய்ந்தறிந்த பின்னரே அவரோடு நட்புக் கொள்ளவேண்டும் மென்பது. 791. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு. நட்பு ஆள்பவர்க்கு நட்டபின் வீடு இல்லை - நட்புக் கொள்ள விரும்புவோர்க்கு ஒருவனோடு நட்புச் செய்தபின் அவனை விட முடியாது; நாடாது நட்டலில் கேடு இல்லை - ஆதலால், ஆராயாது நட்புச் செய்தலைக் காட்டிலும் கேடு தருவது வேறில்லை. ஆராய்தல் - குணஞ் செயல்களினது நன்மையை ஆராய்தல். ஒருவனோடு நட்புக் கொண்டபின் அதை விட முடியாதாகை யால் முன்னரே நன்கு ஆராய்ந்து நட்புக் கொள்ளவேண்டும். (1) 792. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாந் துயரந் தரும். ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை - குணம் செயல் களின் நன்மை தீமைகளைப் பலகாலும் பலவாற்றானும் ஆராய்ந்து கொள்ளாதவன் நட்பானது, கடைமுறை தான் சாம் துயரம் தரும் - முடிவில் தான் சாதற்கேதுவான துன்பத்தினைக் கொடுக்கும். குணம் செயல்களின் நன்மை நோக்கிக் கொள்ளவேண்டும். தீயவனோடு நட்புக் கொள்ளின் அவனுக் குண்டாகும் பகை யெல்லாம் தனக்கும் உண்டாகு மாதலால் 'தான்சாம் துயரம் தரும்' என்றார். (2) 793. குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா வினனு மறிந்தியாக்க நட்பு. குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து - ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினையும் குறையாத சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து, நட்பு யாக்க - அவனோடு நட்புக் கொள்க. குடிப்பிறப்பு - வழிவழியாக நல்லொழுக்கமுடைய குடியில் பிறத்தல். ஒரு குற்றமும் இல்லார் உலகத் தின்மையின் உள்ள குற்றத்தைப் பொறுத்துக் கொள்வதற்காகக் குற்றமும் ஆராய வேண்டும். குன்றா - குன்றாத. குறையாத சுற்றம் - நிறைந்த சுற்றம். சுற்றப்பிணிப்புடையார் நண்பரோடும் பிணிப் புடையராவர். (3) 794. குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் கொடுத்துங் கொளல்வேண்டு நட்பு. குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானை - நற்குடியில் பிறந்து தன்னிடத்தி லுள்ளதாக உலகோர் சொல்லும் பழிக்கு நாணுபவனை, கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும் - அவன் விரும்பும் பொருளைக் கொடுத்தாயினும் நட்புக் கொள்ளல் வேண்டும். குடிப்பிறந்தவன் பிழை செய்யான், பழி நாணுவான், பிழை பொறுப்பான். (4) 795. அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய வல்லார்நட் பாய்ந்து கொளல். அல்லது அழச் சொல்லி - முறையல்லது செய்யக் கருதினால் அழும்படி சொல்லி விலக்கியும், இடித்து - செய்தால் பின்னும் செய்யாதபடி கண்டித்துரைத்தும், வழக்கு அறிய வல்லார் - உலக வழக்கையும் அறியவல்லாரை, ஆய்ந்து நட்புக் கொளல் - ஆராய்ந்து நட்புக் கொள்க. அழச்சொல்லல் - கடுமொழி கூறல். (5) 796. கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை நீட்டி யளப்பதோர் கோல். கிளைஞரை நீட்டி அளப்பது ஓர்கோல் - ஒருவனுக்கு வறுமை என்பது, தன் நண்பர்களாகிய நிலங்களை எஞ்சாமல் அளப்பதோர் கோலாகும்; கேட்டினும் ஓர் உறுதி உண்டு. - ஆதலால், வறுமையினும் ஓர் நன்மை யுண்டு. சுருங்கிய நட்புச் செல்வக் காலத்து வெளிக்குத் தோன்றாது, வறுமைக் காலத்துத் தோன்றும். ஆகவே, வறுமையைக் கோலாக் கினார். நண்பரை நிலங்களாக்காத தால் ஒருகூற்றுருவகம். கேட்டிலுறுதி - நட்பின் தன்மையறிதல். (6) 797. ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார் கேண்மை யொரீஇ விடல். ஒருவற்கு ஊதியம் என்பது - ஒருவனுக்கு ஊதியம் என்பது, பேதையார் கேண்மை ஒரீ இவிடல் - அறிவிலாரோடு கொண்ட நட்பினை நீக்கி விடுதலே. ஒரீஇ - ஒருவி - நீக்கி. பேதையார் நட்பை நீக்கிவிடுவதே ஒருவனுக்கு ஊதியம் (இலாபம்) ஆகும். (7) 798. உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க அல்லற்க ணாற்றறுப்பார் நட்பு. உள்ளம் சிறுகுவ உள்ளற்க - தம் ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களைச் செய்ய நினையாதிருக்க வேண்டும், அல்லல் கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க - அது போல, துன்பம் வந்தபோது கைவிடுவாரது நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும். ஆற்று அறுத்தல் - கைவிடுதல். (8) 799. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை உள்ளினு முள்ளஞ் சுடும். கெடுங்காலை கைவிடுவார் கேண்மை - ஒருவன் கெடுங் காலத்து அவனை விட்டு நீங்குவாரது நட்பு, அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் - பிறர் தன்னைக் கொல்லும்போது நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை அந்நட்பு, தன்னைக் கொல்லுகிறவனைக் காட்டிலும் மிகுதியாக வருந்தும். கெடுதல் - வறுமை. கெட்டகாலத்து விட்டு நீங்குவோர் கொலைஞரினும் கொடியராவர். (9) 800. மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும் ஒருவுக வொப்பிலார் நட்பு. மாசு அற்றார் கேண்மை மருவுக - குற்றமற்றவரது நட்பைக் கொள்க; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக - தனக்கு நிகரில்லா தவருடைய நட்பை அவர் விரும்பிய ஒரு பொருளைக் கொடுத் தாயினும் நீக்கி விடுக. ஒப்பிலார் - தன் குணஞ் செயலோ டொப்பிலார் (812 பார்க்க) தமக்கு மாறானவரோடு கொண்டுள்ள நட்பைப் பொருள் கொடுத் தேனும் நீக்கிவிட வேண்டும். இது முன் ஆராயாது கொண்ட நட்பு. (10) 81. பழமை நண்பரது பழமை குறித்து அவர் பிழை பொறுத்தல்; பழைய நண்பரது பிழை பொறுத்தல். 801. பழமை யெனப்படுவ தியாதெனின் யாதுங் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. பழமை எனப்படுவது யாதெனின் - பழமை யென்று சொல்லப் படுவது யாதென்றால், கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு - பழகியவர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் விலக்காமல் அவற்றிற்கு உடம்படும் நட்பு. கிழமை - உரிமை. அது ஆகுபெயராய் உரிமையுடையன வற்றைக் குறித்தது. உரிமையால் செய்வனவாவன - ஒன்றைக் கேளாது செய்தல், கெடும்படி செய்தல், தமக்கு வேண்டிய தாமே கொள்ளல் முதலியன. உரிமையால் செய்வனவற்றை விலக்காத நட்பே பழமை எனப்படும். இது பழமையின் இலக்கணங் கூறியது. (1) 802. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற் குப்பாதல் சான்றோர் கடன். நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை - நட்புக்கு உறுப்புக் களாவன நண்பர்கள் உரிமையால் செய்வன; அதற்கு உப்பாதல் சான்றோர் கடன் - அதனால் அவ்வுரிமைக்கு இனியராதல் சான்றோர்க்கு முறைமையாகும். கெழுதகைமை - உரிமை. இதுவும் ஆகுபெயர். இனியராதல் - உரிமையால் செய்வனவற்றை விலக்காமை. உப்பு - இனிமை, தகுதி. (2) 803. பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை. கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை - நண்பர் உரிமையால் செய்தவற்றைத் தாம் செய்தவைபோல் உடம்படா ராயின், பழகிய நட்பு எவன் செய்யும் - அவரோடு பழகிய நட்பு என்ன பயனைச் செய்யும்? உடம்படுதல் - ஒப்புக் கொள்ளுதல். தாஞ் செய்தாற் போல உடம்படல் - தாமும் அவரிடத் துரிமையால் ஒப்புக் கொள்ளுதல். நண்பர் செய்ததைத் தாம் செய்தது போல் கொள்ளா விட்டால் பழகிய நட்பாற் பயனில்லை. (3) 804. விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின். நட்டார் கெழுதகையால் கேளாது செயின் - தமது காரியத்தை நண்பர் உரிமையால் தம்மைக் கேளாது செய்தாரானால், விழை தகையான் வேண்டி இருப்பர் - அச்செயலினது விரும்பப் படுந் தன்மையால் விரும்பி யிருப்பர் அறிவுடையோர். ஒருவர்க்குத் தங்காரியம் தம்மையறியாமல் முடிந்திருப் பதை விட நன்மையின்மையின் அக்காரியம் விரும்பத் தக்க தாயிற்று. நமது நண்பர் நம்மைக் கேளாது நமது காரியத்தைச் செய்தால் அதை விரும்பவேண்டும். (4) 805. பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க நோதக்க நட்டார் செயின். நோதக்க நட்டார் செயின் - தாம் வெறுக்கத்தக்க வற்றை நண்பர் செய்தால், பேதைமை ஒன்றோ பெருங் கிழமை என்று உணர்க - அதற்குக் காரணம் அறியாமை அல்லது மிகுந்த உரிமை என்று கொள்க. ஒன்றோ - எண்ணிடைச் சொல். தமது நண்பர் தகாதன செய்தால் அறியாமலோ, மிகுந்த உரிமையாலோ செய்தா ரென்று கொள்ளவேண்டுமே யன்றி, அன்பில்லாமல் செய்தாரென்று கொள்ளக்கூடாது. அவை பொறுக்க வேண்டும். (5) 806. எல்லைக்க ணின்றார் துறவார் தொலைவிடத்துந் தொல்லைக்க ணின்றார் தொடர்பு. எல்லைக்கண் நின்றார் - நட்பின் வரம்பைக் கடவாது நிற்பவர், தொல்லைக்கண் நின்றார் தொடர்பு தொலை விடத்தும் துறவார் - தம்மோடு பழமையில் மாறுபடாது நின்ற நண்பர்களது நட்பை அவரால் தமக்குப் பொருட் கேடோ தொழிற்கேடோ வந்த விடத்தும் விடார். நட்பின் வரம்பைக் கடவாது நிற்றல் - நட்புமுறை தெரிந்து நடத்தல். பழமையில் மாறுபடாது நின்ற நண்பர் - பழைய நண்பர். பழமையில் மாறுபடாமை - உரிமையில் மாறுபடாமை. பழைய நண்பரால் தமக்குப் பொருளழிவோ தொழிலழிவோ வந்தாலும் அவர் நட்பை விடக்கூடாது. (6) 807. அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின் வழிவந்த கேண்மை யவர். அன்பின் வழிவந்த கேண்மையவர் - அன்புடன் பழமையாய் வந்த நட்பையுடையவர், அழிவந்த செய்யினும் அன்பு அறார் - தம் நண்பர் தமக்கு அழிவுதரத் தக்கவற்றைச் செய்தாலும் அவரிடத்து அன்பு நீங்கார். அழிவு - பொருட்கேடும் தொழிற்கேடும். அழி - முதல் நிலைத் தொழிற்பெயர். அன்பின் வழிவந்த கேண்மையவர் - அன்புள்ள பழைய நண்பர். பழைய நண்பர்கள் நமக்குக் கேடு செய்தாலும் அவர் நட்பை விடக்கூடாது. (7) 808. கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்க நட்டார் செயின். கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு - நண்பர் செய்த பிழையைப் பிறர் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாத உரிமை யறிய வல்லார்க்கு, நட்டார் இழுக்கம் செயின் நாள் - நண்பர் பிழை செய்வாராயின் அந்நாள் நல்ல நாளாகும். கேளாத என்றதால் பிறர் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளார், தாமும் மனத்துட்கொள்ளா ரென்பதாம். பிழை செய்யா நாட்கள் நல்லநாளல்ல வாயின. பிழை செய்வதால் தம்மிடம் தமது நண்பருக்குள்ள உரிமையை அறியும்படி செய்வதால் அந்நாள் நல்ல நாளாயிற்று. இது பிழை பொறுத்தலின் சிறப்புக் கூறியது. (8) 809. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையு முலகு. கெடா வழிவந்த கேண்மையார் கேண்மை விடார் - உரிமையறாமல் பழையதாய் வந்த நட்பினையுடையாரது நட்பினை அவர் பிழை செய்தாராயினும் விடாதவரை, உலகு விழையும் - உலகம் நட்புக்கொள்ள விரும்பும். கெடா - கெடாத நம்மிடத்தும் இவர் இத்தன்மைய ராவ ரென்று யாவரும் தாமே வந்து நட்பாவர் என்பதாம். (9) 810. விழையார் விழையப் படுப பழையார்கட் பண்பிற் றலைப்பிரியா தார். பழையார்கண் பண்பில் தலைப் பிரியாதார் - பழைய நண்பர் பிழை செய்தாராயினும் அவரிடத்துத் தம் பண்பினின்று நீங்காதவர், விழையார் விழையப்படுப - பகைவராலும் விரும்பப் படுவர். பண்பாவது - பிழை செய்யாமுன் போல அன்புடைய ராதல். விழையார் - விழையாராலும். மூன்றன் உருபும் உம்மையும் உடன் தொக்கன. அக்குணம் நோக்கிப் பகை வரும் நண்பர் ஆவர் என்பதாம். (10) 82. தீநட்பு தீயவர் நட்பின் திறம். பொறுக்க முடியாத குற்ற முடைய தீயவர் நட்புக் கொள்ளத்தக்க தன்று; தள்ளத் தக்கது. 811. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்ற லினிது. பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை - கண்ணினால் பருகுவாரைப் போன்று தமக்கு அன்புடைய ராய் இருக்கினும் தீக்குண முடையார் நட்பு, பெருகலின் குன்றல் இனிது - பெருகுவதைக் காட்டிலும் குறைவது நல்லது. பருகுதல் - உண்ணுதல்; அப்படியே எடுத்து விழுங்கு வார் போன்ற அவ்வளவு அன்பு. நற்குணமில்லா ரெனவே தீக்குண முடையாராயிற்று. பெருகினால் வருங்கேடு குன்றினால் வராதா கையால் 'குன்றல் இனிது' என்றார். (1) 812. உறினட் டறினொரூஉ மொப்பிலார் கேண்மை பெறினு மிழப்பினு மென். உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை - தமக்குப் பயனுண்டானபோது உறவாடிப் பயனில்லாத போது நீங்கிவிடும் ஒப்பிலாரது நட்பினை, பெறினும் இழப்பினும் என் - பெற்றால் உண்டாகும் நன்மை என்ன? இழந்தால் உண்டாகும் தீமை என்ன? தமக்கு வருவதையே பார்ப்பவர் பிறரோடு பொருத்த மில்லா ராகையால், ஒப்பிலார் என்றார். குறள் 800 பார்க்க. அவரை நொது மலராகவே கொள்ளவேண்டும். (2) 813. உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது கொள்வாருங் கள்வரு நேர். உறுவது சீர்தூக்கும் நட்பும் - நட்பின் அளவைப் பாராது அந் நட்பால்வரும் பயனின் அளவைப் பார்க்கும் நண்பரும், பெறுவது கொள்வாரும் - கொடுப்பாரைக் கொள்ளாது அவர் கொடுக்கும் பொருளைக் கொள்ளும் பொது மகளிரும், கள்வரும் - பிறர் கேடு நோக்காது அவர் சோர்வு நோக்கும் கள்வரும், நேர் - தம்முளொப்பர். கொடுக்கும் பொருள் - விலை. இதனாலேயே கணிகையர் களுக்கும் (தாசிகள்) விலைமாதர் என்ற பெயர் வந்தது. தீ நட்பினர் பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின், விலைமாதர் கள்வரோ டொப்பாயினார். (3) 814. அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார் தமரிற் றனிமை தலை. அமர் அகத்து ஆற்று அறுக்கும் கல்லாமா அன்னார் தமரில் - போர்வராத முன்னெல்லாம் தாங்கிப் போர்க் களத்தில் வீழ்த்திச் செல்லும் அறிவில்லாத குதிரையைப் போன்றாரது நட்பைக் காட்டிலும், தனிமை தலை - தனிமையே சிறந்ததாகும். துன்பம் இல்லாதபோது உடனிருந்து, துன்பம் வந்த போது விட்டுச் செல்வார் என்பதாம். அவர் நட்பானால் வருங்கேடு தனியானால் வாராமையால், தனிமையைத் தலை என்றார். (4) 815. செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலி னெய்தாமை நன்று. செய்து ஏமம் சாராச் சிறியவர் புன் கேண்மை - நட்புச் செய்து வைப்பினும் தனக்குப் பாதுகாவலாகாத கீழ் மக்களது தீநட்பு, எய்தலின் எய்தாமை நன்று - ஒருவனுக்கு உண்டாதலைக் காட்டிலும் உண்டாகா திருத்தல் நல்லது. ஏமம் - பாதுகாப்பு. ஏமம்சாராத கேண்மை என்க. ஒருவர்க் கொருவர் உதவியாவதற்காகக் கொள்வது நட்பு. அதற்காகக் கொண்டும், துன்பம் வந்தபோது உதவியாகாதவர் நட்பைப் பெறுவதிலும் பெறாமையே நல்லது. (5) 816. பேதை பெருங்கெழீஇ நட்பி னறிவுடையார் ஏதின்மை கோடி யுறும். பேதை பெருங்கெழீஇ நட்பின் - அறிவில்லாதவனது மிகச் செறிந்த நட்பைக் காட்டிலும், அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் - அறிவுடையாரது பகைமை கோடி மடங்கு நல்லது. கெழீஇ - கெழுமிய - செறிந்த, பொருந்திய. கோடி - மிகப்பல. அறிவுடையார் பகை ஒரு தீங்கும் தராது; பேதையார் நட்பு எல்லாத் தீங்குந்தரும். (6) 817. நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற் பத்தடுத்த கோடி யுறும். நகைவகையர் ஆகிய நட்பின் - அறிவுவகைய ராகாது நகை வகையாரோடு கொண்ட நட்பினால் வரும் இன்பங் களை விட, பகைவரால் பத்தடுத்த கோடி உறும் - பகைவரால் வருந்துன்பங்கள் பத்துகோடி மடங்கு நல்லனவாகும். நட்பு - நட்பினால்வரும் இன்பத்தை யுணர்த்திற்று. நகை வகையர் - நகைச்சுவையாளர், கழைக்கூத்தர், மாயவித்தைக் காரர் போன்றார். இவர் பலவகையாக மக்களை மகிழ்வித்துப் பொருள் கொண்டு வாழ்பவர். அவ்வாறே தம் நண்பனை மகிழ்வித்துப் பொருள்பறித்து வாழும் தீநட்பினரை 'நகை வகையர்' என்றார். தீநட்பினர், நட்பை விரும்பாது பொருளை விரும்பி நட்பினரா யிருப்பவர். (7) 818. ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல். ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை - தம்மால் முடியுங் காரியத்தை முடியாததாக நடிப்பவரோடு கொண்ட நட்பினை, சொல்லாடார் சோரவிடல் - அவரறியச் சொல்லாமலே நழுவ விட்டு விட வேண்டும். சோரவிடல் - விடுவது ஒருநாளைக் கொருநாள் நழுவ விடுதல். அறியச் சொல்லினும், விடுவது தெரியினும் அப்போது அத்தவற்றை விட்டுப் பின்னும் நட்பாயொழுகக் கருதுவாராகலின், அறியாமல் நழுவவிடுக என்றார். (8) 819. கனவினு மின்னாது மன்னோ வினைவேறு சொல்வெறு பட்டார் தொடர்பு. வினை வேறு சொல்வேறு பட்டார் தொடர்பு - வினையும் சொல்லும் பொருந்தாது வெவ்வேறாக இருப்பவர் நட்பானது, கனவினும் இன்னாது - கனவிலும் துன்பந்தருவ தாகும். மன் ஓ - அசை. வினைவேறு சொல்வேறு - செயலிற் பகை வராயும் சொல்லில் நண்பராயும் இருத்தல். நண்பரைப் போல் பேசித் தீங்கு செய்பவர். (9) 820. எனைத்துங் குறுகுத லோம்பல் மனைக்கெழீஇ மன்றிற் பழிப்பார் தொடர்பு. மனைக் கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு - தனியாக வீட்டில் இருந்தபோது நட்புப்பாராட்டிப் பலர் முன்னிலையில் பழித்துப் பேசுவாரது நட்பினை, எனைத்தும் குறுகுதல் ஓம்பல் - கொஞ்சங்கூடத் தம்மை அணுகுதலை நீக்குக. அந்நட்பைக் கொஞ்சமுங் கொள்ளக்கூடாது. கெழீஇ - கெழுமி - பொருந்தி, மன்று - அவை. மனையில் புகழ்ந்து மன்றில் இகழ்வோர் ஒருபோதும் தம்மை அணையா வகை எச்சரிக்கையாகக் காக்க வேண்டும். (10) 83. கூடாநட்பு மனத்தால் கூடாமல் புறத்தால் கூடி ஒழுகுவார் நட்பின் தன்மை. உள்ளுக்கு நட்பாகாமல் தமது காரியம் ஆகுமட்டும் வெளிக்கு நட்டார்போல் நடித்தல். 821. சீரிடங் காணி னெறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. நேரா நிரந்தவர் நட்பு - மனத்தால் கூடாதிருந்தே தமக்கு வாய்ப்புக் கிடைக்கும் வரையில் கூடியிருப்பவர் நட்பானது, சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை - வாய்ப்புக் கிடைத் தால் இரும்பு முதலியவற்றைத் துண்டாக வெட்டுதற்குத் துணை செய்யும் பட்டடைக்கு ஒப்பாகும். நேரா - நேராது. எதிர்மறை வினையெச்சம். நேர்தல் - பொருந்துதல். நிரத்தல் - கலத்தல், பொருந்துதல். சீரிடம் - வாய்த்த இடம், காரியம் கைகூடும் நேரம். பட்டடை - கொல்லன் பட்டறையில் காய்ச்சிய இரும்பை அடிக்கவும், துண்டாக வெட்டவும் தாங்கலாய் இருக்கும் பட்டடைக்கல். இரும்பை வெட்டும் வேளை வரும்வரை தாங்குவது போன்றிருந்து, அவ்வேளை வந்ததும் துண்டாக வெட்ட உதவும் பட்டடைக்கல் போல, காரியம் கைகூடும் வரை நண்பர் போல் நடித்துக் காரியம் கைகூடினதும் கேடு செய்யும் நட்பினைப் பட்டடையாகக் கூறினார். இது இப்போது பட்டறையென வழங்குகிறது. (1) 822. இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். இனம் போன்று இனமல்லார் கேண்மை - நட்பினர் போன்று நட்பில்லாதவருடைய நட்பானது, மகளிர் மனம் போல வேறுபடும் - பொதுமகளிர் மனம்போல வேறுபடும். பொதுமகளிர் மனம் அன்பின்றிப் பொருளையே நாடிப் பொருள் தீர்ந்தால் அவனைப் புறக்கணிப்பது போன்றதே இவர் நட்பும். (2) 823. பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது. நல்ல பல கற்றக் கடைத்தும் - நல்ல நூல்கள் பல வற்றைக் கற்ற போதிலும், மனம் நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது - அதனால் மனந்திருந்தி நண்பராகுதல் பகைவர்க்கு இல்லை. மனம் நல்லராகுதல் - செற்றம் நீங்குதல். செற்றம் - தணியாச் சினம். உள்ளே செற்ற முடையாரைக் கல்வி யுடைமை பற்றி நட்புடையரென்று கருதக்கூடாது. மாணார் - பகைவர். (3) 824. முகத்தி னினிய நகாஅ வகத்தின்னா வஞ்சரை யஞ்சப் படும். முகத்தின் இனிய நகா அகத்து இன்னா வஞ்சரை - கண்ட பொழுது முகத்தால் இனிமையாகச் சிரித்து எப்பொழுதும் மனத்தால் கேடு செய்ய நினைக்கும் வஞ்சகர்களை, அஞ்சப்படும் - அஞ்சவேண்டும். முகத்தால் - முகமலர்ந்து. நகா - நக்கு. இன்னா வஞ்சர் - இன்னாதன செய்ய எண்ணும் வஞ்சர். (4) 825. மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ் சொல்லினாற் றேறற்பாற் றன்று. மனத்தின் அமையாதவரை - மனத்தால் தம்மொடு பொருந்தா தவர்களை, சொல்லினால் எனைத் தொன்றும் தேறற்பாற்று அன்று - அவன் சொல்லைக் கொண்டு யாதொரு செயலினும் தெளிதற் பால தன்று. அவர் வஞ்சனைச் சொல்லை உண்மையான சொல்லென எண்ணி ஒரு காரியஞ் செய்ய அமர்த்தக் கூடாது. (5) 826. நட்டார்போ னல்லவை சொல்லினு மொட்டார்சொல் ஒல்லை யுணரப் படும். நட்டார்போல் நல்லவை சொல்லினும் - நண்பர்போல நல்லவைகளைச் சொன்னாராயினும், ஒட்டார் சொல் ஒல்லை உணரப்படும் - பகைவர் சொல்லும் சொற்கள் நன்மை தராமை விரைவில் அறியப்படும். தீமை தரும் என்பதாம். (6) 827. சொல்வணக்க மொன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். வில்வணக்கம் தீங்கு குறித்தமையான் - வில்லினது வணக்கம் தீமை செய்தலைக் குறித்தமையால், ஒன்னார் கண் சொல் வணக்கம் கொள்ளற்க - பகைவரிடத்திலிருந்து பிறக்கும் சொல்லினது வணக்கத்தையும் நமக்கு நன்மை செய்தலைக் குறித்ததென்று கொள்ளா தொழிக. வில் வணக்கம் - வில்லினது வளைவு. சொல்வணக்கம் - வணக்கமாகச் சொல்லும் சொல். வணக்கம் - தாழ்வு, பணிவு. வணங்கும் குறிப்பொப்புமை பற்றிக் கூறினார். வில்லினது குறிப்பு அவனால் வளைக்கப்படும் வில்வணக்கத்தின் மேல் நிற்பது போல, பகைவர் குறிப்பும் அவரால் சொல்லப்படும் சொல் வணக்கத்தின் மேல் நின்றது. பகைவர் சொல்லும் வணக்கச் சொல்லும் வில் வணக்கம் போல் தீமை குறித்த தென்று கொண்டு அச் சொல்லை நம்பக் கூடாது. (7) 828. தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னார் அழுதகண் ணீரு மனைத்து. ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - பகைவர் களது வணங்கும் கையினுள்ளும் படைக்கலம் மறைந்திருக்கும், அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அப்படை மறைந்திருக்கும் இடமாகும். பகைவர் தாம் நண்பர் என்பதனைத் தம் கையால் தொழுதும் கண்ணால் அழுதும் காட்டிப் பின் கொல்லுதற்கு எடுக்கும் படைக் கலம், ஆராய்ந்தறியின் தொழுதும் அழுதும் காட்டும் அச் செயல் களிலேயே தோன்றும் என்பார், 'ஒடுங்கும்' என்றார். உலகம் போற்றும் உயர்ந்தோன் காந்தியடிகளைத் தொழுத கோட்சேயின் கையே வெடியைக் கொண்டு அடிகளைச் சுட்டுக் கொன்றது இதற்கு எடுத்துக் காட்டாகும். பகைவர் தம் எளிமை காட்டித் தொழினும் அழினும் அச் செயலால் அவரை நம்பாது குறிப்பையே நோக்கி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். (8) 829. மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று. மிகச் செய்து தம் எள்ளுவாரை - பகைமை தோன்றாமல் புறத்தே நட்பினை மிகச் செய்து அகத்தே தம்மை இகழும் பகைவரை, நட்பினுள் நகச் செய்து சாப் புல்லல் பாற்று - தாமும் அவ்வாறே புறத்தே அந்நட்பினை மிகச்செய்து அகத்தே அது சாகும்படி பொருந்தும் பான்மை உடையது முறையாகும். புறத்தே நட்பினை மிகச்செய்தல் - வெளிக்கு நட்புடையவர் போல் நடித்தல். சாகும்படி பொருந்துதல் - அந்நட்பை அறவே நீக்கிடுதல். உள்ளொன்று புறமொன் றாதல் ஒருவர்க்குத் தகா தெனினும், பகைவரிடத்தாயின் தகுமென்பது அரசியல் முறை. எள்ளுவாரைப் புல்லல் எனக் கூட்டுக. நட்பினுள் நகச்செய்தல் - புறத்தே செய்யும் நட்பைக் கண்டு மகிழும்படி செய்தல். (9) 830. பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட் டகநட் பொரீஇ விடல். பகை நட்பாம் காலம் வருங்கால் - தம் பகைவர் தமக்கு நண்பராக நடக்கும் காலம் வந்தால், முகம் நட்டு அகம் நட்பு ஒரீஇ விடல் - தாமும் அவரோடு முகத்தால் நட்புச் செய்து அகத்தால் அந் நட்பை விலக்கிப் பின் அம்முக நட்பையும் விட்டுவிட வேண்டும். அக்காலமாவது - பகைவரென்று வெளிப்படையாக விலக்க முடியாமல் நடந்துகொள்ளுங் காலம். அக்காலத்தே முகம் நட்டு அகம் விட்டுப் பின் நாளடைவில் விலக்கி விட வேண்டும் என்பதாம். (10) 84. பேதைமை யாதும் அறியாமை; அறிவு சிறிது மின்மை. 831. பேதைமை யென்பதொன்றி யாதெனி னேதங்கொண் டூதியம் போக விடல். பேதைமை என்பது ஒன்று யாதெனின் - அறியாமை என்று சொல்லப்படுவது இன்று எது வென்றால், ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் - அது குற்றந் தருவன வற்றைக் கொண்டு நன்மை தருவனவற்றைக் கைவிடுதல். பேதைமை - யாதுமறியாமை (1) 832. பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல். பேதமையுள் எல்லாம் பேதைமை - ஒருவனுக்கு அறியாமை களிலெல்லாம் மிக்க அறியாமையாவது, கை அல்ல தன்கண் காதன்மை செய்தல் - தனக்காகாத ஒழுக்கத்தின் கண் விருப்பங் கொள்ளுதல். காதன்மை - காதல், விருப்பம். கை - ஒழுக்கம். (2) 833. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். நாணாமை - நாண வேண்டியவற்றுக்கு நாணாமையும், நாடாமை - ஆராய வேண்டியவற்றை ஆராயாமையும், நார் இன்மை - அன்பின்மையும், யாதொன்றும் பேணாமை - போற்ற வேண்டி யவற்றுள் ஒன்றையும் போற்றாமையும், பேதை தொழில் - அறிவில் லாதவனுடைய தொழில் களாகும். நாணம் - வெட்கம். பிறரால் பழிக்கப்படும் கெட்ட காரியங்களைச் செய்ய வெட்கப்படுதல். ஆராய வேண்டியவை - நல்லவை, கெட்டவை. போற்ற வேண்டியவை - கல்வி, ஒழுக்கம் முதலியன. (3) 834. ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப் பேதையிற் பேதையா ரில். ஓதி உணர்ந்தும் - நூல்களைக் கற்றறிந்தும், பிறர்க்கு உரைத்தும் - அவற்றைப் பிறர்க்குச் சொல்லியும், தான் அடங்காப் பேதையின் - தான் அடங்கி நடவாத அறிவில்லாத வனைப் போல, பேதையார் இல் - அறிவில்லாதவன் உலகத்தில் இல்லை. (4) 835. ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந் தான்புக் கழுந்து மளறு. பேதை - அறிவில்லாதவன், எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு - ஏழிடங்களில் தான் புகுந்து அழுந்திக் கிடக்கும் பெருந் துன்பத்தை, ஒருமைச் செயல் ஆற்றும் - ஓரிடத்திலேயே செய்து கொள்ள வல்லவனாவான். எழுமை - பல என்னும் பொருளது. முகவுரை பார்க்க. அளறு - பெருந்துன்பம். 225ஆம் குறளுரை பார்க்க. பல இடங்களில் படுந்துன்பங்களை ஓரிடத்திலேயே படுவானென்பது. (5) 836. பொய்படு மொன்றோ புனைபூணுங் கையறியாப் பேதை வினைமேற் கொளின். கை அறியாப் பேதை வினைமேற்கொளின் - செய்யும் முறையறியாத அறிவில்லாதவன் ஒரு தொழிலை மேற்கொள் வானாயின், பொய்படும் ஒன்றோ புனைபூணும் - அத்தொழிலும் கெடும் தானும் தளைபூணுவான். பொய்படும் - கெடும். ஒன்றோ - எண்ணிடைச்சொல். தளை - விலங்கு. குற்றஞ் செய்ததற்காக விலங்கிடப்படுவான். தொழிலையுங் கெடுத்துத் தானுங் கெடுவான். (6) 837. ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வ முற்றக் கடை. பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை - அறிவில்லாதவன் பெரிய செல்வத்தை அடைந்த விடத்து, ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் - அயலார் உண்ணச் சுற்றத்தார் பசித்து நிற்பர். ஆர என்றது - அயலார் எல்லாம் பெறுவரென்பது. அறிவிலார் செல்வம் தம்மவருக்குப் பயன்படாது. (7) 838. மைய லொருவன் களித்தற்றாற் பேதைதன் கையொன் றுடைமை பெறின். பேதை தன்கை ஒன்று உடைமை பெறின் - அறிவில்லாதவன் தன் கையில் ஒரு பொருளை உடைமையாகப் பெற்றால், மையல் ஒருவன் களித்தற்று - அது இயற்கையாகவே மயக்க முடையான் ஒருவன் மேலும் கள்ளுண்டு களித்தாற் போன்றது. அறிவின்மைக்கு மயக்கமும், செல்வக் களிப்புக்குக் கள்ளுண்ட களிப்பும் உவமை. அவன் செய்வன தலைதடு மாற்றமாயிருக்கும். (8) 839. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட் பீழை தருவதொன் றில். பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல் - பிரிய நேர்ந்த போது பிரியும் இருவர்க்கும் தருவதாகிய துன்பம் ஒன்றில்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆதலால், அறிவிலாதார் ஒருவர்க் கொருவர் செய்து கொள்ளும் நட்பானது மிகவும் நல்லது. பீழை - துன்பம். நாடோறும் தேய்ந்து வருதலின் துன்பந் தராததாயிற்று. இது புகழ்வது போலப் பழித்தது. (9) 840. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். சான்றோர் குழாத்துப் பேதை புகல் - சான்றோரது அவையின் கண் அறிவில்லாதவன் புகுதல், கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று - கழுவாத காலைப் படுக்கையின் மேல் வைத்தாற் போலும். குழாம் - கூட்டம். கழாத கால் - கழுவாத கால் - மல மிதித்த கால் (இடக்கரடக்கல்). அதனால் அப்படுக்கை இழிவு படுவது போல, பேதையால் சான்றோர் கூட்டம் இழிவுபடும். (10) 85. புல்லறிவாண்மை புல்லிய அறிவினை ஆளுந்தன்மை என விரியும். அதாவது - தான் சிற்றறிவுடையனாக இருந்தும் தன்னைப் பேரறிவினனாக மதித்து, உயர்ந்தோர் கூறும் உறுதிச்சொற் கொள்ளாமை. 841. அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு. இன்மையுள் இன்மை அறிவின்மை - வறுமையுள் மிக்க வறுமையாவது அறிவில்லாமை யாகும், பிறிதின்மை இன்மையா வையாது உலகு - ஏனைப் பொருளில்லாமையை வறுமையாகக் கொள்ளமாட்டார் உலகத்தார். அறிவு என்றது - நல்லறிவை. புல்லறிவாளர் செல்வம் பெறினும் பிறர்க்குப் பயன்பட வாழாமையால் அறிவின்மையை இன்மையுள் இன்மையென்றும், நல்லறிவாளர் வறுமை யுறினும் பிறர்க்குப் பயன்பட வாழ்வாராகையால் அதனை உலகு இன்மையா வையா தென்றுங் கூறினார். (1) 842. அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதியாது மில்லை பெறுவான் றவம். அறிவிலாம் நெஞ்சு உவந்து ஈதல் - புல்லறிவுடையான் மனமு வந்து ஒருபொருளை ஒருவனுக்குக் கொடுத்தற்குக் காரணம், பிறிது யாதும் இல்லை - வேறொன்றும் இல்லை, பெறுவான் தவம் - அது பெறுகின்றவனுடைய தவமே யாகும். தவம் - நற்செயல். அவன் மனமுவந்து கொடுப்பது இவன் நற்செய லென்பதல்லாமல் அவன் ஒருபோதும் மனமுவந்து கொடானென்பதாம். (2) 843. அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பிழை செறுவார்க்குஞ் செய்த லரிது. அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை - புல்லறிவாளர் தாமே தம்மைத் துன்பப்படுத்திக் கொள்ளும் துன்பமானது, செறுவார்க்கும் செய்தல் அரிது - அத்துன்பஞ் செய்வதற்குரிய பகைவர்க்கும் செய்தல் அரிது. பகைவர் தாம் குறித்த ஒன்றனைக் காலம் பார்த்திருந்து செய்வதல்லது புல்லறிவாளர் போல வறுமை, பழி முதலிய பல வற்றையும் எக்காலத்தும் செய்யமாட்டாமையின், பகைவர்க்கும் செய்த லரிதென்றார். (3) 844. வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை உடையம்யா மென்னுஞ் செருக்கு. வெண்மை எனப்படுவது யாது எனின் - புல்லறி வுடைமை என்று சொல்லப்படுவது எதுவென்றால், யாம் ஒண்மை உடையம் என்னும் செருக்கு - தம்மைத் தாமே யாம் நல்லறிவுடையேம் என்று சொல்லிக் கொள்ளும் மயக்கமாம். வெண்மை - அறிவு முதிராமை. தம்மைத் தாமே நல்லறி வுடையேம் என்று நன்கு மதித்துக் கொள்ளும் மயக்கமே புல்லறி வுடைமை யாகும். (4) 845. கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉ மையந் தரும். கல்லாத மேற்கொண்டு ஒழுகல் - புல்லறிவாளர் தாம் கல்லாத னவற்றையும் கற்றவர் போலக் காட்சிக் கொண்டு நடத்தலானது, கசடு அற வல்லதும் ஐயம் தரும் - குற்றமறக் கற்ற நூலிடத்தும் பிறர்க்கு ஐயத்தை உண்டாக்கும். புல்லறிவாளர் ஒரு நூலில் தாம் வல்லரெனக் கூறிக் கொண்டு பிழைபடக் கூறுவதால், அந்நூலைக் கற்றவர்க்கும் ஐயம் உண்டாவ தாயிற்று. அவர் கூறுவதுதான் சரியோ, நாம் எண்ணுவது தப்போ என்று ஐயம் உண்டாகும். (5) 846. அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயிற் குற்ற மறையா வழி. தம்வயின் குற்றம் மறையாவழி - புல்லறிவாளர் தம்மிடம் உள்ள குற்றங்களை நீக்காராயின், அற்றம் மறைத்தலோ புல்லறிவு - ஆடையால் மறைத்தற்குரிய உறுப்பை மறைத்தவராகத் தம்மைக் கருதுதலும் புல்லறி வாகும். குற்றம் மறைத்தல் - குற்றம் இல்லாமல் செய்தல். புல்லறிவாளர் குற்றமே உருவானவ ராகையால், அற்றம் மறைக்காவிடினும் குற்றம் நாடுவார் இல்லை என்பதாம். அற்றம் மறைத்தல் - இடக்கரடக்கல். (6) 847. அருமறை சோரு மறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. அருமறை சோரும் அறிவிலான் - அரிய மறை பொருள் களை வெளியிடும் புல்லறிவாளன், தானே தனக்குப் பெரு மிறை செய்யும் - தானே தனக்குப் பெரிய துன்பத்தைச் செய்துகொள்வான். அருமறை - வெளியிடக் கூடாத மறைபொருள் (இரகசியம்). மிறை - துன்பம். வெளியிடக் கூடாதவற்றை வெளியிட்டுப் பிறரால் துன்பந்தேடிக் கொள்வதால், புல்லறிவாளன் தானே தனக்குப் பெருமிறை செய்தவனா கிறான். (7) 848. ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னவ்வுயிர் போஒ மளவுமோர் நோய். ஏவவும் செய்கலான் - புல்லறிவாளன் தனக்கு உறுதியாயின வற்றை அறிவுடையோர் செய்யென்று சொன்னாலும் செய்ய மாட்டான், தான் தேறான் - அதுவன்றித் தானாகவும் இவை நல்லவை என்று அறியமாட்டான், அவ்வுயிர் போமளவும் ஓர் நோய் - அவன் சாகுமட்டும் உலகிற்கு ஒரு நோய் போல்வான். சொற்பேச்சுங் கேளான், தானும் அறியான் எனப் பழிப்பதற் காக 'உயிர்' என அஃறிணையால் கூறினார். தன் புல்லறிவினால் தீங்கே செய்வதால் 'நோய்' என்றார். உறுதியாயின - நல்லவை. (8) 849. காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான் கண்டானாந் தான்கண்ட வாறு. காணாதான் காட்டுவான் தான் காணான் - தன்னை எல்லா மறிந்தவனாக மதித்தலால், ஒன்று மறியாத புல்லறி வாளனுக்கு ஒன்றை அறிவிக்கப் புகுந்தவன் அவனால் பழிக்கப் பட்டுத் தான் அறியாதவனாவான்; காணாதான் தான் கண்டவாறு கண்டானாம் - இனி, அவ்வறியுந் தன்மையில்லா தவன் கொண்டது விடாமையால், தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தவனாவான். புல்லறிவாளர்க்கு நல்லறிவு புகட்டுதல் எவ்வகையினும் முடியாது. தானறிந்த வாற்றால் அறிந்தவனாதல் - ஒன்றுமறியாத வனாதல். சொற்பொருட் பின்வருநிலையணி. (9) 850. உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும். உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் - உயர்ந்தோர் பலரும் உண்டென்பதை இல்லையென்று சொல்லும் புல்லறி வாளன், வையத்து அலகையா வைக்கப்படும் - இவ்வுலகத்தின் கண்ணே திரியும் பேய் என்று எண்ணப்படுவான். உலகத்தார் உண்டென்பதை இல்லையென்பது புல்லறி வாளர் தன்மை. அலகை - பேய். பேய் அச்சத்தாலுண்டாகும் உரு வெளித் தோற்றம். 565ஆம் குறளுரை பார்க்க. உலகத்தோடு ஒட்ட வொழுகும் நல்லறி வின்மையால் அலகையாக வைக்கப்படும் என்று பழித்துக் கூறினார். புல்லறிவாளன் மகனல்லன், மகன் போன்ற போலியே. அவனை அஞ்சத்தகும் பொருளைப் போல அஞ்சி யகல வேண்டும் என்பதாம். (10) 86. இகல் இகல் - பகை; பகைமைக்குணம். 851. இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கு நோய். எல்லா வுயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய் - எல்லாவுயிர்கட்கும் பிற வுயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் நோயை, இகல் என்ப - இகல் என்று சொல்லுவர் அறிவுடையோர். பகல் - பகுப்பு, கூடாமை. பண்பு இன்மை - நற்குண மின்மை. எனவே தீக்குணமாயிற்று. நோயே இகல். இகல் - மாறுபாடான உணர்ச்சி. பகைக்குணம். (1) 852. பகல்கருதிப் பற்றா செயினு மிகல்கருதி இன்னாசெய் யாமை தலை. பகல் கருதிப் பற்றா செயினும் - தம்மொடு கூடாமை யைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தாலும், இகல் கருதி இன்னா செய்யாமை தலை - அவனோடு மாறுபாட்டைக் கருதி அவனுக்குத் துன்பஞ் செய்யாமல் இருப்பது சிறந்தது. அவனுக்குத் துன்பஞ் செய்யின் பகைமை வளரும். செய்யா திருக்கின் அப்பற்றாதன தாமே ஓய்ந்து போகும். பற்று - விருப்பம். பற்றாத - வெறுப்பன. பற்றாத - பலவின்பால் வினையாலணையும் பெயர். பற்றிலாத என்பது பொருள். (2) 853. இகலென்னு மெவ்வநோய் நீக்கிற் றவலில்லாத் தாவில் விளக்கந் தரும். இகல் என்னும் எவ்வம் நோய் நீக்கின் - மாறுபாடு என்னும் துன்பந் தருகின்ற நோயை ஒருவன் தன் மனத்தி லிருந்து நீக்குவா னாயின், தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும் - அவனுக்கு அந் நீக்கம் எப்போதும் அழிவில்லாத குற்றமற்ற புகழைத் தரும். எவ்வம் - துன்பம். தவல் - கேடு. தாஇல் - தா - குற்றம். விளக்கம் - புகழ். மாறுபாட்டுக் குணம் நீங்கினால் யாவரும் நண்பராவர், அதனால் பெருஞ் செல்வனாகிப் புகழ் அடைவான். (3) 854. இன்பத்து ளின்பம் பயக்கு மிகலென்னுந் துன்பத்துட் டுன்பங் கெடின். இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - மாறுபாடு என்னும் துன்பங்களுக்கெல்லாம் மிக்கதுன்பம் ஒருவனுக்கு இல்லையாயின், இன்பத்துள் இன்பம் பயக்கும் - அது அவனுக்கு இன்பங்களி லெல்லாம் மிக்க இன்பத்தைக் கொடுக்கும். மாறுபாடில்லாதவனுக்கு யாவரும் நட்பாவராதலின் இன் புறுவான். (4) 855. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்குந் தன்மை யவர். இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை - மாறுபாட்டை ஏற்றுக் கொள்ளாமல் நடக்கவல்லாரை, மிகல் ஊக்கும் தன்மை யவர் யார் - வெல்லக் கருதும் தன்மை யுடையவர் யார்? ஒருவருமில்லை. எதிர் சாய்தல் - ஏற்றுக்கொள்ளாமை. எல்லோரும் உறவா வதால் பகை இல்லை என்பதாம். மிகல் - வெற்றி. மிகல் ஊக்கல் - வெல்ல முயலுதல். (5) 856. இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை தவலுங் கெடலு நணித்து. இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை - பிறரோடு மாறு படுதலில் மிகுதல் எனக்கு இனிது என்பவனுடைய வாழ்க்கை யானது, தவலும் கெடலும் நணித்து - வறுமையால் துன்பமடைதலும் முழுதும் கெடுதலும் விரைவில் உண்டாகும். இகலின் மிகல் - மிகுந்த மாறுபாடுடையனாதல். முழுதும் கெடுதல் - இறத்தல். மிகுந்த மாறுபாட்டைப் பெருக்கிக் கொண்டே போகிறவன் வறுமையால் துன்புற்று முடிவில் இறந்து விடுவான். பகைவரால் கெடுவான் என்றுமாம். (6) 857. மிகன்மேவன் மெய்ப்பொருள் காணா ரிகன்மேவல் இன்னா வறிவி னவர். இகல் மேவல் இன்னா அறிவினவர் - மாறுபாடு பொருந்து தலையுடையவர், மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் - வெற்றி பொருந்துதலை யுடைய உண்மைப் பொருளை அறியமாட்டார். இன்னாத அறிவு - தமக்கும் பிறர்க்கும் தீங்கு தரும் அறிவு. வெற்றி பொருந்தும் உண்மைப் பொருள் - வெற்றி யடைதற்கான உண்மை வழி. மேவுதல் - பொருந்துதல். மாறுபாடு கொண்ட அறிவினையுடையார் வாழ்க்கையில் வெற்றியடையும் வழியை அறியமாட்டார். (7) 858. இகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை மிகலூக்கி னூக்குமாங் கேடு. இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் - மாறுபாட்டை ஏற்றுக் கொள்ளாமை ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம் - மாறுபாட்டில் மிகுதலை மேற்கொள்ளின் கேடு மிகும். ஆக்கம் - செல்வம். மாறுபாட்டில் மிகுதல் - மாறுபாடு டையவனாதல். (8) 859. இகல்காணா னாக்கம் வருங்கா லதனை மிகல்காணுங் கேடு தரற்கு. ஆக்கம் வருங்கால் இகல் காணான் - ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது மாறுபாட்டை நினையான், கேடு தரற்கு அதனை மிகல் - காணும் தனக்குக் கேடு செய்து கொள்ளும் போது அவ்விகலை மிகுதியாக நினைப்பான். கேடு செய்து கொள்ளல் - கேடு தேடிக்கொள்ளல். மாறுபாடின்மையால் செல்வமும், மாறுபாட்டினால் வறுமையும் உண்டாகும். (9) 860. இகலானா மின்னாத வெல்லாம் நகலானாம் நன்னைய மென்னும் செருக்கு. இகலான் இன்னாத எல்லாம் ஆம் - மாறுபாட்டினால் இன்னாதனவெல்லாம் உண்டாகும், நகலான் நல்நயம் என்னும் செருக்கு ஆம் - நட்பால் நல்லறம் என்னும் பெருஞ் செல்வம் உண்டாகும். இன்னாதன - துன்பந் தருவன. இகல் துன்பந்தரும். இக லின்மை இன்பந் தரும். பகைக் குணத்தால் துன்பமும், நட்புக் குணத்தால் இன்பமும் உண்டாகும் என்பதாம். (10) 87. பகை மாட்சி பகை மாட்சி - பகைவனது மாட்சி. மாட்சி - நன்மை. தனக்கு நன்மையாகும் பகையை ஏற்றுக் கொள்ளுதல். நன்மை - வெற்றி. பிறரால் எளிதில் வெல்லற்குரியவனது இலக்கணம் இதில் கூறுகின்றார். அதாவது பகைவர் எளிதில் வெல்லும் நிலைமை யுடையவன் தன்மை. அத்தகையவனை அறிந்து, அவன் மேல் செல்ல வேண்டும் என்பதாம். 861. வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா மெலியார்மேல் மேக பகை. வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக - தம்மினும் வலியார்க்குப் பகையாகி அவர்களை எதிர்த்தலை ஒழிக, மெலியார்மேல் பகை ஓம்பா மேக - தம்மினும் மெலியார் மீது பகையாகி எதிர்த்தலை ஒழியாது விரும்புக. ஒழியாது - ஈறு கெட்டது. மேவுக - இடைக்குறை - வலியார் என்னுமிடத்துத் துணைவலியும் அடங்கலின், மெலியார் என்னு மிடத்துத் துணைவலி இன்மையும் கொள்ளப்படும். மெலியார் பகை வெற்றி தருவதால் விடாது கொள்ள வேண்டும் மென்பதாம். (1) 862. அன்பில னான்ற துணையிலன் றான்றுவ்வான் என்பரியு மேதிலான் றுப்பு. அன்பு இலன் - ஒருவன் தன் சுற்றத்தின் மேல் அன்பில்லா தவன், ஆன்ற துணை இலன் - அதுவேயன்றி வலிய துணை யில்லாதவன், தான் துவ்வான் - தானும் வலியில்லாதவன், எதிலான் துப்பு என் பரியும் - இத்தகையவன், தன்மேல் வந்த பகைவன் வலியினை எவ்வாறு தொலைப்பான்? துவ்வுதல் - வலியுறுதல். துப்பு - வலி. பரிதல் - அழித்தல் - சுற்ற மும் துணையும் வலியும் இல்லான்மேல் செல்வார்க்கு வலி வளரு மென்பதாம். (2) 863. அஞ்சு மறியா னமைவில னீகலான் றஞ்ச மெளியன் பகைக்கு. அஞ்சும் - ஒருவன் அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சுவான், அறியான் - அறிய வேண்டியவற்றை அறியான், அமைவு இலன் - பிறரோடு பொருத்தமில்லாதவன், ஈகலான் - பிறர்க்கு ஒன்றும் கொடாதவன், பகைக்குத் தஞ்சம் எளியன் - இப்படிப்பட்டவன் பகைவர்க்கு மிகவும், எளியவனானவான். தஞ்சம் - எளிமை. தஞ்சம் எளியன் - ஒருபொருட் பன்மொழி. (3) 864. நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கு மெளிது. வெகுளி நீங்கான் - ஒருவன் வெகுளி நீங்கானாய், நிறை இலன் - பிறரறியாமல் மனத்தில் மறைத்து வைக்க வேண்டிய தொன்றை மறைத்து வையாதவனை, எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது - அவனை வெல்லுதல் எப்போதும் எவ்விடத்தும் யார்க்கும் எளிதாகும். வெகுளுந் தன்மையும் மறை வெளிப்படுத்தலும் உடைய னாதலால், காலமும் இடமும் வலியும் ஆராய்ந்தறி யாமல் எளிதில் மேற்சென்று வெல்லலாமென்ப தாயிற்று. (4) 865. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க் கினிது. வழி நோக்கான் - ஒருவன் பின்வருவனவற்றை எண்ணிப் பாரான், வாய்ப்பன செய்யான் - வெல்வதற்கு வேண்டிய வற்றைச் செய்துகொள்ளான், பழி நோக்கான் - தனக்கு வரும் பழியையும் பாரான், பண்பு இலன் - நற்குண மில்லாதவன், பற்றார்க்கு இனிது - அவன் பகைவர்க்கு அப்பகை இனியதாகும். இக்குற்றங்களுடையான் தானே யழிதலால், பகைவர்க்கு இனிதென்றார். (5) 866. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும். காணாச் சினத்தான் - ஒன்றையும் பாராத வெகுளியை உடையவனும், கழி பெருங் காமத்தான் - மிகப் பெரிய ஆசையை யுடையவனும் ஆகியவனது, பேணாமை பேணப்படும் - பகைமை விரும்பிக் கொள்ளப்படும். ஒன்றையும் பாராத வெகுளி - எதையும் எண்ணிப் பார்க்க முடியாத, தணியாத கடுஞ் சினம். காணாத - ஈறு கெட்டது. கழிபெருங் காமம் - பெரும் பேராசை. முன்னவனுக்கு யாவரும் பகையாவர்; பின்னவன் ஈயாத் தன்மையால் பலரும் அவனை விட்டு நீங்குவர். ஆகையால், தானே அழிவனென்பதாம். அத்தகையோன் பகையை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டு மென்பது; வெல்லலுதல் எளி தாகலின். 867. கொடுத்துங் கொளல்வேண்டு மன்ற வடுத்திருந்து மாணாத செய்வான் பகை. அடுத்து இருந்தும் மாணாத செய்வான் பகை - பகையை உற்றிருந்தும் அப்பகை வெல்வதற் கேலாதன செய்வான் பகையை, கொடுத்தும் மன்ற கொளல் வேண்டும் - சில பொருளைக் கொடுத் தாயினும் கட்டாயங் கொள்ள வேண்டும். பகையை உ ற்றிருத்தல் - தன்மேல் வருதற்குக் காலம் பார்த் திருக்கும் பகையை உடையனாயிருத்தல், ஏலாதன - படை முதலியவற்றைப் பெருக்காமை, துணைகொள்ளாமை முதலியன. மன்ற - உறுதியாக, கட்டாயம். அவன் வலியடை வதற்குமுன் சில கொடுத் தேனும் போர்க்களத்தை அடையச் செய்து வெல்ல வேண்டும் மென்பதாம். (7) 868. குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க் கினனிலனா மேமாப் புடைத்து. குணன் இலனாய் - ஒருவன் நற்குண மொன்றும் இல்லா தவனாய், குற்றம் பலவாயின் - குற்றங்கள் பல உள்ள வனாயின், இனன் இலனாம் - அவன் துணை இல்லாத வனாவன்; மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து - அத்துணையின்மை அவன் பகைவர்க்குத் துணையாவதை உடையது. குணம் - இறைமாட்சியில் சொல்லியன. குற்றம் - இவ்வதி காரத்தில் சொல்லியனவும் பிறவும். துணை - சுற்றம், நட்பு, பொருள், படை முதலியன. (8) 869. செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின். அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - அறிவில்லாத அஞ்சுந்தன்மையுள்ள பகைவரைப் பெற்றால், செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா - அவரை வெல்வார்க்கு உயர்ந்த இன்பங்கள் நீங்காவாம். இலா - இல்லாத. சேண் - உயர்வு. இக்குற்றமுடையார் எதிர்த்த பொழுதே தோற்பாராதலால், வெல்வார்க்கு உயர்ந்த இன்பங்கள் நீங்கா என்றார். (9) 870. கல்லான் வெகுளுஞ் சிறுபொரு ளெஞ்ஞான்று மொல்லானை யொல்லா தொளி. கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை - அற நூல்களைக் கல்லாதவனுடன் பகைத்தலால் வரும் எளிய பொருளை அடையா தவனை, எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது - எப்போதும் புகழ் அடையாது. சிறுபொருள் - சிறு முயற்சியால் வரும் பெரும் பொருள். அற நூலைக் கல்லாதானை வெல்லுதல் எளிதா யிருக்கவும் வெல்ல மாட்டாதானை வெற்றியால் வரும் புகழ் கூடாதென் பதாம். கல்லான் பகையை ஏற்றுக்கொள்ள வேண்டு மென்பதாம். சிறிய முயற்சியால் பெரிய பயன் அடைய வேண்டும். (10) 88. பகைத்திறந்தெரிதல் பகைவரிடம் நடந்து கொள்ள வேண்டிய வகையை ஆராய்ந் தறிதல். அறிந்து பகை கொள்ளாமல் இருக்க வேண்டும். 871. பகையென்னும் பண்பி லதனை யொருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று. பகை என்னும் பண்பு இலதனை - பகையென்று சொல்லப் படும் குணமில்லாததை, ஒருவன் நகையேயும் வேண்டற் பாற்று அன்று - ஒருவன் விளையாட்டின் கண்ணும் விரும்பற் பால தன்று. குணமில்லாதது - குற்றம். விளையாட்டாகவும் பகையை விரும்பக்கூடாது. (1) 872. வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க சொல்லே ருழவர் பகை. வில் ஏர் உழவர் பகை கொளினும் - ஒருவன் வில்லை ஏராக உடைய உழவரது பகையைக் கொள்ளினும், சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க - சொல்லை ஏராக உடைய உழவரது பகையைக் கொள்ளற்க. வில்லேருழவர் - வீரர். சொல்லேருழவர் - அறிஞர், அறநூலை அறிந்தவர். வீரரோடு பகை கொண்டால் கேடு வருதல் தவறினும் தவறும், நுண்ணறி வுடையாரோடு பகை கொண்டால் தவறாது கெடுவதால், அது கொள்ளினும் இது கொள்ளற்க என்றார். கொள்ளினும் என்ற உம்மையால் அதுவும் கொள்ளக் கூடாமை பெறும். இவ்விருவரோடும் பகை கொள்ளக் கூடாது. உழவர் உருவகம். அறிவுடைய பகைவரோடு கட்டாயம் பகை கொள்ளக் கூடாது. (2) 873. ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன் - தனிய னாய்ப் பலரோடு பகை கொள்பவன், ஏமுற்றவரினும் ஏழை - பித்தரைக் காட்டிலும் அறிவில்லாதவ னாவான். தனிமை - சுற்றம், நட்பு முதலிய துணையின்மை. பித்தர் பித்தி னால் தீங்கடைதல் தவறினும், கட்டாயம் தீங்கடையும் துணையி லானை அவரினும் அறிவிலி என்றார். தீங்காவது - துணையுள்ள போதே வெல்வ தரிதாயிருக்கத் துணையின்றிப் பலரோடு பகை கொண்டு அழிதல். (3) 874. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் றகைமைக்கட் டங்கிற் றுலகு. பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன் தகைமைக் கண் - வேண்டியபோது பகையை நட்பாகச் செய்து கொண்டு வாழும் இயல்புடையவனது பெருமை யினிடத்து, உலகு தங்கிற்று - இவ்வுலகம் அடங்கிற்று. நட்பாக்கல் - பகை நிலைமையில் நீக்குதல். உலகம் அவன் ஆட்சிக்கு ளடங்கும் என்பதாம். (4) 875. தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவ னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று. தன் துணை இன்று - தனக்குதவும் துணையோ இல்லை; பகை இரண்டு - பகையோ இரண்டு; ஒருவன் தான் அவற்றின் ஒன்று இன் துணையாக் கொள்க - இந்நிலையில் இருக்கும் ஒருவன், அப்பகை இரண்டனுள் பொருந்திய தொன்றைத் தனக்கு இனிய துணையாகச் செய்து கொள்க. பொருந்தியது - மற்றொன்றை வெல்வதற்கு ஏற்றது ஆல் - அசை. கொள்க அவற்றின் - தொகுத்தல் விகாரம். (5) 876. தேறினுந் தேறா விடினு மழிவின்கட் டேறான் பகாஅன் விடல். தேறினும் தேறாவிடினும் - பகைவனை முன்பு ஆராய்ந்து தெளிந்தானாயினும் தெளியானாயினும், அழிவின்கண் தேறான் பகான் விடல் - வேறொரு வினையால் தனக்குத் தாழ்வு வந்தபோது அவனைக் கூடாமலும் நீங்காமலும் நடுநிலையில் விட்டு வைக்க வேண்டும். முன் தெளிந்தானாயினும் அப்பொழுது கூடாமலிருக்க வேண்டு மென்றது - பகைவர்க்கு உடந்தையாய் நின்று தன்னைக் கெடுத்தல் நோக்கி. தெளியானாயினும் அப்பொழுது நீங்காதிருக்க வேண்டுமென்றது - அத்தாழ்வுக்குத் துணையாதல் நோக்கி. இதனால், பகைவரை நொதுமல ராக்க வேண்டு மென்பது. ஒருவனோடு செய்த போரில் தோல்வி நேரின், மற்ற பகைவரிடம் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டு மென்பது. (6) 877. நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க மென்மை பகைவ ரகத்து. நொந்தது அறியார்க்கு நோவற்க - தான் வருத்த முற்றதை அறியாத நண்பர்க்குத் தன் வருத்தத்தைச் சொல்லற்க; மென்மை பகைவர் அகத்து மேவற்க - வலியின்மை பார்த்திருக்கும் பகைவரிடம் தனது வலியின்மையைக் காட்டாதிருக்க. நோ என்னும் முதனிலைத் தொழிற்பெயர் அதைச் சொல் லுதலை உணர்த்திற்று. பகைவரிடம் தவிர்வது கூறுவார், நண்பரிடம் தவிர்வதும் உடன் கூறினார். (7) 878. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கட் பட்ட செருக்கு. வகை அறிந்து - ஒருவன் தான் போர்செய்தற் குரிய வகையை அறிந்து, தற்செய்து - அது முடித்தற்கேற்பத் தன்னைப் பெருக்கி, தற்காப்ப - மறதி புகாமல் தன்னைக் காக்கவே, பகைவர்கண் பட்ட செருக்கு மாயும் - அவனது பகைவரிடம் உண்டான களிப்புக் கெடும். வகை - வலியனானால் எதிர்த்துப் பொருதல், மெலிய னானதும் போர்விலக்கல் முதலியன, பெருக்கல் - பொருள் படை களால் தன்னைப் பெருகச் செய்தல். இவ்வாறு செய்யவே பகைவர் மகிழ்ச்சி யொழியும். (8) 879. இளைதாக முண்மரங் கொல்க களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து. முள்மரம் இளைதாகக் கொல்க - முள்ளையுடைய செடியை இளம் பருவத்திலேயே பிடுங்கி யெறிக; காழ்த்த இடத்துக்களை யுநர் கை கொல்லும் - முற்றிய போது தன்னைப் பிடுங்கு வோர் கையை வருத்தும். முள்மரம் - முட்செடி. முட்செடியை இளம்பருவத்தில் எளிதில் பிடுங்கி யெறியலாம்; முற்றினால் முள் கையைக் குத்தும். பகைவர் வலியடைவதற்கு முன்னமே வெல்ல வேண்டும்; வலி யடைந்தால் நம்மை வெல்வர் என்பது தோன்ற நிற்றமையால், இது பிறிது மொழிதல். (9) 880. உயிர்ப்ப வுளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் - தம்மொடு பகைப்ப வரது செருக்கினை அடக்க முடியுமாயிருந்தும் அடக் காதவர், உயிர்ப்ப உளரல்லர் - பின் மூச்சுவிடும் அளவிற்கும் உயிருடன் இருப்பவரல்லர்; விலைவில் அழிவர் என்பது பொருள். மன்ற - உறுதி குறிக்கும் இடைச்சொல். செம்மல் - செருக்கு. பகையைக் களைய வேண்டிய காலத்துக் களையா விட்டால் தாம் அழிவர் என்பதாம். (10) 89. உட்பகை உடனிருந்து கெடுக்கும் பகை. அதாவது புறப்பகைக்குத் துணை செய்து, அது வெல்லுமட்டும் நம்முடன் இருக்கும் பகைவர். 881. நிழனீரு மின்னாத வின்னா தமர்நீரு மின்னாவா மின்னா செயின். நிழல் நீரும் இன்னாத இன்னா - நிழலும் நீரும் இனியனவாய்க் காணப்படினும் அவற்றுள் நோய்களைத் தருபவை இனியவை அல்ல; தமர் நீரும் இன்னா செயின் இன்னாவாம் - அதுபோல், சுற்றத்தார் இயல்புகளும் இனிமை தருவனபோல் காணப்படினும் அவர்கள் துன்பம் செய்தால் இனியவை அல்லவாம். நோய் - பெருங்கால், பெருவயிறு, கக்கல், கழிச்சல் முதலியன. தமர் என்றதனால் உட்பகையாதற்குரிய பங்காளி களாம். (1) 882. வாள்போற் பகைவரை யஞ்சற்க; வஞ்சுக கேள்போற் பகைவர் தொடர்பு. வாள்போல் பகைவரை அஞ்சற்க - வெளிப்டையாக வெட்டும் வாளைப் போல வெளிப்படையான பகைவரது பகையைக் கண்டு அஞ்சற்க; கேள்போல் பகைவர் தொடர்பு அஞ்சுக. உறவினரைப் போல மறைவாக நிற்கும் பகைவரது நட்பைக் கண்டு அஞ்சுக. முன்னேயறிந்து காக்கப்படு மாகையால் அஞ்சற்க வென்றும், அறியவும் காக்கவும் படாமையால் கட்டாயம் கெடுக்கும் என்பது பற்றி அஞ்சுக வென்றுங் கூறினார். (2) 883. உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும். உட்பகை அஞ்சி தன் காக்க - உட்பகையானவர்களைக் கண்டு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்க; உலைவிடத்து மண்பகையின் மாணத் தெறும் - ஏனெனில், தனக்கோர் தளர்ச்சி வந்தபோது குயவன் மட்கலத்தை அறுக்கும் கருவிபோல அவர்கள் தப்பாமல் கெடுப்பர். காத்தல் - அவர் அணுகாமலும் அவர்க்கு உடம் படாமலும் நீக்குதல். மண்ணைப் பகுக்குங் கருவி மட்பகை எனப்பட்டது. பகைமை தோன்றாமல் உள்ளிருந்தே வஞ்சனை செய்தலின் கெடுதல் தப்பா தென்பதாம். (3) 884. மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா ஏதம் பலவுந் தரும். மனம் மாணா உட்பகை தோன்றின் - புறந்திருந்தியது போல அகந்திருந்தா உட்பகை ஒருவனுக்கு உண்டாயின், இனம் மாணா ஏதம் பலவும் தரும் - அது அவன் சுற்றத்தார் நல்லவராகாத குற்றம் பலவும் தரும். மாணா - மாணாத. சுற்றத்தார் நல்லவராகாத குற்றம் - சுற்றத்தார் கெட்டவராகும் குற்றம் ; அதாவது சுற்றத் தாரைப் பகைவராக்கும் குற்றம். (4) 885. உறன் முறையா னுட்பகை தோன்றி னிறன்முறையா னேதம் பலவுந் தரும். உறல் முறையான் உட்பகை தோன்றின் - வெளிக்கு உறவுமுறைத் தன்மையோடு கூடிய உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமாயின், இறல் முறையான் ஏதம் பலவும் தரும் - அது அவனுக்கு, இறத்தல் முறையோடு கூடிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும். உறல் முறையான் உட்பகை - வெளிக்கு உறவினர் போன்று உள்ளுக்குள் பகைகொண்டிருத்தல். இறல் முறையான் ஏதம் - இறத்தற் கேதுவாகிய குற்றம். வெளிக்கு உறவினர் போன்று நடக்கும் உட்பகையை உடையவன் அதனாலே கெடுவான். (5) 886. ஒன்றாமை யொன்றியார் கட்படி னெஞ்ஞான்றும் பொன்றாமை யொன்ற லரிது. ஒன்றாமை ஒன்றியார் கண்படின் - உட்பகை தனக்கு உட்பட் டவரிடத்தே தோன்று மாயின், பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - அவன் இறவாமையுடன் கூடுதல் எப்போதும் அரிதாகும். உட்பட்டவர் - உறவினர். இறவாமையுடன் கூடுதல் - இறவாதிருத்தல். உறவினர் உட்பகைவரானால் தப்புதலரி தாகும். (6) 887. செப்பின் புணர்ச்சிபோற் கூடினுங் கூடாதே யுட்பகை யுற்ற குடி. செப்பின் புணர்ச்சி போல் கூடினும் - சிமிழினது புணர்ச்சி போலப் புறத்தே வேற்றுமை தெரியாது கூடினா ராயினும், உட்பகை உற்ற குடி கூடாது - உட்பகை உற்ற குடியில் உள்ளவர்கள் அகத்தே தம்முள் கூடமாட்டார். செப்பின் புணர்ச்சி - சிமிழ் தன் மேல்மூடியுடன் ஒன்று பட்டுப் பொருந்துதல். செப்பு - சிமிழ். சிமிழ் அதன் மேல் மூடியுடன் கூடினும் திறக்க வேண்டும் போது சிமிழும் மூடியும் வெவ்வேறாதல் போல, உட்பகையினரும் வெளிக்கு வேற்றுமை தெரியாமல் இருக்கினும் புறப்பகை வந்தால் வேறாவர். புறப்பகை - வெளிப்படையான பகை. (7) 888. அரம்பொருத பொன்போலத் தேயு முரம்பொரு துட்பகை யுற்ற குடி. உட்பகை உற்ற குடி - உட்பகை உண்டாகிய குடியானது, அரம் பொருத பொன்போல பொருது உரம் தேயும் - அரத்தால் அராவப்பட்ட இரும்புபோல அவ்வுட் பகையால் அராவப்பட்டு வலி குறையும். உட்பகையால் அராவப்பட்டுக் குடியின் வலி தேயும். பொன் - இரும்பு. முன் வளர்ந்து வந்ததாயினும் உட்பகை யுற்ற பிறகு அதனால் பொரப்பட்டு அக்குடி தேயும் என்பதாம். (8) 889. எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு முட்பகை யுள்ளதாங் கேடு. உட்பகை எள்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் - ஒருவனது உட்பகை அவன் பெருமையை நோக்க எள்ளின் பிளவைப்போல அவ்வளவு சிறிதாயினும், கேடு உள்ளதாம் - அப்பெருமை முழுவதும் போக்கும் கேடு அதில் உள்ளதாகும். பகவு - பகுதி. எட் பிளவு - எள்ளின் ஒரு பகுதி மிகச் சிறுமைக்கு எடுத்துக் காட்டு. மிகச் சிறிய உட்பகையினால் மிகப் பெரிய கேடு வரும் என்பதாம். (9) 890. உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட் பாம்போ டுடனுறைந் தற்று. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை - மனப் பொருத்தம் இல்லாத வருடன் கூடி வாழும் வாழ்க்கையானது, குடங்கருள் பாம்போடு உடன் உறைந்தற்று - சிறுகுடிசையில் பாம்புடன் கூடி வாழ்வதைப் போன்றது. சிறு குடிசையில் பாம்போடு வாழ்பவன் கட்டாயம் அப் பாம்பால் கடியுண்டிறப்பான் போல, இவனும் அவ்வுட் பகைவரால் இறப்பானென்பதாம். (10) 90. பெரியாரைப்பிழையாமை பெரியாருக்குப் பிழை செய்யாமை. பெரியார் - ஆற்றலுள்ள அரசரும், பொதுநலப் பெரியாரும். 891. ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார் போற்றலு ளெல்லாந் தலை. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - மேற்கொண்ட செயலை நன்கு முடிக்க வல்லவர்களது ஆற்றலை இகழா திருத்தல், போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தம்மைக் காப்பவரது காவல்கள் எல்லாவற்றினும் சிறந்தது. ஆற்றல் - அறிவு, முயற்சி முதலியன. இகழாதிருத்தல் - போற் றுதல். பெரியோர்களது ஆற்றலைப் போற்றுவார்க்கு யாதொரு தீங்கும் வராது என்பார், 'போற்றலுள் எல்லாம் தலை' என்றார். (1) 892. பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் பேரா விடுப்பை தரும். பெரியாரைப் பேணாது ஒழுகின் - பெரியோர்களைப் போற்றாது நடப்பார்களாயின், பெரியாரால் பேரா இடும்பை தரும் - அந்நடக்கை அவருக்கு அப் பெரியோர்களால் நீங்காத துன்பங் களைக் கொடுக்கும். போற்றாது - மதியாது, இகழ்ந்து. அரசர்களைப் போற்றா ராயின் அவராலும், ஏனைப் பெரியோர்களைப் போற்றாராயின் பிறராலும் துன்பம் வரும். பெரியாரை இகழ்வாரைப் பிறர் துன்பு றுத்துவர். (2) 893. கெடல்வேண்டிற் கேளாது செய்க வடல்வேண்டி னாற்று பவர்க ணிழுக்கு. கெடல் வேண்டின் - ஒருவன் கெட விரும்பினால், அடல் வேண்டின் கேளாது ஆற்றுபவர்கண் - வேற்றரசரை வெல்ல விரும்பினால் ஆராய்ந்து பாராது அதை அப்பொழுதே செய்ய வல்ல அரசர்களிடம், இழுக்குச் செய்க - பிழை செய்க. கேட்டல் - ஆராய்தல். முன்னமே வெல்லும் வகையை ஆராய்ந்து முடிவு செய்யாது நினைத்த உடனே செய்ய வல்லவ ரென அவர் ஆற்றல் மிகுதியை விளக்கியவாறு. தம்மினும் பெரிய அரசர்க்குத் தவறு செய்வான் கெடுவான். (3) 894. கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க் காற்றாதா ரின்னா செயல். ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் - வலிமை யுடைய வர்க்கு வலிமை யில்லாதார் துன்பந் தருஞ் செயல்களைச் செய்தல், கூற்றத்தைக் கையால் விளித்தற்று - தானே வரும் கூற்றத்தை வருவதற்கு முன்னமே கை காட்டி அழைத்தாற் போலும். கூற்றம் - இறப்பின் உருவகம். முகவுரை பார்க்க. வலியில் லாதார் வலியுடையார்க்குத் துன்பஞ் செய்வது சாவைத் தானே வரவழைத்துக் கொண்டதுபோ லாகும். கட்டாயம் கெடுவார் என்பதாம். தாமே வெல்லற் குரியாரை அதற்கு முன்னே விரைந்து வரவழைத்துக்கொள்வார் கட்டாயம் விரைவில் அழிவர். (4) 895. யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர். வெம் துப்பின் வேந்து செறப்பட்டவர் - வெய்ய வலிமை பொருந்திய வேந்தனால் வெகுளப்பட்டவர்கள், யாண்டுச் சென்றுயாண்டும் உளராகார் - அவனைத் தப்பி எங்கே போனாலும் ஓரிடத்திலும் உயிருடன் இருக்க மாட்டார்கள். மிக்க வலிமை பொருந்திய வேந்தனாகையால், அவனோடு மாறுபட்டவர் வேறு நாடுகட்குச் சென்றாலும், அந்நாட்டாரும் இடந்தரார். அல்லது அப்பெரு வேந்தனோடு நட்புக் கொள்ளவோ, அவர்கள் பொருளைக் கொள்ளவோ இவரைக் கொல்வர். தன் நாட்டிலேயே இருந்தால் அப்போதே அழிவர் என்பார், 'யாண்டுச் சென்று யாண்டும் உளராகார்' என்றார். வலிமிக்க பெரு வேந்தனால் வெகுளப் பட்டவர் 'அருமையுடைய அரண் சேர்ந்தும் உய்யார்' என்பதாம். (5) 896. எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார். எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் - நெருப் பினால் சுடப் பட்டாலும் ஒருவாறு உயிர் பிழைத்தல் கூடும், பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார் - ஆனால், பெரியோர்க்குப் பிழைசெய்து நடப்பவர் உயிர் பிழையார். தீ உடம்பைச் சுட்டுக் கொல்லுமுன் தப்பலாம். பின் மருந் திட்டுப் புண்ணை யாற்றலாம். ஆனால், பெரியாரைப் பிழைத்த வரை உலகம் ஒறுக்குமாதலான் உய்வு இல்லை யென்றார். 29ஆம் குறளுரை பார்க்க. (6) 897. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு மென்னாந் தகைமாண்ட தக்கார் செறின். தகை மாண்ட தக்கார் செறின் - பெருமையினால் மாட்சிமை பொருந்திய பெரியார் வெகுள்வாராயின், வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் - எல்லா வகையிலும் மாட்சிமை பொருந்திய வாழ்க்கையும் சிறந்த பொருளும் என்ன பயனுடையன வாகும்? கெடும் என்பதாம். செல்வச் செருக்கால் பெரியார்க்குப் பிழை செய்யின் அவர் வெகுளுவாரானால் இவர் செல்வம் கெடும். (7) 898. குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து. குன்று அன்னார் குன்ற மதிப்பின் - மலைபோன்ற பெருமை பொருந்தியவர் கெட எண்ணுவாராயின், நிலத்து நின்றன்னார் குடியொடு மாய்வர் - இவ்வுலகத்தில் நிலை பெற்றாற் போலத் தோன்றுபவர்கள் தமது குடியோடும் அழிந்து போவர். நிலை பெற்றாற் போலத் தோன்றுபவர் - நிலையாக இருப்பவர் போலக் காணப்படுபவர். செல்வ வாழ்க்கையை நிலை யென்று எண்ணியே பெரியாரைப் பிழைத்தலால் இவ்வாறு கூறினார். (8) 899. ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். ஏந்திய கொள்கையார் சீறின் - உயர்ந்த கொள்கையை யுடைய பெரியோர் வெகுளுவாராயின், வேந்தனும் இடை வேந்து முரிந்து கெடும் - அரசனும் இடையே தன்னிலை யிழந்து கெடுவான். வேந்தனும் என்றது, பெருஞ் செல்வமுடைய அரசனும் என்பதுபட நின்றது. வேந்து - அரசு. அரசையிழந்து தானும் கெடுவான் என்பதாம். (9) 900. இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார் சிறந்தமைந்த சீரார் செறின். சிறந்து அமைந்த சீரார் செறின் - நனிமிகு பெருமை யுடைய வர்கள் வெகுளுவாராயின், இறந்து அமைந்த சார்பு உடையாரா யினும் உய்யார் - மிகவும் பெரிய பக்கத்துணை உடையவரா யினும் தப்பமாட்டார். சீர் - பெருமை. சிறந்து அமைந்த சீர் - நனிமிகு பெருமை; மிகவும் மிகுந்த பெருமை. சார்பு - துணை. (10) 91. பெண்வழிச்சேறல் வாழ்க்கைத் துணைவர்களாகிய ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் ஒத்த உரிமையுடையராய் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் அறம் பொருளின்பம் அடைந்து இன்புற்று வாழலாம்; இல்லறத்தார்க் குரிய கடமைகளையும் குறைவின்றிச் செய்து புகழுடன் வாழலாம். இங்ஙனமன்றி, ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் அடங்கித் தன்னுரிமை யழிந்து, அவரேவல் கேட்டு நடப்பா ராயின் இல்லறம் இனிது நடைபெறாது. வாழ்க்கையில் செய்ய வேண்டுவன செய்து இன்புற முடியாது. அறம் பொரு ளின்பம் அடைய முடியாது. சில பெண்கள் தம் கணவர்களை அடக்கித் தம் கீழ்ப்படுத்து, தாம் சொல்லுகிறபடி தம் கணவர் ஆடும்படி ஆட்டி வைக்கின்றனர். அப்பெண்ணேவல் செய்தொழுகு வோர் தம் மனைவியர்க்கு வேண்டாத சுற்றத்தாரைப் போற்றவோ, தாம் விரும்பினவர்க்கு ஒன்று செய்யவோ, விரும்பியதொன்றைக் கொடுக்கவோ முடி யாமல், மானங் கெட்டு நிற்கின்றனர். எதற்கும் மனைவியர் கையைப் பார்த்து அலைகின்றனர். அவர்களை உறவினரோ, பிறரோ யாரும் மதிப்பதில்லை. பெண்ணேவல் செய்தொழுகுவான் தனக்கு வேண்டி யவரை வீட்டுக்குக் கூட்டிப்போனால் அன்று வீடு போர்க்களமாகிவிடும். அவன் மானம் மலை யேறிவிடும். உலகில் ஓர் ஆண் மகனாக அவன் வாழ முடியாது. இவ்வாறே சில ஆண்கள் பெண்களை அடிமைகளாக்கி 'மனையாள், இல்லாள்' என்னும் அவர்களது வீட்டதிகார உரிமையைப் பறித்து, நாளும் அரிசி பருப்புக்கூட அளந்து கொடுத்துக் கொண்டு வருவர். இப்பெண்களாலும் வாழ்க்கை யின்பத்திற்கு வேண்டிய எதையும் செய்ய முடியாது. கணவர் வீட்டுச் செலவுக்குக் கொடுப்பதில் மிச்சம் பிடித்துச் சிறுவாடு சேர்த்தும், தம் விருப்பம் போல் குடும்பம் நடத்த முடியாமலும் திண்டாடுவர். இப்பெண்வழிச் சேறலும், ஆண்வழிச் சேறலும் வாழ்க்கை முறைக்குச் சிறிதும் ஏற்றவையல்ல. இக்கெட்ட ஒழுக்கத்தை விலக்க எழுந்ததே இவ்வதிகாரம். ஆண் வழிச் சேறலினும் பெண்வழிச் சேறல் மிகுதியாதலினாலும், இல்லிருந்து விருந்து, சுற்றம், நட்பு முதலியோரைப் போற்றுபவள் பெண்ணாதலினாலும், மனைவி தலைமைபெறின் கணவனு டைய சுற்றத்தாருக்கு யாதொரு உதவியும் செய்யாததோடு, அவர்களை வெறுத்துப் பகையாகக் கொண்டு நடத்துதலி னாலும் பெண்வழிச் சேறலின் குற்றங் கூறி ஆண்வழிச் சேறலின் குற்றத்தையும் பெறவைத்தார். இஃதறியார், வள்ளுவர் பெண்ணடிமையை விரும்புகிறார் எனத் தமக்கு வேண்டி யவாறெல்லாங் கூறுவர். 901. மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளு மது. மனை விழைவார் மாண்பயன் எய்தார் - மனைவியை விரும்பி அவள் ஏவல் கேட்டு நடப்பவர் சிறந்த இல்லறப் பயனை அடைய மாட்டார்கள்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை முயலுபவர் விரும்பாத பொருளும் அதுவே. விழைதல் - விழையும் ஏவற்றொழிலை யுணர்த்திற்று. இல்லறப் பயன் - விருந்து புறந்தருதல், சுற்றம் பேணல், வறியார்க் கீதல், பிற அறங்களைச் செய்தல் முதலியன. தம் எண்ணப்படி வினை செய்ய விடாராகையால் பொருள் செய்யவும் முடியா தென்றார். (1) 902. பேணாது பெண்விழைவா னாக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும். பேணாது பெண் விழைவான் ஆக்கம் - அறத்தையும் பொருளையும் போற்றாது பெண்மையை விரும்புவோனது செல்வமானது, பெரியது ஓர் நாண் ஆக நாணுத்தரும் - மிகுந்ததோர் வெட்கம் உலகத்தில் நிற்கும்படியான வெட்கத்தைக் கொடுக்கும். பெண்மையை விரும்பல் - பெண்மையின் ஏவலை விரும்பல். உலகத்தில் நிற்கும்படியான வெட்கம் - உலகத்தார் முன் தலை காட்ட முடியாத அவ்வளவு வெட்கம். பெண்ணேவல் கேட்பான் தான் செய்வன செய்ய முடியாமையால் உலகர் முன்வெட்க மடைவான். (2) 903. இல்லாள்கட் டாழ்ந்த வியல்பின்மை யெஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும். இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை - மனைவியிடத்துத் தாழ்ந்து நடக்கும் தகுதியின்மை, எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும் - எப்போதும் நல்லோர்களிடையில் பேசும்போது வெட்கத்தைக் கொடுக்கும். தாழ்ந்து நடத்தல் - ஏவல் கேட்டல். நல்லன செய்ய முடியா மையால் நல்லன பற்றிப் பேச வெட்கப்படுவா னென்க. 59ஆம் குறள் இத்துடன் ஒருகூறு பொருந்தும். (3) 904. மனையாளை யஞ்சு மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று. மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் வினை ஆண்மை - மனைவியைக் கண்டு அஞ்சும் புகழில்லாதவன் ஒருவினையை மேற் கொள்ளினும், வீறு எய்தல் இன்று - அதனால் அவன் பெருமை அடைவதில்லை. மறுமை - ஒருவன் இறந்த பிறகு இவ்வுலகில் அவன் வாழ்வு 98ஆம் குறளுரை பார்க்க. மறுமை வாழ்வு - புகழ். அவ்வினை முடிவு பெறாததால் அவ்வினையால் அவன் பெருமை அடைவதில்லை. (4) 905. இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல். இல்லாளை அஞ்சுவான் - மனைவியை அஞ்சுபவன், நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - நல்லோர்க்கு நல்லவை செய்தற்கு எப்போதும் அஞ்சுவான். நல்லோர் - விருந்தினர், அறவோர் முதலாயினார். செய்தே தீர வேண்டிய நாளிலுங்கூட என்பார், எஞ்ஞான்று மென்றார். (5) 906. இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள் அமையார்தோ ளஞ்சு பவர். இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர் - மனைவியின் மூங்கில் போன்ற தோள்களுக்கு அஞ்சுபவர், இமையாரின் வாழினும் பாடு இலர் - தேவர்கள்போல வாழ்ந்தாலும் பெருமை இல்லாதவராவர். அமை ஆர் தோள் என்பது - பெயரளவாக நின்றது. தேவர்கள் பெருமையுடன் வாழ்பவர்என்னும் அயலார் கூற்றைக் கொண்டு கூறியது. முகவுரை பார்க்க. (6) 907. பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி னாணுடைப் பெண்ணே பெருமை யுடைத்து. பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் - மனைவியின் ஏவற்றொழிலைச் செய்து நடக்கும் ஆண்மகனது ஆண்மையைக் காட்டிலும், நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து - நாணமுடைய பெண்மகளது பெண்மையே பெருமையுடையது. ஆண்மை - ஆண்மகனது தன்மை. பெண்மை - பெண் மகளது தன்மை. ஆணுக்கு ஆண்டன்மையும், பெண்ணுக்குப் பெண்டன்மையும் சிறந்தது. அத்தன்மையாவது - தனக்குள்ள உரிமையை இழக்காமல் நடக்குந் தன்மை. உரிமையை இழந்த ஆண்டன்மையை விட, உரிமையிழக்க நாணும் பெண்டன்மையே சிறந்தது என்பதாம். (7) 908. நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட்டாங் கொழுகு பவர். நல்நுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் - நல்ல நெற்றியை யுடைய மனைவி விரும்பியவாறு நடப்பவர், நட்டார் குறை முடியார் - நண்பர்களது குறையை முடிக்க மாட்டார், நன்று ஆற்றார் - நல்லறத்தையும் செய்யமாட்டார். பெட்டாங்கு - விரும்பியவாறு. பெட்பு - விருப்பம். நண்பர்க் குதவுதல், அறஞ்செய்தல் ஆகிய மாணப்பயன் எய்தாமை (901) கூறப் பட்டது. (8) 909. அறவினையு மான்ற பொருளும் பிறவினையும் பெண்ணேவல் செய்வார்க ணில். அறவினையும் - அறச்செயலும், ஆன்ற பொருளும் - சிறந்த பொருட்செயலும், பிற வினையும் - இன்பச் செயலும், பெண் ஏவல் செய்வார்கண் இல் - மனைவியின் ஏவலைச் செய்பவர் களிடம் இல்லை. பெண்ணேவல் செய்வார் அறம் பொரு ளின்பம் ஆகிய மக்கட்பயன் மூன்றையும் முடிவுறப் பெறார் என்பதாம். (9) 910. எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை யில். எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு - எண்ணம் சேர்ந்த நெஞ்சத்தை விரிவாக உடையவர்க்கு, பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல் - மனைவி யைச் சேர்வதால் உண் டாகும் அறிவின்மை எப்போதும் இல்லை. எண் - எண்ணம். எண்ணம் சேர்ந்த நெஞ்சத்தை விரிவாக உடையவர் - ஆராய்ந்து பார்க்கும் அறிவினை யுடையவர். மனைவியைச் சேர்வதால் உண்டாகும் அறிவின்மை - பெண் ணேவல் செய்யும் அறிவின்மை. ஆராய்ந்தறியும் அறிவினை யுடையார் பெண்ணேவல் செய்யார். (10) 92. வரைவின்மகளிர் வரைவு இல் மகளிர். வரைவு - வரையறை. தம் இன்பத்திற்கு உரியவர் இவரென்ற வரையறை யில்லாதவர். பொது மகளிர், விலை மகளிர். 911. அன்பின் விழையார் பொருள்விழையு மாய்தொடியா ரின்சொ லிழுக்குத் தரும். அன்பின் விழையார் - ஒருவனை அன்பு பற்றி விரும்பாது, பொருள் விழையும் - பொருள் பற்றி விரும்பும், ஆய்தொடியார் இன்சொல் - ஆய்ந்த வளையல்களை அணிந்த மகளிரது இனிய சொற்கள், இழுக்குத் தரும் - பின்பு கேட்டை உண்டாக்கும். பொருளின் - இன் தொக்கது. அணியாலும் சொல்லாலும் மயக்குபவர் என்பதை, ஆய்தொடியார் இன்சொல் எனக் குறித்தார். பொருள் பெறுமட்டும் அன்புடையவர் போலப் பேசும் இன்சொல் பின் வறுமை பயத்தலின் இழுக்குத்தரு மென்றார். (1) 912. பயன்றூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்றூக்கி நள்ளா விடல். பயன் தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு இல்மகளிர் - தமக்கு உண்டாகும் பயனை அளந்தறிந்து, அது பெறுமளவும் தமது நற் குணங்களைக் கூறும் நற்குணமில்லாத மகளிரது, நயன் தூக்கி நள்ளா விடல் - இன்பத்தை அளந்து பார்த்து அவர்களைப் பொருந் தாது விடுக. பயன் தூக்கல் - ஒருவனுக்குள்ள பொருளின் அளவையும், அவனது கொடுக்குந் தன்மையையும் ஆராய்ந்து பார்த்தல். குண மில்லாதிருந்தும் பேச்சளவில் உள்ளவர்போல் கூறுதல் அவர்க் கியல்பு. நள்ளாது - பொருந்தாது. இன்பம் பொய்யின்பம் என்பதை அறிதல். (2) 913. பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையி லேதிற் பிணந்தழீஇ யற்று. பொருள் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் - கொடுப் போரை விரும்பாது பொருளையே விரும்பும் பொருள் மகளிரது ஒருவனை முயங்கும் பொய் முயக்கமானது, இருட்டு அறையில் ஏதில் பிணம் தழீஇ யற்று - கூலிக்குப் பிணமெடுப்பார் இருட் டறையில் கிடந்த தாம் முன் கண்டறியாததும், தமக்குச் சொந்த மல்லாததுமான ஓர் அயற் பிணத்தைத் தழுவி எடுத்தாற் போலும். முயங்குதல் - தழுவிக்கொள்ளுதல்; அணைத்துக் கொள்ளுதல். இன்பத்துக்கன்றிப் பொருட்கு முயங்கும் மகளிர் ஒருவனை முயங்கும் குறிப்பு - கூலிக்குப் பிணமெடுப்பவர் கூலிக்காக இருட்டறையில் கிடந்த ஓர் அயற்பிணத்தை அருவருப்போடு எடுப்பதை ஒக்கும் எனவே, பொருள் மகளிரும் அகத்தில் அருவருப்போடு பொருளுக் காகவே தழுவுவர். ஆதலால், அவரை விரும்பற்க என்பதாம். (3) 914. பொருட்பொருளார் புன்னலந் தோயா ரருட்பொரு ளாயு மறிவி னவர். பொருள் பொருளார் புன்னலம் - இன்பமாகிய பொருளை விட்டுப் பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது புன்மையாகிய இன்பத்தை, அருள் பொருள் ஆயும் அறிவினவர் தோயார் - அருளாகிய பொருளை ஆராயும் அறிவுடையோர் தீண்டார். பொருட் பொருள் - பொருள். அருட் பொருள் - அறம். புன்னலம் - தாழ்ந்த நலம். நலம் - இன்பம். (4) 915. பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின் மாண்ட வறிவி னவர். மதி நலத்தின் மாண்ட அறிவினவர் - இயற்கையாகிய அறிவு நலத்தினால் மாட்சிமைப்பட்ட செயற்கை யறிவுடை யோர், பொது நலத்தார் புன்னலம் தோயார் - பொருள் கொடுப் போர்க்கெல்லாம் பொதுவாகிய நலத்தினையுடைய மகளிரது புன்மையான இன் பத்தைத் தீண்டார். செயற்கையறிவு - நூலறிவு. அறிவாளிகள் அம்மகளிர் இன்பத்தை விரும்பார். (5) 916. தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள். தகை செருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் - ஆடல் பாடல் அழகு என்னும் தகைமையால் களித்துத் தம் புன்மை யாகிய இன்பத்தை விலைகொடுப்போர் யாவரிடத்தும் பரப்பும் விலை மகளிரது தோளினை, தம் நலம் பாரிப்பார் தோயார் - தமது புகழை உலகத்தில் பரப்பும் பெரியோர் தீண்டார். தகை - மேம்பாடு. களிப்பு - மிக மகிழ்ச்சி. பாரித்தல் - பரப்புதல். (6) 917. நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள். பிற நெஞ்சில் பேணிப் புணர்பவர் தோள் - இன்ப மல்லாத பிறவாகிய பொருளை நெஞ்சில் விரும்பி அன்புடை யார் போல் நடித்துப் புணரும் மகளிரது தோளை, நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் - நிறைந்த நெஞ்சம் இல்லாதவர் தோய்வர். பிற - பொருள். நிறைந்த நெஞ்சம் - அறிவால் நிறைந்த நெஞ்சம். (7) 918. ஆயு மறிவின ரல்லார்க் கணங்கென்ப மாய மகளிர் முயக்கு. மாய மகளிர் முயக்கு - வடிவு, சொல், செயல்களால் வஞ்சிக்கும் மகளிர் முயக்கும், ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப - ஆராய்ந்தறியும் அறிவில்லாதவர்க்கு அணங்கின் முயக்கம் என்பர் அறிவுடையோர். பெண்களை வருத்தும் ஆண்பாற் காமத்தைக் 'காமன்' (1197) என ஆண்பாலால் கூறுவதும், ஆண்களை வருத்தும் பெண்பாற் காமத்தை 'அணங்கு' எனப் பெண்பாலால் கூறுவதும் நூன்மரபு. அணங்கு - வருத்தம். 'தகையணங் குறுத்தல்' (109) என்னும் அதி காரத்தைப் பார்க்க. அணங்கு - தன் வடிவழகால் ஆடவரை வருத்தும் பெண். அணங்கின் முயக்கம் - மிக்க இன்பந்தரும் முயக்கம். அறிவிலார்க்குப் பொருட் பெண்டிர் முயக்கம் மிக்க இன்பந்தரு முயக்கமாகும் என்பதாம். (8) 919. வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப் பூரியர்க ளாழு மளறு. வரைவு இலா மாணிழையார் மென்றோள் - வரையறை யில்லாது விலை கொடுப்போர் யாவரையும் கூடும் மாட்சிமைப் பட்ட அணிகளை உடைய மகளிரது மெல்லிய தோளானது, புரை இலாப் பூரியர்கள் ஆழும் அளறு - அறிவில்லாத கீழ்மக்கள் படும் பெருந்துன்பமாகும். 255ஆம் குறளுரை பார்க்க. (9) 920. இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந் திருநீக்கப் பட்டார் தொடர்பு. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் - பொது மகளிரும் கள்ளும் சூதும் ஆகிய இம்மூன்றும், திருநீக்கப் பட்டார் தொடர்பு - திருவினால் நீக்கப் பட்டவர்களுக்கு நட்பாம். இருமனம் - ஒருவனோடு புணர்தலும் புணராமையும் ஒரு காலத்தே உடைய மனம். திரு - செல்வம். ஒத்த குற்றமுடைமையால் கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன. அடுத்து வரும் அதிகாரங் கட்குத் தோற்றுவாய் எனினுமாம். இவர்களிடம் செல்வம் நில்லாது என்பதாம். (10) 93. கள்ளுண்ணாமை 921. உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங் கட்காதல் கொண்டொழுகு வார். கள் காதல் கொண்டு ஒழுகுவார் - கள்ளின்மீது விருப்பம் கொண்டு வாழ்பவர், எஞ்ஞான்றும் உட்கப்படார் - எப்போதும் பகைவரால் அஞ்சப்படார், ஒளி இழப்பவர் - அதுவே யன்றி முன் அடைந்திருந்த பெருமையையும் இழப்பர். பொருள், படை முதலியவற்றால் பெரியவரான காலத்தும் அறிவின்மையால் இவரைக் கண்டு அஞ்சார். பகைவரால் அஞ்சப்படார் - பகைவர் இவரைக் கண்டு அஞ்சார். ஒளி - முன்னோர் பெருமை. (1) 922. உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார். கள்ளை உண்ணற்க - அறிவுடையோர் கள்ளை உண்ணற்க. உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டதார் உண்க - உண்ண விரும்பின் அறிவுடையோரால் நன்கு மதிக்கப்பட வேண்டாதார் உண்க. கள்ளுண்போரை அறிவுடையோர் மதியார். (2) 923. ஈன்றாள் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது - யாது செய்யினும் மகிழும் தாய் முன்பும் ஒருவன் கள்ளுண்டு களித்தல் துன்பந் தருவ தாகும்; மற்றுச் சான்றோர் முகத்து என் - அவ்வாறிருக்க, அறிவுடையோர் முன்னிலையில் கள்ளுண்டு களித்தல் அவர்க்கு என்னாம்? களி - வெறி. களித்தல் - வெறிகொண்டு திரிதல். வெறியால் வெட்கங் கெடும்; கெடவே, தாயும் வெறுக்கும் படி நடக்கச் செய்யும். எத்தீங்கு செய்யினும் பொறுக்கும் தாயும் கள்ளுண்டு களித்தலைப் பொறாளாயின், ஒரு தீங்கும் பொறாத சான்றோர் என் செய்வ ரென்பதாம். (3) 924. நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. கள் என்னும் பேணாப் பெருங் குற்றத்தார்க்கு - கள் என்று சொல்லப்படும் பிறரால் விரும்பப் படாத பெரிய குற்றத்தை உடையார்க்கு, நாண் என்னும் நல்லாள் புறங் கொடுக்கும் - நாண் என்று சொல்லப்படும் நல்லவள் முதுகு காட்டி நீங்குவாள். பேணா - பேணாத. கள் என்னும் குற்றத்தார்க்கு - குடியர். 'நிலம் என்னும் நல்லாள்' (1040) என்பது போல, நாணைப் பெண் ணென்றார் . முதுகு காட்டி நீங்குதல் - குடியரை நோக்குதற்கு நாணி அவர்க்கு எதிர்முகமாகச் செல்லுதல். குடியர்கட்கு வெட்கம் கெடும். குடியர் வெட்கமின்றித் தகாதன செய்வ ரென்பதாம். (4) 925. கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல். பொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல் - ஒருவன் பொருளைக் கொடுத்து மெய்ம்மறதியைக் கைம் மாறாகப் பெற்றுக் கொள்ளுதல், கை அறியாமை உடைத்து - செய்வதறி யாமையைத் தனக்குக் காரணமாக உடையது. மெய்ம்மறதி - தன் உடல் நிலையைத் தான் அறியாமை. தன்னை அறியாமை சொல்லவே, ஒழிந்தன யாவும் அறியாமை சொல்ல வேண்டாவாயிற்று. அறிவுடையோர் விலை கொடுத்து ஒன்றை வாங்கினால் நல்லதாக வாங்குவார்கள். குடியர் பொருள் கொடுத்து மெய்ம்மறதியை வாங்குதற்குக் காரணம் செய்வ தறியாமை என்பதாம். (5) 926. துஞ்சினார் செத்தாரின் வேற்றல்ல ரெஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர். துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் - உறங்குபவர் அறிவை இழப்பதனால் செத்தாரைக் காட்டிலும் வேறல்லர்; எஞ்ஞான் றும்கள் உண்பவர் நஞ்சு உண்பார் - அவ்வாறே எப்போதும் கள்ளுண்பவர் மயக்க மடைதலால் நஞ்சுண்பவர் ஆவர். உறங்குதல் - தூங்குதல். நஞ்சு போலவே கள்ளும் அறிவை மயக்கு மென்பதாம். (6) 927. உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங் கள்ளொற்றி கண்சாய் பவர். கள் ஒற்றிக் கண் சாய்பவர் - கள்ளை மறைந்துண்டு அக் களிப்பால் தம் அறிவு சோர்பவர், உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப் படுவர் - உள்ளூரில் வாழ்பவரால் உள்ளது உய்த்துணரப் பெற்று எப்போதும் சிரிக்கப்படுவார். ஒற்றுதல் - மறைத்தல், உய்த்துணர்தல். உய்த்துணர்தல் - உடல் தளர்ச்சியால் களிப்பினை யுணர்ந்து, அதனால் கள்ளுண்டதை உணர்தல். கள்ளை மறைத்து உண்டாலும் ஊராரால் அறிந்து பழிக்கப்படுவர் என்பதாம். எஞ்ஞான்றும் என்பதால், ஒரு முறை உண்ணின் அது எப்போதும் இகழ்ச்சிக்குரிய தாகும் என்பது கருத்து. (7) 928. களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉ மாங்கே மிகும். களித்து அறியேன் என்பது கைவிடுக - நான் கள்ளுண் டாலும் களித்து அறியேன் என்று சொல்வதை விட்டு விடுக; நெஞ்சத்து ஒளித்ததும் ஆங்கே மிகும் - உண்ணாதபோது நெஞ்சத்தில் மறைத்து வைத்த அக்களிப்பும் கள்ளை உண்ட அப்போதே வெளியில் வந்து விடும். களித்தல் - வெறிகொள்ளுதல். வெறி - போதை. கள்ளை யுண்டதும் வெறி வந்து விடுவதால், உண்ணாதபோது நான் கள்ளுண்டாலும் எனக்கு வெறியுண்டாகாது என்று பொய் கூறு தலை விடுக என்பதாம். முன் (927) மறைந் துண்டது வெளிப்படுங் காரணங் கூறினார். இதில் களி வெளிப்படுங் காலங் கூறினார். (8) 929. களித்தானைக் காரணங் காட்டுதல் நீர்க்கீழ்க் குளித்தானைத் தீத்தூரீஇ யற்று. களித்தானைக் காரணம் காட்டுதல் - கள்ளுண்டு களித்த வனுக்கு அதை உண்ணுதல் கூடாது என்று காரணங் காட்டுவது, நீர்க்கீழ்க் குளித்தானைத் தீத்துரீ இயற்று - நீருள் மூழ்கினவ னொருவனை விளக்குப் பிடித்துத் தேடுவதை ஒக்கும். களித்தானை - உருபுமயக்கம். நீர்க்குள் தீச்செல்லாதது போல அவன் நெஞ்சில் காரணம் செல்லாதென்பதாம். துருவுதல் - தேடுதல். துரீஇ - தேடி. (9) 930. கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு. கள் உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் குடியன் ஒருவன் கள்ளுண்ணாத போது, கள்ளுண்டு களித்த மற் றொருவனைக் காணும் போதாகிலும், உண்டதன் சோர்வு உள்ளான் கொல் - தான் உண்ணும் போது உண்டாகும் சோர்வை நினைக்க மாட்டான் போலும். நினைப்பானாயின் குடியான் என்பது கருத்து. இது குடியை விலக்குதற்குக் காரணம் கூறியது. (10) 94. சூது 931. வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந் தூண்டிற்பொன் மீன்விழுங்கிய யற்று. வென்றிடினும் சூதினை வேண்டற்க - தனக்கு வெல்லும் ஆற்றல் இருப்பினும் சூதாடுதலை விரும்பற்க; வென்றதும் தூண்டில் பொன் மீன் விழுங்கியற்று - சூதில் வென்ற பொருளும் இரையால் மூடப்பட்ட தூண்டிலிரும் பினை மீன் விழுங்கினாற் போலும். தூண்டிலை இரையென்று விழுங்கி மீன் உயிரிழத்தல் போல, வென்றதைப் பொருளென்று கருதிச் சூதாடுவார் சூதாடலை நீங்காமைக்கோர் தளையாகும். (1) 932. ஒன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோ ராறு. ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் - முதலில் ஒரு பொருளை அடைந்து பிறகு மேன்மேலும் வெல்லுவோம் என்ற எண்ணத்தினால் நூறு பொருள்களை இழக்கும் சூதாடிகளுக்கும், நன்று எய்தி வாழ்வது ஓர் ஆறு உண்டாங்கொல் - நன்மை யடைந்து வாழ்வதொரு வழி உண்டோ? இல்லை. ஒன்று - சில, கொஞ்சம். நூறு - பல. பொருளாசையால் மேன்மேலும் சூதாடி வறியராவ ரென்பதாம். (2) 933. உருளாய மோவாது கூறிற் பொருளாயம் போஒய்ப் புறமே படும். உருள் ஆயம் ஓவாது கூறின் - ஒருவன் உருளுங் கவற்றிற்குரிய பணையத்தை இடைவிடாமல் கூறிச் சூதாடுவானாயின், பொருள் ஆயம் போய்ப் புறமே படும் - பொருளும் பொருள் வருவாயும் அவனைவிட்டுப் போய்ப் பிறரிடம் சேரும். ஆயம் - கவறு, பொருள் வருவாய். கவறு - சூதாடு கருவி. ஆயம் ஆகுபெயராய்க் கவற்றிற் குரிய பணையத்தை யுணர்த் திற்று. பணையம் - போட்டிப்பொருள் (பந்தயம்). காத்தலினும் இயற்றலினும் (385) கருத்தின்மையால் அவை இரண்டும் புறத்தே போகும். (3) 934. சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின் வறுமை தருவதொன் றில். சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் - துன்பங்கள் பல உண்டாக்கி உள்ள புகழையுங் கெடுக்கும் சூதுபோல, வறுமை தருவது ஒன்று இல் - ஒருவனுக்கு வறுமையைத் தர வல்லது வேறொன்றில்லை. சூது துன்பந் தந்து, புகழைக் கெடுத்து, வறுமையை உண்டாக்கும். (4) 935. கவறுங் கழகமுங் கையுந் தருக்கி யிவறியா ரில்லாகி யார். கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் - சூதையும் சூதாடுமிடத்தையும் கவறாடும் கைத்தொழிலையும் விரும்பி விடாதவர், இல்லாகியார் - வறியராயினார். கவறு ஆடும் கைத்தொழில் - சூதாடு கருவியை வெல்லும் வகையில் பிடித்தெறிதல். இவறுதல் - விடாதிருத்தல். இவ் விடாமையே வறுமைக்குக் காரணமாகும். (5) 936. அகடாரா ரல்ல லுழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார். சூது என்னும் முகடியால் மூடப்பட்டார் - சூது என்னும் மூதேவியால் மறைக்கப்பட்டவர், அகடு ஆரார் அல்லல் உழப்பர் - வயிறு நிறைய உண்ணப் பெறார், அதுவன்றித் துன்பத்திலும் உழலுவார். சூது செல்வத்தைக் கெடுத்து வறுமை உண்டாக்குவ தால் 'சூது என்னும் முகடி' என்றார். முகடி - மூதேவி - வறுமை. வறுமையை மூத்தாள் என்பதும், செல்வத்தை இளையாள் என் பதும் நூன்மரபு. முகவுரை பார்க்க. சூது வறுமையை உண்டாக்கி உணவின்றித் துன்புறச் செய்யும். (6) 937. பழகிய செல்வமும் பண்புங் கெடுக்குங் கழகத்துக் காலை புகின். காலை கழகத்துப் புகின் - ஒருவனது காலம் சூதாடு மிடத்தில் கழியுமாயின், பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் - அவனது தொன்றுதொட்டு வந்த செல்வத்தையும் குணத்தையும் அது போக்கும். காலைபுகல் - எப்போதும் சூதாடுதல். காலை - காலம். காலை - காலையில் ஒவ்வொரு நாளும். நாடோறும் சூதாடுமிடத் திற்குச் சென்றால் என்றுமாம். (7) 938. பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ யருள்கெடுத் தல்ல லுழப்பிக்குஞ் சூது. சூது - சூதானது, பொருள் கெடுத்து - ஒருவனது செல்வத்தைக் கெடுத்து, பொய் மேற் கொளீஇ - பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருள் கெடுத்து - அருளைக் கெடுத்து, அல்லல் உழப்பிக்கும் - அவனைத் துன்பத்தில் உழல வைக்கும். சூது இம் மூன்றையும் செய்யும். தோல்வியால் பொருள் கெட்டு, வெற்றியால் பொய் மேற்கொண்டு, வெகுளியால் அருளைக் கெடுக்குமென்க. (8) 939. உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்தும் அடையாவா மாயங் கொளின். ஆயம் கொளின் - ஒருவன் சூதாட்டத்தை விரும்புவானாயின், ஒளி, கல்வி, செல்வம், ஊண், உடை ஐந்தும் அடையாவாம் - புகழும் கல்வியும் செல்வமும் உணவும் உடையும் என்று சொல்லப் பட்ட ஐந்தும் அவனைச் சேராவாம். (9) 940. இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப முழத்தொறூஉங் காதற் றுயிர். இழத்தொறும் காதலிக்கும் சூதே போல் - பொருளை இழக்குந் தோறும் அதை விரும்பும் சூதாட்டத்தைபோல, துன்பம் உழத்தொறும் காதற்று உயிர் - துன்பப்படுந்தோறும் இன்பத்தை விரும்புவது உயிர். துன்பப்படுந்தோறும் உயிர் இன்பத்தை விரும்புவது போல, பொருளை இழக்குந்தோறும் ஒருவன் சூதை விரும்புகிறான். பொருளழிவை யுணர்ந்து சூதை விலக்குவோர் பெருமை யடைவர். (10) 95. மருந்து உணவின் மீதுள்ள ஆசையால் மிகுதியாகவும், பசியா முன்னும் உண்பதால் உண்டாகும் நோய்களைத் தீர்க்கும் மருந்தின் சிறப்புக் கூறுதல். இங்கு நோய்வருங் காரணமும், நோய்வராமற் காக்கும் முறையும், மருத்துவ முறையும் கூறப்படுகின்றன. 941. மிகினுங் குறையினு நோய்செய்யும் நூலோர் வளிமுதலா வெண்ணிய மூன்று. நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று - மருத்துவ நூலோர் வாதம் பித்தம் கவம் என எண்ணிய மூன்றும், மிகினும் குறையினும் நோய் செய்யும் - மிகுமாயினும் குறையு மாயினும் நோயை உண்டாக்கும். வாதம் - காற்று. பித்தம் - தீ. கவம் - நீர். காற்று, தீ, நீர் இவை மூன்றும் உடலின் கூறுகளாகும். இவை மூன்றும் ஏற்ற அளவினவாக இருந்தால்தான் உடல் நன்னிலையில் - நோயில்லாமல் இருக்கும். வாத முதலிய மூன்றும் இருக்க வேண்டிய அளவில் மிகுந்தாலும் குறைந்தாலும் நோயை உண்டாக்கும். இவை உண்ணும் உணவுகளாலும் செய்யும் செயல்களாலும் மிகவும் குறையவும் செய்யும். நோயாளரின் கைந்நாடியைப் பார்த்து மருத்துவர் வாத முதலியவற்றின் நிலையை அறிவர். இது நோயுண் டாதலின் காரணமும், அதை அறியும் வகையும் கூறிற்று. (1) 942. மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி யுணின். அருந்தியது அற்றது போற்றி உணின் - ஒருவன் முன்னுண்ட உணவு அற்றதைத் தெளிவாக அறிந்து பின் உண்பானாயின், யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம் - அவன் உடம்புக்கு மருந்து என்று ஒன்று வேண்டியதில்லை. உணவு அறுதல் - உணவு செரித்தல். முன்னுண்ட உணவு நன்கு செரித்த பிறகு உண்டால் அதுவே நோய்வராமல் தடுக்கும் மருந்தாகையால் வேறு மருந்து வேண்டியதில்லை. (2) 943. அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு பெற்றா னெடிதுய்க்கு மாறு. அற்றால் அளவு அறிந்து உண்க - முன்னுண்டது அற்றால் பின் அறும் அளவு தெரிந்து உண்ணவேண்டும்; அஃது உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு - அது உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்துதற் குரிய வழியாகும். முன் உண்டது நன்கு செரித்த பின்பு செரிக்கும் அளவை அறிந்து உண்பவன் நெடுநாளைக்கு வாழ்வான் என்பதாம். இவ்வாறு உண்பவனுக்கு நோய்வராது. அளவறிந்து உண்ணல் - சுவையுடைய தென்று அளவுக்கு மீறி உண்ணாமல் பசியடங்கும் அளவு உண்ணுதல். (3) 944. அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. அற்றது அறிந்து - முன்னுண்டது அற்றதை அறிந்து, துவரப் பசித்து - பின் மிகப் பசித்து, மாறல்ல கடைப்பிடித்துத் துய்க்க - உண்ணும்போது மாறுகொள்ளாத உணவுகளைக் கடைப்பிடித்து உண்ண வேண்டும். கடைப்பிடித்து - உறுதியாக, மாறுகொள்ளுதலாவது - வாத பித்த கவங்களுக்குப் பொருந்தாதவற்றை உண்ணுதலும், மழைக் காலம், பனிக்காலம், வெயிற்காலம், காலை, மாலை, நண்பகல் என்னுங் காலவேறுபாடுகளுள் ஒன்றற்காவன பிறிதொன்றற் காகாமையும், தேனும் நெய்யும் நல்ல சுவையும் சாரமும் உடையவை யேனும் அவ்விரண்டையும் ஒரே அளவாகக் கலந்தால் நஞ்சாவது போலவுமாம். காலம், சுவை சாரங்களில் மாறு கொள்ளாமல் உண்ணாவிடின் வாத முதலியன மிக்கும் குறைந்தும் நோய்செய்து கொல்லும். (4) 945. மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணின் ஊறுபா டில்லை யுயிர்க்கு. மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் - அம் மூவகை மாறுபாடு மில்லாத உணவை மனம் விரும்பிய அளவன்றிப் பிணிவாராத அளவு ஒருவன் உண்பானாயின், உயிர்க்கு ஊறுபாடு இல்லை - அவன் உயிர்க்கு நோய்களால் துன்பம் உண்டாதல் இல்லை. மாறுபாடு 944 ஆம் குறளுரையில் கூறப்பட்டவை. மாறுபாடு இல்லாத உணவையும் குறைவாக உண்ண வேண்டும். (5) 946. இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங் கழிபே ரிரையான்க ணோய். இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம் போல் - உண்ணும் அளவில் சிறிது குறைய உண்பது நன்றென அறிந்து அவ்வாறே உண்பவனிடம் இன்பம் நீங்காது நிற்பதுபோல, கழிபேர் இரையான் கண் நோய் நிற்கும் - மிகப்பெரிய உணவை உண்பவனிடம் நோய் நீங்காது நிற்கும். இன்பமாவது வாத முதலிய மூன்றும் அதனதன் நிலையில் நிற்பதால் துன்பமின்றி இன்புறுதல். இரையை அளவின்றி உண்டு அதனால் வருந்தும் விலங்கோ டொத்தலின் 'இரை' என்றார். (6) 947. தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும். தெரியான் தீ அளவு அன்றிப் பெரிது உண்ணின் - ஒருவன் தன் உடல்நிலைக் கேற்ற உணவையும் காலத்தையும் ஆராயாது வேண்டிய உணவை வேண்டியபோது வயிற்றுத் தீயின் அளவல்லாமல் மிக உண்பானாயின், நோய் அளவு இன்றிப்படும் - அவனிடம் நோய்கள் அளவின்றி வளரும். உடல்நிலை - வாத முதலிய மூன்றும். வயிற்றுத்தீ - பசி. இவை ஆறு பாட்டானும் உண்ணும் வகை கூறப்பட்டது. (7) 948. நோய்நாடி நோய்முதல் நாடி யதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். நோய் நாடி - ஒரு நோயாளியின் நோயை அதன் குறிகளால் இன்னதென்று அறிந்து, நோய் முதல் நாடி - பின் அந்நோய் வந்ததன் காரணத்தை அறிந்து, அது தணிக்கும் வாய் நாடி - பின் அந் நோயைத் தீர்க்கும் வழியை அறிந்து, வாய்ப்பச்செயல் - அவ்வழியில் தப்பாமல் மருத்துவம் செய்க. குறி - நாடி. காரணம் - உணவும் செயலும் (941). தணிக்கும் வாய் - அறுத்தல், சுடுதல், குருதிநீக்கல், மருந்து செய்தல் முதலியன. தப்பாமை - பழைய மருத்துவர் செய்து வருகின்ற முறையில் தப்பாமை. இது மருத்துவன் மருத்துவம் செய்யும் முறை கூறிற்று. (8) 949. உற்றா னளவும் பிணியளவுங் காலமுங் கற்றான் கருதிச் செயல். கற்றான் - மருத்துவ நூலைக் கற்றவன், உற்றான் அளவும் - நோயாளியின் அளவையும், பிணி அளவும் - நோயின் அளவையும், காலமும் கருதிச் செயல் - மருத்துவஞ் செய்தற்கேற்ற காலத்தையும் நன்கு எண்ணிப் பார்த்துச் செய்ய வேண்டும். நோயாளி அளவு - பருவம், வாத முதலிய மூன்று, உடல் வலி ஆகியவற்றின் அளவு. பிணியளவு - தீர்க்கத்தக்கது, தீர்க்கத் தகாதது, பெரும்பான்மை தீர்க்கத்தக்கது என்னும் வகையும், தொடக்கம், நடு, ஈறு என்னும் நோயின் பருவ வேறுபாடும், வன்மை மென்மைகளும். காலம் - நோயாளியின் அளவு, நோயளவுக்கேற்ற காலம். (9) 950. உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல்வானென் றப்பானாற் கூற்றே மருந்து. மருந்து - பிணிக்கு மருந்தாவது, உற்றவன் - நோயுற்றவன், தீர்ப்பான் - நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து - மருந்து, உழைச் செல்வான் என்ற அப்பால் நாற்கூற்று - மருத்துவம் செய்பவன் (நர்ஸ்) என்ற அந்நான்கு பிரிவுகளையுடையது. பிணிக்கு மருந்து - நோய்க்கு மருத்துவம் செய்தல். உழை - இடம். உழைச் செல்வான் - அடிக்கடி நோயாளி யிடம் சென்று மருந்து கொடுத்து வருபவன். நோயாளி மருத்துவர் சொற்படி நடக்க வேண்டும். மருத்துவர் கவனித்து மருந்து கொடுக்க வேண்டும். மருந்து நோய்க்கு ஏற்றதாக இருக்க வேண்டும். உழைச் செல்வான் (நர்ஸ்) கவனித்து ஒழுங்காக மருந்து கொடுத்து வரவேண்டும். இவ்வாறு இந்நான்கும் நன்கு அமைந்ததே மருத்துவம் என்பதாம். இந்நான்கும் நன்கு அமைந்தால்தான் நோய் எளிதில் நீங்கும் என்பது கருத்து. உழைச்செல்வான் - கம்பவுண்டரையும் குறிக்கும். (10)\ நட்பியல் முற்றிற்று. 7. குடியியல் (13) குடிமக்களின் இலக்கணம். குடி - நாட்டுக் குடிமக்கள். இவர்கள் நாட்டின் உயிர்நாடி போன்றவர்; உழவு முதலிய தொழில்கள் செய்து தம் நாட்டை நன்னாட்டின் முன்னாட்டும் நாடாக்குபவர். 96. குடிமை குடிமை - குடிமக்கள் தன்மை. 951. இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச் செப்பமு நாணு மொருங்கு. இல் பிறந்தார்கண் அல்லது - நற்குடிப் பிறந்தாரிடத் தல்லது பிறரிடத்தில், செப்பமும் நாணும் ஒருங்கு இயல்பாக இல்லை - செம்மையும் நாணமும் ஒருங்கே இயல்பாக உண்டாகா. நற்குடி - வழிவழியாக நல்லொழுக்கமுள்ள குடி. இது, உயர்குடி எனவும் வழங்கும். செம்மை - எண்ணமும் சொல்லும் செயலும் ஒன்றாதல், நடுவுநிலைமை. குடிப் பிறந்தார்க்கு இவை இயல்பாக அமையும்; பிறர்க்குக் கற்பித்தாலும் நீடித்திரா. (1) 952. ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். குடிப்பிறந்தார் - உயர் குடியில் பிறந்தவர்கள், ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார் - ஒழுக்கம், உண்மை, நாணம் என்ற இம் மூன்றிலும் தவறாது நடப்பார்கள். நாணம் - தமக்கொவ்வாத காரியஞ் செய்ய நாணுதல். இம் மூன்றையும் இயல்பாக உடையராயிருப்பர். இது அக்குடிப் பழக்கம். (2) 953. நகையீகை யின்சொ லிகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு. வாய்மைக் குடிக்கு - எக்காலத்தும் ஒழுக்கந் தவறாத குடிப் பிறந்தார்க்கு, நகை ஈகை இன்சொல்இகழாமை நான்கும் வகை என்ப - வறியார் சென்றால் முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும் இகழாமையு மாகிய இந்நான்கும் உரிய கூறு என்று சொல்லுவர் அறிவுடையோர். இல்லாரை எல்லோரும் எள்ளுதலின், (752) இகழாமை குடிப்பிறந்தார் கூறாயிற்று. உரிய கூறு - இயல்பாக அமைந்தது. (3) 954. அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார் குன்றுவ செய்த லிலர். அடுக்கிய கோடி பெறினும் - பலவாக அடுக்கப் பெற்ற கோடி பொருளைப் பெற்றாலும், குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - உயர்குடிப் பிறந்தவர் தமது ஒழுக்கம் குன்றும் செயல்களைச் செய்யார். ஒழுக்கம் குன்றும் செயல் - ஒழுக்கம் குன்றுதற் கேதுவான செயல்; கெட்ட காரியம். (4) 955. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலைப்பிரித லின்று. பழங்குடி - பழைய குடியில் பிறந்தவர், வழங்குவது உள் வீழ்ந்தக் கண்ணும் - தாம் கொடுக்கும் பொருள் முன்பு இருந்ததைக் காட்டிலும் குறைந்த விடத்தும், பண்பில் தலைப் பிரிதல் இன்று - தமது இயல்பினின்றும் நீங்க மாட்டார். பழங்குடியாவது, கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி. (வெண்பாமாலை - கரந்தை 14) பதியெழு லறியாப் பழங்குடி. (மலைபடுகடாம் 479) பதியெழு வறியாப் பழங்குடி கெழீ இய புகார். (சிலப். 1 : 15) என்றாற் போலத் தொன்று தொட்டு வருங்குடி. பண்பில் தலைப்பிரிதல் - இல்லையென் றிரப்போர்க்கு இல்லை யெனல் வழங்குவது உள்வீழ்வதே அவர்க்கு வறுமையாகும். (5) 956. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்துமென் பார். மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் - குற்றமற்ற தம் குடிக்கேற்ப வாழ்கின்றோம் என்று எண்ணுபவர், சலம் பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமையுற்ற போதும் வஞ்சனையாகத் தங்குடிக்கு ஏலாத செயல்களைச் செய்யார். நற்குடிப் பிறந்தவர் வறுமையுற்றபோதும் தங்குடிக் கேலாத செயல்களைச் செய்யார். குலம் - குடி. (6) 957. குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போ லுயர்ந்து. குடிப் பிறந்தார்கண் குற்றம் - உயர்குடிப் பிறந்தவர் களிடம் காணப்படும் குற்றம் சிறிதாயினும், விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து விளங்கும் - வானத்தில் மதியிடத்துள்ள மறுவைப் போல உயர்ந்து காணப்படும். குடியின் உயர்ச்சியானும், மதிபோன்ற அவருடைய நற் குணங்களோடு மாறுபடுதலானும் அச்சிறு குற்றம் உலகெங்கும் பரந்து காணப்படும் என்பதாம். (7) 958. நலத்தின்க ணாரின்மை தோன்றி னவனைக் குலத்தின்க ணையப் படும். நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் - நல்ல குலத்தில் பிறந்தவனிடம் அன்பின்மை காணப்பட்டால், அவனைக் குலத்தின் கண் ஐயப்படும் - அவனை அக்குடிப் பிறப்பில் தப்பினவனென்று ஐயப்படும் உலகம். தோன்றின் என்பது, தோன்றாமை விளக்கி நின்றது. அன்பின் மையால் ஈயாமை, கடுஞ்சொல் முதலியன குறிப்பிட்டனர். குலநல முடையவனிடம் இவை தோன்றலின் உலகம் ஐயப் படலாயிற்று. (8) 959. நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங் குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் - நிலத்தின் இயல்பை அந்நிலத்தில் முளைத்த முளைகாட்டும்; குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல் காட்டும் - அதுபோல, உயர் குடியில் பிறந்தவர் இயல்பை அவர் வாயிலிருந்து வரும் சொற்கள் காட்டிவிடும். கிடந்தமை - உள்ளபடி; அதாவது இயல்பு. கால் - பயிரின் முளை. முளைத்தவுடனே நிலத்தின் நன்மையும் தீமையும் தெரிதலின் இலை முதலியன கூறவில்லை. 'விளையும் பயிர் முளையிலேயே தெரியும்' என்பது பழமொழி. ஆகவே, குடிப் பிறந்தாரின் செயல் முதலியன வேண்டா, சொல்லே போது மென்பதாம். இன் சொல்லே குலத்தியல்பை அறியுங் கருவிகளுள் முதன்மையானது. (9) 960. நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு. நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் - ஒருவன் தனக்கு நலத்தை விரும்புவானாயின் நாணுடைமையை விரும்பக் கடவன்; குலம் வேண்டின் யார்க்கும் பணிவு வேண்டுக - உயர்குடித் தன்மையை விரும்புவானாயின் எல்லோரிடத்தும் பணிதலை விரும்பக் கடவன். நலம் - புகழ், அறங்கள். எல்லோரிடத்திலும் பணிவாக நடந்துகொள்ளுதலே உயர்குடிப் பிறப்பின் தன்மையாகும். (10) 97. மானம் மானமாவது - எப்போதும் தந்நிலையில் தாழாமையும், தாழநேரின் உயிர் வாழாமையுமாம். 961. இன்றி யமையாச் சிறப்பின வாயினுங் குன்ற வருப விடல். இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் - இன்றியமை யாத சிறப்பை உடையனவாயினும், குன்ற வருப விடல் - குடிப் பிறப்புக் குறையவரும் தொழில்களைச் செய்யாது விடுக. குடிப்பிறப்புக்குத் தகாத செயலைச் செய்யக்கூடாது. குடிப்பிறப்பு - உயர்குடியின் தன்மை. (1) 962. சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். சீரொடு பேராண்மை வேண்டுபவர் - புகழுடன் பெரிய ஆண்மையை விரும்புபவர், சீரினும் சீர் அல்ல செய்யார் - அப் புகழைச் செய்யும்போது தம் குடிப்பிறப்புக்கு ஒவ்வாத இழிவான செயல்களைச் செய்யார். நிலையுடைய புகழின் பொருட்டாகவும் மானமுடையவர் இழிசெயலைச் செய்யமாட்டார். (2) 963. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டு முயர்வு. பெருக்கத்துப் பணிதல் வேண்டும் - குடிப்பிறந்தார்க்குச் செல்வம் பெருகியபோது எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்; சிறிய சுருக்கத்து உயர்வு வேண்டும் - செல்வம் மிகவும் குறைந்த போது பணியாமை வேண்டும். பணியாமை - தாழ்வு வராமல் பழைய உயர்ச்சிக் கண்ணே நிற்றல். செல்வக்காலத்துத் தாழ்வும் வறுமைக் காலத்து உயர்வும் வேண்டும். (3) 964. தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர் நிலையி னிழிந்தக் கடை. மாந்தர் - உயர்குடிப்பிறந்தவர், நிலையின் இழிந்தக் கடை - தம் குடிக்குரிய நிலையைவிட்டுத் தாழ்ந்தவிடத்து, தலையின் இழிந்த மயிர் அனையர் - தலையைவிட்டு நீங்கிய மயிரைப்போல இகழப் படுவர். மயிர் தலையிலிருக்கும்போது நன்கு மதிக்கப்படுதலும், தலையிலிருந்து உதிர்ந்துவிட்டால் கையால் தொடவும் கூடாததாய் அவ்வளவு இழிவுபடுத்தப்படுவதும் போலவே, குடிப்பிறந்தாரும் நிலையில் தாழ்ந்தவிடத்து இழிவுபடுத்தப் படுவர்; மதிக்கப் படார். (4) 965. குன்றி னனையாருங் குன்றுவர் குன்றுவ குன்றி யனைய செயின். குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பால் மலைபோன்ற உயர்ச்சியுடையாரும், குன்றுவ குன்றி அனைய செயின் குன்றுவர் - இழிசெயல்களை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் பெருமை குன்றுவர். மிகுந்த குடிப்பெருமை யுடையோரும் ஒருசிறு தகாத செயல் செய்யினும் பெருமை குன்றுவர். (5) 966. புகழின்றாற் புத்தேணாட் டுய்யாதா லென்மற் றிகழ்வார்பின் சென்று நிலை. இகழ்வார்பின் சென்று நிலை - மானத்தைவிட்டுத் தன்னை இகழ்வார்பின்னே ஒருவன் சென்று ஒன்றை வேண்டி நிற்கின்ற நிலையானது, புகழ் இன்று - புகழ்பயவாது, புத்தேள் நாட்டு உய்யாது - வானுலகத்தே அவன் பெயரைச் செலுத்தாது, மற்று என் - இனி அது அவனுக்குச் செய்வது யாது? புத்தேள் நாடு எது என்பதை முகவுரையில் காண்க. பெயரைச் செலுத்துதல் - அவ்வானாடர் மதிக்கும்படி செய்தல். இகழ் வாரிடம் ஒன்றைவேண்டி நிற்றல் புகழ்பயவாத தோடு, அயல் நாடரும் மதியாமல் செய்யும் என்பதாம். ஆல் - அசை. (6) 967. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலி னந்நிலையே கெட்டா னெனப்படுத னன்று. ஒட்டார்பின் சென்று ஒருவன் வாழ்தலின் - பகைவர் பின் சென்று ஒருவன் வாழ்வதைக் காட்டிலும், அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று - முன்னின்ற வறுமை நிலையிலேயே நின்று இறந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது. அயலாரிடம் பொருள் பெற்று உயிர்வாழ்வதைவிட வறுமையினால் இறந்துபடுதல் நல்லது. (7) 968. மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த விடத்து. பெருந்தகைமை பீடு அழிய வந்த விடத்து - உயர்குடிக் குரிய பெருமையானது தன் வலிமை அழிய வந்த விடத்து, ஊன் ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ - இறத்தலை விட்டு உடம்பைப் போற்றும் வாழ்க்கையானது பின்னும் இறவாமைக்கு மருந்தாகுமோ? ஒருபோதும் ஆகாது. பெருமை தன்வலிமை அழிதல் - பெருமை குன்றுதல் - மானங்கெடுதல். சாவது உறுதியாகையால் மானங்கெடாமல் உயிர் விடுதலே உயர்குடிப்பிறப்புக்கு ஏற்றதாகும். (8) 969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர், மானம் வரின் உயிர்நீப்பர் - உயிர்நீங்கினால் மானம் வருமாயின் உயிரைவிடுவர். உயிரைவிட்டால் மானம் நிலைக்குமெனின் உயிரை விட்டு மானத்தை நிலைநிறுத்த வேண்டும். கவரிமானின் உவமை - உயர்குடிப் பிறந்தோர்க்கு உயிர்விட்டு மானங் காத்தல் இயல்பு என்பதை விளக்கிநின்றது. மேல் (968) உயிர்விட வேண்டு மென்றதை உவமையால் விளக்கினார். (9) 970. இளிவரின் வாழாத மான முடையார் ஒளிதொழு தேத்து முலகு. இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளி - தமக்குத் தாழ்வு வந்தபோது உயிர்வாழாத மானமுடையவரது புகழை, உலகு தொழுது ஏத்தும் - உலகினர் தொழுது வாழ்த்துவர். மானங்காத்து உயிர்விட்டவர் புகழை உலகினர் என்றும் போற்றுவர். எனவே, உயிருக்காக மானத்தை விட்டு உலகப் பழிக் காளாகக் கூடாது. (10) 98. பெருமை செயற்கரிய செய்தல், செருக்கின்மை, பிறர் குற்றங் கூறாமை முதலிய நற்குணங்களால் சிறந்த பெரியாரது தன்மை. 971. ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற் கஃதிறந்து வாழ்து மெனல். ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனுக்குப் பெருமை யாவது பிறரால் செய்தற்கரிய செயலைச் செய்வேம் என்று கருதும் ஊக்க மிகுதி, ஒருவற்கு இளி அஃது இறந்து வாழ்தும் எனல் - ஒருவனுக்குச் சிறுமையாவது அவ்வூக்கத்தை ஒழித்து வாழ்வோம் என்று எண்ணுதல். செயற்கரிய செய்யும் ஊக்கமே பெருமை யாகும்; அவ்வூக்க மின்மை சிறுமையாகும். உள்ளம் - ஊக்கம். வெறுக்கை - மிகுதி. இறந்து - கடந்து, ஒழித்து. (1) 972. பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - எல்லா மக்களுக்கும் பிறப்பு ஒக்கும்; செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா - அவரவர்கள் செய்யும் தொழில் வேற்றுமையால் பெருமை சிறுமை என்னும் சிறப்பு ஒவ்வா. உயிரென்றது - மக்களுயிரை. சிறப்பு ஒவ்வாமை - ஒருவன் செய்யும் நல்ல தொழிலினால் பெருமையும், கெட்ட தொழிலினால் சிறுமையும் அடைதலாம். எல்லா மக்களும் பிறப்பினால் ஒரு தன்மையினரே; செய்யுந் தொழிலுக்குத் தக்கவாறு பெரியார் சிறியார் என்னும் பெயர் பெறுகின்றனர். அவ்வாறு மதிக்கப்படு கின்றனர் என்பதாம். 26. ஆம் குறளைப் பார்க்க. (2) 973. மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங் கீழில்லார் கீழல் லவர். மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - சிறியோர் மேலான இடத்திலிருந்தாலும் பெரியோராகார்; கீழ் அல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லார் - பெரியோர் கீழான இடத்தி லிருந்தாலும் சிறியோராகார். மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வமும் வறுமையும், மேல் கீழ்களால் பெருமையும் சிறுமையும் குறிக்கப்பட்டன. (3) 974. ஒருமை மகளிரே போலப் பெருமையுந் தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு. ஒருமை மகளிரே போல - ஒருமனப் பெண்டிர் தம்மைத் தாம் காத்துக்கொள்ளுதல் போல, பெருமையும் தன்னைத் தான் கொண்டு ஒழுகின் உண்டு - பெருமையும் ஒருவன் தன்னைத்தான் காத்துக்கொண்டு நடப்பானாயின் அவனிடம் உள்ளதாகும். பொது மகளிரை 'இருமனப் பெண்டிர்' (920) என்றது போலக் குலமகளிரை 'ஒருமை மகளிர்' என்றார். குலமகளிர் தம்மைத்தாம் காத்துக்கொண்டு நடப்பதுபோல, ஒருவன் மனமொழி மெய்களை அடக்கி, நல்லன செய்யின் பெருமை யுண்டாகும் என்பதாம். குலமகளிரும் பெருமையுடை யோரும் தற்காத்தலால் ஒத்தவராவர். (4) 975. பெருமை யுடையவ ராற்றுவா ராற்றி னருமை யுடைய செயல். பெருமை உடையவர் - பெருமை உடையவர், அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் - செய்தற்கு அரிய செயல்களை அவற்றிற்குரிய வழியிலே செய்யவல்லவர் ஆவர். அரிய செயல்களை ஏற்ற வழியில் செய்பவர் பெருமை யுடையவராவர். (5) 976. சிறியா ருணர்ச்சியு ளில்லை பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னு நோக்கு. பெரியாரைப் பேணிக்கொள்வேம் என்னும் நோக்கு - பெரியாரைப் போற்றி அவரைத் துணையாகக் கொள்வோம் என்னும் கருத்து, சிறியார் உணர்ச்சியுள் இல்லை - சிறியவர் களது உணர்வின்கண் இல்லை. பெரியாரைத் துணைக்கொள்ளும் எண்ணம் சிறியார் மனத்தில் தோன்றுவதில்லை. (6) 977. இறப்பே புரிந்த தொழிற்றாஞ் சிறப்புந்தான் சீரல் லவர்கட் படின். சிறப்புந்தான் - சிறப்பானது, சீர் அல்லவர்கண் படின் - சிறியோரிடம் உண்டாகுமாயின், இறப்பே புரிந்த தொழிற்றாம் - செருக்கினால் அளவுகடந்து போகும் செயலை உடையவராக்கி விடும். சிறப்பு - கல்வி, செல்வம் முதலியவற்றில் மிக்கிருத்தல். சிறியவர்களிடம் சிறப்புக்குரிய தன்மைகள் வாய்க்குமாயின் அவர் செருக்குடையவராவர். இறத்தல் - அளவு கடத்தல். (7) 978. பணியுமா மென்று பெருமை சிறுமை அணியுமாந் தன்னை வியந்து. பெருமை என்றும் பணியும் - பெரியோர் எப்போதும் அடங்கி நடப்பர்; சிறுமை தன்னை வியந்து அணியும் - சிறியோர் தம்மைத் தாமே புகழ்ந்து பெருமைப்படுத்திக் கொள்வர். ஆம் இரண்டும் - அசை. (8) 979. பெருமை பெருமித மின்மை சிறுமை பெருமித மூர்ந்து விடல். பெருமை பெருமிதம் இன்மை - பெருமையாவது செருக் கில்லாதிருத்தல், சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடல் - சிறுமையாவது செருக்கின் முடிவில் நின்று விடுதல். செருக்கின் முடிவு - அளவு கடந்து செருக்குக் கொள்ளுதல். 980. அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். பெருமை அற்றம் மறைக்கும் - பெரியோர் பிறரது குற்றத்தை மறைத்துச் சொல்வர்; சிறுமை குற்றமே கூறிவிடும் - சிறியோர் பிறரது குற்றங்களையே கூறிவிடுவர். பெரியோர் குற்றத்தை மறைத்துக் குணத்தைக் கூறுவர்; சிறியோர் குணத்தை மறைத்துக் குற்றமே கூறுவர். (10) 99. சான்றாண்மை சான்றாண்மை - எல்லா நற்குணங்களாலும் நிறைந்தவர் தன்மை. சால்பு - நிறைவு. சால்பை ஆளுதல் - சான்றாண்மை. 981. கடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - நமக்குத் தகுவது இதுவென்றறிந்து எல்லா நற்குணங்களையும் ஆளுந் தன்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு, நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்ல குணங்களெல்லாம் இயல்பாக உள்ளனவென்று கூறுவர் அறிவுடையோர். தகுவது - தக்கது; நம்மால் கைக்கொள்ளத் தக்கது இது என்றறிதல். எல்லா நற்குணங்களையும் ஆளும் தன்மை -நற்குணங் களெல்லாம் பொருந்திய தன்மை; நற் குணங்களின் தொகுதி. நல்ல குணங்களெல்லாம் இயல்பாக உள்ளதே சான்றாண்மையாகையால், சான்றோர்க்கு அதுவே இலக்கணமாகக் கூறினார். (1) 982. குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத் துள்ளதூஉ மன்று. சான்றோர் நலன் குணநலமே - சான்றோர்களது நலமாவது நற்குணங்களாகிய நலமே யாகும், பிறநலம் எந்நலத்தும் உள்ளது அன்று - குணநலமொழிந்த உறுப்புக் களாலாகிய நலம் ஒரு நலத்தினும் - உள்ளதன்று. நலம் - சிறப்பு. உறுப்புக்களாலாகிய நலம் - உடலழகுச் சிறப்பு; அதாவது உருவச் சிறப்பு. குடிப்பிறப்பு, கல்வி முதலிய நூலோர் எடுத்த நலங்களில் இவ்வுடல் நலம் சேராமையால், 'எந்நலத் துள்ளதும் அன்று' என்றார். சான்றோர்க்கு நற்குணச் சிறப்பே சிறப்பாகும்; உருவச் சிறப்புச் சிறப்பாகாது. (2) 983. அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ டைந்துசால் பூன்றிய தூண். அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்து - அன்பும் நாணும் ஒப்புரவும் கண்ணோட்டமும் உண்மையும் என்ற ஐந்தும், சால்பு ஊன்றிய தூண் - சால்பு என்னும் கூரையைத் தாங்கும் தூண்களாகும். நாண் - குற்றஞ் செய்ய நாணுதல். கண்ணோட்டம் - இரக்கம். இவ்வைந்தும் சால்பு என்னும் கூரையைத் தாங்கிய தூண்களாகும். சால்பைக் கூரையாகக் கூறாததால், ஒருகூற்றுரு வகம். இவ்வைந்து குணங்களில் ஒன்றில்லை யேனும் சால்பு நில்லாது என்பது உவமையால் பெறப்படும். (3) 984. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. நோன்மை கொல்லா நலத்தது - நோன்பு நோற்றல் ஓருயிரையும் கொல்லாத அறத்தின்பாலது; சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது - அதுபோல, சால்பு பிறர் குற்றங்களைச் சொல்லாத குணத்தின் பாலது. அறத்தின் பாலது - அறத்தைச் சேர்ந்தது. நோன்புக்குக் கொல்லா அறஞ் சிறந்தது போலச் சால்புக்குப் பிறர் குற்றஞ் சொல்லாக் குணம் சிறந்த தென்பதாம். கொல்லாத - சொல்லாத. (4) 985. ஆற்றுவா ராற்றல் பணித லதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் - ஒரு தொழிலைச் செய்து முடிப்போரது வல்லமையாவது அத்தொழிலுக்குத் துணை செய்வாரிடத்தில் பணிவாக நடந்து கொள்ளுதல், அது சான்றோர் மாற்றாரை மாற்றும் படை - அதுவே சால்புடையவர் தம் பகைவரை ஒழிக்கும் கருவியாகும். ஆற்றல் - ஒரு தொழிலில் வல்லவராகுந் தன்மை. சால்புக் கேற்ற பணிதற்குணத்தது சிறப்புக் கூறுவார், துணைவரிடம் நடந்து கொள்ளும் முறையும் கூறினார். இது தம்மைப்போல் பிறரையும் எண்ணும் சரிநிகர் பண்பு. (5) 986. சால்பிற்குக் கட்டளை யாதெனிற் றோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல். சால்பிற்குக் கட்டளையாது எனின் - சால்பாகிய பொன்னின் மாற்றை அறிதற்கு உரைகல் எதுவென்றால், தோல்வி துலை அல்லார் கண்ணும் கொளல் - அது தன்னைக் காட்டிலும் வலியவரிடம் கொள்ளும் தோல்வியை மெலிய வரிடமும் கொள்ளுதல். துலை - ஒப்பு. துலை அல்லார் - தனக்கு ஒப்பில்லாத மெலியார். தோல்வியைக் கொள்ளுதல் - வெல்லும் ஆற்றலுடை யராயிருந்தே தோல்வியை ஏற்றுக்கொள்ளுதல். தம்மினும் மெலியாரை வெல்லக்கருதி அவரைத் தமக்கு எதிரியாகக் கொள்ளாது தோல்வியால் அவரினும் உயர் வாரானால், அதனால் சால்பின் அளவு அறியப்படும் என்பதால், ஒரு கூற்றுருவகம். மெலியாரிடம் கொள்ளும் தோல்வியே, மெலியாரை வெல்லக் கருதாமையே சால்பாகிய பொன்னின் உரைகல்லாகும். (6) 987. இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா லென்ன பயத்ததோ சால்பு. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் - தமக்குத் தீமை செய்தார்க்கும் நன்மையே செய்யாராயின், சால்பு என்ன பயத்தது - அவரது சால்பு வேறு என்ன பயனையுடையது. தாமும் இன்னா செய்வாராயின் சால்பினால் ஒருபயனும் இல்லை யென்பதாம். (7) 988. இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின். சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்னும் உறுதி உண்டாகப் பெற்றால், ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு வறுமையானது இகழ்ச்சியாகாது. சால்புடையார் வறுமையுற்றாலும் மேம்படுவர் என்பதாம். (8) 989. ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக் காழி யெனப்படு வார். சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் - சான்றாண்மை யாகிய கடலுக்குக் கரை என்று சொல்லப்படுபவர், ஊழி பெயரினும் தாம் பெயரார் - ஏனைய கடல்கள் கரை புரளும்படி காலம் மாறு பட்டாலும் தாம் மாறுபடார். சான்றாண்மையின் பெருமை தோன்ற அதைக் கடலாக்கியும், அதைத் தாங்கி நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். ஒருகூற்றுருவகம். இது தென் கடல் பொங்கித் தமிழ்நிலங் கொண்ட வரலாற்றை நினைப் பூட்டுகிறது. அவ்வாறு இனியும் கரை புரண்டு வரினும் மாறுபடாத உறுதியுடையார் என்பதாம். (9) 990. சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலந்தான் றாங்காது மன்னோ பொறை. சான்றவர் சான்றாண்மை குன்றின் - சான்றோர் தம் தன்மை குன்றுவாராயின், இரு நிலந்தான் பொறை தாங்காது - பெரிய நிலவுலகமும் தன் சுமையைத் தாங்காத தாகிவிடும். சான்றவர்க்குச் சான்றாண்மை குன்றாமையும், நிலத்துக்குத் தாங்கலும் இயல்பாதலின் அவை எப்போதும் உளவாகா என்பது தோன்ற நின்றமையின் மன் ஒழியிசை. (10) 100. பண்புடைமை பெருமை, சான்றாண்மை முதலிய குணங்களில் வழுவாமல், பிறர் இயல்பறிந்து அகற்கேற்ப ஒழுகுங் குணம். 991. எண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை யென்னும் வழக்கு. யார் மாட்டும் எண்பதத்தால் - யாவரிடத்தும் எளிய செவ்வியராதலால், பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப - பண்புடைமை என்னும் நன்னெறியினை அடைதல் எளிதென்று சொல்லுவர் அறிவுடையோர். செவ்வி - பிறர் எளிதில் காணற்குரிய நிலை. காட்சிக் கெளியராதல் பண்புடைமை எய்துதற்கு ஏற்ற வழியாகும். பதம் - நிலை. பண்புடைமை - பிறர் இயல்புகளுக்கேற்ப ஒழுகுதல். (1) 992. அன்புடைமை யான்ற குடிப்பிறத்த லிவ்விரண்டும் பண்புடைமை யென்னும் வழக்கு. அன்புடைமை ஆன்ற குடிப் பிறத்தல் இவ்விரண்டும் - யாவரிடத்தும் அன்புடையராயிருத்தலும் உயர்குடிப் பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும், பண்புடைமை என்னும் வழக்கு - பண்புடைமை என்று உலகத்தார் கூறும் நன்னெறி யாகும். உயர்குடிப் பிறத்தல் என்றது, உயர்குடிப் பிறந்தாரின் குணம் செயலை. அன்புடைமையும், உயர்குடிக்கேற்ற நற்குண நற்செயலும் பண்புடைமையாகும். (2) 993. உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்த லொப்பதா மொப்பு. உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்று - செறியத்தகாத உறுப்புக் களால் ஒத்தல் ஒருவனுக்கு நன் மக்களோடு ஒப்பதாகா மையின் அது பொருந்துவதன்று, ஒப்பதாம் ஒப்பு வெறுத்தக்க பண்பு ஒத்தல் - இனிப் பொருந்துவதான ஒப்பாவது செறியத்தக்க பண்பா லொத்தல். வெறுத்தல் - செறிதல்; வேறுபாடின்றி ஒன்றாகப் பொருந்துதல். உறுப்பொத்தல் - கை கால் முதலிய உறுப்புக்களால் ஒத்தல். பண் பொத்தல் - நன்மக்களுடைய பண்பினை உடை யனாதல். பண் பொத்தலே நன்மக்களோடு ஒத்ததாகும்; உறுப் பொத்தல் ஒத்த தாகாது. (3) 994. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டு முலகு. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு - முறையையும் அறத்தையும் விரும்பிய பயனுடையவரது பண்புடைமையை, உலகு பாராட்டும் - உலகத்தார் கொண்டாடுவர். பண்புடைமையால், முறையையும் அறத்தையும் விரும்பிப் பயனுடையராதலால் அதனை உலகம் பாராட்டு மென்றார். (4) 995. நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு. இகழ்ச்சி நகையுள்ளும் இன்னாது - இகழ்ச்சியானது ஒருவனுக்கு விளையாட்டின் கண்ணும் துன்பந்தருவதாகும்; பாடு அறிவார் மாட்டுப் பகையுள்ளும் பண்புஉள - ஆதலால், பிறர் இயல்பறிந்து நடப்பவர்களிடத்துப் பகையின்கண்ணும் இனிய பண்புகளே உள்ளன. பாடறிவாரெனவே, அவ்வின்னாமையறிதலும், அவ்வின்னா மையை அறிந்தவர் பின் இனியவே செய்வார் என்பதும் கருத்து. பண்புடையார் பகைவர்க்கும் இன்னாதன செய்யார். (5) 996. பண்புடையார்ப் பட்டுண் டுலக மதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன். பண்பு உடையார்ப் பட்டு உலகம் உண்டு - பண்புடைய வரிடத்திற்படுதலால் உலகியல் எப்போதும் நடைபெற்று வருகின்றது, இன்றேல் அது மண்புக்கு மாய்வது - இல்லை யேல், உலகியல் மண்ணில் புகுந்து மாய்ந்து போய் விடும். உலகம் இடுகாடாகிவிடும் என்பது. பண்புடையார் துணையாலே உலகியல் நடைபெற்று வருகிறது. இல்லையேல் உலகியல் நடைபெறாது என்பது கருத்து. மன் - உறுதி. (6) 997. அரம்போலுங் கூர்மைய ரேனு மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர். மக்கட்பண்பு இல்லாதவர் - மக்களுக்குரிய பண் பில்லாதவர், அரம்போலும் கூர்மையரேனும் - அரத்தின் கூர்மை போல அறிவுக் கூர்மையுடையவர் ஆயினும், மரம் போல்வர் - ஓரறிவு யிரான மரத்திற்கு ஒப்பாவர். நுண்ணறிவுடையரேனும், பிறர் இயல்பறிந்து ஒழுகும் மக்கட் பண்பு இலராயின் மக்களாகார், மரத்திற்கு ஒப்பாவர். (7) 988. நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றா ராதல் கடை. நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்புச் செய்யாது பகை செய்வாரிடத்தும், பண்பு ஆற்றாராதல் கடை - பண்புடையவராய் நடந்து கொள்ளாமை அறிவுடை யார்க்குக் குற்றமாகும். நயம் - அன்பு. நயம்இல - பகை. அறிவுடைய ராயிருந்தும் பகை செய்யின் தாமும் அவர் தன்மையவர் ஆவர் என்பார் 'கடை' என்றார். (8) 999. நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள். நகல் வல்லர் அல்லார்க்கு - பண்பின்மையால் ஒருவரோடு கலந்து மனமகிழ மாட்டாதார்க்கு, மாயிரு ஞாலம் பகலும் இருட்பால் பட்டன்று - மிகவும் பெரிய உலகமானது இருளில்லாத பகற்காலத்திலும் இருளின்கண் கிடந்ததாகும். எல்லாரோடும் கலந்துறவாடத் தெரியாத பண்பிலார்க்கு உலகியல் தெரியாததால் உலகம் இருளின்கண் பட்டன்று என்றார். (9) 1000. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யாற்றிரிந் தற்று. பண்பு இலான் பெற்ற பெரும் செல்வம் - பண் பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமானது ஒருவர்க்கும் பயன்படாமற் போதல், நன்பால் கலந்தீமையால் திரிந்தற்று - நல்ல மாட்டுப்பால் ஊற்றி வைத்த கலத்தின் குற்றத்தால் களிம்பேறி ஒருவர்க்கும் பயன் படாமல் போவது போலும். கலம் - செம்பினாற்செய்த ஏனம். களிம்பு - கைப்புச் சுவை. செப்புக் கலத்தில் ஊற்றி வைத்த இனிய சுவையுடைய பால் கைத்துப் பயன்படாமற் போவது போல, பண்பிலான் செல்வமும் பயன்படா தென்பதாம். (10) 101. நாணுடைமை தமக்கும் ஒவ்வாத காரியம் செய்ய நாணுடையராதல். அதாவது, இழிந்த செயல்களைச் செய்ய நாணுதல். 1001. கருமத்தா னாணுத னாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற. நாணுக் கருமத்தால் நாணுதல் - நல்லோர்களுக்கு உரிய நாணாவது இழிந்த செயல்களால் நாணுதல், பிற திருநுதல் நல்லவர் நாணு - மனமொழி மெய்களின் அடக்கத்தால் வரும் பிற நாண்கள் அழகிய நெற்றியை உடைய குலமகளிர் நாண்களாகும். இழிந்த செயல்களால் நாணுதல் - இழிந்த செயல் களைச் செய்ய நாணுதல். (1) 1002. ஊணுடை யெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு. ஊண் உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறு அல்ல - ஊணும் உடையும் இவை ஒழிந்த பிறவும் எல்லா உயிர் களுக்கும் பொது வானவை, மாந்தர் சிறப்பு நாணுடைமை - நன்மக்கட்குச் சிறப் பாவது நாணுடைமையே. ஒழிந்தன - தூக்கம், காமம், அச்சம் முதலியன. (2) 1003. ஊனைக் குறித்த வுயிரெல்லா நாணென்னும் நன்மை குறித்தது சால்பு. உயிரெல்லாம் ஊனைக் குறித்த - எல்லா உயிர்களும் தங்களுடைய உடம்புகளை இருப்பிடமாகக் கொண்டுள்ளன, சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது - அது போலச் சால்பானது நாண் என்னும் நல்லியல்பைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டுள்ளது. உயிர் உடம்போடு கூடியல்லது பயனெய்தாவாறு போலச் சால்பு நாணோடு கூடியல்லது பயனெய்தா தென்பதாம். சால்பு - 99 ஆம் அதிகாரம் பார்க்க. (3) 1004. அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃ தின்றேற் பணியன்றோ பீடு நடை. சான்றோர்க்கு நாணுடைமை அணியன்றோ - சான்றோர்க்கு நாணுடைமை அழகாகும், அஃது இன்றேல் பீடு நடை பிணி அன்றோ - அவ்வழகு இல்லையாயின் அவர்களது பெருமித நடை யானது கண்டார்க்கு வெறுப்பைத் தருவதாகும். அருவருப்புக் கொள்ளத்தக்க நோயென்பதாம். அன்றோ என்னும் ஓகார இடைச்சொல் வினாவொடு எதிர்மறை. பெருமித நடை - மேம்பாடாக நடந்து கொள்ளுதல். (4) 1005. பிறர்பழியுந் தம்பழியு நாணுவார் நாணுக் குறைபதி யென்னு முலகு. பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் - பிறர்க்கு வரும் பழியை யும் தமக்கு வரும் பழியையும் ஒன்றுபோல எண்ணி நாணுபவர்களை, உலகு நாணுக்கு உறைபதி என்னும் - உலகத்தார் நாணுக்கு இருப்பிடம் என்று கூறுவர். ஒன்றுபோல எண்ணல் - அதுவும் தமக்கு வந்ததாகவே எண்ணுதல். இச்சிறந்த குணமுடையோரை உயர்ந்தோர் யாவரும் இவரே நாணுடையவர் என்று புகழ்வர் என்பதாம். (5) 1006. நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர். மேலாயவர் - உயர்ந்தோர், நாண் வேலி கொள்ளாது - நாணத்தைத் தமக்குக் காவலாகக் கொள்வ தல்லாமல், வியன் ஞாலம் பேணலர் - பரந்த வையகத்தைக் காவலாகக் கொள்ள விரும்பார். வேலி - காவல். தீயவை புகுதாமல் காத்தலின் வேலி என்றார். மேலோரின் மேன்மையைக் காப்பது நாணேயாகும். ஞாலம் - மக்கள். பிறரைக் காவலாகக் கொள்ளார் என்பதாம். (6) 1007. நாணா லுயிரைத் துறப்ப ருயிர்ப்பொருட்டால் நாண்டுறவார் நாணாள் பவர். நாண் ஆள்பவர் - நாணமுடையோர், நாணால் உயிரைத் துறப்பர் - நாணத்தின் பொருட்டுத் தமது உயிரை விடுவர், உயிர்ப் பொருட்டு நாண் துறவார் - உயிரின் பொருட்டு நாணத்தை விடார். நாணுடையோர் இழிந்த செயல் செய்ய நேரிடுமேல் அது செய்யாது உயிரைவிடுவர். உயிரினும் நாண் சிறந்த தென்பதாம். (7) 1008. பிறர்நாணத் தக்கது தானாணா னாயின் அறநாணத் தக்க துடைத்து. பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் - பிறர் நாணத்தக்க பழியைக் கண்டு தான் நாணாது செய்வானாயின், அறம் நாணத் தக்கது உடைத்து - அறம் அவனை விட்டு நீங்கும் தகுதியை உடையது. பழி - பழித்தற்குரிய செயல். பழியை நாணாதவன் அறத்திற்குப் புறம்பானவனாவான். (8) 1009. குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பி னலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை. கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவனுக்கு ஒழுக்கம் தவறுமாயின் அது அவனது குடிப் பிறப்பை மட்டும் கெடுக்கும், நாணின்மை நின்றக் கடை நலம் சுடும் - ஒருவனிடம் நாணின்மை நிலைபெறுமாயின் அது அவனுடைய நலம் அனைத்தையும் கெடுக்கும். நிலைபெறல் - ஒருபொழுதும் நீங்காமை. நலம் தொகுதி யொருமையாதலின் கல்வி, குணம், செயல் முதலியவற்றால் வந்தன வெல்லாம் கொள்ளப்படும். ஒழுக்கக் கேட்டினும் நாணக்கேடு மிகத் தீது என்பதாம். (9) 1010. நாணகத் தில்லா ரியக்க மரப்பாவை நாணா லுயிர்மருட்டி யற்று. அகத்து நாண்இல்லார் இயக்கம் - நெஞ்சில் நாணமில்லார் இடம்விட்டுப் பெயர்தல், மரப்பாவை நாணால் உயிர் மருட்டி யற்று - மரத்தினால் செய்த பாவை தன்னைக் கட்டிய கயிற்றால் இயங்கி உயிருள்ளதுபோல் மயக்கினாற் போன்றது. பாவை - பொம்மை. நாண் - கயிறு. நாணில்லாத மக்களி யக்கம் நாணுடைய மரப்பாவை போல்வதல்லது உயிரியக்க மன்று. மயங்குதல் - நடமாடுதல், வாழ்தல். (10) 102. இவறன்மை இவறன்மை - பற்றுள்ளம் (உலோப குணம்). பொருளைச் செலவழிக்க மனமில்லாத்தன்மை. இவறல்மை - இவறுந் தன்மை. 1011. வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு ளஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில். வாய் சான்ற பெரும்பொருள் வைத்தான் அஃது உண்ணான் - மனை நிறைந்த பெரும்பொருளை ஈட்டி வைத்து இவறன்மையால் அதை உண்ணாதவன், செத்தான் செயக் கிடந்தது இல் - உளனா யினும் செத்தவனாவான்; அவனால் அப்பொருளைக் கொண்டு செய்யக் கிடந்தது எதுவும் இல்லை. உலகில் உண்டு வாழ்வதற்கே பொருளீட்டுவதால் உண்ணாதவன் இருந்தும் பயனின்மையால், செத்தவனாவான் என்றார். அப்பொருளாலும் பயனில்லை என்பதாம். உண்ணாது தானும் வருந்திப் பொருளையும் பயன்படா தாக்கினான். (1) 1012. பொருளானா மெல்லாமென் றீயா திவறு மருளானா மாணாப் பிறப்பு. பொருளான் எல்லாம் ஆம் என்று - பொருளினால் எல்லாம் உண்டாகுமென்று அறிந்து அதனை ஈட்டி, ஈயாது இவறும் மருளான் - பின் பிறர்க்குக் கொடுக்காமல் கையழுத்தம் செய்யும் மயக்கத்தினால், மாணாப் பிறப்பு ஆம் - அமைதியில்லாத வாழ்க்கை உண்டாகும். ஈட்டுதற்கு முன்னிருந்த அறிவு பின் மயங்குதலின் மருளான் என்றும், அம்மயக்க அறிவினால் அவன் வாழ்க்கை நல்வாழ்க்கை யாகாதாகலின் மாணாப் பிறப்பென்றுங் கூறினார். மாணாத பிறப்பு - பிறப்பின் பயனான வாழ்க்கையை உணர்த்திற்று. பொருளால் எல்லாம் உண்டாகும் என்றறிந் தீட்டிப் பிறர்க்குக் கொடாதவர் வாழ்க்கையில் அமைதி இருக்காது. (2) 1013. ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர் தோற்ற நிலக்குப் பொறை. ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் - பொரு ளீட்டுவதையே விரும்பிப் புகழை விரும்பாத மக்களது பிறப்பு, நிலக்குப் பொறை - நிலத்துக்குச் சுமையாகும். இவறுதல் - விரும்புதல். ஆடவர் தோற்றம் - மக்கள் என்னும் பொருளதாய் நின்றது. பொருளின் பயனறியாத மக்கள் இருப்பது நிலத்துக்குச் சுமையாகும். (3) 1014. எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ வொருவரா னச்சப் படாஅ தவன். ஒருவரால் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈயாமையால் ஒருவராலும் விரும்பப்படாதவன், எச்சம் என்று என் எண்ணுங் கொல் - தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பதாக எதைக் கருது வானோ? எஞ்சி நிற்பது புகழேயாகையால், ஈயாதவனுக்கு எச்சம் ஒன்றுமில்லை யென்பதாம். (4) 1015. கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க் கடுக்கிய கோடியுண் டாயினு மில். கொடுப்பதும் துய்ப்பதும் இல்லார்க்கு - பிறர்க்குக் கொடுப்பதும் தாம் நுகர்வதும் இல்லாதவர்க்கு, அடுக்கிய கோடி உண்டாயினும் இல் - பலவாக அடுக்கிய கோடி பொருள் உண்டா யினும் அதனால் பயனில்லை. பொருளின் பயனாகிய அறமும் இன்பமும் அடையப் பெறாமையால், பயன் இல்லை என்றார். (5) 1016. ஏதம் பெருஞ்செல்வந் தான்றுவ்வான் றக்கார்க்கொன் றீத லியல்பிலா தான். தான் துவ்வான் - தானும் நுகராதவனாய், தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பு இலாதான் - தகுதியுடையார்க்கு ஒன்றைக் கொடுக்கும் இயல்பும் இல்லாதவனாயின், பெருஞ் செல்வம் ஏதம் - பெரிய செல்வத்திற்கு அவன் ஒரு நோயாவான். தக்கார் - ஏற்கத் தகுதியுடைய ஏழை மக்கள். நுகரப் படுதலும் ஈயப்படுதலுமாகிய பொருளை அவ்விரண்டும் இன்மையாக்கின தால் அதற்கு நோய் என்றார். (6) 1017. அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வ மிகநலம் பெற்றா டமியள்மூத் தற்று. அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் - வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுக்காதவனுடைய செல்வம், மிகநலம் பெற்றாள் தமியள் மூத்தற்று - மிக்க நலத்தினைப் பெற்ற ஒரு பெண் மண மின்றித் தனியளாய்ப் பருவ முதிர்ந்த தன்மையது. நலம் - அழகும் குணமும், மிகநலம் - மிகுந்த அழகும் அதற் கேற்ற குணமும் உடையவள். ஒருவன் வாழ்க்கையின்பத்திற் குரிய அவள் அதுவுமின்றித் தானும் வாழ்க்கையின்ப மின்றிப் பருவங் கழிந்த குமரியோடு உவமை கூறினமையின், பிறர்க்கும் பயன் படாமல் செல்வமும் பயனிழந்து கழியு மென்பதாம். இதனால், மணமில்லாத துறவு வள்ளுவர்க்கு உடன்பாடன்று என்பது தெரிகிறது. (7) 1018. நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று. நச்சப் படாதவன் செல்வம் - ஈயும் இயல்பு இல்லாமை பற்றிப் பிறரால் விரும்பப்படாதவன் செல்வமானது, ஊர் நடுவுள் நச்சுமரம் பழுத்தற்று - ஊரின் நடுவில் உள்ளதோர் நச்சுமரம் பழுத்தாற் போலும். நடுவூர் - ஊர் நடு. நச்சு - நஞ்சு. நச்சு மரம் - நஞ்சுத் தன்மை யுள்ள பழம் பழுக்கு மரம். ஊரின் நடுவிலிருந்தும் நஞ்சுத் தன்மை யால் அம்மரத்தின் பழம் பிறர்க்குப் பயன் படாததுபோல, இவறன் மையுடையான் செல்வமும் பிறர்க்குப் பயன்படாது. (8) 1019. அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர். அன்பு ஒரீஇ - ஒருவன் உறவினரிடம் அன்பு காட்டுவதை நீக்கி, தன் செற்று - வேண்டுவன நுகராது தன்னையும் வருத்தி, அறம் நோக்காது - வறியார்க்கீதல் முதலிய அறத்தையும் எண்ணிப் பாராது, ஈட்டிய ஒண் பொருள் பிறர் கொள்வார் - சேர்த்த மிக்க பொருளைக் கொண்டு பிறர் பயனடைவர். உறவினர் - சுற்றத்தாரும் நண்பரும், பொருளின் பயனான அறமும் இன்பமும் செய்து கொள்ளாதார்க்கு அப்பொருளை ஈட்டிய துன்பமேயன்றி அதையும் அயலார் கொள்வர். பிறர் - கள்வர் முதலியோர். (9) 1020. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து. சீர் உடைச் செல்வர் சிறுதுனி - புகழுடைய செல்வரது சிறிது காலம் நிற்பதாய வறுமையானது, மாரி வறங் கூர்ந்தனையது உடைத்து - முகில் மழை பெய்யாமல் வறுமை மிகுந்தாற் போன்ற இயல்பை உடையது. துனி - வெறுப்பு. வெறுப்பை உண்டாக்குவதால் வறுமையைத் துனி என்றார். யாவருக்கும் பயன்பட்டார் வறியராயியினும் அவ் வறுமை விரைவில் நீங்கிப் பின்னும் பயன்படுவர் என்பது உவமை யால் பெறப்பட்டது. எனவே, இவறன்மையுடையான் செல்வம் என்றுமே பயன்படா தென்பதாயிற்று. (10) 103. குடி செயல்வகை தான் பிறந்த குடியை உயரச் செய்யும் வகை. 1021. கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும் பெருமையிற் பீடுடைய தில். கருமம் செயக் கைதூவேன் என்னும் பெருமையில் - தன் குடியை உயர்த்தும் பொருட்டுத் தான் மேற்கொண்ட காரியத்தை முடிக்காமல் விடேன் என்னும் முயற்சியாகிய பெருமையைப் போல, ஒருவன் பீடு உடையது இல் - ஒருவனுக்குப் பெருமை யுடையது வேறு இல்லை. பல்வகையான செயலால் செல்வமும் புகழுமடைந்து குடி உயருமாகலின் பீடுடையது இல் என்றார். கைதூவல் - செயலாற்றா திருத்தல், தொழில் செய்யாமை. ஒவ்வொருவரும் உளமுயற்சி மெய் முயற்சியுடன் (அதி. 61. 62) தொழில் செய்து தம் குடியை உயர்த்தி னால் நாடு தானாக உயரும். (1) 1022. ஆள்வினையு மான்ற வறிவு மெனவிரண்டின் நீள்வினையா னீளுங் குடி. ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள் வினை யால் - மெய்முயற்சியும் நிறைந்த அறிவும் என்ற இரண்டினது இடையறாத செயலால், குடி நீளும் - ஒருவனது குடி உயரும். நிறைதல் - இயற்கையறிவு செயற்கையறிவோடு கூடி நிரம்புதல். முயற்சி - சோம்பல் புகுதாமல் காக்கவும், நிறைந்த அறிவு குடியுயர்தற் கேற்ற செயல் முடிக்குந் திறத்தை அறியவும் வேண்டும். (2) 1023. குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். குடி செய்வல் என்னும் ஒருவற்கு - எனது குடியை நான் உயரச் செய்வேன் என்று அதற்கேற்ற செயல்களில் முயலும் ஒருவனுக்கு, தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும் - ஊழ் ஆடையை இறுக உடுத்துக் கொண்டு தான் முன் வந்து நிற்கும். தெய்வம் - ஊழ். ஊழ் என்னும் அதிகாரம் (38) பார்க்க. மடி - ஆடை. தற்றுதல் - இறுக உடுத்துதல். ஆகூழ் இவனுக்கு உதவ முன் வந்து நிற்கும். தன் குடியை உயர்த்தப் பெருமுயற்சி செய்வானுக்கு எளிதில் காரியம் கைகூடும் என்பதை இவ்வாறு கூறினார். 620ஆம் குறளைப் பார்க்க. (3) 1024. சூழாமற் றானே முடிவெய்துந் தங்குடியைத் தாழா துஞற்று பவர்க்கு. தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடி உயர்தற் குரிய செயல்களை விரைந்து முயல்வார்க்கு, சூழாமல் தானே முடி வெய்தும் - அச்செயலை முடிக்கும் திறத்தை அவர் ஆராயாமல் இருக்கும்பொழுதே அது தானாகவே முடிவடையும். கட்டாயம் விரைவில் முடியும் என்பதை இவ்வாறு கூறினார். பெரு முயற்சி செய்வார்க்கு மேற்கொண்ட செயல் விரைவில் முடியும். உஞற்றுதல் - செய்தல். (4) 1025. குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்று முலகு. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானை - குற்ற மற்ற வனாய்த் தன் குடியை உயரச் செய்து வாழ்பவனை, உலகு சுற்றமாச் சுற்றும் - உலகத்தார் தமக்குச் சுற்றமாக விரும்பித் தாமே போய்ச் சுற்றி நிற்பர். தாமும் பயனடைதல் கருதி யாவரும் சென்று அவனைச் சார்வர். (5) 1026. நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை யாக்கிக் கொளல். ஒருவற்கு நல் ஆண்மை என்பது - ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது எதுவெனில், தான் பிறந்த இல் ஆண்மை ஆக்கிக் கொளல் - தான் பிறந்த குடியை ஆளுந் தன்மையைத் தானே உண்டாக்கிக் கொள்ளுதல். குடியை ஆளுந்தன்மை - குடியை உயரச் செய்தல். குடி செயலே ஒருவனுக்கு நல்லாண்மையாகும். (6) 1027. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து மாற்றுவார் மேற்றே பொறை. அமரகத்து வன்கண்ணர் போல - போர்க்களத்தில் உள்ள வீரர் பலருக்கும் போரைத் தாங்குதல் வலியாரிடமே உள்ளது போல, தமரகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே - குடிப்பிறந்தார் பல ருள்ளும் அக்குடியின் சுமையைத் தாங்குதல் வல்லவரிடமே உள்ளது. ஒரு படையில் வீரர் பலர் இருப்பினும் தம்மேல் வரும் படையைத் தாங்கும் பொறுப்பு வலியார்க்கே உரியதுபோல, குடியை உயரச் செய்யும் பொறுப்பும் அக் குடிப்பிறந்தார் பல ருள்ளும் வலியார்க்கே உரிய தாகும். (7) 1028. குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும். மடி செய்து மானம் கருதக் கெடும் - தன்குடியினை உயரச் செய்வார் அச் செயலையே நோக்காது காலத்தை நோக்கி, சோம்பலை மேற்கொண்டு மானத்தையும் நோக்குவா ராயின் குடி கெட்டுவிடும், குடி செய்வார்க்குப் பருவம் இல்லை - ஆகையால், தங்குடியை உயரச் செய்பவர்க்கு காலவரையறை இல்லை. காலத்தை நோக்கி மடிசெய்தல் - வெயில் மழை பனியை நோக்கிப் பின்னர்ச் செய்யலாம் என்றிருத்தல். மானங் கருதுதல் - இக்குடியிலுள்ளோர் யாவரும் இன்புற யான் மட்டும் ஏன் வெயில், பனி, மழை என்று பாராமல் துன்புறுவேன் என்று எண்ணுதல். காலமறிதல் (49) என்னும் அதிகாரம் பகைவெல்லும் வேந்தர்க்குக் கூறப்பட்டது. குடிசெய்வார்க்குக் கால வரையறை யில்லை. மடியும் மானமும் காலமுங் கருதாமல் தொழிலாற்ற வேண்டும் என்பது. (8) 1029. இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பா னுடம்பு. குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு - தன் குடும்பத் திற்குத் துன்பமுண்டாகாமல் காக்க முயல்பவனது உடம்பு, இடும் பைக்கே கொள்ளகலம் கொல் - அம்முயற்சித் துன்பத்திற்கே கொள் கலமாமோ? அன்றி, இன்பத்திற்குக் கொள்கலம் ஆதலில் லையோ? மறைத்தல் - காத்தல். கொள்கலம் - பண்டங்கள் போட்டு வைக்கும் பாண்டம். என் குடி முழுதும் இன்புற்று வாழ்தலான் நான் இன்புறுவதால் இம் மெய்வருத்தமும் எனக்கு நல்லதே என்று முயலும் அறிவுடையான், அம் முயற்சியை ஒரு நாளும் ஒழியாமை நோக்கி, இடும்பைக்கே கொள்கலம் என்றார். குடிசெய்வான் மெய் வருத்தம் பார்க்கக் கூடாதென்பதாம். (9) 1030. இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்றும் நல்லா ளிலாத குடி. அடுத்து ஊன்றும் நல்ஆள் இலாத குடி - தன்குடி சாயும் போது அதை விழாமல் தாங்கி உதவி புரியும் நல்ல ஆண்மகன் இல்லாத குடியாகிய மரம், இடுக்கண் கால் கொன்றிட வீழும் - துன்பமாகிய கோடரி வேரை வெட்டிச் சாய்க்க விழுந்துவிடும். 'கால் கொன்றிட வீழும்' என்றும், 'அடுத்து ஊன்றும்' என்றும் வந்த தொடர்களால் குடியை மரமாகவும் துன்பத்தைக் கோடரியாகவும் கொள்ளப்பட்டன. இது குறிப்புருவகம். வளர்ப் பார் உள்வழி வளர்ந்து பயன்படுதலும், அவரில் வழிக் கெடுதலும் உடைமையின் குடியை மரமாக்கினார். வறுமைத் துன்பத்தால் குடி நலிவுற்றுக் கெடுதலின் துன்பத்தைக் கோடரியாக்கினார். (10) 104. உழவு உழவுத் தொழிலின் சிறப்புக் கூறுதல். உழவின் சிறப் புணர்ந்து செய்து வாழ்தல் இதன் பயன். 1031. சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா லுழந்து முழவே தலை. சுழன்றும் உலகம் ஏர்ப்பின்னது - உழவுத்தொழிலால் உண் டாகும் மெய்வருத்தத்தை நோக்கிப் பிற தொழில்களைச் செய் தாலும் உலகத்தோர் ஏருடையோர் இடத்திற்கே வருவர், அதனால் உழந்தும் உழவே தலை - ஆதலால், வருந்தியும் உழுதலே தலைமை யான தொழிலாகும். ஏர் - ஆகுபெயராய் உழவரை உணர்த்திற்று. பிற தொழில் களால் பொருளடைந்த விடத்தும் உணவின் பொருட்டு உழுவா ரிடம் செல்ல வேண்டுதலின் 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றும், வருத்தம் இல்லையாயினும் பிற தொழில்கள் உழவுக்கு அடுத்தவையே என்பார் 'உழந்தும் உழவே தலை' என்றும் கூறினார். உழவின் சிறப்புக் கூறப்பட்டது. (1) 1032. உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து. அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து - உழவுத் தொழிலைச் செய்யமாட்டாது வேறு தொழில்களின் மேற் செல்வோர் யாவரையும் தாங்குதலான், உழுவார் உலகத்தார்க்கு ஆணி - உழுவார் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணி யாவர். பொறுத்தல் - தாங்குதல். உலகத்தாரென்பது - உழவரல்லா தாரை. உழவுத் தொழில் செய்யமாட்டாரது வேறு தொழில் செய்வோர்க் கெல்லாம் உணவூட்டிக் காத்தலால் உழுவார் உலகத் தோர்க்கு அச்சாணி போன்றனர். ஒரு கூற்றுருவகம். (2) 1033. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர். உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும் படி உழவுத் தொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்பவரே உரிமையுடன் வாழ்பவராவார்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் - பிறரெல்லாம் அவ்வுழவுத் தொழிலைப் பின்பற்றி வாழ்ப வராவர். தொழுதல் - உழவின் இன்றியமையாமை குறித்துத் தொழுதல்; போற்றுதல் என்பதாம். பின்பற்றி வாழ்தல் - தங்கள் தொழிலால் பொருளீட்டினும் உணவுக்கு உழவை யண்டி வாழ்தல். ஆகவே, உழவே உரிமையுடைய தொழிலும் பிறரை வாழ்விக்கும் தொழிலும் ஆகும். அவ்வுழவைப் போற்றுவது மக்கள் யாவர்க்கும் கடமை யாகும். (3) 1034. பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்ப ரலகுடை நீழ லவர். அலகு உடை நீழலவர் - உழவுத் தொழிலால் நெல்லினை யுடையவரான அருளுடையார், பலகுடை நீழலும் தம் குடைக் கீழ்க் காண்பர் - பல வேந்தர்களது குடை நிழலில் உள்ள மண் முழுவ தையும் தமது வேந்தரின் குடை நிழலின் கீழே காண்பர். அலகு - நெல். உழவால் ஏனைத் தவசங்களும், பிற பொருள்களும் விளையுமேனும் மக்களால் விரும்பப்படுவது நெல் லுணவே யாகலான் (732) உழவரை 'அலகு உடை நீழலவர்' என்றார். உழவுத் தொழிலின் வளர்ச்சியே அந்நாட்டரசனுக்கு வெற்றியைத் தந்து மண் முழுதும் அவனதாக்கும் என்பதாம். (4) 1035. இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். கை செய்து ஊண் மாலையவர் - தம் கையினால் உழவுத் தொழில் செய்து உண்ணும் இயல்பையுடையவர், இரவார் - பிறரிடம் சென்று இரக்கமாட்டார். இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர் - தம்மிடம் வந்து இரப்பவர்க்கு அவர் வேண்டிய தொன்றை ஒளிக்காமல் கொடுப்பர். பிறரிடம் இரவாது தாம் ஈதல் உழவர் சிறப்புக் குணமாகும். மாலை - தன்மை, இயல்பு. கரத்தல் - மறைத்தல், உள்ளதை இல்லை யெனல். (5) 1036. உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம் விட்டேமென் பார்க்கு நிலை. உழவினார் கை மடங்கின் - உழவர்கள் கை அத் தொழிலைச் செய்யாதிருக்குமாயின், விழைவதும் விட்டேம் என்பார்க்கும் நிலை இல்லை - எப்பொருளையும் துறந்தேம் என்பவர்களுக்கும் அத்துற வற நிலையில் நிற்றல் முடியாது. உழவர் தொழிலைக் 'கைமடங்கின்' எனக் கைமே லேற்றினார். துறவறமும் உணவில்லாமல் நடவாதென உழவின் சிறப்புக் கூறியவாறு. எனவே, அறவோர்களும் உழவுத் தொழில் வளர்ச்சிக்கு உதவிபுரிய வேண்டுமென்ப தாம். இவ்வாறு பாட்டானும் உழவின் சிறப்புக் கூறினார். (6) 1037. தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். தொடிப் புழுதி கஃசா உணக்கின் - உழவன் உழுத நிலத்தின் ஒரு பலப் புழுதியைக் காற்பலமாக உலறும்படி செய்வானாயின், பிடித்து எருவும் வேண்டாது சாலப் படும் - அந்நிலத்தின்கண் செய்த பயிர் ஒருபிடி எருவும் வேண்டாது மிகுதியாக விளையும். தொடி - ஒரு பலம். கஃசு - காற் பலம். உலறுதல் - ஈரம் போதல்; அதாவது அப்புழுதியிலுள்ள நீர் வற்றுதல். உழுத புழுதி நிலத்தில் ஒரு படி மண்ணெடுத்து அதை நிறுத்தால் எவ்வளவு எடை வருகிறதோ அது நாலில் ஒரு பாகம் ஆகும் வரையிலும் புழுதியைப் புரட்டிப் புரட்டி உழவேண்டும் என்பதாம். அவ்வாறு செய்தால் எருப் போடாமலே நன்கு விளையும். உழுது ஈர நிலத்திலேயே விதைத்தால் பயிர் நன்கு வளராது. பிடி எரு - ஒரு கைப்பிடி அளவு எரு. கொஞ்சங்கூட வேண்டியதில்லை என்பது. புழுதியுழுவதன் சிறப்புக் கூறியது. (7) 1038. ஏரினு நன்றா லெருவிடுதல் கட்டபின் நீரினு நன்றதன் காப்பு. ஏரினும் எரு இடுதல் நன்று - உழுதலினும் எருவிடுதல் நல்லது; கட்டபின் அதன் நீரினும் நன்று - உழுது எருவிட்டு விதைத்த பயிர்க்குக் களைந்தபின் பயிரைக் காத்தல் அப்பயிர்க்கு நீர் பாய்ச்சுதலினும் நல்லது. ஏர் - உழுதலைக் குறித்தது. காத்தல் - ஆடுமாடு முதலிய வற்றால் பயிர் அழிவெய்தாமல் காத்தல். பயிர் நோயால் அழி வெய்தாது காத்தலுங் கொள்க. உழுதல், எருவிடுதல், களை களைதல், நீர்பாய்ச்சல், காத்தல் என்னும் ஐந்தும் முறையே நடைபெற வேண்டும் என்பதாம். எருவிட்டு உழுதல் பெருவழக்கு. (3) 1039. செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலந் தில்லாளி னூடி விடும். கிழவன் செல்லான் இருப்பின் - நிலத்திற்கு உரியோன் நிலத் திற்கு நாடோறும் செல்லாமல் சோம்பியிருப்பானாயின், நிலம் இல்லாளின் புலந்து ஊடிவிடும் - அந்நிலம் அவன் மனைவியைப் போலத் தன்னுள்ளே வெறுத்துப் பின் ஊடிவிடும். செல்லாமல் இருத்தல் - நேரத்துக்கு நேரம் போய்த் தொழிலைப் பாராது வீட்டில் இருத்தல். எருவிடல், கற்பொறுக்கல், ஓரங் கொத்தல். முதலியன செய்யாமல் சோம்பியிருத்தல். புலத்தல் - வெறுத்தல். ஊடல் - வெறுப்பு முற்றிச் சினங் கொள்ளுதல். தன்னிடம் வராமலும் வேண்டுவன செய்யாமலும் இருந்தால் மனைவி புலந்து ஊடுதல் போல என்றது, விளைவு குறைந்து பின் விளையாமலே போமென்பது. மனைவி உணர்த்த உணர்ந்து ஊடல் தணிந்து கூடுதல் போல, நிலமும் கிழவன் சென்றால் விளையு மென்பதும் கருத்தாகக் கொள்க. (9) 1040. இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின் நிலமென்னு நல்லாள் நகும். இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் - யாம் வறியேம் என்று சொல்லிச் சோம்பி இருப்பாரைக் கண்டால், நிலம் என்னும் நல்லாள் நகும் - நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நல்லாள் தனக்குள் சிரிப்பாள். உழுதொழிலைச் செய்து உண்டு வாழாது 'யாம் வறுமை யுடை யேம்' என்று சும்மா இருப்போரைக் கண்டால், யானிருக்க உமக் கென்ன குறை? என்று நிலமகள் சிரிப்பாள் என்று உழவன் சிறப்பைக் குறித்தார். நாணத்தை 'நாணென்னும் நல்லாள்' (924) என்றது போல, நிலத்தைப் பெண் (நிலமகள்) என்பது நூல் மரபு. முகவுரை பார்க்க. (10) 105. நல்குரவு நல்குரவு - வறுமை. யாதொரு தொழிலும் செய்யாமை யால் உண்டாவது. 1041. இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி னின்மையே யின்னா தது. இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு வறுமையைக் காட்டிலும் துன்பந்தருவது எது வென்றால், இன்மை யின் இன்னாதது இன்மையே - வறுமைபோலத் துன்பந் தருவது வறுமையே; வேறில்லை. வறுமைக்கு ஒப்பதில்லை யெனவே, மிக்கதின்மை சொல்ல வேண்டிய தில்லை. (1) 1042. இன்மை யெனவொரு பாவி மறுமையு மிம்மையு மின்றி வரும். இன்மை யென ஒரு பாவி - வறுமையென்று சொல்லப் படுவதொரு பாவி, மறுமையும் இம்மையும் இன்றிவரும் - ஒருவனிடம் வருங்கால் அவனுக்கு மறுமையின்பமும் இம்மை யின்பமும் இல்லையாக வரும். மறுமை - ஒருவனது இறந்தபின் இவ்வுலக வாழ்வு. 88ஆம் குறளுரை பார்க்க. வறுமையின் கொடுமை நோக்கிப் பாவி (தீயோன்) என ஆண்பாலாகக் கூறினர். முகவுரை பார்க்க. (2) 1043. தொல்வரவுத் தோலுங் கெடுக்குந் தொகையாக நல்குர வென்னு நசை. நல்குரவு என்னும் நசை - வறுமை என்னும் ஆசை யானது, தொல்வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும் - தொன்று தொட்டு வருகின்ற குடிப்பிறப்பையும் அதற்குரிய சொல்லையும் ஒருங்கே கெடுக்கும். ஒன்றை ஆராய்ந்து செய்யமுடியாமல் மனத்தை மயக்கும் பேராசை இல்லையேல் வறுமை இல்லையாகலின், வறுமையை ஆசையாக்கி, அது அக்குடியின் முன்னோர்க்கு இல்லாத இழி தொழில்களையும் இழி சொற்களையும் உண்டாக்கலின், பழங் குடிக்குரிய நற்செயலையும் நற்சொல் லையும் ஒருங்கு கெடுக்கும் என்றார். குடிப்பிறப்பு - குடிப்பிறப்பின் பெருமை. (3) 1044. இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த சொற்பிறக்குஞ் சோர்வு தரும். இன்மை - வறுமையானது, இல் பிறந்தார் கண்ணேயும் - நற் குடிப்பிறந்தா ரிடத்தும், இளிவந்த சொல் பிறக்கும் சோர்வு தரும் - இழிவுக்குக் காரணமான சொற்கள் பிறக்கும் சோர்வினை உண்டாக்கும். சொல் - குடிப்பிறப்புக்கு ஏலாத 'எமக்கீயும்' என்னும் சொல். சோர்வு - வறுமைத்துன்ப மிகுதியால் தம் குடிப் பிறப்பினை மறந்து அத்துன்பம் சொல்வதாக நினைத்து அவ்வாறு சொல்லுதல். (4) 1045. நல்குர வென்னு மிடும்பையுட் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். நல்குரவு என்னும் இடும்பையுள் - வறுமை என்னும் துன்ப மொன்றினால், பல் துன்பங்கள் சென்று படும் - பல துன்பங்களும் வந்து தோன்றும். குரை - அசை. சென்று என்றது, வந்து என்னும் பொருளது, துன்பமும் வறுமையும் ஒன்றாக நிகழ்தலின் வறுமையைத் துன்ப மென்றார். செல்வரைச் சேர்தல், அவரைக் காணுதல், ஏற்றல் முதலிய பல துன்பங்களும் ஒருங்கே வருதலின், வறுமையால் எல்லாத் துன்பங்களும் வந்து தோன்று மென்றார். (5) 1046. நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் - உண்மைப் பொருளை நன்கு அறிந்து கூறினும், நல்கூர்ந்தார் சொல் பொருள் சோர்வுபடும் - வறியார் கூறும் சொல் பொருளற்ற தாகவே முடியும். பொருளற்றதாக முடிதலாவது - நாம் இவர் சொல்வதை விரும்பிக் கேட்கின் இரக்கந்தோன்றி இவர் வேண்டுவதைக் கொடுக்க நேருமென்று அஞ்சி யாவரும் கேளாமையால் பயனில் சொல்லாய் முடிதல். (6) 1047. அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். அறம் சாரா நல்குரவு - அறத்துடன் பொருந்தாத வறுமை யாளன், ஈன்ற தாயானும் பிறன்போல நோக்கப் படும் - தன்னைப் பெற்ற தாயினாலும் அயலான் போலக் கருதப்படுவான். அறத்துடன் பொருந்தாமை - வறுமை அறநெறியில் நடக்க விடாமை. அன்புடைய தாயாலும் வெறுக்கப்படு வானெனவே, பிறரால் வெறுக்கப்படுதல் சொல்ல வேண்டா வாயிற்று. (7) 1048. இன்றும் வருவது கொல்லோ நெருநலுங் கொன்றது போலு நிரப்பு. நெருநலும் கொன்றது போலும் நிரப்பு - நேற்றும் வந்து என்னைக் கொன்றது போலத் துன்பஞ் செய்த வறுமைத் துன்பம், இன்றும் வருவது கொல் - இன்றைக்கும் என்னிடம் வரக்கூடுமோ? வந்தால் என் செய்வேன்! அத்துன்பங்கள் 1045ஆம் குறளுரையில் கூறியவை. முதல்நாள் மிகவும் வருந்தித் தன்வயிற்றை நிரப்பினா னொருவன் கூற்று. (8) 1049. நெருப்பினுட் டுஞ்சலு மாகு நிரப்பினுள் யாதொன்றுங் கண்பா டரிது. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - நெருப்பின் நடுவில் ஒருவன் தூங்குவதும் கூடும், நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - ஆனால், வறுமையின் நடுவில் யாதொரு வழியினாலும் தூங்க முடியாது. தீயினும் வறுமை கொடியதென்றவாறு. துஞ்சலும் என்ற உம்மை துஞ்சாமையை விளக்கி நின்றது. இதுவும் அவன் கூற்று. (9) 1050. துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்குங் காடிக்குங் கூற்று. துப்புரவு இல்லார் துவரத் துறவாமை - நுகரப்படும் பொருள்கள் இல்லாதவர் முற்றத் துறவாது வருந்துதல், உப்பிற்கும் காடிக்கும் கூற்று - பிறர் வீட்டிலுள்ள உப்புக்கும் காடிக்கும் கேடாவர். முற்றத் துறத்தல் - இறத்தல். உண்ண உணவில்லாதார் சாவாமல் இருத்தல், பிறர் வீட்டிலுள்ள சோற்றுக்குக் கேடேயாகும். ஆதலால், அவர்கள் சாதலே தகுதியுடையது என்பது பொருள். சாவைக் கூற்றென்பது போல் கேட்டையும் கூற்று என்பது வழக்கு. சிறுவன் ஏதேனும் ஒரு பொருளைக் கெடுத்துவிட்டால், தாய் 'என்னடா இதற்கு நீ கூற்றாய்த் தோன்றிவிட்டாய்?' என்னும் வழக்கை யுணர்க. காடி - புளித்த கஞ்சி. (10) 106. இரவு பிறரிடம் ஒன்றைக் கேட்டுப் பெறுதல். மானந் தீரா இரவு இரவாமையோ டொத்தலின் வறியார் உடலோம்பிச் சாவை விலக்குதற் பொருட்டு இரவு கூறினார். 1051. இரக்க விரத்தக்கார்க் காணிற் கரப்பி னவர்பழி தம்பழி யன்று. இரத்தக்கார்க் காணின் இரக்க - வறியோர், இரத்தற்குத் தகுதியுடையாரைக் கண்டால் அவரிடம் இரக்கக்கடவர், கரப்பின் அவர் பழி தம்பழி அன்று - இரந்தால் அவர் ஒளிப் பாராயின் அது அவரது பழியே, இரப்பவர் பழியன்று. இரத்தற்குத் தக்கார் என்பது தொக்கு நின்றது. இரத்தற்குத் தகுதியுடையவராவார் - கேளாமுன் கொடுக்கும் அறிவுடையராய் மறுக்காது ஈவோர். அவரிடம் இரந்தார்க்கு இரவால் வரும் இழிவு இன்மையால் இரக்க வென்றும், அவர் இல்லையென்பாராயின் அப்பழி அவர்க்கு வெள்ளாடையிற் பட்ட கறைபோல் விரைவில் சேரலின் அவர் பழி என்றும், தகுதியில்லாரிடத் திரவன்மையால் தம் பழி அன்று எனவும் கூறினார். கரத்தல் - இல்லை யெனல். (1) 1052. இன்ப மொருவற் கிரத்த லிரந்தவை துன்ப முறாஅ வரின். இரந்தவை துன்பம் உறாவரின் - இரந்த பொருள்கள் துன்ப மடையாமல் வருமாயின், ஒருவற்கு இரத்தல் இன்பம் - ஒருவனுக்கு இரப்பதும் இன்பமே யாகும். உறாது என்பதன் ஈறு தொக்கது. இரந்தபொருள் துன்ப முறாது வருதலாவது - இரப்போன் நிலையுணர்ந்து கேளாமுன் ஈதல். (2) 1053. கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் றிரப்புமோ ரேஎ ருடைத்து. கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன்நின்று இரப்பும் - ஒளித்தல் இல்லாத நெஞ்சினையுடைய மானமறிவார் முன்னர் நின்று அவரிடம் ஒன்றை இரத்தலும், ஓர் ஏர் உடைத்து -வறி யோர்க்கு ஓர் அழகை உடையது. கேளாமல் கொடுத்தலால், கேட்டலான் வரும் சிறுமை யின்மையால் ஓர் ஏருடைத்து என்றார். (3) 1054. இரத்தலு மீதலே போலுங் கரத்தல் கனவிலுந் தேற்றாதார் மாட்டு. கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு இரத்தலும் - தமக் குள்ளதை இல்லை யென்பதைக் கனவிலும் அறியாதவரிடம் ஒன்றை இரத்தலும், ஈதலே போலும் - கொடுப்பதனோ டொக்கும். அவரிடம்இரத்தல் புகழ்தராதாயினும் முன்னுள்ள புகழ் கெடாமையால் ஈதலே போலும் என்றார். (4) 1055. கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் றிரப்பவர் மேற்கொள் வது. கண்நின்று இரப்பவர் மேற்கொள்வது - ஒருவர்க்கு எதிரில் நின்று இரப்பவர் இரக்குந் தொழிலை மேற்கொள்வது கரப்பிலார் வையகத்து உண்மையான் - உள்ளதை ஒளிக்காமல் கொடுப்பவர் சிலர் வையகத்தில் உள்ளதனால்தான்; மற்றொன்றால் அன்று. அவரில்லையாயின் மானத்தை விடமுடியாமையால் உயிர் விடுவ ரென்பதாம். (50 1056. கரப்பிடும்பை யில்லாரைக் காணி னிரப்பிடும்பை யெல்லா மொருங்கு கெடும். கரப்பிடும்பை இல்லாரைக் காணின் - உள்ளதை ஒளித்த லாகிய நோயில்லாரைக் கண்டால். நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் - வறுமையாகிய துன்பம் அனைத்தும் ஒருசேரக் கெடும். உள்ளதை ஒளியாரைக் காணின் இரப்பவர் பெரு மகிழ்ச்சி கொள்வாராதலின் எல்லாத் துன்பமும் ஒருங்கு கெடு மென்றார். (6) 1057. இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ள முள்ளு ளுவப்ப துடைத்து. இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் - தம்மை இகழ்ந்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால், உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து - இரப்போர் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே இன்பமுறு தலை யுடைத்து. இகழ்ந்து எள்ளாது என்றது - நன்கு மதித்தலையும் இன்சொற் கூறலையுமாம். வறுமைத் துன்பங் கெட்டு இன்ப முறுமாகையால் மகிழ்ந்து உள்ளுள் உவக்கலானார். (7) 1058. இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. இரப்பார் இல்லாயின் - வறுமையுற்று இரப்பவர் இல்லை யானால், ஈர்ங்கண் மாஞாலம் - குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகத்திலுள்ளவர் செலவு வரவுகள், மரப்பாவை சென்று வந்தற்று - உயிரில்லாத மரப்பாவை கயிற்றினால் சென்று வந்து இயங்குதலை ஒக்கும். இரப்பாரை என்பதன் ஐ - அசை. வறியார்க் கீந்து புகழ் அடை யாதவர் உயிருடனிருந்தும் பயனின்றென்பதாம். செலவு வரவு - அங்கு மிங்கும் நடந்து திரிதல். (8) 1059. ஈவார்க் கணென்னுண்டாந் தோற்ற மிரந்துகோள் மேவா ரிலாஅக் கடை. இரந்துகோள் மேவார் இலாக்கடை - இரந்து கொள் வதை விரும்பாதவர் இல்லாதவிடத்து, ஈவார்கண் தோற்றம் என் உண்டாம் - கொடுப்பவரிடத்துப் புகழ் எவ்வாறு உண்டாகும்? உண்டாகாது. தோற்றம் - புகழ் மேவுவார் என்பது மேவார் என்றாயிற்று. இரப்பாரில்லையேல் கொடையின்மையால் புகழ் அடைதல் இல்லையாயிற்று. (9) 1060. இரப்பான் வெகுளாமை வேண்டு நிரப்பிடும்பை தானேயுஞ் சாலுங் கரி. இரப்பான் வெகுளாமை வேண்டும். - கொடுப்பவனுக்கு ஒருவேளை பொருள் இல்லையென்றால், 'இவன் எனக்கு ஈய வில்லை' என்று இரப்பவன் வெகுளாதிருத்தல் வேண்டும்; நிரப் பிடும்பை தானேயும் கரி சாலும் - பொருளில்லாமை எல்லார்க்கும் நேரக்கூடும் என்பதை அறிதற்குத் தனது வறுமைத் துன்பம் ஒன்றே சான்றாதல் அமையும். கரி - சான்று, சாட்சி. தனக்குள்ளது போலவே பிறர்க்கும் பொருளில்லா நிலைமை உண்டாக்கும் என்பதை உணர்ந்து வெகுளாதிருக்க வேண்டும். இரப்போன் இயல்பு கூறியது. (10) 107. இரவச்சம் மானங் கெடவரும் இரவுக்கு அஞ்சுதல், இரவு - இரத்தல். 1061. கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி யுறும். கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை - உள்ளதை மறைக்காமல் மனமுவந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தவரிடமும் இரவாமல் ஒருவன் வறுமை யோடிருத்தல், கோடி உறும் - இரந்து அடையும் செல்வத்தினும் கோடி மடங்கு நல்லது. கண்ணன்னார் கண்ணும் என்னும் உம்மையால், மறைக்காத நண்பரிடத்தும் இரத்தல் கூடாதென்பதாம். பெரு முயற்சியால் உயி ரோம்பலே நல்லதென்பது கருத்து. (1) 1062. இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக வுலகியற்றி யான். உலகு இயற்றியான் இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் - இவ் வுலகத்தை உண்டாக்கியவன் மக்கள் முயற்சியால் உயிர் வாழ்தலை விரும்பாது பிறரிடம் சென்று இரந்தும் உயிர் வாழ்தலை விரும்புவானானால், பரந்து கெடுக - அக்கொடி யோன் இரப் போரைப் போன்று எங்குந் திரிந்து கெடக் கடவன். தொழில் செய்தற் கேற்ற கைகால் முதலிய உறுப்புக் களும் பகுத்தறிவும் இருந்தும் ஒரு சிலர் பிறரிடம் சென்று இரத்தல் தகாது என்பதை இவ்வாறு கூறினார். இது உலகம் ஒருவனால் உண்டாக்கப் பட்டது என்னும் கொள்கையைக் கொண்டு கூறியது. (2) 1063. இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில். இன்மை இடும்பை இரந்துதீர்வாம் என்னும் வன்மையின் - வறுமைத் துன்பத்தை முயற்சியால் நீக்காமல் இரந்து நீக்குவோம் என்று எண்ணும் வன்மையைப் போல, வன் பாட்டது இல் - முரட்டுத் தன்மையுடையது வேறொன்று இல்லை. வன்பாடு - முரட்டுத் தன்மை. வறுமையைத் தீர்க்க ஒழுங்கான முயற்சியிருக்க, ஒழுங்கல்லாத இரவால் தீர்க்கக் கருதுதலின் வன்மையாயிற்று. (3) 1064. இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக் காலு மிரவொல்லாச் சால்பு. இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு - நுகர்தற்குப் பொருள் இல்லாதபோதும் இரத்தற்கு இசையாத நிறை குணம், இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே - அகன்ற நிலமுழுதும் ஒன்று சேரினும் ஒப்பாகாத பெருமையை உடையது. சால்புடையார் இரக்கத் துணியார் என்பதாம். இடம் - பொருள். (4) 1065. தெண்ணீ ரடுபுற்கை யாயினுந் தாடந்த துண்ணலி னூங்கினிய தில். தாள் தந்தது தெண்ணீர் அடுபுற்கை யாயினும் - முயற்சியால் கிடைத்த பொருளானது தெளிந்த நீர் போலக் காய்ச்சிய கஞ்சியே யானாலும், உண்ணலின் ஊங்கு இனியது இல் - அதனை உண்ணு வதைக் காட்டிலும் இனிமை வேறொன்றும் இல்லை. தாள் - முயற்சி . புற்கை - கஞ்சி. அடுதல் - காய்ச்சுதல் முயற்சி யால் வந்ததால் அக்கஞ்சி பாலினுமினிய தென்பதாம். (5) 1066. ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற் கிரவி னிளிவந்த தில். ஆவிற்கு நீர் என்று இரப்பினும் - நீர் வேட்கையால் சாகு நிலை யிலுள்ள ஒரு மாட்டிற்குத் தண்ணீர் வேண்டும் என்று கூறும் போதும், இரவின் நாவிற்கு இளி வந்தது இல் - அவ்விரத்தலைக் காட்டிலும் ஒருவன் நாவிற்கு இழிந்தது வேறொன்று இல்லை. ஓர் உயிரைக் காப்பதன் பொருட்டு விலை கொடுத்து வாங்க வேண்டாத நீரே எனினும் இரத்தல் இழிவானதாகும். எனவே, அறமும் முயன்று செய்வதல்லது இரந்து செய்யற்க வென்பதாம். (6) 1067. இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற் கரப்பா ரிரவன்மி னென்று. இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று - 'நீங்கள் இரப்பின் தமக்குள்ளதை மறைப்பவரிடம் இரவாதீர்கள்' என்று, இரப்பாரை எல்லாம் இரப்பன் - இரப்போர் அனைவரையும் நான் இரக் கின்றேன். இரந்து கேட்டுக் கொள்கின்றேன் என்பது கருத்து. இது இரத்தலுக்கு அஞ்சிய ஒருவன் கூற்று. (7) 1068. இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி - வறுமைக் கடலைக் கடக்க அமைத்துக் கொண்ட இரத்தல் என்னும் காவலற்ற கப்ப லானது, கரவு என்னும் பார்தாக்கப் பக்குவிடும் - கரவு என்னும் கற் பாறையில் தாக்குமாயின் பிளந்து போகும். முயற்சிக் கப்பலே யன்றி இரவுக் கப்பல் வறுமைக் கடலைக் கடக்க ஏற்றதன்று என்பதாம். உருவகம். (8) 1069. இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள வுள்ளதூஉ மின்றிக் கெடும். இரவு உள்ள உள்ளம் உருகும் - உடையார் முன் இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைத் தால் எம் முள்ளங் கரைந்து உருகா நிற்கும்; கரவு உள்ள உள்ளதும் இன்றிக் கெடும் - இனி அவ்வாறு இரந்து நிற்கும் நிலையைக் கண்டு 'இல்லை' என்றலின் கொடுமையை நினைத்தால் அவ்வுருகும் நிலையும் இல்லாமல் அழிந்து போய் விடும். இரவிலும் கரவு கொடிது. கரத்தல் - உள்ளதை இல்லை யென்றல். (9) 1070. கரப்பவர்க்கி யாங்கொளிக்குங் கொல்லோ விரப்பவர் சொல்லாடப் போஒ முயிர். சொல்லாட இரப்பவர் உயிர் போம் - உள்ளதை மறைப்பவர் இல்லையென்று சொன்னவுடனேயே இரப்பவர்க்கு உயிர் போகின்றது; கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல் - இனி உள்ளதை மறைப்பவர்க்கு அதற்குப் பின்னும் உயிர் நிற்றலால் முன் இல்லை என்று சொன்ன போது அவ்வுயிர் எந்த இடத்திற் போய் ஒளிந் திருக்குமோ? அறியேன். உயிர் போகலாவது - இனி என் செய்வேன் என்று ஏங்கிச் செயலற நிற்றல். கரத்தல் கொடிதினும் கொடிது. (10) 108. கயமை யாதொரு நற்குணமு மில்லாத கீழோரது தன்மை. அதாவது, குடிமக்கள் ஆகாதார் தன்மை. 1071. மக்களே போல்வர் கயவ ரவரன்ன வொப்பாரி யாங்கண்ட தில். மக்களே போல்வர் கயவர் - வடிவால் முழுதும் மக்களைப் போன்றேயிருப்பர் கயவர், அவர் அன்ன ஒப்பார் யாம் கண்டது இல் - அவர் மக்களை ஒத்தாற் போன்ற ஒப்பு வேறு எவற்றினும் யாங் கண்டதில்லை. வேறு எவற்றிலும் என்றது - ஒன்றோ டொன்றை உவமை கூறப்படும் எப்பொருள்களிலும் என்பது. அவர் என்றது - கயவர் களிடத்துள்ள ஒப்புமையை. மக்களுக்கும் கயவர்களுக்கும் வடி வொத்தலின் குணங்களது உண்மை இன்மைகளால் அல்லது வேறுபா டறியப்படா தென்பதாம். எனவே, கயவர் சிறிதும் மக்களை ஒத்தவராகார்; மக்களல்லர் என்பது கருத்து. ஒப்பார் இ - இகரம் யகரம் வரத் தோன்றிய சாரியை. (1) 1072. தேவ ரனையர் கயவ ரவருந்தா மேவன செய்தொழுக லான். அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - கயவரைப் போன்றே தேவரும் தாம் விரும்புவனவற்றையே செய்து வருவதால், தேவர் அனையர் கயவர் - தேவரும் கயவரும் ஒரே தன்மையராவர். விரும்புவனவற்றையே செய்தல் - செய்வன தவிர்வன என்னும் மக்கட்பண்புச் சட்டத்தை அறிந்து, செய்வன செய்து தவிர்வன தவிர்த்து நடக்காமல் மனம் போனபடியே செய்து நடத்தல். அதாவது நல்லொழுக்கமின்மை. தேவரும் செய்வன தவிர்வனவின்றி மனம்போனபடி விரும்பியதை யெல்லாம் செய்தொழுகலான், அத் தன்மையுடைய கயவர்களை அத் தேவருக்கு ஒப்பிட்டார். மேல் (1071) கயவர்களுக்கு மக்களுக் குரிய யாதொரு நற்குணமும் இன்மை யால் கயவர்கள் மக்களல்லர் என்றார். பின் யாரோடொப்பர் கயவர் என்னும் வினாவிற்கு விடையாக, அவரைப் போலவே ஒழுக்கம் சிறிதுமில்லாத தேவரோ டொப்பர் எனக் கயவர்க்கு இனங் கூறினார். இதனால், மக்களிலும் தேவர்கள் தாழ்ந்தவரென்பது வள்ளுவர் கருத்தாகும். ஒழுக்கமே மக்கட்டன்மை யாகும். (2) 1073. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவல மிலர். நன்று அறிவாரில் கயவர் திரு உடையர் - தமக்கு நன்மையான வற்றை அறிவாரைக் காட்டிலும் அவை யறியாத கீழ் மக்கள் நல்லவராவர்; நெஞ்சத்து அவலம் இலர் - ஏனெனில், அக் கீழ்மக்கள் தமது உள்ளத்தில் மேன்மக்களைப் போல் நன்மைகளை அறிய வேண்டும் என்கின்ற கவலை இல்லாதவராவர். நன்று - தொகுதியொருமை. நன்மைக ளாவன - அறிவு புகழ் அறம் முதலாயின. மேன்மக்கள் இவற்றைக் குற்ற மின்றிச் செய்ய வேண்டுமென்று கவலை யெடுத்துக் கொள்வர்; கயவர்கள் அவற்றைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாதவ ராகையால் 'திரு வுடையர்' என இகழ்ந்தவாறு. திரு - நன்மை. கயவர் பழி முதலிய வற்றிற்கு அஞ்சார் என்னபதாம். (3) 1074. அகப்பட்டி யாவாரைக் காணி னவரின் மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ். கீழ் - கீழோன், அகப்பட்டி ஆவாரைக்காணின் - தன்னைக் காட்டிலும் குறைந்த பட்டியாய் நடப்பாரைக் கண்டால், அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் - அவரைக் காட்டிலும் தான் உயர்ந்தவ னென்று இறுமாப்புக் கொள்வான். பட்டி - ஒழுக்கமில்லான். அகம் - சுருங்குதல், குறைதல். கயவன் தன்னிலும் குறைந்த கயமைத் தன்மை யுடைய கீழோரைக் கண்டால் தானே கயமைத் தன்மையில் சிறந்தவனென்று இறுமாப்புக் கொள்வான். கீழோர் பெருமை கூறியவாறு. (4) 1075. அச்சமே கீழ்கள தாசார மெச்சம் அவாவுண்டே லுண்டாஞ் சிறிது. கீழ்களது ஆசாரம் அச்சமே - கயவரிடம் ஒழுக்கங் காணப் படின் அதற்குக் காரணம் அரசனால் தண்டிக்கப் படுவோம் என்று அஞ்சும் அச்சமே யாகும்; எச்சம் அவா உண்டேல் சிறிது உண்டாம் - அஃதொழிந்தால், தம்மால் விரும்பப்படும் பொருள் அதனால் உண்டாகுமாயின் சிறிது ஒழுக்கம் உண்டாகும். அவ்வாறு நடந்தால் தாம் விரும்பிய பொருள் கிடைக்கு மென்று தெரிந்தால் சிறிது அவ்வாறு ஒழுக்கமுடையராய் நடப்பர் என்பது கருத்து. அச்சத்தினாலும் அவாவினாலும் சிறிது உண்டானால் உண்டாகுமேயன்றிக் கயவர்களுக்கு ஒழுக்க மென்பதொன்றில்லை என்பதாம். அஃதொழிந்தால் - அவ்வச்சத்தின் பொருட்டின் றேல், கயவர்க்கு ஒழுக்கம் இயல்பன்றென்பது. (5) 1076. அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட மறைபிறர்க் குய்த்துரைக்க லான். தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான் - தாம் கேட்ட மறைபொருளைத் தாங்கிக் கொண்டு போய்ப் பிறர்க்குச் சொல்லுதலால், கயவர் அறைபறை அன்னர் - கயவர் அறையப் படும் பறையினை ஒப்பர். மறை - இரகசியம். அறைபறை - நாடகம், படக் காட்சி போன்றவற்றையும், அரசியற் காரியங்களையும் ஊர்மக்கட்கு அறிவிக்க அறையும் பறை. கயவர் தாங்கேட்ட மறையை ஊரறியச் செய்வர். 1077. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங் கூன்கைய ரல்லா தவர்க்கு. கயவர் கொடிறு உடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு - கீழ்மக்கள் தமது கன்னத்தை நொறுக்கும் வளைந்த கையை யுடைய கொடியோர் அல்லாதவர்க்கு, ஈர்ங்கை விதிரார் - தாம் உண்டு கழுவிய ஈரக்கையையும் உதறார். கயவர் தம்மை உதைத்து வருத்துவோர்க் கன்றிப் பிறர்க்கு ஒன்றுங் கொடார். "செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்தீவார்." "எச்சில் கையால் காக்கை ஓட்ட மாட்டான்," "உண்டகையும் உதறான்" என்பன காண்க. (7) 1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற் கொல்லப் பயன்படுங் கீழ். சான்றோர் சொல்லப் பயன்படுவர் - மேலோர், ஒருவன் தன் குறையைச் சொன்னவுடனே அவனுக்கு உதவிபுரிவர், கீழ் கரும்பு போல் கொல்லப் பயன்படும் - அவ்வாறன்றி, கீழ் மக்களோ தம்மைக் கரும்பைப் போல நையப் புடைத்தால் தான் பயன்படுவர். பயன்படுதல் - உள்ளது கொடுத்தல். கயவர்களின் இழிவு நன்கு விளங்க மேன்மக்களையும் உடன் கூறினார். நையப் புடைப்போர் - கள்வர், வழிபறிப்போர் முதலியோர். (8) 1079. உடுப்பதூஉ முண்பதூஉங் காணிற் பிறர்மேல் வடுக்காண வற்றாகுங் கீழ். உடுப்பதும் உண்பதும் கீழ் காணின் - பிறர் நன்கு உடுப் பதையும் உண்பதையும் கீழ்மகன் கண்டானாயின், பிறர்மேல் வடுக்காண வற்றாகும் - அவற்றைப் பொறாது, அவரிடத்தில் குற்றமில்லா விட்டாலும் குற்ற முண்டாக்க வல்லவனாவான். வடு - குற்றம். வற்றாகும் - வல்லவனாவான். இல்லாத குற்றத்தை அவர்மீது சொல்வான். பிறர் செல்வங் கண்டு பொறாத கயமைக் குணங் கூறப்பட்டது. (9) 1080. எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால் விற்றற் குரியர் விரைந்து. கயவர் ஒன்று உற்றக்கால் விரைந்து விற்றற்கு உரியர் - கயவர் தமக்கு ஏதேனும் ஒருகுறை உண்டானபோது அது தீர்த்தற் பொருட்டு விரைந்து தம்மைப் பிறர்க்கு அடிமைப் படுத்தற் குரியர்; எற்றிற்கு உரியர் - அதுவன்றி வேறு எதற்குரியர்? ஒன்றுக்கும் உரியரல்லர். கயவர்க்கு மானம் என்னும் நற்குணம் இன்மையால் உணவுடை ஏதேனும் ஒன்றின்மை யானால் உடனே பிறரையடுத்து, அவர் சொன்னபடி கேட்டு, அதைப் பெற்று உயிர் வாழ்வர் என்பதாம். விற்றல் - பிறர் சொற்படி நடத்தல். (10) பொருட்பால் முற்றிற்று 3. இன்பத்துப்பால் இன்பமாவது - ஒருவனும் ஒருத்தியும் கூடி இன்புறும் இன்பம். அவ்வின்ப வொழுக்கம் - புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என ஐந்து வகைப்படும். அவற்றை 'ஐந்திணை' என்பர் தொல்காப்பியர். அவ்வைந்தொழுக்கத் தையும் களவு, கற்பு என இரண்டாக வகுத்து, அவற்றைப் பெரும்பாலும் உலக வழக்கோடு பொருந்திச் செய்யுள் வழக்கும் இனிது அமையப் பழந்தமிழ் மக்களின் இல்வாழ்க் கையின் நனிமிகு சிறப்பின் நற்பண் பாட்டினைச் சுவை மிக வுடைத்தாய் இனிது கூறுகின்றார் வள்ளுவர். புணர்ச்சி ஒன்றையும் களவு எனவும், பிரிவு முதலிய நான்கையும் கற்பு எனவுங் கொண்டனர். களவினும் பிரிவு நிகழுமேனும் பெரும்பான்மைபற்றிக் கற்பி லடக்கினார். அறத்துப் பாலினும், பொருட் பாலினும் உள்ள பல அதிகாரங்களே கால மாற்றத்தால் தேவையில்லாது போயினும், மக்களினம் உள்ளமட்டும் நின்று நிலவுவது இவ்வின்பத்துப் பாலே யென்பது தெளிக. 1. களவியல் (7) களவாவது - குடிப்பிறப்பும் அக் குடிப்பிறப்பிற் குரிய தன்மையும் ஆண்மையும் பருவமும் உருவமும் அன்பும் நிறையும் அருளும் அறிவும் செல்வமும் என்னும் பத்தும் தம்முள் ஒத்தவராய தலைமகனும் தலைமகளும் தாமே எதிர்ப்பட்டுக் கூடி மகிழ்வது. உரு - வடிவழகு. நிறை - அடக்கம். இவை ஒருவாறு தம்முளொத்த இருவர் காதல் கொள்வதே உலகியல். இவை பத்தும் ஒருங்கு ஒப்புமை உடையதாகக் கூறுதல் செய்யுள் வழக்கு. (தொல். மெய்ப் பாட்டியல் 25.) அக்களவு - இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப் பாடு, பாங்கற்கூட்டம், தோழியிற் கூட்டம் என நான்கு வகைப்படும். தோழிமதியும் பாடு, பகற்குறி, இரவுக்குறி, ஒருவழித் தணத்தல், வரைவு கடாதல், வரைவுடன்படல், வரைவிடை வைத்துப் பொருள் வயிற்பிரிதல், அறத்தொடு நிலை, உடன்போக்கு என ஒன்பது வகைப்படும். 109. தகையணங்குறுத்தல் தகை அணங்கு உறுத்தல். தகை - அழகு. அணங்கு - வருத்தம். உறுத்தல் - வற்புறுத்திக் கூறுதல். தலைமகளது அழகு தன்னை வருத்துதலைத் தலைமகன் கூறுதல். 1081. அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் னெஞ்சு. கனங்குழை - கனவிய குழையினை யுடையாள், அணங்கு கொல் - அணங்கோ, ஆய்மயில் கொல் - சிறந்த மயிலோ, மாதர்கொல் - அல்லது ஒரு தமிழ்ப்பெண்ணோ, என் நெஞ்சு மாலும் - இவளை இன்னாளென்று துணிய மாட்டாது என் உள்ளம் மயங்குகிறது. குழை - காதணி. ஆய்மயில் - மயில்களில் ஆராய்ந் தெடுத்த மயில். அணங்கு - முகவுரை பார்க்க. இது ஐயம். தலைமகன் தலைமகளை ஐயுற்றது. (1) 1082. நோக்கினா ணோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் - இத்தகைய அழகுடையாள் எனது நோக்கிற்கு எதிர் நோக்குதல், தாக்கு அணங்கு தானைக்கொண்டன்னது உடைத்து - தானே வருத்தும் அணங்கு வருத்துதற்கு ஒரு படையையுங் கொண்டு வந்த தன்மையை உடையது. நோக்குதல் - பார்த்தல். எதிர்நோக்கு - குறிப்பு நோக்கு. அழகால் வருத்துதலோடு குறிப்பு நோக்கால் வருத்துதலுங் கூறிற்று. பெண்ணென்று தெளிந்தவன் அவள் நோக்காலாகிய வருத்தங் கூறியது. (2) 1083. பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன் பெண்டகையாற் பேரமர்க் கட்டு. கூற்று என்பதனைப் பண்டு அறியேன் - கூற்று என்று நூலோர் சொல்வதை முன்பு கேட்டு அறிவதல்லது கண்டறியேன், இனி அறிந்தேன் - இப்போது அறிந்தேன், பெண் தகையால் பேர் அமர்க் கட்டு - அது பெண் தகைமையுடன் பெரிய அமர்த்த கண்களையுடையது. இதுவுமது. பெண்தகை - நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் பெண்மைக் குணங்கள். நாணம் - காமக் குறிப்பு நிகழும் போது உண்டாகும் பெண்மைக் குணம். மடம் - அறிவிக்க அறிந்து அறிந்ததை வெளிக்காட்டாமை. அச்சம் - அன்பு காரணமாகத் தோன்றுங் குணம். பயிர்ப்பு - புதிதாக ஒன்றைக் கண்டபோது மனங் கொள்ளாமை. துன்பம் பயத்தலின் கூற்று என்றார். கூற்று - முகவுரை பார்க்க. (3) 1084. கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப் பேதைக் கமர்த்தன கண். பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண் தன்மையை உடைய இவளுக்கு உள்ள கண்கள், கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தால் அமர்த்தன - தம்மைக் கண்டவரது உயிரை உண்ணும் தோற்றத் துடனே கூடி மாறுபட்டிருக்கின்றன. இதுவுமது, பேதைமை - காம வேட்கையால் செய்யத் தகுவன அறியாமை. அவள் குணங்களுக்கும், பேதைமைக்கும் மாறாகக் கொடியனவாய் இருந்தன என்பதாம். (4) 1085. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்று முடைத்து. கூற்றமோ - என்னைத் துன்பப் படுத்துதலால் கூற்றமோ, கண்ணோ - என் மீது இரக்கங் கொண்டு பார்த்தலால் கண்ணோ, பிணையோ - இயல்பாக அஞ்சுதலால் பெண்மானோ, அறிகிலேன்; மடவரால் நோக்கம் இம்மூன்றும் உடைத்து - இவள் நோக்கம் இம்மூன்று தன்மைகளையும் உடையதா யிருக்கிறது. இதுவுமது. இன்பமும், துன்பமும் ஒருங்கு செய்கின்றது என்பதாம். இது ஐயவுவமம். (5) 1086. கொடும்புருவங் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்னிவள் கண். கொடும் புருவம் கோடா மறைப்பின் - கொடிய புருவங்கள் கோணுதலில்லாமல் தடுக்குமானால், இவள் கண் நடுங்கு அஞர் செய்யல - அப்புருவங்களைக் கடந்து வந்து இவள் கண்கள் எனக்கு நடுக்கத்தைத் தரும் துன்பத்தைச் செய்ய மாட்டா. இதுவுமது. கோடா - கோடாது, நடுவுநிலைமை தவறாது. 138 உரை பார்க்க. புருவங்கள் நடுவு நிலைமையுடன் நின்று தடுக்குமானால் அவைகளை மீறிக் கண்கள் எனக்குத் துன்பம் செய்யா என்பதாம். புருவங்கள் இயல்பாகக் கோடுதலுடைமையின் பிறர் தவறு செய்தால் கண்டிக்குந் தன்மையில்லை என்பதுபட நின்றமையால், மன் - ஒழியிசை. (6) 1087. கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர் படாஅ முலைமேற் றுகில். மாதர் படா முலைமேல் துகில் - இவளது சாயாத முலைமே லிட்ட மேலாடையானது, கடாக் களிற்றின் மேல் கண் படாம் - வெறி யானையின் கண்களை மறைத்திட்ட முகப் படாத்தினை ஒக்கும். அவள் மார்பாலாகிய வருத்தங் கூறியது. முலை தன்னை வருத்தாமல் மேலாடை காத்தலான் அதை, கொல்லுங் குண முடைய வெறிக் களிற்றின் கண்ணை மறைத்திட்ட முகமூடி போலும் என்றான். (7) 1088. ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரு முட்குமென் பீடு. ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு - போர்க் களத்தில் பகைவரும் அஞ்சும் எனது வலி, ஒள்நுதற்கு உடைந்ததே - இவளது ஒளி பொருந்திய நெற்றிக்கு ஆற்றாது அழிந்துவிட்டது. நெற்றியாலாய வருத்தங் கூறியது. வலி - மனவலியும் உடல் வலியும். ஒ - வியப்பிடைச் சொல். (8) 1089. பிணையேர் மடநோக்கு நாணு முடையாட் கணியெவனோ வேதில தந்து பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு - பெண் மானைப் போன்ற அஞ்சுந் தன்மையை யுடைய பார்வையையும், நாணத்தையும் உடைய இவளுக்கு, ஏதில தந்து அணி எவன் - வேறு அணிகலன்கள் கொண்டு வந்து அணிவது யாது கருதியோ? அணிகலத்தாலாய வருத்தங் கூறியது. இவளுக்குச் சுமையாதலும், எனக்கு வருத்தமாதலும் கருதாமல் அணிந்தார் அறிவிலர் என்பதாம். ஏர் - உவமவுருபு. (9) 1090. உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போற் கண்டார் மகிழ்செய்த லின்று. அடு நறா - கள்ளானது, உண்டோர் கண் அல்லது - தன்னை உண்டவர்க்கு மட்டுமே அல்லாது, காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று - காமத்தைப் போலத் தன்னைக் கண்டவர்க்கு மகிழ்ச்சியைக் கொடுத்தல் இல்லை. தலைவி குறிப்பறிந்து கூறியது. காமமென்றது - காம நுகர்தற் கிடமாகிய தலைமகளை. (10) 110. குறிப்பறிதல் தலைவி, தோழி ஆகியோர் குறிப்பினைத் தலைவனும்; தலைவன், தலைவி குறிப்பினைத் தோழியும் அறிதல். 1091. இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. இவள் உண்கண் உள்ளது இரு நோக்கு - இவள் மையுண்ட கண்களில் உள்ளதாகிய பார்வை. இப்போது என்மீது இரண்டு பார்வை ஆயிற்று, ஒரு நோக்கு நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து - அவற்றில் ஒரு பார்வை எனக்கு நோய் தரும் பார்வை, மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகிய பார்வை. தலைமகன், தலைமகள் குறிப்பை அவள் நோக்கினால் அறிந்தது. மை உண்ணல் - மை தீட்டுதல். நோய் தரும் பார்வை - அவள் மனத்திலுள்ள காமக் குறிப்பினை வெளிப் படுத்தும் பார்வை. மருந்தாகிய பார்வை - தலைவனைப் பார்க்கின்ற அன்புப் பார்வை. (1) 1092. கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற் செம்பாக மன்று பெரிது. கண் களவு சிறுநோக்கம் - இவள் கண்கள் யான் காணாமல் என்னைக் கள்ளத்தனமாய்ப் பார்க்கும் சிறிய பார்வையானது, காலத்தில் செம்பாகம் அன்று பெரிது - மெய்யுறு புணர்ச்சியில் சரிபாதியன்று; அதைவிடப் பெரிது. இதுவுமது. தான் பார்த்தபோது நாணித் தலைகுனிந்தும், தான் பார்க்காதபோது தன்னை உற்றும்பார்த்தலால் களவு கொள்ளு மென்றும், அது சிறிது நேரம் நிகழ்வதால் சிறு நோக்க மென்றும் கூறினான். அவள் தனது குறிப்புக்கு உளப்பட்டபோது நிகழ்வதாகலின் இனிப் புணர்ச்சி கட்டாயம் என்பான், செம்பாகம் அன்று பெரிது என்றான். செம்பாகம் - சரிபாதி. (2) 1093. நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள் யாப்பினு ளட்டிய நீர். நோக்கினாள் - நான் பார்க்காதபோது என்னை அன்போடு பார்த்தாள், நோக்கி இறைஞ்சினாள் - பார்த்து ஒன்றனை உட் கொண்டு அதனால் வெட்கித் தலைகுனிந்தாள், அஃது யாப்பினுள் அவள் அட்டிய நீர் - அக்குறிப்பு எங்கள் இருவரிடத்தும் தோன்றிய அன்பாகிய பயிர் வளர அப் பயிரில் அவள் ஊற்றிய நீரானது. இதுவுமது. இது நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது. அஃது - புணர்ச்சி குறித்தது. (3) 1094. யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற் றானோக்கி மெல்ல நகும். யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் - நான் அவளைப் பார்க்கும்போது அவள் என்னைப் பாராது தலை குனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நோக்காக்கால் தான் நோக்கி மெல்லநகும் - அதையறிந்து, நான் அவளைப் பாரா விடின் அவள் என்னைப் பார்த்து உள்ளுக்குள் மகிழ்வாள். இம்மகிழ்க்கியால் புணர்தற் குறிப்பு இனிது விளங்கும். (4) 1095. குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண் சிறக்கணித்தாள் போல நகும். குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - நேராக என்னைக் குறித்துப் பாராததே யல்லாமல், ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணைச் சுருக்கினாற் போலப் பார்த்து மகிழ்வாள். இதுவுமது. சிறங்கணித்தல் என்பது வலிந்து நின்றது. வலித்தல் விகாரம் இனி இவளை அடைதல் துணிவென்பதாம். (5) 1096. உறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொல் ஒல்லை யுணரப் படும். உறாதவர்போல் சொலினும் - அயலார் போலக் கடுஞ் சொல் சொன்னாராயினும், செறார் சொல் ஒல்லை உணரப்படும் - பகைமைக்குண மில்லாதவர் சொல் பயன்தரத் தக்கது என்பதை விரைவில் அறியப்படும். தோழி சேட்படுத்தபோது அவள் குறிப்பறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. சேட்படுத்தல் - தலைமகளை அணுக விடாமல் அவனைத் தடுத்தல். கடுஞ்சொல் - இங்கு காவல் மிகுதி யுடையது வாராதீர் என்பது போன்ற சொல். தன்குறை முடிக்கக் கருதியே சேட்படுக்கின்றமை அறிந்து கூறியது. (6) 1097. செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கும் உறாஅர்போன் றுற்றார் குறிப்பு. செறாச் சிறு சொல்லும் - பின் இன்பந்தரும் முதலில் இன்பந் தராத கடுஞ்சொல்லும், செற்றார் போல் நோக்கும் - வெளிக்குப் பகைவர் போன்ற வெகுளிப் பார்வையும், உறார் போன்று உற்றார் குறிப்பு - நொதுமலர் போன்று அன்பராயினாரது குறிப்பாகும். உள்ளொன்று குறியாமையால் இவற்றிற்கு அஞ்சவேண்டா மென்பதாம். (7) 1098. அசையியற் குண்டாண்டோ ரேஎர்யா னோக்கப் பசையினள் பைய நகும். யான் நோக்கப் பசையினள் பைய நகும் - நான் வருந்தி நோக்கியபோது அதற்கிரங்கி மெல்ல மகிழா நின்றாள், அசை இயற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - ஆகையால், அசையும் இயல் பினை யுடையவளுக்கு அந்நகையில் ஓர் நன்மைக் குறிப்பு உண்டு. தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது. பசை - இரக்கம். (8) 1099. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள. ஏதிலார்போலப் பொது நோக்கு நோக்குதல் - முன் அறியாதார்போல ஒருவரை ஒருவர் பொதுப்பார்வை பார்த்தல் - காதலார் கண்ணே உள - காதலரிடமே உள்ளன. தோழி மதியுடம் படுவாள் தன்னுள்ளே சொல்லியது. மதியுடம் படுதல் - காதலர் கருத்துக்குத் தானும் உடம் படுதல். (90 1100. கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனு மில. கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் - காதலர் இரு வருள், ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் பார்வையில் ஒத்திருக்கு மாயின், வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - அவர் வாயிலிருந்து வரும் சொற்கள் ஒருபயனும் உடையவையல்ல. இதுவுமது. இணை - இரண்டு. நோக்கொத்தல் - காதல் நோக்கின வாதல். (10) 111. புணர்ச்சிமகிழ்தல் குறிப்பறிந்து புணர்ந்த தலைவன் அப்புணர்ச்சி இன்பத்தை மகிழ்ந்து கூறுதல். 1101. கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள. கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் - கண்டும் கேட்டும் உண்டும் மோந்தும் தொட்டும் இன்புறும் ஐம்புல இன்பமும், ஒண்டொடி கண்ணே உள - இவ்வொள்ளிய வளையல்களை உடையவளிடமே யுள்ளன. இயற்கைப் புணர்ச்சி முடிவில் சொல்லியது. இயற்கைப் புணர்ச்சி - முதற்கூட்டம். வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பொருள்களால் நுகரப்படும் ஐவகை இன்பமும் ஒருகாலத்தே இவளிடமே நுகரப்பட்டதென மகிழ்ந்தனன். (1) 1102. பிணிக்கு மருந்து பிறம னணியிழை தன்னோய்க்குத் தானே மருந்து பிணிக்கு மருந்து பிற - நோய்க்கு மருந்து பிறிதொன்று அணி இழை தன் நோய்க்கு தானே மருந்து - இவ்வணி யிழையாள் தன் னோய்க்கு மருந்தும் தானே ஆயினாள். இடந்தலைப் பாட்டின்கண் சொல்லியது. இடந்தலைப் பாடு - மறுநாட் கூட்டம். இயற்கைப் புணர்ச்சியை நினைத்து முன் வருந்தின தால் நோய் என்றும், இன்று தனியாகக் கண்டு கூடி அவ்வருத்தம் தீர்ந்தானாகலின் மருந்து என்றும் கூறினான். இப்பிணியும் எளிய மருந்தால் தீரப்பெற்றிலேம் என்பதால், மன் ஒழியிசை. (2) 1103. தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல் தாமரைக் கண்ணா னுலகு. தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் - தம்மால் விரும்பப் படும் மகளிர் தோள்மேல் துயிலும் துயிலைக் காட்டிலும், தாமரைக் கண்ணான் உலகு இனிது கொல் - தாமரைக் கண்ணான் உலகின்கண் மிகுதியான இன்பம் உண்டோ? இல்லை. பேரின்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இவ்வாறாதல் தகாதென்ற பார்ப்பனுக்குச் சொல்லியது. தாமரைக் கண்ணான் உலகு - முகவுரைப் பார்க்க. மனையோடு கூடி வாழும் இல்லற இன்பத்தைவிட, மனைவியைப் பிரிந்து அடைவதாக நீங்கள் கூறும் தாமரைக்கண்ணா னுலகின்கண் மிகுதியான இன்பம் உண்டோ? என அயலார் கொள்கையை மறுத்துக் கூறியது. மென்றோள்துயில் - புணர்ச்சியின்பம். (3) 1104. நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றன்ணென்னுந் தீ யாண்டுப் பெற்றாளிவள். நீங்கின் தெறும் குறுங்கால் தண் என்னும் தீ - தன்னை விட்டு நீங்கினால் சுடும் தன்னை நெருங்கினால் குளிரும் இத்தன்மை வாய்ந்த நெருப்பை, இவள் யாண்டுப் பெற்றாள் - இவள் எவ் விடத்தில் பெற்றாள்? பாங்கற் கூட்டத்தின் முடிவில் சொல்லியது. பாங்கற் கூட்டம் - பாங்கன் உடன்பாடு பெற்றுத் தலைவன் தலைவியைக் கூடுங் கூட்டம். தன் காமத்தீ அவளால் வெளிப்படுதலால், அவள் தந்தா ளாகக் கூறினான். (4) 1105. வேட்ட பொழுதி னவையவை போலுமே தோட்டார் கதுப்பினா டோள். தோடு ஆர் கதுப்பினாள் தோள் - பூவையணிந்த கூந்தலை யுடையவள் தோள்கள், வேட்ட பொழுதின் அவை அவை போலும் - விரும்பிய பொருள்களைப் பெறாது அவற்றை விரும்பிய போதெல்லாம் அப்பொருள்கள் நினைவுக்கு வந்து இன்பஞ் செய்யு மாறுபோல் இன்பஞ் செய்யும். தோழியிற் கூட்டத்தின் முடிவில் சொல்லியது. தோழியிற் கூட்டம் - தோழியின் உடன்பாடு பெற்றுக் கூடுங் கூட்டம். தோடு - பூவிதழ்; பூவை யுணர்த்திற்று. வேட்டல் - விரும்புதல். 1106. உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தி னியன்றன தேன். உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலால் - தம்மைச் சேருந் தோறும் வாடிய என்னுயிர் தழைக்கும்படி தீண்டுதலால், பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இப்பேதைக்குத் தோள்கள் அமிழ் தினால் செய்யப்பட்டவை யாகும். அமிழ்து - உயிரை வளர்க்கும் மருந்து. (6) 1107. தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா வரிவை முயக்கு. அம்மா அரிவை முயக்கு - அழகிய பொன்னிறமுடைய அரிவையின் புணர்ச்சியானது, தம் இல் இருந்து தமது பாத்து உண்டற்று - தமது வீட்டிலிருந்து தமது பொருளை இல்லா தார்க்குப் பங்கிட்டுக் கொடுத்து உண்டாற் போலும். இவளை நீ மணந்துகொண்டு இல்லறம் நடத்த வேண்டு மென்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது. உவமை பழந் தமிழரின் தனிப் பண்பாட்டுக்குச் சான்றாகும். (7) 1108. வீழு மிருவர்க் கினிதே வளியிடை போழப் படாஅ முயக்கு. வளிஇடை போழப் படா முயக்கு - காற்றினால் இடை யறுக்கப்படாத புணர்ச்சியானது, வீழும் இருவர்க்கு இனிதே - ஒருவரையொருவர் விரும்பும் இருவர்க்கு இனிதேயாகும். இருவர்க்கும் இடையே காற்று நுழையாதபடி இரண்டறத் தழுவிய புணர்ச்சி. இருவரில்லை, ஒன்றாயினோம் என்றது. ஒத்த அன்புடைய நுமக்கு ஒருபொழுதும் நீங்காத முயக்கமே இனிது என, மணஞ் செய்துகொள்ள வேண்டிய தோழிக்குச் சொல்லியது. (8) 1109. ஊட லுணர்தல் புணர்த லிவைகாமங் கூடியார் பெற்ற பயன். ஊடல் உணர்தல் புணர்தல் இவை - புணர்ச்சி யின்பம் மிகும் பொருட்டு ஊடுதலும், ஊடல் நீங்குதலும் பின் கூடுதலும் என்னும் இவை யன்றோ? காமம் கூடியார் பெற்ற பயன் - மணந்துகொண்டு இடையறாத இன்பம் எய்தியவர் பெற்ற பயன்கள். ஊடல் உணர்தல் புணர்தல் என்னும் இவையன்றோ மணஞ் செய்து கொண்டவர்கள் பெற்ற பயன்கள் என வரைவு கடாய தோழிக்கு, ஈருடல் ஓருயிரான எமக்கு அப்பயன்கள் வேண்டாவென வரைந்தடையும் பயன்களைத் தலைவன் இகழ்ந்து கூறியது. வரைவு கடாதல் - மணஞ் செய்து கொள்ள வேண்டுதல். வரைதல் - மணத்தல். (9) 1110. அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு. சேயிழை மாட்டுச் செறிதோறும் காமம் - சிவந்த அணி களையுடையவளைப் புணரப்புணரக் காதலானது, அறிதோறு அறியாமை கண்டற்று - கற்று அறியஅறிய முன்னிருந்த அறியா மையைக் கண்டதுபோலும். தலைமகன் தன் நிறையா இன்பத்தைக் கூறியது. ஆல் - அசை. (10) 112. நலம்புனைந்துரைத்தல் தலைமகன் தலைமகளின் வடிவழகைச் சிறப்பித்துச் சொல்லியது. 1111. நன்னீரை வாழி யனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள். அனிச்சமே வாழி - அனிச்சப் பூவே! நீ வாழ்வாயாக! நல் நீரை - மென்மையால் நீ எல்லாப் பூக்களினும் நல்ல இயற்கையை உடை யாய், யாம் வீழ்பவள் நின்னினும் மெல் நீரள் - எம்மால் விரும்பப் படுபவள் உன்னைக் காட்டிலும் மெல்லிய இயற்கையை உடையாள். இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது. இனி, 'நானே மெல்லியன்' என்னும் செருக்கினை ஒழிவாயாக என்பதாம். (1) 1112. மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் பலர்காணும் பூவொக்கு மென்று. நெஞ்சே - நெஞ்சமே! இவள் கண் பலர் காணும் பூ ஒக்கும் என்று - இவள் கண்களைப் பலராலும் பார்க்கப்படும் மலர்கள் ஒக்கும் என்று நினைத்து, மலர் காணின் மையாத்தி - நீ பலவகை மலர்களைக் கண்டால் மயங்கா நின்றாய்; உன் அறிவிருந்தவா றென்ன! இது இடந்தலைப்பாடு. இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலை மகள் கண்களைக் காணப்பெறாது, அக்கண்களை யொக்கும் மலர்களைக் கண்டவிடத்தெல்லாம் அம்மலர்களிடம் அன்பு செலுத்தி வந்தான். இடந்தலைப் பாட்டில் தனியாகக் கண்டா னாகையால் அம் மலர்கள் ஒவ்வாமை கருதி ஒப்புமை கருதிய நெஞ்சை இகழ்ந்து கூறினான். (2) 1113. முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. வேய்த்தோள் அவட்கு - மூங்கில் போலும் தோளினை உடை யவளுக்கு, மேனி முறி - நிறம் தளிர் போன்றது; முறுவல் முத்தம் - பல் முத்துப் போன்றது; நாற்றம் வெறி - இயற்கை மணம் நறு மணமாக இருக்கும்; உண்கண் வேல் - மையுண்ட கண் வேல் போன்றது. நின்னால் கருதப்பட்டாளை அறியேன் என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. தலைவியின் அடையாளங் கூறினான். (3) 1114. காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ணொவ்வே மென்று. குவளை - குவளைப் பூக்கள், காணின் - காணும் ஆற்றலுடை யனவாயின், மாண் இழை கண் ஒவ்வேம் என்று கவிழ்ந்து நிலன் நோக்கும் - மாட்சிமைப்பட்ட அணிகளை உடையவளது கண்களையாம் ஒவ்வேம் என்று கருதி நாணத்தினால் தலை குனிந்து நிலத்தைப் பார்க்கும். பாங்கற் கூட்டத்துச் செல்வான் கூறியது. காணும் ஆற்றலும், நாணும் இன்மையால் இறுமாந்து வானை நோக்கு கின்றன என்பது குறிப்பு. (4) 1115. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை. அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள் - இவளுடைய மென்மை கருதாது அனிச்சப்பூவைக் காம்பு நீக்காது கூந்தலில் சூடினாள்; நுசுப்பிற்கு நல்ல பறை படா - இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலிக்க மாட்டா. பகற்குறிக்கண் பூவணி கண்டு சொல்லியது. பகற்குறி - பகலில் தலைமகள் குறித்த இடத்தில் தலைமகன் சென்று கூடுதல். காம்புகளின் சுமை தாங்காது இடுப்பு முறியும்; முறிந்தால் அதற்குச் செத்தாற்குரிய சாப்பறை ஒலிக்கும் என்பதாம். 'நல்ல பறை படா' எனவே சாப்பறை படும் என்பதாம். (5) 1116. மதியு மடந்தை முகனு மறியா பதியிற் கலங்கிய மீன். மீன் - வானத்திலுள்ள மீன்கள், மதியும் மடந்தை முகனும் அறியா - மதிக்கும் எம் மடந்தை முகத்திற்கும் வேறுபாடு காண மாட்டால், பதியின் கலங்கிய - தம் நிலையினின்றும் கலங்கித் திரிகின்றன. இரவுக் குறிக்கண் மதி கண்டு சொல்லியது. இருமதி கண்டு மீன்கள் நிலைகலங்கின. (6) 1117. அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல - முன் குறைந்த கலை நிறைந்த ஒளிர்மதிக்குப் போல, மாதர் முகத்து மறு உண்டோ - இம்மாதர் முகத்தில் களங்கம் உண்டோ? இதுவுமது. முகம் தேய்தலும் வளர்தலும் மறு இன்மையும் பற்றி மதியொடு வேறுபாடறியலாமா யிருக்க, அம் மீன்கள் அறிந்தில என இகழ்ந்தவாறு. அறுவாய் - அற்ற. குறைந்த இடம். வாய் - இடம். (7) 1118. மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற் காதலை வாழி மதி. மதி வாழி - மதியே! வாழ்வாயாக; மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை - யான் மகிழும்படி இம்மாதர் முகம்போல ஒளிவீச வல்லையாயின் நீயும் என் காதலை உடையை யாவாய். இதுவுமது. மறுவுடைமையின் ஒளி வீச மாட்டாய்; மாட்டா மையின் என்னால் காதலிக்கவும் படாய் என்பதாம். (8) 1119. மலரன்ன கண்ணான் முகமொத்தி யாயிற் பலர்காணத் தோன்றன் மதி. மதி - மதியே! மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் - இம்மலர் போலும் கண்களை உடையவளது முகத்தை நீ ஒத்திருக்க வேண்டுவாயாயின், பலர் காணத் தோன்றல் - நீ பலர் காணத் தோன்றற்க; நான் காணும்படியாக மட்டும் தோன்றுவாயாக. இதுவுமது. முகத்தின் அழகு முழுதுங்கண் டின்புற்றானா கலின் பலர் காணத் தோன்றல் என்றான். (9) 1120. அனிச்சமு மன்னத்தின் றூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். அனிச்சமும் அன்னத்தின் தூவியும் - உலகத்தாரால் மென்மைக் கெடுத்துக் காட்டப்படும் அனிச்சப் பூவும் அன்னப் பறவையின் தூவியுமாகிய இரண்டும், மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் - இம் மாதரின் அடிக்கு நெருஞ்சி முட்போல வருத்தஞ் செய்யும். உடன்போக் குரைத்த தோழிக்குச் சொல்லியது. இத் தன்மை யான அடி கூரிய கற்களை யுடைய சுடுசுரத்தை எப்படிக் கடக்கு மெனறு மறுத்தது. உடன்போக்கு - தலைவன் தலைவியை அழைத்துக் கொண்டு தன்னூர் செல்லுதல். (10) 113. காதற் சிறப்புரைத்தல் தலைமகனும் மலைமகளும் தத்தம் காதல் மிகுதியைக் கூறுதல். 1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர். பணி மொழி வால் எயிறு ஊறிய நீர் - மென்மையான மொழி யினை உடையவளது வெண்மையான பல்லில் ஊறிய நீரானது, பாலொடு தேன் கலந்தற்று - பாலுடன் தேனைக் கலந்த சுவை போலும். தலைமகன் கூற்று. (1) 1122. உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு. மடந்தையொடு எம்மிடை நட்பு - இம்மடந்தையோடு எம் மிடம் உண்டாகிய நட்பு, உடம்பொடு உயிரிடை என்ன அன்ன - உடம்போடு உயிரிடம் உண்டாகிய நட்பு எத்தகையன வோ அத்தகையன. உடம்பொடு உயிர்க்கு, மடந்தையொடு எமக்கு என்க. தலைவன் பிரிவைக் கண்டு தலைவி அஞ்சியபோது தலைவன் கூறியது. (2) 1123. கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுந் திருநுதற் கில்லை யிடம். கருமணியில் பாவாய் நீ போதாய் - என் கண்ணின் கரு மணியில் உறையும் பாவாய்! நீ அவ்விடம் விட்டுப் போவாயாக; யாம் விழும் திருநுதற்கு இடம் இல்லை - எம்மால் விரும்பப்பட்ட அழகிய நெற்றியை உடையவளுக்கு இருக்க இடம் இல்லை. இடந்தலைப் பாட்டில் தலைமகள் நீங்கும்போது தலைமகன் சொல்லியது. இவளைக் காணாதிருக்க என்னால் முடியாதாகையால் இவள் எப்போதும் என் கண்ணினுள்ளேயே இருப்பாள்; உன்னோ டொருங்கிருக்க இடம் போதாமையால் உன்னிலும் சிறந்த இவட்கு அவ்விடத்தை விட்டு நீ போவாயாக என்பதாம். பாவை - கண்ணுக்குள் பார்த்தால் தெரியும் பார்ப்பவர் உருவம். (3) 1124. வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத லதற்கன்னள் நீங்கு மிடத்து. ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள் - ஆராய்ந்த அணியை உடையவள் என்னுடன் புணரும்போது என் உயிருக்கு உடம்புடன் கூடி வாழ்வது போல்கின்றாள்; நீங்கும் இடத்து அதற்குச் சாதல் அன்னள் - என்னை விட்டுப் பிரியும் போது அவ்வுயிருக்கு உடம்பை விட்டு நீங்குதல் போல்கின்றாள். புணர்ந்து நீங்குவோன் சொல்லியது. (4) 1125. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே னொள்ளமர்க் கண்ணாள் குணம். ஒள்அமர்க் கண்ணாள் குணம் யான் மறப்பின் உள்ளுவன் - ஒளி பொருந்திய அமர் செய்யுங் கண்ணினையுடையாள் குணங் களை நான் மறந்தேனாயின் நினைப்பேன்; மறப்பு அறியேன் - ஆனால், மறத்தலறியேன்; ஆகையால், நினைத் தலையும் அறியேன். ஒருவழித்தணந்து வந்த தலைமகன், நீர் பிரிந்தபோது எம்மை நினைத்தீரோ என்ற தோழிக்குச் சொல்லியது தணத்தல் - பிரிதல். ஒரு வழித்தணத்தல் - இடைவிடாது இன்பம் நுகர்வான் தலைமகளைப் பிரிந்து சில நாள் தலைமறைவா யிருத்தல். குணங்கள் - நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு. 1083ஆம் குறளுரை பார்க்க. இனித் தலைமகள் கூற்று. (5) 1126. கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார் நுண்ணியரெங் காத லவர். எங் காதலவர் கண் உள்ளில் போகார் - எமது காதலர் என் கண்ணினின்றும் வெளியே போகமாட்டார், இமைப்பின் பருவரார் - யாம் அறியாது இமைத்தேமாயின் அதனால் வருந்தவும் மாட்டார், நுண்ணியர் - ஆதலால், அவர் காணப் படாத நுண்ணியர். ஒருவழித்தணந்தபோது தலைமகனைத் தோழி இயற் பழிப்பாள் என்று அஞ்சித் தோழி கேட்பத் தலைவி தன்னுள்ளே சொல்லியது. இயற்பழித்தல் - தலைமகன் குணத்தைப் பழித்தல். இடைவிடாத நினைவால் எப்போதும் முன்னே தோன்றலின் கண்ணுள்ளிற் போகாரென்றும், இமைத்த போதும் அகத்தோற்றம் நிற்றலின் இமைப்பின் பருவரார் என்றும் கூறினாள். பருவரல் - வருந்துதல். (6) 1127. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு மெழுதேங் கரப்பாக் கறிந்து. காதலவர் கண் உள்ளாராக - காதலர் எங் கண்ணினுள் எப் போதும் இருக்கின்றாராதலால், கரப்பாக்கு அறிந்து கண்ணும் எழுதேம். அவர் மறைதலை அறிந்து அவ்வளவு காலமும் மையி னால் கண்ணும் எழுத மாட்டேம். இதுவுமது. கரப்பாக்கு - கரத்தல்; தொழிற்பெயர். யான் எப் போதும் இடையீடின்றிக் காண்கின்றவரைப் பிரிந்தா ரென்று எண்ணுதல் என்னை என்பது கருத்து. (7) 1128. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட லஞ்சுதும் வேபாக் கறிந்து. காதலவர் நெஞ்சத்தாராக - காதலர் எமது நெஞ்சில் எப் போதும் இருக்கின்றாராதலால், வேபாக்கு அறிந்து வெய்து உண்டல் அஞ்சுதும் - அவர் சுடுதலை அறிந்து உண்ணும் போது சூடுள்ளதாக உண்ணுதற்கு அஞ்சுகிறேம். இதுவுமது. வேபாக்கு - தொழிற் பெயர். எப்பொழுதும் என் நெஞ்சின்கண் இருப்பவரைப் பிரிந்தாரென்று எண்ணுவது என்ன என்பது கருத்து. (8) 1129. இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே ஏதில ரென்னுமிவ் வூர். இமைப்பின் கரப்பாக்கு அறிவல் - என் கண் இமைக்கு மாயின் அதனுள்ளிருக்கின்ற என் காதலர் மறைதலை அறிந்து இமையேன்; அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர் - அவ்வள விற்கே எனக்குத் துயிலா நோய் செய்து பிரிந்தார், அன்பிலர் என்று பழி கூறும் இவ்வூர். வரைவிடைவைத்துப் பிரிந்தபோது, தலைமகள் ஆற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்த போது தலைமகள் இயற்பட மொழிந்தது. வரைவு இடை வைத்துப் பிரிதல் - மணம் செய்துகொள்ள உடன்பட்டபின் பிரிதல். இயற்பட மொழிதல் - தலைவன் தன்மையைப் புகழ்தல். தன் கருத்தறியாமை பற்றித் தோழியை இவ்வூர் என்றார். ஒரு பொழுதும் பிரியாதாரைப் பிரிந்தாரென்று பழிக்காதே என்பதாம். (9) 1130. உவந்துறைவ ருள்ளத்து ளென்று மிகந்துறைவ ரேதில ரென்னுமிவ் வூர். என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - காதலர் எப்போதும் என் நெஞ்சினுள்ளே மகிழ்ந்துறைவர்; இவ்வூர் இகந்து உறைவர் ஏதிலர் என்னும் - அதனை யறியாது அவ்வூர் என்னைப் பிரிந்துறை கின்றார், அன்பில்லாதவர் என்று கூறும். இதுவுமது. உவந்துறைவர் என அன்புடைமை கூறினாள். பிரி யாமையும், அன்பு முடையாரை இலரெனப் பழிக்காதே என்பதாம். (10) 114. நாணுத்துறவுரைத்தல் காலதர் இருவரும் தாம் நாணைத் துறந்தமையைத் தோழிக்குக் கூறுதல். 1131. காம முழந்து வருந்தினார்க் கேமம் மடலல்ல தில்லை வலி. காமம் உழந்து வருந்தினார்க்கு - இன்பம் நுகர்ந்து பின் அது பெறாமல் வருந்தினவர்க்கு, ஏமம் மடல் அல்லது வலி இல்லை - காப்பாகிய மடல்மாவைத் தவிர வலியாவது வேறு இல்லை. ஆகவே, நானும் அது செய்வேன் என்பதாம். சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது. சேட்படுத்தல் - தலைமகளை அணுகவிடாது தோழி தலை மகனை விலக்குதல். மடலேறுதலாவது - தலைமகளை அடைய முடியாமல் தோழி மறுத்தால் தலைமகன் மடலேறுவேன் எனக் கூறுவன். "மடன்மாக் கூறும் இடனுமா ருண்டே" (தொல் - களவு - 11) என்பது இலக்கணம். அதற்கும் அவள் உடம்படாளாயினும், தோழியுடம் பட்டுக் களவொழுக்க மொழுகி மணக்கக் கருதினால், பெற்றோர் தலைவியைக் கொடுக்க மறுத்தாலும் மடலேறுவேன் எனக் கூறுதலே யன்றி மடலேறுவன். "ஏறிய மடற்றிறம்" (தொல் - அகத். 51) என்பது இலக்கணம். அதாவது, பெற்றோர் களவொழுக்கத்தைக் கருதாமலும், தலைவி தோழிக்கும், தோழி செவிலிக்குமாக அறத்தொடு நில்லாமலும் மணக்கக் காலந் தாழ்த்துவரினும், இற் செறிப்பால் தலைவியை எதிர்ப்பட்டுக் கூட முடியாவிடினும் தலைவன் அலர் எழுப்புவதற்காகத் தலைவியின் உருவத்தைப் பனை யோலையில் எழுதிக் குதிரைமேல் ஏறிக் கொண்டு பலருமறியத் தலைவியின் ஊர்த் தெரு வழியே செல்வான். அது கண்ட ஊரார் கூடிப்பேசத் தொடங்குவர். அவ்வலருக் கஞ்சிய பெற்றோர் அவனுக்கே தம் மகளை மணமுடிப்பர் என்பதாம். இது செய்யுள் வழக்கு. மடல்மா - மடலைத் தாங்கிச் செல்லும் குதிரை. மடல் - பனையோலை. மா - குதிரை. நற்பண்பில்லாத எவரோ ஒரு சிலரிடை நடந்து வந்த இத்தீய ஒழுக்கத்தை, தமிழர் ஒழுக்கநூல் செய்யப் புகுந்த தொல்காப்பியர் தகாக்காமம் என விலக்கியுள்ளார். அடுத்த குறளும் இது நாணு டைமைக் கேற்ற செயலன்று எனக் கூறுதல் காண்க. பிற்காலக் கோவை நூலார் இதை ஓர் ஒழுக்கமெனவே கொள்ளலாயினர். அறத்தொடு நிற்றல் - உள்ளதைக் கூறுதல். இற்செறித்தல் - தலைவியை வெளி விடாமல் வீட்டினுள் வைத்துக் காத்தல். அலர் - ஊரார் பேசும் பழிச்சொல். மடலேறுதல் தகாச் செயல். நீ என்னை விலக் கினால் நான் அதைச் செய்தாவது இவளைப் பெறுவேன் எனத் தலைமகன் தனது ஆற்றாமை தோன்றக் கூறியது. (1) 1132. நோனா வுடம்பு முயிரு மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. நாணினை நீக்கி நிறுத்து - மடலேறுவதை விலக்குவ தாகிய நாணத்தை நீக்கி நிறுத்திவிட்டு, நோனா உடம்பும் உயிரும் மட லேறும் - முன் நுகர்ந்த இன்பத்தைப் பெறாததால் உண்டான வருத்தத்தைப் பொறாத உடம்பும் உயிரும் மடன் மாவின் மீது ஏறக் கருதுகின்றன. நீக்கி நிறுத்து - நீக்கிவிட்டு. அறிவு நிறை (அடக்கம்) முதலியன நீங்கவும் நாண் நீங்காது நின்றது. அதுவும் இப்பொழுது நீங்கிற் றென்பான் உடம்பும் உயிரும் என்றான். உடம்பும் உயிரும் தம்முள் நீங்காமைப் பொருட்டு மடலேறும் என்றது - தோழி தன் ஆற்றாமை யறிந்து குறை நேர்தலை நோக்கி. குறை நேர்தல் - குறை தீர்த்தல். நாணுடைய நுமக்கு அது முடியாதென மடல் விலக்க லுள்ள தோழிக்குச் சொல்லியது. (2) 1133. நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையேன் காமுற்றா ரேறு மடல். நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணமும் மிகுந்த ஆண்மையும் முன்பு உடையவனா யிருந்தேன்; இன்று காமுற்றார் ஏறும் மடல் உடையேன் - இப்போது காம மிகுந்தவர் ஏறும் மடலை உடையவனாகியிருக்கிறேன். நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையால் மடலேறுதல் முடியாதென்ற தோழிக்குச் சொல்லியது. நாண் - இழிவான செய்தலை விலக்குவது. ஆண்மை - ஒன்றற்கும் தளராது நிற்றல். அவை முன்புள்ளன; இன்றுள்ளது மடலே யாகலின் விரைவில் ஏறுவேன் என்பதாம். (3) 1134. காமக் கடும்புன லுய்க்குமே நாணொடு நல்லாண்மை யென்னும் புணை. நாணொடு நல்லாண்மை என்னும் புணை - நாணம், மிகுந்த ஆண்மை என்னும் புணைகளை, காமக் கடும்புனல் உய்க்குமே - காமமாகிய பெரிய வெள்ளம் என்னை விட்டுப் பிரித்துக் கொண்டு போகின்றது. நாணும் நல்லாண்மையும் காமவெள்ளத்திற்குப் புணை யாகலின் அவ்வெள்ளத்தால் அவை நீங்குவனவல்ல என்ற தோழிக்குச் சொல்லியது. அப்புனலுக்கு அவை புணையாகா; அதனால் அவை நீங்கும் என்பதாம். (4) 1135. தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை யுழக்குந் துயர். தொடலைக் குறுந்தொடி - மாலைபோலத் தொடரும் சிறிய வளையல்களை உடையாள்; மாலை உழக்கும் துயர் மடலொடு தந்தாள் - மாலைப் பொழுதில் வருந்தும் துன்பத்தையும், மடன் மாவையும் இப்போது எனக்குத் தந்தாள்; முன் இவற்றை அறியேன். இவ்வாற்றாண்மையும் மடலும் நுமக்கு எவ்வாறு வந்தன என்ற தோழிக்குச் சொல்லியது. மாலையில் மிகுதலின் மாலை உழக்கும் என்றும், மடலும் காமத்தால் வந்ததாகலின் அவள் தந்தாள் என்றுங் கூறினான். அவளுக்குச் சொல்லி இவற்றை நீக்குக என்பது கருத்து. தொடலை - மாலை. (5) 1136. மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற படலொல்லா பேதைக்கென் கண். பேதைக்கு என் கண் படல் ஒல்லா - நின் பேதையை நினைத்து என் கண்கள் தூங்குவதைப் பொருந்தா; யாமத்தும் மடலூர்தல் மன்ற உள்ளுவன் - ஆகையால், எல்லோரும் உறங்கும் நடு இரவிலும் நான் தூங்காதிருந்து மடலூர் தலையே நினைப்பேன். இன்று மடலூரும் பொழுது கழிந்தது என்ற தோழிக்குக் கூறியது. இப்போதே என் குறை முடிப்பாய்; நாளைக்கெனத் தவணை வேண்டாம் என்பதாம். மன்ற - உறுதியாக. (6) 1137. கடலன்ன காம முழந்து மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில். கடல் அன்ன காமம் உழந்தும் - கடலைப் போன்ற மிகுந்த காமத்தால் வருந்தியும், மடல் ஏறாப் பெண்ணின் - மடலேறாமல் பொறுத்திருக்கும் பெண்பிறப்பைக் காட்டிலும், பெருந்தக்கது இல் - மிகுந்த தகுதியுடைய பிறப்பு வேறு இல்லை. பேதைக்கு என் கண் படல் ஒல்லா எனவே, அறிவிலராய மகளிரைவிட அறிவுடையராய ஆடவரன்றே ஆற்றியிருக்க வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. ஆணாகப் பிறந்தும் எனக்கு அவ்வடக்கம் இல்லை யென்பதை நீ அறிய வில்லை போலும் என்பதாம். இனித் தலைமகள் கூற்று. (7) 1138. நிறையரியர் மன்னளிய ரென்னாது காமம் மறையிறந்து மன்று படும். நிறை அரியர் மன் அளியர் என்னாது - இவர் நிறை இல்லாதவர், மிகவும் அன்பு செய்யத் தக்கவர் என்றெண்ணிப் பாராது, காமம் மறை இறந்து மன்றுபடும் - மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப் படுவதா யிற்று. காப்புச் சிறைமிக்கக் காமம் பெருகியபோது சொல்லியது. காப்புச்சிறை - காவல் மன்று என்றது - தந்தை தன்னையரை. தன்னை - அண்ணன். காமமிகுதியால் நிறையழிந்துவிட்டது; இனியும் காலந் தாழ்க்கக் கூடாதென்பது குறிப்பு. உலகத்துப் பெண்களின் காமத் தியல்பு கூறுவாள் போன்று தன் காமம் பெருகியவாறும், இனி அறத்தொடு நிற்க வேண்டும் என்பதும் குறிப்பால் கூறியது. (8) 1139. அறிகிலா ரெல்லாரு மென்றேயென் காமம் மருகின் மறுகு மருண்டு. எல்லாரும் அறிகிலார் என்று - என்னை யொழிந்த யாரும் தன்னை அறியவில்லை என்று நினைத்து, என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் நினைத்து, என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமமானது இவ்வூர்த் தெருக்களில் மயங்கித் திரிகின்றது. இதுவுமது. மயங்குதல் - அம்பலாதல். மறுகுதல் - அலராதல். களவொழுக்கத்தை ஊரினர் வெளிப்படக் கூறாது முணுமுணுப் பது - அம்பல்; வெளிப்படக் கூறுவது - அலர். அம்பலும் அலரும் ஆயின. இனி அறத்தொடு நிற்க வேண்டும் என்பதாம். (9) 1140. யாங்கண்ணிற் காண நகுப வறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு. யாம் பட்ட தாம் படா ஆறு - யாம் உற்ற நோய்களைத் தாம் உறாமையால், அறிவில்லார் யாம் கண்ணில் காண நகுப - அறிவில்லாதவர்கள் யாம் கண்ணால் காணுமாறு என்னைக் கண்டு சிரிக்கின்றனர். செவிலிக்கு அறத்தொடு நின்று, யான் நிற்குமாறென்னை என்று நகையாடிய தோழியொடு புலந்து தலைமகள் தன்னுள்ளே சொல்லியது. யான் நிற்குமாறென்னை - நான் எவ்வாறு சொல் லட்டும். நகையாடுதல் - விளையாட்டுப் பேசுதல். புலத்தல் - மனம் வேறுபடுதல். (10) 115. அலரறிவுறுத்தல் களவொழுக்கத்தைப் பற்றி ஊரார் பேசுதலைத் தலைமகன் முதலியோர் கூறுதல். 1141. அலரெழ வாருயிர் நிற்கு மதனைப் பலரறியார் பாக்கியத் தால். அலர் எழ ஆர் உயிர் நிற்கும் - எம் இருவர்க்கு முள்ள காதலன்பு ஊரின்கண் அலராயெழுதலினால் எனது அரிய உயிர் நிலைபெற்றிருக்கிறது; அதனைப் பாக்கியத்தால் பலர் அறியார் - என்னுயிர் நிற்பதை நல்லவேளையாக ஊரிலுள்ள பலரும் அறிய மாட்டார்கள். அறிந்தால் அலர் தூற்றார். அதனால், என்னுயிர் போம் என்பது கருத்து. அல்ல குறிப்பட்ட பின்னொரு நாள் வந்த தலை மகனைத் தோழி அலர் அறிவுறுத்து வரைவு கடாய வழி தலைமகன் சொல்லியது. அல்ல குறிப்படுதல் - குறி அல்லபடுதல், குறி பிழைத்தல். அதாவது - தோழியும் தலைவியும் குறிப்பிட்ட இடத்தே சென்று கூடும் தலைமகன் புனலொலித்தல், புள்ளெழுப் பல் முதலியன செய்வான். அஃதறிந்து தலைமகள் அங்கு செய்வாள். தானாகவே காய் கனி விழுந்து தண்ணீர் ஒலித்தாலும், தானாகவே பறவைகள் பறந்து சென்றாலும் தலைமகள் சென்று பார்த்துத் தலைமகனைக் காணாமையால் வருந்திப் பூவையோ, இலையையோ பறித்துப் போட்டுவிட்டுச் செல்வாள். பின் தலைவன் வந்து பார்த்து அவ்வாறே செல்வான். அல்ல குறிப்படுதல் - தாம் குறித்ததல்லாத வேறு வகையில் குறியுண்டாதல். தாய் துஞ்சாமை, நாய் துஞ்சாமை முதலியவற்றால் தலைவி வர முடி யாமையும் குறி இடையீடு எனப்படும். வரைவு கடாய வழி - மணம் செய்து கொள்ளும் படி கேட்டபோது. வரைதல் -மணத்தல். பாக்கியம் - இயற்கை நிகழ்ச்சி. (1) 1142. மலரன்ன கண்ணா ளருமை யறியா தலரெமக் கீந்ததிவ் வூர். மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - மலர் போலும் கண்ணையுடையவளை நான் அடைய முடியாத அருமையை அறி யாமல், இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது - இவ்வூர் அலர் எமக்கு உதவியது. இதுவுமது. அருமை - அல்ல குறிப்பாட்டாலும், இடையீடு களாலும் (1141) ஆயது. அலர் அவளை அடை வதற்குத் துணையா வதால், ஈந்தென்றான். (2) 1143. உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. ஊர் அறிந்த கௌவை உ றாதோ - எங்களுக்குக் கூட்டம் உண்மையை இவ்வூர் அறிதலால் உண்டான அலரானது எமக்குக் கேட்காதோ? அதனைப் பெறாது பெற்று அன்ன நீர்த்து - அது கேட்ட என் மனம், அக்கூட்டத்தைப் பெறாமலிருந்தும் பெற்ற போதுண்டாகும் இன்பம் போலும் இன்பம் உடையது. இதுவுமது. 'அலர் எழ ஆருயிர் நிற்கும்' (1141) என்பது கொண்டு இவ்வாறு கூறினான். (3) 1144. கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேற் றவ்வென்னுந் தன்மை யிழந்து. காமம் கவ்வையால் கவ்விது - என் காமம் இவ்வூர் எடுக்கின்ற அலரினால் அலர்தலை யுடையது, அது இன்றேல் தன்மை இழந்து தவ்வென்னும் - அவ்வலர் இல்லையாயின் தன் இயல்பை யிழந்து சுருங்கிவிடும். இதுவுமது. அலர்தல் - மேன்மேல் மிகுதல். கவ்வை உடையது கவ்விது. இயல்பு - இன்பம் பயத்தல். தவ் என்னும் என்பது - குறிப்பிடைச் சொல். (4) 1145. களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம் வெளிப்படுந் தோறு மினிது. களிதொறும் கள் உண்டல் வேட்டற்று - கள்ளுண் பார்க்குக் களிக்குந்தொறும் கள்ளுண்டல் இன்பந் தருவது போலும், காமம் வெளிப்படும் தோறும் இனிது - காமம் அலராகுந்தொறும் எனக்கு இனிதாக இருக்கின்றது. இதுவுமது. களித்தல் - கள்வெறியால் இன்புறுதல். வேட்கப் பட்டற்று என்பது குறைந்து நின்றது. விருப்ப மிகுதியால் அலரும் இன்பம் செய்கின்றது என்பதாம். (5) 1146. கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந் திங்களைப் பாம்புகொண் டற்று. கண்டது ஒரு நாள் - நான் காதலரைக் கண்டதும் ஒரு நாளே; அலர் திங்களைப் பாம்பு கொண்டற்று - அதனாலாகிய அலர் திங்களைப் பாம்பு அலர்போல ஊரெங்கும் பரவியது. இடையீடுகளாலும், அல்ல குறியாலும் (1141), தலைமகனை அடையப் பெறாத தலைமகள், அவன் சிறைப் புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறுத்தியது. சிறைப்புறத்தானாக - சொல் கேட்கும்படியான மறை விடத்தில் இருக்க. மன் உம் - அசை. காணுதலின்றியும் அலர் பரக்கின்ற இவ் வொழுக்கம் இனியாகாது வரைந்து கொள்ள வேண்டு மென்பதாம். திங்களினிடத்துள்ள களங்கத்தை மான், முயல் என்றும், ஆலமரத்தின் கீழ் அம்மாயி நூல் நூற்கிறாள் என்றும் கூறும் வழக்குப்போல, ஞாயிறு, திங்கள்மீது படும் நிழலைப் பாம்பு தீண்டுதல் என்னும் வழக்குப் பற்றிக் கூறினார். (6) 1147. ஊரவர் கௌவை யெருவாக வன்னைசொன் நீராக நீளுமந் நோய். இந்நோய் - இக் காமநோயாகிய பயிர், ஊரவர் கௌவை எருவாக - ஊரார் கூறும் அலர் எருவாகவும், அன்னை சொல் நீராக நீளும் - அதுகேட்டு அன்னை கூறுகின்ற கடுஞ்சொல் நீராகவும் வளருகின்றது. வரைவுநீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப் புறத்தா னாதலறிந்த தோழி, ஊரவர் அலரும், அன்னை சொல்லும் ஆற்றல் வேண்டுமெனச் சொன்னபோது தலைமகள் சொல்லியது. அது கேட்டுத் தலைவன் மணத்தல் பயன். கௌவை - அலர். (7) 1148. நெய்யா லெரிநுதுப்பே மென்றாற்றாற் கௌவையாற் காம நுதுப்பே மெனல். கௌவையால் காமம் நுதுப்பேம் எனல் - ஊரார் கூறும் அலரினால் நாம் காமத்தை அவிப்போம் என்று கருதுதல், நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று - நெய்யினால் நெருப்பை அவிப்போம் என்று கருதுவதனோ டொக்கும். இதுவுமது. வளர்தற்குக் காரணமாகிய அலரால் அவிக்க முடியாதென்பதாம். (8) 1149. அலர்நாண வொல்வதோ வஞ்சலோம் பென்றார் பலர்நாண நீத்தக் கடை. அஞ்சல் ஓம்பு என்றார் பலர் நாண நீத்தக்கடை - தம்மை எதிர்ப்பட்டபோது, 'நின்னைப் பிரியேன்; அஞ்சுதலை ஒழிவாயாக' என்ற தலைவரே இன்று கண்டார் பலரும் நாணும் வகை எம்மை விட்டு நீங்கியபின், அலர் நாண ஒல்வதோ - ஊரார் கூறும் அலருக்கு நாம் நாணக் கூடுமோ? கூடாது. வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள், தலைவன் சிறைப்புறத்தா னாதலறிந்து, அலரஞ்சி ஆற்றவேண்டு மென்ற தோழிக்குச் சொல்லியது. கண்டார் நாணும் நிலைமையை உடைய நாம் நாணுதல் எங்ஙனம் என்பதாம். (9) 1150. தாம்வேண்டி னல்குவர் காதலர் யாம்வேண்டுங் கௌவை யெடுக்குமிவ் வூர். யாம் வேண்டும் கௌவை இவ்வூர் எடுக்கும் - உடன் போக்குக்குத் துணை செய்தல் கருதி யாம் முன்பே விரும்பும் அலரை இவ்வூர் தானே எடுக்கின்றது; காதலர் தாம் வேண்டின் நல்குவர் - இனி எம் காதலரும் யாம் விரும்பினால் அவ்வுடன் போக்கை எளிதில் ஒப்புக்கொள்வர். தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் அலரறிவுறுத்து, தலைமகன் உடன் போக்கை விரும்பும்படி சொல்லியது. உடன்போக்கு - தலைமகள் தலை மகனுடன் அவனூர்க்குப் போதல். அதாவது தலைமகன் தலை மகளைத் தன்னூர்க்கழைத்துச் செல்லுதல். (10) களவியல் முற்றிற்று. கற்பியல் (18) கற்பாவது - களவொழுக்க மொழுகிய காதலர் மணம் செய்து கொண்டு இல்வாழ்க்கை நடத்துதல். அது பிரிவு (116), ஆற்றாமை (117 - 126), விதுப்பு (127 - 129), புலவி (130 - 133) என நான்கு வகைப் படும். அந்நான்கு வகையினுள் உலகியலை ஒட்டி, வாழ்வாங்கு வாழும் மக்கள் வாழ்க்கை நுணுக்கங்களை முழுவதும் சுவைபடப் புனைந்துரைத்தலை அறிந்து இன்புறற் பாலது. 116. பிரிவாற்றாமை தலைவன் பிரிவு குறித்துத் தலைவி வருந்துதல். 1151. செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. செல்லாமை உண்டேல் எனக்கு உரை - நீ எம்மை விட்டுப் பிரியாமை உண்டாயின் அதை எனக்குச் சொல்; மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை - அஃதொழியப் பிரிந்துபோய் விரைந்து வருதலைச் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர்வாழ் வார்க்குச் சொல். பிரிந்துபோய் விரைவில் வருவன் என்ற தலைமகனுக்குத் தோழி சொல்லியது. தான் அவள் என்னும் வேற்றுமை இன்மையால் தலைமகளை ஒழித்து எனக்கு என்றாள். அது மட்டும் ஆற்றியிராள்; பிரிந்தபொழுதே இறந்துவிடுவாள் என்பதாம். செலவழுங்கு வித்தல் பயன். அழுங்குவித்தல் - நிறுத்துதல். (1) 1152. இன்க ணுடைத்தவர் பார்வல் விரிவஞ்சும் புன்க ணுடைத்தாற் புணர்வு. அவர் பார்வல் இன்கண் உடைத்து - அன்று களவுக் காலத்தில் நம் பின்நின்று அவர் பார்த்த பார்வை புணர்ச்சி குறித்தமையான் நமக்கு இன்பமுடையதா யிருந்தது, புணர்வு பிரிவு அஞ்சும் புன்கண் உடைத்து - இன்று அவர் புணர்ச்சி பிரிவர் என்று அஞ்சும் அச்சத் தினை உடையதா யிருக்கிறது. பிரிவைத் தலைமகன் குறிப்பால் அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. அழுங்குவித்தல் பயன். புன்கண் - துன்பம். (2) 1153. அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான். அறிவுடையார் கண்ணும் - பிரியேன் என்ற தஞ்சொல்லும், நம் பிரிவாற்றாமையும் அறிந்த காதலரிடத்தும், ஓரிடத்துப் பிரிவு உண்மையால் - ஒவ்வொருகால் பிரிவு உண்டாதலால், தேற்றம் அரிது - அவர் முகமலர்ந்து இனிய கூறுதல் பற்றி நம்மிடம் அன்பு டையவர் என்று தெளிதல் அரிதாயிருக்கிறது. அரோ - அசை. இதுவுமது. (3) 1154. அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற் றேறியார்க் குண்டோ தவறு. அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் - எதிர்ப்பட்ட அன்றே தலையளி செய்து, 'நின்னைப் பிரியேன்; அஞ்சாதிரு' என்று கூறி யவரே எம்மை விட்டுப் பிரிவாராயின், தெளித்த சொல் தேறி யார்க்குத் தவறு உண்டோ - அவர்க்கன்றி, அவர் தெளிவித்த சொல்லை மெய்யன்று தெளிந்தவர்க்குக் குற்ற முண்டோ? இதுவுமது. தேறியார் எனத் தன்னைப் பிறர்போல் கூறினாள். சொல்லும் செயலும் ஒவ்வாமைக் குற்றம் அவர்க்கு வராமல் செலவை நிறுத்து என்பது கருத்து. தலையளி செய்தல் - முகமலர்ந்து இனியன கூறல். (4) 1155. ஓம்பி னமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கி னரிதாற் புணர்வு. ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் - என்னுயிரைப் பிரியாமல் காப்பாயாயின் என் உயிரை ஆள அமைந்தவரது பிரிவைத் தடுப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது - தடுப்பவரில் லாமல் அவர் பிரிவாராயின் என் உயிர் நீங்கும்; நீங்கினால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாகிவிடும். என் உயிர் நீங்காதிருக்க அவர் செலவைத் தடுப்பாயென்பது கருத்து. இதுவுமது. (5) 1156. பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர் நல்குவ ரென்னும் நசை. அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் - நம் விருப்பத்தை யறிந்த தலைவரே நம் முன்னின்று தம் பிரிவை உணர்த்தும் அருளற்றவராயின், நல்குவர் என்னும் நசை அரிது - அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமையறிந்து வந்து அன்பு செய்வார் என்னும் ஆசை வீணானதாகும். தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. கூடியிருந்தே அன்பின்றிப் பிரிய வெண்ணுபவர் பிரிந்துபோய் நம்மை நினைத்து வருதல் எங்ஙனம் என்பதாம். (6) 1157. துறைவன் றுறந்தமை தூற்றாகொல் முன்கை யிறையிறவா நின்ற வளை. துறைவன் துறந்தமை - தலைவன் என்னை விட்டுப் பிரிந்ததை, முன்கை இறை இறவா நின்ற வளை தூற்றாகொல் - என் முன்கையில் தங்குமிடத்திலிருந்து கழலும் வளையல் களே எனக்கு அறிவிக்குமே; அவனுணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவிக்க வேண்டுமோ? இதுவுமது. தலைவன் பிரிவைத் தடுத்துவந்து கூறாமல் நீயும் அவ்வளையல்கள் செய்தனவே செய்தாய் எனப் புலந்து கூறியது. இறை - தங்குதல். (7) 1158. இன்னா தினனில்லூர் வாழ்த லதனினு மின்னா தினியார்ப் பிரிவு. இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது - மகளிர்க்குத் தங் குறிப்பறியும் தோழியர் இல்லாத அயலூரில் வாழ்தல் துன்பந் தருவதாகும்; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது - தங் காதலரைப் பிரிவது அதைக் காட்டிலும் துன்பந் தருவதாகும். இதுவுமது. தலைவன் செலவை உடன்பட்டு வந்தமை பற்றி இனனில்லூர் என்றாள். உலகியல் கூறுவாள் போன்று தனக்கு அவ்விரு துன்பமும் உண்மை கூறியவாறு. (8) 1159. தொடிற்சுடி னல்லது காமநோய் போல விடிற்சுட லாற்றுமோ தீ. தீ தொடின் சுடின் அல்லது - நெருப்பானது தன்னைத் தொட்டால் சுடுமே யல்லாது, காமநோய் போல விடின் சுடல் ஆற்றுமோ - காமநோயைப் போலத் தன்னை விட்டு நீங்கினால் சுடவல்லதோ? காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது. தீயினும் கொடியதனை நான் எவ்வாறு ஆற்றுவேன் என்பதாம். (9) 1160. அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்னிருந்து வாழ்வார் பலர். அரிது ஆற்றி - பிரிவுணர்த்திய போது, பிரிவு என்னும் பொறுத்தற்கரிய அதற்கு உடன்பட்டு, அல்லல் நோய் நீக்கி - பிரிவால் வருந்துன்ப நோயை நீக்கி, பிரிவு ஆற்றி - பிரிந்தால் அப்பிரிவையும் பொறுத்துக் கொண்டு, பின் இருந்து வாழ்வார் பலர் - பின்னும் இருந்து உயிர் வாழும் மகளிர் உலகத்துப் பலராவர். தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர்; அது நீ செய்கின்றலை என்ற தோழிக்குச் சொல்லியது. காதலிகள் இவை யெல்லாம் பொறுத்துப் பின்னும் இருந்து உயிர் வாழ்தல் இல்லை யென்பது குறிப்பு. (10) 117 படர்மெலிந்திரங்கல் படரால் மெலிந்து இரங்குதல். பிரிவாற்றாளாய தலைமகள், தானுறுகின்ற துன்பத்தினை எப்பொழுதும் நினைத்தலின் அந்நினைவால் மெலிந்து இரங்குதல். படர் - வருத்தம், துன்பம். தனிப்படர் மிகுதி (120) என்பது - பிரிவுத் துன்பம் தலைவனி டத்தின்றி, தலைவி தான்மட்டும் உறுவதாகக் கூறுதல். 1161. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை யிறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும். நோயை யான் மறைப்பேன் - காமநோயைப் பிறர் அறிதற்கு நாணி யான் அதனை மறைப்பேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகும் - அந்நோய் நீர் இறைப்பவர்க்கு ஊற்று நீர் ஊறுவது போல மிகுகின்றது. காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்குத் தகாதென்ற தோழிக்குச் சொல்லியது. மறைத்தலால் பயனென் என்பதால், மன் ஒழியிசை. (1) 1162. கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க் குரைத்தலு நாணுத் தரும். இந் நோயைக் கரத்தலும் ஆற்றேன் - இக்காம நோயையான் மறைக்கவும் வலியில்லேன்; நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத்தரும் - நோய் செய்த காதலர்க்கு இதைச் சொல்வதும் எனக்கு நாணத்தைத் தருகிறது; இனி என் செய்வேன்! இங்குள்ளோர் அறியாமல் மறைத்தல், அங்குள்ளோர் அறியத் தூது விடுதல் என்னும் இரண்டனுள் ஒன்று செய்ய வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. அங்குள்ளோர் - தலைவர். தூது விட்டால் இன்னும் இருக்கிறேன் என்பது பெறப்படும் என்னும் கருத்தால், நாணுத்தரும் என்றாள். (2) 1163. காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென் னோனா வுடம்பி னகத்து. காமமும் நாணும் - காமநோயும் அதைச் செய்தவர்க்குச் சொல்ல வொட்டாத நாணமும், நோனா என் உடம்பின் அகத்து - அவற்றைச் சுமக்க மாட்டாத என் உடம்பினிடத்து, உயிர் காவாத் தூங்கும் - உயிரைக் காவடித் தண்டாகக் கொண்டு அதன் இரு முனைகளிலும் தொங்குகின்றன. இதுவுமது. தூது விடவும், மறுக்கவும் செய்யவல்ல காமமும் நாணும் ஒரு நிகராய் வருத்துகின்றன. நான் அவற்றுள் ஒன்றன்கண் நிற்கமாட்டாமையின் உயிராகிய தண்டு ஒடிந்துவிடும் என்பதாம். (3) 1164. காமக் கடன்மன்னு முண்டே யதுநீந்தும் ஏமப் புணைமன்னு மில். காமக் கடல் உண்டு - எனக்குக் காமமாகிய கடல்தான் உள்ளது; அது நீந்தும் ஏமப்புணை இல் - அதைக் கடக்கும் காவலாகிய புணை இல்லை. தலைவியர் காமக்கடலிற் படார்; படினும் அதனை ஏற்ற புணையால் கடப்பர் என்ற தோழிக்குச் சொல்லியது. தூது விட்டு இதற்குப் புணையாயினாயில்லை என்பது கருத்து. மன், உம் - அசை. (4) 1165. துப்பி னெவனாவர் மற்கொல் துயர்வரவு நட்பினு ளாற்று பவர். நட்பினுள் துயர் வரவு ஆற்றுபவர் - இன்பஞ் செய்தற்குரிய நட்பின் கண்ணே துன்ப வரவைச் செய்பவர், துப்பின் எவனாவர் கொல் - துன்பஞ் செய்தற்குரிய பகைமையின் கண் என்ன செய்வாரோ? தூது விடாமை நோக்கித் தோழியோடு புலந்து சொல்லியது. துன்பந் துடைப்பவளாயிருந்தும் அது செய்தாயில்லை யெனப் புலந்து, துன்பஞ் செய்தாளாக்கியும், பிறளாக்கியும் கூறினாள். அப்பகைமை எம்மிடம் இன்மையின் அவர் செய்வதும் அறிந் திலேம் என்பதால், மன் ஒழியிசை. துப்பு - பகை. (5) 1166. இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற் றுன்ப மதனிற் பெரிது. காமம் இன்பம் கடல் - காமத்தினால் வரும் இன்பம் கடல் போலப் பெரிது; மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனில் பெரிது - இனி அது பிரிவால் வருத்தும்போது வருந்துன்பம் அக்கடலினும் பெரிது. இன்பமுற்றார் துன்பமுறுதல் உலகியல் என்ற தோழிக்குச் சொல்லியது. பெற்ற இன்பத்தளவாயின் ஆற்றலாம். இது அதை விடப் பெரிது என்பது கருத்து. (6) 1167. காமக் கடும்புன னீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே யுளேன். காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன் - காமமாகிய பெரிய கடலை நீந்தியும் அதற்குக் கரையைக் காணேன், யாமத்தும் யானே உளேன் - நடு இரவிலும் நான் ஒருத்தியே தனித்து இருக்கிறேன். காமக்கடல் நிறையே புணையாக நீந்தப்படும் என்ற தோழிக்குச் சொல்லியது. நீ துணையாயினாய் இல்லை என்பது குறிப்பு. (7) 1168. மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா வென்னல்ல தில்லை துணை. இரா அளித்து - இரவு அன்புடையதே, மன் உயிரெல்லாம் துயிற்றி என் அல்லது துணை இல்லை - அது உலகத்து நிலை பெற்ற உயிர்களை யெல்லாம் தூங்கச் செய்து என்னை அல்லது வேறு துணையுடையதாக இல்லை. இரவின் கொடுமை சொல்லியது. துணையோடுள்ள உயிர் களை யெல்லாம் விட்டு துணையற்ற என்னையே துணையாகக் கொள்ளுதலின் அறிவற்றது என்பான், அளித்து என்றாள். இகழ்ச்சிக் குறிப்பு. (8) 1169. கொடியார் கொடுமையிற் றாங்கொடிய விந்நாள் நெடிய கழியு மிரா. இந்நாள் நெடிய கழியும் இரா - காதலரோடு இன்புற்ற போது குறியவாய், அவர் பிரிவாற்றாது துன்புறும் இந்நாளிலேயோ நெடியவாய்ச் செல்கின்ற இரவுகள், கொடியார் கொடுமையில் தாம் கொடிய - என்னைப் பிரிந்து சென்ற அக்கொடியவரது கொடுமையைக் காட்டிலும் தாம் கொடுமை செய்கின்றன. இதுவுமது. (9) 1170. உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோவென் கண். உள்ளம் போன்று உள்வழிச் செல்கிற்பின் - மனம் போலக் காதலர் உள்ள இடத்திற்கு விரைந்து செல்லவல்லையாயின், என் கண் வெள்ள நீர் நீந்தல் - என் கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய நீரை நீந்தா. நின் கண்கள் பேரழகு கெடுகின்றனவாகலின் அழாதே என்ற தோழிக்குச் சொல்லியது. நீர் - கண்ணீர். நீர் சிந்தி வருந்தவேண்டிய தில்லை என்பது. செல்லமாட்டாமையின் இனி வெள்ளநீர் நீந்த வேண்டியதுதான் என்பது படநின்றமை யான், மன் ஒழியிசை. (10) 118 கண்விதுப்பழிதல் கண்கள் தலைமகனைக் காணுதற்கு விரைதலால் வருந்துதல். விதுப்பு - விரைவு. அழிதல் - வருந்துதல். தலைவனைக் காண விரும்பி வருந்துதலைக் கண்மேலேற்றிக் கூறியது. 1171. கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது. தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட - இத்தீராத நோயை யாம் அடைந்தது எம் கண்கள் காதலரை உமக்குக் காட்டியதால் அன்றோ? கண் தாம் கலுழ்வது எவன் கொல் - அன்று எமக்குக் காட்டிய கண்கள் இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுவது எதற்காகவோ? நின் கண்கள் அழுது தம் அழகை இழக்கின்றன; நீ ஆற்ற வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. அன்று காட்டியவை இன்றுந் தாமே காட்டாது யாங் காட்டுதல் எங்ஙனம் என்பதாம். கலுழ்தல் - அழுதல். (1) 1172. தெரிந்துணரா நோக்கிய வுண்கண் பரிந்துணராப் பைத லுழப்ப தெவன். தெரிந்து உணரா நோக்கிய உண்கண் - பின் விளைவதை ஆராய்ந்து அறியாமல் அன்று காதலரைக் கண்ட மையுண்ட கண்கள், பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன் - இன்று இத்துன்பம் நம்மால் வந்ததென உணராது துன்புறுவது எதற்காக? இதுவுமது. விளைவது - பிரிந்தவர் வாராமையால் துன்புறுதல். பின்வருவது தறியாது ஒன்றைச் செய்தவர் வந்தபோது பொறுப்பதே கடமை என்பதாம். (2) 1173. கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழு மிதுநகத் தக்க துடைத்து. தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது - இக் கண்கள் முன்பு காதலரைத் தாமே விரைந்து நோக்கி, இப்போது தாமே அழுகின்ற இது, நகத்தக்கது உடைத்து - நம்மால் சிரிக்கத்தக்க இயல்பினை உடையது. இதுவுமது. (3) 1174. பெயலாற்றா நீருலந்த வுண்கண் ணுயலாற்றா வுய்வினோ யென்க ணிறுத்து. உண்கண் - மையுண்ட கண்கள், உயலாற்றா உய்வு இல் நோய் என்கண் நிறுத்து - நான் பிழைக்க முடியாதபடி ஒழிவில்லாத நோயை என்னிடம் நிறுத்தி, பெயல் ஆற்றா நீர் உலந்த - தாமும் அழ முடியாதபடி நீர்வற்றின. இதுவுமது. எனக்குத் துன்பஞ் செய்தலான் பின் தமக்குத் துன்பம் தாமே வந்த தென்பதாம். (4) 1175. படலாற்றா பைத லுழக்குங் கடலாற்றாக் காமநோய் செய்தவென் கண். கடல் ஆற்றாக் காமநோய் செய்த என் கண் - எனக்குக் கடலினும் பெரிய காமநோயை உண்டாக்கிய என் கண்கள், படல் ஆற்றாப் பைதல் உழக்கும் - தூக்கமில்லாதனவாகித் துன்பத்தால் வருந்துகின்றன. .இதுவுமது. (5) 1176. ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண் டாஅ மிதற்பட் டது. எமக்கு இந்நோய் செய்த கண் தாம் இதன் பட்டது - எமக்கு இக்காம நோயை உண்டாக்கிய கண்கள் தாமும் தூங்காமல் அழ நேர்ந்தது, ஓ இனிதே - மிகவும் இனிதாயிற்று. இதுவுமது. ஓ -மிகுதி குறிக்கும் இடைச்சொல். அவற்றால் வருத்த முற்ற எமக்கு அவ்வருத்தம் தீர்ந்தாற் போலும் என்பதாம். (6) 1177. உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து வேண்டி யவர்க்கண்ட கண். விழைந்து இழைந்து வேண்டி அவர்க் கண்ட கண் - விரும்பி உள்நெகிழ்ந்து விடாமல் அன்று காதலரைக் கண்ட கண்கள், உழந்து உழந்து உள்நீர் அறுக - இன்று துயிலில்லாத் துன்பத்தால் வருந்தி வருந்தித் தம்முள் இருக்கும் நீர் அற்றுப் போவதாக. இதுவுமது. (7) 1178. பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க் காணா தமைவில கண். பேணாது பெட்டார் உளர் - நெஞ்சினால் விரும்பாது சொல்லினால் விரும்பினவர் இங்கு இருக்கின்றனர்; மற்று அவர்க் காணாது கண் அமைவில - இருந்து பயனென்ன? அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறல் இல்லை. காதலர் பிரிந்து போயினார் அல்லர்; அவர் ஈண்டுளர்; அவரைக் காணுமளவும் நீ ஆற்றவேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. முன்பிரியேன் என்று கூறினாராகலின், பெட்டார் என்றாள். மன், ஓ - அசை. (8) 1179. வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை யாரஞ ருற்றன கண். வாராக்கால் துஞ்சா - தலைவர் வராதபோது அவர் வரவு பார்த்துத் தூங்கா, வரின் துஞ்சா - வந்தபோது அவர் பிரிவஞ்சித் தூங்கா, ஆயிடைக் கண்ட ஆர் அஞர் உற்றன - அவ்விரு வழியிலும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பம் உற்றன. நீயும் ஆற்றி, நின் கண்களும் தூங்கவேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. இனிக் கண்களுக்குத் துயில் ஒரு நாளும் இல்லை என்பதாம். (9) 1180. மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போ லறைபறை கண்ணா ரகத்து. எம் போல் அறை பறை கண்ணார் அகத்து மறைபெறல் - எம்மைப் போல அறையப்படும் பறையாகிய கண்ணினை யுடையார் தம்நெஞ்சில் மறைக்கப்படும் மறை பொருள்களை அறிதல், ஊரார்க்கு அரிதன்று - இவ்வூரார்க்கு எளிது. காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவர் கொடுமையை மறைக்க வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது. கொடுமை - குறித்த காலத்தே வராமை. யான் மறைக்கவும் இவை வெளிப் படுகின்றன என்பதாம். (10) 119. பசப்புறுபருவரல் பசப்புறுவதனால் உண்டாகிய வருத்தம். பசப்பு - பிரிவாற்றா மையால் மகளிர் மேனியின்கண் உண்டாவதோர் நிறவேறுபாடு; பசுமை நிறம். பருவரல் - வருத்தம். அவ் வருத்தத்தைத் தலைமகள் தோழிக்குச் சொல்வாள். 1181. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க் குரைக்கோ பிற. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் - என்னை விரும்பி னவர்க்குப் பிரிவை உடம்பட்ட நான், பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ - அது பொறாது நிறம் மாறுபட்ட என்னியல்பினை யாருக்குச் சொல்வேன்! முன் பிரிவுடம்பட தலைமகள், அஃதாற்றாது பசந்த வழித் தன்னுள்ளே சொல்லியது. பிற - அசை. 'பண்பியார்க் குரைக்கோ' எனத் தளை தட்டுதலான், குற்றியலிகரத்தைக் கெடுத்து, 'பண்ப்யார்க்' என நேர்நேர் - தேமாவாகக் கொள்க. யான் செய்து கொண்ட துன்பத்தினை இனி ஒருவர்க் குரைத்தலும் பழிப்பாகும் என்பதாம். (1) 1182. அவர்தந்தா ரென்னுந் தகையா லிவர்தந்தென் மேனிமே லூரும் பசப்பு. பசப்பு - இப்பசப்பு நிறம், தந்தார் அவர் என்னும் தகையால் - என்னை உண்டாக்கினவர் அவர் என்னும் பெருமிதத்தினால், என் மேனிமேல் இவர்ந்து ஊரும் - என் உடம்பின்மேல் ஏறி ஊருகின்றது. ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது. கவலுதல் - வருந்துதல். இவர்தல்- மேலேறுதல். ஊர்தல் - செலுத்துதல். உடம்பின்மேல் பரவி உடம்பை உரிமை யாக்கிக் கொண்டது என்பது கருத்து. (2) 1183 சாயலு நாணு மவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையுந் தந்து. கைம்மாறா நோயும் பசலையும் தந்து - பிரிகின்ற போதே அவ்விரண்டற்கும் கைம்மாறாக இக்காம நோயினையும், பசலை யையும் எனக்குத் தந்து, சாயலும் நாணும் அவர் கொண்டார் - என் மேனி யழகினையும், நாணினையும் அவர் கொண்டு போயினார். அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றவேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது. நாணுக்கு நோயையும், அழகுக்குப் பசலையையும் தந்தாரெனக் கூட்டுக. எதிர்நிரனிறை இனி அவர் தந்தாலல்லது அவையாகா, இவைபோகா என்பதாம். (3) 1184. உள்ளுவன் மன்யா னுரைப்ப தவர்திறமாற் கள்ளம் பிறவோ பசப்பு. யான் உள்ளுவன் - நான் எப்போதும் அவர் சொற் களையே நினைப்பேன், உரைப்பது அவர் திறம் - நான் சொல்லுவதும் அவர் நற்றிறங்களையே, பசப்பு கள்ளம் - அப்படியிருக்க எனக்குப் பசப்பு வந்தது கள்ளத்தனமாக இருக்கிறது. பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும், அவர் நற்றிறங் களையும் அறிவாயாகலின் நீட்டியாது வருவர் என்ற தோழிக்குச் சொல்லியது. மனமும் வாயும் அவரை மாறவதிருக்க அவ்விரண்டன் வழிப்பட்ட உடம்பின்கண் வந்தமையின் கள்ளம் என்றாள். பிற, ஓ, மன், ஆல் - அசை. (4) 1185. உவக்காணெங் காதலர் செல்வா ரிவக்காணென் மேனி பசப்பூர் வது. எம் காதலர் உவக்காண் செல்வார் - அன்றும் எங்காதலர் உங்கே செல்வாராக, என் மேனி பசப்பு ஊர்வது இவக்காண் - என் மேனி பசப்பூர்வது இங்கே யன்றோ? அத்தகையது இன்று வேறொன்றாகுமோ? காதலர் பிரிந்து அணித்தா யிருக்கவும் ஆற்றுகின்றிலை என்ற தோழிக்குச் சொல்லியது. உவக்காண், இவக்காண் என்பன, உங்கே இங்கே என்னும் பொருள்பட நின்ற இடைச்சொற்கள். உங்கே - அண்மை குறித்தது. அவர் பிரிந்து அணித்தாகப் போனாரோ இல்லையோ, என்மேனி பசந்து விட்டது. அன்று போலவே இன்றும் அவர் செலவும் பசப்பினது வரவும், பகல் செல்ல இரவு வருவது போன்ற தென்பதை யறிந்தும் நீ அறியாதவன் போற் பேசுகின்ற தென்னை யென்பதாம். (5) 1186. விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவைப் பார்த்து நெருங்கிவரும் இருளே போல, கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - தலைவனது முயக்கத்தின் மெலிவைப் பார்த்து நெருங்கி வரும் இப்பசலை. இதுவுமது. தலைவன் என்னை இறுகத் தழுவாதிருக்கும் நேரம் பார்த்து வரும் பசப்பு,பிரிந்தவிடத்து என் செய்யா தென்பதாம். (6) 1187. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவ்வளவி லள்ளிக்கொள் வற்றே பசப்பு. புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் - முன்னொரு நாள் காதலரைத் தழுவிக் கிடந்த நான் அறியாமல் சற்று விலகினேன், அவ்வளவில் பசப்பு அள்ளிக்கொள்வற்று - அவ்வாறு புடை பெயர்ந்தேனோ இல்லையோ உடனே பசப்பு கையால் அள்ளிக் கொள்வதுபோல வந்து நிறைந்தது. இதுவுமது. அப் புடைபெயர்ச்சிக் குள்ளாக அவ்வாறானது, இப் பிரிவினால் என்னாகுமென்பதைச் சொல்ல வேண்டுமோ என்பதாம். (7) 1188. பசந்தா ளிவளென்ப தல்லா லிவளைத் துறந்தா ரவரென்பா ரில். இவள் பசந்தாள் என்பது அல்லால் - இவள் ஆற்றியிராது பசலை நிறமடைந்தாள் என என்னைப் பழி கூறுவதல்லாமல், இவளை அவர் துறந்தார் என்பார் இல் - இவளை அவர் பிரிந்து போயினார் என்று அவரைச் சொல்வார் ஒருவருமில்லை. நீ இங்ஙனம் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச் சொல்லியது. என்பார் எனத் தோழியை வேறாகக் கூறினாள். (8) 1189. பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலைய ராவ ரெனின். நயப்பித்தார் நல்நிலையர் ஆவர் எனின் - என்னைப் பிரிவுக்கு உடம்படுத்தியவர் நல்ல நிலையினர் ஆவர் என்றால், என் மேனி பட்டாங்கு பசக்க - என் உடம்பு எவ்வாறேனும் பசப்பதாக. இதுவுமது, நல்நிலையராதல் - நல்லவராதல். பட்டாங்கு பசக்க - உண்மையாகவே பசக்க எனக்கு இந்நோயைத் தந்து சென்றவர் நல்லவரல்லர் எனப் புலந்து கூறியது. என்மேன் பசக்கினும் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை உடம் படுத்திப் பிரிந்தவர் தவறிலராக என்பதுபட நின்றமையின், மன் - ஒழியிசை. (9) 1190. பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றா ரெனின். நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் - அன்று குறை நயப்பித்துக் கூடியவர் இன்று அருளாமையை நட்டார் தூற்றராயின், பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே - பசலை நிறம் உற்றாள் என்னும் பெயரைப் பெறுதல் எனக்கு நல்லதே. தலைமகள் ஆற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனே இயற்பழித்த வழி தலைமகள் இயற்பட மொழிந்தது. நட்டார் என்றது தோழியை. அவரை அருளிலர் என்னாது, பசந்தாள் இவள் என்பதே நான் ஆற்றும் வழியாகும் என்பதாகும். (10) 120. தனிப்படர்மிகுதி தனியாகிய படர்மிகுதி என விரியும். படர்மிகுதி தலைவனிடத் தின்றித் தலைமகள் தன்னிடமேயாதல் கூறுதல். படர் மிகுதி - துன்ப மிகுதி, பெருந்துன்பம். 1191. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் - தம்மால் காதலிக்கப் படும் தலைவரால் தம்மைக் காதலிக்கப் பெற்ற மகளிரே, காமத்துக் காழ் இல் கனி பெற்றார் - காமநுகர்ச்சி யென்னும் விதையில்லாத கனியைப் பெற்றவராவர். காதலரும் உன்னிலும் ஆற்றாராய் விரைவில் வருவர்; நீ அவரோடு பேரின்பம் நுகர்வாய் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. காமத்து - அத்து வேண்டாவழிச் சாரியை நங்காதலர் பிரிதலேயன்றிப் பின் வாராமையும் உடைமையின் அக்கனியாம் பெற்றிலேம் என்பதாயிற்று. (1) 1192. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வா ரளிக்கு மளி. வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி - தம்மை விரும்பும் மகளிர்க்கு அவரை விரும்பும் கணவர் காலத்தே வந்து செய்யும் அன்பானது, வாழ்வார்க்கு வானம் பயந்தற்று - தன்னையே நோக்கி வாழ்வோர்க்கு வானம் பருவ காலத்தே மழை பெய்தாற் போலும். இதுவுமது. நங்காதலர் நம்மை விரும்பாமையால், மழை பெய்யாது போனால் அதனால் வாழும் மக்கள் போல நாம் இறந்துபட வேண்டியது தான் என்பதாம். (2) 1193. வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுந மென்னுஞ் செருக்கு. வீழுநர் வீழப்படுவார்க்கு - தாம் விரும்பும் கணவரால் விரும்பப்படும் மகளிர்க்கு, வாழுநம் என்னும் செருக்கு அமையுமே - காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து விரைவில் வருவார்; வந்தால் நாம் இன்புற்று வாழ்வோம் என்னும் செருக்கு உளதாமே. இதுவுமது. நாம் அவரால் விரும்பப்படாமையால் நமக் கமைவது சாவுதான் என்பதாம். (3) 1194. வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅ ரெனின். வீழப்படுவார் - உலகத்தாரால் விரும்பப்படும் மகளிரும், தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇயிலர் - தாம் விரும்புந் தலைவரால் விரும்பப்படார் எனின் தீமை யுடையவரே யாவர். காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவர் அருளின்மை மறைத்த நீ நன்மனையாட்டி யாதலால், உலகத்தாரால் நன்கு மதிக்கப்படுவாய் என்ற தோழிக்குச் சொல்லியது. கெழீஇயின்மை - நன்மையின்மை. தீமையுடையேனுக்கு அந்நன்மதிப்பால் பயனில்லை என்பதாம். (4) 1195. நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாங்காதல் கொள்ளாக் கடை. நாம் காதல் கொண்டார் தாம் காதல் கொள்ளாக் கடை - நம்மால் காதலிக்கப்பட்டவர் தாமும் நம்மைக் காதலியா விடத்து, நமக்கு எவன் செய்ப - நமக்கு என்ன இன்பத்தைச் செய்வார். அவர்மேல் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய் என்ற தோழிக்குச் சொல்லியது. அக்காதலுடைமையால் நாம் பெற்றது துன்பமே என்பதாகும். (5) 1196. ஒருதலையா னின்னாது காமங்காப் போல இருதலை யானு மினிது. காமம் ஒருதலையான் இன்னாது - காமமானது ஓரிடத்தில் உண்டாயின் துன்பந்தருவதாகும்; காப்போல இருதலையானும் இனிது - காவடியின் சுமையைப் போல இரண்டிடத்திலும் உண்டாயின் இன்பந்தருவதாகும். இதுவுமது. இரண்டிடம் - மகளிர், ஆடவர் என்னும் இரண்டிடம். என்னிடத்துண்டாகிய வேட்கை அவரிடத்தும் உண்டாயின் நான் இவ்வாறு துன்புறுதல் கூடுமோ என்பதாம். (6) 1197. பருவரலும் பைதலுங் காணான்கொல் காமன் ஒருவர்க ணின்றொழுகு வான். ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் - காமநுகர்தற் குரிய இருவரிடத்தும் ஒப்ப நில்லாமல் ஒருவரிடத்தே நின்று வருத்து கின்ற காமன், பருவரலும் பைதலும் காணான் கொல் - அவ்விடத்துத் துன்ப மிகுதியையும் பசப்பு நோயையும் அறியானோ? இதுவுமது. பைதல் - பசப்பு நோய். காமன் ஈரிடத்தும் நிற்கின் இத்துன்பம் இல்லை என்பதாம். பெண்பாலை வருத்தும் ஆண்பாற் காமத்தைக் 'காமன்' என ஆண்பாலாகவும், ஆண்பாலை வருத்தும் பெண்பாற் காமத்தை 'அணங்கு' (918, 1081, 1082) எனப் பெண் பாலாகவும் கூறுதல் நூன் மரபு. (7) 1198 வீழ்வாரி னின்சொற் பெறாஅ துலகத்து வாழ்வாரின் வன்கணா ரில். வீழ்வாரின் இச்சொல் பெறாது வாழ்வாரின் - தம்மால் விரும்பப்படும் காதலரிடமிருந்து வரும் இனிய சொற்களைப் பெறாது பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல, வன்கணார் உலகத்து இல் - கொடியவர் இவ்வுலகத்தில் இல்லை. தலைமகனிட மிருந்து தூதுவரக் காணாது தலைமகள் சொல்லியது. யான் வன்கண்ணேன் ஆகையால் அதுவும் பெறாது உயிர் வாழ்கின்றேன் என்பதாம். (8) 1199. நசைஇயார் நல்கா ரெனினு மவர்மாட் டிசையு மினிய செவிக்கு. நசைஇயார் நல்கார் எனினும் - எம்மால் விரும்பப்பட்ட காதலர் எமக்கு அருளார் எனினும், அவர் மாட்டு இசையும் செவிக்கு இனிய - அவரிடத்திருந்து வரும் எவ்வகைச் சொல்லும் எம் செவிக்கு இனியவாம். அவர் வரவில்லை என்பதையாவது சொல்லி விடக் கூடாதா என்பது கருத்து - இதுவுமது. இசை - சொல். (9) 1200. உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு. உறார்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு - உன்னோடு உறவில்லாதவர்க்கு உனது மிகுந்த நோயைச் சொல்லுகின்ற நெஞ்சே! வாழிய - நீ வாழ்வாயாக; கடலைச்செறாய் - அதை விட்டு உனக்குத் துன்பந் தருகின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக. தலை மகனிடமிருந்து தூதுவரப் பெறாது, தான் தூதுவிடக் கருதிய தலைமகள், நெஞ்சொடு சொல்லியது. உறவில்லாரிடம் உரைப்பதால் பயனில்லை என்பது கருத்து. (10) 121. நினைந்தவர் புலம்பல் தலைவனும் தலைவியும் முன்னாள் இன்பத்தினை எண்ணித் தனித்திருந்து வருந்துதல். புலம்பல் - தனித்திருத்தல். அது, அதனாலாய வருத்தத்தை உணர்த்திற்று. 1201. உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற் கள்ளினுங் காம மினிது. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலான் - முன்னைய இன்பத்தினைப் பிரிந்தபோது நினைத்தாலும் நீங்காத மிகுந்த களிப்பைத் தருதலால், கள்ளினும் காமம் இனிது - உண்ட போதல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளைப் பார்க்கிலும் காமம் இனியது. தூது சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது. தன் தனிமையும், தலைமகளை மறவாமையும் கூறியவாறு. (1) 1202. எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில். தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்றில் - தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைப் பார்க்கும் அப்பிரிவால் வருவதோர் துன்பம் இல்லை; காமம் எனைத்து இனிது ஒன்றே காண் - ஆதலால், காமம் எவ்வகை யிலும் இனிதொன்றேயாகும். இதுவுமது. புணர்ந்த விடத்தும் பிரிந்த விடத்தும் ஒப்ப இனிதாகும். தானாற்றிய வகை கூறியவாறு. (2) 1203. நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். தும்மல் சினைப்பது போன்று கெடும் - எனக்குத் தும்மல் உண்டாவது போன்று தோன்றி உடனே அடங்கிவிடுகிறது; நினைப்பவர் போன்று நினையார் கொல் - ஆதலால், அவர் நம்மை நினைப்பவர் போலக் காட்டி உண்மையில் நினையாராதல் வேண்டும். தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது. சினைத்தல் - அரும்புதல், தோன்றுதல். தொலைவிலுள்ள சுற்றத்தார் நினைத்தால் தும்மல் வரும் என்னும் மகளிர் வழக்குப் பற்றிக் கூறியது. (3) 1204. யாமு முளேங்கொல் லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத் தோஒ வுளரே யாவர். எம் நெஞ்சத்து அவர் ஓ உளரே - எம்முடைய நெஞ்சில் அவர் எப்போதும் உள்ளவராயிருக்கின்றார்; அவர் நெஞ்சத்து யாமும் உளேங் கொல் - அவ்வாறே அவருடைய நெஞ்சிலும் யாமும் உள்ளேம் ஆகின்றேமோ? அல்லது இல்லேமோ? இதுவுமது. அவர் நெஞ்சத்திருந்தும் வினை முடியாமை யால் வரவில்லையோ, வினை முடிந்தும் நெஞ்சில் இல்லாததால் வர வில்லையோ என்பது கருத்து. ஓ - இடைவிடாமை உணர்த்திற்று. (4) 1205. தந்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எந்நெஞ்சத் தோவா வரல். தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய நெஞ்சில் யாம் சேராமல் காவல்கொண்ட தலைவர், எம் நெஞ்சத்து ஓவா வரல் நாணார் கொல் - எமது நெஞ்சில் இடைவிடாது வந்து நிற்பதற்கு நாணமாட்டாரோ? இதுவுமது. ஒருவரைத் தம்மிடம் வருவதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவரிடம் பலகாலும் செல்லுதல் நாணிலார் செயலாகலின், நாணார் கொல் என்றாள். (5) 1206. மாற்றியா னென்னுளேன் மன்னோ வவரொடியா னுற்றநா ளுள்ள வுளேன். யான் அவரொடு உற்ற நாள் உள்ள உளேன் - யான் அவரோடு புணர்ந்த நாளின்பத்தை நினைத்தலால் இப்போது உயிர் வாழ்கிறேன்; மற்று யான் என்னுளேன் - அஃதின்றேல், யான் வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்? அவரோடு புணர்ந்தநாள் இன்பத்தை நினைந்து துன்புறு கின்றாய், அது மறத்தல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. வேறும் உள, அவை பெற்றிலேன் என்பது பட நின்றமையின், மன் ஒழியிசை. அவை இருவர் தூதும். (6) 1207. மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியே னுள்ளினு முள்ளஞ் சுடும். மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் - முன் உண்டான புணர்ச்சி யின்பத்தை மறத்தலறியேனாகி, இப்போது நினைக்கவும் பிரிவு என் உள்ளத்தைச் சுடுகின்றது. மறப்பின் எவனாவன் - இங்ஙனம் பிரிவாற்றாத யான் அதை மறந்தால் இறவாமல் இருப்பது எதனால்? இதுவுமது. கொல் - அசை. முன்பாட்டில் போலவே மன் ஒழியிசை. (7) 1208. எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றோ காதலர் செய்யுஞ் சிறப்பு. எனைத்து நினைப்பினும் காயார் - நாம் எவ்வளவு நினைத்தாலும் அதற்கு வெகுளார்; காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ - காதலர் எமக்குச் செய்யும் இன்பம் அவ்வளவன்றோ? இத்துன்ப மறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம் செய்வார் என்ற தோழிக்குச் சொல்லியது. வெகுளாமை - நினைத்தலுக் குடன்பட்டு நெஞ்சில் நிற்றல். (8) 1209. விளியுமெ னின்னுயிர் வேறல்ல மென்பா ரளியின்மை யாற்ற நினைந்து. வேறும் அல்லம் என்பார் அளி இன்மை ஆற்ற நினைத்து - முன்பு நாமிருவரும் வேறல்லேம் என்று சொன்னவருடைய அருளின்மையை மிகவும் நினைந்து, என் இன்னுயிர் விளியும் - எனது இனிய உயிர் கழிகின்றது. தலைமகனிடமிருந்து தூது வரக் காணாது வருந்து கின்றாள், வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது. ஆற்றியிரு என வற்புறுத் தினாட்கு, என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கன்று, அவரது அன்பின் மைக்கெனக் கூறியது. (9) 1210. விடாஅது சென்றாரைக் கண்ணினாற் காணப் படாஅதி வாழி மதி. மதி வாழி - மதியே! வாழ்வாயாக; விடாது சென்றார் - என் நெஞ்சில் இடைவிடாது இருந்துவிட்டுப் போனவர், கண்ணினால் காணப் படாதி - கண்ணினால் காணும்படி நீ மறையா திருப்பாயாக. மதி கண்டு கூறியது. சென்றாரை - ஐ - சாரியை. அவர் நின்னைக் கண்டால் என்னை நினைக்கவும் கூடுமாகையால் நீ இவ்வுதவி செய்வாய் என்பதாம். படுதல் - மறைதல். படாதி - மறையாதே. (10) 122. கனவு நிலையுரைத்தல் தலைவி தான் கண்ட கனவினது நிலையைத் தோழிக்குச் சொல்லியது. இது, நனவின்கண் நினைவு மிகுதியால் கண்ட கனவு. 1211. காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு - என் காதலர் அனுப்பிய தூதினைக் கொண்டு என்னிடம் வந்த கனவுக்கு, யாது விருந்து செய்வேன் - யான் எவ்வகை விருந்து செய்வேன்! தலைமகனிட மிருந்து கனவில் தூதுவரக் கண்டாள் சொல்லியது. கனவினுக்கியாது - குற்றியலிகரம் அலகு பெறவில்லை. 1212. கயல்உண்கண் யான்இரப்பத் துஞ்சின் கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன். கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் - கெண்டை மீன் போன்ற மையுண்ட கண்கள் யான் வேண்டுவதற்கு இணங்கித் தூங்குமாயின் - கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன் - கனவில் வருங்காதலர்க்கு யான் பொறுத்திருக்கும் தன்மையை எடுத் துரைப்பேன். தூதுவிடக் கருதியாள் சொல்லியது. நானே நேரில் எடுத்துச் சொல்வேன் என்பதாம். கண்களும் துஞ்சா, உரைத்தலுங் கூடா என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசை. உயல் - உயிர் வாழ்தல். (2) 1213. நனவினா னல்கா தவரைக் கனவினாற் காண்டலி னுண்டென் னுயிர். நனவினால் நல்காதவரை - நனவில் வந்து முழுஅன்பு செய்யாதாரை, கனவினால் காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின்கண் கண்ட காட்சியினால் என் உயிர் இருக்கின்றது. ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவேன் எனச் சொல்லியது. கவலுதல் - வருந்துதல். அக்காட்சியாலே நான் ஆற்றுகின்றேன், நீ வருந்தாதே என்பதாம். (3) 1214. கனவினா லுண்டாகுங் காம நனவினால் நல்காரை நாடித் தரற்கு. நனவினால் நல்காரை நாடித் தரற்கு - நனவில் வந்து அருள் செய்யாதவரை அவர் சென்ற விடத்தில் தேடிக் கொண்டுவந்து கனவு தருதலான், கனவினால் காமம் உண்டாகும் - அக்கனவினிடத்து எனக்கு இன்பம் உண்டாகிறது. இதுவுமது. இயல்பாக அருளாதாரை அவர் சென்ற இட மறிந்து கொண்டு வந்து தந்த கனவால் தான் ஆற்றுவேன் என்பது. (4) 1215. நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான் கண்ட பொழுதே யினிது. நனவினால் கண்டதும் ஆங்கே இனிது - முன் நனவில் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்போது இனிதாயிற்று, கனவுந்தான் கண்ட பொழுதே இனிது - கனவில் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பமும் அக்கண்டபொழுதே இனிதா யிற்று. ஆகவே, எனக்கு இரண்டும் ஒன்றே. இதுவுமது. முன்னும் யான் பெற்றது இவ்வளவே; இன்னும் அது பெற்று ஆற்றுவேன் என்பதாம். (5) 1216. நனவென வொன்றில்லை யாயிற் கனவினாற் காதலர் நீங்கலர் மன். நனவு என ஒன்று இல்லையாயின் - நனவு என்று சொல்லப் பாடுகிற ஒரு கொடியோன் இல்லையாயின், கனவினான் காதலர் நீங்கலர் - கனவில் என்னை வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார். இதுவுமது. நனவு இடையே வந்து கனவைப் போக்கி அவரைப் பிரிவித்தது என்பது பட நின்றமையின், மன் ஒழியிசை. (6) 1217. நனவினா னல்காக் கொடியார் கனவினால் என்னெம்மைப் பீழிப் பது. நனவினால் நல்காக் கொடியார் - நனவில் வந்து ஒரு நாளும் அருள் செய்யாத கொடியவர், கனவினால் என்னைப் பீழிப்பது என் - நாடோறும் கனவில் வந்து எம்மை வருத்துவது எது பற்றியோ? விழித்தபோது காணாளாகிக் கனவில் கூட்டம் நிகழ்ந்து ஆற்றாளாய்ச் சொல்லியது. பீழித்தல் - வருத்துதல். (7) 1218. துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால் நெஞ்சத்த ராவர் விரைந்து. துஞ்சுங்கால் தோள்மேலராகி - என் உள்ளத்தில் உறையுங் காதலர் யான் தூங்கும்பொழுது என் தோள்மேல் இருப்பவராகி, விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தராவர் - யான் விழிக்கும்போது விரைந்து வந்து என் நெஞ்சில் இருப்பர். தான் ஆற்றுதற் பொருட்டுத் தலைமகனை இயற்பழித்த தோழிக்கு இயற்பட மொழிந்தது. ஒரு போதும் என்னை விட்டு நீங்காதவரைக் குறை கூறாதே என்பதாம். (8) 1219. நனவினா னல்காரை நோவர் கனவினாற் காதலர்க் காணா தவர். கனவினால் காதலர்க் காணாதவர் - கனவில் தம்காதலரைக் காணாத மகளிர், நனவினால் நல்காரை நோவர் - நனவில் வந்து அருளாத காதலரை நோவர்; கனவிலே காண்பாராயின் நோவார். இதுவுமது. இயற்பழித்தது பொறாது புலக்கின்றாளாகலின் அயலாள் போல் இவ்வாறு கூறினாள். (9) 1220. நனவினா னந்நீத்தா ரென்பர் கனவினாற் காணார்கொ லிவ்வூ ரவர். இவ்வூரவர் - இவ்வூரிலுள்ளார், நனவினால் நம் நீத்தார் என்பர் - நனவில் நம்மைவிட்டுப் பிரிந்தாரென நம் காதலரைக் கொடுமை கூறுவர்; கனவினால் காணார் கொல் - அவர்கள் கனவில் நங்காதலர் நீங்காது வருதலைக் காணார் போலும்! இதுவுமது. யான் அவன் என்னும் வேற்றுமை இல்லா திருந்தும் தான் கண்டது காணாது அவரைக் கொடுமை கூறுகின்ற தால், தோழியை அயலாள் போல இவ்வூர் என்றாள். (10) 123. பொழுது கண்டிரங்கல் மாலைப்பொழுதினைக் கண்டு தலைவி இரங்குதல். 1221. மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. பொழுது - பொழுதே! நீ மாலையோ அல்லை - நீ மாலையோ எனில், அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - மணந்தவர் களின் உயிரை உண்ணும் கடலாவாய்; வாழி - நீ வாழ்வாயாக. பொழுதொடு புலந்து சொல்லியது. வாழி - வாழமாட்டாய் என்பது குறிப்பு. சிறிது நேரம் நிற்கும் மாலையன்று; என்னை வருத்துதலால் கடல்போலப் பெருமையுடையாய் என்பதாம். (1) 1222. புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல் வன்கண்ண தோநின் றுணை. மருள் மாலை வாழி - மயங்கிய மாலைப்பொழுதே நீ வாழ்வாயாக; புன் கண்ணை - நீயும் எம்மைப் போல ஒளியிழந் துள்ளாய்; நின் துணை எம்கேள்போல் வன்கண்ண தோ - உனது துணையும் எமது துணைபோல இரக்க மில்லாத தோ? தன் மனத் துன்பத்தை மாலை மேலிட்டுக் கூறியது. மயங்குதல் - பகலோ இரவோ என்று அறியமுடியாது கலத்தல். பகல் மறைய இரவு நேரம். (2) 1223. பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித் துன்பம் வளர வரும். பனி அரும்பிப் பைதல்கொள் மாலை - காதலர் எம்மைக் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கமெய்திப் பசந்து வந்த மாலை, துனி அரும்பித் துன்பம் வளர வரும் - இந்நாள் நான் இறந்து படுமாறு துன்பம் மிகும்படி வளருகின்றது. ஆற்றவேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது. குளிர்ச்சி தோன்ற மயங்கி வரும் மாலை என்னும் நேர் பொருள், நடுக்கம், பசப்பு என்னும் இக்குறிப்புப் பொருள் தோன்ற நின்றது. துனி - உயிர் வாழ்வதற் கண் வெறுப்பு. யான் ஆற்றுமா றென்னை என்பது. (3) 1224. காதல ரில்வழி மாலை கொலைக்களத் தேதிலர் போல வரும். மாலை - காதலர் உள்ளபோ தெல்லாம் என் உயிர் தளிர்க்க வந்த மாலைப்பொழுது, காதலர் இல்வழி - காதலர் இல்லாத பொழுது, கொலைக்களத்து ஏதிலர் போல வரும் - கொலைக் களத்தின்கண் கொலைஞர் வருவது போல வருகின்றது. இதுவுமது. முன்னெல்லாம் எனக்கு இன்பஞ் செய்த மாலையும் இப்போது எனக்குத் துன்பஞ் செய்கின்றது. யான் ஆற்றுமா றென்னை என்பதாம். (4) 1225. காலைக்குச் செய்தநன் றென்கொ லெவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை. காலையும் மாலையும் அவர் கூடிய நாட்போலாது இன்று வேறுபட்டு வருகின்றன; அவற்றுள், யான் காலைக்குச் செய்த நன்று என் - நான் காலைப்பொழுதுக்குச் செய்த நன்மை யாது? மாலைக்குச் செய்த பகை எவன் - நான் மாலைப் பொழுதுக்குச் செய்த தீமை யாது? இதுவுமது. கூடியபோது பிரிவர் என்று அஞ்சப் பண்ணிய காலை அஃதொழிந்து, இப்போது இரவாகிய வெள்ளத்திற்குக் கரையாய் வருகின்றது என்னும் கருத்தால் நன்றென் கொல் என்றும், கூடியபோது இன்பஞ் செய்து வந்த மாலை இன்று அளவில்லாத துன்பஞ் செய்கின்றது என்னும் கருத்தால் பகையெவன் கொல் என்றும் கூறினாள். காலையாகிய கரை யில்லையேல் மாலை வெள்ளத்தால் யான் ஒழிக்கப்படுவேன் என்பதாம். (5) 1226. மாலைநோய் செய்தல் மணந்தா ரகலாத காலை யறிந்த திலேன். மணந்தார் அகலாத காலை - காதலர் என்னைவிட்டுப் பிரியா திருந்தபோது, மாலை நோய் செய்தல் அறிந்தது இலேன் - மாலைப் பொழுது எனக்குத் துன்பஞ் செய்தலை அறியப் பெற்றிலேன். இன்று இத்தன்மையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு உடம்பட்டது என்னை என்ற தோழிக்குச் சொல்லியது. இவ்வாறு வேறுபடுதலை அறியேன்; அறிந்திருப்பின் பிரிவுக்கு உடம்பட் டிருக்கேன் என்பதாம். (6) 1227. காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய். இந்நோய் - இக் காமநோயாகிய பூ, காலை அரும்பி - காலைப் பொழுதில் அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி - பகற் பொழுதெல்லாம் பேரரும்பாக முதிர்ந்து, மாலை மலரும் - மாலைப் பொழுதில் மலரும். மாலைப் பொழுதில் இத்தன்மையை ஆதற்குக் காரணம் என்னை யென்றாட்குச் சொல்லியது. துயிலெழுந்த பொழு தாகலின் அரும்பி என்றும், பொழுது செல்லச் செல்லப் பிரிவெண்ணி வருந்துதலின் போதாகி என்றும், மாலைவரப் பெரிதும் வருந்துதலின் மலரும் என்றும் கூறினாள். (7) 1228. அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன் குழல்போலுங் கொல்லும் படை. ஆயன் குழல் - முன்னெல்லாம் இனிதாய இடையன் புல்லாங் குழல், அழல் போலும் மாலைக்குத் தூது ஆகி - இப்போது நெருப்புப் போலச் சுடுவதாகிய மாலைப் பொழுதுக்குத் தூதுமாகி, கொல்லும் படை - என்னைக் கொல்லும் கொலைக் கருவியும் ஆயிற்று. இதுவுமது. தானே சுடவல்ல மாலை இத்துணையும் பெற்றால் என் செய்யாது என்பதாம். போலும் - அசை. (8) 1229. பதிமருண்டு பைத லுழக்கு மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. மதி மருண்டு மாலை படர்தரும்போது - கண்டார் மதி மயங்கும்படி மாலைப்பொழுது வரும்போது, பதி மருண்டு பைதல் உழக்கும் - இவ்வூரார் அனைவரும் மயங்கித் துன்பப் படுவர். இதுவுமது. பதி - இடவாகுபெயர். (9) 1230. பொருண்மாலை யாளரை யுள்ளி மருண்மாலை மாயுமென் மாயா வுயிர். மாயா என் உயிர் - பிரிவைப் பொறுத்து இறந்து படாத எனது உயிர், பொருள்மாலை யாளரை உள்ளி மருள் மாலை மாயும் - பொருள் ஈட்டுதலையே இயல்பாக உடைய தலை வரை நினைந்து, மயக்கந்தரும் இம்மாலைப் பொழுதில் மாய்கின்றது. இதுவுமது. குறித்த பருவம் கழியவும் பொருள் முடித் தலையே இயல்பாக உடையவர் சொல் தவறினார்; இனி நீ சொல்வதால் பயனில்லை என்பதாம். (10) 124. உறுப்பு நலனழிதல் தலைவியின் கண் முதலிய உறுப்புக்கள் அழகிழத்தல். 1231. சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி நறுமலர் நாணின கண். சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி - இவ்வாற்றாமை நம்மிடத்தே நிற்க நெடுந்தொலைவு சென்ற நம் காதலரை நீ நினைத்தழுதலால், கண் நறுமலர் நாணின - நின் கண்கள் ஒளியிழந்து, முன் தமக்கு நாணிய நறுமலர்களுக்குத் தாம் இப்போது நாணிவிட்டன. ஆற்றாமை மிகுதியால் வேறுபட்ட தலைமகளுக்குத் தோழி சொல்லியது. இவை கண்டார் அவரைக் கொடுமை கூறுவர்; நீ ஆற்ற வேண்டுமென்பது கருத்து. (1) 1232. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாருங் கண். பசந்து பனிவாரும் கண் - பசப்பெய்தி நீர் வடிகின்ற நின் கண்கள், நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் - நம்மால் விரும்பப்பட்டவரது அருளாமையைப் பிறர்க்குச் சொல்லு கின்ற போலும்! இனி நீ ஆற்றல் வேண்டும் என்பதாம். இதுவுமது. (2) 1233. தணந்தமை சால வறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள். மணந்த நாள் வீங்கிய தோள் - காதலரை மணந்த நாட்களில் இன்பமிகுதியால் பெருத்த நின் தோள்கள், தணந்தமை சால அறிவிப்ப போலும் - அவர் பிரிந்தமையை மிகவும் உணர்த்து கின்றன போல மெலிகின்றன. இஃதறிந்தார் அவரைப் பழிப்பர் என்பதாம். இதுவுமது. (3) 1234. பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் பணை நீங்கி - துணைவரை நீங்கப்பெற்று அதனால் பழைய அழகை இழந்த தோள்கள் மெலிந்து, பைந்தொடி சோரும் - பசிய பொன்னால் செய்த வளையல் கழலுகின்றன. இதுவுமது. பணை - பெருமை. கவின் - அழகு. (4) 1235 கொடியார் கொடுமை யுரைக்குந் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். தொடியொடு தொல்கவின் வாடிய தோள் - வளையல்களும் கழன்று, பழைய அழகையும் இழந்த இத்தோள்கள், கொடியார் கொடுமை உரைக்கும் - கொடிய காதலரது கொடுமையைத் தாமே சொல்லுகின்றன, அயலார் சொல்ல வேண்டியதில்லை. இதுவுமது. (5) 1236. தொடியொடு தோணெகிழ நோவ லவரைக் கொடிய ரெனக்கூற னொந்து. தொடியொடு தோள் நெகிழ - யான் ஆற்றவும் என் வழிப் படாது, வளையல்கள் கழலுமாறு தோள்கள் மெலிய, அவரைக் கொடியர் எனக் கூறல் நொந்து நோவல் - நீ அவரைக் கொடியர் என்று கூறுதற்குப் பொறுக்காமல் வருந்துகின்றேன். தலைமகள் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (6) 1237. பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூச லுரைத்து. நெஞ்சே - நெஞ்சமே! கொடியார்க்கு என் வாடுதோள் பூசல் உரைத்து - நீ கொடியவராகிய காதலர்க்கு எனது மெலிகின்ற தோள்கள் ஊரில் உண்டாக்கிய அலரை உரைத்து, பாடு பெறுதியோ - அதனால், மேம்பாடு பெறுவாயோ? இயற்பழிப்புப் பெறாது தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. பூசல் - பலரறிதல். நின் உரை கேட்டதும் அவர் வருவர்; வந்தால் இத்துன்பமெல்லாம் நீங்கும்; காலத்தினால் செய்த இவ்வுதவியால் நீ பெருமை பெறுவாய் என்னுங் கருத்தால், நெஞ்சே நீ பாடு பெறுவாய் என்றாள். (7) 1238. முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல். முயங்கிய கைகளை ஊக்க - அவளை இறுகத் தழுவிய கைகளை அவளுக்கு நோகுமென்று எண்ணி ஒரு நாள் சிறிது தளர்த்தவே, பைந்தொடிப் பேதை நுதல் பசந்தது - அப்போதே பசிய வளையல்களையுடைய பேதையின் நெற்றியானது பசலை நிறம் எய்தியது. வினை முடித்து மீளலுற்ற தலைமகன் முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது. இனிக் கடிதில் செல்ல வேண்டுமென்பது கருத்து. (8) 1239. முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண். முயக்கிடைத் தண் வளி போழ - அவ்வாறு தழுவிய கைகளைத் தளர்த்தினதால், அத்தழுவிய என் கைகளுக்கும் அவளுக்கும் இடையே சிறு காற்று நுழையவே, பேதை பெரு மழைக் கண் பசப்புற்ற - அவ்வளவு நுண்ணிய இடையீட்டையும் பொறாது பேதையின் பெரிய குளிர்ந்த கண்கள் பசப்புற்றன. இதுவுமது. அத்தன்மையான கண்கள் மலையும் காடும் நாடுமாகிய இவ்விடையீடுகளை எவ்வாறு பொறுத்தனவோ? இடையீடு - இடைவெளி. தண்மை - மென்மை. (9) 1240. கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு. ஒள்நுதல் செய்தது கண்டு - ஒளிபொருந்திய நெற்றி பசந்தது கண்டு, கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று - தண்வளி போழவந்த (1239) கண்ணின் பசலை துன்ப முற்றது. இதுவுமது. நுதலோ கைகளைத் தளர்த்தப் பசந்தது; யானோ கைகளையும் தளர்த்தி, மெய்களும் நீங்கிக் காற்று இடையே செல்லுமளவும் பசந்திலேனெனத் தன் வன்மையும் நுதலின் மென்மையுங் கருதிக் கண் வெள்கிற்றென்பதாம். ஆகவே, கடிதிற் சேர்வோம் என்பது கருத்து. (10) 125. நெஞ்சொடுகிளத்தல் ஆற்றாமைமிக்க தலைவி தன் நெஞ்சொடு சொல்லுதல். 1241. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே யெனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கு மருந்து. நெஞ்சே - நெஞ்சமே! எவ்வ நோய் தீர்க்கும் மருந்து ஒன்று - தீராத இக்காம நோயைத் தீர்க்கும் ஒரு மருந்தை, எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாயோ - யானறியும்படி எப்படியாவது அறிந்து எனக்குச் சொல்ல மாட்டாயோ? தலைவி தன் ஆற்றாமை தீரும்வகை நாடியது. எவ்வம் - ஒன்றானும் தீராதது. (1) 1242. காத லவரில ராகநீ நோவது பேதைமை வாழியென் னெஞ்சு. என் நெஞ்சு வாழிய - என் நெஞ்சே! வாழ்வாயாக; அவர் காதல் இலராக நீ நோவது பேதைமை - அவர் நம்மிடம் காதல் இல்லாதவராயிருக்க, அவர் வரவு நோக்கி நீ வருந்துவது அறியாமையே. தலைமகனைக் காணும் வேட்கை மிகுதியால் சொல்லியது. யாம் அவர்பால் சேறலே அறிவாகும் என்பதாம். (2) 1243. இருந்துள்ளி யென்பரித னெஞ்சே பரிந்துள்ளல் பைதனோய் செய்தார்க ணில். நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் - நெஞ்சே! இங்கு இருந்து நினைத்து வருந்துவது எதற்கு, பைதல்நோய் செய்தார்கண் பரிந்து உள்ளல் இல் - இத்துன்ப நோயை உண்டாக்கியவரிடம் நமக்காக இரங்கி நம்மிடம் வரும் நினைப்பு இல்லை. இதுவுமது. நம்மீது அருளின்மையால் அவர் வரார்; நாம் சேறலே தக்க தென்பதாம். (3) 1244. கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத் தின்னு மவர்க்காண லுற்று. நெஞ்சே கண்ணும் கொளச்சேறி - நெஞ்சே! நீ அவர் பால் செல்லும்போது இக்கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக, இவை அவர்க்காணல் உற்று என்னைத் தின்னும் - இக்கண்கள் அவரைக் காண விரும்பி நீ காட்டென்று என்னைத் தின்பன போல வருத்துகின்றன. தான் சேறல்வேண்டுமென்பது கருத்து. இதுவுமது. (4) 1245. செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயா முற்றா லுறாஅ தவர். நெஞ்சே - நெஞ்சமே! யாம் உற்றால் உறாதவர் - நாம் விரும்பினால் தாம் நம்மை விரும்பாத நம் காதலரை, செற்றார் எனக் கைவிடல் உண்டோ - நம்மை வெறுத்தாரென்று கைவிடும் ஆற்றல் நமக்கு உண்டோ? இல்லை. இதுவுமது. அவர்பால் செல்வதே நமக்குத் தகுதி என்பதாம். (5) 1246. கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்தியென் னெஞ்சு. என் நெஞ்சு - என் நெஞ்சமே! கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்து உணராய் - நாம் அவரோடு புலந்தால் அப்புலவியைக் கலவியாலே நீக்கவல்ல காதலரைக் கண்டால் பொய்யாகவேனும் ஒருமுறை புலந்து பின்னதனை நீங்கமாட்டாய், பொய்க்காய்வு காய்தி - அதுவும் மாட்டாத நீ இப்பொழுது அவர் கொடியரென அவர்மீது பொய்க்காய்வு காய்கின்றாய்; இதில் பயனில்லை யாதலால் அவரிடம் செல்லத் துணிவாயாக. தலைமகன் கொடுமை நினைந்து செலவுடன் படாத நெஞ் சொடு கூறியது. காய்தல் - வெகுளல். (6) 1247. காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேனிவ் விரண்டு. நல் நெஞ்சே - நல்ல நெஞ்சே! ஒன்று காமம் விடு - ஒன்று காமத்தை விடு, ஒன்று நாண்விடு - அல்லது நாணத்தை விடு, இவ்விரண்டு யானோ பொறேன் - ஒன்றற் கொன்று மறுதலையாய இவ்விரண்டையும் நான் பொறுக்க மாட்டேன். நாண் தடுத்தலின் அச்செலவொழிவாள் சொல்லியது. (7) 1248. பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதையென் னெஞ்சு. என் நெஞ்சு - என் நெஞ்சே! அவர் பரிந்து நல்கார் என்று - அவர் வருத்தமுற்று வந்து அருள் செய்யார் என்று நினைத்து, பிரிந்தவர் பின் ஏங்கிச் செல்வாய் பேதை - நம்மைப் பிரிந்துபோன அவர் பின்னால் ஏங்கிச் செல்கின்றாய், நீ யாதுமறியாய். இதுவுமது. (8) 1249. உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ யாருழைச் சேறியென் னெஞ்சு. என் நெஞ்சு - நெஞ்சே! காதலவர் உள்ளத்தாராக - காதலர் உள்ளேயிருக்க, நீ உள்ளி யாருழைச் சேறி - நீ வெளியில் தேடிச் செல்வது யாரிடத்து? இதுவுமது. உன்னுள்ளே இருப்பாரைப் புறத்தே தேடிச் செல்வது நகைப்புக் கிடமாகும் என்பதாம். (9) 1250. துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா வின்னு மிழத்துங் கவின். துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா - நம்மைச் சேராது நீங்கினவரை உள்ளத்தில் உடையேமாயின், இன்னும் கவின் இழத்தும் - முன்னிழந்ததே யல்லாமல் இன்னும் நமது அழகை இழப்போம். அவரை மறந்து ஆற்றல் வேண்டும் எனச் சொல்லியது. உடலழகே யன்றி நிறையும் இழப்பேம் என்பதாம். (10) 126. நிறையழிதல் தலைமகள் மனத்தில் அடக்கவேண்டியவற்றை வேட்கை மிகுதியால் அடக்கமாட்டாது வெளிவிடுதல். 1251. காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னு நாணுத்தாழ் வீழ்த்த கதவு. நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு - நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் கதவை - காமக்கணிச்சி உடைக்கும் - காமமாகிய கோடரி உடைத்து விடும்; இனி அவை நிற்றலும் இல்லை, நான் ஆற்றலும் இல்லை. நாணும் நிறையும் அழியாமல் ஆற்றவேண்டு மென்ற தோழிக்குச் சொல்லியது. நாணுள்ளளவும் நிறையழியா தாகலின் அதைத் தாழாக்கியும், அகத்துள்ளதைப் பிறர் கொள்ளாமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும், தாமாக நீங்காத அவ்விரண் டையும் ஒருங்கு நீக்குதலின் காம வேட்கையைக் கணிச்சி யாக்கியும் கூறினாள். (1) 1252. காம மெனவொன்றோ கண்ணின்றென் னெஞ்சத்தை யாமத்து மாளுந் தொழில். காமம் என ஒன்று ஓ கண் இன்று - காமம் என்ற ஒன்று ஐயோ! கண்ணோட்ட மில்லாததாக இருக்கின்றது; என் நெஞ் சத்தை யாமத்தும் தொழில் ஆளும் - அது என் நெஞ்சத்தை எல்லாரும் தொழிலொழியும் நடு இரவிலும் தொழில் கொள் கின்றது. நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப் படும் என்றாட்குச் சொல்லியது. ஓ - இரக்கம். (2) 1253. மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போற் றோன்றி விடும். காமத்தை யான் மறைப்பேன் - இக்காமத்தை யான் என் னுள்ளே மறைக்கக் கருதுவேன், குறிப்பு இன்றித் தும்மல் போல் தோன்றிவிடும் - அது என் எண்ணத்தின்படி மறைந்து நிற்காமல் தும்மல்போல வெளிப்பட்டே விடுகின்றது. மகளிர் காமம் மறைக்கப்படும் என்றாட்குச் சொல்லியது. தும்மல் அடங்காமை போல அடங்கு கின்றதில்லை என்பதாம். ஓ - இரக்கம். (3) 1254. நிறையுடையே னென்பேன்மன் யானோவென் காம மறையிறந்து மன்று படும். யான் நிறையுடையேன் என்பேன் - இதுவரைக்கும் யான் என்னை நிறையுடையேன் என்று எண்ணியிருந்தேன், என் காமம் மறை இறந்து மன்றுபடும் - ஆனால் இப்போது எனது காமம் தனது மறைவிடத்தைக் கடந்து அவையின் கண் வெளிப்படு கின்றது. இதுவுமது. மன்றுபடுதல் - பலருமறிதல். இனி என்னால் அடக்க முடியா தென்பதாம். (4) 1255. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ யுற்றா ரறிவதொன் றன்று. செற்றார் பின் செல்லாப் பெருந்தகைமை - தம்மைப் பிரிந்து சென்றார்பின் செல்லாத நிறையுடைமை, காம நோய் உற்றார் அறிவது ஒன்று அன்று - காமநோய் உற்றவரால் அறியப்படுவது ஒன்றன்று. நம்மை மறந்தாரை நாமும் மறந்துவிடுவோம் என்றாட்குச் சொல்லியது. பின் செல்லல் - இடைவிடாது நினைத்தல். செற்றார் - பகைவர். அன்பின்றிப் பிரிந்து செல்வதால், 'செற்றார்' என்றாள். (5) 1256. செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ எற்றென்னை யுற்ற துயர். செற்றவர் பின் சேறல் வேண்டி - என்னைவிட்டுச் சென்றவர் பின்னே யான் செல்வதை விரும்புதலால், என்னை உற்ற துயர் எற்று அளித்து - என்னை வந்தடைந்த துன்பமானது எத்தகையது! மிக நன்றாக விருக்கிறது. இதுவுமது. இக்காமநோய் நான் சொல்லவும் கேட்கவும் கூடியதன்று; மிகவும் கொடியதென்பதாம். (6) 1257. நாணென வொன்றோ வறியலங் காமத்தாற் பேணியார் பெட்ப செயின். பேணியார் காமத்தால் பெட்ப செயின் - நம்மால் விரும்பப் பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்புவன வற்றைச் செய்தால், நாண் என ஒன்றோ அறியலம் - நாணம் என்ற ஒன்றையும் அறிய மாட்டோம். பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனோடு நிறையழிவால் கூடிய தலைமகள், நீ புலவாமைக்குக் காரணம் யாதென்ற தோழிக்குச் சொல்லியது. பரத்தை இல் பிரிதல் - பரத்தை வீட்டுக்குச் செல்லல். பரத்தை - வரைவின்மகளிர். ஒரு சிலரிடை நடந்து வந்த இத்தீய ஒழுக்கத்தை ஊடலுக்குக் காரண மாக்குவது நூன்மரபு. நிறை யழிவால் அறியாது கூடிய தன் குற்றத்தை நோக்கித் தோழியையும் உளப்படுத்தினாள். (7) 1258. பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம் பெண்மை யுடைக்கும் படை. நம் பெண்மை உடைக்கும் படை - நமது நிறையாகிய அரணை உடைக்கும படையானது, பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ - பல பொய்களில் வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்க ளன்றோ? இதுவுமது. பெண்மை - நிறை. தலைவன் வந்தால் புலந்து அவன் சொற்செயல்களால் புலவி நீங்கோமென்று இருந்தன வெல்லாம் ஒழிய, கலவியால் நாமே முந்தும் வகைவந்தான் என்பாள், 'பன்மாயக் கள்வன்' என்றாள். (8) 1259. புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சங் கலத்த லுறுவது கண்டு. புலப்பல் எனச் சென்றேன் - அவர் வந்தால் பிணங்குவேன் என்று எண்ணிப் பிறிதோரிடம் சென்றேன், நெஞ்சம் கலத்த லுறுவது கண்டு புல்லினேன் - அவ்வாறு சென்றும் எனது நெஞ்சம் நிறையில் நில்லாது அறைபோய் அவரோடு கலப்பதைக் கண்டு அவரைத் தழுவிக் கொண்டேன். இதுவுமது. நிறையில் நில்லாது - அடங்கியிராமல். அறை போதல் - தன்னை விட்டு அவனைச் சேர்தல். புலத்தற்குக் காரண மாகிய நெஞ்சே கலத்தற்குக் காரணமாய் நிற்றலின் புலத்தல் முடியா தென்பதாம். (9) 1260. நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்தூடி நிற்பே மெனல். நிணம் தீயில் இட்டு அன்ன நெஞ்சினார்க்கு - கொழுப்பைத் தீயிலிட்டால் அது உருகுமாறு போலத் தங் காதலரைக் கண்டால் நிறையழிந்துருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்கு, புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ - காதலர் தம்மை நெருங்கத் தாம் ஊடிப் பின் உணராது நிற்பேம் என்று கூறுதல் உண்டாகுமோ? ஆகாது. யான் அத்தன்மையேன் ஆகலின் என்னால் அவ்வாறு நிற்க முடியா தென்பதாம். இதுவுமது. (10) 127. அவர்வயின்விதும்பல் தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காண்பதற்கு விரைதல். காண மிக்க ஆசை கொள்ளுதல். விதும்பல் - விரைதல். 1261. வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். அவர் சென்ற நாள் ஒன்றி விரல் தேய்ந்த - அவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்ற நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத்தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற - அதுவேயன்றி, என் கண்களும் அவர் வரவைப் பார்த்துப் பார்த்து ஒளியிழந்து புல்லியவாயின. இவ்வாறாயும் அவர் வரவில்லை. தலைமகள் காண்டல் விதுப்பினால் சொல்லியது. புல்லிய வாதல் - கண் மங்கி நுண்ணிய பொருளைக் காண மாட்டாமை. (1) 1262. இலங்கிழா யின்று மறப்பினென் றோண்மேற் கலங்கழியுங் காரிகை நீத்து. இலங்கு இழைhய் - விளங்குகின்ற அணிகளை யுடையவளே! இன்று மறப்பின் - காதலரை மறப்பேனாயின், என் மென் தோள் காரிகை நீத்துக் கலம் கழியும் - என் மெல்லிய தோள்கள் தன் அழகை நீக்கி வளையல்களைக் கழலவிடும். ஆகவே, என்னால் மறக்க முடியவில்லை என்பதாம். ஆற்றாமை மிகுதலின் எப்போதும் நினையாது சிறிது மறக்க வேண்டு மென்ற தோழிக்குச் சொல்லியது. (2) 1263. உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார் வரனசைஇ யின்னு முளேன். உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் - வெற்றியை விரும்பித் தமது ஊக்கமே துணையாகச் சென்றவர், வரல் நசைஇ இன்னும் உளேன் - திரும்பி வருதலை விரும்பி இன்னும் யான் உயிருடன் இருக்கிறேன். இதுவுமது. அவ்விருப்பத்தால் உயிர் வாழ்கின்றேன். அஃதில் லையாயின் இறந்துவிடுவேன் என்பதாம். (3) 1264. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் னெஞ்சு. பிரிந்தார் கூடிய வரவு உள்ளி - நம்மைவிட்டுப் பிரிந்து போனவர் மிக்க காமத்துடன் நம்மிடம் வருதலை நினைந்து, என் நெஞ்சு கோடு கொடு ஏறும் - என் நெஞ்சம் மரக்கிளை மேல் ஏறிப் பார்க்கின்றது. இதுவுமது. வினைவயிற் பிரியும்போது காமவின்பம் நோக்கா மையும், வினை முடிந்ததும் அதையே நோக்குதலும் தலைமகனுக்கு இயல்பாகலின், கூடிய காமம் என்றாள். போனவர் வருகின்றாரா என மரமேறிப் பார்த்தல் உலக வழக்கு. மிக விரைகின்றது என்பது கருத்து. (4) 1265. காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்குமென் மென்றோட் பசப்பு. கொண்கனைக் கண்ணாரக் காண்க - எனது கணவனை யான் கண்ணாரக் காண்பேனாக; கண்டபின் என் மென் தோள் பசப்பு நீங்கும் - கண்ட பிறகு என் மெல்லிய தோள் களின் பசலை நிறம் தானே நீங்கிவிடும். தலைமகன் வரவு கூறி, ஆற்றாமல் பசக்கற்பாலை யல்லை என்ற தோழிக்குச் சொல்லியது. கேட்பதால் நீங்கா தென்பதாம். காண வேண்டும் என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசை. (5) 1266. வருகமற் கொண்க னொருநாட் பருகுவன் பைதனோ யெல்லாங் கெட. கொண்கண் ஒரு நாள் வருக - இவ்வளவு நாளாய் வராத என் கணவன் ஒருநாள் வருவானாக; பைதல் நோயெல்லாம் கெடப் பருகுவன் - வந்தால், துன்பம் செய்கின்ற இந்நோய் அனைத்தும் கெட அவனை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தாலும் பருகுவேன் (1101) இதுவுமது. (6) 1267. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின். கண்அன்ன கேளிர் வரின் - கண்போன்ற தலைவர் வருவா ராயின், புலப்பேன் கொல் - அவர் வராது நீட்டித் தமைக்காகப் புலப் பேனோ? புல்லுவேன் கொல்- அல்லது அவரைக் கட்டித் தழுவிக் கொள்வேனோ? கலப்பேன் கொல் - அல்லது புலத்தல் புல்லுதல் என்னும் இரு செயல்களையும் ஒன்றாகக் கலப்பேனோ? யாது செய்வேன்? இதுவுமது. புலவியும் புல்லலும் ஒரே நேரத்தில் கலவா மையின், கலப்பேன்கொல் லென்றாள். மூன்றையுஞ் செய்தல் கருத்தாகலின் விதுப்பாயிற்று. (7) 1268. வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை யயர்கம் விருந்து. வேந்தன் வினைகலந்து வென்றீக - வேந்தன் போர் செய்து வெல்வானாக; மனைகலந்து மாலை விருந்து அயர்கம் - யானும் மனைவியுமாக மாலைப் பொழுதுக்கு விருந்து நடத்துவோமாக. வேந்தற் குற்றுழிப் பிரிந்த தலைவன், வினைமுடிவு நீட்டித்த விடத்துத் தலைவியை நினைந்து தன்னுள்ளே சொல்லியது. உற்றுழிப் பிரிதல் - போர்த்துணையாகப் பிரிதல். மாலை விருந்து - தலைவி தலைவனை எதிர் கொள்ளுதல், அணிசெய்தல் முதலியன. (8) 1269. ஒருநா ளெழுநாண்போற் செல்லுஞ்சேட் சென்றார் வருநாள்வைத் தேங்கு பவர்க்கு. சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு - நெடுந் தொலைவு சென்ற தலைவர் திரும்பி வரும் நாளைக் குறித்து வருந்தும் மகளிர்க்கு, ஒரு நாள் எழுநாள் போல் செல்லும் - ஒருநாள் பலநாள் போல நெடிதாகச் செல்லும். இதுவுமது. ஏழ் - பன்மை குறித்தது. தலைமகள் வருத்தம் பிறர் மேல் வைத்துக் கூறியது. (9) 1270. பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னா முள்ள முடைந்துக்கக் கால். உள்ளம் உடைந்து உக்கக்கால் - காதலி நம் பிரிவை ஆற்றாது உள்ளம் உடைந்து இறந்து போனால், பெறின் என் - நம்மை அவள் பெறக்கூடியவள் ஆனாலென்ன? பெற்றக்கால் என் - அல்லது பெற்றால்தான் என்ன? உறின் என் - அன்றி மெய்யுறக் கலந்தால்தான் பயனென்ன? இவை ஒன்றாலும் பயனில்லை. அதற்கு முன் யான் செல்ல வேண்டும் என்பது கருத்து. இதுவுமது. ஆம் மூன்றும் - அசை. (10) 128. குறிப்பறிவுறுத்தல் தலைவன் தலைவி தோழி ஆகிய மூவரும் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல். 1271. கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க ணுரைக்க லுறுவதொன் றுண்டு. கரப்பினும் - நீ சொல்லாது மறைத்தாயாயினும், ஒல்லா கை இகந்து - அதற்குடம்படாது உன்னை மீறி, நின் உண்கண் உரைக்கல் உறுவது ஒன்று உண்டு - உன் மையுண்ட கண்கள் எனக்குச் சொல்லு வதான செய்தியொன்று இருக்கிறது; அதனை நீயே சொல்லுக. தலைமகன் பிரிவஞ்சிய தலைமகள் குறிப்பறிந்த தலைமகன் சொல்லியது. தலைவனிடம் பிரிதற்குறிப்பு உளதாகக் கருதி வேறு பட்டாளது வேறுபாட்டைக் குறிப்பாலறிந்து, அவட்குப் பிரியாமைக் குறிப்புணர்த்தியது. (1) 1272. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்ணிறைந்த நீர்மை பெரிது. கண் நிறைந்த காரிகை - என் கண் நிறைந்த அழகையும், காம்பு ஏர் தோள் பேதைக்கு - மூங்கில் போன்ற தோள் களையும் உடைய நின் தலைவிக்கு, பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்பாலரி டத்து நிறைந்த மடமை மற்றவரைக் காட்டிலும் மிகுந்திருக்கின்றது. நாணால் அவள் சொல்லாதபோது தலைமகன் தோழிக்குச் சொல்லியது. மடமை - மனத்திலுள்ளதை வெளிவிடாமை. (2) 1273. மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை யணியிற் றிகழ்வதொன் றுண்டு. மணியில் திகழ்தரு நூல்போல் - கோக்கப்பட்ட கண்ணாடி மணிகளுக்குள்ளே இருந்து புறத்தே தெரிகின்ற நூலைப் போல, மடந்தை அணியில் திகழ்வது ஒன்றுண்டு - உம் மடந்தையின் அழகுக்குள்ளே விளங்குவதாகிய ஒன்று உண்டு. அதை நான் அறியேன், நீ அறிந்து கூறவேண்டும் என்பது கருத்து. இதுவுமது. (3) 1274. முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு. முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் - மலர் முகைக்குள் உள்ள புறத்தே மணக்காத மணம்போல, பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு - நின் பேதையின் புன்முறுவலுக்குள் புறத்துத் தெரியாததோர் குறிப்பு உண்டு. இதுவுமது. மலர்முகை - மலரும் பருவமுள்ள முகை. முகை - பூவரும்பு. மொக்குள் - முதிர்ச்சியால் புடைத்த அரும்பு - பேரரும்பு. (4) 1275. செறிதொடி செய்திறந்த கள்ள முறுதுயர் தீர்க்கு மருந்தொன் றுடைத்து. செறி தொடி செய்து இறந்த கள்ளம் - நெருங்கிய வளை யல்களை உடையாள் என்னிடம் இறந்த தொன்றினை உட் கொண்டு, அதை என்னிடம் சொல்லாது மறைத்துப் போன குறிப்பு, உறு துயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - எனது மிக்க துய ரத்தைத் தீர்க்கும் மருந்தாவ தொன்றினை உடையது. இதுவுமது. உட்கொண்டது - பிரிவு. மறைத்தற் குறிப்பு - தானும் உடன்போக்கு உட்கொண்டது. மருந்து - அப்பிரி வின்மையைத் தோழியால் தெளிவித்தல். நீ அது செய்தல் வேண்டும் என்பதாம். (5) 1276. பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி யன்பின்மை சூழ்வ துடைத்து. பெரிது ஆற்றிப் பெட்பக் கலத்தல் - காதலர் வந்து, தம் பிரி வினால் ஆகிய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும்படி கலக்கின்ற கலவி, அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன் பின்மையை நினைக்குந் தன்மையை உடையது. தலைமகன் குறிப்பறிந்த தலைமகள் அது தெளிவிக்கச் சென்ற தோழிக்கு அதனை அறிவுறுத்தியது. ஆற்றுதல் - பொறுத்தல். பிரிதல் துன்பத்தை யெல்லாம் பொறுத்துக் கொண்டு நாம் மகிழும்படி செய்வது, பின்னும் அப்பிரிவை நினைக்குந் தன்மையை உடைய தென மறுத்துக் கூறியது. (6) 1277. தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினு முன்ன முணர்ந்த வளை. தண்ணந் துறைவன் தணந்தமை - குளிர்ந்த துறையை யுடை யவன் மெய்யால் கூடியிருந்தே மனத்தால் பிரிந்தமையை, நம்மினும் வளை முன்னம் உணர்ந்த - அவன் குறிப்பால் அறிதற்குரிய நம்மினும் அவ்வளையல்கள் முன்னே அறிந்தன. இதுவுமது. நான் நன்கு அறிவதற்கு முன்னே என் தோள்கள் மெலிந்தன என்பாள், வளைகள் அறிந்தன என்றாள். (7) 1278. நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு தெழுநாளே மேனி பசந்து. எம் காதலர் நெருநற்றுச் சென்றார் - எமது காதலர் நேற்றுப் பிரிந்து போனார், யாமும் மேனி பசந்து எழு நாளேம் - ஆனால், அப்பிரிவுக்கு யாமும் மேனி பசப்புற்று ஏழு நாளுடைய மாயினேம். இதுவுமது. நேற்றுச் செய்த அன்பினால் பிரிவு துணியப் பட்ட தென்பாள், நேற்றுச் சென்றார் என்றும், ஐயத்தால் முன்பே மேனி பசந்ததென்பாள், மேனி பசந்தெழு நாளேம் என்றும் கூறினாள். காதலர் நேற்றுச் செல்லத் துணிந்தார்; ஆனால், என் மேனி பசப் புற்றுப் பல நாட்கள் ஆயின என்பதாம். ஏழ் - பல. (8) 1279. தொடிநோக்கி மென்றாளு நோக்கி யடிநோக்கி யஃதாண் டவள்செய் தது. யான் தெளிவிக்கத் தெளியாது, தொடி நோக்கி - அவர் பிரிய நான் இங்கிருப்பின் இவை நில்லா என வளையல் களைப் பார்த்து, மென்தோளும் நோக்கி - அதற்கேதுவாக இவை மெலியுமெனத் தன் மெல்லிய தோள்களையும் பார்த்து, அடி நோக்கி - பின்பு, இவ் விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காக்க வேண்டுமெனத் தன் அடி களையும் பார்த்து, ஆண்டு அவள் செய்தது அஃது - அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன்போக்கா யிருந்தது. தலைமகள் குறிப் பறிந்த தோழி அதனைத் தலைமகற் கறிவித்தது. (9) 1280. பெண்ணினாற் பெண்மை யுடைத்தென்ப கண்ணினாற் காமநோய் சொல்லி யிரவு. காமநோய் கண்ணினால் சொல்லி இரவு - மகளிர் தங் காம நோயினைத் தோழியர்க்கும் வாயினால் சொல்லாது, உடன் போதல் குறித்துக் கண்ணினால் தம் அடியினை நோக்கி இரத்தல், பெண் ணினால் பெண்மை உடைத்து என்ப - தமக்கியல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்தென்று சொல்லுவர் அறிந்தோர். தலைமகன் தன் பிரிவின்மைக் குறிப்பினைத் தோழிக் கறி வுறுத்தது. (10) 129. புணர்ச்சிவிதும்பல் தலைவனும் தலைவியும் புணர்ச்சி வேட்கையில் விரைதல். 1281. உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. உள்ளக் களித்தலும் - நினைத்த அளவில் களிப்புறுதலும், காண மகிழ்தலும் - கண்ட அளவில் மகிழ்வெய்தலும், கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - கள்ளுக்கு இல்லை காமத்திற்கு உண்டு. பிரிதற் குறிப்பினன் ஆகியானோடு நீ புலவாமைக்குக் காரணம் யாதென நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. உண்டாலல்லது நினைத்தாலும் கண்டாலும் களிக்குந் தன்மை கள்ளுக்கு இல்லை; அத்தகைய காமமுடையாள் புலத்தல் எங்ஙனம் என்பதாம். (1) 1282. தினைத்துணையு மூடாமை வேண்டும் பனைத்துணையுங் காம நிறைய வரின். காமம் பனைத் துணையும் நிறையவரின் - மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிகுதியாக உண்டாயின், தினைத் துணையும் ஊடாமை வேண்டும் - தங் காதலரோடு தினையளவும் ஊடாமல் இருக்கவேண்டும். ஊடின் வருத்த மிகுமெனப் பிறர்க்கு உறுதி கூறுவாள் போலத் தன் விதுப்புக் கூறியது. இதுவுமது. (2) 1283. பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக் காணா தமையல கண். பேணாது பெட்பவே செய்யினும் - நம்மை விரும்பாது தம் மனம் விரும்பியனவே செய்வாராயினும், கொண்கனைக் காணாது கண் அமையல - அக்கணவனைக் காணாமல் என் கண்கள் அமை கின்றன இல்லை. இதுவுமது. தன் விதுப்புக் கண்மே லேற்றப்பட்டது. அத் தன்மையேன் அவனோடு புலக்குமா றெங்ஙனம் என்பதாம். (3) 1284. ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து கூடற்கட் சென்றதென் னெஞ்சு. தோழி - தோழீ! ஊடற்கண் சென்றேன் - காதலரைக் காணாத போது அவர் செய்தவற்றை நெஞ்சோடும் ஆராய்ந்து ஊடுதற் கண்ணே சென்றேன், என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது - கண்டவுடன் என் நெஞ்சு அவ்வூடலை அவரோடு கூடுதற்கண்ணே சென்றது. இதுவுமது. நான் ஊடுதற்குச் சென்றேன்; அது கூடுதற்குச் சென்றது. நெஞ்சு அறை போனதால் ஊட முடியவில்லை என்பதாம். செலவால் பயனென் என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசை. (4) 1285. எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து. எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல் - முன் பெல்லாம் கண்டிருந்தும் மையெழுதுங் காலத்துக் கோலைக் காண மாட்டாத கண்களைப் போல, கொண்கன் பழி கண்ட விடத்துக் காணேன் - கணவன் தவற்றை, அவனைக் காணாத விடத்தெல்லாம் கண்டிருந்தும் அவனைக் கண்ட விடத்துக் காணமாட்டேன். என் னியல்பு இதுவாகலின் ஊட முடியா தென்பதாம். இதுவுமது. (5) 1286. காணுங்காற் காணேன் றவறாய காணாக்காற் காணேன் றவறல் லவை. காணுங்கால் தவறாய காணேன் - கணவனை யான் காணும் போது அவனிடம் தவறாயவற்றைக் காண்கின்றி லேன், காணாக்கால் தவறல்லவை காணேன் - அவனைக் காணாத பொழுது தவறல்லாத பிறவற்றைக் காண்கின்றி லேன். நான் முன் சொல்லிய தவறுகள் இப்போது காணாமையின் புலந்திலேனென் பதாம். இதுவுமது. (6) 1287. உய்த்த லறிந்து புனல்பாய் பவரேபோற் பொய்த்த லறிந்தென் புலந்து. உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல் - தம்மை இழுத்துக் கொண்டு போவதை அறிந்திருந்தும் ஓடுகின்ற நீரில் பாய்கின்ற வரைப் போல, பொய்த்தல் அறிந்து புலந்து என் - புலத்தல் பொய் படுவதை அறிந்தும் புலந்து பயனென்ன? பொய்படுதல் - புலப்பதால் பயனில்லையாதல். இதுவுமது. (7) 1288. இளித்தக்க வின்னா செயினுங் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு. கள்வ - வஞ்சக! நின் மார்பு - எங்கட்கு - நின் மார்பு, களித் தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் கள்ளற்றே - தன்னை யுண்டு களித்தார்க்கு இழிவு தரத்தக்க துன்பந் தருவனவற்றைச் செய்தாலும் அவரால் மேன்மேல் விரும்பப் படும் கள்ளே போலும். தலைமகள் புணர்ச்சிவிதுப் பறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது. அத்துன்பந் தருவன - நாணின்மை, நிறை யின்மை, ஒழுக்கமின்மை, உணர்வின்மை முதலாயின. எங்கட்கு நாணின்மை முதலியவற்றைத் தரினும் எங்களால் மேன்மேல் விரும்பப் படுகின்ற தென்பதாம். (8) 1289. மலரினு மெல்லிது காமஞ் சிலரதன் செவ்வி தலைப்படு வார். காமம் மலரினும் மெல்லிது - காமவின்பம் மலரினும் மெல்லி யதாயிருக்கும்; அதன் செவ்வி தலைப்படுவார் சிலர் - அங்ஙனம் மெல் லியதாதலை அறிந்து அதன் செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலராவர். உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. செவ்வி - ஏற்றகாலம். காதற் குறிப்பும், காம வேட்கையும், காம நுகர்ச்சியும், இன்பமும் ஒரு காலத்தே ஒத்து நுகர்தற் குரியார் இருவர், அதற்கேற்ற இடமும் காலமும் கருவிகளும் பெற்றுக் கூடி நுகரவேண்டுதலின், அதன் செவ்வி தலைப் படுவார் சிலர் என்றும், அவற்றுள் யாதானும் ஒன்றினால் சிறிது வேறுபடினும் வாடுதலின் மலரினும் மெல்லிதென்றுங் கூறினான். உணர்ப்புவயின் வாரா ஊடல் - உணர்த்த உணராத ஊடல். (9) 1290. கண்ணிற் றுனித்தே கலங்கினாள் புல்லுத லென்னினுந் தான்விதுப் புற்று. கண்ணில் துனித்தே - என் காதலி, முன்னொரு நாள் புல்லல் விதுப்பினால் சென்ற என்னோடு தன் கண்ணால் மட்டும் ஊடி - புல்லுதல் என்னினும் தான் விதுப்புற்றுக் கலங்கினாள் - புணர்தலை என்னைப் பார்க்கிலும் தான் விரைதலால் அவ்வூடலையும் அப் பொழுதே மறந்து கூடிவிட்டாள். கண்ணால் மட்டும் ஊடல் - சொல்லாடாமல் கண் சிவத்தல். இதுவுமது. (10) 130. நெஞ்சொடுபுலத்தல் காரண முண்டாய விடத்தும், புலக்கக் கருதாது புணர்ச்சி விதும்புகின்ற நெஞ்சுடனே தலைமகள் புலத்தலும், தலைமகன் புலத்தலுமாம். 1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே நீயெமக் காகா தது. நெஞ்சே - நெஞ்சே! அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் - நம் காதலருடைய நெஞ்சும் நம்மை நினையாது அவருக்காக நிற்பதைக் கண்டும், நீ எமக்கு ஆகாதது எவன் - நீ எமக்காக நிற்காமல் அவரை நினைப்பது யாது கருதி? தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது. அவர்க் காதல் - அவர் கருதி யதற்கு உடம்படல். எமக்காகாத தென்றது - புலவிக்கு உடம் படாமையை. ஒரு செயலைத் தாமாக அறிந்து செய்ய மாட்டாதவர் செய்வாரைக் கண்டாயினும் செய்வர்; நீ அதுவும் செய்கின்றா யில்லை யென்பதாம். (1) 1292. உறாஅ தவர்க்கண்ட கண்ணு மவரைச் செறாஅரெனச் சேறியென் னெஞ்சு. என் நெஞ்சு - என் நெஞ்சே! உறாதவர்க் கண்ட கண்ணும் - நம்மிடம் அன்புறாதவரை உள்ளவா றறிந்த விடத்தும், செறாரென அவரைச் சேறி - நாம் சென்றால். வெகுளார் என்று நினைத்து அவரிடம் சேர்கின்றாய்; இதைக் காட்டிலும் ஓர் அறியாமை உண்டோ? பழமை பற்றி வெகுளாரென்று நீ கருதியது தவறு என்ப தாம். இதுவுமது. (2) 1293. கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல். நெஞ்சே - நெஞ்சே! நீ பெட்டாங்கு அவர்பின் செலல் - என்னிடம் நில்லாமல் நீ விரும்பியவாறே அவரிடம் செல்லுதற்குக் காரணம், கெட்டார்க்கு நட்டார் இல்லென்பதோ - கெட்டார்க்கு நண்பர் உலகத்தில் இல்லையென்னும் நினைவோ? உன் இயல்போ? சொல். இதுவுமது. என்னைவிட்டு அவரிடம் சேறல் நீ முன்பே பழகி னது என்பாள் பெட்டாங்கு என்றும், தானிதுபொழுது மானமில ளாகலின் கெட்டார்க் கென்றுங் கூறினாள். (3) 1294. இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று. நெஞ்நே - நெஞ்சே! துனி செய்து மற்று துவ்வாய் - நீ அவரைக் கண்டதும் அவர் தவறு நோக்கி முன் புலந்து, அதனை அளவறிந்து பின் நுகரக் கருதமாட்டாய்; இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் - இனி அப்படிப்பட்ட வைகளை நின்னுடன் எண்ணுபவர் யார்? யானது செய்யேன். இதுவுமது. முன்னெல்லாம் புலப்பதாக எண்ணியிருந்து பின் புணர்ச்சி விதும்பலின் இவ்வாறு கூறினாள். (4) 1295. பெறாஅமை யஞ்சும் பெறிற்பிரி வஞ்சும் அறாஅ விடும்பைத்தென் னெஞ்சு. பெறாமை அஞ்சும் - காதலரைப் பெறாதபோது புணர்ச்சி இல்லையே என்று அஞ்சி நிற்கும், பெறின் பிரிவு அஞ்சும் - பெற்றால் பிரிவாரோ என்று அஞ்சி நிற்கும், என் நெஞ்சு அறா இடும் பைத்து - ஆகையால், என் நெஞ்சம் இடையறாத துன்பத்தை உடையது. வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகன் சொல்லியது. வாயில் - தூது. (5) 1296. தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத் தினிய விருந்ததென் னெஞ்சு. என் நெஞ்சு இருந்தது - என் நெஞ்சு காதலரைப் பிரிந்து இங்கிருப்பது, தனியே இருந்து நினைத்தக்கால் - காதலரைப் பிரிந்து தனியாக இருந்து அவர் கொடுமைகளை யான் இதனோடு நினைத்தால், என்னைத் தினிய - என்னைத் தின்பது போலத் துன்பம் செய்வதற்கே. இதுவுமது. துன்பம் செய்வதற்கே இங்கிருப்பது எனக் கூட்டுக. எம்மிடம் அன்று இருந்தது எனக்குத் துன்பம் செய்வ தற்கே யன்றி, அவர் தவறு நோக்கி அவரோடு புலத்தற்கன்று என்பதாம். (6) 1297. நாணு மறந்தே னவர்மறக் கல்லாவென் மாணா மடநெஞ்சிற் பட்டு. அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சில் பட்டு - என்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத மாட்சிமையும் அறிவு மில்லாத என் நெஞ்சுடன் கூடி, நாணும் மறந்தேன் - என் உயிரினும் சிறந்த நாணத்தையும் மறந்து விட்டேன். இதுவுமது. (7) 1298. எள்ளி னிளிவாமென் றெண்ணி யவர்திற முள்ளு முயிர்க்காத னெஞ்சு. உயிர்க் காதல் நெஞ்சு - உயிர்மேல் காதலையுடைய என் நெஞ்சு, எள்ளின் இளிவு ஆம் என்று எண்ணி - நம்மை இகழ்ந்து சென்றாரென்று நாமும் இகழ்வோமாயின் பின் நமக்கு இழிவாகு மென்று எண்ணி, அவர் திறம் உள்ளும் - அவர் திறத்தையே நினைக் கின்றது. இதுவுமது. எள்ளுதல் - வாயில் மறுத்தல். இளிவு - பிரிவாற் றாமை, நாணும் நிறையும் இழத்தல் முதலியன. திறம் - வாயில் நேர்தலும், கூடலும். நேர்தல் - உடம்படல். (8) 1299. துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி. துன்பத்திற்கு - ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது அது நீக்கு வதற்கு, தாம் உடைய நெஞ்சம் துணை அல்வழி - தம்முடைய நெஞ்சம் தமக்குத் துணையாகாவிடத்து, துணை யாவார் யாரோ - வேறு துணையாவார் யார்? ஒருவருமில்லை. உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. துன்பம் - உணர்த்த உணராமை. நெஞ்சம் துணையாகாமை - அன்பிலள் என்னாது அவளைக் கூடற்கு விதும்பல். கியாரே - குற்றியலிகரம். (9) 1300. தஞ்சந் தமரல்ல ரேதிலார் தாமுடைய நெஞ்சந் தமரல் வழி. தாம் உடைய நெஞ்சம் தமரல்வழி - தம்முடைய நெஞ்சம் தமக்கு உறவல்லாத விடத்து, ஏதிலார் தமர் அல்லது தஞ்சம் - அயலார் உறவல்லாதார் ஆகுதல் எளிதன்றோ? இதுவுமது. தஞ்சம் - எளிது. பிறளொருத்தியைக் காதலி யென்று எண்ணி, என்னெஞ்சே என்னை வருத்துகின்றபோது அப்பிறள் புலக்கின்றது எளிது என்பதாம். (10) 131. புலவி இருவர் நெஞ்சம் புணர்ச்சி விரும்பாது புலக்கக் கருதிய வழி, தலைவனும் தலைவியும் ஒருவரோடொருவர் புலர்த்தல். புலத்தல் -மனவேறுபாடு. புலவி, ஊடல் - ஒருபொருட் சொற்கள். 1301. புல்லா திராஅப் புலத்தை யவருறும் அல்லனோய் காண்கஞ் சிறிது. அவர் உறும் அல்லல் நோய் சிறிது காண்கம் - புலந்தால் காதலர் அடையும் துன்ப நோயை நாம் சிறிது காண்போம், புல்லாது இராப் புலத்தை - நீ அவரைத் தழுவாமல் இருந்து பிணங்குவாயாக. வாயிலாகச் சென்ற தோழி, தலைமகள் வாயில் நேர்தற் பொருட்டு அவளோடு நகையாடிச் சொல்லியது. நேர்தல் - உடம் படுதல். இரா - இருந்து. தலைமகளது புலவிக் குறிப்புக் கண்டு அவளுடன் சேர்ந்து, நாமுற்ற வருத்தம் அவரும் சிறிது உற்றறிதல் வேண்டும் என நகையாடி உடம்படுத்தவாறு. பிணங்குதல் - புலத்தல். (1) 1302. உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது மிக்கற்றா னீள விடல். புலவி உப்பு அமைந்தற்று - புணர்ச்சியின்பத்திற் கமைந்த புலவியின் அளவு, உண்பனவற்றை இன்சுவை தருதற்கமைந்த உப்பின் அளவு போன்றது, சிறிது நீளவிடல் அது மிக்கற்று - அப் பிணக்கைச் சிறிது நீட்டித்தல் அவ்வுப்பின் அளவு மிகுத்தாற் போலும். புலவியொழிந்து வாயில் நேரும் வகை தோழி சொல்லியது. நீளவிடல் - அளவறிந்து உணராது, கலவி மேலெழுந்த குறிப்பு நீங்கு மளவுஞ் செய்தல். உப்பு மிக்க விடத்து உண்பது சுவையின்றாதல் போல, புலவி மிக்க விடத்துக் கலவியின்ப மின்றாம் என்பது. (2) 1303. அலந்தாரை யல்லனோய் செய்தற்றாற் றம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் - தம்மை ஏற்றுக் கொள்ளாது புலந்த மகளிரை அப்புலவி நீக்கித் தழுவாது விடுதல், அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று - துன்புற்று வருந்தின வர்க்குப் பின்னுந் துன்பநோய் செய்தாற்போலும். பரத்தையரிடத்து நின்றும் வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது. (3) 1304. ஊடி யவரை யுணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. ஊடியவரை உணராமை - தம்மோடு ஊடிய மகளிரை ஊடல் தீர்த்துக் கூடாதிருத்தல், வாடிய வள்ளி முதல் அரிந்தற்று - நீரின்றி வாடிய கொடியை அடியிலே அறுத்தாற் போலும். இதுவுமது. முன்னமே ஊடுதற்குக் காரணமாகிப் பின்னும் ஊடல் தீர்த்துக் கூடாதது அழகிதன்று என்பதாம். (4) 1305. நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை பூவன்ன கண்ணா ரகத்து. நலத்தகை நல்லவர்க்கு ஏர் - நற்குணங்களால் தகுதி யுடையராய தலைவர்க்கு அழகாவது, பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம்முடைய பூப்போலும் கண்ணார் நெஞ்சில் நிகழும் புலவியேயாகும் தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. அழகு - இன்பந்தருதல். தானுகர்ந்த இன்பத்திற்கு ஏது வாகிய புலவியை வியந்து கூறியவாறு. (5) 1306. துனியும் புலவியு மில்லாயிற் காமங் கனியுங் கருக்காயு மற்று. துனியும் புலவியும் இல்லாயின் - முதிர்ந்த மனவேறு பாடாகிய துனியும், முதிராத (இளைய) மனவேறுபாடாகிய புலவியும் இல்லை யாயின், காமக் கனியும் கருங்காயும் அற்று - காமமானது மிக முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும். இதுவுமது. மிக முதிர்ந்த பழம் - அழுகிய பழம். புலவி - பொய்ச் சினம். துனி - புலவி நீட்டம். (6) 1307. ஊடலி னுண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொ லென்று. புணர்வது நீடுவது அன்று கொல் என்று - இப்புணர்ச்சி நீடிக் குமோ நீடிக்காதோ என்று எண்ணுவதால், ஊடலின் ஓர் துன்பம் உண்டு - இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலினிடத்தும் ஒரு துன்பம் உண்டு. இதுவுமது. ஊடல் தீர்ந்து கூடின் அவ்வாறே அக்கூட்டத்தின் பின் ஊடலுங் கூடுமாகையால், துன்பம் உண்டு என்றான். (7) 1308. நோத லெவன்மற்று நொந்தாரென் றஃதறியுங் காதல ரில்லா வழி. நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லா வழி - இவர் நமக்காக வருந்தினார் என்று அவ்வருத்தத்தை உணரும் அன்புடைய காதலரை இல்லாத விடத்து, நோதல் மற்று எவன் - ஒருவர் வருந்துவதனால் பயனென்ன? உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தலைமகளோடு புலந்து சொல்லியது. இவள் நம் காதலி அல்லள்; ஆதலால், இந்நோயறியாதவளிடம் புலப்பதனால் பயனில்லை எனத் தன்னாற்றாமை உணர்த்தியவாறு. (8) 1309. நீரு நிழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே யினிது. நீரும் நிழலதே இனிது - உயிர்வாழ்வுக் கின்றியமையாத நீரும் நிழலினிடத் துள்ளதாயின் இனிதாகும், புலவியும் வீழுநர் கண்ணே இனிது - அதுபோலக் கலவிக் கின்றியமை யாத புலவியும் அன்புடையாரிடத் துள்ளதாயின் இனிதாகும்; அன்பில்லாரிடத்து இனி தாகாது. இதுவுமது. நிழற்கண் இருந்த நீர் குளிர்ச்சி மிக்குவிடாய் தணித்தலின் இனிதாயிற்று. வீழுநர் - ஆற்றாமைக்கு நோதலும், கூடுதற்கண் வேட்கையும் உடையவர். இவளிடம் அவ்விரண்டும் இன்மையால் புலந்து பயனில்லை என்பதாம். (9) 3010. ஊட லுணங்க விடுவாரோ டென்னெஞ்சங் கூடுவே மென்ப தவா. ஊடல் உணங்க - ஊடலினால் தான் மெலியும்படி விடுவா ரோடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் அவா - விட்டிருப்பாரோடு கூடுவோமென்று நினைப்பது என் நெஞ்சத்தினது அவாவே; வேறில்லை. தான் என்றது நெஞ்சத்தை. இதுவுமது. (10) 132. புலவிநுணுக்கம் புலவியினது நுணுக்கம் என விரியும். தலைமகனும் தலை மகளும் இணைபிரியாது இருக்குமிடத்து, அவனிடம் புலத்தற்குக் காரணம் இல்லாதிருக்கவும், காதல் கைம்மிகு தலான் அதனை நுண் ணியதோர் காரணம் உளதாக உட் கொண்டு, அதனை அவன் மேலேற்றித் தலைமகள் புலத்தல். இது அருமையாகத் தோன்று மாகலின் நுணுக்க மாயிற்று. 1311. பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. பரத்த - பரத்தமை யுடையவனே, பெண்ணியலார் எல்லாரும் கண்ணில் பொது உண்பர் - நின்னைப் பெண்ணி யல்பை உடைய எல்லாரும் தங் கண்களால் பொதுவாக நுகர்வர், நின் மார்பு நண்ணேன் - ஆகையால், அவர் மிச்சிலாகிய நின்மார்பினை நான் தீண்டேன். உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலை மகள் சொல்லியது. உலா - ஊர்வலம். பள்ளி - படுக்கை. பொது வுண்டல் - எல்லாரும் ஒருங்கு பார்த்தல். தான் நோக்கி இன்புற்ற வாறே அவரும் நோக்கி இன்புறு வரென ஐயங்கொண்டு, அவர்பால் பொறாமை எய்துதலின், புலவி நுணுக்கமாயிற்று. (1) 1312. ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து. ஊடி இருந்தேமாத் தும்மினார் - யான் தம்மோடு ஊடி உரை யாடாது இருக்கக் காதலர் தும்மினார், யாம் தம்மை நீடுவாழ்க என்பாக்கு அறிந்து - அவ்வூடல் நீங்கி யாம் அவரை 'நீடு வாழ்க' என்று உரையாடுவேம் எனக் கருதி வேண்டு மென்றே தும்மினார். தலைமகன் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது. தும்மியக்கால் வாழ்த்துதல் மரபாகலின் (1317) உரையாடல் வேண்டிற்று என்பதாம். இயல்பாக நிகழ்ந்த தும்மலைக் குறிப்பாக நிகழ்ந்ததாகக் கொள்ளலின் நுணுக்கமாயிற்று. (2) 1313. கோட்டுப்பூச் சூடினுங் காயு மொருத்தியைக் காட்டிய சூடினீ ரென்று. கோட்டுப்பூச் சூடினும் - இம்மருத நிலத்துப் பூ அல்லாத பிற நிலங்களில் மரக்கிளையிலுள்ள பூவை யான் சூடினாலும், ஒருத் தியைக் காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மால் காதலிக்கப்பட்ட இவ்விடத்திலுள்ள ஒருத்திக்கு இவ்வேற்றுப்பூ வணியைக் காட்டு வதற்காக அணிந்தீர் என்று வெகுளுவாள். தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு, நீவிர் கூடி யொழுகவும் இது நிகழ்ந்ததற்குக் காரணம் யாதென்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது. மருதம் ஊடற் குரிய நிலம். (3) 1314. யாரினுங் காதல தென்றேனோ வூடினாள் யாரினும் யாரினு மென்று. யாரினும் காதலம் என்றேனா - காதலுடையார் யாரினும் யாம் மிக்க காதலையுடையோம் என்னும் கருத்தால் யான் 'யாரினும் காதலம்' என்றேனாக, யாரினும் யாரினும் என்று ஊடினாள் - நின் தோழி அதனை, 'என்' காதலியர் பலருள்ளும் நின்னிடத்துக் காத லுடையேன்'என்றேனாகக் கருதி, 'அம்மகளிர் யாரினும் என் மீது காதலுடையீர்' என்று ஊடினாள். இதுவுமது. யான் அன்பு மிகுதியால் சொன்னதைக் கருத்து வேறுபடக் கொண்டாள் என்பதாம். (4) 1315. இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள். இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியால், 'இப்பிறப்பில் யாம் பிரியோம்' என்று சொன்னேனாக, கண்நிறை நீர் கொண்டனள் - மறுமையில் பிரிவேன் என்னும் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்ணிறைந்த நீர் கொண்டாள். கண் கலங்கினாள். இதுவுமது. மறுமை - இறந்தபின் வாழ்வு. 818ஆம் குறளுரை பார்க்க. எப்போதும் பிரியக்கூடா தென்பது கருத்து. (5) 1316. உள்ளினே னென்றேன்மற் றென்மறந்தீ ரென்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். உள்ளினேன் என்றேன் - பிரிந்த காலத்து உன்னை இடை யிடையே நினைத்தேன் என்னும் கருத்தால், யான் 'உள்ளினேன் என்று கூறினேன், மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள் - அதனை, மறந்திருந்தால் தானே பின் நினைப்பது கூடும் என்பது கருதி, என்னை மறந்துவிட்டீர் என்று சொல்லி, முன் தழுவுதற் கிருந்தவள் அதை விட்டு ஊடலானாள். மறந்திருப்பீர் என்றெண்ணிப் புலந்தாள் என்பதாம்'. இதுவுமது. (6) 1317. வழுத்தினா டும்மினே னாக வழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீ ரென்று. தும்மினேனாக வழுத்தினாள் - என்னுடன் ஊடியிருந்தவள், யான் தும்மினேனாக வாழ்த்தினாள், அழித்து யார் உள்ளித் தும் மினீர் என்று அழுதாள் - அங்ஙனம் வாழ்த்திய தானே மீண்டும், நும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யார் நினைத்ததால் தும்மினீர் என்று சொல்லிப் புலந்து அழுதாள். இதுவுமது. அன்புடையார் நினைத்தபோது, அந் நினைக்கப் பட்டவர்க்குத் தும்மல் தோன்று மென்பது மகளிர் வழக்கு. இல்லா வழக்கை உள்ள வழக்காகக் கருதிப் புலந்தா ளென்பதாம். (7) 1318. தும்முச் செறுப்ப வழுதா ணுமருள்ள லெம்மை மறைத்திரோ வென்று. தும்முச் செறுப்ப - எனக்குத் தும்மல் தோன்றிய போது, தும் மினால் யாருள்ளித் தும்மினீர் என்று புலத்தலை அஞ்சி, அத் தும்மலை அடக்கினேன்; நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் - உம்முடைய காதல் மகளிர் உம்மை நினைத்தலை எம்மிடம் மறைக்கின்றீரோ என்று சொல்லிப் புலந்தழுதாள். இதுவுமது. செறுப்ப - அடக்க. செறுப்பவும். தும்மினால் குற்றம், ஒழியினுங் குற்றமானால் செய்வது யாதென்பதாம். (8) 1319. தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீ ரிந்நீர ராகுதி ரென்று. தன்னை உணர்த்தினும் - இவ்வாறு ஊடிய தன்னை யான் பணிந்து வேண்டினாலும், பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று காயும் - பிற மகளிர்க்கும் அவரூடியபோது நீர் இவ்வாறு தானே பணிந்து உணர்த்தும் தன்மையை உடையராகுவீர் என்று சொல்லி வெகுளுவாள். இதுவுமது. அவள் என்மே லேற்றிய தவற்றை உடன் பட்டுப் பணிந்தேன். பணிய, அதுவும் புலத்தற் கேதுவாய் முடிந்தது. இனி அவளிடம் செய்யத் தகுவது யாது என்பதாம். (9) 1320. நினைத்திருந்து நோக்கினுங் காயு மனைத்துநீர் யாருள்ளி நோக்கினீ ரென்று. நினைத்து இருந்து நோக்கினும் - என் சொற்களும் செயல் களும் பற்றித் தான் வெகுளுதலான், அவற்றை ஒழித்திருந்து, அவள் உறுப்புக்களின் ஒப்பற்ற அழகை நோக்கிக் கொண்டிருப் பினும், அனைத்தும் நீர் நோக்கினீர் யார் உள்ளி என்று காயும் - என்னுறுப் புக்களனைத்தையும் நீர் நோக்கினீர், அவற்ற தொப்பு மையால் எம் மகளிரை நினைந்து என்று சொல்லி என்னை வெகுளுவாள். இதுவுமது. சும்மா இருத்தலும் குற்றமாயிற் றென்ப தாம். இவ் வதிகாரத்தால் வள்ளுவரின் இல்வாழ்க்கை நுணுக்க ஆராய்ச்சித் திறன் இனிது புலப்படுகின்றது. (10) 133. ஊடலுவகை ஊடலால் கூடலின்பம் சிறத்தலின், அவ்வூடலைத் தலைவியும் தலைவனும் உவந்து விரும்புதல். 1321. இல்லை தவறவர்க் காயினு மூடுதல் வல்ல தவரளிக்கு மாறு. அவர்க்குத் தவறு இல்யைhயினும் - அவரிடத்திலே தவறில்லையாயினும், அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் செய்கின்ற தலையளியே அவரோடு ஊடுதலை உண்டாக்க வல்லதாகின்றது. தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்ற தென்னை என்றாட்குத் தலைமகள் சொல்லியது. தலையளி - முகமலர்ந் தினியன கூறல். யான் பெறும் இத்தலையளியைப் பிறரும் பெறுவ ரென்று எண்ணி, அது பொறாது ஊடல் நிகழ்ந்தது என்பதாம். (1) 1322. ஊடலிற் றோன்றுஞ் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். ஊடலில் தோன்றும் சிறு துனி - ஊடல் காரணமாக நம் மிடம் உண்டாகின்ற சிறிய வெறுப்பினால், நல்லளி வாடினும் பாடு பெறும் - காதலர் செய்யும் நல்ல தலையளி கொஞ்சம் குறையினும் பின்பு பெருமை தரும். புலவாக்காலும் அத்தலையளி பெறலாமாயிருக்க, அஃதி ழந்து புலவியால் வருந்துவது என்னை யென்றாட்குத் தலைமகள் சொல்லியது. ஊடல் நீங்கினால் அவ்வெறுப்பும் நீங்கும்; தலைவர் அன்பு செய்து கூடுவரென்பதாம். துனி - வெறுப்பது போன்ற ஓர் உணர்ச்சி. (2) 1323. புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னா ரகத்து. நிலத்தொடு நீர் இயைந்தன்னார் அகத்துப் புலத்தலின் - நிலத் தொடு நீர் கலந்தாற் போல ஒற்றுமையுடைய காதலரிடம் புலத் தலைக் காட்டிலும், புத்தேள் நாடு உண்டோ - வானுலகில் இன்பம் உண்டோ? இல்லை. இதுவுமது. தண்ணீர் தான் நின்ற நிலத்தின் இயல்பாதல் போலக் காதலரும் தாங்கூடிய மகளிர் இயல்பினராவ ரென்பதாம். அப்புலவி பின்னே பேரின்பம் பயக்கு மென்பாள், புத்தேள் நாடு உண்டோ என்றாள். இது வானுலகம் இன்பத்தின் இருப்பிடம் என்னும் அயலார் கூற்றைக் கொண்டு, இவ்வின்பத்திற்கு அது இணையாகாதென்றது. வானுலகம் - முகவுரைப் பார்க்க. (3) 1324. புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென் னுள்ள முடைக்கும் படை. புல்லி விடாப் புலவியுள் - காதலரைத் தழுவிக் கொண்டு பின் விடாமைக்குக் காரணமான அப்புலவியில், என் உள்ளம் உடைக்கும் படை தோன்றும் - என் உள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம் உண்டாகும். அப்புலவி இனி எதனால் நீங்கும் என்ற தோழிக்குத் தலை மகள் சொல்லியது. படைக்கலம் - தலைவனுடைய வணக்கமும் பணிமொழியும். அவற்றால் அப்புலவியுள்ளம் அழிதலால், அவற்றை உள்ளம் உடைக்கும் படை என்றாள். புலவி நீங்குந் திறங் கூறியவாறு. (4) 1325. தவறில ராயினுந் தாம்வீழ்வார் மென்றோ ளகறலி னாங்கொன் றுடைத்து. தவறு இலராயினும் - ஆடவர் தம்மிடம் தவறில ராயினும், தாம் வீழ்வார் மென்றோள் அகறலின் - தவறுடை யார் போல ஊடப் பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாத போதும், ஆங்கு ஒன்று உடைத்து - அவர்க்கு அத் தன்மையதோர் இன்பம் பயத்த லுடையது. தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் மிக்க உவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது. ஊடுதல் கூடலுக்குக் காரணமாதலால் இன்பம் உண்டு என்றான். ஊடலினாய இன்பம் அளவிறந்ததாகலின் கூறற்கரிய தென்பான், அத் தன்மைய தொன் றென்றான். தவறில்லாமல் ஊடியதும் எனக்கின்பமாயிற் றென்பதாம். (5) 1326. உணலினு முண்ட தறலினிது காமம் புணர்தலி னூட லினிது. உணலினும் உண்டது அறல் இனிது - மேலும் உண்பதைக் காட்டிலும் முன்னுண்ட உணவு அறுதல் இன்பம் தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோலக் காமத்திற்கு மேலும் புணர்தலைக் காட்டிலும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பந் தரும். இதுவுமது. பசித்துண்டால் மிகவுண்ணவும் இனிய சுவையும் ஆகும்; அதுபோல, அகன்று கூடினால் நிரம்பாததும் பேரின்பமும் ஆகும் எனத் தன் பழக்கம்பற்றிக் கூறியவாறு. (6) 1327. ஊடலிற் றோற்றவர் வென்றா ரதுமன்னும் கூடலிற் காணப் படும். ஊடலில் தோற்றவர் வென்றார் - காம நுகர்தற்குரிய இரு வருள், ஊடலில் தோல்வியுற்றவரே வென்றவராவர்; அது கூடலில் காணப்படும் - அவ்வெற்றி அப்போது அறியப்படா தாயினும் பின் புணர்ச்சியின்போது அவரால் அறியப்படும். இதுவுமது. தோற்றவர் - ஊடல் நீங்கினவர். அவர் புணர்ச்சி யின்போது பேரின்பம் எய்துதலின் வென்றவ ராயினார். யான் அப்போது தோற்றதால் இப்போது பேரின்பம் பெற்றேன் என்ப தாம். மன் - ஆக்கம். (7) 1328. ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலிற் றோன்றிய வுப்பு. நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு - இவள் நெற்றி வியர்க்கும்வகை இவளுடன் கூடி இப்பொழுது பெற்ற இன்பத்தை, ஊடிப் பெறுகுவங் கொல்லோ - இன்னுமொரு தரம் இவள் ஊடி நாம் பெறக் கூடுமோ? இதுவுமது. இன்பம் - கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் இன்பம் (1101). இனி அப்பேறு கூடாதெனப் பெற்ற தன் சிறப்புக் கூறியவாறு. (8) 1329. ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ விரா. ஒளியிழை ஊடுகமன் - ஒளி பொருந்திய அணிகளை உடை யாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுகமன் - அங்ஙனம் அவள் ஊடி நிற்பதற்கும், அவ்வூடலை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்பதற்கும் நேரம் பெறும் வகை இவ்விரவு விடியாது நீடுவதாக. இதுவுமது. கூடலினும் ஊடலே போதுமென்பது. மன் - ஆக்கங் குறித்தது. (9) 1330. ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். காமத்திற்கு இன்பம் ஊடுதல் - காம நுகர்ச்சிக்கு இன்பமாவது காதலர் தம்முள் ஊடுதல்; அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின் - அவ்வூடுதலுக்கு இன்பமாவது அவ்வூடலை அளவறிந்து நீங்கித் தம் முட் கூடி முயங்குதல் கூடுமாயின் அம்முயக்கம். இதுவுமது. முயக்கம் - தழுவிக் கொள்ளுதல். முதிர்ந்த துனி யாய விடத்துத் துன்பம் பயத்தலானும், முதிராத புலவியாய விடத்துக் கலவி இன்பம் பயவாமையானும், இரண்டிற்கும் இடை யாகிய அளவறிந்து நீங்குதல் அரிதென்பது பற்றிக் 'கூடி முயங்கப் பெறின்' என்றான். அவ்விரண்டின்பமும் யான் பெற்றேன் என்பதாம். (10) இன்பத்துப்பால் முற்றிற்று. திருக்குறள் - குழந்தையுரை முற்றிற்று. t t t குறட்பா முதற்குறிப்பகர நிரல் எண் : குறளெண் அஃகாமை 178 அஃகியகன் 175 அகடாரல் 936 அகப்பட்டி 1074 அகரமுதல 1 அகலாதனு 691 அகழ்வாரைத் 151 அகனமர்ந்தீத 92 அகனமர்ந்துசெ 84 அங்கணத்து 720 அசையியற் 1098 அச்சமுடையார் 534 அச்சமேகீழ் 1075 அஞ்சாமையீ 382 அஞ்சாமைய 497 அஞ்சுமறி 863 அஞ்சுவதஞ் 428 அஞ்சுவதோ 366 அடக்கமமரரு 121 அடல்வேண் 343 அடற்றகை 768 அடுக்கியகோ 954 அடுக்கிவரி 625 அடுத்தது 706 அணங்குகொ 1081 அணியன்றோ 1014 அந்தணரென் 30 அந்தணர்நூ 543 அமரகத்தா 814 அமரகத்து 1027 அமிழ்தினுமா 64 அமைந்தாங் 474 அரங்கின்றி 401 அரம்பொருத 888 அரம்போலுங் 997 அரிதரோ 1153 அரிதாற்றி 1160 அரியகற் 503 அரியவற்று 443 அரியவென் 537 அருங்கேட 210 அருஞ்செவ் 565 அருட்செல் 241 அருமறை 847 அருமையு 611 அரும்பயனா 198 அருவினை 483 அருளல்ல 254 அருளில்லார்க் 247 அருளென்னு 757 அருளொடு 755 அருள்கருதி 285 அருள்சேர்ந்த 243 அருள்வெஃகி 176 அலந்தாரை 1303 அலரெழ 1141 அலர்நாண 1149 அல்லலரு 245 அல்லவைதேய 96 அல்லற்பட் 555 அவர்தந்தா 1162 அவர்நெஞ் 1291 அவாவில்லா 368 அவாவினை 367 அவாவென்ப 361 அவிசொரிந் 259 அவையறிந் 711 அவையறியார் 713 அவ்வித்தழுக் 167 அவ்வியநெஞ் 169 அழக்கொண்ட 659 அழச்சொல் 795 அழல்போலு 1228 அழிவதூஉ 461 அழிவந்த 807 அழிவினவை 787 அழிவின்றறை 764 அழுக்கற் 170 அழுக்காறவா 35 அழுக்காறுடையார்க் 165 அழுக்காறுடையான் 135 அழுக்காறென 168 அழுக்காற்றி 164 அளவல்ல 289 அளவளாவில் 523 அளவறிந்தார் 288 அளவறிந்து 479 அளவின்க 286 அளித்தஞ் 1154 அறங்கூறா 181 அறஞ்சாரா 1047 அறஞ்சொல் 185 அறத்தாறிது 37 அறத்தாற்றி 46 அறத்தான் 39 அறத்திற்கே 76 அறத்தினூஉங் 32 அறம்பொரு 501 அறவாழி 8 அறவினையா 321 அறவினையு 909 அறனழீஇ 182 அறனறிந்தா 635 அறனறிந்துமூ 441 அறனறிந்துவெ 179 அறனாக்கம் 163 அறனியலா 147 அறனிழுக்கா 384 அறனீனுமின் 754 அறனெனப் 49 அறனோக்கி 189 அறன்கடை 142 அறன்வரை 150 அறிகிலா 1139 அறிகொன் 638 அறிதோற்றி 1110 அறிந்தாற்றிச் 515 அறிவற்றங் 421 அறிவிலார் 843 அறிவிலான் 842 அறிவினானாகு 315 அறிவினுளெ 203 அறிவின்மை 841 அறிவுடையாராவ 427 அறிவுடையாரெல் 430 அறிவுருவா 684 அறுவாய்நி 1117 அறைபறை 1076 அற்காவியல் 333 அற்றதறிந்து 944 அற்றமறைக் 980 அற்றமறைத் 846 அற்றவரென் 365 அற்றாரழிபசி 226 அற்றாரைத் 506 அற்றார்க்கொ 1007 அற்றாலள 943 அற்றேமென் 626 அனிச்சப்பூ 1115 அனிச்சமு 1120 அன்பகத்தில் 78 அன்பறிவாரா 682 அன்பறிவுதே 513 அன்பிலனா 862 அன்பிலாரெல் 72 அன்பிற்குமுண் 71 அன்பின்வழி 80 அன்பின்விழை 911 அன்பீனுமா 74 அன்புடை - லிவ் 992 அன்புடை-வேந் 681 அன்புநாணொ 981 அன்புமறனு 45 அன்புற்றமர்ந் 75 அன்பொரீஇ 1009 அன்போடியை 73 அன்றறிவா 36 ஆகாறளவிட் 478 ஆகூழாற் 371 ஆக்கங்கருதி 463 ஆக்கமதர்வி 594 ஆக்கமிழந் 593 ஆக்கமுங் 642 ஆங்கமை 740 ஆபயன்குன் 560 ஆயுமறிவின் 918 ஆய்ந்தாய்ந் 792 ஆராவியற்கை 370 ஆவிற்குநீ 1066 ஆள்வினையு 1022 ஆற்றாருமாற் 493 ஆற்றினளவறிந்து 725 ஆற்றினளவறிந்தீ 477 ஆற்றின்வருந் 468 ஆற்றினிலை 716 ஆற்றினொழுக் 48 ஆற்றுபவர்க் 741 ஆற்றுவா - பசி 225 ஆற்றுவா - பணி 985 ஆற்றுவா - லிக 891 இகலானா 860 இகலிற்கெ 858 இகலின்மிக 856 இகலெதிர் 855 இகலென்ப 851 இகலென்னு 853 இகல்காணா 859 இகழ்ச்சியிற் 539 இகழ்ந்தெள் 1057 இடமெல்லாங் 1064 இடனில்பரு 218 இடிக்குந்துணை 447 இடிபுரிந்தெள் 607 இடிப்பாரை 448 இடுக்கட்ப 654 இடுக்கண்கா 1030 இடுக்கண்வ 621 இடும்பைக்கி 623 இடும்பைக்கே 1029 இடைதெரிந்து 712 இணரூழ்த் 650 இணரெரி 308 இதனையிதனா 517 இம்மைப்பிறப் 1129 இமையாரின் 906 இமைப்பிற்கரப் 1315 இயல்பாகும் 344 இயல்பினா 47 இயல்புளிக் 545 இயற்றலுமீ 385 இரக்கவிரத் 1051 இரத்தலினின் 229 இரத்தலு 1054 இரந்துமுயிர் 1062 இரப்பனிரப் 1067 இரப்பாரை 1058 இரப்பான்வெ 1060 இரவாரிரப் 1035 இரவுள்ள 1069 இரவென்னு 1068 இருணீங்கி 352 இருநோக் 1091 இருந்துள்ளி 1243 இருந்தோம்பி 81 இருபுனலும் 737 இருமனப்பெ 920 இருமைவகை 23 இருவேறுல 374 இருள்சேரிரு 5 இலக்கமுட 627 இலங்கிழா 1262 இலமென்றசை 1040 இலமென்று 174 இலர்பலரா 270 இலனென்று 205 இலனென்னு 223 இல்வாழ்வா 41 இல்லதெனில் 53 இல்லாரை 752 இல்லாளை 905 இல்லாள்கட் 903 இல்லைதவ 1321 இவறலும் 432 இழத்தொறூஉங் 940 இழிவறிந்துண் 946 இழுக்கலுடை 415 இழுக்காமை 536 இழைத்ததிக 779 இளித்தக்க 1288 இளிவரின் 976 இளைதாக 879 இளையரின் 698 இறந்தமைந் 900 இறந்தவெகுளி 531 இறந்தாரி 310 இறப்பேபுரிந் 977 இறலீனுமெண் 180 இறுதிபயப் 690 இறைகடிய 564 இறைகாக்கும் 547 இற்பிற - கண்ண 951 இற்பிற - கண்ணே 1044 இனத்தாற்றி 568 இனம்போன் 822 இனியவுள 100 இனியன்ன 1294 இனைத்துணைத் 87 இனையரிவ 790 இன்கணுடை 1152 இன்சொலாலீத் 387 இன்சொலாலீர 91 இன்சொலினி 99 இன்பங்க 1166 இன்பத்து - பய 854 இன்பத்து - வி 629 இன்பமிடை 369 இன்பமொரு 1052 இன்பம்விழையானி 628 இன்பம்விழையான் 615 இன்மையிடு 1063 இன்மையினின்னாத 1041 இன்மையினின்னாது 558 இன்மையு 153 இன்மையெ 1042 இன்மையொ 988 இன்றியமையா 961 இன்றும்வரு 1048 இன்னாசெ - ரை 314 இன்னாசெ - தார் 987 இன்னாதிரக் 224 இன்னாதின 1158 இன்னாமையி 630 இன்னாவெனத் 316 ஈட்டமிவறி 1003 ஈதலிசைப 231 ஈத்துவக்கு 228 ஈர்ங்கைவி 1077 ஈவார்கணென் 1059 ஈன்றபொழுதிற் 69 ஈன்றாண்மு 923 ஈன்றாள்பசி 656 உடம்பாடி 890 உடம்பொ 1122 உடுக்கையி 788 உடுப்பதூஉ 1079 உடைசெல் 939 உடைத்தம் 473 உடைமையு 89 உடையரெனப் 591 உடையார்மு 395 உட்கட்படா 921 உட்பகையஞ் 883 உணர்வதுடை 718 உணலினு 1326 உண்டார்க 1090 உண்ணற்க 922 உண்ணாது 160 உண்ணாமையு 255 உண்ணாமைவே 257 உதவிவரைந் 105 உப்பமைந் 1302 உயர்வகலந் 743 உயிருடம்பி 330 உயிர்ப்பவுள 880 உய்த்தல் 1287 உரமொருவற் 600 உரனசைஇ 1363 உரனென்னுத் 24 உருவுகண் 667 உருளாய 933 உரைப்பா 232 உலகத்தா 850 உலகத்தோ 140 உலகந்தழீஇ 425 உலைவிடத் 762 உவக்காணெங் 1185 உவந்துறைவ 1130 உவப்பத்தலை 394 உழந்துழந் 1177 உழவினார் 1039 உழுதுண்டு 1033 உழுவாருல 1032 உழைப்பிரிந் 530 உளபோல் 574 உளரெனினு 730 உளரென்னு 400 உளவரைதூ 480 உள்ளக்களித் 1281 உள்ளத்தார் 1249 உள்ளத்தாலு 282 உள்ளத்தாற் 294 உள்ளமிலா 598 உள்ளமுடை 592 உள்ளம்போன் 1170 உள்ளற்க 798 உள்ளியதெய்த 540 உள்ளியதெல் 309 உள்ளினுந் 1201 உள்ளினே 1316 உள்ளுவதெல் 596 உள்ளுவன் - னு 1184 உள்ளுவன் - ம 1125 உள்ளொற்றி 927 உறங்குவது 339 உறன்முறை 885 உறாஅதவர்க் 1292 உறாஅதவர்போ 1096 உறாஅதோ 1143 உறாஅர்க்குறு 1200 உறினட்ட 812 உறினுயிரஞ் 778 உறுதோறுயிர் 1106 உறுபசியு 734 உறுபொரு 756 உறுப்பமைந் 761 உறுப்பொத் 993 உறுவதுசீர் 813 உறைசிறியா 680 உற்றநோய்நீ 442 உற்றநோய்நோ 261 உற்றவன் 950 உற்றானாள 949 ஊக்கமுடை 486 ஊடலிற்றோற் 1327 ஊடலிற்றோன் 1322 ஊடலினுண் 1307 ஊடலுணங் 1310 ஊடலுணர்தல் 1109 ஊடற்கட் 1284 ஊடிப்பெறு 1328 ஊடியவரை 1304 ஊடியிருந்தே 1312 ஊடுகமன் 1329 ஊடுதல் 1330 ஊணுடை 1312 ஊதியமென்ப 797 ஊரவர்கௌ 1147 ஊருணிநீர் 215 ஊழிபெய 989 ஊழிற்பெரு 380 ஊழையுமுப் 620 ஊறொராலுற் 662 ஊனைக்குறித் 1013 எச்சமென 1004 எட்பகவன்ன 889 எண்சேர்ந்த 910 எண்ணித்துணி 467 எண்ணியவெண் 666 எண்ணியாரெ 494 எண்ணென்ப 392 எண்பதத்தாலெ 991 எண்பதத்தானோ 548 எண்பொருள் 424 எதிரதாக் 429 எந்நன்றிகொன் 110 எப்பொருளு 695 எப்பொருளெ 355 எப்பொருள்யார் 423 எய்தற்கரி 483 எரியாற்சுட 896 எல்லாப்பொ 846 எல்லார்க்குநன் 125 எல்லார்க்குமெ 582 எல்லாவிளக் 299 எல்லைக்கனி 806 எவ்வதுறை 426 எழுதுங்காற் 1285 எழுபிறப்புந் 62 எழுமையெழு 107 எளிதென 145 எள்ளாதவெண் 470 எள்ளாமை 281 எள்ளினிளி 1298 எற்றிற்குரி 1080 எற்றென் 655 எனைத்தானும் 416 எனைத்தானுமெ 317 எனைத்திட்ப 670 எனைத்துங் 820 எனைத்துணைய 144 எனைத்துநினை 1268 எனைத்தொன் 1202 எனைப்பகை 207 எனைமாட்சித் 750 எனைவகையாற் 514 என்பிலதனை 77 என்றுமொ 652 என்னைமுன் 771 ஏதம்பெருஞ் 1106 ஏதிலாராரத் 837 ஏதிலார்குற் 190 ஏதிலார்போல 1090 ஏந்தியகொ 899 ஏமுற்றவ 873 ஏரினுநன்றா 1038 ஏரினுழாஅ 14 ஏவவுஞ்செ 848 ஐந்தவித்தா 25 ஐயத்தினீ 353 ஐயப்படா 702 ஐயுணர்வெ 354 ஒட்டார்பின் 967 ஒண்ணுதற் 1088 ஒண்பொருள் 760 ஒத்ததறிவா 214 ஒப்புரவினால் 220 ஒருதலையா 1196 ஒணருநாளெழு 1269 ஒருபொழுதும் 337 ஒருமைச் 835 ஒருமைக்கட் 398 ஒருமைமக 974 ஒருமையுளாமை 128 ஒலித்தக்கா 763 ஒல்லுங்கரும 818 ஒல்லும்வகை 33 ஒல்லும்வாயெ 673 ஒல்வதறிவ 472 ஒழுக்கத்தினெ 137 ஒழுக்கத்தினொ 136 ஒழுக்கத்து 21 ஒழுக்கமுடைமை 133 ஒழுக்கமுடையவ 139 ஒழுக்கமும் 952 ஒழுக்கம்விழு 131 ஒழுக்காறாக் 161 ஒளியார்முன் 714 ஒளியொருவற் 971 ஒறுத்தாரை 155 ஒறுத்தார்க் 156 ஒறுத்தாற்றும் 579 ஒற்றினானொ 583 ஒற்றுமுரை 581 ஒற்றொற்றித் 588 ஒற்றொற்றுண 589 ஒள்றாகநல் 323 ஒன்றாமை 886 ஒள்றாவுலக 233 ஒன்றானுந் 128 ஒன்றெய்தி 932 ஒன்னார்த் 264 ஓஒதல்வே 653 ஓதியுணர்ந்த 834 ஓம்பினமை 1155 ஓர்த்துள்ள 157 ஓர்ந்துகண் 541 ஓஒவினிதே 1176 கடலன்ன 1137 கடலோடா 496 கடனறிந்து 687 கடனெனப் 981 கடாஅவுரு 585 கடாஅக்களி 1087 கடிதோச்சி 562 கடிந்தகடிந்து 658 கடுஞ்சொல்லன் 566 கடுமொழியுங் 567 கடைக்கொட்க 663 கணைகொடிதி 279 கண்களவு 1029 கண்டதுமன் 1146 கண்டாங்க 1171 கண்டாருயி 1084 கண்டுகேட் 1101 கண்ணிறைந்த 1272 கண்ணிற்கனி 575 கண்ணிற்றுனி 1290 கண்ணின்ப 1240 கண்ணின்று 184 கண்ணுங்கொ 1244 கண்ணுடைய 393 கண்ணுள்ளார் 1127 கண்ணுள்ளிற் 1126 கண்ணொடு 1100 கண்ணோட்டத் 572 கண்ணோட்ட - மி 577 கண்ணோட்ட - மெ 571 கதங்காத்துக் 130 கதுமெனத் 1173 கயலுண்கண் 1212 கரத்தலு 1162 கரப்பவர்க் 1070 கரப்பிடும்பை 1086 கரப்பிலாநெ 1053 கரப்பிலார்வை 1055 கரப்பினுங் 1271 கரவாதுவந் 1061 கருமஞ்சிதை 578 கருமஞ்செய 1021 கருமணியிற் 1123 கருமத்தா 1011 கருவியுங்கா 631 கலங்காது 668 கலந்துணர்த் 1246 கல்லாதமே 845 கல்லாதவரிற் 729 கல்லாதவரு 403 கல்லாதானொ 404 கல்லாதான் 402 கல்லார்ப்பி 570 கல்லாவொரு 405 கல்லான்வெ 870 கவறுங்கழக 935 கவ்வையாற் 1144 கழாஅக்கால் 840 களவினாலாகி 283 களவின்கட் 284 களவென்னு 287 களித்தறியே 928 களித்தானை 929 களித்தொறு 1145 கள்வார்க்கு 290 கள்ளுண்ணா 930 கறுத்தின்னா 312 கற்ககசடறக் 391 கற்றதனா 2 கற்றறிந்தார் 717 கற்றாருட்கற் 722 கற்றார்முற் 724 கற்றிலனாயி 414 கற்றீண்டு 356 கற்றுக்கண் 686 கனவினாலு 1214 கனவினுமின் 819 காக்கபொரு 122 காக்கைகர 527 காட்சிக்கெ 386 காணாச்சின 866 காணாதாற் 849 காணிற்குவ 1114 காணுங்காற் 1286 காண்கமற் 1265 காதலகாத 440 காதலரில் 1224 காதலர்தூ 1211 காதலவரில 1242 காதன்மை 507 காமக்கடன் 1164 காமக்கடு - லு 1134 காமக்கடு - னீ 1167 காமக்கனி 1251 காமமுநா 1163 காமம்விடு 1247 காமம்வெகு 360 காமமுழந் 1131 காமமென் 1252 காலங்கருதி 485 காலத்தினாற் 102 காலாழ்கன 500 காலைக்குச் 1225 காலையரும்பி 1227 கானமுயலெ 772 குடம்பை 338 குடிசெய்வ 1023 குடிசெய்வார் 1028 குடிதழீஇக் 544 குடிப்புறங்காத் 549 குடிபிறந்தார் 957 குடிப்பிறந்துகு 502 குடிப்பிறந்துத 794 குடிமடிந்து 604 குடியாண்மை 609 குடியென்னுங் 601 குணநலஞ் 982 குணநாடி 504 குணமென்னுங் 29 குணனிலனா 863 குணனுங்குடி 703 குலஞ்சுடுங் 1019 குழலினிது 66 குறிக்கொண் 1095 குறித்தது 704 குறிப்பறிந்து 696 குறிப்பிற் - ரா 705 குறிப்பிற் - ர் 703 குற்றமிலனாய் 1025 குற்றமேகாக் 434 குன்றன்னார் 898 குன்றினனை 965 குன்றேறி 758 கூடியகாமம் 1264 கூத்தாட்ட 332 கூழுங்குடியு 554 கூறாமைநோ 701 கூற்றங்குதி 269 கூற்றத்தைக் 894 கூற்றமோ 1085 கூற்றுடன்று 765 கெடல்வே 893 கெடாஅவழி 809 கெடுங்காலை 799 கெடுப்பதூஉ 15 கெடுவல்யா 116 கெடுவாக 117 கெட்டார்க்கு 1293 கேடறியா 736 கேடில்விழுச் 400 கேடும்பெருக் 115 கேட்டார்ப் 643 கேட்டினுமு 796 கேட்பினுங் 418 கேளிழுக்கங் 808 கைம்மாறுவே 211 கையறியா 925 கைவேல்க 774 கொக்கொக்க 490 கொடியார் - யிற் 1235 கொடியார் - யு 1169 கொடுத்தலு 525 கொடுத்துங் 867 கொடுப்பதழுக் 166 கொடுப்பதூஉ 1005 கொடும்புருவ 1086 கொடையளி 390 கொலைமேற் 551 கொலையிற் 550 கொலைவினைய 329 கொல்லாநலத் 984 கொல்லாமை 326 கொல்லான் 260 கொளப்பட் 699 கொளற்கரி 745 கொன்றன்ன 109 கோட்டுப் 1313 கோளிற் 9 சமன்செய் 118 சலத்தாற் 660 சலம்பற்றிச் 956 சாதலினின் 230 சாயலுநா 1183 சார்புணர்ந்து 359 சால்பிற்குக் 986 சான்றவர் 990 சிதைவிடத் 597 சிறப்பறிய 590 சிறப்பீ - மு 31 சிறப்பீ - ம் 311 சிறப்பொடு 18 சிறியாருணர் 976 சிறுகாப்பிற் 744 சிறுபடை 498 சிறுமைநம 1231 சிறுமைபல 934 சிறுமையுஞ் 769 சிறுமையுள் 98 சிறைகாக்குங் 57 சிறைநலனுந் 499 சிற்றினமஞ் 451 சிற்றின்பம் 173 சினத்தைப் 307 சினமென்னுஞ் 306 சீரிடங்கா 821 சீரினுஞ்சீ 962 சீருடைச்செ 1010 சீர்மைசிற 195 சுடச்சுடரும் 267 சுவையொளி 27 சுழலுமிசை 777 சுழன்றுமேர் 1031 சுற்றத்தாற் 524 சூழாமற் 1024 சூழ்ச்சிமுடி 671 சூழ்வார்கண் 445 செப்பமுடை 112 செப்பின்பு 887 செயற்கரியசெ 26 செயற்கரியயா 781 செயற்கைய 637 செயற்பாலசெ 437 செயற்பாலதோ 40 செயிரிற்றலை 258 செய்கபொ 759 செய்தக்க 466 செய்தேமஞ் 815 செய்யாமற்செய் 101 செய்யாமற்செற் 313 செய்வானை 516 செய்வினை 677 செருக்குஞ் 431 செருவந்த 568 செல்லாமை 1151 செல்லாவிட 302 செல்லான் 1039 செல்லிடத் 301 செல்லத்துட் 411 செல்விருந் 86 செவிகைப்பச் 389 செவிக்குண 412 செவிச்சொல் 694 செவியிற்சுவை 420 செவியுணவிற் 413 செறாஅச்சிறு 1097 செறிதொடி 1275 செறிவறிந் 123 செறுநரைக் 488 செறுவார்க் 869 செற்றவர்பின் 1258 செற்றாரெனக் 1245 செற்றார்பின் 1255 சென்றவிட 422 சொலல்வல் 647 சொல்லுகசொல்லி 200 சொல்லுகசொல்லை 645 சொல்லுதல் 664 சொல்லப்பய 1078 சொல்வணக் 827 சொற்கேட்ட 119 ஞாலங்கருதி 484 தகுதியென 111 தக்காங்கு 561 தக்காரினத் 446 தக்கார்தக் 114 தஞ்சந்தம 1300 தணந்தமை 1233 தண்ணந்துறை 1277 தந்தைமகற் 67 தந்நலம் 916 தம்நெஞ்சத் 1205 தமராகித் 529 தம்பொருளென் 63 தம்மிலிருந்து 1107 தம்மிற்பெரி 444 தம்மிற்றம் 88 தலைப்பட்டார் 348 தலையினிழிந்த 964 தவஞ்செய் 266 தவமறைந் 274 தவமுந்தவ 262 தவறிலரா 1325 தள்ளாவிளை 731 தற்காத்துத் 58 தனக்குவமை 7 தனியேயிருந் 1296 தன்குற்றநீக் 436 தன்றுணையின் 875 தன்னுயிர்க்கின் 318 தன்னுயிர்தா 288 தன்னுயிர்நீ 327 தன்னூன்பெரு 251 தன்னெஞ்சறி 293 தன்னைத்தான்காக் 305 தன்னைத்தான் 209 தன்னையுணர் 1310 தாமின்புறு 300 தாம்வீழ் - த 1191 தாம்வீழ் - மெ 1103 தாம்வேண்டி 1150 தார்தாங்கிச் 767 தாளாண்மையி 614 தாளாண்மையே 613 தாளாற்றித் 212 தானந்தவ 19 திறனல்ல 157 திறனறிந்து 644 தினற்பொருட் 256 தினைத்துணைநன் 104 தினைத்துணையாங் 433 தினைத்துணையு 1282 தீப்பாலதா 206 தீயவைசெய் 208 தீயவைதீய 202 தீயளவன்றித் 947 தீயினாற்சுட் 29 தீவினையாரஞ் 20 துஞ்சினார் 926 துஞ்சுங்காற் 1218 துணைநலமாக் 681 துப்பார்க்குத் 12 துப்பினெ 1165 துப்புரவில் 1050 தும்முறுச்செறு 1318 துளியின்மை 557 துறந்தார்க்குத் 263 துறந்தார்க்குந் 42 துறந்தார்படி 586 துறந்தார்பெ 22 துறந்தாரிற் 159 துறப்பார் 378 துறைவன் 1157 துனியும்புல 1306 துன்பத்திற் 1299 துன்பமுற 689 துன்புறூஉந் 94 துன்னாத்துறந் 1250 துன்னியார் 188 தூங்காமை 383 தூங்குகதூங்கி 672 தூய்மைதுணை 688 தூஉய்மையெ 364 தெண்ணீரடு 1005 தெய்வத்தா 619 தெய்வந்தொ 55 தெரிதலுந் 634 தெரிந்தவினத் 462 தெரிந்துண 1172 தெருளாதான் 249 தெளிவிலத 464 தென்புலத்தா 43 தேரான்பிற 508 தேரான்றெளி 510 தேவரனைய 1073 தேறற்கயா 509 தேறினுந் 876 தொகச்சொ 685 தொடங்கற்க 491 தொடலைக் 1135 தொடிநோக் 1279 தொடிப்புழு 1037 தொடியொடு 1236 தொடிற்சுடி 1159 தொட்டனைத் 396 தொல்வரவுந் 1043 தொழுதகை 828 தோன்றிற் 236 நகல்வல்ல 999 நகுதற்பொ 784 நகையீகை 953 நகையுமுவ 304 நகையுள்ளு 995 நகைவகைய 817 நசைஇயார் 1199 நச்சப்படா 1008 நடுவின்றி 171 நட்டார்குறை 908 நட்டார்க்கு 879 நட்டார்போன 828 நட்பிற்குவீ 789 நட்பிற்குறுப் 802 நண்பாற்றா 998 நத்தம்போற் 235 நயந்தவர்க்கு 1181 நயந்தவர்நல் 1232 நயனிலசொல் 197 நயனிலனெ 193 நயனீன்று 97 நயனுடையான் 219 நயனொடு 994 நயன்சாரா 194 நலக்குரியார் 149 நலத்தகை 1305 நலம்வேண்டி 960 நல்குரவெ 1045 நல்லவை 375 நல்லாண்மை 1026 நல்லார்கட் 408 நல்லாறென 324 நல்லாறெனினு 222 நல்லாற்றா 242 நல்லினத்தினூ 480 நவிறொறும் 783 நற்பொருணன் 1048 நனவினாற் 1215 நனவினானந் 1220 நனவினானல்காத 1213 நனவினானல்காரை 1219 நனவென 1216 நன்மையுந் 611 நன்றறிவா 1072 நன்றாகுமாக் 328 நன்றாற்றலு 499 நன்றிக்குவித் 138 நன்றிமறப்பது 108 நன்றென்ற 715 நன்றேதரி 113 நன்னீரை 1111 நாங்காத 1395 நாச்செற்று 335 நாடாதுநட் 791 நாடென்ப 739 நாடோறுநாடி 553 நாடோறும்நாடுக 520 நாணகத்தில்லா 1020 நாணாமை 833 நாணுமறந் 1297 நாணென 1257 நாணென்னு 924 நாணோடுந் 1133 நாண்வேலி 1016 நாநலமென் 641 நாளென 334 நிணந்தீயி 1260 நிலத்தியல்பா 452 நிலத்திற் 959 நிலவரைநீள் 234 நிலைமக்கள் 770 நிலையஞ்சி 325 நிலையிற்றிரியா 124 நில்லாதவ 331 நிழனீருமி 881 நிறைதீர 782 நிறைநெஞ்ச 917 நிறைமொழி 28 நிறையரி 1138 நிறையுடைமை 154 நிறையுடையே 1254 நினைத்திருந் 1320 நினைத்தொ 1214 நினைப்பவர் 1303 நீங்கான்வெ 804 நீங்கிற்றெ 1104 நீரின்றமை 20 நீருநிழல் 1309 நுணங்கிய 419 நுண்ணியமெ 710 நுண்மாண் 410 நுனிக்கொம்ப 476 நூலாருள்நூ 683 நெஞ்சத்தார் 1128 நெஞ்சிற்றுற 276 நெடுங்கட 17 நெடுநீர்மற 605 நெடும்புனலுள் 495 நெய்யாலெ 1148 நெருப்பினுட் 1049 நெருநலுள 336 நெருநற்றுச் 1278 நோக்கினா - கி 1093 நோக்கினா - கெ 1082 நோதலெவ 1308 நோயெல்லா 320 நோய்நாடி 948 நோவற்க 877 நோனாவுடம் 1132 பகச்சொல்லி 187 பகல்கருதிப் 852 பகல்வெல் 481 பகுத்துண் 322 பகைநட்பாக் 874 பகைநட்பாங் 830 பகைபாவ 146 பகைமையு 709 பகையகத்துச் 723 பகையகத்துப் 727 பகையென் 821 பசக்கமற் 1189 பசந்தாளிவ 1188 பசப்பெனப் 1190 படலாற்றா 1175 படியுடை 606 படுபயன்வெ 172 படைகுடி 381 படைகொண் 253 பணியுமாமெ 978 பணிவுடைய 95 பணைநீங்கிப் 1234 பண்டறியே 1083 பண்ணென்னா 573 பண்பிலான் 1000 பண்புடையார் 996 பதிமருண்டு 1229 பயனிலபல் 192 பயனில்சொல் 196 பயன்மரமுள் 216 பயன்றூக்கார் 103 பயன்றூக்கி 912 பரிந்தவர்நல் 1248 பரிந்தோம்பிக் 132 பரிந்தோம்பிப் 88 பரியதுகூர்ங் 599 பரியினுமா 376 பருகுவார் 811 பருவத்தோ 482 பருவரலும் 1197 பலகுடைநீழ 1034 பலசொல்லக் 619 பலநல்லகற் 823 பல்குழுவும் 735 பல்லவைகற் 728 பல்லார்பகை 450 பல்லார்முனி 191 பழகியசெல் 937 பழகியநட் 803 பழிமலைந் 657 பழியஞ்சிப் 44 பழுதென்ன 639 பழையமெ 801 பற்றற்றகண்ணு 521 பற்றற்றகண்ணே 349 பற்றற்றே 275 பற்றிவிடா 347 பற்றுகபற் 350 பற்றுள்ள 438 பனியரும்பி 1223 பன்மாயக்கள் 1258 பாடுபெறு 1237 பாத்தூண் 277 பாலொடு 1221 பிணிக்குமருந் 1102 பிணியின்மை 738 பிணையேர் 1089 பிரித்தலும் 633 பிரிவுரைக் 1156 பிழைத்துண 417 பிறப்பென்னு 358 பிறப்பொக் 972 பிறர்க்கின்னா 319 பிறர்நாணத் 1018 பிறர்பழியுந் 1015 பிறவிப்பெ 10 பிறன்பழி 186 பிறன்பொரு 141 பிறன்மனை 148 பீலிபெய் 475 புகழின்றாற் 966 புகழ்ந்தவை 538 புகழ்படவாழா 237 புகழ்புரிந்தில் 59 புக்கிலமை 340 புணர்ச்சிபழ 785 புத்தேளுல 213 புரந்தார்கண் 780 புலத்தலிற் 1323 புலப்பலென 1259 புலப்பேன் 1267 புல்லவையுட் 719 புல்லாதிரா 1301 புல்லிக்கிடந் 1187 புல்லிவிடா 1324 புறங்குன்றி 297 புறங்கூறிப் 183 புறத்துறுப் 79 புறந்தூய்மை 298 புன்கண்ணை 1222 பெண்ணியலா 1311 பெண்ணிற்பெ 54 பெண்ணினாற் 1280 பெண்ணேவல் 907 பெயக்கண்டு 580 பெயலாற்றா 1174 பெரிதாற்றி 1276 பெரிதினிது 839 பெரியாரைப் 892 பெருக்கத்து 963 பெருங்கொடை 526 பெருமைக்கு 505 பெருமைபெரு 929 பெருமையுடை 975 பெரும்பா 732 பெறாஅமை 1295 பெறினென் 1270 பெறுமவற் 61 பெற்றார்ப்பெறின் 58 பேணாதுபெட்டா 1178 பேணாதுபெட்ப 1283 பேணாதுபெண் 902 பேதைபெருங் 816 பேதைப்படுத் 372 பேதைமையு 832 பேதைமையெ 831 பேதைமையொ 805 பேராண்மை 723 பொச்சாப்பார்க் 533 பொச்சாப்புக் 532 பொதுநலத்தார் 915 பொதுநோக் 528 பொய்படுமொ 836 பொய்மையு 292 பொய்யாமைபொ 297 பொய்யாமைய 296 பொருடீர்ந்த 199 பொருட்பெண் 913 பொருட்பொ 914 பொருணீங்கி 246 பொருண்மாலை 1230 பொருள் கருவி 675 பொருள்கெடுத் 938 பொருளல்லவரை 751 பொருளல்லவற் 351 பொருளற்றார் 248 பொருளாட்சி 252 பொருளானா 1002 பொருளென் 753 பொள்ளென 487 பொறியின்மை 618 பொறிவாயி 6 பொறுத்தலிறப் 152 பொறையொ 733 போற்றினரி 693 மகன்றந்தை 70 மக்கள்மெய் 65 மக்களேபோல் 1071 மங்கலமென்ப 60 மடலூர்தல் 1136 மடிமடிக் 603 மடிமைகுடி 608 மடியிலாமன் 610 மடியுளான் 617 மடிமைமடி 602 மடுத்தவா 624 மணிநீரும்மண் 742 மணியிற்றிக 1273 மண்ணோடியை 576 மதிநுட்ப 636 மதியும்மடந் 1116 மயிர்நீப்பின் 969 மருந்தாகித் 217 மருந்தென 942 மருந்தோமற் 968 மருவுகமாசற் 800 மலரன்ன - அ 1142 மலரன்ன - மு 1119 மலரினுமெ 1289 மலர்காணின் 1112 மலர்மிசை 3 மழித்தலும்நீ 280 மறத்தல்வெ 303 மறந்தும்பிறன் 204 மறப்பினுமோ 134 மறப்பினெ 1207 மறமானமா 766 மறவற்கமா 106 மறைந்தவை 587 மறைபெற 1180 மறைப்பேன்மற் 1161 மறைப்பேன்மன் 1253 மற்றியானெ 1206 மற்றுந்தொடர் 345 மனத்ததுமா 278 மனத்தானாம் 453 மனத்தினமை 825 மனத்துக்கண் 34 மனத்துளது 454 மனத்தொடு 295 மனநலத்தி 459 மனநலம்நன் 458 மனநலம்மன் 457 மனந்தூயார்க் 456 மனந்தூய்மை 455 மனமாணா 884 மனைத்தக்க 51 மனைமாட்சி 52 மனையாளை 904 மனைவிழைவா 901 மன்னர்க்கு 556 மன்னர்விழை 692 மன்னுயிரெ 1168 மன்னுயிரோ 244 மாதர்முகம் 1118 மாலைநோய் 1226 மாலையோவல் 1221 மாறுபாடில் 945 மிகச்செய்து 829 மிகன்மேவன் 857 மிகினுங்குறை 945 மிகுதியான் 158 முகத்தானமர் 93 முகத்தினி 824 முகத்தின்முதுக் 707 முகநகநட்பது 786 முகநோக்கி 708 முகைமொக் 1274 முடிவுமிடை 676 முதலிலார்க் 449 முயக்கிடைத் 1239 முயங்கிய 1238 முயற்சிதிரு 616 முரண்சேர்ந்த 492 முறிமேனி 1113 முறைகோடி 559 முறைசெய்து 388 முறைப்படச் 640 முற்றாற்றி 748 முற்றியுமுற் 747 முனைமுகத்து 749 முன்னுறக்கா 535 மேலிருந்து 973 மேற்பிறந்தா 409 மையலொரு 838 மோப்பக்குழை 90 யாகாவாரா 127 யாங்கண்ணிற் 1140 யாண்டுச்செ 895 யாதனின்யா 341 யாதானும்நா 397 யாமுமுளேங் 1204 யாமெய்யா 300 யாரினுங்கா 1314 யானெனதெ 346 யானோக்குங் 1094 வகுத்தான் 377 வகைமாண்ட 897 வகையறச் 465 வகையறிந்துதற் 878 வகையறிந்துவ 721 வசையிலாவ 239 வசையென்ப 238 வசையொழிய 240 வஞ்சமனத்தா 271 வருகமற்கொ 1266 வருமுன்னர்க் 435 வருவிருந்து 83 வரைவிலா 919 வலியார்க்கு 861 வலியார்முன் 250 வலியினிலை 273 வழங்குவ 955 வழிநோக்கான் 865 வழுத்தினாடும் 1317 வறியார்க் 221 வன்கண்ணாடி 632 வாணிகஞ்செய் 120 வாய்மையெ 291 வாராக்காற் 1179 வாரிபெருக் 512 வாழ்தலுயிர் 1124 வாழ்வார்க் 1192 வாளற்றுப் 1261 வாளொடென் 726 வாள்போற் 882 வானின்றுல 11 வானுயர்தோ 272 வானோக்கி 542 விசும்பிற் 16 விடாஅது 1210 விடுமாற்றம் 689 விண்ணின்று 13 வித்துமடல் 85 வியவற்க 439 விருந்துபுறத்ததா 82 விரைந்து 648 விலங்கொடு 410 வில்லேருழ 872 விழித்தகண் 875 விழுப்புண்ப 876 விழுப்பேற்றி 162 விழைதகை 804 விழையார்வி 810 விளக்கற்றம் 1186 விளிந்ததாரின் 143 விளியுமெனி 1209 வினைகலந்து 1268 வினைக்கண்வினைகெ 612 வினைக்கண்வினையு 519 வினைக்குரிமை 518 வினைசெய்வார் 584 வினைத்திட் 661 வினைபகை 674 வினையான் 678 வினைவலியு 471 வீழப்படுவார் 1194 வீழுநர்வீழப் 1193 வீழுமிருவர் 1108 வீழ்நாட்ப 38 வீழ்வாரினி 1198 வீறெய்தி 665 வெண்மை 844 வெருவந்த 563 வெள்ளத்தனையம 595 வெள்ளத்தனையவி 622 வேட்டபொ 1105 வேட்பத்தா 646 வேட்பன 697 வேண்டற்வெஃ 177 வேண்டற்கவென 931 வேண்டாமை 163 வேண்டியவேண் 265 வேண்டினு 342 வேண்டுங்கா 362 வேண்டுதல் 4 வேலன்று 546 வேலொடு 552 வைத்தான் 1001 வையத்துள் 50 t t t திருக்குறளும் பரிமேலழகரும் அணிந்துரை “திருக்குறளும் பரிமேலழகரும்” புலவர், முனைவர் ஈரோடை இரா. வடிவேலன் 32. தியாகி குமரன் தெரு, ஈரோடை - 638 004. ‘திருக்குறளும் பரிமேலழகரும்’ என்னும் இந்நூலைப் புலவர் குழந்தையவர்கள் ஆராய்ச்சியுடன் எழுதியுள்ளார். இதில் திருக்குறளின் சிறப்பும், தமிழர் வீழ்ச்சியும் எழுச்சியும், குறளின் பெருமை, குறள் வாழ்வு எனப் பகுத்துக் குறளின் பெருமை பேசப்படுகிறது. அடுத்து, பரிமேலழகர் உரையைப் பற்றி எழுதுகிறார். ஏறத்தாழ நாற்பதுக்கு மேற்பட்ட இடங்களை, கருத்து மாறுபாட்டுடன் குழந்தையவர்கள் விளக்கம் தருகிறார். தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பருதி பரிமேலழகர் - முதலிய பழந்தமிழ்க்கு உரைகண்டோர் திருக்குறளுக்கும் உரை கண்டனர். வள்ளுவனார்க்கும் திருக்காஞ்சி வாழ் பரிமேலழகர், வள்ளுவனார்க்கு வழிகாட்டினான். தொண்டை மண்டலமே எனப் பரிமேலழகரை தொண்டை மண்டலத்தாராகக் காட்டுவார்கள். திருவள்ளுவமாலைக் கருத்துக்களையும் புலவர் குழந்தையவர்கள் மறுத்துக் கூறுகிறார். அவை பிற்காலப் புலவர் யாரோ பாடியது என்பார். திருக்குறளில் அறம், பொருள், இன்பம் மட்டுமே கூறப் பட்டுள்ளது. வீடுபேறு பற்றிக் கூறப் படவில்லை. திருவள்ளுவ மாலை 7,8,19,33,38,40 ஆம் பாடல்கள் வீடுபேற்றைப் பற்றிக் கூறுகிறது. 32-வது பாடலில் ஆரிய வேதம் திருக்குறளுக்கு முதல் நூல் என்கிறது. தேவர் குறளும் திருநாள் மறைமுடியும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை. திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்று உணர். ஐயமகற்றல் : திருக்குறளில் வரும் வானோர், தேவர், புத்தேளிர், வானகம், மேலுலகம் என்பன குறளுக்கு மாறுபட்ட உரைகள். இவ்வுரைகளைக் கற்றால் மனம் மாறுபடும். ஆரியச் சார்பாக எண்ணங்கள் தோன்றும். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டவை பரிமேலழகர் உரையே! அது ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று. இங்கு வள்ளுவர் கால நிலை, வடபுலத்தார் வருகை. தெய்வம் பற்றியெல்லாம் ஆராய்கிறார். நூல் செய்த முறை பற்றியும், நூன் மரபு பற்றியும் பொருள் விளக்கமும், சொல்லின் விளக்கமும் கூறுகிறார். உரைப்பாயிர விளக்கமாக, பரிமேலழகர் கருத்தை மறுத்து எழுதுகிறார். வள்ளுவர்செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந் தோர்கள். உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி பிறவி வேற்றுமை கூறும் மனு முதலிய நூல்கள் ஆரியச் சார்பாவை என்று புலவர் குழந்தை கூறுகிறார். புலவர் குழந்தை உரையைத் தமிழர்கள் கற்றுத் தெளிய வேண்டும். தமிழர்கள் உய்வு அடைவர்! 1. திருக்குறள் 1. குறளார்வம் இன்று எங்கு பார்த்தாலும் திருக்குறள் திருக்குறள் என்னும் ஒலியே கேட்கப்படுகிறது. தென்றற் காற்றுத் தமிழ் மணங் கமழ வீசுகின்றது என்னும் தமிழ் நூல்கள். இன்று தென்றலே யன்றி, வாடை, கொண்டல், கோடை என்னும் எல்லாக் காற்றும் குறள் மணங் கமழ வீசுகின்றன எனல் பொருள் பொதிந்த பொன்னுரையே யாகும். அவ்வூரில் திருவள்ளுவர் திருநாள், இவ்வூரில் திருக்குறள் மாநாடு, உவ்வூரில் திருக்குறள் மன்ற ஆண்டுவிழா என்னும் செய்தியே இன்று செய்தித் தாள்களில் வெளிவரும் செய்திகளில் சிறந்த செய்தியாகி விட்டது. திருக் குறளைப் பற்றிய செய்தியில்லாச் செய்தித் தாள்களே இன்று கிடையா. எந்த ஓர் இன்றியமையாத செய்தியையும் இருட்டடிப்புச் செய்யும் இதழ்களும் குறள் பற்றிய செய்தியை மட்டும் ஒருவாறு வெளியிட்டே வருகின்றன. குறள் இன்று அவ்வளவு முதன்மை பெற்றுவிட்டது. திருவள்ளுவர் மன்றம், திருவள்ளுவர் செந்தமிழ்க் கழகம், திருக்குறள் மன்றம், திருக்குறள் ஆராய்ச்சிக் கழகம், திருக்குறட் பயிற்சிக் கழகம் எனப் பல பெயர்களால் இன்று பட்டிதொட்டி யெல்லாம் திருக்குறள் பரப்பப் படுகிறது. எங்கு பார்த்தாலும் திருக்குறள் வகுப்பு நடத்தப்படுகிறது. திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிகள் பல வெளிவந்து கொண்டே யிருக்கின்றன. திருக்குறட் பேச்சாளர்களுக்கு இன்று தமிழ் நாட்டில் நல்ல கிராக்கி. திருக்குறள் கலவாமல் பேசும் எந்த ஒரு மேடைப் பேச்சாளரையும் இன்று காணமுடியாது. திருக்குறளை எடுத்துக் காட்டுவதைப் பெருமையாகக் கொள்கின்றனர். திருக்குறள் இன்னதென்று தெரியாதவர் கூடத் தம் பேச்சில் இரண்டொரு குறளைக் கலவாமல் பேசுவதில்லை. “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு” “பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று” “ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” என்பன போன்ற சில குறட்பாக்களைக் கூறித் தமது குறளறிவைக் காட்டிக் கொள்வோர் பலர். இடத்துக் கேலாமலே இரண் டொரு குறளை அங்கு மிங்கும் கூறுவோர் சிலர். பொருள் தெரியாமலே இரண்டு மூன்று குறளை ஒப்பிப்போரும் உண்டு. தமக்கும் திருக்குறள் தெரியும் என்று காட்டிக் கொள்வதில் இன்று தமிழர்கள், தமிழ்ப் பேச்சாளர்கள் முனைந்து நிற்கின்றனர். 2. தமிழர் வீழ்ச்சி ஒரு காலத்தே இமயமுதல் குமரிவரை ஒரு மொழி வைத்தாண்ட தமிழன், பின்னொரு காலத்தே `தமிழன்’ எனத் தன் பெயர் சொல்லவும் வாயும் மனமும் கூசும் நிலையை யடைந்தான்; தன்னை `நான் ஒரு தமிழன்’ எனப் பெருமை யோடு கூறிக் கொள்ளவும் குற்றமெனக் கடிந்து கூறப்படும் நிலையை அடைந் தான். `தமிழ்நாடு தமிழருக்கே’ என `எலிவளை எலிகளுக்கே’ என ஏளனஞ் செய்த காலமும் ஒன்றுண்டல்லவா? தமிழ் எனது தாய்மொழி, தமிழ் ஒரு தனிமொழி, தமிழ் இனிய எளிய இயல்பு மொழி எனக் கூறுவது தவறெனக் கருதப்பட்டது. தமிழர் ஒரு தனியினம் என்பதை அறியா அறிவிலியானான் தமிழன். இமயத்தில் புலிவிற்கெண்டை பொறித்து ஏக்கழுத்த முடன் வாழ்ந்த தமிழன் தன்னாட்சி யிழந்து தன்னுரிமை யிழந்து, தன்னிலை தாழ்ந்து, தன்னியல் பிறழ்ந்து அயலார்க்கு அடிமை யானான். மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்ன மானமுடைய மறத்தமிழன் தன்மானத்தையும் இழந்தான். இமயவரம்பன், நெடுஞ்சேரலாதன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கங்கைகொண்ட சோழன் எனத் தன் முன்னோர் பெயரை மொழிவதும் குற்றமெனக் கருதினான்; தமிழரைப் பழித்த கனகவியசர் என்னும் ஆரிய வரசரின் முடித்தலையில் கண்ணகி படிமக்கல் ஏற்றிவந்த nரன் செங்குட்டுவன் பெயரைச் சிந்திப் பதும் தீதென எண்ணினான்; தமிழரின் வலியறியாது வந்த வடபுலத் தரசனான மோரியனின் புறத்தைக் கண்டு செம்மாப்போடு சிரித்து நின்ற 1பழையன் மோகூரின் பண்பைப் பகர்வதும் பழுதெனக் கொண்டான்; புகழொடு வாழ்ந்த தன் முன்னோர் பெயரையும் அறியாத முழுமகன் ஆனான் தமிழன்; இல்லை. ஆக்கப்பட்டான். தான் யார், தன் முன்னோர் யார், அன்னாரின் வாழ்க்கை வரலாறு என்ன, தன் வழிமரபு யாது? என்பன போன்ற தன்னிலை யறியா ஊமன் ஆனான் தமிழன். `நானார், என்னுள்ளமார் ஞானங்களார்’ என்பன போன்ற தன் வாழ்வுக்குப் புறம்பான ஏதெதையோ அறிவதில் ஈடுபட்டுக் காலத்தைக் கழிக்க லானான் தமிழன். தமிழ் நாட்டில், தமிழ் மக்கள் கூட்டத்தில் பேசப்படும். பேச்சுக்களில், ஆரியப் பாதுகாப்பு நூல்களான கீதையும், பாரதமும், இராமாயணமும் எடுத்துக்காட்டு நூல்களாக விளங்கினவே யன்றி, திருக்குறள் முதலிய தமிழ் நூல்கள் இடம் பெறவில்லை. எங்கு பார்த்தாலும் இராமாயணச் சொற்பொழிவுகள், பாரதச் சொற் பொழிவுகள், புராணப் பேச்சுக்கள், திருக்குறட் பேச்சோ, சிலப்பதிகாரப் பேச்சோ இல்லை. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்கள் தமிழ்மக்கட்குத் தெரியாப் பொருள்களாயின. தொல்காப்பியம் என்று ஒரு சிறந்த பழந்தமிழ் நூல் உண்டு என்பது தமிழர்க்கு அறவே தெரியாது. “ஆதி சிவன்பெற்று விட்டான் - என்னை ஆரிய மைந்தன் அகத்திய னென்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை மேவு மிலக்கணஞ் செய்து கொடுத்தான்” - பாரதியார் எனத் தமிழ்மொழியுங் கூட ஆரியமக்கள் பெற்று வளர்த்து அன்போடு தமிழர்க்குக் கொடுத்தார்கள் எனப் பேசப்பட்டது. 2உடன்பிறப் பன்புக்குப் பாண்டுவின் மக்களும் தசரதன் மக்களும் எடுத்துக்காட்டாக விளங்கினார்களேயொழிய 3நெடுஞ்சேரலாதன் மக்கள் விளங்கவில்லை. மாதர் மாண்புக்குச் சீதையும் துரோபதையும் சான்றானார் களேயன்றிக் 1கோப் பெருந்தேவியும் மாதவியும் சான்றாகவில்லை. ஆண்மைக்கு அர்ச்சுனனும் இராமனும் முன்னின்றார்களேயல்லாமல் செங்குட்டு வனும் கரிகாலனும் முன்னிற்கவில்லை. கொடைக்குக் கன்னனும் நளனும் முன்வந்தார்களே தவிரக் காரியும் பாரியும் முன்வர வில்லை. அருந்ததி கற்பரசியானாளே யல்லது கண்ணகி கற்பரசி யாகவில்லை. அரசியற்குச் சாணக்கியன் சான்றானானே யொழிய வள்ளுவன் சான்றாக வில்லை. காரிகையார் தீரத்துக்குக் கைகேசியும் ஜான்சி ராணியும் கைகொடுத்தார்களேயன்றி 2அல்லியும் முத்து நாச்சியும் கைகொடுக்கவில்லை. நட்புக்கு நரநாராயணர் (அர்ச்சுனனும் கண்ணனும்) எடுத்துக்காட்டானார்களேயல்லாமல் 3கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் எடுத்துக் காட்டாக வில்லை. ஆடலுக்கு அரம்பையர் அரங் கேறினார்களே யொழியத் தமிழ் விறலியர் அரங்கேற வில்லை. இசைக்குக் கந்தருவர் பண்ணமைத்தார்களேயல்லது பாணர் பண்ணமைக்க வில்லை. தெருக்கூத்தரசன் கூட மனுமுறை தவறாது செங்கோல் செலுத்தினானே யன்றிக் குறள் முறை தவறாது செங்கோல் செலுத்தவில்லை. இது ஒருகால நிலை! 3. தமிழர் எழுச்சி பின்னர் ஒருவாறு தன்னையறியத் தலைப்பட்டான் தமிழன்; தனது நிலையை உணர முயன்றான்; தன் முன்னோர் வாழ்க்கை வரலாற்றை ஆராய முற்பட்டான்; தன்னிலை யையும் தன் முன்னோர் நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் உறுதி கொள்ள லானான்; எங்கு பார்த்தாலும் தமிழன், தமிழர் தனிப்பெருமை, தமிழர் வரலாறு என்ற பேச்சே பேசப்பட்டது. தமிழன் என்ற பெயரைக் கேட்டுத் தலைநிமிர்ந்து நடந்தான் தமிழன், தமிழன் சிறந்தவன், உயர்ந்தவன், பழமையும் பெருமையும் உடையவன், தனிப்பட்ட பண்பாடுடையவன், உயரிய ஒழுக்கமும் விழுப்பமும் உடையவன், தமிழினம் தனியினம் எனக் கொஞ்சமும் அஞ்சாது நெஞ்சழுத்தத்துடன் கூறலானான்; தன் முன்னோர் வாழ்க்கை வரலாறு பொறித்த தொன்னூல் களைத் துருவிப் படிக்கத் தொடங்கினான் தமிழன். அவ்வளவுதான்! தமிழுக்கு நல்ல காலம் பிறந்தது. இந்த நல்ல காலந்தான் திருக்குறள் இன்று தமிழர்களால் போற்றிப் புகழப்படுவதற்குக் காரணம். தமிழுக்கும் தமிழர்க்கும் இந்நல்ல காலத்தை உண்டாக்கிய பெருமை யாரைச் சேரினும் அவர் வாழ்க! தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாகவுள்ள பழந்தமிழ் நூல்களுள் தொல்காப்பியமும், திருக்குறளுமே தலையாய நூல்களாகும். தொல்காப்பியம் இலக்கண நூல், திருக்குறள் இலக்கிய நூல். தொல்காப்பியம், தொல்காப்பியர் என்னும் பழந்தமிழ்ப் பெரியாரால் செய்யப்பட்டது; திருக்குறள் திருவள்ளுவர் என்னும் பழந்தமிழ்ப் பெரியாரால் செய்யப் பட்டது. இவ்விரு நூலும் தமிழ் மக்களின் இரு கண் போன்றவை; கருமணியிற் பாவை போன்றவை; பழந்தமிழர் வாழ்க்கை வரலாற்றை நம் கண்முன் கொண்டுவந்து காட்டும் காலக்கருவியெனலாம். தமிழ் மக்கள் அறியமுடியாது மறைக்கப்பட்டிருந்த பாவையின் ஒளி போன்றவை; அவ்விரு பழந்தமிழ்க் கருவூலங் களுள் திருக்குறள் இன்று எப்படியோ தமிழ்மக்களால் தம்நூலென அறிந்து போற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தமிழனும் `குறள் குறள்’ என்று மனங் கூசாமல் வாய்விட்டுக் கூறி வருகிறான். 4. குறளின் பெருமை ‘திருக்குறள் ஒரு தனித் தமிழ் நூல். திருக்குறள் அயற் கொள்கை எதிர்ப்புநூலே யன்றி எந்த ஒரு அயற்கொள் கையையும் உடன்பட்டுக் கூறும் நூலன்று. தமிழர் வாழ்வே திருக்குறள். திருக்குறளே தமிழர் வாழ்வு என்னும் அவ்வளவு இன்றியமையாச் சிறப்பினையுடைய நூல் திருக்குறள்; உள்ளதை உள்ளபடியே உயரிய முறையில் எடுத்துரைக்கும் உண்மை நூல்; தமிழர் வாழ்வின் படப்பிடிப்பு! பழந்தமிழர் நாகரிக நல்வாழ்வை அப்படியே நமக்குக் காட்டும் களங்க மற்ற காலக்கண்ணாடி! தொன்மையும் எதிர்மையும் ஒருங்கொப்பக் காட்டுந் தொலை நோக்காடி! தமிழ் மக்களின் வாழ்க்கைச் சட்டம்! தமிழ் மக்களுக்கு வள்ளுவர் வகுத்தமைத்து வைத்த பாதுகாப்புப்படை! ஏன்? தமிழர்க்கு மட்டுமின்றி, குறள் உலகப் பொது நூல்! மக்கட் பண்பாட்டுச் சரக்கறை! எக்காலத்துக்கும் உரிய நூல்! இறவா நூல்! காலங் கடந்த நூல்!’ எனத் திருக்குறளின் பெருமையைத் திசை யெட்டும் பரப்பி வருகிறான் தமிழன்; திருக்குறள் படியாதவன் தமிழனல்லன் என எடுப்புடனும் வெடுப்புடனும் கூறிக் கொள்கிறான். வாழ்க குறள்! 5. குறள் வாழ்வு தமிழ் மக்கள் திருக்குறளிடத்து இன்று காட்டும் ஆர்வத்தில், அக்கறையில் இவ்வளவு நாளாய் நூற்றிலொரு பங்கு காட்டி வந்திருப்பரேல் இன்றுள்ள இழிநிலையை அடைந்திருக்க மாட்டார்கள். தமது முன்னோர் போலவே குறள் நெறியில் நடந்து வந்திருப்பரேயானால் இத்தனை யித்தனை சாதிப் பிரிவாலும் சமயச் சளக்காலும் தமிழர் இவ்வாறு சீர்க்குலைந் திருக்க மாட்டார்கள். வள்ளுவர் காட்டிய வழியில் சென்றிருந் தால் தமிழினம் இன்று இவ்வாறு சிதைந்து சில்லாந்தட்டி யாய்ப் போயிருக்காது. குறளைப் படித்துக் குறள்வாழ்வு வாழ்ந்து வந்திருப்பரேல் தமிழர் இவ்வாறு மானமிழந்து மதிகெட்டு அயலார்க் கடிமையாய் அடங்கி யொடுங்கி அல்லலுற்றலைய வேண்டிய நிலையேற் பட்டிருக்காது. வள்ளுவர் வகுத்த வழியில் நடந்திருப்பரேல் சூடு சொரணை யற்றுச் சூத்திரர்கள் எனத் தங்களை ஒப்புக் கொண்டு, சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்து உழலும் நிலை ஏற்பட்டிருக்காது தமிழர்க்கு. குறளை முறையோடு படித்துவந்திருந்தால் இமயத்தில் விற்பொறித்த செங்குட்டுவனைப் போல் நாம் செம்மாந்த வாழ்வு வாழ்ந்திருப்போம்; ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை அடக்கியாண்டிருக்காது; வேங்கை போன்ற வீரங் குன்றி யிருக்காது; வழிவழியாகத் தனியாட்சி நடத்தி வந்த தமிழ்நாடு இன்று அயலாரடிக் கீழ் அடிமைப் பட்டுக் கிடக்காது; இமயத்தில் புலிவிற்கெண்டை பொறித்து இறுமாப்போடு வாழ்ந்துவந்த தமிழர்க்கு இன்று எதற்கெடுத் தாலும் இமயத்தை நோக்கிக் கையேந்தி நிற்கும் இழிநிலை நேர்ந்திருக்காது. குறள் வாழ்க்கை நடத்தி வந்திருந்தால் தமிழ்க்குலம் இன்றுள்ள இக் கொடும் பாட்டு நிலையை அடைந்திருக்காது. இத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த திருக்குறளைப் பின்னேன் தமிழர்கள் போற்றாது புறக்கணித்தனர்? ஏன் படித்துப் பயன் பெறாதிருந்தனர்? திருக்குறள் என்று ஒரு பழந்தமிழ் நூல் உண்டு என்பது தமிழர்க்குத் தெரியாதா என்ன? தம் முன்னோர் செய்து வைத்துப் போன நூலைக் கூடத் தெரிந்துகொள்ள முடியாத அவ்வளவு முழுமோச மான நிலையையா அடைந்து விட்டனர் தமிழர்? இல்லை. தெரிந்தும் பின்னேன் அதை மூத்ததாரத்தைப் போலப் புறக்கணித்து வந்தனர்? பழந்தமிழர் களால் உயிரினும் பெரிதாக மதித்துப் போற்றிப் பயின்று வந்த குறள் பிற்காலத் தமிழர்க்கு ஏன் அவ்வாறு எட்டிக்காயாய்க் கசந்து போய் விட்டது? காரணம் என்ன? திருக்குறள் பழந்தமிழ் மக்களின் அகவாழ்வு புறவாழ்வு என்னும் இருவகை வாழ்க்கை முறைகளையும், அறம்பொருள் இன்பம் என முப்பாலாக்கி, இலக்கியச் சுவைபட அழகாக எடுத்தினிதியம்பும் இயற்றமிழ் நூல். சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தரும், சிற்றரசரும் வள்ளுவர் வகுத்த அரசியலைத்தான் வழுவாது இனிது நடத்திவந்தனர். பழந்தமிழ் மக்களில் எவரொருவரும் வள்ளுவர் கிழித்த கோட்டைத் தாண்டி நடந்ததில்லை. கற்றோன்றி மட்டோன்றாக் காலத்தின் முற்றோன்றி மூத்த குடிவாழ்க்கையையுடைய பழந்தமிழ் மக்களின் உயரிய வாழ்க்கை முறைகளைப் பிழிந்து வடித்தெடுத்த சாரமே திருக்குறள். தமிழ் நாகரிக நற்சாறுகொண் டாக்கிய தீங்கட்டியே திருக்குறள். தமிழ் நாகரிகத்தோடு ஆரிய நாகரிகங் கலந்து, தனித்தமிழ்ப் பண்பாட்டைக் கெடுத்து விடாமல் தடையாக இட்ட உயர்திண் கரையே திருக்குறள். இத்தகைய மேம்பாடுடைய திருக்குறள், கலப்பட மற்ற தனித்தமிழ் நாகரிகங் கூறும் நூல் என்பதைப் பிற்காலத் தமிழ் மக்கள் அறிய முடியாது செய்துவிட்டனர் திருக்குறள் உரை யாசிரியர்கள். திருக்குறள் ஆரிய மனு முதலிய நூல்களின் மொழிபெயர்ப்பு ஆரிய நாகரிகத்தைப் பெயர்த்தெழுதியதே திருக்குறள். உயரிய ஆரியக் கொள்கைகளை மேற்கொண்டு, தமிழ் மக்கள் உயர்வடையும் பொருட்டு வள்ளுவரால் செய்யப் பட்ட ஆரிய நாகரிக வழி நூலே திருக்குறள் எனத் தமிழ்மக்கள் நம்பும்படி மருட்டிவிட்டன அப் பழைய உரைகள்.  2. பரிமேலழகர் உரை 1. உரையாசிரியர் பண்டைக் காலத் தமிழ் மக்கள் இலக்கியம், இலக்கணம் ஆகிய எல்லாவகைத் தமிழ் நூல்களையும் பாட்டாகவே பாடிவந்தனர். இன்றுபோல் அன்று தனியாக உரை நடை நூல் இல்லை. பாட்டின் உரையே உரைநடையாகும். `பாட்டுரை நூலே' (தொல், செ-79) என்னும் தொல்காப்பியச் சூத்திரம் பாட்டு உரையும் தனித்தனி யாப்பென்றே கூறுகிறது. பண்டு நூலைப் போலவே அதன் உரையும் நன்கு மதிக்கப்பட்டு வந்தது. உரையா சிரியர் தனியாகவே இருந்துவந்தனர். நூலாசிரியர் போலவே உரையாசிரியரும் ஒப்ப மதிக்கப்பட்டு வந்தனர். பிறர் கருத்தறிந்து உரையெழுதுதல் கடினமாகையால் நூலாசிரியரினும் உரையாசிரியர் நன்கு மதிக்கப்பட்டு வந்தனர் எனல் மிகையாகாது. நூலாசிரியர் தாம் செய்த நூலுக்கு உரை யெழுதும் வழக்கம் அன்றில்லை. "நூல் செய்தவன் அந்நூற்குரை எழுதான்". என்பது இலக்கணக் கொத்து. உரையாசிரியர்கள் நூலாசிரியர் கருத்தறிந்து உரை யெழுதுவதோடு நில்லாமல், தங்கள் கருத்துக்களை வலிந்து புகுத்தி உரையெழுதுவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். தங்கள் கொள்கைக் கேற்றவாறு நூலின் கருத்தையே மாற்றி விடுவதும் உண்டு. வியாசர் செய்த வேதாந்த சூத்திரம் என்னும் நூலுக்குச் சங்கரர், இராமநுசர், மத்துவர், நீலகண்டர் என்னும் சமயாச் சாரியர் நால்வரும் நால்வகை யுரை யெழுதியுள்ளதும், அவ்வுரைகளைப் பின்பற்றுவோர் தனித்தனி கொள்கை யுடையராய் இருப்பதும் அறிக. இவ்வாறே தமிழர் வாழ்க்கைச் சட்ட நூல்களான தொல் காப்பியத்திற்கும் திருக்குறளுக்கும் பல உரையாசிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு உரையெழுதித் தம்தம் கொள்கைகளைப் புகுத்தி யிருக்கிறார்கள். தொல்காப்பியத் திற்கு இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க் கினியர், கல்லாடர், தெய்வச்சிலையார் என்னும் அறுவர் உரையெழுதி யுள்ளனர். திருக்குறளுக்கு, 1. தருமர் 6. பரிமேலழகர் 2. மணக்குடவர் 7. திருமலையார் 3. தாமத்தர் 8. மல்லர் 4. நச்சினார்க்கினியர் 9. கவிப்பொருள் 5. பருதி 10. காளிங்கர் என்னும் பதின்மர் உரை யெழுதியுள்ளனர் "தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பருதி பரிமே லழகர் - திருமலையார் மல்லர் கவிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற் கெல்லையுரை செய்தா ரிவர்". 2. பரிமேலழகர் இவர்களில் பரிமேலழகரே கடைசியாக உரையெழுதியவ ராவர். பரிமேலழகர் உரையெழுதிய பின்னர் மற்ற உரைகள் பயில்வாரற்றுப் போயின. அவற்றுள் சில இறந்தே ஒழிந்தன. மணக்குடவர், பருதி, காளிங்கர் முதலிய சிலர் உரையே உயிரோ டுள்ளன. இதுகாரும் பரிமேலழகர் உரையே திருக்குறளோடு ஒப்ப மதிக்கப்பட்டு வந்தது. "திருத்தகுசீர்த் தெய்வத் திருவள் ளுவர்தங் கருத்தமைதி தானே கருதி - விரித்துரைத்தான் பன்னு தமிழ்தேர் பரிமே லழகரெனும் மன்னு முயர்நாமன் வந்து". "பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ - நூலில் பரித்தவுரை யெல்லாம் பரிமே லழகன் தெரித்தவுரை யாமோ தெளி". "விள்ளுவ னார்க்குந் திருக்காஞ்சி வாழ்பரி மேலழகன் வள்ளுவ னார்க்கு வழிகாட்டி னான்றொண்டை கண்டலமே". வள்ளுவரின் கருத்தறிந்து உரை யெழுதியவர் பரிமேலழகரே. மற்ற உரையெல்லாம் பரிமேலழகர் உரைக்கு ஒப்பாகா. பரிமேலழகர் உரையில்லாவிட்டால் திருக்குறளுக்கே சிறப் பில்லை. திருக்குறளுக்குப் பெருமை தருவதே பரிமேலழகர் உரைதான். இவர் உரையெழுதும்போது, ஒருமை நிலை (நிஷ்டை) இருந்து உண்மைக் கருத்தைக் கண்டு எழுதினா ரெனவும், உரையை அரங்கேற்ற மதுரைக்குச் சென்றபோது, பாண்டியன் விருப்பப்படி இவர் ஒரு வெண்கலக் குதிரை மேலிருந்து உரையைப் படிக்க, அவ்வெண் கலப்பரி இடம் விட்டுப் பெயர்ந்ததால் பரிமேலழகர் எனச் சிறப்புப் பெயர் பெற்றனர் எனவும் போற்றிப் புகழப்படுகிறது. இவ்வாறு இவர் உரையைப் புகழ்வதன் காரணம், அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்னும் தேவார ஆசிரியர்களாகிய சைவ சமய குரவர்கள் மூவரும், வைணவ சமய குரவர்களான ஆழ்வார்கள் பன்னிருவரும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கும் 9-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தினராவர். பரிமேலழகர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டினராவர். அதாவது ஆரியச்சார்பு பற்றிய சைவ வைணவ சமயக் கொள்கைகள் தமிழ்மக்கள் உள்ளத்தில் நன்கு பதியப்பெற்ற காலத்தில் இருந்தவராவர். தமிழர் கலை, நாகரிகம், சமயம் எல்லாம் ஆரியத்தின் குட்டிகளேயாம் எனத் தமிழர் நம்பி, வட மொழிக்கும் ஆரியத்திற்கும் அடிமைப்பட்டு வாழ்ந்த காலமும் அதுவேயாகும். எனவே, இச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, சமயச்சார்பற்ற திருக்குறளுக்கு அக்காலத்துக் கேற்பச் சமயக் கருத்துக்களையும் ஆரியக் கொள்கை களையும் வலிந்து புகுத்தி உரையெழுதினர் பரிமேலழகர். இதனாலேயே பிற்காலத் தமிழர்கள் பரிமேலழகர் உரையை அளவுக்கு மீறிப் போற்றிப் புகழ்வாராயினர். ஆரிய நாகரிகம் வேறு, தமிழர் நாகரிகம் வேறு; திருக்குறள் ஆரிய நாகரிக எதிர்ப்பு நூலே யன்றி ஆரியக் கொள்கை உடன்பாட்டு நூலன்று என வெட்ட வெளிச்சமாக்கப் பட்ட இன்றுங்கூடப் `பரிமேலழகர் உரையே உரை! இப்போது உரைக்கும் உரையெல்லாம் அதற்கு ஒப்பாகுமா?' என்று கூறும் தமிழறிஞர்கள் இருக்கும்போது, தமிழ் மக்கள் ஆரியப் பேரிருளில் மூழ்கிக் கிடந்த சென்ற நூற்றாண்டில் எவ்வாறு போற்றியிருப்பர் என்பதைக் கேட்கவா வேண்டும்? பரிமேலழகர் காஞ்சீபுரத்தில் பிறந்தவர்; பார்ப்பன இனத்தினர்; வடமொழி தென்மொழிகளில் வல்லுநர்; உரையெழுதுவதில் மிகுந்த திறமையுள்ளவர். திருக்குறளின் பழைய உரைகளில் இவர் உரை மிகவும் சிறந்த உரை என்பது உண்மையே. ஆனால், பரிமேலழகர் ஒரு பார்ப்பனராகையால், தமிழ் நூல், உரை எழுதுவதன் மூலம் தமிழில் ஆரியக் கொள்கைகளைப் புகுத்தித் தனித்தமிழ் மரபைக் கெடுப்பதையே தங்கள் வாழ்க்கைப் பயனாக - கடமையாகக் கொண்ட பார்ப்பன அறிஞர்களைப் போலவே இவரும் தமது உரையால் தனித்தமிழ் நூலாகிய திருக்குறளை, ஆரிய மொழிபெயர்ப்பு நூலெனத் தமிழர் எண்ணும்படி செய்து விட்டார். தமிழர் நாகரிகம் என்னும் இன்சுவை மிக்க திருக்குறளாகிய நல்லாவின் பாலில், ஆரிய நாகரிகம் என்னும் கொடுங்குண மிக்க தம் உரையாகிய நஞ்சைக் கலந்து பாழ்படுத்திவிட்டார். பரிமேலழகர் உரை என்னும் கொடிய நஞ்சை அகற்றினாலன்றி முப்பால் நற்பாலாகாது. அவர் தம் கடமையைச் செய்தார். நாமும் நம் கடமையைச் செய்வதே கடமையாகும். 3. திருவள்ளுவமாலை திருவள்ளுவர் திருக்குறளை மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றினபோது, வள்ளுவரையும் குறளையும் சிறப்பித்துச் சங்கப்புலவர்கள் பாடியதாக 53 வெண்பாக்கள் உள்ளன. அவை திருவள்ளுவமாலை எனப்படும். இது திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரை எத்தகையதோ அத்தகையதே. பரிமேலழ கரின் உரை திருக்குறளின் பெருமையை எங்ஙனம் சிறுமைப் படுத்துகிறதோ அங்ஙனமே திருவள்ளுவமாலையும் சிறுமைப் படுத்துகிறது. அவ் வெண்பாக்கள் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை செய்த சங்கப் புலவர்களால் செய்யப்பட்டவை யல்ல. பிற்காலத்தே யாரோ செய்து, சங்கப்புலவர்கள் செய்ததாக அன்னார் பெயர்களை எழுதி வைத்துவிட்டனர் எனலே பொருந்தும். திருக்குறள் அரங்கேற்றத் தொடங்கியபோது, அதற்குத் தலைமைதாங்கத் தகுதியுடையவர் யார் என்னும் ஐயப்பாடுண் டானது சங்கப் புலவர்களுக்கு. அப்போது, வானொலி (அசரீரி), `மதுரையில் உள்ள உருத்திர சன்மர் என்னும் பெயருடைய ஊமைப் பிள்ளையே தலைமை தாங்கத் தகுதியுடையவர்' என ஒலித்தது, என்னும் கருத்துடையது முதற்பாட்டு. இறையனார் பாட்டுக்குக் குற்றம் கூறியவர் எனும் நக்கீரரைத் தலைவராகக் கொண்ட சங்கப் புலவர்களுக்கா இவ்வையப்பாடு! ஏன் நக்கீரர் தலைமைதாங்கத் தகுதியுடையவரல்லரோ? தமிழர் நாகரிகச் சரக்கறையாகிய திருக்குறளைச் சீர்தூக்கிப் பார்க்கும் அரங்கேற்றத்திற்கு வாய் பேசத் தெரியாத ஓர் ஊமைப் பிள்ளையா தலைமை தாங்க வேண்டும்? அதுவும் சிறுபிள்ளை வேறு. பேசும் பிள்ளை யொன்று மதுரையில் இல்லையா என்ன? மேலும், வானொலி சொல்லிதானா சங்கப்புலவர்கள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? ஒரு நூலரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்குந் தகுதியுடைய ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அறிவுகூட இல்லாதவரா சங்கமிருந்து தமிழாய்த்தனர். இறையனாரகப்பொருள் என்னும் இலக்கண நூலுக்கு இதே சங்கப்புலவர்கள் நாற்பத்தொன்பதின்மரும் உரையெழுதினர். யார் உரை சிறந்தது என்னும் ஐயப்பாடு உண்டானது. அப்போது மதுரைச் சோமசுந்தரக் கடவுள் ஐந்தாண்டுப் பருவமுள்ள இம் மூங்கைப் பிள்ளையையே தான் தலைமை தாங்கும்படி செய்து, ஐயந்தீர்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டதாக இறையனாரகப் பொருளுரை கூறுகிறது. இது ஒரு கற்பனைக் கட்டுக்கதையே யாகும். `உருத்திரசன்மர்' என்னும் பெயரே சங்ககாலப் பெயரன்று. இது பிற்காலப் பாட்டென்பது வெளிப்படை. `உலகத்தார் விதிவிலக்குகளை யறிந்து உய்யும் வகைகளை ஆராய்ந்து, நான் முதலில் நான்முகன் நாவிலிருந்து நான்கு வேதங்களையும் சொன்னேன்; இடைக்காலத்தே பாரதத்தைப் பகர்ந்தேன்; இப்போது வள்ளுவன் வாக்கி லிருந்து திருக்குறளைச் சொல்லினேன்' என நாமகள் பாண்டியனைப் பார்த்துச் சொன்ன தாகவுள்ளது இரண்டாவது பாட்டு. "நாடா முதனான் மறைநான் முகனாவில் பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் - கூடாரை எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின் வள்ளுவன் வாயதென் வாக்கு" என்பது அப்பாட்டு. நாமகள் பாடினாளென்பதே கற்பனைக் கூற்றாகும். நாடா-நாடி. பாடா-பாடி. பாரதத்தில் மக்கள் கடைப்பிடித் தொழுகக்கூடிய விதிவிலக்குகள் என்ன உள்ளனவோ நாமகளைத்தான் கேட்கவேண்டும். வேதம், பாரதம் இவற்றினும் திருக்குறள் தாழ்ந்தது என்பதைக் காட்ட எழுந்ததே இப்பாட்டு. மேலும், வள்ளுவர் அறம் பொரு ளின்பமே சொல்லி யிருக்கத் திருவள்ளுவமாலை 7, 8, 19, 33, 38, 40 பாடல்கள் வள்ளுவர் வீட்டைப் பற்றியும் கூறியிருப்பதாகக் கூறுவதை நோக்கப் பரிமேலழகர் உரையெழுதிய பின்னர், அவ்வுரைக்கு உறுதுணையாகப் பாடப்பட்டதே திருவள்ளுவமாலை எனக் கொள்வதற்கு இடமேற்படுகிறது. 21-ஆம் பாடலில் வள்ளுவர் பெயராக வரும் மாதானுபங்கி என்பதும் சங்க காலச் சொல்லன்று. "நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத் (தோன் தான்மறைந்து வள்ளுவனாய்த் தன்னுரைத்த- நூன்முறை" (4) "செய்யா மொழிக்கும் திருவள் ளுவர்மொழிந்த பொய்யா மொழிக்கும் பொரு ளொன்றே" (23) "வேதப் பொருளாய் மிகவிளங்கி" (24) "மெய்யாய வேதப் பொருள்விளங்க" (28) " . . . . தாமே தமைப் பயந்த வேதமே மேதக்க ன" (32) "வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார் ஓதவழுக் கற்ற துலகு" (37) "வேதப் பொருளை விரகால் விரித்துலகோர் ஓதத் தமிழா லுரைசெய்தார்" (42) இவற்றால், வடமொழி வேதங்களின் கருத்துக்களையே வள்ளுவர் திருக்குறளாகச் செய்தனர் என்பது வலியுறுத்தப் படுகிறது. 32-ஆவது பாட்டு ஆரிய வேதமே திருக்குறளுக்கு முதனூல் என்கின்றது. திருக்குறள் தமிழர் நாகரிகங்கூறு நூலாயிருக்க, தமிழுக்காகவே வாழ்ந்த சங்கப் புலவர்கள், வடமொழி வேதக் கருத்துக்களே திருக்குறள் என ஒருபோதும் மாறுபடக்கூறார். 4-ஆவது பாட்டுத் தமிழ் வாழத் தான் வாழ்ந்த பாண்டியன் பாடியதாக உள்ளது. " . . . . முப்பாற்குப் பாரதஞ்சீர் ராம கதைமனுப் பண்டைமறை நேர்வனமற் றில்லை நிகர்" (30) என்னும் பாட்டுத் திருக்குறளுக்குப் பாரதம், இராமாயணம், மனுநூல், வேதங்கள் என்னும் இவையே ஒப்பாகும்; ஒப்பாவன பிற இல்லை என்கின்றது. மனு நூலும் வேதமும் ஆரிய அற நூல்களா கையால் அவை ஒப்பாகும் என்பதிலாகிலும் கொஞ்சம் பொருளுண்டு. ஆரியப் புராணக் கதைகளாகிய பாரதமும் இராமாயணமும் தமிழர் அறநூலாகிய திருக் குறளுக்கு எங்ஙனம் ஒப்பாகும்? அவை இரண்டும் என்ன அற நூல்களா? தமிழர் ஒழுக்கம் கூறும் திருக்குறளுக்கு ஆரியப் புராணக் கதைகள் ஒப்பாகும் என்பது, பாலுக்கு நஞ்சொப் பாகும் என்பது போன்ற பொருந்தாப் பொய்க்கூற்றே யாகும். "தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்" என்னும் பாட்டைப் போலப் பிற்காலத்தில் யாரோ பாடி யவையே திருவள்ளுவமாலையும். நான்மறை முடிவு - உபநிடதங்கள். மூவர் தமிழ் - தேவாரங்கள். முனி மொழி - வேதாந்த சூத்திரம். கோவை - திருக்கோவையார். திருமூலர் சொல் - திருமந்திரம். திருக் கோவையார் நீங்கலாக மற்றவை சமய நூல்கள். எப்படித் திருக்குறளும் இவையும் ஒன்றோ நமக்கு விளங்கவில்லை. எனவே, பரிமேலழகர் உரை, திருவள்ளுவமாலை போன்ற மாசு நீங்கித் திருக்குறளை மாசிலாமணியாக்குதல் தமிழர் கடமையாகும்1. இன்னொன்று; ஆங்கில முதலிய அயல் மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள திருக்குறள் மொழிபெயர்ப்புக்க ளெல்லாம் பரிமேலழகர் உரையைக் கொண்டு மொழி பெயர்த் தவையேயாகும். உலக மக்கள் திருக்குறளின் உண்மைக் கருத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், குறளின் உண்மைக் கருத்துடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தல் இன்றியமையாததாகும்.  3. ஐயமகற்றல் திருக்குறளில் வரும் வானோர், தேவர், புத்தேளிர், வானகம், மேலுலகம், புத்தேளுலகம், எழுபிறப்பு, மறுமை முதலிய சொற் களால், திருக்குறள் ஆரியக் கொள்கைகளை (உடன்பட்டுக் கூறும் ஒரு நூலெனவும், சமயச் சார்புடைய) நூலெனவும் தமிழ் மக்கள் எண்ணி ஐயுற்று வருகின்றனர். அதற்கேற்பவே பரிமேலழகர் உரையும் அமைந்துள்ளது. அவ்வாறு தமிழ் மக்கள் கொள்ளும் அவ்வையப்பாடு தீர்ந்தாலன்றித் திருக்குறளை ஆர்வத்துடனும் அக்கறையுடனும் படிக்க மனந்துணியாது. ஆகையால், அவ்வை யுறவை நீக்குதல் இன்றியமையாததாகும். 1. வள்ளுவர் காலநிலை வள்ளுவர் காலத்தே, அவர் காலத்திற்குப் பன்னெடு நாள் முன்னர் இமயமலைக்கு வடபாலிருந்து வந்து, இமயமலைக்கும் விந்த மலைக்கும் இடைப்பட்ட நிலமாகிய வட நாட்டில் குடியேறி வாழ்ந்துவந்த ஆரியர் என்போர் அத்துடன் அமைய வில்லை. நாளடைவில் அவ்வடவர் சிலர் தமிழகத்தில் குடியேறி வாழ்ந்து வந்தனர். தமிழ் மக்கள் அவ் வடபுல மக்களை அன்புடன் வரவேற்றுப் போற்றி வந்தனர். அவ்வடபுல முதியோர், தமிழ்த் துறவிகளான அந்தணர் களைப் போல மதிக்கப்பட்டு வந்தனர். அவ் வாரியக் குடும்பத் தலைவர்களில் பெரும்பாலோர் தமிழ்ச் செல்வர் களிடம் பாங்கத் தொழிலின் ஒரு பகுதியான பார்ப்பனத் தொழில் செய்துவந்தனர் (குறள்-1103). வந்தேறிகளான அவ்வடபுல மக்கள் தங்கள் குலத்தொழிலெனக் கொலை வேள்வி செய்து வந்தனர் (259). அவ்வேள்வியால் பெரும்பயன் உண்டாகு மென்னும் அவ்வாரிய மக்கள் கூற்றினைத் தமிழ் மக்கள் ஒருவாறு நம்பிவந்தனர். (328) அவ்வடவர் கொள்கைகள் சில தமிழரிடம் பரவியிருந்தன. அன்னார் கூறிய பல கற்பனைக் கதைகளைத் தமிழ் மக்கள் தெரிந்திருந்தனர்; சில கற்பனைகளை உண்மையென நம்பியும் வந்தனர் (1146). அவ்வாரியப் பிறவி வேற்றுமைப் பிணி தமிழ் மக்களை ஒருவாறு பிணிக்கத் தொடங்கியிருந்தது (972). அதனால், தமிழ் மக்களின் ஒன்றுபட்ட ஒருமை வாழ்வு சிதையத் தலைப்பட்டது. தமிழர் பண்பாட்டை ஆரியர் பண்பாடு விழுங்கி வந்தது. 2. வடபுலத்தார் அவ்வடபுல மக்கள், தாங்கள் முன்பு இருந்துவந்த தங்கள் பழைய தாயகத்தில் வாழும் தம்மவர் மேலானவர்; இந் நாட்டு மக்களிலும் உயர்ந்தவர்; யாதொரு கட்டுப்பாடுமின்றித் தம் விருப்பம் போல் நடந்து கொள்ளும் இயல்பினர் (1072). அவர்கள் தலைவனான இந்திரன் மிக்க வலியும் பெருமையும் உடையவன் (25) அந்நாடு செல்வமிக்க நன்னாடு; துன்பமென்பது அங் கில்லை; இன்ப வடிவானது (1103). என்பன போன்ற தம் இனப் பெருமையைத் தமிழ் மக்கள் நம்பும்படி செய்திருந்தனர். தமிழ் மக்கள் இவ்வடவரின் பழந்தாயகத்தினரான அவ்வட புலத்தாரை வானோர் (18,346), விசும்புளார் (25), இமையார் (906), புத்தேளிர் (58,213,234,290,966), தேவர் (1072), தெய்வம் (50), புலவர் (234) எனவும், அவ்வட புலத்தார் வாழ்விடத்தை வானகம் (101), மேலுலகம் (222), புத்தேளுலகம் (213,234,290). புத்தேள் நாடு (966,1323), தாமரைக்கண்ணானுலகு (1103) எனவும் அழைத்து வந்தனர். காரணங் கண்டு ஒரு பொருளுக்குப் பல பெயரிட்டு வழங்கும் தமிழர் பெருமைக்கு இஃதொரு சான்றாகும். வானவர் : மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலின் உயர்ந்த மேட்டு நிலத்திலிருந்து சேர நாட்டை யாண்டுவந்த சேர மன்னரை வானவர் (புறநானூறு 36,126), வானவரம்பர் (புறம் 2, பதிற்றுப்பத்து 35, 38) என்று அழைத்துவந்தது போலவே, இமயமலையின் வடபால் உயர்ந்த மேட்டு நிலத்தில் வாழ்ந்து வந்ததால் தமிழ் மக்கள் அவ் வடவரை வானோர் என அழைத்தனர். வான் உயர்வு. வானகம் - உயர்ந்த இடம். வானவர், வானோர் - உயந்த இடத்தில் வாழ்பவர். இதுபற்றியே ஆரியர் அன்னாரை `உயர்ந்தவர்' என்றதும். விசும்புளார் : விசும்பு - வான். விசும்புளார் - விசும்பில் உள்ளவர் - வானகத்தார். `மேலுலகம்' என்பதும் அப் பொருளதே. திசைபற்றி ஐரோப்பா மேனாடு எனவும், மலேயா முதலிய கிழக்கு நாடுகள் கீழ்நாடு எனவும் வழங்குதல் போல, இடம்பற்றி அது மேலுலகம் எனப்பட்டது. மேல் - உயரம் உலகம் என்பது நாட்டைக் குறிக்கும். "மாயோன் மேய காடுறை உலகமும்" (தொல் அகத்-5) என முல்லை நிலம் உலகம் எனப்படுதல் காண்க. இமயவர் : இமயமலையில் வாழ்பவர் என்னும் காரணப் பெயர். அமச்சு - அமைச்சு என அகரத்திற்கு ஐகாரம் போலி யானாற்போல, இமயவர் - இமையவர் என்றாயது. இமையோர் - இமயவர். இமையவர் - கண்ணிமையாதவர் என்பது, மக்களினும் உயர்ந்தவர் என்பதைக் காட்ட எழுந்த புராணக் கற்பனை. கோவை, திரு. துடிசைக்கிழார் அவர்கள் பதித்துள்ள திருமந்திரம் 17-ஆம் பக்கத்தில், `தமிழ்நாட்டின் வடவெல்லை யாகிய இமயமலையின் சிகரங்களில் சிறந்த கயிலாயத்தின் திருக்கோயிலுக்கு முதற்பெரு நாயகமாகி, இந்திரன், மால் அயன் முதலாம் இமயவர்க்கு' என்றெழுதி, இமயவர் - இமையமலை வாசிகள் என்று குறிப்பும் எழுதியுள்ளார். "இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும் அவையில் காலம் இன்மையான" (தொல். பொ-54) இமயவர் நாட்டினும், தமிழகத்தினும் அறம் பொருளின்ப நுகர்ச்சியில்லாத காலம் இல்லை எனத் தொல்காப்பியர் அந்நாட்டை அயல் நாடாகவே கொண்டு கூறியுள்ளார். மக்களல்லாத தேவராயின் அறம் பொரு ளின்ப நுகர்ச்சி கூறுதல் பொருந்தாது. அத் தேவருலகத்தையடையத் துணை யாய அவற்றை அவர்க்குரித் தெனல் எங்ஙனம் பொருந்தும்? உரைப்பாயிர விளக்கம் பார்க்க. விரும்பியதை விரும்பியவாறு செய்தொழுகும் தேவர்கட்கு (1072) அறம் ஏது? இமயமலைக்கு மேருமலை என்ற பெயரும் உண்டு. மேரு - பொன். மேருமலை - பொன்மலை. எனவே, பொன்னுலகம் எனப் பொருள்படும் `சுவர்க்கலோகம்' என்பதும் இமய மலையின் ஓரிடமேயாகும். புத்தேள் : இது புத்தாள் என்பதன் திரிபு. புது ஆள் - புத்தாள்; புது ஆடை - புத்தாடை என்பது போல. புதியவர் என்பது பொருள். புத்தேளிர் - பன்மை. அவ்வடபுலத்தார் புதிதாக இங்கு வந்தபோது இட்டு வழங்கிய பெயர் இது. இன்றுங்கூட, வேறூ ரிலிருந்து வந்து புதிதாகக் குடியேறின வனைப் புதுக்குடியான் என்று அழைப்பது வழக்கில் உள்ளது. புத்தேளுலகம், புத்தேள் நாடு - வானகம். தேவர் : தேவர் என்பது மேலானவர், போற்றற்குரியவர் என்னும் பொருளது. முன்னது மேலானவர் என்னும் வடவர் கூற்றினைக் கொண்டு கூறியது. மேலிடத்தினர் என்பது பொருள். பின்னது புதிதாக வரும் அயல் நாடரை அன்புடன் வரவேற்றுப் போற்றும் தமிழர் பண்பாட்டினால் வந்தது. எல்லா வெள்ளை யரையும் மேலானவர் எனப் பொருள்படும் துரை என்னும் பெயராலேயே அழைத்துவந்தது இதற்குச் சான்றாகும். தேவர் என்னும் பெயர் திருவள்ளுவர் பெயர்களில் ஒன்றாக இருப்பதும், வேளாண்குடி மகனாகிய சேக்கிழார் இயற்பெயர் அருண்மொழித்தேவர்; சிவஞான போத ஆசிரியர் பெயர் மெய்கண்டதேவர் ஆகையாலும், `மேழித் தேவர் பெருமைக்கு வேறுந்தேவர் கூறேனே' ஏன ஏரெழுபது கூறுவ தாலும் வேளாண் குடி மக்களுக்குத் தேவர் என்னும் பட்டப் பெயர் வழங்கி வருவதும், மறக்குடி மக்களாகிய தமிழ் மறவர் குலம் தேவர் குலம் என்னும் பெயராலேயே இன்றும் அழைக்கப் பட்டு வருவதோடு, அக்குல மக்களும் தேவர் என்னும் பட்டப் பெயரிட்டு வழங்கி வருவதும், ஆரியமக்கள் தங்கள் தாய்மொழி யெனக் கூறிப் போற்றிவரும் வடமொழியைத் தேவமொழி என்பதும், மலேயா முதலிய கிழக்கு நாட்டுமக்கள் நாகர் என்று அழைக்கப்பட்டது போலவே (மணிமேகலை), தேவர் களுக்கும் நாகர் என்னும் பெயர் இருப்பதும், இன்றும் அஃச்ஃசாமில் உள்ள நாகர் என்போர் நாகாலாந்து எனத் தனிநாடு பெற்று இந்தியாவின் ஒரு கூறாக இருந்துவருவதும், இத் தென்னாட்டில் இருந்த அரக்கர், அசுரர் என்போர்க்கும், அத்தேவர்கட்கும் அடிக்கடி போர் நடந்தது; அது `தேவாசுர யுத்தம்' எனப்படும்; அரக்கரும் அசுரரும் தேவர்களைச் சிறையிட்டனர்; தேவ மகளிரை ஏவற்றொழில் செய்ய அமர்த்தினர்; அரக்கர் தலைவர் கள் தேவருலகம் சென்று, தேவர்கோனாகிய இந்திரனை வென்று அவனுடைய அரியணை முதலிய அரும் பொருள்களை எடுத்து வந்தனர் என்பதும், தேவரும் அசுரரும் காசிப முனிவரின் மக்கள் என்பதும், தேவர் என்போர் மக்களின் ஒருவகையினரே என்பதற்குச் சான்று களாகும். அசுரர், அரக்கர் - ஒரு பொருட் சொற்கள். தெய்வம் : தெய்வம் என்பதும் மேலானவர் என்னும் பொருளைக்கொண்டு கூறிய பெயரேயாகும். தெய்வம் - மேன்மை, சிறப்பு. தெய்வத்தமிழ், தெய்வப்புலவர், தெய்வப் புலமை, தெய்வத்தன்மை, தெய்வத்தாமரை, தெய்வவுத்தி, தெய்வப் புணர்ச்சி எனக் காண்க. தெய்வத் தமிழ் - மேன்மையான, சிறந்த தமிழ். "பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து". (குறள் - 978) என்பதுபோலத் தேவரைத் தெய்வம் என்றனர். பெருமை - பெருமையுடையார். சிறுமை - சிறுமையுடையார். பெருமை, சிறுமை - பண்புப் பெயர்கள். பண்பால் பண்பியைக் குறித்தல் தமிழில் பெருவழக்கு. தெய்வம் என்னும் சொல் : மலையில் மூங்கில் ஒன்றோ டொன்று தேய்வதனால் தீ உண்டாகிறது. கல்லைச் செதுக்கும் போது தீப்பொறி தோன்றுகிறது. இவற்றிலிருந்தே முதன் மாந்தர் தீக்கடை கோலும், சக்கிமுக்கிக் கல்லும் கண்டு பிடித்திருக்க வேண்டும். பொருள்கள் ஒன்றோ டொன்று தேய்வதனால் தீயுண்டாவதால் பழங்காலத் தமிழ்மக்கள் அதைத் தேய் என்றனர். `தேயு' வடமொழி. தேய் என்பதே நாளடைவில் தேய் - தே - தீ எனத் திரிந்தது. அயற் சொல்லானதால் வடமொழியில் திரியாது அப்படியே உள்ளது. உணவு சமைத்தல், குளிர் நீக்கல் முதலிய நன்மை குறித்துத் தீயை மேலானது எனப் போற்றி வந்தனர். தேய் என்னும் சொல்லினடியாகப் பிறந்தவையே தேவன், தேவி, தேவர், தெய்வம் என்னும் சொற்கள். தேவன்- ஆண்பால். தேவி - பெண்பால். தேவர் - பலர்பால். தெய்வம் - பண்புப் பெயர்1. அரசனைத் தேவன் என்றதும், அரசியைத் தேவி என்றதும் முதன்மையும் மேன்மையும் பற்றியே யாகும். தெய்வம் என்னும் சொல் குறள் 43,55,702 ஆகிய மூன்றிடத்தும் மேன்மையே குறித்தல் காண்க. புலவர் : புலவர் - புலம் என்பதன் அடியாகப் பிறந்த சொல்: புலம் - புல - புல அர் - புலவர். ஐம்புல நுகர்ச்சி யுடையோர், மனம்போனபடி நடப்பவர் (1072) என்னும் பொருளது. புலவு அர்- புலவர். புலவு - புலால். வேள்வி மூலம் புலவு உண்பவர் என்பதாம். தாமரைக் கண்ணான் - இந்திரன். சீனர் முதலிய வெளிநாட்டினர் யாத்திரையாய் அன்று தமிழ்நாட்டுக்கு வந்து போனது போலவே, அவ் வடபுலத்தாரும் இங்கு வரப்போக இருந்தனர். தமிழ் மக்கள் அவர்களை அன்புடன் வரவேற்றுப் போற்றி வந்தனர். (18). தமிழர் பெருமை அவ்வானுல கெங்கும் பரவியிருந்து(234). தமிழ் மக்களும் அவ்வட புலத்திற்குப் போகவர இருந்தனர். பாண்டிய னொருவன் இந்திரனவைக்குப் போயிருந்ததாகக் கூறப்படுவதும், பாண்டி நாட்டையாண்டுவந்த மீனாட்சி (தடாதகை) என்னும் தமிழரசி, அவ் வடபுலத்திற்குப் படையெடுத்துச் சென்று, சோமசுந்தரன் என்னும் அவ் வடபுலத் தரசனை வென்று, பின் அவனையே மணந்து கொண்டனள் என்பதும், இன்ன பிற செய்திகளும் இதற்குச் சான்றாகும். மீனாட்சி - மீன் ஆட்சி. மீன்- மீனக்கொடி. அது அக் கொடியுயர்ந்த பாண்டி நாட்டை யுணர்த்திற்று. மீனாட்சி - பாண்டி நாட்டை ஆட்சி புரிந்தவள் என்னும் காரணப் பெயர். பழங்கள் நிறைந்த பழமலையை, வடவர் விருதாச்சலம் எனக் கிழட்டுமலை என்னும் பொருளில் மொழிபெயர்க்க, தமிழர் பின் முதுகுன்றம் என மொழி பெயர்த்து வழங்குவதுபோல, மீனாட்சி என்பதை மீனாக்ஷி என வடவர் மொழிபெயர்க்கத் தமிழர் மீனக்கண்ணி, அங்கயற்கண்ணி என மொழி பெயர்க்கலாயினர். அக்ஷம் - கண். அக்ஷி - கண்ணி. மேலும், சிவனுக்குச் சொந்தமான தென்னும் கயிலாயம் என்பது, மண்ணுலகில் உள்ளதும், இந்திய நாட்டின் வட வெல்லையாக உள்ளதுமான இமயமலையின் முடிகளில் ஒன்றா யிருப்பதால், ஏனைத் தேவர்களின் வாழ்விடமான வைகுந்தம், பிரமலோகம், இந்திரலோகம் முதலிய இடங்களும் மண்ணுல கத்தில், இமயமலைச் சாரலில் உள்ளவையேயாகும். அன்றி, வானவெளியில், நமது தலைக்கு மேல் தொலைவில், விண்மீன்களும், திங்கள், செவ்வாய் முதலிய கோள்களும் இருப்பதுபோலவோ, அவற்றிற்கும் மேலோ உள்ள இடங்களல்ல. விண்ணுலகம் என்பதும் வானுலகம் என்பது போல உயர்ந்த இடம் என்னும் பொருளதே. திங்கள் முதலிய கோள்களையும் தேவர்கள் என்பதால் அவ்விடங்களி லொன்றுதான் வானுலகம் எனலும் பொருந்தாது. எனவே, வானோர், வானுலகம், தேவர், மேலுலகம் என்னும் இவ்வரலாற்றுண்மையே காலக் கடப்பால், தமிழ் மக்களின் கருத்திலாப் போக்கால், கற்பனை மயக்கால், உட்பகைப் பெருக்கால், சமயச் சார்பால், தன்னுணர் விழப்பால், புராணப் புதுமையால் இன்றையத் தமிழ் மக்கள் எண்ணும் இப்புதிய நிலையை அடைந்துவிட்டது. வானுலகம், மேலுலகம், விண்ணுலகம், புத்தேளுலகம் என்பவையும் இம் மண்ணுலகத்தில் உள்ளவையே. வானவர், தேவர், புத்தேளிர், இமயவர் என்பாரும் நம் போன்ற மக்களே யாவர் என்பதைச் சிறிதும் ஐயமின்றித் தெளிக. 3. நூல்செய்த முறை வள்ளுவர் ஓர் அறிவு நூற் புலவர்; அரசியலறிஞர்; வாழ்வியற் கணக்கர்; தமிழர் பண்பாட்டின் பெருமையை நன்குணர்ந்தவர்; தமிழினப் பற்றுடையவர்; தமிழர் நாகரிகத் திற்கும் ஆரியர் நாகரிகத்திற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்தவர்; ஆகையால், அவ்வடபுல மக்களின் பொய்க் கூற்றுக்களும், போலிக் கொள்கைகளும் தமிழ் மக்களிடைப் பரவி வருவதைத் தடுத்து விலக்கி, மேலும் அவை பரவாம லிருக்க, தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களாகிய ஒழுக்க முறைகளை, அகம் புறப் பாகுபாட்டைத் தழுவி, அறம் பொருள் இன்பம் என முப்பாலாக்கி ஒரு நூல் செய்து, தமிழர் பண்பாட்டை நிலைநிறுத்த எண்ணினார். எனவே, தமிழர் மரபுக்கொவ்வாத அயற் கொள்கை களை மறுத்தும், அவற்றை நம்பி வாழும் பொது மக்களுக்கு எளிதில் பொருள் விளங்குதற் பொருட்டுப் பொது மக்களிடைப் பரவியிருந்த அவ்வயற் கொள்கைகளைக் கொண்டு கூறியும், தமிழ் மரபு சிறிதும் கெடாது, தமிழ் இலக்கிய மரபுக் கேற்றவாறு பொருள் விளங்குதற் பொருட்டு, உலக வழக்கில் உள்ள சில வழக்காறு களை நூன் மரபாகக் கொண்டும், செய்யுள் வழக்கில் சிறிதும் குறைவுபடாது, மிகச் சிறுபான்மையான மக்களிடை ஓரொரு கால் நடந்துவந்த தீய ஒழுக்கங்களையும் மிகைபடக் கூறி விலக்கியும், தமிழர் ஒழுக்கச் சட்ட நூலாகிய திருக்குறளைச் செய்து முடித்தார். 4. நூன் மரபு பொருள் குணங்களை ஆண்பாலாகவும், பெண்பாலாகவும் கூறுதல் நூல் மரபாகும். `நிலம் என்னும் நல்லாள்' (1040), `அழுக்காறு என ஒரு பாவி' (168) என நிலம் என்னும் பொருளைப் பெண்பாலாகவும், அழுக்காறு என்னும் குணத்தை ஆண் பாலாகவும் கூறுதல் காண்க. பாவி - தீயோன். செய்யாள் (84), செய்யவள் (67), தாமரையினாள் (617) எனச் செல்வத்தையும், தவ்வை (167), முகடி (167,936) என வறுமையையும் பெண்பாலாகக் கூறியவாறு. செய்யவள் - இளையவள். தவ்வை - மூத்தவள். செல்வந் தீர்வதே வறுமையா தலால், செல்வத்தை இளையாள் எனவும் வறுமையை மூத்தாள் எனவும் கூறினார். மேலும், செல்வம் விரும்பப்படுதல் பற்றிச் செய்யாள் எனவும், வறுமை வெறுக்கப்படுதல் பற்றிக் கரியாள் (617) எனவும் கூறினார். தாமரையினாள் - திருமகள். திரு-செல்வம், கல்வியும் செல்வமும் மனத்தைவிட்டகலா மாண் பொருள்களாதலால் அவற்றைப் பெண்களாக்கி, மனத்தைத் தாமரையாக்கி அதன்மேல் உள்ளனர் என்பது மரபு. பயன் கருதி நிலமடந்தை, வையை யென்னும் பொய்யாக் குலக்கொடி, காவிரிப்பாவை என நிலம், ஆறு முதலிய வற்றைப் பெண்ணாகக் கூறுவதும் நூன் மரபேயாகும். கூற்று : உடலும் உயிரும் கூறுபடும் சாவினைக் கூற்று (326,765,1083) என உயிருடையதாகக் கூறியவாறு. கூற்று - உடலும் உயிரும் கூறுபடும் நேரம், கூறுபடுதல் - வேறாதல் - பிரிதல். கூறுஉ - கூற்று. கூற்று - தொழிற்பெயர். கூறு அம் - கூற்றம் (269,894,1985) என்பதுமது. உடலும் உயிரும் கூறுபடும் காலத்தையும் தொழிலையும் உயிருடையதாகக் கூறியது. கூற்றுவன் என ஆண்பாலாகக் கூறுதலுமொன்று. பேய் (565) : பேய் - அச்சம் . பேயிருள் - அச்சந்தரும் இருள். பேய்க்காய்ச்சல் - அச்சம் தரும் காய்ச்சல். அச்சத்தைப் பேய் என்பது உலகவழக்கு. அஃதே நூல் வழக்குமாயிற்று. ஒருவன் கொள்ளும் அச்சமே அவன் எண்ணும் உருவெளித் தோற்றமாகி, அவனை அச்சுறுத்தும். அவ்வச்சம் ஒருவகை வெறி நோயை உண்டாக்கும். பெரும்பாலும் பெண்களே, அவர்களிலும் இரவில் வெளிச் செல்லாத பெண்களே பேய் பிடித்தாடுதல் காண்க. பேய் பிடித்தல் - அச்ச நோய் கொள்ளல். இரவில் வெளிச் சென்று தொழில் செய்துவரும் சக்கிலிப் பெண்கள், சாணாரப் பெண்கள் போன்றோரைப் பேய் பிடியாமை அறிக. பேய் - பொய்த் தோற்றம் - போலித் தோற்றம் என்பதைப் பேய்க் கரும்பு, பேய்ச்சுரை, பேய்த்தேர் என்றும் வழக்காலறிக. பரணியில் வரும் பலவகைப் பேய்கள் கற்பனைப் படைப்பு. 850-ஆம் குறளில் வரும் `அலகை' என்பதுமது. காமன், அணங்கு: பெண்களை வருத்தும் ஆண்பாற் காமத்தைக் காமன் (1197) என ஆண்பாலாகவும், ஆண்களை வருத்தும் பெண்பாற் காமத்தை அணங்கு (918,1081,1082) எனப் பெண்பாலாகவும் கூறுதல் நூன்மரபு. அணங்கு வருத்தம்; `தகையணங் குறுத்தல்' என்னும் அதிகாரத்தைக் (109) காண்க. இவ் வாண்பால் பெண்பால்களுக்குப் பெண்டு பிள்ளை சுற்றம் வாழ்விடம் முதலியன படைத்துக் கொண்டு கூறுதல் புராணக் கற்பனையாகும். 5. சொற்பொருள் விளக்கம் எழுபிறப்பு : `நாலைந்தெடு, ஏழெட்டுப்பேர்' என்னும் வழக்குப் போல, எழுமை என்னும் எண்ணுப் பெயரைப் `பல' என்னும் பொருளிலேயே ஆளுகிறார் வள்ளுவர் - (62,107,126, 398,538,835). `எழுபிறப்பு' (62) - பல தலைமுறை. `எழுபது கோடி' (639) என்பதும் பலகோடி - மிகப்பல என்னும் பொருளதே. பிறப்பு : பிறப்பு என்னும் சொல்லுக்கு முற்பிறப்பு, மறுபிறப்பு என்பது சமயச்சார்பான பொருளாகும். குறளில் வரும் பிறப்பு என்னும் சொல், `பிறவிப் பெருங்கடல்' (10) - வாழ்க்கையாகிய பெரிய கடல். `பேர்த்துள்ள வேண்டா பிறப்பு' (357) - பின்னர் இப்பிறப்பைப் பற்றி எண்ண வேண்டியதில்லை - இவ் வாழ்க்கையைப் பற்றி; என வாழ்க்கை யையும்; `எழுபிறப்பும் தீயவை தீண்டா' (62) - பல தலை முறைகளிலும் தீமைகள் சேரா; `எழுமை எழுபிறப்பும்' (107) - எப்போதும் பல தலைமுறை களிலும்; எனத் தலைமுறை யையும்; `பிறப்பறுக்கல் உற்றார்க்கு' (345) - தீமையின் தோற்றங்களை நீக்கலுற்றார்க்கு; `பிறப்பறுக்கும்' (349) - துன்பங்களின் தோற்றத்தை அறுக்கும்; எனத் தோற்றத் தையும்; `தவாப் பிறப்பு ஈனும்' (361) - கெடாத துன்பத்தை விளைவிக்கும்; எனத் துன்பத்தையும்; `இழிந்த பிறப்பாய் விடும்' (133) - தாழ்குடித் தன்மையாகி விடும்; `பிறப்பு ஒழுக்கம்' (134) - மக்கட் பிறப்புக்கு உரிய ஒழுக்கம்; `இம்மைப் பிறப்பில்' (1315) - இப் பிறப்பில் - உயிரோடுள்ள வரை; எனக் குடித்தன்மை, மக்கட் பிறப்பு, இப்பிறப்பு என்பவற்றையும் குறித்தல் காண்க. மேற்பிறந்தார், கீழ்ப்பிறந்தார் (409) : மேற் பிறந்தார் - உயர்குடிப் பிறந்தார் - வழிவழியாக நல்லொழுக்க முள்ள குடியில் பிறந்தார். கீழ்ப் பிறந்தார் - தாழ்குடிப் பிறந்தார் - நல்லொழுக்க மில்லாத குடியில் பிறந்தார். இம்மை, மறுமை (98) : நாம் உயிரோடு இருக்கும் நிலை - இம்மை. இது இம்மைவாழ் வெனப்படும். நாம் இறந்தபின் நம்மைப் பற்றி இங்கு பேசப்படுவது - மறுமை. இது மறுமைவாழ் வெனப்படும். வள்ளுவர் மறுமையில் உள்ளனர். மறுமை - உயிர் எடுக்கும் மறுபிறப்பு என்பது சமயக் கற்பனை. வினை : இக்காலத்தார் `வினை' என்னும் சொல்லைக் கேட்டாலே படக்கென்று முன்வினை, நல்வினை, தீவினை என்று கூறிவிடுவர். வள்ளுவர் காலத்து வினை என்ற சொல் இத்தகைய பொருளைக் குறியாது `செயல் - தொழில்' என்னும் பொருளையே குறித்தது. தொல்காப்பிய வினை இயல் வினைச் சொல்லின் இலக்கணங் கூறுதல் காண்க. சில இடங்களில் துன்பத்தைக் குறிக்கும். `இருள்சேர் இருவினை' - அறியாமையால் வரும் பெருந் துன்பம். இருமை - பெருமை. இருங்கடல் எனக் காண்க. வினை (244,439) - செயல். நல்வினை (335) - நல்ல செயல். தவாவினை (367) - கெடாத நற்செயல். தீவினை (201,207,209,210) - தீச்செயல் - கெட்ட காரியம். அளறு (255) - தீ நாற்ற முடைய குழைந்தை சேறு. தீராத பெருந் துன்பத்தைச் `சேற்றில் அழுந்துதல்' என்னும் வழக்குண்டு. இழிகாமத்தைச் 'காமச்சேறு' என்பதறிக. குறள் 365,919 - இல் துன்பம் என்னும் பொருளே குறிக்கிறது. பெருந் துன்பத்தையே நிரயம் (நரகம்) எனவும், நிரயவுலகம் தென்றிசைக் கண் உள்ளதெனவும், அங்கு பல கொடுந் துன்பங்கள் படவேண்டு மெனவும், பாவம் செய்தோர் நிரயத்தை அடைவர் எனவும் கூறுதல் புராணக் கற்பனை.  4. உரைப்பாயிர விளக்கம் 1. பாயிரம் ஒரு நூலை எடுத்து விரித்ததும் முதலில் ஆக்கியோன் பெயர், வழி, எல்லை, நூற்பெயர் முதலியன கூறும் சிறப்புப் பாயிரம் காணப்படும். சில நூற்களில் ஆசிரியரால் கூறப்படும் தற்சிறப்புப் பாயிரம் காணப்படும். அது நூலின் உட்பொருள் கூறும். ஒரு நூலுக்குப் பாயிரம் இன்றியமையாத தென்பது, "ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே" என்னும் ஆன்றோர் வாக்கால் விளங்கும். ஆனால், தமிழர் வாழ்க்கைச் சட்ட நூலாகிய திருக்குறளுக்கு மட்டும் அத்தகைய பாயிரம் எதுவும் இல்லை. நூலின் உட்பகுதியாகிய முதன் நான்கதிராகத்திற்குப் பாயிரம் எனப் பெயர் கொடுக்கப் பட்டுள்ளது. பாயிர இலக்கணத்திற்குப் புறம்பாக உள்ள அதற்குப் பாயிரம் என்னும் பெயர் எவ்வகை யினும் பொருந்துவதாக இல்லை. திருக்குறளினும் முற்பட்ட பழந்தமிழ் நூலாகிய திருக் குறளின் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்குக் கூட ஆக்கியோன் பெயர் முதலியன கூறும், "வடவேங்கடந் தென் குமரி ஆயிடைத் தமிழ்க்கூறு நல்லுலகத்து" என்னும் தொடக்கத்தை யுடைய சிறப்புப் பாயிரம் அமைந்திருக்க, திருக்குறளுக்கு அத்தகைய பாயிரம் அமைந்திலாமையின் காரணம் நமக்கொன்றும் விளங்கவில்லை. திருவள்ளுவரின் உண்மை வரலாறு தெரியாமற் போனதற்கும், திருக்குறள் செய்த காலம் முதலியன அறிய முடியாமல் இருப்பதற்கும், திருவள்ளு வரைப் பற்றிய பொய்க் கதைக்கும் அச் சிறப்புப் பாயிரம் இல்லாமையே காரணமாகும். 2. உரைப்பாயிரம் சிறப்புப் பாயிரமோ, தற்சிறப்புப் பாயிரமோ இல்லை யெனினும், திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் கூறிய உரைப்பாயிரம் என்பது நூலின் முகப்பில் அமைந்துள்ளது. அது திருக்குறளில் கூறப்படும் பொருள் இன்னவென முதற் கண் விளக்கிக் கூறுகிறது. பாயிரம் - வரலாறு. உரைப் பாயிரம் - உரையின் வரலாறு. பரிமேலழகர் தாம் எழுதப் போகும் உரை இத்தன்மைய தெனத் தமதுரைக் கேற்பத் திருக்குறளின் கருத்தைத் திரித்துக் கூறுவதே அவ்வுரைப் பாயிரமாகும். சிறப்புப் பாயிரத்தில் கூறப்படும் நுதலிய பொருளை - நூலிற் கூறப்படும் கருத்தைத் திரித்துக் கூறுவதே. அவ்வுரைப் பாயிரம் எனல் மிகையாகாது. திருக்குறளைப் படிக்கத் தொடங்குவோர் முதலில் அவ்வுரைப் பாயிரத்தைப் படித்துவிட்டுத்தான் அப்புறம் நூலைப் படிக்கத் தொடங்க வேண்டும். வாயிலோனைக் கடந்து அரண் மனைக்குட் போவதுபோல. பரிமேலழகரின் உரைக்கேற்ற வாறு அவ்வுரைப் பாயிரம், திருக்குறள் படிக்கத் தொடங்குவோர் மனத்தை மாற்றியமைத்துவிடும் என்பதில் சிறிதும் ஐயப்பாடு கொள்ள வேண்டியதில்லை. அதாவது, திருக்குறள், ஆரிய நாகரிகங் கூறும் வடமொழி வேதம் மனு முதலிய நூல்களின் கருத்தைத் தமிழ்ப்படுத்திய ஒரு மொழி பெயர்ப்பு வழி நூலேயன்றி, தமிழர் நாகரிகங் கூறும் தனித் தமிழ் நூலன்று என்னும் மனப்பான் மையைத் திருக்குறள் படிக்கப் புகுவோர் மனத்தில் பசுமரத் தறைந்த ஆணிபோல் நன்கு பதிய வைத்து விடும். அத்தகைய வருணாச்சிரம தரும வடிவில் அமைந்துள்ளது அவ்வுரைப் பாயிரம். அப்புதிய உரைப் பாயிரமே திருக்குறளின் பொருளையும் புதுமை செய்து விட்டது. அவ்வுரைப் பாயிரத்தின் நச்சுத்தன்மையை உணர்ந்தாலன்றித் திருக்குறளின் உண்மைக் கருத்தை உள்ளபடி அறிய முடியாது. அறுப்பு மருத்துவம் செய்யப் புகும் மருத்துவர் கொடுக்கும் மயக்க மருந்துபோல அமைந்துள்ளது அவ்வுரைப் பாயிரம். ஆனால், அம்மருத்துவர் கொடுக்கும் மயக்க மருந்து நன்மைக்குக் காரணமாவது போலன்றி, அவ்வுரைப் பாயிரம் தீமைக்குக் காரணமாக அமைந்துள்ளது. திருக்குறள் முழுக்க முழுக்க அப்படியே ஆரியர் பழக்க வழக்கங்களைத் தமிழாக்கிய நூல் என நம்பும்படி தமிழரை மருட்டியது அவ்வுரைப் பாயிரமே யாகும். 1. "இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்த மில் இன்பத்து அழிவில் வீடும் நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம் பொருள் இன்பம் வீடு என்பன." 2. அவற்றுள் வீடு, என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகலின், துறவறமாகிய காரண வகை யால் கூறப் படுவதல்லது இலக்கண வகையால் கூறப்படா மையின் நூல்களால் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம். 3. அவற்றுள், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம். அது ஒழுக்கம் வழக்கம் தண்டம் என மூவகைப்படும். 4. அவற்றுள், ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத் தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற் அறங்களின் வழுவாதொழுகுதல். 5. வழக்காவது, ஒரு பொருளைத் தனித்தனியே எனதென தென்றிருப்பார் அது காரணமாகத் தம்முள் மாறுபட்டு அப் பொருள்மேற் சொல்வது. அது கடன் கோடல் முதல் பதினெட்டுப் பதத்ததாம். 6. அதுதான் (அவ்வொழுக்கம்) நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடுடைமையின், சிறுபான்மையாகிய அச் சிறப்பியல்புக ளொழித்து, எல்லார்க்கும் ஒத்தலின் பெரும் பான்மையாகிய பொதுவியல்பு பற்றி இல்லறம் துறவறம் என இருவகை நிலையாற் கூறப்பட்டது". இதுதான் அவ்வுரைப் பாயிரம். முதலாவதாக, வள்ளுவர் காலத் தமிழர்கள் இந்திரன் முதலிய இறையவர்களைத் தங்கள் தெய்வமாகக் கொண்ட தோ, கொண்டு வழிபட்டதோ இல்லை. இறையவர் - தேவர். மற்ற இறையவர் அயன், அரி, அரன் முதலியோர். இனி, இந்திரன் ஆரியர் தலைவன்; ஆரியர்க்காக நமது முன்னோர் களாகிய பழந்தமிழர்களுடன் அடிக்கடி போரிட்டவன்; நமது முன்னோர் களைக் கொல்லுமாறு ஆரியர் தம் தலை வனாகிய இந்திரனை வேண்டும் பாடல்கள் வேதத்தில் ஏராளமாக உள்ளன. இந்திரன் பாண்டியரோடு பகை கொண்டு, பாண்டி நாட்டையும், மதுரையையும் அழிக்கும்படி கடலையும் மழையையும் ஏவினதாகத் திருவிளை யாடற் புராணங் கூறுகிறது. அரக்கர், அசுரர், அவுணர், தானவர் என்பாரோடு இந்திரன் பலமுறை போர் செய்ததாகப் புராணங்கள் கூறுவ தெல்லாம் பழந்தமிழ்த் தலைவர்களுடன் போரிட்டதையே யாகும். அரக்கர், அசுரர், அவுணர், தானவர் என்பன ஒரு பொருட் சொற்கள். அரக்கர் என்போர் தமிழர்களேயாவர். "உண்மையை உரைக்குமிடத்து இராமாயணக் கதை யானது ஆரியர்கள் தென்னாட்டின் மீது படையெடுத்துச் சென்றபோது, அவர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரைப் பற்றிக் கூறுகிறதென்று சொல்லலாம். திராவிடரில் ஒரு வகுப்பாரையே `வானரர்கள்' என்று அழைத்தார்கள் போலும்" (ஜவஹர்லால் நேருவின் கடிதங்கள் - 177) இரண்டாவது உலகப் பெரும் போரில் (938 - 45) ஜப்பானியரை அரக்கர் என்று திட்டிப் பேசினதை நினைவு கூர்க. அரக்கர் முதலிய சொற்கள் பகைவரைக் கூறும் கடுஞ்சொற்கள். அப்படியிருக்க, பகைவர் தலைவனாகிய, பகைவனு மாகிய இந்திரனுடைய நாட்டை - இந்திரப் பதவியை அடையத் தமிழர் எதற்காக முயலுகின்றனர். பகைவர் பதத்தை அடைய முயலுவதா தமிழர் வாழ்வின் பயன்? இது புதுமையினும் புதுமையாகவன்றோ இருக்கிறது! ஒருவேளை, இந்திரன் நாட்டை வெல்லத் தமிழர் தலைவர்கள் முயன்றனர் எனில் பொருந்தும். வளம் பொருந்திய தமிழ் நாட்டை யடைய - தமிழ்நாட்டில் நிலையாக இருந்து இன்புற்று வாழ ஆரியர்களும், ஆரியத் தலைவர்களும் பல வழிகளில், பலவாறு, பலமுறை முயன்றிருக்கிறார்களேயன்றி, தமிழர்கள் அன்னார் பதத்தை யடைய ஒருநாளும் முயன்றதில்லை; வளமார் தமிழ்நாட்டை வெறுத்து அன்னார் பதத்தை யடைய எதற்காக முயலுகின்றனர்? இறந்தபின் (மறுமையில்) உயிர் இந்திரன் முதலிய இறையவர் பதங்களை அடைவதென்பது வள்ளுவர் கொள்கையன்று என்பதைத் `திருக்குறள் - குழந்தையுரை' நோக்கி யுணர்க. சோழ மன்னர்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டு தோறும் `இந்திர விழா'க் கொண்டாடினத்தாகச் சிலப்பதிகாரம் கூறுவது அந்நூலில் வரும் புராணக் கதைகளில் ஒன்றாக இருக்கலாம், அல்லது சோழர்கள் கொண்டாடின இந்திர விழாவுக் குரிய இந்திரன் ஒரு சோழமன்னனாக இருக்கலாம். 1இந்திரன் - அரசன். நரேந்திரன், மிருகேந்திரன் எனக் காண்க. நர இந்திரன் - மக்கள் அரசன். மிருக இந்திரன் - விலங்கரசன். சிலப்பதிகாரத்தின் தொடர் நூலான மணிமேகலையில், மணிபல்லவத் தீவில், தேவர் கோனாகிய இந்திரனால் நிறுவப் பட்ட புத்த பீடிகைக்காக நாகநாட்டரசர் இருவர் போரிட்ட தாகக் கூறப்படுகிறது (மணி 8:52-6). புத்த பீடிகை - புத்தரது பாத பீடிகை. பாத பீடிகை - புத்தரது பாத வடிவங்கள் உள்ள பீடம். வேள்வித் தலைவனும் தேவர் கோனுமாகிய இந்திரன், வேள்வியை மறுத்தவரும் மக்களிலொருவருமாகிய புத்தருக்குக் கோயில் கட்டி வழிபாடு செய்தான் என்பது சிறிதும் பொருந் தாத பொய்க் கூற்றேயாகும். பொன்னுலக மன்னனாகிய இந்திரன், தனக்குச் செய்யும் வேள்வியை மறுப்பதையே கொள்கையாகக் கொண்ட ஒரு மண்ணுலக மன்னனின் திருவடிகளைப் பீடிகையில் வைத்து வழிபட்டான், வணங் கினான் என்பது பள்ளிப் பிள்ளைகளும் எள்ளி நகையாடும் செய்தியாக அன்றோ இருக்கிறது? வேள்விப் பகைவராகிய புத்தர் பாத பீடிகையை வேள்வித் தலைவனாகிய இந்திரன் ஒருக்காலும் அமைத்திருக்கமாட்டான். மேலும், பௌத்த சாரணர் இருந்து, புத்தர் அருளிய ஆகமத்தின் பொருளை யாவர்க்கும் விளங்க உணர்த்துவதற்கு இடமாகக் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரனால் ஏழு விகாரங்கள் அமைக்கப்பட்டன வென்று சிலப்பதிகாரம் கூறுகிறது (சிலப் 10: 11-44). அவை இந்திர விகாரங்கள் என வழங்கின. `இந்திர விகாரம் எழும்' (மணி 26:55), `இந்திர விகாரம் ஏழுடன்' (சிலப் 10:14). விகாரம் - அரங்கு, கோயில். புத்தர் அருளிய ஆகமம் போதிப்ப தென்ன? கொலை வேள்வி செய்தல் கூடாது என்பதுதானே? தனக்கு மக்களால் செய்யப்படும் வேள்வியைத் தகாதென மறுத்துக் கூறுவதற்கு இடமாக ஓரூரில் ஏழு கட்டிடங்கள் கட்டித் தருவானா இந்திரன்? யாராவது தனக்குப் பிறர் உதவுவதை வேண்டா வென்றும், தன்னைப் பழித்தும் சொற்பொழிவாற்ற மண்டபங் கட்டி வைப்பார்களா? ஒருக்காலும் வைக்கார். வேள்வி மறுத்த அரக்கர் களை யெல்லாம் கருவறுத்த இந்திரன், அதே வேலையைச் செய்த புத்தர்க்கு மட்டும் கோயில் கட்டி வழிபாடு செய்வானா? அவருடைய அருள்மொழியை யாவர்க்கும் எடுத்துரைக்க மண்டபங் கட்டித் தருவானா? எனவே, மணிபல்லவத் தீவில் புத்த பீடிகை அமைத்த இந்திரனும், புகார் நகரில் ஏழு விகாரங்கள் அமைத்த இந்திரனும் தேவர் தலைவனாகிய தேவேந்திரன் அல்லன்; மக்கள் தலை வனாகிய மாநில மன்னனே யாவன். மலேயா முதலிய கிழக்கு நாடுகளுக்கு முன்னர் நாகநாடு என்று பெயர். நாகநாட்டில் வாழ்ந்த மக்கள் நாகர் எனப்படுவர். அந் நாகநாடு முன்னர்ச் சோழ நாட்டுடன் இணைந்தே இருந்தது. அதாவது, சோழராட்சிக் கீழ் அந்நாடு இருந்த காலமும் உண்டு. சோழர்களுக்கும் நாகர் என்னும் பெயர் உண்டு. அர்ச்சுனன் மணந்த நாககன்னி என்பவள் சோழன் மகளே. மணிமேகலை காலத்தில் நாக நாட்டை யாண்ட புண்ணியராசன் என்பவன் இந்திரன் வழி வந்தவன் என மணிமேகலை கூறுகிறது. "இந்திரன் மருமான் இரும்பதிப்புறத்து" (மணி 26: 164). மருமான் - வழிவந்தோன். புகார் மக்கள் கொண்டாடிய இந்திர விழாவுக் குரிய இந்திரன் ஒரு சோழ மன்னனேயாவன். அன்றி, தேவேந்திரனைத் தெய்வ மாகக் கொண்டு தமிழர்கள் வழிபட்டதாக வேறெங்கும் காணப்படவில்லை. அப்படியிருக்க, இந்திரன் முதலிய தேவர்கள் வாழ்விடமான இந்திரவுலக முதலியவற்றை யடைய தமிழர்கள் முயலுவ தெங்ஙனம்? இனி, நெறியறிந்து வீட்டை அடைவதற்கு அறம் பொருள் இன்பம் காரணமாகுமேயன்றி, வீடு காரணமாகாது. வீட்டை யடைவதற்கு வீடு காரணம் எனல் எங்ஙனம் பொருந்தும்? மனைவியை அடைவதற்கு மனைவியும், கணவனை யடைவ தற்குக் கணவனும் காரணம் எனல் எத்தகையதோ அத்தகையதே வீட்டை வழியறிந்து அடைவதற்கு வீடு காரணமென்பதும். சென்னையை வழியறிந்து அடைவதற்குச் சென்னை எப்படிக் காரணமாகும்? இது ஒரு பெரும் புதிராகவன்றோ உள்ளது? காட்டுக் குருவியை அடைவதற்குக் கூட்டுக் குருவி காரணம் என்பது போலவெனின், எந்த வீட்டை அடைவதற்கு எந்த வீடு காரணம்? வீடு என்பது ஒன்றா இரண்டா? நன்கு எண்ணிப் பாருங்கள். இது ஒரு வகையினும் பொருந்தாத போலியுரை, அல்லது பொய்யுரையேயாகும். அறவழியில் பொருள் செய்து, இன்ப நுகர்வோர் முடிவில் வீடெய்துவர்; அதாவது, `நெறி யறிந்து வீடெய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந் தோரான் எடுக்கப்பட்ட பொருள் மூன்று. அவை அறம் பொருள் இன்பம் என்பன' எனின் ஒருவேளை பொருந்தும். தமிழ் நாட்டில், தமிழ் மொழிக்குச் சான்றாகப் பல சான்றோர்கள் இருந்திருக்கிறார்கள்; இன்றும் இருக்கிறார்கள். திருக்குறளைப் பற்றிப் பேசாதவரும் ஆராயாதவரும் எவரும் இல்லை. ஆனால், `வீட்டையடையும் உறுதிப் பொருள் வீடு' என்னும் இம் முரண்பட்ட பொருந்தாப் போலியுரையை இவ்வளவு நாளாய் எந்த ஒரு தமிழ்ப் பேரறிஞரும் எடுத்துக் காட்டாததுதான் - மறுத்துக் கூறி விலக்காததுதான் வியப்பினும் வியப்பாக இருக்கிறது. தமிழ் மொழிக்குச் சான்றெனத் தமிழ் மக்களால் கொள்ளப்பட்ட தமிழ்ச் சான்றோர்கள் எவரும் இப்பொருந்தாப் போலிக் கூற்றை எடுத்துக்காட்டி விலக் காமல் இருந்ததன் - இருப்பதன் காரணம் அறியாமையன்று. எடுத்த எடுப்பிலுள்ள இதை யறியவும் திறமை யற்றதா என்ன அவர்கள் அறிவு? எடுத்துக் காட்டாததற்குப் பின்னென்ன காரணம்? தமிழ்ப் பெரியார்க ளெல்லாம் சமய சார் புடையவர்கள்; சமயச் சார்பின்றித் தமிழ் தனித்தியங்கா வென்னும் கொள்கையுடையவர்கள்; சமயச் சார்பினாலேயே தமிழ் வளர்ந்தது; சமய நெறியே தமிழ் வளர்க்கும் நெறி; சமயச் செவிலிதான் தமிழ்க் குழவியை இனிது வளர்த்து வருகிறாள் என்னும் கருத்துடை யவர்கள்; சமயத்தை விட்டுப் பிரித்தால் தமிழ் இறந்துபடும் என்னும் கொள்கையுடையவர்கள்; ஆகையால், சமயச் சார்பான அப்போலியுரை அன்னார் சமயக் கண்களுக்குப் படாமல் இருக்கலாம். பட்டும் நல்ல தாகத் தோன்றி யிருக்கலாம். அல்லது அப் பொருந்தாக் கூற்றை மறுத்துக் கூறின், பரிமேலழகர் பார்ப்பனராகையால் பார்ப்பனத் தலைவர்கள் சீறி விழுவரே, பார்ப்பன இதழாசிரியர்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுமே, நமது முன்னேற்றத் திற்கு முட்டுகட்டையாக முடியுமே என்னும் அச்சங் காரணமாக இருக்கலாம். அதனால், நமது வேலையை நாம் பார்ப்போம்; நமக்கேன் இந்தத் தொல்லை என்று சும்மா இருப்பதேயன்றி அறியாமல் அல்ல. இன்றேல், ஏதாவதொரு கொசுப்போன்ற செய்திக்கும் மடிதற்று முன்வரும் இவர்கள், ஆற்றைக் கடக்க ஆறு துணை என்பதுபோல வீட்டையடைய வீடு துணை என்னும் பொருந்தாக் கூற்றைப் பார்த்துக் கொண்டே இருப்பர்? என்றுதான் தமிழ்ப் பெரியார்களுக்குப் 'பரந்து கெடுக உலகியற்றியான்' எனக் கூறும் வள்ளுவரின் நெஞ்சுத் துணிவு உண்டாகுமோ? இவர்கள் வள்ளுவரின் வழிவந்தோ ரல்லரோ! "பிராமணனுக்குப் பணிவிடை செய்வதே சூத்திரனுக்குமோட்சத்தைத் தருகிற மேலான தருமமாகும்" (மனு, அ-9, சு-334) என்ற மனு வாக்குப்படி பார்ப்பனருக்குப் பணிவிடை செய்தலே வீட்டுக்குக் காரணமாக இருக்க, வீடடைதற்கு அறம் பொரு ளின்பமுங்கூடத் தேவையில்லையன்றோ? தமிழர்க்கு மனு முறையே வலிந்து புகுத்தும் பரிமேலழகர் எளிதில் வீடடைவ தற்குக் காரணமான பார்ப்பனப் பணிவிடையை எடுத்தியம் பாததுதான் வியப்பாக இருக்கிறது. 2. இரண்டாவது, 'வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து' என்கிறார். அதாவது வீடு என்பது, மனத்தால் இத்தன்மையதென எண்ண முடியாததும், வாயால் இத்தன்மைத்தெனச் சொல்ல முடியாததும் என்பதாம். அவ்வாறு எண்ணவும் சொல்லவும் முடியாத வீட்டையடைய அத்தகைய வீடு எப்படிக் காரணமாகும்? காரணப் பொருள் எளிதானதாக வன்றோ இருக்க வேண்டும்? சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய வீட்டை உறுதிப் பொருளாகக் கொண்டு அத்தகைய வீட்டைஅடைதல் என்பது கல்லாச் சிறாரும் மறுத் துரைக்கும் கற்பனை கடந்த தொன்றாக வன்றோ உளது? இத்தகைய வீட்டைத் துறவறமாகி காரண வகை யாற்றான் எப்படிக் கூறமுடியும்? அதுதான் சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாயிற்றே! இனி, `துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவ தல்லது இலக்கண வகையாற் கூறப்படாமை' என்பதும் விளங்கா வுரையேயாகும். துறவறங் காரணமாக வீட்டிலக் கணங் கூறப்படும் எனின், துறவற வியலில் வீட்டிலக் கணங் கூறலா மன்றோ? வள்ளுவர் கூறாததன் காரணம் என்ன? இலக்கண வகையால் ஏன் கூறமுடியாது? இலக்கண வகை என்பது என்ன? இது இன்ன இயல்புடையது என்பதுதானே? துறவறமாகிய காரணவகையால் கூறப்படுவ தென்பதன் பொருளென்ன? துறவறங் காரணமாக வீட்டிலக்கணங் கூறப்படும் என்பது தானே? அப்படியிருக்க, துறவற இலக்கணங் கூறும் துறவற வியலில் துறவறத்தின் பயனாகிய வீட்டிலக் கணம் ஏன் கூறமுடியாது? வீட்டிலக்கணம் என்பது, `அதோ போறான் குள்ளன் இதோ போறான் குள்ளன் தாரையைக் காணாம்' என்னும் சிறு பிள்ளைப் பேச்சாகவன்றோ இருக்கிறது? `வீடு' என்பதே பரிமேலழகர் படைத்துக் கொண்டு கூறுவ தொன்றாகும். வள்ளுவர் வீடு என்னும் சொல்லையே திருக்குறளில் எங்குமே ஆளாமலிருக்க, இவர் பல இடங்களில் வலிந்து பொருள் கொண்டு, வள்ளுவர் வீட்டிலக்கணங் கூறுவதாக உரை யெழுதி யிருக்கிறார். இதை `வீடு' என்னும் தலைப்பில் கூறுவாம். அப்படிப் படைத்துக் கூறுபவர், `இலக்கண வகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப் படுவன ஏனை மூன்றுமேயாம்' எனத் தங்கூற்றுக்கு மாறாகவும் கூறியுள்ளார். இது `மாறுகொளக் கூறல்' என்னும் குற்றத்தின் பாற்படும். `நூல்களால் கூறப்படுவன ஏனை மூன்று மேயாம்' என்பதே உண்மையுரை யாகும். நூல்களால் கூறாமல் வீட்டைப் பற்றிப் பின் எதனால் கூறுவது? இதிலிருந்தே இது வலிந்து புகுத்திய வடமொழிக் கருத்தென்பது விளங்குகிற தல்லவா? தமிழர் கொள்கையல்லாத வடவர் கொள்கையையே பரிமேலழகர் தன் இயல்புப்படி வலிந்து புகுத்தியுள்ளா ரென்க. `அறம் பொருள் இன்பம் அடைதல் நூற்பயன்' என்பதையே வடமொழிக் கடிமையான பிற்காலத் தமிழர்கள், அறம் பொருளின்பம் வீடடைதல் நூற்பயன், என்று திரித்து விட்டனர். வீடும் உறுதிப்பொருளில் ஒன்றென்பது பழந்தமிழர் கொள்கை யெனில், வள்ளுவர் திருக்குறளை நாற்பாலாகச் செய்யாமல் முப்பாலாகச் செய்திருப்பாரா? `குன்றக் கூறல்' என்னும் குற்றமுடைத்தாகும் என்பதை வள்ளுவர் அறியாரா என்ன? ஆசிரியர் முப்பால் கூறியிருக்க, நாற்பால் எனக் கூறுவது ஆசிரியர் கருத்தறியாமையோடு, ஆசிரியர் கருத்தைத் திரித்துக் கூறித் தமிழரை மயங்க வைத்தலு மாகும். 3. வள்ளுவர் அறத்துப் பாலில், இல்லறம் துறவறம் என இரு கூறுபட்ட தமிழர் அறங்களை விரித்து விளக்கிக் கூறியிருக்க, இவர் `அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கின ஒழிதலுமாம்' என்கிறார். விதித்தன செய்தல் - செய்வன. விலக்கியன ஒழிதல் - தவிர்வன. முதலில் திருக்குறள் தமிழர் அறங் கூறும் தனித் தமிழ் நூல் என்பதை மறந்து, ஆரிய அற நூல்களாகிய மனு முதலிய நூல்களில் கூறும் ஆரிய அறங் கூறும் நூல் எனக் கொண்டதே தவறாகும். `அறமாவது, தமிழ் அறவோர்களால், அல்லது அற நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலு மாம்' என்று கூறியிருக்க வேண்டும். தமிழ் மக்கட்கு ஆரிய அற நூல்கள் எப்படி அறநூல்களாகும்? தமிழில் அறங்கூறு நூல் இல்லாதிருந் தாலன்றோ வேற்று மொழி நூல்வழி நடக்க வேண்டும்? தமிழரோ அறவடிவினர், அற வுளத்தினர், அறவியல்பினர், அறவாழ்வினர், அறவாழியந்தணர் என்பது உலகறிந்த தொன்றன்றோ? அகவாழ்விலும் 'அறத்தொடுநிலை' கண்டவர் தமிழரன்றோ `மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்' (34) என்னும் அறம் தமிழர்க்கே சிறப்பாக உரிய தனியறமன்றோ? அறத்துக்கு அஞ்சி அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் வரலாறே தமிழரின் அற வாழ்வுக்குச் சான்றாகுமன்றோ? தமக்கென வாழாப் பிறர்க்குரியாளரான அறவோர்களையுடையது தமிழினமன்றோ? அப்படியிருக்க, தமிழ் அறவோர் செய்த அறநூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் தமிழர் அறமாகுமேயன்றி, தமிழர் நாகரிகத்துக்குப் புறம்பான ஆரிய மனு முதலிய அற நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் எங்ஙனம் தமிழர் அறமாகும்? இது தமிழர்க்கு ஒன்றுந் தெரியாது. தமிழர் சொத்தெல்லாம் வடமொழியாளர் சொத்துத்தான். தமிழர்களின் குறை கண்டிரங்கி, வடவர்களே தமிழர்க்கு அறநெறியை வகுத்துத் தந்தனர். ஆரியர் இந்நாட்டுக்கு வருமுன் தமிழர் அறம் என்பது இன்னதென அறியாதவராய் இருந்து வந்தனர். ஆரிய மேலோர் தமிழர்க்கு அற முறையை வகுத்துதவினர் என்னும் ஆரியர் தம் பொருந்தாப் பொய்க் கூற்றுப் போன்றதேயாகும். மேலும், ஆரியர் இந்நாட்டுக்கு வருமுன்னரே, அவர்கள் நாகரிகம் என்பது இன்னதென அறியாது, ஓரிடத்தில் நிலை யாய்த் தங்கியிருக்க வழிவகை காணாது, உழவுத் தொழிலையறியாது, ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டு, அவற்றின் ஊனையுண்டு, தோலையுடுத்து நாடோடிகளாய் அங்குமிங்கும் அலைந்து திரிந்த அக்காலத்தே, தமிழர் காடுவெட்டி நாடாக்கி, குளந்தொட்டு நிலந்தி திருந்தி, நீர்தேக்கி நெல் விளைவித்து, ஆடையுடுத்து அரசியல் புரிந்து, அரண்மனையமர்ந்து, நன்னாகரிக நல்வாழ்வு வாழ்ந்து வந்திருக்க, அன்னமாட்சி அனைய தமிழர்க்கு வந்தேறிகளாகிய ஆரியர் அறம் வகுத்துக் கொடுத்தனர் என்பது எவ்வளவு பொருந்தாப் பொய்க்கூற்று! ஆரியர் தமிழ்நாட்டுக்கு அண்டிப்பிழைக்க வந்தபோது அன்னாரை அன்போடு வரவேற்று உணவுடை யுதவிப் போற்றிய தமிழர்கள் செய்வன தவிர்வன அறியாது காட்டு மிராண்டிகளாகவா இருந்திருப்பர்? மேலும், செய்வன தவிர்வன தெரியாமலா ஆரிய முனிவர் செய்த கொலை வேள்வியை மறுத்து வந்தனர்? வாழ்க்கை முறையை அகம் புறம் என இரு கூறாக்கி, அவற்றிற்குத் திணை துறை வகுத்து, இலக்கிய இலக்கணம் செய்து இன்ப வாழ்வு வாழ்ந்து வந்த தமிழர்க்கா அறந் தெரியாது? அகவாழ்வுக்குத் துணையாக வமைந்த பார்ப்பனத் தொழிலில் அன்னாரை அமர்த்திக் காத்த தமிழரா அறமறியார்? எழுதாக் கிளவியாகிய ஆரியர் பாட்டுக் களை எழுதிவைக்க எழுத்துதவிக் காத்த தமிழர்க்கா செய்வன தவிர்வன தெரியாது? அன்றியும், மனுநூல் திருக்குறளுக்குப் பிற்பட்ட நூலேயாகும். மனு நூல் கூறும் அறம் வேறு, திருக்குறள் கூறும் அறம் வேறு என்பதற்கு, "வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி" என்னும் மனோன்மணீய ஆசிரியர் திரு. சுந்தரம் பிள்ளை அவர்கள் வாக்கே சான்றாகும். ஒரு குலத்துக்கு ஒரு நீதி மனுவாதி உள்ளவரோ - ஒருகுலத்துக் கொருநீதி கூறும் மனுமுதலிய வட நூல்களை எண்ணுவார்களோ? திருக்குறளை நன்கு கற்றுத் தெளிந்தவர்கள் பிறவி வேற்றுமை கூறும் மனு முதலிய ஆரிய நூல்களைப் படிப்பார்களோ என்பதாம். மனுமுதலிய ஆரிய நூல்களில் கூறும் அறங்களே திருக் குறளில் கூறும் அறங்கள் என்பது முழுப்பொய் என்பதை அறிதற்குத் திருக்குறளுக்கும் மனுவுக்குமுள்ள வேற்றுமையைப் பாருங்கள். திருக்குறள் தமிழர் அறங்கூறு நூல், மனு ஆரியர் அறங்கூறு நூல் என்பதை மட்டும் மறவாமல் மனத்தில் வையுங்கள். 1. பிறப்பு "பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" (குறள் - 972) எல்லா மக்களும் ஒரே பிறப்பினர்; பிறப்பில் ஏற்றத் தாழ்வு இல்லை. அவரவர் செய்யும் தொழில் வேற்றுமையால் பெருமை சிறுமை என்னும் சிறப்பு ஒவ்வா. சிறப்பொவ்வாமை - ஒருவன் செய்யும் நல்ல தொழிலினால் பெருமையும், கெட்ட தொழிலி னால் சிறுமையும் அடைதல். "பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரமாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும், எல்லா வருணத் தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்" (மனு, அ-1, சு-100) "சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால், அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை யறுக்க வேண்டும்" (மனு, அ-8, சு-270) "பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்குத் தாழ்வை யும் காட்டுகிற பெயரை இடவேண்டும்" (மனு, அ-2, சு-31) 2. கல்வி "மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றா ரனைத்திலர் பாடு" (குறள் - 409) கல்லாதார் உயர் குடியில் பிறந்தாராயினும், தாழ்குடியில் பிறந்தும் கற்றாரைப் போலப் பெருமை யில்லாதவராவர். உயர்குடி - வழிவழியாக நல்லொழுக்கமுள்ள குடி. தாழ் குடி - நல்லொழுக்கமில்லாத குடி. எல்லோரும் கற்க வேண்டும். "பார்ப்பனர் இந்த மனுநூலைப் படிக்கலாம்; மற்ற வருணத் தாருக்கு ஓதுவிக்கக்கூடாது" (மனு, அ-1, சு-103) "சூத்திரன் பக்கத்தில் இருக்கும்போது வேதம் ஓதக் கூடாது". (மனு, அ-1. சு-99) "வேதத்தைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும் மெழுகையும் உருக்கி விட வேண்டும். வேதத்தைச் சொல்லு கிற சூத்திரனது நாக்கை அறுத்தெறிய வேண்டும்; பொருளை யுணர்ந்து வைத்திருக்கிற நெஞ்சைப் பிளக்க வேண்டும்." (வேதம்) எவ்வளவு அருளுள்ளம்? 3. ஈகை "இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல்" (குறள் -229) தேடிய பொருளைப் பிறர்க்குக் கொடாமல் தாமே தனியாக உண்ணுதல் இரத்தலைக் காட்டிலும், கொடியது. "சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றையும், ஓமம் பண்ணிய மிச்சத்தையும் கொடுக்கலாகாது." (மனு, அ-4. சு-80) 4. இரத்தல் "இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்" (குறள் - 1062) இவ்வுலகத்தை யுண்டாக்கியவன், மக்கள் முயற்சியால் ஏதாவது தொழில் செய்து உயிர்வாழ்தலை விரும்பாது, பிறரிடம் சென்று இரந்தும் உயிர்வாழ்தலை விரும்பு வானானால், அக் கொடியோன் இரப்பாரைப் போல எங்குந் திரிந்து கெடக்கடவன். உலகம் ஒருவனால் உண்டாக்கப் பட்டது என்னும் கொள்கையைக் கொண்டு கூறியது. "நாள் தோறும் பிச்சைக்காக ஊர்க்குள் புகவேண்டும்" (மனு, அ-6, சு-43) 5. உழவு "சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால் உழந்து முழவே தலை" (குறள் - 1031) உழவுத் தொழிலால் உண்டாகும் மெய்வருத்தத்தை நோக்கிப் பிற தொழில்களைச் செய்தாலும், உலகத்தார் உணவுக்காக ஏருடையார் இடத்திற்கே வருவர். ஆதலால், வருந்தியும் உழுதலே தலைமையான தொழிலாகும். "சிலர் பயிர்த்தொழில் நல்ல தொழிலென்று நினைக்கிறார்கள். அந்தத் தொழில் பெரியோர்களால் இகழப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும் வெண்வெட்டியும் நிலத்தையும், நிலத்தி லுண்டான பலபல உயிர்களையும் வெட்டுகிற தல்லவா?" (மனு, அ-10, சு-84) வேள்விக்கண் ஆடுமாடுகளை வெட்டுதல் என்னவோ! 6. பொய் சொல்லாமை "பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று" (குறள் - 297) ஒருவன் எப்போதும் பொய் சொல்லா திருப்பின், அவன் வேறு அறங்கள் செய்ய வேண்டியதில்லை. பொய்யாமை என்னும் அறம் மற்ற எல்லா அறங்களின் பயனையும் தரும். "பல மனைவிகளை யுடையவன் அவர்களின் புணர்ச்சிக் காகவும், பசுமாடுகளின் புல்லுக்காகவும், பிராமணரைக் காப்பாற்றவும் பொய் சொன்னால் குற்றமில்லை" (மனு, அ-8. சு-112) 7. கொலையும் புலையும் "அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று" (குறள் - 259) நெய் முதலியவற்றை ஊற்றி ஆயிரம் வேள்வி செய்தலைக் காட்டிலும் ஒன்றன் உயிரைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை நல்லது. கொலை வேள்விகள் பல செய்தலை விட ஓருயிரைக் கொன்றுண்ணாமல் இருப்பது நல்லது. "நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை" (குறள் - 328) வேள்வி மூலம் கொன்றால் நன்மையைத் தரும் பெரும் பயன் கிடைக்கும் என்று பிறர் கூறினும், ஓருயிரைக் கொல்வ தால் வரும் பயன் பெரியோர்க்கு இழிந்ததாகும். இது தமிழ்த் துறவிகள் அறம். ஆரிய முனிவர்கள் அறத்தைப் பாருங்கள். "அஜீகர்த்தர் என்னும் முனிவர் பசியினால் வருந்தி, சுநச்சேயன் என்னும் தன் பிள்ளையை நரவேள்விக்குக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக நூறு பசுக்கள் வாங்கிச் சென்று வேள்வி செய்து தமது பசியைத் தீர்த்துக் கொண்டார். அப்படிச் செய்தும் அவருக்குப் பாவம் நேரிட வில்லை". (மனு. அ-10. சு-105) "ஒரு பிராமணன் தன்னைப் புலால் உண்ண வேண்டும் என்று பிறர் கேட்டுக் கொள்ளும்போதும், விதிப்படி சிரார்த்தத்தில் வரிக்கப்பட்ட போதும், வேறு உணவில்லாமல் உயிர் போகும்படி நேரிட்டபோதும் மந்திரத்தினால் கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம்". (மனு, அ-5. சு-27) "உயிருக்கு ஆபத்து நேருங்கால் உண்ணத்தக்க உயிர்களை நாள்தோறும் உண்டாலும் பாவத்தை யடையமாட்டான். பிரமனாலேயே உண்ணத் தக்கவையும் கொல்லத் தக்கவையும் படைக்கப்பட்டிருக்கின்றனவல்லவா?" (மனு; அ - 5. சு- 27) சிரார்த்தம் :- "மீன் இறைச்சியால் சிரார்த்தம் செய்தால் பிதிர்க்கள் இரண்டு மாத வரையிலும் திருப்தியடைவார்கள்; மான் இறைச்சி யால் மூன்று மாதங்களும், செம்மறியாட்டிறைச்சியால் நான்கு மாதங்களும், பறவை யிறைச்சியால் ஐந்து மாதங் களும், வெள்ளாட்டிறைச்சியால் ஆறு மாதங்களும், புள்ளிமான் இறைச்சி யால் ஏழு மாதங்களும், கவரிமான் இறைச்சியால் எட்டு மாதங் களும், கலைமான் இறைச்சியால் ஒன்பது மாதங்களும், முள்ளம்பன்றி, காட்டெருமை இறைச்சியால் பத்துமாதங்களும், முயல் ஆமை இறைச்சியால் பதினொரு மாதங்களும், வார்த்தீசனம் என்னும் கிழ வெள்ளாட்டிறைச்சியால் பன்னிரண் டாண்டுகளும், முள்ளுள்ள வாளைமீன் இiசியால் அளவற்ற காலமும் திருப்தி யடைகிறார்கள்". (மனு, அ-3. சு-268, 269, 270, 271) "சிரார்த்தத்தில் விதிப்படி வரிக்கப்பட்ட பிராமணன் குற்ற மென்று இறைச்சியைப் புசியாவிட்டால் அவன் 21 பிறப்புப் பசுவாகப் பிறப்பான்". (மனு, அ-5. சு-35) 8. ஆராய்ச்சி "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" (குறள்-423) எந்த ஒரு பொருளை யார் சொன்னாலும் அப் பொருளின் உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிவதே அறிவாகும். "வேதத்தைச் சுருதி யென்றும், தரும சாத்திரத்தை மிருதி என்றும் அறியத்தக்கது. அவ்விரண்டையும் ஆராய்ச்சி செய்து மறுப்பவன் நாத்தி கனாவான்". (மனு, அ-2. சு-10) 9. ஒத்தமுறை " ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்தி யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை" (குறள் - 541) ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து, யாவரிடத்தும் இரக்கம் காட்டாது. தலைமை பொருந்தி, குற்றத்திற்குத் தக்க தண்டனையை ஆராய்ந்து தண்டித்தலே முறையாகும். குரவர்க்கும் சமநீதி வழங்கவேண்டும். 1. "பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனைச் சித்ரவதை செய்து கொல்லுக. ஆனால், பிராமணன் சூத்திரனுடைய பொருளை விருப்பப்படி கொள்ளையிடலாம்". (மனு, அ-9. சு-248) 2. "பிராமணன் எத்தகைய குற்றங்களைச் செய்தாலும் அவனைத் தூக்குப் போடவேண்டிய நிபந்தனை ஏற்பட்டால், அவன் தலையை மொட்டை யடிக்கவேண்டும். அதுவே அவனுக்குத் தூக்குத் தண்டனைக் கொப்பாம். மற்ற வருணத்தாருக்குக் கொலையே தண்டனை" (மனு, அ.8. சு-379) 3. "கொடிய குற்றம் செய்தாலும் பிராமணனைக் கொல்லாமலும், மற்ற எத்தகைய துன்பத்திற்கும் ஆளாக்காமலும் அவனுடைய பொருளைக் கொடுத்து அயலூருக்கு அனுப்ப வேண்டும்". (மனு, அ-8. சு-380) 4. "அரசன் எத்தகைய குற்றத்திற்கும் பிராமணனைக் கொல்ல நினைக்கக் கூடாது". (மனு, அ - 8. சு-381) பார்த்தீர்களா குறளுக்கும் மனுவுக்கும் உள்ள வேறு பாட்டை? இன்னோரன்னா கொடிய அறங்கள் தாம் மனுநூலில் சொல்லப் பட்டிருக்கின்றன. இதனாலேயே அதை மனு அதர்ம நூல் என்கின்றனர் பகுத்தறிவுத் தமிழர். இம் மனு அறங்கள் எப்படித் தமிழர்க்கு அறங்களாகும்? மேலும், இந்த அறங் களெல்லாம் பிரமனால் சொல்லப்பட்டவை என (மனு, அ1. சு, 58) மனுவே சொல்லுகிறார். இம் மனுநூலில் சொல்லப் படும் அறங்க ளெல்லாம் வேதசம்பந்தம் உடையவை (மனு, அ-2. சு-7) என அவரே கூறுகிறார். வேதம், மனு முதலிய ஆரிய அற நூல்களின் அறநெறியைப் பாருங்கள். இத்தகைய வருணாச்சிரம தருமங்களா திருக்குறள் கூறும் பொருள்கள்? தமிழர்க்கு ஏற்றவையா இவை? மேலும், இம்மனு நூலில் சொல்லப்படும் அறங்கள் ஆரியரின் பழைய ஒழுக்கங்களாம். அவர்கள் தமிழ் நாட்டுக்கு (இந்தியாவுக்கு) வருமுன்னர் ஒழுகிய ஒழுக்கங்களும் இவைதாமாம். "பழமையான தேச ஒழுக்கத்தையும் குல ஒழுக்கத்தையும் மனுவானவர் இந்த நூலில் வரிசையாகச் சொல்லி யிருக்கின்றார்". (மனு, அ. சு-118) எனவே, அறமாவது மனு முதலிய நூல்களில் 'விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம்' என்னும் கூற்றே. பொருந்தாப் போலி கூற்றாகும். ஆரியக் கொள்கைகளை எப்படியாவது தமிழர் நம்பும்படி செய்துவிட வேண்டும் என்னும் உட்கருத்துடன் கூறப்பட்டதேயாகும் இவ்வுரைப் பாயிரம். மனுவறம் தமிழர்க்கு எவ்வகையினும் பொருந்தாது. இக்கருத்துடன் உரையிற் புகுத்தப் படும் மனு , மறங்களைக் களைந்து குறட் கருத்தைக் கொள்ளுதல் வேண்டும். இனி, `அது ஒழுக்கம் வழக்கு தண்டம் என மூவகைப் படும்' என்பதும் பொருந்தாவுரையே யாகும். அது அறம், வள்ளுவர், `அறன் வலியுறுத்தல்' (4) என்னும் அதிகாரத்தில் இல்லறம் துறவறம் என்னும் இருவகை யறங்களின் சிறப்பினைப் பொதுப் படையாக வற்புறுத்திக் கூறிவிட்டு, பின்னர் இல்லறத்தின் பகுதியாகிய அன்புடைமை, விருந்தோம்பல், இன்சொல், செய்ந்நன்றி யறிதல், நடுவு நிலைமை, அடக்க முடைமை, ஒழுக்கமுடைமை முதலிய அறங்களை ஒவ்வோரதி காரமாக விளக்கிக் கூறிச் செல்கிறார். எனவே ஒழுக்கம் என்பது அறமேயன்றி அறத்தின் கூறுபாடு அன்று. வழக்கும் தண்டமும் பொருட் பாலைச் சேர்ந்தனவே யன்றி அறத்துப் பாலில் இடம்பெறா. 4. ஒழுக்கம் என்பது நன்னடக்கை. கெட்ட வழிகளில் நடக்காமல் நல்ல வழிகளில் நடப்பதே ஒழுக்கமாகும். ஒழுகுதல்- ஒழுக்கம். `ஒழுக்க முடைமை' என்னும் அதிகாரத்தில் ஒழுக்கம் இன்னதென்பதை வள்ளுவர் இனிது விளக்கியுள்ளார். ஒழுக்கமே உயர்குடிப் பிறப்பின் இலக்கணம். நல்லொழுக்கம் நன்மைக்குக் காரணமாகும்; தீய ஒழுக்கம் தீமைக்குக் காரணமாகும், என்பதே ஒழுக்க விளக்கத்தின் சுருக்கமாகும். ஆனால், பரிமேலழகரோ, `அவற்றுள், ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று "அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவா தொழுகுதல்' என்கிறார். இது பச்சை வருணாச்சிரம தருமம். மக்கள் ஒழுகவேண்டிய ஒழுக்கங்களை வள்ளுவர் பொதுப்படையாகக் கூறுகிறாரேயன்றி, இன்ன சாதியான் இன்னவாறு ஒழுகவேண்டும் என்றோ, இன்ன சாதியான் இன்ன நிலையில் இன்னவாறு ஒழுக வேண்டு மென்றோ கூறவில்லை. (நிலை - ஆச்சிரமம்) மேலும், `ஒழுக்க முடைமை' என்னும் அதிகாரத்தை வள்ளுவர் இல்லறவியலில், இல்லறத்தார்க்குரிய ஒழுக்கமாகக் கூறியிருப்பதும் பரிமேலழகரும் தம் உரையில் அவ்வதிகாரத்தை இல்லறவியலிலேயே வைத்து உரையெழுதி யிருப்பதுமே இவர் கூறுவது போலியுரை என்பதற்குச் சான்றாகும். ஆனால் அவ்வதிகார விளக்கத்திலும், தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை யுடையராதல் என வருணாச்சிரம தருமத்தையே புகுத்துகிறார். இது அவர்தம் இயல்பு போலும்! மேலும், இல்லறத்தில் நல்லொழுக்க மொழுகி, பின் ஒழுக்கத்து நீத்து, அதாவது நல்லொழுக்கத்தினின்று தீய ஒழுக்கங் களைத் துறந்து துறவற நெறியில் ஒழுகுவோர், அவ்வறத்தில் மனவுறுதிப்பாடில்லாமல், முன்விட்ட காம வின்பத்தைப் பின்னும் விரும்பி மறைந்தொழுகும் `கூடா வொழுக்கம்' (28) துறவறத்திற்குத் தகாதென விலக்குவதால் இவ்வொழுக்கம் பிரமசரிய முதலிய நால்வகை நிலைக்கும் ஏலாமையறிக. "ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்" (குறள் - 139) நல்லொழுக்க முடையவர் மறந்தும் தீய சொற்களைச் சொல்லமாட்டார் என்பதால், வள்ளுவர் கூறுவது பொதுப் படையான ஒழுக்கமேயன்றி, வருணத்திற்கும் நிலைக்கும் ஏற்ற வருணாச்சிரம ஒழுக்கமல்ல. தமிழ் அந்தணர் என்பார் தனிச் சாதியல்லர். வேளாளர், வணிகர், அரசர் என்னும் வகுப்பினரில் இல்லறம் இனிது நடத்தி, காமம் தீர்ந்த காலத்துக் குடும்பத்தை மக்களிடம் ஒப்படைத்து விட்டுப் பொதுநலம் புரியும் பெரியோர்களே அந்தணர் ஆவர் எனத் தொல்காப்பியர், பொருளதிகாரக் கற்பியல் 51-ஆம் சூத்திரத்தில் கூறுகிறார். அந்தணர் - துறந்தார் - நீத்தார். `அந்தணர் என்போர் அறவோர்' (30) என வள்ளுவரே கூறுதல் காண்க. எனவே, பரிமேலழகர், `அந்தணர் முதலிய வருணத்தார் என அந்தணரை ஒரு சாதி எனக் கூறியிருத்தல் சிறிதும் பொருந்தாது. தமிழரில் அந்தணர் என்பது அறப்பெயர் (துறவறம்) ஆரியரிற்றான் அந்தணர் என்பது சாதிப் பெயர். இனி, ஆரியப் பிராமணரைத் தமிழ்ப் பெயரால் அந்தணர் எனக் கூறுவதே தவறாகும். ஆரியப் பிராமணர் பிரமாவின் முகத்தில் பிறந்த முதல் சாதியினர். தமிழந்தணர் துறவறத்தினர்; தனிச் சாதியினரல்லர். தமிழந்தணர்களோ மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுபவர் (குறள் - 30); இல்லறந் துறந்து பொதுநலம் புரிபவர்; தீய ஒழுக்கம் சிறிதும் இல்லாதவர்; அளவற்ற பெருமையுடையவர்; புலனடக்க முடையவர்; செயற் கருஞ் செயல் செய்பவர்; குணக் குன்றுகள்; சினம் என்பதை அறியாதவர்; உயிர்களிடத் தருளுடையவர். ஆனால், ஆரியப் பிராமணரோ, பட கோட்டிய கன்னிப் பெண்ணைப் படகிலேயே புணர்தல் போன்ற தீய ஒழுக்கமே உருவானவர்; வேண்டியதே இல்லை என்னாது கொடுத்த வள்ளலாகிய மாவலியை வஞ்சித்துக் கொல்லும் சிறுமை யுடையவர்; புலனடக்கமின்றி நாச்சு வைக்க கள்ளுங் கறியுமுண்டு காலங்கழித்தவர்; அன்போடு வரவேற்று உணவுடையுதவிப் போற்றிய தமிழர்களை வஞ்சித்துக் கொன்றும், நூற்றுக்கணக் கான தமிழரசர்கள் கோட்டைகளைத் தீவைத்துக் கொளுத்தியும் (ரிக் வேதம்) கொடுமைகள் செய்த இழிதொழிலாளர்; தங்களைப்போல் பிறரும் கல்வி கற்று மேம்பட வாழக்கூடா தென்னும் இழி குண முடையவர்; எடுத்ததற் கெல்லாம் கல்லாய்ப் போ, மண்ணாய்ப் போ என்று சபிக்கும் கடுஞ்சினத்தார்; பிறருக்கு மிஞ்சிய சோற்றைப் போடுவதும் பாவம் என்னும் வன்னெஞ் சர்கள்; `கல்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக் காகத்தை என்செயப் படைத்தாய்' என்பது விவேக சிந்தாமணி. பொது நல மென்பதையே அறியாதவர். இப்படியிருக்க, இங்கே அந்தணர் என்றது பிராமணர்களையே யாகும்; தமிழந்தணர் களையன்று. பிராமணர் எவ்வகையிலும் அந்தணர் என்னும் பெயருக்கு உரியவராகார். ஆரிய முனிவர்களும் இல்லறம் முற்றித் துறந்தவர்களல்லர்; இள மனைவி மக்களுடன் வாழ்ந்து வந்த ஒரு சாதியினரே யாவர். இனி, பிரமசரிய முதலிய நால்வகை நிலைகளும் தமிழர் ஒழுக்கமல்ல. தமிழ்த் துறவென்பது இல்லறப் பற்றின்றிப் பொது நலம் செய்யும் நிலையேயன்றி, மனைவி மக்களை விட்டு, ஊரைவிட்டு ஓடிவிடுவதன்று அத்தகைய குறிப் பொன்றும் திருக்குறளில் இல்லை. பட்டினத்தார் போன்ற ஒருசில தமிழர் அவ்வாறு வெளியேறினாரெனின், அன்னார் தமிழ்நாட்டை ஆரியச் சார்பான சமயவிருள் மூடியிருந்த காலத்தில் இருந்ததாலும், வடமொழிக் கொள்கைகளைத் தமிழ்க் கொள்கையெனக் கொண்ட மயக்கத்தாலும் அவ்வாறு செய்தனர். பட்டினத்தார் போன்றார், `ஊரார் சதமல்ல, உற்றார் சதமல்ல, பெற்றார் சதமல்ல, பெண்டிர் சதமல்ல, என வெறுத்தும், பெண்களைக் கண்டபடி பழித்தும், தாம் நாற்பேறடைவ தொன்றையே பெரிதாகக் கருதி, அதற்காகவே முயன்று வந்தாராகையால், அன்னார் தன்னல மொன்றையே கருதினார் களன்றிப் பொதுநலம் என்பதைக் கனவிலும் கருதினாரில்லை யாகையால், அவர்கள் செந்தண்மை பூண்ட அந்தணராகார். அயன் அரி அரண் முதலிய தேவர்களிடம் ஒன்றை வேண்டிக் காட்டிற் சென்று தவம் செய்யும் வழக்கமும் தமிழர் வழக்கமன்று. திருக்குறளில் கூறப்படும் `தவம்' என்னும் அதிகாரத்தை (27) நோக்குக. அது மனவடக்கத்தின் பொருட்டு ஊணும் உறக்கமும் குறைத்தல், உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தல், பிற உயிர்களைப் போற்றுதல் முதலிய நோன்பு நோற்றலேயாகும். காட்டில் சென்று கண்ணை மூடிக்கொண்டு கடவுளை நோக்கி ஒன்றை வேண்டுவதன்று. மும்மூர்த்திகளை வேண்டித் தவம் செய்து வேண்டிய வரங் களைப் பெற்றனர் என்பதெல்லாம் புராணக் கதைகளேயாகும். சிவபெருமான் திருவடி நிழலையடைய அரும்பாடு பட்ட பெரிய புராண நாயன்மார் கதையில் கூடக் காட்டில் சென்று கண்மூடித் தவம் செய்ததாகக் கதையில்லை. இனி, மணம் செய்து கொள்ளாமல் குருவின் வீட்டிலேயே இருந்து படித்தல் என்பதும் தமிழர் வழக்கமன்று. பழங்காலத் தமிழர்கள் மணஞ் செய்துகொண்ட பின்னரே அயல் நாடுகளில் சென்று அந்நாட்டு நாகரிகங்களைக் கற்று வந்தனர். அக்கல்விப் பிரிவு மூன்றாண்டுவரை உண்டு என்பது, "வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது" (தொல், கற் - 47) என்னும் தொல்காப்பியர் வாக்கால் தெரிகிறது. எனவே, பிரமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம் என்னும் நால்வகை நிலைகளும், ஆரிய நாகரிகமேயன்றித் தமிழர் நாகரிகமல்ல. பிரமசரியம் - குருகுலத்திலிருந்து படித்தல். குலம் - வீடு. கிருகத்தம் - இல்லறம். வானப்பிரத்தம் - மனைவியுடனோ, தனித்தோ காட்டில் சென்று தவம் செய்தல். சந்நியாசம் - துறவு. அந்நிலைகளே தமிழ் மரபின்மையால், அவ்வவற்றிற் கோதிய அறங்களும் தமிழர்க்குரிய வையல்ல. பரிமேலழகர் வேண்டு மென்றே ஆரிய வருணாச்சிரம தருமத்தை வலிந்து புகுத்தியதே யாகும். 5. வழக்கு என்பது பொருட்பாலைச் சேர்ந்தது. `அவ்வழக்குக் கடன்கோடல் முதல் பதினெட்டுப் பதத்ததாம்' என்பது மனு முறையே யன்றிக் குறள் முறையல்ல. பதினெட்டாவன: கடன்கோடல், உபநிதி, கூடிமேம்படல், நல்கியதை நல்காமை, ஒப்பிப் பணி செய்யாமை, கூலி கொடாமை, உடையனல்லான் விற்றல், விற்றுக் கொடாமை, கொண்டுள்ள மொப்பாமை, கட்டுப்பாடு கடத்தல், நிலவழக்கு, மாதராடவர் தருமம், தாயபாகம், வன்செய்கை, சொற்கொடுமை, தண்டக் கொடுமை, சூது, ஒழிபு என்பன. இவை பதினெட்டும் மனு, அத்தியாயம் எட்டில் விளக்கமாகக் கூறப் பட்டுள்ளன. 6. தமிழர்கள் ஒரே வகையான ஒழுக்கமுடையவர்கள். தமிழர் வாழ்வு ஒரே தரமானது. இன்றுள்ள தமிழரைப் பார்த்து ஐயுறக் கூடாது. இன்றுள்ள தமிழர், தமிழ் மரபினின்று தவறிய நிலையிலுள்ளவராவர். இன்றுள்ள சாதிப் பிரிவுகளும், சாதி வேற்றுமைகளும் வள்ளுவர் காலத்தில் இல்லை. இவை ஆரியப் பழக்கத்தால், ஆரியக் கொள்கைகளைப் பின்பற்றிய தால், ஆரிய நாகரிகத்திற்குத் தமிழ் நாகரிகம் இரையானதால் ஏற்பட்ட பிரிவுகளேயாகும். ஆரியர் இங்கு வருமுன், தமிழினம் ஆரிய நாகரிகத்தால் தாக்குறு முன் தமிழரிடைச் சாதி வேற்றுமையின்றி, எல்லோரும் கொண்டு கொடுத்து ஒரே இனமாக வாழ்ந்து வந்தனர் என்பது தொல்காப்பியக் கற்பியல் மூன்றாவது சூத்திரத்தால் விளங்குகிறது. பிறவி வேற்றுமையோ, குலவேற்றுமையோ அன்று தமிழரிடை இல்லை. `பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்' (குறள் - 972). தமிழர் எல்லோரும் ஒரே இனம்; ஒரு குலைக்காய்! உழவு, கைத்தொழில் என்னும் இருவகைத் தொழிலும் மக்களின் உயிர் வாழ்க்கைக்கு, நாகரிக நல்வாழ்வுக்கு உதவி செய்வனவாகையால் அத்தொழிலாளர்கள் வேளாளர் எனப் பட்டனர். வேள்-உதவி. `வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்' என்பது திரிகடுகம். "தாளாற்றித் தந்த பொரு ளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு" (212) என்பது திருக்குறள். நாள் ஆக ஆக உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுப் பொருளை உண்டாக்கும் உழவுத் தொழிளார்க்கே உரித்தாயது வேளாளர் என்னும் பெயர். மற்ற தொழிற் பெயர்களால் தொழிலாளர் வகுப்புகள் உண்டாயின. பிற்காலத்தே ஆரியக் கொள்கையின் ஆதிக்கத்தால் அத்தொழில் வகுப்புகள் தனித்தனி தொழில் இனங்களாகி, முடிவில் ஏற்றத் தாழ்வுடைய வெவ்வேறு சாதிகளாகி வேறுபட்டன. பழங்காலத் தமிழகத்தில், தமிழர்க்குள் வேளாளர், வணிகர், அரசர், அந்தணர் என்னும் நான்கு பிரிவே இருந்தன. இவை தொழில் பற்றிய பெயர்கள். அந்தணர் என்பது பொதுநலத் தொழிற்பெயர். உழவு முதலிய தொழில் செய்வோர் வேளாளர். அவர்களில் வாணிகம் செய்வோர் வணிகர். அவர்களில் நாடு காப்போர் அரசர். அரசு - காவல். இம்மூவகைத் தொழிலினத் தினும் இல்லறம் முற்றித் துறவு பூண்டு பொதுநலம் புரிவோர் அந்தணர். இந் நாற்பாலினவாய் ஒருபாற்பட்டு நன்கினிது வாழ்ந்து வந்தது பழந்தமிழினம். தமிழ் மக்கள் குறள் நெறியைக் கடைப்பிடித்தால் பழையபடி அந்நிலையை அடையலாம். இவ்வாறிருக்க, `அதுதான் (அவ்வொழுக்கம்) நால்வகை நிலைத்தாய், வருணந்தோறும் வேறுபாடுடைமையின், சிறு பான்மையாகிய அச் சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலின் பெரும்பான்மையாகிய பொதுவியல்பு பற்றி இல்லறம் துறவறம் என இருவகை நிலையில் கூறப்பட்டது' என்பது தனி ஆரியக் கொள்கையேயாகும். பிராமணர் முதலிய வருண வேற்றுமையும், பிரமசரிய முதலிய நிலைகளும் தமிழ் மரபு அன்மையாலும், தமிழ் அந்தணர் ஒரு சாதி அல்லராலும் இது பொருந்தாக் கூற்றாகும். ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு வருணத்திற்கும் வெவ்வேறு ஒழுக்கங்கள் விதித்துள்ள ஆரிய வருணாச்சிரம தருமம் இயற்கைக்கு மாறுபட்ட அடக்கு முறை ஆதிக்க வெறிச் சட்டமேயாகும். எனவே, இவ்வுரைப்பாயிரம் திருக்குறளுக்கு எவ்வகை யிலும் பொருந்தாத தொன்றாகும். பரிமேலழகர் திருக்குறளில் தாம் வலிந்து புகுத்தும் உரைக்கு உறுதுணையாக உரைக்கப் பட்டதே யாகும் இவ்வுரைப்பாயிரம். இவ்வாறு சிறிதும் பொருத்த மில்லாததும், தமிழ் மரபுக்குப் புறம்பானதும், தமிழ்ப் பழக்க வழக்க மல்லாததும், தமிழ் மரபைத் தாழ்த்துவதும், திருக்குறள் படிப்போர் சிந்தையைச் சிதைப்பதும் ஆகிய ஆரியக் கொள்கையை வேண்டுமென்றே முதலில் கூறிவைத்த பரிமேலழகரின் நெஞ்சழுத்தமே அழுத்தம்! இத்தகைய துணிவு தமிழறிஞர்க்கு இல்லாமைக்குத் தான் இரங்க வேண்டியிருக்கிறது. இனியாகிலும் தமிழரிஞர்கள் தமிழ் மரபுக்குப் புறம்பான கருத்துக்களை யார் கூற்றானாலும் அஞ்சாது எடுத்துக் கூறும் நெஞ்சுரம் கொள்வார்களாக. வாழ்க தமிழ்மரபு!  5. ஆரியக் கொள்கை பரிமேலழகர் உரை எத்தகையது, அதனால் திருக்குறளின் தனித்தமிழ்க் கொள்கை எவ்வாறு மறைக்கப்பட்டுள்ளது என்பவற்றை அவர் உரைத்துள்ள உரைப்பாயிரத்தால் ஒருவாறு உணர்ந்தாம். இனி, அவர்தம் உரையில் வள்ளுவர் கருத்துக்கு மாறாகத் தமது கருத்துக்களை வலிந்து புகுத்தித் திருக்குறளின் உண்மைக் கருத்துக் களைத் தமிழ் மக்கள் அறிந்து பயன்பெற முடியாது செய்து விட்டமையை அறிந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும். அதுவே இந் நூற்பயனுமாகும். தமிழர் கொள்கை வேறு, ஆரியர் கொள்கை வேறு. தமிழர் கொள்கைக்கும் ஆரியர் கொள்கைக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. அவ் விரண்டிற்கும் மலைக்கும் மடுவுக்கு முள்ள தூரம். அவை எண்ணெயும் தண்ணீரும் போல், பகலும் இரவும் போல் வேறுபட்டவை. தமிழர் நாகரிகம் மக்கட் பண்பாட்டினின்று இயல்பாகத் தோன்றிப் படிப்படியாக வளர்ந்து மாண்புற்றது. ஆரியர் நாகரிகம் மக்கட் பண் பாட்டுக்குப் புறம்பாக வலிந்து புகுத்தி வளர்க்கப்பட்டது. தமிழர் நாகரிகம் ஒத்த நீதியுடையது. ஆரியர் நாகரிகம் ஒருகுலத்துக் கொரு நீதியுடையது. தமிழ் நாகரிகம் தமிழினத்தின் பொதுவுடைமை. ஆரிய நாகரிகம் ஏற்றத் தாழ்வான பிறவி வேற்றுமையுடையது. தமிழீ நாகரிகமும் தமிழர் எல்லோருக்கும் ஒப்ப முடிந்தது. ஆரிய நாகரிகம் குல வேற்றுமையும் நிலைவேற்றுமையும் உடையது. (நிலை - ஆச்சிரமம்) தமிழ் நாகரிகம் இயல்பானது. ஆரிய நாகரிகம் திரிபானது என்பனவற்றை முதலில் மனத்தில் நன்கு பதித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பரிமேலழகர் குறட் கருத்துக்களை மாற்றியும் வலிந்தும் தொடர்பில்லாமலும் புகுத்தியுள்ள ஆரியக் கொள்கைகள் எளிதில் விளங்கும். அவை விளங்கினாற்றான் குறளின் உண்மைக் கருத்தும் எளிதில் விளங்கும். ஆரிய நாகரிகமாவது, தமிழ் நாகரிகமாவது, எல்லாம் ஒன்றுதான் என்னும் மனப்பான்மை யுடையவர்க்கு வள்ளுவரின் உண்மை யுள்ளம் ஒருபோதும் விளங்காது. 1. வருணாச்சிரம தருமம் வருணாச்சிரம தருமமாவது - பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வகை ஆரியச் சாதியினரும், பிரமசரியம், கிருகஃச்தம். வானப்பிரஃச்தம், சந்நியாசம் என்னும் நால்வகை நிலைகளிலும், அவரவர்க்கு விதிக்கப்பட்ட விதிப்படி ஒழுகும் ஒழுக்கமாகும். வருணாச்சிரம தருமம் - குலநிலை அறம். குலம் - வருணம், சாதி. நிலை - ஆச்சிரமம். குலநிலை அறம் - குலத்துக்கும் நிலைக்கும் ஏற்ற அறம். பிரமசரியம் - கல்விநிலை. கிருகஃச்தம் - இல்லறம். வானப் பிரஃச்தம் - தவநிலை. சந்நியாசம் - துறவு. வேதம், மனு முதலிய ஆரிய அறநூல்களில் ஒவ்வொரு சாதிக்கும், நிலைக்கும் தனித்தனி ஒழுக்கங்கள் கூறப்படுகின்றன. குல வேற்றுமை, நிலை வேற்றுமை ஆகிய அவற்றைக் குலநிலை யொழுக்கம் எனவும் கூறலாம். இக் குலநிலை யொழுக்கம் தமிழர்க் குரியவையல்ல. தமிழரிடைக் குலவேற்றுமையும் நிலைவேற்றுமையும் இல்லை. ஒன்றே குலம் ஒருவகை நிலையே. 1. "ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவற் துணிவு." (21) பனுவல் துணிவு - நூல்களது துணிவு, ஒழுக்கத்து நீத்தார் பெருமை - நல்லொழுக்கத்தில் நின்று தீய ஒழுக்கங்களைத் துறந்தாரது பெருமையே, விழுப்பத்து வேண்டும் - எல்லாப் பெருமைகளிலும் மேலாக விரும்பும். பனுவல் - நூல். அது நூலாசிரியரைக் குறிக்கும். அறிவு நூற் புலவர்கள், நீத்தார் பெருமையை எல்லாப் பெருமை களிலும் மேலான பெருமையாகக் கொள்வர் என்பதாம். பரிமேலழகர் : `தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது - தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாதொழுக அறம் வளரும், அறம் வளரப் பாவந்தேயும், பாவந்தேய அறியாமை நீங்கும்' என அடுக்கிக் கொண்டு போகிறார். `தமக்குரிய' என வருவித்து, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்கள் என வருணாச்சிரம தருமத்தைப் புகுத்துகிறார். துறவறம் ஒரே தன்மைத்தன்றிச் சாதிக்கேற்ற ஒழுக்க முடையதன்று. ஒழுக்கத்து நீத்தல் - நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்துத் தீய ஒழுக்கத்தைத் துறத்தலேயாகும். இங்கு குலத்துக்கும் நிலைக்கும் இடமேயில்லை. நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்துத் தீய ஒழுக்கத்தை விட்டவர் பெருமையே எல்லாப் பெருமையினும் மேலான பெருமையாகும் என்பதே குறளின் கருத்தாகும். 2. "இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கும் நல்லாற்றி னின்ற துணை." (41) இல்வாழ்வான் என்பான் - குடும்ப வாழ்க்கை நடத்துபவன் என்று கூறப்படுவோன், இயல்புடைய மூவர்க்கும். அறத்தின் தன்மையை யுடைய மூவர்க்கும், நல்லாற்றின் நின்ற துணை - நல்ல வழியில் நிலைபெற்ற துணையாவான். அறத்தின் தன்மையை யுடையார் - அறவாழ்வு வாழ்பவர். அவர் அடுத்த குறளில் வரும் துறந்தார் முதலிய மூவர். இக்குறள் தொகுத்துச் சுட்டல். அம் மூவரையும் நல்லாற்றில் வாழச் செய்பவர் இல்வாழ்வாரே. பரி : `ஏனை மூவராவார் - ஆசாரிய னிடத்தினின் றோதுதலும், விரதங் காத்தலுமாகிய பிரமசரிய வொழுக்கத்தானும், இல்லை விட்டு வனத்தின்கண் தீயொடு சென்று, மனையாள் வழிபடத் தவஞ்செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத்துறந்த யோக வொழுக்கத்தானும் எனுமிவர். இவருள் முன்னை யிருவரையும் பிறர்மத மேற்கொண்டு கூறினார்'. பிரமசரிக்கு இல்லறத்தான் துணையாயினும், காட்டின் கண் மனையாளொடு சென்று தவஞ் செய்வோனுக்கு எப்படித் துணையாவான்? இன்று மனையாளொடு யாத்திரை செல்வோர் அவ் யாத்திரைக்கு வேண்டிய பொருள் கொண்டு செல்வது போல, தவஞ் செய்யச் செல்வோரும் வேண்டுவன கொண்டு செல்வாரன்றோ? அவரே `இவருள் முன்னை யிருவரையும் பிறர்மதமேற் கொண்டு கூறினார்' என்கின்றார். பிறர் கொள்கையை எடுத்துக் கூறல் எனவே, இது தமிழர் கொள்கையன் றென்பதை ஒப்புக்கொண்டு வலிந்து புகுத்துதலே யாகும். மனையாள் வழிபடக் காட்டின்கட் சென்று தவம் செய்தல் தமிழர் கொள்கை அன்றென்பது உரைப்பாயிர விளக்கத்தில் விளக்கப்பட்டது. 3. "துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வா னென்பான் துணை." துறந்தார்க்கும் - துறவிகளுக்கும், துவ்வாதவர்க்கும் - வறுமையினால் உண்ண உணவின்றித் தவிக்கும் ஏழைகளுக்கும் இறந்தார்க்கும் - பாதுகாப்போர் இல்லாதவர்க்கும், இல்வாழ் வான் என்பான் துணை - இல்லறத்தான் துணையாவான். துஆதவர் - துவ்வாதவர். து - உண். துவ்வாதவர் - உண்ண உணவில்லாதவர் - எளியர். இறத்தல் - கடத்தல். இறந்தவர் - கடந்தவர் - நீங்கினவர். குடும்பத்தினீங்கினவர் - யாருமற்றவர்; தாமாக வாழமுடியாத இளைஞரும் முதியரும் - (அனாதைகள்). துறவிகள், எளியவர், யாருமற்றவர் ஆகிய மூவர்க்கும் இல்வாழ்வார் துணையாவர். பரி : `துறந்தார்க்கும் - களைகண் ஆனவரால் துறக்கப் பட்டார்க்கும், துவ்வாதவர்க்கும் - நல்கூர்ந்தார்க்கும், இறந்தார்க்கும்- ஒருவரு மின்றித் தன்பால்வந் திறந்தார்க்கும். துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய்நின்று வேண்டுவன செய்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலியன செய்து நல்லுலகின்கட் செலுத்துதலானும் துணை யென்றார்'. களைகண் - துணை, ஆதரவு. மேல் 41-ஆம் குறளுக்கு அவ்வாறு பொருள் கொண்டதனாலேயே இக்குறளுக்கு இவ்வாறு பொருள் கொள்ளலானார். `துறந்தார்' என்னும் செய்வினைக்குத் `துறக்கப்பட்டார்' எனச் செயப்பாட்டு வினைப்பொருள் கொண்டுள்ளார். தம்மால் ஆதரிக்கப்படுபவரை ஆதரிக்காது விடுதல் பாவம் என்பதும், அப்பாவம் வேறொருவரால் ஆதரிக்கப்பட்டால் தீரும் என்பதும் ஆரியக் கொள்கையாகும். நீர்க்கடன் - சிராத்தம் அல்லது திதி கொடுத்தல். திதி கொடுப்பதால் உயிர்வானுலகும் வீடும் அடையும் என்பதும் ஆரியக் கொள்கையே. துறவிகட்கும், வறிஞர்கட்கும், தம்மால் உழைத்து உண்ண முடியாத அனாதைகட்கும் உதவுதல் இல்லறத்தார் கடமையாம். துறவிகள் பொதுநலம் புரிவதால் அவர்க்குதவுதல் கடமையாகும். ஏனை இருவர்க்கும் உதவுதல் ஒப்புரவாகும். 4. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங் கைம்புலத்தா றோம்பல் தலை. (43) தென்புலத்தார் - தென்னாட்டினர், தெய்வம் - தன் முன்னோர், விருந்து - விருந்தினர், ஒக்கல் - சுற்றத்தார், தான் என்று ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - தான் என்றும் ஐந்திடத்தும் அறவழியைத் தவறாது செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறந்தது. புலம் - இடம். தென்புலத்தார் - தமிழர். வடபுலத்தாரும் இருந்ததால் தென்புலத்தார் என்றார். இது இனப்பற்று. அதாவது தமிழினப் பற்றுக் கொள்ளுதல். தெய்வம் - மேன்மை; தன் முன்னோரின் மேன்மை அல்லது பெருமை விளங்கச் செய்தல். அதாவது தன் குடிக்குரிய நல்லொழுக்கத்தில் தவறா தொழுகித் தன் முன்னோர் பெயர் விளங்கச் செய்தல் தன் உடலையும் ஒழுக்கத்தையும் போற்றுதலும் இல்வாழ்வான் கடமையாயிற்று. இனப்பற்று கொள்ளுதலும், முன்னோர் பெயர் விளங்கச் செய்தலும், விருந்தினரைப் போற்றுதலும், சுற்றந் தழுவலும், தம்மைப் பேணுதலும் இல்வாழ்வார் கடமையாகும். பரி : `தென்புலத்தார் - பிதிரர். தெய்வம் - தேவர். பிதிரராவார் - படைப்புக் காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி. அவர்க்கிடம் தென்றிசை யாதலின் தென்புலத்தார் என்றார். ஐவகையும் அறஞ்செய்தற்கு இடனாகலின் ஐம்புல மென்றார். இவ் வைம் புலத்திற்கும் ஐந்துகூறு வேண்டுதலான் அரசனுக்கு இறைப்பொருள் ஆறிலொன்றாயிற்று'. பிதிர்க்கள் இறந்துபோன முன்னோர்கள் (தகப்பன் பாட்டன்) என்று மனு, அத்தியாயம் 3. சுலோகம் 220, 221-ல் கூறியிருக்க, மனுவை அறநூலென்று ஒப்புக் கொண்டு, அதைக் குறளுரையில் வலிந்து புகுத்தும் இவர். அதற்குமாறாக, `பிதிரராவார் - படைப்புக் காலத்து அயனாற் படைக்கப் பட்டதோர் கடவுட் சாதி' என்பது, `மாறுகொளக் கூறல்' என்னும் குற்றமாகும். `அவர்க்கிடம் தென்றிசை' என்பது யமபுரம் அல்லது நரகவுல கத்தையேயாகும். பாண்டு நரகவுலகத்தில் இருப்பதைக் கேள்விப் பட்ட பாண்டவர் அரச வேள்வி செய்து அவரை வானுலகடையச் செய்ததாகப் பாரதம் கூறுவதால், இறந்தவர் நரகவுலகத்தை யடைவர் என்பதும், அது தென்றிசைக் கண் உள்ளதென்பதும் வடநூற் கொள்கையாகும். மேலும், `இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கட் செலுத்துதலானும்' (குறள் - 42) என்னும் இவர் கூற்றுக்கும் இது மாறாகவன்றோ உளது? 7-ஆம் அதிகார விளக்கத்தில், `தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுத லானும்' எனப் புதல்வன் திதி செய்தலைக் குறிப்பிடுகிறார். 63-ஆம் குறளுரையிலும் இதைக் கூறுகிறார். பிதிரர் கடவுட் சாதியெனின், அவர்க்குப் புதல்வர் செய்யும் கடன் என்ன? அக்கடனால் தந்தைக்கு - தந்தையின் உயிர்க்கு ஏற்படும் நன்மை என்ன? `தந்தை தாய்க்குத் திதிகொடுத்தான் என்பது பாவனையில் கொடுத்தல்' என்னும் நன்னூல் நான்காம் வேற்றுமை யுரையாலும் முன்னோரே பிதிர்க்கள் என்பது வெளிப்படை. எனவே, பிதிரர் கடவுட் சாதி என்பது பொருந் தாவுரையே யாகும். இக்குறள் இல்வாழ்வான் கடமை கூற, இவர் `இவ்வைம்' புலத்திற்கு ஐந்து கூறு வேண்டுதலான் அரசற்கு ஆறிலொரு கடமையாயிற்று' எனக் கொடுத்தலாகக் கூறுதல் பொருந்தாவுரையாகும். ஒருவன் தான் தேடுவதில் ஐந்து கூறைப் பிறர்க்கீந்து தான் ஒரு கூறு கொள்ள வேண்டும் என்பது பொருந்தா அறமேயாகும். 5. வள்ளுவர், ஓரதிகாரத்தில் வரும் சொல்லையோ, சொற்றொடரையோ கொண்டே அவ்வதிகாரத்திற்குப் பெயரிட் டுள்ளனர். அக்கொள்கைப்படி 7-ஆம் அதிகாரத்தில் புதல்வர் என்னும் பெயர் வரவேயில்லை. மக்கள் என்னும் பெயர் 7 குறளில் வந்துள்ளது. முதற் குறளில் மக்கட்பேறு என்பதும் வந்திருக்கிறது. எனவே, அவ் வதிகாரத்திற்கு `மக்கட்பேறு' என்னும் பெயரே பொருந்தும். மணக்குடவர் `மக்கட்பேறு' என்றே பெயரிட்டுள்ளார். பரிமேலழகரோ தனது ஆரியக் கொள்கைக் கேற்ப, வருணாச்சிரம தருமத்தை நிலைநாட்டப் புதல்வரைப் பெறுதல் என்று பெயரிட் டுள்ளார். இப்பெயர் பெண்பாலை ஒழிப்பதால் பெண்ணடி மையைக் குறிக்கிறது. அதிகார விளக்கத்தில், `இருபிறப்பாளர்மூவரானும் இயல்பாக இறுக்கப்படும் கடன் மூன்றனுள், முனிவர் கடன் கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப் படா மையின்' எனப் பச்சை வருணாச்சிரம தருமத்தை அப்படியே புகுத்துகிறார். கேள்வி - ஓதுதல், கற்றல் - பிரமசரியம். அப்புதல்வரால் பிதிர்க்களுக்கு நீர்க்கடன் செய்தல் கூறுதலால், முன் (43) `தென்புலத்தார் ஒரு கடவுட்சாதி' என்றதற்கு மாறுபடக் கூறலேயாம். மேலும், வள்ளுவர் பொதுவாக மக்கட் பேற்றின் சிறப்புக்கூற, இவர் இருபிறப்பாளரான பிராமணர், சத்திரியர், வைசியர் என்னும் ஆரிய முதற் குலத்தோர் மூவரின் மக்கட் பேறே கூறினதாகக் கூறி, சூத்திரர் திதி செய்யப்படாமையான் அவரை விலக்கிவிட்டார். இஃது வள்ளுவர் கருத்தறி யாமையே யாகும். வள்ளுவர் உலக நிகழ்ச்சியின் இன்றியமை யாமையான மக்கட்பேறு கூற, இவர் அதை வருணாச்சிரம தருமத்தின்பாற் படுத்தி மருட்டிவிட்டார். தமிழ் அந்தணர் துறவிகளாதலால் இது ஆரியக் கொள்கையேயாகும். தமிழ் வேளாளர் உயர் மக்கள் என்பது இங்கு அறியத்தக்கது. ஆரியக் கொள்கையைத் தழுவிய தமிழ்நாட்டு வேளாளர் இன்று திதி செய்து வருகின்றனர். 6. இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விரும்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. (81) இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - வீட்டின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழ்வதெல்லாம், விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - வந்த விருந்தினரைப் போற்றி அவர்க்கு உதவி செய்வதற்காகவே. விருந்தினரைப் போற்றுதலே இல்வாழ்வாரின் முதற்கடமை. விருந்தினர் - புதியவர். பரி : `இல் இருந்து - மனைவியோடும் வனத்திற் செல்லாது இல்லின்கணிருந்து' என்கிறார். `மனைவியோடும் வனத்திற் செல்லாது' என்பது இந்த இடத்திற்கு ஏலாத வருணாச்சிரம தருமப் புகுத்தலேயாம். `இல் இருந்து' என்பது - இல்லறத்தைக் குறிக்கும் தொடரே யன்றி, `வனத்தின்கண் செல்லாது' என்பதை அவாவியதன்று. ஆரிய மக்கள்தாம் தவம் என்னும் பெயரால் மனைவி மக்க ளோடு பெரும்பான்மையோர் காட்டில் வாழ்ந்து வந்தார்களே யன்றித் தமிழர் வழக்கமன்று. விருந்தோம்பல் என்பது தமிழர்க்கே யுரிய தனியறம் என்பதை இவர் அறியார் போலும்! 7. "ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்." (133) ஒழுக்கம் உடைமை குடிமை - நல்லொழுக்கம் உடைமையே உயர்குடித் தன்மையாகும், இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - ஒழுக்கமின்மை தாழ்குடித்தன்மையாகி விடும். தாழ்குடித்தன்மை - நல்லொழுக்க மில்லாத தன்மை. பிறப்பு என்றது குடியை. பரி : `ஒழுக்கம் உடைமை குடிமை - எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கேற்ற ஒழுக்க முடைமை குலனுடைமையாம். இழுக்கம் இழிந்த பிறப்பாய்விடும் - அவ்வொழுக்கத்திற் றவறுதல் அவ் வருணத்தில் தாழ்ந்த வருணமாய் விடும். பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்க முடையவராக உயர்குலத்தாராவராகலின் குடிமையாம் என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத் திற்றவறத் தாழ்ந்த வருணத்தா ராவராகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றும் கூறினார்'. `வருணத்திற் கேற்ற ஒழுக்கம்' என்பது வருணாச்சிரம தருமம். பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தார் என்பது ஆரியருக்குள் இல்லை. இதுவரை எந்த மூன்றங்குல நாலாங் குலத்தோனும் நல்லொழுக்கத்தால் பிராமணனாகவில்லை. உலகம் போற்றும் உத்தமர் காந்தியே வைசியனாகப் பிறந்து வைசியனாகவேதான் கோட்சேயின் கைவெடிக்குண்டுக் கிரையானார். உயர்ந்த வருணத்திற் பிறந்தாராயினும் ஒழுக்கந் தவறின் தாழ்ந்த வருணத் தாராவர் என்றபடி. குருவின் மனைவியைப் புணர்ந்தவனும், தாயின் இரண்டாவது கணவனுக்குப் பிறந்த தம்பிமார்களின் மனைவி யரான கைம்மைகளைக் கலந்து பிள்ளை பெற்றவனும் தாழ்ந்த வருணமாக வில்லை. இன்றும் ஒழுக்கமென்பதே சிறிதும் இல்லாத பார்ப்பனருங் கூடப் பார்ப்பனராகவே தான் இருந்து வருகின்றனர். பிராமணன் ஒழுக்கந் தவறிச் சூத்திரனானதாகப் புராணங்கூட இல்லை. அரச ஒழுக்கத்திற் குறைவின்றி யிருந்த சூத்திரச் சிவாஜி அரசனாக அன்னார் அருளையல்லவோ வேண்டி நின்றான்! 8. "மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்." (134) பார்ப்பான் மறப்பினும் ஒத்துக் கொளலாகும் - நூல்களை ஆராய்ந்து பார்ப்பவன் அவற்றை மறப்பினும் மறுபடியும் கற்றுத் தெரிந்து கொள்ளலாம், `பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் - மக்கட் பிறப்புக்குரிய உயரிய ஒழுக்கம் குறையு மானால் அவன் கெடுவான் கற்றதை மறந்தாலும் பின் கற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒழுக்கம் குன்றினால் மறுபடியும் தேடிக்கொள்ள முடியாது. கற்றலினும் ஒழுக்கம் சிறந்ததென்பது. பரி : ஒத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணங் கெடாமையின் பின்னும் அஃதோதிக் கொள்ளலாம். பார்ப்பான் பிறப்பு ஒழுக்கங் குன்றக் கெடும் - அந்தணரது உயர்ந்த வருணம் தன் னொழுக்கங் குன்றக் கெடும்'. இது தமிழர் ஒழுக்கங் கூறு நூல் என்பதை மறந்து கூறியது,. ஒழுக்கத்தின் சிறப்பை விளக்கக் கற்ற கல்வியை மறத்தலை எடுத்துக் கூறினாரேயன்றிப் பார்ப்பானையும் வேதத்தையும் கூறவில்லை. மேலும், `அந்தணரது உயர்ந்த வருணம். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின் இஃது ஏனைய வருணங் கட்கும் கொள்ளப்படும்' என்பதும், பார்ப்பனர் உயர்ந்தவர், சிறந்தவர் என்னும் மனு முறையேயாகும். மறந்த வழி இழிகுலத்தானா மாகலின்' என்பதும் பொருந்தாக் கூற்றேயாகும். இன்று வேதம் என்பதே இன்னதென்று தெரியாத பார்ப்பானும் பார்ப்பனாகவே தான் இருந்து வருகிறான். இது வலிந்து குல வேற்றுமையைப் புகுத்தியது. ஒத்து என்பது பொதுவாக ஓதுதலைக் குறிக்குமே யல்லாது வேதத்தினைக் குறியாது. ஒத்து இங்கே வினையெச்சப் பொருள்படும். சாதி வேற்றுமை "பிறப்பிலேயே உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்னும் சாதி வேற்றுமை தமிழர்க்குள் இல்லை. `ஒன்றே குலம்' என்பது ஆன்றோர் மொழி. பிராமணன் பிரமாவின் முகத்திலும், சத்திரியன் மார்பிலும், வைசியன் தொடையிலும், சூத்திரன் காலிலும் பிறந்தனர் என்பதும், அவ்வவ் விடத்திற் கேற்றவாறு ஏற்றத் தாழ்வுடையர் என்பதும், பிரமாவின் உயர்ந்த இடமான முகத்தில் பிறந்ததால் பிராமணன் உயர்ந்த பிறப்பினன், பிரமாவின் தாழ்ந்த இடமான காலில் பிறந்ததால் சூத்திரன் தாழ்ந்த பிறப்பினன் என்பதும் ஆரியக் கொள்கை. அவ்வுயர்வு தாழ்வுக் கேற்றவாறே அன்னார் ஒழுகியும் வந்தனர். இச்சாதி வேற்றுமைக் கொள்கைக்குச் சான்றாக எழுதப்பட்டதே மனு நூல். `பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்' (972) என்ற கொள்கையுடைய திருக்குறளில், பரிமேலழகர் வேண்டு மென்றே ஆரியச் சாதி வேற்றுமையை வலிந்து புகுத்தி யுள்ளார். 1. மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றா ரனைத்திலர் பாடு. (409) கல்லாதார் மேற்பிறந்தா ராயினும் - கல்லாதவர் உயர் குடியில் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்குடியில் பிறந்தும் கற்றாரைப் போலப் பெருமை யில்லாதவராவர். உயர்குடி - வழிவழியாக நல்லொழுக்க முள்ளகுடி. தாழ்குடி - வழிவழியாக நல்லொழுக்க மில்லாதகுடி. ஒருவன் உயர்குடியில் பிறந்தும் கல்லாவிட்டால் அக்குடிப் பெருமையை அவன் இழந்து விடுவான். தாழ்குடிப் பிறந்த ஒருவன் கற்கின் உயர்குடிக்குரிய பெருமையை அடைவான். இன்று கல்லூரிப்பட்டம் பெற்ற எத்தனையோ தாழ்குடியினர் உயர்குடியில் மணஞ் செய்துள்ளனர். கல்வியே பெருமைக்குக் காரணம். பரி : `கல்லாதார் உயர்ந்த சாதிக்கட் பிறந்தாராயினும் தாழ்ந்த சாதிகட் பிறந்து கற்றாரது பெருமை இலராவர்'. `பிறப்பொக்கும்' (972) என்ற வள்ளுவர் கொள்கைக்கு முரணாக `உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி' என்பது பொருந்தாது. மேலும், இவர், `உடலோ டொழியும் சாதியுயர்ச்சி' என்பதால், ஆரியப் பிறவி வேற்றுமையையே குறிப்பிடுகிறார். நந்தனாரின் உடலைத் தீயில் எரித்துவிட்டுப் பிராமண வடிவங்கொண்டனர் என்பதும், சிவன் முதலிய தேவர்கள், அடியாரைச் சோதிக்கப் பிராமண வடிவுகொண்டே வந்தனர் என்பதும், பிறப்பினால் ஏற்பட்ட சாதியுயர்வைக் குறிப்பதே யாகும். 2. பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (972) எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - எல்லா மக்களுக்கும் பிறப்பு ஒக்கும், செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா - அவரவர்கள் செய்யும் தொழில் வேற்றுமையால் பெருமை சிறுமை என்னும் சிறப்பு ஒவ்வா. உயிர் என்றது மக்களை. எல்லா மக்களும் பிறப்பினால் ஒரு தன்மையினரே - ஒத்த பிறப்பினரே. செய்யுந் தொழிலுக்குத் தக்கவாறு மதிக்கப்படுகின்றனர். பரி : `எல்லா மக்களுயிர்க்கும் பொதுவகையாகப் பிறப்பு ஒக்குமே யெனினும், பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் ஒவ்வா, அவை செய்யுந் தொழில்களது வேறுபாட்டான்'. உயிர் என்றது ஆகுபெயரால் மக்களை யுணர்த்த, இவர் உயிரெனவே கொண்டு, அவ்வுயிர் செய்யும் தொழில்களது வேறுபாடென்றும். `வினை வயத்தால் பஞ்சபூத பரிணாம மாகிய யாக்கையைப் பொருந்தி நின்று, அதன் பயன் அநுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் பிறப் பொக்கும் என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற் பாகுபாடுகள் வருணந்தோறும், யாக்கை தோறும் வேறுபடுதலின் சிறப்பு ஒவ்வா என்றுங் கூறினார்' என்கிறார். பஞ்சபூதம் - நிலம் நீர் தீ காற்று வெளி. பரினாமம் - வேறுபடுதல். கட்டளைக்கல் - உரைகல். `உயிரானது முன் வினையினால், பஞ்சபூத வேறுபாட்டால் உண்டாகிய உடல் எடுக்கிறது. எல்லா வருணத்தாரும் இவ்வாறே பிறக்கின்றனர். யாக்கை யெடுத்து வினைப்பயனை அநுபவித்தலில் எல்லா வருணத்தாரும் ஒரே தன்மையுடையரே. ஒவ்வொரு சாதிக்கும், மரம் விலங்கு முதலிய யாக்கைதோறும் தொழில் வேறு படுகிறது' என்பன வெல்லாம் சாதி வேற்றுமையை நிலை நாட்ட வலிந்து கொண்ட பொருளேயாகும். பார்ப்பனர் முதலிய எல்லாச் சாதியினர் உடலும் பஞ்சபூத பரிணாமத்தால் ஆனது என்பது `பிறப்பொக்கும்' என்பதற்கு நேர்பொருளன்று. மேலும், சாதித் தொழிலும், மரங்கள், ஊர்வன, நீர்வாழ்வன, பறப்பன, நடப்பன, மக்கள், தேவர் என்னும் எழுவகைப் பிறப்பு எடுக்கிறது. ஓர் உயிர் என்னும் ஆரியச் சமயக் கொள்கைப்படி உயிர் அந்தந்த யாக்கைதோறும் செய்யுந் தொழிலுமன்று இங்கு வள்ளுவர் கூறுந்தொழில். வள்ளுவர் கூறுவது `நல்லது கெட்டது' என்னும் தொழிலேயாகும். இது `பெருமை' என்னும் அதிகாரம். நற்செயலால் பெருமையும், தீச் செயலால் சிறுமையும் உண்டாவதால், செய்யுந் தொழிலுக்குத் தக்கபடி உயர்வு தாழ்வு உண்டாகும் என்பதே இக்குறளின் கருத்தாகும். `செயற்கரிய செய்வார் பெரியர்' (26) என்பதை நோக்குக. வள்ளுவர் மக்களது பெருமை கூறுகின்றாரே யன்றி, உயிர் வினைவயத்தால் பஞ்சபூத வேறுபாட்டால் ஆகிய உடலை யெடுத்து, அவ்வினைப் பயனை அநுபவிக்கிறது என்னும் உயிரைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இங்கு இடமில்லை. வருணத் தோறும் யாக்கை தோறும் தொழில் வேறுபடும் என்பது சாதி வேற்றுமையும் பிறவி வேற்றுமையும் பிறவி வேற்றுமையும் ஆகும். 3. அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வ பொருட்செல்வம் பூரியர் கண்ணு முள. (241) செல்வங்களுள் சிறந்த செல்வமாவது அருளாகிய செல்வம்; பொருட்செல்வம் கீழோரிடத்தும் உள்ளது. கீழோர் - நற்குணமும் நல்லொழுக்கமும் இல்லாதவர். பரிமேலழகர், `பூரியர் - நீசர்' என்கிறார். நீசராவார் - மக்கள் தேவர் நரகர் உயர்திணை' என நன்னூலார் கூறும் நரகரேயாவர். நரகர் - தாழ்த்தப்பட்டோர். இது தற்காலத்தே ஆரிய நாகரிக ஆதிக்கத்தால் உண்டானதே. இங்கு நீசர் என்னும் சாதிக்கும் அருளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. துறவற ஒழுக்கங் களுள் அருள் முதன்மையான தொன்றாகையால், பொருட் செல்வம் ஒழுக்க மில்லாத கீழ் மக்களிடத்தும் உண்டென அருளின் சிறப்பை எடுத்துக் காட்டினார். `உயர்ந்தோர் கண்ணேயல்ல தில்லாத அருட் செல்வம்' என உயர்சாதியைக் குறிப்பிடுகிறார். உயர்ந்த சாதியார்க்கே அருளுண்டென்பது இவ் விடத்திற்குச் சிறிதும் பொருந்தாது. துறவிகட்குச் சாதியேது? வேகாத கடு வெயிலில் விறகுடைத்து வேர்த்துக் களைத்து விடாய்த்துக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கேட்டால், ஏதோ ஒரு மாதத்தையும் நாளையுங் கூறி `இல்லை' என்னும் இரக்க மென்ப தையே இன்னதென்றறியாத உயர் சாதியினரா அருளுடையர்? 3. வேள்வி வேள்வி என்பது தேவர்களுக்கு விருப்ப முண்டாகச் செய்யப்படும் தீத்தொழில். இது பாக வேள்வி, அவி வேள்வி, சோம வேள்வி என முப்பகுதியாய், ஒவ்வொரு பகுதியும் எவ்வேழாய் இருபத்தொரு வகைப்படும். இவையேயன்றி, நாடோறும் செய்யப்படும் பிரமயாகம், தேவயாகம், மானுட யாகம், பிதிர்யாகம், பூதயாகம் என ஐம்பெரு வேள்விகளு முண்டு. வேள்வி, யாகம், யக்யம், ஓமம் என்பன ஒரு பொருட் கிளவி. வேள்வி செய்தல் ஆரியர்க்குரிய தொழில்களில் தலையாய தொன்று. ஆரிய வேதங்களிற் பெரும்பகுதியும் இவ் வேள்வி பற்றிய செய்திகளே யாகும். தேவர்களின் பொருட்டுச் செய்யப்படும் இவ் வேள்விகளில் ஆடுமாடு முதலிய உயிர் களைக் கொல்வது கொலையாகாது என்று அவ்வேதமே கூறுகிறது. (மனு, அ-5. சு-39) வேள்விசெய்வதால் எல்லா வகையான நன்மைகளும் உண்டாகு மென்றும், வேள்வி செய்தற்குரியர் பிராமணரே யாவர் என்றும் வேதம், மனு முதலிய ஆரிய நூல்கள் கூறுகின்றன. தமிழர்க்கு இவ் வேள்வி உரியது மன்று, உடன்பாடு மன்று. 259,328ஆம் குறள்களில் வள்ளுவர் வேள்வியை மறுத்துக் கூறியுள்ளார். சமண பௌத்தர் களும் அவ் வேத வேள்வியை மறுத்து வந்தனர். "வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லி அமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே பாதி மாதுட னாய பரமனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே". எனச் சம்பந்தர், வேள்வியை மறுத்த சமண பௌத்தரை அழித்துச் சைவத்தை வளர்க்கும்படி ஆலவாய்ச் சிவனை வேண்டுவதால், தேவார காலச் சைவர்கள் வேள்வியை உடன்பட்டு வந்துள்ளனர் எனத் தெரிகிறது. ஆதம் - அன்பு. ஆதம் இல்லி - அன்பில்லாத. தேரர் - பௌத்தர். இவ் வாரிய வேத வேள்வியை பரிமேலழகர் வலிந்து புகுந்துகின்றனர். 1. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். (87) வேள்விப் பயன் இனைதுணைத்து என்பதொன்று இல்லை - விருந்தோம்பலின் பயன் இன்ன அளவினது என்று கூறும் ஓர் அளவினை யுடையதன்று, விருந்தின் துணைத் துணை - அவ் விருந்தினரது தகுதியின் அளவே அதற்கு அள வாகும். வேள்வி - உதவி. பரி : வேள்விப் பயன் - விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன். ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் வேள்வி என்றும்' ஐம்பெரு வேள்வியாவன - பிரமயாக முதலியன. பிரமயாகம் - வேதமோதல். தேவயாகம் - ஓமம் வளர்த்தல், மானுடயாகம் - விருந்தோம்பல். பிதிர்யாகம் - சிரார்த்தம் செய்தல். பூதயாகம் - பலியீதல். யாகம் - வேள்வி. வேள்வி என்னும் சொல்லுக்கு இவர் கொண்ட பொருளே தப்பு. மற்ற வேள்விகளையும் தமிழரை நம்பும்படி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்ட தேயாகும் இப்பொருள். வேள்வி - விருந்தோம்பல் என்பதே நேர் பொருள். பிரமயாகம் முதலிய மற்ற வேள்விகள் தமிழர்க்கு ஏலாமையால் அதிலும், மனுமுறைப்படி தமிழ் வேளாளர்க்கு ஒரு சிறிதும் ஏலாமையால் தமிழ் வேளாளர்க்குச் சிறப்புப் பண்பாக இருக்க, அவர்க்கேலாத மற்றவற்றுடன் சேர்த்துப் பரிமேலழகர் கொண்ட பொருளில், வேள்வியை மறுத்துக் கூறும் (259, 328) வள்ளுவர் ஒருபோதும் கூறியிருக்க மாட்டார். 2. அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு. (384) அறன் இழுக்காது - அறனெறி தவறாது, அல்லவை நீக்கி - அறமல்லாத குற்றங்களை நீக்கி, மறம் இழுக்காமானம் உடையது அரசு - வீரத்தினின்று தவறாத மானத்தை யுடையவனே அரசனாவான். பரி : `அறமாவது - ஓதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத் தொழிலினும், படைக்கலம் பயிறல், பல்லுயி ரோம்பல், பகைத்திறந் தெறுதல் என்னும் சிறப்புத் தொழிலினும் வழுவாது நிற்றல்' இத்தொழில்கள் கூறவேண்டிய இடமே இங்கில்லை. அறம் என்பதற்கு அரசன் செய்யும் தொழில்களைக் கூறுதல் பொருந்தா உரையே யாகும். வேட்டல் - வேள்வி செய்தல். இது ஆரிய அரசர் தொழிலேயன்றித் தமிழரசர் தொழிலன்று. தமிழ் நாட்டில் வாழ்ந்த, தமிழரல்லாத கொடுங் குணங்களை யுடைய கொடியரெனத் திரித்துக் கூறப்படும் அரக்கர் தலைவராகிய இராவணன், இரணியன் முதலியோர் கூடக் கொலை வேள்வியை மறுத்திருக்கும்போது, தமிழரசர்களுக்கு வேட்டல் எங்ஙனம் தொழிலாகும்? ஆரியர் புகழுரையில் மயங்கி, ஆரியக் கொள்கை மோகத்தால் `பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' போன்ற ஒரு சிலர் வேள்வி செய்துள்ள தாகத் தெரிகின்றதேனும், தமிழரசர்க ளெல்லாம் வேள்வியை ஒரு தொழிலாகக் கொண்டு செய்து வந்ததாக வரலாறில்லை. 3. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு. (385) இயற்றலும் - பொருள் வரும் வழிகளை மேன்மேல் உண்டாக்கலும், ஈட்டலும் - வந்த பொருளைச் சேர்த்து வைத்தலும், காத்தலும் - அவற்றைக் காப்பாற்றுதலும், காத்த வகுத்தலும் - அப்படிக் காப்பாற்றியவற்றை நாட்டு நலத்தில் செலவிடுதலும், வல்லது அரசு - வல்லவனே அரசனாவான். பரி : `காத்த வகுத்தலும் - காத்தவற்றை அறம்பொருளி ன்பங்களில் பொருட்டு விடுத்தலும். கடவுளர், அந்தணர், வறியோர் என்றிவர்க்கும், புகழுக்கும் கொடுத்தலை அறப் பொருட்டாகவும்'. கடவுளர்க்கு என்றதும் வேள்விக்கும், அந்தணர்க்கு என்றது பிராமணர்க்குங் கொடுத்தலை. இது ஒருசார் மனு முறையையே யாகும். வேள்விக்குக் கொடுத்தல் தமிழரசர் அறமன்று. 4. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும். (63) அவர் பொருள் - மக்கள் தேடும் பொருள், தம்தம் வினையான் வரும் - அவரவர் தொழிலுடனே பெற்றோர்பால் வரும். ஆதலால், தம் மக்கள் தம்பொருள் என்ப - தம் மக்களைத் தம் பொருள் என்பர் அறிவுடையோர். மக்கள் பெற்றோரின் கீழ் வாழ்வதால், அம்மக்கள் செய்யும் தொழிலும், அத்தொழிலால் அவர் தேடும் பொருளும் பெற்றோரையே சேரும் என்பதாம். பெற்றோர்க்கு மக்களே பெருஞ்செல்வம். பரி : `தம் புதல்வரைத் தம் பொருளென்று சொல்லுவர் அறிந்தோர். அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான், நன்மக்கட் பெற்றோர் பெறும் மறுமைப் பயன் கூறப்பட்டது'. `தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினை' - இறந்து போன பெற்றோரை நோக்கி மக்கள் செய்யும் திதி. நல்வினை - திதி. தம்பால் - அப்பெற்றோர்பால். சிரார்த்தத்தில் புரோகி தருக்குக் கொடுக்கும் பொருள் பெற்றோரைச் சேருமென்பது கருத்து. பெற்றோர்க்கு மறுமைப் பயன் அவர் மக்கள் செய்யும் சிராத்தமே யாகும். ஆலமரத்திற்கு விழுதைப்போல முதுமைப் பருவத்தில் பெற்றோர்க்குதவும் மக்களின் இன்றிமையாமையை விளக்கி னாரே யன்றி மறுமைப்பயன் கூறவில்லை. பெற்றோரின் முதுமைப் பருவத்தில் அவர் மக்கள் தொழில் செய்து பொருளீட்டிப் பெற்றோருக்கு உதவுதலான், மக்களைத் தம்பொருள் என்பர் பெற்றோர் என மக்கட்பேற்றின் சிறப்புக் கூறியதேயாகும். மக்கள் தேடும் பொருள் சிரார்த்தங் கொடுப் பதன் மூலம் இறந்துபோன பெற்றோரிடம் வரும் என்பது ஆரியக் கொள்கையை வலித்து புகுத்துதலேயாகும். மக்கள் என்பதற்குப் `புதல்வர்' என ஆண் பாலாகக் கொண்டதும், பெண்பாலை யொழித்துச் சிரார்த்தம் செய்வதற்குரிய ஆண் பாலாகக் கொண்ட மனு முறையே யாகும். சிரார்த்தம் என்பது - இறந்துபோன பெற்றோர்களின் உயிர் நற்கதியடையும் பொருட்டு (குறள் 42. பரி) ஆண்டு தோறும் அவர் இறந்த நாளில் அவர் மக்களால் செய்யப்படும் சடங்கு. உவாத்தோறும் திதி செய்வதும் உண்டு. உவா - அமாவாசை. சிரார்த்தம், திதி, திவசம் என்பன ஒரு பொருட் கிளவி. இறந்தவர் - பிதிர்க்கள் எனப்படுவர். பிராமணரைப் பிதிர்க்களாகப் பாவனை செய்து, இப் பிராமணர் உண்பது அப்பிதிர்க்கள் உண்பதாகப் பாவித்துச் செய்வதே திதியாகும். மனுநூல் மூன்றாவது அத்தியாயம் முழுவதும் இசிரார்த்தத்தைப் பற்றியதேயாகும். "பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்! இறந்தவ ராயுமை யிவ்விடை யிருத்திப் பாவனை மந்திரம் பலபட வுரைத்தே உமக்கவர் புத்திரர் ஊட்டின போது அடுபசி யாற்குலைந் தாங்கவர் மீண்டு கையேந்தி நிற்பது கண்டதார் புகலீர்! அருந்திய வுண்டியால் யார்பசி கழிந்தது?" (கபிலரகவல்) உமை - பிராமணரை. அவர் புத்திரர் - இறந்தவர் மக்கள், அடுபசியால் குலைந்து - மிக்க பசியால் வருந்தி, ஆங்கவர் - பிதிருலகில் உள்ள பிதிர்க்கள். அருந்திய உண்டியால் யார் பசி கழிந்தது - பிராமணர் உண்ட உணவால் பிராமணர் பசி தீர்ந்ததா? அல்லது பிதிர்க்கள் பசி தீர்ந்ததா? பிராமணர் பசி தான் தீர்ந்தது. இதனால், தமிழர்க்குத் திதி கொடுத்தல் உடன்பாடன் றென்பது தெரிகிறதல்லவா? 4. துறக்கம், நரகம் துறக்கம் - சுவர்க்கம், துறக்கவுலகம், தேவருலகம், புத்தேளுலகம், வானுலகம், மேலுலகம், விண்ணுலகம் என்பன வெல்லாம் ஒரு பொருட் சொற்கள், இவையெல்லாம் மண்ணுல கத்தில் உள்ள இடங்களேயன்றி, திங்கள், விண்மீன் முதலியனபோல வானவெளியில் உள்ளனவல்ல, தேவர் என்பாரும் மக்களேயாவர். நரகம் என்பது பெருந்துன்பம். அது ஓரிடம் என்பதும், அது தெற்கே யுள்ளதென்பதும் கற்பனைப் படைப்பு. இறந்த உயிர்கள் புண்ணிய பாவத்திற்குத் தக்கபடி தேவருலகத்தையும் நரகவுலகத் தையும் அடைந்து இன்பதுன்ப மநுபவிக்கும் என்பதும் ஆரியச் சமயச்சார்பான புராணக் கருத்துக்களாகும். ஐயமகற்றல் என்னும் தலைப்பைப் பார்க்க. பிராமணர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பதும் அவர் களுக்குத் தொண்டு செய்வதுமே புண்ணியம். அவர்களுக்குக் கொடாமையும் தொண்டு செய்யாமையும் பாவம். (மனு, அ-10.சு-122,3) என்பது பிராமணர் தமிழரை ஏமாற்றிப் பிழைக்க எழுதிவைத்த ஏட்டுக் கற்பனையேயாகும். "இறந்து போகிறவர்' உயிருடனிருக்கும்போது இங்கு தேவர்களுக்குக் கொடுத்த சோமம், இறைச்சி இவற்றின் உயர்வு தாழ்வுக் கேற்றவாறு துறக்கத்திலும் சோமம், அமுதம், அழகிய பெண்கள் இவற்றை அனுபவிப்பார்கள். புண்ணியம் முடிந்தவுடன் பழையபடியே மண்ணுலகத்தில் பிறக்கிறார்கள்" (இருக்குவேதம்) 1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். ( 121) அடக்கம் அமர் அருள் உய்க்கும் - அடக்கம் மிக்க மேன்மையைக் கொடுக்கும், அடங்காமை ஆர் இருள் உய்த்து விடும் - அடக்கமின்மை மிக்க துன்பத்தைக் கொடுத்துவிடும். அடக்கம் - மனமொழி மெய் அடங்குதல். அருள் - மேன்மை. அமர்தல் - பொருந்துதல். அமர் அருள் - அமர்ந்த அருள் - மிக்க அருள், இருள் - துன்பம். ஆர் இருள் - மிக்க துன்பதும் - பெருந்துன்பம். அடக்கம் இன்பத்தையும் அடங்காமை துன்பத்தையும் தரும். பரி : `அடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கமாகிய அறம் பின்தேவருலகத் துய்க்கும், அடங்காமை ஆர் இருள் உய்த்து விடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கரிய இருளின்கட் செலுத்தும். இருள் என்பது ஓர் நரக விசேடம்'. அடக்கமுள்ளவன் இறந்தபின் தேவருலகத்தை யடைவான். அடங்காதவன் இறந்தபின் நரகத்தை அடைவான் என்பதாம். நரகம் இருபத்தெட்டுக் கோடி உண்டு என்னும் புராணப் படி, `இருள் ஓர் நரகவிசேடம்' என்றார். ஒருவன் உயிரோடுள்ள போது எய்தும் இன்ப துன்பப் பயன் கூறப் பட்டதே யன்றி, இறந்தபின் உயிரடையும் இன்ப துன்பங்களல்ல. இறந்தபின் அடையும் இன்ப துன்பத்தைக் கூறி அச்சுறுத்தி ஏமாற்றுவது ஆரியக் கொள்கையே யன்றித் தமிழர் கொள்கை யன்று. பருவத்தில் அடக்கமுடையவன் இன்புறுவதும், அடக்க மில்லாதவன் துன்புறுவதும் கண்கூடு. 2. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவி னல்ல பிற. (213) ஒப்புரவின் நல்ல பிற - ஒப்புரவைக் காட்டிலும் நல்ல வேறு செயல்களை, புத்தேளுலகத்தும் ஈண்டும் பெறல் அரிது - வானுலகத்தும் தமிழ்நாட்டினும் பெறமுடியாது. ஒப்புரவு - இல்லார்க்குக் கொடுத்தல் உள்ளவர் கடமை என்பதை உணர்ந்து கொடுத்தல். எதிர்நாடா உதவியை விட நல்லதொன்று எங்கும் இல்லை என்பதாம். இன்றும் ஏதாவ தொன்றை மேனாட்டிலும் இல்லை இங்குமில்லை என்று சொல் வதுண்டல்லவா? புத்தேளுலகம் இன்ன தென்பதை வடபுலத்தார் என்னும் தலைப்பில் காண்க. பரி : `ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மைய ராதல் புத்தேளுலகத் தரிதாயிற்று' இத்தகைய உலகம் ஒன்று உண்டு என்பது வியப்பினும் வியப்பே. சமய உலகில் கூட ஏற்றத் தாழ்வான தகுதியும், செல்வாக்கும் செல்வாக்கின்மையும் உள்ள கடவுளர் உண்டு. மண்ணுலகில்கூடத் திருப்பதியானுக்குள்ள செல்வாக்கு வெண்ணெய்மலையானுக்கில்லை. பழனியாண்டவனுக் குள்ள பெருமை மேட்டுப் பழனிக்கில்லை. புத்தேளுலக மன்னனாகிய இந்திரன், தனது பூந்தோட்டத்துக்குத் தண்ணீரில் லாமல் யானை முகனைக் குறையிரந்ததாகப் புராணங் கூறுகிறது. புராணக் கற்பனைகளையும் சமயக் கருத்துக் களையும் புகுத்தும் இவர் இவ்வாறு கூறுவது தான் நமக்கு விளங்கவில்லை. தமிழர்களை நம்பும்படி செய்வதற்குச் செய்யும் சூழ்ச்சியேயாகும். 5. புராணக்கதை புராணம் என்பது சிறுவர்களுக்குச் சொல்லிய பஞ்ச தந்திர கதைகளைப் போலப் பெரியவர்களுக்குச் சொல்லிய கற்பனைக் கதைகளேயாகும். புராணம் - பழங்கதை. இது, `இறைவன் வேதாகமங்களை ஓதியருளியதன்றி, அவற்றை ஓதவும் உணரவும் ஏலாத ஏனையோர் பொருட்டு அவ் வேதாகம சாரத்தை யுட்கொண்ட சரிதமாகிய புராணங்களை அருளி, நந்திதேவர் மூலமாக அகத்திய ராதி முனிவர்களுக்கு உபதேசிப்பித்தார்'. எனத் தெய்வத்தொடர்பாக்கப்பட்டுள்ளது. புராணக் கதைகள் பெரும்பாலன இயற்கைக்கு ஒவ்வாததும், மக்கட்டன் மைக்கு அப்பாற்பட்டதுமாகவே உள்ளன. அவற்றைக் கதைக் காகக் கொள்ளாமல் உண்மை நிகழ்ச்சியெனக் கொள்வதே தகாமையாகும். 1. ஐந்தவித்தா னாற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. (25) ஐந்து அவித்தான் ஆற்றல் - ஐம்பொறிகளையும் அடக்கின வனது வல்லமைக்கு, அகல் விசும்பு உளார் கோமான்- இந்திரனே - அகன்ற வானுலகத்தார்க்குத் தலைவனாகிய இந்திரனே, சாலும் கரி - தக்க சான்றாவான். வானுலகத்தை வடபுலத்தார் என்பதில் காண்க. இந்திரன் ஆரியர் தலைவன்; தமிழர் பகைவன்; தமிழர் பெருமை கண்டு பொறாதவன்; வலிமையும் பெருமையும் தலைமையும் புகழுமுடைய தமிழ்ப் பெரியார்களை ஒழிப்பதையே தனது வாழ்க்கைப் பயனாகக் கொண்டவன்; வரையா ஈகையால் பெரும்புகழோடு வாழ்ந்த `மாவலி' என்னும் தமிழரசனை வாமனன் என்பானைக் கொண்டு கொல்வித்தவன்; பாண்டியர் பெருமை கண்டு பொறாது அவர்களை ஒழிக்கப் பல சூழ்ச்சிகள் செய்தவன் எனப் பல கதைகள் கூறப்படு கின்றன. இத்தகைய கதைகள் பல அன்றுங் கூறப்பட்டிருக் கலாம். அக்கதைகளைத் தெரிந்திருந்தனர் பழந்தமிழ் மக்கள். துறந்தார் பெருமையைப் பலரும் எளிதில் உணரும் பொருட்டு இந்திரன் கதையை எடுத்துக்காட்டாகக் காட்டினர் வள்ளுவர். தமிழ் மக்களின் கொடை, புகழ் போன்ற பெருமைக்கே பொறாமைப்படுகிற இந்திரன், ஒழுக்கத்து நீத்து ஐந்தவித்தார் பெருமைக்கு என்படான்? என நீத்தார் பெருமையை விளக்கியவாறு. இன்றும், தமிழர் வாழ்வு கண்டு பொறாது பல அடக்குமுறைச் சட்டங் களைச் செய்து தமிழரை வாட்டி வதைக்கும் தென்னாப்பிரிக்கா மலான் போன்றார் கொடுஞ் செயல்களை எடுத்துக்காட்டுவ துண்டல்லவா? தமிழ்த் துறவிகள், அயல்நாடர் பொறாமை கொள்ளக்கூடிய அவ்வளவு பெருமை யுடையவர் என்பதாம். பரி : `தான் ஐந்தவியாது சாபம் எய்தி நின்று அவித்தவன தாற்றல் உணர்த்தினானாகலின், இந்திரனே சாலுங்கரி என்றார்'. அவித்தவன் - கௌதம முனிவர். கௌதமர் குளிக்கப் போனபோது அவர் மனைவி அகலிகையோடு இந்திரன் கூடியிருக்கக் கண்ட முனிவர் அவளைக் கல்லாகச் சபித்த தோடு, இந்திரனை உடம்பெல்லாம் பெண்குறி உண்டாகும் படி சபித்தனர் என்பது புராணம். இங்கே வள்ளுவர் தமிழ்த் துறவிகளின் பெருமை கூறுகிறாரேயன்றி, ஆரிய முனிவர் களின் பெருமை கூறவில்லை. அவ்வாறு இரக்கமின்றிச் சபிக்கக் கூடியவர் என்பது அருளாளராகிய தமிழ்த் துறவிகளுக்கு இழுக்கேயாகும்; பெருமையாகாது. கல்லாகச் சபிப்பதும், நெடுங்காலத்திற்குப் பிறகு ஒருவன் கால்பட அக்கல் பெண்ணான தென்பதும் நடக்கா நடப்பாகும். 2. மடியிலா மன்னவன் எய்து மடியளந்தான் றாஅய தெல்லா மொருங்கு. (610) மடியில்லா மன்னவன் - சோம்பலில்லாத அரசன், மடிஅளந்து ஆன்றாயது எல்லாம் - சோம்பலடைந்ததால் முன்பு தன்னை விட்டு நீங்கிய செல்வத்தையெல்லாம், ஒருங்கு எய்தும் - ஒருங்கே அடைவான். அளத்தல் - கலத்தல், அளவளாவி என அறிக. மடி - சோம்பல், மடி அளந்து - சோம்பலைக் கலந்து - சோம் பலடைந்து. ஆன்று - நீங்கி. முடிந்தது - முடிந்தாயது என நிற்பது போல, ஆன்றது - ஆன்றாயது என நின்றது. ஆன்றது - வினையா லணையும் பெயர். நீங்கிய செல்வத்தைக் குறித்தது. சோம்ப லில்லாத அரசன், முன்பு சோம்பலடைந்ததால் இழந்த செல்வத்தை யெல்லாம் ஒருங்கடைவான். அடியளந் தான் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் எனவும், தாயது - அவன் கொண்ட நிலம் எனவும் கொள்ளலாம். பரி : `மடியிலா மன்னவன், அடியளந்தான் தாயது எல்லாம்- தன் அடியளவானே எல்லா வுலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுவதையும், ஒருங்கே எய்தும்'. இது, திருமால் இந்திரன் வேண்டுகோளால் வாமனனாகப் பிறந்து, மாவலியிடம் மூன்றடி மண்ணிரந்து பெற்று, பின் முப்பேருருவனாகி, (திரிவிக்கிரமன்), அதாவது ஒரு கால் பாதாளத்தையும், மற்றொருகால் மேலுலகத்தையும் பொருந்த உலகமுழுவதும் தானேயாகி, மாவலி தலையில் மேலே தூக்கிய காலைவைத் தழுத்திக் கொன்றனன் என்னும் புராணக் கதையாகும். மேலே தூக்கிய கால் பிரமவுலகம் செல்லப் பிரமன் அக்காலுக்குப் பூசை செய்த (கழுவிய) நீரே கங்கை என்பதும் புராணக்கதை. திரிவிக்கிரமன் தாவிய வானுலகத் தையும், பாதாளத்தையும் அடைவான் என்பது வள்ளுவர் கருத்தன்று. உயிரோடு தான் வானுலகை யடைய முடியாதே. இறந்தபின் அடையும் வானுலகை எத்தகைய முயற்சியுடை யவன் தான் எப்படியடைய முடியும்? முயன்றால் முன்னிழந் ததை முற்றும் அடைவான் என்பதே குறட் கருத்தாகும். 3. ஊறொரால் உற்றபின் ஒல்காமை யிவ்விரண்டின் ஆறென்ப ராய்ந்தவர் கோள். (662) ஆய்ந்தவர் கோள் - நூல்களை ஆராய்ந்தறிந்த அறி வுடையோர் கொள்கையாவது, ஊறு ஒரால் - தீய காரியங் களைச் செய்யாமையும், உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் - மேற்கொண்ட செயல் பழுது பட்டால் மனந் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழியாகு மென்பர். தீய செயல்களைச் செய்யாமல் நீக்குதலும், மேற் கொண்ட செயல் முடியாவிட்டால் மனந்தளராமையும் அறிவுடையோர் கொள்கையாகும். பரி : `உற்றபின் ஒல்காமை - தெய்வத்தால் பழுதுபட்ட வழி அதற்குத் தளராமை. தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ வெள்ளிகளது துணிவு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்ற மையின்'. வியாழனும் வெள்ளியும் நெடுங்காலம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் குருவாக இருந்துவந்தனர் என்பது புராணக் கதை. தமிழ்நூலை ஆய்ந்த தமிழறிஞர்கள் கொள்கையை வள்ளுவர் கூறினாரேயன்றி, வடமொழியாளர் கொள்கையை வள்ளுவர் கூறவில்லை. நீதிநூலுடையார் - சாணக்கியரும், காமந்தகரும். இவ்விருவர் நூலின் கருத்துக்களையே வள்ளுவர் மொழிபெயர்த் துள்ளார் எனத் திருக்குறள் ஆரியக் கொள்கை கூறும் நூலென்பதை வலியுறுத்துகிறார். வள்ளுவர் கள்ளுண் பதை மறுக்க சாணக்கியர் அரசனது வருவாய்க்குக் கள்ளுக் கடை வருவாயும் ஒன்றெனக் கூறுவதால், சாணக்கியர் கூறிய வாறு வள்ளுவர் கூறுகிறார் என்பது எவ்வாறு பொருந்தும்? ஏன் தமிழில் நீதி நூல்கள் இல்லையா என்ன? `ஆய்ந்தவர் கோள்' என்பதால், வள்ளுவர் திருக்குறள் செய்யு முன்னரே தமிழில் நீதி நூல்கள் பல இருந்தன என்பது விளங்குகிற தல்லவா? தமிழில் உள்ளனவெல்லாம் ஆரியர் சொத்து என்னும் ஆரியக் கொள்கை புகுத்தலே யாகுமிது. 4. ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். (899) ஏந்திய கொள்கையார் சீறின் - உயர்ந்த கொள்கையை யுடைய பெரியோர் வெகுளுவாராயின், வேந்தனும் இடை வேந்து முரிந்து கெடும் - அரசனும் இடையே தன்னிலை யிழந்து கெடுவான். அரசை யிழந்து தானும் கெடுவான் என்பதாம். பரி : `ஏந்திய கொள்கையார் சீறின் - காத்தற் கருமையான் உயர்ந்த விரதங்களை யுடையார் வெகுள்வாராயின், வேந்தனும் இடை வேந்து முரிந்து கெடும் - அவராற்றலான் இந்திரனும் இடையே தன்பதம் இழந்து கெடும். நகுடன் என்பான் இத்திரன்பதம் பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியான் அகத்தியன் வெகுள்வ தோர் பிழைசெய, அதனால் சாபமெய்தி அப்பதம் இடையே இழந்தா னென்பதனை உட்கொண்டு இவ்வாறு கூறினார். இவை நான்கு பாட்டானும் முனிவரைப் பிழைத்தலின் குற்றங் கூறப்பட்டது'. இதன் முன்னுள்ள மூன்று குறளிலும், பெரியார் - தவத்தாற் பெரியார். தகைமாண்ட தக்கார் - சாபவருள் கட் கேதுவாய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர். குன்றன்னார் - குன்றை யொக்கும் அருந்தவர் எனப் பெரியார் என்பதை ஆரிய முனிவர் எனக்கொண்டு கூறுகிறார். வள்ளுவர் தமிழ்ப் பெயரைப் பிழையாமை கூற, இவர் ஆரிய முனிவர்களை கொண்டதோடு, வேந்தன் என்பதற்குப் பொருத்தமில்லாமல், `இந்திரன்' என்றும், நகுடன் சாபம் பெற்ற புராணக் கதையையுங் கூறுகிறார். பெரியார் வெகுளுமாறு நடந்துகொண்டால் நாட்டுமக்களும் அரசனை வெறுப்பார்க ளாதலால், அதனால், அரசன் அரசையிழந்து கெடுவான் என்பது கருத்து. நூறு குதிரை வேள்வி செய்தவன் இந்திரப் பதவி பெறுவா னென்றும், அப்போது பழைய இந்திரன் விலகிக் கொள்வா னென்றும், ஆனால், இந்திராணி அப்புதிய இந்திரனுக்கு ராணியா வாள் என்றும், இவ்வாறு நகுடன் என்னும் அரசன் நூறு குதிரை வேள்வி செய்து இந்திரப் பதவியேற்க மலரூர்தியில் சென்றான். அவனை அகத்தியர் முதலிய ஏழு முனிவர்கள் தூக்கிச் சென்றனர். நகுடன் விரைவில் இந்திராணி முதலிய பேற்றையடைய விரும்பி, `சர்ப்ப சர்ப்ப' (விரைக விரைக) என்றான். அகத்தியர் வெகுண்டு `நீ சர்ப்பமாகக் கடவாய்' என்று சபித்தார். அவன் பாம்பானான் என்பது புராணம். குதிரை வேள்வி யென்பது படையோடு குதிரையை நாற்றிசையினும் விட்டுப் பிடிப்போரை வென்று அவர் கொடுக்கும் பொருள் கொண்டு செய்வது. இது ஒருவகை அரசத் தேர்தல் போலும்! இதிலிருந்து இந்திரன் என்பவன் இன்று மக்கள் எண்ணும் தேவனல்லன்; மண்ணுலகத்தவனே என்பது தேற்றம். இது, ஆரியரிடம் தமிழர்க்கு அச்சம் உண்டாகுமாறு கூறியதாகும். 5. தாமரைக் கண்ணானுலகு (1103) - இந்திரவுலகு. பரி : `தவயோகிகள் எய்தும் செங்கன்மாலுலகம்' இது. இல்லற வாழ்வை விட்டாற்றான் வைகுந்த முதலிய பதம் கிடைக்கும் என்னும் புராணக்கதை. 6. பெண்ணடிமை பெண்களை உடைமைகளிலொன்றாகக் கொள்வது ஆரிய நாகரிகம். பெண்களை வாழ்க்கைத் துணையாகக் கொள்வது தமிழ் நாகரிகம். எனவே, பெண்ணடிமை என்பது தமிழர் பண்பாடன்று. ஆரியர் பெண்களை நடத்தும் வகையை மனு, அத்தியாயம் ஒன்பதில் காண்க. 1. பெற்றார்ப் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழு முலகு. (58) பெற்றார்ப் பெறின் - கணவனை மனவுறுதியுடைய ராகப் பெற்றால், புத்தேளில்h வாழுமுலகு - தேவருலகில், பெண்டிர் பெரும் சிறப்புப் பெறுவர் - பெண்கள் பெருஞ் சிறப்பை அடைவர். பெற்றார் - பெண்களை மனைவியாகப் பெற்றவர் - கணவர். கணவரும் மனவுறுதி யுடையராகப் பெற்றால், ஒரு மனப்பட்டு உயரிய வாழ்க்கை நடத்தி, அயல் நாடரும் புகழும் பெருஞ் சிறப்பினைப் பெறுவர் பெண்டிர் என்பதாம். மேல் (57) மனைவியர் மனவுறுதி கூறினார். இதில் கணவர் மனவுறுதி கூறினார். கணவர் மனமொத்து நடக்கும்படி நடந்துகொள்வது பெண்கள் கடமையாகும். இது ஆண்கட்கும் ஒக்கும். புத்தேளிர் உலகத்தை வடபுலத்தாரிற் காண்க. பரி : `பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மையெய்திய கணவனை வழிபடுதல் பெறுவாராயின்'. பெண்கள் இறந்தபின் தேவர் சிறப்புச் செய்ய இப்போது கணவனை வழிபடுதல் வேண்டுமென்பது கருத்து. (மனு, அ-5, சு-155). கணவன் மனமொத்து நடக்கும்படி நடந்து குடும்ப நடத்தும் பெண்களைத் தந்நாடே யன்றி அயல் நாடும் புகழு மென்பது வள்ளுவர் கருத்தேயன்றி இறந்தபின் புகழப்படு வதை யன்று. இவர் மறுமைப் பயன் கூறுவதாகக் கொண்டதே தப்பு. 2. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற. (61) நாம் பெறும் பேறுகளுள் அறிவுடைய மக்கட் பேற்றை விடச் சிறந்த பேறு வேறில்லை. பரி : `அறிவறிந்த' என்றதனால் மக்கள் என்னும் பெயர் பெண்ணொழித்து நின்றது. வள்ளுவர் `மக்கட்பேறு' என்று அதிகாரத்திற்குப் பொது வாகப் பெயரிட்டிருக்க, இவர் `புதல்வரைப் பெறுதல்' என்று ஆண்பாலாகக் கொண்டதற் கேற்பவே இவ்வாறு கூறினார். சங்ககாலத்தே செந்நாப்புலமை யுடைய பெண்கள் பலர் சங்கப்புலவர்களாய் இருந்திருக்க, இலக்கியம் இலக்கணம் இரண்டினாலும் ஆண்களோடு போட்டி போட்டுக்கொண்டு நூல்கள் எழுதியிருக்க, அறிவுக் கொள்கலமாகிய அவ்வையா ரிருந்திருக்க, பெண்களுக்கு அறிவில்லையென்றோ, அறிவு பெறக்கூடாதென்றோ கொள்ளுதல் தமிழர் பண்பாடன்று. வள்ளுவர் கொள்கையுமல்ல. எல்லாத் தமிழரசியரும் சிறந்த புலமை யுடையவராகவே விளங்கியுள்ளனர். விறலியர், பாட்டியர் ஆகிய ஆடன்மகளிரும், பாடன்மகளிரும் அறி வில்லாதவரா என்ன? தமிழ்ப் பெண்டிர் அறிவில்லாமலா செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருந்தனர் (86)? இசை நாடகத் தமிழை வளர்த்த பெருமையே பெண்களைச் சேர்ந்த தாயிருக்க, பெண்களுக்கு அறிவில்லை, அவர் அறிவு பெறத் தகுதியற்றவர் என்பது பொருந்தாக் கூற்றேயாகும். அறிவில்லா மக்கட்பேற்றால் பயனில்லையாதலால், `அறிவறிந்த மக்கள்' என்றார். பெண்ணொழிக்கவில்லை. 3. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். (69) தன் மகனை அறிவில் நிறைந்தோ னென்று அறிவுடை யோரால் சொல்லக் கேட்ட தாய், பெற்ற பொழுதைவிடப் பெரிதும் மகிழ்வாள். ஒருமை பற்றி `மகன்' என்றார், மகளும் கொள்க. தந்தையை விடத் தாயே மக்கள் பெருமை கண்டு மிகவும் மகிழ்வாளாதலால் `தாய்' என்றார். அறிவுடையோரால் உங்கள் மகன் சிறந்த அறிவுடையவன் என்று சொல்லக் கேட்ட பெற்றோர் மிகவும் மகிழ்வர் என்பதாம். பரி : `பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாயெனவுங் கூறினார்'. தம் மகனைத் தாமாக அறிவில் சிறந்தவனென்று யாருஞ் சொல்லிக்கொள்ளார். தாமாகச் சொல்லிக் கொள்வதில் பயனு மில்லை. பிறர் சொல்வதுதான் ஏற்றதாகும். அதிலும், அறிவுடை யோர்க்கே ஒருவர் அறிவைப்பற்றி ஆராய்ந்து கூற முடியுமாகையால், அறிவுடையோரால் உங்கள் மகன் சிறந்த அறிவுடையவன் என்று சொல்லக் கேட்ட தாய் மிகவும் மகிழ்வாள் என்பதே நேர் பொருள். பெண்கள் அறிவிலார் என்பது தமிழர் கொள்கையன்று. 4. பெண்வழிச் சேறல். (91) வாழ்க்கைத் துணைவர்களாகிய ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் ஒத்த உரிமையுடையவராய் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் அறம் பொரு ளின்பம் அடைந்து அமைவுடன் வாழலாம். இல்லறத்தார்க் குரிய கடமைகளையும் குறைவின்றிச் செய்து புகழுடன் வாழலாம். இங்ஙனமன்றி, ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் அடங்கித் தன்னுரிமை யிழந்து, அவரேவல் கேட்டு நடப்பா ராயின் இல்லறம் இனிது நடைபெறாது. வாழ்க்கையில் செய்ய வேண்டுவன செய்து இன்புற முடியாது. அறம் பொருளின்பம் அடைய முடியாது. சில பெண்கள் தம் கணவர்களை அடக்கித் தம்கீழ்ப் படுத்தி, தாம் சொல்லுகிறபடி தம் கணவர் ஆடுமாறு ஆட்டி வைக்கின்றனர். அப் பெண்ணேவல் செய்தொழுகுவோர் தம் மனைவியர்க்கு வேண்டாத சுற்றத்தாரைப் போற்றவோ, தாம் விரும்பினவர்க்கு ஒன்று செய்யவோ, விரும்பிய தொன்றைக் கொடுக்கவோ முடியாமல் மானங் கெட்டு நிற்கின்றனர். எதற்கும் மனைவியர் கையைப் பார்த்து அலைகின்றனர். அவர்களை உறவினரோ, பிறரோ யாரும் மதிப் பதில்லை. பெண்ணேவல் செய்தொழுகுவான் தனக்கு வேண்டிய வரை வீட்டுக்குக் கூட்டிப்போனால் அன்று வீடு போர்க்கள மாகிவிடும். அவன் மானம் கப்பலேறிவிடும். உலகில் ஓர் ஆண்மகனாக அவன் வாழ முடியாது. இவ்வாறே சில ஆண்கள் பெண்களை அடிமைகளாக்கி, `மனையாள், இல்லாள்' என்னும் அவர்களது வீட்டதிகார உரிமையைப் பறித்து, நாளும் அரிசி பருப்பு உப்புப் புளிகூட அளந்து கொடுத்துக் கொண்டு வருவர். இப்பெண்களாலும் வாழ்க்கையின்பத்திற்கு வேண்டிய எதையும் செய்ய முடியாது. கணவர் வீட்டுச் செலவுக்குக் கொடுப்பதில் மிச்சம் பிடித்துச் சிறுவாடு சேர்த்தும், தம் விருப்பம் போல் குடும்பம் நடத்த முடியாமலும் திண்டாடுவர். அவர்கள் `இல்லாள், மனையாள்' என்னும் பேருக்கு இருந்து வருவார்களே யன்றி அவ்வுரிமை சிறிதும் இலராகவே இருப்பர். இப்பெண்வழிச் சேறலும், ஆண்வழிச் சேறலும் வாழ்க்கை முறைக்குச் சிறிதும் ஏற்றவையல்ல. இக்கெட்ட ஒழுக்கத்தை விலக்க எழுந்ததே இவ்வதிகாரம். ஆண்வழிச் சேறலினும் பெண்வழிச் சேறல் மிகுதியாதலினாலும், இல்லின்கண் இருந்து விருந்து, சுற்றம், நட்பு முதலியோரைப் போற்றுதல் பெண்கள் ஆதலினாலும், மனைவி தலைமை பெறின் கணவனுடைய சுற்றத்தார்க்கு யாதொரு உதவியும் செய்யாததோடு, அவர்களை வெறுத்துப் பகையாகக் கொண்டு நடத்துதலினாலும், மிகவும் தகாததான பெண்வழிச் சேறலின் குற்றங்கூறி ஆண்வழிச் சேறலின் குற்றத்தையும் பெறவைத் தார். இஃதறியார், வள்ளுவர் பெண்ணடிமையை விரும்புகிறார் எனத் தமக்குத் தோன்றியவா றெல்லாங் கூறுவர். திருக்குறள் குழந்தையுரை கண்டு உண்மை யுணர்க. பரி : `அஃதாவது, தன் வழி யொழுகற் பாலளாய இல்லாள் வழியே தானொழுகுதல்'. இது, பெண்களுக்கு எவ்வகை யுரிமையும் இல்லை. `இளமையில் தகப்பன் கட்டளைப்படியும், பருவத்தில் கணவன் கட்டளைப்படியும், கணவனிறந்த பின்பு பிள்ளைகள் கட்டளைப் படியும் இருக்க வேண்டியதே யல்லது பெண்கள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக்கூடாது'. (மனு, அ-5, சு-148) `கணவன் தீய ஒழுக்கமுடையவனாக இருந்தாலும், பிற பெண்கள் லோலனாக இருந்தாலும், நற்குண மில்லாதவனாக இருந்தாலும் கற்புடைய பெண்ணானவள் அவனைத் தெய்வத்தைப் போல் பூசிக்க வேண்டியது. (மனு, அ-5. சு-154) என்னும் மனுமுறை புகுத்துதலேயாகும். மேலும், `பேணாது (2)-தன் ஆண்மையை விட்டு, அவன் தான் அஞ்சி யொழுகுதல் இயல்பாதலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மை யாயிற்று (3). தான் வேண்டிய வாறன்றித் தன் மனையாள் வேண்டியவாறு ஒழுகுபவர்' (8) என்பன வெல்லாம் ஆணுக்குப் பெண் அடங்கியே நடக்க வேண்டும் என்னும் பெண்ணடிமைக் கருத்துக்களே யாகும். 7. பச்சை யாரியம் அறம் பொரு ளின்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெறிந்து தேறப் படும். (501) அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறம் தெரிந்து - அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமும் என்னும் நான்கின் கூறுபாட்டையும் ஆராய்ந்தறிந்து, தேறப் படும் - பின்பு ஒருவனைத் தெளியவேண்டும். தெளிதல் - தேர்ந்தெடுத்தல். இது `தெரிந்து தெளிதல்' என்னும் அதிகாரத்தைச் சேர்ந்தது. தெரிந்து தெளிதல் - ஆராய்ந்து தேர்ந்தெடுத்தல். அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அறிவு குணம் செயல் என்பவற்றை ஆராய்ந்து தேர்ந்தெடுத்தல். இக்காலத்து பண்ணையம், கடை, தொழிலகம் முதலியவற்றிற்கு ஆட்களைத் தேர்ந்தெடுத் தலுக்கும் இது பொருந்தும். அரசியல் அலுவலாளர்களையும் இம்முறையில் தேர்ந்தெடுத்தல் ஏற்றதாகும். அறம் பிறழாமலும், பொருளுக்காகக் கடமையிற்ற வறாமலும், இன்பத்தின் பொருட்டு ஒழுக்கந் தவறாமலும், உயிர்க்கு உண்டாகும் கேட்டுக்கு அஞ்சிக் கடமை தவறாமலும் உள்ளவனையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதாம். உயிரச்சம்- உயிருக்காக அஞ்சும் அச்சம்; தனது கடமைக்கு மாறாக ஒன்றைச் செய்யாவிட்டால் உன்னைக் கொல்வேனென்று அச்சுறுத்தி னாலோ, அல்லது வருத்தினாலோ அதற்கு அஞ்சிக் கடமையில் தவறுதல். இந்நான்கு வகையிலும் ஆராய்ந்து பார்த்து, இந்நான்கிலும் தவறாதவனையே வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும். பரி : 1. `அவற்றுள், அறவுபதையாவது - புரோகிதரையும் அறவோரையும் விட்டு, அவரால், இவ்வரசன் அறவோனன்மையின் இவனைப் போக்கி, அறனுமுரிமையும் உடையானொருவனை வைத்தற் கெண்ணினம்; இதுதான் யாவர்க்கும் இயைந்தது. நின்கருத் தென்னையெனச் சூழுறவோடு சொல்லுவித்தல். 2. பொருளுபதையாவது - சேனைத் தலைவனையும், அவனோ டியைந்தாரையும் விட்டு, அவரால், இவ்வரசன் இவறன் மாலை யனாகலின் இவனைப் போக்கி, கொடையும் உரிமையும் உடையா னொருவனை வைத்தற் கெண்ணினம்; இதுதான் யாவர்க்கும் இயைந்தது. நின்கருத் தென்னையெனச் சூழுறவோடு சொல்லுவித்தல். 3. இன்பவுபதையாவது - தொன்றுதொட்டு உரிமை யொடு பயின்றாளொரு தவ முதுமகளை விட்டு, அவளால், உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டு மென்று என்னை விடுத்தாள். அவளைக் கூடுவையாயின் நினக்குப் பேரின்பமே யன்றிப் பெரும் பொருளும் கைகூடும் எனச் சூழறவொடு சொல்லுவித்தல். 4. அச்சவுபதையாவது - ஒரு நிமித்தத்தின் மேலிட்டு, ஓரமைச்ச னால் ஏனையோரை அவன் இல்லின்கண் அழைப்பித்து, இவர் அறைபோவான் எண்ணிக் குழீஇயினாரென்று தான் காவல் செய்து, ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின், அதனை நாம் முற்படச் செய்து, நமக்கினிய அரசனொருவனை வைத்தல் ஈண்டை யாவர்க்கும் இயைந்தது. நின்கருத் தென்னை யெனச் சூழுறவோடு சொல்லுவித்தல். இந்நான்கினும் திரிபில னாகியவழி எதிர்காலத்துந் திரிபில னெனக் கருத்தளவையால் தெளியப்படும் என்பதாம். இவ் வடநூற் பொருண்மையை உட்கொண்டு இவரோதிய தறியாது பிறரெல்லாம் இதனை `உயிரெச்சம்' எனப் பாடந் திரித்துத் தமக்குத் தோன்றியவாறே யுரைத்தார்' உபதை - சோதனை, ஆராய்ச்சி. சூழுறவு - சத்தியம். சத்தியமாகச் சொல்லும்படி கேட்டல். கருத்தளவை - எண்ணியறிதல். 1. அதாவது, ஒருவன் அரசியல் வேலைக்காக விண்ணப்பம் போட்டால், அவனை வரவழைத்து ஒரு தனிஇடத்தில் இருக்கும்படி செய்து, புரோகிதரையும், அறவோரையும் அங்கு அனுப்பி, அவ்வாறு கேட்கச் சொல்லுதல். அவன் அவ்வாறே இவ்வரசனை நீக்கி விட்டு வேறொருவனை அரசனாக்கலாம் என்றால், அவனை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளாமல் தள்ளிவிடுதல். அவ்வாறு செய்யக் கூடாது. அது தவறு. இது அரச இரண்டகச் செயலாகும் என அவன் மறுத்துக் கூறினால், அவனை வேலைக்கு எடுத்துக் கொள்ளுதல் என்பதாம். 2. இவறன் மாலையன் - உலோபத்தன்மை யுடையவன். இங்கும் அவ்வாறே சோதித்தல். 3. உரிமை - அரசன் மனைவியர். தொன்றுதொட்டு உரிமை யொடு பயின்றவள் - அரசன் மனைவியர் வந்ததிலிருந்து அவர்களோடு பழகினவள். தவமுது மகள் - கிழவி. உரிமையுள் இன்னாள். அரசன் மனைவியர் பலருள் இன்னவள். நின்னைக் கண்டு வருத்தமுற்று - உன்னைக் கண்டு காதலுற்று அதனால் வருந்தி. கூட்டுவிக்க வேண்டு மென்று - அழைத்து வரும்படி. 4. நிமித்தம் - காரணம். அறைபோதல். பகையரனைப் போய்ச் சேருதல். ஓரமைச்சன் வீட்டில் பலரும் கூடியிருந்து, அங்கு அவனை அழைத்துப் போய், இவர்களெல்லாம் இவ்வரசனைவிட்டுப் பகையர சனிடம் போகக் கூடினாரென்று எண்ணி, இவ்வரசன் போகாமல் காவல் செய்து, ஒருவனைக் கொண்டு இங்குள்ளோரை யெல்லாம் கொல்ல நினைப்பதனால், அவன் நம்மைக் கொல்வதன் முன் நாம் அவனைக் கொன்று, நமக்கேற்ற அரசனொரு வனை வைக்க இங்குள்ள எல்லோரும் முடிவு செய்தனம். பார்த்தீர்களா ஆரியர் அரசியல் முறையை? இவ்வாறா வேலைக்கு ஆளைத் தேர்ந்தெடுப்பது? இவ்வாறு தேர்ந் தெடுத்தால், தேர்ந்தெடுப்போரைப் பற்றியும் அவ்வரசனைப் பற்றியும் அவன் என்ன நினைப்பான்? இவை தான் ஓர் ஆளைத் தேர்ந்தெடுக்கும் வழியா? நல்ல சோதனை! இத்தகைய அரசியல் முறை கூறுவதுதான் மனு முதலிய ஆரிய அறநூல்கள். அந்த நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுந் தான் திருக்குறள் கூறும் அறம் என்று கூறும் பரிமேலழகரின் துணிவே துணிவு! இனி, மூன்றாவதான இன்பச்சோதனை ஓர் அரசன் செய்வானா? அவனுக்கு என்ன மானம் வெட்கம் உண்டா இல்லை? `எனது பெண்டாட்டி உன்னைக் காதலிக்கிறாள். உன் மீது அவளுக்கு அளவுகடந்த ஆசை. உன்னைக் கூட முடியாது வருந்துகிறாள். நீ அவளைக் கூடிப் பேரின்பம் அடைவாய். உனக்கு இன்பந் தருவதோடு, அவள் மிகுந்த பொருளுந்தருவாள். நீ தயவு செய்து அவள் விருப்பத்தை நிறைவேற்றுவாயாக. நீ அவ்வாறு அவள் விருப்பத்தை நிறைவேற்றினால் பேரின்பமும் பெரும் பொருளும் பெறுவாய்' என ஒருவன், அதுவும் ஓர் அரசன் தன் வேலைக் காரியை விட்டு, தன்னிடம் வேலை வேண்டி வந்த ஒருவனைக் கூப்பிடுவானா? அவன் என்ன மகனா, அல்லது மரக்கட்டையா? அட மானங்கெட்ட ஆரிய நாகரிகமே! அடடா! என்ன உயரிய நாகரிகம்! இத்தகைய நாகரிகத்தைத்தான் ஆரிய மக்கள் தமிழ் மக்களுக்கு அருள்கூர்ந்து வழங்கினார் போலும்! ஒரு தமிழரசன் இதைக் கனவிலாவது கண்டிருப்பானா? மேலும், `இவ் வடநூற் பொருளை யுட்கொண்டு வள்ளுவர் ஓதியதை மற்ற உரை யாசிரியர்கள் அறியவில்லை' என்று வெட்கமில்லாமல் வேறு கூறுகிறார். ஆரியர் நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதெல்லாம் முழுப்பொய்; அது குறுகிய நோக்கம்; ஒருவகைத் தன்னலத் தால் கூறும் கூற்று. ஆரிய நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒன்றாகக் கலந்து நெடுங்காலமாகிவிட்டது. தமிழர் நாகரிக மென்று தனியாக ஒன்றுமில்லை. ஆரிய நாகரிகக் கலப்பால் தான் தமிழர் நாகரிகம் சிறப்புற்றது என்போர் இதைக் கண்டு தங்கள் மயக்கந் தெளிவார்களாக. இத்தகைய இழிதகைமையான கொள்கையை வடநூற் கொள்கை யென்று வாயுமனமுங் கூசாமல் கூறிக்கொண்டு, இக்கருத்தை உடன்பட்டே வள்ளுவர் கூறியுள்ளார் என்று துணிந்து கூறும் பரிமேலழகருடைய நெஞ்சத் துணிவை மெச்சுவதா! `இவனென்னடா கத்துக் குட்டி! பரிமேலழகரைக் குறைகூற வந்துவிட்டான். பரிமேலழகரெங்கே இவனெங்கே? அவருடைய உரையில்லாமல் திருக்குறளை எப்படிப் படிப்பது?' என்று கூறும் தமிழரது தகாத் தன்மையை மெச்சுவதா! இத்தகைய உரையை அப்படியே வைத்துக் கொண்டிருந்த தமிழ்ச் சான்றோர்களின் அக்கறையற்ற தன்மையை மெச்சுவதா! எதை மெச்சுவது! தற்காலத் தமிழ் மக்களே கூறட்டும்.  6. சமயக் கருத்து திருக்குறள் ஒரு சமயச் சார்பற்ற நூல். அகம் புறம் என்னும் மக்கள் வாழ்க்கை முறையை, அறம் பொருளின்பமென முப்பாலாக்கிக் கூறும் வாழ்க்கைச் சட்ட நூலேயன்றித் திருக்குறள் ஒரு சமய நூலன்று. எச் சமயத்திற்கும் உடன் பாடான நூல் என்பதும் பொருந்தாது. வாழ்க்கை வேறு, சமயம் வேறு. வாழ்க்கைக்கும் சமயத்திற்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை. சமயச் சார்பற்ற வாழ்க்கையே உயரிய நல்வாழ்க்கையாகும். வாழ்க்கைத் தேரை இனிது செல்லாமல் தடை செய்யும் மேடு பள்ளமும் மணலும் புழுதியும் சேறுமேயாகும் சமயங்கள்; வாழ்க்கை வழியிடைப்பட்ட பேரிருளேயாகும் சமயம். வாழ்க்கையில் சமயத்தைத் தொடர்புபடுத்தி வாழ்க்கையைக் குட்டிச்சுவராக்கினது அதிகார பீடத்தில் சமயம் அமர்ந்தத னாலேயே யாகும். உலகம் பொய், உடம்பு பொய், வாழ்க்கை பொய், பெண்டுபிள்ளை யெல்லாம் பொய், ஏன் காண்ப தெல்லாம் பொய் என்ற புறம்போக்காளர்களுக்கு அரசர்கள் அடிமையானதே, அன்னாரின் கட்டளைப்படி ஆட்சி நடத்தினதே இக்கேட்டுக்குக் காரணமாகும். தமிழர் பண்பாடு கெட்டு, தமிழினம் இன்றுள்ள இத்தகைய இழிநிலையை அடைந்ததற்குக் காரணம் வாழ்க்கையையும் சமயத்தையும் பிரிக்க முடியாது நிலையில் ஒன்றாகப் பிணித்ததே யாகும். திருக்குறளில் கூறும் துறவறம், இல்லறம் முற்றியவர், இல்லறத்தைத் துறந்து - இல்லற இன்பத்தைத் துறந்து மனஅமைதியுடன் பொதுநலம் புரிவதைக் கூறுவதே யாகும். சமயக் கருத்துக்கள் ஒன்றும் அங்கு கூறப்படவில்லை. எனவே, திருக்குறள் எந்தச் சமயத்தாரும் எமதென உரிமை கொண்டாட உரிமையில்லாததாகவும், எல்லார்க்கும் உரிய பொது நூலாகவும் உள்ளது. இத்தகைய சமயச் சார்பற்ற குறளில், பரிமேலழகர் வேண்டுமென்றே வினை, பிறப்பு, வீடு முதலிய சமயக் கருத்துக்களை வலிந்து புகுத்தி, திருக்குறள் சமயச் சார்பான நூலென எண்ணும்படி செய்துவிட்டனர். 1. வினை வினை என்பது - ஒருவன் செய்த வினை அவன் உயிர் எடுக்கும் பல பிறப்புக்களிலும் அவ்வுயிரோடு தொடர்ந்து செல்லும். அவ்வினையே பிறப்புக்கு காரணம். அது நல்வினை தீவினை என இரண்டு வகைப்படும் என்பது சமயக் கற்பனை. 1. "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு." (5) இறைவன் பொருள் சேர்புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ப்பொருள் சேர்ந்த புகழை விரும்பினவ ரிடத்து, இருள் சேரும் இருவினை சேரா - அறிவின்மையால் உண்டாகும் பெரிய துன்பங்கள் சேரா. இருள் - அறிவின்மை. வினை - துன்பம். இருமை - பெருமை. இருங்கடல் எனக் காண்க. பரி : `இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா'. அறியாமையால் - அறிவு மயக்கத்தால் தீவினைதான் செய்வார்களே தவிர, நல்வினை செய்வதெங்ஙனம்? அறியாமை நல்வினைக்குக் காரணமாயின் அறிவினாலாய பயனென்? இறைவன் புகழை விரும்பினார்க்குப் பெருந்துன்பங்கள் சேரா என்பதே நேர்பொருளாகும். 2. தீவினையா ரஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னும் செருக்கு. (201) தீவினை என்னும் செருக்கு - தீச்செயல் என்னும் களிப்பை, தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் - தீச்செயலுடையார் அஞ்சார், சீரியர் அஞ்சுவர். களிப்பு - தீச்செயல் புரிந்ததால் ஏற்படும் மிகுமகிழ்ச்சி. தீவினையார் - தீச்செயல் புரிந்து பழகினர். தீவினை - கெட்ட காரியம். பரி : `தீவினை என்னும் செருக்கு - தீவினை யென்று சொல்லப் படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் - முன் செய்த தீவினை யுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் - அஃதிலராகிய சீரியர் அஞ்சுவர்'. தீவினையார் - தீச்செயல் செய்து பழகினவர்; தீச்செயல் புரிபவரேயன்றி, முற்பிறப்பில் செய்த தீவினையார் அல்லர். முன் செய்த தீவினைப்படி தீவினை செய்யின் குற்றம் அவருடைய தன்றே. வினைப்படி நடப்பதற்கு அவரென்ன செய்வர்? வினைப்படி நடக்கும் செயலை எப்படி அஞ்சிச் செய்யாது தவிர்க்க முடியும்? 3. அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை. (37) சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை - பல்லக்கைச் சுமப்பானிடத்தும், அதில் ஏறிச் செல்வானிடத்தும், இது அறத்தாறு என வேண்டா - இது அறநெறி என்று கூற வேண்டா. பொறுத்தல் - சுமத்தல். மக்களில் ஒருவரை ஒருவர் சுமக்கு முறை அறமாகாது. இது மக்கட் பண்பாட்டுக்குத் தகாத முறை யாகும். செல்வத்திலும், தன்மையிலும் இவ்வளவு ஏற்றத் தாழ்வு அறமாகாது என்பதாம். ஓடு - எண்ணொடு நீண்டது. இடை - இடம். பரி : `அறத்து ஆறு இது என வேண்டா - அறத்தின் பயன் இதுவென்று' யாம் ஆகமவளவையான் உணர்த்தல் வேண்டா, சிவிகை பொறுத் தானோடு ஊர்ந்தா னிடை - சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சி யளவை தன்னானே உணரப்படும்'. `பயனை ஆறென்றார், பின்னதாகலின்' என்பதால், முற்பிறப்பில் அறஞ் செய்தவன் பல்லக்கின் மேலும், அறஞ் செய்யாதவன் பல்லக்கைச் சுமந்தும் செல்கின்றனர் என்பது கருத்தாகும். ஆகமம் - நூல். அறம் - செய்வன தவிர்வனவே யன்றி ஈகையன்று. முற்பிறப்பில் புண்ணியம் செய்தவன் பல்லக்கில் செல்கிறான், புண்ணியம் செய்யாதவன் அதைச் சுமந்து செல்கிறான். எனவே, பிறருக்குக் கொடுங்கள் என்பது செய்வன தவிர்வனவாகிய அறத்தின் சிறப்பை வற்புறுத்திக் கூறும் `அறன்வலியுறுத்தல்' என்னும் அதிகாரத்திற்குப் பொருந்தாது. 4. வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்கும் துய்த்த லரிது. (377) கோடி தொகுத்தார்க்கும் - கோடியளவு நுகரப்படும் பொருள்களைச் சேர்த்து வைத்தவர்களுக்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - அப்பொருள்களை உண்டாக்கி யவர்களது வகைப்படி யல்லாமல் வேறு வகை யினால் நுகர்தல் முடியாது. நுகர் பொருள் பலவாகலின், ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வகையினர் ஒவ்வொரு வகையாகச் செய்தனர் என்பது தோன்ற `வகுத்தான்' என ஒருமையாற் கூறினார். குளிருக்குரிய கம்பளி வெயிலுக்காகாது. பனிநீரும் தேம்பாகும் சளிப்பிடித்தவனுக் காகா என, நுகர்பொருளின் தகுதியும், நுகர்வோன் தகுதியும் ஒவ்வாமை கூறினார். பொருள்களின் தகுதிக்கு மாறாக நுகரப்படாதென்பது கருத்து. பரி : `வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது- தெய்வம் வகுத்த வகையா னல்லது நுகர்தலுண்டாகாது'. தெய்வம் - ஊழ். `ஓருயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கட் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வகுத்தானென்றார்' என்பதால், ஒருவன் செய்த வினை அவன் உயிரையே தொடருமென்பதும், வினைப்படியே எல்லாம் நடக்கும் என்பதும் சமயக் கருத்துக்களே யாகும். 5. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். (1062) உலகு இயற்றியான் இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் - இவ்வுலகத்தை உண்டாக்கியவன் மக்கள் முயற்சியால் உயிர் வாழ்தலை விரும்பாது பிறரிடம் சென்று இரந்தும் உயிர் வாழ்தலை விரும்புவானானால், பரந்து கெடுக - அக் கொடி யோன் இரப்போரைப் போன்று எங்குந் திரிந்து கெடக் கடவன். தொழில் செய்தற்கேற்ற கை கால் முதலிய உறுப்புக்களும், பகுத்தறிவும் இருந்தும் ஒரு சிலர் பிறரிடம் சென்று இரத்தல் தகாது என்பதை இவ்வாறு கூறினார். இது உலகம் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்னும் கொள்கையைக் கொண்டு கூறியது. பரி : `மக்களுயிர்க் கெல்லாம், வாழ்நாளும், அதற்கு வேண்டுவ தாய உண்டியும், அதற்கேதுவாய செய்தொழிலும் பழவினை வயத்தால் கருவொடு கலந்தவன்றே அவன் கற்பிக்குமன்றே' பழவினையால் ஒருவற்குக் கருவொடு இவை அமையு மெனில், முயற்சியும், பிறர்க்குக் கொடுக்க வேண்டு மென்பதும், இரத்தல் இழிவென்பதும், வினைப்படி படைத்தவனுக்கு எதிரிடையாகச் செய்வதாகு மன்றோ? இது பச்சைச் சமயக் கருத்தாகும். 2. பிறப்பு உயிர், தான் செய்யும் வினைக்கீடாகப் பல பிறப்புக்கள் எடுக்கிறது. யோக ஞானங்களால் உயிர் பிறப்பற்று வீடு பெறும். நாம் பிறவா நிலையை அடைய முயல வேண்டும் என்பன வெல்லாம் சமயக் கருத்துக்களாகும். இத்தகைய கருத்துக்கள் எதுவும் திருக்குறளில் கூறப்படவில்லை. வேண்டு மென்றே பரிமேலழகர் புகுத்துவதே யாகும். 1. யாண்டும் இடும்பை இல (4) - எப்போதும் துன்பம் இல்லை. பரி : `யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. பிறவித் துன்பங் களாவன - தன்னைப் பற்றி வருவனவும், பிறவுயிர்களைப்பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வருந்துன்பங்கள்'. பிறவித்துன்பம் - பிறவிக்குக் காரணமாகிய துன்பம். இடும்பை என்பது - இடுக்கண், வருத்தம் என்பன போலவே, துன்பம் எனப் பொருள்பட, இவர் `பிறவித்துன்பம்' என வலிந்து பொருள்கொண்டு, அதை மூவகையாக்கிச் சமயக் கருத்தை வலிந்து புகுத்துகிறார். 2. தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லான் மனக்கவலை மாற்ற லரிது. (7) ஒப்பில்லாதவனது தாளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல் மற்றோர்க்கு மனக்கவலையை நீக்கமுடியாது. தனக்கு மேல் ஒருவன் இருந்தால்தானே தான் அவனிலும் தாழ்ந்தவன் என்னும் கவலை யுண்டாகும்? வண்டியில் செல்வோர்க்குத் தானே வானூர்தி யில்லையே என்ற கவலை? வானூர்தியில் செல்வோர்க்கு அதற்குமேல் செல்லும் ஓர் ஊர்தியின்மையால் கவலை யுண்டாக இடமில்லை என்பதையறிக. ஒப்பில்லாத உயர்குண முடையோர்க்கு மனக் கவலையில்லை. பரி : `தாள் சேராதார் பிறவிக் கேதுவாகிய காம வெகுளி மயக்கங் களை மாற்றமாட்டாமையின். பிறந்து அவற்றான் வருந் துன்பங் களுள் அழுந்துவ ரென்பதாம்'. காம வெகுளி மயக்கங்கள் பிறவிக்குக் காரணம் என்பது சமயக் கருத்தாகும். காம வெகுளி மயக்கங்கள் பிறவிக்கேது; அவற்றல் பிறந்து, பின்பும் காம வெகுளி மயக்கங்களால் வருந் துன்பங்களுள் அழுந்துவர் என்பது மறுபடியும் மறுபடியும் அவற்றால் பிறந்துகொண்டே துன்புற்றுக் கொண்டே இருப்ப தென்னும் சமயக் கற்பனையே யாகும். 3. எழுபிறப்புந் தீயவை தீண்டாப் பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். (62) பழி பிறங்காப் பண்புடை மக்கட் பெறின் - குற்றமற்ற நன்மக்களைப் பெற்றால், எழுபிறப்பும் தீயவை தீண்டா - எழு தலைமுறைகளிலும் தீமைகள் சேரா. ஏழ் என்னும் எண்ணுப் பெயர் பல என்னும் பொருளது. ஒருவன் தன்மை ஏழு தலைமுறை வரையிலும் இருக்கும் என்னும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி முடிவு இங்கு நோக்கத் தக்கது. நல்லோர் பிறந்தகுடி பல தலைமுறை மதிக்கப்படு தலை யறிக. நன்மக்கள் பிறந்த குடும்பம் பல தலைமுறை மதிப்புப் பெறும். பரி : `எழுபிறப்பும் தீயவை தீண்டா - வினைவயத்தாற் பிறக்கும் பிறப்பேழின் கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை யுடைய புதல்வரைப் பெறுவானாயின். அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணமாகிய நல்வினை களைச் செய்யும் புதல்வரைப் பெறுவானாயின் என்றவாறாயிற்று. தந்தை தாயர் தீவினை தேய்தற் பொருட்டு, அவரை நோக்கிப் புதல்வர் செய்யும் தான தருமங்கட்கு, அவர் (புதல்வர்) நற்குணங் காரண மாகலின்'. மக்கட் செய்யுந் தான தருமங்களால் பெற்றோர் பிறவித் துன்பங்கள் நீங்குமென்பது சமயக் கருத்தேயாகும். இது சிரார்த்தஞ் செய்தலாகும். புதல்வர் செய்யும் நல்வினையால் (திதி) தந்தை தீவினை தேயுமென்பது கற்பனையே. 4. எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண் விழுமந் துலிடத்தவர் நட்பு. (107) தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு - தமக்குற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை, எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் - அறிவாளிகள் எப்போதும் நினைப்பர். எழுபிறப்பு - பல தலைமுறை. கோவலன், பல தலை முறைக்கு முற்பட்ட தன் முன்னோ னொருவனைக் கடலினின்று கரையேற்றிக் காத்த மணிபல்லவத்து அரசியான மணி மேகலையின் நன்றியை மறவாது, தன் மகளுக்கு `மணிமே கலை' என அவள் பெயரை இட்டமை அறிக. பரி : தங்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை, எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் - எழுமையினை யுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர். எழுமை என்றது - வினைப்பயன் தொடரும் எழு பிறப்பினை. நினைத்தலாவது - துன்பந் துடைத்தலான் அவர் மாட்டுளதாகிய அன்பு பிறப்புத்தோறும் தொடர்ந்து அன்புடையராதல்'. ஓருயிர் எழுபிறப்பில் செய்த வினையின் பயன் அவ்வுயிர் எழு பிறப்பினும் தொடரும் என்பதும், ஒரு பிறப்பில் கொண்ட அன்பு பல பிறப்புக்களிலும் தொடர்ந்து அன்புடையராக்கும் என்பதும் சமயக் கருத்துக்களே யாகும். 5. ஒருமையு ளாமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து. (126) ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஒரு கூட்டிற்குள் ஐந்துறுப்பினையும் அடக்கும் ஆமையைப் போல, ஐம்பொறிகளும் ஐம்புலன்கள் மேலும் விரும்பிய வாறு செல்லாமல் அடக்க வல்லனாகில், எழுமையும் ஏமாப்பு உடைத்து - அச்செயல் பல தீமைகளும் அணுகாத பாதுகாப் பாக உடையது. ஏழு - பல. ஐம்பொறி யடக்கமே துன்பம் அணு காமைக்குக் காரணமாகும். காணவேண்டும், கேட்கவேண்டும், சுவைக்க வேண்டும், துய்க்கவேண்டும் என்னும் விருப்பமே துன்பத்திற்குக் காரணமாதலை யறிக. பரி : ஆமைபோல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின்- ஆமைபோல ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்க வல்லனாயின், எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ்வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரணாதலை யுடைத்து. ஒருமைக்கட் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரு மென்பது இதனானறிக'. ஒருமை என்பதை ஒன்றெனக் கொள்ளாது ஒரு பிறப்பெனக் கொண்டதே தவறு. `ஒருமை மகளிர்' (973) என்பதற்கு இவர் ஒன்று என்றே பொருளெழுதி யுள்ளார். ஒரு பிறப்பில் செய்த வினையின் பயன் எழுபிறப்பிலும் தொடரு மென்பது சமயக் கருத்தாகும். ஒரு பிறப்பில் ஐந்தடக்கினால் அவனுக்குத்தான் பிறப்பில்லையே; அவ்வளவு வருந்திப் பொறிகளை யடக்கியும் பிறப்பறாமல் பின்னும் எழுபிறப் புண்டெனில், ஒருவன் எதற்காக ஐம்பொறியடக்க வேண்டும்? அவ்வடக்கம் எழுபிறப்பின் கண்ணும் அவனுக்கு எதற்கு அரணாதலை யுடைத்து? எழுபிறப் பின்கண் என்பதும் பொருந்தா உரையே யாகும். மேலும், வள்ளுவர் மக்களுக்குக் கூறுவதையெல்லாம் இவர் மக்களுக்குக் கொள்ளாமல் மக்களுயிர்க்குக் கொண்டதே முதல் தவறாகும். வள்ளுவர் உயிரைப்பற்றி எங்கும் யாதும் கூறவில்லை. உடலினின்று உயிரென்பதைத் தனியாகப் பிரித்து, அது வினை செய்வதாகவும், அவ்வினைப்பயனைப் பல உடலெடுத்து (பிறவி) அது அநுபவிப்பதாகவும் கூறுவ தெல்லாம் சமயக் கருத்துக்களே யாகும். 6. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். (202) தீச்செயல்கள் தீமை தருவதனால் அத் தீச்செயல்களைத் தீயைவிட மிகுதியாக அஞ்ச வேண்டும். பரி : `தீயவை - தீவினைகள். பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதொருடம்பினும் சென்று சுடுதல். தீக்கின்மையின், தீயினு மஞ்சப்படுவதாயிற்று'. இதனால், ஒருவன் செய்த வினை அடுத்த பிறப்பில் அவ்வுயிர் வேறு எந்த நாட்டில் பிறந்தாலும், எந்த உடம் பெடுத் தாலும் சென்று பயன் நுகரும்படி செய்யும் என்ப தாயிற்று. தீயவை - தீய செயல்கள் அல்லாமல், உயிரொடு தொடரும் தீவினைகள் அல்ல. 7. இலனென்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. (205) ஒருவன் யான் எளியவன் என்று எண்ணி அவ்வெளிமை தீர்தற் பொருட்டுப் பிறர்க்குத் தீமைகளைச் செய்யாதிருக்கக் கடவன்; செய்தால் மட்டும் எளியவனாவான். மீட்டும் எளியனாதல் - பொருளாலன்றி நற்குண நற்செய்கையாலும் எளியனாதல். வறுமையைப் போக்கி கொள்ளவும் பிறர்க்குத் தீமை செய்யக் கூடாது. பரி : `தீயவை - தீவினைகள். அத் தீவினையாற்பிறவி தோறும் இலனாம் என்பதாம். தீவினை பிறவிதோறும் தொடருமென்பது கருத்து'. 8. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்ட லரிது. (227) பாத்து ஊன் மரீஇயவனை - பங்கிட்டு உண்ணுதலைப் பழகினவனை, பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது - பசி என்னும் தீய நோய் தீண்டுதல் இல்லை. பகுத்துண்பவனுக்குப் பலரும் உதவுவ ராகையால் பசிநோய் வருத்துவதில்லை. பரி : `இவ்வுடம்பினின்று ஞான வொழுக்கங்களை அழித்து, அதனால் வருமுடம்புகட்கும் துன்பஞ் செய்தலின், தீப்பிணி எனப் பட்டது'. பசி அறிவொழுக்கங்களைப் போக்கும். அறிவொழுக்க மின்மையால் பிறப்புண்டாகும். அப்பிறவியால் உயிர் துன்புறுதலின், அப்பிறப்பினும் பசியென்னும் கொடிய நோய் துன்பம் செய்யும் என்பதாம். இவர் பிறவியை விட்ட பாடில்லை பாவம்! இஃது வலிந்து புகுத்துதலே. பங்கிட் டுண்பவனைப் பசி வருத்தாது என்பதே நேர்பொருள். 9. பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார். (246) அருள் நீங்கி அல்லவை செய்தொழுகுவார் - தம் மனத் திருந்த அருள் நீங்கித் தகுதியல்லாதவற்றைச் செய்தொழுகு வாரை, பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - அறத்தையும் இழந்து தம் கடமையையும் மறத்தவர் என்பர் உலகோர். அல்லவை - கொடுமைகள், பொச்சாத்தல் - மறத்தல். அருளின்றிக் கொடுமை செய்வோர், துறவறத்தையும் கடமை யையும் இழந்தவராவர். பரி : `அருள் நீங்கி அல்லவைசெய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமை களைச் செய்தொழுகுவாரை, பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும் உறுதிப் பொருளைச் செய்யாது தாந் துன்புறுகின்றமையை மறந்தவ ரென்று சொல்லுவர் நல்லோர், உறுதிப் பொருள் - அறம். துன்புறுத்தல்- பிறவித் துன்பம் மூன்றனையும் அனுபவித்தல்'. முன்னும் - முற்பிறப்பில். தாந் துன்புறுகின்றமையை மறந்தவர் - மறுபிறப்பில் துன்புறுகின்றமையை முற்பிறப்பில் மறந்தவர். அறஞ் செய்யாவிட்டால் மறுபிறப்பில் துன்புறுவோ மென்பதை முற்பிறப்பில் மறந்து அறஞ் செய்யாதவரே இப்பிறப்பில் அருளில்லாது கொடுமை செய்கிறார் என்பதாம். இப்போது கொடுமை செய்வாரை, அடுத்த பிறப்பில் துன் புறுவோமென்பதை மறந்து முற்பிறப்பில் அறஞ்செய்யாதவர் என்பர் நல்லோர் என்பது கருத்து. இதனாற் பயனின்மையால் இது போலியுரையாகும். கொடுமை செய்வோர் பயனடையார் என்பதே நேர் கருத்தாகும். 10. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. (266) தவம் செய்வார் தம் கருமஞ் செய்வார் - தவம் செய்பவரே தம் தொழிலைச் செய்பவராவர், மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - அவரை யொழிந்தார் ஆசையில் சிக்குண்டு பயனில்லாதவற்றைச் செய்பவராவர். ஆசையுள் பட்டு அவம் செய்வார் - துறந்தும் மனத்தை யடக்கி நோன்பு நோற்காமல், பழைய ஆசையால் துறவு நிலைக்கு ஏலாதவற்றைச் யெய்து காலத்தை வீணாகக் கழிப்பவர். பரி : `மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவஞ்செய்வார். அவரை யொழிந்த பொருளின் பங்களைச் செய்வார் அவற்றின்கண் ஆசையாகிய வலையுட்பட்டுத் தமக்குக் கேடு செய்வார்'. இது முப்பாலில் இருபாலையே பழிப்பதாக வுள்ளது. இன்பம் அறத்தின் ஒரு கூறான இல்லறத்தைச் சேர்ந்த தாகை யால், முப்பாலையுமே பழிக்கின்றது. தவம் - மனவடக்கத் தோடு, ஊணுறக்கங் குறைத்து, உயிர்க்கு வருந்துன்பத்தைப் பொறுத்து நோன்பு நோற்றல். அதைச் செய்யாது பழைய ஆசையுட்பட்டுத் துறவுக்கு ஏலாதவற்றைச் செய்தலேயாகும். `அநித்தியமாய் மூவகைத் துன்பத்ததாய் உயிரின் வேறாய உடற்கு வருத்தம் வருமென் றொழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பிணிமூப் பிறப்புக்களான் அநாதியாகத் துன்பமெய்தி வருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறுமாகலின், தவஞ் செய்வாரைத் தங்கருமஞ் செய்வார் என்றும், கணத்து ளழிவதாய சிற்றின்பத்தின் பொருட்டுப் பலபிறவியுந் துன்புறத்தக்க பாவஞ் செய்து கோடலின், அல்லாதாரை அவஞ் செய்வா ரென்றுங்கூறினார்'. அநித்தியம் - நிலையற்றது. அநாதி - பழமை, முன். மூவகைத்துன்பம் - தன்னைப்பற்றியும், பிறவுயிர்களைப் பற்றியும், தெய்வத்தைப் பற்றியும் வருவன. ஊணுறக்கங் குறைத்தலால் தவத்தால் உயிர் வருந்துகிறது, உடல் வருந்து கிறது என்பதே தப்பு. உயிரொடு கூடிய உடல் தான் வருந்து கிறது. உயிர் தனித்துத் துன்பமெய்துகிறதென்பது பொருந் தாக் கூற்றேயாகும். பாவம் பல பிறவியைத் தருகிற தென்பதும், அல்லாதார் - இல்லறத்தார் என்று கூறி, அவர் பல பிறவியும் துன்புறத்தக்க பாவஞ்செய்து கொள்கிறார் என்பதும் இல்லறத்தை இழித்துக் கூறுதலேயாகும். 11. அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண் கன்றிய காத லவர். (286) அளவு - வரையறை செய்யப்பட்ட ஒழுக்கம், நேர்மை. பிறர் பொருள்மேல் ஆசையுள்ளவர் நேர்மையாய் நடந்து கொள்ள மாட்டார். பரி : `அளவின்கண் நின்றொழுக லாற்றார் - உயிர் முதலிய வற்றை அளத்தலாகிய நெறியின்கண் நின்று அதற்கேற்ப ஒழுக மாட்டார். உயிர் முதலியவற்றை அளத்தலாவது - காட்சி முதலாகச் சொல்லப் பட்ட அளவைகளான் உயிர்ப் பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக் குற்ற விளைவுகளையும், அவற்றான் அது (உயிர்) நாற்கதியுட் பிறந்திறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற் குபாயமாகிய யோக ஞானங் களையும், அவற்றான் எய்தும் வீட்டினையும் அளந்து உள்ள வாறறிதல்'. அளவு என்பதற்குக் காட்சியளவு, ஆகமவளவு கருத்தளவு எனப் பொருள் கொண்டதே இவ்விடர்ப்பாட்டுக்குக் காரணம். அநாதியாய் - தொன்று தொட்டு. நாற்கதி - தேவகதி, மக்கள்கதி, நரகர்கதி, விலங்குகதி. கதி - பிறப்பு. காட்சி - கண்ணால் காண்பது. ஆகமம் - நூல். கருத்தளவு - எண்ணி யறிதல். நல்வினை தீவினைக ளால் உயிர் பல பிறப்பெடுக்கிறது. யோக ஞானங்களால் உயிர் வீடெய்தும் என்பது. இது பிறப்பினை வலிந்து புகுத்திய தாகும். 12. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா வுயிருந் தொழும். (260) ஓருயிரையும் கொல்லா தவனாகிப் புலாலையும் உண்ணா தவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும். அருட் பெருக்கினால் உயிர்களிடத்து அன்புடன் நடந்து கொள்ளும் அறவோனிடம் உயிர்கள் அச்சமின்றி அருகணைந்து அன்புடன் அளவளாவி வாழும். இதையே நயம்படக் கைக்கூப்பித் தொழும் என்றார். பரி : `இப் பேரருளுடையான் மறுமைகண் தேவரின் மிக்கானும் என அப்பயனது பெருமை கூறியவாறு'. இது, `மற்றொன்று விரித்தல்' என்னும் குற்றத்தின் பாற்படும். இப்போது கொள்ளவேண்டிய அருட் சிறப்பைக் கூறினாரேயன்றி மறுமையைப் பற்றி யன்று. இங்கு உயிரென்றது மக்களல்லாத மற்ற உயிர்களை. 13. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்ப தறிவு. (358) பிறப்பு என்னும் பேதைமை நீங்க - பிறவி என்னும் அறியாமை நீங்க, சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு - சிறப்பு என்னும் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவாகும். பிறப்பு என்னும் பேதைமை - ஒருவன் பிறக்கும் போதே உடன்பிறந்த அறியாமை. பிறக்கும்போதே உடன்பிறந்த அறியாமை நீங்கச் சிறந்த உண்மைப் பொருளைக் காண்பதே அறிவு. பரி : `பிறப்பு என்னும் பேதைமை நீங்க - பிறப்பிற்கு முதற் காரணமாய் அவிச்சை கெட, சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு - வீட்டிற்கு நிமித்தகாரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர் வாவது'. நிமித்தகாரணம் - துணைக்காரணம். அவிச்சை - அறியாமை. அறியாமையால் பிறப்பு உண்டாகுமென்பது சமயக் கருத்தாகும். உண்மை யுணர்வினால் வீடெய்து மென்பது மஃதே. `உயிர் உடம்பி னீங்குங் காத்து அதனால் (உயிர்) யாதொன்று பாவிக்கப்பட்டது (எண்ணப்பட்டது) அஃது அதுவாய்த் தோன்று மென்பது எல்லா ஆகமங்கட்குத் துணிபாகலின், வீடெய்துவார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கேதுவாய பாவனை கெடுதற் பொருட்டுக் கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டுதலான்'. உயிர் அப் பாவிக்கப்பட்ட பொருளாகப் பிறக்கும். ஆகையால், உயிர் போகும்போது, உயிர் ஒன்றுமற்ற தனிமை யையே நினைக்கவேண்டும். உயிர் அவ்வாறு பிறத்தல் என்பது ஒருவர் கொள்கையே. அறியாமை சிறிதுமின்றி உண்மைப் பொருளைக் காண்பதே அறிவு என்பதே கருத்தாகும். 14. ஒருமைக்கட் டாங்கற்ற கல்வி யொருவற் கெழுமையு மேமாப் புடைத்து. (398) ஒருவற்கு ஒருமைக்கண் தான் கற்ற கல்வி - ஒருவனுக்கு ஓரிடத்தில் தான் கற்ற கல்வியானது, எழுமையும் ஏமாப்பு உடைத்து - பல இடங்களிலும் சென்று உதவுதலை யுடைத்து. ஒருமை - ஒன்று. எழுமை - பல. ஒருவன் ஓரிடத்தில் இருந்து கற்கிறான். அவன் கல்வியறிவு பல இடங்களிலும் பரவி அவனைச் சிறப்பிக்கிறது. அவனது கல்வியறிவுக்காக அவனை நாடெங்கும் போற்றுகிறது. `கற்றோர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு' என்பது காண்க. பரி : `ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து - எழுபிறப்பினும் சென்று உதவுதலை யடைத்து'. அப்போது ஒரு பிறப்பில் கல்லாதவரெல்லாம் எப்படிக் கற்கமுடியும்? கற்றவர் தான் கற்பது, கல்லாதவர் கல்லாம லேயே இருப்பதா? நம் நாட்டுச் சக்கிலியரும், நாடோடி களும் முற்பிறப்பில் அத்தனைபேரும் கல்லாதவரா? கல்விக் காக செய்யும் முயற்சிகளெல்லாம் பயனின் முயற்சிகள் தானே? ஞானப்பாலுண்டும், கலைமகள், காளி முதலியோர் அருள் பெற்றுந்தானே கல்வியறிவு பெற்றதாகக் கூறப் பட்டுள்ளதே யன்றி, யாராவதொருவர் கல்லாமல் கல்வியறிவு பெற்றதாக உண்டா? இத்தகைய புராணக்கதை கூட உள்ள தாகத் தெரியவில்லை. எனவே, இது போலியுரையே யாகும். ஒருமை, எழுமை என்பன பிறப்பினைக் குறியா. மேலும், `வினைகள் போல உயிரின்கட் கிடந்து அதுபுக்குழிப் புகுமாகலின் எழுமையும் ஏமாப்புடைத் தென்றார்' என்கிறார். வினை உயிரைத் தொடர்ந்து செல்வது போல் கல்வியும் உயிருடன் தொடருமென்பது `கல்வி' என்னும் அதிகாரத்திற்கே முரண்பட்ட தாகும். அவ்வாறு ஒருமைக்கண் கற்ற கல்வி எழுபிறப்பிற்குப் பயன்படுமாயின், எல்லோரும் படிக்கவேண்டியதில்லையே. எல்லாப் பிள்ளைகளும் படித்தே தெரிந்து கொள்ளு தலும், படியாமல் யாரும் எழுத்தறிவுகூடப் பெறாமையும் முரணாக வன்றோ உள்ளன? வினை உயிரைத் தொடரு மென்பதே கற்பனை. இது கற்பனையில் கற்பனை! 15. ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்து மளறு. (835) பேதை - அறிவில்லாதவன், எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு - ஏழிடங்களில் தான் புகுந்து அழுந்திக் கிடக்கும் பெருந்துன்பத்தை, ஒருமைச் செயல் ஆற்றும் - ஓரிடத்திலேயே செய்து கொள்ள வல்லவனாவான். ஒருமை - ஒன்று. எழுமை - பல. அளறு - பெருந்துன்பம். அறிவிலான் பல இடங்களில் படுதுன்பத்தை ஓரிடத்திலேயே படுவான் என்பதாம். தகாதன செய்து பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வான். பரி : `பேதை, எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு - வரும் பிறவிகளிலெல்லாம் தான் புக்கழுந்தும் நிரயத்தினை, ஒருமைச்செயல் ஆற்றும் - இவ் வொரு பிறப்புள்ளே செய்து கொள்ள வல்லனாம்'. நிரயம் - நரகம். நரகம் என்பது பாச்சி பாச்சி என அழும் சேய்க்குப் பூச்சி பூச்சி என்பதுபோன்ற அச்சுறுத்தும் செயலாகும். நரகவுலகம் என்று தனியாக ஒன்றில்லை. பெருந்துன்பத்தின் கற்பனையே நரகம் என்பது. சொற்பொருள் விளக்கத்தில் காண்க. துறவறவியல் : துறவறம் என்பது இல்லறம் இனிது நடத்தி ஒழுக்கத்து நீத்தார் ஒழுகும் ஒழுக்கம். இல்லற இன்பத்தைத் துறந்து தம் இல்லிருந்தே பொதுநலம் புரிவதும் துறவறமே யாகும். பரி : `துறவறமாவது - மேற்கூரிய இல்லறத்தின் வழுவாதொழுகி அறிவுடையராய்ப் பிறப்பினை யஞ்சி வீடுபேற்றின் பொருட்டுத் துறந்தார்க் குரிய அறம்' பிறப்பினை யஞ்சி வீடு பேற்றின் பொருட்டென்பது குறட் கொள்கையன்று. மேலும், `விரதங்களாவன - இன்ன அறஞ் செய்வலெனவும், இன்ன பாவம் ஒழிவலெனவும் தம் ஆற்றலுக் கேற்ப வரைந்து கொள்வன' என்கிறார். வேண்டு மென்றே பாவம் செய்வதும், அதற்குக் கழுவாய் (பிராயச் சித்தம்) செய்வதும் ஆரியக் கொள்கையேயாகும். விரதம் என்பது - மனவடக்கத்தின் பொருட்டு உண்டி சுருங்கல், துன்பம் பொறுத்தல் முதலியனவே யாகும். 3. வீடு ஒருவன் இறந்த பின்னர் அவன் உயிர் அடையும் பல இடங்களில் வீடும் ஒன்றாகும். மற்ற இடங்களை அடைந்த உயிர், தான் செய்த நல்வினை தீர்ந்ததும் மறுபடியும் பழைய படி இவ்வுலகில் பிறக்கும். வீடு என்பது பிறவா நிலையாகும். வீடடைந்த உயிர் மீண்டும் பிறப்பதில்லை என்னும் சமய நூற்கள். உரைப்பாயிரத்தில், `அந்தமில் இன்பத்து அழிவில் வீடும்' என வலிந்து புகுத்துகிறார். இது பற்றி அங்கே விளக்கியுள்ளாம். 1. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு. (791) நட்பின் வீடு இல்லை - ஒருவனோடு நட்புச் செய்தபின் அவனை விடமுடியாது. வீடு - வீடுதல். முதனிலை திரிந்த தொழிற்பெயர். திருக் குறளில் வீடு என்னும் சொல் இந்த ஒரே இடத்தில் தான் வந்துள்ளது. உயிர் பிறப்பற்று வாழும் பொருளுடைய வீடு என்னும் சொல் எங்கும் வரவில்லை. இதற்குப் பரிமேலழ கரும் `நட்டபின் வீடு இல்லை - ஒருவனோடு நட்புச் செய்த பின் அவனை விடுதல் உண்டாகாது' என்றே பொருளெழுதி யுள்ளார். இனி இவர் வலிந்து புகுத்தும் இடங்கள் வருமாறு. 2. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு. (23) இருமை வகை தெரிந்து - நன்மை தீமைகளின் பாகு பாடுகளை நன்கு அறிந்து, ஈண்டுஅறம் பூண்டார் பெருமை - மிக்க அறத்தைக் கைக்கொண்டவர் பெருமையே, உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. ஈண்டுதல் - மிகுதல். ஈண்டறம் - வினைத்தொகை. பரி : `இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது இன்பதுன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து, ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பறுத்தற்கு இப்பிறப்பின் கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே, உலகு பிறங்கிற்று - உலகின் கண் உயர்ந்தது'. ஒருவன் தனது பிறப்பை யறுத்து வீடு பெறச் செய்யும் முயற்சி `உலகின்கண் உயர்ந்தது' என்பது பொருந்தாக் கூற்றாகும். அது தமிழர் துறவற நிலையன்று. நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து, பிற வுயிர்கட்கு நன்மையே செய்யும் பெரி யோரை உலகத்தார் பெருமைப்படுத்துவர் என்பதே நேர் பொருளாகும். 3. உரனென்னும் தோட்டியால் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. (24) உரன் என்னும் தோட்டியால் - அறிவு என்னும் குத்துக் கோலால், ஓர் ஐந்தும் காப்பான் - பொறிகளாகிய யானைகள் ஐந்தனையும் புலன்கள்மேல் செல்லாமல் காப்பவன், வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - துறவறம் என்னும் சிறந்த நிலத்திற்கு ஒப்பற்ற விதையாவான். வரம் - சிறந்தது. ஐம்பொறி யடக்கத்தின் வளர்ச்சியே துறவறமாகும். பொறியடக்கமுள்ளவன் துறவறத்தில் நிலைத்து நிற்பதால் வித்தென்றார். பரி : `வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்தினும் மிக்கதென்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்தாம். அந்நிலத்தில் சென்று முளைத்தலின் வித்தென்றார். ஈண்டுப் பிறந்திறந்துவரும் மகனல்லன் என்பதாம்'. புலனடக்கம் உடையோர் உறுதியாக வீடு பெறுவர் என்பது கருத்து. புலனடக்க முடையவரே துறவறத்திற்கு ஏற்றவராவர்; புலனடக்கமே துறவறத்திற்குச் சிறந்த உறுப் பாகும் எனப் புலனடக்கத்தின் சிறப்புக் கூறினாரேயன்றி, வீட்டைப் பற்றிய பேச்சிங்கில்லை புலனடக்க முடையோரே துறவறத்தில் நிலைத்து நிற்க முடியுமென்பது கருத்து. 4. நல்ல றெனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. (222) கொளல் நல் ஆறு எனினும் தீது - ஒருவனிடமிருந்து ஒரு பொருளைக் கொள்ளுதல் நல்லவழி என்றாலும் அது தீதாகும், மேலுலகம் இல் எனினும் ஈதல் நன்று - கொடுத்தால் மேலுலகில் மதிப்பு இல்லை என்றாலும் கொடுத்தல் நல்லது. மேலுலகம் - அயல்நாடு. வடபுலத்தாரில் காண்க. கொடுத் தால் அயல்நாடர் மதியார் எனினும் கொடுத்தல் நன்று என ஈகையின் சிறப்புக் கூறினார். பரி : கொளல் நல்லாறு எனினும் தீது - ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி யென்பார் உளராயினும் அது தீது, மேலுலகம் இல் எனினும் ஈதலே நன்று - ஈந்தார்க்கு அவ்வுல கெய்துதல் இல்லையென்பார் உளராயினும் ஈதலே நன்று. கொடையாளர்க்கு வீடு உண்டென்பது, யோக ஞானங் களால் வீடெய்துதல் என்பதற்கு முரணானதாகும். மேலுகம் என்பதை வீட்டுலகம் என்பது பொருத்தமன்று. நல்லவழி, கெட்டவழி என்பது போல `நல்லாறு' என்பது நல்லவழி என்னும் பொருளதே. 5. அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க் கிவ்வுலக மில்லாகி யாங்கு. (247) பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு - பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இன்பம் இல்லை யானாற் போல, அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர் களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு மறுமை இன்பம் இல்லை. பொருள் - இடம் பொருள் ஏவல் முதலிய செல்வப் பொருள். இவ்வுலகம் - உயிர் வாழும் இன்றைய உலகத் தையும், அவ்வுலகம் - இறந்தபின்னுள்ள மறுமையான அன்றைய உலகத் தையும் குறிக்கும். மறுமை - நாம் இறந்த பின் நம்மைப்பற்றி இங்கு பேசப்படுவது. வள்ளுவர் மறுமையில் உள்ளார். இவ்வுலகம் இல்லறத்தையும், அவ்வுலகம் துறவறத்தையும் எனினுமாம். பரி : `அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர்கள் மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத் தின்பமில்லை'. இன்ப துன்ப மற்றதன்றோ வீடு? வீட்டுலகத் தின்ப மென்பது பொருந்தாது. 6. தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். (364) தூய்மை என்பது அவாஇன்மை - தூய்மை என்று சொல்வது அவாவில்லாமை, மற்றது வாய்மை வேண்டவரும் - அவ் வவாவின்மையானது உண்மையை விரும்பவரும். தூய்மை - மனத்தூய்மை. உண்மையை விரும்பினால் அவாவறும். அவாவற்றால் மனத்தூய்மை உண்டாகும். பரி : தூய்மை என்பது அவாவின்மை - ஒருவர்க்கு வீடென்று சொல்லப்படுவது அவாவில்லாமை, அது வாய்மை வேண்ட வரும் - அவ் வவாவில்லாமைதான் மெய்ம்மையை வேண்டத்தானே யுண்டாம். வீடாவது - உயிர், அவிச்சை முதலிய மாசு நீங்குதலாகலின், அதனைத் தூய்மை யென்னும். அவிச்சை, முதலிய மாசு நீங்கினார் வீடடைவர் என்பதே யன்றி, மாசு நீங்குதலால் வீடென்பது பொருந்தாது. அவாவறுதல் மனத்தூய்மை என்பதே நேர் பொருளாகும். 7. ஆரா வியற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா வியற்கை தரும். (370) ஆரா இயற்கை அவா நீப்பின் - நிரம்பாத இயல்புடைய அவாவை ஒருவன் நீக்குவனாயின், அந்நிலையே பேரா இயற்கை தரும் - அப்போதே அவனுக்கு அது அசையாத தன்மையைக் கொடுக்கும். நிரம்பாமை - போதுமென்னும் முடிவில்லாமை. பேரா - பேராத - உறுதியான. அசையாததன்மை - மீண்டும் பொருளின் மேல் பற்றுண்டாகாத தன்மை. ஆசை முழுவதும் நீங்குவதே உண்மைத் துறவாகும். பரி : `களிப்புக் கவற்சிகளும் பிறப்புப் பிணிமூப் பிறப்புக்களும் முதலியன வின்றி, உயிர் நிரதிசய வின்பத்தாய் நிற்றலின், வீட்டினைப் பேராவியற்கை என்றும்'. மீண்டும் பொருள்களின்மேல் பற்றுண்டாகாத தன்மையே அவா நீக்கத்தால் உண்டாவதால் இது பொருந்தா உரையே. 4. ஆராய்ச்சி வினை, பிறப்பு, வீடு என்னும் இவை மூன்றும் சமயச் சார்புடைச் சொற்கள். இவை ஒன்றையொன்று தொடர் புடையவை. ஒன்றுக்கொன்று காரணமானவை. ஒன்றை விட்டொன்று தனித்து நில்லாத் தன்மையவை. 1. வினை : அவற்றுள், வினையென்பது பிறப்புக்குக் காரணமானது. ஒருவன் செய்த வினை அவன் உயிரோடு தொடர்ந்து சென்று, அவ்வுயிர் எடுக்கும் பல பிறப்புக்களிலும் தன் பயனை நுகர்விக்கும். இது தொடர்வினை எனப்படும். ஒருவன் ஒரு பிறப்பில் செய்த வினைப்பயனைப் பல பிறப்புக் களில் நுகர்ந்து மிஞ்சிய வினை மிச்சவினை எனப்படும். ஒரு பிறப்பில் அறிவு வந்த பிறகு ஒருவன் புதிதாகத் தேடிக் கொள்ளும் வினை நிகழ்வினை எனப்படும். இம் மூவினை யையும் வடநூலார் முறையே பிராரத்தம், சஞ்சிதம், ஆகாமியம் என்பர். தொடர்வினை உயிர் வீடு பெற்றால்தான் தீரும். இம்மூவினையும் நல்வினை, தீவினை என இருவகைப் படும். நல்வினையால் நல்ல பிறப்பும், தீவினையால் தீய பிறப்பும் உண்டாகும். நல்வினை செய்த உயிர் துறக்க முதலிய உயர் பதவிகளை அடைந்து இன்புறும். தீவினை செய்த உயிர் நரகத்தை யடைந்து துன்புறும். நல்வினை - புண்ணியம் எனவும், தீவினை - பாவம் எனவும் வழங்கும். இப் புண்ணிய பாவப் பயனுகர் வோரே செல்வரும் வறியரும் என்னும் சமய நூல்கள். திருக்குறளில் இத்தகைய வினை யொன்றும் கூறப் படவில்லை. பரிமேலழகர் வேண்டுமென்றே வலிந்து புகுத்துவதேயாகும். உயிர் தான்செய்த வினைக்கீடாகப் பல பிறப்பெடுக் கிறது. வினைப்படி உயிர்கள் பிறக்கின்றன. மரஞ் செடி கொடிகள், ஊர்வன, நீர்வாழ்வன, பறவைகள், விலங்குகள், மக்கள், தேவர் எனப் பிறப்பு எழுவகைப்படும். இன்னின்ன செய்தால் உயிர் பிறப்பற்று வீடுபெறும். நாம் பிறவா நிலையையடைய முயல வேண்டும். அதுவே மக்கட் பிறப்பின் பயன் என்பன வெல்லாம் சமயக் கற்பனையே. உயிர் : உயிர் என்பது ஓர் அழிவற்ற பொருள் என்பதே, காணாததைக் கண்டதாகக் கூறும் சமயக் கற்பனையாகும். உடலுக்குள் உயிர் உண்டு, உடலும் உயிரும் கூடி வாழ்கிறது, உயிர் பிரிந்தால் உடல் அழிந்துவிடும், உடல் கெட்டால் உயிர் பிரிந்துவிடும் என்பனவே ஒருவாறு நாம் அறிவதாகும். உடல் அழிந்தபின் உயிர் என்னாகிறது? உயிர் எத்தகையது? அது ஒரு தனிப்பட்ட பொருளா? என்பனவெல்லாம் நமக்கொன்றும் தெரியாது. இத்தகைய குறிப்பொன்றும் திருக்குறளில் இல்லை. இவையெல்லாம் பிற்காலத்தில், ஆரியக் கொள்கையாலும், சமய மயக்கத்தாலும் ஏற்பட்டனவேயாகும். சமயப் படலம் படர்ந்த தற்காலத் தமிழர் கண்களுக்கு, பரிமேலழகர் உரை யென்னும் திரையிடப்பட்ட குறள் அவ்வாறுதான் தெரியும். அப்படலமும் திரையும் நீங்கினால்தான் குறளின் உண்மைக் கருத்துத் தெற்றெனத் தெரியும். 2. பிறப்பு : இனி ஒருவன் செய்த நல்லதும் கெட்டதும் செய்த உடலை விட்டு உயிரைத் தொடர்ந்து சென்று, அவ்வுயிர் எடுத்த உடல்தோறும் அதற்கு இன்பதுன்பங்களை ஊட்டு கின்றன என்பதும், நல்வினையால் நல்ல பிறப்பையும், தீவினை யால் தீய பிறப்பும் உண்டாகின்றன என்பதும் அப்படியாகலாம் என்னும் எண்ணத்தால் கொண்டதே யாகும். நல்வினையால் நல்ல பிறப்பு உண்டாகுமெனின், மரங்கள் என்ன நல்வினை செய்கின்றன? மரஞ் செடி கொடிகள் நல்ல கனிகளும் காய்களும் பூக்களும் தவசங்களும் தருகின்ற நல்வினை செய்கின்றன எனின், அவையெல்லாம் படைப்புக் காலத்தி லிருந்து அத்தகைய நல்வினை செய்து அதனால் உயர்பிறப் படைந்து, அத்தகைய மரஞ்செடி கொடி களெல்லாம் இப்போது இல்லாமலன்றோ இருக்க வேண்டும்? நனிமிகு பழங்காலத்தி லிருந்த மாவும் பலாவும் வாழையும் கரும்பும் தென்னையும் பனையும் மல்லிகையும் முல்லையும் தாமரையும் குவளையும் நெல்லும் கம்பும் இன்றும் அப்படியே தானே இருக்கின்றன? அதிலும், எட்டி எருக்கிலை, ஆடு தின்னாப்பாளை முதலியவை என்ன புண்ணியம் செய்து அடுத்த பிறப்பான புழுவாய்ப் பிறக்கின்றன? அல்லது நன் மரங்களாய்ப் பிறக்கத்தான் அவை செய்யும் நல்வினைகள் என்ன? இனி, புழுக்கள், கொசுக்கள், எறும்புகள் முதலியன என்ன நல்வினை செய்து நீர்வாழ்வனவாகிய மீன், நண்டு, தவளை, முதலைகளாகப் பிறக்கின்றன? முதலை செய்யும் நல்வினைதான் என்ன? பறவைகளில் எப்போதும் கோழிக் குஞ்சைப் பிடித்துக் கொன்றுதின்னும் பருந்து, புறாக்களைத் துடிக்கத் துடிக்க அடித்துக் கொன்று தின்னும் வல்லூறு, முயலடிக்கி, மீன்கொத்தி முதலியன என்ன புண்ணியம் செய்து விலங்குப் பிறப்பையடை கின்றன? `புலி பசித்தாலும் புல்லைத்தின்னாது' எனப் புலாலை யன்றி வேறோன்றையும் தின்னாத புலி, சிங்கம் முதலிய கொடிய விலங்குகள் என்ன புண்ணியம் செய்து மக்கட் பிறப்பை அடைகின்றன? அல்லது மாடாகவாவது பிறக் கின்றனவா? பூனை செய்யும் புண்ணியம் யாது? எலிதான் என்ன புண்ணியம் செய்கின்றது? பாம்பு, தேள், பரவு செய்யான் முதலிய நச்சுயிர்கள் செய்யும் நல்வினை என்ன? அவை எப்படி அடுத்த பிறப்பை அடை கின்றன? நல்வினை செய்யவேண்டும்; உயர் பிறப்பினை யடையவேண்டும் என்ற எண்ணம் அவற்றிற்கு உண்டாவ துண்டா? அல்லது இயல்பாகவே செய்யும் வினைக் கீடாக உயர்பிறப் பினையடைகின்றனவோ? இனி, அம்மை, கக்கல்கழிச்சல், பெருவரிநோய், ஈளை யிருமல் முதலிய கொடிய நோய்களை யுண்டாக்கும் நச்சுப் புழுக்களும், மலப்பு முக்களும் காய்கனிச் செடிகள், நெற்பயிர் முதலியவற்றைத் தின்றழிக்கும் புழுப்பூச்சிகளும் தாம் செய்யும் தீவினைக் கீடாக எட்டி, எருக்கிலை, ஆடு தின்னாப் பாளை முதலியனவாகப் பிறக்கின்றன வெனில் அவை என்னவாகப் பிறக்கின்றன? அன்றியும், மக்கட் பிறப்பிலிருந்து தேவப்பிறப்பெடுத் தால் அப்புறம் என்ன பிறப்பெடுப்பது? அதுதானே கடைப் பிறப்பு? தேவர்கள் தாம் நோய் நொடி இல்லாதவர், கவலையே இன்னதென்று அறியாதவர், வறுமை இல்லாதவர், எப்போதும் இன்புற்றிருப்பவர், அவ்வுலகமே இன்பவுலகம். ஆகையால், அத்தேவப் பிறப்பை யடைய மக்கள் பலவாறு, பலவகையில் முயலுகின்றனர். அது இயற்கையுங்கூட. ஆனால், தேவர்கள் எதற்காக வேறு பிறப்பெடுக்க முயலு கின்றனர்? அதுதான் இன்பவுலக மாயிற்றே. தேவர்களுக்கும் இறப்புண்டெனில், அவர் எப்பிறப்பை அடைவர்? முறை யாக அன்னார் மரஞ் செடி கொடிகளாகப் பிறப்பதுதானே இயல்பு? இல்லை, தேவர் களெல்லாம் அப்படியே வீட்டை யடைவர் எனின், எல்லா மக்களும் வீடடையவே முயலாது ஒரு சிலர்மட்டும் எதற்காகத் தேவப்பிறப்படைய முயல வேண்டும்? மரஞ்செடி கொடி புற் பூண்டுகள், புழுப்பூச்சிகள், நீர் வாழ்வன, பறவை, விலங்கு, மக்கள் என்பனவெல்லாம் வெவ்வேறு வகையான உயிர்வகைகளே யல்லாமல், ஓருயிர் தான் செய்த வினைக்கேற்றவாறு இப்பிறவிகளை எடுக்கிறது என்பது அறியாக் கூற்றேயாகும். இதற்கு முன் இன்ன பிறப்பாக இருந்தோமென்று இதுவரை எந்த உயிர்க்கும் தெரியாதபோது, உயிர்கள் தம் வினைக்கீடாகப் பல பிறப்பெடுக்கின்றன என்பதை கண்டவர் யார்? அன்று அறிந்திருந்தனர் எனில், இன்று ஏன் அறிவ தில்லை? அன்று கடவுள் நேரில் சொன்னார் எனில், இன்று ஏன் சொல்லாமல் மவுனியாய் இருக்கின்றார்? அவருக்கு நமது முன்னோர் செய்த நன்மை என்ன? நாம் செய்த தீமை என்ன? "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்" (திருவாசகம்) என்றது, சொன்னதைச் சொன்னதே யாகும். இதோடு விட்டார்களா? இன்று அரசியலார் எவ்வள வோ ஏற்பாடுகளுடன் மக்கட் கணக்கெடுக்கின்றனர். அப்படி யிருந்தும் சரியான கணக்குக் கிடைப்பதில்லை. புழுப் பூச்சிகள், மரஞ்செடி கொடிகள், நீர் வாழ்வன இன்னின்ன வென்பது அறியமுடியாத தொன்றாக இருந்து வருகிறது. ஆனால், "ஊர்வ பதினொன்றா மொன்பது மானுடம் நீர்பறவை நாற்காலோர் பப்பத்துச் - சீரிய பந்தமாம் தேவர் பதினான் கயன்படைத்த அந்தமில் சீர்த் தாவர நாலைந்து" (குறள் 62. பரி) நூறாயிரம் ஊர்வன - 11 மக்கள் - 9 நீர்வாழ்வன - 10 பறப்பன - 10 நடப்பன - 10 தேவர் - 14 தாவரம் - 20 84 என எழுவகைப் பிறப்பும் எண்பத்து நான்கு நூறாயிரம் (லட்சம்) வடிவ வேற்றுமையுள்ளனவென வரையறுத்துக் கூறியுள்ளார். 3. வீடு : வீடு என்பது ஒருவன் இறந்தபின் அவன் உயிர்அடையும் இடங்களில் ஒன்றென்று கூறப்படுகிறது. ஒரு பிறப்பில் ஓர் உயிர் நல்வினை செய்தால் இந்திரன் முதலிய இறையவர் பதங்களில் ஒன்றை யடைந்து, அந் நல்வினைக் கேற்ப இன்புற்று அந் நல்வினை தீர்ந்ததும் மற்றொரு பிறப்பை எடுக்கும். தீவினை செய்தால் நரகம் என்னும் இடத்தை அடைந்து, அத் தீவினைக் கேற்பத் துன்புற்று அத் தீவினை தீர்ந்ததும் மற்றொரு பிறப்பை எடுக்கும். எழுவகைப் பிறப்பில் மக்கட்பிறப்பே சிறந்தது. மக்கட்பிறப்பெடுத்த ஒருவன், இல்லறத்தைத் துறந்து துறவறத்தையடைந்து யோக ஞானங்க ளெய்தினால் அவன் உயிர் பிறவா நிலையாகிய வீட்டுலகை அடையும் என்று சமய நூல்கள் கூறுகின்றன. இதை மக்கள் நம்புவதற்காக , இது கடவுளாற் சொல்லப் பட்டது. கடவுளை யறிந்து, அவரோடு நேரில் பேசிக் கொண்டிருந்த பெரியோர்களால் நூல்களாகச் செய்யப்பட்டன என்றெல்லாம் எழுதி வைத்துள்ளனர். வீடு என்பது உயிர் விடுதலை பெற்ற இடம், பிறவாது இருக்கும் இடம். உயிர்கள் தாம் செய்த தொடர்வினைப்படி பிறக்கின்றன வெனின், மாந்தரும் தொடர்வினைப்படி பிறக்கின்றனர், இறக் கின்றனர்; பிறவாநிலைக்குப் பாடுபடுவானேன்? மக்க ளல்லாத மற்றையுயிர்கள் பிறவாநிலையடைய என்ன முயற்சி செய்கின்றன? மக்கட் பிறப்பிற்றான் அது கூடுமெனின், உலகில் பிறந்து இன்ப துன்ப நுகர்ந்து, வாழ்வதல்லாமல், பிறப்பிறப் பின்றிக் கூட்டுப் புழுப்போல எப்போதும் சோம்பேறியாய்ச் சும்மா இருப்பதால் அவ்வுயிர்க்கு என்ன நன்மை? கடவுளுக்குத் தான் தான் படைத்த உயிர் அப்படிச் சோம்பேறித்தனமான ஒருபயனுமின்றிச் சும்மா இருப்பதால் நன்மை என்ன? அவ்வாறு சும்மா இருப்பதைத்தான் அவர் விரும்புவாரா? நட்ட செடி பூக்காமல் காய்க்காமல் இருந்தால் கூட நட்டவன் விரும்புவ தில்லை. ஊன்றிய விதை அப்படியே எப்போதும் முளைக்காமல் இருக்க விரும்புவானா? ஒருபோதும் விரும்பான். தன்னால் படைக்கப்பட்ட உயிர் ஒரு பயனும் இல்லாமல் சும்மா இருப்பதால் கடவுளுக்கும் அப்படித் தானே இருக்கும்? உடலெடுக்காமல் பிறக்காமல் சும்மா இருக்கும் நிலையை உயிர் விரும்புமானால் அத்தகைய உயிரை அவர் ஏன் உடம் பெடுக்கும்படி செய்தார்? பலவாறு முயன்று, பல துன்பங்கள் பட்டு உயிர் பிறவா நிலையை அடையும் படி செய்வதால் கடவுளுக் குண்டாகும் நன்மை என்ன? எல்லா உயிர்களையும் தானாகவே - அவை முயலாமலே பிறவா நிலையில் வைத்து விட்டால் கடவுளுக் குண்டாகும் கேடென்ன? அது கடவுட்டன்மைக்கு அடுக்காத - தகாத செயலா? உயிர்களைப் படைத்து பிறப்பறுப்பதற்காக அவற்றை அவ்வாறு படாதபாடு படும்படி அலையவைப்பதை விட, அருள்வடிவமான கடவுள் அவ் வுயிர்களைப் படைக்காமலே இருந்திருப்பது மேலல்லவா? ஏதோ ஒரு காலத்தில் படைத்தார். அப்போது உயிர்கள் வீடு பெற முயலவில்லை. பின்னர்த்தான் அவை அம் முயற்சியிலே ஈடுபட்டன; அதற்காகப் பல இடர்ப் பாடுகள் எய்துகின்றன; அம் முயற்சிக்குத் துணை செய்யும் உடம்பை வாட்டி வதைக் கின்றன எனின், கள்ளியை ஒழித்தது போல இப்போது அவற்றை அடியோடு ஒழித்து விடுவதோ, எல்லா உயிர் களையும் ஒரேயடியாய்ப் பிறவாநிலையில் வைத்து விடுவதோ கடவுளுக்குப் பெருந்தன்மையாகு மல்லவா? இனி, நல்ல செயல்கள் செய்துதான் உயிர் பிறப்பறுக்க வேண்டும். எனின், கடவுள் எல்லா உயிர்களையும் நல்லனவே செய்யும்படி படைத்தால் என்ன? திருட்டு புரட்டு, பொய் பித்தலாட்டம், வஞ்சகம் சூது, கொள்ளை கொலை, பொறாமை பொச்சாப்பு முதலிய கொடிய குணங்கள் அமையும்படி படைத்து விட்டு, அக் குணங்களால் பிறப்பை யுண்டாக்கி உயிர்களைப் படாதபாடு படுத்துவதால் கடவுளுக்குண்டாகும் நன்மை என்ன? மனைவி மக்களை விட்டு, இல்லறத்தினீங்கி, துறவறத்தை அடைந்து, விரதங்களால் உடலை வருத்தி, யோக ஞானங்க ளெய்தி வீடு பெறுதல் என ஆண்களுக்குச் சொல்லப்படு கின்றதே யன்றிப் பெண்களுக்கு வீடு பேறு சொல்லப்பட வில்லை. `மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை மூன்றையும் வாக்குமன நோக்கவில்லை' என்றார் ஒரு பெரியார். `பொன்னில் மாதராசை' என்பது கைவல்யம். மூவாசைகளில் பெண்ணாசை ஒன்று. அவ்வாசையை விட்டால்தான் வீடு பேறு கிடைக்கும் என்று கூறப்படுகிறதேயன்றி, ஆண்களைத் துறந்து பெண்கள் வீடு பெறவேண்டுமென்று எந்த ஒரு சமய நூலிலும் கூறப் படவில்லை. பட்டினத்தார், அருணிகிரியார் போன்ற பெரியார்கள் தங்கள் வீடு பேற்றிற்குத் தடையெனப் பெண் களை வாய்க்கு வந்தபடி திட்டு திட்டென்று திட்டியிருக் கிறார்களே யொழிய தங்கள் வீடு பேற்றுக்கு ஆண்கள் தடையென எந்த ஒரு பெண் மணியுங் கூறவில்லை. எந்த ஒரு சமயநூலுங் கூறவில்லை. உயிர்களிலும் ஆணுயிர் பெண்ணுயிர் என இருவகையுண்டோ? அல்லது ஆணுடம் பெடுத்தால் தான் மனைவி மக்களைத் துறந்து யோக ஞானங்க ளெய்தி வீடு பெறமுடியுமோ? பெண்களுக்கு வீடு பேறே கிடையாதோ? யானை முகனால் கயிலாயத்தில் விடப்பட்டார் என்னும் ஒளவையார் காட்டில் சென்று தவஞ் செய்ததாக வோ, வேறு நோன்புகள் நோற்றதாகவோ இல்லை. காரைக் காலம்மை யார் யோக ஞானங்களாற் பேயுருக் கொண்டு கைலையை அடைந்ததாகவில்லை. ஆண்டாள் கூடச் சூடிக் கொடுத்தும் திருவரங்கத்தைத்தான் அடைய முடிந்தது. இனி, மக்களையன்றி மற்ற உயிர்கள் பிறந்தது முதல் இறக்கும் வரை ஒரே தன்மையாகத்தான் வாழ்ந்து வருகின்றன. காக்கை, புறா, சிட்டு, சிங்கம், புலி முதலிய உயிர்கள் இறக்கும் வரை ஆணும் பெண்ணும் ஒன்றாகவேதான் இருந்து வருகின்றன. சாகும்வரை புணர்ச்சியும் இனப்பேறும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அவ்வுயிர்கள் இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் அந்தமில் இன்பத்து அழிவில் வீடும் பெறுவதில்லையா? இல்லை யெனில், மக்களுயிர்க்கு மட்டும் அது என்ன அவ்வளவு இன்றியமையாதது? உயிர்கள் எல்லாம் ஒரே தன்மையுடை யனவா, ஏற்றத்தாழ்வான வெவ்வேறு தன்மையுடையனவா? இனி, உயிர்கள் எல்லாம் வீடு பெற்றே வருகின்றன என்று வைத்துக் கொள்வோம். உயிர்கள் மொத்தம் எத்தனை? உலகந் தோன்றியதிலிந்து, அதாவது முதன் முதல் கடவுளால் படைக்கப் பட்டதிலிருந்து இதுவரை எத்தனை உயிர்கள் வீடு பெற்றுள்ளன? அவ்வாறு வீடுபெற்று உயிர்க்கீடாக, உயிர்கள் குறையாமலிருக்க அவ்வப்போது கடவுள் புதுப்புது உயிர் களைப் படைத்துக் கொண்டே வருகிறாரா இல்லையா? இல்லையெனில், உயிர்கள் குறைந்திருப்பதற்கு மாறாக, அதிகமாகிக் கொண்டல்லவோ வருகின்றன? வீடு பெறுவதற் குரிமையுடைய மக்களை மட்டும் எடுத்துக்கொண்டால் ஆண்டுதோறும் கோடிக்கணக்காகப் பெருகிக் கொண்டல்ல வோ வருகின்றன. படைத்துக்கொண்டே வருகிறார் எனில், புதிதாக உயிர்களைப் படைத்து அவற்றைப் பலவாறு துன்புற்று வீடடையச் செய்தல் வீண் வேலையன்றோ? புதிய உயிர்களைப் படையாமல் இருந்தால் கொஞ்ச காலத்தில் எல்லா உயிர்களும் வீடு பெற்றுவிட்டால், படைத்தல், காத்தல், அழித்தல் செய்யும் மும்மூர்த்திகளின் வேலையும், அதற்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியும் இல்லாகுமல்லவா? முதற்கடவுளும் ஒரு தொல்லையும் இல்லாமல் சும்மா இருப்பதோடு, வீட்டுலகைப் பாதுகாக்கும் பொறுப்பும் இல்லாமலிருப்பாரல்லவா? உயிர் களைப் படைப்பதும், அவை பலபிறப் பெடுத்துழன்று முடிவில் யோக ஞானங்களெய்தி வீடு பெறும்படி செய்வதும் கடவுளுக்கு ஒரு பொழுது போக்கு எனின், உயிர்களை அவ்வாறு அல்லலுறும் படி செய்தல் கடவுள் என்னும் பெயருக்கு ஏலாத இரக்கமற்ற தன்மை யோடு, சிறுபிள்ளைத்தன மாகவுமன்றோ உள்ளது? இவ்வளவு காலமாய் எத்தனை உயிர்கள் வீடு பெற்றுள்ளன? முதன்முதல் படைத்த உயிர்களில் இன்னும் எத்தனை வீடு பெறாமல் உள்ளன? அவை யெல்லாம் வீடுபெற இன்னும் எத்தனை காலம் பிடிக்கும்? இப்போது மண்ணுலகம், வானுலகம், நரகவுலகம் ஒவ்வொன்றிலும் உள்ள உயிர்கள் எவ்வெத்தனை? "நூறு கோடி பிர்மர்கள் நொங்கினார் ஆறு கோடிநா ராயணர் அங்ஙனே" (சுந்தரர்) என மும்மூர்த்திகளில் இருமூர்த்திகள் பிறப்புக் கணக்கை அறிந்து கூறினவர்க்கு இது தெரியாதா என்ன? இன்றியமை யாத இக்கணக்கையேன் கூறவில்லை? இத்தகைய ஐயவினாக்கள் எழுமன்றோ? வீடு பேறு என்பதும், வீடு என்பதும், அது `சிந்தையு மொழியும் செல்லா நிலைமைத்து' என்பதும் கற்பனைப் பேச்சே யாகும். திருக்குறளுக்கும் வீட்டுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. வினை, பிறப்பு, வீடு, இந்திரன் முதலிய இறையவர் பதங்களை யடைதல், நரகத்தை யடைதல், பிறப்பறுத்தல், வீடு பெறுதல் என்பன வெல்லாம் ஒன்றுக்கொன்று முரணான விளங்காப் பேச்சுக்களேயன்றிப் பயனுடைய பேச்சல்ல. குறளுக்கும் இப்பேச்சுக்கும் எத்தகைய தொடர்புமில்லை. பரிமேலழகரின் வலிந்து புகுத்தலேயாகும். 5. கடவுள் திருக்குறள் மக்கள் வாழ்க்கைமுறை கூறும் நூலேயன்றிச் சமயக் கருத்துக்கள் எதுவும் குறளில் இல்லை. அவ்வாறே கடவுளைப் பற்றிய பேச்சும் திருக்குறளில் இல்லை. கடவுள் என்ற சொல்லே திருக்குறளில் வரவில்லை. திருக்குறளின் முதலதிகாரத் திற்குக் `கடவுள் வாழ்த்து' எனப் பெயரிட்டதே உரையாசிரியர் களாவர். வள்ளுவர் ஓரதிகாரத்தில் வரும் சொல்லையோ, சொற்றொடரையோ கொண்டே அவ் வதிகாரத்திற்குப் பெயரிட் டுள்ளனர். முதலதிகாரத்தில் கடவுள் என்னும் சொல் வரவில்லை. அம்முதலதிகாரம் கடவுள் வாழ்த்தொன்றுங் கூறவில்லை. மக்களின் உயர்ந்த குணங்களையே ஆண்பாலாகக் கொண்டு கூறியுள்ளார் வள்ளுவர். திருக்குறள் குழந்தையுரை நோக்கி யுணர்க. பரிமேலழகர் முதலதிகாரத்திற்குக் கடவுள் வாழ்த்து எனப் பெயரிட்டதோடு நில்லாது, அம் முதலதிகாரம் ஆரியக் கடவுள்களான மும்மூர்த்திகளின் வாழ்த்தெனவும் துணிந்து கூறுகிறார். `கடவுள் வாழ்த்து - கவி தான் வழிபடு கடவுளையாதல், எடுத்துக்கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல், அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை யென வறிக. என்னை? சத்துவ முதலிய குணங்களான் மூன்றாகிய உறுதிப் பொருட்கு, அவற்றான் மூவராகிய முதற்கடவுளோடு இயை யுண்டாகலான். அம்மூன்று பொருளையுங் கூறலுற் றார்க்கு அம் மூவரையும் வாழ்த்துதல் முறைமையாகலின், இவ் வாழ்த்து அம் மூவர்க்கும் பொதுப்படக் கூறினாரென வுணர்க. வழிபடுகடவுள் - ஒருவன் நாடோறும் வழிபடுங் கடவுள். அதாவது அவனது சமயக் கடவுள். ஏற்புடைக் கடவுள் - நூலில் கூறும் பொருளுக் கேற்ற கடவுள். முக்குணம் - சத்துவம், இராசதம், தாமதம் என்பன. அக்குணங்களால் மூன்றாகிய உறுதிப் பொருள் - அறம் பொருள் இன்பம் என்பன. அவற்றான் மூவராகிய முதற்கடவுள் - அயன், அரி, அரன் என்பார். வள்ளுவர் இம் மூவர்க்கும் பொதுப்படக் கூறினாரெனக் கொண்டு அதற்கேற்பவே அவ் வதிகாரக் குறள்களுக்குப் பொருள் எழுதியுள்ளார். வள்ளுவர் காலத் தமிழர்கள் இம் மும்மூர்த்திகளைக் கடவுளாகக் கொள்ளவு மில்லை; வாழ்த்தி வழிபடவுமில்லை. இவர் ஆரியப் புராணக் கடவுள்களேயாவர். இவர்களைப் பற்றிய குறிப்பொன்றும் அப் பத்துக் குறளிலும் இல்லை. ஏன்? ஆயிரத்து முந்நூற்று முப்பது குறளிலுமே வராதிருக்க, அம் மூவரையும் வாழ்த்துவ தாகக் கூறுதல் பொருந்தாவுரையே யாகும். சமயச் சார்பான, அம் முக்குணங் கட்கும் அறம் பொருளின்பங்கட்கும் என்ன தொடர்பு? இன்பத்தைத் தாமத குணத்தாலாகிய தென்பது சிறிதும் பொருந்தாது. 6. ஊழ் பரி : `ஊழாவது - இருவினைப் பயன் செய்த வனையே சென்றடைதற் கேதுவாகிய நியதி. ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம். நியதி, விதி என்பன ஒரு பொருட் கிளவி. இனிப் பொருளும் இன்பமும் கூறுவார் அவற்றின் முதற்காரண மாகிய ஊழின் வலி கூறுகின்றார்'. நல்வினை தீவினையாகிய இருவினைப்பயனும் அவற்றைச் செய்தவனையே சென்றடைதற்குக் காரணமானது ஊழ் எனப்படும். பொருளின்பங்களுக்கு ஊழே முதற்காரணம் என்பதால், ஊழின்படியே பொருளின்பங்களை அடைய முடியும் என்பதாம். ஓருயிரைப் படைக்கும்போதே படைத்தவன் இன்னின்ன காலத்தே இன்னின்ன இன்ப துன்பம் அநுபவிக்க வேண்டும் என விதிக்கும் விதியே ஊழ். ஊழின்படியே எல்லாம் நடக்கின்றன. நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. அன்றெழுதினவன் அழித்தெழுதவா போகிறான் எனப் பொது மக்களும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இது ஊழ்வினை, தலைவிதி, தலையெழுத்து எனவும் படும். ஊழ் - கடவுள் கட்டளை என்பதாம். இது தப்பான கருத்தேயாகும். ஊழின்படியே எல்லாம் நடக்குமானால் செய்வன செய்து தவிர்வன தவிர வேண்டிய தில்லை யன்றோ? எல்லாம் ஊழின்படியே நடைபெறுகின்ற தெனில், ஒன்றை யடையச் செய்யும் முயற்சிகளும், இரத்தல் இழிவென்பதும், குற்றங்கள் செய்யக்கூடாவென்பதும், நல்லவராக நடந்துகொள்ள வேண்டுமென்பதும் பயனில் கூற்றாக வன்றோ முடியும்? ஊழின்படியே ஒருவன் திருடு கிறான், கொலை செய்கிறான், அவன் எப்படிக் குற்றவாளி யாவான்? குற்றஞ் செய்தோரைத் தண்டிப்பது, கொலையாற் கொடியாரை வேந்தொறுப்பது (550) ஊழை மீறிய செயலன்றோ? அவனைக் கொல்லவேண்டு மென்பது அவன் ஊழ். அப்படியிருக்க எப்படிக் கொலை செய்தவன் குற்ற வாளியாவான்? எனவே, இது சமயச் சார்பான கருத்தேயாகும். வள்ளுவர் கூறும் ஊழ் என்பது இத்தகையதன்று. ஊழ் - முறைமை, உலகியல் நிகழும் முறைமை; உலகியலின் இயற்கை நிகழ்ச்சி. அதாவது பொருளும் காலமும் செயற்படும் தகுதியும், சுற்றுச் சார்பின் தகுதியும், நமது எண்ணத்தின், முயற்சியின், செயலின் தகுதிக்கு ஒத்து வருதலும் ஒவ்வாது வருதலுமாம். ஒத்துவருதல் - ஆகூழ் எனவும், ஒவ்வாது வருதல் - போகூழ் எனவும்படும். செயற் படுதல் - நிகழுதல். ஊழ் - மக்களின் எண்ணம் முதலிய வற்றினுள் அடங்காமல் அப்பாற் பட்ட இயற்கையாக நிகழும் நிகழ்ச்சி; நமது எண்ணத்திற்கும் முயற்சிக்கும் செயலுக்கும் யாதொரு தொடர்பும் இல்லாமல் அதன் போக்கில் நிகழும் நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியின் போக்கில் நாம் செய்வன ஆகும். இது ஆகூழ். அதற்கு எதிரிடையாகச் செய்வன ஆகா, இது போகூழ். ஒருவன் பனந்தோப்பிற்குப் பனம்பழத்திற்குச் செல்கிறான். பழம் விழுந்துகிடந்தால் எடுத்து வருவான். விழாமலிருந் தாலோ, அல்லது முன்னமே ஒருவன் வந்து எடுத்துச் சென்றிருந் தாலோ வெறுங்கையோடு திரும்புவான். திரும்பி வரும் வழியில் தொப்பொன்று ஒரு பழம் விழுந்தால் ஆவலோடு எடுத்துச் செல்வான். பழமெடுத்து வரும்போது பனைக்குடையவன் கண்டு பிடுங்கிக் கொண்டாலும் கொள்வான். `வந்துவிட்டுச் சும்மா போகிறாய் பாவம்! இந்தா' என அவன் தான் எடுத்துவந்த பழத்தில் ஒன்று கொடுத்தாலும் கொடுப்பான். பனம்பழம் கிடைக்காமல் வரும் வழியில் மாம்பழம் கிடைத்தாலும் கிடைக்கும். திருடனென்று பிடிபட்டாலும் படுவான். நாயோ, பாம்போ கடித்தாலும் கடிக்கும். வழியிலே இறந்தாலும் இறக்கலாம். ஒருவன் மாடு வாங்கச் சந்தைக்குப் போகிறான். அவன் குறித்துச் சென்ற தகுதியுள்ள மாடு சந்தைக்கு வந்திருக்காது. வந்திருந்தாலும் விலை இசையாது. விலை முடியும்போது மற்றொருவன் வாங்கிக் கொள்ளலாம். குறித்துச் சென்ற மாடு குறித்த விலையில் கிடைத்தாலும் கிடைக்கலாம். மாடு வாங்கப் போய் ஆடோ, எருமையோ வாங்கி வந்தாலும் வரலாம். திருட்டு மாட்டை வாங்கித் திருடனென்று பிடி பட்டாலும் பிடிபடலாம். மாடு முட்டி இறந்தாலும் இறக்கலாம். இவையெல்லாம் பொருளும் காலமும் செயற்படுந் தகுதியும், ஒருவன் எண்ணம், முயற்சி, செயல் இவற்றின் தகுதியும் ஒத்து வருதலும், ஒத்துவாராமையும் ஆகிய ஆகூழும் போகூழு மாகும். ஒருவனிடம் ஏதாவதொன்றை வேண்டி ஒருவன் செல்கிறான். அவன் அமைதியாக இருந்தால் அன்போடு இவனை வரவேற்பான். அன்பிருந்தால் வேண்டுவன செய்வான். அவன் ஏதோ மனக்க வலையுடன் இருந்தால் இவனைப் பார்க்க உடன்படான். உடன்படினும் கடுகடுத்துப் பேசுவான். வேண்டு வனவும் செய்யான். அல்லது உதவிசெய்ய முன்வரும் போது வேறொருவன் குறுக்கே வந்துதடுத்தாலும் தடுக்கலாம். அவனை உதவும்படி தூண்டினாலும் தூண்டலாம். இவன் விரும்பிச் சென்ற பொருள் அவனிடம் இல்லாதிருந்தாலும் இருக்கலாம். இவன் எண்ணிச் சென்ற காரியம் ஆகாமல் வேறொரு காரியம் ஆனாலும் ஆகலாம். இன்ன பலவெல்லாம் சுற்றுச் சார்பின் தகுதி, நமது எண்ணம் முயற்சி செயலின் தகுதிக்கு ஒத்துவருதலும் வாராமை யும் ஆகும். உலகியலின் இயற்கை நிகழ்ச்சியாகிய இவ் வுண்மையை அறியாது, எண்ணியது முடிந்தால் மகிழ்வதும், முடியாவிட்டால் வருந்து வதும் ஆகாது என அவ் வூழின் தன்மை கூறுகிறார் இவ்வதி காரத்தில். இதையே, "ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும் அன்றி யதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல்" எனக் கடவுள் செயலெனக் கொண்டு கூறினர் பிற்காலத்தார். ஈசன் செயல் என்றது தலைவிதி, தலையெழுத்து என்பதை யாகும். பொருளும் காலமும் தன் எண்ணம் முயற்சி செயலுக்கு ஒவ்வாத போது, எண்ணிய வெண்ணங் கை கூடவில்லையே, முயன்றும் பயனில்லாமல் போய்விட்டதே என்று வருந்து வதில் பயனில்லை. பொருளும் காலமும் தன் எண்ணம் முதலிய வற்றிற்கு ஒத்த தகுதியறிந்து ஒன்றைத் தொடங்கிப் பயன்பெற வேண்டும். இனி, ஒருவன் நல்லனவே செய்கிறான். ஒருவன் தீயனவே செய்கிறான். ஒருவன் எப்போதும் சோம்பலுடைய வனாகவே இருக்கிறான். ஒருவன் எப்போதும் சுறுசுறுப் பாகவே இருக்கிறான். விடாப்பிடி, விட்டுக்கொடுத்தல், முரட்டுத்தனம், எளிமைத்தனம், விருப்பு, வெறுப்பு, ஒழுக்கம், இழுக்கம், வாய்மை, பொய்மை, தன்னலம், பொதுநலம், பொறாமை, ஆசை, அடக்கம் அன்பு, அமைதி, ஈகை, இவறல், நட்பு, பகை ஆகிய இன்ன பலவெல்லாம் மக்களின் உடலமைப்புக் கேற்றவாறு அமையும் தனிப்பட்ட குணங்களாகும். இது பிறவிக் குணம், இயற்கைக் குணம் எனப் படும். இக்குணமும் உலகியலின் இயற்கை நிகழ்ச்சியாகிய ஊழுக்குத் துணை செய்யும் இவ் வூழ் மக்களின் இயற்கைக்கு அப்பாற்பட்டதாகும். இவ் வதிகாரத்தின் 5-ஆம் குறளில் பொருளும் காலமும் செயலும் சுற்றுச்சார்பும், 3-இல் சுற்றுச்சார்பும் இயற்கைக் குணமும் அமைதல் காண்க.  7. மாறுபட்ட உரை பரிமேலழகர் பெரும்பாலும் தமது கொள்கையை வலிந்து புகுத்துதலே யன்றிப் பல குறட்பாக்களுக்கு ஆசிரியர் கருத்துக்கு மாறாகவும் உரை யெழுதியுள்ளார். உள்ளபடியே ஆசிரியர் கருத்துக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் மாறுபட்ட உரையைத் தெரிந்துகொள்ளுதல் இன்றியமையாததாகும். 1. "சிறப்பீனும் செல்வமு மீனும் அறத்தினூஉங் காக்க மெவனோ வுயிர்க்கு." (31) சிறப்பு ஈனும் - சிறப்பையும் கொடுக்கும், செல்வமும் ஈனும்- செல்வத்தையும் கொடுக்கும், அறத்தின் ஊங்கு - ஆதலால் அறத்தை விட, உயிர்க்கு ஆக்கம் எவன் - மக்களுக்கு வேறு சிறப்பு என்ன? ஒன்றுமில்லை. சிறப்பு - மதிப்பு. பரி : `சிறப்பு ஈனும் - வீடு பேற்றையும் தரும், செல்வமும் ஈனும் - துறக்க முதலிய செல்வத்தையும் தரும், உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது? எல்லாப் பேற்றினும் சிறந்தமையின் வீடு சிறப்பெனப்பட்டது. துறக்கம் - சுவர்க்கம், வானுலகம். `அறன்வலி யுறுத்தல்' என்னும் அதிகாரத்தில் வீட்டுக்கும் துறக்கத்திற்கும் இடமேது? அறம் செய்வன தவிர்வன என்பதை மறந்தார் போலும்! 2. தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. (212) தாள் ஆற்றித் தந்த பொருளெல்லாம் - ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம், தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு - தகுதியுடையார்க்கு உதவுவதற்காகவே. தாள் - முயற்சி. தக்கார் - ஓயாது உடல் தேய உழைத்தும் உண்ண உணவும், உடுக்க உடையும், உறையக் குடிசையும் இல்லாத ஏழைப் பாட்டாளி மக்கள். உலக வாழ்க்கையின் அச்சாணி போன்ற ஏழைப் பாட்டாளி மக்களே ஏற்கத் தக்கவராவர். அன்னார் ஓயா உழைப்பால் வந்ததே செல்வரின் செல்வமாதலான் அப் பாட்டாளி மக்களுக்குக் கொடுத்தலே செல்வர் கடமையாகும். வேளாண்மை - உதவி. பரி : `தக்கார்க்கு - தகுதியுடையார்க்காயின், தாள் ஆற்றித் தந்த பொருளெல்லாம் - முயறலைச்செய் தீட்டிய பொருள் முழுவதும், வேளாண்மை செய்தற் பொருட்டு - ஒப்புரவு செய்தற் பயத்தவாம்'. தகுதியுடைய செல்வர்களேதான் ஒப்புரவு செய்வா ராகலின், தக்கார் - தகுதியுடைய செல்வர் எனக் கொள்வதில் பயன் இல்லை. தக்கார்க்குக் கொடுத்தற் பொருட்டு என்பதே நேர் பொருள்கோள். 3. நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு. (234) நிலவரை நீள்புகழ் ஆற்றின் - நிலமுழுவதும் ஒருவன் நெடிய புகழைச் செய்வானாயின், புத்தேளுலகு புலவரைப் போற்றாது - வானுலகம் தேவர்களைப் போற்றாது. புலவர் - தேவர். தேவருலகம் அங்கு வாழும் தேவரைப் போற்றாது மிகுபுகழுடைய இவனையே போற்றும் என்பதாம். புகழுடையோரை வெளியுலகும் புகழும். பரி : `புத்தேள் உலகு புலவரைப் போற்றாது - புத்தேளுலகம் அவனை யல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது. புகழுடம்பான் இவ்வுலகும் புத்தேளுடம்பான் அவ் வுலகும் ஒருங்கெய்தாமையின். அவன் (புகழுடையவன்) இரண்டுலகும் ஒருங்கெய்துவன்'. புலவர் - ஞானிகள் எனவும், அவர் வானுலகை அடைவர் எனவும் கூறுதல், ஞானிகள் வீடடைவர் என்பதற்கு மாறுகொளக் கூறலாம். இங்கே ஞானிகளுக்கு யாதொரு தொடர்பும் இல்லை. ஓரூரில் புதிதாகக் குடியேறினவன், அவ்வூர்த் தலைவனின் செல்வாக்குப் பெற்றால், அவ்வூர் மக்கள் ஊர்த் தலைவனைப் போற்றாது அப் புதியவனையே போற்றுதல் இன்றுங் காணலாம். மாவலியின் புகழால் தேவர்கள் அவனைப் புகழத் தலைப்பட்டதனாலேயே இந்திரன் பொறாமை கொண்டு அவனைக் கொல்வித்தான் என்பது புராணம். 4. தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை அஃதிலார் மேற்கொள் வது. (262) தவமும் தவமுடையார்க்கு ஆகும் - துறவுபூண்டு நோன்பு நோற்றலும் இல்லற வொழுக்கங்களை நன்கு கடைப் பிடித்து ஒழுகியவர்க்கே முடியும், அஃதிலார் அதனை மேற் கொள்வது அவம் - அம் முற்றவம் இல்லாதவர் அதை மேற்கொள்வது வீணாகும். இல்லறவொழுக்கங்களை நன்கு கடைப்பிடித்து ஒழுகாதவர் மேற்கொண்டு செய்யும் தவங்கள் தப்புமாகை யால், `தவமும் தவமுடையார்க்காகும்' என்றார். இல்லறம் நன்கியாற்றித் துறவறம் பயில வேண்டும். இல்லையேல், இல்லறத்தாசை யுண்டாகும். பரி : `தவமும் தவமுடையார்க்கு ஆகும் - பயனே யன்றித் தவந்தானும் உண்டாவது முற்றவ முடையார்க்கே, அதனை அஃதிலார் மேற்கொள்வது அவம் - ஆகலான், அத் தவத்தை அம் முற்றவ மில்லாதார் முயல்வதும் பயனின் முயற்சியாம்'. `பயனே யன்றி' என்பதால் முற்றவம் என்பது முற்பிறப்பில் செய்த தவத்தைக் குறிக்கும். முற்பிறப்பில் தவம் செய்த வர்க்கே இப் பிறப்பில் தவம் ஆகும் என்பது, முற்றவமில்லார் முயலுதல் வீண் என்று, அதிகாரத்தோடு மாறுபடுதல் காண்க. 5. வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் மீண்டு முயலப் படும். (265) வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் - விரும்பியவற்றை விரும்பியபடியே அடைதலால், செய்தவம் மீண்டும் முயலப் படும் - செய்கின்ற தவம் மேன்மேலும் முயற்சிக்கப்படும். வேண்டிய வேண்டியாங் கெய்தல் 42, 264-ஆம் குறள் - குழந்தை யுரை பார்க்க. (துறவிகளுக்கு இல்லறத்தார் வேண்டிய உதவி செய்யப் பெறுவதால் அவர் எண்ணியதைச் செய்ய வல்லவரா கின்றனர். 264 குழந்தை) பரி : `வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் - முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால், செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்யப்படுவதாகிய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான் முயலப்படும். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா வென்பதாம். மேற்கதி - உயர்பிறப்பு. இது தவத்தின்கண் சோர் வில்லாமல் முயலவேண்டும் என்பதேயன்றி மறுமைப்பயன் குறித்ததன்று. 264-ஆம் குறளுக்கு இது மாறுபட்ட கருத் தாகும். தவம் செய்வது இம்மையிலேயே யாகலான் `ஈண்டு' என்ற பாடம் பயனில்லதாகும். 6. எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. (281) எள்ளாமை வேண்டுவான் என்பான் - பிறரால் இகழா மையை விரும்புவோ னென்பான், எனைத் தொன்றும் கள்ளாமை தன் நெஞ்சு காக்க - யாதொரு பொருளையும் திருட நினையாதபடி தன் நெஞ்சைக் காக்கக் கடவன். திருடுவோனை உலகத்தார் இகழ்வர். பரி : எள்ளாமை வேண்டுவான் என்பான் - வீட்டினை இகழாது விரும்புவான் இவனென்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான், எனைத்தொன்றும் கள்ளாமை தன் நெஞ்சு காக்க - யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாமை தன் நெஞ் சினைக் காக்க. `வீட்டினை இகழ்தலாவது - காட்சியே அளவையாவ தொன்றும், நிலம் நீர் தீ வளி யெனப் பூதம் நான்கே யென்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றிப் பிரிவான் மாய்வ தாய உடம்பின் கண்ணே அறிவு மதுவின் கட் களிப்புப்போல வெளிப்பட்டு அழியு மென்றும், இறந்தவுயிர் பின் பிறவா தென்றும், இன்பமும் பொருளும் ஒருவனாற் செய்யப்படுவன வென்றும் சொல்லும் உலோகாயத முதலிய மயக்க நூல் களைத் தெளிந்து, அதற்கேற்ப வொழுகுதல்'. இங்கு வீடு என்னும் சொல்லுக்கு இடமே இல்லை. மேலும், இது பிற சமய மறுப்புரையேயன்றி இக் குறளின் விரிவுரையன்று. கள்ளத்தனத்தை இகழுதல் உலகோரே யன்றித் தவத்தோரன்று. 7. நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாம் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை. (325) நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - தீமை நிலைக்கு அஞ்சி அத்தீமையை விட்டவர்கள் எல்லோரினும், கொலை யஞ்சிக் கொல்லாமை சூழ்வான்தலை - கொலைப் பழிக்கு அஞ்சிக் கொல்லாமையாகிய அறத்தைக் கருதுபவன் முதன்மை யானவன். தீமைநிலை - தீமை புரிந்து வாழுநிலை. தீமைகளுக்கு அஞ்சி அவற்றை விட்டவர் பலரினும், கொலைக் கஞ்சிக் கொலையை விட்டவரே சிறந்தவராவர். `ஒழுக்கத்து நீத்தார்' (21) என்னும் குறளுரை பார்க்க. பரி : `நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறப்பு நின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப் பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தா ரெல்லாருள்ளும், பிறப்பு நின்ற நிலையாவது - இயங்குவ, நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்ப மென்ப தொன்றின்றி உள்ளன வெல்லாம் துன்பமே யாய நிலைமை'. நிற்ப - மரவகை. மரஞ்செடி கொடிகளுக்குத் துன்ப நிலை தெரியுமெனின், அவையேன் யோக ஞானங்களெய்திப் பிறப்பறுக்க முயலுவதில்லை! இது, உலக வாழ்வே துன்பநிலை யென்னும் சமயக் கருத்தேயாகும். 8. நன்றாகு மாக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை. (328) நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் - வேள்விக் கண் கொன்றால், நன்மையைத் தரும் செல்வம் பெரிது ஆகும் என்று பிறர் கூறினும், கொன்று ஆகும் ஆக்கம் சான்றோர்க்குக் கடை - ஓர் உயிரைக் கொல்வதால் வரும் செல்வம் பேரறிஞர்க்கு இழிந்ததாகும். நன்று ஆகும் ஆக்கம் - நன்மையைத் தரும் வேள்விப் பயன். இது வேள்வி மறுப்பு. பரி : `நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் - தேவர் பொருட்டு வேள்விக்கண் கொன்றால் இன்பமிகும் செல்வம் பெரிதாமென்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும், சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை - துறவா னமைந்தார்க்கு ஓருயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை. இன்ப மிகுஞ் செல்வமாவது - தாமும் தேவராய்த் துறக்கத்துச் சென்றெய்தும் செல்வம்'. இல்லறத்தோர் வேள்வி செய்தல் உண்டெனக் கூறுதல் ஆரியக் கொள்கையே யாகும். தமிழர்க்கு வேள்வியுடன் பாடன்று. வேள்விப்பயன் தேவனாகித் துறக்கமடைத லென்பதும் அக்கொள்கையே. பரி : `கொலை வினையர் (329) என்றதனால், வேள்விக் கண் கொலையன்மை யறிக'. `வேள்விக்காகவே பிரமனால் படைக்கப் பட்டிருக்கின்றன. அந்த வேள்வி செய்தால் உலகமெல்லாம் நன்மை யடைகின்றது. ஆகையால், வேள்வியில் செய்யும் உயிர்க்கொலை கொலையாக மாட்டாது. (மனு, அ-5. சு-39) என்பதற்கு மாறுபட்டதாகும். 10. பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (350) பற்றற்றான் பற்றினைப் பற்றுக - பற்றற்றவனது அன்பை மனத்துட் கொள்க, பற்றுவிடற்கு அப்பற்றைப் பற்றுக - ஆசையை ஒழித்தற்கு அவ்வன்பையே உறுதியாகக் கொள்க. முற்றத் துறந்தவரது அன்பே பற்றறுதற்குக் ஏதுவாகும். பழக்கம் பற்றறற்குக் காரணமாம். பரி : 'பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறி யென்று மனத்துட் கொள்க, அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு - கொண்டு, அதன்கண் உபாயத்தை மனத்தாற் செய்க, விடாது வந்த பற்று விடுதற்கு. அதன்கண் உபாயமென்றது - தியான சமாதிகளை. விடாதுவந்த பற்றென்பது - அநாதியாய் வரும் உடம்பின் பற்றினை'. அநாதி - தொன்று தொட்டு. இறைவன் ஏன் பற்றற வேண்டும்? வீடடைவதற்கா? பற்று அற்றான் பற்று என்பதற்கு - இறைவன் ஓதிய வீட்டு நெறி என்பது பொருந்தாவுரையே யாகும். உடம்பிற்பற்று - உடம்பின் மீதுள்ள பற்று. இங்குப் பொருட் பற்றே யன்றி உடம்பிற் பற்றன்று. உண்மைத் துறவிகளிடம் அன்பு கொள்ளுதல் பற்றறுதற்குக் காரணம் ஆகும் என்பதே கருத்தாகும். 11. பொருளல் லவற்றைப் பொருளென் றுணரும் மருளானா மாணாப் பிறப்பு. (351) பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் - மெய்ப்பொரு ளல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று எண்ணும் மயக்க அறிவினையுடையவன், மாணாப் பிறப்பு ஆகும் - மாண்பில்லாத பிறப்பினன் ஆவான். மருள் - மயக்க வுணர்வு. பொய்ப் பொருளை மெய்ப் பொருளென்று உணர்பவன் இழிந்தவனாவான். பரி : `பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம்-மெய்ப்பொரு ளல்லாதவற்றை மெய்ப் பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம், மாணாப் பிறப்பு - இன்ப மல்லாத பிறப்பு. அவ் விபரீத வுணர்வாவது - மறுபிறப்பும், இரு வினைப் பயனும், கடவுளும் இல்லையெனவும், மற்றுமித் தன்மையவும் சொல்லும் மயக்க நூல் வழக்குகளை மெய்ந் நூல் வழக்கெனத் துணிதல். நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறப்பினுமுள்ளது துன்பமே யாகலின், `மாணப் பிறப்பு' என்றார்', இது பிற மத நூற் கொள்கை மறுப்பே யாகும். மயக்க வுணர்வான் துன்பப் பிறப்பு உண்டாகு மென்பது சமயக் கருத்து. நால்வகைப் பிறப்பினும் துன்பம் எனின், உலகத்தைக் கடவுள் எதற்காகப் படைத்தனர்? அல்லது இன்பப் படைப் பாகவே படைத்திருக்கலாமே? இங்கு ஒன்றை மற்றொன்றாக உணரும் மயக்க வுணர்வு பற்றியதே யன்றி பிறப்புக்கு இங்கு இடமில்லை. மயக்கவுணர்வினன் துறவுக்குத் தகுதி யுடையவ னல்லன் என்பதே நேர்பொருளாகும். 12. முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும். (388) முறை செய்து காப்பாற்றும் மன்னவன் - குற்றஞ் செய்தாரைத் தண்டித்து முறை செய்து, நாட்டு மக்களைக் காக்கும் அரசன், மக்கட்கு இறை என்று கருதப்படுவான் - தலைவன் என்று மக்களால் மதிக்கப்படுவோனே நல்ல அரசனாவான். பரி : `முறை செய்து காப்பாற்று மன்னவன் - தான் முறை செய்து பிறர் நலியாமல் காத்தலையும் செய்யும் அரசன், மக்கட்கு இறை யென்று வைக்கப்படும் - பிறப்பான் மகனே யாயினும், செயலான் மக்கட்குக் கடவுளென்று வேறு வைக்கப்படும்'. தான் முறை செய்து பிறர் நலியாமல் என்பது இரு வகைப்பட்ட பொருளே இறை - கடவுளெனில், இறை மாட்சி - கடவுளின் மாட்சியா? முறை செய்து காப்பாற்று வோனை மக்கள் தம் தலைவனாகக் கொள்வர் என்பதே நேர்பொருள். 13. செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. (413) செவியுணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினையுடையார், நிலத்து அவியுணவின் ஆன்றா ரோடு ஒப்பர் - நிலத்தில் குறைந்த உணவினை யுடைய நிறைந்த அறிவினை யுடையாரை யொப்பர். அவிதல் - குறைதல். ஆன்றோர்கள் நிறையுணவினை விரும்பாது குறையுணவுண்டு, புலனடக்கிப் புத்தொளி பெறுவா ராகையால், `அவியுணவின் ஆன்றோர்' என்றார். கேள்விச் செல்வமுடையோர் ஆன்றோர் போல மதிக்கப் படுவர். பரி : நிலத்து அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர் - நிலத்தின் கண்ண ராயினும் அவியுண வினையுடைய தேவரோ டொப்பர். துன்ப மறியாமையால் தேவரோடொப்பர் என்றுங் கூறினார்'. `அவி சொரிந்து' (259) என்னும் குறளில் வள்ளுவர் வேள்வியை மறுப்பதால், அவியுணவினையுடைய தேவர் சிறந்த வரெனக் கூறார். தேவர்கள் பொறாமையே உருவானவராகை யால் துன்பமறியாதவர் என்பது எங்ஙனம் பொருந்தும்? 14. உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். (442) உற்ற நோய் நீக்கி - தனக்கு உற்ற துன்பத்தை நீக்கி, உறாமை முன் காக்கும் பெற்றியார் - அது பின்னும் உறாமல் முன்னறிந்து காக்கும் தன்மையரை, பேணிக்கொளல் - விரும்பித் துணையாகக் கொள்க. வந்த துன்பத்தை நீக்கி, அது பின்னர் வராமல் காக்கும் பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும். பரி : `உற்ற நோய் நீக்கி - தெய்வத்தானாக, மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறறிந்து நீக்கி, உறாமை முற்காக்கும் பெற்றியார் - பின் அப் பெற்றியன வாரா வண்ணம் முன்னறிந்து காக்கவல்ல தன்மையினை யுடையாரை, பேணிக்கொளல் - அரசன் அவர் உவப்பன செய்து துணைக்கொள்க. தெய்வத்தான் வருந் துன்பங்களாவன - மழையின தின்மை மிகுதிகளாயினும், காற்றுத் தீப் பிணியென் றிவற்றானும் வருவன. அவை கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யுஞ் சாந்திகளான் நீக்கப்படும்'. இது ஆரியக் கொள்கை, வருணசெபம் செய்தல் போன்ற பித்தலாட்டங்களை அறிக. நோய் என்பதற்குத் துன்பம் என்னும் பொருளிருக்க, இவ்வாறு கூறுதல் மாறுகொளக் கூறுதலே யாகும். `ஆகவே, புரோகிதரையும் அமைச்சரையும் கூறியவா றாயிற்று' வள்ளுவர் புரோகிதரென்னும் பெயரையோ, கருத்தையோ கூறாமலிருக்க, இங்கு புரோகிதரைப் பெரியோ ரெனல் பொருந்தாது. 15. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். (543) அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - அறவோர் செய்த நூலுக்கும், அந்நூலில் கூறப்படும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்றது, மன்னவன் கோல் - அரசனது செங்கோல். அரசன் முறை செய்யாவிட்டால் அறவோரின் நூல்களைப் போற்றுவோரும், அறத்தைக் கடைப்பிடித்து நடப்பாரும் நாட்டில் குறைவாராதலால், அவ் விரண்டிற்கும் அடிப்படையாய் நிற்பது மன்னவன் கோல் என்றார். அறவோர் நூல் செய்யவும் முடியாதென்பதாம். பரி : `அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - அந்தணர்க் குறித்தாய வேதத்திற்கும், அதனாற் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது, மன்னவன் கோல் - அரசனாற் செலுத்தப்படுகின்ற செங்கோல்'. வேதமும் அதனாற் கூறப்படும் அறமும் தமிழர்க் கேலாமையின் இவ் வுரை பொருந்தாது. வேதங்கள் கூறும் அறங்கள் என்ன? வேள்விகள் செய்யும் முறையும், பகைவரைக் கொல்ல வேண்டும் என்னும் வேண்டுகோளுந்தானே? இவற்றைத் தமிழரசர் எதற்காகக் காக்க வேண்டும்? வேதமும் அறமும் அநாதி என்பதும் பொருந்தாக் கூற்றே. 16. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின். (560) காவலன் காவான் எனின் - அரசன் முறை செய்யா னாயின், ஆபயன் குன்றும் - அவன் நாட்டின்கண் வாழும் மக்களது முயற்சியால் ஆகும் பலன் குறையப் பெறும், அறுதொழிலோர் நூல் மறப்பர் - முதன்மையான தொழிலுடையோர் தம் தொழிலுக் குரிய அறிவை மறந்து விடுவர். ஆபயன் - வினைத்தொகை. ஆகின்ற பயன். ஆ - ஆதல். அறுதொழில் - அறுத்த தொழில். அறுத்தல் - அறுதி செய்தல், வரையறை செய்தல், இன்றியமையாத சிறந்த தொழிலென அறுதி செய்யப்பட்ட தொழில்கள். அவை உழவு, வாணிகம், நெசவு, தச்சு, கொல் முதலிய முதன்மையான தொழில்கள். கொடுங் கோலரசன் நாட்டில் அமைதியிராதாகையால் இத்தொழில்கள் ஒழுங்காக நடைபெறாவென்பதாம். மறத்தல் - முயன்று செய்யாமை. நூல் - அத்தொழில்களின் நுட்ப அறிவை யுணர்த்திற்று. அறு தொழில் - வினைத்தொகை. பரி : `காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானயின், ஆபயன் குன்றும் - அறனில்லாத அவனாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அறுதொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர். பசுக்கள் பால் குன்றியவழி அவிஇன்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்ப ஓதாமையானும் வேள்வி நடவாதாம். வானம் பெயலொல்லா என்பதாயிற்று? அறனில்லாதவன் நாட்டுப் பசுக்கள் பால் குறையுமென்பது புராணக் கூற்று. அவி - வேள்வித்தீயில் ஊற்றும் நெய் முதலியன. அவி - தேவருணவு. வேள்வியால் மழை பெய்யும் என்பது ஆரியக் கொள்கை. பிராமணர் வேதமோதல் தமிழ் மரபன்று. 17. ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்ன ரிழுக்கு. (716) வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - விரிந்த நூற்பொருளைக் கேட்டு அறியவல்லவர் முன்னிலையில் குற்றமுண்டாகும்படி சொல்லுதல், ஆற்றின் நிலை தளர்ந்து அற்று - நல்வழியில் நின்றவன் அதினின்றும் தவறியது போலும். நல்லவழியில் நடந்தவன் தவறியது போலும் நல்லோ ரவையில் பொல்லாத சொல்லுதல். பரி : `ஆற்றின் நிலை தளர்ந்தற்று - வீடெய்தற் பொருட்டு நன்னெறிக்கண் நின்றானொருவன் அந்நெறியினின்றும் நிலை தளர்ந்து வீழ்ந்தா லொக்கும், வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - அகன்ற நூற்பொருளை யுட்கொண்டு அவற்றின் மெய்ம்மை யுணர வல்லா ரவைக்கண் வல்லானொருவன் சொல்லிழுக்குப் படுதல்'. ஆறு என்பதற்குத் துறவற நெறி என்பதும், வீடு என்பதும் வலிந்து கொண்ட பொருளே. 18. கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் நிலை. (786) கேடு அறியா - பயிர்நோய் முதலியவற்றால் கெடுதலை அறியாததாய், கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடு - ஓரிரு போகம் கெட்டதாயினும் வளங்குன்றாத நாட்டினை, நாட்டின் தலை என்ப - எல்லா நாடுகளிலும் முதன்மையான நாடென்று சொல்லுவர் அறிவுடையோர். ஒரு கெடுதலும் இன்றி விளையும் நாடே நன்னா டாகும். மழையின்மை, மிகுமழை, பயிர்நோய் முதலிய வற்றால் ஒன்றல்லது இரண்டு போகம் விளைவு கெட நேரினும், அதனால் உணவுத்தட்டுதல் உண்டாகாதபடி மிகுதியாக விளையும் நாடே சிறந்த நாடென்பார். `கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடு நாட்டின் தலை' என்றார். பரி : `கேடு அறியா - பகைவரால் கெடுதலறியாததாய், கெட்ட விடத்தும் வளங்குன்றாத நாடு - அரிதிற் கெட்ட தாயினும் அப்பொழுதும் தன் வளங்குன்றாத நாட்டினை, நாட்டின் தலை என்ப- எல்லா நாட்டினும் தலையென்று சொல்லுவர் நூலோர். கேடறியாமை - அரசனாற்றலானும், கடவுட் பூசை யறங்க ளென்றிவற்றது செயலானும் வரும்'. பகைவரான் அழிக்கப்படின் வளங் குன்றாமை கூடாமையின் இது பொருளன்று. கடவுட் பூசை அறங்களால் நாட்டிற் பகைவர் புகாரென்பது ஆரியக் கொள்கையே. 19. பொருளானா மெல்லாமென் றியா திவறும் மருளானா மாணாப் பிறப்பு. (1002) பொருளான் எல்லாம் ஆம் என்று - பொருளினால் எல்லாம் உண்டாகும் என்று அறிந்து அதனை ஈட்டி, ஈயாது இவறும் மருளான் - பிறர்க்குக் கொடுக்காமல் கையழுத்தம் செய்யும் மயக்கத்தினால், மாணாப் பிறப்பு ஆம் - அமைதி யில்லாத வாழ்க்கை யுண்டாகும். பிறப்பு - பிறப்பின் பயனாக வாழ்க்கையை யுணர்த் திற்று. பொருளால் எல்லாம் உண்டாகு மென்று ஈட்டிப் பிறர்க்குக் கொடாதவர் வாழ்க்கையில் அமைதியிருக்காது. பரி : `மாணாப் பிறப்பு ஆம் - நிறைதலில்லாத பேய்ப்பிறப்பு உண்டாகும். பேய்ப் பிறப்பு - உணவுகள் உளவாயிருக்கப் பசித்து வருந்தும் பிறப்பு'. இது, மறுபிறப்பென்னும் கொள்கை புகுத்தல். உலோபி கட்கு இத்தகைய பிறப்பு உண்டாகுமென்பது கற்பனையே. பிசினர்கள் வாழ்க்கையில் அமைதி இருக்காது என்பது நேர் பொருள். 20. கருவியுங் காலமும் செய்கையும் செய்யும் அருவினையு மாண்ட தமைச்சு. (631) செய்யும் அருவினையும் - செய்யப்படும் அரிய செயலும், கருவியும் - அதற்கு வேண்டுங் கருவியும், காலமும் - காலமும், செய்கையும் மாண்டது அமைச்சு - அச் செயலைச் செய்யும் வழியையும் பொருந்த எண்ணியறிய வல்லானே அமைச்ச னாவான். வினை, கருவி, காலம், அவ்வினை செய்யும் வழி ஆகிய நான்கினையும் பொருந்த எண்ணி யறிய வல்லவனே அமைச்சனாவான். கருவி - பொருளும் படையும். பரி : `கருவியும் - வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும், காலமும் - அதற்கேற்ற காலமும், செய்கையும் - அது செய்யுமாறும், செய்யும் அருவினையும் - அவ்வாற்றிற் செய்யப்படும் அரிய வினைதானும், மாண்டது அமைச்சு - வாய்ப்ப எண்ண வல்லவனே அமைச்சனாவான். 1. கருவிகள் - தானையும், பொருளும். 2. காலம் - அது தொடங்கும் காலம். செய்கை யெனவே, 3. அது தொடங்கு முபாயமும், 4. இடையூறு நீக்கி முடிவு போக்குமாறும் அடங்கின. சிறிய முயற்சியால் பெரிய பயன் தருவதென்பார் 5. அருவினை என்றார். இவை ஐந்தனையும் வடநூலார் மந்திரத்திற் கங்கமென்ப'. மந்திரம் - அமைச்சர் குழு. குடிகாத்தல், கற்றறிதல் (632) என்பவற்றைப் பிறர் இரு பகுதியாகப் பிரிப்பதை மறுக்கும் இவர். செய்கையை இரண்டாகப் பிரிக்கிறார். உபாயத்தோடு தொடங்கி இடையூறு நீக்கி முடிப்பது தானே செய்கை? 21. வண்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு. (632) வன்கண் - அஞ்சாமையும், குடிகாத்தல் - குடிகளைக் காத்தலும், கற்றறிதல் - அறநூல்களைக் கற்றறிதலும், ஆள்வினை யோடு - முயற்சியும் ஆகிய நான்கும், ஐந்துடன் மாண்டது அமைச்சு - ஐம்பொறித் தூய்மையுடன் திருந்த உடையவனே அமைச்சனாவான். வன்கண் முதலிய நான்கும் ஐம்பொறித் தூய்மையுடன் திருந்த உடையவனே அமைச்சனாவான். வன்கண் முதலிய நான்கனோடு ஐம்பொறித் தூய்மையும் உடையவனென்க. `ஆள்வினையோடு' என்னும் ஓடு - பிரிந்து கூடும் எண்ணோடு. பரி : `வன்கண் - வினை செய்தற்கண் அசைவின்மையும், குடிகாத்தல் - குடிகளைக் காத்தலும், கற்று அறிதல் - நீதி நூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும், ஆள்வினை- முயற்சியும், ஐந்துடன் மாண்டது அமைச்சு - மேற்சொல்லிய (631 குறளில்) அவ் வங்கங்கள் ஐந்துடனே திருந்த உடையவனே அமைச்சனாவான். இந்நான்கனையும் மேற்கூறியவற்றோடு (631) தொகுத்துக் கூறியது, அவையும் இவற்றோடு கூடியே மாட்சிமைப்பட வேண்டு தலானும், அவற்றிற்கு ஐந்தென்னும் தொகை பெறுதற்கும். இனி, இதனை ஈண்டெண்ணிய வற்றிற்கே தொகையாக்கி, குடிகாத்தல் என்பதனைக் குடிப்பிறப்பும், அதனை யொழுக்கத்தால் காத்தலு மெனப் பிரிப்பாரும், கற்றறிதலென்பதனைக் கற்றலும் அறிதலும் எனப் பிரிப்பாரு முளர்'. ஐந்துடன் என்பதற்கு 631-ல் வரும் ஐந்துடன் எனப் பொருள் கொண்டதே தப்பு. ஒரு குறளின் பொருள், அடுத்த குறளில் தொகை பெறுதலென்பது புதுமையேயாகும். மேலும் 631-ல் நான்கு பொருள்தான் கூறப்பட்டுள்ளன. இவர் வடநூற் கொள்கையை எண்ணி ஐந்தாக வலிந்து தொகை கொண்டதேயாகும். 22. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு மீண்டு. (18) வானம் வறக்குமேல் - மழை பெய்யாதாயின், ஈண்டு வானோர்க்கும் சிறப்பொடு பூசனை செல்லாது - இங்கு வரும் தேவர்களுக்கும் சிறப்பாக வழிபாடு நடவாது. வழிபாடு - முகமன் - அன்போடு வரவேற்றுப் போற்றுதல். வானோர் - அயல் நாடர். வடபுலத்தாரிற் காண்க. மழை பெய்யா தாயின் அன்போடு அயலாரைப் போற்றும் தமிழர் பண்பாடாகிய அச்செயலும் நடைபெறாதென்பதாம். பரி : `வானோர்க்கும் ஈண்டு சிறப்பொடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகின் மக்களாற் செய்யப்படும் விழாவும் பூசையும் நடவாது, வானம் வறக்குமேல் - மழை பெய்யாதாயின்'. `சிறப் பொடு' என்னும் ஓடு உடனிகழ்ச்சிப் பொருண்மைய தன்று. அன்பொடு விருந்து செய்தான் - அன்பாக விருந்து செய்தான் என்பது போல, சிறப்பாகப் பூசனை நடவாது என `ஆக' என்னும் பொருட்டு. சிறப்பு - திருவிழா எனவும், பூசனை - தினசரி நடக்கும் பூசை எனவும் கொண்டது உருவ வழிபாடு புகுத்தலேயாகும். கோயில்களில் நடக்கும் திருவிழாவையும், தினப் பூசையையும் வள்ளுவர் கூறியிருப்பாரானால், தமிழ் நாட்டில் உள்ள கோயில் கடவுளரை `வானோர்' என வேறு இடத்தில் உள்ளவராகக் கூறியிருக்க மாட்டார். மேலும், `ஈண்டு' என்னும் சொல் இங்குள்ள கோயிற் கடவுளரைக் குறிக்கும்போது வேண்டாச் சொல்லே யாகும். மழையின்றேல் அயல் நாடர்க்கு ஈண்டு சிறப்பாகப் பூசனை செல்லாது என்பதே நேர்பொருள். வள்ளுவர் காலத்தில் தமிழ்நாட்டில் உருவ வழிபாடு இருந் திருந்தால் கோயில் முதலியவற்றைக் கூறியிருப்பாரன்றோ? மழையின் இன்றியமையாமையை விளக்க, அயலாரை அன்போடு வரவேற்றுப் போற்றும் தமிழரது இன்றியமையாத பண்பாட்டின்மேல் வைத்துக் கூறியதேயாகும். முடிவுரை : பரிமேலழகர் உரையிலுள்ள அயற் கருத்துக்கள் முழுவதையும் ஆராயப் புகின், மணற் சோற்றில் கல்லாய்வதனோ டொக்கும். ஆனால், தமிழர் தனிச் சொத் தாகிய இன்பத்துப் பாலில் அவர் கையை வைக்கவில்லை. பொருட் பாலினும் அறத்துப் பாலிலேயே ஆரிய நஞ்சு அத்தனையுங் கலந்துவிட்டார். அதுதானே பிற்காலத் தமிழர் களை ஏமாற்ற வழி? திருக்குறள் அறத்துப்பாலில் கூறும் அறங்கள் தமிழர் அறங்கள் அல்ல. அவை ஆரியர் அறங்கள். ஆரியர் அறங்களையே வள்ளுவர் நூலாக்கி வைத்துள்ளார். ஆரியர் அறங்கள் தமிழர் அறங்களிலும் மேலானவை. அதனா லேயே பழந்தமிழர் அவற்றை மேற்கொண்டனர் எனப் பிற்காலத் தமிழர் நம்பினாற்றானே தமிழ்ப் பற்றின்றி ஆரியத்துக் கடிமையாக முடியும்? அப்போது தானே ஆரிய மக்கள் நல்வாழ்வு வாழலாம். பரிமேலழகரின் இனப்பற்றே பற்று! அது தானே தமிழர்க் கில்லை! இச்சிறு ஆராய்ச்சி நூல் தமிழர்க்கு அதை உண்டாக்கு மாக. பரிமேலழ கரின் மயக்க மருந்துண்டு மயங்காமல், தனித்தமிழ் முப்பாலுண்டு தமிழ் வாழ்வு வாழ்வார்களாக.  குறள் அகரவரிசை அடக்கம் 83 அந்தணரெண் 154 அருளில்லார் 125 அருட்செல் 76 அவிசொரிந் 49 அளவிண்கண் 116 அறத்தாறிது 105 அறம்பொருளின் 97 அறனிழுக் 79 ஆபயன் 155 ஆராவியற் 126 ஆற்றனி 156 இகலின் 158 இயற்றலும் 80 இரந்துமு 48, 107 இரத்தலி 48 இருந்தோம் 70 இருமைவ 122 இருள்சேர் 104 இலனென 113 இல்வாழ்வா 64 இனைத்துணைத் 78 ஈன்றபொ 94 உரனென்னு 123 உற்றநோய் 153 ஊறொரால் 86 எப்பொருள் 51 எழுபிறப்பு 109 எழுமையெ 110 எள்ளாமை 148 ஏந்தியகொ 90 ஐந்தவித் 86 ஒருமைக்கண் 119 ஒருமைச் 120 ஒருமையுள் 111 ஒழுக்கத்து 63 ஒழுக்க 55 ஒழுக்க கு 70 ஓர்ந்துகண் 51 கருவியும் 159 கேடறியா 157 கொல்லான் 117 சிறப்பீனும் 144 சிறப்பொடு 161 சுழன்றுமேர் 48 செவியுண 153 தம்பொருள் 80 தவஞ்செய் 115 தவமுந்த 146 தனக்குவ 109 தாளாற்றித் 144 தீயவைதீ 112 தீவினையார் 105 துறந்தார்க் 65 தூஉய்மை 125 தென்புலத் 67 நல்லாறெ 126 நன்றாகுமா 50, 149 நாடாது 122 நிலவரை 145 நிலையஞ்சி 148 பற்றுகப 150 பாத்தூண் 113 பிறப்பென் 118 பிறப்பொக் 46, 74 புத்தேளுல 84 பெறுமவற் 93 பெற்றார்ப் 92 பொய்யாமை 49 பொருளானா 49, 159 பொருளல் 151 பொருள் நீங் 114 மடியிலா 87 மறப்பினும் 72 முறைசெய் 156 மேற்பிறந் 47, 73 வகுத்தான் 106 வன்கண் 160 வேண்டிய 147