நூற்றாண்டு நினைவு வெளியீடு புலவர் குழந்தை படைப்புகள் - 9 இந்தி ஆட்சி மொழியானால் ஒன்றே குலம் சங்க இலக்கியச் செல்வம் பூவா முல்லை அனைத்து நூல்களும் ஒருசேரத் தொகுத்து, பொருள் வழிப்பிரித்து, கால வரிசையில் ஒரே வீச்சில் வெளிவருகின்றன. ஆசிரியர் புலவர் குழந்தை நூற்பெயர் : புலவர் குழந்தை படைப்புகள் - 9 ஆசிரியர் : புலவர் குழந்தை பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 392 = 408 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 255/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906இல் தோன்றி 1973இல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர். தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் பட்ட அவலங்களை எண்ணி யெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளை எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு பதிவுகளாக எழுதி வைத்துச் சென்றவர். தமிழ் இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி 1 முதல் 15 படைப்புகளாக ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய முத்து மாலையாகத் தந்துள்ளோம். இவர் நூல்கள் அனைத்தும் தமிழ்மொழி இன நாட்டின் மேன்மைக்கும், வாழ்வுக்கும், வளத்துக்கும் வித்திடுபவை. குறிப்பாக இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிழ் மண்ணில் தன்மானக் கொள்கைகள் நிலைத்து நிற்பதற்கு செயற்கரிய செயல்களைத் தமிழ் இளைஞர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும் எனும் இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடு கின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்ற தமிழ்ப் பெருமக்களுக்கும், இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும்புலவர் இரா. வடிவேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன் கொள்ளும் வகையில் பிழையற்ற பதிப்பக வெளிவருகின்றது. வாங்கிப் பயனடையுங்கள். (இராவண காவியம் நூலுக்கு மிகச்சிறந்த தெளிவுரை எழுதப்பட்டு வருவதால் இப்படைப்பு வரிசையில் சேர்க்க முடியவில்லை. விரைவில் வெளிவரும்.) கோ. இளவழகன் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்கள் கொங்கு நாட்டில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஓலவலசு’ என்னும் சிற்றூரில், பண்ணையக்காரர் என்னும் பழங்குடியில், முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையாருக்கு 1-7-1906இல் பிறந்தார். இவர்தம் பெற்றோருக்கு ஒரே மகனாக வளர்ந்தார். தாம் பிறந்த சிற்றூரில் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார்; தொடர்ந்து படிக்காமல் இடையிடையே விட்டு விட்டுப் படித்தார். மொத்தத்தில் எட்டு மாதங்களே திண்ணைப் பள்ளியில் பயின்றார். கருவிலே திருவுடையவராகிய இவர் பத்தாம் ஆண்டில் இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். யாரேனும் ஒருவர் ஒரு பாட்டைப் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசையில் புதுப்பாட்டு ஒன்றினைப் பாடுவார். எப்போதும் ஏதேனும் ஒருபாட்டை எழுதிக் கொண்டே இருப்பார். பாட்டு எழுதுவது இவருக்குக் கைவந்த கலையாக அமைந்து விட்டது. இவர் காலத்தில் இவர் வாழ்ந்த பகுதியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தானாகவே முயன்று படித்துக் கவிபாடும் திறம் பெற்றிருந்தார். இவர் முதன் முதலில் இசைப்பாடல்களைப் பாடினார். இவர்தம் கல்லாமல் பாடும் கவித்திறனையும், பாடல்களின் சிறப்பினையும் கண்டு வியந்த அறிஞர்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிக்குமாறு தூண்டினர்; ஊக்குவித்தனர். தாம் பிறந்த ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர்கள் எவரும் அக்காலத்தில் இல்லை. ஆகவே இவர் ஆசிரியர் துணையின்றித் தாமாகவே முயன்று இலக்கிய இலக்கணங்களைப் படித்துத் தமிழில் சிறந்த புலமை பெற்றார். மேலும் இவர் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகத் தேர்வு எழுதிப் புலவர் பட்டயம் பெற்றார். இவர் பவானியில் மாவட்டக் கழகப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். 1940வரை தமிழாசிரியராகத் தொண்டாற்றினார். 1941 முதல் 1962ஆம் ஆண்டுவரை தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்கள் வியந்து பாராட்டும்வகையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியினின்று ஓய்வு பெற்ற பின்பும் எழுத்துப் பணியினின்று ஓய்வு பெறவில்லை. வாழ்நாள் முழுமையும் தமிழுக்காகத் தொண்டாற்றினார்; பல நூல்களைப் படைத்தார்; தமது கவிதைகள் வாயிலாகச் சமுதாய உணர்வை - பகுத்தறிவை மக்களிடையே பரப்பினார். இவருக்கு முன் ஓலவலசில் படித்தவர் எவருமில்லை. அவ்வூரில் உள்ளவர் களுக்குக் கையொப்பம் இடவும் தெரியாது. இளமைப் பருவத்திலேயே பொதுத் தொண்டில் -குமுகாயத் தொண்டில் ஆர்வமுடையவராக இருந்தார். தாமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தம் ஊரிலிருந்த தம்மையொத்த அகவையுடைய இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்தார். அவர்கள் மூலமாகப் பெரியவர்களுக்குக் கையொப்பம் போடப் பயிற்சியளிக்கச் செய்தார்; கை நாட்டு போடுவதை அறவே ஒழித்தார். அக்காலத்தில் இவரைவிட மூத்தவர் பலர் இவரிடம் கல்வி கற்றனர். ஓலவலசில் கல்லாமை இருளைப் போக்கினார். வேளாளஇன மக்களிடையே இருந்த பலபிரிவினரையும் ஒன்று சேர்ப்பதற் காகவும், அவ்வின இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்காகவும் 1946 முதல் 1950வரை ‘வேளாளன்’ என்னும் திங்களிதழை நடத்தினார். அவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் அவ்வின இளைஞர்களிடையே புத்துணர்ச்சியை வளர்த்தது. விதவை மணம், கலப்புத் திருமணம், சீர்த்திருத்த மணம் முதலியன செய்யவும் அம்மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். வேளாள சமூகத் தலைவரான திரு. வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் தலைமையில், தகடூர் (தருமபுரி) மாவட்டத்திலுள்ள அரூரில் வேளாள மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் புலவர் குழந்தை அவர்கள் ‘விதவை மணம்’ தீர்மானங் கொண்டு வந்தார்; ஒருமனமாக நிறைவேறச் செய்தார். அதன்படி நூற்றுக்கணக்கான விதவை மணங்களைச் செய்து வைத்தார். இச்செயல்கள் இவர்தம் சமூகத் தொண்டிற்குச் சிறந்த சான்றுகளாகும். இவர், யாப்பிலக்கணம் படிப்பதற்கு முன்னே 1918இல் ‘கன்னியம்மன் சிந்து’ என்னும் கவிதை நூலை வெளியிட்டார். இவர் பாடிய அச்சாகாத பாடல்களும் நூல்களும் பல உள்ளன; சில நூல்கள் அச்சாகி வெளியிடப்பட்டன. யாப்பிலக்கணம் கற்பதற்கு முன்பு பாடிய பாடல்கள் யாப்பிலக்கணப்படி அமைந்துள்ளன. இவர் இதுவரை எழுதியுள்ள நூல்கள் : இராவண காவியம் உள்படச் செய்யுள் நூல்கள்-7, உரைநூல்கள் - 3, இலக்கண நூல்கள் -3, உரைநடை நூல்கள் -16 ஆகமொத்தம் 29 நூல்கள் படைத்துள்ளார். தீரன் சின்னமலை நாடகம் இன்னும் அச்சாகவில்லை. ‘விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர்கம்பன்’ என இதுவரையில் போற்றப்பட்டு வரும் புகழுரைக்கு ஈடாகப் புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் பாடிப் புகழ்பெற்றார். ‘காமஞ்சரி’ என்னும் செய்யுள் நாடக நூல், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் என்னும் நூலுக்குப் பிறகு எழுதப்பட்ட சிறந்த நாடக நூலாகும். ‘நெருஞ்சிப் பழம்’ என்னும் நூல் தமிழில் இதுவரை வெளிவராத கற்பனைக் கருவூலமான காதல் கதையாகும். புலவர் குழந்தை அவர்கள் பெருங்கவிஞர் மட்டுமல்லர். சிறந்த எழுத்தாளர்; கேட்போர் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசும் பெரும் பேச்சாளர். இவருடைய எழுத்துகள் உறுதியும் அஞ்சாமையும் ஆய்வும் செறிந்த புரட்சிக் கனல் தெறிக்கும் இயல்புடையவை. இவருடைய செய்யுள் நடையும் உரைநடையும் எளிய இனிய தனித்தமிழில் அமைந்தவை. இவர் படைத்த நூல்களெல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன. தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இவர் அவ்வியக்கத்தில் சேர்ந்தார்; பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். அன்று முதல் சுயமரியாதை இயக்கம் அதன் மறு பதிப்பான திராவிடர் கழகம், அதன் மறுமலர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுள் இணைந்து தொண்டாற்றியவர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். பள்ளித் தமிழாசிரியராக இருந்துகொண்டே, அத்தொழிலுக்குச் சிறிதும் இடையூறு இல்லாமல், ‘பெரியார் சீடர்’, ‘கருப்புச் சட்டைக்காரர்’ என்று பொது மக்கள் கூறும்படி கட்சித் தொண்டாற்றியவர். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் படைக்கத் தூண்டியது; இவருக்குப் புகழைச் சேர்த்தது. 1948இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திருக்குறளுக்குப் பகுத்தறிவிற்கு ஏற்ப உரை எழுதுவதற்குத் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் ஐவர் கொண்ட குழுவை அமைத்தார். அக்குழுவில் புலவர் குழந்தையும் ஒருவர். இவரே தனிஒருவராக இருந்து திருக்குறளுக்கு உரை எழுதி ‘திருக்குறள்-குழந்தையுரை’ என்று வெளியிட்டார். அவ்வுரையை 28 நாட்களில் எழுதி முடித்த பெருமைக்குரியர். அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்ட இவர்தம் இராவண காவியத்திந்ழு, தமிழக அரசால், தமிழ் வாழத் தாம் வாழும் தமிழவேள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் 17-5-1971இல் தடை நீக்கப்பட்டது. அதைக்கண்டு தமிழகமே அகமிக மகிழ்ந்தது; தமிழவேள் கலைஞரை உளமார வாழ்த்தியது. புலவர் குழந்தை ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கொண்டவர். இவர் ஒரு புரட்சிப் புலவரே எனினும் அமைதியும் அடக்கமும் உடையவர்; ஆடம்பரமின்றி எளிய வாழ்வு வாழ்ந்தவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடமை தவறாதவர்; எதிர்க் கட்சியானாலும், மாற்றுக் கருத்து உடையவராலும் நன்கு மதிக்கத் தக்கவர். புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார். கல்வியறிவு பெற வாய்ப்பில்லாதவராயினும் பொது அறிவு நிரம்பப் பெற்றவர்; தன்மானக் கொள்கையுடையவர்; தம் கணவரின் கொள்கைக்கேற்ப இல்லறத்தை இனிது நடத்தியவர். இவ்விணையருக்குச் சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர். தமிழுக்குத் தொண்டு செய்து வந்த புலவர் பெருந்தகை தமது 68ஆம் அகவையில் 24-9-1973இல் இயற்கை அடைந்தார். மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் புலவர் குழந்தையிடம் அன்பும் மதிப்பும் உடையவர். அவர் மறைந்த பிறகு, அவர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நூல்கள் 8-7-2006 அன்று அரசுடைமை ஆக்கப்பட்டதாக அறிவித்தார். குழந்தை அவர்களின் மகள்கள் இருவருக்கும் தலா ரூ.5 இலட்சம் பரிவுத் தொகை வழங்கினார். நன்றி : நித்திலக் குவியல் (திபி 2037 - டிசம்பர் 2006) மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு. புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல்களையும் அரசுடைமை யாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது. பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர். அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது. 4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார். அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார். அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார். “இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3). புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தை யானாலும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள்தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழுதினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும். விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார். “புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்டதேயாகும். நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப்படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார். புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனங் களையெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப்படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளையெல்லாம் சாமியாக்குகின்றான். அதுபோல நமக்காகப் பாடுபடுகின்றவர்களை, தொண்டு செய்கிறவர்களை, எழுதுகிறவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன்வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத் துரைத்தார்கள். சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை 1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடைபோட்ட காட்சி கண் கொள்ளாதது. 1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட! எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர். வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது. இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு! கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார். “தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!” நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப்பிட்டதிலிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது. கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள்கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார். “ இனியொரு கம்பனும் வருவானோ? இப்படி யும்கவி தருவானோ? கம்பனே வந்தான்; அப்படிக் கவிதையும் தந்தான் ஆனால், கருத்துதான் மாறுபட்டது” என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது. கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை. தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற் பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இராவண காவிய மாநாடு இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன; முதல் மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டதுண்டு. இத்திசை யில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு. தீர்மானங்கள் 28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும். இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும். மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும். இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல் படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005) அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான். மத்திய அரசு தொலை தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத் துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005). தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது. கலைஞரின் சாதனை! இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார். வாழ்க அப்பெருமகனார்! பொருளடக்கம் பதிப்புரை iii புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு iv மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை viii இந்தி ஆட்சி மொழியானால் 1. முன்னுரை 3 2. இந்தி எதிர்ப்பு 5 3. தேசீயமொழிகள் 8 4. ஆட்சிமொழித்திட்டம் 9 5. இந்தியால் விளையுந் தீமை 31 6. ஆட்சிமொழிச் சட்டத் திருத்தம் 36 ஒன்றே குலம் முன்னுரை 43 1. ஒன்றே குலம் 45 2. காந்தியடிகள் 53 3. புத்தர் பெருமான் 60 4. இராசராசச் சோழன் 65 5. தலைவர் நேரு 68 6. காசிநாத தேவால் 73 7. இயேசுநாதர் 79 8. நபிகள் நாயகம் 83 9. சங்கரர் 88 10 . இராமாநுசர் 93 11. இராமகிருஷ்ணர் 98 12. விவேகானந்தர் 105 சங்க இலக்கியச் செல்வம் முன்னுரை 115 1. தாய்மொழிப்பற்று 117 2. வளைந்த கோல் நிமிர்ந்தது. 125 3. அரசுப் பரிசு 134 4. குலவித்தை 142 5. அடாது செய்தார் 149 6. சங்கத் தமிழ் 157 7. சிலம்புச் செல்வன் 165 8. ஒளவையும் அதியனும் 174 9. புள்ளின் புரவலன் 181 10. உணர்ச்சி ஒன்றல் 189 பூவா முல்லை முன்னுரை 201 1. பூவா முல்லை 203 2. ஏறுதழுவல் 211 3. கல்லாக் கவித்திறம் 223 4. போலிச் சோழர் 233 5. ஓரவஞ்சனை 244 6. இந்திர விழா 256 7. கலப்புக் கலை 266 8. தமிழ்க் கொலை 277 9. யார் குற்றவாளி 288 10. ஊமும் செவிடும் 298 11.ஒருநாள் இரவு 308 12. வள்ளுவன் வாயது 314 13. முத்தார முத்தம் 323 14. ஊழ் 336 15. பாட்டியற் பரிசு 343 16. நனி நாகரிகம் 352 17. முன்னுக்குப் பின் 361 18. நெல்லிடைப் புல் 382 இந்தி ஆட்சி மொழியானால் (1965) 1. முன்னுரை நாட்டின் பல பக்கங்களிலும் இன்று பகையிருள் சூழ்ந்துள்ளது. செஞ்சீனப்புலி நம் நாட்டின் மீது பாயத்தயாராகி வருகிறது. அது இந்தியாவை விழுங்க ஏற்ற காலம் பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்காக இங்கு அது ஐந்தாம் படைகளை ஆக்கிக் கொண்டு வருகிறது. சீனரை எதிர்த்து விரட்ட இன்னும் நாம் வெளியார் உதவியை வேண்டிய நிலையில் இருந்து வருகிறோம். நாடு விடுதலையடைந்து, நம்மாட்சி ஏற்பட்டுப் பதினெட்டாண்டு களாகியும் இன்னும் நம்மை நாமே காத்துக் கொள்ளும் அத்தகு நிலையை அடைந்தோமில்லை. மேற்கிலும் கிழக்கிலும் பக்கத்துப் பகையாகிய பாகித்தான் வேறு பெருந்தொல்லை கொடுத்து வருகிறது. அது இந்தியத் தாயின் இரு தோள்களிலும் எந்நேரமும் ஈட்டி கொண்டு தாக்கி வருகிறது. இது உடன்பிறந்தே கொல்லும் நோய் போலும் உள்நாட்டுப் பகை. அது தன் ஆதிக்கத்தைப் பெருக்கிக்கொள்ள முனைந் துள்ளது. அதற்காக அது சீனாவுடன் உறவாடி வருகிறது. இந்தியாவைத் தாக்கச் சீனாவுக்குப் பாகித்தான் உதவி, பாகித் தானுக்குச் சீனா உதவி என்ற நிலையில் அவ்விரு நாடுகளும் செயல்பட்டு வருகின்றன. பாகித்தானின் பகையைத் தீர்த்துக் கொள்ளாதிருப்பது புண் வைத்து மூடுவது போன்றதாகும். செஞ்சீனத்துக்கொரு முடிவுகட்டாதிருப்பது கொள்ளிக் கட்டையைக் கூரையில் சொருகி வைத்திருப்பது போன்றதாகும். மற்றும் நாகர் கலகம், காசுமீர்ப் பிரச்சினை, சேக் அப்துல்லாவின் அடாச்செயல், உணவுப் பொருள் பற்றாக் குறை போன்ற எத்தனையோ தொல்லைகள் நம் இந்திய அரசுக்கு. “பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு” என்ற வள்ளுவர் வாய்மொழி இங்கு நினைவுகூரத்தக்கது. மேலும், நாம் முழுக்க முழுக்க நம்பியிருக்கும் உலக வல்லரசுகள் மூன்றும் அன்றிருந்த நிலையில் இன்றில்லை. அதற்கும் செஞ்சீனரின் தீச்செயலே காரணமாக உள்ளது. உலக வல்லரசுகளின் ஒற்றுமையைக் குலைக்க வியட்நாமில் வேட்டு வைக்கிறது செஞ்சீனம். இதுபோது, நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப் பாட்டுணர்ச்சியும் மிகமிக இன்றியமையாத தென்பதை ஆட்சித் தலைவர்கள் நன்கு உணரவேண்டும். இந் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், ‘உயிரைக் கொடுத்தேனும் எங்கள் நாட்டைக் காப்போம்’ என்று உறுதிகொள்ளும்படி செய்வது ஆளுங் கட்சி யினரின், ஆள்வோரின் இன்றியமையாக் கடமையாகும். இதற்குக் கொள்கைவேறுபாடு குறுக்கிடக்கூடாது. ஆனால், இந்நிலையில் இன்று இந்நாட்டை ஆள்வோர்க்கு நாட்டைச் சூழ்ந்துள்ள பகையிருளை அடியோட கற்ற முழு முயற்சி எடுத்துக்கொள்வதைவிட, மிகமிக இன்றியமையாத தாகத் தோன்றுவது ஆட்சிமொழிக் கொள்கையேயாகும். அவ் வாட்சிமொழிக் கொள்கை இன்று இந்திய ஆட்சி வட்டாரத்தை, ஆட்சித் தலைமையை ஒரு தொத்துநோயாகப் பிடித்து வாட்டிவருகிறது. இவ்வாட்சிமொழித் திட்டம் நடைமுறைக்கு வராவிட்டால் இந் நாட்டாட்சியே நடைபெறாது-நடத்தமுடியாது போன்ற அத்தகு நிலையில் உள்ளனர் இன்று ஆட்சித்தலைவர்கள். ஆட்சித் தலைமையில் உள்ளவர்கள் ஆட்சிமொழிபற்றிக் கருத்துத் தெரிவியாத நாளே இல்லை எனலாம். அவ்வளவு இன்றியமையா நிலையை அடைந்துவிட்டது இன்று ஆட்சிமொழிக்கொள்கை. ஆட்சிமொழிக் கொள்கைபற்றிப் பேசும் ஒவ்வொரு தலைவரும் வகையாகப் பேசி வருகின்றனர். அவர்கள் கூற்றுக்கள் தெளிவற்ற மயக்க நிலையில் உள்ளனவாகை யால், இந்நாட்டு மக்கள் ஆட்சிமொழித் திட்டம் இன்ன என்பதை அறிந்து கொள்ளமுடியாத நிலையில் இருந்து வருகின்றனர். ஆட்சிமொழித் திட்டத்தை நடுவு நிலையில் நின்று நன்கு ஆய்ந்து நல்லதோர் முடிவு காண்பதே இக் கட்டுரையின் நோக்க மாகும்.  2. இந்தி எதிர்ப்பு இந்நாட்டில் ஆங்கில ஆட்சி ஏற்படுமுன் இந்தியா என்றும் ஒரே நாடாக ஓராட்சியின் கீழ் இருந்ததில்லை. வடநாடு பலமொழி பேசும் பல சிறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. தமிழ் நாடு தமிழ்மொழி பேசிய முடியுடை மூவேந்தர் களால் முறையாக ஆளப்பட்டு வந்தது. ஆங்கில ஆட்சி யாளர்களால் தான் இந்தியா ஓராட்சியின்கீழ் ஒரே நாடாக உருவாக்கப் பட்டது. ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த காந்தியடிகளால், இந்நாட்டு மக்களுக்கு, 'இந்தியா எங்கள் நாடு' என்னும் உணர்ச்சி ஊட்டப்பட்டது. விடுதலை வேட்கைகொண்ட தமிழர், தமிழன் என்ற இனவுணர்ச்சியை மறந்து, 'நான் ஓர் இந்தியன்; இந்தியா எங்கள் சொந்த நாடு' என வாய்விட்டுக்கூறத் தலைப்பட்டனர். விடுதலைப் போரின் முன்னணியில் முனைந்து நின்றது தமிழ் நாடு. ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்க, இந்திய மக்களுக்கு ஒருமை யுணர்ச்சியும் நாட்டுப் பற்றும் ஊட்ட, காந்தியடிகளால் மேற் கொள்ளப்பட்ட-கையால் நூல் நூற்றல், கதர் உடுத்தல், கதர்க் குல்லாயணிதல், தந்நாட்டுப் பொருளோம்பல், அயல் நாட்டுப் பொருள் நீக்கல், மதுவிலக்குப் போன்ற கருவிகளில் இந்தியும் ஒன்றாகும். விடுதலை வேட்கை கொண்ட தமிழர்-இந்தி படிக்கத் தொடங்கினர். தமிழ் நாட்டில் இந்திப் பிரசார சபை தோன்றியது. இது, இந்தியா ஒரே நாடு. அதற்கொரு பொதுமொழி வேண்டும். இந்தி இந்தியாவின் பொதுமொழி எனக் கொண்ட தாகும். இதுவே இந்தி இந்தியாவின் பொதுமொழி என்பதன் பழைய வரலாறு. இந்தியா விடுதலை அடைந்தது. இந்தியர்-இந்தி பேசுவோர்-இந்தி பேசாதார் மீது குதிரையேறத் தலைப்பட்டனர்; ஆளுங்கட்சிக் கொள்கையின் உதவியால், 'இந்தி இந்தியாவின் ஆட்சிமொழி' எனச் சட்டம் செய்து கொண்டனர். அன்றிருந்து இந்தியரின் மொழிவெறிச் செய்கைகளைக் கண்ட தமிழர் இந்தியை எதிர்க்கத் தொடங்கினர்; இந்தி இந்தியாவின் பொது மொழி என்று அன்று மேற்கொண்டனரே யன்றி, ஆட்சி மொழி எனக் கொள்ளவில்லை. 1937-38 லேயே தமிழர் கட்டாய இந்தியை எதிர்த்து வெற்றி கண்டது குறிப்பிடத் தக்கது. பின்னர், 'பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்தி இந்தியாவின் ஆட்சிமொழி ஆகவேண்டும்' என, இந்தி பேசாதாரின் எதிர்ப் பைப் பொருட்படுத்தாது, ஒருவாக்கு மிகுதியால் சட்டஞ் செய்யப்பட்டது. அதுகண்ட இந்தி பேசாதாரின் சிறப்பாகத் தமிழரின் எதிர்ப்பைக்கண்ட காலஞ்சென்ற தலைவர் நேரு அவர்கள், 'இந்தியோடு தொடர்ந்து ஆங்கிலமும் இணையாட்சி மொழியாக இருந்து வரும்' என உறுதிமொழி தரவே, தமிழர்கள் ஒருவாறு சரியென்றிருந்தனர். 1965 சனவரி 26 குடியரசு நாளன்று, இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழியாக நடைமுறைக்குக் கொண்டுவருவதாக இந்திய அரசினர் முடிவு செய்தனர். அதுகண்ட தமிழ்நாட்டு மாணவர்கள், சனவரி 25-ஆம் நாளன்று இந்தி எதிர்ப்புப்போர் தொடங்கினர். தமிழ் நாட்டிலுள்ள எல்லாக் கல்லூரி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் ஒருசேர அவ்வறப்போரில் கலந்து கொண்டனர். மாணவர் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி தமிழ்நாடெங்கும் தொடர்ந்து நடந்துவந்தது. (சில இடங்களில் மாணவரல்லாதார் கலந்து செய்த வன்முறைச் செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கவையாகும்.) திராவிட முன்னேற்றக் கழகம், சனவரி 26-ஆம் நாளைத் துக்கநாளாகக் கொண்டாடுவதென முடிவு செய்தது. கழக முதன்மையாளர் பலர் அதன் முன்னரே சிறை யிடப்பட்டதால், அம்முடிவு கைவிடப்பட்டது. தமிழ்நாட்டு மாணவர்களின் இம்மொழிப்போர் இதுவரை உலகங் கண்டறியாத ஒன்றாகும். தமிழ்நாட்டு மாணவர்களின் இம் மொழிப்போரைக் கண்டு உலகமே வியந்தது. தாய்மொழிக்காக, தமிழினத்துக்காக, தடியடிபட்டும் வெடியடி பட்டும் செந்நீர் சிந்தியும் இன்னுடல் குன்றியும் ஆருயீர் விட்டும் அருஞ்சிறைப்பட்டும் தமிழ் மாணவர்கள் ஆற்றிய அரும்பெருந் தொண்டு பாராட்டிப் போற்றுதற்குரிய தொன்றாகும். சில தமிழ் இளைஞர்கள் தாய்மொழிக்காக எரி யூட்டித் தற்கொலை செய்து கொண்டு பொன்றாப் புகழெய்தினர். தமிழ்நாட்டு மாணவர் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஆதரித்து-மலையாள, கன்னட, தெலுங்கு முதலிய இந்தி பேசாத மாநில மாணவர்களும் சிற்சில இடங்களில் இந்தியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். தமிழ் மாணவர்களின் இந்தி எதிர்ப்புக்கு உறுதுணையாக, தமிழ்நாட்டு இந்திய அமைச்சர் களான திரு. சுப்பிரமணியம் அவர்களும், திரு. அழகேசன் அவர்களும் தங்கள் பதவியை விட்டு விலகினர். கல்வித் துறை வல்லுநர்களும், பிற அறிஞர்களும் ஆட்சிமொழி பற்றிய தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்தியத் தலைமை அமைச்சர் அவர்கள் மாநில முதலமைச்சர் களையும், மைய அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து, ஆட்சிமொழிபற்றி ஆராய்ந்தனர். காங்கிரசுத் தலைவர் திரு. காமராசர் அவர்களும் தம் கருத்தைத் தெரிவித்தனர். திரு. சாஸ்திரி அவர்கள், இந்தி பேசாதார்க்கு, தமிழர்க்கு-தீங்கு நேராத வகையில் ஆட்சி மொழிச் சட்டத்தைத் திருத்துவதென்ற முடிவுக்கு வந்தனர். தமிழ்நாட்டு மாணவ இந்தி எதிர்ப்புக் குழுவினர், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை நிறுத்திவைப்பதென முடிவு செய்தனர். 27-1-65 முதல் மூடப்பட்டிருந்த கல்லூரிகளும் பள்ளிகளும் 8-3-65 அன்று திறக்கப்பட்டன. மாணவர்கள் கல்லூரிக்கும் பள்ளிக்கும் சென்றனர். சிறைவைக்கப்பட்டிருந்த எல்லா மாணவர்களும் விடுதலை செய்யப் பட்டனர். ஆட்சிமொழி பற்றிய அரசியல் சட்டத்தை எவ்வாறு திருத்துவதென்ற ஆராய்ச்சியில் ஆட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவே இன்றைய ஆட்சிமொழிபற்றிய வரலாறாகும். அச்சட்டத் திருத்தத்திற்குத் துணைசெய்யவே இக் கட்டுரை எழுதப்பட்டது.  3. தேசீயமொழிகள் இந்தியாவில் பலமொழிகள் பேசப்படுகின்றன. அவற்றுள் திருந்திய மொழிகள் சிலவே. அவற்றுள் கீழ்க்காணும் 14 மொழிகளும் தேசீய மொழிகளாக இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. அவை : 1. தமிழ் 6. குசராத்தி 11. காசுமீரி 2. தெலுங்கு 7. பஞ்சாபி 12. இந்தி 3. கன்னடம் 8. வங்காளி 13. உருது 4. மலையாளம் 9. ஒரியா 14. வடமொழி 5. மராத்தி 10. அஸ்ஸாம் - என்பனவாம். இவற்றுள், வடமொழி (சமஸ்கிருதம்) - எங்கும் பேசப்படுவதில்லை; செய்யுள் வழக்கு மொழியாக உள்ளது. உருது-வட மாநிலங்களில் ஒரு சாராரால் பேசப்படுகிறது. உருது-இந்தியின் உட்பிரிவுகளில் ஒன்றாகவும் உள்ளது. இந்தி-இராசத்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய நான்கு மாநிலங்களில் பல்வேறுவகையாகப் பேசப்பட்டு வருகின்றது. மற்ற பதினொரு மொழிகளும் அந்தந்த மாநிலங்களின் மாநில மொழியாகவும், தாய் மொழியாகவும் உள்ளன. இவற்றுள் தமிழே மிகப் பழமையான தனிமொழியாகும்.  4. ஆட்சிமொழித்திட்டம் மக்கள் ஒருவர்க்கொருவர் தத்தம் கருத்தைப் பரிமாறிக் கொள்ளும் கருவியாக அமைந்தது மொழி என்பது. ஆட்சிமொழி-ஆட்சி நடத்துவதற்குக் கருவியாகக் கொள்ளும் மொழி யாகும். இந் நாட்டில் பல மொழிகள் வழங்குவதால், இந்தியப் பொது ஆட்சி நடத்துதற்கும், மாநிலத் தொடர்புக்கும் ஒரு பொதுமொழி தேவையாகிறது. ஆட்சிமொழித் திட்டத்தில் இடம்பெறும் மொழிகளாவன: 1. தாய்மொழி, அல்லது மாநிலமொழி, 2.இந்தி, 3.ஆங்கிலம் - என்னும் மூன்றும் ஆகும். மூன்று மொழிகளை ஒரு நாட்டின் ஆட்சிமொழியாக்க முனைவதால், ஆட்சிமொழித் திட்டம் என்பது, ஆட்சி மொழிச் சிக்கலாக ஆகியுள்ளது. இவற்றுள், மாநில ஆட்சிமொழி பற்றிச் சிக்கல் எதுவுமில்லை. தமிழ், தமிழ் நாட்டின் ஆட்சிமொழியாக இருக்கும். இவ்வாறே ஏனைய மாநில மொழிகளும் அந்தந்த மாநிலங்களின் ஆட்சிமொழிகளாக இருக்கும். இந்தி, இந்திபேசும் மாநிலங் களின் ஆட்சிமொழியாக இருக்கும். இந்திய ஆட்சிமொழியாகவும், மாநிலங்களின் தொடர்பு மொழியாகவும் இருக்கவேண்டும் என்னும் இந்தி, ஆங்கிலம் ஆகிய இருமொழிச் சிக்கல்தான் இன்று பிரிக்க முடியாத பெருஞ்சிக்கலாக உள்ளது. அதிலும், மாநில ஆட்சி மொழியாக உள்ள இந்தியை, மைய ஆட்சிமொழியும் ஆக்க வேண்டும் என்பதுதான் இச்சிக்கலுக்கே முதற்காரணமாகும். அச்சிக்கலாவது: 1. இந்திய நாட்டில் வழங்கும் ஒரு மொழிதான் இந்தியாவின் ஆட்சிமொழியாகத் தகுதியுடையதாகும். 2. இந்திய மக்களில் பெரும்பாலோரால், மூன்றிலொரு பங்கினரால் பேசப்படுவதால், இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கத் தகுதியுடைய தாகும். 3. இந்தி-இந்தியா என்னும் பெயரொற்றுமையால் ஒருமைப் பாட்டுணர்ச்சி உண்டாகுமாகையால், இந்தி தான் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கத் தகுதியுடையதாகும். 4. இந்தியோடு ஆங்கிலமும் இணையாட்சி மொழியாக இருந்து வரலாம்; வரவேண்டும். 5. இந்தி ஆங்கிலத்தின் நிலையை அடையும் வரையிலும் ஆங்கிலம் இந்தியோடு இணையாட்சி மொழியாக இருந்து வரவேண்டும். 6. இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலம் இணை யாட்சிமொழியாக இருந்துவரவேண்டும். 7. என்றைக்கிருந்தாலும் ஒரு நாளைக்கு இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழியாகத் தகுதியுடையது. 8. என்றோ ஒரு காலத்தே ஆங்கிலம் அடியோடு அகற்றப் பட வேண்டியதே. 9. ஆங்கிலம் அயல்மொழியானதால், நம்மை அடக்கியாண்டவர் மொழியானதால் அது கூடவே கூடாது. அதைக் கற்பது நம் தன்மானத்துக்கு உகந்ததாகாது. 10. உடனடியாக இந்தியையே ஆட்சிமொழி ஆக்கிவிட வேண்டும். 11. இந்தியை ஆட்சிமொழி ஆக்கக்கூடாது; ஆங்கிலமே இன்று போல என்றும் ஆட்சிமொழியாக இருந்துவர வேண்டும். 12. தேசீய மொழிகள் பதினான்கையும் ஆட்சிமொழி ஆக்க வேண்டும். 13. மாநிலமொழி அல்லாத இந்தி ஒன்றை ஆட்சி மொழியாக உருவாக்க வேண்டும். 14. இந்தி பேசாதார் இந்தியைக் கற்பதுபோல, இந்தி பேசுவோர் தென்னாட்டு மொழிகளில் ஒன்றைக் கற்க வேண்டும். 15. இந்தி பேசாதார்மீது இந்தியைத் திணிக்கக் கூடாது; இந்தி பேசுவோர் மீது ஆங்கிலத்தைத் திணிக்கக் கூடாது. இன்னும் பலவகை. இவ்வாறு ஆட்சிமொழித் திட்டம்பற்றிக் கருத்துத் தெரிவிப் போர் மூன்றுவகையினராவர். அவராவர்; 1. காங்கிரசுக் கட்சியினர்-ஆளுங்கட்சியினர்-இன்றைய ஆட்சியாளர். 2. இந்திபேசுவோர் 3. இந்திபேசாதார் - என்பவராவர். முதலில் இம் மூவகையினர் நிலையையும் அறிதல் ஆட்சி மொழித்திட்டம் பற்றிய கருத்து வேறுபாட்டு விளக்கத்திற்கு ஏற்றதாக இருக்கும். 1. காங்கிரசுக் கட்சியினர்: காங்கிரசுக் கட்சியின் ஆக்கத்திட்டங்களுள் இந்தியும் ஒன்றாகும். இந்தி இந்தியாவின் பொதுமொழியாக இருக்கவேண்டும் என்பது காங்கிரசின் பழையகொள்கை. அதன்படி இந்தியை இந்தியா வின் ஆட்சிமொழி யாக்க விரும்புவது காங்கிரசுக்காரரின் கடமையே ஆனால், பழைய கொள்கைகளை அப்படியே கடைப்பிடிக்க விரும்பாத காங்கிரசுக்காரர் சிலர் இருந்து வருவதனாலும், இந்தி இன்னும் ஆட்சிமொழிக்குரிய தகுதியை அடையாததனாலும், இந்தி பேசாதார் எதிர்ப்பைத் தணிப்பதற்காகவும், இந்தியோடு ஆங்கிலமும் இணையாட்சி மொழியாக இருந்து வரலாம் என்கின்றனர். எனவே, ஆளுங்கட்சியினர் இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாகவேண்டும் என்பதில் வியப்பொன்றுமில்லை. கட்சித் திட்டங்களை நிறைவேற்றுவது, கொள்கையைக் கடைப் பிடிப்பது அவர்தம் கடமையேயாகும். எனினும், நாட்டு நலத்தையும், எதிர்கால நிலையையும், இந்நாட்டு மக்கள் எல்லோருடைய நலஉரிமையினையும் எண்ணிப் பார்த்து, காலத்துக்கேற்பப் பழைய கொள்கைகளை விட்டுப் புதிய கொள்கைகளை மேற்கொள்வதும் கட்சியின் கடமை யேயாகும். கொள்கையும் திட்டமும் என்றும் நிலைபேறுடை யவை அல்ல; காலப் போக்கின் சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளத் தக்கனவே யாகும். "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகை யினானே." - ( நன்னூல்) என்பது, கட்சிக்கும் விலக்கானதன்று. காலச் சூழ்நிலைக் கேற்றவாறு காந்தியடிகள், தனித்தொகுதி முறைக்கும், பாகித்தான் பிரிவினைக்கும் உடன்பட்டதும், திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினைக் கொள்கையை மாற்றிக் கொண்டதும் நினைவு கூரத்தகும். இன்று காங்கிரசுக்காரர் யாவரும் நூல் நூற்பதோ, காந்தி குல்லாய் அணிவதோ இல்லை. அயல்நாட்டுப் பொருள்களைப் பயன்படுத்தாத காங்கிரசுக்காரர் இன்று யாரும் இல்லை எனலாம். நாட்டு மக்கள் நலத்திற்காகக் கொள்கையே யன்றிக் கட்சிக் காகவன்று கொள்கை. காலத்திற்கேற்பக் கொள்கைகளை மாற்றிக்கொள்வதே கட்சி நலனும் கட்சி வளர்ச்சியும் நாட்டுக்குச் செய்யும் நன்மையும் ஆகும் என்பதை ஒவ்வொரு காங்கிரசுத் தலைவர்களும் எண்ணிப் பார்க்கவேண்டும். இன்று இந்தி பேசாத காங்கிரசுக்காரர்களெல்லாரும், காங்கிரசுத் தமிழர் களெல்லாரும்-இந்தி மட்டுந்தான் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும். ஆங்கிலம் கூடவே கூடாது என்னும் கொள்கை யுடையவர் என்று கூற முடியாது; கட்சிக் கட்டுப்பாட்டினால் தங்கள் உண்மைக் கருத்தை வெளியிட முடியாத நிலையில் இருந்து வருகின்றனர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஒருசிலர் வாய்விட்டுச் சொல்லாமலும் இல்லை. மெல்லவு முடியாமல் விழுங்கவு முடியாமல் இருப்பதைவிட, நாட்டு நலனைக்கருதி, நாட்டின் ஒற்றுமையைக் கருதி உண்மையை உரைப்பதே கட்சி நலனுமாகும். எதிர்ப்புக் காங்கிரசுக்காரர் ஆவதினும் இது கோடி மடங்கு நல்லதாகும். 2. இந்தி பேசுவோர்: இந்தி, இலக்கிய வளமும் இந் நாட்டுப் பழந் தனிப் பெருமையும் உடைய மொழியாக இல்லா திருந்தும், ஆட்சிமொழிக்கேற்ற தகுதியுடைய தல்லா திருந்தும், தங்கள் தாய்மொழி ஆட்சிமொழியானால், இந் நாட்டில் தாங்கள் ஆதிக்கம் பெற்று மேம்பாடுற்று மேன் மக்களாக வாழலாம் என்ற ஒரே நோக்கத்தால், இந்நாட்டின் நலனையும், இந்தி பேசாத இந்நாட்டு மக்கள் நலத்தையும் கருதாமல், இந்தியை மட்டும் இந்தியாவின் தலைமை ஆட்சிப் பீடத்தில் அமர்த்திவிட வேண்டும் என்று இந்தி பேசுவோர் விடாப்பிடி செய்து வருகின்றனர். இதில் ஒருசிலர் விலக்காக இருக்கினும் பெரும்பாலோர்க்கு இம்மொழி வெறி தலைக்கேறி உள்ள தென்பதில் சிறிதும் ஐயமில்லை. இவர்கள் ஆங்கிலத்தை வெறுப்பதன் காரணமும் இத்தன்னலத் தினாலேயாகும். தன் பிள்ளையைப் பல்லக்கிலேற்றி, அதனோடொத்த மற்ற பிள்ளைகள் வலுக்கட்டாயமாய் அதைச்சுமக்க வைத்து, மற்ற பிள்ளைகளின் தாய்மார்களுடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் தன் பிள்ளையை ஆளாக்குவாளா ஒரு தாய்? அது தாய்மைத் தன்மை யாகுமா என்பதை இந்தி பேசுவோர் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும். இந்நாட்டின் விடுதலைக்காகப் பலவகையான இன்னல் களடைந்தும், உயிர்விட்டும் அரும்பெருந் தொண் டாற்றிய விடுதலை வீரர்களின் வழித்தோன்றல்களாகிய இவர்கள், இந்நாட்டு நலனையும் இந்தி பேசாத இந்நாட்டு மக்களின் நல் வாழ்வையும் கருதித் தாய்நாட்டுக்காகச் சிறிது விட்டுக் கொடுக்கின், ஆட்சி மொழிச் சிக்கல் எளிதில் தீர்ந்துவிடும் என்பதைச் சிறிது எண்ணிப் பார்த்தல் அன்னாரின் நீங்காக் கடமையும் தாய்நாட்டுத் தொண்டு மாகும். 'தனக்குள்ளது பிறர்க்கும் உண்டு' என்பதை அவர்கள் உணர வேண்டும். தங்களைப் போலவே இந்தி பேசாத மாநிலத்தார் ஒவ்வொரு வரும் தத்தம் தாய்மொழியை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்கவேண்டும் என்று விடாப்பிடி செய்தால் இந்நாட்டின் நிலை என்னாகு மென்பதையும் அவர்கள் எண்ணிப்பார்த்தல் வேண்டும். தென்னாப்பிரிக்காவில் அன்று நடத்திய அறப்போர் வீரர்களாகத் தமிழக் கந்தனும் வள்ளியும் முதன்முதல் முன் வந்தது கண்ட காந்தியடிகள், அதற்குக் காரணம் அவர்தம் தாய் மொழியான தமிழ்மொழியின் தனிப்பண்பே எனக் கொண்டு, 'இந்தியாவைவிட்டு ஒருகாலத்தே வெள்ளையர் கப்பலேறினால், இந்தியாவின் பொதுமொழியாகுந் தகுதி தமிழுக்குத்தான் உரித் தாகும்' என்ற காந்தியடிகளின் கூற்றினைச் சான்று காட்டி, உலக முதன்மொழியாக உடையதும், அப்பழமைக் கேற்ற இளமையுடையதும், இலக்கிய வளமும் இலக்கண வரையறையு முடையதும், தன்னோடொப்ப எண்ணப்படும் - லத்தீன், கிரேக்கம், எகுபதியும், ஈப்புரு, ஆரியம் முதலிய பண்டை மொழிகளெல்லாம் பேச்சு வழக்கற்றுப்போயும், தான் மட்டும் அன்றேபோல் இன்றும் உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஒருங்குடைய உயர்தனிச் செம்மொழியாக உடையதும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் அரியணையில் இனி தமர்ந்து நாடாண்ட பயிற்சியுடையதும், ஆட்சித்திறனும் அதற்கேற்ற தகுதியும் ஒப்ப உடையதும், ஒருகாலத்தே குமரி முதல் இமயம் வரை அரசு வீற்றிருந்ததும், இயல்பும் எளிமை யும் இனிமையும் தனிமையும் உடையதுமான தன்னேரிலாத தங்கள் தாய்மொழியாம் தமிழ் மொழியை, 'இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குங்கள்' என்று தமிழர் கூறாமல் இருப்பது, இந்நாட்டு நலத்தைக் கருதியேயாம் என்பதை இந்தி பேசுவோர் உணர வேண்டும். தமிழர் இந்தியை எதிர்ப்பதற் குரிய காரணமே மற்றவர் தமிழை எதிர்ப்பதற்கும் பொருந்தும் என்பதை உணர்ந்தே அவர்கள் அவ்வாறு எண்ணவும் ஆவல் கொள்ள வில்லை. 3. இந்தி பேசாதார் - தமிழர்: இந்தி ஆட்சிமொழி ஆனால் தங்கள் தாய்மொழி கெடும், தங்கள் பண்பாடு கெடும், தங்கள் இனம் கெடும், தங்கள் வாழ்வு கெடும் என அஞ்சியே தமிழர் இந்தி ஆட்சிமொழி ஆவதை எதிர்க்கின்றனர். இது அவர்தம் கடமையேயாகும். மேலும், நாட்டுப்பற்று மிகுதியாக உடைய தமிழர், இந்நாட்டின் ஒற்றுமையினையும் ஒருமைப் பாட்டினையுங் கருதியே இந்தியை எதிர்க்கின்றனர். ஆனால், இந்திய ஆட்சிக்கு ஒரு பொதுமொழி வேண்டும். ஆங்கிலமே அதற்குத் தகுதியுடையதாகும் என்பதை உணர்ந்தே, 'ஆங்கிலமே இன்று போல் என்றும் இந்தியாவின் ஆட்சிமொழி யாக இருந்துவர வேண்டும்' என்கின்றனர். இங்ஙனமன்றி, 'ஆங்கில மோகத்தால் ஆங்கிலம் வேண்டும் வேண்டும் என்கின்றனர்' என்பது சிறிதும் பொருந்தாது. ஆங்கிலம் என்ன தமிழின் சார்புமொழியா? அல்லது தமிழினும் இனிய மொழியா? தமிழர் மோகங்கொள்வதற்கு! இனி, இந்தி பேசாத பிற தென்னாட்டினர் வாளா இருக்க, தமிழர் மட்டும் ஏன் இந்தி ஆட்சிமொழி ஆவதை எதிர்க்க வேண்டும் எனில், அளவு கடந்த அயல் மொழிக் கலப்பாலும், அயல் மொழியின் ஆதிக்கத் தாக்குதலாலும் பழந்தமிழ் திரிந்துண் டாயினவே தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்னும் தென்னாட்டு மொழிகள் மூன்றும். "கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்" - (மனோன்மணீயம்) இனிச் சிலப்பதிகாரம் செய்த இளங்கோவடிகள் பேசிய பழந்தமிழ், கி.பி-9ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே மலையாள மொழியாகத் திரிந்தது. மலையாளிகள் தங்களைப் பழந்தமிழரின் வழியினர் என்பதையே அறியாத நிலையை அடைந்து விட்டனர். எனவே, வடமொழிச் சார்பினை அடைந்த அம்மொழியினர்க்கு, வடமொழிச் சார்புடைய, வடமொழியின் மறுபதிப்பான இந்தியின் அயன்மை உறைக்காமையே அவர்கள் இந்தி ஆட்சிமொழி ஆவதை இன்று எதிர்க்காமையின் காரண மாகும். இந்தி மட்டும் இந்தியாவின் ஆட்சிமொழியானால் அன்னாரும் எதிர்க்கத் தலைப்படுவர் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. அந்நிலையை உண்டாக்கக் கூடாதென்பதற்காகவே இன்று தமிழர் இந்தியை எதிர்ப்பதன் நோக்கமாகும். இந்தியோடு ஆங்கிலமும் இருந்துவரலாம். இந்தி மட்டும் போதும். இந்தி கூடாது; ஆங்கிலமே போதும் -என்னும் அம்மூவர் நிலையினையும் ஓர்ந்தறிக. ஆட்சிமொழித்திட்ட விளக்கம் 1. பலமொழி வழங்கும் இந்நாட்டின் தலைமை ஆட்சிக்கும், மாநிலத் தொடர்புக்கும் ஒரு பொது மொழி வேண்டும். இந்நாட்டு மொழிகளான தேசீய மொழிகள் 14 இல் எதை நாட்டுப் பொது மொழி ஆக்குவது? ஏதாவ தொன்றினைப் பொதுமொழி யாக்க மற்ற மொழியினர் ஒத்துக்கொள்வார்களா? பிறர் விரும்பாது அவர்மீது சட்டத்தின் மூலம் வலுக்கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால் பிணக்கும் பூசலுமல்லவோ உண்டாகும்? அவ்வாறு வலுக் கட்டாயமாகத் திணிப்பது மக்களாட்சி முறைக்கு ஒத்த தாகுமா? இரு கட்சியினர் விளையாடும் போட்டி விளையாட்டுக்கு, அவ்விரண்டில் ஒரு கட்சிக்காரரை நடுவராகப் போட மற்ற கட்சியினர் ஒத்துக்கொள்வாரா? அவ்விரு கட்சியினும் சேராத மற்றொருவரை, அயலாரொருவரை நடுவராகப் போடுவதே வழக்கம். அவ்வாறே, இந்நாட்டு மக்கள் பேசும் மொழியல்லாத ஒர் அயல்மொழியை ஆட்சிமொழி ஆக்குவதே ஏற்ற முறையாகும். 2. இனி, இந்தி இந்தியமக்களில் பெரும்பாலோரால் பேசப்படுகிறது, மூன்றிலொரு பங்கினரால் பேசப்படுகிறது என்பதும் உண்மையில்லை. ஏனைத் தேசீய மொழிகள் ஒவ்வொன்றையும் விட இந்தி பெரும்பான்மையோரால் பேசப் படுவதில்லை. இராசத்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார் என்னும் நான்கு மாநிலங்களில் ஒன்றுக்கொன்று தொடர் பில்லாத பதினொரு மொழிகள் பேசப்படுகின்றன. இப்பதினொன் றையும் இந்தி என்னும் பெயரால் குறித்து, இந்தி பெரும்பான்மை யோரால் பேசப்படுகிறது என்கின்றனர். அப்பதினொன்றையும்-மேல்நாட்டு இந்தி, கீழ்நாட்டு இந்தி, பிகாரி என மூன்று வகையாகப் பிரித்துக் கூறுவர் மொழி நூல் வல்லுநர். அவையாவன: 1.மேல்நாட்டு இந்தி: பாங்காரு, பிரஜ்பாஷா, கனோஜ், பந்தேலி, உருது. 2. கீழ்நாட்டு இந்தி: அவதி, பகேலி, சத்தீஸ்கரி. 3. பிகாரி: மைதிலி, போஜ்புரி, மககி. இப்பதினொன்றில் ஒன்று பேசுவோர்க்கு மற்றொன்று புரியாது. பீகார் மாநிலத்தில் பேசப்படும் பிகாரியின் ஒரு பிரிவான மைதிலி என்னும் இந்தியே தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது. மைதிலி-சில நூறாயிரம் பேராலேயே பேசப்படுகிறது. தமிழ் நாட்டின் கண்ணேயன்றி, பர்மா, மலேயா, இலங்கை, தென்னாப்பிரிக்கா முதலிய வெளி நாடுகளில் வாழும் தமிழர் பேசும் தமிழும் ஒரே தன்மையாகவே உள்ளது. இங்ஙனம் உலக முழுவதுமுள்ள தமிழர் தொகையை விட, ஒவ்வொரு பிரிவு இந்தியும் ஒவ்வொரு கோடி மக்களால் பேசப்படுகிறது எனினும், தமிழ் மூன்றுகோடி மக்களுக்கு மேல் பேசப்படுகிறது. எனவே, இந்தி பெரும்பான்மை யோரால் பேசப்படுகிறது, மூன்றிலொரு பங்கினரால் பேசப் படுகிறது என்பது பொருந்தாக் கூற்றேயாகும். இனி, உருதுவைத் தேசீய மொழிப் பட்டியலில் சேர்த்தால், இன்னும் இப் பெரும்பான்மை குறையும். அப்படியே மூன்றிலொரு பங்கினரால் பேசப்படுகிறது என்று வைத்துக்கொண்டாலும், மூன்றில் ஒரு பங்கினர் மொழியை மூன்றில் இருபங்கினர் மீது திணிப்பது எங்ஙனம் மக்களாட்சி முறைக் கொத்ததாகும்? 3. இனி, இந்தி-இந்தியா என்னும் பெயரொற்று மையால் ஒற்றுமையுணர்ச்சி உண்டாகும் என்பதும் பொருத்தமாக இல்லை. இன்று இந்தியா-பாரதம் என்றே வழங்கப்படுகிறது. பாரத அரசு, தென்பாரதம், அகில பாரதச் செய்தி அறிக்கை என்பன காட்டாகும். இந்தி-பாரதம், என்ன பெயரொற்றுமை! இந்தி மொழியினால் இந்திய ஒருமைப்பாட்டுணர்ச்சி உண்டாகுமெனில், ஒரே மொழிபேசிய தமிழரசர்கள் மூவரும் பிற்காலத்தே பகைகொண்டு போர்க்களத்திலேயே வாழ்ந்து வந்ததும்; ஒரே மொழிபேசிய பாண்டவ கௌரவர் பகைவர்க ளாகவே வாழ்ந்து வந்து முடிவில் போரிட்டடியோடழிந்தொழிந்ததும் எதனால்? எனவே, இந்தி இந்தியாவின் ஆட்சிமொழி யாதற்குத் தகுதியுடைய தென்பது பொருத்தமுடையதாக இல்லை. 4. இந்தியோடு ஆங்கிலமும் இணையாட்சி மொழியாக இருந்து வரலாம்; இருந்து வரவேண்டும். 'இருந்து வரலாம்' என்பது - இல்லாமலும் இருக்கலாம் எனவும் பொருள் படுமாதலால், 'இருந்து வரவேண்டும்' எனத் திருத்த வேண்டும் என்பது ஒருசாரர் கருத்து. அடுத்தது இதற்கு விளக்கமாகும். 5. 'இந்தி ஆங்கிலத்தின் நிலையை அடையும் வரையிலும் ஆங்கிலம் இந்தியோடு இணையாட்சி மொழியாக இருந்து வரவேண்டும்' என்பதே, இந்திக்கு ஆட்சிமொழித் தகுதி இன் றென்பதாகும். இந்தி ஆங்கிலத்தின் நிலையை என்றும் அடையப் போவதில்லை. ஆங்கிலம் அறிவுக்களஞ்சியம், இலக்கியக் கருவூலம், உலக முழுதும் பரவியுள்ள மொழி, உலகையே கட்டியாளும் அத்தகு தகுதியும் திறனும் உடையது, அரசியல் துறை, அறிவியல் துறை, தொழில் துறை, வணிகத் துறை முதலிய எல்லாவற்றிலும் முதலிடத்தில் இருந்து வருகிறது; தலைமை தாங்கி வருகிறது எனலாம். இந்நிலையை இந்தி பல நூற்றாண்டுகளாயினும் அடைய முடியாதென்பது உறுதி. 6. இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலம் இணையாட்சி மொழியாக இருந்துவர வேண்டும். இந்தி பேசாத மாநில மக்கள் எதற்காக இந்தி ஆட்சி மொழி ஆகவேண்டும் என்று விரும்புகின்றனர்? இந்தி பேசாத மாநில மொழி ஒன்று ஆட்சி மொழியாக இந்தியர் விரும்பு வாரா என்ன? இந்தி பேசாத மாநில மக்கள் என்பது தமிழரையே குறிக்கும். இந்தியை நேரடியாக எதிர்ப்பவர் அவர்தானே? தங்கள் தாய்மொழி யாம் தமிழைக் கெடுக்கும், தமிழ்ப்பண்பாட்டைக் கெடுக்கும், தமிழரின் உயர்வைக் கெடுக்கும், தமிழரை இந்தியர்க்கு அடிமை யாக்கும், சொந்த நாட்டில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழச்செய்யும் ஒரு மொழியை; இலக்கியவளமில்லாத ஒரு மொழியைத் தமிழர் எதற்காக விரும்புகின்றனர்? இன்று இந்தி ஆட்சிமொழி ஆகக்கூடாது; வலுக் கட்டாய மாய்த் திணிக்கக்கூடாது என்னும் தமிழர், எதற்காக ஒரு நாளைக்கு எதற்காக அதை விரும்பி ஏற்றுக்கொள் கின்றனர்? இன்று இந்திமொழிமீது வெறுப்புக்கொண்டா அதை வேண்டா மென் கின்றனர்? அவ்வெறுப்பு நீங்கி ஒரு காலத்தே விரும்புவதற்கு? என்றோ ஒரு நாள் விரும்பி ஏற்றுக்கொள்வதை இன்றே எதிர்ப் பின்றி ஏற்றுக்கொள் வரன்றோ? எதிர்கால விளைவை எண்ணி இத்தலைமுறையினரே எதிர்க்கும் போது, இந்தியினால் விளையும் தீங்கினை அடையும் அடுத்த தலை முறையினர் அதனை விரும்பு வாரா என்ன? ஒருக்காலும் விரும்பவே விரும்பார்? 4-இல் எதிர்ப்பைத் தணிக்க இந்தியோடு ஆங்கிலமும் இருந்து வரலாம் எனவும், 5. இல் இந்திக்கு அரசியற் பயிற்சி கொடுக்க ஆங்கிலம் இருந்து வரவேண்டும் எனவும், 6. இல் சில ஆண்டுகளில் அதிகாரத்தின் மூலமும், அலுவற் பயன்பாட்டின் மூலமும் இந்திபேசாதாரை - தமிழரை விரும்பும்படி செய்து விடலாம் எனவும்-படிப்படியாக இந்தியைத் திணிக்க எடுத்துக் கொள்ளும் முயற்சியாகக் கொள்ளவேண்டும். 7. என்றைக்கிருந்தாலும் ஒரு நாளைக்கு இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழியாகத் தகுதியுடையது. 8. என்றோ ஒருகாலத்தே ஆங்கிலம் அடியோடு அகற்றப் பட வேண்டியதே. இவ்விரண்டும் மேற்கூறியவற்றிற்கு (4-6) விளக்கமும் உறுதிப்பாடும் தருவனவாகும். இதிலிருந்து இந்தித் திணிப்புத் தொடங்குகிறது. என்றோ ஒரு நாளைக்கு இந்தியே இந்தியா வின் தனியாட்சி மொழியாகும். அன்று ஆங்கிலம் அகற்றப்படும் எனக் கெடுவை ஏற்படுத்தினால், அதாவது பல ஆண்டுகளுக்குப் பின்னாவது இந்தி ஆட்சிமொழி ஆக வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டுவிட்டால், இப்பொழு திருந்தே சிறுகச் சிறுக இந்தியைத் திணிக்கும் வேலையும் தொடங்கும். திணிப்பை எதிர்க்கமுடியாது. எனவே, இவ்வாறு சட்டஞ் செய்தால், இன்றிருந்தே எதிர்ப் புணர்ச்சியும் எதிர்ப்பும் வலுப்பெற்றே வரும். 'மூக்குள்ள வரையிலும் சளி' என்பது போல, மொழிக் கிளர்ச்சி அடிக்கடி தோன்றி வளர்ந்து அது மொழிப் பூசலாக முடியும். இன்று இந்தியால் வரும் தீங்கு என்றும் வரும் என்பதை மறக்கக் கூடாது. 9. ஆங்கிலம் அயல்மொழியானதால், நம்மை அடக்கியாண்டவர் மொழியானதால் அது கூடவேகூடாது. அதைக் கற்பது நம் தன்மானத்துக்கு ஏற்றதாகாது. இது, உடனடியாக இந்தியை மட்டும் ஆட்சி மொழி யாக்கி விடவேண்டும் என்போர் திட்டம். இவ்வாறு கூறுவோரில் பெரும் பாலோர் ஆங்கிலப் பட்டதாரிகளே; ஆங்கிலத் தினாலே பேரும் புகழும் பெருவாழ்வும் பெற்றவர்களே. ஆங்கிலத்தை விட்டால் இந்திதானே என்பது இவர்கள் கொள்கை. தான் பேசும் மொழி-தாய்மொழி; தன் சொந்தமொழி, அயலார் பேசும் மொழி-அயல் மொழி, ஆங்கிலம் இந்நாட்டு மக்களுக்கு அயல்மொழியெனில், ஆங்கிலத்தைப் போலவே இந்தி பேசாதார்க்கு-தமிழர்க்கு, இந்தியும் அயல்மொழியேயாகும். ஆங்கிலம் நமக்கு அயல்மொழியே எனினும், ஆங்கி லேயர் ஆட்சி இங்கு இன்மையால், 'எங்கள் மொழி' என உரிமை கொண்டாடுவோர் இங்கு இன்மையால், அம்மொழி மூலம் ஆதிக்கஞ் செலுத்த முற்படுவோர் இங்கு இன்மையால், ஆங்கிலம் ஆட்சிமொழியாக இருப்பதால் இந்நாட்டு மக்கள் எவர்க்கும் அதனால் தீமை ஒன்றும் இல்லை. ஆங்கிலம் இந்நாட்டு மக்கள் எல்லோர்க்கும் அயல் மொழியேயாதலால் ஒப்பக்கற்று ஒரு நிகராக வாழலாம். இந்தி பேசுவோர் இந்நாட்டின் ஒரு பகுதியினர் ஆகையால், இந்தியில் இந்தியா ஆதிக்கம் மிகும்; இந்தி பேசாதார் தாழ்வுறுவர். இந்தி இந்தியர்க்கு நன்மையாகவும் அல்லா தார்க்குத் தீமையாகவும் அமையும். மேலும், இந்தியர்க்கு நமது தாய்மொழி நம்போன்ற ஒரு சாரார் தாய்மொழிக்கு அடிமையாக நேர்ந்தது என்ற சிறுமையும் தோன்றி இந்நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும். ஆகையால், இந்தியினும் ஆங்கிலமே ஆட்சிமொழியாதற் கேற்றதாகும். ஆங்கிலம் நம்மை அடக்கியாண்டவர் மொழியெனில், அடக்கியாண்ட அயலாராகிய ஆங்கிலேயருடன் கைகுலுக்கிக் கொண்டு கொஞ்சிக் குலாவுகிறோம். அவர்கள் பொருளை விரும்பி ஏற்கிறோம். அன்னார் அறிவியற் கண்டுபிடிப்பு களை, தொழில் நுணுக்கக் கருவிகளை வாங்கிப் பயனடைந்து வருகிறோம். செஞ்சீனரை எதிர்க்க அன்னார் படைத் துணையைப் போர்க் கருவிகளை வேண்டி ஏற்றோம். இன்றும் நமது பகைவர்களை அடக்க அன்னார் உதவியை வேண்டி நிற்கிறோம். ஆனால், அவர்தம் மொழியை அயலார்மொழி, அயல்மொழி, அடக்கி யாண்டார் மொழி என்று வெறுத் தொதுக்க முனைவது எங்ஙனம் பொருளுடையதாகும்? நாம் புதிதாக மேற்கொண்டுள்ள கிலோ, லிட்டர், மீட்டர் என்னும் அளவைகள் மூன்றும் ஆங்கில அளவை களே. 1-10 எண்ணும் ஆங்கில எண்களே, எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் என்ற அளவைகள் நான்கும் எண் எனப்படும். 'எண்ணும் எழுத்தும் மக்கட்கு இருகண்' என்கின்றார் வள்ளுவர். ஆங்கி எண்ணை அயலெனப்பாராது பயன்படுத்திக் கொண்டு, எழுத்தை 'அயல்' என்று வெறுத்தல் எங்ஙனம் அறிவுடை மையாகும்? எண், எழுத்து இரண்டுங் கொண்ட தல்லவோ ஒரு மொழியாகும்? அடக்கியாண்டோர் பொருள்களைப் பயன்படுத்தி வரும் நமக்கு, அவர்கள் எழுத்தைக்கற்பது எங்ஙனம் நமது தன் மானத்துக்கு ஏற்றதாகாது? அடக்கியாண்டோர் மொழியைக் கற்பது மானக்கே டெனின், இந்நாடு விடுதலை அடைந்த 1947 ஆகஸ்ட் 15ஆம் நாளன்றே ஆங்கிலேயருடன் ஆங்கிலத்தையும் மூட்டை கட்டி அனுப்பி யிருக்கவேண்டும். அங்ஙனமின்றி, 18 ஆண்டுகளாக முன் போலவே ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டு, ஆங்கிலக் கல்வியின் தரத்தை உயர்த்தப் பலவகையிலும் முயற்சி எடுத்துக்கொண்டு, ஆங்கிலத்திலேயே 18 ஆண்டுகளாய் ஆட்சி நடத்திவிட்டு, இன்னும் நடத்திக் கொண்டே, அடக்கியாண்டார் மொழி ஆகாது, அதைக் கற்பது நம் தன்மானத்துக்கடுக்காது என்பதில் என்ன பொருள் இருக்கிறது? நம்மை அடிமைப்படுத்தி அடக்கியாண்டஆங்கிலேயர்தான், 'இந்தியா ஒரே நாடு' என்ற ஒற்றுமை யுணர்வை ஏற்படுத்தினர். சில்லாந்தட்டியாய்ச் சிதறிக்கிடந்த இந்தியாவை ஓராட்சியின்கீழ் ஒரே நாடாக்கினர். நாடு முழுவதும் ஒரே அயலாட்சியின்கீழ் அடிமைப் பட்டதால் ஒன்று பட்டது; ஒரே நாடானது. அதற்கு முன் என்றும் இந்தியா ஒரே நாடாக, ஓராட்சியின் கீழ் இருந்த தில்லை. இதனை ஆங்கிலமொழிதான் செய்தது. ஆங்கில மொழியால்தான் இந்திய மக்களுக்கு, 'இந்தியா ஒரே நாடு, இந்தியர் எல்லோரும் இந்நாட்டு மக்கள்' என்ற ஒருமை உணர்ச்சி உண்டானது. இதனை ஆங்கிலம் என்றும் செய்யும் என்பதில் சிறிதும் ஐயுறவில்லை. விடுதலை யுணர்ச்சியை உண்டாக்கினதும் ஆங்கிலந்தான் என்பதை மறத்தல் கூடாது. அடிமைத்தனத்தில் பிறந்தது - உண்டானது, அயலாரால் உண்டாக்கப்பட்டது என்பதால், இந்திய ஒருமைப் பாட்டை நாம் உதறித்தள்ளிவிடத் துணிவோமா? அஃதேபோல் இந்திய ஒருமைப் பாட்டுக்குக் காரணமான ஆங்கிலத்தை அயல் மொழிப் பட்டம் சூட்டி உதறித் தள்ளிவிடாமல் இருப்பதே இந்நாட்டின் ஒற்றுமைக்கும் உயர்வாழ்வுக்கும் ஏற்றதாகும் என்பதை மறந்து விடக் கூடாது. இனி, இத்திட்டப்படியே ஆங்கிலத்தை அடியோடகற்றி விட்டு, இந்தியை மட்டும் ஆட்சிமொழியாக்கிக் கொள்வதாக வைத்துக்கொள்வோம். மைய ஆட்சிக்கும், மாநிலத் தொடர் புக்கும் இந்தி போதும். அதன்பின் நாம் இந்தியாவை விட்டு வெளியில் எங்கும் செல்ல வேண்டியதே இல்லையா? உலக நாடுகளிற் சென்று, அந்நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்வை, கலைத்திறத்தை, தொழிற்றிறத்தைக் கண்டறிந்து வரவேண் டாமா? வெளியுலகத்தைப் பற்றிக் கவலையில்லாமல், கிணற்றுத் தவளைபோல் இந்நாட்டுக்குள்ளேயே இருந்து வருவதா? வெளி நாட்டுத் தூதர்கட்கு ஆட்கெங்கேபோவது? நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டுத் தூதர்களுடன் நாம் பேசவேண்டாமா? ஆங்கிலத்தில் கண்டறிந்து வெளியிடும் அறிவியற் செல்வங்களை அறிந்து பயனுறுவ தெங்ஙனம்? அன்றன்று வெளியுலகச் செய்தியை அறிந்துகொள்ள வேண்டாமா? வெளி நாடுகளோடு வாணிகம் செய்து பொருளீட்டுவதெப்படி? ஆங்கிலத்தை அகற்றிவிட்டால் பிரிட்டன், அமெரிக்கா முதலிய வெளிநாடுகள் பணத்தை வாரிவழங்கி முதலீடு செய்து நம் நாட்டைத் தொழில்வள முடையதாக்க முன்வருமா? வெளி நாடுகளிற் சென்று மேற்கல்வி கற்றுவருவ தெங்ஙனம்? ஒன்றுமே தேவையில்லையா? நன்கு எண்ணிப் பாருங்கள்? உள்ளபடி இவ்வுண்மையை உணர்ந்தவர்களும் வேண்டுமென்றே ஆங்கிலம் கூடாது என்பதுதான் வியப்பினும் வியப்பாக இருக்கிறது. 10. உடனடியாக இந்தியையே ஆட்சிமொழியாக்கி விட வேண்டும். இது, இந்தியர் கொள்கை. 4-6க்கு இது மாறானதாகும். இதற்குப் பல இடங்களில் விளக்கந்தரப்படுகிறது. 11. இந்தியை ஆட்சிமொழி ஆக்கக்கூடாது. ஆங்கிலமே இன்றுபோல என்றும் ஆட்சிமொழியாக இருக்கவேண்டும். இதுவே இக்கட்டுரையின் முடிவாகும். பாலகோணங் களில் பல இடங்களில் கூறப்படும் விளக்கத்தால் இது உறுதிப் பாடுறும். இந்தி பேசாதாரின் - தமிழரின் முடிந்த முடிவு இதுவே. 12. தேசீய மொழிகள் பதினான்கையும் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்பது, அவ்வாறு செய்தால், இந்தியும் அவற்றுள் ஒன்றாயடங்கும். அப்போது இந்திக்குத் தனிச்சிறப்பு நீங்கிவிடும் என்பது. 13. மாநில மொழி அல்லாத இந்தி ஒன்றை ஆட்சி மொழியாக உருவாக்க வேண்டும். அதாவது, இந்தியின் வகை பதினொன்றனுள் ஏதாவதொன்றன்கண் ஏராளமான அயற் சொற்களைக் கலந்து, அதன் பழைய உருவந்தெரியாதபடி செய்து, அப்பழைய மொழியி னின்றும் முழுதும் வேறுபட்ட ஒரு புதிய மொழியை உண்டாக்கி அதை ஆட்சிமொழி ஆக்கவேண்டும் என்பது. இது தமிழரின் இந்தி எதிர்ப்பை மாற்றுவதற்காகக் கூறும் திட்டமாகும். இந்தி பேசுவோர் மொழி அன்றெனத் தமிழர் உடன்படுவரென்பது கருத்து. உடன்பட்டுச் சட்டஞ் செய்த பின், சிறுகச் சிறுகப் பழைய இந்தியையே ஆக்கிவிடுவது எளிது தானே? அப் புதிய மொழி எப்படி இந்தி மொழி ஆகும்? ஆணாக மாறிய அங்கயற்கண்ணி எப்படி அங்கயற்கண்ணி ஆவாள்? நூல் வழக்கில்லாத அப்புத்தம் புதிய கதம்ப மொழியை விட, பட்டுப் பழகிய பழைய மொழியான ஆங்கிலத் தைக் கொள்வதில் தவறென்ன? அப்புதிய மொழியும் இந்நாட்டில் வழங்காத மொழி யானதால், இந்நாட்டு மக்களுக்கு அயல் மொழி போன்றதுதானே? தங்கள் மொழியல்லாத அப்புதிய மொழியை ஆட்சிமொழியாக்க இந்தியர் விரும்புவார்களா? இத்தகைய இடர்ப்பாட்டுக்குக் காரணம், எப்படியாவது ஆங்கிலத்தை நீக்கிவிட்டு அந்த இடத்தில் இந்தியை அமர்த்தி விட வேண்டும் என்பதேயாகும். 14. இந்தி பேசாதார் இந்தியைக் கற்பதுபோல, இந்தி பேசுவோர் தென்னாட்டு மொழிகளில் ஒன்றைக் கற்க வேண்டும். தென்னாட்டு மொழிகள் - தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன. இது ஒருவன் தலையில் மற்றொருவன் தன் பெருஞ் சுமையைச் சுமத்திவிட்டு, இதோ நானும் உன் சுமையைச் சுமக்கிறேன் என்று, அவன் மேல்துண்டை வாங்கித் தன் தலையில் சுற்றிக் கொள்வது போன்றதாகும். இதனால், சுமப்போனின் தலைப்பாரம் தணியாமை போல, இந்தி பேசாதார்க்கு இந்தியின் தீமை அகலுமா என்ன? அவ்வாறு இந்தி பேசுவோர் தங்கள் மொழியைக் கற்பதால் இந்தி பேசாதார்க்கு ஆகும் பயனென்ன? ஆட்சிமொழியும் தாய்மொழியுமாகிய இந்தியைக் கற்கும் இந்தியர், ஆட்சி மொழியல்லாத தென்னாட்டு மொழிகளில் ஒன்றை எதற்காகக் கற்கவேண்டும்? இனி, இந்தி பேசாத மாநில மொழிகளில் எதை இந்தியர் கற்பது? இந்தி வழங்கும் நான்கு மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்த வரும் ஒவ்வொரு தென்னாட்டு மொழியைக் கற்ப தெனில், அதனால் உண்டாகும் பயனென்ன? எங்கள் மொழியைத் தான் அங்கு பாடமாக வைக்கவேண்டும் எனத் தமிழர், தெலுங்கர் முதலிய தென்னாட்டவர்க்குள் போட்டியும் பூசலும் பொறாமையும் உண்டாவதற்கேதுவாகுமன்றோ இது? இப்போதே ஆந்திர முதலமைச்சர், 'தெலுங்கில் வட சொற்கள் மிகுதியாகக் கலந்திருப்பதால், இந்தி பேசுவோர் தெலுங்கை எளிதில் விரும்பிக் கற்பர்' என, அடிப்போட்டு வைத்துள்ளார். இதனால், வேறுவகையில் மொழிப் பூசல் உண்டாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இது தமிழரை இந்தியை ஒப்புக்கொள்ளும்படி செய்யும் ஏற்பாடாகும். 15. இந்தி பேசாதார் மீது இந்தியைத் திணிக்கக் கூடாது; இந்தி பேசுவோர் மீது ஆங்கிலத்தைத் திணிக்கக் கூடாது. 'இந்தி பேசுவோர் மீது ஆங்கிலத்தைத் திணிக்கக் கூடாது' என்பதால், இந்தி பேசாதார் தம் தாய் மொழியோடு ஆங்கிலமும் கற்கவேண்டும் என்றாகிறது. ஓராட்சிக்குட்பட்ட ஒரு நாட்டு மக்களில், ஒருசிலர் இருமொழி கற்கவேண்டும் என்பதும், மற்றொருசிலர் ஒரு மொழி கற்றால் போதும் என்பதும், எவ்வகை மக்களாட்சி முறை என்பது விளங்கவில்லை. இத்தகைய ஆட்சித் திட்டத்தால் நாட்டில் அமைதி எங்ஙனம் நிலவும்? ஒரு கண்ணுக்குச் சுண்ணாம்பு ஒரு கண்ணுக்கு வெண்ணெய்' என்பது போன்ற முரண்பட்ட முறை யாகவன்றோ உள்ளது இது? நூற்றைம்பதாண்டுகளுக்கு மேலாக ஆங்கிலத்தைச் சொந்த மொழிபோலப் பயின்று, ஆங்கிலேய ஆட்சியினின்று விடுதலை யடைந்த பதினெட்டாண்டுகளாக ஆங்கிலத்திலேதான் ஆட்சி நடத்திவருகிறோம்; ஆங்கில ஆட்சி முறையையே பின்பற்றி வருகிறோம். இந்தி பேசும் மாநிலங்களிலும் இப் பதினெட்டாண்டு களாக ஆங்கிலத்திலேதான் ஆட்சி நடத்தப் பட்டு வருகிறது. இந்தி பேசுவோர் இன்றும் ஆங்கிலம் பயின்று தான் வருகின்றனர். இங்ஙனமாக, இந்தி பேசுவோர் மீது எப்படி ஆங்கிலத்தைத் திணிப்பதாகும்? ஆங்கிலத்தை இன்று புதிதாகவா ஆட்சிமொழியாக இந்தி பேசுவோர் மீது திணிக்க முற்படுகிறோம்? இந்தி பேசாதார் மீது இந்தியைத் திணிக்கக் கூடாது. இந்தி பேசாதார் இந்தி கற்க வேண்டியதில்லை. இந்தி பேசுவோர் மீது ஆங்கிலத்தைத் திணிக்கக் கூடாது - இந்தியர் இந்தி மட்டும் கற்றால் போதும். இத்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரின், இந்தியரும் இந்தி பேசாதாரும் எப்படிப் பழகுவது? எம்மொழியில் இந்தி பேசாத மாநிலங்களும் இந்தி மாநிலங்களும் தொடர்பு வைத்துக் கொள்வது? மைய ஆட்சி எம்மொழியில் நடத்துவது? ஆங்கிலத்தில் எனில், இந்தியர் எவ்வாறு அதில் பங்குகொள்ளமுடியும்? இந்தியில் எனில், இந்தி பேசாத மாநிலத்தார் நிலை என்னாகும்? இந்தி மாநிலங்களும் இந்தி பேசாத மாநிலங்களும் இருகூறாகப் பிரிந்து வாழும் நிலையன்றோ ஏற்படும்? இந்தி, ஆங்கிலம் இரண்டிலும் மைய ஆட்சி நடத்துவதெனில், இந்திய ஆட்சிக்குட்பட்ட அலுவலகங்களில் எவ்வாறு வேலை நடக்கும்? இந்தி பேசாதார்க்கு இந்தி தெரியாது. இந்தி பேசு வோர்க்கு ஆங்கிலம் தெரியாது. பாராளுமன்றக் கூட்டம் எப்படி நடத்துவது? யார் இருமொழி களையும் மொழி பெயர்ப்பது? மைய அமைச்சர்கள் ஒருவர்க் கொருவர் கலந்து பேசிக்கொள்ள வேண்டியதில்லையா? இது முழுதும் முரண்பாடான திட்டமாகும். 16. பத்தாண்டுக் காலத் தவணை கொடுத்து, அதன் பிறகு இந்தியை மட்டும் ஆட்சிமொழி ஆக்குவது. 17. இந்தி பேசாத மாநில மக்களில் முக்காற் பங்கினர் இந்தி ஆட்சிமொழி ஆகலாம் என்று சொன்னால், அதுமுதல் இந்தியை மட்டும் ஆட்சிமொழி ஆக்குவது. 18. இந்தி பேசாத கடைசி மாநிலம், ஆங்கிலமும் கூடவே இயங்கவேண்டும் என்று சொல்லுகிறவரை ஆங்கிலத்தைத் துணையாட்சி மொழியாகக் கொள்வது. 16, 17, 18இம் மூன்று திட்டங்களும், பாராளு மன்றத்தில் ஆட்சிமொழிச் சட்டத் திருத்தம் செய்வதற்காகத் தீட்டப்பட்ட திட்டங்களாகும். 16வது -5வது திட்டத்திற்கும், 17வது -6வது திட்டத்திற்கும் வரையறை கூறுவனவாகும். 5வது திட்டம், இந்தி ஆங்கிலத்தின் நிலையை அடையும் வரையிலும் ஆங்கிலம் இருக்கவேண்டும் என்கின்றது. 16வது, இந்தி ஆங்கிலத்தின் நிலையை அடைந்தாலும் அடையா விட்டாலும் இவ்வளவு காலத்திற்குப்பின் ஆங்கிலத் தை நீக்கிவிட வேண்டும் என்கிறது. 6வது திட்டம், இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலம் இருக்கவேண்டும் என்கின்றது. 17வது, அவ்வளவு பேரும் விரும்ப வேண்டியதில்லை. முக்காற் பங்கினர் விரும்பினால் ஆங்கிலத்தை நீக்கிவிடலாம் என்கின்றது. முக்காற் பங்கினர் என்பது, தமிழர் விரும்பா விட்டாலும் என்பதாகும். தமிழர்தானே இந்தியை நேரடியாக எதிர்ப்பவர்? முக்காற் பங்கினர் என்று சட்டம் செய்துவிட்டால், இந்தி பேசாத மற்றவர்களைச் சரிக்கட்டித் தமிழரைக் கேளாமலே, தமிழர் எதிர்த்தாலும், (எதிர்க்கத்தான் முடியாதே;) ஆங்கிலத்தை விலக்கிவிட்டு, இந்தியை மட்டும் ஆட்சிமொழி ஆக்கிவிடலாம் என்ற கருத்தில் தீட்டப்பட்ட திட்டமாகும் இது. இந்தி பேசாத மற்றவரைச் சரிக்கட்டி விடலாம் என்பதை, 4. ஆட்சிமொழித் திட்டம்; 3. இந்தி பேசாதார் என்பதிற் காண்க. இவ்விரண்டும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை மட்டும் ஆட்சிமொழி ஆக்கிக் கொள்வதற்காகத் தீட்டப் பட்ட திட்டங் களாகும். தமிழ்நாட்டு இந்திய அமைச்சர்களும், தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் களும், குறிப்பாகக் காங்கிரசு உறுப்பினர் களும் இதை நன்கு கவனிக்கவேண்டும். 18. இத்திட்டப்படிதான் திருத்தஞ்செய்யப் போவ தாகக் கேள்வி. 'கடைசி மாநிலம்' என்பது - தமிழ்நாடேயாகும். இந்தி ஆட்சிமொழி ஆகக் கூடாதென்று எதிர்ப்பவர் தமிழர்தானே? தமிழர் ஒருநாளும், 'இந்தி மட்டும் போதும்; ஆங்கிலத்தை நீக்கிவிடலாம்' என்று சொல்லப்போவதில்லை. தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில், ஆளுங்கட்சியினர் - காங்கிரசுக் கட்சியினர், தங்கள் பெரும் பான்மையைக் கொண்டு அவ்வாறு தீர்மானம் செய்தாலும், தமிழ் மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவ்வாறு தீர்மானம் செய்து? ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை மட்டும் ஆட்சிமொழி ஆக்கிவிடலாம் என்ற கருத்தில்தான் இத்திட்டம் தீட்டப்பட்டதாகும். தமிழ் நாட்டுச் சட்டமன்ற எதிர்க்கட்சியினர் அத்தீர்மானத்தை எதிர்ப்பார்களாதலால், பெரும்பான்மைக் கட்சி - 'மாநிலம்' என்பதைக் குறிக்குமா என்பது ஆராய்ச்சிக்குரியது. இவ்வாறு சட்டஞ் செய்தால், கடைசி மாநிலம் அவ்வாறு ஆங்கிலத்தை நீக்கிவிடலாம் என்று சொல்லுகிறவரை, தமிழர் - தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி படிக்க வேண்டும். இந்தியர்-இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழி படித்தால் போதும். ஓராட்சியின் கீழுள்ள ஒரு நாட்டு மக்களுள், சிலர் மூன்று மொழியும், சிலர் இரண்டு மொழியும் படிப்ப தென்பது மக்களாட்சி முறைக்குச் சிறிதும் ஒவ்வாததாகும். ஆளுங்கட்சியின் சனநாயக சோசலிசக் கொள்கைக்கு இது மிகமிக வேறுபட்டதாகும். இனிக் கடைசி மாநிலம் - 'இந்தி மட்டும் போதும்; ஆங்கிலத்தை நீக்கிவிடலாம்' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். அப்போதும், தமிழர்-தமிழ், இந்தி ஆகிய இருமொழியும், இந்தியர்-இந்தி மட்டும் படிப்பதென்பதும் அத்தகைய ஒவ்வா முறையே யாகும். இந்தி பேசுவோரும், இந்தி பேசாதோரும் - இந்நாட்டின் ஒரு நிகரான ஒத்த குடிமக்கள், சரிநிகரான பங்காளிகள் ஆவர் என்பதை ஆளுங்கட்சியினர் ஒருபோதும் மறத்தல் கூடாது. "வாழிகல்வி செல்வமெய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர்யாரும் ஒருநிகர்ச மானமாக வாழ்வமே." என்ற பாரதியாரின் வாக்கினை நோக்குக. 2-6-65இல் டில்லியில் கூடிய காங்கிரசுக் காரியக்குழுவின் தீர்மானம் 1. மும்மொழித் திட்டத்தைப் பள்ளிப்பாடத் திட்டத்தில் சேர்ப்பதோடு, பல்கலைக் கழகக் கட்டத்தை அடையச் செய்தல் எல்லா மாநிலங்களின் கட்டாயமான பொறுப்பாகும். 2. அனைத்திந்திய அலுவல் தேர்வுகளை (யு.பி.எஸ்.சி.) ஆங்கிலத்திலும் இந்தியிலும், மற்ற தேசீய மொழிகளிலும் நடத்தவேண்டும். 3.ஆங்கிலத்திலும் இந்தியிலும் கட்டாயமாக வினாத்தாள்கள் இருக்கும். இந்தியில் தேர்வுகள் எழுதுவோர்க்கு ஏதாவதொரு மாநில மொழியில் ஒரு வினாத்தாள் இருக்கும். 4. இந்த நோக்கத்தை அடையும் பொருட்டு:(அ) ஒவ்வொரு மாநில மொழியும் ஆட்சி மொழியாகவும், கூடிய சீக்கிரம் பல்கலைக் கழகப் போதனா மொழியாகவும் ஆகும். (ஆ) பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்தி போதனையின் தரம் படிப்படி யாக உயர்த்தப்படும். (இ) முதன்மையான பங்கு வகிக்கக் கூடிய மொழி என்ற முறையில் ஆங்கிலம் தொடர்ந்து கற்றுக் கொடுக்கப் படும். 5. இந்திய ஆட்சிமொழியாகவும், மாநிலங்களின் இணைப்பு மொழியாகவும் திறம்பட இயங்கும் வகையில் படிப்படியாகப் பலகட்டத் திட்டமிட்டு இந்தி வளர்ச்சி யடையும்படி செய்யப்படும். எப்படியாவது, என்றோ ஒரு நாளைக்கு இந்நாட்டில் தனி இந்தி ஆதிக்கத்தை ஏற்படுத்திவிடவேண்டும் என்ற ஒரே நோக்கத் தோடு செய்யப்பட்டவையாகும் இத்தீர்மானங்கள். மேலும் இத் தீர்மானங்கள், இந்தி எதிர்ப்பை எவ்வாறு தணிக்கலாம் என்பதில் அக்கறை கொள்கின்றனவேயொழிய இந்நாட்டின் எதிர்கால நலனில் அக்கறைகொண்டதாகத் தெரியவில்லை. 4. ஆ, 5. இதற்குச் சான்று பகரும். இவை இந்தி பேசாத இந்நாட்டு மக்களின் உண்மையான எதிர்ப் பையும் நலத்தையும் ஒரு சிறிதும் பொருட்படுத்தாது, தம் போக்கில் செய்யப்பட்டனவாகும் எனலாம். மும்மொழித் திட்டம் பற்றி முன்னரே விளக்கப் பட்டுள்ளது. 2,3 "14 மாநில மொழிகளிலும் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் திட்டத்தால், நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப் பாடும் குலைந்து, மாநில மனப்பான்மையோடு மாநில ஒற்றுமையின்மையும் வளரும். பலமொழிகளில் எழுதினால் ஏற்றத் தாழ்வின்றித் திருத்தமுடியாது." - டாக்டர். சி.பி.ராமசாமி ஐயர். 4. இ. தொடர்ந்து கற்றுக் கொடுக்கக்கூடிய தகுதியுடையதும், இன்றியமையாத பங்கு வகிக்கக்கூடியதுமான ஆங்கிலமிருக்க, இந்நாட்டு மக்களில் ஒரு சாராரின் நல்வாழ்வுக்கும், நாட்டொற்றுமைக்கும் ஊறு விளைக்கக்கூடிய இந்தியை எதற்காக வலுக்கட்டாயமாகப் புகுத்த இவ்வளவு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென்பது விளங்கவில்லை. இன்று இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்குரிய காரணம் என்றும் இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். "ஆங்கிலம் நமக்கு அயல்மொழி அல்ல. இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆங்கிலம் மிகவும் இன்றியமையாதது. என்றைக்கு நாம் ஆங்கிலத்தை விடுகிறோமோ அன்றைக்கே நம்முடைய சுதந்தரம் பறிபோய்விடும்" - சர்.சி.வி.ராமன். ஆட்சிமொழிச் சட்டத்திருத்த விவரம் இந்திய அரசியல் இந்தியுடன் ஆங்கிலமும் நீடிக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களுக்கும் இந்திய அரசுக்கும் கடிதப் போக்குவரத்து ஆங்கிலத்தில் நடைபெறவேண்டும். இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்தி மாநிலங்கள் ஆங்கிலத்தில் கடிதம் எழுத வேண்டும். எல்லா மாநிலங்களும் ஆங்கிலத்தை அகற்றும்படி தீர்மானம் நிறைவேற்றுகிறவரை இது நீடிக்க வேண்டும். இவற்றிற்கு முன்னரே விளக்கந்தரப்பட்டுள்ளது.  5. இந்தியால் விளையுந் தீமை 1. இந்தி ஆட்சிமொழியானால் - 1. தமிழ் கெடும், 2. தமிழ்ப் பண்பாடு கெடும், 3. தமிழினங் கெடும், 4. தமிழர் வாழ்வு கெடும். 2. இந்தி ஆட்சிமொழியானால் - இந்தியர்க்கு மொழி வெறி உண்டாகும்; ஏனையோர்க்கு இந்தி எதிர்ப்புணர்ச்சி உண்டாகும். 3. இந்தி ஆட்சிமொழியானால் - இந்தியர் ஆதிக்கம் மிகும்; அல்லாதார் இரண்டாந்தரக் குடிமக்களாவர். 4. இந்தி ஆட்சிமொழியானால் - இந்தி பேசுவோர், இந்தி பேசாதோர் என, இந்திய மக்கள் இருவேறு வகை யினராவர். 5. இந்தி ஆட்சிமொழியானால் - இந்தியாவின் ஒற்றுமையும், ஒருமைப்பாட்டுணர்ச்சியும் கெடும். 1. (1) இந்தி ஆட்சிமொழியானால், தமிழ் கெடும்: கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட அயல்மொழி ஆதிக்கத்தால், தமிழ் இலக்கியத்தில் ஏராளமான அயற் சொற்கள் கலந்து தமிழின் தூய தனித்தன்மையைக் கெடுத்து விட்டன. அயல்மொழிச் சொற்களைக் கலந்து பாடுவதே சிறப்பு என்னும் நிலை ஏற்பட்டது. "கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல் கற்பூர களப மணிவன மணிசேர" - (அருணகிரிநாதர் திருப்புகழ்.) "சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்த சிவமே" - (தாயுமானவர் பாடல்.) எனக் காண்க. தமிழ்ப் பாடல்களாகிய நாலாயிரத்திற்கு, தமிழர்க்கு விளங்காத, தமிழும் வடமொழியும் கலந்த - மணிப்பிர வாள நடையில் உரை எழுதப்பட்டதும், அந்நடையில் சமணர் சீபுராணம் செய்ததும் குறிப்பிடத்தக்கவையாகும். " அன்றியும் தமிழ்நூற் களவிலை அவற்றுள் ஒன்றே யாயினும் தனித்தமிழ் உண்டோ?" - (இலக்கணக் கொத்து.) தமிழ் மக்கள் பெயரெல்லாம் அயல்மொழிப் பெயர் களாயின. தமிழ்ப் பெயர் வைப்பதே தாழ்வு என்ற நிலை உண்டானது. இன்றையத் தமிழ் மக்கள் பெயர்களை நோக்குக. தனித்தமிழ் வளர்த்த மூவரசர் பெயர்களும் - மாறவர்மன் அவநிசூளாமணி, விஜயாலயன், ரவிவர்மன் குலசேகரன் என, அயற்பெயர்களாயின. அரியணை ஏறாத வெறும் அயல்மொழி ஆதிக்கத்தினாலேயே தமிழ் இவ்வாறு கெட்டுவிட்டதென்றால், வடமொழியின் சார்புடைய இந்தி ஆட்சிமொழியானால், தமிழ் கெடும் எனத் தமிழர் அஞ்சுவதில் தவறுண்டோ? இப்போதுதான் தமிழர்க்குத் தனித்தமிழ் உணர்ச்சி தோன்றி, அயற்சொற் கலவாது பாடியும் எழுதியும் வருகின்றனர். இந்தி ஆட்சிமொழியானால், அவ்வுணர்ச்சி கெட்டுப் பழைய நிலையே உண்டாகிவிடும் என்றஞ்சியே தமிழர் இந்தியை எதிர்க்கின்றனர். 150 ஆண்டுகள் ஆங்கிலம் ஆட்சிமொழியாகவும், பாட மொழியாகவும் இருந்தும், ஆங்கிலச் சொற்கள் தமிழ் இலக்கியத்தில் கலவாமையும், தமிழர் ஆங்கிலப் பெயர்வைத்துக் கொள்ளாமையும் இங்கு குறிப்பிடத்தக்கனவாகும். 'இந்தியால் தமிழ் அழியாது' என்கின்றனர். இந்தியால் தமிழ் அழிந்துவிடுமென்று தமிழர் எண்ணவும் இல்லை, அஞ்சவும் இல்லை. இந்தியால் தமிழ் கெடும் என்றுதான் அஞ்சுகின்றனர். அழிவதைவிடக் கெடுவதுதானே கொடிது. இறந்துவிடுவதை விடத் தீராத நடைநோயால் உடல் நலிந்து படுத்த படுக்கையில் கிடப்பதுதானே ஒருவர்க்குப் பெருந் துன்பம்? இலக்கிய வள மில்லாத இந்தியால் தமிழ் வளரு மென்பதும் பொருந்தாக் கூற்றேயாகும். 1. (2) இந்தி ஆட்சிமொழியானால், தமிழ்ப் பண்பாடு கெடும். அகவாழ்வையும் புறவாழ்வையும் சிறப்பித்துப்பாடி அதன்படி வாழ்ந்துவந்த உயர்வாழ்வும், குறள் நெறியும், பொது நலத்துறவும் வாழ்க்கையின் ஒரு கூறான சமயவாழ்வும் ஆகிய இயற்கையோடொட்டிய பழந்தமிழ்ப் பண்பாடுகள் ஒழிந்து, புராணங்களும் புகழ் நூல்களும் மலிந்தமைக்கு அயல்மொழி ஆதிக்க மன்றோ காரணம்? இந்தி ஆட்சி மொழியானால், இந்தியரின் பெருங்கலப் பேற்பட்டு மேலும் தமிழ்ப் பண்பாடு கெடும் என்பதில் தடையுண்டோ? 1. (3) இந்தி ஆட்சிமொழியானால், தமிழினங்கெடும்: ஒன்றாயொரு குலமாய் உயர்குடி மக்களாய் வாழ்ந்து வந்த தமிழினம், அயல்மொழி யாதிக்கத்தால், பிறப்பிலேயே உயர்வு தாழ்வுடைய வென்னும் பாகுபாடுற்று, கொள்வனை கொடுப்பனை யற்று, உடனுண்ணுதலற்று, வெவ்வேறு சாதிகளாகப் பிரிந்து வாழுநிலை ஏற்பட்டது. சில பழங்குடி வகுப்பினர் தீண்டப்படாத நிலையை அடைந்தனர். ஒவ்வொரு தமிழ்ச் சாதிக்கும் வடமொழி மூலச் சாதிப் புராணங்கள் ஏற்படலாயின. ஒவ்வொரு சாதியினரும் தம் சாதிப் புராணக் கற்பனையைப் பெருமையாக மதித்துத் தத்தம் சாதியுயர்வை நிலைநாட்ட முனைவதால், தமிழரிடைச் சாதிப்பூசல் மலிந்துவிட்டது. இப்போதுதான் தமிழர்க்கு, தமிழினம் தனியினம், தமிழ்ச் சாதிகள் பிறப்பினால் வேறுபட்டவை அல்ல என்ற உண்மை புலப்பட்டு வருகிறது. இந்தி அதைக் கெடுத்துவிடும் என்பதில் ஐயமுண்டோ? 1. (4) இந்தி ஆட்சிமொழியானால், தமிழர் வாழ்வு கெடும்; இந்தி ஆட்சி மொழியானால், தமிழ் நாட்டிலுள்ள இந்திய அலுவல்களிலும், தமிழ்நாட்டு ஆட்சி அலுவல் களிலும் இந்தியர் பெருவாரியாக நுழைந்து விடுவர். தமிழ் நாட்டில் ஏராளமான இந்தியர் குடியேறி, தமிழர் தொழில், வாணிகம் எல்லா வற்றையும் கைப்பற்றிவிடுவர். அதனால் தமிழர் வாழ்வு கெடும். தமிழர் இந்தியரோடு நெருங்கி வாழ நேருமாகையால், தமிழ் கெடுவ தோடு தமிழ்ப் பண்பாடும் கெடும். இக்காரணங்களால் தான் இந்தி ஆட்சிமொழி ஆவதைத் தமிழர் எதிர்க்கின்றனர். தங்கள் மொழியும் பண்பாடும் இனமும் வாழ்வும் கெட யார்தான் உடன்படுவர்? 2. இந்தி ஆட்சிமொழி என உறுதிப்படு முன்னரே, 26-1-65க்கு முன்னரே, இந்தியில்தான் பேசவேண்டும், இந்தியில் தான் அறிக்கைகள் இருக்கவேண்டும் என இந்தியர் கூச்சலிடு கின்றனர்; பலமொழி பேசுவோர், இந்தி தெரியாதோர் கூடியுள்ள பாராளுமன்றத்தில் இந்தியில் கேள்வி கேட்கின்றனர், இந்தியில் பேசுகின்றனர்; இந்தியக் குடியரசுத் தலைவரையே ஆங்கிலத்தில் பேசக்கூடாதெனக் கூப்பாடு போடுகின்றனர்; இந்தியை உடனடி யாக ஆட்சிமொழி யாக்காவிட்டால், தாக்குப்பிடிக்க முடியாத பெரும்புரட்சி நடத்துவோம் - என்று விரட்டுகின்றனர். இந்தி ஆட்சிமொழியானால், அன்னாருக்கு மொழி வெறி தலைக்கேறி விடுமென்பதற் கையமுண்டோ? இந்தி பேசாதவர் களை, தமிழர்களை இந்நாட்டுக் குடிமக்கள் என்று மதிப்பார்களா என்ன? இந்தியரின் அம்மொழிவெறி, இந்தி பேசாதார்க்கு இந்தி எதிர்ப்புணர்ச்சியை உண்டாக்காமலா இருக்கும்? அது இந்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உகந்ததாகுமா? 3. இந்தி ஆட்சிமொழியானால், இந்தியர் ஆதிக்கம் மிகும்; அல்லாதார் இரண்டாந்தரக் குடிமக்களாவார்: இன்றே, மற்ற மொழியினரைவிட நாங்கள் பெரும்பாலோர்; நாங்கள் வைத்தது தான் சட்டம் என்கின்றனர்; இந்திய ஆட்சி அலுவலகங்களில் அவர்கள் ஆதிக்கம் மிக்குள்ளது. மற்றவர்களை அவர்கள் மதிப்பதில்லை. இந்தி ஆட்சிமொழியானால், ஆங்கில ஆட்சிக் காலத்தே ஆங்கிலேயரும் நாமும் எந்நிலையில் இருந்துவந்தோ மோ, எவ்வாறு அவர்கள் நம்மை மதித்து நடத்திவந்தனரோ அந்நிலையினும் மோசமான நிலை ஏற்பட்டுவிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஓர் அலுவலக ஏவல் இந்தியன் கூடத் தமிழ் உயர்தர அதிகாரியை மதிக்காத நிலை ஏற்பட்டுவிடும். இந்தி பேசாதார், தமிழர், இந்தியாட்சியில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழநேரும் என்பதில் ஐயப்பாடே இல்லை. 4. இந்தி ஆட்சி மொழி ஆனால், இந்தி பேசுவோர், இந்தி பேசாதார் என, இந்திய மக்கள் இருவேறு வகையினராவர்; விடுதலை இயக்க காலத்தே காந்தியடிகளால் உண்டாக்கப்பட்ட, 'நாம் இந்தியர், நமது நாடு இந்திய நாடு' என்ற உணர்ச்சி, சென்ற சீனத்தாக்குதலினால் உறுதிப் பாடுற்றது. இந்தியாவிலிருந்து பிரிந்துவிடவேண்டும் என்று எண்ணியவர்கள்கூட அவ்வெண்ணத் தைவிட்டு, 'எங்கள் இந்திய மண்ணை மிதிக்க அச்சீனரை விடோம்' என்று வீரமுழக்கம் செய்தனர். இன்று பாகித்தான் கொடுக்கும் தொல்லையால் அவ்வுணர்ச்சி மேலும் வலுப் பெற்றுள்ளது. இந்தி ஆட்சிமொழியானால், இந்தியரின் ஆதிக்க வெறியால், அடாச் செயல்களால், இந்தி பேசாதார்க்கு, தமிழர்க்கு, அவ்வொற்றுமை மனப்பான்மை கெட்டு, இந்தியர் வேறு நாம் வேறு; இவ்விந்தியரோடு கூடிவாழ நம்மால் முடியாது; ஆங்கில ஆட்சிக்கு முன்னிருந்ததுபோல் நாம்பிரிந்து தனியாக வாழ்வதே நல்லது என்ற எண்ணம் உண்டாவது இயல்பே. வடஇந்தியரின் முரட்டுப் பிடிவாதத்தால்தானே பாகித்தான் பிரிய நேர்ந்தது? எண்ணிப்பாருங்கள். 5. இந்தி ஆட்சிமொழியானால், இந்தியரின் மொழிவெறியும், ஆதிக்கச் செருக்கும் மிகுமாதலால், மற்றவர்க்கு வேற்றுமை யுணர்ச்சி உண்டாகும். அதனால், இந்தியாவின் ஒற்றுமையும் ஒருமைப்பாட்டுணர்ச்சியும் கெடும் என்பது உறுதி. ஒற்றுமையினையும் ஒருமைப்பாட்டுணர்ச்சியினையும் சட்டத்தி னாலோ, அதிகாரத்தினாலோ, அடக்குமுறையினாலோ உண்டாக்கி விட முடியா? அவை தன்னுணர்ச்சியினால் தானாக உண்டாகக் கூடியவை. அவ்வுணர்ச்சியை இந்தியினால் கெடுத்துக் கொள்வதா? ஒரு மொழிக்காக கருத்துப் பரிமாறும் ஒரு கருவிக்காக, சொந்த மொழி அயல்மொழி என்பதற்காக இழக்க வழி செய்வதா? எண்ணிப் பாருங்கள். இவ்வளவு தீமையினையும் பொருட்படுத்தாது, 'இந்தியை ஆட்சி மொழி ஆக்கித்தான் தீருவோம்' எனின், அது இந்நாட்டின். இந்நாட்டு மக்களின் போதாக்காலம் என்று தான் நினைக்க வேண்டும்.  6. ஆட்சிமொழிச் சட்டத் திருத்தம் இந்தி மட்டும் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும்; ஆங்கிலம் கூடாது என்பது ஒரு கட்சி. இந்தி கூடாது; ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருந்து வரவேண்டும் என்பது மற்றொரு கட்சி. எனவே, ஆட்சி மொழித் திட்டம் பற்றி இருவேறு வகையான கருத்து நிலவி வருகிறது. ஆட்சிமொழித் திட்டம் இந்தியப் பாராளுமன்றத்தில், பெரும்பான்மையினரால் சட்டஞ் செய்யப்பட வேண்டியது. இந்தியப் பாராளுமன்றத்தில் காங்கிரசுக் கட்சியினரே பெரும்பான்மையினராவர். மற்ற கட்சியின ரெல்லாம் சேர்ந்து சிறு பான்மையினரே. எனவே, இந்நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப் பாட்டுக்கும் ஊறுண்டாகாத வகையில், இந்தி பேசாதார்க்கு, குறிப்பாகத் தமிழர்க்குத் தீங்கு நேராதவகையில் ஆட்சி மொழிச் சட்டத் திருத்தம் செய்யும் பொறுப்பு, காங்கிரசுக் கட்சி யினரைச் சார்ந்ததே. ஆளுங்கட்சியாகிய காங்கிரசுக் கட்சியினர் - இந்தி பேசு வோர், இந்தி பேசாதோர் என இருவகையினராவர். இந்தி ஆட்சிமொழி ஆகவேண்டும் என்பது காங்கிரசுக் கொள்கை யாகையால், இந்தி பேசுவோர் - இந்தி மட்டும் ஆட்சிமொழி ஆகவேண்டும்; ஆங்கிலம் கூடாது என்றால், அது குற்றமாகக் கருதப்படமாட்டாது. இந்தி பேசாதார் - இந்தி கூடாது; ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருந்துவரட்டும் என்றால், அது கட்சிக் கொள்கைக்கு மாறானதாகையால் குற்றமாகக் கருதப் படும். அதனால், இந்தி பேசாதார் அவ்வாறு கூறத் துணிவதில்லை. எனவே, இந்தியப் பாராளுமன்றத்தில் இந்திக்கே பேராதரவு உண்டு; ஆங்கிலத்திற்கு ஆதரவில்லை. ஆட்சிமொழி என்பது ஒரு கட்சிச் சார்புடையதன்று அது கட்சிக்கு அப்பாற்பட்டது. ஆளுங்கட்சியுட்பட இந்தியா விலுள்ள எல்லாக் கட்சியினரும், எக்கட்சிச்சார்பும் இல்லாதவரும் ஆகிய இந்திய மக்கள் 40 கோடி பேருக்கும் பொதுவானது ஆட்சி மொழி என்பது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சிமொழி மாறுவதில்லை. இந்நாட்டு மக்கள் ஒவ்வொரு வரின் உடமை யாகும் அது. ஆகவே, சொந்தமொழி - அயல்மொழி என்பது கருதி, இந்நாட்டு மக்களில் ஒருசாரார் விருப்பத்திற்கு மாறாக, இந்தி பேசாதார்க்குத் தீமைதரும் என்பதை எண்ணிப்பாராது, ஆளுங் கட்சியின் பெரும்பான்மைத் திறத்தால் ஆட்சிமொழிச் சட்டத் திருத்தம் செய்யக்கூடாது. அது ஆட்சிமொழியின் தன்மைக்கு ஒத்ததாகாது. காங்கிரசுப் பாராளுமன்ற உறுப்பினர்களும், இந்திய அமைச்சர்களும், குறிப்பாகத் தலைமை அமைச்சர் அவர்களும் - இந்நாட்டு மக்களின் ஒரு நிகரான உயர் வாழ்வையும், இந்தி பேசாத மக்களின், குறிப்பாகத் தமிழ் மக்களின் நல்வாழ் வையும் நன்கு எண்ணிப்பார்த்து, சமன் செய்து சீர்தூக்குங்கோல் போல் நடுநின்று நன்கு ஆய்ந்து, ஆட்சி மொழிச் சிக்கல் என்பது இனி என்றென்றைக்கும் தலை காட்டாதவாறு, கீழ்வருமாறு ஆட்சிமொழிச் சட்டத்தைத் திருத்திவிட வேண்டும். இதற்கு, இந்தி பேசாத மாநிலங்களின் காங்கிரசுப் பாராளு மன்ற உறுப் பினர்களின், அதிலும், தமிழ்நாட்டுக் காங்கிரசுப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பு தனிச் சிறப்பு வாய்ந்த தாகும். இந்தி பேசும் மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் - 'தனக்குள்ளது பிறர்க்கும் உண்டு' என்னும் உண்மையை உணர்ந்து, இந்நாட்டுக்காகத் தங்கள் மொழிக் கொள்கையை விட்டுக்கொடுத்து, இதற்குப் பெருந் துணை செய்ய வேண்டும். தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் இதற்கு முதற்காரணமாக அமையவேண்டும். காங்கிரசுத் தலைவரின் பொறுப்பு மலையினும் மாணப் பெரிதாகும். இதில் கட்சிக் கொள்கைக்கு இடமே இருக்கக்கூடாது. வெறுப்பு விருப்பின்றி, எதிர்ப்பென்னும் பெயரின்றி ஒருமனமாக இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஏற்ப நல்ல தீர்ப்பு வழங்குவது, இந்தியக் குடியரசுத் தலைவரின் பொறுப்பும் கடமையுமாகும். 'அந்தந்த மாநிலமொழி, அந்தந்த மாநிலங்களின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும், ஆங்கிலம் இந்திய ஆட்சி மொழியாகவும், மாநிலத் தொடர்பு மொழியாகவும் இருந்து வரவேண்டும்' - என்பதே. தமிழ் - தமிழ்நாட்டு ஆட்சிமொழியாகும். இவ்வாறே ஏனை இந்தி பேசாத மாநிலமொழிகளும். இந்தி - இந்தி பேசும் மாநிலங்களின் ஆட்சிமொழியாகும். தமிழர் - தமிழோடு ஆங்கிலமும் கற்றுவரவேண்டும். இவ்வாறே மற்ற இந்தி பேசாத மாநிலத்தவரும் தத்தம் தாய்மொழியோடு ஆங்கிலமும் கற்றுவரவேண்டும். அதாவது, இந்தி பேசுவோரும் இந்தி பேசாதோரும் தத்தம் தாய்மொழியோடு ஆங்கிலம் மட்டும் கற்றால் போதும். இத்திட்டத்தால், இந்தியும், இந்தியல்லாத ஏனை மாநில மொழி களும் ஒரே நிகராக ஆட்சிமொழியாகின்றன. இம்மொழியினர் ஒருமனப்பட்டுறவாடி ஒரு நிகராய் வாழ்ந்துவருவர். இவ் விருமொழித் திட்டம் - இந்நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் முழுக்க முழுக்க ஏற்றதாகும். இதுவே, சனநாயக சோசலிசத்திற்கு ஏற்ற திட்டமாகும். இத்திட்டத்தை நிறைவேற்றி, இந்நாட்டு மக்களெல்லோரும் ஒன்றாய் ஒருநிகராய் ஒருமனப்பட்டு உயர்வாழ்வு வாழ்வோமாக.  ஒன்றே குலம் (1966) முன்னுரை நம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு இடையூறாக இருந்து வருவது, குல வேற்றுமை. குலவேற்றுமை என்பது, குறிப்பாகத் தீண்டாமையை உணர்த்தும். இந் நாட்டின் எதிர்காலக் குடிமக்களாகிய சிறுவர்களுக்கு, 'மக்கள் ஒரே இனம்' என்னும் ஒருமைப்பாட்டுணர்ச்சியை, இப் பள்ளிப் பருவத்திலேயே உண்டாக்குதல் ஏற்புடைத்தாகும். இந்நோக்கத்துடனேயே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 'ஒன்றே குலம்' என்னும் இந்நூலில், தீண்டாமை விலக்கிய பெரியார் சிலரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், கதை வடிவில், எளிய இனிய தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. இந்நூலைப் பள்ளிச் சிறார்க்குப் பயன்படும்படி செய்து அன்னார்க்கு மொழியறி வோடு, ஒருமைப்பாட்டுணர்ச்சியையும் உண்டாக்குதல், பெரியோர்களின் பொறுப்பும் கடமையும் ஆகும். பவானி அன்புள்ள, 15.10.66 குழந்தை 1. ஒன்றே குலம் ஒன்றே குலம் - என்பது, திருமூலர் என்னும் தமிழ்ப் பெரியாரின் திருவாக்கு. திருமூலர் செய்த திருமந்திரம் என்னும் நூலில் உள்ளதுதான், 'ஒன்றே குலம்' என்னும் இவ்வறவுரை. ஒன்றே குலம்! ஆம், ஒன்றே குலந்தான்! ஒரே இனமான மக்களை - உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என, இருவேறு வகையாகப் பிரித்து வைத்திருக்கும், அங்ஙனம் பிரித்து வைத்ததோடு நில்லாமல், அவ்வாறே நடைமுறையிலும் அதைக் கடைப்பிடித்து நடந்து வரும் குல வேற்றுமைக் கொடு மையைப் போக்க எழுந்ததே, 'ஒன்றே குலம்' என்னும் இத்திரு மூலர் திருமந்திரத் திருவாக்கு. ஒன்றே குலம்- மக்கள் எல்லோரும் ஒரு குலமே, ஓரினமே; பிறப்பிலேயே இவர் உயர்ந்த பிறப்பினர், இவர் தாழ்ந்த பிறப்பினர் என்னும் உயர்வு தாழ்வு மக்களுக்குள் இல்லை. பிறவி வேற்றுமை என்பது வெறும் கட்டுக் கதையே, உண்மையன்று என்பதே, இதன் உட்கருத்து. சாதி வேற்றுமை, உண்மையிலேயே பொருளற்றதாகும். சாதி வேற்றுமை என்பது, உண்மையானதன்று. ஆடு வேறு சாதி. அதாவது வேறு இனம், அல்லது வகை. மாடு வேறு சாதி என்பது உண்மையானதாகும். அவை வெவ்வேறு சாதிகளே. அவை ஒரே இனம் அல்ல. அவை வெவ்வேறு வடிவமும் உறுப்புக்களும் உடையவை. அவை வேறுபட்ட இயல்பும் உடையவை எனலாம். ஆட்டுக் குட்டி, ஐந்து மாதக் கருவாகும். மாட்டுக் கன்று, பத்து மாதக் கருவாகும். ஆனால், மக்களுக்கிடையே உள்ள சாதிகள் இத்தகையன அல்ல. எல்லாச் சாதியாரும், உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்ற எல்லாரும் ஒரே வகையான வடிவமும் உறுப்புக்களும் உடையவ ராகவே உள்ளனர். பொதுவாக எல்லா மக்களும் ஒரே வகையான இயல்புடையவரே யாவர் எனலாம். மேலும், இச்சாதி வேற்றுமையால், மக்களினம் ஒன்று பட்டு முன்னேற முடியாமல் இருந்து வருகிறது. இச்சாதி வேற்றுமை, மக்களினத்தை நல்லவாழ்வு வாழ முடியாமல் செய்து வருகிறது. இவ்வுண்மையை உலகில் அவ்வக் காலத்தே தோன்றிய எல்லாப் பெரியார்களும் எடுத்துக் காட்டி, உண்மையற்ற அச்சாதி வேற்றுமை கூடவே கூடாதெனக் கண்டித்திருக்கிறார்கள். இச்சாதிக் கொடுமையைக் கண்டிக்காத சீர்திருத்தப் பெரியார்கள் ஒருவருமே இலர் எனலாம். "சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத் தாழ்ச்சி உயர்ச்சிசொலல் பாவம்!" என்கிறார். பாரதியார், 'சாதிகள் இல்லை' என்று, உறுதியாகவே சொல்கிறார். அவ்வாறு இல்லாத சாதி வேற்றுமையை உண்டென்று சொல்வது, சாதி வேற்றுமை பாராட்டுவது 'பாவம்' என்றும் சொல்கிறார். பாவம் - குற்றம். மக்களுள் ஒரு சிலரைத் தொடக் கூடாது, தொடுவது தீட்டு; அவரோடு புழங்கக் கூடாது. புழங்குவது பாவம் - என, என்றோ எப்போதோ ஒரு காலத்தே, அவ்வொரு சிலரைத் தீண்டப் படாதவராக, புழங்கப்படாதவராகத் தாழ்த்தித் தனியாகத் தள்ளி வைத்தனர். அவர்கள் அன்று தொட்டுத் தீண்டாதார், தாழ்த்தப் பட்டோர் எனத் தனி இனமாகவே வாழ்ந்து வருகின்றனர். 'தாழ்த்தப் பட்டோர்' என்னும் அன்னார் பெயரே, அவர்கள் வலிதில் தாழ்த்தப் பட்டவர், தள்ளிவைக்கப் பட்டவர் என்பதற்குச் சான்றாகும். அவர்கள் பிறப்பிலேயே தாழ்ந்தவர், தாழ்வாகவே பிறந்தவர் எனக் கதை கட்டப்பட்டு, அத் தாழ்த்தப்பட்டோரும் அதை உண்மை யெனவே நம்பி, தாழ்ந்தவராகத் தனியாகவே வாழ்ந்து வரலாயினர். இக்குல வேற்றுமைக் கொடுமையை அறிவுடையார் அத்தனை பேரும் ஒருமுகமாகக் கண்டித்துள்ளனர். அதனுள் ஒன்றே, 'ஒன்றே குலம்' என்பது. ஏழை பணக்காரர், அறிவுள்ளார் அறிவில்லார், நல்லவர் கெட்டவர், வலியவர் மெலியவர் என்னும் வேறுபாடு மக்களுக்குள் உண்டு. இவை மாறிமாறி வருபவை; ஒரே நிலையுடையவை அல்ல. இன்று ஏழை, நாளை பணக்காரன் ஆகலாம். இன்று கெட்டவர் நாளை நல்லவர் ஆகலாம். ஆனால், ஒரு தாழ்குலத் தோன், உயர்குலத்தோன் ஆக முடியாது. பிறப்பிலேயே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் பிறவி வேற்றுமைக் கொடுமை என்றும் மாறாது அப்படியே நிலையாக இருந்து வரும் கொடுமையாகும். இப்பிறவி வேற்றுமைக் கொடுமையால் உண்டானதே, தீண்டாமைக் கொடுமை! உலக மக்கள் எல்லாரையும் இத்தீண்டாமை என்னும் கொடுநோய் தீண்டாமலில்லை. மேனாடுகளில் இது, வெள்ளை கறுப்பு என்னும் நிறவேற்றுமையால் ஆட்சி புரிந்து வருகிறது. இக் கொடுநோய் அறவே ஒழியாமல், மக்களினம் ஒரு போதும் முன்னேற முடியாது. இது, மக்கள் முன்னேற்றத்திற்குத் தடைக் கல்லாக இருந்து வருகிறது. இதனாலேதான், மக்கள் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அத்தமிழ்ப் பெரியார், 'ஒன்றே குலம்' என்றார். பொருளற்ற அச்சாதி வேற்றமையைப் போக்கி, மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக, ஒரே இனமாக, ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதே, அப்பெரியார் கருத்து. மீன், தவளை, நண்டு முதலிய நீர்வாழ்வனவெல்லாம் ஒன்றாகவே வாழ்கின்றன. ஆடு மாடு முதலிய விலங்குகள், காக்கை, புறா முதலிய பறவைகள், புழுப்பூச்சிகள் எல்லாம் கூட்டங் கூட்ட மாகக் கூடியே வாழ்கின்றன. ஆயிரக்கணக்கான காக்கைகள் ஒரே மரத்தில் உட்கார்ந்திருப்பதை நாம் பார்க்கிறோம். 'ஆயிரம் காக்கைக்கு ஒரே கல்' என்ற பழமொழியை நோக்குங்கள். ஒரு கோடி எறும்புகள் ஒரே வளையில் ஒன்றுகூடி ஒரே இனமாக வாழ்கின்றன. பறவை, விலங்கு, புழுப்பூச்சி ஆகியவற்றுக்குள் தீண்டாமை இல்லை. அவற்றைத் தீண்டாமை என்னும் தொத்து நோய் தீண்டுவதில்லை. ஆனால், பகுத்தறிவுள்ள மக்கட் கூட்டத்தை மட்டும் அது வாட்டி வதைக்கிறது. மக்கள் ஒன்று கூடி ஒரே இனமாக வாழ முடியாமல் எதற்காக அத்தீண்டாமை என்னும் சுவர் குறுக்கே இருக்க வேண்டும்? உயர் மக்கள் என்போர் மனம் ஒரு சிறிது மாறினால், அதே நொடியில் இத் தீண்டாமை யென்னும் குறுக்குச் சுவரை இடித்து நொறுக்கி அடியோடு அப்புறப்படுத்தி விடலா மல்லவா? மலந்தின்னும் நாய், கோழிகளைத் தொட்டால் தீட்டு உண்டாவதில்லை. வேண்டுமானால், தொட்ட கையைக் கழுவினால் அத்தீட்டுப் போய் விடுகிறது. ஆனால், பகுத்தறிவுள்ள மக்களில் ஒருசிலரைத் தொட்டால், எப்படித் தேய்த்துத் தேய்த்துக் கழுவி னாலும் தீட்டுப் போவதில்லை. பாம்பு கையைக் கடித்தால் நஞ்சு தலைக்கேறுவது போல், தீட்டு உடல் முழுதும் பரவி விடுகிறது. தலையோடு குளிக்க வேண்டியிருக்கிறது. உடுத்துள்ள உடையிலும் அத்தீட்டு ஒட்டிக் கொள்கிறது. நாய் கோழிகளை விடவா பகுத்தறிவுள்ள மக்களில் ஒரு சிலர் தாழ்ந்தவர்? ஈ எறும்புகளைத் தொட்டால், தொட்ட அக்கையைக் கழுவுவதில்லை. அவற்றை விடவா மக்களிற் சிலர் இழிந்தவர்? அத்தீண்டாத மக்கள் தூய்மையின்றி (அசுத்தமாய்) இருக்கி றார்கள் எனில், நாயை விடவா அவர்கள் தூய்மை யில்லை? வெயில் வேளையில் கைவண்டி இழுப்போர், குப்பை எடுப்போர், செக்காட்டுவோர், புகையிலை திருப்புவோர், உணவுச் சாலை களில் சமையல் வேலை செய்வோர் ஆகிய உயர் குலத்தினரை விடவா அவர்கள் தூய்மையில்லா திருக்கிறார்கள்? குப்பை எடுப்போர் முதலியோர், அத்தொழில் செய்து கொண்டிருக்கும் போதே எங்கும் செல்கின்றனர். எதையும் தொடுகின்றனர். அவர்களை யாரும் அச்சமின்றித் தொடுகின்றனர்; தீட்டுண்டாவ தில்லை. எல்லாக் கிணறுகளிலும் புழங்கக் கூடிய கிணற்றுரிமை அத்தீண்டாதார்க்கில்லை. கிணற்றுரிமையோடு, மாற்றிக் கட்ட வேறு கந்தையும் இல்லாத அவர்களில் பெரும்பாலோர் எப்படி நாடோறும் குளிக்க முடியும்? தூய்மையில்லா திருப்பவர்கள் போகட்டும்; குளித்துக் கொண்டு தூய்மையாக இருப்பவர்களைத் தொடலாமல்லவா? ஏன் அவர்களில் ஒருவரையுமே தொடுவ தில்லை? ஏன் தொட அஞ்சுகிறார்கள்? நண்டு, தவளை, புழுப்பூச்சிகளெல்லாம் கிணற்று நீரில் வாழ்கின்றன. பாம்புகூடக் கிணற்றில் இருப்பதுண்டு. அவை யெல்லாம் இருப்பதால் தீட்டாகாத கிணற்று நீர், பகுத்தறி வுள்ள மக்களில் ஒரு சிலர் தொடுவதால் எப்படித் தீட்டாகி விடும்? குளத்தில் நாய் தண்ணீர் குடிக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டே தண்ணீர் குடிக்கிறார்கள்; தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர். ஆனால், மக்களில் ஒருசிலர் தொடக் கூடாது. இதை மடமை, அல்லது கொடுமை என்பதல்லாமல் வேறு என்னென்பது? எல்லா உயிர்களுக்கும் உரிமையுடைய கிணறும், குளமும் மக்களில் ஒரு சிலர்க்கு உரிமையில்லாது போனதன் காரணம் என்னவோ நமக்கு விளங்கவில்லை. நெல், கம்பு, சோளம், கடலை, துவரை முதலிய எல்லா உணவுப் பொருள்களையும் தாழ்த்தப்பட்டோர் தொடுகின்றனர். தொடாமல் அவற்றை அறுத்து அடிக்க முடியாதல்லவா? களத்தில் அடித்த தவசங்களைத் தூற்றுவதே அவர்கள்தானே? அவர்கள் தொட்ட மிளகாயைக் கழுவிச் சாற்றுக்குப் போடுவதில்லை. அவர்கள் தொட்ட புகையிலையை அப்படியே வாய்க்குப் போடு கின்றனர். அவர்கள் தொட்ட பழங்களைக் கழுவித் தின்பதில்லை. கிணற்றில் தண்ணீர் இறைக்கும் இரும்புச்சால், மண் வெட்டி, அரிவாள், பொன், வெள்ளி, செம்பு நாணயங்கள் முதலியவற்றை அவர்கள் தொட்டால் தீட்டுண்டாவதில்லை. செம்பு, பித்தளை ஏனங்களைத் (பாத்திரம்) தொட்டால் தீட்டு. கிராமக் கணக்குப் பிள்ளைகளின் கணக்கேட்டு அட்டைத் துணியை அவர்கள் தொட்டால் தீட்டுண்டாவ தில்லை. உடுத்தா டையைத் தொட்டால் தீட்டு. வீட்டுக் கூரை வேயும் ஓட்டைத் தொட்டால் தீட்டில்லை. சட்டி பானைகளைத் தொட்டால் தீட்டு. இது என்ன முறையோ? மருத்துவச் சாலைக்குள் அவர்கள் போவதால் தீட்டுண்டா வதில்லை. தீண்டாதாரைத் தொட்டகையைக் கழுவாமலேயே மருத்துவர் உயர்குலத்தோரையும் தொடுகிறார். மருத்துவ சாலைக்குப் போய் வந்தோர் குளிக்காமலேயே வீட்டுக்குட் போகின்றனர். திருவிழாவுக்குப் போய் வந்தவர் எவரும் குளித்துக் கொள்வதில்லை. சந்தைக்குப் போய் வந்த ஒரு சிலர் சாணித்துளி போட்டுக் கொள்கின்றனர். திருவிழாக் கூட்டத்திலும் சந்தைக் கூட்டத்திலும் தீண்டாதாரைத் தொட்டால் தீட்டில்லை போலும்! இதிலிருந்தே தீண்டாமைக்குத் தூய்மையின்மை காரணம் அல்ல வென்பது விளங்குகிறதல்லவா? உயர்குலத்தோர் காலைத் தொட்டால் தீட்டில்லையாம். இதன் பொருள் நமக்கு விளங்கவில்லை. தாழ்த்தப்பட்டோர் பல்லால் கடித்து, எச்சிலால் பதம் பண்ணிய வாரால் தைத்த தோல்பறி, தும்பிகளை அப்படியே கிணற்றுக்குள் விட்டுத் தண்ணீர் இறைக்கின்றனர். அப்பறித் தண்ணீரை மனங் கூசாமல் உயர்குலத்தோர் குடிக்கின்றனர். இங்கு தீட்டு என்னானதோ தெரியவில்லை! நாயும் பன்றியும் நடமாடும் தெருக்களில் அன்னார் நடக்கக் கூடாது. மலந்தின்ற வாயுடன் நாய் படுத்திருக்கும். மலம் பறித்த காலுடன் கோழி நிற்கும். அங்கு மக்கள் செல்லக் கூடாது. பாம்பு, பல்லி, எலி, ஈ, எறும்பு, கொசு, இன்னும், எத்தனையோ புழுப் பூச்சிகள் எல்லாம் வாழும் வீட்டுக்குள் அன்னார் வரக் கூடாது. இது என்ன முறையோ, நமக்குப் புரியவில்லை! அன்னார் மலமெடுக்கிறார், தெருக் கூட்டுகிறார், தோல் பதனிடுகிறார் எனில், தாய் தன் குழந்தையின் மலத்தை எடுக்கிறாள்; வாசல் கூட்டுகிறாள். மேலும், பன்றியெருப் பொறுக்குவோன் தீண்டத்தகாதவனாவதில்லை. சீழ்ப்பிடித்து முடைநாற்றம் வீசும் புண்ணைத் தொட்டுக் கழுவித் தோலைப் பதனிடும் மருத்துவரை விட, மாட்டுத் தோலைப் பதனிடும் அப் பாட்டாளிகள் எப்படித் தீண்டாதவராவர்? மாடு தின்கிறார் எனில், கோழி, பன்றியைவிட மாடு இழிந்ததா? மாடு தின்போரெல்லாம் தீண்டாதவராகவும் இல்லையே. எப்போதும் நாய்க்கும் பன்றிக்கும் சோறு ஊற்றுகிறோம். கோழிக்குத் தீனி போடுகிறோம். ஆனால், ஆண்டில் சில மாதங்களில், வாரத்தில் சில நாட்களில் தீண்டாதாருக்குச் சோறு போடுதல், தண்ணீர் ஊற்றுதல் தீட்டு. நாய், பன்றி, கோழி களை விடவா மக்கள் கடைப்பட்டவர்கள்? வேகாத வெயிலில் ஒருவன் விறகுடைக்கிறான்; தாகத்தால் தொண்டை வறண்டு போய் விட்டது. மூச்சுவிட முடியவில்லை. ஆனால், அவன் அத்தாகத் துக்குக் கொஞ்சம் தண்ணீர் கேட்க முடியாமல் புரட்டாசி மாதம் வந்து குறுக்கே நிற்கும். அல்லது வெள்ளி, சனி, திங்கள், செவ்வாய் ஆகிய ஏதாவதொரு நாள் வந்து தடை செய்யும். சில மாதங்களும், சில நாட்களும் பண்டமேய்க்கிப் பையனுக்குக் 'கஞ்சியூற்றாதீர்' என்று கட்டளையிடும். 'கொடுப்பது பாவம், கொடாமை புண்ணியம்' - இது என்ன முறையோ! 'ஐயம் இட்டுண்' என்பது, ஒளவையார் வாக்கு. 'கொள்ளுதல் தீது, கொடுப்பது நன்று' என்பது, கம்பர் வாக்கு. பிறப்பு, வளர்ப்பு, இறப்பு, நோய், நோய்க்கு மருந்து, உண்பது, உறங்குவது, உணர்வு, உறுப்புக்கள் முதலிய எல்லாம் உயர்ந்தோர்க்கும் தாழ்ந்தோர்க்கும் ஒன்றாகவே இருக்க, எப்படி அவர்கள் இழிந்த பிறப்பினர் ஆவர்? 'பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்' என்றார், வள்ளுவர், 'எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம்' என்றார் பாரதியார். பன்றிப் பிறப்பினுமா பகுத்தறிவுள்ள மக்கட் பிறப்புத் தாழ்ந்த பிறப்பு? தீண்டாமை அவர்களைப் பெரும்பாலும் ஏழைகளாகவே வைத்திருக்கிறது. துணிக்கடை, சில்லறைக்கடை, மளிகைக் கடை, சிற்றுண்டிச்சாலை, உணவுச்சாலை போன்ற நல்ல வருவாயுள்ள தொழில் செய்ய அது விடுவதில்லை. உடல் வருந்த விறகுடைக்க வேண்டுமே யன்றி, ஒரு வெற்றிலை பாக்குக் கடை வைக்கக்கூட முடிகிறதில்லை. கோயிலுரிமை வழங்கப்பட்டிருப்பது போல், கிணற்றுரிமை முதலிய எல்லா உரிமைகளும் வழங்க வேண்டும். அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். அவர்கள் தனித்து வாழாமல், உயர் குடிமக்கள் வாழும் ஊரோடு ஒன்றாகவே வாழ வேண்டும். அவர்கள் மாக்கள் நிலையினின்று மக்களாக வேண்டும். அப்போதுதான் நம்நாடு நன்னாடாகும். பள்ளியில் எல்லாரும் ஒன்றாக நெருங்க உட்கார்ந் திருக்கிறீர்கள். தாழ்த்தப்பட்ட சிறுவரைத் தொட எந்த ஒரு உயர்குலச் சிறுவனும் தயங்குவதில்லை. ஒருவர்க்கொருவர் பச்சைக் குதிரை தாண்டிக் கொண்டு விளையாடுகிறீர்கள்; தின்பண்டம் வழங்கிக் கொள்கிறீர்கள்; 'நீங்கள் நாங்கள்' என்று பேசிக் கொள் கிறீர்கள். ஆனால், பள்ளி வாழ்க்கையை விட்டுக் குடும்ப வாழ்க்கை தொடங்கினால், உயர்வு தாழ்வுணர்ச்சி வந்து விடுகிறது. இத்தலை முறையிலிருந்தாவது, பள்ளி வாழ்க்கையிற் போலவே குடும்ப வாழ்க்கையிலும் நடந்து கொண்டு, தீண்டாமை என்னும் தொத்து நோயை மக்களினத்தினின்று விரட்டுங்கள். கொஞ்சம் இனவுணர்ச்சி இதற்குத் தேவை. இதுநாள் காறும் நம் நாட்டுச் சீர்திருத்தக்காரர்களும், சமயத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், பிறரும் இத் தீண்டாமைக் கொடுமையைப் போக்கப் பெரிதும் முயன்று வந்திருக்கின்றனர். பலர் அதை எதிர்த்து வெற்றியுங் கண்டுள்ளனர். இந்நாட்டின் எதிர்காலக் குடிமக்கள் ஆகப் போகும், இந் நாட்டின் அரசரும் அரசியரும் ஆகப் போகும் நீங்கள், உங்கள் காலத்தில் தீண்டாமை என்னும் பெயரே இந்நாட்டில் இல்லாமல் செய்ய முற்படுங்கள். 'இன்னார் தலைமுறையில் தீண்டாமை ஒழிந்தது. குலவேற்றுமை ஒழிந்து 'ஒன்றே குலமானது' என்னும் புகழை அடையுங்கள். அதற்குத் துணையாகத் தீண்டாமை யொழித்த பெரியார்கள் சிலரின் வரலாற்றுக் கதைகளை அடுத்து வரும் தலைப்புக்களில் படித்தறியுங்கள்.  2. காந்தியடிகள் நம் நாட்டை இன்று நாமே ஆண்டு வருகின்றோம். பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இந் நாட்டை ஆண்டு வருகிறார்கள். நாம் எல்லோரும் இந்நாட்டு அரசர் களாகவும் அரசியர்களாகவும் இன்று விளங்குகின்றோம். நம் நாட்டில் இன்று மக்களாட்சி நடக்கிறது. 1947க்கு முன், நாம் அயலார்க்கு அடிமைகளாக இருந்தோம். இந்நாட்டை அன்று ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்தனர். 15.8.1947 இல் நாம் விடுதலை அடைந்தோம். இந்நாட்டு ஆட்சி, ஆங்கிலேயர் கையினின்று நம் கைக்கு மாறியது. அது முதல் நாம் அடிமை நீங்கி உரிமை வாழ்வு வாழ்கின்றோம். இத்தகைய நல் வாழ்வை நமக்கு அளித்தவர் யார்? எனில், நீங்கள் தயங்காமல் காந்தியடிகள் என்பீர்கள். ஆம், அண்ணல் காந்தி தான் நம்மை இங்ஙனம் வாழவைத்தவர். நம் எல்லோரையும் இந்நாட்டு மன்னர் களாக்கியது அண்ணல் அவர்கள்தான். காந்தியடிகள் பிறவாதிருந்திருந்தால், இன்னும் நாம் அயலார்க்கு அடிமையாகவே வாழ்ந்து வருவோம். இன்னும் நம்மை ஆங்கிலேயரே, அவ்வயல் நாடரே ஆண்டு வருவர். காந்தியடிகள் பிறவாதிருந்திருந்தால், நமக்கு விடுதலை உணர்ச்சியே உண்டாகி யிருக்காது; நாம் அடிமை வாழ்வு வாழ்கிறோம் என்பதையே எண்ணியிருக்கமாட்டோம். 'சொந்த நாட்டில் அயலார்க்கு, அதுவும் அயல் நாடர்க்கு அடிமையாக இருக்கக் கூடாது' என்ற எண்ணத்தை, விடுதலை வேட்கையை நமக்கு உண்டாக்கி, நம்மை இந்நாட்டின் உரிமைக் குடி மக்களாய் வாழ வைத்தவர் அண்ணல் காந்தி அவர்கள் தான். வாழ்க அண்ணல் காந்தி வண்புகழ்! இந்நாட்டின் பதினைந்து மாநிலங்களில் குசராத்தி மாநிலம் ஒன்று. அம்மாநிலத்தில் மேல் கடற்கரையில் உள்ளது கத்தியவார் என்னும் தீவகற்பம். கத்தியவாரிலுள்ள போர்பந்தர் நகரில் காபா காந்தி என்னும் வணிகர் ஒருவர் இருந்தார். அவர் மனைவி புத்திலிபாய் என்பவர். அப்பெற்றோரின் கடைசிப் பிள்ளை தான் நம் காந்தியடிகள். 2.10.1869இல் அண்ணல் பிறந்தார். மோகனதாஸ் கரன் சந்திர காந்தி என்பது அண்ணலின் முழுப்பெயர். 'காந்தி' என்பது, அக்குடிப்பெயர். 13ஆம் ஆண்டுப் பருவத்தில் அண்ணல், கஸ்தூரி பாய் அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டார். இலண்டனில் சட்டப் படிப்புப் படித்து வழக்கறிஞரானார். 1893 முதல் 1914வரை தென்னாப்பிரிக்காவில் இருந்தார். அக்காலத்தே அண்ணல், தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் விடுதலைக்காகப் பாடுபட்டார். 1914இல் இருந்து நம் நாட்டின் விடுதலை வாழ்வுக் காகவே அண்ணல் வாழ்ந்து வந்தார். காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு ஒருவாறு உங்களுக்குத் தெரியும். அவர் ஓர் இல்லறத்துறவி; மனைவி மக்களுடன் இருந்து கொண்டே துறவு வாழ்க்கை நடத்தி வந்தார். அத்துறவு வாழ்க்கையை, இந்நாட்டின் அரசியல் வாழ்க்கையாக நடத்தி வந்தார். 1915இல், சபர்மதி என்னும் இடத்தில் அண்ணல் ஒரு தவப்பள்ளி (ஆச்சிரமம்) ஏற்படுத்தினார். அவ்வூர், பம்பாய் மாநிலத்தில், ஆமதாபாத்துக்கருகில் உள்ள சபர்மதி ஆற்றங் கரையில் இருக்கிறது. அண்ணலின் தவநிலை ஏற்பட்ட பிறகு அவ்வூர் உலகப் புகழ் பெற்றது. சபர்மதியே இந்திய அரசியலின் தலைமையிடமாக இருந்து வந்தது. அன்றைய இந்திய அரசியல், சபர்மதியை எதிர்பார்த்தே நடந்து வந்தது. 1. பழங்குடிப் புதுக்குடும்பம் சபர்மதித் தவப்பள்ளி ஏற்பட்ட சில மாதங்களில், 'தங்கள் தவப் பள்ளிகளில் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பம் சேர விரும்புகிறது. தங்கள் கருத்தென்ன?' என்று, அமிர்தலால் தாக்கூர் என்பவரிட மிருந்து ஒரு கடிதம் வந்தது. அடிகள் அக்கடிதம் கண்டு மகிழ்ந்தார்; உடனே அனுப்பிவைக்குமாறு அவர்க்கு எழுதினார். தூதாபாய் என்பவரும், அவர் மனைவியாரான தானிபென் என்பவரும், தங்கள் எட்டு மாதக் கைக்குழந்தை யான இலக்குமியை எடுத்துக் கொண்டு சபர்மதியை அடைந்தனர். அண்ணல் அன்னாரை அன்புடன் வரவேற்றனர்; இலக்குமியை ஆவலுடன் வாங்கி மார்போடணைத்து முத்தமிட்டனர். இலக்குமியின் பெற்றோர்களான அப் பழங்குடி மக்கள், அக் குழவியைப் பெற்ற நாளினும் பெரிது உவந்தனர். அத் தவப்பள்ளி வியப்புக் கடலுள் ஆழ்ந்தது. ஏன்? திடுக்கிட்டதென்றே சொல்லலாம். தவப்பள்ளிக் கிணற்றில் அத்தோட்டக்காரனுக்குப் பாதி சொந்தம். தானிபென் அக்கிணற்றுக்குத் தண்ணீர்க்குப் போனாள். தோட்டக்காரன், 'அடா! இதென்ன முறைகேடு! தீண்டாதாரை யெல்லாம் ஒன்றாக வைத்துக் கொண்டேதாடு, அவள் கிணற்றுக்குத் தண்ணீர்க்கு வேறு வந்துவிட்டாள். இச்சண்டாளி தொட்ட தண்ணீரையா நாம் தொடுவது? இவரென்ன பித்தர் போல் இருக்கிறாரே! எங்கேயோ போகிற இழவு இங்கே வந்து தொலைத்தது! ஏ புலைமகளே! இனி இங்கே வராதே. வந்தால் அப்புறம்...' எனப் பலவாறு திட்டினான். தானிபென் வந்து அண்ணலிடம் கூறினாள். அண்ணல், 'அவர் என்ன சொன்னாலும் சரி. அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் தண்ணீர் மொண்டு வாருங்கள். வாய் வலித்தால் அவர் நிறுத்திக் கொள்வார். பொறுமை வெற்றியளிக்கும்' என்றார். அவ்வம்மை அவ்வாறே தோட்டக்காரன் திட்டுவதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் தண்ணீர் எடுத்து வந்தார். தோட்டக் காரன் மனமிரங்கி, வைவதை விட்டுச் சும்மா இருந்தான். இதை அவ்வூரார் அறிந்து அண்ணல் மீது வெறுப்புக் கொண்டனர். இனி யாரும் தவப்பள்ளிக்கு ஒரு காசு கூடக் கொடுக்கக்கூடாது என்று கட்டுத் திட்டம் செய்தனர். அதனால், தவப்பள்ளிச் செலவுக்குப் பணமில்லாமல் வருந்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கையிருப்பில் ஒரு காசு கூட இல்லை. அடுத்த நாளைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தவப்பள்ளியி லுள்ள எல்லாரும் மனங்கலங்கினர். அது கண்ட அண்ணல், 'செலவுக்கு இல்லா விட்டால் எல்லோரும் சேரிக்குப் போய் விடலாம்' என்று தீண்டாமை ஒழிப்பில் உள்ள தமது உறுதியான கொள்கையை வெளியிட்டார். அன்று மாலை ஒரு சேட்டு சபர்மதிக்கு வந்தார். அண்ண லோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, 'தங்கள் தவப் பள்ளிக்குக் கொஞ்சம் நன்கொடை கொடுக்கலாம் என்று விரும்புகிறேன்; தாங்கள் அன்பு கூர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்றார். வழி கேட்டுக் கொண்டு தானாக வந்த பொருளை யார்தான் வேண்டாமென்று மறுப்பர்? மேலும், தவப் பள்ளியின் பொருள் நிலை மறுக்கக் கூடிய நிலையிலா இருந்தது? அண்ணல், 'தங்கள் விருப்பம்' என்றார். மறுநாள் அச்சேட்டு ரூ.13 ஆயிரம் அனுப்பினார். தவப்பள்ளியே மகிழ்ந்தது. சில நாளில் அவ்வூராரும் உடன்பட்டனர். ஏன்? உலகமே உடன்பட்டது. அண்ணலின் அன்பு வலைக்கு உட்படாத மக்களும் உண்டோ? 'ஒன்றே குலம்' என்னும் உயர் நெறிக்குச் சபர்மதி இருப்பிடமானது. தெருக் கூட்டல், மலமெடுத்தல் முதலிய எல்லாத் தொழில்களையும் அத்தவப் பள்ளி மக்கள் எல்லோரும் சரி நிகராகவே செய்து வந்தனர். காந்தியடிகளும் அதிலொரு பங்காளியே. அத்தவப் பள்ளியில் உள்ள எல்லோரும் உயர்வு தாழ்வின்றி ஒரே குடும்பமாகவே வாழ்ந்தனர். அண்ணலின் வளர்ப்பு மகளான இலக்குமியின் குடியேற்றம், அத்தவப் பள்ளியைப் புனிதமாக்கியதோடு நிற்கவில்லை; இந்தியா முழுதும் பரவியது; இந்திய மக்களைப் பிடித் தாட்டி வரும் தீண்டாமை என்னும் நோயின் வலியை நிலை குலையச் செய்தது. சபர்மதி, இந்நாட்டின் தீண்டாமை விலக்குக்கு வழி காட்டியாய் விளங்கியது. 2. பழங்குடிப் பாட்டி தீண்டாமை என்னும் நோயை ஒழிக்கவும், அதேபோது பழங்குடி மக்களுக்குத் தொண்டு செய்யவும் அண்ணல் ஒரு சங்கம் ஏற்படுத்தினார். அதை நன்கு நடத்துதற்குப் பெரும் பொருள் சேர்க்க எண்ணினார். அதற்காக, 1934இல், நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்தார். சென்றவிட மெல்லாம் மக்கள் அண்ணலை அன்புடன் வரவேற்றனர்; தங்களால் இயன்ற பொருளைக் காணிக்கையாகக் கொடுத்தனர். எட்டு நூறாயிரம் (8 லட்சம்) ரூபாய் சேர்ந்தது. அண்ணல் போன ஊர் தோறும் பொதுக் கூட்டம் நடந்தது. தீண்டாமைக் கொடுமை பற்றியும், அதை ஒழிக்க வேண்டியதன் இன்றியமையாமை பற்றியும் அண்ணல் எடுத்துரைத்தார். விடாப் பிடியுள்ள பலர் மனம் மாறுபட்டது. பழமை விரும்பிகள் பலர் தீண்டாமை விலக்கி வாழத் தொடங்கினர். தீண்டாமை என்பது, மூடப் பழக்க வழக்கங்களில் ஒன்றென்பதை மக்கள் உணரத் தலைப்பட்டனர். ஒரு நாள் அண்ணல் ஓரூருக்குப் போயிருந்தார். அவ்வூரே அன்று இன்பக்கடலாடியது. திருவிழாப் போல அவ்வூரார் அவ்வூரை அணி செய்தனர். பொதுக் கூட்டம் தொடங்கியது. அண்ணலைக் கண்டு களிக்க ஏராளமான மக்கள் காணிக்கை யுடன் வந்து கூடினர். தீண்டாமைக் கொடுமையைப் பற்றி அண்ணல் பேசிக் கொண்டிருந்தார். 70 ஆண்டு நிரம்பிய ஒரு பழங்குடிப் பாட்டியார், காணிக்கை யுடன் சென்று காந்தியடிகளைக் காண விரும்பினார். கையில் ஒரு காசும் இல்லை. கடன் கொடுப்பவர் யார் அந்த ஏழை மூதாட்டிக்கு? வேறு யாதொரு பொருளும் இல்லை. அண்ணலுக்கு விருப்ப மானது ஆட்டுப் பால் என்பதைக் கேள்விப்பட்டிருந்தார் அப்பாட்டி யார். அதை ஏற்றுக் கொள்வாரோ கொள்ள மாட்டாரோ என்ற ஐயம் ஒரு பக்கம். எப்படியாவது அண்ணலைக் கண்ணாரக் கண்டு களிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒரு பக்கம். ஆர்வம் ஐயப்பாட்டைப் போக்கியது. ஒரு மட்கலத்தில் கொஞ்சம் வெள்ளாட்டுப் பால் கறந்து கொண்டு வீட்டை விட்டுப் புறப் பட்டார். அண்ணலைக் காண வேண்டும் என்னும் ஆசை பிடர் பிடித்துத் தள்ள, தலை நடுங்க, தள்ளாடித் தத்தளித்துக் கொண்டு, கோலுங்கையுமாய்க் கூட்டத்தை அடைந்தார். தேன் கூட்டை ஈக்கள் மொய்த்திருப்பது போல் மக்கள் அண்ணலை மொய்த் திருந்ததால், கூட்டத்திற்குள் நுழைய முடியவில்லை. தவித்துக் கொண்டு கூட்டத்திற்கு வெளியே நின்றார் அம் மூதாட்டி. தன்னைக் காணப் பாட்டி தவித்துக் கொண்டிருப்பதை அண்ணல் கண்டார்; உடனே மேடையிலிருந்து இறங்கினார்; கூட்டத்தை விலக்கிக் கொண்டு பாட்டியிடம் சென்றார்; பாட்டியின் கையிலிருந்த மட்கலத்தை வாங்கிக் கொண்டு, பாட்டியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய் மேடையில் உட்காரவைத்தார். பாட்டியின் காணிக்கைப் பொருளான ஆட்டுப் பாலையே முதலில் ஏற்று உண்டு மகிழ்ந்தார். அக்காட்சியைக் கண்ட அக்கூட்டம் கல்லாய்ச் சமைந்தது; இந்தியாவை விட்டே தீண்டாமை என்னும் கொடும்புலி விரண் டோடும்படி, 'அண்ணல் காந்தி - வாழ்க! தீண்டாமை - ஒழிக!' என ஆர்த்தது. அப்பாட்டி, அண்ணலையும் கூட்டத்தையும் மாறி மாறிப் பார்த்தபடியே தன்னை மறந்து உட்கார்ந்திருந்தார். பாட்டியின் மகிழ்ச்சிப் பெருக்கை நீங்களே கணித்தறியுங்கள். என்னே அண்ணலின் அருட் பெருக்கு! 3. ஊராளியின் மனமாற்றம் 1934இல், சபர்மதித் துறவி, வார்தாத் துறவி ஆனார். வார்தா என்னும் ஊர், மத்திய மாநிலத்தில் உள்ள ஒரு புகை வண்டிச் சந்திப்பு. வார்தா அருகில் உள்ள மகன்வாடி என்னும் இடத்தில் 1934இல் அண்ணல் தம் தவப்பள்ளியை ஏற்படுத்தினார். அவ்வூராளி, (கிராமாதிகாரி) 60 ஆண்டு நிரம்பிய முதியவர்; நல்ல வைதிகர். முதலில் அவர் அண்ணல் மீது வெறுப்புக் கொண்டிருந்தார்; சில நாளில் அண்ணலின் அன்புக் கயிற்றால் கட்டுண்டார். அண்ணலின் சமையல்காரன், கோவிந்தன் என்னும் பழங்குடி மகன். ஒரு நாள், வீமன் என்னும் அவ்வூர் மழிப்போன் (நாவிதன்) அண்ணலுக்கு மயிர் வெட்டினான். பாதிமயிர் நறுக்கினதும் அண்ணல், 'நீர் இங்குள்ள தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கும் செய்வீரா?' என்றார். வீமன் முணுமுணுத்தான். 'ஆனால், எனக்கும் செய்ய வேண்டாம் போ'. என்றார் அண்ணல். அப்போது அவ்வூராளி அங்கு வந்தார். அண்ணல் அவரிடம் வீமன் நடத்தையை கூறினார். அவ்வூராளி ,'நான் சாதி நீக்கம் செய்து விடுவேன் என்று வீமன் அஞ்சுகிறான். நம்ம கோவிந்தனுக்குச் செய்த கையோடே இவனிடம் நான் செய்து கொள்கிறேன்; இது உறுதி' என்றார். அது கேட்ட வீமன், 'பெரியீர். இன்று முதல் நான் பழங்குடித் தோழர்களுக்கும் செய்கிறேன். ஊராளி அய்யா அவர்கட்கு அஞ்சியே தயங்கினேன். அவரே தங்கள் அன்புக்குக் கட்டுப்பட்ட பின் எனக்கென்ன தடை?' என்றான். அண்ணல் மகிழ்ந்து, முழுதும் செய்து கொண்டார். பின்னர் வீமன், கோவிந்தனுக்கும் அவ்வூ ராளிக்கும் செய்தான். என்னே ஊராளியின் மனாற்றம்! அவ்வூராளிபோல, நம் நாட்டிலுள்ள எல்லா ஊராளர்களும், ஊர்த்தலைவர்களும், சமூகத் தலைவர்களும், பண்ணையக்காரர்களும், காணியாளரும் மனமாற்றம் அடைந்தால், உண்மையை யுணர்ந்தால், அப்புறம் தீண்டாமை என்னும் கொடும் புலி இந்நாட்டில் இருக்குமா என்ன! பழமையில் ஊறிக் கிடந்த அவ்வூராளியின் மனத்தை, இவ்வாறு மாறுபடும்படி செய்த, இவ்வாறு எளிதில் மாற்றிய அண்ணலின் ஆற்றல்தான் என்னவோ! அண்ணலின் மனத் துணிவே, நல்லதென்று பட்டதைச் செய்தே தீரும் உறுதிப் பாடே, அவ்வூராளியின் மனத்தை அவ்வாறு மாற்றியது. அம்மன வுறுதிதானே நம்மை நூற்றைம்பதாண்டுகளுக்கு மேல் அடக்கி யாண்ட வெள்ளைக்காரரை மூட்டை முடிச்சுகளுடன் கப்ப லேறச் செய்தது! அத்தகைய துணிவுடையவர்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்; தாம் மேற்கொண்ட செயலை எளிதில் செய்து முடிக்க முடியும் என்பதை உணருங்கள்.  3. புத்தர் பெருமான் ஒருநாள் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் இருக்கும். ஓர் அழகிய இளைஞன்; ஆண்டு இன்னும் இருபத்தொன்பது நிரம்பவில்லை. தன் அருமை மனைவி அயர்ந்து தூங்குகிறாள். அரசிளங்குழவி அன்னையின் அருகில் படுத்திருக்கிறது. அரச செல்வத்தையும், மனைவி மக்களையும் துறந்து ஓர் இளவரசன் அரண்மனையை விட்டு வெளிப்பட்டான். எனில், உடனே நீங்கள் ' கௌதம புத்தர்' என்பீர்கள். ஆம், புத்தர் பெருமான்தான்! 'அருளறம்' என்னும் ஒர் உயரிய கொள்கையைக் கண்ட புத்தர்தான் அவ்வாறு வெளிப் பட்டார். உலக நிலையாமையை, உலக வாழ்வின் உண்மையை உலகுக்குணர்த்த, மக்களை அன்பும் அருளும் உடையவராக்க, அரசசெல்வத்தைத் துறந்து ஆண்டியானார். பழங்கால வட இந்திய நாடுகளில் வடகோசலம் என்பதும் ஒன்று. அது கங்கை வெளியில் இருந்தது. கபிலபுரம் என்பது, அந்நாட்டின் தலைநகர். கி.மு.6ஆம் நூற்றாண்டில் சுத்தோதனன் என்னும் அரசன் அவ் வடகோசல நாட்டை ஆண்டு வந்தான். அச் சுத்தோதனன் மனைவியான மாயாதேவி என்பாள் பெற்ற பிள்ளைதான் நமது புத்தர் பெருமான். புத்தர், கி. மு.567இல் பிறந்தார்; கி.மு.487 வரை, 80 ஆண்டுகள் வாழ்ந்தார். இவரது இயற்பெயர்- சித்தார்த்தன் என்பது. சித்தார்த்தன் கற்க வேண்டிய கலைகளை யெல்லாம் கசடறக் கற்றுணர்ந்தார்; அரசியல் முறையிலும் நல்ல பயிற்சி பெற்றார். சுத்தோதனன் தன்மகனுக்கு, யசோதரை என்னும் மங்கையை மணம் முடித்தான். ஆனால், சித்தார்த்தன் மனம் இல்லற வாழ்வில் அவ்வள வாக ஈடுபடவில்லை. 'உலகம் நிலையானதன்று. உலக வாழ்வு இன்பமும் துன்பமும் கலந்தது; நல்லதும் கெட்டதும் நிறைந்தது. இளமை போய் முதுமை வருகிறது. கண் மங்குகிறது. காது செவிடாகிறது. பல் விழுந்து விடுகிறது. நரை திரையால் உடல் அழகிழந்து அருவருக்கத்தக்கதாகிறது. வாட்டி வருத்தும் தீராத கொடிய நோய்க்கு ஆளாகிறது இவ்வுடல். பிறந்தோர் இறந்து விடுகின்றனர். இதென்ன நிலையில்லாத உலகம்!' என, உலக நிலையாமையை எண்ணி யெண்ணி இரங்கினார். இளமை நிலையாதது. உடம்பு நிலையாதது. செல்வமும் நிலையாதது. நிலையில்லாத இவற்றை நிலையுடையவை என நம்புவதால், மக்கள் துன்புறுகின்றனர். இதனால், மக்கள் வாழ்வே துன்ப முடையதாக உள்ளது. இத் துன்ப வாழ்வைப் போக்கி மக்களை இன்பவாழ்வு வாழச் செய்வதெப்படி? இதை அறிவதில் அவர் மனம் அல்லும் பகலும் ஓயாமல் ஈடுபடுவதாயிற்று. ஒரு வழியுந்தோன்றவில்லை. ஒருநாள் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் இருக்கும். யசோதரை அயர்ந்து தூங்கினாள். நாடாளப் பிறந்த மகன் அன்னையின் அருகில் படுத்திருந்தான். மனைவி மக்களை அப்படியே படுக்கவைத்து விட்டுப் பள்ளியறையை விட்டு வெளிப்பட்டார் சித்தார்த்தர். தன் நண்பனான சயந்தகன் என்பவனைக் குதிரை கொண்டு வரச் சொல்லி இருவரும் வெளிக்கிளம்பினர். நகரை விட்ட கன்றனர்; பொழுது கிளம்புகிற நேரத்தில் குதிரையை விட்டிறங் கினர். தன் நகைகளையும் உடைவாளையும் சயந்தகனிடம் கொடுத்து, 'இவற்றை என் தந்தையிடம் கொடுத்து, என்னை மறந்துவிடும்படி சொல்லுக' என்றார் சித்தார்த்தர். சயந்தகன் கண்ணீர் விட்டுக் கலங்கினான். அவனைத் தேற்றியனுப்பி விட்டுத் தனியாகச் சென்றார் கௌதமர். நாடாளப் பிறந்த அவர் காடாளலானார்; காடுகளில் வாழ்ந்து வரும் துறவிகளிடம் உண்மை நிலையைப் பற்றிக் கேட்டார். ஒருவரும் சரியான விடை சொல்லவில்லை. பின்பு தனியாக ஓர் அரசமரத்தின் கீழ் இருந்து நெடு நாள் தவம் செய்து உண்மை உணர்வு பெற்றார். அதிலிருந்து சித்தார்த் தர்க்கு - புத்தர், போதி முனிவர் என்னும் பெயர்கள் வழங்க லாயின. போதி-அரச மரம். புத்தருக்கு ஆயிரக்கணக்கான மாணாக்கர்கள் ஏற்பட்டனர். புத்தர் தம் மாணாக்கருடன் நாடு முழுவதும் சுற்றித் தம் கொள்கையைப் பரப்பி வந்தார். புத்தர் தம் மாணாக்கருடன் ஓரூரில் தங்கியிருந்தார். புத்தரின் மாணவரிலொருவரான ஆனந்தர் என்பவர் வெளியே சென்றிருந்தார். அது வெயிற்காலம்; நண்பகல் நேரம். அவருக்கு நீர்வேட்கையுண்டானது. தண்ணீர்த் தாகம் பொறுக்க முடிய வில்லை. வழியில் உள்ள ஒரு கிணற்றில் மாதங்கி என்னும் தாழ்த்தப் பட்ட பெண் ஒருத்தி தண்ணீர் சேந்திக் கொண்டிருந்தாள். ஆனந்தர், 'அம்மா! மிக்க விடாயாக இருக்கிறது; கொஞ்சம் தண்ணீர் ஊற்றுங்கள்' என்றார். அப்பெண்மணி, 'ஐயா! நானோர் தீண்டப்படாத குலப் பெண்; நான் தங்களுக்குத் தண்ணீர் ஊற்றக் கூடாது; நான் தொட்ட தண்ணீரைத் தாங்கள் குடிக்கக் கூடாது' என்றாள். 'அம்மணி! நீ யாராயிருந்தாலும் குற்றமில்லை. எனக்குத் தாகம் அதிகம். நாவறண்டு போய்விட்டது. பேசவே முடிய வில்லை. தண்ணீர் குடியாமல் நான் என் இருப்பிடம் போய்ச் சேர முடியாது. காலத்தே செய்த இவ்வுதவி ஞாலத்தினும் பெரிதாகும். வேறொன்றும் எண்ணவேண்டாம்; கொஞ்சம் தண்ணீர் ஊற்றும்' என்றார் ஆனந்தர். அப்பெண், பார்க்கலாம் என்று ஊற்றினாள். ஆனந்தர் ஆர்வத்தோடு அத்தண்ணீரைக் குடித்துவிட்டு, 'நன்றாக இரு' என்றார். அது கண்ட மாதங்கி வியப்புற்று, 'ஐயா! தாங்கள் யார்? உயர் குலத்தினராக இருந்தும், வழக்கத்திற்கு மாறாகத் தாழ்த்தப்பட்ட குலத்தினளான, தீண்டத் தகாதவளான என்னிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தீர்கள். இது புதுமையாக வல்லவோ இருக்கிறது?' என்றாள். 'என் குருநாதர் அங்கிருக்கிறார். அவரிடம் வந்து கேட்டால் உண்மையை உரைப்பார். வருக' என்று, ஆனந்தர் அப் பெண்ணைப் புத்தர் பெருமானிடம் அழைத்துச் சென்று, நடந்ததைக் கூறினார். புத்தர், 'அம்மணி! மக்கள் எல்லோரும் ஒரே இனம்; ஒரே பிறப்பு. மக்களிடை உயர்வு தாழ்வு கற்பிப்பது மடமை, அல்லது கொடுமையாகும். சாதி வேற்றுமைக்கு உண்மையான காரணம் இல்லவே இல்லை. இதோ, இவர்களைப் பார், எனத் தம் மாணவர்களைச் சுட்டிக் காட்டி, 'இவர்கள் காரணமில்லாமல் கற்பிக்கப் பட்டுள்ள உயர்வு தாழ்வான பல சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்களிடை ஏதாவது சாதி வேறுபாடு தெரிகிறதா? இல்லை யல்லவா? இவர்கள் எத்தகைய வேறுபாடு மின்றி, ஒன்றாகவே இருந்து வருகின்றனர்; ஒருங்கே கலந்திருந்துண்டு வருகின்றனர். தீட்டு, அல்லது தீண்டாமை என்பதெல்லாம் அறியா மையின் பாற்பட்டதாகும். எக்காலத்தோ, யாரோ சில தன்னலமி களால், வேண்டுமென்றே உண்டாக்கப்பட்ட இக்கொடுமை, மக்களினத்தை வாட்டி வருத்தி வருகிறது' என, உண்மை யறிவு புகட்டி அனுப்பினார் அப்பெண்ணை. இச்செய்தி அந்நாட்டரசனான பிரசேனசித்து என்பான் காதுக்கெட்டியது. அவன் தன் அமைச்சர் முதலியோருடன் அங்கு வந்து, புத்தர் பெருமானை வணங்கி, 'பெரியீர்! மக்களில் தாழ்வுயர்வில்லை; எல்லோரும் ஓரினம். தீட்டில்லை; தீண்டாமை இல்லை எனல், எப்படிப் பொருந்தும்? சாதி வேறுபாடும், தீட்டும் இல்லை என்றால், அவை ஏன் நடை முறையில் இருந்து வருகின்றன?' என, வழக்காடினான். புத்தர், தீண்டாமையின் உண்மையான உட்கருத்தை விளக்கமாக எடுத்துக் கூறி, தீட்டும், தீண்டாமையும் உண்மை யானவை அல்ல என்பதை அவனை ஒப்புக் கொள்ளுமாறு செய்தார். அரசன் மகிழ்ந்து, தன் அறியாமையை மன்னிக்கும் படி வேண்டி, விடைபெற்றுச் சென்றான். அவன் அதோடு நின்றுவிட வில்லை; தன் நாட்டினின்றும் தீண்டாமை என்னும் அக்கொடும்புலியை விரட்டியடிக்க முற்பட்டான். புத்தரின் அறிவுரையால், பிரசேனசித்து மட்டுமா உண்மை யுணர்வு பெற்றான்? அக்காலத்தரசர்கள் எத்தனையோ பேர் மனமாற்றம் அடைந்தனர். அன்னார் நாட்டுக் குடிமக்கள் சாதிக் கொடுமையினின்று தப்பினர். அதனாலன்றோ, 2500 ஆண்டு கட்குமேல் ஆகியும், இன்னும் புத்தர் பெருமானின் புகழ் அப்படியே ஒளிவீசிக் கொண்டிருந்து வருகிறது! புத்தர் பெருமானின் அறிவுரையை நீங்கள் பின்பற்ற வேண்டாமா!  4. இராசராச சோழன் தமிழகத்தே ஆட்சிமுறை என்று ஏற்பட்டதோ அன்று தொட்டுத் தமிழகம், சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர் மரபினரால் ஆளப்பட்டு வந்தது. தமிழரசு தோன்றியதி லிருந்து, கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைக் காலம் வரை அம் முடியுடை மூவேந்தரும் சீருஞ் சிறப்புடன் தொடர்ந்து ஆண்டு வந்ததால், தமிழகம் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என முப்பெரும் பிரிவாகப் பிரிந்திருந்தது. இவற்றுள், திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் - சோழநாடு ஆகும். உறையூரும், காவிரிப்பூம்பட்டினமும் சோழ நாட்டின் பழைய தலைநகரங்கள். கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்குப் பின், கி.பி.9ஆம் நூற்றாண்டு வரை சோழ மன்னர்கள் வலிகுன்றி, வரலாற்றுச் சிறப்பின்றிப் போயினர். அக்காலத்தே இருந்த சோழமன்னர்கள் இன்னார் என்றே தெரியவில்லை. கி.பி.9ஆம் நூற்றாண்டில், விசயாலயன் என்னும் சோழ மன்னன், தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு மறுபடியும் சோழப் பேரரசைத் தோற்றுவித்தான். விசயாலயன் முதல் வந்தோர் பிற்காலச் சோழர் எனப்படுவர். அப்பிற்காலச் சோழர்களில் முதல் இராசராசன் என்பான், முதன்மை யுடையவன் ஆவான். இவன், கி.பி.985 முதல், 1014 வரை சோழ நாட்டைச் சீருஞ் சிறப்புடன் ஆண்டு வந்தான். இவன், கல்வி கேள்விகளிற் சிறந்தவன்; தமிழ் மொழியிடத்து அளவு கடந்த அன்புடை யவன். இவனொரு பெரு வீரனாகவும் விளங்கினான். சங்க காலத்திற்குப் பிறகு, (கி.பி. 250 பின்) சீர்குலைந்து போன சோழப் பேரரசை முன்னிலும் சிறப்புடைய தாக்கியவன் இராசராசனே. தேய்ந்து மாய்ந்து போன சோழ மன்னர் புகழை, முன்னிலும் பன்மடங்கு விளங்கச் செய்த பெருமை இவனையே சாரும். இவன், சிறந்த சைவ சமயப் பற்றுடையவன். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியவன் இவனே. ஒருநாள் இவன் அவைக்கு வந்த சிவனடியார் ஒருவர், தேவாரப் பதிகம் ஒன்றை உருக்கமாகப் பாடினார். அத் தேவாரப் பாடல்களின் சுவையில் ஈடுபட்ட இராசராசன், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரம் முழுமையையும் ஒன்று திரட்டி வைக்க ஆவல் கொண்டான். தமிழகத்தின் பல இடங் கட்கும் ஆள் விட்டுத் தேடினான். மூவர் தேவாரம் முழுமையும் சிதம்பரத்திலிருந்து கிடைத்தன. எண்ணிய எண்ணம் நிறைவேறிய சோழன் அளவிலா மகிழ்ச்சி யடைந்தான். திருநாரையூர் நம்பி யாண்டார் நம்பி என்னும் சைவப் புலவரைக் கொண்டு, அத்தே வாரப் பாடல்களைத் திருமுறைகளாக வகுத்தான். சம்பந்தர் தேவாரம் - முதல் மூன்று திருமுறைகள். அப்பர் தேவாரம் - நான்கு ஐந்து ஆறு திருமுறைகள். சுந்தரர் தேவாரம் - ஏழாந் திருமுறை. இத்தேவாரத் திருமுறைகள் ஏழும் -'மூவர டங்கல் முறை' எனப்படும். அதனால் இவன், திருமுறை கண்ட சோழன் எனப் பெயர் பெற்றான். பத்துப்பாடல்கள் கொண்டது - பதிகம் எனப்படும். தேவாரப் பாடல்கள், ஒவ்வொரு கோயில் மீதும் ஒவ்வொரு பதிகமாகப் பாடப் பெற்றவையாகும். அவை, திருக்கழுமலப் பதிகம், திருநணாப்பதிகம், திருவையாற்றுப் பதிகம் எனப் பெயர் பெறும். தேவாரப் பதிகங்கள் - குறிஞ்சி, நட்டபாடை, பஞ்சமம், சாதாரி, புறநீர்மை, தக்கேசி முதலிய பண்களுடன் பாடப் பட்ட வையாகும். பண் - இசை. சிதம்பரத்தில் கிடைத்த தேவார ஏடுகளில் பண் எழுதப்படவில்லை. அத்தேவாரப் பதிகங்களுக் கெல்லாம் பண்ணமைக்க விரும்பினான் இராசராசன். சிவநேயச் செல்வர்களை வரவழைத்துக் கேட்டான்; சில பதிகங்களுக்குச் சிலர் ஒருவாறு பண் கூறினர். எல்லாப் பதிகங் களுக்கும் பண் தெரிந்தவர் எங்கு தேடியும் கிடைக்க வில்லை. சோழன் மிகவும் மனம் வருந்தினான்; அதே கவலையாக இருந்தான். முடிவில் ஒரு நல்ல செய்தி கிடைத்தது. திருஞான சம்பந்தர் தேவாரங்களை, திருநீலகண்டப் பெரும்பாணர் என்பார் யாழிலமைத்து வாசித்து வந்தார். பாணர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்; திருவெருக்கத்தம் புலியூரினர். அத்திருநீலகண்டப் பெரும்பாணர் குடும்பத்தினர் வழிமுறையாகத் தேவாரப் பண்முறைகளைப் பயின்று வந்தனர். அக்குடும்பத்தில், நன்கு பண்முறை தெரிந்த பாண் மகள் ஒருத்தி இருப்பதாகக் கேள்விப்பட்டான் இராசராசன். சோழன் தன் எண்ணம் நிறைவேறியதை அறிந்து மகிழ்ந்தான்; அப்பாணிச்சியை அழைத்து வரும்படி அமைச்சரை அனுப்பினான். அமைச்சர் திருவெருக்கத்தம் புலியூர் சென்றார்; அவ்விறலியிடம் அரசன் கருத்தைத் தெரிவித்தார். அப்பாண் மகள் அகமகிழ்ந்து, அரசன் கட்டளையை ஏற்று அமைச்சருடன் தஞ்சைக்குப் புறப்பட்டாள். பாடினி வருகையை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண் டிருந்த சோழன், அவளைத் தமிழ் மகளே எனக் கொண்டு அன்புடன் வரவேற்றான். அவள் ஒரு தீண்டப் படாத வகுப்பினள் என்பதை அவன் எண்ணவில்லை; அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான். அறுசுவை உணவிட்டு அன்புடன் போற்றினான். பின்னர்ச் சரி சமனான இருக்கையில் அவளை இருக்கச் செய்து, எல்லாத் தேவாரப் பதிகங்களுக்கும் பண்ணமைத்தான்; பண்ணமைத்து முடிந்ததும், சிவநேயச் செல்வர்களை வர வழைத்து அப்பாண்மகளைக் கொண்டு பண்ணரங்கேற்றினான். அதாவது, அப்பதிகங் களைப் பண்ணுடன் பாடிக்காட்டும்படி செய்தான். பண்ணமைத்த நாட்களில் அப்பாண்மகள் அந்தப்புரத்தில் அரசியுடன் அரண்மனை விருந்தினளாகவே இருந்து வந்தாள். பின் வேண்டிய வரிசைகளுடன் எருக்கத்தம் புலியூரில் கொண்டு போய்விட்டனன். என்னே இராசராசனின் பெருந் தன்மை! மக்கள் எல்லோரும் ஓரினம் என்னும் ஒருமை மனப்பான்மை! தீண்டாத குலத்தினளான அப்பாண் மகளால் பண்ண மைக்கப்பட்ட தேவாரப் பதிகங்களைப் பண்ணுடன் மன முருகப் பாடுகிறோம். பாடக் கேட்டு மகிழ்கிறோம். ஆனால், அக்குலத் தினரை, அப்பாண்மகள் வழியினரைத் தொடுதல் தீட்டு, அவர் களுக்கு இடுதல் தீட்டு என்கிறோம். இது என்ன முறை? அத்தாழ்த்தப்பட்ட குலமகள் அமைத்த பண்ணன்றோ கேட்போர் மனத்தை உருகச் செய்கிறது! அப்பண்ணுடன் கூடிய தேவாரத் திருமுறைகள்தான், சைவத் தமிழ் மறையாகும்.  5. தலைவர் நேரு உலகப் பேரொளி என்பது, கதிரவனின் (சூரியன்) பெயர்களில் ஒன்று. உலக முழுமைக்கும் பேரொளியைத் தருதலால், கதிரவனுக்கு அப்பெயர் ஏற்பட்டது. ஆனால், இன்று, 'உலகப் பேரொளி' என்னும் அப்பெயர், கதிரவனைக் குறியாது, இவ்வுலக மக்கள் தலைவர்களில் ஒருவரைக் குறிக்கும் பெயராக ஆகி விட்டது. யார் அவர்! பகலவனுக்குப் போட்டியாக உள்ள அவர் யார்? இக்கேள்விக்கு நீங்களே விடை சொல்வீர்கள், நேரு என்று. ஆம், நமது ஒப்பற்ற தலைவர், காந்தியடிகளுக்கு அடுத்த நமது மாபெருந் தலைவர் நேரு அவர்கள்தான். அப்பெயருக்கு உரியவர். உலகப் பேரொளி, நேரு! இந்திய அரசியல் வானில் தோன்றி ஒளிவீசிய பேரொளி களில், நமது தலைவர் நேரு அவர்கள் மங்காப் பேரொளி யாவர். மேருவே அன்ன நம் நேருவே, இந்திய அரசியல் வானில், உலகப் பேரொளி என்னும் அத்தகு சிறப்பைப் பெற்றனர். நேரு அவர்களின் வாழ்வே அரசியல் பொதுவாழ்வாகும். இவர் குடும்பமே அரசியல் வாழ்வுக் குடும்பம். குடும்பமே அப்படியே அரசியல் தொண்டு செய்த பெருமை, நேரு குடும்பத் திற்கே உண்டு. தலைவர் நேரு அவர்கள் அஞ்சா நெஞ்சமும் அதற்கேற்ற தகுதியும் திறமையும் உடையவர்; ஓயா உழைப்பினர். உலையா முயற்சியினர். பொது நலத்தையே அவர் பூணாகப் பூண்டவர்; பரந்த நோக்கமும் விரிந்த எண்ணமும் உடையவர்; அருளுள்ளங் கொண்ட அரசியல் வீரர். உலக அரசியல் அறிஞர் களில் தலைவர் நேரு அவர்கள் முன் வைத் தெண்ணத் தக்கவர். இதனால்தான் அவர்க்கு, 'உலகப் பேரொளி' என்னும் பெயர் ஏற்பட்டது. 'மக்களுள் மாணிக்கம்' என்பது அவரது மற்றோர் அத்தகு பெயர். இப்பெயர்களைவிட, நேரு மாமா என்னும் பெயர் உங்களுக்கு அவ்வளவு அறிமுகமான பெயர். ஆம், தலைவர் நேரு அவர்கள், சிறுவர்களாகிய உங்களிடத்தில், அளவு கடந்த அன்புடையவர். உங்களை 'எதிர்காலச் செல்வங்கள்' என்று பெருமையாக அழைத்தவர் நேரு ஒருவரேயாவர். 'உங்களை' என்பது, தமிழ்ச்சிறார்களை மட்டும் குறிப்பதாகாது. இந்தியச் சிறுவர்களையும், இல்லை, உலகச் சிறுவர்களையே குறிக்கும். உலகச் சிறுவர்களெல்லாம் நேரு அவர்களை, 'நேரு மாமா' என்றேதான் அன்போடு அழைத்து வந்தனர்; இன்றும் அவ்வாறே தான் அழைத்து வருகின்றனர். நேரு அவர்களின் தந்தையார் பண்டித மோதிலால் நேரு ஆவர். அவர் ஊர் அலகாபாத்து. அவர்தம் மாளிகையின் பெயர் ஆனந்த பவனம் என்பது. மோதிலால் நேரு பெருஞ் செல்வர்; சிறந்த வழக்கறிஞர்; இந்திய நாடே கலங்கிக் கண்ணீர் விட்டழ அரசியல் குற்றவாளியாகச் சிறையிலேயே உயிர் விட்ட பெரியார் ஆவர். நேரு அவர்களின் தாயார் சொரூபராணி அம்மையார் ஆவர். தலைவர் நேரு, 14.11.1889 இல் பிறந்தார். பண்டித ஐவகர்லால் நேரு என்பது இவரது முழுப் பெயர். பெருஞ் செல்வப் பிள்ளையாதலால், இளமையில் இவர் ஆங்கிலச் செவிலியால் வளர்க்கப்பட்டனர்; ஆங்கில ஆசிரியர்களிடம் கல்விகற்றனர். பின்னர் இவர், இங்கிலாந்திலுள்ள மன்னர் மக்கள் படிக்கும் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்று, சட்டம் படித்து வழக்கறிஞரானார். இவர் இந்தியா வந்ததும், நாட்டு விடுதலைப் போரில் ஈடுபட்டார்; 7 முறையினில், 12 ஆண்டுகள் சிறையில் இருந்தார். 1916 இல், கமலா நேரு என்னும் அம்மையாரை, இவர் வாழ்க்கைத் துணைவியராகக் கொண்டார்; இன்றைய இந்திய முதலமைச்சர் திருவாட்டி இந்திரா காந்தி அவர்களை நமக்குத் தந்தார். காந்தியடிகளின் அரசியல் செல்லப் பிள்ளையாகிய நேரு அவர்கள், 15.8.1947 இல் விடுதலை இந்தியாவின் முதலமைச்சர் ஆனார்; 27.5.1964 இல் நம்மை விட்டுப் பிரியும் வரை இந்திய முதலமைச்ச ராகவே இருந்தார். 14.3.1937 இல், டில்லியில் ஒர் அரசியல் மாநாடு நடந்தது. அதற்கு நம் நேரு அவர்கள் சென்றார். அன்று நேரு, முதலமைச்சர் நேருவாக இல்லை. வெறும் அரசியல் தலைவர் நேருவாகவே இருந்தார். ஆனால், அன்றே அவர் இந்திய மக்களின் பெருமதிப்பைப் பெற்றுவிட்டார். ஓரூர்க்கு நேரு வருகிறார் என்றால், மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடிவிடுவர். நேரு அவர்களைக் கண்டு களிக்கவும், அவர் பேச்சைக் கேட்கவும் நெடுந்தொலைவில் இருந்தெல்லாம் மக்கள் வந்து குவிந்து விடுவர். டில்லி மாநாட்டுக்குச் சென்ற நேரு, டில்லியிலுள்ள காசிதாபாத்து என்னும் புகை வண்டி நிலையத்தில் இறங்கினார். நேருவைப் பார்க்க மக்கள் ஏராளமாகக் கூடி விட்டனர். வெள்ளம் போன்ற மக்கட் கூட்டத்தினிடையே மிதக்கும் கப்பல் போல நின்றார் நேரு. அப்போது புகைப்படம் பிடிப்போன் ஒருவன், நேருவைப் படம் பிடிக்க முடின்றான். நெருக்கமான அக் கூட்டத்தில் அமைதியாக நின்று படம் எடுப்பது அவ்வளவு எளிதாகத் தோன்றவில்லை. கூட்டமென்ன சிறிய கூட்டமா? நேருவின் எதிரில் உள்ள மேரு போன்ற கூட்டம்! படம் பிடிக்கும் வரை அக்கூட்டம் அமைதியாக இருக்க வேண்டுமே. எனவே, நேரு படம் பிடிக்க மறுத்துவிட்டார். மக்கட் கூட்டத்தினிடையே செல்லும் நேருவைப் பார்க்க மக்கள் மேலும் மேலும் வந்து கூடிக்கொண்டே இருந்தனர். அங்குள்ள தோட்டியொருவன், நேருவைப் பக்கத்தில் சென்று பார்க்க விரும்பினான். ஆனால், தேன் கூட்டை மொய்க்கும் தேனீக்கள் போல் மக்கள் கூடியுள்ள அந்நெருக்கத்தில், குப்பை கூட்டும் விளக்குமாற்றுடன் அக்கூட்டத்துள் செல்ல முடியாமல், 'பக்கத்தில் போய்ப் பார்க்க முடியவில்லையே' என்னும் ஏக்கத்துடன் அவன் ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்தான். மக்கட் கூட்டத்தினிடையே, விண்மீன் கூட்டத்தினிடையே செல்லும் மதியைப் போல் செல்லும் நேரு, அத்தோட்டி நிற்கும் நிலையைக் கண்டார்; அவன் தம்மை அணுகி, தம்மை நன்றாகக் கண்டு களிக்கவேண்டும் என்று பேராவலாக உள்ளான் என்பதை அவன் முகக் குறிப்பால் உணர்ந்தார்; அவனை நன்கு உற்றுப் பார்த்தார். அவனும் இவரையே பார்த்தகண் மாறாமல் பார்த்தான். பல கோடி இந்திய மக்களின் வாழ்வே தம் வாழ்வெனக் கொண்டுள்ள நேரு அவர்கள், அவ்வேழைப் பாட்டாளி மீது இரக்கங் கொண்டார். அவனது ஆவலை நிறைவேற்றி வைக்க எண்ணினார்; கடல் போல் தம்மைச் சூழ்ந்து நின்ற மக்கட் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவ்வேழைப் பாட்டாளியிடம் ஓடினார்; அருகில் சென்று, அவனைத் தழுவிக் கொண்டு, 'என்ன வேண்டும்?' என்று அன்புடன் கேட்டார். அவன், 'தங்களைப் பக்கத்தில் வந்து கண்குளிரக் கண்டு களிக்க வேண்டும் என்றுதான் அரும்பாடுபட்டேன். இத்துடைப் பத்துடன் கூட்டத்தின் உள்ளே வர என் மனம் இடந்தர வில்லை. இனி எனக்கு வேண்டியது என்ன இருக்கிறது? இனி எனக்கு ஒன்றும் குறைவில்லை' என்று, தான் பெற்ற பெரும் பேற்றை வெளியிட்டான். புன்முறுவலுடன் நேரு அவனைத் தடவிக் கொடுத்துக் கொண்டே, முன் தன்னைப் படம் பிடிக்க முயன்றவனைக் கூப்பிட்டார். அவனிடம், 'இத்தோழனோடு என்னைப் படம் எடும்' என்றார். அக்கூட்டமே வியப்புக் கடலில் மூழ்கியது. அவ்வேழைப் பாட்டாளித் தோழனின் தோள்மேல் கையைப் போட்டுக் கொண்டு, படம் பிடிப்பதற்கு ஏற்ற நிலையில் நின்றார் நேரு. அப்பாட்டாளி, ஒரு கையில் பிடித்த துடைப்பத்துடன் அவன் நிற்பது போல நின்றான். அப்படம் பிடிப்போன் பெருமகிழ்ச்சியுடன், 'இனி இந்தியாவின் ஏழ்மை நிலையும், ஏற்றத்தாழ்வான சாதிக் கொடுமையும், தீண்டாமைப் புலியும் அடியோடழிந் தொழி வதற்கு இதுவே அறிகுறி' என்பதை மக்கள் கண்டு களிக்கும்படி, அத்தோட்டியையும் நேருவையும் ஒன்றாகப் படம் பிடித்தான். புன்னகை பூத்த முகத்துடன் அப்பாட்டாளித் தோழனுடன் படம் பிடித்துக் கொள்ள நிற்கும் நேருவை, படத்தில் அமைக்கப் படப்பெட்டியின் வழியாகப் பார்த்த அப்படம் பிடிப்போன் கண்கள், அக்காட்சியைக் கண்டு களித்த வண்ணம், 'யாம் பெற்ற பேறு பெறுக இவ் வையகம்' என்று பெருமிதம் கொண்டன. அக்காட்சியைக் கண்ட அக்கூட்டமே திடுக்கிட்டது; நேருவின் பெருந்தன்மைக்கு ஒப்புக் காணாது மயங்கிற்று. அவன் படம் பிடிக்கும்போது அக்கூட்டம் படம் போலவே இருந்தது; ஏன்? அப்பாட்டாளிக்கு வாய்த்த வாய்ப்புத் தனக்கு வாய்க்க வில்லையே என்று, பொறாமை கொண்டது என்று கூடச் சொல்லலாம். அப்பாட்டாளி தன்னை மறந்து படம் போலவே நின்றான். டில்லி மக்கள் கண்கள் அப்புதுமைக் காட்சியைக் கண்டு களித்தன. அவர் மனம் நேருவின் தனிப் பெருந் தன்மையை எண்ணி மகிழ்ந்தது. என்னே நேருவின் அருட்பெருக்கு! ஒப்பற்ற ஒருமைப்பாட்டுத் தன்மை! நேருவின் இவ் வருட்பெருஞ் செயல், தன்னைக் காண முடியாமையால், மரத்தின் மீது ஏறிப் பார்த்த சகேயு என்னும் ஆயக்காரனிடம் சென்று, கீழே இறங்கும்படி செய்து, அவனோடு அளவளாவிய ஏசுநாதரின் அருட்பெருஞ் செயலையும் மீறி விட்டதல்லவா? 'நேரு மாமா' என, அவர்க்கு, உங்களுக்கென ஒரு தனிப் பெயர் படைத்துக் கொண்ட நீங்கள், அவர் கொள்கையை, நடக்கையைக் கடைப்பிடித்து நடக்க விரும்புவீர்களல்லவா? ஆம், அதுதான் தலைவர்களிடம் அன்பு கொள்வதன் பயன் ஆகும்.  6. காசிநாத தேவால் தமிழ்நாடு, மலையாள நாடு, ஆந்திர நாடு, கன்னட நாடு என்னும் நான்கு மாநிலங்களும் 1956க்கு முன்னர். சென்னை மாநிலம் என ஒரே மாநிலமாக இருந்து, பின்னர் நான்கு மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது போலவே, அன்று ஒரே மாநிலமாக இருந்த பம்பாய் மாநிலம், இன்று - மராட்டியம், குசராத்தி என இரு மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டுவிட்டது. மராட்டிய மாநிலத்தின் தலைநகர் - பம்பாய். அது, மேல் கடற்கரையில் உள்ள ஒரு சிறந்த துறைமுகப் பட்டினம். இந்தியா விலேயே சிறந்த தொழில்வளமுடைய நகராக விளங்குகிறது பம்பாய் மாநகர். தமிழ் நாட்டின் சிறந்த தொழில் வளமுடைய நகரான கோவை மாநகரை, இரண்டாவது பம்பாய் என்பர். அதனினும் மிக்க தொழில் வளமுடையது அந்நகர். இன்று தனி மாநிலமாகப் பிரிந்துள்ள மராட்டிய மாநிலம், ஒரு காலத்தே தனியரசு நாடாக விளங்கிற்று. அம் மாராட்டியத் தனியரசை நிறுவியவன், வீர சிவாஜி என்பது உங்களுக்குத் தெரியும். சிவாஜி கண்ட அம்மராட்டிய நாட்டிற்கு, பூனா என்பது தலைநகராக விளங்கியது. அந்நகர், பம்பாய்க்குத் தெற்கில் உள்ளது. அஃதும் ஒரு சிறந்த தொழில் வளமுடைய நகரே. பூனா நகரில் காசிநாததேவால் என்னும் பெருஞ் செல்வ ரொருவர் இருந்தார். அவர் மராட்டியப் பிராமண குலத்தினர்; 1866இல் பிறந்தவர்; செல்வமாக வளர்க்கப் பட்டவர். காசிநாதர், பள்ளிச் சிறுவராய் இருக்கும்போதே ஏழைச் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவார்; பெற்றோர் கண்டித்தால் தக்க மறுமொழி கூறி அவர்களை மகிழ்விப்பார். மிகவும் வைதிக மான குடும்பத்தில் பிறந்த இவர்க்கு இத்தகைய மனப்பான்மை எப்படி உண்டானதென்பது, புதிராகவே உள்ளது. வீட்டுப் பழக்கத்துக்கு நேர்மாறாக இயல்பாகவே இவர்க்கு இச்சீர்திருத்த குணம் அமைந்தது வியப்புக்குரிய தொன்றேயாகும். பருவம் ஆக ஆக, வளர வளரக் காசிநாதரின் இச்சீர்திருத்த மனப்பான்மையும் வளர்ந்து கொண்டே வந்தது. மக்களில் ஒரு சிலரைத் தொடக்கூடாது என்னும் தீண்டாமைக் கொடுமை யைப் பற்றி எந்நேரமும் சிந்திக்கத் தொடங்கினார். பல அறிஞர்களிடம், தீண்டாமை என்னும் தொத்து நோயை ஒழிக்கும் வழியைப் பற்றி வினாவினார். 'சாதி வேற்றுமை இருக்கிற வரையில் தீண்டாத வகுப்பினரும் இருந்துதான் தீருவர். தீண்டாத வகுப்பினர் இருக்கும் வரை மக்களினம் அமைதியான இன்பவாழ்வு வாழ முடியாது. நம் நாடும் விடுதலை பெறாது' என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால், 'இக்கொடுமை இப்படியேதான் இருக்க வேண்டுமா? இதனை ஒழிக்கும் வழி ஒன்றும் இல்லையா?' என்று, எப்போதும் இதே கவலையாக இருந்தார். தன் குடும்பக் கவலை சிறிதும் இல்லாதிருக்க அத்தகு செல்வப் பெருக் குடையராய் இருந்தும், பிறர் குடும்பக் கவலையால் மனம் நோகலானார். முடிவில், 'ஒவ்வொரு உயர் குலக் குடும்பத்தினரும் தாழ்த்தப் பட்ட வகுப்புக் குழந்தை ஒன்றை எடுத்து வளர்ப்பதே தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கத் தகுந்த வழியாகும்' எனத் தீர்மானித்தார். அதைத் தாமே முதலில் செய்து, மற்றவர்க்கு வழி காட்டுதல் வேண்டும் என முடிவு செய்தார். மனைவியாரிடம் தன் கருத்தைக் கூறினார். கணவன் கருத்தின்படி ஒழுகும் அவ்வம்மையும் அதற்கு உடன்பட்டார். மனைவியைத் தன் கருத்துக்கு உடன் படச்செய்ய இவர் எத்தனை நாள் எவ்வளவு படாதபாடுபட்டாரோ யார் கண்டார்? எப்படியோ அந்த அம்மையாரை உடன்படச் செய்துவிட்டார். சீர்திருத்தக்காரர்க்கு இத்தகு திறமை இன்றியமையாததாகும். மனைவியாரைத் தன் கருத்துக்கிணங்கு வித்த அன்றே இருவரும் ஒரு சேரிக்குச் சென்றனர். தாங்கள் வளர்த்துக் கொள்ள ஒரு சிறுவனைத் தரும்படி கேட்டனர். அவ்வெளியோர் பெரு வியப்புற்றனர். ஏதோ விளையாட்டாக இப்படிக் கேட்கின்றனர் என்று எண்ணினர். இவர்கள் இன்னார் என்பதும் அவர்கட்குத் தெரியும். "நாங்கள் அருமையாகப் பெற்ற பிள்ளையை உங்களுக்குக் கொடுப்போமா? பிள்ளைப் பேற்றைவிடப் பெரும் பேறுவேறு என்ன இருக்கிறது? அப்படிக் கொடுப்பதுதான் முறையா? எங்களுக்கென்ன பிள்ளை சுமையாகவா இருக்கிறது? பாலும் பழமுமா கேட்கிறது? நாங்க குடிக்கிற கஞ்சியை அதுங் குடிக்கிறது' என்று, அவர்களும் விளையாட்டாகவே உண்மையைக் கூறி மறுத்தனர். காசிநாதர் தாங்கள் கொண்டுள்ள முடிவை விளக்கிக் கூறி வேண்டினர். அவர்கள் உண்மையை யுணர்ந்து, காசி நாதரை மனமார, வாயாரப் பாராட்டி, ஒரு சிறுவனைக் கொடுத்தனர். ஆனால், சிறுவனின் பெற்றோர், மற்றவரின் வற்புறுத்தலுக்கு இசைந்தனரேயன்றி, வருத்தத்துடனேதான் கொடுத்தார்கள். பெற்ற மனம் பித்தல்லவா? 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு' தானே? வறியோன் பெரும்பொருள் பெற்றாற் போல மகிழ்ந்து, அச்சிறுவனை அன்புடன் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர் அப்பெற்றோர். வீட்டுக்கு வந்ததும் அவ்வம்மையார், அச்சிறுவனுக்கு நீராட்டி வேறு உடையுடுத்தத் தொடங்கினார். அது கண்ட காசிநாதர், 'என்ன இருக்க என்ன செய்தாய்? இதுவா தீண்டாமையை ஒழிக்கும் வழி? தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிணற்றுரிமையின்மையால், அவர்கள் தூய்மையின்றிக் கிடக்கின்றனர். அதனால், அவர்களைத் தொடு வதற்கு அருவருப்பாக இருக்கிறது. உயர் குலத்தினர் எல்லோருடைய மனமும் ஒரேயடியாய் மாறி, தாராளமாய்ப் புழங்கும்படி கிணற்றுரிமை கொடுத்தாலன்றி, அவர்கள் நம்மைப் போல் நாடோறும் குளித்துத் தூய்மையாக இருக்க முடியாது. அது இப்போது நடக்கக் கூடியதா? ஆகவே, நாம் இச்சிறுவனை இந்நிலையிலேயே வைத்துக் கொண்டு பழகினால், பின் எல்லோரையும் அருவருப்பின்றித் தொடலாம். வந்ததும் வராததும் அதை மாற்றவே தொடங்கி விட்டாயே? இன்றைக்கு இப்படியே யிருக்கட்டும்' என்று, அச் சிறுவனை யெடுத்து, மடிமேல் வைத்து, மார்போடு அணைத்து முத்தமிட்டார். என்னே காசிநாதரின் மாசிலா உள்ளம்! அது கண்ட அம்மையார், 'ஆ! இதென்ன கொடுமை! இப்படிச் செய்வீர்களென்று தெரிந்திருந்தால் நான் முன்னமே இசைந்திருக்க மாட்டேனே. நீங்கள் இப்படி விடாப்பிடி செய்தால், நான் என் பெற்றோர் வீட்டுக்காகிலும் போய் விடுகிறேன்' என்று மனம் வருந்திக் கூறினார். காசிநாதர், 'பெண்ணே! மலந்தின்னும் நமது நாயை அச்சமின்றித் தொடும் நீ, பகுத்தறிவுள்ள இம்மக்கட் குழவியைத் தூய்மையில்லதென்று தொடுவதற் கஞ்சுவதன்றோ கொடுமை! மலந்தின்ற வாயை நாய் கழுவிக் கொண்டா உன் கையை வந்து நக்குகிறது? வெயிற் காலத்தில் வேர்த் தடங்கினால் நமது மேலுந் தானே நாற்ற மடிக்கிறது?' எனத் தீண்டாமையின் உண்மை நிலையை எடுத்துரைத்தார். அவ்வம்மையார் உண்மையை யுணர்ந்து, உண்மையுணர் வுற்று, அப்பழங்குடிச் சிறுவனைத் தான் பெற்ற பிள்ளை யினும் பேரன்புடன் வாங்கி, மார்போடணைத்து முத்தமிட்டார். அச்சிறுவன் தன் மழலை மொழியால், 'அம்மா!' என்றான். அவ்வன்னை, 'ஏண்டா கண்ணே!' என்றார். மனைவியின் மனமாற்றத்தைக் கண்ட காசிநாதர், அகமிக மகிழ்ந்தார். பின்னர் அச்சிறுவனை, நீராட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தனர். இதையறிந்த ஊராரும் உறவினரும் கடுஞ்சினங் கொண்டனர்; காசிநாதர் ஏதோ செய்யத்தகாத அத்தகைய கொடிய குற்றத்தைச் செய்துவிட்டது போல எண்ணிச் சீறிவிழுந்தனர். காசிநாதரின் சீர்திருத்த நடக்கையால் முன்னமே வெறுப்புக் கொண்டுள்ள அவர்கள், இதைக் காரணமாகக் கொண்டு, காசிநாதரை அந்த எண்ணத்தையே விட்டுவிடும்படி செய்துவிட வேண்டு மெனத் தீர்மானித்தனர். முதியோர் பலர் ஒன்று கூடிக் காசிநாதர் வீட்டுக்கு வந்து, "காசி நாதா! என்ன இருக்க என்ன செய்தாய்? நமது புனிதமான பிராமண குலத்துக்கே நீங்காத இழிவைத் தேடி விட்டாயே? நம்ம தெருப் பக்கமே வரக் கூடாத அச்சண்டாளப் பயலை வீட்டுக்குள்ளேயே கொண்டு வந்துவிட்டாயே? நீ தொட்டுத் தொலை; அவர்களோடு கட்டிப் புரள். ஆனால், அத்தீண்டத்தகாத சிறுவனை ஊர்க்குள், அதுவும் வீட்டுக்குள் கொண்டு வரலாமா? பெருமையாக வாழ்ந்து வந்த குடும்பத்தில் பிறந்த உனக்கேன் இந்தச் சிறுமதி? அந்த இழிசாதிப் பயலை விட்டில் வைத்திருந்தால் உன்னைச் சாதிக்குப் புறம்பாகத் தள்ளி வைத்துவிடுவோம். போனது போகட்டும், மரியாதையாக அப்பையனைக் கொண்டு போய்க் கொடுத்துவிடும்"என்று விரட்டினர். காசிநாதர், அவர்கள் மிரட்டலைக் கண்டு சிறிதும் அஞ்ச வில்லை. அவர் பணிவாக, "எம்மவரே! மக்களில் ஒரு சிலரைக் கேவலம் புழுப் பூச்சிகளினும் இழிவாக எண்ணி, அவர்களைத் தொடுவதே தீட்டு எனக்கூறும் நமது குலமா புனிதமான குலம்? மக்களை மக்களாக மதிப்பதன்றோ புனிதத் தன்மை? அதுவன்றோ மக்கட் பண்பு? நம்மைவிட அப்பாட்டாளிகள் எந்த வகையில் தாழ்ந் தவர்கள்? ஓயாமல் உடல் தேய உழைத்து உலகத்தை வாழ்விக்கும் அவரன்றோ உயர்ந்தவர்? எல்லோரினும் நாமே உயர்ந்தவர் என எண்ணும் சாதிச் செருக்குடைய நாமா உயர்ந்த குலம்? மக்களை மக்களாக மதியாத நாமன்றோ தாழ்ந்தவர்? ஈரறிவுடைய புழுப் பூச்சிகள் கூட, ஒவ்வோரினமும் ஏற்றத் தாழ்வின்றி ஒன்று கூடி ஒரு நிகராய் வாழ்ந்துவர, 'ஆறறிவுடைய மக்கள்' என்று பெருமையாகக் கூறிக் கொண்டு, நம்மில் ஒரு சிலரைத் தாழ்ந்தவர் என்றும், தொடுவது தீட்டு என்றும் தனியாகத் தள்ளி வைத்திருக்கும் நாமா ஆறறிவுடையவர்? இதுவா பகுத் தறிவின் பயன்? மக்களைத் தவிர, வேறு எந்த உயிர்கள் தம்முள் ஒன்றையொன்று தீண்டுதற் கஞ்சுகின்றன? இந்தச் சிறுவன் புகுந்ததால் எங்கள் வீடு என்ன இடிந்தா போய்விட்டது? நம்ம தெருப்பக்கமே வரக்கூடாத இவனென்ன சிங்கமா புலியா!'' என, அச்சிறுவனைத் தழுவிக் கொண்டே, ''பல கோடி பாட்டாளி மக்கள், இரவு பகலாய் ஓயாமல் உடல் வருந்த உழைத்தும், குடிக்கக் கஞ்சியும், கட்டக் கந்தையும், இருக்கக் குடிசையும், ஏன்? குடிக்கத் தண்ணீருங் கூடச் சரியாக இல்லாமல் தவிப்பதற்குச் சாதிக் கொடுமை யன்றோ காரணம்? ஓயாமல் உழைத்தும் அவ்வுழைப்பாளி மக்கள் வாழ வழியின்றி வாடும் போது, நாங்கள் மட்டும் நல்வாழ்வு வாழ விரும்பவில்லை. நீங்கள் விலக்கா முன், இதோ நாங்களே உங்கள் சாதியை விட்டு விலகிக் கொள்கிறோம்'' என்று, ஊர்க்குப் புறம்பேயுள்ள தமது நிலத்தில் ஒரு குடிசை கட்டி, குடும்பத்தோடு அங்கு குடி யேறினார். பின்னர்ச் சில தாழ்த்தப்பட்ட குடும்பங்களை அங்கு குடியேற்றினார். அந்நிலத்தில் பயிர்த் தொழில் செய்து வாழும்படி செய்தார். அவர்கட்குக் கல்வி கற்பித்தார்; நல்ல கைத் தொழில்கள் செய்யப் பழக்கினார். அவர்கள் உண்ணும் உணவையே தாமும் உண்டு, அவர்களோடு ஒன்றாகவே வாழ்ந்து வந்தார். அக்குடி யிருப்பு, தீண்டாமை விலக்குக் குருகுலம் ஆகத்திகழ்ந்தது. காந்தியடிகள், நம் காசிநாதரின் இப் பெருந் தொண்டைப் பல படப் பாராட்டியுள்ளார். தாழ்த்தப்பட்டோரின் தந்தையும் தாயும் உடன் பிறந்தோனும் ஊழியனுமாக விளங்கினார் காசிநாதர். ''ஒவ்வோர் உயர் குலத்தோரும், தாழ்த்தப்பட்டோரில் ஒருவரைத் தமது குடும்பத்தில் ஒருவராகக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தீண்டாமை ஒழியும்''-சாமி சிரத்தானந்தர்.  7. இயேசுநாதர் 'இவன் , 1956 இல் பிறந்தான். இப்பொழுது இவனுக்குப் பத்தாண்டுகள் ஆகின்றன' என்கின்றார் ஒரு தந்தை. 'இப்பொழுது' என்றது, 1966ஆம் ஆண்டினை யாகும் . 1966 என்பது, உலகப் பெருஞ் சமயங்களில் ஒன்றான கிறித்து சமயத்தை உண்டாக்கிய, இயேசுநாதர் பிறப்பு ஆண்டாகும். இவ்வாண்டே, உலகில் பெரும்பாலும் வழங்கி வருகிறது. அது, கி.மு. எனவும், கி.பி. எனவும் வழங்கி வருகிறது. கி.மு. கிறித்துப் பிறப்பதற்கு முன்; கி. பி. கிறித்துப் பிறந்த பின், எனப்படும். இன்று கிறித்துப் பிறந்து 1966 ஆண்டுகள் ஆகின்றன. கிறித்து- இயேசுநாதர். ஆசியாக் கண்டத்தில், அரேபியாவுக்கு வடமேற்கில், பாலத்தீனம் என்னும் நாடு இருக்கிறது. அது ஒருகாலத்தே, 'பாலும் தேனும் பாயும் பாலத்தீனம்' என்னும் சிறப்புடன் விளங்கியது. செரூசலம் என்பது, அந்நாட்டின் தலைநகர். அப்பாலத்தீனத்தில் முற்காலத்தே, யூதர் என்னும் சாதியார் வாழ்ந்து வந்தனர். அவர்கள், 'மக்கட் பிறப்பில் தாங்களே உயர்ந் தவர்கள். தங்களைவிட உயர்ந்தவரோ, ஒப்பானவரோ மக்கட் பிறப்பில் இல்லை' என்னும் நம்பிக்கையுடையவர்; பிறர்க்கு ஏவற் றொழில் செய்வது இழிவு என்னும் எண்ணமுடையவர். 'யூதர்கள் பிறரை அடிமை கொள்ளப் பிறந்தவரே யன்றி, பிறர்க்கு அடிமைப் படப் பிறந்தவர்கள அல்லர்' என்பது, அவர்களது உறுதியான நம்பிக்கை. இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முன், பாலத்தீனம் உரோமர் ஆட்சிக் குட்பட்டிருந்தது. உரோம அரசுக்கு ஆயம் (சுங்கம்) வாங்கி அனுப்பி வந்த யூதர்களை, ஆயம் வாங்கும் அரசியல் அலுவல் பார்த்து வந்த தம் இனத்தவரை, மற்ற யூதர்கள் இழிந்தவரெனக் கருதினர். அவர்களைத் தீண்டத் தகாதவரெனத் தள்ளி வைத்தனர். அவ்வாயக்காரர், நம் நாட்டுத் தாழ்த்தப்பட்ட மக்களைப் போலத் தள்ளுண்டு தவித்து வந்தனர். சென்ற நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் இங்கு எந்நிலையில் இருந்து வந்தனரோ அந்நிலையில் இருந்து வந்தனர் அன்று அவ்வாயக்காரர். செரூசலத்திற்கு அண்மையிலுள்ள பெத்தலகேம் என்னும் ஊரில், யூசேப்பு என்னும் தச்சர் ஒருவர் இருந்தார். அவர் உயர்ந்த யூதவகுப்பைச் சேர்ந்தவர். அவர் மனைவியா ரான மரியாள் என்னும் மங்கையர்க்கரசியார்தான் உலக முழுவதும் பரவியுள்ள கிறித்துவ சமயத்தை ஏற்படுத்திய இயேசுநாதரை ஈன்றவர். இயேசுநாதர் வீட்டிலேயே கல்வி கற்று வந்தார். குலத் தொழிலான தச்சுவேலையும் பழகினார். தந்தை இறந்தபின், அவர் தானே வருந்தியுழைத்துத் தாயாரைக் காப்பாற்றி வந்தார். இவர் இயல்பாகவே ஏழைகளிடத்தில் இரக்கமுள்ளவர்; ஏழைகளை ஈடேற்றுவதற்காகவே பிறந்தவர் எனலாம். பொறுமையே உருவானவர். 'இந்தக் கன்னத்தில் அடித்தால் அந்தக் கன்னத்தைக் காட்டு' என்பது, இயேசுநாதர் பொறை. தமது தாய்நாட்டில் வாழும் ஆயக்காரரின் இரங்கத்தக்க இழி நிலையைக் கண்டு மன முருகினார். அவர்களை மாக்கள் நிலையி லிருந்து மக்களாக்கும் வழியை ஆராய்ந்தார். முடிவில் நல்ல வழியொன்றைக் கண்டறிந்தார். தாங்கண்ட கொள்கையை மக்களுக்கு எடுத்துரைத்து வந்தார். 'மக்களில் ஏற்றத்தாழ்வு கிடையாது. எல்லாரும் ஓரினம். ஒன்றே குலம்' என்ற உண்மையை எடுத்துரைத்து வந்தார். இவர்க்கு மாணாக்கர் சிலர் ஏற்பட்டனர். அம் மாணாக்கர் களுடன் ஊர்தோறும் சென்று தம் கொள்கையைப் பரப்பி வந்தார். அது பொறாத யூத குருமார்களால் இவர் பல இன்னலுக் குள்ளாக்கப்பட்டார். முடிவில் அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுகிறார் என்னும் குற்றஞ் சாட்டப் பெற்றுச் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். இயேசுபெருமான், ஏழைகளுக் காகவே பிறந்து, ஏழைகளுக்காகவே வாழ்ந்து, ஏழைகளுக் காகவே உயிர்விட்டார். பாலத்தீனத்தின் நடுவில் சமாரியா என்ற சிறிய நாடொன் றுண்டு. அது கீழ்மேல் நீளவடிவ மானது. அது ஆயக்கார மக்கள் வாழ்விடம். அதனால், உயர்குல யூதர்கள் அச்சமாரிய நாட்டை மிதிப்பதுங்கூடத் தீட்டென எண்ணி, வடக்கும் தெற்கும் செல்ல வேண்டுமானால், சமாரிய நாட்டைச் சுற்றிக் கொண்டே செல்வர்; ஒரு கி.மீ.தொலை வுக்கு ஒன்பது கி.மீ. சுற்றிக் கொண்டு செல்வர் பாவம்! தீட்டைக் கண்டு அவர்களுக்கு அவ்வளவு அச்சம்! அச்சமாரியர்கள் மலையாள நாட்டில் உள்ள நாயாடிகள் என்னும் வகுப்பார், முப்பதாண்டுகளுக்கு முன்னர் எந்நிலையில் இருந்து வந்தார்களோ அந்நிலையில், யூதர்களால் கண்ணால் பார்க்கவுங் கூடாத பாவிகளாய்க் கருதப்பட்டு வந்தனர். அச்ச மாரியர் பாலத்தீனத்தில் கால் வைக்க முடியுமா என்பதைக் கேட்கவா வேண்டும்? அவர்கள் காற்றுக்கூடப் பாலத்தீனத்தில் வீசக் கூடாது. அவ்வளவு இழி மக்களாகக் கருதப்பட்டு வந்தனர் அச்சமாரிய மக்கள். ஒருநாள் இயேசுநாதர் தம் மாணாக்கருடன் அச்சமாரிய நாட்டுக்குச் சென்றார்; அங்குள்ள சீகார் என்னும் ஊரையடைந் தார்; வெயிலில் நெடுந்தூரம் நடந்ததால் மிகவும் களைப் படைந்தனர்; ஒரு மரத்து நிழலில் போய் உட்கார்ந்தார். மாணவர்கள் உணவுப் பொருள்கள் வாங்கிவர ஊருக்குட் சென்றனர். கிறித்து நாதர் தனியாக உட்கார்ந்திருந்தார். ஒரு சமாரியப் பெண் தண்ணீர் எடுத்துச் செல்ல வந்தாள். இயேசுநாதர் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் ஊற்றும் படி கேட்டார். அப்பெண், 'ஐயா! தங்களைப் பார்த்தால் யூதர் போல் தோன்று கிறது. நானோ தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண், நான் தொட்ட தண்ணீரைத் தாங்கள் குடிக்கலாமா? தாங்கள் எங்கள் நாட்டிற்குள் வந்ததே பாவம்! இதற்கு முன் எந்த யூதரும் இங்கு வந்ததில்லை! என்றாள். 'அம்மணி! மக்களில் உயர்வு தாழ்வு கிடையாது. இக்கிணற்றுக்குள் இருக்கும் மீன், தவளை, நண்டு முதலிய வற்றை விட நீ எவ்வகையில் தாழ்ந்தவள்? தாகம் அதிகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் ஊற்று' என்றார் இயேசு. 'ஐயா! இவ்வளவு பெருங்குணமுள்ள பெரியீராகிய தாங்கள் இன்னாரென்று தெரியவில்லையே?' 'அம்மா! நீ இயேசு என்பானைப் பார்த்திருக்கிறாயா?' அது கேட்ட அப்பெண், அவர்தான் இயேசுநாதர் என்பதை அறிந்து, 'எங்களை வாழ்விக்க வந்த சாமி! தங்கள் பெயரைக் காதால் கேட்டிருக்கிறேன். இப்போதுதான் தங்களைக் கண்ணாரக் கண்டு களித்தேன்' என்று கூறிக் கொண்டே ஓடிப்போய்த் தண்ணீர் சேந்திக் கொண்டு வந்து ஊற்றினாள். அண்ணல் அன்புடன் குடித்துக் களைப்பு நீங்கினார். தண்ணீர் ஊற்றினதும் அப்பெண் அண்ணலிடம் யாதும் பேசவில்லை. அங்கு நிற்கவும் இல்லை. தண்ணீர் ஊற்றினதும் குடத்தைக் கீழே வைத்து விட்டு விரைந்து ஓடினாள். ஏன் தம்மிடம் ஒன்றும் பேசாமல் அப்படி ஓடுகிறாள் என்பது தெரியாமல், அண்ணல் அவள் ஓடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பெண் ஓடிப்போய் ஊராரிடம் கூறிவிட்டு, 'இயேசுநாதர்! இயேசுநாதர்!' என்று, திரும்பி ஓடி வந்தாள். அப்போதுதான் அவள் எதற்காக அவ்வளவு விரைவாக ஓடினாள் என்பது இயேசுநாதர்க்குத் தெரிந்தது. அவள் ஓடிவந்து, அண்ணலின் காலடியில் தொப்பென்று விழுந்து வணங்கி எழுந்து, 'சாமி! மிகவும் பசியாக இருக்கிறீர்கள். சமையல் செய்து சாப்பிடுங்கள்' என்றாள். அண்ணல் 'அம்மணி! தண்ணீர் ஊற்றி என் களைப்பைப் போக்கினவள், என் பசியைப் போக்கக்கூடாதா?' என்றார். அதற்குள் ஊரார் திரண்டு வந்து, அண்ணலை வணங்கி, ஊர்க்குள் அழைத்துச் சென்றனர். சீகார் அன்று இன்பத்தின் இருப்பிட மாக விளங்கிற்று. இயேசுநாதர் இரண்டு நாள் அப்பெண் மணியின் விருந்தாளியாக இருந்தார். அப்பெண்மணி எந்நிலையில் இருந் திருப்பாள் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள். இவ்வளவு பெரிய கொடிய குற்றங்கள் பல செய்ததனா லேயே இயேசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டார். தாழ்த்தப்பட்டோரைத் தொடுவதும், அவருடன் புழங்குவதும் கொலைக் குற்றமாகக் கருதப்பட்டு வந்தது அக்காலத்தே. 1900 ஆண்டுகளுக்குக் மேல் ஆயிற்று. இன்னும் அத்தீண்டாமைக் கொடுமை அடியோ டொழிந்தபாடில்லை. என்னே அதன் அளப்பரும் ஆற்றல்!  8. நபிகள் நாயகம் 'பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்' என்றார் வள்ளுவர். மக்கள் எல்லாரும் ஒரே வகையான பிறப்பினை யுடையவரே யாவர். மக்களுக்குள் பிறவி வேற்றுமை என்பது இல்லை. பிறப்பிலேயே உயர்ந்த பிறப்பினர் தாழ்ந்த பிறப்பினர் என்னும் பிறவி வேற்றுமை மக்களுக்குள் இல்லை. எனவே, மக்களுள் ஒருசிலரைத் தாழ்ந்த பிறப்பினர், பிறப்பிலேயே தாழ்ந்தவர், தாழ்வாகவே பிறந்தவர் எனத் தாழ்த்தி வைத்திருப்பது, தீண்டத் தகாதவராக, தீண்டப்படாத வராகத் தள்ளிவைத்திருப்பது தகாது. மக்களுக்குள் தாழ்வுயர் வில்லை. மக்கள் ஒரே இனம் என்பது வள்ளுவர் கருத்து. இக்குறளுக்கு அப்படியே எடுத்துக் காட்டாக விளங்குவது இஸ்லாம் சமயம். இஸ்லாம் சமயத்தைச் சார்ந்தவர் - முஸ்லீம் எனப்படுவர். முஸ்லீம்கள் முகமதியர் என அழைக்கப் படுகின்றனர். முஸ்லீம்கள் ஒரே இனமாக வாழ்ந்து வருகின்றனர். முஸ்லீம் களுக்குட் சாதி வேற்றுமை கிடையாது. தாழ்ந்த சாதி உயர்ந்த சாதி என்பது முஸ்லீம்களுக்குள் இல்லை. நடைமுறையில் சாதி வேற்றுமை பாராட்டாத இனம் ஒன்று உண்டெனில், அது முஸ்லீம் இனமே யாகும். தீண்டாமை, தீட்டு என்பன அவர்கள் அறியாதன வாகும். வீரன் என்ற பழங்குடி மகன் தமிழனாக இருந்தும் நாம் அவனைத் தொடுவதில்லை; அவனைத் தொட அஞ்சுகிறோம். அவனை நம் வீட்டுக்குள் விடுவதில்லை. ஆனால், வீரன் தன் பெயரை, அப்துல் என மாற்றிக் கொண்டால் போதும், அதாவது இஸ்லாம் சமயத்தில் சேர்ந்தால் போதும், நாம் அப்பழைய வீரனைத் தொட அஞ்சுவதில்லை. அவனைத் தாராளமாக வீட்டுக்குள் விடுகிறோம். இத்தகைய சிறப்புடையது இஸ்லாம் சமயம், முஸ்லீம் இனம்! இத்தகைய பெருமை பொருந்திய இஸ்லாம் சமயத்தை மக்களிடைப் பரப்பியவர் யார்? அவர் பெயர் என்ன? அவர் வரலாறு யாது? என்பவற்றைத் தெரிந்து கொள்ள நீங்கள் விரும்பு வீர்கள் அல்லவா? ஆம், அன்னார் வரலாற்றை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். இஸ்லாம் சமயத்தைப் பரப்பியவர் நபிகள் நாயகம் என்னும் பெரியார் ஆவர். எகிப்து, கிரேக்கம், உரோம் முதலிய பழம் பெருமை வாய்ந்த மேனாடுகளில் அரேபியா நாடும் ஒன்று. இந்தியாவின் மேற்கெல்லையாக உள்ளது அரபிக்கடல். அது இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் உள்ளது. அரபிக்கடலின் வட மேற்கு மூலையில் உள்ளது அரபுநாடு. அவ்வரபு நாட்டை அடுத்துள்ளதால்தான் அக் கடல், அரபிக்கடல் எனப் பெயர் பெற்றது. அவ்வரபு நாட்டின் தலைநகர், மக்கா என்பது. நமது நபிகள் நாயகம் அம் மக்கா நகரில்தான் பிறந்தார். நபிகள் நாயகத்தின் தந்தை - அப்துல்லா என்பவர். தாய்-ஆமினா என்பவர். கி.பி.571 இல் நபிகள் நாயகம் பிறந்தார். இவரது இளமைப் பெயர் முகமது என்பது. முகமது என்றால், புகழப் பட்டவர் என்பது பொருள். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தந்தை இறந்துவிட்டார். மக்கா நகர்ச் செல்வர்கள் தங்கள் குழந்தைகளை, நாட்டுப் புறத்து ஏழைப் பெண்களிடம் கொடுத்து வளர்ப்பது அக்கால வழக்கம். அந்நாட்டுப்புறப் பெண்கள் செல்வர் குழந்தைகளை வாங்கிச் சென்று இரண்டு மூன்றாண்டுகள் வளர்த்துப் பின்னர்த் திருப்பிக் கொண்டு வந்து பெற்றோரிடம் கொடுப்பர். அவ்வாறே, அலீமா என்னும் நாட்டுப் புறச் செவிலித் தாயார் நமது முகமதுவை வாங்கிச் சென்று அன்போடு வளர்த்து வந்தார். அலீமா அன்னையிடம் முகமது அன்பாக வளர்ந்து வந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின், அலீமா முகமதுவை ஆமினா அம்மையாரிடம் கொண்டு வந்து கொடுத்தார். அதன் பின் முகமது தம் தாயாரிடம் வளர்ந்து வந்தார். முகமது அவர்களின் கட்டழகையும், அறிவுக் கூர்மையையுங் கண்ட கதீஜா என்னும் பெருஞ்செல்வியார் இவரை மணந்து கொண்டார். நபிகள் நாயகம், இயல்பாகவே ஏழை எளியார்களிடம் இரக்கம் உள்ளவர்; இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் இயல்புடையவர்; சொன்ன சொல் தவறாதவர்; பொறுமையே உருவானவர்; மிகுந்த சீர்திருத்த நோக்கம் உள்ளவர். இவர் காலத்து அரபு நாட்டு மக்கள் மிகுந்த மூடப்பழக்க வழக்கம் உடையவராக இருந்து வந்தனர். குடி, சூது கொள்ளை முதலிய குற்றங்களை இயல்பாகவே செய்பவராக இருந்து வந்தனர்; பெண்களை மிகவும் கொடுமையாக நடத்தி வந்தனர். மக்கா நகரின் பெரிய கோயிலில் இருந்த 360 தெய்வ உருவங்களை (விக்கிரகம்) வணங்கிவந்தனர்; உருவ வழிபாட்டில் அவ்வளவு நம்பிக்கை யுடையவராக இருந்தனர். நபிகள் நாயகம் இவற்றையெல்லாம் எதிர்த்தார்; உருவ வழிபாட்டை வன்மையாகக் கண்டித்தார்; 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதை வற்புறுத்தி வந்தார். இதனால் வெறுப்புக் கொண்ட அரபியர், இவர்க்குச் சொல்லொணாத் தொல்லை கொடுத்தனர்; முடிவில் கொல்லவுந் துணிந்தனர். அது கண்ட நபிகள், மக்கா நகரைவிட்டு, 400 கி.மீ. தொலைவில் உள்ள மதீனா நகர்க்குச் சென்றுவிட்டனர். அங்கு சென்றுங்கூட அரபியர்கள் விடவில்லை. பலமுறை படையெடுத்துச் சென்று தொல்லை கொடுத்தனர். பத்தாண்டு களுக்குப் பிறகு, நபிகள் நாயகம் பத்தாயிரம் மதீனா வீரர் களுடன் மக்காவுக்கு வந்து, போரில்லாமல் மக்காவைக் கைப்பற்றினார், எதிரிகள் சிறைபிடிக்கப்பட்டு, கைகள் கட்டப் பட்டு, நபிகள் நாயகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். நபிகள் நாயகம் அவர்களைப் பார்த்து, 'இப்போது நீங்கள் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க் கிறீர்கள்?' என்றார். 'நாங்கள் தங்களுக்குப் பொறுக்க முடியாத இன்னல்கள் இழைத்துள்ளோம். சொல்ல முடியாத தொல்லைகள் கொடுத் துள்ளோம். நாங்கள் செய்துள்ள குற்றங்களுக்குக் கொலையே தண்டனையாகும். ஆனால், இயல்பாகவே இரக்க குணமுள்ள தாங்கள், கொடிய குற்றங்களையும் பொறுக்கும் உயர்குணக் குன்றாகிய தாங்கள், எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்களை விடுதலையும் செய்யலாம். அது தங்களுக்கு ஒரு பெரிய காரிய மல்ல' என்றனர். 'உங்கள் விருப்பப்படியே விடுதலை செய்கிறேன். உங்களைச் சிறைபிடித்த போதே நீங்கள் செய்த குற்றத்தை மன்னித்து விட்டேன். நீங்கள் முன் போலவே இந் நாட்டில் உரிமையுடன் வாழலாம்' என்றனர் நபிகள் நாயகம். அவர்கள் கட்டவிழ்த்து விடப்பட்டனர். யாவரும் வெளியே சென்றனர். சற்றுநேரங் கழித்து எல்லாரும் திரும்பி வந்து நபிகளை வணங்கி, அவர் கொள்கையை மேற்கொண்டு, அத்தனை பேரும் முஸ்லீம் ஆயினர். காலத்தே உதவிய மதீனா மக்கள் விருப்பப் படி, நபிகள் மதீனா சென்று இறுதிவரை அங்கேயே இருந்து வந்தனர். அக்காலத்தே, அரேபியா முதலிய அம் மேல் நாடுகளில், ஆடுமாடுகள் போல மக்களை விற்றுக் கொள்ளும் அடிமை வழக்கம் இருந்து வந்தது. அபிசீனியா நாட்டைச் சேர்ந்த, சைத் என்ற எட்டாண்டுப் பருவமுள்ள நீக்கரோ வகுப்புச் சிறுவன் ஒருவனைச் சிலர் பிடித்துவந்து, நபிகள் நாயகத்தின் மனைவியா ரான கதீஜா அம்மையாரின் உடன்பிறந்தாருக்கு விற்றுவிட்டனர். அவர் அச்சிறுவனைத் தம் தங்கைக்கு அடிமையாகக் கொடுத் தனர். கதீஜா அம்மையார் தம் கணவருக்கு அச்சிறுவனைக் கொடுத்தார். நபிகள் அவனை அடிமையாகப் பெற்றதும் விடுதலை செய்து, 'நீ உன் ஊருக்குப் போகலாம்' என்றார். அவன் போக மறுத்து, அவரிடமே உரிமையுடைய வேலைக்காரனாக இருந்து வந்தான். சைத்தின் தந்தையாகிய ஆரித் என்பான் வந்து அழைத்தும் அவன் நபிகளை விட்டுத் தந்தையுடன் போக மறுத்துவிட்டான். சைத், நபிகளிடம் அவருடைய தம்பி போலவே இருந்துவந்தான். அந்த நீக்கரோ அடிமைச் சைத்துக்கு இத்தகு உரிமை கொடுத்ததோடு நபிகள் நின்றுவிடவில்லை. தம்மை மணந்து கொள்ளச் சொன்ன தமது அத்தை மகளான ஜைனப் என்பாளை, சைத்துக்கு மணஞ்செய்து வைத்தார். இப்போது சைத், நபிகள் நாயகத்தின் தம்பிதானே! நபிகள் நாயகத்தின் சீர்திருத்த நோக்கினை, மக்கள் ஒரே இனம் என்னும் ஒருமைப்பாட்டுணர்ச்சியைப் பார்த்தீர்களா? என்னே நபிகள் நாயகம் அவர்களின் பெருந்தன்மை! தங்கள் தலைவரின் கொள்கையை நடைமுறையில் கடைப்பிடித் தொழுகும் முஸ்லீம் இனமக்களின் நடக்கையை, மற்ற இன மக்களும் கடைப்பிடித் தொழுகுதல் நன்றல்லவா?  9. சங்கரர் ஒரே இனமான மக்கள் பல்வேறு சாதியினராகப் பிரிந்து வாழ்ந்து வருவது போலவே, பல்வேறு சமயத்தினராகவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் ஏற்பட்டுள்ளன போலவே, ஒவ்வொரு சமயத்திலும் பல பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதிக்கெனத் தனிப்பட்ட சில பழக்கவழக்கங்களை உடையராய் இருத்தல் போலவே, ஒவ்வொரு சமயத்தினரும் தங்கள் சமயத்துக் கெனத் தனிப்பட்ட சில கொள்கைகளை உடையராய் இருக்கின்றனர். அச் சாதிப் பழக்க வழக்கங்களும், சமயக் கொள்கைகளும் என்றும் ஒரே நிலையாய் இருப்பவை அல்ல. கால மாறுபாட்டுக்கும், மக்களின் நாகரிக மாறுபாட்டுக்கும் ஏற்ப அவை மாறுபடக் கூடியவைகளே. சென்ற நூற்றாண்டில் இருந்த சில சமூகப் பழக்க வழக்கங்கள் இன்று இல்லை. அவ்வாறே சமயக் கொள்கைகளும் மாறுபாடு அடைந்து வருகின்றன. சமூக சீர்திருத்தப் பெரியார்களும், சமய சீர்திருத்தப் பெரியார்களும் அவ்வப்போது தோன்றிச் சமூகப் பழக்க வழக்கங் களையும், சமயக் கொள்கைகளையும், சீர்திருத்தி வந்திருக் கின்றனர். குறிப்பாகச் சமய சீர்திருத்தத்தினால், பழங் கொள்கைகள் மறைந்து புதுக் கொள்கைகள் தோன்றுவ துண்டு. இவ்வாறு இந்து சமயத்தைச் சீர்திருத்திய பெரியார்களில் சங்கரர், இராமாநுசர், மாத்துவர் என்போர் குறிப்பிடத்தக்க வராவர். இவர்கள் சமயாச்சாரியர் எனப்படுவர். இவர்களைப் பற்றி நீங்கள் வரலாற்றுப் பாடத்தில் படித்திருப்பீர்கள். இம்மூவருள், சங்கரர் என்பார், மலையாள நாட்டிலுள்ள காலடி என்னும் ஊரில் பிறந்தவர்; பிராமண வகுப்பினர். இவருடைய தந்தை - சிவகுரு; தாய்- ஆரியாம்பாள். இவர் தென்மொழி. வடமொழி இரண்டிலும் மிக்க தேர்ச்சி யுடையவர். வடமொழியில் மிக்க வல்லுநர். இவர் கி.பி.788இல் பிறந்து, 820 வரை, 32 ஆண்டுகளே வாழ்ந்தனர். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர். சங்கரர் காலத்தே மலையாள நாடு, மலையாள நாடாக இல்லை. தமிழ் நாட்டுப் பிரிவுகளில் ஒன்றான சேர நாடாக, தமிழ்நாடாக இருந்தது. அதன்பின்னரே, தமிழ் திரிந்து மலையாள மொழி உண்டானது. எனவே, சங்கரர் ஒரு தமிழ்ப் பெரியார் என்பதை அறிந்து இன்புறுங்கள். சங்கரர், இளமையிலே துறவு பூண்டார். இளந்துறவியாகிய சங்கரர், இந்தியா முழுவதும் சுற்றித் தமது கொள்கையைப் பரப்பி வந்தார். இவ்விளந் துறவியின் சமயச் சீர்திருத்தக் கொள்கையை நாட்டில் பெரும்பாலான மக்கள் பின்பற்றினர். சங்கரர் பேரறிஞர் மட்டும் அல்லர்; பெரும் பேச்சாளர்; தமது கொள்கையை மக்கள் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதியும்படி அவ்வளவு எளிதாகவும், விளக்கமாகவும் எடுத்துக் கூற வல்லவர். அவர் பேச்சை மக்கள் விரும்பிக் கேட்டு, அவர் கொள்கையைப் பின்பற்றினதற்கு அப்பேச்சு வன்மையே காரண மாகும் எனலாம். எந்த ஒரு பொருளையும் விற்போர் சொல் வன்மையால் மக்கள் விரும்பி வாங்குவதையும், வாயில்லார் விற்கும் நல்லதொரு பொருளையும் மக்கள் விரும்பாமையையும் இன்றுங் காண்கிறோமல்லவா? இவ்வுண்மையை அறிந்தே சமயத் தலைவர்களெல்லாரும் பெரும் பேச்சாளர்களாகத் திகழ்ந்தனர். இதில் சங்கரர் தலைசிறந்தவர் எனலாம். சங்கரர் பேச்சை நேரில் கேட்டவர், அவர் சொல்வன்மையில் மயங்கி, அப்படியே அவர் கொள்கையைப் பின்பற்றி வந்தனர். நேரில் சென்று அவர் சொல்லைக் கேளாதவர், கேட்டவர் சொல்லக் கேட்டு, 'ஆ! நாம் கேட்காமல் போனோமே? நாளையும் பேசுகிறாரா?' என்று, அவர் பேச்சைக் கேட்க விரும்புவர். அத்தகைய சொல்லாற்றலுடையவர் சங்கரர். சங்கரர் கண்டறிந்த கொள்கை என்ன? 'உயிரும் கடவுளும் ஒன்றே. உயிர் வேறு கடவுள் வேறு என்பதில்லை. அவ்வொரு பொருளே உலகில் உள்ள எல்லாப் பொருள்களிலும் நிறைந்து, அப்பொருள்களை இயக்குகிறது. உடல்தான் அழியுமேயன்றி, உயிர் என்றும் அழியாதது; நிலையானது.' என்பதே சங்கரர் கண்ட புதிய சமயக் கொள்கையாகும். சங்கரர் கண்ட இக்கொள்கை - அத்துவிதம் எனப்படும். அத்துவிதம் - இரண்டற்றது; அதாவது கடவுள் வேறு, உயிர் வேறு என்பதில்லை. இரண்டும் ஒன்றெனல். இது, அத்துவைதம் எனவும் வழங்கும். சங்கரர் தாங்கண்ட கொள்கையை மக்களிடைப் பரப்பு வதற்காக, சிருங்கேரி, துவாரகை, பூரி, காஞ்சிபுரம், கும்பகோணம் ஆகிய இடங்களில் மடங்கள் அமைத்து, தம் மாணவர்களை அம்மடங்களின் தலைவர்களாக ஏற்படுத்தினார். அவை இன்றும் சங்கர மடம் என்னும் பெயருடன் விளங்கி வருகின்றன. இவரது மாணவர் இவரை, உலக குரு என்றழைத்தனர். இவர் வடமொழியில் பல நூல்கள் எழுதியுள்ளார். வேதாந்த சூத்திரம், பகவத்கீதை முதலிய வடமொழி நூல்களுக்கு, தாம் கண்ட அத்துவிதக் கொள்கைப்படி உரை எழுதியுள்ளார். சங்கரர்க்கு மாணாக்கர் பலருண்டு. இவர் தம் மாணாக்கர் களோடு நாடெங்கும் சுற்றித் தம் கொள்கையைப் பரப்பி வந்தார். ஒரு நாள் சங்கரர் தம் மாணாக்கருடன் ஓரூருக்குப் போனார். மக்கள் திரளாகக் கூடினர். சங்கரர் அக்கூட்டத்தில், 'கடவுளும் உயிரும் (பரமாத்துமா, சீவாத்துமா) ஒன்றே. ஒரு பொருளே எங்கும் நிறைந்திருக்கிறது. இதோ ஓர் எடுத்துக்காட்டு; நூறு கிண்ணங்களில் தண்ணீரை ஊற்றி வைத்தால், அந்நூறு கிண்ணங்களிலும் வானவெளியி லுள்ள கதிரவன் தெரிகிறான். தண்ணீரைக் கீழே ஊற்றிவிட்டால், அக்கிண்ணங்களில் கதிரவன் தெரிவதில்லை. கதிரவன் ஒன்றே. ஒரே கதிரவன் வானத்திலும் தண்ணீரிலும் தெரிவது போலவே, ஒரே பொருள் எல்லா உடல்களிலும் நிறைந்திருக்கிறது. கதிரவன் ஒளி தெரியும் கிண்ணங்கள் போன்றவரே நாம்' என்று, தமது கொள்கையை விளக்கிப் பேசினார். 'நானே கடவுள்' என்பது, சங்கரர் கொள்கைச் சுருக்கம். கடவுள் வேறு, நான் வேறு அல்ல என்பது. ஒரு நாடகக் கொட்டகையில் நாடகம் நடக்கிறது. நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் நல்ல நடிகர்கள். திறமையாக நடித்தனர். நாடகம் முடிந்தது. நாடகம் பார்த்தோர் வீட்டுக்குச் செல்கின்றனர். அவர்கள் வழியில் சும்மா வாயை மூடிக் கொண்டு செல்லவில்லை. அந்நாடகத்தின் கதையைப் பற்றி, கதை அமைப்பைப் பற்றி, நடிகரைப் பற்றி, நடிப்புத் திறனைப் பற்றி ஒருவருக் கொருவர் காரசாரமாக உரையாடிக் கொண்டு சென்றனர். இதுவே நாடகம் பார்ப்பதன் பயனும். இங்ஙனமே, சங்கரர் பேசி முடித்ததும், சங்கரர் பேச்சுத் திறனைப் பற்றி, அவர்தம் கொள்கையைப் பற்றி ஒருவருக் கொருவர் சொற்போரிட்டுக் கொண்டு சென்றனர். இதுவே ஒருவர் பேச்சைக் கேட்பதன் பயனும். மறுநாள் சங்கரர், அவ்வூரிலிருந்து தம் மாணாக்கருடன் வேறூருக்குச் சென்றனர். செல்லும் வழியில் ஒரு தாழ்த்தப் பட்டோன் எதிரில் வந்தான். பொதுவாக, ஒரு உயர்குலத் தோன் எதிரில் ஒரு தாழ்குலத்தோன் - தாழ்த்தப்பட்டவன் - வர நேர்ந்தால் அவன், யானையைக் கண்டு அஞ்சி ஓடுபவன் போல் விலகிச் செல்லுதல் வழக்கம். ஆனால், சங்கரர் எதிரில் வந்த இவன் விலகிச் செல்லவில்லை. சங்கரர், அவனை விலகிச் செல்லும்படி சொன்னார். அவன் முதல் நாள் சங்கரர் பேச்சைக் கேட்டவன்; அவர் பேச்சு வன்மையில் மயங்கினவன்; அவர் பேச்சுக்குத் தன்னைப் பறி கொடுத்தவனென்றே சொல்லலாம். நேற்றுச் சங்கரர் பேசிய தற்கும், இன்று அவர் கூறியதற்கும் முன்னுக்குப் பின் முரணா யிருத்தலைக் கண்டு அவன் திடுக்கிட்டான். உடனே அப்பாட்டாளி, 'பெரியீர்! உயர் குலத்தோராகிய தங்களிடத்தில் உள்ள உயிரன்றோ தாழ்குலத்தோனாகிய என்னிடத்திலும் விளங்குகிறது? உங்கள் உயிர் வேறு, என் உயிர் வேறா? 'உயிரும் கடவுளும் ஒன்றே. அது கதிரவன் ஒளிபோல் எங்கும் நிறைந்திருக்கிறது. நீங்களும் நானும் வேறல்ல. உடல்தான் நமக்கு வெவ்வேறு; உயிரொன்றே' என்று, நேற்றுத் தாங்களே சொல்லி விட்டு, இன்று என்னை வேறாகவும், தாழ்ந்தவனாகவும் கருதி விலகும்படி சொல்வது முறையா? தங்கள் பேச்சை நான் உண்மை என்றல்லவோ நம்பினேன்? இப் பெரியாரால் தீண்டாமை என்னும் கொடும்புலி இனி நம் நாட்டைவிட்டே தொலைந்துவிடும். இனி நமது நிலை உயர்ந்து நாமும் மக்களாக வாழலாம் என்று எண்ணி யெண்ணி மகிழ்ந் தேனே. அவ்வெண்ணத்தில் மண்ணைப் போட்டு விட்டீர்களே?' என்று, கலக்கத்துடன் கூறினான். அது கேட்ட சங்கரர் திடுக்கிட்டார். அவர்க்கு மெய்மயிர் சிலிர்த்தது, மேலெல்லாம் வியர்த்தது; உள்ளம் கலங்கிற்று, உடல் நடுங்கிற்று. சற்று நேரம் அவர் தன்னை மறந்து அப்படியே நின்றார். அப் பழங்குடி மகன், அவரைப் பார்த்தபடியே மரப் பாவைபோல அசைவற்று அப்படியே நின்றான். சங்கரரைப் பின் தொடர்ந்து சென்ற அம் மாணாக்கர்கள், அவ்விரு வரையும் பார்த்தபடியே கற்சிலைகள் போலக் காட்சியளித்தனர். தன்னை மறந்து நின்ற சங்கரர், பின்னர் மெய்யுணர் வுற்று, 'அத்துவிதக் கலையின் உண்மைப் பொருளை அடியேனுக் கறிவுறுத்திய அருட்குரு நாதா! இன்றுதான் எனக்கு உண்மை யறிவு வந்தது. எனது அறியாமையை மன்னிக்கவும். எனக்கு உண்மை யறிவு புகட்டிய அண்ணலே ! இனி உய்ந்தேன்' என, அப்பாட்டாளி மகனின் காலில் விழுந்து வணங்கினார். அப்பாட்டாளி அப்படியே அவரை வாரி யெடுத்தனன். அது கண்ட மாணாக்கர்கள் பெரு வியப்புற்றனர். தம் குருநாதரின் உண்மையறிவையும், பெருந்தன்மையையும் கண்டு அகமிக மகிழ்ந்தனர். இக் கண்ணைவிட்டகலா ஒன்றே குலக் காட்சியைக் கண்முன் கண்டு, அக்காட்சியை உங்கள் கண்ணைவிட்ட கலாது செய்யுங்கள். அக்காட்சியின்படி ஒழுகுங்கள். தீண்டாமை என்னும் கொடும்புலி அஞ்சி ஓடுவதைக் கண்டு களியுங்கள்! '' சாதிகள் இல்லையடி பாப்பா!-- குலத் தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம்! '' என்ற, பாரதியார் பாடலைப் பாடி மகிழுங்கள்!  10 . இராமாநுசர் கொசுக் கடியினால் குளிர்காய்ச்சல் வருகிறது. அக்காய்ச்சல் மிகவும் கொடியது . பொறுக்க முடியாத குளிர்! அத்தகைய காய்ச்சல்! குளிர் காய்ச்சலால் உடல் நலம் குன்றுகிறது. குளிர்காய்ச்சல் வராமல் செய்ய வேண்டுமானால், வீட்டில் கொசு இல்லாமல் செய்யவேண்டும். கொசு இல்லாமல் இருந்தால் குளிர் காய்ச்சல் வராது. வீட்டில் கொசு இல்லாமல் செய்வது எப்படி? தேங்கி நிற்கும் நீரில் கொசு உண்டாகிறது. எனவே, கொசு இல்லாமல் செய்ய, கொசுவை ஒழிக்க, தண்ணீர் தேங்காமல் செய்கின்றனர்; கிணற்றுத் தண்ணீரில் மருந்து போடுகின்றனர்; சலதாரையை அடிக்கடி தேய்த்துக் கழுவித் துப்புரவாக இருக்கச் செய்கின்றனர்; இரவில் துளசியைத் தீயில் போட்டுப் புகைக் கின்றனர் . கொசு கடிக்காமல் இருக்கக் கொசுவலை கட்டிக் கொள்கின்றனர். அக் கொசுவை ஒழிக்க, இவ்வாறு பல வகையைக் கையாளுகின்றனர். இங்ஙனமே, குல வேற்றுமையை ஒழிக்க, ஒவ்வொரு பெரியாரும் ஒவ்வொரு வழியினைக் கையாண்டு வந்தனர். சமூகச் சீர்திருத்த வழியிலும், சமயச் சீர்திருத்த வழியிலும், அரசியல் சீர்திருத்த வழியிலும், இன்னும் பிற வழிகளிலும் ஒவ்வொரு காலத்தே ஒவ்வொரு பெரியார் தோன்றி அரும்பாடு பட்டு வந்தனர். அவ்வாறு முயன்றவர்களில் இராமாநுசரும் ஒருவரா வார். இவர், செங்கற்பட்டு மாவட்டத்துக் காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பெரும்பூதூர் என்னும் ஊரில் பிறந்தவர்; பிராமண குலத்தினர்; தந்தை - கேசவாச்சாரியார். தாய் - காந்திமதி அம்மையார். இவர், கி.பி.1017இல் பிறந்தார்; நீண்டகாலம் வாழ்ந்து வந்தார். இவர் சிறந்த கல்வியறி வுடையவர்; வைணவ சமயத்தைச் சார்ந்தவர். வைணவ சமயத்தை நன்கு வளர்த்த பெருமை இராமாநுசரையே சாரும். பெரிய நம்பி என்பவர், இவருடைய அருளாசிரியர் ஆவர். வேதாந்த சூத்திரத்திற்கும் பகவத் கீதைக்கும் அத்துவிதக் கொள்கைப்படி சங்கரர் உரை யெழுதி உள்ளார் என்பதை முன்பு கண்டோம். இராமாநுசர், இவ்விரு நூல்களுக்கும் வைணவ சமயக் கொள்கைப்படி உரை எழுதியுள்ளார். அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்னும் சைவ சமயப் பெரியார்கள், தேவாரப் பாடல்கள் பாடிச் சைவ சமயத்தை வளர்த்து வந்தமை போல, நம்மாழ்வார், பெரியாழ்வார் முதலிய வைணவப் பெரி யார்கள் பன்னிருவர், செந்தமிழ்ப் பாடல்கள் பாடி வைணவ சமயத்தை வளர்த்து வந்தார்கள். அப்பன்னிரு ஆழ்வார்களும் பாடிய பாடல்கள் நாலாயிரம் ஆகையால், அப்பாடல்களையுடைய நூல் நாலாயிரப் பிரபந்தம் எனப் பட்டது. இராமாநுசர், வேதாந்த சூத்திரம், பகவத் கீதை ஆகிய வடமொழி நூல்கட்கு உரை எழுதியதோடு, நாலாயிரப் பிரபந்தத் திற்கும் உரை எழுதியுள்ளார். அதனால், வைணவர்கள் இவரை, உரைகாரர் எனப் பெருமையாக அழைத்து வருவதோடு, அப்பெருந் தொண்டுக்காக இவரை, உடையவர் என உரிமையுடனும் அழைத்து வருகின்றனர். இவர், திருவரங்கம் முதலிய இடங்களில் மடங்கள் அமைத்து, அங்கங்கு தம் மாணவர்களை ஏற்படுத்தி, வைணவ சமயத்தை மக்களிடைப் பரப்பி வந்தார். இவர் பெரும்பாலும் திருவரங்க மடத்தில் இருந்து வந்தார். இவர் அருளுருவானவர்; ஏழையெளியவர் படும் இன்னலைத் தமதெனக் கொண்டு உளங்கசிந்துருகுவார். அதனால் இவர், மக்கட் கொழுந்து எனச் சிறப்பிக்கப் பட்டனர். ஏழைப் பங்காளராகிய இவர், தீண்டாமைக் கொடுமையைப் போக்கப் புதிய வழி யொன்றை மேற்கொண்டார். என்ன அப்புது வழி? இவர் வைணவ சமயத்தினர் அல்லவா? வைணவ சமயத்தின் திருக்குறி யாகிய நாமத்தைக் கொண்டு தீண்டாமையைப் போக்க முடிவு செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நாமந் தரித்து அவர்களை வைணவராக்கினார். உயர்குல வைணவருடன் அவர்களைப் புழங்கும்படி செய்தார். தாழ்த்தப்பட்டோரைத் திருக்குலத்தார் எனப் பெருமையாக அழைத்தார். இவரால் தாழ்வகன்று உயர் வடைந்த தமிழர் பல்லாயிரவராவர். இவருக்குத் திருக்குல மாணவர்களும் சிலர் இருந்தனர். இராமாநுசர் திருவரங்க மடத்திலிருந்து நாடோறும் காவிரிக்கு நீராடப் போவார். போகும்போது கூரத்தாழ்வார், முதலியாண்டார் என்னும் இரு பிராமண மாணவர் தோள்களின் மீது பட்டாடையை விரித்து, அதன் மேல் தமது கையை வைத்துச் சாய்ந்து கொண்டு போவார். நீராடித் தூயராய் மடத்திற்கு வரும்போது, இரு திருக்குல மாணவர் தோள்களின் மேல் பட்டாடையின்றிச் சும்மா கையை வைத்துச் சாய்ந்து கொண்டு வருவார். ஏன் இப்படிச் செய்கிறார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ள எவருக்கும் துணிவு பிறக்கவில்லை. காரணமோ தெரியவில்லை. இருசாரார் தோள்மேலும் ஒரே வகையாகச் சாய்ந்து கொண்டு போனாலும் தவறில்லை. உயர் குலத் தோராகிய பிராமண மாணவர் தோள் மேல் பட்டாடையை விரித்து அதன் மேல் கையை வைப்பது; இழிகுலத்தோராகிய தாழ்த்தப்பட்ட மாணவர் தோள்மேல் ஆடையின்றிக் கையை வைப்பது. இது சரியான முறையா? நேருக்கு மாறாகவன்றோ இருக்கிறது? மேலும், நீராடப் போகும்போது பிராமண மாணவர் தோள்மீது சாய்ந்து கொண்டு போவதும், நீராடித் தூயராய் வரும்போது தீண்டாத மாணவர் தோள் மீது சாய்ந்து கொண்டு வருவதும் புதுமுறையாக வன்றோ இருக்கிறது? ஆம், புது முறைதான். வழக்கத்துக்கு மாறாக நடப்பது புதிதுதானே? இதற்கு ஏதாவது காரணம் இருக்கலாம். காரணம் இல்லாமலா அறிவறிந்த அப்பெரியார் அப்படிச் செய்வர்? நமக்கு அதன் காரணம் இன்ன வென்று புரியவில்லை. அதனால் அது நமக்குப் புதுமையாகத் தோன்றுகிறது. காரணம் இன்ன தெனத் தெரிந்தால், 'ஆ! இதற்காகவா இப்படிச் செய்தனர்? என்னே இவரது பெருந்தன்மை!' என்று வியப்புறுவோம். இவர் இவ்வாறு, காவிரிக்குப் போவதையும் வருவதையும் கண்ட பொது மக்கள், நம்மைப் போலவே காரணம் விளங்காமல் திகைத்தனர். ஒரு உயர் குலப் பெரியார், குளித்துக் கொண்டு தங்கள் குலத்தவர் தோள் மீது கையை வைத்துக் கொண்டு செல்வது கண்ட அத்திருக்குலத்தோர் கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லையும் உண்டோ? அவர்கள் நம் பெரியாரை வாயார வாழ்த்தினர். ஆனால், உயர் குலத்தாரோ உள்ளம் வெதும்பினர். 'என்னே இவர் இப்படிச் செய்கின்றனர்! பிராமணராக இருந்தும், மேலும் ஒரு பெரிய மடத் தலைவராக இருந்தும், குளித்துக் கொண்டு தீண்டத்தகாத அவ் விழி குலத்தார் தோள்மீது கையை வைத்துக் கொண்டு போகின்றாரே? அவர்களைத் தொட்டால் நாமெல் லாரும் குளித்துக் கொள்கிறோம். இவர் குளித்துக் கொண்டு அவர்களைத் தொடுகிறார். இவருக்குப் பித்துப் பிடித்துக் கொண்டது போல் இருக்கிறது. இல்லை, காலம் இப்படிக் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போய்விட்டது; என்ன செய்வது!' என்று பேசிக் கொண்டனர். இவ்வாறு வழக்கமாய் நடந்து வருவது கண்டு மனம் புழுங்கிய பிராமண மாணவர்கள், பொறுக்க முடியாமல் ஒரு நாள் முணுமுணுத்தனர். அது கண்ட உடையவர், "தோழர்களே! சாதிச்செருக்கு, கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு என்னும் இம்மூன்றும் ஒருவனை நல்லது செய்து நலமடைய முடியாமல் துன்புறுத்தும் தீராப் பெருநோய் களாகும். இம் முப்பெரும்பிணிகளைத் தீர்க்கும் மருத்துவர் இத்திருக்குலச் செல்வர்களே யாவர். சாதிச்செருக்குத் தீண்டத் தகாதது. நாம் உயர்சாதி என்னும் அச்சாதிச்செருக்கும், கல்விச் செருக்கும் கொண்டுள்ள உங்களைத் தொடுவதனால் உண்டாகும் தீட்டு, நீராடுவதனால் நீங்காது. சாதிச்செருக்கு, கல்விச் செருக்கு, செல்வச்செருக்கு ஆகிய மூவகைச் செருக்கும் இன்றிப் புனிதர்களாய் விளங்கும் இத்திருக் குலத் தோழர்களைத் தீண்டுவதனாலேயே அத்தீட்டு நீங்குகிறது. அதற்காகவே நான் இவ்வாறு செய்து வருகிறேன்"என்றார். உடையவர் அறிவுரையால் உண்மையுணர்வுற்ற கூரத்தாழ் வார் முதலிய அப்பிராமண மாணவர்கள் அத்திருக்குலத் தோழர் களைத் தொழுதெழுந்து, அவர்களை மார்புறத் தழுவிக் கொண்டனர். 'உடையவரே நம் தெய்வம்' என்று வாயாரப் பாடிக் கொண்டும், 'உரைகாரர்' எனப் பெருமை பாராட்டிக் கொண்டும், அவர் உரையைப் படித்துக் கொண்டும், அவர் நடந்து காட்டிய வழியைப் பின்பற்றாமல் இருப்பது முறையாகுமா? திருமாலுக் குரியவை எனக் கொண்டு, ஒரே தன்மையான சில நாள், மாதங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தண்ணீர் ஊற்றுவதுங் கூடத் தீட்டு என்பது, உடையவர் கொள்கையைப் புறக்கணிப்ப தாகுமன்றோ? நன்கு எண்ணிப் பாருங்கள்.  11. இராமகிருட்டிணர் இன்று நீங்கள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறீர்கள். இதற்குமுன் நீங்கள் தொடக்கப் பள்ளியில் படித்தீர்கள். இப்பள்ளிப் படிப்பு முடிந்ததும், உயர் படிப்புப்படிக்க உங்களிற் சிலர் கல்லூரிக்குச் செல்வீர்கள். ஆம், கட்டாயம் செல்லுங்கள். சென்று படித்துப் பட்டம் பெறுங்கள். நம் நாட்டின் நல்வாழ்வுக்குக் கல்லூரிப் பட்டம் பெற்ற நல்லறிவாளர்கள் மிகவுந் தேவை. நம் நாட்டுப் பள்ளிகளும் கல்லூரிகளும் யாரால் நடத்தப் படுகின்றன? பல அரசினரால் நடத்தப்படுகின்றன; ஒரு சில நாட்டு நலத்தில் அக்கறை கொண்ட பெருஞ் செல்வர்களால் நடத்தப்படுகின்றன. ஒரு சில கல்வித் தொண்டைப் பயனாகக் கொண்ட தனியார்களால் நடத்தப் படுகின்றன. ஒருசில கிறித்துவ மடத்தினரால் நடத்தப்படு கின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய வெளிநாடுகளில் உள்ள கிறித்துவ மடத்தினர், இந்நாட்டில் பள்ளிகளும் கல்லூரிகளும் நடத்திக் கல்வித் தொண்டு செய்து வருவது போலவே, இந்நாட்டு இராமகிருஷ்ண மடத்தினரும் பள்ளிகளும் கல்லூரிகளும் நடத்திக் கல்வித் தொண்டு செய்து வருகின்றனர். இம் மடத்தினரால் நடத்தப்படும் பள்ளி மாணவர்கள், பழைய குருகுலமுறைப் பள்ளி மாணவர்களைப் போல, பெரும் பாலும் பள்ளி விடுதியில் தங்கியிருந்தே படித்து வருகின்றனர். இம்மடம், இராமகிருஷ்ணர் என்னும் பெரியார் பெயரினால் ஏற்படுத்தப்பட்டதாகும். அப்பெரியார் வரலாறு யாது? இந்திய மாநிலங்களில் வங்காள மாநிலம் ஒன்று. அது கங்கை வெளியில், வங்கக் கடலைச் சார்ந்துள்ளது. அது இரண் டாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி பாகித்தானைச் சேர்ந்து விட்டது. மற்றொரு பகுதியாகிய மேற்கு வங்காளம், இந்திய மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. 1947க்கு முன், அது ஒரே மாநிலமாகவே இருந்து வந்தது. வங்காள மாநிலத்து மாவட்டங்களுள் ஊக்ளி மாவட்டம் ஒன்று. அம் மாவட்டத்தில் உள்ளது காமர்ப்புகூர் என்னும் ஊர். கல்கத்தாவுக்கு 128 கி.மீ. மேற்கில் உள்ளது இவ்வூர். வங்க மாநிலத்திற்கே, ஏன்? இந்தியாவிற்கே பெருமையைத் தேடித் தந்தது அவ்வூர். அவ்வூரில், குதிராம் சட்டர்ஜி என்ற பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் மனைவியார் சந்திராமணி தேவி என்பார். அப்பெற்றோரின் நாலாவது பிள்ளையே பகவான் இராம கிருஷ்ணர் என்பவர். இவர், 18.2.1836இல் பிறந்தார். இவரது இயற்பெயர் கதாதரன் என்பது. கதாதரன் ஒரு திண்ணைப் பள்ளியில் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார். அவ்வளவுதான் இவர் பள்ளிப் படிப்பு. இளமையிலிருந்தே இவர் இயற்கையறிவை வளர்த்து வந்தார். அவ்வியற்கையறிவு வளர்ச்சியே இவரைப் பெரிய வராக்கியது; 'பகவான் இராமகிருஷ்ணர்' என்ற பட்டப் பெயருக் குரியவராக்கியது; ஒரு தனிப்பட்ட கொள்கைக்கே தலைவ ராக்கியது. இருபத்தைந் தாண்டுப் பருவமுள்ள இராமகிருஷ்ணருக்கு, சாரதாமணி என்னும் ஐந்தாண்டுச் சிறுமியை வாழ்க்கைத் துணைவியாக்கினர். சாரதாமணி அம்மையார் பின்னர், கண வரையே குருநாதராகக் கொண்டனர். சாரதா உயர்நிலைப் பள்ளி, சாரதா கல்லூரி என்பவை, இவ்வம்மையார் பெயரால் நடப்ப வையே யாகும். கல்கத்தாவில், இராசமணி தேவி என்னும் செம் படவகுலச் செல்வி யொருத்தி இருந்தார். அவ்வம்மையார், பல நூறாயிரம் செலவு செய்து, 1853இல், கல்கத்தாவுக்கு 6கி.மீ. வடக்கில் கங்கைக் கரையில், ஒரு காளி கோயில் கட்டினார். இராம கிருஷ்ணர் அக்காளி கோயில் பூசனை செய்யும் பணியிலமர்ந்தார். ஆனால், இராமகிருஷ்ணர் சில நாட்களில் அவ்விறைப் பணி செய்வதை விட்டுவிட்டு, அக்காளி கோயிலுக் கருகில் இருந்த ஆல மரத்துக்குப் பக்கத்தில் இருந்த பஞ்சவடி என்னும் இடத்தில் அமர்ந்து, காளியின் அருளை வேண்டித் தவம் செய்து வந்தார். இரவு பகல் எந்நேரமும் உட்கார்ந்தபடியே இருப்பார். இங்ஙனம் இருக்கையில், பைரவி என்னும் பெண்துறவி ஒருவர் அங்கு வந்தார். அவர் சில ஆண்டுகள் அங்கு தங்கி, இராமகிருஷ்ணருக்கு யோக முறைகளையும், பல சமயக் கருத்துக் களையும் அறிவுறுத்திச் சென்றார். பின்னர், தோதாபுரி என்னும் துறவி அங்கு வந்தார். அவர், மேலும் சிறந்த யோக முறைகளை உணர்த்தி, இராம கிருஷ்ணர் என்ற சமயப் பெயர் சூட்டிச் சென்றார். அதிலிருந்து இவருக்கு இராமகிருஷ்ணர் என்ற பெயர் வழங்கலானது. இராமகிருஷ்ணர் அதன் பின்னர்த் தொடர்ந்து முயன்று மெய்யறிவு கைவரப் பெற்றார். இவருக்கு விவேகானந்தர் முதலிய மாணாக்கர்கள் பலர் ஏற்பட்டனர். இராமகிருஷ்ணர் ஆராய்ந்து கண்டறிந்த உயர் நெறிகளை, விவேகானந்தர் உலகெங்கும் பரப்பினார். பகவான் இராமகிருஷ்ணர் இயல்பாகவே அருளுள்ளம் வாய்க்கப் பெற்றவர்; ஏழையெளியவர்களிடம் அளவு கடந்த இரக்கம் உடையவர்; பிறர் துயர் கண்டு பொறாத உள்ள முடையவர். 'ஏழைகளுக்குத் தொண்டு செய்வதே இறைபணி' என்பதே, இவர் கண்டறிந்த முடிவான கொள்கையாகும். இராமகிருஷ்ணருக்கு மாணவர் பலர் உண்டல்லவா? அவர்களில், அடிகளோடு உடனிருந்து வந்த மாணவர்களே யன்றி, வெளி மாணவர்களும் பலர் இருந்து வந்தனர். அவருள் ஏழை முதல் பெருஞ்செல்வர் ஈறாகப் பலதரப்பட்டவர் இருந்தனர். அவர்களுள் மதுரநாதர் என்பவர் ஒருவர். அவர் இராசமணி தேவியின் மருகர்; பெரும் பணக்காரர்; அடிகளிடம் அளவு கடந்த அன்புடையவர். மதுரநாதர் ஒரு நாள் காசியாத்திரை போய்வர விரும் பினார்; அடிகளையும் அழைத்தார். அடிகளும் மதுர நாதர் விருப்பத்திற் கிணங்கினார். காசிக்குச் செல்லும் வழியில் அவர்கள் ஓரூரில் தங்கினார்கள். அடிகள் தனியாக அவ்வூர்ச் சேரிக்குச் சென்றார். அச்சேரிப் பாட்டாளி மக்கள் உணவும் உடையும் இன்றி வருந்துவதைக் கண்டார். அடிகளின் மனம் வருந்தியது. மதுரநாதரிடம் வந்து, 'அவ்வேழைகளுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் கொடுக்க வேண்டும். அவர்கள் உண்டு உடுத்துக் களிப்பதைக் கண்டு களிக்க வேண்டும்' என்றார். 'காசிக்குப் போய் வருவதற்கு வேண்டிய அளவு பணந்தான் கொண்டு வந்திருக்கிறேன். அதில் இங்கு செலவழித்து விட்டால் காசிக்குப் போய் வருவதெப்படி?' என்றார் மதுரநாதர். 'இவர்களுக்குச் சோறும் துணியும் கொடுத்தால்தான் நான் காசிக்கு வருவேன். இல்லையேல், நான் இவர்களுடனே இருந்து விடுகிறேன்' என்றார் அடிகள். அது கேட்ட மதுரநாதர், கல்கத்தாவிலிருந்து வேண்டிய அளவு அரிசியும் துணியும் வரவழைத்து அப் பாட்டாளி மக்களுக்கு விருந்திட்டுத் துணியும் கொடுத்தார். அவ்வெளியரோடு தாமும் மகிழ்ந்து காசிக்குப் புறப்பட்டார் அடிகள். என்னே அடிகளின் அருளுள்ளம்! 'பெரியோர்க் கழகு பிறர் நலம் பேணுதல்' என்பதற்கு, எடுத்துக்காட்டாக விளங்கும் அடிகளின் பெருங் குணத்தை என்னென்பது! பகவான் இராமகிருஷ்ணர் ஒரு நாள் இரவு, தம் மாணாக்கர் எல்லாரும் தூங்கின பிறகு, ஒருவருக்கும் தெரியாமல் எழுந்து, பக்கத்தில் உள்ள ஒரு சேரிக்குச் சென்றார். அச்சேரியில் உள்ளோர் யாரும் அறியாமல் அங்கு கிடந்த குப்பை கூளங்களையெல்லாம் வாரி எறிந்து அச்சேரித் தெருவைத் துப்புரவு செய்துவிட்டு வந்து ஒருவரும் அறியாமல் படுத்துக் கொண்டார். காலையில் எழுந்து பார்த்த அப் பாட்டாளி மக்கள் திகைப்புற்றனர். 'இது யார் செய்த வேலை? நாம் தாம் உயர்குடி மக்கள் தெருவைக் கூட்டித் துப்புரவு செய்கிறோம். தாழ்த்தப் பட்டோராகிய நமது தெருவைக் கூட்டினவர் யார்? அதுவும், ஒருவருக்கும் தெரியாமல் இரவில் வந்து, யார் இவ்வளவு அக்கறை யோடு நம்ம தெருவைத் துப்புரவு செய்பவர்? குப்பையை வேண்டுமானால் யாராவது காணாமல் வாரிக் கொண்டு போ வார்கள். கூட்டிய குப்பையும் இங்கேயே கிடக்கிறதே! இது என்ன புதுமையாக இருக்கிறது?' என்று அச் சேரியே திகைப் புற்றது. இன்றிரவு விழித்திருந்து, களவுங்கையுமாக அக் கள்வனைப் பிடிக்கலாமென்று முடிவு செய்தனர். மறுநாளும் அடிகள் அவ்வாறே அச் சேரிக்குச் சென்று, தெருவைத் துப்புரவு செய்துகொண்டிருந்தார். ஒருவன் எழுந்து வந்து பார்த்து, 'யாரது?' என்றான். 'யாருமில்லை, நான்தான். இங்கே வாரும்' என்றார் அடிகள். அவன் பக்கத்தில் வந்து பார்த்ததும், 'சாமி! சாமி' எனப் பித்துப் பிடித்தவன் போல் கத்தினான். எல்லாரும் எழுந்து வந்து பார்த்து, அடிகளை வணங்கி, 'ஐயோ! இதென்ன கொடுமை!' இது யார் செய்கிற வேலை? தாங்கள் இந்நள்ளிரவில் இங்கு வந்து இத்தொழில் செய்தல் தகுமோ? இது முறையோ?' என்று, வருத்தத்துடன் கூறினர். 'தோழர்களே! உயர்வு தாழ்வு என்னும் வேற்றுமை உணர்வும், உயர்சாதி என்னும் செருக்கும் ஒழிய, இத்தொழிலைச் செய்வதே ஏற்றதென முடிவு செய்தேன். அவ்வாறே செய்தேன். ஒவ்வொரு நாளும் இவ்வாறே வந்து உங்கள் தெருவைத் துப்புரவு செய்யப் போகிறேன். நீங்கள் இதை ஊரறியச் செய்யக்கூடாது' என்றார் அடிகள். அப்பாட்டாளி மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னமோ தங்கள் விருப்பம் என்றனர். அடிகள் நாடோறும் அத் திருத்தொண்டைத் தொடர்ந்து செய்து வந்தனர். 'ஊர் வாயை மூட உலைமூடி உண்டா?' சில நாட்களில் அது, மாணாக்கர்க்குத் தெரிந்துவிட்டது. அது கேட்டுத் திடுக் கிட்ட அவர்கள் அடிகளை வணங்கி, 'குருநாதா! தாங்கள் நள்ளிரவில் தீண்டாதார் சேரிக்குச் சென்று, அச் சேரித் தெருவைத் துப்புரவு செய்து வருவதாகக் கேள்விப் பட்டோம். என்ன இருக்க என்ன செய்தீர்கள்? தாழ்ந்த பிறப்பினரான அச் சண்டாளர்கள் இருக்கும் இடத்தை மிதிப்பதே பாவம். அப்படியிருக்க, அவர்கள் சேரியைத் துப்புரவு செய்வது பாவத்தினும் கொடிய பாவ மல்லவா? இது, தங்கள் ஒப்புயர் வற்ற புனிதத் தன்மைக்கும் பெருமைக்கும் ஏற்றதாகுமா?' என்று வருந்தினர். அது கேட்ட குருநாதர், 'ஆ! இதுவோ உங்கள் அறிவின் பெருமை! அப்பாட்டாளிகளா சண்டாளர்கள்? ஒரு தொழிலும் செய்யாத நாமல்லவோ சண்டாளர்கள்? இரவு பகலாக ஓயாமல் உழைத்து உலகை வாழ்விக்கும் உயர் மக்களல்லவோ அவர்கள்? உழைப்பின்றேல் உலக வாழ்வேது? உழைப்பன்றோ உலகத்தின் செல்வம்? கடவுள் உருவங்களாகிய அப் பாட்டாளிகளை, செருக் கென்பது இன்னதென்றே அறியாத அவ்வருட் செல்வர்களை, தனக்கென வாழா அப்பிறர்க்குரியாளரை, குடிக்கக் கஞ்சியும், கட்டக் கந்தையும், இருக்கக் குடிசையும் மட்டுமா? குடிக்கத் தண்ணீருங்கூடச் சரியானபடி கிடைக்காதபடி அடக்கியாளும் நாமன்றோ பரம சண்டாளர்கள்? உயர் சாதி என்னும் செருக்கன்றோ மக்களைத் தூய்மை யின்மையினும் தூய்மையில்லவ ராக்குகின்றது? கடவுட் படைப்புக் குட்பட்ட ஒரு சிலரை, அப்படைப்பின் புறம்பாக எண்ணி ஈவிரக்க மின்றி அடக்கியாண்டு வரும் சண்டாளர்கள் வாழும் இவ்வுலகில் பிறந்த குற்றத்தைப் போக்கிக் கொள்ள, தாழ்த்தப் பட்ட மக்களாகிய அவர்கள் தெருவைத் துப்புரவு செய்வதைவிட வேறு வழியொன்றுமே இல்லை' என, மனவுருக்கத்தோடு கூறினார். உண்மை யுணர்ந்த மாணாக்கர்கள் தங்கள் அறியாமையை மன்னித் தருளும்படி வேண்டிக்கொண்டனர். என்னே அடிகளின் உண்மை யுணர்வின் திண்மை! உண்மை யென்று கண்டதை அப்படியே செயல்படச் செய்வது தானே அறிவின் பயன்? உண்மை என்று கண்டதைத் தான் செய்ய அஞ்சுவது அறிவுடைமை ஆகாது. உண்மையென்று கண்டதை அப்படியே செயல்படச் செய்த அடிகளின் அறிவுடைமையை என்னென்பது! 'மெய்யறிவு மெய்யறிவு' என்பது என்ன? என்ற கேள்விக்குச் சரியான விடை இப்போது கிடைத்துவிட்ட தல்லவா? மக்கள் ஒரே இனம். மக்களுக்குள் ஏற்றத் தாழ்வான சாதி வேறுபாடு, பிறப்பிலேயே உயர்ந்த பிறப்பினர், தாழ்ந்த பிறப்பினர் என்ற பிறவி வேற்றுமை இல்லை என்று கண்ட இதுதான் மெய்யறிவு! இதுதான் உண்மையறிவு! கண்ட உண்மையைச் செயல்படச் செய்த அடிகளே மெய்யறிஞர்! அடிகள் அப் பாட்டாளி மக்களிடமும், தம் மாணாக் கரிடமும் கூறிய அறவுரையை இன்னொரு முறை திருப்பிப் படித்துப் பாருங்கள். படித்துப் பார்த்து 'ஒன்றே குலம்' என்னும் உண்மையை உணருங்கள். 'செயற்கரிய செய்வார் பெரியர்' என்ற வள்ளுவர் குறளுக்கு அடிகள் அப்படியே எடுத்துக்காட்டாவரன்றோ? இனி உங்களுக்கு, அக்குறளுக்கு உரை விளக்கம் தேவையே இல்லை யல்லவா? "தீண்டாத சாதியார் கட்டாயத்தின் கீழ்ச் செய்யும் தோட்டி வேலையை, நாம் மனமாரச் செய்யும் அறிவையும் ஆற்றலையும் கடவுள் நமக்கு அருள்வாராக"- காந்தியடிகள்.  12. விவேகானந்தர் காந்தியடிகளை நேரில் கண்டு களியாதவர்க்கும், அடிகளின் திருவுருவம், அவரை நேரில் கண்டு களிப்பதுபோல, அந்நேரில் காணார் கண்முன் காட்சியளிக்கும். அத்திருவுருவத்தின் மயக்கப் புன்சிரிப்பு அடிகள் நேரில் நின்று சிரிப்பது போன்ற உணர்வை உண்டாக்கும். இவ்வாறே, 'ஒருவகை உருமாலைக்கட்டும்' நேர் நிமிர்ந்து பார்க்கும் வீரப் பார்வையும் உடைய ஒருவரின் திருவுருவம் அவரை நேரில் காணாதவர்க்கும் நேரில் கண்டு களிப்பது போல அவர்தம் கண்முன் காட்சியளிக்கும். யார் அவர்?' என்ற கேள்விக்கு விவேகானந்தர் என்ற விடை உடனே கிடைக்கும். ஆம், நேரில் காணார் கண்முன்னும் காட்சியளிக்கும் அத்தகைய உருவத் தோற்றம் உடையவரே விவேகானந்தர். 'ஏழைகளுக்குத் தொண்டு செய்வதே இறைவன் திருப்பணி' என்னும் பகவான் இராமகிருஷ்ணர் கொள்கையை உலகெங்கும் பரப்பிய பெருமை, உலகம் அறிந்தின்புறச் செய்த பெருமை விவேகானந்தரையே சாரும். இவர், இராம கிருஷ்ணரின் முதன் மாணாக்கர் ஆவார். இவர் இராம கிருஷ்ணரின் வெறும் முதல் மாணாக்கர் மட்டும் அல்லர்; இராமகிருஷ்ணரின் மறுபதிப்பே விவேகானந்தர் என்பதே மிகவும் பொருத்தம். தம் குருநாதர் கொள்கையை அப்படியே மேற் கொண்டவர் விவேகானந்தர். வங்க மாநிலத்தின் தலைநகரான கல்கத்தாவே விவேகானந் தரின் சொந்த ஊர். இவர் தந்தை விசுவநாத தத்தர் என்பவர். அவர் கல்கத்தா உயர்நீதி மன்ற வழக்கறிஞர்; பெருஞ்செல்வர். அரசமரபைச் சார்ந்தவர் இவர். விவேகானந்தரின் தாயார் புவனேசுவரி அம்மையார். அவர் நல்ல கல்வியறிவுடையவர். 12.11.1863இல் நம் விவேகானந்தர் பிறந்தார். நரேந்திர நாதன் என்பது இவரது இயற்பெயர். நரேந்திரனின் பிள்ளைப் பருவம் மிகமிகத் துடுக்குத் தனம் நிறைந்ததாக இருந்தது. இவனை வைத்துத் தாட்டவே முடியாதெனத் தாயார் வெறுப்புக் கொள்ளு மளவுக்கு நரேந்திரனது துடுக்குத் தன.ம் மிதமிஞ்சியதாக இருந்தது. எனினும், நரேந்திர நாதன் அறிவுடையவனாகவே காணப் பட்டான். பிள்ளைப் பருவம் போய்ப் பள்ளிப் பருவம் வந்தது. நரேந்திரன் கல்வியிற் கருத்தைச் செலுத்தினான். பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியிற்சென்று படித்துப் பட்டம் (பி.ஏ.) பெற்றான் நரேந்திரன். கல்லூரிப் பட்டம் பெற்ற நரேந்திரன், உலக வாழ்வில் ஏனோ வெறுப்புக் கொண்டு, பகவான் இராமகிருஷ்ணரை அடைந்து, அவர்க்கு முதல் மாணாக்கனாகி, சாமி விவேகானந்தர் என்ற சிறப்புப் பெயர் பூண்டு துறவி ஆனான். 'காசைக் கையால் தொடுவதில்லை; உயிர் போவதாயிருந் தாலும் ஒருவரை உணவு கேட்பதில்லை; நாளைக் கென்று யாதொரு பொருளையும் மீத்துவைப்பதில்லை' என்னும், மக்கள் இயல்பைமீறிய கடுமையான நோன்புடையவர் இவர். உலக முழுவதும் சுற்றுப் பயணம் செய்துள்ளார். தம் வாழ்நாள் முழுதும் ஓரிடத்தில் நிலையாகத் தங்கியிராமல் அங்கங்கே சென்று தமது கொள்கையைப் பரப்பிக் கொண்டே இருந்தார். இவர் சிறந்த பேச்சாளர்; எவ்வளவு நேரம் வேண்டு மானாலும் ஓயாமல் பேசுவார். கல்லூரிப் பட்டம் பெற்ற இத்துறவி, சொல்லாற்றலில் வல்லுநராய் விளங்கியதில் வியப்பொன்று மில்லை. உலகமே இவர் பேச்சை ஆவலுடன் கேட்டது; கேட்டு இன்புற்றது. ஆசியாவே யன்றி, அமெரிக்கா, ஐரோப்பாக் கண்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து சொற்பொழிவாற்றியுள்ளார். அங்கெல்லாம் இவர்க்கு மாணாக்கர்கள் உண்டு. இவர் ஓர் உலக அறிஞரும், உலகத் துறவியும், உலகப் பெரியாரும் ஆவர். காண்போர் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் தோற்றப் பொலிவுடையவராவர். 1893இல் அமெரிக்க நாட்டுச் சிகாகோ என்னும் நகரில், உலகச் சமய மாநாடு ஒன்று நடந்தது. உலகிலுள்ள எல்லாச் சமயங்களையும் சீர் தூக்கிப் பார்த்தற்காகக் கூட்டப்பட்டது அம் மாநாடு. உலகில் உள்ளபேரும் புகழும் பெற்ற சமயத் தலைவர்கள் எல்லாரும் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர். நமது சாமிகளும் அம் மாநாட்டிற்குச் சென்றிருந்தார். 11.9.1893அன்று அம் மாநாடு தொடங்கிற்று. தலைவர் முன்னுரைக்குப் பின், பலர் பேசினர். நம் சாமிகளின் முறை வந்தது. அரியேறு போல எழுந்து மேடைக்குச் சென்றார். சாமிகளின் தோற்றப் பொலிவால் அம் மாநாடு மருண்டது. பெருமிதமான வெண்கலக் குரலில், 'அமெரிக்க நாட்டுப் பிறந்தவிகளே! பிறந்தவர்களே!' (சகோதரிகளே, சகோதரர் களே) என்றார். அவ்வளவுதான்! அதற்கு மேல் அவரைப் பேசவிட வில்லை. யார்? இடியென முழங்கிய கைதட்டலின் ஒலி. காரணம், மற்ற பேச்சாளர்களெல்லாரும், 'செல்விகளே! செல்வர்களே!' (சீமாட்டிகளே சீமான்களே) என்று, அவையோரை விளித்துத் தம் பேச்சைத் தொடங்கினர். நமது சாமிகளோ, உலக மக்களை உடன் பிறந்த ஒரே குடும்பமாகக் கொண்டதே யாகும். அதன்பின் இவர் சொன்மாரி பொழிந்தார். அம் மாநாடென்ன, அமெரிக்காவே இவரைப் பாராட்டியது. இம் மாநாட்டுக்காக 1893இல் அமெரிக்கா சென்ற நம் சாமிகள், நான்காண்டுகள் அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய வெளிநாடுகளில் தமது கொள்கையைப் பரப்பி விட்டு, 1897இல் இலங்கை வழியாகத் தமிழ்நாட்டை அடைந்து, சென்னையில் தமிழ் மக்களின் வரவேற்பைப் பெற்று, சென்னையிலிருந்து கல்கத்தா சென்றார். இந்தியாவின் எல்லாப் பெரிய நகரங்களுக்கும் சாமிகள் சென்றிருக்கிறார். சாமிகள் முதல் முதல் இந்தியச் சுற்றுப் பயணம் செய்த போது, ஆழ்வார் நகருக்குச் சென்றிருந்தார். அது ஓர் இந்தியச் சிற்றரசின் (சமஸ்தானம்) தலைநகர். அங்கு மூன்றுநாள் தொடர்ந்து சொற்பொழிவாற்றினார் சாமிகள். சாமிகளின் இன்சொல் தேனுண்டு மதிமயங்கிய மக்கள் அவரது பசியைப் பற்றிக் கவனிக்கவே இல்லை. அப்போது இவர் பெயர் நாட்டில் நன்றாகப் பரவவில்லை. 'யாரோ ஓர் இந்தியத் துறவி; சிறந்த பேச்சாளி, பெரிய படிப்பாளி' - இவ்வளவே அன்று அவ்வூர் மக்கள் சாமிகளைப் பற்றி அறிந் திருந்தது. இன்று போல் அன்று, பேச்சாளரை வரவேற்று உணவிட்டுப் போற்றும் வழக்கமும் அவ்வளவாக இல்லை. எனவே, சாமிகள் நீண்ட நேரம் பேசுவதும், பேசிவிட்டுப் போய்த் தனியாக ஓரிடத்தில் தங்குவதுமாக இருந்து வந்தார். 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' என்பது, ஒரு தமிழ்ப் பழமொழி யாகும். ஆனால், நமது சாமிகளோ எவ்வளவு பசித்தாலும், பசியினால் உயிரே போய்விடுவதாக இருந்தாலும், ஒருவர் கொடுத்தால் வாங்கிச் சாப்பிடுவதே யல்லாமல், தாமாகக் கேட்டு வாங்கி யுண்ணும் வழக்கமில்லாத கடுமை யான நோன்பு நோற்று வந்த காலம் அது. ஆகையினால், அம் மூன்று நாளும் பட்டினி யாகவே இருந்து வந்தார். மூன்றா நாள் சொற்பொழிவு முடிந்தது. கூட்டத்தினர் எல்லாரும் அவரவர் பாட்டில் எழுந்து போய் விட்டனர். இது அவர்கட்கு வழக்கமானது. ஆனால், மூன்று நாளாய்ச் சரியான உணவின்றி, அதாவது உண்ணாமலேயே சொல்மாரி பொழிந்து ஓய்ந்து போன அடிகள், கடும்பசியால் மிகவும் களைப்புற்றார். நடக்க முடியவில்லை. கால்கள் தள்ளாடின. பசி காதை அடைத்தது. இந்நிலையிலும், 'பசிக்கின்றது' என்று, பிறரிடம் சொல்லக் கூடாத அத்தகு கடுநோன்பு உடைய அவர் அங்கேயே அயர்ந்து படுத்திருந்தார். படுத்திருந்தார் என்பதைவிட, படுத்துக் கிடந்தார் எனலே பொருந்தும், நெடு நேரம் அங்கு ஒருவரும் வரவில்லை. தனியாகவே களைத்துப் படுத்துக் கிடந்தார். அவ்வழியாக வந்த பழங்குடிமகன் ஒருவன் (சக்கிலி) அடிகள் தனியாகப் படுத்திருப்பதைக் கண்டான்; அவர் ஏனோ களைத்துப்படுத்திருக்கிறார் என்பதை ஒருவாறு அறிந்து கொண்டான். அவன் பக்கத்தில் சென்று, 'சாமி! சாமி!' என்றான். சாமிகள் கண்விழித்துப் பார்த்துவிட்டு மறுபடியும் கண்ணை மூடிக் கொண்டார். மிகுந்த பசியினால் களைத்துப் படுத்திருக்கிறார் என்பதை அப்பாட்டாளி அறிந்து வருந்தினான். 'பெரியீர்!' பசியால் மிகவும் களைத்துப் படுத்திருக்கிறீர்கள் போல் இருக்கிறது. எத்தனை வேளையாகச் சாப்பிட வில்லையோ பாவம்! இந்நிலையிலுங்கூடத் தங்கள் பசியைப் போக்க முடியாத வனாக இருக்கிறேன். ஐயோ! நான் என்ன செய்வேன்? சாமி! தாங்களோ உயர் குலத்தினர் போல் காணப்படு கிறீர்கள். நானோ இழிகுலத்தினன்; தீண்டப்படாத சாதி. கொஞ்சம் மாவு தருகிறேன். சமைத்துச் சாப்பிடுகிறீர்களா? அதுகூட இப்போது தங்களால் முடியாது போல் தோன்றுகிறது. வேறு ஒரு வழியுந் தோன்றவில்லையே. என் செய்வேன்? இந்த நிலையிலும் உதவ முடியாத பாவி!' என்று வருந்தினான். சாமிகள் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தார். பசியின் களைப்பால் தொண்டை வறண்டு போய்விட்டதால், மங்கிய குரலில், 'தோழ! வருந்தாதே. உன் அருளுள்ளம், அவ்வுள்ளத்தினின்று வெளி வந்த அன்பு மொழி, உன் ஒப்பற்ற பெருங்குணம் இவையே என் கண்களைத் திறக்கும்படி செய்தன. உன்னுடைய உணவே எனக்குப் பாற்சோறு போன்ற தாகும். உன் வீட்டில் உள்ள உணவில் கொஞ்சம் கொண்டு வாரும்; வருந்து வதைவிடும்' என்றார். 'பெரியீர்! நானோ தாழ்த்தப்பட்டவன். உயர்குலத்தில் பிறந்த தாங்கள் நான் தொட்ட உணவை உண்ணலாமா? நான் தங்களுக்கு உண்ண உணவு கொடுப்பது பாவமல்லவா?' 'நண்பா! மக்களில் உயர்வு தாழ்வு கருதுவது மடமை யாகும். என்றோ, எவராலோ தாழ்த்தப்பட்டீர்கள். பாவம்! அக்கொடுமை இன்னும் தொலையாது மக்களினத்தை ஆட்டிப்படைக்கிறது; வாட்டி வருத்துகிறது. 'இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்' என்பது, ஆன்றோர் வாக்கன்றோ? நீ அன்புடன் அளிக்கும் உப்பில்லாப் பழங்கூழும் எனக்கு ஆரமுதமாகும். தயங்காமல் போய்க்கொண்டு வாரும்' என்றார் சாமிகள். அப் பாட்டாளி, ஓர் உயர்குலத் துறவிக்கு ஒரு தீண்டப் படாதவன் உணவு கொடுத்தா னென்று ஊரார் வெகுளுவார் என அஞ்சினான். எனினும், சாமிகளின் பசி தணிய வேண்டும், அவர் களைப்பு நீங்க வேண்டும் என்னும் ஆர்வம் பிடர் பிடித்துத் தள்ள விரைந்து தன் குடிசைக்குச் சென்று, கொஞ்சம் பழைய சோறு கொண்டுவந்து கொடுத்தான். சாமிகள் அதை அன்புடன் வாங்கி உண்டு பசி தணிந்தார். கொஞ்ச நேரத்தில் பசியினாலுண்டான களைப்பு நீங்கிற்று. 'நண்பா! இன்று நீ இல்லாவிட்டால் நான் இவ்வுலகை விட்டுச் சென்றிருப்பேன். நான் உயிரோடு இவ்வுலகத்தில் இருக்க உதவியவன் நீயே' என, அப்பழங்குடி மகனை மார்புறத் தழுவினார். அவன் அச்சத்தால் நடுங்கினவனாய், 'பெரியீர்! இதை யாரிடமும் சொல்லாதீர்கள். தங்களுக்கு நான் உணவு கொடுத்தது தெரிந்தால் நான் உயிரோடு வாழ முடியாது' என்று வேண்டிக் கொண்டான். மறுநாள் சாமிகள் ஆழ்வார் மன்னரின் அரண்மனைக்குச் சென்றிருந்தார். நெடுநேரம் மன்னரிடம் ஏதோ பேசிக் கொண் டிருந்தனர். முடிவில், முதல் நாள் தனக்கு உணவு கொடுத்த பழங்குடிமகனின் அரும்பெருங் குணத்தைப் பற்றி அரசனிடம் கூறினார். அரசன் அடிகளின் பெருங்குணத்தை மெச்சிய தோடு, அப்பழங்குடிமகனை வரவழைத்து வேண்டிய பொருள் கொடுத் தனுப்பினான். இதுவன்றோ பெரியார்க் கழகு! என்னே சாமிகளின் ஒருமை மனப்பான்மையும் செய்நன்றியறிதலும்! அரசன் அறிந்தது அம்பலத்துக்கு வராமலா இருக்கும்? அச்செய்தி அந்நகர் எங்கும் பரவியது. சாமிகளின் பேச்சைக் கேட்டு இன்புற்றோரெல்லாரும் அவர் பசியைப் பற்றிக் கவனியாத தவற்றை எண்ணி வருந்தினார்கள். அடிகளின் பெருங்குணத்தைப் பாராட்டினர். 'யாரோ ஒரு இந்தியத் துறவி' என்ற நிலை போய், சாமிகளிடம் அளவு கடந்த அன்பு கொள்ளலாயினர்.  சங்க இலக்கியச் செல்வம் (1966) முன்னுரை கதை படிப்பதில் பொதுவாகச் சிறுவர்களுக்கு ஆர்வம் அதிகம். அதிலும், தமிழ் இலக்கியக் கதைகள் என்றால், தமிழ்ச் சிறுவர்கள் மிகவும் விரும்பிப் படிப்பார்கள். தமிழ்ச் சிறுவர் களின் அத்தகைய இயல்புக் கேற்பச் சங்க இலக்கியங்களில் உள்ள வரலாற்றுக் கதைகளே இந்நூலில் இடம்பெற் றுள்ளன. தமிழ்ச் சிறுவர்கள் கதை படிப்பதோடு, தங்கள் முன்னோரின் வாழ்க்கை முறைகளையும் ஒருவாறு தெரிந்து கொள்ளுதல், 'தமிழ் இலக்கியங்கள் படிக்க வேண்டும்' என்னும் ஆர்வத்தை அவர்கட்கு உண்டாக்குமாதலால், அத்தகு ஆர்வத்தை உண்டாக்கும் முறையில் எளிய இனிய தமிழ் நடையில் இந்நூல் எழுதப் பட்டுள்ளது. இந்நுலைத் தமிழ்ச் சிறுவர்கட்குப் பயன் படும்படி செய்து, அன்னாரின் தமிழ் மொழி அறிவையும், 'சங்க இலக்கியங்கள் படிக்கவேண்டும்' என்னும் ஆர்வத்தையும் வளர்ப்பது, பெரி யோர்களின் கடமையாகும். பவானி அன்புள்ள. 25-8-'66 குழந்தை 1. தாய்மொழிப்பற்று தமிழ் நாட்டின் வளத்துக்கும் சிறப்புக்கும் காரணமாய் இருப்பது காவிரியாறு. அது சோழ நாட்டை நீர்வள முடைய தாகச் செய்கிறது. 'சோழ வளநாடு சோறுடைத்து' என்னும் சிறப்புக்குக் காவிரியாறே காரணமாகும். ஒரு சோழ மன்னனை, 'காவிரிபுரக்கும் நாடுகிழவோனே' - காவிரியாற்றினால் வளஞ் செய்யப்படும் நாட்டுக்கு உரியவனே - என்கின்றார் ஒரு சங்க காலப் புலவர். காவிரியாறு முன்னர் மலையிலிருந்து நிறையப் பொற் பொடியை அடித்துக்கொண்டு வந்தது. அதனால், அது பொன்னி என்றும் பெயர் பெற்றது. பொன்னியாறு பாய்வதால், சோழ நாடு, பொன்னி வளநாடு எனப்பட்டது. அதனால், சோழ மன்னர்கள் பொன்னித்துறைவர் என்று அழைக்கப் பெற்றனர். காவிரியாற்றின் பெருமையைப் பாராட்டாத பழந்தமிழ் நூல்கள் ஒன்றுமே இல்லை எனலாம். 'காவிரிப்பாவை, தமிழ்ப் பாவை, சோழர் குலக்கொடி' என்று சிறப்பிக்கின்றது மணி மேகலை. சிலப்பதிகாரத்துக் கானல்வரி என்னும் காதையில், ஆற்றுவரி என்னும் பாடல்களால், காவிரியின் பெருமை விளக்கமாக விரித்துக் கூறப்பட்டுள்ளது. "உழவர் ஓதை மதகோதை உடைநீர் ஓதை தண்பதங்கொள் விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி." "வாழி யவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி." (கானல்வரி) என்னும் சிலப்பதிகார அடிகளைப் பாடி இன்புறுக. இத்தகைய சீருஞ்சிறப்பும் உடைய காவிரியாறு மேற்கு மலைத்தொடரில் தோன்றி, கொங்கு நாட்டிடைப் பாய்ந்து, சோழநாட்டை நன்கு வளஞ் செய்துகொண்டு கீழ்கடலில் சென்று கலக்கிறது. ஆறு கடலொடு கலக்கும் இடத்திற்குக் கழிமுகம் என்று பெயர். கழிமுகத்திற்குப் புகார் என்பது பழந்தமிழ்ப் பெயர். காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் - புகாரில் - சோழ நாட்டின் தலைநகர் அமைந்திருந்ததால் அது புகார் எனப் பட்டது. காவிரியின் பெயரொடு பொருந்த அப்பூம்புகார், காவிரிப்பூம்பட்டினம் எனவும் வழங்கிற்று. காவிரிப்பூம்பட்டினம் சங்க இறுதிக் காலத்தே சீருஞ் சிறப்பும் பொருந்தித் திகழ்ந்தது. அது ஒரு கப்பல் துறைமுக பட்டினமாக விளங்கிற்று. வெளி நாடுகளுக்குச் சரக்குக்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களும், வெளிநாடுகளிலிருந்து வந்து சரக்குக்களை இறக்கும் கப்பல்களும் அப்புகார்த் துறைமுகத்தில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அப்பூம்புகார் நகர் - பட்டினப் பாக்கம், மருவூர்ப் பாக்கம் என, இருபெரும் பிரிவாகப் பிரிந்திருந்தது. புகார் நகரின் சிறப்பினைப் பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழந்தமிழ் நூல்களில் பரக்கக் காணலாம். காவிரிப்பூம்பட்டினத்துப் பெருங்குடி மக்களில் வணிக மரபினர் சிறந்தவராவர். வெளி நாடுகளுடன் கடல் வாணிகம் செய்துவந்தோர் அவ்வணிக மக்களே யாவர். அன்று சாவகம், சீனம் முதலிய கீழ்நாடுகளுடனும், எகிப்து, கிரேக்கம், உரோம் முதலிய மேனாடுகளுடனும் கடல்வாணிகம் செய்து வந்தது தமிழ்நாடு. அவ்வணிகரில் பெரும்பாலோர் பெருஞ் செல்வர்களாவர். சிலப்பதிகாரக் கதைத்தலைவர்களான கோவலனும் கண்ணகியும் அச்செல்வ வணிகர் குடியில் பிறந்தவரே யாவர். கோவலன் தந்தையான மாசாத்துவான் என்பானை, 'சோழ மன்னனோடு ஒருங்குவைத்து எண்ணப்படுகின்ற பெருஞ் செல்வக் குடிகளில் ஒருவன்' என்கின்றார் இளங்கோவடிகள். பூம்புகார்நகரில் அவ்வணிக மரபில் கோவலன் காலத்தே, சாதுவன் என்னும் செல்வன் ஒருவன் இருந்தான். இவனும் அத்தகைய செல்வர்களுள் ஒருவனே. சாதுவன் மனைவி, ஆதிரை என்பாள். சாதுவனும் ஆதிரையும் இனிது இல்லறம் நடத்தி வந்தனர். கோவலன் எங்ஙனம் தன் முன்னோர் ஈட்டிய செல்வம் முழுவதையும் தொலைத்து விட்டு, சொந்த ஊரில் வாழ முடியாத நிலையை அடைந்தனனோ அவ்வாறே, சாதுவனும் தன் செல்வ மெல்லாம் தொலைத்து ஏழையானான். உள்ளதைத் தொலைத்தவர்க்கு உள்ளூரில் மதிப்பில்லை. பெருஞ்செல்வ வாழ்க்கை வாழ்ந்தவர்க்கு அதே ஊரில் கூலி வேலை செய்து பிழைக்க மனம் இடந்தருமா? தம் குடிப் பெருமை அதற்குக் குறுக்கே நிற்குமல்லவா? இதனால்தானே கோவலன் இரவோடிரவாக, பெற்றோர்க்குக் கூடத் தெரியாமல், தன் மனைவி கண்ணகியுடன் சொந்த ஊரை விட்டு, வேற்று நாட்டின் ஊராகிய மதுரைக்குச் சென்றான்! இது சாதுவனுக்கு விலக் காகுமா? இவனும் செல்வாக்காக வாழ்ந்து கெட்டவன் தானே? 'வாழ்ந்தவர் கெட்டால் வாயோட்டுக்குக்கூட உதவார்' என்ற பழமொழிப் படி, அவன் உள்ளூரில் மதிப்பிழந்தான். சாதுவன், கப்பல் வணிகம் செய்து கண்ணியமாக வாழ்ந்து வந்த பெருங்குடியில் பிறந்தவன். இளமையிலிருந்து செல்வாக் காக வாழ்ந்து வந்தவன். ஆனால், அவன் தன் அறியாமையினால், ஆடம்பரமாக வீண் செலவு செய்து, மலையின் முடியில் வாழ்ந்த அவன், மடுவின் அடிக்குத் தாழ்ந்தான்; வாழ்க்கைச் செலவுக்கே பணம் இல்லை; வறுமையால் வாடினான். வறுமை அவனை வாட்டியது. ஒரு சிலர், வரவுக்கு மீறி ஆடம்பரச் செலவு செய்து உள்ளதை யெல்லாம் தொலைத்துவிட்டு, வாழ வழியில்லாமல் மனைவிமக்கள் எல்லாரையும் தனியாகத் தவிக்க விட்டு விட்டு, ஒருவருக்குந் தெரியாமல் இலங்கை, மலேயா முதலிய வெளிநாடு களுக்குக் கப்பலேறி விடுவது போலவே, சாதுவனும் வெளியேற முடிவு செய்தான். அவன் தன் அருமை மனைவியைத் தனியாகத் தவிக்க விட்டு விட்டு, உற்றார் உறவினரையும் மறந்து விட்டு, வெளி நாடுகளுக்கு வாணிகத்தின் பொருட்டுப் புறப்பட்ட கப்பல் ஒன்றில் ஏறி விட்டான். கோவலனாவது, அறிவில்லாமல் கெட்ட வழியில் ஆடம்பரமாகச் செலவு செய்து செல்வமிழந்து வறுமை யுற்று, உள்ளூரில் வாழ மனமில்லாமல், தன் மனைவி யாகிய கண்ணகியை உடனழைத்துக்கொண்டு மதுரைக்குச் சென்றான். சாதுவனோ, தன் மனைவியாகிய ஆதிரையைத் தனியாகத் தவித்தேங்க விட்டு விட்டு, அவளிடம் சொல்லாமலேயே கப்பலேறி விட்டான். கணவன் சென்ற இடம் தெரியாத ஆதிரை மிகவும் வருந்தி னாள். யார் யாரையோ கேட்டுப் பார்த்தாள்; தன் உறவினர் ஊர்களுக்கெல்லாம் ஆள்விட்டுத் தேடினாள். அவன்தான் கப்பலேறி விட்டானே. அங்கெல்லாம் எப்படி இருப்பான்? ஆதிரை என்செய்வாள் பாவம்! உள்ளதை யெல்லாம் தொலைத்து ஓட்டாண்டியாக்கிவிட்டு வேறு சென்று விட்டான். என்னவோ, ஆறாத்துயருடன் அழுதழுது ஒவ்வொருநாளையுங் கழித்துக் கொண்டு வந்தாள் அவள். சாதுவன் முன்பெல்லாம் வணிகத்தின் பொருட்டுக் கப்பலேறி வெளிநாடுகளுக்குச் சென்றது போல இன்று பண மூட்டை யுடனா சென்றான்? இல்லை; வெறுங்கையுடன், எங்காவது போய்த் தொலையலாம் என்ற எண்ணத்துடன் உயிரினும் இனிய மனைவியையும், உற்றார் உறவினரையும், தாய்த்திரு நாட்டையும், சொந்த ஊரையும் விட்டுப் பிரிந்து, கடலின் நடுவில் கப்பலில் சென்று கொண்டிருந்தான். சாதுவன் சென்ற கப்பல், இன்றுள்ள கப்பல்கள் போல யந்திரக்கப்பல் அன்று. அது பாய்மரக்கப்பல்; காற்றினால் செல்லும் கப்பல்; காற்று அடித்த பக்கம் செல்லும் கப்பல். காற்று வீசினால் அது செல்லும்; காற்று நின்று விட்டால் அக் கப்பலும் நின்றுவிடும். அக்காலத்தே கப்பலில் செல்வது உயிருக்குத் துணிந்த ஒரு செயலாகும். அடிக்கடி சுழல் காற்றில் அகப்பட்டுக் கப்பல்கள் கவிழ்ந்து விடுவதும் உண்டு. சாதுவன் சென்ற கப்பல் ஒரு நாள் இரவில் சென்று கொண் டிருந்த போது, பெரிய சுழல் காற்று வீசத் தொடங்கியது. அது புயல் எனப்படும். புயலினால் கப்பல் ஆடத் தொடங்கியது. கப்பலில் உள்ளவரெல்லாரும் அஞ்சி அலறினர். வரவரக் காற்று விசையாக வீசத் தொடங்கியது. கப்பலில் உள்ளவர்கள், கப்பல் கவிழ்ந்து விடும் என்பதை உறுதிசெய்து கொண்டனர். பெரும்பாலோர் தங்கள் உயிரின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டனர். வரவரக் கப்பல் வெறி கொண்டவன் போல் ஆடியது. எல்லாரும் 'கப்பல் கவிழ்ந்தது கவிழ்ந்தது' என்று கூச்சலிட்டனர். கப்பலும் கவிழ்ந்து விட்டது! கப்பலில் இருந்தவரில் பெரும்பாலோர் கடலுக்கிரை யாயினர். ஒரு சிலர் அலையோடு போராடிக் கொண்டிருந்தனர். நம் சாதுவனுக்கு ஒடிந்த பாய் மரத் துண்டொன்று கிடைத்தது. அவன் அதைப் பிடித்துக் கொண்டு அலையோடு போராடினான். மறுநாட்காலையில் அலை அவனை அடித்துக் கொண்டு போய், ஒரு சிறு தீவின் கரையில் தள்ளியது. சாதுவன் இரவெல்லாம் அலையோடு போராடிய களைப்பால், கரையோரத்தில் படுத்து அயர்ந்து தூங்கி விட்டான். அது, நாகர் என்னும் ஒருவகை மக்கள் வாழும் தீவு. நாகர் வாழ்வதால் அது, நாகத் தீவு என வழங்கியது. அந்நாகரை மக்கள் என்பதை விட, மாக்கள் என்பதே பொருந்தும். ஏனெனில், அவர்கள் பகுத்தறி வில்லாத விலங்குகள் போன்றவர். ஒரு சில விலங்குகள் தம் இன விலங்குகளையே கொன்று தின்பது போல, அந்நாகர்கள் மக்களையே கொன்று தின்பவர்கள். மேலும், மானத் திற்காக நாம் உடை உடுத்துகிறோம். அவர்கள் ஆடையில்லாமல் வாழ்பவர்கள். மணிமேகலை ஆசிரியர் இவர்களை, 'நக்க சாரணர் நாகர்' என்கின்றார். அதாவது, ஆடை யில்லாமல் வாழும் நாகர் என்கின்றார். ஏன்? அவர்களை மாக்கள் என்று சொல்ல லாமல்லவா? அந்நாகர்கள், கவிழ்ந்த கப்பலிலிருந்து தப்பி அத்தீவை அடைந்தவர்களைக் கொன்றுதின்பார்கள்; கடலில் விழுந்து தவிப்போர்களையும் பிடித்துக் கொண்டு போய்த் தின்பார்கள்; கடலில் நன்கு நீந்தவல்லவர்கள்; கவிழ்ந்த கப்பலில் உள்ள பொருள்களையும் எடுத்துக் கொண்டு போவார்கள். அந்நாகரிற் சிலர், சாதுவன் படுத்துத் தூங்கிக் கொண் டிருக்கும் பக்கமாக வந்தனர். சாதுவன் படுத்துத் தூங்குவதைக் கண்டனர்; பெரும் புதையல் கிடைத்தது போல உள்ளும் புறமும் ஒருங்கே உவந்தனர். தேடிச் சென்றவர்களுக்கு நல்ல வேட்டை கிடைத்தால் மகிழ்ச்சி உண்டாவது இயல்புதானே? அவர்கள் தூங்குகின்ற சாதுவனைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். சூழ்ந்து நின்று, புதருக்குள் படுத்திருக்கும் முயலை எழுப்புவது போல, அவர்கள் சாதுவனை எழுப்பினர். சாதுவன் விழித்தெழுந்தான்; தன்னைச்சுற்றிலும் ஆடை யில்லாது ஒருவகைக் காட்டு மக்கள் நிற்பதைக் கண்டான்; அச்சங் கொண்டான். 'மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்பது போல , கப்பல் கவிழ்ந்து கடலில் வீழ்ந்து உயிருக்கு ஊசலாடிய அச்சம் நீங்கிக் கரையேறியும், இன்னும் அவனுக்கு அச்சம் நீங்கினபா டில்லை. அந்நாகர்களைப் பார்த்து, 'நீங்கள் யார்?' என்று கேட்டான். அவர்கள் என்னவோ கத்தினார்கள். அவர்களுக்குத் தமிழ்த் தெரியாது. அவர்கள் பேசுவது வேறு மொழி. ஆனால், சாதுவனுக்கு அவர்கள் பேசும் மொழி ஒருவாறு தெரியும். அவன் அந்நாகர் தாய்மொழியில் தான் இன்னான் என்பதையும், கப்பல் கவிழ மரத்துண்டைப் பிடித்துக் கொண்டு கரை யேறியதையும் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொன்னான். உடனே அந்நாகர்கள், சாதுவனைச் சுற்றி வளைத்து நின்றதை விட்டு விட்டார்கள்; அவனைக் கொல்லும் எண்ணத் தையும் மாற்றிக் கொண்டார்கள். சாதுவனிடம் அவர்கள் மிக்க அன்பும் இரக்கமும் கொண்டார்கள். சாதுவன் மிகவும் களைத் திருப்பதைக் கண்டு, பழங்கள் பறித்துக்கொண்டு வந்து கொடுத்து உண்ணும்படி வேண்டினர். சாதுவன் அப்பழங்களைத் தின்று களைப்புத் தீர்ந்தான். புதருக்குள் படுத்திருக்கும் முயலைச் சூழ்ந்து கொண்ட வேட்டைக்காரர்கள் அந்த முயலுக்குப் புல் பிடுங்கிக் கொடுப்பது போல, சாதுவனைக் கொன்று தின்னச் சூழ்ந்த அந்நாகர்கள், இவ்வாறு மாறியதற்குக் காரணம் என்ன? அவர்களுடைய கொடிய மனத்தை இவ்வாறு மாற்றியது எது? உயிரைக் கொல்ல எழுப்பியவர்களை அவ்வுயிர் போகாமலிருக்கப் பழம் பறித்துக் கொடுக்கும்படி செய்தது எது? அவர்கள் தாய்மொழி. அந்நாகரின் தாய்மொழிப் பற்றே அவர்களை அவ்வாறு மாறச் செய்தது. சாதுவன் அவர்கள் தாய்மொழியில் பேசவும், அவர்கள் தாய் மொழிப் பற்று அவர்கள் மனத்தை அவ்வாறு மாற்றி விட்டது. கொன்று தின்னும் பொருளாகக் கொண்ட சாதுவன், பாதுகாக்கப்படும் பொருளாக மாறினான். அந்நாகரின் தாய்மொழிப் பற்று அவர்கள் மனத்தை அவ்வாறு மாற்றி, அவன்பால் அன்பும் இரக்கமும் கொள்ளும்படி செய்தது; தங்களுக்கு உணவாக வேண்டிய ஒருவனுக்கு, உண்ணப் பழம் பறித்துக் கொடுக்கும் நிலையை உண்டாக்கி விட்டது. மக்களைக் கொன்றுதின்னும் அம் மாக்களுக்கே, ஆடை யின்றி விலங்குகள்போல் வாழும் அந்நாகர்களுக்கே தங்கள் தாய்மொழி மேல் அவ்வளவு பற்றிருக்கு மானால், மக்களல்லாத மாக்களுக்கே தாய்மொழிப் பற்று அத்தகைய உணர்ச்சியை உண்டாக்கு மானால், தாய் மொழிப் பற்றின் சிறப்பினை என்னென்பது! மேலும், எழுத்தில்லாத, இலக்கிய இலக்கண மில்லாத, பண்படாத ஒரு மொழியின்மேல், மக்கட்பண்பாடே இல்லாத அந்நாகருக்கு அத்தகைய பற்று இருக்குமானால், நமது தாய்மொழி யாகிய தமிழ்மொழி போன்ற சிறந்த மொழியைத் தாய்மொழியாக உடையவர்களுக்கு எத்தகைய தாய் மொழிப் பற்று இருக்கும் என்பதை, இருக்கவேண்டும் என்பதை எண்ணிப்பாருங்கள். தலையாய தாய்மொழிப் பற்றுடைய அந்நாகர்கள் சாது வனைப் பார்த்து, 'என்னவோ நல்ல வேளையாக உயிர் தப்பினீர்கள். கப்பல் கவிழ்ந்த போது எவ்வாறு துடித்தீர்களோ? அந்த மரத் துண்டு கிடைக்கா திருந்திருந்தால் இங்கு வந்திருக்க மாட்டீர்கள்; நாங்கள் கண்டிருக்க மாட்டோம். வாருங்கள் எங்கள் தலை வனிடம் போகலாம்' என்று, சாதுவனை அவர்கள் தங்கள் தலை வனிடம் அழைத்துச் சென்றனர். சாதுவனைக் கண்ட நாகர் தலைவனும் நல்ல வேட்டை என்றெண்ணி மகிழ்ந்தான். நாகர் தலைவனைக் கண்டதும் சாதுவன், 'வணக்கம்' என்று, அந்நாகர் மொழியில் கூறினான். அவ்வளவுதான்! அந்நாகர் தலைவன் இருக்கையை விட்டு எழுந்து வந்து, மலர்ந்த முகத்துடன் இன்சொற் கூறி, இருகைகளையும் பிடித்துக் குலுக்கிச் சாதுவனை அழைத்துச் சென்று அருகில் உட்கார வைத்தான். நாகர்கள் சாதுவன் வந்த வரலாற்றைக் கூறினர். நாகர் தலைவன் சாதுவனோடு உரையாடினான். சாதுவன் தங்கள் தாய் மொழியில் பேசுவதைக் கேட்கக் கேட்க அத் தலைவன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான்; அடிக்கடி சாதுவனைத் தன் கைகளால் தடவிக் கொடுத்தான். இடையிடையே, 'ஆஃஆ! ஆஃஆ! என்றான். அவன் சாதுவனுக்குக் கறியும் கள்ளும் கொண்டு வந்து கொடுக்கச் சொன்னான். சாதுவன் தான் அவற்றை உண்ப தில்லை. எனவே, பலவகையான இனிய பழங்களும் பாலும் கொடுத்து, 'உண்ணுங்கள் உண்ணுங்கள்' என்று வேண்டிக் கொண்டான். சாதுவன் உண்டு பசியாறினான். அவன் நாகர் தலைவனின் அன்பைப் பாராட்டினான். சாதுவன் பல நாள் நாகர்தலைவனின் விருந்தினனாக இருந்து வந்தான். ஒரு நாள் காவிரிப்பூம் பட்டினத்துக் கப்பல் ஒன்று அத்தீவுக்கு வந்தது. பல ஆண்டுகளாகக் கவிழ்ந்த கப்பல்களிலிருந்து எடுத்து வைத்திருந்த சந்தனக் கட்டைகள், அகிற் கட்டைகள், பலவகை யான மணப் பொருள்கள், பட்டாடைகள், பல்லாயிரக் கணக்கில் பணம் எல்லாம் கொடுத்து, சாதுவனை அக்கப்பலில் அனுப்பினான் அந்நாகர் தலைவன். சாதுவன் அந்நாகர்களிடம் பிரியாவிடை பெற்று, வெளிநாடுகளி லிருந்து சரக்கேற்றிக் கொண்டு வருகின்றவன் போலக் காவிரிப்பூம் பட்டினத்தை அடைந்தான். சாதுவன் வருகைகண்ட ஆதிரையின் மகிழ்ச்சிப் பெருக்குக்கு எதனை உவமை கூறுவது? ஆதிரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தாள். வெறுங்கையோடு பிரிந்து சென்ற கணவன் பெரும் பொருளோடு வரக்கண்டால் அவள் மகிழாமலா இருப்பாள்? சாதுவன் தான் அன்று அவளைவிட்டுப் பிரிந்து சென்றது முதல் வந்தது வரை நிகழ்ந்தனவெல்லாம் கூறினான். ஆதிரை அது கேட்டுத் துன்பமும் இன்பமும் அடைந்தாள். சாதுவனும் ஆதிரையும் முன்போலச் செல்வாக் குடன் வாழ்ந்து வந்தனர். தாய்மொழிப் பற்றின் தனிப் பெருமையைப் பார்த்தீர் களா? நீங்களும் உங்கள் தாய் மொழியாம் தமிழ்மொழி யிடத்துப் பற்றுக் கொண்டு நன்கு கற்றுக் கொள்ளுங்கள்; தாய்மொழியைத் தாயைப்போல மதித்துத் போற்றுங்கள். வாழ்க தாய்மொழிப் பற்று! வளர்க நம் நாட்டு மொழிகள்!  2. வளைந்த கோல் நிமிர்ந்தது. காவிரிப்பூம் பட்டினம் என்பது சோழ நாட்டின் தலைநகர். அது காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் இருந்ததனால் அப்பெயர் பெற்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் கோவலன் என்னும் வணிகன் ஒருவன் இருந்தான். அவன் பெருஞ் செல்வன். அவன் வீண் செலவு செய்து செல்வ மெல்லாம் தொலைத்து ஏழையானான். உள்ளூரில் வாழ மனமில்லாத அவன் தன் மனைவி கண்ணகியுடன், பாண்டி நாட்டின் தலைநகரான மதுரைக்குச் சென்றான் என்று முன்பு கண்டோம். இக்கோவலனும் கண்ணகியும்தாம் சிலப்பதிகாரக் கதைத் தலைவர்கள். கோவலன் பெருஞ் செல்வக் குடியில் பிறந்து, செல்வமாக வளர்ந்து, செல்வமாக வாழ்ந்து வந்தான். கோவலன் தந்தையான மாசாத்துவான் என்பான், 'சோழ மன்னனோடு ஒருங்கு எண்ணப் படும் பெருஞ் செல்வக் குடிகளில் ஒருவனான உயர்ந்தோங்கு செல்வத்தான்' என்கிறார் இளங்கோவடிகள். கண்ணகி தந்தை யான மாநாய்கன் என்பானும் மாசாத்துவான் போன்ற பெருஞ் செல்வனே யாவன். கோவலனும் கண்ணகியும் இனிது இல்லறம் நடத்தி வருகையில், 'என்னவோ பொல்லாத காலம்' என்பார்களே அவ்வாறு, கோவலன், மாதவி என்னும் ஒரு கணிகை யிடத்துச் சென்று தங்கி, மிக்க ஆடம்பரமாக வீண் செலவு செய்து, தன் முன்னோர் தேடிய செல்வம் முழுவதும் தொலைத்து வறுமை யுற்றான்; கண்ணகி அணிந்திருந்த ஏராளமான விலையுயர்ந்த அணிகலன்களையும் வாங்கித் தொலைத்து விட்டான். வாழ்ந்து கெட்ட அவன், சொந்த ஊரில் ஏழையாக வாழ வெட்கப்பட்டு ஒருவரிடமும் சொல்லாமல், ஒருவருக்கும் தெரியாமல் கிழக்கு வெளுக்காமுன் தன் மனைவி கண்ணகியுடன், பிறந்து வளர்ந்த தாய்த்திரு நகரை விட்டுப் புறப்பட்டான். நகரை விட்டுப் புறப்பட்ட கோவலனும் கண்ணகியும் வழியில் எதிர்ப்பட்ட, கவுந்தியடிகள் என்னும் தவமூதாட்டி யுடன் கூடி வழி நடந்தனர். அது முதுவேனிற் காலம். கண்ணகி இதற்கு முன் என்றும் வெயிலில் நடந்தறியாதவள். அவள் கால்கள் நடக்க முடியாமல் தடுமாறின. கோவலன் தான் இதற்கு முன் எங்கு இவ்வளவு நெடுந்தொலை நடந்திருக்கின்றான் பாவம்! அவர்கள் அங்கங்கே தங்கித் தங்கிப் பலநாள் வருத்தத் துடன் நடந்து சென்று, சங்கப் புலவர்கள் இருந்து தமிழ் வளர்க்கும் தண்டமிழ் மதுரையை அடைந்தனர். பாண்டி நாட்டின் தலைநகரான மாடமதுரை, வையை யாற்றின் கரையில் இருந்தது. இன்றும் இருக்கின்றது. பாண்டியன் நெடுஞ்செழியன் என்பான் அப்போது மதுரையிலிருந்து, பாண்டி நாட்டை ஆண்டு வந்தான். மதுரையை அடைந்த கோவலன், மாதரி என்னும் இடைக் குல மூதாட்டி வீட்டினில் கண்ணகியை இருக்கச் செய்து, அவள் காற்சிலம்பிலொன்றை விற்று வரக் கடைத் தெருவை நோக்கிச் சென்றான். கோவலன் கடைத்தெரு வழியே செல்கின்ற போது எதிரில் ஒரு பொற்கொல்லன் வந்தான். தன் சிலம்பை விற்றுத் தரும்படி கோவலன் அப்பொற்கொல்லனைக் கேட்டான். அரண்மனைச் சிலம்பொன்றை ஏமாற்றி விட்டு, அது களவு போய்விட்ட தென்று பொய் கூறி வந்த அப் பொற்கொல்லன், கோவலனைக் காட்டிக் கொடுக்க முடிவு செய்தான். அவன், கோவலனைத் தன் வீட்டின் அருகில் இருக்கச் செய்து விட்டு, அரசனிடம் கேட்டு வருவதாக அரண்மனையை நோக்கிச் சென்றான். சென்றவன், அரசனை வணங்கி, 'தென்னவர் பெரும! காணாமற் போன நம் அரண்மனைச் சிலம்பைத் திருடிய கள்வன், கையுங்களவுமாகப் பிடிபட்டான்' என்றான். அது கேட்ட அரசன், காவலரை அழைத்து, 'இவன் சொல்லுகின்றவனிடம் அரண்மனைச் சிலம்பு இருக்கின், அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வாருங்கள்' என்று கட்டளை யிட்டான். காவலர் சென்று, கோவலன் கையில் சிலம்பு இருப்பதைக் கண்டு, கோவலனை வெட்டிக் கொன்று விட்டு, அச்சிலம்பைக் கொண்டுபோய் அரசனிடம் கொடுத்தனர். மாதரி வீட்டில் இருந்த கண்ணகி, கணவன் கொலை யுண்ட செய்தியைக் கேட்டுத் திடுக்கிட்டெழுந்தாள்; தலைவிரி கோலமாய், கண்ணீருங் கம்பலையுமாய்த் தனது மற்றொரு சிலம்பினைக் கையிலேந்திக் கொண்டு, கோவலன் கொலை யுண்டு கிடக்கும் இடத்தை நோக்கி ஓடினாள். கண்ணகி அழுது புலம்பிக் கொண்டு தலைவிரி கோலமாய் ஓடுவதைக் கண்ட மதுரை மகளிர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். கண்ணகி அழுது கொண்டு சும்மா ஓடவில்லை. "இவ்வூரில் பெண்களும் இல்லையோ! இவ்வூரில் சான் றோரும் இல்லையோ! ஐயோ! நேற்றுத்தானே கணவனொடு இவ்வூர்க்கு வந்தேன்! இன்று கணவனை இழந்து கைம்பெண் ஆனேனே! அந்தோ! இனி நான் என்செய்வேன்"என்று அவள் கதறி அழுதுகொண்டோடினாள்; ஓடிப்போய்க் கொலை யுண்டு கிடக்கும் கோவலனைக் கண்டாள். கண்டதும், ஓவென்றழுது கொண்டோடிவிழுந்து, கணவன் உடலைத் தழுவிக் கொண்டு கதறி அழுது கொண்டு புரண்டாள்; தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண் டழுதாள். கண்ணகியின் கடுந்துயர் கண்டு பொறாதவனாய்க் கதிரவன் மறைந்தான். கதிரவன் மறையவே, கண்ணகி அழுகை மாறி வீர உருக் கொண்டாள்; 'காரணம் இல்லாமல் என் கணவனைக் கொன்ற அக்கடுங்கோல் மன்னனைக் கண்டு காரணங் கேட்பேன்' என எழுந்தாள்; அரண்மனையை நோக்கி நடந்தாள். கண்ணகி அரண்மனை வாயிலை அடைந்து, "அறிவை இழந்த, முறை தவறிய அரசனின் வாயில் காப்போனே! கையில் ஏந்திய ஒரு சிலம்புடன் கணவனை இழந்த ஒருத்தி இங்கு வந்திருப்பதாக உன் அரசனுக்கு அறிவிப்பாய்"என்றாள். வாயிலோன் சென்று மன்னனிடம் கூற, மன்னன் இங்கு அழைத்து வருக என, வாயிலோன் வந்து அழைத்துப் போனான். கண்ணகி கண்ணீர் ஒழுகுங் கண்ணுடன் சென்று பாண்டியனைக் கண்டாள். பாண்டியன் நெடுஞ் செழியன், "கண்ணீர் ஒழுகுகின்ற கண்ணுடன் இங்கு வந்த நீ யார்?"என்றான் "ஆராய்ச்சி யில்லாத அரசனே! ஒரு புறாவுக்காகத் தன்னையே தராசுத் தட்டில் வைத்து நிறுத்து, அப் புறாவைக் கொல்ல வந்த பருந்துக்குக் கொடுக்கத் துணிந்த பெரியோனும், தானே வந்து தேர்க்காலில் விழுந்திறந்த ஒரு மாட்டுக் கன்றுக்காகத் தன் மகனை, தேரூர்ந்து அத்தேர்க்காலினால் கொன்ற நல்லோனும் ஆண்ட சோழ நாட்டின் தலைநகரான புகார் எனது ஊர். அவ்வூரில், அரசனைப் போன்ற பெருஞ் செல்வனான மாசாத்து வான் மகன் என் கணவன். வாழ்வதற்காக உன் மாநகரான மதுரைக்கு வந்து, என் காற்சிலம்பை விற்க வந்து உன்னால் கொல்லப்பட்ட கோவலன் மனைவி நான்; கண்ணகி என்பது என் பெயர்"என்றாள் கண்ணகி. "பெண்மணி! கள்வனைக் கொல்லுதல் எப்படிக் கொடுமை யாகும்?" "அறநெறி தவறிய அரசனே! என் கணவன் கள்வன் அல்லன்; அது என் காற்சிலம்பு; என் சிலம்பின் பரல் மாணிக்கம்; உடைத்துப் பாரும்." "உன் சிலம்பின் பரல் மாணிக்கமா! எமது சிலம்பின் பரல் முத்து"என்று, அரண்மனையில் உள்ள கண்ணகி காற் சிலம்பைக் கொண்டு வரச் செய்து, கண்ணகியிடம் கொடுத்தான் பாண்டியன். கண்ணகி அச்சிலம்பை வாங்கி உடைத்தாள். அச்சிலம்பு உடைந்து, அதனுள் இருந்த மாணிக்கப் பரல்கள் செழியன் முகத்தில் தெறித்தன. மணி கண்ட மன்னன் திடுக்கிட்டான்; உளம் நடுங்கினான், உரை குழறினான், உணர்வு கலங்கினான், உயிர் நலங்கினான். "என் கொற்றக் குடை தாழ்ந்தது, என் செங்கோல் வளைந்தது; அந்தோ! ஒரு பொற்கொல்லன் சொல்லைக் கேட்டு, நேரில் விசாரியாமல் ஒருவனைக் கொன்ற யானோ அரசன்? இல்லை இல்லை, யானே கள்வன்! ஆம், நான்தான் கள்வன். என்று தோன்றியதோ அன்று முதல் இன்று வரை தவறாத பாண்டியர் ஆட்சி முறை இன்று என்னால் தவறிவிட்டது. ஐயோ! பாண்டியர் செங்கோலை நான் வளைத்து விட்டேன். ஆம். வலிதில் வளைத்துக் கொடுங்கோல் ஆக்கிவிட்டேன். அம்மணி! உன் கணவன் கள்வன் அல்லன். கோவலன் கள்வனா? இல்லை. அவன் கள்வன் அல்லன் யானே கள்வன்; ஆம், யானே கள்வன். போதும் நான் உயிர் வாழ்ந்தது. என் உயிர் ஒழிக; ஒழிக என் உயிர்!"என்று சொல்லிக் கொண்டே பாண்டியன் மயங்கி வீழ்ந்தான். அவன் உயிர் பிரிந்து விட்டது. பிரிந்த அவ்வுயிர், பாண்டியன் வளைத்த கொடுங்கோலை நிமிர்த்துச் செங்கோலாக்கியது. என்னே பாண்டியன் நெடுஞ்செழியனின் செங்கோன்மை! 'கோல் அஞ்சி வாழும் குடி' என்பதற்கு நேர் மாறாக வல்லவோ இருக்கிறது இம்மாறனின் செயல்? கோலஞ்சி, கொடுங்கோலுக் கஞ்சி உயிரையே யல்லவா விட்டு விட்டான்? தான் ஆராய்ந்து பாராமல், நேரில் விசாரியாமல் கோவலனைக் கொன்று வளைத்த கொடுங்கோலைத் தன் உயிரை விட்டல்லவா நிமிர்த்துச் செங்கோலாக்கி விட்டான்! உயிர் நீத்து முறை காத்த இவனன் றோ அரசன்! இவனன்றோ மக்களின் காவலன்! தமிழர் செங் கோன்மை - ஆட்சிமுறை - எத்தகையது என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டி, தமிழர் பெருமையைக் கல்மேல் எழுத்துப் போல் நிலைநாட்டிய பெருமை இவனை யன்றோ சாரும்? கொடுங்கோலுக்கு அஞ்சி உயிர் விட்ட இச் செயற்கருஞ் செயலின் அறிகுறியாகத் தமிழ் மக்கள் இவனை, அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் என்று அழைத்தனர். உண்மை தெரிந்ததும், கண்ணகி காற்சிலம்பின் பரல் மாணிக்கம் என்பதைக் கண்டதும், 'யானே கள்வன்' என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்ட செழியனின் செம்மைதான் என்னவோ! 'யானோ அரசன்? யானே கள்வன்' இச்சொற்கள் நெடுஞ்செழியன் நேரில் சொல்வது போலல்லவோ உள்ளன? இச் சொற்கள் அல்லவோ அவன் உயிரை விரட்டி அடித்தன? பாண்டியன் நெடுஞ்செழியன், தான் முறை தவறியதற் காக, தன்னை உலகம் பழிக்கும் என்பதற்காகக் கூட அஞ்ச வில்லை. 'பாண்டியர் முறைதவறி விட்டனர்' என்று தன் மரபுக்கே இழுக்கு நேரும், தன் மரபையே உலகம் பழிக்கும் என்பதற்காகவே அஞ்சினான். 'அந்தோ! நமது மரபுக்கே பழியை உண்டாக்கி விட்டோமே! பாண்டியர் மரபு பழம் பெரு மரபு! அத்தகைய மரபின் பழமையை அழித்து விட்டோமே' என்றே அஞ்சினான்; அலறினான். அவன் உயிர் பிரிந்து விட்டது. உயிரை விட்டு அவன் மரபுக்கு ஏற்பட்ட மாசைத் துடைத்து விட்டான்; தனது பழம் பெரு மரபுக்குத் தன்னால் ஏற்பட்ட மாசைத் தன்னுயிர் கொண்டே துடைத்துத் தூய்மை யாக்கிவிட்டான். கவரிமான் என்பது ஒருவகை மான். அது அடர்ந்து நீண்ட மயிரை யுடையது. அதன் மயிர் எளிதில் உதிராது. மகளிர் தலைக்கு வைத்த முடியும் கவரி (சவரி) என்பது இந்த மானின் மயிர்தான். அம் மான், தன் மயிரில் ஒன்று எப்படியாவது உதிர்ந்து விட்டால் உடனே தன் உயிரை விட்டு விடுமாம். அது போல, மானம் உடையவர், மானம் கெடும்படியான செயல் ஏதாவது ஏற்பட்டால் தம் உயிரையே விட்டு விடுவர்; உயிரை விட்டு மானத்தைக் காப்பர், என்கின்றார் வள்ளுவர். "மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்" என்பதே அக் குறள். இக் குறளுக்கு அப்படியே எடுத்துக் காட்டாக வன்றோ விளங்குகின்றான் நம் நெடுஞ்செழியன்? இவர் அவ்வாறு, 'யானே கள்வன்' என்று தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல் இருந்திருந்தால், ஒப்புக் கொண்டு உயிர் விடா திருந்திருந்தால், இன்று உலகம் இவனைக் 'கொடுங் கோலன்' என்றல்லவா பழிக்கும்? உலகப் பழிக்கு நாணி உயிர் விட்டுப் புகழ்பெற்ற, தன் இனப் பெருமையை நிலை நாட்டிய, தமிழர் பெருமையை உலகறியச் செய்த நெடுஞ்செழியனின் இச்செயற்கருஞ் செயலை நினைக்க நினைக்க நம் நெஞ்சு வெடித்து விடும்போ லன்றோ இருக்கிறது? இவனன்றோ அரசன்! இவன் இயல்பை, பெருமையை, மானத்தை உள்ளபடி எடுத் துரைக்க யாரால் இயலும்! ஒருவன் தான் செய்த குற்றம் மிகவும் கொடியது என்று உணர்ந்தாலோ, அக் குற்றத்தைப் பொறுக்க முடியா விட்டா லோ, ஆறு குளம், கிணறு குட்டையில் விழுந்தோ, நஞ்சுண் டோ, மற்றும் ஏதாவது பிறவழிகளிலோ தற்கொலை செய்து கொள்ளுதல் உலக நடப்பு. உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல் பண்டைய வழக்கம். அப்பண்டைய வழக்கம் வாள்வடக் கிருத்தல் என வழங்கிற்று. ஆனால், தான் செய்தது தவறு என்று கண்டதும், தான் செய்த குற்றம் தனக்கே யன்றித் தன் மரபுக்கே, தமிழினத்துக்கே இழுக்குடையது என்று கண்டதும், 'என் உயிர் ஒழிக' என்று கூறி உயிர்விடுவதென்பது, எல்லாராலும் எளிதில் இயலக் கூடிய தொன்றா? இது, செயற்கரிய செயலினும் செயற்கரிய செய லாகவன்றோ உளது? 'செயற்கரிய செய்வார் பெரியர்' என்ற வள்ளுவர் குறளுக்குச் செழியனின் இச்செயல் அப்படியே எடுத்துக்காட்டாகுமன்றோ? நோய்நொடி இல்லாமல், நல்ல நிலையில் இருந்த ஒருவனது உயிர், திடீரென்று உடலை விட்டுப் பிரிய வேண்டுமானால், தான் செய்த குற்றத்தை அவன் எவ்வாறு எண்ணியிருக்க வேண்டும்? எவ்வாறு எண்ணி யெண்ணி மனம் புண்ணாகி யிருக்க வேண்டும்? எவ்வாறு உள்ளம் நொந்து வெந்து உருகியிருக்க வேண்டும்? உயிர் இருப்பதற்கு முடியா மலன்றோ உடலை விட்டுச் சென்றிருக் கிறது? பாண்டியன் நெடுஞ்செழியன் தான் செய்த தவற்றைப் பற்றி எண்ணிய எண்ணத்திற்கு எதனை உவமை கூறுவது? வாழ்க நெடுஞ்செழியன் வண்புகழ்! தீராத கொடிய நோயினால் பல மாதங்கள் கட்டிலுக் கிரையாய்க் கிடந்தாலும் போகாத உயிர் அடியடி யென்று அடித்தாலும் போகாத உயிர் தான் செய்தது தவறு என்பதை அறிந்ததும் போன தென்றால், நம் நெடுஞ்செழியனைப் பற்றி என்ன நினைப்பது? இவனைப் போல் மானமுடைய ஒருவன், உலக மக்களில் இதுநாள் காறும் பிறந்ததே இல்லை; இனியும் என்றும் பிறக்கப் போவது மில்லை! செழியனின் இச் செயற்கருஞ் செயலினைத் தமிழ் மக்கள் அன்றே மனமாரப் பாராட்டினர். வாயார அவனை வாழ்த்தினர். இவன் காலத்தே சேர நாட்டை ஆண்டவன் சேரன் செங்குட்டுவன் என்பான். இவன்தான் இமயத்தில் கல்லெடுத்து வந்து, கண்ணகிக்குக் கோயில் எடுத்து வழிபாடு செய்தவன். இவன் தம்பிதான் சிலப்பதி காரம் செய்த இளங்கோவடிகள். பாண்டியன் நெடுஞ்செழியன் அரசு கட்டிலில் துஞ்சிய செய்தியை, அரியணையில் இருந்த படியே இறந்த செய்தியை, சாத்தனார் என்னும் புலவர் செங்குட்டுவனிடம் கூறினார். அதுகேட்ட செங்குட்டுவன் பாண்டியனை மனமாரப் பாராட்டி னான். எங்ஙனம்? "பாண்டியன் நெடுஞ்செழியன் முறை தவறி விட்டான்; வளையாத செங்கோலை வளைத்து விட்டான்; தமிழரச மரபுக்கே, தமிழினத்துக்கே இழுக்கைத் தேடி விட்டான்; ஆராய்ந்து பாராமல், நேரில் கேட்டறியாமல், ஒருவன் சொன்ன சொல்லை நம்பிக் கோவலனைக் கொன்று விட்டான் என்னும் பழிச்சொல், எம் போன்ற அரசர்களின் செவியில் வந்து புகுவதற்கு முன்னே, பாண்டியன் ஆராயாது கோவலனைக் கொன்ற செய்தியை நாங்கள் கேட்குமுன்னே, 'தான் செய்தது தவறு என்பதை அறிந்ததும் நெடுஞ்செழியன் உயிர் விட்டு விட்டான்; அவன் வளைத்த செங்கோலை, அவன் உடம்பிலிருந்து பிரிந்து சென்ற அவன் உயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது. அதாவது தன் உயிரை விட்டு அப் பழியைத் துடைத்து விட்டான்' என்னும் புகழ்ச்சொல் புகுக என்று பாண்டியன் உயிர் விட்டான்"என்கின்றான். முறை தவறிவிட்டான் என்னும் சொல்லை விட, இறந்து விட்டான் என்னும் சொல்தானே நாட்டில் முதலில் பரவும்? 'பாண்டியன் ஆராயாது கோவலனைக் கொன்று விட்டான்' என்ற பழிச்சொல் தம்போன்ற அரசர்கள் செவியில் புகுமுன், 'உயிர் விட்டு முறை காத்தான்' என்ற புகழ்ச் சொல் புகுக என்று, பாண்டியன் உயிர் விட்டானாம்! ஆம், செங்குட்டுவன் சொல்வது முற்றிலும் உண்மையே. இல்லையென்றால் பாண்டியன் உயிர் விட்டிருப்பானா? பழந்தமிழ் வேந்தர்கள், 'அரசர் முறை தவறினார்' என்று குடி மக்கள் சொல்வதை - குடி பழி தூற்றுவதை - எவ்வளவு அழுத்தமாக வெறுத்து வந்தனர் என்பதற்குச் செங்குட்டுவன் சொல்லே சான்றாகு மல்லவா? செங்குட்டுவனைப் போலவே, சோழ மன்னனும், தமிழக வேளிரும் நெடுஞ்செழியனைப் பாராட்டியிருப்பர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நமது பாண்டியன் நெடுஞ் செழியனைப் போன்ற மானமும் நேர்மையும் கொடுங்கோலுக் கஞ்சும் குணமும் உடையோரே ஆள்வோராகத் தகுதியுடைய வராவர். அத்தகைய ஆள்வோரை, ஆட்சித்தலைவரை உலக நாடுக ளெல்லாம் பெறுவதாக. கண்ணகி வழக்குரைத்த போது, பாண்டியன் மனைவியான கோப்பெருந்தேவியும் அங்கு இருந்தாள். அவள் பாண்டிய னுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். கண்ணகி என் சிலம்பின் பரல் மாணிக்கம் என்றதும், பாண்டிமாதேவி மனம் மருண்டாள். கண்ணகி சிலம்பை வாங்கி உடைத்தாள்; தேவி மனம் உடைந்தாள். மணி கண்ட மன்னன், 'யானோ அரசன்! யானே கள்வன்! கெடுக என் ஆயுள்' என மயங்கி வீழ்ந்தது கண்ட அவள், ஆ! என்றெழுந் தாள்; உள்ளம் குலைந்தாள், உடல் நடுங்கினாள், ஓ! வென்று கதறினாள், தரையில் விழுந்தாள். அவ்வளவுதான்! தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடுவாள் போல, உடனுயிர் விட்டாள்!  3. அரசுப் பரிசு தமிழ் மொழி நமது தாய்மொழி. நாம் பேசுவது தமிழ் மொழி. நாம் தமிழ் பேசுவதால் தமிழர் எனப் பெயர் பெற்றோம். தமிழ் வழங்குவதால் அதாவது தமிழ் பேசப்படுவதால் நம் நாடு தமிழ்நாடு எனப் பெயர் பெற்றது. தமிழர் வாழ்வதால் தமிழ்நாடு எனப் பெயர்பெற்றது எனவும் கூறலாம். தமிழ் நாட்டின் மேற்கில் உள்ளது மலையாள நாடு. மலையாள நாட்டில் வாழும் மக்கள் மலையாளம் என்னும் மொழி பேசுகின்றனர். மலையாள மொழி பேசுவதால் அவர்கள் மலையாளிகள் எனப் பெயர் பெற்றனர் எனினுமாம். மலைஞாலர் என்பது, மலையாளர் எனத் திரிந்த தென்பர். மலையாள நாடு ஒரு காலத்தே தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது; அதாவது தமிழ் நாடாக இருந்தது. அங்கும் தமிழ்மொழிதான் பேசப்பட்டது. அங்கும் தமிழர்கள் தாம் வாழ்ந்தனர் என்றால் கேட்பவர்க்கு வியப்பாக இருக்கும் அல்லவா! ஆம், வியப்பைத்தரும் செய்திதான் இது. தமிழர்கள் தாம் மலையாளிகளாக மாறி விட்டனர். தமிழ் மொழி தான் மலையாள மொழியாக மாறிவிட்டது. பழைய தமிழ்நாடு தான் இன்று மலையாள நாடு எனப் பெயர் பெற்றுவிட்டது. பழந் தமிழர் வழி வந்தவர்தாம் இன்று மலையாளிகளாகி விட்டனர். இது வியப்பைத் தரும் செய்திதானே! சேர நாடு, சோழ நாடு, பாண்டி நாடு எனப் பழந்தமிழ் நாடு மூன்றாகப் பிரிந்திருந்தது. சேர நாட்டைச் சேர மன்னரும், சோழ நாட்டைச் சோழ மன்னரும், பாண்டி நாட்டைப் பாண்டிய மன்னரும் ஆண்டு வந்தனர். சேர சோழ பாண்டியர் என்னும் இம்மூவரசர் மரபும், தமிழ் நாட்டில் ஆட்சி முறை என்று ஏற் பட்டதோ அன்றிருந்து தமிழ் நாட்டை ஆண்டு வரும் அரசமரபு களாகும். இம் மூவரும், 'முடியுடை மூவேந்தர்' என்று சிறப்பிக்கப் பெறுவர். மூவரசர் என்றால், சேர சோழ பாண்டியர் என்னும் இம் மூவரையுமே குறிக்கும். அத்தகு பழமையும் பெருமையும் உடையவர் இம்மூவரசரும். இன்றைய மலையாள நாடுதான் அன்றைய சேர நாடு. பழந்தமிழகத்தின் ஒரு பிரிவான சேர நாடு தான் இன்று மலையாள நாடு என வழங்குகிறது. சேரலர் என்பதே, கேரளர் எனத் திரிந்து வழங்குகிறது. பழந்தமிழ் மொழிதான் அயல் மொழிக் கலப்பால் திரிந்து மலையாள மொழி ஆகிவிட்டது. பழந்தமிழ் மொழிதான் இன்று தமிழர்க்குத் தெரியாத ஒரு புது மொழி ஆகிவிட்டது; தமிழர்க்கு அயல் மொழி ஆகிவிட்டது. சிலப்பதிகாரம் ஒரு செந்தமிழ்க் காப்பியம். சிலப்பதிகாரம் செய்த இளங்கோவடிகள் ஒரு சேர இளவரசர்; சேரன் செங்குட்டுவன் தம்பி. செந்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் செய்த இளங்கோவடிகள் வழி வந்தோர்தாம் இன்று மலையாளிகள் என வேறு இனமாயினர். இளங்கோ வடிகள் பேசிய தமிழ் மொழி தான் இன்று மலையாள மொழியாகி விட்டது. பழந்தமிழர் வழி வந்தவர்தாம் இன்று தங்களைத் தமிழர் வழி வந்தவர் என அறியாதவராகி விட்டனர். எட்டுத்தொகை என்னும் பழந்தமிழ் நூல்கள் எட்டனுள், பதிற்றுப்பத்து என்பது ஒன்று. அது பத்துச் சேர மன்னர்கள் மீது பாடப்பட்ட ஒரு பழந்தமிழ் நூல். ஒரு சேர மன்னன் மீது பத்துப் பாட்டுக்களாக, பத்துச் சேர மன்னர்கள் மீது, பத்துப் பழந் தமிழ்ப்புலவர்கள் பாடிய நூறு பாட்டுக்களையுடையது அந்நூல். பழந்தமிழ் மன்னர்களாகிய பத்துச் சேர வேந்தர்களின் சிறப்பினைக் கூறுவது பதிற்றுப்பத்து. தம்மீது பத்துப் பாட்டுக்களைப் பாடிய புலவர்க்கு அச்சேர மன்னர்கள் கொடுத்த பரிசினைக் கேட்கின் நீங்கள் பெருவியப் புறுவீர்கள். நீங்களென்ன? கேட்பவர் யாருமே வியப்புறுவர் என்பதில் ஐயமில்லை. இதோ ஒரு சேர மன்னனின் தமிழ்ப் பற்றினையும் கொடைக் குணத்தினையும் பாருங்கள். பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் சேர நாட்டை ஆண்டு வந்தான். இவன் சங்க இறுதிக் காலத்தவன். இவன் தமிழரசர்க்குரிய வீரம், கொடை, புகழ் என்னும் மூன்றிலும் மேம்பட்டு விளங்கினான்; குடிமக்களிடம் பேரன் புடையவனாக இருந்தான்; குடிமக்களை யாதொரு குறையும் இல்லாமல் காப்பதே தனது கடமையெனக் கொண்டவன்; தன் தாய்மொழி யாம் தமிழ் மொழியிடத்து அளவு கடந்த அன்புடையவன்; தமிழ் மொழியைத் தன் உயிரினும் மேலாக மதித்துப் போற்றி வந்தான்; தமிழ்மொழி வளர்ப்பதைத் தன் கடமைகளுள் முதற்கடமை யாகக் கொண்டவன். தமிழ்ப் புலவர்களுக்கு வாரிவாரி வழங்கித் தமிழ் வளர்த்து வந்தான் அம்மன்னன். இவ் விரும்பொறையின் தமிழ்ப் பற்றுக்குச் சிறு எடுத்துக் காட் டொன்றைக் கேளுங்கள். மோசிகீரனார் என்னும் புலவர் இப்பெருஞ் சேரலைக் காணச் சென்றார்; சேரன் அரண் மனையை அடைந்தார்; வெயிலில் நடந்து வந்த களைப்பால், அரண் மனையின் ஒரு பக்கத்தே இருந்த முரசு கட்டிலில் படுத்துத் தூங்கிவிட்டார். அங்கு வந்த பெருஞ்சேர லிரும்பொறை, முரசு வைக்கும் இடத்தில் - முரசு கட்டிலில் - யாரோ ஒருவர் படுத்திருப்பதைக் கண்டான். முரசு கட்டிலில் யாரும் உட்காரவோ, படுக்கவோ கூடாது. அங்ஙனம் செய்வது கொலைக் குற்றத்திற்கு ஒப்பாகும். எனவே, இரும்பொறை உடைவாளை உருவிக் கொண்டு சென்றான். அருகில் சென்றதும், படுத்துத் தூங்குபவர் ஒரு செந் தமிழ்ப்புலவர் என்பதை அறிந்தான். அவன் கை அவ்வாளை எறிந்தது. ஒரு கவரி கொண்டுவரச் சொல்லி, வாள்பிடித்த கையால் அக்கவரியைப் பிடித்துப் புலவர் விழித்து எழுகிறவரை வீசினான். 'கவரிவீசிய காவலன்'என்று புலவர்கள் அவனைப் புகழ்ந்தனர். அத்தகு தமிழ்ப்பற் றுடையவன் பெருஞ்சேரலிரும் பொறை. இவ்விரும்பொறை காலத்தே, அரிசில்கிழார் என்னும் புலவர் ஒருவர் இருந்தார். அவர் சோழ நாட்டில் உள்ள அரிசில் என்னும் ஊரினர். கிழார் - உரியவர். அவர் அரிசில் என்னும் ஊரினர் ஆதலால், அரிசில்கிழார் என்று அழைக்கப் பட்டார். இவர் ஒரு சிறந்த தமிழ்ப் புலவர்; கவிபாடுவதில் வல்லவர். இவர் இனிய செந்தமிழ்ப் பாடல்கள் பாடி, தமிழ்ச் செல்வர்களிடமும், தமிழ் மன்னர்களிடமும் பரிசு பெற்று வாழ்ந்து வந்தார். அரிசில் கிழார், நம் பெருஞ்சேர லிரும்பொறையின் தமிழ்ப் பற்றையும் கொடைத்திறத்தையும் கேள்வியுற்றார்; இரும்பொறையைப் பாடிப் பரிசில் பெற எண்ணினார். சேர நாட்டின் தலைநகரான வஞ்சியை நோக்கி நடந்தார்; சேரநாட்டின் வளத்தையும், இயற்கைக் காட்சிகளையும் கண்டுகளித்துக் கொண்டே அரண்மனையை அடைந்தார். பெருஞ்சேர லிரும்பொறை, புலவரை அன்போடு வர வேற்றான்; தாயைக் கண்ட சேயைப் போல மனமகிழ்ந்தான்; இன்சொற்கூறி இனிது அளவளாவினான். புலவர், இரும்பொறை மீது பத்துச் செந்தமிழ்ப் பாட்டுக்கள் பாடிச் சென்றிருந்தார்; அப்பத்துப் பாட்டுக்களையும் படித்துப் பொருள் கூறினார். அப்பாட்டுக்கள் பத்தும், பதிற்றுப் பத்தில் எட்டாம்பத் தாகும். அப்பாடல்களின் பொருளைக் கேட்ட இரும்பொறை பெருமகிழ் வுற்றான். தன்மீது எட்டாம் பத்தைப் பாடிய அரிசில் கிழார் என்னும் புலவர் பெருமானுக்கு இரும்பொறை தந்த பரிசில் என்ன? பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் அச்சேர மன்னன் கொடுத்த பரிசிலை நினைத்தால், அவனை இத்தகையவன் என்று சொல்வ தற்கே இடமில்லாமல் இருக்கிறது. இத்தகைய தமிழ்ப்பற் றுடைய ஒரு தமிழனும், ஒரு தமிழ்ப் பேரரசனும் தமிழ் நாட்டில் ஒரு காலத்தே இருந்தானா? இருந்திருப்பானா? 'ஆம் இருந்தான்' என்கின்றது எட்டாம் பத்து. அத்தகைய தமிழ்ப்பற்றுடைய தமிழ்மகன் இருந்து ஆண்டு வந்த, தமிழ் வளர்த்து வந்த அப்பழந்தமிழ்ச் சேரநாடு, அத்தமிழ் மன்னன் வழிவந்த அவன் நாட்டுத் தமிழ்க் குடிமக்கள் வழிவந்த தமிழர் மரபு, இன்று தான் இன்னார் என்பதை அறியாது, தமிழர் வேறு, தாம் வேறு என்று எண்ணி வாழ்ந்து வருகின்றது; தம் இனத்தவரான தமிழரை அயலாரென எண்ணி, அவ்வாறே நடந்தும் வருகின்றது. 'தமிழ்' என்னும் தன் பழம் பெயரை விட்டுத் தன் பெயரை 'மலையாளி' என மாற்றிக் கொண்டு விட்டது; தன் தாய் மொழியாம் தமிழ் மொழியை, அயல் மொழி எனக் கொண்டுள்ளது. தன் தாய்த்திரு நாட்டை அயல் நாடென எண்ணி வருகிறது. ஆ! எம் அருமைத் தமிழகமே! செந்தமிழ்ப் பெருங் காப்பிய மான சிலப்பதிகாரந்தந்த பழந்தமிழ்ச் சேரநாடே! நீ ஏன் இந்நிலையை அடந்தனை? மாறுபா டென்றால் இப்படியா தலைகீழ் மாறுபாடு! தமது இனத்தை, தமது தாய் மொழியை, தமது தாய்நாட்டை - வேறு இனம், வேறுமொழி வேறுநாடு என்று எண்ணும் இத்தகு மாறுபாடா! அரிசில்கிழார் என்னும் புலவர் பெருந்தகைக்கு, தன்மீது பாடிய எட்டாம் பத்துக்கு, பெருஞ்சேர லிரும்பொறை கொடுத்த அத்தகு பெரும்பரிசு என்ன? எத்தனை நூறாயிரம்! ஒரு பாட்டுக்கு ஒரு நூறாயிரமா? இல்லை, இரு நூறாயிரமா? எவ்வளவு? புலவர் பாட்டுக்களைப் படித்துப் பொருள் கூறினார்; இரும்பொறையின் வீரச் சிறப்பினை எடுத்து விளம்பினார்; வெற்றிச் சிறப்பினை எடுத்து விளக்கினார்; கொடைச் சிறப்பினை எடுத்துக் கூறினார். புகழ்ச்சிறப்பினை எடுத்துப் புகன்றார். அச்செந்தமிழ்ச் செய்யுட்களின் சொல் நயத்தையும் பொருள் நயத்தையும் தொடை நயத்தையும் நடை நயத்தையும் சுவைத்து மகிழ்ந்துகொண்டிருந்தான் மன்னன். புலவர் பத்துப் பாட்டையும் படித்துப் பொருள் கூறி முடித்தார். அவ்வளவு தான்! இரும் பொறை ஒன்றும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றான். நெடு நேரம் அவன் வெளியே வரவில்லை. புலவர்க்கு ஒன்றுமே தோன்ற வில்லை. அவ்வாறு அன்போடு தம்மை வரவேற்று அழைத்து வந்த அரசன், வாயினிக்கப் பேசி மனமினிக்கச் செய்த மன்னன், தமது பாட்டைக் கேட்டு உள்ளும் புறமும் உவந்த உதியன், ஒவ்வொரு பாட்டையும் தனித்தனி பாராட்டிய அத் தகைமிகு செம்மல் பாட்டின் பொருளறிந்து இன்புற்ற அப்பொறையன், பாட்டுக்கள் பத்தும் படித்து முடிந்ததும் ஒன்றும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றான் என்றால், புலவர் அவனைப் பற்றி என்ன எண்ண முடியும்? அப்பாட்டுக்களை அவன் விரும்பவில்லை யானால், பத்துப் பாட்டும் படித்துப் பொருள் கூறி முடியும் வரை அவ்வளவு ஆர்வத்தோடும் அன்போடும் அமைதியாகக் கேட்டுக் கொண்டி ருக்க மாட்டானல்லவா? அவனைப் பற்றிப் புலவர்கள் புகழ்ந்து கூறியதற்கு மாறாக வன்றோ உள்ளது அவன் செயல்! இந்நிலையில் புலவர் ஒன்றுந் தோன்றாமல் இருத்தல் அன்றி வேறு என்ன செய்வார் பாவம்! தன்னந் தனியே விடப்பட்ட சின்னஞ் சிறு குழந்தை போல, என்னென்னவோ எண்ணாத வெல்லாம் எண்ணியவராய் ஏக்கத் துடன் இருந்தார் அப் புலவர் பெருந்தகை. இவ்வாறு புலவர் இருக்கும் போது, உள்ளே ஒருவனாகச் சென்ற சேரலர் பெருந்தகை, தன் தேவியுடன் வெளியே வந்தான். வந்தவன் புலவரை வணங்கி, "தண்டமிழ்ப் பெரியீர்! நான் தங்கள் தமிழுக்கு, தமிழ்ப் பாட்டுக்களுக்கு ஏற்ற பரிசு கொடுக்கும் தகுதியுடையவனாக இல்லை. நான் அன்போடு கொடுப்பதைத் தாங்கள் மறுக்காமல் ஏற்றருளல் வேண்டும். கோயிலில் உள்ள எல்லாப் பொருளையும் தாங்கள் அன்போடு எடுத்துக் கொள்ளுங்கள். அவை தங்களுக்கு உரியவை. இக்கோயிலும் (அரண்மனை) தங்கள் உடைமையே. அதோடு, நான் மனமுவந்து கையாரக் கொடுக்கும் இதையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்"என்று, ஒன்பது நூறாயிரம் (900000) பொற் காசுகள் கொண்ட முடிப் பொன்றை நம் புலவரிடம் கொடுத்தான். அவன் அத்துடன் நின்றானா? இல்லை. வழி வழியாகச் சேர அரசமரபுக்கு உரிமை உடையதாக உள்ள அரசு கட்டிலையும் நம் புலவர் பெருமானுக்குப் பரிசாகக் கொடுத்தான். இதன் பொருளென்ன? தான் இருந்து அரசு புரியும் அந்த அரியணையைக் கொடுத்தான் என்றால், புலவர்க்குத் தன் அரசையே பாட்டின் பரிசாகக் கொடுத்தான் என்பது தானே பொருள்? அரசையே கொடுத்தான் என்றால், அவ்வரசுக் குரிய நாடு, நகர், வீடு, பொருள் எல்லாம் கொடுத்ததாகு மன்றோ? ஆம், ஒரு பத்துப்பாட்டுக்குப் பரிசாக அவ்வளவுங் கொடுத்தான் அக்கோ. அப்பத்துப் பாட்டும் 181 அடிகளே (வரி) உடையன. பொற்காசே அடி யொன்றுக்கு 4972 ஆகிறது. என்னே இரும் பொறையின் பெருந்தமிழ்ப் பற்று! நூற்றெண்பத்தோ ரடிகட்கா ஒன்பது நூறாயிரம் பொற்காசும், ஒரு நாடும், அதன் அரசும் பரிசு! பத்துப் பாட்டுக்கும் பொருள் கூறி முடித்ததும், இரும் பொறை ஒன்றும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றபோது புலவர் ஒன்றும் தோன்றாமல் இருந்தது போலவே, இப்போதும் இரும் பொறையின் செயல் அவருக்கு ஒன்றுந் தோன்றாத தாகவே இருந்தது. ஆனால், புலவர் பெருந்தகை என்ன செய்தார்? சேர மன்னன் உவந்தளித்த அரசுகட்டிலில் இனிதமர்ந்து, சேர நாட்டை அரசாளத் தொடங்கினரா என்ன? அத்தகைய பண்புடையவரா அப் பழந்தமிழ்ப் புலவர்பெருந்தகை! "மன்னர் பெருமான்! மகிழ்ந்தேன்; உன் தாய்மொழிப் பற்றினை, தமிழ்ப் பற்றினை மெச்சுகிறேன்; மனமாரப் பாராட்டுகிறேன்; வளர்கநின் வண்மை! வாழ்க நின் தமிழுள்ளம்! என் பாட்டுக்களுக்காக நீ கொடுத்த பரிசுகள் அனைத்தையும் நான் அன்போடு மனமுவந்து ஏற்றுக் கொண்டேன். இப்போது நான் இந்நாட்டின் மன்னன். நீ எனது குடிமகன்; என் கட்டளைப்படி நடக்க வேண்டியவன். இந்தா எனது அரசை நான் உனக்குக் கொடுக்கிறேன். எதற்கு? உன் தாய்மொழிப் பற்றுக்காக. நீ அதை ஏற்று நன்கு ஆட்சிபுரிந்து வருவாயாக"என்று, பழையபடி அரசனை அரசனாக்கினார் புலவர். பெருஞ்சேரலிரும்பொறை, புலவர் சொல்லை மறுக்க முடியாதவனாய், அவர் விருப்பப் படியே அரசை ஏற்றுக் கொண்டான். ஆனால் ,அவன் அரசைப் பெற்றுக் கொண்டு புலவரை வந்த வழியே செல்லுங்கள் என்று அனுப்பிவிட வில்லை. பின் என்செய்தான் அச் சேரர் பெருந்தகை? புலவர் திருப்பிக் கொடுத்த அரசை ஏற்றுக்கொண்டு, வேண்டிய அளவு பரிசில் கொடுத்துச் சென்று வாருங்கள் எனப் புலவரை அனுப்பி விட்டனனா என்ன? அதுதானே முறையும்? ஆனால், நம் இரும் பொறை அவ்வாறு செய்ய வில்லை. பின் என்ன செய்தான்? புலவர் அன்புடன் உவந்தளித்த அரசை ஏற்றுக் கொண்ட தும் பெருஞ்சேரலிரும்பொறை புலவரை வணங்கி, "பெரியீர்! தமிழர் வாழத் தாம் வாழும் தண்டமிழ்ப் பெருந்தகையீராகிய தாங்கள் எனது தாழ்மையான வேண்டுகோளை மறுக்காமல் ஏற்றருளல் வேண்டும். அது தங்களது நீங்காக் கடமையும் ஆகும். தாங்கள் உளமுவந்து அளித்த அரசை நான் இனிது நடத்தத் தாங்கள் எனக்குத் துணைபுரிதல் வேண்டும். இதுவே எனது வேண்டுகோளாகும்"என்று வேண்டிக் கொண்டான். அரிசில் கிழார், பெருஞ்சேரலின் வேண்டுகோட் கிணங்கி அவனுக்கு அமைச்சுரிமை பூண்டிருந்தார். இத்தகைய தலைவரையும் புலவரையும் நம் நாடு ஒருகால் பெற்று இன்புறுதலுங் கூடுமோ! தமிழ்ப் பாட்டுக்குத் தன் அரசையே பரிசாகக் கொடுத்த சேரமன்னன் ஆண்ட தமிழ்நாடுதான் இன்று தமிழரைத் தம் இனமென அறியாத மக்கள் வாழும் நாடாக இருந்துவருகிறது. என்னே காலச்சுழல்!  4. குலவித்தை சோழநாட்டின் தலைநகர் காவிரிப்பூம்பட்டினம் என்று முன்பு கண்டோம். இது கடற்கரைப்பட்டினம். உறையூர் என்பது சோழநாட்டின் உள்நாட்டுத் தலைநகர். இதுவே சோழநாட்டின் பழைய தலைநகராகும். 'ஊரெனப் படுவது உறையூர்' என்னும் சிறப்பினையுடையது உறையூர். இது உறந்தை எனவும் வழங்கிற்று. உறையூர் இன்று, திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியாக உள்ளது. காவிரிப்பூம் பட்டினம் கடலில் மூழ்கிவிட்டது, சோழமன்னர்களில் சீரும் சிறப்பும் உடையவன் இரண்டாம் கரிகாலன் என்னும் சோழ மன்னன் ஆவான். கரிகால்வளவன், கரிகாற் பெருவளத்தான் எனவும் இவன் அழைக்கப்படுவான். இவன், உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்னும் சோழன் மகன். காவிரிப்பூம் பட்டினத்தைச் சிறப்புடைய அழகிய பெரு நகராக்கியவன் இக்கரிகாலனே யாவன். கரிகாலன் தன் தாய்மொழியாம் தமிழ்மொழியிடத்து அளவுகடந்த அன்புடையவன்; தமிழ்ப் புலவர்கட்கு வாரி வாரி வழங்கித் தமிழ் வளர்த்து வந்தான். சங்க இலக்கியங்களான பத்துப் பாட்டைச் சேர்ந்த பட்டினப் பாலை, பொருநராற்றுப்படை என்னும் பழந்தமிழ் நூல்களின் பாட்டுடைத் தலைவன் இவனே. தன்மீது பட்டினப் பாலையைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் பெருமானுக்குப் பதினாறு நூறாயிரம் (1600000) பொன்னோடு, உறையூர் அரண்மனையுள் இருந்த பதினாறுகால் மண்டபத்தையும் பரிசாகத் தந்து அவரைப் பெருமைப்படுத்தினான் கரிகாலன். கரிகால்வளவன், இத்தகைய தாய்மொழிப் பற்றும் கொடைக் குணமும் உடைமையோடு சிறந்த வீரனாகவும் விளங்கினான்; தமிழரின் வீரச் சிறப்பிற்கோர் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தான். சங்ககாலச் சோழமன்னர்களில் பேராற்றலும் பெரும் புகழும் உடையவன் இவனே. இவன் வடக்கே இமயம்வரைப் படையெடுத்துச் சென்று எதிர்த்த அரசர்களெல்லாரையும் வென்றான். இவன் அத்துடன் அமையவில்லை. இமயத்தையும் கடந்து சென்ற போது, பனி யுறைந்து மேலும் செல்ல முடியாது தடுத்தமை யால், இமய நெற்றியில் சோழ அரச முத்திரையான புலியைப் பொறித்து மீண்டான். இன்றும் திபேத்துக்கும் சிக்கிமுக்கும் இடையிலுள்ள மலைத்தொடருக்கு, சோழன் மலைத்தொடர் என்றும், அங்குள்ள கணவாய்க்கு, சோழன் கணவாய் என்றும் பெயர்கள் காணப் படுகின்றனவாம். இமயத்தில் புலிபொறித்து மீண்டுவரும் போது நம் சோழர் பெருந்தகைக்கு, வச்சிரநாட்டு வேந்தன் கொற்றப் பந்தரும், மகத நாட்டு மன்னன் பட்டிமண்டபமும், அவந்திநாட்டரசன் தோரணவாயிலும் காணிக்கையாகக் கொடுத்தனர். இவை பொன்னாலும் மணியாலும் நுண்ணிய வேலைப் பாட்டுடன் செய்யப் பட்டவை; அழகுக்காக வைக்கத் தக்கவை. கரிகாலன் அவ்வெற்றி வரிசைகளுடன் சோழநாட்டை அடைந்தான். காவிரியாறு, அன்று வெள்ளப் பெருக்குக் காலத்தே இருபக்கமும் உள்ள வயல்களில் சென்று பயிரை அழித்து வந்தது. காவிரியாற்றின் இரு பக்கமும் கரை கட்டி, அவ்வாறு வயலுக்குள் வெள்ளம் செல்லாமல் செய்தவன் இக்கரிகாலனே யாவன். அதனால் இவன், 'காவிரிக்குக் கரை கண்ட சோழன்' எனப் புலவர்களால் பாராட்டப் பெற்றான். இன்று தமிழ் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் வேலையில்லாத் திண்டாட்டம் என்கின்றனர். சிலர் தாய் நாடாம் தமிழ்நாட்டில் வேலை இல்லாமல், இங்கு வாழவழியின்றி இலங்கையில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அன்று கரிகாலன் காவிரிக்குக் கரைகட்ட இங்கு ஆளில்லாமல், இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான பேர்களை அழைத்து வந்து காவிரிக்குக் கரைகள் கட்டினான். ஆற்றில் அணைகள் கட்டியும், ஆற்றிற்குக் கரைகள் கட்டியும் சோழநாட்டை வளப்படுத்தியவன், 'சோழவளநாடு சோறு டைத்து' என்னும் பெருமைக்குரிய தாக்கியவன் நம் கரிகாலனே யாவன். கரிகாலனது இளமைப்பருவ வரலாறு, சிறுவர்களாகிய நீங்கள் படித்து இன்புறத்தக்கதாக உள்ளதோடு, உங்கள் எதிர்கால வாழ்வுக்கு ஓர் எடுத்துக் காட்டாகவும் விளங்குகிறது. கரிகாலன் தன்தாய்வயிற்றில் இருக்கும்போதே தன் தந்தையை இழந்துவிட்டான். அதனால், 'இவன் பிறக்கும் போதே அரசுரிமை எய்திப் பிறந்தவன்' என்று புலவர்கள் இவனைப் பாராட்டு கின்றனர். இவ்வாறு இவன் தாய்வயிற்றி லிருக்கும் போதே அரசுரிமை எய்திப் பிறந்ததால், இவன் பங்காளிகள் சோழ நாட்டு ஆட்சியைக் கைப்பற்ற விரும்பினர். அதனால், அவர்கள் ஒன்று கூடி, இவன் இளமையாக இருக்கும் போது வஞ்சனையாக இவனைப் பிடித்துக்கொண்டு போய் வேறோர் ஊரில் சிறை வைத்தனர். கரிகாலன் சில ஆண்டுகள் சிறையிலிருந்து வருந்தினான். புலிக்குட்டி கூண்டில் அடைக்கப்பட்டு வளர்ந்து வருவது போல, இவன் சிறையில் அடைக்கப்பட்டு வளர்ந்துவந்தான். இவன் வளரவளர வலிமையும் வீரமும் மானமும் ஒருங்கே வளர்ந்து வந்தன. சிறையைவிட்டு வெளியேறுங் காலத்தை இவன் எதிர்நோக்கிக்கொண்டிருந்தான். இவ்வாறு கரிகாலன் சிறையைவிட்டு வெளியேற முயல்வதை அறிந்த பகைவர்கள், அவனைக் கொன்றுவிடவே முடிவு செய்து, அவனிருந்த சிறைச்சாலைக்குத் தீ வைத்தனர். கரிகாலன் தன் வலியினாலும் முயற்சியினாலும் மதிலேறிக் குதித்து வெளியேறி, அந்த இளமைப் பருவத்திலேயே எதிர்த்த பகைவரை வென்று உறையூரை அடைந்தான். கரிகாலன் சிறையினின்று தப்புவதற்கு இவனது தாய்மாமனும், தமிழ்ப்பெரும் புலவருமான இரும் பிடர்த்தலையார் என்பார் பெருந்துணையாக இருந்தார். பகைவரை வென்று சிறை மீண்ட கரிகாலன், அவ்விளமைப் பருவத்திலேயே சோழப் பேரரசனாக முடிசூட்டப் பெற்றான். அரசன் இல்லாது ஏங்கிய சோழநாட்டுப் பெருங்குடிமக்கள், மிக்க இளமையிலேயே பெருவீரனாக விளங்கிய தங்கள் இளவரசனது பேராண்மையைக் கண்டு வியந்து அவனைத் தங்கள் அரசனாக முடிசூட்டி அரியணையிலமர்த்தினர். அரியணை ஏறிய அவனும் திறம்பட ஆட்சிபுரிந்து செங்கோல் வேந்தனாகத் திகழ்ந்தான். 'குலவித்தை கல்லாமல் பாகம் படும்' என்பது ஒரு பழமொழி. அதாவது, பெற்றோர் தொழில், செய்து பழகாம லேயே அவர்தம் மக்களுக்குச் சரிபாதி தானாகவே அமையும் என்பதாம். பாகம் - சரிபாதி. இதற்கு நம் கரிகாலன் சிறந்த எடுத்துக்காட்டாக இலங்கினான். பெற்றோர் செய்யும் தொழிலை அடிக்கடி நேரில் பார்ப்பதால் பிள்ளைகளுக்கு அத்தொழிற் பழக்கம் உண்டாவது இயல்பே. தந்தை ஆட்சிபுரியும்போது, அரசியல் அலுவல் பார்க்கும் போது, கூட இருந்து பழகுவதால் அரசகுமாரர்க்கு ஆட்சித் தொழிற் பழக்கம் உண்டாவது இயற்கையே. ஆனால், நம் கரிகாலனோ தாய்வயிற்றி லிருக்கும்போதே தந்தையை இழந்து விட்டான்; சில ஆண்டுகளைச் சிறையில் கழித்தான். ஆட்சி செய்வது எப்படி என்பதை ஒருநாட்கூடக் கண்டறி யாதவன் அவன். அப்படி யிருந்தும், பல ஆண்டுகள் தந்தையின் கீழ் இளவரசனாக இருந்து அரசியல் முறையைப் பழகியவன் போல, நாட்டுமக்கள் மகிழும் படி நல்லாட்சி புரிந்தான் என்றால், அது கரிகாலனது தனிப்பட்ட திறமையாகும் அல்லவா? ஆம், அத்தகு தனித்திறமையுடையவனே நம் கரிகாலன். உறந்தைப்பேரவை என்பது உறையூரில் இருந்த அறங் கூறவையம் ஆகும். அறங்கூறவையம் - நீதி மன்றம். அது பழந்தமிழ்ப் புலவர்களால் சிறப்பித்துப் பாடும் அத்தகு சிறப்பு டையதாகும். சோழ மன்னரின் செங்கோன்மைக்கு, ஆட்சித் திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது அப்பேரவை. ஒருநாள் அப்பேரவை கூடிற்று. அதற்கு இளைஞனாகிய நம் கரிகாலன் தலைமை தாங்கினான். அவ்வறங்கூற வையத்தில் தங்கள் வழக்கை உரைக்க முதியோர் இருவர் வந்திருந்தனர். மிக்க இளைமைப் பருவத்தானாகிய கரிகாலன் அப்பேரவைத் தலை வனாக வீற்றிருப்பதைக் கண்ட அம்முதியோர், மிகச் சிக்கலான தங்கள் வழக்கை அவ்விளைஞனால் தீர்க்க முடியாதென எண்ணினார். தாங்கள் இருவரும் கூறுவதைக் கேட்டு, நடுவு நிலைமையாகத் தீர்ப்புக் கூறத்தக்க அறிவும் ஆற்றலும் அவ்விளை ஞனுக்கு இரா என்று அவர்கள் கருதினர். அதனால், அவர்கள் தங்களுக்குள் என்னவோ மறைமுகமாகப் பேசிக் கொண்டனர். அதுகண்ட கரிகாலன், அம்முதியோர் இருவரையும் பார்த்து, "முதியீர்! நீங்கள் இருவரும் உங்களுக்குள் என்ன பேசிக் கொள்கிறீர்கள்? உங்களுக்கு உண்டான ஐயப் பாட்டை வாய் விட்டே கூறுங்கள். இது அறங்கூறவையம். இங்கு யார்க்கும் தங்கள் கருத்தைக் கூற உரிமை உண்டு. உங்கள் ஐயப்பாடென்ன? உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன செய்யவேண்டும்? உங்கள் குறைபாடென்ன? உள்ளதை ஒளியாமல் சொல்லுங்கள்"என்றான். அதுகேட்ட அம்முதியோர், "அரசே! உறந்தைப் பேரவை என்பது தனிச்சிறப்புடையது; நீதிக்கும் நேர்மைக்கும் இருப்பிட மானது. தமிழகத்தில் இது போன்ற ஓர் அறங் கூறவையம் இல்லை என்பது புலவர்கள் கண்ட முடிவு. இதுகாறும், ஆண்டிலும் அறிவிலும் பழக்கத்திலும் மூத்த முதியோரே தலைமை தாங்கி, எத்தகைய சிக்கலான வழக்குக்களையும் எளிதில் தீர்த்து இப்பேர வைக்குப் பெருமை உண்டாக்கி வந்தனர். ஆனால், தாங்களோ மிகவும் இளைஞர். இத்தகைய அறங்கூற வைக்குத் தலைமை தாங்கும் தகுதியில்லாதவர். எங்கள் வழக்கோ மிகவும் சிக்கலானது; மிகுந்த பழக்கமுடையவருக்கே மலைப்பைத் தரக்கூடியது. இளைஞராகிய தங்களால் எவ்வாறு அவ்வழக்கைத் தீர்க்க முடியும் என்பது பற்றியே பேசிக் கொண்டோம்"என்றனர். அம்முதியோர் கூற்றைக் கேட்ட கரிகாலன், "பெரியீர்! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. அவ்வாறு எண்ணிய தில் தப்பொன்றும் இல்லை. நீங்கள் இருவரும் இன்று போய் நாளை வாருங்கள். ஆண்டிலும் அறிவிலும் பழக்கத்திலும் பண் பாட்டிலும் முதிர்ந்த தகுதியான ஒருவரைக் கொண்டு உங்கள் வழக்கைத் தீர்த்து வைக்கிறேன். இப்பேரவையின் பெருமையைக் குறைக்க நானும் விரும்ப வில்லை."என்றான். அம்முதியோர் இருவரும் 'சரி' என்று சென்றனர். அத்துடன் அவையைக் கலைத்துவிட்டான் கரிகாலன். அறங்கூறவையிலிருந்து சென்றதும் கரிகாலன் பலவாறு எண்ணினான். "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு" என்றார் வள்ளுவர். சிறிதும் எண்ணிப் பாராமல் அம் முதியோர் களிடம் அவ்வாறு கூறிவிட்டேன். அத்தகைய தகுதியுடைய நடுவர் ஒருவரை எங்கு தேடுவது? அதுவும் ஒருநாளில். மிகச் சிக்கலான வழக்கு என்று வேறு அவர்கள் சொன்னார்கள். நாம் ஒருவரைத் தலைமை தாங்கச் சொல்லி, அவ்விருவர் சொல்லையுங் கேட்டு அவர் சரியாகத் தீர்ப்புக் கூறாவிட்டால் நம் பெயர் கெடுவதோடு, நம் அறங்கூறவையின் பெயருமல்லவோ கெடும்? தொடங்கிய நாள் முதல் சீருஞ்சிறப்புடன் நடந்து வந்த இவ்வுறந்தைப் பேரவையின் பெயரை, பெருமையைக் கரிகாலன் கெடுத்துவிட்டான் என்னும் பழிச்சொல்லுக் கல்லவோ ஆளாக நேரிடும்?"என்று பலவாறு எண்ணினான். முடிவில் அவனுக்கு ஓர் எண்ணந் தோன்றியது. அவ்வாறே செய்வதென முடிவு செய்தான். இயல், இசை, நாடகம் எனத் தமிழ் மூன்று வகைப்படும். இயற்றமிழை வளர்த்துவந்தவர் புலவர்கள். இசை நாடகத் தமிழை வளர்த்து வந்தவர் பாணர், கூத்தர், பொருநர் என்போராவர். இவர்களில் பாணர் - இசைபாடுவர். கூத்தர் - கூத்தாடுபவர். கூத்து - நாடகம். பொருநர் - நாடகத்தில் வரும் நாடக உறுப்பினர் போல் கோலம் பூண்டு நடிப்பவர். கோலம் - வேடம். இளமைப் பருவமுள்ள அப்பொருநர், கிழவர் போல் கோலம் பூண்டு நடிப்பதைக் கண்டுகளித்தவ னல்லவா நம் கரிகாலன்! தானும் அப்பொருநர்போல் நடிக்க முடிவு செய்தான். அவ்வாறே, ஒரு பொருநனை வரவழைத்தான். குடுகுடு கிழவன் போலத் தன்னை ஆக்கிவிடுமாறு கூறினான். அப் பொருநன், தூய வெள்ளை நிறமுடைய நரைமயிரைக் கொண்டு தாடி, மீசை, தலைமயிர் எல்லாம் வைத்து ஒட்டிக் கட்டி, முகத்தில் சுருக்கங்கள் உண்டாகும் படியான பூச்சைப் பூசி, இளைஞனாகிய கரிகாலனைக் குடுகுடுகிழவன் ஆக்கினான். கரிகாலன் நிலைக்கண்ணாடியில் பார்த்தான். அவனாலேயே அக் கிழ உருவத்தைத் தானென்று கண்டு கொள்ள முடிய வில்லை; மிக்க மகிழ்ச்சி யடைந்தான். அக் கிழக்கோலத்தைக் களைந்து வைத்து விட்டு அமைதியாகத் தூங்கினான். மறுநாள் அறங்கூறவையங் கூடிற்று. அம்முதியோர் இருவரும் அங்கு வந்தனர். தங்களைவிட நரைத்துப்பழுத்த முதியோர் ஒருவர் அவைத்தலைவராக வீற்றிருப்பதைக் கண்டனர்; பெரு மகிழ்ச்சி கொண்டனர்; தங்கள் வழக்கைத் தீர்ப்பதற்குத் தகுதி யானவர் இவரே என எண்ணினர். அவ்வழக்காளிகள் இருவரும் தங்கள் வழக்கை எடுத் துரைத்தனர். அவைத் தலைவர், அவ்விருவர்தம் சொல்லையும் நன்கு கேட்டனர்; பலமுறை திருப்பித் திருப்பிக் கேட்டனர்; இருவர் சொல்லையும் சீர்தூக்கிப் பார்த்துத் தீர்ப்புக் கூறினர். அம் முதியோர் இருவரும் அத்தீர்ப்பைச் சரியென்று ஒப்புக்கொண்டனர். சரியாகத் தங்கள் வழக்கைக் கேட்டு நல்ல தீர்ப்புக் கூறியதற்காக அந்த அவைத் தலைவரைப் பாராட்டினர்; நன்றியுங் கூறினர். அவைத் தலைவர் தம் நரைமுடியை எடுத்தனர். முதல் நாள் அவைத்தலைமை தாங்கிய தங்கள் அரசனே அம்முது பெரு நடுவர் என்பதை அறிந்த அம்முதியோர் இருவரும் அக மிக மகிழ்ந்தனர். தங்கள் அரசனது அறிவுத் திறனையும் அரசியலறி வையும் பலபடப் பாராட்டினர்; சோழ நாட்டு மக்களுக்குக் கிடைத்துள்ள பெரும்பேற்றை எண்ணி யெண்ணி உவந்தனர்; 'குலவித்தை கல்லாமல் பாகம் படும்' என்பதை இன்று நேரில் கண்டறிந்தோம் என்று புகழ்ந்து, அரசனிடம் விடை பெற்றுச் சென்றனர். 'நரைமுடித்து முறைசெய்தான் கரிகாலன்'எனப் புலவர்கள் புகழ்ந்தனர். பார்த்தீர்களா கரிகாலனது இளமைப் பருவ வரலாற்றினை? குலவித்தையை! அக்கரிகாலனைப் போன்ற கூரிய அறிவுடைய இளைஞர்கள் நம் நாட்டுக்கு மிகப்பலர் தேவை!  5. அடாது செய்தார் தமிழகத்தில் என்று ஆட்சிமுறை ஏற்பட்டதோ அன்று முதல் தமிழகம், சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர்களால் முறைதிறம்பாது ஆளப்பட்டு வந்தது. அதனால் பழந்தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என முப்பெரும் பிரிவாகப் பிரிந்திருந்தது. அப்பழந்தமிழ் நாடுகள் மூன்றனுள் ஒன்றான சேரநாடு என்பது, இன்றைய மலையாள நாடேயாகும். அது மேற்கு மலைத் தொடருக்கும் மேல் கடலுக்கும் இடைப்பட்ட தாகும். சேரநாடு மிக்க வளம் பொருந்திய நாடு. அங்கு மழை மிகுதியாகப் பெய்யும். அது காண்போர் கண்ணைக் கவரும் இயற்கைக்காட்சி நிறைந்த நாடு. சேரநாட்டின் தலைநகர் வஞ்சி என்பது. இவ்வஞ்சிமா நகர்க்கு, கருவூர் என்ற பெயரும் உண்டு. சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினம் காவிரியாற்றின் கரையில், காவிரியாறு கடலொடு கலக்கும் இடத்தில் இருந்த தென்பதை முன்பு கண்டோம். அதுபோலவே, சேரநாட்டின் தலைநகரான வஞ்சி என்பது, பேரியாற்றின் கரையில் இருந்தது. ஆனால் இது, பேரியாறு கடலொடு கலக்கும் இடத்தில் இல்லை; சிறிது உள்ளே தள்ளி உள்நாட்டு நகராக இருந்தது. முசிறி என்பது புகார் போல, பேரியாறு கடலொடு கலக்கும் இடத்தில் இருந்தது. முசிறி, வஞ்சிமா நகரின் ஒரு பகுதியே யாகும். காவிரியாறு, மேற்குமலைத் தொடரில் தோன்றிச் சோழ நாட்டை வளஞ்செய்து கொண்டு கீழ்கடலில் கலக்கிறது. அங்ஙனமே, பேரியாறும் மேற்குமலைத் தொடரில் தோன்றிச் சேரநாட்டை வளஞ்செய்து கொண்டு மேல்கடலில் கலக்கிறது. இது பெரியாறு எனவும் வழங்கும். பொருநையாறு என்பது, இதன் மறுபெயர். வஞ்சியின் ஒரு பகுதியாகிய முசிறி, சேர நாட்டின் சிறந்த துறைமுகபட்டினம் ஆகும். சேர நாட்டில் இன்னும் சில துறைமுக பட்டினங்கள் இருந்தன. முசிறியின் வடக்கில் தொண்டி, மாந்தை, நறவு என்ற துறைமுகப் பட்டினங்களும், முசிறியின் தெற்கில் காந்தளூர், விழிஞம் என்ற துறைமுகப் பட்டினங்களும் இருந்தன. இத் துறைமுகங்களி லிருந்தே அக்காலத்தே எகிப்து, கிரேக்கம், உரோம், பாபிலோன், அரேபியா முதலிய மேனாடுகளுடன் சேரர்கள் கடல்வாணிகம் செய்துவந்தனர். இத்துறைமுகப் பட்டினங்கள் அன்றுபெருஞ்செல்வக் கருவூலங் களாக விளங்கின. வஞ்சிமா நகரிலிருந்து சேரநாட்டினைச் சீருஞ் சிறப்புடன் ஆண்டுவந்த சேரமன்னர்களுள், இமயவரம்பன், நெடுஞ் சேரலாதன் என்பவன் ஒருவன். இவன் வடக்கே இமயமலை வரை வென்று ஆண்டு வந்தான். அதனாலேயே இவன், இமய வரம்பன் என்ற சிறப்புப்பெயர் பெற்றான். இமயவரம்பன் - இமயமலையைத் தன் ஆட்சியின் வடஎல்லையாக உடையவன் என்பது பொருள். வரம்பு - எல்லை. இவனைக் 'குமரியொடு வட இமயத் தொருமொழிவைத் துலகாண்ட சேரன்' என்கின்றது, சிலப்பதிகாரம். தெற்கே குமரியாற்றிலிருந்து வடக்கே இமயமலைவரை ஆணை செலுத்தினவன் என்பதாம். இவன், இமயத்தில் சேர அரச முத்திரையான வில்லைப் பொறித்த வெற்றிவீரன் ஆவான். ஒருநாள் பகல் பத்துமணி இருக்கும். வானளாவிய அழகிய மாடங்களையுடைய வஞ்சிமா நகரின் தெருவில் ஓர் ஊர்வலம் சென்றது. இடியென வெற்றி முரசு முழங்கிற்று. சேரஅரசமரபுக் கொடியான விற்கொடிகள் பறவைகள் போல உயரத்தே பறந்து சென்றன. வாளேந்திய தமிழ்மறவர்கள், அவ்வூர்வலத்தின் முன்னும் பின்னும் அணி வகுத்துச் சென்றனர். 'வஞ்சி வேந்தன் வாழ்க! வானவர் தோன்றல் வாழ்க! பொருநைத் துறைவன் வாழ்க! சேரலர் பெருமான் வாழ்க! இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வாழ்க! வாழ்க!' என்னும் வாழ்த்தொலி, வான்முகடு பிளவு படும்படி ஒலித்தது. 'அச்சமில்லை அச்சமில்லை அச்சமினி இல்லையே' என்ற ஒலி, அவ்வாழ்த்தொலியை முந்தியது. 'வெற்றி வெற்றி! நமதே வெற்றி!' என்ற ஒலி, அதனையும் முந்தியது. ஊர்வலத்தின் ஒலிகேட்டுத் தெருவின் இருபுறமும் உள்ள வீடுகளிலிருந்து மகளிர் வெளியே வந்து கூடினர். தங்கள் அரசன் நெடுஞ்சேரலாதன் ஊர்வலம் செல்கின்றான். அவ்வூர்வலக் காட்சியைக் கண்டுகளிக்கலா மென்று அவ்வஞ்சி மகளிர் வீட்டுக் குள்ளிருந்து வெளியே வந்தனர். ஆனால், அவ்வூர் வலத்தில் சேரமன்னன் செல்லவில்லை. ஆடல் பாடல் இல்லை. பின்னர், அவ்வஞ்சி மகளிர் கண்ட காட்சி என்ன? ஓர் அயல் நாட்டு அரசனும், நூற்றுக்கணக்கான அயல் நாட்டு வீரர்களும் ஊர்வலமாகச் செல்வதைக் கண்டனர். அவர்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். எவ்வாறு அவர்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்டனர்? அவர்களுடைய இரண்டு கைகளும் பின்கட்டாகக் கட்டப் பட்டிருந்தன. மழையில் நனைந்தவரின் தலையிலிருந்து மழைநீர் முகத்தில் வடிவது போல, அவர்கள் தலையிலிருந்து தண்ணீர் போல என்னவோ முகத்தில் வடிந்துகொண் டிருந்தது. அவ்வரசன் என்ன அவ்வாறு தேரின்மேலா சென்றான்? இல்லை, தெருவில் நடந்து சென்றான். அவன் தலையில் மணி முடியில்லை; மார்பில் மலர்மாலை யில்லை. அவ்வீரர்கள் கையில் வாளோ வேலோ இல்லை. அவ்வரசனும் வீரரும் தமிழ் மறவர்களால் அவ்வாறு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இன்னார் என்பதை அறிந்த அவ்வஞ்சி மகளிர், "அழிந்து போக; இவர்கள் செய்த கொடுமை என்ன கொஞ்சமா நஞ்சமா! இந்தப் பதர்களுக்கு இப்படித்தான் வேண்டும்; இன்னமும் வேண்டும். குழியிலே போட; விழிக்கிறதைப்பாரு ஆந்தைகள் போல! 'அடாது செய்தார் படாது படுவர்' என்று, சும்மாவா சொல்லி வைத்தார்கள் பெரியவர்கள்?" "அடேயப்பா! எவ்வளவு அட்டூழியம்! அடிமாண்டு போக. எங்கு பார்த்தாலும் கொள்ளை கொலை! இதே தொல்லை! நம்ம பாட்டில் நாம் சும்மா இருக்க விட்டார்களா என்ன?" "ஆடு மாடுகளைக்கூடத் தனியாக மேய விடுவதற் கில்லை; திருடர்கள்! காட்டில் மேய்ந்த எங்கள் மாடுகளை யெல்லாம் இந்தக் கள்வர்கள் அன்றோ பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள்? எங்கள் பண்ணையத்தையே முடக்கி விட்டார்கள் படுபாவிகள்!" "ஏன், ஒண்டி ஒருத்தி தனியாக எங்காவது போக முடிந்ததா என்ன? தொலைந்தது இன்றோடு நம்மைப் பிடித்த தொல்லை!" "அன்று மாந்தைத் துறைமுகத்தை நோக்கி வந்து கொண் டிருந்த நமது கப்பலிற் புகுந்து கொள்ளையடித்தது இக் கொடிய வர்கள்தாமே?" "அந்தக் கடம்பர் பேச்சைக்கேட்டு இவர்கள் கெட்டார்கள். இவர்களை ஏவி விட்டுவிட்டு அவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். 'கேட்டார் பேச்சைக் கேட்டால் நாட்டார் பின்னே போக வேண்டியதுதான்' என்று சும்மாவா பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்?" என்று, ஒருத்திக் கொருத்தி பேசிக்கொண்டனர். அவ் வஞ்சியரின் அத்தகு ஏச்சையும் பேச்சையும் கேட்டுக் கொண்டே அவ்வயல் நாடர்கள் தெருவில் நடந்து சென்றனர். ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அவ்வரசன் யார்? சேரமன்னனால் அழைக்கப்பட்டுச் சேரநாட்டைச் சுற்றிப்பார்க்க வந்த அயல் நாட்டரசனா? அப்படித் தங்கள் அரசனால் அழைக்கப் பட்டு அவன் வந்திருந்தால், ஊர்மகளிர் எதற்காக அவ்வாறு என்னென்னவோ சொல்லி ஏசுகின்றனர்? கண்டபடி பேசு கின்றனர்? அவ்வரசன் அவ்வாறு சேரமன்னனால் அழைக்கப்பட்டு வந்த சேரநாட்டு நட்பரசன் அல்லன். அவன் தமிழ் நாட்டின் பகையரசன். அவ்வரசனும் மறவரும் அடிக்கடி சேர நாட்டில் புகுந்து கொள்ளையடித்து வந்த கொடியவர்கள்! உண்மையில் அவன் அரசன் அல்லன்; அக்கொள்ளையர் கூட்டத்தின் தலைவன். யார் அவர்கள்? அவர்கள் யவனர்கள். யவனர் என்பார் யார்? எகிப்து, கிரேக்கம், உரோம், பாபிலோன், பாரசீகம், அரேபியா முதலிய மேனாடுகளுடன் சங்ககாலத் தமிழர் கடல் வாணிகம் செய்துவந்தனர். ஆனால், எகிப்தியர், கிரேக்கர், உரோமர் முதலிய அம்மேனாட்டினர் பெயர் சங்க நூல்களிற் காணப்படவில்லை. காரணம், அக்காலத் தமிழர்கள், அம்மேல் நாட்டினர் எல்லாரையும் பொதுவாக, யவனர் என்று அழைத்து வந்தமையேயாகும். யவனர் என்பது, மேல்நாட்டினர் எல்லாரையும் குறிக்கும் பொதுப் பெயர் ஆகும். யவனர் - மேனாட்டினர். யவனம் என்பது அம் மேல் நாடுகளுள் ஒன்றெனவும் கூறுவர். யவனர்கள் தமிழ் நாட்டுடன் வாணிகஞ் செய்யத் தொடங்கிய அக்காலந்தொட்டே, யவனர் பலர் தமிழ் நாட்டில் குடியேறிப் பல தொழில்கள் செய்து வாழ்ந்து வந்தனர். தமிழரசர்களின் அரண்மனை வாயிற் காவலராகவும், படைவீரராகவும், மற்றும் பலவகையான தொழில்கள் செய்து கொண்டும் தமிழ் நாட்டில் இருந்து வந்தனர். அந்த யவனர்கள் செய்து வந்த தொழில்களில் தச்சு, கொல், நகைசெய்தல், சிற்பம், ஓவியம் என்பன முதன்மையான தொழில்களாகும். இன்று தமிழ்நாட்டுத் தச்சுத்தொழிலை மலையாளத் தச்சர்கள் கைக்கொண்டுள்ளது போலவே, அன்று யவனத் தச்சர்கள் கைக் கொண்டிருந்தனர். யவனர் செய்த பாவை விளக்கு, ஓதிம விளக்கு என்பன தனிச்சிறப் புடையவை. ஓதிமம் - அன்னம். சங்க இலக்கியங்களில், தமிழ் நாட்டில் யவனர்கள் செய்து வந்த தொழில்களைப் பற்றிய குறிப்புக்கள் நிரம்ப உள்ளன. அந்த யவனர்கள், தமிழ்நாட்டுப் பேரூர் தோறும் தங்கித் தச்சு முதலிய தொழில்கள் செய்து வாழ்ந்து வந்ததோடு, வஞ்சி, மதுரை, உறையூர், புகார் முதலிய தலைநகர்களில் மிகுதியாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் பெரிய நகர்களில் தனியாகவே வாழ்ந்து வந்தனர். யவனர்கள் வாழ்ந்து வந்த இடம், யவனப்பாடி என வழங்கி வந்தது. யவனமகளிர் ஆடல் பாடல் மகளிராகவும், தமிழரசியரின் ஆயமகளிராகவும் இருந்து வந்தனர் எனவும் தெரிகிறது. பழந்தமிழ் மக்கள் அந்த யவனர்களை அன்போடு போற்றி வந்தனர். அவர்கள் யாதொரு குறையும் இன்றித் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்தனர். யவன வணிகர்களும் பெரும்பாலும் இங்கு தங்கி வாழ்ந்து வந்தனர். இங்ஙன மிருக்க, அன்று சேர நாட்டின் வடபால் மேல்கடலோரப் பகுதியில் கடம்பர் என்னும் ஒருவகையினர் வாழ்ந்து வந்தனர். அவர்களிற் பலர், சேரநாட்டை அடுத்து மேல்கடலில் உள்ள ஒரு சிறு தீவினில் சென்று தங்கியிருந்து, அவ்வழியாகச் செல்லும் கப்பல் களில் புகுந்து கொள்ளையிட்டு வந்தனர். அதோடு, அடிக்கடி சேர நாட்டின் கரையோரப் பகுதியில் புகுந்தும் கொள்ளையிட்டு வந்தனர். அதனால், சேர நாட்டின் சிறந்த துறைமுகங்களான தொண்டி, மாந்தை, நறவு ஆகிய துறைமுகங்களுக்கு யவனக் கப்பல்கள் வர அஞ்சின. கரையோரப்பகுதி மக்கள் அங்கிருக்கவே அஞ்சி நடுங்கினர். குடிமக்களேயன்றி, யவனவணிகரும் அரசனிடம் முறை யிட்டனர். நெடுஞ்சேரலாதன், பெரிய கப்பற்படையுடன் சென்று, அத்தீவில் இருந்த கடம்பர்களை வென்று துரத்தி மீண்டான். அதன்பின் கப்பல்கள் அச்சமின்றி வந்து போயின. கரையோர மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்தனர். தோற்றோடிய கடம்பர்கள் அத்துடன் சும்மா இருக்கவில்லை; தங்களால் இயன்ற அளவு உதவுவதாகச் சில யவன வீரர்களைத் தூண்டினர். அந்த யவனர்கள் மேலும் பல யவன வீரர்களைச் சேர்த்துக் கொண்டு சென்று, அத்தீவில் தங்கியிருந்து கொண்டு, தமிழர் கப்பல்களை மட்டும் கொள்ளை யிட்டு வந்ததோடு, அடிக்கடி சேர நாட்டு ஊர்களிற் புகுந்து கொள்ளையடித்து வந்தனர். அந்த யவனர்களால் சேரநாட்டு மக்கள் பட்டபாடு கொஞ்சநஞ்ச மல்ல. இழந்த பொருள்களோ அளவி லடங்கா. தமிழ் மறவர்கள் அக்கொடிய யவனர்களைப் பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பியும் பயனில்லை. அவர்கள் மறுபடியும் மறுபடியும் வந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தனர். குடிமக்கள் படும்பாட்டைக்கண்ட சேரலாதன், பலமுறை எச்சரிக்கை செய்தும் அந்த யவனர்கள் தங்கள் கெடுபிடியை விட்டபா டில்லை. அது கண்ட நெடுஞ்சேரலாதன், ஒரு பெரிய கப்பற்படையோடு அத்தீவுக்குச் சென்று, அந்த யவனரோடு பொருது வென்று, அவர்களெல்லாரையும் சிறைபிடித்து வந்தான். அந்த யவனர் செய்த கொடுமையால் மனம் புண்பட்டுள்ள தமிழ் மக்கள், அக்கொடியரை நேரில் கண்டு மனப்புண் ஆறும் பொருட்டே, நொந்த மனம் அமைதியுறும் பொருட்டே, கைகளைப் பின்கட்டாகக் கட்டி, அப் புல்லரை வஞ்சி நகர்த்தெருவின் வழியே ஊர்வலமாக அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டான் சேரலாதன். அந்த யவனர் தலையிலிருந்து மழைநீர் போல முகத்தில் வடிந்தது மழைத்தண்ணீரன்று, நெய். குற்றவாளிகளின் கைகளைப் பின்கட்டாகக் கட்டி, நெய்யைத் தலையில் ஊற்றி, அவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்லுதல் அக்கால வழக்கம். அவ்வழக்கப் படியே அந்த யவனத் தலைவனும் வீரரும் அவ்வாறு ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்டனர். அந்த ஊர்வலம் இருவகையில் சென்றது. ஒன்று, நெடுஞ் சேரலாதன் யவனரை வென்ற வெற்றி ஊர்வலம். மற்றொன்று யவனரின் குற்ற ஊர்வலம். தமிழ் மறவர்கள் சேர மன்னனை வாழ்த்தியது, வெற்றி குறித்தேயாகும். அந்த ஊர்வலம் வஞ்சிமா நகரின் எல்லாப் பெருந் தெருக்கள் வழியாகவும் சென்றது. எல்லாத் தெருவிலும் அந்த யவனர்க்கு அவ்வாறே ஏச்சும் பேச்சும் கிடைத்தன! முடிவாக அந்த ஊர்வலம் சிறைச்சாலையைச் சென்றடைந்தது. அவர்கள் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவ்வாறு சிறையி லடைக்கப்பட்ட யவனர்களைச் சேர மன்னன் என்ன செய்தான்? சிறையிலடைத்து அவர்களைத் துன் புறுத்தினனா என்ன?அதுதான் தமிழர் பண்பாடல்லவே. பின் என்ன செய்தான்? அந்த யவனர் தலைவன் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டான். அவன் கைகள் இப்போது பின் கட்டாகக் கட்டப்பட்டிருக்கவில்லை. அவன் வந்து சேரலா தனை வணங்கி நின்றான். சேரன் அவனை இருக்கையில் அமரச் செய்தான். அவன் உட்கார்ந்து தலைகுனிந்தபடியே இருந்தான். சேரலாதன் அவனைப் பார்த்து, " யவனர் தலைவ! நெடுங் காலமாகத் தமிழகமும் யவனமும் நட்புறவாக இருந்து வந்தன. இன்றும் அந்நிலை அப்படியேதான் இருந்து வருகின்றது. இன்றும் யவனக் கப்பல்கள் சில வஞ்சித் துறை முகத்தில் தங்கி யுள்ளன. யவன மக்கள் இங்கு பல்லாயிரக் கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். நீங்கள் எங்கள் மக்களுக்கு இவ்வளவு கொடுமைகள் செய்தும் உங்கள் இனத்தவர்கள் இந்த வஞ்சியிலும் நலமாகவே இருந்து வருகின்றனர். யவனத் தெரு உங்களுக்குக் கொடுத்த மதிப்பே இதற்குச் சான்றாகும். நீங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காததால் நான் இந்த முடிவுக்கு வர நேர்ந்தது. இனியேனும் நீங்கள் திருந்துவீர் களென்று நம்புகிறேன்"என்றான். யவனத் தலைவன் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டான்; தங்களை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டான். சேரலாதன் அவ்வாறே மன்னித்து, அந்த யவனர்களிட மிருந்து பறித்து வந்த அணிகலன்களையும் வைரங்களையும் திருப்பிக் கொடுத்து, அவர்களை அவர்கள் நாட்டிற் கனுப்பும்படி படைத் தலைவனுக்குக் கட்டளையிட்டான். யவனத்தலைவன், நெடுஞ்சேரலாதனின் பெருந் தன்மையைப் பாராட்டி, அப்பொருள்களைக் காணிக்கையாக வைத்துக் கொள்ளும்படி வேண்டிக்கொண்டான். சேரன் அதற்கிசைந்தான். படைத்தலைவன் அந்த யவனர்களை விடுதலை செய்து அனுப்பி னான். பதிற்றுப்பத்து என்னும் சங்க நூல் நெடுஞ்சேரலாதனின் இவ்வீரச் செயலைப் பாராட்டுகின்றது.  6. சங்கத் தமிழ் 'சங்கத் தமிழ்மூன்றுந் தா' என்றார் ஒளவையார். ஆம், ஒவ்வொரு தமிழனும் 'தா' என்று கேட்க வேண்டியதுதான் இது. சங்கத்தமிழ் மூன்றையும் கற்றுணர வேண்டும் என்பது இதன் கருத்து. தமிழ் மூன்று - இயல், இசை, நாடகம் என்பன. இயற்றமிழ் - இயல்பான தமிழ். செய்யுளும் உரை நடையும் - இயற்றமிழ் எனப்படும். இயற்றமிழ்ப் பாடல்களை இசையோடு பாடுதல் - இசைத்தமிழ் எனப்படும். அப்பாட்டுக்களை இசையுடன் பாடிக் கொண்டு, கேட்போர்க்கு அப்பாடல்களின் பொருள் எளிதில் விளங்கும்படி, மெய்ப்பாடு தோன்ற நடிப்பது - நாடகத் தமிழ் எனப்படும். நாடகம் - கூத்து எனவும் வழங்கும். இதனால் தமிழ், முத்தமிழ் எனப்பட்டது. இத்தகைய பெயர் வேறு எம்மொழிக்கும் இல்லை. இத்தகைய மொழிச் சிறப்பு, தமிழர் நாகரிக மேம் பாட்டுக்கு ஒரு சான்றாக உள்ளது. 'மோனை முத்தமிழ் மும் மதமும் பொழி யானை' என, ஒட்டக்கூத்தர் தம்மைப் பெருமை யோடு கூறிக் கொண்டனர். இனி, 'சங்கத்தமிழ்' என்பது என்ன? சங்கம் என்பது - கூட்டம். அதாவது, புலவர் கூட்டம். அப்புலவர் சங்கப்புலவர் எனப்படுவர். புலவர் கூட்டத்தால் ஆராயப்பட்ட தமிழ் -சங்கத் தமிழ் எனப்பட்டது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் பழந்தமிழ் நூல்கள், சங்க மருவிய நூல்கள் எனப்படும். சங்கம் மருவிய நூல்கள், சங்கத்தாரால் தேர்ந்தெடுக்கப் பட்ட நூல்கள். இத்தமிழகம் முழுதும் உள்ள புலவர்கள், தாங்கள் பாடிய பாட்டுக்களை, ஒரு குறிப்பிட்ட நாட்களில் அச்சங்கத்தார் முன் படித்துப் பொருள் கூறுவர்; சங்கத்தார் கூறும் குற்றங் குறை களைத் திருத்திக் கொள்வர். இவ்வாறு செய்வது, கவியரங் கேற்றுதல் எனப்படும். சங்கப் புலவர்களால் ஒப்புக்கொள்ளப் பட்ட, அரங்கேறிய பாட்டுக்களே, சங்க மருவிய பாட்டுக்கள் எனப்படும். இவ்வாறு கவியரங்கேற்றித் தமிழாய்ந்து, தமிழ் வளர்த்து வந்தது அத்தமிழ்ச்சங்கம். முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என அச் சங்கம் மூன்று வகைப்படும். அது, முச்சங்கம் என வழங்கும். முதல், இடை, கடை என்னும் அம் மூன்று சங்கங்களையும், முடியுடை மூவேந்தருள் ஒருவரான பாண்டிய மன்னர்கள் நடத்தி வந்தனர். அம்மூன்று சங்கங்களும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் நடந்து வந்தன. இனைத்தென வரையறுத்துக் கூற இயலாத காலந்தொட்டுப் பாண்டிய மன்னர்களால் நடத்தப் பட்டு வந்த அத்தமிழ்ச் சங்கம், கி. பி.மூன்றாம் நூற்றாண்டில் முடிவுற்றது. இம்முச்சங்க வரலாற்றினை நீங்கள் ஒருவாறு அறிந்து கொள்ளுதல் நல்லது. அது உங்களுக்குத் தாய் மொழிப் பற்றையும், தமிழ் கற்பதில் ஆர்வத்தையும் உண்டாக்கும். நம் முன்னோர் இத்தகு தாய் மொழிப்பற் றுடையவராக இருந்தனரா? தமிழ் அரசர்கள் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்தனரா? அன்னார் ஆட்சியில் தமிழ் எத்தகைய மேம்பாட்டுடன் இருந்திருக்கும்? நமது தாய்மொழி முச்சங்கப் புலவர்களால் முறையாக வளர்க்கப்பட்டு வந்த மொழியா? நமது தாய் மொழி, பல்லாயிரக்கணக்கான ஆண்டுப் பழமை யுடைய மொழியா? இவ்வாறு சங்கம் நிறுவித் தாய்மொழி வளர்த்து வந்த நாடு, உலகில் வேறொன்று இருந்ததாகக் கேள்விப்பட்ட தில்லையே! பத்துப்பாட்டு, எட்டுத் தொகை முதலிய பழந்தமிழ் நூல்கள் அவ்வாறு கவியரங் கேற்றப் பட்ட நூல்களா? என்பன போன்ற உணர்ச்சி உங்களுக்கு உண்டாகும் அல்லவா? அவ் வுணர்ச்சி, உங்கள் தாய்மொழியாம் தமிழ் மொழியைக் கருத்துடன் கற்றுக் கொள்ள உங்களைத் தூண்டும் அல்லவா? ஆம் கட்டாயம் தூண்டும். அத்தூண்டுதல் உங்களைச் சிறந்த கல்வியறிவுடையவ ராக்கும். வடக்கே வேங்கட மலையையும், மற்ற மூன்று திசையினும் கடலையும் எல்லையாக உடையது பழந்தமிழகம். தெற்கே குமரியாற்றை எல்லையாகக் கொண்டிருந்த காலமும் உண்டு. 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்' என்பது, தொல்காப்பியப் பாயிரம். தமிழ் கூறு உலகம் - தமிழ் வழங்கும் இடம் - தமிழ்நாடு. வடவேங்கட மலைத்தொடர், வடக்கே வட பெண்ணை யாற்றங் கரைவரைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு வடக்கெல்லை யாய் நிற்பது. வட பெண்ணையாறே தமிழகத்தின் வடக் கெல்லை யாகும். வட பெண்ணையாற்று நேர், நேர் மேற்காக, மேல் கடல் வரை ஒரு கோடிழுத்தால், அது கொண்கானத்தின் வடக்கில் செல்லும். அக்கோடே பழந்தமிழகத்தின் வடக் கெல்லை யாகும். ஆனால், தமிழ்மக்களின் பயக்குறையால், 'வடக்கே வேங்கட மலையை எல்லையாக உடைத்தாயிருந்தது தமிழ்நாடு' என, இறந்த காலத்தால் கூறி இரங்கும்படி, இன்று தமிழ்நாடு, வடக்கும் மேற்கும் முறையே ஆந்திர கன்னட மலையாள நாடு களை எல்லைகளாகக் கூறிக் கொள்ளும் நிலையை அடைந்து விட்டது. நனிமிகு பழங்காலத்தே தமிழர், பனிமலை காறும் பரவி வாழ்ந்து வந்தனர் என்பது, சிந்து வெளியிற் கண்ட புதைபொரு ளாராய்ச்சியால் தெற்றென விளங்குகிறது. பனிமலை காறும் பழந்தமிழராட்சி நடந்துவந்த தென்பதற்குச் சங்க இலக்கியங் களில் நிரம்பச் சான்றுகள் உள்ளன. இனி, தமிழ்நாட்டின் தெற்கெல்லையான தென்பெருங் கடல், நிலமாக இருந்த காலமும் உண்டு. பன்முறை ஏற்பட்ட கடல் கோளால் அப்பெரு நிலப் பரப்பு, இன்றுள்ள தென்கடற் கரையின் தெற்கில், அதாவது தமிழ்நாட்டின் தெற்கில், 2400 கி.மீட்டருக்கு மேல் (1500கல்) பரவியிருந்தது. ஆப்பிரிக்காக் கண்டத்தின் தென் கீழ்ப் பக்கமுள்ள மடகாஸ்கர் என்னும் தீவையும், கிழக்கே சாவகம் முதலிய கிழக்கிந்தியத் தீவுகளையும் அது தன்னுள் அடக்கியதாக இருந்தது. இலங்கை அன்று தனித்தீ வாக இல்லை. அப்பெருநிலப் பரப்பு - குமரிமலை, மணிமலை, பன்மலைத் தொடர் முதலிய பல பெரிய உயர்ந்தோங்கிய மலைகளும்; குமரியாறு, பஃறுளியாறு முதலிய வற்றாத பல பேராறுகளும் வளஞ்செய்ய, 'நீர்மலி வான்' என, நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் உடையதாய், மக்கள் நல்வாழ்வுக்கேற்ற நன்னாடாக விளங்கியது. இன்றுள்ள குமரி முனைக்கு 320கி.மீ. (200கல்) தெற்கில், குமரிமலையில் தோன்றிக் கிழக்கு நோக்கிப் பாய்ந்தது குமரி யாறு. குமரியாற்றுக்குச் சுமார் 1120கி.மீ. (700கல்) தெற்கில், பன்மலைத்தொடரில் தோன்றிப் பஃறுளியாறு என்னும் பேராறு பாய்ந்தது. அது பன்மலைத் தொடரில் தோன்றிய பல சிறு அருவிகள் பெருகி ஆறுகளாகி ஒன்று கூடிய பேராறாகும். பல்+துளி - பஃறுளி. 'துளி' என்பது சிற்றாறுகளைக் குறிக்கும். துளி - சிறிது என்னும் பொருளுடையது. இவ்விரண்டு பேராறு கட்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு - பெருவளநாடு எனப்படும். இதன் பெயரே இது மிக்க வளம் பொருந்திய நாடு என்பதற்குச் சான்றாகும். "பஃறுளி என்னும் ஆற்றுக்கும், குமரி என்னும் ஆற்றுக்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவான் என மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன் பாலைநாடும், ஏழ்பின் பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகரை நாடும், ஏழ்குறும் பகை நாடும் என்னும் இந்த நாற்பத் தொன்பது நாடும்; குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின் காறும் கடல்கொண் டொழிதலான்."(சிலப்-8) என்னும் அடியார்க்கு நல்லார் கூற்றால், அப்பெருவள நாடு எழுவகைப் பட்ட ஏழேழு நாற்பத்தொன்பது உள்நாடுகளாகப் பிரிவுபட்டிருந்ததென்பதும், அதையடுத்து அதன் வடமேற்கில் குமரி, கொல்லம் முதலிய பல மலைநாடுகள் இருந்தன என்பதும் பெறப்படுகிறது. 'தடநீர்க்குமரி' என்பதால், அக் குமரிமலை, பன்மலைத் தொடர் போல மிக்க நீர்வளம் பொருந்திய தென்பதும் விளங்குகிறது. குமரிமலைத் தொடர், பன்மலைத் தொடர் முதலாக அப்பெருவள நாட்டின் மேற்கிலிருந்த மலைகளெல்லாம் மேற்குமலைத் தொடரின் தொடர்ச்சி யேயாகும். நீலகிரியின் மீதுள்ள நீலகிரி மாவட்டம் போன்றவையே குமரி, கொல்லம் முதலிய அம்மலை நாடுகள். மலையாள நாட்டில் உள்ள கொல்லம் என்பது நினைவுகூரத் தக்கது. 'நதியும் பதியும்' என்பதால், குமரி பஃறுளி யல்லாத வேறு பல ஆறுகளும் அப்பெருவள நாட்டில் பாய்ந்தன என்பது பெறப்படுகிறது. பஃறுளியாற்றின் தென்பால், தென்கடல் வரை ஏறத்தாழ 800 கி.மீ. (500கல்) பரப்புடைய நிலம் இருந்தது. அது தென்பாலி நாடு எனப்படும். பஃறுளியாற்றின் தென்பால் இருந்தமையால் அது அப்பெயர் பெற்றது. அஃதும் பல உள்நாடுகளாகப் பிரிவு பட்டிருந்திருக்கலாம். 'அக்காலத்து, அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வட வெல்லை யாகிய பஃறுளி என்னும் யாற்றிற்கும்' (சிலப் 1) என்னும் அடியார்க்கு நல்லார் உரை இதற்குச் சான்றாகும். தென்பால் உள்ளது, தென்பாலி. 'அவர் நாட்டுத் தென்பாலி' என்பதால், அப்பெருவளநாடும் தென்பாலிநாடும் ஓராட்சியின் கீழ் இருந்து வந்தன என்பது பெறப்படும். பஃறுளியாறு கடல்கொள்ளாமுன் அப்பெருவள நாட்டினை ஆண்டு வந்த நெடியோன் வழிவந்த முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னனை, நெட்டிமையார் என்னும் புலவர், "எங்கோ வாழிய குடுமி! தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே." (புறம்-9) என வாழ்த்துதலும், "அன்னச் சேவல் அன்னச் சேவல் குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயின்" (புறம்-67) என்னும் பிசிராந்தையார் கூற்றும், பஃறுளியாறும் குமரியாறும் இருந்தமைக்கு நேர்முகச் சான்றுகளாகும். இப்புலவர்கள் அக்காலத்தே வாழ்ந்தவர்கள். முதுகுடுமிப் பெருவழுதியும், பஃறுளியாறு கடல் கொள்ளாமுன் அங்கிருந் தாண்டவனே யாவன். 'எங்கோ வாழிய' என்னும் புறப்பாட்டு, முதுகுடுமிப் பெருவழுதியின் முன்னோனாகிய நெடியோன் என்னும் பாண்டிய மன்னன், அப்பெருவள நாடு கடல் கொள்ளா முன் அதனை ஆண்டு வந்தவன் எனவும் கூறுதலான், அப்பெருவள நாட்டை ஆண்டவர் பாண்டிய மன்னர் மரபினர் என்பதற்கு அது சான்றாகும். அத்தென் பாலி, பெருவள நாடுகள் அமைந்த அப்பெருநிலப் பரப்பு, குமரிக்கண்டம் எனப்படும். பஃறுளியாற்றங் கரையிலிருந்த மதுரை என்பது அந் நாட்டின் தலைநகராகும். மதுரம் - இனிமை. மதுரை - இனிய நகர்; மக்கள் வாழ்வதற் கேற்ற இனிய நகர். அத் தொன்மதுரையி லிருந்து, அத்தொல்பழந்தமிழ் நாட்டினை ஆண்டு வந்தவர் பாண்டியர் ஆவர் என்பதை முன்பு கண்டோம். அப்பாண்டியர் தம் தலைநகரில் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்தனர். அத் தொன்மதுரையில் நடந்து வந்ததே முதற்சங்கம் ஆகும். அச்சங்கம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வந்தது. அன்று ஏற்பட்ட பெயரே நம் தங்கத் தமிழ் மொழிக்குச் சங்கத் தமிழ் என்னும் பெயர். ஒரு பெரிய கடல்கோளால் அத்தென்பாலி நாடும் பெருவள நாட்டின் பெரும் பகுதியும் கடலுக்கிரையாயின. பஃறுளியாற்றையும் கடல் குடித்து ஏப்பம் விட்டது. அதன் பின்னர், அக்கடல்கோள் நிகழ்ந்த காலத்திருந்த பாண்டிய மன்னன் வடக்கே வந்து, குமரியாற்றங் கரையில் புதிதாக ஒரு நகர் கண்டு அதில் குடியேறி னான்; இந்நகர்க்கும் மதுரை என்று அப்பழைய நகரின் பெயரையே வைத்தனன். இம் மதுரை அலைவாய் எனவும் வழங்கிற்று. அப்பாண்டியன் பழையபடியே இங்கும் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்தான். இம் மதுரையில் நடைபெற்ற சங்கமே இரண்டாம் சங்கம், அல்லது இடைச்சங்கம் எனப் படும். இவ்விடைச் சங்கத்தேதான் தொல்காப்பியம் அரங் கேற்றப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட ஒரு கடல் கோள், குமரியாற்றின் பெரும் பகுதியையும், அதைச் சூழ்ந்த நிலப்பரப்பையும் விழுங்கவே, அப்போதிருந்த பாண்டியன் வடக்கே வந்து, சில ஆண்டு மணலூர் என்னும் இடத்தில் தங்கி, பின்னர் வையை யாற்றங் கரையில் இன்றுள்ள மதுரையை அமைத்து அங்குக் குடியேறி னான். இம்மூன்றாம் மதுரையில் குடியேறிய பாண்டியன் பழைய படியே சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்து வந்தனன். இதுவே மூன்றாம் சங்கம், அல்லது கடைச் சங்கம் ஆகும். இம்மூன்று சங்கங்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வந்தன. இதுவே முச்சங்க வரலாறாகும். இடமாற்றமே முதல் இடை கடை என்னும் மூன்று சங்கங்களின் பெயர்க் காரணமாகும். பஃறுளியாற்றங் கரையில் நடந்தது முதற் சங்கம். குமரியாற்றங் கரையில் நடந்தது இடைச்சங்கம். வையை யாற்றங் கரையில் நடந்தது கடைச்சங்கம் எனக் கொள்க. முதல் இடை கடை என்னும் இம் முச்சங்கத்தினும் நூற்றுக் கணக்கான புலவர்கள் உறுப்பினராக இருந்து வந்தனர். அன்னார் சங்கப் புலவர் எனப்படுவர். அச்சங்கப் புலவர்கள், தமிழக முழுவதும் உள்ள புலவர் பெருமக்கள் பாடிய பாட்டுக்களையும், செய்த நூல்களையும் அரங்கேற்றித் தமிழ் வளர்த்து வந்ததோடு, தாமும் பாட்டுக்கள் பாடியும், நூல்கள் செய்தும் வண்டமிழ் மொழியை வளமுற வளர்த்து வந்தனர். அம்முச்சங்கத்தினும் அரங்கேறிய நூல்கள் பன்னூற்றுக் கணக்கினவாம். அவற்றுள், இப்போது நமக்குக் கிடைத்துள்ள சங்க மருவிய நூல்கள்- தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்பனவே. திருக்குறள், பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த சங்க மருவிய நூலாகும். நமக்குக் கிடைக்கப் பெறாத சங்கமருவிய பழந்தமிழ் நூல்கள் - முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, மாபுராணம், பூதபுராணம், இசை நுணுக்கம், குணநூல், செயிற்றியம், சயந்தம், கூத்து, வரி, பேரிசை, சிற்றிசை என்பனவாம். முச்சங்க வரலாற்றினை ஒருவாறு கண்டோம். அம் முச்சங்கமும் நடந்த காலத்தே தமிழ் நாடு, சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர்களால் சிறப்புற ஆளப்பட்டு வந்தது. இன்று தமிழ்நாடு இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாக உள்ளது. தமிழ் மக்களாகிய நாம் இந்தியக் குடிமக்களாக உள்ளோம். இந்தியா நமது தாய் நாடு. நம் இந்தியப் பெருநாட்டில் நூற்றுக் கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றுள், தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளி முதலிய பதினான்கு மொழிகள் இந்தியத் தேசீய மொழியாகக் கொள்ளப்பட் டுள்ளன. இப் பதினான்கு தேசீய மொழிகளையும் ஒருநிகராக வளம்பெற வளர்த்தல், இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஏற்புடைத்தாகும். பாண்டிய மன்னர்கள் நடத்தி வந்த பழைய தமிழ்ச் சங்கம் போல, இத்தேசீய மொழிகள் பதினான்கிற்கும் தனித்தனிச் சங்கம் நிறுவி அவற்றை வளம்பெற வளர்த்தல் இந்தியப் பேரரசின் பொறுப்பும் கடமையும் ஆகும். வாழ்க தாய் மொழி! வளர்க இந்தியத் தேசீய மொழிகள்!  7. சிலம்புச் செல்வன் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு; - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி ஆரம் படைத்த தமிழ்நாடு." என்ற, பாரதியார் பாடலை நீங்கள் படித்திருக்கிறீர்கள் அல்லவா? இப்பாடலைப் பலமுறை இசையோடு பாடி மகிழ்ந்திருக்கிறீர்கள் அல்லவா? தமிழ் நாட்டின் சிறப்பினைக் கூறும் இப் பாடலைத் தமிழ்ச் சிறுவர்களாகிய நீங்கள் படியாமலா இருப்பீர்கள்? தமிழ் நாட்டின் சிறப்புக்கு வள்ளுவர் குறளையும், சிலப்பதிகாரத்தையும் காரணமாகக் கூறுகிறார் பாரதியார். ஆம், தமிழ்நாட்டின் சிறப்புக்குக் காரண மானவைதாம் திருக்குறளும் சிலப்பதி காரமும்! சிலப்பதிகாரம் ஒரு செந்தமிழ்க் காப்பியம். சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங் காப்பியங்களில் தலையாயது சிலப்பதிகாரம்; கற்போர் நெஞ்சைக் கவரும் தன்மையது. இது பற்றியே பாரதியார், 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்றார். இது செந்தமிழ்க் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், சிலம்புச் செல்வம், சிலம்பு என்றெல்லாம் வழங்கப்பெறும். சிலப்பதிகாரம், கண்ணகி கோவலன் கதை கூறும் நூல்; கண்ணகியின் வீரவரலாற்றுக் காப்பியம். இது கண்ணகியின் வீரச்செயலை விளக்குவதோடு மட்டும் நிற்கவில்லை. கண்ணகி, சோழ நாட்டின் தலைநகரான புகாரில் பிறந்து வளர்ந்து, பாண்டி நாட்டின் தலைநகரான மதுரையில் தன் கணவனை இழந்து ஆறாத்துயருற்று, சேரநாடு சென்று உயிர்நீத்தாள். அதனால், கண்ணகி வீரவரலாற்றில் சோழநாடு, பாண்டி நாடு, சேரநாடு ஆகிய தமிழகத்தின் முப்பெரு நாடுகளும் இடம் பெறுகின்றன. எனவே, சிலப்பதிகாரம் அம்முந்நாடுகளின் சிறப்பினைக் கூறும் ஒரு முத்தமிழ் நூலாகும். அந் நாட்டு மக்களின் வாழ்க்கை முறை கூறுகிறது சிலப்பதிகாரம். இன்னும் அம்மூன்று நாடுகளையும் முறைபுரந்த சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர்களின் சிறப்பினையும், அன்னாரின் ஆட்சித் திறனையும் கூறுகிறது சிலப்பதிகாரம். வஞ்சி, புகார், மதுரை என்னும் சேர சோழ பாண்டிய நாடுகளின் தலைநகரங்களின் சிறப்பினைப் பரக்கக் காணலாம் சிலப் பதிகாரத்தில். எனவே, பழந்தமிழகத்தின் பெருமையினைக் காட்டும் காலக் கண்ணாடிபோல் விளங்குகிறது சிலப்பதிகாரம். இயல், இசை, நாடகம் எனத் தமிழ் மூன்று வகைப்படுமல்லவா? சிலப்பதி காரம் அம்மூன்று தமிழுங் கூறுகின்ற ஒரு முத்தமிழ்ப் பெருங் காப்பியமாகும். மேலும், அருந்தமிழ் ஆற்றல் அறியாது, தமிழ் பழித்த கனகவிசயரை வென்றடக்கிய தமிழரின் வெற்றிக்காப்பிய மாகவும் சிலப்பதிகாரம் திகழ்கின்றது. இத்தகைய சீரும் சிறப்பும் ஒருங்கு வாய்ந்த செந்தமிழ்க் காப்பியம் ஆகிய சிலப்பதிகாரத்தைச் செய்தவர், இளங்கோ வடிகள் ஆவர். "யாமறிந்த புலவரிலே . . . இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மைவெறும் புகழ்ச்சி யில்லை" எனப் பாரதியார் பாராட்டும் அத்தகு சிறப்பினையுடையவர் இளங்கோவடிகள். இவர் இளங்கோ ஆக இருந்து, இளங்கோ அடிகள் ஆனது ஒரு வியத்தகு நிகழ்ச்சி யாகும். அது, படிப்போர் உள்ளத்தை உருக்கும் தன்மையதாகும். இதோ அது: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேரமன்னனின் வரலாற்றினை முன்பு கண்டோம். நெடுஞ்சேரலாதனின் கோப் பெருந்தேவி, நற்சோணை. இவ்விரு பெற்றோரின் இளைய மகனே நம் இளங்கோ. மூத்தவன், செங்குட்டுவன். செங்குட்டுவனும் இளங்கோவும் கற்கவேண்டியன வெல்லாம் கசடறக் கற்றுத் தெளிந்தனர்; தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்றறிந்தனர்; திருக்குறள் கூறும் அரசியல் இலக்கணங்களை ஐயந்திரிபின்றி ஆராய்ந்து கற்றுத் தேர்ந்தனர்; வில், வாள், வேல் முதலிய படைக்கலப் பயிற்சியிலும் நல்ல தேர்ச்சி பெற்றனர். மக்கள் இருவரும் கல்வி கேள்விகளிலும் படைக்கலப் பயிற்சி யிலும் சிறந்து விளங்குவது கண்ட நெடுஞ்சேரலாதன் அகமிக மகிழ்ந்தான். அன்னாரின் அன்னை, அவர்களை ஈன்ற பொழு தினும் பெரிதுவந்தனள். செங்குட்டுவன், தந்தைக்குப்பின் சேரநாட்டுப் பேரரசன் ஆவோன் ஆதலால், இளவரசுப் பட்டங்கட்டப் பெற்று அரசியற் பயிற்சி பெற்று வந்தான். அவன் தன் தந்தைக்குத் துணையாக அரசியல் அலுவல்களைக் கவனித்து வந்தான். குடிமக்களிடத்தும், அரசியல் அதிகாரிகளிடத்தும் அவன் நெருங்கிப் பழகி வந்தான். குடிமக்களும் அதிகாரிகளும் இளவரசனிடம் மிக்க அன்புடைய ராக நடந்து கொண்டனர். இளங்கோ, அரசியல் அதிகாரிகள் எல்லார்க்கும் தலைமை அதிகாரியான பெருநம்பி என்னும் பொறுப் பேற்று, தந்தைக்கு ஆட்சித் துணைவனாக இருந்து வந்தான். அண்ணனைப் போலவே இளங்கோவும் எல்லாரிடத்தும் அன்பாகப் பழகிவந்தான். செங்குட்டுவனும் இளங்கோவும், தமிழும் இனிமையும் போல ஒரு மனப்பட்டு இருந்து வந்தனர். மேல் கடல் தீவில் இருந்துகொண்டு, அடிக்கடி சேர நாட்டு மக்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த யவனரை, நெடுஞ் சேரலாதன் வென்றடக்கியதை முன்பு கண்டோம். அதில், இளவரசன் செங்குட்டுவனுக்கும் பங்குண்டு. யவனரை வென்று சிறைபிடித்தவன் செங்குட்டுவனே யாவன் எனலாம். ஒருநாள், சேரநாட்டின் தலைநகரான வஞ்சிமா நகரின் அரண்மனைக் கொலுமண்டபத்தில் அமைச்சர்கள், படைத் தலைவர்கள், ஒற்றர்கள், தூதுவர்கள், மற்றபெரிய அதிகாரிகள், நகரப் பெருமக்கள் முதலியோர் கூடியிருந்தனர். அவர்கள் மன்னனது வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். நெடுஞ்சேரலாதன், விண்மணி போன்ற செங்குட்டுவன், இளங்கோ என்னும் தன் இரு கண்மணிகளுடன் அக் கொலு மண்டபத்திற்கு வந்தான். அவையோர் எழுந்து வணக்கம் செலுத்தினர். அரசன் அரியணையில் அமர்ந்தான். செங்குட்டுவன் இளவரசனுக்குரிய இருக்கையிலமர்ந்தான். இளங்கோ அண்ணனுக்கு அருகில் அமர்ந்தான். அவைக்களப் புலவர், நெடுஞ்சேரலாதனின் யவனப் போர் வெற்றியைப் புகழ்ந்து பாடினர். அரசன் புலவர்க்குப் பரிசு கொடுத்துப் பெருமைப் படுத்தினான். பின்னர், அவன் அவை யோரைப் பார்த்து, "அன்பிற்குரிய அவைப் பெருமக்களே! உங்கள் இளவரச னாகிய செங்குட்டுவன் ஆட்சித் துறையில் நன்கு பயிற்சி பெற்று ள்ளான். வீரத்திலும் அவன் மிக்கு விளங்குவதை யவனப் போரில் கண்டோம். அவனை அரியணையில் அமர்த்திவிட்டு நான் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்ள விரும்பு கின்றேன்"என்றான். அவையினர் எல்லாரும் ஒருமுகமாக, 'தங்கள் விருப்பமே எங்கள் விருப்பம்' என்றனர். நெடு : மகிழ்ச்சி, எல்லாரும் மனமொத்துச் செய்யுஞ் செயலேஏற்ற செயலாகும். என் விருப்பம் போல் உங்கள் விருப்பமும் இருப்பது பற்றி மிக்க மகிழ்ச்சி. இளங்கோ! நீ அண்ணனுக்குத் துணையாக இருந்து, நீங்கள் இருவரும் நல்லாட்சி புரிவதைக் கண்டு களிக்க வேண்டும் என்பது என் விருப்பம். இளங்: எந்தையே! தங்கள் விருப்பப்படியே நடந்து கொள்கின்றேன். அது இளவலாகிய எனது கடமை யாகு மன்றோ? அரச மரபில் பிறந்த எனக்குக் குடிமக்கள் நலத்திற்கு உழைப்பதைவிட வேறு என்ன இருக்கிறது? மேலும், தந்தையின் விருப்பப்படி நடப்பதுதானே மைந்தனின் கடமை. இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது, வாயில் காவலன் வந்து அரசனை வணங்கி, கணிவன் (சோதிடன்) ஒருவன் வந்திருப்பதாகச் சொன்னான். அரசன் அவனை அழைத்து வரும்படி கூறினான். வாயிலோன் சென்று, அக் கணிவனை அழைத்துவந்தான். கணி: குமரியொடு வட இமயத்து ஒரு மொழி வைத்து உலகாளும் இமயவரம்ப! நெடுஞ்சேரலாத! வணக்கம். வாழ்க நின் கொற்றம்! நெடுஞ் சேரலாதன் அக்கணிவனை அன்புடன் வரவேற்று, இருக்கை தந்து இன்மொழி கூறினான். அக்கணிவன் சிறிது நேரம் அரசனையும், அரசகுமரர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். இளங்கோவை அடிமுதல் முடிவரை நெடுநேரம் உற்றுப் பார்த்தான். பின் எழுந்து நின்று, கணி: சேரர் பெரும! நான் கணிதநூற்படி ஒன்று சொல்ல விரும்புகிறேன். அது எதிர்காலம் பற்றிய செய்தி யாகும். வஞ்சி மூதூர் மன்னர் மன்னவ! நான் உண்மையைக் கூறுகின்றேன், பொறுத்தருள வேண்டும். நெடு: என்ன அது? உண்மையும் பொறையுந்தாமே தமிழறம்? கூற விரும்புவதை ஒளியாமற் கூறுக. கணி: சேரலர் பெரும! நான் உடற்கூற்றிலக்கணம் நன்கு அறிவேன். உடலமைப்பின் குறிப்பைக் கொண்டு பலன் சொல்வதே எனது தொழில். அதன்படியே கூறுகிறேன். இதுவரையில் என்சொல் பொய்த்ததே இல்லை. நெடு: அப்படியா! சரி, என்ன கூறப்போகிறீர்? கூறுக. கணி: வஞ்சி வேந்தே! உடலமைப்பின்படி நும் இளைய மைந்தர்க்கு அரச இலக்கணம் நன்கு அமைந்திருக் கிறது. நான் சொல்லவில்லை, உடற்கூற்றிலக்கண நூல் சொல்கிறது. அந்நூலில் உள்ளபடியே நான் சொல்கிறேன். நும் மக்கள் இருவருள், இளையவரே நுமக்குப்பின் இந்நாட்டின் அரசராவர். கணிவன் சொல்லைக் கேட்ட சேரலாதன் திடுக்கிட்டான். அவன் உள்ளம் துடித்தது, உடல் நடுங்கியது, முகம் வியர்த்தது, வாய் வறண்டது. அந்நிலைமையில் அவன் செங்குட்டுவனைப் பார்த்தான். செங்குட்டுவன் கவலை தோய்ந்த முகத்துடன் இளங்கோவைப் பார்த்தான். அவன் இளங்கோவைப் பார்த்த படியே இருந்தான். அவையோர் அம்மூவரையும் பார்த்த படியே இருந்தனர். எங்கு எதை எவ்வாறு சொல்ல வேண்டும் என்பதை அறியாத அக்கணிவன் கூற்று, அந்த அவையினையே அவ்வாறு கலங்கச் செய்தது. அக்கணிவன் அச்சத்துடன் நின்று கொண் டிருந்தான். இந்நிலையில் இளங்கோ என்ன செய்தான்? தான் தந்தைக்குப்பின் அரசனாகப் போவதை எண்ணி உள்ளம் உவக்க வீற்றிருந்தானா? இல்லை. பின் அவன் என்ன செய்தான்? அவன் இருக்கையை விட்டு எழுந்து அக்கணிவனைப் பார்த்து, இளங்: ஏ கணிவரே! என்ன சொன்னீர்? எம் தந்தைக்குப் பின் நான்இந்நாட்டின் மன்னன் ஆவேனா? உண்மையாகவா? இந் நாட்டின் இளவரசர்! ஏ கணிவரே! நும் கூற்றில் உண்மை சிறிதும் இல்லை. நீர் வேண்டு மென்றே பொய் கூறுகிறீர். மூத்தவன் இருக்க இளையவன் முடிசூட்டிக் கொள்வதா? இது முறையாகுமா? அண்ணன் இருக்கத் தம்பி அரசன் ஆவதா?இது அறமாகுமா? தம்பி இந்நாட்டின் அரசன் ஆனால், அண்ணனுக்கு இங்கு வேறு என்ன வேலை இருக்கிறது? இளையவன்அரியணையின்மேல் இருக்க, மூத்தவன் கீழ் இருப்பதா? கணி : என்னவோ, உள்ளதைச் சொன்னேன். இளங்: இதுதான் உள்ளதா? அண்ணன் இருக்கத் தம்பி அரசனாவது! எதில் உள்ளது இது? இது நும் கணித நூலில் உள்ளது தானே?நுமது கூற்றில் சிறிதும் உண்மை இல்லை. கணிவரே! என் அண்ணன் வீரமே உருவானவர்; இளவரசராக இருந்து ஆட்சி முறையை நன்கு அறிந்தவர்; குடிமக்களால் பெரிதும் விரும்பப்படுபவர். அவர் அரசர் ஆவதை இந்நாட்டுக் குடிமக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அத்தகைய அவர் இருக்கவா நான் அரசனாவது? தங்கள் அரசனிருக்க நான் அரசனாவதை இந்நாட்டு மக்கள் விரும்புவார்களா என்ன? தமிழ் அரசமரபில் இதுவரை இத்தகைய முறைகேடான செயல் நடந்ததே இல்லை. அவ்வாறு நடந்ததாக எந்த ஒரு தமிழ் நூலிலும் இல்லை. இதோ, நும் சொல்லைப் பொய்யாக்குகிறேன். என்று, தன் அணிகலன்களைக் கழற்றினான் இளங்கோ. அவையோர் ஒன்றுந் தோன்றாமல் திகைத்தனர். நெடுஞ் சேரலாதன் தன்னை மறந்து மரப்பாவை போல அப்படியே அசைவற்று உட்கார்ந்திருந்தான். செங்:தம்பி! என்ன இது? கணிவன் சொன்னபடியே நடந்தாலும் அதில் குற்றம் என்ன? ஆட்சி என்பது ஒரு தொழில். மக்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து வருகிறார்கள். அது போலவே, ஆட்சித் தொழிலையும் ஒருவர் செய்ய வேண்டியதே. அதை அண்ணன் செய்தாலென்ன? தம்பிசெய்தா லென்ன? தம்பி! வேண்டாம், அணிகலன்களைக் கழற்றாதே. இளங்: அண்ணா! தடுக்காதீர். தாங்கள் என் மீது வைத்துள்ள அத்தகு அன்பினால் இவ்வாறு சொல்கிறீர். இக்கணிவன் சொன்னபடியே நடப்பதைத் தாங்கள் விரும்பினாலும் இந்த நாடு விரும்பாது; இந்த நாட்டு மக்கள் விரும்ப மாட்டார்கள். இதோ, இந்த அவையோர் நிலைமையைப் பாருங்கள். அண்ணா! நமது முதலமைச்சர் அழும்பில்வேளின் முகத்தைப் பாருங்கள்.நமது படைத்தலைவர் வில்லவன் கோதையின் வீரமுகம் அடைந்துள்ள நிலையைக் கவனியுங்கள். அதோ, அங்கு அமர்ந்திருக்கும் இவ்வூர்ப் பெருங்குடி மக்கள் கல்லுருவம் போல் காட்சி யளிப்பதன் காரணம் என்ன? கணிவன் கூற்றை அவர்கள்விரும்பினால் மலர்ந்த முகத்துட னன்றோ இருப்பர்? அண்ணா! அவர்கள் இருக்கட்டும். இதோ நம் தந்தையின் நிலைமையைப் பாருங்கள். அவர் ஏன் இப்படித் தன்னை மறந்து இருக்கிறார்? அவருக்கு என்ன பேசவா தெரியாது? அவர் வாய்பேசாமல் இருப்பதன் காரணம் என்ன? அண்ணா! இவர்களெல்லாரும் இங்ஙனம் கவலையே வடிவாக மாறியதன் பொருள் என்ன? இவர்களில் எவரும் இந்தக் கணிவன் சொல்லை விரும்பவில்லை என்பதுதானே பொருள்? அண்ணா! தந்தை விரும்பாததை, இந்நாட்டு அரசர் விரும்பா ததை, அமைச்சர் விரும்பாததை, படைத் தலைவர் விரும்பாததை, ஒற்றர் விரும்பாததை, இவ்வூர்ப் பெருங்குடி மக்கள் விரும்பா ததை நான் மட்டும் எங்ஙனம் விரும்புவேன்? நானும் இந்த நாட்டைச் சேர்ந்தவன்தானே? அவர்களில் ஒருவன் தானே? இதோ, நான் துறவுபூண்டு குணவாயிற் கோட்டத்தை அடை கிறேன். செங்: தம்பி! வேண்டாம். இக்கணிவன் சொற்படி ஒன்றும் நடக்கப் போவதில்லை. என்னவோ அவன் தெரியாத் தனமாக அவ்வாறு உளறி விட்டான். அணிகளைக் கழற்ற வேண்டாம். நெடு: கணிவா! இடமறியாது பேசி இந் நிலைமையை உண்டாக்கி விட்டனையே. இளங்கோ! வேண்டாம். இளங்: எந்தையே! வருந்தாதீர். அண்ணன் அரியணையில் அமர்ந்து இந்நாட்டு மக்கட்குத் தொண்டு செய்யட்டும். நான் தமிழன்னைக்குத் தொண்டு செய்கிறேன். வேண்டும்போது அண்ணனுக்கு உதவுகிறேன். அண்ணனுக்கு இடையூறாக இனி நான் இங்கு இருப்பது முறையன்று. செங்: தம்பி! வேண்டாம். நீ இங்கு இருப்பதால் எனக் கொன்றும் இடையூறு இல்லை. என்னைத் தனியாக விட்டுப் பிரிந்து செல்லத் துணிவதுதான் எனக்கு இடையூறாகும். வாழப்பிறந்தநீ, இந்த இளமைப் பருவத்திலே வாழ்வை வெறுக்கத் துணிவதா? அதுவும் எனக்காக. 'செங்குட்டுவனுக்காக இளங்கோ துறவு பூண்டான்; தன் வாழ்வை வெறுத்தான்' என்ற பழிச்சொல்லை என்மேல் சுமத்தலாமா? இளங்கோ! வேண்டாம். இளங்: அண்ணா! தடுக்காதீர். காலச்சுழல் எப்படி இருக்கும் என்பது எவருக்கும் தெரியாது. மக்கள் மனம் மாறும் இயல்புடையது. 'எண்ணித் துணிக' என்கின்றார் வள்ளுவர். பின்னர் வருந்துவதால் பயன் என்ன? நான் எங்கு போகிறேன்? இங்குதானே இருக்கப் போகிறேன். நான் தங்களோடு வாழ்விலிருந்து சற்றுவிலகிக் கொள்கிறேனே யல்லாமல், இருப்பது பக்கத்திலேயே தானே! என்று இளங்கோ அணிகலன்களையும், அரச உடையினை யும் களைந்து, காவி உடுத்து, குணவாயிற் கோட்டம் புக்கார். அங்குள்ள பெரியோர்கள், 'வருக வருக! இளங்கோவடிகளே வருக!' என்று, வரவேற்றனர்.  8. ஒளவையும் அதியனும் சங்ககாலப் புலவர் பெருமக்களுள் பெண்பாற் புலவர் களும் பலர் இருந்தனர். அவர்களுள் ஒளவையார் ஒருவராவர். ஒளவையாரைப் பற்றித் தெரியாத தமிழ்மக்கள் எவரும் இருக்க மாட்டார்கள். கற்றவர், கல்லாதவர் எல்லார்க்கும் தெரிந்த புலவர் அவர் ஒருவரே எனலாம். தமிழ் மக்களுக்கு அவ்வளவு அறிமுக மானவர் ஒளவையார்; அவ்வளவு பேரும் புகழும் பெற்றவர் எனலாம். ஒளவையார் செய்த - ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி முதலிய நூல்களை நீங்கள் படித் திருப்பீர்கள். ஒளவையாரைப் பற்றி வழங்கும் பல கதைகளையும் அறிந்திருப்பீர்கள். தமிழ்மக்களால் தமிழ்த் தாய் என்றே மதித்துப் போற்றப்பட்டு வந்தவர் ஒளவையார். ஒளவையார் என்னும் பெயருள்ள புலவர் இருவர் இருந்திருக்கின்றனர். சங்ககால ஒளவையார் வேறு, ஆத்திசூடி முதலிய நூல்கள் செய்த ஒளவையார் வேறாவர். இவர் பிற்காலத்தவர். நாம் இங்கு சங்ககால ஒளவை யாரின் வரலாற்றினையே காண்போம். ஒளவையார் தமிழ்நாடு முழுவதும் சுற்றித் தமிழ் மக்களுக்கு நல்லறிவு புகட்டுவதையே, தமிழ் மக்களை நல்வழியில் நடக்கச் செய்வதையே தம் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர். தமிழ் மக்கள் எவரும் ஒளவையார் சொல்லைத் தட்டி நடவார்கள். தமிழ் மக்களுக்கு அவ்வளவு வேண்டியவர் ஒளவையார். 'ஒளவை அமிழ்த மொழி' என, அவர் சொல்லைச் சிறப்பித்து மேற்கொண்டு அதன் படி நடந்து வந்தனர் தமிழ்மக்கள். ஒளவையார் சொல்லில் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தனர் தமிழ் மக்கள். ஏதாவ தொன்றுபற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது ஒருவர், 'முடியாது,' அல்லது 'ஆகாது' என்றால், 'என்ன அவச் சொல் சொல்கிறாய்?' என்னும் வழக்கமே, ஒளவையார் சொல்லில் தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்குச் சான்றாகும். 'ஒளவை சொல்' என்பதே, 'அவச்சொல், அவைச் சொல்' எனத் திரிந்து வழங்குகிறது. ஆண்பாற் புலவர்களைப் போலவே, ஒளவை யாரும் பாடிப் பிழைக்கும் பரிசில்வாழ்க்கையே நடத்தி வந்தனர். தொண்டை நாடு, சோழ நாடு, பாண்டி நாடு, சேரநாடு களின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, கொங்கு நாட்டுச் சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார் ஒளவையார்; கொங்கு நாட்டுச் செல்வர்கள் பலரைப் பாடிப் பரிசுபெற்றார். பின் தகடூரை நோக்கிச் சென்றார் ஒளவையார். கொங்கு நாடு என்பது எது? தகடூர் எங்கே உளது? கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களும்; மதுரை மாவட்டத்துத் திண்டுக்கல், பழனி வட்டங்களும், திருச்சி மாவட்டத்துக் கரூர், குளித்தலை வட்டங்களும், வடக்கில் கொள்ளேகால் வட்டமும் - கொங்கு நாடு ஆகும். தமிழகத்தில், சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர் ஆட்சி என்று ஏற்பட்டதோ அன்று தொட்டே, கொங்கு நாடு தனியாட்சி நாடாகவே இருந்து வந்தது. அது, வேளிர் என்னும் குறுநில மன்னர் பலரால் ஆளப்பட்டு வந்தது. சங்ககால வள்ளல்களி லொருவனான அதியமான் என்பான், தகடூரில் இருந்து தகடூர் நாட்டை ஆண்டு வந்தான். இன்றையத் தருமபுரி மாவட்டமே, அதாவது தருமபுரி வட்டம், அரூர் வட்டம், ஒசூர், கிருஷ்ணகிரி வட்டங்களின் தென்பகுதி இவையே - தகடூர் நாடு ஆகும். தருமபுரி மாவட்டத்தின் தலைநகரான தருமபுரியே, தகடூர் நாட்டின் தலைநகரான தகடூர் ஆகும். தருமபுரிக்குத் தெற்கில் உள்ள அதமன் கோட்டை என்பது, அதியமான் கோட்டை என்பதன் சிதைவாகும். சங்ககாலந் தொட்டு, கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை, தகடூர் நாட்டை இவ்வதியமான் மரபினர் ஆண்டு வந்தனர். ஒளவையார் காலத்தே தகடூரில் இருந்தாண்ட அதியமான் முழுப்பெயர் - அதியமான் நெடுமான் அஞ்சி என்பது. அந் நெடுமான் அஞ்சியைக் காணவே, ஒளவையார் தகடூரை நோக்கிச் சென்றார். அதியமான், ஒளவையாரை அன்புடன் வரவேற்றான்; மலர்ந்த முகத்துடன் இன்சொல் கூறி அளவளாவினான். ஒளவை யாரிடத்து அஞ்சி அளவு கடந்த அன்புடையவன்; ஒளவை யாரைத் தமிழ்த்தாயெனவே மதித்துப் போற்றினான். ஒளவை யார், அதியமானைப் பல பாடல்களால் சிறப்பித்துப் பாடிப் பெருமைப் படுத்தினார். அதியமான் மனைவியார், நாகையார் என்பவர். அவர் ஒரு சங்ககாலப் பெண்பாற் புலவராவர். அவர் ஓளவையாரை அன்னையெனக் கொண்டு போற்றி வந்தனர். அதியமான் ஒருநாள், சேலத்திற்கு மேற்கில் 9. கி.மீ. அளவில் உள்ள கஞ்சமலைக்குச் சென்றான். இக்கஞ்சமலை பல்வகை மூலிகைச் செடி கொடிகளையுடையது; இரும்புத் தாதினை நிரம்ப வுடையது. இதை இரும்பு மலையென்றே கூடச் சொல்லலாம். இக்கஞ்சமலையின் பக்கத்திலேதான் சேலம் உருக்காலை ஏற்படுத்தத் தமிழ்நாட்டு அரசினர் முடிவுசெய் துள்ளனர். இம்மலையில் பொற்றாதும் உண்டு. இம்மலையில் தோன்றி வரும் பொன்னியாறு என்னும் ஆற்று மணலைக் காய்ச்சி முன்பெல்லாம் பொன் எடுத்தார்களாம். அப்பொன்கொண்டே ஆதித்தசோழன் என்பான், சிதம்பரத்துச் சிற்றம்பலத்தைப் பொன்னம் பலம் ஆக்கினானாம். அத்தகு சிறப்புடையது கஞ்சமலை. கஞ்சமலைக்குச் சென்ற அதியமான், அங்கு அணுகுதற் கரிய உயர்ந்த ஒரு பாறைப் பிளவின் உச்சியில் இருந்த நெல்லிக் கனி ஒன்றை அரிதின் முயன்று பறித்தான். அக்கனி, உண் போர்க்கு உறுதியான உடல் நலத்தையும் நீண்ட வாழ் நாளையும் தரவல்லது. அரிய மூலிகைப்பொருட் களஞ்சிய மல்லவா கஞ்சமலை? அக்கனியைத் தான் உண்பதினும், தமிழ்த்தொண் டாற்றி வரும் ஒளவையார் உண்பதே மேலெனக் கருதிய அதியமான், அதன் பயனை உரையாது, அதை ஒளவையார்க்குக் கொடுத்துப் பொன்றாப்புகழை அடைந்தான். என்னே அஞ்சியின் தாய்மொழிப் பற்று! இத்தகைய வள்ளல்களாலல்லவோ அன்று தமிழ்மொழி, அவ்வளவு சீருஞ்சிறப்புமுற் றிருந்தது! உண்டபின், அக்கனியின் பயனை அறிந்த ஒளவையார், "மன்னுக பெரும நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத் தடக்கிச் சாதல் நீங்க எமக்கீத் தனையே." என, தனக்கென வாழா அத்தமிழ்த் தலைவனின் அவ்வரும் பெருங் குணத்தினை மனமாரப் பாராட்டினார். விடர் - பிளவு. அருமிசை - அணுகுதற்கரிய அவ்வளவு உயரத்தில். மிசை - மேலே. குறியாது - பயனை உரையாது. ஆதல் - பயன். சாதல் நீங்க - நீண்டகாலம் வாழ. இங்ஙனம் அக்கனியை எனக்குக் கொடுத்த பெரும! நீ மன்னுக - நிலைபெற்று வாழ்வாயாக. ஒளவையார் பால் அதியமானுக்கும், அதியமான் பால் ஒளவை யாருக்கும் இருந்த அன்பின் பெருக்கை என்னென்பது! அதியமான் காலத்தே தொண்டை நாட்டைத் தொண்டை மான் என்னும் அரசன் ஆண்டுவந்தான். காஞ்சி (காஞ்சீபுரம்) என்பது, தொண்டை நாட்டின் தலைநகர். அக் காஞ்சித் தொண்டை மான், தகடூர் நாட்டின் வளத்தைக் கண்டு, அதை வென்று கைக்கொள்ள விருப்பங் கொண்டான். அதற்காகத் தன் படையைப் பெருக்கிக்கொண்டே வந்தான். தொண்டை நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்கும் இடையில் நடுநாடு என்ற நாடு இருந்தது. தென்பெண்ணை யாற்றங் கரையில் உள்ள திருக்கோவலூர் அந்நாட்டின் தலைநகர். சங்ககால வள்ளல்களிலொருவனான மலையமான் திருமுடிக் காரி என்பவன், திருக்கோவலூரில் இருந்து அந்நடு நாட்டை ஆண்டு வந்தான். அவனொரு பெருவீரன்; பெரும் படைவலி யுடையவன். பேரரசர்கட்குப் போர்த்துணை யாவதையே அவன் பெரும்பான்மைத் தொழிலாகக் கொண் டிருந்தான். அவன் யார் பக்கம் உள்ளானோ அவ்வரசன் பக்கமே வெற்றி பெறும் என்பது அக்கால மன்னர்கள் நம்பிக்கை. அவ்வளவு பேராற்றல் உடையவன் ஆவான் அவன். அக்காரி, அதியமானுடன் நட்புடையவனாக இல்லை என்பது தெரிந்தே, தொண்டைமான் அங்ஙனம் விருப்பங் கொண்டு தன் படையைப் பெருக்கி வந்தான். பெரும்படை யுடையவன் பக்கந்தானே ஒருவன் சேருவான்? மேலும், சேல மாவட்டத்து நாமக்கல் வட்டத்தில் உள்ளது கொல்லிமலை என்பது. அது மிக்க பரப்பும் வளமும் பொருந்திய ஒரு மலைநாடு. கொல்லிமலைத் தேன், இலக்கியச் சிறப்பு டையது. அங்கு விளையும் கருவாழைப் பழமும் அத்தகு சிறப்பு டையதே. அம்மலையில் அன்றிருந்த கொல்லிப்பாவை என்பது, சங்கப் புலவர் பலரால் சிறப் பித்துப் பாடப் பெற்றதாகும். அக்கொல்லிமலை நாட்டை, வல்வில் ஓரி என்பவன் ஆண்டுவந்தான். அவனும் சங்ககால வள்ளல்களில் ஒருவனே. அதியமான், காரி ஆகிய இருவருடனும் ஒருங்கெண்ணப் படுபவனே அவ்வல்வில் ஓரி. அவனும் ஒரு பெரு வீரனே. அவன் பெயரே அவனது வீரத்துக்குச் சான்று பகரும். ஓரி ஒருநாள் ஒரு யானைமேல் எய்த அம்பு, அந்த யானையைக் கொன்றதோடு, அங்கிருந்த ஒரு புலி, ஒரு மான், ஒரு காட்டுப்பன்றி, புற்றின் கண் இருந்த ஓர் உடும்பு ஆகிய இத்தனையையும் கொன்றதாம். அத்தகு வில்வீரன் அவன்; பெரும் படையும் உடையவன். ஓரி அதியமானுக்கு மிக்க நண்பன். அதியமானும் ஓரியும் உற்ற நண்பர்களாக இருந்து வந்தனர். அதியமானிடம் பகை பாராட்டி வந்த திருக்கோவலூர்க் காரி அதியமான் அஞ்சியின் உற்ற நண்பனும், தன் நாட்டின் அடுத்த நாட்டினனும் ஆகிய ஓரியிடமும் பகை பாராட்டி வந்தான். இதனை அறிந்த தனாலேயே தொண்டைமான் அவ்வாறு தகடூர் நாட்டைக் கைக் கொள்ள விரும்பினான். காரியைத்துணைக் கொண்டு அதியனை யும், ஓரியையும் வென்றால், காரிக்கு அவன் பக்கத்து நாடான கொல்லிமலை நாட்டைக் கொடுத்து விட்டு, தான் தகடூர் நாட்டை வைத்துக் கொள்ளலாம் என்பது தொண்டைமானின் எண்ணம். தொண்டைமானின் எண்ணத்தை ஒற்றரால் அறிந்த பெருவீர னாகிய அஞ்சி, எதிரியின் பெரும் படைகண்டஞ்சி நெஞ்சழிய வில்லை. போர் உண்டானால் நாட்டில் உண்டாகும் பேரழிவை எண்ணி நெஞ்சழிந்தான். எப்படியாவது போர் நேராவண்ணம் செய்ய எண்ணினான். அதற்காகத் தொண்டைமான்பால் ஒளவை யாரைத் தூது விட்டான். இதனால், பகைவேந்தர்பால் பெண்டிர் தூது செல்லும் வழக்கமும் பழந்தமிழரிடை உண்டென்பது பெறப்படுகின்றது. பகையரசர்பால் தூது செல்வதென்பது அவ்வளவு எளிதான செயலொன்றன்று. பெருவீரர்களே அத்தொழில் செய்து வந்தனர். பாட்டுப் பாடுவதைத் தொழிலாகக் கொண்ட ஒளவையார் - ஒரு பெண் - அத்தொழிலுக்கு எங்ஙனம் தகுதி யுடையராவர் என்று எண்ணலாம். தன் ஒரே ஒரு மகனை வாள்கை கொடுத்து வாழ்த்திப் போர்க்கு அனுப்பிய மடமங்கையும், புறப்புண்பட்டு இறந்து கிடக்கிறான் உன் மகன் என்பது கேட்டு, 'அங்ஙனம் செய்திருந்தால், அவன் பாலுண்ட மார்பை அறுத்தெறிவேன்' என வாளுடன் போர்க்களம் நோக்கிச் சென்ற நரை மூதாட்டியும் ஆகிய மறக்குடி மகளிரின் வழிவந்தவ ரல்லரோ ஒளவையார்! ஒளவையாரின் புறநானூற்றுப் பாடல்களைப் பார்த்தால், அவர் எத்தகு வீரமுடையவர் என்பது விளங்கும். அதியமானின் தூதுவராக ஒளவையார் காஞ்சிமாநகர் சென்றார். தொண்டைமான் அவரை அன்புடன் வரவேற்றான். ஒளவையார் தான் எதற்காக வந்துள்ளேன் என்பதை எடுத் துரைத்தார். தொண்டைமான் ஒளவையாரை அழைத்துச் சென்று தன் படைக்கலக் கொட்டிலைக் காட்டினான். தொண்டைமானின் கருத்தை அறிந்த ஒளவையார், "இவை யெல்லாம் முனைமழுங்காது, நெய் பூசப்பட்டு, பீலியணிந்து படைக்கலக் கொட்டிலில் உள்ளன. ஆனால், அதியமானின் வாள், வேல் முதலிய படைக்கலங்களோ, பகைவரை வெட்டியும் குத்தியும் கங்கும் முனையும் போய்ப் பழுதுபார்ப்பதற்காகக் கொல்லன் உலைக்கூடத்தில் உள்ளன"என்று, அதியமானின் வீரத்தையும் பேராற்றலையும் புலப்படுத்தினார். தொண்டைமான் தான் எண்ணிய எண்ணத்தைக் கைவிட்டு, அதியமானிடம் நட்புறவு கொண்டான். எனினும், காரி அதியமானிடம் கொண்ட பகையை விட வில்லை. அவன், பெருஞ்சேரலிரும்பொறை என்னும் சேர மன்னனைத் தகடூர் நாட்டின் மேல் படையெடுக்கும்படி தூண்டினான். காரியின் படைத்துணையுடன் சேரன் தகடூர் நாட்டின் மேல் படையெடுத்தான். அதியமான் அச்சேரப் படையை எதிர்த்து வீரத்துடன் போர் புரிந்து மறப்புகழ் எய்தினான். அதியன் இறந்தது கண்ட ஒளவையார், அடங்காத் துயருடன் பாடி அழுதனர். அப்பாடல்கள் புறநானூறு என்னும் சங்க நூலில் உள்ளன. கருங்கல் போன்ற கடிய மனத்தையும் கரைந்துருகும்படி செய்யும் தன்மை வாய்ந்தவை அப்பாடல்கள். அப்பாடல்களால், ஒளவையார் அதியமான் நெடுமான் அஞ்சியின்பால் கொண்டிருந்த அன்பின் பெருக்குத் தெற்றென விளங்கும். ஒளவை மூதாட்டியாரின் அருளுள்ளத்தின் றெழுந்த அப்பாடல்களை நீங்கள் படித்துப் பாருங்கள். ஒளவையாரின் அளப்பருஞ் சிறப்பும், புறநானூற்றின் பெருமையும் இனிது விளங்கும். அதியமானுக்குப் பின்னர், அவன் மகன் பொகுட் டெழினி என்பான் தகடூர் மன்னன் ஆனான். அவனும் ஒளவையார்பால் பேரன்புடையவனாக இருந்து வந்தான். அப்பொகுட்டெழினி யையும் ஒளவையார் சிறப்பித்துப் பாடியுள்ளார். அதியர் மரபுக்கும் ஒளவையார்க்கும் உள்ள இடையறாத் தொடர்பினை என்னென்பது!  9. புள்ளின் புரவலன் பேகன் என்னும் சங்ககாலத் தமிழ் வள்ளல், மழையால் நனைந்த ஒரு மயிலைக் கண்டு, அதற்குக் குளிரும் எனக் கொண்டு, தான் போர்த்திருந்த போர்வையை அம்மயிலுக்குப் போர்த்துப் பொன்றாப் புகழ் கொண்டான். பாரி என்னும் வள்ளல், பற்றிப் படரக் கொழுகொம்பு இல்லாது வருந்திய ஒரு முல்லைக் கொடியைக் கண்டு, இரக்கங் கொண்டு, தான் ஏறிச் சென்ற தேரை அக்கொடிக்குக் கொடுத்துக் குன்றாப் புகழ் கொணடான். ஆய் என்னும் வள்ளல், ஒரு நாட் காலை ஓர் ஆலமரத் தடியில் இருந்த ஒரு சிவக்குறியைக் (சிவலிங்கம்) கண்டு, அது பின்பனிக் காலமாதலால், அக்கற்சிலை பனியால் நடுங்கு மெனக் கொண்டு, தான் போர்த்திருந்த விலையுயர்ந்த அழகிய நீலப் பட்டாடையை அச்சிலைக்குப் போர்த்து அழியாப் புகழ் கொண்டான். முல்லையும் மயிலும் சிலையும், தேரும் போர்வையும் கேட்டனவா? இல்லை. பேகன், பாரி, ஆய் என்னும் மூவரும், கேளாமலே கொடுக்கும் கொடைமடம் பட்ட பழந்தமிழ்ச் செல்வர்களாவர். இன்னும் அப்பழங்காலத்தே - கடைசங்க காலத்தே - காரி, ஓரி, நள்ளி, அதியன், எவ்வி, பண்ணன், புல்லி, குமணன் முதலிய எத்தனையோ கொடை மடம் பட்ட தமிழ்ச் செல்வர்கள் இருந்தனர். இவர்கள் எல்லாரும், இல்லை யென்று இரப்போர்க்கு இல்லை என்று உரையாது கொடுத்து வந்த வள்ளல்களாவர். யானைக்கொடை, குதிரைக்கொடை, தேர்க்கொடை, ஊர்க் கொடை, உயிர்க்கொடை என, இவ் வள்ளல்கள் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கொடையில் சிறந்து விளங்கினர். அன்று தமிழ் வளர்த்த பெருமை பெரும்பாலும் இவ்வள்ளல்களையே சாரும். இவ்வள்ளல்களைப் போலவே அக்காலத்தே, பறவை களுக்காகத் தன் உயிரையே கொடுத்த வள்ளலும் ஒருவன் இருந்தான். ஆய் எயினன் என்பது, அவன் பெயர். ஆய் எயினன் என்பான், வேளிர் மரபைச் சேர்ந்தவன். வேளிர் என்பவர், சேர சோழ பாண்டியர்களாகிய முடியுடை மூவேந்தரின் கீழும், தனித்தும் சிற்றரசர்களாக இருந்து, பழந் தமிழகத்தைச் சீருஞ்சிறப்புடன் ஆண்டு வந்ததோடு, வரையாது கொடுத்துத் தமிழ் வளர்த்து வள்ளல்களாகவும் விளங்கிய செல்வர் களாவர். பள்ளிமாணவர்களாகிய நீங்கள் எல்லாரும் - சேரரணி, சோழரணி, பாண்டியரணி, வேளிரணி என நான் கணிகளாகப் பிரிந்து, பள்ளிப் பொதுநலப்பணி புரிந்து வருகிறீர்களல்லவா? அவ்வணிகள் நான்கனுள், 'வேளிர் அணி' என்பது, பழந்தமிழ்க் குறுநில மன்னர்களாகிய அவ்வேளிரின் நினைவுக்குறியே யாகும். வீரம், கொடை, புகழ் என்னும் மூன்றையும் அணிகல னாகக் கொண்டவர் அவ்வேளிர்கள். அவ்வேளிர் மரபில் வந்த நம் ஆய் எயினன், வீரம் முதலிய அம் முப்பண்பினும் மேம்பட்டு விளங்கினான். இவன் தமிழ்மொழி யிடத்து அளவுகடந்த அன்புடையவன்; பாடும் தமிழ்ப் புலவர்களுக்கு யானைக்கொடை கொடுக்கும் அத்தகு பெருங்கொடை வள்ளல். 'நள்ளிரவில் வந்து, ஆயின் அரண்மனை வாயிலில் நின்று, அவனது மலைவளத்தைப் பாடினால், பாடும் பாணர்க்கு, அந்நடு இரவிலும் பெரிய ஆண்யானைகளைக் கொடுக்கும் ஆய்எயினன்' என்று, புலவர் களால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இவ்வாறு இரவுபகல் எந்நேரமும் வாரி வாரி வழங்கித் தமிழ் வளர்த்து வந்தான் நம் ஆய் எயினன். ஆயின் நாடு, புன்னாடு என்பது. சேரநாடு, தெற்கிலிருந்து - வேணாடு, குட்டநாடு, பொறை நாடு, குடநாடு, கொண்கான நாடு என்னும் உள் நாடுகளையுடையதாயிருந்தது. கொண்கானத்தின் மேல் கடலோரப் பகுதி, துளுநாடு எனப்படும். கொண் கானத்தின் தென் கீழ்ப்பகுதி - புன்னாடு எனப்படும். இவ்விரண்டும் கொண்கானத்தின் உள்நாடு களாகும். வெளியம் என்பது, புன்னாட்டின் தலைநகர். அது சீரும் சிறப்பும் உடைய ஒரு செல்வ நகர். வெளியன் வேண்மான் என்பது, ஆயின் தந்தை பெயர். அதனால், ஆய் அவன் தந்தை பெயரோடு சேர்த்து, வெளியன் வேண்மான் ஆய் எயினன் என்று அழைக்கப்பட்டு வந்தான். வெளியன் வேள்- வெளியம் என்னும் ஊரையுடைய வேள். புன்னாடு சிறந்த மலைவளம் செறிந்த நாடு. அந்நாட்டிற் பல ஆறுகள் வளஞ் செய்தன. புன்னாட்டிற் பெரிய காடு ஒன்று இருந்தது. அந்நாட்டின் சிறப்புக்கு அக்காடே காரணம் எனலாம். அக்காட்டில் - சந்தனம், அகில், தேக்கு, ஈட்டி, கருங்காலி, மருது, வேங்கை, கோங்கு, மூங்கில் முதலிய பலவகை மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. மா, பலா, வாழை முதலிய பலவகைப் பழமரங் களும் நிறைந்திருந்தன. மல்லிகை, முல்லை, இருவாட்சி முதலிய பூங்கொடிகள் பூத்துப் பொலிந்தன. பல்வகையான செடிகொடி கள் அடர்ந்திருந்தன. காண்போர் கண்ணையும் கருத்தையும் ஒருங்குகவரும் அத்தகு அழகியது அக்காடு. இயல்பாகவே அக்காட்டில் - மயில், குயில், கிளி, பூவை, காகம், கழுகு, பருந்து, மாடப்புறா, மணிப்புறா, தவிட்டுப்புறா, பச்சைப்புறா, செம்புறா, மரங்கொத்தி, வௌவால், ஆந்தை, கூகை, செம்போத்து, ஊர்க்குருவி, கரிக்குருவி, சிட்டுக்குருவி, தூக்கணங்குருவி, வக்கா, கொக்கு, நாரை, தாரா, ஆக்காட்டி, காடை, கவுதாரி, கான்கோழி, வான்கோழி, வானம்பாடி முதலிய வகைவகையான புள்ளினங்கள் ஏராளமாக வாழ்ந்து வந்தன. பறவை இனங்கள் அத்தனையும் அக்காட்டில் உண்டு எனலாம். இதனால்தான் அந்நாட்டுக்குப் புள்+நாடு - புண்ணாடு என்று பெயர் ஏற்பட்டு வழங்கி வந்து, பின்னர் அது புன்னாடு எனத் திரிந்ததோ என, எண்ணவும் இடம் ஏற்படுகிறது. ஆய் அப்புட்களிடம் அளவு கடந்த அன்புடையவனாய் இருந்தான். அக்காட்டின் இடையே சென்ற ஆற்றில் நெடுகப் பல கால்வாய்கள் வெட்டினான். அங்கங்கே குளங்கள் வெட்டியும் ஏரிகள் கட்டியும் அக்கால்வாய்களில் நீரைத் தேக்கி நிறுத்தி னான். அப்பறவைகள் உண்டு வாழப் பல வகையான பழ மரம் செடி கொடிகளை வைத்து வளர்த்து வந்தான். அக்காட்டில் சென்று யாரும் அப்புட்களை வேட்டையாடா திருக்கும்படி கட்டளையிட்டான். அப்புட்களைப் பாதுகாத்து வரும்படி வீரர்களைக் காவல் வைத்தான். ஆய் அடிக்கடி அக்காட்டிற்குச் சென்று அப்புள்ளினங் களைக் கண்டு களிப்பான். அப்புட்கள் ஆயினிடம் அளவற்ற அன்புடையனவாய் இருந்து வந்தன. ஆய் அங்கு சென்றால் எல்லாப் பறவைகளும் வந்து அவனைச் சூழ்ந்து கொள்ளும்; வாலையும் தலையையும் ஆட்டி, எயினன்பால் தங்களுக்குள்ள அன்பைக் காட்டிக் கொள்ளும்; ஆடியும் பாடியும் அவனுக்கு இன்பூட்டும். எந்தப் பறவையும் அவனைக் கண்டு அஞ்சாமல் அருகில் வரும். ஆய் அப்பறவைகளை அன்புடன் தடவிக் கொடுத்து மகிழ்வான்; அவற்றை மகிழ்விப்பான். 'ஓருயிரையும் கொல்லாமலும், புலால் உண்ணாமலும் இருப்பவனை எல்லா உயிரும் கைகூப்பித் தொழும்' என்கிறார் வள்ளுவர். அதாவது, உயிர்களிடத்து அருளுள்ளம் கொண்ட வனிடத்து, இரக்கம் உள்ளவனிடத்து அவ்வுயிர்கள் அன்பு கொள்ளும்; அவனைக் கண்டு அச்சம் கொள்ளா என்பதாம். நாம் வளர்த்து வருகின்ற புறா முதலிய பறவைகள் நம்மைக்கண்டு அஞ்சுவ தில்லையல்லவா? " கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்." என்பதே அக்குறள். வள்ளுவர் குறளுக்கு ஆய் எடுத்துக் காட்டாக விளங்கினான். அப்பறவைகளுக்குக் குறைவற்ற உணவையும் நீரையும் ஆய் அங்கே உண்டாக்கி வைத்துள்ளமையால், அப் பறவைகள் அக்காட்டை விட்டு வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே நிலையாக இருந்து வாழ்ந்து வந்தன. ஆனால், புதிய புட்கள் அங்கு அடிக்கடி வந்து தங்கிப் போகும். அப் புதுப் புட்களும் ஆயைக் கண்டு அஞ்சாமல் அருகில் வரும். ஆய் விருந்தினர் களை வரவேற்பது போல அப் புதுப்புட்களை வரவேற்றுத் தடவிக் கொடுப்பான். என்னே ஆயின் அன்பும் அருளும்! " புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும்பெயர் வெள்ளத் தானை எயினன்." என்கின்றார், பரணர் என்னும் பழந்தமிழ்ப் புலவர். ஏமம் - பாதுகாப்பு. பெயர் - புகழ். அந் நாட்டில் எப்போதும் புட்கள் மிகுதியாக வாழ்ந்து வந்ததால், அந் நாட்டிற்கு, புண்ணாடு என்று பெயர் ஏற்பட் டிருக்கலாம் என்பதை முன்பு கண்டோம். ஆய் எயினனால் அந் நாடு விளக்க முற்றது. அந் நாட்டின் புகழ், ஆயின் புகழோடு தமிழக மெங்கும் பரவியது. இதனால் ஆயை, 'புள்ளின் புரவலன்' என்று, புலவர்கள் புகழ்ந்து பாடினர். புன்னாட்டின் அண்டை நாடான துளுநாட்டை, நன்னன் என்னும் வேளிர் குடியினன் ஆண்டு வந்தான். அவனும் வீரம் கொடை புகழ் என்னும் மூன்றும் ஒருங்கு அமையப் பெற்றவனே. புன்னாட்டில் வாழும் புட்களின் பெருக்கத்தைக் கேள்வியுற்ற நன்னன், அப்புட்களை வேட்டையாடி வரும்படி வீரர் சிலரை அனுப்பினான். அவ் வீரர்கள், புட்கள் வாழும் அக் காட்டை அடைந்து, ஆய் தன் உயிர்போல விரும்பிப் பாதுகாத்து வளர்த்து வரும் அப்பறவைகளை வேட்டையாடினர். அக் காட்டைக் காத்து வரும் காவலர் கண்டு, அப்பறவைகளை வேட்டையாடக் கூடாதென அவ் வீரர்களை விரட்டி யடித்தனர். இது, புறத்திணை ஏழனுள் ஒன்றும், போர்த்தொடக்கமும் ஆன, நிரை கவர்தலும் நிரை மீட்டலும் ஆகிய வெட்சித் திணை போன்றதாகும். அவ் வீரர்கள் போய் நன்னனிடம் கூறினர். நன்னன் சினங் கொண்டான் "அப்படியா! ஆயின் ஆட்கள் நன்னன் ஆட்களை அடித்துத் துரத்தினர். அவர்கள் அஞ்சி ஓடி வந்தனர். சோம்பேறி காள்! போய்ப் படுத்துத் தூங்குங்கள்"என்று கடிந்து கூறி அவர்களை அனுப்பி விட்டு, அங்கிருந்த ஒரு படைத் தலைவனிடம், "நீ சில வீரருடன் சென்று அப்புட்களை வேட்டையாடு. அக் காவலர் தடுத்தால் அடித்துத் துரத்தி விட்டு, வேண்டிய மட்டும் அப்புட்களை வேட்டையாடிக் கொண்டுவா"என்று கூறி யனுப்பினான். அவன் அவ்வாறே சில வீரர்களுடன் புறப் பட்டான். அவ்வீரர்கள் அக்காட்டையடைந்து, பறவைகளை வேட்டை யாடினர். காவலர் வந்து தடுக்கவே, அவர்களை அடித்துத் துரத்திவிட்டு, கண்டபடி பறவைகளைக் கொன்றனர். பறவைகள் அஞ்சியலறின. சில பறவைகள் சென்று, ஆயின் அரண்மனை மேல் வட்ட மிட்டன. அவற்றைக் கண்ட ஆய், "இவை ஏன் இவ்வாறு வந்து வட்டமிடுகின்றன?"என்று, எண்ணிக் கொண் டிருக்கையில், காவலாட்கள் ஓடிப்போய் நடந்ததைக் கூறினர். உடனே ஆய், சில வீரர்களுடன் சென்று, அத் துளு நாட்டு, வீரரை விரட்டி யடித்துவிட்டு, "அன்பிற்குரிய என் ஆருயிர்ப் புள்ளினங்காள்! அஞ்சாதீர்கள். பகைவர் படையெடுத்து வரினும் என் உயிரைக் கொடுத்து உங்களைக் காப்பாற்றுகிறேன்"என, அப்புள்ளினங்கட்கு ஆறுதல் கூறிச் சென்று, பகைவர்கள் அக் காட்டை அணுகாமல் பார்த்துக் கொள்ளும்படி வீரர்களைக் காவல் வைத்தான். படைத்தலைவன் சென்று, நன்னனிடம் கூறினான். நன்னன் கடுஞ்சினங் கொண்டான், "அவ்வளவு ஆளாகி விட்டானா அவன்? அந்தக் காட்டையே அடியோடு அழித்து விடுகிறேன். அந்த ஆய் எயினனையும் ஒழித்து விடுகிறேன்"என்று கூறி, பெரும் படைத்தலைவனான மிஞிலி என்பானைப் புன்னாட்டின் மீது படையெடுக்கும்படி கட்டளையிட்டான். மிஞிலி அவ்வாறே செய்தான். துளுநாட்டுப் படை, புன்னாட்டை நோக்கி வந்தது. நன்னன்படை தன் நாட்டை நோக்கி வருதலை ஒற்றர் மூலம் அறிந்தான் ஆய். நன்னன் படையை நாட்டுக்குள் விட்டால், அது புட்கள் வாழும் காட்டை அழித்துவிடும். இப் படை யெடுப்பின் நோக்கமும் அது தானே? அதனால், நன்னன் படையைத் தன்னாட்டுக்குள் விடாமல் வழியிலேயே எதிர்க்க முடிவு செய்தான் ஆய்; படை திரட்டும் படி படைத்தலைவ னுக்குக் கட்டளை யிட்டான். போர்ப் பறை முழங்கிற்று. புன்னாட்டு மறவர்கள் வீறுகொண் டெழுந்தனர். புன்னாட்டுப் படை துளுநாட்டுப் படையை எதிர்க்கப் புறப்பட்டது. நன்னன் படையும் எயினன் படையும் எதிர்ப்பட்டுக் கைகலந்தன. போர் கடுமையாக நடந்தது. நன்னன் படைத்தலைவனான மிஞிலி, புட்கள் வாழும் அக் காட்டினை அணுக முயன்றான். அது தானே ஆயின் உயிர்! அதை அணுக அவன் விடுவானா? மிஞிலி படையை அங்கு விடாமல் எதிர்த்துப் பெரு வீரத்தோடு பொருதான் ஆய். புன்னாட்டுப் படை புறப்பட்ட போதே உடன் புறப்பட்டு, அந்நாட்டுக் கொடிகள் போலப் பறந்து சென்ற புட்கள், போர் நடப்பதைக் கவனித்துக் கொண்டு மேலே பறந்துகொண்டிருந்தன. அக் காடு வாழ் புட்கள், அப் போர் நிகழ்ச்சியைக் காண வருவதும் போவது மாக இருந்தன. அது முது வேனிற் காலம். வெயிலின் கொடுமை பொறுக்க முடியாததாயிருந்தது. நட்ட நடுப்பகல். ஆய் வீரமே உரு வெடுத்தாற் போல் பகைவரைத் தாக்கினான். ஆய்க்கும் மிஞிலிக்கும் வாட்போர் நடந்தது. அடுத்து வேற்போர். பகல் பன்னிரண்டு மணியிருக்கும். புள்ளின் புரவலனாகிய ஆய் எயினன் மார்பில், மிஞிலி எறிந்த வேல் ஒன்று பாய்ந்தது. அந்தோ! அப்புட்களை ஏங்க விட்டுவிட்டு அருளே உருவான ஆய் மண்மேல் சாய்ந்தான். ஆய் இறந்ததை அறிந்த அக்காட்டிலுள்ள பறவைகளெல்லாம் போர்க்களத்துக்குப் பறந்தோடி வந்தன. அவை ஒன்றாகத் திரண்டு பறந்து, வெயிலவன் வெயில் எயினன் உடலின்மேல் படாமல் நிழல் செய்தன. அவை பந்தற் போட்டாற் போல் வட்டமாகச் சுற்றிப் பறந்து கொண்டே இருந்தன. வெளியிடங் களிலிருந்து அன்று அங்கு வந்த புட்களும் அப் பழம்புட்களோடு கூடிப் பறந்து ஆய்க்கு நிழல் செய்தன. பறவைகளின் அவ்வன்புச் செயலைக் கண்ட பகை வீரர்கள் மதி மருண்டு நின்றனர். புள்ளின் புரவலன் உயிரைக் குடித்த மிஞிலி, நாணத்தால் தலை குனிந்து நின்றான். ஆயின் உடலின் மேல் பகலவன் வெயில் படாமல் பறவைகள் ஒன்றுகூடி வட்ட மிட்டுப் பறந்து நிழல் செய்வதைக் கண்ட நன்னன், போர்க் களத்துக்கு வந்து, தனக்கு வெற்றி தேடித்தந்த மிஞிலியைப் பாராட்டாது, தனது வெற்றியை மறந்து வெட்கத்தால் மனங் கலங்கி நின்றான். பறவைகள் பந்தற் போட்டாற்போல் அப்படியே பறந்து கொண்டே இருந்தன. 'அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்!' என்பது, எவ்வளவு பொருள் பொதிந்த பொன் மொழி! ஆய் இறந்தது கேட்ட அவன் மனைவி, தலைவிரி கோல மாய் அழுது கொண்டு போர்க்களத்தை நோக்கி ஓடி வந்தாள். வேளிர் மகளிர் அவளைப் பின்தொடர்ந்து ஓடி வந்தனர். ஆயின் மனைவி கணவன் இறந்து கிடப்பதைக் கண்டதும், ஓ வென்று கதறி அழுதுகொண் டோடிப் போய்க் கணவன் உடம்பின்மேல் விழுந்து புலம்பினாள். அவ்வேளிர் மகளிர் அவளைச் சூழ்ந்து அழுது புலம்பினர். அப் புள்ளினங்கள், அழுது புலம்புகின்ற அவர்கட்கும் நிழல் செய்தன. அப்புட் களின் அன்பின் பெருக்கு இருந்தவாறுதான் என்னே! இதைத் தான் வள்ளுவர், 'கை கூப்பித் தொழும்' என்றார் போலும்! ஆய் எயினன் முன், 'அஞ்சாதீர்கள்! என் உயிரைக் கொடுத்து உங்களைக் காப்பாற்றுகின்றேன்' என்று சொன்ன சொல் பொய்க் காமல் தன் உயிரைக் கொடுத்து அப் பறவைகளைக் காப்பாற்றி னான். அத்துடன் போர் முடிந்தது. வீரர்கள் ஆயின் உடலை எடுத்துச் சென்று முறைப்படி அடக்கம் செய்தனர். ஆயின் உடலை எடுத்துச் செல்லும் போதும் அப் பறவைகள் நிழல் செய்து கொண்டே பறந்து சென்றன. இனி யாரோ அப்புட்களின் புரவலர்!  10. உணர்ச்சி ஒன்றல் தமிழகத்தில் ஆட்சி முறை என்று ஏற்பட்டதோ அன்று தொட்டுத் தமிழகம் சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. அதனால், பழந்தமிழகம் சேரநாடு, சோழநாடு, பாண்டிநாடு என முப்பெரும் பிரிவுகளாகப் பிரிந்திருந்தது என்பதை முன்பு கண்டோம். இன்றைய மலையாள நாடே பழந்தமிழ்ச் சேரநாடு என்பதையும் அறிந்தோம். மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங் கள் பாண்டி நாடு ஆகும். திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் சோழநாடு ஆகும். அதாவது, சிதம் பரத்திற்கு வடக்கேயுள்ள வட வெள்ளாற்றுக்கும், புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள தென் வெள்ளாற்றுக்கும் இடைப்பட்டது சோழநாடு ஆகும். உறையூரும் புகாரும் சோழ நாட்டின் இருபெருந்தலை நகர்கள் ஆகும். உறையூர் உள் நாட்டு நகர். புகார் கடற்கரைப் பட்டினம். சோழ மன்னர்கள் இவ்விரு தலைநகரங்ளிலும் இருந்து சோழ நாட்டை இனிது ஆண்டு வந்தனர். உறையூரிலிருந் தாண்டவர் உறையூர்ச் சோழர் எனவும், புகாரிலிருந் தாண்டவர் புகார்ச் சோழர் எனவும் பெயர் பெறுவர். உறையூர் தமிழ்நாட்டுப் பழம்பெரு மூதூர்களில் ஒன்று. 'ஊரெனப்படுவது உறையூர்' என்னும் சிறப்பினையுடையது உறையூர். இது உறந்தை எனவும் வழங்கும். 'ஊருக்கு உறந்தை நிகர் கொற்கையோ' என்றார் ஒட்டக்கூத்தர். உறையூர் காவிரிக் கரையில் அமைந்த வளம் பொருந்திய பேரூர். இன்று திருச்சிராப் பள்ளியின் ஒரு பகுதியாக உள்ள உறையூர் என்பதே, சோழர் தலைநகராகிய அப்பழைய உறையூர் ஆகும். கோப்பெருஞ் சோழன் என்னும் சோழ மன்னன் உறையூரி லிருந்து சோழ நாட்டை ஆண்டு வந்தான். இவன் ஒரு சீரிய செங்கோல் வேந்தன். இவன் நேர்மையின் இருப்பிடம்; சீர்மையின் பிறப்பிடம்; தன் முன்னோர் புகழையெல்லாம் தன்புகழாக்கிக் கொண்ட தகைமிகு பெரியோன். இவன் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் என்னும் இறைமைக் குணங்கள் நான்கும் எஞ்சாமல் உடையவன். சோம்பல் என்னும் கொடியோன் இவனிடம் அணுக அஞ்சு வான்; ஆண்மையே இவனது அணிகலன்; அறநெறியின் கண்ணே செல்வான்; அல்லாத நெறியில் ஒருபோதும் செல்லான். இவன் காட்சிக்கு எளியன்; நாட்டு மக்கள் எவரும் இவனை நேரில் கண்டு பேசலாம். இவன் வாய் ஒருபோதும் கடுஞ்சொல்லைக் கண்டறியாது; யாரிடமும் அது இனிமையாகவே பேசும், தமிழ் பேசிப் பழகியதல்லவா அவ்வாய்? இவன் பிறர் சொல்லும் எத்தகைய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்வான்; பொறையே உருவானவன் நம் சோழர் பெருந்தகை! மக்களின் காவலனாகிய இவ்வளவன், பொருள் வரும் வழிகளைக் கண்டறிந்து பெரும்பொருளீட்டி, ஈட்டிய பொருளை இனிது காத்து, அதனை நாட்டு மக்களின் நலத்திற்குச் செலவிட்டு வந்தான்; குடி மக்களின் குறை கேட்டு முறை செய்து அவர்களைக் காப்பதையே இவன் தன் கடமையாகக் கொண்டிருந்தான்; மானமே உருவானவன். வள்ளுவர் இறைமாட்சி என்னும் அதிகாரத்தில் கூறும் அரச இலக்கணத்திற்கு இவன் அப்படியே இலக்கியமாக விளங்கினான். கோப்பெருஞ் சோழன் சிறந்த கல்வியறிவுடையவன்; கற்கவேண்டியவெல்லாம் கசடறக் கற்றுத் தெளிந்தவன்; தமிழ் முழுவதும் அறிந்தவன்; சிறந்த செய்யுளியற்றும் திறமுடையவன். இவன் புலவனாகவும் புரவலனாகவும் விளங்கினான். இவன் இயற்றிய செய்யுட்கள் குறுந்தொகையில் நான்கும், புறநானூற்றில் மூன்றும் உள்ளன. 'கற்பவை கசடறக் கற்க கற்றபின் அதற்குத் தக நிற்க' என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கு இவன் எடுத்துக் காட்டாக இலங்கினான். இவனை நற்குணக்குன்றம் எனல் மிகப் பொருத்த முடையதாகும். இத்தகைய குண நலச் சிறப்பினால், புலவர் பெருமக்கள் இவனிடம் பரிசுபெற விரும்புவதைவிட, இவனது நட்பைப் பெற விரும்பி அவ்வாறே பெற்று அளவளாவினர். இப்பெருங்கிள்ளி, தமிழ்வாழ, தமிழ் புலவர் வாழ ,தமிழ் மக்கள் வாழத் தான் வாழ்ந்து வந்தான். இவன் காலத்தே பாண்டிநாட்டில் ஆந்தையார் என்ற புலவர் ஒருவர் இருந்தார். அவர் பிசிர் என்னும் ஊரினர். ஆதலால், பிசிராந்தையார் என்று அழைக்கப் பட்டு வந்தார். பிசிராந்தையார் பெரும்புலவர்; ஒழுக்கமே உருவானவர்; முதுமையை வென்றார்; முதுமையில் இளமை கண்ட மூதறிவாளர்; கவலை என்பதைக் கனவிலும் அறியாதவர். "என் மனைவியும் மக்களும் மிகவும் நல்லவர்கள்; அவர்கள் என் மனம்போல நடந்து கொள்கின்றனர்; அவ்வளவு பொறுப்பும் கடமை யுணர்ச்சியும் உள்ளவர்கள் அவர்கள். எங்கள் ஊரில், ஊர் மக்களை நன்னெறிக்கண் நடத்திச் செல்லும் சான்றோர் பலர் வாழ்கின்றார்கள்; எங்கள் நாட்டு மன்னன் குடிமக்களுக்குத் தீமை ஒன்றுஞ் செய்யாது நன்மை பலவும் செய்து காத்து வருகின்றான். ஆகையால், நான் கவலை யில்லாமல் வாழ்ந்து வருகின்றேன்; அதனால், எனக்கு ஆண்டு பல ஆகியும் மயிர் நரைக்க வில்லை"(புறம்-191) என, வீடும் ஊரும் நாடும் எவ்வாறு இருக்க வேண்டும். எவ்வாறு இருந்தால் கவலை உண்டாகாது. கவலையில்லாமல் இருந்தால் நெடுநாள் இளமை நலத்துடன் வாழலாம்; கவலையே விரைவில் முதுமை அடைவதற்குக் காரணம் என்னும் உண்மை யைக் கண்டறிந்து கூறி, மக்களை வாழ்வித்த பெரியாராவர் இவர். புலவர் வாயிலாய், கோப்பெருஞ்சோழன் பிசிராந்தை யாரின் குணநலங்களைப் பற்றியும் பிசிராந்தையார், கோப் பெருஞ்சோழனின் குணநலங்களைப் பற்றியும் கேள்வி யுற்றனர். இருவர் குணநலன்களும் ஒத்திருந்தமையால், இருவரும் ஒருவரை யொருவர் நேரில் காணாமலே, நேரில் கண்டு பழகாமலே நட்புக்கொண்டனர். அவர்கள் இருவரும் ஒருமுறைகூட நேரிற் கண்டு பழகாவிட்டாலும் நெடுநாட் பழகின வரைவிட ஒருவரை யொருவர் விரும்பி வந்தனர். பிசிராந்தையார் தம்மைக் கோப் பெருஞ்சோழன் என்றும், கோப்பெருஞ் சோழன் தன்னைப் பிசிராந்தையார் என்றும் பெயர் மாற்றிக் கூறிக்கொள்ளும் அளவு அவர்தம் நட்பு வளரலாயிற்று, 'தன் பெயர் கிளக்குங் காலை என்பெயர் பேதைச் சோழன் என்னும்' (புறம்-216) என்று கூறிக் கொள்கிறான் கோப்பெருஞ்சோழன். பிசிராந்தையார் எப்போதும் சோழனுடைய நினை வாகவே இருப்பார்; அவனை நேரில் காண வேண்டும் என்ற ஆவலினால் தூண்டப் பெற்றவராய் எப்போதும் சோழன் சோழன் என்ற பேச்சாகவே இருப்பார்; மனைவி மக்கள் எல்லாரையும் சோழனை நண்பனாகக் கொள்ளும்படி செய்து விட்டார். அவர்களும் அவனைத் தங்கள் நண்பருள் ஒருவனாகவே கொண்டு வாழ்ந்து வந்தனர். அத்தகைய குடும்பந்தானே அவர் குடும்பம்! ஒருநாள் மாலை பிசிராந்தையார் வெளியில் உலாவிக் கொண்டிருந்தார்; வடக்கு நோக்கிப் பறந்து செல்லும் ஓர் அன்னத்தைக் கண்டார்; அதைச் சோழன் பால் தூதுவிட எண்ணினார்; சோழன்பால் கொண்ட நட்பு அவரை அவ்வாறு எண்ணச் செய்தது. அவர் அவ் வன்னத்தைப் பார்த்து, "அன்னச் சேவலே! அன்னச்சேவலே! நீ குமரியாற்றங் கரையிலே அயிரை மீன்களைத் தின்று, வடதிசையில் உள்ள இமயமலைக்குப் போவா யாயின், செல்லும் வழியில் சோழ நாடு உள்ளது. அதன் தலைநகர் உறையூர். அவ் வுறையூரின் உயர்ந்த மாடத்தின் மேல் உன்பெடை யோடு தங்கி, வாயிலோனுக்கு அறிவியாமல் அரண்மனைக்குட் சென்று, எமது நண்பனாகிய கோப்பெருஞ் சோழனைக் கண்டு, 'நான் பிசிர் என்னும் ஊரில் உள்ள ஆந்தையின் அடிக் கீழ் வாழ்வேன்' என்று சொல்லுக. அது கேட்ட அவன் பெரிதும் மகிழ்ந்து நின் பெடை அணிந்து கொள்ளத்தக்க சிறந்த அணிகலம் தருவான்"(புறம்-67) என்றார். என்னே ஆந்தையாரின் நட்பின் திறம்! இவ்வாறு நேரில் கண்டு பழகாது கொள்ளும் நட்பை, வள்ளுவர் 'உணர்ச்சி', என்கின்றார். அதாவது உள்ளத்து உணர்ச்சி யால் ஒருவரையொருவர் நட்புக்கொள்ளுதல். இது உணர்ச்சி ஒன்றுதல் எனப்படும். புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சி என நட்பின் காரணம் மூவகைப்படும். ஓரிடத்தில் பிறந்தவர் நண்பரா யிருத்தல் - புணர்ச்சி எனப்படும். அடிக்கடி பழகுவோர் நட்புக் கொள்ளுதல் - பழகுதல் எனப்படும். இவ்விரண்டினும் உணர்ச்சி யொத்தலே சிறந்த நட்பு என்பது வள்ளுவர் கொள்கை. " புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்." என்பது அக்குறள். இக்குறளுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கு பவர் கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் ஆவர். இவர்கட்காகத்தான் வள்ளுவர் இக்குறள் செய்தார் போலும்! கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் இங்ஙனம் பழகா நட்பினராய் ஒருவரையொருவர் உளக்கோயிலின்கண் வைத்து அளவளாவி வந்தனர். அவர்கள் நட்பு, வளர்பிறை போல் நாளொரு வண்ணமாய் வளர்ந்து வருகையில், அந் நட்பின் முடிந்த முடிவை அறியும் காலம் ஒன்று வந்தது. பயிர் விளையும் நல்ல நிலத்தில் 'மிளகாய்ப் பூடு' என்னும் நச்சுப்பூடு முளைப்பது போல, நற்குண நற்செயல் களுக்கு இருப்பிடமான கோப்பெருஞ்சோழனுக்கு, மக்கட் பண் பாட்டுக்கு முற்றிலும் மாறுபட்ட குணமுடைய மைந்தர் இருவர் பிறந்தனர். அவர்கள் வளர வளரத் தீய குணங்களும் உடன் வளர்ந்தன. தமிழினத்தின் பெருமையைக் கெடுக்கப் பிறந்த அப்பதர்கள் தாய்மொழிப் பற்றுச் சிறிதும் இல்லாதவர்; தந்தை தமிழ்ப் புலவர்களோடு அளவளாவுதலை வீண்பொழுது போக்கெனக் கருதினர்; அவர் தமிழ்ப் புலவர்க்குக் கொடுப்பதை வீண் செலவு என்று எண்ணினர். அதனால், அப்பாளைகள் தந்தையைக் கொன்று அரசைக் கைப்பற்றுவதென முடிவு செய்தனர்; அதற்காகப் பெரும் படையையும் திரட்டினர். மைந்தர்களின் அறிவின்மையை அறிந்து சோழன் மனம் வருந்தினான்; அக்கீழ்மக்களின் இழிதகவை எண்ணி யெண்ணி மனம் புண்ணானான்; தமிழினத்தின் தனிப் பெருமைக்குத் தீராத இழிவையுண்டாக்கத் துணிந்த அத்தறுதலைகளின் இழி செயலை உன்னியுன்னி உள்ளம் உருகினான்; முடிவில், தாய்மொழிப் பற்றுச் சிறிதும் இல்லாத அக்கயவர்களிடம் தமிழ் மக்களை ஒப்படைப்பதை விட, அப்பதடிகளை ஒழித்து விடுவதே மேல் எனப் போர்க்கோலம் பூண்டான் கோப்பெருஞ் சோழன். இதனை எயிற்றியனார் என்னும் புலவர் அறிந்தார். அவர் சோழனை அணுகி, "வெற்றிப்புகழ் மிக்க கொற்ற வேந்தே! உன்னோடு போர் செய்ய வந்திருப்பவர் நின் பகைவ ரல்லர்; நீ அவர்கட்குப் பகைவனும் அல்லை; நீ இவ்வுலக வாழ்வை நீப்பாயானால் இவ்வரசாட்சி அவர்களுக்கே உரியதாகும். பின் இவ்வரசாட்சியை நீ யாருக்குக் கொடுப்பாய்? மைந்தருடன் போரிட்டு வென்றான் என்னும் வசை நிற்குமேயன்றி வேறில்லை; வெற்றிதோல்வி ஒருவர் பால் இல்லை, ஒரு வேளை நீயே தோற்பாயாயின் நின் பகைவர் மகிழ்வர்; எப்படிப் பார்க்கினும் இப்போர் நிறுத்தப்பட வேண்டியதேயாகும்"(புறம்-213) என்று, உண்மையை எடுத்தியம்பினார். புலவரின் பொருளுரையைக் கேட்ட சோழன் போர்க் கோலத்தைக் களைந்தான்; ஆட்சியை மைந்தரிடம் ஒப்பு வித்தான்; தன் மக்கள் தன்மேற் பகைகொண்டபின், தன்னைக் கொல்லத் துணிந்தபின் அவன் உயிர்வாழ விரும்பவில்லை. மயிர் நீப்பின் வாழாக் கவரிமா வன்ன மானமுடைய அவன் உயிர்விடத் துணிந்தான். அக்காலத்தே ஏதாவது பற்றி உயிர்விடத் துணிந்தவர் உண்ணாநோன்பிருந்து உயிர் விடுவது வழக்கம். இது வடக் கிருத்தல் எனப்படும். ஆற்றிடைக்குறை போன்றதொரு தூய இடத்தில் வடக்குமுகமாக இருந்து நோற்கப் படுதலின் இது இப்பெயர் பெற்றது. கோப்பெருஞ்சோழனும் அவ்வாறே காவிரி யாற்றின் நடுவில் உள்ள ஒரு மணல் மேட்டில் அமர்ந்து உண்ணா நோன்பைத் தொடங்கினான். பொத்தியார் முதலிய சான் றோரும் பிறரும் அவனைப் பிரிய மனமில்லாது அவனைச் சூழ அமர்ந்தனர். அரசன் அவர்களை நோக்கி, "என் ஆரூயிர் நண்பர் பிசிராந்தையார் வருவார்; அவருக்கு என் அருகில் இடம் விட்டு ஒதுங்கியிருங்கள்"என்றான். அது கேட்ட சான்றோர், "அரசே! பிசிராந்தையார் உனது பெயரைக் கேட்டதன்றி நின்னை நேரில் பார்த்தவரல்லர்; நீயும் அவர் பெயரைக் கேட்ட தன்றி அவரை நேரில் பாத்ததில்லை; மேலும் அவர் நெடுந்தொலைவில் உள்ளார். நீ வடக்கிருக்கும் செய்தியை அவர் எங்ஙனம் அறிவர்?"என்றனர். "இல்லை, நீங்கள் நினைப்பது தவறு; அவரும் நானும் உயிரொன்றிய நண்பர்கள்; அவர் நான் அல்லலுறுங் காலத்து நிற்கமாட்டார்; நான் வடக்கிருத்தலை அறிந்தும் வாராதிரார்; இப்பொழுதே வந்துவிடுவார்; அவருக்கு இடம் ஒதுக்குங்கள்"என்றான் சோழன். அவ்வாறே இடம் விட்டிருந்தனர். உணவுண்ணாமையால் சோழனது உடல் தளரத் தளரப் பிசிராந்தையாரின் மனம் ஒரு வகைக் கலக்கமுடைய தாயிற்று. ஒரே கவலை; வேறொன்றிலும் மனம் செல்ல வில்லை; பசியும் இல்லை. புலவரின் ஒத்த மனவுணர்ச்சி அங்ஙனம் செய்தது. " என் நண்பன் கோப்பெருஞ் சோழனுக்கு என்னவோ இடுக்கண் நேரிட்டுள்ளது; அவன் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறான்; அதனால் உண்டானதே இம் மனக் கலக்கம்; நான் போய்ப்பார்த்து வரவேண்டும்"என்று மனைவி மக்களிடம் விடை பெற்றுக் கொண்டு சோழ நாட்டை நோக்கி நடந்தார் புலவர். அவர் சில நாளில் உறையூரை அடைந்தார். 'இன்னே வருகுவன்; ஒதுக்குக அவர்க்கு இடம்' என்று சோழன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிசிராந்தையார் அங்கு வந்தார். ஆந்தையாரும் சோழனும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர். அப்போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எதை உவமை சொல்வது? ஆந்தையாரைத் தழுவிய அரசன், கண்ணீர் சோர, குழைந்த அன்போடு அவரை நோக்கி, "புலவர் பெருமானே! தங்களை நேரில் காணும் பேறு பெற்றிலேன் எனினும், புலவர் வாயிலாகத் தங்களுடைய குணநலன்களைக் கேள்வியுற்றுத் தங்களை நேரில் கண்டு அளவளாவ ஆவல் கொண்டிருந்தேன்; நான் அரியணையில் அமர்ந்திருந்தபோது நீர் வந்திலீர்; வடக்கிருக்கும் இக்காலத்தே வந்தீர். இஃதொன்றே தங்களது நட்பின் சிறப்பை விளங்கச் செய்கிறது"என்று தன் உள்ளத் துணர்ச்சியை வெளிப்படுத் தினான். சோழனது நட்புரிமைச் சொல்லைக் கேட்ட ஆந்தையார் இன்பக் கடலில் திளைத்தார்; அவனது அரும்பெருங் குணத்தை எண்ணியெண்ணிக் கண்ணீர் வடித்தார். எதிர்பாரா அந் நிகழ்ச்சியைக் கண்ட பொத்தியார் வியப் புற்றார்; 'எங்கள் அரசன் அரசைத் துறந்து வடக்கிருக்கத் துணிந்ததை நினைக்க நினைக்க வியப்பைத் தருகிறது. ஆனால், வேற்று நாட்டினராகிய புலவர் பெருமான், நட்பையே துணை யாக் கொண்டு இத்தகைய துன்பக் காலத்தில் இங்கு வந்தது அதைவிட வியப்பைத் தருவதாகும். 'ஆந்தையார் இப்பொழுதே இங்கு வருவார்' என்று துணிந்து சொல்லிய மன்னனது ஒப்பற்ற மனவுணர்ச்சியும், இவனது சொல் பழுது படாமல் வந்த சான் றோனது அத்தகு மனவுணர்ச்சியும் நினைக்க நினைக்க உண்டாகும் வியப்பு எல்லையின்றிச் செல்கிறது. தன்னாட்டில் வாழும் சான்றோர் உள்ளத்தையே யன்றி, வேற்று நாட்டில் வாழும் இவர் உள்ளத்தையும் தன்பால் ஈர்த்த இப்பேரரசனை இழந்த நாடு இனி என்ன துன்பத்தை அடையுமோ! அதுதான் இரங்கத் தக்கதாகும்' (புறம்217)என, மனமுருகிப் பாடினார். மற்றப் புலவர்களும் அவ்விருவர் தம்நட்புரிமைச் சிறப்பினை வியந்து பாராட்டினர். உணர்ச்சி யொன்றுபட்ட கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் வடக்கிருந்து ஒருங்கு உயிர் விட்டு, நட்பின் பெருமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வாராயினர். 'கோப் பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் போல உணர்ச்சி யொப்பின், அது உடனுயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும்' என்பது பரிமேலழகரின் பயனுரை. புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சி என்னும் மூன்றும் நட்பிற்குக் காரணம் என்கிறார் வள்ளுவர். ஓரூரினர் கொள்ளும் நட்புக்குக் காரணம், புணர்ச்சி எனப்படும். அடிக்கடி கண்டும் பேசியும் கொள்ளும் நட்புக்குக் காரணம், பழகுதல் எனப்படும். ஆனால், இருவர் உற்ற நண்பர்கள் ஆதற்குக் காரணம், ஒத்த உணர்ச்சி, அல்லது உணர்ச்சி ஒன்றுதலே, சிறப்புடை தாகும் என்கின்றார் வள்ளுவர். அவ்வாறு உணர்ச்சி ஒன்றிய நண்பர்களை என்றும் எவராலும் பிரிக்க முடியாது. அதனாலேதான் ஏனைய இரண்டினும் இது சிறந்ததானது. ஆனால், நம் கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தை யாருக்கும் ஏற்பட்ட நட்பு ஒரு புது வகையான நட்பாகும். அவர்கள் ஒருவரை யொருவர் ஒரு நாளும் நேரில் கண்ட தில்லை. 'அவர் இத்தகையர், இவர் அத்தகையர்' என்று பிறர் கூறிய கூற்றைக் கொண்டு அவ்விருவரும் அத்தகைய நட்புடைய வரானார்கள் என்றால், அவ்விருவர் நட்புக்கும் எதனை உவமை கூறுவது! உண்ணாதிருத்தலால் சோழன் உயிர் வாடவாட ஆந்தையாரின் உள்ளக் கவலை மிகுந்து கொண்டே வந்ததாம். என்னே அன்னாரின் ஒன்றிய உணர்ச்சி! வாழ்க அன்னார் நட்பு! இத்தகைய மனமொத்த நட்புரிமை மக்களிடை மலர்வதாக. இந்நாட்டின் எதிர்காலக் குடிமக்களாகிய நீங்கள் ஒருவர்க் கொருவர் உணர்ச்சி ஒன்றிய நட்புரிமை பூண்டு இந்திய ஒருமைப் பாட்டினை நிலைபெறச் செய்வீராக.  பூவா முல்லை முன்னுரை பூவா முல்லை என்னும் இந்நூலில் உள்ள கட்டுரைகளில் பெரும்பாலான முத்தாரம் என்னும் மாத இதழில் வெளிவந்தவை யாகும். தமிழ் மக்களின் பயன்பாடு கருதி நூல் வடிவில் வெளி வருகிறது. தமிழ் மக்கள் படித்துப் பயனுறுக. 7-12-61 பவானி புலவர் குழந்தை 1. பூவா முல்லை “அன்னாய்! தமிழ்முழு தறிந்த உனக்கு நான் எடுத்துச் சொல்ல என்ன இருக்கிறது? மாந்தளிரன்ன நின் மாமேனி உண்ணா திருந்திருந்து உதிர்ந்த அவ்விலை போல வாடி விட்டது. கருங்குவளையைப் பழித்த நின் கயலுண்கண்கள் உறங்கா திருந்திருந்து குவிந்த அம் மலர்போல ஒளி மழுங்கி விட்டன. ஒளிமதி போன்ற நின் மலர் முகம் எண்ணக் கவலையின் எழுவேக் காட்டால் உவாமதிபோல ஒளியிழந்து விட்டது. ஆம்பலிதழ் போன்ற நின் அமுதவாய் அரற்றியரற்றி வண்டுண் மலர்போல் பசை யிழந்து விட்டது. நான் பொய் கூறவில்லை, மெய். ஆடியிற் பார்த்து நீயே அறிவாய். இங்ஙனம் நீ ஆற்றாது வருந்தினால், இயற்கையின் அமைந்த நின் கட்டழ கென்னாம்? பசப்பென்னும் பாவி உண்டேப்ப மிட்டுக் களிப்பானன்றோ? அன்னாய்! பொறையே பெண்டிர்க்குப் பூண் என்பது, புலவர் பெரு மக்களின் பொருளுரை யன்றோ? அன்றியும், நீயோ தொல்காப்பியத்தை எழுத்தெண்ணிப் படித்தவள். நீ கொண்டுள்ள இவ்வாற்றாமையை அவர், “தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்” என்னும் ஒவ்வாக் காமமாகிய பெருந்திணை யென்றல்லவோ புகல்கின்றார்? தொல்குடிப் பிறந்த உனக்கு அது தகுமோ? அன்னாய்! எண்ணிப்பார்.” “போடி!வாயால் சொல்லுகிறவளுக் கென்ன? பொறு மைக்கும் ஓர் எல்லை யில்லையா? பொறுமை பொறுமை! நல்ல பொறுமை! என்னைப் பொறுமையில்லாதவளென்று குறைகூறுதல் உனக்கே தகும். யார் என்னைப் போல் பொறுமையுடையவர்? ஒன்றா இரண்டா? முப்பத்திரண்டு மாதங்கள்! பொறுத்தாச்சு பொறு பொறென்று. இத்தனை மாதங்கள் என்போற் பொறுமை யாக இருந்தவர் யார்? ஓர் எடுத்துக்காட்டுச் சொல் பார்க்கலாம்?” “நான் சொல்ல வேண்டுமா? நீயே கற்றறிந்திருப்பாயல்லவா? உன்போற் பிரிவாற்றாது வருந்துவதை ஒவ்வாக் காமம் என்னும் அதே தொல்காப்பியர், தலiயைப் பிரிந்துவெளி நாடுகட்குச் சென்று அந்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களை, தொழிற்றிற மைகளை, நாகரிக நல்வாழ்வினை நேரிற் கண்டறிந்து வரப் பிரியும் அவ்வோதற் பிரிவு மூன்றாண்டு வரை உண்டென் கின்றாரல்லவா? நம் முன்னோராகிய தலைவியர், அம்மூன்றாண்டுக் காலமும் ஆற்றியிருந்த அவ்வாழ்வியலை யல்லவோ தொல் காப்பியர் இலக்கணமாகச் செய்துள்ளார்?” “ஆமாம், இவ்வாறு இலக்கணங் காட்டி வருத்துவது தானே உன் போன்ற தோழியரின் தொழில்? நீ யென்ன அதில் இளைத்தவளா? ஆற்றியிருத்தற்கும் ஓர் எல்லையே இல்லைப் போலும்!” “கொங்குச் செல்வி! நின் பிறந்த குடிப் பெருமையை எண்ணிப்பார். கொங்கு நாட்டார் பொறுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்பவர். நம்மவரென்று இங்ஙனம் கூறவில்லை. மயிலுக்குப் போர்வை போர்த்த வள்ளல் பேகன், தன்னைப் பிரிந்து வெளிநாடுகூடச் செல்லவில்லை. உள்ளூரிலேயே அதுவும் மற்றொருத்தியின் வீட்டில் இருந்தும், அப்பேகன் மனைவியாகிய கண்ணகி என்னும் கொங்கர் குலக் கொம்பர் ஆற்றியிருந் தனள் என்பதை நீ புறநானூற்றில் படித்தறிந்துள்ளா யல்லவா? கொங்கு வேளிர்குடி சிறப்பு மிக்க தொன்முது குடி. அக்குடியிற் பிறந்த நீ பிறந்த அக்குடிப் பெருமையைக் கெடுக்கலாமா? கொங்கு நாட்டுக் குரிசிலான இளங்கோவேளின் மகள், இளங்கோ வேண்மாள், பெண்டிர்க்குப் பூணாக விளங்கும் பொறையிறந்து அக்குடிப் பெருமையைக் கெடுத்தாள் என்னும் பழிச் சொல்லை. நிலை நாட்டுதல் உன்போன்ற நற்குடிப் பிறந்த நங்கையர்க் கழகாகுமோ!” “இன்னுங்கேள். நின் மாமியாரின் மாமியாரான வெளியன் வேண்மாள் என்னும் நின் குலக் கொடி, தன் கொழுநரான உதியஞ்சேரல் என்பார், பல போரில் ஈடுபட்டிருந்த போதும், வடநாட்டில் நடந்தபாரதப் போரின் போது பாண்டவர்க்குப் படைத்துணையாகி, அன்னார் படைக்குப் பெருஞ்சோறளித்துக் கொண்டிருந்த போதும் ஆற்றியிருக்க வில்லையா?” “ஏன்? நின் மாமியார் நற்சோணை யம்மையாரையே எடுத்துக்கொள். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற நின் மாமனார், யவனர் என்னும் மேனாட்டினர், நமது நாட்டை அடுத்துள்ள கடல் தீவுகளில் வந்து தங்கியிருந்து அடிக்கடி நம் நாட்டிடைப் புகுந்து குடிமக்கட்குத் தொல்லை கொடுத்து வந்த அன்னாரை, கடலிடைப் பலகலஞ் செலுத்திச் சென்று வென்று சிறைபிடித்து, அன்னார் ஆங்கு அணுகாதபடி செய்யப் பிரிந்த போதும், இமயம் வரைப் படையெடுத்துச் சென்று, பல மாதங்கள் ஆங்குள்ள வடவரச ரோடு பொருது வென்று, இமயத்தில் விற்பொறித்து மீளும் வரை ஆற்றியிருக்க வில்லையா? பிறந்த குடிக்கும் புகுந்த குடிக்கும் பெருமை யுண்டாகும்படி நடந்து கொள்வதே, அக்குடிப் பெருமையினைக் கெடுக்காதிருப்பதே பெண்ணின் கடமை யாகும். அன்னாய் நன்கு எண்ணிப்பார்.” “நீ சொல்வ தெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. நான் தப்பென்று சொல்லவில்லை. நீ சொல்லின் செல்வியல்லவா? சொல்வன்மை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் சொல்லும் சொல்வன்மை யிலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழும் நீ சொல்வதை என்னால் மறுக்க வியலாதுதான் ஆனால்?” “அன்னாய்! ஆனால் என்பதன் பொருள். ‘ஆனால், நீ சொல்வதை ஒப்புக் கொண்டாலும், சொல்வது உண்மை என்பதை உணர்ந்தாலும் என்னால் ஆற்றியிருக்க முடிய வில்லையே என் செய்யட்டும்? நீர்மலிவான் எனத் தமிழகத்தை வளப்படுத்துத் தமிழ்மொழி போல மக்கள் வாழ்தற் கினிமையுடைய தாக்கி, மேனாட்டினரும் வட நாட்டினரும் விரும்பி வந்து தங்கி வாழும் படி செய்வித்த பெருமையுடையது நீலமலைத் தொடர். உலகிலுள்ள பெருமலை களில் தன் னிருபால் உள்ள நிலத்தையும் வளமுறச் செய்யும் மலைத் தொடர் இதுவே யாமெனில் அது மிகைபடக் கூறலாகாது. அத்தகைய பெருமை பொருந்திய நீலமலையின் மேற்குச் சாரலில் தோன்றி, தன் மேல்பாலுள்ள நிலத்தை வளஞ் செய்து மேல் கடலில் - அரபிக்கடலில் - சென்று கலக்கும் பேராறு, ஆன்பொருநை என்னும் பேராறே யாகும். அவ் வான் பொருந்தத்தினையே அகழாகக் கொண்டு விளங்கும் மேல் கடற்கரைப் பட்டினமாகிய நமது வஞ்சிமாநகர் அவரில்லாத காரணத்தால் பொலிவற்றிருக்கிறது. அப்பழம் பெருமுது நகரின் நடுவே, எல்லாச் செல்வமும் பொருந்திய அகன்றுயர்ந்த கோயிலின் கண்ணே, நெடிய அடுக்குகளுடன் உயர்ந்து, ஞாயிறு கடந்து செல்ல முடியாமல் விலகிச் செல்லும் இப்பொன் மாளிகையில், சுற்றிலும் முத்தாரங்கள் தொங்கும் ஓவியக் கூடம் போல விளங்கும் மேற்கட்டினையுடைய, தங்கத் தகடு போர்த்து அதன் மேல் வைர மணிகள் பதிக்கப் பெற்ற குத்துக்கால்களையும் சட்டங்களையும் உடைய இப்பொற்பாடிலின் மீது, தன் சேவலுடன் கூடிய உணர்ச்சியால் அனைப்பேடை உதிர்த்த மென்மையான அடி வயிற்றுத் தூவிகளையிட்டுப் பல அடுக்குகளாகத் தைத்து விரிக்கப் பட்ட இப்பஞ்சணை, அவரில்லாத பொலிவின்றிப் புல்லென்று கிடக்கின்றது’ என்பது தானே?” “ஆமாம். அதற்கென்ன ஐயம்? சென்ற ஆண்டு அவர் பிறந்த நாள் விழா நடந்ததா என்ன? இவ்வாண்டு தான் என்ன? நாளை அந்நன்னாள் நடக்கவா போகிறது? அவர் பிரிந்து சென்றதிலிருந்து இப்பஞ்சணை பயனின்றித் தானே கிடக்கின்றது? அவர் இங்கிருந்திருந்தால் நகர மக்கள் எத்தனை திருநாளும் பெருநாளும் கொண்டாடிக் களித்திருப்பர்? மக்கள் மகிழ்ச்சி தானே நம் மகிழ்ச்சி?” “ஆம், அன்னாய்! ஆனாலும் மகிழ்ச்சியைவிட மானக் கேடு பெரிதல்லவா? வடவராகிய கனகனும் விசயனும் மானத்தின் செல்வர்களாகிய தமிழர்களைத் திறமையற்றவர் என்று பழித்த அப்பழியைத் துடைக்க வல்லவோ நம் தலைவர் சென்றிருக்கிறார் ஆண்மையற்றவரென அயலார் பழித்த பழியைப் போக்கிப் பழியற்றவர்களாய், மானத்தோடு வாழ்வதை விடவா மக்கள் திரு நாளையும் பெருநாளையும் விரும்புவர்? மானங் கெடவரின் உயிர் நீங்கும் மாண்புடைய ரல்லரோ தமிழர்?” “இல்லை, மானத்தோடு வாழ்வதைத் தான் விரும்புவர். தன்மானம் என்பது தமிழரின் தனிப்பண்பாடு என்பதை நான் மறுக்கவில்லை. தமிழ்மக்களின் பழி துடைக்கச் சென்றுள்ளதை நான் பாராட்டுகிறேன். ஆனாலும், என் ஆற்றாமை என்னவோ என் மனவுறுதியையுங் குலைத்து என்னை வருந்தும் படி செய்கிறது. அதை அடக்கும் ஆற்றல் இல்லாதவளாக நான் இருக்கின்றேன். என் ஆற்றாமை, நாணுத்தாழ் இட்ட நிறை என்னும் கதவை உடைத்துக் கொண்டு வெளிக் கிளம்புகிறது. இன்ன செய்வ தென்றே எனக்குத் தோன்றவில்லை. தோழி! நின் ஆறுதல் மொழிகள் என் செவியில் புக இடமில்லாமல் செய்கிறது அவ்வாற் றாமை!” “சேரமாதேவி! பத்துப் பாட்டினுள் ஒன்றான முல்லைப் பாட்டை நீ படித்தறியாதவள் அல்லள். அம்முல்லைப் பாட்டு என்ன கூறுகிறது? அதில் கூறும் முல்லைத்திணையின் இலக்கணம் என்ன? பிரிந்துசென்ற தலைவன் வரும் வரை, அவன் எதகற்காகப் பிரிந்து சென்றானோ அத்தொழில் வெற்றியில் மனத்தைச் செலுத்தி, அதாவது தலைவன் மேற் கொண்டுள்ள தொழில் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ண முடையளாய் அவன் வெற்றி தன் வெற்றியாகக் கொண்டு தலைவி ஆற்றியிருத்தல் தானே முல்லைத்திணை என்கின்றது அம்முல்லைப்பாட்டு? அப்பாட்டினைப் பன்முறை பயின்றுள்ள நீ அதன் பயனை யிழத்தல் முயைhகுமா? ‘கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்பது பொய்யா மொழியன்றோ? கற்றதன்படி நடப்பது தானே கல்வியின் பயன்?” “அன்னாய்! நம் பொன்மாளிகையின் புறத்தே நாம் வைத்து வளர்த்து வரும் முல்லைக் கொடியின் அரும்புகள், தம்மைப் பிரிந்து சென்ற மாலைக்காலம் வந்த பின் தானே மலர்கின்றன? ஓரறிவுயிராகிய அக்கொடி முல்லையின் இச்செயலைக் கொண்டு தானே நம் முன்னோர்கள் ஆற்றி யிருத்தற்கு முல்லை என்று பெயரிட்டுள்ளனர்? இது பற்றித் தானே இத்திணையைப் பூவா முல்லை எனச் சிறப்பித்துப் போற்றலாயினர்? வாடா வஞ்சிக் கொடியாகிய நீ, பூவா முல்லைக் கொடிபோன்றிருப்பது தானே முறை? அன்னாய்! நின் தமிழுள்ளத்தால் நன்கு எண்ணிப்பார்!” “எண்ணிப் பார்க்காமலில்லை. எண்ணி யெண்ணி என் மனம் புண்ணானது தான் மிச்சம்! ஓரறிவுயிராகிய அப்பூக்கும் முல்லைபோல ஆறறிவினளாகிய என்னால் அப்பூவா முல்லை யைப் போற்ற முடிய வில்லையே.ஆற்றுதல் என்பது என் ஆற்றலை மீறிய ஒன்றாகி விட்டது. யார் வெளியில்?” “கூனும்குறளுமாகிய நம் குற்றேவல் மகளிர் வருகின்றனர்.” “அன்னாய்! வாழ்க நின் பெண்மை! வளர்க நின் இன்பம்! நம் தலைவர் வந்து விட்டார்.” “வந்து விட்டாரா! இந்தா! இம் முத்துமாலையை அணிந்து கொள்.” “அன்னாய்! தமிழரின் பழியைத் துடைக்கச் சென்ற நம் தலைவர், தமிழ் பழித்த கனக விசயரைச் சிறைபிடித்து வருகின் றாராம்; அவர் தம் முடித்தலையில் கண்ணகியின் படிமக்கல் ஏற்றி வருகின்றாராம்; நம் வளமார் வஞ்சியினின்று வஞ்சிசூடிச் சென்ற அவர், தும்பை வேய்ந்து சில நாழிகையில் வாகை புனைந்து வெற்றிக் களிப்புடன் நம் நகர்நோக்கி வந்து கொண்டிருக் கிறாராம். சோழ பாண்டியர்க்குக் காட்டி மகிழ்ச்சி யூட்டிவர, வில்லவன் கோதை அவ்வடவரை அழைத்துச் சென்றிருக் கிறாராம். அன்னாய்! நின் ஆற்றாமை ஒழிக! வாழ்க பல்லாண்டு! வெற்றிக் களிப்புடன் வரும் தலைவரை வரவேற்கச் செல்வோம்; ஒப்பனை செய்து கொள்க. அன்னாய்! பட்டாடையும் பன்மணிக் கலன்களும் நின் மேனியைப் பொருந்துவதாக. ஒருங்குபன் நறுமலர் நன் கருங்குழலின் மருங்கடைக! அன்னாய்! வாழ்க நின் எழில் நலம்!” “அன்னாய்! இங்கே வருக! அதோ பாரும், நகரின் கீழ் பால் உள்ள அச் சில்குன்றில் ஒரு யானை அசைவற்று நிற்பதை. ஏன்அவ்வாறு வாளா நிற்கின்றது? அதோ அத்தினைப்புனத்தின் அருகில் உள்ள வேங்கை மரத்தின் கீழ் ஒரு கானவன் உட்கார்ந் திருப்பதைப் பாரும். அவன் மூங்கிற் குழலிலிட்டுப் புதைத்து வைத்த முதிர்ந்த தேனையுண்டு மயங்கிக் கவண்கல் எறிவதை விட்டு அயர்ந்து அவ்வாறு வாளா உட்கார்ந்திருக்கிறான். அவன் அவ்வாறு உட்கார்ந்திருப்பது கண்ட யானை தினை யுண்ண வந்தது. பின் ஏன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அப்படியே நிற்கிறது? ‘வஞ்சிசூடி வடநாடு சென்று வாகை சூடிய யானை விரைந்து வருகிறது. அது வரும் வழியில் சென்று அதனைக் கண்டு களிப்பாய்’ என்று உயர்ந்த பரண் மீதிருந்து நம் தலைவரின் வெற்றிச் செயலைப் பாடும் குறத்தியரின் குறிஞ்சிப் பாடலைக் கேட்டுத்தான் அவ்யானை அவ்வாறு நிற்கிறது. தமிழிசையின் பெருமையே பெருமை!” “அதோ அவ்வயலிடை உழும் உழவன் பாடும் மருதப் பாடலைக் கேட்பாயாக. அவன் பாடுவதென்ன? ‘என் அருமை எருதுகளே! வடநாடு சென்ற நம் மன்னவன், வடவரின் கொட்டத்தை யடக்கி மீண்டனன். நாளை நமது மன்னனின் பிறந்த நாள். சிறையிலிருக்கும் பகைவர்களின் விலங்கு நீங்கும் அப்பெருமங்கல நாளில் நான் கலந்துகொள் வேனாதலால், உங்களுக்கும் நாளை விடுமுறை நாளாகும். நீங்களும் நாளை நுகம் பூணுதல் தவிர்வீர்’ என்பதே அவன் பாடும் பாட்டின் பொருளாகும்.” “அதோ குளிர்ச்சி பொருந்திய ஆன்பொருநை யாற்றில் நீராடும் அம்மகளிர் வழித்தெறிந்த தொய்யிற் குழம்பும், முகத்துக்குப் பூசிய பொற் சுண்ணமும், கூந்தலிற் சூடிய நறுமலர்களும் வானவிற் போலத் தோன்றும் அப்பேரியாற்றின் பெருந்துறையில், வண்ண வண்டுகள் உண்ணும்படி மலர்ந்த நீலமணி போலும் நிறத்தினை யுடைய குவளை மலரையும், முள்ளிப் பூக்களையும், மலர்களின் தலைமையேற் றொளிறும் தாமரை மலரையும் கலந்து சூடிய கோவலர்கள், அவ் வகன் கரையிலுள்ள, வெள்ளைக் கொக்குப் போல மலர்ந்த தாழை மரத்தின் கிளையின் மேல் இருந்து கொண்டு, ‘ஏ! எம் அன்புக்குரிய ஆக்களே! விற்கொடியை யுடைய நம் மன்னவன் வெற்றிக் கொடியுடன் மீண்டனன். இமயமலைப் பக்கத்தே யிருந்து அவன் கொண்டு வந்துள்ள ஆநிரைகளைக் கண்டு அவற்றுடன் அளவளாவுவீர்’ என்று, அவ் வாநிரைகளை நீர்குடிக்க விட்டு அக் கோவலரூதும் குழலிசையைக் கேட்பாயாக.” “அதோ அலை வீசுகின்ற அக்கடற்கரையைப் பாரும். அதோ அக்கடற்கரை மணல் மேட்டிலுள்ள புன்னை மரத்தின் கீழ் வெண்சங்கீன்ற ஒளிவெண் முத்துக்களைக் கொண்டு பாடிக் கொண்டு கழங்காடும் மகளிரைப் பாரும். அவர்கள் என்ன பாடுகின்றார்கள்? ‘எங்கைமீர்! வடநாடு சென்ற நம் மன்னர் பெருமான் வந்தனன். நீண்ட நாளாய் அவனைக் காணாத நம் கண்கள் கண்டு களிக்க; பனை மாலையுடன் சூடிய வஞ்சியும் தும்பையும் வாகையும் வாழ்க’ என்பதேஅவர் பாடும் பாட்டு.” “குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நானிலங் களும் சூழ்ந்து விளங்கும் நமது வஞ்சிமா நகரின் சிறப்பே சிறப்பு!” “அம்மா! அதோ, வெற்றி முரசொலி முழக்கம்!” “ஆமாம், அன்னாய்! அதோ யானையின் மீது நம் அரசர் பெருமான்! வாருங்கள் போய் எதிர்சென்றழைக்க ஏற்பாடு செய்வோம்.” “இதோ! நம் தலைவியின் தளர்ந்த வளையல்கள் செறிந்து விட்டன.” “வளையல்கள் செறியவில்லை. வாடிய முன்கை பெருத்து விட்டது.” “நீங்கள் இருவர் சொல்வதும் ஒரே பொருள் தான்.” “நமது தலைவி, பொறையெருப் போட்டு, அன்பு நீர் பாய்ச்சி முப்பத்திரண்டு மாதங்களாய் அருமையாக வளர்த்து வந்த பூவா முல்லை இன்று பூத்து விட்டது. பூத்துப் பொலிவதைப் பாருங்கள். வாழ்க நம் தலைவியின் அப்பூவா முல்லை!”  2. ஏறுதழுவல் வீரம், கொடை, புகழ் என்னும் இம்மூன்றுமே மக்கள் வாழ்வின் பயன்பாட்டுக் குறிக்கோளாகும். இம்மூன்றனுள் வீரமே ஏனையிரண்டிற்கும் காரணம் எனலாம். வீரத்தாற் பொருளீட்டி எளியவர்க்குக் கொடுத்துப் புகழ் பெறுதல் முறை யாதல் காண்க. வீரமற்றவர் வாழ்வின் குறிக்கோளை உள்ளபடி அடைய முடியாது. நம் முன்னையோராகிய பழந்தமிழ் மக்கள் இவ்வுண்மையையுணர்ந்து கடைப்பிடித்து உயர்வாழ்வு வாழ்ந்து வந்தனர் என்பது அறிந்து இன்புறற்பால தொன்றாகும். தமிழ்நாடு வீரத்தின் விளைநிலம். வீரக் குடிமக்களின் வாழ்விடமாய் அமைந்தது தமிழ் நாடு. தமிழ் நாட்டின் வீரம் உலகப் புகழ் பெற்றது; உவமைப்பொருளற்றது;உயர்வுக் குயர் வுற்றது. தமிழர் வீரம் கதிரவனின் ஒளி போன்றது; காற்றின் அலை போன்று; கனை கடலின் நிலை போன்றது. வீரமே உருவானவர் தமிழ் மக்கள் என்பது சுருங்கக் கூறி விளங்க வைத்தலாகும். புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய சங்க நூல்களில் தமிழர் வீரத்தை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் விளக்கமாகக் காணலாம். அகம், புறம் என்னும் தமிழர் ஒழுக்கக் கூறுபாட்டில் புறம் என்பது வீரத்தின் திரட்சியேயாகும். பழந்தமிழ் மக்களின் வீரக் கருவூலமே புறப்பொருள் என்னலாம். பழந்தமிழ் மக்கள் வீரத்திற்கு இலக்கியங் கண்ட தோடு மட்டும் நிற்கவில்லை; வீர இலக்கியத்திற்கு இலக்கணமும் கண்டு எழுச்சியுடன் வாழ்ந்து வந்தனர். தொல்காப்பியப் பொருளதி காரப் புறத்திணையியல் என்பது வீர இலக்கணப் பிழம்பாகும். வீரத்தை ஓர் ஒழுக்கமாகக் கொண்டு, அதற்கு இலக்கியமும் இலக்கணமும் கண்ட பெருமை தமிழ் மக்களுக்கே உரிய தனிப்பெரு மையாகும். பழந்தமிழ் வீரம் புறவாழ்வோடு மட்டும் நின்று விட வில்லை; அவர்தம் அகவாழ்வும் வீரத்தின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. வீரமற்ற ஆடவரை மகளிர் விரும்பாமையும், கற்பென்னும் திண்மையும், உடனுயிர் நீத்தலும், ஆடவரும் காதல் தப்பின் சாதலை மேற் கொண்டதும் இதற்குச் சான்றாகும். அக்கால ஆடவரும் மகளிரும் தபுதார நிலையும், தாபத நிலையும் மேற்கொண்டு வாழ்ந்ததும் வீரத்தின் பாலதேயாகும். அகவாழ்வு, புறவாழ்வு என்னும் வாழ்வின் இரு கூற்றினும் வீரம் பொருந்த வாழ்ந்து வந்த நம் முன்னையோர் வாழ்க்கை முறை நம்மனோரால் மேற்கொள்ளத் தக்க தொன்றன்றோ? அன்னார் நடக்கை முறைகளைக் கைவிட்டுப் பெயரை மட்டும் விடாமல் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கும் தற்காலத் தமிழர் வீரமே வீரம்! போர்க் காலத்தே மட்டுமன்றி, திருநாள், பெருநாள் ஆகிய சிறப்புக் காலத்தும் பழந்தமிழ் மக்கள் வீரக் குறிப்பு நிகழ்த்தி வந்தனர். போர்க்குப் புறப்படும் முன் ஒரு நாள், மறக்குடிமக்கள் வாளும் வேலும் கொற்றக் குடையும் உயர்த்தி, ஆடல் பாடலுடன் நகர்வலம் வருவர். அது வாள் நாட்கோள், குடைநாட்கோள் எனப்படும். வாணாள் குடைநாட்கோ ளன்று, மறவர்கள் வாளை நாட்டித் துடியென்னும் ஒருவகைப் பறையடித்துக்கொண்டு அவ்வாளைச் சுற்றி ஆடிவந்து, அவ்வாள் முனையில் வீழ்ந்து உயிர்விடுவர் ஒரு சிலர். இவ்வீரக்குறிப்பை அவிப்பலி என்பர் தொல்காப்பியர். அதாவது வெற்றி வாளுக்கு,வெற்றியின் உருவ மான கொற்ற வைக்குத் தம் ஆவியைப் பலியிடுதல் என்பது பொருள். அதனால், இது கொற்றவை நிலை எனவும் வழங்கும். இது வியத்தகு வீரக்குறிப்பாகு மன்றோ? இன்று தேர்த்திருநாளின் போது அலகுகுத்திக்கொண்டாடுதல் அத்தகைய வீரக் குறிப்பின் நினைவு நிகழ்வேயாகும். இன்று தமிழ் மக்கள் தமிழ்த்திருநாள் என உரிமை யுணர்ச்சி யுடன் கொண்டாடி வரும் தைப்பொங்கல் திரு நாளின் போது, தமிழ் நாட்டின் சில பகுதிகளில் ஒரு காளையை விரட்டிவிட்டு, அதனைப் பிடித்தடக்குவோர்க்குப் பரிசு வழங்கிப் பெருமைப் படுத்தி வருகின்றனர். இது சல்லிக்கட்டு, மாடுபிடித்தல், காளைப்போர், மஞ்சிவிரட்டு என, இடத்துக் கிடம் வெவ்வேறு பெயர்களில் வழங்கி வருகிறது. இது தமிழர்க்குப் புதிதன்று; பழந்தமிழ் மக்கள் நிகழ்த்தி வந்த ஏறுதழுவல் என்னும் வீரக் குறிப்பைப் பின்பற்றியதேயாகும். ஏறு - காளை. தழுவுதல் - பிடித்தடக்குதல். ஏறுதழுவல் : ஏறுதழுவல் என்பது, தைப்பொங்கற்றிரு நாளின் போது பழந்தமிழ் மக்கள் கொண்டாடி வந்த ஒரு வீர விளையாட்டாகும். தைப் பொங்கலின் போது, இன்று பந்தயக் குதிரைகள் வளர்ப்பது போல, அதற்கெனவே வளர்க்கப்பட்ட காளைகளைக் கூராகக் கொம்புகளைச் சீவி ஒரு தொழுவத்தில் விட்டு, பறையறைந்து வெருளச் செய்வர். அவை வெருண்டு கண்கொண்டு அங்குமிங்கும் ஓடித்திரியும். ஏறுதழுவும் காளையர் அத்தொழுவத்திற்குட் புகுவர். புகவே, இக்காளையரைக் கண்ட அக்காளைகள் சினங் கொண்டு சீறிச் செருக்கடித்துக் கொண்டு பாயவரும். அக்காளையர் அஞ்சாது எதிர்த்துச் சென்று அக்காளைகளைப் பிடிப்பர். கண்கொண்ட காளைகட்கும் கைகொண்ட காளை யர்க்கும் கடும் போர் நடக்கும். போர்க்களத்தில் நடக்கும் களிற்றுப் போர் இங்கு நினைவு கூரப்படும். இக்காளைப் போரில் ஒரு சிலர் வீரச்சா வெய்துவர். வென்றவர் வீரப்பரிசு பெறுவர். அக்காளைய ரால் பிடித்தடக்க முடியாத காளைகள் வீரப்பரிசு பெற்றுத் தம்மை வளர்த்த வரைப் பெருமைப் படுத்தும். இதுவே பழந்தமிழ் மக்கள் நிகழ்த்தி வந்த ஏறு தழுவல் செய்தியாகும். கண்கொண்ட அக்காளைகள் தம்மைத் தழுவு வோரைக் கூரிய கொம்பால் குத்திக் குடரைச் சரித்துக் கொல்வதைக் கண்டும், பழந்தமிழ்க் காளையர் மேலும் மேலும் அடுத்துச் சென்று அக்காளைகளைத் தழுவிய வண்ணம் இருப்பர். சாவுக் கஞ்சுதல் எங்ஙனம் வீரத்தின் பாற்படும்? அப் பழந்தமிழ் வீரம் இன்று தமிழ் மக்களிடை அருகினமையே, தமிழ் நாடு இன்று தன் பெயர் சொல்லவும் அஞ்சி அடங்கி ஒடுங்கி அலமந்து கிடப்பதற்குக் காரணமாகும். அவ்வேறுதழுவலில், அப்பழந்தமிழ்க் காளையர்கள் தம் வீரச் செயலைக் காட்டி அக்காளைகளைப் பிடித்தடக்கி வீரப் பரிசு பெற்று விளங்கினமை போலவே அக்காளைகளும், அன்று போரில் யானைகளும் குதிரைகளும் தாமாகவே வீரங் கொண்டு பொருது, யானைமறம், குதிரைமறம் என்னும் புறத்திணைத் துறைச் சிறப்புப் பெற்றமை போலத் தம் வீரச் செயலைக் காட்டி வீரப் பரிசு பெற்று விளங்கின. வீரத்தின் பிறப்பிடமான தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவை யன்றோ அக்காளைகள். இக்காளை யர்களுக்குள்ள வீரம் அக்காளை களுக்கில்லாமலா போகும்? நம் முன்னையோர் ஏறுதழுவிய இச்செய்தி, எட்டுத் தொகையில் ஒன்றான, 'கற்றறிந்தார் போற்றும் கலி' என்று சிறப்பிக்கப்படும் கலித்தொகையின் முல்லைக் கலியிற் கூறப் படுகிறது. அது இக்காலத் தமிழ் மக்கள் அறிந்து பெருமை கொள்ளற்குரிய பெருமையுடைய தொன்றாகும். ஆனால், அது காலத்துக்கேற்ற மாறுதலையடைந்துள்ளது. புறப்பொருளாகிய அது, காதற்கலப்புடன் இணைக்கப்பட்டு, கற்பனை நலம் பொலிய அகப் பொருளின் கருப் பொருளாகக் கொள்ளப்பட்டு, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அவ்வளவில் உருப்பெற்றுள்ளது; முல்லை நில மக்களாகிய ஆயர்களின் காதற் கலப்பின் கடப்பாட்டுக் கருவியாக அமைந்துள்ளது. ஒருவன் ஒருத்தியின் கூட்டு வாழ்வை யுண்டாக்கி,அன்னார் இனிது இன்புற்று வாழ ஏதுவாக இனிதின் அமைந்துள்ளது அவ்வேறு தழுவல். ஆயர் என்பது, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் அகவொழுக்கம் ஐந்தனுள் ஒன்றான முல்லை யொழுக்கம் - இருத்தல் ஒழுக்கம் - நிகழ்தற்குரிய இடமான முல்லை நில மக்களைக் குறிக்கும் பெயரே யன்றி இனப்பெய ரன்று. இது நிலம் அல்லதுஇடத்தாற் பெற்ற பெயராகும். முல்லை, குறிஞ்சி முதலிய எல்லா நிலமக்களும் ஒத்த தன்மையையுடைய ஓரின மக்களே யாவர். அகப் பொருட்ட லைவனும் தலைவியும் அவ்வவ் வொழுக்கம் நிகழ்த்தும் போது அவ்வந் நிலமக்களாகக் குறிக்கப் பெறுவர். பருவமுற்ற ஒவ்வொரு ஆயர் மகளிரும் ஒவ்வொரு காளை வளர்த்து வருவர். அவை அன்னார் தம் காதலரின் வீரத்தின் அளவை அளக்கும் கருவியாகப் பொலிவுற்று வளர்ந்து வரும். ஏறுதழுவற்குரிய காலத்தே, 'எம்மகள் வளர்க்கும் காளையைத் தழுவிய காளைக்கு எம்மகளைக் கொடுப்போம்' என, அம்மகளிரின் பெற்றோர் பறையறைந் தறிவிப்பர். பறை யொலி கேட்ட அக்காளைகட் குரியாரின் காதலங் காளையர் உவப்பால் உள்ளம் உப்பி, ஊக்கத்தால் உடல்வலியுற்று, ஏறுதழுவும் அந்நன்னாளை ஆவலுடன்எதிர் நோக்கியிருப்பர். பழந்தமிழரிடை நிகழ்ந்து வந்த ஏறுதழுவற் செய்தி போலவே, இன்னுயிருண்ணும் ஈட்டிபோலக் கொம்பு சீவப்பட்ட அக்காளை களை அதற்கென உள்ள பெரிய தொழுவத்தில் விடுவர். தொழுவத் தைச் சுற்றிலும் உட்புறத்தில் சுவரையடுத்து அமைக்கப்பட்டுள்ள பரண்களில் அக்காளை கட்குரிய ஆயர் மகளிர் ஒவ்வொருவரும் தத்தம் தோழி மாருடன் அமர்வர். குறித்த நேரத்தில் முரசொடு பறையும் துடியும், சங்கொடு கொம்பும் குழலும் முதலிய பல்லியம் கார் காலத்து இடியென முழங்கும். அம்முழக்கங் கேட்டு, மலையினினின்றும் வீழ்கின்ற அருவி போல வெள்ளிய கால்களையுடைய காரி, மீன் பூத்து விளங்கும் மாலைக் காலத்து வான் போன்ற வெள்ளிய புள்ளி களையுடைய சிவலை, ஒளி பொருந்திய இளம்பிறை போல வளைந்து நீண்ட கூரிய கொம்புகளையுடைய சிவலை, பலராமன் மார்பில் அணிந்த சிவந்த மாலை போலக் கழுத்தில் சிவந்த மறுவினையுடைய வெள்ளை, சிவபெருமான் நிறம்போன்ற கபிலை முதலிய வெவ்வேறு நிறங்களுடன் விளங்கும் அக்காளைகள் வெருண்டு கண்கொண்டு சினத்துடன் செருக் கடித்துக் கொண்டு தொழுவத்துள் திரியும். அவ்வேளை, பிடவம் காயா செங்காந்தள் முல்லை குல்லை குருந்து கோடல் முதலிய பூக்களால் கட்டிய கண்ணிகளை அணிந்த ஆயர்கள் ஏறுதழுவும் விருப்போடு தொழுவினுள் புகுவர். புகவே, அக்காளைகள் கதங் கொண்டு இக்காளையரைப் பாய வரும். காளையர்க்கும் காளைகட்கும் கடும்போர் நடக்கும். "தொழுவினுள், புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின ஏறு" - முல்லைக் - 3 "எழுந்தது துகள் ஏற்றறர் மார்பு கவிழ்ந்தன மருப்புக் கலங்கினர் பலர்" - முல்லைக் - 2 என, அப்போரின் கொடுமை புகலப்படுகிறது கலித் தொகையில். இங்ஙனம் ஏற்றுப்போர் நிகழும் போது, விண் மீன்களாற் சூழப்பட்ட மதியைப் போலத் தோழியரால் சூழப்பட்டுப் பரண்மேல் உள்ள தலைவியர்க்கு அன்னார் தோழியர் தத்தம் காளைகளின் வீரச் செயலையும், அக்காளைகளைத் தழுவும் காளையரின் வீரச் செயலையும் உவமை நயத்துடன் எடுத்தியம்புவர். அக்காதலங் கன்னியர் அவ்வீரச் செயல்களைக் கண்டுங் கேட்டுங் களித்துழியிருப்பர். அத்தோழியர் கூற்றுள் ஒரு சில வருமாறு: "அன்னாய்! உயர்ந்த மரக்கிளையினிடத்தே யுள்ள கூட்டினுள் இருக்கும் அழகிய பட்டுப் புழுப் போன்ற நிறத்தையுடைய ஏற்றினைக் கண்டு, அஞ்சாது அதன் மேற் பாய்ந்தானைச் சாவக் குத்திக் கொம்பினிடத்தே எடுத்துக் கொண்டு, அவன் உடலை உருக்குலையச் செய்யும் அவ்வேற்றின் தோற்றத்தைப் பாராய்! பாரதப் போரில் துரோபதையைத் துகிலுரிந்து மானக் கேடுறச் செய்த துச்சாதனனுடைய நெஞ்சைப் பிளந்து, பகைவர் நடுவே தனது வஞ்சினத்தைத் தீர்த்துக் கொண்ட வீமசேனனைப் போலும்!" "தோழீஇ! செவியில் மறுவையுடைய சிவந்த சிறிய புள்ளி களையுடைய அவ்வெள்ளை, ஒருவனைக் குடர் சரியக் குத்திக் கொம்பிடைக் கொண்டு, அவன் உடலை உருக்குலைப் பதன் தோற்றத்தைப் பாராய்! பாரதப் போரில் கண்ணஞ்சுங் கங்குற் போதில், துரோணாச் சாரியைக் கொன்ற சிகண்டி யென்பானைக் கொன்று, தன் கைகளால் அவன் தலையைத் திருகும் அசுவத்தா மனைப் போலும்!" "இகுளைஇ! இதோ ஈங்'கொன்று. ஒளிமிக்க வெண்மதி போன்ற நெற்றிச் சுட்டியையுடைய அக் காரி, ஒருவனைக் குடர் சரியும்படி குத்திக் கோட்டிடைக்கொண்டு குலைப்பதன் தோற்றத்தைக் காணாய். உயிர்களெல்லாம் வருந்தும் ஊழி முடிவில், பசிய நிறத்தைத் தன் பாகத்தேயுடைய உருத்திரன், கூற்றுவனுடைய நெஞ்சைப் பிளந்து குடரைக் கூளிகட் கிட்டு அவற்றை நிறைக் கின்றதனைப் போலும்!" "அன்னாய்! அதோ பார்! சிவபெருமான் சடையில் விளங்கும் பிறையில் சூடிய சிவந்த மாலைபோல அவ்வேற்றின் கொம்பிடைக் குடர்கள் தொங்குகின்றன. அங்ஙனம் தொங்கும் குடரை இருகையாலும் இழுத்துத் தன் வயிற்றினுள் இடுகின்றவன் தோற்றத்தைப் பாராய்! சிவந்த நூற்கழியை ஒருவன் இரண்டு கையாலும் கோத்துப் பிடித்திருக்க, அந்நூலை முந்நூல் பிடிக் கின்றவனை ஒக்கும். என்னே அன்னான்றன் வீரம் இருந்தவாறு!" "அணியிழாய்! ஆங்கொருவனைப் பாராய்! அவ் விகலேற்றின் கழுத்திலே பாய்ந்து, அக் கழுத்திலிட்ட மாலை போல விளங்கு வதைக் காண். இனி அவன் அதனை விடான்!" "எல்வளாய்! ஈங்கொரு காட்சியைக்காண்! தன்னைப் பாயவந்த ஏற்றைப் பிடித்தடக்கி அதன் முதுகின் மேல் ஏறியிருந்து, அதனை ஊர்கின்றவன் தோற்றம்., தெப்பத்தின் மேலிருந்து அதனைச் செலுத்துகின்றவனைப் போலும்!" "அன்னாய்! அதோ, விடாது கழுத்தைத் தழுவினவனோடே பரணின் மீது பாயும் அவ்வெள்ளேற்றின் தோற்றத்தைக் காணாய்! சிறிது விழுங்கப்பட்ட பாம்புடனே விசும்பிற் செல்லும் வெண் ணிலவு போலும்! தனது வீரச் செயலைத் தன் தலைவிக்குக் காட்டச் சென்றது போலும்!" "அம்பன்ன கண்ணாய்! அதோபார்! ஒருவன் ஒரு வெள்ளைக் காளையின் கழுத்திலே பாய்கிறான். அதுகண்டு அவனைக் குத்தும் அக்காரிக் காளையின் தோற்றத்தைக் காணாய்! மதியை மறைத்த பாம்பினது மறைத்த தன்மையை விடுக்கும் மாயோனைப் போலும்! என்னே காலத்தினாற் செய்யும் நன்றி! இவை காலுடைய மக்கள் போலும்!" "கருநெடுங் கண்ணாய்! அக் கபிலைக்காளையின் வீரச் செயலினைப்பார்! தன்னைத் தழுவிக் கீழே விழுந்தவனைக் கொல்லாது செல்லும் தோற்றம், வாளோடு தன் கையிலகப்பட்ட பகைவனை வெட்டாமல் செல்லும் வீரனை யொக்கும்! புறங் காட்டினோர் மீது படையேவாத தமிழர் பண்பாட்டினை இவ்வேறு களும் உடையன போலும்! ஏன்? இவையும் தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்த தமிழ்க்காளைகள் தானே!" இத்தகு வீரக்காட்சிகள், வியத்தகு செயல்கள் முதலிய வற்றை முல்லைக்கலியில் கண்டு இன்புற்று, நீவிரும் அத்தகு வீர உணர்ச்சி பெறுக! இவ்வேறுதழுவல் விழா, உருவமும் பருவமும் ஒத்த ஒருவனும், ஒருத்தியும் எதிர்ப்பட்டு ஒருவரை யொருவர் காதலித்து, இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப் பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என்னும் காதற் கலப்புக் கட்டங்களில் திளைத்துக் காதற் கலப்புற்று வரும் போது நிகழும். எனவே, ஒவ்வொரு காளையரும் தம் தலைவியர் காளையினையே பிடித்தடக்குவர். இறந்தவ ரொழிய வென்றவர் தம் காதலியரை மணந்து, கூடிக்களித்து இல்லறம் இனிது நடத்தி இன்புறுவர். இது வீரக் காதற் கலப்பாகும். "கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" (முல் - 3) ஏற்றின் கூரிய கொம்புகளைக் கண்டஞ்சி அதைத் தழுவாத வனை இம்மையிலே யன்றி, மறுமையிலும் ஆய மகள் புல்லாள் என்பது எத்தகைய வீரக் குறிப்பு! இத்தகைய வீரத்தமிழ் மகளிர் இன்று ஒருவராவது இருப்பர் என்பது ஐயுறவே. "வளியா அறியா உயிர்க்காவல் கொண்டு நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற் கெளியவோ ஆயமகள் தோள்" (முல் - 3) உயிரை ஒரு காற்றென உணராது, அதனைக் காவல் கொண்டு - உயிருக்கஞ்சி - ஏற்றின் கூரிய கொம்புக் கஞ்சு வோர் தழுவ ஆயமகளிர் தோள் எளியவோ? 'உயிர் ஒரு காற்று' இதில் பகுத்தறிவுக் கொள்கை அப்படியே பொதிந்துள்ள தல்லவா? உயிர் ஒரு தனிப் பொரு ளெனவும், அது ஊழ்வினைக் கேற்ப உடலெடுக் கிறதெனவும், மக்கட் பிறப்பின், புண்ணியத்தால் அது வீடு பெறுகிறதெனவும் நம்பும் பிற்காலத்தே புகுந்த அயற் கொள்கையாலன்றோ பழந்தமிழ் மக்களின் பகுத் தறிவுக் கொள்கை பாழ்பட் டொழிந்தது? உயிர் ஒரு காற்றென்பதே உயிராராய்ச்சி வல்லுநர் முடிவு. "தாம் விரும்பும் மகளிர் மார்பிடை வீழ்தல் போல ஏற்றின் கொம்பிடை வீழின், ஆயர் மகளிர் தோள் எளிதில் கிட்டும்."(முல் - 3) இக்கூற்றுக்களால், அக்காலத் தமிழ் மகளிர் காதல் வாழ்வு எத்தகையது என்பது இனிது புலப்படும். தன் காதற் றுணைவன் வீரனாக இருந்தால் தான் தாம் வீர வாழ்வு, நாகரிக நல்வாழ்வு வாழ்வதோடு, வீர மக்களைப் பெற்ற வீரமரபை நிலைபெறச் செய்யலாம் என்பதைப் பழந்தமிழ்ப் பெண் மணிகள் நன்கு உணர்ந்திருந்தனர் என்பதற்கு இவ்வேறு தழுவற் செய்தியே சான்றாகும். உருத்திரன் கூற்றுவனைக் கொல்லல், மதியைப்பாம்பு கடித்தல் போன்ற உவமைகளால், கடைச் சங்க காலத்திலேயே புராணக் கொள்கைகள் தமிழரிடை ஆதிக்கம் பெற்று விட்டமை தெரியப்படும். எனினும், இன்று போல் அன்று அவ்வயற் கொள்கைகளைத் தமிழ் மக்கள் உவமையாகக் கொண்டனரே யன்றிப் பொருளாகக் கொண்டு தமது சொந்தக் கொள்கைகளைக் கைவிடவில்லை. அயற் சமயங் கட்கு அடிமைப்பட்ட பிற்காலத்தி லேயே அவற்றைப் பொருளாகக் கொண்டு தம் புலமை நிறுவத் தலைப்பட்டனர். இனி, இம் முல்லைக் கலியில் கூறப்படும் ஏறு தழுவல் செய்தி, கண்ணன் மனைவியரில் ஒருத்தியான நப்பின்னை என்பாளை, அவள் வளர்த்த காளை ஒன்றை அடக்கிக் கண்ணன் மணந்தனன். அச் செய்தியைப் பின்பற்றியதேயாகும் என்பர் ஒருசிலர். அது தவறு. கண்ணன் பிறப்பதற்குப் பன்னெடுங் காலத்திற்கு முன்னிருந்தே நடந்து வருவது தமிழ் மக்களின் ஏறுதழுவல் செய்தி. தைப் பொங்கற்றிரு நாளின் போது வீர விளையாட்டாக நடந்து வந்து அது, அங்ஙனம் ஏறுதழுவிய வீர இளைஞர்களை மறத்தமிழ் மகளிர் விரும்பி மணந்து வந்ததால், பிற்காலத்தே அது, அக வொழுக்கத்தின் ஒரு கூறாகக் கொள்ளப்பட்டது. தனிப்பட நடந்து வந்த அவ்வீரச் செயல் வாழ்க்கையின் ஒரு கூறாக்கப் பட்டது. இத்தமிழர் ஒழுக்க முறையினையே ஆயர் என்னும் மரபு பற்றி நப்பின்னை மரபினர் மேற் கொண்டனர் போலும்! இது தமிழர் நாகரிகம் பிற இடங்களிலும் பரவியுள்ளமைக்குச் சான்றாகும். இனி, பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், கந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்னும் ஆரிய மணம் எட்டனுள், அசுரம் என்பது - கொல்லேறு கோடல், வில்லேற்றுதல், திரிபன்றி எய்தல் முதலியன செய்து ஒருவன் ஒருத்தியைக் கொள்ளுதலாகும். கண்ணன் கொல்லேற கொண்டு நம்பின்னையை மணந்ததும், இராமன் வில்லேற்றிச் சீதையை மணந்ததும் அசுர மணத்தின் பாற்படும். அர்ச்சுனன் வில்லை வளைத்து மச்சக்குறி எய்து துரோபதையை மணந்ததும் இதன் பாற்படும். எனவே, முல்லைக் கலியிற் கூறப்படும் ஏறு தழுவலும் அசுர மணத்தின் பாற்படும் என்பர் ஒருசாரார். அது பொருந்தாக் கூற்றேயாகும். அசுர மணத்தின் கொல் லேறு கோடல் - யார் கொள்கிறார்களோ அவர்க்கு, பெற்றோர் தம் மகளைக் கொடுப்பது. அவள் விரும்ப வேண்டும் என்ப தில்லை. முன்பின் அறிமுக மில்லாத ஒருவன் கொல்லேறு கொள்ளினும், வில்லேற்றினும் அவனுக்கு ஒருத்தியை அவள் பெற்றோர் கொடுக்கும் அளவினது அசுரமணம். முல்லைக் கலியில் வரும் ஏறுதழுவலோ, களவொழுக்க மொழுகி வரும் காதலியின் ஏற்றை அவள் காதலனே தழுவும் ஒருவகை வீரக் குறிப்பாகும். அயலானொருவன் ஏறுதழுவல் முல்லைத் திணையாகாது. ஒருத்தி ஏற்றை அவள் காதலன் தழுவின் அவர்தம் களவு கற்பாக மாறும். அஃதாவது மணஞ் செய்து கொண்டு இல்லறம் நடத்துவர். அங்ஙனம் தழுவாது அவன் கொல்லேற்றின் கோட்டுக் கிரையானால் அவள் நிலை என்னென்பது முல்லைக் கலியில் கூறப்படவில்லை. அங்ஙனம் முடிவு கூறுதல் செய்யுள் வழக்கத்தின் மரபாகாது. உய்த்தறியும்படி விட்டுவிடுவதே இலக்கியச் சுவையும் இலக்கண அமைவும் உடையதாகும். 'காதல் தப்பின் சாதல்' என்பதே பெரும்பான்மை முடிவாகும். இலக்கிய நயந்தோன்ற, அதாவது, தழுவுவோனின் வீரக் குறிப்பு மிக்குத் தோன்றத் தழுவுவோரைக் குத்திக் கொல்லும் ஏற்றின் வீரச் செயல் மிகைப்படுத்திக் கூறப்பட்டதே யன்றிக் கொலை அரிதாகவே நிகழும். அங்ஙனம் மிகைப்படக் கூறாவிடின், ஏறுதழுவுவோரின் வீரச் செயல் சுவையற்ற தாகிவிடு மென்க. நூற்றுக்கு இரண்டொருவர் அரிதாக இறத்தலுங்கூடும். பெரும் பாலும் தழுவுவோரே வென்று களங்கொண்டு வீரப்பரிசு பெறுவ ரென்க. ஏறுதழுவல் நிகழும் போது தலைவியரும் தோழியரும் தத்தம் ஏற்றைத் தழுவுமாறு கைதட்டியும் ஆரவாரம் செய்தும் தத்தம் தலைவர்களை ஊக்குவிப்பர். தமது காதலியின் குழலினும் யாழினும், பாலினும் தேனினும்இனிய ஊக்க வுரையைச் செவி மடுத்த காதலர்கள் தம் உயிராற்றல் எவ்வளவுண்டோ அவ்வள வையும் காட்டி, ஊக்க முடைமை, ஆள்வினையுடைமை என்னும் மனமுயற்சி மெய்ம் முயற்சி ஆகிய இருவகை முயற்சியுங் கொண்டு கொல்லேறு தழுவி வீரப் பரிசாகத் தம் காதலியை அடைந்தின்புறுவரென்க. அத்தகைய வீரக் காதல் வாழ்வு வீழ்ந்து பட்டதே இன்று தமிழினம் இரங்கத்தக்கஇத்தகு இழிநிலை எய்தியதற்குக் காரண மாகும். இன்று அகப்பொருட்கே யன்றிப் புறப்பொருள் பற்றி ஏறுதழுவுதலும் குற்றமென ஆள்வோர் தடைவிதிக்கும் அத்தகு நிலையில் உள்ளது தமிழ்நாடு இனி, முல்லை குறிஞ்சிபாலை மருதம் நெய்தல் என்னும் அகத்திணை ஐந்தனுள், முல்லைத்திணை என்பது, 'இல்லிருத்தல் முல்லை' என்றபடி இருத்தல் ஒழுக்கமாகும். அதாவது, தலைவன் பிரியின், தலைவி அவன் கூறிச் சென்ற நாள் வரும் வரையிலும் ஆற்றியிருத்தலாம். இது களவு கற்பு என்னும் இருவகை அக வொழுக்கத்திற்கும் உரியது. களவில் ஒருவழித் தணித்தல், வரை விடை வைத்துப் பொருள்வயிற் பிரிதலும், கற்பில் ஓதல் பகை தூது பொருள் முதலிய பிரிவிலும் தலைவன் பிரியத் தலைவி ஆற்றியிருப்பாள். இவ்விருத்தல் ஒழுக்கம் எல்லா நிலங்களிலும் நிகழினும், முல்லை நிலத்தில் நிகழும் என்பது புலனெறி வழக்கம். ஆனால், கலித்தொகை முல்லைக் கலியில் இருத்தல் ஒழுக்க மட்டும் கூறாமல், புணர்தல் முதலிய மற்றை ஒழுக்கங்களுங் கூறப்படுகின்றன. எனவே, இது அவ்வைந் திணையுள் ஒன்றான முல்லைத் திணையில் வேறுபட்டதாகும். இங்கு முல்லை நில மக்களிடை நிகழும் ஐவகை ஒழுக்கமும் ஒருங்கு கலந்து கூறப்படு கின்றன என்பது, ஐந்திணையிலக்கண வரம்பிற்குட்பட்ட வர்க்கும் பெரியதொரு வியப்பினை யுண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. அங்ஙனம் கற்றோர் வியக்கும் புதிய முறையில் அமைந்ததே முல்லைக்கலி. இதனாற்றான் இதைக் 'கற்றறிந்தார் போற்றுங் கலி' எனப் பழந்தமிழ்ச் சான்றோர் சிறப்பித்துக் கூறலாயினர். ஒரு சிலர் இதனை, 'ஏறுதழுவற் கைக்கிளை' என்பர். அது பொருந்தாது. கைக்கிளை ஒருதலைக் காமம். அதாவது, தலைவன் தலைவி இருவருள் ஒருவர்பால் நிகழ்வது. இருவரும் விரும்பாமல் ஒருவர் மட்டும் விரும்புவது. ஆனால், இவ்வேறுதழுவலோ, தன்னேற்றைத் தழுவும் தலைவனைத் தலைவியும், தான் தழுவும் ஏற்றிற்குரிய தலைவியைத் தலைவனும் விரும்புதலான் இது ஒத்தகாமம் ஆகுமேயன்றி ஒவ்வாக் காமமாகிய கைக்கிளை யாகாது. இத்தகு ஆழமுடைத்து, 'கற்றறிந்தார் போற்றுங் கலி!'  3. கல்லாக் கவித்திறம் பசும்பொற் பட்டாடையின்கண் அமர்ந்து பண்ணியம் தின்பார்போல, ஒரு பசும்புற்றரையில் ஆடுகள் மேய்ந்து கொண் டிருக்கின்றன. அவ்வாடுகட்குப் பாதுகாப்பாக ஆடுமேய்க்கிச் சிறுவன் ஒருபுறம் நின்று கொண்டிருக்கிறான். அவன் ஆடுகள் மேய்வதைப் பார்த்துக் கொண்டு சும்மா நிற்கவில்லை. ஆடுகள் புல் மேய்கின்றன. அவனுக்கு வேலை வேண்டுமே? சும்மா நின்று கொண்டிருப்பது சிறுவர்க் கியல்பா? மேய்கின்ற ஆடுகளைப் பார்த்துக் கொண்டே அவன் எவ்வளவு நேரம் சும்மா நின்று கொண்டே இருப்பான் நடுகற் போல? அவ்வாறு சும்மா இருப்பது மக்கட் பண்பாட்டுக் கேற்றதா? அப்பண்ட மேய்க்கிச் சிறுவன் சும்மா நிற்கவில்லை;பாட்டுப் பாடுகிறான். அவன் பொழுது போக்காக நின்று பாடிக் கொண்டிருக்கிறான். அச்சிறுவன் வாய்க்கு வந்த சொற்களை அடுக்கி அழகாகப் பாடுகிறான். அவன் காரிகை கற்றுக் கவிபாடும் கவிஞன் அல்லன். எனினும், அவன் பாடும்பாட்டு, பாட்டு என்னும் பெயருக் கேற்றவாறு பாட்டாகவே அமைந்துள்ளது. கேட்போரை இன்புறச்செய்யும் நடையழகும், மோனை எதுகை முதலிய தொடையழகுங் கூட அப்பாட்டில் நன்கு அமைந்துள்ளன. வெறும் சொல்லடுக்கு மட்டுமல்ல, பொருட் செறிவும் நன்கு அமைந்துள்ளது அப்பாட்டில். எழுத்தறி வில்லாத அப்பண்ட மேய்க்கிச் சிறுவனுக்கு, இலக்கிய இலக்கணம் இன்னவென்றே அறியாத அச்சிறுவனுக்கு, யாப்பறிவில்லாத அவ்விளவலுக்கு எங்ஙனம் அத்தகைய பாட்டுப் பாட முடிந்தது? அதன் காரணம் என்ன? அதுதான் தமிழ் மொழிக்குரிய தனிப்பெருந்தன்மை! இது எல்லா மொழிக்கும் உரிய தெனினும், தமிழ்மொழிக்குள்ள அத்தகு தகுதியும் சிறப்பும் மற்ற மொழிகளுக்கு அமையவில்லை. காரணம், தமிழ்மொழியின் இயற்கைத் தன்மையும், வேண்டிய அளவு மோனை எதுகைச் சொற்கள் இருத்தலுமேயாகும். தமிழ் மொழி போல் கல்லாக் கவிஞர்களையுடைய மொழி உலகில் வேறொன்றும் இல்லை என்பது பொய்யுரை யாகாது; பொருள் பொதிந்த பொன்னுரை யேயாகும். இனி, அக்கல்லாச் சிறுவன் அத்தகு கவி பாடும் திறமை பெற்றதற் கேது என்னவெனில், உரிமை வேட்கையுடைய அவனது இயற்கையுள்ளத் தெழுந்த உணர்ச்சிப் பெருக்கே யாகும். இதுவே கவிதை தோன்றுதற்குரிய கருக்கூடு எனலாம். ஆம், அக்கருப்பையில் உருவாகிய கவியே கவி என்னும் பெயருக் கேற்ற கவியாகும். அக்கல்லாச் சிறுவன், கற்று வல்ல கவிஞர் போலப் பிறருக் காகக் கவி பாடவில்லை.அவன் தனக்காகவே பாடினான்; தன்னுணர்ச்சி யால் தூண்டப்பட்டுத் தன் உள்ளக் கிளர்ச்சிக்காகவே பாடினான். தன் போக்கில் பாடிப்பாடி அவன் தமிழின் இனிமையை நுகர்ந்தான்; தமிழன் தனியின்பம் பெற்றான். அவன் தமிழன்னையின் அழகுக் கழகு செய்தான்; தாய்மொழித் தொண்டு செய்தான். அச்சிறுவன் பாடிய பாட்டு இனிய இசைத் தமிழ்ப் பாட்டு. அவன் சும்மா நின்று கொண்டே இசையுடன் பாட வில்லை. பாட்டின் பொருளுக் கேற்றவாறு ஆடிக் கொண்டே பாடினான். அவன் இனிய இசையுடன் ஆடிக்கொண்டு பாடினான். அவ்விசை அவனாகவே அமைத்துக் கொண்ட தனியிசையாகும். ஓரிசையை அவன் தழுவிப் பாடவில்லை. அது கல்லாக் கவிஞனாகிய அச்சிறுவனின் பண்பாடன்று. அவ்வாறு பாடியிருந்தால் அவன் கவி அவ்வளவு சிறப்புடைய சீரிய கவியாக அமைந்திருக்காது. கல்லாக் கவிஞனாகிய அப்பண்ட மேய்க்கிச் சிறுவன் புதிதாகக் கவி பாடுகிறான்; அக்கவியை இசையுடன் பாடுகிறான்; இசையோடு பாடிக் கொண்டே பாட்டின் பொருளுக் கேற்ற வாறு ஆடுகிறான். எனவே, அச்சிறுவன் ஒரு முத்தமிழ்க் கவிஞனாக வன்றோ திகழ்கின்றான்? ஆம், அவனொரு முத்தமிழ்க் கவிஞன் தான். புதிதாக இசையுடன் பாடியாடுவது தானே முத்தமிழின் இலக்கணம்? இப்பொல்லாச் சிறுவனின் கல்லாக் கவித் திறமே கவித் திறம்! இதோ அக்கல்லாக் கவிஞனின் கவிஒன்று, "மத்தியான நேரத்திலே மாடுகன்றி னோரத்திலே பத்திபத்தி யாகமேயும் வெள்ளைக் கொக்காரே! - மாட்டுப் பாலைப்போல பறந்துசாயும் வெள்ளைக் கொக்காரே!" பாட்டு எப்படி? மோனையும் எதுகையும் இயைபும் துள்ளி விளையாடுகின்றன வல்லவா? 'நேரத்திலே... ஓரத்திலே, மேயும்... சாயும்' எத்தகைய இயை பின்பம்! 'மாடு கன்று' என உம்மைத் தொகையும், பத்திபத்தியாக என இணைச் சொற் றொடரும் இன்பந் தருகின்றன வல்லவா? கருத்துக்குத் தான் என்ன? கொக்குகள் பத்திபத்தியாக மேய்கின்றனவாம். கொக்குக் கூட்டமொன்று மாட்டுப் பாலைப் போல வெள்ளை வெளேரெனப் பறந்து வந்து மாடுகளுக்குப் பக்கத்தில் உட்காருகின்றனவாம். உவமை எப்படி? அருமையான உவமை யல்லவா! மடியிலிருந்து மாட்டுப் பால் வீழ்வது போல வானிலிருந்து கொக்குகள் பறந்து வருகின்றன வாம். என்னே! கல்லாக் கவிஞனின் கவித்திறம்! இனி, அஃறிணைப் பொருளாகிய கொக்குகளைக் 'கொக்காரே' என உயர்திணைப் பொருள் போல விளித்திருப்பதும், கேளாதவற்றைக் கேட்பன போலப் பாடும் இலக்கண விதிப்படி 'கொக்காரே' என்பதும் எத்தகைய சொன்னயமும் பொருணயமும் உடையவை! செய்யுள் உறுப்புக்களுள் ஒன்று மரபு என்பது. அது, பெயர்ச் சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச் சொல் என்னும் உலக வழக்குச் சொற்களை அடுக்கிப் பாட்டாகப் பாடுவதாகும். "மரபேதானும், நாற்பால் இயலான் யாப்புவழிப் பட்டன." என்பது தொல்காப்பியம் (செய். 80). நம் பண்ட மேய்க்கி பாட்டு அம்மரபு என்னும் இலக்கணப்படி அமைந்த தேயாகும். இத்தகைய இயற்கைக் கவிகளைப் பிற்காலத்தார் தெம்பாங்கு என்றனர். இன்றுகூடப் பண்ட மேய்க்கிகள் பாடும் பாடல்களை எழுதினால், அவை சிறந்த சீரிய பெரிய இலக்கியச் செல்வங் களாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. முறையாக இலக்கிய இலக்கணங் கற்றுச் செய்யுளி யற்றுந் திறம் பெற்றுச் சிறந்த புலவர்களான பின்னர், ஒருவர் இப்பண்ட மேய்க்கி போல் பாடும் பாடலைப் பிற்காலத்தினர் ஆசுகவி எனவும், அவ்வாறு ஆசுகவி பாடும் கவிஞரையும் ஆசுகவி எனவும் கூறிச் சிறப்பித்தனர். ஆனால், இலக்கிய இலக்கணம் இன்ன வென்றே அறியாது, ஏன்? எழுத்தறிவே இல்லாது ஆசுகவி பாடும் நம் பண்டமேய்க்கி போன்ற கல்லாக் கவிஞரை என்னென் றழைப்பது? இத்தகைய இயற்கைக் கவிகளின் தமிழ்த் தொண்டைப் புறக்கணித்து வாழ்வது தமிழ்த் தாயின் குறைபாடேயாகும். என்று தமிழ் மக்கள் இக்குறை பாட்டைக் களைந்து தமிழன்னையைப் பெருமைப்படுத்துவார்களோ? பண்ட மேய்க்கிகள் மட்டுமா இத்தகைய தமிழ்த் தொண்டு செய்து வருகிறார்கள்? இல்லை, இன்னும் இவர் போன்றார் எத்தனையோ பேர் இத்தகைய தொண்டினைச் செய்து வருகிறார்கள்; கல்லாக் கவிஞர்களாய்த் திகழ்கிறார்கள். அவர்களுள் ஒரு சிலர் கவித் திறத்தினை இங்குக் காண்போம். இரவு பத்து மணிக்குமேல் இருக்கும். வழியில் பார வண்டிகள் வரிசையாகச் செல்கின்றன. அவ்வண்டிகள் செல்வதை அவ்வண்டிச் சக்கரங்களின் கீச்சுக் குரல் நமக்குத் தெரிவிக்கின்றது. அவ்வண்டிக்காரரில் ஒருவன் பாடுகிறான். அப்பாடல் சக்கரங் களின் கீச்சுக் குரலோசையோடு இணைந்து கேட்போருக்கு இன்ப மூட்டுகிறது. அவ்வண்டிக்காரனும் நம் பண்ட மேய்க்கிச் சிறுவனைப் போல எழுத்தறி வில்லாதவனே யாவான்; காரிகை என்பதைக் காதாலும் கேட்டறியாதவனே அவனும். அப்பண்ட மேய்க்கி போல உணர்ச்சிப் பெருக்கினாற்றான். உள்ளக் கிளர்ச்சிக்காகத்தான் அவ்வாறு கற்று வல்ல கவிஞர் போலப் புதுப்புதுக் கவிதை புனைந்து கொண்டு, தான் இரவில் வண்டி யோட்டுகிறோம் என்பதையே மறந்து, தமிழின் தனியின்பத்தில் திளைத்துக் களித்துக் கொண்டு செல்கிறான். இவ்வண்டிக்காரன் பாடல்களும் நம் பண்ட மேய்க்கி பாடல்கள் போல நடை யழகும் தொடை யழகும் உடையவையே; பொருட் பொலிவு பொலிந்து விளங்குபவையே. இப்பாடல்களையும் பிற்காலத்தார் தெம்பாங்கு என்றே பெயரிட்டழைக்கலாயினர். இதோ அவ்வண்டிக்காரன் பாடலில் ஒன்று, "காடுவெட்டிச் சிறையொதுக்கிக் கபிலைபூட்டி ஏருழுது வீடுமுட்ட நெற்குவித்தேன் விருந்துகண்டு வருந்தலாமோ" ஏன் பண்டமேய்க்கி பாட்டுப் போல் இல்லையா? இத்தகைய முயற்சி தானே இன்றுமிகமிகத் தேவையாக உள்ளது? 'விருந்தோம்பல்' என்னும் தமிழரின் தனிப் பண்பாடு இப்பாடலில் திகழ்கின்ற தன்றோ? ஒவ்வொரு உழவனும் அவ்வாறு குவித்தால் விருந்து கண்டு எதற்காக வருந்த வேண்டும்? அடுத்து கல்லாக் கவிஞர்கள் துணியை வண்ணஞ் செய்யும் தொழிலாளர்கள், பூசாரிகள் முதலியோர். இவர்களும் சிறந்த கல்லாக் கவிஞர்களே. ஒருவனும் ஒருத்தியும் தாமே எதிர்ப்பட்டு அன்பு கொள்ளும் காதற் கலப்பில், இற்செறிப்பினால் குறியிடம் சென்று தலைவனைக் காணப் பெறாத தலைவி, அப்பிரிவுத் துன்பத்தால் வருந்துவாள். தலைவிக்குற்ற அந்நோயின் காரண மறியாத செவிலி, வேலன் என்பானை வரவழைத்து நோயின் காரணங் கேட்பாள். அவ்வேலன் வெறியாடித் தலைவிக்குற்ற நோயின் காரணத்தைக் கூறிச் செவிலியைத் தேற்றுவான் என்கின்றது தொல்காப்பியம். ஐயாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே சாமியாடி வாக்குச் சொல்லும் பூசாரிகள் இருந்துவந்திருப்பதால், இலக்கிய இலக்கணச் சிறப்புப் பெற்றி ருப்பதால், இக்கல்லாக் கவிஞர்களின் கவித்திறத்தின் பழமையும் பெருமையும் அறிந்து இன்புறத்தக்கனவாகு மன்றோ? இப்பூசாரி வேலைக் கையில் கொண்டு ஆடுவதால் வேலன் எனவும், வெறியாடுவதால் வெறியாட்டாளன் எனவும் பெயர் பெறுவான். பழந்தமிழ்ப் புலவர்கள் இவ்வெறியாட்டாளர்களை அகத்திணையின் ஓர் உறுப்பாகக் கொண்டு போற்றுதலைச் சங்க நூல்களில் காணலாம். அத்தகைய பழமையும் பெருமையும் உடைய வேலன் என்னும் இவ்வெறியாட்டாளனே இன்று பூசாரி எனப்படுவான். இவன் இன்று குல தெய்வங்கட்குப் பூசை செய்வதால் பூசாரி எனப்பட்டான். இன்றும் இப்பூசாரிகள் வேலைக் கையிற் கொண்டு சாமியாடுவார். பிரம்பைக் கையிற்கொண்டு ஆடுவதும் உண்டு. வெறியாடலே இன்று சாமியாடல் எனப்படுகிறது. இப்பூசாரி சாமியாடிக் கொண்டே கேட்பவர்களுக்குப் பலன் சொல்லுவான். அது வாக்குப் பிரித்தல், வாக்குச் சொல்லுதல் எனப்படும். முற்கூறிய கல்லாக் கவிஞர்கள் போல இவன் கவியாகவே வாக்குச் சொல்வான். அக்கவிகளும் முற்கூறிய கல்லாக் கவிஞர்கள் கவிபோலவே சீருஞ்சிறப்பும் பொருந்தி யிருக்கும். பூசாரி வாக்குச் சொல்லும் போது, ஒருவர் 'சாமி, சாமி' என்று கேட்பர். "கேட்ட வரங்கொடுக்கக் கெடுதலெல்லாம் தீhத்துவைக்க ஓட்ட நடையுமாக ஓடியே வந்தனப்பா"- சாமி! வாக்கு எப்படி? இவ்வாறு மோனை எதுகை பொருந்தக் கேட்டதை யெல்லாம் பாட்டாகவே சொல்வர். இன்னும் கல்லாமல் கவிபாடும் கல்லாக் கவிஞர்கள் பலர் உண்டு எனினும், அவர்களுள் ஒருவகையினரின் கவித்திறத் தினை இங்கு கூறாமல் விடுவது அறிவுடமையாகாது. தமிழ் மொழியைத் தமிழ்த் தாய் என வாயினிக்கக் கூறிக் கொண்டு, அத்தமிழ்த் தாயினத்தைக் கல்லாக் கவிஞர்களாக்கிய பெருமை தமிழ் ஆண் பாலர்க்கே உரிய தனிப் பெருமையாகும். 'அடுப்பூதும் பெண் களுக்குப் படிப்பெதற்கு?' என்று அடக்கி யாண்டுங் கூட அத் தண்டமிழ்ப் பெண்டிர் எப்படியோ கல்லாக் கவிஞர் ஆகி விட்டனர். அக்கல்லாக் காரிகையரின் கவித்திறம் இரு வகையில் வெளிப்படுகிறது. ஒன்று தாலாட்டு, மற்றொன்று ஒப்பாரி. இவ்விருவகைக் கவி பாடுவதிலும் அவர்க்கு நிகர் அவரே யாவர். அக்கவிகள் பாடும் திறம் அன்னாரின் தனியுடைமையாகும். 'இயன்மொழி வாழ்த்து' என்பது புறத்திணைப் பாடாண் துறைகளுள் ஒன்று. அது, ஒருவரைப் பாடும் போது, அவர் பெருமையோடு அவர்குல முன்னோர் பெருமையினையும் அவர் மேலேற்றிப் பாடுவதாகும். அதாவது, ஒருவர் முன்னோர் செய்ததை அவர் செய்ததாகவே கூறுவது. இதைத் தாய்மார்கள் பாடும் தாலாட்டில் அப்படியே காணலாம். அத்தாலாட்டுப் பாடல்கள் இத்தகைய துறையாயமைவதோடு, உவமை உருவகம் முதலிய பலவகை அணி நலமும், மோனை எதுகை இயைபு முதலிய தொடை நலமும் பொருந்தியவாய் விளங்கும். பழந் தமிழ்ப் புலவர்கள் பாடியுள்ள எந்த ஓர் இயன்மொழி வாழ்த்துப் பாடலுக்கும் இத்தாலாட்டுப் பாடல்கள் இளைத்தவையல்ல. அடுத்த ஒப்பாரியோ ஒப்புயர்வற்றதாகும். ஒப்பாரி பாடுவதில் இப்பாரில் ஒப்பாரு மில்லாதார் துப்பாரிதழுடைத் தோகையரே யாவர் என்பது மிகைபடக் கூறலாகாது. கல்லன்ன மனத்தையும் கரைவிக்கும் தன்மை வாய்ந்த ஒப்பாரி. பெற்ற தாய் தந்தையரையோ, பெற்று வளர்த்த பிள்ளையையோ, கொண்ட கணவனையோ இழந்து தலைவிரி கோலமாய் அழுது புலம்பும் ஒருத்தி, ஆறாத் துயர்க் கடலில் வீழ்ந்தாழ்ந்து கரைகாணாமல் தவிக்கும் அது போது, மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்னும் ஐந்து தொடையும் அப்படியே அமைய, காலத்துக் கேற்ற கருத்துச் செறிவுடன் செய்யுள் நலம் திகழும்படி பாடும் அப்பாடலை நோக்கின், காரிகையரின் கல்லாக் கவித் திறத்தின் சிறப்பினை என்னென்றியம்புவது? உவமை உருவகம் முதலிய பொருளணிகளோடு, திரிபு மடக்கு என்னும் சொல்லணிகளும் பொருந்தி விளங்குவன அப்பாடல்கள். தற்குறி என்னும் பெயரைத் தகவுடன் தாங்கிய ஒருத்தி, காரிகை என்னு நூலைக் காதாலுங் கேட்டறியாத ஒரு காரிகை எங்ஙனம் இத்தகைய சிறப்புடைய சீரிய பாடலைப் பாடுகிறாள்? எவ்வாறு அவளால் அவ்வாறு பாட முடிகிறது? இஃதொரு புதிராகவன்றோ உள்ளது? புலவர் பட்டம் பெற்றவர்களில் ஒரு சிலரே மோனையும் எதுகையும் நன்கு அமையப் பாட முடியாது யாப்புக் குறையுடைய பாட்டுக்களைப் பாடும்போது, எழுத்தறி வில்லா ஏந்திழை நல்லாரால் எங்ஙனம் அத்தகு சிறந்த சீரிய பாடல்கள் பாடமுடிகிறது? அதுதான் இயற்கையெழுச்சியின் இயல்பாகும். அதுதான் உணர்ச்சிப் பெருக்கின் ஒதுக்கிடமாகும். காரிகை கற்றுக் கவிபாடுவோர்க்கு அத்தகு உணர்ச்சி யின்மையால் கவித்திறம் நன்கு அமைவதில்லை. அகராதியிலிருந்து தேடி யெடுத்து அவர்கள் மோனையும் எதுகையும் அமைப்பதால் கருத்து நன்கு அமைவதில்லை. கருத்தமைந்தால் யாப்பமைவ தில்லை. யாப்பமைந்தால் கருத்தமைவதில்லை. கவியுள்ள முடை யோர்க்கே எளிதில் இயல்பாகச் சிறந்த கவிகள் அமையும். காலத்துக் கேற்ற கருத்தமை வுடையதே கவி எனப்படும். பழமையை விளம்பிக் கொண்டே இருப்பது சிறந்த கவியா காது. பழமையும் புதுமையும் கொஞ்சிக் குலவி விளையாடு வதே கவி எனப்படும். இவ்வாறு அமையுங் கவிகளை மறுமலர்ச்சிக்கவி என்பர். மறு மலர்ச்சியை யுண்டாக்குங் கருத்தமை வில்லாத கவி உயர்கவியாகாது. எடுத்துக்காட்டாக, இக்கால ஆண்மக்கள் அத்தனை பேரும் குறுங்குஞ்சியுடையராய் இருக்க, ஓர் ஆண்மகனை வருணிக்கும் கவிஞரொருவர், உருவக உவமை ததும்ப அவன் குடுமியை வருணிப்பது எங்ஙனம் கவி எனப்படும்? அவனது குறுங்குஞ்சியை வருணிப்பதன்றோ கருத்துடைக் கவியாகும்? கல்லாக் கவிஞர்களாகிய காரிகையார் அத்தகு பழமை பாராட்டி களல்லர்; காலத்துக் கேற்ற கருத்தமைவுடைய கவிபாடுங் கவிஞர்களாவர். இன்று ஒருத்தி பாடும் ஒப்பாரியில் வானூர்தி வட்ட மிடும், அணுகுண்டு தணதணக்கும், வானொலி தேனினிக்கும். ஏன்? செயற்கைத் திங்கள் கூடச் செவிகேட்கும். மறுமலர்ச்சி மறுமலர்ச்சி என்போர் இத்தகைய பாடல்களுக்கு என்ன பெயரிடப் போ கிறார்கள்? அம்மங்கையர் மறுமலர்ச்சியை எங்கே கற்றனர்? அவர் தாம் எழுத்தறிவில்லாதவராயிற்றே, எவ்விதழ் அல்லது நூலிலிருந்து கற்றுத் தெரிந்து காலத்துக் கேற்ற கருத்தமைத்து மறுமலர்ச்சிக் கவி பாடுகின்றனர்? உள்ளத்துணர்ச்சியின் சிறப்பே இதற்குக் காரணமாகும். இன்னும் ஒரு புதுமை. ஒருத்தி தானும் பாடி யழுது கொண்டே மற்ற மகளிர் பாடும் பாட்டுக்களையும் மனப் பாடம் செய்து கொள்வாள். ஒரு பாட்டை இருபாலில் இரண்டு முறை சொன்னால் - மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் என்பர். ஆனால், இவர்களோ ஒரு முறை சொன்னதும் மனப்பாடம் செய்து கொள்ளும் அவ்வளவு மதியுடையோராய் உள்ளனர். இதுவும் இயற்கை எழுச்சியின் இயல்பேயாகும். இவ்வாறு பாலர் பாடும் பாட்டுக்களைப் படித்துக் கொண்டு ஊருக்கு வந்ததும், ஊர்மகளிரைக் கூட்டி வைத்துக் கொண்டு, தாம் கற்று வந்த புதுப்பாடல்களை அம்மகளிர் பாடிய இசையுடன் பாடிக் காட்டுவர். ஊர்மகளிர் அவற்றைக் கற்றுக் கொள்வர். ஓர் இழவு வீட்டில் பலர் கூடி 'ஓஒ' வென்று அழும் அக் கூப்பீட் டொலிக் கிடையே, பிறர்பாடும் பாட்டை ஒரு முறை கேட்டதும் மனப்பாடம் செய்வதும், அப்பாட்டுகளை அப்படியே மாலை வரை மறவாமல் இருப்பதும், அவர்கள் பாடினது போலவே பாடிக்காட்டுவதும், வியப்பினும் வியப்பாகவன்றோ உள்ளன? இயற்கையுணர்ச்சியின் பெருமையே பெருமை! இன்னும் இத்தகைய கல்லாக் கவிஞர்கள் பலர் உண்டு. அவ்வெல்லாக் கல்லாக் கவிஞர் கவிகளும் மேற்கூறிய கவிகள் போன்றே சீருஞ் சிறப்புடன் திகழும். அக்கல்லாக் கவிஞர்களின் கவிகளை யெல்லாம் எழுதி இனப்படுத்தினால் அவை அரும் பெரும் இலக்கியச் செல்வங்களாகும். தமிழ் இலக்கியம் மறுமலர்ச்சி பெற்றுத் திகழும் தமிழில் காலத்துக் கேற்ற இலக்கியம் வளர வில்லை. என்னும் குறைபாடு நீங்கும். இது தமிழர் முன்னிற்கும் தலையாய பணியாகும். 'இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்' என்பது இலக்கிய இலக்கண வரன்முறை. தமிழில் முதன் முதல், இலக்கணம் தோன்று முன்னரே கல்லாக் கவிகள் தோன்றி மிளிர்ந்தனவாகும். அக்கவிகளுக்கே பிற்காலப் புலவர்கள் இலக்கணம் கண்டனர்; அக்கவிகளின் அமைப்பினை எழுதி அவற்றிற்குக் குறியீடு இட்டனர். அக்குறியீடுகளே யாப்பிலக்கணம் எனப்படும். இயல்பாக எழுந்த அக் கல்லாக் கவிகளைப் பின்பற்றி, அவற்றின் இலக்கண மரபைத் தழுவி அமைத்தவையே வெண்பா, ஆசிரியப்பா கலிப்பா, வஞ்சிப்பா என்னும் பாக்கள். பின்னர் யாப்பிலக்கணம் கற்று, யாப்பின் மரபு வழுவாமல் நால்வகைப் பாக்களும் பாடித் தமிழ் இலக்கியச் செல்வத்தை வளர்த்து வந்தனர், பிற்காலத் தமிழ்ப் புலவர்கள். காலப்போக்கு அவ்வரம்புக் குட்பட வில்லை. இயற்கையைச் சிறைப்படுத்த யாரால் முடியும்? காலப் போக்கு அவ்வரம்பைக் கடந்து விட்டது; இயற்கையின் திசையை நோக்கிச் சென்றது. அதனால், பிற்காலத்தே தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்கள் தோன்றின. பின்னர்ப் பாவும் பாவினமும் பாடித் தமிழ் வளர்த்து வந்தனர் நம் தமிழ்ப் புலவர் பெருமக்கள். எனினும், பண்டமேய்க்கி முதலிய கல்லாக் கவிஞர் மரபு அழிந்து படவில்லை. அக்கவிமரபும் அன்று முதல் இன்றளவும் அப்படியே நடந்து கொண்டுதான் வருகிறது. பாவும் பாவினத்துக்கும் உட்படாது, தனித்து நடந்து வந்த அச் செய்யுள் மரபினையே, ஆசிரியர் தொல்காப்பியர் தொல் காப்பியச் செய்யுளியலில், "அவ்வேழ் நிலத்தும்"(79), "அடி வரை யில்லன ஆறென மொழிப"(264) என்னும் சூத்திரங்களில், 'வாய் மொழி, பிசி' முதலியனவாகக் குறித்துள்ளார். பிற்காலத்தார் அக்கல்லாக் கவிகளை ஒட்டிப் பாடிய வையே கும்மி, சிந்து முதலிய பாவகைகள். இவற்றிற்கு இலக்கணம். என்னால் எழுதப்பட்ட யாப்பதிகாரம் என்னும் நூலில் காண்க. நம் முன்னோர்கள் இயல்பாக எழுந்த அக்கல்லாக் கவி களைப் பின்பற்றிப் பாவும் பாவினமும் வகுத்துப் பாடித் தமிழ் வளர்த்து வந்தனர். அயல் மொழி யாட்சியால் அம்மரபு தடைப் பட்டுப் போய் விட்டது. அம்மரபை மீண்டும் நடை முறைக்குக் கொண்டு வந்து, நமது தாய் மொழியாம் தமிழ் மொழியை வளர்ப்பது தற்காலத் தமிழ்க் கவிஞர்களின் நீங்காக் கடப் பாடாகும். வெண்பா முதலிய பாமரபு, தாழிசை முதலிய பாவின மரபு, கும்மி சிந்து முதலிய கல்லாக் கவிமரபு ஆகிய மும்மரபி னையும் முறையொடு வளர்க்க, அம்மூவகைக் கவிகளையும் முறையொடு பாடத் தற்காலத் தமிழ்க் கவிஞர்கள் முற்படு வார்களாக. தமிழ்ச்செய்யுள் மரபு தோன்றுவதற்குக் காரணமான, அடிப்படையான அக்கல்லாக் கவிஞர்கள் வாழ்க!  4. போலிச் சோழர் தலைப்பைப் பார்த்ததும் வியப்புறுவீர்கள். ஆம் வியப்புறச் செய்யுந் தலைப்புத்தான்! தமது பழமையின் பெருமையை மறந்த இக்காலத் தமிழர்க்கு இத்தலைப்பு வியப்பைத் தருவதில் வியப் பொன்றுமில்லை. தமிழகத்தில் அரசியல் முறை என்று ஏற்பட்ட தோ அன்றிருந்து, தமிழ் நாட்டின் குணபுலத்தைச் சீரும் சிறப்புடன் ஆண்டு வந்த, வண்புகழ் மூவர் என ஆசிரியர் தொல்காப்பிய ரால் சிறப்பித்துக் கூறப்பட்ட முடியுடை மூவேந்தருள் ஒருவரான செம்பியர் மரபினரா போலிச் சோழர்? தமிழர் பெருமை யறியாது, தமிழ் நாட்டின் மேற் படையெடுத்து வந்த மோரிய ராகிய வடவர் வெரீஇ வெந்நிட் டோடும்படி துரத்தியடித்த செருப்பாழி வென்ற இளஞ்சேட் சென்னி வழிவந்தவரா போலிச் சோழர்? தமிழரின் தனிப் பெருமை கண்டு வடவர் அஞ்சும்படி பனிமலையில் புலிபொறித்த கரிகாலன் மரபினரா போலிச் சோழர்? - என்று வியப்போடு அயிர்ப்புங் கொள்ளத்தான் செய்யும் இத்தலைப்பு! இங்ஙனம் தமிழர் தங்ஙனம் மறந்தனர் பாவம்! அம்மறதியால் எழுந்ததே இத்தலைப்பு! 1070-ஆம் ஆண்டு, ஐந்தா மாதம், ஒரு நாள் இரவு பத்து மணி இருக்கும். கங்கை கொண்ட சோழபுரத்தில், தனது விடுதியில், குலோத்துங்கன் ஏனோ ஒருவகை முகவாட்டத் துடன் தனியாக உட்கார்ந்திருந்தான். வாழ்க்கையில் வெறுப்புத் தட்டியவன் போல் அவன் அவ்வளவு கவலையுடன் காணப்பட்டான். அவன் பித்துப் பிடித்தவன் போல் வாய்க்குள் என்னென்னவோ முணுகிக் கொண்டிருந்தான். அப்போது ஒருவன் அங்கு வந்தான். "கருணாகரா! ஏன் இவ்வளவு நேரம்? உன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டே இருந்து விட்டேன்; இன்னும் சாப்பிடக் கூட இல்லை. நம் குருதேவர் என்ன சொன்னார்? மதுராந்தகன் வரவில்லை?" "இளவரசே! குருதேவரே இங்கு வருகிறார்கள்." "அவரே இங்கு வருகிறரா?" "ஆம், மதுராந்தகன் குருதேவருடன் வருகிறான். தமது வருகையை உனக்குத் தெரிவிக்கும்படி என்னை முன்னர் அனுப்பினர். ஏன் ஒரு வகையாய்?" "ஒன்றுமில்லை கருணாகரா! நான் இக்கங்கை கொண்ட சோழபுரத்திலேயே பிறந்தேன்; பிறந்ததிலிருந்து இங்கேயே தான் வளர்ந்து வருகிறேன்; சோழ நாட்டு இளவரசன் போலவே இருந்து வருகின்றேன். யாதொரு குறையும் இல்லை. எனினும், என் பாட்டனார் காலமுதல் நாங்கள் சோழர்களின் அருளினா லேயே வாழ்ந்து வருகிறோம். எங்கள் வேங்கி நாடோ சோழர்க்குச் சொந்தமாகி விட்டது. அச்சோழர் கீழ்ச்சிற்றரசர்களாகத்தான் நாங்கள் இருந்து வருகின்றோம். இத்தன்மானமற்ற அடிமை வாழ்வுதான் என் மனத்தை வாட்டுகிறது. கருணாகரா! நாம் கட்டிய மனக் கோட்டை இடிந்து தகர்ந்து விடும்போல் இருக்கிறது." "இளவரசே! அவ்வாறு நிகழாமல் செய்யத்தானே இன்று இங்கு கூடுகின்றோம்? நம் குருதேவர் இருக்கையில் நமக்கென்ன குறை? நாம் கட்டிய மனக்கோட்டையை அவர் ஒருபோதும் அவ்வாறு அழிந் தொழிந்து போக விடமாட்டார். அவரும் சேர்ந்து கட்டினது தானே அக்கோட்டை?" "இல்லை கருணாகரா! காரியம் வேறு வகையாகப் போய் விட்டது. முதலாவது, என் காதற் கனியை, நான் என் உயிரினும் பெரிதாக எண்ணிவரும் என் கண்மணி மதுராந்தகியை எனக்குக் கொடுப்பதில்லையாம். எனது குலப்பகைவன் விக்கிரமாதித்தன் இல்லை? அவன் தம்பி சய சிம்மனுக்குக் கொடுக்கப் போகிறானாம் மடயன்! அதன் பின் எனக்கு இங்கு என்ன வேலை? அப்புறம் நானெங்கே இச்சோழ நாட்டுக்கு அரசனாவது? இரண்டாவது, எனது அம்மான் இறந்ததிலிருந்து நான் இங்கு இருப்பதையே அவன் விரும்ப வில்லையாம்; மதுராந்தகி சொன்னாள். இன்று அதிராசேந்திரன் பார்த்து வெளியில் நட என்றால் என் நிலை என்னாவது?" "இளவரசே! அவனுக்கு அவ்வளவு நெஞ்சத் துணிவு ஒரு போதும் வராது. உன்னைச் சோழப் பேரரசனாக்குவது நம் குருதேவரின் கடமையும் பொறுப்புமாகும். அதற்காகவே அவர் உயிர் வாழ்கிறார். நானும் என் கடமையைச் செய்யத் தவறேன்; மதுராந்தகனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை." குருதேவரும் மதுராந்தகனும் வர, இருவரும் எழுந்து குருதேவரை வணங்கினர். குலோத்துங்கன் தன் எண்ணத்தை எடுத்துரைத்தான். குருதேவர், "குலோத்துங்க! அது பற்றி நீ சிறிதும் கவலைப் படாதே. உன்னை இந்தச் சோழ நாட்டுக்கு அரசன் ஆக்காவிட்டால், என் பெயர் ஈசான சிவனா! சோழ நா டென்ன? இத்தமிழக முழுமைக்கும் நீயே தான் தலைவன்! இதில் உனக்கு ஐயம் வேண்டாம். ஆரியச் சூழ்ச்சிக்கு மேற்பட்டதும் ஒன்றுண்டோ? எத்தனையோ தமிழ் முடிமன்னர்களைத் தம் அடி வருடச் செய்துள்ளனர் நம் முன்னையோர். அன்னார் வழியில் வந்தவன் அல்லனோ யான்? புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? ஆரியத்தை எதிர்த்தஇரணியன், இரணியாக்கன், மாவலி, சூரபதுமன், நரகாசுரன் முதலிய பன்னூற்றுக் கணக்கான தமிழர் தலைவர் களை ஒழித்துக் கட்டி, அன்னார்க்கு அரக்கர், அசுரர் எனப் பெயர் சூட்டி, தமிழர்களே அவர்களைக் கொடியவர்கள் என்று வெறுக்கும் படி செய்யவில்லையா? இராவணன் முதலிய தமிழர் தலைவர்கள் வெறுத்தழித்த கொலை வேள்வியை. அவர்கள் வழிவந்த தமிழரசர்களே விரும்பிச் செய்து, பல்யாக சாலை முதுகுடுமிப் பெரு வழுதி, இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற சிறப்புப் பெயருடன் விளங்கும்படி செய்யவில்லையா?" "ஆரியக் குரிசில்! நம் தசரத ராமனைக் கொண்டே ஆரிய ஆட்சியைத் தமிழகத்தில் நிலை நாட்ட முயன்றனர் அகத்தியர் முதலிய நம் முன்னையோர். ஆனால், அது கை கூடாமற் போயிற்று. நமது முன்னோர்கள் அரும்பாடு பட்டுத் தமிழகத்திற் பயிர் செய்த ஆரிய நச்சு மரங்கள் தழைத்துச் செழித்துப் பயன்தர வொட்டாமல் விழிப்புள்ள தமிழர் தலைவர்கள் அவ்வப்போது வெட்டி யெறிந்து வந்தனர். இனி அம்மரங்களை வெட்டாமலும், மேலும் நிரம்ப ஆரிய நச்சு மரம் செடி கொடிகளனைத்தையும் பயிர் செய்து பயன் தரும் படி பாதுகாக்கவும், தமிழகத்தில் ஆரிய ஆட்சியை ஏற்படுத்தவே நான் உயிர்வாழ்ந்து வருகின்றேன். அதற்கேற்ற நல்ல வேளையும் அடுத்து விட்டது." "அரசிளங்குமர! சேர சோழ பாண்டியர்களாகிய செந்தமிழ் வேந்தர்கள் மூவரும் அன்று இமய நெற்றியில் புலிவிற்கெண்டை பொறித்து நம் முன்னோர்களை இழிவு படுத்திய அச்செயலை நினைக்க நினைக்க என் நெஞ்சம் குமுறுகிறது. நல்ல குருதி யோட்டமுள்ள எந்த ஓர் ஆரியன் நெஞ்சமும் குமுறத்தான் செய்யும். அன்று செங்குட்டுவன் கனகவிசயர்தம் முடித்தலையில் கண்ணகியின் படிமக்கல் ஏற்றிய கொடுமையை நினைத்துப்பார். ஏன் உன் பாட்டனைப் பல ஆண்டுகள் சிறையிலடைத்துச் சிறுமைப் படுத்திய செயல்தான் என்ன மறக்கக் கூடியதா? இவற்றிற்கெல்லாம் பழிக்குப் பழி வாங்கி நமது இன இழிவைப் போக்க வேண்டாமா? சோழர்கள் தாய்வழிச் சொந்தம் என்று எண்ணாதே. விக்கிர மாதித்தன் என்ன உனக்கு அயலானா? இதற்கு ஒரே வழி உன்னைத் தமிழ் நாட்டின் தனித்தலைவன் ஆக்குவதே. அது என் வேலை." "குருதேவ! உய்ந்தேன். தாங்கள் இருக்க எனக்கு என்ன குறை? அவ்வினவிழிவு என் உள்ளத்தை உறுத்தாமலா இருக்கிறது?" "குலோத்துங்க! எத்தனையோ மறத் தமிழர்களை எளிதில் ஒழித்துக் கட்டிய அவ்வாரிய மேலோர் வழிவந்த எனக்கு இந்த அதிராசேந்திரனை ஒழித்துக் கட்டுவதாமலை? அதற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் செய்து விட்டேன். அவனுக்குப் பிறகு மதுராந்தகியை உனக்குக் கொடுக்க மறுப்பவர் யார்? அவள் உனது உடைமையானால், சோழ அரசமரபின் முடி காலடியில் வந்து விழுமன்றோ?" "இளவரசே! அதிராசேந்திரன் இக்கொடிய நோயினின்றும் இனித்தப்ப முடியாது. இந்நோய் தீரக் கூகூர் இறைவன் திருமுன் தேவாரம் ஓத ஏற்பாடு செய்துள்ளானாம். இரவு பகல் எந்நேரமும் ஓயாது ஓதினாலும் கூகூர் இறைவனால் இனிஅவனைக் காப்பாற்ற முடியாது; அவ்வளவு கொடிய நோய்! நான் ஏற்பாடு செய்திருக்கும் உள்நாட்டுக்குழப்பம், அவன் விரைவில் ஒழிவதற்கும், நீ சோழப் பேரரசனாவதற்கும் தோன்றாத் துணையாகும் என்பதில் ஐயமும் உண்டோ? கருணாகரனும் மதுராந்தகனும் அதற்கு ஆவன வெல்லாம் செய்து வருகிறார்கள். ஆகையால், நீ கவலையின்றியிரு. நாங்கள் வருகிறோம்." முதல் இராசராசன் காலத்திலிருந்தே (985 - 1014) வட நாட்டிலிருந்து ஓர் ஆரியப் பிராமணனை அழைத்து வந்து அரசகுரு ஆக்கிக் கொள்வதைச் சோழமன்னர்கள் வழக்க மாகக் கொண்டு வந்தனர். அவ்வாறு சோழ அரசகுரு ஆனவரே ஈசான சிவனார் என்பவர். ஆனால், இவர் யாருக்குக் குருவானாரோ, யாரால் குருவாக்கிக் கொள்ளப் பட்டாரோ அம் மரபையே ஒழித்துக் கட்டி, தமது இனத்தைத் தமிழ் நாட்டுக்குத் தலைமை யாக்கத் தலைப்பட்டு விட்டார். தமிழ் நாட்டில் ஆரியரைக் குடியேற்றுவதையும் ஆரிய நச்சுவிதைகளை விதைப்பதையுமே இவர் தமது வாழ்க்கைப் பயனாக்கொண்டவர். தமிழ் நாட்டை ஆரிய மயமாக்கக் காப்புக் கட்டிக் கொண்டு வேலை செய்தவர் என்று சுருங்கக் கூறி விளங்க வைக்கலாம். கருணாகரன் என்பவன், ஆரிய இனத்தைச் சேர்ந்த பல்லவ மரபினன்; கலிங்கத்துப் பரணி கூறுகின்ற கலிங்கப் போர் வென்ற கருணாகரத் தொண்டைமான் என்பவன் இவனே. மதுராந்தகனும் ஆரிய இனத்தினனே; நல்லூர் என்னும் ஊரினன்; குலோத்துங் கனால், 'பிரமாதிராசன்' என்னும் பட்டஞ் சூட்டிப் பெருமைப் படுத்தப்பட்டவன். இவர்களும், இன்னும் சில இரண்டகர்களும் சேர்ந்தே சோழ அரசை, ஏன்? தமிழ் அரசையே ஒழித்துக் கட்டச் சூழ்ச்சி செய்து வந்தனர். முடிவில் வெற்றியும் பெற்றனர். தமிழ் நாடு இன்று இந்நிலையை அடைந்ததற்கு, தமிழர்கள் இன்று தன்னரசையிழந்து தவிப்பதற்கு இவர்களே காரணமாவர். பம்பாய் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள வாதாவியைத் தலைநகராகக் கொண்ட இரட்டபாடி நாட்டைச் சாளுக்கியர் என்போர் ஆண்டு வந்தனர். இவர் வடநாட்டிலிருந்து புதிதாகக் குடியேறிய ஆரிய வகுப்பினராவர். அச்சாளுக்கியர் மரபில் வந்த இரண்டாம் புலிகேசியின் தம்பியான குப்தவிஷ்ணு வர்த்தனன் என்பான், கிருஷ்ணை கோதாவிரி யாறுகட் கிடையே கீழ்க்கடலை யடுத்திருந்த வேங்கி நாட்டை வென்று அதற்கு அரசனானான். இவன் வழி வந்தோர் கீழைச் சாளுக்கியர் எனவும், வாதாவிச் சாளுக்கியர் மேலைச் சாளுக்கியர் எனவும் பெயர் பெற்றனர். இவ்விரு சாளுக்கியர்களுக்கும் சோழர்களுக்கும் அடிக்கடி போர் நடந்து வந்தது. 'மத்தளத்துக்கு இரு புறம் இடி' என்பது போல, அவ்விருவகைச் சாளுக்கியர்களும் சோழ நாட்டை இரு முனையிலும் தாக்கி வந்தனர். முதல் இராசராச சோழன் வேங்கியை வென்று, விமலாதித்தன் என்னும் வேங்கி வேந்தனைப் பிடித்து வந்து சிறை வைத்தான். அவன் பல ஆண்டுகள் சோழ நாட்டுச் சிறையிலிருந்தான். பின், இராசராசன் தன் மகள் குந்தவை என்பாளை அவனுக்குக் கொடுத்து மருமகனாக்கி வேங்கியை ஆளச் செய்தான். இராசராசன் மகனாகிய கங்கை கொண்ட சோழன் என்னும் இராசேந்திரயை சோழன் தன் மகள் அம்மங்கை தேவி என்பாளை, தன் தங்கை குந்தவையை விமலாதித்தன் மகன், இராசராச நரேந்திரன் என்பானுக்குக் கொடுத்தான். இவ்வம் மங்கை தேவியின் மகனே சோழ அரசைக் கைப்பற்றச் சூழ்ச்சி செய்யும் குலோத்துங்கன் என்பான். இவ்வாறு சோழர்கள் கீழைச் சாளுக்கியர்க்குப் பெண் கொடுத்துத் தம் நாட்டின் ஒரு பக்கத்து இடியைத் தவிர்த்துக் கொண்டனர். கங்கை கொண்ட சோழன் மக்களில் முதல் இராசாதி ராசன், இரண்டாம் இராசேந்திரனுக்குப் பின், வீர ராசேந்திரன் என்பான் ஆட்சிக்கு வந்தான். இவன் தன் மகளை மேலைச் சாளுக்கியனான ஆறாம் விக்கிரமாதித்தனுக்குக் கொடுத்து மற்றொரு புற இடியையும் நீக்கிக் கொண்டான். தமிழ் நாட்டில் ஆட்சி முறை என்று ஏற்பட்டதோ அன்று தொட்டுத் தமிழகத்தைச் சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர் மரபினரே ஆண்டு வந்தனர். இவர்கள் ஒருவர்க்கொருவர் ஒவ்வொருகால் பகை கொண்டு பொரு தனரேனும், ஒருவர் மற்றவர் நாட்டைப் பிடித்து ஆளாமல் தத்தம் நாடுகளையே ஆண்டு வந்தனர். ஆனால், அத்தமிழ் மரபுக்கு மாறாக, முதல் இராசராசன் முதல், முதல் வீரராசேந்திரன் ஈறான சோழ மன்னர்கள் சேரபாண்டியரை வென்று, தமிழ்நாடு முழுமையும் தாங்களே ஆண்டு வந்தனர். 'வண்புகழ் மூவர்' 'முடியுடை மூவேந்தர்' என்ற முறையை இவர்கள் அழித்தொழித்து விட்டனர். அச்சோழ மன்னர்கள் செய்த அத்தகாச் செயலே தமிழ் நாட்டில் தமிழ் அரச மரபு ஒழிந்ததற்குக் காரணமாகும். வீரராசேந்திரனுக்கு அதிராசேந்திரன் என்ற ஒரே மகன். கி.பி. 1070-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வீரராசேந்திரன் இறக்கவே, அதிராசேந்திரன் சோழப் பேரரசன் ஆனான். அவனுக்குப் பிள்ளை இல்லாததால், அவனை விரைவில் ஒழித்துச் சோழப் பேரரசைப் பெறவே குலோத்துங்கன் முதலிய நால்வரும் கூடிப் பேசினர். குலோத்துங்கன் தாயான அம்மங்கை தேவி தான் கருவுற்றதி லிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திலேயே இருந்து வந்தாள். குலோத்துங்கன் சோழ அரச குமரன் போலவே வளர்ந்து வந்தான். வீரராசேந்திரன் தன் தங்கை மகனான குலோத்துங்கனை இளவரச நிலையிலேயே வளர்த்து வந்தான். அதாவது, தன் மகன் போலவே வளர்த்து வந்தான் எனலாம். தன் அண்ணன் இரண்டாம் இராசேந்திரன் மகளான மதுராந்தகியைக் குலோத்துங்கனுக்குக் கொடுக்க முடிவு செய்திருந்தான். மதுராந்தகியும் குலோத்துங்கனும் காதலர்கள் போலவே பழகி வந்தார்கள். அதிராசேந்திரனும் இதை மறுக்கவில்லை. ஆனால், தன்னை ஒழித்து விட்டுச் சோழப் பேரரசனாகச் சூழ்ச்சி செய்வதை அறிந்தபின், அவன் மதுராந்தகியைக் குலோத்துங் கனுக்குக் கொடுக்க விரும்பாததோடு, குலோத்துங்கன் சோழ நாட்டில் இருப்பதையே வெறுத்தான். தன் மைத்துனன் ஆறாம் விக்கிரமாதித்தன் தம்பியாகிய சயசிம்மனுக்கு மதுராந்தகியைக் கொடுத்துத் தனக்கு வரவிருக்கும் கேட்டினைத் தடுக்க எண்ணினான். இது இயல்புதானே? ஆனால், கொடிய நோயால் வருந்திய அதிராசேந்திரன், ஈசான சிவன் உண்டாக்கிய உள்நாட்டுக் குழப்பத்தால் உண்டான கவலையால் உயிர் துறந்தான். குலோத்துங்கன் மதுராந்தகியை மணந்து கொண்டு சோழப் பேரரசனானான். நாட்டுக்கு அரசனில்லாக் குறையையும், குலோத்துங்கன் இளவரசன் போலவே இருந்து வந்த பழக்கத்தையும் எண்ணி, அரசியல் அதிகாரிகளும் பெருமக்களும் அவன் சோழப் பேரரசனாக உடன்பட்டனர் போலும்! குலோத்துங்கன் 9-6-1070ல் சோழப் பேரரசனாக முடி சூட்டிக் கொண்டான். அன்றிருந்து சோழ நாட்டில் தமிழ் அரசமரபு ஒழிந்து ஆரிய அரசமரபு ஏற்பட்டது. அரசியல் முறைப்படி மதுராந்தகிதான் அரசுக்குரியவள். அவளுக்குத் தான் முடி சூட்டியிருக்க வேண்டும். அவளைத் தான் சோழப் பேரரசியாக்கியிருக்க வேண்டும். அல்லி, மீனாட்சி முதலிய தமிழரசியரும், விக்டோரியா முதலிய ஆங்கில அரசியரும் நாடாண்டு வந்ததையும், அவர்கள் கணவன்மார் புது மாப்பிள்ளை போல இருந்து வந்ததையும் அறிக. இன்றும் எலிசபெத்து அரசியின் கணவன் என்ற அளவில் தானே எடின்பரோக் கோமகன் இருந்து வருகிறார்? இன்றும் மதுரை மீனாட்சிக்கு வழிபாடு செய்தபின் தானே சொக்கருக்குச் செய்யப்படுகிறது? மீன்+ ஆட்சி - மீனாட்சி. மீன் என்பது பாண்டிய அரச முத்திரையும் கொடியும் ஆகும். அது ஆகுபெயராய் அரசையும் நாட்டையும் குறிக்கும். பாண்டி நாட்டை, பாண்டிய அரசை ஆண்டதால், மீன் ஆட்சி -மீனாட்சி என்றபெயர் ஏற்பட்டது. அவள் பிள்ளை பெயர் தடாதகை என்பதாகும். பிற்காலத்தார் இவ்வுண்மையை அறியாது, மீனம்+அட்சி-மீன+அட்சி - மீனாட்சி என வடமொழித் தீர்க்க சந்தியாகக் கொண்டு, அங்கயற் கண்ணி எனக் கொள்ளலாயினர். அட்சம்-கண். அட்சி - கண்ணை யுடைவள். மீன் போன்ற-கயல் போன்ற கண்ணையுடையவள் எனக் கொண்டனர். எல்லாப் பெண்கள் கண்ணும் கயல் போன்றது தானே! ஆனால், அரசியல் முறைக்கு மாறாக, சூழ்ச்சித் திறத் தினால், அரசுக்குரிய மதுராந்தகியிருக்கக் குலோத்துங்கன் சோழப் பேரரசனானான். 1602-ல் குலோத்துங்கன் தந்தையிறந்தான். குலோத்துங்கன் வேங்கி வேந்தனாக முடிசூட்டப் பெற்றான். ஆனால், அவன் வேங்கியை ஆளவில்லை. வேங்கியை அவன் சிற்றப்பன் விசயாதித்தன் என்பவன் ஆண்டு வந்தான். இவன் சோழப் பேரரசனாகச் சூழ்ச்சி செய்து கொண்டு கங்கை கொண்ட சோழபுரத்திலேயே இருந்து வந்தான்; முடிவில் வெற்றியும் பெற்றான். குலோத்துங்கனுக்குப் பிறகு, விக்கிரமன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதி ராசன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இரசேந்திரன் ஆகிய ஆரிய அரசர்கள் 209 ஆண்டுகள் (1070-1279) தமிழ் நாட்டை ஆண்டு வந்தனர். அவர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தே தமிழ் நாட்டில் ஆரிய நச்சு மரம் செடி கொடிகள் நன்கு வளர்ந்து, பூத்துக் காய்த்துப் பழுத்துப் பயன் தரப் பாதுகாவலராக இருந்து வந்தனர். ஈசான சிவனின் திட்டம் நிறைவேறியது. அவன் திட்டத்தை இவர்கள் நிறைவேற்றி வைத்தனர். அவ்வாரிய நச்சு மரங்களில் இராமாயணமும் பாரதமும் தலையாயவை. தமிழ் நாட்டில் ஆரியப் பாதுகாப்பு அரண்களாக அமைந்தவை இராமாயணமும் பாரதமுமேயாகும். கடைச் சங்கப் புலவர்களில் ஒருவரான பெருந்தேவனார் என்பவரால் பாரதம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. அதனால் அவர் 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' என்றே அழைக்கப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. அப்பாரதம் இப்போது இல்லை. அதற்கு முற்பட்ட நூல்களெல்லாம் அப்படியே இருக்க, அது அழிந் தொழிந்ததன் காரணம் புலப்பட வில்லை. பிற்காலத்தே கவிசாகரப் பெருந்தேவனார் என்பார் ஒருவர் பாரதத்தைத் தமிழ்ப் படுத்தி யிருக்கிறார். அதன் சில பகுதிகள் இப்போதுள்ளன. இவரும் முன்னவரும் இருவரோ ஒருவரோ என்பது ஆராய்ச்சிக்குரியது. ஆனால், இராமாயணமோ, கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரைத் தமிழ் நாட்டில் தலைகாட்ட முடியவில்லை. முதற் குலோத்துங்கன் காலம் முதல், மூன்றாங் குலோத்துங்கன் காலம் வரை (1070-1200) 130 ஆண்டுகள் ஆரிய ஆட்சியின் கீழ் அரும்பாடு பட்ட பின்னரே மூன்றாங் குலோத்துங்கன் காலத் திற்றான் அதைத் தமிழில் மொழி பெயர்க்க முடிந்தது. காரணம், இராமாயணம் தமிழரின் பகைக் கதை. தமிழரை இழிவு படுத்துங் கதை; தமிழரால் அறவே வெறுக்கப்பட்ட கதை. கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றுவதற்குப் பட்ட பாட்டைப் பார்த்தாலே இது விளங்கும். மூன்றாங் குலோத்துங்கனின் அரசகுருவான ஈசுவரசிவனின் ஆரிய இனவெறியாலும், குலோத்துங்கனின் அதிகார வெறியாலுமே அது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. கம்பரின் மகனான அம்பிகாபதியைப் பாடும்படி எவ்வளவோ வற்புறுத்தியும் தன்மான முள்ள அவன் மறுத்து விடவே, பின் கம்பரைக் கொண்டு பாடப்பட்டதாகக் கதையும் உண்டு. கம்பரும், 'வையம் என்னை இகழவும் மாசென' என்றே பாடியுள்ளார். ஆரிய ஆட்சி தமிழ் நாட்டில் ஏற்படாதிருந்திருக்குமானால், இராமாயணம் ஒருக்காலும் தமிழாக்கப்பட்டிருக்காது; தமிழ் இலக்கிய மரபு இந்நிலையை அடைந்திருக்காது; தமிழர் வாழ்வு இவ்வாறு தாழ்ந்திருக்காது; தமிழாட்சி ஒழிந்திருக்காது. இப்போது விளங்கிற்றா தலைப்பின் பொருள்? சோழர் வரலாறு எழுதியுள்ள எல்லா வரலாற்றாசிரியர்களும் இவ்வுண்மையை விட்டு, முதற் குலோத்துங்கன் முதல், மூன்றாம் இராசேந்திரன் ஈறாகவுள்ள எண்மரையும் 'சோழர்' என்றே குறித்துள்ளனர்; பிற்காலச் சோழப் பேரரசரின் குறியீட்டுச் சொற்களான இராசகேசரி, பரகேசரி என்பவற்றைக் கொண்டு, சோழ மன்னர்களோடு இவர்களைத் தொடர்புபடுத்தியும் உள்ளனர். சோழர் ஆட்சியைப் பேராட்சி யாக்கிய சோழர்கள் என இவர்களிற் பலரைப் புகழ்ந்தும் உள்ளனர். அவர்கள் அவ்வாறு எழுதியதன் காரணம் நமக்கு விளங்கவில்லை. இது வரலாற்றி லக்கணத்திற்குப் புறம் பானதேயாகும். முதற் குலோத்துங்கன் முதலியோர் எவ் வகையிலும் சோழராகார். எழுத்துப் போலியும் இலக்கணப் போலியும் கண்டவர் தமிழர். 'முகம் - முகன்' என ஓரெழுத்து நின்றவிடத்து வேறோ ரெழுத்து நின்று பொருள் வேறு படாதது எழுத்துப் போலி. 'இல்வாய் - வாயில்' எனச் சொல் நிலைமாறி அதே பொருள் படுவது இலக்கணப் போலி. ஆனால், குலோத்துங்கன் முதலிய வர்களைச் 'சோழர்' என்றதில் அத்தகைய பொருள் அமைய வில்லை. பட்டல்லாததை - பார்ப்பதற்குப் பட்டுப் போல இருப்பதை - போலிப்பட்டு எனவும், முத்தல்லாததை - முத்தைப் போன்ற வடிவும் நிறமும் உடையதை - போலி முத்து எனவும் கூறுவது போல, சோழர் - அல்லாத அவர்களை - சோழ நாட்டை ஆண்டமையால் - போலிச் சோழர் எனலே பொருந்தும். போலிப்பட்டைப் பட்டெனல் எங்ஙனம் பொருந்தாதோ, அங்ஙனமே போலிச் சோழரைச் சோழர் எனலும் பொருந்தாது. போலிப் பட்டைப் பட்டெனக் கூறி விற்கின் எங்ஙனம் குற்ற முடையதோ, அங்ஙனமே போலிச் சோழரைச் சோழரெனக் கூறித் தமிழரை ஏமாற்றுவதும் குற்றமுடையதேயாகும். இது வரலாற்று மரபுக்கு மாறானது. சோழ நாட்டை ஆண்டதால் இவர்கள் சோழர் எனப் பெயர் பெற்றனர் எனில், பல்லவர் பல நூற்றாண்டுகள் சோழ நாட்டை ஆண்டனர், சோழர் எனப் பெயர் பெறவில்லை. மராட்டியர் சோழ நாட்டை ஆண்டனர், சோழர் எனப் பெயர் பெறவில்லை. நாயக்கர் பாண்டி நாட்டை ஆண்டனர், பாண்டியர் எனப் பெயர் பெறவில்லை. இவர்கள் மட்டும் சோழர் எனப் பெயர் பெறக் காரணம் என்னவோ? குலோத்துங்கன் சோழப் பெண்ணுக்குப் பிறந்ததால், சோழன் எனப் பெயர் பெற்றனன் எனில், இவன் தந்தையும் சோழப் பெண்ணுக்குப் பிறந்தவன்தானே, ஏன் அவன் சோழன் எனப் பெயர் பெறவில்லை? தமிழ்ப் பெண்கட்குப் பிறந்த சட்டைக்காரர் ஏன் தமிழர் எனப் பெயர்பெறவில்லை? எவ்வகை யிலும் இவர்களைச் சோழர் எனல் பொருந்துவதாக இல்லை. சோழர் வரலாற்றாசிரியர்கள் இனியேனும், குலோத்துங்கன் முதலிய எண்மரையும் 'சோழர்' என்று எழுதியிருப்பதைப் 'போலிச் சோழர்' என்று திருத்தி வெளியிட்டு வரலாற்று ஓர வஞ்சனை மரபைத் தூய்மைப்படுத்துவார்களாக.  5. ஓரவஞ்சனை ஒரு நாள் மாலை மணி ஐந்தரையிருக்கும். ஆடு மாடுகள் அங்குமிங்கும் நகர்ந்து மேய்ச்சற் காட்டில் மேய்வது போல, முகிற் கூட்டம் வான வெளியில் அங்கு மிங்கும் நகர்ந்து கொண் டிருந்தன. வீட்டுக்கு வந்த விருந்தினர், 'போய் வருகிறேன்' என்று தம் இருகைகளையும் கூப்ப, வீட்டரசியார் அவ்விருந்தினரைப் பிரிய மனமில்லாது, தன் ஒண்ணில வெறிக்கும் தண்மதி முகம் ஒருவகை வாட்டத்தையுடைய, கொற்கை முத்துப் போன்ற வெண் பற்கள் தோன்றப் புன்னகை பூத்த வண்ணம், "போய் வாருங்கள்"என்று விடை கொடுத்தனுப்புதலைப் போல, அந்த மெல்லியலின் முகத்தினைப் போன்ற தாமரை மலர்கள் குவியவும், அன்னாள் முருந்தன்ன மூரல் போன்ற முல்லை முகைகள் மலரவும், ஞாயிறு தன் ஒளிக் கைகளைக் குவித்து,செம்முகம் பொலியக்காட்டிப் "போய் வருகிறேன்"என்று உலகம் என்னும் நல்லாள் பால் விடை பெற்றுக் கொண்டிருந்தது. ஓர் அழகிய மாடி வீடு. அதன் புறக்கடையில் ஒரு முல்லைப் பந்தர். ஓர் அழகிய இள நங்கை, அப்பந்தரில் அவளைப் புன்னகை பூப்ப அன்புடன் வரவேற்பது போலப் பூத்துப் பொலிவுடன் விளங்கும் அம்முல்லைப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். தம் தலைவியின் வெண்பற் களுக்கு ஒப்பாமோ வெனப் பறித்து ஒப்பிட்டுப் பார்த்துப் பார்த்து ஒவ்வாவென எறிவது போல அவள் கரும்புக் கைகள் அம்முல்லை முகைகளைப் பூந்தட்டத்தில் போட்டுக் கொண்டிருந்தன. "தேமொழி! இங்கு என்ன செய்கிறாய்? தமிழ்ப் புலவர்கள் மகளிர் பல்லுக்கு முல்லை முகையை ஒப்புமை சொன்னது சரியா தப்பா என்று உன் பற்களுடன் அம்முகைகளை ஒத்திட்டுப் பார்த்துக் கொண்டிருக்கின்றனையா ஏன்? புலவர் சொல் பொய்யா மெய்யா?"என்று கேட்டபடி அங்கு வந்தான் அவள் கொழுநன். "தமிழ்ப் புலவர்கள் சொல் பொய்க்கவா! அங்ஙனம் ஆராய்ந்து பாராது அரைகுறை யாகவா உவமை கூறியுள்ளனர் அவர்கள்?" "மலரா முல்லை மகளிர் பல்லுக் குவமை, மலர்ந்த முல்லை?" "மலர்ந்த முல்லை ஆடவர் பல்லுக் குவமை!" "பல்லிதழ் விரித்துச் சில்லென மணங் கமழும் அம் மலர்ந்த முல்லை எங்ஙனம் ஆடவர் பல்லுக் கொவ்வும்? நீ நகையாடு கின்றனை. இங்ஙனம் பொருந்தா உவமை கூறுதல் தமிழ் மரபுக்கு ஒவ்வாததாகும்." "இல்லை, ஒத்த உவமையே தான். ஆடவரின் அகன்ற பற்களுக்கு அம்மலர்ந்த முல்லையின் இதழ்கள் ஒத்த உவமை யாகும். வேண்டுமானால் பறித்து ஒப்பிட்டுப் பாருங்கள்." "ஆமாம், அக்காரணத்தினால் தான் மலர்ந்த பூக்களைப் பறிக்காமல் விட்டு வைத்தனை போலும்! நீ இன்று தப்பிப் பிறந்தனை. நீ சங்க முற்காலத்தே பிறந்திருக்க வேண்டியவள். அன்று நீ பிறந்திருந்தால் இவ்வுவமை சொல்லாத ஒரு குறை, தமிழ் மொழிக்கில்லாதிருக்கும். ஒளவை முதலிய பழந்தமிழ் நல்லாரையும் நீ புறங்கண்டு விட்டனை. ஒரு முல்லை மகளிர், ஆடவர் இருவர் பல்லுக்கும் உவமையாகும் உண்மையைக் கண்டறிந்த உன் நுண்மாண் நுழைபுலத்தைப் பாராட்டுகின்றேன்." "இல்லை, நான் அவர்களைப் புறங்காணவில்லை. பெண் களின் இயற்கையழகில் ஈடுபட்ட ஆடவர்கள், அன்னாரின் பல்லுக்கும் சொல்லுக்கும், கண்ணுக்கும் மூக்குக்கும். கைக்கும் காலுக்கும் உவமை கண்டு இன்புறுவதையே பொழுது போக் காகக் கொண்டனர். புலமை வாழ்வு வாழ்ந்த பெண்பாலார் சிறுபான்மையின ராதலான் பெரும் பான்மையினரைப் பின் பற்றிச் சென்றனர். இல்லையேல், ஆடவர்கள் பொதுநோக்குடன் இருந்திருந்தால், கருங்குழல், தாழ்குழல், சுரிகுழல், பூங்குழல், பவளவாய், மதிமுகம், முத்துப்பல், துடியிடை, பொற்றொடி போன்ற மகளிரைக் குறிக்கும் அன்மொழித் தொகைகள் போல ஆடவரைக் குறிக்கும் அன்மொழித் தொகைகளும் தமிழ் மொழியில் இருக்குமல்லவா? இவ்வுண்மையை விட்டு, ஒளவை போன்ற பழந்தமிழ்ப் புலவர்களை நான் புறங்கண்டதாகக் கூறுதல் உண்மையுரை யாகாது." "தேமொழி! உன்னுடைய தமிழறிவையும், தமிழினப் பற்றையும் நான் பாராட்டுகிறேன்! நீ சொல்வது முழுதும் அப்படியே உண்மை. அன்றென்ன? இன்றும் ஆடவர்கள் பெண்டிரைச் சரிநிகராக எண்ணி நடத்துவதில்லை தானே? நமது தமிழ்ச் சட்ட மன்றமே இதற்குத் தக்க சான்று பகருமே. இரு நூற்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அச்சட்ட மன்றத்தில், பாதிப்பங்காளிகளான பெண்கள், விரல்விட் டெண்ணக் கூடிய அளவில் தானே இருக்கின்றனர்? ஆண்கள் வெட்கித் தலை குனியும்படி சீரும் சிறப்புடன் திறம்பட ஆட்சி நடத்திய இலங் கணியும் தாடகையும் காமவல்லியும் சிந்தாதேவியும் மதுராபதியும் மீனாட்சியும் அல்லியும் வந்த வழியில் வந்த மகளிர் குலத்திற்கு என்ன ஆளுந்திறமையா இல்லை? வாயால், "ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சாமானமாக வாழ்வமிந்த நாட்டிலே"என அழகாகப் பேசுவதைத் தவிர, நடைமுறையில் ஆடவர்கள் கடைப்பிடித்து நடப்பதில்லை யென்பதை நான் முழுமனத்துடன் ஒப்புக் கொள்கிறேன். இதற்காக நான் வெட்கமும் படுகிறேன்." "ஆமாம், நீங்களும் அழகாகத்தான் பேசுகின்றீர்கள். ஆனால்..." "ஆனாலென்ன?" "ஒன்றுமில்லை" இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டே பூப்பறித்துக் கொண்டிருக்கையில், ஓர் இளம்பெண், ஆண்டு பதினெட்டுக் குள்தான் இருக்கும்; பூவா முல்லைபோல வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து, இவர்கள் இருவரும் முல்லைப் பந்தரின் எதிரெதிராக நின்று பூப்பறித்துக் கொண்டே பேசிக் கொண்டதைக் கேட்டுக் கொண்டு நின்று விட்டுத் திரும்பி வீட்டுக்குட் சென்று விட்டாள். அவள் யாருமல்லள்; தேமொழியின் கொழுந்தி, தீந்தமிழனின் தங்கை- துளசிதான். துளசி வைத்து வளர்த்தது தான் அம் முல்லைக்கொடி. அவளும் அம்முல்லை மலரைப் பறித்து மாலையாகத் தொடுத்து அத்தொடையைத் தன் மொய் குழலில் அணிந்து, "பூங்குழல்"என்னும் பொலிவுடன் விளங்கி வந்தாள். அப்புறம்? அப்புறம் கீழே படியுங்கள்: மேட்டுப்புதூர் என்பது ஒரு நாட்டுப்புற ஊர். பேர் என்னவோ மேடானாலும், அது நெல்லுங் கரும்பும் விளையும் வயல் சூழ்ந்த ஊர். வேங்கடம் பிள்ளை என்பவர் அவ்வூரின் பெருஞ் செல்வர். இவர்தான் அவ்வூர்த் தலைவரும். மாங்குயில் மொழியம்மையார் என்பவர் வேங்கடம் பிள்ளையின் வாழ்க்கைத் துணைவியார். அவ்விரு பெற்றோரின் செல்வ மகனும் செல்வ மகளுந்தான் நம் தீந்தமிழனும் துளசியும். அவர்கள் இருவரும் செல்வமாக வளர்ந்தனர். செல்வமாக வளர்ந்தனர் என்பதைச் சொல்லவா வேண்டும்? அவர்கள் செல்வமாக வளர்ந்து மணப் பருவத்தையடைந்தனர். தீந்தமிழன் ஈரொன்பானாண் டகவையும், துளசி ஈராறாண்டகவையும் அடைந்தனர் எனலாம், இலக்கிய நடையில் - இளங்கோ வடிகள் நடையில். "ஏனுங்க! நீங்கென்ன இப்படி உங்க பாட்டிலே இருக்கறீங் களே! நான் சொல்லறதெக் காதில் போட்டுக்காமே - இதென்ன நல்லாவா இருக்கும்? நாலு பேரு என்ன பேசிக்கு வாங்க? புள்ளெ பருவமாயி ஒரு வருசத்துக்கு மேலாவுது; இன்னும் வீட்டிலெ வெச்சுக்கிட்டிருந்தா ஊருவாயே மூட ஒலெ மூடியா உண்டு? அதோடு அதன் பருவத்திலே செய்து முடிச்சிட்டாத்தானே நம்ம பாரமுங் குறையும்? வந்த இடத்தையெல்லாந் தட்டிக் கழிச்சுக் கிட்டே இருந்தா அப்புறம் வார வங்க ஒருவிதமா நினைக்க மாட்டாங்க?" "நானென்ன சும்மாவா இருக்கிறேன்? நம்ம செல்வாக்குக்கும் தகுதிக்கும் செரியா இருக்க வேண்டாமா? படிப்பிருந்தால் பணமில்லை, பணமிருந்தால் படிப்பில்லை. அந்த இரண்டு மிருந்தாக் குலமில்லை. "வழி வழியாக வந்த குடும்பப் பெருமையை வேங்கடம் பிள்ளை கெடுத்து விட்டான்"என்ற கெட்ட பெயரையா வாங்கச் சொல்லுகிறாய்?" "ஏன் அந்தக் குடும்பத்துக் கென்ன? பையனும் படிச் சிருக்குது, பணமுமிருக்குது. குலங் குல மின்னு குலமா சோறு போடுது? பணம் பந்தியிலே குலங் குப்பையிலே தானே? எங்கூருலே வடக்கு வளவாரு புள்ளையைக் குடுத்திருக்குது பாருங்க, அந்தப் பையன் பாட்டன் அவுங்க பண்ணையத்திலே இருந்தானாம். இப்ப நெரயாக் காடு தோட்டம் சொத்துச் சொகமெல்லாம் வர, அவன் பேரன் மருமகனாகிவிடவில்லையா? பண்ணையக்காரக் குடும்பங் கடனாளியா இருக்குது. பண்ணையத்தி லிருந்தவங்க குடும்பம் இப்பப் பணத்திலே வாழுது. அவுங்க கடனை யெல்லாம் மருமகன் கட்டிப் போடப் போறானாம்; ஒன்னுக்கு ரண்டு காரிருக்குது, சும்மா குலங்குலமின்னு நாளைக் கடத்தாதீங்க. அந்தப் பையனுக்கே குடுத்துக் கில்லாம். அழகான பையன்." "சரி! அப்படியே செய்திட்டாப் போவுது. புள்ளெ யென்னுங்கு தோ?" "புள்ளை யென்னுங்கு? எருத்தைக் கேட்டா பொதி வைப்பது? அதையே முடிச்சுப் போடலாம்!" வேங்கடம் பிள்ளை மனைவியின் பேச்சுக்குக் கட்டுப் பட்டவர். "சரி அப்படியே செய்து விடலாம்"என்றார். புரோகி தனைக் கூப்பிட்டுப் பொருத்தம் பார்த்தார்கள். பத்துப் பொருத்தமும் அப்படியே அமைந்திருக்கிறதென்றான் அவன். நல்ல முகூர்த் தத்தில் துளசிக்கும் தோலா மொழிக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது. பருவமான பெண் வீட்டிலிருக்க, பையனுக்கு மணஞ் செய்யக் கூடாது என்ற குல வழக்கப்படி தள்ளி வைத்திருந்த தீந்தமிழன் திருமணம், துளசி திருமணம் நடந்த அடுத்த மாதத்திலே அவ்வாறே சீரும் சிறப்புடன் நடந்தது. இவனுக்கும் பொருத்தம் பார்த்து, நல்ல முகூர்த்தத்தில் எல்லாச் சடங்குகளும் செய்துதான் திருமணம் செய்தார்கள். தீந்தமிழன் திருமணம் நடந்து ஒரு மாதங்கூட இன்னும் முடியவில்லை. வேங்கடம் பிள்ளையும் மாங்குயில் மொழி யம்மையும் மக்கள் மருமக்களுடன் தென்னாட்டுத் திருக் கோயில் களைத் தரிசித்து வரப் புறப்பட்டனர். பழனி யாண்டவனையும், மதுரை மீனாட்சி சொக்கரையும், திருப்பரங்குன்றச் செவ்வேளையும் தரிசித்துக் கொண்டு, செந்தூர் வேலாண்டியைத் தரிசிக்கச் சென்றனர். திருச் செந்தூர் செல்லும் வழியில் குற்றால அருவியில் நீராடிக் குறும் பலா இறைவனையும் தரிசித்து விட்டுச் செல்லலா மெனச் சென்றனர். செல்லும் வழியில் அவர்கள் சென்ற இன்னூர்தி சாலை யோரமிருந்த ஒரு மரத்தில் மோதியது. வண்டி பள்ளத்தில் விழுந்துவிட்டது. அந்தோ! துளசியின் கணவனும் தீந்தமிழனின் மனைவியும் பிணமாயினர். மற்றவர்களுக்கும் நல்ல அடி. வணங்கி வழிபட்டுச் சென்ற அத்தனை தெய்வங்களும் காப்பாற்ற வில்லை. துளசி கைம்மையானாள். தீந்தமிழன் தபுதாரன் ஆனான். திருக்கோயில்களைத் தரிசித்து, தெய்வங்களை வணங்கி வழிபட்டு வரம் பெற்று வரச் சென்ற வேங்கடம் பிள்ளையும் அவர் மனைவியும், மருமகனையும் மருமகளையும் இழந்து, கணவனையும், மனைவியையும் இழந்த தன் மக்களுடன் ஊர் வந்து சேர்ந்தார்கள். ஒரு மாதம் அவர்கட்குத் துன்பத்துடன் கழிந்தது. 'ஊரி (மோட்டார்) கவிழ்ந்தது' என்னும் செய்தியைச் செய்தித்தாளில் பார்த்தால் அன்று முழுதும் வேங்கடம் பிள்ளையும் அவர் மனைவியும் உண்ணாமல் உறங்காமல் அழுது கொண்டேயிருப் பார்கள்; நம்பிக் கைவிட்டதெய்வங்களை நொந்து கொள் வார்கள்; உலக வாழ்வையே வெறுப்பார்கள். அடுத்த மாதம் பிறந்தது. "ஏனுங்க! பையன் தண்டுவனாட்ட இருந்தா நல்லாவா இருக்கும்? நாலு என்ன நினைக்கும்? பையன் தனியா நல்லது பொல்லாதுக்குப் போகவர இல்லாமெ எத்தனை நாளைக்கு இப்படி இருப்பான்? இந்த மாதத்திலேயே எப்படியாவது தேவையை முடிச்சுப் போடோணும்"என்று கணவனை வற்புறுத்தி னாள் மாங்குயில் மொழியம்மை. ஆனால், யாதொரு மாறுபாடு மின்றி முன்போலவே இருக்கும் தன் மகனைப் பற்றி இவ்வாறு தன் கணவனிடம் வற்புறுத்தி வந்தாளேயன்றி, அத்தாய், சுமக்க முடியாது சுமந்திருந்த நகைகளையிழந்து, வகை வகையானவண்ணப் பட்டாடைகளை யிழந்து, மஞ்சளிழந்து, மணப்பொடியை இழந்து, பொட்டை யிழந்து, பூவை இழந்து, வெள்ளையுடுத்து, பூத்து மாறின பூங்கொடி போல் பொலிவின்றி, வெளியிற் செல்லாது வீட்டுக் குள்ளேயே ஊணுறக்கமின்றி அழுத கண்ணுஞ் சிந்தையுமாய்ப் படுத்துக் கிடக்கும் தன் மகளைப் பற்றிக் கனவிற் கூட நினைக்க வில்லை. இரண்டு மாதங்களுக்கு முன் அவளைப் பற்றி, அவள் தனிமையைப் பற்றி அவ்வளவு அக்கறையும் அவசரமும் பட்ட அத்தாய், ஏனோ இப்போது அவள் தனிமையை மறந்து விட்டாள். அவளை அங்ஙனம் நினைக்க முடியாத நிலையில் வைத்து விட்டது அவள் குலச் சட்டம்! அடுத்த மாதம் தீந்தமிழனுக்கும் தேமொழிக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது. அவர்கள் இனிது இல்லறம் நடத்தி வந்தார்கள். ஆண்டுகள் இரண்டு உருண்டோடின. ஆனால், துளசியோ, சென்னைக் கீழ்ப்பாக்க மருத்துவ சாலையிலுள்ள மகளிரைப் போல், நடைப்பிணமாக அவ் விரண்டாண்டையும் கழித்து வந்தாள். கோயில் கட்டியவர்கள் அக்கோயிலுக்குட் போக முடியாமலும் இருப்பதைப் போல், தான் வைத்து அன்போடு வளர்த்த முல்லைக் கொடியைத் தீண்டாத நிலையில் இருந்து வந்தாள் துளசி. புறக்கடைக்குச் சென்ற துளசி, தான் வைத்து வளர்த்துத் தனக்குப் பயன்படாமல் இருக்கும் அம்முல்லைக் கொடியில், அண்ணனும் அண்ணியும் எதிரெதிராக நின்று கொண்டு, சிரித்துப் பேசிக் கொண்டு பூப்பறிக்கும் காட்சியைக் கண்டாள். "அவர் இருந்தால் நாமும் இப்படி"என அவள் வாய் முணுமுணுத்தது. உடனே தன் நிலை அவள் மனத்தில் தோன்றி அவளை வருத்தத் தொடங்கியது. கொஞ்ச நேரம் அப்படியே செதுக்கிய சிலை போல அக்காட்சியைப் பார்த்த வண்ணம் நின்றாள். அதற்கு மேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை. அவள் கண்கள் முத்து முத்தாகக் கண்ணீரை உதிர்த்தன. வீட்டுக்குட் சென்று, கரை யில்லாத துன்பக் கடலின் இடையில் கிடந்தாள். தேமொழி அம்முல்லைப் பூவைப் பறித்துக் கொண்டு போய், அழகிய மாலை தொடுத்து, நிலைக் கண்ணாடிக்கு முன் நின்று தன் கருங் குழலில் சூடி, "நல்லா இருக்குதா?"என்றாள். "கேட்கவா வேண்டும்? அம்முல்லைக்கொடி இப்போது உன்னைப் பார்த்தால், உன்னைப் போல் தானில்லையே யென்று வருந்தி, 'என் அழகைக் கெடுத்தவளே! என் பூக்களன்றோ உன்னை என்னிலும் அழகுடைய வளாக்கி, என்னை நாணும்படிச் செய்தன? இனி என்ன செய்வாயோ பார்க்கலாம்' என்று அது தன் பூக்களை உதிர்த்துப் பூவா முல்லையாகிவிடும். இதனால் தான் புலவர்கள் மகளிரைப் "பூங்கொடி"என்றார்கள் போலும்! பொருத்தமான பேர்!" "ஆமாம், வாங்க, நீங்களும் ஒரு புலவரே ஆகி விட்டீர்கள்"என்று அப்புறம் சென்றாள் தேமொழி. "தேமொழி! துளசி எங்கே?" "அந்தப் பக்கம் இருப்பாள். ஏனோ இன்னும் காப்பிகூடக் குடிக்கவில்லையே!" "காப்பி கூடக் குடிக்காமல் இந்நேரத்தில் எங்கு போய் இருப்பாள்? தேமொழி, போய்ப்பாரு!" தேமொழி போய், ஓர் அறைக்குள் வெறுந் தரையில் அழுது கொண்டு படுத்திருக்கும் துளசியைக் கண்டாள். "துளசி! காப்பி கூடக் குடிக்காமல் இந்நேரத்தில் ஏன் இங்கு வந்து படுத்துக் கொண்டாய்! எழு, காப்பி சாப்பிடலாம். உடம்புக்கென்ன? - துளசி! ஏன் பேசவில்லை? எழம்மா! தலையா வலிக்கிறது? சுடச்சுடக் காப்பி சாப்பிட்டால் நல்லாப் போய் விடும். எழு"என்று கையைப் பிடித்துத் தூக்கினாள். அழுதழுது கண்கள் வீங்கியிருப்பதைக் கண்டாள். "துளசி! யார் என்ன சொன்னாங்க? இந்த வீட்டில் உன்னை ஏதாவது சொல்லறவுங்க யாரு? ஏம்மாஅழுகிறாய்? உனக்கென்ன குறை, நானிருக்கும் போது? ஏன் அழுகிறாய்? உள்ளதைச் சொல்"என்று எடுத்து உட்கார வைத்துக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, கண் கலங்கிய வண்ணம், "யார் என்ன சொன்னார்கள்? மாமனும் அத்தையும் தான் ஊரிலில்லையே? உங்க அண்ணாரும் நான் பூப்பறிக்கிற பக்கம் இருந்தார். என்னம்மா உள்ளதைச் சொல். என்ன துளசி! இப்படி ஒன்றும் பேசாமல் நீ அழுதா, அப்புற நானும் உன்னோடு சேர்ந்து கொண்டு அழ வேண்டியது தான். சும்மா இரம்மா! என்ன உள்ளதைச் சொல்!" "ஒன்றுமில்லை" "ஒன்று மில்லாமாலா இப்படி அழுது கண்ணெல்லாம் வீங்கிக் கெடக்கிறது? எங்கிட்டச் சொல்லறதுக் கென்ன? என்னம்மா?" "ஒன்றுமில்லை. நீங்களும் அண்ணனும் பூப்பறித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் நினைவு வந்தது, அதனால் அழுதேன்." அது தேமொழி மனத்தில் ஊசி போல் தைத்தது. அவளும் கொஞ்சநேரம் அப்படியே அழுது கொண்டிருந்தாள். பின், "என்னமோ வாழும் பருவத்தில் உனக்கு இந்த நிலை! அழுது என்ன செய்வது? நாம் ஒரு புல்லாய்ப் பூண்டாய்ப் பிறக்காமல் பெண்ணாகப் பிறந்தோம் - அதுவும் இந்தக் குலத்தில். எத்தனை யோ வகுப்பார்கள் மறுமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். வகுப்புக் கொரு சட்டம்! பெண்களை உயிரோடு வதைப்பது உயர்ந்த குலம்! அவர்களும் மக்கள் தானே? வேறு எந்த நாட்டில் இந்தக் கொடுமை!" "அண்ணி அந்த இராசாராம் மோகன்ராய் செய்த கொடுமை இது. இல்லையேல், அன்றே அவரோடு என்னையும் பொசுக்கி யிருப்பார்களல்லவா? என்றைக்கிருந்தாலும் ஒரு நாளைக்கு அவரைப் போல் ஆவதுதானே இந்தக் கட்டை?" "அப்படியெல்லாம் எண்ணாதே அம்மா! என்னமோ பெண்ணுரிமை பெண்ணுரிமை என்று மேடையிலேறித் தொண்டை கிழியப் பேசுகிறார்கள் ஆண்கள். இதைவிட வேறு உரிமை என்ன உரிமை! சீர்திருத்தம் சீர்திருத்தம் என்பதெல்லாம் வெறும் ஏமாற்றுப் பேச்சு. நம்மையல்லாத மற்ற இன மக்களெல்லோரும் கடைப் பிடித்து நடந்து வருவது; நம்மிலேயே ஒரு சில வகுப்பார் மேற் கொண்டுள்ளது. இதைச் செய்யத் துணிவில்லாதவர்சம உரிமை என்பதெல்லாம் வீண் பேச்சுத் தானே? துளசி! அழுவதால் பயனொன்றும் இல்லை. ஆண் மக்களை நம்பி நாம் இந்நிலையில் காலத்தைக் கழிக்கக் கூடாது. நாம் ஒன்று பட்டுப் போராடி நம் உரிமையைப் பெற வேண்டும். தானாக வழக்காடி, "கள்வன் மனைவி"என்னும் மாசைத் துடைத்துக் கற்பரசியாக விளங்கும் கண்ணகி வழி வந்தவரல்லவா நாம்? நாம் எடுத்ததற் கெல்லாம் அழுதழுதே இந்நிலையை அடைந்து விட்டோம். வீரம் என்பது ஆண்களுக்கு மட்டும் சொந்தமுடையதா?" "இல்லை" இவர்கள் இங்ஙனம் பேசிக்கொண்டிருக்கையில் தீந்தமிழன் அங்கு வந்தது, "தேமொழி! ஏன்? துளசி! உடம்புக் கென்னம்மா?" "அவள் உடம்புக் கொன்று மில்லை." "பின்னென்ன? ஏனோ அழுதிருப்பாள் போல் தெரிகிறதே? துளசி! நானிருக்க உனக்கென்ன குறையம்மா? உனக்கு என்ன இல்லை? நம்ம சொத்தில் பாதியை உனக்கு எழுதி வைக்கிறேன். அழாதேயம்மா!" "அவள் சொத்துக்காக அழவில்லை. உரிமைக்காக அழுகிறாள். நாம் இருவரும் பூப்பறித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து , தன் நிலையை எண்ணி அழுதாளாம். அழாமலா இருக்க முடியும்?" தீந்தமிழன் தங்கையின் நிலையை எண்ணி, ஒன்றும் பேசாமல் கற்சிலை போல அப்படியே நின்றான். துளசி கண்ணீர் முத்து முத்தாக உதிர்த்தபடி எழுந்து "அண்ணா! தங்கள்மேல் எனக்குச் சிறிதும் வருத்தம் இல்லை. நீங்கள் எனக்காக வருந்த வேண்டாம். எனக்காக நீங்கள் வருந்துவதனாலோ, நான் தங்கள் மேல் வருத்தப் படுவதனாலோ, ஆவதொன்றுமில்லை. என்னை இந்நிலையில் வைத்துக் கொண்டு வாழ்வது நம் உயர்குலம்; அக்குலக் கட்டுப் பாடு; அக்குல மக்களின் அறியாத்தனம்; அக்குல ஆண் மக்களின் கன்னெஞ்சம்; பொது நோக்கமில்லாப் புற்குணம்; தன்னலத்தின் தனிப் பெருமை; பெண் மக்களின் ஏமாளித்தனம். "அண்ணா! ஆனால், அதன் பேர் தலையெழுத்து, கடவுளின் கட்டளை, நல்ல தலையெழுத்து! சரி பங்காளிகளான ஆண்களுக் கேன் எழுதவில்லை? தமிழ்ப் பெண்களை, அதுவும் உயர் குலமென்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் ஒருசில வகுப்புப் பெண்களைத் தேடிப் பிடித்து அவர்கள் தலையில் மட்டுமேன் எழுத வேண்டும்? பெண் மக்களாகிய எங்களை இவ்வாறு துன்பக் கடலில் அழுந்தித் துடித்துச் சாகுங்களென்று கட்டளையிட்ட கடவுள், ஆண்களை ஏன் மறந்தது? பொய் யென்றாலும் பொருந்தப் புளுக வேண்டாமா? "அண்ணா! நம் அப்பாவும் அம்மாவுந்தான் பழமையில் ஊறியவர்கள். அவர்களைக் குறை கூறுவதில் பயனில்லை. அவர்கள் என்ன செய்வார்கள், பாவம்! அவர்கள் பழக்க வழக்கம், பண்பாடு அது. அவர்கள் என்னைப் பற்றி, என் நிலையைப் பற்றிக் கலலையில்லாமல் இருப்பதில் தவறொன்று மில்லை. "ஆனால், அண்ணா! என் உடன் பிறப்பே! தாங்கள் என்னைப் பற்றி, என் நிலையைப் பற்றிச் சிறிதும் கவலை யில்லாமல் இருப்பதுதான் என் நெஞ்சைப் பிளக்கிறது. என்னை வாட்டி வதைக்கிறது. ஏன்? சீர்த்திருத்தம் செல்வாக்குப் பெற்றுள்ள உலகில் பிறந்து வாழும் தாங்கள், சீர்திருத்தம் என்று பேசும் தாங்கள் என் நிலையைப் பற்றி எண்ணாதது, என் நிலையைச் சீர்திருத்த எண்ணாதது குற்றந்தானே? "என் உடன் பிறப்பே! "பையன் தண்டுவனாட்டத் தனியா இருந்தா நல்லாவா இருக்கும்?"என்று அம்மா..... அப்பாவிடம் சொன்னபோது, நீங்கள் கேட்டுக் கொண்டு தானே இருந்தீர்கள். அப்போது தாங்கள், "ஏம்மா! தங்கை தனியா இருந்தா நல்லாவா இருக்கும்?"என்றிருக்கலா மல்லவா? இல்லை, தங்களுக்கு இரண்டாவது திருமணம் உறுதியாகி நாளுங் குறித்தபோது, உங்களுக்கு முன்னமே மணந்து இந்நிலையில் இருந்த என்னைப் பற்றி நினைத்தீர்களா? இதுவா உடன் பிறப்பு! "அண்ணா! முன் பிறந்த தங்கள் மணத்தைப் பற்றிக் கொஞ்சமும் நினையாது, பின் பிறந்த எனது திருமணத்துக்காக ஓடியாடி அப்படித் திரிந்த தாங்கள், நான் பின் பிறந்து முன் கட்டிப் பின்னறுத்து அறுதாலியான பின் என்னை மறந்தே விட்டுத் தாங்கள் மணந்து கொண்ட தன் பொருள் எனக்கு விளங்க வில்லை. அண்ணா! உண்மையான உடன் பிறப்பின் இலக்கணம் இதுவா? உடன் பிறந்த தங்களைவிட என் வாழ்வில் அக்கறை யுடையவர் வேறு யார்? அண்ணா! நம் உடல் உறுப்புக்களில் ஒன்றுக்கு ஏதாவது துன்பம் வந்தால் மற்ற உறுப்புக்களும் உடன் துன்புறுகின்றன அல்லவா? அவையன்றோ உடன் பிறப்பு! அண்ணா! பகுத்தறிவுடைய மக்கள் என்று பறை சாற்றிக் கொண்டு எதற்கு இந்த ஓரவஞ்சனை? ஆணுக்கொரு நீதி; பெண்ணுக்கொரு நீதி - இதுவா பகுத்தறிவின் பயன்? பாதிப் பங்காளிகளான பெண்ணினத்தை, தாய்க் குலத்தைக் கொல்லாமல் கொல்வதா பகுத்தறிவு? ஆண்மக்கள்! இதுவா ஆண்மை?" "அண்ணாநீர் வந்தபடி அடியவளும் வந்தேன் அருந்திய நம் தாய்மகப்பால் அடியவளும் உண்டேன் அண்ணாநீர் மணந்தபடி அடியவளும் மணந்தேன் அன்றிழந்து விதவை யென அவமானம் அடைந்தேன் உண்ணாமல் உறங்காமல் உடலமது மெலிந்தேன் உன்பெருமை காணவுளம் உயிர்போகா துழந்தேன் எண்ணாமல் ஒருபிறப்புக் கிருநீதி யெதற்கோ? என்துயரம் கண்டிரங்கா திருப்பதுடன் பிறப்போ!"  6. இந்திர விழா "விழவுமேம் பட்ட பழவிறல் மூதூர்"(பெரும் -411) விழாக்களாலே ஏனை நகர்களின் மேலான வெற்றியினை யுடைய ஊர்-என, விழாக்கொண்டாடுதல் ஓர் ஊரின் சிறப்புக்குக் காரணமெனக் கூறுகிறார் பெரும்பாணாற்றுப் படை ஆசிரியர். விழா என்பது மக்களின் மகிழ்ச்சிப் பொருள்களில் ஒன்றாகும். விழாவென்றால் சிறுவர் கட்கேயின்றிப் பெரியவர் கட்கும் ஒரே கொண்டாட்டந்தான்! வாழ்க்கைச் சுழலிற் பட்டு வருந்தும் மக்கள், தங்கள் துன்பத்தை மறந்து இன்பத்தில் திளைத்துக் களிக்கும் காலம் விழாக்காலமேயாகும். ஏழை பணக்காரர் என்ற எண்ணத்தை மறப்பித்து, எல்லோரையும் ஒரே படித்தாய் இன்புறச் செய்து, பொதுவுடைமை வாழ்வுக்கு எடுத்துக் காட்டாய்த் திகழ்வது திருவிழாவேயாகும். முன்னரே எதிர்ப்பட்டுக் காதலரும்பிய காளையர்க்கும் கன்னியர்க்கும் காதலன்பு மலரப் பேருதவி புரியும் பெருமை திருவிழாவுக்கே உண்டு என்றால் மிகையாகாது. ஆண்டில் பல திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. திருவிழா என்பது உலக மக்களின் பொதுவுடைமைப் பொருளாகும். நாகரிக மடைந்துள்ள மக்களேயன்றி, நாகரிக மடையாத மக்களும் ஏதாவது திருவிழாக்கள் கொண்டாடியே வருகின்றனர். தைப் பொங்கற் றிருநாளைத் 'தமிழ்த் திருநாள்' எனச் சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர் இன்றையத் தமிழ் மக்கள். பொங்கற் றிருநாள் போன்ற எத்தனையோ தமிழ்த் திருநாட்கள் பழந்தமிழ் மக்களால் கொண்டாப் பட்டு வந்தன. "விழவறா வியலாவணம்"(பட்டினப் -158) - திருவிழா நீங்காத பெரிய கடைத் தெரு என்பதால், பல்வகைப் புதிய கடைகள் பொருந்த நிகழும் தேர்த்திருநாள் போலவே, அன்று திருவிழாக்கள் நடந்து வந்தன என்பது தெரிகிறது. அத்தகைய தமிழ்த் திருநாட்கள் நிகழ்ந்த இடங்களில் இன்று 'தீபாவளி' போன்ற புராணப் பண்டி கைகள் குடிபுகுந்து கொண்டன. பழந்தமிழர் கொண்டாடி வந்த திருநாட்களில் இந்திர விழா என்பது ஒன்று. இது காவிரிப்பூம் பட்டினத்து மக்களால் கொண்டாடப் பட்டு வந்த திரு விழாவாகும். இவ்விழா இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடப்பட்டு வந்ததாக மணி மேகலை கூறுகிறது. இதுதான் இந்நகரில் கொண்டாடிய திருவிழாக்களில் பெருந் திருவிழாவாகும். புகார் நகர மக்கள் இவ்விழாக் கொண்டாடிய சிறப்பினை சிலப்பதிகார - இந்திரவிழவூ ரெடுத்த காதையில் காண்க. காதற்கயிற்றால் கட்டுண்டு, 'இருதலைப் புள்ளின் ஓருயிரும்' என வாழ்ந்து வந்த கோவலனையும் மாதவியையும் மறுமுறை காணா வண்ணம் வெவ்வேறாகப் பிரித்து வைத்ததும், கண்ணகி என்னும் செந்தமிழ்ச் செல்வியைத் தன் கணவனுடன் கூட்டி வைத்ததும். ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டினை - சிலப்பதி காரம், மணி மேகலையை - தோற்றுவித்ததும், மணிமேகலை என்னும் வாழப் பிறந்த வண்டமிழ்ப் பாவையைத் துறவு வாழ்க்கை வாழும்படி செய்ததும் இவ்விந்திர விழாவே யாகும். இவ்விந்திரவிழா வின்றேல், ஆரியப் படைகடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் செங்கோற் கஞ்சும் செம்மை யினையும், சேரன் செங்குட்டுவனது வீரதீரத்தினையும், இளங்கோவடி களின் நாவன்மை யினையும் நாம் எங்ஙனம் அறிந்தின்புற முடியும்? நம் முன்னை யோராகிய சங்ககாலத் தமிழர் நாகரிக நல்வாழ்வினை நாம் ஒருவாறு அறிந்து பெருமைப்படுதற்கு இவ்விந்திர விழாவே காரணமாகும் என்பது மிகைபடக் கூறலாகாதன்றோ? இனி, இத்தகைய வரலாற்றுச் சிறப்பினை யுடைய இவ்விந்திர விழாவினைப் பற்றி மணிமேகலை கூறும் கதையினைக் காண்பாம்; 'சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம் பட்டினத்தை வளமுறச் செய்வித்தற்கு நினைத்த அகத்திய முனிவருடைய கட்டளைப்படி, தூங்கெயி லெறிந்த தொடித் தோட் செம்பியன் என்னும் சோழ மன்னன் இந்திரனை வணங்கிக் குறையிரந்து, அவன் உடன்பாடு பெற்று இருபத் தெட்டுநாள் அப் புகார் நகரில் இந்திரவிழாக் கொண்டாடினான். அவனைப் போலவே அவன் வழி வந்தோரும் கொண்டாடி வந்தனர்'(மணி-1) 'நெடுமுடிக் கிள்ளி என்னும் சோழமன்னன் கொண்டாட வேண்டிய காலத்தே இவ்விந்திரவிழாக் கொண்டாடாது மறந்த தால், மணிமேகலா தெய்வத்தின் சாபப்படி காவிரிப்பூம் பட்டினத் தைக் கடல் கொண்டது.'' (மணி-25) இதுவே மணிமேகலையில் கூறப்படும் இந்திர விழாப் பற்றிய கதையாகும். எனவே, காவிரிப்பூம் பட்டினத்தை வளமுறச் செய்வதற்குக் காரணமாக இருந்து வந்த அதே இந்திர விழா, அந்நகரம் அழிந்தொழிவதற்கும் காரணமாக அமைந்தது என்பது தெரிகிறது. வாழ்விக்கப் பெற்ற பிள்ளையே தாயின் சாவிற்குக் காரணமாவது போல இஃதொரு புதுமைத் திருவிழாப் போலும்! பல்லாண்டு காலம் காவிரிப்பூம் பட்டின மக்களால் சீருஞ் சிறப்புடன் கொண்டாடப் பெற்று வந்த இவ் விந்திர விழாவினுக் குரிய இந்திரன் என்பவன் யாவன்? அவனுக்கு விழாக் கொண்டாடும் படி சோழனுக்கு அகத்தியர் கட்டளை யிடுமுன் காவிரிப்பூம் பட்டினம் என்ன வளமின்றி வறுமையின் உறைவிட மாகவா இருந்து வந்தது? அதுதான் காவிரிப்பூம் பட்டின மாயிற்றே! காவிரியின் வளத்துக்கு மேலும் அந்நகர்க்கு, அல்லது அந்நாட்டுக்கு வளம் எதற்காக வேண்டும்? பாண்டி நாட்டுப் பொதிய மலையின்கண் இருந்த வராகக் கூறப்படும் அகத்திய முனிவர், வளங் குறைந்துள்ள பாண்டி நாட்டின் தலைநகரான மதுரை வளமுறும் பொருட்டு இந்திரனுக்கு விழாக் கொண்டாடும்படி பாண்டியனுக்குக் கட்டளையிடாமல், வளமிக்க காவிரிப்பூம் பட்டினம் மேலும் வளமுறும்படி இந்திர விழாக் கொண்டாடும்படி தொடித்தோட் செம்பியனுக்குக் கட்டளையிட்டதன் காரண மென்ன? இந்திரவிழாவுக்கும் மணிமேகலா தெய்வத்திற்கும் என்ன தொடர்பு? அகத்தியர் அல்லது இந்திரனல்லவா சாபமிட்டிருத்தல் வேண்டும்? மேலும்,நகர் வளமுறும் பொருட்டுக் கொண்டாடிய விழாவைக் கொண்டாடாமல் மறந்ததற்கு அந்நகர் வளமற்றுப் போகும்படி சபிப்பதுதானே நேர்மையும் முறையுமாகும்? மேலும், நகரே அழியும்படி சபிப்பானேன்? நகரழிந்தொழியும் படி சபிப்பதைவிட, விழாக் கொண்டாட மறந்த சோழனைச் சபிப்ப தன்றோ முறையாகும்? இன்னபிற ஐயப்பாடுகட்குக் காரணமாக வன்றோ அமைந்துள்ளது இக்கதை? "விண்ணவர் தலைவனை வணங்கி.... அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது"(மணி-1), "ஆயிரங் கண்ணோன் விழாக்கால் கொள்கென"(மணி-1), "விண்ணவர் கோமான் விழவுநாளகத்து"(சிலப்-5:240) என, மணிமேகலை, சிலப்பதிகாரம் என்னும் இரு பெருங் காப்பியத்துள்ளும், இவ் விழாவுக்குக் காரணமான இந்திரன், புராணங்களில் கூறப்படும் விண்ணூலகத்தில் வாழும் தேவர்களுக்குத் தலைவனான இந்திரனாகவே கூறப்பட்டுள்ளான். பழந்தமிழ் மன்னர்களான முடியுடை மூவேந்தருள் சேரரும் பாண்டியரும் தத்தம் நகர் வளமுற இந்திரவிழாக் கொண்டாடா திருக்க,சோழர் மட்டும் அவ்விழாக் கொண்டா டியதன் காரணம் விளங்க வில்லை. சேரரும் பாண்டியரும் தங்கள் நகர் வளமுற்று மக்கள் இன்புற்று இனிது வாழ வேண்டும் என்பதில் அக்கறை இல்லாதவர்களா என்ன? மேலும், நீர்வள மிக்குள்ள, "பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பிற் புகார் நகர்"(சிலப்-1;15-16) வளமுறச் சோழர் இந்திரனுக்கு ஆண்டுதோறும் 28 நாள் விழாக் கொண்டாடி வரும் போது, இத்தகு நீர்வள மில்லாத மதுரைப் பாண்டியர் இவ் விழாக் கொண்டாடாமல் சும்மா இருந்திருப்பாரா என்ன? சோழர் கொண்டாடி வருவதைக் கேட்ட பின்னர் ஆவது கொண்டாடி யிருப்பரன் றோ? சோழர் கொண்டாடிய இந்திர விழாவைப்பற்றிப் பாண்டியர் கேள்விப் படாமலா இருந்திருப்பர்? எனவே, இது ஆராய்ச்சிக்குரிய தொன்றாகும். இந்திரவிழாவினைப் பற்றிக் கூறும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் 'இந்திரவிகாரம்' என்பது பற்றியும் கூறுகின்றன. இந்திரவிகாரம்-இந்திரனால் நிருமிக்கப்பட்ட விகாரம். விகாரம்-அரங்கு, விரிவுரை மண்டபம், அதாவது, பௌத்த முனிவர் களிருந்து புத்தருடைய ஆகமங்களை-அறவுரைகளைப் பொது மக்கட்கு விரித்துக் கூறும் அரங்கு, இடம். "இந்திரவிகாரம் ஏழும் ஏத்துதலின்"(மணி-26:55), "இந்திர விகாரம் ஏழுடன் போகி"(சிப்-10:14) என்பன வற்றால், காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திரனால் கட்டப்பட்ட அவ்வரங்கு ஏழிருந்தனவென்று தெரிகிறது. இங்ஙனமே புத்தர் இருந்து அருளறம் உரைக்க-தமது கொள்கையைப் பொது மக்களுக்கு எடுத்துக் கூற-மணி பல்லவத் தீவில் இந்திரனால் பீடிகை ஒன்று அமைக்கப்பட்டிருந்து. அது கண்டோர் பழம் பிறப்பினை உணர்த்த வல்லது. அப்பீடத்தின் மீது புத்தர் இருக்கும் போது இந்திரன் வணங்கி வந்தான் என்பது, "தேவர்கோன் இட்ட மாமணிப் பீடிகை; பிறப்பு விளங்கவிரொளி அறத்தகை ஆசனம்; பெருந்தவ முனிவனிருந்தற முரைக்கும் தரும் பீடிகை"(மணி-8), "முற்றவுணர்ந்த முதல்வனையல்லது மற்றப் பீடிகை தன்மிசைப் பொறாஅது, பீடிகை பொறுத்த பின்னர் அல்லது வானவன் வணங்கான்"(மணி-25:58-9) என்பனவற்றால் விளங்குகிறது. இந்திரனைப் பற்றிப் புராணங்கள் கூறுவதாவது: இந்திரன் என்பவன் வானுலகில் வாழ்பவன்; தேவர்கள் தலைவன். மக்கள் தன்னை நோக்கிச் செய்யும் வேள்வியை ஏற்று, அவ்வேள்விப் பயனை அவர்கள் நுகரும்படி செய்பவன். அவ்வேள்விக்கு அதிகாரி இந்திரனே யாவான். வேள்விக்கு வேந்தன், மகவான் என்னும் இந்திரன் பெயர்களே இதற்குச் சான்று பகரும். மகம்-வேள்வி. மகவான்-வேள்விக்கு அதிகாரி. முனிவர்கள் என்போர் இந்திரனை நோக்கியே வேள்வி செய்து வந்தனர். ஆடு மாடு முதலிய உயிர்களைக் கொன்று செய்யப்படும் கொலைவேள்விகள் அனைத்திற்கும் இந்திரனே தலைவனாவான். வேள்வி செய்தலே இந்திரனை மகிழ்விப்ப தாகும். பண்டு இந்நாட்டிற் குடியேறிய ஆரியர் என்போர், தம்மை எதிர்த்த இந்நாட்டுப் பழங்குடி மக்களை அழித் தொழிக்கும் படி இந்திரனை வேண்டி வேள்விகள் செய்து வெற்றி பெற்றதாக ஆரிய வேதங்கள் கூறுகின்றன. வேள்வியிற் கொல்லப்படும் உயிர்களும், வேள்வித்தீயிற் சொரியப்படும் பொருள்களும் தேவர்களின் உணவாகும். இது அவியுணவு எனப்படும். இந்த அவியுணவைத் தேவர்கள் விரும்பி ஏற்றுண்டு மகிழ்வர். வேள்வியாகிய நற்காரியஞ் செய்வோர் இம்மையின்ப மெய்தி வாழ்வதோடு, மறுமையில் தேவராகப் பிறப்பர். இப்பேற்றினை நல்குவோன் இந்திரனே யாவான், இந்திரன் பெருமைக்கும் விருப்பத்திற்கும் உரியது வேள்வியேயாகும். புத்தரோ மக்கள் தலைவர்: கொலை வேள்வியை மறுத்து அருளறத்தை நிலைபெறச் செய்ய அரும்பாடுபட்டவர்; வேள்வி மறுத்தலே புத்தரின் தலையாய கொள்கை; "அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத் துண்ணாமை நன்று"என்னும் அருளறத்தை நாட்டு மக்களிடைப் பறைசாற்றி வந்து, அதில் ஒருவாறு வெற்றியுங் கண்டவர். இந்திரனே வேள்வியை விரும்புவன்; புத்தர் வேள்வியை வெறுப்பவர், மறுப்பவர். இந்திரன் வேள்வித் தலைவன்; புத்தர் வேள்விப் பகைவர். இத்தகைய நேர்மாறான கொள்கை யுடையவர் இந்திரனும் புத்தரும் மேலும், இந்திரன் மக்களினும் உயர்வுடைய ரெனக் கருதப்படும் தேவர் தலைவன். புத்தர் தேவரினும் தாழ்வுடையராகக் கருதப்படும் மக்கள் தலைவர். இங்ஙனம் மிருக்க, மக்களால் வணங்கப்படும், உயர்வாகக் கருதப்படும், மக்கட்கு வரங்கொடுக்கும் நிலையில் உள்ள தேவர் கோனாகிய இந்திரன், மக்களிலொருவராகிய புத்தர் கொள்கை யைப்பரப்ப ஏழு மண்டபங்கள் எடுப்பித்தான் என்பதும், புத்தர் இருந்து தமது கொள்கையை எடுத்துரைக்கப் பீடிகை அமைத்து, புத்தர் அதில் அமர்ந்திருக்கும் போது அவரை வணங்கி வந்தான் என்பதும் எங்ஙனம் பொருந்தும்? புத்தர் கொள்கை என்ன? கொலை வேள்வியை மறுத்தல் தானே புத்தரின் முதன்மையான கொள்கை? அருளறம் அல்லது பௌத்தாகமம் என்பது, 'தன்னுயிர் போல் பிற உயிர்களையும் எண்ண வேண்டும்; உயிர்களைக் கொன்று செய்யும் கொலை வேள்வியாற் பெறும் பயனொன்று மில்லை; கொல்லாமையே பேரறமாகும்; கொலைவேள்வியால் நற்பேறு கிடைக்கு மென்பது பொய்க் கூற்றேயாகும். வேள்வி தேவர்க்கு விருப்பமானது; அவர்கள் வேள்விக் கொலையை விரும்பியேற்று, வேள்வி செய்வோர்க்கு நன்மை செய்வரெனில், அத்தேவரினும் கொடியோர் யாவர்? கொல்லா மையாகிய அருளறத்தைக் கடைப் பிடியுங்கள் என்பது தானே புத்தர் கொள்கை? இக்கொள்கையைப் பரப்பவா இந்திரன் ஓரூரில் ஒன்றிரண்டல்ல, ஏழ் அரங்குகள் கட்டி வைப்பான்? தமது பெருமையை, தாம் அடையும் புகழைக் குறை கூற ஒருவர் ஓரூரில் ஒரு சொற்பொழிவு மண்டபங் கட்டி வைப்பாரா? அங்ஙனம் செய்பவரைப் பித்தர் என்பதன்றி வேறு என்னென்பது? தனக்குப் புகழும் பெருமையும் தரும் வேள்வியை மறுத்துக் கூறுவதற்கு மண்டபங் கட்டி வைத்தான், தன் பகைவனே இருந்து தன்னைப் பழித்துக் கூறப் பீடிகை கட்டி வைத்தான், தான் மதிப்புப் பெறா வண்ணம் மறுத்துப் பேசிவரும் தன் பகைவனை வணங்கினான் என்பது பொருந்தாப் பொய்க் கூற்றாகுமன்றோ? எதிரிக்குத் தன்னை எளிதில் வெல்லுதற் கேற்ற களமமைத்துக் கொடுக்கும் ஒருவனிலும் இவ்விந்திரன் அறிவிலி யாகவன்றோ உள்ளனன்? வேள்விக்கு வேந்தனாகிய இந்திரன், இங்ஙனம் பீடிகையும் அரங்குகளும் அமைத்துப் புத்த சமயத்தை வளர்த்து வந்தா னெனில், புத்தரை வணங்கி வந்தானெனில், கொலை வேள்வியை ஒப்புக் கொள்ளும் வைதிக சமயத்தினரான சம்பந்தர், "வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லிகள்"எனப் பௌத் தரை மட்டுமல்ல, பௌத்த சமயக் கொள்கையையும் எதிர்த்து இழித்துக் கூறியிருக்க வேண்டிய தில்லையல்லவா? வேள்வித் தலைவனான இந்திரனே வேள்வியை மறுத்துக் கூற, வேள்வியின் கொடுமையை மக்கள் மன்றத்திலே பறைசாற்ற அரங்கமைத்து வைத்திருக்க, வேள்வியை மறுப்போர் அறிவிலிகள் என்று சம்பந்தர் கூறுவது பொருந்தாக் கூற்றாகு மன்றோ? சோழ வேந்தர் கொண்டாடி வந்த இந்திர விழாவுக்குரிய வனும், புகார் நகரில் இந்திர விகாரம் ஏழு அமைத்தவனும், மணிபல்லவத் தீவில் புத்த பீடிகையமைத்து வழிபட்டு வந்தவனும் தேவர் கோனாகிய இந்திரன் அல்லன்; இவ்விந்திரர் மக்கள் தலைவரே யாவர். மக்கள் தலைவராகிய அவ்விரந்திரர் வரலாறு அருகிய பிற்காலத்தே, வரலாற்றுடன் புராண சமயக் கருத்துக் களைக் கலந்து நூல் செய்த சாத்தனாரும் இளங்கோவடிகளும் அங்ஙனம் மயங்கிக் கூறலாயினார். பாண்டி நாட்டைத் தென்புலம் என்பதும், சேரநாட்டைக் குடபுலம் என்பதும், சோழநாட்டைக் குணபுலம் என்பதும் பண்டைய வழக்கு. குணக்கு அல்லது கிழக்கு இந்திரம் எனவும் வழங்கும் "மந்திரம்"என்பது போல, இந்திரம் என்பதும் பழந் தமிழ்ச் சொல்லே. வடவர். தென்னவர், குடவர் என்பதுபோல, குணபுலத்தார் இந்திரர் எனப்பட்டனர். இறுதிக் கடல்கோளிலிருந்து இரண்டாவது கடல் கோளுக்கு முன்னர், வங்கக் கடல் நிலப்பரப்பாக இருந்தது. பர்மா, மலேயா எல்லாம் ஒரே நிலப்பரப்பாக இருந்தன. அந்நிலப் பரப்பிற்கு 'நாகநாடு, என்பது பழம் பெயர். "பூமி நடுக்குறூஉம் போழ்தத் திந்நகர் நாகநன் னாட்டுடன் நானூறு யோசனை வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும்"(மணி9:20-2), "கீழ்நில மருங்கின் நாகநாடு"(மணி-9:54). இந் நாக நாடெ பழஞ் சோழ நாடாகும். அந்நாகநாடு ஒரு கால் சாவகம் வரைப் பரவியிருந்தது. அந்நாடு மிக்க வளம் பொருந்தியதாகும். நாகர்கள் மிக்க புகழும் போகமும் உடைய ராய் வாழ்ந்து வத்தனர். "நாக நீள் நகரொடு நாக நாடத னொடு போக நீள் புகழ் மன்னும் புகார் நகர்"(சிலப் - 1: 12-3) என, இளங்கோவடிகள் புகாரின் சிறப்புக்கு அந்நாக நாட்டின் சிறப்பினையே எடுத்துக் காட்டியுள்ளார். அர்ச்சுனன் மனைவியரில் ஒருத்தியான நாககன்னி என்பவள் சோழன் மகளாகையால், சோழர்க்கு நாகர் என்னும் பெயருண் மையும், நாகநாட்டரசனான வளைவணன் மகள் பீலிவளை என்பாளைச் சோழன் நெடுமுடிக்கிள்ளி என்பான் மணந்திருப்ப தால் (மணி-24), கடைச் சங்க காலம்வரை அந் நாகருடன் சோழர்க்குத் தொடர்பிருந்தமையும் பெறப்படும். நாகநாட்டரசனான புண்ணிய ராசன் என்பவனை 'இந்திரன் மருமான்' (மணி-24:61) என மணிமேகலை கூறுதலன், பழைய நாகநாட்டரசர்க்கு இந்திரன் என்னும் பெயருண்மை பெறப்படும். மருமான்-வழிவந்தோன். "இந்திரன் என்று பழைய நூல் கூறுவது பலவிடத்தில் கடாரத்தரசனையே. கடாரம்-பர்மா. இந்திரன் யானைக்கு வெள்ளை நிறமும், ஐராவதம் என்னும் பெயரும் கூறப் படுவதையும், கடாரத்திலுள்ள ஐராவதி என்னும் ஆற்றுப் பாங்கரில் வெண்புகார் யானை யிருப்பதாகக் கூறப்படுவதையும், இலங்கையிலிருந்த அரக்கரும் அசுரரும் அடிக்கடி இந்திரனை வென்றதாகக் கூறு வதையும், கடாரம் கிழக்கிலிருப்பதையும், இந்திரன் பாண்டி நாட்டின் மேல் கடலை வரவிட்ட கதையையும், மேகம் கீழ் கடலில் தோன்றிக் கொண்டால் என்றுபெயர் பெறுவதையும், கடாரமும் மலேயாவும் இன்றும் ஆடல் பாடல்களில் சிறந்திருப்ப தையும், நோக்குக"(ஒப்பியல் மொழி நூல்-பக்-262). எண்டிசைக் காவலரில் இந்திரன் கீழ்த்திசைக் காவலன் எனப்படுதலும், கிழக்குத் திசைக்கு இந்திரதிசை என்னும் பெயருண் மையும், இந்திரன் மேகவாகனன் எனப்படுதலும் இதற்குத் துணை செய்யும். மணிபல்லவத் தீவில் உள்ள புத்த பீடிகைக்காக இருநாக நாட்டரசர் போரிட்டதாக மணிமேகலை கூறுதலான் (மணி. 8:54-9), நாகநாட்டரசர்கள் புத்தமதச் சார்புடைய ராகவே இருந்தனர் என்பது பெறப்படும். இன்றும் கடாரம், சாவகம் முதலிய கிழக்கு நாடுகளில் புத்தமதம் மிக்கிருத்தலை யறிக. மணிபல்லவம் என்பது இலங்கையின் வடகீழ்த் திசையை அடுத்துள்ளதொரு தீவு. எனவே, நாகநாட் டரசனான புத்த சமயச் சார்புடைய அரசனான இந்திரனே மணிபல்லவத் தீவில் புத்த பீடிகை அமைத்தவனாவான். அப் பீடிகையில் புத்தர் இருந்தபோது இவன் புத்தரை வணங்கி வந்தனன் என்பதால் (மணி-25:60-1), இவ்விந்திரன் புத்தர் கால மாகிய கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் இருந்தவனாவான். மணிபல்லவ முதலிய கிழக்கு நாடுகள் முழுவதும் இவன் ஆட்சிக்குட் பட்டதாம். இவன் வழிவந்த இந்திரன் ஒருவனே காவிரிப்பூம் பட்டினத்தில் ஏழு விகாரங்கள் அமைத்திருக்க வேண்டும். கடைச் சங்க காலத்தே சோழர்களிலிருந்து பிரிந்து தொண்டை மான், திரையர் எனத் தொண்டை நாட்டையாண்டவர் போல, பழங்காலத்தே சோழரினின்று பிரிந்தவரே கடார முதலிய கிழக்கு நாடுகளை யாண்டு வந்த நாகர், இந்திரர் என்போர். எனவே, இந்திரர் என்னும் பெயர் பழங்காலச் சோழர்களுக்குரிய பெயரே யாகும். அரசரின் பிறந்த நாளை ஆண்டு தோறும் கொண்டாடுதல் மரபு. தொல்காப்பியர் இப் பிறந்த நாள் விழாவினைப் 'பெரு மங்கலம்' என்கின்றார். (புறத்-36). இராசராசன், இராசேந்திரன் முதலிய பிற்காலச் சோழர்களின் பிறந்த நாள் விழாக் கொண் டாடப்பட்டு வந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அரசர்கள் தம் பிறந்த நாளையே யன்றி, தம் தந்தை, பாட்டன் முதலிய தம் முன்னோர் பிறந்த நாளைக் கொண்டாடுதலும் உண்டு. புகார்ச் சோழர் கொண்டாடி வந்த இந்திர விழா, அவர்தம் முன்னோன் ஒருவனின் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டமான பெருமங்கலமேயாகும். இவன் இந்திரன் என்னும் பட்டப் பெயரினையுடையவன்; புகார்ச் சோழரின் பெருமைக்கும் புகழுக்கும் காரணமாகச் சீருஞ் சிறப்புடன் விளங்கிய செம்பி யனாவான். இவன் தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியனின் தந்தையாகவும் இருக்கலாம். இதுவே உண்மையான இந்திர விழா. ஆனால், மணி மேகலை கூறும் இந்திர விழாக் கதையோ, விக்கிரமாதித்தன் கதையில் வேதாளஞ் சொல்லும் முறை தெரியாக் கதைபோல் இருக்கிறது.  7. கலப்புக் கலை இன்றும் நாம் அறிவியல் உலகில் வாழ்ந்து வருகிறோம். அறிவியல் இன்று உலகை ஆட்டிப் படைக்கிறது. 'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே' என்பது அறிவியலுக்கே பொருந்தும், அறிவியல் அறிஞர்கள் ஒருபொருளோ டொரு பொருளைக் கலந்து, அக்கலப்பால் ஒரு புதுப் பொருளை உண்டாக்கி உலகை வாழ்வித்து வருகிறார்கள். இன்னும் நாம் வான வெளியில் பறப்பதும், நெடுந்தொலைவில் பேசுவதை, பாடுவதை வீட்டில் இருந்தபடியே கேட்டின்புறுவதும், மின்சாரத்தினால் இரவைப் பகலாக்குவதும், இன்ன பிறவும் அறிவியலின் விளைவுகள் தானே? கலப்புக் கலையால் அறிவியலார் படைத்த செயற்கைத் திங்கள் இன்று 560 கல்லுக் கப்பால், வான வெளியில் 96 நிமிடங்களுக்கு ஒரு முறை உலகத்தைச் சுற்றிக்கொண்டு வருகின்ற தன்றோ! இன்று அறிவியலார் கண்டுள்ள கலப்புக் கலை தமிழருக்குப் பழமையானது. தொல்காப்பியர் கூறும் அறிவர் (சித்தர்) என்போர் அறிவியல் அறிஞர்களேயாவர். இன்று அறிவியல் அறிஞர்கள் செய்துவரும் செயற்கரும் செயல்கள் போன்றே அன்று அத் தமிழறிஞர்களும் செய்து வந்தனர். கலப்புக் கலையால் அவர்கள் அரிய மருந்துகளைச் செய்து இன்று அறிவியல் அறிஞர்கள் தீர்க்க முடியாதென எண்ணும் பல கொடிய நோய்களை எளிதில் தீர்த்து மக்களை வாழ்வித்து வந்தனர். அவ்வறிஞர்கள் கண்ட சித்த மருத்துவத்தின் வழி வந்தனவே உலக மருத்துவங்களெல்லாம் எனில், ஆம் என்போர் எத்தனை பேர்! நோய் வந்த பின் தீர்ப்பது மருத்துவம்; நோய் வராமல் தடுப்பது வாகடம் எனப்படும். அவ்வறிஞர்கள் கண்டறிந்த வாகடம் உலகிற்குப் புதுமையானது. இன்னும் அவ்வறிஞர்கள், கலப்புக் கலையால் இரும்பைப் பொன்னாக்கி மக்களை வாழ் வித்தனர் எனவும் கூறுவர். பாலில் மோரைக் கலந்து தயிராக்குவதும், தயிரில் நெய்யும் மோரும் எடுப்பதும், அரிசியும் நீரும் கலந்து சோறாக்குவதும், காயும் பருப்பும் கலந்து குழம்பு செய்வதும், உப்பு புளி காரம் இவற்றைக் கலந்து பல சுவையுள்ள உணவுப் பொருள்களை உண்டாக்குவதும் கலப்புக்கலையேயாகும். சிற்றுண்டிச் சாலைகளில் காணும் வகை வகையான, வெவ்வேறு சுவை உடைய பலகாரங்கள் அவ்வளவும் கலப்புக் கலையால் உண்டாக்கப்பட்டவையல்ல வோ? கலப்புக் கலை பயிலாத எந்த ஓர் உணவும் சுவையுடைய தாவதில்லை. அழகான சேலை, அழகான மாலை, அழகான ஓவியம், அழகான காவியம் எல்லாம் கலப்புக் கலையினால் ஆயினவே. அழகு, சுவை எல்லாம் கலப்புக் கலையின் காரியங்களே. மக்களே நில நீர் முதலிய ஐம் பெரும் பூதத்தின் கலப்புத் தோற்றம் என்கிறார் தொல்காப்பியர். உலகத் தோற்றத்திற்கும், மக்களின் நல்வாழ்விற்கும் காரண மாய் இருப்பது கலப்புக் கலையேயாகும். இக் கலப்புக் கலையே உலக நன்மையின் பொருட்டு, மக்களின் நல்வாழ்வின் பொருட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட தொன்றாகும். இன்பூட்டி நன்பூட்டி மக்களை வாழ்விப்பது கலப்புக் கலையேயாகும் எனல் மிகைபடக் கூறலாகாது. பாலில் நீரைக் கலத்தல், நெய்யில் கடலை எண்ணெயைக் கலத்தல், நெல்லில் கல்லையும் பதரையும் கலத்தல், வெள்ளைச் சர்க்கரையில் வெண் மணலைக் கலத்தல் முதலியவையும் கலப்புக் கலையேதான். ஆனால், இங்கு கலப்பினால் பொருள்களின் தன்மை கெடுகிறது; பொருள்களின் மதிப்பும் கெடுகிறது; இவ்வாறு கலப்போருடைய மதிப்பும் கெடுகிறது. பாலில் சர்க்கரையைக் கலப்போரையும் பாலில் நீரைக் கலப் போரையும் மக்கள் ஒன்றாகவா மதிப்பர்? கலப்புக் கலையை இவ்வாறு பொருள்களைக் கெடுப்ப தற்குப் பயன் படுத்துவதேயன்றி, மக்கள் நலத்தைக் கெடுக்கப் பயன்படுத்துவதும் உண்டு. நல்ல துவரம் பருப்புடன் 'கேசரி' என்னும் ஒரு வகை நச்சுப் பருப்பைக் கலந்து விற்கப்படுகிறது. அது உண்போர்க்குக் கெடுதல் செய்கிறது. அதனால் ஒரு வகைக் கொடிய நோய் உண்டாகிறது. இது தெரிந்தே அது பயிர் செய்யப்படுகிறது-என்னும் செய்தியை நாளிதழ்களில் படித்தோம். இதுவுமொரு கலப்புக் கலைதானே! கலப்புக்கலை என்று கண்டறியப்பட்டதோ அன்றிலிருந்து, அது மக்களின் நன்மைக்கே யன்றித் தீமைக்கும் பயன்படுத்தப் பட்டே வருகிறது. மக்களைக் கொல்லும் நச்சு மருந்து, வெடி மருந்து போன்றவை, மக்களை நோய் தீர்த்து வாழ்விக்கும் மருந்துகள் செய்யும் கலப்புக் கலையினாற்றானே செய்யப் படுகின்றன? எந்த ஒரு கலையும் அதைப் பயன்படுத்தும் முறையைப் பொறுத்தே, பயன்படுத்துவோரின் நோக்கத்தைப் பொறுத்தே நன்மையும் தீமையும் பயக்கிறது. மக்களை வாழ்விக்கக் கண்டறிந்த அறிவியற் கலை மக்களை வீழ்விக்கவும், மாள்விக்கவும் பயன்பட்டுத்தானே வருகிறது? அணுகுண்டு என்பது அறிவியற் கலையின் குட்டி தானே? மின்சாரத்தை, வானூர்தியை, வானொலியை, வானொளியை, (டெலிவிஷன்) நோய் தீர்க்கும் பலவகை ஊசி மருந்துகளைக் கண்டறியப் பயன்பட்ட கலப்புக் கலைதானே அணுகுண்டைக் கண்டுபிடிக்கவும் பயன்பட்டது? உணவுப் பொருள்களில் கலப்படம் செய்து மக்களின் நலத்தைக் கெடுக்காதீர் என்று எவ்வளவு சொன்னாலும், எவ்வளவு சட்ட திட்டஞ் செய்தாலும், அக்கலப்புக் கலையினர் தம் கலைத் திறனை விட்டொழிப்பதில்லை. இவ்வாறுதானே அணுக்குண்டு போன்ற அழிப்புப் பொருள்களைக் கண்டுபிடியாதீர்கள் என்று உலகமே, உலக அறிஞர்களே ஒரு சேரக் கேட்கினும் அவ்வழிவுப் பொருள்களைக் கண்டு பிடிக்கும் அறிவியற் கலைஞர்களும் தங்கள் கலைத்திறனை விட்டொழிக்க, அழிப்பு வேலைக்குப் பயன்படுத்துவதை நிறுத்த இசைவதில்லை. இயல்பாகவே நல்ல தன்மையுடைய பால்போன்ற பொருள் களுடன் அத்தகு தன்மையில்லாத பொருள்களைக் கலந்து, பால் முதலியவற்றின் தன்மையைக் கெடுப்பது போலவே, இயல் பாகவே நற்பண்பு வாய்ந்த தமிழர் வாழ்வில் அத்தகு பண்பில்லாத அயலார் தங்கள் வாழ்வியல்களைக் கலந்து தமிழரின் தனிப் பண்பைக் கெடுத்துவிட்டனர். தண்ணீர் கலந்த பாலைத் தீயில் வைத்துச் சுண்டக் காய்ச்சினால் நீர் நீங்கி நல்ல பால் ஆவது போல, தமிழரின் தனிப் பண்பை அடைய அத்தகு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. தமிழர் தனிப் பண்பாடு என்ன? பழந்தமிழரிடைச் சாதி வேற்றுமை கிடையாது. அவர் பிறப்பிலேயே தாழ்ந்தவர்; இவர் பிறப்பிலேயே உயர்ந்தவர் என்னும் பிறவி வேற்றுமை தமிழர்க்குள் இல்லை. 'ஒன்றே குலம்' என்பது தமிழர் இனப் பண்பு. அயலா ராகிய ஆரியர் கொள்கைக் கலப்பால் ஏற்பட்டதே இன்று தமிழரிடை உள்ள சாதி வேற்றுமைப் பாகுபாடுகள். இவ்வயற் கொள்கைக் கலப்பால் உண்டான வேறுபாட்டைக் களைய எழுந்ததே "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால்"என்னும் குறள். வடநாடராகிய ஆரியர் கொள்கை போல, மேலை நாட ராகிய கிறித்தவர், முஃச்லீம்கள் கொள்கைகளும் தமிழரிடைப் பரவின. ஆனால், அவை ஆரியக் கலப்பால் தமிழினத்திடை வேறுபாடு தோன்றியதுபோல, ஆரியக் கலப்பு தமிழினத்தை வேறுப்படுத்தியது போல் வேறு படுத்த வில்லை. மாறாக, ஆரியத்தால் வேறுபட்ட தமிழினத்தை ஒன்று சேர்க்கப் பயன் பட்டன அவை. ஆரியத்தால் ஏற்பட்ட தீண்டாமை முதலிய சாதி வேற்றுமைக் கொடுமையைப் போக்க ஒருவாறு பயன்பட்டமைக் காகத் தமிழர்கள் அன்னாரைப் பாராட்டுங் கடப்பாடுடையவ ராவர். அவர்களுள் முஃச்லீம்களுக்கே தமிழர் பெரிதுங் கடப் பாடுடையவராவர். இனி, வெள்ளையர் கலப்பால் தமிழரிடையே உண்டாகிய இனக் கலப்பு, இரு இனப் பண்பாடும் இல்லாத ஒரு தனி இனத்தை உண்டாக்கித் தமிழினத்தின் வளர்ச்சியைக் குறைத்து விட்டது. சட்டைக்காரர் (ஆங்கிலோ இந்தியர்) என்னும் அக் கலப்புக் கருவினம் இன்று தமிழர் வெள்ளையர் என்னும் ஈரினத்திலும் சேராத ஒரு தனி அயலினமாக இயங்கி வருகிறது. இது அயல் கலப்பால் வந்த கேடாகும். 'ஒருவனே தேவன்' என்பது தமிழர் கடவுட் கொள்கை என்கின்றனர். அவ்வொரு தெய்வக் கொள்கை எது என்பதை அறிய முடியாமல் செய்துவிட்டது ஆரியம். பெரும்பாலான தமிழர்கள் சிவனே முதற்கடவுளென்கின்றனர். ஒரு சிலர் முருகன் தமிழ்க் கடவுள் என்கின்றனர். இதில் காலஞ் சென்ற தமிழ்ப் பெரியார் திரு.வி.க. முதல்வராவர். 'ஒருவனே தேவன்' என்னும் கொள்கைக்குத் தொல்காப்பியத்தில், திருக்குறளில் சான்றில்லை. இனி, வடநாட்டுச் சமயங்களான புத்த சமணக் கலப்பு, வேத வேள்வி போன்ற ஆரியக் கொள்கையை வெறுத்தொதுக்க ஒரு வகையில் உதவிற்றேனும், தமிழர்க்கே யுரிய தனிப்பண்பான வீரத்தைக் கெடுத்துத் தமிழர்களைப் பேடிகளாக்கி, தமிழகத்தில் அயலாராட்சி ஏற்படச் செய்துவிட்டது. தமிழகத்தில் புத்த சமண சமயங்கள் பரவாதிருந்தால், தமிழர்கள் புத்த சமணக் கொள்கை களைப் பின்பற்றாதிருந்திருந்தால், தமிழ்நாட்டை முஃச்லீம்களும், வெள்ளையரும் வடவரும் அடக்கி ஆண்ட, ஆளும் நிலை ஒருக்காலும் ஏற்பட்டிருக்காது. தமிழரைப் பொறுத்தவரை, கலப்புக் கலை செய்த கேடு ஒன்றிரண்டல்ல; அளவிலடங் காதவை. தமிழர் வாழ்வியல், அரசியல், பொருளியல் எல்லா வற்றையும் கெடுத்ததோடு நில்லாமல், கலப்புக் கலை தமிழ் மொழியையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டது. ஆரியக் கலப்புக் கலை, தமிழ் இலக்கிய இலக்கணத்தோடு கலந்து தமிழன் தனிப் பண்பைக் கெடுத்ததுபோலவே, ஆரியச் சொற் கலப்பால் தமிழ் மொழியின் தனிப் பண்பு கெட்டொழிந்தது. சங்க கால முதற்கொண்டே தமிழறிந்த ஆரியப் புலவர்கள், தமிழ் இலக்கிய இலக்கணத்தில் தங்கள் கொள்கைகளைப் புகுத்தி வந்தனர். ஆரியச் சமய வுணர்ச்சி தமிழரை அதை எதிர்க்க முடியாமற் செய்துவிட்டது. இன்று ஆளுங் கட்சி யார் தமிழுக்கு வடவர் செய்யும் கொடுமைகளை, தமிழரிடை வடவர் தம் மொழியைத் திணிப்பதைக் கட்சி காரணமாக எதிர்க்க முடியாமல் இருப்பது போலவே, அன்று சமயங் காரணமாக எதிர்க்க முடியாமல் இருந்தனரென்க. பாலில் நீரைக் கலந்து பாலின் தன்மையைக் கெடுப்பது போல, பாலில் நஞ்சைக் கலந்து, பாலைக் கொல்லும் கொடிய பொருள் ஆக்குவதும் உண்டல்லவா? இங்ஙனமே தமிழ் இலக்கிய இலக்கணங்களில் தங்கள் மொழியை, கொள்கையைக் கலந்து தமிழில் தனித் தன்மையைக் கெடுத்ததோடு நிற்கவில்லை அவ்வாரியக் கலப்புக் கலையார். பழந்தமிழ் நூல்களின் உரையில் தங்கள் கொள்கையான நஞ்சைக் கலந்து, அத்தமிழ் நூல்களின் பொருளையே பிற்காலத் தமிழர் அறிந்து கொள்ள முடியாமல் செய்துவிட்டனர். தொல் காப்பிய உரையும், திருக்குறள் உரையும் இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். இங்கு திருக்குறள் உரையை மட்டும் எடுத்துக் கொள்வோம். திருக்குறளுக்குத் தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலகழகர், பருதி, திருமலையார், மல்லர், கவிப் பெருமாள், காளிங்கர் எனப் பதின்மர் உரை எழுதியிருப்ப தாகத் தெரிகிறது. இவற்றுள் பரிமேலழகர் உரையே மிகவும் சிறந்ததெனத் தமிழர் களால் போற்றப்பட்டு வருகிறது. "பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ, பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ-நூலில் பரித்தஉரை யெல்லாம் பரிமே லழகன் தெரித்தவுரை யாமோ தெளி" எனப் பரிமேலழகர் உரை சிறப்பிக்கப்படுகிறது. பரி மேலழகர் உரையைப்பற்றிப் பல கதைகள் வழங்கி வருகின்றன. இவர் உரையேடு வைத்த வெண்கலப் பரிபுலவரவையைச் சுற்றி வந்ததாம். அத்தகு பெருமை உடையது பரிமேலழகர் உரை என்பது தமிழ்ப் பெரியார்கள் நம்பிக்கை. திருக்குறள் உரைப் பேராசிரியர்கள் பதின்மரில் ஒருவரான பரிமேலழகரின் உரையே, திருக்குறளின் உண்மையான பொருளை, திருவள்ளுவரின் கருத்தினை, நம்முன்னோர் வாழ்க்கை முறையை நாம் உள்ளபடி உணர முடியாது செய்து விட்டது. இது தமிழர் வாழ்க்கை முறை கூறும் ஒரு தமிழ் நூலா, திருக்குறள் கூறுவது தமிழர் பண்பாடுதானா என்று ஐயுறும்படி செய்து விட்டது. ஆரியர் பண்பாட்டினின்று, பழக்க வழக்கங்களினின்று தோன்றி யவையே தமிழர்பண்பாடு; ஆரியர் பழக்க வழக்கங்களினின்று தோன்றியவையே தமிழர் பழக்க வழக்கங்கள் என்று நம்பும்படி செய்துவிட்டது. திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூல். திருக்குறள் அயற் கொள்கை எதிர்ப்பு நூலேயன்றி, எந்த ஒரு அயற்கொள் கையையும் உடன் பட்டுக் கூறும் நூலன்று. திருக்குறளே தமிழர் வாழ்வு என்னும் உண்மையைத் தமிழர் உணர முடியாது செய்து விட்டது பரிமேலழகர் உரையேயாகும். 'திருக்குறள் தமிழர் வாழ்வை உள்ளதை உள்ளபடியே உயரிய முறையில் எடுத்துரைக்கும் உண்மை நூல். தமிழர் வாழ்வின் படப்பிடிப்பு. பழந்தமிழர் நாகரிக நல்வாழ்வை அப்படியே நமக்குக் காட்டும் களங்க மற்ற காலக் கண்ணாடி. தமிழ் மக்களின் வாழ்க்கைச் சட்டம், தமிழ் மக்களுக்கு வள்ளுவனார் வகுத்தமைத்து வைத்த பாதுகாப்புப் படை' என்பதைத் தமிழ் மக்கள் அறிய முடியாமல் மருட்டி விட்டது அவ்வுரை. இப்போதுதான் பரிமேலழகரின் கலப்புக் கலையின் நச்சுத் தன்மையைத் தமிழ் அறிஞர்கள் ஒருவறு உணரத் தலைப் பட்டுள்ளனர். திருக்குறள் என்னும் முப்பாலில் ஆரியக் கொள்கை என்னும் நஞ்சைக் கலந்து, முப்பாலின் தனித் தன்மையைப் பரிமேலழகர் எங்ஙனம் கெடுத்துள்ளார் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டு: "அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்" (குறள் - 501) இக் குறளின் பொருளாவது: அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின் திறம் தெரிந்து-அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமும் என்னும் நான்கின் கூறுபாட்டையும் ஆராய்ந்தறிந்து, தேறப்படும்-பின்பு ஒருவனைத் தெளிய வேண்டும்; அதாவது தேர்ந் தெடுக்க வேண்டும். இது, 'தெரிந்து தெளிதல்' என்னும் அதிகாரத்தின் முதற்குறள். தெரிந்து தெளிதல்-அரசன் அரசியல் அலுவலர்களையும் அதிகாரி களையும் தேர்ந்தெடுக்கும் போது, அவர் தம் அறிவு குணம் செயல் என்பவற்றை ஆராய்ந்து தெளிதல். தெளிதல்- அறிதல். தெரிந்து தெளிதல்-ஆராய்ந்து அறிந்து தேர்ந்தெடுத்தல். இது இன்று அரசியல் அலுவலரைத் தேர்ந் தெடுக்கும் பொதுப்பணி ஆணையர் (சர்வீஸ் கமிஷன்) தேர்வு போன்றதாகும். அதாவது, அறத்திற் பிறழாமலும், பொருளுக்காகக் கடமை யிற்றவறாமலும், இன்பத்தின் பொருட்டு ஒழுக்கந் தவறாமலும், உயிர்க்கு உண்டாகும் துன்பத்திற் கஞ்சிக் கடமையிற்றவறாமலும் உள்ளவனையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதாம். உயிரச்சம்-தன் உயிருக்காக அஞ்சும் அச்சம்; தன் உயிருக்கு அஞ்சிக் கடமையில் தவறுதல். அதாவது, தனது கடமைக்கு மாறாக ஒன்றைச் செய்யா விட்டால் உன்னைக் கொல்வே னென்று அச்சுறுத்தினாலோ, அடித்துதைத்துத் துன்புறுத்தினாலோ அவற்றிற் கஞ்சிக் கடமையில் தவறுதல். இந்நான்கு வகையிலும் ஆராய்ந்து பார்த்து, இந் நான்கினும் தவறாதவனையே வேலைக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது கருத்து, இது பின்னர்ப் பயன்படும். நட்புப்பகை பாராட்டி அறம் பிறழாமலும், கைக்கூலி பெற்றுக் கடமை தவறாமலும், இன்பத்தின் பொருட்டு ஒழுக்கங் கெடாமலும், உயிரச்சத்தினால் காட்டிக் கொடாமலும் இருக்கப் பயன்படும், உயிரச்சம் பெரும்பாலும் ஒற்றர்பால் நிகழும். இன்றும் பண்ணையம், கடை, வணிக நிலையம் முதலிய வற்றிற்குப் புதிதாக ஆட்சேர்க்கும் போது ஒருவாறு ஆராயப் பட்டு வருகிறது பழந்தமிழரசர்களின் செங்கோன் மைச் சிறப்புக்கு இஃதோர் எடுத்துக் காட்டாகும். இக்குறளுக்குப் பரிமேலழகர் கூறும் உரையாவது, அறம் பொருள் இன்பம் உயிரச்சம் - அரசனாற் றெளியப் படுவா னொருவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப் பொருட்டான் வரும் அச்சமும் என்னும், நான்கின் திறம் தெரிந்து தேறப்படும்-உபதை நான்கின் திறத்தான் மனவியல்பு ஆராய்ந்தால் பின்பு தெளியப்படும். உபதை-சோதனை, ஆராய்ச்சி. 1. அவற்றுள், அறஉபதையாவது புரோகிதரையும் அறவோ ரையும் விட்டு, அவரால், இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப் போக்கி, அறனும் உரிமையும் உடையானொருவனை வைத்தற் கெண்ணினம். இதுதான் யாவர்க்கும் இயைந்தது. நின் கருத்து என்னை எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இவனைப் போக்கி-இவ்வரசனை நீக்கிவிட்டு. சூளுறவோடு சொல்லுவித்தல்- உண்மையாகச் (சத்தியமாக) சொல்லும்படி சொல்லுதல். 2. பொருளுபதையாவது - சேனைத் தலைவனையும் அவனோடியைந்தாரையும் விட்டு, அவரால், இவ்வரசன் இவறன் மாலையனாகலின் இவனைப் போக்கி, கொடையும் உரிமையும் உடையானொருவனை வைத்தற் கெண்ணினம். இதுதான்யா வர்க்கும் இயைந்தது. நின் கருத்தென்னை எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இவறன் மாலையன்-உலுத்தத் தன்மையுடையவன். 3. இன்ப உபதையாவது - தொன்றுதொட்டு உரிமை யொடு பயின்றாளொரு தவமுதுமகளை விட்டு, அவளால், உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்த முற்று, கூட்டு விக்க வேண்டும் என்று என்னை விடுத்தாள். அவளைக் கூடுவை யாயின் நினக்குப் பேரின்பமே யன்றிப் பெரும் பொருளும் கைகூடும் எனச் சூளுறவோடு சொல்லுவித்தல் உரிமை-அரசன் மனைவி. பயிலல்-பழகுதல். தவமுதுமகள்-மிகமுதிர்ந்த கிழவி. வருத்தம்-காதல். 4. அச்ச உபதையாவது - ஒரு நிமித்தத்தின் மேலிட்டு, ஓரமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின் அழைப்பித்து, இவர் அறைபோவான் எண்ணற்குக் குழீ இயனாரென்று தான் காவல் செய்து, ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின், அதனை நாம் முற்படச் செய்து, நமக்கு இனிய அரசனொருவனை வைத்தல். ஈண்டை யாவர்க்கும் இயைந்தது. நின் கருத்தென்னை எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இந்நான்கினும் திரிபிலனாயவழி, எதிர்காலத்தும் திரிபிலனெனக் கருத்தளவையால் தெளியப்படும் என்பதாம். அறைபோதல் - பகைவனை யடைதல். தான் காவல் செய்து. தான் என்றது- அரசனை. கொல்வான்-கொல்ல. சூழ்கின்றமையின்-முடிவு செய்திருக்கின்றதனால். அதனை-அக்கொலையை. அதாவது, அங்குள்ளவர்களெல்லாம் பகையரசன் ஒருவனிடம் செல்வதற்காகக் கூடியுள்ளார் என்று அரசன் எண்ணி, அவர்கள் வீட்டை விட்டு வெளியே போகாமல் காவல் செய்து, ஒருவனைக் கொண்டு எல்லோரையும் கொல்ல முடிவு செய்துள்ளான். நம்மைக் கொல்வதற்கு முன் நாம் அரசனைக் கொன்று நல்ல அரசன் ஒருவனை ஏற்படுத்த வேண்டும் என்பதாம். இந்நான்கு ஆய்விலும் அவர்கள் சொல்வதை மறுத்து அப்படிச் செய்யக் கூடாது என்பவனையே வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கருத்து. இவ்வாறா ஓர் அரசன் அலுவலாளர்களையும் அதிகாரி களையும் தேர்ந்தெடுப்பான்? இவ்வாறு ஆராயின், வேலைக்குச் சேர வந்த அவன், அவ்வரசனையும் ஆராய்ந்தவர்களையும் பற்றி என்ன நினைப்பான்? ஒன்று இரண்டு ஆராய்ச்சிகளில் இவ்வரசனை நீக்கி விட்டு வேறொருவனை அரசனாக்க எண்ணினம் என்பது. நாலாவது ஆராய்ச்சி இவ்வரசனைக் கொன்று வேறொருவனை அரசனாக்க எண்ணினம் என்பது. இவ்வாறா ஆராய்ச்சி செய்வது? இவ்வாறு சோதனை செய்வதைக் கேட்கும் ஒருவன் எங்ஙனம் அரசியல் அலுவல் பார்க்கத் தகுதியுடையவன் ஆவான்? இனி, மூன்றாவது சோதனை நன்கு கவனிக்கத் தக்கதாகும். அரசன் மனைவிமார்களுடன் நன்கு பழகிய ஒரு கிழவியை விட்டு, வேலைக்கு விண்ணப்பம் போட்டவனைத் தனி அறைக்குள் அழைப்பித்து, 'அரசன் மனைவியரில் இன்னாள் உன்னைக் கண்டு, உன் அழகில் ஈடுபட்டு உன்னை அடையப் பெறாமல் வருந்துகிறாள். உன்னை அழைத்து வரும்படியே என்னை அனுப்பினாள். நீ இசைந்தால் அவளுடன் பேரின்பம் நுகர்வ தோடு, அவள் கொடுக்கும் பெரும் பொருளையும் அடைவாய்' என்று அவனிடம் கேட்பதாம். அவன் 'சரி' என்றால், அவனை வேலைக்கு எடுத்துக் கொள்வதில்லையாம். அது தகாது என்று மறுத்துரைத்தால் வேலைக்குச் சேர்த்துக் கொள்வதாம். எவனாவது ஒரு தமிழரசன் இவ்வாறு சோதனை செய்து அலுவலாளரையும் அதிகாரிகளையும் தேர்ந்தெடுத்திருப்பானா? நன்கு எண்ணிப் பாருங்கள். என்னே இழிதகவான ஆராய்ச்சி! மேலும், பரிமேலழகர், 'இவ் வடநூற் பொருண்மையை உட்கொண்டு இவர் (வள்ளுவர்) ஓதியத்தை அறியாது பிறரெல்லாம் உயிரெச்சமெனப் பாடந் திரித்துத் தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்' எனத் தாம் கூறுவது வட நூற் கருத்து என்பதையும் ஒளியாமல் கூறிவிட்டார். வள்ளுவர் திருக்குறளில் வடவர் ஒழுக்கமா கூறுகின்றார்? தமிழர் ஒழுக்கங் கூறும் ஒரு தனித் தமிழ் நூலில் வடநூற் கருத்தை இவரேன் இவ்வாறு வலிந்து புகுத்த வேண்டும்? பார்த்தீர்களா பரிமேலழகரின் கலப்புக் கலையின் பயனை? இவர் திருக்குறளில் வேண்டுமென்றே வலிந்து புகுத்தியுள்ள கலப்புக் கலையை, என்னால் எழுதப்பட்ட, திருக்குறளும் பரிமேலழகரும் என்னும் நூலில் அறிக. குறள் முழுவதும் இவர்தம் கலப்புக் கலை கலவாத இடமே இல்லை. என்று தமிழறிஞர்கள் உண்மையுணரத் தலைப் படுவார்களோ? அது காறும் கலப்புக்கலையின் பயனை நுகர்ந்து கொண்டிருப்பது தமிழர் கடமையாகும்.  8. தமிழ்க் கொலை ஒரு நாட்டின்கண் புதிதாகக் குடிபுகுவோர், அந்நாட்டு மக்களிடைத் தங்கள் தாய்மொழியையும் தங்கள் பழக்க வழக்கங் களையும் புகுத்துவதையே முதல் வேலையாகக் கொள்வர்; முதற் கடமையாகக் கொள்வர் எனலாம். இது வரலாற்றுண்மை. காரணம், அவற்றாலே தான் அந்நாட்டு மக்கள் தாய்மொழியும் தனிப்பட்ட கொள்கையும் கெட்டு, அன்னார் மொழிப் பற்றும் இனப்பற்றும் அற்று அவ்வந்தேறிகட்கு அடிமைப்பட ஏதுவாகும். இவ்வேலையை அன்று தமிழ்நாடு போந்த ஆரியரும், அவர் பின் வந்த ஆங்கிலேயரும் செய்துதான் தமிழ் மொழி யையும் தமிழன் பண்பாட்டையும் கெடுத்துத் தமிழர்க்குத் தாய்மொழிப் பற்றும் தமிழினப் பற்றும் இல்லாமற் செய்து, தமிழ் நாட்டில் ஆதிக்கம் செலுத்திவரலாயினர். அங்ஙன மன்றித் தமிழர் வீரத்தின்முன் எதிர்நின்று வென்று தமிழரை அடிமை யாக்கிக் கொள்ளவில்லை. அவ் விருபாலாரும் பிரித்தாளும் கொள்கையையும் கொண்டு வெற்றிபெற்றனர். அதனால் ஆரியர், இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய தமிழரைத் தாழ்மக்களாகவும், தாம் தனிப்பட்ட உயர் மக்களாகவும் ஆக்கிக்கொண்டு வாழலாயினர். ஆங்கிலேயர் இந்நாட்டு மக்களில் ஒருசிலரைச் சமய அடிமைகளாக்கிக் கொண்டனர். ஆனால், ஆங்கிலேயர் தம் தாய் மொழியை ஆட்சி மொழி யாகவும் பாட மொழியாகவும் ஆக்கித் தமிழ் மொழியைத் தலையெடுக்க முடியாமல்செய்தனரே யன்றி, ஆரியர் போல் தங்கள் மொழியையும் கொள்கைகளையும் தமிழ்மொழியில் கலக்கவில்லை. அன்னார் செய்த அவ்வேலையைத் தான் இன்று இந்தியரும் (வடவர்) செய்துவருகின்றனர்; 'பொது மொழி' என்னும் பெயரால் தங்கள் தாய்மொழியான இந்தி மொழியை வலுக்கட்டயாமாகத் தமிழரிடைப் புகுத்தி வருகின்றனர். இந்தியைப் புகுத்தித் தமிழ் மொழியையும் தமிழர் பண்பாட்டையும் கெடுத்துத் தமிழ் மக்கள்மேல் ஆதிக்கம் செலுத்தவேண்டும், தமிழரை அடிமை கொள்ள வேண்டும், தமிழினத்தை ஒழிக்கவேண்டும் என்பது தானே வடவர் குறிக்கோள்? இவ்வுண்மையறியாத் தமிழ் மக்கள் தான், 'இந்தி வேண்டும்; இந்தி படிக்க வேண்டும்; இந்தி படித்தால்தான் எதிர்காலத்தில் நல்வாழ்வு வாழலாம்'என்று கூறிவருகின்றனர். தம் பகைவரை எதிர்நின்று எதிர்த்துக் கொல்லுதல், நட்புற்றுக் கொல்லுதல், வஞ்சித்துக் கொல்லுதல், கூட்டிப் போய்க் கொல்லுதல், ஆள்வைத்துக் கொல்லுதல், உள்ளாளைக் கொண்டு கொல்லுதல், மருந்திட்டுக் கொல்லுதல் எனப் பலவகையில் உயிர்க் கொலை செய்வது போலவே, தமிழ்ப் பகைவர்கள் பழங்காலத்திலிருந்தே தமிழ்க் கொலை புரிந்து வருகின்றனர். அன்று அகத்தியர் முதலிய ஆரிய மரபினர் தமிழை ஒருவாறு கற்றுத் தமிழ் நூல் செய்வதன் மூலம் ஆரியக் கொள்கை களையும் ஆரியச் சொற்களையும் தமிழிடைப் புகுத்தித் தமிழ்க் கொலை புரிந்து வந்தனர். மாறாகத் 'தமிழை வளர்த்தார், தமிழ் முனிவர்' எனத் தமிழராலேயே பாராட்டுஞ் சிறப்பினைப் பெற்றார் அகத்தியர். "ஆதி சிவன்பெற்று விட்டான்- என்னை ஆரிய மைந்தன் அகத்திய னென்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நின்ற மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்" எனப் பாரதியாரும் பாராட்டுதலை அறிக. இரண்டாவது தமிழ் மன்னர்களையும் தமிழ்ச் செல்வர்களையும் ஏமாற்றி, வட நூல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதன் வாயிலாய் வட மொழிக் கருத்துகளையும் வட சொற்களையும் புகுத்தித் தமிழ்க் கொலை புரிந்து வந்தனர். இன்று தமிழ்க் கலைச் சொற்களை வடசொற்களில் ஆக்கிக் கொண்டு தமிழ்க்கொலை புரிவது போலவே, அன்று சமயச் சொற்களை வட சொற்களில் ஆக்கிக் கொண்டு தமிழ்க் கொலை புரிந்து வந்தனர். தமிழருக்குத் தனிச் சமயம் உண்டு; அதுதான் சைவசமயம், பழஞ்சைவம் வேறு, இன்றையச் சைவம் வேறு என்று கூறும் சைவ மெய்யன்பர்கள், சைவ அறிஞர்கள் பழந்தமிழ்ச் சைவச் சொற்கள் இன்றில்லாமைக்கு, அல்லது மறைந் தொழிந்தமைக்கு என்ன காரணம் கூறப் போகின்றனர்? மேலும், 'தமிழ் வடமொழியின் குட்டி' எனத் தமிழர்களை நம்பும்படி செய்து, பிள்ளைகளைக் கொண்டே பெற்றோரைக் கொலை செய்வதுபோல, தமிழர்களைக் கொண்டே தமிழ்க் கொலை செய்துவந்தனர். தமிழில் வடசொற்களை மிகுதி யாகக் கலப்பதற்குத் தனி மதிப்பிருந்த காலமும் ஒன்றுண்டு. இதற்கு, வில்லி பாரதம், அருண கிரிநாதர் திருப்புகழ் முதலியன எடுத்துக் காட்டுகளாகும். தமிழையும் வடமொழியையும் சமனாகக் கலந்தெழுதி அதற்கு, மணிப்பிரவாளநடை எனத் தனிப் பெயர் சூட்டித் தமிழ்க் கொலை புரிந்ததையும் நோக்குக. இத்தகைய வடமொழிக் கலப்பினால் தமிழ்திரிந் துண்டானவை தாமே கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம் என்னும் திராவிட மொழிகள்? பிற்காலத் தமிழ்ப் புலவர்களின் தனிப்பாடல்கள் இன்று பயன் படாமற் போனதற்கு - படிக்கத் தகுதியற்றவையாய்ப் போனதற்கு- அப்பாடல்களெல்லாம் தமிழ்ப் பெயரில் வட மொழிக் கருத்துக்களை மிகுதியாகவுடையனவாய் இருத்தலன்றோ காரணம்? 'கவிராயர்கள்' என்ற சிறப்புப் பெயர் பெற்ற பிற்காலப் புலவர்கள்-காளமேகப் புலவர், இரட்டைப் புலவர் முதலியோர்-உண்மையில் தனித்தமிழில் தனித்தமிழ்க் கருத்துக்களைக் கொண்டு தம்கவிகளைச் செய்திருப்பாரேல், இன்று தமிழ் இலக்கியம் எவ்வளவு வளமுள்ளதாகத் திகழும்! இனி, தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்கள், வேண்டுமென்றே வடமொழிக் கருத்துக்களை வலிந்து புகுத்திக் தமிழ்க் கொலை செய்துள்ளனர் என்பது உலகறிந்த உண்மை. 'கலப்புக்கலை, முன்னுக்குப்பின்' என்ற கட்டுரை களைப் பார்க்க. மேலும், தூய தமிழ்ச்சொற்களை யெல்லாம் வட சொற்கள் என்றும், தனித் தமிழ்ச் சொற்களை வடசொல் லாக்கியும் தமிழ்க் கொலை புரிந்து வந்தனர். எடுத்துக் காட்டாக: தொல்காப்பியச் சொல்லதிகாரம் 398-ஆம் சூத்திர வுரையில், 'நீர் என்பது ஆரியச் சிதைவு' என்கின்றார் சேனாவரையர். குடிக்குந் தண்ணீர்க்குக் கூடப் பெயரிட அறியாத நிலையிலா இருந்தனர் அன்று தமிழ் மக்கள்? இது வேண்டுமென்றே கூறும் பச்சைப் பொய்யல்லவா? நீரைக் குறிக்கும் தமிழ்ப் பெயர்தான் எதுவோ? அரங்கம்- ரங்கம், திருவரங்கம்- ஸ்ரீரங்கம், அரத்தம்-ரத்தம், அராகம்- ராகம், சலம்-ஜலம், தானம்-ஸ்தானம், தேயம்-தேசம், மாதம்-மாசம் என்பன வெல்லாம் வட சொற்களாக்கப் பட்ட தமிழ்ச் சொற்களே. இடத்திலுள்ள பொருளின் பெயர் இடத்தை உணர்த்துவது - தானியாகு பெயர். இடத்தின் பெயர் இடத்திலுள்ள பொருளை உணர்த்துவது இடவாகுபெயர். தானியாகு பெயர் இருக்க, தானவாகு பெயர் ஏன் இல்லை? தானம் வடசொல் ஆனால், தானி எப்படித் தமிழ்ச் சொல் ஆகும்? இடவாகு பெயர்க்கேற்ப, தானியாகு பெயர்-இடியாகு பெயர் என்றல்ல வோ இருக்க வேண்டும்? பழமலை என்பது, பழையமலை எனக்கொண்டு, விருத் தாசலம் என வடவர் வடமொழியாக்க, பிற்காலத் தமிழர் அதை வடசொல் எனக்கொண்டு, முதுகுன்றம் எனத் தமிழாக்கியுள்ள மையே, வடவர் தமிழ்ச் சொற்களை வடசொல் லாக்கினமைக்குப் போதிய சான்றாகும். விருத்தம் - கிழப் பருவம். அசலம்- மலை. பழமலை-பழங்களையுடைய மலை. ஆங்கிலேயர் உச்சரிக்க இயலாமல், திருவையாறு-டர்வாடி, தஞ்சாவூர் - டேஞ்சூர், மதுரை - மெஜுரா, கொள்ளிடம் - கொலரின், கோயமுத்தூர்-கோயம்பட்டூர், தூத்துக்குடி -டூட்டுக்குரின், கள்ளிக்கோட்டை- கோழிக்கோட், யாழ்ப்பாணம் - ஜாப்னா எனத் தமிழ்ச் சொற்களைத் திரித்து வழங்கினார்கள் அல்லவா? தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களெல்லாம் தமிழ்மொழி நன்னிலையில், ஆட்சிமொழியாக இருந்தபோது வெட்டப் பட்டவையாகும். ஆனால், அவை வடமொழியை வேண்டு மென்றே கலந்து, தமிழ் மக்களால் புரிந்து கொள்ள முடியாத படி எழுதப்பட்டிருப்பதன் காரண மென்ன? பலரும் பார்க்கு மிடத்தில் வெட்டப்பட்டவை தானே அக்கல்வெட்டுக்கள்? அவ்வாறு தமிழ் மக்கள் படிக்க முடியாதபடி ஏன் எழுத வேண்டும்? காட்டு: மாத விக்கிரம வித்தன் சாஸனம்: "ஸ்வஸ்திஸ்ரீ ஸகல ஜகத்திரயாபி வந்தித ஸுரா ஸராதீசபுர பரமேஸ்வர பிரதி ஹாரீக்ருதமஹாபலி குலொத்பவ மஹாபலி வாணராஜர்" "பராக்ரம பாண்டிய தேவர் சாஸனம்: "சுபமஸ்து, ஸ்வஸ்தி ஸ்ரீ புவநேக வீர சந்த்ர குலப் பிரதீப கோஜடிலவர்மத் திரிபுவநச் சக்ரவர்த்தி கோநேரின்மை கொண்டான் பெருமாள் அதிராம பராக்ரம பாண்டியதேவர் நந்த நரான ஸ்ரீபெருமாள் குலசேகர தேவரான பராக்ரம பாண்டிய தேவற்கு" புரிகின்றதா? இன்னும் எத்தனையோ வகை! திரு.மு.ராகவையங்கார் என்பவர், 'தமிழர்க்கு ஒழுக்க மில்லை. தமிழ்நாடு போந்த ஆரியமேலோர் தமிழர்க்கு மணச் சடங்குகளை வகுத்துக்கொடுத்து வாழ்வித்தனர்' எனத் தமிழ் மரபையே பழித்துத் தமிழ்க் கொலை புரிந்தனர். திரு.பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் என்பவர், 'வடமொழி இலக்கண நூலின் மொழி பெயர்ப்பே தொல்காப்பியம்' என மனங்கூசாமல் எழுதித் தள்ளித் தமிழ்க்கொலை புரிந்தனர். இன்னும் எத்தனை யோ வகையில் தமிழ்க்கொலை நடந்து வருகிறது. இவ்வாறு சங்க முற்காலத்திலிருந்து, இலக்கிய இலக்கண மூலமாகவும், சமய நூற்களின் மூலமாகவும், மொழி வளர்ப்பின் மூலமாகவும், தேசீயத்தின் மூலமாகவும், பிற வகையிலும் தமிழின் தனித் தன்மை கெடுக்கப்பட்டு வருகிறது; தமிழர் தனிப் பண்பாடு அழிக்கப்பட்டு வருகிறது, இன்று கலை, கவிதை, கதை, கட்டுரை மூலம், தமிழ் கெடுக்கப்படுவது போல. இவற்றையெல்லாம் விட, மதுரையிலுள்ள மதுரைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் திரு.ரா.கிருஷ்ண மூர்த்தி பி.ஏ.; பி ஓ.எல்.; எல்.டி. என்பவர் ஒரு புதிய முறையில் தமிழ்க் கொலை செய்ய - தமிழைக் கெடுக்க-தமிழ் இலக்கண மரபை அழிக்க-முற்பட்டிருக்கிறார். 1951ல் வெளியிடப் பட்ட மதுரைக் கல்லூரி மலர் 17- ஆம் பக்கத்தில், தமிழில் பெண்பால் விகுதி என்றதலைப்பில், கீழ் வருமாறு எழுதி யுள்ளனர். தமிழில் பெண்பால் விகுதி: " 'இ' என்பது, தமிழில் பெண்பால் விகுதி என்று கூறப்படுகிறது. உண்மையில் பெண்பால் விகுதி 'இ' அல்ல. அது பெண்பால் விகுதியாயின் 'வில்லி', 'நாற்காலி' முதலியவற்றில் அப்பொருளில் வாராதிருப்ப தேன்? உண்மை என்ன வென்றால், 'இ' என்பதை 'ஸ்திரி' என்பதன் சிதைவு, பெரும்பாலும் 'த்தி', 'ச்சி', 'ட்டி' என்பவையே பெண் பால் விகுதிகளாக வருகின்றன. இவை 'ஸ்திரி' என்பதன் மாறு பட்ட உருவங்கள் என்பது தெளிவு, முதலில் 'ஸ்திரி' என்பதே பெண்பால் விகுதியாக இருந்து, பிறகு அது சிதைந்து, 'த்தி', 'ச்சி', 'ட்டி' என்று மாறியிருக்க வேண்டும். உதாரணம்: குற+ஸ்திரி-குறத்தி: வலை+ஸ்திரி-வலைச்சி: வெள்ளான்+ஸ்திரி-வெள்ளாட்டி; புலை+ஸ்திரி-புலைச்சி; வண்ணான்+ஸ்திரி-வண்ணாத்தி; ஆய்+ஸ்திரி-ஆய்ச்சி; பார்ப்பான்+ஸ்திரி-பார்ப்பாத்தி; பிராமணன்+ஸ்திரி- பிராமணத்தி; ராஜா + ஸ்திரி - ராஜாத்தி; பறை + ஸ்திரி பறைச்சி; பெண்ட+ஆம்+ஸ்திரி-பெண்டாட்டி; கண்+ஆம்+ஸ்திரி-கண்ணாட்டி; பொம் மனாட்டி, கம்மி னாட்டி என்பவையும் இவ்வாறே வந்திருக்க வேண்டும். இதுதான் அவர்தம் ஆராய்ச்சியுரை. உண்மையில் 'இ' என்பது 'ஸ்திரி' என்பதன் சிதைவன்று. 'இ' என்பது 'இ'ய்யே தான். 'ஸ்'திரி என்னும் சொல் தமிழ் நாட்டுக்கு வருவதற்குப் பன்னெடுங் காலத்திற்கு-பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு-முன்னி ருந்தே 'இ' என்பது தமிழில் பெண்பால் விகுதியாக இருந்து வருகிறது. தமிழில் உள்ள மிகப்பழைய நூல் தொல்காப்பியம். அது ஓர் இலக்கண நூல். தொல்காப்பியம், தொன்றுதொட்டு வந்த பழந்தமிழர் பழக்க வழக்கங்களை- 'வாழ்க்கை முறையினை-- இலக்கண வகையால் கூறும் நூலாகையால், தொல்காப்பியத்தில் வரும் இலக்கண வழக்கம், தொல்காப்பியத்திற்குப் பன்னெடுங் காலத்திற்கு முற்பட்ட தமிழர் வழக்கென்பதில் சிறிதும் ஐயம் இல்லை." தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் 'இ'என்பது பெண்பால் விகுதி என்று கூறப்பட்டிருக்கிறது. "பெண்மை அடுத்த இகர விகுதி"(சொல் -163) காட்டு: பெண்டாட்டி. "இ உஐஒ என்னும் இறுதி"(சொல் - 120) காட்டு: சாத்தி-சாத்தீஇ. "அளபெடை மிகூஉம் இகர இறுபெயர்"(சொல் -125) காட்டு: தோழி-தோழீ இ. "பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்"(சொல் -180) காட்டு: சாத்தி,முடத்தி, முடக்கொற்றி. "பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும், தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்" (சொல் -4) காட்டு: பேடி, தேவி. இவ்வெடுத்துக்காட்டுக்கள் சேனாவரையர் முதலிய பழைய உரையாசிரியர்களால் காட்டப்பட்டவையே. 'இ'என்பது, 'ஸ்திரி' என்பதன் சிதைவாயின், "வடசொற் கிளவி வடெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே." (சொல்-401) "சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்." (சொல்-402) என, வடசொல் தமிழில் எவ்வாறு வந்து வழங்கும் என இலக்கணஞ் செய்த ஆசிரியர் தொல்காப்பியர், "ஸ்திரி என்பதுதான் தமிழில் 'இ' எனத் திரிந்து வழங்கும்' எனச் சொல்லாது விடுவரா? ஆசிரியர் தொல்காப்பியர் காலத்தே இடப்பெயர், மக்கட் பெயர் போன்ற சில வடமொழிப் பெயர்ச் சொற்களை அவ் வடமொழியாளர் செய்யும் செய்யுட்களில் வழங்கிவர, அவற்றை எவ்வாறு வழக்கவேண்டும் என்று ஆசிரியர் விதி செய்தனரே யன்றி, சொல்லின் உறுப்பாகும் நிலையில் அன்று வடசொல் தமிழ் நாட்டில் மதிப்புப் பெறவில்லை. இன்னும் அயல் மொழி யிடத்து உறுப்புக்கள் கடன் வாங்கும் அத்தகைய இழிநிலையைத் தமிழ்மொழி அடையவில்லை. இனித் தொல்காப்பியத்தின் வழிநூலெனப் படுவதும், (வழிநூலன்று. 'முன்னுக்குப்பின்' என்னும் கட்டுரை பார்க்க.) வடமொழிக்கு ஆக்கந் தந்ததுமான நன்னூலிலும், "கிளைமுத லாகக் கிளந்த பொருள்களுள் ளவ்வொற் றிகரக் கேற்ற வீற்றவும் தோழி செவிலி............. பெண்பாற் பெயரே"(நன்-227) என, இகரமே பெண்பால் விகுதி என்று கூறப்பட்டிருக்கிறது. 'ஸ்திரி' என்பதுதான் 'இ' என்றானது என்றால், வடமொழி யாக்கங் கூறிய நன்னூலார் இதைக் கூறாமலா இருப்பர்? இகர வீற்றுக்கு எடுத்துக்காட்டாக நன்னூல் உரையாசிரியரும். ஒருத்தி, அவையத்தி, பொன்னி, குறத்தி, எயிற்றி, ஆய்ச்சி, உழத்தி, மலையாட்டி, சோழிச்சி, கருவூரி வானத்தி , அகத்தி புறத்தி, திணிதோளி, சுரிகுழலி, குறுந்தாளி, கூனி, பார்ப்பினி, படைத்தலைவி, தச்சச்சி, பாங்கி, பெண்டாட்டி - என்னும் பெயர் களையே காட்டியுள்ளனர். இனி, 'த்தி, ச்சி, ட்டி' என்பவையும் 'ஸ்திரி' என்பதன் மாறுபட்ட உருவங்கள் அல்ல. அவை மாறு படாத இயற்கை உருவங்களேயாம். 'த்தி, ச்சி, ட்டி' என்பவை பெண்பால் விகுதிகள் அல்ல. அவற்றின் ஈற்றிலுள்ள 'இ' என்பதே பெண்பால் விகுதியாகும். குற+த்+த்+இ- குறத்தி. முதல் 'த்'-சந்தி. இரண்டoவது 'த்'-பெயரிடைநிலை. - 'இ' விகுதி. வலை+ச்+ச்+இ- வலைச்சி, பெண்டு+ ஆட்டி-பெண்டாட்டி, ஆள்+த்+இ- ஆட்டி, பெண்டாட்டி - பெண்மையை ஆள்பவள், உடையவள். மேலும், த்,ச்,ட் என்னும் வல் லொற்றுக்கள் தமிழில் மொழிக்கு, முதலில் வாரா மையும், 'த்தி,ச்சி, ட்டி' என்பவை விகுதிகள் அல்ல, அவை 'ஸ்திரி' என்பது திரிந்தானவையும் அல்ல என்பதற்குச் சான்றாகும். நன்னூல் 141-ஆம் சூத்திர உரை பார்க்க. இடைநிலையையும் சந்தியையும் சேர்த்து விகுதி எனவும், அது 'ஸ்திரி' என்னும் வடசொல்லின் திரிபு எனவும் கூறும் ஆராய்ச்சித் திறன் வெகு அழகிது! வடமொழியிலும் 'ஸ்திரி' என்னும் சொல் பெண்பாலைக் குறிக்குமே யன்றிப் பெண்பால் விகுதியன்று. பரஸ்திரி-அயற் பெண் அல்லது அயலான் பெண், மனைவி; பிராமணஸ்திரி-பிராமணப் பெண் எனக் காண்க. 'ஸ்திரி' என்பதற்கு நேரான 'புருஷன்' என்னும் வடசொல் ஆண் பாலையே உணர்த்துகிறது; தொடர் வண்டிப் பேட்டை யிலுள்ள ஒதுங்கிடச் (கக்கூஸ்) சுவரில் காணலாம். இனி, 'ஸ்திரி' என்பது 'இ'என்னும் பெண்பால் விகுதி யானால், 'புருஷன்' என்பது 'அன், ஆன்' என்னும் ஆண்பால் விகுதிகள் ஆகவேண்டும். அதாவது, குற+ஸ்திரி-குறத்தி என்றாவது போல, குற+புருஷன்- குறவன் என்றாக வேண்டும். ஆண் பாலைக் குறிக்கும் 'புருஷன்' என்னும் வடசொல் தமிழில் ஆண்பால் விகுதியாகத் திரியாமல், பெண்பாலைக் குறிக்கும் 'ஸ்திரி' என்னும் வடசொல்மட்டும் எப்படித் தமிழில் பெண்பால் விகுதியாகத் திரியும்? குற, புலை, வலை, ஆய், பாறை எனச் சிலவற்றைப் பகுதியாகவும், வெள்ளான், வண்ணான் பார்ப்பான் எனச் சிலவற்றை ஆண்பாற் பெயராகவும் கொள்ளுதல் பொருத்த மற்றதாகும். வெள்ளான்+ஸ்திரி-வெள்ளாட்டியன்று. வெள்ளை+ ஆட்டி, அல்லது வெண்மை+ ஆட்டி-வெள்+ஆட்டி-வெள்ளாட்டி என்பதே. வண்ணான் + ஸ்திரி-வண்ணாத்தி என்பதற்கேற்ப, குறவன்+ ஸ்திரி-குறத்தி,வலையன்+ஸ்திரி-வலைச்சி, பறையன்+ஸ்திரி-பறைச்சி என்றே காட்ட வேண்டும். ஆண்பாற் சொல்லுடன் பெண்பால் விகுதி சேர்ந்து. பெண்பாற் சொல் ஆகிறது என்பது, 'ஆதாம் என்னும் ஆதி மகனின் விலா எலும்பை ஒடித்தெடுத்து, ஏவாள் என்னும் ஆதிமகளைக் கர்த்தன் உண்டாக்கினார்' என்னும் விவிலிய நூற் கூற்றுப் போன்றதேயாகும். பார்ப்பு+ஆன்-பார்ப்பான். பார்ப்பு+அன்+அன்-பார்ப்பனன். பார்ப்பு-பகுதி. அன்-சாரியை. அன்-ஆண்பால் விகுதி. பார்ப்பு+ ஆ+த்+த்+இ-பார்ப்பாத்தி. பார்ப்பு-பகுதி. ஆ-சாரியை. த் சந்தி. த்-பெயரிடை நிலை இ- பெண்பால் விகுதி பார்ப்பு + இன் +இ-பார்ப்பினி. இன்-சாரியை. பார்ப்பு+அன்+இ+-பார்ப்பனி. அன்-சாரியை. பெண்டு+ஆம்+ஸ்திரி-பெண்டாட்டி அன்று. பெண்டு+ ஆட்டி-பெண்டாட்டி.பெண்டு-பெண்மை; அதாவது பெண் தன்மை. பெண்டாட்டி-பெண்தன்மையை ஆள்பவள். 'ஆட்டி' என்பதும் பெண்ணைக் குறிக்கும் சொல்லே. மனையாட்டி. பெருமாட்டி, திருவாட்டி, வெள்ளாட்டி, மூதாட்டி, அயிலில் லாட்டி எனக்காண்க. 'பொம்மனாட்டி, கம்மினாட்டி' என்பன இழிவழக்குகள். கை+பெண்டு + ஆட்டி-கைம்பெண்டாட்டி என்பதன் இழிவழக்கே கம்மினாட்டி (கம்மனாட்டி) என்பது. இனி, 'இ' பெண்பால் விகுதியாயின், 'வில்லி, நாற்காலி' முதலியவற்றில் அப்பொருளில் வராததேன்?"என்பதும் ஆராய்ச்சி யின்மையால் எழுந்த வினாவேயாம். இகரம் (இ) பெண்பால் விகுதி என்றால் மற்ற இடங்களில் வரக் கூடா தென்னும் வரையறை யில்லை. அவ்வாறு இலக்கண ஆசிரியர்கள் கூறவு மில்லை. நம்பி, தம்பி, சென்னி, கிள்ளி, வில்லி, பாரி, காரி, ஓரி, நள்ளி, புல்லி, அத்தி என இகர விகுதி ஆண்பாலிலும்; முள்ளி, முக்காலி, நாற்காலி, வெள்ளிஎன அஃறிணையிலும் வரும். உண்டி, தின்றி, உரைத்தி (சொல்-223) என முன்னிலை வினையிலும், உண்ணுதி, போதி-என ஏவல் வினையிலும் இகர விகுதி வந்துளது. ஒரு விகுதி ஒரே பால் அல்லது இடத்தில் வரவேண்டு மென்பதில்லை. இகர விகுதி-ஆண்பால், பெண்பால், ஒன்றன் பால், முன்னிலை வினை, ஏவல் வினை ஆகிய இடங்களில் வந்திருப்பது போலவே, 'அன்' என்னும் விகுதி, நடந்தனன் (அவன்), நடந்தனன் (யான்) எனப் படர்க்கையிலும், தன்மை யிலும் வந்துளது. உண்பல் (யான்), உண்ணல் (உண்ணுதல், உண்ணற்க) என 'அல்' விகுதி தன்மையிலும், தொழிற் பெயரினும், விளங்கோளினும் வந்துளது. "முதலில் 'ஸ்திரி' என்பதே பெண்பால் விகுதியாக இருந்து"என்பது, 'வடமொழியிலிருந்து தமிழ் மொழி உண்டானது' என்னும் பொருந்தாப் பொய்க் கூற்றை உட் கொண்ட பொருந் தாக் கூற்றாகும். தமிழ் வடமொழியிலிருந்து பிறந்த தென்பதை உண்மையென்றே வைத்துக் கொள்வோம். தமிழ் வடமொழியி லிருந்து பிறந்தபோது, 'குறஸ்திரி' என்று வழங்கின தென்றால், அது எப்படித் தமிழாகும்? மணிப் பிரவாள மன்றோ ஆகும்? யார்? எப்போது? எதற்காக? 'குறஸ்திரி' என்பதைக் 'குறத்தி' எனத் திரித்தனர்? ஆரியர் இந்நாட்டுக்கு வருமுன்,அவர் தம் மொழிக்கு எழுத்தின்றி, அப்போது பாடப்பட்ட பாடல்களையும் மொழி யையும் 'எழுதாக்கிளவி' என்று கூறிக்கொண்டிருந்த காலத்தி லேயே தமிழ் மொழி சீருஞ்சிறப்புடன், திணைபால் எண்ணிடப் பாகுபாட்டுடன் திகழ்ந்து வந்ததென்பதை அறியாத இவர்; அறிந்திருந்தாலும் ஒப்புக் கொள்ள 'மனமில்லாத இவர், "முதலில் ஸ்திரி என்பதே பெண்பால் விகுதியாக இருந்தது' என்பது எவ்வளவு பொருந்தப் புளுகுதல்! அதற்கு என்ன சான்று? தமிழில் தனித்தனிப் பாலுணர்த்தும் ஈறு இருப்பது போல வடமொழியில் இல்லாதிருக்க, வடமொழி 'ஸ்திரி' என்பது பெண்பால் விகுதி யாக இருந்து, பிறகு அது சிதைந்து இகர விகுதியாயிற்று என்பதும் பொருந்தாக் கூற்றே யாகும். இவர் தமது நுண்மாண் நுழைபுலத்தால் நுணுகி ஆராய்ந்து கண்ட புதிய கண்டு பிடிப்பாக இருந்தாலேனும், ஏதோ ஆராய்ச்சிக் கெட்டினவாறு ஆராய்ந்து வெளியிட்டிருக்கிறார். தவறு இருக்கினும் குற்றமில்லை. புதிய ஆராய்ச்சிதானே எனக் கொள்ளலாம். அங்ஙன, 'மாறியிருக்க' வேண்டும், இவ்வாறே வந்திருக்க வேண்டும்' என ஐயுறவுபட 14 வரிகளில், அதுவும் மாணவர் படிக்கும் கல்லூரி மலரில் எதற்காக இதை எழுதினாரோ நமக்கு விளங்கவில்லை. ஒரு கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர், தமிழை வளர்க்கும் பணிபுரிந்து வருபவர், தமிழுக்கு ஆக்கந்தரும் செயலை விட்டு, அழிவு தரும் செயலை எதற்கு மேற்கொண்டாரோ அறியோம். வேலியே பயிரை மேயும் நிலையில் உள்ளது தமிழ் நாடு; நாம் என்ன செய்வது!  9. யார் குற்றவாளி 'ஏன் செட்டியாரே! அதிமதுரம் இருக்கிறதா? தோலா என்ன விலை? இருக்கிறதா இல்லையா-மிக விரைவாய் வேண்டி யிருக்கிறது. ஏன் பேசவில்லை? உண்டா இல்லையா-சொல்லுங்கள்; உங்களைத்தான்! நான் கேட்பது காதில் விழவில்லை? ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்? வாயிலென்ன?' என்று வற்புறுத்திக் கேட்டார் ஒருவர். அவருக்கு அதிமதுரம் மிகமிகச் சுருக்காக, கட்டாயம் வேண்டியிருந்தது. அதனாற்றான் அவர் அங்ஙனம் வற்புறுத்திக் கேட்டார். ஆனால் செட்டியாரோ பதில் ஒன்றுங் கூறாமல் அப்படியே அடித்து வைத்த கல்லுப் பிள்ளையார் போல் உட்கார்ந்து கொண்டிருந்தார். பண்டங்கள் விற்றுப் பணந்திரட்டுவதற்காகக் கடை வைத்திருக்கும் ஒருவரிடம் இதைவிட எவ்வாறு கேட்பது? 'எங்கள் கடையில் இன்ன சரக்கு இருக்கிறது விலைமலிவு; நல்ல சரக்கு; மிகவும் திடம்; போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்; ஒருமுறை எங்கள் கடைக்கு வாருங்கள், வந்து பாருங்கள்; அதே போதும்' என்று கடைக்காரர் விளம்பரம் செய்வதை விட்டு, அடுத்த கடைக்குப் போவாரை, 'என்ன வேண்டும்? வாருங்கள் என்று வலிய அழைப்பதை விட்டு, வலிய வந்து ஒருவர் இன்னது வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்கும் போது, பேசாமல் உட்கார்ந்திருக்கும் கடைக்காரரை என்னென்பது! அவர் ஏன் அவ்விதமாக ஒன்றும் பேசாமல் இருந்தார்? விற்பதற்குத் தானே கடை வைத்திருக்கிறார்? விளையாட்டுக்கா வைத்திருக்கிறார்? அல்லது தனக்காகவா கடை வைத்திருக்கிறார்? உண்டு அல்லதுஇல்லை என்ற சொல்லவேண்டும்; அது தானே வினாவுக் கேற்ற விடை? ஏன் பேசாமடந்தை தம்பிபோல் உட்கார்ந்து கொண்டிருந்தார்? இது ஒரு புதிராகவன்றோ இருக்கிறது? இத்தகைய கடைக்காரரை நாம் இதுவரை கண்டது மில்லை; கேட்டதுமில்லை! கடை விற்பதற்குத்தான் வைத்திருக்கிறார், வேடிக்கைக்காக அன்று. ஆனால், வாங்க வந்தவர் கேட்டதை அவர் அறிந்து கொள்ளவில்லை. அவர் எப்போதும் கடை விற்கும் செட்டி யாரல்லர். அவர் அக்கடைக்குப் புதியவர். கடைக்காரர் இவரைக் கடைக்குக் காவலாக உட்கார வைத்து விட்டுச் சாப்பாட்டுக்குப் போய் விட்டார். இவர் ஊமை என்பது வாங்க வந்தவருக்குத் தெரியாது. அவருக்குச் சுருக்காக அதிமதுரம் வேண்டும். அதுவும் கட்டாயம் வேண்டும். அதனால், அவர் அவ்வளவு பாடுபட்டுக் கேட்டார். அவர் கேட்டதும் கடைக்காரருக்கு ஒன்றும் விளங்காத தால் - கடையில் உட்கார்ந்திரந்த அந்த ஊமைக்கு ஒன்றும் விளங்காததால் அவர் ஒன்றும் பேசாமல் அப்படி உட்கார்ந்து கொண்டிருந்தார். 'நாம் இத்தனை பாடுபட்டுக் கேட்டும் விற்பதற்காகவே கடை வைத்திருக்கும் செட்டியார் ஒன்றும் பேசாமல் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறாரே' என்ற வருத்தத்துடன் சென்றார் வாங்கவந்தவர். கடையில் உட்கார்ந் திருந்த ஊமை முன் போலவே உட்கார்ந்திருந்தார். வேறொருவன் அவர் ஊமை என்று சொன்ன பிறகுதான், 'அடடா! எனக்குத் தெரியாதே! கேட்கக் கேட்க ஒன்றும் பேசாமல் இருக்கிறாரே என்றல்லவோ வருத்தப்பட்டேன்? முன்னரே அறிந்திருந்தால் கேட்டிருக்க மாட்டேனே; அக்கடைக்கே போயிருக்க மாட்டேனே.' என்று தன் அறியாமைக்கு வருந்திச் சென்றார். இவ்விருவரில் யார் குற்றவாளி? இருவரும் குற்றவாளி களல்லர். வாங்கவந்தவருக்குக் கடையில் இருந்தவர் ஊமை யென்பது தெரியாது; அவருக்கு இவர் கேட்டது இன்ன தென்று விளங்கவில்லை. அதனால், இது இருவரையும் சாராத ஒரு தனிப்பட்ட குற்றமாக முடிந்தது. உலகில் இத்தகைய நிகழ்ச்சிகள், குற்றங்கள் பல ஏற்படுவ துண்டு. ஆனால், அறியாமையை அறிந்த பின், அறியாமைக்கு வருந்தி அறிவுடன் நடந்து கொள்வதே அறிவுடைமையாகும். அறியாமையை அறிந்தும் அறிவுடன் நடந்து கொள்ளாமையே அறியாமை எனப்படும். அவ்வாறு அறிவுடன் நடந்து கொள்வதே மக்கள் பண்பாடுமாகும். கடைக்காரன் தன்னை மதிக்க வில்லை; தன்பேச்சைப் பொருடபடுத்தவில்லை; தன்னை இழிவுபடுத்தினான் என்றெண்ணி, வாங்க வந்தவர் கடையில் புகுந்து வலிதில் அதிமதுரத்தை எடுத்துச் செல்லல் அறமாகுமா? ஒரு போதும் ஆகாது. அத்தகைய இழி செயலை ஆன்றோர் ஒருக்காலும் ஒருப்படார். அதனை இழி செயல் என்று, ஒழுக்கமன்றென்று கடிவர். அதுதானே ஆன்றோர் கடமை! ஒருநாள் மாலை நாலரை அல்லது ஐந்து மணி இருக்கும். ஒரு தோட்டத்தை அடுத்த குறுங்காடு. கொழுக்கட்டைப் புல் பச்சைப் பசேலென்று முழங்கால் வரை வளர்ந்திருந்தது. அக்காட்டில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவை முதல் மாணாக்கர்கள் போல் அவ்வளவு ஆர்வத்துடன் மேய்ந்து கொண்டிருந்தன. வெள்ளைக் கொக்குகள் தம் கழுத்தை நீட்டி நீட்டி மாடுகளின் உயரத்தை அளந்து கொண்டிருந்தன, காக்கைகள் மாடுகளின் முதுகின்மேல் உட்கார்ந்து கொண்டு, 'நேரமாயிற்று; விரைவில் மேயுங்கள்'-என்று எச்சரிக்கை செய்து கொண்டிருந்தன. கதிரவன் செந்நிறப் போர்வை போர்த்ததுபோல் காட்சியளித்தான். வானம் அப்பழுக்கில்லாமல் இருந்தது. ஓங்கி வளர்ந்த வேலா மரங்களும் பனைமரங்களும் அக்குறங் காட்டை அழகு செய்தன. அம் மரங்களுக்கிடையே பாயும் கதிரவனொளி கண்கவர் காட்சியாக இருந்தது. பக்கத்துத் தோட்டத்து வேலியோரம் ஒரு பெரிய வரப்பு. ஓர் இளமங்கை அவ்வரப்பில் ஒரு மாட்டைப் பிடித்து மேய்த்துக் கொண்டிருந்தாள். மாடு புல் மேய்வதைப் பார்த்துப் புன் முறுவல் பூத்தவண்ணம் அவள் நின்றுகொண் டிருந்தாள். கதிரவனொளி யால் அவள் பொன்னுடல் பெற்றவள் போல் விளங்கினாள். உண்மையிலேயே அவள் பொன்னுங் கண்டு வெட்கும்படியான ஒளியுட லுடையவள் தான். அவளுக்கு மாடு, மாட்டுக்கு அவளுந்தான் துணை. வேறு யாரும் அங்கில்லை. மேய்ச்சற் காட்டில் மேயும் மாடுகளை ஓட்டிக் கொண்டு போகக் காளை ஒருவன் அங்குவந்தான். அவன் அழகும் ஆண்மையும் ஒருங்கமைந்த கட்டழகன்; ஆடவர் அவாவத் தக்க ஆழகன். ஆடவரின் நடைக்கு ஆணேற்றின் நடையையும் களிற்றின் நடையையும் உவமை கூறுவர் புலவர் பெருமக்கள். ஆனால், இவன் நடைக்கு அவைகளின் நடை உவமையாகாது; அத்தகு இயற்கை வடிவமைந்தவன். எப்போதும் ஆறு மணிக்கு மேல் வருபவன் அன்று ஏனோ அந்நேரத்தில் அங்கு வந்தான். அடுத்த தோட்டத்து வேலி யோரம் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் கட்டழகி அவன் கண்ணில் பட்டாள். ஓர் ஆண்மகன் கண்ணில் ஒரு பெண்மகள் படுவது இயற்கை தானே! அவ் வியற்கையேதான் அவன் கண்ணில் அவளைப் படவைத்தது. மாடு முடுக்கச் செல்பவன் போல் அவன் அவள் நிற்கும் இடத்திற்குச் சென்றான். இருவருக்கும் இடையே ஒரு வேலிதான் குறுக்கே! இவன் நிற்பது அவளுக்கும் அவள் நிற்பது இவனுக்கும் அப்படியே தெரியும். தன்னை ஒத்த ஓர் ஆணழகன் வந்து எதிரில் நிற்பதைக் கவனியாமல் அவள் போக்கில் மாடு மேய்ப்பதில் கருத்துடன் இருந்தாள் அவள். அது கண்ட அக் காளை, "என்ன இது புதுமையாக இருக்கிறது! ஓர் இளம் பருவமங்கை; ஒத்த பருவமுடைய ஒருவன் வந்து தன்னெதிரியில் நிற்பதைப் பாராமல், கொஞ்சங் கூடப் பொருட் படுத்தாமல், பண்ணி வைத்த பாவைபோல நிற்கிறாளே! 'இவள் என்ன இன்னும் பருவ முறாதவளா? இல்லை; இல்லை. அதோ பச்சை மூங்கில் போல அவள் தோள்கள் அடிபெருத்து அழகுடன் பொலிகின்றன. மார்பு பெருத்து அவள் அழகுக்கு அழகு செய்கின்றன. பருவ மங்கைதான். அதிலொன்றும் ஐயமில்லை. பின்னேன் திரும்பிப் பாராமல் குனிந்தபடியே நிற்கின்றாள்? நாம் இங்கு வத்தது தெரியாதோ? ஏன் தெரியாது? நம்மைப் பார்த்துவிட்டுத்தானே குனிந்தாள்?"எனத் தனக்குத் தானே இன்னும் என்னென்னவோ பேசிக் கொண்டான். 'என்ன இந்த மாட்டுக்கு அறிவே இல்லை போலும்! இங்கு புல் நிறைய இருக்கிறது. இதைப் பாராமல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய அழகான பச்சைப் புல் இருப்பது, அதுவும் தன் முன்னரே இருப்பது தெரியவில்லை? என்ன மாடு இது; அறிவில்லாத மாடு!' என்று முன்னிலைப் புறமொழி மொழிந்தான். மாட்டைப் பார்த்துச் சொல்பவன்போல் அவளுக்குச் சாடை பேசினான். அப்போதும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அவனை ஓர் ஆண்மகனாவே அவள் மதிக்க வில்லை. பின்னர் இருமினான்; தும்மினான்; சீட்டியடித்தான்; குறும்பாட்டுப் பாடினான். ஒன்றையும் அவள் காதில் போட்டுக் கொள்ளாமல் மாட்டை மேய்த்துக் கொண்டே அங்கு நில்லாமல் சென்று விட்டாள். அவள் கண் மறையும் மட்டம் அங்கு நின்று கொண்டு பார்த்துக் கொண்டே நின்றான். அவள் கண் மறையவும் தவிர்க்க முடியாத வருத்தத்தோடு மாடுகளை ஓட்டிக் கொண்டு சென்றான் அவ்விளைஞன். அவனால் வேறு என்ன செய்ய முடியும்? அவனால் முடிந்ததையே அவன் செய்தான். உள்ளமும் உணர்வும் அவள்பாற் செல்ல, ஓட்டை மனத்தோடு உயிர் தாங்கிச் சென்ற அவன் அன்று இரவு உண்ணவில்லை; தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டே இருந்தான். அவ்விரவு அவனுக்கு ஓராண்டு போல் கழிந்தது. கொஞ்சம் கண் மூடினால் அவள் உருவத் தோற்றம்! இந் நிலைமையில் அன்றிரவைக் கழித்தான். அவன் பகல் பன்னிரண்டு மணிவரை அவன் பருவத்தில் பாதியைக் கழித்தது போல் கழித்தான். பொழுது மேற்கே சாயத் தொடங்கியதும் பொழுதைப் பார்ப்பதுதான் அவன் வேலையாக இருந்தது. 'கூத்தாடிக்குக் கிழக்கே கண், கூலிக்காரனுக்கு மேற்கே கண்' என்பது பழமொழி, அப்பழ மொழியின் பிற்பகுதியைப் பழமொழி யாக்கிவிட்டான் அவன். 'பொழுதுக்கு என்ன போங்காலம், போகவே மாட்டேன் என்கின்றது; இன்னும் அதே இடத்தில் இருக்கிறதே உயிரற்ற பொருள்போல? நம்மோடு போட்டி போடுகிறதா என்ன? இன்றைக்குப் பொழுது போவதாவது ஒன்றாவது? அது ஓய்வெடுத்துக் கொண்டது போல் இருக்கிறது அடேயப்பா! நேற்று ஒரு நொடிக்குள் விழுந்து விட்டது; இன்னும் கொஞ்ச நேரம் அவளைப் பார்க்க முடியாமல் செய்து விட்டது. இது இன்னும் கொஞ்சநேரம் இருந்திருந்தால் அவள் பேசியிருந் தாலும் இருப்பாள். நமக்குக் குடிப்பகையாகவன்றே வந்து தோன்றி யிருக்கிறது இப்பொழுது! நேற்றென்ன? இன்று நம்மைக் கொஞ்சமா ஆட்டிப் படைத்தது இப்பாழும் பொழுது! அது என்ன இரவா? ஓராண்டு! அவ்வளவு நேரம் எங்கு போயிருந்த தோ இது? இதைப் பார்ப்பதற்கு நாம் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமா? 'எங்கு வந்துவிட்டுப் போய் விடுகிறாளோ! இன்னும் அங்கேயா இருந்துகொண்டிருப்பாள்? அட சனியனே! அப்படியே இருக்கிறதே அசையாக் கடைபோல! பிறர்க்கு நன்மை செய்யா விட்டாலும் தீமை செய்யாதிருப்பதன்றோ அறம்? மக்கள் விரும்புவதும் அதுதானே? ஒவ்வொரு நாளும் உலகைச் சுற்றி வருகிற இப் பகலோனுக்கு இது தெரியாதா என்ன? தெரிந்தால் நம்மை இங்ஙனம் வருத்துவானா? இல்லை; உணர்வுடை யோர்க் கன்றே அது சாலும்!' அவன் இவ்வாறு தனக்குத்தானே பேசிக் கொண்டு பித்துப் பிடித்தவன் போல் அடிக்கடி பொழுதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மணி நாலாயிற்றோ இல்லையோ-மாடோட்டி வரப் புறப்பட்டு விட்டான். அவள் வருகிறபோதுதானே வருவாள்? இவனுக்காக அந் நேரத்தில் வருவாளா என்ன? வருவதாகச் சொல்லி விட்டா போனாள்? முன்னை நாள் இவனைப் போலவே அவளும் இவனை விரும்பி, இருவரும் காதல் கொண்டு பிரிந்து சென்றிருந் தால், இவனுக்கு முன்னே அவள் வந்திருப்பாள். அவ்வாறு முதல் நாள் எதிர்ப்பட்டுக்காதல் கொள்வதை இயற்கைப் புணர்ச்சி எனவும், இரண்டாம் நாள் இருவரும் அதே இடத்தில் எதிர்ப்படு வதை இடந்தலைப்பாடு எனவும் கூறுவர் அகப்பொருள் நூலார். ஆனால், முதல்நாள் அவள் இவனைக் காதலிக்க வில்லை. அவள் இவனைக் காதலிக்காமல், இவன் மட்டும் அவள்மேல் காதல் கொண்டது ஒரு தலைக்காமம் ஆகும். மணி ஐந்துக்கெல்லாம் வழக்கம்போல் மாட்டைப் பிடித்துக் கொண்டு அங்கு வந்தாள் அவள். இவன் முதல்நாட் போலவே அவள் அருகில் சென்றான். முதல் நாள் செய்த குறிப்புக்களை யெல்லாம் செய்தான். அவள் முதல் நாட் போலவே இவனை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. முன் அசையாது இருந்த இடத்திலேயே இருந்த பொழுது இப்போது இவன் மனத்திலும் விரைவாகச் செல்லுகிறது. போதைப் பார்ப்பதும் போதன்ன அப்பூவையைப் பார்ப்பது மாக இவன், "ஏ! அழகிய பூங்கொம்பே! நறு மணத்தாலும் அழகிய நிறத்தாலும் என் மனத்தை ஈர்த்து என்னை வருத்து கின்றனையே! உனக்கிது தகுமா? அன்றி அறமாகுமா? நீயே சொல்!"என்று முன்னிலைப் புறமொழி கூறினான். அப்போதும் அவள் இவனைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. அவன் மறுபடியும் என்னென்ன வோ கூறினான். மணி ஆறானது. அவள் மாட்டைப் பிடித்துக் கொண்டு புறப்பட்டாள். உடனே இவன், "நீண்டு சுருண்ட கரிய கூந்தலையும், வளைந்த மணிக் கட்டையும், பச்சை மூங்கில்போல நீண்ட மெல்லிய கை களையும், அழகிய குவளை மலர் போன்ற மையெழுதிய காதளவோடிய கண்களையும், பெண்மான் போன்ற பார்வையையும், மாந்தளிர் போன்ற இயற்கை மணமுள்ள மேனியையும், அழகிய ஒளி பொருந்திய பிறைபோன்ற நெற்றியையும் கூரிய மயிலினிற கையும் முல்லை முகையையும் முத்தினையும் போன்ற வெண்பற் களையும், கொடி போன்ற இடையையும் உடையாய்! சிலம்பு கலீர் கலீர் என்றொலிக்க, வளைக் கைகளை வீசிக் கொண்டு எனது உயிரைப் பறித்துக் கொண்டு செல்லும் பெண்ணழகி! சொல் வதைக் கொஞ்சம் கேட்டு விட்டுப்போ"என்றான். அவள் இவன் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாது மாட்டைப் பிடித்துக் கொண்டு முதல் நாட்போலவே போய் விட்டாள். இவனுக்கோ ஒன்றும் தோன்றவில்லை. மறுபடியும் பித்தன்போல் என்னென்னவோ பிதற்றினான். பொழுதும் இவன் துன்ப நிலையைக் காணப் பொறாமல் சென்று விட்டது. என செய்வான் பாவம்! அவனும் மாட்டை ஓட்டிக் கொண்டு வாட்டத்துடன் சென்றான். "ஏன் ஒருவகையாக வாட்டத்துடன் இருக்கிறாய்?" "ஒன்றுமில்லை. ஏனோ உடம்பு ஒரு வகையாக இருக்கிறது!" "என்னிடமா மறைக்கிறாய்? தெரியும் எனக்கு உன் உடல் நோய். அது உடல் நோயன்று; உளநோய்!" "உனக்கு எப்போதும் விளையாட்டுத்தான்!" "விளையாட்டில்லை, உண்மையாகத்தான் சொல்லு கிறேன். அவள் ,இன்னும் பருவமாகவில்லை!" "அப்படியா? பருவமானவள் போல் இருக்கிறாளே?" "இல்லை, இன்னும் பருவமாக வில்லை. எனக்கு நன்றாகத் தெரியும். சில பெண்கள் பருவ மாகாமலே பருவ மானவர்கள் போல் தோன்றுவார்கள். தோற்றத்தைக் கண்டு ஏமாறக் கூடாது. 'தோற்றம் பொய்' என்பது கற்றறிந்த வனாகிய உனக்குத் தெரியாதா என்ன? சிலர் பருவாமாகியும் காமக் குறிப்பு அரும்பாமல் இருப்பார்கள். இவ்விரு வகையினரும் காமஞ்சாலா இளையவர் ஆவர். "இவர் காமக் குறிப்பு அரும்பாதவராகையால், ஆடவர் கூறும் காதற் குறிப்புரையை உணர்ந்து எதிர் மொழி கூறப் பெறார். அதையறிந்து அவர் மேல் கொண்ட காதலை விட்டு விடுவது தான் ஆண்மகனுக்கு அறிவுடைமையாகும். "அவள் காமக் குறிப்பு அரும்பினளாய் இருந்தால் அப்படி ஒன்றுமே பேசாமல் சும்மா சென்றிருக்கமாட்டாள். அவள் ஓர் பெண்ணல்லவா? ஆகையால், அவள்மேற் கொண்ட காதலை விட்டுவிடு!" "அப்படியா! அதுதான் நான் வாய்விட்டுக் கேட்டும் பதில் பேசாது போய் விட்டாளா?" "ஆமாம்; இவ் வொருதலைக்காமமாகிய கைக்கிளையை, "காமஞ் சாலா இளமை யோன் வயிள் ஏமஞ் சாலா இடும்பை எய்தி நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே" என்பர் தொல்காப்பியர்." "இதன் பொருள் என்ன? "காமக் குறிப்பு அரும்பாத இளையாள் ஒருத்தியைக் கண்டு, அவள்மேல் காதல் கொண்டு, அடக்க முடியாத வருத்தம் அடைந்து, தான் ஒன்றும் செய்யவில்லை; அவள் தான் சும்மா இருந்த தன்னை, தனது வடிவழகால் வருத்தினாள் என்று, தான் நன்மை செய்ததாகவும், அவள் தீமை செய்த தாகவும் கூறி, அவளது எதிர் மொழியைப் பெறாது, தான் மட்டும் சொல்லி இன்புறுதலைப் பொருந்தும் ஒருதலைக் காமம் என்பது!" "ஓகோ! இது தொல்காப்பியர் காலத்திலேயே இருந்து வந்ததா? அன்றும் என்போல் இடுக்கணுக்காளானார் பலர் உண்டு போலும்!" "ஆம்; உண்மை என்னவென்றறியாத ஒரு சிலர் உன் போல் நடந்து வந்தனர். அது தகாது என விலக்க எழுந்ததே தொல் காப்பியச் சூத்திரம். இஃதொன்றே தமிழரின் ஒழுக்கச் சிறப்புக்குச் சான்றாகும். இஃதறியார், பழந் தமிழரிடைச் சிறுமியரை மணக்கும் வழக்கம் இருந்து வந்தது என மனமாரப் பொய் கூறுவர். ஒன்றை வேறொன்றாகக் கொள்வது-வேறொன்றாக மயங்குவது-மயக்க அணி எனப் படுவது போல, ஒரு சிலர் அறியாது பருவ முறாதாரைப் பருவ முற்றாராகக் கொண்ட மயக்கத்தால் நேரும் இவ்வொழுக் கத்தினைத் தகாத ஒழுக்கமாக் கொண்டு விலக்கி வந்தனர் நம் முன்னையோர். பிற்காலத் தமிழ் மக்கள் இன்னதென அறிய - அறிந்து விலக்கி யொழுக-சூத்திரம் செய்து வைத்தனர் ஆசிரியர் தொல்காப்பியர். உன் காதற் கருத்தை மாற்றிக் கொள்!" "அவ்வாறே மாற்றிக் கொண்டேன்; நான் என்ன செய்யட்டும்? தன் வடிவழகால் வருத்தினது யார் குற்றம்? அவள் குற்றந்தானே? நானா, குற்றவாளி?" "இல்லை, ஒருவரும் குற்றவாளியில்லை. அது இயற்கையின் குற்றம். இயற்கைதான் குற்றவாளி! 'ஆட்டு வித்தால் யாரேதான் ஆடாதாரே' என்னும் சமயவாதிகளின் கூற்றுக்கு இலக்காயினை நீ! இயற்கையால் தூண்டப்பட்ட நீயும் குற்றவாளியில்லை; இயற்கையாய் வடிவழகமைந்த அவளும் குற்றவாளி அல்லள். இதற்குக் காரணமான இயற்கையே குற்றவாளி"என்று ஆறுதல் கூறினான் நண்பன். அது கேட்ட நம் கதைத் தலைவன் தன் அறியாமைக்கு வெட்கினான். தனக்கு உண்மையை அறிவுறுத்திய நண்பனைப் பலபடப் பாராட்டினான்!  10. ஊமும் செவிடும் ஒரு நாட் காலை பத்தரை மணியிருக்கும். சோழர் தலை நகரின் அறங்கூறவையக் கூட்டம். ஓர் இளைஞன் அவ் வவைத் தலைவனாக வீற்றிருந்தான். அன்று விசாரித்தற் கிருந்த வழக்கிற் குரியோர் இருவரும்-வழக்காளியும் எதிர் வழக்காளியும் - கயல்முள் ளன்ன நரைமுது மக்கள். அம் முதியோர் இருவரும் ஒருவர்க்கொருவர் காதுக்குள் என்னவோ பேசிக்கொண்டனர். வழக்கு விசாரணைத் தொடக்கமணி யடித்தது. ஒருவன் அவ் வழக்காளிகள் இருவர் பெயரையுஞ் சொல்லிக் கூப்பிட்டான். அவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக, "பருவ முதிர்ச்சியும் பயிற்சியும் இல்லாத இவ் விளவலால் எங்கள் வழக்கைக் கேட்டு எங்ஙனம் தீர்ப்புக் கூற முடியும்?"என்றனர். அதுகேட்ட அவைத் தலைவன் திடுக்கிட்டான். தன் இளமை நாணி இடருற்றான். "முதியீர்! இன்று போய் நாளை வாருங்கள்; தக்கார் ஒருவரைத் தலைமை தாங்கும் படி செய்கிறேன்"என்றான். அம்முதியோர் இருவரும் அதற்கிசைந்து சென்றனர். அத்துடன் அவை கலைந்தது. மறுநாள் அவை கூடிற்று நரைத்துத் திரைத்த முதியோன் ஒருவன் தலைமை தாங்கி யிருந்தான். வழக்காளிகளான அம்முது மக்கள் இருவரும் தத்தம் வழக்கை எடுத்துரைத்தனர். அவ் வறங்கூறவை முதுபெருந்தலைவன், இருவர் உரையையும் தெளிவுறக் கேட்டுத் தீர்ப்புக் கூறினான். அம்முதியோர் இருவரும் தங்கள் வழக்கை ஒப்புக் கொண்டதோடு, நடுநிலை தவறாது நன்கு ஆராய்ந்து நல்ல தீர்ப்புக் கூறிய அவ் வவைத் தலைவனின் மதிநுட்பத்தை மனமாரப் பாராட்டினர். அக்கிழத்தலைவன் தான் முடித்திருந்த நரை மயிரையும் தாடியையும் களைந்தான். முதல்நாள் அவைத் தலைமை தாங்கி யிருந்த அவ்விளைஞனே தான் நரை முடித்து வழக்குத் தீர்த்தான் என்பது கண்ட அம்முதியோர் இருவரும் உவந்து, தங்கள் அரசனது அறிவுத் திறனை வியந்தனர். இவ்விளையோன் யார்? அவன்தான் சோழன் கரிகாலன்; சோழ மன்னர்களிற் சிறப்புடையோன்; காவிரிக்குக் கரை கட்டிச் 'சோழவளநாடு சோறுடைத்து' என்னும்படி செய்த தூயோன். "உரைமுடிவு காணான் இளமையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப-நரைமுடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமற் பாகம் படும்" என்று கரிகாலன் அதிமதிநுட்பத்தைப் பாராட்டினான் பழமொழி நானூற் றாசிரியர். இத்தகு நன்னிலையில் இருந்தது அன்றையத் தமிழ்நாடு. அரசனே யெனினும் தகுதியில்லானைத் தகுதி யில்லானெனக் கூறி, நேர்மையை-நெறிமுறையை-நிலை நிறுத்தி வந்தனர் பழந் தமிழ் மக்கள். இன்றுபோல் அக்காலக் குடிமக்களுக்கு அரசியலைப் பற்றி, அரசனைப் பற்றி, ஆள்வோரைப் பற்றி உள்ளது கூற வாய்ப் பூட்டில்லை. அரசனுடைய அத்தாணி மண்டபத்தில், அவன் முன்னிருந்து, 'இளையன், உரைமுடிவு காணான்' என அஞ்சாது கூறும் நிலையைப் பெற்றிருந்தது அன்றையத் தமிழ் நாடு. அத்தகு கடப்பாட்டின் நின்று தமிழ் மரபைக் காத்து வந்தனர் தமிழ் மக்கள். கூடலிறைவன் பாட்டைக் குற்ற முடைத் தென்ன, அன்னான் நெற்றிக் கண்ணைக் காட்ட, 'கோடி கண்ணுறினும் குற்றம் குற்றமே' என அஞ்சாது கூறி நேர்மையை நிலை நாட்டித் தமிழ் வளர்த்தனர் சங்கப் புலவர் என்கின்றது திருவிளையாடற் புராணம். ஆம் அவ்வாறில்லை யெனில் தமிழ் மரபு இன்றும் உயிருடன் இருக்குமா என்ன? அதே காலம். அதாவது கடைச் சங்க காலம். பாண்டி நாட்டில் கொடிய பஞ்சம் வந்தது. மக்கள் பசியால் வாடினர். பாண்டியன் தமிழ்ப் புலவர் பெருமக்களை யெல்லாம் வேறு நாடுகளில் சென்று தங்கியிருந்து, மழை பெய்து நாடு செழித்த பின் வரும்படி வேண்டிக்கொண்டான். புலவர்கள் எல்லோரும்-ஒருவர் கூடப் பாக்கியில்லாமல்-வேறு நாட்டுக்குச் சென்றனர். பன்னீ ராண்டு பஞ்சம் இருந்தது. பின்னர் மழை பெய்து நாடு செழித்தது. அரசன் புலவர்களை அழைத்து வரும்படி பல நாடு கட்கும் ஆட்களை அனுப்பினான். அவர்கள் அவ்வாறே சென்று. எல்லா நாடுகளிலும் தேடி அழைத்து வந்து அரசனிடம், 'எழுத்ததி காரமும் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைக் கண்டு அழைத்து வந்தோம். பொருளதிகாரம் வல்லாரை எங்கு தேடியும் கண்டிலேம்' என்றனர். அரசன் அது கேட்டு, 'எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின பொருட்டன்றோ? பொருளதி காரம் பெறேம் எனில் இவை பெற்றும் பெற்றிலேம்' என்று வருந்தினான். அரசனது கவலையைக் கண்ட ஆலவாய் அண்ணல் அறுபது சூத்திரங்கள் செய்து மூன்று செப்பேடுகளில் எழுதிப் பீடத்தின் கீழ் இட்டான். கோயில் வழிபாடு - பூசை-செய்வோன் கண்டெடுத்து, அவை பொருளதிகாரமாய் இருத்தல் கண்டு, அரசனிடம் கொண்டுபோய்க் கொடுத்தான். அரசன் மிகவும் மகிழ்ந்து, சங்கப்புலவர்களிடம் கொடுத்து உரை காணும்படி வேண்டினான். நக்கீரர் முதலிய சங்கப் புலவர் நாற்பத் தொன்பதின்மரும் அவ்வறுபது சூத்திரங்கட்கும் உரை யெழுதினர். அவற்றுள் யார் உரை உண்மையான உரை என்று அவர்கட்கு ஐயப்பாடு உண்டானது. புலவர்கள் அரசனிடம் சென்று, 'எங்கள் உரைகளில் யாருரை மெய்யுரை என்று கண்டு கூற ஒரு நடுவனைத் தர வேண்டும்' என்றனர். அரசன், 'சங்கப்புலவர் களாகிய தங்கட்கு யான் எங்ஙனம் ஒரு நடுவனைத் தர முடியும்?' என்றனன்.' புலவர்கள் ஆலவாய் அண்ணலை அண்மி வேண்டினர். "இவ்வூர் உப்பூரிகுடிகிழார் மகனான உருத்திரசன்மன் என்னும் மூங்கைப் பிள்ளை ஒருவன் உளான். அவன் பைங் கண்ணன், புன்மயிரன், ஐயாட்டைப் பருவத்தான். அவனை அத்தகையன் என்றிகழாது அழைத்துக்கொண்டு போய், சங்கப் பலகையின் மேலிருத்தி, நீங்கள் கீழிருந்து, உங்கள் உரைகளை உரைத்தால், மெய்யான உரையாயின் கண்ணீர் வார்த்து மெய்ம் மயிர் சிலிர்ப்பான்; மெய்யல்லா உரையாயின் சும்மா இருப்பான்"என்றது ஒரு குரல். புலவர்கள் திருவருளை வியந்து, அச்சிறுவனைக் கொடு போந்து. சங்கப் பலகை மேலிருத்தித் தத்தம் உரையினைப் படித்தனர். அச்சிறுவன் எல்லோருடைய உரைகளையும் படிக்கும் போது சும்மா இருந்து. நக்கீரர் உரையைப் படிக்கும் போது சொற்றொறும் கண்ணீர் வார்த்து மெய்ம்மயிர் சிலிர்த்தான் என்பது இறையனாரகப்பொருளுரை. அவ்வறுபது சூத்திரங்களும் அவ்வுரையுமே இன்று 'இறையனார் அகப் பொருளுரை' என்ற பெயருடன் உள்ளன. இது 'இறையனார் களவியல்' எனவும் வழங்கும். ஐயாட்டைப் பருவத்தான்-ஐந்தாண்டுப் பருவமுள்ள சிறுவன். மூங்கை-ஊமை. ஊமர்கள் செவிடராய் இருத்தல் இயல்பு. எனவே உருத்திரசன்மன் செவிட்டூமை என்பது பெறப் படும். பைங்கண்ணன், புன்மயிரன், என்பதால், அப்பிள்ளை நன்மக்கட் பிறப்பன்று; அருவருக்கத் தக்க புன்பிறப்பு என்பது விளங்கும். செவிட்டுப் பிள்ளைக்குப் புலவர்கள் உரைத்த உரை எங்ஙனம் கேட்கும்? கேளாமல் எப்படி இது பொய்யுரை, இது மெய்யுரை என்பதை அறிந்துகொள்ள முடியும்? அதுவும் என்ன வெறும் பாட்டுரையா? இலக்கண உரை. அஃதும் களவியலுரை. மேலும், பரந்துபட்ட அகப்பொருளைச் சுருக்கித் தொகுத்துச் செய்த சூத்திரங்களின் உரை! கேளாக் காதையுடைய அவ்வூமைப் பிள்ளைக்கு எங்ஙனம் புரிந் திருக்கும்? அதுவும், பள்ளிப் பருவத்தைக் கூட அடையாத இளம்பிள்ளையல்லவா அவன்? மேலும், 'அன்பின் ஐந்திணை' என்ற மூன்றடியுள்ள முதற் சூத்திரத்திற்கு முப்பத்து நாலுபக்க உரை. இரண்டடியுள்ள இரண்டாவது சூத்திரத்திற்கு இருபத்திரண்டு பக்க உரை. இத்தகைய அகல உரையை அப்புன்பிள்ளை எங்ஙனம் புரிந்து சொற்றொரும் கண்ணீர் வார்த்து மயிர்க்கூச் செறிந் திருக்கக் கூடும்? இங்ஙனம் ஐயுறா திருக்கவே, 'அவன்குமார தெய்வம். ஆங்கோர் சாபத்தினால் தோன்றினான்' என்னும் தடையுரையும், அக்குமரன் தந்தை என்னும் இறைவனாலேயே கூறப்பட்டுள்ளது. தகப்பன் சாமிக்கு யாரிட்டார் சாபம்? படைத்துக் காத்தழிக்கும் எல்லாம் வல்ல கடவுளுக்கே சாபம் என்பதன் உட்கருத்தென்ன? சிவபெருமான் உமையவளுக்குச் சிவஞான போதத்தை ஓதினானாம். அவ்வம்மையார் அதைச் சரியாகக் கவனிக்க வில்லையாம். அதனால் சினங்கொண்ட சிவன் அவ் வம்மையை வலைச்சியாகப் பிறக்கக் கடவை எனச் சபித்தானாம். அது கண்ட முருகன், தாயின் சாபத்துக்குக் காரணமான அவ் வேட்டை எடுத்துக் கிழித் தெறிந்தானாம். அதனால், சிவபெருமான் இவ்வாறு மூங்கைப் பிள்ளையாய்ப் பிறக்கவெனச் சபித்தனன் என்கின்றது ஒரு புராணம். அருளுருவான சிவபெருமானின் சினத்தின் பெருமையைப் பார்த்தீர்களா? நிற்க, தமிழ் இலக்கணத்திற்கு மெய்யுரை காண்பதற்கு ஊமும் செவிடுந்தானா கிடைத்தது? வாய்பேசும் தமிழ்ச் சிறுவன் ஒருவன் கிடைக்கவில்லையோ? தருமி என்னும் பார்ப்பன இளைஞனின் வறுமையைப் போக்கப் பொற்கிழி வாங்கித் தரத் தான் எழுதிய 'கொங்குதேர்வாழ்க்கை' என்னும் ஒரு பாட்டிற்குக் குற்றங் கூறிய நக்கீரர்பால், அப்பாட்டின் மெய்யுரையை-குற்றமின்மையை-விளக்கத் தமிழ்ப் புலவன் போல் வரிந்து கட்டிக்கொண்டு வந்த ஆலவாய் இறைவன், தான் எழுதிய மிகமிக இன்றியமையாத, தமிழ் மொழியின் குறைபாட்டையே தீர்க்க எழுந்த, அறுபது சூத்திரங் கொண்ட பொருளிலக்கணத்தின் மெய்யுரையை விளக்கத் தானே முன்வரலாமே? தன் பிள்ளையான மூங்கைப் பிள்ளையைக் காட்டி வாளா இருந்ததேன்? தருமியின் இன்மையைவிடத் தமிழின் குறையைத் தீர்த்தல் அவ்வளவு புறம்பானதா, இன்னார் உரை மெய்யுரை என்று இறைமொழி மூலமே கூறியிருக்கலா மல்லவா? இனி, மெய்யுரை காண நடுவரை வேண்டிச் சங்கப் புலவர்கள் ஆலவாய் அண்ணலை நோக்கித் தவங்கிடக்கா விட்டால் வேறு தமிழ்ப் புலவர்களா தமிழ் நாட்டில் இல்லை. அதே இறையனாரகப்பொருளுரை கூறும் கடைச்சங்க நூல் களான-நெடுந்தொகை நானூறும் (அகநானூறு), குறுந் தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறு நூறும், பதிற்றுப் பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும் பாடிய நானூறு புலவர் பெருமக்களில் ஒருவர் கூட மெய்யுரை காணத் தகுதியுடைய ரல்லரா? அல்லதூஉம், சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின் மரில் ஒருவர் கூட அதற்குத் தகுதியுடையரல்லரா? அவர்கள் எல்லோருமே படித்துப் பார்த்து இதுதான் மெய்யுரை யென்று தேர்ந்தெடுத் திருக்கலா மல்லவா? ஒவ்வொருவரும் தத்தம் உரைதான் சிறந்தது என்றனர் எனில், அப்புலவர்கள் புலவர் என்னும் பெயருக்குத் தகுதியுடையர் அல்லர் என்பதன்றோ பெறப்படும்? மேலும், இந்நாற்பத் தொன்மதின்மரில் பொருளதிகாரம் வல்ல புலவர் ஒருவர் கூட இல்லையல்லவா? பொருளதிகாரப் புலவர் கிடைக்கப் பெறாமையினாற்றானே இறைவனால் இவ் வறுபது சூத்திரங்களும் செய்து தரப்பட்டன? பொருளதிகார அறிவில்லாத இவர்கள், பொருளிலக்கணந் தெரியாத இவர்கள், எங்ஙனம் தொகுத்தெழுதப்பட்ட அப்பொருளிலக்கணச் சூத்திரங் கட்கு உரை எழுத முடியும்? பொருளிலக்கண மறியார் எழுதிய பொருளிலக்கண உரை எங்ஙனம் மெய்யுரையாகும்? எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம், பொருளிலக்கணம். யாப்பிலக்கணம் அணியிலக்கணம் என்னும் ஐந்திலக் கணமும் ஐயந்திரிபறக் கற்றவரே புலவர் எனப்படுவர். இவ் வைந்திலக் கணப் புலமையும் உடையவரே புலவராவர். எழுத்திலக்கணப் புலவரும் சொல்லிலக்கணப் புலவரும் யாப்பிலக்கணப் புலவரும் கிடைத்தனர்; பொருளிலக்கணப் புலவர் கிடைத்திலர் என்பது பொருளற்ற வுரையாகவன்றோ உள்ளது? எழுத்ததிகாரம் மட்டும் அறிந்தவர் எங்ஙனம் புலவராவர்? எழுத்தறியாமல் சொல்லிலக் கணம் அறிவதெப்படி? எழுத்திலக்கணம் மட்டும் அறிந்த புலவரின் தமிழ்த் தொண்டுயாது? இது பாட்டிகள் சிறுபிள்ளை களுக்குச் சொல்லும் பூச்சாண்டிக் கதை போலல்லவோ இருக்கிறது? இக் கட்டுக்கதை, தமிழரை, தமிழ் மொழியைப் பழிப் பதற் கென்றே, வேண்டுமென்றே எழுதப்பட்ட தென்பதில் சிறிதும் ஐயமில்லை. தெய்வத் தன்மை கற்பித்துத் தமிழர் புலமையைத் தாழ்த்திக் கூற எழுதப்பட்ட பொய்க்கதை யேயாகும் இது. இதை உண்மை யென்று நம்பி, மாணவர் பாடநூல்களிற் சேர்க்கும் தமிழ் நூலாசிரியர் நிலைக்குத்தான் இரங்க வேண்டியிருக்கிறது! இவ் வூமைப் பிள்ளை கதை இத்துடன் நிற்கவில்லை. தமிழர் பெருமைக்குச் சான்றாக வுள்ள, தமிழர் வாழ்க்கைச் சட்ட நூலாகிய திருக்குறளுக்கு மெய்யுரை கண்டதும்-திருக்குறளை நல்ல நூலென்று தேர்ந்தெடுத்ததும்-இம்மூங் கைப் பிள்iய யாம் என்பதைக் கேட்டால் நீங்கள் வியப்புறுவீர்க ளல்லவா? ஆம், வியத்தகு செய்திதான்! வள்ளுவர் தம் குறளை அரங்கேற்ற மதுரைக்குச் சென்றார். அக்குறள் அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கத் தகுதியுடையார் யார் என்னும் ஐயம் எழுந்தது. உடனே, "திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோ டுருத்தகு நற்பலகை யொக்க இருக்க உருத்திர சன்மன் எனவுரைத்து வானில் ஒருக்கவோ வென்றதோர் சொல்" என ஒரு குரல் எழுந்தது என்பது திருவள்ளுவ மாலை. இது அசரீரி பாட்டென்றே குறிக்கப்பெற்றுள்ளது. என்னே பொருள் பொதிந்த பொய்க் கூற்று? கடைச் சங்கப் புலவர் தலைவராகிய நக்கீரர் இருக்க, தலைமை தாங்கத் தகுதியுடையார் யாரென ஏன் ஐயந் தோன்ற வேண்டும்? தலைமை தாங்குவதைவிடத் தலைவருக்கு வேறு என்ன வேலை? சங்கத்தலைவர் என்ன பாவை மன்றத் தலைவரா? பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய சங்க மருவிய நூல்களெல்லாம் சங்கத் தலைவர் தலைமையில் தானே அரங்கேற்றப் பட்டன? சங்கத் தலைவர் தலைமையில், சங்கப்புலவர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட செய்யுட்கள் தானே சங்கச் செய்யுட்கள்? இது திருக்குறளின் பெருமையைக் குறைக்க எழுந்த பொய்க் கதையே யாகும். வள்ளுவரின் நுண்மாண் நுழை புலத்திற்கு உண்டாக்கிய மாசேயாகும், தெய்வத்தன்மை கற்பித்துத் தமிழர் திறனை, அறிவாற்றலைக் குறைத்துக் காட்ட இட்டுக் கட்டிய பொய்க் கதையேயாகும். இன்னும் அப் பாடலைத் திருக்குறளுடன் ஒன்றாகப் பதிப்பித்தல் தமிழர்க்கு மானக்கேடேயாகும். இறையனாரகப்பொருளின் மெய்யுரையைத்தான் கண்ணீர் வார்த்தும் மயிர்க்கூச் செறிந்தும் காட்டியது அம் மூங்கைப் பிள்ளை. நாற்பத்தெட்டுரைக்கும் சும்மா இருந்து நக்கீரர் உரைக்கு மட்டும் அழுதது அம் மூங்கை திருக்குறள் ஒவ்வொன்றுந் தான் மாசிலா மணியாயிற்றே? 1330 குறளுந் தானே அரங்கேறி யுள்ளன? வள்ளுவர் ஒவ்வொரு குறளைப் படிக்கும் போதும், படித்துப் பொருள் கூறும் போதும் அம் மூங்கை அழுது கொண்டே யன்றோ இருந்திருக்கும்? இப்படியுமா கதை கட்டித் தமிழர் பெருமையைத் தாழ்த்த வேண்டும் பாவம்! மதுரைத் தமிழ்ச் சங்கத்தில், திருவள்ளுவர் திருக்குறளை அரங் கேற்றியதும், அரங்கேற்றம் முடிந்ததும், நாமகளும், பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும், இடைக்காடரும், ஒளவை யாரும், சங்கப்புலவர் 49 பேரும் திருக்குறளையும், திருவள்ளு வரையும் சிறப்பித்து, பலபடப் பாராட்டி, வெண் பாக்களால் மதிப்புரை வழங்கியதாகவும். அப்பாடல்கள் 53-ம் திருவள்ளுவ மாலை என்னும் பெயருடன் வழங்கிவருகின்றன.* ஆனால், தலைமை தாங்கிய உருத்திர சன்மன் திருக் குறளைப்பற்றி, திருக்குறளின் சிறப்பினைப்பற்றி ஒன்றும் குறிப்பிட்டதாகக் காணவில்லை. கண்ணீர் வார்த்து மெய்ம் மயிர் சிலிர்த்ததாகவும் கதையில்லை. தலைவர் முடிவுரை தானே அரங்கேற்றத்தின் முடிவாகும்? தலைவர் முடிவுரை யில்லாத அரங்கேற்றம் எங்ஙனம் அரங்கேற்றமாகும்? ஊமைத் தலைவரானதால் பேசமுடியா தெனில், கைகளால் குறிப்புக் காட்டியிருக்கலா மல்லவா? அதைச் சங்கப் புலவரிலொருவர் பாட்டாகப் பாடியிருப்பரன்றோ? இவ் வுருத்திர சன்மன் கதை இத்துடன் நிற்கவில்லை. தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் தமிழினத்தையும் எவ்வளவு இழிவுபடுத்த வேண்டுமோ அவ்வளவு இழிவு படுத்துகிறது. தமிழினத்தைத் தாழ்த்துவதற்காகவே தோற்று விக்கப் பட்டதாகும் இவ்வூமன் கதை. சங்கப் புலவர்கள் நாற்பத்தொன்பதின்மரும் செய்யுட்கள் செய்து, அவரவர் செய்த செய்யுட்களே சிறந்தவையெனத் தருக்குற்று ஒருவருக்கொருவர் மாறுபட்டனர். முடிவில், ஆலவாயின் அழல் நிறக் கடவுளை அடைந்து, நல்ல செய்யுட்களைத் தேர்ந்தெடுத்துத் தரும் படி வேண்டினர். அப்போதும் இறைவன் இம் மூங்கைப் பிள்ளையினையே நடுவனாகத் தந்தான். அச் செவிட்டூமை நக்கீரர், கபிலர், பரணர் ஆகிய மூவர் செய்யுட் களையே தேர்ந்தெடுத்தது என்கின்றது பரஞ்சோதியார் திருவிளை யாடற் புராணம். சில புலவர்கள் சொல்லையும் பொருளையும் இகழ்ந்த தாம் அவ்வூமு. இஃதுண்மையானால், அம்மூவரு மல்லாத மற்ற 46 சங்கப் புலவர்களால் செய்யப்பட்டன எனப்படும் புறநானூறு, அகநானூறு முதலிய சங்க நூல்களிலுள்ள செய்யுட்கள் படிக்கத் தகுதியற்றவை என்றல்லவோ படும்? தமிழையும் தமிழ்ப் புலவர் களையும் இவ்வாறா இகழ்வது? சங்கப் புலவர்கள் எழுதிய அகப்பொருளுரையைத் தேர்ந் தெடுக்க, சங்கப் புலவர்கள் செய்த செய்யுட்களைத் தேர்ந்தெடுக்க, திருக்குறள் அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்க இவ்வூமுஞ் செவிடுந்தானா கிடைத்தது. இதை விடத் தமிழர்க்கு என்ன இழிவு வேண்டும்? உருத்திரசன்மன் கதைபோன்ற பொய்க்கதைகள் தமிழ் இலக்கியங்களில் பலப்பல உள்ளன. அவை தமிழின் பெருமையை, தமிழர் பெருமையை உள்ளது உள்ளபடி உணர முடியாது மறைத்துக்கொண்டிருக்கின்றன. அம் மாசுகளை யகற்றித் தமிழர் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டுதல், தமிழுக்குத் தலைமை பூண்டிருக்கும் தமிழ்த் தலைவர்கள். தமிழ்த்துறைத் தலைவர்கள் தலையாய கடமையாகும். ஆனால், தமிழர் தலைவர்கள், தமிழ்த்துறைத் தலைவர்கள் தம் கடமையை உணர்ந்து செய லாற்றுவதாகத் தெரியவில்லை. தமிழின் பெருமையை உலகுக்கு, தமிழர்க்கு எடுத்துக் காட்டும்பணியை அவர்கள் மேற்கொள்ள வில்லை; அப்பொய்க்கதைகட்கு மேலும் மெருகிடும் வேலையில் முனைந்து நிற்கின்றனர்; பாவம்! காரணம், அச்சமேயாகும். அச்சத்திற்குக் காரணம் உண்மையை எடுத்துரைக்கும் நெஞ்சுரம் இன்மையே. நெஞ்சுரம் இன்மைக்குக் காரணம் உண்மையான தமிழுணர்ச்சி தமிழினவுணர்ச்சியின்மையேயாகும். தமிழ்த் தலைவர்களுக்கு என்று உண்மையான தமிழு ணர்ச்சியுண்டாகுமோ அது காறும் தமிழ்மொழி ஊமும் செவிடும் உண்மையுரை காணும் இழிநிலையிலேயே இருந்துவர வேண்டியதுதான்! அதுகாறும் தமிழ் இளைஞர்கள் மூங்கைப் பிள்ளை கதை போன்ற கதைகளை நம்பி, தமிழின் பெருமை, தங்கள் முன்னோர் பெருமையை உள்ளபடி உணராது இருக்க வேண்டியதுதான்! என்று தமிழர்க்கு நல்ல காலம் வருமோ! (1961-லும்) உண்மையை எடுத்துக் கூற அஞ்சும் நிலையில் தமிழர் இருக்கையில், ஊமும் செவிடும் வாழ்க!  11. ஒருநாள் இரவு ஒருநாள் இரவு பத்து மணியிருக்கும். ஒரு மருத நிலத்தூர். அவ்வூரைச் சுற்றிலும் உள்ள வயல்களில் நெல்லும் கரும்பும் வாழையும் மஞ்சளும் செழித்துப் பொலிந்து அவ்வூரின் அழகுக் கழகு செய்தன. அவ்வூரில் ஒரு செல்வமனை. அஃதொரு மதிதவழும் மாடிவீடு. அம் மனையாட்டி ஓர் இளம்பருவ மங்கை; மயில் போன்ற சாயல்! மதிபோன்ற முகம்! மலர் போன்ற இதழ்! உயிரோவியம் போன்ற எழிலுருவம்! அவள் ஏனோ ஒருவகை யாக, மனக்கவலையுடன், தனியாகப் பஞ்சணையில் படுத்துக் கொண்டிருந் தாள். கதவு திறந்தபடியே இருந்தது. மின்விளக்கு எரிந்து கொண் டிருந்தது. அவள் ஏனோ படுக்கை கொள்ளாமல் அங்கு மிங்கும் புரண்டு படுத்த வண்ணம் இருந்தாள். அவள் கண்ணும் காதும் கதவண்டை சென்று யாரோ ஒருவருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. அவள் ஏனோ இருந்தாற்போல் சடக்கென்று முகந் தெரியாமல் போர்த்துப்படுத்தாள், அவ்வளவுதான்! அவள் கணவன் அங்கு வந்தான். அவள் அசைவற்றுத் தூங்குபவள் போலப்படுத்திருந்தாள். கணவன் கட்டிலினருகே சென்றான்; சற்றுத் தயங்கினாற் போல் நின்றான். பின் அவன், 'ஏன் பேசவில்லை? இதற்குள்ளா கவா தூக்கம்? எழுந்திரு. மணியென்ன, பத்துத்தானே ஆகிறது?' என்று முகமூடியை எடுத்தான். 'இஃக்' என்று அவள் மறுபடியும் முன்போல இழுத்துப் போர்த்துக் கொண்டாள். 'ஒந்திப்படு' என்று, அவன் கட்டிலின்கண் உட்கார்ந்தான். ஆனால் அவள் அவ்வாறாறு செய்யாமல், பொசும் பொசென்று பெருமூச்சு விட்டாள். அவனுக் கொன்றுமே புரியவில்லை. 'ஏன்? உடம்புக்கென்ன?' என்று தலையைத் தொட்டான். 'போதும்' என்று அவள் மறுபக்கம் திரும்பிப்படுத்தாள். 'யாரென்ன சொன்னார்? உண்மையைச் சொல்' என்று நெற்றியை நீவினான். 'ஒன்றுமில்லை, என்னைத் தொடாதீர்' என்று சடக்கென்று எழுந்து கட்டிலின் ஒரு பக்கமாக உட்கார்ந்தாள். 'ஏன்? தொட்டால் என்ன தீட்டா ஒட்டிக்கொள்ளும்? காரணம்?' என்றான் காதலன். 'காரணம்! எதற்காக அவ்வளவு ஆடம்பரமாகத் தெருவில் செல்ல வேண்டும்? நான் மாடிமேல் நின்று பார்த்தேன். அம்மாடி! எல்லாப் பெண்களும் கண்கொட்டாமல் தங்களை யே பார்த்தனர். இதற்குத்தான் திருவிழா நடத்துகிறார் களாக்கும்! சீத்திருத்தக் காரர்கள் சொல்வதில் தப்பென்ன இருக்கிறது? திருவிழாவாம் திருவிழா! நல்ல திருவிழா! அப்பருவ மங்கையர் பார்த்துக் கழித்த மிச்சிலாகிய (எச்சில்) உம்மை நான் தொடமாட்டேன்' என்று ஓர் ஓரமாகத் தள்ளி உட்கார்ந்தாள். 'அட பாவமே! நான் தெருவில் என்போக்கில் சென்றேன். அவர்கள் என்னைப் பார்த்திருக்கலாம். அதற்கு நானென்ன செய்யட்டும்? அது என் குற்றமல்லவே நான் வருகிறேன். என்னை ஒருவரும் பார்க்காதீர்கள்' என்று முன்னாடியே சொல்லிவிட்டா சென்றிருக்கட்டும்? நான் என்ன? நீ சென்றாலும் பார்க்கிறவர் பார்க்காமலா இருப்பர்? பார்ப்பதுங் குற்றமா' என்றான். அவள் ஒன்றும் பேசாமல் அப்படியே உயிரோவியம் போல் உட்கார்ந்திருந்தாள். வாய் பேசாப் போட்டியின் வெற்றிப் பரிசாக அவள் கண்கள் அவளுக்கு ஒளிமுத்து மாலையணிந்தன. காலமோ முன்பனிக் காலம். இரவு பத்து மணி வரையிலும் பனியில் நனைந்ததால் அவன் தும்மினான். ஊடல் நீங்கி, 'நீடுவாழ்க' எனத் தன்னை வாழ்த்தவேண்டும் என்று எண்ணித் தும்மினான் எனக் கொண்டு அவள் மேலும் புலந்தாள். (புலவி-ஊடல்-மனவேறுபாடு).அவன் எவ்வளவோ முயன்று பார்த்தான். அவள் பேசவே இல்லை. அப்புலவிப் போரில் புறங்காட்டிய தலைவன், செய்வதறியாது செயலற்றிருந்தான். அவன் திருவிழாக் காட்சி கண்டு களித்து வந்தவனல்லவா? விழாவுக்குச் சென்றோர் வெறுமனேயா வீடு திரும்பி வருவர்? ஏதாவது வாங்கி வருவது இயல்பல்லவா? அதற்காகத்தானே திருவிழாக் காலத்தில் அத்தனை கடைகள் வைத்திருக்கிறார்கள்? திருவிழாக்காட்சி கண்டு களிக்கச் சென்ற நமது தலைவனும் சும்மா வரவில்லை. அவன் மார்பில் விளங்கிய வேங்கை மலர் மாலை அவள் கண்ணிற் பட்டது. உடனே அவள் கண்கள் சிவந்தன. முகமும் உடன் சிவந்தது. செந்தாமரை மலர் போன்ற அவள் முகம் அம்மலரை வென்றது. கெண்டைமீன் போன்ற அவள் கண்கள் கோவைப் பழம் போலாயின. வெடுக்காக. 'எதற்காக இன்று புதிதாக இக்கோட்டுப் பூவைச் சூடினீர்? தாமரை, குவளை முதலிய நம் மருத நிலப் பூக்கள் இல்லையா? நும் காதலி ஒருத்திக்கு இப் புதுப்பூ வணியைக் காட்டுவதற்காகச் சூடினீர் என்பது எனக்குத் தெரியும்!' என்று வெறுப்புணர்ச்சி மேலிட வெகுண்டு கூறினாள். 'இல்லை கண்ணே! பூக்கடைக்காரன் அழகான பூ என்று அன்பாகக் கொடுத்தான். அவ்வழகை உனக்குக் காட்டுவதற் காகத்தான் வாங்கிச் சூடினேன். நீ பார்த்து மகிழுவதுதானே எனக்கு இன்பம்; உன்னைவிடக் காதலுடையார் யார் எனக்கு?' என்று தேற்றுவான். மனைவியின் ஊடலைத் தணிப்பான். காதலு டையார் யாரினும் நாம் மிக்க காதலை யுடையோம் என்பான் - நாம் யாரினும் காதலம்' - என்றான். அவ்வளவு தான்! 'என் காதலியர் பலரினும் நான் உன்னிடத்து மிக்க காதலுடையேன் என்று அவன் சொன்னதாகக் கொண்டு. 'யாரினும் யாரினும்' என்று சீறி விழுந்தாள். 'என் காதற்களஞ்சியமே! கற்பின் பெருந்துணையே! நீ தப்பாக எண்ணி விட்டாய். நான் அவ்வாறு சொல்லவில்லை. உலகத்திலுள்ள காதலர் எல்லாரிலும் நாம் மிக்க காதலுடை யோம் என்றேன். உனக்கது அப்படிப் பொருள் பட்டது. தப்பாக எண்ணாதே. அவ்வெண்ணத்தை மாற்றிக்கொள்' என்று அவன் அவள் நெடுங்கருஞ் சுரிகுழலை நீவினான். அது அவள் சினத்தீக்கு மண்ணெண்ணெய் போலானது. மதிமுகம் என்பதை விட்டு. இனி எரிமுகம்! என்று உவமை கூறும்படி அவள் முகம் விளங்கிற்று. கண்ணும் எரியை உவமை யாக்கிக்கொண்டது. அவ்வெரிவிழி கண்ட அவன், 'என் அன்பே! ஆரமிழ்தே! அருந்தமிழ் மொழியே! என்னிடம் கொண்ட ஐயத்தை விடு, எதற்காக உனக்கு இத்தகைய ஐயம்? உறுதியாகச் சொல்லுகிறேன். இப்பிறப்பில் நாம் ஒரு போதும் பிரியோம்' என்றான். 'அப்புறம்! மறுமையில் பிரிந்து விடுவீர். நாம் உயிரோ டிருக்கும் மட்டுந்தான் நாம் காதலர்? நான் இறந்தபின் என்னை நும் காதலி என்று சொல்லுதலை நீர்விரும்ப வில்லை போலும்! இது தானா ஆடவர் கொள்ளும் உண்மைக் காதலென்பது? நான் இதுநாள்வரை அறியாது போனேனே. நல்ல காதல், வெல்லம் போட்ட காதல்' என்று கண்கலங்கிக் கண்ணீர் உதிர்த்தாள். அவன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, 'என் இன்ப வாழ்வே! என்ன? நான் எது சொன்னாலும் தப்பாகப் பொருள் கொள்கிறோயே? இப்பிறப்பில் நாம் பிரியோம் என்றால் மறுமையில் பிரிவோம் என்பது பொருளா? மறுமை என்பது என்ன? நாம் இறந்த பின்னர் இங்குள்ளோர் நம்மைப் பற்றிப் பேசுவது தானே? நம்மை இணைபிரியாக் காதலர் என்னாமல்' தனித்தா பேசுவர்? இனி எப்போதும் பிரியோம் என்னும் கருத்துடன் அவ்வாறு கூறினேன். இது உண்மை. பொய்யன்று எனப் பலகூறி ஊடல் தீர்ப்பான், தன் கூற்றுக்குத் துணையாக, 'சென்ற மாதம் நான் உன்னைப் பிரிந்து சட்ட மன்றக் கூட்டத்திற்காகச் சென்னை சென்றே னல்லவா? சட்டமன்றக் கூட்டத்தில், 'கல்லூரிகளிலும் தமிழிலேயே எல்லாப் பாடங் களையும் கற்பிக்க வேண்டும். அப்போது தான் தமிழ் தழைத்து வளரும்' என்னும் தீர்மானம் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போதுகூட உன்னை அடிக்கடி நினைத்தேன்' என்றான். 'அப்படியா! அப்போ அன்று பிரிந்து செல்லும்போது, 'உன்னை மறவேன்' என்ற தெல்லாம் என்னை ஏமாற்றுவதற்காகக் கூறியது தானோ? மறந்திருந்தால் தானே நினைக்க வேண்டும்? மறவாமல் இருந்தால் நினைக்க வேண்டிய வேலையில்லையே!' என்று ஊடலானாள். ஒருமணி நேரம் அமைதியாகக் கழிந்தது. இன்னசெய்வ தென்று தோன்றாத நிலையில் இருந்த தலைவன் தும்மினான். ஊடலை மறந்து, 'நீடு வாழ்க' எனத் தலைவி வாழ்த்தினாள். அவ்வாறு வாழ்த்தினவள் அதே வாயால், 'நும்மை நினைத்து வருந்துகின்ற நும் காதலியரில் எவள் நினைத்ததால் தும்மினீர்?' என்று தேம்பித்தேம்பி அழுதாள். 'என் ஆருயிரே! உன்னைவிட எனக்கு வேறு காதலியர் யார்? என் உள்ளங்குடி கொண்ட உயிரோவியமே! ஏன் இப்படித் தப்பாக எண்ணுகிறாய்? இக் கெட்ட எண்ணம் உனக்கு உண்டா கலாமா? இது நம் ஒருமை வாழ்வுக்கு ஊறு செய்யு மல்லவா? பனியில் நெடுநேரம் இருந்ததால் தும்மல் வருகிறது. நீ வேறு வகையாக எண்ணாதே' என்று பல சொல்லி ஊடல் தணிக்கும் போது மறுபடியும் தும்மல் வந்தது. தும்மினால், நும் காதலியருள் யார் நினைத்ததால் தும்மினீர் என்று மறுபடியும் ஊடுவாளென்று அஞ்சிய தலைவன் அத் தும்மலை அடக்கிக் கொண்டான். அது கண்ட தலைவி, 'நும் காதலியர் நும்மை நினைப்பதை என்னிடம் மறைக்கின்றீர். ஒருவர் நினைக் காமல் சும்மா தும்மல் வருமா?' என்று மறுபடியும் அவ்வாறே தேம்பித் தேம்பி அழுதாள். 'ஒருவர் நினைத்தால்தான் தும்மல் வருமா? இது பெண்டி ராகிய உங்கள் வழக்கம். பனியில் நனைந்ததால் சளிப் பிடிக்கும் போல் இருக்கிறது. அதனால், அடிக்கடி தும்மல் வருகிறது. போன வாரம் சளிப்பிடித்து நீ அடிக்கடி தும்மிக் கொண்டே இருந்தாயே பிறர் நினைத்தா தும்மினாய்? உன்னை நினைத்தவர் யார்? உனக்குள்ளதுதானே பிறர்க்கும் இருக்கும்? 'தனக்குள்ளது பிறர்க்கும் உண்டு' என்னும் பழமொழியை நீ அறியாதவளா? மணி ஒன்றரைக்குமேல் ஆகிறது. இல்லாத ஒன்றை உண்டு என்று எண்ணும் இந்த எண்ணத்தை விட்டுவிடு' என்று அவள் கூந்தலை நீவினான்; நெற்றியைத் துடைத்தான்; கன்னத்தைத் தடவினான்; கண்களை உறுத்தினான்; தோள்களைப் பிடித்தான்; முதுகை மெல்லச் சொறிந்தான்; கால் களைப் பிடித்தான். அவ்வளவிலும் அவள் ஊடல் தணியவில்லை. முடிவில் அவள் அடிமலரைப் பணிந்தான். நடந்ததென்ன? 'நான் சொன்னது சரியாகப் போயிற்றா? எனக்குத் தெரியுமே நுமது நடவடிக்கை, நும் காதலியர் ஊடிய போது நீர் இப்படித் தானே பணிந்து அவர்கள் ஊடலைத் தணித்திருப்பீர்? பணிந்து பணிந்து பழக்கம். இது ஒரு நாளில் இயல்வதா?' என்று கடுஞ்சினங் கொண்டாள். என்செய்வான் பாவம்! தன்குற்றத்தை ஒப்புக் கொண்டு பணிந்தான். அப்பணிவு அவள் புலத்தற்குக் காரணமாயிற்று. இனிச் செய்வ தென்ன இருக்கிறது? அவன் சொல்லும் செயலும் அவளிடம் பயன்படாமையால் பேசாமல் அவளைப் பார்த்த படியே இருந்தான். வேறு என்ன செய்வான் பாவம்! பணிந்தும் பார்த்தாகிவிட்டது. ஆனால், அப்படிச் சும்மா இருந்ததும் அவள் புலவியைத் தூண்டிவிடுதற் கேதுவாயிற்று. 'என் உறுப்புக்களை யெல்லாம் எதற்காக இப்படி உற்று நோக்குகிறீர்? என் உறுப்புக்கள் எவள் உறுப்புக்கள் போல் இருக்கின்றன என்று ஒப்பிட்டுப் பார்க்கிறீரா? என் கண் எவள் கண்போல் இருக்கிறது? என் இதழ் எவள் இதழ்போல் இருக்கிறது? நன்றாகப் பாரும்' என்று வெகுண்டாள். அதற்குள்மேல் அவன் செய்வதற்கு என்ன இருக்கிறது? சும்மா இருப்பதுங் குற்றமானால் ஒருவன் குற்றமற்றவனாய் நடந்து கொள்வ தெப்படி? எவ்வாறு அவள் ஊடலைத் தீர்ப்ப தென்பது அவனுக் கொன்றும் புலப்படவில்லை. அதன்பின் அவன் என்ன செய்திருப்பான் சொல்லுங்கள் பார்க்கலாம்...? பெண்ணின் பெருமையைப் பார்த்தீர்களா? நம் காதலர்க்கு அவ்வாறு கழிந்தது அவ்விரவு, இவர்களுக்கு மட்டுமா? உலகில் இன்னும் எத்தனை காதலர்களுக்கு அவ்விரவு அவ்வாறு கழிந்த தோ யார் கண்டார்? இதைப் படித்ததும், திருக்குறள் 132-வது 'புலவி நுணுக்கம்' என்னும் அதிகாரத்தைப் படியுங்கள். அப்புறம் வேண்டுமானால் இக்கட்டுரையை மறுபடியும் ஒருமுறை படித்துப் பாருங்கள். மறுபடி ஒரு முறை புலவி நுணுக்கம் என்னும் அவ்வதிகாரப் பத்துக் குறளையும் படித்தே தீருவீர்கள். அதன்பின் திருக்குறளின் பெருமையையும், பழங்காலத் தமிழ் மக்களின் காதல் வாழ்வையும் எண்ணிப்பாருங்கள். வேண்டுமானால் இக்காலத் தமிழர் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். வாழ்க நம் காதலர்!  12. வள்ளுவன் வாயது 'தமிழுக்குக் கதியாவார் இருவர். அவர்தாம் கம்பரும் திருவள்ளுவரும். 'கதி' என்னும் சொல்லிலுள்ள க-கம்பரை யும், தி-திருவள்ளுவரையும் குறிக்கும்' என்பது, சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் காலஞ் சென்ற திரு. செல்வக்கேசவராய முதலியார் அவர்களின் ஆய்வுரை. அன்று திருக்குறள் தமிழ்மக்களிடையே அந்நிலையினில் இருந்துவந்தது. வள்ளுவரை, கம்பருடன் இணைத்துத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் காலம் அது. எங்கு ஒரு சொற் பொழிவு நடக்கிறதென்றாலும் அது கம்பராமாயணச் சொற் பொழிவாகத்தான் இருக்கும். அன்று தமிழாசியர் பலர் இதை ஒரு துணைத் தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர். கம்பர் கவிநயங்கூறத் தெரியாதவர் தமிழ்ப் புலவராக மதிக்கப் படார். பேச்சாளர் பேச்சுக்கிடையே இரண்டோரு திருக்குறளை எடுத்துக் காட்டுவர். அவ்வளவுதான் அன்று திருக்குறளின் நிலை! தனித் திருக்குறட் சொற்பொழிவு அன்றில்லை. திருக்குறளுக்கு இரங்கத்தக்க இவ்விழி நிலை அன்று மட்டுந்தான் நேர்ந்ததென்று சொல்வதற்கில்லை. திருக்குறளுக்கு வரும் இவ்விழி நிலை, மக்களுக்கு அடிக்கடி வரும் தொத்து நோய் போன்றது. இத் தொத்து நோயினால் திருக்குறள் பன்முறை தாக்குண்டு பாடிழந்திருக்கிறது. நோயின் கொடுமை பொறுக்க முடியாமல் அது கட்டிலுக்கிரையாய்க் கண்ணீர்க் கிடையே கலங்கிக் கிடந்த காலமும் உண்டு. அக்கொடு நோயின் தாக்குத லால் நம் அருமைத் திருக்குறள், உடல் நலிந்து உளமெலிந்து உருவும் ஒளியும் இழந்து உயிருக்கு ஊசலாடியதும் உண்டு. தமிழர் பண்பாட்டுக்கு நேர்மாறான ஆரியர் பண்பா டென்னும் கொடிய நச்சு மருந்தை, தமிழ்க் கவியென்னும் கூட்டு மருந்துடன் குழைத்துக் கொடுத்துத் தமிழ் மக்களின் தனிப் பண்பைக் கெடுத்த, தமிழ் மக்கள் தம் முன்னோரான பழந் தமிழ்த் தலைவர்களைத் தமக்கு யாதொரு தொடர்பு மில்லாதவர், அரக்கர், கொடியர் எனநம்பி இகழும்படியும். தம் முன்னோர் குலப் பகைவரான ஆரியத் தலைவர்களை மிகவும் நல்லவர், மேலானவர், தெய்வத் தன்மையுடைவர் என நம்பி வணங்கும் படியும் செய்த கம்பருடன், தமிழர் பண்பாட்டுச் சரக்கறை யாகிய, தமிழர் வாழ்க்கைச் சட்ட நூலாகிய திருக்குறள் செய்த வள்ளுவரை ஒப்பிட்டுக் கூறித் தமிழ் மக்களுக்கு அறிமுகப் படுத்தும் நிலையை விடத் தமிழர்க்கு ஒரு தாழ் நிலை உண்டோ? அஃதும், 'கதி' என்னும் வட சொல்லைத் தமிழுக்குக் கதியெனக் கொண்டு, 'கம்பராமாயணம் தமிழுக்கு, தமிழர்க்குச் செய்துள்ள நன்மை போன்றது, திருக்குறள் தமிழுக்கு தமிழர்க்குச் செய்துள்ள நன்மை எனக் கூறும் இழி நிலையைத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்வரோ?' இன்று தமிழ் மக்களிடைத் திருக்குறள் பெற்றுள்ள மதிப்பினை-செல்வாக்கை-நோக்கின் அது வியப்பாகத் தான் தோன்றும். இவ்வாறே குறள் முன்னரும் செல்வாக்குப் பெற் றிருந்த காலமுமுண்டு. செல்வம் ஒருவரிடம் நிலைத்து நில்லாது சகடக்கால் போலுதல் போலவே திருக்குறளின் செல்வாக்கும் போக்கு வரத்துடைய தாகவே இருந்து வந்துள்ளது. திருக் குறளுக்கு இந்நிலை ஏற்படுவதற்கு அதன் தனிப் பெருமையே காரணமாகும். உலக மொழிகளில் குறள் போன்ற ஒரு நூல் இது வரை தோன்றியது இல்லை. இனிமேல் தோன்று மென்பதும் ஐயமே என்பதில் ஐயமில்லை! திருக்குறள், தமிழர் பண்பாட்டின் தனிப் பெருமையைக் கலங்கரை விளக்கம் போல் காட்டிக் கொண் டிருப்பதால், பொறாமை கொண்ட மாற்றி னத்தார், அக்கலங் கரை விளக்கத்தை களங்கமுடையதாக்கி, தமிழ்ப் பாண்பாட்டுச் சரக்குக் கப்பலைத் திசை கெட்டுப் போகும்படி செய்ய முயலும் முயற்சியே குறளுக்கு இத்தகு நிலை ஏற்பட ஏதுவாயிற்று. திருக்குறள் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சட்ட நூலாகை யால், மக்கள் செய்வன தவிர்வன-இவை இவை யெனத் தெள்ளத் தெளிய வரையறுத்துக் கூறும் வாய்மை நூலாகையால், பழந்தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் குறள் முழுவதையும் மனப்பாடம் செய்து, குறள் வழி நின்று வாழ்ந்து வந்தனர். அதனாற்றான் இன்று நாம், "திருக்குறள் உலகப் பொது நூல். தமிழர் பெருமைக்குச் சான்றாக உள்ளது திருக்குறள், திருக்குறள் போல ஒரு நூலை யாங்கணும் கண்டிலேம், 'வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந் தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி"என்றெல்லாம் பெருமை பாராட்டி வருகிறோம். இல்லையேல், ஏனைப் பழந்தமிழ் நூல்களை ஒழித்துக்கட்டியது போலவே என்றோ தமிழ்ப் பகைவர்கள் திருக்குறளையும் ஒழித்துக் கட்டியிருப்பார்கள். திருக்குறளின் தனித் தமிழ்ப் பண்பாடே, நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு அதற்குப் பதின்மர் உரை யெழுதக் காரணமாயிற்று. வள்ளுவர் கருத்தை உள்ள படி விளக்கித் தமிழ் மக்களை வாழ்விக்கவா அவர்கள் உரை யெழுதினார்கள்? இல்லை; தங்கள் சமயக் கருத்துக்களை, தம் இனக்கருத்துக்களைப் புகுத்திக் குறளின் தூய்மையைப் போக்கி, தமிழினத்தைத் தாழ்த்தவே அன்னார் உரையெழுதினர். ஆனால், அவர்கள் எண்ணம் ஈடேற வில்லை; முயற்சி முற்றுப் பெறவில்லை. அவர்கள் படுதோல்வி யடைந்தனர், எங்ஙனம்? அவ்வுரைகள் தமிழ்ச் சரக்கல்ல; அவை அயற் சரக்கு மூட்டைகள், அம்மூட்டைகளைப் போட்டுக் குறள் என்னும் மரக்கலத்திலுள்ள தமிழ்ச் சரக்கு மூட்டைகளை மூடி வைத்துள்ளனர் என்னும் உண்மையை எப்படியோ தமிழ் மக்கள் தெரிந்து கொண்டனர்; அவ்வயற்சரக்கு மூட்டைகளைப் புரட்டி எடுத்து, அப்புறப் படுத்தித் தமிழ்ச் சரக்குகள் வெளிப்படையாகத் தெரியும் படி செய்து விட்டனர். இதுவே அவர்கள் தோல்விக்குக் காரணம். இனித் தமிழர்களை அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. அயலார் முயற்சி இத்துடன் நிற்கவில்லை; அவர்கள் மேலும் சூழ்ச்சி செய்யத் தலைப்பட்டனர், குறளின் பெருமை கூறுவார் போன்று அதற்குச் சிறுமையுண்டாக்கத் தலைப் பட்டனர். அதில் ஒருவாறு வெற்றியும் கண்டனர் எனலாம். எங்ஙனம்? 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி' என்னும் பழமொழியாலும், 'பழகு தமிழ் நாலிரண்டிற் பார்' என்னும் செய்யுளடியாலும், திருவள்ளுவ மாலையாலும் திருக்குறளின் பெருமை விளங்கும் எனத் திருக்குறளின் பெருமைக்குக் கூறப்படும் காரணங்களுன் திருவள்ளுவ மாலை என்பதும் ஒன்றாகும். 'வள்ளுவர் திருக்குறளை மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றினர். குறளின் பெருமை யுணர்ந்த சங்கப் புலவர்கள் நாற்பத் தொன்பதின்மரும் ஆளுக்கொரு வெண்பா வினால் குறளையும் வள்ளுவரையும் புகழ்ந்து பாடினர். அப் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை என்கின்றனர். திருவள்ளுவ மாலையில் அந்நாற்பத் தொன்பதோடு, அசரீரி, நாமகள், பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, இடைக்காடர், ஒளவையார் ஆகியோர் பாடல்களும் சேர்ந்து 53 பாடல்கள் உள்ளன. அத்திருவள்ளுவ மாலைக்குச் சென்ற நூற்றாண்டினரான திருத் தணிகைச் சரவணப் பெருமாளையர் என்பவர் உரை எழுதி யுள்ளனர். திருக்குறளுக்கு-தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பருதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், கவிப் பெருமாள், காளிங்கர் என்ற பத்துப் பேர் உரை எழுதியுள்ளனர். இவர்கள் கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குப்பின்னர் இருந்தவராவர். இவர்களில் யாரும் திருவள்ளுவ மாலையைப் பற்றிக் குறிப்பிடவில்லை. சங்கப்புலவர்கள் பாடியதாக இருந்தால் பதின்மரில் எவரேனும் ஒருவர் அதற்கு உரை யெழுதியிருப் பரன்றோ? அன்னார் புகுத்தியுள்ள அயற் கருத்துக்குத் துணை செய்யும் அப்பாடல்களை எடுத்துக் காட்டாமல் இருப்பாரோ? எவரும் எடுத்துக் காட்டாத தன் காரணம், அது திருக்குறள் உரையாசிரியர்கள் காலத்திற்குப் பின்னர்ப் பாடப் பெற்ற தென்பதேயாகும். திருக்குறளின் பெருமையைக் கெடுக்க, தமிழர் தனிப் பண்பாட்டை மறைக்க, பிற்காலத்திலே யாரோ ஒரு தமிழ்ப் பகைவர் எழுதி, கடைச் சங்கப் புலவர்கள் பெயர்களை அப்பாடல் களின் கீழ் எழுதி வைத்து விட்டனர். வள்ளுவர் ஆதி என்னும் பறைச்சிக்கும் பகவன் என்னும் பார்ப்பனனுக்கும் பிறந்தவர் என்று எழுதி வைத்ததுபோல், வடமொழி மயக்க மருந்துண்டு மயங்கிய பிற்காலத் தமிழர்கள் அப்பொய்க் கூற்றை மெய்க் கூற்றெனவே கொள்ளலாயினர். வள்ளுவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றுகின்றார்; குறட் கருத்துக்களை விரித்துரைக் கின்றார். அச்சங்கத்தில் வீற்றிருந்த மங்கையர்க்கரசியாகிய திருவாட்டி நாமகள் அம்மையார் முதன் முதல் குறளின் சிறப்பினை ஒரு வெண்பாவினால் விரித்துரைக்கின்றார். வள்ளுவர் எதிர்பார்த்தி ராத அத்தகு சிறப்புரை வள்ளுவர் உவகைப் பெருக்கால் உண்மையி லேயே உளம் உப்பியிருப்பர் என்பதில் ஐயமில்லை. இதோ அவ்வெண்பா : " நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில் பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன்-கூடாரை எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின் வள்ளுவன் வாயதென் வாக்கு" நாடா-உலகத்தார் விதி விலக்குகளை அறிந்து உய்யும் வழியை ஆராய்ந்து; முதல் நான்முகன் நாவில் நான்மறை பாடா-முதலில் பிரமனது நாவிலிருந்து நான்கு வேதங்களையும் பாடி; இடை பாரதம் பகர்ந்தேன் - இடைக்காலத்தே பாரதமாகிய வேதத்தைக் கூறினேன்; பின் என் வாக்கு வள்ளுவன் வாயது-பின்னர்த் திருக்குறளாகிய வேதத்தைச் சொல்லி என் வாக்கு வள்ளுவன் வாயின் கண்ணது. இதனால், நான்மறை முதல் வேதம் பாரதம் இடைவேதம், திருக்குறள் கடைவேதம் என்பதாயிற்று என்பது உரை. 'கூடாரை... மாற' என்பது பாண்டியனைக் குறித்தது. வடமொழி வேதங்களும் பாரதமும் திருக்குறளும் உலக மக்கள் உய்யும் வழியைக் கூறும் நூல்கள் என்பது கருத்து. ஆரிய வேதங்களில் மக்கள் உய்யும் வழிகள் என்ன இருக் கின்றன? ஆரியர்கள், தம்மை எதிர்த்த இந்நாட்டுப் பழங்குடி மக்களை அழித்தொழிக்கும் படி இந்திரன் முதலிய தம் தெய்வங் களை வேண்டும் பாடல்களும், கொலை வேள்விச் சடங்கு பற்றிய பாடல்களும், வருண வேற்றுமை கூறும் பாடல்களும், சில துதிப் பாடல்களும் கொண்டவையே வேதங்கள். இவற்றைக்கற்று மக்கள் உய்வ தெங்ஙனம்? இவற்றைக் கற்போர்க்குப் பகை யுணர்ச்சியும் கொலையுணர்ச்சியு மன்றோ உண்டாகும்? அதனாலன்றோ வேதங்களை ஆரியரல்லார் படிக்கக் கூடாதென்று எழுதி வைத்தது? சிவானந்த சரச்ஃவதியார் எழுதிய ஞான சூரியன் என்னும் நூலைப் பார்த்தால் வேதங்களின் சிறுமை விளங்கும். இனிப் பாரதத்தில்தான் மக்கள் அறிந்து கடைப் பிடித் துய்யும் வழிகள் என்ன இருக்கின்றன? நாகரிக மக்கள் காதால் கேட்கவும் நாணும் கதைகள் கூறுவது பாரதம்; புராணப் பொய்க் கதைகள் நிரம்பியது. பாரதத் தலைவர்களின் குல முறையே அருவருக்கத்தக்கது. ஒருவரை யொருவர் அழித் தொழிக்கச் செய்யும் சூழ்ச்சியின் முடிவே பாரதத்தின் சாரம். மக்கட் பண்பாட்டுக்குரிய செய்தி யொன்றும் பாரதத்தில் இல்லை. வேத பாரத நூலுக்குரியார் இந்நாட்டுக்கு வரு முன்னரே தமிழர் தனி நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தனர். வேதபாரதந்தோன்று முன்னரே தமிழர் ஒழுக்க நூல் செய்து உயர்வுடன் வாழ்ந்து வந்தனர். அங்ஙனமிருக்க. தமிழர் பண்பாட்டுச் சரக்கரையான திருக்குறளை, தமிழர் பண்பாட்டுக்கு மாறான ஆரியர் பண்பு கூறும் வேத பாரதங் கட்குக் கடைப்பட்டதென, அவற்றுடன் ஒரு புடை ஒப்புமை கூறுதல் எங்ஙனம் பொருந்தும்? திருக்குறள் ஒழுக்க நூல்; வேத பாரதம் இழுக்கு நூல்கள். இவை எங்ஙனம் ஒரு புடை ஒத்த தாகும்? 'தமிழர் நாகரிகத்தினும் ஆரியர் நாகரிகம் சிறந்தது. ஆரிய நாகரிகத்தினின்று தோன்றியதே தமிழர் நாகரிகம்' எனக்கொண்டு பிற்காலத் தமிழர் தம் வழி முறையறியாது போகும்படி செய்து வைத்த சூழ்ச்சியே இது. "நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த நூல்முறை" "செய்யா மொழிக்கும் திருவள் ளுவர்மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருளொன்றே" 'வேதப் பொருளை விரகால் விரித்துலகோர் ஓதத் தமிழா னுரைசெய்தார்' - அருமறைகள் "ஐந்தும் சமயநூலாறும்நம் வள்ளுவனார் புந்தி மொழிந்த பொருள்" எனப் பின்வரும் பொய்க் கூற்றுகட்குத் துணையாக முன் கூறி வைத்ததே இது. செய்யா மொழி - ஆரிய வேதம். அரு மறைகள் ஐந்து - இருக்கு முதலிய வேதங்கள் நான்கும் பாரதமும். பாரதத்தை ஐந்தாம் வேதமென்பதே வேதங்களின் சிறுமைக்குச் சான்றாகும். 'ஆரிய நாகரிகமும் தமிழர் நாகரிகமும்' 'ஒன்றே, திருக்குறள் கூறுவது ஆரிய நாகரிகமே' என நம்பி, தமிழரை ஆரியத்துக் கடிமையாக்கச் செய்த தந்திரமே இது என்பதில் ஐய மென்ன? மேலும், "முப்பாற்கு - பாரதம், சீராம கதை, மனு, பண்டைமறை நேர்வன"என, வேத பாரதங்களே யன்றி இராமா யணம், மனுதர்மங்களின் கருத்துடையதே திருக்குறள் எனவும் நம்பும்படி செய்யப்பட்டுள்ளது. வள்ளுவர் காலத் தமிழர் வெறுத்தொதுக்கிய இராமாயணம் எங்ஙனம் திருக்குறளுக் கொப்பாகும்? சூழ்சசியும் பொறாமையும் பித்தலாட்டமும் பொருந்திய இராமன் வாழ்வியல் எங்ஙனம் திருக்குறளறத்துக் கொப்பாகும்? அரசுக்குரியவன் ஊரிலில்லாத போது அவனரசைக் கொள்ள முயலுதல். இருவர் பொரும் போது ஒருவனை மறைந் திருந்து கொல்லுதல், சூத்திரன் தவஞ் செய்யக் கூடாதென்றல் போன்ற இராமாயண அரசியல் முறை எங்ஙனம் திருக் குறளரசியல் முறைக் கொப்பாகும்? ஆரிய மணம் எட்டனு ளொன்றான வில்வளைத்து மணக்கும் அசுரமண முறை எங்ஙனம் திருக்குறள் இன்பமுறைக் கொப்பாகும்? தமிழர் பண்பாட்டுக்கு நேர்மாறான தன்றோ இராமாயணப் பண்பாடு? இனி, 'வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந் தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி' என, மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம்பிள்ளை வெறுத் தொதுக்கும் ஒரு குலத்துக் கொரு நீதி கூறும் மனு நூல் 'பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்' எனச் சமநீதி கூறும் திருக்குறளுக்கு எங்ஙனம் ஒப்பாகும்? நிலத்தை நிலமகள் என்பதும், நீரை நீர்மகள் (கங்கா தேவி) என்பதும், மொழியை நாமகள் என்பதும், கல்வியைக் கலைமகள் என்பதும் நூன் மரபு. எனவே, நாமகள் கூறியதாக ஒருவர் கூறியதேயாகும் இப்பாடல். வேதம் பிரமனால் செய்யப்பட்டது; நாமகள் பிரமன் மனைவி என்பதெல்லாம் புராணக்கதை. சங்கத்தார் முன் நாமகள் எவ்வடிவில் வந்து கூறினாள்? தெய்வ வடிவில் அல்லது மக்கள் வடிவில் என்றால், இன்றேன் அவ்வாறு வெளிப்படுவதில்லை? ஒன்றுக் கொன்று முரண்பட்ட கருத்து களையுடைய நூல்களை ஒன்றெனக் கொண்டு, 'என் வாக்கு வள்ளுவன் வாயது' என்னும் நாமகள் கூற்றுப் பொருளிலாப் பொய்க் கூற்றாக வன்றே உளது? பொய் கூறி மக்களை மருள வைப்பதா தெய்வத்தின் தன்மை? கல்வியின் கடவுளெனவும், அறிவுத் தெய்வமெனவும் போற்றப்படும் நாமகளே, வேதபாரங்களோ டொத்தது திருக் குறள், அத்தகு சிறப்புடையது என மதிப்புரை வழங்கிய பின், எதற்காகக் காலமும் பொருளும் வீண்படச் சங்கப் புலவர்கள் முன்னிலையில் பலநாள் அரங்கேற்ற வேண்டும்? நாமகளுக்குத் தெரியாததா சங்கப் புலவர்களுக்குத் தெரியும்? நாமகள் கூறிய கருத்துக்களையே இவர்களும் கூறுவதால் பயனென்ன? குறளரங் கேற்றத்திற்குத் தலைமை தாங்கத் தகுதியுடையார் யார் என ஐய முண்டான போது, 'அதை அரங்கேற்ற வேண்டியதில்லை; அது குற்றமற்ற சிறந்த நூல்; பிரமன் நாவில் இருந்து வேதங்களையும், வியாசர் நாவிலிருந்து பாரதத்தையும் சொன்னது போலவே, நானே வள்ளுவன் வாயிலிருந்து குறளைச் சொன்னேன்; ஆகை யால், நீங்கள் அதனை அப்படியே ஒப்புக்கொண்டு விடுங்கள்' என்று நாமகள் சொல்லியிருக்கலா மல்லவா? ஊமைப் பிள்ளை யான உருத்திரசன்மன் தலைமையில் எதற்காக அரங்கேற்ற வேண்டும்?... 'யார் தலைவர்' என்னும் ஐய முண்டான போதே, தலைமை தாங்கத் தகுதியுடையார் யார் என்று சங்கப் புலவர்கள் பேசிக்கொண்ட போதே, 'நாடா முதல் நான் மறை' என்னும் பாடலை நாமகள் பாடியிருந்தால் புலவர்கள் அரங்கேற்றத்தையே நிறுத்தியிருப்பர் அல்லவா? எனவே, திருவள்ளுவ மாலை என்பது, பிற்காலத்தே யாரோ ஒருவர் பாடி, சங்கப் புலவர்கள் பாடியதென எழுதி வைத்ததேயாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இனியேனும், தமிழறிஞர்கள் உண்மையுணர்ந்து, திருவள்ளுவ மாலை திருக்குறளின் பெருமை கூறுவதன்று; அது திருக்குறளின் பெருமையைக் கெடுக்க எழுந்தது என்பதைத் தமிழ் மக்கள் உணரும்படி செய்து, குறளின் பெருமையை நிலை நாட்டு வாராக.  13. முத்தார முத்தம் ஒரு நாள் மாலை; இளவேனிற் காலம். குளிர் தென்கால் தமிழ்மணங் கமழ வீசிற்று. வானவெளியில் அங்கு மிங்கும் வெண்ணீல முகிற்கூட்டம், நிலவுலகின் இயற்கையின் எழிலுருவங் களைக் காட்டிக் காண்போர் கண்ணையுங் கருத்தையும் ஒருங்கு கவர்ந்தது. வானையும் நிலத்தையும் தம் வாழ்விடமாகப் பெற்ற வன்னப்புள்ளினங்கள், தமிழ் மக்களிடம் பெற்ற இனிமைப் பண்பைத் திருப்பித்தந்து செய்ந்நன்றி மறவாச் செம்மைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தன. கடற்கரைக் கானல் மலரும் மணமும் தூவி மகிழ்வித்தது. தமிழ்க் கடற்கரை மணல்வெளி. அது வெண்ணில வொளி போல் விளங்கிற்று. அத்தமிழ்க் கடல், "நான் அன்று தமிழுண்டது தவறன்று; நீயே தவறுடையை. எங்ஙன மெனில், கண்டோர் விரும்புதற்குக் காரணமான இனியதொரு பொருளை மறைத்து வைப்பதுதானே அதற்குடையோர் கடன்? அங்ஙனமின்றி யாருந் தடையின்றிக் காணுமாறு வைத்தல் தவறன்றோ? இனிமையின் இருப்பிடமான தமிழை ஒளிமறை வின்றி வெள்ளிடை மலை போல் வெளியில் வைத்தது நின் தவறன்றோ?" "இனிமை யென்றால் என்ன, பொதுப்பட்ட இனிமையா? இவ்வுலகின்கண் உள்ள இனிமைகள் அத்தனையும் ஒருங்கு கூடினால் எவ்வளவு இனிமையாகுமோ அதைவிடப் பன்மடங்கு இனிமையுடைய தமிழை, ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியே சொன்னாலின்பம், தொடைபடத் தொடர்ந்தா லொரு தனி யின்பம், மேலாகப் பார்த்தாலே ஒருவகையின்பம், நுணுகிப் பார்த்தால் நனிமிகு இன்பம், நினைக்குந் தோறும் நெஞ்சுக் கின்பம் - இங்ஙனம் அனைத்தும் இன்பமயமான தமிழைத் தனியே விட்டு வைத்தது நின் தவறுதானே? "இல்லை, நான் செய்ததே தவறெனில், அத்தவற்றைப் பொறுத்தருள்க"எனத் தமிழ்நில மடந்தையைத் தன் திரைக் கைகளால் தொட்டுத் தொட்டு வணங்கிற்று. அவ்வணக்கமும் கூற்றும் உண்மையானவையல்ல; உள்ளொன்று வைத்துப் புற மொன்று கூறுதலாகும் என்பதை, கரையைக் கரைக்கும் அதன் அலையின் செயல் காட்டிற்று. அது போழ்து, கடலினின்று கரையை நோக்கி ஒரு படகு வந்தது. அப்படகிலிருந்து சிலர் இறங்கினர். அவர்கள் கடலி லிருந்து பைகளில் கொண்டு வந்த முத்துச் சிப்பிகளைக் கரையில் குவித்தனர். சிப்பிகளிலிருந்து ஒளிவெண் முத்துக் களைக் கண்டு களித்தனர்; உழைப்பின் பயனைக் கைம்மேற் பெற்றால் களிக்கா மலா இருப்பர்? இவர்கள் களிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். அம்முத்துக் களுக்கு உரிமையுடையதான கருங்கடல் உள்ளும் புறமும் களித்தது. அக்களிப்பு அதற்குக் கரை புரண்டது. களிப்பு மிகுதி யால் அக்கடல், "செந்தமிழ் நிலச் செல்வியே! நான் அன்று தமிழுண்டது தவறென்றே வைத்துக்கொள். இதோ, விலை மதிப்பில்லா ஒளிவெண் முத்துக்கள். அதற்கீடாக இவற்றை எடுத்துக் கொள். நின் தமிழ் என்னிடமுள்ள எத்தனையோ தீவுகளில் உண்டு. ஆனால், உன்னிடம் இத்தகைய முத்தங்கள் இன்றல்ல வா? இனி, என்மேற் குறை கூறுதல் கூடாது. நான் உண்ட உன் தமிழுக்கு இதை விலையாக வைத்துக் கொள் என்று இறுமாப்புடன் சொன்னது." அதுகேட்ட தென்றழிழ் நிலச் செல்வி, கடலின் அறியா மையைக் கண்டு கலகலவெனச் சிரித்து, "புறவுலக அறிவிலாப் பொருதிரைக் கடலே! இவ்வளவுதான் நீ அறிந்தது போலும்! உன் பெயருக் கேற்ற மடமையை உடையையாய் இருக்கின்றனை. அது உன் நீர்மை. நீ மட்டும் என்ன? உன் போன்றார் எத்தனையோ பேர் என்னிடம் அறிவியற் சொற்களில்லை. அன்ன குறை யுடையள் என, எனது பெருமையை அறியாது தங்கள் மனம் போனவாறு, வாய்க்கு வந்தவாறு கூறி வருகின்றனர். அவரைக் குறை கூறுவதில் பயனென்ன? அவர் வறுமை அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்"என்ற நாலடியார் கூற்று அவர்கட் கென்றே எழுந்தது போலும்! அழகிய கடலே! 'நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று' என, வள்ளுவர் நின் அறிவின்மையை நோக்கித்தான் கூறினாரென எண்ணுகிறேன். "அறிவின் கரையறியா ஆழ்கடலே! நின்னிடம் சிப்பி ஒன்றில் மட்டும் உள்ள முத்தைக் கொண்டு இவ்வளவு பெருமை கொள்கிறாய்? அதையும் எளிதில் பிறர்க்குக் கொடாத இவறன்மை யுடையையாய்ய இருக்கின்றனை. மேலும், பிறர் பொருளைக் கொள்ளையிடுவோர் இருவகைப் பண்புடையராய் இருக் கின்றனர். தாம் கொள்ளை கொண்ட பொருளை நுகர்ந்து இன்புறுவோர் ஒருவகையினர். தாம் கொண்டதை அப்படியே வைத்துக் கொண்டு பார்த்துப் பார்த்து இன்புறுவோர் மற்றொரு வகையினர். நீ இரண்டாவது வகையைச் சேர்ந்தவனாக இருக் கின்றனை. இல்லையேல், நீ என்னைப் பார்த்து இவ்வாறு கேட்டிருக்க மாட்டாய்." "நேர்மையில்லா நீர்மைக் கடலே! நீ கொள்ளை கொண்ட தமிழ்ப் பாடல்களை ஒரு முறை மேலாகப் படித்துப் பார்த்திருப் பையானாற்கூட என் மனம் புண்படும்படி இவ்வாறு கேட்டிருக்க மாட்டாய். என்னிடம் உள்ள முத்துக்களைப் பேசாத தமிழ் நூலே இல்லை. நீ ஏதாவது ஒரு நூலை ஒரு முறை அப்படித் திருப்பிப் பார்த்திருந்தால் போதும் என் பெருமையை அறிந்திருப்பாய். உனக்குத் தான் அந்நீர்மையில்லையே!" "பெருக்கத்து வேண்டும் பணிதல் என்னும் வள்ளுவர் வாய்மொழியை அறியா வண் கடலே! நீ சிப்பி ஒன்றில் மட்டும் முத்தினை உடையவனாய் இருக்கின்றாய். என்னிடம் பலவகைப் பொருள்களில் முத்துக்கள் இருக்கின்றன. இது உலகறிந்த உண்மை. அங்ஙனம் இருந்தும் நீ அறியாதது நின் அறியாமைப் பெருக்கை யன்றோ காட்டுகிறது! இதோ, தமிழ் நூல்களிலிருந்தே சில சான்றுகள் தருகிறேன். கருத்துடன் கேள்!" "சரி, கேட்கிறேன்; கண்ணுங் கருத்துடன் கேட்கிறேன். கேட்டுத் தெரிந்து கொள்ள என் உள்ளம் துடிக்கிறது உணர்வு பொங்குகிறது. நான் அறியாது கூறிய அதனைப் பொருட் படுத்தாது, 'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல' என்ற வள்ளுவர் வாக்கின்படி பொறுத்தருளி விளக்கமாகக் கூறுக"என்றது கடல். "தன் பெருமையை உணராரிடத்துத் தானே தன்னைப் புகழுதல் தற்புகழ்ச்சி என்னும் குற்றம் ஆகாது என்பது இலக்கணம். என் பெருமை யறியாத நின்னிடம் கூறித்தானேயாகவேண்டி யிருக்கிறது? உன் விருப்பப்படியே கூறுகிறேன். வெறும் புகழ்ச்சி யல்ல; தமிழ்ச் சான்றோர்கள் கூறியதையே கூறுகிறேன். இலக்கியச் சான்றுடன் எடுத்துரைக்கின்றேன். அமைதியுடன் கேள்"என்று நிலமென்னும் நல்லாள் கூறலானாள். "என்பால் உள்ள முத்துப் பிறக்கும் இடங்களைக் கேட்டால் நீ வியப்புறுவாய். நீ என்ன இவ்வுலகமே வியப்புறும் வியக்கத்தக்க இடங்களிலெல்லாம் முத்துப் பிறக்கிறது என்பதைக் கண்டறிந்து பயன்படுத்தி யுள்ளார்கள் என் அருமைப் பழந்தமிழ் மக்கள். அக் கண்டு பிடிப்புகள், இன்று என்னென்னவோ பொருள்களிலிருந்து என்னென்னவோ பொருள்களைக் கண்டறியும் அறிவியல் வல்லு நரும், 'ஆ! என்று ஆர்வத்துடன் கேட்க அவாவும் அத்தகைய கண்டு பிடிப்புகளாகும். "வெண்பாவிற் புகழேந்தி என்னும் சிறப்புப் பெயர் பெற்ற புகழேந்திப் புலவர் கூறுவதைக் கேள். அந்த இரத்தினச் சுருக்கத் தைச் சுருக்கமாகக் கூறுகிறேன் கேள். இருபது இடங்களில் - பொருள்களில் - முத்துப் பிறக்கிறது என்கின்றார் புகழேந்தியார். அவ்விடங்கள் யாவை? என்னென்ன பொருள்களில் பிறக்கின்றன இலங்கொளி முத்தங்கள்? யானைக்கொம்பு, பன்றிக்கொம்பு, மாட்டுப்பல், கொக்குத் தலை, பாம்பு, உடும்பு, இப்பி, சங்கு, சலஞ்சலம், மீன் தலை, முதலை, கமுகு, வாழை, மூங்கில், கரும்பு, நெல், தாமரை, கற்பூரம், முகில், பெண்கள் கழுத்து என்னும் இருபது இடங்களில் பிறக்கின்றன இலங்கொளி முத்தங்கள். எதை விட்டது? விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, மரவகை, மக்கள் என்னும் இவ்வுலகின் கண் உள்ள அறுவகை உயிர்ப் பொருளினிடத்தும் பிறக்கின்ற தல்லவா பிறங்கொளி முத்தம்! "உனக்கு மறதி அதிகமல்லவா? வேண்டுமானால், புகழேந்தி யார் கூறும் இரத்தினச் சுருக்கப் பாட்டையே எழுதிக்கொள். "தந்தி வராக மருப்பிப்பி பூகம் தழைகதலி நந்து சலதஞ்சலம் மீன்றலை கொக்கு நளினமின்னார் கந்தரம் சாலி கழைகன்னல் ஆவின்பல் கட்செவிகார் இந்து வுடும்பு கராமுத்த மீனும் இருபதுமே." என்பதே அபாட்டு. தந்தி-யானை, வராகம்-பன்றி, மருப்பு-கொம்பு, தந்திமருப்பு, வராகமருப்பு, இப்பி-முத்துச்சிப்பி, பூகம்-கமுகு, கதலி-வாழை; தழைகதலி-தழைத்த கதலி, நந்து-சங்கு, மீன்தலை, கொக்குத்தலை, நனிளம்-தாமரை, மின்னார் கந்தரம்-பெண்கள் கழுத்து. சாலி-நெல். கழை-மூங்கில், கன்னல்-கரும்பு, கட்செவி-பாம்பு, இந்து-கற்பூரம், கராம்-முதலை. இவற்றுள் இப்பியும், சலஞ்சலமுந்தான் நின்னிடத்தில் உள்ளவை; உனக்குச் சொந்தம். ஏனைப் பதினெட்டும் என்பாலுள் ளவை; எனக்குச் சொந்தம். இப்பியுங்கூட ஆறு குளங்களில் உண்டு. கார் என் மலைகளில் வாழ்வது. என்னைச் சார்ந்து இன்புறவே அது பிறந்தது. "பார்வளர் முத்தம்"(முல்லைக் - 5:4) என, நிலத்தில் வளர்ந்த முத்தம் எனச்சிறப்பித்துக் கூறுகின்றார் முல்லைக்கலி யாசிரியர். 'வளர்முத்தம்' என்பது, மிகுதியாகக் கிடைக்கும் முத்தம் எனப்பொருள்படும். "முத்துவிளை கழனி"(மணி-8:4) என்கின்றார் மணிமேகலை ஆசிரியர். ஏ! அமைதியில்லா அலைகடலே! இத்தகு சிறப்பு உனக்கேது? "குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை வலம்புரி ஈன்ற நலம்புரி முத்தம்" (சிலப். 27:243-4) ஆழமான நீரையுடைய கரையின்கண் உள்ள புன்னை மரத்தின்கண் வலம்புரிச்சங்கு ஈன்ற அழகிய முத்தம் என்கின்றார் இளங்கோவடிகள். யானை மருப்பில் முத்துப் பிறக்கிறது என்பதை. "முத்தார் மருப்பு"(கலி. 40:4) "பெங்களிற்று முத்துடை வான்கோடு"(முருகு. 304) "யானை முத்தார் மருப்பு"(குறிஞ். 36) "யானை முத்துடை மருப்பு"(பதிற். 518) "முத்துடை மருப்பின் மழகளிறு"(பதிற். 32) "வைந்நுதி வான்மருப் பொடிய உக்க தெண்ணீர் ஆலி கடுக்கும் முத்தம்"(அகநா. 282) எனச் சங்கநூற் சான்றோர்கள் பலர் துணிந்து கூறியுள்ளனர். "ஒடியடி மருப்பிணைகள் சொரிகுருதி முத்தம் நினையோம்" (குலோத் - பிள்ளைத் - 8) என, யானையின் கொம்புகள் ஒடிந்தால், அவற்றிலிருந்து ஒழுகும் குருதியோடு முத்துக்களும் சிந்தும் என்பதால், யானைக் கொம்பு களுக்குள் நிறை முத்துக்கள் இருத்தல் பெறப்படும். 'எருமைக்கூட்டம் வயலிலுள்ள கரும்பைக் கடித்து மென்று முத்துக்களை உமிழும்' (நளவெ - 24) என்கின்றார் புகழேந்தியார். இவர் சோழநாட்டி னராதலால், நேரில் கண்டதைக் கவியிலமைத் துள்ளாரெனில் மிகையாகாது அதி வீரராம பாண்டியர், 'கண்ணுடைக் கரும்பு ஈன்ற வெண் முத்தம் (நைடத 8) என்கின்றார். கரும்பின் கணுக்களில் முத்து விளைகிறது; சர்க்கரை ஒன்று கரும்பு இரட்டைப் பயன் உடையதாகும். கரும்பின் முத்துச் செல்வம் பற்றி ஒரு பழங்கதை.' மதுரைப்பாண்டியன் அவையில், பொருளீட்டுதற்குச் சிறந்தவழி யாதென்று ஒரு கேள்வி பிறந்தபோது, ஒரு வணிகன் வாணிகம் செய்தல் சிறந்த வழி எனவும், ஒரு வேளாளன் பயிர்த் தொழில் செய்தல் சிறந்த வழி எனவும் பகர்ந்தனர். வழுதி அவ்விருவர்க்கும் சிறிது பொருள் கொடுத்து, இதனைக் கொண்டு நீங்கள் கூறிய வழியில் பெரும்பொருள் ஈட்டுங்கள் என்று கூறி விடுத்தான். ஓராண்டு கழிந்தது. பாண்டியன் அவ்விருவர் நிலையை யும் அறிந்து வரும்படி தூதரை அனுப்பினான். தூதுவர் சென்று பார்த்து வந்து, வணிகன் வணிகத்தால் பெரும் பொருள் ஈட்டி யுள்ளான் என்றும், வேளாளன் செழிப்பான கரும்புத்தோட்டம் செய்திருக்கிறான் என்றும் கூறினர். பாண்டியன் நேரில் அறியக் கருதி, முதலில் வணிகனை யழைப்பித்துக் கேட்க, அவன் தனக்குக் கொடுத்த பொருளைப் பதின்மடங்கு பெருக்கியிருப்பதாகச் சொன்னான். பின்னர் வேளாளனை அழைப்பித்துக் கேட்க, அவன் தன் கரும்புத் தோட்டத்தைக் குறித்துக்காட்டி, 'இது என் பொருளீட்டம்' என்றான். அரசன் 'இது செழித்த கரும்பாக இருப்பினும், வணிகன் ஈட்டிய பொருளுக்கு இணையாகுமோ?' என்றான். 'அவன் பொருள் இதன் விலையில் பத்திலோரு பங்கிற்கும் இணை யாகாது' என்றான் வேளாளன். இது கேட்ட அரசன் நகைக்க, வேளாளன் தன் தோட்டத்திற்குச் சென்று ஒரு கரும்பை வெட்டி வந்து, அரசன் முன்னிலையில் தரையில் அடித்து முறித்தான். அதன் கணுக்களிலிருந்து முத்துக்கள் தெறித்தன. அது கண்ட அரசன் வியந்து, ஒவ்வொன்றும் மிக்கவிலை பெறுமென்பதை அறிந்து மகிழ்ந்து, அவ்வேளாளனைப் பாராட்டி, அவனுக்கு, முத்து' என்றும், அக்கரும்பை யடித்த இடத்திற்கு 'முத்தடித்த களம்' என்றும், அந்நாட்டுக்கு 'முத்து நாடு' என்றும் பெயர் வைத்து அவ்வேளாளனைச் சிறப்பித்தான் என்பதே அப்பழங்கதை. "வயல்களில் தவழ்கின்ற சங்குகள் ஈன்ற வெண் முத்தங் களும், கரும்பு உதிர்த்த வெண் முத்தங்களும், தாமரை சொரிந்த வெண் முத்தங்களும் நிலாவினது ஒளிபோல ஒளி வீசுதலினால், அவ்வொளியைத் திங்களின் ஒளியென்று கொண்டு குமுத மலர்கள் மலரும்"(நைட - 8) என்கின்றார் நைடதமுடையார். இதனால் இரவில் மலரும் குமுதம், முத்துக்களின் ஒளியை நிலவொளியென மயங்கிப் பகலில் மலர்வதால், அம் முத்துக்கள் மிக்க ஒளியுடையவை என்பது பெறப்படும். "உழவர்கள் அதிகாலையில் எழுந்து வயலுழச் சென் றார்கள். வயலில் சங்குகள் ஈன்ற வெண்முத்தம் குவியல் குவிய லாகக் கிடந்தன. உழவர்கள் அவற்றை எடுத்துக் கரையில் போட்டுவிட்டு உழவோட்டினார்கள். அம்முத்துக் குவியல் களைத் தங்கள் முட்டையென எண்ணி அன்னங்கள் அம்முத்துக் குவியலின்மேற்படுத்து அடைகாத்தன"வென்கின்றார் சேக்கிழார் பிள்ளைத் தமிழாசிரியர். அன்னம் தன் முட்டையென மயங்கும் அவ்வளவு பெரிய முத்துக்கள்! "இத்தகைய வெண் முத்தங்கள் என்னிடமிருக்க, ஏதோ கொஞ்சம் முத்துடைய நீ முத்துடையே மெனத்தற் பெருமை கொள்ளும் நின் அறியாமையை என்னென்பது! இத்தகைய முத்துக்கள் நின்பால் இருப்பின் நின்னைக் கையால் பிடிக்கவா முடியும்?"கரை கடந்த மகிழ்ச்சியால் பொங்கி யெழுந்து குப்புற வீழ்ந்து மண்ணைக் கவ்வுவா யல்லவா? "யானை மருப்பு, பன்றி மருப்பு முதலிய இடங்களில் முத்துப் பிறக்கிறது என்பதைக் கண்டறிய என் பழந்தமிழ் மக்கள் மேற்கொண்ட முயற்சியை நினைக்கின் எனக்கே மலைப்பாக இருக்கிறது. அரிய பொருள்கள் எங்கு கிடைத்தாலும் அவை அரசனுக்குச் சேர வேண்டியவை என்னும் கெடு பிடிச்சட்டம் அன்றில்லை. அத்தகைய சட்டம் போட்டுத் திருட்டுத் தனத்தை வளர்க்க விரும்பவில்லைப் பழந்தமிழ் அரசர்கள். அன்று நாட்டின் செல்வம் அனைத்தும் நாட்டு மக்களின் செல்வமாக இருந்து வந்தன. அரசன் குடிமக்களின் மூத்தமுதற் குடியாகவே இருந்து வந்தான். எனவே, ஏதாவது ஓர் அரும்பொருள் கிடைத்தால் குடிமக்கள் அதை அரசனுக் கறிவிப்பர். அரசன் அதுபற்றி ஆராய்ச்சி நடத்தி அப்பொருளைப் பெருக்கி நாட்டு மக்களின் நலனுக்குப் பயன்படுத்துவான். இவ்வாறு கண்டுபிடிக்கப் பட்ட வையே முத்து, பவளம், மாணிக்கம், மரகதம், கோமேதகம், புட்பராகம், நீலம், வைரம், வைடூரியம் என்னும் ஒன்பான் மணிகளும். "உனக்குத் தெரியாதது போலவே, பெரும்பான்மை யான மக்களுக்கு என்பால் முத்துப் பிறக்கிறது என்பது தெரியாது. எல்லோரும் முத்துக்களஞ்சியம் நீதான் என்று எண்ணிக் கொண்டி ருக்கின்றனர் இன்னும். எனது முன்மக்கள் போல் என்பால் பிறக்கும் அரும் பொருள்களை ஆராய்ந்து காணுதல் இன்றையத் தமிழ் மக்களின் கடமையாகும். இனி, ஒரு பொருள் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் அதைப் பயன்படுத்தா விட்டால் அப்பொருள் மதிப்புப் பெறுவ தில்லை. அங்ஙனமே நமது அரும்பேறான முத்தைப் பலவகையிலும் பயன்படுத்தி அதற்குப் பெருமை தேடித் தந்தவள் நானே. முத்துப் பயிலாமல் எந்த ஓர் அணிகலனும் அன்று செய்வதில்லை. முத்தில்லையேல் எந்த அணியும் முற்றுப்பெறுவ தில்லை எனலாம். இனி, அணிகலன்களில் சிறந்தது முத்தாரமேயாகும். ஆரம் என்பதே முத்தின் பெயர்களிலொன்று. ஆரம் மாலை, முன்பு முத்துக்கள் பெரிதும் மாலையாகவே பயன்படுத்தப் பட்டு வந்தன. அதனாலேயே முத்துக்கு மாலை எனப் பொருள்படும் 'ஆரம்' என்பது பெயராய் அமைந்தது. அல்லது ஆரம் என்பது முத்து, முத்தை மாலையாகவே பயன்படுத்தி வந்ததால், அப்பெயர் பிற மாலைக்கும் வழங்கலாயது எனினு மாம். தானம்-ஸ்தானம்; தலம் - ஸ்தலம்; சலம் - ஜலம் எனத் தமிழ்ச் சொற்கள் பலவற்றை வடமொழிச் சொற்களாக்கி, தமிழ் மக்கள் அவற்றைத் தமிழ்ச் சொல் எனக் கண்டு கொள்ள முடியாமல் செய்ததுபோலவே, வடசொற்களெனவே நம்பியது போலவே, 'ஆரம்' என்னும் தமிழ்ச் சொல்லையும் 'ஹாரம்' என வடசொல்லாக்கி விட்டனர். வடசொற்களைத் தமிழில் தற்பவம் ஆக்குவதுபோல் - தமிழ் ஒலிக்கேற்ப, லக்ஷ்மணன் - இலக்குமணன் எனத்திரிந்து வழங்குவது போல் - தமிழ்ச் சொற்களை வடமொழியில் தற்பவம் ஆக்கலாம் என்பதை அறியாத தமிழ் மக்கள் அதை வடசொல் எனக் கொள்ள லாயினர். "ஆரம் அல்லது மாலையில் பல சரம் அல்லது கோவை இருக்கும். அது வடம் என வழங்கும். வடம் என்றாலே முத்துவடம் என்பதே பொருள். அவ்வடத்திற்குக் காழ் என்னும் பெயரும் உண்டு. காழ் என்றாலும் முத்துவடம், முத்துச்சரம் என்பதே பொருள். சரம் என்றால் முத்துச்சரம், வடம் என்றால் முத்துவடம், கோவை என்றால் முத்துக் கோவை, ஆரம் என்றால் முத்தாரம் என பதைவிட, 'முத்து' என்னும் பொருளுண்மை அதன் பயிற்சி யைக் குறிக்கும்." "முத்தாரத்தை அன்று ஆண் பெண் இருபாலாரும் அணிந்து வந்தனர். முத்து, பெண்மக்களின் போர்வையாகவே பயன்பட்டு வந்தது. பெண்களின் தலையில் முத்தாரம், முடியில் முத்தாரம், காதில் முத்தாரம், கழுத்தில் முத்தாரம், மார்பில் முத்தாரம், மருங்கில் முத்தாரம், இடையில் முத்தாரம், உடையில் முத்தாரம் என எங்கும் முத்தாரமாகவே இருந்தன. ஆடையின் கரைகளை முத்தாரம் அணி செய்யும். மார்க்கச்சை முத்தாரம் மறைத்துவிடும். இன்று ஆண்கள் இடையில் கச்சு அணிவதுபோல அன்று பெண்கள் கச்சு அணிந்து வந்தனர். அதன் அறிகுறியே ஒட்டியாணம் என்பது. அது அரையில் அணிவதால் அரைக்கச்சு என வழங்காது, அதன்மேல் வைத்துத்தைத்த முத்தாரத்தின் எண்ணிக்கையின் பெயர் பெற்றே வழங்கிவந்தது. எண் கோவை அல்லது எட்டு முத்தாரம் வைத்துத்தைத்த அக்கச்சு, 'எண் கோவை' எனவே பெயர்பெறும். எண் கோவை - மேகலை எனவும், எழுகோவை - காஞ்சி எனவும், பதினாறு கோவை - கலாபம் எனவும், பதினெட்டுக் கோவை - பருமம் எனவும், முப்பத்திரண்டு கோவை - விரிசிகை எனவும் வழங்கின. உதயணன் மனைவியரில் ஒருத்தி பெயர் விரிசிகை. மணிமேகலை அறிமுகமானவள். காஞ்சி - இருகோவை என்பதும் உண்டு. "எண்கோவை மேகலை காஞ்சி மெழுகோவை பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள் பருமம் பதினெட்டு முப்பத் திரண்டு விரிசிகை யென்றுணரற் பாற்று" ஒருவர் வந்து ஏதாவது நற்செய்தி சொன்னால், அம் மகிழ்ச்சிக்கு, நன்றிக்கு அறிகுறியாகக் கொடுப்பது முத்தாரமே யெனின், முத்தாரத்தின் பெருமையை மொழியவும் வேண்டு மோ! "இனி, அரியணை, கொற்றக்குடை, முடி முதலியன அரசமரபுக்குரிய சொந்தாகும். இவற்றை எந்த அரசனும் அழிக்கக்கூடாது. இவ்வாறே அரசன் மார்பிலணியும் முத்தாரமும் வழி வழியாக அரசமரபுக்குரிய சொத்தாகப் பயின்று வந்திருக்கிறது. தம் நாட்டையே கேட்கினும் கொடுத்து விடுவர் அரசர்; ஆனால், முத்தாரத்தை மட்டும் கொடுக்க இயையார். அரிச்சந்திரனைப் பொய்யனாக்குதற்காக, கோசிக முனிவன் பல சூழ்ச்சிகள் செய்கிறான். காட்டு விலங்குகளை ஏவிவிட்டு நாட்டு மக்களுக்குத் தொல்லை கொடுக்கிறான். அரிச்சந்திரன் வேட்டைக்குச் செல்கிறான். அங்கு முனிவன் இருபெண்களை அனுப்பி அவன் முன் நடனமாடச் செய்கிறான். அரசன் மகிழ்ந்து வேண்டியதைக் கேட்கச் சொல்கிறான். அப்பெண்கள் தங்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்கின்றனர் அரிச்சந்திரன் மறுத்து விடுகிறான். இவ்வாறே கொற்றக்குடை முதலியவற்றைக் கேட்டு, முடிவில் முத்தாரத்தைக் கேட்கின்றனர். அரசன், 'அஃதெனக் குரியதன்று; அது எனது அரசமரபுக் குரியது என மறுத்து விடுகின்றான்' என அரிசந்திரன் நாடகம் கூறுகிறது. பல்லுக்கு முத்து உவமை யாவதோடு, பல்லை 'முத்து' என உருவகமாகவே கூறுவது வழக்கம். தாய், குழந்தையை வாரி எடுத்து, பற்கள் தோன்ற உவகையைக் காட்டி முத்தம் கொடுக் கின்றாள். சேயும் அவ்வாறே சிரித்து முத்தம் கொடுக்கிறது. முத்தம் என்னும் பல்லின் உருவகப் பெயரே, வாய் முத்தத்திற்கு முத்தம் என்ற பெயர் ஏற்படக் காரணமாயிற்றென்க. இனி, முத்து என்பது, முத்தையன், முத்தப்பன், முத்தண்ணன், முத்தாய், முத்தம்மாள், முத்தக்காள் என, ஐயன், அப்பன், அண்ணன், ஆய், அம்மாள், அக்காள் என்னும் ஆண் பெண் பெயர்களுடன் முன் மொழியாக வந்து, அப்பெயர்களைச் சிறப்பித்து நிற்கிறது. இப்பெயருடைய ஆண் பெண் இரு பாலாரையும் 'முத்து' என்று அழைப்பதே பெருவழக்கு. வெள்ளைமுத்து, வள்ளிமுத்து, நல்லமுத்து, செல்லமுத்து, பச்சைமுத்து, கெட்டிமுத்து, மருதமுத்து என முத்தின் பெயரே மக்கட் பெயராகப் பயின்று வழங்கிவருதலை அறிக. செல்லமுத்து - செல்வமுத்து. பச்சை - ஈரம், நீர், மருதமுத்து - மருதநிலத்து முத்து. முத்துப்பிள்ளை, முத்துக்கவுண்டன், முத்து முதலி, முத்துச் செட்டி, முத்துரெட்டி, முத்து நாய்க்கன், முத்து நாயுடு என மக்களின் இயற்பெயராகவே வந்துள்ளது முத்து. இவையெல்லாம் முத்தின் பெருமையையும் சிறப்பையும், பயிலும் பயன் பாட்டையும் குறிக்குமல்லவா? இத்தகு பெருமையுடைய முத்தாரமுத்தம் பண்டு தமிழ் நாட்டினின்று எகிப்து, உரோம், சாலடியம், கிரேக்கம், அரேபியா முதலிய வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. முத்துவணிகர் என்போர் பெருவணிகர் வகையினராய்த் திகழ்ந்து வந்தனர். தமிழ் நாட்டு முத்துப் புழங்காத நாடே இல்லை யெனலாம். அப்படி ஏராளமாகக் கிடைத்து வந்தது அன்று முத்து; அவ்வாறு ஈட்டப்பட்டு வந்தது. உலகமளிர் எல்லாம் நந்தமிழ் முத்தை விரும்பி வாங்கி யணிந்து அழகுக் கழகு செய்து எழிலுடன் விளங்கினர். எகிப்தின் எழிலரசி எனப்படும் கிளியோ பாத்ரா என்பாள் அழகு மிளிரத் தமிழகத்து விலையுயர்ந்த கட்டாணி முத்துக்களை மதுவில் கரைத்துக் குடித்ததாகவும் கதையுண்டு. "ஆனால், பிற்காலத்தே தமிழ்நாடு அம்முத்துச் செல் வந்திரட்டும் முயற்சியைக் கைவிட்டது. கொஞ்ச காலமாகச் செயற்கை முத்தார மணிந்து திகழ்வதில் முனைந்துள்ளனர் தமிழ் மக்கள். எனது வளமிக்க முத்துச்செல்வத்தை இழந்தனன் எனினும், இப்பொது நின்பால் இருந்து முத்தெடுத்து வருவதைக் கண்டு ஒருவாறு ஆறுதலடைகிறேன். இனியேனும் என்மக்கள் அச்செல் வந்திரட்டும் முயற்சியில் முனைவார்களாக வாழ்ந்து கெட்டவர் களின் பழைய நிலையை யார் மதிக்கிறார்கள், நீ மதிக்க?"என்று சலிப்புடன் கூறி முடித்தாள் தமிழ் நிலமகள். "அன்னாய்! நின்பெருமையை அறியாது அவ்வாறு கூறி விட்டேன். பொறுத்தருள்க. பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ் உண்டன்றோ? இது நம் பொய்யா மொழியின் பொருளுரையாகுமன்றோ? மலர் மலர்ந்திருக்கிறது; அதைப் பறித்துச் சூடிப் பயன் பெறாவிடின் அம்மலர்ச்செடி என் செய்யும்? அது அதன் குற்றமன்றே! நம்மிடம் இன்னும் எத்தனையோ அரிய பொருள்கள் உள்ளன. அவை நம்மிடம் இருப்பதனால் நமக்கு யாதொரு பயனும் இல்லை. அதற்காக நாம் வருத்தப் பட்டென் செய்வது? அவற்றைப் பயன்படுத் தினாற்றானே நமக்கும் புகழ், அவர்க்கும் பயன்"என்று கருங்கடலும் வருத்தத் துடன் கூறிற்று. முத்துச்சிப்பியைக் கொண்டு வந்து கரையில் போட்டு விட்டு இவ்வுரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த அப் பாட்டாளிகள், 'கவலைப்படாதீர்கள். இனி உங்கள் பெருமை யைப் பழையபடி உலகம் அறியும்படி செய்வோம். எமது முன்னோர்கள்போல் அச்செல்வத்தை ஈட்டி இனிது வாழ்வோம்; வாழ்க நம் பெருமை' என்று முழக்கினர். நிலமும் கடலும் ஒன்றை யொன்று நோக்கியபடி இருந்தன!  14. ஊழ் ஒரு பெரிய இடத்துப்பெண். அப்பெண்ணுக்கு ஏற்ற அத்தகு இடத்து மாப்பிள்ளை ஒருவர் இருவர் அல்லர், நாலைந்து பேரிடம் நன்கு பொருத்தம் பார்த்தனர் பஞ்சாங்கப் பொருத்தம் பத்தில் ஐந்து பொருத்தம் இருந்ததால் போது மாம். ஆனால், இம் மணமக்களுக்கோ பத்துக்குப் பத்தும் பழுதில்லாமல் பொருந்தி யிருந்தன. கணவனின் வாழ்நாளை இறுகக்கட்டி வைத்திருக்கும் கயிற்றுப் பொருத்தம் மிகமிக நன்கு பொருந்தியிருந்தது. கேட்ட சாமிகளெல்லாம் நல்ல பூவே கொடுத்தன. பல்லிகளெல்லாம் கேட்டது கேட்டபடி கலகல வென்று சொல்லின. தடம் வழியும் நன்றாகவே இருந்தன. திருமணம் மிகச்சிறப்பாக நடந்தது. சடங்குகளெல்லாம் ஒன்றுகூடப் பாக்கி யில்லாமல் குறைவின்றி நடந்தன. பச்சைப் புரோகிதத் திருமணம் சுயமரியாதைத் திருமணமோ, தமிழ்த் திருமணமோ அங்கு தலைகாட்ட வில்லை. மணமகன் எழுந்து மிக்க மகிழ்ச்சியோடு மணமகள் கழுத்தில் தாலி கட்டினான். யாவரும் 'நீடூழி வாழ்க' என மனமார வாயார வாழ்த்தினர். வாழ்த்தொலி கேட்டு மணமக்கள் புன் முறுவல் பூத்தனர். அவ்வளவு தான்! மணமகனுக்கு என்னவோ ஒருவித மயக்கம் வந்தது. ஐந்து நொடிகூட ஆகவில்லை. மணமகன் பிணமகன் ஆனான். அம் மணவீடு இழவு வீடானது. மணப்பறை பிணப் பறையானது. ஆடை யணிகளால் அணி செய்யப்பட்டுச் செம் பொற் பாவைபோல் சிறப்புடன் வீற்றிருந்த மணமகள் கைம்மை யாக்கப் பட்டாள். மஞ்சளும் கலவையும் மணிப் பொற் கலன்களும் மணமலர் மாலையும் வண்ணச்சேலையும் அவளுக்குத் தீண்டப் படாதவையாயின. என்னே பெண் பிறப்பு! மணமகனின் திடீர்ச் சாவுக்குக் காரணம், மாரடைப் பென்றனர் மருத்துவர். அத்திருமணப் பந்தரில் குழீஇயிருந் தோருள் ஒரு சிலர் ஊழ்வினை யென்றனர்; ஒரு சிலர் ஆண்டவன் கட்டளை என்றனர்; ஒரு சிலர் அவன் செய்த தீவினை யென்றனர்; ஒரு சிலர் இவள் செய்த கருமம் என்றனர்; அக்கைம்மைப் பெண்ணின் பெற்றோர் எங்கள் தலைவிதி என்றனர்; அப்பெண் என் தலையெழுத்து என்றனள். அவர்கள் எல்லோரும் கூறியன ஒன்றே. 'சாமி, சகுனம், பொருத்தம், சடங்கு, புரோகிதம் எல்லாம் வினைவலியின் முன்னிற்க முடியாமல் புறங்காட்டி யோடின. வினையின் வலியே வலி! இக்கொலைகாரக் கொடுவினையை வெல்லும் வழியும் இல்லையா? இல்லை' என்பது தான் மக்கள் நம்பிக்கை. "ஓர் உயிர் முற்பிறப்பிற் செய்த வினையின் பயனை இப்பிறப்பில் நுகர்கிறது. நுகர்ந்தேதான் தீரவேண்டும். அதை மீறும் ஆற்றல் உயிர்க்கு இல்லை. வினையினாலேயே உயிர் பிறப்பெடுக்கிறது. வினையற்றால் உயிர் பிறப்பற்று விடும்; பிறப்பற்று வீடுபெறும். கடவுள் உயிர்களைப் படைக்கும் போதே இவ்விவ்வாறு வாழவேண்டும் என்றே படைத்து விடுகிறார். அவ்வாறே தான் வாழ வேண்டும். செல்வம், வறுமை, நன்மை, தீமை, இன்பம், துன்பம் எல்லாம் வினையின்படியே நிகழ்கின்றன. வினைப்பயனை நுகர்ந்தேதான் ஆகவேண்டும். ஊழ் வினைப் படியே நம் வாழ்வியல் நடைபெறுகிறது. நம்மால் ஆவதொன்று மில்லை"என்பது சமயக்கொள்கை. சமச் சார்பின்றித் தனித்துவாழ முடியாதென்ற நம்பிக்கை யுடைய மக்கள், அச்சமயக் கொள்கையை அப்படியே நம்பி வாழ்ந்து வருகின்றனர். அந்நம்பிக்கையே மக்களிடையுள்ள ஏற்றத்தாழ்வை, வேற்றுமை மனப்பான்மையை, மூடப்பழக்க வழக்கங்களைப் போக்க முடியாமல் தடுத்து வருகிறது. இந்நம்பிக்கை மக்களுக்குச் செய்யும் கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல. 'ஆணுக்குப் பெண் அடிமை உள்ளோர்க்கு இல்லோர் அடிமை. பிறப்பால் உயர்வு தாழ்வு, எல்லாம் வினைப்படி அமைந்தவை. இவற்றை மாற்ற நினைப்பது தப்பு. கடவுள் கட்டளையை மீறியதாகும்' என்னும் இந் நம்பிக்கை ஒழியாமல், 'எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓரினம்' என்பன வெறும் வாய்ப்பேச்சேயாகும். பழந்தமிழ் மக்களிடை இந்நம்பிக்கை யில்லை. இது பிற்காலத்தே உண்டாக்கப் பட்டதே யாகும். வள்ளுவர் கூறும் 'ஊழ்' என்பதற்கும். சமயச்சார்பான இவ்வூழ் வினைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை; ஊழ் என்பதனோடு வினை என்பதைச் சேர்த்து, ஊழ் என்னும் சொல்லின் பொருளைக் கெடுத்து விட்டனர் பிற்காலத்தவர். ஊழ் என்பது முறைமை, 'உலகியல் நிகழும் முறையை. உலகியலின் இயற்கை நிகழ்ச்சி. அதாவது, மக்களின் எண்ணத் திற்கும் செயலுக்கும் அடங்காமல், அவற்றிற்கு அப்பாற்பட்டு இயற்கையாக நிகழும் நிகழ்ச்சி ஊழ் எனப்படும். அவ்வியற்கை நிக;சசி எண்ணத்திற்கும் செயலுக்கும் ஒத்துவருதல் - ஆகூழ் எனப்படும். ஒவ்வாது வருதல் - போகூழ் எனப்படும். அவ்வியற்கை நிகழ்ச்சியின் போக்கில், நாம் எண்ணுவன, செய்வன ஆகும்; அதற் கெதிரிடையாக எண்ணுவனவும் செய்வனவும் ஆகா. இவையே ஊழ் எனப்படும். இவ்வியற்கை நிகழ்ச்சியை யறிந்து, அவ்வியற்கை நிகழ்ச்சி யொத்து நம் எண்ணமும் செயலும் ஆனதற்கு மகிழ்வது போலவே, அவ்வியற்கை நிகழ்ச்சி ஒவ்வாது நம் எண்ணமும் செயலும் ஆகாததற்கு வருந்தாமல், இயற்கை நிகழ்ச்சி ஒத்துக் கொள்ள வில்லை என்று அமைதியுற வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து. ஒருவன் அதிகாலையில் எழுந்து பனம் பழத்திற்காகப் பனந்தோப்பிற்குச் செல்கிறான். பழம் விழுந்து கிடந்தால் எடுத்து வருவான்; பழம் விழாமல் இருந்தாலோ, அல்லது விழுந்திருந்து முன்னமே ஒருவன் வந்து எடுத்துச் சென்றிருந் தாலோ வெறுங்கை யோடு வீடு திரும்புவான். அவன் திரும்பி வரும் போது தொப் பென்று ஒரு பழம் விழுந்தால் ஆவலோடு ஓடி எடுத்துச் செல்வான், பழத்தை எடுத்துக்கொண்டு வரும்போது பனைக்குடையவன் கண்டு பழத்தைப் பிடுங்கிக் கொண்டாலும் கொள்வான் வெறுங்கையோடு செல்வதைக் கண்டு இரங்கி, தானெடுத்து வந்த பழங்களில் ஒன்று கொடுத்தாலும் கொடுப்பான். பனம்பழங் கிடைக் காமல் வரும் வழியில் மாம்பழங் கிடைத்தாலும் கிடைக்கும். மாம்பழம் எடுத்து வரும் போது திருடனென்று பிடிபட்டாலும் பிடிபடுவான். அடியுதை தின்றாலும் தின்பான். நாயோ, பாம்போ கடித்தாலும் கடிக்கும். வழியிலே இறந்தாலும் இறப்பான். முன்னாடியே சென்றால் ஊரியில் (மோட்டார்) இடங் கிடைக்கும். காலந்தாழ்த்துச் சென்றால் சீட்டுக் கொடுப்போன் இடம் இல்லை யென்பான். ஒருவன் ஒரு நாள் காலந்தாழ்த்துச் சென்றான். வண்டி போயிருக்குமென்றே சென்றான். ஆனால், தொடர் வண்டியும் அன்று காலந்தாழ்த்து வந்தது, ஏறிக் கொண்டான். மற்றொரு நாள் அவ்வாறே காலந் தாழ்த்துச் சென்றான். வண்டி புறப்பட்டு விட்டது. ஒரு நாள் சுற்றத்தார் வருவதாகக் கடிதம் எழுதியிருந்தனர். பலகாரத்தோடு சமையல் செய்து வைத்துக் கொண்டு எதிர் பார்த்திருந்தனர். ஆனால், சுற்றத்தார் வரவில்லை. காரணம், அவ்வூரில் ஒருவர் திடீரென்று இறந்து விட்டார். இவர்களும் அங்குபோக நேர்ந்தது. மற்றொருநாள் எதிர்பாராமல் சுற்றத்தார் வந்தனர். வீட்டுக்காரர் வேறூர்க்குப் போய் விட்டனர். இருவர் ஒரே நாளில் ஒரு வேலைக்கு விண்ணப்பம் போட்டனர். முதலில் எடுத்துப்பார்த்த விண்ணப்பக் காரனுக்கு வேலை கிடைத்து விட்டது. இரண்டாவது எடுத்துப்பார்த்த விண்ணப்பக்காரனுக்கு வேலை கிடைக்க வில்லை. உலகியல் இங்ஙனம் நிகழும். உலகியலின் இயற்கை நிகழ்ச்சியாகிய இவ்வுண்மையை - ஊழை - அறியாது. எண்ணியது முடிந்தால் மகிழ்வதும் முடியாவிட்டால் வருந்துவதும் அறிவுடைமை ஆகாதென அவ்வூழின் தன்மை கூறுவதே திருக்குறள் 38வது அதிகாரம் இஃதறியார் அதை ஊழ்வினை எனக்கொண்டு தம் மனம் போனவாறு சமயக் கருத்தைப் புகுத்தி அவ்வதிகாரத்தையே இழிவு படுத்தி விட்டனர், அதிகாரப் பொருளையே மாற்றி விட்டனர். 23-11-55 இரவு சென்னையிற் புறப்பட்ட தூத்துக்குடித் தொடர் வண்டிக்கு வந்து, வண்டி புறப்பட்டதால் வருத்தத் தோடு திரும்பிச் சென்றவரை ஆகூழ் காப்பாற்றியது. அதே வண்டியில் 8-வது பெட்டியில் சென்றவர்களையும் ஆகூழ் காப்பாற்றியது 1-7 பெட்டிகளில் சென்றவர்களில் பெரும் பாலோரைப் போகூழ் கொன்றது. பெண்கள் பெட்டிப் பக்கங் கூட ஆகூழ் - போக வில்லை. இறந்தவர் அத்தனைபேர் தலையிலுமா அரியலூர்த் தொடர்வண்டி வீழ்ச்சியில் சாக வேண்டும் என்று ஆண்டவன் எழுதியிருந்தான்? இதில் ஆண்டவனுக்கு என்ன நன்மை? திருமால் கோயில்களை வழிபட்டு, மேலும் வழி படச் செல்லும்போது ஆற்றில் விழுந்து சாகவேண்டும் என்றா கோத்தகிரியார் ஐம்பது பேர் தலையிலும் எழுத வேண்டும்? இதுவா கடவுளின் அருட்டன்மை? புகை வண்டித்துரை அதிகாரிகளின், அத்துறை அமைச்சரின் கருத்தின்மையே அக்கேட்டுக்கு - அரியலூர்த் தொடர்வண்டி வீழ்ச்சிக்கு - காரணமாகும். அவ்வண்டியில் ஏறிச்சென்று செத்தவர்க்குப் போகூழ், சாகாதவர்க்கும் ஏறாத வர்க்கும் ஆகூழ். பொட்டி ராமுலு உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டு வெற்றி பெற்றார். ஆனால், நம் சங்கரலிங்கனாரோ வெற்றி பெறவில்லை; உயிர் போனதுதான் மிச்சம். காரணம், ஆகூழும் போகூழுமே. ஆந்திரரின் இனப்பற்று ஆகூழ். தமிழரின் இனப் பற்றின்மை போகூழ். தமிழ் நாட்டில் பொன்னாடை போர்த்துவதென்பது ஒரு சடங்காகிவிட்டது. ஒரு சிலர் ஒன்றின்மேலொன்றாகப் பல பொன்னாடைகளைப் போர்த்துப் பொலிகின்றனர். இது அன்னாரின் நல்வினையன்று; அதற்கு ஏற்பாடு செய்தோரின் ஆகூழேயாகும். நாம் யாருக்காகப் பாடுபடுகின்றோமோ அவர்களே நாம் இறந்த பிறகு நம்மை இழிவுபடுத்துவர் என்பது தெரிந் திருந்தால் ஃச்டாலின் கம்யூனிசத்தைப் பரப்புவதில் அவ்வளவு முயற்சி யெடுத்திருக்க மாட்டார். இது ஃச்டாலின் கொள்கையைக் கடைப்பிடித்த பிறநாட்டுக் கம்யூனிஃச்டுக்களின் போகூழாகும். ஃச்டாலின் உயிரோடிருக்கும் வரை புகழோடு வாழ்ந்ததால் அவர்க்கு அது ஆகூழாகும். வழிபாட்டுக் கூட்டத்தின் போது கோட்சே தம்மைச் சுட்டுக் கொன்று விடுவான் என்பது தெரிந்திருந்தால் காந்தி யடிகள் அன்று வழிபாட்டுக் கூட்டத்திற்குப் போயிருக்க மாட்டார். போனது அடிகளின் போகூழ்; கோட்சேயின் ஆகூழ். அவன் எண்ணிச்சென்றது முடிந்த தல்லவா? அன்று வானூர்தியில் ஏறாதிருந்திருந்தால் இன்று பன்னீர்ச் செல்வம் தமிழர் தலைவராய்த் திகழ்வாரன்றோ? அன்று அவ்வூர்தியில் ஏறியது போகூழ்; அவரது இடத்தைப் பிடித்தவரது ஆகூழே. இந்தியச் சிற்றரசர்களெல்லாரும் அரசிழந்து வேறொருவர் அதிகாரத்தின் கீழ் இருக்க, மைசூர் மன்னர் மட்டும் அரசிழந்தும் மன்னர்போலவே இருத்தல் அவரது ஆகூழே. மலையாள நாட்டு அரசியல் கூட்டணியின் ஒரு கட்சி யினரான பட்டம். தாணுப்பிள்ளை முதலமைச்ச ரானது ஆகூழ். அக்கூட்டணியின் மற்றொரு கட்சியான முஃச்லீம் லீக்கர்க்கு ஓர் அமைச்சர் பதவிகூடக் கிடைக்காதது போகூழே. அரசியல் வட்டாரத்தில் இவ்வாகூழும் போகூழும் அடிக்கடி மோதிக்கொள்ளும். நேற்று அமைச்சராக இருந்தவர் இன்று சட்டமன்ற உறுப்பினராகவும் முடியாமற்போவதும் உண்டு. நேற்று முகவரி தெரியாத ஒருவர் இன்று உயர்ந்த நிலையை அடைதலும் உண்டு. இவையெல்லாம் அந்தந்த நேரத்தில் நிகழும் ஆகூழும் போகூழுமே யாகும். இவ்விருவகை ஊழினையும் நன்கு அறிந்து அவற்றிற் கேற்ப நடந்து கொள்பவர்க்கே எண்ணிய எண்ணியாங் கெய்தும். அங்ஙனம் இயற்கை நிகழ்ச்சிக்கேற்ப நடந்து கொள்வோரே அறிவுடையோராவர். கட்டுப்பாட்டுக் காலத்தில், கட்டுப்பாட்டதிகாரி களைக் கட்டுப்படுத்தத் தெரிந்த, அன்னாரின் போக்கறிந்து நடந்து கொண்ட வணிகர்கள் பெருஞ்செல்வங் குவித்தனர். அங்ஙனம் நடந்துகொள்ளத் தெரியாதவர்கள் முன்னிருந்த இடத்திலேயே அசையாமல் இருந்தனர் அல்லவா? இவர்களில் யார் அறிவுடை யவர்கள்? ஊழின்படி அறிந்து கொள்ளத் தெரியாமல் அவ்வாறு நடந்து கொள்வோரைக் குறைகூறிப் பயனென்ன? ஒருவருடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகவுள்ள இவ்வறிவு ஒவ்வொரு வருக்கும் கட்டாயம் தேவை. இஃதே உலகத்தோ டொட்ட ஒழுகலென்பது. இவ்வுண்மை யுணர்ந்து, நமது வாழ்வுக்கும் தாழ்வுக்கும் அவ்வறிவே காரணமென்பதை அறிந்து, அதற்கேற்ப நடந்து கொள்ளாமல், 'நாம் என் செய்வது? நம்மால் ஆவது என்ன? எல்லாம் தலைவிதிப்படியே நடக்கும். நாம் வீண் முயற்சி செய்வதில் பயன் என்ன?' 'ஊழையும் உப்பக்கம் காண்பர் என்பது பொய்யுரை' என்று வீண்பேச்சுப் பேசிக்கொண் டிருப்பது பகுத்தறிவுக் கேற்புடைத்தாகாது. இயற்கை நிகழ்ச்சிக்கேற்ப ஒழுகி, எண்ணிய எண்ணியாங் கெய்தி, எடுத்தகாரியம் யாவினும் வெற்றி பெற்று இனிது வாழ்வதே அறிவுடைமை யாகும், இயற்கை நிகழ்ச்சிக் கெதிராகச் சென்று, எடுத்ததிலெல்லாம் தோல்வியுற்று, திருக்குறள் 'ஊழ்' என்னும் அதிகாரத்திலுள்ள பத்துக்குறளையும் நன்கு பயின்று, ஊழின் இயல்பை யறிந்து, "தெய்வத்தா லாகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்." "ஊழையும் உப்பாக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர்." என்னும் வள்ளுவர் வாய்மொழியைத் துணைக் கொண்டு, ஊழை வென்று இனிது வாழ்வதே பகுத்தறிவின் பயனாகும்.  15. பாட்டியற் பரிசு 'பரிசில் வாழ்நர்' என்பது, பழந்தமிழ்ப் புலவர் பெரு மக்களின் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகும். இது அன்னாரின் இயற்பெயரின் இடத்தில் பயின்று வந்ததெனல் மிகையாகாது. அவர்தம் வாழ்க்கை முறை அத்தகு நிலையில் அமைந்திருந்தது. 'வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி' எனப் பழமரம் நாடிச் செல்லும் பறவைகள் போலச் செல்வர்கள் உள்ள இடத்தை நாடிச் சென்று பாடிப் பரிசு பெற்று வாழ்ந்து வந்தனர் அப்புலவர் பெருமக்கள். இது புறநானூறு முதலிய சங்க நூல்களிலிருந்து தெரிகிறது. அப்பழந்தமிழ்ச் சான்றோர்கள் தனக்கென வாழாப் பிறர்க் குரியாளராக, 'தாம் பெற்ற செல்வம் பெறுக இவ்வையகம்' என்னும் குறிக்கோளுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தாம் பெற்ற பரிசிலைப்போல் பிறரும் பெற்று வாழ வேண்டும் என்னும் ஒப்புரவுடைய உயர் குணக்குன்றுகளாய் வாழ்ந்து வந்தனர். தாபம் பரிசு பெற்ற செல்வரிடம் மற்ற புலவரையும் அனுப்பிப் பரிசு பெறும் படிச்செய்து வந்தனர். 'பெற்ற பெரு வளம் பெறாஅர்க் கறிவுறீஇ' என்பது தொல்காப்பியம். இங்ஙனம் செய்தல் ஆற்றுப்படை எனப்படும். ஆற்றுப்படை - ஆற்றுப் படுத்தல், வழிப்படுத்தல். ஆறு - வழி. படை - படுத்தல். அதாவது தாம் பரிசு பெற்ற வள்ளலிடம் புலவரை அனுப்புதல். அது புலவராற்றுப்படை, கூத்தராற்றுப் படை, பொருநராற்றுப் படை, பாணராற்றுப் படை விறலி யாற்றுப்படை என ஐவகைப்படும். இவ் வாற்றுப்படைச் செயலொன்றே பழந்தமிழ்ப் புலவர் பெருமக்களின் ஒப்புயர்வற்ற உயரிய பண்பாட்டுக்குச் சான்று பகரும். இவ்வாற்றுப் படையின் வகையால் சங்ககாலப் புலவர் பெருமக்களின் வகையும் பெருக்கமும் இனிது விளங்கும். அவர்தம் பரிசில் தொகை. பதினெண் கீழ்க்கணக்கு என்னும் சங்க நூல்களிற் பெரும்பான்மைய. அப்பரிசில் வாழ்க்கைக் கொள்கை தந்தவையே சங்கத் தமிழ் நூற் செல்வம் எனல் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலாகும். தனக்கென வாழாத் தகவுடையோரான அப்பழந் தமிழ்ச் சான்றோர்கள் தமிழர் வாழ்வே தம் வாழ்வெனும் குறிக் கோளுடன், தமிழ் மொழியை வளர்த்தலே தம் கடமை யெனக் கொண்டு. பாடிப் பரிசு பெற்று வாழ்ந்து வந்தனர். மக்கள் வாழ்க்கையை - வாழ்க்கை முறையை - அகம் புறம் எனப்பகுத்து, இயற்கைப் பொருளின் எழிற்சுவை யூட்டி இனிது பாடித் தமிழ் மக்களை வாழ்வித்துத் தமிழ் வளர்த்து வந்தனர். அன்னார் பாடும் பெரும்பாலான பாட்டுக்களில் பாட்டுடைத் தலைவன் இயற்பெயர் இராது. அவ்வாறு தம் பெயரை யமைத்துப் பாடும்படி பாட்டுடைத் தலைவர்களும், விரும்பாப் பாட்டுடைத் தலைவர்களாகிய அப்பழந்தமிழ்ச் செல்வர்களும் தம் செல்வத் தைத் தமிழர் வாழ்வுக்கு, தமிழ் வளர்ச்சிக்குச் செலவிடுதலே தமக்குத் தகவென எண்ணுந் தகவுடையோராய் இருந்தமையால், தம் பெயர் வரவேண்டும் என விரும்பவில்லை. பாடுவோரும் பாடப்படுவோருமாகிய அவ்விருவர் தம் கொள்கைக்கேற்பவே, பாட்டுடைத் தலைவன் இயற் பெயரைப் பாட்டில் அமைத்துப் பாடுதல் மரபன்றெனக் கொண்டிருந்தனர் அக்காலத் தமிழச் சான்றோர். அதிலும், அகப் பொருட் பாட்டுக் களில் பாட்டுடைத் தலைவன் இயற்பெயர் சுட்டுதல் அறவே விலக்கப்பட்டது. 'சுட்டி யொருவர் பெயர் கொளப்பெறாஅர்' என்பது தொல்காப்பியம் இவ்வுயரிய கொள்கையாற்றான் இறவாத உயிர் நூல்கள் தோன்றின. கடைச் சங்க காலத்திற்குப் பின்னர் இவ்வுயரிய முறை கைவிடப்பட்டது. பாட்டுடைத் தலைவரின் இயற்பெயர் சுட்டாத பாட்டுக்களே இல்லாமையாயின. தமிழ்ச் செல்வரும் அத்தகு நிலையை அடைந்தனர். பாட்டுடைத் தலைவனைப் பலபட வெளிப்படையாகப் புகழ்ந்து பாடத் தலைப்பட்டனர். இது பற்றித் தோன்றியதே 'உயர்வு நவிற்சி அணி' எனலாம். தலைவரும் பாட்டின் பொருளுக் கேற்றவாறு பரிசு கொடுக்கும் வழக்கத்தை விட்டு, புகழ்ச்சிக்குத் தக்க பரிசு கொடுக்கலாயினர். பாட்டின் தரம் அங்ஙனம் மதிக்கப்படலாயிற்று. இதனால், 'சுட்டி யொருவர் பெயர் கொளப் பெறாஅர்' என்னும் மரபு கைவிடப்பட்டு பாட்டுடைத் தலைவனது இயற்பெயர் சுட்டி, வெளிப்படை யான சாதற் கவிதைகள் புனையத் தலைப்பட்டனர் பிற்காலப் புலவர்கள். இம்முறையினால் தோன்றியனவே தமிழில் உள்ள தொண்ணூற் றாறு வகைப் பனுவல்கள். பிள்ளைத் தமிழ், கலம்பகம், உலா, மடல், அந்தாதி முதலிய பனுவல்களைப் 'புகழ் நூல்' எனல் பொருத்தமான பெயராகும். பழந்தமிழ்ச் செய்யுள் மரபினின்றும் மாறுபட்ட இப்புகழ் நூல்களைப் பாடுதற்கு, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் இலக்கணங்களே யன்றி ஒரு புத்திலக்கணமும் படைக்கப் பட்டது. அதுதான் பாட்டியல் என்பது. பாட்டு இயல் - பாட்டுப் பாடும் இலக்கணம். புதிய முறையில் எழுந்து புகழ் நூல்களை இவ்வாறு பாடவேண்டும் எனக் கூறுவதே பாட்டியலாகும். தமிழில், வெண்பாப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், பன்னிரு பாட்டியல், நவநீதப் பாட்டியல் முதலிய பாட்டியல் நூல்கள் உள்ளன. இவை மங்கல முதலிய பத்துப் பொருத்தமும் 96 பனுவல்களின் இலக்கணமும் கூறுகின்றன. மக்களின் வாழ்க்கை முறையை அகம் புறம் எனப் பகுத்து, இயற்கையின் எழிலோவியமாகச் செய்யுள் செய்து மக்களை வாழ்வித்ததோடு, தமிழ் வளர்த்து வந்த புலவர் மரபு, அம்முறை யைக் கைவிட்டு, கொடுப்போரைப் புகழ்வதையே குறிக் கோளாகக் கொண்டு, நம் முன்னையோர் ஒருவன் ஒருத்தியின் வாழ்க்கைத் துணைக்குக் கொண்ட குடிப்பிறப்பு, ஒழுக்கம், ஆண்மை, ஆண்டு, உருவம், அன்பு முதலிய பத்துப் பொருத்தங் களையும் விட்டு, அவ்வாழ்க்கைத் துணைவர்களுக்கு யாதொரு தொடர்பும் இல்லாத பத்துப் பொருத்தம் பார்ப்பது போலவே, ஒருவன்மேல் ஒரு நூல் செய்ய அவன் இயற்பெயரைக் கொண்டு, அவன்மேற் பாடும் நூலுக்கும் அவனுக்கும், அன்னார்க்கும் அந்நூற்கும் தொடர்பில்லாத மங்கலம் முதலிய பத்துப் பொருத்தம் பார்த்து நூல் செய்யத் தலைப்பட்டது. பாட்டின் பொருட்குப் பரிசு பெறும் முறை மாறிப் பாட்டியற்குப் பரிசு பெறும் முறை உண்டானது. பாட்டின் கருத்தைக் கூறிப் பாட்டுடைத் தலைவனை மகிழ்வித்துப் பரிசு பெறும் மரபை விட்டு, பாட்டுக்கும் பாட்டுடைத் தலைவனுக்கும் உள்ள போலிப் பொருத்தத் தைக் கூறிப் பாட்டுடைத் தலைவனை மகிழ்வித்துப் பரிசு பெறும் மரபு தொடங்கியது. பத்துப் பொருத்தங்களாவன : மங்கலப் பொருத்தம், சொற் பொருத்தம், எழுத்துப் பொருத்தம், தானப் பொருத்தம், பாற் பொருத்தம், உண்டிப் பொருத்தம், வருணப் பொருத்தம், நாட் பொருத்தம், கதிப் பொருத்தம், கணப் பொருத்தம் என்பன. இப்பத்துப் பொருத்தமும் பாட்டுடைத் தலைவனின் இயற் பெயரின் முதலெழுத்திற்கும், பாட்டின் முதற் சீரின் முதலெழுத் திற்கும் பார்க்கப்படும். இப்பத்துப் பொருத்தமும் பொருந்தி யிருக்கு மாறு நூல் செய்தலே மரபென்கின்றது பாட்டியல். மணமக்களுக்கு இன்று பார்க்கும் பொருந்தாத போலிப் பொருத்தங்கள் போலவே, இவையும் பொருந்தாத போலி எனினும், அம்மணப் பொருத்தத் தை நற் பொருத்த மெனப் பார்ப்பது போலவே, இப்பொருத்தமும் நற்பொருத்த மெனக் கூறுகிறது பாட்டியல் நூல். மணப்பொருத்தத்தில் இது நல்லது இது தீயது என்பது போலவே, இப் பொருத்தத்திலும் இது நல்லது இது தீயது என்பது உண்டு. பாட்டுடைத் தலைவன் இயற்பெயரின் முத லெழுத்திற்கும் பாட்டின் முதற்சீரின் முதலெழுத்திற்கும் பார்க்கும் பொருத்தம் நல்லதாக அமையச் செய்யுள் செய்ய வேண்டும். சீர் எழுத்து பொன் பூ திரு முதலிய மங்கலச் சொற்களில் ஒன்று முதற் பாட்டின் முதற் சீராக வரப்பாடுவது மங்கலப் பொருத்தமாககும். வகையுளி முதலியன இல்லாத சொல் முதலில் வரப்பாடுவது சொற் பொருத்தமாகும். முதற் பாட்டின் முதற்சீர் 3,5,7,9 ஆகிய ஒற்றைப் பட்ட எழுத்துக்காளாக வருதல் எழுத்துப் பொருத்தம் ஆகும். 4,6 என இரட்டைப்பட்ட எழுத்துக்களால் வருவது தீது. பாலன், குமரன், இராசன், மூப்பு, மரணம் என்பன தானப் பொருத்தம் ஆகும். 'அ,ஆ' வும் அவற்றின் உயிர் மெய்யும் பாலன். இவ்வாறே இ,ஈ முதலிய உயிர்களும் அவற்றின் உயிர் மெய்களும் முறையே குமரன், இராசன், மூப்பு, மரணம் முதலிய தானங்களாகும். இவற்றுள் மூப்பும் மரணமும் பாட்டின் முதற்சீரின் முதலெழுத்தாய் வருதல் தீது. குற்றெழுத் தெல்லாம் ஆண்பால், நெட்டெழுத் தெல்லாம் பெண்பால், ஒற்றும் ஆய்தமும் அலி. அலி யெழுத்து முதலில் நிற்றல் தீது. உணவு - அமுது, நஞ்சு என இருவகைப்படும். க் ச் த் ந் ப் ம் வ், அ இ உ எ - இவை அமுத எழுத்துக்கள். மற்றவை நஞ் செழுத்துக்கள். நஞ்செழுத்து முதற்சீரின் முதலெழுத்தாக வருதல் தீது. உயிர் பன்னிரண்டும், க் ங் ச் ஞ் ட் ண் என்னும் மெய்யாறும் - மறையோர் சாதி. த் ந் ப் ம் ய் ர் - இவை அரசர் சாதி. ல் வ் ற் ன் - இவை வணிகர் சாதி. ழ் ள் - இவை சூத்திரர் சாதி. இவை வருணப் பொருத்தம் என வட சொல்லில் அமைந்திருப்பது நோக்கற் பாலது. பெ, பொ, ரா, ரி - சித்திரை என மக்கட் பெயரின் முதலெழுத் துக்கு நாள் கொள்வது போலவே, அ ஆ இ ஈ நான்கும் கார்த்திகை என இந்நாட் பொருத்தத் திற்கும் நாள் கொள்ளப் படுகிறது. நாள் - நட்சத்திரம். கதி - தெய்வகதி, மக்கள் கதி, விலங்குகதி, நரகர் கதி என்பன. கணம் - நீர், தீ, வானம் முதலியன. இப்பத்துப் பொருத்தங் களும் முற்பாட்டின் முதற்சீரில் நன்கு அமையப் பாடின், பாட்டு டைத் தலைவன் செல்வம் பெருகி நீண்ட வாழ்வு பெற்று இனிது இன்புற்று வாழ்வானென்பது நம்பிக்கை. இங்ஙனமே பத்துப் பொருத்தமும் பழுதற அமையும் மண மக்களும் இவ்வாறேதான் வாழ்வரென்று நம்பப்படுகிறது. ஆனால், நடைமுறையில் அது நிகழ்வதில்லை. மணப் பந்தலி லேயே மடிவோர் பலர் உண்டு. பல்லாயிரக் கணக்கான கைம் பெண்கள் இதற்குச் சான்றாவார்கள். கஞ்சிக்கு வழியின்றி வாழும் வாழ்க்கைத் துணைவர்கள் பொருத்தம் பார்க்காமலா மணந்து கொண்டனர்? பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இவ்விலக்கணம் கூறப்படவில்லை. ஒரு சில தமிழ் எழுத்துக்களை நஞ்செழுத்தென்றும், ஒரு சில எழுத்துக்கள் மரணத்தைத் தரும் எழுத்துக்கள் என்றும் கொண்டதற்குப் பழையதமிழ் நூல்களில் ஆதாரம் இல்லை. 'தெட்டு தற்கோ பணக்காரகத் துரைகளுண்டு' என்ற பணக்காரத்துரைகளை ஏமாற்றிப் பொருள் பறித்து வாழ்வதற்காகப் பிற்காலப் புலவர்கள் தாமாகப் படைத்துக் கொண்ட படைப்பேயாகும் இப்பாட்டியல். பொருளற்ற இப்போலி முறை தமிழப்புலவர் பட்டப் படிப்பிற்குப் பாடமாக உள்ளது. இப்போலியைப் புலவர் தேர்வுக்குப் பயில்வோர் அடையும் பயன் என்ன? வீணாகப் படித்துத் தெரிந்து ஆவதென்ன? காலக்கேடும் மூளைக் கேடும்தான் பயன்! இனி, பயனற்ற இப்போலிப் பொருத்தங் கூறுவதோடு அப்பாட்டியல் நின்றுவிடவில்லை. குல வேற்றுமையினையும் தெய்வத் தன்மையினையும் மறை முகமாகப் புகுத்துகிறது. 'வருணப் பொருத்தம்' என்பதில் மனுநூலிற் கூறும் நாற்பாற் சாதிக்கும் தமிழ் எழுத்துக்களின் உரிமை கூறும் முகத்தான் சாதி வேற்றுமையைத் தமிழரிடைப் புகுத்துகின்றது. அதாவது, உயிர் பன்னிரண்டும், க் ங் ச் ஞ் ட் ண் என்னும் ஆறு மெய்யும் மறையோர் சாதி. த் ந் ப் ம் ய் ர் இவை அரசர் சாதி. ல் வ் ற் ன் - இவை வணிகர் சாதி. ழ் ள் - இவை சூத்திரர் சாதி. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' 'ஒன்றே குலம்' - என்ற தமிழினத்தின் தாய்மொழியாகிய தமிழ் வாயிலாய், ஆரியச் சாதி வேற்றுமை தமிழர்பால் புகுத்தப் படுகிறது. மனு முறைக்கு இங்கு ஆதிக்கம் ஏற்படுத்துகிறது. எழுத்தென்பது ஒலி; மக்களின் உயிர்ப்பொலி. அவ்வொலியுமா சாதி வேற்றுமைச் சுழலிற் பட்டுத் தடுமாற வேண்டும்? நாற் பாலுக்கும் எழுத்துக்களைப் பங்கிடும் பங்கில் எவ்வளவு ஏற்றத்தாழ்வு? தமிழரிடைப் புகுத்தப்பட்ட சாதி வேற்றுமையை ஒழிக்க எத்தனையோ தமிழ்ச் சான்றோர்கள் அரும்பாடு பட்டுள்ளனர், பட்டென் பயன்? தமிழர் வாழ்க்கையில் மட்டுமா புகுந்துள்ளது சாதி வேற்றுமை? இல்லை. அன்னார் தாய் மொழியில், தாய் மொழி இலக்கணத்தில், செய்யுளியற்று முறையில் புகுந்து நீக்க முடியாத நிலையைப் பெற்றுள்ளது. 'நால்வகைச் சாதி இந்நாட்டினில் நாட்டினீர்' என்னும் கபிலர் மொழி, எத்தகைய பொருள் பொதிந்த பொன்மொழி! உண்மையான உறுதி மொழி! வட மெழியில் பிராமணர், சத்திரியர், வைசியர் என்பதே இங்கு மறையோர், அரசர், வணிகர் என மெழி பெயர்த்துக் கூறப்படுகிறது. ஆனால், தமிழினத்தின் தலைமை யிடமான, அந்தணர் அரசர் வணிகர் என்னும் வகுப்புகள் தோன்றும் முதலிடமான வேளாண் குடி மக்களை 'மண்பாவும் சூத்திரர் தாம் மற்றையவை' எனச் 'சூத்திரர்' என அவ் வடமொழிச் சொல்லால், தமிழர் வெறுக்கும் தகாத இழி சொல்லால் சுட்டப்படுகிறது. சூத்திரன் என்னும் சொல் இழி பொருளுடையது. அதனால் தமிழரில் யாரையும் சுட்டக் கூடாது. அவ்வாறு யாராவது 'சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டெழு' என்று தமிழ் மக்கள் வெறுத்து வருகின்றனர். ஆனால், அச்சொல் ஈங்கு உரிமையுடன் கூறப்படுகிறது. வெண்பா மறையோர் சாதி, நிறம் வெண்மை; ஆசிரியப்பா அரசர் சாதி, நிறம் செம்மை; கலிப்பா வணிகர் சாதி, நிறம் பொன்மை; வஞ்சிப்பா சூத்திரர் சாதி, நிறம் கருமை - என நாற்பாச் சாதியுரிமை கூறப்படுவதால், வேண்டு மென்றே ஆரிய வருண வேற்றுமை தமிழரிடைப் புகுத்தப் படுகிறது. எவ்வாறு? பாவுரிமை கூறுமுகத்தான் புகுத்தப் படுகிறது. மேலும், 'முதற் குலத்தோர் மூவருக்கும் தொண்டு செய்தல் சூத்திரர் தொழில்' என மனு நூல் கூறுகிற படியே, 'பார்திகழ மூவர் பணித்த பணியொழுகல்... காட்டினார் சூத்திரர் தங்கண்' எனக் கூறுதலால், வேளாளராகிய உயர்குடி மக்களையே 'சூத்திரர்' என இழி சொல்லால் கூறப்படுகிறது என்பது வெளிப்படை. கலம்பகம் தேவர்க்கு 100 பாட்டும், ஐயர்க்கு 95 பாட்டும், அரசர்க்கு 90 பாட்டும், வணிகர்க்கு 50 பாட்டும், சூத்திரர்க்கு 30 பாட்டும் பாடப்படும் என்பதால், ஏற்றத்தாழ் வான ஆரிய வருண வேற்றுமையே பாட்டியலில் கூறப்படும் நாற்பாற் குலவேற்றுமை என்பதில் சிறிதும் ஐயப் பாடில்லை. 'எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்' என வாயாரப் பாடும் தமிழர்கள், தமிழ்த் தலைவர்கள், தமிழ் நாட்டு ஆள்வோர்கள் இதனை உணரவேண்டும். தமிழ் நூல் வகையின் இலக்கணங் கூறும் ஒரு நூலில் இத்தகைய குல வேற்றுமை நாற்றம் வீசலாமா? இது உடனடியாகக் களையத் தகுந்த தல்லவா? இதைவிட விரைவில் விலக்கத்தக்கதாய் முன்னிற்பவை வேறுயாவுள? இளந்தமிழ் மக்களே எண்ணிப் பார்மின்! இதோடு நின்றுவிடவில்லை அப்பாட்டியல். தமிழ் எழுத்துக் களெல்லாம் மக்களின் இயல்பான பேச்சொலியாக அமைந்தவை யாகும். அதனாற்றான் தமிழ் மொழி எளிய இனிய மொழியாகத் திகழ்கின்றது. உலக மொழிகளின் முதன் மொழியாய் மிளிர் கின்றது. இங்ஙனமிருக்க, அரன், அரி, செவ்வாய், புதன், ஞாயிறு, திங்கள், இயமன், வருணன், வியாழன் என்னும் ஒன்பது தேவரும் முறையே இரண்டிரண்டாகப் பதினெட்டு மெய்களையும் படைத்தனர் எனவும், பன்னிரண்டு உயிர்களையும் பிரமன் படைத்தனன் எனவும் கூறுவது வியப்பினும் வியப்பாக வன்றோ உளது? ஒரு மொழியின் எழுத்துக்கள் அம்மொழி பேசுவோரின் பேச்சு வழக்கிலுள்ள சொற்களின் ஒலிக் கூறுகளின் வடிவங்களே யாகையால், அவை அம்மொழி தோன்றிய போது உடன் தோன்றியவையேயாகும். ஒரு மொழியின் எழுத்துக்கள் ஒருவரால் உண்டாக்கப்படும் இயல்பினவல்ல, தமிழ் எழுத்துகள் முப்பதினையும் அப்பத்துத் தேவரும் ஒன்று கூடிப் பேசி, இன்னார் இன்ன எழுத்துக்களைப் படைப்ப தென முடிவு செய்து ஒருமனப்பட்டுப் பங்கு போட்டுக் கொண்டு படைத்தனர் என்பது வேண்டுமென்றே பொருத்தப் புளுகலாகவன்றோ உளது? பன்னிரண்டு உயிர்களையும் படைத்த, படைத்தற் றொழிலைத் தனது குலத் தொழிலாக உடைய பிரமன், ஏனைப் பதினெட்டு மெய்களையும் படைக் காமல் பிறர் படைக்க விட்டு விட்டதன் காரணம் விளங்கவில்லை. அல்லது பன்னிரண்டு உயிர்களையும் படைத்ததும் களைப்படைந்து விட்டான் போலும்! இனி, தமிழ் மொழிக்கே சிறப்பாக உடைய, தமிழ் எழுத்துக் களின் பயன்பாட்டுக் கருவியாக உள்ள ஆய்த எழுத்தை எத்தேவரும் படைத்ததாகத் தெரியவில்லை. இது எல்லாம் வல்ல தேவர்கட்கு இழுக்காகுமன்றோ? தமிழ் எழுத்துக்களைப் பத்துத் தேவர்கள் கூடிப் படைத்தனர் என்பது, தமிழ் மொழியின் பெருமையைக் குறைக்கக் கட்டின கட்டுக்கதையே யாகும். தமிழை, 'ஆதிசிவன் பெற்று விட்டான்' என்பர். தமிழ் எழுத்துக்களைப் பிரான் முதலிய பதினொரு தேவர்கள் படைத்தா ரெனில், ஆதிசிவன் படைத்த தமிழ் என்பது என்ன? எவ்வளவு முரணான கூற்று? பார்த்தீர்களா பாட்டியலின் பரிசினை? இத்தன்மையுடைய நூல்கள் தமிழ் மொழியில் இருக்கும்வரைத் தமிழினம் எவ்வாறு ஒன்றுபட்டு வாழும்? தமிழர் எங்ஙனம் மானத்தோடு மதிப்போடு வாழ முடியும்? தமிழ்ப் பண் பாட்டுக்கு மாறான இலக்கணம் படிக்கும் தமிழன் எங்ஙனம் தமிழுணர்ச்சி, தமிழினவுணர்ச்சி பெற முடியும்? அவனுக்குத் தனித் தமிழ்ப்பற்று எப்படியுண் டாகும்? தமிழ் அறிஞர்கள், தமிழ்ப் புலவர்கள் தமிழ் ஆட்சி யாளர்கள் தமிழர்க்கு இழுக்காக உள்ள இதனைப் போக்கித் தமிழினத்தை நல்வாழ்வு வாழச் செய்வார்களாக!  16. நனி நாகரிகம் வானவெளியில் விட்டு விட்டொளிறும் உடுக்குலங்களுக் கிடையே இரட்டைவால் முழுமதி ஊர்ந்து செல்வது போல, நகரத்துத் தெருவிடைச் சில கன்னியர், செந்தாமரை மலர் போன்ற முகத்தின்கட் பொற் சுண்ணம்பூசி, மதியிடைத் தோன்றும் மறுவென்னப் பிள்ளைமதி, நுதலில் சாந்துப் பொட்டிட்டு, முகத்தையணுகும் சிற்றுயிர்களை அடித்து விரட்டும் சாட்டைகள் போல இரட்டைச் சடையிட்டு, அவற்றில் தோரணம் போல ஒளிமிக்க நறுமலர்ப் பன்மையைச் சூடி, மின்னலை மறைக்கும் மேகம் புரைய வண்ணப் பட்டாடை யுடுத்துப் பொற்பாவை உயிர்பெற்றுச் செல்வது போல் ஆடி யசைந்து செல்லக் கண்ட நாட்டுப்புற நங்கையர் சிலர், "எவ்வளவு நாகரிகம்! என்ன இருந்தாலும் நகரம் நகரந் தான், நாட்டுப்புறம் நாட்டுப் புறந்தான்! உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?"எனத் தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்பதை அறியாது, அந்நகரத்துப் பெண்மணி களைப் புகழ்ந்து சென்றனர். அந்நகரத்து நாகரிக மணிகளோ, "என்ன நாகரிக மற்ற பட்டிக்காடு! உடையையும் நடையையும் பாரு!"என அந் நாட்டுப்புற நல்லியலார்களை இகழ்ந்தவண்ணம் கேலிச் சிரிப்புச் சிரித்துக்கொண்டு சென்றனர். நாகரிகம் என்பது, காலப்போக்குக் கேற்றவாறு ஆடை யணிகள் அணிவதும், உண்பதும் உறைவதுமேயாம் என்பது ஒரு சாரார் கருத்து, காலத்துக்கேற்ற கருத்து மாற்றமே நாகரிகம் எனப்படும் என்பது மற்றொரு சாரார் கருத்து. ஒரு காலத்தே நாகரிகம் எனப் போற்றப்பட்டது பின்னொரு காலத்தே நாகரிக மற்றதாகி விடுதல் இயல்பு எனவே, இது தான் சிறந்த நாகரிகம் என நாகரிக நல்வாழ்வை வரையறுத்துக் கூறுதல் இயலாது. காலப்போக்கே நாகரிகத்தின் இயல்பைக் கணித்தறியும் கட்டளைக் கல்லாகும். காலில் வீரக்கழலும், கையில் மணிப்பொன் காப்பும், தோளில் வளையும், மார்பில் பதக்கமும் மணிப்பொன் மாலையும் மலர் மாலையும், காதிற் கடுக்கும் முறுகும் ஒரு காலத்தே ஆடவரின் நாகரிகமாக மதிக்கப்பட்டு வந்தன. பின்னொரு காலத்தே முடியும் மீசையும் தாடியும், மற்றொரு காலத்தே குடுமியும் முறுக்கு மீசையும், இன்னொரு காலத்தே குஞ்சியும் மீசையும் நாகரிகச் சின்னங்களாகக் காட்சி யளித்தன. 'குஞ்சி யழகும்' என்பது நாலடியார் காலத்து நாகரிகம். இன்றோ குறுங்குஞ்சியும் மழிப்பு முகமும் அல்லா தவை நாகரிக மற்றவை யாகி விட்டன. இன்று குடுமி இகழ்ச்சிக்குரிய ஒன்றாகி விட்டது. 'மீசை முருக்கழகன்' என்பது புகழேந்தியார் காலத்து நாகரிகம். வேட்டியைக் கோவணம் போட்டுக்கட்டி, தலையில் துண்டால் உருமாலை கட்டிக்கொள்வது ஒரு காலத்து நாகரிகம். அதற்கெனவே நெய்யப்பட்ட மெல்லிய நீண்ட துணியில் உருமாலை கட்டித். தோளில் ஒரு துண்டைப் போட்டுக் கொள்வது முதியோரின் உடை நாகரிகமாகும். இன்று உருமாலை ஊரை விட்டே ஓடிவிட்டது. சட்டையின்றி யிருப்பது இன்று தாழ்வு என்னும் நிலை ஏற்பட்டு விட்ட தல்லவா? இன்னும் உடையில் எத்தனையோ மாற்றம். காலை ஒன்பது மணி பழைய சோற்று நேரம் எனப்படும். அக்காலமே இன்று அறியாத பொருளாகி விட்டது. முன்பு ஆடவர் பெண்டிர் ஒவ்வொருவருக்கும் உண்பதற்கு ஒவ்வொரு வெண்கல வட்டில் இருக்கும். 'போட்டு வைத்தால் உண்பாய் ஒரு வட்டில்' என்பது பழமொழி. 'வாலுப்போய்க் கத்தி வந்தது' என்பது போல, வட்டில்போய் இலை வந்தது; இலைபோய்த் தட்டம் (பிளேட்) வந்தது; இன்று எவர்சில்வர் வட்டில் இறுமாப் புடன் உலவுகிறது. தமிழ் நூல்கள் மகளிர் காதுக்கு வள்ளை இலையை உவமை கூறுகின்றன. அவ்விலை நீண்ட வளையம் போல் இருக்கும். அக்காலப் பெண்மணிகள் காது குத்தி, பஞ்சு போட்டுக் குதம்பை போட்டுத் துளையைப் பெருக்கி, ஈயக்குணுக்குகள் போட்டுத் தோளைத் தொடும்படி காதுகளை நீளச்செய்து, முடிச்சு, நாக படம், பூச்சிக்கூடு என்னும் நகைகள் அணிந்து வந்தனர். நகைகள் அணிந்த காதுகள் முன்னும் பின்னும் ஆடுவதற்குப் பொன்னூ சலாடுதலை உவமை கூறியுள்ளனர். இலண்டன் பொருட்காட்சி சாலையில் உள்ள கண்ணகியின் சிலை ஒன்று அத்தகைய நீண்ட காதுகளையுடையதாக இருப்பதும், இன்றும் மதுரைப்பக்கம் அத்தகைய காதுகளையுடைய மகளிர் இருந்து வருவதும் இதற்குச் சான்றாகும். ஆனால், இன்று அது நாகரிக மற்றதாகக் கருதப்படு கிறது. இத்தகைய காதுகைள யுடைய பெண்கள் அக்காது களை வெட்டி ஒட்டவைத்துக் கம்மல் என்னும் காதணியணிந்து, காலத்துக் கேற்றவாறு நாகரிகப் பாதையில் நடந்து வருகின்றனர். 'பணங்காசு கூடவா வருகிறது? செத்தா நம்ம கூட வருவது இதுதானே' என்று பெண்கள் உடம்பில் பச்சை குத்திக்கொள் வதை நாகரிகமாகக் கருதி வந்தனர் முன்பு. செக்கச் செவேலென்ற மேனியை, கை கால்களைப் பச்சைப் பசேலென்று செய்து கொள்வது அழகுக் கழகு செய்யும் நாகரிகமாக மதிக்கப் பட்டது. சரம், வங்கி, குளம், கிளி, மீன், யாளி, சிங்கம், கங்கணம், மோதிரம் என அந்தந்த இடங்களுக் கேற்ற பச்சை குத்தி வந்தனர். எல்லாப் பெண்களும் கட்டாயம் நெற்றிப் பச்சை குத்திக் கொள்வர். இது ஒரு பருவமாகும். அன்று தெருக்கூத்து அல்லது நாடகங்களில் பச்சைக் காரி வருதல் ஒரு பாகம். 'பச்சை குத்தலையா ஆயாலோ பச்சை குத்தலையா' என்று பாடிக்கொண்டு வருவாள் பச்சைக்காரி. இன்று பச்சை குத்துதல் நாகரிகமற்ற தாகிவிட்டது. பச்சைக்காரர் என்னும் ஓர் இனமக்களே இன்று வேலை யில்லாத் திண்டாட்டத் திற்குள்ளாகி விட்டனர். திருச்சி மாவட்டத்தில் சில இடங்களில் இன்றும் ஆண்கள் நெற்றிப் பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. அன்று மஞ்சள் பூசுதல் மகளிர்க்கு மங்களமாகக் கருதப் பட்டு வந்தது. கைம்மைகள் மங்கல மிழந்ததற்கு அறிகுறியாக மஞ்சட் பூசுவதில்லை. ஆனால், இன்றோ மஞ்சட் பூசுதல் நாகரிகமற்ற தாகி விட்டது. 'மஞ்சட் அழகும் அழகல்ல' என்ற நாலடியார் வாக்கை இன்று மகளிர் உண்மையாக்கி விட்டனர். 'மஞ்சள் பூசும் முகத்தை மறைத்ததே சோப்புக் கற்றை' என்ற பபூன் சண்முகம் பாடலும் இன்று பழம்பாட லாகி விட்டது. உண்பதினும் உடுப்பதினும் பூண்பதினும் பூசுவதினும் இன்னும் எத்தனையோ காலத்துக்கேற்ற மாறுபாடுகள்! நாகரிகம் என்பது சகடக்கால்! எப்போதும் ஒரு நிலையாக இராது. சுற்றிக்கொண்டே போவதும் வருவதுமாகவே இருக்கும். இவ்வுண் மையை யறியார், இன்று தமிழ் மக்கள் மேற்கொண்டுள்ள மேனாட்டு நாகரிகந்தான் நனி நாகரிகம்; இத்தகைய நாகரிக வாழ்வு தமிழ் மக்கள் ஒரு காலத்தும் வாழ்ந்ததில்லை - என வாயும் மனமும் கூசாது கூறுகின்றனர். பழந்தமிழர் வாழ்க்கை முறையை, நாகரிக நல்வாழ்வை, நனி நாகரிகத்தை அறியாது கூறும் அவர்தம் பொய்க்கூற்றை என்னென்பது! பழங்காலத் தமிழ் மகளிர் நாகரிக நல்வாழ்வைப் பாருங்கள். எது போலி நாகரிகம் என்பது வெளிப் படும். உடலின் இயற்கை யழகை மிகுதிப் படுத்திக்கொள்வது மகளிரின் தனிப் பண்பாகும். உடலின் இயற்கையழகை, பள பளப்பைக் கெடுப்பது உடலில் விழும் திரைகளே (சுருக்கம்) யாகும். உடலில் திரை விழாமல் உடற்றோல் சுருங்காமல் இருக்கும்படி செய்யத் தெரிந்து கொள்வது நாகரிக நல்வாழ் வாகும். பழந்தமிழ் மகளிர் இதனை நன்கு உணர்ந்திருந்தனர். தோல் முறுக்கமாக இருந்தால் சுருக்கம் விழாது. தோலை முறுக்கியிழுத்துப் பிடிக்கும் ஆற்றல் துவர்ப்புக்கு உண்டு என்பதை, வெற்றிலைபாக்குப் போடும்போது பாக்கின் துவர்ப்பால் அறிந்த அவர்கள், அதை அழகைக் காக்கும் மருந்தாகப் பயன்படுத்த எண்ணி, அவ்வாறே பயன்படுத்தி வந்தனர். அவர்கள் குளிக்கும் நீரில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், நாவல், அத்தி, இத்தி, அரசம்பட்டை, முத்தக்காசு, மாந்தளிர் என்னும் பத்துத் துவரை ஊறவைத்து, ஊறிய அந்நன்னீரில் முழுகிக் கொஞ்சநேரம் இருந்து பின்னர் நீராடுவர். ஆனால், அன்னார்தோல் முறுக்கேறி மேனி மினுமினுப்பாகத் திகழும். இப்பத்துத் துவரையும் ஒரு தொட்டியில் இரவிலேயே ஊறவைத்து, ஊறிய அந்நீரில் காலையில் முழுகிச் சற்றிருந்து பின் நன்னீரில் குளிப்பர். அவர்கள் அஃதோடு அமைய வில்லை. மேனி மினுமினுப் பாக இருந்தால் மட்டும் போதுமா? கெட்ட நாற்றமின்றி உடல் நறுமணங் கமழ வேண்டாமா? அதற்காக அத்துவர் நீரில், அதாவது அப்பத்துத் துவருடன் ஐந்து விரையும், முப்பத்திரண்டு ஓமாலிகையும் கலந்து ஊறவைப்பர். அந்நாற்பத் தேழு பொருள் களும் ஊறிய நீரில் முழுகிப் பின் நன்னீரில் குளித்து வந்தனர். "பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத் திருவகை ஓமா லிகையினும் ஊறிய நன்னீர் உரைத்தநெய் வாசம் நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டி" (சிலப். 6:76-9) என்பது இளங்கோவடிகள் வாக்கு. விரை-மணம் ஓமாலிகை நறுமணம். வாசநெய்-நறுநெய்-வாசனைத் தைலம். இவ்வாறு முழுகி நீராடும் போது, கூந்தலுக்கு வாசனைத் தைலம் தேய்த்துக் குளிப்பர். ஐந்து விரை-இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம் என்பன. கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம் என்பன ஐந்து விரை எனவுங் கூறப்படும். முப்பத்திரண்டு ஓமாலிகையாவன : இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம், நாகணம், கொட்டம், நாகம், அதாவரிசி, தக்கோலம், நன்னாரி, வேரி, இலாமிச்சம், காண்டில் வெண் ணெய், கடு, நெல்லி. தான்றி, துத்தம், வண்ணக் கச்சோலம், அரேணுகம், மாஞ்சி, சமலேகம், புனுகு, புன்னைத்தாது, புலியுகிர், பூஞ்சரளம், தமாலம், வகுளம், பதுமுகம், நுண்ணேலம், கொடுவேரி என்பன, அடேயப்பா! எத்தகைய மேனிமினுக்கு! இவ்வாறு ஊறிய நீரில் முழுகிப் பின் நீராடும்போது, நறுமணக் கலவையைத் தேய்த்து நீராடுவர் என்பது. "விதியாற்றான் ஆக்கிய மெய்க்கலவை போல" (பரி. 7-20) என்னும் பரிபாடலால் தெரிகிறது. இதனாற்றான் அக்கால மகளிர் மேனி மினுமினுப்பாக இருந்ததோடு, நறுமணம் உடையதாகவும் இருந்து வந்தது போலும். "யோசனை கமழும் வாச மேனியர்"(பரி. 12:25) "முறிமேனி முத்தமுனுவல் வெறிநாற்ம்"(குறள்) வெறிநாற்றம் - நறுமணம், இதனாற்றன் 'மகளிர் கூந்தல் மணம் இயற்கையன்று, செயற்கையே' எனக் 'கொங்கு தேர் வாழ்க்கை' என்னும் குறுந்தொகைச் செய்யுட்கு நக்கீரர் குற்றங் கூறியதாகும். மேனாட்டு மகளிர்தாம் அழகுக் கலையில் தேர்ச்சி பெற்றவர், அவர்களைக் கண்டு நடக்கும் போலி நாகரிகந் தான் தமிழர் நாகரிகம் என்பதெல்லாம் அறியாக் கூற்றென்பது மேல் எடுத்துக் காட்டிய வற்றால் விளங்குகிற தல்லவா? தங்கள் முன்னோரின் அத்தகைய நனி நாகரிக நிலையை அறியும் நிலையில்-அறிந்து இன்புறும் நிலையில்-இன்றையத் தமிழ் மகளிரிற் பெரும்பாலோர் இல்லை என்பது தான் வருந்தத்தக்கதாகும். இத்துடன் நின்றனரா அன்னார்? தைலந்தேய்த்துக் குளித்த கூந்தல் மென்மையடைந்து விடுமல்லவா? கூந்தல் பருத்து மொறுமொறென்றிருக்க வேண்டுமல்லவா? அதற்காகக் கூந்தலுக்கு அகிற்புகை யூட்டுவர். அகிற்புகையால் கூந்தல் மொறுமொறுப் பாவதோடு, நறுமணமும் கமழும். மகளிர் மாடியிலிருந்து கூந்தலுக்கு ஊட்டும் அகிற் புகை வானை நோக்கிச் சென்று முகிலோடு கலப்பதால் மழை பெய்யும் போதெல்லாம் அகில் மணக்கும் என்கின்றார் புகழேந்தியார். இது கற்பனை யெனினும், உண்மைச் செய்தியே யாகும். குழலுக்கு அகிற்புகை யூட்டுதலை மகளிர் அவ்வளவு சிறப்பாகக் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுதற்கே புகழேந்தியார் இங்ஙனம் கூறினார். இதோ அந்தப் பாட்டு. "நின்று புயல்வான் பொழிந்த நெடுந்தாரை என்று மகிழ்கமழு மென்பரால் - தென்றல் அலர்த்துங் கொடிமாடத் தாயிழையா ரைம்பால் புலர்த்தும் புகைவான் புகுந்து" (நளவெண்பா) அவர்கள் இத்துடன் அமையவில்லை. மேலும் நறு மணத்தை விரும்பினர். அதற்காக அகிற்புற்புகை யூட்டியபின் கத்தூரிக் குழப்பினைத் தடவுவர். "புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி" (மலர் - 6:80-1) மான்மதச்சேறு - கத்தூரிக் குழம்பு. இது சவ்வாதும் கலந்ததாகும். இப்போது விளங்குகிறது அல்லவா நக்கீரர் சாட்டிய குற்றம் குற்றமே என்பது? இன்று பெண்கள் இரட்டைக் சடை போடுதல் மேனாட்டு நாகரிகம் எனப்படுகிறது. ஆனால், பழந்தமிழ் மகளிர் தம் தலைமயிரை ஐந்து வகையாக முடித்து அழகுற விளங்கி வந்தனர் என்பது, ஐம்பால் என்னும் மகளிர் கூந்தலின் பெயரால் விளங்கும். அவை கொண்டை, குழல், முடி, சுருள், பனிச்சை என்பன. கொண்டை - மயிரை முடிந்து ஒரு பக்கமாக செருகிக் கொள்ளுதல். குழல்-நுனியில் முடிந்து தொங்க விடுதல். முடி-பிடரிக்குப்பக்கம் முடிதல். சுருள்-இரண்டாக அள்ளச் செருகுதல். பனிச்சை-சடை. இனி, இன்று இதழுக்குக் செஞ்சாயம் பூசுவது மேனாட்டு நாகரிகப் போலியாகக் கருதப்படுகிறது. இல்லை, அதுதான் போலி; அதுவும் தமிழர் நாகரிகத்தின் போலி. பழந்தமிழ் மகளிர், இதழுக்கும் கைகால் நகங்கட்கும் உள்ளங் கைக்கும் செஞ்சாயம் பூசித் திகழ்ந்தனர். இது பஞ்சில் தோய்த்துத் தடவி வந்ததால் செம்பஞ்சு, செம்பஞ்சுக் குழம்பு என வழங்கியது. இச்செம்பஞ்சுக் குழம்பு மருதோன்றியிலையுடன் நறுமணப் பொருள்கள் கலந்து செய்யப்பட்டது. இதனால் நோயணுகா தென்பதும் அறியத் தக்கது. "உகிரும் கொடிறும் உண்டசெம் பஞ்சியும்"(பரிபா. 6:17) உகிர்நகம். கொடிறு-கன்னம். இதழ் நகங்கட்கேயன்றிக் கன்னத்திற்கும் செம்பஞ்சுக் குழம்பு பூசி அழகுடன் விளங் கினர் அக்காலத் தமிழ் மகளிர். செம்பஞ்சு பூசிய இதழுக்குப் பவழத்தை யும் கோவைப் பழத்தையும், நகத்திற்குக் கிளி மூக்கையும் பவழத்துண்டையும், உள்ளங்கைக்குச் செங் காந்தட் பூவையும் உவமை கூறிச் சிறப்பித்தனர் புலவர் பெருமக்கள். "அலத்தகம் ஊட்டிய அஞ்செஞ் சீறடி"(சிலப்-6:83) என்பதால், அடிக்கும் செம்பஞ்சு பூசித் திகழ்ந்தமை விளங்கும். அலத்தகம்-செம்பஞ்சு. இன்று மகளிர் பூசும் முகப்பூச்சுத் தமிழர் நாகரிகமே யன்றி மேனாட்டினர் போலியன்று. அது சுண்ணம் அல்லது பூசுசுண்ணம் எனப்படும். பொற்சுண்ணம் என்பதும் உண்டு. அது "வண்ணமும் சுண்ணமும்"(சில. 5:13) என்னும் சிலப்பதிகாரத்தால் விளங்கும். சுண்ணம் பூசிய முகத்திற்கு முழுமதி உவமை கூறப்பட்டது. முகத்தின் வட்ட வடிவத்திற்கு வட்டமதியும், சுண்ணத்திற்கு மதியின் நிலவும் உவமை. மணிவாசகர், திருவாசகத்தில், பொற் சுண்ணம் என்னும் உறுப்பொன்றே அமைத்துள்ளார். அது மகளிர் பொற் சுண்ணம் இடித்துக் கொண்டு பாடுவது போல் பாடப் பட்டதாகும். இனி, மேனாட்டினர் அறியாத தொன்றைப் பழந்தமிழர் அறிந்திருந்தது அறிந்தின்புறற் பாலதாகும். அதுதான் தொய்யில் என்னும் தோட்கோலமாகும். அதாவது, மகளிர் தம் தோளிலும் மார்பிலும் குங்கும சந்தனக் குழம்பினால் மலர்க்கொடிகள், கரும்பு முதலிய பலவகைக் கோலங்கள் எழுதிக் கொள்வர். பெரும் பாலும் கொடிகளாக எழுதுவதால் இது தொய்யிற்கொடி எனப்படும். இது 'வள்ளி' எனவும் வழங்கும். வள்ளி-கொடி. "கரும்பின் அணை மென் றாள்"(பரி. 7:55) தொய்யிற் கரும்பினை யுடைய அணைபோலும் மென் றோன். "வண்டே இழையே வள்ளி என்றா"(தொல்-களவு 4) வள்ளி-தோளி லெழுதுந் தொய்யிற் கொடி (நச்சி). இனி, இத்தொய்யில் எழுதுவதில் மகளிரேயன்றி ஆடவரும் பயிற்சி யுடையவராக இருந்து வந்தனர் என்பது வியப்பிற் குரிய செய்தியாகும். தலைவன் தலைவிக்குத் தொய்யி லெழுதியின் பூட்டும் வழக்கம் தொல்காப்பியர் காலத்தே உண்டென்பது 'அணிநிலையுரைத்தல்' (கற் 27) என்பதனால் தெரிகிறது. அணி நிலை உரைத்தல் என்பது, தலைவிக்குத் தொய்யி லெழுதும் வகையினைக் கூத்தர் தலைவற்குக் கூறுதல். இது எத்தகு நனி நாகரிகம்! அழகுக் கலைகளே நாகரிகத்தின் உறுப்புக்களாகும். அழகுக்கலைகளில் பழந்தமிழ் மக்கள் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்கினர். நாகரிகம் என்பது சகடக்கால் போன்றது. ஒரு பத்தாண்டு களில் பெண்கள் அணியும் மார்க்கச்சின் வரலாற்றை நோக்கின் இது இனிது விளங்கும். அது மங்கையர் தோளைப் படுத்தியபாடு - படுத்துகிறபாடு கொஞ்ச நஞ்ச மல்ல. ஆயிர முறை மேலேறியும் கீழிறங்கியும் தோளையே தேய்த்து விட்டதல்லவா? அது பாவையர் தோளைப் பனைமரம் என்று நினைத்து விட்டது போலும்! இப்போது முழங்கையை மூடியிருக்கிறது; இனி என் செய்யுமோ! தமிழர் நாகரிகத்தை உலகம் அறியும்படி செய்வதே தமிழர் முன்னேற்றத் தொண்டாகும். அத்தொண்டை மேற்கொள்வது தமிழறிஞர்கள் கடப்பாடாகும். வாழ்க தமிழர் நாகரிகம்!  17. முன்னுக்குப் பின் "காய மேயிது பொய்யடா காற்ற டைத்த பையடா மாய னான குயவன் செய்த மண்ணுப் பாண்டம் ஓடடா" "தாயே! இரண்டு நாளாச்சுக் கஞ்சி குடிச்சு, பசி பொறுக்க முடியவில்லை தாயே! கஞ்சிக் களைப்புக் காதை அடைக்குது அம்மா! கொஞ்சம் பழசு கிழசு இருந்தாப் போடுங்க தாயே! "ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற பேரும் சதமல்ல, பெண்டிர் சதமல்ல, பிள்ளைகளும் சீரும் சதமல்ல, செல்வம் சதமல்ல தேசத்திலே! "அம்மா தாயே! இந்தப் பச்சக் குழந்தை பசி பொறுக்க மாட்டாமே பறவாப் பறக்குது தாயே! கொஞ்சம் கஞ்சி கிஞ்சி இருந்தா ஊத்துங்க அம்மா தாயே! அட பகவானே! இந்தத் தெருவிலே ஒருத்தருக்குக் கூட மனமிரக்க மில்லையா! "மூணுகாசு தாங் குடுங்களே! அம்மா! அணாவுக்குச் சில்லறை வேணு மின்னாலும் நான் தாரேன் தாயே."இது இரப்போன் இரப்புரை. உடம்பு பொய்யென்கிறான், உடனே உடம்பை மெய்யென்று அதைக் காப்பாற்றச் சோறு கேட்கிறான். பிள்ளை சதமல்ல என்கிறான். பின் பிள்ளைக்குக் கஞ்சி கேட்கிறான். செல்வம் சதமல்ல என்கிறான். பின் காசு கேட்கிறான்; தன்னிடம் காசு இருப்பதாகவும் கூறுகிறான். இவன் பேச்சு முன்னுக்குப் பின் முரணாகவன்றோ இருக்கிறது? எதற்காக, ஏன் அவன் இவ்வாறு முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறான்? வயிறு வளர்ப்பதற்காக, உண்டு உயிர் வாழ்வதற்காக அவன் அவ்வாறு பேசுகிறான். எப்படியாவது பேசி வாங்கியுண்டு வாழ்வதுதான் அவன் தொழில். அவன் பாடிய பாட்டின் பொருள் அவனுக்குத் தெரியாது. அவன் கல்வியறிவில்லாதவன். யாரோ பாடக்கேட்டு மனப் பாடம் பண்ணிக் கொண்டு அவன் பாடுகிறான். பாடிய பாட்டின் பொருளை அறிந்து அவன் பேசவில்லை. அறியாது அவன் அப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறான். எப்படியாவது தன் பாட்டைக் கேட்டு மகிழ்ந்து ஏதாவது கொடுக்க வேண்டும் என்பதுதான் அவன் குறிக்கோள். அதற் காகத்தான் அவன் பொருள் தெரியாது தெரிந்தவன்போல் பாடுகிறான். இவ்விரவலன் வாங்கியுண்டு வாழ்வதற்காக முன் பாடிய பாட்டின் பொருளை யறியாது முன்னுக்குப் பின் முரணாகவே பேசுகிறான். ஆனால், அறிந்தே வாழ்வின் பொருட்டு இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவோரும் பலருண்டு. ஒருவர் தான் வாழ முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது பற்றி யாரும் அவ்வளவாக அக்கறை எடுத்துக்கொள்வ தில்லை. ஆனால், பிறர் வாழ்வைக் கெடுக்க அவ்வாறு பேசுவது பற்றித் தான் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. இனி, இவ்வாறு பேசுவதோடு மட்டும் நில்லாமல், முன்னுக்குப் பின் முரணாக எழுதுவதும், எழுதிப் பிறர் வாழ்வைக் கெடுப்ப தையுமே தம் கடமையாகக் கொண்டுடாடும் மக்களும் பலருண்டு. இத்தகையோர் 'பரீஇ உயிர் செகுக்கும் பாம்பினும்' கொடிய ராவர். பாம்பொடு இயல்பாகவே மக்கள் பகை பாராட்டு வதற்குக் காரணம் அதன் நச்சுத்தன்மை தானே! "நல்லோரின் அவை புக்க நாகமும் சாகா"என்பது, நல்லோரின் சிறப்பினை மிகுவிக்க எழுந்ததே யாகும். பாம்பைக் கண்டால், 'பாவம் பிழைத்துப் போகட்டும். அதுவும் நம்மைப்போல் ஓருயிர் தானே!' என்று இரக்கத்தோடு கூறும் நல்லோர் உலகில் எத்தனை பேர்? பாம்பனைய ஒரு சிலரால் மக்களிடை இனப்பகை ஏற்பட லாயிற்று. உலக மக்களின் நாகரிகங்களுக்கெல்லாம் முதலாக வுள்ளது தமிழர் நாகரிகம். உலகில் உள்ள பல நாட்டு மக்களும், பல இன மக்களும் நாகரிகம் இன்னவென்றே கனவு கூடக் கண்டிராத அக்காலத்தே நாகரிக நல்வாழ்வு வாழ்ந்து வந்தவர் தமிழ் மக்கள். அத்தகு நனி நாகரிக நல்வாழ்வைக்கண்டு பொறாமை கொண்ட அயலார், தங்களைவிடத் தமிழ் மக்கள் அத்தகு மேம்பட்ட நிலையில் வாழ்வதா என்று மனம்பொறாத தமிழினப் பகைவர்கள், எப்படியாவது தமிழினத்தைத் தாழ்வுறச் செய்ய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தால், நல்ல பாலில் நச்சு நீரைக் கலந்து பாலின் அந்நல்லியல்பைப் போக்குவது போல, தமிழர் நாகரிகத்திடை தாழ்ந்த நச்சுத் தன்மையைக் கலந்து, அதன் தூய்மையைக் கெடுக்க, பிற்காலத்தமிழர் தங்கள் முன்னோர் நாகரிக நல்வாழ்வுச் சிறப்பினை அறிந்து கொள்ள முடியாமல் செய்யப்பண்டு தொட்டு இன்றளவும் இடைவிடாது முயன்று வருகின்றனர். அம்முயற்சியில் ஒருவாறு வெற்றியும் பெற்றுள்ளனர். ஓரின மக்களின் நாகரிக நல்வாழ்வின் அடிப்படை யாக உள்ளது அம்மக்கள் பேசும் மொழியே. ஒரு மொழியின் உயர்வு தாழ்வுக்குத் தக்கபடியே அம்மொழி பேசும் மக்களின் உயர்வு தாழ்வும் அமைந்திருக்கும். தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணச் செல்வங்களே தமிழ் மக்களின் உயர்வுக்குக் காரணங்களாக உள்ளன. பழந்தமிழ் நூல்கள் தாமே தமிழ் மக்களின் பழம் பெருநாகரிக நல்வாழ்வினைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. தொல்காப்பியத்தை, திருக்குறளை, புறநானூற்றைக் காட்டித் தானே தமிழ் மக்கள், 'தமிழினம் தனியினம்' என்று அயலாரிடம் பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து கூறிக்கொள்கின்றனர். எனவே, தமிழ் இலக்கிய இலக்கண வாயிலாய்த் தங்கள் அழிவு வேலை யைக் கையாண்டு வருகின்றனர், தமிழினப் பகைவர்கள். தொன்று தொட்டே அயலார் செய்யும் இவ்வழிவு வேலையை, 'உடன் பிறந்தே கொல்லும் நோய் போலத்' தமிழ் மொழித் தொண்டு செய்வது போலத் தமிழர் நாகரிக நல்வாழ்வை, தமிழினத்தின் தனிச் சிறப்பைக் கெடுத்து வரும் அவ்விழி செயலைத் தமிழ் மக்கள் தடுத்துத்தான் வந்துள்ளார்கள். ஆனால், களையை வேரோடு பிடுங்கி எறியாமல் மேலாகக் கிள்ளி யெறிவதுபோன்ற எதிர்ப்பால் அவ்வயற்களை அடியோடொழிய வில்லை. காலக் கடப்பில் அவையும் தமிழர் நாகரிகம் என்னும் நிலையை அடைந்துவிட்டன. தமிழர் நாகரிகத்தோடு மாறு பட்ட, முன்னுக்குப் பின் முரணான ஒரு சிலவற்றைக் காண்பாம். தமிழ் மக்களின் வாழ்க்கை முறையினைத் தொகுத்தும் வகுத்தும் சுவைபடக் கூறுவது தொல்காப்பியம். தொல் காப்பியந் தான் தமிழினத்தின் பழமைக்கும் பெருமைக்கும் சான்றாக உள்ளது. அது எழுத்துச் சொற்பொருள் யாப்பணி என்னும் தமிழ் இலக்கணத்தைத் தகவுறக் கூறுகின்றது. இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழமையை யுடையது தொல்காப்பியம் இத்தகு பழங்காலத்தே இத்தகைய இலக்கணப் பெருநூலைக் கொண்டிருந்த மொழி உலகில் வேறொன்றும் இல்லையாகும். தொல்காப்பியத்தின் பழைய உரையாசிரியர்கள் எனப்படும் பேராசிரியர், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க் கினியர் முதலியோர் கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இருந்தவ ராவர். இவர்கள் வேண்டுமென்றே ஆசிரியர் கருத்துக்கு மாறான கருத்துக்களை வலிந்து புகுத்தித் தொல்காப்பியத்தின் தூய்மையைக் கெடுத்து விட்டனர். முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் பலவற்றைப் புகுத்தித் தமிழினத்தின் தனிப்பெருமையைத் தாழ்த்தி விட்டனர். மாசிலாமணியாகிய தொல்காப்பியம் அன்னார் உரையால் மாசு படிந்து கிடக்கிறது. பரிமேலழகர் திருக் குறளைக் கெடுத்தது போல், வள்ளுவர் கருத்தை உள்ளபடி அறிய முடியாமல் செய்ததுபோல், இவர்கள் தொல் காப்பியத்தைக் கெடுத்து விட்டனர். அம்மாசினைத் துடைத்துத் தொல்காப்பியத்தைத் தூய்மையுடையதாக்குவது தமிழ் அறிஞர்களின் நீங்காக் கடமை யாகும். ஓரெடுத்துக் காட்டு : தொல்காப்பியச் சொல்லதிகார எச்சவியலின் முதற் சூத்திரம், தமிழ்ச் செய்யுள் செய்வதற்குரிய சொற்கள் இவை என்கின்றது. இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நான்குமே செய்யுள் செய்வதற்குரிய சொல் என்கின்றது. இயற்சொல்லாவது, பொருள்-இயல்பாக-எளிதாக-விளங்கும் சொல். பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச் சொல், உரிச்சொல், என்னும் தமிழ்ச் சொற்கள் நான்கினும் எளிதிற் பொருள் விளங்கும் சொல் - இயற்சொல் எனப்படும். திரிசொல்-பொருள் திரிந்த சொல். எளிதிற் பொருள் விளங்காத பெயர்ச் சொல் முதலிய சொற்கள் திரிசொல் எனப்படும். வடசொல்-ஆரியச் சொல். ஆரியமொழி அன்று, தமிழகத்தின் வடக்கில் வழங்கியதால் வடமொழி எனப் பட்டது. வடமொழியாளர்கள் அன்று தமிழகத்தில் வாழ்ந்து வந்ததால் அவ்வடவரின் மக்கட் பெயர், ஊர்ப்பெயர் ஆகிய வடசொற்கள் தமிழ்ச் செய்யுட்களில் இடம் பெறலாயின. இனித் திசைச்சொல் என்பது தமிழ்நாட்டின் ஒவ்வொரு திசையிலும் வழங்கும் சொல். ஓரிடத்தில் வழங்கும் சொல் மற்றோரிடத்தில் திசைச் சொல் எனப்படும். ஒவ்வொரு இடத்திலும் ஒரு சில சொற்கள் வழங்கும். வேறிடங்களில் அவை வழங்கா. வழங்குமிடத்தில் அவை இயற்சொற்களாக இருக்கும். மற்ற இடங்களில் அவை புதிய சொற்களாக - கடுஞ்சொற்களாக இருக்கும். ஒரு திசையில் வாழும் புலவர் செய்யும் செய்யுட்களில் அப்பகுதியின் வழக்கச் சொற்கள் மிகுதியாக இருக்கும். அச்செய்யுட் களைப் படிக்கும் மற்றப் பகுதிகளில் உள்ளவர்க்கு அச்சொற்கள் கடும் சொற்களாக இருக்குமாகையால், இக்காரணம் பற்றியே அவ்வாறு ஒரு பகுதியில் வழங்கும் வழக்கச் சொற்களைத் திசைச்சொல் என்றனர் இலக்கணப்புலவர்கள். எனவே, திசைச் சொல் என்பது தமிழகத்தின் ஒவ்வொரு திசையிலும் வழங்கும் தமிழ்ச் சொற்களேயாகும். அச்சொற்கள் அவை வழங்கும் இடத்தில் எளிதில் பொருள் விளங்கும் இயற்சொல் ஆகவும், மற்ற இடங்களில் எளிதில் பொருள் விளங்கா அருஞ் சொற்களாகவும் இருக்கும். சுனையைப் பாழி என்பதும், வழியை வெட்டி என்பதும், மாடு எருமையைப் பெற்றம் என்பதும், குழம்பை வெஞ்சனம் என்பதும் ஒவ்வொரு திசையில் வழங்கும் சொற்கள். கொங்கு நாட்டு வேளாளர்கள் மகளிரை ஆத்தா என்று அழைப்பர். பாட்டியை ஆயா என்பதும், ஆய்ச்சி என்பதும் திசைச் சொற்களே. இச்சொற்கள் அவை வழங்கும் இடத்தினருக்கு எளிய சொற் களாகவும், மற்ற இடங்களில் உள்ளவர்க்கு அரிய சொற்களாகவும் உள்ளமையால், அவை வழங்கா இடத்தில் உள்ளவர்க்குத் திசைச் சொற்களாயின. "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி." என்பது தொல்காப்பியம் (100) செந்தமிழ் வழங்கும் பன்னிரண்டு நிலத்தும் தாம் வழங்கும் நிலத்தில் தம் பொருளை எளிதில் விளக்கும் சொல் திi சொல் எனப்படும். எனவே, மற்ற இடங்களில் எளிதில் பொருள் விளக்கா என்பது பெற்றாம். தம் குறிப்பின் தாம் வழங்கும் நிலததில் தம் பொருளை எளிதில் விளக்குவன. செந்தமிழ் சேர்ந்த - தமிழ் வழங்குகின்ற. 'செந்தமிழ்' என்பதில் உள்ள 'செம்மை' என்பது. செஞ்ஞாயிறு என்பதிற் போல இனம் விலக்காத அடைமொழியாகும். செந்தமிழ் - நல்ல தமிழ்; செம்மையில்லாத தமிழ் இன்மையால். செந்தமிழ் என்பது தமிழ் என்ற பொருளுடையதேயாகும். செந்தாமரை என்பது வெண்டா மரையை விலக்குவதால், செந்தாமரையில் உள்ள செம்மை இனம் விலக்கிய அடைமொழியாகும். செந்தமிழ் சேர்ந்த - தமிழ் வழங்குகின்ற. பாயிரத்தில், "செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு"என்றதும், 'இயற்சொற்றாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி' (398) என்றதும், 'தமிழ் வழங்கும் நிலத்து' என்னும் பொருள் குறிப்பனவேயாகும். பைந்தமிழ், இன்றமிழ், நற்றமிழ் என்பவற்றிலுள்ள பசுமை, இனிமை, நன்மை என்ற அடைமொழி களும் பசுமையில்லாத, இனிமையில்லாத, நன்மையில்லாத தமிழை விலக்க எழுந்த அடைமொழிகள் அல்ல. தமிழை ஒவ்வொரு வகையில் சிறப்பிக்க எழுந்த அடைமொழிகளே யாகும். தமிழ் என்பதே இனிமை என்ற பொருள் குறிக்கும் போது கெட்ட தமிழ் என்பது எங்ஙனம் பொருந்தும்? சேனாவரையர், செந்தமிழ் என்பதிலுள்ள செம்மை என்னும் அடைமொழி, கொடுந்தமிழை விலக்குவதால் இனம் விலக்கும் அடைமொழி எனக்கொண்டு உரையெழுதி யுள்ளார். மேலும், செந்தமிழ் சேர்ந்த என்பதற்குச் செந்தமிழ் நிலம் எனவும், செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் என்பதற்குச் செந்தமிழ் நிலத்தை சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நிலத்தும் என்றும் உரை யெழுதி யுள்ளார். சேனாவரையர், "செந்தமிழ் நிலமாவது - வையை யாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்குமாம்"என்கின்றார். இவர் செந்தமிழ் நிலமாகக் கூறிய இடம் சோழ நாட்டின் தென் பகுதியாக உள்ளது. இவ்வாறு கூறுவதன் காரணம் நமக்கு விளங்கவில்லை. தமிழ் மொழி தோன்றிய இடமும், சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்த பாண்டியர் ஆண்ட இடமும், இன்று நமக்குக் கிடைத்துள்ள, தொல்காப்பியம் திருக்குறள் முதலிய பைந்தமிழ் நூல்களை அரங்ககேற்றி ஆய்ந்து நமக்குத் தந்துதவிய முச்சங்கம் இருந்த இடமும் ஆகிய பாண்டிய நாட்டை விட்டு வையை யாற்றின் வடக்கைச் செந்தமிழ் நாடென்னும் சேனாவரையர் கூற்று வியப்பிற்கும் சிரிப்பிற்கும் இடமாகவன்றோ உளது? இதை, "செந்தமிழ் நாடாவது - வையை யாற்றின் வடக்கும்... மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணங் காணாமையானும், வையை யாற்றின் தெற்காகிய கொற்கையும், கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும், மருத யாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ்திரி நிலமாதல் வேண்டு மாத லானும் அது உரையன்று"எனத் தொல்காப்பியத்தின் பழைய உரையாசிரியர்களில் ஒருவரான தெய்வச் சிலையார் என்பவர் மறுத்துள்ளார். எனவே, சேனாவரையர் கூறுவது சிறிதும் பொருத்த மில்லாத கூற்றேயாகும். வேண்டுமென்றே இவ்வாறு தவறாகக் கூறியுள்ளார் என்று எண்ண வேண்டியிருக்கிறது. சேரசோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர் ஆண்டது செந்தமிழ் நாடு என்ற வரலாற்றுண்மையையே பிற்காலத் தமிழ் மக்கள் அறியாது செய்யவேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் எழுதப்பட்ட தாகும் அவ்வுரை - என்பதில் தவறொன்றும் இல்லை. "வேங்கட மலையின் தெற்கும், குமரியின் வடக்கும், குணகடலின் மேற்கும், குட கடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலம் என்றுரைப்ப"என்னும் தெய்வச்சிலையார் கூற்றே ஏற்புடைத்தாகும். இது, "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்"என்னும் பழந்தமிழகத்தையே செந்தமிழ் நாடெனக் குறிப்பிடுதல் காண்க. "செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே"என்பதும், பொதுவாகத் தமிழ்நாடு எனப்பொருள் படுதலையறிக. தமிழ் வழங்கும் பன்னிரு நிலமாவன : சேரசோழ பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர் ஆட்சிக்குட்பட்ட சேரநாடு சோழநாடு பாண்டிநாடு என்னும் தமிழ்ப்பிரிவு ஒவ்வொன்றினும், அமைந்துள்ள முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும் நானிலமுமேயாம். முந்நான்கு பன்னிரண்டாதல் அறிக. இப்பன்னிரண்டுமே செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம் ஆகும். தொல்காப்பியர் காலத்தே மூவரசர் நாடும் முல்லை முதலிய நான்கு பிரிவாகப் பிரித்தே ஆளப்பட்டு வந்ததென்பது, தொல்காப்பிய அகத்திணையியலில், "முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படும்"(5) என அகனைந்திணைக்கு நிலம் வகுத்துள்ளமையும், "முல்லை முதலாச் சொல்லிய முறையால்"(28) என ஆட்சிமுறை வகுத்துள்ள மையும் முல்லை முதலிய நானிலப் பிரிவேயாகையால், சேர சோழ பாண்டிய நாடொவ் வொன்றும் பழங்காலந் தொட்டே, ஆட்சிமுறை ஏற்பட்ட காலத்திருந்தே இந்நானிலப் பகுப்புடைய வையாகவே இருந்து வந்தன என்பது பெறப்படும். 28-வது சூத்திரம், பழந்தமிழர சர்கள் தம் நாட்டை முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என நான்காகப் பிரித்து, தம் நாட்டின்கண் அமைந்துள்ள அவ் வியற்கைப் பிரிவுப்படி அதனதனுக்குத் தனித்தனி அதிகாரி களை ஏற்படுத்தி நல்லாட்சி புரிந்து வந்தனர் என்கின்றது. தமிழகத்தை நானிலம் என்று வழங்குதல் இதற்குத் தக்க சான்று பகரும். எனவே, தமிழகத்தின் நால்வேறுபட்ட முல்லை குறஞ்சி மருதம் நெய்தல் என - மூன்றாகிய - சேர சோழ பாண்டிய நாடு - பன்னிரு நிலத்தும், ஒரு நிலத்து வழங்கும் அந்நிலத்து வழக்குச் சொல், அதாவது பிற நிலத்தில் வழங்காது அந்நிலத்தில் மட்டும் வழங்கும் சொல், மற்ற நிலத்திற்குத் திசைச் சொல் ஆகும் என்பதே, 'செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்' என்னும் சூத்திரத்தின் கருத்தாகும். சேனாவரையர் கூறும் கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டாவன: பொங்கர் நாடு, ஒளி நாடு, தென் பாண்டி நாடு, குட்ட நாடு, குட நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூமி நாடு, மலை நாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு என்பன. இந்நிலப்பிரிவு தொல்காப்பியர் காலத்தில் இல்லை. இப்பிரிவு கி.பி. 12-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவையாகும். தொல்காப்பியர் காலத்து இவர் குறிக்கும் தென்பாண்டி நாடு வட பாண்டி நாடாகும். இன்று தென்பாண்டியென்பது திருநெல்வேலி மாவட்டத்தினையேயாகும். தொல்காப்பியர் காலப் பாண்டியர் தலைநகர் கடல் கொண்ட குமரியாற்றங் கரையில் இருந்த மதுரையாகும். பொங்கர் நாட்டைப் பிறர் புனல்நாடு என்பர். புனல் நாடு - சோழநாடு. எனவே, இவர் குறித்த செந்தமிழ் நாட்டில் அது அடங்கும். அருவா நாடிரண்டும் தொண்டை நாடாகும். மலை நாடு-நடுநாடு. இது திருக்கோவலூரைச் சார்ந்தது. மற்றவை மேற்குக் கரை நாடுகள். அவை சேர நாட்டையும் கொங்கு நாட்டையும் சேர்ந்தவை. தமிழகத்தினுட்பட்ட பகுதிகளைக் கொடுந்தமிழ்நாடு எனல் பொருந்தாது. செந்தமிழ் கொடுந்தமிழ் எனத் தமிழைப் பிரித்ததே தவறு. செந்தமிழ் என்பது கொடுந்தமிழை விலக்க எழுந்தது எனக் கொண்டதே தவறான கருத்தாகும். ஆசிரியர் குறியாத ஒன்றை, இவர் வேண்டுமென்ற 'கொடுந்தமிழ்' எனக் குறியிட்டு வழங்கித் தமிழர் வரலாற்று முறையைப் பிற்காலத் தமிழ் மக்கள் அறியாது செய்து விட்டனர். ஒளவையாரால் 'சான்றோர் உடைத்து' என்ற தொண்டை நாடும், சங்ககால வள்ளல்களில் பலர் வாழ்ந்த, சங்கச் செய்யுட்களில் பல தோன்றிய கொங்கு நாடும், செந்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரந் தோன்றிய சேரநாடும் கொடுந்தமிழ் நாடெனில், செந்தமிழ் நாடென்னும் பகுதியின் சிறப்புத்தா னென்னவோ? வேண்டு மென்றே முன்னுக்குப் பின் முரணாகக் கூறித் தமிழை, தமிழினத் தை, தமிழர் நாகரிகத்தைத் தாழ்த்தச்செய்த உள்ளெண்ணமே யாகும். செந்தமிழ் சேர்ந்த என்பதற்கு-செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு நிலம்-செந்தமிழ் வழங்குகின்ற பன்னிரு நிலம்-என்பதே நேர் பொருள். தென்பாண்டி நாடு, குட்ட நாடு, பூமி நாடு முதலிய நாட்டுப் பிரிவுகளெல்லாம் மிகப் பிற்காலத்தே ஏற்பட்ட பிரிவுகளாகும். இவையெல்லாம் அன்று நல்ல தமிழ் நாடாகவே இருந்து வந்தன. சேனாவரையர் கொடுந்தமிழ் நாடெனக் குறிக்கும் பகுதிகளிளெல்லாம் அன்று முதல் இன்றும் நல்ல தமிழேதான் வழங்கி வருகிறது. ஒரு சிறு பகுதி நீங்கலாகத் தமிழகத்தின் பெரும் பகுதியைக் கொடுந்தமிழ் நாடுகள் எனக் குறிப்பிடுவதால், அக்கொடுந் தமிழ் நாடுகளில் வழங்கும் சொற்களெல்லாம் திசைச் சொற்கள் எனில், இயற்சொற்கள் என்பவைதாம் யாவையோ? இயற்சொல்லின் இலக்கணங் கூறுமிடத்து, 'இயற்சொல் லென்று' சொல்லப்படுவது, செந்தமிழ் நிலத்து வழங்கும் வழக்குச் சொல்லாகக் கொடுந்தமிழ் நிலத்தும் தம் பொருள் வழுவாமல் உணர்த்தும் சொல்லாம்' என்பதால், செந்தமிழ் நாடெனச் சேனாவரையர் குறிக்கும் ஒரு சிறு பகுதியில் வழங்குவதே இயற்சொல் எனப்பட்டுத் தமிழ் மொழியின் பெருமையினையே குறைப்பதாகவன்றோ உளது சேனாவரையர் கூற்று? இளங் கோவடிகள் செந்தமிழ் நாட்டிலுள்ள இயற் சொற்களைக் கற்றறிந்தா சிலப்பதிகாரம் பாடினர்? தமிழகம் முழுவதும் வழங்கிய சொற்களை இலக்கண ஆசிரியர்கள், எளிமை பற்றி இயற்சொல் எனவும், அருமை பற்றித் திரிசொல் எனவும், ஓரிடத்திற்கே உரிமை பற்றித் திசைச் சொல்லெனவும் பாகு படுத்திக் கூறினரேயன்றி, செந்தமிழ் நாடு கொடுந்தமிழ் நாடெனத் தமிழகத்தை இரு கூறாகப் பிரித்துச் செந்தமிழ் நாட்டில் வழங்குவது இயற் சொல் என்று வேறுபடுத்திக் கூறவில்லை. இது பிற்காலத்திய உரையாசிரியர்கள் செய்த முரண்பாடேயாகும். பழந்தமிழ் மரபுப் பாதுகாப்புச் சட்டமான தொல் காப்பியத்தில், பழைய உரையாசிரியர்கள் வேண்டுமென்றே வலிந்து புகுத்தியுள்ள இத்தகைய முன்னுக்குப் பின் முரணான தமிழ் மரபுக் கொவ்வாததாகக் கருத்துக்களை இனியேனும் களைந்து, தொல்காப்பியத்தைத் தூய்மைப் படுத்துவது - பழந்தமிழராகிய தம் முன்னோரின் வாழ்க்கை வரலாற்று முறையினை உள்ளபடி அறிந்தின்புறுவது - தனித் தமிழ் மரபினைப் பாதுகாப்பது தமிழ் மக்களின் நீங்காக் கடமையு ளொன்றாகும். இதனைப் புறம்போக்குப் பொருளெனக் கருதுதல் கூடாது. தமிழ் வழங்கும் பன்னிரு நிலத்தும், ஒரு நிலத்து வழங்கும் வழக்கச் சொற்கள் - அதாவது அந்நிலத்துக்கே சிறப்பாக உடைய சொற்கள், ஏனைப் பதினொரு நிலத்துக்கும் திசைச் சொல் எனப்படும் என்கின்றார் தொல்காப்பியர் (தொல். 400) ஒரு நிலத்து வழங்கும் வழக்கச் சொற்கள் அந்நிலத்து மக்களுக்கு எளிதில் பொருள் விளங்கும் இயற்சொல்லாகவும், ஏனைப் பதினொரு நிலத்து மக்களுக்கும் எளிதிற் பொருள் விளங்காத அருஞ் சொல்லாகவும் இருக்கும். அத்தகு சொற்களே திசைச் சொல் எனப்படும். அதாவது ஒரு நிலத்து வழங்கும் வழக்கச் சொற்கள் மற்ற நிலம் வாழ்கின்ற மக்களுக்குத் திசைச்சொல் ஆகும் என்பதுதான் தொல்காப்பியர் கூறும் திசைச் சொல்லின் இலக்கணம். தமிழ் வழங்கும் பன்னிரு நிலம் பற்றிச் சென்ற கட்டுரையில் முன்பு சுருக்கமாகக் கூறப்பட்டது. அதன் விளக்கம் வருமாறு: பழந்தமிழகம்-சேர நாடு, சோழ நாடு, பாண்டி நாடு என முப்பெரும் பிரிவாகப் பிரிந்திருந்தது. அவற்றை முறையே சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர் சிறப்புற ஆண்டு வந்தனர். இப்பழந்தமிழ்ப் பேரரச மரபுகளே தமிழகத்தின் முதல் அரச மரபுகளாகும். சேர சோழ பாண்டிய நாடுகள் ஒவ்வொன்றும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நாற்கூறுபட்டிருந்தது (அகத் - 5). இந்நானில மக்களும் முல்லை நில மக்கள், குறிஞ்சி நில மக்கள், மருதநில மக்கள், நெய்தனில மக்கள் என அவ்வந் நிலப் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தனர். இவர்கள் நிலமக்கள், தலைமக்கள் என அகத்திணைக்கண் இரு கூறுபடுவர். இந்நானில மக்களே பழந்தமிழ் மக்களாவர். முதற் பொருள்,கருப்பொருள், உரிப் பொருள் என்னும் அகத்திணைப் பொருள் மூன்றனுள், முல்லை முதலிய இத்நானிலமும் நில முதற்பொருள் எனப்படும். முல்லை முதலிய ஒவ்வொரு நிலத்துக்கும் தெய்வம், உணா முதலிய தனித்தனிக்கருப் பொருள்கள் உண்டு. இருத்தல், புணர்தல், ஊடல், இரங்கல் என்னும் அகவொழுக்கத்தின் உரிப் பொருள்கள் நான்கும் முறையே முல்லை முதலிய நானிலத்தின் கண்ணே நிகழும் என்பது அகப்பொருள் இலக்கண வரையறை. பிரி வொழுக்கம் நிகழும் பாலை என்பது, முதுவேனிற் காலத்தே முல்லையும் குறிஞ்சியும் வளம் பிரிந்த வறண்ட தன்மையே யாதலான்பாலை என்பதோர் தனிநிலம் இல்லை. முல்லை முதலிய நானிலத்தின்கண்ணே புணர்ச்சி முதலிய ஐவகை யொழுக்கமும் நிகழ்ந்து வந்தன. முடியுடை மூவேந்தரும் தத்தம் நாடுகளில் உள்ள அம் முல்லை முதலிய ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அதிகாரிகளை ஏற்படுத்தி நல்லாட்சி புரிந்து வந்தனர் என்கின்றார் தொல் காப்பியர் (அகத்-28). காடு, மலை, வயல், கடற்கரை என்னும் முல்லை முதலிய அந்நானிலமும் தனித் தலைவர்களின் ஆட்சிக்கீழ் இருந்து வந்த காலமும் ஒன்று உண்டென்பது. "மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மைரை உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமணல் உலகமும், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே" (அகத்-5) என்னும் தொல்காப்பியர் கூற்றால் நன்கு விளங்குகிறது. மாயோன் முதலிய நால்வரும் முல்லை முதலிய நானிலங்களையும் முறையே சீருஞ் சிறப்புடன் ஆண்டு வந்த பழந்தமிழ்த் தலைவர் களேயாவர் என்பதை என்னால் எழுதப்பட்ட 'தொல்காப்பியர் காலத் தமிழர்' என்னும் நூலிற் காண்க. உலகம்-நிலம். எனவே, இந்நானிலப் பிரிவு, பழந்தமிழ் நாட்டுப் பிரிவின் இன்றியமையாப் பிரிவு என்பது பெறப்படும். இது பற்றியே பழந்தமிழ்ப் புலவர்கள் தமிழ் நாட்டினைக் குறிப்பிடுகின்ற போதெல்லாம் நானிலமென்றே குறிப்பிட்டதும். எனவே, இந்த முந்நான்கு பன்னிரண்டு நிலத்தினையே, தொல்காப்பியர், "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்"(தொல்400) என்றதாகும். பன்னிரு நிலம்-தமிழகம். "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பே"பன்னிரு நிலம். இனி, தமிழ் என்னும் சொல்லுக்கே இனிமை என்பது பொருளாயிருக்க, அப்பொருளுக்கு மாறாகச் சேனாவரையர் கொடுந்தமிழ் என்ற ஒன்றை இட்டுக் கட்டிக் கொண்டது தமிழ் மரபினைக் கெடுப்பதற்கேயாம் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இன்சுவைத் தேனுக்குக்கைப்புச் சுவையுண்டெனல் பொருந்தாமை போல, இனிமைச் செந்தமிழுக்குக் கொடுமைக் குணம் எங்ஙனம் பொருந்தும்? செந்தமிழ் என்பதில் உள்ள செம்மை என்னும் அடைமொழியை இனம் விலக்கிய அடைமொழி எனக் கொண்டதே தவறு. அத்தவறான இலக்கண அறிவினால் எழுந்ததே கொடுந் தமிழ் என்னும் தகாச் சொல். கருமதி இருந்தாலன்றோ வெண்மதி என்பதில் உள்ள வெண்மை என்னும் அடைமொழி இனம் விலக்கிய அடைமொழியாகும்? வெண்டாமரையும் உள்ளதால், செந்தாமரை என்பதில் உள்ள செம்மை என்னும் அடை மொழி என்பதில் உள்ள செம்மை என்னும் அடைமொழி இனம் விலக்கிய அடைமொழியாகும். தமிழ் என்பதற்குத் 'தமிழ் நிலம்' என வலிந்து பொருள் கொண்டதும் தவறே யாகும். எனவே, "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்"என்ற சூத்திரத்திற்குச் சேனாவரையர் உரைத்த உரை, சிறிதும் பொருந்தாப் போலியுரை யேயாகும். சேனாவரையரின் பொருந்தா அப்போலியுரையினைப் பொருளுரை என்பதாகக் கொண்டே கொடுந்தமிழ் என்ற பெயரால் ஓர் இலக்கண நூல் எழுந்தது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் இவ்வாறு தவறாகக் கொண்ட கருத்துக்களை, ஆசிரியர் கருத்துக்குமாறாக வலிந்து புகுத்தியுள்ள தகாக் கருத்துக்களை உண்மையான கருத்துக்கள் எனக் கொண்டு, அக்கருத்துக்களைத் தழுவிச் செய்யப் பட்டதே நன்னூல் என்னும் இலக்கண நூலாகும். தமிழ் இலக்கண மரபைச் சிதைக்க எழுந்த பிற்கால நூல்களில் நன்னூல் ஒன்றாகும். நன்னூல் ஆசிரியரான பவணந்தி முனிவர் என்பார் கி.பி. 13-ஆம் நூற்றாண் டினராவர். நன்னூலைத் தொல்காப்பியத்தின் வழி நூலென்பர். ஒரு நூலின் கருத்துக்களைக் காலத்துக் கேற்றவாறு தொகுத்தும் விரித்தும் தொகை விரியாகவும் செய்வதே வழிநூலின் இலக்கணம் ஆகும். ஆனால், நன்னூலிலோ முதனூலாகிய தொல்காப்பியக் கருத்துக்கு நேர்மாறான கருத்துக்கள் பல கூறப்படுவதால் அதைத் தொல்காப்பியத்தின் வழி நூல் எனல் சிறிதும் பொருந்தாது. இதைத் தொல்காப்பியத்தின் எதிர் நூல் என்று வேண்டுமானால் சொல்லாம். எடுத்துக்காட்டாக, தொல்காப்பியர், "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்"என்பதற்குச் சேனாவரையர், "செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிருநிலத்தும்"என்று உரையெழுதினார். அதனை நன்னூலார், "செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்" எனச் சூத்திரஞ் செய்தனர். அவர் அம்மட்டோடு நின்றாரா? இல்லை; மேலும் ஒரு படி முன்னேறிச் சென்றுள்ளார். தமிழ் மரபுக்கு மாறான கருத்தினைத் தமிழ் இலக்கண வழக்கில் புகுத்தித் தமிழினத்தின் தமிழ் இலக்கண மரபின் தனித் தன்மையைச் சிதைத்துள்ளார். சேனாவரையர், "செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந் தமிழ் நிலத்தும் வழங்கும் சொல் திசைச்சொல்"என்ற மட்டில் நிற்க, நன்னூலாரோ, "செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்" என்று அதனை அப்படியே சூத்திரஞ் செய்ததோடு, "ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப" (நன்னூல் - 273) எனக் கொடுந்தமிழ் நிலம் பன்னிரண்டின்கண் வழங்கும் சொற் களேயன்றி, தமிழ் அல்லாத வேறு பதினெழு மொழிச் சொற் களும் திசைச் சொல் என்கின்றார். ஒன்பதிற்றிரண்டு - பதினெட்டு. மேலும், இவ்வாறு நான் சொல்வதாக எண்ணாதீர்கள். நான் ஒன்றும் சொல்லவில்லை. நமது முன்னையோர் சொன்ன தையேதான் நான் சொல்லுகிறேன் என்பார். 'என்ப' என் கின்றார். என்ப-என்று சொல்லுவர் புலவர். என்ப - எண்பார்கள் - என்று சொல்வார்கள் என்பது பொருள். கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டினும் வழங்குஞ் சொற்கள் திசைச் சொல் என்று தான் இவர் முன்னோரான சேனாவரையர் சொல்கிறார். தமிழ் ஒழிந்த பதினேழ் மொழிச் சொற்களும் திசைச்சொல் என்று சேனாவரையர் சொல்ல வில்லை. அவ்வாறு சொன்ன முன்னோர் யார்? எந்த முன்னோர் அவ்வாறு சொன்னார்? தானே இட்டுக்கட்டிச் சொல்லிவிட்டு, 'என்ப' என்று முன்னோர் மேல் பழியைச் சுமத்திவிட்டுத் தான் தப்பித்துக்கொள்கிறார். சேனாவரையர், 'செந்தமிழ், கொடுந்தமிழ்' எனத் தமிழை இரண்டாகப் பிரித்துத் தமிழின் இனிமைத் தன்மைக்கு இழிவு கற்பித்தார். நன்னூலாரோ, சூத்திரஞ் செய்து அதை உறுதிப் படுத்தினதோடு, தம் முன்னோர் மொழியைப் பொன்னே போல் போற்றின தோடு, அழகொளிரும் அருந்தமிழில் அயல்மொழிச் சொற்களைக் கலப்பதற்கும் அடிகோலி விட்டார். தமிழில் அயல் மொழிச் சொற்களைக் கலந்து தமிழின் தனித்தன்மையை தூய்மை யைக் கெடுக்கும் இத்தமிழ்க் கொலைக்குத் தான் காரணம் இல்லை என்று தப்பித்துக் கொள்ள, 'என்ப' என்ற சொல்லைச் சான்றாக்கிக் கொண்டார். ஒருவன் தான் கொலை செய்து விட்டுப் பொய்ச் சான்றுகளைக் கொண்டு பிறர்மேல் அக்கொலைக் குற்றத்தைச் சுமத்துவது போலன்றோ இருக்கிறது இவர் செயல்? இன்னார் இவ்வாறு சொன்னார் என்ற விளக்க மின்றி, வேண்டுமென்றே 'என்ப' என்று பிறர் கூற்றாக்கிச் சொல்லாத தைச் சொன்னதாகப் பொய் பேசுகிறார், தமிழின் தனி மரபைக் கெடுக்க இவர் கூறும் முன்னுக்குபின் முரணான கூற்றுக்களில் இதுவும் ஒன்றாகும். இவர் கொடுந்தமிழ் நாடெனக் கூறும். "தென்பாண்டி குட்டம் குடங்கற்கா வேண்பூமி பன்றி யருவா வதன்வடக்கு-நன்றாய சீத மலாடு புனல்நாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண்" என்னும் பன்னிரண்டில், தென்பாண்டி நாடு-திருநெல்வேலி மாவட்டம், குட்டம், குடம் முதலியவை சேர நாட்டைச் சார்ந்தவை. அருவா நாடும், அருவா வடதலை நாடும் தொண்டை நாட்டைச் சார்ந்தவையாகும். சீதநாடு கொங்கு நாட்டைச் சார்ந்தது. மலாடு-நடு நாடு. புனல் நாடு - சோழ நாடு. இக்கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டும் பழைய செந்தமிழ் நாடேயாகும். இவை பன்னிரண்டும் சேர சோழ பாண்டிய நாடுகளான தமிழகத்தில் அடங்க, இவற்றைக் கொடுந்தமிழ் நாடு எனில், சேர சோழ பாண்டியரைச் 'செந்தமிழ் வேந்தர்' எனல், பொருந்தாப் பொய்க் கூற்றாக வன்றோ முடியும்? தமிழ் பழித்த கனக விசயரின் செருக்கடக்கிய செந்தமிழ் வேந்தனாகிய செங் குட்டுவன் ஒரு கொடுந்தமிழ் வேந்தனாகவன்றோ குறைபாடுறு வான்? அவன்றன் இளவலான இளங் கோவடிகளும் கொடுந் தமிழ்ப் புலவராவரன்றோ? அவரால் செய்யப் பெற்ற செந்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரமும் கொடுந் தமிழ்க் காப்பியமன்றோ ஆகும்? தமிழர் செங்கோன்மைச் சிறப்பை உலகறியச் செய்த பாண்டியன் நெடுஞ்செழியன் ஒரு கொடுந்தமிழ் வேந்தனாக வன்றோ குறிக்கப்படுவான்? தம் செல்வமுழுவதையும் வரையாது வாரி வழங்கித் தமிழ் வளர்த்த சங்க கால வள்ளல்களான பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், பேகன், நள்ளி, எவ்வி, பண்ணன், குமணன் முதலியோரெல்லாம் கொடுந்தமிழ்க் குறும்பர் என்றன் றோ குறைபாடுறுவர்? பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் பழந்தமிழ் நூல்களெல்லாம், அந்நூற் களின் செய்யுட்களைப் பாடி பழந்தமிழ்ப் புலவர்களெல்லாம் பெறும் பெயர் என்னவோ? இது வேண்டுமென்றே தமிழின் தனியுயர் தன்மையைக் கெடுக்க, தமிழர் தனிப்பண்பாட்டை மாசுடையதாக்க, தமிழிலக் கண மரபைச் சிதைக்கச் செய்த சூழ்ச்சியேயாகும். இத்தகைய தமிழ் மரபுக்கு மாறான கருத்துக்களைக் கூறும் நன்னூல்தான் தமிழ் மக்களின் பயக்குறையால் இன்று தமிழ் மாணவர்களுக்கு இலக்கணப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தம் மரபுக்குப் புறம்பான அக்கருத்துக்களை, தமக்குரியன போலத் தமிழ் மாணவர்கள் கற்று வருகின்றனர் என்று தமிழ் மக்களுக்குத் தந்நிலை யுணரும் நற்காலம் வருமோ! அடுத்தபடி, தமிழிற் கலத்தற்குரியவென நன்னூலார் கூறும் பதினேழ் மொழிகளாவன. "சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக் குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம் வங்கம் கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே" என்பன. சிங்களம்-இலங்கையில் வழங்கும் மொழி. சோனகர்-யவனர், கிரேக்கர், அரேபியர் முதலிய மேற்கு நாட்டினரை யவனர் என்பது தமிழ் மரபு. எனவே, சோனகம் என்பது-கிரேக்கம், அரபி, செர்மன், பிரஞ்சு, ஆங்கிலம் முதலிய மேலை நாட்டு மொழிகள் அனைத்தையும் குறிக்கும். கடாரம் - பர்மா, குடகம் - முற்கூறிய கொடுந்தமிழ் நாடாகும். இதனால், நன்னூலார், உலகில் வழங்கும் எல்லா மொழிச் சொற்களையும் கலந்து, தமிழின் தனித் தன்மையைக் கெடுக்க இலக்கண விதியே வகுத்து விட்டாரல்லவா? இவ்வாறு ஒரு மொழியில் உலகில் வழங்கும் எல்லா மொழிச் சொற்களையும் கலந்து செய்யுட்செய்யலாமெனின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆரியம், இந்தி, ஆங்கிலம், செர்மனி முதலியனவாக உலகில் வெவ்வேறு மொழிகள் இருக்கவேண்டியதில்லை யல்லவா? எல்லா மொழிகளையும் ஒன்றாகக் கலந்து பேசியும் எழுதியும் ஒரே மொழியாக்கி விட்டால் மொழி வேற்றுமை, மொழி வெறி என்னும் வேறுபாடு ஒழிந்து, உலகம் ஒருவழிப்படுமல்லவா? இதைவிட ஒரு மொழிக்குச் செய்யுங் கேடு வேறு என்ன இருக்கிறது? நன்னூலார் காலத்திலிருந்து இன்றளவும் இத்தகாத கருத்து, தமிழ் மரபுக்குப் புறம்பான கருத்துத் தமிழிலக்ண விதியாகவே தமிழ் மக்களால் போற்றப்பட்டுத் தானே வருகிறது? இன்னும் தமிழ் எழுத்தாளர் எனப்படுவோரில் ஒரு சிலர் நன்னூலார் கட்டளையை அப்படியே பொன்னே போற்போற்றித்தானே வருகின்றனர்? அயல் மொழிச் சொற்களைக் கலந்து எழுதுவது தமிழுக்கு அழகாகும் என்பதோடு, தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அஃது ஏற்றதென்று கூறுவோரும் இன்று உண்டல்லவா? இக்கலப்பிலக்கண விதியை மேற்கொண்டே பிற்காலத் தினர், கடலைபொரி போல அயற் சொற்களைக் கலந்து தமிழின் தனித் தன்மையைச் சிதைத்துவிட முற்பட்டனர். வேண்டு மென்றே தமிழ்ச் சொற்களிலும் அயற் சொற்களை மிகுதியாகக் கலந்து எழுதி, அதற்கு மணிப்பிரவாள நடை எனப் பெயரும் சூட்டினர். மணி-முத்து, பிரவாளம் - பவளம், தமிழில் அயற் சொற்களைக் கலந்து இதற்கு மணிப் பிரவாளம் என்பதை விட 'பானஞ்சு' எனல் பொருத்தமான பெயராகுமே! சமணர் சீபுராணமும், வைணவர் நாலாயிரப் பிரபந்தத்திற்கு உரையும் மணிப் பிரவாள நடையில் எழுதித் தமிழ் மொழியை அழிக்க முனைந்தனர். இன்பத்தமிழ் பயிலும் வாயால் அத்தகைய இழி நடையைப் பயிலும்படி செய்தது அக்காலச் சமயப் பற்று. இன்று கட்சிப் பற்றுக் கொண்ட தமிழர், அயல் மொழியாகிய இந்தியைத் தமிழ் மக்களிடைப் புகுத்தித் தமிழ் மொழியையே அழித் தொழிக்க முனைகின்றனரல்லவா? அது அயலார் தலைமைக் குட்பட்ட சமயப்பற்று. சமயம், கட்சி என்னும் பெயர் வேறு பாடேயன்றிச் செயற்படு வதில் இரண்டும் ஒன்றே தான்! தமிழ்நாட்டில் பரவிய அயனாட்டுச் சமயங்கள் தமிழர்க்குச் செய்த தீமைகள் பலப்பல. அவற்றுள் முதன்மை யானவை இரண்டு. ஒன்று, தமிழில் அயல் மொழிச் சொற்களை வேண்டு மென்றே கலந்து தமிழின் தூய தனித்தன்மையைக் கெடுத்தது. மற்றொன்று; தமிழில் அயற் கருத்துக்களை வலிந்து புகுத்தித் தமிழரின் தனிப்பண்பைக் கெடுத்தது. அத்தகைய அயற் சமயக் கொள்கையாலன்றோ தமிழர் வேங்கைபோல் வீரங்குன்றி அயலாருக் கடிமையாயினர்? அயற்றலைமைக் கட்சிக் கொள்கை யாலன்றோ தமிழர் இன்று தம்மரசிழந்து அயலார்க் கடிமையாய் அலைகின்றனர்? இவற்றிற்கு வழி வகுத்துக் கொடுத்த குற்றம் பிற்காலத் தமிழ் இலக்கண ஆசிரியர்களை யல்லவோ சாரும்? 'தமிழ்க் கடவுள், அகத்தியற்குத் தமிழறிவுறுத்த செந் தமிழ்ப் பரமா சாரியன்' எனத் தமிழர்களாலேயே போற்றப் படும் முருகக்கடவுளின் அருள் பெற்றவரெனப்படும் அருண கிரிநாதர் என்பார் நன்னூலார் கட்டளையை அப்படியே தலைமேற் கொண்டு செயற்படுத்தியவராவர். அவர் பாடி யுள்ள திருப்புகழ்ப் பாடல்களில் கலக்கவேண்டிய அளவு அயற்சொற்களைக் கலந்துள்ளார். அஃதும் கொடுந்தமிழ் பரமாசாரியன் மேலல்ல; செந்தமிழ்ப் பரமாசாரியன்மேல் பாடிய பாடல்களிலேதான் அத்துணைக் கலப்பு! "கத்தூரி யமரு ம்ருகமத வித்தார படிற இமசல கற்பூர களப மணிவன" இதில் எத்தனை தமிழ்ச் சொற்கள், எத்தனை அயற் சொற்கள் என்று எண்ணிப் பாருங்கள். இதற்குத் தமிழல்லாத பதினேழு மொழிச் சொற்களும் திசைச் சொல் என்ற நன்னூ லாரன்றோ காரணமாவர்? தமிழ் நாட்டில், தமிழ்ப் பழங்குடியில் பிறந்து, தமிழைத் தாய் மொழியாகப் பேசிப் பழகி, தமிழ் பயின்று புலமை யடைந்த தமிழ்ப் புலவர்களுக்குத் தனித் தமிழில் பாடவா முடியாது? பின்னேன் அவ்வாறு அயல் மொழிச் சொற்களைக் கலந்து பாடினர் பிற்காலப் புலவர்கள்? அயல் மொழிச் சொற்களைத் தமிழ்ச் செய்யுள் செய்தற்குரிய திசைச் சொல் என்று இலக்கணம் வகுத்தமையன்றோ இத்தமிழ்க் கொலைக்குக் காரணம்? "சர்வபரி பூரண அகண்டதத் துவமான சச்சிதா னந்தசிவமே" இது தாயுமானவர் பாடலடி. இதில் 'ஆன' என்பதைத் தவிர அத்தனையும் அயற் சொற்கள். தாயுமானவர் என்ன அயல் நாட்டில் பிறந்து வளர்ந்து, அயல் மொழிப் புலமையடைந்து, பின் தமிழ் நாட்டிற்கு வந்து தமிழ் மொழியை ஒருவாறு கற்றுக் கவிபாடியவரா? பழந்தமிழ்க் குடியிற் பிறந்த அவர்க்குத் தனித் தமிழில் பாடவா முடியாது? நன்னூலார் போன்ற பிற்கால இலக்கணப் புலவரும் அயனாட்டுச் சமயமும் செய்த கொடுமை யன்றோ இது? "தத்துவ சொரூபத்தை மதசம் மதம்பெறாச் சாலம்ப ரகித மான சாசுவத புட்கல நிராலம்ப வாலம்ப சாந்தபத வ்யோம நிலையை நித்தநிர் மலசகித நிஷ்ப்ரபஞ் சப்பொருளை நிர்விகா ரத்தைத் தடத்தமாய் நின்றொளிர் நிரஞ்சய நிராம யத்தை" இவையும் தாயுமானவர் பாடல் அடிகளே. இவற்றுள் 'பெறா, ஆன, நிலை, பொருள், ஆய், நின்று ஒளிர்' என்னும் சொற்களல்லாத அத்தனையும் அயற் சொற்கள். இவை களைப்போன்ற தமிழ்ப் பாடல்களைப் படிக்கும் ஒரு தமிழ் இளைஞன் எங்ஙனம் தமிழுணர்ச்சி பெறுவான்? "ஓர் ஏழை வேலைக்காரனைப் பார்த்துச் 'சோறு தின்றாயா?' என்று கேட்கலாம். ஒரு கனவானைப் பார்த்து அப்படிக் கேட்கக் கூடாது. கேட்பதில் இலக்கணக் குற்றம் ஒன்றும் இல்லை. அர்த்தமும் விளங்காமற் போக வில்லை. ஆனாலும் அப்படிக் கேட்பது தமிழன்று; தமிழ் மரபன்று. ஒரு கனவானைப் பார்த்து, 'போஜனம் ஆயிற்றா?' 'நிவேதனம் ஆயிற்றா?' என்று கேட்பதும் சம்பிரதாயங்கள்." இது ஒருவர் பேச்சின் ஒரு பகுதி. இது 24-9-41 திருச்சி வானொலியில் பேசப்பட்ட பேச்சின் ஒரு பகுதி. இது யார் பேசினது? முகவரி தெரியாத ஒருவர் பேசினதன்று அப்பேச்சு. தமிழுக்குச் செய்த தொண்டுக்காகப் பெரியபட்டங்கள் பெற்றுத் தமிழர்களால் தமிழ்த் தாத்தா என அழைக்கப் பெற்ற - மஹாம ஹோபாத்யாய, தக்ஷிணாத்திய கலாநிதி டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர் அவர்களின் பேச்சுத்தான்! இது, ஐயரவர்களால், 'தமிழ் மரபு' என்னும் தலைப்பில் பேசப்பட்ட பேச்சின் ஒரு பகுதியாகும். இதில் ஐயரவர்கள், 'சோறு தின்றாயா?' என்று கேட்கலாம். இதில் இலக்கணக் குற்றம் ஒன்றும் இல்லை என்கிறார். "சோறு தின்றாயா?"என்பது இலக்கணக் குற்றமாகும். "சோறு உண்டாயா?"என்பதே தமிழ் மரபு மேலும் "போஜனம், நிவேதனம், பிக்ஷை ஆயிற்றா?"என்பதே தமிழ் மரபு என்கின்றார். 'போஜனம், நிவேதனம், பிக்ஷை' என்னும் அயற் சொற்கள் எங்ஙனம் தமிழ் மரபாகும்? "போஜனம் ஆயிற்றா?"என்பன வெல்லாம் இழிவழக்கேயன்றி, உயர்ந்தோரிடை வழங்கும் தமிழ் மரபாகா. மேலும், 'தமிழ் மரபு' என்னும் அக்கட்டுரையில், மகா மகோபாத்தியாயர், தக்ஷிணாத்திய, கலாநிதி, வாசனை, சந்தோஷம், சங்கீதம், வித்வான், சபை, அமிர்தம், சுருதி, சந்தர்ப்பம், சம்பிரதாயம், தந்தி, வாத்தியம், பூரணம், கச்சேரி, வருஷம், சாரீரம், அபஸ்வரம், சுத்தம், சாதாரணம், அங்கம், மேகம், இருதயம், ஆதாரம், பாஷை, வசனம், சமாச்சாரம், கோபம், துக்கம், பரிகாசம், சாதித்தல், தந்திரம், வார்த்தை, வித்தியாசம் அர்த்தம், உபயோகம், பிராணிம், விஷயம், சமஸ்கிருதம், ஆரம்பம், சக்தி, வாசித்தல், நிர்வாகம், துவிபாஷி, சம்பாஷணை, சுவாசம், ஜாதி, போஜனம், நிவேதனம், பிக்ஷை என ஐம்பத்தோர் அயல் மொழிச் சொற்கள் உள்ளன. தமிழ்த்தாத்தா இவ்வாறு எழுதிய குற்றம், இத்தமிழ்க் கொலை, முன்னே அதற்கு வழிவகுத்துக் கொடுத்த இலக்கண ஆசிரியரை யன்றோ சாரும்? இவ்விலக்கண விதி இல்லை யேல், ஐயரவர்கள் இவ்வாறு எழுதத்துணிவார்களா?  18. நெல்லிடைப் புல் ஒரு நாள் இரவு எட்டுமணியிருக்கும். ஒரு காலத்தே சோழ நாட்டின் தலைநகராகச் சீருஞ்சிறப்புடன் திகழ்ந்த திருவாரூர்ப் பார்ப்பனச் சேரித் தெருத்திண்ணை யொன்றில் முதிர்பருவ முடைய நாலைந்து மறையவர்கள் உட்கார்ந் திருந்தனர். அவ்வீட்டுக் காரர் வாயிலில் நின்றுகொண்டிருந்தார். ஏழாண்டுப் பருவமுள்ள சிறுவன் ஒருவன் அவர் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தான். அச்சிறுவன் ஏதோ கூறிக்கொண்டிருந்தான். அச்சிறுவன் கூறுவதை அவர்கள் மிக்க வியப்புடன் கண்ணுங் கருத்துமாய் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தனர். அச்சிறுவனுக்குப் பக்கத்தில் நின்றவர், உவகையும் வியப்பும் ஒருங்கு கலந்த முகத்துடன் அச்சிறுவனைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தார். யார் அந்தச் சிறுவன்? அம்முதியோர்களைப் பார்த்து அவன் என்ன கூறினான்? அம்முதியோர்கள் அவ்வாறு வியப் போடு கேட்கும்படி அச்சின்னஞ் சிறுவனால் அப்படி என்ன கூறியிருக்க முடியும்? அவன் அம்முதியோர்களைப் பார்த்துக் கைநீட்டிக் கைநீட்டிப் பேசுவதைப் பார்த்தால், கடாவிடை யோடு, கருத்துச் செறிவுடன் பேசும் பெரும் பேச்சாளனாக வன்றோ தோன்றுகிறான்? அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டு, அவனைப் பார்த்தபடியே அவ்வளவு உவகையுடன் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பவர் யார்? இக்காட்சி சிறந்த ஒரு நாடகக் காட்சியாகவன்றோ இருக்கிறது? ஆம்; தமிழர் வாழ்க்கை வரலாறென்னும் அமிழ்திடை நஞ்சைக் கலக்கும் நாடகக் காட்சிதான்! 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு' 'யாமறிந்த புலவரிலே வள்ளுவர் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை' என்னும் சிறப்பிற்குரிய வள்ளுவர் வாழ்க்கை வரலாற்று நாடகக் காட்சிக்குள் ஒன்று தான் இக்காட்சி. 'வள்ளுவர் ஆதி என்னும் பறைச்சிக்கும் பகவன் என்னும் பார்ப்பானுக்கும் பிறந்தவர்' என்று தொடங்குகிறது வள்ளுவர் வரலாற்று நாடகம். அந்நாடகத்தின் கட்டியக்காரன் காட்சிதான் மேலே கண்ட காட்சி. தமிழர் வாழ்க்கைச் சட்டநூலாகிய திருக்குறளைச் செய்து, தமிழர் பெருமையைக் கல்மேல் எழுத்துப்போல் நிலைபெறச் செய்த வள்ளுவரின் பெற்றோர் எனப்படும் ஆதியும் பகவனும், அக்காலத் தமிழர் வழக்கப்படி ஒருவரை யொருவர் காதலித்து, களவொழுக்க மொழுகிக் காதல் முதிர்ந்து, பெற்றோரும் சுற்றமும் அறிய மணஞ் செய்து கொண்டு இல்லறம் இனிது நடததி வள்ளுவரைப் பெற்று வளர்த்துப் பெருமையுடன் வாழ்ந்தார் களில்லை. அவர்கள் தமிழர் பண்பாட்டுக்கு, பழக்க வழக்கத்திற்கு மாறாக, மணஞ் செய்து கொள்ளாமல் வள்ளுவரைப் பெற்றனர். ஆதியைக் காதலித்த பகவன், அவளை மணக்கத் தன் உயர்சாதி இடந்தராதென மறுத்து, அவளைக் கூட்டிக் கொண்டு ஒருவருக்கும் தெரியாமல் ஊரை விட்டே ஓடி விட்டான். அவ்வாறு ஓடினவன் தன் ஊருக்குச் சென்றிருந்தால் அது உடன் போக்கு, அல்லது கொண்டு தலைக்கழிதல் என்னும் களவியற் பிரிவில் ஒன்றாயடங்கும். ஆனால், பகவன் தன் ஊர் செல்லாமல் எங்கேயோ ஓடித் தமிழர் ஒழுக்க முறைக்கே ஓர் இழுக்கை உண்டாக்கி விட்டான். அவ்வாறு ஓடிய ஆதியும் பகவனும் நாடோடிகளாக ஊரூராய்த் திரிந்து வந்தார்கள். அவ்வாறு நாடோடி வாழ்க்கை நடத்திவந்த அவர்கட்கு உப்பை, உறுவை, வள்ளி, ஒளவை என்ற நான்கு பெண் மக்களும், வள்ளுவன், அதியமான், கபிலன் என்ற மூன்று ஆண்மக்களும் பிறந்தனர். ஆதியும் பகவனும் தாங்கள் செய்து கொண்ட முன்னேற்பாட்டின்படி அப்பிள்ளைகளைப் பெற்ற அவ்விடத்திலே வைத்துவிட்டுச் சென்றனர். அக்குழந்தைகளைக் கண்டோர் எடுத்து வளர்த்து வந்தனர். அக்குழவிகள் எழுவருள் ஒருவரான வள்ளுவர், சென்னை மயிலாப்பூரிலுள்ள ஒரு பறைய ரால் எடுத்து வளர்க்கப்பட்டார். இவ்வாறு தொடங்குகிறது வள்ளுவரின் பிறப்பு வளர்ப்பு நாடகம்! அப்பிள்ளைகள் எழுவருள் கடைப் பிள்ளை யான கபிலன் தான் நமது சின்னஞ் சிறுவன். ஆதியும் பகவனும் ஊரூராய்ச் சுற்றிக் கொண்டே திருவாரூர் சென்றபோது ஓர் ஆண்குழந்தை பிறந்தது. வழக்கம் போல் அவர்கள் பெற்ற அப்பிள்ளையை அங்கே வைத்து விட்டுச் சென்றனர். அப்பிள்ளையை ஒரு பார்ப்பனர் கண்டு எடுத்துப் போய்க் கபிலன் என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார். கபிலன் ஏழாண்டுப் பருவத்தைக் கடந்து எட்டாவ தாண்டை அடைந்தான். மனுமுறைப்படி (மனு-2:36) அது பூQலணிய வேண்டிய பருவம். எனவே, கபிலனது வளர்ப்புத் தந்தை அவனுக்குப் பூQற் சடங்கு (உபநயனம்) செய்ய அவ்வூர்ப் புரோகிதரை அழைத்தார். அஃதறிந்த அவ்வூர்ப் பார்ப்பன முதியோர் சிலர் கபிலன் வீட்டுக்கு வந்து, அவன் தந்தையை அழைத்து, 'இச்சிறுவன் நமது மரபில் பிறந்தவன் அல்லனாகை யால் இவனுக்குப் பூணூற் சடங்கு செய்யக் கூடாது' என மறுத்தனர். அது கண்ட கபிலனது வளர்ப்புத் தந்தையார் செய்வதறியாது மனங்கலங்கி நிற்கக் கண்ட கபிலன், கடவுள் திருவருள் பெற்று, உண்மை யறிவுற்று, சாதி வெறி பிடித்த அப்பார்ப்பன முதியோர் களைப் பார்த்து, 'பிறப்பிலே சாதிவேற்றுமையில்லை. இது ஒரு சிலர் உயர் வாழ்வுக்காக ஏற்படுத்திய சூழ்ச்சித் திறனேயாகும்' என்பதை, ஏதுவும் எடுத்துக்காட்டும் பொருந்த, எளிய இனிய அகவற் பாவினால் ஆணித்தரமாக எடுத்தியம்பினான். சிறுவனின் சீரிய அத்தெளிவுரையைக் கேட்ட அப்பார்பனர்கள் பூQற் சடங்கு செய்ய உடன்பட்டனர். கபிலன் கூறிய-பாடிய-அவ்வகவல், கபிலர் அகவல் என வழங்குகிறது. "ஒட்டியர் மிலேச்சர் ஊணர் சிங்களர் இட்டிடைச் சோனகர் யவனர் சீனத்தர் பற்பலர் நாட்டிலும் பார்ப்பார் இலையால்" "நால்வகைச் சாதியிந் நாட்டினில் நாட்டினீர் பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே அவ்விரு சாதியின் ஆண்பெண் மாறிக் கலந்து கருப்பெறல் கண்ட துண்டுமோ" எனச் சாதிவேற்றுமைக் கொடுமையைத் தவிடு பொடியாக்கு கிறான் ஏழாண்டுப் புலவன்! அவன் அத்துடன் நிற்கவில்லை. தன் உடன் பிறந்தவர் களான உப்பை, உறுவை முதலிய அறுவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் எடுத்துக் கூறுகிறான். உப்பை, உறுவை, வள்ளி, ஒளவை வள்ளுவர் அதியமான், கபிலன் என்னும் எழுவரும் உடன்பிறந்தார் என்பதற்கும் சான்றாக உள்ளது கபிலரகவல் என்னும் இச்சிறு நூலே யாகும். 134 அடிகளை உடைய அவ்வகவல் சொல்லில் சிறிதே யெனினும், பொருளில் மலையினும் மாணப்பெரிதாகும். அத்தகு ஆன்ற பொருட் செறிவும் செய்யுட் சிறப்புமுடைய அவ்வகவல், ஏழாண்டுச் சிறுவனால் பாடப்பட்டதென்பது, அதுவும் ஆசுகவி யாக அறையப்பட்ட தென்பது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போலாகுமன்றோ? ஏதோ பல்லாயிரத்திலொரு வருக்குப் புத்தாண்டுப் பருவத்திலே கவியுள்ளம் வாய்க்கப்பெறு மெனினும், கபிலரகவல் போன்ற அத்தகு சிறந்த கருத்தமைந்த கவிபாட முடியாததொன்றாகும். பின் எப்படிப்பாட முடிந்தது என்பதற்குத்தானே, எதற் கெடுத்தாலும் கடவுளின் திருவருட்டன்மை கற்பித்துத் தமிழ் மக்களின் அறிவிய லாராய்ச்சித்திறனைக் கெடுத்துக் குட்டிச்சுவ ராக்கி வரும் அத்திருவருள் வந்து குறுக்கே நிற்கிறது? அத்திரு வருட்பேறின்றி அச்சிறுவன் அவ்வகவலைப் பாடியிருந்தால் அவனுக்குத் தனிப்பெருமையுண்டு. தமிழ் மக்கள் தனிப்பெரு மையடையக் கூடாது என்பதற்காகக் குறுக்கே நிற்பதுதானே திருவருள்! இத்திருவருட் பேறு முன்னுக்குப்பின் முரணாக அமைந் துள்ளது. ஆதி பத்துமாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளைப் பெற்ற அப்போதே, பெற்ற இடத்திலே எறிந்து விட்டுச் செல்ல மனந் துணியாமல் பிரிவாற்றாது வருந்துவது கண்ட ஒவ்வொரு பிள்ளையும் பிறந்த அப்போதே, தாய் வயிற்றிலிருந்து வெளிவந்த அப்போதே கடவுளின் திருவருளால் உண்மை யறிவும் கவிப் புலமையும் கைவரப்பெற்று, 'எல்லாப் புலவர்க்கும் வெண்பாப் புலி' என்னும் வெண்பாவினால் திருவருட் பேற்றை கடவுள் திரு வருட்டன்மையை எடுத்துக் கூறித் தாயைத் தேற்றியனுப்பினதாகக் கூறப்படும் ஏழு வெண்பாக்கள் உள்ளன. அவ்வெண்பாக்கள் ஒவ்வொன்றும், 'காரிகை யோடுதொல் காப்பியங் கற்றுக் கவிசொலும் நாவலர்களும்' கண்டு பொறாமைகொள்ளும் படி அத்தகு சீருஞ்சிறப்புடன் திகழ்கிறது. "கண்ணுழையாக் காட்டில் கடுமுள் மரத்துக்கும் உண்ணும் படி தண்ணீர் ஊட்டுவார் - எண்ணும் நமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர் தமக்குந் தொழிலதுவே தான்." இவ்வெண்பா, கபிலர் பிறந்த போது பாடித்தாயைத் தேற்றிய வெண்பா வெனக் கூறப்படுகிறது. என்னே கடவுளின் திருவருட்பெருக் கிருந்தவாறு! இத்தகைய சீருஞ்சிறப்பும் செறிவும் நிறைவும் திட்பமும் நுட்பமும் உடைய அழகிய வெண்பாப் பாடுதற் கமைந்த திருவருளிருக்க, ஏழாண்டுக்குள் மீண்டும் கடவுட்டிருவருள் பெறுவானேன்? அன்றடைந்த புலமை என்னானது? அப்பொழுதே நீங்கிவிட்ட தெனின், அத்திருவருனிள் பெருமைப் பாடு எத்தகையது? கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போற் றோன்றி அப்போதே மருங்கறக் கெட்டுவிடுவதா திருவருளின் தன்மை? இரண்டாண்டுப் பருவத்தில் திருவருள் பெற்ற மெய்கண்ட தேவரும் (சிவஞானபோத ஆசிரியர்), மூன்றாண்டுப் பருவத்தில் திருவருள் பெற்ற திருஞான சம்பந்தரும், ஐந்தாண்டுப் பருவத்திலே திருவருள் பெற்று ஊமை நீங்கிப் புலமையுற்றுக் கவிபாடிய குமரகுருபரும் என்றும் அப்புலமை நீங்காமல் அப்படியே விளங்கியிருந்ததாகக் கூறும்போது கபிலருக்கு மட்டும் பிறந்த போது பெற்ற திருவருட்பேறு நீங்கி மறுபடியும் அப்பேறு பெறவேண்டியதன் காரண மென்ன? எனவே, கபிலரகவல் ஏழாண்டுச் சிறுவனான கபிலன் பாடினானென்பதும், கபிலன் கூற்றைக் கேட்ட பார்ப்பன முதியோர் தங்கள் கொள்கையை விட்டுப் பூQல் சடங்கு செய்ய உடன்பட்டனர் என்பதும் கட்டுக் கதையேயாகும். இன்னார் பிள்ளை யென்றே தெரியாத போது உடன்படாத அப்பார்ப்பன முதியோர், புலைச்சி பிள்ளை என்பதை அறிந்த பின் எங்ஙனம் உடன்படுவர்? இனி, கபிலர் பாடியதாகக் கூறப்படும் அவ்வகவற் பாவில் கபிலர் தன்னைப் பற்றியும், தன் உடன் பிறந்தாரைப் பற்றியும், தன் பெற்றோரைப் பற்றியும், விளக்மாகக் கூறுகிறார். அப்பகுதிதான் இங்கு ஆராய்ச்சிக்குரியது. "பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்! அருந்தவ மாமுனி யாம்பக வற்குக் கருவூர்ப் பெரும்பதிக் கட்பெரும் புலைச்சி ஆதி வயிற்றில் அன்றவ தரித்த கான்முளை யாகிய கபிலனும் யானே என்னுடன் பிறந்தவர் எத்தனை பேரெனில் ஆண்பால் மூவர், பெண்பால் நால்வர் யாம்வளர் திறஞ்சிறி தியம்புவல் கேண்மின்! ஊற்றுக் காடெனும் ஊர்தனில் தங்கியே வண்ணா ரகத்தில் உப்பை வளர்ந்தனள் காவிரிப்பூம் பட்டினத்தில் கள்வினைஞர் சேரியில் சான்றா ரகந்தனில் உறுவை வளர்ந்தனள். நரம்புக் கருவியோர் நண்ணீடு சேரியில் பாண ரகத்தில் ஒளவை வளர்ந்தனள். குறவர் கோமான் கொய்தினைப் புனஞ்சூழ் வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள். தொண்டைமண் டலத்தில் வண்டமிழ் மயிலைப் பறைய ரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர். அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி அதிகன் இல்லிடை அதிகமான் வளர்ந்தனன். பாரூர் நீர்நாட் டாரூர் தன்னில் அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்" (---கபிலரகவல்) அருளிளங் கவியாகிய கபிலரோ தம்மைக் கடைசிப் பிள்ளையெனக் கூறிக்கொள்கிறார். தம் அக்கைமார்களையும் அண்ணன்மார்களையும் வரிசையாகக் கூறுகிறார். அருட்கவி யல்லவா! ஊற்றுக்காடு, காவிரிப்பூம் பட்டினம், வள்ளி வளர்ந்த திருத்தணிகை, மயிலை, வஞ்சி, திருவாரூர் ஆகிய ஊர்களோ ஒன்றுக்கொன்று நூற்றுக்கணக்கான கல் தொலைவில் உள்ளவை. உப்பை முதலியோர் பெற்றோராகிய ஆதியும் பகவனும், இவர்களைப் பெற்ற அப்பொழுதே, இவர்கள் பிறந்த அவ்விடத்திலே வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். அப்பிள்ளைகளை யார் யார் எடுத்து வளர்த்தனர், அல்லது அப்பிள்ளைகள் என்னாயின என்பது அப்பெற்றோர்க்கே தெரியாது. என்னவோ பிள்ளை பெற்றோம் என்பதுதான் அவர்கட்குத் தெரியும். அக்காலத்தோ ஊரி, தொடர்வண்டி, அஞ்சல் முதலிய போக்குவரத்து வசதிகள் ஒன்றும் இல்லை. இப்பிள்ளைகளை எடுத்து வளர்த்தவர்களுக்கும் இவர்கள் இன்னாருடைய பிள்ளைகள் என்பது தெரியாது. அப்படித் தெரிந்திருந்தால் இவர்களை அவர்கள் எடுத்து வளர்த் திருக்கவே மாட்டார்கள். கபிலருடைய வளர்ப்புத் தந்தைக்கே கபிலர் இன்னாரு டைய பிள்ளை என்பது தெரியாதல்லவா? 'யாரோ பாவம்! பெற்றுவைத்து விட்டுச் சென்று விட்டனர். என்ன காரணமோ, யார் கண்டார்? பச்சைக் குழந்தை பாவம்! தனியாகக் கிடக்கிறது' என்றுதானே எடுத்துப்போய் வளர்த்து வந்தனர்? பார்ப் பானுக்கும் பறைச்சிக்கும் பிறந்த குழந்தையென்று தெரிந்திருந் தால் அவர் கையால் தொட்டிருப்பாரா என்ன? அதன் பக்கத்தில் கூடப் போயிருக்க மாட்டாரல்லவா? இவ்வாறிருக்க, கபிலருக்கு எப்படித் தெரியும் தன் உடன் பிறந்தார் அறுவரின் பேரும், அவர் பிறந்து வளர்ந்துவரும் ஊரும், எடுத்து வளர்த்து வருபவர் சாதியும் அவ்வளவு பொட்டுக் குறித்தாற் போல? தன் அண்ணன்மார் ஊர்கட்கும் அக்கைமார் ஊர்கட்கும் அடிக்கடி போய் வருபர்போலல்லவோ கூறுகிறார்? எங்கேயோ ஒரு மூலையில் உள்ள 'ஊற்றுக் காடு' என்னும் சிற்றூர் கூடத்தெரிந்திருப்பதைப், பார்த்தால், உலக வரலாற்றையே இன்றுவரை அன்றே இவர் எழுதியிருந்தாலும் எழுதியிருப்பார் போலல்லவோ தோன்றுகிறது? கபிலரகவல் என்னும் நூல், நமது ஏழாண்டுச் சிறுவனான கபிலன் பாடியதன்று; வேறு கபிலரும் பாடியதன்று. அது பிற்காலத்தே யாரோ ஒருவரால் பாடப்பட்டது. அவரோ அல்லது வேறொருவரோ வள்ளுவர் வாழ்க்கைக் குறிப்புக்காக, இப்பகுதியைப் பாடி அதில் சேர்த்துவிட்டனர் என்பதில் ஐயமில்லை. இதற்கு அவ்வகவலிலேயே சான்றுகள் பலவுள்ளன. 'உப்பை வளர்ந்தனள், உறுவை வளர்ந்தனள், வள்ளுவர் வளர்ந்தனர், அதிகமான் வளர்ந்தனன்' என இறந்த காலத்தால் கூறுவதை நோக்கினால், அன்னார் காலத்திற்கு நெடுங் காலத்திற்குப் பின்னர் இருந்த ஒருவர் பாடியதென்பது வெளிப் படை. அதிய மான் கபிலர்க்கு ஓரிரண்டு ஆண்டுக்கு முன்னரும் வள்ளுவர் கபிலர்க்கு மூன்றல்லது நான்காண்டுகட்கு முன்னருந்தானே பிறந்திருப்பார்? கபிலருக்கு ஏழாண்டென் றால், அதிகமானுக்கும் வள்ளுவருக்கும் முறையே எட்டு, பத்து ஆண்டுகள் தானே இருக்கும்? அப்படியிருக்க, வளர் கின்றான், வளர்கின்றார் என நிகழ்காலத்தால் கூறுவதுதானே பொருத்தமுடையதாகும்? ஏதோ நெடுங்காலத்திற்கு முன் இருந்தவர்களைப் போல, 'வளர்ந்தனன், வளர்ந்தனர்' என்பதே கபிலருக்கும் இக்கூற்றுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை யென்பதற்குச் சான்றாகும். மேலும், பகவனுக்கு, 'அருந்தவ மாமுனி' என்ற அடையும், ஆதிக்கு, 'பெரும் புலைச்சி' என்ற அடையும் கொடுத்திருப்பதே இது கபிலர் கூற்று அல்லவென்பதைத் தெள்ளத்தெளியக் காட்டுவ தாகும். தந்தையை, 'அருந்தவ மாமுனி' என்று உயர்த்திக் கூறிவிட்டு, பத்து மாதஞ் சுமந்து பெற்ற தாயை, 'பெரும்புலைச்சி' என்று அவ்வளவு இழிவுபடக் கூறுவதா பிள்ளைக் கழகு? தாய் இன்னார் என்று தான் கபிலர்க்குத் தெரியாதே. மேலும், பார்ப்பனப் பிள்ளையல்ல வென்று பூQற் சடங்கு செய்ய மறுப்போரிடம், பெரும்புலைச்சி பெற்ற பிள்ளை என்று தன்னைக் கூறிக் கொள்வது எங்ஙனம் அறிவோடு பட்டதாகும்? பகவன் உயர் குலத்தினன் என்பதையும் ஆதிஇழிகுலத்தினள் என்பதையும் காட்டற் கெழுந்த தேயாகும் இக்கூற்று. இனி, வள்ளுவரை, 'வளர்ந்தனர்' எனவும், 'அதியமான் வளர்ந்தனன்' எனவும் கூறியிருப்பதிலிருந்தே இது வள்ளுவரைப் பற்றி, வள்ளுவர் வாழ்க்கை வரலாறு பற்றிப் பிற்காலத் தொருவர் கூறிய கூற்றேயென்பதும், கபிலர் கூற்று அல்ல வென்பதும் தெளிவாகும். வள்ளுவரைப் புலவர் நிலையில் வைத்து 'வளர்ந்தனர்' என உயர்வுப் பன்மையாகவும், அதியமானை அரசன் நிலையில் வைத்து 'வளர்ந்தனன்' என ஒருமையாகவும் கூறுகிறார். இது தன்காலத்தவரான, தனக்கு இரண்டு மூன்றாண்டுகட்கு முன் பிறந்தவரான தன் அண்ணன்மார் களைப் பற்றிக் கபிலர் கூறிய கூற்றேயாகாது. எனவே இப்பகுதி வள்ளுவர் வரலாற்று நாடகத்திற் காகவே அண்மைக் காலத்திலிருந்த ஒருவரால் பாடிக் கபிலரக வலிற் சேர்க்கப்பட்ட தென்பதில் சிறிதும் ஐயமில்லை. பெற்றோர் இன்னார் என்று தெரியாது ஐயுற்றுச் சடங்கு செய்ய மறுத்த மறையவர்களிடம், 'பெரும்புலைச்சி கான்முளை' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதே இது கபிலர்கூற்றல்லவென் பதற்குச் சான்றாகும். கபிலர், வள்ளுவர் காலத்தே இருந்த கடைச்சங்கப் புலவருள் ஒருவராவர். கடைச்சங்க நூல்களான பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகிய மூவகை நூல்களிலும் கபிலர் பாட்டுக்கள் உள்ளன. 'கபிலரது பாட்டு' என்னும் இலக்கண எடுத்துக்காட்டு இவரது புலமைத் திறனைப் புலப்படுத்தும். இவர் பாடிய பாட்டுக்கள் எதிலும் கபிலர் அகவல் போன்ற புரட்சிக் கருத்துக்கள் இல்லை. கபிலர் கடைச்சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மரில் (49) ஒருவராவர். திருக்குறள் அரங்கேற்றியபோது சங்கப் புலவர்கள் 49 பேரும் திருவள்ளுவரையும் திருகுறளையும் புகழ்ந்து ஒவ்வொரு வெண்பாப் பாடினர். அவ்வெண் பாக்கள். திருவள்ளுவமாலை என்னும் பெயருடன் வழங்குகின்றன. திருவள்ளுவமாலையின் ஐந்தாவது பாட்டான 'தினையளவு போதா' என்பது கபிலர் பாடிய வெண்பா வாகும். அதில், 'வள்ளுவனார்' வெள்ளைக் குறட்பா விரி என, மற்ற புலவர்கள் போலவே இவரும் வள்ளுவரைப் பொதுவாகவே கூறுகிறார். வள்ளுவரின் ஊர்பேர் முதலியன வெல்லாந் தெரிந்திருந்த கபிலர் வள்ளுவரைக் கண்டதும், வள்ளுவர் தம்மை இன்னார். இன்ன ஊர் எனச் சொன்னதும் அளவிலா மகிழ்ச்சி கொண்டு, 'என் உடன்பிறந்தார், என் அண்ணார்' என்று சங்கப் புலவர்களிடம் வள்ளுவரை அறிமுகம் செய்திருப் பாரல்லவா? ஒன்று விட்ட, அல்லது தூரத்துப் பங்காளி ஒருவர் செல்வத்திலோ, கல்வியிலோ, அதிகாரத்திலோ சிறப்புற் றிருந்தால், 'எங்கண்ணன்' என்று உரிமை கொண்டாடுதல் மக்களியல்பாயிருக்க, தமிழ்ச் சங்கமே புகழும் அத்தகு சிறப்புடைய வள்ளுவரை, 'எங்கண்ணா' என்று உரிமை பாராட்டாமல், பிறர் போல, மூன்றாமவன் போல, 'வள்ளுவனார்' என்றா கூறியிருப்பர்? "தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி" என்பதை, "வள்ளைக் குறங்கும் வளநாட எம்முன்னோன் வெள்ளைக் குறட்பா விரி" என்றல்லவோ பாடியிருப்பார்? இனி, இக் கபிலர் இளமையில் கபிலரகவல் பாடியிருந் தால், தமது தோழர்களான சங்கப் புலவர்களுக்கு அதைக் காட்டாமலா இருந்திருப்பர்? அப்புலவர்கள் அவ்வகவலைப் படித்திருந்தால் வள்ளுவரைப் பற்றி முன்னரே அறிந்திருப்பார் களல்லவா: மேலும், தாம் பாடிய மற்ற பாக்களை அரங்கேற்றிய கபிலர், அவ்வகவலையும் அரங்கேற்றியிருப்பாரல்லவா? அப்படி அரங் கேற்றியிருந்தால், நாற்பத்தெண்மரில் ஒருவராவது வள்ளுவர் கபிலருடன் பிறந்தவர் என்று குறிப்பிடாமலா இருந்திருப்பர்? தாம் பாடும் பாட்டுக்களிலெல்லாம் ஏதாவ தொரு வரலாற்றுக் குறிப்பைக் கூறும் சிறப்புடைய கபில பரணர், எனக் கபிலருடன் உடனெண்ணப்படும், கபிலரது நண்பரான பரணர் கூறாமலா இருந்திருப்பர்; மற்றும், திருக்குறள் அரங்கேற்றத்தின் போது அங்கு வந்திருந்த ஒளவையாரைப் பற்றியும் கபிலர் இன்னா ரென்று - தம்முடன் பிறந்தாரென்று தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. திருவாலங்காட்டில் சிவன் ஆடிய திருக்கூத்தை மயிலையி லிருந்த படியே கண்டு களித்த வள்ளுவருக்கே கபிலர் தம் உடன்பிறந்தவர், ஒளவை தம் உடன்பிறந்தவர் எனத் தெரியா திருக்க, கபிலருக்கு மட்டும் எப்படி வள்ளுவர் முதலியோரைத் பற்றித் தெரிந்திருக்கக் கூடும்? வள்ளுவர் திருவருட்டிறனை விடவா கபிலர் திருவருட்டிறன் சிறந்தது? மேலும், சங்ககால வள்ளல்களிலொருவனான தகடூர் அதிகமானே கபிலருடன் பிறந்தானென்னும் அதிகமானாவான். 'அரும்பார் சோலைச் சுரும்பார் தகடூர்' என்பதே 'வஞ்சி' என மாறியிருக்கலாம் போலும்! அல்லது கொங்கு நாட்டுக் கருவூருக்கு 'வஞ்சி' என்ற பெயரும் உண்டு. அதியமானை எடுத்து வளர்த்த அதியமான் தகடூரிலிருந்து அவ்வஞ்சி வரையிலும் ஆண்டிருக் கலாம். ஒளவையார் அதியமானுக் காகத் தொண்டை மானிடம் தூது சென்றுள்ளார். அதியமான் ஒளவைக்கு அருநெல்லிக் கனி கொடுத்துப் போற்றியுள்ளான். ஆனால், ஒளவையார்க்கு அதிய மானும் தானும் உடன் பிறந்தவர் என்பது தெரியாது. எனவே, 'கபிலரகவல்' என்பது, திருவருள் பெற்ற ஏழாண்டுச் சிறுவனான கபிலன் பாடிய தன்று. கபிலரகவலில் வரும் ஆதிபகவன் மக்களான உப்பை உறுவை முதலியோர் வரலாறு வள்ளுவரின் போலிக் கதைக்காகப் பிற்காலத்தே எழுதிச் சேர்க்கப்பட்டதாகும். அல்லது கபிலரகவலே, இப்போது உள்ளபடி - வள்ளுவர் பிறப்பு வளர்ப்பெல்லாம் கூறும் பகுதியுடன் - பிற்காலத்தில் ஒருவர் பாடி, இளங்கவிஞனாகிய கபிலன் பாடினது என எழுதி வைத்ததேயாகும். இத்தகைய கற்பனைக் கதைகள், 'நெல்லிடை முளைக்கும் புல்' போன்ற போலிக் கூற்றுக்கள் தமிழர் வரலாற்றிடை நிரம்ப வுள்ளன. அப்போலிப் பொய்க் கூற்றுக் களான புற்களைக் களைந்து தமிழர் வரலாறென்னும் நெற் பயிரை வளமுற வளர்ப்பது தமிழறிஞர் பெரு மக்களின் நீங்காக் கடமையாகும். உடனடியாகத் தமிழர் வாழ்க்கை வரலாற்று நெல்லிடைப் புல்லாகியபோலிப் பொய்க் கூற்றுக்களைக் களைந்தெறி வோமாக.  புலவர் குழந்தைப் பாடல்கள் கவிதை நூல்கள் தொகுதி 1 1 நெருஞ்சிப்பழம் 2 திருநணாச்சிலேடை வெண்பா 3 உலகப்பெரியோன் கென்னடி தொகுதி 2 4 அரசியலரங்கம் தொகுதி 3 5 காமஞ்சரி தொகுதி 4 6 புலவர் குழந்தை பாடல்கள் வரலாற்று நூல்கள் தொகுதி 5 7 கொங்கு குலமணிகள் 8 கொங்கு நாடும் தமிழும் 9 தீரன்சின்னமலை 10 அண்ணல் காந்தி தொகுதி 6 11 தமிழக வரலாறு தொகுதி 7 12 கொங்கு நாட்டு வரலாறு உரைநடை நூல்கள் தொகுதி 8 13 தமிழ் வாழ்க 14 தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் 15 அருந்தமிழ் விருந்து 16 அருந்தமிழ் அமிழ்து தொகுதி 9 17 இந்தி ஆட்சி மொழியானால் 18 ஒன்றே குலம் 19 சங்க இலக்கியச் செல்வம் 20 பூவா முல்லை அறநூல்கள் தொகுதி 10 21 திருக்குறள் குழந்தை உரை 22 திருக்குறளும் பரிமேலழகரும் தொகுதி 11 23 நீதிக்களஞ்சியம் உரை 1 தொகுதி 12 24 நீதிக்களஞ்சியம் உரை 2 இலக்கண நூல்கள் தொகுதி 13 25 தொல்காப்பியம் பொருள் அதிகாரம் தொகுதி 14 26 யாப்பதிகாரம் 27 தொடையதிகாரம் தொகுதி 15 28 வள்ளுவர் தமிழ் இலக்கணம் தொகுதி 16 29 தொல்காப்பியர் காலத் தமிழர் 30 இன்னூல் தொகுதி 17 31 இராவண காவியம் 