நூற்றாண்டு நினைவு வெளியீடு புலவர் குழந்தை படைப்புகள் - 7 கொங்கு நாட்டு வரலாறு அனைத்து நூல்களும் ஒருசேரத் தொகுத்து, பொருள் வழிப்பிரித்து, கால வரிசையில் ஒரே வீச்சில் வெளிவருகின்றன. ஆசிரியர் புலவர் குழந்தை நூற்பெயர் : புலவர் குழந்தை படைப்புகள் - 7 ஆசிரியர் : புலவர் குழந்தை பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 280 = 296 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 185/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906இல் தோன்றி 1973இல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர். தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் பட்ட அவலங்களை எண்ணியெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளை எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு பதிவுகளாக எழுதி வைத்துச் சென்றவர். தமிழ் இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி 1 முதல் 15 படைப்புகளாக ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய முத்து மாலை யாகத் தந்துள்ளோம். இவர் நூல்கள் அனைத்தும் தமிழ்மொழி இன நாட்டின் மேன்மைக்கும், வாழ்வுக்கும், வளத்துக்கும் வித்திடுபவை. குறிப்பாக இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிழ் மண்ணில் தன்மானக் கொள்கைகள் நிலைத்து நிற்பதற்கு செயற்கரிய செயல்களைத் தமிழ் இளைஞர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும் எனும் இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடு கின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்ற தமிழ்ப்பெரு மக்களுக்கும், இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும்புலவர் இரா. வடி வேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தமிழ் ஆய்வாளர் களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன் கொள்ளும் வகையில் பிழையற்ற பதிப்பக வெளிவருகின்றது. வாங்கிப் பயனடையுங்கள். (இராவண காவியம் நூலுக்கு மிகச்சிறந்த தெளிவுரை எழுதப்பட்டு வருவதால் இப்படைப்பு வரிசையில் சேர்க்க முடியவில்லை. விரைவில் வெளிவரும்.) கோ. இளவழகன் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்கள் கொங்கு நாட்டில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஓலவலசு’ என்னும் சிற்றூரில், பண்ணையக்காரர் என்னும் பழங்குடியில், முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையாருக்கு 1-7-1906இல் பிறந்தார். இவர்தம் பெற்றோருக்கு ஒரே மகனாக வளர்ந்தார். தாம் பிறந்த சிற்றூரில் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். தொடர்ந்து படிக்காமல் இடையிடையே விட்டு விட்டுப் படித்தார். மொத்தத்தில் எட்டு மாதங்களே திண்ணைப் பள்ளியில் பயின்றார். கருவிலே திருவுடையவராகிய இவர் பத்தாம் ஆண்டில் இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். யாரேனும் ஒருவர் ஒரு பாட்டைப் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசையில் புதுப்பாட்டு ஒன்றினைப் பாடுவார். எப்போதும் ஏதேனும் ஒருபாட்டை எழுதிக் கொண்டே இருப்பார். பாட்டு எழுதுவது இவருக்குக் கைவந்த கலையாக அமைந்து விட்டது. இவர் காலத்தில் இவர் வாழ்ந்த பகுதியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தானாகவே முயன்று படித்துக் கவிபாடும் திறம் பெற்றிருந்தார். இவர் முதன் முதலில் இசைப்பாடல்களைப் பாடினார். இவர்தம் கல்லாமல் பாடும் கவித்திறனையும், பாடல்களின் சிறப்பினையும் கண்டு வியந்த அறிஞர்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிக்கு மாறு தூண்டினர்; ஊக்குவித்தனர். தாம் பிறந்த ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர்கள் எவரும் அக்காலத்தில் இல்லை. ஆகவே இவர் ஆசிரியர் துணையின்றித் தாமாகவே முயன்று இலக்கிய இலக்கணங்களைப் படித்துத் தமிழில் சிறந்த புலமை பெற்றார். மேலும் இவர் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகத் தேர்வு எழுதிப் புலவர் பட்டயம் பெற்றார். இவர் பவானியில் மாவட்டக் கழகப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். 1940வரை தமிழாசிரியராகத் தொண்டாற்றினார். 1941 முதல் 1962ஆம் ஆண்டுவரை தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்கள் வியந்து பாராட்டும்வகையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியினின்று ஓய்வு பெற்ற பின்பும் எழுத்துப் பணியினின்று ஓய்வு பெறவில்லை. வாழ்நாள் முழுமையும் தமிழுக்காகத் தொண்டாற்றினார்; பல நூல்களைப் படைத்தார்; தமது கவிதைகள் வாயிலாகச் சமுதாய உணர்வை - பகுத்தறிவை மக்களிடையே பரப்பினார். இவருக்கு முன் ஓலவலசில் படித்தவர் எவருமில்லை. அவ்வூரில் உள்ளவர்களுக்குக் கையொப்பம் இடவும் தெரியாது. இளமைப் பருவத்திலேயே பொதுத் தொண்டில் - சமுகாயத் தொண்டில் ஆர்வமுடையவராக இருந்தார். தாமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தம் ஊரிலிருந்த தம்மையொத்த அகவையுடைய இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்தார். அவர்கள் மூலமாகப் பெரியவர்களுக்குக் கையொப்பம் போடப் பயிற்சியளிக்கச் செய்தார்; கை நாட்டு போடுவதை அறவே ஒழித்தார். அக்காலத்தில் இவரைவிட மூத்தவர் பலர் இவரிடம் கல்வி கற்றனர். ஓலவலசில் கல்லாமை இருளைப் போக்கினார். வேளாளஇன மக்களிடையே இருந்த பலபிரிவினரையும் ஒன்று சேர்ப்பதற்காகவும், அவ்வின இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்காகவும் 1946 முதல் 1950வரை ‘வேளாளன்’ என்னும் திங்களிதழை நடத்தினார். அவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் அவ்வின இளைஞர்களிடையே புத்துணர்ச்சியை வளர்த்தது. விதவை மணம், கலப்புத்திருமணம், சீர்த்திருத்த மணம் முதலியன செய்யவும் அம்மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். வேளாள சமூகத் தலைவரான திரு. வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் தலைமையில், தகடூர் (தருமபுரி) மாவட்டத்திலுள்ள அரூரில் வேளாள மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் புலவர் குழந்தை அவர்கள் ‘விதவை மணம்’ தீர்மானங் கொண்டு வந்தார்; ஒருமனமாக நிறைவேறச் செய்தார். அதன்படி நூற்றுக்கணக்கான விதவை மணங்களைச் செய்து வைத்தார். இச்செயல்கள் இவர்தம் சமூகத் தொண்டிற்குச் சிறந்த சான்றுகளாகும். இவர், யாப்பிலக்கணம் படிப்பதற்கு முன்னே 1918இல் ‘கன்னியம்மன் சிந்து’ என்னும் கவிதை நூலை வெளியிட்டார். இவர் பாடிய அச்சாகாத பாடல்களும் நூல்களும் பல உள்ளன; சில நூல்கள் அச்சாகி வெளியிடப்பட்டன. யாப்பிலக்கணம் கற்பதற்கு முன்பு பாடிய பாடல்கள் யாப்பிலக்கணப்படி அமைந்துள்ளன. இவர் இதுவரை எழுதியுள்ள நூல்கள் : இராவண காவியம் உள்படச் செய்யுள் நூல்கள்-7, உரைநூல்கள் - 3, இலக்கண நூல்கள் -3, உரைநடை நூல்கள் -16 ஆகமொத்தம் 29 நூல்கள் படைத்துள்ளார். தீரன் சின்னமலை நாடகம் இன்னும் அச்சாகவில்லை. ‘விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர்கம்பன்’ என இதுவரையில் போற்றப்பட்டு வரும் புகழுரைக்கு ஈடாகப் புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் பாடிப் புகழ்பெற்றார். ‘காமஞ்சரி’ என்னும் செய்யுள் நாடக நூல், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் என்னும் நூலுக்குப் பிறகு எழுதப்பட்ட சிறந்த நாடக நூலாகும். ‘நெருஞ்சிப் பழம்’ என்னும் நூல் தமிழில் இதுவரை வெளிவராத கற்பனைக் கருவூல மான காதல் கதையாகும். புலவர் குழந்தை அவர்கள் பெருங்கவிஞர் மட்டுமல்லர். சிறந்த எழுத்தாளர்; கேட்போர் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசும் பெரும் பேச்சாளர். இவருடைய எழுத்துகள் உறுதியும் அஞ்சாமையும் ஆய்வும் செறிந்த புரட்சிக் கனல் தெறிக்கும் இயல்புடையவை. இவருடைய செய்யுள் நடையும் உரைநடையும் எளிய இனிய தனித்தமிழில் அமைந்தவை. இவர் படைத்த நூல்களெல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன. தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இவர் அவ்வி யக்கத்தில் சேர்ந்தார்; பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். அன்று முதல் சுயமரியாதை இயக்கம் அதன் மறு பதிப்பான திராவிடர் கழகம், அதன் மறுமலர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுள் இணைந்து தொண்டாற்றியவர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். பள்ளித் தமிழாசிரியராக இருந்துகொண்டே, அத்தொழிலுக்குச் சிறிதும் இடையூறு இல்லாமல், ‘பெரியார் சீடர்’, ‘கருப்புச் சட்டைக்காரர்’ என்று பொது மக்கள் கூறும்படி கட்சித் தொண்டாற்றியவர். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் படைக்கத் தூண்டியது; இவருக்குப் புகழைச் சேர்த்தது. 1948இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திருக்குறளுக்குப் பகுத்தறிவிற்கு ஏற்ப உரை எழுதுவதற்குத் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தரபாரதியார் தலைமையில் ஐவர் கொண்ட குழுவை அமைத்தார். அக்குழுவில் புலவர் குழந்தையும் ஒருவர். இவரே தனிஒருவராக இருந்து திருக்குறளுக்கு உரை எழுதி ‘திருக்குறள்-குழந்தையுரை’ என்று வெளியிட்டார். அவ்வுரையை 28 நாட்களில் எழுதி முடித்த பெருமைக்குரியர். அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்ட இவர்தம் இராவண காவியத்திற்கு, தமிழக அரசால், தமிழ் வாழத் தாம் வாழும் தமிழவேள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் 17-5-1971இல் தடை நீக்கப்பட்டது. அதைக்கண்டு தமிழகமே அகமிக மகிழ்ந்தது; தமிழவேள் கலைஞரை உளமார வாழ்த்தியது. புலவர் குழந்தை ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கொண்டவர். இவர் ஒரு புரட்சிப் புலவரே எனினும் அமைதியும் அடக்கமும் உடையவர்; ஆடம்பரமின்றி எளிய வாழ்வு வாழ்ந்தவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடமை தவறாதவர்; எதிர்க் கட்சி யானாலும், மாற்றுக் கருத்து உடையவராலும் நன்கு மதிக்கத் தக்கவர். புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார். கல்வியறிவு பெற வாய்ப்பில்லாதவராயினும் பொது அறிவு நிரம்பப் பெற்றவர்; தன்மானக் கொள்கையுடையவர்; தம் கணவரின் கொள்கைக்கேற்ப இல்லறத்தை இனிது நடத்தியவர். இவ்விணையருக்குச் சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர். தமிழுக்குத் தொண்டு செய்து வந்த புலவர் பெருந்தகை தமது 68ஆம் அகவையில் 24-9-1973இல் இயற்கை அடைந்தார். மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் புலவர் குழந்தையிடம் அன்பும் மதிப்பும் உடையவர். அவர் மறைந்த பிறகு, அவர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நூல்கள் 8-7-2006 அன்று அரசுடைமை ஆக்கப்பட்டதாக அறிவித்தார். குழந்தை அவர்களின் மகள்கள் இருவருக்கும் தலா ரூ.5 இலட்சம் பரிவுத் தொகை வழங்கினார். நன்றி : நித்திலக் குவியல் (திபி 2037 - டிசம்பர் 2006) மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு. புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல்களையும் அரசுடைமையாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது. பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர். அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது. 4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார். அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார். அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார். “இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3). புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தையானாலும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள்தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழு தினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும். விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார். “புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்டதேயாகும். நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப்படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார். புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனங்களை யெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப்படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளையெல்லாம் சாமியாக்குகின்றான். அது போல நமக்காகப் பாடுபடுகின்றவர்களை, தொண்டு செய்கிறவர்களை, எழுதுகிறவர் களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன் வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத்துரைத்தார்கள். சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை 1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடைபோட்ட காட்சி கண் கொள்ளாதது. 1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட! எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர். வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது. இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு! கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார். “தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!” நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப்பிட்டதிலிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது. கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள்கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார். “ இனியொரு கம்பனும் வருவானோ? இப்படி யும்கவி தருவானோ? கம்பனே வந்தான்; அப்படிக் கவிதையும் தந்தான் ஆனால், கருத்துதான் மாறுபட்டது” என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது. கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை. தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற்பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற்பொழிவு களை நிகழ்த்தினார். முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இராவண காவிய மாநாடு இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன ; மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டதுண்டு. இத்திசையில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு. தீர்மானங்கள் 28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும். இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும். மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும். இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005) அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான். மத்திய அரசு தொலை தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005). தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது. கலைஞரின் சாதனை! இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார். வாழ்க அப்பெருமகனார்! பொருளடக்கம் கொங்கு நாட்டு வரலாறு பதிப்புரை iii புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு vi மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை vii 1. பழந்தமிழகம் 3 2. தமிழரசு 16 3. தமிழகப் பிரிவு 25 4. கொங்கு நாட்டின் எல்லைகள் 28 5. கொங்கு நாட்டின் அமைப்பு 30 6. கொங்கு நாட்டின் இயற்கையமைப்பு 32 1. மலைகள் 33 2. ஆறுகள் 36 7. இயற்கை வளம் 40 8. பெயர்க்காரணம் 46 9. கொங்கு நாட்டுப் பிரிவு 47 1. தென் வட மேல் கொங்கு 47 2. இருபத்து நான்கு உள்நாடுகள் 49 10. பழங்கொங்கு மக்கள் 59 11. கொங்கு தனியாட்சி நாடு 79 12. கொங்கு நாட்டின் பழமை 88 1. கற்காலம் முதலியன 88 2. கடல் வாணிகம் 95 13. கொங்கு நாட்டின் பெருமை 108 1. புலவர்கள் 108 2. சித்தர்கள் 112 3. வைச நாயன்மார்கள் 114 4. வைணவப் பெரியார்கள் 114 5. பாடல் பெற்ற தலங்கள் 114 1. தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 114 2. வைப்புத் தலங்கள் 115 3. திருப்புகழ்ப் பாடல் பெற்ற தலங்கள் 117 4. புராணம் பெற்ற தலங்கள் 119 14. பழங்கொங்கு நாடு 121 15. வீரமும் புகழும் 139 1. சங்ககாலத் தலைவர்கள் 142 2. சங்கப் பிற்காலத் தலைவர்கள் 168 16. கொங்கு நாட்டின் நிகழ்காலப் பெருமை 208 கொங்கு நாடு (1968) கொங்கு நாடு 1. பொதுப்பகுதி 1. பழந்தமிழகம் உலகில் பல்வேறு மொழிகள் வழங்குகின்றன. அவற்றுள் மிகப் பழமையான மொழிகள் மிகச் சிலவே, அவற்றுள்ளும் திருந்திய செம்மொழிகள் மிகமிகச் சிலவே. அத்தகைய செம்மொழிகளுள் ஒன்று தமிழ்மொழி. உலகில் இன்று மிகப் பழமையும் இளமையும் உடைய திருந்திய செம்மொழி, தமிழ்மொழி ஒன்றேயாகும். தமிழ் பேசுவோர் தமிழர் எனப் பெயர் பெற்றாற்போல, தமிழ் வழங்கும் நாடு தமிழ் நாடு எனப் பெயர் பெற்றது. தமிழ் நாடு, தமிழகம் எனவும் வழங்கப் பெறும். தமிழ்நாடு, தமிழகம் என்னும் வழக்குத் தொன்று தொட்ட வழக்காகும். ‘தண்டமிழ் வேலித் தமிழ்நாடு’ என்பது, பரிபாடல் (பிற் சேர்க்கை). ‘இமிழ் கடல் வேலித் தமிழகம்’ என்பது, பதிற்றுப் பத்து (2.பதிகம்). தமிழ் அகம் - தமிழ் வழங்கும் இடம். தமிழ் என்னும் சொல்லுக்கு, இனிமை என்பது பொருள். ‘இனிமையும் நீர்மையும் தமிழெனவாகும்’ என்பது, பிங்கலம், தமிழ்மொழி தன் இயல்பினாலும் எளிமையினாலும் பேசு வோர்க்கு இன்பம் பயத்தலான் அப்பெயர் பெற்றது. தமிழ் மொழி - இனிய மொழி. இனி, தமிழ் என்னும் சொல், தமிழ் மொழியைக் குறிப்ப தோடு, தமிழ் மக்களையும் தமிழ் நாட்டையும் குறிப்பதும் தொன்று தொட்டு வரும் மரபேயாகும். ‘அருந்தமிழ் ஆற்றல் அறியாராகி’ (சிலப். 26: 161), தமிழ் ஆற்றல் - தமிழர் ஆற்றல்; எனத் தமிழ் மக்களையும், ‘தென்றமிழ்ப் பாவை’ (சிலப். 12 : 48) தமிழ்ப் பாவை - தமிழ் நாட்டுப் பாவை; எனத் தமிழ் நாட்டையும் குறித்தலை அறிக. இங்ஙனம் ஒரு சொல் ஒரு மொழியையும், அம்மொழி பேசும் மக்களையும், அம் மக்கள் வாழும் நாட்டினையும் குறித்தல், தமிழ் ஒன்றற்கே உரிய தனிச் சிறப்பாகும்; தனியுரிமை எனினும் பொருந்தும். இதனாற்றான், ‘தமிழ் வாழ்க’ என்பது, தமிழ் மொழி வாழ்க, தமிழ் மக்கள் வாழ்க, தமிழ் நாடு வாழ்க’ என்பதாகும் என்றார் ஒரு புலவர். உலக மொழிகளில் எதுவும் இங்ஙனம் இம்முப்பொருள் குறிப்பதாக இல்லை. வடக்கே வேங்கட மலையையும், மற்ற மூன்று திசையினும் கடலையும் எல்லையாக உடையது பழந்தமிழகம். தெற்கே குமரி யாற்றை எல்லையாகக் கொண்டிருந்த காலமும் உண்டு. ‘வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’ என்பது, தொல்காப்பியப் பாயிரம். தமிழ்கூறு உலகம் - தமிழ் வழங்கும் இடம் - தமிழ் நாடு. வேங்கடம் குமரி தீம்புனல் பௌவமென் றிந்நான் கெல்லை தமிழது வழக்கே’ என்பது, சிகண்டியார் கூற்று. பௌவம் - கடல். வடவேங்கட மலைத் தொடர், வடக்கே வடபெண்ணை யாற்றங்கரை வரை தொடர்ந்து, தமிழகத்திற்கு வடக்கெல்லையாய் நிற்பது. வட பெண்ணையே தமிழகத்தின் வடக்கெல்லையாகும். வடபெண்ணை யாற்றுநேர் நேர்மேற்காக மேல் கடல்வரை ஒரு கோடிழுத்தால், அது கொண்கானத்தின் வடக்கில் செல்லும். அக்கோடே தமிழகத்தின் வடக் கெல்லையாகும். ஆனால், தமிழ் மக்களின் பயக்குறையால், ‘வடக்கே வேங்கட மலையை எல்லையாக உடைத்தாயிருந்தது தமிழ் நாடு’ என, இறந்த காலத்தாற் கூறி இரங்கும்படி, இன்று தமிழ் நாடு வடக்கும் மேற்கும் முறையே ஆந்திர கன்னட மலையாள நாடுகளையும், தெற்கும் கிழக்கும் மட்டும் பழைய படியே கடலையும் எல்லையாக உடையதாகி, “ஆந்திரங்கன் னடம்வடக்கில் மேற்கில்மலை யாளம் அலைகடல்மற் றிருபுறமும் இலகுதமிழ் நாடு” எனப் பாடி அமையும் நிலையை அடைந்து விட்டது. ‘குண் கடல் குமரி குடகம் வேங்கடம்’ (நன்னூல்) என்பது, சேர நாடு மலையாள நாடாக ஒருவாறு மாறிய பின் (12.நூ) கொண்ட எல்லையாகும். குமரி -குமரிமுனை, குடகம் - சேரநாடு. தொன்று தொட்டு, ‘வடவேங்கடம் தென்குமரி, வேங்கடம் குமரி தீம்புனல் பௌவம்’ எனப் பெருமையாகக் கூறிவந்த தமிழ்நாட்டின் வடக்கெல்லையாகிய வேங்கடம், இன்று ஆந்திர நாட்டின் உடைமையாகிவிட்டது. அங்ஙனமே, பதிற்றுப் பத்தும், சிலப்பதிகாரமும் தோன்றிய பழந்தமிழ்ச் சேர நாடு, தமிழ் பழித்ததற்காகக் கனகவிசயர் முடித்தலையில் கண்ணகி படிமக் கல் ஏற்றி வந்தசேரன் செங்குட்டுவன் ஆண்ட பழந்தமிழ் நாட்டுப் பகுதி, இன்று தமிழ் நாட்டினின்று பிரிந்து தனி மலையாள நாடாகி விட்டது; ‘எங்கள் தமிழ் நாடு’ எனத் தமிழர் எண்ணவுங் கூடாத வேற்று நாடாகி விட்டது. தமிழ் நாட்டுக் கடல் வாணிகத்தின் நிலைக் களனாகத் திகழ்ந்திருந்த குடகடல், இன்று மலையாள நாட்டின் சொத்தாகிவிட்டது. வடக்கும் மேற்கும் மலையும் கடலுமாகிய இயற்கை எல்லையை இழந்து, பிறநாடுகளை எல்லையாகக் கொள்ளும் நிலையில் உள்ளது இன்று தமிழ் நாடு. பழந்தமிழ் நாடு வேங்கடத்தை வடக்கெல்லையாகக் கொண்டிருந்த தெனினும், “குமரியொடு வடவிமயத் தொருமொழிவைத் துலகாண்ட சேரலாதன். (சிலப் - 29) “வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன்.” (சிலப். - 11) “பொன்னிமயக் கோட்டில் புலிபொறித்து மண்ணாண்டான் மன்னன் வளவன்.” (சிலப். - 17) என்னும் இளங்கோவடிகள் கூற்றால், பழந்தமிழ் வேந்தர் களின் ஆட்சி, வேங்கடத்தின் வடபாலும் பரவியிருந்த தென்பது விளங்கும். “வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும் குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் உருவும் புகழும் ஆகி விரிசீர்த் தண்டா ஈகைத் தகைமாண் குடுமி.” (புறம் - 6) “தென்குமரி வடபெருங்கல் குணகுடகட லாவெல்லை ஒன்றுபட்டு வழிமொழிய இடியென முழங்கு முரசின் வரையா வீகைக் குடவர் கோவே.” (புறம் -17) என்னும் காரிகிழார், குறுங்கோழியூர்க்கிழார் கூற்றுக்களும் இதற்குச் சான்று பகரும். ‘இமயவரம்பன்’ என்ற சேரமன்னன் பெயரும் இதற்குத் துணைசெய்யும். நனிமிகு பழங்காலத்தே தமிழர் பனிமலை காறும் பரவி வாழ்ந்து வந்தனர் என்பது, சிந்துவெளியிற் கண்ட புதை பொரு ளாராய்ச்சியால் தெற்றென விளங்குகிறது. சிந்து வெளியில் வாழ்ந்த திராவிடமக்கள் - பழந்தமிழ்மக்கள் - நனிமிகு நாகரிக முடையராய் வாழ்ந்து வந்தனர் என்பதும், சிந்துவெளி நாகரிகம், கி.மு.4000 ஆண்டுகட்கு முற்பட்ட தென்பதும் ஆராய்ச்சி அறிஞர்கள் ஆய்ந்து கண்ட முடிவாகும். (டாக்டர், இராச மாணிக்கனார், சிந்துவெளி நாகரிகம்.) இந்தியாவின் முதற்குடி யேறியரான ஆரியர் குடியேற்ற காலம், கி.மு. 1500, அல்லது 2000 ஆண்டுகட்டுப்பட்டதே என்று வடமொழி ஆராய்ச்சி வல்லுநர்கள் கூறுவதால், ஆரியர் முதலிய வெளிநாட்டினர் குடியேறு முன்னர், இந்தியா முழுதும் தமிழ் மக்களே வாழ்ந்து வந்தனர்; இந்தியா அன்று தமிழ் நிலமாகவே இருந்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை. இனி, தமிழ்நாட்டின் தெற்கெல்லையான தென்பெருங் கடல், நிலமாக இருந்த காலமும் உண்டு. பன்முறை ஏற்பட்ட கடல் கோளால் அப்பெருநிலப் பரப்பு கடலுள் மூழ்கியது. அந் நிலப்பரப்பு, இன்றுள்ள தென்கடற்கரையின் தெற்கில், அதாவது தமிழ் நாட்டின் தெற்கில், ஆயிரத்தைந்நூறு கல்லுக்கு மேல் பரவியிருந்தது. ஆப்பிரிக்காவின் தென்கீழ்ப் பக்கமுள்ள மடகாஸ்கர் தீவையும், சாவா முதலிய கிழக்கிந்தியத் தீவுகளையும் அது தன்னுள் அடக்கியதாக இருந்தது. இலங்கை அன்று தனித்தீவாக இல்லை. அப்பெருநிலப் பரப்பு - குமரிமலை, மணிமலை, பன் மலைத் தொடர் முதலிய பல பெரிய உயர்ந்தோங்கிய மலைகளும்; குமரியாறு, பஃறுளியாறு முதலிய வற்றாத பல பேராறுகளும் வளஞ்செய்ய, ‘நீர்மலிவான்’ என, நீர்வளமும் நிலவளமும் பிறவளங்களும் உடையதாய், மக்கள் நல்வாழ்வுக் கேற்ற நன்னாடாக விளங்கியது. இன்றுள்ள குமரி முனைக்கு இருநூறுகல் தெற்கில் குமரிமலையில் தோன்றிக் கிழக்கு நோக்கிப் பாய்ந்தது குமரி யாறு, குமரியாற்றுக்குச் சுமார் எழுநூறுகல் தெற்கில், பன் மலைத் தொடரில் தோன்றிப் பஃறுளியாறு என்னும் பேராறு பாய்ந்தது. அது, பன்மலைத் தொடரில் தோன்றிய பல சிறு அருவிகள் பெருகி ஆறுகளாகி ஒன்று கூடிய பேராறாகும். பல் + துளி = பஃறுளி. ‘துளி’ என்பது, சிற்றாறுகளைக் குறிக்கும். துளி - சிறிது என்னும் பொருட்டு. இவ்விரண்டு பேராறுகட்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு, பெருவளநாடு எனப்படும். இதன் பெயரே இது மிக்க வளம் பொருந்திய நாடு என்பதற்குச் சான்றாகும். “பஃறுளி என்னும் ஆற்றுக்கும், குமரி என்னும் ஆற்றுக்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவான் என மலிந்த - ஏழ்தெங்கநாடும் ஏழ் மதுரை நாடும், ஏழ்முன் பாலை நாடும், ஏழ்பின் பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குண கரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும்; குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறும் கடல் கொண் டொழிதலான்.” (சிலப்.8) என்னும் அடியார்க்கு நல்லார் கூற்றால், அப்பெருவள நாடு எழுவகைப்பட்ட ஏழேழு - நாற்பத்தொன்பது உள்நாடு களாகப் பிரிவுபட்டிருந்த தென்பதும், அதையடுத்து அதன் வட மேற்கில் குமரி, கொல்லம் முதலிய பல மலைநாடுகள் இருந்தன என்பதும் பெறப்படுகிறது. ‘தடநீர்க் குமரி’ என்பதால், அக்குமரி மலை, மேற்குமலைத் தொடர் போல மிக்க நீர்வளம் பொருந்திய தென்பதும் விளங்குகிறது. குமரிமலை, பன்மலைத் தொடர் முதலாக அப்பெருவள நாட்டின் மேற்கிலிருந்த மலைகளெல்லாம் மேற்குமலைத் தொடரின் தொடர்ச்சியே யாகும். நீலகிரியின் மீதுள்ள நீலகிரி மாவட்டம் போன்றவையே குமரி, கொல்லம் முதலிய அம்மலை நாடுகள், மலையாள நாட்டில் உள்ள கொல்லம் என்பது நினைவுகூரத் தக்கது, ‘நதியும் பதியும்’ என்பதால், குமரி, பஃறுளி அல்லாத வேறு பல ஆறுகளும் அப்பெருவள நாட்டில் பாய்ந்தன என்பது பெறப்படுகிறது. தெங்கு - தென்னை மரம், தென்னை மிகுதியாக இருந்த மையால் தெங்க நாடு எனவும், பனை மிகுதியாக இருந்தமை யால் பனைநாடு எனவும் அந்நாடுகள் பெயர் பெற்றன வென்க. தென்னைமரத்தூர், பனைமரத்துப்பட்டி, ஈஞ்சம்பள்ளி, கொழுஞ் சிவாடி, ஊணாம்பதி என, மரஞ்செடி கொடிகளால் ஊர்ப் பெயர் வழங்குதல் காண்க. இலங்கைத் தீவில் இன்னும் தென்னை பனை மிகுதியாக இருத்தலை அறிக. மதுரை என்பது, பஃறுளியாற்றங்கரையிலிருந்த அப்பெருவள நாட்டின் தலை நகர். அம்மதுரையைச் சூழ்ந்திருந்த நாடுகள் அதன் பெயர் பெற்றன. குன்ற நாடு - மேற்கு மலையை அடுத்திருந்த நாடுகள். குணகரை நாடு - கிழக்குக் கரையை அடுத்திருந்த நாடுகள். குணக்கு - கிழக்கு. முதுவேனிற் காலக் கடுவெயிலால், முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் வறண்டு வளம் பிரிந்த மிகு வெப்ப நிலையே பாலை எனப்படும். (சிலப். 11: 64-66). அப் பெருவளநாடு நிலநடுக் கோட்டுப் பகுதியில் அமைந்திருந்தமையால், ஞாயிற்றின் தென் வடச் செலவால் முன்னரும் பின்னரும் பாலை நிலையை அடைந்தமையால், அந்நாடுகள் முறையே முன்பாலை நாடு, பின்பாலை நாடு எனப் பெயர் பெற்றன போலும். முன் பின் என்பன காலங் குறித்து நின்றன. பாலை மரத்தால் பெயர்பெற்று, ஏதாவது குறிப்பிட்ட இடத்துக்கு முன்னும் பின்னும் இருந்தமையால், முன்பாலை பின்பாலை எனப்பெயர் பெற்ற வெனினுமாம், இங்கு முன்பின் என்பன, இடங்குறிக்கும். சேர சோழ பாண்டிய தொண்டை கொங்கு நாடுகளும் பல உள்நாடுகளாகப் பிரிவுபட்டிருந்தமை நினைவு கூரத்தக்கது. பஃறுளியாற்றின் தென்பால், தென்கடல்வரை ஏறத்தாழ ஐந்நூறுகல் பரப்புடைய நிலம் இருந்தது, அது, தென்பாலி நாடு எனப்படும். பஃறுளியாற்றின் தென்பால்’ இருந்தமை யால் அது அப்பெயர் பெற்றது. அஃதும் பல உள்நாடுகளாகப் பிரிவு பட்டிருந்திருக்கலாம். “அக்காலத்து, அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும்” (சிலப்.8) என்னும் அடியார்க்கு நல்லார் உரை இதற்குச் சான்றாகும். தென்பால் உள்ளது - தென்பாலி. ‘அவர் நாட்டுத் தென்பாலி’ என்பதால் அப்பெருவள நாடும் தென்பாலி நாடும் ஓராட்சியின் கீழ் இருந்து வந்தன என்பது பெறப்படும். பஃறுளியாறு கடல் கொள்ளாமுன் அப்பெருவள நாட்டினை ஆண்டு வந்த நெடியோன் வழிவந்த முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னனை நெட்டிமையார் என்னும் புலவர், “எங்கோ வாழிய குடுமி, தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.” (புறம்-9) என வாழ்த்துதலும், “அன்னச் சேவல் அன்னச் சேவல் குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயின்.” (புறம் - 67) என்னும் பிசிராந்தையார் கூற்றும், பஃறுளியாறும் குமரியாறும் இருந்தமைக்கு நேர்முகச் சான்றுகளாகும். இப்புலவர்கள் அக் காலத்தே வாழ்ந்தவர்கள். முதுகுடுமிப் பெருவழுதியும் பஃறுளி யாறு கடல் கொள்ளாமுன் அங்கிருந்தாண்டவனேயாவன். ‘எங்கோ வாழிய’ என்னும் புறப்பாட்டு, முதுகுடுமிப் பெருவழுதியின் முன்னோனாகிய நெடியோன் என்னும் பாண்டிய மன்னன், அப்பெருவளநாடு கடல் கொள்ளுமுன் அதனை ஆண்டுவந்தவனெனவும், பஃறுளியாறு அவனுக்குரிய தெனவும் கூறுதலான், அப்பெருவள நாட்டை ஆண்டவர் பாண்டியமன்னர் மரபினர் என்பதற்கு அது சான்றாகும். இனி, அப்பெருவள நாட்டின் மன்னனான செங்கோன் என்பான்மீது, அந்நாட்டுத் தனியூர்ச் சேந்தன் என்னும் புலவர் பாடிய செங்கோன்றரைச் செலவு என்னும் பழந்தமிழ் நூலும் இதற்குப் பெருந்துணை செய்யும். இது, தகடூர் யாத்திரை போன்ற நூல். பெருவளம், தென்பாலி என இரு கூறுபட்ட அத்தென்ற மிழகத்தின் வரலாற்றினை, குமரிக்கண்டம் (கா.அப்பாத்துரை யார்) என்னும் நூலில் விளக்கமாகக் காணலாம். தென்பாலி, பெருவள நாடுகள் அமைந்த அப்பெரு நிலப் பரப்பு, ஒரு காலத்தே - ஆப்பிரிக்கா, ஆத்திரேலியாக் கண்டங் களையும் உள்ளடக்கிய ஒரு மாபெருங் கண்டமாகப் பரந்து கிடந்ததாம். அம்மாபெரும் நிலப்பரப்பை மேனாட்டு ஆராய்ச்சி அறிஞர்கள் லெமூரியாக் கண்டம் என்றனர். அது, அந்நிலப் பரப்பில் வாழ்ந்த லெமூர் என்னும் - மக்கட்கும் குரங்கிற்கும் இடைப்பட்ட - ஒரு வகை உயிரின் பெயர் கொண்டு இட்ட பெயராகும். தமிழர்கள் அதைக் குமரிக்கண்டம் என்றனர். இது, பழைய குமரியாற்றின் நினைவாகக் குமரிமுனை எனப் பெயரிட்டிருப்பது போன்று இட்ட பெயராகும். இது கடல் கொண்ட தென்னாடு எனவும் பெயர் பெறும். அன்று இமயமலைப் பகுதி கடலாக இருந்ததாம். அத் தென்னிலம் கடலுள் மூழ்க மூழ்க இமயமலை தோன்றிற்றாம். அத்தென் பெருநிலப் பரப்பு, காலப் போக்கில் கடற்கிரையாகி, இங்கு நாம் காணும் தென்பாலி பெருவளப் பகுதியளவில் நின்றது. குமரிக் கண்டம் என்னும் அப்பெருநிலப் பரப்பு, நில நடுக் கோட்டுப் பகுதியில் அமைந்திருந்தது. ஞாயிறு என்ற ஒளிப்பிழம்பு தன்னைத்தானே சுற்றுவதால் சிதறிய ஒரு திவலையாகிய இவ்வுலகம், தன்னைத்தானே சுற்றுவதால் குளிர்ந்து இறுகி, மேலோடு கெட்டியாகி, உயிர்கள் தோன்றற் கேற்ற நிலையை அடைந்தது. ஒரு பம்பரம் சுழலும் போது அதன் நடு வட்டமே மிக விரைவாகச் சுழலும், அவ்வாறே உலகின் நடுப்பகுதியே விரைவாகச் சுழன்று முதலில் உயிர்கள் தோன்றற்கான நிலையை அடைந்திருக்கும் நிலநடுக்கோட்டுப் பகுதியாக அமைந்திருந்ததால், அக்குமரிக் கண்டப் பகுதியே முதலில் அந்நிலையை அடைந்திருக்கும். ஆகையால் அப் பகுதியில் தான் முதன் முதல் உயிர் வகைகள் தோன்றின என்கின்றனர் ஆராய்ச்சி அறிஞர்கள், எனவே, உலக முதன் மக்கள் தோன்றிய இடம் அத்தென் பெருநிலப் பரப்பேயாகும். (கா.அப்பாத்துரையார், குமரிக்கண்டம்) எனவே, உலக முதல் நாடு தமிழ்நாடு, உலக முதன்மக்கள் தமிழ் மக்கள், உலக முதன்மொழி தமிழ்மொழி என்பது பெறப்படும். அத்தென்னில மக்கள், அத்தகு பழங்காலத்திலேயே தற்கால நாகரிக மிக்க நன்மக்களும் நாணும் வகையில் அத்தகு நன்னாகரிக முடையராய் வாழ்ந்து வந்தனர் என்பது, அறிந்து இன்புறற்பால தொன்றாகும். அவர்கள் - கல்லில் செதுக்கிய உருவங்கள், தோலில் தீட்டிய ஓவியங்கள், பயன்படுத்திய தொழிற்கருவிகள், கல்லெழுத்துக்கள் முதலியன கிடைத்துள்ள மையால் அது பெறப்படுகிறது. (கா.அ.குமரிக்கண்டம், 65 - 84) குமரிக் கண்டத்தில் அரும்பிய அந்நாகரிகமே, சிந்து வெளி நாகரிகமாக மலர்ந்து, நடுக்கடலையடுத்த எகிப்திய, கிரேக்க, பாபிலோனிய, பினீஷிய நாகரிகம் வளரக் காரணமாக இருந்தது. (V.R.R. Didkshitar, தென்னிந்திய வரலாறு - 170). அத்தகு பழமையும் பெருமையும் உடையது தமிழர் நாகரிகம் என்பது, உலகம் இன்னும் அறியாத நிலையில் உள்ளது. நாளடைவில் அத்தென்னில மக்கள் உலகெங்கும் பரவி, அவ்வவ்விடங்களின் தட்பவெப்ப நிலைகளுக்கேற்றவாறு வெவ்வேறு வடிவும் நிறமும் இயல்பும் அமையப் பெற்று, வெவ்வேறு இனமாயினர்; அங்ஙனமே வெவ்வேறு மொழியும் பேசலாயினர். மூல முதலானது தமிழினம் என்பது இன்று உலகம் அறியாத நிலையில் உள்ளது. பஃறுளியாற்றின் கரையிலிருந்த மதுரை என்பது அந் நாட்டின் தலைநகராகும். மதுரம் - இனிமை. மதுரை - இனிய நகர்; மக்கள் வாழ்தற்கேற்ற இனிய நகர் அழகான பெயர். ‘மதுரா’ என்னும் வடசொல், மதுரை என, ‘ஆவீறு ஐயீறான’ வட மொழியாக்க மன்று; (நன்னூல் - 147). அன்று வட மொழிக்குத் தமிழகம் என்று ஒன்று இருப்பதாகவே தெரியாது. அத்தொன் மதுரையிலிருந்து அத்தொல் பழந்தமிழ் நாட்டினை ஆண்டு வந்தவர் பாண்டியர் ஆவர். பண்டையர் என்பதே பாண்டியர் எனத் திரிந்தது. கொள் + இ - கோடி, செல் + இ - சேதி என, கொள், செல் என்னும் முதனிலை களுடன் இகர விகுதி சேர, பகுதி முதல் நீண்டு புணர்ந்தது போலவே. பண்டு + இ - பாண்டி என, பண்டு என்னும் பண்புப் பகுதியுடன் இகர விகுதி சேரப் பண்டு என்பது, பாண்டு என முதல் நீண்டு புணர்ந்தது. பாண்டி + அன் - பாண்டியன். பாண்டி + அர் - பாண்டியர். இது, அன்னார்க்குப் பிற்காலத்தே ஏற்பட்ட பெயராகும். பாண்டி நாடு, பாண்டி மன்னர் என, அது தனித்து வழங்குதலையும் அறிக. அப்பாண்டியர் தம் தலைநகரில் சங்கம் இரீஇத் தமிழ் வளர்த்து வந்தனர். சங்கம் - புலவர் கூட்டம். இரீஇ - இருத்தி. அத்தொன்மதுரையில் நடந்து வந்ததே முதற்சங்கம் ஆகும். அச்சங்கம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வந்தது. அன்று ஏற்பட்ட பெயரே நம் தங்கத் தமிழ் மொழிக்குச் சங்கத் தமிழ் என்னும் பெயர். ஒரு பெரிய கடல் கோளால் அத்தென்பாலி நாடும், பெரு வள நாட்டின் பெரும்பகுதியும் கடலுக்கிரையாயின. பஃறுளி யாற்றையும் கடல் குடித்து ஏப்பம்விட்டது. அதன் பின்னர், அக்கடல்கோள் நிகழ்ந்த காலத்திருந்த பாண்டிய மன்னன் வடக்கே வந்து, குமரியாற்றங்கரையில் புதிதாக ஒரு நகர் கண்டு அதில் குடியேறினன். இந்நகர்க்கும் மதுரை என்று அப்பழைய நகரின் பெயரையே வைத்தனன். இம்மதுரை அலைவாய் எனவும் வழங்கிற்று. இதனைக் கபாடபுரம் என்றனர் வடவர். (வான்மீகி இராமாயணம்). அப்பாண்டியன் பழைய படியே இங்கும் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்தனன். இம்மதுரையில் நடைபெற்ற சங்கமே இரண்டாஞ் சங்கம், அல்லது இடைச் சங்கம் எனப்படும். இம் முதற் கடல் கோளுக்குத் தப்பிய பாண்டியன், முதல் இடை என்னும் இருசங்கக்கட்கும் உரியவனாவன். இவ்விடைச் சங்கத்தேதான் தொல்காப்பியம் அரங்கேற்றப் பட்டது. இடைச் சங்கத்தார்க்கும் தொல்காப்பியம் இலக்கணம் எனப்படுதலான், அச்சங்க முற்பகுதியில் செய்யப்பட்ட தாகும் தொல்காப்பியம். அக்கடல்கோளால் நம் முன்னையோராகிய முதுதமிழ் மக்கள் அடைந்த அல்லலும், இழந்த இழப்பும் இவ்வளவிற் றென்று சொல்லுந்தரத்தவல்ல. “பஃறுளி யாற்றொடு பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள”. (சிலப்.11:91-20) ‘கொடுங்கடல் என்பது, அக்கடல்கோளின் கொடுஞ்செயல் பற்றி இளங்கோவடிகளுக் கிருந்த வருத்தத்தைப் புலப்படுத்துவ தாகும். கோடு - மலை. குமரியாறு தோன்றும் இடத்திற்குத் தென் பாற்பட்ட அக்குமரிமலைப் பகுதியைக் கடல் கொண்ட தென்க. “யாழுங் குழலும் பலபறையும் யாழோ ராடும் ஆடரங்கும் போழும் பனையே டுந்தோய்ந்த பொதிபொதி யான தமிழ்நூலும் வாழும் பொருளும் நிலபுலமும் மனையோ டினவும் வாய்க் கொண்ட பாழுங் கடலே! நீயொருநாட் பாழாய்ப் போகக் காணேமோ.” (இராவண காவியம் - கடல்கோட்படலம் - 13) என்று தமிழ் மக்கள் வருந்தி, “அன்னை புலம்பத் தந்தையழ ஆவா வென்றே மக்களழத் தன்னை புலம்பத் தங்கையழத் தாவா நின்றே ஒக்க லொடு பொன்னை யிழந்துங் கைவந்த பொருளை யிழந்தும் மணிமாடந் தன்னை யிழந்தும் வடபாலி தன்னை யடைந்தார் தமிழ்மக்கள்”, -(இராவண காவியம் - கடல்கோட்படலம் - 20) அதன் பின்னர் ஏற்பட்ட ஒரு கடல்கோள், குமரியாற்றின் பெரும் பகுதியையும், அதைச் சூழ்ந்த நிலப் பரப்பையும் விழுங்கவே, அப்போதிருந்த பாண்டியன் வடக்கே வந்து, சில ஆண்டு மணலூர் என்னும் இடத்தில் தங்கி, பின்னர் வையை யாற்றங் கரையிலுள்ள மதுரையை அமைத்து அங்குக் குடியே றினான். இம்மதுரையின் நான்கு வாயிலிலும் வானளாவிய மாடங்கள் - கோபுரங்கள் - இருந்தமையால் அது, நான் மாடக் கூடல், மாடக்கூடல் என்னும் பெயர் பெற்றது. சங்ககாலச் சான்றோர்கள் கூடல் எனவும் வழங்கினர். இம் மதுரை, இன்றுள்ள மதுரைக்கு 6 கல் தென்கிழக்கில் இருந்ததுவாம். (1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் - 26) இம் மூன்றாம் மதுரையில் குடியேறிய பாண்டியன் பழைய படியே சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்து வந்தனன். இதுவே மூன்றாம் சங்கம் அல்லது. கடைச்சங்கம் ஆகும். இடைச்சங்கத் திறுதிக் கடல்கோளில் தப்பி வந்து கடைச் சங்கத்தை நிறுவிய பாண்டியன் முடத்திருமாறன் என்ப. (இறையனாரகப் பொருளுரை). இச்சங்கங்கள் மூன்றும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து நடந்துவந்தன என்பது நினைவு கூரத்தக்கது. முதற்சங்க காலத்தே 4449 புலவர்களும், இடைச்சங்க காலத்தே 3700 புலவர்களும், கடைச்சங்க காலத்தே 449 புலவர்களும் பாடினர் எனவும், முதலிடை கடைச் சங்கங்களை முறையே 89, 59, 49 பாண்டிய மன்னர்கள் நடத்தி வந்தனர் எனவும், அம்மூன்று சங்கங்களும் முறையே 4440, 3700, 1850 ஆண்டுகள் (9990) நடந்து வந்தன எனவும் - இறையனாரகப் பொருள் உரையாசிரியர் கூறுகின்றனர். இவ்வரையறை ஏற்றக் குறைவாயிருக்கினும், அம்மூன்று சங்கங்களும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் நடந்து வந்தன என்பதில் சிறிதும் ஐய மில்லை. தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்பவற்றைத் தவிர, அம்முச்சங்க காலத்தும் இருந்த பல்லாயிரக்கணக்கான புலவர்கள் பாடிய பழந்தமிழ் நூல் களெல்லாம் நமக்குக் கிடைக்கவில்லை. கி.பி.250இல் மதுரையில் அயலாட்சி ஏற்பட்டதால், அதுவே கடைச்சங்க காலத்தின் இறுதியாகும். மேலெல்லை இற்றெனக் கூறுதற்கியலாத தொன்மையையுடையதாகும். இந்நூலில் சங்ககாலம் என்பது, பெரும்பாலும் கடைச்சங்க காலத்தையேயாகும். மாடலன் என்பான், குமரியாற்றில் நீராடி வந்ததாக, “குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து” “குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன்” என, சிலப்பதிகாரத்து 15, 27 காதைகளில் கூறப்படுகிறது. ஆனால், “நெடியோன் குன்றமும் தொடியோன் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு” (சிலப். 8: 1-2) என, எட்டாங்காதையில், தமிழ்நாட்டின் தெற்கெல்லை குமரிக் கடல் எனப்படுகிறது. தொடியோள் - குமரி; பெண் பாலாகக் கூறப்பட்டது. தொடியோள் பௌவம் - குமரிக்கடல். அதாவது, இரண்டாங் கடல்கோளில், குமரியாற்றின் பெரும் பகுதியும் அதைச்சூழ்ந்த நிலப்பகுதியும் கடல் வாய்ப் பட்டன; அவ்வாறு தோன்றிவரும் மேற்குப் பகுதியில் சிறு பகுதி தப்பிற்று. அதாவது, சிலப்பதிகாரக் கதை நிகழ்ந்த போது குமரியாற்றின் அப்பகுதியிருந்தமையால், மாடலன் அவ்வாற்றில் நீராடி வந்தான். மணிமேகலை காலத்தே (கி.பி.2நூ) ஏற்பட்ட ஒரு கடல் கோளால் காவிரிப்பூம்பட்டினம் கடல் வாய்ப்பட்டதாக, “இன்றேழ் நாளில் இருநில மாக்கள் நின்றுநடுக் கெய்த நீணில வேந்தே பூமி நடுக்குறூஉம் போதத் திந்நகர் நாகநன் னாட்டு நானூறு யோசனை வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும்.” -(மணிமே. 9: 18-22) என மணிமேகலை கூறுகிறது. அக்கடல் கோளால் எஞ்சியிருந்த அக்குமரியாற்றுப் பகுதியும் கடலுள் மூழ்கியது. அதாவது, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் செய்தபோது, எஞ்சி நின்ற அக்குமரியாற்றுப் பகுதியும் கடலுள் மூழ்கி விட்டதால், எட்டாங்காதையில் தமிழ்நாட்டின் தெற்கெல்லை குமரிக்கடல் என்றனர் என்க. பன்முறை ஏற்பட்ட கடல் கோளால், ஆயிரக்கணக்கான கல் பரப்புடைய தமிழகம் சுருங்கி இன்றைய நிலையை எய்தி விட்டது. என்னே காலத்தின் கோலம்! கடலின் கொடுஞ் செயல்! 2. தமிழரசு உலக முதன் மக்கள் தமிழ் மக்கள் என்பது, ஆராய்ச்சி அறிஞர்களின் முடிந்த முடிபென்பதை முன்பு கண்டோம். அங்ஙனமே, உலக முதலரசு தமிழரசே என்பதும் முடிந்த முடிபேயாகும். அரசு என்பதை உலகம் அறியாத அக்காலத்தே தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வந்தது. உலக அரசியலின் பிறப்பிடம் தமிழகமேயாகும். இனைத்தென அறிய முடியாத அவ்வளவு தொன்மை வாய்ந்தது தமிழரசு. தமிழரசின் தோற்றம் வரையறுத்துக் கூறமுடியாத தொன்றாகும். வரலாற்றுக்கு எட்டாதது தமிழரசு எனலாம். உலக மக்கள் ஓரிடத்தே நிலைகொள்ளாது கூட்டங் கூட்டமாக அங்குமிங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த அக்காலத்தே தமிழ் மக்கள் நனிமிகு நாகரிக நல்லாட்சியின் கீழ் நன்கு வாழ்ந்து வந்தனர் என்பது, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலாகும். தமிழரசு, கடல்கொண்ட தென்றமிழகத்தில் குடியரசாகத் தோன்றி வளர்ந்து, முடியரசாக உருப்பெற்ற ஒரு மூத்தமுதல் முதுபேரரசாகும். தமிழரசர் ஆட்சி முறையை, ஆட்சித்திறனை, சீரிய செங்கோன்மைச் சிறப்பினைப் புறநானூறு முதலிய பழந்தமிழ் இலக்கிய நூல்களிலும், தொல்காப்பியம் என்னும், பழந்தமிழ் இலக்கண நூலிலும் பரக்கக் காணலாம். திருக்குறட் பொருட் பால், பந்தமிழரசர் ஆட்சி முறையினை, இறைமாட்சியினை அப்படியே பட்டாங்கு படம்பிடித்துக் காட்டுகிறது. அத்தகைய ஆட்சிமுறை உலகில் இனியொரு கால் தோன்று மென்பது கனவு நிலைக் காட்சியேயாகும். உலக அரசியலறி ஞர்களின் ஆட்சி முறைத் திட்டமெல்லாம் பழந்தமிழ் அரசியல் முறையினுள் அடங்கும். குடியரசோ, முடியரசோ, பொதுவு டைமையரசோ, தனியுடைமையரசோ - உலக அரசியற் பேரறிஞர்கள் கண்ட அத்தனைவகை அரசியல் முறைகளையும் தன் உறுப்பாகக் கொண்டமைந்ததாகும் பழந்தமிழரசு! அறியாது ஓர் ஆன்கன்றைக் கொன்றதற்காகத் தன் அரும் பெற்ற புதல்வனை ஆழியின் மடித்த அச்சோழன் வரலாறும், அயலான் வீட்டுக் கதவைத் தட்டினது குற்றமெனக் கண்டதும் தன் கையைக் குறைத்துக் கொண்ட பொற்கைப் பாண்டியன் வரலாறும், ஆராயாது கோவலனைக் கொன்றது குற்றமெனக் கண்டதும் அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ் செழியன் வரலாறும். “கொடியனெம் இறையெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலே னாகுக.” (புறம் - 72) என்னும் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் கூற்றும், “பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதகவில்” (சிலப்.25 : 101 - 4) என்னும் செங்குட்டுவன் கூற்றும், தமிழரசர் செங்கோன்மைத் திறத்தினுக்கு எடுத்துக்காட்டுகளாகும். “ வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது” (சிலப். 25: 98 - 9) என்னும் செங்குட்டுவன் உள்ளம். செங்கோன்மைத் திறத்தில் எவ்வளவு பற்றுள்ள தென்பதை உன்னுக. தமிழகத்தில் ஆட்சிமுறை என்று ஏற்பட்டதோ, அரசு என்று தோன்றிற்றோ அன்று தொட்டுத் தமிழகம் சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர்களால் இனிது ஆளப் பட்டு வந்தது. அம்மூவரசரும், ‘முடியுடை மூவேந்தர்’ என்றும், ‘முரசு முழங்குதானை மூவர்’ (புறம் - 35) என்றும் முன்னோர்களால் பாராட்டிப் பேசப்படும் அத்தகு பெருமை யுடையராவர். மூவரசர் என்னும் தொகைக் குறிப்புச் சொல், அவர்களையே குறிக்கும். இவர்களை, வண்புகழ் மூவர் என்று சிறப்பித்துக் கூறுவர் தொல்காப்பியர். இம் மூவரசர் மரபு தோன்றிய காலந்தொட்டுக்கடைச் சங்ககாலத்திறுதிவரை (கி.பி.3நூ), பல்லாயிரக்கணக்கான யாண்டுகள் யாதொரு மாற்றமும் இன்றித் தொடர்ச்சியாக அப்படியே அச்சுக் குலையாமல் இருந்து வந்திருப்பதே அவற்றின் சீரிய சிறப்புக்கு சான்றாகும். உலக அரச மரபு எதுவும் இங்ஙனம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து அப்படியே இருந்து வந்ததாக வரலாறில்லை. ஏன்? பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக அரசுவீற்றிருந்த அரசமரபு ஒன்றும் இல்லையெனலாம். பல்லாயிரக்கணக் கான ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒரே அரசமரபு ஆண்ட பெருமை தமிழகத்திற்கே உரிய தனிப்பெருமையாகும். சேர சோழ பாண்டியர் என்னும் இம்மூவரச மரபினுள், பாண்டிய அரசமரபே முதலில் தோன்றிய பழமையான அரச மரபாகும். அதன் பெயரே அதற்குச் சான்றாகும். அது குமரிக் கண்டம் என்னும் கடல் கொண்ட தென்றமிழகத்தில் தோன்றி வளர்ந்த உலக முதலரச மரபாகும் என்பதை முன்னர்க் கண்டோம். பாண்டியர் பெருவள நாட்டை ஆண்டு வந்த போது, குமரிக்கு வடபாலுள்ள தமிழகப் பகுதியைச் சோழரும் சேரரும் ஆண்டு வந்தனர். அத்தென்னாட்டைக் கடல் கொண்ட பின், அவ்வட தமிழகம் மூன்று பகுதியினையும் ஒருசேர முத்தமிழகம் என்று அழைத்து வந்தனர். முத்தமிழகம் என்பது, சேர சோழ பாண்டியர் ஆளும் மூன்று பகுதியையுடைய தமிழகம் என்பதோடு, இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பகுதிப்பட்ட தமிழ் வழங்கும் நாடு என்னும் பொருளுங் குறித்து இன்புறுத்தும். இம் மூவரசர் மரபும், பழந்தமிழ்ப் பெருங்குடியிலிருந்து தோன்றி வளர்ந்த அரசமரபுகளாகும் என்பது, ‘பெருநில முழு தாளும் பெருமகன் தலைவைத்த ஒரு தனிக்குடி’ (சிலப். 1 : 31 -2). என்னும் இளங்கோவடிகள் வாக்கால் விளங்கும். அதாவது, ஒரு முதுகுடியிலிருந்து தோன்றிய குடியரசிலிருந்து தோன்றி வளர்ந்த முடியரச மரபாகும் என்பதாம். இம்மூவரச மரபினரும் ஏறக்குறைய, கி.மு. முதல் நூற்றாண்டு வரை ஒருவர்க்கொருவர் பகைமையின்றிப் பெரும் பாலும் ஒற்றுமையாகவே இருந்து வந்தனர். ஒருவர் நாட்டை ஒருவர் பிடித்தாள வேண்டுமென்ற மண்ணாசையின்றி, தத்தம் நாட்டைத் தாயென இனி தோம்பி வந்தனர்; தமிழ்நாடு மூவர்க்கும் பொது என்ற பெருநோக்குடையவராய் இருந்து வந்தனர். ‘பொதுமை சுட்டிய மூவருலகம்’ (புறம் - 357) என்னும் புறப்பாட்டு இதற்கு சான்றாகும். கடைச்சங்ககாலத் திறுதிவரை, இம்மூவரசர் நாட்டெல்லையும் பெயரும் அப்படியே இருந்தபடியே இருந்து வந்தமையும் இதற்குச் சான்றாகும். இம்மூவரச மரபினரும் வீரமும் ஆண்மையும் ஒருங்கே ஒப்ப உடையவராவர். இஃதும் அவர்கள் பகை கொள்ளாமலிருந்தமைக்கு ஒரு காரண மெனலாம். கணவன் மனைவி ஊடல் போல, ஒரு சிலர் ஒவ்வொருகால் மறம் மீதூர ஒருவர்க்கொருவர் மாறுபட்டுப் பொருதனரேனும், அதில் நீட்டித்து அழிவுதலைப்பட்டாரில்லை. பிற்காலத்தே அழிவு தலைப்பட்டு ஒருவர் மண்ணை ஒருவர் கொண்டமையே அம்மூவரச மரபு அழிவதற்குக்காரணமாயிற்றென்க. வேளிர்: முடியுடை மூவேந்தரும் தங்கீழ் ஆங்காங்கே குறுநில மன்னர்களை ஏற்படுத்தித் தத்தம் நாட்டினை நன்கு ஆண்டு வந்தனர். அவர்கள் தத்தம் நாட்டினைக் கண்போற் பேணிக் காத்து வந்தனர். அக்குறுநில மன்னர்கள், வேளிர் எனப்படும் வேளாண்குடிச் செல்வர்கள் ஆவர் என்பது, “ மன்னர் பாங்கிற் பின்னோர் ஆகுப” (அகத் - 30) மன்னர் பாங்கின் - மன்னர் சார்பில் ஆட்சிபுரிய, பின்னோர்- வேளாளர். “ வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே” (மரபு - 81) வேந்துவிடு தொழில் - படைத்தலைமை ஏற்றுப் பகை மேற் செல்லல் முதலியன. படை - வேல்வாள் முதலிய படைக்கலங்கள் அவர் - வேளாளர். என்னும் தொல்காப்பிய நூற்பாக்களானும், “உழுதுண்போரும் உழுவித் துண்போரும் என, வேளாளர் இருவகையின ராவர். இவருள் உழுவித் துண்போர் மண்டில மாக்களும் தண்டத்தலைவருமாய், சோழநாட்டுப் பிடவூரும் அழுந்தூரும் நாங்கூரும் நாவூரும் ஆலஞ்சேரியும் பெருஞ் சிக்கலும் வல்லமும், கழாரும் முதலிய பதியிற்றோன்றி, வேள் எனவும், அரசு எனவும் உரிமை எய்தினோரும், பாண்டி நாட்டுக் காவிதிப் பட்டம் எய்தினோரும், குறுமுடிக்குடிப் பிறந்தோர் முதலியோருமாய், முடியுடை வேந்தர்க்கு மகட் கொடைக் குரிய வேளாளர் ஆகுப” (அகத்-30. நச்) என்னும் நச்சினார்க் கினியர் கூற்றால் விளங்கும். மண்டிலம் - நாடு. தண்டலத் தலைவர் - படைத்தலைவர். உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி - அழுந்தூர் வேளின் மருமகன். அதாவது, அழுந்தூர் வேளின் மகளை மணந்தவன். அவன் மகன் கரிகாற்சோழன் - நாங்கூர் வேளின் மருமகன். உதியஞ்சேரல் என்னும் சேர மன்னன் - வெளியன் வேண்மான் மருமகன். அவன் மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - வேளாவிக்கோமான் பதுமன் மருமகன். அவன் மகன் சேரன் செங்குட்டுவன் - இளங்கோவேளின் மருமகன் என்பதை அறிக. இவ்வேளிர்களெல்லாம் உழுவித் துண்ணும் வேளாண் குடிச் செல்வர்களாவர். உழுதுண்போர் - தமது நிலத்தைத் தாமே உழுதுண்டு வாழும் உழவர்களும், பிறர் நிலத்தை உழுதுண்டு வாழும் உழவர் களுமாவர். உழுவித்துண்போர் - உழுதுண்போரைக் கொண்டு, தமது நிலத்தை உழுவித்து உண்டு வாழும் பெருஞ் செல்வராயர். பெருநிலக்கிழாராகிய இவ்வுழுவித்துண்ணும் வேளாளரே அந்நிலப்பரப்பை ஆளத் தகுதியுடையவராவரென்பதை அறிக. பாரி, காரி, ஓரி, பேகன், அதியன், ஆய், நள்ளி, பண்ணன், நன்னன், கங்கன், கட்டி, திதியன், அத்தி, பழையன், எழினி, எவ்வி, பொருநன், கொற்றன், குமணன் முதலிய சங்க காலச் சிற்றரசர்களெல்லாரும் உழுவித் துண்ணும் வேளாண் குடிச் செல்வர்களே யாவர். குறுநில மன்னர்களாகிய இவ்வேளிர்கள், பேரரசர் போன்ற பெருமையும் வீரமும் ஆண்மையும் ஒருங்கே உடையவர்: மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் இனப்பற்றும் மிக்கவர்; கொடை மடம் பட்டவர்; கொடை மடம் படினும் படைமடம் படாத மறப்பண்புடையவர் வேளாளர் யார் என்பதை, ‘பழங் கொங்கு மக்கள்’ என்னும் தலைப்பிற் காண்க. இக்குறுநில மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதி - நாடு எனப்படும். மூவேந்தர் முத்தமிழ் நாடும் பல உள் நாடுகளாகப் பாகுபட்டிருந்தன என்பது, பழந்தமிழ் நூல்களால் அறியக்கிடக்கின்றது. இவ்வேளிர்கள் தத்தம் நாட்டினைத் திறம் பட ஆண்டு வந்தனர். பேரரசுக்குத் திறை தருவதும் படைத் துணையாவதும் அன்றி, இவர்கள் முழு உரிமை உடையவர் களாய் இருந்து வந்தனர். ஊராட்சி : இக்குறுநில மன்னரேயன்றி, பேரூர் தோறும் இருந்த நிலக்கிழார்களான வேளாண்குடிச் செல்வர்கள், குடியரசராக இருந்து ஊராட்சி நடத்தி வந்தனர். அப்பேரூரைச் சூழ்ந்த சிற்றூர்களெல்லாம் அவ்வூராட்சிக் குட்படும். இது, இன்றைய ஊராட்சி போன்றதே. ஆனால், வழிவழிக் குடி மன்னராட்சியாக இருந்து வந்தது அவ்வூராட்சி. இங்ஙனம், பெருநில மன்னர், குறுநில மன்னர், குடி மன்னர் ஆகிய மூவகை யினராலும் முத்தமிழகம் முறையாக ஆளப் பட்டு வந்தது. எனவே, பேரரசாட்சி, சிற்றரசாட்சி, ஊராட்சி என்ற மூவகைப்பட்ட ஆட்சி முறையினால் திறம் பட ஆண்டு வந்தனர் முடியுடை மூவேந்தரும். ஊராட்சியைச் சிற்றரசரும், சிற்றரசினைப் பேரரசரும் கண்காணித்துக் குற்றங் கடிந்து குடிகாத்து வந்தனர். நானிலம் : இம்மூவகை ஆட்சிப் பிரிவேயன்றி, மற்றொரு வகையிலும் பழந்தமிழ் நாட்டாட்சிப்பிரிவிருந்து வந்தது. தமிழகம் - மலையும் காடும் வயலும் கடலும் பொருந்திய நாடு. மலையும் மலைசார்ந்த இடமும் -குறிஞ்சி நிலம் எனவும், காடும் காடு சார்ந்த இடமும் - முல்லைநிலம் எனவும், வயலும் வயல் சார்ந்த இடமும் - மருதநிலம் எனவும், கடலும் கடல் சார்ந்த இடமும் - நெய்தல்நிலம் எனவும் பெயர் பெறும். மலைசார்ந்த இடம் - மலைச்சாரல். காடு சார்ந்த இடம் - பெருங்காட்டை அடுத்த புல்லும் புதருமுள்ள இடம். வயல் சார்ந்த இடம் - தோட்டம். கடல் சார்ந்த இடம் - கடற்கரை. இவற்றுள் மருதநிலமே பெரும்பான்மை. குறிஞ்சி முதலிய நானிலங்களிலும் வாழ்ந்த மக்கள் முறையே - குறிஞ்சிநிலமக்கள், முல்லைநிலமக்கள், மருத நில மக்கள், நெய்தல்நிலமக்கள் எனப்படுவர். இவர்கள் மலை வளமும் கான்வளமும் வயல் வளமும், கடல் வளமுங் கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்நானிலச் சிறப்பினை அகப்பொருள் நூல்களிற் காண்க. இந்நானில மக்கள் வேறு, தமிழ் மக்கள் வேறு என எண்ணற்க. அவரும் இவரும் ஒருவரே யாவர். இவை நிலப் பிரிவால் ஏற்பட்ட பெயர். இதனாற்றான் தமிழகம் - நானிலம் எனப்பட்டது. மூவேந்தர் நாட்டிலுமுள்ள நானிலங்களும் தனித்தனித் தலைவர் களால் கண்காணிக்கப்பட்டு வந்தன. (தொல். அகத்.28). இன்றுள்ள கான்றுறை, கடற்றுறை முதலியவற்றின் ஆட்சி போன்றனவாகும் இந்நானில ஆட்சி. (கான்றுறை - காட்டிலாகா) “மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.”(அகத் -5) என்பது தொல்காப்பியம். மாயோன் முதலிய நால்வரும், நானிலங்களையும் முறையே இனிது காத்து வந்த நானில ஆட்சித் தலைவர்களாவர். சேரன், சோழன், பாண்டியன், அதியன் என்பன போல, மாயோன் முதலிய பெயர்கள், வழி வழியாக வழங்கி வரும் மரபுப் பெயர்களாகும். தொல்காப்பியர் காலத் தமிழர் (புலவர் குழந்தை) என்னும் நூலில் இதன் விரிவையும் விளக்கத்தையுங் காண்க. இனி, முதுவேனிற் காலத்தே முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் வறண்டு தம் வளம்பிரிந்து, நடப்போர் அடியை வருத்தும் வெப்ப மிகுந்த காலை, அது பாலை அல்லது பாலை நிலம் எனப்படும். பாலை - பிரிவு; வளம் பிரிதல். “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை என்பதோர் படிவங் கொள்ளுங் காலை” (சிலப்.11:64-6) எனக் காண்க. அக்காலை அங்கு வாழ்பவர் - பாலைநில மக்கள் எனப்படுவர் என்பது அகத்திணை மரபு. இது, தலைவி, தலைவனுடன் தலைவனூர்க்குச் செல்லும் உடன் போக்கிற்கும், தலைவன், தலைவியைப் பிரிந்து செல்வதற்கும் பயன்படுவது. பாலை என்பது ஒரு தனி நிலமன்று. இப்பாலை நிலமும் பாலை வனமும் வெவ்வேறென்றுணர்க. இவ்வைந்நில மக்களையே அகப்பொருட்டலைவர்க ளாக்கி அகத்திணைப் பாடல்கள் பாடினர் பழந்தமிழ்ச் சான்றோர்கள். குறிஞ்சி முல்லை முதலிய ஐவகை நில மக்களும் நில வகையால் பிரிவுபட்ட ஓரின உயர்குடித் தமிழ் மக்களே யாவர். புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்னும் ஐவகை அகவொழுக்கங் களுள், புணர்ச்சிக்குக் குறிஞ்சி நில மக்களையும், பிரிவுக்குப் பாலை நில மக்களையும், இருத்தற்கு முல்லைநில மக்களையும், இரங்கற்கு நெய்தல் நில மக்களையும், ஊடற்கு மருதநில மக்களையுங் கொண்டதும் இதற்குச் சான்றாகும். புணர்தல் முதலிய ஐவகை ஒழுக்கங்களும் ஒரு தலைவன் தலைவி பால் நிகழ்பவை என்பதையும் அறிக. புணர்ச்சிக்குரிய குறிஞ்சிநிலத் தலைவனும் தலைவியுமே, ஊடற்குரிய மருதநிலத் தலைவனும் தலைவியும் ஆவர் என்பதை அறியவும். இன்று ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கருதுவது போல, படகர், தொதவர், மலசர் முதலிய மலைவாழ் மக்களின் முன்னோர்களல்லர் பழந்தமிழ்க் குறிஞ்சிநில மக்கள். அன்னார் மேம்பட்ட நாகரிக நல்வாழ்வு வாழ்ந்து வந்த உயர் குடித் தமிழ் மக்களேயாவர். ஏனை நில மக்களும் இத்தகையரே. மூவேந்தர் நாட்டினும் உள்ள முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும் நானிலங்களால், அந்நானில இயற்கைப் பிரிவால், தமிழ் நிலம் முந்நான்கு பன்னிரு வகைப்படுதலான் அவற்றைத் தொல்காப்பியர், ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்’ (எச்.4) என்றார். தொல்காப்பிய உரையாசிரியர்கள் கருதுவது போல, பன்னிரு நிலம் - பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகள் அல்ல. அவை செந்தமிழ் நாட்டுப் பிரிவேயாகும். இங்குச் ‘செந்தமிழ்’ என்பது, தமிழ் என்னும் அளவில் நின்றதேயன்றி, கொடுந்தமிழுக் கெதிர்மறை குறிக்கவில்லை. இதன் விளக் கத்தை, ‘பூவா முல்லை’ (புலவர் குழந்தை) என்னும் நூலில் காண்க. மேலும் தொல்காப்பியம் குமரியாற்றங் கரையின் கண் செய்யப்பட்ட தென்பதை மறந்து, அப்பன்னிரு நிலத்தையும், கி.பி.பத்தா நூற்றாண்டுக்குப் பிற்பட்ட தமிழகத்தே காண முயன்றதே, அந் நூற்பாவுக்கு அஃதுரையன்மை என்பதற்குச் சான்றாகும். ஊராட்சி, குறுநிலவாட்சி, நானிலவாட்சி ஆகிய நல்லாட்சி நாட்டில் நடைபெற அதிகாரிகளையும் அலுவலாளர் களையும் ஏற்படுத்தி, அமைச்சர், அறிவர், ஒற்றர், தூதுவர் படைத்தலைவர் ஆகியோருடன் ஆய்ந்து முறை புரந்து வந்தனர் முடியுடை மூவேந்தரும். தலைநகரங்களும், பிற பெருநகரங்களும் நேரடியாட்சியில் இருந்து வந்தன. அந்நகர்களில், இன்றைய நகர் மன்றம் போன்ற ஒருவகை அமைப்பு அன்று இருந்து வந்தது. அவ்வமைப்பினர் - நகரப் பெரியோர் எனப்படுவர். “ தானை யானை குதிரை என்ற நோனா ருட்கும் மூவகை நிலையும்” “ மூன்றேர்க் குரவை பின்றேர்க் குரவை” (தொல். புறத் - 21) என்பதால், அன்று யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என்னும் நால்வகைப்படையும் இருந்து வந்தன என்பது பெறப்படும். “எட்டுவகை நுதலிய அவையத் தானும்” (தொல். புறத்.21) என்பதால், அறங்கூறவையமும் (நீதிமன்றம்) அன்று இருந்தமை பெறப்படும். ‘உறந்தை அவையகம், மோகூர் அவையகம்’ என்ற சங்க நூற் குறிப்புக்களும் உண்டு. நாட்டு நிலைபற்றி அதிகாரிகளையும் அலுவலாளர் களையும் கேட்டுத் தெரிந்தும், அரண்மனைப் பாதுகாப்பைப் பற்றி வாயிற் காவலரை வினாவியும், நாட்டுச் செல்வநிலை பற்றிக் கருவூலக் கண்காணிப்பாளரைக் கலந்தும், நகர் நலம் பற்றி நகரப் பெரியோர்களிடம் கேட்டும், படைநிலை பற்றி தானை யானை குதிரைத் தலைவர்களுடன் கலந்தறிந்தும், அறங் கூறவையத்தாருடன் ஆய்ந்து நல்ல தீர்ப்பு வழங்கியும் மூவரும் முறை திறம்பாதாண்டு வந்தனர். எனவே, பேரரசரும் சிற்றரசரும் மனம் போனவாறு தன்னாட்சி நடத்தாமல், அரசியலுறுப்பினர் அனைவரையும் அவ்வப்போது கலந்து, அன்னார் கருத்துரை கேட்டுச் சீரிய நேரிய முறையிற் சிறப்புடன் ஆண்டு வந்தனர் என்பதை அறிந்து இன்புறுவோமாக. 3. தமிழகப் பிரிவு சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர்கள் மூவரும் தொன்று தொட்டு நிலையாக ஆண்டு வந்ததால், பழந் தமிழகம் சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என முப்பெரும் பிரிவாகப் பாகுபட்டிருந்தது. அம்மூவரசர் ஆட்சி ஒழிந்து, அவ்வரச மரபுகள் மறைந்து பன்னூற்றுக் கணக்கான ஆண்டுகள் ஆகியும், இன்றும் அந்நாட்டுப் பிரிவுப் பெயர்கள் - சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்பன - வழக்கத்தி லிருந்து வருவதே அன்னாரின் ஆட்சியின் மாட்சியும் பழமையும் பெருமையும் இனிது விளங்கும். இவற்றுள், சேரநாடு தமிழ் மொழி வழக்கை இழந்து வேற்றுமொழி - மலையாள மொழி - வழக்குடையதாகி விட்டது எனினும், அது நிலநூல் வழக்கில் சேர மண்டலக் கரை என்றே குறிக்கப்பெறுதல் பெருமைக்குரியதொன்றாகும். சேர சோழ பாண்டிய நாடுகளே யன்றித் தமிழகத்தே கொங்கு நாடு, தொண்டை நாடு என்ற பிரிவுகளும் உண்டு. இவற்றுள், கொங்கு நாடு என்னும் பிரிவு தொன்று தொட்டே இருந்து வருவதொன்றாகும். தொண்டை நாடு, சங்க இறுதிக் காலத்தே ஏற்பட்டதாகும். சேரநாடு முதலிய ஐந்தும் முறையே- சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் எனவும் வழங்கப் பெறும். சேரநாடு: இன்றுள்ள மலையாள நாடு - சேர நாடு ஆகும். அது, அரபிக் கடலுக்கும் மேற்குமலைத் தொடருக்கும் இடைப் பட்ட நிலப்பரப்பாகும். வடக்கே துளுநாடும், தெற்கே தென் பாண்டி நாடும் அதன் எல்லைகளாகும். சேர நாட்டின் தலைநகர் வஞ்சி என்பது. அது, மேற்கு மலைத்தொடரில் தோன்றி அரபிக் கடலில் கலக்கும் பேரியாற்றங் கரையில் இருந்தது. இது மேல் கடற்கரையை அடுத்து இருந்த உள்நாட்டு நகர். இது, கருவூர் எனவும் வழங்கப் பெறும். நறவு, மாந்தை, தொண்டி, முசிறி, காந்தளூர், விழிஞம் என்பன சேர நாட்டின் துறைமுக பட்டினங்கள். முசிறி - பேரியாற்றின் கடல் முகத்தில் இருந்தது. தமிழகத்தின் குடக்கில் இருந்தமையால், சேரநாடு குடபுலம் எனவும் வழங்கிற்று, மலைநாடு, மலைஞாலம் என்ற வழக்கும் இதற்குண்டு. இப்பெயரினின்று பிறந்ததே மலையாளம். சேர மன்னரின் அரசியற் குறியும் கொடியும் வில் ஆகும். மாலை - பனந்தோடு. சேரர், சேரலர், சேரல், உதியர், பொறையர், குடவர், குட்டுவர், பூழியர், வானவர், வில்லவர் என்பன சேர மரபுப் பெயர்களாகும். சேர நாட்டு மக்கள் - சேரர் எனப் படுவர். சோழநாடு : திருச்சி, தஞ்சை மாவட்டங்களும், தென்னார்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியும் சோழநாடு ஆகும். அதாவது தென்பெண்ணை யாற்றுக்கும், புதுக்கோட் டைப் பக்கத்தே உள்ள தென்வெள்ளாற்றுக்கும் இடைப் பட்டது சோழநாடு ஆகும். கிழக்கே வங்கக்கடலும், மேற்கே கொங்கு நாடும் இதன் எல்லை. சோழ நாட்டின் தலைநகர் - உறையூரும் புகாருமாகும். புகாரின் மறுபெயர் - காவிரிப்பூம் பட்டினம் என்பது. உறையூர் - இன்று திருச்சியின் ஒரு பகுதியாக உள்ளதேயாம். புகாரும், நாகபட்டினமும் சோழ நாட்டின் துறைமுக பட்டினங்கள். திருவாரூர், பழையாறை, தஞ்சை, கங்கைகொண்டசோழபுரம் என்பன, பிற்காலத்தே சோழ மன்னர்களின் தலைநகர்களாக இருந்து வந்தன. சோழ மன்னரின் இலச்சினையும் (அரசியற்குறி) கொடியும், புலி. மாலை - ஆத்தி, சென்னி, கிள்ளி, செம்பியன், வளவன் என்பன சோழ மன்னரின் மரபுப் பெயர்களாகும். சோழநாட்டு மக்கள் - சோழியர் எனப்படுவர். பாண்டிநாடு : மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்கள் பாண்டிநாடு ஆகும். வடகிழக்கில் தென்வெள் ளாறும், வடக்கில் கொங்குநாடும், சேரநாடும் பாண்டி நாட் டெல்லையாகும். பாண்டி நாட்டின் தலைநகர் - மதுரை. கொற்கையும் காயலும் பாண்டி நாட்டின் துறைமுக பட்டினங்கள். பாண்டிய மன்னரின் இலச்சினையும் கொடியும் - மீன், இது - கயல், கெண்டை எனவும் வழங்கப்பெறும், மாலை - வேம்பு. செழியன், வழுதி, மாறன், தென்னவன், மீனவன், பஞ்சவன் என்பன பாண்டியர் மரபுப் பெயர்கள், பாண்டி நாட்டு மக்கள் - பாண்டியர் எனப்படுவர். தொண்டைநாடு : சென்னை, செங்கற்பட்டு, வடார்க் காடு மாவட்டங்களும்; தென்னார்க்காடு, சித்தூர் மாவட்டங் களின் ஒரு பகுதியும் தொண்டை நாடு ஆகும். இதன் வடக் கெல்லை - வேங்கடம்; தெற்கெல்லை - தென் பெண்ணை யாறு; மேற்கெல்லை - கொங்குநாடு. தொண்டை நாட்டின் தலைநகர் - காஞ்சி (காஞ்சிபுரம்). துறைமுகப்பட்டினம் - கடன்மலை, அல்லது மாமல்லபுரம் (மகாபலிபுரம்). தொண்டை மண்டலம் முன்னர்ச் சோழர்களாலும், பின்னர்ப் பல்லவர் களாலும், மறுபடியும் சோழர்களாலும் ஆளப்பட்டு வந்தது. தொண்டைமான் என்போர் முன்னர்ச் சோழர்கீழிருந்தாண்டு வந்தனர். முன்னர் இது, அருவா நாடு என வழங்கிற்று. அதனால், அந்நாட்டுத் தமிழ் மக்கள் - அருவாளர் எனப்பட்டனர். இது தெலுங்கு நாட்டை அடுத்திருந்ததால், பிற்காலத்தே தெலுங்கர் தமிழரை - அரவாளு எனவும், தமிழை - அரவம் எனவும் அழைத்தனர். “வேழம் உடைத்து மலைநாடு, மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து, - பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்துத் தெண்ணீர் வயற் றொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து” என்னும் பழம்பாட்டால், இந்நாடுகளின் சிறப்பு விளங்கும், மலைநாடு - சேரநாடு, வேழம் - யானை, பூழியர் - பாண்டியர், சேரநாட்டிற்போலப் பாண்டிநாட்டிலும் பூழிநாடு என்னும் பகுதி இருந்தது. நடுநாடு: சோழ தொண்டை கொங்கு நாடுகட்கிடையே நடுநாடு என்ற பிரிவும் சங்க இறுதிக் காலத்தே ஏற்பட்டிருந்தது. இதன் வடக்கெல்லை - பாலாறு; தெற்கெல்லை - வட வெள்ளாறு; மேற்கெல்லை - கொங்கு நாடு; சோழ நாட்டின் வட பகுதியும், தொண்டை நாட்டின் தென்பகுதியும் கொண் டதே இந்நடுநாடாகும். இதன் தலைநகர் - திருக்கோவலூர். மலையமான் மரபினர் இந்நாட்டை ஆண்டு வந்தனர். கொங்கு நாடு: கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களும், திருச்சி மதுரை மாவட்டங்களின் மேல் பகுதி யும் வடபகுதியும் கொண்டது கொங்குநாடு ஆகும். அதாவது, மதுரை மாவட்டத்துப் பழனி, திண்டுக்கல் வட்டங்களும், திருச்சி மாவட்டத்துக் கரூர், குளித்தலை வட்டங்களும், வடக்கில் கொள்ளேகால் வட்டமும் கொங்கு நாட்டைச் சேர்ந்தவையாகும். சேல மாவட்டத்து ஓசூர், கிருஷ்ணகிரி வட்டங்களின் மலைப்பாங்கான வடபகுதி (பாராமகால்), அன்று கங்கநாட்டைச் சேர்ந்திருந்தது. கொங்குநாடு தொன்று தொட்டே வேளிர் பலரால் ஆளப்பட்டு வந்தது. கொங்கு நாட்டு மக்கள் - கொங்கல் எனப்படுவர். 4. கொங்கு நாட்டின் எல்லைகள் கொங்குநாடு, இந்நூலின் நுதலிய பொருளாகையால் அதன் எல்லைகள், இயற்கையமைப்பு முதலியன பற்றி விளக்க மாகக் காணுதல் வேண்டும். இவை ஒரு நாட்டு வரலாற்றின் முதலுறுப்புக்களாகும். ஒருநாட்டின் எல்லைகள் அந்நாட்டின் இருப்பிடத்தை அறிவதற்கும், ஒரு நாட்டின் இயற்கை அமைப்பு அந்நாட்டின் வளத்தை அறிவதற்கும் கருவிகளாகும். ஆகையால், முதற்கண் கொங்கு நாட்டின் எல்லைகளைக் காண்போம். வடக்குத் தலைமலையாம் வைகாவூர் தெற்கு குடக்குவெள் ளிப்பொருப்புக் குன்று - கிழக்கு கழித்தண் டலைசூழுங் காவிரிசூழ் நாடா குழித்தண் டலையளவே கொங்கு - பழம் பாடல் வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று - கிடக்கும் களித்தண் டலைமேவுங் காவிரிசூழ் நாட்டுக் குளித்தண் டலையளவு கொங்கு. - கொங்கு மண்டல சதகப் பதிப்பு இவ்வெண்பா விரண்டும், கொங்கு நாட்டின் மேற் கெல்லை-வெள்ளி மலை எனவும், தெற்கெல்லை - வைகாவூர் எனவும், கிழக்கெல்லை - குளித்தலை எனவும் கூறுகின்றன. ஆனால், வடக்கெல்லையோ- தலைமலை, பெரும்பாலை என இரண்டுபடக் கூறுகின்றன. தலைமலை, பெரும்பாலை என்பன, கொங்கு நாட்டின் வடக்கெல்லையாகவுள்ள மலைத் தொடரின் பெயர்களாகும். நீலகிரியிலிருந்து அம்மலைத் தொடர் - தலைமலை, பிளிகிரிரங்கன் மலை, மாதேசுவரன் மலை, பருகூர் மலை, பாலைமலை என்னும் பெயர்ப் பிரிவுகளுடன் அமைந்துள்ளது. பெரும்பாலை - பாலைமலை. மேல் கொங்குக்குத் தனாமலையும், வடகொங்குக்குப் பாலைமலையும் எல்லைகளாகும் கொங்கு நாட்டு மக்கள் அவ்வடமலைத் தொடரை - பாலைமலை என்பதே பெருவழக்கு. வைகாவூர் - பழனி. குளித்தண்டலை - குளித்தலை. குளிர்தண்டலை என்பதே - குளித்தலை என மருவிற்று. தண்டலை - சோலை, இவ்வூர், குளித்தலை வட்டத்தின் தலைநகர், காவிரியின் தென்கரையில் உள்ளது இவ்வூர், இஃதொரு புகைவண்டி நிலையமாகும். குளித்தலை வட்டம் கொங்கு நாட்டைச் சேர்ந்ததாகும். மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழனி மதிகுடக்குக் கதித்துள வெள்ளி மலைபெரும் பாலை கவின்வடக்கு விதித்துள நான்கெல்லை சூழ வளமுற்றும் மேவி விண்ணோர் மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு மண்டலமே. எனக் கொங்கு மண்டல சதகம், கொங்கு நாட்டின் கிழக் கெல்லை மதிற்கரை என்கின்றது. மதில் கரை - மதிற்கரை. இது இன்று மதுக்கரை எனத் திரிந்து வழங்குகிறது. இது, குளித் தலைக்கு மேற்கில் காவிரியின் தென்கரையில் உள்ள தோர் ஊர். வடக்கெல்லை - தலைமலை. பாலைமலை என இரண்டாகக் கொண்டதுபோல, கிழக்கெல்லையும் - குளித்தலை, மதிற்கரை என இரண்டாகக் கொண்டதாகும். மதில், கோட்டை ஆதலான், இது கோட்டைக்கரை எனவும் வழங்கும். மதுக்கரைச் செல்லாண்டியம்மன் கோயில் சிறப்புடையது. எனவே கொங்கு நாட்டின் எல்லைகளாவன. தெற்கு - பழனி மேற்கு - வெள்ளி மலை (வெள்ளியங்கிரி) வடக்கு - தலைமலை, பெரும்பாலை (பாலைமலை) கிழக்கு - குளித்தலை, மதிற்கரை. 5. கொங்கு நாட்டின் அமைப்பு கொங்கு நாட்டின் தெற்கெல்லை பழனி எனினும், பழனி மலையின் தொடர்ச்சியாக அதன் தெற்கில் உள்ள வராகமலைத் தொடரும் கோடை மலைத் தொடரும் கொங்கு நாட்டைச் சேர்ந்தவையேயாகும். பழனி திண்டுக்கல் வட்டங்கள் கொங்கு நாட்டைச் சேர்ந்தவையாகலான், அவ்வட்டங்களில் உள்ள அம்மலைத் தொடர்ப் பகுதியும் கொங்கு நாட்டைச் சேர்ந்ததே யாகும். இதன் தொடர்ச்சியாக மேற்கில் உள்ள ஆனைமலைத் தொடரும் கொங்கு நாட்டின் தெற்கெல்லையாகும். இம்மலைத் தொடர்கள் ஏறக்குறைய 6000 அடி உயரமுடையவை. ஆனைமுடி 8850 அடி. மேற்கெல்லை வெள்ளிமலை எனப்படினும், அது மேற்கு மலைத் தொடரைச் சேர்ந்ததேயாகும். மேற்குமலைத் தொடரும், அதிலுள்ள நீலகிரி மாவட்டமும் கொங்கு நாட்டைச் சேர்ந்தன வேயாகும். மேற்குமலைத் தொடரின் மேற்பரப்புக் கொங்கு நாட்டைச் சேர்ந்ததாகையால், மேற்கு மலைத் தொடரின் மேல் சாரலே கொங்கு நாட்டின் மேற் கெல்லையாகும். பாலக்காட்டுக் கணவாயை அடுத்து அதன் வடக்கில் உள்ள அம்மலைத் தொடரின் மேற்பரப்பு - வள்ளுவநாடு எனப்படும். அது, கொங்கு நாட்டைச் சேர்ந்த தென்பது இதற்குச் சான்றாகும். அவ்வள்ளுவநாடு, வெள்ளிமலை சூழவுள்ளது. ஆனைமலைத் தொடர், மேற்குமலைத் தொடரின் ஒரு பகுதியே, பாலக்காட்டுக் கணவாயே இடைவெளியாகும். வெள்ளி மலையும் நீலகிரியும் சுமார் 6000, 7000 அடி உயரமுடை யவை. கொங்கு நாட்டின் வடக்கெல்லையாகிய மலைத் தொடர், நீலகிரியின் தொடர்ச்சியாக வடகிழக்காகச் செல்கிறது. அது மேற்கிலிருந்து - தலைமலை, பிளிகிரிரங்கன் மலை, மாதேசுவரன்மலை, பருகூர்மலை, பாலைமலை, தொப்பூர் மலைகளின் தொடர்ச்சியாகும். இம்மலைத்தொடர் ஏறத்தாழ 3000 அடி உயரமுடையது. இம்மலைத் தொடரிலுள்ள பிளிகிரிரங்கன் மலையும் மாதேசுவரன் மலையும் கொங்கு நாட்டைச் சேர்ந்த கொள்ளே கால் வட்டத்தில் அமைந்துள்ளன. கொள்ளேகால் வட்டம் ஒரு மலைநாடு, கொள்ளேகால் வட்டத்தின் வடக்கெல்லை யாகக் கிழக்கு நோக்கிச் செல்லும் காவிரியாரே கொங்கு நாட்டின் வடக்கெல்லையாகும். கொள்ளேகால் வட்டத்தின் கிழக்கி லுள்ள, சேல மாவட்டத்து ஓசூர், கிருஷ்ணகிரி வட்டங்கள், கொள்ளேகால் வட்டத்தின் வடக்கெல்லையைக் கடந்து வடக்கே நெடுந் தொலை செல்கின்றன. அவ்வட்டங்களின் தெற்கிலுள்ள தருமபுரி வட்டமே, கொள்ளேகால் வட்டத்தின் வடகெல்லையின் வடக்கில் பாதிக்குமேல் சென்றுள்ளது. ஓசூர், கிருஷ்ணகிரி வட்டங்களின் வடபகுதி - பாராமகால் எனப்படும். அப்பாரா மகாலே கொங்கு நாட்டின் வடக்கெல்லையாகும். குளித்தலையும், மதிற்கரையும் கிழக்கெல்லை எனப் படினும், தொப்பூர்மலையைத் தொடர்ந்து ஒரு மலைத்தொடர் தென்கிழக்காகச் சென்று, பின் வடதெற்காகச் செல்கிறது. அம்மலைத் தொடரில் - சேர்வராயன்மலை. கோதைமலை, கல்வராயன் மலை, பச்சைமலை (விச்சிமலை), கொல்லிமலை ஆகிய மலைகள் தொடராக அமைந்து, அத்தொடர் கிழக்கெல்லை யாக அமைந்துள்ளது. கல்வராயன் மலைக்கும் பச்சைமலைக்கும் இடையில் சிறிது இடைவெளியுள்ளது. இத்தொடர் சுமார் 4000 அடி உயரமுடையது. கொங்கு நாட்டைச் சுற்றிலும் மலையரணாக அமைந் துள்ள இம்மலைத் தொடர்கள் செங்குத்தாக உயர்ந்து நிற்க, அவற்றின் அடிவாரங்கள் 1000 முதல் 1500 அடிவரை உயர முடையனவாக இருக்கின்றன. அவ்வடிவாரங்களிலிருந்து நிலம் படிப்படியாக வாட்டமாகத் தாழ்ந்திருக்கிறது. பெரிதும் சிறிதுமான ஆறுகள் பல, சுற்றிலுமுள்ள அம்மலைத் தொடர் களில் தோன்றி வந்து, நாட்டின் நடுவில் செல்லும் காவிரியில் கலக்கின்றன. (‘ஆறுகள்’ என்னும் தலைப்பிற் காண்க.) நாற்புறமும் உயரிய வலிய மலையரண்களால் சூழப் பட்டுத் தென்கிழக்குப் பகுதியில் மட்டும் சிறிது பாகம் இடை வெளியாக அமைந்துள்ளது கொங்குநாடு. அதாவது, நாற் புறமும் உயர்ந்து நடுவில் தாழ்ந்து, அத்தாழ்வு நாட்டின் தென் கிழக்கோரமாக வெளியே செல்கிறது. கொங்குநாட்டின் இடையே காவிரியாறு வடக்கிருந்து தெற்காகச் சென்று, பின் கிழக்கே திரும்பி, அத்தாழ்வின் வழியாகச் சோழ நாட்டிற் புகுகிறது. எனவே, கொங்கு நாடு ஒரு மண்விளக்குப் போலவும் காவிரியாறு திரிபோலவும், காவிரியினும், நாற்புறமும் இருந்து வந்து காவிரி புகும் ஆறுகளிலும் உள்ள நீர் எண்ணெய் போலவும், சோழ நாட்டிற்புகும் காவிரி அவ்விளக்குச்சுடர் போலவும் அமைந்துள்ள அமைப்பு அறிந்து இன்புறற் பால தொன்றாகும். காவிரி வற்றாத வளங்கெழீஇய ஆறாகையால், கொங்கு நாட்டைத் தூண்டா மணிவிளக்கு எனல் தகும். இயற்கையமைப்புப் படத்தினை நோக்குக. இத்தகைய இயற்கையமைப் புடைய நாடு, இந்நாட்டில் வேறொன்று மில்லையெனலாம். 6. இயற்கையமைப்பு இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற் குறுப்பு. (குறள்) இருபுனலும் - மேல் நீரும் கீழ்நீரும் ஆகிய இரண்டு நீரும், வாய்ந்த மலையும் - பயனுள்ள மலையும், வருபுனலும் - அம் மலையில் தோன்றி வருகின்ற ஆற்று நீரும், வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு - வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புக் களாகும். மேல்நீர். - மழைநீர். கீழ் நீர் - கிணற்று நீர். கீழிருந்து நீர் ஊறுவதால் கிணறு - கீழ்நீர் எனப்பட்டது. வருபுனல் - ஆறு. புனல் - நீர். மழை, கிணறு, மலை, ஆறு அரண் என்னும் இவ் வைந்தும் பொருந்தியதே சிறந்த நாடாகும் என்பது, மழை பொருந்துதல் - மழை பெய்யும் நிலையில் நாடு அமைந்திருத்தல். கொங்கு நாடு. மேற்குப் பருவமழை பெய்தற்கேதுவான பாலக் காட்டுக் கணவாய்க்கு நேரினும், கிழக்குப் பருவமழை பெய்தற் கேற்ற இடத்தினும் அமைந்திருத்தலை அறிக. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். (குறள்) என, ஐவகை அரண்களில் மலையும் ஒன்றாதல் காண்க. கொங்கு நாடு, ‘இருபுனலும்’ என்னும் குறளுக்கு இலக்கிய மாக அமைந்துள்ளமை அறிந்து இன்புறற்பால தொன்றாகும். கொங்கு நாட்டின் அமைப்பைக் கொண்டே வள்ளுவர் இக்குறளைச் செய்துள்ளனர் என்றுகூடத் துணிந்து கூறலாம். நாற்புறமும் ஓங்கிப் பரந்துயர்ந்த மலைத் தொடர்களை யுடையது கொங்குநாடு. அம்மலைகளில் தோன்றி வந்து பாயும் காவிரி, பவானி, ஆன்பொருநை முதலிய ஏராளமான ஆறுகளையுடையது கொங்குநாடு. மழைவளந் தப்பிய காலத்தும் வளந்தப்பாத ஏராளமான ஆழ்ந்தகன்ற கிணறு களையுடையது கொங்கு நாடு. மலைகளில் அடர்ந்து வளர்ந்த வானளாவிய மரங்கள் இருப்பதால், அங்கு மிகுதியாக மழை பெய்கிறது. அம் மழைநீர் மாரிக் காலத்தே ஆறாகப் பெருகி வருவதோடு, மலைகள் மாரிக் காலத்தே உட்கொண்ட மழை நீரைக் கோடைக் காலத்தே அருவியாகத் தருதலான், மலைகளி லிருந்து வரும் பேராறுகள் என்றும் வற்றாது பாய்ந்து நாட்டை வளஞ் செய்கின்றன. காவிரி, வானி, ஆன் பொருநை முதலிய ஆறுகளில் எப்போதும் நீரோடுவதன் காரணம் இதுவேயாகும். கொங்கு நாட்டுக்கும், ‘இருபுனலும்’ என்னும் அக்குறளுக்கும் உள்ள பொருத்தம் எப்படி! 1. மலைகள் கொங்கு நாட்டைச் சுற்றிலும் நாற்புற எல்லையாக உயர்ந் தோங்கிப் பரந்த மலைத்தொடர்கள் வல்லரணாக அமைந்துள்ளன என்பதைக் கண்டோம். அம்மலைத் தொடர் களில் - கோங்கு, வேங்கை, தேக்கு, ஈட்டி, கருங்காலி, மருது, இருள், ஆச்சா, சந்தனம், அகில், மா, பலா, மூங்கில் முதலாய வானுற ஓங்கிய பல்வகை மரங்களும், பல்வேறு வகையான செடி கொடிகளும் மிக்குத் தழைத்துப் பூத்து நறுமணங் கமழ்கின்றன; காய்த்துக் காயுங்கனியுந் தருகின்றன. அம்மலை களில் பல்வகையான காய்கறி கிழங்குகள் விளைகின்றன; வாழை, ஆரஞ்சு, முந்திரி முதலிய பழவகைகளும்; மஞ்சள், இஞ்சி, மிளகு, ஏலம், கிராம்பு, திப்பிலி, சாதிக்காய், நெல்லிக் காய், கடுக்காய், தான்றிக் காய், அரக்கு, தேன் முதலிய பல்வேறு வகையான பொருள்களும் உண்டாகின்றன; காப்பியும் தேயிலையும் பயிராகின்றன. கோடைமலையில் ஏலக்காய் மிகுதி. முப்பழத்தில் முதன்மையுடைய அப்பழத்திற் சிறந்த விருப்பாட்சி மலைப் பழம் கொங்கு நாட்டுப்பழம். இம் மலைவாழை, தீரன் சின்னமலை (1804) பயிரிட்ட தென்பதை அறியவும். ஆனைமலைத் தொடரில் யானைகள் மிகுதி. நீலகிரியில் காய்கறி கிழங்கு வகைகள் மிகுதி. பருகூர், ஆலம்பாடி மலைப் பகுதிகளில் மாடுகள் மிகுதி. சேர்வ ராயன் மலைத் தொடர் கனிவள மிக்கது. கொல்லிமலைத் தேன் இலக்கியப் புகழுடையது. இம்மலைத் தொடர்கள் மக்கள் வாழும் ஊர்கள் நிறைந்துள்ள மலை நாடுகளாகத் திகழ்ந்து பழங்காலக் குறிஞ்சி நில வாழ்வை நினைப்பூட்டுகின்றன. நீலகிரி ஒரு மாவட்டமாக விளங்குகிறது. சேர்வராயன் மலையிலுள்ள ஏர்க்காட்டுப் பகுதி ஒரு வட்டமாகத் திகழ்கின்றது. கோடை மலையும் நீலகிரியும் கோடைக்கால உறைவிடமாக இலகுகின்றன. பழனிமலை, கோடைமலை, ஆனைமலை, நீலமலை, கொல்லிமலை, விச்சிமலை முதலியவை இலக்கியப் புகழுடைய மலை களாகும். நாட்டின் நாற்புறமும் வலிய அரணாகச் சூழ்ந்துள்ள இப் பெருமலைத் தொடர்களேயன்றி உள்நாட்டில் ஏராளமான பெருமலைகளும் சிறு மலைகளும் குன்றுகளும் நின்று நிலவு கின்றன. அவை யாவன கோவை மாவட்டம் வட்டம் 1. மருதமலை, குருடிமலை, இரத்தினகிரி (சிரவணம்பட்டி மலை), கணவாய் மலை, கோவை ஐயாச்சாமி மலை, அனுமக்குமாரமலை 2. ஓதிமலை, குருந்தமலை, தோகைமலை- அவிநாசி 3. தென்சேரி மலை (செஞ்சேரி). அலகுமலை முத்துக்குமாரசாமி மலை, மலைப் பல்லடம் பாளையம் 4. பொன்மலை (கிணற்றுக்கடவுமலை) ஆனைமலைக்காடு, கோலார் பொள்ளாச்சி பட்டி மலை 5. திருமூர்த்தி மலை, குதிரை மலை உடுமலைப் முதலியன. பேட்டை 6. ஊதியூர் மலை, வட்டமலை, சிவன் மலை, திருமான்கரடு தாராபுரம் 7. சென்னிமலை, அறச்சலூர் மலை (நாகமலை), எழுமாற்றூர் மலை, அரசண்ணாமலை, எட்டிமலை, ஈரோடு கதித்த மலை, மலைப்பாளையம் 8. பெருமாள் மலை, ஊராட்சிக் கோட்டை பவானி மலை, பருவாய்ச்சி மலை, அந்தியூர் மலை 9. தவளகிரி, பவளகிரி, நாகமலை, திட்ட மலை, குன்னத்தூர் மலை, அருளிமலை, கோபி ஒழலக் கோயில் சேலம் மாவட்டம் வட்டம் 1. திருச்செங்கோடு, சங்ககிரி, மோரூர் திருச்செங் மலை, பெருமாள் மலை, கபிலை மலை, கோடு வைகைப் பொன் மலை, சூரியன் மலை 2. கஞ்சமலை, பெருமாள்மலை சேலம் சேர்வராயன் மலை, கோதைமலை 3. வேளுக்குறிச்சி மலை, கொங்கணமலை, இராசிபுரம் போதமலை 4. நாமக்கல் மலை, கந்தமலை, நயினார் நாமக்கல் மலை 5. தீர்த்தமலை - அரூர் சேலமாவட்டத்து மற்ற வட்டங்களிலும் மலைகள் உள்ளன. ஓசூர், கிருஷ்ணகிரி வட்டங்களின் தென் பகுதியில் பல மலைகள் உள்ளன. சேலமாவட்டத்தில் இன்னும் ஏராளமான சிறுமலைகளும் குன்றுகளும் உள்ளன. சேர்வராயன் மலை சேலத்திலிருந்து வடக்கே 24 கல் நீளமுடையது. சேர்வராயன் மலையின் 13 கல் கிழக்கில் வடகிழக்காக 25 கல் நீளமுடையது கோதை மலை. 1. அயிரமலை (ஐவர் மலை), கொண்டறங்கி மலை (கொண்டல் தங்கி) -பழனி 2. பன்றி மலை -திண்டுக்கல் 3. புகழி மலை, தாந்தோன்றி மலை, வெண்ணெய்மலை -கரூர் குறிப்பு : இம்மலைகள் மீதெல்லாம் கோயில்கள் உண்டு. சில மலைகளில் வற்றாத சுனைகள் உண்டு. கஞ்சமலை முதலிய சில மலைகளில் மருந்துச் செடி கொடிகள் உண்டு. சில மலைகளில் இரும்பு முதலிய கனிவளம் உண்டு. 2. ஆறுகள் 1. காவிரியாறு : இது, மேற்கு மலைத் தொடரில் தோன்றி, மைசூர் நாட்டின் வழியாகக் கிழக்கு நோக்கி வந்து கொங்கு நாட்டின் வடக்கெல்லையில், தர்மபுரி மாவட்டத்து ஓகேனகல் (புகைக்கல்) என்னும் இடத்தில் தெற்காக வீழ்ந்து, கோவை சேலமாவட்டங்கட்கிடையில் தெற்கு நோக்கிச் சென்று, கரூர்க் கணித்தாய்க் கிழக்கே திரும்பி போய்ச் சோழ நாட்டை அடைகிறது. பொன்னி என்பது இதன் மறுபெயர். மேற்கு மலையில் தோன்றும் கீழ்ப்பூவானி என்னும் ஆறு, மைசூர் நாட்டில் காவிரியுடன் கலக்கிறது. மைசூர் நாட்டில்காவிரிக்குக் கண்ணம் பாடி முதலிய 12 அணைகள் உண்டு. காவிரியின் அணைகளுட் சிறந்த மேட்டூர் அணை கொங்கு நாட்டில் உள்ளது. 2. பவானியாறு : இது, நீலகிரியில் தோன்றி கோவை மாவட்டத்து அவிநாசி, கோபி, பவானி வட்டங்களின் வழி யாகக் கிழக்கு நோக்கி வந்து, பவானி என்னும் ஊருக் கண்மையில் காவிரியுடன் கூடுகிறது. இக்கூடுதுறையில் சிறப்பு நாட்களில் மக்கள் திரளாக வந்து நீராடுவர். இவ்வாற்றில், சத்திய மங்கலத்திற்கு 8 கல் மேற்கில் கீழ்பவானி அணையும், சத்திய மங்கலத்திற்கு 4 கல் கிழக்கில் கொடிவேரி அணையும். பவானிக்கருகில் காளிங்கராயன் அணையும் உள்ளன. இதுவும் காவிரிபோல் வற்றாத ஆறே. வானி என்பது இதன் பழம் பெயர். பூவானி என்ற வழக்கும் இதற்குண்டு. பூவானி என்பதே பவானி எனத்திரிந்தது. சிறுவானி, பாய்கரை (பைக்காரா), கல்லாறு, குன்னூராறு, மாயாறு என்பன, வானியாற்றில் கலக்கும் சிற்றாறுகள். 3. நொய்யல் : இது, வெள்ளி மலையில் தோன்றிக் கோவை, பல்லட வட்டங்களின் வழியாகக் கிழக்கு நோக்கிச் சென்று, ஈரோடு தாராபுர வட்டங்களுக்கிடையே எல்லை யாகக் கிழக்கு நோக்கி ஓடிக் காவிரியில் கலக்கிறது. இவ்வாற்றில் 32 பழைய அணைகள் உண்டு. காஞ்சி என்ற பெயரும் இதற்குண்டு. காஞ்சி, நீலிப்பள்ளம், வெண்ணாற்றங் கரை, நள்ளாறு என்பன, நொய்யலாற்றில் கலக்கும் சிற்றாறுகள். 4. அமராவதி : இது, மேற்குமலைத் தொடரில், மூணாறு என்னும் இடத்தில் தோன்றி, உடுமலை, தாராபுர வட்டங்களின் வழியாய்க் கிழக்கு நோக்கி ஓடிக் கரூர்க்குக் கிழக்கில் காவிரியில் கலக்கிறது. உடுமலை வட்டத்தில் இதற்கு அமராவதி அணை என்ற புதியஅணை கட்டப்பட்டுள்ளது. அவ்வணையின் கிழக்கில், காவிரியில் கலக்கும் வரை இவ்வாற்றில் 29 வாய்க் கால்கள் உள்ளன. ஆன்பொருநை என்பது இதன் பழம்பெயர். குதிரை ஆறு, சண்முகநதி, உப்பாறு, குடவனாறு என்பன ஆன் பொருநையில் கலக்கும் சிற்றாறுகள். காவிரி, வானி, காஞ்சி, ஆன்பொருநை என்னும் இவ்வாறுகள் நான்கும் இலக்கியச் சிறப்புடையவையாகும். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள்: 1. தென்பெண்ணை : இது, மைசூர் நாட்டிலுள்ள நந்தி மலையில் தோன்றி, ஒசூர், கிருஷ்ணகிரி, அரூர், வட்டங்களின் வழியாய் ஓடி, தென்னார்க்காடு மாவட்டத்தின் வழியாகச் சென்று, கடலூருக்கருகே கடலில் கலக்கிறது. கிருஷ்ணகிரிக்குப் பக்கத்தில் (தெற்கில்) இவ்வாற்றில் கிருஷ்ணகிரி அணை உள்ளது. இவ்வாறும் இலக்கியச் சிறப்புடையதே. 2. சனற்குமார ஆறு : இது, ஒசூர் வட்டத்தே, ஒசூர்க்கு 17 கல் அளவில் உள்ள தளி அருகே தோன்றி, பெண்ணாகரப் பகுதி வழியே ஓடி, ஓகேனகல் அருகே காவிரியில் கலக்கிறது. 3. பாம்பாறு : இது, வடார்க்காடு மாவட்டத்துச் சவ்வாது மலை, ஏலகிரி இவற்றிடைத் தோன்றி, கிருஷ்ணகிரி, அரூர் வட்டங்களின் வழியே ஓடித் தென்பெண்ணையில் கலக்கிறது. 4. கம்பை நல்லூர் ஆறு : இது, தருமபுரி வட்டத்தில் பாய்ந்து, தென்பெண்ணையில் கலக்கும் ஒரு சிற்றாறு. 5. சுவேதநதி : இது, கொல்லிமலையில் தோன்றி, ஆற்றூர் வட்டத்தின் வழியே ஓடி வசிட்ட நதியுடன் சேர்ந்து, தென்னார்க்காடு மாவட்டத்திற்குச் சென்று, வடவெள்ளாறு என்ற புதுப்பெயர் பெற்றுப் பொலிகிறது. 6. வசிட்டநதி : இது, கல்வராயன் மலையில் தோன்றி, ஆற்றூர் வட்டத்தே சவேதநதியுடன் கலக்கிறது. 7. தொப்பையாறு : இது, சேர்வராயன் மலையில் தோன்றி, தருமபுரி, ஓமலூர் வட்டங்களின் எல்லையாக மேற்கு நோக்கி ஓடி, மேட்டூர் அணைக்கு அப்பால் சோழ பாண்டி என்னுமிடத்தில் காவிரியில் கலக்கிறது. 8. சரபங்கநதி : இது, சேர்வராயன் மலையில் தோன்றும் பெரியாறு, குட்டாறு என்னும் இரண்டும் கலந்து, சரபங்கநதி எனப்பெயர் பெற்று, ஓமலூர் வட்டத்தின் வழியே ஓடி, காவேரிப்பட்டி என்னுமிடத்தில் காவிரியில் கலக்கிறது. 9. திருமணிமுத்தாறு : இது, சேர்வராயன் மலையில் தோன்றி, ‘சேலம் நகரின் கூவம்’ என்னும்படி நகரிடைச் சென்று, சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் வட்டங்களின் வழியாய்த் தெற்கு நோக்கி ஓடி, வேலூர்க்கு 3கல் கிழக்கில் கூடுதுறை என்னும் ஊர்க்கருகில் காவிரியில் கலக்கிறது. 10. பொன்னியாறு : இது, கஞ்சமலையில் தோன்றி,டி மகுடஞ்சாவடிப் புகை வண்டிப் பேட்டை ஓரமாகத் தெற்கு நோக்கி ஓடிக் காவிரியில் கலக்கிறது. இவ்வாற்று மணலி லிருந்து எடுத்த பொன்னைக் கொண்டு தான், ஆதித்தசோழன் (881 - 907) தில்லைச் சிற்றம் பலத்தைப் பொன்னம்பலம் ஆக்கினான். கொங்கு நாட்டில் இன்னும் சிற்றாறுகளும் பெரும் பள்ளங்களும் ஓடைகளும் நாடு முழுவதும் ஏராளமாக உள்ளன. மாரிக்காலத்தே இவற்றின் வளத்தைக் கண்டு களிக்கலாம். இப்போது விளங்குகிறதா, ‘இருபுனலும் வாய்ந்த மலையில் வருபுனலும் வல்லரணும் நாட்டிற் குறுப்பு’ என்னம் வள்ளுவர் குறளுக்குக் கொங்குநாடு இலக்கியமாய் - எடுத்துக் காட்டாய் - அமைந்துள்ள தென்பது? 7. இயற்கை வளம் ‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்பது, தமிழ் நாட்டுப் பழமொழி. மலிதல் - நிறைதல்; பல்வகை வளமும் குறைவின்றி நிறைந்திருந்தால். இப்பழமொழி எதனால் எழுந்தது? இதன் கருத்தென்ன? ஒரு நாட்டின் வளத்துக் காரணமாய் இருப்பவை மலை களும் ஆறுகளுமே யாகும். கொங்கு நாட்டைச் சுற்றிலும் ஓங்கிப் பரந்துயர்ந்த மலைத் தொடர்கள் அமைந்துள்ளன. அவை தமிழ் நாட்டின் செவிலித்தாயராகும். பச்சிளங்குழவி களுக்கு அன்போடு பாலூட்டி வளர்க்கும் தாயார் போல, தமிழ் நாட்டிற்கு, தமிழ் மக்கட்கு நீரூட்டி வளர்க்கும் அன்புடை அன்னையர் அம்மலைகளே யாகும். மேலும், அகநாடெங்கும் நூற்றுக்கணக்கான பெரு மலைகளும் சிறுமலைகளும் குன்றுகளும் ஊற்றிருந்தூறும் உயிர் நிலைக்களனாக அமைந்துள்ளன என்பதைக் கண்டோம். அத்தொடர் மலைகளும் பெருமலைகளும் சிறுமலைகளும் குன்றுகளும் குன்றாக் கொழுநீர்க் களஞ்சியங்களாகும். மஞ்சு துஞ்சும் மரமார் உயர்மலைகளிற்றானே மழை மிகுதியாகப் பெய்கிறது? கடலிடை நீர் மொண்டு கொண்டு வான வெளியில் நடந்து களைத்து வரும் காரினம் தங்கி இளைப்பாறுமிடம், வானுற வோங்கிய அம்மலைகளே யாமன்றோ? நாட்டை வளஞ் செய்யும் ஆறுகள், மலைகளின் வண்ணக் குழந்தை களல்லவோ? கார்காலத்தே கருக்கொண்ட மலைகள், கோடைக் காலத்தே ஈனும் குழவிகளாலன்றோ நாடு வாழ்ந்து வருகிறது? எனவே, வற்றா வளமுடைய ஆறுகளையீன்று தந்து, நாட்டை நீர்வள முடைய தாக்கி மக்களை வாழ்விக்கும் வள்ளன்மை மிக்கவை அம்மலைகளே யாகும். இது பற்றியே காவியப் புலவர்கள், தங்கள் காவியங்களில் ஆற்றுப்படலம் என்பதை அமைத்தனர். வான் பொய்ப்பினும் தான் பொய்யா வளநீர்ச் செல்வக் களஞ்சியமான காவிரியாற்றின் நற்றாயான மேற்குமலைத் தொடர் கொங்கு நாட்டின் உடைமை. கொங்கு நாட்டின் மற்ற மூன்று புறமுஞ் சூழ்ந்துள்ள பெருமலைத் தொடர்கள் காவிரியின் செவிலித்தாயராகும். அம்மலைகளில் தோன்றும் ஆறுகளாலன்றோ காவிரி பேராறாகப் பெருகுகிறது? பேரும் புகழும் பெறுகிறது? மற்றும், காவிரியின் வளத்துக்குக் காரணமான குதிரை மலையின் குலக் கொடி, கொங்கிற் குடமலையின் செல்வமன்றோ? “கோணிலை திரிந்து கோடை நீடினும் தானிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை” (மணிமே. பதிகம் - 24-5) “தவாநீர்க் காவிரிப் பாவை” (மணிமே. 3:55) “சுரந்துவரு காவிரி புரந்துநீர் பரக்கவும்” (மணிமே. 15 : 84) “முதுநீர்க் காவிரி முன்றுறை” (சிலப். 25:123) எனக் காவிரிக்கு இத்தகு பெருமை தரும் வானியும் ஆன் பொருநையும் வற்றாத வருபுனல்களே. இன்னும் எத்தனையோ சிற்றாறுகளும் பெரும் பள்ளங்களும் வந்து காவிரியிற் கலக்கின்றன. இத்தகைய வருவாயினையுடைய கொழுநீர்ச் செல்வக் குவையாய்ப் பொலிகின்றது கொங்கிற் காவிரி! சோழ நாட்டில் நெல் விளைகிறது. தமிழ் நாட்டு மக்களுக்கு நெற்கொடை கொடுப்பது பெரும்பாலும் சோழ நாடே, நெல் விளைய நீர் நிரம்ப வேண்டும். ‘நீருயர நெல்லு யரும்’ என்றார் ஒளவையார், கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவையாகிய காவிரி’ கொங்கு நாட்டின் குலக்கொடி! காவிரியின் நற்றாயான மேற்கு மலைத்தொடரும், செவிலித் தாயரான மற்ற மலைகளும் கொங்கு நாட்டின் உடைமை! கொங்கில் மழை பெய்து கொழுநீர்க் காவிரியில் வெள்ளம் வந்தால்தான் சோழ நாட்டில் நெல் விளையும்; ‘சோழ வளநாடு சோறுடைத்து’ என்னும் சிறப்பினைப் பெறும்; ‘புனல் நாடு, பொன்னி வளநாடு’ என்னும் புகழினைப் பெறும். சோழ நாடு நெற்களஞ்சியம் ஆகக் கொங்கு நாட்டின் நீர்க் களஞ்சியம் தேவை. சோழ நாட்டுக்கு வேண்டும் போது விருப்பொடு நீர்க்கொடை கொடுக்கும் மேட்டூர்த் தேக்கமும், கீழ் பவானித் தேக்கமும், ஏன்? பரம்பிக் குளம், அமராவதித் தேக்கங்களும், கொங்கு நாட்டின் உடைமைகளே. (இவை இன்றைய வளமாம்) சோழ நாட்டின் வளம் கொங்கு நாட்டின் கையில் தான் இருக்கிறது. எனவே, ‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்னும் பழமொழியில் உள்ள ‘எங்கும்’ என்பது, பெரும்பாலும் குறிப்பாகச் சோழ நாட்டையே குறிக்கும். அதன் பின்னரே, சோழ நாட்டுச் சோற்றை உண்டு வாழும் மற்ற பகுதிகளைக் குறிக்கும். மேலும், நமக்கு நெல்லுணவு மட்டும் இருந்தால் போதாது. அவரை, துவரை, உழுந்து, கடலை, தட்டை, பச்சை, கொள்ளு முதலிய பருப்பு வகைகள், காய்கறி கிழங்கு வகைகள், கடுகு முதலிய தாளிப்புப் பொருள்கள், எண்ணெய், மிளகாய் முதலிய எல்லாமும் வேண்டும். ஆடைக்குப் பருத்தி வேண்டும். இவையெல்லாம் கொங்கு நாட்டில் மிகுதியாக விளைகின்றன. மற்றும், கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு, தினை, சாமை முதலிய தவசங்களும் கொங்கில் நிறைய விளைகின்றன. இதனாற்றான், ‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்னும் பழமொழி எழுந்தது. உணவு உடை இரண்டும் மக்களுக்கு இன்றியமையா தவை. இதனாற்றான், ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப்படுபவன், தான் கெடுவதோடு அவன் சுற்றமும், ‘உண்பதும் உடுப்பதும் இன்றிக்கெடும்’ என்றார் வள்ளுவர். உணவுக்கும் உடைக்கும் வேண்டுவனவெல்லாம் கொங்கு நாட்டில் குறைவின்றி விளைகின்றன. தன்னிடத்தில் பெய்யும் மழையாலும் தனது விளைவாலும் வாழ்ந்து வருவது கொங்கு நாடு. மழைவளந் தப்பிய காலத்தும் வளந்தப்பாத ஆழ்ந்தகன்ற கிணறுகளை வேண்டிய வேண்டியாங்குடையது கொங்கு நாடு. கொங்கு நாட்டில் உள்ள கிணற்றுவளம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. “கொங்கர், கனைபொறி பிறப்ப நூறி வினைப்படர்ந்து கல்லுறுத் தியற்றிய வல்லுவர்ப் படுவில் பாருடை மருங்கின் ஊறல்.” (அகம் - 79) கொங்கர், கடப்பாரினால் குழிபோட்டுத் தீப்பொறி பறக்கப் பாறைகளை உடைத்து ஆழமான கிணறு வெட்டுவர் என்பதை, குடவாயில் கீரத்தனார் என்னும் கொங்கு நாட்டுப் புலவர் நேரில் கண்டவாறு கூறுதல் காண்க. இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னரே - சங்க காலத்தே - கொங்கு நாடு கிணற்று வளம் உடையதாக இருந்தமை பெறப்பபடுகிற தல்லவா? வினைப் படர்ந்து - கிணறு வெட்டத் தொடங்கி. கனை பொறி - மிக்க தீப்பொறி. பாறையை உடைக்கும் போது தீப் பொறி பறக்கும். நூறி - உடைத்து. கல் உறுத்து இயற்றிய - தோண்டி அமைத்த, கல்லுதல் - தோண்டுதல். வல்உவர் - மிக்க இனிய நீர், உவர் இனிமை. படு - ஆழமான கிணறு. பார் உடை மருங்கின் - கடப்பாரினால் குழிபோட்ட இடத்தில். ஊறல் - ஊறிய நீர், பார் - கடப்பார். கொங்கு நாட்டு உழவர் பெருமக்கள் உழைப்பின் செல்வர்கள்; இலம் என்று அசைஇ இராதவர்; உலையா முயற்சி யுடையவர். மலைத் தொடர், மலை, குன்று, ஆறு, ஏரி, குளம் குட்டை, பள்ளம் படுகைகளெல்லாம் எங்கு பார்த்தாலும் மழை பெய்தற் கேதுவான உயர் மரக்காடுகள் நிறைந்து, வானங் கவிழ்ந்தாற் போலப் பச்சைப் பசேலென்றிருந்தது பழங்கொங்கு நாடு. கொங்கு நாட்டின் வளத்திற்குக் காடும் ஒரு காரணமாகும். மக்கட்குத் தேவையான எல்லாவகையான மரங்களும் அக் காடுகளில் இருந்தன. இன்று போலன்றி, அன்று பருவந்தவறாமல் மழை பெய்தது. கொங்கு நாடு காடும் மலையும் தலைமயங்கிய நாடு, வயல் போன்ற வளமுடைய தோட்டங்களையுடைய நாடு; கடல் போன்ற வற்றாத காவிரிக் கரையையுடைய நாடு; எனவே, கொங்கு நாடு நானிலமும் ஒருங்கமைந்த நன்னாடாகும். இதனாலேதான், ‘கொங்கு மலிந்தால் எங்கும் மலையும்’ என்பதோடு, கொங்கு வறந்தால் எங்கும் வறக்கும்’ என்னும் பழமொழியும் வழங்கி வரலானது. இனி, ஒரு நாட்டின் இயற்கைச் செல்வங்களுள், ஆடுமாடு களாகிய கால்நடைச் செல்வமும் ஒன்றாகும். கால்நடைச் செல்வமும் ஒரு நாட்டின் வளத்துக்கு இன்றியமையாததே யாகும். கால்நடைச் செல்வத்தில் சிறந்து விளங்குவது கொங்கு நாடு. “ஆகெழு கொங்கர் நாடு” (பதிற் . 22) “கொங்கர் ஆபரந் தன்ன செலவில்” (பதிற். 77) “வன்புலம் துமியப் போகிக் கொங்கர் படுமணி ஆயம் நீர்க்குநிமிர்ந்து செல்லும் சேதா எடுத்த செந்நிலக் குரூஉத்துகள்” (அகம் - 79) ஆயம் - மாட்டுக் கூட்டம், சேதா - செவ்விய ஆக்கள். “எருமை யன்ன கருங்கல் இடைதோ றானிற் பரக்கும் யானைய” (புறம் - 5) எருமைக் கூட்டத்தின் இடையிடையே மேயும் மாடு களைப் போல, கருங்கற்களின் இடையிடையே நிற்கும் யானைகள். “மாடும் பெருகி வளர்வதன் றோகொங்கு மண்டலமே” (கொங்கு மண்டல சதகம்) என, கால்நடைச் செல்வத்தில் கொங்கு நாடு இலக்கியப் புகழ் பெற்றது; பழம் பெருமை வாய்ந்தது. இன்றும், உலகப் புகழ் பெற்ற காங்கய இனம் என்னும் காண்போர் கண்ணையும் கருத்தையும் ஒருங்கு கவரும் அழகிய ஆக்களையும், ஆலம்பாடி என்னும் வன்மையும் வனப்பும் உடைய உயரிய மாடுகளையும், பட்டுக் கயிறு போன்ற பருகூர் மாடுகளையும் உடையது கொங்கு நாடு. உழவுத் தொழிலுக்கு மிகமிக இன்றியமையாதது மாடு, மாடுகளின்றேல் உழவுத் தொழில் நடைபெறாதென்றே சொல்லலாம். மாடும் எருமையும் சிறந்த உணவுப் பொரு ளாகிய பால் தருபவை. ஆடுகள் நிலத்திற்குப் பட்டிகாக்கப் பயன்படுபவை. ஆடுமாடுகள் உழவுத் தொழிலுக்கு இன்றிய மையாமையோடு மிக்க வருமானமும் உடையவையாகும். நிலவளம் தப்பின காலத்துதவும் அத்தகு வருவாயினை யுடையது கால் நடைச் செல்வம். எனவே, கொங்குக் குடிமக்களை வாழ்த்துவோர், “பட்டி பெருகவேணும் பாற்பானை பொங்கவேணும் மாடு பெருக வேணும் வீடு பொலியவேணும்” என்று வாழ்த்துதல் மரபு. அவ்வாறு வாழ்த்துவதன் கருத்து, அவற்றின் பயன்பாடும், வருமானமும் குறித்தேயாகும். இத்தகு சிறப்புடைமையினாலேயே கொங்கர்கள் ஆடு மாடுகளை மிகுதியாக வளர்த்து வந்தனர்; வளர்த்து வரு கின்றனர். ஆடுமாடுகளை அவ்வளவு அன்போடும் அக்கறை யோடும் போற்றி வளர்ப்பதில் கொங்கு நாட்டு உழவர் பெரு மக்கள் தன்னிகரற்றவராவர். இஃதறியாத ஒருசில வரலாற்றா சிரியர்கள், ‘கொங்கு நாட்டுக் குடி மக்கள் ஆடுமாடுகள் வளர்க்கும் ஆயர்கள்’ என்று எழுதுவது, வருந்தத்தக்கதாகும். ‘கும்பத்துப் பாலும் குறையாத செல்வமும், தாழியிற் பாலும் தழும்பாத செல்வமும்’ உடைய கொங்கு நாட்டு நெய் குடங்குடமாய்த் தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளுக்கேற்று மதியானது குறிப்பிடத்தக்கது. 8. பெயர்க் காரணம் ‘கொங்குநாடு என்னும் பெயர், இந்நாட்டுக்கு எப்படி உண்டானது? பெயர்க் காரணம் என்ன? கொங்கு என்பது - பூந்தாது, மணம், தேன் என்னும் பல பொருளொரு சொல். பூந்தாது - மகரந்தம். “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” - (குறுந் - 2.1) கொங்கு - பூந்தாது. “கொங்கலர் பூம்பொழில் குறுகினர்” (சிலப்.10:220) கொங்கு - மணம். “இயலெறி பொன்னிற் கொங்குசேர் புறைப்ப” (அகம் - 142) உலைக்களத்து அடிக்குங்கால் தெறித்து விழும் பொற்றுகள் போலத் தேன் துளித்து வீழ, கொங்கு - தேன். எனக்காண்க. கொங்கு நாட்டைச் சுற்றிலும் பெருமலைத் தொடர்கள் சூழ்ந்துள்ளன. நாடு முழுவதும் பெருமலைகளும் சிறுமலை களும் குன்றுகளும் மிகுந்துள்ளன அம்மலைகள் இன்று மலங் காடுகள் என்றே வழங்குகின்றன. பண்டு கொங்கு நாடெங்கும் மரஞ்செடி கொடிகள் மிகுந்து தழைத்துப் பூத்து மணங்கமழ்ந்த தனாலும், தேன் மிகுதியாக இருந்ததனாலும், முன்னையோர் இந்நாட்டுக்கு கொங்குநாடு என்று பெயர் இட்டழைத்தனர். அருமையான காரணம்; அழகான பெயர். ‘கொல்லிமலைத் தேன்சொரியுங் கொற்றவா’ (கம்பர்) எனக் கொங்கு நாட்டுத் தேன் இலக்கியச் சிறப்புப் பெற்றது. கொல்லிமலை கொங்கு நாட்டு மலைகளுள் சிறந்த தொன்று, பூநாடு, மணநாடு, தேன்நாடு என்னும் மூன்றையும் உள்ளடக்கிக் ‘கொங்குநாடு’ என்றனர். கொங்கு நாட்டு மக்கள் கொங்கர் எனப்பட்டனர். நாட்டின் பெயர் அந்நாட்டில் வாழும் மக்களுக் கானது. 9. கொங்கு நாட்டுப் பிரிவு 1. தென் வட மேல் கொங்கு தொன்று தொட்டே கொங்கு நாடு - தென்கொங்கு, வடகொங்கு என, இரு பெரும் பிரிவுகளாகப் பிரிவுபட்டிருந்த தென்பது, தமிழிலக்கியங்களாலும், கல்வெட்டுக்களாலும் பெறப்படுகிறது. இவ்விரு கொங்குக்கும் நொய்யலாறும், நொய்யல் காவிரியுடன் கலந்தபின் கிழக்கிலுள்ள காவிரியாறும் எல்லையாகும். கோவை, பல்லட வட்டங்களின் தென்பகுதியும், பொள் ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், கரூர், குளித்தலை, பழனி, திண்டுக்கல் வட்டங்களும் - தென்கொங்கு ஆகும். கோவை, பல்லட வட்டங்களின் வடபகுதியும், அவிநாசி, கோபி, பவானி, ஈரோடு, கொள்ளேகால் வட்டகளும், சேல மாவட்டமும் - வடகொங்கு ஆகும். நாமக்கல் கல்வெட்டொன்று, நாமக்கல் வடகொங்கைச் சேர்ந்ததென்கின்றது. பாரியூர்க் கல்வெட்டொன்று அப்பகுதி வடகொங்கு என்கின்றது. பாரியூர் - கோபி வட்டத்தே, கோபிக்குப் பக்கத்தில் இருக்கிறது. கரூர் கல்வெட்டு கரூரைத் தலைநகராக் கொண்ட வெங்காலநாடு, தென்கொங்கைச் சேர்ந்த தென்கின்றது. வடகொங்கு, தென்கொங்கு மன்னர்களிடை உண்டான முரண்பாட்டைப் போக்கி நட்புண்டாக்கி வைத்ததாக, முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1216 - 1238) தன் கல்வெட்டில் குறித்துள்ளான். கொங்கு நாட்டை யாண்ட கொங்குச் சோழர்களான வீர சோழனும் (1138 - 1206), வீரராசேந்திரனும் (1207 - 1255). தாங்கள் வடகொங்கு தென்கொங்கு ஆகிய ‘இரு கொங்கும் ஆண்டவர்கள்’ என்று, தங்கள் கல்வெட்டுக்களிற் குறித்துள்ளனர். இனி அவிநாசிக்கு மேற்கேயுள்ள கொங்கு நாட்டுப் பகுதி மேல்கொங்கு என வழங்கி வந்ததென்பது, சுந்தரர் தேவாரம், பெரியபுராணம் முதலியவற்றால் தெரிகிறது. “ஆரூரர் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில் அணிகாஞ் சிவ்வாய்ப் பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றா மன்றே.” - (சுந்தரர் - கோயிற்றிருப் பதிகம்) “பலவுமுன் பணிந்து பரமர்தாள் போற்றிப் போந்துதண் பனிமலர்ப் படப்பை குலவுமீ கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர் குறுகினார் முறுகுமா தரவால்.” -(பெரிய. ஏயர்க் - 88) மீ கொங்கு - மேல் கொங்கு. மீ-மேல்- மேற்கு. காஞ்சி -நொய்யலாறு. பேரூர்-கோவையை அடுத்துள்ளது. “குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்” (சிலப்-30:159) குடகக் கொங்கர் - மேல் கொங்கர். குடகு - மேற்கு. இனி, தென் கொங்கு, வடகொங்கு என்பன போல, மேல் கொங்கு என்பதற்கேற்பக் கீழ் கொங்கு என்னும் பிரிவு இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், மழகொங்கு என்னும் பகுதி இருந்ததாகத் தெரிகிறது. “பூவிரியும் பொழிற்சோலைக் காவிரியைக் கடந்திட் டழகமைந்த வார் சிலையின் மழகொங்கம் அடிப்படுத்தும் ஈண்டொளிய மணியிமைக்கும் எழிலமைந்த நெடும்புரிசைப் பாண்டிக் கொடுமுடி சென்றெய்தி.... அறைகடல் வளாகங் குறையா தாண்ட மன்னர் மன்னன் தென்னர் மருகன் மான வெண்குடை மான்றேர் மாறன்” எனப் பாண்டியன் நெடுஞ்சடையனுடைய வேள்விக் குடிச் செப்பேட்டில் நெடுஞ்சடையன் தந்தையான தேர்மாறன் (அரிகேசரி பராங்குச மாறவர்மன்) என்பான். காவிரியைக் கடந்து, மழகொங்கை வென்றடிப்படுத்து, பின்னும் காவிரியைக் கடந்து, காவிரியின் தென்கரையிலுள்ள கொடுமுடியை அடைந்தனன் என்று குறிக்கப்பட்டுள்ளது. இத்தேர்மாறன், கி.பி.710 முதல் 765 வரை ஆண்டவன். இவன், தெற்கிலிருந்து காவிரியைக் கடந்து, மழகொங்கை வென்று, பின் மேற்காகக் காவிரியைக் கடந்து கொடுமுடியை அடைந்தனன், எனவே, மழகொங்கு என்பது, சேலமாவட்டத்து நாமக்கல் வட்டத்தின் தென்பகுதி என்று தெரிகிறது. மேலும், அத்தேர் மாறன் மகனான நெடுஞ்சடையன் பராந்தகன் (765 -790) “மாயிரும் பெரும்புனற் காவிரி வடகரை ஆயிர வெலி அயிரூர் தன்னிலும், புகழி யூரினும் திகழ்வே லதியனை ஓடுபுறங் கண்டவன்.” என, அயிரூரிலும், புகழியூரிலும் தகடூர் அதியமானுடன் பொருது வென்றதாக அவன் செப்பேடு கூறுகிறது. இவற்றுள், பகுழியூர் (புகலூர்) என்பது, காவிரியின் தென்கரையிலுள்ளது. புகலூர்ப் புகைவண்டி நிலையம் இதுவே, அயிரூர் (அயிலூர்) என்பது, காவிரியின் வடகரையில், நாமக்கல் வட்டத்தின் தென் பகுதியில் உள்ளது. தகடூர் அதியமான் ஆட்சி ஒரு காலத்தே நாமக்கல் வரை பரவியிருந்ததாக, நாமக்கல் கல்வெட்டால் தெரிகிறது. அதிய மான் மரபினரிடம், மழவர் என்ற ஒரு வகை வீரர் படை இருந்தது. அதியமானை, ‘மழவர் பெருமகன்’ என்பர் சங்க காலச் சான்றோர்கள், அம்மழவர் படைத்தலைவன் ஒருவன் கீழ் நாமக்கல்லின் தென்பகுதி இருந்து வந்திருக்கலாம். அவன் பெயரால் அப்பகுதி, ‘மழகொங்கு’ என வழங்கி வந்திருக்கலாம். தேர்மாறனும் நெடுஞ்சடையனும் தனித்தனியாகவோ, அல்லது தந்தையும் மகனும் சேர்ந்தோ மழகொங்கை வென்றிருக்கலாம் தேர்மாறன் வென்றதும் அதியமானையே யாகும். எனவே, மழகொங்கம் என்பது கொங்கு நாட்டுப் பிரிவில் ஒன்றாக இல்லை; மழவன் தலையின் கீழ் இருந்ததால் அப் பகுதிக்கு வழங்கிய பெயரேயாகும் அது. 2. இருபத்து நான்கு உள்நாடுகள் கொங்கு நாடு, பழங்காலத்திலிருந்தே இருபத்து நான்கு உள் நாடுகளாகப் பிரிவுபட்டிருந்தது. அவை பூந்துறை நாடு, காங்கய நாடு முதலியனவாம் சில உள்நாடுகளுக்கு இணை நாடு, அல்லது துணைநாடுகளும் உண்டு. இன்றும் அவ்வுள் நாடுகள் வழக்கத்திலிருந்து வருகின்றன அவ்வுள்நாட்டுப் பிரிவுகள் சில மாறுதலுடன் பழைய கல்வெட்டுக்களிலும் குறிக்கப்பெற்றுள்ளன. பழம் பாடல்களில் பூந்துறை நாடே முதலாவதாக எண்ணப்பட்டு வரினும், அவ்வுள்நாடுகளின் இருப்பிடத்தை எளிதில் அறிந்து கொள்ளுதற் பொருட்டு, இங்கு ஆறை நாடு முதலாக வைத்தெண்ணப்படுகிறது. அவையாவன: 1. ஆறை நாடு 13. தலைய நாடு 2. பொன்கலூர் நாடு 14. கிழங்கு நாடு 3. வாரக்க நாடு 15. தட்டைய நாடு 4. காவடிக்கா நாடு 16. ஒடுவங்க நாடு 5. ஆனைமலை நாடு 17. காஞ்சிக்கோயில் நாடு 6. நல்லுருக்க நாடு 18. குறும்பு நாடு 7. வையாபுரி நாடு 19. வடகரை நாடு 8. அண்ட நாடு 20. அரைய நாடு 9. தென்கரை நாடு 21. பூந்துறை நாடு 10. காங்கய நாடு 22. வாழவந்தி நாடு 11. மணநாடு 23. இராசிபுர நாடு 12. வெங்கால நாடு 24. பூவானிய நாடு எனபவையாம். குறிப்பு : வையாவிபுரி நாடு என்பது, வையாபுரி நாடு என மருவிற்று. ‘ஆவிநன்குடி நாடு’ என்பது இதன் வழக்கப் பெயர். 11. மணலூர் நாடு என்பதே, மணல்நாடு, மண நாடு என மருவிற்று, 18. குறும்பு நாடு - குறுப்பு நாடு என்பது வழக்கப் பெயர். இலக்கியங்களில், குறும்பு நாடு எனவே வழங்குகிறது. 16, 24, பூவானியாறு (பவானி) சூழ்ந்த பகுதியாதலால், ‘ஓடுவங்க நாடு’ என்பதற்குப் பதிலாக, ‘பூவானிய நாடு’ என்றிருத்தல் பொருத்தமுடையதாகும். சேலம் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியைப் பூவானிய நாடு என்பது பொருத்தமுடையதேயன்று. அது ஒடுவங்க நாடே யாகும். ஒடுவங்குறிச்சி என்ற அங்குள்ள ஊர்ப் பெயர் நோக்குதற்குரியது. நாடு இருக்குமிடம் 1. ஆறை நாடு - கோவை, அவிநாசி வட்டங் களும் பல்லட வட்டத்தின் வட மேற்குப் பாகமும். உட்பிரிவு 1. கோவங்க நாடு - கோவையைச் சுற்றி. 2. மன்னி நாடு - அன்னூரைச் சுற்றி. 3. கவைய நாடு - கவசை என்னும்கோயிற் (கவசை நாடு) பாளையத்தைச் சுற்றி. 4. செம்பை நாடு - சேவூரைச் சுற்றி. 5. தணக்கு நாடு - நடுவச்சேரியைச் சுற்றி. 6. பழன நாடு - பெருமா நல்லூரைச் சுற்றி. குறிப்பு : அன்னியூர் என்பதே, அன்னூர் என வழங்குவதால், ‘அன்னி நாடு’ என்பதே சரியான பெயராகும். கல் வெட்டுக்களில், கோவை வட்டம் - ‘பேரூர் நாடு’ எனவும், அவிநாசி வட்டம் - ‘வடபாரிச நாடு’ எனவும் காணப்படுகின்றன. கோவையினும் பேரூரே பழமை யான ஊராகும். பாரிசம் - பக்கம். வடபாரிசம் - வட பக்கம். 2. பொன்கலூர் நாடு - பல்லட வட்டத்தின் கீழ் பாகமும், தாராபுர வட்டத்தின் மேல் பாகமும். தென்பொன்கலூர் நாடு- தாராபுர வட்டத்தின் தென் பாகமும், பழனி வட்டத்தின் வட பாகமும். 3. வாரக்க நாடு - பல்லட வட்டத்தின் மேல் பாகமும், பொள்ளாச்சி வட்டத்தின் வட கீழ்ப்பாகமும். 4. காவடிக்கா நாடு - பொள்ளாச்சி வட்டத்தின் கீழ்பாகம். 5. ஆனைமலை நாடு - பொள்ளாச்சி வட்டத்தின் தென் மேற்குப் பாகம். 6. நல்லுருக்க நாடு - உடுமலை வட்டத்தின் மேல் பாகம். 7. வையாபுரி நாடு - உடுமலை வட்டத்தின் அமரா வதிக் கரையும், பழனி வட்டத்தின் மேல்பாகமும். கரைவழி நாடு - கொழுமம் சூழ்ந்த அமராவதிக் கரை. 8. அண்ட நாடு - பழனி வட்டத்தின் தென்கீழ்ப் பாகம். குறிப்பு: திண்டுக்கல் வட்டம் அண்ட நாட்டைச் சேரும். ‘திண்டுக்கல் நாடு’ என, அண்ட நாட்டின் இணை நாடாகக் கொள்ளலுமாம். 9. தென்கரை நாடு - தாராபுர வட்டத்தின் தென் பாகம். நறையூர் நாடு - கொழுஞ்சிவாடி சூழ்ந்த பகுதி, (D. 2949 - 3. கொழுஞ்சிவாடிக் கல்வெட்டு) 10. காங்கய நாடு - தாராபுர வட்டத்தின் வட பாகம். 11. மண நாடு - கரூர் வட்டத்தின் தென்மேல் பாகம், 12. வெங்கால நாடு - கரூர் வட்டத்தின் கீழ்பாகம் இடைப்பிச்ச நாடு - முன்னூர் பரமுத்திப் பகுதி. 13. தலைய நாடு - கரூர் வட்டத்தின் தென்பாகம். 14. கிழங்கு நாடு - கரூர் வட்டத்தின் குளித்தலை ஓரமாகக் காவிரித் தென்கரைத் பகுதி. 15. தட்டைய நாடு - குளித்தலை வட்டத்தின் வட மேற்குப் பாகம். 16. ஒடுவங்க நாடு - கோபி வட்டத்தின் வானி யாற்றின் கரையோரப் பகுதி. 1. தணாயக்கன் - சத்தியமங்கலஞ் சார்ந்த வானியற் கோட்டை நாடு - றின் கரையோரமேல் பகுதியும், அவிநாசி வட்டத்தின் வட கீழ்ப் பகுதியும். 2. புறமலை நாடு - நீலகிரி மாவட்டம். 3. படி நாடு - கொள்ளேகால் வட்டம். 17. காஞ்சிக்கோயில் நாடு - கோபி, பவானி, ஈரோடு வட்டங்கள் சந்திக்கும் பாகம். 18. குறும்பு நாடு - ஈரோடு வட்டத்தின் மேல் பாகமும், கோபி வட்டத்தின் தென்கீழ்ப் பகுதியும். 19. வடகரை நாடு - பவானி வட்டத்தின் வானி யாற்றின் வடகரைப் பகுதி. 20. அரைய நாடு 1. மேல்கரைஅரையநாடு- ஈரோடு வட்டத்தின் தென்வட கீழ்ப்பாகம் 2. கீழ்கரை அரைய நாடு -நாமக்கல் வட்டத்தின் மேல் கோடி. (வாழவந்தி நாட்டுக்கு மேற்கில்) 21. பூந்துறை நாடு 1. மேல்கரைப் - ஈரோடு வட்டத்தின் தென் வட பூந்துறை நாடு நடுப்பாகம். 2. கீழ்கரைப் - திருச்செங்கோடு வட்டத்தின் பூந்துறை நாடு மேல்பகுதி. 1. பருத்திப்பள்ளி நாடு - நாமக்கல் வட்டத்தின் வட மேற்குப் பகுதியும், திருச்செங் கோடு வட்டத்தின் கீழ்ப் பகுதியும். 2. ஏழூர் நாடு - நாமக்கல் வட்டத்தின் வட (எழுகரைநாடு) மேற்குப் பகுதி. குறிப்பு: இவ்விரண்டும் கீழ்கரைப் பூந்துறை நாட்டின் இணை நாடுகள். ஏழூர் - நாமக்கல்லின் வடக்கில் 10 கல் அளவில் உள்ளது. பருத்திப் பள்ளி - திருச்செங் கோட்டின் வடகிழக்கில், திருச்செங்கோடு - சேலம் வழியில் உள்ளது. 22. வாழவந்தி நாடு - நாமக்கல் வட்டத்தின் மேல் பகுதி. அதாவது, நாமக்கல் - வேலூர், மோகனூர் - வேலூர்ப் பெருவழிகட் கிடைப் பட்டபகுதி. 1. தூசூர் நாடு - நாமக்கல் - துறையூர், நாமக்கல் - மோகனூர்ப் பெருவழிகட் கிடைப்பட்ட பகுதி. 2. விமலை நாடு - நாமக்கல் வட்டத்தின் தென் பகுதி. அதாவது, மோகனூரைச் சூழ்ந்த காவிரியாற்றங்கரைப் பகுதி. குறிப்பு : ஏழூர்நாடு, வாழவந்திநாடு, விமலை நாடு ஆகிய மூன்று நாடுகட்கும் எல்லையாக, அந்நாடுகள் சூழ இருப்பது நாமக்கல். 23. இராசிபுர நாடு - இராசிபுர வட்டம். (இராச ராச புரம் என்பது, இடைக்காலச் சோழர் காலத்துப் பெயர்.) 1. சேலம்நாடு - சேலம் வட்டம். குறிப்பு : இராசிபுரநாடு, ஏழூர்நாடு, தூசூர்நாடுகள் தொடர வுள்ள கொல்லிமலைமேல் 14 நாடுகள் உள்ளன. அவற்றுள், 1. வாழவந்திநாடு, வலப்பூர் நாடு, குண்டூர்நாடு, தின்னனூர் நாடு, அரியூர்நாடு, தேவனூர்நாடு, சேலூர் நாடு என்னும் ஏழு நாடும், நாமக்கல் வட்டத்தைச் சார்ந்துள்ளன. 2. குண்டுமணி நாடு, ஆலத்தூர்நாடு, திருப்பள்ளிநாடு, இடைப்புல்லிநாடு, சித்தூர்நாடு, பிறக்கரைநாடு, பயிலநாடு என்னும் ஏழுநாடும், ஆற்றூர் வட்டத்தைச் சார்ந்துள்ளன. 3. சேர்வராயன் மலைமேல் - முட்டநாடு, மோகநாடு, சேல நாடு என, மூன்று நாடுகள் உள்ளன. சேலநாட்டில் ஏர்க்காடு உள்ளது. 24. பூவானிய நாடு - திருச்செங்கோடு வட்டத்தின் வடபகுதியும், ஓமலூர், தருமபுரி, அரூர்வட்டங்களும், ஓசூர், கிருஷ்ணகிரி வட்டங்களின் தென்பகுதியும். 1. நங்கைவல்லி நாடு - ஓமலூர் வட்டத்து, நங்கை வல்லி (வஞ்சி நாடு) (நங்கவள்ளி) சூழ்ந்த பகுதி. 2. பக்க நாடு - சுவேதநதியும் வசிட்டநதியும் (வெள்ளாறு நாடு) ஒன்று கூடும் பகுதி; ஆற்றூர் வட்டத்தின் கீழ்பாகம். 3. பெரும்பாலை நாடு - தருமபுரி வட்டத்தின் மேல்பகுதி யில் உள்ள பெரும் பாலை என்னும் ஊர் சூழ்ந்த பகுதி. ஓசூர் வட்டத்தின் தென் பகுதியும் இதைச் சேரும். குறிப்பு : 1. சேலமாவட்டத்தைச் சேர்ந்த ஓசூர், கிருஷ்ணகிரி வட்டங்களின் வடபகுதியாகிய பாராமகால், இவ்வுள் நாடுகள் ஏற்பட்ட காலத்தே எருமை நாட்டைச் (மைசூர் நாடு) சேர்ந்திருந்தது. 2. 1911க்கு முன் திருப்பத்தூர் வட்டம், சேல மாவட்டத் தோடு சேர்ந்திருந்தது; கரூர் வட்டம், கோவை மாவட்டத்தோடு சேர்ந்திருந்தது. 1956க்கு முன். கொள்ளேகால் வட்டம், கோவை மாவட்டத் தோடு சேர்ந்திருந்தது. கொங்கு நாட்டுக் கல்வெட்டுக்களில், இந்நாடுகளின் பெயர்கள் சில திரிந்தும், மிகுதியாகச் சில இணைநாடுகளும் காணப்படுகின்றன. அவை வருமாறு: கொங்கு மண்டல கல்வெட்டுக்கள் சதகம் 1. ஆறை நாடு பேரூர்நாடு1. சேவூர்நாடு - சேவூரைச் சுற்றி. 2. நல்லூர்ப் பற்றி நாடு- பெருமா நல்லூரைச் சுற்றி. 3. வெள்ளாநாடு- வெள்ளலூரைச் சுற்றி. 4. வள்ளுவநாடு- வெள்ளிமலை சூழ்ந்த மேற்குமலைப் பகுதி. 5. பூளுவநாடு 6. நிரற்றூர் நாடு- இடம் விளங்கவில்லை. 7. வளையலூர் நாடு 2. பொன்கலூர் நாடு - பொங்கலூர்க்கா நாடு. 3. வாரக்க நாடு - வாயிரக்கா நாடு. 7. வையாபுரி நாடு - வைகாவி நாடு 1. இராசராசவளநாடு - அமராவதிக்கரை. 9. 1.நறையூர் நாடு - நரையனூர் நாடு. 10. 1. நற்காவேரி நாடு. 11. மணநாடு - மணத்தூர்நாடு. 1. வடகரை நாடு - அமராவதியின் வடகரைப்பகுதி. 12. 1. இடைப்பிச்ச நாடு - இடைப்புழுதி நாடு. 13. தலைய நாடு - தலையூர்நாடு. 14. கிழங்கு நாடு - கீழங்நாடு. 15. தட்டைநாடு - தட்டையூர் நாடு 16. 1. நறையூர்நாடு - ஒடுவங்க நாட்டின் இணைநாடு. 17. காஞ்சிக் கோயில்நாடு - காஞ்சிக் கூவல்நாடு. 18. 1. வீரசோழ வளநாடு. 22. 1. நாடாள்வான் நாடு. 24. பூவானிய நாடு - வடபூவானிய நாடு. கல்வெட்டுகள் காணும் மிகுதியான நாடுகள் 1. தகடை நாடு - தருமபுரிப்பகுதி; தகடூர் சூழ்ந்தது. 2. தெற்காணம்பி நாடு - தலைக்காட்டுக்கு வடக்கிலுள்ள (தென்கடம்பை நாடு ) கங்கநாட்டுப் பகுதி. 3. போசள நாடு - கொள்ளேகால் வட்டத்திற்கு மேற்கிலுள்ள பகுதி. 4. புறங்கரம்பை நாடு 5. வறுப்புக்கா நாடு - இடம் விளங்கவில்லை. 6. வளுப்புற்றக்கூ நாடு 7. பருள் நாடு “கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய்” (சுந்தரர் தேவாரம்) என, சுந்தரர் காலத்திற்கு (கி.பி.7 நூ. இறுதி) முன்னரே, இவ்வுள் நாட்டுப் பிரிவு ஏற்பட்டிருந்தமை பெறப்படும். குறும்பு - குறும்பு நாடு. ‘எங்கள் பூந்துறை நாடு, காங்கய நாட்டுக் கவுண்டர், ஏழூர் நாடு எங்கள் நாடு’ என, இன்றும் கொங்கு நாட்டு மக்கள் இந்நாடுகளைச் சிறப்பாகக் கூறிக் கொள்கின்றனர். 10. பழங்கொங்கு மக்கள் கொங்கு நாடு, இருபத்து நான்கு உள்நாடுகளாகவும், சில உள்நாடுகள் இணைநாடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ள தென்பதைக் கண்டோம். அரசியலாட்சி முறைக்காக ஒரு நாடு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது போன்று, இவ்வுள் நாட்டுப் பிரிவு இனஆட்சி முறைக்காகப் பிரிக்கப்பட்ட பிரிவாகும். (இனம் - சமூகம்) இவ்வுள் நாடுகள் பிரிக்கப்பட்ட காலந்தொட்டு, ஒவ்வோர் உள்நாடும் ஒவ்வொரு தலைவரின் அதிகாரத்திற்குட் பட்டு இருந்துவந்தது. அவர் நாட்டுத்தலைவர் எனவும், நாட்டார் எனவும் அழைக்கப்படுவர். இவர் அந்நாட்டின் இன ஆட்சித் தலைவராவர். நாட்டு மக்கள் ஒருவர்க்கொருவர் வம்பு வழக்கின்றி இனச் சட்டதிட்டக்களுக்கடங்கி, ஒரு கட்டுப்பாட்டின் கீழ் அமைதி யாக இருந்து வருமாறு கண்காணித்து வருவது அந்நாட்டுத் தலைவரின் கடமையும் பொறுப்புமாகும். அத்தகு அதிகாரமும் செல்வாக்கும் உடைய வழிவழியாக வரும் கொங்கு வேளாளப் பெருங்குடிச் செல்வரே அந்நாட்டுத் தலைவராவர். இன்றும், செல்வாக்குள்ள கொங்கு வேளாளக் கவுண்டர்கள், நாட்டுக் கவுண்டர்கள் என அழைக்கப்படுவது, கொங்கு வேளாளரில் நாட்டாரக் கவுண்டர் என்னும் பிரிவினர் இருப்பதும், புகலூரை அடுத்துள்ள புகழிமலைக்கு, ஆறு நாட்டார்மலை என்ற பெயர் வழங்கிவருவதும் இதற்கு எடுத்துக் காட்டாகும். ‘நீ என்ன பெரிய நாட்டுக் கவுண்டர் போல’ என்னும் வழக்கு, அந்நாட்டுத் தலைவரின் அதிகார நிலையைக் குறிக்கும். நாட்டுக் குடிமக்களிடைத் தப்புத் தவறு உண்டானாலும், இந்நாட்டுத் தலைவர் நேரில் சென்று விசாரித்து ஒழுங்கு செய்து, மேலும் அத்தகைய தவறுகள் நேரா வண்ணம் கட்டுத் திட்டம் செய்துவருவர். கொங்கு நாட்டின் பழம்பெருங் குடிமக்களான கொங்கு வேளாளர் திருமணங்கள், பெரும்பாலும் இந்நாட்டுத் தலைவர் முன்னிலையில்தாம் அன்று நடக்கும். “மணக்கோல மாக மணப்பந்தல் தன்னில் நட்டுமுட்டுத் தான்முழங்க நாட்டார் சபைவிளங்க வலமதாய் வந்து மணமுடன் நின்று” என, கொங்கு வேளாளர் திருமணக்காலத்தில் பாடும், மங்கல வாழ்த்துப் பாடலில், இது குறிக்கப்படுதலை அறிக. அந்நாட்டார் வராத போது, அந்நாட்டாரின் அறி குறியாக ஒரு கல்லை நாட்டி, அங்கு மணமக்களைத் தனித் தனியாக அழைத்துச் சென்று, அக்கல்லை வலம்வந்து வணங்கி வந்து மண முடிப்பர். அக்கல் - நாட்டுக்கல் எனப்படும். இன்றும் நாட்டுக் கல்லுக்குப் போய்வரும் சீர், கொங்கு வேளாளர் திருமணங்களில் தவறாது நடந்து வருகிறது. கொங்கு இருபத்து நான்கு நாட்டுத் தலைவர்களும் ஆண்டுக்கொரு முறை ஒன்று கூடி, நாட்டு நடப்பு முறைகளைக் கலந்தாய்ந்து சீர் செய்து, நாட்டு மக்கள் ஒழுங்காக வாழுமாறு செய்து வருவர். இவ்வாறு கொங்கு இருபத்து நான்கு நாட்டுத் தலைவர்களும் ஒன்று கூடுதல் மாநாடு, அல்லது பெரியநாடு எனப்படும். “இந்திரன் ஓலக் கம்போல் இருந்தது பெரிய நாடே” என்பது ஏரெழுபது, ஓலக்கம் - கொலுவிருக்கை. இனி, இந்நாட்டுத் தலைவர்களாகிய நாட்டார் போலவே, ஒவ்வொரு நாட்டுப் பேரூர்களிலும் ஊர்ப் பெருந்தலைவர்கள் இருந்து வந்தனர் என்பது, ஒய்சள மூன்றாம் வீரவல்லாளன் (1293 - 1342) ஈரோட்டுக் கல்வெட்டில், ஒருநில தானத்தில், மேல்கரைப் பூந்துறை நாட்டு - திண்டல் வேணாவுடையான், வெள் ளோடு வீர சோழக் காமிண்டன், அனுமன் பள்ளிக் காங்கேயன், பெருந்தொழு பெரியபிள்ளைக் காமிண்டன், பெருந்துறைத் தொண்டைமான், நசையனூர் முனையதரையன், ஈரோடு சமைய மந்திரி, குளவிளக்குச் சோழகங்க தேவன் என்போர் கையெழுத்திட்டிருப்பதால் விளங்குகிறது. இவர்கள் பெயர்களே தலைவர்கள் என்பதைக் காட்டுகின்றன அல்லவா? இந்நாட்டாண்மை ஊராண்மை போலவே, கொங்கு நாட்டின் காணியாளரும் கொங்கு வேளாளர்களேயாவர். அதாவது, கொங்கு நாட்டுக் காணியுரிமை கொங்கு வேளாளர்க்கே உரியதாகும் இன்றும், தங்கள் காணியை விட்டு வேறு இடங்களில் சென்றிருந்து வாழ்ந்து வரும் கொங்கு வேளாளக் குடிமக்கள், ஆண்டுக்கொரு முறையேனும் தங்கள் சொந்தக்காணிக்குச் சென்று, அக்காணித் தெய்வமான அம்மனுக்கு வழிபாடு செய்து தங்கள் காணியுரிமையை விடாது போற்றி வருகின்றனர்; தங்கள் குழந்தைகளுக்கு அக்காணியிற் சென்றே மொட்டை யடித்து வருவர். ‘காணி நிலம் வேண்டும்’ என்பது, பாரதியார் பாடல். அக்காணி யின் முதன்மையாளர் - காணியாளக் கவுண்டர் எனப்படுவர். அந்நாட்டுக் கோயில் குளம் முதலிய பொது நிலையங்கள், அக்காணியாளரின் கண்காணிப்பில்தான் இருந்து வந்தன. அவற்றைக் கண்காணிக்கும் அதிகாரம் - காணியாட்சி எனப்படும். கொங்குச் சோழனான குலோத்துங்கச் சோழ மன்னன் (1149 -1183) மூன்றாம் ஆட்சியாண்டுப் பாரியூர்க் கல்வெட் டொன்றில் (D 3302. IV - 165), கொங்கின் இருபது உள்நாடுகளைக் குறிப்பிட்டு, அந்நாடுகளிலுள்ள கொடுமுடி, வெஞ்ச மாக் கூடல், திருமுருகன் பூண்டி முதலிய கோயில்களின் வருமானம், அக்கோயில்களின் நாட்படிச் செலவுக்கே போது மானதா யிருப்பதால், அக்கோயில்கள் அரசுக்குச் செலுத்தி வரும் ஒட்டச்சு என்ற வரியை நீக்கிவிட்டதாக, அவ்விருபது நாடுகளின் (கோயில்களின்) காணியாளர்களுக்கு அரசன் ஆணையிட்டுள்ளதாகக் காணப்படுவது, இதற்குச் சான்றாகும். தொன்று தொட்டே கொங்கு நாட்டின் நாட்டாண்மை யும் காணியாட்சியும் கொங்கு வேளாளப் பெருங்குடிச் செல்வர் கட்குரியனவாகவே இருந்து வந்தன என்பது, நாட்டுப் பாடல், காணிப்பாடல், கல்வெட்டு முதலி வற்றால் பெறப்படுகிறது. இந்நாட்டாட்சியும் காணியாட்சியும் வேளிர்க்கு அடுத்த நிலையாகும். இனி, வேளாளர் என்பது இன்றுள்ள சாதியடிப்படையில் ஓரினத்தினரைக் குறிக்கும் சொல்லன்று. அது, தொழில் மரபுப் படி அமைந்த ஒரு தொகுதிக் குறிச்சொல்லாகும். பண்டு தமிழ் மக்களிடைக் குலவேற்றுமை இல்லை; மண வேற்றுமையும் இல்லை; ஒருங்கொப்பக் கொண்டு கொடுத்து - மணஞ்செய்து கொண்டு - ஒன்றாயொரு குலமாய் வாழ்ந்து வந்தனர் இன்று தமிழ் மக்களிடைக் காணப்படும் ஏற்றத் தாழ்வான எண்ணிறந்த சாதிப் பிரிவுகள் பிற்காலத்தே ஏற்பட்டனவேயாகும். உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதது உணவு. உணவுப் பொருளை உண்டாக்கும் தொழில் உழவு. பருத்தியும் இத்தொழிற் பயனே என்பதை அறியவும். மற்றைத் தொழில் களெல்லாம் அத்தகு இன்றியமையாமையல்லாதனவும் உழவுத் தொழிலுக்கு உதவித்தொழில்களுமேயாகும். உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உழவுத்தொழில் செய்து வந்தனர் வேளாளர் எனப்பட்டனர். வேள் - உதவி. ‘வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்’ என்பது திரிகடுகம். “இனைத்துணை என்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்” என்பது, குறள். வேளாளர் என்பது, தொழில் பற்றிய பெயரே யன்றிக் குலம்பற்றிய பெயரன்று. உழவல்லாத மழித்தல், வெளுத்தல் முதலிய குடித்தொழில் செய்வோரும், தச்சு, கொல் முதலிய கைத்தொழில் செய்வோரும் தொழிலால் வேறுபட்ட வரேயன்றிக் குலத்தால் வேறுபட்டவரல்லர். பண்டு எல்லாத் தொழிலாளரும் கொண்டு கொடுத்து ஒருங்குண்டு ஒரே குலமாகவே வாழ்ந்து வந்தனர். எல்லாத் தொழில்களும் வாழ்க்கை நடக்கைக் கேதுவான தொழில்களே யாகலான், ஒன்றுக்கொன்று உதவித் தொழிலேயாகுமாகலான், எல்லாத் தொழிலாளரும் வேளாளரேயாவர். உழவுத் தொழில் மற்றைத் தொழில்களின் முதலும், இன்றியமையாச் சிறப்புடையதுமானதால், தலைமைபற்றி அத் தொழில் செய்வோரை வேளாளர் எனவே, மற்றைத் தொழி லாளரும் அடங்குவர் (தொல். கிளவியாக்கம் - 49). வள்ளுவரும், ‘உழவு’ என்னும் அதிகாரத்தில் ஏனைத் தொழில்களையும் அடக்கின்மை அறிக. பண்டு ஒரே குலமாய் வாழ்ந்து வந்த தமிழர், ஒவ்வொரு தொழில் செய்து வந்தோரும் தத்தம் தொழிலின் முறைக்கேற்ப அவ்வத் தொழில் செய்வோர்களுக்குள்ளேயே கொண்டு கொடுத்து வந்தமையால் குலப்பிரிவினை உண்டாகி, நாளடை வில் அது, தொடர்பற்ற வெவ்வேறு குலமெனக் கருதும் நிலையை அடைந்துவிட்டது. பிற்காலத்தே ஒவ்வொரு வகுப்பினரும் கொள்வனை கொடுப்பனையற்ற வெவ்வேறு சாதிகளாகும், ஒவ்வொரு சாதியினரும் தாமே சிறந்தவரெனத் தெய்வத் தொடர்பான புராண மரபு கூறிப் பிறப்பிலேயே வேறு பட்ட சாதியினரெனப் பிரிந்து வாழலாயினர் ஒருசில வகுப்பினர் ஒருங்குண்ணுதலும், புழங்குதலுங்கூட அற்றவராயினர். பண்டு பெரும்பாலோர் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமை யாத உழவுத்தொழிலே செய்து வந்தனர். சிலர் அவ்வுழவுக்கு வேண்டிய தச்சு, கொல் முதலிய கைத்தொழில்களும், சிலர் மழித்தல், வெளுத்தல் முதலிய குடித்தொழில்களும், மற்றும் சிலர் வாழ்க்கைக்கு வேண்டிய மற்றைத் தொழில்களும் செய்து வந்தனர். இவர்களெல்லாரும், இன்று பல தொழில்கள் செய்து வரும் ஓரினத்தார் போன்றவரே. எடுத்துக்காட்டாக: ஒரு குலத்தைச் சேர்ந்த - ஒருவன் உழவுத் தொழில் செய்கிறான், ஒருவன் நெல்வாணிகஞ் செய் கிறான், ஒருவன் கடை வைத்திருக்கிறான், ஒருவன் நெய்கிறான், ஒருவன் துணை தைக்கிறான், ஒருவன் விறகுடைக்கிறான், ஒருவன் மூட்டை தூக்குகிறான், ஒருவன் ஆசிரியத் தொழில் செய்கிறான், ஒருவன் அரசியல் அலுவல் பார்க்கிறான், ஒருவன் அமைச்சுத் தொழில் செய்கிறான், ஒருவன் அயல்நாட்டுத் தூதுவனாக இருக்கிறான், ஒருவன் ஊராட்சி மன்றத் தலைவர், ஒருவன் படைவீரன், ஒருவன் ஆலைத்தொழிலாளி, இவர் களெல்லாரும் கொள்வனை கொடுப்பனையுள்ள ஓரினத்தவரே யாவரல்லரோ? இத்தகையனவே அக்காலத் தொழிலினங்கள், வெவ்வேறு தொழில் செய்யும் உடன் பிறந்தார் போன்றவரே அன்னார் எனலாம். சிலர் உணவுப் பொருள்களையும், கைத்தொழிற் பொருள் களையும் உள்ள இடங்களில் வாங்கி, வேண்டிய இடங்கட்குக் கொடுத்து வந்தனர். மேற்கண்ட தொழில்கள் இடையூறின்றி நடைபெறவும், நாட்டில் ஒற்றுமை, அமைதி, ஒழுங்கு முதலியன நிலவவும், மக்கள் அச்சமின்றி வாழ்ந்து வரவும் உடல்வலிமிக்க ஒரு சிலர் காத்து வந்தனர். கல்வி கேள்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்த பெரியார்கள் - உலகியல், அரசியல், தொழிலியல் முதலிய நடைமுறை களைக் கற்பித்து, ஏனை யோரை நன்னெறிக்கண் நடத்தி வந்தனர். இன்றும் இம்முறையிலேயே மக்கள் வாழ்ந்து வருதலை ஓர்ந்தறிக. தொழில், வாணிகம், ஆட்சி, அறிவு என்னும் இந்நான்கனுள் உலக நடைமுறை அடங்குமாறுணர்க. உழவு முதலிய தொழில் செய்வோர் - வேளாளர் எனவும், கொண்டு கொடுப்போர் - வணிகர் எனவும், (கொண்டு கொடுத்தல் - வாணிகம்), நாடு காப்போர் - அரசர் எனவும், (அரசு - காவல்), நன்னெறி கொளுத்தியோர் - அந்தணர் எனவும் வழங்கலாயினர், அந்தணர் - அறவோர், ‘அந்தணர் என்போர் அறவோர்’ என்பது குறள். எனவே, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் தொழில் பற்றிய பிரிவு ஏற்பட்டன. ஏனை மூன்று இனத்துத் துறவு பூண்டோரே அந்தணராவர். அதாவது, இல்லற முற்றிய பின் குடும்பத்தை மக்களிடம் ஒப்படைத்துவிட்டு - குடும்பப் பொறுப்பினின்று நீங்கி பொதுநலம் செய்து வந்தோரே அந்தணராவர் (தொல்- கற்பு - 51). எனவே, அரசர் முதலிய ஏனை மூவரும் போல, அந்தணர் என்போர் தனி இனமல்லர். பொதுத் தொண்டாற்றி வந்த அம்மூன்றினத்து முதிய மூதறி வாளரே அந்தணராவர். பொதுத் தொண்டும் ஒரு தொழி லாகையால், ஏனை மூவருடன் அந்தணரையும் சேர்த்து நாற்பால் எனக் கொண்டனர். வேளாளர் ஆட்சியேற்று அரசராதலும், வாணிகம் செய்து வணிகராதலும் கூடும். வாணிகம் செய்வோர் உழு தொழில் செய்து வேளாளராதலுங் கூடும் அரசர் அரசிழந்து வாணிகஞ் செய்து வாழ்ந்து வணிகராதலும், உழவுத் தொழில் செய்து வேளாளராதலுங் கூடும். எனவே, இம்மூன்றினமும், இன்றையக் குலங்கள் போல நிலையான இனம் அல்ல என்பதைத் தேர்ந்து தெளிக. ஆட்சித்தொழில் முட்டின்றி நடத்தற் பொருட்டு மன்னர்- பெரு நில மன்னர். குறுநில மன்னர் என இருவகைப் பட்டமை போல, உழவுத் தொழில் முட்டின்றி நடத்தற் பொருட்டு, வேளாளரும் - உழுதுண்போர், உழுவித்துண்போர் என இரு வகைப்பட்டனர். உழுதுண்போர் - தாமாகவே நிலத்தை உழுதுண்டு வாழும் உழவுத் தொழிலாளர். இவர், தந்நிலத்தையும் பிறர் நிலத்தையும் உழுவோர். உழுவித் துண்போர் - உழவுத் தொழிலாளரைக் கொண்டு தமது நிலத்தை உழுவித்துண்டு வாழும் நிலக்கிழார். இவரே நாட்டுத் தலைவராதற்குரியர். செல்வமும் சிறப்புமுடைய பெருநிலக் கிழாரே சிற்றரசராதற்குரிய என்பதை முன்பு கண்டோம். (‘தமிழரசு’ என்னும் தலைப்பில்) மற்றைத் தொழில் செய்வோரும் - தாமே தொழில் செய்து வாழ்வோர், தொழிலாளர்களைக் கொண்டு தொழில் செய் வித்து வாழ்வோர் (முதலாளி) என இருவகைப் படுதலை அறிக, இவ்விருவகையினரும், இருவகை வேளாளரில் அடங்குவர். இன்றும் இவ்வாறே உலகியல் நடத்தலை எண்ணியறிக. வரவர - அரசர், வணிகர், வேளாளர் என்னும் இவர்கள், தத்தம் தொழிலையே தந்தைக்குப் பின் மைந்தன் என வழிவழி யாகச் செய்து வந்து அரச மரபு, வணிக மரபு, வேளாளமரபு என்ற நிலையை அடைந்தனர். எனினும், அன்று மட வேற்றுமைப் பட்டிலர். மிகப் பழங்காலத்தே, அந்நிலையை அடையினும் - அரசர், வணிகர், இருவகை வேளாளர் ஆகிய நால்வரும் - எல்லாத் தமிழ் மக்களும் - தமக்குள் மணஞ் செய்து கொண்டு ஓரினமாகவே வாழ்ந்து வந்தனர். தொழில் வேறுபட்ட இனமாக இருந்து வந்தனரேயன்றி, அன்று குலவேறுபாடியில்லை. வரவர, உழுதுண்ணும் வேளாளரை - தொழிலாளரை - ஒதுக்கிவிட்டு, மற்ற மூவரும் தமக்குள்ளே மணஞ் செய்து கொள்ளலாயினர் என்பது, “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே” (கற்பு - 3) என்னும் தொல்காப்பியர் கூற்றால் பெறப்படுகிறது. மேலோர் - அரசர். வணிகர், உழுவித்துண்ணும் வேளாளர் - வேளிர். கீழோர் - உழுதுண்ணும் வேளாளர் - தொழிலாளர். மேல்கீழ் என்பன - முன்பின் என்னும் பொருள். கரணம் - மணவினை, திருமணம். நால்வரும் - தமிழ் மக்கள் எல்லோரும் - ஒன்றாக மணஞ் செய்து கொண்டு ஒருங்கு வாழ்ந்த காலமும் ஒன்றுண்டு. பிற் காலத்தே உழுதுண்போரை - தொழிலாளரை - ஏனை மூவரும் விலக்கிவிட்டனர் என்பதாம். ‘காலமும் உண்டே’ என்பதால், தொல்காப்பியர் காலத்துக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே இவ்வேறுபாடு ஏற்பட்ட தென்பது பெறப்படும். இதன் விளக்கத்தை - எமது, ‘தொல்காப்பியர் காலத் தமிழர்’ என்னும் நூலிற் காண்க. அவரவர் செய்யும் நற்றொழில் தீத்தொழில்களுக்கேற்பப் பெருமை சிறுமை உண்டாகின்றனவேயன்றி, பிறப்பினால் பெருமை சிறுமை - உயர்வு தாழ்வு - இல்லை என அக்காலத் தமிழ் மக்களின் குலவேற்றுமையைக் கண்டிக்கும், “பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்னும் வள்ளுவர் கூற்றும் இங்குநோக்கத்தகும். அங்கங்கே வாணிகம் செய்து வந்த ஒரு சிலர் வரவர அதையே தனித்தொழிலாகக் கொண்டு, வாணிகத்தைக் குறிக்கும் செட்டு என்பதனடியாகப் பிறந்த செட்டி என்பதைக் குலப்பெயராகக் கொண்டு, செட்டியார் எனத் தனிச் சாதியாயினர். இவர்கள், பிரமன் தொடையிற் பிறந்தவ ரெனத், தெய்வத் தொடர்பான புராண மரபு கூறித் தமிழினத்தின் வேறெனத் தங்களைத் தாழ்த்திக் கொண்டனர். இச்செட்டியாரிடையும் பிற் காலத்தே மணத் தொடர்பற்ற பல பிரிவுகள் உண்டாயின. 1909இல் அச்சான, வைசியகுல விளக்கம் என்னும் நூலைக் கண்ணுறின், அக்காலத்தே தமிழரிடைச் சாதி வெறி எந்நிலையில் இருந்ததென்பது விளங்கும். இனி, உழவுத் தொழிலைச் சிறப்புடை உரிமைத் தொழி லாகக் கொண்ட வேளாளரோ, தாங்கள் திருமாலின் கூறாகக் கங்கையிற் பிறந்து, இந்திரன் மகளையும் குபேரன் மகளையும் மணந்து கொண்ட கங்கை மைந்தன் வழி வந்தவரெனத் தெய்வத் தொடர்புடைய புராண மரபு கூறித் தமிழினத்தின் வேறெனத் தங்களைத் தாழ்த்திக் கொண்டனர். இவ்வேளாளரி டையும் பிற்காலத்தே மணத்தொடர்பற்ற பல பிரிவுகள் உண்டாயின. அரசர் மரபு மட்டும், செங்கதிர்க்குலம் வெண்கதிர்க் குலம் என்ற அளவோடு, இத்தகைய பிரிவின்றி இருந்து வந்தது. உணவுக்கு அடுத்தது உடை, நெய்தொழில் பண்டு ஒரு தனிப்பட்டவர் உரிமைத் தொழிலாக இல்லாமை அறிக. அன்று உழவர்களே தாங்கள் விளைத்த பருத்தியை அறைத்து நூற்று நெய்து வந்தனர். அதாவது, உழவரில் ஒரு சிலர் நெய்து வந்தனர். (திவாகரம் - 12:81, 83.) உழவர் மகளிர் பஞ்சறைத்து நூல் நூற்று வந்தனர். சென்ற அரை நூற்றாண்டுக்கு முன் வரை இத்தொழில் நடந்து வந்தது. அன்று வேளாளர் தங்கள் மகளிர்க்குக் கொடுக்கும் சீர்களில் - திருகுமணையும் இராட்டையும் உண்டென்பது குறிப்பிடத்தக்கதாகும். நாளடைவில் அங்கங்கே நெய் தொழில் செய்து வந்த ஒரு சிலர் அதையே தனிப்பட்ட தொழிலாகக் கொண்டு, தாங்கள் நெய்த துணியைத் தாங்களே விற்று வரலாயினர். அதனால் நெய்தொழிலோடு, அறுவை வாணிகமும் அவர் தொழிலானது. பிற்காலத்தே அன்னார், உழவுத் தொழில் செய்யும் வேளாள ரோடு மணத் தொடர்பற்ற தனியினமாயினர். ஆயினும், வேளாளர் பெயர்களிலொன்றான முதலியார் என்னும் பெயரைத் தங்கள் குலப் பெயராகக் கொண்டிருத்தலே, இவர்கள் வேளாளரினின்று பிரிந்து வேறினமானவர் என்பதற்குச் சான்றாகும். தொண்டை நாட்டு வேளாளர், ‘முதலியார்’ என்னும் பட்டப் பெயருடையராதலை அறிக. ஒருகால், சிவபெருமான் நெற்றிக் கண்ணினின்று தீப்பெறி வெளிப்படவே, உடனிருந்த உமையவள் ஆங்கு நின்றுஞ் செல்ல, அவள் காற்சிலம்பினின்று திர்ந்த ஒன்பது மணிகளும் ஒன்பது மகளிராகிக் கருவுறவே உமையவள் சினந்து, கருவு யிர்க்கா திருக்குமாறு செய்ய, அவ்வொன்ப தின்மம் நெடுங் காலம் உமையவளை நோக்கித் தவஞ் செய்து வீரகேசரி முதலிய நவவீரரை ஈன்றனர். அம்மகளிர் வேர்வையினின்று நூறாயிரம் வீரர்கள் தோன்றினர். தாங்கள் அந்நவவீரர் வழி வந்த செங்குந்தர் எனத் தெய்வத் தொடர்புடைய புராண மரபு கூறி, பழந்தமிழராகிய அன்னார் தமிழினத்தின் வேறெனத் தங்களைத் தாழ்த்திக் கொண்டனர். பிற்காலத்தே இச்செங்குந்தரிடையும் மணத் தொடர்பற்றபல பிரிவுகள் உண்டாயின. இனி, தச்சு, கொல், ஏனம், சிற்பம், அணிகலன் என்னும் தொழில்கள் செய்து வந்தவர், நாளடைவில் மணத் தொடர் பற்ற தனித்தனியினமாகி, தாங்கள் பரமனின் ஐந்து முகங் களினின்றுந் தோன்றிய ஐவர் வழிவந்தவரெனப் புராண மரபு கூறித் தங்களைத் தாழ்த்திக் கொண்டதோடு, ஆசாரி (ஆச்சாரி) என்ற தமிழ் மரபுக்குப் புறம்பான பட்டப் பெயரையுஞ் சூட்டிக் கொண்டனர். இவரிடையும் பிற்காலத்தே மணத் தொடர்பற்ற பல பிரிவுகள் உண்டாயின. விளைநிலம் பற்றிய கணக்குத் தொழில் செய்து வந்தவர், பிள்ளை என்ற பட்டப் பெயர் சூட்டிக் கொண்டு, கணக்கர் என ஒரு தனியினமாயினர், சோழ பாண்டிய நாட்டு வேளாளர்கள், பிள்ளை என்னும் பட்டப் பெயருடையராகையால், பிள்ளைப் பட்டமுடைய இவர் வேளாளரினின்று பிரிந்து வேறினமானவர் என்பதற்குச் சான்றாகும். பகலவன்ஓரு நாட்காலை தேரூர்த்துவர, கடலிடைத் தோன்றிய அவன் ஒளி, நீழாதேவி என ஒரு பெண்ணாக, அவ்விருவர்க்கும் பிறந்த சித்திரகுப்தனை யமன் தன் கணக்குப் பிள்ளையாக்கிக் கொண்டான். தாங்கள் அச்சித்திரகுப்தன் வழிவந்த கருணீகர் எனப் புராணமரபு கூறி, அப்பிள்ளைக் குலத்தினர் தங்களைத் தாழ்த்திக் கொண்டனர். இவரிடையும் பிற்காலத்தே மணத் தொடர்பற்ற பல பிரிவுகள் உண்டாயின. இன்னும் இவ்வாறு தோன்றிய பிள்ளைக் கூட்டத்தினர் பலர் உள்ளனர். இனி, கோயில்களில் இறைபணி செய்து வந்தனர், கோயில் நகை முதலிய பொருள்கள் உள்ள பண்டாரத்தையும் கண்காணித்து வந்ததால் பண்டாரம் எனப் பெயர் பெற்றனர். (மடத் தலைவர்கட்கும் பண்டாரம் என்னும் பெயருண்மை அறிக.) கோயில் பொருள்களைக் கண்காணித்துவந்ததால் - ஆண்டு வந்ததால் - அன்னார்க்கு ஆண்டி என்ற பெயரும் ஏற்பட்டது. ‘கோயிலாண்டி’ என்னும் வழக்கையும் அறிக. முடவரை ஆண்டு வந்தோர் - முடவாண்டி எனப் பெயர் பெற்றமை காண்க. நாளடைவில் இவர்களில் ஒரு சிலர், வேளாண்குடிச் செல்வர்கள் வீட்டுத் திருமண முதலிய காலங்களில் சமையல் செய்தல், இலைபோடுதல் முதலிய தொழில்களையுஞ் செய்து வந்ததால் தந்நிலையில் தாழ்ந்து விட்டனர். இவர்களிடையும் பிற்காலத்தே மணத் தொடர்பற்ற பல பிரிவுகள் உண்டாயின. இனிக் கோயில் இறைபணியை மட்டும் செய்து வந்த ஒரு சிலர், நாளடைவில் குருக்கள் எனப் பெயர் பெற்று உயர்நிலை அடைந்துவிட்டனர். இக்குருக்கள்மார், கொங்கு வேளாளரைப் போலவே பெண்ணுக்குப் பரியம் கொடுத்தல், கொங்கு வேளாளர் காணிக்குரியவராதல் முதலியவற்றால், இவர்கள் வேளாளரினின்று பிரிந்து வேறினமானவர் என்பது பெறப்படும். எடுத்துக்காட்டாக: பொருளந்தை, கூரை கூட்டத்துக் கொங்கு வேளாளர் குலதெய்வமான, சென்னி மலைக்கு 2 கல் வடக்கி லுள்ள பிடாரியூர் அத்தனூரம்மனே சென்னிமலைக் குருக்கள் மாருக்கும் குலதெய்வமாகும். கொங்கு வேளாளரைப் போலவே, இக்குருக்கள்மாரும் இன்றும் அவ்வம்மன் கோயிலுக்குச் சென்றே தங்கள் குழந்தைகளக்கு மொட்டையடித்து வருகின்றனர். கொங்கு நாவிதன் - குடிமகன் எனப்படுதலாலும், கொங்குக் குயவர் - மண்ணுடையார் எனப்படுதலாலும் (வேட்கோ என்னும் பெயருங் காண்க). கொங்குவேளாளர் கட்டுக் கண்ணிகளாகிய குடித்தொழிலாளர்களெல்லாரும், வேளாளரினின்று பிரிந்து வேறினமானவரேயாவர். இவ்வாறே, ஒவ்வொரு தொழில் செய்து வந்தோரும் நாள டைவில் மணத்தொடர்பற்ற தனித்தனிச் சாதியாகி, அச்சாதிகளொவ்வொன்றும் அத்தகைய பல பிரிவுடைய தாகிப் பிறப் பிலேயே வேறுபட்டவரெனப் புராணமரபு கூறி, ஒன்றா யொருகுலமாய் வாழ்ந்து வந்த தமிழினம், சிதறிச் சில்லாந்தட்டி யாகிவிட்டது. இவ்வாறு பிரிவுபட்ட தமிழ்ச் சாதிகளெல்லாம் - புழங் குஞ்சாதிகள், புழங்காத சாதிகள், தீண்டாத சாதிகள் என பழப் பெரும் பிரிவாய் முரண்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றன. உண்டொருங்கு கொண்டுகொடுத் தொன்றாய் ஈன்ற ஒருகுலைக்காய் போன்றேதாழ் வுயர்வொன் றின்றிப் பண்டிருந்த தமிழரினம் அந்தோ! அத்திப் பழத்தையிரண் டாய்ப்பிட்டுப் பார்த்தாற் போலக் கொண்டவொரு குலம்பலவாய் அவையொவ் வொன்றும் குடமுடைந்தாற் போன்றுபல குலங்க ளாகி விண்டதுமேல் கீழ்பலவாய் விதிர்ந்தே வேறு வேறாகி முடிவினிலிவ் வாறா யிற்றே! (புலவர் குழந்தை) இவ்வாறு ஒரே இனமாக இருந்து, ஒவ்வொரு தொழில் செய்து வந்தோரும் ஒவ்வொரு சாதியாயின்மை போலன்றி, உழவுத் தொழிலொன்றையே செய்து வந்தோரிலிருந்து எவ்வாறோ பிற்காலத்தே - வேட்டுவர், படையாட்சி என்ற பிரிவுகள் உண்டாகிவிட்டன. “வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப” (மரபு - 80) என்னும் தொல்காப்பியர் கூற்றுப்படி, உழவுத் தொழிலையே சிறப்புத்தொழிலாக - குலத்தொழிலாக - கொண்ட வேட்டுவரும், படையாட்சியரும் மிகப் பிற்காலத்தே வேளாளரினின்றம் பிரிந்து வெவ்வேறினமான வராவர். இன்றும் அவர்கள் உழவர்களாகவே இருந்து வருதல் குறிப்பிடத்தக்கது. உழவர் என்றால், வேளாளர் என்பது தானே பொருள்? வேளாளர் தாங்கள் கங்கையிற் பிறந்தவரெனப் புராண மரபு கூறித் தமிழினத்தினின்று தங்களைத் தாழ்த்திக் கொண்டது போலவே, வேட்டுவரும் படையாட்சியரும் அத்தகு புராண மரபு கூறித் தங்களைத் தாழ்த்திக் கொள்கின்றனர். குருகுலத்தினரான பாண்டவர் வழிவந்தோர், வலிகுன்றிய பின் தெற்கே வந்து, பொத்தப்பி நாட்டுக் காளத்தியில் தங்கி அப்பகுதியை ஆண்டு வந்தனர். அம்மன்னர் மரபினனான திண்ணன் (கண்ணப்பன்) வழிவந்த ஒருவனுக்கு - வெட்டுவன் (வேட்டுவன்) முதலிய ஐந்து மைந்தர் பிறந்தனர். அவ்வைவரும், மேருமலைப் பகுதியை ஆண்ட மன்னர்களால் வென்று சிறை வைக்கப்பட்ட தமிழகத்து முடியுடை மூவேந்தரையும் சிறை மீட்டதனால் அம்மூவரும் மகிழ்ந்து, அவ்வெட்டுவன் முதலிய ஐவரையும் அழைத்துவந்து கொங்கு நாட்டை ஆளும் உரிமை தந்து கொங்கு இருபத்து நான்கு நாடுகளில் ஒன்றான குறுப்பு நாட்டில் குடியேற்றினரென்று கூறிக்கொண்டு, வேட்டுவர் தாங்கள் தமிழராக இருந்தும், தமிழர் அல்லர் எனத் தங்களைத் தாழ்த்திக் கொள்கின்றனர். இவரிடையும் மணத்தொடர்பற்ற பல பிரிவுகளுண்டு. இனிப் படையாட்சியரோ, தாங்கள் பல்லவ அரசர் மரபினரெனவும், வன்னியகுல சந்திரியர் எனவுங் கூறித் தங்களைத் தமிழர் அல்லர் எனத் தாழ்த்திக் கொள்கின்றனர். பல்லவர் தமிழரல்லர்; தமிழ்நாட்டுக்குப் புறம்பானவர்; கி.பி.250 லிருந்து, 890 வரைத் தமிழ் நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஆண்டு வந்த அயலவர். பழந்தமிழராகிய இவர்கள், தமிழ் மரபைக் கெடுத்த தமிழரல்லாத அப்பல்லவரின் வழி வந்தவரெனக் கூறிக் கொள்வதன் பொருள் விளங்கவில்லை. இவரிடையும் மணத்தொடர் பற்ற பல பிரிவுகள் உண்டு. பழந்தமிழ்ப் பெருங்குடி மக்களாகிய வேட்டுவரும் படை யாட்சியரும் - பாண்டியர் மரபினர், சோழர் மரபினர், சேரர் மரபினர் எனக் கூறிக் கொள்வதை விட்டு, தமிழரல்லாத பாண்டவர் மரபினர், பல்லவர் மரபினர் எனக்கூறிக் கொள்ளும் அத்தகு நிலையை அடைந்துவிட்டது தமிழினம்! கொங்கு நாட்டுப் பழங்குடி மக்களாகிய வேளாளர் - கவுண்டர் என்னும் பட்டப் பெயரையுடையது போலவே, வேளாளரிலிருந்து பிரிந்து தனி வகுப்பினரான கொங்கு நாட்டு வேட்டுவரும் படையாட்சியரும் கவுண்டர் என்னும் பட்டப் பெயரையே உடையராதலால், இம் மூவரும் ஓரினமாய் இருந்து பிற்காலத்தே பிரிந்து, பழக்க வழக்கங்களில் மாறு பட்டுப் பிறப்பிலேயே வேறுபட்ட வெவ்வேறு சாதியினரென வாழ்ந்து வருகின்றனர் என்பது பெறப்படும். கவுண்டர் - தலைவர், அதிகாரி, கவுண்டிக்கை - அதிகாரம்; வழக்கச் சொல். கண்டர் என்பது, கவுண்டர் என்பதன் மரூஉவேயாகும். கவுண்டர் - காணியுரிமையும், காணியாட்சித் தலைமையும் உடையவர், கொங்கு நாட்டில், வேட்டுவர் ஒருவாறு காணி யுரிமை எய்தியுள்ளனர். ஆனால், படையாட்சியர் அஃதெய்த வில்லை. இஃது, அவர் மிகப் பிற்காலத்தே தனியின்னமானவர் என்பதைக் காட்டும். இனி, ஓரினமாகிய கொங்கு வேளாளர்க்குள்ளேயே பிற் காலத்தே - செந்தலைக் கவுண்டர், படைத்தலைக் கவுண்டர், வடகரைக் கவுண்டர், நாட்டாரக் கவுண்டர் முதலிய பல பிரிவுகள் உண்டாகி, மணத்தொடர்பின்றி வெவ்வேறினமாக வாழ்ந்து வருகின்றனர். படைத்தலைக் கவுண்டரும் வடகரைக் கவுண்டரும், செந்தலைக் கவுண்டரினின்று சில நூற்றாண்டுகட்கு முன்னர்த் தான் பிரிந்து, வெவ்வேறு வகையினரானவராவர். அவர்களும், தாங்கள் பூந்துறை நாட்டுச் செந்தலைக் கவுண்டரிலிருந்து பிரிந்து வந்தவரெனவே கூறிக் கொள்கின்றனர். செந்தலைக் கவுண்டர் குலங்களே அவர்கள் குலங்களாகும். இவ்விருவகை யினரும் முறையே குறுப்பு நாடு, வடகரை நாடுகளில் மட்டும் இருந்து வருகின்றனர். இனி, சேனைத்தலைக் கவுண்டர் என்பது, செந்தலைக் கவுண்டர் எனத் திரிந்து வழங்குகிற தெனவும், திரியவில்லை; ஒரு காலத்தே சோழ நாட்டுச் செந்தலை என்னும் இடத்தி லிருந்து வந்து கொங்கு நாட்டில் குடியேறியதால், செந்தலைக் கவுண்டர் எனப்பட்டனர் எனவும் பலவாறு கூறுகின்றனர். அவ்வாறு குடியேறினர் என்பதற்கு இலக்கியச் சான்றோ, கல்வெட்டுச் சான்றோ இல்லை. மேலும், செந்தலைக் கவுண்டர் என்ற வழக்கே இவர்கட்கில்லை. படைத்தலைக் கவுண்டரும், வடகரைக் கவுண்டருமே தங்களினின்று வேறுபாடறிய இவர்களைச் செந்தலைக் கவுண்டர் என்கின்றனர். இனிக் கொங்கு வேளாளரில் பெரும்பான்மையினரான இச் செந்தலைக் கவுண்டரினின்றே படைத்தலைக் கவுண்டரும் வடகரைக் கவுண்டரும் பிரிந்தவராகையால் இவர் மட்டும் சோழ நாட்டுச் செந்தலையிலிருந்து குடியேறினவரெனல் பொருந்தாமையோடு, அதற்கு முன் கொங்கு நாட்டில் வேளாளரே இல்லை என்பதும் பெறப்படும். நாட்டாரக் கவுண்டரோ எனில், அவர்கள் சேல மாவட்டத்தில் ஒரு சிறு பகுதியில் மட்டுமே இருந்து வருகின்றனர். எனவே, கொங்கு வேளாளர் எங்கிருந்தும் வந்தவரல்லர்; என்றும் எப்போதும் கொங்கு நாட்டிலேயே இருந்தவராவர். அதனை இனிக் காண்போம். ஒரே இனமாகிய தமிழர், செய்யுந் தொழிலுக்கேற்ப அந்தணர் அரசர், வணிகர், வேளாளர் எனப் பெயரளவில் பிரிவு பட்டிருந்தனர். நாளடைவில், வாணிகஞ் செய்து வந்தோர் தனியினமாயினர். இருவகை வேளாளரில், உழுதுண்ணும் வேளாளர் என்போர் ஒரே இனமாக இருந்து உழவொழிந்த பிற தொழில்கள் செய்து வந்தவரெல்லாரும் அவ்வத் தொழில் களையே தனித் தொழிலாகக் கொண்டு. பிற்காலத்தே வெவ்வேறு சாதியினராகப் பிரிந்து போயினர். பின்னர், உழவுத் தொழில் செய்து வந்தவர் மட்டும் வேளாளர் என்னும் அப் பழைய இனத்தினராகவே இருந்துவரலாயினர். கொங்கு நாட்டு வேளாளர் - கொங்கு வேளாளர் எனப் படுவர். சில வரலாற்றாசிரியர்கள் எண்ணுவதுபோல, இவர்கள் வேறு இடத்திலிருந்து வந்து கொங்கு நாட்டில் குடியேறியவர் களல்லர்; கொங்கு நாட்டுப் பிரிவு ஏற்பட்டதிலிருந்து இங்கேயே வாழ்ந்து வருபவராவர்; அப்பிரிவு ஏற்படா முன்னரும் இப்பகுதியிலேயே வாழ்ந்து வந்த பழந்தமிழ்க் குடிமக்களே யாவர். கொங்கு தனி நாடான பின் இவர்கள் கொங்கு வேளாளர் எனப் பெயர் பெற்றனர். கொங்கு என்றாலே, வேளாளர் என்பது தானாகவே வந்து இயைந்து - கொங்கு வேளாளர் எனமுடியும் அத்தகு பழமையும் உரிமையும் உடையவராவர் இவர் கொங்கு நாட்டுக்கு. கொங்கு என்பது, வேளாளர் என்பதையும், வேளாளர் என்பது கொங்கு என்பதையும் அவாய் நிற்கும் அவாய் நிலைச் சொற்களாகும் அவ்விரு சொல்லும். இனிச் சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் தொண்டை நாட்டிலும் துளு நாட்டிலும் இருந்து வந்து, கொங்கு நாட்டில் வாழும் வேளாண்குடி மக்கள் தங்களைச் சோழிய வேளாளர், பாண்டிய வேளாளர், தொண்டை மண்டல வேளார், துளுவ வேளாளர் எனக்கூறிக் கொள்வதும், கொங்கு வேளாளர் தொன்று தொட்டுக் கொங்கு நாட்டிலேயே வாழ்ந்துவரும் கொங்கு நாட்டுப் பழங்குடி மக்களாவர் என்பதற்குச் சான்றாகும். மேலும், கொங்கு நாட்டில் வாழும் தெலுங்கரும் கன்னடரும், கொங்கு வேளாளரை - கொங்கவாளு, கொங்கவாடு என்றழைத்து வருதலும் இதனை உறுதிப்படுத்தும். கொங்கு நாட்டிற் குடியேறி வாழும் சோழநாட்டு வேளாளர், தங்களைச் சோழிய வேளாளர் என்று கூறிக் கொள்வது போல, கொங்கு வேளாளர், கொங்கு நாட்டிற்கே உரியவராதலான், தங்களை - வேளாளர், வேளாளக் கவுண்டர் எனக் கொங்கு என்னும் அடைமொழியின்றியே கூறிக் கொள்ளு தலும் கருதுதற்குரியதாகும். இனி, கி.மு. ஆயிர ஆண்டுகட்கு முற்பட்ட பாடல் களையும் உடைய சங்க இலக்கியங்களில் இவர்கள் கொங்கர், கொங்கு வேளிர் எனவே குறிக்கப்படுதலான், அப்பழங் காலத்திலிருந்தே கொங்கு வேளாளர்கள் கொங்கு நாட்டின் காணியாளர்களாகவும், ஆட்சித் தலைவர்களாகவும் இருந்து வந்தனர் என்பதற்கு அச்சங்க நூல்களே சான்றாகும். பேகன், அதியன், பழையன், ஓரி, குமணன், விச்சிக்கோ முதலிய சங்ககாலக் கொங்கு மன்னர்களெல்லாரும் ‘வேளிர்’ என்னும் கொங்கு வேளாளப் பெருங்குடிச் செல்வர்களே யாவ ரென்பதை அச் சங்க நூல்கள் பறை சாற்றுகின்றன. கிழார் என்பது, வேளாண் மரபுப் பெயர்களிலொன்றாதலான். கொங் கானங்கிழான், ஈந்தூர் கிழான் என்னும் கொங்கு நாட்டுச் சங்க காலச் செல்வர்கள், கொங்கு வேளாளர் பெருங்குடி மக்களே யாவரல்லரோ? “கொங்கர் ஆபரந் தன்ன” (பதிற் - 77) “ஆகெழு கொங்கர் நாடு” (பதிற் - 22) “வன்புலந் துமியப் போகிக் கொங்கர் படுமணி ஆயம் நீர்க்குநிமிர்ந்து செல்லும்” (அகம் - 79) என, ஆக்களையுடைய இக்கொங்கர், கொங்கு வேளாண் குடி மக்களே யாவரல்லரோ? ஆயம் - மாட்டுக்கூட்டம். ‘கொங்கர் நாடு’ என்ற உரிமை யுரையையும் நோக்குக. 1. ஆந்தை 9. கீரை (கீரன்) 17. செங்கண்ணன் 2. காடை 10. ஈஞ்சன் 18. பூதன் 3. அந்துவன் 11. பொன்னன் 19. சாத்தந்தை 4. செல்லன் 12. பவளன் 20. கொற்றந்தை 5. மாடன் 13. மணியன் 21. கண்ணந்தை 6. பயிரன் 14. பில்லன் 22. கீரந்தை 7. தூரன் 15. வண்ணக்கன் 23. பொருளந்தை 8. பண்ணை 16. கண்ணன் 24. பூந்தை இவை, கொங்கு வேளாளர் குலப் பெயர்களில் ஒரு சில, இக் குலங்கள் கொங்கு வேளாளர்க்கே உரிய தனிச் சிறப்புடை யவையாகும். சோழ பாண்டிய நாட்டு வேளாளர்கட்கு இத்தகைய குலங்கள் இல்லை. கொங்கு வேளாளர் சோழ நாட்டிலிருந்து கொங்கு நாட்டிற் குடியேறியவராக இருந்தால், சோழிய வேளாளர்க்கும் இக்குலங்கள் இருத்தல் வேண்டுமல்லவா? குலம் - கூட்டம். ஆந்தை கூட்டம், பயிரன் கூட்டம், சாத்தந்தை கூட்டம் எனக் கொங்கு வேளாளர் தங்கள் குலத்தைக் கூட்டம் எனவே வழங்கி வருகின்றனர். இப்பெயர்கள், அக்குல முதல்வர் பெயர்களாகும். ஆந்தையின் வழிவந்தோரெல்லாரும் தங்களை ஆந்தை கூட்டம் (ஆந்தையின் கூட்டம்) எனக் கூறிக் கொண்டனர். ஆந்தை - அக்குல முதல்வன். இவற்றுள், 1 - 2 பறவைப் பெயர். அந்து - கறையான். செல்- உழு. 5, விலங்குப் பெயர். 6 - 10. மரப் பெயர். 11 - 13. பொன் மணிப் பெயர். 14 - 15. நிறப்பெயர். 16 - 17. உறுப்புப் பெயர். 18. பெருமை குறிக்கும் பெயர். 19 -24. தை விகுதி பெற்ற ஆண்பால் பெயர்கள். பூதன், சாத்தன், கொற்றன் என்பன மிக்க பயிற்சியுடைய பழந்தமிழ்ப் பெயர்கள் என்பதை அறிக. இவற்றுள், 1. ஆந்தை 9. கீரன் 3. அந்துவன் 15. வண்ணக்கன் 8. பண்ணன் (பண்ணை) 16. கண்ணன் 17. செங்கண்ணன் 19. சாத்தந்தை 18. பூதன் 22. கீரந்தை என்னும் பெயர்கள், சங்ககாலப் புலவர் பெயர்களாகும். 1. அஞ்சில் ஆந்தையார் 17. செங்கண்ணனார் பிசிர் ஆந்தையார் மதுரைச் செங்கண்ணனார் 3. ஆசிரியர் நல்லந்துவனார் 18. இளம்பூதனார் சேந்தம் பூதனார். 8. நப்பண்ணனார் 19. சாத்தந்தையார் 9. அந்தியிளங்கீரனார் 20. கீரந்தையார் மூலங்கீரனார், இளங்கீரந்தையார் கீரங்கீரனார் 15. வடமவண்ணக்கன் 16. கண்ணனார், கொல்லிக் கண்ணனார், காட்டூர் கிழார் மகனார் கண்ணனார், சேந்தங் கண்ணனார். 15. வடமன்- வட நாட்டான், காங்கயம் பக்கத்தார், மேட்டூர்ப்பகுதியை - வடக்குச் சீமை என்பது, இன்றும் வழக்கமாக உள்ளது. இவர்களெல்லாரும் கொங்கு வேளாண் குலப் புலவர்களேயாவர். இவர்கள் கொங்கு நாட்டினின்று, தமிழ் நாட்டின் பிறபகுதிகளில் சென்று இருந்தவராகலாம். இது, புலவர்களின் வாழ்க்கை முறையாகும். மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் எனக்காண்க. இவர், இலங்கையிலிருந்து வந்து மதுரையில் இருந்தவர். பிற்காலத்தும், தொண்டை நாட்டுப் பொன்விளைந்த களத்தூர்ப் புகழேந்திப்புலவர், மதுரையிலும் உறையூரிலும் சென்றிருந்து வாழ்ந்து வந்ததை அறிக. இவர்களுள் அந்தியிளங்கீரனாரும், கொல்லிக்கண்ணனாரும் கொங்கு நாட்டுப் புலவர்கள். 9. மூலங்கீரனார் - தென்கரை நாட்டு மூலனூரினராக இருக்கலாம். 16. சேந்தங்கண்ணனாரும், 18. சேந்தம்பூதனாரும் - சேலமாவட்டத்துச் சேந்தமங்கலத்தினராக இருக்கலாம். ஆகையால், சங்ககாலத்தே கொங்கு வேளாளர் கொங்கு நாட்டிலேயே இருந்து வந்தனர் என்பது வெளிப்படை. ஆந்தை என்பது, ஆதன் + தந்தை - ஆந்தை எனத் தொல் காப்பிய உரையாசிரியர்கள் புணர்ச்சிவிதி கூறியது (தொல். எழுத்து-349) போன்ற புணர்ச்சிக்குட்பட்ட சொல்லன்று. இது, ஆந்தை என்னும் பறவைப் பெயராகும். காடை கூட்டம், பனங் காடை கூட்டம் (காடான்), மயிலங்கூட்டம் என்பன காண்க. இவ்வாறே, சாத்தன் + தந்தை - சாத்தந்தை, கொற்றன் + தந்தை - கொற்றந்தை, கீரன் + தந்தை - கீரந்தை, பூதன் + தந்தை - பூந்தை என்னும் புணர்ச்சி விதிக்குட்பட்ட சொற்களல்ல இவை. மடம் + தை - மடந்தை, இளமை + தை - இளந்தை, வடக்கு + தை - வடந்தை, குழ + தை - குழந்தை என்னும் பெயர்கள் போல, ‘தை’ என்ற பெயர்விகுதி பெற்ற பெயர்களாகும். இவை. சாத்தன் + தை - சாத்தந்தை, னகரம் கெட்டு, நகரமெய் தோன்றிற்று. கெடுதல், தோன்றல் விகாரம். குழ + தை - குழந்தை என்பது போல, பூ + தை - பூந்தை என, மெலி தோன்றிற்று. மழவும் குழவும் இளமைப் பொருள’ என்பது, தொல்காப்பியம். குழ - உரிச்சொல். பூ - பெயர்ச்சொல். இனி, கொங்கு - நாட்டுப் புலவர்களான - கருவூர்க்கிழார், கருவூர்ப் பூதஞ்சாத்தனார், செங்குன்றூர்க்கிழார், ஆலத்தூர்க் கிழார், பெருந்தலைச் சாத்தனார் ஆகியோர் கொங்கு வேளாண் குலத்தினரேயாகலான், தொன்று தொட்டே கொங்கு வேளாளர் கொங்கு நாட்டிலேயே இருந்து வந்த கொங்கு நாட்டின் பழங்குடி மக்களேயாவர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஒருநாட்டு வரலாறு எழுதுவோர் அந்நாட்டில் வாழும் பெருங்குடி மக்கள் எங்கிருந்து வந்தவர்? என்னும் கேள்வி கேட்டு, அவர்கள் ஏதாவது வேறொரிடத்திலிருந்து வந்து குடியேறினவர்கள் என்று முடிவு கட்டுவதை மரபாகக் கொண்டனர். இது, பெரும்பாலும் மேனாட்டு வரலாற்றா சிரியர்களின் கொள்கையாகும். அவர்களையே மற்றநாட்டு வரலாற்று ஆசிரியர்களும் பின்பற்றுவாராயினர். இத்தகைய மரபைப் பின்பற்றியதனாலுண்டான தவறே, கொங்கு வேளாளர் வேறிடத்திலிருந்து வந்து கொங்கு நாட்டிற் குடியேறியவர் என்பதும். இதற்கு இலக்கியச்சான்றோ, கல்வெட்டுச் சான்றோ, பிறசான்றுகளோ எதுவும் இல்லை என்க. உலக முதன் மக்களாகத் தமிழகத்தே தோன்றி, அத் தோன்றிய காலந்தொட்டுத் தமிழகத்திலேயே வாழ்ந்துவரும் தமிழர்களையும், வேறு இடத்திலிருந்து வந்து தமிழகத்தில் குடியேறியவர்கள் எனச் சில வரலாற்றாசிரியர்கள் எழுதிப் போந்தனர் என்பது, இங்கு நினைவுகூரத்தக்கது. கொங்கு நாட்டுப் பழங்குடி மக்கள் எல்லோரும் என்றும் எப்போதும் கொங்கு நாட்டிலேயே இருந்துவருபவராவர். அவர்கள் ஒரே இனத்தினின்று பிரிந்து, தாந்தாஞ் செய்த தொழில்களுக்கேற்ப மணத்தொடர்பற்ற வெவ்வேறு சாதி களாகித் தமது பழைய நிலையை மறந்து வாழ்ந்து வருகின்றனர். கொங்கு நாட்டு வேட்டுவரும் படையாட்சியரும் கொங்கு வேளாளரேயாவர். பல பிரிவுபட்ட கொங்கு வேளாளரும் ஒரே இனமாக இருந்து பிரிந்தவரே யாவர். கொங்குப் பழங்குடி மக்கள் எல்லோரும் தமிழ் மரபினரேயன்றி, அயல் மரபினர் அல்லர் என்னும் உண்மையை, கொங்கு நாட்டுப் பழங்குடி மக்கள் எல்லோரும் உய்த்துணர்ந் தின்புறுவாராக. 11. கொங்கு தனியாட்சி நாடு தமிழரசு என்றால், சேர சோழ பாண்டியர் என்பது தாமே பெறப்படுமேனும், கொங்கு நாட்டைப் பொறுத்த மட்டில் அது விலக்குடைய தாகும் கொங்கு நாடு தமிழாட்சி நடந்த தமிழ் நாடே யெனினும். தமிழ் நாட்டின் ஏனைப் பகுதிகளின் ஆட்சி யினின்றும் தனிப்பட்டதாகும் கொங்கு நாட்டின் ஆட்சி. தொன்று தொட்டே கொங்கு நாடு, சேர சோழ பாண்டி யர்களாகிய முடியுடை மூவேந்தராட்சிக்குட்படாது தனியாட்சி நாடாகவே இருந்து வந்தது. பேரரசர்க்குரிய புகழும் ஒருங்கே அமையப் பெற்ற தமிழ்ச் சிற்றரசர் பலரால் சீருஞ்சிறப்புடன் ஆளப்பட்டு வந்தது கொங்கு நாடு. அன்னாரைச் சிற்றரசர் என்பதினும் தனியரசர் என்பதே சாலப் பொருந்தும், அக் கொங்கு மன்னர்களிற் சிலர், முடியுடை மூவேந்தரும் ஒன்று கூடி எதிர்க்கினும் அஞ்சாது எதிர் நிற்கும் அத்தகு வீரமும் ஆண்மையும், அவற்றிற்கேற்ற போர்த்திறனும் ஒருங்குடையவ ராக இருந்து வந்தனர். “களம்புகல் ஓம்புமின் தெவ்விர், போரெதிர்ந் தெம்முளும் உளனொரு பொருநன்; வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த காலன் னானே” (புறம் - 87) பகைவர்காள்! போர் செய்தற்காகக் களம்புக எண்ணு தலைத் தவிருங்கள். எங்களுள்ளும் ஒரு வீரன் உளன். அவன், ஒரு நாளைக்கு எட்டுத் தேர் செய்யும் தச்சனொருவன், ஒரு மாதம் நன்கு எண்ணிப் பார்த்துச் செய்யப்பட்ட தொரு தேர்ச் சக்கரத்தை ஒப்பான். கால் - சக்கரம், அத்தகு ஆற்றலுடையவன் ஆவன் அவன். “பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை வளிபொரு தென்கண் கேட்பின் அதுபோரென்னும் என்னையும் உளனே” (புறம் - 89) மன்றத்தின் கண் உள்ள மரத்தில் தொங்கும், வாரால் இறுக்கிக் கட்டப்பட்ட மத்தளதத்தின் மீது காற்றுப்பட்டு எழுந்த ஓசையைக் கேட்கின், அது போர்ப்பறையின் ஓசை யென்று மகிழும் எனது தலைவனும் உளன். அத்தகு மறப்பண் புடையன் அவன். என, ஒளவையாரால் பாராட்டப் பெற்ற கொங்கர் கோம கனாகிய தகடூர் அதியமான் நெடுமான் அஞ்சி போன்ற ஆற்றலும் மறப் பண்பும் உடைய தலைவர்கள் பலரால் தனித் தனி ஆளப்பட்டு வந்தது பழங்கொங்கு நாடு. வேளிர் என்னும் சிறப்புப் பெயரையுடைய வேளாண் குடிச் செல்வர்களாகிய அத் தனியரசர்கள், தமக்குட் பகை யின்றி, நாட்டு நலனே தம் வாழ்க்கை நலனெனக் கொண்டு, ‘அழுங் குழவிக் கன்புடைய தாயே போல்’ (ஏரெழுபது) குற்றங் கடிந்து குடிபுறங் காத்து வந்தனர். சங்க காலக் கொங்குநாட்டு மன்னர்கள், தம்முட் பகைகொண்டு போர் செய்ததாக வரலா றில்லை. அன்னார் தம்மை ஒரு மூத்த குடிமகனாகவே எண்ணிச் செம்மையிற் றிறம்பாது செங்கோ லோச்சி வந்தனர். அவர்கள் முடியுடை மூவேந்தரிடத்தும் அன்பொடு நண்பும் அமைவும் உடையராகவே இருந்து வந்தனர். முடியுடை மூவேந்தர்க்கும் மைத்துனரும் மாமனாரு மாகிய அன்னார் பின்னர் எவ்வாறி யிருந்திருப்பர்? (‘தமிழரசு’ என்னும் தலைப்பைப் பார்க்க). கொங்குப்படைத் துணை மூவரசர் வென்றிக்கும் முதற் காரணமாக இருந்து வந்தது. கொங்கு நாட்டுக் குறுநில மன்னர்கள் நாட்டாட்சியோடு, தலைமலை, காவேரிபுரம், தொப்பூர், பொன்முடிக் கணவாய் களின் வழியாக வடக்கித்தியார் தமிழ்நாட்டுக்குட் படை யெடுத்து வாரா வண்ணம் அம்மலை யரணினும் வன்மையாகப் பாதுகாத்தும் வந்தனர். கொங்கரின் போர்த் திறமையே தமிழ் நாட்டைப் பற்றி அயலார் கனவினும் கருதாதபடி செய்து வந்தது. ஊர்த் தலைவர்களால் திறம்பட ஊராண்மை நடத்தும் பெருமை கொங்கு நாட்டுக்கே உரிய தனிப்பெருமையாகும். கொங்கு நாடு என்றும் தனியாட்சி நாடே என்பதற்குச் சங்க நூல்களில் நிரம்பச் சான்றுகள் உள்ளன. 1. “வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன்” (அகம் - 253) 2.“மைந்த ராடிய வயங்குபெருந் தானைக் கொங்குபுறந் தந்த கொற்ற வேந்தே. வஞ்சி முற்றம் வயக்கள னாகக் கொண்டனை பெருமகுடபுலத் ததரி.” (புறம் - 373) 3.“ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த வேல்கெழு தானை வெருவரு தோன்றல்.” (பதிற் - 22) 4.“கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயற்கொடி பகைப்புறத்துத் தந்தன ராயினும்.” (சிலப். 25:158 - 4) 5.குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்” (சிலப்.30:159-60) 6.“கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென்றமிழ்ப் பாவை.” (சிலப். 12: 47-8) 1. பசும்பூண் பாண்டியன் கொங்கரை வென்று, கொங்கு நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றினான் இப்பசும் பூண் பாண்டியன், கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தவன். 2. சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் (கி.பி.98-145) கொங்கு நாட்டை வென்று, பின் மேற்கு நோக்கிச் சென்று, சேர நாட்டின் தலைநகராகிய வஞ்சியை முற்றினான். 3. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் (கி.பி.70-95) என்னும் சேரமன்னன் கொங்கு நாட்டை வென்றனன். இவன், செங்குட்டுவன் சிற்றப்பன். 4. சேரன் செங்குட்டுவன் (125 - 180), கொங்கு நாட்டுச் செங்களம் என்ற இடத்தில் நடந்த போரில், மோகூர்ப் பழையனுக்குத் துணைவந்த சோழ பாண்டியரை வென்றான், இவற்றின் விரிவை. இவர்கள் வரலாற்றிற் காண்க. 5. மாளுவ வேந்தரையும் இலங்கை மன்னனையும் போலவே, கொங்கு மன்னரையும் வேற்று நாட்டு மன்னராகவே இளங்கோவடிகள் குறித்துள்ளமை காண்க. குடகக் கொங்கர் - மேல்கொங்கை ஆண்ட மன்னர்; சேர நாட்டை அடுத்திருந் தவர். 6. சேர பாண்டிய நாடுகளின் வேறாகவே கொங்கு நாடு கூறப்பட்டுள்ளது. இனிச் சங்கப் பிற்காலத்தும், தேர்மாறன் (அரிகேசரி பராங்குச் மாறவர்மன்) என்னும் பாண்டிய மன்னன் (710 - 765), கொங்கு நாட்டுத் தகடூரில் நடந்த போரில், அதியமானையும், அவனுக்குத் துணைவந்த இரண்டாம் நந்திவர்மப் பல்லவனையும் (710 - 775)வென்று, பின் சேர நாட்டு மங்கலாபுரத்தை (மங்களூர்) அடைந்து கப்பலேறித் தெற்காகச் சென்று, தனக்குரிய விழிஞம் என்னும் துறைமுகத்தில் இறங்கித் தன் தலைநகர்க்குச் சென்றனன். (டாக்டர், எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் - சேரன் வஞ்சி- 179). கொங்கு நாட்டின் உரிமை பற்றியே தேர் மாறனுக்கும், இரண்டாம் நந்திவர்மனுக்கும் பகை உண்டானது. (இவர்கள் வரலாறு பார்க்க). அத்தேர்மாறன் மகனான நெடுஞ்சடையன் பராந்தகன் (765 - 790) அதியமானைவென்று மதுரையில் சிறை வைத்ததாக, வேள்விக் குடிச் செப்பேடு கூறுகிறது. எனவே, சேர சோழ பாண்டியன் மூவரும் கொங்கு மன்னரை வென்றமை கூறுதலான், கொங்கு நாட்டுக்காகப் போட்டியிட்டதனால், கொங்கு நாடு மூவேந்தர் ஆட்சிக் குட் படாது தனியாட்சி நாடாகவே இருந்து வந்ததென்பது பெறப் படும். பசும்பூண் பாண்டியன் வரலாற்றால், கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே கொங்கு நாடு, தனித்துத் தனி யாட்சி நாடாக இருந்து வந்ததென்பது பெறப்படும். 1. “கங்கபாடி கவ்விக் கொங்கம் வெளிப்படுத் தருளிய சாரல்மலை யடிக்குவட்டின் இட்டுஞ் சேரன் மலை நாட்டு முதல் இராசரான் (985 - 1014) கல்வெட்டு. 2. “குடக்கொங்கத் தடன்மன்னனைக் கொல்களிற் றொடுங் கொண்டு போந்து, கொடியணி நெடுமாடக் கூடல் மணிமண்டபத்து வைத்து, கங்கபூமி யதனளவும் கடிமுரசு தம்பியரறையக் கொங்க பூமி யடிப்படுத்து”- பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகன் (765 - 790) கல்வெட்டு. 3. “கங்கர் திறையிடக் கன்னடர் வெந்நிடக் கொங்கர் ஒதுங்க” - விக்கிரமச்சோழன் (1118 - 1136) மெய்க்கீர்த்தி 4.“கொங்கு ருடல்கிழியக் குத்தியிரு கோட்டெடுத்து வெங்க ணழலில் வெதுப்புமே - மங்கையர்கண் சூழத்தா மம்புனையுஞ் சுந்தரத்தோள் மீனவனுக் கீழத்தா னிட்ட இறை” - சிதம்பரத்திலுள்ள பாண்டியன் கல்வெட்டு. எனச் சோழ பாண்டியர் கல்வெட்டுக்களும் கொங்கு தனி நாடெனவே கூறுகின்றன. 1. “கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பாரிலை” (சுந்தரர்) 2. “கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய்” (சுந்தரர்) 3. “குரவலர் சோலை யணிதிருப் பாண்டிக் கொடுமுடி யணைந்தனர் கொங்கில்” (பெரிய.ஏயர்கோன்) 4. “கொங்கு நாடு கடந்து போய்க் குலவு மலைநாட் டெல்லையுற” (பெரிய. சேரமான்) 5. “தெண்டிரைநீர்த் தடம்பொன்னித் தென்கரைவாய்க் கொங்கினிடை வண்டணையும் புனற்சடையார் வாழ்விடங்கள் தொழுதணைந்தார்.” (பெரிய. திருஞான) எனச் சுந்தரரும் சேக்கிழாரும், கொங்குநாடு தனிநாடு எனவே கூறுதல் காண்க. கொங்கு நாட்டைக் கடந்து போய்ச் சேரநாட்டை அடைந்ததால், இரண்டும் தனித்தனி நாடுகளோயகும். குலசேகராழ்வார் (754 - 798) தம் பாடல்களில் தன்மைக் கோழிவேந்தன், கூடலிறைவன், கொல்லிக்காவலன், கொங்கர் கோமான் என்று கூறிக் கொள்கிறார். இவர் சேர மன்னர். கோழி - உறையூர். கூடல் - மதுரை. ‘கொல்லி’ என்பது - சேர நாட்டின் தலைநகரான வஞ்சி நகரின் ஒரு பகுதியின் பெயர். அது, கொல்லி நகர் என்று வழங்கும். இவர் தமிழ்நாடு முழுவதும் தமக்குரியதாகக் கூறிக் கொள்ளும் வகையில், கொங்கு நாட்டைத் தனி நாடாகவே குறிப்பிடுதல் அறிக. சங்ககால முதல், கி.பி.13ஆம் நூற்றாண்டுவரைக் கொங்கு நாடு தனியாட்சி நாடாகவே இருந்து வந்ததென்பது, மேல் எடுத்துக் காட்டியவற்றால் விளங்குகிறதல்லவா? மூவேந்தரும் கொங்கு நாட்டின்மேற் படையெடுத்து கொங்கு மன்னரை வென்றிருப்பதிலிருந்தே அது, அம்மூவர்க்கும் உரியதன்றென்பது பெறப்படும். “ஆதி யந்தவு லாவாசு பாடிய சேரர் கொங்குவை காவூர்நன் னாடதில் ஆவி நன்குடி வாழ்வான தேவர்கள் - பெருமாளே.” என்னும் அருணகிரி நாதர் திருப்புகழ்க் குறிப்பைக் கொண்டு, கொங்கு நாடு சேரர்க்குரியதெனல் பொருந்தாது, ஏதோ ஒரு காலத்தில், அதுவும் மிகவும் பிற்காலத்தே, கோவை மாவட்டத் தின் தென்மேற்குப் பகுதியைக் கைப்பற்றிச் சேர மன்னர் இரண்டொருவர் சில ஆண்டுகள் ஆண்டு வந்திருப்பதாகத் தெரிகிறதேயன்றி, கொங்கு நாடு சேரர்க்குரியதென்பதற்கு யாதொரு சான்றும் இல்லை. அருணகிரிநாதர் காலத்தே (கி.பி.15 நூ), சேர மன்னன் ஒருவன், கொங்கு இருபத்து நான்கு நாடுகளுள் ஒன்றான ஆவி நன்குடி (பழனி) நாட்டுப் பகுதியைப் பிடித்து ஆண்டு வந்திருக் கலாம். அது கொண்டு அவர் அவ்வாறு குறிப்பிட்டனர். வையாபுரி, அல்லது வைகாவூர் நாடு, சங்க காலத்தே வையாவிக் கோப்பெரும் பேகன் என்னும் கொங்குவேளிர் மரபினுக்குரியதாய் இருந்து வந்தது. வையாவிபுரி, அல்லது வையாவியூர் என்பனவே, வையாபுரி, வைகாவூர் எனத் திரிந்து வழங்கின. “கோதைநனி யாண்டதொரு கொங்குவள நாடு” (பேரூர்ப் புராணம்) கோதை - சேரன். இப்பேரூர்ப் புராண ஆசிரியரான கச்சியப்ப முனிவர், கி.பி.19ஆம் நூற்றாண்டினராவர். அருணகிரி நாதர் கூற்றினைக் கொண்டே கச்சியப்ப முனிவர் இவ்வாறு கூறியுள்ளார். இவருக்குப் பின் இருந்தவர்களான - அவிநாசிப் புராணம், திருமுருகன் பூண்டிப் புராணம், பவானிப் புராணம், திருச்செங்கோட்டுப் புராணம், கரூர்ப் புராணம் முதலிய வற்றின் ஆசிரியர்களெல்லாரும், பேரூர்ப் புராண ஆசிரியர் கூற்றைப் பின்பற்றிக் கொங்கு நாடு சேரர்க் குரியதெனவே கூறிப் போந்தனர். “புகாஅர்ச் செல்வ, பூமியர் மெய்ம்மறை, கழைவிரிந் தெழுதரு மழைவிரி நெடுங்கோட்டுக் கொல்லிப் பொருந” (பதிற்-73) என்பதைக் கொண்டு, சோழ நாடும் பாண்டிய நாடும் சேரர்க் குரிய வெனல் எங்ஙனம் பொருந்தும்? பூமியர்- பாண்டியர். பாண்டி நாட்டிலும் ஒரு பூமிநாடுண்டு. கொல்லிமலை சேரர்க் குரிய தெனலும் அங்ஙனமே பொருந்தாது. இது, சேரனது பெருமை கூறியதேயாகும். பல்யானைச் செல்கெழு குட்டுவன், களங்காய்ச் கண்ணி நார்முடிச் சேரல், சேரன் செங்குட்டுவன், பெருஞ்சேரலிரும் பொறை, இளைஞ்சேரலிரும்பொறை என்னும் சங்க காலச் சேரமன்னர்கள் ஐவரும் கொங்கு மன்னர்களை வென்றதாக, கொங்கு நாட்டைக் கைப் பற்றியதாகப் பதிற்றுப் பத்தும் (22. 32, 8 பதிகம், 88), சிலப்பதிகாரமும் (25:153-4) கூறுகின்றன. கொங்கு நாடு சேரர்க்குரியதெனின், இவர்கள் எதற்காக ஒருவர் பின் ஒருவராகப் போர் செய்து அதைப் பிடிக்க வேண்டும்? இனி, ஒவ்வொரு காலத்தே சோழரும் பாண்டியரும் கொங்கு நாட்டின் தென்கீழ்ப் பகுதியையும், தென்பகுதியையும் பிடித்தாண்டிருக் கின்றனர். கொங்கு நாட்டின் பழமையான நகர்களிலொன்றான கரூர் ஒரு காலத்தே சோழ மன்னர் இருப்பிடமாக இருந்திருப்பதே இதற்குச் சான்றாகும். கரிகாற் சோழன் மருமகனான - ஆதிமந்தியின் கணவனான- ஆட்டனத்தி என்னும் சேர மன்னன் கொங்கு நாட்டுக் கருவூரைப் பிடித்து அப்பகுதியைச் சில ஆண்டுகள் ஆண்டு வந்ததால், கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரலிரும் பொறை (கி.மு.30-12) என்று பெயர் பெற்றனன். சேர நாட்டின் தலை நகராகிய கருவூர் (வஞ்சி) இவனுக்கு உரியதாகையால், அதை இவன் பிடிக்க வேண்டியதில்லை. பிடிக்கினும், அது பற்றி இவ்வாறு சிறப்புப் பெயர் ஏற்படக் காரணமில்லை. இவன் காலத்தே கொங்கு நாட்டுக் கரூர்க்கு - வஞ்சி எனவும், கரூரின் கிழக்கே காவிரியின் வடகரையிலுள்ள ஒரு மூதூர்க்கு - முசிறி எனவும் பெயர் வழங்கினதாகத் தெரிகிறது. (புறம் - 373, உரை; கரூர்க் கல்வெட்டு). ஆனால், அவனுக்குப் பின் கரூர்க்கு வஞ்சி என்னும் பெயர் வழக்கு வீழ்ந்தது. முசிறி, இன்றும் வழங்கி வருகிறது. பிற்காலத்தே (1004 - 1300) சோழரும் பாண்டியரும் கொங்கு நாட்டைப் பிடித்து, கொங்கு நாட்டிலேயே இருந்து ஆண்டு வந்து, கொங்குச் சோழர், கொங்குப் பாண்டியர் எனப்பெயர் பெற்றுள்ளனர். ஆனால், சேரர்கள் என்றும் அவ்வாறு கொங்கு நாட்டில் நிலையாகத் தங்கியிருந்தது ஆண்டு வந்ததாகத் தெரியவில்லை. கொங்குப் பழங்குடி மக்களான கொங்குப் புலவர் என்பார், தவறாகத் தங்களைச் சேரர்குல வேளாளர் எனக் கூறிக் கொள்வதைத் தவிர, கொங்கு நாட்டில் சோழிய வேளாளரும் பாண்டிய வேளாளரும் ஒரு சிலர் குடியேறியிருந்து வருவது போலச் சேர வேளாளர் இன்மையும், கொங்கு நாடு சேரர்க் குரிய தன்றென்பதற்குச் சான்றாகும். வராக மிகியார் (கி.பி.4நூ) என்பார், தமது வட நூலில் - சேர சோழ பாண்டிய கொங்கு நாடுகள் எனக் கொங்கு நாட்டைத் தனி நாடாகவே குறித்துள்ளார். அசோகன் (கி.மு.278 - 232) கல்வெட்டில், தமிழகத்து அரசகர்களெனக் குறிக்கப்பட்டுள்ள - சோழர், பாண்டியர், கேரள புத்திரர், சத்திய புத்திரர் என்போரில், சத்திய புத்திரர் என்பார், கொங்கு நாட்டு மன்னரேயாவர். (டாக்டர், இராச மாணிக்கனார் - இலக்கிய வரலாறு - 56) சேர சோழ பாண்டிய ரல்லாத தமிழகத்துத் தனியரசர் அவர்களன்றிப் பிறரின்மை அறிக. கொங்கு நாட்டு அரச மரபுகளில் கட்டி மரபு ஒன்று. கங்கர் கொங்கு நாட்டைக் கைப்பற்று முன்னர் சத்திய மங்கலம் பகுதி கட்டி மரபினர் ஆட்சியில் இருந்து வந்தது. அன்று அவர்கள் சத்திய மங்கலத்தையே தலைநகராகக் கொண்டிருந்தனர். தலை மலைக் கணவாய்களுக்குப் பாது காப்பாக இருந்து வந்தது சத்தியமங்கலம். கங்கர் அப் பகுதியைக் கைப்பற்றிய பின்னர், கட்டி மரபினர் தங்கள் தலைநகரைச் சேலம் மாவட்டத்துத் தாரமங்கலத்திற்கு மாற்றிக் கொண்டனர். அத்தி, மத்தி என்பன போலச் சத்தி என்பான் பெயரால் அமைந்ததால், அவ்வூர் சத்தியமங்கலம் எனப்பெயர் பெற்றது. சத்தி அம்மங்கலம். அம்-சாரியை. மங்கலம் என்பது ஊரைக் குறிக்கும். தென்னமங்கலம், குடிமங்கலம், பழமங்கலம், விசய மங்கலம், தாரமங்கலம் என்னும் ஊர்ப் பெயர்களிற் காண்க. வேட்டி-வேஷ்டி, தானம் - ஸ்தானம் என்பன போல, சத்தி- சக்தி என வடமொழியில் தற்பவம் ஆக்கப்பட்ட சொல்லாகும். அசோகன் காலத்தே கொங்கு நாட்டுக்கு வந்த வடவர், முதலில் கண்ட கொங்கு நாட்டுப் பகுதி சத்தியமங்கலமே யாதலான். அக்கோநகரின் பெயரோடு சேர்த்துக் கொங்கு நாட்டு மன்னரை - சத்தியபுத்திரர் என்று குறித்தனர். கேரள புத்திரர், சத்தியபுத்திரர் என்பவற்றில், ‘புத்திரர்’ என்பது, அரசரைக் குறிக்கும். மற்றும், கேரளோற்பத்தி என்னும் மலையாள வரலாற்று நூலும், கேரள மான்மியம் என்னும் வட நூலும் கொங்கு நாடும், சேர நாட்டுக்குப் புறம்பான தனி நாடு என்றே கூறுகின்றன. திருவாங்கூர்ச் சரித்திர ஆசிரியர் திரு. சங்குண்ணி மேனன் அவர்களும், கொங்கு நாடு தனிநாடு என்றே கூறுகிறார். டாக்டர். எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள், சேரன் வஞ்சி என்னும் நூலில், கொங்கு நாடு தனியாட்சி நாடென்பதைத் தக்க ஏதுவும் எடுத்துக்காட்டும் தந்து முடிவு கட்டியுள்ளார். மேலும், சேர நாட்டு மக்கள் பழக்க வழக்கங்களையும் கொங்கு நாட்டு மக்கள் பழக்க வழக்கங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எக்காலத்திலும் இவ்விரு நாடுகளும் ஒன்றாக ஓராட்சியின் கீழ் இருந்திருக்க முடியாதென்று உறுதியாகக் கூறலாம். கொங்கு நாடு சேர நாட்டின் ஒரு பகுதியாக ஓராட்சி யின் கீழ் இருந்திருக்குமானால், சேர நாட்டுப் பரவாமலா இருந்திருக்கும்? எனவே, கொங்கு நாடு தொன்று தொட்டே தனியாட்சி நாடாகவே இருந்து வந்ததென்பதில் சிறிதும் ஐய மில்லை. 12. கொங்கு நாட்டின் பழமை 1. கற்காலம் முதலியன வரலாற்றுக் காலம் என்பது கி.மு.600 ஆண்டுகட்குட் பட்டதே யாமென்பர் வரலாற்றாசிரியர்கள். சங்க காலத் திலேயே கொங்கு நாடு தனியாட்சி நாடாக இருந்து வந்த தென்பதைக் கண்டோம். சங்ககாலம் என்பது, பெரும்பாலும் கடைச்சங்க காலத்தையேகுறிக்கும். அதற்கு முன் நெடுங் காலத்திலிருந்தே கொங்கு நாடு தனி நாடாகவே இருந்து வந்த தென்பதில் ஐயமில்லை. அதாவது, வரலாற்றுக் காலத்திற்கு நெடுங்காலத்திற்கு முன்னிருந்தே இது தனிநாடாகவே இருந்துவந்ததென்பது தேற்றம். வரலாற்றுக்கு முந்திய காலம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்டது. எனவே, அக்காலத்தை வரலாற்றாசிரி யர்கள், அவ்வக் காலத்திலிருந்த மக்கள் பயன்படுத்திய பொருள் களைக் கொண்டு கற்காலம், செம்புக் காலம், அல்லது வெண்கலக் காலம், இரும்புக் காலம் என, முப்பெரும் பிரிவுகளாகப் பகுத்துள்ளார்கள். அக்கற்காலத்தையும் - முதற் கற்காலம், இரண்டாங்கற்காலம், மூன்றாங் கற்காலம் என மூன்றாகப் பாகுபடுத்துள்ளார்கள். இக்காலங்கள் ஒவ் வொன்றும் பல்லாயிர ஆண்டின தளவாகும். முதன் முதல் கற்களினாலே கத்தி முதலிய கருவிகள் செய்து பழகிய மக்கள், படிப்படியாக அதில் தேர்ச்சி அடைந்து, பின்னர்ச் செம்பு, அல்லது வெண்கலத்தாலும், அதன் பின்னர் இரும்பினாலும் கருவிகள் செய்து பழகிப் பயன்படுத்தி வந்தனர். கொங்கு நாட்டில் மூன்றாங்கற்காலப் பொருள்கள் நிரம்பக் கிடைத்துள்ளன. அவற்றின் வேலைப்பாடும், தென்னாட்டின் மற்ற பகுதிகளிற் கிடைத்துள்ளவற்றைவிட மிக்க மேம்பாடுடையனவாக உள்ளன. கற்களாற் செய்யப்பட்ட பொருள்களில் பெரும்பாலான- உளி, சுத்தி, உரைகல், ஆட்டாங்கல் ஆகியனவேயாம். பெரும்பாலும் அவை, சேர்வராயன் மலை, கல்வராயன்மலை, கொல்லிமலை, கோதைமலை, பருகூர்மலை முதலிய மலைகளின் மீதே கிடைத்துள்ளன. இதுகாறும் 70 உளிகள், 5 சுத்திகள், 3 உரைகற்கள், ஓர் ஆட்டாங்கல் ஆகியவை கிடைத்துள்ளன. அவை சென்னைப் பொருட்காட்சி சாலையில் வைக்கப் பட்டுள்ளன. உரைகல் - நெய்த துணிகளைத் தேய்த்துப் பளபளப் பாக்கப் பயன்படுவது. எனவே, அக்கால மக்கள் நெய்தொழில் தெரிந்திருந்தமையோடு, நன்முறையில் உடையுடுத்தும் வந்தனர் என்பதும் பெறப்படுகிறது. நல்லுடை நாகரிகத்தின் அடையாளமாகும். நெய்தற்குரிய கருவிகளும் அவர்கள் செய்திருப்பர். அவையெல்லாம் கிடைத்தில. ஆட்டாங்கல் - ஆட்டுக்கல். முற்கூறிய கற்கருவிகள், வெங்கச் செங்கல் முதலிய நல்ல கற்களால் செய்யப்பட்டுள்ளன. பருகூர் மலைமீது ஒரே இடத்தில் பல கற்கருவிகள் இருந்தன. இது, அக்கற்கருவிகள் செய்த, அல்லது செய்து வைத்திருந்த இடமாக இருக்கலாம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னரே தமிழ் மக்கள் நனிநாகரிக முடையராய், கழிநீர்ப்பாதை, குளிப்பறை, காலதர் முதலியவுடைய மாடிவீடுகள் கட்டி, நல்லாடை யுடுத்து, நல்லுணவுண்டு, பல்வகை அணிகலன்கள் அணிந்து, கலவைச் சாந்து பூசி வாழ்ந்து வந்திருப்பதால், உலகின் மற்றைப் பகுதிக் கற்கால மக்களுக்கு முன்னரே குமரிக் கண்டத்தில் வாழ்ந்த அம் முதுபழந்தமிழ் மக்கள் பொன்மணிக் கலனணிந்து பொலிவுற்று நன்னாகரிகமுடையராய் இருந்து வந்திருப்பதால், இவை நாகரிகமில்லாத ஒருவகை மலைவாழ் மக்கள் பயன்படுத்திய பொருள்களாக இருக்கலாம். இன்றும் பருகூர்மலை வாழ் மக்கள் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னிருந்த படியே இருந்து வருவதே இதற்குச் சான்றாகும். நாகரிக மிக்க நம்மக்கள் வாழும் இதற்குச் சான்றாகும். நாகரிக மிக்க நன்மக்கள் வாழும் எந்த நாட்டிலும், நாகரிகமில்லாத இன மக்களும் இருந்து வருதல் இயல்பென்பதை அறிக. அன்றேல், உலகின் மற்றைப் பகுதிக் கற்கால மக்களுக்குப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் இவர்கள் முற்பட்டவராக இருக்கலாம். உலக முதன் மக்களல்லரோ தமிழர்! இரும்புக் காலம்: இது, இரும்பின் பயன்பாட்டை அறிந்து, அதனால் கருவிகள் செய்து பயன்படுத்தி வந்த காலமாகும். மண்ணுக்குள் இருந்து இரும்புத் தாதினை எடுத்து, அதைக் காய்ச்சி இரும்பு செய்யத் தெரிந்துள்ளன ராகையால், இரும்புக் கால மக்களை நாகரிகமில்லாதவரென்று கொள்ளுதற் கில்லை. பழங்காலத் தமிழ் மக்கள், இறந்தவர்களைப் பெரிய மண்தாழிக்குள் வைத்து மூடிப்புதைத்து வந்தனர். குழிக்குள் அத்தாழியை வைத்து, தாழியைச் சுற்றிலும் வட்டமாகக் கற்களை வைத்து மண்கொண்டு மூடிவிடுவது ஒருவகை. (கெய்ர்ன் Cairn). சதுரமான குழிக்குள் நான்கு பக்கமும் செங்குத் தாகப் பலகைக் கல்லால் மூடி, மண்கொண்டு மூடிவிடுவது மற்றொரு வகை. (டால்மென் Dalmen). அத்தாழிக்கு - முது மக்கட்டாழி என்றும், அக்குழிக்கு - மாண்டவர்குழி யென்றும் பெயர். தவறாக அக்குழியை - பாண்டவர்குழி என்றும், பாண்டியர் குழி என்றும் கூறுகின்றனர். அத்தாழிகள் சில செம்மண்ணாலும், சில கருமண்ணாலும் செய்யப்பட்டு, மேற்பாகம் பளபளப் பாக்கப்பட்டுள்ளன. அத்தாழிகள் தொட்டால் மண் உதிரும் நிலையில் உள்ளமை அவற்றின் பழமையைக் காட்டும். களிமண்ணால் கலங்கள் செய்தல் அருஞ்செயலாகையால், அதனால் அக்கால மக்களின் மதிநுட்பமும் நாகரிகமும் பெறப்படும். அத்தாழியில் மாண்டவர்க்கு விருப்பமான பொருள் களையும் வைப்பர். தாழிக்குள் அன்றிக் கற்பெட்டிக்குள்ளும் அப் பொருள்களை வைப்பதுண்டு. அங்ஙனம் வைக்கப்பட்ட பொருள்களே வரலாற்றுக்குப் பயன்படுவனவாக உள்ளன. அப்படி வைக்கப்பட்ட பொருள்களில் கொங்கு நாட்டில் இது வரை கிடைத்துள்ளவை: இரும்புக் கருவிகள் : கத்தி, குத்தீட்டி, மரப்பிடி கொண்ட ஈட்டி, அம்பு, மண்வெட்டி, முதலியன வெண்கலக்கருவிகள் : கிண்ணம், செம்பு, கெண்டி, தட்டம், கரண்டி, சாடி, சலங்கை, வளையல், மாலை முதலியன. இவற்றுள், வெண்கலத்தால் செய்யப்பட்ட பொருள்கள் மிக்க வேலைப்பாடுடையனவாக உள்ளன. அவ்வெண்கலம் பலவகைக் கலவையுடையதாகும். வெண்கல ஏனங்கள், புலி போன்ற உருவங்கள் செதுக்கப்பட்ட கால்களையும், பூவேலைப் பாடும், சேவல் உருவமும் செதுக்கப்பட்ட மூடிகளையும் உடையனவாகும். இது, அக்காலத் தமிழ்மக்களின் நுண்கலைத் திறப்பாட்டைக் காட்டும், பலவகை மட்கலங்களும் கிடைத்துள்ளன. சில இடங்களில் பொன்முடிகள் கிடைத்துள்ளன. அவை அரசர்கள் அணிந்தவையாகும். கொங்கு நாட்டு மன்னர்கள் தனியரசர்களாகையால் முடியணிந்து வந்தனராவர். இது, கொங்கு நாட்டு ஆட்சியின் பழமைக் கெடுத்துக் காட்டாகும். இதனால், பொன்கண்டு பொருள் செய்யவும் அவர்கள் அறிந்திருந்தமை பெறப்படும். இத்தகைய மாண்டவர் குழிகள் - பெருந்துறைக்கு 6 கல் வடக்கிலுள்ள நல்லாம்பட்டியிலும், அன்னூரை அடுத்த கஞ்சப்பள்ளி, எல்லைப்பாளையம், முத்துக்கோனான் பட்டி ஆகிய இடங்களிலும், பேரூரிலும், போத்தனூருக்கு 3 கல் கிழக்கில் உள்ள வெள்ளலூரிலும், பல்லடத்துக்கு 13 கல் அளவில் உள்ள கண்டியான் கோயிலும், உடுமலைப் பேட்டையை அடுத்த பூண்டியிலும், பொள்ளாச்சியை அடுத்த நாட்டுக்கற் பாளையத்திலும் இருந்தன. சதுரக்குழிகள் (டால்மென்) கொங்கு நாட்டில் மிகுதியாக இருக்கின்றன. நீலகிரி மேட்டுப் பாளையத்திற்கு அருகில் அவை 100 கிடைத்துள்ளன. தாராபுரம் பக்கம் அவை பல இடங்களில் உள்ளன. பல்லட வட்டத்துச் செட்டிபாளையத்தில் கிடைத்த ஒரு மாண்டவர் குழியில் - பளபளப்பான கருமை நிற மண் பாண்டங்கள், மான்வடிவம் செதுக்கப்பட்ட நீரருந்தும் செம்புக்குவளை யொன்று, யானைத்தந்தம், தந்தச்சீப்பு, சிப்பி, மணி, தலையணை முதலிய பொருள்கள் இருந்தன. இவை அக்காலக் கொங்கர்களின் நாகரிகச் சிறப்பைக் காட்டும். புதைபொருள் ஆராய்ச்சித் துறையினர் முயன்றால், சேல மாவட்டஞ் சேரக் கொங்கு முழுவதும் பல இடங்களில் இவை கிடைக்கக்கூடும். “சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர் தாழ்வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்” (மணிமே - 6: 66-7) இம்மணிமேகலை அடிகளில், இறந்தோரை அடக்கஞ் செய்யும் பலவகைமுறைகள் கூறப்பட்டுள்ளன. இடுதல் - சுடாமலும் புதைக்காமலும் சும்மா போட்டுவிடுதல். தொடு குழிப்படுத்தல் - குழிதோண்டிப் புதைத்தல். தாழ்வயின் - பள்ளமான இடம். தாழ்வயின் அடைத்தல் - பள்ளத்தில் போட்டு மூடிவிடுதல். கவித்தல் - மூடிவைத்தல். இவற்றுள் வரலாற்றுக்குப் பயன்படும் தாழியில் கவித்தலே பெரும் பான்மையாகும். குமரிக்கண்டத்து மக்களிடையே இத்தாழியில் கவிக்கும் வழக்கம் இருந்து வந்தமை நினைவுகூரத்தக்கது. “கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே கொடிநுடங்கு யானை நெடுமா வளவன் தேவ ருலகம் எய்தின னாதலின் அன்னோற் கவிக்கும் கண்ணகன் தாழி வனைதல் வேட்டனை யாயின் னையதூஉம் இருநிலந் திகிரியாப் பெருமலை மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே.” (புறம் - 228) இது, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் (98 - 135) இறந்தபோது, ஐயூர் முடவனார் இரங்கிப் பாடியது. புலவர் மனக்கண்ணில் வளவனுடைய புகழுடம்பு புலனாயிற்று. அவ்வுடம்பு, நிலவுலகு முழுவதும் பரந்து வானளாவ உயர்ந்து தோன்றிற்று. அவ்வுடம்புக்கேற்ற தாழி வேண்டின், இந் நிலவுலகையே அத்தாழிவனையும் சக்கரமாகவும், மேரு மலையையே அத்தாழி வனைதற்கு வேண்டிய மண்ணாகவும் கொண்டு பெரியதொரு தாழி வனைய வேண்டும். நினக்கு அவ்வாறு ஒரு பெரிய தாழி செய்ய இயலுமோ என, வேட் கோவை நோக்கிக் கேட்பதாகப் பாடியுள்ளார். வேட்கோ - குயவன். “காணி லியரோநிற் புகழ்ந்த யாக்கை முரசுடைத் தாயத் தரசுபல வோட்டித் துளங்குநீர் வியலகம் ஆண்டினிது கழிந்த மன்னர் மறைந்த தாழி வன்னி மன்றத்து விளங்கிய காடே.” (பதிற் - 44) இது, இறந்த மன்னர்கள் உடம்புகளை இட்டுப் புதைத்த தாழிகளை யுடைய சுடுகாட்டை நின் உடம்பு காணாது, நீடுவாழ்வாயாக என, சேரன் செங்குட்டுவனைப் (125 - 180) பரணர் வாழ்த்தியது, இவ்விருபாடல்களாலும், சங்ககாலத் தமிழரசரிடைப் பெரும்பாலும் தாழியிற் கவிக்கும் வழக்கம் இருந்து வந்ததென்பது பெறப்படுகிறது. “கூகைக் கோழி ஆனாத் தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே.” (புறம் - 364) இவ்விரு பாடல்களாலும், தாழியிலிட்டுப் புதைத்தல் பெரும்பாலும் சுடுகாட்டின் கண்ணேயாம் என்பது பெறப் படுகிறது. காடு, பெருங்காடு - சுடுகாடு. “வியன்மல ரகன்பொழில் ஈமத் தாழி அகலி தாக வனைமோ” (புறம் - 256) இது, தனிவழியில் கணவனை இழந்த ஓருத்தி, தானும் அவனுடன் இறந்து, இருவரையும் ஒன்றாக வைக்கக் கூடிய அளவு பெரிய தாழி வனையுமாறு வேட்கோவை நோக்கிக் கூறுதல், இதனால், கணவன் மனைவி இருவரையும் ஒரே தாழி யுள் வைக்கும் வழக்கமும் அன்று உண்டென்பது தெரிகிறது. சங்க காலத்து மக்களின் முதுமக்கட் டாழிகள் கிடைத் தால், அக்காலத் தமிழ் மக்களின் நாகரிக நல்வரலாற்றினை யறியப் பெருந்துணையாக இருக்கும். நடுகல் : இனி, வீரத்தோடு போர்புரிந்து இறந்த வீரர்கட்கு, அவர்தம் உருவமும் பெயரும் பெருமையும் பொறித்த கல் நாட்டி வழிபாடியற்றி வந்தனர் பழந்தமிழ் மக்கள் என்பது, தொல்காப்பியப் புறத்திணையியலில்(36) விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அது, நடுகல், அல்லது வீரக்கல் எனப்படும். “மனைக்குவிளக் காகிய வாணுதல் கணவ முனைக்குவரம் பாகிய வெள்வேல் நெடுந்தகை நடுகல் பிறங்கிய உவலிடு பறந்தலை” முனை - போர்க்களம்.” (புறம் - 134) “நல்லமர் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்.” (அகம் - 67) இவை, வீரத்தோடு போர்புரிந் திறந்தவீரர்கட்கு நாட்டிய நடுகற்கள். “நிறையிவட் டந்து நடுகல் ஆகிய வென்வேல் விடலை” (புறம் - 261) இது, நிரை மீட்சிப் போரில் இறந்த வீரனுக்கு நாட்டிய வீரக்கல். “இல்லடு கள்ளின் நல்குடிச் சீறூர்ப் புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி நன்னீ ராட்டி நெய்நறைக் கொளீஇ” (புறம் - 329) இது, நடுகல்லுக்கு வழிபாடு செய்தது. “சீறூர்ப்புடை’ என்பதால், நடுகல் ஊர்மன்றத்தில் நடப்படும் என்பது பெறப் படும். 67 அகப்பாட்டில் பெயரும் பீடும் எழுதிப் பீலி சூட்டி வழிபாடு செய்தலை அறிக. பீடு - பெருமை. பீலி - மயிற் றோகை. ‘அதர்தொறும்’ என்பதால், நடைவழிச் சந்திகளிலும் நடுகல் நடப்படுதல் பெறப்படும். அதர் - வழி. “கல்நின்றான் எந்தை, கணவன் களப்பட்டான்” என்பது, புறப்பொருள் வெண்பாமாலை. (176) கொங்குநாட்டில் இவ்வீரக் கற்கள் பலஇடங்களில் உள்ளன. வீரனின் பெயர் பீடுடன், ஊரும், காலமும், அரசன் பெயர், ஆட்சியாண்டு முதலியனவும் அக்கல்லில் பொறிக்கப் படுமாகலான், இந்நடு கற்களும் வரலாற்றுக்குப் பயன்படுவன வாகும். பழந்தமிழ் மக்கள் பத்தினிப் பெண்டிர்க்கு நடுகல் நாட்டி வழிபாடியற்றி வந்தனர் என்பது, கண்ணகி வரலாற்றால் பெறப்படும். கொங்கு நாட்டுப் பழந்தமிழர் (ஆதிதிராவிடர்) சேரி தோறும் வீரமாத்தி கோயில் இருக்கிறது. அது, கணவருடன் உடன்கட்டை ஏறிய வீரப் பெண்மணிகளின் நடுகற் கோயிலே யாகும். ‘வீரமாத்தி கோயிலுக்குச் சோறு மாத்தினாற் போலே’ என்பது, கொங்கு நாட்டுப் பழமொழி. வீரமாபத்தினி என்பதே, ‘வீரமாத்தி’ என மருவி வழங்குகிறது. ‘ஆரஞருற்ற வீரபத்தினி’ என்பது, சிலப்பதிகாரம் (22 : 115) கொங்கு நாடு முழுவதும் இவ்வகைப் பண்டைக் காலத்துச் சின்னங்கள் கிடைப்பதை நோக்குமிடத்து, கொங்கு நாட்டின் பழமையும், அக்காலக் கொங்கு நாட்டுத் தமிழ் மக்களின் நாகரிக நிலையும் நன்கு விளங்குகின்றன. 2. கடல் வாணிகம் உழவு, கைத்தொழில், வாணிகம் என்னும் மூன்றுமே ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்வுக்கு அடிப்படையாகும். ஒரு நாட்டின் செல்வ வளத்துக்கு ஏதுவான தொழில் வாணிகத் தொழிலேயாகும். தமிழ் மக்கள்தொன்று தொட்டே வாணிகத் தொழிலிற் சிறந்து விளங்கினர் என்பது, பழந்தமிழ் நூல்களாற் தெரிகிறது. உள்நாட்டு வாணிகமேயன்றி, அன்றுதிரைகடல் கடந்தும் செல்வந்திரட்டி வந்தனர். அயல்நாட்டு வாணிகம் ஒரு நாட்டின் பழமையை அறிதற்குக் காரணமாக இருத்தலான், தமிழ் நாட்டின் கடல் வாணிகத்தினை அறிந்து கொள்ளுதல், கொங்கு நாட்டின் பழமையை அறிதற்குப் பயன்பாடுடையதாகும். “இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றினும்” (அகத் -11) இருவகைப் பிரிவு - காலிற் பிரிவும் கலத்திற் பிரிவும் ஆகும். காலிற்பிரிவு - உள்நாட்டுப் பிரிவு. கலத்திற்பிரிவு - கப்பலேறிக் கடல் கடந்து செல்லும் பிரிவு. “முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை” (அகத் - 34) முந்நீர் - கடல். முந்நீர் வழக்கம் - கடல் கடந்து செல்லுதல். எனத் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே தமிழ் மக்கள் நிலவாணிகத்தோடு, கடல் வாணிகத்திலும் மேம்பட்டிருந்தமை பெறப்படும். “நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளிதொழி லாண்ட உரவோன் மருக” (புறம் - 66) எனக் கரிகாற் சோழன் (கி.மு.120-90) முன்னோனொருவன், காற்றைத் துணையாகக் கொண்டு கடலிடைக் கலஞ் செலுத்தியதை, வெண்ணிக் குயத்தியார் குறிப்பிடுவது, அக்காலத் தமிழ் மக்களின் கடல்வாணிகச் சிறப்பினை இனிது புலப்படுத்தும், வளி - காற்று. பருவக் காற்றின் துணை கொண்டு கப்பலோட்டும் வகை கண்ட ஹிப்பலாசுக்கும் (கி.பி.47) பன்னூற்றுக்கணக்கான ஆண்டுகட்கு முன்னரேயே தமிழர் அதனைக் கண்டு கடலிடைக் கலஞ்செலுத்திக் கடல் வாணிகஞ் செய்து வந்தமை குறிப்பிடத் தக்கதாகும். இதன் விளைக்கத்தை, ‘தொல்காப்பியர் காலத் தமிழர்’ (புலவர் குழந்தை) என்னும் நூலில், ‘ஓதற் பிரிவு’ என்னும் தலைப்பு) காண்க. பண்டு சாவா முதலிய கிழக்கிந்தியத் தீவு பற்றியும் நிலப் பரப்பாக இருந்தன. அன்று அது, வழங்கிற்று. பஃறுளியாற்றங் கரையிலிருந்து கடல் கொண்ட தென்னகத்தில் நெடியோன் என்னும் பாண்டிய மன்னர் கடல் கடந்து அச் சாவக நாடு சென்று துறைமுக பட்டினமான சாலியூர் என்னும் கொண்டனன் என்பது. “பொன்மலிந்த விழுப்பண்டம் நாடார நன்கிழிதரும் ஆடியற் பெருநாவாய் மழைமுற்றிய மலைபுரையத் துறைமுற்றிய துளங்கிருக்கை தெண்கடற் குண்டகழிச் சீர்சான்ற உயர்நெல்லின் ஊர்கொண்ட உயர்கொற்றவ.” (மதுரைக் - 81) என்னும் மதுரைக்காஞ்சி யடிகளாற் பெறப்படும். அதாவது, பொன் மலிந்த விழுப்பண்டம் நாடு ஆர-விலை மிக்க சிறந்த பொருள்களை நாட்டிலுள்ளார் நுகரும் படி, நன்கு இழிதரும் - அவ்வாணிகப் பொருள்கள் கரையில் இறங்கும், ஆடியல் பெருநாவாய் - கொடியாடும் இயல்பினையுடைய பெரிய மரக்கலம், மழை முற்றிய மலையுரைய முகில் சூழ்ந்த மலை போல, துறை முற்றிய துளங்கு இருக்கை - கடல் சூழ்ந்த அசைகின்ற இருப்பினையும், தெள்கடல் குண்டு அகழி - தெளிந்த கடலாகிய ஆழமான அகழியினையுமுடைய, சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ - சிறப்பமைந்த உயர்ந்த சாலியூரைக் கொண்ட உயரிய வெற்றியை உடையவனே என்பதாம். எனவே, இந் நெடியோன் காலத்திற்கு முன்னிருந்தே, தமிழர் கலமூர்ந்து கடல் கடந்து வெளிநாடுகளுடன் வாணிகஞ் செய்து வந்ததை பெறப்படும். “சினமிகு தானை வானவன் குடகடற் பொலந்தரு நாவாய் ஒட்டிய அவ்வழிப் பிறர்கலஞ் செல்கலா.” (புறம் - 126) இப் புறப்பாட்டு, சங்ககாலச் சேரமன்னர் கடல் வாணிகச் சிறப்பினை இனிது எடுத்துக்காட்டுகிறதன்றோ? சேரர் கப்பலோட்டிய வழிகளில் மற்றவர் கப்பல்கள் செல்லாவாம். மேனாட்டு வாணிகம் பெரும்பாலும் சேர நாட்டுக் கடற்று றைகள் வழியாகவே நடந்து வந்ததென அறியவும். மிகப் பழங்காலத்திலிருந்தே தமிழர் - சீனம், சாவகம் முதலிய கிழக்கு நாடுகளுடனும், பினிசியா, சிரியா, சாலடியம், எகிப்து, கிரேக்கம், பாபிலோன், உரோம், பாரசீகம், அரேபியா முதலிய மேற்கு நாடுகளுடனும் வாணிகஞ் செய்து வந்தமைக்குத் தமிழ் இலக்கியச் சான்றும், பிற சான்றுகளும் நிரம்ப உள்ளன. பிளைனி (கி.பி.24-79), தாலமி (கி.பி.2. நூ), செங்கடற் செலவு (பெரிப்புளூஸ்) என்னும் நூலாசிரியர் (கி.பி.60) முதலிய மேனாட்டு வரலாற்றாசிரியர்கள், தமிழரின் கடல் வாணிகம் பற்றிக் குறிப்பிடுவதோடு, ஏற்றுமதி இறக்கு மதிப் பொருள்கள் இன்னின்ன என்பது பற்றியும் குறித்துள் ளார்கள். தமிழகத்தைச் சூழ்ந்துள்ள கடற்கரையில் - நறவு, மாந்தை, தொண்டி, முசிறி, காந்தளூர், விழிஞம் முதலிய சேர நாட்டுத் துறைமுகங்களும், உவரி, கொற்கை, காயல் முதலிய பாண்டி நாட்டுத் துறைமுகங்களும், நாகை, புகார், கடன்மல்லை முதலிய சோழ நாட்டுத் துறைமுகங்களும், தமிழ்நாடு வெளிநாடுகளுடன் நடத்திவந்த கடல் வாணிக நிலையங்களாகத் திகழ்ந்தன. கீழ் நாட்டினர் வங்கக்கடல் வழியாகவும், மேனாட்டினர் அரபிக்கடல் வழியாகவும் வந்து, அத்துறை முகங்களில் தங்கித் தமிழ் நாட்டுடன் வாணிகஞ் செய்து வந்தனர். மேனாட்டினர் கீழ்நாடுகளுடனும், கீழ்நாட்டினர் மேல் நாடுகளுடனும் செய்து வந்த வாணிகத்தைத் தமிழர் நடுநின்று நடத்தினர். இக்கடல் வாணிகம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னிருந்தே நடந்து வந்தது. ஒரு காலத்தே மேல் கடலிடைத் தீவுகளிலிருந்த கடற் கொள்ளைக்காரர்கள், வாணிகக் கப்பல்களைக் கொள்ளை யிட்டு வந்ததாகத் தாலமி முதலிய மேனாட்டாசிரியர்கள் குறித்துள்ளனர். சேரமன்னர்கள் வழிவழியாகக் கடலிடைக் கலமூர்ந்து சென்று, அக்கடற் கொள்ளையரை ஒழித்துத் தடை யின்றிக் கடல் வாணிகம் நடைபெறுமாறு செய்து வந்தனர் என்பது, 127 அகப்பாட்டாலும், பதிற்றுப்பத்தாலும் (20, 46) தெரிகிறது. தங்கம் குரங்கு அரிசி வெள்ளி மாடு கம்பு இரும்பு தோல் சோளம் வைரம் ஆட்டுமயிர் வெல்லப்பாகு முத்து ஆடைவகை தீம்புளி சங்கு மிளகு பாக்கு சங்குவளை ஏலம் நல்லெண்ணெய் யானைத்தந்தம் கிராம்பு தேங்காயெண்ணெய் மயில் சாதிக்காய் சந்தனக்கட்டை மயில்தோகை சாதிப்பத்திரி அகில்கட்டை ஆமையோடு இஞ்சி தேக்குமரம் கிளி திப்பிலி கருங்காலி மட்கலங்கள் முதலிய பொருள்கள் தமிழ் நாட்டிலிருந்து மேனாடு கட்கு ஏற்றுமதியாயின. தீம்புளி - கருப்புக் கட்டி சேர்த்துப் பொரித்த புளி (மதுரைக் - 318). மிளகு, மணப் பொருள்கள், முத்து, யானைத்தந்தம் முதலியன மிகுதியாக ஏற்றுமதியாயின. மேனாட்டு மகளிர் தமிழ் நாட்டு முத்துக்களை மிகவும் விரும்பினர். மயில் தோகையை ஆடையில் வைத்துத் தைத்து அழகுக்கழகு செய்தனர். பொன் வெள்ளி நாணயங்கள், பவழம், ஈயம், தகரம், எந்திரப் பொறிகள் (சிலப் - 15:207-14), உயர்ந்த மதுவகைகள், குதிரைகள் முதலியன மேனாடுகளிலிருந்து தமிழ்நாட்டில் இறக்குமதியாயின. கீழ்நாடுகளிலிருந்து பட்டும், சர்க்கரையும் தமிழ் நாட்டில் இறக்குமதியாயின. மிளகு முதலியன அக்கீழ் நாடுகட்குத் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியாயின. சில தமிழ்ச் சொற்கள், தமிழ்நாடு மேனாடுகளுடன் நடத்திய கடல் வாணிகத்திற்குச் சான்று பகர்ந்து கொண்டு அம்மேனாட்டு மொழிகளில் இருந்து வருகின்றன. தோகை - துகி - சிரியா அகில் - அகல் எபிரேயம் கவி - கபிம் (ஹீப்ரூ) அரிசி - அரிஜா இஞ்சி - ஜிஞ்ஜர் கிரேக்கம் இஞ்சிவேர் - ஜிஞ்ஜிபார் கி.மு.3000 ஆண்டுகட்குமுன், பாபிலோனிய நாட்டை ஆண்ட ஊர்ஏயா என்னும் மன்னனால், சாலடிய நாட்டின் தலைநகரான ஊர் (ur) என்னும் நகரில், சேரநாட்டுத் தேக்கு மரத்தினால் திங்கட்கோட்டம் கட்டப்பட்டது. (பி.டி.எஸ். ஐயங்கார் - தமிழ் வரலாறு). கி.மு.2600இல், தமிழகத்திலிருந்து கருங்காலி மரம், மணப் பொருள்கள் முதலியன எகிப்து நாட்டிற்கு ஏற்றமதி யானதாக, ஆக்கஃப் என்னும் இடத்திலுள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. (பி.டி.எஸ். ஐயங்கார் - தமிழ் வரலாறு). பாலத்தீனத்துப் பேரரசனான சாலமன் காலத்தே (கி.மு.1000) மூன்று ஆண்டுகட் கொருமுறை - தங்கம், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு, தமிழ் நாட்டிலிருந்து கப்பல்கள் அங்குச் சென்றனவாம். திமிலையுடைய எருதுகள், பாரசீக வளைகுடாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன வாம். (டாக்டர். இராசமாணிக்கனார் - இலக்கிய வரலாறு - 45). எருது - கொங்கு நாட்டுப் பொருள். மேனாடுகட்கு மிகுதியாக ஏற்றுமதியானது மிளகு ஆகும். அடுத்தது ஏலம் முதலிய மணப் பொருள்கள், முத்து, யானைத் தந்தம் முதலியனவாம். “சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை சிதற யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி.” (அகம் - 149) யவனர் - மேனாட்டினர். கலம் - கப்பல், கறி - மிளகு. பொன் - பொன்னாணயம். “நனந்தலை தேஎத்து நன்கலன் உய்ம்மார் புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோ டனைத்தும்.” (மதுரைக் - 322-3) என்ற மதுரைக்காஞ்சியடிகளால், மேனாட்டிலிருந்து குதிரைகள் இங்கு இறக்குமதியாயின என்பது பெறப்படும். அன்று தமிழரசர்கள் அரபி நாட்டுக் குதிரைகளை ஏராளமாக வாங்கினதாக, மேனாட்டு ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேற்கண்ட ஏற்றுமதிப் பொருள்களுள் - இரும்பு, வைரக் கற்கள், யானைத்தந்தம், மயில், குரங்கு, கிளி, மாடு, கம்பு, சோளம், மட்கலம் ஆகியவை கொங்கு நாட்டுப் பொருள்கள், சந்தனம், அகில், மிளகு, ஏலம், இஞ்சி, தோல், ஆட்டுமயிர், ஆடை ஆகியவையும் கொங்கு நாட்டில் உண்டு. இரும்பிலிருந்து எஃகு (உருக்கு) செய்வதற்குத் தமிழ் நாட்டாரைத் தவிர, அக்காலத்தில் வேறு யாருக்கும் தெரியா தென்று, கிரேக்க, உரோமப் புலவர்கள் எழுதியிருக்கிறார்கள். எகிப்து நாட்டுக் கல்லறைக் கோபுரங்கட்கு (Pyramids) அடியி லிருந்து, சேலத்து எஃகினால் செய்யப்பட்ட சுத்தி, உளி முதலிய கருவிகள் கிடைத்திருக்கின்றன. எஃகு ஆராய்ச்சியில் வல்லு நர்களான - ஜே.எம்.ஹீத் என்பாரும், சர்.ஜே.ஜே.வில் கின்சன் என்பாரும், சேலம் எஃகினால் செய்யப்பட்ட உளி, சுத்தி முதலியவற்றைத்தாம் எகிப்து நாட்டுச் சிற்பிகள் அப்பழங் காலத்தே பயன்படுத்தினார்கள் என்கின்றனர். அக்கல்லறைக் கோபுரங்களின் காலம் கி.மு.எட்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதென்பர். எனவே, பத்தாயிர ஆண்டுகட்கு முன் பிருந்தே கொங்கு நாடு, மேனாடுகளுடன் கடல் வாணிகம் செய்து வந்ததென்பது பெறப்படும். தாராபுர வட்டத்துச் சிவன்மலைக்குப் பக்கத்தில் உள்ள படியூரில் கடல்நிற வைரக்கற்கள் மிகுதியாகக் கிடைத்தனவாம். அவைமிக்க நீரோட்டமுள்ள உயர்ந்த வகைக் கற்களாகும். 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை அக்கற்கள் தோண்டி எடுக்கப்பட்டு வந்தன. 1820இல், 60சேர்கற்கள் கிடைத்தனவாம். அவற்றின் மதிப்பு ரூ. 18000 ஆகும். சேலமாவட்டத்து இடைப் பாடிக்கு 3 கல் அளவில் உள்ள குறும்பப்பட்டியிலும் அவ் வைரக் கற்கள் கிடைத்தன. இக்கற்கள் பதித்த நகைகளை மேனாட்டு மகளிர் விரும்பி அணிந்தனராம். தொன்று தொட்டே எகிப்தியர் தமிழகத்துடன் வாணிகம் செய்து வந்தனர். கி.மு.4 ஆம் நூற்றாண்டில் அலெக்சாண்ட ரால் உண்டாக்கப்பட்ட அலெக்சாண்டிரியா நகர் வாணிகச் சிறப்புடைய நகராயிற்று. கி.மு.47இல் உரோமானியப் பேரரசனான அகஸ்டஸ் என்பான் எகிப்து நாட்டைக் கைப்பற்றினான். அதிலிருந்து உரோமர்கள் அலெக்சாண்டிரி யாத் துறைமுகத்தின் வழியாகத் தமிழகத்துடன் வாணிகம் செய்து வந்தனர். இவ்வாணிகம், கி.பி.6ஆம் நூற்றாண்டு வரை நடந்து வந்தது. அதனால், தமிழ் நாட்டில் உரோமானிய நாணயங்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. அவை மண்பாண்டங்களிலிட்டு நிலத்தில் புதைக்கப் பட்டிருந்தன. நிலத்தை உழும் போதும், வீடுகட்ட அடிப்படை தோண்டும் போதும், கிணறு வெட்டும்போதும் அவை கிடைத்தன. எடுத்தவர் அவற்றைப் பயன்படுத்தி வந்தனர். இந்நாட்டைப் பிடித்தாண்ட ஆங்கில ஆட்சியாளர் அவற்றை வாங்கி ஆராய்ந்து பார்த்தனர். அவை வரலாற்று மூலங்களாக இருந்ததையால், அதன்பின், ‘புதையல் எடுத்தோர் உடனே அதிகாரிகட்குத் தெரியப்படுத்த வேண்டும்; இல்லையேல் திருட்டுக் குற்றத்திற்கு ஆளாவார்கள்’ என ஆணை பிறப்பித்தனர். கிடைத்த புதையற் பொருள்களைச் சென்னைப் பொருட்காட்சி சாலையில் வைத்து ஆராய்ச்சி செய்து வந்தனர். ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டனர். உரோமானிய நாணயங்கள் கொங்கு நாட்டில் மிகுதியாகக் கிடைத்துள்ளன. மற்ற இடங்களில் கிடைத்த வற்றைவிடக் கொங்கு நாட்டிற் கிடைத்தவை மிகவும் சிறந்தவை. அவை வருமாறு: அரசன் காலம் இடம் கிடைத்த ஆண்டு 1. அகஸ்டஸ் கி.மு.44-14 பொள்ளாச்சி 1888 ” ” வெள்ளலூர் 1842 ” ” கரூர் 1878 1.a.ட்ரூசஸ் கி.மு.8 வெள்ளலூர் 1842 ” ” கலயமுத்தூர் 1856 1.b.அன்டோனியா ” கரூர் 1806 1.c.ஜெர்மனியஸ் ” வெள்ளலூர் 1842 2. டைப்பீரியஸ் கி.பி.14-37 பொள்ளாச்சி 1809 ” ” கரூர் 1806 ” ” வெள்ளலூர் 1842 ” ” கண்ணனூர் 1851 ” ” கலயமுத்தூர் 1856 3. கேலிகுலா 37-41 வெள்ளலூர் 1842 ” ” கலயமுத்தூர் 1856 4. கிளாடியஸ் 41-54 கரூர் 1806 ” ” வெள்ளலூர் 1842 ” ” கலயமுத்தூர் 1856 5. நீரோ 54-68 கண்ணனூர் 1851 ” ” கலயமுத்தூர் 1856 6. டோமிஷியன் 81-96 கலயமுத்தூர் 1856 7. நெர்வா 96-98 கலயமுத்தூர் 1856 8. ட்ராஜன் 98-117 கலயமுத்தூர் 1856 9. ஹேத்திரியன் 117-138 கலயமுத்தூர் 1856 10.கம்மோடியஸ் 180-193 கலயமுத்தூர் 1856 11. கான்சடான் 323-337 கரூர் 1806 (இப்பட்டியல், கோவைக்கிழார் - கொங்கு நாட்டு வரலாறு என்னும் நூலில் உள்ளபடி). இது காறும் கிடைத்தவற்றிலிருந்து, கி.மு.44 அகஸ்டஸ் மன்னன்கால முதல், கி.பி.138 ஹெத்திரியன் காலம் வரை பெரும்பான்மையான நாணயங்களும், கம்மோடியஸ் (180), கான்சடான் (337) காலங்களில் சிறுபான்மையும் கிடைத்துள்ளன. எனவே, கி.மு.முதல் நூற்றாண்டிலிருந்து, மூன்று நான்கு நூற்றாண்டுகள் உரோமர்கள் கொங்கு நாட்டுடன் பெருத்த வாணிகம் செய்து வந்தனர் என்பதை அறியலாம். மேலே குறித்த பட்டியல் முழுமையுடையதன்று - சில இடங்களில் புதையல் எடுத்தவர் வெளியிடாமல் இருந்திருக் கலாம்; உருக்கியிருக்கலாம்; இன்னும் நிலத்துக்குள்ளேயே இருக்கலாம். 19.1.1931இல் வெள்ளலூரில் கிடைத்த ஒரு மட்கலத்தில் 121 உரோம வெள்ளி நாணயங்கள் இருந்தன. எடுத்த புதையல்களில் ஒருசிலவே சூழ்நிலைக்கேற்ப அதிகாரிகட்குத் தெரிவிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலானவை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் என்பதில் சிறிதும் ஐமய மில்லை. “மலடி வயிற்று மகன்போ லேயொரு புதையல் எடுத்த தனம்போ லேயொளிர் வயிர மடித்த களம்போ லே” (திருப்புகழ்) என்னும் அருணகிரிநாதர் வாக்கினால், புதையலை மக்கள் எவ்வளவு ஆவலோடு எடுத்திருப்பர் என்பதும், எடுத்தவர் அதை எவ்வளவு எச்சரிக்கையாக மறைத்து வைத் திருப்பர்’ என்பதும் விளங்கும். புதையல்களில் நாணயங்கள் நூற்றுக்கணக்காகவும் ஆயிரக்கணக்காகவும் இருந்தன. அவை செம்பொன்னினாலும், தனி வெள்ளியினாலும், சிறுபான்மை செம்பினாலும் செய்யப் பட்டவை. சில இடங்களில் கிடைத்த நாணயங்கள் நகை களுக்குப் பயன்படுத்தியவை போல, துளைகளும் குந்துகளும் உடையனவாயிருந்தன. இனி, இந்நாணயச் செலாவணியின் பட்டியலைப் பார்த்தால், கலயமுத்தூரில் - கி.மு.8 முதல், கி.பி.193 வரை ஆண்ட 10 அரசர்கள் காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளன. அவ்வாறே, வெள்ளலூரில் - கி.மு.44 முதல். கி.பி. 54 வரை ஆண்ட 6 அரசர்கள் காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளன. அங்ஙனமே, கரூரில்- கி.மு. 44 முதல், கி.பி.337 வரை ஆண்ட 5 அரசர்கள் காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றுள், வெள்ளலூர் - கோவையை அடுத்த போத் தனூருக்கு 3 கல் கிழக்கில் உள்ளதொரு பழைய ஊர். கலய முத்தூர் - பழனி கொழுமம் வழியில், பழனிக்கு மேற்கில் 6வது கல்லில் உள்ளதொரு பழைய ஊர், கரூர் - கொங்கு நாட்டின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள தொரு பழமையான நகர். மேலும், இந்நாணயங்களெல்லாம் கடலோரப் பகுதியி லன்றி, உள்நாட்டிலேயே கிடைத்துள்ளமையை நோக்கு மிடத்து, அவ்வெளிநாட்டு வணிகர்கள், முற்கூறிய வெள்ளலூரி லும், கலயமுத்தூரிலும், கரூரிலும் தங்கியிருந்து, சுற்றுப்புற ஊர்களிலிருந்து பொருள்களை வாங்கித் துறைமுகங்களுக்கு அனுப்பி வந்திருக்கலாம். வெள்ளலூர் - மேல்கொங்கிலும், கலயமுத்தூர் - தென் கொங்கிலும், கரூர் - கொங்கு நாட்டின் கீழ்ப்பகுதியிலும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கரூரிலிருந்து கலயமுத்தூர், பொள்ளாச்சி, பாலக்காட்டுக்கணவாய் வழியாக ஒருவழியும்; பவானி, அவிநாசி, வெள்ளலூர், பேரூர், பாலக் காட்டுக் கணவாய் வழியாக ஒருவழியும், மேல்கடற்கரைத் துறைமுகங்கட்கு அமைந்திருந்தன என்பதையும் அறியவும். கிடைத்துள்ள நாணயங்களெல்லாம் மேல்கொங்கிலும் தென்கொங்கிலுமே கிடைத்திருப்பதால், வடகொங்கின் பழைய ஊர்களான - சத்தியமங்கலம், அந்தியூர், ஈரோடு, பவானி., சேலமாவட்டத்துச் சங்ககிரி, திருச்செங்கோடு, தார மங்கலம், தருமபுரி, சேலம், இராசிபுரம், நாமக்கல் முதலிய ஊர்களிலும் கட்டாயம் இந்நாணயங்கள் இருக்கலாம். இனி, உரோமானிய நாணயங்கள் இவ்வளவு கிடைத்தும், உரோமர்கள் சங்க காலத்தே தமிழகத்தோடு வாணிகம் செய்து வந்தும், சங்க இலக்கியங்களில் உரோமர் பெயர் குறிக்கப் படாமைக்குக் காரணம், அன்று வட நாட்டினர் எல்லாரையும் தமிழர், “ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்” (நற்-170) “வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்து” (சிலப்.25:158) “ஆரிய மன்னர் ஈரைம் பதின்மர்” (சிலப். 27: 177) “ஆரியர் - கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி” (குறுந் - 7) என, ஆரியர் என்றே அழைத்தது போல, உரோமர், எகிப்தியர், கிரேக்கர், பாரசீகர், அரபியர் முதலிய எல்லா மேனாட்டினரையும் தமிழர், யவனர் என்றே அழைத்தனர். அதனாலேயே உரோமர் பெயர் சங்க இலக்கியங்களில் குறிக்கப்படவில்லை. யவனர் என்ற சொல்லை, மேனாடர் என்ற பொருளில் வழங்கினர் போலும். இனி, அமுதம் உண்டதனால் தேவர்க்கு - அமுதர் என்று பெயர் ஏற்பட்டது என்னும் புராண மரபு போல, மேனாட் டினர் பெரும்பாலும் கோதுமையுணவுண்டு வந்ததனால், தமிழர் அவரை யவனர் என்று அழைத்தனர் போலும். யவம் - ஒருவகைக் கோதுமை, யவம் + அன் + அர் - யவனர். அன் - சாரியை. யவம் - யவ + அன் - யவன். நிலைமொழி ஈற்றகரம் கெட்டுப் புணர்ந்தது. யவன் + அர் - யவனர். யவனரை - சோனகர் என்னும் வழக்கமும் உண்டு. மிலேச்சர் என்ற வழக்கும் காணப்படுகிறது. ‘பயனறவறியா யவனர் இருக்கை’ (சிலப்.5:10). இங்கு அரும்பத உரையாசிரியர், யவனர் - சோனகர் எனவும், அடியார்க்கு நல்லார், யவனர் - மிலேச்சர் எனவும் பொருள் கூறியுள்ளனர். சோனகர் என்பது பெருவழக்கு. “சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம் கொங்கணங் கன்னடங் கொல்லந்தெலுங்கங் கலிங்கம்வங்கம் கங்க மகதம் கடாரங் கவுடங் கடுங்குசலம் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே.” (நன்னூல் - 273) என, நன்னூல் உரையாசிரியர், தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பதினேழ் மொழி வழங்கும் நாடுகளில் ஒன்றாகக் கூறும் சோனகம் என்பது, மேனாட்டினையே என்பது பெறப்படுகிறது. சிங்களம் - இலங்கை, சாவகம், சீனம் கடாரம் - கீழ் நாடுகள், சோனகம் ஒழிந்த மற்றவை - இந்தியாவிலுள்ள நாடுகளாகும். எனவே, சோனகம் என்பது, மேனாடுகள் எல்லாவற்றையும் குறிக்கும் பொதுச் சொல்லாகிய யவனமே யாதலை அறிக. யவனர்கள் அன்று வாணிகத்தின் பொருட்டு வந்து தமிழ் நாட்டில் தங்கியிருந்ததோடு, அரண்மனை வாயில்காவல ராகவும், படை வீரராகவும், மற்றும் பலவகையான தொழில் செய்து கொண்டும் தமிழ் நாட்டின்கண் வாழ்ந்து வந்தனர். அவர்கள் செய்து வந்த தொழில்களில் - தச்சு, கொல், அணி கலன், சிற்பம், ஓவியம் என்பன முதன்மையான தொழில் களாகும். இன்று தமிழ்நாட்டுத் தச்சுத் தொழிலை மலையாளத் தச்சர்கள் கவர்ந்து கொண்டுள்ளது போல், அன்று யவனத் தச்சர்கள் கைக்கொண்டிருந்தனர். அந்த யவனர்கள், தமிழ் நாட்டுப் பேரூர் தோறும் தங்கித் தச்சு முதலிய தொழில்கள் செய்து வாழ்ந்து வந்ததோடு, வஞ்சி, மதுரை, உறையூர், புகார் முதலிய தலைநகர்களில் மிகுதியாக இருந்து வந்தனர். “கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும் பயனற வறியா யவனர் இருக்கை” (சிலப். 5:9-10) யவனர் இருக்கை - யவனப்பாடி, யவனச்சேரி. இது, காவிரிப்பூம்பட்டினம். “கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர்க் கயிராது புக்கு” (சிலப்.14:66-7) இவர் வாயில் காவலர், இது, மதுரை. “மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவரு தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்" (முல்லைப் - 59 - 61) இவர் படை வீரர்; குதிரை வீரர். மத்திகை - குதிரைச் சாட்டை, மெய்ப்பை - சட்டை. “யவனர்இயற்றிய வினைமாண் பாவை கையேந் தையகல்” (நெடுநல் - 101-2) இது, பாவை விளக்கு. கை ஏந்து ஐ அகல். அகல் - விளக்கு, ஐ-வியப்பு, வியக்கத்தக்க வேலைப்பாடுடைய அகல். இங்கும் உரைகாரர், யவனர் - சோனகர் என்றே பொருள் கூறுகிறார். “ வேள்வித் தூணத் தசைஇ யவனர் ஒதிம விளக்கின்” (நெடுநல் - 316-7) ஓதிமம் - அன்னம். அன்னம் போன்ற வடிவுடைய விளக்கு. “மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி” (மணிமே - 19:107-9) “ யவனப் பாடி ஆடவர் தலைமகன்” (பெருங் - 2.8:168) இங்கு யவனப் பாடி என்பது - யவனத் தச்சர் சேரி, ஆடவர் தலைமகன் - தச்சர்களில் கைதேர்ந்தவன். உதயணன் அமைச்சனாகிய யூகிக்கு, வானூர்தி செய்து தந்ததோடு, அதனை ஓட்டவும் பழக்கித் தந்தவன் இவனே. சூடாமணி நிகண்டு ஆசிரியர், கண்ணாளர் பெயர்களுள் யவனர் என்பதும் ஒன்றாகக் கூறுகின்றார். கண்ணாளர் - சிற்பியரும் ஓவியரும். திவாகரமும் பிங்கலந்தையும், சிற்பி யரைக் கம்மாளர் என்பதில் அடக்கி, கம்மாளர் பெயர்களுள் யவனர் என்பது ஒன்றாகக் கூறுகின்றன. எனவே, தச்சு, கொல், ஏனம், சிற்பம், நகை என்னும் ஐவகைக் கம்மியர் தொழிலும் இவர்கள் (யவனர்) செய்து வந்தனர் என்பது பெறப்படுகிறது. யவன மகளிர், ஆடல் பாடல் மகளிராகவும், தமிழரசி யரின் ஆயமகளிராகவும் இருந்து வந்தனர் எனவும் தெரிகிறது. 13. கொங்கு நாட்டின் பெருமை 1. புலவர்கள் ஒரு நாட்டின் பெருமைக்கு அந்நாட்டுப் புலவர் பெரு மக்களே காரணமாவர். பழந்தமிழ்ப் புலவர் பெருமக்களினா லேயே தமிழ்நாடு இன்னும் தன் பெருமையை இழக்காமல் இருந்து வருகிறது. ‘தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து’ எனத் தொண்டை நாட்டின் பெருமைக்கு அந்நாட்டுப் புலவர் களே காரணமாவர் எனக் கூறுதல் காண்க. புலவர் பாடாத நாடு, உலகில் பெருமையுடைய நாடு ஆகாது என்பது, “ஓங்கி சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவ னாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகவென் நிலவரை.” (புறம் - 72) என்னும், பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் கூற்றால் விளங்குகின்றதல்லவா? பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் சங்க இலக்கி யங்கள் கடைச் சங்க இறுதிக் காலத்தே தொகுக்கப்பெற்றவை எனினும், எட்டுத்தொகை நூல்களுள் இடைச்சங்க காலத்துப் புலவர் பாடல்களும் உண்டு. அச்சங்ககாலப் புலவர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்தவராவர். அவர்களுள் பெரும் பாலோரின் நாடு, ஊர் முதலியன இன்னவெனத் துணிந்து கூற இயலாத நிலையில் இருந்து வருகின்றன. அவர்களுள் கொங்கு நாட்டுப் புலவர்கள் உண்டா? உண்டெனில், எத்தனை பேர்? அவர்கள் யார் யார்? என அறிய அவாவுதல் கொங்கு நாட்டு மக்களின் இயல்பே. சங்க காலப் புலவர்களில் கொங்கு நாட்டுப் புலவர்கள் பலராவர். அவராவார்: 1. அஞ்சி அத்தை மகள் நாகையார் - அதிமான் நெடுமான் அஞ்சியின் மனைவியார், தகடூர், அகம் - 352. 2. அதியன் விண்ணத்தனார் - தகடூர் நாட்டினர். அகம் - 301. 3. அந்தியிளங்கீரனார் - பவானி வட்டத்து அந்தியூர். அகம் - 71. 4. ஆலத்தூர்க்கிழார் - இராசிபுர வட்டத்து ஆலத்தூர். புறம் - 34, 36, 69, 225, 324. குறுந் - 112, 350. 5. ஆவியார் - ஆவியர் குடியினர்; பழனி. புறம் - 298. 6. இரும்பிடர்த்தலையார் - குளித்தலை வட்டத்துப் பிடர்த்தலை. புறம் - 3. 7. உலகடத்துக் கந்தரத்தனார் - அந்தியூரின் தென்கிழக்கில் உள்ள உலகடம். அகம் - 95, 191. நற் 238, 306 - குறுந் - 155. 8. எருமை வெளியனார் - எருமை நாட்டு (மைசூர் நாடு). எருமையூர். புறம் - 273, 303 அகம் - 73. 9. எருமை வெளியனார் மகனார் கடலனார் - எருமை வெளியனார் மைந்தர். அகம் - 72. 10. கருவூர் ஓதஞானியார். குறுந் - 71, 227. 11. கருவூர்க் கண்ணம் பாளனார். அகம் - 180, 263, நற் - 148. 12. கருவூர்க் கண்ணம் புல்லனார். அகம் - 63. நற் - 159. 13. கருவூர்க் கதப்பிள்ளை. புறம் - 380. நற் - 135. குறுந் -64, 265, 380. 14. கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார். புறம் - 168, அகம் - 309, நற் - 343. 15. கருவூர்க் கலிக்கத்தனார் அகம் - 183. 16. கருவூர்க்கிழார். குறுந். 170. 17. கருவூர்க் கோசனார். நற் - 214 18. கருவூர்ச் சேரமான் சாத்தனார். குறுந் - 268 19. கருவூர் நன்மார்பனார். அகம் - 277. 20. கருவூர்ப் பவுத்திரனார். குறுந் - 162. 21. கருவூர்ப் பூதஞ்சாத்தனார். அகம் - 50. 22. கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார். புறம் - 219. 10- 22. இப்பதின்மூவரும் கொங்கு நாட்டுக் கரூர். 23. குடவாயிற் கீரத்தனார் - பல்லட வட்டத்துக் குடவாயில், புறம் - 242. அகம் - 44, 60, 79, 119, 129, 287, 315, 345, 366, 385. நற்-27, 379, குறுந் - 281, 369, 24. குடவாயிற் கீரனக்கனார் - குடவாயில், இவர், முன்னவர் மைந்தராக இருக்கலாம், குறுந் - 79. 25. குடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் - உடுமலை வட்டத்துக் குடிமங்கலம், அகம் - 179, 232. 26. கொல்லிக் கண்ணனார் - கொல்லிமலை நாடு, குறுந் - 34. 27. செங்குன்றூர்க்கிழார் - திருச்செங்கோடு, திருவள்ளுவ மாலை. 28. தகடூர் யாத்திரை ஆசிரியர் ஒருவர். (பெயர் தெரிய வில்லை) 29. பெருந்தலைச்சாத்தனார் - பவானி வட்டத்துப் பெருந் தலையூர். புறம் - 151, 164, 165, 205, 209, 294, அகம்-13, 224. நற் - 262. 30. பொன்முடியார் - தகடூர் நாட்டுப் பொன்முடி, பெண்புலவர், புறம் - 299, 310, 312. குறிப்பு : 7. உலகடம் - உரோடோகம், ஒரோடோகம், ஒரோடகம், உரோடகம், உரகடம் என, ஏடுகளிற் பலவாறாகப் பிறழ்ந்து காணப்படுகிறது. 23, குடவாயில் - இன்று, ‘கொடுவாய்’ என வழங்குகிறது. கொடுவாய்க் கல்வெட்டில் (B.3360) ‘கொடுவாயில்’ என்றுள்ளது. இடிகரைக் கல்வெட்டில் ‘குடவாயில்’ ஒன்றே உள்ளது. 25. இவ்வூர் - ‘கொடிமங்கலம்’ எனவும் திரிந்து காணப்படுகிறது. (அகம்-179). ஆனால், வழக்கில் ‘குடி மங்கலம்’ என்றே வழங்கு கிறது. பெயர்களுக்குப் பின்னுள்ள பாட்டெண்கள், அவர்கள் பாடிய பாடல்களின் எண்களாகும். சங்கப் பிற்காலப் புலவர்கள் 31. கொங்கு வேளிர் - பெருங்கதை ஆசிரியர்; ஈரோடு கோவைப் பெருவழியில், ஈரோட்டின் மேற்கில் 16வது கல்லில் உள்ள விசயமங்கலம், இவரொரு குறுநில மன்னர். 32. அடியார்க்கு நல்லார் - சிலப்பதிகார உரையாசிரியர்; விசயமங்கலத்தை அடுத்த நிரம்பை என்னும் ஊர். 33. குணவீர பண்டிதர் - நேமிநாதம், வெண்பாப் பாட்டியல் ஆகிய நூலாசிரியர்; மூன்றாங் குலோத்துங்கன் (1178 - 1218) காலத்தவர். 34. வச்சணந்தி முனிவர் - குணவீர பண்டிதரின் ஆசிரியர்: இவ்விருவரும் பொள்ளாச்சி வட்டத்துக் களந்தை. 35. பவணந்தி முனிவர் - நன்னூல் ஆசிரியர் ; விசய மங்கலத்தை அடுத்த சீனாபுரம். (சனகை). இவரும் மூன்றாங் குலோத்துங்கன் காலத்தவரே. 36. சன்மதி முனிவர் - பவணந்தி முனிவரின் தந்தையார். 31 - 36. இவ்வறுவரும் சமணப் புலவர்கள். 37. கடிய நன்னியார் - ஒரு செய்யுளிலக்கண நூலாசிரியர்; கடிய நெடுவேட்டுவன் ஊரான கடியம் என்னும் ஊரினர். கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர். பிற்காலப் புலவர்கள் 38. காங்கேயர் - உரிச்சொல் நிகண்டு ஆசிரியர்; திருச் செங்கோட்டை அடுத்த மோரூர். 39. பாகம்பிரியான் கவிராயர் - மோரூர். 40. வீரபத்திரக் கவிஞர் - நல்லத்தம்பிச் சர்க்கரை மன்றாடி யார் காதல் ஆசிரியர்; திருச்செங்கோடு. 41. கார்மேகக் கவிஞர் - கொங்குமண்டல சதக ஆசிரியர்; விசயமங்கலம்; சமணர். 42. எம்பெருமான் கவியராயர் - தக்கை இராமாயண ஆசிரியர்; சங்ககிரி. பவானி சேலம் பெருவழியில் பவானியின் கிழக்கில் 12வது கல்லில் உள்ளது இவ்வூர். 43. பூங்கோதையார் - எம்பெருமான் கவிராயரின் மனைவி யார். 44. சின்னம்மையார் - இம்முடிக் கட்டியின் மனைவியார்; தாரமங்கலம். இன்னும், பிற்காலத்தே கொங்கு நாட்டில் - பூந்துறை அம்பிகாபதிப் புலவர், வீராட்சிமங்கலம் கந்தசாமிக் கவிராயர், முதலிபாளையம் நாச்சிமுத்துப் புலவர், பழனி பாம்பழக் கவிராயர். மடவளாகம் இலக்குமணக் கவிராயர், திருச் செங் கோடு சிற்றம்பலக் கவிராயர், காழியண்ணப் புலவர், உடுமலை முத்துச்சாமிக் கவிராயர், காங்கயம் சேசாலக் கவிராயர், முதலாய நூற்றுக்கணக்கான பெரும் புலவர்கள் இருந்தனர்; இன்றும் பலர் இருக்கின்றன. 2. சித்தர்கள் மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்குக் காரணமாய் இருப்பவை வாகடம், மருத்துவம் என்னும் இரு கலைகளுமேயாகும். நோயில்லாமல் வாழும் வகை கூறுவது - வாகடம். நோய் தீர்ப்பது- மருத்துவம், வள்ளுவர், ‘மருந்து’ என்னும் அதிகாரத்தில் இவற்றின் சிறப்பியல்பினை விரித்துக் கூறுகின்றார். ‘அற்றால் அளவறிந்துண்க’ என்பது - வாகடம். இக்கலைகளில் தமிழர் உலகப்புகழ் பெற்றவராவர். இவ்விதுரு கலைகளையும் நன்கு ஆய்ந்து தெளிந்து தமிழர்களை உலகப் புகழுக்குரியவ ராக்கியவர் தமிழ்ச் சித்தர்களேயாவர். இவரை, அறிவர் என்பர் தொல்காப்பியர் (புறத் - 20). சித்தர் கண்டதனாலேயே தமிழ் மருத்துவம் - சித்த மருத்துவம் எனப்பட்டது. தமிழ்ச் சித்தர்கள், மருத்துவ வாகட ஆராய்ச்சியேயன்றி, இயைபுக்கலை ஆராய்ச்சியிலும், மெய்ப் பொருளாராய்ச்சியிலும் வல்லுநராவர். மருத்துவ வாகட நூல்களும், அறிவு நூல்களும் செய்து, மக்களை வாழ்வித்த தமிழ்ச் சித்தர்களில் பலர் கொங்கு நாட்டினராவர். சித்தர் பதினெண்மர் என்பர். அவர்களுள் எழுவர் கொங்கு நாட்டின ராவர் அவராவார். 1. இடைஞானியார் - அரூர் வட்டத்துத் தென்கரை. 2. கஞ்சமலைச்சித்தர் - சேலத்தை அடுத்த கஞ்சமலை. 3. கரூர்த் தேவர் - கரூர். இவர், முதல் இராசராசச் சோழன் காலத்தவர். (985 - 1014). 4. கொங்கணர் - தாராபுர வட்டத்து ஊதியூர். இவர்க்கு மருதமலைச் சித்தர் என்றும் பெயர். 5. புலப்பாணி - பழனி. 6. போகர் - பழனி குறிப்பு : கஞ்சமலைச்சித்தர்: திருமந்திரம், குருபரம்பை 4 இல், திருமூலர் இவரைத் தம் மாணவரென்று குறிப்படுகிறார். திருமூலர் - கி.பி.6ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவ ரென்பது அறிஞர் முடிவு. (டாக்டர் - இராசமாணிக்கனார் -சைவசமய வளர்ச்சி - 58). கொங்கணர் : இவர், சங்ககிரிக்கு 8 கல் வடக்கில் உள்ள கொங்கண புரத்தில் பிறந்து வளர்ந்து, இராசிபுரத்திற்கு 2 கல் மேற்கில் உள்ள கொங்கணமலையில் தவம் செய்து மெய்யறிவு கைவரப் பெற்று, ஊதியூர் மலையில் இரசவாதச் செயலில் ஈடுபட்டனராம். ஊதியூர் மலைக்கு- பொன்னூதி மலை என்ற பெயரும் உண்டு. கொங்கண மலையில் இருந்து தவஞ் செய்ததால் இவர் இப்பெயர் பெற்றார். இம்மலை இன்று - சித்தர் மலை என்று வழங்குகிறது. கொங்கணபுரம் என்பது, இவர் புகழ் பெற்றபிறகு ஏற்பட்ட பெயராகும். கொங்கணர் + புரம் - கொங்கணபுரம். கொங்கணபுரம் என்பதே, கொங்கணா புரம் எனத்திரிந்து வழங்குகிறது. நம் பெயரால் தம் தாய் நாட்டின் பெயரை விளக்கியவராவர் இவர். 3. வைச நாயன்மார்கள் 1. எறிபத்த நாயனார் - கரூர். 2. கணம்புல்ல நாயனார் - சேலமாவட்டத்து வடவெள் ளாற்றின் கரையிலுள்ள இருக்குவேளூர் (பேளூர்). 3. கூற்றுவ நாயனார் - பொள்ளாச்சி வட்டத்துக் களந்தை. 4. விறன்மிண்ட நாயனார் - திருச்செங்கோடு. 4. வைணவப் பெரியார்கள் 1. கொங்கில் அண்ணல் 2. கொங்கில் ஆச்சான் 3. கொங்குப் பிராட்டியார் - நாமக்கல் வட்டத்துச் செருக் கலை (லத்திவாடி) : கொல்லிமலையை அடுத்தது, இராமா நுசர் - மைசூர் நாட்டுச் சீரங்கப்பட்டணம் செல்லும் போது, இவர் வீட்டில் தங்கிச் சென்றார். இரண்டாங் குலோத்துங்கன் காலம். (1133 - 1150) 5. பாடல் பெற்ற தலங்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்னும் சைவசமய குரவர் களால் பாடப் பெற்ற கோயில் - பாடல் பெற்ற தலம் எனப் படும். மூவர் தேவாரப் பாடல்களில் பெயர் மட்டும் குறிக்கப் பெற்ற கோயில் - வைப்புத் தலம் எனப்படும். திருவாசக வைப்புத் தலமுங் கொள்க. 1. தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருநணா (பவானி), திருச் செங்கோடு, திருப்பாண்டிக் கொடுமுடி (கொடுமுடி), திருக்கருவூர் ஆனிலை (கரூர்), திருவெஞ்சமாக்கூடல் என்னும் ஏழும் கொங்கு நாட்டுத் தேவாரப் பாடல்பெற்ற தலங் களாகும். 1. அவிநாசி (திருப்புக் கொளியூர்)- சுந்தரர் 2. திருமுருகன் பூண்டி - சுந்தரர் 3. திருநணா (பவானி) - சம்பந்தர் 4. திருச்செங்கோடு - சம்பந்தர் 5. கொடுமுடி - அப்பர், சம்பந்தர்,சுந்தரர் 6. கரூர் - சம்பந்தர் 7. வெஞ்சமாக் கூடல் சுந்தரர் குறிப்பு : சமண பௌத்த சமயங்களை எதிர்த்தகற்றவும், சைவ சமயத்தைத் தமிழரிடைப் பரப்பவும் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்த சைவசமய குரவர்களான - அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் கொங்குநாட்டுச் சுற்றுப்பயணத்தின் போது பாடப்பெற்ற கோயில் களாகும் இவை. அப்பரும் சம்பந்தரும் கி.பி. 7ஆம் நூற்றாண்டினர். சுந்தரர் - அந்நூற்றாண்டின் இறுதி யினர். விளக்கம், ‘தேவார மூவர்’ என்னும் பகுதியிற் காண்க. ஐயடிகள், கபிலதேவர் முதலியோர் பாடல்கள் பதினொராந் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்கள் பாடிய கோயில் களும் பாடல்பெற்ற தலங்களேயாகும். இவர்கள், அப்பர் சம்பந்தருக்கு முற்பட்டவராவர். 1. குளித்தலை - ஐயடிகள் - சேத்திர வெண்பா. 2. கொடுமுடி - கபிலதேவர் - சிவபெருமான் இரட்டை மணி மாலை. 3. திருச்செங்கோடு கபிலதேவர் - சிவபெருமான் திருவந்தாதி. 4. களந்தை 2. வைப்புத் தலங்கள் பேரூர், அவிநாசி, திருமுருகன் பூண்டி, குரக்குத்தளி, மொக்கணீச்சுரம், திருச்செங்கோடு, ஏழூர், அறப்பள்ளீச்சுரம், மயிண்டீச்சுரம், தகடூர், வெஞ்சமாக்கூடல் என்னும் பதினான்றும் கொங்கு நாட்டு வைப்புத் தலங்களாகும். இவற்றுள் - திரு முருகன் பூண்டி, அவிநாசி, திருச்செங்கோடு, வெஞ்சமாக் கூடல் ஆகிய நான்கும் பாடல் பெற்ற தலமும் வைப்புத் தலமும் ஆகும். 1. “பேரூர் பிரமாபுரம் பேரா வூரும்” - அப்பர். “மீகொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர்ப் பெருமானை” - சுந்தரர் 2. “அவிநாசி கண்டாய்” - அப்பர் “அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே” - திருவாசகம் ஆனந்த மாலை-7 3. “முல்லைப் புறவ முருகன்பூண்டி” - அப்பர் 4. “கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய்” - சுந்தரர் 5. “மொக்கணி யருளிய முத்தழல் மேனி” - திருவாசகம் - கீர்த்தித்திருவகவல் 6. கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர்”- அப்பர் 7. “இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்”- அப்பர் 8. “கொல்லிகுளிர் அறப்பள்ளி” - சம்பந்தர் 9. “மயிண்டீச் சுரம்வாத வூர்வார ணாசி”- சம்பந்தர் 10. “தாழை யூர்தக டூர்தக்க ளூர்தரு மபுரம்” - சுந்தரர் 11. “வெஞ்சமாக் கூடல் மீயச்சூர் வைகா” - அப்பர் குறிப்பு : பேரூர் - கோவையை அடுத்துள்ளது. அவிநாசி - ஈரோடு கோவைப் பெருவழியில், கோவையிலிருந்து 23வது கல்லில் உள்ளது. திருமுருகன் பூண்டி- அவிநாசிக்கும் திருப்பூருக்கும் இடையில் உள்ளது. குரக்குத்தளி - திருப்பூருக்கு 6 கல் கிழக்கில் உள்ளது. மொக்கணீச்சுரம் - அவிநாசி கோபி வழியில் உள்ள சேவூருக்கு 3 கல் வடமேற்கில் உள்ள குடக்கோட்டூரில் உள்ள கோயில். ஏழூர் - நாமக்கல்லின் வடக்கில் 10 கல் அளவில் உள்ளது. அறப்பள்ளீச்சுரம் - கொல்லி மலை மேல் உள்ளது. மயிண்டீச்சுரம் - கொல்லி மலைமேல் உள்ளது. மயிண்டீச்சுரம் - தகடூரை அடுத்த அதியமான் கோட்டையில் (அதமன் கோட்டை) உள்ள கோயில். (அக்கோயிற் கல் வெட்டில் உள்ளது.) வெஞ்சமாக் கூடல் - கரூர்க்குத் தென்மேற்கில் 13 கல் அளவில், அமராவதி யோடு ஒரு சிற்றாறு கூடுமிடத்தில் உள்ளது. 3. திருப்புகழ் பெற்ற தலங்கள் திருவண்ணாமலை அருணகிரிநாதர், தமிழ்நாடு, முழுவதும் உள்ள முருகன் கோயில் கொண்டுள்ள மலைகள், ஊர்கள் ஆகிய இடங்கள் தோறும் திருப்புகழ் பாடியுள்ளார். அவை திருப்புகழ் பெற்ற தலங்கள் எனப்படும். இவர், வெற்றி நகர்ப் பேரரசனான இரண்டாந் தேவராயன் (1426 - 1446) காலத்தவர். அவனுக்குப் பிரபுடதேவராயன் (பிரபுடதேவன்) என்றும் பெயர். கொங்கு நாட்டுத் திருப்புகழ் பெற்ற தலங் களாவன: இடம் பாடல் தொகை 1. பழனி 95 2. ஆய்க்குடி 2 3. தென்சேரிமலை 3 4. கனககிரி 1 5. முட்டம் 2 6. பேரூர் 2 7. கோவை 1 8. மருதமலை 1 9. குருடிமலை 1 10. ஓதிமலை 2 11. அவிநாசி 6 12. திருமுருகன் பூண்டி 1 13. விசயபுரம் 1 14. விசயமங்கலம் 1 15. பவானி 1 16. திருச்செங்கோடு 26 17. கரபுரம் 2 18. சேலம் 1 19. தீர்த்தமலை 1 20. இராசிபுரம் 1 21. கொங்கணகிரி 1 22. எழுகரை நாடு 1 23. கொல்லிமலை 3 24. கொடுமுடி 2 25. புகழிமலை 1 26. கரூர் 8 27. நெரூர் 1 28. வெஞ்சமாக்கூடல் 1 29. கன்னபுரம் 1 30. காங்கயம் 2 31. சிவன்மலை 2 32. பட்டாலியூர் 3 33. கீரனூர் 1 34. சென்னிமலை 3 ஆக 161 குறிப்பு : 4. கிணற்றுக்கடவு மலை. 5. வெள்ளிமலை அடி வாரத்தில் உள்ளது. 8, 9. கோவையை அடுத்துள்ளன. 13. திருப்பூரை அடுத்து மேற்கில். 17, சேலத்தை அடுத்துச் சேலம் பவானிப் பெருவழியில் உள்ளது; உத்தமச் சோழபுரத்தின் மறுபெயர். 22. ஏழூர். 27. கரூர்ப் பக்கம். 29. காங்கயத்தின் 6 கல் கிழக்கில், 32. சிவன்மலைக்கு வடக்கில், 33. பட்டாலியூரின் கிழக்கில். 4. புராணம் பெற்ற தலங்கள் 1. பேரூர்ப் புராணம் - கச்சியப்ப முனிவர் 2. துடிசைப் புராணம் - 3. அவிநாசிப் புராணம் - இளையான்கவிராயர் குன்றிடம். 4. திருமுருகன் பூண்டிப் புராணம் - வாசுதேவ முதலியார், செட்டிபாளையம். 5. பவானிப் புராணம் - வாசுதேவ முதலியார். 6. திருச்செங்கோட்டுப் புராணம் - கவிராய பண்டிதர். 7. பூந்துறைப் புராணம் - 8. சென்னிமலைப் புராணம் - 9. சிவன்மலைப் புராணம் - சீர்காழிஅம்பலவாணக் கவிராயர் 10. அபிரமேயர்தலப்புராணம் - இளையான் கவிராயர் 11. தாராபுரத்தலப்புராணம் - வேலாயுத பாண்டிதர், தாராபுரம். 12. திருமூர்த்திமலைப் புராணம் - வேலாயுத பண்டிதர் 13. பழனித்தலப்புராணம் - பாலசுப்பிரமணியக் கவிராயர், பழனி. 14. வெஞ்சமாக் கூடற் புராணம் - தி.அ.முத்துச்சாமிக் கோனார், திருச்செங்கோடு 15. கரூர்ப் புராணம் - சத்திய ஞானியார் மாணவர். 16. கொடுமுடிப் புராணம் - வேங்கடரமணதாசர், சாம்பற்குணம். 17. குரக்குத்தளிப் புராணம் - 18. சேவூர்ப் புராணம் - சிவஞான தேசிகர், கொடுமுடி. 19. தென்சேரிகிரிப் புராணம் - அம்மையப்பர். 20. அன்னியூர்த் தலப்புராணம் -கந்தசாமி அடிகள், சிரவணம் பட்டி மடம். 21. கவசைப் புராணம் - கந்தசாமி அடிகள். 22. காரமடைப் புராணம் - இராமாநுநாவலர். கரடிவாவி. 23. திருவெள்ளுர்ப் புராணம் - சொக்கலிங்கப் புலவர், குன்றத்தூர். 24. சேலந்தலப் புராணம் - சொக்கலிங்கப் புலவர். 25. தீர்த்தகிரிப் புராணம் - சைவ எல்லப்ப நாவலர். 26. கரபுர தலப்புராணம் - குறிப்பு : 2, 7, 8, 17, 26 - இவற்றின் ஆசிரியர் பெயர் தெரிய வில்லை. மற்றும் - குறவஞ்சி, பள்ளு, பதிகம், அந்தாதி, சிலேடை, மாலை, விருத்தம் முதலிய பெற்ற தலங்கள் கொங்கு நாட்டில் பல உண்டு. 14. பழங்கொங்கு நாடு இதுகாறும் கொங்கு நாட்டின் ஒரு பகுதியின் வரலாற்றினை ஒருவாறு கண்டோம். இனி, அதன் மற்றொரு பகுதியின் வரலாற்றினைக் காண்போம். கொங்கு நாட்டைச் சேர்ந்த கோவை மாவட்டப் பகுதியாக இருந்த கொள்ளேகால் வட்டம், 1956இல் ஏற்பட்ட மொழிவழி மாநிலப் பிரிவின் போது, மைசூர் மாநிலத்தைச் சேர்ந்து விட்டது. இன்று கொங்கு நாட்டு மக்களுக்குத் தங்கள் உடைமையான கொள்ளேகால் என்னும் பெயர் மறந்தே போய்விட்டது. இவ்வாறு கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்து, மொழிவழி திரிந்து போனதே மைசூர் நாடும் ஆகும். இன்றைய மைசூர் நாடு, பழங்காலத்தே தமிழ் நாடாகவே இருந்தது. அது அன்று கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. அதில், கொங்கணம், பங்களம், கருநாடகம், கங்கம் முதலிய பல சிறு நாடுகள் அடங்கியிருந்தன. “கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடார் பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்து” (சிலப்.25:156-8) என்னும் இவற்றுள், கொங்கணம், அல்லது கொண் கானம் என்பது, மைசூர் நாட்டின் மேல் கடற்கரைப் பகுதி யாகும். அதையடுத்துக் கிழக்கில் கருநாடகமும், அதை யடுத்துக் கிழக்கில் கங்கநாடும் இருந்தன. கொங்கணத்தை அடுத்து வடக்கில் மேல் கடற் கரைப்பகுதி - பங்கள நாடு ஆகும். பங்கள நாட்டின் வடக்கது ஆரியநாடு. கொள்ளேகால் வட்டத்தின் தெற்கில், வானியாற்றின் வடகரைப் பகுதியான பவானி வட்டமும், சத்திய மங் கலம் பகுதியும் - கட்டி நாடு ஆகும். அது மேற்கே மேட்டுப்பாளையத்தை உள்ளடக்கி, நீலகிரியை எல்லையாகக் கொண்டி ருந்தது. அதாவது, வடகரை நாடும், ஓடுவங்க நாடும் - கட்டிநாடு ஆகும். கலிங்கம் - மகத நாட்டின் தென்பாலதான் கீழ் கடற்கரைப் பகுதி. கலிங்கர், வடவாரியரொழிந்த, கொங்கணர், கருநாடர், பங்களர், கங்கர், கட்டியர் என்போர் - தமிழ்க் குறுநில மன்னர் களாவரென்பது. “நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி”(அகம் - 44) என்னும் அகப்பாட்டால் பெறப்படும். இவருள் நன்னன் - கொங்குநாட்டு ஆனைமலைப் பகுதியை ஆண்டவன், இந் நன்னன் மரபினனாகிய நன்னன் என்பானே கொங்கணத்தை ஆண்டவன். கருநாடு அல்லது கருநடம் என்பதே கன்னடம் எனத்திரிந்தது. பங்கள நாட்டை ஆண்டவர் - கடம்பர் ஆவார். இவர், கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்ட மையால், இப்பெயர் பெற்றனர். ஏற்றையும் அத்தியும் - தமிழகத்தைக் குறுநில மன்னராவர். கங்கன், கட்டி பற்றிப் பின்னர்க் காண்போம். “பழங்காலத்தில் மைசூர்ப் பகுதி - கங்கநாடு என்று அழைக்கப்பட்டது. இப்பெயர், அதாவது கங்கநாடு என்பது - கொங்குநாடு என்பதன் மறுவடிவமே யாகும். இன்று கொங்கு நாடு என்ற பெயரை நாம், சேலம் கோவை மாவட்டங் களடங்கிய தமிழகப் பகுதிக்கு மட்டுமே வழங்குகிறோம். ஆனால், சங்க காலங்களில் இது கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக மட்டுமே கொள்ளப்பட்டது. இதை அன்று, தென்கொங்கு நாடு என்று வழங்கினர். இன்றைய மைசூர்ப் பகுதி வடகொங்கு நாடு என்றும், தென்கன்னட மாவட்ட மடங்கிய மேல் கடற்கரைப் பகுதி - மேல் கொங்கு நாடு என்றும் குறிக்கப்பட்டன. இம்மூன்றும் சேர்ந்ததே பண்டைக் கொங்கு நாடு, அல்லது பெருங்கொங்கு நாடாக இருந்தது.” (கா.அப்பாத்துரையார் - ஹைதரலி-7) அப்பழங்கொங்கு நாட்டின் அவ்விருபகுதிகளின் வரலாற்றினையும் அறிந்தால்தானே கொங்கு நாட்டின் வரலாறு முற்றுப் பெறும்? இன்றையக் கொங்கு நாடு - தென் கொங்கு, வடகொங்கு, மேல்கொங்கு எனப் பாகுபட்டது. சங்கத்திறுதிக் காலத்தேயாம். மைசூர் நாட்டின் பழம்பெயர் - எருமைநாடு என்பது, எருமையூர் என்பது - அதன் தலைநகர். அப்பகுதியிலுள்ள தமிழ் கன்னடக் கல்வெட்டுக்கள், அப்பகுதியை ‘எருமைநாடு’ என்றே கூறுகின்றன. (புறம் - 223. ஒளவை. சு.து.உரை.) 273வது புறப்பாட்டைப் பாடிய எருமைவெளியனார் என்னும் புலவர், எருமையூரினராவர். ‘வெளியனார்’ என்பது, அவர் பெயர். ‘எருமை’ என்பது, எருமையூர்ப் பெயர். எருமை வெளியனார் மகனார் கடலனார் (அகம் - 72) என்னும் புலவர் இவர் மைந்தராவர். சங்க காலத்தே, எருமையூரன் என்னும் குறுநில மன்னன் மரபினர், எருமையூரிலிருந்து அவ்வெருமை நாட்டை ஆண்டு வந்தனர். ‘கோநாடு, வேங்கை நாடு, உம்பற்காடு’ என்பன போல எருமை மிகுதியாக இருந்தமையால் பெற்ற பெயராகும், எருமை நாடு என்பது. ஆவூர் புலியூர் போன்றது எருமையூர். எருமை நாட்டின் தலைநகர் எருமையூர், ‘எருமைப் பட்டி’ என்னும் ஊர், இன்றும் தமிழ் நாட்டில் பல உண்டு. பட்டி - ஊர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (175- 204) என்ற பாண்டியனோடு, தலையாலங்கானம் என்னும் இடத்தில் எதிர்த்துப் பொருத - இரு பெருவேந்தர், ஐம்பெரு வேளிர் ஆகிய எழுவரில், இவ்வெருமையூரனும் ஒருவனாவன். அவ்வெழுவராவார்: சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை, சோழன் இராசசூயம் வெட்ட பெருநற்கிள்ளி, திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேன், பொருநன் என்போர். “கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன் ஆலங் கானத் தகன்றலை சிவப்பச் சேரல் செம்பியன் சினங்கெழு திதியன் போர்வல் யானைப் பொலம்பூண் எழனி நாரரி நறவின் எருமை யூரன் இருங்கோ வேண்மான் இயறேர்ப் பொருநனென் றெழுவர் நல்வல மடங்க” (அகம் - 36) என்னும் நக்கீரர் கூற்றால் அறிக. இவ்வெருமையூரன் என்பான், சேர மன்னனுக்குப் படைத்துணை வந்தவனாக இருக்கலாம். குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையின் (132 - 148) தாய்- மையூர் கிழான் வேண்மாள் அந்துவஞ் செள்ளை என்கின்றது, பதிற்றுப்பத்தின் ஒன்பதாம்பத்துப் பதிகம். அப்பதிகமே, மையூர்கிழான் என்பான், இளஞ்சேரலிரும் பொறையின் அமைச்சன் எனவுங் கூறுகிறது. இம்மையூர் கிழான், முன்னவன் மகனாக இருக்கலாம். இரண்டாங் கரிகாலனுக்கு அவன் தாய்மாமனான இரும்பிடர்த்தலையார் அமைச்சராக இருந்தமை போல, இவன் இருந்திருக்கலாம், மையூர் என்பது, எருமையூர் என்பதன் மறு பெயரே. மை - எருமை. பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்த யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை (148-180). இளஞ்சேரலிரும் பொறையின் மைந்தனாவன். எனவே, சேரனோடு சேர்ந்து, பாண்டியனோடு பொருத எருமையூரன் என்பானும் மையூர் கிழானும் ஒருவனாகவோ, அல்லது தந்தையும் மைந்தனு மாகவோ இருக்கலாம். ஆகையால், எருமை நாடு, தமிழ் நாடென்பது வெளிப்படை. “நேரா வன்தோள் வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாட் டுள்ளதை அயிரியா றிறந்தன ராயினும்.” (அகம் - 253) வடுகர் - வடக்கின்கண் உள்ளவர். அதாவது மூவேந்தர் தமிழகத்தை அடுத்து, அதன் வடக்கிலுள்ளவர். வடக்கின்கண் உள்ளாரை வடுகர் என்பது அக்கால வழக்கு. இப்பெயரே பிற் காலத்தே, கன்னடர், தெலுங்கரைக் குறிக்கும் பொதுப் பெய ரானது. எருமை - எருமையூரன், அயிரியாறு, தமிழ்ப் பெய ராதலை அறிக. இவ்வயிரியாறு, குதிரை மலையில் தோன்றி, வடக்கே சென்று கிருஷ்ணையாற்றுடன் கலக்கிறது. “நுண்பூண் எருமை குடநா டன்ன” (அகம் - 115) என்னும் மாமூலர் கூற்றால், எருமையூரன் மரபினர் ஆட்சியில் குடநாடும் அடங்கியிருந்தமை பெறப்படும். குடநாடு குடகு. இவன், காலத்தால் முன்ன வனுக்கு முற்பட்டவன். தகடூர் அதியமான் எழினியின் படைவீரனான எருமை நடுகன் என்பான், எருமை நாட்டு எருமை யூரினன் என்று, கல்வெட்டுக் கூறுகிறது. (A.R. No. 112 of 1910). தகடூர் நாடு, எருமைநாட்டை அடுத்ததாகும். கொங்கு நாட்டைச் சோழர் பிடித்தாண்ட போது, அவ்வெருமை நாட்டைச் (கங்க நாடு) சோழர் கீழ் அதியமான் மரபினர்தாம் ஆண்டு வந்தனர். எருமையூர் என்பதே, பிற்காலத்தே மைசூர் என்றாயது. எருமைக்கு வடமொழியில் மகிஷம் என்று பெயர். எருமையூர் - மகிஷபுரி. மகிஷபுரி - மகிஷவூர் - மகிசவூர் - மைசூர் எனத் திரிந்தாயது. தமிழ் நாடாக இருந்த எருமை நாடே, பிற்காலத்தே தமிழ் திரிந்து கன்னட வழக்கான போது, எருமையூர் என்பது மகிஷ புரியாகி, மைசூராகி, அந்நாடு மைசூர் நாடானது. அவ்வெருமை நாட்டின் தென்பகுதியில் தென் கடம்பை நாடு, அல்லது தெற் காணம்பி நாடு என்பது இருந்தது. இதற்குக் கல்வெட்டுச் சான்றும் உண்டு. தெற்கு ஆள் நம்பி நாடு - தெற்காணம்பி நாடு. இரண்டும் அழகான தமிழ்ப் பெயர்கள். “நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்” என்னும் அப்பர் தேவாரம். அந்நாட்டினை நினைப் பூட்டுகிறது. இத்தெற்காணம்பி மாதவன் மரபினர் வரலாற்றை, ஒய்சளர் வரலாற்றிற் காண்க. இனி, கொங்கண முதலிய நாடுகள் அமைந்துள்ள மேல் கொங்கு நாட்டினைக் காண்போம். கொங்கு நாட்டிற்கும் சேர நாட்டிற்கும் இடையே உள்ள மேற்குமலைத் தொடர் - தெற்கே பாண்டிநாட்டுப் பொதிய மலையில் தொடங்கி, வடக்கே பம்பாய் மாநிலத்தில் உள்ள தபதியாற்று வரை 1000 கல் அளவில் தொடர்ந்திருக் கிறது. இம்மலைத் தொடரிலுள்ள பாலக்காட்டுக் கணவாய் 20 கல் அகல முடையது. இக் கணவாயின் வாயிலாகப் பாலக்காடு என்னும் ஊர் இருக்கிறது. கொங்கு நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் போக்குவரவு வழியாக உள்ளது இக் கணவாயேயாகும். சென்னை இருப்புப் பாதை இவ் வழியாகத் தான் மலையாள நாட்டுக்குச் செல்கிறது. பாலக்காட்டுக் கணவாய்க்கு வடக்கிலுள்ள இம்மலைப் பகுதி - வடமலை எனவும், தெற்கிலுள்ள பகுதி - தென்மலை எனவும் வழங்கின. தென்மலை 200 கல் நீளமும், வடமலை 800 கல் நீளமும் உடையன. இம்மேற்கு மலைத் தொடரின் பழம்பெயர் வானமலை என்பது, இம்மலைச் சாரலை யுடைமையாலேயே சேரர்க்கு வானவர் என்னும் பெயர் உண்டானது. வானமலை- வான ளாவியமலை. ஆறுகள் : வடமலைத் தொடரில் தோன்றும் ஆறுகள் - பெரும்பாலும் வானி எனவும், தென்மலைத் தொடரில் தோன்றும் ஆறுகள் பெரும்பாலும் பொருநை எனவும் பெயர் பெறும். தென்மலைத் தொடருக்கு - தென்னம் பொருப்பு என்னும் வழக்குண்மையால், அப்பொருப்பில் தோன்றும் ஆறுகள் - பொருநை எனப் பெயர் பெற்றன போலும். வடமலையில் தோன்றி, வடதென் கன்னட மாவட்டங் கட்கு எல்லையாக மேற்கு நோக்கி ஓடி, மேல்கடலில் கலக்கும் ஆறு வானியாறு எனப்படும். அதன் தெற்கில் அம்மலையில் தோன்றி, மைசூர் நாட்டில் காவிரியுடன் கலக்கும் ஆறு - கீழ்ப்பூவானி எனப்படும். அது இன்று கெப்பானி (Kabbani) என்று வழங்குகிறது. அதன் தெற்கில் அம்மலையில் தோன்றி, பவானி என்னும் ஊர்க்கருகில் காவிரியுடன் கலக்கும் ஆற்றின் பழம் பெயர் - பூவானி என்பது. பூவானி என்பதையே பவானி எனத் திரித்தனர். பூவானியின் கீழ்த் தோன்றுதலான், முன்னது கீழ்ப்பூவானி எனப்பட்டது. இவ்வடமலைத் தொடரின் தென்னிறுதியில் தோன்றும் ஓர் ஆறு, பாலக்காட்டுக் கணவாயில் பாரதப் புழையுடன் கலந்து மேற்கு நோக்கி ஓடி, பொன்வானி என்னும் பெயருடன் மேல்கடலில் கலக்கிறது. பொன்வானி என்பது - பொன்னானி என, இன்று சிதைந்து வழங்குகிறது. காவிரியைத் தவிர - வானி, கீழ்ப்பூவானி பூவானி, பொன்வானி என, இந்நான்காறுகளும் வானி எனவே பெயர் பெறுதல் காண்க. இனி, தென்மலையில் தோன்றி, மேற்கு நோக்கி ஓடிச் சேர நாட்டின் தலைநகரான வஞ்சியருகே மேல் கடலில் கலக்கும் பேரியாறு - பொருநை எனப்படும். அம்மலையில் தோன்றும் அமராவதியின் பழம் பெயர் - ஆன்பொருநை என்பது. அம்மலையில் தோன்றும் தாம்பிரபன்னியின் பழம் பெயர் - தண்ணான் பொருநை என்பது. மேற்கு மலைத் தொடருக்கும் மேல் கடலுக்கும் இடைப் பட்டது - சேரநாடு, அது, தெற்கிலிருந்து வேணாடு, குட்ட நாடு, பொறைநாடு, குடநாடு, கொண்கானநாடு என்னும் உள் நாடு களையுடையதாயிருந்தது. கொண்காணத்தின் வடக்கெல்லை - வானியாறு. வேணாட்டின் தெற்கெல்லை - தென்பாண்டி நாடு. குட்ட நாட்டின் கிழக்கில் பூமிநாடும், பொறை நாட்டின் கிழக்கில், தென்பால் கடுங்கோ நாடும், அதன் வடபால் பாயல் நாடும் இருந்தன. கடுங்கோ நாட்டின் கிழக்கில், கோவை வட்டத்தின் நேர் மேற்கில், கொங்கு நாட்டைச் சேர்ந்த வள்ளுவ நாடு இருந்தது. சேர நாட்டின் தலைநகரான வஞ்சி - குட்ட நாட்டில் இருந்தது. சேரமன்னர் குடிமரபின் ஒரு பிரிவான, பொறையன்குடி வகையால் பொறைநாடு ஏற்பட்டது போலும். சேரநாட்டைச் சேர்ந்த இக்குடநாடு வேறு; காவிரி தோன்றும் குடகு வேறு என்பதை அறிக. குடகு - மலைநாடு. கொண்கானத்தின் வடக்கெல்லையான வானியாற்றின் வடபால், பங்களநாடு இருந்தது. பங்கள நாட்டின் கிழக்கிலும், கொண்கானத்தின் கிழக்கிலுமாக, மேற்கு மலைத்தொடரின் கீழ்பால் - வேளிரது வேணாடு இருந்தது. வேள்நாடு - வேணாடு. சேர நாட்டின் தென் பகுதியிலுள்ள வேணாடு வேறு, இவ்வேணாடு வேறு என்பதை அறியவும். அவ் வேணாட்டின் வட பகுதி - வேளகம் எனவும், தென்பகுதி - வானவாசி எனவும் வழங்கின. இவ்வானவாசி நாடு, வானமலையின் கிழக்கில் இருந்ததால் இப்பெயர் பெற்றது. வானமலையின் கிழக்கில் உள்ளது என்பது பொருள். வாசி என்பது, ‘பாசி’ என்ற தமிழ்ச் சொல்லின் சிதைவு, பாசி - கிழக்கு. பாசிச் செல்லாது ஊசி முன்னாது’ (புறம்-229) எனக் காண்க. பாசி- கிழக்கு, ஊசி-வடக்கு. இங்குள்ள அசோகன் கல்வெட்டுக்கள், இதை வானிவாசி என்கின்றன. வேளகம் பங்கள நாட்டின் கிழக்கிலும், வானவாசி - கொண்கானத்தின் கிழக்கிலும் அமைந்துள்ள நாடுகள் என்பதை மனத்திருத்துக. வேளகம் என்பதே, வேளகம், வேள்காம் பெல்காம் (Belgam) எனத் திரிந்து வழங்குகிறது. மேற்கிலுள்ள கொண்கானத் துக்கும், கிழக்கிலுள்ள வானவாசி நாட்டுக்கும் இடையிலுள்ள மலைநாடு - மேற்கு மலைத் தொடர்ப் பகுதி - வானமலைநாடு எனப்படும். பங்கள நாட்டில் அன்று கடம்பர் என்போர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அடிக்கடி சேரநாட்டிற் புகுந்து தொல்லை கொடுத்து வந்தனர். அக் கடம்பர்க்கும் சேரர்க்கும் அடிக்கடி போர் நடந்து வந்தது. முடிவாக அக்கடம்பரை வென்ற சேர மன்னன், அக்கடம்பருடன் நட்புறவு கொண்டு, வானி, அல்லது வானவாற்றினைச் சேர நாட்டின் வடக்கெல்லை - வரம்பு- ஆக்கிக் கொண்டான். அவ்வரம்பைக் கடந்து கடம்பர்கள் தெற்கே வராதவாறு உடன்பாடு செய்து கொண்டான். அதனால், அவனுக்கு - வானவரம்பன் என்ற பெயர் உண்டானது. அது, சேராது மரபுப் பெயர்களிலொன்றானது. “வகையில் செல்வ, வான வரம்ப” (பதிற் - 38) “வான வரம்பனை நீயோ பெரும” (புறம் - 2) இதனால், அவ்வான வாற்றுக்கு, சேரவாறு என்ற வழக்கும் உண்டானது. இது, மிகப் பழங்காலத்தே நிகழ்ந்ததாகும். பிற்காலத்தே அக்கடம்பர்கள் வானவாசியிலும் குடியேறினர். பிற்காலத்தார், அவர்களை வனவாசிக் கடம்பர் என்றனர். (ஒளவை. சு.து.சேரமன்னர் வரலாறு). சேரநாட்டுக்கும் கடம்பர் பங்கள நாட்டுக்கும் வரம்பான அவ்வானவாறு, வானமலையில் தோன்றி மேல் கடலில் கலக்கும் வரையிலும் அதன் பெயர் வானவாறேயாகும். அவ்வானவாறு கன்னட மொழியில் ஹோனவார் என்று வழங்குகிறது. அங்கே வாழும் முகமதிய முதியோர், அவ்வாற்றின் பழம்பெயர் - வானவாறு என்றே கூறுகின்றனர். அவ்வானவாறு கடலில் சேரும்போது உள்ள கிளைகளிலொன்று - இன்று - ஷீராவதி என்று வழங்குகிறது. சேரவாறு என்பதே, ஷீராவதி எனத் திரிந்து வழங்குகிறது. அவ்வாறு ஜோக் என்னும் ஊருக்கருகே, 850 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து மேலைக் கடல்நோக்கி ஓடுகிறது. ‘தோகைக் காவின் துளுநாடு’ (அகம் 15) என்னும் அகப் பாட்டில் காணப்படும் தோகைக்கா என்பதே, ‘தோக்கா’ என மருவிப் பின் ஜோக் எனத் திரிந்து வழங்கி வருகிறது. (ஒளவை. சு.து.சேரமன்னர் வரலாறு - 53). கொண்கானத்தின் வடக்கில், வடகன்னட மாநிலத்தி லுள்ள கோகரணம் என்னும் ஊர் - அப்பர், சம்பந்தர் ஆகிய இருவர் பாடலும் பெற்ற தலமாகும். எனவே, கி.பி.7 ஆம் நூற்றாண்டில் அப்பகுதி தமிழ் நிலமாகவே இருந்தமை பெறப் படும். ஏழிற்குன்றம், பாழிச்சிலம்பு என்னும் மலைகளை யுடையது கொண்கான நாடு. ‘ஏழில்’ என்பது, தமிழ் இசைக் கருவிகளில் ஒன்று. அது போன்ற தோற்றமுடைமையால் அம்மலை - ஏழில்மலை எனப் பெயர் பெற்றது. வடவர் அம்மலையைச் சப்தசைலம் என்பர். பிற்காலத்தே அவ்வேழில் மலை - எலிமலை எனத் திரித்து வழங்கப்பட்டது. அதனால், அவ்வேழில்மலை சூழ்ந்த பகுதியை, வடமொழி யாளர் - மூஷிக நாடு என்றனர். மூஷிகம் - எலி. பாழிச்சிலம்பு - பாழிக்கல் எனவும் வழங்கும். கல் - மலை. பாழிக்கல் என்பது இன்று - பாட்கல் என வழங்குகிறது. அங்கு இரண்டு தமிழ்க் கல்வெட்டுக்கள் உள்ளன. கடம்பின் பெருவாயில் என்பது, கொண்கான நாட்டின் தலைநகர். பாரம், பிரம்பு, வியலூர் என்ற பேரூர்களும் அந் நாட்டில் உண்டு. வியலூர் இன்று - பெயிலூர் (Bailur) என்று வழங்குகிறது. சேரன் செங்குட்டுவன் (125 - 180) இவ்வியலூரை அழித்தனன் என்பது, ‘சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி’ (பதிற். 5. பதிகம்) என்னும் பதிற்றுப்பத்தால் தெரிகிறது. மேல் கடற்கரையை அடுத்துள்ள அப் பாழிச்சிலம்பு என்ற மலைக்குச் செருப்பு என்ற பெயரும் உண்டு. செருப்புப் போன்ற தோற்றமுடையது போலும். புலவர்கள் அதை, மிதியாச் செருப்பு என்றனர். அம்மலையை அடுத்துள்ள வளைகுடாவுக்கு - செருப்பாழி என்று பெயர். செருப்பு + ஆழி - செருப்பாழி. அங்கு பாழி. அல்லது செருப்பாழி என்ற ஊரும் இருந்தது. அது, பாதுகாப்பு மிக்க வலிய அரணை யுடைய நகராகும். அச்செருப்பாழியில் தங்கியிருந்த மோரியர் படையை வென்று துரத்தியே, இளஞ்சேட்சென்னி என்னும் சோழ மன்னன், செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி (கி.மு. 290- 270) என்று பெயர் பெற்றான். அவன் வரலாற்றிற் காண்க. இக்கொண்கான நாடு.பொன்விளையும் நாடாகப் பொலிந்தது. நிலநூல் வல்லுநரான பேராசிரியர் பால் என்பார். அந்நாட்டில் பொன் மிகுதியாக இருந்ததென்பதை உறுதி செய்துள்ளார். அக்கொண்கான நாட்டை நன்னன் வேண்மான் என்னும் தமிழ்க் குறுநில (வேளிர்) மன்னர் மரபினர் ஆண்டு வந்தனர். “பொன்படு கொண்கான நன்னன் நன்னாட் டேழிற் குன்றம் பெறினும்” (நற் - 391) “நன்னன் உதியன் அருங்கடிப் பாழி” (அகம் - 258) எனக் காண்க. சங்க இறுதிக் காலத்தே இக் கொண் கானத்தை ஆண்டு வந்த நன்னன் என்பான், அளவு கடந்த தமிழ்ப் பற்றுடையவன்; பெருங்கொடை வள்ளல்; ஆய் ஆண்டிரன் போலத் தமிழ்ப் புலவர்கட்கு யானைக் கொடை கொடுத்துத் தமிழ் வளர்த்து வந்த பெருந்தகையாளன்; பெரு வீரனுமாவான். “இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ் பாரத்துத் தலைவன் ஆர நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பில்” (அகம் - 152) எனப் பரணரால் பாராட்டப் பெற்ற பழந்தமிழ்ச் செல்வன். இக் கொண்கான நாட்டு மக்கள் - கொங்கணிகள் என்று பெயர் பெறுதலானும், கொங்கு நாட்டை ஆண்ட கங்க மன்னர்கள் - கொங்கணிவர்மர் என்ற பெயரையுடையராய் இருந்தமையானும், கொங்கணர் என்ற சித்தர் பெயராலும், இது பழங்கொங்கு நாட்டின் ஒருபகுதி யாதலானும், கொண் கானம் என்பதினும், கொங்கணம் என்பதே பெருவழக் குடையதாகும். கொங்கு அணம்- கொங்கணம். அணவுதல் - பொருந்துதல், கூடுதல், கொங்கு நாட்டைப் பொருந்தி யிருந்ததால் இப்பெயர் பெற்றது. கொண்கானம் - இலக்கிய வழக்குப் போலும். இக் கொண்கானத்தின் கடலோர வடபகுதி - துளுநாடு எனப்படும். கொண்கானத்தின் தென்கீழ்ப் பகுதி - புன்னாடு எனப்படும். இவ்விரண்டும் கொண்கானத்தின் உள்நாடு களாகும். இப்புன்னாட்டில், கி.மு.மூன்றாம் நூற்றாண்டி லேயே கங்கைவெளிச் சமணர் வந்து தங்கியிருந்தது. குறிப் பிடத்தக்கது. வெளியம் என்பது, புன்னாட்டின் தலைநகர். அப்புன்னாட்டை, வெளியன் வேண்மான் மரபினர் ஆண்டு வந்தனர். அம்மரபில் வந்த வெளியன் வேண்மான் ஆய் எயினன் என்பான். களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் (கி.பி.72-97) என்னும்சேர மன்னனின் படைத்தலைவனாக இருந்தான். சேரனுக்கும் கொண்கானத்து நன்னனுக்கும் பகை யுண்டானது. பாழிப் பறந்தலையில் நடந்த போரில், நன்னன் படைத்தலைவனான மிஞிலி என்பானால் ஆய் எயினன் கொல்லப்பட்டான். “வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந் தொள்வாள் மயங்கமர் வீழ்ந்தென” (அகம் -208) என்பது, பரணர் பாட்டு. ஆனால், நார்முடிச் சேரல் சினங் கொண்டு படையுடன் சென்று, வாகைப் பறந்தலை என்னு மிடத்தில் நடந்த போரில் நன்னனைக் கொன்றான். (அகம் - 199). இந்நார்முடிச்சேரல், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மைந்தன். நெடுஞ்சேரலாதன் -- ‘உதியஞ் சேரற்கு -வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்’ என்கின்றது, பதிற்றுப்பத்து (2. பதிகம்). எனவே, இந்நார் முடிச் சேரலின் பாட்டி, இவ் ஆய் எயினன் அத்தை, அல்லது தந்தையின் அத்தையாக இருக்க வேண்டும். வேண்மாள் - பெண்பாற் பெயர். வேண்மான் - ஆண்பாற் பெயர். எனவே, அக்கொண்கானப் பகுதி அன்று தமிழ் நாடாகவே இருந்ததென்பது வெளிப்படை. குதிரைமலை நாடு: தென் கன்னடத்திற்கும் மைசூர் நாட்டிற்கும் எல்லையாக இருக்கும் மலைத்தொடர்ப் பகுதியில் உள்ள முடிகளில் ஒன்று குதிரைமலை எனப்படும். இது, கொண்கானத்தின் கிழக்கில் உள்ளது. இம்மலை குதிரைமுகம் போல் காட்சியளித்தலால், இப்பெயர் பெற்றது. இம்மலையை, ஊராக் குதிரை (புறம் - 168) என்பர் தமிழ்ச் சான்றோர். வடமொழியாளரால் இது, சஞ்ச பருவதம் என மொழி பெயர்க்கப்பட்டிருப்பினும், தென் கன்னட மாவட்டத்து உப்பினங்காடி வட்டத்தில் இது, ‘குதிரை மூக்கு மலை’ என்றே வழங்கி வருகிறது. இம்மலை மேற் பொழியும் மழை நீர் - ஒரு பகுதி (அயிரியாறு - அகம் 253) வடக்கே சென்று கிருஷ்ணை யாற்றையும், ஒரு பகுதி தெற்கே சென்று காவிரி யாற்றையும் அடைகிறது. காவிரியின் நீர் வளத்துக்கு இக்குதிரை மலையே நிலைக்களனாகும். இம்மலைப் பகுதியில், மேற்கரை என்னும் தமிழ்ப் பெயர் - மர்க்காரா எனவும், வடகரை என்னும் தமிழ்ப் பெயர் - படகரா எனவும் உருத்திரிந்து வழங்குகின்றன. மேற்கரையில் பெய்யும் மழை நீரே காவிரிக்கு வருகிறது. இம்மலை நாடு மிக்க வளம் பொருந்திய நாடு. இக்குதிரை மலை நாட்டை அன்று கொற்றன் மரபினர் ஆண்டு வந்தனர். இந்நாட்டின் தலைநகர் - கொற்றன் கருவூர் என்பது. இன்றும் அங்குள்ள மக்கள் - கொங்கணிகள் - அதை கொத்தகனவூர் என்கின்றனர். ஆனால், அங்கு ஜமால் பாத் என்ற ஊர் இருக்கிறது.) அவ்வூர், திப்பு சுல்தான் தாயான ஜமால் பீபியின் பேரால் அமைத்த தென்றும், அதன் பழம் பெயர் நரசிம்மங்காடி என்றும் அப்பகுதி வரலாறு கூறுகிறது. நரசிம்ம வர்மன் என்ற கடம்ப மன்னன், ‘கொற்றன் கருவூர்’ என்னும் அதன் பழம் பெயரை மாற்றி ‘நரசிம்மங்காடி’ எனப் புதுப் பெயரிட்டனன் என, அங்கு வாழ்வோர் கூறுகின்றனர். (ஒளவை, சு.து.சேர மன்னர் வரலாறு). கொற்றன் மரபில் வந்த பிட்டங் கொற்றன் என்பவன், பேராண்மையும் பெருங் கொடைக் குணமும் ஒருங்குடைய வன்; அளவு கடந்த தமிழ்ப் பற்றுடையவன்; சேரமான் குட்டுவன் கோதையின் (95 - 130) படைத்தலைவன். கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார். உறையூர் மருத்துவன் தாமோதரனார், வடம வண்ணக்கன் தாமோதரனார் என்னும் புலவர் பெரு மக்களால் பாராட்டப் பெற்றவன் (புறம்-168-172). எனவே, இவன் காலத்தே அப்பகுதி தமிழ் நிலமாகவே இருந்து வந்த தென்பது பெறப்படும். தமிழகத்தின் மீது மோரியர் படை யெடுத்தபோது, இதே பெயரையுடைய இவன் முன்னோன் ஒருவன் எதிர்த்துப் பொருதாகத் தெரிகிறது. கொண்கானத்தின் வடபாலிருந்த வேணாடு, வேளகம்வள் என்னும் தமிழ்ச் சொல்லடியாகப் பிறந்த பெயர்களாகும். வேள் நாடு - வேணாடு. வேள் அகம் - வேளகம். வேள், அல்லது வேளிர் என்பது, தமிழ்க் குறுநில மன்னரைக் குறிக்கும் பெயர்களாகும். தமிழ்க் குறுநில மன்னர்களாகிய வேளிர் இருந்து ஆண்டு வந்ததனாலேயே அப்பகுதிக்கு - வேணாடு, வேளகம் என்ற பெயர்கள் ஏற்பட்டன. எனவே, அன்று அப்பகுதி தமிழ் நிலமாகவே இருந்து வந்ததென்பது பெறப் படும். அவ்வேளிருள் ஒருவன், அவ்வேணாட்டை அடுத்துக் கிழக்கிலிருந்த எருமை நாட்டுத் துவரையைத் (துவார சமுத்திரம்) தலைநகராகக் கொண்டு அப்பகுதியை ஆண்டு வந்தான். அவ் வெருமை நாட்டை அடுத்து வடகிழக்கில் இருந்த பகுதியைச் சாதவாகனர் என்னும் ஆந்திர அரசர்கள் ஆண்டு வந்தனர். அச்சாதவாகனருள் மிக்க ஆற்றல் வாய்ந்த புலிமெய் என்பவன் எருமை நாட்டின் மேற் படையெடுத்து வந்தான். ஒரு மலைப் பாங்கரில் நடந்த போரில், துவரை வேள் அப்புலி மெய்யை வென்றுதுரத்திப் புலிகடிமால் என்னும் புகழ்ப் பெயர் பெற்றான். அப்பெயர் அவன் வழிவந்தோர்க்கு மரபுப் பெயராக வழங்கி வந்தது. அத்துவரை வேளிருள் ஒருவன் தெற்கே வந்து, தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். அவன் வழி வந்த இருங்கோவேள் என்பானைப் பாடிய கபிலர், இச்செய்தியைக் குறிப்பிட்டுள்ளார். “வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச் செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை உவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே, விறற்போ ரண்ணல். தாரணி யானைச் சேட்டிருங் கோவே. ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்” (புறம் - 201) அதாவது, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி - வடக்கின்கண் உள்ள ஒரு முனிவன் இருந்த மலைப்பாங்கரிப் போந்து, புலிகடி மால் - புலிமெய் என்பானைப் போரில் வென்று துரத்திப் ‘புலிகடிமால்’ என்று பெயர் பெற்று செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை- செம்பினால் புனைந்து செய்தாற் போன்ற மிக உயர்ந்த நிலையுடைய, துவரை ஆண்டு - துவரையை ஆண்டு பத்து ஒன்பது வழி முறை வந்த - நாற்பத் தொன்பது தலைமுறை தொன்று பட்டு வந்த, உவரா ஈகை - வெறுப்பில்லாத கொடையினையும், ஒலியல் கண்ணி - தழைத்த கண்ணியினையும் உடைய, வேளிருள் வேளே - வேளிருள் சிறந்த வேளாயுள்ளவனே, விறல் போர் அண்ணல் - வெற்றிப் போரையுடைய தலைவ, தாரணி யானைச் சேடு இருங்கோவே- தாரணிந்த யானையையுடைய பெரிய இருங்கோவே என்பதாம். பெயர் பெற்ற வேளிருள் வேளே, துவரை ஆண்டு வழி முறை வந்த வேளிருள் வேளே எனக் கூட்டுக. மேற்கு மலைத் தொடர்ப் பகுதியினர், நாற்புறமும் மலை முடிகள் சூழ்ந்த இடை நிலத்தை - தடவு என்றும், கோட்டம் என்றும் கூறுதலால், ஒரு முனிவன் இரந்த அத்தகைய மலைப் பாங்கரில் படையெடுத்து வந்து தங்கிய புலிமெய்யை வென்று துரத்தினன் என்பதாம். அப்புலிமெய்யின் பெயர் - புலுமாவி, புலிமாயி எனக் காணப்படினும், கன்னட மொழியில் அது, புலி மெய் என வழங்கும் என்றும், புலிபோலும் மெய்வலியுடையன் என்பது பொருளென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர் (புறம் - 201. ஒளவை. சு.து. உரை) அப் புலிகடி மாலிலிருந்து இவ்விருங்கோவேள் நாற்பத் தொன்பதாவது தலைமுறையினன் என்பதாம். ஆனால், அப்புலிமெய் என்பான், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவன். கபிலர், கி.பி. இரண்டாம் நூற்றாண்டினர். எனவே, ‘நாற்பத்தொன்பது’ என்பது, பொருந்தாமையாக உள்ளது. ‘நாற்பத்தொன்பது’ என்பதை, உம்மைத்தொகையாகக் கொள்ளின், நான்கும் பத்தும் ஒன்பதும் என, இருபத்துமூன்று என்பது, பொருந்துவதாகும். இனி, ஒரு மலைப் பாங்கரில் தவஞ்செய்து கொண்டிருந்த ஒரு முனிவனைக் கொல்ல வந்த புலியைக் கொன்றதனால் ஏற்பட்ட பெயரென்னும், ஒய்சள மரபுக் கதைபோல இதைக் கொள்ளின், இவ்விரு மரபினரின் இட முதலிய ஒற்றுமையால், இவ்விருவரும் வேணாட்டு வேளிர் வழிவந்த ஒரே மரபினரே, பெயரால் வேறுபட்டனர் எனக் கொள்ளற்கமையும். இது காறும் கண்டவற்றால், கொண்கானம், வேளகம் முதலிய மேல்கடல் சார்ந்த பகுதி சேர, இன்றைய மைசூர் நாட்டுப் பகுதி முழுவதும் அன்று தமிழ் நிலமாகவே இருந்து வந்ததென்பதும், இன்றையக் கொங்கு நாடு - தென்கொங்கு எனவும், மைசூர் நாட்டுப் பகுதி - வடகொங்கு எனவும், மேல் கடற்கரைப் பகுதி - மேல்கொங்கு எனவும், அப்பழங்கொங்கு நாடு மூன்று பெரும்பிரிவாகப் பெயர் பெற்று வந்ததென்பதும் பெறப்படுதலை அறிக. தமிழகத்தின் வடவெல்லைப்புறப் பகுதியாகிய அவ்வட கொங்கு நிலப்பரப்பில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கும், தென்றமிழ கத்துத் தமிழ்மக்களுக்கும் நெருங்கிய தொடர்பின்மையாலும், அயல்மொழித் தாக்குதலாலும், அயற் சமயத்தாரின் மொழிக் கொள்கையாலும் வரவர அங்கு தமிழ் திரிந்து, தமிழின் வேறாகிய புதியதோர் உருவமும் பெயரும் பெற்று, கன்னடம் என்னும் மொழி உண்டானது கருநடம் என்பதே, கன்னடம் எனத் திரிந்தது. இங்ஙனமே தமிழ் திரிந்து - தெலுங்கு, மலையாளம், துளு என்னும் மொழிகள் தோன்றலாயின. “கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்” -(மனோன்மணீயம்) எனப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் இவ் வுண்மையை எடுத்தியம்பி யுள்ளமை காண்க. நாளடைவில் அப்பழந்தமிழர் தமிழினத்தினின்றே பிரிந்து, தம்மைத் தமிழ ரென்றே அறிய முடியாத, தமிழரின் வேறுபட்ட தனித்தனி இனமாகி விட்டனரென்க. ஆசிரியர் மறைமலை அடிகள் அவர்கள், நன்கு ஆராய்ந்து கண்ட கன்னடம் முதலிய மொழித் தோற்ற வரலாறு கீழ்வருமாறு:- கன்னட மொழி: ‘மைசூர் நாடு, கடைச்சங்ககாலத்தே ‘கன்னட மொழி வழங்கும் நாடாக இல்லை; தமிழ் நாடாகவே இருந்தது. கன்னட மொழி, கி.பி.9ஆம் நூற்றாண்டில் தான் நூல்வழக்குடையதாயிற்று. அதுவும் தமிழ் இலக்கியங்கள் போன்ற நூல்கள் ஏற்படவில்லை. கி.பி.9ஆம் நூற்றாண்டி லிருந்த இராட்டிரகூட அரசனான முதலாம் அமோகவர்ஷ நிருபதுங்கன் (811 - 880) அவைக்களப் புலவரான ஸ்ரீவிஜயர் என்பவர் தாம் முதன்முதல் கவிராஜ மார்க்கம் என்னும் நூலைக் கன்னட மொழியில் செய்தார். அதன் பின், 1369இல் பசவ புராணமும், 1385இல் பத்மராஜபுராணமும் செய்யப் பட்டன. அதன் பின்னரே பாரதம், இராமாயணம், பாகவதம் முதலான நூல்கள், வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டன. கி.பி.பத்தாம் நூற்றாண்டிற்கு முன் வழங்கிய கன்னட மொழி தனித் தமிழாயிருக்க, அதற்குப்பின், சமண வீர சைவ வைணவப் புலவர்கள், பெரும்பாலும் வடமொழிச் சொற்கள், சொற்றொடர்களை ஏராளமாகக் கலந்து வேறு மொழியாக்கி விட்டனர். தெலுங்கு: சாதவாகனராகிய ஆந்திரகுலம், கி.மு. இரண்டாம் நூற்றாண்டி லேயே வலிய அரசர்களை உடைய தாய் இருந்தது. மோரிய கலிங்கப் பேரரசுக்குப் பின் அதன் தெற்கில் அமைந்த பேரரசு இதுவே. ஆந்திர அரசர்கள் பௌத்த சமயத்தினர். அவ்வரச மரபு கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் முடிந்தது. அத்தகைய சிறந்த அரசர்கள் காலத்தே அவர்கள் தெலுங்கு மொழி வழங்கியிருந்தனராயின் அதன்கண் பல நூல்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய பழைய நூல்கள் எவையும் தெலுங்கு மொழியில் காணப் படாமையால், அவ்வாந்திர அரசர்கள் காலத்தே தெலுங்கு மொழி வழங்கவில்லை என்பதே தேற்றம். அவர்கள் பேசியது தமிழே. ஆய் என்னும் தமிழ் வள்ளல் வேளிர்குடிக் குரியவனா தலின், வேள் ஆய் எனவும், ஆண்டிர நாட்டினன் ஆதலின், ஆய் அண்டிரன் (புறம் - 129, 131) எனவும் பெயர் பெற்றனன், அண்டிரம் என்பது, ஆண்டிரம் எனத் திரிந்து, பின் ஆந்திரம் எனத் திரிந்ததாகும். இஃதெங்ஙனமாயினும், பழைய ஆந்திர அரசர்கள் வழங்கியதும், போற்றி வளர்த்ததும் தமிழே என்பது மட்டும் பழைய தமிழ்நூல் ஆராய்ச்சியால் புலனாகிறது. இனி, இத்தென்றமிழ் நாட்டிலே பிறந்து வளர்ந்து தமிழிலக்கியம் பயின்று வந்த தமிழ் மக்களுக்கும், நெடுந் தொலைவில் இருந்த அப்பழந்தமிழர்க்கும் இடையில் தொடர் பில்லாமையால், அவர்கள் தமிழும் நூல்வழக்கில்லாத தாய்ச் சொற்றிரிபு மிகவுடைத்தாகி, அதனாற் பிறிதொரு மொழி போலத் தெலுங்கு எனப் பிற்காலத்தே பிறிதொரு பெயர் பெற்றது. கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப் பெற்ற ஒரு தெலுங்கு நூலாவது, ஆந்திர அரசர்களாற் பொறிக்கப் பெற்ற ஒரு கல்வெட்டாவது, ஆங்கில ஆட்சியாளரால் எவ்வளவோ தேடிப்பார்த்தும் இதுகாறும் (1938) கிடைக்க வில்லை. எனவே, பதினொன்றாம் நூற்றாண்டுவரை தெலுங்கு சீர்திருத்தம் எய்தி நடைபெறவில்லை யென்பது திண்ணமாய்ப் புலப்படுகிறது. கீழைச்சாளுக்கிய மன்னனான இராசராச நரேந்திரன் (1022 - 1063) வேண்டுகோட்படி, நன்னயப்பட்டர் என்பார், வடமொழிப் பாரதத்தை ஆரணியபருவம் வரை தெலுங்கில் மொழி பெயர்த்தார். அதன் பின்னரே தெலுங்கு மொழி நூல் வழக்குடையதாயிற்று. நன்னயர் பாரதத்தில் வடமொழிச் சொற்கள் இருபங்கும், தெலுங்குச் சொற்கள் ஒருபங்கும் காணப்படுவதால், அக்காலத்திலேயே தெலுங்கு மொழி வடமொழியின் உதவியின்றித் தனித்தியங்கும் ஆற்றலில்லாத தொன்றாய் நடைபெற்றமை இனிதின் விளங்கும். மலையாளம்: இனி, மலையாள மொழியோ, கி.பி.17 ஆம் நூற்றாண்டு வரை முழுதும் தமிழாகவே இருந்தது. ஆனால், இத்தமிழ் நாட்டில் வழங்கும் செந்தமிழ்ச் சொற்கள் திரிந்த கொச்சைத் தமிழாகும் அது. அத்திரிபுகளை நீக்கினால், மலையாள மொழி முற்றும் தமிழாகவே காணப்படுகிறது. கி.பி.1350இல் இருந்த கன்னசப்பணிக்கர் என்பவரே மலையாள மொழியில் முதன்முதல் இராமாயணத்தை மொழி பெயர்த்தார். அவர் மொழி பெயர்ப்பில் வடசொற்கள் மிக அருகியே காணப்படுகின்றன. இவர்க்குப்பின், 1550இல் இருந்த செருச்சேரி நம்பூதிதி என்பார், தாமியற்றிய கிருஷ்ண கதா என்னும் நூலைப் பெரும்பாலும் வடசொற் கலவாத தனி மலையாள மொழியில் எழுதியிருக்கிறார். இவருக்குப் பின், எழுத்தச்சன் (1650) என்பவரோதாம் மொழி பெயர்த்த மகாபாரதத்திலும், வேறுசில புராணங்களிலும் தொகுதி தொகுதியாக வடசொற்களையும், சொற்றொடர் களையும் அளவின்றிப் புகுத்தியுள்ளார்.” -மறைமலையடிகள். வடசொற்களைக் கலக்காதிருந்திருந்தால் கன்னடமும் தெலுங்கும் தமிழின் தொடர்புடைய வழிமொழிகளாகவே இருக்கும்; மலையாள மொழி தமிழின் வேறுமொழியெனும் நிலையை அடைந்தே இருக்காதெனலாம். 15. வீரமும் புகழும் ஒரு நாட்டு வரலாற்றில் வீரமே முதலிடம் பெறுகிறது. வீரத்தின் அடிப்படையிலேயே ஒரு நாட்டின் வரலாறு எழு கின்றது. வீரமற்ற மக்களையுடைய நாடு எதுவும் வரலாற்றுத் தொடர்பு பெறுவதில்லை. வரலாறு அந்நாட்டின் பக்கங்கூடத் திரும்பிப் பார்ப்பதில்லை. வீரம் வரலாற்றின் அடிப்படையாக மட்டும் நின்று விடுவதில்லை. வரலாற்றின் வளர்ச்சியும் வீரத்தின் ஏற்றத் தாழ்வைப் பொறுத்ததேயாகும். வீரம் வளர வளர வரலாறும் வளர்ந்து கொண்டே போய், உலக வரலாற்றின் முடிவிடத்தைப் பெறுகிறது என்று விளக்கமாகக் கூறலாம். இத்தகைய வீரவரலாறு பெற்ற நாடே, ‘நன்னாட்டின் முன்னாட்டும் நாடு’ என்று புலவர் பெரு மக்களாற் புகழப் படுகிறது. தமிழ்நாடு வீரத்திற்குப் பெயர் பெற்றது. தமிழ்நாடு வீரத்தின் விளைநிலம். மறக்குடி மக்களின் வாழ்விடமாய் அமைந்தது தமிழ்நாடு. தமிழ்நாட்டின் வீரன் உலகப் புகழ் பெற்றது; உவமைப் பொருளற்றது; உயர்வுக் குயர்வுற்றது; உலகில் தனையொத்தது. தமிழர் வீரம் கதிரவனின் ஒளி போன்றது; காற்றின் வெளி போன்றது; மலையின் நிலை போன்றது; மாகடலின் வளம் போனற்து. வீரமே உருவானவர் தமிழ் மக்கள் என்பது, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலாகும். புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய சங்க நூல்களில் தமிழரின் வீரத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளக்க மாகக் காணலாம். புறநானூறு தமிழர் வீரக் கருவூலமாகும். அகம், புறம் என்னும் தமிழர் ஒழுக்கக் கூறுபாட்டினுள் புறம் என்பது வீரத்தின் திரட்சியேயாகும். தமிழ் மக்களின் வீரப் பண்பாடே புறப்பொருள் எனலாம். தமிழ் மக்கள் வீரத்திற்கு இலக்கியம் கண்டதோடு மட்டும் அமையவில்லை; வீர இலக்கியத்திற்கு இலக்கணமுங் கண்டு எழுச்சியுடன் வாழ்ந்து வந்தனர். தொல்காப்பியப் பொருளதி காரப் புறத்திணையியல் வீர இலக்கணப் பிழம்பாகம். வீரத்தை ஓர் ஒழுக்கமாகக் கொண்டு, அதற்கு இலக்கியமும் இலக்கணமும் கண்ட பெருமை தமிழ் மக்களுக்கே உரிய தனிப் பெருமையாகும். எண்வகை மெய்ப்பாட்டுக் குறிப்பினுள் ஒன்றான பெருமிதம் என்பது வீரக் குறிப்பேயாகும். அத்தகைய வீரக்குறிப்போடு பெருமித வாழ்வு வாழ்ந்து வந்தனர் பழந்தமிழ் மக்கள். தமிழக ஊர் தோறும் அன்று சிலம்பக் கூடம் இருக்கும். தமிழ் இளைஞர்கள் இன்றியமையா வாழ்கைக் குறிக் கோளாகக் கொண்டு, உடற்பயிற்சியும் பல்வகைப் படைக் கலப் பயிற்சியும் பயின்று வீரர்களாகத் திகழ்வர். ஊர்த் தலைவர்களும் தம் தலைமைக்கேற்ப உடல் வலியும் படைக் கலப் பயிற்சித்திறமும் உடையவராக இருப்பர். அக்காலச் செல்வர்கள் இக்காலச் செல்வர்கள் போல, ‘உண்பதும் உறங்குவதும் அல்லாமல் வேறு பயன் உலகத்தில் இல்லை கண்டீர்’ எனக்கொண்டு வாளாப்பொழுது போக்கவில்லை. அன்னாரும் வீரச் செல்வராக விளங்கி வந்தனர். போரெனில் இளைஞர்கள் வீறுகொண்டு திரண்டெழுவர். ஊர்த்தலைவர்கள் அம்மறவர் படையைத் தலைமை தாங்கி நடத்துவர். வலியும் மறக்குணமும் போர்ப் பயிற்சியும் ஒருங்குடையவரே அன்று தலைவராதற்குத் தகுதியுடையவராக இருந்தனர். பெண்டிரும் தம் கணவரையும் புதல்வரையும், ‘வாகை புனைந்து மீண்டு வருக’ என, வாழ்த்தி வான்கை கொடுத்தனுப்பும் மறக்குணமுடையராகத் திகழ்ந்தனர். (புறம் - 89, 276, 312). தமிழரின் இத்தகைய மறப்பண்பே, அதற்கேற்ற படைப்பயிற்சியே, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தமிழாட்சி தொடர்ந்து நடைபெற்று வந்ததற்குக் காரணமாக இருந்து வந்தன. வீரம் என்பது வெறும் போர்வீரம் மட்டும் அன்று. எதிரிகளைக் கொல்வதுமட்டும் வீரத்தின் இலக்கணமன்று. தற்காப்பு, தன்னலமறுப்பு, அருளுள்ளம், அறச்செலவு, தன்மானம், மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப்பற்று ஆகிய இவற்றை அடிப்படையாகக் கொண்டதே வீரத்தின் இலக்கணமாகும். தமிழர் தலைவர்கள் வெறும் போர் வீரராக மட்டும் இருக்கவில்லை; வென்று களங்கொள்வதை மட்டும் அவர்கள் வீரமாகக் கருதவில்லை; மொழிப்பற்றும் இனப்பற்றும் நாட்டுப் பற்றும் ஒருங்குடைய உயர்பண்பினராகத் திகழ்ந்தனர். அம் மூன்றுக்குமாகவே உயிர் வாழ்ந்து வந்தனர் எனலாம். அளவு கடந்த அயல்மொழிப் பற்றினாலும், அயற் கொள்கைப் பிடிப்பினாலும் பிற்காலத்தே தமிழ்த் தலைவர் கட்கு, மொழி இனம் நாடு என்னும் அம் மூன்றும் அருகிய தனாலேயே அன்னார் தமக்குட்பகையும் போரும் உடையராய், இனைத்தென அறியாத அவ்வளவு காலமாய் இடையறாது தொடர்ந்து நடந்து வந்த தமிழரசை ஒழித்து விட்டனர், தமிழ் நாட்டில் அயலாட்சி ஏற்பட வழிவகை செய்து விட்டனர். மலையாகிய மேட்டு நிலத்தே நீர் ஊறி, அது வெள்ள மாகப் பள்ளத்தே தேங்கிப் பயிர்க்குப் பயன்படுவது போல, தமிழ்த் தலைவர்களின் வீரமாகிய மேம்பாட்டினின்று அருளூறி, அது கொடைக் குணமாக உள்ளத்தே தேங்கித் தமிழ் மக்கட்குப் பயன்பட்டு வந்தது. தமிழ்த் தலைவர்களெல்லாரும் அளவு கடந்த வீரமும், அதற்கேற்ற அருளுள்ளமும், அதற்கேற்ற கொடைக்குணமும் உடையராய்த் திகழ்ந்து வந்தனர்; ஏழை எளியரான இரவலர்க்கும், தமிழ்ப் புலவர்கட்கும் வரையாது வாரிவழங்கி வந்தனர். அவர்கட்கிருந்த மொழிப்பற்றும் இனப்பற்றும் நாட்டுப் பற்றுமே இதற்குக் காரணமாகும். ‘செல்வத்துப் பயனே ஈதல்’ (புறம் - 189), ‘ஈதல் இசைபட வாழ்தல்’ (குறள்) என்னும் கடமையுணர்ச்சியும் அன்னாரை அவ்வாறு ஈத்துவக்குமாறு தூண்டிற்று. ‘ஒப்புரவறிதல்’ என்னும் குறளதிகாரத்தைப் பழந்தமிழ்ச் செல்வர்கள் அப்படியே மேற்கொண்டொழுகி வந்தனர் எனலாம். ஒரு சில செல்வர்கள் (தலைவர்கள்) கொடுத்துக் கொடுத்து ஏழ்மை நிலைமை அடைந்தனர். கொடை மடம் பட்ட அன்னார் வரையாது கொடுத்துக் கொடுத்து வள்ளல் என்னும் பெயருடன் விளங்கினர். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி, மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகம் ஆகியோர் கொடைத் திறத்தை என்னென்பது! வரையாது கொடுத்துத் தமிழரை வாழ்வித்து, தமிழ் வளர்த்து வந்த சங்ககால வள்ளல்களின் வாழ்க்கை வரலாற்றினை, கொடைத் திறத்தினை, வீரத்தினைச் சங்க நூல்களிற் கண்டு மகிழாத தமிழன் தமிழனாகான். சங்ககாலத் தமிழகத்தே பன்னூற்றுக்கணக்கான வள்ளல்கள் இருந்தார்கள். அவர்களுள் - பாரி, ஓரி, காரி, பேகன், ஆய், அதியன், நள்ளி என்னும் எழுவரை மட்டும் வள்ளல்கள் என வரைறுத்துக் கூறினர் சங்ககாலச் சான்றோர்கள். இவ்வெழுவர்க்குப் பின்னர், ‘அவ்வெழுவர் போல ஈதற்கு யான் உளேன்’ (புறம் - 158) என்ற வள்ளல் குமணானோடு சங்க கால வள்ளல்கள் எண்மராவர். அவ்வெண்மரில் நால்வர் கொங்கு நாட்டினர் எனில், அவர்கள் யார்? ஊர் முதலிய அன்னார் வரலாறென்ன? என அறியக் கொங்கர்கள் விரும்புவது இயல்பே. ஆம்; இதோ அவர்கள்: 1. சங்ககாலத் தலைவர்கள் 1. பேகன் பழனியும் அதைச் சூழ்ந்த பகுதியும் வையாபுரி நாடு எனப்படும். இது, வைகாவூர் நாடு எனவும் வழங்கும். இது, கொங்கு இருபத்து நான்கு நாடுகளுள் ஒன்றாகும். வையாவியூர் என்பதே, வையாவூர், வையாபுரி எனத் திரிந்து வழங்கலானது. இந்நாட்டின் தலைநகர் - பழனி, பொதினி என்பதே, பிற் காலத்தே பழனி எனத் திரிந்தது. “முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி” (அகம் - 61) எனக் காண்க. இந்நாட்டை முன்னர் ஆவியர் குடியினர் ஆண்டு வந்தனர். ஆவி என்பவன் அக்குடி முதல்வனாவான். அதனால், பழனிக்கு- ஆவிநன்குடி என்றும் பெயர் வழங்கலானது. ‘ஆவிநன்குடி அசைதலும் உரியன்’ (முருகு - 476) ‘ஆவி நன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே ‘(திருப்புகழ்) எனக் காண்க. இம்மரபினர் வையாவி, வேளாவி எனத் தம் குடி முதல்வன் பெயரை முன் வைத்துப் பெயர் வைத்துக் கொள்வது வழக்கம். அதனாலேயே இந்நாட்டுக்கு, ‘வையாவியூர் நாடு’ எனப் பெயர் ஏற்பட்டது. இது ஆவிநன்குடி நாடு எனவும் வழங்கும். உதியன்குடி, பொறையன் குடி எனச் சேரமன்னர் மரபு இருவகைப் பிரிவுடையது. அவ்விரு சேரமன்னர் குடும்பங்கட்கும், ஆவியர் குடிக்கும் மண உறவு உண்டு. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மனைவியும், செல்வக் கடுங்கோ வாழியாதன் மனைவியும், வேளாவிக் கோமான் பதுமன் என்பவன் மகளிராவர். அவ்விருவர்க்கும் வேளாவிக் கோமான் பதுமன் தேவி என்றே பெயர். (பதிற் 4, 8 பதிகம்). முன்னவன் - உதியன் குடி, பின்னவன் - பொறையன் குடி. ஆவியர் குடிக்கும் சேரமன்னர் குடிக்கும் உள்ள இத்தகைய மணத் தொடர்பினால், இவ்வேளாவிக் கோமான் பெயரால், சேரர் தலைநகராகிய வஞ்சியில், வேளாவிக்கோ மாளிகை என்ற ஒரு மாளிகை இருந்தது. (சிலப். 28:198). வையாவிக் கோப்பெரும் பேகன் என்பது, பேகனின் முழுப் பெயர். ‘வேள்’ என்பது போல, ‘வை’ என்பதும் அடை மொழி. வை என்பது, வீரங் குறித்தது போலும். வேள் - வேளாண் குடிப்பெயர். பேகன் மனைவி பெயர் - கண்ணகி இவள், சிலப் பதிகாரக் கண்ணகிக்கு முற்பட்டவளாவள். பழனிக்குப் பக்கத்தில் ஆய்க்குடி என்ற ஒர் ஊர் இருக்கிறது. அது, வள்ளல்களிலொருவனான ஆயின் ஊரெனவும், அப் பகுதியை அவன் ஆண்டு வந்தனன் எனவும் கூறுவர். “விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய் நின்னாட் டண்ணல் யானை எண்ணில் கொங்கர் குடகட லோட்டிய ஞான்றை” (புறம் - 130) என, ஆய் கொங்கரை வென்றதாகக் கூறுதலான், அவன் கொங்குவேள் அல்லன் என்பது பெறப்படுவதால், அக்கூற்றுப் பொருந்துவதாக இல்லை. ஆவிக்குடி, அல்லது ஆவியர்குடி என்பதே, ஆய்க்குடி எனத் திரிந்து வழங்கலானது. ஆவிநன்குடி என்பதும் இதற்குச் சான்றாகும். கார்காலத்தே ஒரு நாள், கார்கண்டு களித்தாடிய ஒரு மயிலைக் கண்டு, அதற்குக் குளிரும் எனக்கொண்டு, விலை யுயர்ந்த தன் போர்வையை அம்மயிலுக்குப் போர்த்துப் பொன்றாப் புகழெய்தினான் பேகன். என்னே பேகனின் கொடை மடம்! “உடாஅ போராஅ ஆகுதல் அறிந்தும் படாஅம் மஞ்ஞைக் கீத்த எங்கோ கடாஅ யானைக் கலிமான் பேகன்.” (புறம் - 141) “மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப் படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேகன்.” (புறம் - 145) எனப் பரணரும். “கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திற லணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகன்.” (சிறுபாண் - 85 -7) என, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரும் இச்செயற் கருஞ் செயலைப் பாராட்டியுள்ளமை காண்க. படாம், கலிங்கம்- ஆடை, பனித்தல் - குளிர்தல். புலவர்க்கு வரையாது வாரி வழங்கித் தமிழ் வளர்த்தவன் பேகன். இத்தகைய கொடை மடம் பட்ட கொங்கர்களால் வளர்க்கப்பட்டது சங்கத்தமிழ். ஆனால், இத்தகைய அருளுள்ளமுடைய பேகன், மனைவி கண்ணகியைத் துறந்து, பழனிக்குப் பக்கத்தேயுள்ள நல்லூரில் உள்ள ஒருத்திபால் சென்று தங்கி வருவானாயினன். இது, கண்ணகி என்னும் பெயர்ப் பொருத்தம் போலும்! பேகனது இப் புறத்தொழுக்கத்தை அறிந்த கபிலர், பரணர், அரிசிற் கிழார், பெருங்குன்றூர்க்கிழார் என்னும் சான்றோர்கள் பேகனைப் பாடி, (புறம் - 143, 145, 146, 147) அவனைக் கண்ணகியோடு கூட்டினர். என்னே புலவர்தம் பெருந் தொண்டு! இத்தகைய புலவர் பெருமக்களால்தாம் அக்காலத் தமிழ்க் குடும்பங்கள் நன்னெறிக்கண் இனிது நடந்து வந்தன. பேகன் ஒரு பெரு வீரன் என்பதை நினைவு கூர்க. இப்பேகன் மரபில், இத்தகையார் எத்தனைபேர் இருந்தனரோ! 2. அதியமான் சங்ககால வள்ளல்களிலொருவனான இவ்வதியமான், கொங்கு நாட்டுத் தகடூர் நாட்டினன், தருமபுரி மாவட்டத்துத் தருமபுரி வட்டம், அரூர் வட்டம், ஓசூர் கிருஷ்ணகிரி வட்டங் களின் தென்பகுதி இவை, தகடூர் நாடு ஆகும். ஒரு காலத்தே வடக்கே மைசூர் நாட்டுக் கோலார் வரை, தெற்கே நாமக்கல் வரை பரவியிருந்தது இந்நாடு. தகடூர் என்பது, இந்நாட்டின் தலைநகர். இன்றையத் தருமபுரியே அன்றையத் தகடூர் ஆகும். தருமபுரிக்குத் தெற்கில் உள்ள அதமன் கோட்டை என்பது, ‘அதியமான் கோட்டை’ என்பதன் சிதைவாகும். இன்று அதிய மான் கோட்டை என மாற்றப்பட்டுள்ளது. சங்ககாலந் தொட்டு, கி.பி.13ஆம் நூற்றாண்டுவரை, தகடூர் நாட்டை இவ்வதியமான் மரபினர் ஆண்டு வந்தனர். இந்நூலிற் காணும் இம்மரபினர் வரலாற்றை அங்கங்கே அறிக. அதியன் என்பவன் இக்குடி முதல்வன் ஆவன். இவ்வதியன் மரபினர் வீரமும் புகழும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற கொங்கு வேளிர் குடியினராவர். பொன்முடிக் கணவாயின் பாதுகாவலராக இருந்து வந்தனர் இம்மரபினர். அதியமான் நெடுமான் அஞ்சி என்பது, நம் அதிய மானின் முழுப்பெயர். தமிழரின் தனிச் செல்வமாகிய ஒளவை யாரிடத்து அளவு கடந்த அன்புடையவன் அஞ்சி; ஒளவை யாரைத் தமிழ்த்தாய் எனவே மதித்துப் போற்றி வந்தான். ஒளவையாரை அதியனின் அவைப் புலவரென்றே கூறலாம். அதியமான் ஒரு நாள் சேலத்தை அடுத்த கஞ்சமலைக்குச் சென்றான். அங்கு, அணுகுதற்கரிய உயர்ந்த பாறைப் பிளவின் உச்சியில் இருந்த நெல்லிக்கனியொன்றை அரிதின் முயன்று பறித்து வந்தான். அக்கனி, உண்போர்க்கு உறுதியான உடல் நலத்தையும் நீண்ட வாழ்நாளையும் தரவல்லது. அரிய மருந்துப் பொருட் களஞ்சியமல்லவா கஞ்சமலை! அதைத்தான் உண்பதினும் தமிழ்த் தொண்டாற்றி வரும் ஒளவையார் உண்பதே மேலெனக் கருதிய அதியமான், அதன் பயனை உரை யாது அதை ஒளவைக்குக் கொடுத்துப் பொன்றாப் புகழை அடைந்தான். என்னே அஞ்சியின் தாய்மொழிப் பற்று! “மன்னுக பெரும நீயே, தொன்னிலம் பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா தாதல் நின்னகத் தடக்கிச் சாதல் நீங்க எமக்கீத் தனையே.” (புறம் - 91) என, தனக்கென வாழா அத்தமிழ்த் தலைவனின் அவ்வரும் பெருங்குணத்தினை ஒளவையார் மனமாரப் பாராட்டினார். பெருவீரனாகிய அஞ்சி, எதிரியின் பெரும்படை கண்டஞ்சி நெஞ்சழியானேனும் தன்னொடு மாறுபட்ட காஞ்சித் தொண்டைமானிடம் ஒளவையாரைத் தூதுவிட்டுப் போர் நேரா வண்ணம் செய்து நாட்டின் அழிவைப் போக்கினான் (புறம் - 95). இதனால், பகைவேந்தரிடம் பெண்டிர் தூது செல்லும் வழக்கமும் பழந்தமிழரிடை உண்டென்பது பெறப் படும். கொங்கு நாட்டை அடுத்துக் கிழக்கில், தென் பெண்ணை யாற்றங் கரையிலுள்ள திருக்கோவலூரைத் தலை நகராகக் கொண்டது நடுநாடு என்பது, சோழ தொண்டை கொங்கு நாடு கட்கு நடுவில் இருந்ததால், அது அப்பெயர் பெற்றது. அது மலாடு எனவும் வழங்கும். அதை மலையமான் மரபினர் ஆண்டு வந்தனர். அதிய மான் அஞ்சி காலத்தே, மலையமான் திருமுடிக் காரி என்பவன் அந்நடுநாட்டை ஆண்டு வந்தான். சங்ககால வள்ளல்களிலொருவனான அக்காரி, அதியமானோடு பகை கொண்டு தகடூர் நாட்டின் மீது படையெடுத்தான். அதியன் அவனை வென்று துரத்தினதோடு, கோவலூரையும் அழித்தான் (புறம் - 99). தோற்றோடிய காரி, பெருஞ்சேரலிரும் பொறை (115- 132) என்னும் நேரமன்னனைத் தகடூர் நாட்டின் மீது படை யெடுக்கும் படி தூண்டினான். காரியின் படைத்துணை யுடன் இரும்பொறை படையெடுத்து வந்து, தகடூரை முற்றுகை யிட்டான். அதியமான் வெளிப்போந்து ஆற்றலுடன் பொருது மறப்புக ழெய்தினான் (பதிற் - 8 பதிகம்). இப்போர்ச் செயல் பற்றியதே, தகடூர் யாத்திரை என்னும் பழந்தமிழ் நூல். அதியன் இறந்தது கண்ட ஒளவையார் ஆராத்துயருடன் பாடி அழுதனர் (புறம் - 235). தகடூர்ப் போர்க்கு முன், அதியனுக்கும் இரும்பொறைக்கும் கொல்லி மலையில் போர் நடந்தது. (பதிற் - 8- பதிகம்). இப் போரில் கொல்லிமலைத் தலைவனான ஓரி இறந்தான். சேரன், இத்தகடூர் வெற்றியின் அறிகுறியாகச் சேலத்து மலைக்கு -சேர அரையன்மலை எனப் பெயரிட்டனன். அதுவே, சேரராயன்மலை, சேர்வராயன் மலை எனத் திரிந்து வழங்கலானது. அதியமான் மனைவியார் - நாகையார் என்பார், அதியமானின் அத்தை மகள், அவ்வம்மையார் செந்நாப் புலமையுடைய சங்ககாலப் புலவரிலொருவராவர். 352 அகப்பாட்டு அவர் பாடியதே. அதியாமான்மகன் பொகுட் டெழினி என்பான். அவனும் தந்தை போல வீரமும் புகழும் உடையவனே. இனி, இம்மரபினரின் உலகப் புகழுக்குரிய செய்தி யொன்றுண்டு. அதாவது, மக்கள் பயன்படுத்த அறியாது காட்டில் இருந்த கரும்பை, முதன் முதல் அதன் பயன்பாடு கண்டு நாட்டில் பயிர் செய்து, மக்கட்குப் பயன்படச் செய்தவன் இவ்வதியமானின் முன்னோரிலொருவனே யாவன். (புறம் - 99). எனவே, கரும்பை உலகுக்கு வழங்கிய பெருமை கொங்கு நாட்டையே சேரும். அவன் கரும்பைச் சீனாவிலிருந்து கொண்டு வந்ததாகவும் கூறுவர். 3. ஓரி இவன், சங்ககால வள்ளல்களிலொருவன்; வீரமும் புகழும் ஒருங்கே உடையவன். இவன் சேல மாவட்டத்துக் கொல்லி மலை நாட்டை ஆண்டு வந்தான். இக்கொல்லிமலை மீது பதினான்கு நாடுகள் உண்டென்பதை முன்பு கண்டோம். அப்பதினான்கு நாடுகளும் ஓரியின் ஆட்சிக்குட்பட்டிருந்தன. கொல்லிமலை நாடு மிக்க வளம் பொருந்திய மலைநாடு. அம்மலை மீதிருந்த கொல்லிப் பாவை இலக்கியச் சிறப் புடையது. (குறுந் - 100) கொல்லி மலைத் தேனும் அத்தகையதே. (அகம் - 209) இவன், ஆதன்ஓரி எனவும் பெயர் பெறுவான். ஆதன் என்பான், ஓரிகுடியின் முதல்வனாவான், ஓரிவிற்போரில் மிக்கவல்லவன். இவன் வில்லாண்மை அளவு கடந்த வன்மை யுடையது. அதனால் இவன், வல்வில்ஓரி எனப் பெயர் பெற்றனன். ஒரு நாள் அக் கொல்லிமலைச் சாரலின் கண் வேட்டை யாடச் சென்ற ஓரி, ஓர் யானையின்மீது அம்பெய் தான், ‘அவ்வம்பு, அந்த யானையை வீழ்த்தி, அவ்யானை மேற் பாய்வதற்கு அற்றம் பார்த்து வாயைத் திறந்து கொண்டு நின்ற ஒரு புலியின் அகன்றவாயில் தைத்து ஊடுருவிச் சென்று அதைக் கொன்று, அவ்வழியில் நின்ற ஒரு கலைமானை மாய்த்து, அண்மையிலிருந்த ஒரு காட்டுப்பன்றியின் உயிரைக் குடித்து, அங்கு புற்றின்கண் இருந்த ஓர் உடும்பினையும் கொன்றது.’ (புறம் - 152) என, வன்பரணர் என்னும் புலவர், ஓரியின் வில்லாண்மையைப் பாராட்டியுள்ளார். ஓரம்புக்கு - யானை, புலி, மான், பன்றி, உடும்பு ஆகிய ஐந்துயிர்கள் இரை! ‘கொல்லி யாண்ட வல்வில் ஓரி’ (புறம் - 156) என்பது, பெருஞ்சித்திரனார் வாக்கு. அவ்வழியே வந்து, இளைப்பாறுதற்காக அங்கு ஒரு மரத்து நிழலில் தங்கியிருந்த பாணர்கள், ஓரியின் அவ்விற்றிறனைக் கண்டதும் யாழை மீட்டி அவனைப் பாடினர். அத்தமிழிசை யைச் சுவைத்த ஓரி, தான் வேட்டையாடிய மானின் தசைப் புழுக்கலோடு தேனும் தந்ததோடு அம்மலையிடைப் பிறந்த பொன்னும் மணிக்குவையுந் தந்து தன்பெயரைச் சொல்ல நாணிச்சென்ற அத்தகு பெருந்தகையாளனாவான். (புறம் - 151). இவன் ஆய் போலப் புலவர்க்கு யானைக் கொடை கொடுத்த வள்ளல், ஓரியின் குதிரைக்கும் ஓரி என்பது பெயர். திருச்செங்கோட்டில் குதிரை மேலுள்ள ஓரியின் சிலை ஒன்று இருக்கிறது. இராசிபுரத்தில் கையில் வில்லுடன் ஓரி சிலை. இருக்கிறது. பவானிக்கு 6 கல் மேற்கில், ஓரிச்சேரி என்னும் ஊர் ஓரியின் நினைவுக் குறியாக உள்ளது. அது, இன்று ‘ஓரிச்சேரி’ எனத் திரிந்து வழங்குகிறது. அதியமான் அஞ்சியும் ஓரியும் நண்பர்களாக இருந்து வந்தனர். முன்பு அதியமானிடம் தோற்றோடிய காரி, தகடூர் நாட்டின் மீது படையெடுக்கும்படி பெருஞ்சேரலிரும் பொறையைத் தூண்டினானென்பதை, அதியமான் வரலாற்றில் கண்டோம். முதலில் கொல்லி மலையில் நடந்த போரில், அதியமானும் ஓரியும் சேர்ந்தே சேரனையும் காரியையும் எதிர்த்தனர். காரி ஓரியைக் கொன்றான். (அகம் - 209. நற்.-320). 4. குமணன் உடுமலைப்பேட்டையின் தென்கிழக்கில் 10 கல் அளவில் கொழுமம் என்னும் ஊர் இருக்கிறது. இது, குழுமம் எனவும் வழங்கும். இதற்குக் குழுமூர் என்ற வழக்கும் உண்டென்பது தெரிகிறது. (அகம் - 168). அவ்வூரை அடுத்துக் குதிரைமலை என்னும் மலை இருக்கிறது. அக்குதிரைமலை முன்னர் முதிரமலை என்று வழங்கிற்று. அப்பகுதிக்கு அன்று முதிரநாடு, அல்லது முதிர மலை நாடு என்பது பெயர். இது, பழனி வட்டத்து வட மேற்குப் பகுதியும், உடுமலை வட்டத்தின் தென்கீழ்ப் பகுதியும் கொண்டதாகும். அம்முதிரமலை நாட்டின் தலைநகர் முதிரம் என்பது, “நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன் மட்டார் மறுகின் முதிரத் தோனே.”(புறம் - 160) என்னும் புறப்பட்டால் பெறப்படும். மட்டு - கள், மறுகு- தெரு, இந்நகர், கொழுமத்தை அடுத்திருந்தது. முதிரி நகரின் ஒரு பகுதியே கொழுமம் ஆகும். குதிரைமலையில் தோன்றிவரும் குதிரையாறு, கொழுமத்தின் அருகில் ஓடுகிறது. சங்ககால வள்ளல்களி லொருவனான குமணன் அம்முதிர மலை நாட்டை ஆண்டு வந்தான். இவன் - பேகன், அதியன், ஓரி முதலிய சங்ககால வள்ளல்களுக்குப் பின்னர் இருந்தன. இவன் அளவு கடந்த தமிழ்ப் பற்றுடையவன்; தமிழை உயிரினும் பெரிதாக மதித்துப் போற்றி வந்தான்; உலகிலுள்ள கொடைக் குணம் அவ்வளவும் ஓருருவெடுத்து வந்தாற் போன்றவன். மிக்க வறுமையால் வாடிய பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் முதிரம் சென்று குமணனைப் பாடினார். புலவர் வறுமையால் வாடிய மேனியும், தளர்ந்த நடையும் உடையராய் இருத்தலைக் கண்ட பெருங்கொடை வள்ளலாகிய குமணன். உடனே அவர்க்குப் பரிசில் தந்தனுப்பாது, சில நாள் தன் அரண் மனையிலிலேயே அவரை இருக்கச் செய்து, நல்லுண வுண்பித்து உடல் வளம்பெறச் செய்து, பின்னர்ப் புலவர் விரும்பியவாறு பெரும் பொருளொடு. ஓர் யானையையும் பரிசிலாகக் கொடுத்தான். புலவர் அப்பொருளை யானை மேலேற்றித் தாமும் ஏறிக்கொண்டு, பெருஞ்செல்வர் போலச் சென்றனர். (புறம் - 159, 160, 161) என்னே குமணனது பெருந்தகைமை! குமணனுக்கு இளங்குமணன் என்ற தம்பியொருவன் உண்டு. அவன் மிகவும் கொடியவன்; அழிந்தொழிந்து போன கள்ளிப் பழத்துடன் பிறந்த முள்ளைப் போன்றவன். அண்ணனது புகழ் கண்டு பொறாமை கொண்ட அவன். குமணனது நாட்டைக் கவர்ந்து கொண்டதோடு. அவனைக் கொல்லுதற்கும் முயன்று வந்தான். அதையறிந்த குமணன், நாட்டை விட்டுச் சென்று ஒரு காட்டில் வாழ்ந்து வந்தான். பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் முதிரஞ் சென்றார்; குமணனை நாட்டிற் காணாது காட்டிற் சென்று கண்டு பாடினார். அப்பாட்டின் பரிசாக. ‘என் தலையை வெட்டிக் கொண்டு போய் என் தம்பிக்குக் காட்டினால் வேண்டும் பொருள் கொடுப்பான். இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ எனத் தன் வாளை அவர் கையில் தந்து தலை தாழ்த்து நின்றான் குமணன். (புறம் - 165) புலவர், அவ்வாளை மட்டும் வாங்கிக்கொண்டு முதிரஞ் சென்று, இளங்குமணனுக்கு அவ்வாளைக் காட்டி, நடந்தது கூறித் தம் புலமை நலத்தால் அவனுக்கு நல்லறிவு உண்டாகும் படி செய்து, குமணனை அழைத்து வந்து, பழையபடி நாட்டில் வாழுமாறு செய்தார். (புறம் - 161, 165) பெருந்தலைச் சாத்தனார், பவானிக்கு 9 கல் மேற்கில் உள்ள கவந்தப்பாடியை அடுத்து வடக்கில் உள்ள பெருந்தலை யூரினர். கொடைமடம் பட்ட குமணனும், கொடியனை நல்லனாக்கிய சாத்தனாரும் கொங்கர்களென்பதில். கொங்கு நாட்டு மக்கள் பெருமையுறுவாராக, முதிரநகர் இன்றில்லை. அதன் ஒரு பகுதியாகிய கொழுமத்தை, அவ்வூர் மக்கள் குமணநகர் என்று பெருமையோடு கூறிக் கொள்கின்றனர். 5. கடிய நெடுவேட்டுவன் கொங்கு நாட்டின் தெற்கெல்லையாகத் தென்கோடியில் உள்ளது கோடை மலை. இது, பழனிமலைத் தொடரின் தென்கோடியாகும். கொங்கு நாட்டைச் சேர்ந்த இக்கோடை மலை, இன்று கொடைக்கானல் என்று வழங்குகிறது. இது வளம்பொருந்திய ஒரு மலைநாடாகும். இக்கோடைமலையின் வட சாரலின் அடிவாரத்தில், கடியம் என்னும் ஊர் இருந்தது. அது, கோடைமலை நாட்டின் தலைநகர் ஆகும். அவ்வூரில் நெடுவேட்டுவன் என்ற கொங்கு வேளிர் குடித்தலைவன் ஒருவன் இருந்தான். கடியம் என்னும் அவ்வூர்ப் பெயரோடு சேர்த்து. அவன் கடிய நெடுவேட்டு வன் என அழைக்கப்பட்டு வந்தான். அக்கோடைமலை நாட்டின் தலைவன் இக்கடிய நெடுவேட்டுவனேயாவன். இவனைப் போலவே பிற்காலத்தே தன் பெயரோடு சேர்த்து அழைக்கப்பட்ட, கடிய நன்னியார் என்னும் புலவர் பிறந்து விளங்குதற்கு இடமாக விளங்கிற்று இவ்வூர். இக்கடிய நன்னியார் செய்த யாப்பிலக்கணத்தை, தொல்காப்பிய உரை யாசிரியராகிய பேராசிரியரும் (தொல். செய்-161), யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் (யாப். 55) தங்கள் உரைகளில் எடுத்தாண்டுள்ளனர். இக்கடிய நெடுவேட்டுவன் பெருவீரன்; அதற்கேற்ற கொடைக்குணமும் வாய்க்கப் பெற்றவன்; பாடிச் சென்ற புலவர் கட்கு வாரி வழங்கித் தமிழ் வளர்த்து வந்த தகையாளன். குமணனைப் பாடிப் பரிசில் பெற்றுச் சிறப்பெய்திய பெருந்தலைச் சாத்தனார், ஒருகால் இக்கடிய நெடுவேட்டு வனைக் காணச்சென்றார். நெடுவேட்டுவன் அவரை அன்போடு வரவேற்றுப் போற்றி, அவரோடு அளவளாவினான். ஆனால், பரிசில் கொடுக்காது கால நீட்டித்து வந்தான். அவன் கருத்தறியாது வருத்தமுற்ற சாத்தனார். ‘கோடைப் பொருந! நிறைந்த செல்வத்தையுடைய மூவேந்தராயினும் விருப்பமின்றி ஈதலை யாங்கள் விரும்போம். நின்பால் வரும் பரிசிலர், கடலின்பால் சென்ற முகில் நீரின்றிச் செல்லாதவாறு போலப் பரிசிலின்றிச் செல்வது கண்டிலேன். யான் இன்று பரிசிலின்றி வறிது செல்லுமாறு செய்தனை’ என்ற கருத்தமைந்த ஒரு பாடலைப் பாடினார். (புறம் - 205). புலவரைப் பிரிய மனமில்லாது பரிசில் நீட்டித்த வள்ளல், புலவர் மகிழுமாறு பெரும் பரிசில் நல்கினான். என்னே கடியநெடுவேட்டுவனின் தமிழ்ப்பற்று! 6. நன்னன் முன்னர்க் கொண்கான நாட்டு நன்னன் வரலாற்றினைக் கண்டோம். அந் நன்னன் வேண்மான் மரபினர், தமிழகத்தின் பல பாகங்களிலும் பரவி, அங்கங்கே உள்ள சிறு நாடுகளை ஆண்டு வந்தனர். அம்மரபினனான நன்னன் சேய் நன்னன் என்பான், திருவண்ணாமலைக்கு மேற்கிலுள்ள செங்கண்மா என்னும் ஊரிலிருந்து, பல்குன்றக் கோட்டத்தை ஆண்டு வந்தான். பத்துப்பாட்டி லொன்றான மலைபடுகடாத்தின் பாட்டுடைத் தலைவன் இவனே. இங்ஙனமே, அக்கொண்கானத்து நன்னன் மரபில் வந்த ஒருவனான நன்னன் என்பான், கொங்கு நாட்டுப் பொள்ளாச்சிக்கு அண்மையிலுள்ள ஆனைமலைப் பகுதியை ஆண்டு வந்தான். இந்த நன்னன் இருந்தாண்ட ஊர் - நன்னனூர் என்று வழங்கியது. இன்றும் அப்பகுதியில் - நன்னன் பாறை, நன்னன் மூக்கு என்னும் பெயர் கொண்ட ஊர்கள் பல இருப்பதே இதற்குச் சான்றாகும். ஆனைமலைச் சோமேசுவரர் கோயில் கல்வெட்டில் நன்னனூர் என்பது குறிக்கப்பட்டுள்ளது. பாலக்காட்டின் கீழ்ப்பகுதியும் இந்நன்னன் ஆட்சிக்குட்பட்டிருந்தது. (ஒளவை. சு.து.சேரமன்னர் வரலாறு). இவன், கொண்கானத்து நன்னன் காலத்தவன்; மிக்க வீரமுடையவன்; புலவர் பாடும் புகழுடையவன். இவனொரு பழங்கொங்கன் என்பதை அறிக. “நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி பொன்னணி வல்விற் புன்றுறை” (அகம் - 44) என்னும் அகப்பாட்டில் குறிக்கப் பெறும் வேளிருள், ‘நன்னன்’ என்பான் இவனே, இவ்வகப்பாட்டிற் குறிக்கப் பெற்ற வேளிர்கள் ஒருங்குகூடி, கழுமலம் என்ற இடத்தில் நடந்த போரில், பெரும்பூட் சென்னி என்னும் சோழன் படைத் தலைவனான பழையன் என்பானைப் பொருது கொன்றனர். அது கண்ட சோழன் வெகுண்டு இவர்களோடு பொருது வென்றனன். (அகம் - 44). இந் நன்னன், சேர நாட்டின்மேற் படையெடுத்துப் பாலக் காட்டுக் கணவாய் வழியாகச் சென்று, பாலக்காட்டுப் பகுதியையும், அதன் தெற்கில் அதை அடுத்திருந்த பூமி நாட்டையும் பிடித்துக் கொண்டனன். அது கண்ட களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் (72 - 97) என்பான் பெரும்படை யுடன் வந்து, நன்னனை வென்று தன்னாட்டை மீட்டுக் கொண்டனன். (பதிற். 4-பதிகம்). இந்நன்னன் மரபினர் அப்பகுதியைப் பல தலைமுறை ஆண்டு வந்தனர். 7. பூந்துறை 44வது அகப்பாடலில் காணும், புன்றுறை என்னும் வேளிர் மரபினர், கொங்கு இருபத்து நான்கு நாடுகளில் ஒன்றான மேல் கரைப் பூந்துறை நாட்டின் தலையூரான பூந்துறையிலிருந்து அப்பகுதியை ஆண்டு வந்தனர். அதனால், அவ்வூர் புன்றுறை எனப் பெயர் பெற்றது. புன்றுறை என்பது, பூந்துறை எனத் திரிந்து வழங்குகிறது. (ஒளவை. சு.து.சேர மன்னர் வரலாறு). கொங்கு நாட்டின் உள்நாட்டுப் பிரிவு ஏற்பட்ட காலத்தி லிருந்தே, அவ்வூரும், அந்நாடும் பூந்துறை என்றே வழங்கி வருகின்றன. பழைய கல்வெட்டுக்களும் அந்நாட்டைப் பூந்துறை நாடு என்றே குறிக்கின்றன. புன்றுறை என்பது, புன்துறை, புல் துறை - என்னும் இரு வகைப் புணர்ச்சியினும் உயர்பொருளும் குறிக்கவில்லை. ‘புன்மை’ என்பது, எவ்விடத் தும் உயர் பொருள் குறிப்பதாக இல்லை. எனவே, பூந்துறை, என்பதே, ஏடு பெயர்த் தெழுதுவோரால் ‘புன்றுறை’ எனத் தவறாக மாற்றி எழுதப்பட்ட தென்பதே பொருத்தமுடை யதாகும். பூந்துறை என்பது அழகிய நீர்த்துறை போன்ற பயன்பாடுடையவன் என்ற பொருளுடைய தாகும். 44வது அகப்பாட்டால், இப்பூந்துறை, வீரமும் புகழும் ஒருங்குடையவனென்பது விளங்குகிறது. 8. ஈந்தூர்க்கிழான் ஈரோட்டின் மேற்கில் 11வது கல்லில் பெருந்துறை என்னும் ஊர் உள்ளது. பெருந்துறைக்கு 3½ கல் தெற்கில் ஈங்கூர் என்ற ஊர் இருக்கிறது. ஈரோடு கோவை இருப்புப் பாதையில் உள்ள ஒரு புகைவண்டி நிலையம் ஆகும் இவ்வூர். இதன் பழம் பெயர் ஈந்தூர் என்பது. ஈந்து - ஈச்சமரம். ஈச்சமரம் மிகுதியாக இருந்ததால், இவ்வூர் இப்பெயர் பெற்றது. ஈச்சம்பள்ளி என்ற ஊரும் கொங்கு நாட்டில் உண்டு. ஈந்து என்பது வழக்கில் இல்லை. அது ஈஞ்சு, ஈச்சமரம் என்றே வழங்கி வருகிறது. ஈந்தூர் என்பது - ஈஞ்சூர் எனப் போலியாகி, இன்று அது, ஈங்கூர் எனத் திரிந்து வழங்குகிறது. இவ் வீங்கூர்க் காணியாளர். ஈஞ்சன் குலத்தினராக இருப்பதே. ஈந்தூர் - ஈஞ்சூராகி, அது ஈங்கூர் ஆனதற்குச் சான்றாகும். சங்க காலத்தே இவ்வூரில், ஈந்தூர்க் கிழான் என்னும் வேளாண்குலச் செல்வனொருவன் இருந்தான். அவன் வீரமே உருவானவன்; போர்த் தொழிலில் தன்னிகரற்றவன்; போர் செய்வதையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவன். அதனால் அவன், மருந்துக்காகப் பட்டை வெட்டப்பட்ட மரத்தைப் போல, போரிற்பட்ட வாள் வடுக்கள் ஒன்றோ டொன்று விரவிப் பொலிவுற்ற யாக்கையை யுடையவனாக விளங்கினான். (புறம் - 180) பழந்தமிழ்ச் செல்வர்கட்குரிய கொடைக்குணம் இவன் இயல்பாக உடையவன்; ஆனால், வரையாது வாரி வழங்கும் அத்தகு பெருஞ் செல்வம் உடையவனல்லன்; எனினும், இரப் போர்க்கு இல்லையென்று சொல்லும் இழிகுணம் உடை யவனும் அல்லன். இவன் பேரரசர்க்குப் படைத்துணையாகி, அதனால் வரும் பொருளைக் கொண்டு பரிசில் வழங்கும் பான்மையுடையவனாக இருந்தான். இவ்வீந்தூர்க் கிழானிடம் வீரமும் புகழும் பின்னிப் பிணைந்து பிரிக்க முடியாதவாறு அமைந்திருத்தலை எண்ணி இன்புறுக. கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர், இவன் போர்த் திறத்தையும் கொடைத் திறத்தையும் ஒரு பாணன் கூற்றில் வைத்து, ‘பாண்பசிப் பகைவன் ஒருவன் ஈந்தையில் உள்ளான்; எம்மொடு வருக, யாம் சென்று அவனை இரப்போமாயின், அவன் தன்னூர்க் கொல்லனை வரவழைத்து, அவனுக்கு நம் உண்ணா வயிற்றினைக் காட்டி, ‘உடனே வேல்வடித்துக்கொடு; யான் சென்று போர் புரிந்து பொருள் கொணர்ந்து, இவர்தம் பசிதீர்த்தல் வேண்டும்’ என்று, இவன் அக்கொல்லனை இரப்பான்’ (புறம் - 180) என்று சிறப்பித்துக் கூறுதலை அறிந்தின்புறுக. 9. கொண்கானங் கிழான் சேல மாவட்டத்து இராசிபுர நாட்டில் கொங்கண மலை என்னும் ஒரு மலை இருக்கிறது. இது இராசிபுரத்தின் 2 கல் மேற்கில் உள்ளது. கொண்கானமலை என்பது, அம்மலையின் இலக்கிய வழக்கு. இது பற்றிப் பழங்கொங்கு நாட்டுக் கொண்கான வரலாற்றின்கண் விளக்கப்பட்டுள்ளது. கொங்கணர் என்னும் சித்தர், இம்மலையிலிருந்து தவஞ்செய்துதான் அப்பெயர் பெற்றார். இம்மலைசூழ் பகுதி - கொண்காண நாடு எனப்படும். சங்க காலத்தே, இக்கொண்கான நாட்டில், கொண கானங் கிழான் என்னும் வேளாண் குடிச் செல்வனொருவன் இருந்தான். அவன் பெருஞ்செல்வன் அல்லன். எனினும், பெருங் கொடைக்குணமும், அதற்கேற்ற தாளாண்மையும், தோளாண் மையும் உடையவனாக இருந்தமையால், புலவர் பாடும் புகழுடையோனாக வாழ்ந்து வந்தனன். ‘எறிபடைக் கோடா ஆண்மை’ (புறம் - 154) என்பதால், இவனது பேராற்றலுடை மை பெறப்படும். இவனைப் பார்த்தவுடன், பாணரது மண்டை என்னும் உண்கலம், ஞாயிற்றின் ஒளியைக் கண்ட நெருஞ்சிப்பூப் போல மலரும் எனவும், தமக்குரிய கடனைத் தாம் தவறாதே பெறலாம் என்னும் கருத்தால், இரவலர் இவன் குன்றத்தைச் சூழ்ந்திருந் தனர் எனவும் (புறம் - 155, 156), மோசிகீரனார் என்னும் புலவர், இவனது கொடைச் சிறப்பினைப் பாராட்டுகிறார். ‘தமக்குரிய கடனைத் தாம் தவறாதே பெறலாம்’ என்பது, இவன் இல்லையென்னாது கொடுக்கும் வள்ளியோன் என்பதைக் குறிக்கும். 10. விச்சிக்கோ கொங்கு நாட்டுக் கொல்லி மலையின் வடகிழக்கில் அதன் தொடராக உள்ளது பச்சை மலை என்பது. அதன் பழம் பெயர்- விச்சிமலை என்பது. கொல்லிமலை நாடு போன்று அஃதும் ஒரு மலைநாடு. குறும்பூர் என்பது அந்நாட்டின் தலைநகர். (குறுந் - 328). கொல்லிமலை நாட்டை வல்வில் ஓரி மரபினர் ஆண்டுவந்தது போல, அவ்விச்சி மலைநாட்டை விச்சிக்கோ மரபினர் ஆண்டு வந்தனர். அம்மலையின் கீழ்பால் அடிவாரத்தில், விச்சியூர் என்ற ஊரும் இருந்தது. இவ்விச்சிக்கோவுக்கு இளவிச்சிக்கோ என்ற தம்பியொருவன் உண்டு. அதனால் பிற்காலத்தே அவ்வூர் பெருவிச்சியூர், சிறுவிச்சியூர் என இரண்டாகப் பிரிந்திருந்தது. பெருவிச்சியூர் மறைந்துவிட்டது. சிறுவிச்சியூர் இன்று சிறுவாச்சூர் என்று திரிந்து வழங்குகிறது. இவ்விச்சிக்கோ கொங்கு வேளிர் குடிச்செல்வன்; வீரமும் அதற்கேற்ற கொடைக் குணமும் ஒருங்கே உடையவன்; புலவர் பாடும் புகபடையோன். ஒருகால் குறும்பூர்ப் புறத்தே இவ்விச்சிக்கோ தன் பகைவரோடு பொருதபோது, அப்போர்க் களத்தே இருந்த பாணர்கள் போரின் கடுமையைக் கண்டு, ‘யார் வெல்வர், யார் தோற்பர்’ என்னும் ஐயத்தால், இருபடைப் பக்கமும் மாறி மாறிப் பார்ப்பதைக் கண்ட அக்குறும்பூர் மக்கள், தங்கள் தலைவனின் போர்த்திறத்தை வியந்து ஆரவாரம் செய்தனர் எனப் பரணர் என்னும் புலவர் பெருமானால். “வில்கெழு தானை விச்சியர் பெருமகன் வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர் புலிநோக் குறழ்நிலை கண்ட கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே.” (குறு-328) எனப் பாராட்டப் பெற்ற அத்தகு போர்த்திறம் உடையவன் இவ்விச்சிக்கோ. முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளலான பறம்பிற் கோமான் பாரி இறந்தபின், பாரியின் நண்பரான கபிலர் என்னும் புலவர் பெருமான், பாரியின் மகளிரை அழைத்துக் கொண்டு இவன்பால் வந்து, ‘விளங்குமணிக் கொடும்பூண் விச்சியர் கோவே! அடங்கா மன்னரை அடக்கும் மடங்கா விளையுள் நாடு கிழவோயே இவர் முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளலாகிய பாரியின் மகளிர். யானோ பரிசிலன். நீயோ பகைவரை வெல்லும் வாள்வலியுடையவன். ஆதலால், நினக்குயான் கொடுப்ப இவரைக் கொள்வாயாக’ (புறம் - 200) என வேண்டினர், ஏனோ இவன் அம் மகளிரை மணக்க விரும்பவில்லை. அதன் பின்னரே கபிலர், இவ்விச்சி நாட்டை அடுத்துக் கிழக்கில் இருந்த மலாட்டு (நடுநாடு) மன்னன் மலையமான் திருமுடிக் காரியின் மைந்தர்க்கு அம்மகளிரை மணஞ்செய்து கொடுத்தனர். பெருஞ்சேரலிரும்பொறை என்னும் சேரமன்னன் கொங்கு நாட்டின் மேற் படையெடுத்து வந்து, தகடூர் அதியமானைப் பொருது கொன்றதாக முன்பு கண்டோம். பெருஞ்சேரலிரும் பொறைக்குப் பின், அவன் மகன் இளஞ்சேர லிரும்பொறை (132- 148) சேரநாட்டு மன்னனானான். அவனும் கொங்கு நாட்டின் மேற் படையெடுத்து வந்து, இவ்விச்சிக் கோவை வென்றதாகப் பதிற்றுப்பத்துக் கூறுகிறது. (9.பதிகம்). சங்க இறுதிக் காலத்துச் சேரமன்னர் ஒவ்வொருவரும் கொங்கு நாட்டின் மேற் படையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 11. தாமான் தோன்றிக்கோன் கொங்கு நாட்டுக் கரூர்க்குப் பக்கத்தே, தாந்தோன்றி மலை என்ற மலை இருக்கிறது. அதன் பழம் பெயர் - தோன்றி மலை என்பது. சங்க காலத்தே, தாமான் தோன்றிக் கோன் என்பான், அத்தோன்றிமலைப் பகுதியின் தலைவனாக இருந்தான். இவன் இயற்பெயர் தாமன் என்பது. அது, தாமான் எனத் திரிந்து வழங்கலானது. அத்தோன்றி மலை, இத்தலைவன் பெயரொடு சேர்த்து, ‘தாமான் தோன்றி மலை’ என வழங்கி வந்தது. தாமான் தோன்றி மலை என்பதே, பிற்காலத்தே தாந்தோன்றி மலை எனத் திரிந்து வழங்கலானது. இத்தோன்றிக்கோன், கொங்கு வேளாளப் பெருங்குடிச் செல்வன்; அச்செல்வச் சிறப்புக்கேற்ற கொடைக்குணமும் தமிழ்ப்பற்றும் ஒருங்கமையப் பெற்றவன். இவன் காலத்தே, ஐயூர் முடவனார் என்னும் புலவ ரொருவர் இருந்தார். அவர், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்பால் (98 - 135) பேரன்புடையவர்; அவ்வள வனையன்றிப் பிறரைப் பாடுவதில்லை எனவும், அவன் பாலன்றிப் பிறர் எவர்பாலும் ஒன்று வேண்டிச் செல்வதில்லை எனவும் உறுதி பூண்டவர். புலவர் ஒருகால் கிள்ளிவளவனைக் காணச் சென்றார். அவர் முடவராதலின் வண்டியில் செல்வதுதான் வழக்கம். உறையூர் நோக்கிச் செல்லும்போது, வண்டி எருதுகளில் ஒன்று களைத்துத் துவளை பாய்ந்து வண்டியிழுக்க முடியாத நிலையை அடைந்துவிட்டது. மெல்ல மெல்லத் தள்ளிச் சென்று பக்கத்தே இருந்த தோன்றி மலையை அடைந்தார். வண்டிமாடு அவ்வாறானது பற்றிப் புலவர் மிகவும் வருந்தினார். புலவரின் வருத்தங்கண்ட அங்கிருந்தோர், ‘தோன்றிக் கோனிடம் கேட்டால் நல்ல எருது கொடுப்பான். தாங்கள் அவனிடம் சென்றால் போதும், கேட்க வேண்டிய தில்லை. செல்லுங்கள்’ என்றனர். புலவர் அவ்வாறே தோன்றிக் கோனிடம் சென்றார். பருந்துக்கு முன்னரே நிழல் செல்வது போல, புலவர் தோன்றிக் கோனிடம் செல்வதற்கு முன்னரே அச்செய்தி தோன்றிக் கோனிடம் சென்றுவிட்டது. அவன் ஐயூர் முடவனாரின் புலமைச் சிறப்பினை முன்னமே அறிந்தவனாதலின், அவரை அன்புடன் வரவேற்று. ‘எனக்கு ஒரு வண்டி மாடு வேண்டும்’ எனப் புலவர் கேளா முன்னரே. அவர் குறை பாட்டை அறிந்த அவன், ஓரெருது வேண்டி வந்த அவருக்குப் பல ஆக்களையும், சிறந்த காளைகள் பூட்டிய ஓர் இரட்டை மாட்டு வண்டியையும் நல்கிப் பெருமைப் படுத்தினான். புலவர், தோன்றிக் கோனின் தமிழ்ப் பற்றினையும் கொடைத் திறத்தினையும் பலபட பாராட்டி (புறம் - 399) விடை பெற்றுச் சென்றார். புலவர், தம்மூரிலிருந்து கரூர் வழியாகத் திருச்சி (உறையூர்) சென்றி ருப்பதால், ஐயூர் கொங்கு நாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரிகிறது. 12. மோகூர்ப் பழையன் கொங்கு நாட்டுச் சேல மாவட்டத்து நாமக்கல்லுக்கு 11 கல் தெற்கில், காவிரியின் வடகரையில் மோகனூர் என்னும் ஊர் இருக்கிறது. கரூர்க்கு நேர் வடக்கில் காவிரியின் தென் கரையில் உள்ள வாங்கல் என்ற ஊர்க்கு எதிர்க்கரையில் உள்ளது இவ்வூர். இதன் பழம் பெயர் மோகூர் என்பது. மோகூர் என்பதே, மோகனூர் எனத் திரிந்து வழங்கலானது. மோகனூர் என்பதன் இடையிலுள்ள ‘அன்’ சாரியையை நீக்கிவிட்டால் இரண்டும் ஒன்றே. மோகு, மோகன் என்னும் இரண்டும் ஒருவன் பெயர் எனினுமாம். வரகூர், வரகனூர் எனக் காண்க. இது, காவிரிக் கரையில் உள்ள மிக்க வளம் பொருந்திய ஊராகும். “மழையொழுக் கறாஅப் பிழையா விளையுள் பழையன் மோகூர்.” (மதுரைக் - 507-8) எனக் காண்க. மழை ஒழுக்கு அறா - மழை பெய்யும் பருவத்தே பெய்கின்ற. பிழையா விளையுள் - தப்பாத விளை வினை யுடைய, மோகூர், இது, வலிமிக்க அரண் பொருந்திய ஊராகும். இவ்வூரின் காவல் மரம் - வேம்பு. இம்மோகூர் நாடு - கொங்கு நாட்டின் தென்கீழ்ப் பகுதி யான கரூர் குளித்தலை வட்டங்களின் வட பகுதியை உள்ளிட்டு, மேற்கே நொய்யாலாற்றங் கரைப் பகுதி சேரக் காங்கயம் வரை பரவியிருந்தது. நாமக்கல் வட்டத்தின் தென்கீழ்ப் பகுதி இந் நாட்டைச் சேர்ந்ததாகும். இந்நாடு முதலில் மோகூரைச் சூழ்ந்ததாக இருந்து பின் பெருகியதாகும். இம்மோகூர் நாட்டைப் பழையன் என்னும் கொங்கு வேளிர் மரபினர் ஆண்டு வந்தனர். இப்பழையன் மரபு மிகமிகப் பழமையான மரபாகும். பழையன் என்பான் இம் மரபின் குடி முதல்வன் ஆவான். ‘மொய்வளஞ் செருக்கி மொசிந்து வரு மோகூர்’ (பதிற் - 49) என, இம்மரபினர் அவ்வூர்ப் பெயராலேயே குறிக்கப்படுவதால், அவ்வூரின் பழமையும் பெருமையும் விளங்கும். இப்பழையன் மரபினர், தம் நாட்டில் அங்கங்கே வலிமை வாய்ந்த கோட்டைகள் பல கட்டி நாட்டைப் பாதுகாத்து வந்தனர். கரூர், கொடுமுடிக்கு 8 கல் வடமேற் கிலுள்ள தலைய நல்லூர்க் கோட்டை முதலியன இம்மரபினர் - கட்டிய கோட்டைகளே, இவற்றுள் பழைய கோட்டை என்பதும் ஒன்று. ஈரோடு காங்கயம் வழியில், ஈரோட்டின் தெற்கில் 18வது கல்லில் உள்ள பட்டக்காரர் பழைய கோட்டையின் தென் கிழக்கே 5 கல் அளவில், பழைய கோட்டை என்னும் பழைய ஊர் இருக்கிறது. அவ்வூரை அடுத்து, அழிந்த கோட்டை மேடு இருக்கிறது. அது உள்ள இடம் இன்றும் கோட்டைக் காடு என்றே வழங்கி வருகிறது. இக்கோட்டை அப்பழையன் மரபினர் கட்டியதேயாகும். கட்டினவன் தன் பெயரையோ, தன் தந்தையின் பெயரையோ அதற்கிட்டு, பழைய கோட்டை என வழங்கியிருக்கிறான். குமரன் + கோட்டம் - குமர கோட்டம் என்பதுபோல, பழையன் + கோட்டை - பழைய கோட்டை என்றாயது. பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபினர், 150 ஆண்டு கட்கு முன் வரை இப்பழைய கோட்டை யில்தான் இருந்து வந்தனர். அதன்பின், நொய்யலாற்றின் தென்கரையில் இன்றுள்ள பழைய கோட்டையின் வடபால், அவ்வாற்றின் வடகரை யிலுள்ள தோட்டத்தில் இருக்கும் கட்டிடத்தில் குடியேறினர். அதற்குச் செங்குளம் என்று பெயர். பழைய கோட்டைப் பண்ணையம் பெரும்பாலும் நொய்யலின் தென்கரையில் இருந்ததால், அதன் பின்னர் இன்றுள்ள அரண்மனை கட்டி ஆங்குப் போந்தனர். இன்றையப் பழைய கோட்டையினையும், பட்டக்காரரையும் - அச்சுற்றுப்புற மக்கள் இன்றும், செங் குளத்து அரண்மனை, செங்குளத்து எசமாங்கள் என்றே அழைத்து வருகின்றனர். செங்களம் என்பதே, செங்குளம் எனத் திரிந்து வழங்குகிறது. இப்பழைய கோட்டைச் சர்க்கரை மரபு, அம்மோகூர்ப் பழையன் மரபின் வழிவந்ததாகவும் இருக்கலாம். இப் பழையன் மரபு, வீரமும் புகழும் ஒருங்கே உடைய பழமையான கொங்கு வேளிர் மரபாகும். இம்மரபினன் ஒருவன், முன்னர்த் தமிழ் நாட்டின் மேற்படையெடுத்து வந்த மோரியரை முதுகு காட்டி ஓடும்படி செய்ததே, இம் மரபினரின் வீரப் புகழுக்கு எடுத்துக் காட்டாகும். சேரன் செங்குட்டுவன் காலத்தே (125-180) இருந்த இம்மோகூர்ப் பழையன் ஒப்பற்ற பெருவீரனாக இருந்தான். சங்க இறுதிக் காலத்துச் சேர மன்னர் ஒவ்வொருவரும் கொங்கு நாட்டின்மேற் படையெடுத்துள்ளனர். கொங்கு நாடு சேரர் ஆட்சிக்குட்படுதல் தங்கட்குத் தீமை தருமெனக் கண்ட சோழ பாண்டியர் கொங்கு மன்னர்க்கு உதவி வந்தனர். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் (72-97). அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோனான, அதியமான் நெடுமிடல் அஞ்சியை வென்றதாகவும் (பதிற் -32), பெருஞ்சேரலிரும் பொறை (115 - 132) கொல்லிமலை வல்வில் ஓரியோடு, அதியமான் நெடுமான் அஞ்சியைக் கொன்றதாகவும், (பதிற் - 8 - பதிகம்). பெருஞ்சேரலிரும்பொறையின் மகனான இளஞ்சேரலிரும் பொறை (132-148). கொல்லிமலையை அடுத்து அதன் வடக்கிழக்கில் உள்ள விச்சிமலை நாட்டு விச்சிக்கோவை வென்றதாகவும் (பதிற் - 9 - பதிகம்) பதிற்றுப் பத்துக் கூறுகிறது. வடகொங்கில் காவிரியின் கீழ்பாக்கத்திலிருந்து தகடூர் அதியமான் மரபினரையும், கொல்லிமலை வல்வில் ஓரி மரபினரையும், விச்சிமலை விச்சிக்கோ மரபினரையும் சேரர்கள் வென்றும் கொன்றும் அடக்கியதால், அவற்றின் தெற்கில் இருந்த மோகூர்ப் பழையனை வெல்லச் சேரன் செங்குட்டுவன் (125-180) காலம் பார்த்துக்கொண்டிருந்தான். அதற்கேற்ப, செங்குட்டுவனுக்கு நண்பன் ஆகிய அறுகை என்னும் குறுநில மன்னன் செங்குட்டுவன் தனக்கு நண்ப னென்று சொல்லிக் கொண்டு, அப்பேரரசன் துணை தனக் கிருப்பதை எண்ணிச் செருக்குற்று, படையெடுத்து வந்து மோகூரை முற்றுகையிட்டான். ஆனால் அவன், பழையனால் முறியடிக்கப்பட்டுத் தோற்றோடி ஒளிந்து கொண்டான். அறுகை அவ்வாறு தன் பெயரைக் கூறிக் கொண்டு வந்து தோற்றோடி ஒளிந்து கொண்டது தனக்கு இழிவாகுமெனக் கொண்டு, செங்குட்டுவன் மோகூர்மேல் படையெடுத்து வந்து பழையனை வென்று மோகூர் அரணை அழித்தனன் என்பது. “நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை சேண னாயினும் கேளென மொழிந்து புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற் கரண்கள் தாவுறீஇ அணங்கு நிகழ்ந்தன்ன மோகூர் மன்னன் முரசங் கொண்டு நெடுமொழி பணித்தவன் வேம்புமுதல் தடிந்து” (பதிற்-44) என்னும் பதிற்றுப்பத்தால் தெரிகிறது. உழிஞை-மதில் முற்றுவோர் சூடும்பூ. சேண் - தொலைவு. சேணன் - தொலை விலுள்ளவன். அதாவது, சேரநாட்டு வஞ்சிக்கும் அறுகையின் ஊர்க்கும் நெடுந்தொலை வென்பது. கேள் -நட்பு. களையாப் பூசல் - நீக்க முடியாத பழிப்புரை. புலம் பெயர்ந்து ஒளித்த - தன் நாட்டினின்றும் ஓடி ஒளித்துக் கொண்டதாலாகிய- பூசல் என்க. இதனால், பழையன் படை அறுகையைத் துரத்திச் சென்ற தென்பது பெறப்படுகிறது. பூசல் - பழிப்புரை. இதற்கு மேல் உள்ள செய்தி மோகூரில் நடந்தது. அப்பழியைத் துடைப்பதைக் காரணமாகக்கொண்டு செங்குட்டுவன் மோகூர் மேல் படையெடுத்தனர். அதையறிந்த பழையன், சோழ பாண்டியரும் பிறவேளிரும் துணை வர எதிர் சென்று, முன்னர்க் கண்ட செங்களம் என்னும் இடத்தில் செங்குட்டுவனை எதிர்த்தனன். இக்கொங்கர் செங்களப் போரில் செங்குட்டுவன் வெற்றி பெற்றனன். இது, “வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து மொய்வளஞ் செருக்கி மொசிந்துவரு மோகூர் வலம்படு குழுஉநிலை அதிர மண்டி” (பதிற் - 49) என்பதால் பெறப்படுகிறது. ஒன்று மொழிந்து- ஒன்று கூடிப் பேசி. மொய்வளம் செருக்கி-மிக்க படைவலியால் மனஞ் செருக்கி, மொசிந்து வரு மோகூர் - அவரோடு கூடி வருகின்ற மோகூர்ப் பழையன். மொசிந்து - கூடி. வலம்படு குழுஉநிலை அதிர மண்டி-வெற்றி தரும் அப்படைத் திரள் சிதறும்படி தாக்கி, வென்றனன் என்க. இது, கொங்கர் செங்களத்து நடந்த போராகும். மடத்துக் குளம், சிரவண வெண்குளம், சாம்பற்குளம் என்னும் கொங்கு நாட்டு ஊர்கள் போல, செங்குளம் என்பதே, ஏடு பெயர்த்தெழுதுவோரால் இடத்திற் கேற்பச், செங்களம்’ என எழுதப்பட்டதெனினுமாம். குளத்தின் பெயரே ஊர்க் கான தால், வெண்குளம் என்பதுபோல, இது செங்குளம் என்பதாம். “நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக் கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி பகைப்புறத்துத் தந்தன ராயினும்” (சிலப். 25: 125.7) என. (இளங்கோவடிகளும் கூறுதல் காண்க.) இதன் பின்னரே, செங்குட்டுவன் மோகூர் சென்று, அரண் களை அழித்து முரசங் கொண்டு வேம்பு முதல் தடிந்தனன் என்பது. இதை, “பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு வேம்புமுதல் தடிந்த ஏந்துவாள் வலத்து” (சிலப். 26:124-5) என, இளங்கோவடிகளும் கூறுமாறறிக. முதல் - அடிமரம். களையாப் பூசலின் பொருட்டு, செங்குட்டுவன் படை யெடுத்துச் சென்று, செங்களம் என்ற இடத்ததே, இருபெரு வேந்தர், வேளிருடன் கூடி வந்தெதிர்த்த பழையனைவென்று, பின் மோகூர் சென்று, மோகூர்க் கோட்டையை முற்றி அழித்துக் காவல் மரமாகிய வேம்பினை வெட்டி, அதை முரசு செய்தற்கேற்றவாறு துண்டங்களாகத் தறித்து வண்டியிலேற்றி, மோகூர் மகளிர்களின் கூந்தல்களை அறுத்துக் கயிறாகத் திரித்துக் கட்டிப் பழையன் யானைகளையே எருதுகளாக வண்டியில் பூட்டிக் கொண்டு சென்றனன் என்பதாம். அக்கயிற்றால் வண்டியை இழுத்துச் செல்லுமாறு யானை களைக் கட்டி என்பது. “பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின் மூழாரை முழுமுதல் துமியப் பண்ணி வாலிழை கழித்த நறும்பல் பெண்டிர் பல்லிருங் கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டி” (பதிற். 5. பதிகம்) என்பது பதிற்றுப் பத்து, முரற்சி - கயிறு குஞ்சரம் - யானை. ஒழுகை - வண்டி. ‘வாலிழை கழித்த’ என்பதால், அப்போரில் பழையன் பட்டனன் என்று தெரிகிறது. ‘வாலிழை கழித்த பெண்டிர் கூந்தல்’ என்பதால், கணவனையிழந்த மகளிர் நகை அணிதல் இல்லை என்பதும், அன்னார் மொட்டையடித்துக் கொள்ளும் வழக்கம் தமிழரிடை இல்லை என்பதும் விளங்கும். வஞ்சியிலிருந்து புறப்பட்டுப் பாலக்காட்டுக் கணவாய் வழியாக மோகூர் செல்லும் நேர் வழியில் உள்ளது செங்களம் (செங்குளம்) என்பதை அறியவும். 13. கட்டி மரபு சிற்ப வேலைப்பாட்டில் உலகப் புகழ் பெற்றது தார மங்கல கைலாசநாதர் கோயில் சிற்பம். இச்சிற்பக் கோயிலை மும்முடிக் கட்டி, சீயால கட்டி, வணங்காமுடிக் கட்டி என்னும் தந்தை மைந்தன் பேரன் ஆகிய மூவர் கட்டி முடித்தனர். இக்கட்டி மரபு, சங்க காலத்திலிருந்து, கி.பி.17 ஆம் நூற்றாண்டு வரைக் கொங்கு நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்த கொங்கு வேளிர் மரபாகும். சங்க காலத்தே இக்கட்டி மரபினர், சத்திய மங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு, கிழக்கே காவிரியாறும், மேற்கே மேற்கு மலைச்சாரலும் எல்லையாக, பவானியாற்றின் வடகரைப் பகுதியை ஆண்டு வந்தனர். கொள்ளேகால் வட்டமும் கட்டி நாட்டி லடங்கும். “குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும்” (குறுந் - 11) என்னும் மாமூலர் வாக்கால், கி.மு. இரண்டாம் நூற்றாண் டிற்கு முன்னர் மைசூர் நாட்டின் ஒரு பகுதியும் இவர்தம் ஆட்சிக் குட்பட்டிருந்ததாகத் தெரிகிறது. பல்வேற்கட்டி நன்னாட்டு உம்பர் குல்லைக் கண்ணி வடுகர் முனையது மொழி பெயர் தேம் எனக் கூட்டுக. வடுகர்- தமிழ் நாட்டின் வடக்கில் உள்ளவர். உம்பர் - அப்பால். மொழி பெயர் தேம் - வேறு மொழி வழங்கும் நாடு. அன்று கன்னடமும் தெலுங்கும் தோன்றவில்லை. எனவே, கட்டி நாட்டின் வடக்கேயுள்ள வடுகர் நாட்டின் எல்லையான மொழி பெயர் தேம் எனக் கொள்ளுதல் வேண்டும். அசோகன் (கி.மு.273 - 232) கல் வெட்டு. இக்கட்டி மரபினரையே சத்திய புத்திரர் என்கின்றது என்பதை முன்பு கண்டோம். எனவே, இக்கட்டி மரபினர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தே அப்பகுதியை ஆண்டு வந்தனர் என்பது பெறப்படும். “வலிமிகு முன்பிற் பாணனொடு மலிதார்த் தித்தன் வெளியன் உறந்தை நாளவைப் பாடின் தெண்கிணைப் பாடுகேட் டஞ்சிப் போரடு தானைக் கட்டி பொராஅ தோடிய ஆர்ப்பினும் பெரிதே.” (அகம் - 226) என்னும் பரணர் கூற்றல், இக்கட்டி மரபினன் ஒருவன், பாணன் என்னும் குறுநில மன்னனோடு கூடி உறையூரை முற்றி, தித்தன் வெளியன் என்பானால் தோற்கடிக்கப்பட்ட தாகத் தெரிகிறது. இவன் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவன். கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்த இக்கட்டி மரபினன் ஒருவன், நன்னன் முதலிய வேளிர்களோடு கூடி, கழுமலம் என்னும் இடத்தில், பெரும்பூட் சென்னி என்னும் சோழனோடு பொருதனன் என்பது, “நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி பொன்னணி வல்விற் புன்றுறை யென்றாங் கன்றவர் குழீஇய அளப்பருங் கட்டூர்ப் பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக் கண்டது நோனான் ஆகித் திண்டேர்க் கணையன் அகப்படக் கழுமலந் தந்த பிணையலங் கண்ணிப் பெரும்பூட் சென்னி” (அகம் - 44). என்னும் அகப்பட்டால் தெரிகிறது. இக்கழுமலப் போரின் விளக்கத்தை, நன்னன் வரலாற்றிற் காண்க. கட்டூர் - பாசறை. நன்னன் முதல் கணையன் ஈறாகவுள்ளோர் கூடிப் பழையனைக் கொன்றனரென்க. “கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர் பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்து” (சிலப்.25:156-8) என்னும் இளங்கோவடிகள் கூற்றால், இம்மரபினன் ஒருவன் சேரன் செங்குட்டுவனால் (125-180) வென்றடக்கப்பட்டனன் என்பது பெறப்படும். கொங்கணர், கட்டியர் முதலிய தமிழர், கலிங்கர், வடவாரியரோடு கூடித் தமிழனாகிய செங்குட்டு வனை ஒரே களத்தில் எதிர்த்திராராகையால், இவர்கள் செங்குட்டுவனால் தனித்தனி வென்றடக்கப் பட்டவராவர். ‘வடவாரிய ரொடு’ என்பதிலுள்ள ஒடுவை, கொங்கணர் முதலியவற்றொடுங் கூட்டுக. கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் கங்கர் சத்தியமங்கலம் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர். அதன் பின்னர் இக்கட்டி மரபினர் தங்கள் தலைநகரைச் சேல மாவட்டத்துத் தாரமங்கலத்துக்கு மாற்றிக் கொண்டனர். (‘கங்கர்’ என்னும் தலைப்பைப் பார்க்க.) போராடு தானைக் கட்டி, பல்வேற்கட்டி, என்பதைத் தவிர, சங்ககாலத்திருந்த இம்மரபினர் பெயரொன்றும் தெரிய வில்லை. பிற்காலத்தே வேம்பன் கட்டி, இளமன் கட்டி, இம்முடிக்கட்டி, மும்முடிக்கட்டி, சீயாலகட்டி, வணங்கா முடிக் கட்டி, என்னும் ஒரு சில பெயர்கள்தாம் தெரிகின்றன. இக்கட்டி மரபினர், மூவரசர் கொடிகளாகிய புலிவிற் கெண்டையைத் தங்கள் கொடியாகக் கொண்டிருந்தனர். இம்மரபினரின் தமிழ்ப் பற்றுக்கு இஃதோர் சிறந்த எடுத்துக் காட்டாகும். இம்மரபினர், சத்தியமங்கலத்திலிருந்து தலை நகரைத் தாரமங்கலத்திற்கு மாற்றிக் கொண்ட பின்னர், தாரமங்கலத்தை அரசியலலுவலமாகக் கொண்டு, அதை அடுத்துள்ள அமரகுந்தி என்னும் நகரிலிருந்து கட்டி நாட்டை ஆண்டு வந்தனர். தாரமங்கலம் - ஓமலூர் வட்டத்தைச் சேர்ந்தது. இம்மரபினர் பிற்காலத்தே, நாட்டுப் பாதுகாப்புக்காக தாரமங்கலம், அமரகுந்தி, ஓமலூர், காவேரிபுரம், குளத்தூர், அந்தியூர், பவானி, தென்கரை, ஆற்றூர், தலைவாசல், இருக்கு வேளூர் (பேளூர்) ஆகிய ஊர்களில் திண்ணிய மண்கோட்டை கள் கட்டியிருந்தனர்; நெருஞ்சிப்பேட்டைக்குப் பக்கத்தில் காவிரியாற்றில் அணையொன்று கட்டிநாட்டை வளஞ் செய்திருந்தனர்; பாலைமலைத் தொடரிலுள்ள காவேரிபுரம், தொப்பூர்க் கணவாய்களின் வழியாய் வெளியார் தமிழகத்துட் புகாது பாதுகாத்து வந்தனர். பேகன் முதல் கட்டிமரபினர் ஈறாகக் கண்ட இவர்கள் சங்ககாலத் தமிழ் வளர்த்த கொங்கு நாட்டுத் தலைவர்கள், இன்னும் சங்க காலத்தே கொங்கு நாட்டில், புலவர் பாடும் புகழுடையோராய் எத்தனையோ இத்தகைய தலைவர்கள் இருந்திருப்பர். ஆனால், சங்ககாலப் புலவர்கள் பாடிய பாடல்களெல்லாம் நமக்குக் கிடைத்தில. கிடைத்த அளவில் சங்ககாலத் தமிழர் தலைவர்கள் பெருமையை அறிந்து இன்புறுகிறோம். இவர்களுள், அதியமான் மரபினர் தகடூரிலிருந்து சேல மாவட்டத்தின் வடபகுதியை ஆண்டு வந்தனர். கொல்லை மலைப் பகுதியை வல்வில் ஓரி மரபினரும். அதன் கீழ்ப் பச்சை மலைப் பகுதியை விச்சிக்கோ மரபினரும் ஆண்டு வந்தனர். கிழக்கே குளித்தலை, கரூரிலிருந்து மேற்கே காங்கயம் வரை மோகூர்ப் பழையன் மரபினர் ஆண்டு வந்தனர். கோவை மாவட்டத்தின் நடுப்பகுதியைப் பூந்துறை மரபினர் ஆண்டு வந்தனர். கிழக்கே காவிரிக்கும் மேற்கே நீலகிரிக்கும் இடைப் பட்ட வடபகுதியைச் சத்தியமங்கலத்திலிருந்து கட்டி மரபினர் ஆண்டு வந்தனர். பொள்ளாச்சி ஆனைமலைப் பகுதியை நன்னன் மரபினர் ஆண்டு வந்தனர். கொழுமம் பகுதியைக் குமணன் மரபினரும், பழனிப் பகுதியைப் பேகன் மரபினரும் ஆண்டு வந்தனர். கொங்கு நாட்டின் தென்கோடியான கோடை மலைப் பகுதியைக் கடிய நெடுவேட்டுவன் மரபினர் யார் என்பது தெரியவில்லை. அப்பகுதியை ஒருவர் கட்டாயம் ஆண்டிருக்க வேண்டும். மேலும், ஈந்தூர் கிழான், கொண்கானங் கிழான், தாமான் தோன்றிக்கோன் போன்ற இன்னும் எத்தனை யோ கொடை மடம் பட்ட கொங்குச் செல்வர்கள் சங்க காலத்தே கொங்கு நாடு முழுவதும் அங்கங்கே இருந்திருப்பர். இவர்களைப் போலவே கொடைமடம் பட்ட தலைவர் கள் பலர் பிற்காலத்தே கொங்கு நாட்டில் இருந்திருப்பர். அவர்களுள் ஒரு சிலர் வரலாறே நாம் அறிந்து இன்புறக் கொடுத்து வைத்துள்ளோம். சங்க காலத்தே பழமரம் நாடி வரும் பறவைகள் போலத் தமிழ்கத்தின் ஏனைப் பகுதிகளிலுள்ள புலவர் பெருமக்கள் கொங்கு நாட்டை நோக்கி வந்த வண்ணமிருப்பர். அன்று கொங்கு நாடு புலவர் பெருமக்களின் தொழிலகமாகத் திகழ்ந்து வந்தது. கொங்கில் எங்கு பார்த்தாலும் பரிசு பெற்றுச் செல்லும் புலவரையும் பாணரையும் பொருநரையும் கூத்தரையும் விறலியரையும் கூட்டங்கூட்டமாகக் காணலாம். சேரசோழ பாண்டிய தொண்டை நாடுகளை விடத் தமிழ் வளர்த்த பெருமை கொங்கு நாட்டையே சேரும் எனல் மிகையாகாது. பிற்காலத்தும் கொங்கு நாடு இந்நிலையினின்று மாறவில்லை என்பதை இனிக்காண்போம். 2. சங்கப் பிற்காலத் தலைவர்கள் 14. பழைய கோட்டைச் சர்க்கரை கொங்கு இருபத்து நான்கு நாடுகள் ஒவ்வொன்றும் ஒரு நாட்டுத் தலைவரின் இன ஆட்சியின் கீழ் இருந்து வந்தமையை முன்பு கண்டோம். பிற்காலத்தே, கொங்கு இருபத்து நான்கு நாட்டு வேளாண்குடி மக்களின் இனத் தலைவர்களாகப் பட்டஞ் சூட்டப் பெற்று, இனவொழுக்கச் சட்ட திட்டஞ் செய்து அவ்வின மக்களின் ஒற்றுமைக்கும் உயர்வாழ்வுக்கும் காரணமாக இருந்து வந்தவர் பட்டக்காரர் எனப்படுவர். கொங்கு வேளாண்குடி மக்கள் இவர்களைக் குலகுரு நிலையில் மதித்து வந்தனர். பழைய கோட்டை, காங்கயம், காடையூர், சங்கரண்டாம், பாளையம் ஆகிய நான்கு பட்டக்காரர்களும் சென்ற தலைமுறை வரை அவ்வாறு பட்டஞ் சூட்டப் பெற்று இனநலஞ் செய்து வந்தனர். இவர்களுள், பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு பழம் பெருமை வாய்ந்த கொங்கு வேளாண்குடி மரபாகும். இக்குடி முதல்வனாக கரியான் சர்க்கரை என்பவன், பாண்டியன் படைத் தலைவனாக இருந்து, பாண்டி நாட்டின் மேற்படையெடுத்து வந்த உத்தமச் சோழனை (970-985) வென்றதால் பாண்டியன் மகிழ்ந்து, உத்தமக் காமிண்டன் என்ற பட்டப் பெயர் வழங்கி, ஏனைச் சிறப்புக்களுடன் காங்கய நாட்டுக் காரையூர்த் தலைவன் ஆக்கினதாகப் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபுப் பட்டயம் கூறுகிறது. பாண்டி நாடு உத்தமச் சோழன் ஆட்சியின் கீழ் இல்லாமை யால், இவன் பாண்டி நாட்டின்மேற் படையெடுத்துச் சென்று, பாண்டியனிடம் தோற்றிருக்கலாம். மிண்டன்-கெட்டிக்காரன். காமிண்டன் - மிகவுங் கெட்டிக்காரன், அதாவது, காத்தலில் வல்லவன் என்றபடி. ஒய்சள மூன்றாம் வீர வல்லாளன் ஈரோட்டுக் கல்வெட்டில் (கி.பி.1340), ஒரு நில தானத்தில் கையெழுத்திட்டவருள், வெள்ளோடு வீரசோழக் காமிண்டன் ஒருவன் என்பது காணப்படுவதால், காமிண்டன் என்பது, பெருவழக்குடைய தென்பது பெறப்படும். காரையூர் என்பது, பழைய கோட்டைக்கு ஒருகல் தெற்கில் உள்ளது. கரியான்ஊர் என்பதே, காரையூர் எனத் திரிந்தது. கரியான் நாடு, கரியான் காடு, கரியாக் கவுண்டன் புதூர் என்பன இதற்குச் சான்றாகும். இன்று இவ்வூர் - நத்தக் காரையூர் என்று வழங்குகிறது. பின் இங்கிருந்து இம்மரபினர் பழைய கோட்டைக்குச் சென்றனர். இதற்கு மேல், மோகூர்ப் பழையன் வரலாற்றில் காண்க. இம்மரபினர் குலதெய்வம் - பழைய கோட்டையில் உள்ள ஆனூரம்மன் ஆகும். பழைய கோட்டைச் சர்க்கரை மரபினர்க்கு - ஆனூர்ச் சர்க்கரை என்ற பெயரும் வழங்குவதால், பழைய கோட்டைக்கு ஆனூர் என்ற பெயரும் உண்டெனத் தெரிகிறது. ஆவூர் என்பது போல இது ஆனூர் ஆகும். ஆன்-மாடு. இது, ஆணூர் எனவும் திரிந்து வழங்குகிறது. சர்க்கரை, உத்தமக் காமிண்டன், மன்றாடியார் என்னும் பெயர்களை இம்மரபினர் வழிவழி மரபுப் பெயராக வைத்து வருகின்றனர். முதல் முதல் பட்டஞ் சூட்டப் பெற்றவர் - அழகர் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் (1246-1268) என்பவராவர். மன்றாடியார் - தலைவர். காங்கய இனம் என்னும் உலகப் புகழ் பெற்ற அழகிய மாடுகளை ஆயிரக்கணக்கில் வளர்த்து, அத்தகு புகழுக்குரிய தாக்கியவர் இச்சர்க்கரை மரபினரேயாவர். அம்மாடுகளைக் காங்கய இனம் என்பதை விடப் பழைய கோட்டை இனம் எனல் தகும். புலவர் பாடும் புகழுடைய இம் மரபினர் தாய்மொழிப் பற்றுத் தனிப் பெருமையுடையதாகும். 1. அழகன் சர்க்கரை (1330 - 1350) இவர், ஐந்தாவது பட்டக்காரர்; அளவு கடந்த தமிழ்ப் பற்றுடையவர். இவர் காலத்தே, தொண்டை நாட்டுக் குன்றத் தூரில், எல்லன் என்ற வள்ளலொருவன் இருந்தான். பழைய கோட்டைப் புலவரொருவர் குன்றை சென்று எல்லனைப் பாடினார். அவன் பரிசு கொடுக்க, புலவர் இடக்கையை நீட்டினார். ‘பரிசு பெறும் முறையைத் தாங்கள் அறிந்திலீரோ?’ என்றான் எல்லன். ‘அறிவேன்; ஆனூர் அழகன் சர்க்கரைபால் எப்போதும் ஏற்கும் வலக்கையை வேறு எவரிடமும் நீட்டுவ தில்லை’ என்றார் புலவர். அது கேட்ட எல்லன் வியப்புற்று, அப்புலவரை அங்கேயே இருக்கச் செய்து, சர்க்கரையின் கொடைச் சிறப்பினை அறிந்து வரும்படி தன் அவைப்புலவர் இருவரைப் பழைய கோட்டைக்கு அனுப்பினான். பழைய கோட்டை சென்ற அப்புலவர்கள் அரண்மனைப் பூங்காவுக்குட் புகுந்து, பூஞ்செடிகளைக் கண்டபடி வெட்டி யெறிந்தனர். காவலர் சென்று சர்க்கரையிடம் கூற, சர்க்கரை அவர்களை அன்போடு அழைத்து வரும்படி செய்து, ‘பெரியீர்! ஏடும் எழுத்தாணியும் பிடித்துத் தமிழ்ப் பாடல்கள் எழுதும் தங்கள் மெல்லிய கைகள், அரிவாளைப் பிடித்து இத்தகைய கடுந்தொழில் செய்யுமாறு நான் ஏதாவது குற்றம் செய்திருந்தால் பொறுத்தருள வேண்டும்’ என, அன்புரை கூறினார். பின்னர், சர்க்கரை அப்புலவர்களோடு உடனிருந்து உண்டனர். சர்க்கரையின் தாயார் உணவு பரிமாறிக் கொண்டி ருந்தனர். சர்க்கரையின் பெருந்தகைமையைக் காண எண்ணிய அப்புலவர்களிலொருவர், அவ்வம்மையாரின் முதுகின்மேல் ஏறி உட்கார, அம்மையார் திடுக்கிட்டு மைந்தன் முகத்தைப் பார்க்க, ‘அன்புள்ள அன்னாய்! என்னைப் பத்துமாதம் பொறுமையோடு சுமந்த தாங்கள், இப்புலவர் பெருமானை ஒரு நொடிநேரம் சுமக்கமாட்டீரோ?’ என்றார் சர்க்கரை. அது கேட்ட அப்புலவர் சடக்கென்று இறங்கி, ‘பொறுமையே உரு வாகிய அண்ணலே! பொறுத்தருள வேண்டும்’ எனத் தாங்கள் வந்ததன் வரலாற்றைக் கூறினார். “அன்னைவெரிந் மேற்கொளச்சேய் ஆனனத்தை நோக்குதலும் என்னையீ ரைந்துதிங்கள் இன்பாய்ச் சுமந்தீரே இவரை யொருநிமிட மேசுமப்பீர் என்று சொன்ன பவளவாய்த் தருமனைப் போல் பாரிலும்பொன் னாட்டிலுண்டோ” (நல்லதம்பிச் சர்க்கரை காதல்) மன்றாடியார் பெருமகிழ்வுற்று, வேண்டிய பரிசுகள் கொடுத்து, ‘எல்லப்பனுக்கு என் நன்றியைச் சொல்லுங்கள்’ என, புலவர்க்கு விடை கொடுத்தனுப்பினார். 2. பெரியன் சர்க்கரை (1431 - 1459) ஒரு நாள் ஒரு புலவர் பழைய கோட்டைக்கு வந்தார். பெரியன் சர்க்கரை புலவரைப் பேரன்புடன் வரவேற்று உணவுண்ட பின், புத்தாடையும் பொன்னும் வைத்த தட்டத் தினை அன்புடன் கொடுத்தார். புலவர் அதைப் பெறாது, அருகில் இருந்த குதிரைச் சவுக்கை (சாட்டை) எடுத்துப் பளார்ப் பளார் என்று அடித்தார். அடியுண்ட சர்க்கரை, புலவர்கை யைப் பிடித்துக் கொண்டு ‘பெரியீர்! ஒரு குற்றமும் செய் திலேனே’ என்று இரங்கினார். ‘நான் நும்மிடம் தமிழின் பெருமையைப் பேச வந்தேனே யன்றிப் பணத்துக்காக வரவில்லை. பணத்துக்காக வந்தவனென் றெண்ணி, ஒரு தட்டம் நிரம்பப் பணத்தைக் கொடுத்து என்னை இழிவு படுத்தினீரே, இதைவிட வேறு என்ன செய்ய வேண்டும்?’ என்றார் புலவர். ‘பெரியீர்! அதுதான் எனது வழக்கமும், ஆனால், நான் இன்றியமையாத ஓர் அலுவலின் பொருட்டு வெளியே செல்ல வேண்டியிருக்கிறேன். தாங்கள் வராதிருந்தால் அப்போதே சென்றிருப்பேன். இரண்டொரு நாள் இங்கு இருங்கள்; வந்து விடுகிறேன்’ என்றார் சர்க்கரை. அது கேட்ட புலவர் மகிழ்ந்து, ‘அண்ணால்! தமிழ் வளர்த்த தங்கள் முன்னோர் பெருமையைக் கேட்டு இங்கு வந்தேன். அதைத் தங்களிடமும் கண்டேன். பெயருக்கேற்ற பெருந் தன்மையுடைய தாங்கள், எனது இத்தகாச் செயலைப் பொறுத் தருள வேண்டும். இச்சவுக்கடி தங்கட்குப் பொன்றாப் புகழைத் தரும்’ என்றார். “கற்றாய்ந்த நாவலர்தம் கையில் சவுக்கடியும் பெற்றான் சயத்தம்பம் பேருலகில் நாட்டுவித்தோன்” (ந.காதல்) 3. சேனாபதிச் சர்க்கரை (1488 - 1519) இவர் குடும்பத்துடன் யாத்திரை சென்றிருந்தார். சென்ற இடத்தில் ஒரு புலவர் இவரைக் கண்டு, தாம் கடன்பட்டு விட்டதாயும், அக்கடன் துன்பத்தைத் தீர்த்துதவ வேண்டும் என்றும் கேட்டனர். அது கேட்ட சர்க்கரை, இன்னும் பதினைந்து நாட்களில் ஊர் செல்வோம். அதன்பின் அங்கு வாருங்கள் என்றார். புலவர் அவ்வாறே பதினைந்து நாட்களுக்குப் பின் பழைய கோட்டை சென்றார். இன்னும் அவர் வரவில்லை என்றனர். வருத்தத்தோடு திரும்பிச் சென்ற புலவர், கரூரில் சர்க்கரையைக் கண்டார். ‘நும் சொல்லை நம்பி, கடன் கொடுத்தவர்க்கு 15 நாட்களில் கொடுப்பதாகச் சொன்னேன். சொன்ன தவணை கடந்துவிட்டதே’ என்றார். ‘கொண்டு வந்த பணம் தீர்ந்துவிட்டது. வாருங்கள் ஊருக்குப் போகலாம்’ என்றார் சர்க்கரை. புலவர் வெகுண்டு, ‘இதுதானா நும் கொடைத் திறம்! நும்மை நான் இவ்வூர்க் கடைத் தெருவில் விலைகூறி விற்பேன்’ என்று மடியைப் பிடித்து இழுத்துச் சென்று தெருவில் விலைகூறினார். புலவரின் உறுதிப் பாட்டைக் கண்டு மகிழ்ந்த சர்க்கரை. தமக்குத் தெரிந்த ஒருவரைப் புலவர்க்குள்ள கடன் தொகையைக் கொடுத்துத் தன்னை வாங்கும்படி செய்து புலவரை மகிழ்வித்தனர். “மற்றோர் புலவன் மடிமேற்கை போட்டிழுத்து விற்றா லலாதென் வெறுமைநோய் தீராதே எங்கும் விலைகூற வேயிசைந்த புண்ணியாவன்” (ந. காதல்) 4. சம்பந்தச் சர்க்கரை இவர் காலத்தே, கொங்கு நாடு மதுரைத் திருமலை நாயக்கன் (1623 - 1659) ஆட்சிக்குட்பட்டிருந்தது. மதுரைத் தளவாய் இராமப்பய்யன் சங்ககிரிக் கோட்டையில் வந்து தங்கி, கொங்கு நாட்டு ஆட்சியைக் கண்காணித்து வந்தான். (பவானி யின் கிழக்கில் 12வது கல்லில் உள்ளது சங்ககிரி). அதுபோது கொங்கு நாட்டில் பெரும் பஞ்சமாக இருந்தது. பழைய கோட்டைப் பண்ணையம் உழுவோரால் குத்தகை கொடுக்க இயலவில்லை. அதனால், மதுரை நாயக்கருக்குத் திறை செலுத்தத் தவணையானதால், மற்ற பாளைக்காரர், பண்ணையக்காரரோடு. சர்க்கரையையும் சங்ககிரிக் கோட்டை யில் சிறை வைத்தான் தளவாய். அதுபோது பழைய கோட்டை வந்த புலவரொருவர், சர்க்கரை சங்ககிரிச் சிறையிலிருப்பதை அறிந்து அங்குச் சென்று, சிறைக் காவலரின் இசைவு பெற்றுச் சர்க்கரையைக் கண்டு பாடினார். புலவர்க்குக் கொடுக்கக் கையில் பொருளில்லாத சர்க்கரை, சிறைக் கூடத்தின் வெளியே தங்கியிருந்த தம் மனைவி யாரிடமும் பணம் இல்லை. விலையுயர்ந்த அணிகலன் களும் அப்போது அணிந்திருக்கவில்லை. எனவே, அக்கொங்குச் செல்வி, தன் கழுத்திலிருந்த பொற்கொடியுடன் கூடிய தாலியைக் கழற்றி ஒரு துணியில் சுற்றி, தன் கணவரிடம் கொடுக்கும்படி கொடுத்தனுப்பினார். சர்க்கரை, மனைவி கொடுத்தனுப்பிய தாலியை எடுத்து, ‘இப்போது இதை பெற்றுக் கொள்ளுங்கள். விடுதலையாகி ஊர் சென்றதும் வேண்டியது தருகிறேன்’ என்று, அத்தாலியைப் புலவரிடம் கொடுத்தார். புலவர் திடுக்கிட்டார். சர்க்கரையின் தமிழ்ப்பற்றை வியந்தவராய்த் தாலியை வாங்கிக் கொண்டு நேராகத் தளவாய் இராமப்பய்யனிடம் சென்று, அத்தாலியைக் காட்டி, “கொங்கினில் இராமப் பயனதி காரக் குரூரத்தினால் கங்குலி ராப்பகல் சர்வசங் காரஞ்செய் காலத்திலே சிங்கநற் சம்பந்தச் சர்க்கரை தேவி திருக்கழுத்தின் மங்கலி யந்தனைத் தந்தான் தமிழ்க்கவி வாணருக்கே.” என்றார். அது கேட்ட தளவாய் வியந்து, சர்க்கரையை விடுதலை செய்து, மற்றும் வேண்டியன் கேளும் என, ‘வரி செலுத்த முடியாமையால் சிறையிலிருக்கும் மற்றவர்களையும் விடுதலை செய்ய வேண்டுகிறேன்’ என்றார் சர்க்கரை. சர்க்கரையின் பெருங்குணத்தைக் கண்ட தளவாய், அவ்வாறே எல்லோரையும் விடுதலை செய்தான். புலவர் தாலியைச் சர்க்கரையிடம் திருப்பிக் கொடுத்து விட்டு அவருடன் பழைய கோட்டை சென்று தக்க பரிசு பெற்றுச் சென்றார். புலவர்க்குத் தாலிக் கொடை கொடுத்த இருவரில் யார் சிறந்தவரென்று பாராட்டுவது! தாலி கொடுத்துத் தமிழ் வளர்த்த இத்தகு தகைமிகு தலைவரையுடையது தண் கொங்குநாடு! 5. நல்லதம்பிச் சர்க்கரை (1647 - 1662) திருச்செங்கோட்டுப் புலவரான வண்ணார்குல வீரபத்திரக் கவிராயர் என்பார் பழைய கோட்டை சென்றார். நல்லதம்பிச் சர்க்கரை மன்றாடியார், புலவரை அன்புடன் வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தனர் ஏதோ அலுவலாய் அரண்மனையினுட் சென்றவர். நெடுநேரம் வரவில்லை. அங்கு வந்த ஒருவனைக் கேட்க, சாப்பிடுவதாகச் சொல்லவே, நம்மை விட்டுச் சாப்பிடச் சென்று விட்டாரென்று புலவர் சினங்கொண்டு, அரண்மனையை விட்டுச் சென்றனர். அங்கு வந்த சர்க்கரை, புலவரைக் காணாது நிகழ்ந்ததை அறிந்து தாமாகவே சென்று, தான் இன்னும் சாப்பிடவில்லை; வேறு வேலையில் ஈடுபட்டிருந்ததால் நேரமானது என்று கூறி அழைத்து வந்து, காய்ச்சிய நெய்யில் கையை விட்டுச் சாப்பிட வில்லை என்பதை உறுதிப்படுத்தி உடனிருந்து உணவுண்டனர். உண்டபின், ‘தாங்கள் உண்மையாக என்னை அவமதிக்க வில்லை எனில், எனது உண்ட எச்சில் வாயைக் கழுவிவிடுங்கள்’ எனவே, சர்க்கரை அவ்வாறே கழுவிவிடக் கண்ட புலவர் பெருமகிழ்வு கொண்டு,‘காதல்’ என்னும் செந்தமிழ்ப் பாமாலை சூட்டிச் சிறப்பித்தார். அது, ‘நல்லதம்பிச் சர்க்கரை மன்றாடியார் காதல் எனப்படும்; மிக்க சுவையுடைய தொரு நூல். “தூசர்குல வாணனுக்கோர் சோர்வுரைக்க வில்லையென நேசமுட னேகாய்ந்த நெய்யதனிற் பாணியிட்டோன்.” (ந. காதல்) சொட்டைப் படை செம்மறிக் கிடாய்க் கொம்பு போல இரு புறமும் கூராக உள்ளது சொட்டை என்னும் படைக்கலம். சர்க்கரை மரபினர் ஒருவர் அச்சொட்டைப் படைக்கலப் பயிற்சியில் மிகவும் கெட்டிக்காரராக விளங்கினார். இவர் காலத்தே, வெற்றி நகரின் மேல் முகமதியர் படையெடுத்தனர். கொங்குநாடு வெற்றி நகர் ஆட்சிக்குட்பட்டிருந்ததால், வெற்றிநகர் வேந்தர்க்குப் படைத் துணை சென்றிருந்த அச்சர்க்கரை, சொட்டைப்படைத் திறத்தால் அம்முகமதியப் படையைப் புறங்காட்டி ஓடும்படி செய்தார். வெற்றி நகர் வேந்தன் மகிழ்ந்து, சொட்டைக்காரர் கண்டன் என்னும் பட்டப்பெயர் தந்து சர்க்கரையைச் சிறப்பித் தான். இன்றும் பழைய கோட்டையில் அச்சொட்டைப் படை உள்ளது. “ஓங்குசொட்டைக் காரர்கண்டன் உத்தமக்கா மிண்டனென்கோன்” (ந. காதல்) “மட்டு வார்குழல் மாத ரும்புகல் மறவ ருந்திசை யெட்டி னும்புகழ் சொட்டை வீரரும் பொருந ருங்கலித் துடிய டித்துமுன் னாடவே” (நல்லதம்பிச் சர்க்கரை குறவஞ்சி) 15. மும்முடிப் பல்லவராயர் கொங்கு நாட்டுப் பட்டக்காரர் நால்வருள் காங்கயம் பட்டக்காரர் ஒருவர் என்பதை முன்பு கண்டோம். இப்பட்டக் காரர் மரபினர், மும்முடிப் பல்லவராயர் என்பதை மரபுப் பெயராக உடையவர். அது ஒரு பல்லவனை வென்றதால் பெற்ற பட்டமாகும். இப்பல்லவராயர் மரபினர், பெருவீரராகவும், பேரரசர்க்குப் படைத்துணையாளராகவும், இருந்ததோடு, சிறந்த தமிழ்ப் பற்றும் அதற்கேற்ற கொடைக்குணமும் உடையராக விளங்கினர். மூன்றாம் இராசராசச் சோழன் (1216 - 1256) மாறவர்மன் சுந்தர பாண்டியனிடம் தோல்வுயுற்று வேற்று நாடு செல்லும் வழியில், கோப்பெருஞ்சிங்கன் என்னும் பல்லவக் குறுநில மன்னன் எதிர்த்துப் பொருது வென்று சேந்தமங்கலத்தில் சிறை வைத்தனன். சோழமன்னனின் மாமனான ஒய்சள வீரநரசிம்மன் என்பான், சோழ மன்னனைச் சிறை மீட்கும்படி பெரும்படை யொன்றை அனுப்பினான். கொங்கு நாடு அன்று ஒய்சளர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அப்பெரும்படையில் கொங்குப் படையும் இருந்தது. காங்கயம் பட்டக்காரர் மரபினரான இலிங்கய்யன் என்பார் அக்கொங்குப் படையைத் தலைமை தாங்கி நடத்திச் சென்றார். அப்படை சென்று கோப்பெருஞ்சிங்கனை வென்று, சோழனைச் சிறை மீட்டது. இது, திருவயிந்திரபுரங் கல்வெட்டில் குறிக்கப் பட்டுள்ளது. பல்லவனை வென்றதைப் பாராட்டி, மும்முடிப் பல்லவ ராயன் என்ற பட்டம் வழங்கி இலிங்கய்யனைச் சோழ மன்னன் சிறப்பித்தான். அதிலிருந்த காங்கயம் பட்டக்காரர் மரபினர், ‘மும்முடிப் பல்லவராயர்’ என்பதை மரபுப் பெயராகக் கொண்டனர். “போரிட்ட பல்லவன் தேசத்தை வெட்டியே பொன்மகுடம் நீபடைத்தாய் செங்கதிர்ப் பரிதிகுல மகராச ராசனாம் திரிபுவன சக்கரவர்த்தி சித்தமகிழ் தளகர்த்தர்’ இலிங்கய்யப் பல்லவன்” (பழம்பாடல்) 16. பல்லவராயன் சிறுவன் (1292) இப் பல்லவராயர் மரபுக் குழந்தையொன்றுக்கு, சங்கி ராம சோழன் என்பான் விளையாட்டுப் பொன்வண்டி யொன்றை அன்பளிப்பாக வழங்கினான். ஒரு நாள் புலவ ரொருவர் காங்கயத்துக்கு வந்தார். பல்லவராயர் ஊரிலில்லாததை அறிந்து வருத்தத்துடன் வெளியே வந்தார். பல்லவராயன் சிறுவன் அப்பொன்வண்டியை ஓட்டி விளையாடிக் கொண் டிருந்தனர். புலவர் அச்சிறுவனை நோக்கி, ‘குழந்தாய்! புலவர்கள் குறித்து வந்த இடத்துப் பரிசு பெறாது திரும்பிச் செல்லுதல் முறையன்று. நின் தந்தையார் ஊரில் இருந்திருப்பாரானால் நான் மிகுந்த பரிசு பெற்றுச் செல்வேன்’ என்று தன் வருத்தத்தை வெளியிட்டார். தந்தை புலவர்க்குப் பரிசு கொடுக்கும் போதெல்லாம் உடனிருந்து கண்டவனல்லவா அச்சிறுவன்? இரண்டாண்டு நிரம்பப் பெறாத அக்குழந்தை, தான் உருட்டி விளையாடிய அந்நடை வண்டியை இருகையாலும் எடுத்து, மழலை மொழியால், ‘இதை வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கொடுத்தது. புலவர் அக்குழவியை இருகையாலும் வாரி எடுத்து மார் போடணைத்துக் கொண்டு, அப்பெருங்குணச் செல்வனைப் பெற்ற தாயிடம் சென்று நடந்ததைக் கூறினார். அத்தாய், அச் செல்வனை ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்து, புலவர்க்கு விருந் திட்டுப் போற்றினார். வெளியிற் சென்றிருந்த பல்லவராயர் வந்து, செல்வனின் செயல் கேட்டுவந்து, புலவர்க்கு வேண்டியது கொடுத்துச் சிறப்பித்தார். ‘குலத்தளவேயாகும் குணம்’ என்பது எவ்வளவு பொருள் பொதிந்த பொன்மொழி! அமராவதிப் பல்லவராயன் குறவஞ்சியிலும் இக்கொங்கு வேளாண் குலச் செல்வச் சிறுவனின் இச்செயற்கருஞ் செயல் கூறப்படுகிறது. 17. காடையூர்க் காங்கேயர் காங்கயத்தை அடுத்த காடையூரில் ஒரு வேளாண் குடும்பத்தில் ஒரு வெள்ளைப் பெண் பிறந்தது. அப்பெண்ணை, சேலமாவட்டத்துக் கீழ்கரைப் பூந்துறை நாட்டுக் கருமாபுரத்து இளைஞனொருவனுக்கு மணஞ்செய்து கொடுத்தனர். திருமணக்காலத்து ஒப்பந்தப்படி காடையூர்க் காணி முதலிய உரிமைகளைக் கொடுக்க அப்பெண்ணின் உடன் பிறந்தார் மறுக்கவே, அவையோர் தீர்ப்புப்படி நட்டகழுவில் கையறைந்து அவ்வுரிமைகளைப் பெற்றாள் அப்பெண்மணி. அவள் பல புலவர்களைக் கொண்டு தன் மகனுக்குத் தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஐயந்திரிபறக் கற்பித்தாள். அவ்விளைஞன் அத்தமிழ்ப் பயிற்சியோடு தக்க படைப் பயிற்சியும் பெற்று, பாண்டியன் படையில் சேர்ந்து படைத் தலைவனானான். அவன், பாண்டி நாட்டின் மேற்படை யெடுத்து வந்த பகைவரை வென்று துரத்திய திறமையைப் பாராட்டிப் பாண்டிய மன்னன் அவனுக்கு காங்கேயன் என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்தான். இக்காங்கேயன் மரபினரே காடையூர்ப் பட்டக்காரராவர். இம்முடி, மன்றாடி என்ற பட்டங்களையும் இம்மரபினர் அடைந்துள்ளனர். வீரத்தால் சிறப்படைந்த இக்காங்கேயன் மரபினர், அதற்கேற்ற தமிழ்ப் பற்றும் கொடைக் குணமும் உடையராக விளங்கினர். மற்ற பட்டக்காரர் மரபு போல, இக்காங்கேயர் மரபும் பழமையான மரபாகும். 18. கொற்றை வேணாடுடையார் கொங்கு நாட்டுப் பட்டக்காரர் நால்வரில் ஒருவரான சங்கரண்டாம் பாளையம் பட்டக்காரர், தென்கரை நாட்டுப் பட்டக்காரர் எனவும் அழைக்கப்படுவர். சங்கரண்டாம் பாளையம் என்னும் ஊர் தாராபுரத்தின் வடக்கில், அமராவதி யின் வடகரையில் இருக்கிறது. இவ்வூர் தென்கரை நாட்டைச் சேர்ந்தது. இம்மரபினர் இவ்வூரை அடுத்துள்ள கொற்றை என்னும் ஊரில் இருந்து வந்தனர். அது, கொற்றனூர், கொற்றையூர் எனவும் வழங்கப் பெறும். இக் கொற்றையூர்ப் பட்டக்காரர் மரபினர், வேணாடு டையார் என்னும் பட்டப் பெயரை உடையராவர். வேளிர் நாட்டை வென்று கைக்கொண்டாண்டு வந்ததால், அப்பெயர் ஏற்பட்டதாம். ஆனால், வேணாவுடையார் என்பதே பெரு வழக்குடையதாகும். கொங்குச் சோழ மன்னனான குலோத் துங்கச் சோழன் (1149 - 1183) கோயில்கள் பற்றித் தென்கரை நாடு முதலிய கொங்கின் இருபது உள்நாட்டுக் காணியாளர் களுக்கு ஆணையிட்டுள்ள பாரியூர்க் கல்வெட்டில், வேணாவு டையான் என்றே குறிக்கப்பட்டுள்ளது. இது, வேணுடையார் எனவும் வழங்கும். இரண்டாங் கரிகாற் சோழன் (கி.மு.60-20) மாமனும், கொங்கு நாட்டைச் சேர்ந்த குளித்தலையை அடுத்த பிடர்த் தலை என்னும் ஊரினருமான இரும்பிடர்த்தலையார் என்னும் வேளிர்குடிப் புலவர் இம்மரபின் குடி முதல்வன் என்கிறது இம்மரபுப் பட்டயம். இம்மரபில் வந்த பிடாரன் பெரியண்ண வேணாடன் என்பார், பூதப்பாண்டியனை வென்றதாக அவ்வோணாடன் மெய்க்கீர்த்தி கூறுகிறது. ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன், கி.மு. இரண்டாம் நூற்றாண்டினர். ஆதலால், இப்பூதப் பாண்டியன் பிற்காலத்தே இருந்தவனாவன். ‘பிடாரன்’ என்னும் பெயரே இதற்குச் சான்றாகும். இம் மரபினர் சோழ பாண்டியருக்குப் படைத்தலைவர் களாகவும், படைத் துணைவர்களாகவும் இருந்துவந்துள்ளனர். இம்மரபினருக்கு மும்முடி என்ற பட்டமும் உண்டு. தமிழ்ப் புரவலாக இருந்து இம்மரபினர் காதல், தூது, பள்ளு முதலிய பனுவல்கள் பெற்றுள்ளதோடு, புலவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். சத்துரு சங்கார மாலை என்பது, ஒரு வேணாடனால் பாடப்பட்ட நூலேயாகும். 19. மோரூர்க் காங்கேயர் ‘தோன்றிற் புகழாடு தோன்றுக’ என்றார் வள்ளுவர். புகழொடு தோன்றுதல் - புகழொடு வாழ்தலாகும். அதாவது, புகழுக்கேதுவாகிய நற்செயல்கள் செய்து வாழ்தல். புகழுடன் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கே மரபு என்னும் சிறப்புப் பெயர் உரியதாகும். சேரர் மரபு, சோழர் மரபு, பாண்டியர் மரபு, அதியன்மரபு எனக்காண்க. இத்தகைய மாறாத் தொடர் புடைய வழிவழிப் புகழுடன் வாழ்ந்த மரபுகளில் மோரூர்க் காங்கேயர் மரபும் ஒன்று. தமிழ் மொழி உள்ளளவும், ஒரு தமிழன் உயிரோடுள்ளளவும் நின்று நிலவும் நீள் புகழுடைய மரபாகும் மோரூர்க் காங்கேயர் மரபு. மோரூர் என்பது, திருச்செங்கோட்டுக்கு 6 கல் வட மேற்கில் உள்ள ஒரு பழமையான ஊராகும். மோரூர்க் காங்கேயர் குடும்பமும் அத்தகைய வேளாண்குலச் செல்வக் குடும்பமே யாகும். இக்குடும்பத்தினர் வீரம் கொடை புகழ் என்னும் முப்பண்பும் ஒருங்குடையவர். தமிழ்த் தாய்க்கு இம்மரபினர் செய்துள்ள தொண்டுகள் பலப்பல. 1. சூரிய காங்கேயன் சேலம் மாவட்டமும் தென்னார்க்காடு மாவட்டமும் சந்திக்கும் இடத்தில் ஆறகழுர் என்னும் ஊர் இருக்கிறது. ஆற்றூரின் கிழக்கில் உள்ள தலைவாசல் என்னும் ஊரின் தென் கிழக்கில் 5 கல் அளவில் உள்ளது இவ்வூர். ஆறு அகழால் சூழப் பட்டதால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இது, சேல மாவட்டத்தைச் சேர்ந்தது. இவ்வாறகழுரைத் தலைநகராகக் கொண்டது மகதநாடு எனப்படும். இம் மகதநாட்டை முன்னர் மாவலிவாண மரபினர் ஆண்டு வந்தனர். இவர், மாத நாட்டை ஆண்டு வந்ததால், மகதைப் பெருமாள் எனவும் வழங்கப் பெற்றனர். மூன்றாங் குலோத்துங்கச் சோழன் (1178 - 1218) காலத்தே இருந்த வாண கோவரையன் என்பான், குலோத்துங்களின் படைத் தலை வனாக இருந்து வந்தான். இவன் பேராற்றலும் அதற்கேற்ற போர்த்திறனும் உடையவன். மூன்றாங் குலோத்துங்கனால் முறியடிக்கப்பட்ட முதல் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1218) என்பான், மணவுறவுடைய கொங்குச் சோழனான வீர சோழன் (1183- 1206) உதவி நாடிக் கொங்கு நாட்டில் வந்து தங்கியிருந்தான். அதுபோது, மூன்றாங் குலோத்துங்கன் படைத்தலைவனான ஆறகழுர் வாணனை எப்படியாவது உயிரோடு பிடித்துவர வேண்டுமென முடிவு செய்தான். மோரூர்ச் சூரியன் என்னும் கொங்குப் படைவீரன் அதைச் செய்து முடிப்பதாக முன்வந்து, சில வீரர்களுடன் அதற்கு வேண்டியவற்றோடு சென்று, மாறுகோலம் பூண்டு ஆறகழுரை அடைந்து, பல்லக்குத் தூக்கிகள் போல் இருந்து வாணனை ஒரு பல்லக்கில் ஏற்றி மகதநாட்டி டெல்லையைக் கடந்துகொண்டு வந்து, அங்கு தங்கியிருந்த மற்ற வீரர்களோடு சேர்ந்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு வந்து, அங்குத் தங்கியிருந்த பாண்டியன் முன் நிறுத்தினான். பாண்டியன் மகிழ்ந்து, ஆகவராம பாண்டியன், காங்கேயன் என்னும் பட்டப் பெயர்களோடு, எழுகரை நாட்டதிகாரமுங் கொடுத்து பெருமைப் படுத்தினான், அகவராமன் என்பது இப்பாண்டியனுக்குரிய பெயர் போலும், சடையவர்மன் சீவல்லப பாண்டியன் (1534 - 1543). ஆகவராம பாண்டியன் புதல்வன் என்பதை அறியவும். இச்சூரியன், அகவராம பாண்டிய சூரிய காங்கேயன் என வழங்கலானான். இதிலிருந்து இம்மரபினர், காங்கேயன் என்னும் பெயரை மரபுப் பெயராகக் கொண்டனர். “மிண்டாறை வாணனைமுன் வெட்டாமற் பாண்டியனேர் கொண்டுவந்து நிற்கவிட்ட கொற்றவனும் நீயலையோ தெண்டிரைசேர் மோரூரில் தென்னன்மகு டாசலனே மண்டலிகர் தேர்ந்துமெச்ச வாழ்சூரிய காங்கயனே.” (பழம்பாடல்) 2. பொப்பண காங்கேயன் ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையும் சிறப்பு முடையது சிலப்பதிகாரமே யாகும். இது, சேரன் செங்குட்டுவன் இளவலாகிய இளங்கோவடிகளால் செய்யப்பட்டது. தமிழர் பெருமைக்குச் சான்றாகவுள்ள இச்செந்தமிழ்க் காப்பியத்தின் பொருளை அறிந்தின்புறுவதற்குப் பெருந்துணை செய்வது அடியார்க்குநல்லார் உரையேயாகும். சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் என்னும் புலவர் பெருமான், ஈரோடு கோவைப் பெருவழியில், ஈரோட்டின் மேற்கில் 16வது கல்லில் உள்ள விசயமங்கலத்தை அடுத்த நிரம்பை என்னும் ஊரினராவர். இவர், கி.பி. 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியினர். இவ் வடியார்க்கு நல்லாரைத் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு, சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதுவித்த பொப்பண காங்கேயன் என்பான், இம் மோரூர்க் காங்கேயர் மரபினனே யாவன். நூல் செய்வித்தல், உரை எழுதுவித்தல் ஆகிய இரண்டும் பெருந்தமிழ்த் தொண்டாகும். “காற்றைப் பிடித்துக் கடத்தி லடைத்துக் கடியபெருங் காற்றைக் குரம்பைசெய் வார்செய்கை போலுமக் கால மெனும் கூற்றைத் தவிர்த்தருள் பொப்பண காங்கேயர் கோனளித்த சோற்றுப் பெருக்கல்ல வோதமிழ் மூன்றுரை சொல்வித்ததே.” -பழம் பாடல் தமிழ் மூன்று - முத்தமிழ்க் காவியமாகிய சிலப்பதிகாரம். 3. காங்கேயன் தமிழில் அகரவரிசை நூல்கள் ஏற்படுமுன், சொற்பொரு ளறியத் தமிழ் மக்கள் நிகண்டு கற்று வந்தனர். பிங்கல நிகண்டு, திவாகர நிகண்டு, சூடாமணி நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, ஆசிரிய நிகண்டு எனத் தமிழில் பல நிகண்டுகள் உள்ளன. உரிச்சொல் நிகண்டு செய்தவன், இம் மோரூர்க் காங்கேயர் மரபினனேயாவன், இந்நூல் வெண்பாவினால் செய்யப் பட்டது. இக்காங்கேயன் நூல் செய்யும் புலவனாக இருந்த தோடு, பெருவீரனாகவும் பெருங்கொடையாளனாகவும் இருந்தான். இவன் இயற்பெயர் தெரியவில்லை. 4. நல்லதம்பிக் காங்கேயன் (1599 - 1635) மோரூர்க் காங்கேயர் மரபில் வந்த இந்நல்லதம்பிக் காங்கேயனும் வீரமும் புகழும் ஒருங்கே உடையவன் ஆவான். இவன் முன்னோனான பொப்பண காங்கேயன் உரை எழுது வித்தான். காங்கேயன் நூல் செய்தான். இவன் நூல் செய்வித்துப் புகெழய்தினான். இவன் காலத்தே, சங்ககிரியில், பத்தர்பாடி என்னும் எம் பெருமான் கவிஞர் என்பார் பெரும்புலவராக விளங்கினார். திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் கம்பரைக் கொண்டு தமிழில் இராமாயணம் பாடுவித்தது போலவே, இக்காங்கேயன் பத்தர்பாடியைக் கொண்டு, தக்கை என்னும் ஒருவகை இசையையுடைய பாவினால், தக்கை ராமாயணம் என்னும் நூல் செய்வித்துப் புகழெய்தினான். “மெத்தவே கண்ணன் வெண்ணெய்தனில் விருத்தச் சீரா மாயணத்தைச் சுத்த மாக்கம்ப நாடன் சொன்னான் சொன்ன பொருள்தக்கை யிசையாலே பத்தர் பாடியெம் பெருமானார் பகரும் படிசெய்தான் மோரூராள் அர்த்த நாரிசொல் நல்லதம்பி அமல னருள் பெற்று வாழ்வாரே.” - தக்கைராமாயணம். 5. குமார காங்கேயன் மோரூர்க் காங்கேயர் மரபினனான இவன், கல்வி கேள்வி களிற் சிறந்தவன்; புலவர்க்கு வரையாது வாரி வழங்கித் தமிழ் வளர்த்து வந்த வள்ளியோன். இவன் காலத்தே, தொண்டை நாட்டுப் பொன் விளைந்த களத்தூரினரான படிக்காசுப் புலவர் என்பவர் பெரும் புலவராக விளங்கினார். அவர், சேது நாட்டு இரகுநாத சேதுபதி மன்னரின் அவைக்களப் புலவராக இருந்தார். அவர் அளவு கடந்த தமிழ்ப் பற்றுடையவனான காயல் பட்டினத்துச் சீதக்காதி (ஷெய்கு அப்துல் ரகீம்காதர் மரக்காயர்) என்னும் முகமதியச் செல்வனிடத்து உளங்கலந்த நண்பராக இருந்து வந்தார். இப்படிக்காசுப் புலவர் மதுரைச் சொக்கநாத நாயக்கன் (1659 - 1682) காலத்தவர். படிக்காசுப் புலவர் கொங்கு நாடு போந்து, மோரூரை அடைந்து, குமாரகாங்கேயனைப் புகழ்ந்து பாடினார். புலவரது தமிழ்ப் புலமையைக் கண்ட காங்கேயன், அவர்க்கு ஏராள மாகப் பொன்னும் பொருளுங் கொடுத்ததோடு, விலைமிக்க தந்தப் பல்லக்கு ஒன்றையுங் கொடுத்துப் பெருமைப்படுத் தினான். “அந்திப் பிறைச்சடை யாரர வாசல ராலயத்திற் கந்தப் பிரான்கதை கற்சிலை யாலமை காங்கேயரில் விந்தைப் புயக்கு ரேந்திர வேந்து வியந்தெமக்குத் தந்தச் சிவிகை கொடுத்தான் பெரும்புகழ் தாங்கினனே.” எனக் குமார காங்கேயன் கொடைத்திறத்தினைப் புலவர் புகழ்ந்து பாராட்டினார். பின்னர்ப் படிக்காசுப் புலவர், திருச்செங்கோட்டு அர்த்த நாரீச்சுரர் வருகைப் பதிகம், உமைபாகப் பதிகம், மோரூர்ப் பாம்பலங்காரர் வருக்கைக் கோவை ஆகிய நூல்கள் செய்து, காங்கேயன் அவையில் அரங்கேற்றினார். 20. மசக்காளி மன்றாடியார் கோவைக்கு வடகிழக்கில் 10 கல் அளவில் கவசை என்னும் பழமையான ஊர் இருக்கிறது. அதற்கு - சர்க்கார் சாமக்குளம் என்ற பெயரும் உண்டு. சாம்பற்குளம் என்பதே, சமக்குளம் எனத் திரிந்தது. அவ்வூர் இன்று கோயில் பாளையம் என்று வழங்கி வருகிறது. கவசையில் மசக்காளி மன்றாடியார் என்ற வேளாண் குடிச் செல்வரொருவர் இருந்தார். அவர்தம் செல்வச் சிறப்புக்கேற்ற அளவு கடந்த தமிழ்ப் பற்றும் உடையவர். மன்றாடியார், தாம் பிறந்த கொங்கு நாடு அக்காலம் போல இக்காலத்தும் ‘தமிழ் வளர்த்த நாடு’ என்ற பெருமையுடையதாக விளங்கும்படி செய்ய வேண்டும் என ஆவல் கொண்டார். அதன்படி, ‘கொங்குத் தமிழ்ச் சங்கம்’ என்ற பெயரில் ஒரு சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்தார். மோரூர்க் குமார காங்கேயனிடம் தந்தப் பல்லக்குப் பரிசு பெற்றுச் சிறப்புற்ற படிக்காசுப் புலவர், அந்தத் தந்தப் பல்லக்கி லேறிக் கொண்டு கவசையை அடைந்தார். மன்றாடி யார் புலவரை அன்புடன வரவேற்றார். வண்ணப் புலியாகிய அவர், அழகிய வண்ணப் பாக்கள் பாடி மன்றாடியாரை மகிழ்வித்தார். கவசைத் தமிழ்ச் சங்கப் புலவர்கட்கும் படிக்காசுப் புலவர்க்கும் வண்ணப் போட்டி நடந்தது. அதில், வண்ணப் புலி எனத் தமிழ் நாடெங்கும் பாராட்டப் பெற்றுப் பேரும் புகழுடன் விளங்கிய படிக்காசுப் புலவர் தோல்வியடைந்தார். போட்டித் திட்டப்படி, அந்தத் தந்தப் பல்லக்கு முதலியவற்றை இழந்து, “அஞ்சாலி மக்களும் சாணாரும் பாணரும் அம்பட்டரும் செஞ்சாயக் காரரும் வேசையர் மக்களும் செந்தமிழைப் பஞ்சாகப் பண்ணியே காசுக் கொருவண்ணம் பாடுகின்றார். நஞ்சாகப் போச்சுதை யோவென் தமிழ்கொங்கு நாடெங்குமே.” என்று வருந்திப் பாடிச் செல்லவே, மன்றாடியார், புலவர் போட்டியில் தோற்ற பொருள் போலப் பன்மடங்கு கொடுத்த தோடு, சங்கத்தார்க்கு விலை கொடுத்து அந்தத் தந்தப் பல்லக்கையும் வாங்கிக் கொடுத்துப் படிக்காசுப் புலவரை மகிழ்வித்தார். 21. முளசை வேலப்பன் கீழ்கரைப் பூந்துறை நாட்டை இரண்டாகப் பிரித்ததில், வட பகுதிக்கு மோரூரும், தென் பகுதிக்கு முளசையும் தலைமை யூர்களாயின. முளசை என்பது,திருச்செங்கோட்டுக்குத் தென் மேற்கில் 8 கல் அளவில் காவிரியின் வடகரையில் உள்ள ஒரு பழமையான ஊர். முளசையில் வேலப்பன் என்ற வேளாண்குலச் செல்வ னொருவன் இருந்தான். அவன் சிறந்த படைத்திறனும் கொடைத் திறனும் உடையவன்; ஒரு பெரும் படையை வைத்துக் காக்கும் அத்தகு செல்வப் பெருக்குடையவன். தமிழ் வளர்க்கும் தகைசால்புடையரில் வேலப்பனும் ஒருவனாவன். வேலப்பன் வீடு எப்போதும் புலவர்களால் பொலிவுற்றிருக்கும். இவன் காலத்தே, பாண்டி நாட்டை ஆண்டுவந்த முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு (1216 - 1238) வேலப்பன் நண்பனாக இருந்தான். அப்பாண்டியன் படைத் துணைவர் களில் வேலப்பனும் ஒருவனாவான். செஞ்சிக் கோட்டைத் தேசிங்கு. டில்லிச் சுல்தானின் அடங்காக் குதிரை ஒன்றை அடக்கிப் பேரும் புகழும் பெற்றது போல, வேலப்பனும் பாண்டியனின் அடங்காக் குதிரை ஒன்றை அடக்கி, அத்தகு பேரும் புகழும் பெற்றவனாவான். அக்காலத்தே பாண்டி நாட்டிற் பெரும் பஞ்சம் உண்டானது. பல மாதங்கள் மழை பெய்யவில்லை. பாண்டியன் தன் படையின் ஒரு பகுதியை முளசைக்கனுப்பினான். மழை பெய்து நாடு செழிக்கும் வரையிலும் அப்படை முளசையி லிருந்து வந்தது. பாண்டி நாட்டு மறவர்கள் யாதொரு குறையு மின்றி இனிதிருந்து வந்தனர். அப்படையில் நூற்றுக்கணக்கான குதிரைகளும் இருந்தன. வேலப்பன் பாண்டி நாட்டு வீரர்க்கு வயிற்றுணவோடு செவியுணவும் ஊட்டி வந்தான். பஞ்சம் பிழைக்க வந்த அவர்கள் பைந்தமிழ்ப் புலமையும் பெற்றுச் சென்றனர். இப்பேருத விக்காகப் பாண்டியன், அன்னத்தியாகி என்ற பட்டந்தந்து வேலப்பனைப் பெருமைப்படுத்தினான். வேலப்பன் மனைவி: பாண்டி நாட்டுப் புலவரொருவர், வேலப்பனிடம் பரிசுபெற முளசைக்கு வந்தார். வேலப்பன் ஊரில் இல்லை. வேலப்பன் மனைவியும் வீட்டில் இல்லை. வீட்டிலிருந்த வேலைக்காரி, ‘கவுண்டரு வெளியூர் போயிருக் கிறார்கள்; நாளைக்குத்தான் வருவார்கள். கவுண்டச்சி அவுங் களும் தோட்டத்துக்குப் போயிருக்கிறார். வாருங்கள் குளித்துக் கொண்டு சாப்பிடலாம்’ என்றாள். ‘கொஞ்சம் பொறுத்துச் சாப்பிடலாம். தோட்டத்தைப் போய்ப் பார்த்து வருகிறேன்’ என்று தோட்டத்திற்குச் சென்றார் புலவர். களத்தில் கம்மங்கதிர் குவித்திருந்தது. புலவர் சில கதிரை எடுத்துத் தேய்த்துத் தின்று கொண்டிருந்தார். கதிர் கொண்டு வந்து களத்திற் கொட்டிய ஆள் மூலம் அறிந்த வேலப்பன் மனைவியார், களத்திற்குச் சென்று, புலவரை வணங்கி, ‘ஐயா! தமிழ்ப் பாட்டெழுதும் தங்கள் கைகளுக்கு இத்தொழில் ஏற்றதாகுமோ? நான் தேய்த்துத் தருகிறேன்’ என்று, தேய்த்துக் கொடுத்தார். புலவர் அக்கொங்குக் குலக்கொடியின் தமிழ்ப் பற்றைக் கண்டு வியந்து, “பூத்துக் கொடுத்தது பூங்கொடி பூக்களைப் பூமுதிர்ந்து காய்த்துக் கொடுத்தது பைந்தரு வுண்ணக் கனிகடனை வாய்த்துக் கொடுத்ததென் றன்பசி தீரக்கம் மங்கதிரைத் தேய்த்துக் கொடுத்த முளசைவே லப்பனின் தேவிகையே.” என்று பாராட்டினார். அவ்வம்மையார் புலவரை வீட்டுக்கழைத்துச் சென்று விருந்திட்டுப் போற்றினார். மறுநாள் வந்த வேலப்பன் அஃதறிந்து அகமகிழ்ந்தான். வேலப்பன் மனைவியின் இச் செயல், அக்காலத்துத் தமிழ்ச் செல்வக் குடும்பப் பெண்களுக் கிருந்த தமிழ்ப் பற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். 22. கோபண மன்றாடி சடையவர்மன் குலசேகர பாண்டியனும் (1162 - 1175), மாறவர்மன் பராக்கிரம பாண்டியனும் பாண்டிய நாட்டின் ஆட்சியுரிமை பற்றிப் பகைகொண்டு போராடி வந்தனர். குலசேகர பாண்டியன் மாமனான கொங்கு நாட்டை ஆண்ட கொங்குச் சோழனான குலோத்துங்கன் (1148 - 1183). குலசேகரனுக்கு உதவிப்படை அனுப்பினான். கோபணன் என்பான், அக்கொங்குப் படைக்குத் தலைமை தாங்கிச் சென்றான். கொங்கரின் வீரதீரமே, பராக்கிராம பாண்டி யனுக்குத் துணைவந்த இலங்கைப் படையைப் புறங்காட்டி ஓடச் செய்தது. இப்போர், கி.பி. 1167இல் நடந்தது. அவ் வெற்றிக்காகப் பாண்டியன், கோபணனை மிகவும் பாராட்டி, இம்முடி, மன்றாடி என்ற பட்டங்கள் தந்து பெருமைப் படுத்தினான். இக்கோபண மன்றாடி, பொள்ளாச்சி வட்டத்து வாரக்க நாட்டுக் களந்தை என்னும் ஊரினன். பொள்ளாச்சி வட்டத்துப் புரவிபாளையம் பாளையக்காரர் இவன் மரபினராவர். இம்மரபினர், இம்முடி, மன்றாடி என்ற பட்டங்களை வழிவழி மரபுப் பெயர்களாகக் கொண்டனர். இப்பாளையக்காரர் - வேட்டுவரில் ஒருபிரிவான பூவலர் (பூலுவர்) பிரிவைச் சேர்ந்தவர். இம்மரபினர் - வெற்றி நகர், மதுரை நாயக்கர், மைசூர் ஆகிய மன்னர்களிடம் பல சிறப்புக்கள் பெற்றுள்ளனர். வேட்டுவர், கொங்கு வேளாளரி னின்று பிரிந்தவர் என்பதை நினைவு கூர்க. “பம்பிட்ட சிங்களர் தென்னர் களிக்கப் பணுங்களந்தைக் கம்பக் கரிக்கோ பணன்வரை யீர்வேள் கலாபத்திலே செம்பொற் குடத்தைப் பவளத்தை முத்தைத் தெரியவிட்டே அம்பைப் புதைத்துவைத் தீரிந்த வெண்ண மறிந்திலனே.” -கோபணமன்றாடி கோவை 23. வணங்காமுடி வாணராயன் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள சமத்தூர்ப் பாளையக் காரர். கொங்கு வேளாளப் பழங்குடி மரபினராவர். இம் மரபினர், வாணராயர் என்னும் குடிப்பெயரையும், வணங்கா முடி என்னும் வழிவழிப் பட்டப் பெயரைப் உடையராவர். இம் மரபினர்க்கு, இரண்டாம் சேரமான் பெருமாள் (754 - 798) என்னும் சேரமன்னனால் கி.பி. 791இல் கொடுக்கப் பட்ட ஒரு செப்புப் பட்டயத்தால், இம்மரபினரின் பழமை பெறப்படும். இவ்வாணராயர் மரபில் வணங்காமுடி வாணராயன் என்னும் வள்ளலொருவன் இருந்தான். இவனுடைய தமிழ்ப் பற்றும் கொடைத்திறனும் இற்றெனக் கூற முடியாதன வாகும். பாரி முல்லைக்குத் தேர் கொடுத்ததும், பேகம் மயிலுக்குப் போர்வை கொடுத்ததும் கேளாமல் கொடுத்த கொடையாகும்; பாடி வந்தோர்க்கு வேண்டியது கொடுத்தல் கேட்டுக் கொடுக்கும் கொடையாகும்; இலைக்கறிமேல் தூவும் மாவுக்காகக் கொஞ்சம் அரிசி கேட்க ஆள் கன்றுடன் யானை கொடுத்தது அளவின்றிக் கொடுதத்த கொடை யாகும்; அதிய மான் ஒளவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தது வரையாது கொடுத்த கொடையாகும்; குமணன் பெருந்தலைச் சாத்தனார்க்கு வாள் கொடுத்தது தன்னையே கொடுத்த கொடையாகும். இவையெல்லாம் பழங்கொடை வகை. ஆனால், வணங்காமுடி வாணராயன் கொடையோ புத்தம் புதிய புதுக்கொடையாகும். ‘ஈயென இரத்தல் இழிந்தன்று’ என்றனர் சங்ககாலச் சான்றோரொருவர். ஒருவர் எதிரில் நின்று, மானத்தையும் நாணத்தையும் விட்டு, எனக்கு இன்னது வேண்டும் என்று மனங் கூசாமல் கேட்டல் அறிவுடையவர்க்கு எளிதில் இயலுவ தொன்றன்று. எனவே, தன்னிடம் வரும் தமிழ்ப் புலவர்கள் அவ்வாறு நாணாது, தமக்கு வேண்டியதைக் கேட்பதற்கு வாண ராயன் ஓர் ஏற்பாடு செய்தான். அரண்மனை வாயிலில் ஓர் ஏடும் எழுத்தாணியும் கட்டித் தொங்கவிட்டு, பரிசில் வேண்டிவரும் புலவர்கள் தங்கட்கு வேண்டியதை அவ்வோ லையில் எழுதி விட வேண்டும் என்பதே அவ்வேற்பாடு. புலவர் எழுதிய அவ்வேட்டை ஏவலாளன் கொண்டு வந்து கொடுக்க, அவ்வேட்டிற் கண்டதை அந்த ஆளிடம் கொடுத் தனுப்பிப் புலவர் அதைப் பெற்று மகிழ்ந்த பின்னர், வணங்கா முடி அங்கு வந்து, புலவரை அன்புடன் வரவேற்று அழைத்துச் சென்று அளவளாவுவன்; புலவரிடம் தமிழ்ப் பாடலைக் கேட்டு இன்புறுவன்; புலவர்க்கு விருந்திட்டுப் போற்றுவன்; முன்னர்க் கொடுத்தனுப்பிய பொருளோடு, பின்னரும் வேண்டிய பரிசு கொடுத்துப் பெருமைப் படுத்துவான். இத்தனிச் சிறப்புடைய தமிழ்க்கொடை அவ்வணங்கா முடியின் வழிவழியாக நடந்து வந்தது. வணங்காமுடி போன்ற வள்ளல்களைத் தமிழ்நாடு என்று பெறுமோ! “வாயிலிற் றொங்கும் ஏட்டில் வரைந்ததைப் புலவர்க் கென்றும் ஓய்விலா துதவு கீர்த்தி ஓங்கவாழ் பவளன் வாண ராயனெந் நாளும் போற்ற நலமருள் சித்தாண் டீசர் வாயிலைக் காக்குங் கட்டி யக்காரன் வருகின் றானே.” -(சித்தாண்டீசர் - மோகினி விலாசம்) பவளன் - இச் சமத்தூர்ப் பாளையக்காரர், கொங்கு வேளாளர் குலங்களி லொன்றான பவள குலத்தினர். 24. காளிங்கராயன் ஈரோடை, பேரோடை, சிற்றோடை, வெள்ளோடை என்னும் ஊர் நான்கும் புராண மரபுப் படி, ஈரோடு, பேரோடு, சிற்றோடு (சித்தாடு), வெள்ளோடு என வழங்கி வருகின்றன. சிற்றோடு - ஈரோட்டின் மேற்கில் 6 கல் அளவிலும், பேரோடு - சித்தோட்டின் தென்மேற்கில் 2 கல் அளவிலும், வெள்ளோடு, ஈரோட்டின் தென் மேற்கில் 8 கல் அளவிலும் உள்ளன. இவ்வூர் நான்கும் மேல்கரைப் பூந்துறை நாட்டைச் சேர்ந்தவை. வெள்ளோட்டில், சாத்தந்தை குலத்தைச் சேர்ந்த வேளாண்குலச் செல்வ இளைஞனொருவன் இருந்தான். இவன் கொங்கு நாட்டை ஆண்ட கொங்குப் பாண்டியனான வீர பாண்டியனின் (1265 - 1285) படைத்தலைவனாக இருந்து வந்தனர்; பின்னர் அமைச்சனாக இருந்து வந்ததாகவும் தெரிகிறது. பாண்டியன் இவனது போர்த்திறமையைப் பாராட்டி, காளிங்கராயன் என்னும் பட்டப்பெயர் வழங்கிச் சிறப்பித்தான். “நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே. உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தொடு நீரே. நீரும் நிலனம் புணரி யோரீன் டுடம்பும் உயிரும் புணரி யோரே.” (புறம் - 18) என்னும் குடபுலவியனார் சொல்லின் பொருளை உள்ளபடி உணர்ந்த காளிங்கராயன், நிலத்தொரு நீரைப் புணர்க்க எண்ணினான். அவ்வெண்ணப்படியே, பவானி நகருக்கு அண்மை யில் மேல்புறம், பவானியாற்றில் ஓர் அணை கட்டினான். ஒரு வாய்க்காலும் வெட்டினான்; அவ்வாய்க் காலின் கழிநீரைக் கொடுமுடிக்குத் தெற்கே போகும் நொய்ய லாற்றில் கலக்கும்படி செய்தான். அவ்வணையும் வாய்க்காலும் - காளிங்கராயன் அணை, காளிங்கராயன் வாய்க்கால் என, இவன் பேராலேயே வழங்கி வருகின்றன. பிறருக்காக அவ்வணை கட்டி வாய்க்கால் வெட்டிய தாகையால், அவ்வாய்க்கால் பாய்ச்சலில் விளையும் நெல்லை, காளிங்கராயன் வழிவந்த முதன்மையாளர்கள் இன்றும் உண்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சியை அடுத்த ஊற்றுக்குழிப் பாளையக்காரர், இக்காளிங்கராயன் வழியினராவர். காளிங்கராயன் என்னும் பட்டப் பெயரை அவர்கள் வழிவழி மரபுப் பெயராக வைத்துக் கொண்டு வருகின்றனர். கொங்கு நாட்டில் இன்றுள்ள அணைகளில், இதுவே முதலணையாகும். இவ்வணையை அடுத்து, காளிங்கராயன் பாளையம் என்ற ஊர் இருக்கிறது. “திரைகொண்ட வாரியை மாலடைத் தான்செழுங் காவிரியை உரைகொண்ட சோழன் முன் னாளடைத் தானுல கேழறிய வரை கொண்ட பூந்துறை நன்னாடு வாழவவ் வானிதனைக் கரைகொண டடைத்தவன் வெள்ளோடைச் சாத்தந்தை காளிங்கனே.” - பழம் பாடல். “ஏற்று திரைப் பொன்னி கூடுறு வானி யிடைமடங்க வெற்றி மிகுந்த அதிவீர பாண்டிய வேந்தமைச்சன் கற்ற வறிவினன் காளிங்க ராயன்செய் கால்கழிநீர் உற்ற வானத்தை வளவய லாக உயர்த்தியதே”. - பழம்பாடல். 25. பாரியூரான் பாரியூர் என்றதும், முல்லைக்குத் தேர்கொடுத்த பறம்பிற் கோமான் பாரியின் நினைவு உண்டாகின்றதல்லவா? ஆம், இவ்வூர் கொடைமடம் பட்ட அப்பாரியின் நினைவாக உண்டான ஊர்தான். அப்பாரியைப் போன்ற ஒரு பெருவள்ள லையும் உடையதாய்த் தன் பெயருக்கேற்ற பெருமையுடையது அவ்வூர். கோவை மாவட்டத்துக் கோபிசெட்டிபாளையத்தை அடுத்து வடக்கில் உள்ளது இப்பாரியூர். இது, காஞ்சிக்கோயில் நாட்டைச் சேர்ந்தது. பாரியூரம்மன், இவ்வூர் போல் பெயர் பெற்றது. பாரியூரில் செட்டிப் பிள்ளையப்பன் என்னும் வேளாண் குலச் செல்வ னொருவன் இருந்தான். இவன் வடகரைக் கவுண்டர் பிரிவைச் சேர்ந்தவன். இவன், ஒய்சள மூன்றாம் வீர வல்லாளன் (1293 - 1342) காலத்தவன் என்பது பாரியூர்க் கல்வெட்டால் (D. 3303 IV - 166) பெறப்படுகிறது. பறம்பிற் கோமான் பாரி போலவே, இப்பாரியூரானும் வரையாது கொடுக்கும் ஏழையானான். ‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என்றபடி, அக்கொடைக் குணத்தில் மட்டும் கடுகளவுங் குறையாதிருந்து வந்தான். ஒருநாள் ஒரு புலவர் பாரியூர் வந்தார். பாரியூரான் புலவரை அன்புடன் வரவேற்றான். புலவர் பாரியூரானின் தமிழ்ப் பற்றையும் கொடைத்திறத்தையும் பாராட்டிப் பாடினார். பாட்டைக் கேட்டு மகிழ்ந்தான் பாரியூரான். ஆனால், அப் பாட்டுக் கேற்ற பரிசு கொடுக்கும் நிலையில் அவன் இல்லை; அதனால் மிகவும் வருந்தினான். பாரியூருக்குப் பக்கத்தில் பெரியகாடு இருந்தது. அக்காட்டில் உள்ள புலி ஒன்று ஆடு மாடுகளையும் வழிச் செல்வோரையும் கொன்று தின்று வருகிறதென்பது நம் வள்ளலுக்குத் தெரியும். “சாதலின் இன்னாத தில்லை. இனித தூஉம் - ஈத லியையாக் கடை” என்னும் குறளின்படி, புலவர்க்குப் பரிசு கொடுக்க முடியாததைவிட அப்புலிக்கு இரையாவதே மேலென முடிவு செய்தான். இரவில் எல்லோரும் தூங்கிய பிறகு எழுந்து அக்காட்டை அடைந்து, அப்புலித்தூறை நோக்கிச் சென்று கொண்டி ருந்தான். பக்கத்து ஊரிலே கொள்ளையிட்ட பொருளை அப் புலித்தூறின் மறைவிலே பதுங்கிக் கொண்டிருந்த கள்வர்கள், பாரியூரான் தங்களை நோக்கி வருவதைக் கண்டு, அப்பொருளை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டனர். புலித்துறை அடைந்த வள்ளல், கூறு கூறாகக் கிடந்த பொற்குவியலைக் கண்டு மகிழ்ந்து, அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து ஒருவருமறியாமல் எடுத்துக் கொண்டான். காலையில் எழுந்ததும் இரவில் நடந்ததைக் கூறி, அப்பொருள் முழுவதையும் புலவர்க்குக் கொடுத்தான். புலவர் பாரி யூரானின் தமிழ்ப்பற்றை வியந்து, அதில் சிறிதளவு எடுத்துக்கொண்டு மிகுதியை அவனுக்கே கொடுத்துவிடை பெற்றுச் சென்றார். வள்ளல், கொள்ளை கொடுத்தவரை வரவழைத்து நிகழ்ந்ததைக் கூறி, அம்மிகுதிப் பொருளை அவர்க்குக் கொடுத்து விட்டான். புலவர்களுக்குக் கொடுக்கப் பொருளில் லாமல் பாம்புப் புற்றில் கையைவிட்ட, நின்றைக் காளத்தி என்னும் வள்ளல் செயலை நினைப்பூட்டுகிறதல்லவா பாரியூ ரான் செயல்! 26. செய்யான் பல்லவராயன் இவன், மேல்கரைப் பூந்துறை நாட்டைச் சேர்ந்த அறச் சலூர், ஈரோடு பழைய கோட்டை வழியில், ஈரோட்டின் தெற்கில் 13வது கல்லில் உள்ளது இவ்வூர். அறச்சாலையூர் என்பதே அறச்சலூர் என மருவிற்று. இவ்வூரில் உள்ள அறச்சாலை யம்மனே இதற்குச் சான்றாகும். அறச்சலூரில் செய்யான் என்னும் இளைஞனொருவன் இருந்தான். அவன் கரைய வேட்டுவ வகுப்பினன். வேட்டுவர் வேளாளரினின்று பிரிந்தவர் என்பதை நினைவு கூர்க. இவன், கொங்கு நாட்டை ஆண்ட ஒய்சள மூன்றாம் வல்லாளன் (1293 - 1342) படைத்தலைவனாக இருந்து வந்தான். இவனது போர்த் திறமையை மெச்சி வல்லாளன் இவனுக்குப் பல்லவராயன் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தான். செய்யான் பல்லவராயன், வீரத்திற்கேற்ற கொடைக் குணமும் தமிழ்ப் பற்றும் உடையவனாகத் திகழ்ந்தான். தனக்குப் பாமாலை சூட்டிய புலவரொருவரைப் பொன் முழுக் காட்டிப் பெருமைப்படுத்திய பெருந்தகையாளனாவான். இவன், இவனது அறச்செயல் பற்றிய கல்வெட்டொன்று, அறச்சலூர்ப் புற்றிடங்கொண்ட நாதர் கோயிலில் இருக்கிறது. 27. உலகுடையான் கொங்கு நாட்டு ஊர்களுக்குத் தலைமைதாங்குந் தகுதி யுடையது விசயமங்கலம், பெருங்கதை ஆசிரியரான கொங்கு வேளிர், விசயமங்கலம், சிலப்பதிகார உரையாசிரிய ரான அடியார்க்கு நல்லார், சிவயமங்கலத்தைச் சேர்ந்த நிரம்பை, கொங்கு மண்டல சதக ஆசிரியரான கார்மேகக் கவிஞர், விசய மங்கலம், நன்னூலாசிரியரான பவணந்தி முனிவர், விசய மங்கலத்தை அடுத்த சீனாபுரம். கொங்கு நாட்டுச் சமணத் துக்குத் தலைமை தாங்கியது விசயமங்கலம். இவ்வூர், குறுப்பு நாட்டைச் சேர்ந்தது. இத்தகைய சிறப்புடைய விசயமங்கலத்தில் உலகுடை யான் என்னும் வேளாண்குலச் செல்வனொருவன் இருந்தான். இவன், கொங்கு வேளாளரின் படைத்தலைக் கவுண்டர் என்னும் பிரிவைச் சேர்ந்தவன். உலகுடையவன் என்பது இம்மரபினரின் பட்டப் பெயர். அது, இக்குடி முதல்வனின் போர்த்திறமையால் பெற்ற பெயராகும். இவனது இயற்பெயர் தெரியவில்லை. ஆனால், விசயமங்கலம் உலகுடையான் எனத் தன் ஊர்ப் பெயரொடு சேர்த்தே அழைக்கப்பட்டு வந்தான். கொங்குப் பாண்டியனான சுந்தரபாண்டியன் (1285 - 1300) படைத்துணைவர்களில் நம் உலகுடையானும் ஒருவனாவன். இவன், தமிழ்த் தலைவர்கட்குள்ள வீரமும் புகழும் இயல்பாகவே உடையவன்; தமிழ்ப் புலவர்களைப் போற்றித் தமிழ் வளர்த்து வந்த தகைசால் புகழினனாவன். உலகுடையான் தமிழ்ப் பற்றையும் கொடைத் திறத்தையும் அறிந்த புலவரொருவர் விசயமங்கலத்தை அடைந்தார். புலவரை உலகுடையான் அன்புடன் வரவேற்றுப் போற்றினான். புலவர் இவன் மீது கோவை என்னும் நூலொன்று செய்து அரங்கேற்றினார். அது, உலகுடையான் கோவை எனப்படும். உலகுடையான் அப்புலவரைப் பல்லக்கிலேற்றி, தானும் அப்பல்லக்கைச் சுமந்து கொண்டு ஊர்வலம் செய்தான்; நிலமும் பொன்னும் பொருளும் ஏராளமாகக் கொடுத்துச் சிறப்பித்தான். இதைக் குறிக்கும் கல்வெட்டொன்று, விசய மங்கலம் நாகேசுவரசுவாமி கோயிலில் உள்ளது. 28. ஐவேலசதி ஒளவையாரைப் பற்றி அறியாத தமிழ் மக்கள் எவரும் இரார். ஒளவையார் தமிழ் மக்களின் தனிச்செல்வம்; தமிழகத்தின் பொதுச் சொத்து; கொங்கு நாட்டின் வளர்ப்புச் செல்வி! சங்க காலத்தே ஒருவரும், கி.பி.8ஆம் நூற்றாண்டில் - சுந்தரர் காலத்தே ஒருவரும், கி.பி.13ஆம் நூற்றாண்டில் ஒருவருமாக மூன்று ஒளவையார் இருந்ததாகத் தெரிகிறது. இம் மூவரும் ஒருவரெனவே எண்ணத்தக்க அத்தகையவராவர். மூன்றாங் காலத்து ஒளவையார் ஒருநாள், சேல மாவட்டத்துச் சங்ககிரிப் பக்கம் வந்து கொண்டிருந்தார். அது முதுவேனிற் காலம். நெடுவழி நடந்த அலுப்பாலும் பசியாலும் தாகத்தாலும் களைப்படைந்து அவர் வழியில் படுத்து விட்டார். அக்காட்டில் மேய்ந்து கொண்டிருந்த தன் ஆடு மாடு களைப் பார்த்துக்கொண்டு அவ்வழியாக வந்த அசதி என்பவன், ஒளவையார் மயங்கிப் படுத்திருப்பதைக்கண்டு, அவர் ஒளவை யார் என்பதை அறியாதவனாயினும் அருளுன்ன முடைய அவன், பண்ட மேய்க்கிவைத்திருந்த ஒரு மண்கலயத் தை வாங்கிக் கொஞ்சம் ஆட்டுப்பால் கறந்து கொண்டுவந்து கொடுத்தான். ஒளவையார் அப்பாலைப் பருகிக் களைதெளிந்தார். அசதியை வாயார வாழ்த்தினார். அசதி, அவர் ஒளவையார் என்பதை அறிந்து அளவிலா மகிழ்ச்சி அடைந்தான்; வீட்டுக்கு அழைத்துப் போய் விருந்திட்டுப் போற்றினான். ஒளவையார் அவனது தமிழ்ப்பற்றைக் கண்டு மகிழ்ந்து, அசதிக்கோவை என ஒரு நூல் செய்து, அசதியைப் பெருமைப்படுத்தினார். அசதி ஆயர்குலச் செல்வன்; அளவு கடந்த தமிழ்ப் பற்றுடையவன்; பெருங்கொடைக்குணமுள்ளவன்; புலவர் களைப் போற்றித் தமிழ்வளர்த்து வந்த தகைசால் செல்வத் தமிழ் மகன். இவன், ஒரு கொங்குக் குறுநில மன்னனாகவும், ஒரு பேரரசன் படைத்தலைவனாகவும் இருந்து வந்தனன் என்பது, ‘சேனைத் தலைவனைச் செங்கோலசதியை’ என்னும், அசதிக் கோவைக் குறிப்பால் பெறப்படுகிறது. ஐவேலி என்பது, அசதியின் ஊர். அது, சங்ககிரிக்குப் பக்கத்தே இருந்த ஒரு பழமையான ஊர். அவ்வூர் அழிந்து விட்டது. அதன் பக்கத்தே இடையர் பட்டி என்னும் ஊர் இருக்கிறது. “ஆலவட் டப்பிறை ஐவேலசதி அணிவரைமேல் நீலவட் டக்கண்கள் நேரொக்கும் போதந்த நேரிழை யாள் மாலைவிட் டுச்சுற்றி வட்டமிட் டோடி வரவழைத்து வேலைவிட் டுக்குத்தி வெட்டுவ ளாகில் விலக்கரிதே.” -அசதிக்கோவை 29. அகளங்கன் தமிழரசு தோன்றிய அக்காலந் தொட்டுத் தமிழகத்தைச் சீருஞ்சிறப்புடன் ஆண்டு வந்த முடியுடை மூவேந்தராட்சி ஒழிந்து, கி.பி. 14ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் அங்கங்கே சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். மதுரையில் முகமதியராட்சி நடந்து வந்தது. தொண்டை நாட்டைச் சம்புவராயர் என்போர் ஆண்டு வந்தனர். வெற்றிநகர்ப் பேரரசின் படைத்தலைவனான குமார கம்பண்ணன் (1363 - 1370) என்பான், தமிழகத்தின் மேற்படை யெடுத்து வந்தது, சம்புவராயர்களை வென்று காஞ்சியில் தங்கியிருந்தான். (‘கம்பண்ணன் படையெடுப்பு’ என்பது பார்க்க). அக்கால், சேலமாவட்டத்து இராசிபுரத்தில், தித்தன் என்ற வேளாண்குல இளைஞனொருவன் இருந்தான். அவன் ஒரு சோழச் சிற்றரசனின் படைத்தலைவனாக இருந்து வந்தான். அவன், சுரிகை என்னும் படைக்கலப் பயிற்சியில் மிக்க வல்லவனாவன். அத்தித்தன் பெரும் படையுடன் காஞ்சிபுரம் சென்று, கம்பண்ணனைப் போரில் புறங்காட்டச் செய்தான். இதன் பின்னரே கம்பண்ணன் அங்கு நின்று தெற்கு நோக்கிச் சென்றனன் போலும். அது கண்ட சோழமன்னன் மகிழ்ந்து, அகளங்கச் சோழன் என்ற பட்டப்பெயர் வழங்கித் தித்தனைப் பெருமைப்படுத்தினான். தித்தன் சுரிகைப் படையில் வல்ல வனாதலின், சுரிகைமுனை வல்லான் என்ற பட்டமும் தந்தான். இவ்வகளங்கன் மரபினர், இராசிபுர நாட்டுத் தலைவர்களாக இருந்து வந்தனர். இம்மரபினர் மெய்க்கீர்த்தியிலும் இவ் வரலாறு கூறப்பட்டுள்ளது. “கருவித் தடிப்படி யாதம ராற்றிடு கம்பணனைச் செருவிற் படவென்ற தீரனை நோக்கியச் செம்பியனுஞ் சுரிகைப் படையினில் வல்லோன் அகளங்கச் சோழனென வருபட்ட மீயப் பெருராசை யோன்கொங்கு மண்டலமே.” -கொ. ம. சதகம் 30. இம்முடிச் சோழியாண்டான் இவன், வடபாரிச நாட்டு அவிநாசி. இவ்வூர் - ஈரோடு கோவைப் பெருவழி யில், கோவையின் கிழக்கில் 23வது கல்லில் உள்ளது. இச்சோழியாண்டான் - பாலவேளாள வகுப்பினன்; பெருஞ்செல்வமும் அதற்கேற்ற கொடைக் குணமும் உடை யவன், விசய விக்கிரம இம்முடிச் சோழி யாண்டான் என்பது, இவன் முழுப் பெயராதலின், இவனொரு பெரு வீரனாக விளங்கினான் என்பது பெறப்படும். வெற்றிநகர்ப் பேரரசின் ஆணையாளனாகக் கொங்கு நாட்டை ஆண்டு வந்த உம்மத்தூர் நஞ்சராசன் (1489 - 1499) காலத்திலிருந்து வந்தான் இச்சோழி யாண்டான். திருப்பூரை அடுத்துள்ள மங்கலத்துக்கருகில் நொய்ய லாற்றில், இவன் தன் செலவில் ஓர் அணை கட்டியுள்ளான். அவ்வணை கட்டும் போது நிற்காததனால், இவன் தன் மகளையே பலி கொடுத்துக் கட்டினானாம், இஃதொரு மூட நம்பிக்கையே எனினும், அன்னானது பொதுநலப் பண்பாட்டின் ஏற்றத்தைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவிநாசி யிலும் குரக்குத்தளியிலும் இவன் கல்வெட்டுக்கள் உள்ளன. 31. முதலிக்காமிண்டன் வெற்றிநகர்க் கிருட்டின தேவராயன் காலத்தில் (1509 - 1529), கொங்கு நாடு வெற்றிநகர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. சேல மாவட்டத்துத் திருச்செங்கோட்டு வட்டத்துப் பருத்திப் பள்ளி என்னம் ஊரினனான வேளாண்குல இளைஞனொருவன், கொங்குப்படையில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து கொங்குப் படைத்தலைவனாக இருந்தான். தாராபுரத்துத் தென்கரை நாட்டில் சிலர் கலகம் செய்தனர். கிருட்டின தேவராயன் கட்டளைப்படி அவன் தன் படை யொடு, கொங்கு வேட்டுவ வீரர்களையும் சேர்த்துக்கொண்டு போய், அக்கலகஞ் செய்தவர்களை வென்றடக்கினான். மன்னன் மகிழ்ந்து, முதலிக்காமிண்டன் என்ற பட்டம் தந்து சிறப்பித்தான். இம் முதலிக்கா மிண்டன், வீரத்தோடு கொடைக் குணமும் உள்ளவனாக விளங்கினான். பருத்திப் பள்ளிப் புவனேசுவரர் கோயிலில் இவ்வெற்றியைக் குறிக்கும் கல்வெட்டு இருக்கிறது. “வெற்றியுட னேகிருட்டின ராயனிடத்தில் - வர மேன்மைப்பட் டாபிசேக முடிசூட்டி முத்தின் சிவி கையில் வைத் தூர்வலஞ் செய்து - தான் முதலிக்கா மிண்டனெனும் விருதுங்கொடுத்து நத்தூர் பருத்திப் பள்ளி நாடும்பூந்துறை - நாடு நாலாறு நாடுதானும் மேலுமையாப் பெற்றோன்.” -இருப்புலிப் பள்ளு 32. பூந்துறைக் குப்பிச்சி பூந்துறை என்பது, மேல்கரைப் பூந்துறை நாட்டின் தலைநகர். இது, பூந்துறை என்ற தலைவன் பெயரால் ஏற்பட்ட பெயரென்பதை முன்பு கண்டோம். ஈரோடு பழைய கோட்டை வழியில், ஈரோட்டின் தெற்கில் எட்டாவது கல்லில் உள்ளது இவ்வூர், பூந்துறையில் குப்பிச்சி என்ற வேளாண்குலச் செல்வனொருவன் இருந்தான். இவனொரு பெருவீரன். அக்காலத்தே கொங்குநாடு, வெற்றிநகர்ப் பேரரசின் ஆட்சிக் கீழ் இருந்து வந்தது. சுதாசிவராயன் (1542 - 1576) என்பான், வெற்றிநகர்ப் பேரரசனாக இருந்தான். அவ் வேந்தனைக் காணக் குப்பிச்சி வெற்றிநகர் சென்றான். அரண்மனை வாயிலில் ஒரு மல்லன், ஒரு சங்கிலியின் ஒரு தலைப்பைத் தன் காலில் கட்டி, மற்றொரு தலைப்பை வாயிற் படியின் எதிர்ப்பக்கமாக மேலே தோரணம் போற் கட்டித் தொங்க விட்டு, ‘வல்லவர்களானால் என்னை மற்போரில் வென்று உள்ளே செல்ல வேண்டும்; இல்லையேல், இச்சங்கலித் தோரணத்தினுள் நுழைந்து செல்ல வேண்டும்’ என எழுதி அங்கு மாட்டியிருந்தான். குப்பிச்சி அம்மல்லனுடன் மற்போர் செய்து அவனை வென்று, அரண்மனைக்குட் சென்று அரசனைக் கண்டான். இராயன் மகிழ்ந்து, ‘என்னிடம் ஒரு குதிரை இருக்கிறது. அதில் ஏறிச் சவாரி செய்து வருவீரேல் நீர் மிகவும் கெட்டிக்காரன்’ என்றான். குப்பிச்சி குதிரையேற்றத்தில் மிகவும் கெட்டிக்காரன் எனவே, மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான். அக்குதிரையோ பொல்லாதது; ஏறின உடனே அது அந்நகருக்கு அருகில் உள்ள ஒரு குளத்திற்குக் கொண்டு சென்று கீழே தள்ளிப்புரண்டு மிதித்து மீளும் இயல்புடையது என்பதைக் குப்பிச்சி அறிந்தான். எனவே, அதை எளிதில் அடக்க வழி யொன்று கண்டான். கொஞ்சம் கண்ணாம்புக் கல்லை ஒரு துணிப்பையிலிட்டு அக்குதிரையின் அடிவயிற்றிற் கட்டிவிட்டு அதன் மேல் ஏறினான். உடனே அக்குதிரை விரைந்து சென்று, வழக்கப்படி அக்குளத்தினுள் இறங்கியது. நீர் பட்டவுடன் சுண்ணாம்புக்கல் நீற்றுக் கொதித்தது. அதனால் உண்டான எரிச்சலைப் பொறுக்க முடியாது. அக்குதிரை வெளியேறி விரைந்து ஓடிற்று. அவ்விரை விலேயே அந்நகர்த் தெருவை ஒரு சுற்றுச் சுற்றிவந்து, அக் குதிரையை அரசன் முன் கொண்டு வந்து நிறுத்தினான் குப்பிச்சி. குப்பிச்சியின் சூழ்ச்சித் திறனைக் கண்டு மகிழ்ந்த மன்னன், பல சிறப்புக்களோடு, பூந்துறை நாட்டதிகார முங்கொடுத்துப் பெருமைப்படுத்தினான். இவன் காலத்திலிருந்து, இவன் மரபினர் பூந்துறைநாட்டதிகாரஞ் செலுத்தி வந்தனர். பூந்துறை வாரணவாசி: மைசூர் மன்னனான தொட்ட தேவராயன் (1659 - 1672) படைத்தலைவனாயமைந்து, வணங்கா முடிக் கட்டி தோற்பதற்குக் காரணமாக அமைந்த பூந்துறை வாரணவாசி என்பவன், இக்குப்பிச்சி வழிவந்தவனே யாவன். இவனும் ஒரு பெருவீரனே; ஆனால், அயலானோடு சேர்ந்து இனத்தானை வென்று, கொங்கு நாட்டை மைசூர் அரசுக்குட்படுத்தி விட்டான். “மாற்றலர்மண் கொள்ளும் வணங்கா முடிக்கட்டி ஆற்றலழிந் தேங்கி யடங்கினான் - தாற்றரம்பைப் பூங்கனித்தேன் பாய்மருதப் பூந்துறையான் சேனைமதிற் பாங்குறுத்துச் செய்கொடுமை பார்த்து.” -தனிப்பாடல் 33. வணங்கா முடிக்கட்டி கட்டிமரபின் வரலாற்றினை முன்பு கண்டோம். இவ் வணங்காமுடிக் கட்டியே கட்டி மரபின் கடைசி அரசனாவன். இவன் வீரமும் புகழும் ஒருங்கே அமையப் பெற்றவன்; அளவு கடந்த தமிழ்ப்பற்றுமுடையவன். தாரமங்கலம் சிற்பக் கோயிலைக் கட்டி முடித்தவன் இவனே. பவானிக் கூடுதுறைக் கோயிலை அடுத்துள்ள யாத்திரை விடுதி. இம்மரபினர் பவானிக்கு வந்தால் தங்குவதற்காகக் கட்டினதே யாகும். இவன் காலத்தே மைசூரை ஆண்ட தொட்டதேவராயன் (1659 - 1672) என்பான். அடிக்கடி கட்டி நாட்டின் மேற்படை யெடுத்தான். கி.பி.1665இல், அவன் பெரும்படையோடு அமர குந்தியை நோக்கி வந்து கொண்டிருந்தான். வணங்கா முடிக் கட்டி போர்க் கோலம் பூண்டு அரண்மனை வாயிலில் அடலரி யேறு போல வந்து கொண்டிருந்தான். அப்போது, பூந்கோதையார் என்னும் தமிழ் மூதாட்டி யார் வணங்காமுடியிடம் பரிசு பெற வந்தார். அந்நிலையில் வணங்காமுடி புலவரை அன்புடன் வரவேற்றான். பூங்கோதை யார், மல்லிற் செதுக்கிவைத் தார்பொரு ளாற்றமிழ் வள்ள லெல்லாம் சொல்லிற் செதுக்கிவைத் தார்தம் பெயரைநின் தோள்வலியால் எல்லிற் செதுக்கிவைத் தார்பொரு ளால்நின் இரும்பெயரைக் கல்லிற் செலுக்கிவைத் தாய்கொங்கி னில்வணங் காமுடியே. (மல்- தோள்வலி, செதுக்கி வைத்து ஆர்பொருள் - ஈட்டி - வைத்த மிக்க பொருள். சொல்லில் செதுக்கி வைத்தல் - புலவர்க் கீந்து பாடல் பெறல். எல்-விளக்கம். எல்லில் செதுக்கிவைத்து ஆர் பொருள் - குடிவிளங்க ஈட்டி வைத்த நிறைந்த பொருள். கல்லில் செதுக்கி வைத்தது - தாரமங்கலம் சிற்பக் கோயில் கட்டியது.) என்ற பாடலைப் பாடிப் பொருள் விளக்கக் கேட்ட வணங்கா முடி, ‘அன்னாய்! தங்கள் பாட்டுக்குத் தக்க பரிசில் இது வென்று தோன்றவில்லை. பாரி உயிரைக் கொடுத்ததும், குமணன் தலையைக் கொடுத்ததும், (கொடுக்க இசைந்தது) தமிழ்ப் பாடலுக்கெனில், அவற்றைவிடச் சிறந்த பொருள் என்ன இருக்கிறது? என் அரசே தங்கள் பாட்டின் பரிசு!’என்று, தன் மணிமுடியைப் புலவர் தலையில் சூட்டினான்; ‘இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று, வெற்றிவானைப் புலவர் கையில் தந்தான். பூங்கோதையார் அவ்வாளைக் கையில் வாங்கிக் கொண்டு, ‘அரசே! நின் தமிழ்ப்பற்றினை மெச்சுகிறேன். உன் விருப்பப் படியே அரசை ஏற்றுக் கொள்கிறேன். நான் கட்டி நாட்டின் அரசி. நீ என் நாட்டுக் குடிமகன். உனது தமிழ்ப் பற்றுக்காக இந்நாட்டுக்கு உன்னை அரசனுக்குகிறேன்; என் அரசை உனக்குப் பரிசாகக் கொடுக்கிறேன். நீ பகை வென்று பைந்தமிழ் காப்பாயாக’ என, மணிமுடி சூட்டி, வீரவாளைக் கட்டி கையில் கொடுத்தார். வணங்காமுடிக்கட்டி படையுடன் சென்று, பகைவனைப் புறங்காட்டி ஓடச் செய்து மீண்டான். 1672இல் ஈரோட்டில் நடந்த பெரும்போரில், மைசூர் மன்னன் தொட்ட தேவராயன் மகன் சிக்கதேவராயன் (1672 - 1704) வணங்கா முடிக் கட்டியை வென்று, கட்டிநாட்டை மைசூர் நாட்டுடன் சேர்த்துக் கொண்டான். இப்பூங்கோதையார். தக்கைராமாயணம் பாடிய, சங்ககிரி எம்பெருமான் கவிராயரின் மனைவியார்; 75 ஆண்டு கட்கு மேற்பட்ட மூதாட்டியாராவர். 34. அல்லாளன் இளையான் அல்லாளன் மிகவும் வல்லாளனும் நல்லாளனும் ஆவான். இளையான் எதிரியைக்கண்டொருபோதும் இளையான். இவன் பேருக்குத் தகுந்த வீரமும் புகழும் ஒருங்குடையவன். பேரரசரின் பெரும்படையையும் மதியாது எதிர்க்கும் அத்தகு ஆற்றலுடையவன். இவன் கரையை வேட்டுவகுலச் செல்வன். வடகரை ஆற்றூர் என்பது இவன் ஊர். இவ்வூர், சேல மாவட்டத்து நாமக்கல் வட்டத்தின் மேல் பகுதியான கீழ் கரை அரையநாட்டில் காவிரியின் வடகரையில் உள்ளது. திருமலை அல்லாளன் இளையான் என்பது இவன் முழுப்பெயர். பெரும் பணத்தை வாரி இறைத்து ஆற்றில் ஆணை கட்டுவர். ஆனால், அல்லாளன் அதற்கு மாறானவன். இவன், வடகரை ஆற்றூர்க்குப் பக்கத்தில், காவிரியாற்றில் ஒரு தடுப்புச் சுவர் கட்டி, அதினின்று வாய்க்கால் பிரித்து அரைய நாட்டை நீர்வளமுடையதாக்கினான். இது, இராச வாய்க்கால் எனப் படும். அப்பகுதியின் வளத்துக்கு அடிப்படை யாக உள்ளது இவ் வாய்க்காலே. “மூவருக்கும் அகத்தியமா முனிவருக்கும் அரசிருந்த முன்னை யோர்க்கும் தேவருக்கும் திரும்பாத காவிரியைக் கொங்கேற்றித் திறை கொண் டாயே பூவிருக்கு முரமாயன் கடலடைத்தா னவன்வேடம் புனைந்த வாறோ யாவருக்கு மிளையானே அல்லாள திருமலையா ஈகை யோனே.” - திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை. மைசூர் நாட்டுப் படைத்தலைவனான நஞ்சராசன் என்பான் மிகவுங் கொடியவன். அவனைக் கொள்ளைக்கார நஞ்சராச னென்றே கூறுவர். 1746இல் அவன் கொங்கு நாட்டின் மேற்படையெடுத்தான். தாராபுரம் வரைச் சென்று, அங்குள்ள பாளையக்காரர்களை வென்றடக்கி, அவர்கள் கொடுக்க வேண்டிய திறையோடு, கொடுமை செய்து பெரும் பொருளைக் கொண்டு மைசூர் செல்லும் வழியில், திருச்செங் கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் புகுந்து ஏராளமான பொருள்களைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்றான். அல்லாளன் பெரும்படையோடு சென்று, நஞ்சராசனை வழிமறித்துப் பொருது வென்று, அவன் கொள்ளைகொண்டு சென்ற பொருளை மீட்டுக் கொண்டு, அக்கொள்ளைக் காரனை வடக்கு நோக்கி ஓடும்படி செய்து மீண்டான்; நஞ்சராசனால் இடிக்கப்பட்ட அம்மையப்பர் கோயிலையும் பழுதுபார்த்துப் புதுப்பித்தான். திருச்செங்கோட்டுத் திருப் பணிமாலையிலும், கபிலைமலைக் குழந்தைக் குமாரர் வருக்கைக் கோவையிலும் இவன் பாராட்டப் பெற்றுள்ளான். 35. தொண்டைமான் 1. தாராபுர வட்டத்துத் தென்கரை நாட்டு மூலனூரில் வேளாண்குல இளைஞனொருவன் இருந்தான். அவன் மிக்க வீரமும் துணிவும் மிக்கவன், அவன் ஏதோ காரியமாய், சங்ககிரிக் கோட்டையில் இருந்த மைசூர் முகமதிய அதிகாரி யைப் பார்க்கப் பலநாள் காத்திருந்தும் பார்க்க முடியவில்லை. எனவே, அவ்வதிகாரியின் மகன் அருமையாக வளர்த்து வந்த செம்மறிக்கிடாயின் இரண்டு காதுகளையும் அறுத்து விட்டான். காவலர் பிடித்துக் கொண்டு போய் அவனை அந்த அதிகாரி முன்விட்டனர். அதிகாரி கேட்க அவ்விளைஞன், ‘ஐயா! பல நாளாகக் காத்திருந்தும் தங்களைக் காணமுடிய வில்லை. இப்படிச் செய்தாலாவது தங்களைக் காணலாமென இப்படிச் செய்தேன்’ என்றான். அவ்விளைஞனின் அறிவையும் துணிவையும் மெச்சி, வளர்கிடாயைக் காதறுத்த பகதூர் தொண்டைமான்’ என்று பாராட்டினான் அவ்வதிகாரி, அதிலிருந்து அவன் வழியினர், தொண்டைமான் என்ற பெயரை வழிவழிப் பெயராக வைத்து வழங்கி வந்தனர். இவன் காலம் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். 2. சேலம் மாவட்டத்துப் பருத்திப் பள்ளி நாட்டு மல்ல சமுத்திரத்து வேளாண் குல இளைஞனொருவன், தொண்டை மான் என்ற மன்னன் படையில் இருந்து வந்தான். அவன் ஒரு போரில் காட்டிய தீரத்தைப் பாராட்டி அம்மன்னன் அவனுக்குத் தொண்டைமான் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தான். இவன் மரபினரும் தொண்டைமான் என்ற பெயரை வழிவழிப் பெயராக வைத்து வழங்கி வந்தனர். இவ்விரு தொண்டைமான் குடியும் சிறந்த செல்வக்குடியாகும். 36. அருமைப் பிள்ளை நாயக்க மன்னர்கள் இருந்தாண்ட தமிழ்நாட்டு ஊர்களுள், சேந்தமங்கலமும் ஒன்று. இவ்வூரில், இராமச்சந்திர நாயக்கன் மரபினர் இருந்தாண்டு வந்தனர். இவ்வூர், சேல மாவட்டத்து நாமக்கல்லின் வடக்கிலுள்ளது. சேந்தமங்கலத்தில் கோழைப்பிள்ளை என்னும் சோழிய வேளாளச் செல்வனொருவன் இருந்தான். இவன், சோழ நாட்டிலிருந்து வந்து கொங்கு நாட்டில் குடியேறிய மரபினன். இவனுக்கு அருமைப்பிள்ளை என்ற மகனொருவன் இருந்தான். அவன், புலவர் பாடும் புகழுடையவனாக விளங்கினான். இராம நாடகம் பாடிய, சீகாழி அருணாசலக் கவிராயரின் மைந்தரான அம்பலவாணக் கவிராயர் என்பவர் (இவர் 1742இல் பிறந்தவர்) சேந்தமங்கலம் வந்தார். அருமைப் பிள்ளை புலவரை அன்புடன் வரவேற்றுப் போற்றினான். புலவர், கொல்லி மலைமேல் உள்ள அறப்பள்ளீச்சுரர் மீது, அறப்பளீச்சுர சதகம் பாடி அரங்கேற்றினார். அருமைப்பிள்ளை பெரும் பொருள் கொடுத்துப் புலவரைச் சிறப்பித்தான். அச்சதகத்தின் ஒவ்வொரு பாட்டின் ஈற்றிலும், அத்தமிழ்ப் புரவலனின் பெயரை அமைத்துப் பாடிச் சிறப்பித்துள்ளார் கவிஞர், சில பாடல்களில் அவன் தந்தை பெயரையும் அமைத்துப் பாடியுள்ளார். “ஆடிச் சிவந்தசெந் தாமரைப் பாதனே அண்ணலெம தருமை மதவேள் அனுதினமு மனதில்நினை தருசதுர கிரிவளர் அறப்ப ளீசுர தேவனே.” “அண்ணலே கங்கா குலத்தலைவன் மோழைதரும் அழகனெம தருமை மதவேள் அனுதினமு மனதில்நினை தருசதுர கிரிவளர் அறப்ப ளீசுர தேவனே.” எனக் காண்க. சதுரகிரி - கொல்லிமலை. அருமை - அருமைப் பிள்ளை. மதவேள் - அழகிய வேளாண்குலத் தலைவன். 37. தீரன் சின்னமலை இவன், பழையகோட்டைச் சர்க்கரை மரபினன்; ஈரோடு பழைய கோட்டை வழியில், ஈரோட்டின் தெற்கில் 16வது கல்லிலிருந்து கிழக்கே ஒருகல் அளவில் உள்ள ஓடாநிலை என்னும் ஊரிலிருந்து கோவைக் கோட்டத்தை ஆண்டு வந்தான். இவன், 1756இல் பிறந்து, தாய் நாட்டின் விடுதலைக்காகவே வாழ்ந்து, அதற்காகவே 1805இல் தன் உயிரைக் கொடுத்த விடுதலை வீரன். சின்னமலை முதலில், ‘கொங்கு நாட்டார் எதற்காக மைசூர் மன்னர்க்கு வரி கொடுக்க வேண்டும்?’ என மைசூர்க்குக் கொண்டு போன வரிப் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு, மைசூர் ஆட்சியை எதிர்த்தான். ஆனால், ஆங்கிலேயர் இந்நாட்டைக் கைப்பற்ற முற்பட்டதைக் கண்டதும், எராள மான கொங்கு இளைஞர்களை மைசூர்ப் படையில் சேர்த்த தோடு. தானும் மைசூர் சென்று, அக்கொங்குப் படைக்குத் தலைமை தாங்கி, வெள்ளையரோடு வீரப்போர் புரிந்தான். 1799இல், சூழ்ச்சியால் மைசூர் வீழ்ச்சியடைந்ததும், ஆங்கிலேயர்க்கு உரிமையுடையதான கோவைக் கோட்டத்தை, ஐந்தாண்டுகள் ஆங்கிலேயர்க்கு விடாமல் ஆண்டு வந்தான். பல முறை வெள்ளைப் படையை வெந்நிட்டோடும்படி செய்தான். சின்னமலை என்றாலே ஆங்கிலேயர் அஞ்சி நடுங்கினர். ஆனால், உள்ளாளைக் கொண்டு வஞ்சனையாகப் பிடித்து, 1805இல் சங்ககிரிக் கோட்டையில் தூக்கிக் கொல்லப்பட்டான். விடுதலை வீரன் தீரன் சின்னமலை! இவனே கொங்குநாட்டில், ஏன்? தமிழகத்திலேயே தனித் தமிழாட்சிபுரிந்த கடைசித் தமிழர் தலைவன் ஆவான். இவனது விரிவான வரலாற்றை, எனது - ‘தீரன் சின்னமலை’ என்னும் நூலிற்காண்க. 38. கொல்லி மழவன் சங்ககாலத்தே, கொங்கு நாட்டுக் கொல்லிமலைப் பகுதியை ஆதன் ஓரி மரபினர் ஆண்டு வந்தனர். வல்வில் ஓரி, திருக்கோவலூர் மலையமான் திருமுடிக் காரியால் கொல்லப் பட்ட பின்னர்க் கொல்லிமலை நாடு சில ஆண்டுகள் சேரர் ஆட்சிக் கீழ் இருந்து வந்தது. பின்னர் அது, தகடூர் அதியமான் மரபினர் ஆட்சிக்குட்பட்டது. அதியமான் மரபினரிடம் மழவர் என்னும் ஒருவகை மறவர் படை இருந்து வந்தது. அம்மழவர் படைத்தலைவனொருவன் தகடூர் மன்னரின் ஆணையாளனாக அப்பகுதியை ஆண்டு வந்தான். அப்படைத் தலைவன் வழியினர் தொடர்ந்து ஆண்டு வந்ததால் அப்பகுதி மழகொங்கு எனப் பெயர் பெற்றது. பாண்டியன் தேர்மாறன் (710-765) அம் மழகொங்கை வென்றதாக வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது. கொல்லிமலைப் பகுதியை ஆண்டு வந்ததால், அம்மழவன் வழியினர் - கொல்லி மழவர் எனப் பெயர் பெற்றனர். 1. சம்பந்தர் காலத்தே (கி.பி.7 நூ) இருந்த கொல்லி மழவன் என்னும் தலைவன் மகள், முயலகன் என்னும் காக்கை வலிப்பு நோயால் மிகவும் வருந்தினாள். மன்னன் மிகவும் வருந்தி திருப்பாச்சிலாச்சிராமத்து இறைவனை வழிபட்டு வரும்படி செய்தான். அங்கு வந்த சம்பந்தர், ‘துணிவளர் திங்கள் துளங்கி விளங்க’ எனும் பதிகம் பாட மன்னன் மகளின் அந்நோய் நீங்கினதாகச் சம்பந்தர் வரலாறு கூறுகிறது. 2. முதல் இராசராசச் சோழன் (985 -1014) தந்தையாகிய சுந்தரச்சோழன் காலத்திலிருந்த கொல்லி மழவன், சுந்தரச் சோழன் இலங்கை மீது படையெடுத்த போது சோழருக்குப் படைத்துணையாகச் சென்று, இலங்கை மன்னன் நான்காம் மகிந்தனோடு புரிந்த இலங்கைப் போரில் உயிர் துறந்தனன். 3. இக்கொல்லி மழவன் மகன், சுந்தரச் சோழன் மைந்தனான முதல் இராசராசன் காலத்தில் (985 - 1014) சோழர் கீழ்ச் சிற்றரசனாக இருந்து கொல்லிக் கூற்றத்தை ஆண்டு வந்தனன் எனத் திருச்செங்கோட்டுக் கல்வெட்டுக் கூறுகிறது. 39. சீயகங்கன் இவன், குவலாளபுரத்தில் இருந்து கீழ்கங்க நாட்டை ஆண்டு வந்த கங்க மன்னன் ஆவன். கீழ்கங்கம் என்பது மைசூர் நாட்டின் கீழ்ப் பகுதியும், தருமபுரி மாவட்டத்து ஓசூர், கிருஷ்ணகிரி வட்டங்களின் வடபகுதியும் (பாராமகால்) ஆகும். குவலாளபுரம் இன்று கோலார் என வழங்குகிறது. இச் சீயகங்கன் மூன்றாங்கு லோத்துங்கச் சோழன் (1178 - 1218) காலத்தவன். அமராபரணன் என்பது, இவனது சிறப்புப் பெயர். இவன் கல்வெட்டுக்களெல்லாம் தமிழிலேயே உள்ளன. இவன் மிகுந்த தமிழ்ப் பற்றுடையவன். தமிழிலக்கணக்கட லாகிய தொல்காப்பியத்தில் கூறப்படும். இலக்கணக் கருத்துக் களைச் சுருக்கமாகத் தொகை வகை விரியில் ஓர் இலக்கண நூல் செய்தல் இக்காலத்திற்கு ஏற்றதாகுமென இவன் எண்ணினான். கொங்குக் குறுப்பு நாட்டுச் சனகாரத்தவரான பவணந்தி முனிவரைக் கொண்டு, நன்னூல் என்னும் இலக்கணநூல் செய்வித்துப் பொன்றாப் புகழை எய்தினான். “கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் திருந்திய செங்கோற் சீய கங்கன் அருங்கலை விநோதன் அமரர் பரணன் மொழிந்தன் னாக முன்னோர் நூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன் பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி” என்பது, நன்னூற் சிறப்புப் பாயிரம், எனவே, சீயகங்கன் காலத்தே அப்பகுதியில் கன்னடம் அவ்வளவாகப் பரவவில்லை என்பது பெறப்படுகிறது. சனகை - சனகாபுரம், இன்று இது சீனாபுரம் என வழங்குகிறது. கங்கநாடு - பழங்கொங்கு நாடென்பதை அறிக. 40. வரபதியாட் கொண்டான் இவன் ஒரு கொங்கு வேளிர் மரபினன். கொங்கு நாட்டி னின்று சோழ நாட்டு வக்கபாகை என்னும் ஊரில் சென்று தங்கி, அப்பகுதியை ஆண்டு வந்தான். இவன் மிக்க தமிழ்ப் பற்றுடை யவன்; வில்லிபுத்தூராழ்வார் என்னும் புலவரைக் கொண்டு, பாரதத்தைத் தமிழில் பாடுவித்தான். இவன் கி.பி.15ஆம் நூற்றாண்டினன். “எங்குமிவ னிசைபரப்பி வருநாளில் யாமுரைத்த இந்த நாட்டில் கொங்கர்குல வரபதியாட் கொண்டானென் றொரு வாய்மைக் குரிசில் தோன்றி” என்பது, வில்லிபுத்தூரார் மகனார் வரந்தருவார் பாடிய, பாரதச் சிறப்புப் பாயிரம். 41. கொங்கு மங்கலை முன்பு கொங்கு நாட்டை ஆண்ட கங்க மன்னர்களில் முதல் ஒன்பது பேர் (கி.பி.143 - 436) காந்தபுரத்திலிருந்தாண்டு வந்தனர். (கங்கர் வரலாறு பார்க்க) கீழ்பவானி அணையுள் மூழ்கிய தணாயக்கன் கோட்டை இருந்த இடத்திலே தான் இக்காந்தபுரம் இருந்தது. இது ஒடுவங்க நாட்டைச் சேர்ந்தது. அக்கங்க மன்னர்களில் ஒருவன் மகள் கருப்பவலியுற்றுக் கருவுயிர்க்காமல் மிகவும் வருந்தினாள். எத்தனையோ கை தேர்ந்த மருத்துவிகள் பார்த்தும் குழந்தை பிறக்கவில்லை. குழந்தையைக் கொன்று எடுக்க மனமில்லாத மன்னன் மிகவும் வருந்தினான். நறையூர் நாடு என்பது, அவ்வொடுவங்க நாட்டின் இணை நாடு, அது, காந்தபுரத்தைச் சேர்ந்த நாடு. அந்நறையூர் நாட்டூ ரொன்றிலிருந்த மங்கலை (கொங்குநாவிதச்சி) ஒருத்தி வந்து, மன்னன் மகளின் வயிற்றைக் கிழித்து, குழந்தையை உயிரோடு எடுத்து, கிழித்த வாயைத் தைத்து மருந்திட்டு ஆற்றித் தாயையும் சேயையும் வாழ்வித்தாள். அரசன் அகமிக மகிழ்ந்து, ஓர் ஊருக்கு மங்கலைப் பட்டி என்று பெயரிட்டு, அதை அவளுக்கு இறையிலியாகக் கொடுத் தான். அவ்வூர் இன்று அழிந்துவிட்டதுபோலும். இங்கு ஊர் என்பது, ஒரு கிராமமாகும், காங்கய நாட்டு முத்தூக்குப் பக்கத்தில், மங்கலைப்பட்டி என்ற ஊர் இருக்கிறது. முன்பெல்லாம் கொங்குக் குடிநாவிதப் பெண்கள் தாம் மகப்பேற்று மருத்துவம் செய்து வந்தனர். அவர்களில் ஒரு சிலர் கைதேர்ந்த மருத்துவிச்சிகளாக இருந்து வந்தனர். தாய்க்கு நோகாமல் வயிற்றைக் கிழித்துக் குழந்தையை எடுக்கும் மருத்துவமுறை தெரிந்திருந்தனர். கிழித்த புண்ணை விரைவில் ஆற்று வதில், தமிழ் மருத்துவம் தலைசிறந்ததாகும். அன்று கொங்கு நாவிதர்களும் பெரும்பாலும் மருத்துவம் செய்து வந்தனர். அதுதான் நாவிதர்க்கு, மருத்துவர் என்ற பெயர் ஏற்பட்டதற்குக் காரணமாகும். அத்தகு பழங்காலத்தே அத்தகு அறுவை மருத்துவ முறையில் கைதேர்ந்திருந்தனர் தமிழர் என்பது, அறிந்து இன்புறத்தக்க தொன்றாகும். இன்னும், சங்க காலத்திலும் பிற்காலத்திலும் கொங்கு நாட்டில் இத்தகையோர் அங்கங்கே எத்தனையோ பேர் இருந்திருப்பர். கிடைக்கப் பெற்றுள்ள அளவில் அமைதி யுறுவோமாக. ‘வீரமும் புகழும்’ என்னும் இப்பகுதியில் காண்போர் வரலாறு - புறநானூறு முதலிய சங்க இலக்கியங்கள், கொங்கு மண்டல சதகம், அவ்வக்காலப் புலவர்கள் செய்துள்ள பனுவல்கள், கல்வெட்டுக்கள் முதலியவற்றில் உள்ளபடி எழுதப்பட்டது. தமிழக வரலாற்று நூல்களும் இதற்கு ஒருவாறு துணை செய்தன. 16. கொங்கு நாட்டின் நிகழ்காலப் பெருமை கொங்கு நாட்டின் பண்டைய வரலாற்றினை - பழம் பெருமையினை. இதுகாறும் கண்டோம். கொங்கு நாட்டின் இன்றைய வரலாற்றினை - நிகழ்காலப் பெருமையினை இனிக் காண்போம். ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்வுக்கு அந்நாட்டின் இயற்கை வளமே காரணமாகும். கொங்கு நாடு இயற்கை வளத்தின் பிறப்பிடமும் இருப்பிடமும் ஆகும் என்பதை முன்பு கண்டோம். கொங்கு நாட்டை இயற்கைவளக் களஞ்சியம் என்றே சொல்லலாம். அவ்வியற்கை வளத்தின் கூறுபாடு - கனிவளமும் நீர்வளமும் ஆகும். அவற்றின் பயன்பாடு - பயிர் வளமும் தொழில்வளமும் ஆகும். 1. கனி வளம் கொங்கு நாட்டின் கனிவளம்உலகப் புகழ் பெற்றது. ‘கொங்கு நாட்டின் மேலே முக்கனிவளம்! கீழே பொற்கனி வளம்!’ என்பது, புலவர் புகழுரையாகும். மா, பலா, வாழை என்னும் முக்கனிகளுள், சேலத்து மாம்பழமும், கொல்லி மலைப் பலாப்பழமும், திண்டுக்கல் மலைவாழைப் பழமும் பாடலிற் பயில்பவை யல்லவா! இன்றைய அறிவியல் தொழிற் படைப்புக்குத் தேவையான எல்லா வகையான கனிப் பொருள் களும் கொங்கு நாட்டில், குறிப்பாகச் சேல மாவட்டத்தில் உள்ளன. பொன்வகை, மணிவகை, பிறகனிவகை எனக் கனிப் பொருள்களை மூன்றுவகையாகக் கொள்ளலாம். மூலத்தாது வகை, கல்வகை எனப் பிறகனிவகையினையும் இருவகை யாகக் கொள்ளலாம். தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகிய இக்கனிப் பொருள் ஐந்தையும் - ஐம்பொன் என்பது தமிழ் மரபு, இரும்பு - கரும்பொன் எனப்படும். 1. பொன்வகை 1. இரும்பு : எல்லா வகையான தொழிலுக்கும் இன்றியமையா அடிப்படையாக உள்ளது இரும்பு. இரும்பு இல்லையேல் எத்தொழிலும் இல்லை எனலாம். கனிச் செல்வங்களுள் முதன்மையானது இரும்பு. நிலமகளின் முதற்பிள்ளை இரும்பு; அடுத்த பிள்ளைகளே நாம். தாயையும் சேயையும் வெவ்வேறாக்குவது இரும்பு தானே! ‘இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது’ என்பது, இரும்பின் அரும் பெரும் பயன் பாட்டினைக் குறிக்கும். உறுதியான இரும்பு - உருக்கு அல்லது எஃகு எனப்படும். எஃகினால் ஆன வேலினை, எஃகு என்றே வழங்கினர் பழந்தமிழ் மக்கள். கொங்கு நாட்டின் எஃகு, கி.மு. எட்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே எகிப்து முதலிய மேனாடுகட்கு ஏற்றுமதியானது என்பதை முன்பு கண்டோம். அக் காலத்தே கட்டப்பட்ட எகிப்து நாட்டுக் கல்லறைக் கோபுரங்களின் வேலைப்பாட்டுக்குச் சேலத்து எஃகினா லான உளி முதலிய கருவிகள் பயன்படுத்தப் பட்டன என்பதை நினைவு கூடங்கள். கி.மு.327இல், கிரேக்க நாட்டு அலெக்சாண்டர் இந்தியா வின் மேற்படையெடுத்து வந்த போது, புருசோத்தமன் என்னும் வடநாட்டரசன், 38 பவுண்டு எடையுள்ள கொங்கு நாட்டு எஃகினை அலெக்சாண்டருக்கு அன்பளிப்பாக அளித்தனன் என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இதனால், அன்று வட இந்தியாவுடனும் கொங்கு நாடு எஃகு வாணிகம் செய்து வந்த தென்பதும், அந்நாட்டினருக்கு அன்று அன்பளிப்பாக அளிக்கவும் பெறவும் உள்ள நிலையில் எஃகு அவ்வளவு அரிய பொருளாக இருந்து வந்ததென்பதும் பெறப்படுகிறதல்லவா? இரும்பிலிருந்து எஃகு செய்ய அன்று தமிழர்க்கு மட்டுந்தான் தெரியும் என்பதையும் நினைவு கூர்க. வெள்ளைக்காரர் முதன்முதல் கொங்கு நாட்டு இரும்பைத் தான் பயன்படுத்தினர். கொங்கு நாட்டில் வெட்டியெடுக்கப் பட்ட இரும்புக் கனிப்பொருள் இங்கிலாந்திலுள்ள ஷெப்பீல்டு, கிளாஸ்கோ முதலிய நகரங்களுக்குக் கொண்டு போகப்பட்டு அங்கு உருக்கப்பட்டது. கொங்கு நாட்டு இரும்பைக் கொண்டு கட்டப்பட்ட இரண்டு பாலங்கள் இங்கிலாந்தில் இன்னும் இருக்கின்றன. இனிக்கொங்கு நாட்டில் இரும்புக்கனிச் செல்வமுள்ள இடங்களைக் காண்போம். கோவை மாவட்டம் : கீழ்பவானி அணையின் தென் பகுதியிலும், கீழ்பவானி அணை - தொப்பம்பாளையம் பகுதியிலும், அணையை அடுத்த புங்கார் என்னும் ஊரின் மேல் பகுதியிலும், சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் வழியில், சத்தியிலிருந்து 8வது கல்லிலுள்ள கரிதொட்டம் பாளையம் பகுதியிலும், கோவை சத்தி வழியில், கோவையின் 38வது கல்லிலுள்ள வேலாம் பூண்டிக் காடுகளிலும் கோபிசெட்டி பாளையத்தின் வடக்கிலுள்ள வங்களாப்புதூரின் வடக்கிலுள்ள மலைப்பகுதியிலும், பவானி - மேட்டூர் வழியிலுள்ள நெருஞ்சிப் பேட்டையின் வடக்கிலுள்ள தலைமலைக் காடுகளிலும் இரும்புத்தாதுப் பொருள் உள்ளது. நீலகிரி மாவட்டம் : கூடலூர் வட்டத்துப் பண்டலூர்க் கருகிலுள்ள உச்சிப்பாறைப் பகுதியிலும், குன்றூரின் (குன்னூர்) 4வது கல்லிலும் எடப்பள்ளியின் அரைக்கல் கிழக்கிலும், குன்றூர் - கோத்தகிரி வழியில், 5½ கல் அளவிலுள்ள இல்லித் துறையிலும், உதகமண்டல அரசினர் விடுதியின் வடபுற முள்ள சினோடன் வழியில் 3வது கல்லிலுள்ள கொடப்ப மண்டலத்திலும், தட்டார வேணுவின் கிழக்கிலும், திருச்சி குடியின் கிழக்கிலும், குருடுகுடியின் மேற்கிலும், மாசின குடிக்கு 2 கல் மேற்கிலுள்ள முதுமலைப் பகுதியிலும், இலடா - அரிமயாறு வழிக்குத் தென் பக்கமுள்ள மெடம்பாடு என்னுமிடத்திலும், அஜ்ஜூரின் தெற்கிலும், தேவலா நகரின் 5 கல் வடக்கிலிருந்து தெற்கே கூடலூர் - கள்ளிக்கோட்டைச் சாலை வரையிலும் இரும்புக்கனிப் பொருள் உள்ளது. சேலம் மாவட்டம் : சேலத்தை அடுத்துள்ள சேர்வராயன் மலைப்பகுதியிலும், சேலத்தின் 6 கல் மேற்கிலுள்ள கஞ்ச மலையிலும், அம்மலையைச் சுற்றிலும் பத்துக்கல் சுற்றளவிலும், சேலத்தின் 13 கல் கிழக்கிலுள்ள கோதை மலையிலும், சேர்வ ராயன் மலையின் கிழக்கில், வடகிழக்காக 25 கல் நீளத்திலுள்ள சித்தேரி, தைநந்த மலைகளிலும், சேலம் - ஆற்றூர் வழியிலுள்ள வாழைப்பாடியிலிருந்து 2½ கல் தெற்கிலுள்ள சிங்கபுரமலை யிலும், கல்வராயன் மலையிலும், கல்வராயன்மலை யடிவாரத் திலுள்ள இராமநாயக்கன் பாளையத்திலும், கல்வராயன் மலைக்கும் கொல்லிமலைக்கும் இடையிலுள்ள ஆற்றூர்ப் பள்ளத்தாக்கிலும், தம்மம்பட்டிப் பகுதியிலும், சிங்கிலியான் கோம்பையின் ஒருகல் கிழக்கிலுள்ள மலைப்பகுதியிலும், கொல்லிமலையின் மேல்பகுதியிலும், இராசிபுரம் - நாமக் கல்லுக்கு இடையிலுள்ள புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, நரசிம்மபுதூர், கொண்டம நாயக்கனூர்ப் பகுதிகளிலும், நாமக்கல்லுக்கும் தலைமலைக்கும் இடையிலும் நாமக்கல்லின் கிழக்கேயுள்ள வில்லியப்பன் பட்டிக்கு ஒரு கல் வடக்கில் தொடங்கி, கிழக்கு நோக்கி 25 கல் நீளத்திற்கு தாத்தையங்கார் பேட்டை வரை இடையறாது உள்ளது இரும்புக்கனிச் செல்வம். கொல்லிமலையின் கிழக்கிலுள்ள பச்சை மலையின் தென்பகுதியில் மணலோடை வரையிலும் இரும்புக் கனி உள்ளது. அரூர் வட்டத்துத் தீர்த்த மலையிலும் இருப்புத்தாது ஏராளமாக உள்ளது. இச்சேலம் பகுதிகளை இரும்புக் கருவூலம் என்றே சொல்லலாம். இந்தியாவிலேயே உயர்ந்த இரும்புத்தாது சேல மாவட்டத்திலேதான் உள்ளது. சர்.தாமஸ் ஹாலண்டு என்னும் கனிவள ஆராய்ச்சி வல்லுநர், ‘சேலத்து இரும்புக் கனிவளம் கணக்கிட முடியாதது; வெட்ட வெட்டக் குறையாதது; தரத்தில் உயர்ந்தது’ என்கின்றார். கஞ்சமலையை அடுத்து உருக்காலை ஏற்படுத்தத் தமிழக அரசு முயன்று வருவது உலகறிந்த தொன்றாக உள்ளது. அன்னார் முயற்சி விரைவில் வெற்றி பெறுமாக, சேலத்தில் உருக்காலை ஏற்பட்டால், கொங்கு நாட்டின் தொழில் வளம் மேலும் வளமுடையதாகும்; தமிழகத்தின் தொழில் வளமும் பெருகும். 2. மேக்னேடைட் (Magnetite): இது ஒருவகைச் சிறந்த இரும்புத்தாது, சேல மாவட்டத்துக் கஞ்சமலை, கோதைமலை, தீர்த்தமலை, மற்றும் சேலமாவட்டத்தில் பல இடங்களில் இக்கனிப்பொருள் உள்ளது. 3. பொன் (தங்கம்) : பொன்னின் பெருமை புகலும் தரத்ததன்று. ஒளியும் தரமும் மிக்க விலை மதிப்புமே பொன்னின் பெருமைக்குக் காரணமாகும். அயல் நாட்டுச் செலாவணிக்குக் காரணமாக இருப்பதொன்றே பொன்னின் தன்னிகரற்ற தனிப் பெருமைக்குச் சான்றாகும். ‘அரும்பொனே மாணிக்க மணியே’ என, மணியினும் முன் வைத்தெண்ணப்படுவது பொன். ‘சீரெழுத்துப் பொன்பூ’ என மங்கலச் சொற்களுள் ஒன்றாகக் கொள்ளத்தகும் பெருமையுடையது பொன். ‘பொன் பூட்ட வந்தவர்க்குப் பூதக்கலந் தானனுப்பி’ என்னும் கொங்கு வேளாளர் மங்கல வாழ்த்துப் பாடலில், பொன் மணிகளால் செய்யப்பட்ட எல்லாவகை நகைகளும் ‘பொன்’ என்றே குறிப்பிடுதலை அறிக. ‘பொன்னின்றேல் பெண்ணில்லை’ என்பது பழமொழி. ‘பொன்னே போற் போற்றி’ என்பது, பொன்னின் தன்னிகரில்லாத் தனிப்பெருமைக்குத் தக்க சான்றாகும். இத்தகு பெருமை வாய்ந்த பொன்னும் கொங்கு நாட்டில் உண்டு. கோவை மாவட்டத்துக் காங்கயத்தின் தெற்கில், காங்கயம் - தாராபுரம் வழியிலுள்ள ஊதியூர் மலைக்கு - பொன்னூதி மலை என்பதே பெயர். தமிழ்ச் சித்தர்கள் இரும்பு முதலிய ஐவகைப் பொன்னையும் உலையிலிட்டுப் புடம் போட்டு உயர்ந்த பொன்னாக்கி வந்தனர். ‘சுடச்சுடரும் பொன்’ என்பது திருக்குறள். இதற்கு இரசவாதம் என்பது பெயர். ‘வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்’ என்பது, தாயுமானவர் பாடல், கொங்கு நாட்டினரான கொங்கண சித்தர் என்பவர் அவ்வாறு இரசவாதம் செய்த இடமே பொன்னூதிமலை. நீலகிரி மாவட்டம் : நீலகிரியிலுள்ள நட்கானிச் சுரங்கம், தேவலா நகரிலிருந்து ஒருகல் தெற்கிலுள்ள ஆல்பாச் சுரங்கம், தேவலாவின் 1½ கல் வடக்கிலுள்ள ஹார்வூடு சுரங்கம், தேவலாப் பக்கமுள்ள சாலமன் சுரங்கம், துன்பார்ச் சுரங்கம், சுள்ளிமலையடிவாரம், அம்மனமுடி பெட்டாவின் தென்பகுதி யிலுள்ள போனிக்ஸ் சுரங்கம், பண்டலூர் - போனிக்ஸ் சுரங்கத்திற்கிடையேயுள்ள ரோசடேல் சுரங்கம், அம்மனமுடி பெட்டாவின் முக்காற்கல் வடக்கிலுள்ள கிளென்ராக் சுரங்கம், சேரம்பாடியின் தென்பகுதியிலுள்ள வென்ட் வொர்த்துத் தேயிலைக் தோட்டம், அதன் தெற்கிலுள்ள கோட்டாமலைப் பகுதி முதலிய இடங்களில் பொற் கனிகள் உள்ளன. இப்பகுதியில் தங்கச் சுரங்கங்கள் பல இருத்தல் குறிப்பிடத் தக்கது. சேலமாவட்டம் : இராசிபுர வட்டத்துச் சிங்கிலியான் கோம்பையிலும், ஈசுவரமூர்த்தி பாளையத்திற் கருகிலுள்ள ஈசுவர மலையிலும், இராசிபுரத்தை அடுத்துள்ள கொங்கண மலையிலும் (சித்தர்மலை) பொற்கனி உண்டு. ஈசுவரமலைப் பகுதியில் இப்போதும் பொன் எடுத்து வருகிறார்கள். கொல்லி மலையிலும் பொன் உண்டென்பது 152ஆம் புறப்பட்டால் பெறப்படுகிறது. கஞ்சமலையில் தோன்றிக் காவிரியில் கலக்கும் ஒரு சிற்றாற்றுக்குப் பொன்னியாறு என்றே பெயர். அவ்வாற்று மணலைக் காய்ச்சியெடுத்த பொன் கொண்டே, தில்லைச் சிற்றம்பலம் - பொன்னம்பலம் ஆக்கப்பட்ட தென்பதை நினைவு கூர்க. எனவே, கஞ்சமலையை - கரும்பொன் பைம்பொன் களஞ்சியம் எனலாம், காவிரிக் கரையிலும் பொன் உண்டு என்பதற்கு, பொன்னி என்னும் அதன் பெயரே சான்றாகும். தருமபுரி மாவட்டம் : கிருஷ்ணகிரி அணையிலிருந்து 17 கல் அளவிலுள்ள இராயகோட்டையை அடுத்த சித்தர் கோயில் என்னுமிடத்தில் பொற்கனியுள்ளதாக, டாக்டர் ஹெய்னி என்பார் கூறுயுள்ளார். ஓசூர் வட்டத்திலும் பொன் உண்டென்பது, 1961இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓசூர் வட்டத்தை அடுத்து 40 கல் அளவில் கோலார்த்தங்கவயல் உள்ளதல்லவா? கோலார் அப்பொற்கனிச் செல்வத்தைச் சிறை செய்தாவைத்திருக்கும்! நிலப் பெட்டகத்துள் இருக்கும் பொன்னியெடுத்து மக்கட்குப் பயன்படச் செய்யத் தமிழக அரசு முயல வேண்டும். கையில் வெண்ணெயிருக்க அயல்நாட்டுச் செலாவணியாகிய நெய்க்கேன் அயலார் கையைப் பார்க்க வேண்டும்? 4. செம்பு : அரூர் வட்டத்துப் பைரநாயக்கன்பட்டி, கோட்டப்பட்டிப் பகுதியில் 400 சதுரக் கிலோ மீட்டர் அளவில் செம்புப் படிவங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை’ (புறம் - 202) ‘செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்’ (கம்ப:கும்ப கன்னன்). புரிசை, இஞ்சி - மதில். தனிச்செம்பு தீயினால் உருகாத தன்மையுடையதாகலின் பழந்தமிழ் மக்கள் செம்பினால் கோட்டை கட்டிச் சிறப்புடன் வாழ்ந்தனர். ‘செம்பொன் பதின்றொடி’ என்பது, ‘செம்பு ஒன்பதின் தொடி, செம்பொன் பதின் தொடி’ எனப் பிரித்துப்பொருள் கொள்ளப் படுவதால் (நன்னூல் - 391). தமிழகத்தில் அன்று செம்புக்கனி ஏராளமாக இருந்தமை பெறப்படும். இரும்பை அடுத்துச் செம்பு பலவகையிலும் பயன்படுகிறது. 5. அலுமினியம் : பாக்சைட் (Bauxite) என்பது, அலுமினி யத்தின் மூலப்பொருள். அலுமினியத் தொழிலுக்கும் பெட் ரோலைத் தூய்தாக்குவும், பித்தளையைத் தூய்தாக்கும் துலக்கி (பாலிஷ்) செய்யவும், கத்தி சாணை பிடிக்கும் கல் செய்யவும் மோட்டார்ப் பசை (கிரீஸ்) முதலியன செய்யவும் இவ்வலு மினியத் தாது பயன்படுகிறது. நீலகிரியில், 1. கோத்தகிரிச் சுற்றுப்புறம், 2. உதக மண்டலச் சுற்றுப்புறம், 3. உதகமண்டலத்திற்கும் கோத்த கிரிக்கும் இடைப்பகுதி ஆகிய மூன்றிடங்களில் பாக்சைட் உள்ளது. 1. கோத்தகிரியிலிருந்து அரைக்கல் வடமேற்கிலுள்ள டெயிலர் மலையிலும், கோத்தகிரியின் 3½ கல் வடக்கிலுள்ள கற்கோம்பையிலும், கோத்தகிரியின் 8 கல் வடக்கிலுள்ள எலடா என்னும் இடத்திலும் இத்தாது உள்ளது. எலடாவில் 5 இடங்களில் இது உள்ளது. 2. உதகமண்டலம் - கோத்தகிரி வழியில் 4½ கல் அளவில் சாலைக்கு மேல்புறமும் உதகமண்டலத்தின் 2½ கல் தென் மேற்கிலுள்ள கோன்மலையிலும், உதகமண்டலத்தின் 4 கல் வடமேற்கிலுள்ள வென்லாக்கு நகர்ப்பகுதியிலும் தொட்ட பெட்டாவிலும் இத்தாது உள்ளது. 3. உதகமண்டலம் - குன்றூருக்கு (குன்னூர்) இடையில், எடப்பள்ளியின் 2 பர்லாங்கு வடக்கில் பாதைக்கு மேல் புறமும், எடப்பள்ளியின் 2 பர்லாங்கு வடகிழக்கிலுள்ள ரங்கசாமி பெட்டாவிலும், கோத்தகிரி - குன்றூர் வழிக்குக் கிழக்கேயுள்ள மலையின் மேல்சரிவிலும், மோரிகாடு என்னுமிடத்திலிருந்து 2 பர்லாங்கு வடகிழக்கேயுள்ள பொரடையென்னு மிடத்திலும் இத் தாது உள்ளது. கொங்கு நாட்டின் தெற்கெல்லையான பழனிமலைப் பகுதியிலும் இத்தாது உள்ளது. சேலமாவட்டம் : சேர்வராயன் மலை முழுவதும் இவ்வலுமினியத் தாது நிரம்பியுள்ளது. சேர்வராயன் மலையை- அலுமினியமலை என்றே சொல்லலாம். அலுமினியப் பொருள்கள் செய்ய உலகிலேயே உயர்ந்ததும் சிறந்ததும் தரமானதும் இவ் வலுமினியத்தாதே என்கின்றனர் ஆராய்ச்சி அறிஞர்கள், கொல்லிமலைப் பகுதியிலும் இத்தாது உள்ளது. மேட்டூர் அலுமினியத் தொழிற்சாலையார், சேர்வராயன் மலை அலுமினியத் தாதினைத்தான் பயன்படுத்துகின்றனர். அலுமினியத்தால் ஆகும் பொருள்கள் அளவிறந்தவை. இந்நாட்டின் மிகப் பெரிய தொழில்களுள் ஒன்றாகப் பெட்ரோலைத் தூய்தாக்கும் தொழிற்சாலை யொன்று சேலத்தில் அமையின், அப்போது தெரியும் சேர்வராயன் மலையிலுள்ள அலுமினியச் செல்வத்தின் அருமையும் பெருமையும். 6. குரோமியம் (Chromiam) : இது, குரோமைட் (Chromite) என்னும் தாதுப் பொருளிலிருந்து எடுக்கப்படுகிறது. குரோமி யத்தின் மூலப்பொருள், குரோமைட் ஆகும். 60 பங்கு குரோமியமும், 2 பங்கு கரியமும் (Carbon) கலந்து உருக்கியது - பெர்ரோ குரோமியம் (FerroChromiam) எனப்படும். உறுதியுள்ள குரோம் எஃகு (Chrome steel) செய்யப் பெர்ரோ குரோமியம், பயன்படுகிறது. குரோமியம், சீமைவெள்ளி, இரும்பு ஆகிய இம் மூன்றன் கலப்பால் போர்க் கப்பல்களுக்கு எத்தகைய குண்டும் ஊடுருவிச் செல்லாத கவசத் தகடு செய்யப்படுகிறது. மின்பூச்சுத் தொழிலுக்கும் (Electro lating), நிழற்படத் தொழிலுக்கும் குரோமியம் பயன்படுகிறது. உருக்குச் சூளைகள், உலைக் கூடங்கள், கொதிகலமுள்ள பிறதொழில்சாலைகள் ஆகியவற்றிற் குரிய செங்கற்கள் செய்வதற்கும் குரோமியம் தேவைப்படுகிறது. இன்னும் பல வகையில் இது பயன்படுகிறது. இரும்பும் குரோமியமும் கலந்ததே புதுவெள்ளி (எவர்சில்வர்) ஆகும். சேலத்தின் 5ல் மேற்கில் உள்ள கருப்பூர் வெள்ளைக் கல்மேட்டில் பல இடங்களில் வெள்ளைக் கற்களுக்கருகே குரோமைட்டுப் பரவிக் கிடக்கிறது. கஞ்சமலையின் மேல் பகுதியில், சித்தர் கோயிலுக்குக் கிழக்கில் இத்தாதுப் பொருள் உள்ளது. திருச்செங்கோட்டுக்கு 11 கல் தெற்கில் வில்வடிவில் இது காணப்படுகிறது. இவ் வில்வடிவம் தெற்கு நோக்கி உப்பி வளைந்துள்ளது. அதாவது மேற்கே காவிரிக் கரையிலுள்ள இரைய மங்கலத்திலிருந்து கிழக்கே கோட்டக்கல் பாளையம் வரையிலும் சென்று, அங்கிருந்து வடக்கே இருப்புலி வரையிலும் சென்றுள்ளது. திருச்செங்கோடு- நாமக்கல் பாதைக்கு வட புறம் உள்ளது இருப்புலி. இதன் இடையிலுள்ள ஊர்கள் - இரைய மங்கலம், முளசை, செட்டிபாளையம், சித்தம்பூண்டி, பாமாண்ட பாளையம், தொட்டியநத்தம், கருங்கல்பட்டி, கோட்டக்கல் பாளையம் ஆகியனவாம். இது 10 கல்லுக்கு மேல் நீளம் உள்ளது. சில அடியி லிருந்து 30 அடிகனம் வரை உள்ளது இத்தாதுப் பொருட் படிவம். ஓசூர் வட்டத்து மலைகளிலும் இக்கனிப்பொருள் உள்ளது. 1840க்கு முன் இதை வெட்டி எடுத்து இங்கிலாந்துக்கு அனுப்பி வந்தனர். பெரிய அளவில் புதுவெள்ளித் தொழிற் சாலையொன்று சேலத்தில் தொடங்கினால், தமிழ் நாட்டின் புதுவெள்ளித் தேவைக்குப் போதியதாக அமையும். குரோமியம் பயன்படும் பிற தொழிற்சாலைகளும் தொடங்கலாம். 7. கொலம்பைட் - டேண்டலைட் (Columbite Tanta lite): இரும்பும் கொலம்பியமும் கலந்த கலப்புக் கனிப்பொருள். குரோமியம் போன்ற வேறு பல கனிப்பொருள்களுடன் சேர்த்துக் கலப்புப் கனிப்பொருள் (Alloys) செய்ய இது பயன் படுகிறது. எவ்வளவு வெப்பத்தையும் தாங்கும் ஆற்றல் வாய்ந்தது இது. சேல மாவட்டம், ஓமலூர் வட்டத்து இடைப்பாடிக்கு 3 கல் கிழக்கிலுள்ள குறும்பப்பட்டிக் கருகிலுள்ள சீனிவாச காக்காப்பொன் சுரங்கத்திலும், கோவை மாவட்டத்து பவானிக்கு 5 கல் மேற்கில் பாவனியாற்றங் கரையிலுள்ள வைரமங்கலம் காக்காப் பொன் சுரங்கத்திலும் இக்கனிப் பொருள் உள்ளது. 8. உரேனியம் (Uranium)): இது, அணுமின்சார நிலையம் அமைக்கப் பயன்படும் ஒரு வகைக் கனிப்பொருள். திருச்செங் கோட்டின் 13 கல் கிழக்கில் உள்ள சூரியமலை அடிவாரத்தி லுள்ள குள்ளம்பட்டியிலும், இடைப்பாடிக்கருகேயும் உரேனியம் இருப்பதாக 1959இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 9. வனேடியம் (Vanadium) : கனிவகைகளிலெல்லாம் இது கனமானது; கிடைப்பதும் அரிது; விலை மதிப்பும் மிகுதி, வேறு கனிப்பொருள்களுடன் சேர்த்துக் கலப்புக் கனிப்பொருள் செய்ய இது பயன்படுகிறது. எஃகுக் கலப்புக்களில் குரோமியம் 500 பங்கும் வனேடியம் ஒரு பங்கும் சேர்க்கப்படுகின்றன. இந்த எஃகு மிக்க வன்மையுடையதாக இருக்கும். உருள்குண்டுகளும் (Ball Bearings), (டிரான்ஸ்மிஷன் கீயர், ரீயர் ஆக்சில் கீயர், ஸ்டியரிங் கீயர் முதலிய) மோட்டார் வண்டியின் பகுதிகளும் செய்ய இவ்வெஃகுப் பயன்படுகிறது. சேலமாவட்டத்தில் சில இடங்களில் வனேடியம் கிடைக்கிறது. 10. காக்காப் பொன் (மைக்கா - Mica): கண்ணாடிப் பொருள்கள், வனொளிக் கருவிகள் (டெலிவிஷன்), மோட்டார் வண்டியின் சில உறுப்புக்கள் முதலியன செய்ய இது பயன் படுகிறது. கோவை மாவட்டம் : பவானிக்கு 5 கல் மேற்கில், பவானியாற்றங்கரையில் உள்ள வைரமங்கலத்திற்கு அருகிலும், ஏரப்ப நாயக்கன் பாளையத்திற்கருகில் மேற்கிலும், பவானி - மேட்டூர் வழியில் சிற்றாற்றுக்கருகே குறிச்சிப்பாதை சந்திக்கும் இடத்திலும், சத்தியமங்கலம் கோவை வழியில், சத்திக்கு 12கல் தெற்கிலுள்ள புன்செய்ப் புளியம்பட்டியிலும் இக்கனிப் பொருள் உள்ளது. நீலகிரி மாவட்டம் : கூடலூர் வட்டத்தில் பண்டலூர், சேரம்பாடி, கொளப்பள்ளி ஆகிய ஊர்களைச் சுற்றிலும், தேவர் சோழாவுக்கு 3 கல் தெற்கிலுள்ள சண்டுவயல் என்னுமிடத்தி லுள்ள குன்றின் மீதும், கூடலூர் - கள்ளிக் கோட்டை வழியில், 65வது கல்லின் வடகிழக்கிலுள்ள புளியாம் பாறைக்கு அருகிலோடும் ஓர் ஓடைக்கருகிலும், கூடலூர் - கள்ளிக் கோட்டை வழியில், 75வது கல்லிலுள்ள தம்பட்டி மலையின் தென்கிழக்கிலும், கொளப்பள்ளிக்கு 1½ கல் வடக்கிலுள்ள வெங்கடேசு வராச்சுரங்கம், அச்சுரங்கத்திற்குக் கீழ்பக்கமுள்ள கௌரிசுரங்கம் கௌரி சுரங்கத்திற்கு எதிரிலுள்ள பழைய சுல்தான் சுரங்கம். கொளப்பள்ளிச் சாலைக்கு 1½ கல் வட மேற்கேயுள்ள சந்திரகிருஷ்ணாச் சுரங்கம், சந்திரகிருஷ்ணாச் சுரங்கத்திற்கு 1 கல் தென்கிழக்கே யுள்ள பாஸ்கராச் சுரங்கம், கொளப்பள்ளிக்கு 1½ கல் மேற்கேயுள்ள நியூகோப்புச் சுரங்கம், கொளப்பள்ளிக்கு 1½ கல் தென்மேற்கேயுள்ள ஓமர் சோழா, கூடலூர்க்கு வடமேற்கே 2½ கல் அளவிலும், சுல்தான் பேட்டைக்குச் செல்லும் பாதைக்கு மேல் புறமுள்ள சாலிஸ் பரிச்சுரங்கம் ஆகிய இடங்களிலும் இக்கனிப் பொருள் உள்ளது. சேல மாவட்டம் : இடைப்பாடியின் 3 கல் கிழக்கில் உள்ள குறும்பப்பட்டியில் இக்கனிப் பொருள் ஏராளமாக உள்ளது. கரையானூருக்கு ½ கல் வடமேற்கேயுள்ள தச விலக்கில் பெரிய காக்காப்பொன் சுரங்கம் உள்ளது. இடைப் பாடிக்கு 2 கல் மேற்கேயுள்ள அலச்சிபாளையத்திலும், சூரமங்கலம் இருப்புப் பாதையில் தாரமங்கலத்திற்குக் கிழக்கே 3வது கல்லிலும் இது உள்ளது. எனவே, நீலகிரிக் கூடலூர் வட்டத்திற் போலவே, சேலம் ஓமலூர் வட்டத்திலும் இது மிகுதியாக உள்ளதென்பதை அறியவும். திருச்செங்கோட்டுக்கு 13 கல் கிழக்கிலுள்ள சூரியமலையில் இது ஏராளம். இக்கனிப்பொருள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியா கிறது. 2. மணிவகை ஒன்பான் வகை மணியணியணிந்து உயர்வாழ்வு வாழ்ந் தனர் பழந்தமிழ் மக்கள். ‘நவமணிமாலை’ என்னும் தமிழ் நூல்வகை இதற்குச் சான்று பகரும். 11. (1) கடல்நிற வைரக்கற்கள் (Beryls): கோவை மாவட்டத்துக் காங்கயத்தை அடுத்து வடக்கிலுள்ள படியூரில், கடல்நிற வைரக்கற்கள் வெட்டியெடுக்கப்பட்டன என்பதை முன்பு கண்டோம். அப்பகுதியில் இன்னும் இக்கற்கள் இல்லாம லில்லை. ‘பல்லவர்க்குக் கோதாவரி, கோல்கொண்டா முதலிய இடங்களில் வைரக்கனிகள் இருத்தல் போல, கொங்கர்க்குப் படியூரில் கடல்நிற வைரக்கற்கள் உள்ளன’ என்று, பிளைனி (கி.பி.24 - 79) என்னும் மேனாட்டாசிரியர் குறிப்பிட்டுள்ளார். காங்கயம் பகுதியில் பச்சை, மஞ்சள், நீலநிற வைரக்கற்களும் உள்ளனவாம். சேலமாவட்டத்து இடைப்பாடிக்கு 3 கல் கிழக்கில் உள்ள குறும்பப்பட்டியிலும், இடைப்பாடியின் மேற்கிலுள்ள வாலசி ராமணியிலும் உள்ள காக்காப் பொன் சுரங்கங்களில் இக்கடல் நிற வைரக்கற்கள் உள்ளன. கொல்லி மலையைச் சார்ந்த தலை மலையின் வடமேற்கு முனையில் 5 கல் மேற்கிலுள்ள எருமைப் பட்டியிலும் இக்கல் உள்ளது. 12. (2) உயர்தர வைரக்கல் (Gem Stone): கோவை மாவட்டத்துப் படியூரிலும், சேலம் மாவட்டம் நாமக்கல் வட்டத்துச் சித்தம் பூண்டியிலும், குளித்தலை வட்டத்துக் குளித்தலைக்குத் தெற்கிலுள்ள எல்லம்மன் கோயில் பட்டி யிலும் இக்கல் உள்ளது. 13. (3) ஊட்ஸ் (Wootz): உயர்ந்த வகையான இக்கல், சேலத்தின் அருகே கிடைக்கிறது. 14. (4) குருந்தக்கல் (Corundum): இது, வைரத்திற்கு அடுத்தாற்போல் மிக உறுதியானது. இதிலிருந்து கெம்பு, பதுமராகம் போன்று மணிகள் செய்யலாம். கடிகாரங்கட்கும், மின்சாரக் கருவிகட்கும் இக்கல் பயன்படுகிறது. மெருகேற்றுங் கருவியாகவும் இக்கல் செயற்படுகிறது. கோவை மாவட்டம் : காங்கயத்தின் வடக்கிலுள்ள சிவன் மலைக்கும் கரட்டுப்பாளையத்திற்கும் இடையில், காங்கயம் -திருப்பூர் சாலைவரைத் தொடர்ச்சியாக உள்ள குன்றுகளிலும், கண்டியான் கோயில், படியூர்ப் பகுதியிலும், பவானி வட்டத்துச் செல்லிங்கிபாளையத்திலும், கோபி செட்டி பாளையம், சிங்கிரிசம் பாளையம் ஆகிய இடங்களிலும் இக்கல் உள்ளது. தருமபுரிவட்டம்: தருமபுரி வட்டத்துப் பாப்பாரப் பட்டியிலிருந்து 2 கல் தென்மேற்கிலுள்ள வறட்டுப் பாளையத்திலும், பாப்பாரப் பட்டியின் 3 கல் தென்மேற்கி லுள்ள தாம்பர மலையின் தென்சரிவிலும், பாப்பாரப்பட்டி மலைமீதுள்ள மழவூரின் ½ கல் வடகிழக்கிலும், அதன் ஒருகல் வடக்கிலுள்ள திட்டம் பட்டியிலும், தருமபுரி - பெண்ணா கரம் வழிச் சந்திப்பிலிருந்து 2 பர்லாங்கு கிழக்கிலுள்ள பேளூர்ப் பேட்டையின் ½ கல் தெற்கிலும், திருமழவாடியின் 1 கல் வடக்கிலுள்ள பிக்கிலி மலையடி வாரத்திலும் திருமழ வாடியின் ½ கல் வடமேற்கிலுள்ள எரகுட்டா மலைச் சரிவிலூர், பாலக்கோட்டுக்கும் பாப்பாரப்பட்டிக்கும் இடையிலுள்ள ஏரணகள்ளிக்கு (ஏரம் பட்டி) மேற்கிலும், கொல்லம் பட்டிக்கு ½ கல் தெற்கிலும், குப்பங்கோட்டைக்கு 2 கல் மேற்கிலுள்ள அனுமந்தராயன் கோயிலிலும், குப்பங் கோட்டைக்கும் சக்கசமுத்திரத்திற்கும் இடையிலும், இராய கோட்டையி லிருந்து 1½ கல் வடகிழக்கிலுள்ள குண்டல கள்ளி என்ற அழிந்து போன ஊரிலும், குண்டலகள்ளியின் 1 கல் வடக்கிலும், சிண்டல குண்டாவின் ½ கல் தெற்கிலும், தருமபுரி - பாப்பாரப்பட்டி வழி சந்திக்கு மிடத்திலுள்ள நாகதசம் பட்டியிலும், அரிச்சந்திராவின் கிழக்கும், ரங்க புரத்தின் 2½ கல் வடகிழக்கும், பெண்ணாகரத்தின் 8½ கல் தெற்கும், தொம்மகுட்ட கள்ளியின் ½ கல் கிழக்கும், தருமபுரி - மொரப்பூர் வழியில் 1வது கல்லிலிருந்து ஒருகல் தெற்கும் ஆகிய இடங்களிலும் இக்கல் உள்ளது. பாப்பாரப்பட்டி பாலக்கோடு சுற்று வட்டாரங்களிலுள்ள பயிர் செய்நிலங் களிலும் இக்கல் உள்ளது. இப்பகுதி குருந்தக்கல்லின் நிலைக் களனாக உள்ள தல்லவா! சேல மாவட்டம் : திருச்செங்கோட்டுக்குத் தெற்கே 11வது கல்லில், திருச்செங்கோடு - பரமத்தி வழியில், பட்ட லூருக்குக் கிழக்கும், கோட்டக்கல் பாளையத்திற்கு மேற்கும் ஆகிய இடைப்பகுதியில், 11 கல் நீளத்தில் இக்கல் உள்ளது. ‘குரோமியம்’ என்பதிற் பார்க்க. 15. (5) கார்னெட் (Garnet): இது, பலநிறமுள்ள கண்ணாடி போன்ற கல். இதில் சிவப்புநிறக்கல்லே மிகுதி. இது மெருகு காகிதம் போல மெருகுபோடப் பயன்படுகிறது. சேலமாவட்டம் : கஞ்சமலையின் வடக்குப் பகுதி யிலும், தெற்குப் பகுதியிலும், செவிட்டுரங்கம் பாளையத்தின் 3 பர்லாங்கு வடகிழக்கிலும், சங்ககிரிக்குப் பக்கத்துத் திப்பம் பட்டியின் 2 பர்லாங்கு கிழக்கிலும், மங்கரங்கம் பாளையத்தின் ½ கல் வடக்கிலும், திருச்செங்கோட்டின் வடக்கிலுள்ள மோரூர் மலையின் அடிவாரத்திலும், திருச்செங்கோட்டுக்கு அண்மையில் வடக்கிலுள்ள கைலாசம் பாளையத்தை அடுத்தும், நாமக்கல் - மோகனூர் வழிக்குக் கிழக்குப் பக்கத்திலும், சேர்வ ராயன் மலைமீதுள்ள ஏர்க்காட்டுக்குப் பக்கத்திலும், சந்நியாசி மலையிலும், தருமபுரி மாவட்டத்துத் தொப்பூரின் 3 பர்லாங்கு தெற்கிலும் இக்கனிப்பொருள் உள்ளது. 3. பிற கனிவகை 1. கலப்புக் கனிப்பாறை 16. (1) டாலோமைட் (Dolomite): இது, மெக்னீசியம் கார்பனேட்டும், கால்சியம் கார்பனேட்டும் கலந்தபாறை. எஃகுத் தொழிலுக்குப் பயன்படும் கனிப்பொருள்களில் இதுவும் ஒன்று. இஃதும் சேலமாவட்டத்தில் ஓரளவு உள்ளது. 17. (2) பெக்மடைட் (Pegmatite): இது, வெங்கச் செங்கல், களிக்கல், காக்காப் பொன் கலந்த பாறை, இவ்வகைப் பாறை, கோவை மாவட்டத்தில் ஈரோடு இருப்புப் பாதைக்கருகே காவிரியாற்றுப் படுகையில் இருக்கிறது. 18. (3) மிக்மடைட் (Migmatite): இது, அணு ஆற்றலை உண்டாக்க உதவும் கனிவளப் பாறை, கோவை மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இது உள்ளது. 2. பலவகைக் கனிப்பொருள் 19. (1) பைரைட் (Pyrite): இது, கந்தகத்தின் மூலப் பொருள். கந்தக அமிலம் ஆக்க இது பயன்படுகிறது. அமிலம் ஆக்கும் போது உண்டாகும் கழிவுப் பொருள் இரும்பாகிறது. நீலகிரி மாவட்டத்து வயனாட்டிலும், தேவலா, பண்டலூர்ப் பகுதியிலுள்ள தங்கச் சுரங்கங்களிலும் இது கிடைக்கிறது. சேல மாவட்டத்து இராசிபுரத்தின் கிழக்கில் 2-வது கல்லிலுள்ள பூசாரிபாளையத்திலுள்ள இரண்டு மூன்று கிணறுகளில் இது உள்ளது. 20. (2) கந்தகம் : நாமக்கல் வட்டத்து மோகனூர்க்கு 2½ கல் அளவில் உள்ள நடுப்பட்டியில் இரண்டு மூன்று கிணறு களில் கந்தகம் உள்ளது. 21. (3) கிரேபைட் (graphite): இது, ஒரு வகைக் கரிப் பொருள். இது அமிலத்தில் கரையாது; மிகுந்த வெப்பந் தாங்கக் கூடியது. பென்சில் செய்யவும், மின்கல அடுக்குச் (ஷெல்) செய்யவும் இது பயன்படுகிறது. கோவை மாவட்டத்துச் சிவன்மலைப் பகுதியில் இது கிடைக்கிறது. 22. (4) சிர்கான் (zircon): இது, தங்கத்தைத் தூய்தாக்கப் பயன்படுகிறது. இதுவும் சிவன்மலைப் பகுதியில் கிடைக்கிறது. 23. (5) பேரியம் சல்பேட் (Baryam sulhate): இது ஒருவகை உப்பு, வண்ணத் தொழிலுக்கும், காகிதஞ் செய்யவும், மட் பாண்டங்கள் செய்யவும் இது பயன்படுகிறது. சேலமாவட்டத்தில் சில இடங்களில் இது கிடைக்கிறது. 24. (6) ஜிப்சம் (Gypsum) : இது சிமெண்டு செய்யப் பயன்கிறது. கோவை மாவட்டத்துக் கரிசல் மண்நிலங்களில் இது உள்ளது. அதாவது, பல்லட உடுமலை வட்டங்களைச் சேர்ந்த பல்லடம், கோமங்கலம்புதூர், பெரியபுதூர், மெட்ராத்தி, ஜோட்டம் பட்டி, விடாம்பட்டி, ஆதிவழி, ஆரியூர், பணிக்கம் பட்டிச் சுரங்கம் முதலிய இடங்களில் உள்ளது. 25. (7) கல்நார் (Asbestos): தீயினால் பழுதுபடா திருக்கக் கிடங்குகள் போன்ற கட்டிடங்கள், மின்சார அமைப்புக்கள் முதலியவற்றிற்குக் கல்நாரில் செய்யப்பட்ட தகடுகள், குழாய்கள் முதலியன பயன்படுத்தப்படுகின்றன. கல்நாரினால் தான துணியுடையைத் தீயணைக்கும் படையினர் அணிந்து கொள்கின்றனர். இது துருப் பிடிக்காது; எடையுங் குறைவு. இதனால் தண்ணீர்க் குழாய்களும், வீட்டுக்கூரை வேயும் தகடு (ஓடு) முதலிய பொருள்களும் செய்யப்படுகின்றன. கோவையை அடுத்த போத்தனூரில் பெரிய கல்நார்த் தொழிற்சாலை யொன்று இருக்கிறது. கோவை மாவட்டம் : கோவை - மேட்டுப்பாளையம் வழியில், காரமடைக்குத் தெற்கிலுள்ள முத்தம்பாளையத்திலும், மேட்டுப்பாளையத்திற் கண்மையிலுள்ள சிறுமுகைக்கு வடக்கேயுள்ள பெட்டிக் குட்டையிலும் கல்நார் உள்ளது. சேலமாவட்டம் : நாமக்கல்லுக்கு 7 கல்தென்கிழக்கி லுள்ள அலங்கார நத்தத்திற்கருகிலும், அதையடுத்து வலையப் பட்டியிலும், இடைப்பாடியின் மேற்கிலுள்ள வாலசிராமணி யிலும், சேலத்திற் கருகேயுள்ள செட்டிச்சாவடியிலும், மேற் சேரி- தொளசம்பட்டி இருப்புப்பாதைக்கருகிலும், கல்நார் மிகுதியாக உள்ளது. சேலத்தில் பெரிய கல்நார்த் தொழிற் சாலையொன்று தொடங்கலாம். 3. கல்வகை 26. (1) களிக்கல் (Felspar - or - feldspar): இது கண்ணாடித் தொழிலுக்குப் பயன்படுகிறது. சேலமாவட்டம், ஓமலூர் வட்டத்து சலகண்டாபுரத்திற்கும் பக்க நாட்டுக்கும் இடை யிலும், சலகண்டாபுரத்திற்கும், குப்பங்குட்டைக்கும் இடை யிலும், சலகண்டாபுரத்திற்கருகிலும், செட்டுகாபட்டியூர்க்கு வடக்கும், ஒருவப்பட்டிக்கு இடையிலும், இடைப்பாடிப் பகுதி - ரெட்டிபட்டிக்குப் பக்கத்தில் தெப்பக்குளத்திற்கு வடபுறமும், இடைப்பாடியின் கிழக்கிலுள்ள குறும்பபட்டி ருக்குத் தென் கிழக்கே 1வது பரிலாங்கிலும், காளிபட்டிரோடு புகைவண்டி நிலையத்தின் வடமேற்கேயுள்ள பெரிய தாண்ட வனூர்க் கருகிலும், சங்ககிரியின் வடபகுதியிலும், திருச்செங் கோட்டின் கிழக்கிலுள்ள சூரியன் மலையிலும் இக்கல் உள்ளது. திருச் செங்கோட்டுக்குத் தெற்கிலுள்ள சித்தம் பூண்டிக்கத் தெற்கே 8 கல் பரப்பளவில் உள்ளது. இக்கல். கரூர் வட்டம், அரவக் குறிச்சி - திண்டுக்கல் வழியிலுள்ள இராமநாத புரத்தின் அருகிலும் இக்கல் உள்ளது. 27. (2) வெங்கச் செங்கல் (Quartz): இது படிகம் எனவும் வழங்கும். வானொலிக்கருவி, தொலைபேசி (டெலிபோன்), தொலைப்படக் கருவி (ராடார்). நுண்ணோக்கி (மைக்கிராஸ் கோப்பு), கொத்தான், கண்ணாடிப் பொருள்கள் முதலியன செய்ய இது பயன்படுகிறது. சேலம் கண்ணாடித் தொழிற் சாலைக் கண்மையில், இக்கல்லை மணலாகவும் மாவாகவும் அறைக்கும், அரசினர் படிக அறைவைத் தொழிற்சாலை யொன்று உள்ளது. கோவை மாவட்டம், தாராபுர வட்டத்தில் பல இடங் களில் இக்கல் உள்ளது. சேல மாவட்டம் : சேர்வராயன் மலையில் இரு பகுதி களில் இக்கல உள்ளது. மலைமீதிருந்து பார்த்தால் நெடுந் தொலைவிலுள்ள அப்பகுதிகள் வெள்ளையானைக் கூட்டம் போல மலைமலையாகத் தோன்றும். ஓமலூர் வட்டத்துத் தார மங்கலம் - நங்கவள்ளிப் பாதையிலுள்ள சீரங்கனூருக்கு ½ கல் தெற்கிலும், தாரமங்கத்திற்கு 1½ கல் மேற்கிலுள்ள வெள்ளைக் கற் பட்டியிலும், தாரமங்கலத்திற்கு 2 கல் வடக்கிலும், செட்டு காபட்டியூரிலும், இடைப்பாடிப் பழைய காக்கப்பொன் சுரங் கங்களைச் சுற்றிலும், கஞ்சமலையில் சித்தர் கோயிலுக்கு வடமேற்கிலும், காக்காப்பாளையத்தின் ½ கல் கிழக்கிலும், ஆட்டையாம்பட்டிப் பாதைக்கு வட புறமும், மகுடஞ்சாவடிக்கு 1 கல் கிழக்கிலும், நாமக்கல் வடத்து வெள்ளைக்கல் பட்டிக்கு வடக்கேயுள்ள ஒரு குன்றின் மீதும் நரவலூர்க்கு கிழக்கேயுள்ள ஒரு குன்றின் மீதும், இரட்டணைப் புதூர்க்கு வடக்கேயுள்ள ஒரு குன்றின் மீதும், நாமக்கல் - திருச்சி வழியில் உள்ள வலையப்பட்டி ஊர்ச்சாவடிக்குத் தென்புறமும் இக்கல் உள்ளது. கரூர்வட்டம் : முத்துக்கவுண்டன் பாளையத்திற்கு ½ கல் தென்கிழக்கிலுள்ள மேட்டுப் பகுதியிலும், வெங்க மேட்டூர்க் கருகேயும், கரூர் - திண்டுக்கல் வழியில் கரூரிலிருந்து 4வது கல்லில் கிழக்குப் பக்கமும், அரவரக்குறிச்சியிலிருந்து 1½ கல் கிழக்கே திண்டுக்கல் வழிக்குக் கீழ்புறமும், குளித் தலை வட்டம் வடுகபட்டியிலும், வெங்கக் குறிச்சியிலும், சட்டாம் பாடியின் தென்கிழக்கிலும், ஆணையூரின் தென் கிழக்கிலும், மேட்டூரிலும், கருமகவுண்டன் பட்டியின் தென்பகுதியிலும், மண்பாறைப் புகைவண்டி நிலையத்தின் மேற்கிலும் இக்கல் உள்ளது. 28. (3) சுண்ணாம்புக் கல் (Line stone): சிமெண்டு, கண்ணாடிப் பொருள், இரசாயணப் பொருள்கள் முதலியன செய்ய இது பயன்படுகிறது. சர்க்கரை ஆலைகளிலும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலும் இதைப்பயன்படுத்து கின்றனர். கோவை மாவட்டம் : கோவையின் தெற்கே 8வது கல்லிலுள்ள மதுக்கரைக்குப் பக்கத்திலும், கோவை- மேட்டுப் பாளையம் வழியிலுள்ள காரமடைக்கு மேற்கிலுள்ள தேவண புரம், வெள்ளியங்காடு ஆகிய இடங்களிலும் இக்கல் உள்ளது. மதுக்கரைச் சிமெண்டுத் தொழிற்சாலையார் இக்கல்லைத் தான் பயன்படுத்துகின்றனர். சேல மாவட்டம் : சங்ககிரிப் பகுதியில் இக்கல் ஏராள மாக உள்ளது. சங்ககிரிச் சிமெண்டுத் தொழிற்சாலையாரும், மேட்டூர் இரசாயனத் தொழிற்சாலையாரும் இக்கல்லைத் தான் பயன்படுத்துகின்றனர். தமிழ் நாட்டில் கிடைக்கும் சுண்ணாம்புக் கல்லில் இதுவே தூய்மையானது; வெண்ணிற முடையது; அழுக்கு மிகவும் குறைவாக உள்ளது. மேட்டூர் இரசாயனத் தொழிற் சாலையார், சங்ககிரிக்குக் கிழக்கில் இக்கல்லைச் சுண்ணாம் பாக்கும் சூளையொன்று வைத்துள்ளனர். திண்டுக்கல் வட்டத்துச் சத்திரப்பட்டிக்குப் பக்கத்திலுள்ள கஜலம்பட்டி - குள்ளப்பட்டிக் கிடையிலும், தோழி பட்டி - தேவர்மலைக் கிடையிலும், குளித்தலை வட்டத்துத் தேவர் மலைப்பகுதி - அய்யம்பாளையத்திற் கிடையிலும் இக்கல் உள்ளது. களிக்கல், வெங்கச்செங்கல், சுண்ணாம்புக்கல் இம் மூன்றையும் எடுத்துச் சேலம், ஆற்றூர்க் கண்ணாடித் தொழிற் சாலையார் பயன்படுத்துகின்றனர். 29. (4) வெங்காரம் (Borax): காண்ணாடிப் பொருள், எனாமல், செயற்கைவைரம், சோப்பு, பூச்சிமருந்து முதலியன செய்ய இது பயன்படுகிறது. சங்ககிரி மலைப்பகுதியில் இது கிடைக்கிறது. 30. (5) மாக்கல் (Steatite): வானொலி, வானொளி (டெலிவிஷன்), தொலைப்படக்கருவி (ராடார்) காகிதம், பெயிண்டு, சோப்பு, ரப்பர், முகத்துக்குப் பூசும் நறுமணப் பொடி, கற்சட்டி முதலியன செய்ய இது பயன்படுகிறது. சேலமாவட்டம் : ஓமலூர் வட்டத்து மேச்சேரி, பெரிய சரகை, அரங்கனூர், ஏனடி, நாச்சம்பட்டி, செம்மாண்டபட்டி, இடைப்பாடி, சின்னம்பட்டிப் பகுதியிலும், வீரபாண்டிரோடு புகைவண்டிப் பேட்டைக் கருகேயுள்ள குன்றிலும், கருப்பூர்க்குப் பக்கத்திலும், ஈசுவரமூர்த்திபாளையம் மலையிலும் இராசிபுரம், நாமகிரிப் பேட்டைப் பகுதிலும், நாமக்கல் பகுதியிலும், நாமக்கல்லின் கிழக்கிலுள்ள எருமைப்பட்டியிலும், நாமக்கல்லுக் கருவிலுள்ள மாக்கல்புதூரிலும், ஆற்றூர் வட்டத்திலும் மாக்கல் உள்ளது. இந்தியாவின் மூன்று இடங்களில் தான் இம்மாக்கல் கிடைக்கிறது. அவற்றுள் சேலமாவட்டம் ஒன்று. இம் மாக்கல் கிடைக்கும் இடங்களிலெல்லாம் கற்சட்டி செய்யுந் தொழில் நடைபெறுகிறது. 31. (6) கோலக்கல் (Barytes): பெயிண்டு, ரப்பர், மை முதலியன செய்யவும், எண்ணெய்க் கிணறு தோன்றும்போது சேற்றுக்குப் பதிலாகவும் இது பயன்படுகிறது. கோவை மாவட்டத்துப் பவானி - மேட்டூர் வழியிலுள்ள சிற்றாற்றுக்கு 3 கல் மேற்கிலுள்ள குறிச்சிக்கு மேல்புறமுள்ள குன்றில் இக்கல் கிடைக்கிறது. பவானியின் 10 கல் வடக்கில் உள்ளது சிற்றாறு. 32. (7) சவுக்காரக்கல் (Tale) : பீங்கான் (போர் சலைன்), சோப்பு, பிளாஸ்டிக், கல்நார்த் தொழில் முதலியவற்றிற்கு இது பயன்படுகிறது. சேலத்திற்கு 17 கல் தென்கிழக்கிலுள்ள மலைப் பகுதியிலும், ஓமலூர் வட்டத்திலும் இக்கல் உள்ளது. 33. (8) வெள்ளைக்கல் (Magnessite): சேலத்திற்கு 5 கல் மேற்கிலுள்ள கருப்பூருக்கு அருகிலுள்ள வெள்ளைக் கல்மேடு என்னுமிடத்தில் இக்கல் ஏராளமாக உள்ளது. இவ் வெள்ளைக்கல் மேட்டை மையமாகக் கொண்டு, கிழக்கே சேர்வராயன் மலை அடிவாரத்திலிருந்து, தெற்கே முத்துநாயக்கன் பட்டி வரை 20 கல் அளவில் 3000 ஏக்கர்நிலத்தில் இக்கல் பரவிக் கிடக்கிறது. உலகிலேயே பெரிய அளவில் வெள்ளைக்கல் கிடைக்கும் இடங்களில் இஃது ஒன்றே இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் இமயமலைப் பகுதியான அல்மோரா மலைப் பகுதியிலும் சேலத்திலுமாக இந்த இரண்டு இடங்களில் மட்டுமே இவ்வெள்ளைக்கல் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மற்றும், சேலம் - சென்னை இருப்புப்பாதையில், சேலத்தி லிருந்து 11வது புகைவண்டி நிலையமான தாசம் பட்டிக்கு 2 கல் வடக்கிள்ள கஞ்சனூர்க் கருகிலும், அப்பகுதியிலுள்ள சஞ்சீவி ராயன் கரடு, போடிக்கரடு, படகணி, புல்லாறுகரடு, மலினிக்கரடு ஆகிய இடங்களிலும், ஓமலூரிலும், கஞ்சமலையின் வடமேற்குப் பகுதியிலுள்ள சித்தர் கோயிலுக்கு ½ கல் கிழக்கிலும், தாரமங்கலம் - நங்கவள்ளிப் பாதைக் கருவிலுள்ள சீரங்கனூர்க்கு வடக்கிலும், தொப்பையாற்றுப் பகுதியிலும், சலகண்டா புரத்திற்கு 2½ கல் மேற்கிலுள்ள குண்டா மலையின் தென்புற அடிவாரத்திலும், இடைப்பாடியின் கிழக்கிலுள்ள குறும்பப்பட்டியிலும், பவானிக் குமாரபாளையம்- இடைப் பாடி வழியிலுள்ள தேவூருக்கு மேல் புறமும், செட்டிபட்டிக்கு மேல் புறமும், மல்லியக்கரைக்கு மேற்கிலுள்ள ஈசுவரமலைக்கு மேற்குப் பக்கமும், திருச்செங் கோட்டின் 13 கல் தெற்கிலுள்ள சிராப்பள்ளியிலும், திருச் செங்கோடு - பரமத்தி வழியை இணைக்கும் சாலையருகி லுள்ள நடந்தையிலும், நாமக் கல்லுக்குத் தெற்கே 6வது கல்லிலுள்ள வலையப்பட்டிக்கு வடக்கே 3வது கல்லிலும், சங்கமநாயக்கன் பட்டியின் கிழக்கில் உள்ள சுண்ணாப்புக் கரட்டிலும், நாமக்கல் - தாத்தையங்கார் பேட்டை வழியிலுள்ள பவுத்திரத்திலும், வாலசிராமணியிலும் இவ்வெள்ளைக் கல் உள்ளது. இந்தியாவில் கிடைக்கும் வெள்ளைக்கல்லில் நூற்றுக்கு 95 பாகம் சேலமாவட்டத்திலேயே கிடைக்கிறது. உலகில் எங்கும் உள்ளவற்றை விடச் சேலத்து வெள்ளைக்கல் உயர்ந்தது; உறுதியானது; தூய்மையானது; சுதையம் (கால்சியம்) கலந்தது. இவ்வெள்ளைக்கல் மாவைக் கட்டிடங்களின் சுவர்க்கும் தரைக்கும் சிமெண்டுடன் கலந்து போட்டால் உறுதியாகவும் பளபளப்பாகவும் இருக்கும். சாப்பிடும் மணைமேற் (மேஜை) போடும் வெண்பலகைக்கல் இம்மாவினாற் செய்யப்பட்டதே. நாணயங்கள் அச்சிடும் தொழிற்சாலைகளிலும், தங்கச்சுரங் களிலும் வெள்ளி, தங்கம் உருக்கும் குகைகள் (மூசை) இம் மாவினாற் செய்யப்படுகின்றன. இரும்பு உருக்கும் உரைக்கள் அடுப்புக்கள் இம்மாவினால் செய்த செங்கற்களால் கட்டப் படுகின்றன. இது தீயினால் உருகாத்தன்மையும், எவ்வளவு வெப்பத்தையும் தாங்கும் ஆற்றலும் உடையது. இது அலுமினியத்தைவிட நொய்தாக (இலேசாக) இருப்பதனால், வானூர்த்தித் தகடுகள் இதனால் செய்யப்படுகின்றன. முகப் பொடி, மருந்துகள் (மில்க் ஆப் மக்னிசியா) போன்ற எத்தனை யோ பொருள்கள் இவ்வெள்ளைக் கல்லினால் செய்யப் படுகின்றன. இவ்வெள்ளைக் கல்லை வெட்டி எடுத்துச் சூளையிலிட்டு மாவாக்கவும், அம் மாவால் செங்கல் முதலியன செய்யவும் கருப்பூர் வெள்ளைக்கல் மேட்டில், 1. பர்ன் & கோ 3. மேத்தா கம்பெனி 2. டாம்மியா கம்பெனி 4. டாட்டா கம்பெனி என நான்கு பெரிய நிறுவனங்கள் உள்ளன. இவற்றுள் பர்ன் & கம்பனியே முதலில் ஏற்பட்டதாகும். டால்மியா கம்பனி ஆசியாவிலேயே பெரியது. டாட்டா கம்பனியில் எந்திரச் சூளையில் வெள்ளைக் கல்லை மாவாக்குங் காட்சி காணத்தக்க காட்சிகளி லொன்றாகும். வெள்ளைக் கல்லை வெட்டியெடுத்து மாவாக்கம் இத்தொழில் 40 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நான்கு நிறுவனங்களிலும் 10,000 பேர் வேலை செய்கின்றனர். நாளொன்றுக்கு 500 டன் கல் வெட்டி எடுக்கப்படுகிறது. இவ்வெள்ளைக் கல் மா - இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் முதலிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி யாகிறது. அம்மாவினால் வெளிநாடுகளில் செய்யும் அத்தொழில் களை இங்கேயே செய்யத் தமிழக அரசு முயலுதல் ஏற்றதாகும். 4. மண்வகை 34. (1) சீனாக்களிமண் : நீலகிரி மாவட்டம், கூடலுர் வட்டத்திலுள்ள காக்காப்பொன் சுரங்கங்களில், கார்க்காப் பொன்னுடன் இது கலந்து கிடக்கிறது. மற்றும் உள்ள காக்காப் பொன் சுரங்கங்களிலெல்லாம் இது கிடைக்கிறது. 35. (2) வெள்ளைக் களிமண் : நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்துக் கொளப்பள்ளிக்கு வடக்கிலுள்ள முருக்கம் பாடியிலும், செல்லக்கண்ணு என்னுமிடத்திலும், தட்டாம்பாறையிலும் இம்மண் உள்ளது. இவ்விரு மண்ணும் பீங்கான் பொருள்கள் செய்யப் பயன்படுகின்றன. இங்கு எடுத்துக் கூறிய கனிச்செல்வத் தாதுக்களெல்லாம், சென்னைப் பொருட்காட்சி சாலையில் காட்சிக்காக வைக்கப் பட்டுள்ளன. கொங்குக் குலக்கொடி, இன்னும் என்னென்ன கனிப் பொருள்களைத் தன்னகத்தே வைத்துக் கொண்டு தன்னடக்க மாக உள்ளனளோ யார் கண்டார்! இப்பொழுது விளங்குகிறதா கொங்கு நாட்டின் கனி வளப் பெருமை! கொங்கு நாட்டுப் பெருஞ்செல்வர்களும், தமிழக அரசும் சேர்ந்து முயன்றால் கொங்கு நாட்டில் பல வகையான பெருந்தொழிற்சாலைகளை நிறுவலாம். உலகச் சந்தியின் ஊடே ஓடிவிளையாடலாம். முயல்வார்களாக! 2. நீர்வளம் கொங்கு நாட்டின் பெருமைக்குக் காரணமான இயற்கை வளத்தின் ஒரு கூறான கனிவளச் சிறப்பினைக் கண்டோம். இயற்கை வளத்தின் மற்றொரு கூறுபாடு நீர்வளம் ஆகும். நீர் வளத்தின் பயன்பாடு நிலவளமும் பயிர் வளமும் ஆகும். கனிவளம் பல்வகைத் தொழில்களுக்குப் பயன்படுவதே போல, நீர்வளமும் உணவுக்கே யன்றித் தொழில்களுக்கும் பயன்படுவதொன்றேயாகும். பருத்தி, நீலக்கடலை, எள், கரும்பு, மஞ்சள், குச்சிக்கிழங்கு, புகையிலை முதலியன தொழில்களுக்குப் பயன்படுதலை அறிக. மழை, ஆறு, கிணறு, ஏறி முதலியவை நீர் வளத்திற்குக் காரணமாகும். ஆழ்ந்தகன்ற கிணறுகளையுடையது கொங்கு நாடு என்பதை முன்பு கண்டோம். கொங்கு நாட்டின் கிணற்று வளம் தனிச் சிறப்புடையதொன்றாகும். கிணற்று வளத்தோடு ஆற்று வளமும் இன்று நிரம்பப் பெற்றுள்ளது கொங்கு நாடு. கீழ்வரும் வாய்க்கால்களின் பட்டியலைக் கண்ணுறின் கொங்கு நாட்டின் நிகழ்கால நீர்வளச் சிறப்பு விளங்கும். அது வருமாறு:- கோவை மாவட்டம் வாய்க்கால்களின் பெயர் பாயும் ஏக்கர் 1. மேட்டூர் வாய்க்கால் 18000 2. காளிங்கராயன் வாய்க்கால் 13953 3. கொடிவேரி அணைவாய்க்கால்கள்: 1. அரக்கன் கோட்டை வாய்க்கால் 6850 2. தடப்பள்ளி வாய்க்கால் 17650 4. கோபிவட்டம்: 1. வரப்பாளையம் கண்மாய் - 285 935 2. பள்ளபாளையம் வடிகால் - 650 5. கீழ்பவானி வாய்க்கால் ஈரோடு வட்டம்: 207000 1. பெரும்பள்ளம் வடிகால் 2545 2. குரங்கம்பள்ளம் வடிகால் 3500 6. அவிநாசி வட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் 1. ஓடந்துறை வாய்க்கால் 331 2. நெல்லித்துறை வாய்க்கால் 824 3. மருதவல்லி வாய்க்கால் 1294 குறிப்பு : 1. காவிரி வய்க்கால். 2-6. பவானியாற்று வாய்க்கால். 6 இல் 1-3. பவானியாற்று நேர் வாய்க்கால்கள். 7. 1. வறட்டுப்பள்ள அணை வாய்க்கால் 2000 2. வழுக்குப்பாறை அணை வாய்க்கால் 1000 8. நொய்யலாற்று வாய்க்கால்கள் : 1. சித்திரைச் சாவடி வாய்க்கால் 2. கோயமுத்தூர் வாய்க்கால் 3. குணியமுத்தூர் வாய்க்கால் 4. குறிச்சி வாய்க்கால் 5. வெள்ளலூர் வாய்க்கால் 6. சிங்காநல்லூர் வாய்க்கால் 7. நீலி வாய்க்கால் 8. புதுக்காடு வாய்க்கால் 9. இருகூர் வாய்க்கால் 10. இராசிபாளையம் வாய்க்கால் ஆகப் பத்தும் - 8174 (1-10 இவை கோயமுத்தூரை அடுத்துள்ளவை) 9. ஆளியாற்றுப் பழைய வாய்க்கால்கள்: 1. வடக்காலூர் வாய்க்கால் 2. காரைப்பட்டி வாய்க்கால் 3. ஆற்றூர் வாய்க்கால் 4. அரியாபுரம் வாய்க்கால் 5. பெரிய அணை வாய்க்கால் 6. பள்ளிவிளாங்கல் வாய்க்கால் ஆக ஆறும் - 6805 10. பரம்பிக்குளம் அணைவாய்க்கால் 240000 11. அமராவதி அணை வாய்க்கால் 22000 12. அமராவதியாற்றுப் பழைய வாய்க்கால்கள்: 1. இராமகுளம் வாய்க்கால் 2. கல்லாபுரம் வாய்க்கால் 3. குமரலிங்கம் வாய்க்கால் 4. கண்ணாடிப்புத்தூர் வாய்க்கால் 5. சோழமாதேவி வாய்க்கால் 6. கணியூர் வாய்க்கால் 7. கடத்தூர் வாய்க்கால் 8. காரைத்தொழு வாய்க்கால் 9. தளவாய் பட்டணம் வாய்க்கால் 10. அலங்கியம் வாய்க்கால் 11. தாராபுரம் வாய்க்கால் 12. கொழுஞ்சிவாடி வாய்க்கால் 13. நன்செய்த் தலையூர் வாய்க்கால் ஆகப் பதின்மூன்றும் - 15513 13. உப்பாற்று வாய்க்கால் 6319 14. ஏரிய பாய்ச்சல் 1. கோவை வட்டம் 8348 2. பல்லட வட்டம் 1614 3. பொள்ளாச்சி வட்டம் 757 4. உடுமலை வட்டம் 2795 5. தாராபுர வட்டம் 246 6. ஈரோடு வட்டம் 1210 7. பவானி வட்டம் 948 8. கோபி வட்டம் 1108 9. அவிநாசி வட்டம் 1330 ஆக ஒன்பதும் - 18356 கோவை மாவட்ட மொத்த ஏக்கர் - 587330 சேல மாவட்டம் 1. மேட்டூர் வாய்க்கால் 27000 2. இராச வாய்க்கால் 5122 3. குமாரபாளையம் வாய்க்கால் 1455 4. மோகனூர் வாய்க்கால் 1585 5. கூடமலை வாய்க்கால் 140 6. ஆணையாம்பட்டி வாய்க்கால் 220 7. செந்தாரம்பட்டி வாய்க்கால் 369 8. அபிநவம் வாய்க்கால் 272 9. சின்னம சமுத்திரம் வாய்க்கால் 375 10. பெத்தநாயக்கன் பாளையம் வாய்க்கால் 214 11. அப்பம சமுத்திரம் வாய்க்கால் 257 12. ஒதியத்தூர் வாய்க்கால் 206 பிற பாய்ச்சல் 100 ஆக - 37315 குறிப்பு : - 1-4 காவிரியாற்று வாய்க்கால்கள்; ஓமலூர், சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் வட்டங்கள். 5-12 வட வெள்ளாற்று வாய்க்கால்கள்; ஆற்றூர் வட்டம். 15. ஏரிப்பாய்ச்சல் 1. வட்டம் ஏக்கர் 1. சேலம் 9784..20 2. ஆற்றூர் 20553.65 3. இராசிபுரம் 7878.56 4. நாமக்கல் 24250.16 5. திருச்செங்கோடு 8151.36 6. சங்ககிரி 6829.78 7. ஒமலூர் (மேடூர்சேர) 4344.65 ஆக - 81792. 36 சேல மாவட்ட மொத்த ஏக்கர் - 125107 தருமபுரி மாவட்டம் 1. கிருஷ்ணகிரி அணை இரு வாய்க்கால்கள் 9000 2. நெடுங்கல் அணை வாய்க்கால் 4500 3. பாரூர்ப் பெரிய ஏரி வாய்க்கால் 500 4. பாரூர்ச் சின்ன ஏரி வாய்க்கால் 100 5. படேத் தலவு ஏரி வாய்க்கால் 365 6. மாறசமுத்திர அணை வாய்க்கால் 932 7. அலையாலம் அணை வாய்க்கால் 218 ஆக - 15615 குறிப்பு : 2. இது கிருஷ்ணகிரி அணைக்கு 7 கல் அளவில் உள்ளது. 5 இவ்வேரி, கிருஷ்கிரி அணைவாய்க்கால் நீரால் நிரம்புகிறது. 1-6. கிருஷ்ணகிரி வட்டம். 7. ஓசூர் வட்டம்; ஓசூரிலிருந்து 12 கல் அளவில் உள்ளது. இவ்வேழும் தென் பெண்ணையாற்று வாய்க்கால்கள். 8. ஏரிப்பாய்ச்சல் வட்டம் ஏக்கர் 1. அரூர் வட்டம் 5245 2. கிருஷ்ணகிரி வட்டம் 17002 3. ஒசூர் வட்டம் 20998 (தேன்கனிக்கோட்டையுட்பட) ஆக - 40245 தருமபுரி மாவட்ட மொத்த ஏக்கர் - 58850 கரூர், குளித்தலை வட்டங்கள் - அமராவதி வாய்க்கால்கள் 1. சின்னத்தாராபுரம் வாய்க்கால் 1902 2. நன்செய்க் காளக்குறிச்சி வாய்க்கால் 396 3. பள்ளபாளையம் வாய்க்கால் 3623 4. பஞ்சமாதேவி வாய்க்கால் 1093 5. திருமானிலையூர் வாய்க்கால் 911 6. சணப்பிரட்டி வாய்க்கால் 484 7. புலியூர் வாய்க்கால் 1370 காவிரி வாய்க்கால்கள் 1. புகலூர் வாய்க்கால் 2400 2. பாபுலர் முதலியார் வாய்க்கால் 1200 3. வாங்கல் வாய்க்கால் 2100 4. நெரூர் வாய்க்கால் 2500 5. கோயம்பள்ளி வாய்க்கால் 949 6. மணவாசி வாய்க்கால் 583 7. மாயனூர் வாய்க்கால் 407 8. மாயனூர்த் தென்கரை வாய்க்கால் 7300 9. கட்டளை வாய்க்கால் (பழையது) 1671 10. கட்டளை மேட்டு வாய்க்கால் (புதியது) 2400 11. காட்டு வாரி வாய்க்கால் 1800 12. உய்யக் கொண்டான் வாய்க்கால் 1000 13. கிருட்டினராயபுரம் வாய்க்கால் 1200 ஆக - 35209 கோவை மாவட்டம் 1. மேட்டூர் வாய்க்கால் : காவிரியாற்றின் பேரணையாகிய மேட்டூரணையிலிருந்து இவ்வாய்க்கால் ஆற்றின் மேல்கரையில் தெற்கு நோக்கிச் சென்று, 4 கல்லுக்குத் தெற்கில், ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இருபெருங்குழாய் களின் வழியாய் ஒருபகுதி நீர் சேலம் மாவட்டத்திற்குச் செல்கிறது. மேல்புறத்து வாய்க்கால் தெற்கு நோக்கி 27 கல் நீளம் சென்று, கோவை மாவட்டத்துப் பவானி வட்டத்தில், பவானி நகர் வரை பாய்கிறது. 2. காளிங்கராயன் வாய்க்கால் : பவானி நகர்க்கு மேல்புறம் பவானியாற்றில் கட்டப்பட்டுள்ள காளிங்கராயன் அணையிலிருந்து பிரியும் இவ்வாய்க்கால், காவிரியோரமாகத் தென்கிழக்காக 56½ கல் நீளம் சென்று, ஈரோடு வட்டத்தில் பாய்ந்து, கொடுமுடிக்குத் தெற்கில் நொய்யலாற்றில் கலக்கிறது. 3. கொடிவேரி அணை வாய்க்கால்கள்: சத்திய மங்கலத்திற்கு 4 கல் கிழக்கில் பவானியாற்றில் கட்டப் பட்டுள்ள இவ்வணையிலிருந்து ஆற்றின் இடப்புறம் அரக்கன் கோட்டை வாய்க்காலும், ஆற்றின் வலப்புறம் தடப்பள்ளி வாய்க்காலும் பிரிந்து கோபி, பவானி வட்டங்களில் கவந்தப் பாடி வரை பாய்கின்றன. புதிதாகக் கள்ளிப்பட்டியருகில் வெட்டப் பட்டுள்ள வாய்க்கால் பாய்ச்சல் நிலமும் இதில் சேரும். 4. கீழ் பவானி அணை வாய்க்கால் : சத்திய மங்கலத்திற்கு 8 கல் மேற்கில் பவானியாற்றில் கட்டப்பட்டுள்ள இவ்வணையிலிருந்து பிரியும் இவ்வாய்க்கால், கோபி, பவானி, ஈரோடு வட்டங்களில் பாய்ந்துகொண்டு, சென்னி மலைக்குத் தெற்கில் நொய்யலாற்றைப் பாலத்தின் வழியாகக் கடத்து தாராபுர வட்டத்தில் பாய்கிறது. இதன் நீளம் 124 கல். 5. ஓடந்துறை, நெல்லித்துறை, மருதவல்லி என்னும் இம் மூன்று வாய்க்கால்களும் பவானியாற்றிலிருந்து பிரிந்து அவிநாசி வட்டத்தின் மேல்பகுதியில் மேட்டுப்பாளையத் திற்குப் பக்கத்தில் பாய்கின்றன. 6. வறட்டுப்பள்ள அணை, வழுக்குப்பாறை அணை இரண்டும் பவானி வட்டம், அந்தியூர் வட்டாரத்தில் பருகூர் மலை அடிவாரத்தில் உள்ளன. நொய்யலாற்றில் பிரியும் 10 வாய்க்கால்களும் பேரூர்க்கு மேற்கிலிருந்து சூலூர் வரை கோவைப்பகுதிக்கு பாய்கின்றன. 7. பரம்பிக்குளம் அணை வாய்க்கால் : பொள்ளாச்சிக்கு 35 கல் தெற்கில் உள்ள மலைமேல் - ஆளியாறு, சோலையாறு, பரம்பிக்குள ஆறு முதலிய ஆறுகளில் கட்டப்பட்டுள்ள இவ்வணை வாய்க்கால் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பல்லடம், தாராபுர வட்டங்களில் 120 கல் நீளம் பாய்கிறது. ஆளியாற்றுப் பழைய வாய்க்கால்கள் பொள்ளாச்சி வட்டத்தில் பாய்கின்றன. 8. அமராவதி அணை வாய்க்கால் : உடுமலைப் பேட்டைக்குத் தெற்கிலுள்ள மலைமேல் அமராவதியாற்றில் கட்டப்பட்டுள்ள இவ்வணை வாய்க்கால், உடுமலைப் பேட்டை, தாராபுர வட்டங்களில் பாய்கிறது. உடுமலைப் பேட்டைக்குக் கிழக்கே உள்ள இராமகுளம் வாய்க்கால் முதலிய அமராவதிப் பழைய வாய்க்கால்கள் 13 உம் உடுமலைப் பேட்டை, தாராபுர வட்டங்களில் பாய்கின்றன. 9. உப்பாற்று அணை வாய்க்கால்கள் : தாராபுரத்திற்கு 7 கல் அளவில் உப்பாற்றில் கட்டப்பட்டுள்ள இவ்வணையி லிருந்து வலப்புறமாக ஒரு வாய்க்காலும், இடப்புறமாக ஒரு வாய்க்காலும் பிரிந்து பாய்கின்றன. சேல மாவட்டம் : 1. மேட்டூர் வாய்க்கால் : இது ஓமலூர், சங்ககிரி, திருச் செங்கோடு வட்டங்களில் ஈரோடு - சேலம் இருப்புப்பாதை வரை 40 கல் நீளம் பாய்கிறது. 2. இராச வாய்க்கால் : கோவை மாவட்ட ஊஞ்சலூர்க்கு 2 ½ கல் வடக்கில் அக்கரையில் - சேல மாவட்டத்தில் - சேடர் பாளையம் என்னுமிடத்தில் காவிரியாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவர் மூலம் பிரிகிற இவ்வாய்க்கால் 32 கல் நீளம் பாய்ந்து மோகனூரின் கிழககில் 5 கல் அளவில் உள்ள ஒருபந்தூர் என்னுமிடத்தில் காவிரியில் கலக்கிறது. இது திருச்செங்கோடு, நாமக்கல் வட்டங்களில் பாய்கிறது. 3. குமாரபாளையம் வாய்க்கால் : இது மோக னூர்க்கு 7கல் மேற்கில் உள்ள குமாரபாளையம் என்னுமிடத்தில் காவிரி யாற்றில் தோன்றி நாமக்கல் வட்டத்தில் பாய்கிறது. 4. மோகனூர் வாய்க்கால் : இதுவும் காவிரியாற்றில் தோன்றி நாமக்கல் வட்டத்தில் பாய்கிறது. 5. கொல்லி மலையில் தோன்றும் வடவெள்ளாற்றில் (சுவேதநதி) உள்ள கூடமலை அணைவாய்க்கால் முதலிய எட்டும் ஆற்றூர் வட்டத்தில் பாய்கின்றன. 6. கிருஷ்ணகிரி வாய்க்கால் : இவ்வணை கிருஷ்ண கிரிக்கு 5 கல் தெற்கில் தென்பெண்ணையாற்றில் கட்டப் பட்டுள்ளது. இவ்வணையிலிருந்து இரு வாய்க்கால்கள் பிரிந்து 21 கல் நீளம் பாய்கின்றன. நெடுங்கல் அணை, கிருஷ்ணகிரி அணையின் 7 கல் அளவில் உள்ளது. கிருஷ்ணகிரி அணை வாய்க்கால் படேத்தலவு ஏரியில் பாய்கிறது. அலியாலம் அணை ஓசூர் வட்டத்தில் ஒசூரிலிருந்து 12 கல் அளவில் தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்டுள்ளது. கரூர், குளித்தலை வட்டங்கள் 1. புகலூர் வாய்க்கால் : இது ஊஞ்சலூர்க்கு 2 ½ கல் வடக்கில் அக்கரையில் உள்ள சேடர்பாளையத்தில் காவிரியில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் (இராசவாய்க் காலுக்கு) போன்ற மேல்கரையிலுள்ள தடுப்புச்சுவர் மூலம் தோன்றி, நொய்ய லாற்றுக்கு அப்புறம் பாயத்தொடங்கி, வாங்கலின் 3 கல் மேற்கிலுள்ள செவ்வந்தி பாளையத்தில் முடிகிறது. 2. பாபுலர் முதலியார் வாய்க்கால் : இது தோட்டக் குறிச்சிக்குப் பக்கத்தில் புகலூர் வாய்க்காலிலிருந்து பிரிந்து வாங்கலின் மேற்கில் உள்ள நன்னியூரில் முடிகிறது. 3. வாங்கல் வாய்க்கால் : இது புகலூர்க்கருகில் (புகலூர்ச் சர்க்கரை ஆலை) தொடங்கி வாங்கலுக்கு 3 கல் கிழக்கிலுள்ள நெரூரில் முடிகிறது. வாங்கல் - கரூர்க்கு 6 கல் வடக்கில் காவிரியின் தென்கரையில் உள்ளது. வாங்கலின் எதிர்க்கரையில் உள்ளது மோகனூர். 4. நெரூர் வாய்க்கால்: இது நன்னியூரில் தொடங்கித் திருமுக்கூடலூரில் முடிகிறது. இவை நான்கும் காவிரியாற்று வாய்க்கால்கள். 5. புலியூர்க்குக் கீழ்க் கோயம்பள்ளி வாய்க்கால் முதல் கிருட்டினராயபுரம் வாய்க்கால் ஈறாகவுள்ள ஒன்பதும் முறையே காவிரியாற்றில் தோன்றுகின்றன. 11வது கட்டளை மேட்டுவாய்க்கால், மாயனூரில் தொடங்கும் தென்கரை வாய்க்காலிலிருந்து பிரிகிறது. கட்டளை வாய்க்கால் காட்டு வாரியில் கலக்கிறது. காட்டுவாரி உய்யக் கொண்டானில் கலக்கிற்று. 3. பயிர்வளம் கொங்கு நாட்டின் நீர்வளச் சிறப்பினைக் கண்டோம். நீர்வளத்தின் பயன்பாடான பயிர்வளமும் கொங்கு நாட்டில் சிறந்து விளங்குகிறது. நெல்லும் கரும்பும் வாழையும் மஞ்சளு மாகிய நன்செய்ப் பயிர்களும் பருத்தி, மிளகாய், புகையிலை, நிலக்கடலை, எள் முதலிய வாணிகப் பயிர்களும், கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு, தினை, சாமை முதலிய தவசங்களும், தட்டை, மொச்சை, துவரை, கடலை, கொள் முதலிய பயிறு வகைகளும், வெங்காயம், கொத்தமல்லி, கடுகு, இஞ்சி, ஏலம் முதலியனவும், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முள்ளங்கி முதலிய கிழங்கு வகைகளும், கத்திரி, வெண்டை முதலிய நாட்டுக் காய்கறி வகைகளும், பீட்ரூட் முதலிய சீமைக் காய்கறி வகைகளும் (நீலகிரியில்), மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், ஆரஞ்சு, முந்திரி முதலிய பழவகைகளும் நன்கு விளைகின்றன. கொங்கு நாட்டில் தென்னை, பனை மிகுதி, நீலகிரி மேட்டுப்பாளையத்திலும் ஆற்றூர் வட்டத்திலும் பாக்குத் தோப்பு மிகுதி. கோவை, சூலூர், அந்தியூர், பாண்டமங்கலம், வேலூர், தருமபுரி, ஆற்றூர் வெற்றிலைக்குப் பெயர் பெற்றவை. காட்டு வளம் : கோவை வடக்குக் காட்டியல் வட்டம்: இது, கோவை மாவட்டத்தின் வடக்கெல்லையாகவுள்ள தலைமலை, சத்தியமங்கலம், அந்தியூர், பருகூர்மலைப் பகுதி களைக் கொண்டது; 910 சதுரக்கல் பரப்புடையது. இங்கு வேங்கை, மஞ்சட் கடம்பு, சந்தன மரங்கள் மிகுதி. மூங்கிலும் இங்கு மிகுதியாக உள்ளது. தோல் பதனிடும் தொழிலுக்குப் பயன்படும் ஆவிரஞ் செடி ஏராளம். தீப்பெட்டித் தொழிலுக்கு வேண்டிய மரங்களும் இங்கு உண்டு. கலியன்சோலைக் காடு களில் வெள்ளைக் கோங்கு, நங்குல், மயிலை, நெடுநாரி முதலிய மரங்கள் உள்ளன. மேட்டுப்பாளையத்திற் கருகேயுள்ள காடுகளில் தேக்குமரம் பயிரிடப்படுகிறது. கோவைத் தெற்குக் காட்டியல் வட்டம் : அவிநாசி, கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், வட்டங்கள் இதில் அடங்கும். இது 660 சதுரக்கல் பரப்புடையது. மேட்டுப்பாளையம் பகுதியில் சந்தனமரம் மிகுதி. ஆனைமலை, வால்பாறை, துணைக்கடவு, டாப்சிலிப்புப் பகுதிகள் பொள் ளாச்சி வட்டத்தைச் சேர்ந்தவை. கோவையை அடுத்த தடாகம், போளுவாம்பட்டிப் பள்ளத்தாக்குகளிலும், ஆனை மலைப் பகுதியிலும் சிறந்த காடுகள் உள்ளன. துணைக் கடவுப் பகுதியில் தேக்கும் வேங்கையும் மிகுதி. பரம்பிக் குளம் ஆற்றுடன் கல்லாறு கலக்குமிடத்துக்கருகே, இருமலை களுக்கிடையேயுள்ள பள்ளத்தாக்கில் கடுகு, ஏலக்காய், இஞ்சி, மஞ்சள் தோட்டங்கள் காணத்தக்கவை. இங்கே தேனும் மிகுதி. இப்பகுதியில் சவுக்கு, தோதகத்தி சுருளி, வேங்கை, சடைச்சி, குரங்குப் பலா, பாலி, கொட்டாப்புளி, ஈஞ்சு, அரக்கு முதலிய மரங்கள் மிகுதியாக டாப்சிலிப்புக்கு அருகேயுள்ள காடுகளில் கருமருது, வேங்கை, வெண்தேக்கு, மஞ்சட்கம்பு முதலிய மரங்கள் மிகுதி, இம்மரங்களைக் கீழே இழுத்துவர யானை களைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் கிடைக்கும் தேக்கு மரத்தில் மிக உயர்ந்த சாதிமரம், மலையாள மாநிலத்து நீலம்பூர்ப் பகுதியிலும், கொங்கு நாட்டு ஆனைமலைப் பகுதியிலுந்தான் கிடைக்கிறது. ஆனைமலையில் யானைகள் மிகுதி. இக்காடுகளில் கிடைக்கும் மரங்களெல்லாம் பொள்ளாச்சி யில் விற்கப்படுகின்றன. இதனால், பொள்ளாச்சியில் மர மறுக்கும் ஆலைகள் மிகுதியாக உள்ளன. தமிழகத்துக் காடு களில் கிடைக்கும் வருவாயில் பாதி கோவை மாவட்டத்துக் காடுகளில் கிடைக்கிறது. சேலமாவட்டம் : அடர்த்தியான காடுகள் நிறைந்த மாவட்டம் சேலமாவட்டமேயாகும். சேலமாவட்டத்துக் காடு களின் பரப்பு 10 நூறாயிரம் ஏக்கர் ஆகும். 1. சேர்வராயன் மலைப்பகுதி : இப்பகுதியிலுள்ள உயர்ந்த காடுகள் - சோலைக்காடு, சந்தியாசிக்கரடு, காவிரி உச்சி என்பன. இக்காட்டுப் பகுதிகள் காப்பித் தோட்டங்களைச் சுற்றியுள்ளன. இவற்றுள் மருந்துக்குப் பயன்படும் மரவகைகள் மிகுதி. 2. கொல்லிமலைப்பகுதி: இங்கு நெல், ஏலக்காய், கருவாழை முதலியன விளைகின்றன. தேன் மிகுதி. 3. பச்சைமலைப் பகுதி: இங்கு பலவகையான மரங்கள் உள்ளன. 4. தருமபுரி மாவட்டம்: இங்கு புளியமரங்கள் மிகுதி. 5. ஓசூர்ப்பகுதி: உசிலை, வேங்கை, புளியமரங்கள் மிகுதி. சந்தனமரங்களும் உண்டு. குங்கிலியமரக் கிளைகளில் அரக்குப்பூச்சிகள் உண்டாகின்றன. 6.அஞ்செட்டிக் காடுகள்: ஓசூர் வட்டத்தில் ஓகேனகல் அருவியை அடுத்துத் தேன்கனிக் கோட்டைக்கு 14 கல் தென்மேற்கே அஞ்செட்டிக் காடுகள் உள்ளன. அவை 5000 ஏக்கர்ப் பரப்புடையவை. அஞ்செட்டியில் சந்தனமரம் மிகுதி. மூங்கிலுமுண்டு. தேன் மிகுதி. இக்காடுகளில் யானைகள் உள்ளன. ஓசூர் வட்டத்தில் முசுக்கட்டை பாயிராகிறது. பழனி, திண்டுக்கல் வட்டங்களிலுள்ள மலைப் பகுதி களில் ‘மலைப்பழம்’ என்னும் புகழ் பெற்ற வாழை மிகுதி. திண்டுக்கல் வட்டத்தில் திராட்சை மிகுதி. சேர்வராயன் மலை ஏர்க்காட்டில் காப்பியும், நீலகிரி, ஆனைமலைப் பகுதியில் காப்பி, தேயிலை இரண்டும் மிகுதியாக விளைகின்றன. காப்பி இடம் விளையும் ஏக்கருக்குப் ஆண்டுவிளையும் ஏக்கர் பவுண்டு பவுண்டு ஆனைமலை 3460 575 1991000 நீலகிரி 22722 254 5786000 ஏர்க்காடு 10040 483 4851000 36222 12628000 ஏர்க்காட்டில் இந்தியக் காப்பி அலுவலகம் உள்ளது. தேயிலை நீலகிரி மாவட்டம் 31800 520 16536000 கோவை மாவட்டம் 22500 600 13500000 54300 30036000 தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 6 கோடியே 80 இலட்சம் பவுண்டு தேயிலை விளைகிறது. இதில் ஏறக்குறையப் பாதி கொங்கு நாட்டில் விளைகிறது. வால்பாறையில் தேயிலை ஆராய்ச்சி நிலையம் இருக்கிறது. 1. ஸ்டேன்ஸ் காப்பி நிறுவனம் 2. இந்தியக் காப்பிக்கழகம் 3. புரூக் பாண்டுத் தேயிலை நிறுவனம் 4. இந்தியத் தேயிலைக்கழகம் இவை குறிப்பிட்டத்தக்கவை. 4. மின்சாரம் பயிர் வளத்திற்குக் காரணமாகவுள்ள நீர்வளமே மின்சார வளத்திற்குங் காரணமாக உள்ளது. பயிர்த்தொழிலுக்கும், பிற தொழில்களுக்கும் மின்சாரம் இன்றியமையாத தொன்றாகும். தமிழகத்திற்குத் தேவையான மின்சாரத்தில் பெரும்பகுதி கொங்கு நாட்டிலேயே கிடைக்கிறதென்பது குறிப்பிடத்தக்க தாகும். 1. மேட்டூர் அணை பழையது 40000 K.W. மேட்டூர் புதிய 4 சுரங்கங்கள் 200000 K.W. 2. பைக்காரா மின்சார நிலையம் 70200 K.W 3. மோயாற்றுத் திட்டம் 36000 K.W 4. குந்தாத் திட்டம் 430000 K.W 5. பரம்பிக்குளத் திட்டம் 185000 K.W ஆகக் கிலோ வாட் (K.W) 961200 K.W குறிப்பு : 2, 3, 4 நீலகிரியில் உள்ளன. 5. ஆனைமலைப் பகுதி. தமிழ் நாட்டின் மொத்த நீர் மின்சாரம் 906200 K.W தமிழ் நாட்டின் அனல் மின்சாரம் 401500 K.W ஆக- 1307700 K.W தமிழ் நாட்டு மொத்த K.W. 1307700 கொங்கு நாட்டு மின்சாரம் K.W 961200 5. தொழில் வளம் ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டுகொழுத் திருப்போரை நிந்தனை செய்வோம்’ என்கின்றார் பாரதியார். இப்பாடலின் முதலடிக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்பவர் கொங்கர்கள். உழவும் தொழிலும் கொங்குநாட்டில் சிறந்து விளங்குகின்றன. உணவுக்கு அடுத்தது உடை. கைத்தறி நெசவில் தனிச் சிறப்புடையது கொங்கு நாடு. வனப்பும் வேலைப்படும் தரமும் உடைய வகைவகையன ஆடைகள் நெய்வதில் கைதேர்ந்தவர் கொங்கு நாட்டு நெசவுத் தொழிலாளர்கள். ஏராளமான கைத் தறிகள் யுடையது கொங்கு நாடு. விசைத்தறிகளும் வேண்டிய அளவு உண்டு. இவ்வளவு தறிகளுக்கும் நூல் வேண்டுமல்லவா? இது பற்றியே கொங்கு நாட்டில் நூற்றுக்கணக்கான நூற்பாலைகள் ஏற்பட்டுள்ளன. அவ்வாலைகளில் 2ஆம் எண் முதல் 100 ஆம் எண்வரை பலவகையான நூல்கள் நூற்கப்படுகின்றன. ஒற்றை இரட்டை முறுக்கு நூல்களும் நூற்கப்படுகின்றன. சில நூல் பாலைகளில் துணியும் நெய்யப்படுகிறது. கொங்கு நாட்டில் உள்ள நூற்பாலைகள் வருமாறு:- ஆலையின் பெயரும் இடமும் கதிர்கள் தறிகள் 1. கோயமுத்தூர் ஸ்டேன்ஸ் மில்ஸ் 1 79976 349 2. காளீசுவரா மில்ஸ் 1 48760 330 3. இலட்சுமி மில்ஸ் 1 59680 396 4. பங்கஜா மில்ஸ் 1 97980 5. சோமசுந்தர மில்ஸ் 30124 382 6. கங்கா டெக்ஸ்டைல்ஸ் 1 12320 7. பவானி மில்ஸ், ரேஸ்கோர்ஸ் 1 12280 8. முருகன் மில்ஸ், R.S. புரம் 2 18480 100 9. பயனீர்மில்ஸ் (A) பீளமேடு 4 27226 10. குமரன் மில்ஸ், பீளமேடு 24924 11. இராதாகிருஷ்ணா மில்ஸ், பீளமேடு 60704 300 12. ஸ்ரீ ரங்கவிலாஸ்மில்ஸ், பீளமேடு 38584 13. வரதராஜா டெக்ஸ்டைல்ஸ், பீளமேடு 18316 14. சந்திரா டெக்ஸ்டைல்ஸ், பீளமேடு 17600 15. பிரகாஷ் மில்ஸ், பீளமேடு 12096 16. கமலா மில்ஸ், சிங்காநல்லூர் 24464 90 17. ஸ்ரீபாலசுப்பிரமணியமில்ஸ், சிங்காநல்லூர் 30976 18. கோயமுத்தூர்க் காட்டன்மில்ஸ், சி.நல் 41664 52 19. கோயமுத்தூர்க் காட்டன் ஜூப்ளி மில்ஸ் சி.நல்லூர் 12800 20. ஜயலட்சுமி மில்ஸ், சிங்காநல்லூர் 24800 21. ஸ்ரீகார்த்திகேயா மில்ஸ், சிங்காநல்லூர் 27040 22. கோத்தாரி டெக்ஸ்டைல்ஸ் (A), சிங்காநல்லூர் 41040 300 23. ராஜலட்சுமி மில்ஸ், சிங்காநல்லூர் 49896 24. சரோஜா மில்ஸ், சிங்காநல்லூர் 20080 25. வசந்தா மில்ஸ், சிங்காநல்லூர் 48124 26. கிருஷ்ணவேணிடெக்ஸ்டைல்ஸ், சிங்காநல்லூர் 12976 27. செல்வராஜ் மில்ஸ், சிங்காநல்லூர் 12320 28. கம்போடியா மில்ஸ், ஒண்டிப்புதூர் 5 36492 4 29. ஸ்ரீஹரி மில்ஸ், ஒண்டிப்புதூர் 12528 30. கஸ்தூரி மில்ஸ், ஒண்டிப்புதூர் 25940 31. ரவீந்தீரா மில்ஸ், 12148 32. ஸ்ரீ அம்பாள் மில்ஸ், ஒட்டர் பாளையம் 5 14508 33. கதிரி மில்ஸ், ஒட்டர்பாளையம், ஒண்டிப்புத்தூர் 28141 34. ஜனார்த்தனா மில்ஸ், உப்பிலை பாளையம் 5 23184 35. ராதிகா மிலஸ், உப்பிலிபாளையம் 12096 36. இராமகிருஷ்ணா மில்ஸ், கணபதி 6 32260 37. சிவானந்தா மில்ஸ், கணபதி 33152 38. கோபாலகிருஷ்ணா மில்ஸ், கணபதி 12320 39. ஈசோர்ப் மில்ஸ், கணபதி 12000 40. ஸ்ரீபத்மா மில்ஸ், காலப்பட்டி, கணபதி 3332 41. ஓம்பராசக்தி மில்ஸ், கிருஷ்ணராய புரம், கணபதி 16469 42. ஆனந்தகுமார் மில்ஸ், சிரவணம் பட்டி 6 12180 43. விஜயலட்சமி மில்ஸ், குணியமுத்தூர் 38007 44. சூரியப்பிரியா மில்ஸ், குணியமுத்தூர் 12320 45. சுகுணா மில்ஸ், குணியமுத்தூர் 12000 46. ஞானம்பிகா மில்ஸ், மேட்டுப் பாளையம் ரோடு 11 17248 47. டி.பி.எப்.டெக்ஸ், மே. ரோடு 13392 48. கோத்தாரி டெக்ஸ்டைல்ஸ் (B) கே. வடமதுரை 11 24192 49. சுஜானி டெக்ஸ்டைல்ஸ், சவுரி பாளையம் 15 12096 50. ஸ்ரீகண்ணபிரான் மில்ஸ், சவுரி பாளையம் 22372 51. சாரதா மில்ஸ், போத்தனூர் 20472 200 52. லோட்டஸ் மில்ஸ், சுந்தரபுரம், போத்தனூர் 22696 53. பிரிமியர் மில்ஸ் (கிளை) ஒத்தக்கால் மண்டபம் 15556 54. பயனீர் டெக்ஸ்டைல்ஸ், வேடப் பட்டி, கோ. 12312 55. பயனீர்மில்ஸ் (க்ஷ) பெரியநாயக்கன் பாளையம் 22440 56. ஜோதி மில்ஸ், பெரியநாயக்கன் பாளையம் 24800 57. ராம்நாராயணன் மில்ஸ், பெ. பாளையம் 12384 58. ஸ்ரீபாலமலை ரங்கநாதர் மில்ஸ், பெ.நா.பா. 12152 59. வாசுதேவா இன்டஸ்ட்ரீஸ், பெ.நா.பா. 6520 60. சௌத் இந்தியா விஸ்கோஸ், லிமிட் டெட், சிறுமுகை, மேட்டுப்பாளையம் - 61. நரசிங்கா மில்ஸ் (A) நரசிங்கா நாயக்கன்பாளையம், கோவை 11880 62. நரசிங்கா மில்ஸ், சூலூர் 10120 63. சற்குணா டெக்ஸ்டைல்ஸ், சூலூர் 6160 64. சௌதர்ன் டெக்ஸ்டைல்ஸ், சூலூர் 12168 65. கருணாம்பிகா மில்ஸ், சோமனூர் 13392 66. ஆஷர் டெக்ஸ்டைல்ஸ், திருப்பூர் 24800 67. தனலட்சுமி மில்ஸ், திருப்பூர் 48308 393 68. ஸ்ரீராமலிங்க சூடாம்பிகை மில்ஸ், திருப்பூர் 33892 192 69. திருப்பூர் காட்டன் ஸ்பின்னிங் & வீவிங், மில்ஸ், திருப்பூர் 15584 70. கோபால்டு டெக்ஸ்டைல்ஸ், திருப்பூர் 12096 71. தமிழ்நாடு காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ், திருப்பூர் 4040 72. திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ், திருப்பூர் 12000 73. ஸ்ரீராணி லட்சுமி மில்ஸ், அரசூர், பல்லட வட்டம் 12096 74. சரவணபவா மில்ஸ், பெருமாநல்லூர், பல்லட வட்டம் 25000 75. இலட்சுமி மில்ஸ், பல்லடம் 37120 76. இலட்சுமி நாராயணா டெக்ஸ்டைல்ஸ், வடுபாளையம், பல்லடவட்டம் 13640 77. ஸ்ரீசக்தி டெக்ஸ்டைல்ஸ், பொள்ளாச்சி 12040 78. குவாலிட்டி மில்ஸ், பொள்ளாச்சி 14828 79. பாக்கியலட்சுமி மில்ஸ், பொள்ளாச்சி 8424 80. விஜயேஸ்வரி டெக்ஸ்டைல்ஸ், புளியம்பட்டி, பொள்ளாச்சி 14176 81. திருமூர்த்தி மில்ஸ், உடுமலைப் பேட்டை 28384 123 82. பழனியாண்டவர் மில்ஸ், உடுமலை 47600 83. பிரிமியர் மில்ஸ், பூலாங்கிணறு, உடுமலை 33048 84. வெங்கடேசா மில்ஸ், உடுமலைப் பேட்டை 56660 288 85. கூட்டுறவு நூற்பாலை, குளத்துப் பாளையம், தாராபுரம் 12000 86. ஸ்ரீ நடேசர் மில்ஸ், ஈரோடு 12388 87. விஸ்வம் மில்ஸ், ஈரோடு 4016 88. V.R.டெக்ஸ்டைல்ஸ், நல்லூர், புளியம்பட்டி, ஈரோடு 11720 89. யூனிட்டி மில்ஸ், கொளப்பலூர், கோபி 1680 90. சந்திரப்பிரபா காட்டேஜ் ஸ்பின்னிங் மில்ஸ், சித்தோடு 400 91. கந்தசாமி ஸ்பின்னிங்மில்ஸ், பவானி 12064 92. சுந்தரம் ஸ்பின்னிங் மில்ஸ், பவானி குமாரபாளையம் 12320 93. லில்லி ஸ்பின்னிங் இண்டஸ்ட்ரீஸ், பவானி குமாரபாளையம் 2100 94. புள்ளிக்கார் மில்ஸ், திருச்செங்கோடு 17316 95. ஜவகர் மில்ஸ், சேலம் 33472 96. ராஜேந்திரா மில்ஸ் (A), சேலம் 25144 97. ராஜேந்திரா மில்ஸ் (B), சேலம் 13200 98. கூட்டுறவு நூற்பாலை, சேலம் 12000 99. மேட்டூர் இண்டஸ்ட்ரீஸ், மேட்டூரணை 26496 630 100. மேட்டூர் ஸ்பின்னிங் மில்ஸ், மேட்டூரணை 12000 101. விஜயகுமார் மில்ஸ், பழனி 33940 102. ராஜரத்னா மில்ஸ், திண்டுக்கல் 12000 103. சௌந்திரராஜா மில்ஸ், நெய்க்காரப்பட்டி, பழனி 27600 104. அண்ணாமலையார் மில்ஸ், திண்டுக்கல் 13780 105. கரூர் மில்ஸ், தாந்தோன்றிலை, கரூர் 13480 106. கூட்டுறவு நூற்பாலை, மலைக் கோயிலூர், கரூர் 13000 107. திருவளர் ஸ்பின்னிங் மில்ஸ், L.N. சத்திரம், கரூர் 1440 108. மல்லிகேஸ்வரி டெக்ஸ்டைல்ஸ், மணவாசி, குளித்தலை வட்டம் - குறிப்பு :- ஊர்களின் பின்னுள்ள எண்கள் - கோவை நகரின் அஞ்சல் எண்கள், போத்தனூரும் கோவை நகரை அடுத்துள்ள ஊரை. 60. விஸ்கோஸ் ஆலையில் மரத்தால் கூழ்செய்து, அக்கூழைக் கொண்டு செயற்கைப் பஞ்சாக்கி, அப்பஞ்சைக் கொண்டு செயற்கை நூல் (ரயான்) நூற்கப்படுகிறது. இதன் மூலதனம் ரூ. 8 கோடி. இந்த 108 ஆலைகளில் 54 கோவை நகரைச் சேர்ந்தவை யாகும். 36 கோவை மாவட்டதைச் சேர்ந்தவை. மற்ற 18உம் கொங்கு நாட்டின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவை. புதுச்சேரி உட்படத் தமிழ் நாட்டில் உள்ள 176 நூல் பாலைகளில் 108 ஆலைகள் கொங்கு நாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள மொத்த நூற்பாலைகள் 543. அவற்றுள் தமிழ் நாட்டில் 176. அவற்றுள் கொங்கு நாட்டில் 108. பிற தொழிலகங்கள் 1. சலவைத் தொழிலாலை (யுனைட்டெட் பிளிச்சர்ஸ்)- நீலகிரி மேட்டுப் பாளையம். 2. சித்ரா - நெசவு ஆராய்ச்சி நிலையம் - பீளமேடு 4. 1. இச்சலவைத் தொழிலாலை, கோவை ஆலைகளில் நெய்யப்படும் துணிகளைச் சலவை செய்ய, கோவை ஆலையுரிமையார்களால் நடத்தப்படுகிறது. 2. சித்ராவில் நெசவு பற்றிய, நுணுக்கமான ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. 25-12-55இல் நேரு அவர் களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 13-10-58இல் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களால் திறப்பு விழாச் செய்யப் பட்டது. இனி இந்நூற்பாலைகளுக்கு வேண்டிய கதிர்கள் (Spindless). விசைத்தறிகள் (Powere looms) முதலிய கருவிக ளெல்லாம் கோவையிலேயே செய்யப்படுகின்றன. அவை செய்யும் தொழிற் சாலைகளாவன: 1. இராமகிருஷ்ணா இண்டஸ்ட்ரியல்ஸ், பீளமேடு 2. மெட்ராஸ் மிஷின் டூல் மானுபாக்ஸரிங், சிங்காநல்லூர். 3. டெக்ஸ்டூல் கம்பனி, கணபதி. 4. இலட்சுமி மிஷின் ஒர்க்ஸ், பெரியநாயக்கன் பாளையம். 5. ஸ்கின்ஸ் & லெதர்ஸ் லிமிட்டெட், காரமடை. முதல் மூன்றினும் நூற்பாலைகளுக்கு வேண்டிய நூல் நூற்கும் கதிர்கள் (Spinldes) செய்யப்படுகின்றன. இரண்டாவதில் அத்துடன் எண்ணெயால் இயங்கும் இயந்திரங்களும் (Diesel Engins), கடைசல் இயந்திரங்களும் (Lathes) செய்யப்படுகின்றன. மூன்றாவதில் அக்கதிர்களுடன் தேனிரும்பும், உயர்தர எஃகும் (Special steel) பிறவும் செய்யப்படுகின்றன. டெக்ஸ்டூல் தொழிற் சாலையின் கிளைகள் - பெரியகடைத்தெரு, பாப்பநாயக்கன் பாளையம், ஒண்டிப்புதூர், அத்திப்பாளையம் ஆகிய இடங்களிலும் உள்ளன. அவ்வைந்தினும் 6 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். நாலாவதில் கதிர்கள், விசைத்தறிகள் முதலிய நூற்பாலை யந்திரக் கருவிகளெல்லாம் செய்யப்படுகின்றன. ஐந்தாவதில் நூற்பாலைகளுக்கு வேண்டிய தோற்கருவிக ளெல்லாம் செய்யப்படுகின்றன. பஞ்சாலைகள் கொங்கு நாட்டில் பருத்தி மிகுதியாக விளைவதே இங்கு இத்தனை நூற்பாலைகள் ஏற்பட்டிருப்பதற்குக் காரணமாகும். இனி இத்தனை ஆலைகளுக்கும் பஞ்சு வேண்டுமல்லவா? கொங்கு நாடு முழுவதும் பன்னூற்றுக்கணக்கான பஞ்சாலைகள் - பருத்தியறைக்கும் ஆலைகள் - உள்ளன. பருத்தி மிகுதியாக விளையும் இடங்களிலெல்லாம் இப்பஞ்சாலைகளும் மிகுதி யாக உள்ளன. இதில் திருப்பூர் முதலிடம் பெறுகிறது. பஞ்சை மூட்டை (பேல்) கட்டும் தொழிலும் திருப்பூரில் மிகுதியாக நடைபெறுகிறது. பருத்தி, பஞ்சு வாணிகத்தில் திருப்பூர் சிறந்து விளங்குகிறது. கைநெசவில் சிறப்புடையது கொங்குநாடல்லவா? அதனில் சிறப்புடையவை பவானிச் சமுக்காளம், மெத்தை விரிப்பு, திருப்பூர் பனியன் முதலியன. பவானிச் சமுக்காளம் பவானி நகரிலும், அதன் சுற்றுவட்டாரத்திலுமாக 10000 சமுக்காளத் தறிகள் உள்ளன. நாளொன்றுக்கு ஒரு தறியில் சராசரி ஒரு சமுக்காளம் நெய்யப்படுகிறது. சிறந்த வேலைப் பாடும் கண்கவர் வண்ணவேறுபாடுமுடைய பஞ்சு, பட்டுநூல் (செயற்கைப்பட்டு) சமுக்காளங்கள் நெய்யப்படுகின்றன. இத்தொழில் இவ்வூர்க்கே உரிய சிறப்புடைய தொன்றாகும். இந்தியா முழுதுமேயன்றி, இலங்கை, மலேயா, தென்னாப் பிரிக்கா முதலிய வெளிநாடுகட்கும் ஏற்றுமதியாகிறது. உலகப்புகழ் பெற்றது பவானிச் சமுக்காளம்! மெத்தைவிரிப்பு (பெட்ஷீட்), போர்வை சென்னிமலையும், கரூரும் இத்தொழிலிற் சிறப்பிடம் பெற்றுள்ளன. சென்னிமலையில் இவை மிக்க கண்கவர் வேலைப்பாடுடையவாக நெய்யப்படுகின்றன. திருப்பூர்ப் பனியன் திருப்பூர், பஞ்சாலைத் தொழிறிச் சிறந்து விளங்குதல் போலவே பனியன் தொழிலிலும் சிறந்து விளங்குகிறது. 150 பெரியவையும், 300 சிறியவையுமாகத் திருப்பூரில் 450 பனியன் தொழிற்சாலைகள் உள்ளன. அத்தொழிற்சாலைகளில் 11000 பேர் வேலை செய்கின்றனர். நாளொன்றுக்கு 600000 பனியன்கள் நெய்யப்படுகின்றன. அடுத்துச் சேலத்தில் பனியன் நெய்யப் படுகிறது. பட்டுநூல் தொழிற்சாலை, ஓசூர் தமிழ் நாட்டில் பட்டுநூல் தொழிற்சாலை இஃதொன்றே, இந்தியாவிலுள்ள பெரிய பட்டுநூல் தொழிற்சாலை இதுவே. ஆற்றூர், கிருஷ்ணகிரி வட்டங்களில், கம்பளி நெய்யப்படு கிறது. நூல், துணி சலவை செய்தல் ஈரோட்டில் இத்தொழில் மிகுதியாக நடைபெறுகிறது. நூலுக்கும் துணிக்கும் சாயம் போடும் சாயப்பட்டறைகள் ஈரோட்டில் மிகுதி. சலவை செய்த துணிகளை இயந்திரத் தினால் அழுத்தி ஒழுங்காக்கும் தொழிலும் ஈரோட்டில் மிகுதி. துணிகளில் அச்சிடும் அச்சுப்பட்டறைகளும் கொங்கு நாட்டில் மிகுதி. பவானிக் குமாரபாளையத்தில், கண்கவர் வேலைப் பாட்டுடன் நார்ப் பட்டுச் சேலைகள் நெய்யப்படுகின்றன. நாடா (ரிப்பன்) நெசவுத்தொழிலில் பவானிக் குமாரபாளையம் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது. கொங்கு நாட்டின் உழவர் பெருமக்கள் உழைப்பின் செல்வர்கள்; உலையா முயற்சினர்; இலம் என்று அசைஇ இராதவர் மட்டுமல்ல, காலத்துக் கேற்றவாறு தங்கள் தொழிலை வளமாக்கும் கடமையுணர்வுடையவர்களாமாவர். கொங்கு நாட்டில் பெரும்பாலும் எந்தக் கிணற்றைப் பார்த்தாலும் குழாய்கள் நீரைக் கொட்டிக் கொண்டே இருக்கும். இறைப்புக் கருவிகளின் விலையேற்றம், மாடு விற்கும் விலை, ஆட்களின் சம்பள முதலியவை இன்றுள்ள நிலையில் கவலையிறைத்துப் பயிர்த்தொழில் செய்தல் கட்டுபடியாகாது. எனவே, இன்றுள்ள மின்சார வளத்தைப் பயன்படுத்திப் பெரிய கிணறுகட்கெல்லாம் இறைவைப் பொறி (Motor Pump) வைத்துள்ளனர். இறைவை பம்பு. பொறி- மோட்டார். மேலும், மழைதட்டிய காலத்தும் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படாத வாறு, ஆழ்ந்தகன்ற கிணறுகள் வெட்டி, அக்கிணற்றுக்குள் குழி போடும் இயந்திரத்தைக் கொண்டு நூற்றுக்கணக்கான அடி ஆழமுள்ள குழிகள் போட்டு, இறைவைப் பொறி மூலம் தண்ணீர் இறைத்து வருகின்றனர். இதனால் மின்சாரப் பொறியும் (Electric Motor), இறவையும் (Pump) செய்யும் தொழிற் சாலைகள் கோவையில் ஏராளமான உள்ளன. அத்தொழிலங் களின் பட்டியலைப் பார்த்தாலே கொங்கு நாட்டில் இறைவைப் பொறி வைத்துள்ள கிணறுகளின் அளவு விளங்கும். கிணற்றுக்குக் குழிபோடும் இயந்திரங்கள் (போரிங் மிஷின்) செய்யும் தொழிற்சாலை கோவையில்ஏராளமாக உள்ளன. இறைவை மட்டும் செய்யுற் தொழிற்சாலைகள் 1. ராபமுவுண்டரி, பாப்பநாயக்கன்பாளையம் - 18. 2. பாரத் பவுண்டரி, பாப்பநாயக்கன்பாளையம் 3. ராஜஷ்ரீ இண்டஸ்ட்ரியளல் பவுண்டரி, பா.நா. பாளையம் 4. வீரம் இண்டஸ்ரியல் பவுண்டரி, பா.நா.பாளையம் 5. மகேந்திரா இஞ்சினீரிங் ஒர்க்ஸ், புலியகுளம் - 18 6. சாந்தா இண்டஸ்ட்ரியல்ஸ், பீளமேடு - 4 7. வீனஸ் பவுண்டரி, பீளமேடு 8. ராஜா மெட்டல் & அலாய்ஸ், பீளமேடு 9. சித்ரா இண்டஸ்ட்ரீஸ் திருச்சிரோடு, சிங்காநல்லூர் - 5. 10. கணபதி இஞ்சினீரிங் மானுபாக்ஸ்ர்ஸ், கணபதி - 6 11. ஜயலட்சுமி பவுண்டரி, கணபதி 12. மணி இண்டஸ்ட்ரீஸ், சத்திரோடு, கணபதி 13. கோயமுத்தூர் இண்டஸ்ட்ரீஸ், கிருஷ்ணராயபுரம் - 6. 14. தாமு பவுண்டரி, கே.ஆர்.புரம், கணபதி - 6. 15. ஏ.கே.பொன்னுச்சாமி & கோ, கே.ஆர்.புரம், கணபதி 16. ஸ்ரீரேணுகா பவுண்டரி, கே.ஆர்.புரம், கணபதி 17. ஆல்டெக் இண்டஸ்ட்ரீஸ், கே.ஆர்.புரம், கணபதி 18. தவத்திரு கந்தசாமி சுவாமிகள் தொழிற்சாலை, சின்னவேடம்பட்டி அஞ்சல் - 6. 19. ஸ்ரீவெங்கடேசா பவுண்டரி, படேல்ரோடு - 9 20. பயனியர் பவுண்டரி, படேல் ரோடு. 21. பிராட்வே இஞ்சினீரிங் ட்ரான்ஸ்போர்ட்கோ, ப.ரோடு. 22. ஸ்ரீவாட்சா இஞ்சினீரிங் ட்ரேடிங் கம்பனி, படேல்ரோடு 23. ஸ்ரீராம் இண்டஸ்ட்ரியல்ஸ், துடியலூர் அஞ்சல் - 11. 24. கலா இண்டஸ்ட்ரியல்ஸ், துடியலூர் அஞ்சல் -11 25. KND டூல் எக்யூப்மெண்ட்கோ, மேட்டுப்பாளையம் ரோடு -11 26. டெக்ஸ் ஸ்பிண்டல் இண்டஸ்ட்ரீஸ், வெள்ளக்கிணறு - 11 27. வி.சி.எஸ். இண்டஸ்ட்ரீஸ், ஞானம்பிகா மில்ஸ் - 11 28. விம்கோ இண்டஸ்ட்ரீஸ், சின்னியம் பாளையம் அஞ்சல் - 14. 29. என்.வி. தொழிற்சாலை, சூலூர். 30. ஸ்ரீ முருகன் எல்க்ட்ரிகல் மானுபாக்ஸர்ஸ், அருள்புரம், கரைப்புதூர் அஞ்சல், திருப்பூர் 31. என்.எஸ்.மணியம் மெக்கானிக்கல் ஒர்க்ஸ், வாலிபாளையம், திருப்பூர். 32. ஸ்ரீ கருணாம்பிகை இஞ்சினினீரிங் ஒர்க்ஸ், அவிநாசி 33. ஜோதி இண்டஸிட்ரியல் கார்பரேஷன், ஈரோடு 34. ராணி இண்டஸ்ட்ரீஸ், கொண்டையம்பாளையம், கோபி வட்டம் 35. ஸ்ரீ ஆண்டாள் & கோ, பவானிக் குமாரபாளையம் மின்சாரப் பொறிமட்டும் செய்யுந் தொழிற்சாலைகள் 1. கஸ்தூரி இஞ்சினீயர்ஸ் லிமிட்டெட், குணியமுத்தூர் - 8. 2. பிராட்வே இஞ்சினீரிங் கம்பனி, படேல்ரோடு -9 3. மினி எலெக்ட்ரிகல், சாயிபாபா காலனி 11 1/4 (எச்.பி.) 4. பாரத் மில்ஸ், ஜமீன் ஊற்றுக்குழி, பொள்ளாச்சி மின்சாரப் பொறியும் இறைவையும் செய்யும் தொழிற்சாலைகள் 1. தண்டாயுதபாணி பவுண்டரி, பாப்பநாயக்கன்பாளையம் 2. சுப்பையா பவுண்டரி, பாப்பநாயக்கன்பாளையம் 3. விஜயா பவுண்டரி, பா.நா. பாளையம் 4. ராஜா பவுண்டரி, பா.நா.பாளையம் 5. கோயமுத்தூர் பிரிமியர் கார்பரேஷன், அவிநாசிரோடு 6. சௌதர்ன் இஞ்சினீரிங் இண்டஸ்ட்ரீஸ், பா.நா.பா. 7. காத்திகேயா பவுண்டரி, பா.நா. பாளையம் (மானோபிளாக் செட்டும்) 8. ஸ்ரீகிருஷ்ணா பவுண்டரி. பா.நா. பாளையம் 9. கோவர்த்தனா இஞ்சினீரிங் இண்டஸ்ட்ரீஸ், உக்கடம் தெற்கு-1 10. யுனைட்டெட் இண்டஸ்ட்ரீஸ், ரங்கையகவுடர் தெரு -1 11. டெக்ஸ்மோ இண்டஸ்ட்ரீஸ், ஆர்.எஸ். புரம் -2 12. பூ. சா. கோ. எலக்ட்ரிகல் இன்ஸ்டிட்யூட், பீளமேடு -4 13. வேக்பீல்டு இஞ்சினீரிங் கம்பனி, பீளமேடு 14. ஈஸ்ட்டர்ன் எலக்ட்ரிகல் கம்பனி, சிங்காநல்லூர் - 5. 15. சண்முகா பவுண்டரி, சிங்காநல்லூர். 16. பிரிமியர் இண்டர்ஸ்ட்ரீஸ், திருச்சிரோடு, சிங்காநல்லூர் 17. எல்டெக்ஸ் இஞ்சினீரீங் கார்பரேஷன், கணபதி - 6 18. டெக்ஸ் சோரிஸ் மானுபாக்ஸர்ஸ், கே.ஆர்.புரம், கணபதி 19. கஸ்தூரி இஞ்சினீரிஸ் லிமிட்டெட், குணியமுத்தூர் - 8. 20. டி.ஆர். இண்டஸ்ட்ரீயல்ஸ் லிமிட்டெட், குணியமுத்தூர் 21. பாலசுப்பிரமணியா பவுண்டரி, படேல்ரோடு - 9. 22. ஜெனரல் இஞ்சினீரிஸ் கம்பனி, படேல் ரோடு 23. ஸ்ரீலட்சமி பவுண்டரி, படேல் ரோடு 24. மௌலி & சன்ஸ், கிராஸ்கட் ரோடு - 11 25. எக்ஸல் இண்டஸ்ட்ரீஸ், வேலாண்டிபாளையம் - 11 26. பிரகாஷ் இஞ்சினீரிங் கம்பனி, மேட்டுப்பாளையம் ரோடு -11 27. நிர்மலா இண்டஸ்ட்ரீஸ், மேட்டுப்பாளையம் ரோடு 28. லட்சுமி நாராயணா இண்டஸ்ட்ரீஸ், காந்திபுரம் - 12. 29. ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் இண்டஸ்ட்ரீஸ், பெரியநாயக்கன்பாளையம் 30. நந்தகோபன் இண்டஸ்ட்ரீஸ், இராமபட்டணம், பொள்ளாச்சி 31. பாரத் மில்ஸ், ஜமீன் ஊற்றுக்குழி, பொள்ளாச்சி 32. தனா இஞ்சினீரிங் இண்டஸ்ட்ரீஸ், பொள்ளாச்சி 33. ஸ்ரீதேவி இண்டஸ்ட்ரீஸ், தளிரோடு, உடுமலை இயந்திரப் பகுதிகள் செய்யுந் தொழிற்சாலைகள் 1. லோட்டஸ் பவுண்டரி, பாப்பநாயக்கன்பாளையம் - 1 2. ஸ்ரீஹரி பவுண்டரி, பா.நா. பாளையம் 3. சுந்தரம் பவுண்டரி, பா.நா.பாளையம் 4. வீரம் இண்டஸ்ட்ரியல் பவுண்டரி, பா.நா. பாளையம் 5. ராஜா மெட்டல் & அலாய்ஸ், பீளமேடு -4. 6. இண்டியன் ரெப்ரிஜரேஷன் இண்டஸ்ட்ரீஸ், சிங்காநல்லூர் 7. மனோகரா இன்டஸ்ட்ரீஸ், சிங்காநல்லூர் 8. சுந்தரம் இஞ்சினீரிங் கம்பனி. கே.ஆர்.புரம், கணபதி - 6 9. P.V.R இண்டர்ஸ்ட்ரீஸ், சத்திரோடு, கணபதி 10. துரைமணி பவுண்டரி, கே.ஆர்.புரம், கணபதி 11. பயனியர் இஞ்சினீரிங் பவுண்டரி, கே.ஆர்.புரம், கணபதி 12. ஸ்ரீஜயகிருஷ்ணா பவுண்டரி, கே.ஆர்.புரம், கணபதி 13. லட்சுமி இஞ்சினீரிங், பவுண்டரி, கே.ஆர்.புரம், கணபதி 14. லதா இண்டஸ்ட்ரீஸ், கணபதி 15. ரேணுகா இஞ்சினீரிங் ஓர்க்ஸ், படேல்ரோடு - 9 16. ஜெனரல் மோட்டார் புரடக்ட்ஸ், சத்தியமூர்த்திரோடு - 9 17. ஸ்ரீரங்கா பவுண்டரி, உப்பிலைபாளையம், சௌரிபாளையம், ரோடு - 15. 18. ஸ்ரீரங்கா பவுண்டரி, ஈரோடு 19. ஜோதி இண்டஸ்ரியல் கார்பரேஷன், ஈரோடு. இயக்கிகள் (Starters & Switches) செய்யும் தொழிற் சாலைகள் 1. கோயமுத்தூர் பிரிமியர் கார்பரேஷன், அவிநாசிரோடு -1 2. கணபதி இஞ்சினீரிங் மானுபாக்ஸர்ஸ், கணபதி - 6. 3. இந்துஸ்தான் எக்யூப்மெண்ட் மானுபாக்ஸர்ஸ் கே.ஆர்.புரம், கணபதி 4. புளூமவுண்டன் ஸ்விட்ச்கீரிஸ், அசோசியேட்டஸ், படேல்ரோடு - 9. 5. ஸ்ரீவெற்றிவேல் பவுண்டரி, படேல்ரோடு 6. வேலுமணி இஞ்சினீரிங் இண்டஸ்ட்ரி, துயலூர் - 11 பல்வகை இயந்திரக் கருவிகள் செய்யும் தொழிற்சாலைகள் பொருள்கள் 1. விசைத்தறி (Power Loom), 2. நூற்பாலை இயந்திரப் பகுதிகள் (Textile Spares), 3. நூல்சுற்றும் இயந்திரம் (Reeling Machine), 4. மூட்டை கட்டும் இயந்திரம் (Baling Presser), 5. கடைசல் யந்திரம் (Lathe), 6. சாணைபிடிக்கும் யந்திரம் (Grinder), 7. துளைபோடும் யந்திரம் (Drilling Machine), 8. எண்ணெயால் இயங்கும் யந்திரம் (Diesel Engine), 9.எண்ணெயாட்டும் யந்திரம் (Oil Rotary), 10. நிறுவை யந்திரம் (Weighing Machine), 11. அழுத்தக் காற்றுத் துருத்தி (Air Compressor), 12. உலைத்துருத்தி (Blower), 13. கரும்பாலை யந்திரம் (Crusher), 14. பயிர்த்தொழிற் கருவிகள் (Agricultural Implements), 15. இரும்புக்கட்டில், நாற்காலி, மேஜை, சோபா, பீரோ முதலியன, 16. இரும்புக்கதவு, சன்னல் முதலியன, 17. கூரைக் கோப்பு, நீர்த்தொட்டி, எண்ணெய்த் தொட்டி முதலியன. (லாரி, மோட்டார் வண்டிக்கு); 18. கம்பியாணி, மறையாணி, மறை முதலியன. தொழிற்சாலைகள் 1. நிர்மலா இஞ்சினீரிங் ஒர்க்ஸ், ஆர்.எஸ். புரம் - 16, 17 2. பூ.சா. கோ. இண்டஸ்ட்ரியல் இன்ஸ்ட்டியூட், பீளமேடு-4,5,8 3. டெக்ஸ்லாண்டு இஞ்சினீரிங் மானுபாக்ஸர்ஸ், சௌரிபாளையம் - 14. 4. எல்சீட்டீ இண்டஸ்ட்ரீஸ், சிங்காநல்லூர் - 10, 13, 14 5. சௌத் இண்டியா சான்பிட்ஸ், சிந்தாமணிப்புதூர், கோவை - 15. 6. சுதர்சனம் இஞ்சினீரிங் ஒர்க்ஸ், திருச்சிரோடு, சிங்காநல்லூர் 2 7. மாருதி இண்டஸ்ட்ரீஸ், கள்ளபாளையம், ஒண்டிப்புதூர்-14. 8. பி.ராஜூநாயுடு & கோ, கணபதி - 2. 9. கஸ்தூரி இஞ்சினீயர்ஸ், குணியமுத்தூர் - 3, 6 10. சோவா பிரைவேட் லிமிட்டெட், குணியமுத்தூர் - 8. 11. இஞ்சினீரிங் & இண்டஸ்ட்ரியல் பவுண்டரி, ராம்நகர் - 6,7,11,12 12. கார்ட்டி & கோ, படேல்ரோடு - 11 13. ரங்கா இண்டஸ்ட்ரியல், படேல் ரோடு - 16. 14. ஆல்ஸ்டீல் கார்பரேஷன், படேல் ரோடு - 15. 15. ஸ்ரீவாட்சா இஞ்சினீரிங் ஒர்க்ஸ் & ட்ரேடிங் கம்பனி, படேல்ரோடு - 16. 16. காங்கா பிரசிஷன் இண்டஸ்ட்ரீஸ், ராம்நகர், கோவை - 8. 17. எவரெஸ்ட் இஞ்சினீரிங் ஒர்க்ஸ், கிராஸ்கட் ரோடு - 16. 18. அபிராமி இண்டஸ்ட்ரீஸ், வடகோவை - 15. 19. பிரேமா இஞ்சினீரிங் ஒர்க்ஸ், பீளமேடு - 15. 20. டெக்ஸ் ஸ்பிண்டல் இண்டஸ்ட்ரீஸ், வெள்ளக்கிணறு - 2 21. இராமகிருஷ்ண மிஷன் இண்டஸ்ட்ரியல், பெரியநாயக்கன்பாளையம் - 5, 6, 7, 13 22. பாரத் மில்ஸ், ஜமீன் ஊற்றுக்குழி, பொள்ளாச்சி - 17 23. ஜெய்ஹிந்து இஞ்சினீரிங் ஒர்க்ஸ், ஈரோடு - 9, 13 24. ஜெயந்தா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ், பவானி - 15 25. ஸ்ரீ ஆண்டாள் கோ, பவானிக் குமாரபாளையம் -1 (விசைத்தறிப் பகுதிகளும்) குறிப்பு : தொழிற்சாலைகளின் பின்னுள்ள எண்கள், அத் தொழிற்சாலையில் செய்யப்படும் பொருள்களைக் குறிக்கும். பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் 1. பிரகா இண்டஸ்ட்ரீஸ், அவிநாசி ரோடு - 1. 2. சௌத் இந்தியா பிளாஸ்ட்டிக் லிமிட்டெட், பீளமேடு - 4 3. ஜகா பட்டன் இண்டஸ்ட்ரீஸ், மேட்டுப்பாளையம் ரோடு-11 4. நான்கோ ரப்பர் பிளாஸ்டிக்ஸ், வேலாண்டிபாளையம் -11 5. பி.வி.சி. பிளாஸ்டிக் தொழிற்சாலை, மேட்டூரணை பிரகா தொழிற்சாலை, ஆசியாவிலேயே பெரியதாகும். இதில் பிளாஸ்டிக் பொத்தானுடன், கைகழுவுந் தொட்டிகள் (wash basins), குளிக்கும் தொட்டிகள் (Bath Tubs), துப்பாக்கிக் குண்டு பாயாத தொப்பிகள் (Bullet Helmet) முதலியனவும் செய்யப் படுகின்றன. ஐந்தாதிவல் பிளாஸ்டிக் பொருள்கள் செய்யப் பயன்படும், ‘பி.வி.சி. ரெசின்’ என்னும் ஒருவகைப் பசை செய்யப்படுகிறது. இத்தொழிற்சாலை 5 5-67 இல், தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில், இந்திய அமைச்சர் அசோகமேத்தா அவர்களால் திறந்து வைக்கப் பட்டது. இதன் மூலதனம் ரூ.5 கோடி. சிமெண்டு ஆலைகள் 1. ஏ.சி.சி. சிமெண்ட் ஆலை, மதுக்கரை, கோவை 2. இந்தியா சிமெண்ட் அலை, சங்ககிரி, சேலமாவட்டம் 3. செட்டிநாடு சிமெண்ட் ஆலை, புலியூர், கரூர் வட்டம் காகித ஆலைகள் 1. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பேப்பர் போர்டு மில்ஸ், உடுமலை 2. சேஷசாயி காகித ஆலை, பள்ளிபாளையம், சேல மாவட்டம் காகித அட்டை ஆலைகள் 1. தனலட்சுமி காகித அட்டை ஆi கரூர். 2. தமிழ்நாடு காகித அட்டை ஆலை - கீழ்பவானி அணை பனியன் முதலியன போட்டனுப்பவும் அட்டைப் பெட்டி செய்யவும் பலவகையான அட்டைகள் செய்யப்படு கின்றன இவ்வாலைகளில். சர்க்கரை ஆலைகள் 1. அமராவதிச் சர்க்கரை ஆலை, உடுமலைப்பேட்டை 2. மாதம்பட்டிச் சர்க்கரை ஆலை, மாதம்பட்டி, கோவை 3. சக்தி சர்க்கரை ஆலை, ஆப்பக்கூடல், பவானி வட்டம் 4. கூட்டுறவுச் சர்க்கரை ஆலை, மோகனூர், நாமக்கல் வட்டம் 5. பாரி & கோ சர்க்கரை ஆலை, புகலூர், கரூர் வட்டம். பல்வகைத் தொழிற்சாலைகள் 1. செயற்கை வைரத்தொழிற்சாலை, சிறுமுகை, நீலகிரி மேட்டுப்பாளையம், பலவகையான செயற்கை வைரக் கற்கள் செய்யும் பெரிய தொழிற் சாலையாகும் இது. 2. தோல்பதனிடு மருந்துத் தொழிற்சாலை (Tan India Watle Extracts Company), நீலகிரி மேட்டுப்பாளையம். இந்தியாவிலேயே இத்தகைய தொழிற்சாலை இஃதொன்றே, வாட்டில் - ஒருவகை ஆவிரைமரம். நீலகிரியிலும், கொடைக் கானலிலுமாக அரசினர் 15000 ஏக்கரில் இம்மரங்களைப் பயிர் செய்துள்ளனர். அம்மரப்பட்டையே அம்மருந்து செய்யப் பயன்படுகின்றது. பட்டையுரிக்கப் பட்ட மரங்களை விஸ் கோஸ் தொழிற்சாலையார் வாங்கி மரக் கூழாக்குகின்றனர். ‘டேன் இந்தியா’ என்னும் இத்தொழிற்சாலை 25.6.67இல் தமிழக முன்னாள் தொழில் அமைச்சர் திரு.ஆர். வெங்கட்ட ராமன் அவர்கள் தலைமையில், தமிழகக் கல்வி தொழி லாளமைச்சர் திரு. இரா.நெடுஞ்செழியன் அவர்களால் திறந்து வைக்கப் பட்டது. 3. இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, உதக மண்டலம். இத்தொழிற்சாலையில் வண்ணப் போடோப்பிலும், எக்ஸ்ரே பிலிமும் செய்யப்படுகின்றன. ஜப்பானை விட்டால் ஆசியாவிலேயே இதுதான் பெரிய தொழிற்சாலை. இதன் மூலதனம் ரூ. 12 கோடி. 7.1.67இல் இந்திய முதலமைச்சர், திருவாட்டி இந்திராகாந்தி அவர்களால் இது திறந்து வைக்கப்பட்டது. லிப்ரா போட்டோ கிராபிக் இண்டஸ்ட்ரீஸ், போத்தனூர், இதில் போட்டோ பிலிமும் பேப்பரும் செய்யப்படுகின்றன. 4. இராசாயனத் தொழிற்சாலை (மேட்டூர்க் கெமிக்கல்ஸ்) மேட்டூரணை 5. அலுமினியத் தொழிற்சாலை, மேட்டூரணை 6. கடைசல் தொழிற்சாலை, மேட்டூரணை 7. சந்தன எண்ணெய்த் தொழிற்சாலை, மேட்டூரணை 8. சந்தன எண்ணெய்த் தொழிற்சாலை சீலநாயக்கன் பட்டி, சேலம் 4. இங்கு துணி சலவை செய்யும் சோடா முதலிய பல வகையான இரசாயனப் பொருள்கள் செய்யப் படுகின்றன. 5. இது ஒரு பெரிய தொழிற்சாலை. இதன் மூலதனம் ரூ. 10 கோடி. 6. இதில் பெரிய இரும்புச் சட்டங்கள், தகடுகள் முதலியவற்றை அறுத்தல், துளையிடுதல், பற்றவைத்தல் முதலியன செய்யப்படுகின்றன. இரும்புப் பொருள்களுக்குத் துருப்பிடியாதிருக்க ஈயம் பூசுந் தொழிலும் இங்கு நடைபெறுகிறது. 7, 8. இந்தியாவிலேயே மைசூர், தமிழ்நாடு ஆகிய இரண்டிடங்களில்தான் சந்தன எண்ணெய் செய் யப்படுகிறது. தமிழ் நாட்டில் - மேட்டூர் அணை, சேலத்தை அடுத்த சீலநாயக்கன்பட்டி ஆகிய இவ்விரண்டிடங்களில் தான் இவ்வெண்ணெய் எடுக்கப்படுகிறது. இவ்வெண்ணெய் வட இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அரபு நாடுகள் முதலிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இத்தொழிற் சாலைகளில் சந்தனச் சோப்பும் செய்யப்படுகிறது. 9. நறுமண எண்ணெய்த் தொழிற்சாலை, ஏர்க்காடு 10. மருந்துத்தொழிற்சாலை, ஏர்க்காடு 11. வெடிமருந்துத் தொழிற்சாலை, அறுவங்காடு, நீலகிரி 12. கண்ணாடித் தொழிற்சாலை, சேலம் 13. கண்ணாடித் தொழிற்சாலை, ஆற்றூர் 14. படிக அறைவைத் தொழிற்சாலை, சேலம் இதில், கண்ணாடித் தொழிலுக்குப் பயன்படும் வெங்கச் செங்கல் மணலாக அறைக்கப்படுகிறது. 15. அட்டைத் துணித் தொழிற் சாலை (Cord Clothing), பல்லடம் இந்தியாவில் இத்தொழிற்சாலை மராட்டியத்தில் ஒன்றும், இஃதுமே யாகும். 16. அறுவை மருத்துவப் பஞ்சாலை (Surgical Absor Bent cloth), கோவை இந்தியாவில் இப்பஞ்சாலை நெல்லை மாவட்ட இராசபாளையத்தி லொன்று, இஃதொன் றுமே உள்ளன. 17. குளுக்கோஸ் தொழிற்சாலை, அமராவதிநகர், உடு மலைப்பேட்டை. 18. ஸ்டேன்ஸ் டையர்த் தொழிற்சாலை, கோவை - இங்கு எவ்வகையானடையரும் நன்கு பழுது பார்த்துத் புதுப்பிக்கப்படுகிறது. 19. ஸ்டேன்ஸ் உரத்தொழிற்சாலை, துடியலூர், கோவை. 20. பூ.சா.கோ. உரத்தொழிற்சாலை, காரமடை, கோவை. 21. கெமிகல்ஸ் பெர்டிலைசர்ஸர் (கலப்பு உரம்) மேட்டுப்பாளையம், கோவை. 22. பூ.சா.கோ உணவாக்க ஆராய்ச்சி நிலையம், கோவை. ஜி.டி.நாயுடு - யூ.எம்.எஸ். தொழில் நிறுவனம், கோவை. இங்கு வானொலிப் பெட்டி. சவரப்பிளேடு, கனல்வீசி (ரேடி யேட்டர்) முதலியன செய்யப்படுகின்றன. திரைப்படத் தொழில் கோவை : 1. சென்ட்ரல் ஸ்டுடியோ 2. பட்சிராஜா ஸ்டுடியோ சேலம் : 3. மாடர்ன் தியேட்டர் 4. ரத்னா ஸ்டுடியோ சவ்வரிசித் தொழிற் சாலைகள் குச்சிக்கிழங்கிலிருந்து சவ்வரிசி செய்யப்படுகிறது. சேல மாவட்டத்தில் குச்சிக்கிழங்கு மிகுதியாக விளைகிறது. சேல நகர், இராசிபுரம், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், ஆற்றூர் வட்டாரம் ஆகிய இடங்களில் இத்தொழிற்சாலைகள் 500க்கு மேல் உள்ளன. மலையாளத்தில் விளையும் குச்சிக் கிழங்கு இங்கு கொண்டுவரப்படுகிறது. இந்தியாவில் இத்தொழில் சேல மாவட்டத்தில் மட்டுமே நடைபெறுகிறது. இது இங்கு நூற்றுக்கு 90 பங்காகும். இந்தியா முழுவதுமேயன்றி, வெளி நாடுகட்கும் ஒரளவு ஏற்றுமதியாகிறது. தோல் பதனிடும் தொழில் கோவை, போத்தனூர், ஈரோட்டை அடுத்த பெரியக் கிரகாரம், தாராபுரம், சேலம், குளத்தூர், ஓமலூர், ஊத்தங்கரை (அரூர் வட்டம்), சேந்தமங்கலம் (நாமக்கல் வட்டம்), திண்டுக்கல் முதலிய இடங்களில் இத்தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. பதனிடப்பட்ட தோல் உலக நாடுகளுக் கெல்லாம் ஏற்றுமதியாகிறது. பல்வகைத் தொழில்கள் நிலக்கடலை, எள் எண்ணெயாட்டுந் தொழிற் சாலைகள் கொங்கு நாட்டில் மிகுதி. தென்னை பனைவெல்லம் (கருப்புக் கட்டி) செய்யும் தொழிலும், கரும்புச் சர்க்கரை, வெல்லம் செய்யுந் தொழிலும், மூங்கிலால் கூடை முதலியன பின்னுந் தொழிலும், பனைநார்த்தொழிலும் இங்கு சிறப்பாக நடை பெறுகின்றன. இன்னும் பலவகையான இன்றியமையாத தொழில்களெல்லாம் நடைபெறுகின்றன. வாணிகம் பருத்தி, பஞ்சு, நூல், துணி வாணிகம், நிலக்கடலை, எண்ணெய் வாணிகம், நெல் அரிசி வாணிகம், மரவகை வாணிகம் முதலியன சிறப்பாக நடைபெறுகின்றன. மஞ்சள் வாணிகம் ஈரோட்டிற்கே சிறப்புடைய தொன்றாகும். போக்குவரவு கொங்கு நாட்டில் குறிப்பிடத்தக்க எல்லா ஊர்களுக்கும் நல்ல சாலைகள் அமைந்துள்ளன. சென்னை - கள்ளிக் கோட்டைப் பெருஞ்சாலை கொங்கு நாட்டின் வழியாகத்தான் - கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பவானி, பெருந்துறை, அவிநாசி, கோவை வழியாகச் செல்கிறது. சேலத்திலிருந்து ஆற்றூர் வழியாகச் சென்னைக்கு ஒரு பெருஞ்சாலை செல்கிறது. வேண்டிய அளவு பேரூர்திப் (பஸ்) போக்குவரவு உள்ளது. சென்னை - மலையாள இருப்புப்பாதை சென்னையிலிருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாகச் செல்கிறது. கோவையிலிருந்து மேட்டுப் பாளையம் வழியாக நீலகிரிக்கும், கோவையிலிருந்து பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை, பழனி வழியாகத் திண்டுக்கல்லுக்கும், ஈரோட்டிலிருந்து கரூர், குளித் தலை வழியாகத் திருச்சிக்கும், சேலத்திலிருந்து கிழக்கே விருத்தாசலம் வழியாகச் சென்னைக்கும், வடக்கே தருமபுரிக்கும், மேற்கே மேட்டூரணைக்கும் இருப்புப் பாதைகள் செல்கின்றன. கால்நடைச் செல்வம் ‘ஆகெழு கொங்கர்’ எனச் சங்கப்புலவர் பாடலிற் பயிலும் ஆக்களையுடைய அத்தகு சிறப்புடையது கொங்கு நாடு. கண்கவர் வனப்பும் உயர்ந்த தரமும் தனிச்சிறப்பும் உடைய காங்கய இனம் என்னும் மாடுகளைப் பழைய கோட்டை மாட்டுப்பண்ணையில் கண்டுகளிக்கலாம். பல்வகை இனமாடுகளையுடைய மிகப் பெரியதான ஓசூர் அரசினர் மாட்டுப் பண்ணை காணத்தக்க தொன்றாகும். பருகூர், ஆலம்பாடி என்னும் மலைமாடு களையுடையது கொங்குநாடு. கொங்கு நாட்டில் மாடு விற்கும் வாரச்சந்தைகள் மிகுதி யாக உள்ளன. அவற்றுள், கோவை மாவட்டம் சந்தைகூடும் ஊர் வட்டம் அந்தியூர் பவானி ஈரோடு, பெருந்துறை, சிவகிரி ஈரோடு தாராபுரம், காங்கயம் தாராபுரம் சிறுவலூர், புன்செய்ப்புளியம்பட்டி கோபி அவிநாசி அவிநாசி உடுமலைப்பேட்டை உடுமலை பொள்ளாச்சி பொள்ளாச்சி சேலமாவட்டம் செவ்வாய்ச்சந்தை சேலநகர் முத்துநாயக்கன்பட்டி சேலம் புதன்சந்தை, மணியனூர் நாமக்கல் கோழிக்கால் நத்தம் திருச்செங்கோடு தருமபுரி மாவட்டம் கம்பை நல்லூர், கூட்டுரோடு சந்தை அரூர் பொன்முடி தருமபுரி சூளகிரி ஓசூர் உப்படமங்கலம் கரூர் மணப்பாறை குளித்தலை மாட்டுச் சந்தை கூடும் தேர்த்திருவிழா ஊர் மாதம் வட்டம் கன்னபுரம் சித்திரை தாராபுரம் திருப்பூர் வைகாசி பல்லடம் அந்தியூர் ஆடி பவானி காளிபட்டி தை திருச்செங்கோடு அத்திக்கோம்பை ஆனி பழனி இவ்வூர்களின் தேர்த்திருவிழாவின் போது, ஆண்டுக் கொரு முறை தொடர்ந்து ஒருவாரம் பெரிய மாட்டுச்சந்தை கூடுகிறது. கன்னபுரம், திருப்பூர்த் தேர்த்திருவிழாவில் காங்கய இன மாடுகளும், அந்தியூர்க் குருநாதசாமி திருவிழாவில் பருகூர், ஆலம்பாடி மலைமாடுகளும், குதிரைகளும் விற்கும். கொங்கு நாட்டுப் பால், தயிர், மோர், நெய் தனிச்சிறப் புடையவை. சென்னை நகர்க்கு பால், நெய் வழங்கும் பெருமை யுடையது கொங்குநாடு. சிற்பக்கலை சிற்பக் கோயில் திருப்பணி செய்ய ஒப்பந்தம் செய்யும் சிற்பிகள், ‘தாரமங்கலம், தாடிக் கொம்பு, பேரூர், பெரிய பாளையம் சிற்பக் கோயில் தவிர’ என்று ஒப்பந்தஞ் செய்யும் அத்தகு சிறப்பினையுடையது கொங்கு நாடு. இவற்றுள், தாரமங்கலம் - சேலம் ஓமலூர் வட்டத்திலும், தாடிக்கொம்பு - திண்டுக்கல் வட்டத்தில், திண்டுக்கல்லுக்கு 5 கல் அளவிலும, பேரூர் - கோவையை அடுத்தும், பெரிய பாளையம்- திருப்பூரின் 6 கல் கிழக்கிலும் உள்ளன. பெரிய பாளையம்- தேவார வைப்புத்தலமான குரக்குத்தளிக் கோயில் இருக்கும் ஊராகும். பவானிச் சங்க மேச்சுரர் சிற்பக் கோயில் 15 நூறாயிரம் செலவில் 1967 இல் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. 6. கல்வி வளம் ‘இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள்’ என்பது, திவாகரம், அவ்விருவகைப் பொருள்களுள் செல்வப் பொருளினும் கல்விப் பொருளே சிறப்புடையதாகும் என்பது, ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்றையவை’ என்னும் வள்ளுவர் வாய்மொழியாற் பெறப்படும். கொங்கு நாடு பண்டைக் காலம் போன்றே இன்றும் கல்வியில் சிறந்து விளங்குகின்றது என்பது, கீழ்க்காணும் கல்வி நிலையங்களின் பட்டியலைக் கண்ணுறின் இனிது விளங்கும். அது வருமாறு:- 1. உயர்நிலைப் பள்ளிகள் 1. ஆண்கள் உயர்நிலைப் பள்ளிகள் 1. கோவை மாவட்டம் - 199 1. கோவை வட்டம் 31 6. தாராபுர வட்டம் 12 கோவை நகர் 21 தாராபுரம் 3 2. அவிநாசி வட்டம் 17 7. ஈரோடு வட்டம் 19 அவிநாசி 1 ஈரோடு 6 3. பல்லட வட்டம் 22 8. பவானி வட்டம் 10 பல்லடம் 1 பவானி 1 திருப்பூர் 4 9. கோபி வட்டம் 14 4. பொள்ளாச்சி வட்டம் 18 கோபிசெட்டிபாளையம் 2 பொள்ளாச்சி 2 ----- 5. உடுமலை வட்டம் 13 199 உடுமலைப்பேட்டை 2 2. நீலகிரி மாவட்டம் - 39 1. உதகமண்டலம் வட்டம் 20 2. குன்னூர் வட்டம் 14 3. கூடலூர் வட்டம் 5 ----- 39 3. சேலம் மாவட்டம் - 118 1. சேலம் வட்டம் 18 திருச்செங்கோடு 2 சேலம் 12 5. நாமக்கல் வட்டம் 18 2. ஓமலூர் வட்டம் 13 நாமக்கல் 2 ஓமலூர் 1 6. இராசிபுர வட்டம் 10 மேட்டூரணை 3 இராசிபுரம் 2 3. சங்ககிரி வட்டம் 9 7. ஆற்றூர் வட்டம் 15 சங்ககிரி 1 ஆற்றூர் 1 4. திருச்செங்கோடு ---- வட்டம் 11 118 4. தருமபுரி மாவட்டம் - 72 1. தருமபுரி வட்டம் 22 கிருஷ்ணகிரி 1 தருமபுரி 1 4. ஓசூர் வட்டம் 11 2. அரூர் வட்டம் 12 ஓசூர் 1 அரூர் 1 ---- 3. கிருஷ்ணகிரிவட்டம் 23 72 பழனி, திண்டுக்கல், கரூர், குளித்தலை வட்டங்கள் - 69 1. பழனி வட்டம் 9 3. கரூர் வட்டம் 17 பழனி 1 கரூர் 2 2. திண்டுக்கல் வட்டம் 19 4. குளித்தலை வட்டம் 14 திண்டுக்கல் 3 குளித்தலை 1 கொடைக்கானல் 3 69 கோவை மாவட்டம் 199 பழனி, திண்டுக்கல், கரூர், நீலகிரி மாவட்டம் 39 குளித்தலை வட்டங்கள் 66 சேல மாவட்டம் 118 ------ தருமபுரி மாவட்டம் 72 494 2. பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் 1. கோவை மாவட்டம் - 37 1. கோவை நகர் 15 11. வால்பாறை 1 2. மேட்டுப்பாளையம் 1 12. உடுமலைப்பேட்டை 1 3. பெரியநாயக்கன் 13. தேவனூர்ப் புதூர் 1 பாளையம் 1 14. தாராபுரம் 1 4. ஒண்டிப்புதூர் 1 15. ஈரோடு 3 5. சூலூர் 1 16. பெருந்துறை 1 6. சோமனூர் 1 17. பவானி 1 7. அவிநாசி 1 18. கவந்தப்பாடி 1 8. திருப்பூர் 2 19. கோபி 1 9. சவுரியார் பாளையம் 1 20. சத்தியமங்கலம் 1 10. பொள்ளாச்சி 1 ----- 37 2. நீலகிரி மாவட்டம் 1. ஊட்டி 3 4. கூடலூர் 1 2. குன்னூர் 2 5. கோத்தகிரி 1 3. வெல்லிங்கடன் 1 ---- 8 3. சேல மாவட்டம் - 19 1. சேலநகர் 6 8. சங்ககிரி 1 2. ஓமலூர் 1 9. திருச்செங்கோடு 1 3. மேட்டூரணை 1 10. வேலூர் 1 4. தாரமங்கலம் 1 11. நாமக்கல் 1 5. சலகண்டாபுரம் 1 12. சேந்தமங்கலம் 1 6. இடைப்பாடி 1 13. இராசிபுரம் 1 7. பவானிக் குமாரபாளையம் 1 14. ஆற்றூர் 1 ---- 19 4. தருமபுரி மாவட்டம் - 5 1. தருமபுரி 1 4. பாப்பாரப்பட்டி 1 2. பாப்பிரெட்டிபட்டி 1 5. ஓசூர் 1 3. கிருஷ்ணாகிரி 1 ---- 5 5. பிற வட்டங்கள் - 11 1. பழனி 1 6. புகலூர் 1 2. திண்டுக்கல் 3 7. குளித்தலை 1 3. சின்னாளம்பட்டி 1 8. மணப்பாறை 1 4. வேடசெந்தூர் 1 ---- 5. கரூர் 2 11 கோவை மாவட்டம் 37 தருமபுரி மாவட்டம் 5 நீலகிரி மாவட்டம் 8 பிற வட்டங்கள் 11 சேல மாவட்டம் 19 ---- 80 ஆண்கள் உயர்நிலைப் பள்ளி 494 பெண்கள் உயர்நிலைப் பள்ளி 80 ------ 574 2. பயிற்சிப் பள்ளிகள் ஆண்கள் பயிற்சிப் பள்ளிகள் - 16 1 கோவை மாவட்டம் 1. பெரிய நாயக்கன் 7. நஞ்சயம்பாளையம், பாளையம் 1 தாராபுரம் 1 2. கீழ்பவானி ஆணை 1 8. தாராபுரம் (C.S.I.) 1 3. அவிநாசி 1 9. (C.S.I.) ஈரோடு 2 4. கருமத்தம் பட்டி 1 10. அருநெறி ஈரோடு 5. கரடிவாவி 1 11. குன்னூர் (நீலகிரி) 1 6. காளியாபுரம்- பொள்ளாச்சி 1 2. சேல மாவட்டம் 1. மேட்டூரணை 1 காந்தி கிராமம் 2. கங்கவல்லி 1 (திண்டுக்கல்வட்டம்) 1 3. மோகனூர் மாயனூர் ---- (குளித்தலை வட்டம்) 1 16 2. பெண்கள் பயிற்சிப் பள்ளிகள் - 17 1. கோவை நகர் 1 8. கிருஷ்ணகிரி 1 2. ஈரோடு 1 9. சின்னத்தாராபுரம் 3. கல்தூரிபா கிராமம் (கரூர் வட்டம்) 1 (ஈரோடு வட்டம்) 1 10. பழனி 2 4. ஊட்டி (நீலகிரி) 1 11. திண்டுக்கல் 3 5. பவானிக் குமார 12. காந்தி கிராமம் பாளையம் 1 (திண்டுக்கல் வட்டம்) 1 6. சேலம் நகர் 3 ----- 7. நாமக்கல் 1 17 பிற பயிற்சிப் பள்ளிகள் 1. கூட்டுறவுப் பயிற்சிப் பள்ளி - கோவை 2. கூட்டுறவுப் பயிற்சிப் பள்ளி - சேலம் 3. காப்பாளர் (போலீஸ்) பயிற்சிப் பள்ளி - கோவை 4. வானூர்திப் பள்ளி நிலையம் - கோவை 5. பூ.சா. கோ. சமூகப்பணிப் பயிற்சிப்பள்ளி - கோவை 6. மருத்துவியர் பயிற்சிப் பள்ளி 7. துப்புரவுப் பார்வையாளர் பயிற்சிப் பள்ளி 8. நலவழிப் போதகர் பயிற்சிப் பள்ளி 3. ஆங்கிலப் பள்ளிகள் 1.ஆண்கள் பள்ளி 1. ஸ்டேன்ஸ் உயர்நிலைப் பள்ளி 2. இந்திய அரசினர் உயர்நிலைப் பள்ளி 3. கார்மல் கார்டன் உயர்நிலைப் பள்ளி கோவை 4. மணி உயர்நிலைப் பள்ளி 5. கிக்கானி உயர்நிலைப் பள்ளி 6. படைவீரர் பள்ளி - அமராவதி நகர், உடுமலை 7. லாரன்ஸ் மெமோரியல் பள்ளி, லௌடேல், ஊட்டி, 8. மாண்டு போர்டு உயர்நிலைப் பள்ளி, ஏர்க்காடு 4, 5 பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பிலும் சிலபிரிவுகள் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. 4 இல் ஆண் பெண் இருபாலரும் படிக்கின்றனர். 2. பெண்கள் பள்ளி 1. செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளி 2. பூ.சா.கோ (P.S.G.) கன்னியாகுருகுலம் கோவை 3. அவிநாசிலிங்கம் மகளிர் உயர்நிலைப் பள்ளி 4. சாக்ரட் ஹார்ட் கான்வெண்ட்- ஊட்டி 2, 3 பள்ளிகளில், சிலபிரிவுகள் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படுகின்றன. 4. குழந்தைகள் பள்ளி (Nursary School) 1. பூ.சா.கோ.ர.குழந்தைகள் பள்ளி 2. செயின்ட் பிரான்சிஸ் குழந்தைகள் பள்ளி 3. பாத்திமா குழந்தைகள் பள்ளி 4. ஏர்போர்ஸ் குழந்தைகள் பள்ளி 5. அவிநாசிலிங்கம் குழந்தைகள் பள்ளி 6. சாயிபாபா குழந்தைகள் பள்ளி - சாயிபாபா காலனி 7. சாஸ்திரி குழந்தைகள் பள்ளி - சா.பா.காலனி 8. நேரு வித்தியாலையா - ஆர்.எஸ்.புரம் 9. பாரத் குழந்தைகள் பள்ளி - ஆர்.எஸ்.புரம் 10. சாந்தி கார்டன் குழந்தைகள் பள்ளி - டாடாபாத்து இவை பத்தும் கோவை நகரில் உள்ளன. 11. C.S.I. குழந்தைகள் பள்ளி - தாராபுரம் 12. வாசுகி குழந்தைகள் பள்ளி - தெங்கம்பாளையம் 13. கலைமகள் கல்விநிலையம் - குழந்தைகள் பள்ளி - ஈரோடு 14. ரெட்கிராஸ் குழந்தைகள் பள்ளி - ஊட்டி 15. பாத்திமா குழந்தைகள் பள்ளி - குகை, சேலம் 16. R.C. குழந்தைகள் பள்ளி - நாமக்கல் 17. செயின்ட் ஜோசப் குழந்தைகள் பள்ளி - திண்டுக்கல் குறிப்பு :- ஊர் தோறும் உள்ள இளங்குழந்தைகள் எல்லோரும் படிப்பதற்கேற்றவாறு போதிய அளவு தொடக்கப் பள்ளிகள் உள்ளன. 5. கல்லூரிகள் 1. ஆடவர் கலைக்கல்லூரிகள் 1. அரசினர் கலைக் கல்லூரி - கோவை 2. பூ.சா.கோ,கலைக்கல்லூரி - கோவை 3. சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி - பேரூர், கோவை 4. கிராமியக் கல்லூரி - இராமகிருஷ்ண மிஷன், பெரியநாயக்கன்பாளையம் 5. அரசினர் கலைக்கல்லூரி - திருப்பூர் 6. நல்லமுத்துக் கவுண்டர் - மகாலிங்கம் கலைக்கல்லூரி, பொள்ளாச்சி 7. சிக்கைய நாயக்கர் மாசனக் கல்லூரி - ஈரோடு 8. வாசவி கல்லூரி, பெருமாள்மலை - பவானி 9. அரசினர் கலைக்கல்லூரி - ஊட்டி 10. அரசினர் கலைக்கல்லூரி - சேலம் 11. அரசினர் கலைக்கல்லூரி - இராசிபுரம் 12. அரசினர் கலைக்கல்லூரி - நாமக்கல் 13. கந்தசாமிக் கண்டர் கல்லூரி - வேலூர், சேலம் 14. அரசினர் கலைக் கல்லூரி - ஆற்றூர் 15. அரசினர் கலைக்கல்லூரி - தருமபுரி 16. அரசினர் கலைக் கல்லூரி - கிருஷ்ணகிரி 17. அரசினர் கலைக்கல்லூரி - கரூர் 18. பழனியாண்டவர் கலைக் கல்லூரி - பழனி 19. பழனியாண்டவர் கீழ்த் திசைக் கல்லூரி - பழனி 20. ஜி.டி.என். கலைக் கல்லூரி - திண்டுக்கல் 21. கிராமக் கல்லூரி, காந்தி கிராமம் - திண்டுக்கல் வட்டம் 22. இந்திக் கல்லூரி - காந்தி கிராமம் - திண்டுக்கல் வட்டம் 2. மகளிர் கலைக்கல்லூரிகள் 1. நிர்மலா கல்லூரி - கோவை 2. பூ.சா.கோ.ர.கிருஷ்ணம்மாள கல்லூரி - கோவை 3. அவிநாசிலிங்கம் மனையியற் கல்லூரி - கோவை 4. விசாலாட்சி கல்லூரி - உடுமலைப்பேட்டை - கோவை 5. செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி - குன்னூர். 6. சாரதா கல்லூரி - சேலம் 7. அரசினர் மகளிர் கல்லூரி - நாமக்கல் 8. அரசினர் மகளிர் கல்லூரி - திண்டுக்கல் 3. ஆடவர் பயிற்சிக் கல்லூரி 1. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி - பெரியநாயக்கன் பாளையம் 2. மாருதி உடற்பயிற்சிக் கல்லூரி - பெரியநாயக்கன் பாளையம் 3. வான்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி- கோவை 4. அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி - பவானிக் குமாரபாளையம் 4. மகளிர் பயிற்சிக் கல்லூரி 1. அரசினர் மகளிர் பயிற்சிக் கல்லூரி - கோவை 2. அவிநாசிலிங்கம் மகளிர் பயிற்சிக் கல்லூரி - கோவை 3. மகளிர் பயிற்சிக் கல்லூரி - காந்திகிராமம் - திண்டுக்கல் குறிப்பு :- பேரூர்ப் புலவர் கல்லூரியில் ஆண் பெண் இரு பாலரும் படிக்கின்றனர். கொங்கு நாட்டில் புலவர் கல்லூயீர இஃதொன்றே உளது. ஈரோடு, சேலம் முதலிய இடங்களில் புலவர் கல்லூரி ஏற்படுத்துதல் ஏற்றதாகும். பவானிக் குமாரபாளையம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், புலவர் பயிற்சியும் உண்டு. 4, 20 கிராமியக் கல்லூரிகளில், நான்காண்டுப் பட்டப் படிப்புடன், கட்டிடப் பொறியியல் மூன்றாண்டும், வேளாண்மைக் கல்வி இரண்டாண்டும் கற்பிக்கப்படுகின்றன. இந்தியாவிலுள்ள கிராமியக் கல்லூரிகள் பத்தினுள், தமிழ் நாட்டிலுள்ள இரண்டும் கொங்கு நாட்டிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 5. தொழிலியற் கல்லூரிகள் 1. பொறியியற் கல்லூரிகள் (College of Techinology) 1. அரசினர் பொறியியற் கல்லூரி - கோவை 2. பூ. சா. கோ. பொறியியற் கல்லூரி - கோவை 3. சி.ஐ.டி. பொறியியற் கல்லூரி - கோவை 4. அரசினர் பொறியியற் கல்லூரி - கருப்பூர், சேலம். குறிப்பு :- 2. இக்கல்லூரியில், மின்சார இயந்திர அமைப்புப் பாடத்தில் (Electrical Machine Disign) M.S.C. பட்டப் படிப்பும் உண்டு. இந்தியாவில் தொழிற்கல்லூரி ஒன்றில், காஸ் டர்பைன் (Gas Turbine Capadle of Developing 60 HP Continuous Rating). என்னும் கருவி அமைந்துள்ளது இக்கல்லூரி ஒன்றில் மட்டுந்தான். 3. சி.ஐ.டி. (C.I.T.) Coimbatore Institute of Technilogy) இக்கல்லூரி, கோவை நகரின் புகழ் பெற்ற ஆலை முதலாளியான ரங்கசாமி நாயுடு அறநிலையத்தாரால் நடத்தப்படுகிறது. தொழிலில் இருந்து கொண்டே, இயந்திரப் பொறியியல் துறையில் L.M.E. டிப்ளமோப் பட்டப்படிப்புப் படிக்கும் வாய்ப்பு இக்கல்லூரி யில் உண்டு. 6. தொழிற் கல்லூரிகள் (Poly technics) 1. அரசினர் தொழிற் கல்லூரி - கோவை 2. அரசினர் மகளிர் தொழிற் கல்லூரி - கோவை 3. பூ.சா.கோ. தொழிற்கல்லூரி - கோவை 4. சி.ஐ.டி. தொழிற் கல்லூரி - கோவை 5. நாச்சிமுத்து தொழிற் கல்லூரி - பொள்ளாச்சி 6. தியாகராசர் தொழிற்கல்லூரி - சூரமங்கலம், சேலம் 7. அரசினர் கைத்தறித் தொழிற்கல்லூரி - சேலம் குறிப்பு:- அரசினர் தொழிற்கல்லூரியில், இரண்டாண்டு வேளாண்மைப் பொறியியற் படிப்பும் (Post Diploma course in Agricultural Enginuring) உண்டு. 3. இக்கல்லூரியில், கட்டி.ட (L.C.E.) இயந்திர (L.M.E.) மின்சார (L.E.E.), படிப்புத்தவிர, நூல் நூற்புப் பற்றியும் (L.T.M.) கற்பிக்கப்படுகிறது. இக்கல்லூரியிலும், சேலம் தியாகராசர் தொழிற் கல்லூரியிலுந்தான் இப்பாடம் கற்பிக்கப்படுகிறது. இப்படிப்புப் படித்தோர், நூற்பாலை மேற்பார்வையாளர் ஆகலாம். 4. இக்கல்லூரியில் இயந்திரப் படிப்புப் (L.M.E.) படித்த மாணவர்கள்,மோட்டார்ப் பொறியியல் மேற்படிப்புப் (Post Diploma course in Automobile Engineering) படிக்கும் வாய்ப்பு உண்டு. 5. இக்கல்லூரியில், நெசவுத்துறையில் மூன்றாண்டுப் படிப்பும், பூவேலைப்பாடு (டிசைன்) பற்றி இரண்டாண்டும், சாயம் போடுதல் பற்றி மூன்று மாதமும் கற்பிக்கப்படுகின்றன. 7. தொழிற் பள்ளிகள் 1. இராமகிருஷ்ண மிஷன் பொறியியற் பள்ளி -பொ.நா. பாளையம் 2. அரசினர் தொழிற் பயிற்சிப் பள்ளி - ஈரோடு 3. அரசினர் தொழிற் பயிற்சிப் பள்ளி - திண்டுக்கல் 4. T.E.L.C. தொழிற் பயிற்சிப் பள்ளி - திண்டுக்கல் 5. அரசினர் நெய்தொழிற் பயிற்சிப் பள்ளி - சேலம் 6. அரசினர் தொழிற் பயிற்சிப் பள்ளி - பெ.நா.பாளையம் 7. வேளாண்மைப் பயிற்சிப் பள்ளி - பெ.நா.பாளையம் 8. வேளாண்மைப் பயிற்சிப் பள்ளி - கீழ்பவானி அணை 9. வேளாண்மைப் பயிற்சிப் பள்ளி - காந்திகிராமம் - திண்டுக்கல் குறிப்பு :- 1. இதில், கட்டிடப் பொறியியல் (L.C.E.) மட்டும் கற்பிக்கப்படுகிறது. 6. இதில் நெசவாளர்க்குப் பயிற்சி தரப்படுகிறது. 7, 8 இங்கு தமிழில் கற்பிக்கப் படுகிறது. ஜி.டி. நாயுடு கல்வி நிலையம், கோவை இங்கு வானொலிப் பெட்டியையும், மோட்டார்களை யும், பழுதுபார்த்தல், பற்றி ஆறுவாரகாலப் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. பல மாநில அரசினரும், தொழிற்சாலை யினரும் இங்கு பயிற்சிபெற ஆண்டுதோறும் பலரை அனுப்புகின்றனர். அப்பயிற்சிக்குப் பாடத் திட்டம் கிடையாது. இங்கு கற்பிக்கப்படும் முறை வெளிநாட்டினராலும் பாராட்டப் படுகிறது. 8. பிற கல்லூரிகள் 1. வேளாண்மைக் கல்லூரி - கோவை 2. காட்டியற் கல்லூரி - கோவை 3. மருத்துவக் கல்லூரி - கோவை குறிப்பு :- கோவையின் அணிகலனாக, கொங்கு நாட்டின் புகழ் விளக்காக விளங்குவது வேளாண்மைக் கல்லூரியே. இந்தியாவில் ஏற்பட்ட முதல் வேளாண்மைக் கல்லூரி இதுவே. இது 1898இல் ஏற்பட்டது. இங்கு பி.எஸ்ஸி. (ஏ.ஜி.) பட்டப் படிப்பேயன்றி, எம்.எஸ்.ஸி., பி.எச்.டி. போன்ற பட்ட மேற்படிப்புக்களும் உண்டு. இக்கல்லூரி யில் பெண்களும் படிக்கின்றனர். ஆராய்ச்சி நிறுவனம் : இவ்வேளாண்மைக் கல்லூரிக்குப் பெருஞ்சிறப்பினைத் தருவது, இக்கல்லூரியுடன் தொடர் புடைய ஆராய்ச்சித்துறையேயாகும். இங்கு கரும்பு, நெல், பருத்தி, எண்ணெய் வித்துக்கள், கம்பு, சோளம் முதலிய புன் செய்த்தவசங்கள், பழவகை, இரசாயனம், பயிர்நோய்த் தடுப்பு முதலிய பலவகையான ஆராய்ச்சிப் பிரிவுகள் உள்ளன. பல் வகையான புதிய புதிய கரும்பும், நெல்லும், பிறவும் ஆராய்ந்து கண்டு நாட்டுக்குதவிய, உதவும் பெருமை இவ்வாராய்ச்சி நிறுகூனத்தையே சாரும். இங்கு கண்டுபிடித்த நெல்லும் கரும்பும் - கோ 6, கோ 26 என வழங்குகின்றன. கோ - கோவை. கொங்கர்கள் இக்கரும்பினை - கல்லூரிக் கரும்பு என்றே வழங்குகின்றனர். ஆண் பெண் இருபாலாரும் இவ்வாராய்ச்சி நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். வேளாண்மை வளர்ச்சித் திட்டம் - நீலகிரி. இது, “இந்திய ஜெர்மன் அக்ரிக்கல்சரல் - டெவலப்மெண்ட் பிராஜக்ட்’ என்னும் பெயரால், மேற்கு ஜெர்மனியின் கூட்டாக அமைந்தது. 8.1.67இல் மேற்கு ஜெர்மன் வேளாண்மை அமைச்சர் ஹோச்சர்ல் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி - கோவை. இது கோவைத் தொழிற் செல்வர்களான, ஜி.குப்புச்சாமி நாயுடு அறநிலையத்தாரும், பூ.சா.கோ. அறநிலையத்தாரும் வழங்கிய பெரும் பொருட் கொடையால் (25 இலட்சம்) அவ்விருவர் பெயரால் நடக் கின்றது. இப்பொழுது விளங்குகிறதல்லவா? கொங்கு நாட்டின் நிகழ்காலப் பெருமை! புலவர் குழந்தை படைப்புகள் கவிதை நூல்கள் தொகுதி 1 1 நெருஞ்சிப்பழம் 2 திருநணாச்சிலேடை வெண்பா 3 உலகப்பெரியோன் கென்னடி தொகுதி 2 4 அரசியலரங்கம் தொகுதி 3 5 காமஞ்சரி தொகுதி 4 6 புலவர் குழந்தை பாடல்கள் வரலாற்று நூல்கள் தொகுதி 5 7 கொங்கு குலமணிகள் 8 கொங்கு நாடும் தமிழும் 9 தீரன்சின்னமலை 10 அண்ணல் காந்தி தொகுதி 6 11 தமிழக வரலாறு தொகுதி 7 12 கொங்கு நாட்டு வரலாறு உரைநடை நூல்கள் தொகுதி 8 13 தமிழ் வாழ்க 14 தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் 15 அருந்தமிழ் விருந்து 16 அருந்தமிழ் அமிழ்து தொகுதி 9 17 இந்தி ஆட்சி மொழியானால் 18 ஒன்றே குலம் 19 சங்க இலக்கியச் செல்வம் 20 பூவா முல்லை அறநூல்கள் தொகுதி 10 21 திருக்குறள் குழந்தை உரை 22 திருக்குறளும் பரிமேலழகரும் தொகுதி 11 23 நீதிக்களஞ்சியம் உரை 1 தொகுதி 12 24 நீதிக்களஞ்சியம் உரை 2 இலக்கண நூல்கள் தொகுதி 13 25 தொல்காப்பியம் பொருள் அதிகாரம் தொகுதி 14 26 யாப்பதிகாரம் 27 தொடையதிகாரம் தொகுதி 15 28 வள்ளுவர் தமிழ் இலக்கணம் தொகுதி 16 29 தொல்காப்பியர் காலத் தமிழர் 30 இன்னூல் தொகுதி 17 31 இராவண காவியம்