நூற்றாண்டு நினைவு வெளியீடு புலவர் குழந்தை படைப்புகள் - 8 தமிழ் வாழ்க தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அருந்தமிழ் விருந்து அருந்தமிழ் அமிழ்து அனைத்து நூல்களும் ஒருசேரத் தொகுத்து, பொருள் வழிப்பிரித்து, கால வரிசையில் ஒரே வீச்சில் வெளிவருகின்றன. ஆசிரியர் புலவர் குழந்தை நூற்பெயர் : புலவர் குழந்தை படைப்புகள் - 8 ஆசிரியர் : புலவர் குழந்தை பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 264 = 280 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 175/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு. புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல்களையும் அரசுடைமையாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது. பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர். அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது. 4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார். அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார். அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார். “இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3). புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தையானாலும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள்தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழு தினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும். விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார். “புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்டதேயாகும். நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப்படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார். புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனங் களையெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப் படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளையெல்லாம் சாமியாக்குகின்றான். அதுபோல நமக்காகப் பாடுபடுகின்றவர்களை, தொண்டு செய்கிறவர் களை, எழுதுகிறவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன்வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத்துரைத்தார்கள். சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை 1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடைபோட்ட காட்சி கண் கொள்ளாதது. 1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட! எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர். வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது. இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு! கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார். “தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!” நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப்பிட்டதிலிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது. கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள்கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார். “ இனியொரு கம்பனும் வருவானோ? இப்படி யும்கவி தருவானோ? கம்பனே வந்தான்; அப்படிக் கவிதையும் தந்தான் ஆனால், கருத்துதான் மாறுபட்டது” என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது. கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை. தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற்பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற் பொழிவுகளை நிகழ்த்தினார். முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இராவண காவிய மாநாடு இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன; முதல் மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டதுண்டு. இத்திசையில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு. தீர்மானங்கள் 28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும். இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும். மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும். இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005) அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான். மத்திய அரசு தொலை தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005). தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது. கலைஞரின் சாதனை! இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார். வாழ்க அப்பெருமகனார்! (நன்றி : விடுதலை 2.7.2006) புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்கள் கொங்கு நாட்டில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஓலவலசு’ என்னும் சிற்றூரில், பண்ணையக்காரர் என்னும் பழங்குடியில், முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையாருக்கு 1-7-1906இல் பிறந்தார். இவர்தம் பெற்றோருக்கு ஒரே மகனாக வளர்ந்தார். தாம் பிறந்த சிற்றூரில் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார்; தொடர்ந்து படிக்காமல் இடையிடையே விட்டு விட்டுப் படித்தார். மொத்தத்தில் எட்டு மாதங்களே திண்ணைப் பள்ளியில் பயின்றார். கருவிலே திருவுடையவராகிய இவர் பத்தாம் ஆண்டில் இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். யாரேனும் ஒருவர் ஒரு பாட்டைப் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசையில் புதுப்பாட்டு ஒன்றினைப் பாடுவார். எப்போதும் ஏதேனும் ஒருபாட்டை எழுதிக் கொண்டே இருப்பார். பாட்டு எழுதுவது இவருக்குக் கைவந்த கலையாக அமைந்து விட்டது. இவர் காலத்தில் இவர் வாழ்ந்த பகுதியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தானாகவே முயன்று படித்துக் கவிபாடும் திறம் பெற்றிருந்தார். இவர் முதன் முதலில் இசைப் பாடல்களைப் பாடினார். இவர்தம் கல்லாமல் பாடும் கவித் திறனையும், பாடல்களின் சிறப்பினையும் கண்டு வியந்த அறிஞர்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிக்குமாறு தூண்டினர்; ஊக்குவித்தனர். தாம் பிறந்த ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர்கள் எவரும் அக்காலத்தில் இல்லை. ஆகவே இவர் ஆசிரியர் துணையின்றித் தாமாகவே முயன்று இலக்கிய இலக்கணங்களைப் படித்துத் தமிழில் சிறந்த புலமை பெற்றார். மேலும் இவர் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகத் தேர்வு எழுதிப் புலவர் பட்டயம் பெற்றார். இவர் பவானியில் மாவட்டக் கழகப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். 1940வரை தமிழாசிரியராகத் தொண்டாற்றினார். 1941 முதல் 1962ஆம் ஆண்டுவரை தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்கள் வியந்து பாராட்டும்வகையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியினின்று ஓய்வு பெற்ற பின்பும் எழுத்துப் பணியினின்று ஓய்வு பெறவில்லை. வாழ்நாள் முழுமையும் தமிழுக்காகத் தொண்டாற்றினார்; பல நூல்களைப் படைத்தார்; தமது கவிதைகள் வாயிலாகச் சமுதாய உணர்வை - பகுத்தறிவை மக்களிடையே பரப்பினார். இவருக்கு முன் ஓலவலசில் படித்தவர் எவருமில்லை. அவ்வூரில் உள்ளவர்களுக்குக் கையொப்பம் இடவும் தெரியாது. இளமைப் பருவத்திலேயே பொதுத் தொண்டில் - சமுகாயத் தொண்டில் ஆர்வமுடையவராக இருந்தார். தாமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தம் ஊரிலிருந்த தம்மையொத்த அகவையுடைய இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்தார். அவர்கள் மூலமாகப் பெரியவர்களுக்குக் கையொப்பம் போடப் பயிற்சியளிக்கச் செய்தார்; கை நாட்டு போடுவதை அறவே ஒழித்தார். அக்காலத்தில் இவரைவிட மூத்தவர் பலர் இவரிடம் கல்வி கற்றனர். ஓலவலசில் கல்லாமை இருளைப் போக்கினார். வேளாளஇன மக்களிடையே இருந்த பலபிரிவினரையும் ஒன்று சேர்ப்பதற்காகவும், அவ்வின இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்காகவும் 1946 முதல் 1950வரை ‘வேளாளன்’ என்னும் திங்களிதழை நடத்தினார். அவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் அவ்வின இளைஞர்களிடையே புத்துணர்ச்சியை வளர்த்தது. விதவை மணம், கலப்புத்திருமணம், சீர்த்திருத்த மணம் முதலியன செய்யவும் அம்மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். வேளாள சமூகத் தலைவரான திரு. வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் தலைமையில், தகடூர் (தருமபுரி) மாவட்டத்திலுள்ள அரூரில் வேளாள மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் புலவர் குழந்தை அவர்கள் ‘விதவை மணம்’ தீர்மானங் கொண்டு வந்தார்; ஒருமனமாக நிறைவேறச் செய்தார். அதன்படி நூற்றுக்கணக்கான விதவை மணங்களைச் செய்து வைத்தார். இச்செயல்கள் இவர்தம் சமூகத் தொண்டிற்குச் சிறந்த சான்றுகளாகும். இவர், யாப்பிலக்கணம் படிப்பதற்கு முன்னே 1918இல் ‘கன்னியம்மன் சிந்து’ என்னும் கவிதை நூலை வெளியிட்டார். இவர் பாடிய அச்சாகாத பாடல்களும் நூல்களும் பல உள்ளன; சில நூல்கள் அச்சாகி வெளியிடப்பட்டன. யாப்பிலக்கணம் கற்பதற்கு முன்பு பாடிய பாடல்கள் யாப்பிலக்கணப்படி அமைந்துள்ளன. இவர் இதுவரை எழுதியுள்ள நூல்கள் : இராவண காவியம் உள்படச் செய்யுள் நூல்கள்-7, உரைநூல்கள் - 3, இலக்கண நூல்கள் -3, உரைநடை நூல்கள் -16 ஆகமொத்தம் 29 நூல்கள் படைத்துள்ளார். தீரன் சின்னமலை நாடகம் இன்னும் அச்சாகவில்லை. ‘விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர்கம்பன்’ என இதுவரையில் போற்றப்பட்டு வரும் புகழுரைக்கு ஈடாகப் புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் பாடிப் புகழ்பெற்றார். ‘காமஞ்சரி’ என்னும் செய்யுள் நாடக நூல், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் என்னும் நூலுக்குப் பிறகு எழுதப்பட்ட சிறந்த நாடக நூலாகும். ‘நெருஞ்சிப் பழம்’ என்னும் நூல் தமிழில் இதுவரை வெளிவராத கற்பனைக் கருவூலமான காதல் கதையாகும். புலவர் குழந்தை அவர்கள் பெருங்கவிஞர் மட்டுமல்லர். சிறந்த எழுத்தாளர்; கேட்போர் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசும் பெரும் பேச்சாளர். இவருடைய எழுத்துகள் உறுதியும் அஞ்சாமையும் ஆய்வும் செறிந்த புரட்சிக் கனல் தெறிக்கும் இயல்புடையவை. இவருடைய செய்யுள் நடையும் உரைநடையும் எளிய இனிய தனித்தமிழில் அமைந்தவை. இவர் படைத்த நூல்களெல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன. தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இவர் அவ்வியக்கத்தில் சேர்ந்தார்; பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். அன்று முதல் சுயமரியாதை இயக்கம் அதன் மறு பதிப்பான திராவிடர் கழகம், அதன் மறுமலர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுள் இணைந்து தொண்டாற்றியவர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். பள்ளித் தமிழாசிரியராக இருந்துகொண்டே, அத்தொழிலுக்குச் சிறிதும் இடையூறு இல்லாமல், ‘பெரியார் சீடர்’, ‘கருப்புச் சட்டைக்காரர்’ என்று பொது மக்கள் கூறும்படி கட்சித் தொண்டாற்றியவர். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் படைக்கத் தூண்டியது; இவருக்குப் புகழைச் சேர்த்தது. 1948இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திருக்குறளுக்குப் பகுத்தறிவிற்கு ஏற்ப உரை எழுதுவதற்குத் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தரபாரதியார் தலைமையில் ஐவர் கொண்ட குழுவை அமைத்தார். அக்குழுவில் புலவர் குழந்தையும் ஒருவர். இவரே தனிஒருவராக இருந்து திருக்குறளுக்கு உரை எழுதி ‘திருக்குறள்-குழந்தையுரை’ என்று வெளியிட்டார். அவ்வுரையை 28 நாட்களில் எழுதி முடித்த பெருமைக்குரியர். அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்ட இவர்தம் இராவண காவியத்திந்கு, தமிழக அரசால், தமிழ் வாழத் தாம் வாழும் தமிழவேள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் 17-5-1971இல் தடை நீக்கப்பட்டது. அதைக்கண்டு தமிழகமே அகமிக மகிழ்ந்தது; தமிழவேள் கலைஞரை உளமார வாழ்த்தியது. புலவர் குழந்தை ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கொண்டவர். இவர் ஒரு புரட்சிப் புலவரே எனினும் அமைதியும் அடக்கமும் உடையவர்; ஆடம்பரமின்றி எளிய வாழ்வு வாழ்ந்தவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடமை தவறாதவர்; எதிர்க் கட்சி யானாலும், மாற்றுக் கருத்து உடையவராலும் நன்கு மதிக்கத் தக்கவர். புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார். கல்வியறிவு பெற வாய்ப்பில்லாதவராயினும் பொது அறிவு நிரம்பப் பெற்றவர்; தன்மானக் கொள்கையுடையவர்; தம் கணவரின் கொள்கைக்கேற்ப இல்லறத்தை இனிது நடத்தியவர். இவ்விணையருக்குச் சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர். தமிழுக்குத் தொண்டு செய்து வந்த புலவர் பெருந்தகை தமது 68ஆம் அகவையில் 24-9-1973இல் இயற்கை அடைந்தார். மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் புலவர் குழந்தையிடம் அன்பும் மதிப்பும் உடையவர். அவர் மறைந்த பிறகு, அவர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நூல்கள் 8-7-2006 அன்று அரசுடைமை ஆக்கப்பட்டதாக அறிவித்தார். குழந்தை அவர்களின் மகள்கள் இருவருக்கும் தலா ரூ.5 இலட்சம் பரிவுத் தொகை வழங்கினார். பொருளடக்கம் தமிழ்வாழ்க பதிப்புரை iii மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை iv புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு ix கதைச் சுருக்கம் 3 நாடக உறுப்பினர் 6 தமிழ் வாழ்க! 8 - 68 தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் 73 -97 அருந்தமிழ் விருந்து முன்னுரை 101 1. பழந்தமிழ் நாடு 102 2. தமிழ் மொழி 111 3. புலவர் பெருமை 119 4. தாய்மொழிப் பற்று 126 5. பாட்டும் பரிசும் 135 6. மறக்குடி மகளிர் 144 7. யானே கள்வன் 153 8. பழகா நட்பு 160 9. நயத்தக்க நாகரிகம் 168 அருந்தமிழ் அமிழ்து 1. வள்ளுவர் கண்ட வளநாடு 181 2. இயற்கையின் எழுச்சி 196 3. தொல்காப்பியர் கால ஆட்சி முறை 203 4. ஆரமும் ஆழ்கடலும் 217 5. வண்புகழ் மூவர் 232 தமிழ் வாழ்க (1948) அணிந்துரை ‘தமிழ் வாழ்க!’ புலவர், முனைவர் ஈரோடை இரா. வடிவேலன் 32. தியாகி குமரன் தெரு, ஈரோடை - 638 004. தென்னவன் என்பவன் தமிழரசன்; வடநாட்டை வடவன் என்பவன் ஆண்டு வருகிறான். சங்கப் புலவர்களுடன் வடவர் பழகி தமிழ் கற்று, உளவுவேலை செய்து வந்தனர். தென்னவன் இமயத்தில் புலிபொறித்து மீள்கிறார். தென்னவனை வழிப்படுத்த ஆரியப்பட்டர் என்பவன் தன் மகள் ஆர்யாவுடன் தமிழகம் வருகின்றான். இவர்களுக்கு வரியில்லாமல் நிலதானம் செய்கிறான் தென்னவன். ஊருக்கு ஒரு புரோகிதரை நியமிக்கிறான் ஆரியப் பட்டர். ஒவ்வொரு தொழில் செய்வோரும் அந்தந்தத் தொழிலைச் செய்ய வேண்டுமெனச் சட்டம் செய்யப்படுகிறது. அமைச்சர் மதிவாணர் பேச்சைக் கேட்காமல், பழையன் பேச்சையும் கேட்காமல் தென்னவன் இருக்கிறான். ஆரியச் சாதி வேறுபாட்டால் நாட்டில் ஒற்றுமை குலைகிறது. தென்னவன், ஐயன் என்பவனைக் கொள்ளையரை விரட்டியதால் தலைவன் ஆக்குகிறான். பழையன் அரசியல் அதிகாரம் பெறுகிறான். தமிழ் அரசின் நிலை ஒருவாறு சீர்ப்படுகிறது. தென்னவன், பட்டர் சூழ்ச்சியில் இந்திரா என்பவளை மணந்து கொள்ள ஏற்பாடு செய்கிறான். மதிவாணர் மறுத்தும் கேட்கவில்லை. இளவரசர் தென்னவனை எதிர்க்கிறார். பட்டர், ஆர்யா, இந்திரா முதலியோர் வடநாடு ஓடிவிடுகின்றனர். இளவரசர் பட்டம் ஏற்கிறான். மற்ற அரசர்களும் அதனை ஏற்றுக் கொள்கின்றனர். நாடகப்பாங்கில் ஆடரங்கு. இதில் எங்கள் தமிழ் வாழ்கவென்று பாடுவோமே - பாடி இனிய பொருள்விளங்க ஆடுவோமே தங்குபுகழ் ஏழிசையும் யாழில் அமைத்தே - இன்பந்ததும்ப இனிது பாடி யாடுவோமே! என்ற பாடலுடன் ஆடுதல் முடிகிறது. கொங்கிளங்கோ என்னும் புலவர் ‘பனிமலைப் பரணி’ பாடி வருகிறார். அதனை மன்னவன் போற்றுகிறான். திரை : ஆ : கிருஷ்ணய்யர்: நம்ம தந்திரம் ஒன்றும் தமிழர்களிடம் பலிக்கவில்லையோ? சேஷய்யர்: அவர்கள்தான் தமிழ் தமிழ் என்று கட்டிண்டு அழறாளே! தமிழ் கெட்டால் அன்றி தமிழர்கள் ஒற்றுமை நாளும் கெடாது. இவர்கள் பேச்சு இங்ஙனம் செல்கிறது. வடவர் அவையில் ஆரியப்பட்டர், அமைச்சர் பிராமணர்கள் முதலியோர் இருந்து ஆலோசிக்கின்றனர். தமிழர்களை எளிதில் வெல்லமுடியாது எனப் பேசிக்கொள்கின்றனர். ஆரியா வருத்தத்துடன் இருக்க பட்டர் அருகில் வந்து, இந்திரா நீ தியாகம் செய்ய வேண்டும். இது நம் இனத்துக்கே பயன்படும். தென்னவன் அவையில் பட்டர், இந்திரா முதலியோர் வந்து சேருகின்றனர். அவர்களோடு தென்னவன் சேர்ந்து கொள்கிறான். பழையன், மாறன் முதலியோர் எச்சரிக்கின்றனர் இடையில் இசைப்பாடல் : மாரன் அவதாரம் - பஞ்ச பாரோர் புகழ்தீரா! அந்தப்புரத்தில் தமிழரசியும் தென்னவனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வடவர் இவர்களைப் பிரிக்கிறார்கள். பிறகு தென்னவன் திருந்துகிறான். இளவரசன் ஆட்சியை ஏற்கிறான். நாடு தமிழ் ஆட்சியாக மலர்கிறது! கதைச் சுருக்கம் தமிழ்நாட்டைத் தென்னவன் என்னும் தமிழரசன் ஆண்டு வருகிறான். வடநாட்டை வடவன் என்னும் ஆரியவரசன் ஆண்டு வருகிறான். வடவாரியர், தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவேண்டி, துறவிகளாகவந்து, ‘தமிழ் கற்றுத் தமிழ்ப் புலவர்களுடன் பழகியும் சங்கப் புலவர்களா யிருந்தும் உளவு வேலை செய்து வருகின்றனர். தமிழரசர்கள் அடிக்கடி வட நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். அதனால், ஆரியப் பண்பாடு ஆட்டங்கண்டு வருகிறது. தென்னவனும் அவ்வாறே இமயத்தில் தமிழ்க்கொடி பொறித்து மீள்கிறான். தோல்வியால் மனமுடைந்த வடவன், தென்னவனை வெல்லும் வழியை அமைச்சருடன் ஆராய்கிறான். தென்னாட்டி லிருந்து சென்ற ஆரியர்கள் தமிழ்நாட்டின் நிலைமை கூறித் தமிழர் ஏமாறா மையைக் கூறுகின்றனர். தென்னவனை வழிப்படுத்த ஆரியப் பட்டர் தன் மகள் ஆரியாவுடன் தமிழ்நாடு வருகின்றனர். தமிழ்நாடு வந்த ஆரியாவின் ஆடல் பாடலால் மயங்கிய தென்னவன், அரசியை விடுத்து ஆரியா இடத்திலேயே இருந்து விடுகிறான். புலவர் தலைவர் மதிவாணர் தமிழரசிக்குத் தேறுதல் கூறி வருகிறார். தென்னவன் பட்டரை அரண்மனைப் புரோகி தராக்குகிறான். தமிழ்நாட்டில் வடவாரியர் ஏராளமாகக் குடி யேற்றப்பட்டு வரியில்லாமல் இனாமாக நிலமும் கொடுக்கப் படுகிறது. அரண்மனையில் கொலை வேள்வி செய்யப்படுகிறது. அரண்மனைப் புரோகிதர் குறித்த நாளில், குறித்த முறைப்படி தான் பெருநாள், திருநாள் முதலியன செய்ய வேண்டும் எனும் ஆணை பிறக்கிறது. ஊர்க்கொரு ஆரியர் ஊரார் செலவில் புரோகிதராக்கப்படுகின்றனர். இவற்றை யெல்லாம் அவ்வப் போது மதிவாணரும், மக்கள் தலைவன் பழையனும் மறுத்துக் கூறியும் அரசன் கேட்கவில்லை. மக்கள் தலைவர்களில் ஒருவனான மாறன் என்பவன் ஆரியர் கையாளாகி இவற்றையெல்லாம் ஆதரித்து வருகிறான். நாட்டில் பட்டர் வைத்ததே சட்டம்! முடிவில், ஒவ்வொரு தொழில் செய்வோரும் அந்தந்தத் தொழிலையே செய்வதும், அத்தொழிலாளர்களுக்குள்ளேயே மணந்து கொள்வதும் தொழில் வளர்ச்சிக்கேற்றதென ஆரியச்சாதி வேற்றுமை சூழ்ச்சியாகப் புகுத்தப்படுகிறது. தனித்திருந்து தமிழ்ப் பண்பாட்டைக் காத்தலே தகுதியெனப் பழையன் முதலியோர் முடிவு செய்கின்றனர். மதிவாணர் பேச்சையும் கேளாமல் அரசன் பழையன் முதலாயி னோரை ஒதுக்கி வைக்கிறான். அவர்கள் தனித்து வாழ்ந்து தமிழ்ப் பண் பாட்டைக் காத்து வருகின்றனர். ஆரியச் சூழ்ச்சியால் தெலுங்கம், கன்னடம், மலையாளம் ஆகிய நாடுகளை ஆண்டு வந்த தென்னவன் தம்பிகள் மூவரும் தென்னவனோடு பகைத்து வாழ்ந்து வருகின்றனர். ஆரியச் சாதி வேறுபாட்டால் நாட்டில் ஒற்றுமை குலைகிறது. ஓர் அயல் நாட்டான் நாட்டில் புகுந்து கொள்ளையிட்டுச் செல்கிறான். மேனாட்டு வணிகர் தலைவன் ஜான் கொள்ளைக் கூட்டத்தானைத் துரத்த உதவுகிறான். அதன் நன்றியறிதலாகத் தென்னவன் ஜானை அரசியல் தலைவனாக்குகிறான். பழையன் அரசியலதிகாரம் பெறுகிறான். பட்டர் வேலை காலியாகிறது. ஜானும், அவன் மனைவி கிளியோவும் நாட்டுக்கு நல்லன பல செய்கிறார்கள். தமிழரசியின் நிலை ஒருவாறு சீர்பெறுகிறது. பட்டர், மாறன் முதலியோரைச் சேர்த்துக் கொண்டு, ‘ஜான் நம்நாட்டுப் பொருளைச் சுரண்டுகிறான். அவன் இங்கு இருக்கக்கூடாது’ என நாட்டு மக்களிடம் பிரசாரம் செய்கிறான். தன்னாட்டிலிருந்து வந்த கடிதத்தின்படி ஜான் தன்னாடு செல்கிறான். தென்னவன் பட்டர் சூழ்ச்சியால் ஆரியாவின் அண்ணன் மகளான இந்திரா என்பவளை மணந்துகொள்ள ஏற்பாடு செய்கிறான். மதிவாணர் மறுத்துங் கேட்கவில்லை. இளவரசன் மறுத்துங் கேளாததால், இளவரசன் அவளைத் துரத்த முயல்கிறான். அரசன் தன் மகனைச் சிறையிடுகிறான். நாட்டு மக்கள் சிறையை உடைத்து இளவரசனை விடுதலை செய்கின்றனர். பட்டர், ஆரியா, இந்திரா மூவரும் வடநாட்டுக்கு ஓடிவிடுகின்றனர். தென்னவன் தம்பியர் மூவரும் உறவாகின்றனர். இளவரசனான செழியன் அரசனாகிறான். தமிழரசி நன்னிலை யடைகிறாள். இனி, நாடகத்தைப் படியுங்கள்.  நாடக உறுப்பினர் 1. தென்னவன் - தமிழ்நாட்டரசன் 2. தமிழரசி - தென்னவன் மனைவி 3. செழியன் - இளவரசன் 4. மதிவாணர் - புலவர் தலைவர் 5. சாத்தனார் - அமைச்சர் தலைவர் 6. பழையன் - மக்கள் தலைவன் 7. மாறன் - ஆரியச்சார்புடைய மக்கள் தலைவன் 8. வேலன் அரசனது உற்றவேலையாள் 9. அல்லி - தமிழரசியின் தோழி 10. வடவன் - வடநாட்டரசன் 11. விஜயப்பட்டர் - புரோகிதர் 12. ஆரியா - பட்டர் மகள் 13. வசந்தா - ஆரியாவின் தோழி 14. இந்திரா - ஆரியா அண்ணன் மகள் 15. ஜான் - மேனாட்டு வணிகர் தலைவன் 16. கிளியோ - ஜானின் மனைவி 17. கிருஷ்ணய்யர், சேஷய்யர் - பட்டர் கையாட்கள், பட்டர் வருமுன்னரே தமிழ் நாட்டிலிருந்தவர்கள். 18. பிற நடிகர்கள் : முனிவர், குடிமக்கள், முதலியோர். குறிப்பு : நடிப்போர்-தென்னாட்டு, வடநாட்டு ஆடையணிகள், பழக்கவழக்கம், தமிழ் ஆரியப் பண்பாடமைந்த பேச்சு, காலத்துக்கேற்ற மாறுபாடு இவற்றை நன்கு கவனிக்கவேண்டும். நாடக நிகழ்விடம் - தென்னாட்டிலும், வடநாட்டிலும். திரை 'அ' என்பது, உள்திரை. அரண்மனை முதலிய முதன்மையான காட்சிகள். திரை 'ஆ' என்பது, இடைத்திரை. நடுத்தரமான காட்சி திரை 'இ' திரைவெளி.  தமிழ் வாழ்க! திரை. 1. அ. ஆடரங்கு தென்னவன், தமிழரசி, சிறுவன், மதிவாணர், புலவர் முதலியோர். ஆடவர் குஞ்சியுடன், மதிவாணர் வெண்தாடி யுடன் தமிழரசி நல்ல ஆடையணியுடன். பாணன் யாழ்மீட்டிப்பாடுதல். விறலி மெய்ப்பாடு தோன்ற ஆடுதல். 1. பாட்டு எங்கள் தமிழ் வாழ்கவெனப் பாடுவோமே - பாடி இனிய பொருள்விளங்க ஆடுவோமே. தங்குபுகழ் ஏழிசையும் யாழிலமைத்தே - இன்பந் ததும்ப இனிதுபாடி யாடுவோமே. அச்சமின்றி யாழ்கடலில் கப்பல் செலுத்திச்-சீனர்க் காடையணி யாவனவும் கொண்டு கொடுப்போம்; நச்சிநமைப் பார்த்துவழி நாடியிருக்கும்-மேல் நாட்டினர்க்கு வேண்டுவன கொண்டு நடப்போம். ஊக்கமுடன் நாட்டுவளம் ஓங்கவுழைப் போம்-உயர் உழவுத் தொழில்புரிந்தே உண்டுகளிப்போம். ஆக்கமுடன் பல்தொழிலும் செய்துமுடிப்போம்-அய லார்க்குறையுள் ஊணுடையன் போடுகொடுப்போம். வெற்றியுட னேபுலிவில் மீனக்கொடியை-வட மேருமலை யிற்பொறித்து மீளுவோமே; ஒற்றுமை யெனுநிறைகோல் கொண்டுநிறுத்தே-இவ் வுலகை யொருமொழிவைத் தாளுவோமே. தென்னவன் : நல்ல பாட்டு. மதிவாணர் : ஆட்டமோ? தென் : பாட்டுக்குத் தகுந்த ஆட்டம்! மதி : யாழோ? தமிழரசி : ஏழிசையின் பிறப்பிடம்! மதி : செந்தமிழின் செவ்விய பாக்களை யாழிசையோடு ஏழிசை பொருந்தப் பாடியும், பாட்டின் பொருள் கேட்போர்க்கு எளிதில் விளங்கும்படி மெய்ப்பாடு தோன்ற ஆடியும்-இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் போற்றி வளர்த்து வரும் பாணரும், விறலியருந்தான் நமது தமிழ்த் தாயின் தந்தை தாயர் ஆவர். தென் : தாங்களோ? மதி : மரம் வைத்தவனைவிடத் தண்ணீரூற்றி வளர்ப்பவ னன்றோ சிறந்தவன்? தமி : இருவருந்தான்! தென் : ஆம். (அரசன் பாணற்குப் பொன்னை அள்ளிக்கொடுத்தல். தமிழரசி விறலி தலையில் பொற்றாமரைப்பூச் சூடல். பாணனும், விறலியும் போதல்) தென் : புலத்துறை முற்றிய புலவர் பெருமானே! இவ்வாண்டு அரங்கேறிய அருந்தமிழ்ப் பாக்கள் எத்தனையோ? மதி : செந்தமிழ் வளர்க்கும் தென்னவ! அகப் பொருட் பாடல்கள் ஆயிரமும், புறப்பொருட் பாடல்கள் ஐந்நூறும் அரங்கேறின. இதோ, நமது வடநாட்டு வெற்றியைப் "பனிமலைப் பரணி" எனப் பாடியுள்ளார். (சுவடியைக் கொடுத்து, புலவரைச் சுட்டிக் காட்டி) 'கொங்கிளங்கோ' என்னும் இப்புலவர் பெருந்தகை. (அரசனும் புலவரும் ஒருவரை ஒருவர் வணங்குதல்) என்ன சொற் சுவை, பொருட்சுவை! நம் வீரர்கள் தீரத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. தென் : விரைவில் அரங்கேற்றலாம். (சுவடியைத் தமிழரசி வாங்குதல். அரசன் புலவரிடம் கொடுத்தல்)  திரை. 1. ஆ. கிருஷ்ணய்யரும், சேஷய்யரும். கிருஷ்ணய்யர் இருத்தல் சேஷய்யர் வருதல். சேஷ : என்ன கிருஷ்ணய்யர்வாள்! ஏன் வெறுமனே உக்கார்ந்திருக்கேள்! தேக சௌக்ய மில்லியோ என்ன? கிரு : இல்லை, சேஷய்யர்வாள்! தேகாத்மா நன்னாத்தா இருக்கு; நம்ம தந்த்ரம் ஒன்னும் தமிழர்களிடம் பலிக்கவில்லையே என்பதைத்தான் எண்ணிண்ட்ருக்கேன். சேஷ : அவாதான் 'தமிழ் தமிழ்'ன்னு கட்டிண்டழராளே! தமிழ் கெட்டாலன்றித் தமிழர்கள் ஒத்துமை ஒரு நாளும் கெடாது. இது நிச்சயம். கிரு : நேக்கும் அப்படித்தான் படறது. அதற்காகத் தானே நம்ம கௌதமர், வான்மீகர், மார்க்கண்டர் எல்லாம் சங்கப் புலவர்களாக இருந்திண்டு வர்ராள்? சேஷ : அகஸ்தியர் இருந்து என்ன சாதிச்சிட்டார்? தமிழுக்கு இலக்கணம் செய்தார், இலக்கணம் செய்தாரின்னு நாம் சொல்லிக்கிறதுதான்? கிரு : அவாளும் தம்மால் ஆனமட்டுந்தான் பாடு பட்டிண்டு வர்ராள். தமிழ்ப் புலவர்கள் ஏமாந்தாத்தானே? சேஷ : என்னமோ நம்மாலானதையும் பார்க்கலாம்.  திரை. 2. அ. வடவன் அவை வடவன், ஆரியபட்டர், அமைச்சர், பிராமணர்கள் முதலியோர். வடவன் : பிராமணோத்தமர்களே! மந்திரிமார்களே! மண்டலாதிபதிகளே! அத்தென்னவன் வெற்றி என் மனத்தை வாட்டுகிறது. நம்மைக் கொஞ்சங்கூட மதியாது வந்து, இமயத்தில் தமிழ்க்கொடியைப் பொறித்துச் சென்ற செயல் இன்னும் என் இதயத்தை விட்டு அகலவில்லை. தமிழ் மறவர்களின் வீர தீரத்தை நினைக்க நினைக்க என் நெஞ்சம் திடுக்கிடுகின்றது. ஆனாலும், நம்முடைய வீரர்கள் இவ்வளவு மோசமாக இருப்பார்களென்று நான் ஒருபோதும் எண்ண வில்லை. இது ஆரிய இனத்துக்கே அவமானம்! ஆரியர் தோற்றார், தமிழர் வென்றார்! எவ்வளவு கேவலம்! எப்படி யாவது அத்தென்னவனை வெல்ல வேண்டும். இல்லையேல், ஆரிய இனமே அடியோடு அழிந்தொழிய வேண்டும். மந்திரி : ஆம் அரசே! ஆனாலும், அபஜெயத்தை எண்ணி வருந்துவது அழகல்ல. வெல்லும் உபாயத்தைப் பார்ப்பதே வீரர்களுக்கு அழகு. தோல்வியே வெற்றிக்குக் காரணமாகும். வடவ : தோல்வி! முனிவன் 1 : தமிழர்களை லேசில் வென்றுவிடலாம் என்பது முடியாத காரியம்.ஒற்றுமையென்பது தமிழர்களின் உயிர்நாடி. அவர்கள் ஒரே இனம். அவர்களுக்குள் ஏற்றத்தாழ் வான ஜாதிப் பிரிவுகள் கிடையா. ஒரு தமிழன் நாவசைந்தால் நாடசையும்; அவ்வளவு இனப்பற்று. இனவுணர்ச்சி யென்னும் கயிற்றால் ஒன்றாக இறுக்கிக் கட்டப்பட்டுள்ளனர் தமிழர்கள். தமிழினம் தனியினம்! வீரமென்பது அவர்களுடன் பிறந்தது. மானமென்பது அவர்கள் மரபுக்குணம். கொடை மடம் படுவாரன்றிப் படை மடம் படார். மன்னவன் தன்னையொரு மூத்த குடி மகனாகவே எண்ணி நடந்து கொள்கிறான். வடவ : ஆம், அடிக்க அடிக்க எதிர்த்து வரும் நல்ல பாம்பு போன்றவர்கள் என்பதை நேரில் கண்டேன். முனி 2 : நம்மவரை எவ்வளவு அன்புடன் வரவேற்று ஆதரித்து வருகிறார்கள் தெரியுமா? தாயினும் அன்புடையவர் தமிழர்கள். விருந்தினரை உபசரிப்பதற் கென்றே பிறந்தவர்கள். அடடா! நம்மவரைக் கண்டால் எவ்வளவு பிரியம்! எவ்வளவு உபசாரம்! 'நீமுந்தி நாமுந்தி' என்று போட்டி போட்டுக் கொண்டு உபசரிக் கின்றனர். வடவ : போதும் பகைவரைப் புகழ்ந்தது. முனி 2 : புகழவில்லை. உள்ளதைச் சொன்னேன். வடவ : தமிழர்கள் மீது நமக்குப் பகையில்லை. அவர்கள் ஒன்றாயொருகுலமாய் ஒருமித்து வாழும் அத்தமிழ்ப் பண்பாட்டின் மீதுதான் நமக்குப் பகை. ஏன்? அத்தமிழ்ப் பண்பாடு நம் ஆரியப் பண்பாட்டை நெருக்கு கிறது. தமிழர்களின் அடிக்கடி வெற்றியால் ஆரியப் பண்பாடு ஆட்டங்கண்டு விட்டது. ஆரியப் பண்பாடழிந் தால் நம் சூத்திரர்கள் நமக்கு அடங்கி நடப்பார்களா என்ன? ஒருபோதும் நடவார். நீங்கள் சும்மா இருக்க நாங்கள் மட்டும் ஓயாமல் உழைக்கப் பிறந்த வர்களா? என்றால், நம் கதியென்ன? முனி 1 : நம் கதி அதோ கதிதான். ஆரியச் சாதி வேற்றுமை அழிந்தால், ஆரிய மேலோராகிய நமது வாழ்வே அழிந்துபடும். வடவ : பின் என் செய்வது? தமிழரை எப்படி வெல்வது? முனி 2 : தமிழர்கள் தாய்மொழிப்பற்றில் மித மிஞ்சியவர். தமிழ் கற்றவரிடத்தில் தாயினும் அன்புடை யவர். அதனால், கௌதமர், வான்மீகி, மார்க்கண்டர் முதலிய நம்மவர் தமிழை நன்கு கற்றுச் சங்கப் புலவர்களாய் இருந்து வருகின்றனர். நாங்களெல்லாம் தமிழைக் கற்றுத் தமிழ்ப் புலவர்களிடம் பழகி வருகிறோம். சிலர் தமிழ் அந்தணர்களோடு பழகி, அவர்களைப் போலவே ஆகிவிட்டனர். இவ்வாறு பல வழியிலும் நமது கொள்கையைப் புகுத்தி வருகிறோம். ஆனால், அவர்கள் ஏற்றுக் கொள்வதுதான் இல்லை. அவ்வளவு பண்பட்ட பண்பாடுடையவர் தமிழர்கள். வடவ : அந்தணர் என்பவர் யார்? முனி 2 : வயது முதிர்ந்த பெரியவர்கள் குடும்பத்தை மக்களிடம் ஒப்படைத்து விட்டுப் பொதுநலத்தொண்டு செய்து வருபவர். அன்பும் அருளும் அறமும் ஒழுக்கமும் நிறைந் தவர். அச்செந்தண்மை பூண்ட அந்தணர் சொற்படி தான் மக்கள் நடந்து வருகின்றனர். வடவ : ஓஹோ! முனி 1 : நமது கொள்கையைப் பின்பற்றா விட்டாலும் நம்மவர் சொல்வதைப் பிரியமாய்க் கேட்கிறார்கள். அவர்களுக்குள் சொல்லியும் கொள்கின்றனர். வடவ : அப்படியா! முனி 2 : நம் இளைஞர்கள் சிலர், சில தமிழ்ச் செல்வர் களிடம் ஏவலாட்களாய் இருந்து, அவர்களைத் தம்வயப் படுத்தி வருகிறார்கள். எதற்கும் தமிழர்கள் சுலபத்தில் ஏமாறுவதாகக் காணோம். வடவ : போரிலோ அவர்களை வெல்ல முடியாது. நம் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. பின் எப்படி வெல்வது? ஆரியப்பட்டர் : அரசே! எனக்கொரு உபாயந் தோன்று கிறது. பெண்களுக்கு மயங்காத மானுடப் பிறவியே உலகில் இல்லை. வீராதி வீரரும் மெல்லியலார் வலையில் விழுந்தே தீருவர். ஆடல்பாடல்களில் சிறந்த ஒருத்தியைக் கொண்டு தென்னவனை வசப்படுத்தவேண்டும். அவள் மூலம் நம்மவர் ஒருவர் அரசாங்கத்தில் நல்ல ஆதிக்கம் பெற வேண்டும். அரசனுக்குச் சர்வாதிகார மனப்பான்மையை உண்டாக்க வேண்டும். அதன் பிறகு நமது கொள்கையைப் படிப்படியாய்ப் புகுத்தித் தமிழ்ப் பண்பாட்டைச் சீர்குலைப்பது மிக எளிதாகும். வடவ : ஆம், ஆம். சரியான யோசனை. அதற்கு நம் ஆரியாவே தகுந்தவள். பட்டர் கருத்து யாதோ? பட்டர் : இனத்தொண்டு புரியாதவன் ஒரு ஆரியனா? வடவ : பேஷ்! மெச்சினேன். ஆரியப்பட்டரே! வெற்றி நமதே. பல வருஷங்களாக மந்திரியாக இருந்தும், பல பகையரசர்களிடம் தூதுசென்றும் மிகுந்த அனுபவம் வாய்ந்த நீரே அதற்குத் தகுந்தவர். இன்று முதல் தங்கள் பெயர் "விஜயபட்டர்" என வழங்குவதாக. மந்திரி யாரே! விஜயப் பட்டரின் தென்னாட்டு விஜயத்திற்கு ஆவன செய்யும்.  திரை. 2. ஆ. ஆரியா வீடு ஆரியா வருத்தத்துடன் உட்கார்ந்திருத்தல், பட்டர் அருகில் இருந்து கொண்டு, பட்டர் : நான் சொல்வதைக் கேள். பிடிவாதம் பண்ணாதே. நீ விரும்புகிறவனைக் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வது உனக்கு மட்டும் பயன்படும். உன் அழகும், ஆட்டமும், பாட்டும் நம் இனத்துக்கே பயன் படப்போ கின்றன. அதற்காக நீ உன்னைத் தியாகம் பண்ணிக் கொள்ள வேண்டியதுதான். உன் தியாகம் உனக்கு மட்டு மன்றி உனது இனத்துக்கே பெரும் கீர்த்தியைத்தரும். சொன்னபடி கேள். ஆரியா : ஏப்பா! நம்ம தேசத்தைவிட்டு அவ்வளவு தூரம் அன்னிய தேசத்துக்கு எப்படியப்பா போவது? அதுவும்?.......... பட்டர் : அதுவுமென்ன? நான் உன்னோடுதானே இருக்கிறேன். எல்லாம் நான் பார்த்துக்கிறேன். புறப்படு. 'ஆரியா என்னும் ஒரு பெண்ணால் ஆரிய இனம் முன்னுக்கு வந்தது.' என்னும் கீர்த்திக்குப் பாத்திரமாகு. இம்... எழு. ஆரியா : வசந்தா! (வர) எல்லாம் எடு. பட்டர் : சந்தோஷம். வசந்தா! சீக்கிரம்.  திரை. 3. அ. தென்னவன் அவை எகிப்து, ரோம், அரேபியா, சீன நாட்டு வணிகர்கள், அமைச்சர் முதலியோர் இருத்தல், அரசன் வருதல். எழுந்து வணங்குதல். அமைச்சர் : அரசே! அயல் நாட்டு வணிகர்கள் வந்திருக் கின்றனர். இவர் எகிப்து நாட்டு வணிகர். எ.வ : செந்தமிழ் வேந்தே! தங்கள் நாட்டில் நெய்த பாலாவி போன்ற பட்டாடையும், பாம்புச்சட்டை போன்ற பஞ்சாடையும் தங்கள் தமிழ் நாட்டின் புகழை எங்கள் நாட்டில் நிலை நாட்டியுள்ளன. தங்கள் நாட்டு மட்கலங்களின் மாண்பை எங்கள் நாடு மனமாரப்புகழ்கிறது. இவ்வாண்டு மட்கலமும், ஆடையும் கொஞ்சம் சேர்த்து அனுப்பும்படி எங்கள் அரசர் கேட்டுக் கொண்டனர். தென் : அனுப்பலாம். அமைச் : இவர் ரோமாபுரி வணிகர். ரோ-வ : தண்டமிழரசே! உலகில் எந்நாட்டிலும் விளையாத தங்கள் நாட்டுச் சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், கிராம்பு முதலிய வாசனைப் பொருள்கள் எங்கள் நாட்டை வாழ்விக் கின்றன. இவை இல்லாவிட்டால் இறைச்சியை நீண்ட நாளைக்குக் கெடாமல் வைத்திருக்க முடியாது. எலிமயிர்க் கம்பளத்தின் வேலைப்பாட்டை மெச்சாதார் யார்? மேலும் யானைத்தந்தம், மயில்தோகை, சந்தனம் எல்லாம் கொஞ்சம் மிகுதியாக வேண்டும். அரிசியின் அளவு கொஞ்சம் கூடுதல் வேண்டும். தென் : சரி. அமைச் : இவர் அரேபியா நாட்டு வணிகர். அ.வ : வண்டமிழ் மன்னவ! வணிகத்தின் பொருட்டு முதல் முதல் தமிழ்நாட்டுக்கு வந்த பெருமை எங்களுக்கேதான் உண்டு. வேண்டிய அளவு குதிரைகள் கொண்டு வந்திருக்கிறோம். அவற்றின் விலைக்குப் பண்டங்களே கொடுத்து விடுங்கள். தென் : மகிழ்ச்சி. சீ-வ : எங்கள் சீனநாட்டுக்கு வேண்டிய ஆடை யளிக்கும் பெருமை தங்கள் தமிழ் நாட்டுக்கு உரியது. முத்தும் பவளமும் உதவும் முதன்மையும் தமிழ் நாட்டினுடையதே. தென் : அமைச்சரே! இவர்களுக்கு வேண்டியன கொடும். உங்கள் அரசர்களுக்கு எமது நன்றியைச் சொல்லுங்கள். அமைச் : வடநாட்டுக்கு முத்தும், சங்குவளைகளும் சிறுவணிகர்கள் ஏராளமாகக் கொண்டுபோய் விற்று வருகின்றனர். தென் : நல்லது. உழவும், கைத்தொழிலும் எப்படி ஒரு நாட்டு வளத்துக்கு இன்றியமையாதனவோ அப்படியே வாணிகமும்.  திரை. 3. ஆ. ஊர்க்கூட்டம் பழையன், மாறன், முத்துவணிகன், முதலியோர். பழையன் : வண்டமிழ் மக்களே! நாம் இன்று இங்கு எதற்காகக் கூடினோம் என்பதைச் சொன்னால், நீங்கள் வியப் படைவீர்கள். நம் நாட்டில் இருந்து வரும் வட நாட்டினர் வட நாட்டு ஆதிக்கத்தை நம் தமிழ் நாட்டில் ஏற்படுத்தும் உளவு வேலை செய்து வருகின்றனராம். அவர்கள் வருந்தித் தமிழைக் கற்பதும், தமிழ்ப் புலவர் களோடு அளவளாவுவதும் அதற்காகத் தானாம். வடவர் கொள்கையை நம்மிடம் புகுத்தித் தமிழ்ப் பண்பாட்டைக் கெடுப்பதுதான் அவர்கள் முதல் வேலையாம். தமிழ் நாட்டில் வடவராதிக்கத்தை நிலைநாட்ட, தமிழ் நாட்டை வட நாட்டுக்கு அடிமைப்படுத்த இங்கு வாழும் ஐந்தாம் படைதானாம் அவர்கள். மாறன் : யார் சொன்னது? பிழைக்கவந்தவர்கள் பாவம்? பழையன் : பிழைக்க வந்தால் சீனர், அரேபியர், கிரேக்கர், ரோமர் முதலாயினோர்போல் ஏதாவது ஒரு தொழில் செய்து கொண்டு பிழைப்பார்களா? இரந்துண்டு கொண்டே இருப் பார்களா? நமது முத்து வணிகரைக் கேளும். முத்து-வ : ஆமாம், நான் வட நாட்டுக்கு முத்து விற்கச் சென்றிருந்தேன். நமது ஒற்றர் சொன்னார். வட நாட்டு அரசனுடைய ஏற்பாட்டின் படிதான் இவர்கள் இங்கு வந்தார்களாம். வட நாட்டைப்போல் நம் நாட்டிலும் சாதி வேற்றுமையை உண்டாக்கும் வேலையைத்தான் இவர்கள் செய்து வருகிறார்களாம்! மாறன் : அப்படியிருக்குமா? பழையன் : ஏன் இருக்காது? அரசரிடம் சொல்லி ஆரியக் கொள்கை புகாமல் தடுக்க வேண்டும். கூட்டம் : ஆமாம், தடுக்க வேண்டும்.  திரை. 3. இ. திரைவெளி ஆரியா, பட்டர், வசந்தா, வழிச்செலவு. ஆரியா : எவ்வளவு வளம் பொருந்திய நாடப்பா! தமிழர்கள் நம்மை எவ்வளவு அன்போடு உபசரிக்கிறார்கள்! தமிழ்ப் பெண்கள் அன்புருவமானவர்கள்! பட்டர் : அவ்வன்புதான் நம்ம காரியத்துக்கு வெற்றி தருவது.  திரை 4. அ. அந்தப்புரம் தமிழரசி கிளியோடு கொஞ்சிப் பாடல். தென்னவன் பின்புறம் நின்று கேட்டல். பாட்டு முடியும்போது சேர்ந்து பாடுதல். தமிழரசி பாடுவதை நிறுத்தித் திரும்பிப் பார்த்தல். தென் : ஏன்? பாடு! (தமிழரசிபாடல்) 2. பாட்டு தமிழ்வாழ்க எனப்பாடுவாய்-பைங்கிளியே செந்- தமிழ்வாழ்க எனப்பாடுவாய்! கமழ்சோலைக் கனிதாரேன், கனிதேனின் சுவைதாரேன், தமிழ்போல அவையின்பம் தருமோபைங் கிளியேசெந்-தமிழ் புலவோர்தம் உளமேயது-தமிழ்வாணர் புகழ்போல உருவாயது; நிலமீதில் இதுபோலோர் மொழியுண்டோ? கிளியே செந்-தமிழ் அருளன்புக் கிடமானது-அயல்நாடர் அறியாத பொருள் நூலது; முருகின்பத் தமிழ் போலோர் மொழியுண்டோ? கிளியே செந்-தமிழ்  தோழி : மதிவாணர் எதிர்பார்க்கின்றார். தென் : வரச்சொல். (மதிவாணர் வருதல், இருவரும் வணங்கல்) 'குணமென்னும் குன்றேறி நின்ற' பெரியீர்! வருக! வருக!! மதி : மன்னர் மன்னவ! வாழ்க நின் கொற்றம். கிளிக் கென்ன? தென் : ஒன்றுமில்லை. தமிழரசி கிளியுடன் கொஞ்சிப் பாடிக் கொண்டிருந்தாள். நான் இசைத்தேனுண்டு இன்புற்றிருந்தேன். மதி : தமிழரசி இசைக்காகவே பிறந்தவள்; கேட்கவா வேண்டும்? அரசியின் குரலே இசைமயமானது. தமி : தங்கள் மனம்போல எனது வாழ்வு. தென் : தாங்களாகவே இங்கு வந்ததன் காரணம்? மதி : காரணம் இல்லாமல் இல்லை. இங்கு துறவிகள் என வாழும் வடவாரியர்கள் வடவன் உளவர்களாம். நமது தமிழ்ப்பண்பாட்டைக் கெடுப்பதற்காகவே இங்கு இருந்து வருகிறார்களாம். தென் : யார் சொன்னது? மதி : மக்கள் தலைவன் பழையன். தென் : அவனுக்கு எப்படித் தெரியும்? மதி : வட நாட்டுக்கு முத்து விற்கச் சென்ற முத்து வணிகனிடம் நம் ஒற்றர் சொல்லியனுப்பினார்களாம். அவ் வணிகன் வந்து சொன்னதாகச் சொன்னான். தமி : இருந்தாலும் இருக்கலாம். தென் : வடவராவது, நமது பண்பாட்டைக் கெடுப்பதாவது! மதி : அப்படி எண்ணக்கூடாது. முன்பு அவர்கள் இந் நாட்டுக்கு வந்தபோது, வடநாட்டில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களை எதிர்த்தா வென்றார்கள்? தங்கள் சூழ்ச்சித்திறத் தாலல்லவோ அடிமைகளாய் அடக்கியாண்டு வருகிறார் கள்? வாளால் வெல்ல முடியாதாரையும் வஞ்சனையால் வெல்லலாம். அவர்கள் நீறுபூத்த நெருப்பு! தென் : கவனிக்கலாம்.  திரை. 4. இ. திரைவெளி முத்துவணிகன் விரைந்து செல்லல். ஒருவன் : எங்கப்பா விழுந்தடித்துக் கொண்டு போகிறாய்? மு.வ : அரண்மனைக்கு. ஒரு : அங்கெதற்குப் போகிறாய் இப்படி? மு.வ : நாட்டியம் பார்க்க. ஒரு : அதென்னது? மு.வ : ஒரு பெண் ஆடப்போகிறாள் அரண்மனையில். ஒரு : யாரவள், விறலியா? மு.வ : இல்லை. ஒரு வடவாரியப்பெண். நான் முத்து விற்கப் போயிருந்தபோது பார்த்தேன். எப்படி ஆடறா தெரியுமா? நம்ம விறலி ஆடுகிற மாதிரியல்ல. நீ வேணு மென்றா வந்து பாரு. ஒரு : சரி, வா போகலாம்.  திரை. 5. அ. ஆடரங்கு அரசன், அரசி, மதிவாணர், அமைச்சர் முதலியோர். ஆரியா பாடியாடல். 3. பாட்டு மாரன் அவதாரம் - எ-மெ. பாரோர் புகழ் தீரா-பஞ்ச பாணன் நேரில்வர நாணும் ஆணழகா! - பாரேநர் நீரார் உலகில் நேரார் மதனா! நிலவுமி ழுங்கலை மதிவதனா!-இப்பாரோர் கலைவாணர் புகழ்மேரு மலைநேர் புயா! - பண் கனிதமி ழின்சொல் நயா! நிலைக்கும் குணசீலா நெடுவேலா-உயிர் நில்லா தினி யுந்தன் நெஞ்ச முவந்தெனைக் கொஞ்சிட வந்தருள் - பாரோர் ஆரியா, அரசன் கன்னத்தைத் தொட்டு, தன் கையை முத்தமிடல். தமிழரசி வெறுப்புடன் எழுந்து போதல். எல்லோரும் வெறுப்புடன் பார்த்தல். அரசன் முத்து மாலையைப் பரிசாகக் கொடுத்தல். அரசன் மனமாறுதல்.  திரை. 5. ஆ. மதிவாணரும், சாத்தனாரும். மதி : சாத்தனாரே! இந்த நாட்டியத்திற்கு யார் ஏற்பாடு செய்தனர்? சாத்த : எனக்கொன்றும் தெரியாது. அரசன் கட்டளை. மதி : அரசி எழுந்து சென்றதையும்கூட அரசன் கவனிக்க வில்லை. என்ன அப்பெண்ணுக்கு மானவெட்கமென்பதே இல்லைபோலும்! சாத்த : ஆரியர்களுக்கு மானத்தைவிட வாழ்வுதானே பெரிது. மதி : என்ன இருந்தாலும் அரச பரம்பரைச் சொத்தான முத்து மாலையை அவளுக்குக் கொடுக்கலாமா? முத்து வணிகன் சொன்னது முழுதும் உண்மையாகிவிட்டது. என்னமோ பார்க்கலாம்.  திரை. 6. அ. அந்தப்புரம் தமிழரசி தனியாக இருத்தல். தென்னவன் வந்து, தென் : தேவி! (பேசவில்லை) ஏன் பேசவில்லை? (தோழியைப் பார்த்து) அல்லி! உங்கள் தலைவி ஏன் பேசமாட்டே னென்கிறாள்? (அரசியின் தலையைத் தடவிக் கொண்டே) நான் என்ன தவறு செய்தேன்? என்ன வேண்டும்? எங்கே? உன் செந்தமிழ் வாயைத் திற. தமி : இன்னும் என்ன வேண்டும்? போதாது இவ்வளவு! தென் : என்ன அது? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே? தமி : ஏன் புரிகிறது! நானும் பக்கத்தில் உட்கார்ந் திருக்க, அவள் கன்னத்தைத் தொடவும், கையைப் பிடிக்கவும் எப்படிச் சும்மா இருந்தீர்கள்? மனைவியிருக்க மற்றொருத்தி யோடு கொஞ்சுவதுதான் தமிழ் மரபா? அவள் ஆடின ஆட்டத்தில் நான் அருகில் இருந்ததைக்கூட மறந்து விட்டீர்களே! தென் : கலையுணர்ச்சியால் நான் மயங்கி இருந்தேன். தமி : நம்ம விறலியர் ஆடும் ஆட்டத்தை விடவா அவள் ஆட்டத்தில் கலையுணர்ச்சி! தென் : நல்லாத்தானே ஆடினாள்? தமி : ஆடினாள் களியாட்டம்! பாட்டுங்கூட நல்லாப் பாடினாளே! 'மதனா மதி வதனா' என்று. மான வெட்கமென்பதே அவளுக்கு இல்லை போலும்? தென் : தப்பாக நினைக்காதே. தமி : நான் நினைக்கவில்லை? நீங்கள்தான் நினைத்து விட்டீர்கள். அவள் ஆடிய ஆட்டத்தில் நான் எழுந்து வந்தது கூடத் தெரியவில்லை பாவம்! தென் : நீ ஏன் எழுந்து வந்தாய்? தமி : எனக்கு மானவெட்கமில்லை? நான் ஒரு தமிழ்ப் பெண் என்பதைக்கூட மறந்துவிட்டீர்களாக்கும்! தென் : மறக்கவில்லை. கலைக்கு மனத்தைப் பறி கொடுத்து விட்டேன். அதனால், நீ எழுந்து வந்தது தெரிய வில்லை. தமி : நல்ல கலை; கையையுங் காலையும் ஆட்டுங் கலை! கழுத்து மாலை எங்கே? தென் : அவள் ஆட்டத்துக்குப் பரிசாகக் கொடுத்து விட்டேன். தமி : என்ன இருக்க என்ன செய்தீர்கள்! வழிவழி வந்த அரச மாலையை அயலாளொருத்திக்குக் கொடுக்கலாமா? என்னை யன்றி வேறொருத்தி அம்மாலையைத் தொடுவதே தப்பல்லவா? ஏன் தங்களுக்கு இந்தமதி? தென் : மதிமுக மங்கையே! தெரியாமல் கொடுத்து விட்டேன், வருந்தாதே. தமி : எனக்கும் அவளுக்கும்கூட வேறுபாடு தெரிய வில்லை போலும்! தென் : இல்லை கண்ணே! (தோளோடு சார்த்துத் தலையை நீவுதல்) திரை.6.ஆ. இரு ஆரியப் பெண்கள் தண்ணீர்க்குப் போதல். கமலா : ஏண்டி ராஜம்! நோக்குத் தெரீம்மோ? ராஜம் : என்னது? கமலா : நம்ம ஆரியா இல்லே! பலே கெட்டிக்காரீடி. எப்படியோ இந்த ராஜாவை மயக்கி அவா ஆத்திலேயே வச்சுனுட்டா. ராஜம் : அப்படியா! நேக்குத் தெரியாதே. ஆரடி கமலா சொன்னா? கமலா : எங்க ஆத்துக்காரர் சொன்னா. அவ போட்ட கோட்டை அவெந் தாண்டறதே இல்லையாம்டி. ராஜம் : ஓகோ! உங்க ஆத்துக்காரரு அரமனீல்லே வேலையா இருக்கா. அதனாலே தெரிஞ்சிண்டு வந்திருக்கா. இனி என்னமோ நம்மவாளுக்கு யோகந்தாண்டீ.  திரை. 7. அ. அல்லி வீடு வேலனும், அல்லியும், அல்லி திரும்பி உட்கார்ந்திருக்க. வேலன் : பேசமாட்டாயா! என் கண்ணல்ல! உன்னத்தா. அல்லி : போதும், போதும். நான் கண்ணல்ல, மூக்கு. வே : ஏன் உனக்கு மூக்குக்கு மேலே வருது? நான் என்னாத்தா தப்புச் செஞ்சிட்டே? அ : இன்னும் என்ன செய்யணும், செய் செய்யின்னு! கழுத்துச் சங்கிலி யெங்கே? வே : இப்பக்கூட ஆசாரியூட்டுக்குப் போயிட்டுத்தாவாரேன். இன்னும் பத்தவெய்க்கிலே. அ : அவ கழுத்திலே இருக்கையிலே பத்தெப்படி வெப்பான்? எட்டெவெய்க்காதே. வே : யாரடி சொன்னா? அ : ஏது அடிகிடி! சேர்க்கைவாசனையா? வே : இல்லை, யார் சொன்னதின்னெ? அ : சொல்லோணுமாக்கும் சொல்லு சொல்லுன்னு! கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேறா? வே : வீண் பழி போடாதே. பொய், பொய். அ : பொய் பொய்தா. நம்ம அரசரு இப்படித் தாம் பொய் பொய்யின்னிட்டு இப்போ அந்த வடக்கித்தியா ஊட்டுலேயே படுத்துக்கிட்டாரு. இங்கே எட்டிக்கூடப் பாக்கற தில்லே. நீயும் வடக்கே தலைவெச்சுப் படுக்க ஆரம்பிச் சிட்டயா? நீ யொரு தமிழெ! வே : அல்லீம்மா! மன்னிச்சுக்கோ. இனி வடக்கெ தலை வெய்க்கிலே. தெரியாமெ வெச்சிட்டே. அ : வாயிலே பழத்தெ வெச்சாத் திங்கத் தெரியாது. ஆம்பளய சங்கதியே இப்படித்தா. இனி நம்ம நாட்டுக்குப் புடுச்சுது சனியெ. வே : கொஞ்சம் பேசாதிரு கண்ணாட்டி! வாய்ங் காந்திரறே.  திரை. 7. ஆ. அந்தப்புரம் தமிழரசியும், செழியனும். 4. பாட்டு விண்ணுயர் முடியும் அடியும் உடைய வேங்கட முதலா ஓங்குபன் மலையும், தண்ணென வொளிறும் காவிரி முதலாத் தகுவளஞ் செய்யும் பலவுயி ராறும், கண்ணென வுளமும் உணர்வும் கவரும் காடும் மலையும் கடலும் வயலும் உண்ணென உணவும் பிறவும் உதவும் உலகோர் புகழும் உயர்தமிழ் நாடே. அந்தணர் வகுத்த அறமுதல் மூன்றும் ஆணொடு பெண்ணும் அடைதர நுகரச், செந்தமிழ் வாணர் தாய்மொழி வளர்க்கத், திசைதொறும் வணிகர் பெரும்பொரு ளீட்ட, வெந்திறல் மறவர் மெய்வலி காக்க, விருந்தினர் தெவிட்ட, வினைபல நிகழ, முந்திய முறையைத் தாயெனப் போற்ற முறையொடு பொலியும் முத்தமிழ் நாடே. தமி : செழியா! நான் உனக்காகத்தான் உயிர் வாழ்கிறேன் உன் தந்தையோ இங்கு வருவதைக்கூட மறந்து விட்டார். எந்நேரமும் ஆரியா வீட்டிலேயே இருக்கிறார். அவள்தான் இப்போ தமிழ்நாட்டரசி! செழி : அம்மா! வருந்தாதே. நான் பெரியவனானதும் அவளை நாட்டைவிட்டு ஓட்டிவிடுகிறேன். தமி : என் கண்ணே! (முத்தமிடல்) இனி உங்கப்பா கூப்பிட்டாலும் அவள் வீட்டுக்குப் போகாதே. ஐயா சொல்வதைக் கவனமாகக் கேள். அவர் சொல்லுகிறபடி நடந்து கொள். அவர் தான் நமக்குத் துணை. செழி : சரியம்மா. இனி நான் அங்கு போகவில்லை. ஐயா சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் படித்து வருகிறேன். தமி : என் அறிவுள்ள தங்கம். (முத்தம்)  திரை. 7. இ. திரைவெளி பாணன் பாடல் 5. பாட்டு மனமே மயங்காதே - மதி - தியங்காதே மனமே மயங்காதே. முனமே அறவோர் முதுநூல் தெரியார் மொழிதே றுதல்முறையோ-தமிழ்-முதுநெறியோ இல்லற மென்பதோர் இனிமையின் எல்லை, இதைவிட மக்களுக் கின்பமும் இல்லை. நல்லறம் பிறவென நவிலுவோர் சொல்லை, நம்பிநீ தனிமையை நாடுதல் தொல்லை. (மன) அன்னையுந் தந்தையும் அன்பினுக் கிடமே, அதையொழித் திடுகவென் றறைகுதல் அடமே. பின்னையும் பிறப்பினை வெறுப்பது மடமே, பிறப்பிறப் பியல்பெனக் கொள்மனத் திடமே. (மன) வேலன் : மனமாவது மண்ணாங்கட்டியாவது! இவ சங்கிலி கேக்கர அவ சங்கிலியெத் தர மாட்டேங்கரா. கடையிலே வாங்கித் தந்திடலாமின்னா கையிலே காசில்லே. மனமயங்காடு என்ன பண்ணறது? தெருவிலே பாடிக்கிட்டுப் போரவனுக் கென்ன? குடும்பத்திலே ஈடுபட்டுப் பாத்தால் தெரியும், மனமயங்கிறதும் மயங்காததும்.  திரை. 8. அ. ஆரியா வீடு ஆரியா பாடிக்கொண்டே அரசனுக்குச் சோமபானங் கொடுத்தல். வசந்தா வேலனுக்குக் கொடுத்தல். 6. பாட்டு ஆரியா : சோம பானமே தோன்றுமெஞ் ஞானமே சுவைபொருந்துங் கானமே! - அன்பானமே சுவைபொருந்துங் கானமே. காம பாணமே கலங்குதென் நாணமே கலைமதியின் கோணமே!-கல்யாணமே கலைமதியின் கோணமே. தென் : மதிமுக மாதே மனங்கலங்காதே மதன்ரதி யென வோதே-மண் மீதே மதன்ரதி யென வோதே. இருவரும் : புதுமது வெள்ளம் பொருந்திய பள்ளம் புரிந்திடுதே கள்ளம்-அன்புள்ளம் புரிந்திடுதே கள்ளம். சோம பாட்டு முடிந்ததும், ஆரியா : பிரபோ! நான் கேட்பதை மறுக்க மாட்டேளே? தென் : நானா! மறுக்கவா! நீ கேட்பதையா! என் கண்ணே! உயிரைக் கேட்டாலும் தருகிறேன். என்ன கேள். ஆரியா : என் உயிரே! வேறொன்றுமில்லை. எங்கப்பா வுக்கு நம்ம ராஜியத்தில் ஒரு வேலை. தென் : வேலை என்ன? அவரேதான் இனி இந்நாட்டுக்கு அரசர். ஆரியா : நான் இங்கிருக்கிறவரையிலும் அப்படி இருக்கலாம். நான் போன பிறகு? தென் : நீயாவது போரதாவது? போரதுக்கா இங்கு வந்தாய்? இனி நீதான் இந்நாட்டு அரசி. உன்னைப் பிரிந்து நான் ஒரு நொடியும் தனித்திருக்கமாட்டேன். ஆரியா : என் பாக்யம். எங்கப்பாவுக்கு? தென் : நீ கேட்பதற்கு முன்னமே நம் அரண்மனைப் புரோகிதராக ஏற்படுத்திவிட்டேன். அவர் சொற்படிதான் அமைச்சர் முதல் யாவரும் நடக்க வேண்டும். போதுமா? ஆரியா : தங்கள் சித்தம். (கையைக் கண்ணில் ஒத்தல்) வசந்தா எங்கே? (பின்னும் குடித்தல்).  திரை. 8. ஆ. கிருஷ்ணய்யரும் சேஷய்யரும். கிரு : என்ன சேஷய்யர்வாள்! நம்ம பட்டருக்கு அடித் துட்டுதே அதிர்ஷ்டம்! சேஷ : என்ன கிருஷ்ணய்யர்வாள்! புரோகிதர் வேலை தானே? கிரு : என்னங்காணும் அவ்வளவுலேசா நெனச்சிட்டேள் அந்த வேலையே? நம்ம நாட்டு ராஜாங்கப் புரோகிதனைவிட மேலே காணும் இது. சேஷ : என்னங்காணும் அப்படி? விவரமாச் சொல்லும். கிரு : இப்போ இந்த ராஜாங்க சபையிலே மந்திரி, சேனாதிபதி, தூதுவர், ஒற்றர் என நாலு உத்யோகஸ்தா இருக்கிறாளோ இல்லியோ? இந்தச் சபைக்கு "நாற்பெருங் குழு"ன்னு பேரு. இனிப் புரோகிதரையுஞ் சேர்த்து அது "ஐம்பெருங்குழு" எனப் பெயர் பெறுமாம். புரோகிதர் குறித்த நாளில், அவர் சொன்னபடிதான் மற்ற நால்வரும் நடக்க வேண்டுமாம். சேஷ : இனி எங்காகிலும் சண்டைக்குப் போற தின்னாக் கூட நம்ம பட்டர் சொன்னாத்தாம் போகணும்? கிரு : ஆமாங்காணும் ஆமாம். சேஷ : அப்ப, நம்ம பட்டருதா இந்தத் தேசத்துக்கு ராஜா! கிரு : ஆமா ஆமாம். எல்லா நம்ம ஆரியா தயவால் நடக்கிறது. சேஷ : அவ நன்னா இருக்கணும். நீரும் ஆசீர்வதியு மோய்!  திரை. 8. இ. திரைவெளி பலர் கேட்டுக் கொண்டுபோதல்... பறையறைதல் இன்றையிலிருந்து நம் தமிழ் நாட்டில் நடைபெறும் பெருநாளும், திருநாளும், மற்ற அரசியல் காரியங்களும் அரண்மனைப் புரோகிதர் குறித்த நாட்களில், அவர் குறிப்பிடும் முறைப்படிதான் நடைபெற வேண்டும். அப்படிச் செய்யத் தவறினாலோ, செய்ய மறுத்தாலோ, இக்கட்டளையை மீறினாலோ கடுந்தண்டனைக்குள்ளாக நேரிடும். இது அரசர் கட்டளை.  திரை. 9. அ. ஊர்க்கூட்டம் பழையன் : பெரியோர்களே! பறையறைந்ததைக் கேட்டீர்களா? அரசர் ஆரியா வலையில் சிக்கி அவள் சொன்ன படியாடுகிறார். "ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலேகண்" என்பதை ஆரியா உண்மையாக்கி விட்டாள். புரோகிதம் என்னும் புதிய வேலை எந்த அளவில் வந்து நிற்கிறது பார்த்தீர்களா? ஒருவன் : இதென்னடா இது புதுசா இருக்கிறது! பழையன் : ஆமாம், புதுசுதான். நமது அரசவையில் புதிதாக முளைத்திருக்கிறது இப்புரோகித முள்ளுச்செடி. இதை முளையிலே கிள்ளியெறியவேண்டும். பெரிதாகும்படி விட்டோ மானால் நமது கையில்தைக்கும். கூட்டம் : ஆமாம், ஆமாம். பழையன் : இப்புதுப் புரோகிதன் சொல்லும் நாளுக்கும், கோளுக்கும், மக்கள் வாழ்க்கைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இதெல்லாம் பித்தலாட்டம். இது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையேயாகும். பகைவர் படை நாட்டுக்குள் புகுந்த போது நல்லநாள் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாகும்? முத்துவணிகர் சொன்னார், வடநாட்டில் புரோகித ஆட்சிதான் நடக்கிறதாம். அரசனை ஆட்டி வைப்பவன் புரோகிதன்தானாம். குடிமக்களுக்கும் அரசனுக்கும் யாதொரு தொடர்பு மில்லையாம். இப்புரோகித வேலையை விட்டு வைத்தால், இங்கும் அந்த நிலை ஏற்பட்டுவிடும் என்பது உறுதி. மாறன் : அவர் நல்லவர். கூட்டம் : இல்லை; இல்லை. அவன் வேண்டாம். பழையன் : நாம் அரசனிடம் சொல்லி, அந்த வேலை யிலிருந்து பட்டரை நீக்கும்படி செய்வோம். ஒரு : அந்த வேலையே கூடாது. மற்றொருவன் : பட்டரையும் ஆரியாவையும் தமிழ் நாட்டைவிட்டே ஓட்டவேண்டும். ஒரு : இங்குள்ள எல்லா வடவரையுமே ஓட்ட வேண்டும். கூட்டம் : ஆமாம், ஆமாம். பழை : பொறுங்கள், பொறுங்கள். ஐயாவைக் கலந்து ஆவன செய்வோம்.  திரை. 9. ஆ. கிருஷ்ணய்யரும், சேஷய்யரும். கிரு : என்ன சேஷய்யர் வாள்! தமிழர்கள் வேலையைப் பார்த்தேளா? பட்டர், ஆரியா முதல் கொண்டு நாம் ஒருவருமே இங்கு இருக்கக்கூடாதாம். சேஷ : அவா அவ்வளவுக்கு வந்துட்டாளா? கிரு : ஆமாம். அந்தப் பழையன் இல்லை? அவன் பண்ணறது தான் அத்தனையும். சேஷ : போங்காணும்; அந்தப் பயலால் என்னாகும்? மாறன் நம்ம பக்கம் இருக்கிறான். நாம் சொன்னா சொன்னபடி ஆடறான். அவன் பெரிய பிரபு. ஜனங்க அவஞ் சொல்றதைக் கேப்பாளா? இந்தப் பயலுக சொல்றதைக் கேப்பாளா? கிரு : அப்படி நினைக்கக்கூடாது. அவனுக்குப் பணமிருக்கிறது. இருந்தென்ன செய்கிறது? இவனுக்குச் செல்வாக்கு அதிகம். இவஞ் ஜனங்களுக்காகப் பாடுபட்டு வர்ரான். இவனை இப்படியே விட்டுண்டு வந்தா நம்ம பொழப்புக்கு ஆபத்து வந்துடும். சேஷ : அதுவும் நிஜந்தான். சிறுதுரும்பும் தலைத் தண்ணி யெத்தடுக்கும். ஆனால், நம்ம பட்டர் லேசுப்பட்டவர் அல்ல. இவன்களை ஒடுக்கத் திட்டம் போட்டு வர்ரா நாமும் நம்மாலான ஒத்தாசையைச் செய்யணும்.  திரை. 10. ஆ. மதிவாணரும், பழையனும், மதிவாணர் தனியாக மதி : என்ன வரவர அரசன் நிலைமை இவ்வளவு மோசமாகப் போய்விட்டதே. தமிழரசியைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. அரசியிடத்திற்கு வருவதையே நிறுத்தி விட்டான். தேவியின் நிலை இரங்கத்தக்க நிலையாகவன்றோ இருக்கிறது? அந்த ஆரியாவின் மாயவலையில் இப்படி மாட்டிக் கொள்வா னென்று நான் ஒருபோதும் நினைக்க வில்லை. இது இப்படி யென்றால், தமிழ் நாட்டில், தமிழர் பண்பறியாத அந்த ஆரியப் பட்டர் வைத்ததே சட்டமாகப் போய்விட்டது. குடிமக்கள் பேச்சை அரசன் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. குடிகளுக்காக அரசர்? அரசுக்காகக் குடிகளா? இதோடா? வட நாட்டினர் தமிழ் நாட்டுக்கு வந்தவண்ண மிருக்கின்றனர். பொருளற்ற புலைவேள்வி, புறநாட்டிலிருந்து அகநாட்டுக்குள் உலவத் தொடங்கி விட்டது. தமிழர்களைவிட ஆரியர் களுக்குத் தனிப்பட்ட சலுகைகள் வேறு! (பழையன் வந்து) பழை : ஐயா, வணக்கம். மதி : பழையா! வாரும், உட்கார். செழி : பெரியீர்! பட்டர் வேலையைப் பார்த்தீர்களா? மதி : பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்ன அது? செழி : தமிழ் நாட்டில் ஆயிரமாயிரம் வடநாட்டு ஆரியர் குடியேறி வருகின்றனர். வரியில்லாமல் இனாமாக அவர்களுக்கு நிலங்கொடுக்கப்படுகிறது. இதுவும் அரசன் கட்டளையாம். இதை விட்டுக் கொண்டே இருந்தால் முடிவு என்னாகும்? மதி : முடிவு என்னாகும்! தமிழ்நாடு ஆரிய மயமாகும். இதை நான் எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன். 'வாழ வழியற்று வருபவர்களைத் தடுப்பது முறையல்ல; தடுப்பது 'விருந்தோம்பல்' என்னும் தமிழ்ப்பெருங் குணத்திற்கு முரண் பட்டது. சும்மா கிடக்கும் நிலங்களைத் தானே தருகிறோம்' என அரசன் மழுப்பி விட்டான். பட்டர் ஆட்டிவைக்கும் பம்பரந் தானே அரசன்? பழை : இதோடு நின்றதா? ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஆரியன் புரோகிதனாக இருப்பானாம். 'நல்லது, பொல்லாதது' அவன் குறித்த நாளில், அவனைக் கொண்டுதான் செய்ய வேண்டுமாம். அவன் பிழைப்புக்கு வேண்டியதை அவ்வூரினர் கொடுக்க வேண்டுமாம். இது என்ன கொடுமை! வந்தேறிகளுக்கு நம் நிலத்தைச் சும்மா கொடுத்ததோடு, சும்மா வைத்துக் கொண்டு சோறும்போடுவதா? மதி : நான் இதையும் தடுத்தேன். நாட்டு மக்களிடம் நல்ல காரியங்கள் ஒழுங்காக நடக்க இந்த ஏற்பாடாம். பழையா! அரசன் வரவர என் சொல்லையும் கூடக் கேட்பதில்லை. மறுத்துப் பேசுவதில்லையேயல்லாமல் என் சொற்படி நடப்பதில்லை. பல அரசியல் காரியங்கள் இப்போது எனக்குத் தெரியாமலே நடந்து வருகின்றன. எல்லாம் அந்த ஆரியாவால் வந்த கேடு. ஆரியா என்னும் கயிற்றைக் கொண்டு அரசனாகிய பாவையை ஆட்டிவைக் கிறார் பட்டர். தமிழரசியின் நிலையைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. இதையெல்லாம் பற்றித்தான் எண்ணிக் கொண்டி ருந்தேன். நம் இளவரசனுக்கும் ஆண்டு 15 ஆகிவிட்டது. அவனைக் கொண்டு தான் ஆரிய இருளை அகற்றவேண்டும். பழை : இந்த அரச கட்டளையை? மதி : மறுக்க வேண்டியதுதான். ஆனால், இப்போது மறுப்பதால் பயனில்லை. தமிழர்களுக்குள் சச்சரவுதான் உண்டாகும். அது கூடாது என்பதுதான் எனது ஆசை. மாறன் என்ன சொல்கிறான்? பழை : அவன் என்ன சொல்வான்? அவன்தான் பட்டர் கையாளாகி விட்டானே! மதி : அதனால்தான் சொல்கிறேன்; ஊர் இரண்டு பட்டால் அவர்கள் வேலை தட்டுத் தடையில்லாமல் நடக்கும். நமக்குள்ளே மாறுபட்ட கருத்து வளரவிடக் கூடாது. அதை மட்டுப்படுத்துவதில் நம் முழுக்கவனத்தையும் செலுத்தி வரவேண்டும். பிரித்தாள்வதில் ஆரியர்கள் மிகவும் கெட்டிக் காரர்கள். நம்மவர்களைக் கொண்டே நம்மை அடக்கியாள் வதுதான் ஆரியர் குலத்தொழில். வடநாட்டுப் பழங்குடிகளை இப்படித்தான் வென்று அடிமை கொண்டார்கள். இப்போது நாம் குளக்கரைக் கொக்குப் போல் இருக்க வேண்டும். ஞாலங் கருதுபவர் காலங்கருதியிருப்பர். காலங் கருதிச்செய்தால் ஞாலங் கருதினுங் கைகூடும். காலமறிந்து செய்தால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை, என்பன அறிவறிந்தமைந்த ஆன்றோர் மொழிகள். பழை : சரி ஐயா. தமிழர் வாழ்வு தங்கள் கையில்தான் இருக்கிறது. தென் : உங்கள் ஒத்துழைப்பிருந்தால்?......  திரை. 10. அ. வேள்விச்சாலை அரசனும் ஆரியாவும் மணமக்கள்போல் அலங்கரிக்கப்பட்டு வீற்றிருத்தல். புரோகிதர் மந்திரம் ஓதல். ஆடுவெட்டல், நெய் ஊற்றல். சடங்குகள். புலவு ஆன பிறகு புலவுண்டல். மதுவருந்தல். ஆரியர் நிறைய இருத்தல். ஆரியப் பெண்கள் "சோமபானமே" என்று பாடிக் கொண்டு மதுக்கொடுத்தல். சிலர் வெறுப்புடன் எழுந்து போதல். புரோகிதர்களுக்கு நிறையப் பொருள் கொடுத்தல்.  திரை. 10. இ. திரைவெளி இருவர் பேசிக் கொள்ளுதல் மற் : என்ன தவளை கத்துகிறமாதிரி கத்துகிறான்கள்? நமக்கொன்றும் விளங்கவில்லையே? தமிழில் சொன்னா லென்ன? ஒரு : அதுதான் போகட்டும், ஆடுவெட்டுவதும், குடிப் பதும், இதுதான் வேள்வியா? நல்ல வேள்வி! கொலை வேள்வி! குடி வேள்வி! ஒரு : இதனால்தான் நல்ல மழை பேஞ்சு, நாடு செழிக்குமாம். மற் : செழிக்கும், செழிக்கும்! ஒரு : அந்த வடக்கித்தியானுக் கெல்லாம் எவ்வளவு பணம்! இதென்னமோ? நம்ம பொருளை நாசமாக்கி, நாட்டைக் கெடுக்கச் செய்யற சூழ்ச்சி! மற் : அந்த வடக்கித்திப் பெண்களுக்கு மான வெட்க மிருக்குது? ஒரு : இருக்குது, இருக்குது! மற்ற : நம்ம அரசியை விட்டுட்டு அந்த வடக்கித்தி யாளை அரசன் பக்கத்திலே உட்கார வெச்சுக்கிட்டாரு பாத்தியா! ஒரு : நம்ம அரசி இதிலே வந்து உட்காருவாங்களா என்ன? என்னமோ அப்பா! இந்த ஆரியரால் நம்ம பழக்க வழக்கமெல்லாங் கெட்டுக்கிட்டே வருது. நம்ம பழையஞ் சொல்றது நெசமாத்தான் இருக்கிறது. (போக) கிருஷ்ணய்யரும், சேஷய்யரும் கிரு : என்ன சேஷய்யர்வாள்! நாட்டுப்புறங்களிலே, நாம் கண்டுங்காணாதும் செய்து வந்த யாகத்தை அரசனே செய்யும்படி செய்துவிட்டோம். ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் இதற்கு எவ்வளவு எதிர்ப்பு! தந்திரத்தால் எது தான் ஆகாது? எப்படியாவது ஜாதிபேதத்தைப் புகுத்திவிட வேண்டும். சேஷ : அப்புறம் தமிழரும் நம்ம வேலையைச் செய்ய ஆரம்பிச்சிட்டாலோ! கிரு : வேதசாஸ்திரத்தை நாம் சொன்னாத்தானே? நம்மவாதான் ஓதுவிக்க வேண்டும். தமிழர்கள் ஓதுவது பாவம் என்று கதை கட்டினாப் போகிறது. சேஷ : ஆமாம்; எதைச் சொன்னாத்தான் தமிழர்கள் கேக்க மாட்டேனென்கிறா. பார்க்கலாம்.  திரை 11. அ. அந்தப்புரம் தமிழரசி கிளியை வைத்துக் கொண்டு பாடுதல். செழியன் இடையே வந்து நின்று கேட்டல். 7. பாட்டு கிளிக்கண்ணி வாழ்ந்தநல் வாழ்வு மென்ன? வழிவழி வந்த தென்ன? தாழ்ந்தவித் தாழ்வு மென்ன - கிளியே! தமிழ்பயின் றானதென்ன? ஆரியா இங்கு வர அரசர் முதன்மை தர ஓரியாய் வாழலானேன்-கிளியே! உரிமை யிழக்க லானேன். ஆடை யணியி ழந்தேன் அரசி நிலைது றந்தேன் பாடும் பரிசிழந்தேன் - கிளியே! பணிப்பெண் நிலைய டைந்தேன். ஓயாக் கவலை யினால் உடல் நலங் குன்றியதால் தோயாத் தயிர்போலானேன் - கிளியே! துயர்போம் வழியுங்காணேன். செழி : அம்மா! வருந்தாதே. நானிருக்க உனக்கேன் கவலை? அந்தச் சிறுக்கியை மயிரை அறுத்து வடக்கே துரத்து கிறேன். நான் ஒரு வீரத்தமிழ்த் தாய்க்குப் பிறந்த வீரத் தமிழ்மகன் என்பதை நீ மறந்துவிடாதே. தமி : (அணைத்துக்கொண்டு) இல்லை கண்ணே! நான் எனது நிலைக்காகக் கூட வருந்தவில்லை. நம் நாட்டுமக்கள் சொல்லையே அரசர் புறக்கணித்து வருவதும், அவர்களை வெறுப்பதுந்தான் என் மனத்தை வருத்துகிறது. செழி : அம்மா! நம் உழவர்தலைவன் பழையன் இருக்கும் போது அவர்களை ஒன்றுஞ் செய்ய முடியாது. அவர்களைப் பற்றிய கவலையை விடு. அப்பழையனுந்தான் இல்லை, நம்ம ஐயா ஒருவர் போதாதா? அல்லி : அம்மா! ஐயா வருகிறார். (மதி வாணர் வருதல்) செழி : ஐயா! வணக்கம். அம்மாவைப் பாருங்கள். எப்போதும் அழுது கொண்டே இருக்கிறாள். மதி : தமிழரசி! ஏம்மா! செழியன் இருக்கும்போது உனக்கென்னம்மா குறை? மனக்கவலை நலக்குறைவம்மா! தமி : என்னைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நமது நாட்டு மக்களைப்பற்றித்தான்; அவர்களின் நிலையை நினைந்து தான் அழுதேன். மதி : நடக்கிறது நடக்கட்டும். ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை. நாட்டு மக்கள் செழியனிடத்தில் அளவற்ற அன்புடையவர்களாய் இருக்கிறார்கள். இன்னும் நாலைந் தாண்டில் செழியன் பெரியவனாகி விடுவான். அப்போது அவள் கொட்டம் அடங்கும். நாடு பழைய நிலையை அடையும். உன் துன்பமும் தொலையும். மனத்தைத் திடப்படுத்திக் கொள்ளம்மா! பெண் மக்கள் பொறுமையைப் பூணாகப் பூண்டவர்கள். அதிலும் நீ முற்றக் கற்றுணர்ந்தவள். வளர்கிற சிறுவனுக்குமுன் உன் வருத்தத்தைக் காட்டிக் கொள்ளலாமா? கொஞ்சம் பொறுத்திரு. தமி : எல்லாம் தங்கள் பெருந்தொண்டு. மதி : பார்ப்போம்; வருகிறேன்.  திரை. 11. ஆ. தென்னவன், பட்டர், கிருஷ்ணய்யர். பட்டர் : அரசே! இதைப்பற்றித்தாங்கள் யோசிக்க வேண்டிய தில்லை. ஒவ்வொரு தொழில் செய்வோரும் அத்தொழிலையே செய்து வந்தால்தான் தொழில் வளர்ச்சி யடையும். அப்பன் தொழிலை மக்கள் லகுவில் செய்து பழகிக் கொள்வர். "குலவித்தை கல்லாமல் பாதிவரும்." மேலும் ஒரே தொழில் செய்வோர்க் குள்ளேயே கொண்டு கொடுத்தால் பெண்களும் தொழிலுக்குத் துணையாக இருப்பர். கிரு : ஆமாம் அரசே! வேறு தொழிலாளி பொண்ணெக் கல்யாணம் பண்ணினா அவளுக்குப் புருஷன் தொழில் தெரியா தல்லவா? பட்டர் : ஆமாம். தென் : இப்போதே நாம் பிறப்பிக்கும் கட்டளை களை நாட்டு மக்கள் எதிர்த்து வருகின்றனர். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவா போகின்றனர்? பட்டர் : நாட்டு மக்கள் எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் அரச காரியம் ஒருபோதும் நடைபெறாது. எருத்தைக் கேட்டா பொதி வைப்பது, நாம் நாட்டுக்கு நல்லது தானே செய்கிறோம்? நாட்டு மக்களுக்கு என்ன தெரியும்? நாட்டு நலத்தைக் கவனிப்பது அரசர் வேலையா? குடிகள் வேலையா? தென் : நமது வேலைதான். பட்டர் : ணஎதற்கும் முதலில் எதிர்ப்பு இருந்துதான் இருக்கும். முழுவதும் நன்மையென்று தெரிந்தாலுங்கூடச் சிலர் எதிர்க்கத் தான் செய்வார்கள். இது மக்கள் இயல்பு. அதை அடக்கினால், பின்னர் அவர்களே அது நன்மையென்று தெரிந்து வழிக்கு வந்து விடுவார்கள். இதுதான் நாட்டு நடப்பு. இது அரசியல் தந்திரமும் ஆகும். கிரு : ஆமாம், அரசே. பட்டர் : எங்கள் நாட்டைப் பாருங்களேன். ஆட்சி முறையிலும், அறிவிலும் சிறந்தவனான 'மனு' என்னும் அரசன் இச்சாதி முறையை ஏற்படுத்தினான். அன்று முதல் இன்றும் வடநாட்டில் அம்முறைதான் நடந்து வருகிறது. எங்கள் நாட்டின் சிறப்புக்கே அதுதான் காரணம். இச்சாதி முறையை நிலைநாட்டி விட்டால் மக்கள் பல பிரிவாகப் பிரிந்து வாழ்வார்களாதலால், நாம் எதைச் சொன்னாலும் எதிர்க்காமல் நடந்து கொள்வார்கள். இக்குலத் தொழில் மூலம் தொழிலும் விருத்தியாகும். தென் : ஆமாம், உண்மைதான். எதற்கெடுத்தாலும் நாட்டு மக்களைக் கேட்டுச் செய்யும் தொல்லையும் அப்போது தொலையும். கிரு : எங்கள் நாட்டில் பாருங்களேன். அரசர் சொல்வதை யார் தட்டுகிறார்கள்? அவரவர் பாட்டில் அவரவர் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தென் : சரி.  திரை 11. இ. திரைவெளி. பறையறைதல் இனிமேல் அந்தந்தத் தொழில் செய்வோர் அந்தந்தத் தொழிலையே தான் செய்யவேண்டும். அந்தந்தத் தொழிலாளர்களுக்குள்ளேயே தான் மணந்து கொள்ள வேண்டும். இத் தொழில் வளர்ச்சித் திட்டத்தை மீறுவோர் தண்டனைக் குள்ளாவர். இது அரசர் ஆணை. வேலன் : அடேயப்பா! நம்மெப் புடுச்ச சனியனே தொலஞ்சுது. அந்த வடக்கித்தியானுக நம்ம வேலைக்கு ஒலெ வெச்சிடப் பார்த்தானுக. நம்ம அரசர் நல்ல அரசர். இனி எந்தப் பயங்கொ நமக்குப் போட்டியாக வரப்போறானுக. இனி நாம வெச்சதுதான் சட்டம்! நம்ம வேலையே நம்ம புள்ளைகளுக்குங் கிடைக்கும். எவ்வளவு நல்ல ஏற்பாடு! இதையுங்கூட அந்த வாழாவெட்டிப் பசங்கொ எதிர்த்தாலும் எதிர்ப்பானுக. அவுங்களுக்குப் பகுத்தறிவு இருந்தாத்தானே? இவ்வளவெல்லாம் நமக்கு நல்லது செய்யற பட்டரையே வேண்டாமென்கிறவனுக வேறு என்னதாஞ் சொல்ல மாட்டானுக. மடயனுக.  திரை 12. அ. ஊர்க்கூட்டம் தமிழ் வாழ்க! தமிழ்ப் பண்பாடு வாழ்க! அடக்கு முறை ஒழிக! பழையன் முன் சொல்ல யாவரும் வாழ்க எனல். பழை : பழந்தமிழ் மக்களே! பார்த்தீர்களா அரசன் போக்கை? பட்டர் ஆட்டிவைக்கும் கைப்பாவையாகி விட்டார். நமது வாழ்க்கைக்குப் புறம்பான நாளும் கோளும் பார்க்கச் சொன்னார். தமிழ் மரபுக்கே ஒவ்வாத வேள்வியைச் செய்து பொருளைப் பாழாக்கி வருகிறார். வட நாட்டாரி யர்களை ஆயிரமாயிரமாகக் குடியேற்றி, அவர் களுக்குத் தமிழ் நிலத்தை வரியில்லாமல் இனாமாகக் கொடுத்து வருகிறார். ஊருக்கொரு ஆரியன் சும்மா இருந்து கொண்டு உண்டு கொழுக்கச் செய்துள்ளார். இவ்வளவும் போதாதென்று இப்போது நமது ஒற்றுமையைக் குலைக்கும் அந்தப் பட்டர் திட்டத்திற்கும் உடன்பட்டு விட்டார். அந்தந்தத் தொழிலையே செய்ய வேண்டுமாம். இதுதான் ஆரியச் சாதி முறை. இதற்கு ஒத்துக் கொண்டால் தமிழர் என்னும் ஒரு இனமே உலகில் இல்லாமல் அழிந்தொழிந்து விடும். ஒரு : இதற்கொருவரும் இணங்கக் கூடாது. மற் : பட்டர் முதல் எல்லா வடவரையும் தமிழ் நாட்டைவிட்டு உடனே துரத்த வேண்டும். ஒரு : ஆரியாவையுந் துரத்த வேண்டும். கூட்டம் : ஆமாம், ஆமாம். மாறன் : அரசன் செய்வதற்கு அவர்கள் என்ன செய் வார்கள்? எய்தவனிருக்க அம்பை நோவதால்? ஒரு : போதும், ஆரியர்க்கு மேற்போட்டுக் கொண்டு வந்தது. மற் : வெளியேபோ. கூட்டம் : போ, போ. பழை : பொறுங்கள், பொறுங்கள். (மாறன் முதலிய சிலர் போதல்) கூட்டம் : தொலையட்டும். பழை : பொறுங்கள், பதட்டம் கூடாது. அமைதியைக் கைக்கொள்ளுங்கள். இனி நாம் எதிர்ப்பதில் பயனில்லை. மாறன் போன்ற பலர் ஆரியர்க்கு அடிமையாகி விட்டனர். அவர்கள் பட்டர் செய்வதை ஆதரித்துத்தான் பேசுவார்கள். அடிமை மனப்பான்மையுடையோர்க்கு இனப்பண்பாட்டைப் பற்றிய கவலையே இருக்க முடியாதல்லவா? இளவரசர் பெரிதாகும் வரையிலும் அவர்களோடு சேராது நாம் தனித்திருந்து, தமிழ்ப் பண்பாட்டைக் காத்து வருவோம். ஒரு : ஆம், அவர்களைத் தலைமுழுகிவிட்டுத் தனியாகவே இருந்து விடலாம். மற் : நாம் தனித்து வாழ்ந்தால் அவர்கள் வைத்ததே சட்டமாகி விடாதா? தீமையை எடுத்துக் காட்டுவார் யார்? பழை : கொள்கையில் மட்டுந்தானே தனித்திருக்கப் போகிறோம்! ஒரு : ஆமாம், நல்ல முடிவுதான். கூட்டம் : அப்படியே செய்வோம்.  திரை 12. ஆ. மாறனும் கிருஷ்ணய்யரும் கிரு : என்ன பண்ணையாரே! அவாளெல்லாம் தனியாக இருந்து என்ன செய்யப் போகிறாள்? இருக்கட்டுமே அப்படியே தான், நமக்குத் தொல்லையில்லாமல். மாற : இல்லையுங்கய்யரே! உங்களுக்கென்ன நீங்கள் சொல்றீர்கள், எங்கள் இனத்தாரல்லவா? கிரு : இல்லை, நாமாபோகச் சொன்னந் தனியாக? அவாளே தானே போனா? அதிருக்கட்டும், அந்தச் சாதியாசார மிருக்கிறதே அது கடவுள் கட்டளைப்படி ரிஷிகளால் ஏற்படுத்தப் பட்டது. ரிஷிகளால் சொல்லப்பட்ட சாஸ்திரங்களின் சாரத்தை மனு சாதியாசார அரசியல் சட்டமாக்கினார். மாற : ஓகோ, அப்படியா? கிரு : ஆமாம், பின்னே மனுஷாளாகப் பார்த்துச் செய்ததல்ல. யாகங்கள் மாமிசம் புசிப்பதற்காகவும், மது உண்பதற்காகவும் செய்யப்படுகின்றன என்பது தப்பு. யாகம் தேவர்களுக்கு உகந்தது. அதனால், தேவர்கள் மகிழ்வார்கள். நாடு செழிக்கும். நன்மை பல ஆகும். மாறன் : இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? கிரு : எங்கள் முன்னோர்கள் தேவலோகத்திலிருந்து வந்தவர்கள். அதனால்தான் எங்களுக்குப் 'பூத்தேவர்' என்னும் பெயர் வழங்கிவருகிறது. எங்கள் தாய்மொழி 'தேவபாஷை' என்று வழங்கி வருகிறது. எங்கள் முன்னோராகிய ரிஷிகளெல்லாம் முன்பு தேவர்களோடு பேசி வந்தார்கள். மாறன் : ஓகோ! அப்படியா? வருகிறேன். (கிருஷ். இடதுகை எடுத்தல்) (மாறன்போக. ஒருவன் வந்து) ஒரு : என்னடா எழவு, சகுனத்தடை! (திரும்பிப் போதல்)  திரை. 13. அ. அரண்மனை தென்னவனும், மதிவாணரும். தென் : அவர்கள் இனி எக்காரணங் கொண்டும் மற்றவர்களோடு சேரக் கூடாது. அப்படியே தொலை யட்டும். எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு! மதி : உழவர் பெருமக்களாகிய அவர்கள்தானே நாட்டின் உயிர் நாடி! அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. தென் : நாமா புறக்கணிக்கிறோம்? அவர்கள்தானே நம்மைப் புறக்கணித்தனர்? அரசன், குடிகள் என்னும் அத்தே இல்லையே? நாள் கோளெல்லாம் பொய்யா? நாட்டுக்கு நலந்தரும் வேள்வியைக் கூடவா மறுப்பது? மதி : இவ்வளவு காலமாய் நாம் நாள் கோள் பார்த்தா காரியம் செய்து வந்தோம்? இவ்வுலகத்துக்கே நாகரிகப் பள்ளியாகிய தமிழகத்துக்கு அவையெல்லாம் புறம்பானவையே. ஏன்? மேனாட்டினரும், சீனரும் வேள்வி செய்கின்றனரா என்ன? சகுனம் நம் காரியத்துக்கே முட்டுக் கட்டையாய் இருந்து வருகிறது. தென் : அது போகட்டும்; சாதிப்பாகுபாடு கூடவா கெட்டது? மதி : பின்னென்ன நல்லதா? ஒற்றுமைக்கு உலை வைக்கச் செய்த சூழ்ச்சி யல்லவா அது? இப்போது நாடு இரண்டு பட்டுப்போக வில்லையா? இன்னும் சாதி வேற்றுமை வேரூன்றினால் நம் நாடு என்னாகும்? தென் : பட்டர் கூடாது என்கிறார்களே, அவர் என்ன செய்தார் இவர்களுக்கு? மதி : அவரால்தானே இவ்வளவும்! தென் : பட்டரை நாம் இங்கு வைத்திருப்பது வட நாட்டுத் தொடர்புக்காகவே. 'வடவர் இங்கு இருக்கக் கூடாது' என்பதும், 'வடநாடு, தென்னாடு' எனப் பிரித்துக் கூறுவதும், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் தமிழ்ப் பண்பாட்டுக்கு மாறுபட்ட தல்லவா? மதி : 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்' என்ற தமிழ்ப் பண்பாட்டுக்கு நேர்மாறானது சாதி வேற்றுமை. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது, ஒருவர் மற்றொருவர் மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒரு சிறிதும் பொருந்தாது. ஆதிக்க மனப்பான்மை யற்ற தமிழ்ப் பண்பாட்டுக்கே அது பொருந்தும். 'ஒன்றே குலம்' என்பதற்கும் இச்சாதி வேற்றுமை மாறு பட்டதாகும். தென் : வடவாரியரைப் போலவே நாமும் இருப்பது வடநாட்டுத் தொடர்புக்கு ஏற்றதல்லவா? மதி : சிலர் வாழப் பலருழைக்கும் ஆரியச் சாதிமுறை ஒழிந்தால், 'வட, தென்' என்னும் எதிர்ச் சொற்களே ஒழிந்து விடுமல்லவா? தென் : ஒரு சிலருக்காகப் போட்ட சட்டத்தை மாற்றுவதா? மதி : அப்புறம் உமது விருப்பம்!  திரை. 13. ஆ. தமிழ்ப் புலவரும், வடமொழிப் புலவரும். தமிழ்ப் புலவர் குடுமி, சைவக்கோலம். ஆரியப் புலவர் பூQல் முதலியன. த.பு : எங்கள் தாய் மொழியாந் தமிழ் மொழி பழமை யானது; இனிமையானது; எண்ணிறந்த இலக்கிய இலக்கணங்களை உடையது. வ.பு : எங்கள் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்ததுதானே உங்கள் தமிழ்? த.பு : அதிலிருந்து பிறந்தாலும், அதற்குச் சமமானது. வ.பு : எங்கள் ஆரியம் தேவ பாஷை. உங்கள் தமிழ் மனுஷ பாஷை. எப்படி அதற்குச் சமமாகும்? அதோடு, உங்கள் தமிழில் ஏதோ சில பாடல்களைத் தவிர வேறு என்ன இருக்கு? வடமொழியில் வேத வேதாங்க உபநிஷத ஆகம தர்ம சாஸ்திர புராண இதிகாசங்கள், அடேயப்பா! எத்தனை நூல்கள்? த.பு : தொல்காப்பியம்? வ.பு : வடமொழி ஐந்திரத்தின் மொழி பெயர்ப்புத் தானே? த.பு : திருக்குறள்? வ.பு : சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தைப் பார்த்து எழுதினதுதானே? ஒன்றேயாகிலும் தனித்தமிழுண்டோ? சும்மா அளக்கிறீரே! சமஸ்கிருதத்திற்குச் சமமாம் தமிழ்! (கைதட்டல்)  திரை. 14. அ. அந்தப்புரம் தமிழரசி, செழியன், தென்னவன். தமி : அப்பா செழியா! நாட்டு மக்களில் முதன்மை யானவர்கள் தனியாக ஒதுக்கப்பட்டுவிட்டார்கள். அவர்களைத் தொடுவதுகூடக் குற்றமென்பது உன் தந்தை கட்டளை. சாதி வேற்றுமையால் நாடு ஒற்றுமை இழந்துவிட்டது. செழி : அம்மா! வருந்தாதே. விரைவில் நாட்டின் நலிவைப் போக்கி விடுகிறேன். இப்போதே நாட்டு மக்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால், 'கொஞ்சம் பொறுங்கள்' என்று தடைசெய்து கொண்டு வருகிறார் ஐயா. தமி : குழந்தாய்! தடை அல்ல. காலத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரால்தான் நாம் நன்னிலையுற முடியும். அவர் சொல்கிறபடி நட. செழி : ஐயா சொல்லை யார் தட்டுபவர்? தமி : கண்ணே! செழியா! நம் நாட்டு மக்கள் மட்டும் உன் தந்தைக்குப் பகைவர்களல்ல. தமிழ் நாட்டின் வடக்கிலும், மேற்கிலும் உள்ள தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்னும் நாடுகளை ஆண்டுவரும் உன் சிற்றப்பன்மார்கள் வடவர் பேச்சைக்கேட்டு நம்மோடு பகைகொண்டுள்ளனர். நம்மைப் பிறராகவே எண்ணி வருகின்றனர். ஓரினம் என்பதைக்கூட மறந்து விட்டார்கள். இதையெல்லாம் உன் தந்தை கவனிப்பதே இல்லை. எல்லாம் அவளால்! செழி : அம்மா! எதற்கும் ஐயா இருக்கிறார். நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே. இவ்வளவு நாளாய்ப் பொறுத்தது பொறுத்தாய். இன்னும் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டிரு. தமி : மகிழ்ந்தேனடா கண்ணே! (முத்தம்) செழி : ஐயா எதற்கோ வரச்சொன்னார். போய் வருகிறேன். தமி : இனி நம்ம கவலை ஒழிந்தது. (அரசன் வருதல்) தென் : ஏன் தனியாக ஒருத்தியும்? தமி : பின் யார் எனக்கு? தென் : நான்? தமி : ஏன் அவள்மேல் வெறுப்புத் தட்டிவிட்டதா? தென் : ஏன்? உன்னை அவளுக்குச் சமமாக எண்ணி வந்ததற்காகவா? இதோ போகிறேன். (போதல்)  திரை. 15. அ. கோயில் வழிபாடு நடத்தல், மந்திரம் ஓதல். முன்னால் பிராமணர், அதன் பின் பூணூhலணிந்த வைசியர், அதன் பின் பிறர். ஒரு மொட்டைப் பார்ப்பினி ஒரு சிறுமியுடன் வருதல். சிறுமி 6,7 வயது. சிறுமி : ஏம்பாட்டி! ஏ! அவாளெல்லா அங்கே நின்னி ண்ட்ரிக்கா? பாட் :அவாளெல்லா சூத்திராள். இங்கே வரக்கூடாது. சிறு : ஓகோ! நம்ம வாசக்காரியோடெ சேர்ந்தவாளா? பாட் : ஆமா. (முன்னால் சென்று நிற்றல். தீபாராதனை. வரிசையாகக் கொடுத்தல். பிராமணர் திருநீறு எடுத்துக் கொள்ளல். மற்றவர்க்குக் கொடுத்தல். அவர்கள் காசு போடுதல்.)  9. பாட்டு சாமியார் : சங்கநிதி பதுமநிதி யிரண்டும் தந்து தரணியொடு வானாளத் தருவரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்பே மல்லேம் மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்; அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராயின் அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவு ளாரே. (கோயிலிருந்து சாதிவாரியாகப் போதல். காசு போடுதல்). பாட்டி : அடி சூத்ராள் வர்ரா, விலகி வாயேண்டி. (ஒரு பிராமணனை ஒரு செட்டியார் குனிந்து கும்பிடல். ஒரு செல்வர் பின் தேங்காய் பழத்தட்டத்துடன் ஒரு பிராமணன் போதல்.) 10. பாட்டு பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்குமென் றேமுனம் பேசிய வள்ளுவன் பேச்சதும் பொய்யோ? சிறப்பிக்கும் தொழிலலால் வேற்றுமை யில்லாச் செந்தமி ழினமின்று சிதைந்ததும் பொய்யோ? சீரிய ஒருகுலைக் காயென இன்பச் செந்தமிழ்ப் பண்பினால் இருந்தது முனமே; ஆரியச் சூழ்ச்சியால் ஆயிரங் குலமாய் ஆயின தந்தோ! அருந்தமி ழினமே! தினைவிதைத் தவன்தினை யறுப்பதும் பொய்யே! திறமுடை யவன்தினை யறுப்பதும் மெய்யே! வினையெனப் புகல்வது வீணர்கள் பேச்சே! வெற்றுரை களைநம்பி வெம்பிட லாச்சே! (சிலர் உற்றுக்கேட்டு வருத்தத்துடன் செல்லல்)  திரை. 16. அ. பழையனும், மதிவாணரும். மதிவாணர் எழுதிக் கொண்டிருத்தல். பழையன் வந்து, பழை : ஐயா! வணக்கம்! மதி : வாரும். உட்காரும். பழையா! தமிழ்ப் பண்பாடு உங்களைத் தமிழர்களிலிருந்து வேறாக ஒதுக்கி வைத்துவிட்டது பாவம்! விரைவில் உங்களுக்கு விடுதலை கிடைக்கும். பழை : ஐயா! நாங்கள் எங்களுக்காக வருந்தவில்லை. நம் தமிழரசியின் நிலைக்காகத்தான் வருந்துகிறோம். என்று அந்த ஆரியா தமிழ் நாட்டை விட்டுத் தொலைவாளோ? தமிழரசி அரசியாவாளோ! அன்று எங்கள் நிலையும் பழைய நிலை ஆகிவிடும். மதி : நானும் அதற்காகத்தான் பாடுபட்டு வருகிறேன். விரைவில் ஆகுக. பழை : வெளிநாட்டானொருவன் அடிக்கடி வட நாட்டில் புகுந்து கொள்ளையிட்டு வருகிறானாம். நம் நாடு இருக்கும் சீர்கெட்ட நிலையில் ஒருவேளை இங்கும் அக்கொள்ளைக் கூட்டத்தான் வந்தால் என்னாகும்? மதி : என்னாகும் என்பதைச் சொல்ல முடியாது. எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். உணவுப் பொருள்கள் நல்ல பாதுகாப்பில் இருக்கட்டும். ப . இ. திரைவெளி உள்ளே கலகம். மக்கள் மூட்டை முடிச்சுடன், 'ஐயோ படைவருது, ஐயோ படை வருது' என ஓடுதல். ஒருவன் கிழட்டுத் தா யைத் தூக்கிக் கொண்டு ஓடுதல். படைஞர் மூட்டைகளைப் பிடுங்கிப் போடுதல். மலையைப் பார்த்துப் பணத்தைப் புதைத்துப் போதல். மரத்தடியில் புதைத்தல். இன்னும் பல நிகழ்ச்சிகள்.  திரை. 16. ஆ. பகைவன் கூடாரத்தில் இருத்தல். ஒரு பிராமணன் வழி பாட்டுத் தட்டத்துடன் வந்து, தட்டத்தை வைத்து, பிரா : பிரபு! கடவுள் தங்களைக் காப்பாற்றுவார். ஏழைப் பிராமணாளை ஒன்றும் செய்யாதேள். பகை : அடே இவனைப் பிடித்துக் கட்டுங்கள். கசடன்! (கட்டல்) திரை. 16. இ. திரை விழுதல் ஒரு : ஐயோ! என் பெண்டு பிள்ளைகளெல்லாம் என்னானார் களோ! (ஓடல்) ஒரு : ஐயோ! இந்த இடத்தில்தானே வைத்தேன். காணோமே? நானென்ன செய்யட்டும். (அடிவயிற்றில் அடித்துக் கொண்டு) ஒருத்தி: ஐயோ! என் கணவனைக் கொன்று போட்டார் களாமே. (மாரடித்துக் கொண்டு)  திரை. 17. அ. அரண்மனை அரசன், மதிவாணர், ஜான், அமைச்சர் முதலியோர். தென் : புலவர் பெருமான்! 'ருசிகண்ட பூனை உறியுறியாத் தாண்டும்' என்பது போல், ஊரைக் கொள்ளையிட்டுச் சென்றவன் மறுபடியும் வராமலா இருப்பான்? மதி : வருவான். நாடு ஒற்றுமையிழந்து உருக் குலைந்து விட்டது. மக்கள் தன்னம்பிக்கையிழந்து விட்டனர். தமிழ் நாட்டை விட்டு வீரம் குடிபோய்விட்டது. தென் : ஏமாந்துவிட்டேன். வடநாட்டைக் கொள்ளை யிட்டுத் தான் இங்கு வந்தானாம். நான் வடவனை நம்பி யிருந்தேன். மதி : வடவர்கள் வஞ்சனையாலன்றி, இதுவரை எதிர்த்து யாரையும் வென்றதாகக் கேள்வியில்லை. தென் : ஆமாம். மதி : வடக்கிலிருந்து வராதிருந்தால் கடல் வழியாக வர முடியாது. உலகப் பாதுகாப்புக்கே உறைவிடமாக இருந்த தமிழ்நாடு இன்று கொள்ளைக்கு உறைவிடமாக உள்ளது. போனதைப்பற்றிப் பேசிப் பயனில்லை. ஆகவேண்டியதைப் பார்க்கலாம். தென் : தங்கள் யோசனைப்படி. மதி : வடபுறம் பாதுகாப்புப் படையை வைத்து விட்டு, மேற்கொண்டு செய்யவேண்டியதைக் கவனிக்கலாம். நாட்டு மக்களை நீ வெறுத்தாலும் அவர்கள் உன்னை வெறுக்க வில்லை. நாட்டுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளனர். படை திரட்டக் கட்டளையிடும். காவலன் : மேனாட்டு வணிகர் வந்திருக்கிறார். தென் : வரச் சொல். ஜான் : நமஸ்காரம். (கைகுலுக்கல்) தென் : வாரும், உட்காரும். வந்த காரியம்? ஜான் : நம்பள் நாட்டிலே வந்து யாரோ கொள்ளை அடித்துப் போனதாகக் கேள்விப்பட்டன். அந்தக் கொள்ளைக் காரனைத் தோக்கடிக்க நம்பளால் ஆன உதவியைச் செய்யலாம். தென் : சந்தோஷம். ஜான் : நம்மகிட்டெ வேண்டிய பாதுகாப்புப் படை வச்சிருக்கிறம். பயப்படவேண்டியதில்லை. மதி : காலத்தால் செய்த உதவி ஞாலத்தைவிடப் பெரியது. நல்ல வேளையில் வந்தீர். ஜான் : நம்பள் ஆளுக்கள் சொன்னது வந்தோம். தென் : நமது நட்பு என்றும் நீடிக்கும். ஜான் : சீக்கிரம் சண்டைக்குப் புறப்படலாம். நான் வரு கிறேன். தென் : சரி. (போக) மதி : வலிய வந்த உதவியை விடக்கூடாது. இவர் களிடம் பெரும்படை இருப்பதாகக் கேள்வி. நாட்டில் குழப்ப மிருந்தால் அவர்கள் வணிகத்திற்குத் தடையுண்டாகும் என்பதுதான் நமக்கு உதவ முன்வந்ததன் முதல் நோக்கம். தென் : படைத் தலைவரே! போருக்குத் தயாராகட்டும்.  திரை. 17. ஆ. தமிழ் வீரரும், வெள்ளைக்கார வீரரும் துப்பாக்கியுடன் அணி வகுத்துச் செல்லல். உள்ளே போர் முழக்கம்.  திரை. 17. இ. திரைவெளி பறையறைதல் நாட்டில் புகுந்து கொள்ளையிட்டு வந்த கொள்ளைக் கூட்டத்தார் துரத்தப்பட்டனர். இதற்கு உதவி புரிந்த மேனாட்டு வாணிகர் தலைவன் ஜான் அவர்களுக்கு நாளை நமது அரண்மனையில் ஒரு விருந்து நடைபெறும். திரை. 18. அ. விருந்து பலர் மேஜையைச் சுற்றிலும் இருத்தல். ஜானும் கிளியோவும் வருதல். தென்னவன் வரவேற்றல். தென் : வாருங்கள். (கைகுலுக்கல்) ஜான் : வருகிறம். தென் : உட்காருங்கள். (விருந்துண்ணல், பின், தென்னவன் இருவருக்கும் மாலை சூட்டல்.) தென் : நம் தமிழ்ப் பெரியார் பேசுவார். மதி : அன்பர்களே! இவர் நமக்குத் தக்க காலத்தே செய்த உதவி என்றும் மறக்கமுடியாத தாகும். அதுவும் தானாகவே முன்வந்து, 'சொல்லாமலே செய்வர் பெரியர்" என்னும் முதுமொழியை உண்மையாக்கினார். உங்கள் சார்பிலும், அரசன் சார்பிலும், நான் நண்பர் ஜான் அவர்களைப் பாராட்டுவதோடு, திருவாட்டி கிளியோவையும் பாராட்டுகிறேன். தென் : தமிழ் மக்களே! இவர் நமக்குக் காலத்தே செய்த உதவிக்காக உங்கள் சார்பில் இவரைப் பாராட்டுவதொடு, நமது அரசியல் தலைமை அதிகாரத்தை இவர்க்குக் கொடுக்கிறேன். நமது அழைப்புக் கிணங்கி வந்து, இவ்விழாவினைச் சிறப்பித்த தோழியர் கிளியோவையும் பாராட்டுகிறேன். ஜான் : தமிழ் மக்களே! உங்கள் எல்லவருக்கும் வணக்கம். எங்களுக்குச் செய்த சிறப்புக்காக உங்களைப் பாராட்டுகிறேன். உங்களுக்கும், உங்கள் நாட்டுக்கும் நானும், மிஸஸ் கிளியோவும் எங்களால் இயன்றதைச் செய்வோம். கிளி : பெரியோர்களே! நீங்கள் எங்களுக்குச் செய்த பாராட்டுதலுக்காக நன்றி. நானும் மிஸ்டர் ஜானும் எங்களால் இயன்றதை உங்களுக்குச் செய்வோம் என்று உறுதி கூறுகிறேன். தென் : உங்கள் கூட்டுறவுக்கு நன்றி. திரை. 18. ஆ. கிருஷ்ணய்யரும், சேஷய்யரும். கிரு : என்ன சேஷய்யர்வாள்! நாம் பட்ட பாடெல்லாம் வீணாப்போயிடும் போலிருக்கே. சேஷ : ஏன்? கிரு : நோக்குத் தெரியாதாங் காணும்? நம்ம பட்டருடைய புரோகித வேலை காலியாயிடுத்து. இனி, பட்டர் சாதாரணப் பட்டர்தான். சேஷ : ஓகோ! அப்படியா! இனி நம்ம பாடு கூப்பாடுதான்? கிரு : என்னமோ பார்க்கலாம்.  திரை. 19. அ. அந்தப்புரம் தமிழரசி, கிளியோ, அல்லி. தமி : (கிளியோ வருதல்) வாம்மா! உட்காரு. கிளி : தமிழரசி! உக்காரு. இந்தா உனக்காகக் கொண்டு வந்தேன், (பிஸ்கட், ஆரஞ்சி முதலியன சாப்பிடல்) தமி : அல்லி! எடுத்துக்கொள். கிளி : தமிழரசி! இனி ஒன்றும் கவலைப்படாதே. அதிகம் கஷ்டப்பட்டாயாம் பாவம்! அரசன் இனி இங்குதான் இருப்பார். இந்தா உனக்காக வாங்கி வந்தேன் இந்தச் செய்ன். (கழுத்தில் போடுதல்) தமி : நீ நல்லவள். உன் பேரென்னம்மா! மறந்து விட்டேன். கிளி : எம்பேரு கிளியோ. தமி : கிளியோ, நல்ல பேரு. பேருக்குத் தகுந்த குணம். அடிக்கடி இங்கு வாம்மா. கிளி : வர்ரேன். தமிழரசி! அரண்மனையைச் சுற்றிப் பார்க்கலாமா? தமி : வாம்மா பார்க்கலாம். கிளி : (கிளியைப் பார்த்து) இதென்ன? தமி : கிளி: கிளி : எம்பேரு. (கிளியை எடுத்துக் கொஞ்சி கொண்டே போதல்)  திரை. 19. ஆ. ஆரியா வீடு. ஆரியா, வசந்தா, இந்திரா, ஆரியா சோர்வுடன். ஆரியா : அடி வசந்தா! இங்கே வாடீ! அங்கென்னடி பண்ணறாய் கூப்பிடக் கூப்பிட? வசந் : ஏம்மா? ஆரி : கொஞ்சந் தூத்தங் கொண்டாடி குடிக்க. (கொண்டு வந்து கொடுக்கக் குடித்தல்) வசந் : ஏம்மா! ஒரு விதமா இருக்கேள்? ஆரி : என்னடி செய்யறது? எனக்கோ வயதுமா யுடுத்து. அந்தக் கிளியோ வந்ததிலிருந்து அரசன் நம்மாத்துப் பக்கம் எட்டிப் பார்ப்பதுகூடக் கிடையாது. அரசி இப்ப அரசியாயிட்டாள்! வசந் : ஆனா ஆகரா, நமக்கென்னம்மா கொறச் சொ? ஆரி : என்ன கொறச்சலா? எங்கப்பா வேலெ போயிடுத்து தெரீமேல்லோ? இனி என்னடி சோத்துக்குங் கேடா இங்கிருந்திண்டு? இந்திரா எங்கே? இங்கே கூப்பிடு. (போய்க்கூட்டிவர) இந்திரா : அம்மாமி! ஏன் கூப்பிட்டேள்? ஏன் ஒரு மாதிரி இருக்கிறேள்? (முக்காட்டுடன்) ஆரி : ஒன்னுமில்லே; ஏனோ தலையெ வலிக்கிறது. உங்கையாலே கொஞ்சங் காப்பி போட்டுண்டுவா. வசந்தா! காலெக் கொஞ்சம் பிடீண்டீ.  திரை. 20. அ. பழையன் வீடு பழையன் ஜானையும், கிளியோவையும் வரவேற்றல், ஆண்களும், பெண்களும் கூடியிருத்தல். இருவரும் வருதல். பழை : வாருங்கள்! உட்காருங்கள். (ஜான் கை குலுக்கல் கிளியோ பெண்களைக் கைகுலுக்கல். உட்காருதல்) மாலை போடுதல். பள்ளுப்பாடியாடல் 11.பாட்டு ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி-மலை யாளமின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே. நேற்று மின்றும் கொம்புசுற்றிக் காற்றடிக்குதே-கேணி நீர்ப்படு சொறித்தவளை கூப்பிடுகுதே. சேற்றுநண்டு சேற்றைக்கிள்ளி ஏற்றடைக்குதே-மழை தேடியொரு கோடிவானம் பாடியாடுதே. போற்றுதமிழ் நாட்டினருக் கேற்றவையெல்லாம்-மனம் போல்விளைக வென்றுழவுக் கால்கொளுவோமே. (ஈற்றடி யிரண்டும் புதியவை) எந்தமிழ்ப்பண் பாடுறநாட் காலையெழுவோம்-புலத் தேரினால் பழந்தமிழ் வயலையுழுவோம்; செந்தமிழ்ச்சம் பாவிதையைத் தெள்ளியெடுப்பொம்-நறுந் தீந்தொடையாப் பாருமணிச் சேற்றில்விதைப் போம்; முந்துறநன் னீர்பாய்ச்சிக் காவல்புரிவோம்-அயல் மொழிச்சொற் களைகளைப் பிடுங்கியெறிவோம்; வந்தவிருந் தாளிகட்குச் சிந்தைமகிழ-நால் வகைமூ வினத்தமிழ்ச்சோ றாக்கிப்படைப்போம். ஜான் : பழந்தமிழ் மக்களே! உங்கள் ஆடல் பாடலால் மகிழ்ந்தேன். இனி நாங்கள் தனியாக இருக்க வேண்டியதில்லை. இவ்வளவு நாளாய்த் தாழ்த்தப்பட்டு, தள்ளிவைக்கப் பட்டிருந் தீர்கள் பாவம்! மக்களில் உயர்வு தாழ்வு கற்பிப்பது மடமை! அறிவாளிகள் உயர்ந்தவர்கள்; அறிவில்லாதவர்கள் தாழ்ந்தவர்கள். இனி நீங்களெல்லாம் நல்லாப் படியுங்கள். நண்பர் பழையன் உங்கள் சார்பில் அரசியல் தலைவனாக இருப்பார். பழை : பட்டரால் புகுத்தப்பட்ட சாதி வேற்றுமை யை எதிர்த்ததால் தள்ளிவைக்கப்பட்டோம். சமத்துவ குணமுடைய தாங்கள் எங்கள் தலைவரானது பற்றிப் பெருமகிழ்ச்சியடைகிறோம். உங்கள் இருவருக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக. ஜான் : ஊர்க்குள் சென்று பார்க்கலாம். (போக) கிளி : (பெண்களைப் பார்த்து) வாருங்கள் நாமளும் போகலாம்  திரை. 20. ஆ. வேலனும், அல்லியும் வேலன் : தெரியுமா? அல்லி : தெரியும். வேலன் : என்ன? அல்லி : அதுதான். வேலன் : எது? அல்லி : எது! நீ சொல்லறதுதான். வேலன் : ஆமாம், தெரிஞ்சுக்கோ, நான் போற பக்க மெல்லாம் நீயும் வரணும். அல்லி : வாரெ. அவுங்கமாதிரி நீயு எல்லாம் வாங்கித்தரணும். வேலன் : அடடடே! அதல்லோ, அதல்லோ; அவுங்க மாதிரி நானும் நீயும்சமமாக இருக்கணும். அல்லி : நீ வளத்தி, நாங்கூளெ. நாமெப்படிச் சமமாக இருப்பது? வேலன் : அதல்லோ. அந்தம்மா மாதிரி யாரோடும் பேசணும்; ஒன்னாஉக்காந்து சாப்பிடணும்; எங்கும் போகணும்; எல்லோரையும் சமமாக எண்ணணும். அல்லி : ஓகோ, அப்படியா? நீ அந்த அய்யா மாதிரி நடந்தீன்னா, நான் அந்த அம்மா மாதிரி நடக்கிறேன். தன்னெப் பாத்து பின்னெப்பாருன்னா!  12. பாட்டு வேல : அப்படியே நடந்துக்கிறேன் பொம்பளே! அல் : நான்-அதுக்குமேலே நடந்துக்கிறேன் ஆண் மையுள்ள ஆம்பளே! வேல : எப்படியோ நடந்துக்கோநீ பொம்பளே! அல் : உன்-எண்ணம்போல நடந்துக்கோநீ எனக்கு வந்த ஆம்பளே! வேல : சாதிபேதங் கூடாதிந்த நாட்டிலே! அல் : இனிச்-சரிநிகரா நடந்துக்கோணும் ஆணும் பெண்ணும் வீட்டிலே! வேல : நீதிநெறி ஓங்கவேணும் நாட்டிலே! அல் : ஆண்கள்-நினைக்கிறாப்போல் பெண்களும் நினைத்திடாரோ வீட்டிலே? வேல : ஆணும் பெண்ணும் படிக்கவேணும் நாட்டிலே! அல் : படித்-தவளைமதித்து நடத்தவேணும் ஆம்பளயோ வீட்டிலே! வேல : நானும்நீயுஞ் சரிசமமா இருப்பமே! அல் : இதை-நானுங்கூடக் கடைப்பிடித்து நடக்க லாமினு விருப்பமே! வேல : இப்பத் தெரிஞ்சுதா? அல் : தெரிஞ்சுது.  திரை. 21. அ. கூட்டம் பட்டர், மாறன் முதலியோர். பட்டர் : தமிழ் மக்களே! ஜான் வேலையைப் பார்த்தீர்களா? தேசத் துரோகியும், ராஜத்துரோகியுமான பழையனுக்குப் பெரிய உத்தியோகங் கொடுத்துவிட்டான். பழையன் அரசாங் கத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த தெல்லாம் எதற்கென்பது இப்போது விளங்கிவிட்டதல்லவா? பதவி மோகம் யாரை விட்டது? உத்தியோக வேட்டைக்காகவே அவ்வளவு ஆர்ப்பாட்டமும். அதைப்பற்றிக் கூட நமக்குக் கவலையில்லை. ஜான் நமது பூர்வீக தர்மத்தையே கெடுத்து வருகிறானே? மேலும் நாம் செய்த நல்ல காரியங்களை யெல்லாம் கெடுத்து வருகிறான். இதெல்லாம் அந்தக் கிளியோ தூண்டுதலால் தான் நடக்கின்றன. மேலும் ஜான் இங்கு அதிகாரியாய் இருப்பது நம் நாட்டைச் சுரண்டுவதற்காகவே தான். அவனொரு வணிகன் தானே? நாம் பாடுபட்டுத்தேடும் பொருளைப்பகற் கொள்ளையடிப்பது தான் அவன் முதல் நோக்கம். அவனை எப்படியாவது நம் நாட்டைவிட்டு ஓட்ட வேண்டும். அவனை ஓட்டிவிட்டு நம்ம இளவரசனுக்கு முடி சூட்டவேண்டும். இது எனது தாழ்மையான அபிப்பிராயம். மாறன் : பெரியோர்களே! நமது பட்டர் சொன்னது முழுதும் உண்மை. நம் நாட்டை ஏன் அயலான் ஒருவன் ஆள வேண்டும்? நமக்கென்ன ஆளத் தெரியாதா? ஆள ஆள் இல்லையா? நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து அரசனிடம் சொன்னால் அவன் தானாகவே ஓடிவிடுவான். இப்போது பழையன் வைத்ததே சட்டமாக இருக்கிறதென்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்! கிருஷ் : மகாஜனங்களே! இதற்கு வடவனும் வேண்டிய உதவி செய்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறான். ஜானின் சர்வாதிகார ஆட்சியைப் போக்கி, ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தணும். அப்போதுதான் நம் தேசம் சுபிட்சமாகும். பட்ட : ஊர் ஊருக்கு இதைப் பிரசாரம் பண்ணணும்.பாடுபட்டால்தான் பலன் கிடைக்கும் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.  திரை. 21. ஆ. மதிவாணரும், செழியனும். செழி : ஏய்யா! அவர்கள் சொல்வதிலும் ஒருவாறு உண்மை இருப்பதாகத்தானே தெரிகிறது? நமது நாட்டுக்கு அயலானொருவன் ஏன் தலைவனாக இருக்க வேண்டும்? மதி : செழியா! நீ சிறுவன். அவர்கள் சூழ்ச்சி உனக்குத் தெரியாது. ஜான் போகட்டும்; நாம் வேண்டா மென்று சொல்ல வில்லை. நாட்டின் நிலைமையை எண்ணி அவனுக்குத் தலைமை யதிகாரங் கொடுக்கப்பட்ட தேயல்லாமல் நிலையாக அவனே இந் நாட்டைத் தனியரசு செலுத்தட்டும் என்பதற்கல்ல. நம் நாட்டில், நம்மவரால் புறக்கணிக்கப்பட்ட பழையன் கூட்டத்தை ஒன்றாக்கினான். மக்களுக்குப் பகுத்தறி வுண்டாவதற்கு வேண்டிய வழிகள் செய்தான். எல்லாரும், சரிநிகராக வாழ வேண்டும் என்பதல் லாமல் ஒரு சிலர் உரிமைகளைப் பறித்தாகொண்டான்? பட்டரால் நம் நாட்டுக்கு உண்டான கேட்டைவிடவா அவன் சுரண்டல்? ஆரியாவால் உன் அன்னை என்னானாள்? கிளியோ எவ்வளவு அன்பாக வைத்திருக்கிறாள்? இப்போது தானே உன் அன்னை, ஆரியாவால் அடைந்த துன்பத்தை மறந்து தானும் ஓர் அரசன் மனைவி என்னும் நிலையில் இருந்து வருகிறாள். முதலில் பட்டரும் ஆரியாவும் போகட்டும். அவர்கள் இங்கிருந்தால், ஜான் போனாலும் பழைய நிலைதான்வரும். அவர்கள் வஞ்சகச் சொல்லால் மயங்காதே. போதும் அவர்களால் பட்ட தொல்லை. செழி : ஐயா! உண்மையுணர்ந்தேன். ஆம், உண்மை தான். ஜான் வராமலிருந்தால் இந்நேரம் என் அன்னை என்னா யிருப்பாள்? பழையன் பாடு படும்பாடாயிருக்குமே. அவ்வட வரை முதலில் ஒழிப்பது நல்லதுதான்! மதி : பட்டர் ஆதிக்கம் ஒழிந்து, ஜான் ஆதிக்கத்திற் குள் நம் நாடு வந்ததால்தானே சாதி வேற்றுமை ஒருவாறு தளர்ந்து வருகிறது? எல்லோரும் ஒன்று என்னும் சமரச உணர்ச்சி மக்களுக்கு உண்டாகி வருகிறது. விரைவில் நீ இந்நாட்டரசனாவாய். அப்போது பழைய தமிழ்ப் பண்பாட்டை உண்டாக்க வேண்டும். எல்லோரும் இந்நாட்டு மன்னர்களாக வாழ்ந்துவந்த பழந் தமிழாட்சியை ஏற்படுத்தவேண்டும். அதற்கு, இப்பட்டர் கூட்டம் ஒருபோதும் விடாது. ஆகவே, அவர்களை இந் நாட்டைவிட்டு ஓட்ட நாம் ஒரு சிறிதும் தயங்கக்கூடாது. செழி : ஏய்யா! மற்ற வடவர்களெல்லாம் தாங்களும் தமிழர்கள் என்று, இந்நாட்டுக் குடிகள்போல இங்கேயே நெடு நாளாக இருந்து வருகிறார்களே, அவர்களை என்ன செய்வது? மதி : அவர்கள் இந்நாட்டில் இருந்தாலும் வட நாட்டைத்தான் தங்கள் தாய்நாடென எண்ணி வருகிறார்கள். தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாமல், செத்த வடமொழியைத்தான் தாய்மொழி என எண்ணி வருகின்றனர். தமிழை, தமிழொலிக்கேற்பப் பேசாமல் கொச்சையாகவே பேசி வருகின்றனர். இவ்வளவு நாளாய்ப் பழகியும் தமிழ்ப் பண்பாட்டைக் கைக்கொண்டார்களில்லை. நீ அரசனான பின், அவர்கள் தமிழ்நாட்டைத் தாய்நாடெனவும், தமிழ் மொழியைத் தாய்மொழி எனவும் கொண்டு, வடநாடு, வடமொழிப்பற்றை அறவே விட்டு, தமிழ்ப் பண்பாடு டையவர்களானால் இந்நாட்டுக் குடிமக்களாக இங்கேயே இருக்கலாம். மேலும், அவர்கள் தனி இனமாக வாழாமல் நம்மோடு ஒன்றாகக் கலந்துவிடவேண்டும். இதற் கெல்லாம் இணங்கவில்லை யானால்?..................... செழி:இணங்கவில்லையானால் வெளியேற்ற வேண்டியதுதான். மதி : ஆமாம். இணங்கிவிடுவார்கள். அவர்கள் ஆண் பெண் அத்தனை பேரும் படித்தவர்கள்; காலத்துக்கேற்றபடி நடந்துகொள்ளும் குணம் உள்ளவர்கள். அதனால்தான் இன்னும் ஒருவாறு ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். செழி : உண்மையுணர்ந்தேன்.  திரை 22. அ. பள்ளிக்கூடம். ஜான் தலைமையில், தமிழ்த் திருநாட் கொண்டாட்டம், ஜானைத் தலைமை வகிக்கும்படி பள்ளித் தலைமையாசிரியர் கேட்டுக் கொள்ளுதல். ஜானுக்கும், கிளியோவுக்கும் மாலை போடுதல். ஜான் : அன்புமிக்க ஆசிரியர்களே! மாணவர்களே! இக்கொண்டாட்டத்திற்குத் தலைமை தாங்கும் பேற்றை எனக் களித்தமைக்காக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. முதலில் தமிழ்த்தாய் வணக்கம். சிறுவன் : (கிராப்பு, சட்டை.) 13. பாட்டு பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல், கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாள முந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாநின் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழிநீ அனாதியென மொழிகுவதும் வியப்பாமே! ஜான் : மாணவிகள் கும்மி. 14. பாட்டு செந்தமிழ் நாட்டுச் சிறுமியரே!-ஒன்றாய்ச் சேர்ந்து கும்மி யடித்திடுவோம். தந்தை தாய் போற்றி வளர்த்த-தமிழ்ப்பகை தன்னைத் துரத்தி யடித்திடுவோம். சீரிய வாழ்வு சிறந்திடுக-கொடுந் தீயவை யெல்லா மிறந்திடுக. ஆரிய மாயை யகன்றொழிக-தமிழ் அன்னையின் பண்பா டதுபொலிக. பொல்லாத சாதிக் கொடுமையெனும்-புலி போக்கிட மற்றுவாழ் வற்றிடுக. கல்லாத மக்களிங் கில்லாமல்-யாவரும் கற்றுப் பகுத்தறி வுற்றிடுக. நல்ல தமிழ்த்திரு நாளினிலே - தமிழ் நாள்மலர் மாலை தொடுத்திடுவோம். அல்லவை தேய அறம்வளர்க-என ஆடிக் கும்மி யடித்திடுவோம். ஜான் : மாணவர்கள் பேச்சு. 'தமிழ்' என்பதுபற்றி இளஞ்செழியன் பேசுவார். இளஞ் : தமிழ் வாழ்க! அன்புமிக்க தலைவரவர்களே! ஆசிரியர்களே! மாணவத் தோழர்களே! தமிழ் என்பதற்கு இனிமை என்பது பொருள்! நமது தாய் மொழியாம் தமிழ் மொழி 'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன்தோன்றிய மூத்த தமிழ். மொழி வளமிக்க முத்தமிழ். கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய மொழிகளை ஈன்றும் இன்னும் இளமை நலங் குன்றாத கன்னித்தமிழ். தமிழ் மொழி போலப் பழமையும், இளமையும், இயல்பும், இனிமையும் உடைய மொழி உலகில் வேறொன்று மில்லை. நந்தமிழ் மொழிக்குப் பின்னால் தோன்றி மறைந்த மொழிகள் உலகில் பல. ஏன் நெடுந்தூரம் போக வேண்டும்? எழுத்தின்றி இங்குவந்த ஆரிய மொழி, எங்கள் தமிழ்த் தாயிடம் எழுத்துக் கடன் வாங்கி எழுத்து வழக்குடைய மொழியானது: ஆனால், நெடு நாளைக்கு முன்னரே பேச்சு வழக்கொழிந்து, 'செத்த மொழிப் பட்டியலில் சேர்ந்துவிட்டது. உலக மொழி களுக்கே எண்களைக் கொடுத்துதவிய மொழி எங்கள் தமிழ் மொழியே. இவ்வளவு சீரும் சிறப்புமுள்ள உயர்தனிச் செம்மொழி யாகிய எங்கள் தமிழ், ஆரிய என்புருக்கி நோயால் இந்நிலைமை யடைந்தது. தமிழ் மொழி கெட்டதால் தமிழர் பண்பாடுங் கெட்டது. 'தனித் தமிழுணர்ச்சி! என்னும் நன்மருந்தால் அந்நோயைப் போக்கித் தமிழ் மொழியை வளர்ப்பது தமிழ் மக்களின் நீங்காக் கடமையாகும். தமிழ் வாழ்க! ஜான் : 'தமிழர் நாகரிகம்' என்பதுபற்றி 'இளங்கோ வேண்மாள், பேசுவார். இ.வே : தமிழ் வாழ்க! அன்புமிக்க தலைவரவர்களே! அருந்தமிழ் மக்களே! உலக நாகரிகத்துக்கே முதலாக அமைந்தது தமிழர் நாகரிகம். பகுத்தறிவை முதன்முதல் பயன் படுத்திய வர்கள் தமிழ் மக்கள்தான். மாக்கள் வாழ்க்கையி லிருந்து மக்கள் வாழ்க்கையைக் கண்டவர்கள் தமிழ் மக்களே! பிற இன மக்கள் "அற்றகுளத்தில் அறுநீர்ப் பறவை போல்" நீர் நிலைதேடி அங்கும் இங்கும் நாடோடிகளாய் அலைந்து திரிந்த அக்காலத்தே, ஏரி குளம் கிணறு கண்டு ஒரே இடத்தில் இருந்தவர் தமிழ் மக்கள். பிற இன மக்கள் வேட்டையாடி விலங்கு பறவைகளையுண்டு வந்த காலத்தில் காடு வெட்டி நாடாக்கி, நிலந்திருத்தி நெல் விளைத்து உண்டு வாழ்ந்து வந்தவர் தமிழ் மக்கள். பிற இன மக்கள் தோல், மரப்பட்டை, இலை தழைகளைப் பொத்திக் கொண்டிருந்த காலத்தே பஞ்சாலும், பட்டாலும் பல்வகை மயிர்களாலும் அழகிய ஆடைகள் நெய்து உடுத்த ஆறறிவின் கூறுமிக்கவர் தமிழ் மக்கள், உழவு, கைத்தொழில், வாணிகம் என்னும் முத்தொழிலிலும் முதன்மை பெற்றிருந்தவர் தமிழ் மக்கள். சாதி சமய வேற்றுமையின்றி, 'ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்' என்ற ஒருமை வாழ்வு வாழ்ந்து வந்தவர் தமிழ் மக்கள். ஆணும் பெண்ணும் அல்லவை கடிந்து நல்லவை கொண்டு ஒத்த உரிமை வாழ்க்கை நடத்திவந்தவர் தமிழர்கள். ஆனால், ஆரிய நாகரிகக் கலப்பால் அந்நிலைமை நீங்கி, இந்நிலைமையை அடைந்து விட்டனர். அவ்வாரியக் குடற் காய்ச்சலை, தமிழ் இனவுணர்ச்சி என்னும் மருந்தால் போக்கித் தனிப்பழந் தமிழ்ப் பண்பாட்டை உண்டாக்குவது ஒவ்வொரு தமிழ் மகன், மகளின் நீங்காக் கடமையிலொன்றாகும். தமிழ் வாழ்க! ஜான் : (முடிவுரை) அன்புமிக்க தமிழ் மாணவர்களே! நீங்கள் நிகழ்த்திய உணர்ச்சி மிக்க பாட்டு, ஆட்டம், பேச்சு இவற்றால் நான் பெருமகிழ்வடைகிறேன். நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே. தமிழ் தனிமையும், இனிமையும், இயல்பும், பழமையும் உடைய மொழி என்பது ஆராய்ச்சி மிக்க அறிஞர்கள் கண்ட முடிவு. தமிழர் நாகரிகம் உலக முதல் நாகரிகம் என்பதும் உண்மையே. அன்பு, அருள் மானம், வீரம், கொடை முதலிய உயர் குணங்களின் உறைவிடம் தமிழர்கள் என்பது நான் நேரில் கண்ட உண்மை. விருந்தோம்பல் என்பது தமிழர்களுக்கே உரிய தனிப்பெருங் குணம். இன்றுள்ள உங்கள் நிலை இரங்கத்தக்க நிலைதான். உங்கள் தமிழுணர்ச்சி, தமிழினவுணர்ச்சி வெற்றி யடையும் என நம்புகிறேன். மறுமுறையும் உங்களுக்கு எனது நன்றி. கிளியோ மாணவர்களுக்குப் பரிசு வழங்கல். தலை. ஆ : இத் தமிழ்த்திருநாள் கொண்டாட்டத்தைச் சிறப்புடன் நடத்திக் கொடுத்த தலைவருக்கும், பரிசு வழங்கிய அம்மையாருக்கும், எங்கள் அழைப்பிற்கிணங்கி வந்து கொண்டாட்டத்தைச் சிறப்பித்த பொது மக்களுக்கும் பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கும் எனது நன்றி.  திரை. 22. ஆ. வேலனும், ஒருவனும். வேலன் ஹேட், பூட்ஸ், டை முதலியவுடன். வேலன் : மிஸ்டர் ஜான் போகப்போகிறார். இனிப் பழைய கருப்பனே கருப்பன் எனப் பட்டர் வைத்ததுதான் சட்டமாகப் போகிறது. யாரு வந்தாத்தா நமக்கென்ன போறது? ஆனா, நாட்டிலே பழையபடி கொள்ளையும் கொலையும் வந்துவிடுமே. நம்ம தமிழரசி பாடு பழைய பாடாகிவிடுமே என்பதுதான். ஒரு : என்னய்யா! தனியாக? வேலன் : ஒன்னுமில்லே மிஸ்டர், நம்ம ஜான் அவுங்க நாட்டிலிருந்து இவரை வரச்சொல்லி லெட்டர் வந்திருக்குதாம். அவர் போகப் போராறாம். நாளைக்கு அரண்மனையிலே டீப்பார்ட்டி அவருக்கு. அதைப்பற்றித்தான்?........... ஒரு : போனாத் திரும்பி வருவாரோ இல்லையோ? வேலன் : வரமாட்டாராம். ஒரு : நல்லவராச்சே. அந்த இடத்துக்கு ஆரு. வேலன் : ஆரு வருவா? அவாதா வருவா, மிஸ்டர் பட்டர்! ஒரு : நம்ம இளவரசர் இருக்க அந்தப்பாவி என்னத்துக்கு வாரான் மறுபடியும், நாட்டைக் கெடுக்கவா? வேலன் : என்னமோ தெரீலே. அது அரண்மனை விஷயம், நமக்கெதற்கு!  திரை. 23. அ. ஜானுக்குப் பிரிவுரை எல்லோரும் சிற்றுண்டி யுண்ணல். தென் : பெரியோர்களே! நண்பர் ஜான் இவ்வளவு நாளாய் நம்மிடை இருந்து நமக்கு வேண்டிய உதவி புரிந்து வந்தார். அவரால் நம் நாட்டுக்கு எவ்வளவோ நன்மைகள் ஏற்பட்டுள்ளன. அவருடைய தொண்டு நம்மால் என்றும் மறக்க முடியாததொன்றாகும். அவருடைய தொடர்பு நமக்கு என்றும் இருக்குமாக. தோழியர் கிளியோ அம்மையார் செய்த தொண்டு அதைவிடப் பெரிது. அம்மையாரின் தொண்டு என்றும் நம் நாட்டுக்குத் தேவையே. உங்கள் சார்பில் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக. ஜான் : தமிழ்ப் பெரியோர்களே! உங்கள் மன்னர் எங்களை அளவுக்கு மீறிப் புகழ்ந்து விட்டனர். அப்படி யொன்றும் நாங்கள் செய்துவிடவில்லை. எங்கள் கடமையைச் செய்தோம். நாங்கள் உங்களை என்றும் மறக்கமாட்டோம். நமது நட்பு நிலவட்டும். நமக்குள் இருந்த பழங்கால வணிகத் தொடர்பு மீண்டும் உண்டாக. நாங்கள் உங்களிடம் விடைபெற்றுக் கொள்கிறோம். கிளி : தமிழ் மக்களே! நாங்கள் எங்கள் கடமையைச் செய்தோம். "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்பது தமிழ்ப் பெரியார் வாக்கல்லவா? நாங்கள் உங்களை என்றும் மறவோம். தமிழ் நாட்டை எங்கள் தாய்நாடு போலவே எண்ணுகிறோம். நாங்கள் வருகிறோம். (தமிழரசி கையைப் பிடித்து) தமிழரசி! நான் போய் வரட்டுமா? உன்னை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். தமி : உன் அன்பை நான் என்றும் மறவேன். அடிக்கடி இங்குவா. கிளி : வருகிறேன். இந்தா, என் நட்புக்கு அடையாள மாக. (மோதிரம் விரலில் அணிதல்)  திரை. 23. ஆ. ஆரியா வீடு ஆரியா சோர்வுடன் படுத்திருத்தல். பட்டரும், தென்னவனும் வருதல். தென் : உடம்பு எப்படி இருக்கிறது? ஆரியா : (எழுந்து இருந்து) சுமாராக இருக்கிறது. இந்திரா! காப்பி கொண்டு வந்து கொடு மாமாவுக்கு. (இந்திரா முக்காடுடன் கொண்டுவந்து கொடுக்க) தென் : யாரிந்தப் பெண்? பட்டர் : இவ நம்ம ஆரியா அண்ணம் பொண்ணு. நம்ம பேத்திதான். வடவன் வளர்ப்புப் பெண். சின்னதிலிருந்து அரண்மனையிலேதா வளர்ந்து வர்ரா. கொஞ்ச நாளா இங்குதான் இருக்கா. தென் : ஓகோ! நான் பார்க்கவில்லை. ஆரியா : இங்கு வந்தாத்தானே! பட்டர் : வராதெங்க போராள். அவுங்க அம் மாமியை விட நன்னா ஆடுவா, பாடுவா. தென் : இங்கவா! ஏன் முக்காடு! (முக்காட்டைப் பிடித்து இழுத்தல். இந்திரா கையால் பிடித்துக் கொள்ளல் கடைக்கண் பார்வை) பட்டர் : எங்க நாட்டு வழக்கம். இந்திரா! வீணை யெடுத்துண்டு வந்து பாடடி மாமா கேக்கிட்டும். தென் : எங்கே பாடு. (இந்திரா பாடுதல்) 15. பாட்டு ஜெக தாம்பிகையே ஆதிபர மேஸ்வரிநீயே எ-மெ. மன வாதனையா லுடல்மெலிந்து வாடுவதேனோ! மலி வானமதி யேநிலவைக் கூடுவதேனோ! காதலெனும் பொருளறியாக் கலைஞனுமுண்டோ? கலைமதியா ரியல்பையறி யாதவள்பெண்டோ? அலை யார்கடலில் போய்விழுமுன் அவனையடாயோ? அனி யாயம்பிடி வாதமுனை யணுகவிடாயோ? புதி யாரைமதி யாமையுந்தன் பேருக்கடாதே! மதி யாதெனைப்போய் வாவெனநீ யோதப்படாதே. தென் : அவுங்க அத்தையைவிட நல்லாப்பாடராள். அதே வீட்டுப் பெண்தானே! பட்டர் : தாங்கள் புதுசு. இன்னு நல்லாப்பாடுவா. தென் : பழையவ ஆய்விடராள். (காமப்பார்வை)  திரை. 23. இ. திரைவெளி கிரு : சேஷய்யர்வாள். பார்த்தீளா நம்ம பட்டர் சாமர்த்தியத்தை. சேஷ : என்னது? கிரு : ஜான் போனானோ இல்லியோ, நம்ம இந்திராவை மன்னனுக்கு அறிமுகப்படுத்தி வெச்சுட்டா. இந்திரா என்ன ஆரியாவுக்கிளைத்தவளா? சேஷ : மந்திரத்தாலா மாங்கா விழும்? பொழச்சம் போங்காணும்.  திரை. 24. அ. தென்னவனும், செழியனும். செழி : இந்திரா இனி இங்கு இருக்கக் கூடாது. தென் : இருந்துவிட்டுப் போகிறாள் நமக்கென்ன? செழி : நமக்கென்ன, நமக்கென்ன என்றுதானே நாடு குட்டிச் சுவராச்சு. இவளென்ன? அவளுமே இனி இங்கு இருக்கக் கூடாது. தென் : இந்திரா யார் தெரியுமா? வடவன் வளர்ப்புப் பெண். வடவன் உறவுக்கு அவள் இங்கு இருப்பது நல்லது. செழி : போதும் வடவனுறவு! அவள் மட்டும் இங்கு இருக்கக்கூடாது. தென் : இருந்தால்? செழி : அடித்துத் துரத்துவேன். தென் : உன்னுடைய ஆட்சிக் காலத்தில் துரத்தலாம். வெளியோ போ. செழி : சரி. (போதல்)  திரை. 24. ஆ. ஊர்க்கூட்டம் மதி : தமிழ் வாழ்க! என்னருமைத் தமிழ் மக்களே! நாம் ஒரு நெருக்கடியான நேரத்தில் இங்கு கூடியிருக்கிறோம். ஆரியா வந்தாள்; தமிழரசி யாருமற்றவளானாள். மக்களுக்குள் ஏற்றத் தாழ்வு உண்டானது. ஒற்றுமை குலைந்தது. நாடு ஏழ்மை யானது. கொள்ளையும் கொலையும் தலைவிரித் தாடியது. ஜான் வந்தான். அமைதி நிலைவியது. மக்களுக்கு ஒருவாறு கண்விழிப் பேற்பட்டது. ஜான் மனைவி கிளியோ நல்லவள் தான். ஆனாலும், தமிழரசி பழைய நிலைமையை அடையவில்லை. அவர்கள் போனார்களோ இல்லையோ இந்திரா வந்திருக்கிறாள். ஒருத்தி போனால் ஒருத்தி வருகிறாள். இவள் ஆரியாவின் அண்ணன் மகள். வடவன் வளர்ப்புப் பெண்ணாம். இவளை இங்கு இருக்க விட்டால் ஆரியாவால் கெட்டதினும் ஆயிர மடங்கு கெட்டுவிடு வோம். இந்திரா இங்கிருந்தால் தமிழரசி இறந்தே விடுவாள். அரசனிடம் நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். வடவனுற வுக்காக அவள் இங்கு இருக்கவேண்டுமாம். வடவனுறவு நமக் கெதற்கு? அவருறவால் தானே இப்படி யானோம்? நன்கு எண்ணிப் பார்த்து முடிவு கூறுங்கள். செழி : நான் எவ்வளவு சொல்லியும் என் தந்தை கேட்க வில்லை. உன் ஆட்சிக் காலத்தில் பார்த்துக் கொள் என்று விட்டார். உங்கள் முடிவையும் உதவியையுந்தான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பழை : இந்திரா என்ன? ஆரியாவும் இனி இங்கு இருக்கக் கூடாது. ஒருபெண் : இன்றே அவ்விருவரையும் நாட்டை விட்டோட்டுவோம். தமிழரசிக்காக நாங்கள் போரிடத் தயார். ஒரு : இப்போதே புறப்படுங்கள். அவளை வெளி யேற்றிவிட்டு மறுவேலை பார்க்கலாம். கூட்டம் : புறப்படுங்கள், புறப்படுங்கள்! மதி : பொறுங்கள்! பொறுங்கள்!! இன்னொரு முறை செழியனுடன் சிலர் சென்று அரசனுக்குச் சொல்லிப் பார்க்க லாம். கேட்கவில்லையானால் மேற்கொண்டு பார்க்கலாம்.  திரை. 24. இ. திரைவெளி செழியன் தலைமையில் கொடிபிடித்துக் கொண்டு இந்திரா ஒழிக! அடக்குமுறை ஒழிக! என முழக்கிக் கொண்டு போதல். போலீஸ் : அங்கு போகக்கூடாது. செழி : போவோம். போலீஸ் : உங்களைக் கைது செய்திருக்கிறோம். அரசன் கட்டளை. செழி : சரி. (போலீசார் கொண்டு போதல்)  திரை. 25. அ. சிறைச்சாலை செழியன் சிறைக்குள்ளிருந்து, செழி : என் அன்னைக்குக் கேடு சூழும் அயலாள் இங்கு இருக்கக் கூடாது என்றதற்கா இந்நாட்டை ஆளப்பிறந்த எனக்குச் சிறைச்சாலை? இந்த அடக்குமுறை ஆட்சி எத்தனை நாளைக்கு நிற்க முடியும்? தந்தையின் ஆட்சியில் மைந்தனுக்குச் சிறை! செய்த குற்றமென்ன? தாய்த்தொண்டு! தாய்க்குத் தொண்டு செய்வோரைச் சிறையிடப்படும் நிலைக்கு வந்துவிட்டது தமிழ் நாடு! இந்நாட்டில் தமிழராட்சி நடக்கிறதா? அல்லது வடவராட்சி நடக்கிறதா? தாயின் குறை தீர்க்கக்கூட மகனுக்கு உரிமை யில்லையா இந்த நாட்டில்? அன்றுதான் நான் சிறுவனாக இருந்தேன். ஆளும் பருவமுற்றயான், என் அன்னைக்குப் போட்டியாக ஒருத்தி வருவதையும் பார்த்துக் கொண்டா இருக்க வேண்டும்? என்னருமைத் தமிழன்னையே! உன்னால், உனக்குத் தொண்டு செய்த குற்றத்திற்காக, மகன் தாய்க்குச் செய்த தொண்டுக்காகச் சிறையிடப்பட்டேன். ஆம், என் தாய்க்குத் தொண்டு செய்த குற்றத்திற்காக என் தந்தையால் சிறையிடப் பட்டேன். அதுவும், தமிழ் மகனாகிய நான், தமிழ்த் தாய்க்குத் தொண்டு செய்ததற்காக! இது குற்றந்தானா? தமிழ் மக்களே தீர்ப்புக் கூறட்டும். வெளித்திரை விழுதல் பெருங்கூட்டம். அடக்குமுறை ஒழிக! இந்திரா ஒழிக! தமிழ் வாழ்க! என்ற முழக்கத்துடன் போதல். சிறைச்சாலை சிறையை உடைத்துச் செழியனை விடுதலை செய்தல். திரை விழுதல் கூட்டம் - அந்த மூவரையும் வாலறுத்து வடக்கே துரத்த வேண்டும் எனப் போதல்.  திரை. 25. ஆ. ஆரியா வீடு ஆரியா சோர்ந்து படுத்திருத்தல். இந்திரா தலையைக் குனிந்தபடி உட்கார்ந்திருத்தல். பட்டர் : (பரபரப்புடன் வந்து) எழுங்கள், எழுங்கள். இனி நாம் இங்கிருக்கக் கூடாது. பெருங்கூட்டம் வருகிறது. (மூவரும் மூட்டை முடிச்சுடன் ஓடுதல்) திரை. 25. இ. திரைவெளி. பட்டர் : நாம் பல நாட்கள் அரும்பாடுபட்டுக் கட்டிய கோட்டை ஒரு நொடியில் தகர்ந்து விட்டது. இனித் தமிழர்களை ஏமாற்ற முடியாது. அவர்கள் இனவுணர்ச்சி பெற்றுவிட்டனர். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தோம். இந்நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கினோம். இனி வஞ்சக நெஞ்சோடு இங்கு வாழ முடியாது. தமிழர் பண்பாடே பண்பாடு! எல்லா ஆதிக்கமும் நம்மவர் கையிலிருந்தும் தமிழர்களை வெல்ல முடியவில்லை. எல்லாம் அந்த மதிவாணரின் வாய் வன்மை! தமிழ்நாடே! நாங்கள் விடை பெற்றுக் கொள்கிறோம்.  திரை. 26. அ. கொலு மண்டபம் செழியன் அரியணையில் இருத்தல். தமிழரசி அலங்காரத்துடன் இருத்தல். தென் : பெரியீர்! அறியாமையைப் பொறுத்தருள வேண்டும். மதி : போனதைப் பற்றி வருந்தாதீர். தென் : தமிழ்மக்களே! நான் உங்களுக்குச் செய்த கொடுமை களுக்காக வருந்துகிறேன். மதி : தென்னவ! வடவர் சார்பால், நம்முடன் சேராமலிருந்த உன் தம்பிமார் மூவரும் நம்முடன் சேர்ந்து கொண்டனர். (மூவரும் எழுந்து ஆம் எனக் குறிப்பு) குடி மக்களின் உரிமை பெற்ற முடியாட்சியாகிய பழந் தமிழாட்சிக் கறிகுறியாக, மக்கள் தலைவனாகிய பழையன் முடிசூட்டட்டும். (பழையன் முடிசூட்டல்) மொழியின் அடிப்படையில் நமது பண்பாடு அமைந்திருப்பதால் நம் தாய்மொழியாந் தமிழ் மொழியைப் போற்றி வளர்த்துப் பொலிவுடன் வாழ்வோமாக. தமிழ் வாழ்க!  தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் (1948) முன்னுரை எதிர் காலக் குடிமக்களாகவும், ஆள்வோராகவும் திகழ விருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு, அவர்தம் நாடு, மொழி, இனம் இவற்றின் பழைமை, பெருமை, சிறப்பு என்பனவற்றை அறிவுறுத்துதல் இன்றியமையாமை என்பது அறிஞர் கருத்து. அருந்தமிழ் விருந்து என்னும் இந்நூல் அங்ஙனம் அமைந்ததே யாகும். இதனைக் கற்கும் தமிழர்கள், பழந்தமிழ் நூல்கள் இன்ன என்பதை ஒருவாறு அறிந்து, அவற்றைக் கற்றறிய ஆர்வங் கொள்வதோடு தம் முன்னோரின் நயத்தக்க நாகரிக நல்வாழ்வின் சிறப்பினை அறிந்தின்புற்று, தாமும் அன்னார் போல் வாழ முயலுவர் என்பதில் ஐயமில்லை. இந்நூல் சிறிதளவு தமிழ் படித்தவர்களுக்கும் விளங்கும் வண்ணம் எளிய இனிய தனிச் செந்தமிழ் நடையில், இலக்கியச் சுவையுடன் எழுதப் பெற்றுள்ளது. தமிழ் வளர்ச்சியில் ஆர்வமும் அக்கறையும் உள்ள அறிஞருலகம் இந்நூலை வரவேற்று, அனை வர்க்கும் பயன்படுமாறு பரவச் செய்யுமாறு வேண்டுகிறேன். பவானி அன்புள்ள, 15 - 10 - 58. குழந்தை. 1. பழந்தமிழ் நாடு 'இது எங்கள் ஊர்ப் பழக்கம், இது எங்கள் நாட்டு வழக்கம்' என, ஒவ்வொருவரும் தாம் பிறந்த ஊரையும் நாட்டையும் 'எங்கள் ஊர், எங்கள் நாடு' என்று அவ்வளவு உரிமையோடு பெருமையாகக் கூறிக் கொள்கின்றனர். இது மக்களின் இயல்பு. ஆடு, மாடு, பூனை, நாய் முதலிய விலங்குகளும் புறா, கோழி முதலிய பறவைகளுங்கூட வளர்ந்த இடத்தின்மீது மிகுந்த பற்றுடையனவாக உள்ளன. இவை வேறு இடத்தில் கொண்டு போய் விடப்பட்டால் தம் சொந்த இடத்திற்கு வந்து விடுகின்றன அல்லவா? என்னே பிறந்த இடத்தின் பெருமை! பறவை, விலங்கு முதலிய ஐயறிவுயிர்களே இங்ஙனமாயின், ஆறறிவுடைய மக்கள் தம் சொந்த ஊரின்மீதும், சொந்த நாட்டின் மீதும் பற்றுக் கொள்வதில் வியப்பென்னை? 'சொந்த ஊர்ப் பற்றுத் துறவிக்கும் உண்டு'என்பது பொருளமைந்த பொன்மொழியேயாகும். ஊரூராக இரந்துண்டு திரியும் இரவலரும் தாம் பிறந்த ஊரைப் பற்றி, 'அது எங்களூர்'என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வதை இன்றுங் கேட்கிறோம். அத்தகைய பெருமையுடையது பிறந்த இடத்துப் பற்று! " பெற்ற தாயும் பிறந்தபொன் னாடும் நற்ற வானிலும் நனிசிறந் தனவே." எனப் பெற்று வளர்த்த அருமைத்தாயோடு ஒப்ப, பிறந்து வளர்ந்த நாட்டை உயர்த்துப் பெருமைப் படக் கூறுதல் நாட்டுப் பற்றின் தூண்டுதலேயாகும். பிறந்த நாட்டைத் 'தாய் நாடு' என்பதும் இது பற்றியே யாகும். ஒவ்வொரு நாட்டினரும் தமது நாட்டின் பழைமை, பெருமை, வளம், மேன்மை முதலியன பற்றிப் பெருமையாகக் கூறிக்கொள்வர். அத்தகைய சிறப்புடைய நாடு தங்கள் நாடு எனக் கூறிக் கொள்ளுவது அவர்தம் ஆவல். ஒரு நாட்டு மக்களின் அத்தகைய ஆவலே அந்நாட்டின் முன்னேற்றத்திற்கும், அந்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும், உயர் வாழ்விற்கும் காரணம் எனலாம். அங்ஙனமே, தமிழ் இளைஞர்களும் தங்கள் தாய் நாட்டின் பழைமை, பெருமை, வளம், மேன்மை முதலியன பற்றி அறிந்து, நாட்டுப் பற்றுடையராகித் தாய் நாடாம் தமிழ்நாட்டை முன்னேற்றமுறச் செய்ய விரும்புதல் இயல்பே. தமிழ் நமது தாய் மொழி. தமிழ் பேசுவதால் நாம் தமிழர் எனப் பெயர் பெற்றோம். தமிழ் வழங்குவதால் - தமிழ் பேசப்படுவதால் - நம் நாடு தமிழ்நாடு எனப் பெயர் பெற்றது. தமிழ் நாடு - தமிழகம் எனவும் வழங்கப் பெறும். தமிழ்நாடு - தமிழகம் என்னும் வழக்குத் தொன்று தொட்ட வழக்காகும். 'தண்டமிழ் வேலித் தமிழ்நாடு' என்பது பரிபாடல்.1 'இமிழ் கடல் வேலித் தமிழகம்' என்பது பதிற்றுப்பத்து.2 தமிழ் அகம் - தமிழ் வழங்கும் இடம். இனி, தமிழ் என்னும் சொல் - தமிழ் மொழியைக் குறிப் பதோடு, தமிழ் நாட்டையும், தமிழ் மக்களையும் குறிப்பதும் (தொன்று) தொட்டு வரும் மரபேயாகும். 'தென்றமிழ்ப் பாவை'3 - தென் தமிழ் நாட்டுப் பாவை எனத் தமிழ் நாட்டையும், 'அருந்தமிழ் ஆற்றல் அறியாராகி'4 - தமிழ் ஆற்றல் - தமிழரசர் ஆற்றல் எனத் தமிழ் மக்களையும் குறித்தலையறிக. இங்ஙனம் ஒருசொல் - ஒரு மொழியையும், அம்மொழி பேசும் மக்களையும், அம்மக்கள் வாழும் நாட்டினையும் குறித்தல் தமிழ் ஒன்றற்கே உரிய தனிச்சிறப்பாகும்; தனியுடைமை எனினும் பொருந்தும். இதனாற்றான், 'தமிழ் வாழ்க என்பது - தமிழ் மொழி வாழ்க, தமிழ் மக்கள் வாழ்க, தமிழ் நாடு வாழ்க என்பதாகும்' என்றார் ஒரு புலவர். வடக்கே வேங்கட மலையையும், தெற்கும் கிழக்கும் மேற்கும் கடலையும் எல்லையாக உடையது பழந்தமிழகம். தெற்கே குமரியாற்றை எல்லையாகக் கொண்டிருந்த காலமும் உண்டு. 'வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்' என்பது தொல்காப்பியப் பாயிரம். தமிழ் நாடு 'தமிழுலகம்' என்று வழங்கியதும் உண்டென்பது இதனால் தெரிகிறது. ஆனால், தமிழ் மக்களின் பயக்குறையால் 'வடக்கே வேங்கட மலையை எல்லையாக உடைத்தாயிருந்தது' என, இறந்த காலத்தால் கூறி இரங்கும்படி, இன்று தமிழ்நாடு - வடக்கும் மேற்கும் முறையே ஆந்திர கன்னட மலையாள நாடுகளையும் தெற்கும் கிழக்கும் மட்டும் பழையபடியே கடலையும் எல்லையாக உடையதாகி, "ஆந்திரங்கன் னடம்வடக்கில் மேற்கில்மலை யாளம் அலைகடல்மற் றிருபுறம் இலகுதமிழ் நாடு." எனப் பாடி அமையும் நிலையை அடைந்து விட்டது. தொன்று தொட்டு 'வடவேங்கடம் தென்குமரி', 'வேங்கடம் தீம்புனல் பௌவம்' 'குணகடல் குமரி குடகம் வேங்கடம்'எனப் பெருமையாகக் கூறிவந்த தமிழ் நாட்டின் வடக்கெல்லை யாகிய வேங்கடம், இன்று ஆந்திர நாட்டின் உரிமையாகி விட்டது. அங்ஙனமே, பதிற்றுப்பத்தும், சிலப்பதிகாரமும் தோன்றிய பழந்தமிழ்ச் சேரநாடு, இன்று தமிழ் நாட்டினின்று பிரிந்து தனி மலையாள நாடாகி விட்டது; தமிழர், 'எங்கள் பழந் தமிழ்நாடு' என்று நினைக்கவும் முடியாத வேற்று நாடாகிவிட்டது அது. தமிழ்நாட்டுக் கடல் வாணிகத்தின் நிலைக்களனாகத் திகழ்ந் திருந்த குடகடல், இன்று மலையாள நாட்டின் சொத்தாகி விட்டது. வடக்கும் மேற்கும் மலையும் கடலுமாகிய இயற்கை எல்லையை இழந்து, பிற நாடுகளை எல்லையாகக் கூறிக்கொள்ளும் நிலையில் உள்ளது இன்று நம் தமிழ்நாடு. பழந்தமிழ் நாடு வேங்கடத்தை வடக்கெல்லையாகக் கொண்டிருந்த தெனினும், 'குமரியொடு வடவிமயத் தொரு மொழிவைத் துலகாண்ட சேரலாதன்'1 'வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை யாண்ட தென்னவன்'2 'பொன்னிமயக் கோட்டில் புலி பொறித்து மண்ணாண்டான் மன்னன் வளவன்'1 என்னும் இளங்கோவடிகள் கூற்றால், பழந்தமிழ் வேந்தர்களின் ஆட்சி, வேங்கடத்தின் வடபாலும் நடந்து வந்ததென்பதும் விளங்கும். நனி மிகு பழங்காலத்தே தமிழர், பனிமலை காறும் பரவியிருந்தனர் என்பது, சிந்துவெளி ஆராய்ச்சியால் தெரிகிறது. இனி, தமிழ்நாட்டின் தெற்கெல்லையான தென்பெருங் கடல், நிலமாக இருந்த காலமும் உண்டு. பன்முறை ஏற்பட்ட கடல் கோளால் அந்நிலப் பரப்புக் கடலுள் மூழ்கியது. அந்நிலப் பரப்பு, இன்றுள்ள தென் கடற் கரையின் தெற்கில், அதாவது தமிழ் நாட்டின் தெற்கில் ஏறக்குறைய ஆயிரத்தைந் நூறு கல் பரவியிருந்தது. அந்நிலப் பரப்பு - குமரி மலை, மணிமலை, பன்மலைத் தொடர் முதலிய பல பெரிய உயர்ந்தோங்கிய மலைகளும், குமரியாறு, பஃறுளியாறு முதலிய பல வற்றாத பேராறுகளும் வளஞ்செய்ய, 'நீர்மலிவான்' என, நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் உடையதாய், மக்கள் வாழ்க்கை முறைக்கேற்ற நன்னாடாக விளங்கிற்று. இன்றுள்ள கன்னியாகுமரி முனைக்கு இருநூறு கல் தெற்கில், குமரிமலையில் தோன்றிக் கிழக்கு நோக்கிக் பாய்ந்தது குமரியாறு. குமரி யாற்றுக்குச் சுமார் எழுநூறு கல் தெற்கில் பஃறுளியாறு என்னும் பேராறு பாய்ந்தது. அது, பன்மலைத் தொடரில் தோன்றிய பல ஆறுகள் ஒன்றுகூடிய பேராறாகும். இவ்விரண்டாறுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு - பெருவளநாடு எனப்படும். இதன் பெயரே இது மிக்க வளம் பொருந்திய நாடு என்பதற்குச் சான்று பகரும். 'பஃறுளி என்னும் ஆற்றிற்கும், குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவான் என மலிந்த ஏழ் தெங்கநாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ் முன்பாலை நாடும், ஏழ் பின்பாலை நாடும், ஏழ் குன்ற நாடும், ஏழ் குணகரை நாடும், ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும் நதியும் பதியும், தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலான்.'1 என்னும் அடியார்க்கு நல்லார் கூற்றால், அப்பெருவள நாடு, எழுவகைப்பட்ட ஏழேழு - நாற்பத்தொன்பது உள் நாடுகளாகப் பகுக்கப்பட்டிருந்த தென்பதும், அதையடுத்து, அதன் வடமேற்கில் குமரி, கொல்லம் முதலிய பல மலை நாடுகள் இருந்தன வென்பதும் விளங்குகிறது. 'தடநீர்க் குமரி' என்பதால், அக்குமரி மலை, மேற்குத் தொடர்ச்சி மலைபோல் மிக்க நீர்வளம் பொருந்திய தென்பது தெளிவு. மேற்குத் தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியேதான் குமரிமலை, பன் மலைத் தொடர் முதலிய அப்பெருவள நாட்டின் மேற்கில் இருந்த மலைகளெல்லாம். மலையாள நாட்டில் உள்ளது கொல்லம் என்பது நினைவுகூரத் தக்கது. 'நதியும் பதியும்' என்பதால், பஃறுளி, குமரி யல்லாத வேறு பல ஆறுகளும் அந்நாட்டில் ஓடின என்பது தெரிகிறது. பஃறுளி யாற்றின் தென்பால், தென்கடல் வரைச் சுமார் ஐந்நூறு கல் பரப்புடைய நிலம் இருந்தது. இது, தென்பாலி நாடு எனப் பெயர் பெறும். பெருவள நாட்டின் அல்லது பஃறுளி யாற்றின் தென்பால் இருந்தமையால் அது இப் பெயர் பெற்றது போலும். 'தென்பாலி முகத்திற்கு வடவெல்லை யாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும்'2 என்னும் அடியார்க்கு நல்லார் உரை இதனை வலியுறுத்தும். தென்பால் உள்ளது தென்பாலி. மாடலன் என்பான், செங்குட்டுவனிடம், 'குமரியம் பெருந் துறை ஆடி மீள்வேன்'3 எனக் கூறுதலும், 'குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி'4 என்பதும், பஃறுளி யாறு கடல் கொள்ளா முன், அப்பெருவள நாட்டையாண்டு வந்த முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியனை, 'எங்கோ வாழிய குடுமி . . . . . . நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே'5 என, நெட்டிமையார் என்னும் புலவர் வாழ்த்துதலும் - குமரி யாறும், பஃறுளி யாறும் இருந்தமைக்குச் சான்றாகும். பெருவள நாட்டு அரசனான செங்கோன் என்பான் மீது, அந்நாட்டுத் தனியூர்ச்சேந்தன் என்னும் புலவர் பாடிய செங் கோன்றரைச் செலவு என்னும் பழந்தமிழ் நூல், பெருவள நாடுண்மைக்குச் சான்று பகரும். பெருவளம் தென்பாலி என இரு கூறுபட்ட இத் தென்னாட்டின் விளக்கத்தைக் குமரிக் கண்டம் என்னும் நூலில் விளக்கமாகக் காணலாம். தென்பாலி, பெருவள நாடுகள் அமைந்த இப்பெருநிலப் பரப்பை, மேனாட்டு ஆராய்ச்சி அறிஞர்கள் லெமூரியா என்று பெயரிட்டழைத்தனர். இது, அந்நிலப் பகுதியில் வாழ்ந்த லெமூர் என்னும் ஒருவகைப் பேருயிரின் பெயர் கொண்டு இடப் பெற்ற பெயராகும். தமிழர்கள் இதைக் குமரிக் கண்டம் என அழகிய பெயரிட்டழைத்தனர். இது, பழைய குமரியாற்றின் நினைவாகக் குமரி முனை எனப் பெயரிட்டிருப்பது போன்று இட்டப் பெயராகும். அயல் நாட்டர்க் கடிமைப்பட்டுக் கிடந்த நாம் இதுவரை நமது பழம்பெருமையை அறிந்து இன்புறும் நினைப்பு இல்லாத நிலையில் இருந்தோம். இனி நமது பழைமையை - பழைய வரலாற்றினை - அறிந்து இன்புறுவது தமிழ் மக்களாகிய நமது நீங்காக் கடமை யுளொன்றாகும். ஓர் இனத்தின் பழைய வரலாறு, அறிந்து இன்புறுவதோடு, அவ்வினத்தின் முன்னேற்றத்திற்கும் பேருதவியாகும். பஃறுளி யாற்றின் கரையிலிருந்த மதுரை என்பது அந் நாட்டின் தலைநகராகும். அத்தொன் மதுரையிலிருந்து அத் தொன்னாட்டினை யாண்டு வந்த பாண்டிய மன்னர்கள், சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்தனர். இதுவே முதற் சங்கம் ஆகும். அன்று ஏற்பட்ட பெயரே நம் தங்கத் தமிழ்மொழிக்குச் 'சங்கத் தமிழ்' என்னும் பெயர். ஒரு பெரிய கடல்கோளால், அத்தென்பாலி நாடும் பெருவள நாடும் கடலுக்கிரையாயின. பஃறுளியாற்றையும், அதன் கரை யிலிருந்த மதுரையையும் கடல் விழுங்கி ஏப்பம் விட்டது. அதன் பின்னர், அக்கடல்கோள் நிகழ்ந்த காலத்தி லிருந்த பாண்டியன், வடக்கே வந்து, குமரியாற்றங் கரையில் ஒரு நகரமைத்து அதில் குடியேறினான். இதற்கும் மதுரை என்று பழைய நகரின் பெயரையே வைத்தான். இதனைக் கபாடபுரம் என்பர். 'கபாடம்'என்பது தமிழ்ச் சொல் அன்மையால் இது ஆராய்ச்சிக் குரியது. இம் மதுரையில் நிறுவிய சங்கமே இடைச்சங்கம் ஆகும். "பஃறுளி யாற்றொடு பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள." - (சிலப். 11 : 19 -20) என்பது சிலப்பதிகாரம். 'கொடுங்கடல்' என்பது, அக்கடல் பற்றி இளங்கோவடிகளுக்கிருந்த வருத்தத்தைப் புலப்படுத்து வதாகும். அதன் பின்னர் ஏற்பட்ட ஒரு கடல்கோள் குமரியாற்றையும் விழுங்க, அப்போதிருந்த பாண்டியன், வையை யாற்றங்கரையில் இப்போதுள்ள மதுரையில் குடியேறி, பழையபடி சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்தான். இதுவே கடைச் சங்கம் ஆகும். மணிமேகலை காலத்தே ஏற்பட்ட ஒரு கடல்கோளால் காவிரிப்பூம்பட்டினம் கடலுக்கிரையானதாக மணிமேகலை கூறுகிறது. அக்கடல் கோளினாற்றான் எஞ்சியிருந்த அத்தென்னிலப் பகுதியும் கடலுள் மூழ்கித் தமிழ் நாட்டின் தெற்கெல்லையும் கிழக்கெல்லையும் இன்றுள்ள நிலையை அடைந்துவிட்டன. தமிழ் நாடு, மலையும் காடும் வயலும் கடற்கரையும் பொருந்திய நாடு. மலை - குறிஞ்சி நிலம் எனவும், காடு - முல்லை நிலம் எனவும், வயல் - மருத நிலம் எனவும், கடற்கரை - நெய்தல் நிலம் எனவும் பெயர் பெறும். குறிஞ்சி முதலிய நிலங்களில் வாழ்ந்த மக்கள் முறையே குறிஞ்சி நில மக்கள், முல்லை நில மக்கள், மருத நில மக்கள், நெய்தல் நில மக்கள் எனப் பெயர் பெறுவர். இவர்கள் மலைவளமும் கான்வளமும் வயல்வளமும் கடல்வளமும் கொண்டு இனிது வாழ்ந்து வந்தனர். இதனாற்றான் தமிழகம் நானிலம் எனப் பெயர் பெற்றது. இனிப் பாலை நிலம் என்பதோ எனின், பாலை என்று ஒரு தனி நிலம் இல்லை. பாலைவனம் என்பது பாலை நிலம் அன்று. பாலைவனம் தமிழ் நாட்டில் இல்லை. முதுவேனிற் காலத்தே முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் வறண்டு, மரஞ்செடி கொடி களெல்லாம் காய்ந்து, நடப்போர் அடியைச் சுடும் வளம் பிரிந்த அந்நிலையே பாலை நிலம் எனப்படும். பழந்தமிழ் நூல்களில் இந்நிலங்களின் சிறப்பினைப் பரக்கக் காணலாம். தமிழகத்தில் ஆட்சி முறை என்று ஏற்பட்டதோ அன்றிருந்து தமிழகம் முடியுடை மூவேந்தர் என்று சிறப்பிக்கப்படும் சேர, சோழ, பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. அதனால், பழந் தமிழகம் - சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. இம்மூவேந்தரை வண் புகழ் மூவர் என்பர் தொல்காப்பியர். தொல்காப்பியர் கி. மு. மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட இடைச்சங்க காலத்தவர் என்பது ஆராய்ச்சி அறிஞர்கள் முடிபாதலின், இம்மூவரசர் மரபு அதற்குப் பன்னெடுங் காலத்திற்கு முற்பட்ட தென்பது மிகைபடக் கூறுதலாகாது. அதாவது பெருவளநாடு கடல் கொள்ளு முன்னரே இம்மூவரசர் மரபு இருந்து வந்ததாகும். இம்மூவருள் பாண்டியர் மரபே பழைய மரபாகும். பண்டையர் என்பதே பாண்டியர் எனத் திரிந்தது போலும். பாண்டியர் மரபி லிருந்து பிரிந்தவையே சோழர் மரபும் சேரர் மரபும் ஆகுமென்பர். பாண்டியர் குமரியாற்றின் தென் பகுதியை ஆண்டு வந்தபோது, அதன் வடக்கேயுள்ள தமிழ் நாட்டைச் சோழரும் சேரரும் ஆண்டு வந்தனர். தென்னாடு கடல் கொண்ட பின் வட பகுதி மூன்றானது. இம்மூவரசரும், பழந்தமிழ்ப் பெருங்குடிகளில் மூத்த முதற் குடியினராவர் என்பது, 'பெரு நிலம் முழுதாளும் பெருமகன் தலை வைத்த ஒரு தனிக்குடி' (சிலப். 1) என்னும் இளங்கோவடிகள் வாக்கால் விளங்கும். சேர நாடு, சோழ நாடு, பாண்டி நாடுகளேயன்றித் தமிழகத்தில் கொங்கு நாடு, தொண்டை நாடு என்ற பிரிவுகளும் உண்டு. இவற்றுள் கொங்கு நாடு என்னும் பிரிவு பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. தொண்டை நாடு கடைச் சங்க காலத்தே ஏற்பட்டதாகும். சேர நாடு : இன்றுள்ள மலையாள நாடு சேர நாடாகும். இதன் தலைநகர் வஞ்சி என்பது. முசிறி, தொண்டி என்பன சேர நாட்டின் துறைமுகப் பட்டினங்கள். வஞ்சியும் கடற்கரைப் பட்டினமே. சேரரது கொடியும், அரசியற் குறியும் வில் ஆகும். சோழ நாடு : திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் சோழ நாடு எனப்படும். அதாவது, சிதம்பரத்திற்கு வடக்கேயுள்ள வட வெள்ளாற்றுக்கும், புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள தென் வெள்ளாற்றுக்கும் இடைப்பட்டது சோழநாடு. இதன் தலைநகரம் உறையூரும், புகாரும். புகாரும், நாகப்பட்டினமும் துறைமுகப் பட்டினங்கள். புகாரின் மறு பெயர் காவிரிப்பூம் பட்டினம் என்பது. சோழ மன்னர் கொடியும், அரசியற் குறியும் புலி. பாண்டிய நாடு : மதுரை, இராமநாதபுரம், திருநெல் வேலி மாவட்டங்கள் பாண்டிய நாடு எனப்படும். வட கிழக்கில் தென் வெள்ளாறும், வடக்கில் பழனியும் பாண்டிய நாட்டின் எல்லையாகும். பாண்டிய நாட்டின் தலைநகரம் மதுரை. கொற்கை இதன் துறைமுகப் பட்டினம். பாண்டியர் கொடியும், அரசியற் குறியும் மீன். கொங்கு நாடு : கோவை, நீலகிரி, சேலம் மாவட்டங் களும், திருச்சி, மதுரை மாவட்டங்களின் வடபகுதியும் கொங்கு நாடு எனப்படும். மதுரை மாவட்டத்திலுள்ள பழனியும், திருச்சி மாவட்டத்திலுள்ள குளித்தலையும் கொங்கு நாட்டின் தெற்கெல்லை யாகும். கொங்கு நாடு பழங்காலத்திலிருந்தே தமிழ்ச் சிற்றரசர் களால் ஆளப்பட்டு வந்தது. இது பல சிற்றரசர்களால் ஆளப்பட்டு வந்ததால், இதற்குத் தனிப்பட்ட தலைநகர் இல்லை. தொண்டை நாடு : சென்னை, செங்கற்பட்டு, வடார்க் காடு மாவட்டங்களும், தென்னார்க்காடு, சித்தூர் மாவட்டங் களில் ஒரு பகுதியும் தொண்டை நாடாகும். இதன் வடக் கெல்லை திருப்பதி. தெற்கெல்லை பாலாறு. மேற்கெல்லை கொங்கு நாடு. இதன் தலைநகர் காஞ்சி. துறைமுகப் பட்டினம் கடன்மல்லை. தொண்டை நாடு கடைச் சங்க காலத்தே ஏற்பட்டதாகும். அதன் முன்னர்ச் சோழ நாடாக இருந்தது. இது முதலில் சோழர்களாலும், பின்னர்ப் பல்ல வர்களாலும், மறுபடியும் சோழர்களாலும் ஆளப்பட்டு வந்தது. திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்ட நடு நாடு என்ற சிறு நாடொன்றும் கடைச் சங்க காலத்தே தோன்றி யிருந்தது. இது பாலாற்றுக்கும் வடவெள்ளாற்றுக்கும் இடைப் பட்டது. இதை மலையமான் திருமுடிக்காரி என்னும் சிற்றரச மரபினர் ஆண்டு வந்தனர்.  2. தமிழ் மொழி தமிழ் மொழி நமது தாய் மொழி. நமது தாய் மொழியாகிய தமிழ் மொழி, உலக மொழிகளில் உயர்வுடையது. பழந்தமிழ் மக்கள் மிகுந்த தாய் மொழிப் பற்றுடையராய் இருந்தனர்; தமிழை உயிரினும் பெரிதாகக் கருதிப் போற்றி வளர்த்து வந்தனர். தமிழ் மொழி அன்று சீரும் சிறப்புடன் திகழ்ந்தது. தமிழ் என்பதற்கு இனிமை என்பது பொருள். தமிழ் மொழி இனிமையான மொழி. 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்' என்றார் பாரதியார். 'தமிழுக்கு அமிழ் தென்றுபேர் - அந்தத் - தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்' என்றார் பாரதிதாசன். கற்போர் உள்ளத்தையும் உணர்வையும் கேட்போர் உள்ளத்தையும் உணர்வையும் ஒருங்கு இன்புறச் செய்யும் தன்மை தமிழ் மொழிக்கே உரிய தனித் தன்மை யாகும். 'தமிழ் தமிழ் தமிழ்' என்று தொடர்ந்து சொன்னால், 'அமிழ்தமிழ்தமிழ்து' என்றாகு மென்று, தமிழ் மக்கள் தங்கள் தாய் மொழியாம் தமிழ் மொழியின் இனிமைத் தன்மையைச் சிறப்பித்துக் கூறிப் பெருமை கொள்வர். அது வீண் பெருமையன்று, உண்மையே. அமிழ்து - இனிமை. தமிழ் இனிய மொழி மட்டும் அன்று; கரடு முரடில்லாத இயல்பாகிய மொழியும் ஆகும். தமிழ் மொழி இனிமை இயல்போடு எளிமையும் உடைய மொழியாகும். இதற்குக் காரணம், தமிழ் எழுத்துக்களின் ஒலி இயல்பாக அமைந்திருத்த லேயாகும். உரப்பியும் கனைத்தும் உச்சரிக்க வேண்டிய எழுத்துத் தமிழில் இல்லை. தமிழை யாரும் எளிதில் கற்றுக் கொள்ளலாம். எளிதில் பேசலாம். தமிழ் எழுத்துக்களைக் கற்றுக் கொண்டால், எழுத்துக்கூட்டி எல்லாத் தமிழ்ச் சொற்களையும் எளிதில் படித்துவிடலாம். பிறமொழிகளைப் போல் எழுத்தொலி வேறு, அவ்வெழுத்துக்களாலான சொல்லொலி வேறு என்னும் முரண்பாடு தமிழ் மொழிக்கில்லை. இவ்வளவு எளிமையான மொழி உலகில் வேறொன்றும் இல்லை. இனிமை, இயல்பு, எளிமை என்னும் மொழிக்குரிய முப்பண்பும் ஒருங்கு அமையப் பெற்ற மொழி நம் தமிழ் மொழியேயாகும். தமிழ் மிகப் பழமையான மொழி. தமிழ் மொழி எப்போது உண்டானது என்று வரையறுத்துக் கூறமுடியாது. 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய தமிழ்' என்றார் கல்லாடனார். 'என்றுமள தென்றமிழ்' என்றார் கம்பர். 'ஞாயிறு ஓர் ஒளிப் பிழம்பு. அது தன்னைத் தானே சுற்றுகிறது; அவ்வாறு சுற்றும் விரைவினால் அந்த ஒளி வடிவத்தி லிருந்து சிதறிய ஒரு சிறு திவலையே உலகம் என்பது. முதலில் உலகம் ஆவிப் பிழம்பாக இருந்தது. அது தன்னைத் தானே சுற்றும் விரைவினால் மேற்பாகம் குளிர்ந்து நிலம் ஆயிற்று' என்பது நில நூலறிஞர்களின் ஆராய்ச்சி முடிவு. ஒரு பம்பரம் சுழலும்போது, அதில் அசையாத பகுதி, முடியும் அடியுமாகிய இரு முனைகளுமேயாகும், நடுவட்டமே மிக விரைவாகச் சுழலும். அதுபோலவே, உலக உருண்டையும் தன்னைத் தானே சுற்றும்போது, அதில் வட தென்துருவப் பகுதிகள் அசையாமல் தம்மைத்தாமே சுற்ற, நடுக்கோட்டுப் பகுதியே மிக விரைவாகச் சுழலும். எனவே, அந்நடுப் பாகந்தான் முதலில் குளிர்ந்திருக்கும். கடல் கொண்ட குமரிக் கண்டம் நிலநடுக் கோட்டுப் பகுதியில் இருந்ததால், அப்பகுதி தான் முதலில் குளிர்ந்து, உயிர் வகைகள் தோன்றி வளர்வதற்கேற்ற தட்பவெப்ப நிலையை எய்தியிருக்கும். அப்பகுதி பழந்தமிழ் நாடு ஆகையால், உலக முதன் மக்கள் என்பதும், உலக முதன் மொழி தமிழ் மொழி என்பதும் ஆராய்ச்சி அறிஞர்களின் முடிந்த முடிவாகும். தமிழ் அவ்வளவு பழமையோடு இளமையும் உடைய மொழியாகும். தமிழ், ஈப்ரு, இலத்தீன், கிரேக்கம், ஆரியம் என்னும் மொழிகள் தாம் உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழிகள். தமிழ் அல்லாத ஏனைய நான்கு மொழிகளும் உலக வழக்கு - பேச்சு வழக்கு ஒழிந்து விட்டன. அம்மொழிகள் எழுதப் படிக்க முடியுமே தவிர, பேச முடியாது. உலகப் பழம் பெரு மொழிகள் என உடனெண்ணப் படும் ஏனைய நான்கும் பேச்சு வழக்கொழிந்தும் தமிழ் மட்டும், "உலகவழக் கழிந்தொழிந்து சிதையாநின் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே" என, மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் வியப்பது போலவே, உலகம் வியப்புறும் வண்ணம் அன்று முதல் இன்றும் பேசவும் எழுதவும் கூடியதாய் இருந்து வருகிறது. இவ்வாறு பழமையோடு இளமையும் உடைமையால் தமிழ் மக்கள் தமது தாய் மொழியைக் கன்னித் தமிழ் எனப் பெருமை யோடு கூறிக் கொள்கின்றனர். 'இளந் தமிழ்' என்பதும் அப்பொருளுடையதே. உலகில் பன்னூற்றுக் கணக்கான மொழிகள் பேசப்படு கின்றன. அவற்றுள் ஒரு சில மொழிகளுக்கு எழுத்தே இல்லை. ஒரு சில மொழிகள் இலக்கண வரையறை இல்லாதவை. சில மொழிகளில் ஒரு நூல் கூட இல்லை. நூலியற்றுந் தகுதியை அம்மொழிகள் இன்னும் பெறவில்லை. பல மொழிகள் தோன்றிச் சில நூற்றாண்டுகளே ஆகின்றன. இந்தி முதலிய வட நாட்டு மொழிகள் ஆரியத்தின் இளஞ் சேய்கள். கன்னடம் முதலிய தென்னாட்டு மொழிகள் தமிழ்த் தாயின் தலைப் பிள்ளைகள். "கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்" என்பது மனோன்மணீயம். பல உயிரையும் பல உலகையும் படைத்து, காத்து, அழிக்கினும் பரம்பொருள் முன் இருந்தபடியே இருப்பது போல, கன்னடம் தெலுங்கு முதலிய பல பிள்ளைகளைப் பெற்றும் இன்னும் சீரிளமை மாறாது, பரம்பொருளோ டொத்த பழமையும் இளமையும் உடையது தமிழ் மொழி எனக் கூறி மகிழ்கிறார் மனோன்மணீய ஆசிரியர். அத்தகு பெருமையுடையது நம் கன்னித் தமிழ். மிகப் பழமையோடு இளமையுடையதும், பேசவும் எழுதவும் படுவதும், இலக்கியப் பரப்பும் இலக்கண வரை யறையும் உடையதும் ஆகிய மொழி உயர்தனிச் செம்மொழி எனப்படும். தமிழ் பழமையோடு இளமையுடையது; 'ஓர் எல்லையறு பரம் பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்' என உவமை கூறி வியக்கும் பழமையை உடையது; பேச எழுதப்படுவது; பத்துப் பாட்டு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், நாலடியார் முதலிய ஏராளமான இலக்கியச் செல்வங்களை யுடையது. இவை பழம் பெருஞ் செல்வங்கள்; இவை நம் முந்தையோர் தேடி வைத்த எய்ப்பினில் வைப்பு! சங்க காலப் பின்னோர் ஈட்டிய இலக்கியச் செல்வங்கள் எண்ணிறந்தன! ஒன்றி ரண்டல்ல, தொண்ணூற்றாறு வகையில் ஈட்டி வைத் துள்ளனர். தொல்காப்பியம், நன்னூல், சின்னூல், யாப்பருங் கலம், யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம் முதலிய இலக்கண நூல்களை யுடையது. எனவே, தமிழ் மொழி ஒரு தலையாய உயர் தனிச் செம்மொழியாகும். இன்று உலகில் உள்ள உயர் தனிச் செம்மொழி தமிழ் ஒன்றே என்பதை அறிந்து தமிழ் மக்கள் பெருமை கொள்வதில் வியப்பொன்றும் இல்லை. 'தமிழ் மொழி மிகமிகத் தொன்மை வாய்ந்ததும், பெருவளம் பொருந்தியதும், மிகவும் சீர்திருந்தியதுமான உயர்தனிச் செம்மொழி யாகும். தமிழ் சொல்வளம் மிகுந்தது; அளவிட வொண்ணாப் பண்டைக் கால முதற் பயின்று வருவது' என்பது கிரீயர்சன் என்னும் ஆராய்ச்சி அறிஞரின் ஆய்வுரை. 'தமிழ் மிகவும் தொன்மை வாய்ந்த திருந்திய மொழி. அது சொல்வள மிகுந்தது; பண்டைச் சொல்லிலக்கணத் தொல் வடிவங்களில் பெரும்பாலானவற்றை இகவாது கொண்டு மிளிர்வது' என்பது, தமிழ் மொழியின் தனிப்பெரும் பெருமையை உலகறியச் செய்த மொழியாராய்ச்சி அறிஞர் கால்டுவெல் அவர்களின் கருத்துரை. நமது முன்னோர், தம் தாய் மொழியாம் தமிழ் மொழியை - இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூன்றாகப் பகுத்துப் பொன்னேபோற் போற்றி வளர்த்துப் பயனடைந்து வந்தனர். அதனால், தமிழ் - முத்தமிழ் எனப் பெயர் பெற்றது. இத்தகைய பெயர் உலக மொழிகளில் வேறு எம்மொழிக்கும் இல்லை. இத்தகைய மொழிச் சிறப்பும் தமிழர் தனிப் பண் பாட்டுக்குச் சான்றாகும். 'மோனை முத்தமிழ் மும்மதமும் பொழி யானை' என ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் தம்மைப் பெருமையாகக் கூறிக் கொள்கிறார். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழில், இயற்றமிழ் என்பது தமிழ்ப் பாட்டுக்களாகும். புறநானூறு முதலிய பழந்தமிழ் நூல்களெல்லாம் இயற்றமிழ் நூல்களேயாம். உரைநடையும் இயற்றமிழே. முதலில் இயல்பாக உண்டாவதால் பாட்டு இயற்றமிழ் எனப்பட்டது, இயற்கைப் பொருள் என்பதுபோல, அத்தமிழ்ப் பாட்டுக்களை இசையுடன் பாடுவது இசைத் தமிழ் எனப்படும். இசையாவது பண்ணொடு தாளம் பொருந்தப் பாடுவது. அவ்வாறு இசையுடன் பாடிக்கொண்டு, கேட்போர்க்கு அப்பாட்டின் பொருள் எளிதில் இனிது விளங்கும்படி மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத் தமிழ் எனப்படும். மெய்ப்பாடு என்பது உள்ளக் குறிப்பைக் கண் முதலிய உறுப்புக்களின் மூலம் வெளிப்படச் செய்யும் நகை, அழுகை, இழிவு, வியப்பு, அச்சம், வீரம், வெகுளி, உவகை என்பன. பாட்டின் கருத்துப் பிறர்க்கு விளங்கும் படி மெய்யின் மூலம் வெளிப்படச் செய்வதால் அது மெய்ப்பாடு எனப்பட்டது. மெய் - உடம்பு. தொல்காப்பிய மெய்ப்பாட்டி யலில், மெய்ப்பாட்டின் விரிவை விளக்கமாகக் காணலாம். நாடகம் கூத்து எனவும் வழங்கும். பழந்தமிழ் மக்களாகிய நமது முன்னோர்கள் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழிலும் ஏராளமான இலக்கிய நூல்களும் இலக்கண நூல்களும் செய்து, முத்தமிழையும் முறையாக வளர்த்து வந்தனர். சிலப்பதிகாரம் முத்தமிழ் இலக்கியமாகும். பிற்காலத் தமிழ் மக்களின் புறக்கணிப்பால் அப்பழந்தமிழ் இசை நாடக நூல்களை நாம் பார்க்கக் கூடக் கொடுத்து வைக்காதவர்களானோம். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் அன்று தனித் தனிப் புலவர்கள் இருந்தனர். இயற்றமிழ்ப் புலவர்கள் சிறந்த புலமை - அறிவு - உடைமையால் புலவர் எனவும், பாக்கள் இயற்றும் வன்மையால் பாவலர் எனவும், சிறந்த நாவன்மை - பேச்சு வன்மை - உடைமையால் நாவலர் எனவும் பெயர் பெற்றனர். இப்புலவர் பெருமக்கள் நுண்மாண் நுழைபுலம் உடையராய்த் திகழ்ந்தனர். இசைத் தமிழ்ப் புலவர்கள் பாணர் எனப்படுவர். பாண் - இசை. பாணர் - இசையில் வல்லவர். பாணர் மகளிர் - பாணிச்சியர் எனப்படுவர்; அப்பாண் மகளிரும் இசையில் வல்லுநராகையால் பாடினி, பாட்டி எனப் பெயர் பெற்றனர். பாணர்க்கு யாழ் இன்றியமையாததாகும். அதனால், அவர் யாழ்ப்பாணர் என்றே அழைக்கப்பட்டனர். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனத் தமிழிசை ஏழு வகைப்படும். பழந்தமிழ் மகளிர் ஏழிசைவல்லி எனப் பெயர் சூட்டிக்கொண்டு ஏழிசையினும் வல்லவர்களாய் ஏழிசை பாடி இன்புற்றிருந்தனர். குரல் முதலிய தமிழிசையின் இடத்தை, 'சரிகம பதநி' என்னும் அயலிசைகள் ஏழும் பிடித்துக் கொண்டன, பிற்காலத் தமிழ் மக்களின் முயற்சிக் குறைவால். நாடகத் தமிழ்ப் புலவர் கூத்தர், பொருநர் என இரு வகைப்படுவர். பொருநுதல் - வேறொருவர் போல் கோல மிட்டாடுதல் (கோலம் - வேஷம்). கூத்தர், பொருநர் இரு வகையினரும், இருவகைப் பட்ட ஒருவகையினரே, அவ்விரு வகையினரின் மகளிரும் விறல்பட ஆடுதலான், விறலியர் எனப்பட்டனர். விறல் - மெய்ப்பாடு. இசை நாடகப் புலவர்கள் ஒன்றுபட்டே இசை நாடகத் தமிழை வளர்த்து வந்தனர்; இசை நாடகப் புலவர்கள் - யாழ், குழல், பறை, தாளம் என்னும் நால்வகை இசைக் கருவிகளின் துணைக் கொண்டு அவ்விரு தமிழையும் பொது மக்கட்கறிவுறுத்தி வந்தனர். இயற்றமிழ்ப் புலவர்கள் அவ்வக்காலத்துக் கேற்ற கருத்துக் களை யமைத்துப் புதுப்புதுப் பாட்டுக்கள் பாடியும், இசைத் தமிழ்ப் புலவர்கள் அப்பாட்டுக்களை இசைக் கருவிகளுடன் இசைத்து இன்னிசையுடன் பாடியும், நாடகத் தமிழ்ப் புலவர்கள் அவ்விசைக் கேற்ப, அப்பாட்டுக்களின் பொருள் விளங்கச் சுவைபட ஆடியும் முத்தமிழையும் முறையாக வளர்த்து வந்தனர். இம்மூவகைப் புலவர் பெரு மக்களும் தமிழ் வளர்ப்பதையே தங்கள் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு, தமிழ் நாட்டு ஊர்தோறும் சென்று, தமிழ்ப் பொதுமக்களுக்கு முத்தமிழறி வினையும் ஊட்டி வந்தனர். இம்முப்புலவர்களின் உலையா முயற்சியால், ஓயா உழைப்பினால் முத்தமிழும் நாளொரு வண்ணமும் பொழு தொரு மேனியுமாக வளர்ந்து வந்தன. பிற்காலத் தமிழ் மக்களின் இன்பத்தை வெறுத்தல் என்னும் வெறுப்புத் துறவால் இசை நாடகத் தமிழ் புறக் கணிக்கப்பட்டு, அவ்விரண்டன் நூற் செல்வங்களை இழந்ததோடு அவற்றைப் பழையபடி வளர்க்க வகையறியா நிலையையும் அடைந்து விட்டோம். சங்கம் : பாண்டிய மன்னர்கள் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்தனர் என்று முன்பு கண்டோம். அச்சங்கம் தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூவகைப்படும். முதற் சங்கம் - பஃறுளி யாற்றங் கரையிலிருந்த தொன் மதுரையிலும், இரண்டாஞ் சங்கம் குமரி யாற்றங் கரையிலிருந்த தென் மதுரை யிலும், மூன்றாஞ் சங்கம் வையை யாற்றங் கரையிலுள்ள மதுரையிலும் நடந்து வந்தன. இவ்விட மாற்றமே அச்சங்கம் முதல் இடை கடை என மூன்று வகைப் பட்டதற்குக் காரணமாகும். அச்சங்க உறுப்பினர்கள் - சங்கப் புலவர்கள் எனப்படுவர். முதல், இடை, கடை என்னும் அம்முச் சங்கங்களும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் நடைபெற்று வந்தன. தமிழ் நாடு முழுவதும் வாழ்ந்துவந்த புலவர்கள், தாம் பாடிய பாட்டுக்களுடன் மதுரைக்குச் செல்வர்; தமிழ்ச் சங்கப் புலவர்கள் முன்னிலையில் தாம் பாடியுள்ள பாட்டுக்களைப் படித்துப் பொருள் கூறுவர்; சங்கப் புலவர்கள் கேட்கும் ஐய வினாக்களுக்குத் தக்க விடை பகர்வர்; சங்கப் புலவர்கள் சொல்லும் குற்றங் குறைகளை யேற்றுத் திருத்தியமைத்துக் கொள்வர். இவ்வாறு செய்தல் அரங்கேற்றுதல் எனப்படும். இவ்வாறு அரங்கேற்றிய பாக்களை நூல்களாகத் தொகுப்பர். அவை சங்க மருவிய நூல்கள் எனப்படும். அவ்வாறு மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் ஒப்புக் கொண்ட அரங்கேறிய - சங்க மருவிய நூல்களே மக்கள் படிப்பதற்குத் தகுதியுடையவை யாகும். இத்தமிழ்ச் சங்கம், இன்றுள்ள பள்ளிப் பாட நூற் குழுவைப் போன்றதேயாகும். ஆனால், இன்று நூலாசிரியர் பாட நூற் குழுவினரைச் சந்திப்பதும் குற்றங் குறைகளை எடுத்துக் காட்டித் திருத்திக் கொள்வதும் இல்லை. இதுவே பழந்தமிழ்ச் சங்கத் திற்கும் பாடநூற் குழுவுக்கும் உள்ள வேறுபாடு. இப்போது நமக்குக் கிடைத்துள்ள சங்கமருவிய நூல்கள் - தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க் கணக்கு என்பனவே. நமக்குக் கிடைக்கப் பெறாத சங்க நூல்கள் - முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, மாபுராணம், பூதபுராணம், இசை நுணுக்கம், குணநூல், செயிற்றியம், சயந்தம், கூத்து, வரி, பேரிசை, சிற்றிசை என்பன. இன்றும், பொங்கல் திருநாள், புத்தாண்டு முதலிய சிறப்பு நாட்களில் திருச்சி வானொலி நிலையத்திலும், மாநாடுகளிலும், கல்லூரி விழாக்களிலும் கவியரங்கேற்றம் நடைபெற்று வருகிறது. ஆனால், அக்கவியரங்கத்திற்குத் தலைமை தாங்குவோர், கவி களிலுள்ள குற்றங் குறைகளை எடுத்துக் காட்டுவதோ, கவிஞர்கள் பொருள் கூறுவதோ, குற்றங் குறைகளைத் திருத்திக் கொள்வதோ இன்றி, ஒருவர் தலைமையில் கவிகளைப் படிப்பதோடு அரங்கேற்றம் முடிவடைந்து விடுகிறது. பழைய தமிழ்ச் சங்கம்போல் ஒரு சங்கம் நிறுவி, அது பழைய தமிழ்ச் சங்கம்போல் செயற்படின், தமிழ் நன்முறையில் வளர்ச்சியடையும். இச்சங்கம் ஆள்வோரால் நடத்தப்பட வேண்டும். அதற்கு நிலையான தலைவரும் உறுப்பினரும் இருத்தல் வேண்டும். அவர்கள் ஆண்டுக்கு ஒன்றல்லது இரண்டு முறை கவியரங்கேற்றுவதோடு, பழந்தமிழ்ச் சங்கப் புலவர்கள் போல் நாளும் தமிழாராய்ந்து வரவேண்டும். அந்நன்னாள் விரைவில் வருக!  3. புலவர் பெருமை பழந்தமிழ்ப் புலவர் பெருமக்கள் அறிவுக் களஞ்சிய மாகவும், ஆன்றமைந்த ஒழுக்கமுடையவராகவும், பாவன்மை யோடு நாவன்மை படைத்தவராகவும், அஞ்சாநெஞ்சம் உடைய வராகவும், பொதுநலத்தொண்டே தம் பிறப்பின் பயனெனக் கொண்டவராகவும், தந்நலம் என்பதைக் கனவிலும் கருதாதவ ராகவும், தமிழ் மொழி வளர்ச்சியிலும் தமிழர் முன்னேற்றத்திலும் அளவு கடந்த அக்கறையும் ஆர்வமும் உடையவராகவும் இருந்தனர்; அன்பு, அருள், அடக்கம், பொறை, ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை முதலிய அரும்பெருங் குணங்கட்கு இருப்பிடமாகத் திகழ்ந்தனர். இத்தகைய சால்புடைமை பற்றியே அவர்கள் சான்றோர் எனப்பட்டனர். அச்சான்றோர் இல்லாத ஊர் குடியிருத்தற்குத் தகுதியுடைய தன்றென அக்காலத் தமிழ் மக்கள் கருதி வந்தனர். 'சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின் தேன்தேர் குறவர் தேயம் நன்றே' என்பது நறுந்தொகை. 'ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே' எனப் பெருமையாகக் கூறிக் கொள்கிறார் பிசிராந்தையார் என்னும் சான்றோர். சான்றோர் வாழும் ஊர்க்கே சான்றோர் தேவையெனின் சாலார் வாழும் ஊர்க்குச் சான்றோர் தேவையைச் சொல்லவா வேண்டும்? அத்தகு பெருமை யுடையவர் அன்னார். அப்புலவர் பெருமக்கள் தம்மை நன்னெறிக்கண் நிறுத்தலே யன்றித் தமிழ்ப் பொதுமக்களையும் நன்னெறிக்கண் நிறுத்தி வந்தனர்; தமிழ்த் தலைவர்கள் தவறு செய்தால் அஞ்சாது இடித்துரைத்து நல்வழிப்படுத்தி வந்தனர். வள்ளல் மலையமான் திருமுடிக் காரியின் இளங்குழந்தைகளைப் பகைமையின் முதிர்ச்சியால் யானைக் காலால் மிதிப்பித்துக் கொல்ல முயன்ற கிள்ளிவளவன் என்னும் சோழன் முன் சென்று, அஞ்சாது அறிவுரை புகட்டி, அச்செந்தமிழ்ச் சிறார்களின் உயிரைக் காத்தனர் கோவூர் கிழார் என்னும் புலவர் பெருமான். மனவேறுபாட்டால் தன் மனைவியைத் துறந்திருந்த, மயிலுக்குப் போர்வை போர்த்த வள்ளலாகிய பேகனுக்கு நல்லறிவு கொளுத்தி, அவனை அளவோடு கூடி வாழும்படி செய்தனர் கபில பரணர் முதலிய புலவர் பெருமக்கள். பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் பெருந்தகை, தம்பியாகிய இளங்குமணன் கொடுமையால் காட்டில் வாழ்ந்த குமணவள்ளல் கொடுத்த வாளை வாங்கிச் சென்று, நாட்டைய டைந்து, இளங்குமணனிடம் அவ்வாளைக் காட்டி, பாட்டின் பரிசாகத் தம் தலையைக் கொடுக்க முன் வந்த அத்தமிழ் வள்ளலின் பெருங்குணத்தைச் சாற்றி, நல்லறிவூட்டி அண்ணனின் தலைக்கு விலை கூறிய அவன் மனத்தை மாற்றி, வள்ளல் குமணனை முன் போல் அரியணையிலமர்த்தினார். அப்புலவர் பெருமக்கள், ஒருவருடைய நல்ல குணங் களையும் கெட்ட குணங்களையும் நாடறியச் செய்து, நன்மை கடைப்பிடித்து நடப்பதில் ஆர்வமும் அக்கறையும் கொள்ளும் படி தமிழ் மக்களைத் தூண்டி வந்தனர். 'நல்லது செய்யா விட்டாலும் கெட்டது செய்யாதீர்' என்பது அப்புலவர் பெரு மக்களின் பொன்மொழி. ஒருவர் செய்த கொடுமையைக் கொஞ்சமும் கூசாது கூறி, தமிழ் மக்கள் கொடுஞ்செயல் செய்தற்கு அஞ்சியகலும் படி செய்து வந்தனர். நன்னன் என்னும் தமிழ்ச் செல்வன் பெருங் கொடையாளனாக இருந்தும், இரக்கமின்றி ஓர் இளம் பெண்ணைக் கொலை செய்த கொடுமைக்காக, 'பெண் கொலை புரிந்த நன்னன்'1 என, அக்கொடுஞ் செயலை நாடறியச் செய்தமை இதற்கு எடுத்துக் காட்டாகும். இத்தகைய செம்மை பொருந்திய சீரிய குணங்களால், தமிழ்ச் செல்வர்கள் அன்னாரிடம் மிகுந்த அச்சமும் மதிப்பும் உடையராக நடந்து வந்தனர். அப்புலவர் பெருமக்கள் நாவசைந் தால் நாடசையும் தமிழகத்தில் அன்றன்று நிகழும் நிகழ்ச்சிகள் அன்று புலவர் பெருமக்களா லேயே நாடு முழுவதும் பரப்பட்டு வந்தன. பண்டு தமிழ் நாட்டை நன்னெறி பிறழாது ஆண்டு வந்தவர் புலவர் பெரு மக்களே எனின், அது மிகைபடக் கூறுதல் ஆகாது. அன்னார் வகுத்த வழியில் அரசர்கள் செங்கோல் செலுத்தி வந்தனர். இவ்வாறு பழந்தமிழ்ப் புலவர்கள், தமிழ் மக்களை நல்வழியில் நடக்கும்படி செய்வதையும் தமிழ் வளர்ப்பதையு மே தம் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு, என்றும் நிலையாக ஓரிடத்தில் தங்கி யிராமல், பள்ளத்தை நோக்கிச் செல்லும் வெள்ளம் போல, ஊரூராகச் சுற்றிக் கொண்டே இருந்தமையால், வருவாயுடைய தொழிலெதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்து வந்தனர். தமிழ்ச் செல்வர்கள் கொடுக்கும் பரிசே - பாட்டின் விலையே - அன்னாரின் குடும்ப வருவாயாக இருந்து வந்தது. அதனால் அவர்கட்குப் பரிசில் வாழ்நர் என்னும் சிறப்புப் பெயர் உண்டாயிற்று. அவ்வாறு அவர்கள் பரிசு பெறப் பாடிய பாட்டுக்களே முதுநாரை, முதுகுருகு, பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய சங்கச் செய்யுட்களில் பெரும்பாலானவை. செல்வர்களைப் பாடிப் பரிசு பெறுவதையே தொழி லாகக் கொண்டு, அதனால் வாழ்ந்து வந்த அப்பழந்தமிழ்ப் புலவர்கள் மிக்க வறுமையுடையராய் இருந்து வந்தனர். 'புலவர் வறுமை' என்பது அவர்களது வறுமையின் நிலையை அளந்து காட்டுவ தாகும். அத்தகு வறுமை நிலையிலும் அவர்கள் பெற்ற பொருளில் பற்றுள்ள முடையராய் வாழவில்லை; 'ஓம்பாது உண்டு கூம்பாது வீசிக்'1 குறையாச் செல்வமுடையாரைப் போலப் பெருமித வாழ்வே வாழ்ந்து வந்தனர். தமக்கென வாழப் பிறர்க்குரியாள ராகிய அன்னார், 'தாம் பெற்ற செல்வம் பெறுக இவ்வையகம்' என்னும் உயர் பண்புடையராய் வாழ்ந்து வந்தனர். ஒரு வள்ளலைப் பாடிப் பரிசு பெற்றுவரும் புலவரொருவர், வரும் வழியில் மற்றொரு புலவரைக் கண்டால், அவர்க்குத் தாம் பெற்ற பரிசிலின் சிறப்பினையும், பரிசில் கொடுத்த வள்ளலின் சிறப்பினையும் எடுத்துக் கூறி, 'நீரும் சென்றால் நுமக்கும் இவ்வாறே அவ்வள்ளல் பரிசு கொடுப்பான்; இப்போதே செல்க' என, அப் புலவரை அவ்வள்ளலிடம் அனுப்புவர். இது ஆற்றுப்படை எனப் படும். ஆறு - வழி. படை - படுத்தல். ஆற்றுப்படை - வழிப்படுத்தல். என்னே புலவர் பெருமக்களின் பெருந்தன்மை! ஆற்றுப்படை என்பது, புறத்திணைத் துறைகளில் ஒன்றாகும். கூத்தர், பாணர், பொருநர், விறலி என்பாரை ஆற்றுப்படுத்துதல் மரபென்கிறார் தொல்காப்பியர்.1 கூத்தரை ஆற்றுப்படுத்தல் - கூத்தராற்றுப் படை, பாணரை ஆற்றுப்படுத்தல் - பாணராற்றுப் படை, பொருநரை ஆற்றுப் படுத்தல் - பொருநராற்றுப்படை, விறலியை ஆற்றுப்படுத்தல் - விறலியாற்றுப்படை எனப்படும். புறநானூற்றில் இந்நால் வகை ஆற்றுப்படைச் செய்யுட்களும் உள்ளன. பத்துப் பாட்டில், பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும் பாணாற்றுப்படை என மூன்று ஆற்றுப்படைகள் உள்ளன. இவை தமிழ் மக்கள் ஒவ்வொரு வரும் கட்டாயம் படித்து இன்புற வேண்டியவையாகும். பெருஞ்சித்திரனார் என்னும் சங்ககாலப் புலவர் 'புலவர் வறுமை' என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். அவர் மனைவியார் உண்ணாதிருந்து உடல்வற்றி, உடம்பில் சதைப் பற்றே சிறிதும் இல்லாமல் காணப்பட்டார். அவரைத் தோல் போர்த்த எலும்புக் கூடென்று சொல்லலாம். அத்தகு நிலையில் இருந்தார். அவர் மாசடைந்த கந்தை கட்டியிருந்தார். அவர் குப்பைக் கீரையைப் பறித்து உப்பில்லாமல் வேக வைத்து, பசி என்னும் பாவி வருத்தச் சோறு சோறென்றழும் மக்களுக் கிட்டுத் தாமும் தின்றார். இளங் குழந்தை, சுவைத்துச் சுவைத்துப் பார்த்துப் பாலில்லாமையால் பசி தாளாமல், அடுக்களைக்குச் சென்று சட்டி பானைகளை யெல்லாம் திறந்து திறந்து பார்த்தது; உள்ளே ஒன்றும் இல்லாமை கண்டு அழவே, அவ்வம்மையார் புலி வருகிறதென்று அச்சுறுத்தினார். பசிப்புலி அவ்வச்சப் புலியை மதிக்கவில்லை. மேலும் அக்குழந்தை தேம்பித் தேம்பி அழவே, அவர் அம்புலி காட்டி இன்புறுத்த முயன்றார். அப் புலியைக் கண்டஞ்சாத அக்குழவி, இப்புலிக்கா அஞ்சும்? பின்னரும் அழுதது. அவ்வம்மையார் என் செய்வார் பாவம்! 'கண்ணே, அழாதே! உன் தந்தையிடம் சொல்' என்று கூறி வருந்தினார். அத்தகு வறுமைநிலையில் இருந்தார் பெருஞ் சித்திரனார். அந்நிலையில் அவர், வெளிமான் என்னும் வள்ளலைப் பாடிப் பரிசு பெற்றுவரச்சென்றார். அவர் சென்றபோது வெளிமான் இறந்து விட்டான். இதைத்தான் வள்ளுவர் ஊழ் என்றார். அவன் தம்பி இள வெளிமான் இருந்தான். புலவர் அவனிடம் தம் வறுமை நிலையைக் கூறிப் பரிசில் வேண்டினார். புலவரின் தரமறியாத இளவெளிமான் சிறிது பொருள் கொடுத்தான். புலவர் அதைப் பெற்றாரில்லை; அது தம் தகுதிக்குத் தக்கதன்றென்று கருதினார்; அங்கிருந்து வாளா வெளியேறினார். வெளியேறிய பெருஞ் சித்திரனார் நேரே முதிரத்தை நோக்கி நடந்தார். அது குமணன் ஊர். கோவைக் கோட்டத்து உடுமலைப் பேட்டைக் கூற்றத்தில் கொழுமம் என்னும் ஊர் இருக்கிறது. அது தான் குமண வள்ளலின் ஊராகிய முதிரம். கொழுமத்தை அவ்வூர் மக்கள் குமண நகர் என்று பெருமை யோடு கூறிக் கொள்கின்றனர். அவ்வூரை யடுத்துக் குதிரை மலை என்ற மலை இருக்கிறது. அதுதான் பழை முதிர மலை. கொழுமத்தில் இடிந்த கோட்டை மேடு இருக்கிறது. குமணன் சித்திரனாரை அன்போடு வரவேற்றான். புலவர் மகிழ்ந்து, "பாரி, ஓரி, காரி, அதியன், பேகன், ஆய், நள்ளி என்னும் வள்ளல்கள் எழுவரும் மாய்ந்த பின்னர், 'பாடி வருவோரின் துன்பத்தைத் தீர்க்கக் கடவேன் யான்' என, நீ இருத்தலான் நான் இங்கு வந்தேன்; நின்னிடம் கூறமுடியாத அத்தகு வறுமையில் வாடும் என் மனைவி மகிழும் வண்ணம் நான் ஏறிச் செல்ல ஒரு யானை தரவேண்டும்" என்று பாடினார். பாட்டைக் கேட்டுக் குமணன் மகிழ்ந்தான். பொன்னும் பொருளும் ஆடையும் அணியும் கொடுத்து, புலவர் விரும்பியவாறே, நீண்ட கொம்பு களையுடைய மலை போன்ற களிறொன்றும் கொடுத்துப் புலவரை மகிழ்வித்தான். புலவர் குமணனிடம் விடை பெற்று, அக்களிற்றின்மேல் ஏறிக்கொண்டு பெருமிதத்தோடு சென்றார். எங்கு? தம் ஊருக்கா? இல்லை; இளவெளிமான் ஊரை நோக்கிச் சென்றார்; ஊரை யடைந்தார்; ஏறிச் சென்ற களிற்றை அரண்மனை முன்னர் உள்ள காவல் மரத்தில் கட்டிவிட்டு, அரண்மனைக்குட் சென்று இளவெளி மானைப் பார்த்து, 'இரப்போர்க்குக் கொடுப்பவன் நீயும் அல்லை; இரப்போர்க்குப் புரப்போர் இல்லாமல் இல்லர்; அதோ நின் காவல் மரத்தில் வள்ளல் குமணனைப் பாடிப் பெற்று வந்த பரிசிலான யானையைக் கட்டியிருக்கிறேன்; நான் வருகிறேன்' என்று யானையை அப்படியே கட்டிவிட்டுத் தம் ஊரை நோக்கி நடந்தார். இளவெளிமான் கொடுத்த சிறிது பொருளைக் கொண்டு தம் குடும்பத்தின் வறுமை நிலையை மாற்றி யிருக்கலாம். மனைவியும் மக்களும் உண்டுடுத்து மகிழ்வதைக் கண்டு களித்திருக்கலாம். சட்டி பானைகளைத் திறந்தால் சோறும் சாறும் இருக்கும்படி செய்தி ருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்தாரில்லை. அதைச் செய்ய அவர் தகுதி விட வில்லை. அவர் அத்துடன் நின்றனரா? இல்லை. 'நீ சிறிது கொடுத்தாய், இதோ நான் பெரிது கொடுக்கிறேன்' என்று யானையை அவன் காவல் மரத்தில் கட்டிவிட்டு வந்து, அவன் தன் தவற்றை உணரும்படி செய்தனர். என்னே புலவரின் பெருந்தன்மை! இத்தகைய பெருமை பொருந்திய புலவர் பெருமக்களால் போற்றி வளர்க்கப்பட்ட தன்றோ தமிழர் பண்பாடு! பெருஞ்சித்திரனார் போன்ற புலவர் பெருமக்களை யுடைய தமிழ்நாடு இனியொருகால் உண்டாதல் கூடுங்கொல்! அவர் இத்துணைப் பெருந்தன்மையோடு அமையவில்லை; மேலும், பெருமைக்கு அவாவினார். 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற மூதுரையையும் கடந்து விட்டார். 'அமைவு' என்னும் சொல்லின் பொருளாக அமைந்தார். அவர் குமண வள்ளலிடம் பெற்று வந்த பொருள்களைத் தம் மனைவி யாரிடம் கொடுத்து, 'இது முதிரத்துத் தலைவன் குமணன் நல்கிய செல்வம்; இதை, உன்னை விரும்புகின்ற பெண்களுக்கும், நீ விரும்புகின்ற பெண்களுக்கும், உன் அத்தை, பாட்டி முதலிய முதியவர் களுக்குங் கொடு; வேண்டியபோது உனக்குக் குறியெதிர்ப்புக் கொடுத்தவர்களுக்குங் கொடு; இன்னார் என்று கருதாது கொடு; என்னைக் கேட்க வேண்டும் என்பதில்லை; உன் விருப்பம் போல் கொடு. இதை வைத்துக் கொண்டு செல்வாக்காக வாழலாம் என்று எண்ணாது, நீயும் எல்லார்க்குங் கொடு. நானும் கொடுக்கிறேன்' என்றார். தம் குடும்பம் உள்ள வறுமை நிலையில், யார் இவ்வாறு கூறத் துணிவார்? சிறிது பொருட் பற்றுடையராய் இருப்பினும் என் செய்திருப்பர்! இத்தகைய பற்றற்ற உள்ளமுடைய, தந்நலம் என்பதைக் கனவிலும் அறியாது சான்றோர்களா லன்றோ பழந் தமிழகம் பண்பாட்டுச் சரக்கறையாகத் திகழ்ந்தது! இஃதோர் எடுத்துக்காட்டு. புறநானூற்றைத் திறந்தால், புலவர் பெருமைக்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகளைக் காணலாம். தமிழ்ப் பள்ளி மாணவர்கள், புறநானூற்றில் நூற்றுக்குப் பத்துப் பாட்டாகிலும் படிக்கும் நிலை ஏற்பட்டா லன்றித் தமிழ் மாணவர்கள் தமிழுணர்ச்சி பெற முடியாது. என்று அந்நற் காலம் வருமோ!  4. தாய்மொழிப் பற்று ஒரு மொழி வளம்பெற வளரவேண்டுமெனின், அம்மொழி பேசும் மக்கள் அம்மொழியிடத்து மிகுந்த பற்றுடையராய் இருத்தல் வேண்டும். அங்ஙனம் பற்றில்லாத மக்களையுடைய மொழி எதுவும் வளம் பெற வளராது. பெற்ற பிள்ளையின்பால் தாய்க்குப் பற்றில்லையாயின் அப்பிள்ளை நலனுற வளருமோ? பற்று என்னும் பசையினால் ஒட்டப்பட்டதே ஒருவர்க் கொருவர் கொண்டுள்ள தொடர்பு நிலைத்து நிற்றற்குக் காரணமாகும். உயரின மக்களுக்குரிய மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப் பற்று என்ற மூன்றனுள் மொழிப் பற்றே ஏனை இரண்டிற்கும் ஏதுவாகும். தாய்மொழிப் பற்றில்லாத ஒருவன் மக்கட் பதராவான். பழந்தமிழ் மக்கள் மிக்க தாய்மொழிப் பற்றுடையராய் இருந்து வந்தனர். பழந்தமிழ்ச் செல்வர்களும், குறுநில மன்னர்களும், பெருநில மன்னர்களும் தமிழ்ப் பாடல் பெறாததை மிக மிக இழிவாகக் கருதி வந்தனர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன், 'மாங்குடி மருதனார் முதலிய புலவர்கள் எனது நாட்டைப் பாடாது நீக்குக' என்று வஞ்சினங் கூறியது முதிர்ந்த தாய் மொழிப் பற்றினாலன்றோ? சேரன் செங்குட்டுவன், கனக விசயரின் முடித்தலையில் கண்ணகியின் படிவக்கல் ஏற்றி வந்ததற்கு முதற்காரணம் அவனது தாய்மொழிப் பற்றன்றோ? ஒருவர் எய்தும் புகழில் புலவர் பாடும் புகழே தலையாய புகழென மதிக்கப்பட்டு வந்தது அன்று. 'புலவர் பாடும் புகழுடை யோர்' என்பது ஒருவரது புகழின் எல்லையைக் குறிக்கும் மரபுத் தொடராகும். 'ஒரு பழந்தமிழ்க் குடியைக் குறிப்பிடும் போது, 'புலவர் பாடும் புகழொடு வாழ்ந்த குடி' என்பது வழக்கம். அதியமான் நெடுமான் அஞ்சி, தான் அரிதிற் பெற்ற அரு நெல்லிக்கனியை, உண்டவர் நெடுநாள் உடல் நலத்தோடு வாழ்வார் என்பதை அறிந்திருந்தும் அதை ஒளவைக்குக் கொடுத்தது ஆன்ற தாய்மொழிப் பற்றினாலன்றோ? ஒளவை நெடுநாள் உடல் நலத்துடனிருந்து தமிழ் வளர்க்க வேண்டும் என்பதுதானே அவன் நெல்லிக்கனி கொடுத்ததன் குறிக்கோள்? வழி நடந்து வந்த அயர்ச்சியால் அறியாது முரசு கட்டிலில் ஏறிப் படுத்துறங்கிய மோசிகீரனார் என்னும் புலவரை, வாள் கொண்டு இரு துண்டாக்கும் தன் கையால், அவர் தூங்கி யெழும் வரைக் கவரிகொண்டு வீசிய சேரமான் பெருஞ்சேர லிரும் பொறையின் தமிழ்ப் பற்றுக்கு எதனை உவமை கூறுவது? தமிழ்ப் புலவர்களுக்குக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டு வறுமையுற்ற தமிழ்ச் செல்வர்கள் அளவிலடங்கார். தாய்மொழி மீதுள்ள முதிரிய பற்றினால் புலவர்கள் எதைக் கேட்டாலும் இல்லை யென்னாமல் கொடுத்துப் பொன்றாப் புகழை நிலைநாட்டிச் சென்றனர் பழந்தமிழ்ப் பெருங்குடி மக்கள். 'ஈதல் இசைபட வாழ்தலே' மக்கட் பிறப்பின் பயன். அதைவிட மக்கட் பிறப்பினால் அடையும் பயன் வேறில்லை. 'தோன்றிற் புகழொடு தோன்றுக' என்னும் பொய்யா மொழியின் பொருளுரையை உணர்ந்த தமிழ்ச் செல்வர்கள், தமிழ்ப் பற்றின் தூண்டுதலினால், தமிழ்ப் புலவர்க்கு வாரிவாரி வழங்கித் தமிழ் வளர்த்து வந்தனர். இதனாற்றான் கொடை மடம் பட்ட பாரி முதலிய வள்ளல்கள் தோன்றினர். முறுகிய தாய்மொழிப் பற்றினால் புலவர்க்கு நாடு கொடுத்தும், ஊர் கொடுத்தும், தலை கொடுத்தும், உயிர் கொடுத்தும், அரசு கொடுத்தும், அரசிளங் குமரனைக் கொடுத்தும், மலையேறிக் கண்ட மாநில வருவாயைக் கொடுத்தும் தமிழ் வளர்த்த வள்ளல்கள் பலர். 'பொருளிலார்க்கு இவ்வுலகில்லை' என்னும் பொய்யா மொழியைப் பொய்யா மொழி யாக்கி, மனைவி மக்கள் சுற்றம் என்னும் குடும்பப் பற்றின்றி, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் பொதுமைப் பற்றுடன், வாழ்க்கை யின்பத்தை மறந்து, வறுமைத் துன்பத்திற் சிறந்து, தாய்மொழித் தொண் டாற்றிய புலவர் பெருமக்களின் நோக்கந் தான் என்னை! தாய்மொழிப் பற்றன்றி? இத்தகைய தாய்மொழிப் பற்றுடைய புலவர்கள் செல்வர்களும் இல்லாதிருந்திருந்தால் தமிழ்மொழியும் எப்பொழுதோ செத்த மொழிப் பட்டியலில் சேர்ந்திருக்கும். இந்நேரம் தமிழ் என்னும் பெயரே கூட மறைந்தொழிந்திருக்கும் தமிழ்மொழி அழிந்தொழிந்து சிதையாது அப்படியே நிலைத் திருப்பதற்குப் புலவர் வறுமையும் செல்வர் புகழ்மையும் காரணமோ? அன்றி, அவ்விரு பாலாரின் தாய்மொழிப் பற்றுக் காரணமோ? யாதாயினும் அது வாழ்க! ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று மணி மேகலை. இதன் ஆசிரியர் - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்னும் சங்கப் புலவராவர். 'தண்டமிழாசான் சாத்தன், நன்னூற் புலவன்' என்று இவர் இளங்கோவடி களால் சிறப்பிக்கப் படுகின்றனர். இவர் நெல் முதலிய கூல வாணிகம் செய்தமையான், 'கூலவாணிகன்' என்னும் அடை மொழியைப் பெற்றார். இவர்க்குச் 'சீத்தலை' என்னும் அடை மொழி, அளவு கடந்த தாய்மொழிப் பற்றினால் வந்ததே யாகும். சாத்தனார் மிகுந்த தமிழ்ப் பற்றுடையவர். தமிழே தம் உடல்பொருள் உயிர் எல்லாம் எனக்கொண்டவர்: தமிழ் வாழத் தாம் வாழ்ந்த தகையினர். ஒரு தாய் தன் பிள்ளை ஏதாவது குற்றஞ் செய்தால், அவ்வாறு செய்யாமல் இருக்கும்படி கூறுவாள்; அவன் கேட்கா விடின், 'இது நம் குடிப்பெருமைக் கடுக்காது; இனி அவ்வாறு நடந்து கொள்ளாதே!' என்று அன்போடு கேட்டுக் கொள்வாள்; எவ்வளவு சொல்லியும் கேளாமல் அவன் மேலும் மேலும் குற்றம் புரிவானானால், 'அந்தோ! இப்பொல்லாத பிள்ளையைப் பெற்றேனே! என் பெயரைக் கெடுக்கிறானே கொடியன்; இவனா கொடியன்? இல்லை இவனைப் பெற்ற நானே கொடியள்; ஐயோ! என் மானம் போகிறதே!' என்று தன் தலையில் அடித்துக் கொள்வாள். அத்தாய் தன் குடிப் பெருமையில் தனக்குள்ள பற்றினால் அவ்வாறு செய்தாள். இது நற்குடிப் பிறந்த நற்றாயாரின் இயல்பு. இவ்வாறே, அரைகுறையாகக் கற்றவர்கள் சொற்குற்றம், பொருட்குற்றம், யாப்புக் குற்றம் முதலிய குற்றமுடைய பாட்டுக்கள் பாடினால் சாத்தனார், 'குற்றமுடைய பாட்டுக் களைப் பாடாதீர்; இது தமிழைக் கொலை செய்வதாகும். தாய்க்கொலையினும் கொடியது தாய்மொழிக் கொலை தமிழ்க் கொலை செய்யாதீர்' எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்வார். அங்ஙனம் கேட்டுக் கொண்டும் கேளாது மேலும் குற்றமுடைய பாட்டுக்கள் பாடுவதைக் கண்டால் மனம் பொறாது வருந்து வார்; 'அந்தோ! இது அவர் குறையன்று தமிழ் மொழியின் பயக்குறை' என்று, எழுத்தாணியால் தம் தலையில் குட்டிக் கொள்வார். இங்ஙனம் தமிழ்க் கொலை செய்வதைக் கண்டபோ தெல்லாம் குட்டிக் கொள்வதால் தலையில் புண் உண்டானது. மேலும் மேலும் குட்டிக் கொள்வதால் புண் ஆறாது சீப்பிடித்துக் கொண்டது. அதனால் இவரைச் சீத்தலைச் சாத்தனார் என்றழைத்தனர். என்னே சாத்தனாரின் தாய்மொழிப் பற்று! சாத்தனார் போன்ற தமிழ்ச் சான்றோர்களாலன்றோ தமிழ் மொழி இன்னும் தன் பழம் பண்பை இழக்காமல் இருந்து வருகிறது. தாய், தன் மகன் குற்றமற்றவனாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே தன் தலையில் அடித்துக் கொண்டாள். சாத்தனார் தம்மால் வளர்க்கப்படும் தமிழ் குற்றமற்றதாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே தம் தலையில் குட்டிக் கொண்டார். அந்நற்றாயும், சாத்தனாராகிய இச்செவிலித் தாயும் செய்த செயல் ஒன்றுதானே? அவள் மகன் மேலுள்ள பற்றினால் தலையில் அடித்துக் கொண்டாள். இவர் தமிழ் மேலுள்ள பற்றினால் தலையில் குட்டிக் கொண்டார் வாழ்க இருவர் பற்றும்! சாத்தனார் தாய்மொழிப் பற்று இவ்வளவோடு நின்றுவிட வில்லை. தாய்மொழிப் பற்றுக்குத் தாம் ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்ததோடு, தாம் செய்த மணிமே கலையில் ஓர் எடுத்துக் காட்டுந் தந்துள்ளார். காவிரிப்பூம் பட்டினத்தில் சாதுவன் என்றொரு வணிகன் இருந்தான். அவன் பெருஞ் செல்வன்; ஆதிரை என்னும் கற்பரசியின் கணவன்; தீயவழியில் தன் செல்வம் முழுதும் தொலைத்து விட்டான்; வாழ வழியில்லை. அவன், வெளி நாடு சென்ற ஒரு வணிகக் கப்பலில் ஏறிச் சென்றான். சாதுவன் சென்ற அக்கப்பல் கவிழ்ந்துவிட்டது. சாதுவன் ஒரு மரத் துண்டைத் துணையாகக் கொண்டு நீந்திச் சென்று ஒரு தீவை யடைந்தான். நெடுநேரம் நீந்திய களைப்பினால் அவன் ஓரிடத்தில் படுத்து அயர்ந்து தூங்கிவிட்டான். அத்தீவு, மாக்களையே யன்றி, மக்களையும் கொன்று தின்று வாழும் நாகர் என்னும் ஒருவகை மக்கள் வாழுந்தீவு. அங்கு வந்த நாகர்கள் தூங்குகின்ற சாதுவனைக் கண்டனர். நல்ல வேட்டை கிடைத்ததென்று அகமிக மகிழ்ந்து, சாதுவனைச் சுற்றி நின்று ஆரவாரம் செய்தனர். சாதுவன் விழித்தெழுந் தான்; தன்னைச் சூழ்ந்துள்ள அந்நாகர்களைக் கண்டு அஞ்சினான். நாகர்கள் சாதுவனைப் பார்த்து, 'நீ யார்?' என்று கேட்டனர். சாதுவனுக்கு அந்நாகர் மொழி தெரியும். அதனால், அவன் அவரோடு அவர் தாய்மொழியில் பேசினான். தங்கள் தாய்மொழியில் பேசுவது கண்ட நாகர்கள், சாதுவனிடம் அளவு கடந்த அன்பு கொண்டனர்; அவனைத் தங்கள் தலைவனிடம் அழைத்துச் சென்றனர். சாதுவன், அத்தலைவனிடம் நாகர் மொழியிலேயே பேசினான். அயலானொருவன் தனது தாய்மொழியில் பேசுவது கண்ட நாகர் தலைவன் அளவிலா மகிழ்ச்சியடைந்தான்; சாதுவனிடம் மனங் கலந்த அன்பு கொண்டு அளவளா வினான். சில நாட்களுக்குப் பின், கடலிற் கவிழ்ந்த கப்பல்களிலிருந்து எடுத்து வைத்திருந்த பொன்னும் துகிலும் பிறவும் நிரம்பக் கொடுத்து, அங்கு வந்த காவிரிப்பூம் பட்டினத்துக் கப்பலொன்றில் சாதுவனை அனுப் பினான். சாதுவன் புகார் நகரம் போந்து, ஆதிரையுடன் இனிது வாழ்ந்து வந்தான். நாகரின் தாய்மொழிப் பற்று, சாதுவனைக் கொல்லாது விட்டதோடு, பெருஞ்செல்வனாகவுஞ் செய்தது. மக்களைக் கொன்று தின்று வாழும் பகுத்தறிவில்லாத நாகர் என்போர் கூடச் சிறந்த தாய் மொழிப் பற்றுடையோராய் விளங்குகின்றனர். ஆனால், பகுத்தறிவுடைய தமிழ் மக்களில் ஒரு சிலர், தாய்மொழிப் பற்றுச் சிறிதும் இன்றி, தம் தாய்மொழி யாம் தமிழ் மொழியைக் கொலை செய்கின்றனரே, இது என்ன கொடுமை! என்பதைத் தமிழ் மக்களுக்கு உணர்த்த எழுந்ததேயாகும் இக்கதை. தாய்மொழிப் பற்றுடைமைக் காகச் சாத்தனாரைப் போற்றுவதா? நாகரை, நாகர் தலை வனைப் போற்றுவதா? என்பது நமக்கு விளங்கவில்லை. அவர் எடுத்துக்காட்டு அவரையும் விஞ்சிவிட்டது. இத்தாய்மொழிப் பற்றுச் சாத்தனாருடன் நின்றுவிட வில்லை; தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருந்தது. சாத்தனார் தமிழ்க் கொலை செய்வோரின் அறியாமைக்கு இரங்கித் தம் தலையில் குட்டிக் கொண்டார். ஆனால், பிற்காலத் தமிழர்கள் அத்தமிழ்க் கொலை செய்தவர் தலையி லேயே குட்டித் தமிழ்க் கொலையைத் தவிர்க்கப் பாடுபட்டனர். அதிவீரராமபாண்டியன் என்பவன் கொற்கை என்னும் ஊரிலிருந்து பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். இவன் சிறந்த தமிழ்ப் புலமையடையவன்; புரவலனும் புலவனுமாக விளங்கியவன்; நைடதம், நறுந்தொகை முதலிய நூல்கள் செய்து தமிழ் வளர்த்து வந்த தகையாளன்; தமிழ் மொழியிடத்து அளவு கடந்த பற்றுடையவன். இவன் தன்னிடம் பாடிப் பரிசு பெற வரும் புலவர்கள் தமிழ்க்கொலை செய்தால், குற்றங்கட் கேற்றவாறு அவர்கள் தலையில் ஓங்கிக் குட்டுவான். இது பள்ளிப் பிள்ளைகள் செய்யுஞ் செயல், பள்ளிப் பிள்ளைகளில் ஒருவனுக்குத் தெரியாததை மற்றொருவன் சொன்னால், தெரியாத பிள்ளையைச் சொன்ன பிள்ளை குட்டுவது வழக்கம். அங்ஙனம் பள்ளிப் பிள்ளைகள் செய்யும் செயலைச் செய்து வந்ததால், இவனைப் பிள்ளைப் பாண்டியன் என்று அழைத்து வந்தனர். என்னே பாண்டியனின் தாய்மொழிப் பற்று! சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த மரபில் வந்தவனல்லவா? தமிழ் மக்களுக்குத் தாய்மொழிப் பற்றுக் குன்றிய பிற்காலத்தே தமிழர் நிலைக்கிரங்கிய தாய்மொழி பற்றுடைய புலவரொருவர், "குட்டுதற்கோ பிள்ளைப்பாண் டியனீங் கில்லை" எனத் தமிழ் மக்களின் தகா நிலைக்கு இரங்கியதோடு, பிள்ளைப் பாண்டியனின் தாய்மொழிப் பற்றைப் பாராட்டினார். தமிழில் பாரதம் பாடிய புலவர்களில் வில்லி புத்தூ ராழ்வார் என்பவர் ஒருவர். இவர் வில்லி எனவே அழைக்கப் படுவர். இவர் பாடிய பாரதம் வில்லி பாரதம் எனப்படும். இவர் சிறந்த கவித்திறம் உடையவர்; அளவு கடந்த தமிழ்ப் பற்றுடையவர்; சாத்தனார், குற்றமுடைய பாட்டு பாடுவோரின் கொடுஞ் செயலுக்கு இரங்கித் தன்தலையில் குட்டிக் கொண்டார். அதிவீர ராம பாண்டியன், குற்றஞ் செய்வோர் தலையில் குட்டினான். ஆனால், வில்லியோ அவ்வாறு செய்யவில்லை; இன்னும் ஒரு படி மேற் சென்று விட்டார். இவர், வக்கபாகை வரபதி யாட்கொண்டான் என்னும் அரசனது அவைக்களப் புலவராக இருந்து வந்தார். அரை குறையாகக் கற்ற புலவர்கள் பொருள் பெறும் ஆசையால், குற்றங்குறையுள்ள பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வந்து பரிசு வேண்டினால், ஆழ்வார் அன்னார்க்குத் தக்க பரிசு கொடுத் தனுப்புவார். என்ன அது? குத்தூசி போன்ற ஒன்றைக் காதுக்குள் விட்டு இழுத்து, காதை அடியோடு அறுத்து அப்புலவர் கையில் கொடுத்து, 'உமது பாட்டுக்கு ஏற்ற பரிசில் இது தான்' என்று சொல்லி யனுப்புவார். இதென்ன கொடுமை! இதற்கா இத்தகைய வன்கொலை? என்னலாம். தமிழ்க் கொலை செய்வது மட்டும் கொடுமையும் வன்கொலையுமல்லவா? வில்லி போன்றவர் இல்லா திருந்திருக்கின் இந்நேரம் தமிழ் இறந்துபட்டிருக்கும் என்பதில் ஐய மென்ன? முன் பிள்ளைப் பாண்டியனைப் பாராட்டிய புலவர், அப்பாராட்டுதலோடு சேர்த்து, " குட்டுதற்கோ பிள்ளைப்பாண் டியனீங் கில்லை, குறும்பியள வாய்க்காதைக் குடைந்து தோண்டி எட்டினமட் டறுப்பதற்கோ வில்லி யில்லை." என, இவருடைய தமிழ்ப் பற்றினையும் பாராட்டினார். குற்றஞ் செய்தோரைத் தலையில் குட்டுதலும், காதை அறுத்தலும் எச்சரிக்கை செய்தலேயாகும். ஆனால், 'கொலைக்குக் கொலை' என்ற முடிவான தண்டனை நிறைவேற்றப் பட்டதும் உண்டு. ஒட்டக் கூத்தர் என்பவர் குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவர்; பேரறிஞர்; பெருங்கவிஞர்; 'மோனை முத்தமிழ் மும்மதமும் பொழியானை' எனத் தம்மைக் கூறிக் கொள்ளும் அத்தகு தமிழ்ப் புலமை யுடையவர். இவர் முன்னைய மூவரினும் முதிர்ந்த தமிழ்ப் பற்றுடையவர் எனலாம். இவர் தமிழ்க் கொலை செய்வோரின் தலையையே வெட்டித் 'தமிழ்க் கொலை செய்யின் தலை போய்விடும்' என அஞ்சும்படி செய்து தமிழைப் பாதுகாத்து வந்த தகவுடை யாளராவர். தேமா, புளிமா என்னும் யாப்பிலக்கணங்கூடத் தெரியாத ஒரு சிலர், ஏதோ சில தமிழ்ப் பாட்டுக்களைப் படித்த பழக்கத்தினால், ஒரு பாட்டைப் பார்த்து அதுபோல அரை குறையாகத் தாமும் பாடுவதைக் கவித் திறமையாகக் கொண்டு பொருள் பெறும் ஆசையால் பாட்டுப் பாடிக் கொண்டு பரிசு பெற வந்தால், கூத்தர், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம் பற்றிய கேள்விகள் கேட்பார்; சரியான விடை கூறத் தெரியாதவர்களை, 'இனிமேல் இத்தகைய குற்றமுடைய பாட்டுக்களைப் பாடித் தமிழைக் கொலை செய்யாதீர்; தமிழ் இலக்கிய இலக்கணங்களை முறையாகப் படியுங்கள்; யாப்பருங்கலக் காரிகையை யாவது நன்றாகப் படித்தறியுங்கள்; அதன் பின் புதிய பாட்டுக்கள் பாடுங்கள்; குற்றங் குறையில்லாமல் பாடிப் பாடிப் பழகுங்கள்; அதன்பின் பாடிப் பரிசு பெறச் செல்லுங்கள்' என அறிவுரை கூறி அனுப்புவர். அவர்கள் அவ்வாறு செய்யாமல் மறுபடியும் தமிழ்க் கொலை செய்து கொண்டு வந்தால், அத்தமிழ்க் கொலைஞர்களை இரண் டிரண்டு பேராகக் குடுமியோடு குடுமியை முடிந்து, தலையை வெட்டி விடுவாராம். இது தமிழ்ப் பற்றின் முடிந்த முடிவாகும். குற்றமுடைய பாட்டுப் பாடியதற்குமா கொலைத் தண்டனை? இது கொடுமையன்றோ? எனின், அயலார் வீட்டுக் கதவைத் தட்டிய குற்றத்திற்காகப் பொற்கைப் பாண்டியன் தன் கையையே வெட்டினான். அறியாது ஓர் ஆண் கன்றைக் கொன்ற குற்றத்திற்காக, ஒரு சோழ மன்னன் தன் ஒரே மகனையே கொன்றான். சண்டேசுர நாயனார் என்பவர், மணலைக் குவித்து அதனைச் சிவலிங்க மென்று கொண்டு, அதன் மேல் ஊற்ற வைத்திருந்த பாற் குடத்தைக் காலால் தள்ளிப் பாலைக் கவிழ்த்த குற்றத்திற்காகத் தன் தந்தையின் காலை வெட்டினார். மாறுபட்ட சமயக் கருத்துடைய பல்லாயிரக் கணக்கான பேர்கள் கழுவிலேற்றியும் தூக்கியும் கொல்லப் பட்டுள்ளனர். அரசியல் எதிரிகளைத் தூக்கிலிட்டும் சுட்டும் கொல்வதை இன்றும் காண்கிறோம். அவற்றை யெல்லாம் விடக் கூத்தர் செய்தது கொடுமையாகாது. "கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்" என்பது வள்ளுவர் வாய்மொழி. மக்கட் கொலையினும் தாய்மொழிக் கொலை குறைந்ததா? புல்லாகிய களையைக் களையா விட்டால் நெல் எங்ஙனம் வளரும்? வேண்டுமென்றே தமிழ்க் கொலை புரியும் கொடியரைக் களையாவிடின் தமிழ் எங்ஙனம் வளரும்? தமிழ்க் கொலை ஓர் இனக் கொலை யாகும். தமிழ்க் கொலையைத் தமிழினக் கொலையாகவே கொண்டு தமிழ் வளர்த்து வந்த காலம் அது. என்னே கூத்தரின் தாய்மொழிப் பற்றின் முதிர்ச்சி! முன், பிள்ளைப் பாண்டியனையும் வில்லியையும் பாராட்டிய அப்புலவர், அவ்விருவரையும் பாராட்டிய பாராட்டோடு சேர்த்து, "குட்டுதற்கோ பிள்ளைப்பாண் டியனீங் கில்லை. குறும்பியள வாய்க்காதைக் குடைந்து தோண்டி எட்டினமட் டறுப்பதற்கோ வில்லி யில்லை. இரண்டொன்றாய் முடிந்ததலை இறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்தன் இல்லை விளையாட்டாய்க் கவிதைதனை விரைந்து பாடித் தெட்டுதற்கோ பணக்காரத் துரைக ளுண்டு தேசமெங்கும் புலவரெனத் திரிய லாமே." எனக் கூத்தரின் தமிழ்ப் பற்றினையும் பாராட்டி, அத்தகைய தமிழ்ப் பற்றுடையோர் இன்று இல்லாமையால், 'தடியெடுத்தவன் தண்டற்காரன்' என்பது போல, கண்டவர் களெல்லாம் கவிஞர்கள் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழ்க் கொலை புரிந்து, அக்கொலைக் குற்றம் புரிந்ததற்குக் கூலியாகத் தமிழறிவில்லாச் செல்வர்களிடம் பரிசு பெற்று வாழ்ந்து வந்த கொடுஞ் செயலைக் கடிந்து கூறி இகழ்ந்து மனம் நொந்தனர். என்று தமிழ் மக்கள் சிறந்த தாய் மொழிப் பற்றுடையராகிக் குற்றங்குறையற்ற தமிழ் வளர்த்துத் தனிச் சிறப்புறுவார்களோ!  5. பாட்டும் பரிசும் பழந்தமிழ் மக்கள் தம் வாழ்க்கை முறையை அகம், புறம் என இரு வகையாகப் பகுத்துப் பயனடைந்து வந்தனர். அகம் - அகத்திணை, அகவொழுக்கம், அகப்பொருள் எனவும், புறம் - புறத் திணை, புறவொழுக்கம், புறப்பொருள் எனவும் வழங்கும். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், கைக்கிளை, பெருந்திணை என அகத்திணை ஏழு வகைப்படும். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனப் புறத்திணை ஏழு வகைப்படும். இவை இன்ன என்பது தொல்காப்பியத்தில் விளக்கமாகக் கூறப்படுகிறது. புறத்திணை ஏழனுள், பாடாண்டிணை என்பது பாடப் படுவோர், பாடும் பொருள், பாடும் வகை, பாடுவோர் இலக்கணங் கூறுவதாகும். பாடு ஆண் திணை - பாடப்படும் ஆண்மகனது ஒழுக்கம். இது பாடுவோரையும் குறிக்கும். திணை - ஒழுக்கம். அதாவது வாழ்க்கை முறை. பாடும் பாட்டுக்கு இலக்கணம் வகுத்துப் பாடித் தமிழ் வளர்த்து வந்ததோடு, வாழும் வாழ்க்கை முறையினை அகம் புறம் எனப் பகுத்து, அகப்பொருள் பற்றியும் புறப் பொருள் பற்றியும் பாடி, வாழ்க்கை முறையை வரையறைப்படுத்தி வாழ்ந்து வந்த நம் முன்னையோரின் அறிவு நுணுக்கம் அறிந்து இன்புறற் பால தொன்றாகும். அகநானூறு, நற்றிணை, கலித்தொகை, குறுந்தொகை, ஐங்குறுநூறு முதலியன அகத்திணை நூல்கள். புறநானூறும் பதிற்றுப் பத்தும் புறத்திணை நூல்கள். ஒருவருடைய வீரம், கொடை, புகழ் முதலிய சிறப்பினைப் பற்றிப் பாடுதல் பாடப்படுவோரைப் பற்றியதாகும். கொடுப் போரை ஏத்துதல், கொடாரைப் பழித்தல், தாம் வந்திருத்தலைத் தலைவனுக்கு உரைக்கும்படி வாயில் காப்பவனுக்கு உரைத்தல், ஆற்றுப்படை முதலியன பாடும் புலவரைப் பற்றியவையாகும். அகப்பொருளும் புறப் பொருளும் பாடும் பொருள்களாகும். வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, பெருமங்கலம், வாழ்மங் கலம் முதலியன பாடும் வகையாகும். தொல்காப்பியத்தில் இவை யெல்லாம் நன்கு விரித்துக் கூறப்படுகின்றன. இயற்றமிழ்ப் புலவர்கள், தமிழ்ச் செல்வர்கள் உள்ள இடங்களை நாடிப் பழுமரம் நாடிச் செல்லும் பறவைகள் போலச் சென்று, அகப்பாட்டும் புறப்பாட்டும் பாடி அச்செல்வர் களை மகிழ்வித்து, அவர்கள் மகிழ்ந்து கொடுக்கும் பரிசிலைப் பெற்று வாழ்ந்து வந்தனர். அப்புலவர்கள் எப்போதும் பாடிப் பரிசு பெறுவதையே தொடர்ந்த தொழிலாகக் கொள்ளாமல், பெற்ற பரிசிலைக் கொண்டு சுற்றத்தோடு உண்டுடுத்து இருந்து கொண்டு, தமிழ் நூல்களைக் கற்றும், நூலாராய்ச்சி செய்தும், பிறர்க்குப் பாடம் சொல்லியும், தாமும் இன்புற்றுப் பிறரையும் இன்புறச் செய்து வாழ்ந்து வந்தனர். பெற்ற பரிசில் தீரும்வரை குடும்பக் கவலை என்பது அவர்களை அணுகவே அணுகாது. செலவுக்கில்லாமல் வாழ்க்கைத் தேர் நிலையாக நின்ற பின்னர், மனைவியார் அவ்வாழ்க்கைத் தேர் ஓடாமல் நிற்கும் நிலையை எடுத்துரைத்த பின்னர், சோறில்லாமல் மக்களும் மனைவியும் வாடி வதங்கிய பின்னர், அடுப்பில் காளான் புடைத்த பின்னர்த் தான் குடும்பக் கவலை யென்பது அவர்க்குத் தென்படும். அதன் பின்னர்த்தான் அவர்கள் ஒரு வள்ளலை நாடிப் பாடிப் பரிசு பெற்றுவரச் செல்வர். அவ்வளவு பற்றில்லாத வாழ்வு வாழ்ந்து வந்தனர் அன்னார். தமக்கென வாழாப் பிறர்க்குரி யாளர்களாகிய அச்சான் றோர்கள், தமது குடும்பத்தைப் பற்றிக் கவலை யெடுத்துக் கொள்ளாமல், தமிழ்ப் பொது மக்களின் வாழ்வுக்காகவே, தமிழ் வாழ்வுக்காகவே, தமிழ்ப் பண்பாட்டு வாழ்வுக்காகவே முழுக் கவலையும் எடுத்துக் கொண்டு, அதற்காகவே, தம் வாழ்க்கையைப் பயன்படுத்தி வந்தனர். எத்தகைய வறிய நிலையிலும், இவர்கள் தரமறியாது செல்வர்கள் குறையக் கொடுக்கினும், ஆள் மூலம் கொடுக்கினும் அப்பரிசிலைப் பெறாது மீள்வர். என்னே அன்னாரின் மானவாழ்வு! இனித் தமிழ்ச்செல்வர்களோ, முறுகிய தமிழ்ப் பற்றினாலும், புலவர்தம் பொருள் மொழியைக் கேட்டு இன்புறும் விருப்பி னாலும் 'உவப்பத் தலைக் கூடி உள்ளப் பிரியும்' - 'இன்று இப்புலவர் பெருந்தகையோடு அளவளாவும் நற்பேறு பெற்றேம் என்று செல்வர் மகிழும் வண்ணம் அவரிடம் சென்று, இத்தகைய பெரும் புலவரைப் பிரியின், மறுபடியும் இவரை எப்போது கண்டு அளவளாவி இன்புறுவோம் என்று எண்ணிப் பிரிய மனமில்லாமல் இருக்கும் நிலையில் பிரியும், புலவரைப் பிரிய மனமில்லாதவராய், பிரியா விடை கொடுத்தனுப்பும் அத்தகு பெருமையுடையராதலானும், உடனே பரிசில் கொடுக்காமல் காலந் தாழ்த்துவர். அவர்கள் கண்டார்களா இவர்தம் வறுமை நிலையை? அறுவகைச் சுவையோடு கூடிய நால்வகை உணவை, மாமியார் வீட்டில் மருவலம் உண்ணும் மருமகன்போல, இவர் மட்டும் உண்டு கொண்டிருந்தால் போதுமா? காளான் புடைத் துள்ள அடுப்பினைப் பார்த்து, பின்னர்த் தம் வயிற்றினைப் பார்த்து, பின்னர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, பின் வழிமேல் விழி வைத்துத் தம் வரவை எதிர்பார்த்துக் கொண்டு ஏங்கி யிருக்கும் குடும்பத்தினர் நிலை என்னாவது? பல நாள் ஆகியும் செல்வர் பரிசுகொடாமல் காலந் தாழ்த்துவரின் தம் குடும்ப நிலையைக் குறிப்பாய்க் கூறிப் பரிசு கொடுக்கும்படி வேண்டுவர் புலவர். இது பரிசில் கடாநிலை எனப்படும். வெளிப்படையாகக் கேட்க நாணமும் மானமும் இடந்தராமையால் குறிப்பாகக் கேட்பர். அக்குறிப் பறிந்ததைக் கூறி, அதனைப் பொறுத்தருளுமாறு வேண்டி, வேண்டியன கொடுத்து மகிழ்விப்பர். ஒளவையாரைப் பிரிய மனமில்லாத வள்ளல் பாரி, அவர் வற்புறுத்தலின் பேரில் பரிசு கொடுத்தனுப்பிவிட்டு, பின் தன் ஆட்களை விட்டு அப்பரிசிலைப் பறித்துக் கொண்டு வரும்படி செய்து, ஒளவையார் திரும்பி வந்து நடந்தது கூறவே, அவ்வழிப் பறி பறித்தவரைக் கண்டு பிடிப்பவன் போல் ஒளவையாரைச் சில நாள் அங்கு இருக்கச் செய்ததும், இவ்வாறே, பழையனூர்க் காரி என்னும் வள்ளல், தோட்டத்தில் களை வெட்டிக் கொண்டிருந்தபோது, ஒளவை யார் அவன் வீட்டிலிருந்து அங்குச் சென்று போக விடை கேட்கவே, அவரைப் பிரிய மனமில்லாத காரி, தான் ஓரிடத் திற்குச் சென்று விரைவில் வருவதாகவும், வரும்வரை களை வெட்டிக் கொண்டிருக்கும் படியும் ஒளவையாரிடம் களைக் கொட்டைக் கொடுத்துச் சென்று, பொழுது சென்றபின் வந்து, ஒளவையாரை அன்று அங்கேயே இருக்கச் செய்ததும், பழந்தமிழ்ச் செல்வர்களின் தமிழ்ப்பற்றுக்கு, தமிழ்ப்புலவர் களைப் போற்றி வந்த தகுதிக்கு எடுத்துக் காட்டாகும். பாரி, காரி என்னும் அவ்விரு வள்ளல்களின் பெருந்தகை மை யினையும், " பாரி பறித்த பறியும், பழையனூர்க் காரியன் றீந்த களைக்கொட்டும்." என, ஒளவையார் பாராட்டியுள்ளார். என்னே அவ் வள்ளல்களின் தமிழ்ப் பற்றும் தனித்தகைமையும்! செல்வர்கள் வீடுகள், புலவர்க்கு அடையாக் கதவினை யுடையனவாக இருந்தன. வாயிலோனைக் கேளாமலேயே புலவர்கள் அவ்வீடுகளுக்குட் செல்வர். செல்வர் ஊரிலில்லாத போது, அவர் மனைவியரே பாட்டைக் கேட்டுப் பரிசு கொடுத்து மகிழ்விப்பர். பாட்டின் பொருளுணர்ந்து, புலவரின் தகுதி யறிந்து பரிசு கொடுக்கும் தகுதியுடையராய் இருந்தனர் அக்காலத் தமிழ்ச் செல்வக் குடி மகளிர். தஞ்சை வாணன் என்னும் வள்ளலின் மனைவியார், கணவன் ஊரில் இல்லாதபோது, அவன் மீது பொய்யாமொழிப் புலவர் பாடி வந்த தஞ்சை வாணன் கோவை என்னும் செந்தமிழ் நூலை அரங்கேற்றும்படி செய்து, பாட்டுக்கு ஒன்றாக நானூறு பொற் றேங் காய்ப் பரிசுகொடுத்துப் புலவரை மகிழ்வித்தது இதற்கு எடுத்துக் காட்டாகும். இனித் தலைவன் தலைவி இருவரும் ஊரில் இல்லாத போது வேலைக்காரி பரிசு கொடுத்தலும் உண்டு. அத்தகைய தமிழ்ப் பற்றுடைய செல்வக் குடிமக்களையுடைய தமிழ்நாடு இனி ஒருகால் அமையப்பெறுமோ! இனி, இசை நாடகத் தமிழ்ப் புலவர்களாகிய பாணரும் கூத்தரும் பொருநரும் தம் குடும்பத்துடன் யாழ், குழல், தடாரி, கிணை, மத்தளம் முதலிய இசைக் கருவிகளைச் சுமந்து கொண்டு, ஓர் ஊரைவிட்டு வேறோர் ஊருக்குக் குடி போவாரைப்போல, செல்வர் இருக்கும் ஊரை நோக்கிச் செல்வர். 'வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி' என்பது புறநானூறு (97). செல்வர் இருக்கும் இடத்தை நோக்கி இவர்கள் பழுத்த மரங்கள் இருக்கும் இடத்தை நோக்கிச் செல்லும் பறவைகள் போலச் செல்வார்கள் என்பதாம். தமிழ்ச் செல்வர்கள் இவர்களை அன்புடன் வரவேற்றுப் போற்றுவர். இசைப் புலவர்கள் இன்னிசையால் செல்வரை மகிழ்விப்பர். இசைத் தேனுண்டு அச்செல்வர்கள் இன்புறுவர். இரவில் ஊர்ப் பொது மக்கள் கூடிய கூட்டத்தில் இசையும் கூத்தும் நடைபெறும். பாணர் யாழை மீட்டிப் பாடுவர். பாடினி யரும் உடன் பாடுவர். அவர் தமிழ் மக்களின் செஞ்செவியில் இன்னிசைத் தமிழ்த் தேனை வார்ப்பர். யாழ், குழல், தடாரி, கிணை, மத்தளம் முதலிய இன்னிசைக் கருவி களை இசைப்பர். பாணரும் பாட்டியரும் பாடும் பாட்டின் பொருள் விளங்க விறலியர் விறல்பட ஆடுவர். இதுதான் நடிப்பு அல்லது நாடகம் என்பது. கூத்தரும் பொருநரும் கதை தழுவிய கூத்தாடுவர். 'கூத்தாட்டவைக் குழாம்' என்னும் திருக்குறளால், ஊர்ப் பொது மக்கள் கூடிய அவையில் கூத்தாடப் பட்டு வந்ததென்பது விளங்குகிறது. பாணரும் பாட்டியும் கூத்தரும் பொருநரும் விறலியும் நிகழ்த்தும் ஆடல் பாடல்களைக் கண்டுங் கேட்டும் இன்புறுவதோடு, தமிழ்ப் பொது மக்கள் அறிவும் ஒழுக்கமும் அடையப் பெறுவர். செல்வர்கள் இவர்கட்கு வெறுக்க வெறுக்க அணியும் ஆடையும் பொன்னும் பொருளும் யானையும் குதிரையும் ஆடும் மாடும் தேரும் பிறவும் கொடுத்துப் பெருமைப் படுத்துவர். இவர்க்குச் செல்வர் கொடுக்கும் பரிசுகளில் பொற்றாமரைப் பூவும், பொன்னரி மாலையும் குறிப்பிடத் தக்கவை. பொற்றா மரைப் பூக்களை வெள்ளி நாரினால் தொடுத்த மாலை யொன்றை ஒரு வள்ளல் கொடுத்ததாக ஒரு புலவர் பாடுகின்றார். ஒரு பாணன் பரிசு பெற்று வருவது கண்ட மற்றொரு பாணன், அவனை வேற்றுநாட்டை வென்று வெற்றிக் களிப்புடன் நாற்படை சூழத்திறை கொண்டு வரும் மன்னன் என்று எண்ணி, 'நீ எந்த நாடு? உன் பெயர் என்ன?' என்று கேட்க, அப்பாணன், 'நானும் உன் போன்ற ஒரு பாணனே. அரசன்அல்லன். இன்ன வள்ளலிடம் பெற்ற பரிசில் இது' என்று கூறும் பழம் பாடல் ஒன்றுண்டு. கொங்கு நாட்டில் உள்ள கொல்லி மலைத் தலை வனாகிய வல்வில் ஓரி கொடுத்த அளவுக்கு மீறிய ஆடை, அணி, பொன், பொருள் முதலியவற்றால், பாணரும் கூத்தரும் பொருநரும் பாட்டியும் விறலியும், பரிசில் பெற வேறிடம் செல்ல வேண்டிய வேலை இல்லாமற் போனதால், தாங்கற்ற கல்வியையே - ஆடல் பாடலையே - மறந்து விட்டனர் என்று வன்பரணர் என்னும் புலவர் கூறுகின்றார். "இன்னியம் கறங்க, ஆடலும் ஒல்லார்தம் பாடலும் மறந்தே1." என்பது அது. தமிழ் வளர்க்கும் பெருந் தொண்டை மேற் கொண்டும், பரிசு வேண்டியும் பாடி வரும் புலவர்க்குத் 'தோன்றிற் புகழொடு தோன்றுக' என்னும் வள்ளுவர் வாய் மொழிப் படி, பிறப்பின் பயனாகிய புகழ் பெறுதலை விரும்பிய தமிழ்ச் செல்வர்கள் வாரி வாரி மாரிபோல் வழங்கி வந்தனர். உள்ளன வெல்லாங் கொடுத்து வறியராய் வாழ்ந்த செல்வர்கள் பலர். கொடுத்துக் கொடுத்து ஏழையான பின் புலவர்க்குக் கொடுக்கப் பொருளின்மையால், 'இல்லை' என்று சொல்லல் இழிவென எண்ணி, உயிர்விடத் துணிந்த செல்வர்கள் பலர். கோவை மாவட்டத்துக் கோபி செட்டிப் பாளையத்தை அடுத்த பாரியூர்ச் செட்டிப் பிள்ளையப்பன் என்னும் வள்ளல் புலவர்க்குக் கொடுக்கப் பொருள் இல்லாமையால் புலிக்கு இரையாகத் துணிந்ததும், செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நின்றைக் காளத்தி என்னும் வள்ளல் புலவர்க்கு வழங்க வகையின்மையால் பாம்புப் புற்றில் கைவிட்டு இறக்கத் துணிந்ததும் இதற்கு எடுத்துக் காட்டாகும். பத்துப் பாட்டில் ஒன்றான பட்டினப்பாலை என்னும் பாட்டைத் தன்மீது பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர்க்குப் பதினாறு நூறாயிரம் (16,00,000) பொன் பரிசளித்துப் பெருமைப் படுத்தினன் கரிகால் வளவன் என்னும் சோழ வேந்தன் 301 அடிகளை (வரி) உடையது பட்டினப் பாலை, ஓர் அடியின் பரிசு அல்லது விலை ரூ. 5,315 - 8 - 0 ஆகிறது. அக்காலத் தமிழ்ச் செல்வர் நிலையோடு இக்காலத் தமிழ்ச் செல்வர் நிலையை ஒப்பிட்டு நோக்கினால், நோக்கு வோர் உள்ளம் வெடித்துவிடும் நிலையிலன்றோ உளது? என்னே கரிகால் வளவனின் தமிழ்ப் பற்று! அடிக்கு ஐயாயிரத்து முந்நூற்றுப் பதினைந்தரை ரூபாய்! இனி, எட்டுத்தொகை என்னும் சங்கநூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து என்பது, சேரமன்னர் பதின்மர்மீது பத்துப் புலவர்கள் பாடிய நூறு பாட்டுக்கள் ஆகும். பத்துப் பாட்டுக் களால் தம்மைப்பாடிய புலவர்க்கு, அச்சேர மன்னர் ஒவ்வொரு வரும் கொடுத்த பரிசிலை நோக்கினால், அன்னாரின் தமிழ்ப் பற்றும், கொடைத் திறனும் நம்மனோரால் எண்ணவும் முடியாத அத்தகு பெருமையுடையனவாக உள்ளன. தன்மீது இரண்டாம் பத்தைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்னும் புலவர்க்கு, இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் என்னும் சேர மன்னன், உம்பற் காட்டு ஐந்நூறு ஊர்களோடு, 38 ஆண்டு தன்னாட்டு வருவாயுள் பாகமும் கொடுத்துப் பெருமைப் படுத்தினானாம். உம்பற்காடு என்பது மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சாரலில் உள்ள வளமிக்க ஒரு காட்டுப் பகுதி. உம்பல் - யானை. உம்பல் காடு - யானைக்காடு. யானைமலை என்பது போன்றது இப்பெயர். தன்மீது நான்காம் பத்தைப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்க்குக் கழங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னன், நாற்பது நூறாயிரம் (40,00,000) பொன்னும், தான்ஆள்வதிற் பாகமும் கொடுத்துப் பெருமைப் படுத்தினானாம். இப்பத்துப் பாட்டும் 178 அடிகளே. ஓர்அடியின் விலை அல்லது பரிசு என்ன? அடிக்கு ரூ. 22,528 ஆகிறது. வருவாயில் பாகம் வேறு! இவனது கொடைக் குணத்தின் பொருளே நமக்குப் புலப்படவில்லை. தன்மீது எட்டாம் பத்தைப் பாடிய அரிசில் கிழார் என்னும் புலவர் பெருமானுக்குப் பெருஞ்சேரல் இரும் பொறை என்னும் சேரர் பெருமான் கொடுத்த பரிசிலை நினைத்தால் அவனை இன்னன் என்று சொல்வதற்கே இடமில்லாமல் இருக்கின்றது. இத்தகைய தமிழ்ப் பற்றுடைய ஒரு தமிழனும் தமிழ் நாட்டில் இருந்தானா? அத்தகைய தமிழ் மகன் இருந்தாண்ட பழந்தமிழ்ச் சேரநாடு, அச்சேர மன்னன் வழிவந்த தமிழர் மரபு, இன்று தன்னை மறந்து, தன்னினத் தினரான தமிழர்க்கு, தனது முன்னோரின் பெயரைப் பாதுகாத்து வரும் பண்புடையாளர்க்குக் கொஞ்சம் தண்ணீர் கொடுக்கவும் மறுக்கிறது. ஆ! எம் அருமைப் பழந்தமிழகமே! நீ ஏன் இந்நிலையை அடைந்தனை? மாறு பாடென்றால் இப்படியா தலைகீழ் மாறுபாடு! இரும்பொறை கொடுத்த பெரும் பரிசென்ன? எத்தனை நூறாயிரம்? புலவர் பாட்டுக்களைப் படித்துப் பொருள் கூறினார். மன்னன் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தான். அவ்வளவுதான்! எழுந்து உள்ளே சென்றான். புலவர் ஒன்றுந் தோன்றாமல் உட்கார்ந் திருந்தார். சென்ற சேரலர் பெருந்தகை தன் தேவியுடன் வெளியே வந்தான். வந்தவன் புலவரை வணங்கி, 'பெரியீர்! யான் தங்கள் தமிழுக்குப் பரிசு கொடுக்கும் தகுதியில் இல்லேன்; நான் அன்போடு கொடுப்பதை மறுக்காது ஏற்றருளல் வேண்டும்; கோவிலில் உள்ள எல்லாப் பொருளையும் எடுத்துக் கொள்ளுங்கள்; அவை யெல்லாம் தங்களுக்குரியவை; இக்கோவிலும் (அரண்மனை) தங்கள் உடைமையே. அதோடு, நான் கையாரக் கொடுக்கும் இதையும் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று ஒன்பது நூறாயிரம் பொற் காசுகள் கொடுத்தான். அவன் அதோடு அமையவில்லை; வழிவழியாகத் தன் அரச மரபுக்கு உரிமை யுடையதாக உள்ள அரசு கட்டிலையுங் கொடுத்தான். இதன் பொருளென்ன? அரசையே புலவர்க்குப் பரிசாகக் கொடுத்தான். அரசையே கொடுத்தானெனில், நாடு, நகரம், வீடு, பொருள் எல்லாம் கொடுத்ததாகுமன்றோ? ஆம். ஒரு பத்துப் பாட்டுக்குப் பரிசாக அவ்வளவும் கொடுத்தான் அக்கோ. அப்பத்துப் பாட்டும் 181 அடிகளே உடையது. என்னே இரும் பொறையின் பெருந் தமிழ்ப் பற்று! இவனே, அறியாது முரசு கட்டிலேறிய மோசிகீரனார் என்னும் புலவர் தூங்கி யெழும் வரைக்கவரி வீசி, 'கவரி வீசிய காவலன்' என்ற புகழ்ப் பெயர் பெற்றவன். ஆனால், புலவர் பெருந்தகை என் செய்தார்! அரியணை யிலமர்ந்து அரசு புரியத் தொடங்கினாரா என்ன? அத்தகு பண்பு டையவரா அப்பழந் தமிழ்ப் புலவர்? 'மன்ன, மகிழ்ந்தேன்; உன் தமிழ்ப் பற்றினை மெச்சுகிறேன்: வாழ்க நின் வண்மை! வளர்க நின் தமிழுள்ளம்! இந்தா! எனது அரசை நான் உனக்குக் கொடுக் கிறேன்' என்று பழையபடி அரசனை அரசனாக்கி, அரசன் வேண்டுகோளுக்கிணங்கி அமைச்சுத் தொழிலேற்றிருந் தார். இத்தகைய செல்வரையும் புலவரையும் நந்தமிழ் நாடு ஒருகால் பெற்று இன்புறுதலும் கூடுமோ!  6. மறக்குடி மகளிர் சின்னஞ் சிறுமியர் எப்போதும் தெருவில் விளையாடுவதில் மிகுந்தவிருப்பமுடையவர். தெருவில் மணல் வீடுகட்டிக் கொண்டு விளையாடுவதே அவர்தம் பெரும்பான்மையான விளையாட்டாகும். 'வெள்ளாட்டுக் குட்டிக்கு வேலி மேலாசை, விளையாட்டுப் பிள்ளைக்கு மண்ணு மேலாசை' என்பது பழமொழி. அச்சிறுமியர் ஆண்டில் இளையர் எனினும் ஆள்வினையில் முதியர் எனலாம். அவர்கள் வகை வகையான வீடுகள் கட்டித் தெருவில் ஓர் ஊரே உண்டாக்கி விடுவர். அவர்கள் கட்டும் வீடு மணல் வீடு ஆகையால், அவ்வூர் மணலூர் எனப்பெயர் பெறும் போலும்! "அறையும் ஆடரங் கும்படப் பிள்ளைகள் தரையில் கீறிடில் தச்சருங் காய்வரோ." என, அவர்தம் மணல் வீட்டின் வகையினைத் தமது பெருநூலிற் பாராட்டியுள்ளார். கம்பர். 'மனைக்கு நிகர் என்று சிறு பெண்கள் மணல் வீடு கட்டுவது போலவும்' என்பது குமரேசர் சதகம்; தெருவில் அச்சின்னஞ் சிறுமியர் கட்டும் அச்சிறு வீடு இங்ஙனம் இலக்கியச் சிறப்பினைப் பெற்று விட்டது. தமது முயற்சியால் தாம் கட்டிய தம் சொந்த வீட்டில் அவர்கள் தம் பெற்றோரின் வாழ்க்கை முறைகளை அப்படியே செயற்படச் செய்து மகிழ்வர். பெற்றோர்கள் என்னென்ன செயல்கள் செய்கின்றனரோ அத்தனையும் ஒன்று கூட விடாமல் அப்படியே செய்வர் அச்செல்வச் சிறுமியர். தெருவே அச் சிறுமியரின் வாழ்க்கைப் பயிற்சிக் கூடம். படித்துப் பழகுவதினும் பார்த்துப் பழகுதல் சிறந்தது என்பதை அறிந்து செய்யுநர் போலும் அச்சிறுமியர். சிறுமியரின் இச்செயல் திறத்தினை எந்த ஒரு புலவரும் பாட மறந்தாரில்லை. எதிர் காலப்பாட்டுடைத் தலைவியர் இவர்களல்லரோ? தமிழில் உள்ள தொண்ணூற்றறுவகை நூல்களுள் பிள்ளைத் தமிழ் என்பது ஒன்று. பிள்ளைத் தமிழின் பத்துப் பருவங்களில் சிற்றிற்பருவம் என்பது ஒன்று. சிறுமியர் தெருவில் மணல் வீடு கட்டிக் கொண்டு விளையாடுவர். அங்குப் போந்த ஒரு சிறுவன் குறும்புத்தனமாக அச்சிற்றிலைக் காலால் சிதைப்பான். சிற்றிலைச் சிதையாதே என அச்சிறுமியர் இன்சொற் கூறி விலக்குவர். அச்சிறுவன் அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல், ஆண் பிள்ளை என்னும் செருக்கினால் மேலும் சிதைப்பான். சிதைக்காதே சிதைக்காதே என மறுபடியும் அவர்கள் பலவாறு வேண்டிக் கொள்வர். இதுவே சிற்றில் பருவத்தின் இலக்கணம். சிற்றிற் பருவம், ஆண்பிள்ளையின் சிறப்புக் கூறுவதாகை யால், அவனது ஆண்மையும் பெருமையும் தோன்ற, 'சிற்றில் சிதையாதே சிதையாதே" எனச்சிறுமியர் பலவாறு அவனை வேண்டிக் கொள்வதாகப் பாடுதலே மரபாகும். ஆனால், நாட்டு நடப்பென்ன? சிற்றிலைச் சிதைக்காதே யென்று அச்சிறுமியர் அவனை எவ்வளவு நயந்து கேட்டுக் கொள்ள வேண்டுமோ அவ்வளவு நயந்து கேட்டுக்கொள்வர். அவன் மேலும் சிதைக்கிறான். 'இனிச் சிதைத்தால் அப்புறம் பாரு' எனக் கடிந்து கூறுவர். அவன் அதையும் பொருட் படுத்தாது குறும்புத் தனமாகப் பின்னும் சிதைக்கின் அச்சிறுமியர் சினந்து, மண்கொழித்து விளையாடும் முச்சில் என்னும் சிறுமுறத்தை எடுத்துக்கொண்டு துரத்துவர். அவன் அஞ்சி அங்கு நின்றும் ஓடிவிடுவான். ஓடாமல் இருந்தால் முச்சிலால் மொத்துண்ண வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். நாட்டுப்புறங்களில் இன்றும் இது நிகழ்கிறது. இளம் பருவத்திலேயே தம்மிடம் வம்புக்கு வரும் பகைவனை அஞ்சாது எதிர்த்துப் புறங்காட்டி ஓடும்படி செய்யும் இம்மறப் பண்புதான் எதிர் காலத்தில் அவர்களை மறக்குடி மகளிராகத் திகழும்படி செய்கிறது. இனி, சிறுமியர் விளையாடும் வீர விளையாட்டொன்று பழங் காலத் தமிழ் மக்களின் மறப்பண்பை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது. என்ன அவ்விளையாட்டு? எல்லாச் சிறுமியரும் ஒரே வரிசையாக நிற்பர். ஒரு சிறுமி, அவ்வரிசையில் நிற்கும் முதற் சிறுமி முன் சென்று நின்று, 'இந்தச் சோட்டு வெண்ணெய் போட்டு, இத்தனை மோரூற்றுகிறேன். நரிவந்தால் பயந்துக்காதே' என்பாள், அம்முதற் சிறுமி, 'இல்லை' என்று நிமிர்ந்து நின்று, தலையை நேராக உயர்த்தி, தன் உயிராற்றல் முழுவதையும் கண்ணில் செலுத்தி விழித்த கண் விழித்தபடி, எழுதிய உயிரோவியம் போல் எச்சரிக்கையாக நிற்பாள். முன்னிற்கும் சிறுமி, 'உஃப்' என்று இவள் கண்ணுக்கு நேராக ஊதுவாள். இவள் கண்ணை இமையாமல் இருந்தால் வீரர்கள் வரிசையில் அமர்த்தப் படுவாள்; ஊதும்போது கண்ணை இமைத்தால் கோழைகள் வரிசையில் இருத்தப்படுவாள். இவ்வாறே எல்லோ ரையும் ஊதிப்பார்த்தபின், வீரர்களைப் பாராட்டுவர்; பரிசு கொடுத்துப் பெருமைப் படுத்துவர்; கோழைகளை இகழ்ந்து தூற்றுவர். தோற்றவர் மறுமுறை வெற்றி பெற முயல்வர். இவ் விளையாட்டு, "விழித்தகண் வேல்கொண் டெறியின் அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு." என்னும் குறளின் கருத்தை விளக்கும் வீர விளையாட்டாகும். பகைவர் மார்புக்கு நேராக ஓங்கி வேலால் குத்தினால் அதற்கு அஞ்சி, விழித்த கண்ணை இமைத்தால் - கண்ணே மூடினால் - அவ்வச்சம் வீரர்களுக்குப் புறங்காட்டி யோடுதல் போன்றதேயாகும். அவ்வாறு எதிரி எறியும் வேலைக்கண்டு அஞ்சக் கூடாது. அஞ்சுதல் வீரர்க் கழகாகாது. இது 'படைச் செருக்கு' என்னும் அதிகாரத்தில் உள்ள குறள். வெண்ணெயும் மோரும் - வீரர்கள் பெரும் வெற்றிப் புகழும் பாராட்டும் பரிசும் ஆகும். ஊதுதல் - பகைவர் வெகுண்டு எறியும் கூர்வேல் ஆகும். இது வள்ளுவர் குறட் கருத்தை விளக்கி விளையாடிய வீர விளையாட்டா? அல்லது பழந்தமிழ்ச் சிறுமியர் விளையாடி வந்த இவ்வீர விளை யாட்டை வள்ளுவர் குறளாகச் செய்து வைத்தனரா? எதுவாயினும் சிறப்புடையதே யாகும். இவ்விளையாட்டு, சிறுவரும் விளையாடினும், சிறுமியர் விளையாடுதலே பெரும் பான்மையாகும். இத்தகைய வீர விளையாட்டுகள் விளையாடிப்பழகி, பழக்கம் வழக்கமாகி, வழக்கம் ஒழுக்கமாகி, மறக்குடி மகளிராய் விளங்கிய பழந் தமிழ்த் தாய்மார்களே, பழந்தமிழ் மக்கள் வீரத்திற் சிறந்து விளங்கியதற்குக் காரணமானவர். ஆண்மக்கள் மறப்பண்புடன் விளங்குதல் இயல்பு. ஆனால். மெல்லியலாராகிய பெண்கள் மறப்பண்புடன் விளங்குதலே சிறப்புடைய தொன்றாகும். மகளிர் மறப் பண்புடன் விளங் கினாற்றான் அவரால் வளர்க்கப்படும் மக்கள் மறப்பண்புடையராய் விளங்குதல் எளிதில் கை கூடும். பழந்தமிழ்ப் பெண்டிர்கள் வீரமே உருவாக விளங்கினார் என்பது தொல்காப்பியம், புறநானூறு முதலிய பழந்தமிழ் நூல்களில் படித்தறிந்து இன்புறு கிறோம். மகளிர் வீரம், இல்லாள் முல்லை, மூதில் முல்லை என்னும் துறைகளாக அம்முது நூல்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. வாழ்க மகளிர் மறப்பண்பு! ஆனால், அம் மறக்குடி மகளிரின் வழிவந்த, அவர்தம் மரபினரான இக்காலத் தமிழ்ப் பெண் மணிகளின் மறப்பண்பு எந்நிலையில் உள்ளது? இக்கால மகளிர் எத்தகைய வீரமுடை யவர்களாய் விளங்குகின்றனர்? 'வீரம் என்ன சார்விலை யென்றாச்சு' என்று ஒரு புலவன் எள்ளி நகையாடும் அத்தகு இரங்கத்தக்க இழிநிலையில் இருந்துவருகின்றனர். சருக்கென்றால் விருக் கென்பதே இன்றைய மகளிரின் மறப்பண் பாகும். ஏன் இந்த இழிநிலை? வாளேந்திக் களம்புக்கு மகன் பிணங்கண்டு மகிழ் வெய்திய மறமூதாட்டியின் வழித் தோன்றல்களுக்கா இந்நிலை? காரணம் என்ன? தமிழர் தம்பழமையை மறந்ததே இரங்கத் தக்க இவ்விழி நிலைக்குக் காரணமாகும். வீரம் என்பது கொலைக்கு வழிகோலும் குணமாகை யால், அது சிறப்புடைய தன்றென்பார் அறியார். பாம்பு தேள் முதலிய நச்சுயிர்களை எதனால் கொல்கின்றனர்? வீரத்தினாலா? அச்சத்தினா லன்றோ அவற்றைக் கண்டதும் கொல் கொல் என்கின்றனர்? இங்கு அச்சமும் கொலைக்கு வழி கோலுகின்ற தன்றோ? கோழைத்தனம் இன்றி உள்ளத்துறுதியுடன் விளங்குவதே வீரப்பண்பாகும். வீரத்தைப் பெருமிதம் என்றும், அது எண்வகை மெய்ப் பாட்டினுள் ஒன்றென்றும், கல்வி, தறுகண், புகழ், கொடை என்பனவற்றால் பெருமிதம் என்னும் சுவை தோன்றும் என்றும் கூறுகிறார் தொல்காப்பியர்.1 தறுகண்மை - அஞ்சாமை; சிறந்த கல்விப் பெருக்காலும், அஞ்சாமையாலும், மிக்க புகழெய்தியக் காலும், மிகு கொடையினாலும் வீரப்பண்பு தோன்றும் என்பதாம். கோழைத்தனமின்றி, மேம்பாடு பொருந்திய உள்ளத்துடன் இருத்தலே மறப் பண்பாகும். தற்காலத் தமிழ்ப் பெண்மணிகள், பகலில் தனியாக வெளிச் செல்லவும் அஞ்சுகின்றனர்; இரவில் வீட்டுக்குள் இருந்து தனித்து வெளிவர வெருவுகின்றனர்; அச்சமும் கோழைத்தனமும் அவர்களை ஆட்டிப்படைக்கின்றன. ஆனால், தொல்காப்பியர் காலத் தமிழ்ப் பெண்மணிகள் தனியாகப் போர்க்களஞ் சென்று, பிணக்கு வியலைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து, அப்பிணங் களுக்கிடையே இறந்து கிடக்கும் தம் வீர மைந்தரையும் கணவரையும் தேடி யெடுத்து, அவர்கள் மார்பிலும் முகத்திலும் உள்ள விழுப்புண்களைக் கண்டு களித்து மீண்டனராம். பகலிலேயன்றி இரவிலும் அம்மறக் குடி மகளிர் போர்க்களஞ் சென்று, பிணக் குவியலைக் கலைத்துத் தம் கணவர் உடலைத் தேடியெடுத் தனராம்.2 என்னே அவர்தம் தறுகண்மை! ஒருநாட் காலையில் போர் முரசு முகிலென முழங்கிற்று; வாள் வீரரும் வேல் வீரரும் தெருவில் வரிசை வரிசையாகச் சென்றனர். யானைகளும் குதிரைகளும் அழகிய தேர்களும் அணியணியாகச் சென்றன. அந்நாற்படையின் ஆர்ப்பொலி கடலொலியென ஆர்த்தது. கொடிகள், வீரர்களின் உடற்றசை யுண்ண விரைந்து செல்லும் கழுகு முதலிய பறவைகள் போலப் பறந்து சென்றன. ஒரு வீரத்தாய் தெருவில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த தன் சிறுவனைக் கூப்பிட்டாள். அவன் 'ஏம்மா!' என்று ஓடி வந்தான். 'குழந்தாய்! பகைவர் நம் நாட்டின்மேல் படையெடுத்து வந்துள்ளனர். நாட்டில் போர் நடக்கிறது. அவர்களெல்லாம் வாளையும் வேலையும் ஏந்திக்கொண்டு தம் கடமையைச் செய்யச் செல்கின்றார்கள். நம் தாய் நாட்டுக்குக் கேடு சூழ்ந்துள்ள போது நாம் நம் கடமையைச் செய்ய வேண்டாமா? நாட்டுத் தொண்டு செய்வது தானே நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இன்றியமையா முதற் கடமை? நாடு வாழ நாம் வாழ்வது தானே முறை? யார் இருக்கிறார் நமக்கு? உன் தந்தை இருந்தால்?' - எனத் தழுதழுத்த குரலில் கூறினாள் அம்மறக்குடி மங்கை . அவள் கண்களிலிருந்து முத்து முத்தாகக் கண்ணீர் உதிர்ந்தது. தாய் நாட்டுக்கு உதவ முடியவில்லையே என்று கலங்கிக் கண்ணீர் விடும் தாய்மார்கள் உடையதாய் இருந்தது அக்காலத் தமிழகம். 'ஏம்மா! நான் இல்லை? நான் போகிறேன் போருக்கு; எதற்காக அழுகிறாய்?' என்று அன்னையின் கண்ணீரைத் துடைத் தான்அக் கான்முளை. 'என் கண்ணே! வேலும் வாளும் விளையாடும் அவ் விடத்தில் நீ போய் என்ன செய்வாய்? அது என்ன விளையாடும் இடமா?' 'போம்மா போ!நான் என்ன பூனைக்குட்டியா? மறத் தமிழர்வழி வந்த என்னை வாளும் வேலும் என்ன செய்யும்? வாளையும் வேலையும் கண்டு அஞ்சுபவன் ஓர் ஆண் பிள்ளையா? நான் யார் பெற்ற பிள்ளை யென்பதை நீ மறந்து விட்டுப் பேசுகிறாய்?' 'என் மரபை விளக்க வந்த மாணிக்கமே! நீ அஞ்சாத நெஞ்சுடைய ஆண்பிள்ளைதான்! ஆனாலும், நீ சிறுபிள்ளை யல்லவா?' 'ஏம்மா!' நான் சிறு பிள்ளையாய் இருந்தாலென்ன? போர்க்களம் சென்றறியாத என்போன்ற மறக்குடிச்சிறுவர்கள் போர்க்களம் சென்றுவீரப்போர் புரிவர். அப்பிள்ளைகள் செய்யும் அவ்வீரச் செயல் பிள்ளை நிலை என்னும் துறை யாகும் என்கின்றார் தொல்காப்பியர். 'நமது முன்னோர்கள் அத்தகு வீரச் சிறப்புடன் விளங்கி வந்தார்கள்' என்று நம்ம பாட்டி சொல்ல வில்லை? நான் ஏன் அவர்கள் போலப் போர்க்களம் சென்று போர் புரிந்து, பிள்ளை நிலை என்னும் துறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடாது? ஏம்மா! நீ கூட, நம்ம அரசனான பாண்டியன் நெடுஞ்செழியன், என் போலச் சிறுவனாக இருந்தபோது, தலையாலங்கானம் என்னும் இடத்தில் நடந்த போரில் பகைவரை வென்று, அதனால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் எனப் பெயர் பெற்றான் என்று அவன் வீர வரலாற்றைச் சொல்லவில்லை? நான் அவன் நாட்டுக் குடிமகன் அல்லனோ? எடு வேலை!' 'என்செந்தமிழ்ச் செல்வமே! உன்வீரவுரை என் மனக் குறையை மாற்றிவிட்டது' என மகனை இறுகத் தழுவிப் பல முத்தங்கள் தந்து, 'உன்னை மகனாகப் பெற்ற நானே பெற்றவள் என்னும் பேருக்கு உரியவள்' என அவனைப் பெற்ற நாளிலும் பெரிது உவந்து, எண்ணெய் தடவி, விரிந்து சுருண்டு கிடந்த தலைமயிரை வாரி முடித்து, பூச்சூடி, பொட்டிட்டு வெள்ளுடை யுடுத்து, மறுபடியும் பல முத்தங்கள் தந்து, 'என் கண்ணே! நம் நாட்டுக்கு நலிவு செய்யும் பகை வரைப் புறங்கண்டு வெற்றிவீரனாக மீள்க' என வாழ்த்தி வேல்கை கொடுத்தாள் அவ்வீரத்தாய். வேலை வாங்கித் தோளில் வைத்துக் கொண்டு புன்சிரிப்புடன் புலிக்குட்டி போலப் போர்க்களம் நோக்கி நடந்தான் அவ்வீரச் சேய். இவ்வீரக் காட்சியைக் கண்டு களித்த வண்ணம் தெருவில் நின்று கொண்டிருந்த குதிரை வீரன் ஒருவன், 'ஏம்மா! என்ன இது? பத்தாண்டு கூட நிரம்பாத இச்சிறுவனையா போருக்கனுப்புவது? உன் நாட்டுப் பற்றுக்கு எல்லையே இல்லை போலும்! இவன் போர்க்களம் சென்று என்ன செய்வான்?' என்று இரக்கத்தோடு கேட்டான். 'ஏய்யா! என் வேல் பகைவர் உடலில் பாயாதா?' 'பாயும்! உன் வீர உரையே என் மார்பைப் பிளந்து விட்டது. உன் வேல் . . . . . .!' 'ஐயா! முதல் நாட்போரில் பெரிய யானைப் படையை வென்று வெற்றி வீரனாக என் அண்ணன் இறந்துவிட்டார்; நேற்று நடந்த போரில், பகைவர்கள் கவர்ந்து சென்ற பெரிய ஆநிரையை மீட்டு இவன் தந்தை ஆங்கு இறந்துவிட்டார்; எங்கள் குடும்பத்தில் இருப்பவர் இனி நாங்கள் இருவருந்தான்; எங்கள் தாய்நாட்டுக்கு நாங்கள் எங்கள் கடமையைச் செய்ய வேண்டாமா? இவனையும் அழைத்துச் செல்லுங்கள்.' 'அம்மா! உங்கள் நாட்டுப் பற்றை மெச்சுகிறேன். 'மறக்குடி மங்கை' என்னும் பெயர் உங்களுக்கே தகும்; உங்கள் போன்ற தாயையும் சேயையும் உடைய நாடுதான் நன்னாட்டின் முன்னாட்டும் நன்னாடாகத் திகழும். உங்கள் வீரம் வாழ்க! உங்கள் மறப் பண்பை, வீர உணர்ச்சியை நம் தமிழ் மக்கள் எல்லோரும் பெறுக!' என்று கூறி, அச்சிறுவனையும் குதிரை மேல் ஏற்றிக் கொண்டு போர்க்களம் நோக்கிச் சென்றான் அவ் வீரன். தன் வீர மகன் போர்க்களம் நோக்கிக் குதிரை மேல் செல்லும் காட்சியை இமையிமையாமல் பார்த்துக்கொண்டு நின்றாள் அவ்வீரத்தாய்.1 மறக்குடி முதியாள் ஒருத்தி, பகைவரை வென்று, 'வெற்றி வீரனாக வருக' என வாழ்த்தித் தன் மகனைப் போருக்கு அனுப்பி யிருந்தாள். பகைவரைப் புறங்கண்டு வெற்றிக் களிப்புடன் வருவான் என்று மகனது வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் அந்நரை மூதாட்டி. ஆனால், நடந்ததென்ன? ஒரு வீரன் வந்து, 'அம்மா! நின்மகன் புறங்காட்டி ஓடி விட்டான்' என்றான். அது கேட்ட அம்முதியாள் கொதித் தெழுந்தாள். 'அட பாவி! இதற்கா நான் உன்னைப் பெற்றுப் பெருமையாக வளர்த்தேன்? நான் ஊட்டிய வீர உணர்ச்சி யெல்லாம் எங்கே போய் ஒளித்தன? அந்தோ! வழிவழியாக வந்த என் மறக்குடிக்கு மாசுண்டாக்கி விட்டனையே! இனி நான் என் செய்கேன்; எவ்வாறு பிறர் முகத்தில் விழிப்பேன்? அட பதரே! இது எனக்கு மட்டுமா மானக்கேடு? இல்லை இல்லை. தமிழினத்திற்கே மானக்கேடு! தமிழ் நாட்டிற்கே மானக்கேடு.' 'ஒரு பானைச் சோற்றுக்கு ஓர் அரிசி பதம்' என்பதுபோல, நீ ஒருவன் போதுமே தமிழர் பெருமையைக் கெடுக்க? அட கோழையே! நீ எங்கிருந்து வந்து எனக்கு மகனாய்ப் பிறந்தனை? ஐயோ! பெற்ற வயிறு பற்றி எரிகிறதே! 'அட பேதையே! உன் தந்தையின் நடுகல்லை ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்துக் களித்ததன் பயன் இதுவா? அடபேடி! அக்கல்லில் செதுக்கியுள்ள அவர்தம் வீரதீரங்களைப் படித்து படித்து மகிழ்ந்த உனக்கு எப்படி இந்த எண்ணம் வந்தது? உன் உயிர் என்ன அவ்வளவு பெரிதா? அட மானங்கெட்டவனே! அவர் வீரப் பரிசாகப் பெற்ற ஏனாதி மோதிரத்தை அணிந்து அணிந்து பார்த்ததன் பயனா இது? அடப் படுபாவி! நீ கருவிலேயே அழிந்தொழிந்து போயிருந்தால் இன்று தமிழர் மானம் பறி போயிருக்காதே! அட போருக்கு அஞ்சிப் புறங்காட்டியோடும் கோழையே! நீயும் ஒரு தமிழனா!' எனக் கடுஞ்சினங் கொண்டாள். 'உண்மையில் அவன் புறங்காட்டி ஓடியிருப் பானானால், அவன் பாலுண்ட இம்மார்பை அறுத்தெறிவேன்' என வஞ்சினங் கூறிக்கொண்டு ஒருவாளை எடுத்தாள்; போர்க்களம் நோக்கி விரைந்து நடந்தாள்; அங்கு இறந்து கிடக்கும் பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்; தன் வீர மகன், வாளும் வேலும் அம்பும் பட்டு மார்பு சிதைந்து, கை கால்கள் துண்டிக்கப்பட்டுக் கிடக்கக் கண்டாள்; கண்டதும் அவனைப் பெற்றபோது உவந்ததை விடப் பெரிது உவந்தாள்; வெற்றிக் களிப்புடன் வீடு வந்து சேர்ந்தாள்.1 தன் மகனது வெற்றிப் புகழைக் கண்டால், ஈன்ற பொழுதிற் பெரிது உவக்காமலா இருப்பாள்? வாழ்க அத்தமிழ் மூதாட்டியின் மறப் பண்பு!  7. யானே கள்வன் காவிரிப்பூம்பட்டினம் என்பது சோழர் தலை நகரங்களில் ஒன்று. மற்றொன்று உறையூர். காவிரியாறு கடலொடு கலக்கும் இடத்தில் இருந்ததால் இது காவிரிப்பூம்பட்டினம் எனப் பெயர் பெற்றது. இது புகார், பூம்புகார் எனவும் வழங்கப்பெறும். புகார் சீரும் சிறப்பும் பொருந்திய செல்வமிக்க செழுநகரம். இது ஒரு சிறந்த துறைமுகப் பட்டினம். சோழர் தம் கடல் வாணிகச் சிறப்புக்கு இப்புகார் நகரே காரணமாகும். மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் எனப் புகார் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. இதன் சிறப்பினைச் சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப் பாலை என்னும் பழந்தமிழ் நூல்களில் பரக்கக் காணலாம். பத்துப்பாட்டினுள் பொருநராற்றுப் படை, பட்டினப் பாலை என்னும் நூல்களின் பாட்டுடைத் தலைவனான கரிகால் வளவன் பிறப்பிடமும், சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் செந்தமிழ்க் காப்பியங்களின் கதைத் தலைவர்களான கோவலன், கண்ணகி, மணிமேகலை என்பாரின் பிறப்பிடமும் இப்புகார் நகரேயாகும். கோவலன் என்பான், சோழ மன்னனை முதலாக வைத்தெண்ணப்படும் அத்தகு செல்வக் குடிகளில் முதற் குடியினன் ஆவான். இவன் மாசாத்துவான் என்பானின் மகன்; உயர்ந்தோங்கு செல்வமுடையவன். அவன் தீய வழியில் செல்வ முழுவதையும் தொலைத்து வறியனானான். எத்தனையோ தமிழ்ச் செல்வர்கள், கெட்ட வழியில் தம் செல்வ முழுவதையும் தொலைத்துவிட்டு வாழ வழியின்றி, மனைவி மக்களைத் தாய் நாட்டில் தவிக்க விட்டு விட்டு, ஒருவருக்கும் தெரியாமல், யாருடனும் சொல்லாமல் இலங்கை, மலேயா முதலிய வெளி நாடுகளுக்கு ஓடி விடுவது போலவே, கோவலனும் அரசறிய வீற்றிருந்த வாழ்வையிழந்து, அத்தகுவறிய நிலையில் தன் சொந்த ஊரில் இருந்து வாழ விரும்பவில்லை; யாரிடமும் சொல்லாமல் ஒருவரும் அறியாமல், இரவோடிர வாய்த் தன் பிறந்தகமான பூம்புகாரிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு, பாண்டி நாட்டின் தலை நகரான தண்டமிழ் மதுரையை அடைந்தான். ஆனால், இவன் கற்பின் செல்வியாகிய மனைவி கண்ணகியுடன் சென்றடைந்தான். மதுரையை அடைந்த கோவலன், மாதரி என்னும் இடைக்குல முதுமகள் வீட்டில் கண்ணகியை இருக்கச் செய்து, அவள் காற்சிலம்பொன்றை விற்றுவரக் கடைத் தெருவுக்குச் சென்றான். எதிரில் ஒரு பொற்கொல்லன் வந்தான். கோவலன், தன் சிலம்பை விற்றுத் தரும்படி அப்பொற் கொல்லனிடம் கூறினான். அரண்மனைச் சிலம்பொன்றை விற்றுண்டு விட்டு, அது களவு போய்விட்டதென்று பொய் கூறிய அப்பொற் கொல்லன், கோவலனைக் காட்டிக் கொடுக்க முடிவு செய்தான். தமிழினம் என்னும் நல்ல மரத்தில் தோன்றிய புல்லுருவி போன்ற அவ்வஞ்சகன், கோவலனை அழைத்துப் போய்த் தன் வீட்டண்டை இருக்கச் செய்து, அரசனிடம் கேட்டு வருவதாக அரண்மனையை நோக்கிச் சென்றான். சென்றவன் அரசனை வணங்கி, 'தென்னவர் கோவே! நம் அரண்மனைச் சிலம்பு திருடிய கள்வன் கையுங் களவுமாகப் பிடிபட்டான்; அவன் என் வீட்டண்டை இருக்கிறான்; இது செய்தி உரைக்கவே வந்தேன்' என்றான். கோப்பெருந்தேவி, கணவன்பால் ஊடல் கொண்டிருந் தாள்; அம் மன வேறுபாட்டைத் தலைநோய் என்று காரணங் காட்டிப் படுத்திருந்தாள். பாண்டியன் நெடுஞ்செழியன், அரசியின் ஊடல் தீர்க்கச் சென்ற விரைவில், ஊர்க் காவலரை அழைத்து, 'இவன் சொல்லுகிறவனிடம் அரண்மனைச் சிலம்பு இருக்கின், அவனைக் கொன்று அச்சிலம்பைக் கொண்டு வருக' என்று கூறிச் சென்றனன். ஊர்க்காவலர், கோவலனை வெட்டிக் கொன்று விட்டுச் சிலம்பைக் கொண்டுபோய் அரசனிடம் கொடுத்துச் சென்றனர். மாதிரி வீட்டில் இருந்த கண்ணகி, கணவன் கொலையுண்ட செய்தியைக் கேட்டுப் பொங்கி யெழுந்தாள்; விழுந்தாள்; தலைவிரி கோலமாய் எழுந்திருந்தாள்; செங்கண் சிவப்ப வாய்விட்டுக் கதறியழுதாள்; அந்தோ! என் ஆருயிரே! என எழுந்தாள்; கண்ணீரும் கம்பலையுமாய்த் தனது மற்றொரு சிலம்பினைக் கையிலேந்திக் கொண்டு, கோவலன் கொலை யுண்டு கிடக்கும் இடத்தை நோக்கி விரைந்தாள். 'முறையில்லாத அரசனுடைய ஊரில் வாழும் பத்தினிப் பெண்டிர்காள்! இது எனது மற்றொரு சிலம்பு. என் கணவன் கள்வன் அல்லன்; என் காற்சிலம்பின் விலையைக் கொடாமல் தாமே வைத்துக் கொள்ளுதற்காகக் கள்வனென்று பெயரிட்டு என் கணவனைக் கொன்று விட்டார்கள்; ஐயோ! இனி நான் என் செய்வேன்?' என்று அழுது கொண்டே சென்று கொலையுண்டு கிடக்கும் கோவலனைக் கண்டாள். கண்டதும் ஓடி விழுந்து, கணவன் உடலைத் தழுவிக் கதறியழுதாள். கண்ணகியின் கடுந்துயர் காணப் பொறாத வனாய்க் கதிரவன் மறைந்தான். கண்ணகி அழுகை மாறி வீரவுருக் கொண்டாள்; 'காரணமில்லாமல் என் கணவனைக் கொன்ற அக் கொடுங்கோலனைக் கண்டு காரணங் கேட்பேன்' என்று எழுந்தாள்; அரண்மனையை நோக்கி நடந்தாள். கண்ணகி அரண்மனை வாயிலை அடைந்து, தன் வருகையை மன்னனிடம் கூறும்படி வாயிலோனிடம் கூறினாள். வாயிலோன் சென்று மன்னனிடம் கூறினான். அவன் 'அழைத்து வருக' என, வாயிலோன் வந்து அழைத்துப் போனான். கண்ணகி கண்ணீர் வடியும் கண்ணுடன் சென்று பாண்டியனைக் கண்டாள். பாண்டியன், "நீர்வார் கண்ணுடன் இங்கு வந்த நீ யார்?" என்றான். 'தேரா மன்னா! உலகம் வியக்கும் வண்ணம் ஒரு புறாவுக்காகத் தன் உடலையே தராசுத் தட்டில் வைத்து நிறுத்து, அப்புறாவைக் கொல்ல வந்த பருந்துக்குக் கொடுக்கத் துணிந்த பெரியோனும் தானே வந்து தேர்க்காலில் விழுந்திறந்த ஓர் ஆன் கன்றிற்காகத் தன் மகனையே கொன்ற நல்லோனும் ஆண்ட புகார் எனது ஊர்; வாழ்வதற்காக நின் நகர் புகுந்து, என் காற்சிலம்பை விற்கவந்து, உன்னால் கொல்லப்பட்ட கோவலன் மனைவி கண்ணகி என்பது என் பெயர்' என்றாள் கண்ணகி. 'பெண்மணி, கள்வனைக் கொல்லுதல் எவ்வாறு கடுங்கோலாகும்? அது அரசியல் முறையேயாகும்.' 'அறநெறி தவறிய அரசனே, என் கணவன் கள்வன் அல்லன்; என் காற் சிலம்பின் பரல் மாணிக்கம்; உடைத்துப் பாரும்.' 'அப்படியா! எமது சிலம்பின் பரல் முத்து' என்று கண்ணகி காற் சிலம்பைக் கொண்டு வரச் செய்து, அவளிடம் கொடுத்தான் பாண்டியன். கண்ணகி அச்சிலம்பை வாங்கி உடைத்தாள். அதனுள் இருந்த மாணிக்கங்கள் செழியன் முகத்தில் தெறித்தன. மணிகண்ட மன்னன் திடுக்கிட்டான்; உளம் நடுங்கினான்; உரை குழறினான்; உணர்வு கலங்கினான்; உயிர் நலங்கினான்; 'என் கொற்றக் குடை தாழ்ந்தது; என் செங்கோல் வளைந்தது; ஒரு பொற் கொல்லன் சொல்லைக்கேட்டு, ஆராயாது ஒருவனைக் கொன்ற யானோ அரசன்? இல்லை இல்லை. யானே கள்வன்! என்று தோன்றியதோ அன்று முதல் இன்றுவரை பிழையாத பாண்டியர் ஆட்சி முறை என் முதற் பிழைத்தது; கோவலன் கள்வனா? இல்லை. அவன் கள்வன் அல்லன். யானே கள்வன் ஆம், யானே கள்வன். கெடுக என் ஆயுள்' என்று பாண்டியன் மயங்கி வீழ்ந்தான். அவன் உயிர் பிரிந்தது. பிரிந்த அவ்வுயிர், பாண்டியன் வளைத்த கொடுங்கோலை நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது. என்னே செழியனின் செங்கோன்மை! 'கோலஞ்சி வாழும் குடி' என்பதற்கு மாறாகவன்றோ உள்ளது இவ்வழுதியின் செயல்? கோலஞ்சி வாழவா? இவன் கோலஞ்சி உயிரையல்லவோ விட்டு விட்டான்? உயிர்நீத்து முறைகாத்த இவனன்றோ மன்னன்? அரசன், காவலன், புரவலன் என்னும் சொற்களுக்கு இவனன்றோ நேர் பொருளாவான்? தமிழர் செங்கோன்மை எத்தகையது என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டி, தமிழர் பெருமையை கல்மேல் எழுத்துப் போல் நிலை நாட்டியவன் இவனன்றோ? கொடுங்கோலுக்கஞ்சி உயிர் விட்ட அச்செயற் கருஞ் செயலின் அறிகுறியாகத் தமிழ் மக்கள் இவனை அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் என்றழைத்தனர். உண்மை தெரிந்ததும், 'யானே கள்வன்' என்று தன் தவற்றை ஒப்புக் கொண்ட செழியனின் செம்மைதான் என்னவோ! இதுவன்றோ ஆண் மகற்கழகு! இது வன்றோ மானமுடையோன் செயல்! இங்ஙனம் 'யானே கள்வன்' என்று தனது தவற்றை ஒப்புக் கொள்ளாதிருக்கின், இன்று அவனைக் கொடுங்கோலன் என்று உலகம் பழிக்குமன்றோ? உலகப் பழிக்கு நாணி, உயிர்விட்டுப் புகழ் பெற்ற நெடுஞ் செழியனின் செயற்கருஞ் செயலை நினைக்க நினைக்க நெஞ்சம் வெடித்து விடும்போலன்றோ இருக்கிறது. ஒருவன் தான் செய்த தவற்றைப் பொறுக்க முடியா விட்டால், கிணறு குட்டையில் விழுந்தோ, நஞ்சுண்டோ, கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டோ, வெடியால் சுட்டுக் கொண்டோ தற்கொலை செய்து கொள்ளுதல் நாட்டு நடப்பு. வடக்கிருத்தல் என்னும் உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதலும் வழக்கம். ஆனால், தான் செய்தது தவறு என்று கண்டதும், தான் செய்த குற்றம் தனது மரபுக்கே, தமிழ் மரபுக்கே இழுக்குடையதென்று கண்டதும், 'கெடுக என் ஆயுள்' எனக் கூறி உயிர்விடுவதென்பது செயற்கரிய செயலினும் செயற்கரிய செயலன்றோ? நோய் நொடி இல்லாமல் நன்னிலையில் இருந்த ஒருவனது உயிர் உடல் விட்டுப் பிரிய வேண்டுமானால், தான் செய்த தவற்றை அவன் எண்ணிய எண்ணத்திற்கு எதை உவமை சொல்வது? வாழ்க நெடுஞ் செழியன் வண்புகழ்! செழியனின் இச்செயற்கருஞ் செயலைத் தமிழ் மக்கள் அன்றே மனமாரப் பாராட்டினர். நெடுஞ்செழியன் ஆராயாது கோலவனைக் கொன்றது குற்றமென உணர்ந்ததும் அரசு கட்டிலில் துஞ்சிய செய்தியைத் தண்டழிழாசான் சாத்தனார் சேரன் செங்குட்டுவனுக்கு உரைத்தார். அதுகேட்ட செங் குட்டுவன் யாது கூறினான்? 'பாண்டியன் நெடுஞ்செழியன் முறை தவறிவிட்டான்; வளையாத செங்கோலை வளைத்து விட்டான்; ஆராய்ந்து பார்க்காமல் குற்றமற்ற கோவலனைக் கொன்று விட்டான் என்னும் பழிச் சொல், என்போன்ற அரசர்களின் செவியில் வந்து புகுவதற்கு முன், தான் செய்தது தவறு என்பதை உணர்ந்ததும் பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர்விட்டான்; அவன் ஆராயாது தவறு செய்து வளைத்த கொடுங்கோலை, அவன் உடம்பினின்று பிரிந்து சென்ற உயிர் நிமிர்த்திச் செங்கோல் ஆக்கியது என்னும் புகழ்ச் சொல் புகுக என்று அவன் உயிர் விட்டான்' என்று நெடுஞ்செழியனின் நேர்மையைப் பாராட்டினான். ஆராயாது கொன்றுவிட்டான் என்னும் பழிச்சொல் புகுமுன் உயிர்விட்டு முறைகாத்தான் என்னும் புகழ்ச்சொல் புகுக என்று உயிர்விட்டானாம். ஆம், செங்குட்டுவன் சொல்வது உண்மை தான். இல்லையேல் பாண்டியன் உயிர்விடுவானா? பிற மன்னர்கள் செவியில், பாண்டியன் முறை தவறி விட்டான் என்னும் சொல் புகு முன், அவன் உயிர்விட்டு முறைகாத்தான் என்னும் சொல் புகுக என்று பாண்டியன் உயிர்விட்டானாம். எத்தகைய பொருள் பொதிந்த பொன் மொழி! செங்குட்டுவன் செங்கோன்மையின்பால் வைத்திருந்த மதிப்பின் அளவுதான் என்னவோ! பழந்தமிழ் வேந்தர்கள், 'அரசர்கள் முறை தவறினார்' என்பதை எவ்வளவு அழுத்தமாக வெறுத்து வந்தனர் என்பதற்குச் செங்குட்டுவன் சொல்லே சான்று பகர்கின்றதன்றோ? செங்குட்டுவனைப் போலவே சோழவேந்தனும், பிற சிற்றரசர்களும் பாராட்டியிருப்பர் என்பதில் ஐயமென்ன? நெடுஞ்செழியனின் செயல், பிற அரசர்களின் செவியில் புகுந்து நெஞ்சையடைந்து ஆங்கு நிலைபெற்றிருக்கு மன்றோ? பாண்டியன் நெடுஞ்செழியனைப் போன்ற மானமும் பொறுப்புணர்ச்சியும் கொடுங்கோலுக்கஞ்சும் குணமும் உடையவரே ஆள்வோராகத் தகுதியுடைய வராவார். கண்ணகி வழக்குரைத்தபோது கோப்பெருந்தேவியும் அங்கு இருந்தாள். அவள் அரசற்குப் பக்கத்தில் அமர்ந்திருந் தாள். கண்ணகியின் கருத்துரைகளை அவள் கருத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள். கண்ணகி தன் காற் சிலம்பின் பரல் மாணிக்கம் என்றாள். பாண்டிமாதேவி மனம் மருண்டாள். கண்ணகி சிலம்பை உடைத்தாள். தேவி மனம் உடைந்தாள். மணிகண்ட மன்னன் மயங்கி வீழ்ந்தது கண்ட அவள் ஆ! என்றெழுந்தாள்; உள்ளங் குலைந்தாள்; உடல் நடுங்கினாள்; ஓவென்று கதறி அழுதாள்; கணவனுடைய அடிகளைத் தொழுதவண்ணம் தரையில் விழுந்தாள்; தன் உயிர்கொண்டு அவனுயிர் தேடுவாள் போல உடன் உயிர் நீத்தாள். கணவனும் மனைவியும் ஈருடல் ஓருயிராக ஒரு மனப்பட்டு வாழ்ந்து வந்ததால், கணவன் உயிர் பிரிய மனைவி உயிரும் உடன் பிரிந்துவிட்டது. இது தலையன்பு எனப்படும். கணவன் இறந்ததும் உடன் இறவாத கற்பரசி கண்ணகி அன்பு இடையன்பு எனப்படும். மன்னவனுடன் வழக்காடித் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மெய்ப்பித்து, அவனை மாசற்றவனாக்கிய கற்பரசி கண்ணகியின் திறத்தைப் போற்றுவதா? ஆராயாது கோவலனைக் கொன்ற குற்றத்திற்கஞ்சி, உயிர்விட்டு அக்குற்றத்தை நீக்கிக் குற்றமற்றவனாகத் திகழ்ந்த தன் கணவனோடு உடனுயிர் நீத்த கோப்பெருந்தேவியின் திறத்தைப் போற்றுவதா? இருவர் திறனும் போற்றற்குரியதே. தமிழ்ப் பெண்மணிகளின் தலைமணிகளாகிய அவ்விருவர் திறனும் வாழ்க!.  8. பழகா நட்பு உறையூரும் புகாரும் சோழ நாட்டின் இரு பெருந் தலைநகர்கள் ஆகும். உறையூர் உள்நாட்டு நகர். புகார் கடற்கரைப் பட்டினம். சோழ மன்னர்கள் இவ்விரு தலை நகரங்களிலும் இருந்து சோழ நாட்டை இனிது ஆண்டு வந்தனர். உறையூரி லிருந்தாண்டவர் உறையூர்ச் சோழர் எனவும், புகாரிலிருந்தாண்டவர் புகார்ச் சோழர் எனவும் பெயர் பெறுவர். உறையூர் தமிழ்நாட்டுப் பழவிறல் மூதூர்களில் ஒன்று. 'ஊரெனப்படுவது உறையூர்' என்னும் சிறப்பினையுடையது உறையூர். இது உறந்தை எனவும் வழங்கும். 'ஊருக்கு உறந்தை நிகர் கொற்கையோ' என்றார் ஒட்டக்கூத்தர். கோழி என்பது உறையூரின் மற்றொரு பெயர். ஒரு காலத்தே உறையூரில் ஒரு கோழியும் யானையும் போர்புரிந்ததாம். கோழி யானையை வென்றதாம். அதனால், உறையூர் இப்பெயர் பெற்றதென்பர். உறையூர் காவிரிக்கரையில் அமைந்த வளம் பொருந்திய பேரூர். இன்று திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாக உள்ள உறையூர் என்பதே, சோழர் தலை நகராகிய அப்பழைய உறையூர் ஆகும். கோப்பெருஞ் சோழன் என்னும் சோழ மன்னன் உறையூரி லிருந்து சோழ நாட்டை ஆண்டு வந்தான். இவன் ஒரு சீரிய செங்கோல் வேந்தன். இவன் நேர்மையின் இருப்பிடம்; சீர்மையின் பிறப்பிடம்; தன் முன்னோர் புகழையெல்லாம் தன் புகழாக்கிக் கொண்ட தகுதியாளன். இவன் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் என்னும் இறைமைக் குணங்கள் நான்கும் எஞ்சாமல் உடையவன். சோம்பல் என்னும் கொடியோன் இவனிடம் அணுக அஞ்சுவான்; ஆண்மையே இவனது அணிகலன்: அறநெறியின் கண்ணே செல்வான்; அல்லாத நெறியில் ஒருபோதும் செல்லான். இவன் காட்சிக்கு எளியன்; நாட்டு மக்கள் எவரும் இவனை நேரில் கண்டு பேசலாம். இவன் வாய் ஒரு போதும் கடுஞ்சொல்லைக் கண்டறியாது; யாரிடமும் அது இனிமை யாகவே பேசும். தமிழ் பேசிப் பழகியதல்லவா அவ்வாய்? இவன் பிறர் சொல்லும் எத்தகைய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்வான்; பொறையே உருவானவன் இவன். மக்களின் காவலனாகிய இவ்வளவன், பொருள் வரும் வழிகளைக் கண்டறிந்து பெரும் பொருளீட்டி, ஈட்டிய பொருளை இனிது காத்து, அதனை நாட்டு மக்கள் நலத்திற்குச் செலவிட்டு வந்தான்; குடி மக்களின் குறை கேட்டு முறை செய்து அவர்களைக் காப்பதையே இவன்தன் கடமையாகக் கொண்டிருந்தான்; மானமே உருவானவன். வள்ளுவர் இறை மாட்சி என்னும் அதிகாரத்தில் கூறும் அரச இலக்கணத்திற்கு இவன் அப்படியே இலக்கியமாக விளங்கினான் என்று சுருக்கமாகச் சொல்லலாம். கோப்பெருஞ் சோழன் சிறந்த கல்வியறிவுடையவன்; கற்க வேண்டிய வெல்லாம் கசடறக் கற்றுத் தெளிந்தவன்; தமிழ் முழுதும் அறிந்தவன்; சிறந்த செய்யுளியற்றும் திறமுடையவன். இவன் புலவனாகவும் புரவலனாகவும் விளங்கி வந்தான். இவன் இயற்றிய செய்யுட்கள் குறுந் தொகையில் நான்கும், புறநானூற்றில் மூன்றும் உள்ளன. 'கற்க கசடறக் கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக' என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு இவன் எடுத்துக் காட்டாக இலங்கினான். இவனை நற்குணக் குன்றம் எனல் மிகப் பொருத்தமுடைய தாகும். இத்தகைய குணநலச் சிறப்பினால், புலவர் பெரு மக்கள் இவனிடம் பரிசு பெற விரும்புவதைவிட, இவனது நட்பைப் பெற விரும்பிப் பெற்று அளவளாவினர். இப்பெருங் கிள்ளி, தமிழ் வாழ, தமிழ்ப் புலவர் வாழ, தமிழ் மக்கள் வாழத் தான் வாழ்ந்து வந்தான். இவன் காலத்தே பாண்டி நாட்டில் ஆந்தையார் என்ற புலவர் ஒருவர் இருந்தார். அவர் பிசிர் என்னும் ஊரினர். ஆதலால், பிசிராந்தையார் என்று அழைக்கப்பட்டு வந்தார். பிசிராந்தையார் பெரும் புலவர்; ஒழுக்கமே உருவானவர்; முதுமையை வென்றவர்; முதுமையில் இளமை கண்ட மூதறிவாளர்; கவலை என்பதை அறியாதவர். 'என் மனைவியும் மக்களும் மிகவும் நல்லவர்கள்; என் மனம்போல் நடந்து கொள்கின்றனர்; அவ்வளவு பொறுப்பும் கடமை யுணர்ச்சியும் உள்ளவர்கள் அவர்கள்; எங்கள் ஊரில், ஊர் மக்களை நன்னெறிக்கண் நடத்திச் செல்லும் சான்றோர் பலர் வாழ்கிறார்கள்; எங்கள் நாட்டரசன் குடிமக்களுக்குத் தீமை ஒன்றுஞ் செய்யாது நன்மை பலவும் செய்து காத்து வருகிறான்; ஆகையால், நான் கவலை யில்லாமல் வாழ்ந்து வருகிறேன்; அதனால், எனக்கு ஆண்டு பல ஆகியும் மயிர் நரைக்க வில்லை' 1 என்று கூறு முகத்தான், வீடும் ஊரும் நாடும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும், கவலையில்லாமல் இருந்தால் நெடுநாள் இளமை நலத்துடன் வாழலாம்; கவலையே விரைவில் முதுமை அடைவதற்குக் காரணம் என்னும் உண்மையையும் கண்டறிந்து கூறி மக்களை வாழ்வித்த பெரியாராவர் இவர்.' புலவர் வாயிலாய்க் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தை யாரின் குண நலங்களைப் பற்றியும், பிசிராந்தையார் கோப் பெருஞ்சோழன் குண நலங்களைப் பற்றியும் கேள்வியுற்றனர். இருவர் குண நலங்களும் ஒத்திருந்தமையால், இருவரும் ஒருவரை யொருவர் நேரில் காணாமலே, கண்டு பழகாமலே நட்புக் கொண்டனர். இருவரும் ஒரு முறை கூட நேரிற் கண்டு பழகா விட்டாலும் நெடுநாட் பழகினவரை விட ஒருவரை யொருவர் விரும்பி வந்தனர். பிசிராந்தையார் தம்மைக் கோப்பெருஞ் சோழன் என்றும், கோப்பெருஞ் சோழன் தன்னைப் பிசிராந்தையார் என்றும் பெயர் மாற்றிக் கூறிக் கொள்ளும் அளவு அவர்தம் நட்பு வளரலாயிற்று. 'தன் பெயர் கிளக்குங் காலை என்பெயர் பேதைச் சோழன் என்னும்'2 என்று கோப்பெருஞ் சோழன் கூறுகின்றான். பிசிராந்தையார் எப்போதும் சோழனுடைய நினைவாகவே இருப்பார்; அவனை நேரில் காணவேண்டும் என்ற ஆவலினால் தூண்டப்பெற்றவராய் எப்போதும் சோழன் சோழன் என்ற பேச்சாக இருப்பார்; மனைவி மக்கள் எல்லோரையும் சோழனை நண்பனாகக் கொள்ளும்படி செய்து விட்டார். அவர்களும் அவனைத் தங்கள் நண்பருள் ஒருவனாகக் கொண்டு நடந்து வந்தனர். அத்தகைய குடும்பந்தானே அவர் குடும்பம்! ஒரு நாள் மாலை பிசிராந்தையார் வெளியில் உலாவிக் கொண்டிருந்தார்; வடக்கு நோக்கிப் பறந்து செல்லும் ஓர் அன்னத்தைக் கண்டார்; அதைச் சோழன்பால் தூதுவிட எண்ணினார்; சோழன் பால் கொண்ட நட்பு அவரை அவ்வாறு எண்ணச் செய்தது. அவர் அவ்வன்னத்தைப் பார்த்து, 'அன்னச் சேவலே! அன்னச் சேவலே! நீ குமரியாற்றங் கரையிலே அயிரை மீன்களைத் தின்று, வடதிசையில் உள்ள இமய மலைக்குப் போவாயாயின், செல்லும் வழியில் சோழநாடு உள்ளது. அதன் தலைநகர் உறையூர். அவ்வுறை யூரின் உயர்ந்த மாடத்தின்மேல் உன் பெடையோடு தங்கி, வாயிலோர்க்கு அறிவியாமல் அரண்மனைக் குட்சென்று எமது நண்பனாகிய கோப்பெருஞ் சோழனைக் கண்டு, 'நான் பிசிர் என்னும் ஊரில் உள்ள ஆந்தையின் அடிக்கீழ் வாழ்பவன்' என்று சொல்க; அது கேட்ட அவன் பெரிதும் மகிழ்ந்து நின் பெடை அணிந்து கொள்ளத்தக்க சிறந்த அணிகலம் தருவான்.'1 என்றார். என்னே ஆந்தையாரின் நட்பின் திறம்! இவ்வாறு நேரில் கண்டு பழகாது கொள்ளும் நட்பை வள்ளுவர் 'உணர்ச்சி' என்கின்றார். அதாவது, உள்ளத்து உணர்ச்சியால் ஒருவரை யொருவர் நட்புக் கொள்ளுதல் உணர்ச்சி ஒன்று படுதல் எனலாம். புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சி என நட்பின் காரணம் மூவகைப்படும். ஓரிடத்தில் பிறந்தவர் நண்பரா யிருத்தல் - புணர்ச்சி எனப்படும். அடிக்கடி பழகுவோர் நட்புக் கொள்ளுதல் - பழகுதல் எனப்படும். இவ்விரண்டினும் உணர்ச்சி யொத்தலே சிறந்த நட்பு என்பது வள்ளுவர் கொள்கை. "புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்." என்பது அக்குறள். இக்குறளுக்கு எடுத்துக் காட்டாய் விளங்குபவர் கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் ஆவர். இவர்கட்காகத் தான் வள்ளுவர் இக்குறள் செய்தார் போலும்! கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் இங்ஙனம் பழகா நட்பினராய் ஒருவரை யொருவர் உளக்கோயிலின்கண் வைத்து அளவளாவி வந்தனர். அவர்கள் நட்பு, வளர் பிறைபோல் நாளொரு வண்ணமாய் வளர்ந்து வருகையில், அந்நட்பின் முடிந்த முடிவை அறியும் காலம் ஒன்று வந்தது. பயிர் விளையும் நல்ல நிலத்தில் 'மிளகாய்ப் பூடு' என்னும் நச்சுப்பூடு முளைப்பது போல, நற்குண நற்செயல் களுக்கு இருப்பிடமான கோப்பெருஞ்சோழனுக்கு, மக்கட் பண்பாட்டுக்கு முற்றிலும் மாறுபட்ட குணமுடைய மைந்தர் இருவர் பிறந்தனர். அவர்கள் வளர வளரத் தீய குணங்களும் உடன் வளர்ந்தன. தமிழினத்தின் பெருமையைக் கெடுக்கப் பிறந்த அப்பதர்கள் தாய்மொழிப் பற்றுச் சிறிதும் இல்லாதவர்; தந்தை தமிழ்ப் புலவர்களோடு அளவளாவுதலை வீண் பொழுது போக்கெனக் கருதினர்; அவர் தமிழ்ப் புலவர்க்குக் கொடுப்பதை வீண் செலவு என்று எண்ணினர். அதனால், அப்பாளைகள் தந்தையைக் கொன்று அரசைக் கைப்பற்றுவ தென முடிவு செய்தனர்; அதற்காகப் பெரும் படையையும் திரட்டினர். மைந்தர்களின் அறிவின்மையை அறிந்து சோழன் மனம் வருந்தினான்; அக்கீழ் மக்களின் இழிதகவை எண்ணியெண்ணி மனம் புண்ணானான்; தமிழினத்தின் தனிப் பெருமைக்குத் தீராத இழிவை யுண்டாக்கத் துணிந்த அத்தறுதலைகளின் இழி செயலை உன்னியுன்னி உள்ளம் உருகினான்; முடிவில், தாய்மொழிப் பற்றுச் சிறிதும் இல்லாத அக்கயவர்களிடம் தமிழ் மக்களை ஒப்படைப்பதை விட, அப்பதடிகளை ஒழித்து விடுவதேமேல் என முடிவு செய்தான்; தன் மக்களோடு பொரப் போர்க் கோலம் பூண்டான் கோப்பெருஞ் சோழன். இதனை எயிற்றியனார் என்னும் புலவர் அறிந்தார். அவர் சோழனை அணுகி, 'வெற்றிப் புகழ் மலிந்த கொற்ற வேந்தே! உன்னோடு போர் செய்ய வந்திருப்பவர் நின் பகைவரல்லர்; நீ அவர்கட்குப் பகைவனும் அல்லை; நீ இவ்வுலக வாழ்வை நீப்பாயானால் இவ்வரசாட்சி அவர்களுக்கே உரியதாகும். பின் இவ்வரசாட்சியை யாருக்குக் கொடுப்பாய்? மைந்தருடன் போரிட்டு வென்றான் என்னும் வசை நிற்குமேயன்றி வேறில்லை; வெற்றி தோல்வி ஒருவர் பால் இல்லை. ஒரு வேளை நீயே தோற்பாயாயின் நின் பகைவர் மகிழ்வர்; எப்படிப் பார்க்கினும் இப்போர் நிறுத்தப்பட வேண்டியதேயாகும்'1 என்று உண்மையை எடுத்தியம்பினார். புலவரின் பொருளுரையைக் கேட்ட சோழன் போர்க் கோலத்தைக் களைந்தான்; ஆட்சியை மைந்தரிடம் ஒப்புவித் தான்; தன் மக்கள் தன்மேற் பகை கொண்ட பின், தன்னைக் கொல்லத் துணிந்தபின் அவன் உயிர் வாழ விரும்பவில்லை. மயிர் நீப்பின் வாழாக் கவரிமா வன்ன மானமுடைய அவன் உயிர்விடத் துணிந்தான். அக்காலத்தே ஏதாவது பற்றி உயிர்விடத் துணிந்தவர் உண்ணா நோன்பிருந்து உயிர் விடுவது வழக்கம். இது வடக் கிருத்தல் எனப்படும். ஆற்றிடைக் குறை போன்றதொரு தூய இடத்தில் வடக்கு முகமாக இருந்து நோற்கப்படுதலின் இது இப்பெயர் பெற்றது. கோப்பெருஞ் சோழனும் அவ்வாறே காவிரியாற்றின் நடுவில் உள்ள ஒரு மணல் மேட்டில் அமர்ந்து உண்ணா நோன்பைத் தொடங்கினான். பொத்தியார் முதலிய சான்றோரும் பிறரும் அவனைப் பிரிய மனமில்லாது அவனைச் சூழ அமர்ந்தனர். அரசன் அவர்களை நோக்கி, 'என் ஆருயிர் நண்பர் பிசிராந் தையார் வருவார்; அவருக்கு என் அருகில் இடம் விட்டு ஒதுங்கி யிருங்கள்' என்றான். அது கேட்ட சான்றோர், 'அரசே, பிசிராந்தை யார் உனது பேரைக் கேட்டதன்றி நேரில் நின்னைப் பார்த்த வரல்லர், நீயும் அவர் பெயரைக்கேட்ட தன்றி அவரை நேரில் பார்த்ததில்லை; மேலும் அவர் நெடுந் தொலைவில் உள்ளார். நீ வடக்கிருக்கும் செய்தியை அவர் எங்ஙனம் அறிவார்?' என்றனர். 'இல்லை, நீங்கள் நினைப்பது தவறு; அவரும் நானும் உயிரொன்றிய நண்பர்கள்; அவர் நான் அல்லலுறுங் காலத்து நிற்க மாட்டார்; இப்பொழுதே வந்து விடுவார்; அவருக்கு இடம் ஒழியுங்கள்' என்றான் சோழன். அவ்வாறே இடம் விட்டிருந்தனர். உணவுண்ணாமையால் சோழனது உடல் தளரத் தளரப் பிசிராந்தையாரின் மனம் ஒருவகைக் கலக்கத்தை யுடைய தாயிற்று. ஒரே கவலை; வேறொன்றிலும் மனம் செல்ல வில்லை; பசியும் இல்லை. புலவரின் ஒத்த மனவுணர்ச்சி அங்ஙனம் செய்தது. என் நண்பன் கோப்பெருஞ் சோழனுக்கு என்னவோ இடுக்கண் நேரிட்டுள்ளது; அவன் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறான்; அதனால் உண்டானதே இம்மனக் கலக்கம்; நான் போய்ப் பார்த்துவர வேண்டும்' என்று மனைவி மக்களிடம் விடை பெற்றுக் கொண்டு சோழ நாட்டை நோக்கி நடந்தார் புலவர். அவர் சில நாளில் உறையூரை அடைந்தார். 'இன்னே வருகுவன்; ஒழிக்க அவர்க்கு இடம்' என்று சோழன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிசிராந்தையார் அங்குச் சென்றார். ஆந்தையும் சோழனும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர். அப்போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எதை உவமை சொல்வது? ஆந்தையாரைத் தழுவிய அரசன், கண்ணீர் சோர, குழைந்த அன்போடு அவரை நோக்கி, 'புலவர் பெருமானே, தங்களை நேரில் காணும் பேறு பெற்றிலேன் எனினும், புலவர் வாயிலாகத் தங்களுடைய குணநலங்களைக் கேள்வியுற்றுத் தங்களை நேரில் கண்டு அளவளாவ ஆவல் கொண்டிருந்தேன்; நான் அரியணையில் அமர்ந்திருந்தபோது நீர் வந்திலீர்; வடக்கிருக்கும் இக்காலத்தே வந்தீர்; இஃதொன்றே தங்களின் நட்பின் சிறப்பை விளங்கச் செய்கிறது' என்று தன் உள்ளத் துணர்ச்சியை வெளிப்படுத் தினான். சோழனது நட்புரிமைச் சொல்லைக் கேட்ட ஆந்தையார் இன்பக் கடலில் திளைத்தார்; அவனது அரும் பெருங் குணத்தை எண்ணி எண்ணிக் கண்ணீர் வடித்தார். எதிர்பாரா அந்நிகழ்ச்சியைக் கண்ட பொத்தியார் வியப்புற்றார். எங்கள் அரசன் அரசைத் துறந்து வடக்கிருக்கத் துணிந்ததை நினைக்க நினைக்க வியப்பைத் தருகிறது; ஆனால், வேற்று நாட்டினராகிய புலவர் பெருமான், நட்பையே துணை யாகக் கொண்டு இத்தகைய துன்பக் காலத்தில் இங்கு வந்தது அதைவிட வியப்பைத் தருவதாகும்; 'ஆந்தையார் இப்பொழுதே இங்கு வருவார்' என்று துணிந்து சொல்லிய மன்னனது ஒப்பற்ற மனவுணர்ச்சியும், இவனது சொல் பழுது படாமல் வந்த சான்றோனது அத்தகு மனவுணர்ச்சியும் நினைக்க நினைக்க உண்டாகும் வியப்பு எல்லையின்றிச் செல்கிறது. தன்னாட்டில் வாழும் சான்றோர் உள்ளத்தையே யன்றி, வேற்று நாட்டில் வாழும் இவர் உள்ளத்தையும் தன்பால் ஈர்த்த இப்பேரரசனை இழந்த நாடு இனி என்ன துன்பத்தை அடையுமோ! அதுதான் இரங்கத்தக்கதாகும்'1 என மனமுருகிப் பாடினார். மற்றப் புலவர் களும் அவ்விருவர்தம் நட்புரிமைச் சிறப்பினை வியந்து பாராட்டினர். உணர்ச்சி யொன்றுபட்ட கோப்பொருஞ் சோழனும் பிசிராந்தையாரும் வடக்கிருந்து ஒருங்கு உயிர் விட்டு, நட்பின் பெருமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்வாராயினர். 'கோப் பொருஞ் சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் போல உணர்ச்சி யொப்பின், அது உடனுயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும்'2 என்பது பரிமேலழகரின் பயனுரை. இத்தகைய மனமொத்த நட்புரிமை மக்களிடை மலர்வதாக.  9. நயத்தக்க நாகரிகம் வாழ்க்கை என்பது உண்டு உடுத்து உறைவதேயாகும். பூணுவதும் பூசுவதும் ஆகிய பிற வெல்லாம் இவற்றிற்குப் பின்னர் வேண்டப்படுவனவேயாம். 'அணியெல்லாம் ஆடையின் பின்' என்பது இதனை வலியுறுத்தும். குடிக்கக் கஞ்சியும் உடுக்கக் கந்தையும் முடக்கக் குடிசையும் இருந்தால் போதுமென்பது தானே பெரும்பான்மையோர் வாழ்வியல்? உண்ண உணவும் உடுக்க உடையும் உறைய வீடும் இருந்தால் போதும் என்று, வேண்டுமானால் வேறு வாய்பாட்டால் கூறலாம். இரண்டிற்கும் பொருள் ஒன்று தானே! உணவு, உடை, உறையுள் இம்மூன்றும் திருந்த அமையப் பெற்ற வாழ்வே நாகரிக வாழ்வு எனப்படும். மக்கட் பிறப்பின் வாழ்க்கைத் தேவைகளான இம் மூன்றினும் தமிழ்நாடு முதன்மையுடைய தென்பது உலகறிந்த உண்மையாகும். தமிழ் நாட்டின் நயத்தக்க - விரும்பத்தக்க - நாகரிக நல்வாழ்வை விரும்பித் தானே நனிமிகு பழங்காலத்திருந்தே பல வெளிநாட்டினர் தமிழ் நாட்டை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர்? கிறித்து பிறப்பதற்குப் பல நுற்றாண்டுகளுக்கு முன்னரே யவனர் என்னும் மேனாட்டினர் இங்கு வாழ்ந்து வந்திருக்கின்றனர்.1 எகிப்தியர், உரோமர், கிரேக்கர் முதலிய மேனாட்டினரைப் பழந்தமிழ் மக்கள் யவனர் என்றழைத்தனர். உணவுப் பொருளைத் தரும் உழவுத் தொழிலில் உலகப் புகழ் பெற்றது தமிழ் நாடு. பழந்தமிழ் நூல்கள் இதனைப் பறை சாற்றுகின்றன. 'உழவுத் தொழிலுக் கேற்ற நிலவளமும் நீர்வளமும் நன்கமைந்தது தமிழ் நாடு; தப்பாது விளையும் விளை நிலங்களை யுடையது தமிழ்நாடு; வருந்தாமல் வளந்தருவது தமிழ் நாடு; மாறாத பருவ மழைiம், வற்றாத கிணறுகளும், வளமலிந்த மலைகளும், அம்மலைகளிலிருந்து வரும் வற்றாத ஆறுகளும் பொருந்தியது தமிழ் நாடு' (நாடு) என்கின்றார் வள்ளுவர். இவ்வளத்துக் கேற்றவாறு பலன் கண்டு உலகை வாழ்விக்கும் தகுதியுடையவர் தமிழ்நாட்டு உழவர் பெருமக்கள். தமிழ் நாட்டு உழவர்கள் உழைப்பின் செல்வர்கள்; சோம்ப லென்பதைக் கனவிலும் அறியாதவர்கள்; உலையா முயற்சி யுடையவர்கள்; பிறர் வாழத் தாம் வாழும் பெருந்தகையாளர்கள். 'உழுதூண் அல்லது இல்லென மொழிப'1 என்னும் தொல்காப்பியர் கூற்றுப்படி, தமிழ் நாட்டின் பெரும் பான்மைத் தொழில் உழவேயாகும். 'உழவு' என்னும் அதிகாரத்தில், 'உழவே தலையாய தொழில்; உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி போல்வர்; உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்' என உழவுத் தொழிலின் இன்றியமையாச் சிறப்பினையும், 'உழுத புழுதியை மேலும் மேலும் திருப்பித் திருப்பி உழுது செம்பாடு செய்தால் எருப் போடாமலேயே மிகுதியாக விளையும்' என உழவு முறை யினையும், 'உழுதல், எருவிடுதல், களை களைதல், நீர் பாய்ச்சல், காத்தல்' என்னும் உழவுத் தொழிலின் வகையினையும் வள்ளுவர் விளக்கமாகக் கூறியுள்ளார். 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோராவர். உணவை முதலாக உடையது உடம்பு; உணவென்று சொல்லப்படுவது நிலமும் நீருமே. அந்நீரையும் நிலத்தையும் ஒன்று படுத்தினோர் இவ்வுலகத்துக்கு உடம்பையும், உயிரையும் படைத்த வராவர். ஆதலால், நிலந்தாழ்ந்த இடத்து நீர் தேங்கும்படி செய்தோர், இவ்வுலகத்துத் தம் பெயரை நிலைநிறுத்தினோர் ஆவர்.2 'உழவுத் தொழில் செய்யும் குடிமக்களைப் பாதுகாத்து அக்காவலாலே ஏனைய குடிமக்களைப் பாதுகாப்பாயாக'3 என்னும் புறநானூற்றுப் புலவர் பெருமக்கள் கூற்றினால், பழந்தமிழ் மக்கள் உழவின் இன்றியமையாச் சிறப்பினை எவ்வாறு உணர்ந்து போற்றி, நாகரிக நல்வாழ்வு வாழ்ந்து வந்தனர் என்பது நன்கு விளங்கும். பழந்தமிழ் மக்கள் போர் வெற்றிக்கு ஏர் வென்றியே காரணம் என்பதை நன்கு உணர்ந்திருந்தனர் என்பது, புலவர்கள் 'தேரேறிப் போர்க் களஞ்சென்று, போர்த் தொழிலைச் சிறப்பித்துப் போர்க் களவழி பாடித் தமிழ் மக்களை வீரத்தின் இன்றியமை யாமையை உணரும்படி செய்து வந்தது போலவே, பொருநர், பாணர் முதலிய புலவர்கள் தேரேறி ஏர்க்களஞ் சென்று, ஏர்த் தொழிலைச் சிறப்பித்து ஏர்க்களவழி பாடித் தமிழ் மக்களை உழவின் இன்றியமை யாமையை உணரும்படி செய்து வந்தனர்1' என்பதால் விளங்கும். இனி, 'என்னவோ சோறும் சாறும் உண்டோம்' என்ற அளவில் இல்லாது, உணவைப் பலவகையாகப் பகுத்து, பக்குவ மாகச் சமைத்து இனிது உண்பதும் நாகரிக நல்வாழ்வின் பாலதாகும். அறுசுவையோடு கூடிய நால்வகை உணவு சமைக்கும் பழக்க முடையவர் பழந்தமிழ் மக்கள். "பத்து விதக்கறியும் பதினெட்டுப் பச்சடியும் பொரித்த பொரிக்கறியும் பொன்போல் பருப்புகளும்." என்கின்றார் புகழேந்திப் புலவர். அடிசில், அமலை, அயினி, உண்டி, உணா, ஊண், கூழ், சொன்றி, துற்றி, பதம், பாத்து, பாளிதம், புகா, புழுக்கல், புற்கை, பொம்மல், மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி என்னும் சோற்றைக் குறிக்கும் சொற்கள் பழந்தமிழ் நூல்களில் பயின்று வருகின்றன. இவற்றில் பெரும்பாலன உணவின் வகை பற்றி ஏற்பட்ட பெயர்களே யாகும். இஃதொன்றே பழந்தமிழ் மக்களின் நாகரிக வாழ்வுக்குப் போதிய சான்றாகும். சோறிடுசாலைகளில், சர்க்கரை கலந்து செய்த இனிய கட்டியாகிய தீஞ்சோற்றுக் கடிகை, பாகிலே சமைத்த தேனடை போன்ற மெல்லிய பாகடை, பருப்பும் தேங்காயும் சர்க்கரையும் கலந்து செய்த அப்பம் முதலிய பல்வகை இனிப்புப் பலகாரங் களும், பாற்சோறு, சர்க்கரைச்சோறு, புளிச்சோறு, ஊன்சோறு, வெண் சோறு முதலிய பல்வகைச் சோறுகளும், பலவகைக் காய்கள், கிழங்குகள், இலைக்கறிகள் முதலியவற்றால் செய்த பொரியல், குழம்பு, சாறு முதலிய உணவு வகைகளும் விற்கப் பட்டன என்கின்றது மதுரைக் காஞ்சி. 2 மோர்க் குழம்பு'3 மாவடு ஊறுகாய்,1 முதலியனவும் செய்து உண்டு வந்தனர். பொரியல், குழம்பு, சாறு முதலியன தாளிக்கும் தாளிப்புப் புகை முகில் போல மேலெழுந்து பரந்து செல்லும் வீடுகளை யுடையதாயிருந்தது பழந்தமிழ் மதுரை. 2 நல்லியக் கோடன் என்னும் வள்ளல், மடை நூலில் (பாக நூல்) கூறப்படுகின்ற பாக முறையில் சிறிதும் தப்பாது சமைத்த பல்வேறு வகைப்பட்ட உணவினைப் பாணர்களுக்கு இட்டு மகிழ்ந்தனன் என்கின்றது சிறுபாணாற்றுப்படை. நளபாகம், வீமபாகம் என்னும் சமையல் நூல்களைப் போல, அப்பழங்காலத்தே மடை நூல் செய்து, அந்நூலைக் கற்றறிந்து, அதன்படி பல்வேறு வகைப்பட்ட உணவு சமைத்து, இனிது உண்டு வாழ்ந்து வந்த பழந்தமிழ் மக்களின் நாகரிக நல்வாழ்வின் சிறப்பே சிறப்பு! இன்றுபோல் அன்றே சிற்றுண்டிச் சாலைகளும், பேருண்டிச் சாலைகளும் இருந்தன என்பதை நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்கின்றதன்றோ? உணவுக்கு அடுத்தது உடை. உடை நெய்யுந் தொழிலில் உலக முதலிடம் பெற்றது தமிழ்நாடு. பட்டாலும், எலிமயிர் ஆட்டுமயிர் முதலிய பலவகை மயிரிழையாலும், பருத்தி நூலாலும் வகை வகையான ஆடைகள் நெய்து வந்தனர் பழந்தமிழ் நெசவுத் தொழிலாளர்கள்.3 பாம்புச் சட்டை போலவும், மூங்கிலின் உள்தோல் புறத் தோல் போலவும்,4 பாலாவி போலவும்5 அவ்வளவு மெல்லிய ஆடைகள் நெய்து வந்தனர். அவ்வளவு மெல்லியதாயினும், பாவும் ஊடையு மாகிய இழைகள் இவை என்று பார்த்து அறிய முடியாதபடி அவ்வளவு அழுத்தமாக - வாழை இளங்குருத்துப்போல நெய்தனர். அங்ஙனம் மென்மையும் நுண்மையுமாக நெய்யும் ஆடைகளின் கரைகளிலும், நடுவிலும் பன்னிறப் பூக்களுடன் பொலியும் பூங்காவோ என்னும்படி பலவகையான அழகிய பூவேலைப் பாடுகள் பொருந்தும்படி நெய்தனர்.6 இன்றுபோலவே அன்றும் நூலுக்குக் கஞ்சி தோய்த்து நெய்து வந்தனர்.7 வெளுக்கும் போதும் துணிக்குக் கஞ்சி போட்டு வெளுத்து வந்தனர்.1 நெய்யுமுன் நூலுக்கும், நெய்த பின் துணிக்கும் பல நிறச் சாயங்கள் தோய்த்து வந்தனர். சிலப்பதிகார உரையில் (14 - 108) அடியார்க்கு நல்லார் கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நூண்டுகில் முதலிய ஆடையின் பெயர்கள் (36) கூறுகிறார். இப்பெயர்களே தமிழ் மக்களது நெசவுத் தொழிலின் பழமைக்கும், பெருமைக்கும் சான்று பகரும். மகளிர் - மார்க்கச்சணிந்து, உள்ளுடை தரித்து, பாவாடை கட்டி, கொய்சகமும் முன்மடியும் வைத்துச் சேலையுடுத்து வந்தனர். ஆடவர் - மெய்யுறையும் காற்சட்டையும் மேற் சட்டையும் அணிந்து தலைப்பாகை தரித்து, தோளாடை போட்டு வந்தனர். வேட்டியும் துண்டும் பொதுவான உடை. மகளிர் இரவில் படுக்கும்போது, அதற்கென உரிய மெல்லு டையணிந்து கொள்வது வழக்கம். 2 இனி, உறையுளாகிய கட்டிடக் கலையில் இக்காலத்துத் தனித் திறமை வாய்ந்த பொறிவலாளர்களும் எண்ணி யெண்ணி வியப்பும் பொறாமையும் கொள்ளும் வண்ணம் அத்தகு திறமை யுடையராய் இருந்தனர் பழந்தமிழ் மக்கள். தமிழ் நாட்டின் தலை நகரங்களான மதுரை, புகார், உறையூர், வஞ்சி என்னும் தொன்ன கரங்களின் அமைப்பைப் பார்த்தால் அன்னாரின் வியத்தகு நாகரிகத்தின் பெருமை வெள்ளென விளங்கும். நனி நாகரிக காலம் என்னும் இக்காலத்தில் இல்லாத அமைப்புக்கள் சில அந்நகரங்களில் இருந்தன. இன்று எழுபதடித்தெரு பெருந்தெரு என்று பெருமை யாகக் கூறிக் கொள்கிறோம். ஆனால், அன்று எழுபதடி என்ன? எழுநூறடி என்னும்படி தெருக்கள் அவ்வளவு அகலமாக இருந்தன. தெரு ஆறுபோல அகன்றிருந்தது. தெருவின் இருபக்கமும் உள்ள வீட்டு வரிசைகள், அழகிய சோலைகளுடன் திகழும் ஆற்றின் இரு கரைகள் போல இருந்தன. அத்தெருக்கள் அகலத்தோடு, சென்னைத் தங்க சாலைத் தெருவைவிட நீளமாகவும் இருந்தன. 'ஆறுகிடந் தன்ன அகல் நெடுந்தெரு' என்பது மதுரைக் காஞ்சி (359). தெருவின் இருபுறமும் கரவு நீர்ப்பாதைகள் அமைந்திருந்தன. தெருவின் இருபுறங்களிலும் உள்ள வீடுகளோ, முகில் விளையாடும் மலைபோல் உயர்ந்த மாடிவீடுகள். 'மாடமலி மறுகின் கூடல்' என்பது முருகாற்றுப்படை (71). அம்மாடங் களில் பெரும்பான்மை எழுநிலை மாடங்கள். அம்மாடங்கள் மயமதம் என்னும் சிற்பநூற்படி கட்டப் பெற்றவை யாகும். சின்னஞ் சிறு வீடுமுதல் பெரிய மாடி வீடுகள் ஈறாக எல்லா வீடுகளிலும் நாற்புறமும் காலதர் என்னும் சாளரங்கள் உண்டு. 'சில்காற்று இசைக்கும் பல்புழை நல்இல்' என்பது மதுரைக் காஞ்சி (375 - 8) மானின் கண்களைப்போல நீண்ட வடிவில் சிறுசிறு துளைகள் விட்டுக் கட்டப்பட்ட சாளரங்களும் உண்டு. இது 'மான்கட் காலதர்' எனப்படும். மண்டபம், கூடம், தாய்க்கட்டு, அடுக்களை முதலிய உட்பிரிவுகளுடன் அமைந்திருந்தன அவ்வீடுகள். இனித் தெருக்கள் கூடும் இடங்களையெல்லாம் பழந் தமிழ் மக்கள் வறிதே போட்டிருக்க வில்லை. மூன்று தெருக்கள் கூடும் சந்திகளிலும், நான்கு தெருக்கள் கூடும் சதுக்கங்களிலும் பூங்காக்கள், குளங்கள், ஆடல் பாடல், விரிவுரை நிகழும் மன்றங்கள் முதலியன அமைத்திருந்தனர்; அக்குளங்கட்கு ஆற்றிலிருந்து நீர் வரவும், குளத்து நீர் வெளியே போகவும் வழிகள் அமைத்திருந்தனர். அந்நகரங்களில் நாளங்காடி, அல்லங்காடி என்னும் பகற்கடை, இரவுக்கடைகள் தனித்தனி இருந்தன. மதுரையி லிருந்த அவ்விருவகை அங்காடியின் சிறப்பையும் பெருமை யையும் சிலப்பதிகாரத்தினும், மதுரைக் காஞ்சியினும் படித் தறிந்து இன்புறாத தமிழர் பிறப்பின் பயனை அடையப் பெறாத வரேயாவர். இன்னின்ன கடைகள் என்று அறிதற்கு ஒவ்வொரு பொருள் விற்கும் கடைகளிலும் தனித்தனிக் கொடிகள் கட்டப் பட்டிருந்தன. இவை நாகரிகத்தின் அடையாளங்களாகும். நயத்தக்க நாகரிக நகரங்கள் எனப்படும் சென்னை போன்ற பெரிய நகரங்களிற்கூட இக்காலத்தும் ஓரிரு உணவுச் சாலைகளில் மட்டும் மாடி மேல் பந்தாடிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அக்காலத்திலோ பெரும்பாலான மாடி வீடுகளில், வேயாமாடம் அல்லது நிலாமுற்றம் என்னும் மொட்டை மாடிமேல் பந்தாடிடம் அமைந்திருந்தது. அங்கு மகளிர் பந்தாடி வந்தனர். இந்நாகரிகச் செய்தி, 'பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை வான்றோய் மாடத்து வரிப்பந்து அசைஇ' (332 -3) எனப் பெரும் பாணாற்றுப்படையிற் கூறப்படுகிறது. வான்தோய் உயர்நிலை மாடத்து, பொன் சிலம்பு ஒலிப்பப் பந்தாடிக்களைத் தார்களாம். அசைஇ - களைத்து. இஃதொன்றே போதும் அக்கால நனி நாகரிகச் சிறப்புக்கு! பழந்தமிழ் மகளிர், வான்தோய் உயர்நிலை மாடி மேல் பந்தாடி மாண்புடன் வாழ்ந்தார்கள். ஆனால் அவர் வழிவந்த இக்காலத் தமிழ் மகளிரோ தரையில் பந்தாடுதல் கூட அரிதாக உள்ளது. எது நாகரிக காலம்? ஓடியாடிப் பந்தாடக் கூடிய அவ்வளவு அகல நீளமுள்ள நிலா முற்றங்கள் பொருந்திய மாடங் களையுடைய வீடுகள் எவ்வளவு பெரியவையாக இருந்திருக்க வேண்டும்! சிற்ப ஓவியக் கலைகளில் முதலிடம் பெற்றது தமிழ்நாடு. பழந்தமிழர் வீடுகள் சிற்ப ஓவியக் கலைக்கூடங்களாகச் சிறந்து விளங்கின. காவிரிப்பூம்பட்டினத்துத் தெருவின் இரு புறமும் உள்ள மாடி வீடுகளில் இருந்த சிற்ப ஓவியங்களை, வெளியூரி லிருந்து வந்தவர்கள் கண்டு களித்தனர் என்று மணிமேகலை கூறுகிறது. இனிப் பழந்தமிழ் வேந்தர்களின் கோட்டை ஒன்றே போதும் பழந்தமிழ் மக்களின் நயத்தக்க நாகரிகச் சிறப்பின் பெருமைக்கு. புறத்திணை ஏழனுள் உழிஞைத்திணை என்பது - கோட்டையை முற்றுதலும் காத்தலும் ஆகும்; அப்பழந் தமிழ்க் கோட்டையை முழுமுதல் அரணம் என்கின்றார் தொல்காப்பியர். முழுமுதல் அரணம் - வலிபொருந்திய கோட்டை. அது புறமதில், இடைமதில், அகமதில் என்னும் மூன்று மதில்களையுடையது. ஒவ்வொரு மதிலின் புறத்தும் ஆழ்ந்தகன்ற அகழ் அமைந்திருக்கும். அவ்வகழியில் எப்போதும் நீர் நிரம்பியிருக்கும். 'மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கு' என்பது மதுரைக் காஞ்சி (351). அக் கிடங்குகளில் கொடிய பெரிய முதலைகள் இருக்கும். அகழை அடுத்து 'மிளை' என்னும் பெரிய காவற்காடு அமைந்திருக்கும். அகழிக்கும் காவற் காட்டுக்கும் இடையே 'மருநிலம்' என்னும் வெட்ட வெளி நிலம் இருக்கும். இது மதிலை நோக்கி வரும் பகைவரை அறிதற்குப் பயன்படுவது. 'மணிநீரும் மண்ணும் . . . . . .அணிநிழல் காடும் உடையது அரண்' என்கிறார் வள்ளுவர். காவற் காட்டில், கூரிய அடர்ந்த முட்களையுடைய மரங்களும் பிற மரங்களும் அடர்ந்திருக்கும். விரைந்தோடும் பகைவர் காலில் தைப்பதற்காக இரும்பு நெருஞ்சி முட்கள் பரப்பப்பட்டிருக்கும்; ஓடுவோர் காலை இழுத்துக் கீழே தள்ளுவ தற்குத் தோட்டி என்னும் இரும்புக் கொக்கிகள் அக்காவற் காடு முழுவதும் முளையடித்துக் கட்டப்பட்டிருக்கும். காவற் காட்டைச் சுற்றிப் பெரும்படை காவலிருந்து வரும்; யானைக் காவலும் உண்டு. மதிலில் நாற்புறமும் வாயில்கள் அமைந்திருக்கும். அவ்வாயில் மலையைக் குடைந்து செய்தாற் போலப் பெரிதாகவும் உயரமாகவும் இருக்கும். அவ்வாயிலின் மேல் பெரிய கோபுரம் இருக்கும். 'குன்று இயன்றன்ன ஓங்கு நிலை வாயில்' என்பது நெடுநல் வாடை (88). வாயில் நிலவுகால் வலிய பெரிய பல மரங்களை இணைத்துச் செய்யப்பட்டிருக்கும். வலி பொருந்திய இரட்டைக் கதவுகள் போடப்பட்டிருக்கும். இக்கதவுகளும் பல பலகைகள் இணைத்துச் செய்யப்பட்ட வையே. கதவின் உற்புறத்தில், வெளியிலிருந்து எளிதில் கதவைத் திறக்க முடியாதபடி, நிலவுகாலை அடுத்து இருபுறமும் எழு என்னும் பெரிய வலிய மரங்கள் நடப்பட்டிருக்கும், அவ்வெழு மரத்தில் சீப்பு என்னும் தாங்கு கட்டை பொருந்தியிருக்கும். எழு மரங்கட்கும் கதவுக்கும் இடையே கணையம் என்னும் குறுக்கு மரம் சீப்பின் மேல் போடப்படும் தாழ்ப்பாள்களும் உண்டு. கணைய மரத்தை எடுத்துக் கதவைத் திறப்பர். கணைய மரம் போட்டுள்ளபோது. வெளியிலிருந்து பெரிய கல்லுரல்களைக் கட்டித் தொங்க விட்டும், பெரிய மரங்களைக் கட்டித் தொங்க விட்டும் யானைகளைக் கொண்டு அடித்தாலும் அக்கதவினைத் திறக்கவோ உடைக்கவோ முடியாது. உட்புறத்தி லிருந்து தள்ளிப் பிடிக்க எப்போதும் மல்லர்கள் காவலிருப்பர். நிலவுகாலுக்கு அருகே இருபுறமும் மதிற்சுவரில் உள்ள அறைக்குள் போர்க் கருவிகளுடன் வீரர்கள் இருந்து, கதவை உடைத்துக் கொண்டு வாயில் வழியாக உட்புகும் பகைவர் களைத் தாக்குவர். இத்தகைய பாதுகாப்பமைக்கக் கூரிய அறிவும் நெடுங்காலப் பழக்கமும் வேண்டு மல்லவா? மதில் முகட்டில் பதணம் என்னும் மேடை மதிலைச் சுற்றிலும் அமைந்திருக்கும். இம்மேடைக்கு வெளியே வலி பொருந்திய சுற்றுச் சுவர் இருக்கும். அதனால், அப்பதணம் மதிலுள் மேடை எனப்படும். அம்மேடையில், பகைவர் மதில் மேலேறாமல் தடுக்கவும், தாக்கவும் பலவகைப் போர்க் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும்; தாமே சென்று தாக்கும் பலவகைப் பொறிகள் அமைக்கப் பட்டிருக்கும். அப்பதணத்தின் கீழ், மதில் மேல் ஏறும் பகைவர் மேல் அம்பெய்யும் துளைகள் பொருந்திய ஏப்புழை ஞாயில் என்னும் அறை மதிலைச் சுற்றிலும் அமைந்திருக்கும். அதனுள் வீரர்கள் இருந்து காவல் புரிந்து வருவர். ஏ - அம்பு. புழை - துளை. ஏபுழை - அம்பெய்யும் துளை. ஞாயில் - அறை. ஏப்புழை ஞாயில் - ஏவறை எனவும் வழங்கும். மூன்று மதில்களிலும் இத்தகைய அமைப்புக்கள் இருக்கும். மதிலுள் மேடையில், வளைந்து தானே அம் பெய்யும் வளைவிற் பொறி, மதில்மேலேறுவோர் தலையைக் கொத்தும் ஆண்டலைப் புட்பொறி, பகைவர் கண்ணைக் கொத்தும் சென்றெறிசிரல், மதில் முடியைப் பிடிப்பார் கையைக் குத்தும் கைபெயரூசி, மதில்மேலேறுவோர் உடல் முழுதும் அறுக்கும் அரிநூற் பொறி, தானே சென்று மதில் மேலேறுவோரை வெட்டிக் கிடங்கிற்குள் தள்ளும் தள்ளி வெட்டி, மூங்கில் வடிவான தானே தாக்கும் பணைப்பொறி, மற்றும் குரங்குப் பொறி, பன்றிப் பொறி, களிற்றுப் பொறி, புலிப்பொறி, தகர்ப் பொறி, கழுகுப்பொறி, விழுங்கு பாம்பு முதலிய பொறிகள் அமைக்கப் பெற்றிருந்தன என்கின்றார் இளங்கோவடிகள். 1 இவை, மின்சாரம் போன்ற யாதோ ஒன்றினால் இயங்கின போலும். இவை பகைவர் மதில்மேல் ஏணி சார்த்தி ஏறினதும் தாமே இயங்கித் தாக்கும் படி மதிற் சுவரில் விசையமைத்திருந்தனர் போலும்! அல்லது மதிலுள் மேடையில் விசையமைத்து, பகைவர் மதில்மேல் ஏறினதும், அம்மேடையில் உள்ளோர் அவ்விசையை இயக்கி விட்டனர் போலும்! இது ஆராய்ச்சிக்குரியது. இளங்கோ வடிகள் அரசகுமரர் ஆனதினால், வஞ்சி மாநகரின் மதிலுள் மேடையில் இருந்த அவற்றை அறிந்தபடியே கூறியிருக்கிறார். பதணத்திலுள்ள வீரர்கள், மதில்மேலேறும் பகைவரை, வேல், வளைதடி முதலியவற்றால் தாக்குவர்; இரும்புக் கவையைக் கழுத்தில் கொடுத்துத் தள்ளுவர்; காய்ந்த எண்ணெய், சாணநீர் முதலியவற்றை மேலே ஊற்றுவர்; பகைவர் மதிலை அணுகாதபடி கவண்கல்லால் எறிவர். மதிலை அடுத்து அகழ் இருப்பதால், ஏணியை நீர்மேல் மிதக்கவிட்டு மதில்மேல் சார்த்துதற்கு ஏற்றவாறு ஏணியின் அடியில் அகல நீளமுடைய பலகை இணைக்கப் பட்டிருக்கும். அதாவது அப்பலகையில் ஏணி பொருத்தப்பட்டிருக்கும். இது மடையமை ஏணி எனப்படும். வள்ளுவர் 'அரண் என்னும் அதிகாரத்தில், இம் மதிலின் அமைப்பினை நன்கு கூறுகின்றார். மதில், ஏணி சார்த்த முடியாத உயரமும், பகைவரால் துளை செய்ய முடியாத அடியகலமும், மதிலுள் மேடை, ஏப்புழைஞாயில் இவை அமையக் கூடிய முடியகலமும், பகைவரால் இடிக்க முடியாத திண்மையும் உடையது; உள்ளிருப்போர்க்கு நெடு நாளைக்கு வேண்டிய உணவைத் தன்னிடத்தே உடையது; வற்றாத நீர் நிலையுடையது; உள்ளிருப்போர்க்கு வேண்டிய எல்லாப் பொருளும் உடையது; புறத்தோர் அறியாமல் வெளியே போதற்கும் உள்ளே வருவதற்கும் உரிய கரந்து படை என்னும் சுருங்கையை உடையது. புறமதிலுக்கும் இடைமதிலுக்கும் இடையில் பொது மக்கள் வாழ்வர். இது ஊர் எனப்படும். இடைமதிலுக்கும் அகமதிலுக்கும் இடையில் அதிகாரிகள், பெருங்குடி மக்கள் முதலியோர் மாட மாளிகைகள் இருக்கும். அகமதிலுக்குள் அரசன் இருப்பான். இது கோயில் எனப்படும். ஏன் இவை நயத்தக்க நாகரிகத்தின வல்லவா? தம் முன்னோர் நாகரிக வாழ்வை நூல் வாயிலாக அறிந்தின்புறும் நிலையில் உள்ளனர் தமிழ் மக்கள். இந்நிலையிலேனும் உள்ளனரே, அந்நிலை வாழ்க!  அருந்தமிழ் அமிழ்து முன்னுரை எதிர் காலக் குடிமக்களாகவும், ஆள்வோராகவும் விளங்கவிருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு, அவர்தம் நாடு, மொழி, முன்னோரின் வாழ்க்கை முறை, ஆட்சிமுறை, நாகரிகம் முதலியவற்றின் பழமை, பெருமை, சிறப்பு என்பனவற்றை அறிவுறுத்துதல் இன்றியமையாமை என்பது அறிஞர் கருத்து. இந்நூல் அக்கருத்துப்படி எழுதப்பட்டதேயாகும். இந்நூலைக் கற்கும் தமிழ் இளைஞர்கள், தங்கள் முன்னோர் தங்களுக்காகச் செய்து வைத்துள்ள பழந்தமிழ் நூல்களைக் கற்க ஆர்வம் கொள்வதோடு, தங்கள் முன்னோரின் நாகரிக நல்வாழ்வின் சிறப்பினை அறிந்தின்புற்று, தாமும் அன்னார்போல் வாழ முயலுவர் என்பது ஒருதலை. இந்நூல் உயர்வகுப்பு மாணவர்களுக்கேற்ற எளிய இனிய தனித்தமிழ் நடையில், இலக்கியச் சுவையுடன் எழுதப் பெற்றுள்ளது. மாணவருலகிற்கு இந்நூலைப் பயன்படுமாறு செய்தல் மேலோர் கடமையாகும். பவானி அன்புள்ள, 15 - 10 - 59. குழந்தை. அணிந்துரை "அருந்தமிழ் அமிழ்து" "அருந்தமிழ் அமிழ்து" என்னும் புலவர் குழந்தை அவர்களின் கட்டுரைத் தொகுப்பே இந்நூல். இதில் வள்ளுவர் கண்ட வளநாடு, இயற்கையின் எழுச்சி, தொல்காப்பியர் கால ஆட்சிமுறை, ஆழமும் ஆழ்கடலும், வண்புகழ் மூவர், நனி நாகரிகம் - என்ற கட்டுரைகள் அடங்கியவை இந்நூல். வள்ளுவர் கண்ட வளநாட்டுப் பகுதியில் தமிழ்நாட்டின் இயற்கை வளம், நிலவளம், பொன்னி பற்றிப் பாடுகிறார் ஓட்டக்கூத்தர். மலைகொன்று பொன்னிக்கு வழிகண்டசோழன் வரராச ராசன்கை வாளென்ன வந்தே என்பது தக்கயாகப் பரணி. பசியும் பிணியும் : யானை கட்டுந்தறியில் வான்முட்டும் போர் விழும் என்பது நாட்டு மொழி. 'ஒரு பிடி படியும் கீரிடம் எழு களிறு புரக்கும் நாடு' என்பது சான்றோர் உரை. நாடு நல்ல விளைநிலங்களை உடையதாக இருக்க வேண்டும். நீர் வளம் பொருந்தி இருக்க வேண்டும். வள்ளுவர் நாட்டு வளர்ச்சிக்கு எடுத்துக் கொண்ட முயற்சி அரியது. தக்காரும் செல்வரும் : தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் அறியப் படும். தக்கவர், தமக்கென வாழார். பெரியாரைத் துணைக்கோடல், பெரியாரைப் பிழையாமை என்பன அரண்களுக்குக் கூறப்பட்டன. நாட்டு மக்களின் நல்வாழ்வு இனிது நடைபெற்று வந்தமையால் 'தக்கார் சேர்வது நாடு' என்பது வள்ளுவர் வாக்கு. தள்ளா விளையுள் அமைந்து மக்கள் பசி, பிணியின்றித்தக்காரின் தகவுரையால் இனிது வாழவேண்டும் என்கிறார். பல்குழுவும் கொல்குறும்பும் : உறுபசியும் ஓவாப்பிணியும் இன்றித் தக்காரும், தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்கிறார் வள்ளுவர். பல்வகைச் சிற்றினங்கள் இல்லாதும், குறும்பு செய்யக்கூடிய அரம்பர்கள் (ரௌடி) இல்லாது இருப்பதும் ஒரு நாட்டுக்கு மிகவும் கட்டாய மாகும். இயற்கையின் எழுச்சி : "செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்"(412) என்பது வள்ளுவம். பழந்தமிழ்ப் புலவர்கள் இயற்கைக் காட்சியில் ஈடுபாடு உடையவர்கள். புறம், அகம், நற்றிணை முதலியவற்றில் இயற்கை ஈடுபாட்டுப் பாக்களை நிரம்பக் காணலாம். தொல்காப்பியர் கால ஆட்சி முறை : தமிழர் ஆட்சி மனுமுறைக்கு மாறுபட்டது. யூதர்கள் பொருளீட்டக் கூடாது. எந்தத்தொழிலும் செய்யக்கூடாது என்பது செர்மனியின் தனியாட்சிச் சட்டமாக இருந்தது. வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி - மனோன்மணீயம் சுந்தரணார். குடி சூட்டு முடியாட்சி : பழங்காலத்தில் குடி தழுவிய ஆட்சிமுறையே நடந்து வந்துள்ளது. தமிழர்களின் அரசியலறிவைப் போற்ற வேண்டும். நன்கு பழகிய அரசியல் குமரர்க்கு நாட்டு மக்கள் ஒன்று கூடி முடிசூட்டினர். மன்னர் இருவர் பகை கொண்டனர். பகையின் முடிவு போர் தானே! எல்லாவகைப் போர்களும் செய்தனர். அரசிளங்குமரன் வெற்றி பெற்றான். இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலை என்பது தொல் - புறம் தொல் - புறத்திணை அனைத்தும் நடந்தவையாகும். நாட்டு மக்கள் தகுதியுடையவனையே அரசனாக்கினர். ஆழமும் ஆழ்கடலும் : கடலும் மலையும் பற்றித் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. தென்கடலைத் தமிழ்க்கடல் என்பது மரபு. நிலம்படுமுத்தம் என்பது குறிஞ்சி நிலங்களில் விளையும் முத்தை. சிப்பியிடம் முத்துக்கள் உண்டு. அவை கடலில் விளைபவை. வெண்பாப் புலவர் புகழேந்தி. "யானைக் கொம்பிலும், பன்றியின் கொம்பிலும் முத்துக்கள் பிறக்குமாம். கரும்பு, மூங்கில், நெல், தாமரை, கமுகு இவற்றிலும் முத்துக்கள் பிறக்கும் என்பர் பழந்தமிழர். இவை முத்துக்கள் பிறக்கும் இடங்கள். முத்தாரங்கள் பெண்டிர் அணிவர். வண்புகழ் மூவர் : உலகின் முதன்மாந்தர் தமிழர் என்பதும், உலக முதன் மொழி தமிழ் என்பதும் ஆராய்ச்சி அறிஞர்களின் முடிந்த முடிபாகும்! மூவேந்தர்கள் இவ்வழி வந்தவர்களே! புலவர், முனைவர் இரா. வடிவேலனார் 1. வள்ளுவர் கண்ட வளநாடு 1. இயற்கை வளம் நாடு என்பது நான்கு எல்லைக்குட்பட்ட நிலப்பரப் பினை மட்டும் குறிப்பதில்லை. அந்நிலத்தோடு, அதில் வாழும் மக்களையும், அம்மக்கட்குப் பயன்படும் அந்நிலத்திலுள்ள இயற்கை வளத் தினையும் குறிக்கும். எனவே, நாட்டின் இயற்கை வளம், நாட்டு மக்களின் நல்வாழ்வு இவையே நாடு என்னும் சொல்லின் சிறந்த பொருளாகும். 'ஒரு நிலம் நாடாகவோ, காடாகவோ, பள்ள மாகவோ, மேடாகவோ எதுவாக இருப்பினும் சரி, எங்கு நன்மக்கள் வாழ்கின்றார்களோ அதுவே நல்ல நிலம்' என்கின்றது புறநானூறு (187). தாம் பாடும் பாட்டுகளில் நாட்டு வளம் பாடுதலை இன்றியமையாத பொருள்களுள் ஒன்றாகக் கொண்டுள்ளனர் பழந்தமிழ்ப் புலவர்கள். அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து முதலிய பழந்தமிழ் நூல்களில் நாட்டின் நல்வளச்சிறப்பினைப் பரக்கக் காணலாம். அந்நூல் களைப் பழந்தமிழ் நாட்டின் இயற்கைப் படப்பிடிப் பெனவே பகரலாம். புல், மரம், பூ, விலங்கு, பறவை, நீர் முதலிய இயற்கைப் பொருள்களை இறைச்சி எனவும், உள்ளுறையுவமம் எனவும் அகப்பாட்டுக்களில் அமைத்துப் பாடி, அப்பாட்டுக்களைப் படிப்போர் உள்ளமும் உணர்வும் ஒருங்கு இன்பங் கொள்ளும்படி செய்துள்ளனர் அப்புலவர் பெருமக்கள். அவர்கள் நாட்டின் இயற்கை வளத்தோடு நகரின் செயற்கை வளத்தினையும் தம் பாக்களில் அமைத்துப் பாடியுள்ளார்கள். பத்துப் பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சி என்பது மதுரை மாநகரின் செயற்கை வளத்தினையும், பட்டினப்பாலை என்பது காவிரிப்பூம்பட்டினத்தின் செயற்கை வளத்தினையும், மணிமேகலை வஞ்சி மாநகரின் அவ்வளத்தினையும் கூறுமுகத்தான், அப்பழந் தமிழ் நாட்டின் தலை நகரங்கள் இவ்வாறு இருந்தன என்பதை நமக்கு அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. சிலப்பதி காரமும் மாட மதுரையின் மாண்பு மிக்க சிறப்பினை வகைபடக் கூறுகிறது. அப்பழைய நகரங்களின் சிறப்பினை அந்நூல்களிற் கண்டு, தம் முன்னோரின் நாகரிகச் சிறப்பினை அறிந்தின்புறுதல் தமிழ் மக்களின் தலையாய கடமையாகும். இனி, இடைக்காலப் புலவர்களும், பிற்காலப் புலவர்களும் நாட்டின் இயற்கை வளத்தினையும் நகரத்தின் செயற்கை வளத் தினையும், நன்மக்கள் வாழ்வினையும் நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு எனத் தங்கள் நூல்களில் தனியுறுப்பாகவே கொண்டு தகவுடன் பாடியுள்ளனர். நைடதத்தின் நாட்டுப் படலமும் நகரப்படலமும் படித்தின்புறற்பால தொன்றாகும். தமிழர் வாழ்க்கைச் சட்ட நூலாகிய திருக்குறள் செய்த வள்ளுவரோ, மற்றப் புலவர்களைப் போல நாட்டின் இயற்கை வளமும் அந்நாடு வாழ் மக்களின் நல்வாழ்வும் இவ்வாறு இருந்தன என இறந்த காலத்தால் கூறாது, இவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்காலத்தால் கூறுகிறார். 'இருந்தன' என இறந்தகால நிகழ்ச்சி யாகக் கூறுவதைவிட, 'இருக்க வேண்டும்' என எதிர்கால நிகழ்ச்சி யாகக் கூறுவதே ஏற்புடைத் தாகும். அவ்வாறு இறந்த கால நிகழ்ச்சியாகக் கூறின், அன்று இருந்தவை இன்று இல்லையே என எண்ணி வருந்தவேண்டி நேரும். 'என்னவோ முன்னே அப்படியெல்லாம் இருந்தனவாம்' என்ற அளவோடு இருந்து விடுவோம். பிறரும், 'உங்களப்பன் குதிரையேறினால் நீ கைவண்டி தானே இழுக்கிறாய்? அப்படி யிருந்தது இப்படி யிருந்தது எனப் பழம்பெருமை பேசுவதால் பயன் என்ன? இப்போது இருப்பதைப் பேசுவதுதானே அறிவுடைமை?' என்று ஏளனமாகப் பேசவுங் கூடுமல்லவா? இனி, 'இவ்வாறு இருக்க வேண்டும்' என எதிர்கால நிகழ்ச்சியாகக் கூறினால், அவ்வாறு இருக்கும்படி செய்ய முயற்சி செய்யத் தூண்டும். எனவேதான் வள்ளுவர், இப்படி யிருக்க வேண்டும் அப்படியிருக்க வேண்டும் என எதிர்கால நிகழ்ச்சியாக வற்புறுத்துகிறார். அவ்வாறு வற்புறுத்துவதனாற் பயன், 'இவ்வாறு நாட்டை நன்னாடாக்க வேண்டும்; நன்னாட்டின் முன்னாட்டும் நாடாக ஆக்கவேண்டும்; இதுதான் நாடாள்வோரின் முன்னிற்கும் முதல் வேலை; இவ்வேலையை உடனடியாகச் செய்து நாட்டு மக்களை நல்வாழ்வு வாழச்செய்யுங்கள்; அதுதான் நல்லரசு எனப்படும்' என ஆள்வோர்க்கு அறிவுறுத்தலேயாகும். 2. நிலவளம் திருக்குறளில் உள்ள நூற்று முப்பத்து மூன்று (133) அதிகாரங் களுள் நாடு என்பது ஒன்று. வள்ளுவர் அவ்வதிகாரத்தில் நாட்டு வளமும் நாடு வாழ் மக்களின் நல்வாழ்வும் பற்றியே கூறுகிறார்; நாட்டுநலம் பற்றி நாட்டு மக்களும் ஆள்வோரும் மேற்கொள்ள வேண்டியவற்றை வற்புறுத்துகிறார். அவ்வதிகாரப் பத்துக் குறளும் உலகில் தலையாய ஒரு நாடு எப்படியிருக்க வேண்டும் என்பதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. வள்ளுவர் கண்ட அவ்வளமார் தமிழ் நாட்டை எதிர்காலக் குடிமக்களாகிய, இந்நாட்டின் மன்னர்களாகிய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். நாட்டில் மக்களாட்சி நடப்பதால், தங்கள் ஆட்சிக் காலத்தில் நாட்டை அத்தகு நிலைக்குக் கொண்டு வரலாமல்லவா? வள்ளுவர் கண்ட அத்தகு வளமுடைய நாடாக்கலாமல்லவா? ஆம். ஆக்கலாம். ஊக்கமும் பொது நோக்கமும் இருப்பின் கட்டாயம் ஆக்கலாம். அவ்வாறு ஆக்க வேண்டும் என்பதுதானே வள்ளுவர் நோக்கமும்? ஒரு நாட்டு மக்கள், ஒரு காலத்தே போதிய முயற்சி யின்றியோ, வேறு ஏதாவது காரணத்தினாலோ தம் நாட்டின் மேம்பாடு குன்றும்படி செய்து விட்டாலும் அடுத்த தலை முறையார் அக்குறைபாட்டைத் தீர்த்து நாட்டை நன்னிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்பது கருதித்தானே வள்ளுவர், 'இவ்வாறு இருந்தது' என இறந்தகால நிகழ்ச்சியாகக் கூறாது, 'இவ்வாறு இருக்கவேண்டும்' என எதிர்கால நிகழ்ச்சியாகக் கூறியுள்ளார். அடுத்த தலைமுறையினராகிய உங்களை நோக்கியே வள்ளுவர் அவ்வாறு கூறினார் போலும்! வள்ளுவர் வாய்மொழி பொய்யாமொழி எனப் போற்றப்படுவதன் காரணமும் இதுதானே? இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர்க் கூறியன வெல்லாம் இன்றும் அப்படியே நடைமுறையில் இருந்து வருகின்றன அல்லவா? இதுதான் பொய்யா மொழி என்பதன் உட்பொருள். அப் பொய்யா மொழியைப் பொய்யா மொழியாகக் கொண்டு கையாளுவது உங்கள் கடமையாகுமல்லவா? ஒரு நாடு நல்ல நாடு எனப் பெயர் பெற வேண்டு மானால் அந்நாட்டின் நல்ல விளைவு விளைய வேண்டும். நல்ல விளைவு விளையாத நாடு நாடெனப்படாது. நாடு வாழ் மக்கள் சோற்றுக்குத் துடியாய்த் துடிக்கும்போது உணவுக்கு அயல் நாட்டினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, தம் தாய் நாட்டை விட்டு அண்டை அயல்நாடுகட்குக் குடியோடும் போது எங்ஙனம் அந்நாடு நன்னாடாகும்? நமது வளமார் தமிழ்நாடு, காவிரி பாயும் கன்னித் தமிழ்நாடு ஒரு காலத்தே அந்நிலையை அடைந்த தனாற்றானே? தமிழ்மக்கள் வாழவழி யின்றித் தம் தாய்நாட்டை விட்டு இலங்கை, மலேயா, கடாரம் (பர்மா) முதலிய வெளிநாடு களுக்குக் குடியோடினார்கள்? இன்றும் அவ்வயல் நாடுகளில் அயலார்க்கடிமையாய்க் கூலிவாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்? கி. பி. 13- ஆம் நூற்றாண்டில் பரராசசிங்கன் என்பவன் இலங்கையை ஆண்டுவந்தான். அப்போது இலங்கையில், உணவுத் தட்டுதல் உண்டானது. இலங்கை மன்னன், உணவுப் பொருள் உதவித் தன்னாட்டு மக்களைக் காப்பாற்றும்படி. சோழநாட்டுத் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் என்னும் தமிழ்ப்பெருஞ் செல்வனைக் குறையிரந்து வேண்டினான். சடையப்பன் கப்பல் கப்பலாய் நெல் அனுப்பி இலங்கை வாழ் மக்களைக் காப்பாற்றினான். அதே தமிழ் நாட்டினர் அவ்விலங் கைக்குப் பிழைக்க ஓடினர். இன்று அங்குத் தமிழ் மக்கள் சிங்களவரால் சீரழிந்து திகைக் கின்றனர்; தங்கள் பிறப்புரிமைகளை இழந்து பேதுறுகின்றனர். தமிழ் மக்களின் தாய்மொழியாம் இன்பத் தமிழ் மொழி அங்கு இழிவுபடுத்தப்படுகிறது. இனி அந்நிலைமை இங்கு ஏற்படக்கூடாது. தமிழ் நாட்டு மக்கள் தம் தாய் நாட்டில் வாழ வழியின்றி, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி அயல் நாடுகளுக்குக் குடியோடக்கூடாது. இது குறித்தே வள்ளுவர், 'நாடு இவ்வாறு இருக்க வேண்டும்' என எதிர்கால நிகழ்ச்சியாகக் கூறியுள்ளார். வள்ளுவர் வாய்மொழியைத் தள்ளாது மேற்கொள்ளுவோமாக. நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டுமானால் அந்நாடு முழுவதும் நல்ல விளைநிலங்கள் அமைந்திருக்க வேண்டும். நிலம் ஒரே ஒப்புரவாக இருக்க வேண்டும். நல்ல மண்வள முள்ளதாக இருக்க வேண்டும். இத்தகைய நிலமே நல்ல விளை நிலமாகும். 'போகந்தோறும் எரு போட்டுப் போட்டு உழவர்கள் வருந்தாமல் மிகுதியாக விளையும் விளைநிலங்களையுடைய நாடே நல்ல நாடாகும்' (739) என்கிறார் வள்ளுவர். மழைநீர் பரவலாக அப்படியே நின்று நிலத்தை நீர்வள முடைய தாக்க வேண்டும். விழுந்த துளி சற்றும் நிற்காத ஓரணை நிலம் - - - - சரிவான நிலம் - - - - தன் மண்ணை மழைநீருக்குக் கொடுத்துவிட்டுக் கல்லை மட்டும் விடாமல் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கும். நாலு துளி துளித்தாலும் அப்படியே அது வேறிடம் செல்லும் ஒருச்சரிவு நிலம் எப்படி வளமுடைய நிலமாகும்? 'விழுந்த துளி அந்தரத்தே வேம்' என்பது போல, 'விழுந்த துளி அப்புறத்தே போம்' நிலங்களால் யாது பயன்? அத்தகைய ஓரணை நிலங்களை வெட்டிச் சமனாக்க வேண்டும் கல்லுங்கரடுமாய் கிடக்கும் மேட்டு நிலங்களை வெட்டிப் படுகை நிலங்களாக்க வேண்டும். அப்பொழுது தான் நாடு நல்ல வளமுடையதாகும்; நாட்டின் வளமுடைய விளைநிலம் மிகுதியாக உண்டாகும். இந் நற்செயலை, நாட்டுப் பொதுப்பணியை இன்னம் ஒரு சில பண்ணையக்காரர்கள் செய்து கொண்டுதான் வருகிறார்கள். ஆனால், அத்தகைய நல்லோர் நூற்றுக்கு இரண்டு மூன்றுபேர் கூட இரார். மற்ற உழவர்கள் இதுபற்றிய நினைவே இல்லாதவர் களாக இருந்து வருகின்றனர். உள்ளவர், இல்லாதவர் நல்வாழ்விற்கு வேண்டிய பொதுப்பணிகள் செய்து நாட்டை ஒப்புரவு செய்து வருவதுபோல, நல்ல நிலத்தில் விளையும் விளைவில் ஒரு பகுதியைக் கொண்டு, வளமில்லாத நிலத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக வெட்டிச் சமன் செய்து வளமுடைய நிலமாக்கி வரவேண்டும். இந்நற் பணியை எல்லா உழவர்களும் ஒருவாறு தொடர்ந்து செய்து வந்தால், சில ஆண்டுகளில் நாடு நல்ல வளமுடைய விளை நிலங்களையுடைய நாடாகிவிடும். இதற்கு ஆள்வோர் தனி முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக ஒரு திட்டந் தீட்டி வேலை செய்து வரவேண்டும். நிலத்தைச் சமனாக்கும் ஒப்புரவி (புல்டோசர்) என்னும் கருவியைக் கொண்டு, ஏழை எளியவர் நிலங்களை அரசினரே ஒப்புரவு செய்து தர வேண்டும். ஒரு நிலம் போகம் பத்துப் பொதி விளைய, அதன் பக்கத்தில் உள்ள அதே அளவுள்ள நிலம் ஒரு பொதி கூடச் சரியாக விளைவதில்லை. அத்தகைய நிலங்கள் எவ்வளவுதான் இருந்தும் நாட்டுக்கு அவற்றால் என்ன பயன்? 'மண் திணிந்த நிலனும்' என்னும் புறநானூற்றடியும் மண் வளமுள்ள நிலத்தினையே குறிக்கும். அத்தகைய வளமுள்ள நிலத்தினையே வள்ளுவர் தள்ளாவிளையுள் என்கிறார். விளையுள் - விளை நிலம். தள்ளார் விளையுள் - தப்பாது விளையும் நிலம். 'போட்டது போட்டபடி விளையும் நிலம்' என்பது நாட்டு வழக்கு. இவ்வளவு விதை விதைத்தால் இவ்வளவு விளையும் என்னும் அளவுப்படி விளையும் நிலம் என்பதாம். இதுபற்றியே நம் முன்னையோர் நில அளவினைப்படி வள்ளம் என முகத்தலளவைப் பெயர்களால் வழங்கி வந்ததும், (படி -- ஏக்கர், வள்ளம் -- 4 படி கொண்டது.) ஒரு படி விதை விதைத்தால் அந்நிலத்திற்குப் போதும் என்பதாம். 'ஒரு மிடா விதைப்பாடு' என்பதும் இப்பொருள் குறிப்பதே. நாட்டில், அத்தகைய மண்வளமுள்ள விளை நிலங்கள் இருக்க வேண்டும் என்பதையே, 'தள்ளா விளையுள் சேர்வது நாடு' என்றார் வள்ளுவர். 3. நீர் வளம் இனி, நல்ல மண்வளமுடைய தப்பாது விளையும் விளை நிலங்கள் அமையப் பெறினும், அந்நில வளத்துக்கேற்ற நீர்வளம் அமையவேண்டும். ஒரு நாட்டில் எங்குப் பார்த்தாலும் ஏரி, குளம், குட்டை, கிணறு, பள்ளம், ஓடை, வாய்க்கால், சிற்றாறு, பேராறு என நீர்வளம் பொருந்தியிருக்க வேண்டும். விதை விதைத்து விட்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக் கூடாது. மழை நீர் ஒரு துளிக்கூட வீணாகாமல் விளை நிலத்திற்கே பயன்படும்படி செய்யவேண்டும். குடபுலவியனார் என்னும் புறநானூற்றுப் புலவர், நெடுஞ்செழியன் என்னும் பாண்டியனைப் பார்த்துக் கூறுவதைப் பாருங்கள். "செழியா. நீ இவ்வுலகில் உன் பெயர் விளங்க விரும்பினும், நின் பகைவரை வென்று வெற்றிச் சிறப்புடன் வாழவிரும்பினும், இவ்வுலகில் பொன்றாப்புகழை நிலை நாட்ட விரும்பினும், அவ்விருப்பம் கைகூடுதற்குரிய வழியினைக் கேட்பாயாக. உணவில்லாமல் மக்கள் உயிர் வாழ முடியாது. உணவு நிலத்தி லிருந்து கிடைக்கிறது. நிலம் நீர்வளமுள்ள போதே நன்கு விளையும். ஆகையால், மாற! விதைத்துவிட்டு வானை நோக்கும் புன்செய் நிலம் எவ்வளவு இருந்தாலும், அதனாற் பயனில்லை. ஆகையால், நிலந்தாழ்ந்த இடத்து நீர்நிலை பெருகும்படி செய். அதுதான் நீ விரும்பும் அம் மூன்றினையும் தரும்" (புறம் - 18) என்கின்றார். இது எத்துணைப் பொருள் பொதிந்த பொன்மொழி! நாட்டின் எந்தப் பக்கம் பார்த்தாலும் தண்ணென இருக்க வேண்டும். வள்ளுவர் இதனை, "இரு புனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் சேர்வது நாடு" (737) என்கிறார். புனல் - நீர். இருபுனல் - மழை நீரும் கிணற்று நீரும். வருபுனல் - மலையி லிருந்து வருகின்ற நீர் - ஆற்று நீர். நாட்டில் ஓங்கியுயர்ந்த பெரிய மலைகள் பல இருந்தால்தான் அம்மலைகளிலிருந்து ஆறுகள் தோன்றி வரும். வாய்ந்த மலை - ஆற்று வளம் தரும் மலை. மலை மிக உயர்ந்து மரங்களடர்ந்து இருப்பதனால் அங்கு மழை மிகுதியாகப் பெய்யும். மலை மாரிக்காலத்து உண்ட மழை நீரைத் தன்னிடத்து வைத்திருந்து கோடைக் காலத்து ஆற்று வழியாக நமக்குத் தருகிறது. தமிழ் நாட்டின் மேற்கிலும் வடக்கிலும் மேற்குத் தொடர்ச்சி மலையும் வடக்குத் தொடர்ச்சி மலையும் (கிழக்குத் தொடர்ச்சி) வானளாவ ஓங்கியுயர்ந்து, பல கல்தொலை நீண்டுள்ளன. காவிரி, பவானி, நொய்யல், அமராவதி, வையை, தாமிரபரணி முதலிய ஆறுகளெல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலையிலும் அதன் கிளை மலைகளிலும் தோன்றித் தமிழ்நாட்டை வளஞ் செய்கின்றன. சோழ மன்னர்கள் காவிரிக்குக் கரை கட்டியும் அணை கட்டியும் கால்வாய்கள் வெட்டியும் சோழ நாட்டைச் சோறுடைய நாடாக்கினர். சேர நாடு மழை வளமுடையது. கொங்கு நாடு சிறந்த கிணற்று வளமுடையது. கொங்கு நாடு முன்பு வற்றாத நீரோடைகளால் வள மலிந்திருந்தது. அவை யெல்லாம் பிற்காலத்தே அழிக்கப்பட்டன. தமிழ்நாட்டுக்கு இன்று இன்னும் நீர் வளம் தேவையாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் எண்ணிறந்த அருவிகள் தோன்றி வீணாகச் சென்று மேல் கடலில் கலக்கின்றன. அவற்றை யெல்லாம் கிழக்கே திருப்பினால் தமிழ்நாடு சிறந்த நீர்வளமுடைய நாடாகும். காவிரியைப் போல் வற்றா ஆறுகள் பல பாயும்படி செய்யலாம். மற்றொன்று, மேற்குப் பருவமழை பாலக்காட்டுக் கணவாயை அடுத்துள்ள தமிழ்நாட்டுப் பகுதியில் நன்கு பெய்கிறது. அக்கண வாயின் தெற்கிலும் வடக்கிலும் அப்பருவ மழை வரமுடியாமல் மேற்குத் தொடர்ச்சிமலை தடுத்து விடுகிறது. ஆகையால், பாலக்காட்டுக் கணவாயில் இரு பக்கமுள்ள மலையை வேண்டிய தூரம் வெட்டித் தாழச் செய்தால் மேற்குப் பருவமழை தமிழ்நாடு முழுவதும் நன்கு பெய்யும். என்னென்னவோ செயற்கருஞ் செயல்கள் செய்யும் இயந்திரங்கள் உள்ள இக்காலத்தே இதைச் செய்வது அரிய தொன்றன்று. ஆள்வோர் இப்பெருந் தொண்டினை மேற் கொள்ளுதல் வேண்டும். இதோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே ஒரு சோழன் செய்த செயற்கருஞ்செயலைப் பாருங்கள். காவிரியாறு முன்பு மைசூர் நாட்டின் வழியாய் நேர் கிழக்காகச் சென்றதாம். தென்புறம் பெரிய பாலை மலைத் தொடர் இருப்பதால் அது அவ்வாறு கிழக்கே ஓடிற்று. ஒரு சோழ மன்னன் தென்புறம் உள்ள மலையை வெட்டிக் காவிரியைத் தெற்கே திருப்பிவிட்டுச் சோழ நாட்டிற் பாயும் படி செய்தான். அவன் மலையை வெட்டித் தெற்கே திருப்பி விட்ட இடமே சிவசமுத்திர நீர்வீழ்ச்சி என்பது. இச்செயற் கருஞ்செயலினை, மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட சோழன் வரராச ராசன்கை வாளென்ன வந்தே! (- தக்கயாகப் பரணி) என்று பாராட்டுகிறார் ஒட்டக்கூத்தர். கொன்று - வெட்டி. பொன்னி - காவிரி. உணவுத் தட்டுதலின்றி மக்கள் உண்டு வாழ்வதற்கு வேண்டிய அளவு நிலம் விளைய வேண்டும். அவ்வாறு விளைவதற்கேற்ற வாறு நிலவளமும் நீர்வளமும் அமைய வேண்டும். அமையும்படி செய்ய வேண்டும். இதனையே வள்ளுவர், 'தள்ளா விளையுள் சேர்வது நாடு' என்றார். பழந்தமிழ் மக்கள் இக்குறிப்புப்படியே செய்து வந்தனர். 'இப்பெருந் தொண்டைச் செய்வதே நாடாள் வோரின் முதல் வேலையாகும். இதற்குப் பிறகுதான் மற்ற அரசியல் வேலைகளைக் கவனிக்க வேண்டும்' என ஆள்வோர்க்கும் அறிவுறுத்துதலாகும் 'தள்ளா விளையுள்' என்னும் குறிப்பு. 4. பசியும் பிணியும் இனி, நாடு இருவகை வளமும் உடையதாயினும் அதன் பயன் கொண்டு வாழ வேண்டும். விளைநிலங்களில் மிகுதியாக விளைவிக்க வேண்டும். 'யானை கட்டுந்தூறு வானமட்டும் போர் விழும்' என்பது நாட்டுமொழி. 'ஒரு பிடி துஞ்சும் இடம் எழுகளிறு புரக்கும் நாடு' என்பது சங்கச் சான்றோர் தகவுரை. நிலம் என்னும் நல்லாள் நகும்படி, உழவர்கள் 'இலம்' என்று சோம்பி இருத்தல் கூடாது. உழவர்கள் மெய்ம்முயற்சியுடன் உழைத்து மிகுதியாக விளைவிக்க வேண்டும். உணவுப் பற்றாக்குறையினால் மக்கள் பசியால் வருந்தக் கூடாது. அத்தகைய நாடு நன்னாடாகாது. இதனையே வள்ளுவர், 'உறுபசி சேராது இயல்வது நாடு' என்றார். உறுபசி - மிக்க பசி. அதாவது நாட்டில் பலர் பசியால் வருந்துதல். நாட்டில் பசியென்னும் பாவி தலைகாட்டக் கூடாது. 'தனியொரு வனுக் குண வில்லையெனில் சகத்தினை யழித்திடுவோம்' (பாரதி) என்றதும் இக்கருத்துப் பற்றியே யாகும். உழவர்களுக்கு உதவி, உழவுத்தொழிலில் ஊக்கமுண்டாக்கி, உழவனைப்பெருக்கி, மிகுதியாக விளைவித்து, நாட்டில் உறுபசி அணுகாது பார்த்துக் கொள்வது ஆள்வோரின் கடமையாகும் என்பதே, 'உறுபசி சேராது இயல்வது நாடு' என்றதன் கருத்து. மக்கள் பசியின்றி வாழ்ந்தால் மட்டும் போதாது; 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்றபடி, நாட்டு மக்கள் நோயின்றி வாழவேண்டும். நோய்க்கு இடங் கொடுக்கக் கூடாது. உண்ண உணவு நிரம்ப இருந்தும், உண்ண முடியாது வருந்தும் நோய்வாய்ப் பட்டோர்க்கு அவ்வுணவினாலாய பயன் என்ன? சர்க்கரை நோய் வந்தவர்கள் நல்லுணவாகிய நெல்லுணவையே உண்ண முடிவ தில்லை. நிரம்ப நெல் விளைந்தும் அன்னார்க்கு என்ன பயன்? இருமல் நோய் (க்ஷயரோகம்), மார்ச்சளி (ஆஸ்துமா) முதலிய நோயாளர்களுக்கு வாழ்க்கையில் உண்டாகும் இன்பந்தான் என்ன? அவர்கள் வாழ்வது போலத்தானே வாழ்ந்து வருகிறார்கள்? தொழுநோய் (குஷ்டம்) வந்தவரின் பிறப்பின் பயன்தான் என்னவோ? பெரியம்மை, கக்கல் கழிச்சல் (வாந்திபேதி) பெருவாரி நோய் (பிளேக்) முதலிய தொத்து நோய்களால் மக்கள் படுந் தொல்லையும் துயரமுங்கொஞ்ச நஞ்சமா? எத்தனையோ வகை வகையான காய்ச்சல்கள் வேறு இப்போது வருகின்றன. நாட்டுக்குள் எவ்வகையான ஒரு நோயும் வராதபடி ஆள்வோர் செய்ய வேண்டும். இதனையே வள்ளுவர், 'ஓவாப்பிணி சேராது இயல்வது நாடு' என்றார். 'உறுபசியும் ஓவாப் பிணியும்' இல்லாது நாட்டைப் பாதுகாப்பது ஆள்வோரின் முதற்கடமை யாகும். ஓவாப்பிணி - ஒழியாத, தீராத நோய். நாடு நல்ல விளைநிலங்களை யுடையதாக அமைந்திருக்க வேண்டும். மிக்க நீர்வளம் பொருந்தியிருக்க வேண்டும். அவ்வாறு நிலவளமும் நீர்வளமும் நன்கு அமைந்திருந்தாலும் பயனில்லை. மிகுதியாக விளைவு விளைவிக்க வேண்டும். உணவுப் பற்றாக் குறையினால் மக்களைப் பசி என்னும் பாவி வருத்தக் கூடாது. மக்கள் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும். அடேயப்பா! நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக வள்ளுவர் எடுத்துக் கொண்ட முயற்சி எத்துணை அரும்பெரு முயற்சி! என்னே வள்ளுவர் பெருமானின் நாட்டன்பு! நாட்டு மக்கள் நல்வாழ்வில் வள்ளுவர் கொண்டுள்ள அக்கறைக்கும் அன்பின் பெருக்கினுக்கும் எதனை உவமை கூறுவது வள்ளுவர் போன்ற உள்ளமுடைய நல்லோர் பலர் இன்று நம் நாட்டுக்கு மிக மிகத் தேவை யுடையராவர். 5. தக்காரும் செல்வரும் இனி, நாடு நன்கு விளைந்து, நாட்டு மக்கள் உறுபசியும் ஓவாப் பிணியுமின்றி வாழ்வது மட்டும் வாழ்வெனப்படாது. மக்கள் நல்லொழுக்கமுடையராய் நல்வாழ்வு வாழ வேண்டும். தத்தம் தொழிலைத் தீமை கலவாமல் திறம்படச் செய்ய வேண்டும். அவ்வாறு நாட்டு மக்கள் வாழ, அன்னாரை அவ்வாறு வாழ்விக்கத் தக்க தகுதியுடையார் பலர் நாட்டில் இருக்க வேண்டுமல்லவா? இதனையே, 'உறுபசியும் ஓவாப் பிணியும் சேராது, தள்ளா விளையுளும் தக்காரும் சேர்வது நாடு' என்கின்றார் வள்ளுவர். தக்கார் - பொது நலம் புரியும் தகுதியுடைய பெரியார்கள். தகுதியுடையார் - தக்கார். இத் தக்கார், தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராய், நாட்டு மக்கட்கு நல்லறிவு புகட்டி, அவர்களை நல்வாழ்வு வாழச் செய்வதே தமது வாழ்க்கைப் பயனெனக் கொண்டவர். 'இத்தக் காராலேயே உலகம் நடைபெற்று வருகிறது' என்கின்றார் புறநானூற்றுப் புலவரொருவர் (புறம் 182.) இந்நாட்டு மக்களின் விடுதலைக்காகவே வாழ்ந்து வந்த காந்தி யடிகள் போன்றாரே இத்தக்காராவர். இத்தக்கார் அந்தணர், ஐயர், சான்றோர், பெரியார், நீத்தார் எனப் பல பெயர்களால் சிறப்பித்துக் கூறப்படு கின்றனர். அந்தணர் - அருளுள்ள முடையவர். ஐயர் -- பெருமை யுடையவர். பாட்டனை ஐயன் என்பது இப்பொருள் குறிப்பதே. நீத்தார் - துறவுள்ள முடையவர். தன்னல முதலிய தீய ஒழுக்கங் களை நீத்தார் 'நீத்தார் பெருமை' என்னும் அதிகாரத்தில், இத் தக்கார் பெருமையைப்பிரித்துக் கூறுகிறார் வள்ளுவர். 'பெரியாரைத் துணைக் கோடல்', 'பெரியாரைப் பிழை யாமை' என்னும் திருக்குறள் அதிகாரங்களால் அரசர்கள் இத் தக்காரின் ஆணைப்படியே முன்பு நாடாண்டு வந்தனர் என்பது புலனாகின்றது. பேரரசர்களேயாயினும் தகாதன செய்யப் புகின் இடித்துரைத்து நல்வழிப்படுத்தும் அத்தகு சிறப்புடையவர் இத்தக்கார். பொது மக்கள் இவர்கள் போட்ட கோட்டைத் தாண்டமாட்டார்கள். இவர்களாலேயே நாட்டு மக்களின் நல்வாழ்வு இனிது. நடைபெற்று வந்தமையால், 'தக்காரும் சேர்வது நாடு' என்றார் வள்ளுவர். பழந்தமிழ்ப் புலவர்களெல்லாம் அத்தகை யோரே யாவர். அத்தகைய தக்கார் பலர் தமிழ் நாட்டில் தோன்றுவாராக. இனித் தள்ளா விளையுள் அமைந்து, மக்கள் பசி, பிணியின்றி, தக்காரின் தகவுரையால் இனிது வாழ்ந்து வரினும், அரசியலும் மற்றப் பொதுப்பணிகளும் இனிது நடைபெறச் செல்வம் வேண்டும். 'பொருளில்லார்க் கிவ்வுல கில்லை' (குறள் - 247) யல்லவா? அச் செல்வமும் கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வமாக இருக்க வேண்டும். அப்போதுதானே நாட்டுக்குத் தேவையான எல்லாம் குறைவறச் செய்ய முடியும்? இதனையே வள்ளுவர், 'தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு' என்கின்றார். ஒவ்வொரு குடும்பத்தினரும் ஏதாவதொரு தொழில் செய்து தத்தம் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். தன் மட்டுந் தானாக வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்தினரும் இவ்வாறு தனித்தனி வாழ்ந்து வந்தால் போதுமா? இவ்வாறு வாழும் நாடு இனிது வாழ்ந்து வருகிறது எனப் பொருள் படுமா? பள்ளிக்கூடம், கல்லூரி, மருத்துவச் சாலை முதலிய பொதுப் பணிகள் செய்யத் தனிப்பட்ட சில தாழ்விலாச் செல்வர்கள் வேண்டுமல்லவா? தன் மட்டுந் தானாக வாழ்ந்து வரும் பொது மக்களால் நூறாயிரம், பத்து நூறாயிரம் செலவு செய்து பெரிய பள்ளிக்கூடங்கள், மருத்துவ சாலைகள் முதலியன கட்ட முடியுமா? ஒவ்வோர் ஊரிலும் செல்வர் சிலர் இருந்தால் தானே ஊர்ப்பொதுப்பணிகள் நடை பெறும்? மாரிக் காலத்தில் உட்கொண்ட மழைநீரைக் கோடைக் காலத்தில் உதவி நாட்டை நீர்வளமுறச் செய்யும் மலைகள் இல்லாவிட்டால் வற்றாத ஆறுகள் இல்லை. ஒரு நாட்டிற்கு மலை எப்படியோ அப்படியே செல்வரும், வருவாயுள்ளபோது பணத்தைச் சேர்த்து வைத்து மற்றபோது நாட்டு மக்களுக்கு உதவுதல் செல்வர்தம் கடமையாகும். செல்வர்கள் அருளுள்ளமும் கொடைக் குணமும் நாட்டு நலத்தின் அக்கறையும் உடைய வர்களாய் இருத்தல் வேண்டும். இரக்க மற்றவராய், ஈகைக் குணமிலராய், 'நமக்கென்ன யாரோ எப்படியோ போகட்டும்' என்னும் நற்பண்பில்லாதவராய் இருத்தல் கூடாது. எல்லோரும் செல்வராக முடியாது. ஒரு சிலர்தான் செல்வராக முடியும். அவருள்ளும் மிகச் சிலர்தான் தாழ்விலாச் செல்வராக முடியும். அத்தகைய செல்வர்கள் 'நம் செல்வத்தை நாம் மட்டும் பயன்படுத்தினால் போதாது. நாம் மட்டும் பயன் படுத்த இவ்வளவு செல்வம் வேண்டியதில்லை. ஓரளவு இருந்தால் போதும். பிறர்க்குப் பயன்படுத்துவதே செல்வத்துப் பயன். 'செல்வத்துப் பயனே ஈதல்' என்பது ஆன்றோர் அறவுரை யன்றோ? பகுத்துண்டு பல்லுயிரோம் புதல் வேண்டும். நாடு வாழ் மக்களின் வாழ்வியல் இனிது நடைபெற நமது செல்வம் பயன்பட வேண்டும். பயன்படுத்த வேண்டும் என்னும் உண்மையுணர்ந்தவர்களாய் இருத்தல் வேண்டும். உடுக்கை இழந்தவன் கைபோலத் தாமாக முன் வந்து பொதுப்பணிகள் செய்தல் வேண்டும். பச்சையப்ப முதலியார், அரசர் அண்ணா மலைச் செட்டியார், டாக்டர் அழகப்பச் செட்டியார், கோவை கங்கா நாயுடு அறநிலையத்தார் முதலிய தாழ்விலாச் செல்வர்கள் போன்று தம் செல்வத்தைப் பொது மக்கட்குப் பயன்படச் செய்தல் வேண்டும். இதையே வள்ளுவர், ஒப்புரவறிதல் என்றார். ஒப்புரவறிதலாவது -- பொதுமக்கள் வாழ்க்கை முட்டின்றி நடத்தற்கேற்ற பொதுப் பணிகள் செய்ய வேண்டும் என்பதைச் செல்வர்கள் அறிதல்; அறிந்து செய்தல். அத்தகைய செல்வர்களால்தான் பொது மக்களின் வாழ்க்கைத் தேர் தங்குதடையின்றி இனிது செல்லு மாகையால், 'தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு' என்றார். மிகமிகக் குறைவாக மக்களிருந்த வள்ளுவர் காலத்தி லேயே ஒரு நாட்டுக்குத் தாழ்விலாச் செல்வர்கள் தேவைப்படும் போது, இன்று எத்துணைத் தேவை என்பதை உணராதவர் களே, 'பணக்காரர்கள் ஒழிக' எனப் பயனில் சொல் பாராட்டுவர். நாட்டு மக்கள் எல்லோரும் உண்டுடுத்து இனிது வாழும்படி செய்ய வேண்டுமே யன்றிப் பணக்காரர்கள் கூடாது என்பது நாட்டு நலமாகாது. 'நாட்டிலுள்ள ஏரி, அணைகளை யெல்லாம் உடைத்து விட வேண்டும்' என்பது போன்றதே 'பணக்காரர்கள் ஒழிக' என்பதும் ஏரி அணைகளை உடைத்துவிட்டால் நெல் விளையாது. பணக்காரர்களை ஒழித்துவிட்டால் பொதுப்பணிகள் நடைப் பெறா. மேட்டு நிலம் இருந்தால்தானே பள்ளத்திற்குத் தண்ணீர் வரும்? பள்ளத்தில் நீர் தேங்கி நின்றால் தானே விளை நிலத்திற்கு நீர் பாயும்? இவ்வுண்மையை உணர வேண்டும். நாட்டு முன் னேற்றத்தில் நாட்டு மக்கள் நல் வாழ்வில் அக்கறையுள்ள தாழ்விலாச் செல்வர்கள் நாட்டுக்கு மிகமிகத் தேவையாவர். அத்தகைய செல்வர்கள் நம் நாட்டில் பெருகுக! 6. பல்குழுவும் கொல்குறும்பும் இனி உறுபசியும் ஓவாப்பிணியுமின்றி, தக்காரும் தாழ் விலாச் செல்வரும் சேர்ந்திருக்கினும், நாட்டு மக்களை நல்வாழ்வு வாழ விடாமல் நலிவு செய்வனவும் சில உண்டு. ஊரில் செல்வாக்குள்ள ஒரு சிலர், தங்கள் தலைமையின் கீழ் ஊர்ப் பொது மக்களை வெவ்வேறாகப் பிரித்து வைத்துக் கொண்டு, ஊரைக் கெடுக்கும் ஊர்க்கட்சிகள் இல்லாதிருத்தல் வேண்டும். இக்கட்சிகள் இன்னும் பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் இருந்துதான் வருகின்றன. தேர்தல் காலத்தில் இவை வளம்பெற்று வளர்ந்து விடுகின்றன. இவை ஊரின் ஒற்றுமையைக் குலைத்துப் பகையை வளர்த்து விடுகின்றன. எத்தகைய கட்டுப்பாடுடைய ஊரும் இக்கட்சி தோன்றினால் சீரழிந்து சின்னா பின்னப்பட்டுப் போய்விடும். இக்கட்சிகளால் பெரும்பாலான ஏழைப் பொது மக்கள் ஒரு சிலரின் கைப் பாவைகளாகிப் பல வகையான தொல்லைகட்காளாகின்றனர். இக்கட்சிகளால் ஒன்றுமறியாத அப்பாவிப் பொதுமக்கள் அடிதடியும் கலகமும் கொள்ளையும் கொலையுங்கூடச் செய்து கொள்கின்றனர். இக் கட்சிகள் இல்லாமல் ஊர் மக்கள் ஒரே கட்சியாக ஒன்றுபட்டு வாழவேண்டும். ஊரில் கட்சிகளைத் தோற்றுவித்து, அவற்றால் வாழ்க்கை நடத்தும் ஒரு சில கீழ்மக்களால் ஏற்படுவது இக்கட்சி. இக்கட்சி சில வேளையில் வகுப்புக் கட்சியாக மாறிவிடுவதும் உண்டு. இதனையே வள்ளுவர், 'பல் குழுவும் இல்லது நாடு' என்கின்றார். குழு -- கட்சி. பல் குழு -- ஓருரில் பல கட்சிகள். 'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக் கெளிது' என்னும் பழமொழியின் கருத்தை யுணர்ந்து ஊரில் கட்சிகள் தோன்றவிடாமல் ஊர் மக்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும். ஊர் மக்கட்கு ஊர்ப்பற்று உண்டாக வேண்டும். எல்லாத் தமிழர்க்கும் 'நாம் தமிழினம்' என்னும் இனவுணர்ச்சி ஏற்பட வேண்டும். 'இஃதே பல்குழு இல்லது நாடு' என்ற வள்ளுவர் நோக்கமாகும். இனி இக்கட்சிகள் போலவே நாட்டில் வழிபறிப்போர், கள்வர் முதலியோர் இல்லாதிருத்தல் வேண்டும். இவர்கள் இல்லாமல் இருக்கும்படி செய்வது ஆள்வோர் கடமையாகும். இவர்களை வள்ளுவர், 'பாழ் செய்யும் உட்பகை' என்கிறார். பாழ் செய்யும் என்னும் அடைமொழியால், இவர்களால் நாட்டு மக்கள் படும் தொல்லைகட்கு வள்ளுவர் காட்டும் இரக்கம் விளங்குகிறதல்லவா? ஊர்க் கட்சி, உட்பகை இவற்றைவிடக் கொடியது, பேரரசர்க் கெதிராகச் சிற்றரசர் போர் தொடுப்பது. அதனை, 'வேந்தலைக்கும் கொல் குறும்பு' என்கின்றார் வள்ளுவர். குறும்பு -சிற்றரசர். ஆனால், இன்று பேரரசும் சிற்றரசும் இல்லை. நாட்டில் மக்களாட்சி என்னும் கட்சியாட்சி நடைபெறுகிறது. பெரும் பான்மையாகத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சிக்கு வரும். அவ்வாறு பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளும் கட்சி நாட்டுக்கு நல்லது செய்ய முன் வந்தாற் கூடச் சிறுபான்மைக் கட்சியினர், அதாவது எதிர்க் கட்சியினர் அதை எதிர்த்து நாட்டு நலத்தைக் கெடுக்கக் கூடாது. அப்பெரும் பான்மைக் கட்சி ஆட்சியில் உள்ள வரையிலும் அது செய்யும் நல்ல திட்டங்களைப் போற்ற வேண்டும். தீமை ஏதாவது செய்ய முற்பட்டால் அதை எடுத்துக் காட்டி இடித்துரைத்து அத் தீமையைச் செய்யாமல் தடுக்க வேண்டும். இஃதே மக்களாட்சியில், கட்சியாட்சியில் எதிர்க்கட்சிகளின் கடமையாகும். 'வேந்தலைக்கும் கொல் குறும்பு இல்லது நாடு' என்னும் வள்ளுவர் கூற்றை, இன்றைய ஆட்சி நிலைக்கேற்ப, 'ஆளுங்கட்சி செய்யும் நல்லதை எதிர்க்கும் எதிர்க்கட்சி இல்லது நாடு' எனக் கொள்ளுதல் வேண்டும். நாடு நிலவளமும், நீர் வளமும் பொருந்தியிருக்க வேண்டும். விளைவு மிகுதியாக விளைய வேண்டும். மக்கள் பசியும், பிணியும் இன்றி இனிது இன்புற்று வாழ வேண்டும். நாட்டில் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் மிகுதியாக இருக்க வேண்டும். பகைவர் படையெடுக்காமலும், கள்வர் முதலியோர் இல்லாமலும், வலியோர் மெலியோரை நலியாமலும் அரசன் காக்க வேண்டும். இவை நாட்டிற்கு அணியாகும் என்று நல் நாட்டின் இலக்கணங் கூறுகின்றார் வள்ளுவர். நம் நாட்டை அத்தகைய நன்னாடாக்க முயல்வோமாக, வாழ்க வள்ளுவர் கண்ட வளமார் தமிழ்நாடு!  2. இயற்கையின் எழுச்சி 1. இயற்கைக் காட்சி இயல்பாகவே நமது மனம் ஏதாவதோர் இயற்கைக் காட்சியினைக் கண்டு களிக்க விரும்புகிறது. ஓரழகிய காட்சி யினைக் கண்டால் அதனை விட்டு வர மனம் விரும்புவ தில்லை. ஏன் மனத்தின்மேல் வீண் பழி சுமத்த வேண்டும்? மனமா காண்கிறது? காட்சி கண்ணின் தொழிலல்லவா? கண்ட காட்சியினை விட்டுவரக் கண்கள் விரும்பாமையால் நெடுநேரம் கால்கடுக்கப் பார்த்துக் கொண்டே நிற்கின்றோம். பசியாவது கூடத் தெரிவதில்லை. "செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" (412) என்று வள்ளுவர் கேள்வியின் பத்தின் சிறப்பினைக் கூறுகிறார். கேள்வியின் பத்தினும் காட்சியின்பம் சிறந்ததாகும். கண்ணுக்கு உணவில்லாதபோது தான் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும். கண்காட்சி யின்பத்தில் மூழ்கிக் களித்துக் கொண்டிருக்கும் போது பசியாவது எப்படித் தெரியும்? மற்றையின்பத்தை விடக் காட்சியின்பமே சிறந்ததாகும். இதனாற்றான் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களுள், மற்றப் புலன்களைப் பற்றிப் பேசும்போது, தொட்டுப் பார், கேட்டுப் பார், மோந்து பார், தின்று பார் எனக் கட்புலனோடு சேர்த்தே பேசுகிறோம். பார்த்தல் - கண்ணின் புலன். மக்களின் இக் காட்சியின்பச் சிறப்பினை அறிந்தே, நகர் மன்றத்தாரும் பிறரும் செயற்கைப் பொருட்காட்சி நடத்தி வருகின்றனர். சின்னஞ் சிறிய சிற்றெறும்புகள் ஒன்று கூடிக் கம்பு, சோளம், அரிசி முதலியவற்றை வாயில் கவ்விக்கொண்டு வரிசை வரிசையாக ஊர்ந்து செல்லுங் காட்சியினைக் கண்டு களியாதார் யார்? தன்னைவிடப் பல மடங்கு பெரிய ஓர் அரிசியைத் தனது சிறிய வாயினால் கவ்வி யெடுத்துக் கொண்டு ஒரு சிற்றெறும்பு செல்வதைக் கண்டு, ஏன்? சிலபோது அவ்வரிசி நிலத்தில் படாது அப்படியே தூக்கிக் கொண்டு போவதைக் கண்டு, அவ் வெறும்பின் வன்மையினையும், உள்ளத் திண்மையினையும் வியந்த வண்ணம் தன்னை மறந்து அப்படியே பார்த்துக் கொண்டு இராதார் யார்? அதே எறும்புகள் பல்லாயிரக் கணக்கில் ஒன்று கூடி, 'இப்படிச் செய் அப்படிச் செய்' என்று ஏவுவாரின்றி, ஒவ்வொன்றும் தன் பொறுப்பினையுணர்ந்து கடமையுணர்ச்சி யுடன், வளைக் குள்ளிருந்து வாயினால் மண்ணைக் கவ்விக் கொண்டு வந்து மேலே போட்டுவிட்டுப் போட்டுவிட்டு விரைந்து விரைந்து செல்லுங் காட்சி காண்போர் கண்ணையும் கருத்தையும் கவ்விக் கொள்ளாமலா இருக்கும்? சோம்பலின்மை, சுறுசுறுப்பு, பொறுப் புணர்ச்சி, கூட்டுறவு, ஒற்றுமை, ஒப்புரவு செய்தல் முதலிய வற்றிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் எறும்புகள் காட்சியின் பத்தினாலும் நம்மைக் களிப்பிக்கின்றன அல்லவா? இத்தகைய இயற்கைக் காட்சிகள் உலகில் எத்தனை யெத்தனையோ! இத்தகைய இயற்கைக் காட்சிகளில் இளமையிலிருந்தே ஈடுபாடுடையோர்க்குக் கவியுள்ளம் தானாகவே அமையு மென்பது பொதுவான நம்பிக்கை. நம்பிக்கை யென்ன? உண்மையில் இயற்கைக் காட்சியே புலமையின் பிறப்பிடம். கற்பனையின் ஊற்று; கவித் திறத்தின் அடிப்படை யெனலாம். இயற்கைக் காட்சிகள் இல்லையேல் கவிக்குப் பொருளில்லை; கருத்துக்கு விருந்தில்லை. பழந்தமிழ்ப் புலவர்களெல்லாம் இயற்கைக் காட்சியில் எத்தகைய ஈடுபாடுடையவர் என்பதை அவர்களால் செய்யப் பட்ட பழந்தமிழ் நூல்களில் பரக்கக் காணலாம். புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துப் பாட்டு முதலிய சங்க நூல்களைத் திறந்தால் இயற்கைக் காட்சி இல்லாத இடமே இருத்தல் அரிதாகும். அத்தகைய இயற்கைக் காட்சிகளை நேரில் கண்டு களிக்கச் சிறந்த புலமை வேண்டும். புலவர் காணும் காட்சியைப் புலமையில்லாதார் காணமுடியாது. ஒரே ஒரு காட்சியைப் புலமையுடையார் காண்பது வேறு; புலமையில்லாதார் காண்பது வேறாகும். எனவே இயற்கைக் காட்சியை நேரில் கண்டு களிப்பதைவிட, புலவர் பெருமக்கள் கண்டு களித்துப் பாடல்களில் பெய்து வைத்திருக்கும் இலக்கியக் காட்சியே அறிந்து இன்புறுதற் கேற்ற சிறந்த காட்சியாகும். முதலில் குறிஞ்சி நிலம் எனப்படும் மலைக்குச் செல்வோம். இயற்கையிலேயே மலைக் காட்சி இன்பந் தருவ தொன்றாகும். மலையின் உயர்ச்சி முதற்காட்சியாகும். அடுத்தது மலைவாழ் பொருட்காட்சி. இதோ அக்காட்சி: தமக்கு நீருதவிய நீல வானுக்குப் பூவுங் காயுங் கனியும் உதவுவதுபோல் வானுற ஓங்கி வளர்ந்த பல் வகை மரங்கள், பெரியாரைத் துணைக் கொண்டு முன்னேற முயலும் சிறியார் போல வானுயர் மரங்களைப் பற்றியேறும் பல்வகைக் கொடிகள், தலைவர்க்கு அடங்கி நடக்கும் தொண்டர்கள் போல அம் மரங்களின் கீழ்த் தாழ்ந்து பொலியும் பல்வகைச் செடிகள், இயற்கை யெழிலைக் கண்டு களிப்போரின் அடி வருந்தாமல் இருக்கும் பொருட்டு விரித்த பச்சைப் பட்டுக் கம்பளம் போன்ற பல்வகைப் பசும்புற்கள், 'வாருங்கள், எமது இயற்கை எழிலினை வந்து பாருங்கள்' எனக் கைகாட்டி வரவேற்பது போல அசையுங் கொத்துக்களில் பூத்துப் பொலிவுடன் விளங்கும் நறுமணங் கமழும் பன்னிற மலர்கள், 'செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும்' தமிழர் தனிப்பண்பாட்டினைப் பயில்வது போல, 'உண்ணுங்கள், உண்ணுங்கள்' எனக் கிளைகளாகிய கைகளால் ஏந்தித் தாழ்த்துப் பிடித்திருக்கும் நல்லோர் உள்ளம்போல் கனிந்த இன் சுவைக்கனிகள்! தென்காலின் மென்சாமரம்! என்னே இயற்கையின் எழில் நலம்! மலையருவிகளின் முழவோசை, வான்படர் வேயின் குழலோசை, புள்ளினங்களின் இன்னிசை, பொறி வண்டுகளின் பின்னிசை, நனி விலங்குகளின் நடமாட்டம். இயற்கையரசியின் கொலு வீற்றிருக்கைச் சிறப்பே சிறப்பு! 2. யானையும் குரங்கும் இத்தகைய இயற்கை வனப்பினையுடைய மலையின் ஒருபக்கம் ஓர் அருவி ஓடுகிறது. ஓர் ஆண் யானை தன் பிடியொடு கன்றையழைத்துக் கொண்டு அங்கு வந்தது. கன்றைக் கரைமேல் நிறுத்திவிட்டு அக்களிறும் பிடியும் அருவியாடின. தன் தாயும் தந்தையும் நீராடுவதைக் கண்டு களித்துக்கொண்டு கரைமேல் நின்றது அக் கரிக்கன்று. தாயும் தந்தையும் குளித்துக் கொண்டு வந்து தம் அரும்பெறல் சேயை எடுத்துக் கொண்டு போய்த் தேய்த்துத் தேய்த்துக் குளிப்பாட்டின. அக் குழக்கன்று குளித்துக் களித்தது. அவ்வருவிக் கரையில் ஒரு யாமரம் வானுற ஓங்கி வளம் பெற வளர்ந்திருந்தது. யாவின் இலை யானைக்கு விருப்பமான உணவு. அக்களிறு யாக்கொத்துக்களை ஒடித்துப் பிடிக்குக் கொடுத்தது. பிடி தன் பிள்ளைக்கு ஊட்டியது. என்னே தாயன்பு! பின்னர் அக்களிறும் பிடியும் தம் காதற் குழவியை முன்னும் பின்னும் பிடித்துத் தூக்கித் தாலாட்டின. பின் அம் மூன்றும் அங்கு நின்றும் சென்றன. செல்லும் வழியில் ஒரு பாறை குறுக்கிட்டது. அப்பாறை கொஞ்சம் சாய்ந்த செங்குத்தாக இருந்தது. அப்பாறைமேல் ஏறித்தான் அப்புறம் செல்ல வேண்டும். அக்களிறு அப்பாறைமேல் ஏறிவிட்டது. ஆனால் பிடியோ ஏறியேறிப் பார்த்தது. எவ்வள வோ முயன்றும் அதனால் ஏற முடியவில்லை. தாயே ஏற முடியவில்லையென்றால் அதன் இளஞ்சேயால் எங்ஙனம் ஏறமுடியும்? அக் குழக்கன்று தாய் ஏற முடியாமல் தவிக்குங் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றது. அது கண்ட களிறு மிகவும் வருந்திற்று. ஆனால், அது வருந்திக்கொண்டே சும்மா இருக்கவில்லை. அது காலை உதைத்துக் கொடுத்து நின்று தன் கையை நீட்டிப் பிடியின் கையைப் பிடித்து மேலே தூக்கிற்று. பிடி மெதுவாகப் பாறையின் மேலே ஏறிற்று. ஆனால் அக்கரிக்கன்று தந்தை இழுக்கத் தாய் மேலே ஏறுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கவில்லை. தாயின் வாலைப் பிடித்துக்கொண்டு அக்கன்றும் மேலே ஏறிற்று. இது கண்டு களிக்கக் கூடிய ஒரு கண்கொள்ளாக் காட்சியல்லவா? இதை ஓர் ஓவியன் கண்டால் சும்மாவா இருப்பான்? இதோ இன்னொரு வியத்தகு காட்சி: சில மரந்தாவும் மந்திகள் மலைச்சாரலின் ஒரு பக்கம் மரத்துக்கு மரம் தாவிச் சென்றன. வழியில் ஓர் அருவி குறுக்கிட்டது. அவ் வருவியைத் தாண்டி அக்கரைக்குச் செல்ல அவை முயன்றன. ஆனால், அருவி அகன்றிருந்தமையால் அம்முயற்சி முற்றுப் பெறவில்லை. ஆனால், அக் குரங்குகள் சும்மா வந்த வழியே திரும்பிப் போகவில்லை. அருவியைக் கடக்க ஒரு தந்திரம் செய்தன. என்ன அது? அக்குரங்குகள், அருவியின் இரு கரையிலும் நேருக்கு நேராக உயர்ந்த மரங்கள் உள்ள இடத்திற்குச் சென்றன. ஒன்று அம்மரத்தின்மேல் ஏறி, அருவிப் பக்கஞ் சாய்ந்திருந்த ஒரு கிளைக்குச் சென்று அதன் மேல் குப்புறப்படுத்துக் கொண்டது. மற்றொன்று அருகில் சென்றது. சென்றதன் வாலை அது கெட்டி யாகப் பிடித்துக்கொண்டது. இவ்வாறே எல்லாக் குரங்குகளும் ஒன்றையொன்று பிடித்துக்கொண்ட பிறகு, கடைசியில் இருந்த குரங்கு கிளையை விட்டுத் தலை கீழாய்த் தொங்கிற்று. அவ்வாறே எல்லாக் குரங்குகளும் மெதுவாகக் கிளையை விட்டு விட்டுச் சங்கிலி போலத் தொங்கித் தூரியாடின. அப்படி ஆடும்போது கடைசியில் உள்ள குரங்கு அருவியின் அக்கரையில் உள்ள மரத்தின் கிளையை எட்டிப் பிடித்துக் கொண்டது. பின் அது மெதுவாக மேலே சென்று கிளையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. அழகான குரங்குப்பாலம் கட்டப்பட்டு விட்டது. பின்னர் இக்கரையிலுள்ள மரக்கிளையில் இருந்த குரங்கு கிளையை விட்டு விட்டது. குரங்குச் சங்கிலி அக்கரையில் உள்ள மரக்கிளையில் தொங்கிற்று. பின் ஒவ்வொன்றாக மரக்கிளை களைப் பிடித்துக் கொண்டன. பார்த்தீர்களா அருவி தாண்டிய குரங்குகளின் தந்திரத்தை! இது எவ்வளவு வியத்தகு செயற்கருஞ் செயல்! கட்கினிய காட்சி! கண்ணும் கருத்தும் ஒருங்கு களிக்குங் காட்சியன்றோ இக்காட்சி! இனி வேறு நிலத்திற்குச் செல்வோம். ஒரு கடற்கரை. அதை அடுத்து வயல். கடற்கரை - நெய்தல் நிலம் எனப்படும். வயல் - மருத நிலம் எனப்படும். இங்கு நெய்தலும் மருதமும் ஒன்றை யொன்று வேறு பிரித்தறிய முடியாதபடி அமைந்திருந்தன. மருதமும் நெய்தலும் மயங்கிக் கிடந்தன எனலாம். அவ்விரு நிலமும், 'நீரும் நிழலும் நிலம் பொதியும் நெற்கட்டும்' என்றபடி வளம் பொருந்தியிருந்தன. வயலில் நெல்லும் கரும்பும் செழித்து வளர்ந்திருந்தன. வயலோரத்தில் தென்னை, கமுகு, பலா முதலிய மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. தெங்கிலும் கமுகிலும் காய்கள் குலைகுலையாகத் தொங்கின. பலாவில் பழங்கள் பழுத்து வெடித்துச் சுளைகளில் தேனொழுகிற்று. அம்மரங்களில் குரங்குகள் அங்குமிங்கும் தாவித்தாவி விளையாடிக் கொண் டிருந்தன. இரு குரங்கு பலாச்சுளைகளை எடுத்தெடுத்துத் தின்றது. அது கண்ட வயலை உழுது கொண்டிருந்த உழவன், வயலில் கிடந்த சங்கை எடுத்து அக்குரங்கை எறிந்தான்?. குரங்குக்கு என்ன கையா இல்லை? அது பலாமரத்திலிருந்து தென்னை மரத்திற்குத் தாவினது. அது இளநீர்க் காயைப் பறித்துத் தன் சங்கிட்டெறிந்த உழவனைப் பார்த்து எறிந்தது. உழவன் அக்குரங்கின் செயலைக் கண்டு வியந்த வண்ணம் ஏரோட்டினான். 3. கானற்காட்சி கடற்கரைக்குச் செல்வோம். கடற்கரைக்குக் கானல் என்ற பெயரும் உண்டு. அக்கானலில் புன்னை மரங்கள் பூத்துப் பொலிந்திருந்தன. தாழை மரங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து 'எங்களைப் போல நீங்களும் இணை பிரியாமல் ஒன்று பட்டு வாழுங்கள்' என்று அங்குச் செல்லும் மக்கட்கு அறிவுறுத்துவது போலக் காட்சியளித்தன. அங்கே நெய்தல் நில மகளிர் சிலர் உலர்ந்த மீனை வெயிலில் காயவைத்து விட்டுத் தாழை விழுதினால் கட்டப் பட்ட ஊசலில் அமர்ந்து கொஞ்சநேரம் இன்பத் தமிழ்பாடி யாடினர். பின்னர் அத்தாழை நிழலில் இருந்து கடல் வளம் பாடிக்கொண்டு, அம்மானையாடினர். அதன்பின் கழங்காடிக் கொண்டு, காய வைத்துள்ள மீனைப் புள்ளினம் கவராமல் காவல் காத்து வந்தனர். ஓர் எருமை வயலில் மேய்ந்து விட்டு வந்து அக்கடற் கரையிலிருந்த ஒரு புன்னை மரத்து நிழலில் கொஞ்ச நேரம் படுத்திருந்தது. பின் எழுந்து வயலுக்கு மேயச் சென்றது அவ் வெருமையின் மேல் புன்னையின் நறுந்தாது விழுந்து இரும்பு போலக் கருநிறமுள்ள அவ்வெருமை பொன்போல மஞ்சள் நிறமாகத் தோன்றியது. கடற்காக்கை யொன்று வந்து அவ்வெரு மையின் மேல் உட்கார்ந்து தன் கூறிய அலகினால் சிறகைக் கோதிக் கொண்டிருந்தது. அப்போது நாரையின் ஒரு வகையான வண்டானம் என்னும் பறவை யொன்று வந்து காய்ந்து கொண்டிருந்த மீனைத் தின்றது. கழலாடிக் கொண்டிருந்த ஒருத்தி தன் காதில் அணிந்திருந்த ஒரு குழையைக் கழற்றி அப்பறவையின் மீது எறிந்தாள். குறி தவறிவிட்டது. அவ்வண்டானம் பறந்து சென்றது. அக்குழை எருமையின்மீது உட்கார்ந்து இறகுலர்த்திக் கொண்டிருந்த அக்காக்கையின்மீது பட்டது. காக்கை 'கா - கா' என்று கத்திக் கொண்டு பறக்கமாட்டாமல் பறந்து சென்றது. மருத நிலத்திலுள்ள தாரா என்னும் பறவையொன்று அக்கடற்கரைக்கு வந்தது. அங்கு ஒரு தாழம்பூ விரிந்தும் விரியாதும் நீண்டு எழிலுடன் விளங்கிற்று. அம்மலரின் நிழல் தரையின்மேல் அழகுடன் தோன்றிற்று. அதுகண்ட அத்தாரா, அந்நிழலைத் தன் பெட்டை என்று எண்ணி அதன் அருகில் சென்று, அன்போடு தன் அழகிய இறக்கைகளால் அந்நிழலைத் தழுவ முயன்றது. தாராவின் அறியாமையைக் கண்டு பக்கத்து வயலில் இருந்த ஆம்பல் மலர் வாய் விட்டுச் சிரித்தது. சிரித்த அவ்வாம்பல் மலரின் வாய் நிறைய அதன் அருகில் இருந்த கோங்கமரம் தன் மலரில் உள்ள பூந்தாதைக் கொட்டினது. அது கண்ட அக்கழங்காடு மகளிர் தாங்களும் தங்கள் ஆம்பல் போன்ற வாயைத் திறந்து சிரித்தனர். இதோ கடைசியாக ஒரு வியத்தகு காட்சி. வயலிலுள்ள அழகிய மெல்லிய வெண்மையான சிறகையுடைய ஒரு பெண் அன்னம் அக்கடற்கானலுக்கு வந்தது: அங்கு நறுமணங் கமழும் ஒரு தாழம்பூவைக் கண்டது; கண்டதும் அதற்குத் தன் குஞ்சின் நினைவு வந்தது; உடனே ஒரு பூவின் மடலை எடுத்தது; அதைத் தனது அழகிய குஞ்சு எனக் கொண்டு மடியின் மேல் வைத்துக் கொண்டு கொஞ்சியது; பின்பு அங்குக் கிடந்த ஒரு வலம்புரிச் சங்கை எடுத்துக் குவளை மலரில் நிரம்பியிருந்த தேனை மொண்டு, அதை அக்குஞ்சுக்குப் பாலாக வார்த்தது; பின்னர்ச் செழுமையாக மலர்ந்திருந்த நீண்ட தாமரைப் பூவின் இதழை விரித்து, அதன் மேல் தாழம்பூ மடலாகிய அக்குஞ்சைப் படுக்கவைத்துத் தாலாட்டித் தூங்க வைத்தது. என்னே தாயன்பு! அக்கழங்காடு மகளிர் ஆட்டத்தை நிறுத்திவிட்டு இக்காட்சியைக் கண்டு களித்த வண்ணம் இருந்தனர். தமிழிலக்கியச் சுவை, இலக்கிய இன்பம் என்பதெல்லாம் வீண்பேச்சன்று. இத்தகைய இயற்கை யின்பத்தை நுகர்ந்தவர் கூறும் உண்மையுரையேயாகும். ஓய்வு நேரங்களை வீணாக் காமல் பழந்தமிழ் இலக்கியங்களைக் கண்டு இன்புறுங்கள். இத்தகைய இன்பம் உலகில் வேறெதுவும் இல்லை.  3. தொல்காப்பியர் கால ஆட்சி முறை 1. அரசியல் இன்று உலக அரசியற் கண்களெல்லாம் ஆட்சித் தலைவர்கள் இருவர் ஒன்று கூடும் கூட்டத்தைப் பற்றியே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றன; அரசியற் காதுகளெல்லாம் அவர்கள் ஒன்று கூடி என்ன பேசுகிறார்கள் என்பதையே உற்றுக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. உலக மக்களெல்லாம் இன்னு மோர் உலகப் பெரும் போர் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்று எண்ணிய வண்ணம் இருந்து வருகின்றனர். இன்று உலகிடை இதுபற்றிப் பேசாத நாவொன்றுமே இல்லை எனலாம். 'அமெரிக்க நாட்டுத் தலைவரும் இரசிய நாட்டுத் தலைவரும் ஒன்று கூடிப் பேசப் போகிறார்களாம். இரசிய நாட்டுத் தலைவர் அமெரிக்காவுக்குப் போகப் போகிறாராம்.' 'அப்படியா!' 'ஆமாம்; இரசிய நாட்டுத் தலைவர் அமெரிக்கா போய்ச் சேர்ந்துவிட்டனராம். அமெரிக்கா நாட்டுத் தலைவர் அவரை அன்போடு வரவேற்றனராம்; அளவளாவினராம்; இருவரும் மனம்விட்டுப் பேசிக் கொண்டார்களாம்.' 'என்ன பேசினார்களோ? என்ன முடிவு செய்யப் போ கிறார்களோ? நல்ல முடிவு செய்ய வேண்டும். எப்படியாவது மூன்றாவது உலகப் பெரும் போர் உண்டாகாமல் இருக்க வேண்டும். அது அவர்கள் இருவரின் முடிவைப் பொறுத்தது தானே?' 'ஆமாம்; அவ்விருவரும் ஒன்றுபட்டால் உலகம் ஒன்று பட்ட தாகத் தானே பொருள்! நல்ல முடிவே செய்வார்கள்!' இதுதான் இன்று உலக மக்களின் பேச்செல்லாம்; எண்ண மெல்லாம். முன்னெல்லாம் மண்ணாசை காரணமாக, வலிமை காரணமாக, கொடுமை காரணமாக இரு நாட்டிடையே போருண்டாகும். இரு நாட்டரசரும் மறவரும் வெற்றியை விரும்பி ஒருவரை யொருவர் கொன்று குவிப்பர். அப்போர் இரு நாட்டோடு முடிந்துவிடும். வென்றவர் விளக்கமுறுவர். தோற்றவர் கலக்கமுறுவர்; அவ்வளவே அப்போரின் பயன். ஆனால், இன்று உலகிடை நடக்கப் பார்ப்பது, நடக்காம லிருக்க வேண்டும் என உலக மக்கள் விரும்புவது. அதற்காக நாட்டாட்சித் தலைவர்கள் ஒன்று கூடிப் பேசுவது, அத்தகைய போர்பற்றியன்று. இது, பொதுவுடைமை என்னும் அரசியற் கொள்கைக்கும், தனியுடைமை என்னும் அரசியற் கொள்கைக்கும் நேரும் போரேயாகும். இன்று உலக நாடுகளெல்லாம் இவ்விரு அரசியற் கொள்கைகளையும் சார்ந்து நின்றே போர் தொடுக்க முயலுகின்றன. எனவே, இவ்விரு அரசியற் கொள்கைகளும் ஒன்றுபட்டாலன்றி, ஒன்றையொன்று விழுங்கினாலன்றி இன்றைய நிலை மாறாது. ஒரு காலத்தே வேலும் வாளும் வில்லுங் கொண்டு பொருது வந்தனர். அடுத்து வெடி கொண்டு சுட்டுக் கொண்டனர். இன்றோ அணுகுண்டுக் காலம். யானை, குதிரை, தேர், தானை என்பன நாற்பெரும் படை என்ற நிலை மாறி, தரைப்படை, கப்பற் படை, வானூர்திப் படை என்பன முப்பெரும் படை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு போர்க் கருவிகளும் போர்ப் படைகளும் மாறுதல் போலவே போர் முறையும் மாறுதலடைந்து கொண்டே தான் வருகிறது. இப்போர்முறை போலவே தான் அரசியல் முறையும் மாறிக் கொண்டே வருகிறது. அரசியல் வேறு பாட்டால் தான் பெரும்பாலும் போருண்டாகிறது. புதிய புதிய அரசியற் கொள்கைகள் தோன்றிய காலம் இன்று நேற்றல்ல. ஒரே அரசியல் முறை என்றும் இருந்து வந்ததில்லை. காரல் மார்க்ஃச் போன்ற அரசியல் அறிஞர் களாலேயே புதிய அரசியல் முறைகள் கண்டு பிடிக்கப்பட வில்லை. பழைய முறைகளையே கிளறி எடுத்துப் புது மெருகிட்டு நாட்டு மக்களுக்குக் காட்டினார் மார்க்ஃச் போன்றார். இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே உலக அரசியல் வரலாற்றுப் பேராசிரியர் எனப் போற்றப்படும் கிரேக்க நாட்டுப் பெரியாரான சாக்கரட்டீஃச் என்பார், பலவகைப் பட்ட அரசியல் முறைகளைப் பற்றியும் ஆராய்ச்சி நடத்தியுள்ளார். அதையே தம் வாழ்வின் பயனாகக் கொண்டு வாழ்ந்து வந்த பெரியார் ஆவர் அவர். அதற்காகவே அவர் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டார். அவர் கிரேக்க நாட்டோடு விட்டுச் சென்ற அவ்வரசியல் முறைகளை - சாக்கரட்டீஃசின் அரசியல் கொள்கைகளை - பிளேட்டோ, அரிச்டாட்டில் முதலிய அவர் மாணவர்கள் உலகறியச் செய்தனர்; நூல் வடிவாகச் செய்து உலக முழுவதும் பரவும்படி செய்தனர். உலகில் என்றும் ஒரே வகையான ஆட்சிமுறை நிலையாக இருந்ததில்லை. அவ்வாறு இருப்பதும் ஏற்றதன்று. அவ்வாறு ஒரே வகையான ஆட்சி முறை ஒரே நிலையாக இருக்கவும் இருக்காது. காலத்துக் கேற்றவாறு மக்கள் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், அறிவு வளர்ச்சி முதலியன மாறியமைய வேண்டியதே. அப்போது தான் மக்கள் வாழ்வியல் வளம் பெறும். மக்கட் கூட்டம் நலமிக்க நல்வழியில் இனிது செல்லும். 2. ஆட்சி வேற்றுமை இன்னின்னார் படிக்கலாம், இன்னின்னார் படிக்கக் கூடாது, இன்னின்னார் பொருளீட்டலாம், இன்னின்னார் பொருளீட்டக் கூடாது, இன்னின்னார் ஆளப்பிறந்தவர், இன்னின்னார் ஆளப்படப் பிறந்தவர் என்னும் மனுமறை ஒருகாலத்தே நடைமுறையில் இருந்து வந்தது. 'யூதர்கள் பொருளீட்டக் கூடாது; வருவாயுள்ள எந்தத் தொழிலும் செய்யக் கூடாது' என்று, செர்மனியின் தனியாட்சித் தலைவனான இட்லர் இட்ட கட்டளையை - ஏற்படுத்திய சட்டத்தை - செர்மனி மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுப் போற்றவில்லையா? யார் 'அது கொடுமை' என்று கூறினர்? அது அக் காலத்தையும் நிலையையும் பொறுத்து அந்நாட்டு மக்களால் நல்லரசாகவே கொள்ளப்பட்டது. எல்லோருக்கும் வாக்குரிமை வழங்குமுன் ஒரு சிலர்தான் வாக்காளராக இருந்து வந்தனர். 1931இல் தான் தாழ்த்தப் பட்ட சிறுவர்களை எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் பிறந்தது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோவில் நுழைவு உரிமை கிடைத்தது. இவற்றிற்கு முன்னிருந்த முறை நன்முறை யாகத் தானே கருதப்பட்டு வந்தது? இன்னும் பெற்றோர் சொத்தில் சரிபங்குரிமை யின்மையைப் பெண்மணிகள் எதிர்க் கிறார்களா என்ன? இடைக்கால, பிற்காலத் தமிழ் நூல்களி லெல்லாம், 'அவ்வரசன் மனு முறை தவறாது செங்கோல் செலுத்தி வந்தான்' என அரசர்கள் புகழப்படுகிறார்கள். அது அக்கால நிலை. ஆனால், அதே அரசியல் முறை, வள்ளுவர் செய்திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி (- மனோன்மணீயம்.) என்று, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களால் கண்டிக்கப்படுகிறது. இது மனோன்மணீய ஆசிரியர் கால நிலை. அவர் காலத்தில் அம்முறை வழக்கத்தில் இன்மையால் அது அவர்க்குத் தகாத முறையாகத் தோன்றியது. அதனால், அவர் அதைக் கண்டித்தார் 'பிறப்பொக்கும்' என்ற வள்ளுவர் கொள்கையைச் சுட்டிக்காட்டி, 'இது கொள்ளத் தக்கது அது தள்ளத் தக்கது' என்கின்றார். ஒரு காலத்தே அரசன் கடவுளாகவே கருதப்பட்டு வந்தான். "திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே" என்றார் ஒரு தமிழ்ப் பெரியார். அரசன் ஆள்வதற்காகவே கடவுளால் படைக்கப்பட்டவன் என்று மக்களால் நம்பப்பட்டு வந்தது. குடிமக்களுக்காக அரசு என்பதை விட்டு, அரசுக்காகக் குடிமக்கள் என அரசர்கள் எண்ணி, அதற்கேற்ப நடந்து கொண்ட காலமும் ஒன்றுண்டு. குடிமக்கள் வாழ்வைச் சிறிதும் கருதாமல், நாடு பிடிப்பதும் தாம் நல்வாழ்வு வாழ்வதுமே அரச வாழ்வு என அரசர்கள் எண்ணி வந்த காலமும் உண்டு. இவையெல்லாம் ஒரு காலத்து அரசியல் முறைகளேயாகும். இவை இன்று கொடுங் கோலாட்சி யெனக் கூறப்படுகின்றன. அக்கால மக்கள் இவற்றை நல்லாட்சி முறையென்றே எண்ணியிருந்திருப்பர். இல்லையேல், அத்தகைய ஆட்சி முறைகள் அரும்பியிருக்க முடியுமா? உலக மெங்கணும் சமயச் சார்பான ஆட்சி நடந்து வந்த காலமும் உண்டு. அரசர்கள் அடிக்கடி சமயமாறுவர். சமயத் தலைவர்களால் மாற்றப்படுவர். அப்பொழுது அவ்வரசர்கள் தாம் மாறிய சமயத்தைப் பின்பற்றும்படி குடிமக்களை வற்புறுத்துவர்; பின்பற்றாதவர்களைக் கடுமையாகத் தண்டிப்பார். இதுபற்றிய போர்கள் பல நடந்திருக்கின்றன. சமயச்சார்பான படுகொலைகள் பல நடந்திருக்கின்றன. மகேந்திர வர்மன் என்னும் பல்லவ மன்னன் சமணனாக மாறினான். கூன் பாண்டியனும் அவ்வாறே மாறிச் சைவனானான். கூன் பாண்டியனால் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டன ராம். அஃதும் அக்காலத்தே நல்ல அரசியல் என்றுதான் அக்காலக் குடிமக்களால் கருதப்பட்டு வந்தது. இன்றேல், கொலைக்கஞ்சாத சமயப்பற்று கொண்டிருப் பார்களா? அரசியல் சுவடியைத் திறந்தால் இன்னும் எத்தனையோ அரசியல் முறைகளைக் காணலாம். ஓர் அரசனைத் தலைவனாகக் கொண்டதே நாடென்பது. அரசனில்லாத நாடு நாடெனப்படாது என்ற கொள்கை போய், இன்று அரசனில்லாமலே ஆட்சி நடத்தப்பட்டு வருகிறதல்லவா? அரசனுக்கு ஆய்வுரை கூற ஏற்பட்டது அமைச்சு. அரசனில்லையேல் அமைச்சு என்னும் பெயருக்குப் பொருளில்லை. ஆனால், இன்று அரசன் இல்லாமலே அமைச்சர் இருந்து ஆட்சி புரிந்து வருகிறார் களல்லவா? இதுவும் ஒரு வகை ஆட்சி முறையேயாகும். இந்நாடு விடுதலை பெற்றதும், குடியரசு நாடானதும், ஐந்நூற்றுக்கு மேற்பட்ட இந்நாட்டுச் சிற்றரசர்கள் ஒழிக்கப்படவில்லையா? அரசனில்லா விட்டால் யானையை விடுத்து அரசனைத் தேர்ந் தெடுத்ததாகக் கதையும் இருக்க, இருந்த அரசர்களை ஒழித்ததும் ஒருவகை ஆட்சிமுறையேயாகும். இவ்வாறு காலத்துக்குக் காலம் ஆட்சி முறையும் மாறிக்கொண்டேதான் வந்திருக்கிறது. எது நல்லாட்சி என்பது அக்கால மக்களின் போக்கையும், உலக அரசியல் நிலையையும் பொறுத்ததேயாகும். மக்கள் மனமாற்றம் அடையும்வரை எத்தகைய கொடிய கொடுங் கோலாட்சியும் நல்லாட்சியாகவே கருதப்படும். ஆகையால், பழைய எத்தகைய ஆட்சி முறை யினையும் 'கெட்டது, தகாதது' என்று கூறுதல் கூடாது. அது அக்காலத்து ஆட்சி முறை, இது இக்காலத்து ஆட்சிமுறை என்று கொள்வதே முறை. இன்று உலகில் பெரும்பாலும் கட்சியாட்சி நடக்கிறது. ஆளுங்கட்சியை ஆளப்படுங் கட்சி எதிர்ப்பதும், ஒரு சார்பினர் ஆட்சிக்கு வந்ததும் முன்னைய ஆட்சியில் இருந்தவர்களைச் சிறையிடுவதும், தூக்கிக் கொல்வதும் கூட அரசியல் முறை யாகவே போற்றப்படுகிறது. அத்தகைய ஆட்சியையும் குடிமக்கள் நல்லாட்சியாகவே தான் கொள்கின்றனர். இந்நாட்டை ஒன்றரை நூற்றாண்டுக்காலம் ஆங்கிலேயர் ஆண்டு வந்தனர். ஒரு நாட்டை அந்நாட்டு அரசர் அல்லது தலைவர் ஆள்வதே முறை. அயல் நாட்டார் ஒருவர் ஒரு நாட்டை அடக்கியாள்வது ஆட்சியெனப்படாது. ஆனால் இந் நாட்டு மக்கள் விடுதலை வேட்கை பெறும் வரை ஆங்கில ஆட்சியும் நல்லாட்சியாகவேதான் கருதப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் கொஞ்ச காலம் தனியாட்சியும் கொஞ்ச காலம் இரட்டை யாட்சியும் கொஞ்ச காலம் பொறுப் பாட்சியும் நடந்து வந்தன. முடியாட்சி, குடியாட்சி, இரட்டை யாட்சி, பொறுப்பாட்சி, தனியுடைமை யாட்சி, பொதுவுடைமை யாட்சி முதலிய எல்லா ஆட்சி முறைகளையும் சாக்கரட்டீஃச் அன்றே ஆராய்ந்திருக்கிறார். அவர் எல்லா ஆட்சி முறைகளையும் ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்து முடிவில், குடிமக்கள் நல்வாழ்விற் கேற்ப ஆட்சி நடத்தப் பயிற்சி பெற்ற ஒருவனால் - குடிமக்களால் ஒப்புக் கொள்ளப் படும் ஒருவனால் - ஆளப்படும் முடியாட்சியே தகுதியான ஆட்சி என்ற முடிவுக்கு வந்துள்ளார். அவ்வாறு அரசியல் பற்றி ஆராய்ந்ததற்காகவே அவரை நஞ்சூட்டிக் கொல்லக்கூடிய அத்தகு ஆட்சி நடந்த காலம் அது. 3. குடி சூட்டு முடியாட்சி இன்று அரசியல் அறிஞர்களால் குடியாட்சி, குடி மக்களாட்சி, மக்களாட்சி, நம்மாட்சி, பொதுவுடைமை ஆட்சி என்று பேசப் படும் அத்தனை ஆட்சி முறைகளையும் உள்ளடக்கிய ஓர் ஆட்சி முறை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டில் நடந்து வந்துள்ளது என்றால் தமிழர்களின் அரசியலறிவுப் பழமையையும் இளமையையும் என்னென்றியம்புவது! மக்கள் நல்வாழ்வு முறையை நன்கு பழகிய அரசிளங் குமரனுக்கு நாட்டு மக்கள் ஒன்று கூடி முடி சூட்டி அவனைத் தங்கள் அரசனாக்கிக் கொண்ட வரலாற்றுக் குறிப்பொன்று தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. உண்மை யாகவா? ஆம், பொய் சொல்வதற்கென்ன கட்டுக் கதையா? நீங்களே பார்த்துக் கொள்ளலாம். இக்கட்டுரையை எழுத எழுத நமக்குண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை யென்றால், இதைப் படிக்கும் தமிழ் மக்கள் மகிழ்ச்சிக்கு அளவு காண்பதெங்ஙனம்? தமிழ் மக்களின் பழம் பெருமையே பெருமை என்பதுதான் அன்னார் மகிழ்ச்சியின் எல்லை. அவ்வரலாறு ஒரு பெருங்கதைபோலவே உள்ளது. அஃதாவது, மன்னர் இருவர் தம்முட் பகைகொண்டனர். இருவர்க்கும் பகை முதிர்ந்தது. பகையின் முதிர்வு என்ன? போர்தானே! இருவருக்கும் போர் உண்டானது. இருவர் படையும் ஒரு களத்தே கைகலந்தன. வாட் போர், வேற்போர், விற்போர், யானைப்போர், குதிரைப்போர், தேர்ப்போர், மற்போர் முதலிய எல்லாவகைப் போரும் ஒழுங்காக நடந்தன. போர் பல பகல் நடந்தது. இருபக்கமும் எண்ணிறந்த மறவர்கள் மடிந்தனர். இறந்த கரிகளும் பரிகளும் கணக்கிலடங்கா. போர் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. இதுநாள் வரை போர்க்களஞ் சென்றறியாத அந்நாட்டு அரசிளங்குமரன் தும்பை சூடிப் போர்க் களஞ் சென்றான்; களத்தில் குதித்தான்; தான் கற்றறிந்த படைப் பயிற்சியனைத்தையும் திரும்பிப் பயின்றான்; பகைவரை வெட்டி வீழ்த்திக் கொண்டே களத்தின் ஒரு பக்கத்தே சென்றான். பகைவர் கொடிப்படை யொன்று அவனை நோக்கி வந்தது. அது பெரிய படை. அத் தூசிப் படை அவனை வளைத்து மடக்கிக்கொள்ள முற்பட்டது. அது முனைப்புடன் முன்னேறி வந்தது. அது கண்ட அவ்வீர இளைஞன் ஏறுபோல் பாய்ந்தான்; அத்தூசிப் படையைச் சின்ன பின்னப் படுத்தினான். அப்படை புறமுதுகிட்டது. அதோடு நின்றானா அவ்வரசிளங் குமரன்? இல்லை; வாளையுருவினான்; மாற்றாரோடு வாட் போர் புரியத் தலைப் பட்டான்; வாளை யேந்திக் கொண்டு மாற்றார் படையை நோக்கி நடந்தான். நெடுநேரம் வாட்போர் நடந்தது. அவன் மிடலோடு பாய்ந்து பகைவரை வெட்டி வெட்டித் தள்ளினான். எங்கும் பிணக்காடு. வெட்டுண்ட கைகள் வாளை மீன்கள் போலக் கருதி வெள்ளத்தில் நீந்திச் சென்றன. தலைகள் நுங்குக் காய்கள் போல தரையில் உருண்டன. பகைவர் அவ்வீர இளைஞனின் வாள்வலிக் காற்றாது புறங் கொடுத்தனர். அவ்வேந்திளங் குரிசில் தும்பை மாலையைக் களைந்து வாகைமாலை சூடினான். அரசிளங் குமரனின் வெற்றியைக் கேட்ட நாட்டு மக்கள் அளவிலா மகிழ்ச்சி யடைந்தனர்; தங்கள் மன்னிளங் குரிசிலை வாயாரப் புகழ்ந்தனர்; மனமாரப் பாராட்டினர். அக்காளையின் கன்னிப் போர் வெற்றியைப் புலவர்கள் புகழ்ந்து பாடினர். ஆனால், போர்க்கொடுமை அத்துடன் ஒழிந்ததா? இல்லை; தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. களத்தில் அங்கங்கே யானைப் போர், குதிரைப் போர், வாட்போர், வேற்போர் எனத் தனித்தனிப் போர் நடக்கும். அவ்வாறு ஒரு பக்கம் நடந்த வாட்போரிற்றான் நம் மன்னிளங் குமரன் வாகை சூடினான். மற்ற இடங்களில் போர் நடந்து கொண்டு தானிருந்தது. இரு பக்கத்துப் படைத் தலைவர்களும் இறந் தொழிந்தனர். இருபெரு வேந்தர்க்கும் படைத்துணை வந்த மன்னரும் மாய்ந்தனர். முடிவில் மன்னர் இருவரும் களத்தே குதித்தனர். கொடும் போர் நடந்தது. எங்கும் பிணக்குவியல்! காக்கை, கழுகுகள் தின்று தெவிட்டி அக்களத்தைவிட்டே பறந்து சென்றுவிட்டன. நரிகள் தின்னு தின்னென்று தின்று, வயிற்றைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் தவித்தன. எஞ்சிய பிணங்களைச் செந்நீராறு இழுத்துக் கொண்டு சென்றது. ஒருநாள் ஒரு பகலாயும் வெற்றி தோல்வி உண்டாக வில்லை. வேலும் வாளும் விளையாடின. வளைத்த வில் நிமிர வில்லை. தமிழ் வீரம் தலையெடுத்து நின்றது. முடிவில் இரு பெரு வேந்தரும் ஒருவரை யொருவர் நேருக்கு நேர் எதிர்த்தனர். கண்கொண்டு காணமுடியாத கடும்போர் நடந்தது. முடிவு, இரு பெரும் வேந்தரும் ஒருகளத்தவிந்தனர். இருவரும் ஒருவரை யொருவர் வெட்டிக்கொண்டு இருவரும் வாளுக் கிரையாயினர். இது, இருவெரு வேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகை நிலை (- தொல். புறத்திணை - 17) எனப்படும். சுற்றம் - படைத்தலைவரும், படைத்துணை வந்தோரும். இது புறத்திணை ஏழனுள் ஒன்றான தும்பைத் திணையின் ஒரு துறை. தும்பை - போர். இது நல்ல துறை! இருபெரு வேந்தரையும், படைத்துணை வந்தோரையும், படைத் தலைவரையும் ஒருவரைக்கூட வாழவிடாமல் கொன்றொழிக்கும் துறை! போர் என்றால் வெற்றி தோல்வி உண்டாகியே தீரும். அதுவே போரின் இலக்கணம். ஆனால், இப்போரிலோ வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. இது ஒரு புது முறையான போர். உலகம் என்றும் கண்டறியாத போர். வெற்றி தோல்வி இல்லாதது போரெனப்படாது. இது வெற்றியும் தோல்வியும் இல்லாத போராகையால், இல்பொருளு வமையின் பாற்படும். இது தமிழர் வீரச் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகத் திகழுந் துறையாகும். இன்பமும் துன்பமும் இடையீடின்றி வரும் பொருள் களாகும். இளவரசனின் வெற்றி கேட்டு உவந்த நாட்டு மக்கள் தம் பேரரசனின் முடிவை அறிந்து வருந்தினர். என் செய்வது! இன்பத்தின் குறை துன்பம்! வேந்தன் புறங்கொடுக்கவில்லை. வலிய வந்த பகைவனை வெட்டி வீழ்த்தி வெற்றி வீரனாக ஒரு களத் தவிந்தமையை எண்ணி ஒருவாறு மனந்தேறினர். நாடு அரசனை இழந்துவிட்டது. தலைவன் இல்லாமல் நாடு தன்னந்தனியாக இருத்தல் கூடாது. அது நாடெனப் படாது. 'நில வள முதலிய எல்லாச் சிறப்பும் பொருந்தியிருந்தாலும் அரசனில்லாத நாடு நாடாகாது' (740) என்கின்றார் வள்ளுவர். எனவே, நாட்டுப் பெருங்குடி மக்கள் ஒன்று கூடினர்.; நாட்டுக்குத் தலைவனை ஏற்படுத்துவது பற்றி ஆராய்ந்தனர். 'அரசிளங்குமரன் இளவரசனாக இருந்து சிறந்த அரசியலறிவும் ஆட்சிப் பயிற்சியும் பெற்றுள்ளான்; நாட்டு மக்கள் நல்வாழ்வில் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டுள்ளான்; முதற் போரிலேயே வெற்றி மாலை சூடிப் பெரு வீரனாக விளங்குகிறான். ஆகையால், அவனையே அரசனாக்கிக் கொள்ளலாம்' என முடிவு செய்தனர். முரசறைந்து முடிசூட்டு விழாவினை நாட்டு மக்கட்கு அறிவித்தனர். நகர் அணி செய்யப்பட்டது. குறிப்பிட்ட நாளில் முரசு முழங்கிற்று. முடிசூட்டுவிழா இனிது நடை பெற்றது, நாட்டு மக்களால் அரசனாக்கப் பெற்ற அவ்வரசிளங் குமரன், தன் தந்தை இருந்த இடத்திலிருந்து நாட்டை இனிது ஆண்டு வந்தான். இதோ வரலாற்றுக் குறிப்பு: வாள்மலைத் தெழுந்தோனை மகிழ்ந்து பறைதூங்க நாடவற் கருளிய பிள்ளை யாட்டும். (- தொல், புறத்திணை - 5.) அதாவது வாட்போரில் பகைவரை வெட்டி வீழ்த்தி வெற்றிமாலை சூடிய தங்கள் அரசிளங்குமரனின் வெற்றியைக் கண்டு நாட்டு மக்கள் மகிழ்ந்து, முரசு முழங்க, அவ்வரசிளங் குமரனுக்கு முடிசூட்டி அவனைத் தங்கள் அரசனாக்கிக் கொள்வர் என்பதாம். மலைதல் - பொருதல். பறை தூங்க - முரசு முழங்க. பிள்ளை - அரசிளங்குமரன். பிள்ளையாட்டு - இளவரசனைப் பேரர சனாக்குதல். நாடு அருளுதல் - முடி சூட்டுதல். 'நாடு அவற்கு அருளிய' என்பது இங்குக் குறிப்பிடத் தக்கது. அருளுதல் - கொடுத்தல். தந்தையின் அரசு அவன் மைந்தனுக்கு உரியதேனும், அது நாட்டு மக்களின் உரிமைச் சொத்து. அதனை அவர் கொடுக்கத்தான் அவன் பெற வேண்டும். அவன் அதற்கு உரிமை பாராட்டக் கூடாது. அவனாகவே அரசனாக்கிக் கொள்ளக் கூடாது. தானாகவே முடிசூட்டிக் கொண்டு அரசனாகும் முடியாட்சி முறை அன்று இல்லை. குடியாட்சிக் குட்பட்ட முடியாட்சி முறையே அன்று நடைமுறையில் இருந்து வந்தது. 'நாடு அவற்கு அருளிய' என்னும் தொடரே அதற்குச் சான்றாகும். இதனால், நாட்டு மக்களே அரசனுக்கு முடிசூட்டித் தம் அரசனாக்கிக் கொள்ளும் பொதுமக்களாட்சி முறை, அப்பழங் காலத்தே நம் தமிழ்நாட்டில் இருந்து வந்ததென்பது விளங்கு கிறதல்லவா? இன்று போல் எல்லாக் குடிமக்களும் வாக்குரிமை வழங்கித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குடியாட்சி முறை போலாது, குடிமக்களின் தலைவர்கள் ஒன்று கூடிப் பேசித் தலைவனைத் தேர்ந்தெடுத்து வந்தனர். அரசியல் என்பதே இன்னதென்றறியாத பெரும்பான்மையான பொதுமக்களின் நேரடித் தேர்தலைவிட, அப்பொது மக்களின் தலைவர் களாகிய அரசியல் அறிவு முதிர்ந்த பெரியோர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை சிறப்புடைய தாகுமல்லவா? தொல்காப்பியப் புறத்திணையியல் துறைகள் அனைத்தும் நிகழ்ந்தவை கூறுவனவேயாகும். நாட்டு மக்களிடை நடந்த வற்றை, நடப்பனவற்றைச் சிறப்பித்துக் கூறுவனவே அத்துறைகள். கடைச்சங்க இறுதிக் காலம் வரையிலும் சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தரும் இவ்வாறே நாட்டு மக்களால் முடிசூட்டப் பெற்றுக் குடியாட்சிக்குட்பட்ட முடியாட்சியே புரிந்து வந்தனர். சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர்களின் அரசிளங் குமரர்களில் மூத்தவனிருக்க இளையவன் அரசாண்ட வரலாறு பல உண்டு. மூத்தவன் தகுதியற்றவனாக இருந்தமையால் அவனை விடுத்து, நாட்டுமக்கள் தகுதியுடைய இளையவனைத் தேர்ந்தெடுத்து முடிசூட்டி அரசானாக்கினார் என்பது விளங்கும். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன், 'குடிபழி தூற்றுங் கோலேனாகுக' என வஞ்சினங் கூறுதல் இதனை வலியுறுத்தும். 'குடிபழி தூற்றல்' - குடி மக்கள் இவன் கொடுங்கோலனென்று பழித்துக் கூறி, அவனை, நீக்கிவிட்டுத் தகுதியுடைய வேறொருவனை அரசனாகத் தேர்ந் தெடுத்தல். சங்க நூல்களில் இதற்குச் சான்றுகள் பல உள்ளன. குடிபழி தூற்றும் கோலனு மல்லான் சிலப்- 23:34 என நெடுஞ்செழியன் குடிகளால் வெறுக்கத்தக்க வனல்லன் என்கின்றாள் மதுராபதி. மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம் பிழையுயி ரெய்தின் பேரும்பே ரச்சம் - (சிலப் 25: 100 - 1) என்ற செங்குட்டுவன் கூற்றும் இதற்குச் சான்று பகரும். இன்று உலக மக்கள் நல்லாட்சி முறை என்று விரும்புகிற ஓர் ஆட்சி முறை, இன்றைய உலக நாடுகளில் பல தோன்றியிராத அக்காலத்தே. இன்று வல்லரசுகளாகத் திகழும் நாட்டு மக்கள் அரசியல் முறை இன்னதென்றே அறியாத அக்காலத்தே - உலகில் ஒழுங்கான அரசு, அரசியல் முறை ஏற்படாத ஐயாயிர ஆண்டு களுக்கு முன்னரே - தமிழ் நாட்டில் நடந்து வந்த தென்றால், உண்மையிலேயே தமிழ் மக்கள் ஒப்புயர் வில்லாத் தனிப் பெருமை உடையவர் என்பதில் ஐயப்பாடும் உண்டோ? இனி, சங்கப் பிற்காலத்தும், கி. பி. 13-ஆம் நூற்றாண்டிலும் குடிமக்கள் முடி சூட்டி அரசனாக்கிக் கொள்ளும் இவ்வாட்சி முறை நடைமுறையில் இருந்து வந்ததென்பது, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபினோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி. என்னும் கம்பர் வாக்கால் தெரிகிறது, கம்பர் தமது காலத்து நடைமுறையிலிருந்த தமிழ்நாட்டு அரசியல் முறையினையே இவ்வாறு கூறினார். 4. ஆட்சித் திறன் இனி, ஒரு நாட்டு மக்களிடை வலியோரும் மெலி யோரும் நல்லோரும் பொல்லாரும் இருத்தல் இயல்பே. வலியோர் மெலியோரை நலிதலும், பொல்லார் நல்லார்க்குத் தீங்கிழைத்தலும் ஆகிய குற்றங்குறைகள் நிகழ்தலும் இயல்பே. இவ்வாறு நாட்டு மக்களிடைக் குற்றங் குறைகள் நிகழாமல் காக்கவே அரசு ஏற்பட்டது. இவ்வாறு குற்றங் குறைகள் ஏற்படாமல் காத்து வருவதுதான் அரசின் முதல் வேலை. அதுவே அரசின் கடமையும் பொறுப்பும். அரசு என்பதற்குக் காவல் என்பதே பொருள். அரசன் - காவலன். அரசன் அங்கங்கே அதிகாரிகளையும் அலுவலாளர்களையும் காப்பாளர்களையும் ஏற்படுத்தி அக்காவற் றொழிலை ஒழுங்காக நடத்தி வரவேண்டும். அதற்காகச் செலவு ஆகுமல்லவா? அச்செலவுக்காக அரசுக்கு அரசிறை - வரி - கொடுத்தல் குடிமக்கள் கடமையாகும். தங்கள் நாட்டுக் காவற்றொழில் சரிவர நடத்தற் பொருட்டு வரி கொடுத்தல், தங்கள் நல்வாழ்வுக்காகத் தாங்களே செலவு செய்தலேயாகு மல்லவா? அரசை ஏற்படுத்தியதும் குடிமக்கள் தாமே? தன்னை ஏற்படுத்திய குடிமக்களைக் காப்பது அரசன் கடமை. தம்மால் ஏற்படுத்தப்பட்டுத் தம்மைக் காத்துவரும் அரசனுக்கு வரி கொடுப்பது குடிமக்கள் கடமை. இன்று காவல், வரிவாங்குதல் என்ற இருவகை அரசியற் காரியங்களும், ஒழுங்காக நடைபெறுதற் பொருட்டு மாநிலம், மாவட்டம், வட்டம், பல்வட்டம் (டிவிஷன்), பகுதி (பிர்க்கா) என நாட்டைப் பல்பிரிவுகளாகப் பிரித்து, அப் பிரிவுகளுக்கு அதிகாரிகளையும் அலுவலாளர்களையும் ஏற்படுத்தியுள்ளமை போலவே, ஐயாயிரம் ஆண்டு கட்கு முன்னரே தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டு நல்லாட்சி நடந்து வந்ததென்பதை எண்ணுந் தோறும் நமக்கு வியப்பும் உவப்பும் ஒருங்கு உண்டாகின்றன வல்லவா? ஆம், வியப்பும் உவப்புங் கொள்ள வேண்டிய செய்திதான். பழங்காலத்தே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனத் தமிழகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது; இயற்கை யாகவே பிரிந்திருந்தது. காடும் காடு சார்ந்த இடமும் முல்லை எனப்படும். காடு என்பது இன்றுள்ள மலைப்பகுதி யன்று; சமநிலத்தில் இருந்த மரங்களடர்ந்த பகுதியேயாகும். காடு - மரங்களடந்த பகுதி. காடு சார்ந்த இடம் - அதனை யடுத்திருந்த புன்செய்க் காடுகள், குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும், மலைசார்ந்த இடம் - மலைச் சாரல், மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும், வயல் சார்ந்த இடம் - வயலை அடுத்துள்ள தோட்டங்கள். நெய்தல் - கடலும் கடற்கரையும். கடலிலும் உப்பு மீன் முதலிய பொருள்கள் உண்டாவதால் அது நிலம் எனப்பட்டது. இதனால் தமிழகம் நானிலம் எனப்பட்டது. இவ்வாறு காடு, மலை, வயல், கடல் எனப் பிரித்ததன் நோக்கம், அந்நிலங்களின் இயல்பு, மக்களின் பழக்க வழக்கம், தொழில், பண்பாடு, தட்ப வெப்பம் முதலியன பற்றியே யாகும். இன்றும் ஆட்சி முறைக்கேற்ப நீலமலைப் பகுதியைத் (நீலகிரி) தனி மாவட்டமாகப் பிரிந்திருப்பதும், ஒரே ஊரகத்தை (கிராமம்) நன்செய்க் காளமங்கலம், புன்செய்க் காளமங்கலம் எனப் பிரிந் திருப்பதும் இதற்குச் சான்றாகும். முல்லை முதலிய நிலங்கட்குத் தனித் தலைவர்களும் அலுவலாளர்களும் ஏற்பட்டிருந்தனர். நாட்டின் ஒரு பகுதியில் அரசியல் குழப்பம், வகுப்புக் கலகம், கொள்ளை போன்ற ஏதாவது சீர்கேடுண்டானால் அதைச் சீர்திருத்தி, மீண்டும் அத்தகைய சீர்கேடுண்டாகாமல் காப்பது ஆள்வோர் கடமையாகும். இனி, அரசியல் அலுவலாளர்களில் ஒரு சிலர் கைக்கூலி பெற்றுக் கொண்டோ, வேறு காரணத் தினாலோ முறை தவறி நடத்தலும், முறைதவறி வரிவாங்குதலும் கூடுமல்லவா? அத்தகைய குற்றங்கள் நேராமலும் ஆள்வோர் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். இதற்காகவே இன்று மாவட்டத் தலைவரும், பல்வட்டத் தலைவரும் (R. D. O), வட்டத் தலைவரும் அடிக்கடி தத்தம் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்த்து வருகின்றனர்; அலுவலாளர்கள் செய்யும் வேலையை மேற்பார்வை யிடுகின்றனர். குடிமக்கள் கூறும் குறை கேட்டு முறை செய்கின்றனர். இவ்வாறே தொல்காப்பியர் காலத்திலும் நடந்து வந்ததென்றால் தமிழ் மக்களின் அரசியல் சிறப்புக்கும் பழமைக்கும் வேறு என்ன சான்று வேண்டும்? இனிக் குடிமக்கள் குழப்பம் செய்து கொண்டால் அதை அடக்கச் செல்லும் மேலதிகாரிகளில் ஒருசிலர், ஒரு கட்சி யாரிடம் கைக் கூலி வாங்கிக் கொண்டோ, வேறு காரணத் தினாலோ மேலும் குழப்பத்தை வளர்த்தலும், ஓரவஞ்சனை யாக நடந்து கொள்ளுதலும் கூடுமன்றோ? ஒரு சிலரிடம் அதிக வரி வாங்குதலும் கூடும். எனவே, இத்தகைய குற்றங் குறைகள் ஏற்படாமல் இருத்தற் பொருட்டுப் பழந்தமிழ் அரசர்கள் அடிக்கடி நாட்டைச் சுற்றிப் பார்த்து நல்லாட்சி நிலவும்படி செய்து வந்தனர். பொறுப்புணர்ந்து, கடமையிற் றவறாது, காவலர் என்பதன் பொருளை அறிந்து நாட்டு மக்களை நன் முறையில் காத்துவந்த அன்னாரின் பெருமையே பெருமை! “மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய” (அகத். 28) என்னும் சூத்திரத்தில், தொல்காப்பியர் இவ்வரசியல் முறை யினைக் காவற் பிரிவு, பொருட் பிரிவு என இரு கூறாக்கிக் கூறுகிறார். காவற் பிரிவு - அதிகாரிகளும் அலுவலாளரும் காவலில் தவறாமல் இருக்கும்படி செய்ய அரசன் பிரிதல். பொருட்பிரிவு - அரசிறை வாங்குவதில் தப்புத்தவறு நேராமல் இருக்கும்படி செய்ய அரசன் பிரிதல். பழந்தமிழரசர்கள் ஆட்சிப் பொறுப்பில் எவ்வளவு அக்கறையுடன் இருந்திருக்கிறார்கள்! இல்லையென்றால் அத்துணை நீண்ட காலம் மூவரசர் மரபு நிலைத்திருக்க முடிந்திருக்குமா? நமது முன்னோரின் அரசியற் பெருமையையும் பழமையையும் அறிந்தின்புறுவதோடு, அத்தகைய ஆட்சிமுறை நிலவும்படி செய்தலும் நமது கடமை யாகுமன்றோ?  4. ஆரமும் ஆழ்கடலும் 1. கடலும் நிலமும் ஒருநாள் பிற்பகல். இளவேனிற் காலம். குளிர் தென்கால் தமிழ் மணங்கமழ வீசிக் கொண்டிருந்தது. வான வெளியில் அங்குமிங்கும் வெண்முகிற் கூட்டம் நிலவுலகின் இயற்கை யெழிலுருவங்களைக் காட்டிக் காட்டிக் காண்போர் கண்ணையும் கருத்தையும் ஒருங்கு கவர்ந்து கொண்டிருந்தது. வானையும் நிலத்தையும் வாழ்விடமாகப் பெற்ற வன்ன வன்னப் புள்ளினங்கள் தமிழ் மக்களிடம் பெற்ற இனிமைப் பண்பைத் திருப்பித் தந்து செய்ந்நன்றி மறவாச் செம்மைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தன. ஏன்? அவை தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழ் மொழியைக் கேட்டு வாழ்பவை அல்லவா? அப்பண்பு அவற்றிற்கு அமைவது இயற்கைதானே! நிலத்தியல்பால் நீர் திரிவது போல, வாழும் இடத்திற்கேற்றவாறு குணம் செயல் மாறுபடுவது இயல்பாகும். வண்ண வண்டினங்கள் ஏழிசைபாடிப் பழைய யாழிசையை நினைப்பூட்டின. கடற்கானல் மலரையும் மணத்தையும் தூவி மகிழ்வித்தது. தமிழ்க் கடற்கரை மணல் வெளி. தென்கடலைத் தமிழ்க் கடல் என்பது தமிழ் மரபு. அம் மணல்வெளி வெண்ணில வொளிபோல் வெளேரென விளங்கிற்று. நிலவில் உள்ள களங்கம் போல் ஒவ்வோரிடத்தில் அறல் என்னும் கருமணல் இருந்து அதற்கு அழகு செய்தது. அத்தமிழ்க்கடல், "அன்னாய், நான் அன்று தமிழுண்டது தவறென்கிறாய். இல்லை. நான் தவறுடை யேனல்லன். நீயே தவறுடையை. எங்ஙனமெனில், கண்டோர் விரும்புதற்குக் காரணமான இனிய பொருள்களை மறைத்து வைப்பதுதானே அப்பொருளுடையோர் கடமை? தமிழர் கடமையில் தவறாதவ ரல்லரோ? பிறர் விரும்பும் பொருள்களை மறைத்து வையாமல் யாவருந் தடையின்றிக் காணுமாறு வைக்கலாமா? அவ்வாறு வைத்தல் தவறன்றோ? நன்கு எண்ணிப் பார்." "இனிமையின் இருப்பிடமான தமிழை, ஒளிவு மறைவின்றி அங்காடிப் பொருள் போல வெளிப்படையாக வைத்தது நின் தவறன்றோ? நீ தவறு செய்து விட்டு என்மேல் வீண்பழி சுமத்து கின்றனை. சில தாய்மார்கள், காண்போர் கண்பட்டு விடுமென்று தமது அழகான குழந்தையை வெளியில் விடாமல் வீட்டுக் குள்ளேயே வைத்திருப்பார்கள். வெளியில் எடுத்துப்போக நேர்ந்தால் முகத்தை முன்றானையால் மூடிக் கொண்டு போவார்கள். காண் போர் கண் பட்டுவிடுமென்று பருத்திக்காடு, மிளகாய்க் காடு, நெல்லங்காடுகளுக்குக் கூடத் துணியால் கோமாளிப் பொம்மை செய்து வைக்கிறார்களல்லவா? பயிர் நிலங்களுக்குப் பொட்டுப் பானை வைப்பதைக்கூட நீ பார்த்ததில்லையா?" "உனக்குத் தமிழின் இனிமை தெரியாது போலும்! இனிமை யென்றால் என்ன, பொதுவான இனிமையா? இவ்வுலகிலுள்ள இனிமைகள் எத்தனையோ அத்தனையும் ஒன்று கூடப் பாக்கி யில்லாமல் ஒருங்கு கூடினால் எவ்வளவு இன்பமாக இருக்குமோ இனிக்குமோ அதைவிடப் பன்மடங்கு இனிமையுடைய தமிழை, ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியே சொன்னால் இன்பம்; ஒன்றோடொன்று தொடர்ந்தால் ஒரு தனியின்பம்; அச்சொல்லாலும் சொற்றொடராலும் ஆன பாடல்களை மேலாகப் பார்த்தாலே ஒருவகை யின்பம்; நுணுகிப் பார்த்தால் நனிமிகு இன்பம்; நினைக்குந் தோறும் நெஞ்சுக்கு இன்பம்; கேட்குந் தோறும் காதுகளுக்கு இன்பம். 'தொட்டாலும் கைமணக்கும் சொன்னாலும் வாய் மணக்கும்' என்றார் ஒரு புலவர். இங்ஙனம் அனைத்தும் இன்ப வடிவமான தமிழைத் தனியே விட்டு வைத்தால் யார்தான் சும்மா இருப்பர்? அவ்வாறு தனியே விட்டு வைத்தது நின் தவறு தானே?" "இன்பத் தேனொழுகக் கனிந்து நெடுநாளாகியும் அத்தமிழ்க் கனி வாடாமல் வதங்காமல் வற்றாமல் முற்றாமல் உலராமல் உதிராமல் அப்படியே, கனிந்த அன்றேபோல் இருப்பதைக் காணக்காண என் நாவில் நீர் ஊறிற்று. என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அத்தகு பொறுமையும் அடக்கமும் எனக்கிருந்தால் நானேன். இப்படி உலகப் பழியைச் சுமந்து கொண்டலைகிறேன்? இல்லை, நான் செய்ததே தவறெனில் அத்தவற்றைப் பொறுத்தருள்க" எனத் தமிழ் நில மடந்தையைத் தன் திரைக் கைகளால் தொட்டுத் தொட்டு வணங்கிற்று அத்தென் கடல். அவ்வணக்கமும் கூற்றும் உண்மை யானவை யல்ல; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதலே யாகும் என்பதைக் கரையைக் கரைக்கும் அலையின் செயலால் காட்டிற்று அக்கருங்கடல். அது போழ்து கடலினின்று கரையை நோக்கி ஒரு படகு வந்தது. அப்படகிலிருந்து சிலர் கரையில் இறங்கினர். அவர்கள் கடலிலிருந்தெடுத்துப் பைகளில் கொண்டு வந்த முத்துச் சிப்பிகளைக் கரையில் குவித்தனர்; சிப்பிகளுள் இரந்த ஒளி முத்துக்களைக் கண்டு களித்தனர். உழைப்பின் பயனைக் கண்டால் களிக்காமலா இருப்பர்? களிப்பு உண்டாதல் இயற்கைதானே? அவர்கள் களிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். அம்முத்துக் களைத் தனது உடைமையாக உடைய அக்கருங் கடல், அவ்வில கொளியெழில் முத்துக்களைக் கண்டு உள்ளும் புறமும் ஒருங்கு களித்தது. அக்களிப்பு அதற்குக் கரைபுரண்டது. களிப்பு மிகுதியால் அக் கனைகடல், "செந்தமிழ் நிலச் செல்வியே! நான் தமிழுண்டது தவறென்றே வைத்துக்கொள்; இதோ விலைமதிப்பில்லா ஒளிவெண் முத்துக்கள்; இவற்றை அதற்கீடாக எடுத்துக்கொள். நின் தமிழ் என்னிடமுள்ள எத்தனையோ தீவுகளில் உண்டு. ஆனால், உன்னிடம் இத்தகைய முத்துக்கள் இல்லையல்லவா? இனித் தமிழுண்டாய் தமிழுண்டாய் என என்மேற் குற்றங் கூறிக் கொண்டிருப்பதை விட்டு விடு. நானுண்ட அம்மென்றமிழ்க்கு இவற்றை விலையாகப் பெற்றுக் கொள்" என்றது மிக்க எடுப்பாக அவ்விமிழ் கடல். 2. நிலம்படு முத்தம் அது கேட்ட தென்றமிழ் நிலச் செல்வி, அவ்வலை கடலின் அறியாமையைக் கண்டு கலகலவெனச் சிரித்து, "புறவுலக அறிவிலாப் பெருந்திரைக் கடலே, இவ்வளவு தான் நீ அறிந்தது போலும்! உன் பெயருக்கேற்ற மடமையை யுடையையாய் இருக்கின்றனை. அது உன்னீர்மை. அத்தன்மை உனக்கு இயல்பாக அமைந்தது. நீ மட்டும் என்ன? உன்போன்றார் எத்தனையோ பேர், என் அருமைத் தமிழ் மொழியிடம் அறிவியற்கலைச் சொற்கள் இல்லை. நான் அத்தகைய குறையுடையவள் என்றெல்லாம்" எனது பெருமை யறியாது தங்கள் வாய்க்கு வந்தவாறு பேசி வருகின்றனர். அவர்களைக் குறைகூறுவதில் பயனென்ன? அவர்கள் அறிந்தது அவ்வளவு தான். 'நுண்ணறி வின்மை வறுமை அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்' என்ற நாலடியாரின் நல்லுரை அவர்கட் கென்றே எழுந்தது போலும். அழகிய அலைகடலே! "நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம், மண்மாண் புனை பாவையற்று" என வள்ளுவர் நின் அறியா மையின் பெருக்கை நோக்கித்தான் கூறினாரென எண்ணுகிறேன். "அறிவின் கரையறியா ஆழ்கடலே, நின்னிடம் சிப்பி ஒன்றில் மட்டுந்தான் முத்து உண்டு. அம்முத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு பெருமை கொள்கிறாய். அதையும் எளிதில் பிறர்க்குக் கொடாத ஈயாத் தன்மை யுடையையாய் இருக்கின்றனை. அது நின் இயற்கைக்குணம். மேலும், பிறர் பொருளைக் கொள்ளை யிடுவோர் இருவகை இயல்புடையவராய் இருக்கின்றனர். தாம் கொள்ளை கொண்ட பொருளைத் துய்த்து இன்புறுவோர் ஒருவகையினர். தாம் கொண்ட கொள்ளையைத் துய்க்காது அப்படியே வைத்துக் கொண்டு பார்த்துப் பார்த்து இன்புறுவோர் மற்றொரு வகையினர். நீ இரண்டாவது வகையைச் சேர்ந்தவனாக இருக்கின்றனை. இல்லையேல் என்னைப் பார்த்து நீ இவ்வாறு கூறியிருக்க மாட்டாய்." "நேர்மை யில்லா நீர்மைக் கடலே, நீ கொள்ளை கொண்ட என் இன்பத் தமிழ்ப் பாடல்களை ஒரு முறை மேலாகப் படித்துப் பார்த்திருப்பையானாற் கூட என் மனம் புண்படும்படி இப்படிக் கேட்டிருக்கமாட்டாய். இன்றுங் கூட உன்போன்ற ஒரு சிலர், 'தமிழ் நாட்டில் என்ன இருக்கிறது? இதில்லை அதில்லை' என்று என்னைக் குறைகூறிக் கொண்டு தானே வருகிறார்கள்? அன்னாரின் அறியாமையைப் பற்றி, 'ஆறறிவுடைய மக்களாகப் பிறந்திருந்தும் ஆய்ந்தறியும் அவ்வறிவைப் பயன்படுத்தாது இப்படி அறிவிலிகள் போலப் பேசுகிறார்களே!' என்று எண்ணியிரங்குவதைத் தவிர வேறு என்ன செய்வது! என்னிடம் உள்ள இலங்கொளி முத்துக் களைப் பற்றிப் பேசாத எந்த ஒரு தமிழ் நூலும் இல்லை. ஏதாவது ஒரு நூலை ஒரு முறை திருப்பிப் பார்த்திருந்தால் என் பெருமையை அறிந்திருப்பாய். இவ்வாறு அறிவிலி போலக் கூறியிருக்க மாட்டாய். உனக்குத்தான் அந்நீர்மை இல்லையே!" "பெருக்கத்து வேண்டும் பணிதல்" என்னும் வள்ளுவர் வாய்மொழியை அறியா வலைக்கடலே! நீ சிப்பி ஒன்றில் மட்டும் முத்தினை உடையையாய் இருக்கின்றனை. என்னிடமோ பலவகைப் பொருள்களில் அம்முத்துக்கள் இருக்கின்றன. இது உலகறிந்த உண்மை. நெடுந்தொலைவிலுள்ள வெளிநாடு களெல்லாம் அறிந்திருந்தும் அண்மையிலுள்ள நீ அறியாதது நின் அறியாமைப் பெருக்கையன்றோ காட்டுகிறது? இதோ தமிழ் நூல்களிலிருந்தே சில சான்றுகள் தருகிறேன்; கருத்துடன் கேள்!" "தேனினும் இனிய செந்தமிழ் நிலச் செல்வியே! நான் அறியாது சொல்லிய அவ்வுரையினைப் பொறுத்துக் கொள்க. நின்னிடம் முத்துக்கள் இருக்கும் பொருள்களைக் கூறுக. கண்ணுங் கருத்துமாகக் கேட்கிறேன். கேட்டுத் தெரிந்து கொள்ள என் உள்ளந்துடிக்கிறது. உணர்வு பொங்குகிறது. நான் அறியாது கூறியதைப் பொருட் படுத்தாதே. பிறர் கூறும் குறையினைப் பொறுத்துக் கொள்ளுதல் நின் இயல்பன்றோ? "அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை" என வள்ளுவர் பொறைக்கு நின்னையன்றோ எடுத்துக் காட்டி யுள்ளனர்? வள்ளுவர் வாய்மொழிப்படி வாழும் வண்டமிழ் நிலமடந்தையே, விளக்கமாகக் கூறுக" என்றது அப்பெருங்கடல். "தன் பெருமையை அறியாரிடத்துத் தானே தன்னைப் புகழ்ந்து கூறுதல் தற்புகழ்ச்சி யென்னும் குற்றம் ஆகாது" என்பது இலக்கணம். என் பெருமையை நின்னிடம் கூறித்தானே யாக வேண்டியிருக்கிறது? இதுவரை நான் தற்புகழ்ச்சி பேசியதே கிடையாது. என் செய்வது? பேசவேண்டி வந்தது உன்னால் உன் விருப்பப்படியே விளக்கமாகக் கூறுகிறேன். கேள். வெறும் புகழ்ச்சி யன்று; தமிழ்ச் சான்றோர்கள் கூறி யிருப்பதையே கூறுகிறேன்; இலக்கியச் சான்றுடன் எடுத் துரைக்கின்றேன்; அமைதியுடன் கேட்பாயாக;" என நிலமென்னும் நல்லாள் கூறலானாள். "அலை பெருங்கடலே, என்பால் உள்ள முத்துப் பிறக்கும் இடங்களைக் கேட்டால் நீ பெருவியப்புறுவாய். நீ மட்டும் என்ன? இவ்வுலகமே வியப்புறும். வியக்கத்தகும் இடங்களி ளெல்லாம் முத்துப் பிறக்கிறது என்பதைக் கண்டறிந்து எடுத்துப் பயன்படுத்தி யுள்ளார்கள் என் அருமைப் பழந்தமிழ் மக்கள். அக் கண்டுபிடிப்புக்கள், இன்று என்னென்னவோ கண்டறியும் அறிவியல் வல்லுநரும், 'ஆ!' என்று விரும்பிக் கேட்க அவாவும் அத்தகு கண்டு பிடிப்புக்களாகும்." "அறிவ தறியா மறிகடலே, 'வெண்பாவிற் புகழேந்தி' என்னும் சிறப்புப் பெயர் பெற்ற புகழேந்திப் புலவர் கூறுவதைக் கேள். அவர் கூறும் அந்த இரத்தினச் சுருக்கத்தை நானும் சுருக்கமாகவே கூறுகிறேன். இருபது இடங்களில் - பொருள் களில் - முத்துப் பிறக்கிறது என்கிறார் புகழேந்தியார். அவ் விடங்கள் யாவை? என்னென்ன பொருள்களில் பிறக்கின்றன இலங்கொளி முத்தங்கள்?" என்று அறிய விரும்புவாயல்லவா? இதோ கூறுகிறேன். 3. முத்துப் பிறக்குமிடம் "யானைக் கொம்பிலும் பன்றிக் கொம்பிலும் முத்துப் பிறக்கிறது. இது உனக்கு வியப்பாகத்தான் இருக்கும். உன் போன்ற ஆராய்ச்சி யறிவில்லாதவர்க்கு வியப்பாகத்தான் தோன்றும். பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை முறையே ஒரு வியப்பானது தானே!" இதை எப்படிக் கண்டறிந்தார்கள் என்பதை அப்புறம் கூறுகிறேன். "அடுத்து இப்பி, சங்கு, சலஞ்சலம் என்னும் வலம்புரிச் சங்கு இவற்றில் முத்துப் பிறக்கிறது. இப்பியிலும் சங்கிலும் முத்துப் பிறக்கிறதென்பது உனக்குத் தெரியும்; சலஞ்சலமும் சங்கின் இனந்தானே?" "அடுத்து முத்துப் பிறக்கும் இடங்களைக் கேட்டால் நீ மிகவும் வியப்புறுவாய். மீன்தலை, முதலைத்தலை, உடும்புத் தலை, பாம்புத் தலை, கொக்குத்தலை, மாட்டுப்பல் இவற்றில் கட்டாணி முத்துக்கள் பிறக்கின்றன. ஏன்! வியப்பாக இல்லையா?" "சில மரஞ்செடி கொடிகளில் முத்துப் பிறக்கிறது என்றால் நீ நம்பமாட்டாய். நீ எதைத்தான் நம்புகிறாய்? வாழை மரம், கமுகமரம், கரும்பு, மூங்கில், நெல், தாமரை இவற்றில் திகழொளி முத்துக்கள் பிறக்கின்றன. அடுத்து கற்பூரம், முகில், பெண்கள் கழுத்து இவற்றில் பிறக்கின்றன. இலங்கொளி முத்துக்கள். எண்ணிப் பார்த்துக் கொள். இடங்கள் இருபதும் உள்ளனவா" என்று. "மறிதிரைக் கடலே, உனக்கு மறதி அதிகம் அல்லவா? வேண்டுமானால் புகழேந்திப் புலவரின் இரத்தினச் சுருக்கச் செய்யுளை எழுதிக்கொள்." *தந்தி வராகம் மருப்பிப்பி பூகம் தழைகதலி நந்து சலஞ்சலம் மீன்றலை கொக்கு நளினமின்னார் கந்தரம் சாலி கழைகன்னல் ஆவின்பல்கட் செவிகார் இந்து வுடும்பு கராமுத்த மீனும் இருபதுமே. என்பதே அச்செய்யுள். "இவற்றுள் இப்பியும் சலஞ்சலமுந்தான் நின்னிடத்தில் உள்ளவை. அவை உனக்குச் சொந்தம். ஏனைப் பதினெட்டும் என்பாலுள்ளவை; எனக்குச் சொந்தம். இப்பியும் சலஞ்சலமும் என் ஆறு குளங்களில் இல்லாமலில்லை. கார் என் மலைகளில் வாழ்வது; என்னைச் சார்ந்து இன்புறவே அது பிறந்தது. சில எடுத்துக் காட்டுகள் வேண்டுமேல் கேள்." பார் வளர் முத்தம் (முல்லைக்கலி- 4) "நிலத்தில் வளர்ந்த முத்தம் எனச் சிறப்பித்துக் கூறுகின்றார் முல்லைக்கலி ஆசிரியர். 'வளர் முத்தம்' என்பது மிகுதியாகக் கிடைக்கும் முத்தம் எனப் பொருள் படும். "முத்து விளை கழனி" (மணிமே. 4) என்கின்றார் மணிமேகலை ஆசிரியர் சாத்தனார்." - வாலுகத்துக் குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை வலம்புரி ஈன்ற நலம்புரி முத்தம். - (சிலப். 27: 243- 4) வெண்மணலையுடைய கரைக்கண் உள்ள மிகப் பெரிய அடியினையுடைய புன்னை மரத்தின் நிழலில் வலம்புரிச் சங்கு ஈன்ற அழகிய முத்தம் என்கின்றார் இளங் கோவடிகள். ஏ! ஒலி கடலே! என் பெருமை விளங்குகிறதா? யானை மருப்பில் முத்துப் பிறக்கிறது என்பதை, முத்தார் மருப்பு (கலி. 40:4) பெருங்களிற்று முத்துடை வான்கோடு (முருகு 304) யானை முத்தார் மருப்பு (குறிஞ்சிப் 36) யானை முத்துடை மருப்பு (மலைபடு 518) முத்துடை மருப்பின் மழகளிறு (பதிற். 32) வைந்நுதி வாள்மருப் பொடிய உக்க தெண்ணீர் ஆலி கடுக்கும் முத்தம் (அகம் 282) எனச் சங்க நூற் சான்றோர்கள் துணிந்து கூறியுள்ளார்கள். ஆலி - பனிக்கட்டி. ஓடியடி மருப்பிணைகள் சொரிகுருதி முத்தம் நினையோம். - (குலோத்துங்கன் பிள்ளைத். 8) என 'யானைக் கொம்பு ஒடிந்தால் அதிலிருந்து ஒழுகும் குருதியோடு முத்துக்களும் சிந்தும்' என்பதால், யானைக் கொம்பில் முத்து நிறைய இருக்கும் என்பது பெறப்படும். "எருமைக் கூட்டம் கரும்பைக் கடித்துமென்று முத்துக் களை உமிழும்" (நள. 24) என்கிறார் புகழேந்திப் புலவர். இவர் சோழநாட்டில் வாழ்ந்து வந்தவராதலால், நேரில் கண்டதைக் கவியிலமைத்துக் கூறியுள்ளார். அதிவீரராம பாண்டியன், 'கண்ணுடைக் கரும்பு ஈன்ற வெண் முத்தம்' (நைட. 8) என்கின்றான். கரும்பின் கணுக்களில் முத்து விளைகிறது; கரும்பில் சர்க்கரை உண்டாகிறது. கரும்பு இரட்டைப் பயன் உடைய தாகும். முதுகடலே, இனி என்பால் உள்ள சில முத்தச் சிறப்பினைக் கேள். "வயல்களில் தவழ்ந்து திரிகின்ற சங்குகள் ஈன்ற வெண் முத்துக்களும், கரும்புகளிலிருந்து உதிர்ந்த வெண் முத்துக்களும், தாமரை மலர் சொரிந்த வெண்முத்துக்களும், சேர்ந்து நிலவினது ஒளிபோல ஒளி வீசுதலினால், திங்களைக் கண்டு மலரும் குமுத மலர்கள், அவ்வெண் முத்தொளியைத் திங்களின் ஒளி யென்று எண்ணி மலருமாம்" (நைட. 8). இரவில் மலரும் குமுதம் முத்துக்களின் ஒளியை நிலவொளி யென மயங்கிப் பகலில் மலர்வதால், அம்முத்துக்கள் மிக்க ஒளியையுடையவை என்பது பெறப்படுகிற தல்லவா? உண்மையில் அக்காலம் இனியொருகால் கூடுங் கொல்லோ! "உழவர்கள் காலையில் நேரமே எழுந்து வயலுழச் சென்றார்கள். வயலில் சங்குகள் ஈன்ற வெண்முத்துக்கள் குவியல் குவியலாகக் கிடந்தன. அவ்வுழவர்கள் அம்முத்துக்களை அரித் தெடுத்துக் கரையில் போட்டு விட்டு உழவோட்டி னார்கள். அங்கு ஒரு பெண் அன்னம் வந்தது; அங்குள்ள மடையில் நீராடினது. பின் அது அம்முத்துக் குவியலின் மேல் போய் உட்கார்ந்து இளவெயில் காய்ந்து கொண்டிருந்தது. அது கண்ட உழவர்கள், 'அடட! ஏமாந்து போய் அன்னத்தின் முட்டைகளை முத்துக்களென்று எடுத்துக் கரையில் போட்டுவிட்டோம்' என்று தமது அறியாமையை எண்ணி வருந்தினார்களாம். (சேக்கிழார் பிள்.) உழவர்கள் அன்னத்தின் முட்டையென மயக்கும் அவ்வளவு பெரிய முத்துக்கள்! "இத்தகைய பெரிய வெண் முத்தங்கள் என்னிடம் இருக்க, பல இடங்களில் பிறக்க, நிரம்ப இருக்க, ஏதோ கொஞ்சம் முத்துக்களை யுடைய நீ, 'முத்துடையேன்' எனத் தற்பெருமை கொள்ளும் நின் அறியாமையை என்னென்பது! என்னிடத் திலிருப்பது போன்ற இத்தகைய கட்டாணி முத்துக்கள் நின்னிடம் இருந்தால் உன்னைக் கையால் பிடிக்கவா முடியும்? கரை கடந்த மகிழ்ச்சியால் பொங்கி யெழுந்து குப்புற வீழ்ந்து மண்ணைக் கவ்வுவாயல்லவா?" "ஒலிகடலே, யானை மருப்பு, பன்றி மருப்பு முதலிய இடங்களில் முத்துப் பிறக்கிறது என்பதைக் கண்டறிய என் பழந்தமிழ் மக்கள் மேற்கொண்ட முயற்சியை நினைக்கின் எனக்கே மலைப்பாக இருக்கிறது. அரிய பொருள் எங்கிருந் தாலும் எங்குக் கிடைத்தாலும் அவை ஆள்வோருக்குச் சேர வேண்டியவை என்னும் சட்டம் அன்றில்லை. அத்தகைய சட்டம் செய்து கள்ளத்தனத்தை வளர்க்க விரும்பவில்லை என் பழந்தமிழ்ச் செல்வர்கள். அன்று நாட்டின் செல்வம் அனைத்தும் நாட்டு மக்களின் செல்வமாக இருந்து வந்தன. அரசன் குடிமக்களின் மூத்த முதற்குடியாகவே இருந்து வந்தான். குடிமக்கள் நாட்டுப் பற்றுடையவராக இருந்து வந்தனர்; நாட்டு முன்னேற்றத்தில், நாட்டுப் பெருமையில் மிக்க அக்கறை யுடையவர்களாய் இருந்து வந்தனர்; அதனால் ஏதாவது அரும்பொருள் எங்கிருந்தாவது கிடைத்தால் உடனே அதை அரசனுக்கு அறிவிப்பர். அரசன் அறிஞர்களைக் கொண்டு அப்பொருள் பற்றி ஆராய்ச்சி செய்து அப்பொருளைப் பெருக்கி நாட்டு மக்களின் நலனுக்குப் பயன் படுத்துவான். இவ்வாறு பல நூற்றாண்டுகள் அரசனும் குடிமக்களும் அரிதின் முயன்று கண்டு பிடித்தவையே முத்துப் பிறக்கும் அவ்விருபது இடங்களும். முத்து, பவழம், மாணிக்கம், மரகதம், கோமேதகம், புட்பராகம், நீலம், வைரம், வைடூரியம் என்னும் ஒன்பான் மணிகளுள் முத்தும் பவழமுமே உன் உடைமை. ஏனைய ஏழும் எனக்கே தனியுடைமையாகும். முத்து நம் இருவர்க்கும் பொது வுடைமை. அதிலும் உனக்குச் சிறுபான்மை, எனக்குப் பெரும் பான்மை. விரிகடலே, இப்போது தெரிந்ததா என் பெருமை!" "ஏ ஆழ்கடலே! உனக்குத் தெரியாதது போலவே பெரும் பான்மையான மக்களுக்கு என்பால் முத்துப் பிறக்கிறது என்பது தெரியாது. எல்லோரும், ஏன்? என் மக்களுங்கூட முத்துக்களஞ்சியம் நீதான் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர் இன்னும். முத்து முதலியன போல என்பால் இன்னும் என்னென்னவோ அரிய பொருள்கள் உள்ளன. என் முன் மக்கள்போல அவற்றை ஆராய்ந்து காணுதல் இன்றைய மக்களின் கடமையாகும்." 4. முத்தாரம் "இனி ஒரு பொருள் எத்தகைய சிறப்புடையதாக இருந்தாலும் அதைப் பயன்படுத்தாவிட்டால் அப்பொருள் மதிப்புப் பெறுவ தில்லை. ஒருவர் அடிக்கடி நாட்டு மக்களுக்கு ஏதாவது நற்செயல் செய்துகொண்டு இருப்பாரே யானால் அவர் பெயர் நாட்டு மக்கள் நாவில் நடமாடும். ஒரு சில மாதங்கள் ஒன்றுஞ் செய்யா விட்டாலும் மக்களிடை அவர்தம் மதிப்பு மங்கி விடுகிறதல்லவா? இதனாற்றானே ஒரு சிலர் அடிக்கடி ஏதாவது செய்து தம் பெயரை விளம்பரப் படுத்தி வருகின்றனர்? இவ்வாறேதான் பொருள்களின் மதிப்பும். முத்தைப் பலவகையிலும் பயன்படுத்தி அதற்குப் பெருமை தேடித் தந்தவள் நானே. முத்துப் பயிலாமல் எந்த ஓர் அணிகலனும் முன்பு செய்வதில்லை. முத்தில்லையேல் எந்த ஓர் அணியும் முற்றுப் பெறுவதில்லை எனலாம். முத்துக் கொப்பு, முத்துக்குச்சு, முத்து மூக்குத்தி, முத்துச்சரம் என முத்தோடு சேர்த்து நகைகளின் பெயர்கள் வழங்கப் பட்டதே இதற்குச் சான்றாகும்." "அணிகலன்களிற் சிறந்தது முத்தாரம். ஆரம் என்பதே முத்தின் பெயர். ஆரம் - மாலை. முன்னர் முத்துக்கள் மாலை யாகவே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதனாலேயே முத்துக்கு மாலை எனப் பொருள்படும் 'ஆரம்' என்பது பெயராய் அமைந்தது. ஆரம் என்பது ஹாரம் என்னும் வடசொல்லின் திரிபன்று. தானம் - ஸ்தானம், தலம் - ஸ்தலம் எனத் தமிழ்ச் சொற்கள் வடமொழியில் தற்பவமாக்கப்படுவது போல, ஆரம் என்பது ஹாரம் என வடமொழியில் தற்பவம் ஆக்கப்பட்டது. வடசொல் தமிழின் ஒலியியல்புகளுக் கேற்பத் திரிந்து தமிழில் தற்பவமாவது போல, தமிழ்ச் சொல் வட மொழியின் ஒலியியல் புக்கேற்பத் திரிந்து வடமொழியில் தற்பவமாகும். இதனையறியா தார், ஆரம் என்பது ஹாரம் என்பதன் திரிபெனக் கொள்ளலாயினார்." "ஆரம் அல்லது மாலையில் பல சரம் அல்லது கோவை இருக்கும். அது வடம் என வழங்கும். வடம் என்றால் முத்து வடம் என்பதே பொருள். அவ் வடத்திற்குக் காழ் என்னும் பெயரும் உண்டு. காழ் என்பதற்கும் முத்துவடம், முத்துச் சரம் என்பதே பொருள். சரம் என்றால் முத்துச்சரம், வடம் என்றால் முத்து வடம், கோவை என்றால் முத்துக் கோவை, ஆரம் என்றால் முத்தாரம், இது அக்கால மக்கள் முத்தைப் பயன்படுத்தி வந்த பயிற்சியைக் குறிக்கும்." முத்தாரத்தை அன்று ஆண் பெண் இருபாலாரும் அணிந்து வந்தனர். முத்து அன்று பெண்மக்களின் போர்வை யாகவே பயன்பட்டு வந்தது எனலாம். பெண்களின் தலையில் முத்தாரம், முடியில் முத்தாரம், காதில் முத்தாரம், கழுத்தில் முத்தாரம், தோளில் முத்தாரம், கையில் முத்தாரம், மார்பில் முத்தாரம், இடையில் முத்தாரம், உடையில் முத்தாயிரம் என எங்கும் முத்தாரமாகவே இருக்கும். ஆடையின் கரைளை முத்தாரம் அணி செய்யும். மார்க் கச்சை முத்தாரம் மறைத்து விடும். மேலாடையை முத்தாரம் விளங்கச் செய்யும். இன்று ஆண்கள் இடையில் கச்சு அணிவது போல் அன்று பெண்களும் கச்சு அணிந்து வந்தனர். அதன் அறிகுறியே ஒட்டியாணம் என்பது. மகளிர் இடுப்பில் ஆடையின்மேல் ஆடைய விழாமல் அணிந்து வந்த அக்கச்சு, அரைக்கச்சு, இடைக்கச்சு என இடத்தின் பெயரால் வழங்காது, அதன் பால் உள்ள முத்தாரத்தின் எண்ணிக்கையின் பேராலேயே வழங்கி வந்தது. பட்டுக்கச்சின் மேல் அணியாக முத்தாரங்களை வைத்துத் தைத்து அணிந்து வந்தனர். இருகோவை அல்லது இரு முத்தாரம் வைத்துத் தைத்த அக்கச்சு இருகோவை எனவே பெயர் பெறும். இவ்வாறே அக்கச்சின் மேல் வைத்துத் தைத்துள்ள முத்துக் கோவையின் எண்ணிக்கையின் பெயரால் அக்கச்சு வழங்கிற்று. ஏழு கோவை - காஞ்சி எண் கோவை - மேகலை பதினாறு கோவை - கலாபம் பதினெட்டுக் கோவை - பருமம் முப்பத்திரண்டு கோவை - விரிசிகை எனப் பெயர் பெறும். அக்கச்சு, கலையாகிய ஆடையின் மேல் அணிந்து வந்தமையால், மேல்கடை - மேகலை எனப் பெயர் பெற்றது. மேகலை என்பதே பின்னர் எல்லாக் கோவை கட்கும் பொதுப் பெயராக வழங்கலானது. மணிமேகலை என்பது - முத்தாரம் வைத்துத்தைத்த மேகலை எனப் பொருள் படும். மணி - முத்து. மணிமேகலை தான் உனக்குத் தெரியும். உதயணன் மனைவியிலொருத்தி - விரிசிகை. எண்கோவை மேகலை காஞ்சி எழுகோவை பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள் பருமம் பதினெட்டு முப்பத்திரண்டே விரிசிகை என்றுணரற் பாற்று. இப்பாட்டை மனப்பாடம் செய்துகொள். இனி, அரியணை, கொற்றக்குடை, முடி முதலியன வெல்லாம் வழிவழியாக வரும் அரச மரபுக்குரிய பொதுச் சொத்தாகும். அரியணை முதலியவற்றை எந்த அரசனும் அழிக்கவோ இழக்கவோ கூடாது. அங்ஙனமே அரசர் மார்பில் அணியும் முத்தாரம் வழிவழியாக அரச மரபுக்குரிய பொது வுடைமையேயாகும். அரசர்கள் தங்கள் ஆட்சியையே கேட்கினும் கொடுத்து விடுவர். ஆனால், மார்பிலணிந் திருக்கும் முத்தாரத்தை மட்டும் கொடுக்க ஒரு போதும் இசையார். அது வழிவழிச் சொத்து; ஒருவனுக்கு உரியதன்று என்பதே அதன் கருத்து. 'அரிச்சந்திரனைப் பொய்யனாக்குதற்காகக் கோசிக முனிவர் பல சூழ்ச்சிகள் செய்கிறார். எதற்கும் அவன் மசிய வில்லை. காட்டு விலங்குகளை ஏவி நாட்டு மக்களுக்குத் தொல்லை கொடுத்தார். அரிச்சந்திரன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். முனிவன் அரிச்சந்திரனிடம் இரு பெண்களை ஏவி நடனமாடச் செய்கிறார். அப்பெண்கள் அவ்வாறே சென்று நடனமாடு கின்றனர். அரிச்சந்திரன் மகிழ்ந்து என்ன வேண்டுமென்று கேட்டான். அம்மகளிர் தங்களை மணந்து கொள்ளும்படி வேண்டினர். அரிச்சந்திரன் மறுத்து விடுகிறான். அவ்வாறே கொற்றக்குடை முதலியவற்றைக் கேட்டு, முடிவாக முத்தாரத்தைக் கேட்கின்றனர். அதற்கு அரிச்சந்திரன், 'அது எனக்குரியதன்று. அது எனது அரச மரபுக்குரிய பொதுச் சொத்து. அதைப் பிறர்க்குக் கொடுக்கும் உரிமை எனக்கு இல்லை' என மறுத்து விடுகிறான்.' என்கின்றது அரிச்சந்திரப் புராணம். "இத்தகைய பெருமையுடைய முத்து , பண்டு எகிப்து, உரோம், சாலடியம், கிரேக்கம், அரேபியா முதலிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. நமது கப்பல்கள் வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்ற பொருள்களில் பெரும்பான்மை முத்துக்களேயாகும். முத்து அவ்வளவு நிறைய அன்று கிடைத்து வந்தது. மேனாட்டு மகளிர் இந்நாட்டு முத்துக்களை அவ்வளவு ஆர்வத்துடன் வாங்கி யணிந்து வந்தனர். எகிப்து நாட்டின் இளவரசியான கிளியோ பாட்ரா என்னும் பெண்மணி, தமிழகத்து விலையுயர்ந்த கட்டாணி முத்துக்களை மதுவிலே கரைத்துக் குடித்ததாகச் சொல்லப்படுகிறது. முத்தினையுண்டால் மேனியழகு மிகுமாம்." "இத்தகைய அரும்பெருஞ் சிறப்பினையுடைய முத் தெடுக்கும் முயற்சி பிற்காலத்தே கைவிடப்பட்டது. கொஞ்ச காலமாக முத்தைப் போல முத்துச் செய்யப்பட்டு வருகிறது. இப்போது அப்போலி முத்துக்களை என் தமிழ்ப் பெண் மணிகள் அணிந்து வருகின்றனர். விலையுயர்ந்த கட்டாணி முத்துக்களை யணிந்து வந்த தமிழினம் போலி முத்தையணிந்து பெருமை கொள்ளும் அத்தகு நிலையில் உள்ளேன் நான். என் செய்வது காலத்தின் கோலம்!" "அலைமோதும் ஆழ்கடலே, எனது வளமிக்க முத்துச் செல்வத்தை இழந்தனன் எனினும், இப்போது என் தமிழ் மக்கள் உன்னிடம் உள்ள முத்தை எடுத்து வருதலைக் கண்டு ஒருவாறு ஆறுதலடைகிறேன். இனியேனும் என் மக்கள் முத்துச் செல்வந் திரட்டும் முயற்சியில் முனைந்து ஈடுபடு வார்களாக. வாழ்ந்து கெட்டவளின் பழைய நிலையைப் பழம் பெருமையை யார் மதிக்கிறார்கள். நீ மதிக்க?" என்று சலிப்புடன் கூறிமுடித்தாள் தமிழ் நிலமகள். "அன்னாய் உன் பெருமையை அறியாது அவ்வாறு கூறிவிட்டேன். அறியாமையினால் செய்த பிழையைப் பொறுத் தருள்க. அதுதான் நின் இயற்கைக் குணம் ஆயிற்றே! 'பொறுத் தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்' உண்டன்றோ? இது நம் பொய்யா மொழியின் மெய்யுரையன்றோ? பூப்பூத் திருக்கிறது. அதைப் பறித்துச் சூடிப் பயன் பெறாவிடின் அப்பூங்கொடி யென்ன செய்யும்? நம்மிடம் இன்னும் எத்தனையோ அரிய பொருள்கள் உள்ளன. அவை நம்மிடம் இருப்பதனால் நமக்கு ஒரு பயனும் இல்லை. அதற்காக நாம் வருத்தப் பட்டென்ன செய்வது! அவற்றைப் பயன்படுத்து வோர் எடுத்துப் பயன்படுத் தினால்தானே அவர்க்கும் பயன். நமக்கும் அதனாற் புகழ்!" என, அத் தென் கடலும் வருத்தத்துடன் கூறிற்று. முத்துச் சிப்பியைக் கொண்டு வந்து கரையில் குவித்து விட்டு இவ்வுரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அப் பாட்டாளர்கள், "எம் தமிழ் நிலத்தாயே! தண் பெருங் கடலே! வருத்தப்படாதீர்கள். இனி உங்கள் பெருமையை முன்போல் உலகறியச் செய்கிறோம். நமது முன்னோர்கள் போல முத்துச் செல்வத்தை ஈட்டி இனிது வாழ்வோம். வாழ்க நம் பெருமை!" என்று முழக்கினர். நிலமும் கடலும் ஒன்றை யொன்று பார்த்த படியே இருந்தன.  5. வண்புகழ் மூவர் 1. தமிழரசின் பழமை ஒரு குடும்பத்திற்கு ஒரு தலைவனும், ஒரு பண்ணையத் திற்கு ஒரு பண்ணாடியும், பத்துப் பதினைந்து பாட்டாளர் களுக்கு ஒரு மேலாளும் தேவைப்படுகின்றனர். தலைவன் இல்லாத குடும்பம், தலைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்காமல், குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் அவரவர் விருப்பம்போல் நடந்துகொள்ளும் குடும்பம் ஒழுங்காக நடைபெறாது. குடும்பத் தலைவனுக்குக் கட்டுப்பட்டு நடவாத குடும்பம் குடும்பம் என்னும் பெயருக்கு உரிமையுடைய தாகாது. கட்டுப்பாடின்றி மனம் போனபடி நடப்பவரைக் 'கயவர்கள்' என்கிறார் வள்ளுவர். இங்ஙனமே பண்ணாடியும் மேலாளும் இல்லாவிட்டால், பண்ணையாட்கள் பண்ணாடிக்கும், தொழிலாளர்கள் மேலாளுக்கும் கட்டுப்பட்டு நடக்காவிட்டால் பண்ணையமும் தொழிலும் ஒழுங்காக நடைபெறா. தலைமையின் இன்றியமையாமை எத்தகைய தென்பது, 'எத்தகைய வீரர்களையுடைய படை யானாலும் படைத் தலைவர் இல்லாவிட்டால் அப்படை பகைவரை எதிர்த்து நின்று ஒழுங்காகப் போர் செய்யாது' (குறள் - 770) என்னும் வள்ளுவர் வாயுரையால் இனிது விளங்கும். இத்தகைய இன்றியமையாமை குறித்து ஏற்பட்ட வரே யாவர் ஆட்சித் தலைவரும். ஒரு குடும்பத்துக் கொரு தலைவன்; பல குடும்பங் களையுடைய ஊர்க்கொரு தலைவன்; பல ஊர்களையுடைய நாட்டுக்கொரு தலைவன் என்ற முறையில் ஏற்பட்டவனே அரசன். "தமிழ் நாட்டின் தெற் கெல்லையான தென் பெருங்கடல் நிலமாக இருந்த காலமும் உண்டு. பன்முறை ஏற்பட்ட கடல் கோளால் அந்நிலப்பரப்புக் கடலில் மூழ்கியது. அந்நிலப்பரப்பு இன்றுள்ள தென் கடற் கரையின் தெற்கில் ஆயிரத்தைந்நூறு கல் பரவியிருந்தது." "ஞாயிறு ஓர் ஒளிப்பிழம்பு. அது தன்னைத் தானே சுற்றுகிறது. அவ்வாறு சுற்றும் விரைவினால், அதினின்றும் சிதறிய ஒரு சிறு திவலையே உலகம் என்பது. உலகம் முதலில் ஆவிப் பிழம்பாக இருந்தது. அது தன்னைத்தானே சுற்றும் விரைவினால் மேற்பாகம் குளிர்ந்து நிலம் ஆயிற்று" என்பது நிலநூல் அறிஞர்களின் ஆராய்ச்சி முடிவு. ஒரு பம்பரம் சுழலும்போது அதன் நடுவட்டமே மிக விரைவாகச் சுழலும். அது போலவே, உலக உருண்டையும் தன்னைத் தானே சுற்றும்போது அதன் நடுப்பாகமே விரைவாகச் சுழலும். எனவே, அந்நடுபாகந்தான் முதலில் குளிர்ந் திருக்கும். கடல் கொண்ட தென்னிலம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்ததால், அப்பகுதிதான் முதலில் குளிர்ந்து நிலமாகி, உயிர் வகைகள் தோன்றி வளர்தற்கேற்ற தட்ப வெப்பநிலையை எய்தியிருக்கும். அப்பகுதியே பழந்தமிழ் நாடு. ஆகையால், உலக முதன்மக்கள் தமிழ்மக்கள் என்பதும், உலக முதன்மொழி தமிழ் மொழி என்பதும் ஆராய்ச்சி அறிஞர்களின் முடிந்த முடிவாகும். அப்பழந்தமிழ் நாட்டையாண்டு வந்த முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னனை "எங்கோ வாழிய குடுமி - நன்நீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் - 9) என. நெட்டிமையார் என்னும் புறநானூற்றுப் புலவர் வாழ்த்துதலாலும், அப்பழந்தமிழ் நாட்டு அரசனான செங்கோன் என்பான் மீது, அந்நாட்டுத் தனியூர்ச் சேந்தன் என்னும் புலவர் பாடிய செங்கோன் தரைச்செலவு என்னும் பழந்தமிழ் நூலினாலும், அக்கடல் கொண்ட பழந்தமிழ் நாட்டில் ஆட்சி நடந்துவந்தது என்பது புலப்படுவதால், தமிழரசு உலக முதலரசு என்பது வெளிப்படை. உலக முதல் நாடு தமிழ் நாடு, உலக முதன் மக்கள் தமிழ் மக்கள், உலக முதன் மொழி தமிழ் மொழி, உலக முதலரசு தமிழரசு என்னும் உண்மையை அறியும் தமிழ் இளைஞர்களின் உள்ளம் உவகைப் பெருக்கால் துள்ளி விளையாடும் என்பதில் ஐயமுண்டோ? உலக நாடுகளின் அரசு மரபுக்கெல்லாம் வரலாறு உண்டு. இன்ன அரச மரபு இன்ன காலத்தே தோன்றியது என்னும் காலவரையறையுண்டு. ஆனால், தமிழரச மரபுக்கோ அத்தகைய காலவரையறையில்லை. அதனால், வரலாறும் இல்லை. வரலாறில்லாத வரம்பு கடந்த பழமையுடையது தமிழரசு. தமிழ் மக்கள், 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன்தோன்றி மூத்த குடியினராகையால், அன்னாரின் அரசும் அத்தகைய பழமையுடையதே யாமாகையால், கால வரையறை யில்லாத தாயிற்று.' தந்தை தாய் மக்கள் என்போர் ஒன்றுபட்டு ஒருங்கு வாழ்வது குடும்பம் எனப்படும். பழந்தமிழ் மக்கள் குடும்பம் என்பதைக் குடி என்னும் பெயரால் வழங்கி வந்தனர். குடியின் ஒழுக்கம் - குடிமை எனப்படும். குடியில் உள்ளவர்கள் குடி மக்கள், வள்ளுவர் குடிமக்களின் இயல்பைக் குடியியல் என 13 அதிகாரங்களால் கூறுகிறார். அக்குடியையும் குடிமக்களை யும் குடிப்பிறந்தார், வாய்மைக்குடி, பழங்குடி, இற்பிறந்தார் என்று சிறப்பித்துக் கூறுகிறார்; இல் - குடி. குலம் என்னும் சொல்லையும் குடி என்னும் சொல்லையும் குடி என்னும் பொருளில் வழங்கு கிறார். இல், குடி, குலம் ஒரு பொருட் சொற்கள். அத்தகைய தமிழ்ப் பழங்குடியிலிருந்து தோன்றியதே தமிழ் அரச மரபு. 2. மூவேந்தர் தமிழகத்தில் ஆட்சி முறை என்று ஏற்பட்டதோ அன்றிலிருந்து தமிழகம் முடியுடை மூவேந்தர் என்று சிறப்பித்துக் கூறப்படும் சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. இம்முடியுடை மூவேந்தரை வண்புகழ் மூவர் என்பர் தொல்காப்பியர். வண்புகழ் - வளவிய புகழ் - குன்றாத மிக்க புகழ். 'வண்புகழ்' என்னும் அடைமொழி, இவர்தம் தொன்றுதொட்டு வரும் நல்லரசியல்பைக் குறிக்கும். இம் மூவரசர் மரபினர் தமிழகத்தை வழி வழியாக மாணரசாண்டு அத்தகு புகழை அடைந்தனர். தொல்காப்பியர் கி. மு. மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட இடைச்சங்க காலத்தவர் என்பது ஆராய்ச்சி அறிஞர்களின் முடிபாதலின், அவர்க்குப் பன்னெடுங்காலத்திற்கு முற்பட்ட பழமையுடையதாகும் இம்மூவர் மரபு. 'மூவேந்தர்' என்னும் தொகைக் குறிப்புச் சொல், சேர சோழ பாண்டியர் என இம் மூவரையுமே குறிக்கும். அத்தகு பழமையுடையவர் இம் மூவரும். இம் மூவரசர் மரபும் பாண்டிய மரபு, சோழ மரபு, சேர மரபு எனவே வழங்கி வந்துள்ளன. பாண்டியன், சோழன், சேரன் என்னும் குல முதல்வன் பெயரே அம் மரபினர்க்குப் பெயராக வழங்கலாயின. இம்மூவரசர் மரபில் பாண்டியர் மரபே பழைய மரபாகும். பண்டையர் என்பதே பாண்டியர் எனத் திரிந்தது. கொள் + இ - கோடி, செல் + இ - சேறி எனக் கொள், செல் என்னும் முதனிலைகளுடன் இகரவிகுதி சேர, பகுதி முதல் நீண்டு புணர்ந்தது போலவே, பண்டு + இ - பாண்டி என, பண்டு என்னும் பண்புப் பெயருடன் இகர விகுதி சேர, பண்டு என்பது பாண்டு என முதல் நீண்டு புணர்ந்தது. பாண்டி + அன் - பாண்டியன். பாண்டி + அர் - பாண்டியர். பாண்டிய மரபிலிருந்து பிரிந்தவையே சோழ மரபும் சேர மரபும். இம்மூவரசர் மரபும் கடல் கொண்ட தென்னாட்டில் முதல் முதல் தோன்றியது. அப்பழந்தமிழ் நாட்டை வளஞ் செய்த பஃறுளியாற்றங்கரையிலிருந்த மதுரையிலிருந்து அத்தென்னாட்டை ஆண்டு வந்தனர் பாண்டியர். பாண்டியர் அந்நாட்டை ஆண்டு வந்தபோது அதன் வடக்கேயுள்ள தமிழகப் பகுதியைச் சோழரும் சேரரும் ஆண்டு வந்தனர். அத்தென்னாட்டைக் கடல் கொள்ளக் கொள்ளப் பாண்டியர் படிப்படியாக வடக்கே வந்தனர். பின் அவ்வடபகுதி மூன்றானது. இம் மூவரசரும், பழந்தமிழ்ப் பெருங்குடிகளில் மூத்த முதற் குடியினராவர் என்பது. "பெரு நில முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒரு தனிக்குடி" (சிலப் 1: 31 - 2) என்னும் இளங்கோவடிகள் வாக்கால் விளங்கும். தமிழ் நாட்டின் கிழக்குப் பகுதியில் - சோழ நாட்டில் - முன்பு சோளம் மிகுதியாக விளைந்து வந்தமையால் அது சோழநாடு எனப் பெயர் பெற்றது. பனைநாடு, தெங்கநாடு என்பன கடல் கொண்ட தென்னாட்டின் உள்நாடுகளாகும். பனையும் தென்னையும் மிகுதியாக இருந்தமையால் அவை அப்பெயர் பெற்றன. மாமரத்துப்பட்டி, கொழுஞ்சிவாடி, ஊணாம்பதி, வரகுப் பாளையம் என மரம், செடி, கொடி, பயிர்ப் பெயர்களால் ஊர்ப்பெயர் வழங்குதலும் இதற்குச் சான்றாகும். பவழம் - பவளம் என ழகர ளகரம் ஒன்றுபட்டு வழங்குதல் போல, சோழம் - சோளம் என வழங்கலானது, சோழ நாட்டை ஆண்டதால் சோழர் எனப் பெயர் பெற்றனர். சேரர் என்பது இடத்தால் பெற்ற பெயரேயாகும். சேரநாடு மேற்குமலைத் தொடரின் மேற்குச் சாரலில் அமைந்தது. அதனோடு சார்த்து - அதனோடு சேர்த்து, என்னைச் சார்ந்தவர் என்னைச் சேர்ந்தவர் எனச் சார்தல் சேர்தல் என்பன ஒருங்கு வழங்குதல் போல, சாரல் என்பது சேரல் என வழங்கலானது. குமரன் கோட்டம் - குமர கோட்டம் என்றாவது போல, சேரல் நாடு - சேர நாடு என்றாகியது. சேர நாட்டை ஆண்டவர் சேரர். சேரலை ஆண்டவர் - சேரல். சேரல் பெயர் சேரர் எனவும் வழங்குதல், உதியஞ் சேரல், பெருஞ்சேரல் இரும் பொறை என்னும் சேர மன்னர் பெயர்களால் பெறப்படும். 3. மூவேந்தர் கொடி இனி, இம்மூவரசர்க்கும் படை, கொடி, குடை, முரசு, முடி, தார், யானை, குதிரை, தேர் என்பன உரியவென்கின்றார் தொல்காப்பியர். (தொல். மரபு. 71). இவற்றுள் கொடியும் தாரும் அல்லாதன வெல்லாம் மூவர்க்கும் பொது. மூவர்க்கும் வெவ்வேறு கொடியும் தாரும் உடையனவாகும். பாண்டியர் மீன்கொடி, வேப்பந்தார். சோழர்க்குப் புலிக்கொடி, ஆத்திமாலை, சேரர்க்கு விற்கொடி, பனந்தார். பகைப் புலத்துப் பொருள் அல்லது பகைப் பொருளை அடையாளமாகக் கொள்ளுதல் பண்டைய மரபு. முருகன், சூரபதுமனாகிய பகைவனின் கூறாகிய மயிலை ஊர்தியாகவும், சேவலைக் கொடியாகவும் கொண்டுள்ளான் என்கின்றது கந்த புராணம். சிவன், தாருகா வன முனிவர்களாகிய பகைவர்கள் ஏவிய மழு, மான் முதலியவற்றைப் படையாகவும் அறிகுறி யாகவும் கொண்டுள்ளான் என்பது புராணம். இவ்வாறே, தென்படல் பாண்டி நாட்டின்மீது அடிக்கடி பொங்கி வந்து தொல்லை கொடுத்ததனாலும், கேடுண்டாக்கிய தனாலும் பாண்டியர் அப்புகைப் புலமாகிய கடலின் பொருளாகிய மீனைக் கொடியின் அறிகுறியாகக் கொண்டனர் போலும்! சோழ நாட்டின் வடபகுதி பண்டு பெரும்பாலும் காடாக இருந்தது. கரிகாலன் அப்பகுதியைக் காடுகெடுத்து நாடாக் கினான் என்பர். அக்காட்டிலிருந்து புலிகள் அடிக்கடி நாட்டிற் புகுந்து ஆடு மாடுகளைக் கொன்று தின்று தொல்லை கொடுத்து வந்திருக்கலாம். எனவே, சோழர் அப்பகைப் பொருளான புலியைக் கொடியாகக் கொண்டனர் போலும். வாளும் வேலுமே தமிழர்க்குச் சிறப்புடைய படைகளாகும். 'வாள் நாட்கோள்' என்பது புறத்திணைத் துறைகளுள் ஒன்றாகும். ஒள்வாட் கோப் பெருஞ்சேரல், வெற்றிவேற் செழியன், வெற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி என்னும் மூவேந்தர் பெயர்களும் இதனை வலியுறுத்தும். வட நாட்டி னர்க்கு வில்லே முதன்மையான படையாகும். கோதண்ட பாணி, காண்டீபன், வில்லுக்கு விசயன் என்னும் பெயர்களைக் காண்க. விற்படையினர் அடிக்கடி வடக்கிருந்து வந்து சேரர்க்குத் தொல்லை கொடுத்து வந்திருக்கலாம். வடவர் ஓட்டிச் சென்ற ஆடுகளை மீட்டுவந்து ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்று பெயர் பெற்றமை இதற்குச் சான்றாகும். எனவே, பகைவர் படையாகிய வில்லினைச் சேரர் கொடியாகக் கொண்டனர் போலும். இம் மூன்றும் மீன்புலிவில் எனவும், விற்புலிமீன் எனவும், புலிவிற்கெண்டை எனவும் ஒரு சேர வழங்கும். இதனால், சேர சோழ பாண்டியர் மூவரும் இம் மூன்றையும் தமிழகத்தின் பொதுக் குறியாகவும் கொண்டிருந்தனர் என்பது விளங்கும். இவ்வில்லையும் புலியையும் மீனையும் மூவரசரும் கொடியாகக் கொண்டிருந்ததோடு அரசமுத்திரையாகவும், அதாவது ஆட்சிக் குறியாகவும் கொண்டிருந்தனர். இன்று போலவே அன்றும் அவ்வரச முத்திரையைப் பயன்படுத்தி வந்தனர் என்பது, காவரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தில், வெளி நாடுகளிலிருந்து வந்திறங்கிய பொருள்களுக்கும், ஏற்றுமதி செய்யப்படும் உள்நாட்டுப் பொருள்களுக்கும் மூட்டைகளின் மேல் புலிமுத்திரை பொறிக்கப்பட்டதெனப் பட்டினப்பாலை (128 - 137) கூறுவதால் விளங்குகிறது. தென் தமிழ் நாட்டுச் செழுவில் கயல்புலி மண்தலை ஏற்ற வரைக. - (சிலப். 25: 171 - 2) அதாவது, 'தமிழ் நாட்டு வில்கயல் புலி என்னும் முத்திரையை யுடைய ஓலை எழுதுக' எனச் செங்குட்டுவனுக்கு வில்லவன் கோதை என்னும் அமைச்சன் கூறுதலால், இன்று அரசமுத்திரை அச்சிடப் பெற்ற அஞ்சலட்டையில் கடிதம் எழுதுவது போலவே, அன்றும் வில் முதலிய அரச முத்திரை பொறிக்கப் பெற்ற ஓலையில் எழுதி வந்தனர் என்பது விளங்குகிறது. மண் - முத்திரை. மேலும் மூவரசரும் வில்லையும் புலியையும் மீனையும் தனித் தனிக் குறியாகக் கொண்டிருந்ததோடு, அம் மூன்றையும் தமிழ் நாட்டுப் பொதுக் குறியாகவும் கொண்டிருந்தமை அறிந்து இன்புறற்பால தொன்றாகும். மூவரசர் தலைநகர்களின் கோட்டைக் கதவுகளில் இக்குறிகள் பொறிக்கப் பெற்றிருந்தன. 4. செங்கோன்மை சேரசோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர் மூவரும் தாங்கள் குடிமக்களின் பாதுகாவலர் என்னும் உண்மையை யுணர்ந்து, குடி புரந்தருதலே தங்கள் கடனெனக் கொண்டு நல்லாட்சி புரிந்து வந்தனர். கரிகாலன் என்னும் சோழ மன்னன், தன்னிடம் வழக்குரைக்க வந்த முதியோர் இருவர், தன்னை இளைஞன் என்றும், தன்னால் தங்கள் வழக்கை நன்கு ஆராய்ந்து தீர்ப்புக் கூற முடியாதென்றும் கூறக்கேட்டு, 'இன்று போய் நாளை வாருங்கள். நாளை தக்கார் ஒருவரைக் கொண்டு தங்கள் வழக்கினைத் தீர்த்து வைக்கிறேன்' என்று இன்சொற் கூறி விடுத்து மறுநாள் நரை முடித்து முதியோன் போல அறங்கூறவையத்தே அமர்ந்து அவ்வழக்கைத் தீர்த்து, அம்முதியோர் இருவரும் மகிழும்படி செய்ததும், ஒரு சோழ மன்னன், அறியாது ஆன் கன்றைக் கொன்ற தன் ஒரே மகனைத் தரையில் கிடத்தித் தானே தேரூர்ந்து தேர்க்காலில் நெருக்கிக் கொன்றதும், கொற்கைப் பாண்டியனொருவன், பிறர் வீட்டுக் கதவைத் தட்டிய தனது கையைத் தானே குறைத்துக் கொண்டு, பொற்கைப் பாண்டியன் எனப் புகழப் பட்டதும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் என்னும் பாண்டிய மன்னன், 'நான் என் பகைவரை வெல்லாவிட்டால், குடிபழி தூற்றும் கோலேனாகுக' என்று வஞ்சினங் கூறியதும், பாண்டியன் நெடுஞ்செழியன், தான் ஆராயாது கோவலனைக் கொன்றது குற்றமெனக் கண்டதும் உயிர் விட்டு, 'அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ் செழியன்' எனப் பெயர் பெற்றதும், அவ்வாறு பாண்டியன் உயிர் விட்டானெனச் சாத்தனார் சொல்லக்கேட்ட சேரன் செங்குட்டுவன், 'குற்றமற்ற கோவலனைக் கொன்று வளைத்த கோலை, பாண்டி யனின் உடலைவிட்டுச் சென்ற உயிர் நிமிர்த்துச் செங்கோலாக்கியது' என்றதும் முடியுடை மூவேந்தரின் செங்கோன்மைச் சிறப்புக்கு எடுத்துக்காட்டுகளாகும். செங்கோல் மன்னர்களாய்த் திகழ்ந்த மூவரசர் ஆட்சிக் காலத்தே தமிழ்நாடு நன்னாட்டின் முன்னாட்டும் நாடாகத் திகழ்ந்தது. அம்மூவரும் தத்தம் நாட்டினை இயற்கைப் பிரிவு களான முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நானில மாகப் பிரித்து, அந்நானிலத்திற்கும் தனித் தனித் தலைவரை ஏற்படுத்தியிருந்தனர். ('தொல்காப்பியர் கால ஆட்சிமுறை' என்ற கட்டுரை பார்க்க). இந்நானிலப் பிரிவேயன்றி நாட்டைப் பல கூறாகப் பகுத்தும், தம் கீழ்ப் பல சிற்றரசர்களை ஏற்படுத்தி யிருந்தனர். அச்சிற்றரசர்கள் இப் பேரரசர்களையும் மிஞ்சிய நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும், இனப் பற்றும் உடையவர் களாய்க் கொடைமடம்பட்ட குணப் பெருங்குன்றுகளாய், ஒப்புரவறிதல் என்னும் திருக்குறள் அதிகாரத்திற்கு எடுத்துக் காட்டுகளாய்த் திகழ்ந்தனர். தமிழர்க்கு இயல்பாக உள்ள வீரம் என்பது அவர்தம் உரிமைச் சொத்தாக இருந்து வந்தது. இவர்கள் வேள் எனவும், வேளிர் எனவும் அழைக்கப் பெற்றனர். பாரி, காரி, ஓரி, ஆய், பேகன், அதியன், நள்ளி, எவ்வி, குமணன், பண்ணன், நன்னன், புல்லி முதலிய கொடை மடம் பட்ட வள்ளல் களெல்லாம் ஒரு காலத்தே தமிழகத்தை யாண்டு வந்த சிற்றரசர்களே யாவர். வேளிர்களாகிய இக்குறு நில மன்னர்களோடு, முடியுடை மூவேந்தர்களாகிய பெருநில மன்னர்கள் கொள்வினை கொடுப் பினை யுடையவர்களாய் இருந்து வந்தனர். இவர்களின் மூத்த முதற்குடி தானே அவர்கள்? கரிகாலன் தாய் அழுந்தூர் வேளின் மகள். கரிகாலன் மனைவி நாங்கூர் வேளின் மகள். செங்குட்டுவன் பாட்டி வெளியன் வேளின் மகள். செங்குட்டுவன் மனைவி இளங்கோ வேளின் மகள். சேர சோழ பாண்டியர் என்னும் பெருநில மன்னர்களும் இக்குறுநில மன்னர்களும் குடியும் குணமும் ஒன்றுபட்டுத் தமிழகத்தை இனிது ஆண்டு வந்தனர். 5. வீரச் சிறப்பு முடியுடை மூவேந்தரும் மக்கட்குரிய முக்குணங்களாகிய வீரம், கொடை, புகழ் என்னும் மூன்றினும் மேம்பட்டு விளங்கினர். வீரத்தினால் ஈட்டிய பொருளைக் கொடுத்துப் புகழ்பெறுதலான் இம்மூன்றும் ஒன்றைவிட் டொன்றைப் பிரிக்க முடியாதவையாகும். இம்மூவரும் வீரமே உருவானவர் எனச் சுருங்கக் கூறி விளங்க வைக்கலாம். புறநானூறு, பதிற்றுப் பத்து முதலிய சங்கநூல்களில் இவர்தம் வீரத்தை உள்ளங்கை நெல்லிக்கனிப் போல் விளக்கமாகக் காணலாம். அகம், புறம் என்னும் தமிழர் வாழ்க்கைக் கூறுபாட்டில் புறம் என்பது வீரத்தின் திரட்சியே யாகும். அவ்வீரத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கினர் இம் மூவரும். இம்மூவரும் இமயம் வரை படையெடுத்துச் சென்று, வடவரசர்களை வென்று, தம் வெற்றியின் அறிகுறியாக இமயத்தில் மீனையும் புலியையும் வில்லையும் பொறித்து மீண்ட வெற்றிப் புகழினையுடைய வராவர். இவ்வாறு பலர் பலமுறை இமயத்தில் புலிவிற் கெண்டை பொறித்துள்ளனர். ஆரியப் படைகடந்த நெடுஞ் செழியன், இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் எனும் அன்னார் பெயர்களே அவர்தம் வீரப்புகழை விளக்கிக் காட்டும். கரிகால் வளவன் என்னும் சோழ மன்னன் இமயம்வரை படை யெடுத்துச் சென்று, தன்னையெதிர்த்த வடவர்களை வென்று, மேலும் வடக்கே செல்ல முயன்றான். ஆனால், அது பனிக்கால மானதால் இமயமலையைக் கடந்து செல்ல முடியாமல் இமயநெற்றியில் புலியைப் பொறித்து மீண்டான். மீண்டு வரும்போது வடநாட்டி லுள்ள வச்சிரநாட்டரசன் முத்துப் பந்தரும், மகதநாட்டரசன் பட்டி மண்டபமும், அவந்தி நாட்டரசன் வாயில் தோரணமும் திறையாகக் கொடுக்கப் பெற்று மீண்டனன் என்னும் சிலப்பதிகாரம். (5 : 99 - 104) இனி, செங்குட்டுவன் தந்தையாகிய இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பான், வடவரசரை வென்று குமரி முதல் வட இமயத்து ஒரு மொழிவைத்தாண்டு வந்தான். (சிலப். 29) ஒரு மொழிவைத்து ஆளுதலாவது - தன் ஆணையின் படி அடங்கி நடக்கும்படி ஆளுதல். மேலும், இவன் மேல்கடல் தீவுகளில் வந்திருந்து கொண்டு அடிக்கடி நாட்டினுள் புகுந்து தொல்லை கொடுத்து வந்த யவனர் என்னும் மேனாட்டினரை வென்று பிடித்து, கைகளைப் பின் கட்டாகக் கட்டி, நெய்யைத் தலையில் ஊற்றித் துரத்தினான் என்கிறது பதிற்றுப் பத்து. இவன் மகன் செங்குட்டுவன் வடநாடு சென்று, தமிழ் பழித்த கனகவிசயரை வென்று பிடித்து, அன்னார் முடித்தலையில் கண்ணகியின் படிமக் கல் ஏற்றி வந்து அப்பழியைத் துடைத்தனன். இத்தகைய வெற்றிப் புகழுடைய வரை வண்புகழ் மூவர் என்றது பொருத்தமுடைய பெயர்தானே? தமிழரின் வீரச் சிறப்பினை யறியாது தமிழ் நாட்டின் மேல் படையெடுத்து வந்த பிம்பிசாரன் என்னும் மகத நாட்டரசனை, இளஞ்சேட்சென்னி என்னும் சோழ மன்னன், குடகு நாட்டிலுள்ள செருப்பாழி என்னும் இடத்தில் எதிர்த்து வென்று துரத்திச் செருப்பாழி வென்ற இளஞ்சேட் சென்னி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றனன். அவ்வாறே படையெடுத்து வந்த பிம்பிசாரன் மகனான பிந்துசாரனை, கொங்கு நாட்டுக் குறுநில மன்னனான மோகூர்ப் பழையன் என்பான் முதுகு காட்டி யோடும்படி செய்தனன். இனி இத்தகைய வீரமுடையரேனும், சேர சோழ பாண்டியர் என்னும் இப்பேரரசர்கள் மூவரும் ஒருவர்க் கொருவர் போரிட்டுக் கொண்டதாகவோ, ஒருவர் நாட்டை ஒருவர் பிடித்தாண்டதாகவோ தெரியவில்லை. கடைச் சங்கப் பிற்காலத்தே இம் மூவரசர்க்கிடையே இருந்த ஒற்றுமை ஒருவாறு குன்றலானது. அதனால், களப்பிரர் முதலிய அயலார் தமிழரசர்களை வென்று தமிழகத்தைப் பிடித்து ஆள நேர்ந்தது. அதன் பின்னர், அதாவது கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் அம்மூவரசரும் தாங்கள் தமிழினம் என்பதையே மறந்து ஒருவரோ டொருவர் போரிட்டுக் கொள்வதும், ஒருவர் நாட்டை ஒருவர் பிடித்துக் கொள்வதுமே கடமையாகக் கொண்டு, இனைத்தென அறியாத காலந் தொட்டு வழிவழியாக வந்தமுடியுடை மூவேந்தர் மரபையே அழித்துவிட்டனர். எடுத்துக்காட்டாக, செங்குட்டுவன் காலத்தே சோழ நாட்டை ஆண்டவன் கரிகாலன் என்னும் சோழப் பேரரசன் என்பது சிலப்பதிகாரத்தால் தெரிகிறது. இவனொரு பெருவீரன்; இமயத்தில் புலி பொறித்த வண்புகழாளன். இவன் காலத்தே பாண்டி நாட்டை ஆண்டவன் பாண்டியன் நெடுஞ்செழியன். இவனும் பெருவீரன்; இமயம் வரை படையெடுத்துச் சென்று, எதிர்த்தவரை வென்று இமயத்தில் மீன் பொறித்த இரும்புகழாளன். செங்குட்டுவனைப் பற்றிக் கூறவேண்டிய தில்லை. இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய இதுநீ கருதினை யாயின் ஏற்பவர் முதுநீ ருலகில் முழுவது மில்லை. - (சிலப் 25 : 165 - 7) என்ற வில்லவன் கோதை கூற்றே போதும். கடல் சூழ்ந்த உலகைத் தமிழ்நாடாக்கக் கருதினால் - வெல்லக் கருதினால் எதிர்ப்பவர் உலகில் யாரும் இல்லை. ஆம். அத்தகைய எதிரிலா வீரன்தான் அவன். இங்ஙனம் ஒப்புயர்வற்ற வீரர்களாக இருந்தும் மூவரும் ஒருவரை யொருவர் பகைத்துக் கொண்டதாகவோ, போர் புரிந்து கொண்டதாகவோ தெரியவில்லை. இவர்கள் ஒற்றுமை யாகவே இருந்து வந்தனர் என்பது, 'பாண்டியன் நெடுஞ்செழியன் குற்றமற்ற கோவலனைக் கொன்றுவிட்டான் என்ற சொல், என் காதிலும் சோழன் காதிலும் புகுமுன், அவ்வாறு கொன்றது குற்றமெனக் கண்டதும் அவன் உயிர் விட்டு வளைத்த கோலை நிமிர்த்துச் செங்கோலாக்கி விட்டான் என்னும் சொல் புகும்படி செய்து விட்டான்' (சிலப். 25 : 95 - 9) எனச் செங்குட்டுவன் பாண்டியனைப் பாராட்டுவதும், கனகவிசயர் தென்றமிழ் பழித்தனர் என்றது கேட்ட செங்குட்டுவன் "அருந்தமிழ் ஆற்றல் அறியாராகி" (சிலப். 25 : 161) என மூவரையும் ஒன்றாகவே குறிப்பதும் அம்மூவரும் ஒற்றுமையாக இருந்தமைக்குச் சான்று பகரும். இனிப் புறநானூறு, தொல்காப்பியப் புறத்திணையியல் முதலிய புறப்பொருள்கள் இலக்கிய இலக்கணங்களில் கூறப்படும் போர் முறைகள் நடவாதனவற்றைப் பொய்படப் புனைந்து கூறுவனவோவெனின், இல்லை; அவையெல்லாம் உண்மை கூறுவனவேயாம். ஒரு சிலரிடை ஒரேவொரு காலத்தே நிகழ்வதை மிகுத்துக் கூறுதலே நூன்மரபாகும். அவ்வாறு நடந்த போர்களைச் சிறப்பித்துக் கூறுவனவே அப்புறத்திணைத் துறைகள். பழந்தமிழரசர்கள் கொடுங்கோலுக் கஞ்சிச் செங்கோலை உயிரினும் பெரிதாக மதித்துப் போற்றி வந்தன ரெனினும், அவருள்ளும் கொடுங்கோலரும் சிலர் இல்லாம லிருந்திரார். அத்தகைய கொடுங்கோல் வேந்தனொருவன் தன் குடி மக்களுக்குக் கேடு விளைத்தால், அந்நாட்டுப் பெரியோர்கள் ஒன்றுகூடி அக்கொடுங்கோலனிடம் சென்று அவ்வாறு கேடு செய்யாமல் இருக்கும்படி கூறுவர். அவன் அவர்கள் சொல்லைக் கேளானாயின், அப்பெரியார்கள், அவனிலும் வலியுடைய அடுத்த நாட்டு அரசனிடம் சென்று கூறுவர். அவன், 'ஆள்வோனால் கலக்குற்ற' (கலி. 5) அந்நாட்டு மக்களைக் காத்தற்பொருட்டு அந்நாட்டின் மேல் படை யெடுத்துச் சென்று கூறுவர். அக்கொடி யோனொடு பொருது வென்றடிப் படுத்து, தன் ஆணையின் கீழ்ப்பட்டு ஆளும்படி செய்து மீள்வான். ஒரு சிலர் மண்ணாசையால் அடுத்த நாட்டின் மீது படையெடுத்தலும உண்டு. தமிழர் திறமறியாது பகை கொண்ட அயல் நாட்டினரோடு செய்த போர்களும் உண்டல்லவா? இவ்வாறு நடந்த போர்த்துறைகளே அவை. இவ்வாறன்றித் தமிழரசர்கள் ஒருவர்க்கொருவர் நேரிடையாகப் பகைகொண்டு போர் புரிந்து கொள்ள வில்லை. அவ்வாறு கொண்டிருந்தால் மூவரசர் மரபு ஏற்பட்டதிலிருந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் சேர நாடு பாண்டிய நாடு என்னும் நாட்டுப் பிரிவு அப்படியே இருந்திருக்க முடியுமா என்ன? என்றோ அழிந்த ஒன்றாகி யிருக்குமல்லவா? அவ்வாறு தமிழரசர்கள் பகைகொண்டு போர் செய்திருந்தால், கடைச் சங்கத்திறுதிக் காலம் வரை எந்த ஒரு வெளிநாட்டினரும் தமிழ் நாட்டின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்காமல் இருந்திருப் பார்களா என்ன? 6. தமிழ்ப் பற்று இவ்வாறு இம் முடியுடை மூவரும் ஒற்றுமையாக இருந்து தமிழகத்தைச் சீருஞ் சிறப்புடன் ஆண்டு வந்ததன் காரணம், தமிழினப் பற்றும், தமிழ் மொழியால் ஒன்றுறப் பிணிக்கப் பட்டிருந்ததுமே யாகும். இம்மூவரச மரபினரும் சிறந்த தாய் மொழிப் பற்றுடையராய் இருந்து வந்தனர்; தம் தாய் மொழியால் தம்மைப் புலவர் பாடுவதை அத்துணைப் பெருமையாக மதித்து வந்தனர்; புலவர்களால் பாடப் பெறாமை இழிவென எண்ணி வந்தனர். ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாகப் புலவர் பாடாது வரைகவென் நிலவரை. (-புறநானூறு - 72) என்னுந் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் கூற்றால் விளங்குகிறதல்லவா? தன்னாட்டைப் புலவர் பாடாமையை எவ்வளவு இழிவாக எண்ணுகிறான் இவன்? இம் மூவரசர்களும் தம்மீது பாடிய பாடலுக்காகப் புலவருக்குக் கொடுத்த பரிசிலை நினைக்கின், இவர்கட்கு தமிழ் மொழிமீது இருந்த பற்றின் எல்லை இனிது விளங்கும். எடுத்துக்காட்டாக: பத்துப் பாட்டில் ஒன்றான பட்டினப்பாலை என்னும் பாட்டைத் தன் மீது பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவருக்குப் பதினாறு நூறாயிரம் (16, 00, 000) பொன் பரிசளித்துப் பெருமைப் படுத்தினான் கரிகால் வளவன் என்னும் சோழ மன்னன். நரைமுடித்து முறை செய்த நல்லரசன் இவனே! இமயத்தில் புலி பொறித்த இணையில்லான் இவனே! 301 அடிகளையுடையது பட்டினப் பாலை என்னும் அப்பாட்டு. ஓர் அடியின் விலை ரூ. 5315 - 8 - 0 ஆகிறது. என்னே இவ்வளவனின் தமிழ்ப்பற்று! எட்டுத் தொகை என்னும் சங்க நூல்களுள் ஒன்றான பதிற்றுப் பத்து என்பது சேர மன்னர்கள் பத்துப்பேரின் மேற்பாடப்பட்ட நூறு பாடல்களைக் கொண்டது. முதல் பத்தும் பத்தாம் பத்தும் நமக்குக் கிடைக்கவில்லை. 2- 9 ஆகிய எட்டுப் பத்தும் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. பத்துப்பாட்டுக்களால் தன்னைப் பாடிய புலவர்க்கு அச் சேர மன்னர் ஒவ்வொருவரும் கொடுத்த பரிசிலை நோக்கினால் அன்னாரின் தமிழ்ப் பற்றும் கொடைத்திறனும் நம்மனோரால் எண்ணமுடியாத அத்தகு பெருமை யுடையனவாகும். தன்மீது இரண்டாம் பத்தைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்னும் புலவர்க்கு, இமய வரம்பன் நெடுஞ் சேரலாதன் என்னும் சேரமன்னன் உம்பற்காட்டு ஐந்நூறு ஊர்களோடு, 38 ஆண்டு தன்னாட்டு வருவாயுள் பாகமும் கொடுத்துப் பெருமைப் படுத்தினான். உம்பல் - யானை. உம்பல் காடு - யனைக் காடு. இது மேற்கு மலைத் தொடரின் மேல் சாரலில் உள்ள ஒரு வளமிக்க காட்டுப் பகுதி. யவனரை வென்று துரத்தியவனும், குமரி முதல் வடவிமயத்தொரு மொழி வைத் தாண்டவனும் இவனே. சேரன் செங்குட்டு வனின் தந்தையும் இவனேதான்! தன்மீது நான்காம் பத்தைப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்க்கு, கழங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் என்னும் சேரமன்னன் நாற்பது நூறாயிரம் (40,00,000) பொன்னும், தான் ஆள்வதிற் பாகமும் கொடுத்துப் பெருமைப்படுத்தினான். இவன் இமயவரம்பன் மகன். இப்பத்துப் பாட்டும் 178 அடிகளே. ஓர் அடியின் விலை ரூ. 22, 528 ஆகிறது. வருவாயுள் பாகம் வேறு! இவனது கொடைக் குணத்தின் பொருளே நமக்கு விளங்கவில்லை. தன் மீது எட்டாம் பத்தைப் பாடிய அரிசில் கிழார் என்னும் புலவர் பெருமானுக்கு, பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் கொடுத்த பரிசிலை நினைக்கின் நெஞ்சம் திடுக்கிடுகிறது. அப்பரிசின் தொகை என்ன? அது தொகையற்ற பரிசில்! 181 அடிகளே உடைய அப்பத்துப் பாட்டுக்கும் தன் அரசையே கொடுத்தான் அச்சேரல். அரசு என்றால் நாடு, நகர், வீடு, பொருள் எல்லாம் கொடுத்ததாகத்தானே பொருள்? இவனே முறுகிய தமிழ்ப் பற்றினால், அறியாது முரசுகட்டி லேறிய மோசி கீரனார் என்னும் புலவர் தூங்கியெழும் வரை கவரி வீசி, கவரி வீசிய காவலன் என்ற பெயர் பெற்றவன். அத்தகைய நிலையைத் தமிழ்நாடு இனியொருகால் அடைதலுங் கூடுமோ! இத்தகைய தமிழ்ப் பற்றுடைய சேரநாடு, இன்று மலையாள நாடு என வேறு பெயர் பெற்றதோடு, வேற்று மொழி நாடும் ஆகிவிட்டது. இனிப் பாண்டியர் தமிழ்ப் பற்றுக்கு முதல் இடைகடை என மூன்று சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்ததே சாலும். இம் முடியுடை மூவேந்தரும் இவ்வாறு புலவரைப் போற்றித் தமிழ் வளர்த்து வந்ததோடு, தாமும் தமிழ்ப் புலவர்களாகத் திகழ்ந்தனர். வாழ்க வண்புகழ் மூவர் தண் புகழ்!  6. நனி நாகரிகம் 1. நாகரிகம் காலத்துக் கேற்ற ஆடையணிகள் அணிந்து கொண்டு தெருவிடைச் செல்லும் நகரமக்களைக் கண்ட நாட்டுப்புற மக்கள், 'எவ்வளவு நாகரிகம் பாரு! என்ன இருந்தாலும், நகரம் நகரந்தான், நாட்டுப்புறம் நாட்டுப்புறந்தான்! உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?' எனத் தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்பதை அறியாது அந்நகர மக்களைப் புகழ்ந்து சென்றனர். அந் நகர மக்களோ, 'என்ன நாகரிகமற்ற பட்டிக்காடு; உடையையும் நடையையும் பாரு! காலம் போற போக்கே தெரியாதவர்கள். இத்தனை படக்காட்சிகள் வந்தும் இன்னுமா இப்படி இருப்பது?' என அந் நாட்டுப் புற நல்லார்களை இகழ்ந்த படி கேலிச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு சென்றனர். இதுதான் இன்றைய நாட்டு நடப்பு; நாகரிகப் போக்கு. நாகரிகம் என்பது காலப்போக்குக்கு ஏற்றவாறு ஆடை யணிகள் அணிவதும், உண்பதும், உறைவதுமேயாம் என்பது ஒரு சாரார் கருத்து; காலத்துக்கேற்ற கருத்து மாற்றமே, பழக்க வழக்கங்களின் மறுமலர்ச்சியே நாகரிகம் என்பது மற்றொரு சாரார் கருத்து. ஒரு காலத்தே நாகரிகம் என நன்கு போற்றப்பட்டு வந்தது. பின்னொரு காலத்தே நாகரிக மற்றதாகி விடுகிறது. இது இயற்கையின் போக்காகும். காலச் சூழலின் கருத்து மாற்றமாகும்; பழக்க வழக்கத்தின் பரிமாற்றமாகும். எனவே, இதுதான் சிறந்த நாகரிகம் என நாகரிக நல்வாழ்வை வரையறுத்துக் கூற முடியாது, காலப் போக்கே நாகரிகத்தின் நல்லியல்பைக் கணித்தறியும் கட்டளைக் கல்லாகும். காலப் போக்கென்னும் கட்டளைக் கல்லில் உரைத்துப் பார்த்தே நாகரிகம் என்னும் பொன்னின் மாற்றினை மதிப்பிட முடியும். இது நாகரிகம், இது நாகரிகம் அன்று எனத் தீர்ப்புக் கூறும் ஆற்றல் காலப்போக்குக்கே உண்டு. முன்னெல்லாம் ஊர்ப்பொதுவில் பணம் வாங்கிக் கொண்டு கூத்தாடுவார்கள். அக்கூத்துத் தெருவில் போடப் பட்ட சிறு பந்தலில் நடக்கும். அது இன்று திறந்த வெளி அரங்கு எனப்படு கிறது. தெருவில் ஆடுவதால் அக்கூத்துத் தெருக்கூத்து எனப்படும். பழங்காலத்தே அது பொதுவியற் கூத்து எனப் போற்றப் பட்டு வந்தது. வள்ளுவரும், 'கூத்தாட்ட வைக் குழாம்' என்கின்றார். ஆனால், அக்கூத்து இன்று நாகரிகமற்றதாகக் கருதப்படுகிறது. இது காலத்தின் போக்கு. காலப்போக்கென்னும் பாவியே தமிழ் இசை, நாடகங்களை யெல்லாம் கொன்று விட்டான். நாற்பதாண்டுகளுக்கு முன்னெல்லாம் மைசூர்க் கூத்தாடிகள் தமிழ் நாட்டில் வந்து கூத்தாடுவார்கள். அக் கன்னடியர் தமிழை ஒருவாறு கொச்சையாகப் பேசிப் பாடி ஆடுவார்கள். பெரும் பாலும் அரிச்சந்திர நாடகந்தான் ஆடுவார்கள். புதிதாக ஒரு நடிகர் வரும்போது, இருவர் வேட்டியால் திரையைப் பிடித்துக் கொள்வர்; நடிகர் திரைக்குள் இருந்து பாடுவார். அவர் பாடுவதைப் பலர் தொடர்ந்து பாடுவர். அவர்க்குப் பின் பாட்டுக்காரர் என்பது பெயர். இவ்வாறு பாடுதல் பண்டு 'வாரம் பாடுதல்' (சிலப்: 6 - 19) என வழங்கிற்று. அந்நடிகர், திரையைத் தாழ்த்தித் தாழ்த்திக் கூட்டத்தினர்க்கு முகத்தைக் காட்டிக் காட்டிப் பாடிக்கொண்டே திடீரென்று திரையை நீக்கிக் கொண்டு ஆடாடென்று ஆடுவர். பின்பாட்டுக்காரர் பாடுவர். இதோ ஒரு காட்சி; அரிச்சந்திரன், சந்திரமதி, லோகிதாசன் ஆகிய மூவரும் திரைக்குப்பின், காரிக் கருக்கானி மின்னுரு மின்னுரு மாரிப் பரக்கானி ரொங்குரு ரொங்குரு ராசாதி ராசெ வந்திச்சு சந்திரமதிப் பொம்மெ வந்திச்சு லோகிதாசக் குட்டி வந்திச்சு - காரிக் எனப் பாடுவர். கூட்டம் கொல்லென்று சிரிக்கும். காதில் கடுக்கன் மின்னுது மின்னுது, மார்பில் பதக்கம் தொங்குது தொங்குது என்னும் தமிழ்தான் கன்னடியரிடம் அந்தப் பாடு படுகிறது! இது அக்கால நாகரிகம். இன்று நாடக உலகம் எத்துணை மாறுபாட்டினை அடைந்துள்ளது என்பதை நோக்கினால், நாகரிகம் இன்னவென்பது தெற்றென விளங்கும். காலில் வீரக்கழலும், கையில் மணிப் பொன் காப்பும், தோளில் வாகுவளையமும், மார்பில் பதக்கமும், முத்தாரமும், காதிற் கடுக்கும், மேற்காதில்முறுகும், ஒரு காலில் வெள்ளிக் காரையும் அணிதல் ஒரு காலத்தே ஆடவரின் நாகரிகமாகக் கொள்ளப்பட்டது. ஆறுமுழ வேட்டியைக் கோவணம் போட்டு உடுத்து, அவ் வேட்டிக்கு மேல், குறுமத்தங்காய் போன்ற அரை மூடிக் காயோடு கூடிய வெள்ளி அரை ஞாணைப் போட்டு, தலையில் பெரிய உருமாலைக் கட்டி, தோளில் ஒரு நீண்ட துண்டைப் போட்டுக் கொள்வது பெரிய வர்களின் நாகரிகமாகக் கருதப்பட்டது. அன்று சட்டை போடுவது மிகமிக அரிது. வேட்டியுந் துண்டுந்தான் ஆடவரின் பொதுவான உடை. மேல் துண்டு ஆடவரிடத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டது. பெரும்பாலும் அதன் தொழிலைக் கைக்குட்டை கவர்ந்து கொண்டது. தலைக்குத் துண்டு கட்டும் பழக்கம் பெரும்பாலும் ஒழிந்துவிட்டது. இன்று சட்டை போடாதது நாகரிகமற்ற தாகிவிட்டது, கால்வழிய வேட்டி, அரையுடை (நிக்கர்), மெய்யுறை (பனியன்), சட்டை, கைக்குட்டை என்பவை இன்று ஆடவரின் உடை நாகரிகம். கழுத்தில் மலர் மாலை யணிந்துகொள்வதும், குடுமியில் மலர்மாலையைச் சுற்றிக் கொள்வதும் முன்பு ஆண்களின் நாகரிகமாகக் கொள்ளப்பட்டது. சேர சோழ பாண்டியர் முறையே பனைமாலை, ஆத்திமாலை, வேப்பமாலையை அடையாள மாலையாகக் கொண்டிருந்ததும், வீரர்கள் வெட்சி, தும்பை முதலிய திணைப் பூக்களைச் சூடிவந்ததும் மாலையணிதல் பண்டைய நாகரிக மென்பதைப் பெற வைக்கும். இன்று தலைவர்களுக்கு அணியும் மாலையைக் கழுத்தில் போட்டதும் எடுக்காவிட்டால் நாகரிகமற்றதாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தே முடியும் மீசையும் தாடியும் வளர்ப்பது ஆடவரின் நாகரிகமாகக் கொள்ளப்பட்டது. புராணங்களிற் கூறப்படும் முனிவர்கள் என்போர் இவ்வாறுதான் இருந்து வந்ததாகத் தெரிகிறது. மற்றொரு காலத்தே குடுமியும் முறுக்கு மீசையும் நாகரிகக் குறியாகக் கொள்ளப்பட்டன. (குஞ்சி என்பது - தலைமயிரைப் பிடரிவரை விட்டு நறுக்கிக் கொள்ளுதல் - பாகவதர்கள் போல) பழைய அரசர்களும் போர்வீரர்களும் பெரும்பாலும் குஞ்சிதான் வைத்திருந்தனர். காரணம் பகைவர் பின்னால் வந்து வாளால் வெட்டினால் அது தடுத்து விடும். மயிரில் வாள் பாயாது; அதற்காகவே அவ்வாறு நறுக்கிக் கொண்டிருந்தனர். 'குஞ்சியழகும்' என்பது நாலடியார் காலத்து நாகரிகம். இன்றோ, 'வாலுப் போச்சுக் கத்தி வந்தது டும் டும்' என்பது போல, மீசை போய்க் குறுங் குஞ்சியும் (கிராப்), மழித்த முகமும் நாகரிகமாகி விட்டன. 'மழித்தலும் நீட்டலும்' (குறள்) என்பதால், மயிரைச் சிரைத்துக் கொள்ளுதல் வள்ளுவர் காலத்த நாகரிகமாகும். குஞ்சியைக் குறுகலாக வெட்டிக் கொள்வது குறுங்குஞ்சி. எனவே, இதுவே மேனாட்டு நாகரிகப் போலியன்று. தமிழர் பழைய நாகரிகமேயாகும். முன்னர் ஆண்கள் பத்துப் பன்னிரண்டாண்டு வரை மகளிர் போல முடிவைத்துக் கொண்டிருந்து அதன் பின்னர்ச் சிரைத்துக் குடுமி வைத்துக் கொள்வது வழக்கம். தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன் பன்னி ரண்டாண்டுக்கு மேல் முடித்தலையுடன் இருந்து, பின் குடுமி வைத்துக் கொண்டு போருக்குப் புறப்பட்டதாகப் புறநானூறு (77) கூறுகிறது. முப்பதாண்டுகட்கு முன் வரை குடுமி ஆண்களின் அடையாளமாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் இன்று அது 'சிண்டு' எனப் பழிக்கப்படுகிறது. சிண்டு போய்ச் சீப்புக் கண்ணாடி வந்தன. இவ்வளவும் ஆடவர் நாகரிக மாற்றம். இன்னும் என்னென்ன மாறுபட இருக்கின்றனவோ! 2. மகளிர் நாகரிகம் தமிழ் நூல்கள் மகளிர் காதுகளுக்கு வள்ளை இலையை உவமை கூறுகின்றன. அவ்விலை நீண்ட வளையம் போல் இருக்கும். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எனப் பெண்கள் பருவம் எழு வகைப்படும். 8 முதல் 11 ஆண்டு வரையுள்ள நாலாண்டுகளும் பெதும்பைப் பருவகாலமாகும். சிறுமியர் முன்பெல்லாம் இப் பருவம் தொடங்கும் வரை மயிர்த் தலையுடன் இருப்பர். எட்டொன்பதாண்டானதும் காது குத்தி பஞ்சு போட்டுப் போட்டுக் காதின் துளையைப் பெரிதாக்குவர். குறவன் அல்லது குறத்திதான் பஞ்சு போடுவது வழக்கம். ஒரு மாதத்திற்கு மேல் நாடோறும் பஞ்சு போடுவர். பஞ்சை ஒவ்வொரு நாளும் பெரிது பண்ணிக் கொண்டே போவர். துளை பெரிதாகிப் புண் ஆறின பிறகு வறண்ட சோளத் தண்டுகளை ஒன்று சேர்த்துக் கசக்கிச் சிறிதாக்கிப் போட்டுத் தண்ணீர் விடுவர். அத்தண்டு உதித்துப் பெரிதாகும். அத்தண்டு தக்கை அல்லது குதம்பை எனப்படும். குதம்பையணிந்த பெண்ணும் குதம்பை எனப்படுவாள். மாங்காய்ப்பால் உண்டு மலைமே லிருப்போர்க்குத் தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய் தேங்காய்ப்பால் ஏதுக்கடி. என, இப்பருவப் பெண்ணை விளித்து முன்னிலை யாக்கிப் பாடியதனாற்றான் அச் சித்தருக்குக் குதம்பைச் சித்தர் எனப் பெயர் ஏற்பட்டது. எவ்வளவு பெரியகுதம்பை கோட முடியுமோ அவ்வளவு பெரிய குதம்பைப் போட்டுத் துளையைப் பெருக்கித் துளை பெரிதான பிறகு, ஈயத்தால் உருண்டையாக வளையம் போல் செய்யப்பட்ட இரண்டு மூன்று குணுக்குகளைப் போடுவர். அவை கீழே இழுத்துக் காதை நீட்டி வள்ளை இலைபோலச் செய்யும். காதுகள் தோளைத் தொடும்படி நீளும். காது குத்தும் போது ஆண்களுக்குப் போல அப் பெதும்பையர்க்குத் தலை மயிரைச் சுற்றிலும் சிரைத்துக் குடுமி வைப்பர்; குணுக்குப் போட்ட பின் மயிர் வளர்த்துச் சடையோ கொண்டையோ போடுவர். பெதும்பைப் பருவம் தாண்டி மங்கைப் பருவம் வரும்வரை குணுக்குப் போட்டிருப்பர்; பின் காது நகை போடுவர். முடுச்சு, நாகபடம், பூச்சிக் கூடு என்னும் காது நகைகள் அன்று அணிந்து வந்தனர். நடக்கும் போது அந்நகையணிந்த காதுகள் முன்னும் பின்னும் ஆடுவதற்குப் பொன்னூசல் ஆடுதலை உவமை கூறியுள்ளனர் புலவர்கள். செங்குட்டு வனால் செய்யப் பட்ட கண்ணகி சிலைபோல இலங்கைக் கயவாகு மன்னன் செய்த சிலையொன்று வெள்ளையரால் கொண்டு போகப்பட்டு இலண்டன் பொருட்காட்சியில் வைக்கப் பட்டுள்ளது. அச்சிலையின் காதுகள் வள்ளை இலைபோல் நீண்டுள்ளன. 'சேரன்செங்குட்டுவன்' என்னும் நூலில் அப்படம் உள்ளது. இன்றும் மதுரை திருநெல்வேலிப் பகுதியில் அத்தகைய காது களையுடைய பெண்கள் இருப்பதும் இதற்குச் சான்றாகும். ஆனால், குதம்பை போட்டுக் குணுக்குப் போட்டு இலக்கியச் சிறப்புப் பெறும்படி வளர்த்த அக்காதுகள் இன்று நாகரிக மற்றவையாகி விட்டன. அத்தகைய காதுகளை யுடைய மகளிர் இன்று அக்காதுகளை வெட்டிக் குறுகலாக ஒட்டவைத்துத் தோடு போட்டுக் கொள்கின்றனர். மகளிர் காதுக்குவமையாகக் கூறும் சிறப்புப் பெற்றிருந்த வள்ளையிலை இன்று மதிப்பிழந்து விட்டது. இக்காலப் பொற் கொல்லருக்கு அந்தக் காது நகைகள் செய்யவே தெரியாது. மேலும், அன்று மேற்காது குத்தி அதிர் சேகண்டி போன்ற கொப்புப் போட்டுக் கொள்வர். அது காதுக்குள் காற்றுப் புகாது மறைத்துக் கொள்ளும். பின்னர் அது பூவரசம்பூக் கொப்பாகி இன்று ஒழிந்து விட்டது. கொப்புக்காது குத்தும் வழக்கமே நின்றுவிட்டது. அல்லைக் காது குத்திக் கிராம்புத் தளுக்கும், முருந்துக்காது குத்தி மொட்டுத்தளுக்கும் போடுவதும் இன்று ஒழிந்து விட்டன. 'பணங்காசு கூடவா வருகிறது? செத்தாக்கூட வருவது இது தானே?' என்று பெண்கள் உடம்பில் பச்சைக் குத்திக் கொள்வதை நாகரிகமாகக் கருதினர் ஒருகாலத்தே. பெண் களுக்கு நாலைந் தாண்டானதும் நெற்றிப் பச்சை குத்துவார்கள். அது புருவத்தின் நடுவிலிருந்து நெற்றியில் தலைமயிர்வரை நேர்கோடு போல் இருக்கும். பின்னர் நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் பொட்டுப்போல் குத்தி வந்தனர். செக்கச் செவேலென்ற உடம்பைப் பச்சைப் பசேலென்று செய்வது அழகுக்கழகு செய்யும் நாகரிகமாகக் கருதப்பட்டது. செந்நிற முடையவர்களே உடல் முழுவதும் பச்சைக் குத்தி உடம்பைப் பச்சை நிறமாக்கிக் கொள்வர். சிலர் கை கால்களில் சிறு சொட்டை கூட இல்லாமல் குத்திக் கொள்வர். சரம், வங்கி, தெப்பக்குளம், மீன், கிளி, யானை, சிங்கம், கங்கணம், மோதிரம் என அந்தந்த இடங்களுக் கேற்ற பச்சை குத்தி வந்தனர். ஐந்தாறாண்டிலிருந்து முப்பத்தைந் தாண்டு வரை அப்பச்சை குத்தி முடிப்பர். எல்லாப் பெண்களும் கட்டாயம் நெற்றிப் பச்சை குத்திக் கொள்வார்கள். அது பேதைப் பருவத்திலே குத்துவர். இதுவே பச்சை குத்துகிற பருவமெனப் படும். இன்றும் திருச்சி மாவட்டத்தில் துறையூர் முதலிய வட்டங் களிலுள்ள வேளாள வகுப்பு ஆடவர் நெற்றிப் பச்சைக் குத்திக் கொள்கின்றனர். முன்பெல்லாம் தெருக்கூத்து அல்லது நாடகத்தில் பச்சைக் காரி வருதல் ஒரு பாகம். இன்று பச்சை குத்துதல் நாகரிகமற்ற தாகிவிட்டது. பச்சைக்காரர் என்னும் ஒரு கூட்டத்தினரே இன்று வேலையில்லாத் திண்டாட்டத்திற் குள்ளாகி விட்டனர். முன்பு மஞ்சட் பூசிக் கொள்ளுதல் மகளிர்க்கு மங்கல மாகக் கருதப்பட்டு வந்தது. கணவனை யிழந்த கைம்மைகள் மங்கல மிழந்ததற்கு அறிகுறியாக மஞ்சட் பூசிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், இன்றோ மஞ்சட் பூசுதல் நாகரிகமற்ற தாகிவிட்டது. 'மஞ்சள் அழகும் அழகல்ல' என்ற நாலடியார் வாக்கை இன்று மகளிர் உண்மையாக்கி விட்டனர். "மஞ்சள் பூசும் முகத்தை மறைத்ததே சோப்புக் கற்றை" என்று இரங்கிப் பாடும் நிலையை அடைந்துவிட்டது இன்று மகளிர் மஞ்சள். கோவலனைக் கொல்வித்து, பாண்டியன் நெடுஞ் செழியனை உயிர்விட்டுத் தமிழர் செங்கோன்மையை உலகறியச் செய்யும்படி செய்து, பாண்டியன் கோப்பெருந் தேவியை உடனுயிர் நீத்துத் தலையன்பிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும்படி செய்து, கொன்று, செங்குட்டு வனால் தமிழைப் பழித்த கனகவிசயரை வென்று இமயத்தி லிருந்து கற்கொணர்ந்து கண்ணகிக்குச் சிலை செய்து கோவில் எடுத்து வழிபாடும் செய்யும்படி செய்து, பத்தினிப் பெண்டிரின் பெருமையை உலகறியச் செய்து, மணிமேகலை என்னும் இளமங்கையைத் துறவு பூணச் செய்து, காஞ்சனன் என்னும் கந்தருவனைக் கொண்டு உதய குமரன் என்னும் சோழ இளவரசனைக் கொன்று சிலப்பதிகாரம் மணிமேகலை என்னும் இரு செந்தமிழ்க் காப்பியங்களைத் தமிழர்க்குத் தந்து, இலக்கியத்தின் பெயரொடு சிறப்புற்ற சிலம்பு எனக்கேன் அத்தனை தொல்லை என்று, இன்று மகளிர் காலை விட்டே விடைபெற்றுக் கொண்டுவிட்டதல்லவா? பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம், குறங்கு செறி, முத்தரை, கண்டிகை, தோள்வளை, சூடகம், மத்தகமணி, பொன்வளை, அரியகம், வால்வளை, பவழப்பல்வளை, வாளைப் பகுவாய், பீலி, நெளி, மாணிக்கபீடம், தாள்செறி, வீரச்சங்கிலி, நுண்டொடர், பூண் ஞாண், சவடி, சரப்பளி, சந்திரபாணி, கடிப்பிணை, தெய்வவுத்தி, வலம்புரி, தொய்யகம், புல்லகம், (சிலப் 6: 84 - 107) முதலிய மாதவி யணிந்த அணிகளை இன்று எந்த மகளிர் அணிகின்றனர்? இல்லை யாருக்கு இவை அணியும் இடங்கள் தெரியும்? இன்றும் கூறிக்கொண்டே போகலாம் நாகரிக மாற்றத்தினை? உண்பதினும் உடுப்பதினும் பூண்பதினும் பூசுவதினும் இன்னும் எத்தனையெத்தனையோ காலத்துக்கேற்ற மாறு பாடுகள்! நாகரிகம் என்பது சகடக்கால்! அது மாறி மாறி வந்துகொண்டேதான் இருக்கும். இவ்வுண்மை யறியார், 'இன்று தமிழ் மக்கள் மேற்கொண்டுள்ள நாகரிகம் மேனாட்டார் நாகரிகம். இத்தகைய நாகரிக நல்வாழ்வு தமிழ் மக்கள் ஒரு காலத்தும் வாழ்ந்ததில்லை'என வாயும் மனமும் கூசாது கூறுகின்றனர். பழந்தமிழர் வாழ்க்கை முறையினை, நாகரிக நல்வாழ்வினை, நனி நாகரிகத்தை அறியாது கூறும் அவர் தம் பொய்க் கூற்றை என்னென்பது! பழங்காலத் தமிழ்மகளிரின் நாகரிக நல்வாழ்வைப் பாருங்கள்! எது நாகரிகம், எது போலி நாகரிகம் என்பது வெளிப்படும். 3. மேனியும் கூந்தலும் உடலின் இயற்கை யழகினை மிகுதிப்படுத்திக் கொள்வது மகளிரின் இயற்கைக் குணமாகும். இது அவர்கட்கே யுரிய தனிப் பண்பு எனவுங் கூறலாம். உடலின் இயற்கை யழகை, பளபளப்பைக் கெடுப்பது உடலில் விழும் திரைகளேயாகும். உடம்பின் மேல் திரை விழாமல், உடற்றோல் சுருங்காமல் இருக்கும்படி செய்ய அறிந்து கொள்வது நாகரிக நல்வாழ்வாகும். பழந்தமிழர் மகளிர் இதனை நன்கு அறிந்திருந்தனர். உடலின் மேற்றோல் முறுக்கமாக இருந்தால் சுருக்கம் விழாது. தோலை முறுக்கி இழுத்துப் பிடிக்கும் ஆற்றல் துவர்ப்புக்கு உண்டு இவ்வுண்மையைப் பழக்கத்தில் அவர்கள் அறிந்திருந்தனர். பாக்கு முதலிய துவர்ப்பான பொருள்களை வாயில் போட்டால் அவை ஊறினதும் நாக்கு மந்தமாகி விடுகிறதல்லவா? எளிதில் இனிமையாகப் பேச முடிவதில்லை யல்லவா? அவ்வாறே ஏன் உடம்பின்மேல் உள்ள தோலும் ஆகாது? எனப் பயன்படுத்தி ஆராய்ந்து கண்டதாகும் இவ்வுண்மை அஃதென்ன? கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், நாவல், அத்தி, இத்தி (இச்சி), ஆல், அரசுப்பட்டைகள், முத்தக்காசு, மாந்தளிர் என்னும் பொருள்கள் துவர்ப்புடையவையாகும். இவை பத்துத் துவர் எனப்படும். இவற்றை ஒரு பெரிய கொப்பறையில் ஊற வைப்பர். அவை ஊறிய நீரில் மூழ்கிக் கொஞ்சநேரம் கழித்து நீராடுவர். அதனால், தோல் முறுக்கேறி மேனி பள பளப்பாகத் திகழும். அன்னார் அஃதோடு அமையவில்லை, உடல் மினு மினுப்பாக இருந்தால் மட்டும் போதுமா? கெட்ட நாற்றமின்றி நறுமணங் கமழ வேண்டுமல்லவா? அவ்வாறு மேனி மணக்க வேண்டுமென்று விரும்பினர். அவ்வாறு விரும்புவது அவர்க்கு இயற்கைதானே? மணத்தை விரும்புங் குணம் இயல்பாகவே மகளிர்க்கு அமைந்ததோர் அருங்குணமல்லவா? இது பற்றியே யன்றோ மகளிர் நறுமண மலர்களைச் சூடிக் கொள்வதும், சாந்து, புனுகு முதலிய மணப் பொருள்களைப் பூசிக் கொள்வதும், அப்பத்துத் துவரோடு ஐந்து விரையையும், முப்பத்திரு வகை ஓமாலிகையையும் கலந்து ஊறவைப்பர். அவ்வாறு அந்நாற்பத்தேழு பொருள்களும் ஊறிய நன்நீரிலே அவர்கள் முழுகி வந்தனர். பத்துத் துவரினும், ஐந்து விரையினும், முப்பத் திருவகை ஓமா லிகையினும் ஊறிய நன்னீர் உரைத்தநெய் வாசம் நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டி. - (சிலப். 6. 76 - 9) என்பது இளங்கோவடிகள் வாக்கு. கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம் என்பது ஐந்து விரையாகும். விரை - மணம், "கடலிடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது கருமமன்று" என்னும் கம்பர் வாக்கால், கோட்டம் முதலிய ஐந்தும் அத்தகைய அருமையான நறுமணப் பொருள்கள் என்பதும், கம்பர் காலத்தும் (கி. பி. 13 ஆம் நூற்றாண்டு) தமிழ் மகளிர் அவற்றைப் பயன்படுத்தி வந்தனர் என்பதும் விளங்குகிறது. முப்பத்திருவகை ஓமாலிகையாவன: இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம், நாகணம், கோட்டம், நாகம், அதாவரிசி, தக்கோலம், நன்னாரி, வெண்கோட்டம், கத்தூரி, இலாமிச்சம், கண்டில், வெண்ணெய், கடுக்காய்ப்பூ, நெல்லிப்பூ, தான்றிப் பூ, துத்தம், வண்ணக் கச்சோலம், அரேணுகம், ஆஞ்சி, சயிலேகம், புனுகு, புன்னைத்தாது, புலியுகிர், பூஞ்சாளம், தமாலம், வகுளம், பதுமுகம், நுண்ணேலம், கொடுவேரி என்பன. இவை எத்தகைய கண்டுபிடிப்புகள்! இன்றும் கத்தூரி மஞ்சள், பூலாங் கிழங்கு, பச்சிலை முதலியவற்றை அரைத்துத் தேய்த்துக் குழந்தைகளுக்குக் குளிப்பாட்டுவதுண்டு. இவ்வாறு பத்துத் துவரும் ஐந்து விரையும் முப்பத்திரு ஓமாலிகையும் ஊறிய நீரில் மூழ்கிப் பின் நறுமணக் கலவை தேய்த்து நன்னீரில் குளிப்பர் என்பது, "விதியாற்றான் ஆக்கிய மெய்க் கலவைபோல்" என்னும் பரிபாடலால் (7 : 20) தெரிகிறது. இதனாற்றான் அக்காலத் தமிழ் மகளிரின் மேனி மினு மினுப்பாக இருந்ததோடு, நறுமண முடையதாகவும் இருந்தது போலும்! யோசனை கமழும் வாச மேனியர். - (பரிபாடல் - 12: 25) முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம். - (குறள் - 1113) வெறிநாற்றம் - நறுமணம். அனுமன் சீதையைத் தேடிக் கொண்டு இலங்கை மகளிர் இருந்த அந்தப்புரம் சென்றானாம். பூங்காவுக்குட் புக்கதுபோல் இயற்கை மணம் கமழ்ந்ததாம். - கம்பர். நறுமணப் பொருள்கள் பல கலந்தரைத்த சிவந்த கலவையைப் பூசி ஒருத்தி ஆற்றில் நீராடினாள். அதனால் அந்த ஆற்றுநீர் செந்நீரானது. ஆற்றிலுள்ள வெண்டாமரை செந்தாமரை மலரானது. மடையிலிருந்த கொடிகளெல்லாம் பவழக் கொடிகளாயின என்கிறார் ஒரு புலவர். இது உயர்வு நவிற்சியாய் இருந்தாலும் மகளிர் நறுமணக் கலவை தேய்த்துக் குளித்தனர் என்னும் உண்மை பெறப்படுகிற தல்லவா? அம் மகளிர் இவ்வாறு நீராடும்போது தலைக்கு நறுமண எண்ணெய் (தைலம்) தேய்த்துக் குளிப்பர். மயிர் நீளமாக வளர்வதற்காகவே அந்நறுநெய் தேய்த்துக் குளிப்பர். பெண்களுக்குத் தனியழகைத் தருவது தலைமயிரே. நீளமான மயிரை விரும்பாத பெண்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மிக நீண்ட மயிரைப் பெண்கள் மிகவும் விரும்புகின்றனர் என்பது. அல்லார் தலைமயிரும் ஐந்துமுழம் ஆறுமுழம் ஆரணங்கு கூந்தலதோ அறுபத்து நான்குமுழம். - (அல்லியரசாணி மாலை.) என்னும் புகழேந்திப் புலவர் வாக்கால் விளங்கும். இது, எவ்வளவு நீளமயிர் இருந்தாலும் பெண்கள் போதுமென்று அமையாத விருப்பமுடையவர் என்பதைக் குறிப்பதாகும். மயிர் கொஞ்சமாக உள்ளவர் சில்லோதி எனவும், மயிர் அடர்ந்து நீண்டுள்ளவர் பல்லோதி எனவும் பிரித்து அழைக்கப் பட்டு வந்தனரென்றால், மயிர்க்கு அக்கால மகளிர் கொடுத்த மதிப்புச் சொல்லுந் தரத்ததாமோ? ஓதி - மயிர். மேலும் மயிர் நீண்டு சுருண்டிருக்க வேண்டுமாம். நீண்டு சுருண்ட மயிரையடைவர் சுரிகுழல் என அழைக்கப்பட்டனர். சுரிதல் - சுருளுதல். சுரிகுழல் - சுருண்ட குழலையுடையவள், குழல் - மயிர். மயிர் இவ்வாறு நீண்டு சுருண்டிருப்பதோடு முடிந்தால், சடைபின்னினால் பெரிதாகவும் இருக்க வேண்டுமல்லவா? மயிர் மொறுமொறென்று இருந்தால் தான் முடிந்தால் பொது பொதென்று பெரிதாக இருக்கும். அவ்வாறு பெரிதாக மட்டும் இருந்தால் போதுமா? நறுமணங் கமழ வேண்டாமா? இதற்காகவே, நீராடியபின், புனுகுநெய் தேய்த்துக் கூந்தலை உலர்த்தி, அதன்பின் கூந்தலுக்கு அகிற் புகை யூட்டி, மொறு மொறென்று நறுமணங் கமழும்படி செய்வர். மாடிமீதிருந்து மகளிர் கூந்தலுக் கூட்டும் அகிற் புகை மேலே சென்று முகிலொடு கலத்தலால், மழை பெய்யும்போ தெல்லாம் அகில் மணங்கமழும் என்கின்றார் புகழேந்தியார். அந்த அழகான கருத்துடைய பாட்டைப் பாடஞ்செய்து கொள்ளுங்கள். இதோ அப்பாட்டு: நின்றுபுயல் வானம் பொழிந்த நெடுந்தாரை என்றும் அகில்கமழும் என்பரால் - தென்றல் அலர்த்தும் கொடிமாடத் தாயிழையார் ஐம்பால் புலர்த்தும் புகைவான் புகுந்து. - (நள வெண்பா- 13.) புயல் - மேகம். வானம் நின்று - வானத்திலிருந்து. ஐம்பால் - கூந்தல். முதலில் புனுகுநெய் தேய்த்து அகிற்புகை யூட்டினர். அகிற்புகை யூட்டியதனால் நறுமணம் குறைந்துவிடு மல்லவா? அவ்வாறு எண்ணிய அம்மகளிர், அகிற்புகை யூட்டிய பின்னர்க் கத்தூரிக் குழம்பினைத் தடவி நறுமணங் கமழச் செய்வர். புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி. - (சிலப்: 6: 80 - 1) மான்மதம் - கத்தூரி. சேறு - குழம்பு. பழந்தமிழ் மகளிர் கூந்தலழகுக்காக எடுத்துகொண்ட முயற்சியை நோக்கினால், இன்றைய மகளிர் நாணத்தினால் தலைகுனிய வேண்டும்போ லன்றோவுள்ளது? நறுநெய் தேய்த்துக் குளிக்கிறார்கள். பின்பு புனுகு நெய் பூசுகிறார்கள்; பின் அகிற் புகை ஊட்டுகிறார்கள்; மேலும் கத்தூரிக் குழம்பைத் தடவுகிறார்கள். அம்மம்ம! எத்தகைய அரும்பெரு முயற்சி! 4. அழகுக் கலை மேனாட்டு மகளிர்தாம் அழகுக்கலையில் தேர்ச்சி பெற்ற வர்கள். தமிழ் மகளிர் அழகுக் கலையொன்றும் அறியாதவர்கள். இன்று தமிழ் மகளிர் மேற்கொண்டுள்ள அழகுச் செயல்கள் மேனாட்டு மகளிரைப் பார்த்துச் செய்வனவேயாம். எனவே, மேனாட்டினரின் நாகரிகப் போலிதான் தமிழர் நாகரிகம் என்று கூறுவது அறியாமைக் கூற்றேயாம் என்பது, மேல் எடுத்துக் காட்டியவறறால் விளங்குகிற தல்லவா? தங்கள் முன்னோரின் அத்தகைய நனிமிகு நாகரிக நிலையை அறியும் நிலையில், அறிந்தின்புறும் நிலையில் இன்றைய தமிழ்ப் பெண்மணிகளிற் பெரும்பாலோர் இல்லையே என்பதுதான் வருந்தத் தக்கது. இன்று தமிழ்ப் பெண்கள் இதழுக்குச் செஞ்சாயம் பூசுவது மேனாட்டு நாகரிகப் போலியாகக் கருதப்படுகிறது. அவ்வாறே கூறவும் அஞ்சுவதில்லை. அவ்வாறு கருதுவதும் கூறுவதும் தவறு. அவர்கள் நாகரிகந்தான் போலி. அதுவும் தமிழர் நாகரிகத்தின் போலி. பழந்தமிழர் மகளிர் இதழுக்கும், கைகால் நகங்களுக்கும் செஞ்சாயம் பூசித்திகழ்ந்தனர். இச்செஞ்சாயம், பஞ்சால் தோய்த்துப் பூசியதால் செம்பஞ்சு, செம்பஞ்சுக் குழம்பு எனப் பெயர் பெற்றது. இச்செம்பஞ்சுக் குழம்பை மருதோன்றி இலையை அரைத்துச் செய்தனர். மருதோன்றி நோயணுகாமல் தடுக்கும் ஒரு மருந்துப் பொருளாகும். அது பற்றியே அதனால் செய்தனர் போலும். அச்செம்பஞ்சுக் குழம்பை உள்ளங்கைக்கும் பூசிக்கொள்வர். அதனால் செக்கச் செவேலென்றிருந்த அவ் வங்கைக்கே செங்காந்தட் பூவை உவமை கூறினார் புலவர். கன்னத்துக்கும் பூசுவர் அச் செம்பஞ்சை. உகிரும் கொடிறும் உண்டசெம் பஞ்சியும்.. - (பரிபாடல் - 6: 17.) உகிர் - நகம். கொடிறு - கன்னம். இதழ், கன்னம், கை, கால், நகங்கள், உள்ளங்கை ஆகியவற்றுக்கெல்லாம் செம்பஞ்சு பூசி, இதழுக்குப் பவழமும் கோவைப்பழமும், கன்னத்திற்குச் செந்தாமரை மலரும், உள்ளங்கைக்குச் செங்காந்தள் மலரும், நகங்களுக்குக் கிளிமூக்கும் பவழமும் உவமையாகும்படி விளங்கினர் அக்காலத் தமிழ் மகளிர். இன்று தமிழ் மகளிர் பூசும் முகப்பூச்சும் மேனாட்டினர் நாகரிகப் போலி என்கின்றனர். இல்லை. அது தமிழ் நாகரிகப் போலியேயாகும். முகத்துக்குப் பூசும் பொடி - பொற்சுண்ணம், சுண்ணம் எனப்படும். "வண்ணமும் சுண்ணமும்" (சிலப்: 5. 13). இது பூசு சுண்ணம் எனவும் வழங்கும். சுண்ணம் - பொடி. பொற் சுண்ணம் - அழகிய பொடி. சுண்ணம் பூசிய முகத்திற்கு வெண்முழுமதி உவமை கூறப்பட்டுள்ளது. முகத்தின் வட்ட வடிவத்திற்கு வட்ட மதியும், பொற்சுண்ணப் பொலிவுக்கு மதியின் வெண்ணிலவும் உவமை. மணிவாசகர் திருவாசகத்தில் பொற் சுண்ணம் என்னும் பாடற்பகுதி யொன்றைப் பாடியுள்ளார். அது மகளிர் பொற் சுண்ணம் இடித்துக் கொண்டு பாடுவதுபோல் பாடப்பட்டதாகும். இனி, மேனாட்டினர் இன்றளவும் அறியாத அழகுக்கலை யொன்றைப் பழந்தமிழ் மக்கள் அறிந்திருந்தது, தமிழ் மக்களால், ஏன்? உலக மக்களால் அறிந்து இன்புறற் பால தொன்றாகும். அது தான் தொய்யில் என்னும் தோட்கோல மாகும். அதாவது மகளிர் நம் தோளிலும் மார்பிலும் நறும் பொருள் பல கலந்தரைத்த குங்குமச் சந்தனக் குழம்பினைக் கொண்டு மலர்க்கொடிகள், கரும்பு முதலியன போன்ற பல்வகைக் கோலங்கள் எழுதி அழகு செய்து கொள்வர். அத்தொய்யில் அழகுக் கழகு செய்வதொன்றாகும். பெரும் பாலும் கொடிவகைகளே எழுதுவதால் அது தொய்யிற் கொடி எனவும் வழங்கும். இது வள்ளி எனவும் வழங்கும். "வண்டே இழையே வள்ளி என்றா." (- தொல். களவு - 4.) என்பது தொல்காப்பியம். வள்ளி - தோளில் எழுதும் தொய்யிற் கொடி என்பர் நச்சினார்க்கினியர். கரும்பின் அணைமென்றோள். (- பரிபாடல் - 7 : 85.) தொய்யிற் கரும்பினை யுடைய பஞ்சணை போலும் மெல்லிய தோள். எல்லோரா, அசந்தாச் சிற்பங்களில் தொய்யில் செதுக்கப்பெற்றிருப்பது தமிழர் நாகரிகப் போலியே யாகும். ஐயாயிர ஆண்டுகட்கு முற்பட்ட நாகரிக மன்றோ இது? இத்தொய்யில் எழுதுவதில் மகளிரே யன்றி ஆடவரும் சிறந்த பயிற்சியுடையராய் இருந்து வந்தனர் என்பது வியத்தற் குரிய செய்தியொன்றாகுமன்றோ? தலைவன் தலைவிக்குத் தொய்யில் எழுதி அழகுபடுத்தும் வழக்கம் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே உண்டென்பது, "அணிநிலை உரைத்தல்" (கற் - 27) என்னும் தொல்காப்பியர் கூற்றால் தெரிகிறது. அணிநிலை யுரைத்தலாவது - தலைவிக்குத் தொய்யி லெழுதும் வகையினை கூத்தர் தலைவற்குக் கூறுதலாகும். இது எத்தகு நனிமிகு கழி நாகரிகம்! தொய்யில் எழுதும் அத்தொய்யிற் குழம்பு - வண்ணம் எனப் பெயர் பெறும். வண்ணம் - நிறமும் அழகும் செய்யும் பொருள் எனப்படும். இனி இன்று தமிழ் மகளிர் போடும் இரட்டைச் சடையும் அயலார் நாகரிகப் போலியன்று; பழந்தமிழ் மகளிர் கூந்தலை எவ்வெவ் வகையெல்லாம் முடிந்தால் முகத்திற்கு அழகு தருமோ அவ்வவ் வகையெல்லாம் முடிந்து அழகு செய்து கொண்டனர். பெண்கட்குக் கல்வியின் இன்றி யமையாமை பற்றிக் கூறவந்த சிறுபஞ்சமூல ஆசிரியர், 'மயிர் வனப்புங் கண் கவரும் மார்பின் வனப்பும்' (37) என, மயிர் மகளிர்க்கு அழகு தரக்கூடிய தொன்றென்கின்றார். கருங்குழல், மென்குழல், மெல்லோதி, சில்லோதி, பல்லிரு கூந்தல், சுரிகுழல், புரிகுழல், தாழ்குழல், நீள்குழல், தாழ்சடை, பின்னருங்குழல், சோர்குழல், சரிகுழல், மொய் குழல், விரிகருங் கூந்தல் எனப் பழந்தமிழ்ப் புலவர்கள் கூறும் இவ்வன்மொழித் தொகைப் பெயர்களெல்லாம் மகளிர்க்குக் கூந்தலழகின் இன்றி யமையாமைச் சிறப்பினைக் குறிக்க எழுந்தவையேயாம். மகளிர் மயிரைப் பலவகையாக முடிந்து அழகு செய்து கொண்டதில் முடி, கொண்டை, குழல், சுருள், பனிச்சை என்னும் ஐந்தும் சிறந்தவையாகும். இதனால், மகளிர் கூந்தல் - ஐம்பால் எனப் பெயர் பெற்றது. ஐம்பால் - ஐந்து வகையாக முடிக்கப்படும் மயிர். மற்ற எல்லா வகையும் இவ்வைந்தனுள் அடங்கும் போலும். பெண்டிரை ஐம்பாலர் என்பதும் இதனை வலியுறுத்தும். முடி - ஆண்கள் குடுமி முடிவதுபோல் நேராக முடிவது. கொண்டை - மயிரை முடிந்து வலப்புறமாவது இடப்புற மாவது செருகிக் கொள்வது. குழல் - பிடரிக்குங் கீழ் முடிந்து தொங்க விடுவது; நுனிமயிரை முடிந்து தொங்க விடுவதும் குழல் எனவே படும். இது கோடாலி முடிச்சு, கோடாலி என வழங்குகிறது. சுருள் - மயிரை இரண்டாக அள்ளிச் செருகிக் கொள்வது. பனிச்சை - சடை. சீவிச் சிணுக்கெடுத்துச் சிமிழ்போலக் கொண்டையிட்டார் வாரி மயிர்முடித்து வலப்புறத்தில் கொண்டையிட்டார் சுற்றி முடித்தகொண்டை சூரியனைப் போலிருக்கும். (- அல்லியரசாணிமாலை) என்பர் புகழேந்திப் புலவர். புரிகுழல் - முறுக்கிய மயிர். சுற்றிமுடித்த மயிர் சூரியன்போல் வட்டமாக இருக்கும் என்பதால், இன்று போல் மயிரை முறுக்கி வட்டமாகச் சுற்றி முடிந்து வந்தமை பெறப்படும். விரிகருங்கூந்தல், சோர்கூந்தல், சுரிகுழல் என்பன - அடிமயிரில் கட்டி மயிரை விரித்துப் போட்டிருந்தமை பெறப்படும். இன்றைய நனிநாகரிகர் எனப்படுவோர்க்குத் தெரியாத எத்தனையோ வகையில் முடிந்து அழகுடன் விளங்கினர் அக்காலத் தமிழ் மகளிர். ஈங்கு எடுத்துக்காட்டியவற்றால் தமிழர் நனி நாகரிகத்தின் தனிப்பெருமை இனிது விளங்கும். பழந்தமிழ் நாகரிகமே உலக மெல்லாம் பரவி, இன்று அயலார் நாகரிகம் என்னும் பெயரில் திரும்பி வந்து வழங்குகிறது. அழகுக் கலைகளே நாகரிகத்தின் சிறந்த உறுப்புக்களாகும். அழகுக் கலைகளில் பழந்தமிழ் மக்கள் மிகவும் தேர்ச்சி பெற்றுச் சிறந்து விளங்கினர். நாகரிகம் என்பது வண்டிச் சக்கரத்தின் ஆரக்கால் போன்றது. அடிக்கடி மாறும் இயல்புடையது. ஒரு காலத்தே நாகரிகம் எனப்பட்டது பின்னொரு காலத்தே நாகரிகமற்ற தாகிவிடும். மறுபடியும் அதுவே நாகரிகமாகக் காட்சியளிக்கும். காட்டாக மகளிர் முன்பு தலைமயிரை மூக்குக்கு நேராக வகிர்ந்து சீவி முடிந்து வந்தனர். சில ஆண்டுகளாக ஒரு பக்கமாக நேரெடுத்து வந்தார்கள். இப்போது 'பழைய குருடி கதவைத் திறடி' என்பது போலப் பழையபடி மூக்குக்கு நேராகவே நேரெடுத்து வருகின்றனர். முன்பு ஆடவர் வெண்கல வட்டிலில் உண்டு வந்தனர். அது நாகரிக மற்றதாகிப் பின் இலையில் உண்டு வந்தனர். மீண்டும் அந்த வட்டிலே உண்கல மாகிவிட்டது. பீங்கான் தட்டமாக இருந்து, இப்போது எவர்சில்வர்த் தட்டமாக மாறியிருக்கிறது. வெண்கலம், எவர்சில்வர் - பெயர்தான் வேறு. தமிழர் நாகரிகம் மிகப் பழமையானது. இன்றைய உலக நாகரிகங்கட் கெல்லாம் அடிப்படையானது. அதை உலகம் அறியாமையினால் தமிழினம் தாழ்வுற்றுக் கிடக்கின்றது. ஆகையால், பழந்தமிழராகிய நமது முன்னோர் நனி நாகரிகத்தை உலகறியச் செய்வது நமது தனிப்பெருங் கடமையாகும். வாழ்க தமிழர் நனிநாகரிகம்!