நூற்றாண்டு நினைவு வெளியீடு புலவர் குழந்தை படைப்புகள் - 4 புலவர் குழந்தை பாடல்கள் அனைத்து நூல்களும் ஒருசேரத் தொகுத்து, பொருள் வழிப்பிரித்து, கால வரிசையில் ஒரே வீச்சில் வெளிவருகின்றன. ஆசிரியர் புலவர் குழந்தை நூற்பெயர் : புலவர் குழந்தை படைப்புகள் - 4 ஆசிரியர் : புலவர் குழந்தை பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 240 = 256 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 160/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906இல் தோன்றி 1973இல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர். தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் பட்ட அவலங்களை எண்ணி யெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளை எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு பதிவுகளாக எழுதி வைத்துச் சென்றவர். தமிழ் இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி 1 முதல் 15 படைப்புகளாக ஒரே வீச்சில் வெளியிடு கின்றோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய முத்து மாலை யாகத் தந்துள்ளோம். இவர் நூல்கள் அனைத்தும் தமிழ்மொழி இன நாட்டின் மேன்மைக்கும், வாழ்வுக்கும், வளத்துக்கும் வித்திடுபவை. குறிப்பாக இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிழ் மண்ணில் தன்மானக் கொள்கைகள் நிலைத்து நிற்பதற்கு செயற்கரிய செயல்களைத் தமிழ் இளைஞர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும் எனும் இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்ற தமிழ்ப்பெருமக்களுக்கும், இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும்புலவர் இரா. வடிவேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தமிழ் ஆய்வாளர் களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன் கொள்ளும் வகையில் பிழையற்ற பதிப்பக வெளிவருகின்றது. வாங்கிப் பயனடையுங்கள். (இராவண காவியம் நூலுக்கு மிகச்சிறந்த தெளிவுரை எழுதப்பட்டு வருவதால் இப்படைப்பு வரிசையில் சேர்க்க முடியவில்லை. விரைவில் வெளிவரும்.) கோ. இளவழகன் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்கள் கொங்கு நாட்டில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஓலவலசு’ என்னும் சிற்றூரில், பண்ணையக்காரர் என்னும் பழங்குடியில், முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையாருக்கு 1-7-1906இல் பிறந்தார். இவர்தம் பெற்றோருக்கு ஒரே மகனாக வளர்ந்தார். தாம் பிறந்த சிற்றூரில் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார்; தொடர்ந்து படிக்காமல் இடையிடையே விட்டு விட்டுப் படித்தார். மொத்தத்தில் எட்டு மாதங்களே திண்ணைப் பள்ளியில் பயின்றார். கருவிலே திருவுடையவராகிய இவர் பத்தாம் ஆண்டில் இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். யாரேனும் ஒருவர் ஒரு பாட்டைப் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசையில் புதுப்பாட்டு ஒன்றினைப் பாடுவார். எப்போதும் ஏதேனும் ஒருபாட்டை எழுதிக் கொண்டே இருப்பார். பாட்டு எழுதுவது இவருக்குக் கைவந்த கலையாக அமைந்து விட்டது. இவர் காலத்தில் இவர் வாழ்ந்த பகுதியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தானாகவே முயன்று படித்துக் கவிபாடும் திறம் பெற்றிருந்தார். இவர் முதன் முதலில் இசைப் பாடல்களைப் பாடினார். இவர்தம் கல்லாமல் பாடும் கவித் திறனையும், பாடல்களின் சிறப்பினையும் கண்டு வியந்த அறிஞர்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிக்குமாறு தூண்டினர்; ஊக்குவித்தனர். தாம் பிறந்த ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர்கள் எவரும் அக்காலத்தில் இல்லை. ஆகவே இவர் ஆசிரியர் துணையின்றித் தாமாகவே முயன்று இலக்கிய இலக்கணங்களைப் படித்துத் தமிழில் சிறந்த புலமை பெற்றார். மேலும் இவர் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகத் தேர்வு எழுதிப் புலவர் பட்டயம் பெற்றார். இவர் பவானியில் மாவட்டக் கழகப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். 1940வரை தமிழாசிரியராகத் தொண்டாற்றினார். 1941 முதல் 1962ஆம் ஆண்டுவரை தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்கள் வியந்து பாராட்டும்வகையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியினின்று ஓய்வு பெற்ற பின்பும் எழுத்துப் பணியினின்று ஓய்வு பெறவில்லை. வாழ்நாள் முழுமையும் தமிழுக்காகத் தொண்டாற்றினார்; பல நூல்களைப் படைத்தார்; தமது கவிதைகள் வாயிலாகச் சமுதாய உணர்வை - பகுத்தறிவை மக்களிடையே பரப்பினார். இவருக்கு முன் ஓலவலசில் படித்தவர் எவருமில்லை. அவ்வூரில் உள்ளவர்களுக்குக் கையொப்பம் இடவும் தெரியாது. இளமைப் பருவத்திலேயே பொதுத் தொண்டில் - சமுகாயத் தொண்டில் ஆர்வமுடையவராக இருந்தார். தாமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தம் ஊரிலிருந்த தம்மையொத்த அகவையுடைய இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்தார். அவர்கள் மூலமாகப் பெரியவர்களுக்குக் கையொப்பம் போடப் பயிற்சியளிக்கச் செய்தார்; கை நாட்டு போடுவதை அறவே ஒழித்தார். அக்காலத்தில் இவரைவிட மூத்தவர் பலர் இவரிடம் கல்வி கற்றனர். ஓலவலசில் கல்லாமை இருளைப் போக்கினார். வேளாளஇன மக்களிடையே இருந்த பலபிரிவினரையும் ஒன்று சேர்ப்பதற்காகவும், அவ்வின இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்காகவும் 1946 முதல் 1950வரை ‘வேளாளன்’ என்னும் திங்களிதழை நடத்தினார். அவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் அவ்வின இளைஞர்களிடையே புத்துணர்ச்சியை வளர்த்தது. விதவை மணம், கலப்புத்திருமணம், சீர்த்திருத்த மணம் முதலியன செய்யவும் அம்மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். வேளாள சமூகத் தலைவரான திரு. வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் தலைமையில், தகடூர் (தருமபுரி) மாவட்டத்திலுள்ள அரூரில் வேளாள மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் புலவர் குழந்தை அவர்கள் ‘விதவை மணம்’ தீர்மானங் கொண்டு வந்தார்; ஒருமனமாக நிறைவேறச் செய்தார். அதன்படி நூற்றுக்கணக்கான விதவை மணங்களைச் செய்து வைத்தார். இச்செயல்கள் இவர்தம் சமூகத் தொண்டிற்குச் சிறந்த சான்றுகளாகும். இவர், யாப்பிலக்கணம் படிப்பதற்கு முன்னே 1918இல் ‘கன்னியம்மன் சிந்து’ என்னும் கவிதை நூலை வெளியிட்டார். இவர் பாடிய அச்சாகாத பாடல்களும் நூல்களும் பல உள்ளன; சில நூல்கள் அச்சாகி வெளியிடப்பட்டன. யாப்பிலக்கணம் கற்பதற்கு முன்பு பாடிய பாடல்கள் யாப்பிலக்கணப்படி அமைந்துள்ளன. இவர் இதுவரை எழுதியுள்ள நூல்கள் : இராவண காவியம் உள்படச் செய்யுள் நூல்கள்-7, உரைநூல்கள் - 3, இலக்கண நூல்கள் -3, உரைநடை நூல்கள் -16 ஆகமொத்தம் 29 நூல்கள் படைத்துள்ளார். தீரன் சின்னமலை நாடகம் இன்னும் அச்சாக வில்லை. ‘விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர்கம்பன்’ என இதுவரையில் போற்றப்பட்டு வரும் புகழுரைக்கு ஈடாகப் புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் பாடிப் புகழ்பெற்றார். ‘காமஞ்சரி’ என்னும் செய்யுள் நாடக நூல், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் என்னும் நூலுக்குப் பிறகு எழுதப்பட்ட சிறந்த நாடக நூலாகும். ‘நெருஞ்சிப் பழம்’ என்னும் நூல் தமிழில் இதுவரை வெளிவராத கற்பனைக் கருவூலமான காதல் கதையாகும். புலவர் குழந்தை அவர்கள் பெருங்கவிஞர் மட்டுமல்லர். சிறந்த எழுத்தாளர்; கேட்போர் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசும் பெரும் பேச்சாளர். இவருடைய எழுத்துகள் உறுதியும் அஞ்சாமையும் ஆய்வும் செறிந்த புரட்சிக் கனல் தெறிக்கும் இயல்புடையவை. இவருடைய செய்யுள் நடையும் உரைநடையும் எளிய இனிய தனித்தமிழில் அமைந்தவை. இவர் படைத்த நூல்களெல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன. தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இவர் அவ்வியக்கத்தில் சேர்ந்தார்; பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். அன்று முதல் சுயமரியாதை இயக்கம் அதன் மறு பதிப்பான திராவிடர் கழகம், அதன் மறுமலர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுள் இணைந்து தொண்டாற்றியவர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். பள்ளித் தமிழாசிரியராக இருந்துகொண்டே, அத்தொழிலுக்குச் சிறிதும் இடையூறு இல்லாமல், ‘பெரியார் சீடர்’, ‘கருப்புச் சட்டைக்காரர்’ என்று பொது மக்கள் கூறும்படி கட்சித் தொண்டாற்றியவர். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் படைக்கத் தூண்டியது; இவருக்குப் புகழைச் சேர்த்தது. 1948இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திருக்குறளுக்குப் பகுத்தறிவிற்கு ஏற்ப உரை எழுதுவதற்குத் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தரபாரதியார் தலைமையில் ஐவர் கொண்ட குழுவை அமைத்தார். அக்குழுவில் புலவர் குழந்தையும் ஒருவர். இவரே தனிஒருவராக இருந்து திருக்குறளுக்கு உரை எழுதி ‘திருக்குறள்-குழந்தையுரை’ என்று வெளியிட்டார். அவ்வுரையை 28 நாட்களில் எழுதி முடித்த பெருமைக்குரியர். அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்ட இவர்தம் இராவண காவியத்திற்கு, தமிழக அரசால், தமிழ் வாழத் தாம் வாழும் தமிழவேள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் 17-5-1971இல் தடை நீக்கப்பட்டது. அதைக்கண்டு தமிழகமே அகமிக மகிழ்ந்தது; தமிழவேள் கலைஞரை உளமார வாழ்த்தியது. புலவர் குழந்தை ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கொண்டவர். இவர் ஒரு புரட்சிப் புலவரே எனினும் அமைதியும் அடக்கமும் உடையவர்; ஆடம்பரமின்றி எளிய வாழ்வு வாழ்ந்தவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடமை தவறாதவர்; எதிர்க் கட்சி யானாலும், மாற்றுக் கருத்து உடையவராலும் நன்கு மதிக்கத் தக்கவர். புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார். கல்வியறிவு பெற வாய்ப்பில்லாதவராயினும் பொது அறிவு நிரம்பப் பெற்றவர்; தன்மானக் கொள்கையுடையவர்; தம் கணவரின் கொள்கைக்கேற்ப இல்லறத்தை இனிது நடத்தியவர். இவ்விணையருக்குச் சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர். தமிழுக்குத் தொண்டு செய்து வந்த புலவர் பெருந்தகை தமது 68ஆம் அகவையில் 24-9-1973இல் இயற்கை அடைந்தார். மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் புலவர் குழந்தையிடம் அன்பும் மதிப்பும் உடையவர். அவர் மறைந்த பிறகு, அவர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நூல்கள் 8-7-2006 அன்று அரசுடைமை ஆக்கப்பட்டதாக அறிவித்தார். குழந்தை அவர்களின் மகள்கள் இருவருக்கும் தலா ரூ.5 இலட்சம் பரிவுத் தொகை வழங்கினார். நன்றி : நித்திலக் குவியல் (திபி 2037 - டிசம்பர் 2006) ‘செந்தமிழ்க் குழந்தை’ பள்ளி சென்று படித்த காலம் 5 ஆண்டு எட்டு மாதம்தான்! ஆனால் திருக்குறளுக்கும், தொல்காப்பியத்துக்கும் உரை எழுதி, பேரிலக்கியம் ஒன்றைப் படைத்து, நாடகக் காப்பியம் உருவாக்கிப் பல இலக்கண நூல்களையும், வரலாற்று நூல்களையும் எழுதியவர் பெரும்புலவர் அ.மு. குழந்தை. ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த ஓல வலசில் 1.7.1906 அன்று முத்துசாமிக் கவுண்டர், சின்னம்மையார் தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர் குழந்தைசாமி; பின்பு தன்னைக் ‘குழந்தை’ என்றே குறிப்பிட்டுக் கொண்டார். ஈரோடு லண்டன் மிஷன் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் “எலிமெண்டரி கிரேடு”, “லோயர் கிரேடு”, ஹையர் கிரேடு” ஆசிரியர் பயிற்சி பெற்ற அவர் திருவையாறு சென்று தேர்வு எழுதி 1934இல் ‘வித்துவான்’ பட்டம் பெற்றார். மொத்தம் 39 ஆண்டுகள் ஆசிரியப் பணிபுரிந்தார். பவானி மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் மட்டும் தொடர்ந்து 21 ஆண்டுகள் பணி புரிந்தார். தொடக்க காலத்தில் கன்னியம்மன் சிந்து, வீரக்குமாரசாமி காவடிச்சிந்து, ரதோற்சவச் சிந்து போன்ற பக்திப் பாடல்களைப் பாடினாலும் 1925க்குப் பின் பெரியாரின் பெருந் தொண்டராகவே விளங்கினார். ‘தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக விளங்கும் நூல் திருக்குறள்; அது மனித வாழ்வின் சட்ட நூல்’ என்ற கொள்கையுடைய குழந்தை 1943, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற திருக்குறள் மாநாடுகளில் பெரும் பங்காற்றினார். தான் எழுதிய பள்ளிப்பாட நூல்களுக்கு ‘வள்ளுவர் வாசகம்’ வள்ளுவர் இலக்கணம்’ என்று பெயரிட்டார். வள்ளுவர் பதிப்பகம் வைத்துப் பல நூல்களை வெளியிட்டார். அவற்றுள் பெரியார் நூல்கள் நான்கு. பள்ளிக்கு வெளியே வந்தவுடன் கருப்புச்சட்டை அணிந்து கடவுள் மறுப்பாளராக விளங்கினாலும் பள்ளிப் பாடங்களில் உள்ள பக்திப் பாடல்களை மிகவும் சுவைபட நடத்துவார். தான் இயற்றிய ‘யாப்பதிகாரம்’ ‘தொடையதிகாரம்’ போன்ற நூல்களில் திருஞான சம்பந்தர் தேவாரப் பாடல்கள் பலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அரசியல் அரங்கம், நெருஞ்சிப்பழம், காமஞ்சரி, உலகப் பெரியோன் கென்னடி, திருநணாச் சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல்கள் போன்றவை கவிதை நூல்கள், ‘காமஞ்சரி’ பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மனோண்மனியத்திற்குப் பின் வந்த மிகச் சிறப்பான நாடகக் காப்பியம் ஆகும். தொல்காப்பியர் காலத் தமிழர், திருக்குறளும் பரிமேலழ கரும், பூவா முல்லை, கொங்கு நாட்டு வரலாறு, தமிழக வரலாறு, தமிழ் வாழ்க, தீரன் சின்னமலை, கொங்குக் குலமணி கள், கொங்கு நாடும் தமிழும், அருந்தமிழ் அமுது, சங்கத் தமிழ்ச் செல்வம், அண்ணல் காந்தி ஆகியவை உரைநடை நூல்கள். ‘தமிழ் வாழ்க’ நாடகமாக நடிக்கப்பட்டது. தீரன் சின்னமலை பற்றி முதன்முதலில் நூல் எழுதி அவர் வரலாற்றை வெளிக் கொணர்ந்தவர் புலவர் குழந்தை. தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்குப் புதிய எளிய உரை எழுதினார். திருக்குறளுக்குப் புத்துரை எழுதியதுடன் தமிழில் வெளிவந்த அனைத்து நீதி நூல்களையும் தொகுத்து உரையுடன் “நீதிக் களஞ்சியம்” என்ற பெயரில் பெரு நூலாக வெளியிட்டார். தமிழ் அறிந்தவர்கள் அனைவரும் கவிஞராக ‘யாப்பதி காரம்’, ‘தொடையதிகாரம்’ என்ற யாப்பு நூல்களை எழுதினார். கும்மி, சிந்து ஆகியவற்றிற்கும் யாப்பிலக்கணம் வகுத்துள்ளார். இலக்கணம் கற்க நன்னூல் போல ஒரு நூல் இயற்றி ‘இன்னூல்’ என்று பெயரிட்டார். ‘வேளாளர்’ ‘தமிழோசை’ போன்ற இதழ்களையும் நடத்தினார். வகுப்பில் பாடம் நடத்தும்போது பாடல்களை அதற்குரிய ஓசை நயத்துடன் ஒலிப்பார். உரைநடைபோலத் தமிழாசிரியர்கள் பாடல்களைப் படிக்கக் கூடாது என்பது அவருடைய கருத்தாகும். தமிழைப் பிழையாகப் பேசினாலோ, எழுதினாலோ கண்டிப்பார். ஈரோட்டில் வாழ்ந்த மேனாட்டுத் தமிழறிஞர் ‘பாப்லி’லியுடன் நெருங்கிப் பழகியவர். அவரைப் பற்றிப் ‘பாப்புலி வெண்பா’ என்ற நூலே எழுதியுள்ளார். அவர் படைப்பில் தலையாயது ‘இராவண காவியம்’ ஆகும். பெயரே அதன் பொருளை விளக்கும். 5 காண்டங்கள், 57 படலங்கள், 3100 பாடல்கள். இந்நூல் 1946-ல் வெளிவந்தது. பின் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. தடை நீங்கி 1971-ல் இரண்டாம் பதிப்பும் 1994-ல் மூன்றாம் பதிப்பும் வெளிவந்தது. அண்மையில் நான்காம் பதிப்பை சாரதா பதிப்பகம் (சென்னை - 14) வெளியிட்டுள்ளது. மிகச்சிறந்த நயமுடைய இராவண காவியத்தைக் கம்பனில் முழு ஈடுபாடு கொண்ட அறிஞர்களும் பாராட்டியுள்ளனர். ‘கம்பன் கவிதையில் கட்டுண்டு கிடந்தேன். இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது’ என்று ரா.பி.சேதுப்பிள்ளை கூறினார். கம்பர் அன்பர் ஐயன்பெருமாள் கோனார் ‘இனியொரு கம்பன் வருவானோ? இப்படியும் கவிதை தருவானோ? ஆம், கம்பனே வந்தான்; கவிதையும் தந்தான்’ என்று புலவர் குழந்தையைப் பாராட்டுவார். அறிவியல் தமிழ் அறிஞர் பெ.நா.அப்புசாமி போன்றோரின் துணையுடன் அரிய செய்திகள் சேகரித்துத் ‘திராவிட காவியம்’ பாட முயன்றபோது 24.9.1972 அன்று புலவர் குழந்தை மறைந்தார். பாரதிதாசன் ‘செந்தமிழ்க் குழந்தை’ என்று பாராட்டியது போலத் தமிழாக வாழ்ந்த அவருடைய நூற்றாண்டு நிறைவு நாள் 1.7.2006 ஆகும். பொருளடக்கம் பதிப்புரை iii புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு iv செந்தமிழ்க் குழந்தை vii 1. தமிழ் மொழி 1. தமிழின் பெருமை 3 2. எங்கள் தமிழ்மொழி 4 3. ஞாலத்து மூத்தவளே 6 4. தாலாட்டுத் தொட்டில் 7 5. தமிழ்த்தாய் 8 6. எந்தமிழ்த்தாய் 11 7. தமிழர் கடமை 12 8. தாய்மொழிப் பித்து 13 9. தமிழ்தமிழென வீழுவேன் 13 10. தாய்மொழி வளர்ப்பேன் 14 11. இன்பம் பொங்கு தமிழ் 14 12. அண்ணா காத்த அன்னைத்தமிழ் 15 13. எல்லாமென் தாய்மொழியே 18 14. உலக முதன் மொழியாள் 19 15. அஞ்சிட வேண்டா 22 16. தமிழ்த்தாய் திருப்பள்ளி எழுச்சி 23 17. தம்பிக்கு 26 18. குடுகுடுப்பைப்பாரன் 28 19. உயர்தனிச் செம்மொழி 29 20. தமிழ் வளர்த்தோர் 30 21. கவிபாடிப் பழகுதல் 31 22. கவியரங்கம் 33 23. தமிழ்க் கொலை புரியாதீர் 35 24. தமிழ்ப் பகைவர் 36 25. தமிழரசி தனித்திரங்கல் 37 26. தமிழ் வாழ்க 38 27. தமிழ்ப் பள்ளு 39 2. இந்தி எதிர்ப்புப் போர் 1. கட்டாய இந்தி எதிர்ப்பு 43 2. ஆள்வோர் செய்த வேலை 43 3. 1948 இந்தியெதிர்ப்புப் போர் 44 4. இந்தி படிக்க மறுத்தல் 52 5. ஆள்வோர்க்கு 54 6. மாணவர் இந்தியெதிர்ப்பு - 1965 55 7. தீக்குளித்த செம்மல்கள் 57 8. இந்தி - தமிழ் ஏசல் 58 9. ஒழிந்ததிந்தி 60 3. தமிழ் நாடு 1. நாட்டுப்பண் 63 2. பழந்தமிழகம் 64 3. எந்தமிழ் நாடு 65 4. வானாரும் நீலமலை 67 5. தமிழ்கூறு நல்லுலகம் 68 4. தமிழினம் 1,2. எங்கள் தமிழினம் 71 3. நாடு, மொழி, இனம் 72 4. தமிழன் 73 5. இக்காலத் தமிழன் 75 6. பாண் பாட்டு 76 7. மாலை தொடுத்திடுவோம் 77 8. அருந்தமிழினம் 78 9. இராவணன் 79 5. பாப்பாப் பாட்டு 80 6. நல்ல பெண் 83 7. வள்ளுவன் குறள் 86 வள்ளுவன் கண்ட மருந்து 87 8. பெண் பிறப்பு 89 9. கலைவாணர் பெருந்தொண்டு 1. வித்தைத்தான என்னவோ 93 2. முரட்டுக் களிறு 94 3. மூத்த தொழுநோய் 94 4. நகைச்சுவை 95 5. வேங்கைப் புலி 95 10. படைத்தோனே! 98 11. வெண்ணிலா 103 12. குடும்பக் கட்டுப்பாடு 105 13. தலையெழுத்து 108 14. அண்ணாவின் அருளுள்ளம் 110 15. பொது 114 1. தைத்திருநாள் 114 2. உழவுத்தொழில் 115 3. உழவரின் காலைக் குரல் 116 4. உழைப்பின் சிறப்பு 117 5. வேளாண்குடியின் இயல்பு 118 6. எண்ணிப்பார் 119 7. மேழிக்கொடி 120 8. தொழிலாளர் 121 9. முதலாளியியும் தொழிலாளியும் 123 10. விறகு வெட்டி 126 16. புரட்சிப் புயல் 127 17. தலைவி செயல் 138 18. புரட்சிப் பெண் 140 1. இகழ்ச்சி 140 2. அடிமை வாழ்வு 142 3. உரிமை 143 4. கைம்மை 144 5. வேற்றுமை 146 6. அடக்குமுறை 147 7. விதவைத்துயர் 147 8. பேதையர் என்றிகழேல் 149 19. சுயமரியாதைச் சுடர் 151 20. சொல்லும் செயலும் 153 21. தாழ்ந்த தமிழினம் 1. வாழ்க்கை 154 2. குல வேற்றுமை 157 3. பெண்ணுரிமை 160 4. தமிழர்களுள் ஒருசிலர் 162 5. பொதுவுடமை 163 6. விடுதலை 164 7. எழுச்சி 165 8. உலகியலுண்மை 166 22. பெரியார் வருகைப் பத்து 168 23. பெரியார் பிறவாதிருந்திருந்தால்! 174 24. அறிஞர் அண்ணா 178 25. தமிழர் வீரம் 187 26. பழந்தமிழ் வாணிகம் 189 27. கையறம் 1. காந்தியடிகள் 192 2. நேரு 195 3. கவிமணி 197 4. பாவேந்தர் பாரதிதாசன் 197 5. அறிஞர் அண்ணா 198 28. தனிப்பாடல்கள் 1. கவிபாடிப் பழகினது 203 2. சொந்த ஊர் 203 3. கீரைக்காரி 204 4. நல்லதம்பிச் சர்க்கரை மன்றாடியார் 204 5. கரும்பாலை 205 6. பெரியார் பெருந்துணை 205 7. வள்ளல் அழகப்பா 206 8. கலைஞர் கருணாநிதி 206 2. கடல்கடந்து தமிழ் பரப்பிய 207 3. தமிழ்நாட்டின் முதல்வர் யார்! 207 9. இயற்கை 208 10. மக்கள் கடமை 209 11. குருவாயூரப்பன் 210 29. இந்தியா - பாகித்தான் போர் 211 1. எழுக பைந்தும்பை வேய்ந்தே 211 2. வாழ்க இந்திரா காந்தி! 214 30. அரசியல் 1. வாக்காளர் 216 2. சட்டமன்ற உறுப்பினர் 219 31. பகவத்சிங் தூக்குப் பாடல் 223 புலவர் குழந்தை பாடல் தமிழ் மொழி 1. தமிழின் பெருமை நேரிசை வெண்பா உலக முதன்மக்கள் உள்ளுணர்வைக் கிள்ளி உலகுக் களித்த ஒருத்தி - இலகுதமிழ் அன்னை தமிழர் அகத்தே யமர்ந்தொருமை தன்னையுண் டாக்கிடுமெந் தாய். 1 அறுசீர் விருத்தம் இவ்வுலக மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிமையியல் பெளிமை வாய்ந்த செவ்வியவோர் மொழியுளதோ இல்லைஉல கறிஞரெலாம் தேர்ந்து கண்ட ஒவ்வியவோர் முடிவாகும் வேண்டுமென்று புகழவிலை ஊமர் போல அவ்வகைய தமிழ்கல்லாத் தமிழர்திறம் இனையவென அறிகி லேனே! 2 தேன்வேண்டேன் தித்திக்கும் செங்கரும்பின் சுவைவேண்டேன் தெவிட்டா ஆன்பால் தான்வேண்டேன் நறுங்கனியும் சர்க்கரையும் கற்கண்டும் தனித்தேம் பாகும் நான்வேண்டேன் அறுசுவையும் கலந்தவொரு தனிச்சுவையும் நயக்க மாட்டேன் ஏன்வேண்டேன் இவையெல்லாம் தனையொவ்வா இனியதமிழ் இருக்கை யாலே. 3  2. எங்கள் தமிழ்மொழி பல்லவி எங்கள் தமிழ்மொழி செங்கனி வாயமுச் சங்கத் தமிழ்மொழியே. பல்லவி எடுப்பு எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றுரைக் கவுரைக்க - இன்பம் பொங்கி யெழுந்து புலனும் பொறியும் புதுமுழுக் காடிடுமே - எங்கள் கண்ணிகள் உலக மொழிகளி லுயரிய முதன்மொழி உதவி யதுதப வுலவிடு தனிமொழி அலகில் பழமையும் இளமையு முளமொழி அளவில் வலிமையும் நெளிமையு முடைமொழி விலகு பொருளற இலகுறு பெருமொழி மெலிவு வலிவிடை யொலியமை நலமொழி இலகு மெளிமையும் இயல்புமு டையமொழி எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழியே. 1 பாவலர் நாவிடைப் பயிலிய வியல்மொழி பாணர்கை யாழொலி படவிய லிசைமொழி மேவலர் விழியிடை விளங்கிய நடமொழி வெறுமையை யறிகிலா மிகுவள முடைமொழி காவலர் முடிமிசை கவினிய மணிமொழி காவிய மோவிய மேவிய கலைமொழி ஏவலர் உளமென இயலிய பொருள்மொழி எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழியே. 2 உள்ளுதொ றுளந்தனில் உவப்பெடுத் திடுமொழி உருவக வுவமையி லுளங்கவர்ந் திடுமொழி வள்ளுவன் குறள்மணம் வான்கமழ்ந் திடுமொழி வானவன் சிலம்பொலி மலிதரு திருமொழி கள்ளுறு மலரெனக் கவினுறு கனிமொழி காவிரி வளமெனக் கருத்தினி துடைமொழி எள்ளுறு பொருளெது மிடைமிடை விலமொழி எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழியே. 3 பூப்பயில் புலமெனப் புதுமணங் கமழ்மொழி புலவர்செந் நாவிடைப் பொருந்திய புகழ்மொழி மூப்பியல் வாய்ந்ததொல் காப்பிய முதுமொழி முப்பெரும் பிரிவதா வொப்பிய வொருமொழி யாப்புடை மரபினில் கோப்புடை யெழின்மொழி அணியெனு மணிகளா லழகொழு கிடுமொழி ஈப்பயில் நறவென இனித்திடுங் கனிமொழி எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழியே. 4 அகப்புறப் பாட்டிடை அரும்பிய வலர்மொழி அறம்பொரு ளின்பெனு மழகிய பொருள்மொழி தொகுப்புறப் பலகலை துவன்றிய தொன்மொழி துறைதொறும் பல்பொருள் துலங்கிடுஞ் சுவைமொழி பகுப்புறப் பலவணி பயின்றிடும் பழமொழி பஃறொடை மணிகளாற் பளிச்செனு மெழின்மொழி இகப்புறப் பலதலை முறைபடு மிளமொழி எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழியே. 5  3. ஞாலத்து மூத்தவளே சிந்து ஞாலத்து மூத்தவளே எங்கள்தமிழ்த் தாயே நாவன்மை மிக்கவளே எங்கள்தமிழ்த் தாயே காலத்தை வென்றவளே எங்கள்தமிழ்த் தாயே கட்டிளமை யுள்ளவளே எங்கள்தமிழ்த் தாயே. 1 வான்றோய் இசைக்குயிலே எங்கள்தமிழ்த் தாயே வள்ளுவன் சொற்பொருளே எங்கள்தமிழ்த் தாயே சான்றோர் வளர்த்தவளே எங்கள்தமிழ்த் தாயே சங்கத் திருந்தவளே எங்கள்தமிழ்த் தாயே. 2 மூவா இளங்கொடியே எங்கள்தமிழ்த் தாயே மூவர் முடிமணியே எங்கள்தமிழ்த் தாயே ஓவா ஒளிப்பிழம்பே எங்கள்தமிழ்த் தாயே உணர்ச்சிப் பெருங்குவையே எங்கள்தமிழ்த் தாயே. 3 யாழிசை போன்றவளே எங்கள்தமிழ்த் தாயே யார்க்கு முகந்தவளே எங்கள்தமிழ்த் தாயே ஏழிசை மிக்கவளே எங்கள்தமிழ்த் தாயே இன்பச் சரக்கறையே எங்கள்தமிழ்த் தாயே. 4 தித்திக்குஞ் செங்கரும்பே எங்கள்தமிழ்த் தாயே தெவிட்டாத செந்தேனே எங்கள்தமிழ்த் தாயே முத்துக் கொழுஞ்சரமே எங்கள்தமிழ்த் தாயே முட்டுப்பா டற்றவளே எங்கள்தமிழ்த் தாயே. 5 சிலம்பு கலகலென எங்கள்தமிழ்த் தாயே சிந்தா மணிகுலுங்க எங்கள்தமிழ்த் தாயே கலம்பல மின்னிடவே எங்கள்தமிழ்த் தாயே களித்து நடப்பவளே எங்கள்தமிழ்த் தாயே. 6 எட்டுத் திசையினுமே எங்கள்தமிழ்த் தாயே இசைபெற வாழ்ந்தவளே எங்கள்தமிழ்த் தாயே முட்டுப்பா டுற்றதென்ன எங்கள்தமிழ்த் தாயே முகஞ்சுளிக் காதுசொல்லும் எங்கள்தமிழ்த் தாயே. 7 ஏனோ ஒருவகையா எங்கள்தமிழ்த் தாயே என்ன குறையுனக்கே எங்கள்தமிழ்த் தாயே ஆனாச் சுவையமிழ்தே எங்கள்தமிழ்த் தாயே யாருனக் கென்னசெய்தார் எங்கள்தமிழ்த் தாயே. 8 உயிரைக் கொடுத்தேனும் எங்கள்தமிழ்த் தாயே உன்குறையைப் போக்கிடுவேன் எங்கள்தமிழ்த் தாயே செயிரறு செம்மணியே எங்கள்தமிழ்த் தாயே சிந்தை கலங்காதே எங்கள்தமிழ்த் தாயே. 9  4. தாலாட்டுத் தொட்டில் (இது, 1939இல் பாடியது.) சிந்து - ஆனந்தக் களிப்பு தமிழெங்கள் அருமைத்தாய் மொழியாம் - இன்பத் தமிழெங்கள் பெருமைக்குச் சரியான வழியாம் தமிழெங்கள் தொழிலுக்கோர் ஊக்கம் - அன்புத் தமிழெங்கள் வளமைக்குத் தகவான ஆக்கம். 1 தமிழெங்கள் அறிவுக்கோர் ஊற்று - மென்மைத் தமிழெங்கள் உளவெப்பந் தணிக்குந்தென் காற்று தமிழெங்கள் அன்புக்குச் சான்று - நன்மைத் தமிழெங்கள் அருளுக்குத் தளராத ஊன்று. 2 தமிழெங்கள் மனத்திற்குத் தெம்பு - மும்மைத் தமிழெங்கள் மனச்சோர்வைத் தகர்க்குங்கூ ரம்பு தமிழெங்கள் புறவாழ்வுச் சாலை - செம்மைத் தமிழெங்கள் அகவாழ்வு தளிர்க்கும்பூஞ் சோலை. 3 தமிழெங்கள் பண்பாட்டுக் கொட்டில் - நேர்மைத் தமிழெங்கள் உயரின்பத் தாலாட்டுத் தொட்டில் தமிழெங்கள் அறப்பள்ளிக் கூடம் - சீர்மைத் தமிழெங்கள் மறப்பண்பு சமையுங்கைப் பாடம். 4 தமிழெங்கள் ஒழுக்கத்தின் காப்பு - தன்னேர் தமிழெங்கள் மரபுக்குத் தகுந்தவே மாப்பு தமிழெங்கள் உயர்வாழ்வுத் திட்டம் - பொன்னேர் தமிழெங்கள் உயிர்போன்ற தன்மானச் சட்டம். 5 தமிழெங்கள் இன்னுயிர் நாடி - வாய்மைத் தமிழெங்கள் வரலாற்றுத் தவளக்கண் ணாடி தமிழெங்கள் மனமலர் நாற்றம் - தூய்மைத் தமிழெங்கள் இனமேய தகவுக்கோ ரேற்றம். 6 தமிழெங்கள் வீரத்தின் உரைகல் - கன்னித் தமிழெங்கள் முதுமக்கள் தகுதிக்கோர் நிறைகல் தமிழெங்கள் புலமைக்கை யொப்பம் - அன்னைத் தமிழெங்கள் நல்வாழ்வு சமைதட்ப வெப்பம். 7 தமிழெங்கள் உணர்வுநீ ரோட்டம் - தன்மைத் தமிழெங்கள் முன்னோர்தந் தகவான தேட்டம் தமிழெங்கள் உரையாட்டு மேடை - ஒண்மைத் தமிழெங்கள் மனப்பொய்கை சாருநீ ரோடை. 8 தமிழெங்கள் உடைமைப்பொன் பெட்டி - சங்கத் தமிழெங்கள் உளமொக்குஞ் சர்க்கரைக் கட்டி தமிழெங்கள் தாய்தந்தை யாமே - எங்கள் தமிழெங்கள் தமிழெங்கள் தமிழென்கு வோமே. 9  5. தமிழ்த்தாய் சிந்து முன்னைவில் மீன்புலி யைவட மேரு முடியிற் பொறித்தவர்யார்? - உலகில் தன்னை நிகர்த்திடும் எங்கள் பழந்தமிழ்த் தாயின் தலைமக்கள். 1 அன்றுமா மேரு மலையினைச் செண்டால் அடித்த தெவர்வலக் கை? - திசைதொறும் சென்றுவெற் றிக்கொடி நாட்டுமெங் கள்தமிழ்த் தேவி பொலந்தொடிக்கை. 2 அஞ்சி யலறியன் றாரிய ரோட அடித்துத் துரத்தியதார்? - என்றும் தஞ்சமென் றார்க்கருள் செய்யுமெங் கள்தமிழ்த் தாயின் திறல்மறவர். 3 தப்பிப் பிழைத்தோமென் றேபகை யோடிடத் தாக்கிய தாருடைவேல்? - ஓடும் அப்படைக் கிரங்கி வள்ளைபா டுந்தமிழ் அன்னையின் செங்கதிர்வேல். 4 தமிழைப் பழித்த வடவர் முடித்தலை தன்னிற்கல் லேற்றியதார்? - இன்பங் கமழத் தொடைநடை மேய நறுந்தமிழ்க் கன்னியின் முன்னைமகன். 5 பாரதப் போர்ப்படை ஞர்க்குப் பெருஞ்சோறு பாத்தளித் திட்டதார்கை? - வட ஆரியர் தோற்றோடக் கண்டுவந் ததமிழ் அன்னை கொடைவளக்கை. 6 எழுதாக் கிளவிக் கெழுத்துத விப்புகழ் எய்திய தெந்தமொழி? - பாலுக் கழுதாக் குழவிக் கருள்முந் துறுந்தமிழ் அன்னையின் தொன்மைமொழி. 7 பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்கு மெனுமுண்மை பேசிய தாருடைவாய்? - எல்லாச் சிறப்புக்கு மேலாஞ் சிறப்புடை யதமிழ்த் தேவியின் செந்துவர்வாய். 8 ஒன்றே குலமெனும் உண்மையை உலகுக் கோதிய தார்வாய்ச்சொல்? - தோன்றிய அன்றே யுலகுக் கறமுரைத் ததமிழ் அன்னை மலர்வாய்ச்சொல். 9 யாதும் ஊரே யாவருங் கேளென் றறைந்தது யார்கொள்கை? - நன்றும் தீதுமொன் றாக்கொ டமைவொடு வாழ்தமிழ்த் தேவி யுயர்கொள்கை. 10 ஆயாது கொன்றது தப்பென் றறிந்ததும் ஆருயிர் விட்டவனார்? - ஒருபுறம் சாயாத செங்கோ லுடைய எங்கள்தமிழ்த் தாயின் பெரியமகன். 11 கணவனைத் தோற்றோர்க்குக் காட்டுவ தின்றெனக் கண்மூடி விட்டதெவள்? - என்றும் அணுவுந் தவறா வொழுக்க முடைத்தமிழ் அன்னையின் செல்வமகள். 12 புதவம் புடைத்ததன் கைகுறைத் தேபுகழ் பூத்தசெங் கோலினன்யார்? - உயிர் சிதைய வரினும் முறைபிற ழாத்தமிழ்த் தேவியின் நல்லமகன். 13 யாப்புறி லக்கணம் பூப்ப வெழுதிய தாருடைக் கையெழுத்து? - தொல் காப்பிய னைப்பெற்று மாப்புகழ் மேதமிழ்க் கன்னியின் கையெழுத்து. 14 அள்ளிப் பருகமுப் பாலை யுலகுக் களித்துள தெந்தமொழி? - திரு வள்ளுவ னையீன்று வான்புகழ் கொண்டஎம் வண்டமி ழன்னைமொழி. 15 சான்றவர் கண்டமுச் சங்க மிருந்த தனிமொழி யெந்தமொழி? - ஆனா ஆன்ற அறிவு நிரம்பிய முத்தமிழ் அன்னை யமிழ்தமொழி. 16  6. எந்தமிழ்த்தாய் சிந்து கையில் திருக்குறட் காப்பொலி செய்யக் களிப்புடன் எந்தமிழ்த்தாய் - கழுத்தில் ஐயசிந் தாமணி யார மசையக்கூத் தாடுவள் எந்தமிழ்த்தாய். 1 காலிற் சிலம்பு கலகல வென்னக் கனிவுடன் எந்தமிழ்த்தாய் - இடை ஆலு மணிமே கலையொளி ரவிளை யாடுவள் எந்தமிழ்த்தாய். 2 காதினிற் குண்டல கேசி யணிந்து கவினுவள் எந்தமிழ்த்தாய் - முன்கைப் போதினி லேவளை யாபதி மின்னப் பொலிகுவள் எந்தமிழ்த்தாய். 3 உடுத்துத்தொல் காப்பியம் என்னும்பட் டாடை உவப்புடன் எந்தமிழ்த்தாய் - நூலில் தொடுத்து மணியை அகத்தும் புறத்தும் துலங்குவள் எந்தமிழ்த்தாய். 4 மேனியில் பாவகைத் தொய்யில் எழுதி விளங்குவள் எந்தமிழ்த்தாய் - பாவினம் ஆனபொட் டிட்டுமை தீட்டி யழகோ டவிருவள் எந்தமிழ்த்தாய். 5 யாழிசை யோடு குழலும் முழவும் அமைதர எந்தமிழ்த்தாய் - இனி தேழிசை பாடி நடிக்குவள் மக்கள் இன்புற எந்தமிழ்த்தாய். 6 அன்புப்பா டல்களாம் உள்ளாடை கட்டி அழகுடன் எந்தமிழ்த்தாய் - பல்வே றின்பத் தனிப்பாடல் தோளாடை யிட்டே இலகுவள் எந்தமிழ்த்தாய். 7 பத்துப்பாட் டென்னும் மணிமுடி சூடியே பாங்குடன் எந்தமிழ்த்தாய் - தமிழ கத்தினை யோர்குறை யின்றியே யாண்டு களிக்குவள் எந்தமிழ்த்தாய். 8  7. தமிழர் கடமை கட்டளைக் கலிப்பா துன்னு வெம்பகை வெல்லற் குதவுதல் தொழில கம்பல தோன்றிடச் செய்குதல் மன்னு நல்லறம் பற்பல காணுதல் வறியர்க் கீதல்நற் கல்வி வளர்க்குதல் அன்ன யாவினும் ஆயிரங் கோடிமேல் ஆகுந் தாய்மொழித் தொண்டுக் குதவுதல் என்னு முண்மை யுணர்ந்து தமிழ்வளர்த் தினிது வாழ்தல் தமிழர் கடமையாம்.  8. தாய்மொழிப் பித்து பன்னிருசீர் விருத்தம் அடபாவம் தமிழ்வாழ்க என்போர் சிறையில் அடைக்கப் படக்குடியர சாகியும் ஆங்கிலம் தமிழகத் தரசியாய் அரியணையி லினிதிருக்கக் கெடுவாக வடவர்பொது மொழியென இந்தியைக் கெடுமதியு டன்றிணிக்கக் கெட்டழிந் திட்டவட மொழியைவாழ் விக்குங் கிளர்ச்சிவலு வாயிருக்க நடுவாக நந்தமிழ்த் தாய்க்குதவு வார்தமிழ் நாடெங்க ணுந்தேடியும் நாலுபேர் கூடக் கிடைக்காத காலத்தில் நான்வாழ வைப்பேனெனப் பிடிவாத மாயதற் குதவுகென் றிடலென்ன பித்தோவெ னிற்பித்தெனப் பெருமையொடு கூறுகின் றேனெனது தாய்மொழிப் பித்தென்ப தறிகுவீரே.  9. தமிழ்தமிழென வீழுவேன் பதினான்குசீர் விருத்தம் அட்டி யின்றியெத் திசையி னுந்தமிழ் அன்னை யின்புகழ் பேசுவேன் அயல்மொ ழிப்பகை தனைய லைகடற் கப்பு றத்திலே வீசுவேன் எட்டி நின்றிடுந் தமிழர் வாழ்கதமிழ் என்றி டப்பறை கொட்டுவேன் இனிய ருந்தமிழ்த் தாய்க்கொ ருகுறை இல்லை யென்றுமார் தட்டுவேன் கட்டி யென்றினித் திடும ணித்தமிழ்க் கலைவ ளர்ப்பதென் னாசையே கடல்க டந்தவுல கத்தி லெங்குமே கமழு முத்தமி ழோசையே வெட்டி யேயெனை வீழ்த்தி னுங்குருதி விதிர வேயரும் புண்ணிலே வீழும் போழ்தினும் தமிழ்த மிழென வீழு வேன்தமிழ் மண்ணிலே.  10. தாய்மொழி வளர்ப்பேன் எண்சீர் விருத்தம் வடக்கத்தார் படையெடுப்பை மண்டியிட்டுத் தாக்கி மறுமலர்ச்சி யெழுத்தாளர் மயக்கமதைப் போக்கித் தொடக்கத்தார் பாட்டுரையைத் தூய்மையுறக் காட்டித் துறையமைமுத் தமிழறிவுச் சுவையதனை யூட்டிக் குடக்கத்தார் கலைகளெலாங் கொண்டுவந்து கொட்டிக் குறையாத தமிழூற்றுக் குளங்கள்பல வெட்டி முடக்கத்தார் மனந்தெளிய முகந்தூட்டித் தானே. முறையாக முத்தமிழ்த்தாய் மொழியைவளர்ப் பேனே.  11. இன்பம் பொங்கு தமிழ் கும்மி எங்கள் தமிழின்பம் பொங்குதமிழ் - முன்னர் ஏழிசைச் சங்கத் திருந்ததமிழ் மங்கல வாழ்வுது லங்குதமிழ் - திரு வள்ளுவர் வாயின் மலர்ந்ததமிழ். 1 காதலும் வீரமுங் கொண்டதமிழ் - தொல் காப்பிய னாராய்ந்து கண்டதமிழ் ஈத லிசைபட வாழ்ந்ததமிழ் - உல கெங்கு மிணையி லினியதமிழ். 2 முத்தமிழ் வல்லார் வளர்த்ததமிழ் - நம் முடியுடை மூவர் அளித்ததமிழ் ஒத்ததொன் றின்றி யுயர்ந்ததமிழ் - இவ் வுலக முதன்மொழி யானதமிழ். 3 அகமும் புறமும் அலர்ந்ததமிழ் - ஆங் கறம்பொரு ளின்பம் மலர்ந்ததமிழ் தொகையும் வகையும் துலங்குதமிழ் - அந்நாற் சொல்லும் பொருளும் இலங்குதமிழ். 4 பாட்டும் உரையும் பயிலுந்தமிழ் - இன்பப் பண்ணுந் திறனும் இயலுந்தமிழ் கேட்டவர் உள்ளம் இனிக்குந்தமிழ் - பசுங் கிள்ளையும் பேசிக் களிக்குந்தமிழ். 5 பாவும் இனமும் படைத்ததமிழ் - ஆடிப் பாடற் கினிய நடைத்ததமிழ் பூவும் மணமும்போற் சொல்லும் பொருளும் பொருந்தியின் பூட்டுந் திருந்துதமிழ். 6 காலங் கடந்தநற் கன்னித்தமிழ் - நன்னூல் கற்றவர் போற்றிடும் அன்னைத்தமிழ் ஞாலங் கடந்தவொர் நல்லதமிழ் - அயல் நாட்டவர் நாளும்பா ராட்டுதமிழ். 7 பண்டைப் பெருமையை நாட்டுதமிழ் - பத்துப் பாட்டொடெட் டுத்தொகை யீட்டுதமிழ் தண்டைச் சிலம்பொலி கேட்குந்தமிழ் - எங்கள் தாய்மொழி கேட்குநர் வேட்குந்தமிழ். 8  12. அண்ணா காத்த அன்னைத்தமிழ் சிந்து - ஆனந்தக் களிப்பு உலக முதன்மகள் என்னை - ஈன் றொருத்தியு மாக இருத்தினா ளாங்கே புலமை யுடைய ஒருவன் - கண்டின் புற்றணி பூட்டியன் புற்று வளர்த்தான். 1 தன்னந் தனியாக நானும் - ஒரு தாயின் தலைமக ளாக வளர்ந்தேன் முன்னிந்தப் பேருல கத்தில் - நானே முன்வந்த தாலே முதல்மக ளானேன். 2 இமிழ்கடல் சூழுல கத்தார் - என் இயல்போ டெளிமை இனிமையுங் கண்டே தமிழென என்னை அழைத்தார் - என் றன்பெரு மக்கள் தமிழர்க ளானார். 3 வழிவழி வந்தஎன் மக்கள் - பொன் மணிக்கலன் பூட்டிக் கணக்கில வாக மொழிகுறை யொன்றுமின் றாக - பின்னர் முத்தமி ழென்னவ ழைத்தன ரன்பாய். 4 மைந்தர் பெருந்திற லாலே - நானும் வளர்பிறை போல வளமுற வாழ்ந்து வந்தனன் பல்லூழி காலம் - செல வான்புகழ் பூப்பவென் மக்கள் மகிழ்ந்தே; 5 அம்பொன் மணிமுடி சூட்டி - என்னை அரியணை யேற்றி அரசியாய்ச் செய்தார் இம்பரி லேயெதி ரின்றி - நானும் எந்தமிழ் நாட்டை யினிதர சாண்டேன். 6 என்னிழல் வாழுநர் மெச்ச - யானோர் இன்னலில் லாமல் இனிதர சாண்டு தன்னிகர் தானென மைந்த! - முச் சங்க மிருந்து தகவொடு வாழ்ந்தேன். 7 இன்ப மினிதியல் காலை - துன்பம் எய்துதல் ஞாலத் தியல்பது போலும் என்பெரு வாழ்வி னிடையே - வந் தெய்திய வின்னலை என்னென் றிசைப்பேன். 8 அன்னதென் னென்னில் வடக்கில் - இருந் தாரியை யென்னுமோர் நேரிலா மங்கை துன்னியே தென்னிலந் தன்னை - என் தொன்னல மக்களை அன்னள் மயக்கி; 9 அன்பற என்பா லவர்க்கே - அவள் ஆக்கியே என்னலம் போக்கினள் மைந்த! என்பெருந் தன்மை யிழந்தே - நான் இன்னலுற் றேங்கி யிருக்கையி லாங்கே. 10 மேலைத் திசையி லிருந்தே - தலையில் வீழ்ந்ததோர் பேரிடி வாழ்ந்தஅவ் வாழ்வை ஆலைக் கரும்பென ஆக்கி - என் அரசைப் பறித்தனள் ஆங்கிலை என்பாள். 11 ஆண்டொரு நூற்றுக்கு மேலும் - என்னை அடிமைச் சிறையிலிட் டாண்டளென் நாட்டை ஈண்டுநின் றேயவள் செல்ல - நான் இன்னல கன்றதென் றெண்ணி யுவந்தேன். 12 எண்ணிய எண்ணமண் ணாக - ஆரியை ஈன்றெடுத் தஇந்தி என்னுஞ் சிறுக்கி நண்ணியென் னைச்சிறை யிட்டே - என் நாட்டினை யாண்டிடப் போட்டுளாள் திட்டம். 13 என்னரும் மைந்தர் சிலரும் - அவட் கின்றுணை யாகநிற் கின்றனர் காணும் என்னயான் செய்குவன் மைந்த! - என் றேங்கி யிரங்கி யினைந்தனள் அன்னை. 14 அன்னையுன் அச்சம் தவிர்க - அந்த ஆரிய மாயை யதனை யகற்றி என்னருந் தாயுனைக் காத்தற் - கென்றே எங்கள் அறிஞர் அண்ணாபிறந் துள்ளார். 15 உலக அறிவொளி யென்றே - இவ் வுலகம் புகழும் உயரறி வாளர் அலகிலா வன்புமிக் குள்ளார் - உன்பால் அன்னையே பேரறி ஞரெங்கள் அண்ணா. 16 இந்தியை வென்று துரத்தி - அரியணை ஏற்றுவா ருன்னை எனச்சொலா முன்னம் எந்தமி ழன்னை யுவந்தே - வாழ்ந்தேன் என்பெரு மைந்தன்அண் ணாவாழ்க என்றாள். 17 எந்தமி ழன்னை யுவக்க - ஒழிந்த திருபத்து மூன்றொன் றறுபத்தெட் டிந்தி எந்தமிழ் மக்க ளுவந்தே - வாழ்க எங்கள் அறிஞர் அண்ணாவென ஆர்த்தார். 18  13. எல்லாமென் தாய்மொழியே சிந்து என்னுடல் என்னுயிர் என்னுணர் வென்பொருள் எல்லாமென் தாய்மொழியே - என் இன்னுயிர் தன்னிலும் இன்றி யமையாத தென்னருந் தாய்மொழியே. 1 இவ்வுல கத்தென் னுடைமைய தாக இருப்பதென் தாய்மொழியே - என் ஒவ்வொரு மூச்சி னொடுங்கலந் தவ்வடி வுள்ளதென் தாய்மொழியே. 2 அட்டுக் குழந்தையில் அம்மாவென் றேநான் அழுததென் தாய்மொழியே - அன்னை சிட்டுப்போ லோடிவந் தேகண்ணே யென்று தெளித்ததென் தாய்மொழியே. 3 கற்பன வெல்லாம் கசடற யானும் கற்றதென் தாய்மொழியே - கற்றுப் பற்பல நூல்கள்செய் தேயுல குக்குப் படைப்பதென் தாய்மொழியே. 4 உற்றெழு காத லுரையினி தாடி உவந்ததென் தாய்மொழியே - நாளும் மற்றென் மகவின் மழலையைக் கேட்டு மகிழ்ந்ததென் தாய்மொழியே. 5 ஓங்கிய கொள்கை யினையிவ் வுலகுக் குரைப்பதென் தாய்மொழியே - நாளும் தேங்கிய வின்பத் திரைக்கட லாடித் திளைப்பதென் தாய்மொழியே. 6 இன்புட னென்கவி கற்றுல கின்புற் றெழுவதென் தாய்மொழியே - அதனால் அன்புடன் மேன்மேலுங் கற்பதென் தாய்மொழி யான தமிழ்மொழியே. 7  14. உலக முதன் மொழியாள் சிந்து உலக முதன்மொழியாள் - உலகம் உம்மெனு முயர்தனிச் செம்மொழியாள் புலவர் புகழ்மொழியாள் - திகழ்செம் பொன்மொழி யாளொளிர் நன்மொழியாள் இலகு மியல்மொழியாள் - எளிமையும் இனிமையு முடையநற் கனிமொழியாள் அலகில் வளமொழியாள் - தமிழ் அன்னையெந் தமிழரின் இன்னுயிராள். 1 தேனினுஞ் சுவையுடையாள் - சொலச்சொலத் தித்தித் திடுமியல் பொத்துடையாள் வானினு முயர்வுடையாள் - குன்றா வளமுடை யாளில குளமுடையாள் கானினுங் கமழ்வுடையாள் - எக் காலமு மலர்காய் கனியுடையாள் ஆனினும் பயனுடையாள் - தமிழ் அன்னையெந் தமிழரின் இன்னுயிராள். 2 எண்ணெண் கலையுடையாள் - இசையோ ரேழுடைய யாள்பயில் யாழுடையாள் பண்ணுந் திறமுடையாள் - இன்னிசைப் பாடலும் ஆடலும் பயில்வுடையாள் எண்ணு மெழுத்துடையாள் - உலகில் இல்லாப் பொருளிலக் கணமுடையாள் கண்ணுங் கருத்துடையாள் - தமிழ்க் கன்னியெந் தமிழரின் இன்னுயிராள். 3 சிற்பக் கலையுடையாள் - பல்கலைச் செல்வமுங் கல்வியுஞ் சேர்வுடையாள் பொற்புப் புனைவுடையாள் - செய்ய பொன்மணிப் பணியணி புலமுடையாள் கற்புக் கலையுடையாள் - பெருங் காவிய மோவிய மேவுடையாள் அற்புத் தளையுடையாள் - தமிழ் அன்னையெந் தமிழரின் இன்னுயிராள். 4 நடைமுறை நன்குடையாள் - நிலம் நான்குடை யாள்பொருள் மூன்றுடையாள் இடைமுறை யியல்புடையாள் - திணை ஏழுடை யாள்கை கோளுடையாள் படைமுறை பயில்வுடையாள் - மக்கட் பண்புடை யாள்பழ நண்புடையாள் அடைமுறை யறிவுடையாள் - தமிழ் அன்னையெந் தமிழரின் இன்னுயிராள். 5 காதற் கனியுடையாள் - இன்பக் களவுடை யாள்பயில் கற்புடையாள் ஓதற் கினியுடையாள் - இன்ப ஊற்றுடை யாளுயர் மாற்றுடையாள் ஈதற் குணமுடையாள் - யாரும் எளிதினி லடைந்திடும் ஒளியுடையாள் ஆதற் பயனுடையாள் - தமிழ் அன்னையெந் தமிழரின் இன்னுயிராள். 6 அறம்பொரு ளின்புடையாள் - இன்ப அகமுடை யாளதன் புறமுடையாள் மறம்படு குணமுடையாள் - பிறர் மண்பெற விரும்பாப் பண்புடையாள் புறம்படு பொருளெவையும் - சொல்லும் புலமுடை யாள்பொருள் நலமுடையாள் திறம்படு துறையுடையாள் - தமிழ்த் தேவியெந் தமிழரின் ஆவியன்னாள். 7 இலக்கியப் பெருங்கடலாள் - ஐந் திலக்கண மெனும்பெரு வலக்கரையாள் துலக்கிய அகத்துறையாள் - அறந் துறப்பிலா மறப்படு புறத்துறையாள் சொலச்சொல இனிப்புடையாள் - எண் சுவையுடை யாள்வேத் தவையுடையாள் கலக்கமில் கருத்துடையாள் - தமிழ்க் கன்னியெந் தமிழரின் இன்னுயிராள். 8 பன்னெறி நூலுடையாள் - மிகு பழமையும் இளமையும் ஒருங்குடையாள் நன்னெறி நடையுடையாள் - நன் னலமதை யாய்தரு புலமுடையாள் புன்னெறி புகலறியாள் - சொற் பொருளுணர் திறமிகு தரவுடையாள் சென்னெறி செலவுடையாள் - தமிழ்த் தேவியெந் தமிழரின் ஆவியன்னாள். 9 நாட்டுநன் னலமுடையாள் - புலவர் நாவுடை யாள்மனப் பூவுடையாள் பாட்டுரை நூலுடையாள் - நாற் பாவுடை யாளின மேவுடையாள் ஏட்டினி லிருப்புடையாள் - பாட எதுகையும் மோனையும் அதியுடையாள் ஆட்டொடு பாட்டுடையாள் - தமிழ் அன்னையெந் தமிழரின் இன்னுயிராள். 10 (ஆசிரியரின் - 'அரசியலரங்கம்' என்னும் நூல் - 3 : 4)  15. அஞ்சிட வேண்டா சிந்து - ஆனந்தக் களிப்பு உயிரினும் சிறந்ததொன் றில்லை - ஆனால் ஒண்டமிழ்த் தாயிடை யூறுனக் கெய்தின் உயிரினைப் பெரிதென எண்ணேன் - என் உயிரைவிட் டுன்னிடை யூற்றினைத் தீர்ப்பேன். 1 உணவினும் சிறந்ததொன் றில்லை - ஆனால் உயர்தமிழ்த் தாயிடை யூறுனக் கெய்தின் உணவினை யுண்டுண் டுறங்கேன் - உன்னிடை யூற்றைப்போக் குமட்டும் உண்ணவே மாட்டேன். 2 சிறையினுங் கொடியதொன் றில்லை - ஆனால் செந்தமிழ்த் தாயொரு தீங்குனக் கெய்தின் சிறையினைக் கண்டுநான் அஞ்சேன் - அச் சிறையிற்பூஞ் சோலைபோற் சென்று புகுவேன். 3 இன்னாசெய் தார்க்கின்னா செய்யேன் - ஆனால் இன்றமிழ்த் தாயுனக் கின்னாசெய் வோர்க்கே இன்னா செயச்சிறி தஞ்சேன் - மேன்மேல் இன்னாசெய் தேயுன் இடர்கெடச் செய்வேன். 4 தாய்சொல்லைத் தட்டவே மாட்டேன் - ஆனால் தண்டமிழ்த் தாய்நிற்கி ரண்டகஞ் செய்யின் தாய்சொல்லைத் தட்டவும் அஞ்சேன் - தாய் தடுத்தாலும் அன்னார் முடித்தலை கொய்வேன். 5 அரசுக் கடங்கி நடப்பேன் - ஆனால் ஆய்தமிழ்த் தாய்நிற்குத் தீதுசெய் கிற்பின் அரசினைக் கண்டியான் அஞ்சேன் - அரசின் ஆணையை மீறிநிற் பேணுவேன் அம்மா! 6 ஆகையால் எந்தமி ழன்னாய்! - இனி யாரையுங் கண்டுநீ அஞ்சிட வேண்டா ஓகையோ டின்புற் றிருப்பாய் - என் உயிருள்ள மட்டும் உனக்கில்லை அச்சம்! 7  16. தமிழ்த்தாய் திருப்பள்ளி எழுச்சி எண்சீர் விருத்தம் கொக்கரக் கோவெனக் கூவின கோழி கொள்ளை யிருட்குலம் பொள்ளென வோட மிக்கொளி வீசி இளங்கதிர்ச் செல்வன் மேவினன் காணிதோ ஆவல்மிக் கோராய்த் தொக்குநிற் கின்றோம் தொழுதுனை வாழ்த்தத் தொண்டர்பல் கோடிபேர் வண்டமிழ் பாடி இக்கன வாயினு மேன்துயில் கின்றாய்! எந்தமிழ்த் தாய்பள்ளி எழுந்தரு ளாயே. 1 தங்கையை வன்கொலை செய்கொடி யோன்கால் தன்னிடை வீழத் தகவிலான் போன்றார் தங்களை வென்று தமிழக ஆட்சி தன்னை யடைந்து தகவுடன் உன்னை அங்கவர் காண அரியணை யேற்றி அரசியாய்த் தென்னகம் ஆண்டிடச் செய்த எங்கள் அறிஞர்அண் ணாபுகழ் பாட எந்தமிழ்த் தாய்பள்ளி எழுந்தரு ளாயே. 2 அண்ணாவின் ஆற்ற லதையறி யாமல் ஆரியை யீன்ற அறிவிலா இந்தி மண்ணாசை யாலிங்கு வந்தெங்கள் - அண்ணா மாப்படை முன்னர் வலிந்தெதிர் நிற்க ஒண்ணாவென் றஞ்சிய தோபுறங் காட்டி ஓடுகின் றாளோடும் ஓட்டத்தைப் பார்க்க எண்ணோவி லாமக்கள் கூடிநிற் கின்றார் எந்தமிழ்த் தாய்பள்ளி எழுந்தரு ளாயே. 3 ஓட்டினெம் செந்தமிழ் நாட்டினை விட்டே ஊறுசெய் கிற்பவெம் அன்னையே நிற்குப் போட்டியாய் வந்தஅவ் இந்தியை ஓட்டிப் போதரு வெற்றியை மாதமிழ் மக்கள் பாட்டரங் கும்பட்டி மன்றமுங் கூத்தும் பாட்டும் இசையும் பயின்றுகொண் டாடும் ஈட்டரும் வெற்றி விழாவினைக் காண எந்தமிழ்த் தாய்பள்ளி எழுந்தரு ளாயே. 4 அயலவ ராட்சி யகன்றுமே எங்கள் அறிஞரண் ணாவின் அருந்தமி ழாட்சி வியலிடங் கண்டு வியக்குற வேமூ வேந்தர்க ளாட்சி யெனநடக் கின்ற குயின்மொழி யாரொடு கூடியே யின்பங் கொண்டு நடிக்குங் குளிர்தமிழ் மக்கள் இயலிசை நாடகங் கண்டு களிக்க எந்தமிழ்த் தாய்பள்ளி எழுந்தரு ளாயே. 5 அராவிடை நஞ்சன ஆரிய மாயை அகற்றியே அஃதணு காமலே முன்னர்த் திராவிட நாட்டைச் சிறப்புடன் ஆண்ட செந்தமிழ் வேந்தர்க ளாகிய செய்ய வராகிய பொன்னன்பொற் கண்ணன்மா வாணன் மாவலி சம்பரன் மாந்தரன் சூரன் இராவண னாதியோ ரின்புகழ் பாட எந்தமிழ்த் தாய்பள்ளி எழுந்தரு ளாயே. 6 ஆதிசி வன்பெற்று விட்டனன் உன்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்து நிறைவு மேவு மிலக்கணஞ் செய்தளித் தானென் றோதுதல் ஆரியை யீன்றவள் நீயென் றுன்பெரு மக்களை நம்பவைத் தற்காம் ஏதிலர் கூற்றை யிலாதபொய் யாக்க எந்தமிழ்த் தாய்பள்ளி எழுந்தரு ளாயே. 7 முத்தமிழ் நாட்டினி லாங்கிலம் பயிற்று மொழியாக வேண்டுமென் றோர்சிறு கும்பல் கத்துகத் தென்று கத்து வதனுட் கருத்துனை யுன்மக்கள் காணா தொதுக்கி வைத்தவள் தன்னைத் தாயென வுன்னை மாற்றாந்தா யாக்கிடும் வஞ்சமே யாமவ் எத்தர்கள் சூழ்ச்சி யதைப்புறங் காண எந்தமிழ்த் தாய்பள்ளி எழுந்தரு ளாயே. 8 அன்னைநின் சொந்தநன் னாட்டில்நின் மக்கள் அமிழ்தன நின்மொழி யாலேகல் லூரி தன்னிலே பாடங்கள் தம்மைப் படித்தல் தகாவென ஓர்சில தன்னல வஞ்சர் பன்னுந் தகாவப் பயனில்சொல் நம்பிப் படிக்க மறுக்குமப் பான்மையைக் கண்டும் என்னைகொல் நீதுயில் கின்றனை யின்னும் எந்தமிழ்த் தாய்பள்ளி எழுந்தரு ளாயே. 9 அன்னைநீ அரியணை யமர்ந்தது முதலா யார்க்கும் அடிமைப்பட் டாண்டனை யில்லை முன்னைவில் மீன்புலி யைவட மேரு முடியிற் பொறித்தேயம் மூவர்கள் காத்த அன்னையே யுன்ற னடிமையைப் போக்க ஆயிர மாயிர மாயநின் சேயர் இன்னுயிரீய இதோவெளிப் பட்டோம் எந்தமிழ்த் தாய்பள்ளி எழுந்தரு ளாயே. 10  17. தம்பிக்கு சிந்து எங்கள்தமிழ் இனியதமிழ் எளியதமிழ் தம்பி இயலிசைகூத் தெனமூன்றாய் இலகுதமிழ், தம்பி சங்கமிருந் தேவளர்ந்த தங்கத்தமிழ் தம்பி சான்றோர்கள் வளர்த்தபழந் தனித்தமிழ்காண் தம்பி. 1 உலகமுதன் மொழியாக உள்ளதமிழ் தம்பி உயர்தனிச்செம் மொழியெனவே உயர்ந்ததமிழ் தம்பி பலகலையும் பயின்றமுது பழந்தமிழ்காண் தம்பி பாவையரொப் பாரியிலும் பயிலுந்தமிழ் தம்பி. 2 அன்னையழுங் குழவியைத்தா லாட்டுந்தமிழ் தம்பி ஆடுமேய்க்குஞ் சிறுவன்பாடி யாடுந்தமிழ் தம்பி கன்னலினு மினிமையான கன்னித்தமிழ் தம்பி காவினிலே பூவைபாடிக் களிக்குந்தமிழ் தம்பி. 3 மூவேந்தர் முடிமணியாய் மொய்த்ததமிழ் தம்பி மோனையெது கைத்தொடைப்பூ முடித்ததமிழ் தம்பி பாவேந்தர் நாவில்நடம் பயின்றதமிழ் தம்பி பாங்கொடுபாப் பாவினப்பண் பாடுதமிழ் தம்பி. 4 சொல்லுகின்ற வாயினிக்கும் சுவையதமிழ் தம்பி சொல்லக்கேட்ட செவியினிக்கும் தூயதமிழ் தம்பி புல்லுகின்ற உளமினிக்கும் புதுமைத்தமிழ் தம்பி பொருளிலக்க ணச்சிறப்புப் பொருந்துதமிழ் தம்பி. 5 இலக்கியமும் இலக்கணமும் இயன்றதமிழ் தம்பி இல்லையென்ற குறையெது மிலாததமிழ் தம்பி கலக்கமின்றி எளிதினிலே - கற்குந்தமிழ் தம்பி கற்றறிவைப் பெற்றுநலம் உற்றிடுவாய் தம்பி. 6  18. குடுகுடுப்பைப்பாரன் ஆசிரியப்பா குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு - நல்லகாலம் பொறக்குது நல்லகாலம் பொறக்குது பொல்லாமை போகுது வல்லாமை வருகுது நன்மை பெருகுது தீமை கருகுது இன்பம் பெருகுது துன்பந் தொலையுது நம்பவாக்குப் பொய்க்காது நம்பவாக்குப் பொய்க்காது வல்லமா தேவிஇந் நல்லதங் காளுக்கு நல்வாக்குச் சொல்லு நல்வாக்குச் சொல்லு! குடுகுடு குடுகுடு . . . . . . . பெரிய இடத்திலே பிறந்த அம்மா பெருமையா வளர்ந்த பெரிய அம்மா உரிய இடத்திலே உயர்ந்த அம்மா உரிமை யிழந்து வருந்தும் அம்மா சும்மா வருந்தாதே அம்மா உனக்கு நல்லகாலம் பொறக்குது நல்லகாலம் பொறக்குது குடுகுடு குடுகுடு . . . . . . . அம்மா! நாட்டிலே உனக்குப் போட்டியா வந்தவள் ஓட்டம் பிடிப்பா வாட்டந் தவிர்ப்பாய் சும்மா நீயும் துயரா தேதமிழ் அம்மா உனக்கோர் அருமைப் பிள்ளை பிறந்தி ருக்குது சிறந்தஆண் பிள்ளை நல்லவோர் பிள்ளை வல்லவோர் பிள்ளை அறிவுள்ள பிள்ளை அன்புள்ள பிள்ளை திறமுள்ள பிள்ளை செல்லப் பிள்ளை எழுத்திலும் பேச்சிலும் பழுத்த பிள்ளை கடமை கண்ணியம் கட்டுப்பா டுள்ள திடமுள்ள பிள்ளை தெளிவுள்ள பிள்ளை உன்பெரு மையினை உணர்ந்த பிள்ளை அன்பொடு தமிழர் அத்தனை பேரும் அண்ணாவென் றழைக்கும் கண்ணான பிள்ளை பழந்தமிழ்த் தாய்நீ இழந்த உரிமையை மீட்டுத் தருவார் வாட்டந் தவிர்ப்பாய் உனக்குப் போட்டியா வந்தவள் ஓட்டம் பிடிப்பா இல்லையுன் பிள்ளை வல்லிதின் அவளை ஓட்டியுன் உரிமையை மீட்டுத் தருவார் அடுத்தவுன் துன்பம் துடைப்பதற் காகவே பிறந்த பிள்ளையறி வறிந்த பிள்ளை அம்மா இனிநீ சும்மா இருப்பாய்! குடுகுடு குடுகுடு . . . . . . .  19. உயர்தனிச் செம்மொழி ஆசிரியப்பா மின்மினி யென்ன மேவியிவ் வுலகில் பன்மொழி மாய்ந்த, பலமொழி யின்னும் தன்பெய ரெழுதாத் தற்குறித் தனமா உள்ளன, இன்னும் பொள்ளென மூத்த தொன்மொழி யென்னும் பன்மொழி பேசா மடந்தையா வுலகில் நடந்தையா வுள்ளன. இற்றென வறியாப் பழமையும் இளமையும் சொற்றன வெழுதும் தோண்மையும் ஆண்மையும் கற்றன வோம்பும் கடமையும் உடைமையும் நவையாச் செல்வக் குவையு முடைய அம்மொழி யுயர்தனிச் செம்மொழி யென்ப. அத்தகு மொழியின் றித்திரை யுலகில் குன்றா விளமைக் குளிர்தமிழ் ஒன்றே யாமென் றோதிடு முலகே.  20. தமிழ் வளர்த்தோர் கொச்சகம் முடியுடைமூ வேந்தர்களும் முடிசூடா வேளிர்களும் நெடியபெருஞ் செல்வர்களும் நிலவிடுதம் உயிரேபோல் படியினிடை வளர்த்ததமிழ்ப் பாவையின்சீர்த் திறம்பேசின் கடியுடைய நமதுள்ளங் களிப்பெய்திக் கவினாவோ! 1 மும்மதுரைப் பாண்டியர்கள் முறையொடுமுக் கழகநிறீஇத் தம்முயிர்தம் மினுமீன்ற தாயினுமேம் படவோம்பிச் செம்மையுற வளர்த்ததமிழ்ச் செல்வியின்சீர்த் திறம்பேசின் கம்மெனநம் உளமலர்ந்து களிப்பெய்திக் கமழாவோ! 2 நேரிசை வெண்பா தன்னே ரிலாத்தமிழ்த்தாய் தன்னைநம் முன்னோர்கள் பொன்னேபோற் காத்தோம்பிப் போற்றினமை - மின்னேநம் சாத்தனையும் வீரனையும் தண்டமிழ்ப்புத் தூரனையும் கூத்தனையும் பார்த்தறிந்து கொள். 3  4. இளைத்தனள் தமிழ்த்தாய் அறுசீர் விருத்தம் தொன்றகப் புறப்பாட் டான துறைகளி லினிதி னாடிப் பின்றுகா வியப்பூங் காவிற் பீடுற உலவி யன்புத் தென்றலிற் றிளைத்துப் பின்னர்த் திருப்புகழ் மாலை சூடி இன்றுரை நடையின் மிக்கே இளைத்தனள் தமிழ்த்தா யம்மா.  21. கவிபாடிப் பழகுதல் எண்சீர் விருத்தம் மல்லாந்து கிடந்தவிளங் குழவி கைகால் வலித்தொருபக் கந்திரும்பிப் படுத்து முக்கி அல்லாந்து தலைதூக்கிக் கைகா லூன்றி அழகொழுகத் தவழ்ந்தெழுந்துட் கார்ந்து நின்று வல்லாந்து நடந்தோடிப் பழகிப் பின்னர் வலப்போட்டி போட்டோடு மாறு போலப் பல்லாய்ந்து சிறுகவிகள் பாடிப் பாடிப் பழகுதலே கவிப்பாடிப் பழக லாமே. 1 அறுசீர் விருத்தம் எழுத்தை யசைத்துச் சீராக்கி இணைச்சீர்த் தளையா லடியாக்கி பழுத்த வடியின் தொடையாலே பாப்பா வினம்பாற் படவாக்கி முழுத்த முதுநாப் புலவோர்கள் முறையே வளர்த்த கவிமரபை இழுத்து வளர்க்க இளம்புலவீர் இனிது முனைந்தே எழுவீரே. 2 மேற்படி வேறுவண்ணம் பழம்பெரும் புலவர் பாட்டைப் பன்முறை படித்துப் பார்த்தப் பழம்பெரும் பாட்டைப் போன்று பாடியே பழக வேண்டும் பழம்பெரும் பாட்டைப் போன்று பாடியே பழகு மட்டும் விழும்பெரும் புலவ னென்று விரும்புதல் கூடா தப்பா. 3 ஆயிர முயிரைக் கொன்றோன் அரைமருத் துவனென் பார்கள் ஆயிர மினுங்கொன் றன்றோ அவன்மருத் துவனென் றாவான்? ஆயிரங் கவியைக் கொன்றோன் அவனரைக் கவிஞ னாவான் ஆயிர மினுங்கொன் றன்றோ அவனொரு கவிஞ னாவான்? 4 சிந்து பாடுங்க ளாயிரம் பாட்டு - அவை பாட்டுக்க ளாவென்று பன்முறை மீட்டு நாடுங்கள் அங்ஙனம் நாடி - ஒரு நற்கவி வாண ரிடத்தினைத் தேடி ஓடுங்கள் சொல்குறை யெல்லாம் - திருத்த ஊக்குங்கள் ஊக்கவொண் ணாக்கவி யெல்லாம் போடுங்கள் குப்பைக் குழியில் - போடப் போடக் கவித்திறம் போந்திடுந் தானே. 5 வெண்பாப் பாடிப்பழகுதல் எண்சீர் விருத்தம் வெண்பாவிற் புகழேந்தி யாக வேண்டின் விரும்பிநள வெண்பாவைத் தடவை நூறு கண்பார்வை யெனப்போற்றிக் கருத்தை யூன்றிக் கவிக்காகப் படியுங்கள், படிக்குந் தோறும் பண்பாகத் தொடையமையச் செப்ப லோசை படப்பாடிப் பழகுங்கள், பழகி வந்தால் வெண்பாவிற் புகழேந்தி அண்ணன் ஆவீர் வெறுமுயற்சி செய்வதுவீண் வேலை யாமே. 6 பாவினம் பாடல் தேவர்திரு மணிகளெலாம் ஒருமா சின்றிச் சிறந்தவொளி யுடையவெனச் செப்பற் கில்லை, மூவர்தரு மாரங்க ளோடாழ் வார்தம் மொழியாப்பின் வழாதவென மொழிதற் கில்லை, யாவர்கவி மரபினையும் அறிந்த கம்பன் யாமறிந்த புலவரெனப் போற்றப் பட்டான்; ஏவரையு மறிந்தவில்லி கம்பன் தன்னை இறக்கிவிட்டான் புகழேணி யிருந்தே யப்பா! 7  22. கவியரங்கம் எண்சீர் விருத்தம் கம்ப னும்புக ழேந்தியுந் தங்கள் கவிக ளையரங் கேற்றிடப் பட்ட தம்பெ ருந்துய ரந்தனை யெண்ணில் தமிழ்க்க விஞரெ னப்பெயர் தாங்கல் அம்பி னுங்கொடி தாகு மெனினும் அத னால்நம் அருந்தமி ழன்னை செம்பொ னன்கலஞ் சேப்ப வணிந்து சிறந்து தம்மிற் றிகழ்ந்திட லானாள். 1 அறுசீர் விருத்தம் அவையோ ரெய்த சுடுசொல்லம் பதற்குத் தப்பி யவ்வம்பால் நவையே கிடவே அச்சங்க நல்லோர் நயந்து தேர்ந்திட்ட சுவையார் பத்துப் பாட்டெட்டுத் தொகையே முதலாத் துருசற்ற கவியா லன்றோ தமிழன்னை கவினா நின்று களிக்கின்றாள். 2 பெற்றோர் மகிழச் சிறார்கூடிப் பெரியோர் செய்யுஞ் செயல்செய்து மற்றோர் போலத் தெருவின்கண் மணல்வீ டமைத்து விளையாடும் அற்றே போலத் தங்கவியை அரங்கேற் றிடுவ ரவைமகிழ எற்றே யிதனால் தமிழன்னை எய்துஞ் சிறப்பை யறிகில்லேன். 3 எண்சீர் விருத்தம் பாட்டுக்கோர் ஊர்கொடுக்கப் பாரி யில்லை பழிக்கஞ்சித் தலைகொடுக்கக் குமண னில்லை காட்டுக்குட் கலன்கொடுக்க ஓரி யில்லை களிற்றோடு பிடிகொடுக்க ஆயு மில்லை நாட்டுக்குட் செல்வரெலாங் கவிஞ ரென்றால் நகையாடிக் கதவடைக்கும் இந்த நாளில் ஏட்டுக்குட் பாட்டுவர இவ்வேற் பாடும் ஏற்றதெனக் கவியரங்கைப் போற்று வோமே. 4 வண்புலவர் எந்நாட்டை யினிப்பா டாது வரைகெனவஞ் சினங்கூறச் செழிய னில்லை நண்புலவ ரில்லாதென் அவையெந் நாளும் நலிவுறுக எனக்கூறக் கிள்ளி யில்லை ஒண்புலவ ரவைகூட அரச ரில்லை ஒருங்கமைச்சர் நாடாளும் இந்த நாளில் பண்புலவர் எனப்பேச இவ்வேற் பாடும் பயன்படலாற் கவியரங்கைப் பயிலு வோமே. 5 இருவிழியி லொருவிழியே பார்க்கப் போதும் இருகாலி லொருகாலே நடக்கப் போதும் ஒருவிழிகால் மிகையென்பார் வழக்குப் போல உரைநடையே தமிழ்மொழியை வளர்க்கப் போதும் மருவியவச் செய்யுள்நடை வேண்டா மென்பார் மலிந்துசெருக் கொடுவாழும் இந்த நாளில் ஒருவகையாக் கவிபாட இவ்வேற் பாடும் உரியதெனக் கவியரங்கைப் புரிகு வோமே. 6 கவியென்றால் புரியாது கடின மென்பார் கவியெதற்கிங் குரைநடையே போது மென்பார் கவியென்றால் புலவருக்கே உரிய தென்பார் கவைக்குதவா வேலையென்பார் கற்ற பேரும் கவியென்றால் தமிழ்வளர்க்க முடியா தென்பார் கவிநடையைப் பழித்துவரும் இந்த நாளில் கவிபாடத் தூண்டுகின்ற இவ்வேற் பாடும் காணுவதாற் கவியரங்கைப் பேணு வோமே. 7 (19 - 22 - இவை, 19 - 5 - 65 தேவகோட்டைக் கவியரங்கத் தலைமையுரை.)  23. தமிழ்க் கொலை புரியாதீர் பல்லவி கொலைபுரி யாதிரையா - ஐயாதமிழ்க் கொலைபுரி யாதிரையா. பல்லவி எடுப்பு தலைவ ரெனவும்புதுப் புலவ ரெனவுங்கவி வலவ ரெனவுங்குறை யிலவ ரெனவுந்தமிழ்க் - கொலை கண்ணிகள் அயல்மொழிக் கலப்பினால் அருந்தமிழ் வளரும் யாப்பினால் தமிழ்ச்செய்யு ளதனடை தளரும் பெயலினால் வளமிக வயல்நனி யொளிரும் பேசல்போல் எழுதுதல் பெருமையென் றுளரி - கொலை 1 அரிசியிற் கல்லைக்கலப் பதுபோல் வலிந்து அயல்மொழிச் சொற்களை அளவின்றிக் கலந்து முரசு முழங்குதானை மூவர்முன் விழைந்து முறையொடு போற்றிய முத்தமிழை நலிந்து - கொலை 2 மணிப்பிர வாளமெனும் வழக்குநன் றென்று வளராது தனித்தொரு பழமொழி நின்று அணிற்பிள்ளை முதுகைப்போல் அழகுடைத் தொன்று அருண கிரியார்பாட லதனைப்பா ரென்று - கொலை 3 படக்காட்சிப் பாடலைப் பரிந்துபா ராட்டிப் பாட்டென் றுரைநடைக்கோர் பட்டபேர் சூட்டி இடக்காட்சி யாளர்போல் இழிவழக் கூட்டி இன்பத் தமிழ்நடையின் இனிமையை ஓட்டி - கொலை 4 அடிவரை யறையின்றி அசைசீரில் மறைந்து அடுக்கு மொழியினிற்சீர் அடியென நிறைந்து தொடையெனும் உறுப்பினைத் தூக்கியே எறிந்து சொற்றொடர் கவியெனத் துணிந்துமே அறைந்து - கொலை 5 மொழிவழக் கிற்குமாறா மூடக்கூத் தாடி மோனை யெதுகையின்றி முடக்கவி பாடி அழிவழக் கணியினை அன்னைக்குச் சூடி அயல்மொழி யாட்டியர்க் காடிடந் தேடி - கொலை 6 கொச்சைச்சொற் களைக்கூடை கூடையாக் கலந்து குறித்தசொல் லிருக்கவும் கொண்டயல் வலிந்து பச்சைத் தமிழெனநற் பழஞ்சொல்லைக் களைந்து பதர்கொண்டு நெல்லகற்றும் பழிக்கிடை நுழைந்து - கொலை 7 தாய்க்கொலை போன்றது தமிழ்கொலை யாகும் தமிழ்மொழி சிதைவுறின் தமிழினம் சாகும் காய்க்கொலை யினியதீங் கனிக்கொலை யாகும் கற்படின் கனிமரம் காய்ப்பது போகும் - கொலை 8  24. தமிழ்ப் பகைவர் (இது, 1941 இல் பாடியது.) எண்சீர் விருத்தம் இயற்கைமனை யகத்திருந்த தமிழ்த் தாயை இழிசமய மெனுமயக்க மருந்தை யூட்டிச் செயற்கையெனும் இருட்டறையி னுள்ளே தள்ளிச் செம்பொனணி களைந்திருப்பு விலங்கு பூட்டிப் பயக்குறையள் எனவடவர் உடுத்து நீத்த பழங்கந்தை யதுபொத்திப் பசியைப் போக்கக் கயக்குமிழி புளிங்காடி வார்த்துக் காணும் கலைத்தமிழர் வருந்தநலந் தொலைத்திட் டாரே. 1 முந்துவட மேருவரை காறும் செம்பொன் முடிசூடித் தனியாட்சி முறையே செய்த செந்தமிழ்த்தாய் ஆளுகின்ற தென்னாட் டார்க்குச் செத்தநரிக் குட்டியெனும் தெளிவி லாத இந்தியதைக் கட்டாயப் பாட மாக்கி இரண்டுதமிழ் மறவரைவெஞ் சிறையிற் கொன்ற அந்தவிழி செயல் நினையாத் தமிழ ரேயின் றரசியலில் பெரியதனக் கார ரப்பா! 2  25. தமிழரசி தனித்திரங்கல் சிந்து - கிளிக்கண்ணி வாழ்ந்தநல் வாழ்வுமென்ன மடங்கா மதிப்புமென்ன தாழ்ந்தவித் தாழ்வுமென்ன - கிளியே தமிழெனில் ஆவதென்ன. 1 போட்டியாய் வந்தமடப் பொருட்பெண்டா கியவட நாட்டி யொருத்தியினால் - கிளியே நானன் னிலைதளர்ந்தேன் 2 ஆரியா போதாதென்ன ஆங்கிலை யீங்குவர சீருஞ் சிறப்பிழந்தேன் - கிளியே சிறுமை யடைந்துழந்தேன். 3 ஆடை யணியிழந்தேன் அரசி நிலைதுறந்தேன் பாடும் பரிசிழந்தேன் - கிளியே பணிப்பெண் நிலையடைந்தேன். 4 ஓயாக் கவலையினால் உடல்நலங் குன்றியதால் தோயாத் தயிர்போலானேன் - கிளியே துயர்போம் வழியுங்காணேன். 5 ஆங்கிலை யிந்நின்றேக அகமகிழ்ந் தேனானாக நீங்கிலள் ஆரியாவும் - கிளியே நிலையா யிருந்துவிட்டாள். 6 இந்த நிலையினிலே இந்தி யெனுமவள்பெண் வந்தெனக் குப்போட்டியாய் - கிளியே வாழ முயலுகின்றாள். 7 அன்னவ ளைத்துரத்தி அழியா நிலையிருத்தி என்னைவாழ் விப்பாருண்டோ - கிளியே இலைவாழ் வெனக்கிரண்டோ! 8  26. தமிழ் வாழ்க பல்லவி தமிழ்வாழ்க எனப்பாடுவாய் - பைங்கிளியேசெந் தமிழ்வாழ்க எனப்பாடுவாய். பல்லவி எடுப்பு கமழ்சோலைக் கனிதாரேன் கசிதேனின் சுவைதாரேன் தமிழ்போல அவையின்பம் தருமோபைங் கிளியேசெந் - தமிழ் கண்ணிகள் புலவோர்தம் உளமேயது - தமிழ்வாணர் புகழ்போல உருவாயது நிலமீதில் இதுபோலோர் மொழியுண்டோ கிளியேசெந் - தமிழ் 1 அருளன்புக் கிடமானது - அயல்நாடர் அறியாத பொருள் நூலது முருகின்பத் தமிழ்போலோர் மொழியுண்டோ கிளியேசெந் - தமிழ் 2 நச்சுங்கைப் பொருள் போன்றது - கொளக்கொள்ள நலியாத வளஞ்சான்றது முச்சங்கத் தமிழ்போலோர் மொழியுண்டோ கிளியேசெந் - தமிழ் 3 (25, 26 இவை, 1948 வெளியான தமிழ் வாழ்கஎன்னும் நாடக நூலில் உள்ளவை.)  27. தமிழ்ப் பள்ளு சிந்து எந்தமிழ்ப்பண் பாடுறநாட் காலை யெழுவோம் - புலத் தேரினால் பழந்தமிழ் வயலை யுழுவோம் செந்தமிழ்ச்சம் பாவிதையைத் தெள்ளி யெடுப்போம் - நறுந் தீந்தொடையாப் பாருமணிச் சேற்றில் நடுவோம் முந்துறநன் னீர்பாய்ச்சிக் காத்து வருவோம் - அயல் மொழிச்சொற் களைக்களை களைந்தெ றிகுவோம் வந்தவிருந் தாளிகட்குச் சிந்தை மகிழ - நால் வகைச்செய்யு ளாந்தமிழ்ச்சோ றாக்கிப் படைப்போம். (இது, சிலேடை. பொருள் விளக்கம், எனது காமஞ்சரி என்னும் நாடகத்தின் 13 -வது காட்சியில் காண்க.)  2. இந்தி எதிர்ப்புப் போர் 1. கட்டாய இந்தி யெதிர்ப்பு (1938 -இல் நடந்த கட்டாய இந்தி எதிர்ப்புப் பற்றி அப்போது பாடியது.) நொண்டிச் சிந்து என்றும்நட வாத மொழிப்போர் - முப்பத் தெட்டினில் நடந்தஅக் கட்டாய இந்திப்போர் தென்றமிழ்த் திறம றிகிலா - வடவர் செய்கைபோல்நம் ஆட்சியாளர் செய்கை யினராய்த் தண்டமிழ் இளஞ்சி றுவர்கள் - கட்டாயம் தான்படிக்க வேண்டும்இந்தி தன்னை யென்றனர் கண்டுளங் கொதித்தெ ழுந்துமே - தமிழ் காத்திட எங்கள்பெரியார் மாத்தமிழ் வாழ்க என்றுபோர்ப் பறைய றைந்தனர் - அவ்வொலிகேட் டேர்த்திர ளெனத்தமிழர் ஆர்த்தெ ழுந்தனர் ஒன்றுபத்து நூறெ னப்பட - ஆள்வோர் ஊசலாடக் கண்டுளம்புற் றீசல் போலவே; ஆடவரொன் றோம களிரும் - வீட்டினைவிட் டாயிரமா யிரமென வேயெ ழுந்தனர் கேடுகெட்ட இந்தி யதனை - எதிர்க்கக் கிளம்பினர்நா டோறும்போர்க் களந்தனை நாடி ஆலையிட்ட செங்க ரும்புபோல் - இந்தி ஆட்சியாளர் தோற்றோடுமக் காட்சியைக் காண மாலையிட்டுத் தங்க ணவரைப் - பிள்ளையை வாழ்த்தியே யனுப்பினரக் காழ்த்த மனத்தார். அன்றுவட வோரை யெதிர்க்கக் - கிளம்பிய அத்தமிழ்ப் படையெனவே இத்த மிழ்ப்படை இன்றுவட இந்தி யதனை - ஒழிப்போம் என்றுமே திரண்டெழுந்து சென்றது காணும். அப்பெருந் தமிழ்ப்ப டைக்குமே - படைத்தலைவர் ஆக்கினார் அறிஞர் அண்ணா வைப்பெ ரியாரும் அப்பெரும் படைத்த லைவர்கீழ்த் - தமிழர் ஆரிய இந்தியெதிர்ப்புப் போர்தொ டங்கினர் தந்தைபெரி யாரொ டண்ணாவும் - தம்பியரும் தங்கையரும் ஆர்த்தெழுந்து செங்களம் புக்கு மைந்துடன் முழக்கி நின்றனர் - தமிழ் வாழ்கஇந்தி ஒழிகவெனச் சூழ்கடல் போல. வென்றதில்லை அயலவ ரென்றும் - தமிழரை வெல்லமுடி யுமோநரி வல்லியந் தன்னை என்றுலகோர் நன்று புகலத் - தமிழர் ஏறென இந்தியினையவ் வாறெ திர்த்தனர்; ஊர்கடொறும் இந்தி ஒழிக - என்னும் ஓலமது மாகடல்சூழ் ஞாலமே கேட்க ஆர்கலி யிடைக்க விழ்கலம் - போல் ஆயது கட்டாயஇந்தி ஆய அத்திட்டம். கண்டுளங் கலங்கியே ஆள்வோர் - எதிர்க் கம்முடியா தென்றெணியச் செம்மை யொன்றிலார் தண்டமிழ்ப்பண் பாட்டினுக் கொவ்வா - வழியில் தானடக்க வேமுடிவு தானெ டுத்தனர் கொள்ளைகொண்ட கள்ளரைப் போலக் - கொலைக் குற்றவாளி போலயலிற் பற்றினர் போல கள்ளையுண்ட காமுகர் போலக் - கொண்ட கடன்கொடா தடஞ்செயுங் கயவர்கள் போல எங்களன்புத் தந்தை பெரியார் - தம்மை இட்டனர் சிறையினிலம் மட்டொடு நில்லார். எங்கள்பே ரறிஞர் அண்ணாவை - மட்டுமோ எண்ணிலாத் தமிழரையக் கண்ணிய மில்லார் தள்ளினர் கொடுஞ்சி றையினில் - அவ்வாறு தள்ளத்தள்ளத் தமிழ்ப்படை வெள்ளம் பெருகக் கள்ளமாக வாரியி லேற்றி - ஆளில்லாக் காட்டினிலே விட்டனரிந் நாட்டினை யாள்வோர். ஈவிரக்க மற்ற ஆளுநர் - அந்தோ! ஈருயிருக் காரியராங் காரிகை யென்னும் கோவையிதழ்ப் பாவை யரையும் - காட்டினில் கொண்டுவிட்டார் தண்டமிழால் உண்டு வாழ்குநர் கைக்குழந்தை யோடு தாயரைப் - பாழுங் காப்பகத்தே போட்டடைத்தார் யாப்ப றிவிலார் மிக்குழந்த நோயி னரையும் - வெளியில் விட்டிட மறுத்தனரக் குட்டி யரசர் தாய்மொழிக்காத் தம்முயிர் விட்ட - எங்கள் தாளமுத்து நடராசன் போல வெத்தனை வாய்மொழித் தமிழி ளைஞரைச் - சிறையில் மாளும்படி செய்தனரவ் வாளுங் கட்சியார் எத்தகிடை யூறு செய்யினும் - இந்தி எதிர்ப்பினை விடாமலே எதிர்த்து வந்தனர் முத்தமி ழறிஞர் பலரும் - தாய் மொழிப்போர் புரிந்திடஅவ் வழிக்கு வந்தனர் கட்டாய இந்தி ஒழிக - எங்கள் கன்னித்தமிழ் வாழ்கவெனத் தென்னக மெங்கும் பட்டிதொட்டி தோறும் முழங்கத் - தமிழ்ப் பாவலர் தமிழர்திறம் பாடி மகிழ்ந்தார். தனித்தமி ழுணர்ச்சி யுடனே - தமிழர்க்குத் தாய்மொழிப்பற் றாக்கியதச் சேய்மொழிப் போரும் இனித்தமிழ்க் கிடர்வி ளைப்பவர் - யாரும் இல்லையெனத் தமிழ்மக்கள் சொல்லியே யார்த்தார். ஒன்றுபட்ட வென்றித் தமிழர் - கொண்ட ஒற்றுமையைக் கண்டுசெய லற்றுமே யாள்வோர் வென்றுவிட்டீர் என்பனர் போல - கை விட்டனரீ ராண்டின்பின் கட்டாய இந்தியை. வெற்றிவெற்றி என்று தமிழர் - வர வேற்கவே பெரியார் சிறை மீண்டு மொழிப்போர் வெற்றிபெற் றுயர்ந்த னரென்றும் - இவ் வெற்றிபோல் உலகங்கண்ட வெற்றியொன் றில்லை. வாழ்கதமிழ் வாழ்க தமிழர் - தமிழ் மாப்படை மறவர்களே மாப்புடன் வாழ்க! வாழ்க அன்புத் தந்தை பெரியார் - நீடு வாழ்கபே ரறிஞர் அண்ணா வாழ்க வாழ்கவே.  2. ஆள்வோர் செய்த வேலை சிந்து கேட்டீங்களா ஆள்வோர்செய்த வேலையே - நம்ம கிழட்டுப்பெரி யாரைச்சிறையில் போட்டிட்டாங்கோ காலையே மாட்டாங்களா இனிமேல்விட வெளியிலே - குடி மக்களாட்சி யாளரேன்போ ராரோகெட்ட வழியிலே. 1 கெட்டவழியி லேயவர்கள் போகவே - மக்கள் கெடுத்திட்டாங்க அவரையேதேர்ந் தாட்சியாள ராகவே கட்டவிழ்த்து விட்டவர்போல் குதிக்கிறார் - தலை கால்தெரியா மற்பிறரை என்னவோபோல் மதிக்கிறார். 2 அவரைமட்டு மாசிறையிற் போட்டிட்டார் - எங்கள் அறிஞரண்ணா வோடுநூறு பேரைக்கூடப் போட்டிட்டார் சுவரில்முட்டிக் கொண்டால்மண்டை தப்புமோ - கழகத் தோழர்கள் மனமினிச் சும்மாவிருக்க வொப்புமோ! 3 சென்னையிலே நம்மபெரியார் வீட்டிலே - கழகச் செயலைப்பற்றிப் பேசிக்கொண் டிருக்கஅசைப் பாட்டிலே என்னவென்று கூடக்கேட்டி டாமலே - வண்டியில் ஏற்றிக்கொண்டு போய்ச்சிறையிற் போட்டிட்டார்வி டாமலே. 4 இந்தியைத்தென் னாட்டினைவிட் டோட்டவே - கலந் தெண்ணியே யெல்லாருங்கூடி ஏற்றதிட்டந் தீட்டவே வந்துதிடீ ரென்றுபிடித்துக் கொண்டனர் - தமிழ் மக்கள் வெறுப்பை வேண்டுமென்றே வலியத்தேடித் கொண்டனர். 5 தமிழைக்காக்கப் பாடுபடு வோருக்குச் - சிறைச் சாலையென்றால் சென்னையில் நடக்கும்ஆட்சி யாருக்கு? திமிறிக்கொண்டு திரியும்ஆட்சிப் பீடமே - அடுத்த தேர்தலிற்கட் டாயந்தமிழர் கற்பிப்பார்நற் பாடமே. 6 (1948 இல், பெரியார், அண்ணா முதலிய நூற்றுவரைச் சிறை செய்தபோது பாடியது.)  3. 1948 இந்தியெதிர்ப்புப் போர் 1. இன்பத் தமிழ்கெட இந்தி படித்திடோம் சிந்து இந்தியி னாலெங்கள் செந்தமிழ் கேடுறும் என்று தமிழர்கள் சொன்னார் - அதை ஏற்காமல் ஆளவந் தாரிந்தி கட்டாயம் என்றிறு மாப்பொடு சொன்னார். 1 வீரத் தமிழர்கள் கூடிச் சென்னையிலே வேண்டாம் இந்தியெனக் கேட்டார் - ஆள்வோர் வீம்புபே சிச்செய்வ தைச்செய்யுங் களென்று வீரப்போர்க் குவிதை போட்டார். 2 எங்கள் பெரியாரை ஓமந்தூ ராரழைத் தேமாற்ற லாமெனப் பார்த்தார் - ஆ! எங்கள் பெரியாரா ஏமாறு கின்றவர் இந்தி யெதிர்ப்பென ஆர்த்தார். 3 ஆரிய இந்தி யதையொழிப் பேனென ஆண்மை யொடுவெளிப் பட்டார் - எங்கள் அறிஞர் அண்ணாவைப் படைத்தலை வராக ஆக்கியே போர்தொடுத் திட்டார். 4 இந்தி யெதிர்ப்புப்போர் ஈரைந்தெட் டுநாற்பத் தெட்டினில் தொடங்கி விட்டார் - இனி என்னசெய் வதென்று தோன்றாம லேயாள்வோர் ஏக்கத்தி னிலாழ்ந்து விட்டார். 5 காலையும் மாலையுந் தொண்டர்கள் பள்ளிமுன் காவலர் போன்றுநிற் கின்றார் - நீங்கள் கட்டாயம் இந்தி படிக்கவேண் டாமெனக் கைகூப்பிக் கேட்டுக்கொள் கின்றார். 6 இல்லையில் லையெங்கள் இன்பத் தமிழ்கெட இந்தி படித்திட மாட்டோம் - என ஏறுபோல் மாணவர் கூறியே செல்வதை எங்கள் செவியாரக் கேட்டோம். 7 சென்னை நிலமெங்கும் இந்தி ஒழிகநம் செந்தமிழ் வாழ்கெனும் பேச்சே - அதைச் சென்னை யரசினர் கேட்டுக்கேட் டுமனம் திக்குமுக் காடிட லாச்சே. 8 2. இந்தியெதிர்ப்பு - ஊர்வலப் பாட்டு சிந்து சீர்மி குந்த தமிழ ரிந்திப் போர்பு ரிந்து வருகிறார் சென்னை மக்கள் திரண்டு வந்து சேர்ந்து ணர்ச்சி தருகிறார் கூர்மி குந்த கத்தி யின்றிக் குருதி சிந்த லின்றியே கொடுமை யையெ திர்த்து நின்று கொள்ளு வோம்நாம் வென்றியே. 1 அடிமை கொள்ள இந்தி யென்னும் ஆரி யப்பெண் வருகிறாள் அண்டி வாழ்ந்தி ருக்கும் ஊமை அன்னை யூக்கந் தருகிறாள் மடிமை யின்றி இருவ ரையும் வடக்கு நோக்கி யோட்டுவோம் வம்பு செய்யின் தமிழர் வீர மரபை வெளியிற் காட்டுவோம். 2 சூழ்ச்சி யாகப் பொதுப்பெண் டென்று சொல்லிக் கொண்டு நுழைகிறாள் சொரணை யற்ற தமிழர் தம்மைத் துணைவ ராக்க விழைகிறாள் ஆட்சி யாளர் பதவிக் காக அவளை மறுக்கத் தயங்கிறார் அரசு புரியும் வடவ ராணைக் கஞ்சி நெஞ்சந் தியங்கிறார். 3 வீரத் தமிழ மகளிர் வீட்டை விட்டு வெளியில் வாருங்கள் விதிர்ப்பில் லாமல் நடக்கும் இந்தி எதிர்ப்புப் போரிற் சேருங்கள் கார மின்றி நுழையும் இந்திக் கணிகை மயிரைப் பிடியுங்கள் காறி முகத்தில் உமிழ்ந்து துடைப்பக் கட்டை யாலே அடியுங்கள். 4 ஊர்கள் தோறும் வடவர் இந்தி ஒழிக வென்று முழக்குங்கள் உண்மைத் தமிழ் மரபைத் தமிழர் உணரும் படிக்கு விளக்குங்கள் பேர்கள் தோறும் தமிழ ரென்னும் பெருமை யுணர்ச்சி கொள்ளுங்கள் பேதை இந்திப் பரத்தை தன்னைப் பிடரைப் பிடித்துத் தள்ளுங்கள். 5 இந்தி யால்நம் தமிழர்க் காகும் இழிவை யெடுத்துக் காட்டுங்கள் இன்பத் தமிழர் இனமொன் றாக இனவு ணர்ச்சி யூட்டுங்கள் அந்த நாளிற் போல வெற்றி அடையப் பகையை எள்ளுங்கள் ஆணும் பெண்ணும் ஒருங்கெல் லோரும் அமைதி யைக்கை கொள்ளுங்கள். 6 நாளும் பொழுதும் ஊர்வ லங்கள் நடத்திப் பகையைக் கடியுங்கள் நமது தலைவர் பெரியார் சொல்லை நன்கு கடைஇப் பிடியுங்கள் கேளுங் கிளையு மாகத் தமிழர் கிளம்பி யொன்று கூடுங்கள் கேலி செய்யுந் தமிழர் நெஞ்சைக் கிளறி யுறவைத் தேடுங்கள். 7 வெற்றி வெற்றி வெற்றி யென்று வீர முழக்கஞ் செய்யுங்கள் விரும்பி யேநம் அறிஞர் அண்ணா வெற்றி காண வையுங்கள்ள ஒற்று மையாய் இந்தி ஒழிக ஒழிக வென்று சொல்லுங்கள் உறுதி யாக வடவர் இந்தி ஒழியு மட்டும் நில்லுங்கள். 8  3. தமிழ்க் கொலை செய்யாதீர் சிந்து இனியதமிழ் நாட்டினிலே இந்தி கட்டாயம் - தமிழ் எந்தவட நாட்டினுமே இல்லை கட்டாயம். 1 கரும்பிருக்க வேம்பையுண்ணும் கடைமக னுண்டோ - நம் கன்னித்தமிழ் இருக்கஇந்தி கனிந்த கற்கண்டோ? 2 ஆரியத்தால் இந்தநிலை ஆயினோ மையா - இந்தி யாலினியென் னாகுவமோ யார்கண் டாங்கையா. 3 செத்தவட மொழிதமிழைச் சீர்கு லைத்ததே - இந்திச் சிறுக்கிவரின் இருக்கிறதும் சேர்ந்து செத்ததே. 4 ஆங்கிலத்தால் எங்கள் தமிழ் ஆன திந்நிலை - இந்தி அரசுவரின் வரிசையிழந் தகலுந் தென்கலை. 5 வடவர்செயுஞ் சூழ்ச்சிக்கினி மயங்கவே மாட்டோம் - இந்தி வலையிலொருக் காலும்வீழ்ந்து வருந்தவே மாட்டோம். 6 தலையைக் கொடுத் தேனுமெங்கள் தமிழைக் காக்குவோம் - இந்திச் சனியனைத்தென் னாட்டைவிட்டுத் தானே போக்குவோம். 7 தாய்மொழிமேல் ஆணையிட்டுச் சாற்று கின்றனம் - ஐயா தமிழ்க்கொலைசெய் யாதீரென்று போற்று கின்றனம். 8 வீட்டுக்கொரு தமிழர்வீதம் விரைந்து வாருங்கள் - இந்தி வெருவியோடத் தமிழ்மொழிப்போர் வெற்றி தாருங்கள். 9 அயர்ந்திடாமல் இந்தியொழியும் அளவுங் கடவுங்கள் - அறிஞர் அண்ணா அவர்தம் ஆணைப்படி அடங்கி நடவுங்கள். 10 எந்தமிழ்மா ணவமணிகாள் இந்தி வகுப்பை - நீங்கள் எட்டியும்பா ராதிருத்தல் எய்துஞ் சிறப்பே. 11 எங்கள் தமிழ் வாழ்கவட இந்தி ஒழிக - என எல்லோரும் சொல்லுங்கள்நம் அல்லல் ஒழிக! 12 4. இந்திச் சிறுக்கியை ஈங்கிருக்கவிடோம் சிந்து தமிழர்களெல் லாருந்திரண்டு வாருங்கள் - நம் தாய்மொழியைக் கெடுக்கும் இந்திச் சனியையோட்டப் பாருங்கள் அமிழ்திருக்க நஞ்சையுண்ணு வார்களோ - இந்தி யதனைத்தமிழ்ச் சிறுவர்கற்க ஆவல்கொள்ளு வார்களோ? 1 வடக்கத்தியான் ஆதிக்கத்துக் காகவே - இந்தி வலுக்கட்டாய மாகப்புகுத்தப் படுகுதுமுன் பாகவே தடுக்கத்தவறி னால்வடவர்க் கடிமையா - செந் தமிழினோடு பெருமைமிக்க தமிழர்வாழ்வுங் கெடுமையா. 2 தகுந்தவேலை கிடைக்குமென்று பேசுவார் - நம் சண்முகத்தின் நிலையையெண்ணிப் பார்க்கின்மனங் கூசுவார் மிகுந்தபதவி வேட்டையாடு வோர்களே - இந்தி வேண்டுமென்று தமிழர்முன்பு. வீம்புபேசு வார்களே. 3 என்றும்வடவர்க் கடிமையாகத் தமிழகம் - இருந்த தில்லையில்லை யினியுமடிமை யில்லையென்றுந் தமிழகம் சென்றுவடவர் காலடிக்கீழ்த் தாழ்ந்திடோம் - இந்திச் சிறுக்கியையீங் கிருக்கவிட்டுச் சிறிதுபொழுதும் வாழ்ந்திடோம். 4 நூற்றுக்குத்தொண் ணூறுதமிழர் தற்குறி - இந்தி நுழைக்கவெண்ணுந் தமிழமைச்சர் ஒன்றையிரட்டைக் கற்குறி சாற்றுக்குப்பில் லாதபோது சர்க்கரை - எனும் தாயைப்போலும் தமிழைக்கொல்ல இந்திபுகுத்தும் அக்கறை! 5 தமிழனொருவன் உயிரோடிருக்கும் வரையிலும் - செந் தமிழகத்தில் நுழையவிந்தி தனைவிடோமெக் கரையிலும் அமிழுமலையின் அடியில்வடவர் சூழ்ச்சியே - இந்தி அரசுகாண எண்ணுமெண்ணம் ஆரியத்தின் வீழ்ச்சியே. 6 வடவர்க்கடிமைக் குடிகளான பேர்களே - இந்தி வாழ்கவென்று தமிழ்பயின்ற வாயினாற்சொல் வார்களே அடிமைத்தமிழர் சிலருக்காக இந்தியே - உன்னை அண்டவிடோம் தமிழகத்தில் அறிந்துசெல்வாய் முந்தியே. 7 நன்றிலாத குட்டிநாயு ளைத்ததால் - பட்டி நாய்க்குக்கேடு வந்ததென்னும் நன்மொழியை ஒத்ததால் உன்றனாலுன் தாய்க்குமிங் கினியிடம் - இல்லை ஓடுவீ ரிருவரும் ஒருங்குநும் இருப்பிடம். 8 தலைவர்பெரியா ருடனெங்கண்ணா இருக்கையில் -அண்ணன் தம்பிமார்கள் மார்புதட்டித் தருக்கிமீசை முறுக்கையில் நிலைமையறி யாமலீங்கு வந்தனை - எதிரில் நிற்பையாகில் இந்திநீகட் டாயமாயொ ழிந்தனை. 9 (மேலுள்ள நான்கு பாடல்களும் 11, 13, 14, 16 - 11 -48 'விடுதலை'யில் வெளிவந்தவை.)  4. இந்தி படிக்க மறுத்தல் (1948 இந்தி எதிர்ப்பின் போது பாடியது.) பல்லவி படிக்கவே மாட்டேன் - அம்மா படிக்கவே மாட்டேன் - அப்பா படிக்கவே மாட்டேன் - நம் பைந்தமிழைக் கெடுக்கஇங்கு வந்தஇந்தி மொழியையானும் - படிக் பல்லவி எடுப்பு வடக்கிருந்து தெற்குநோக்கி வந்துதமிழைக் கெடுக்கநினைக்கும் இடக்குமுடக் கானஅந்த இந்தியைக்கட் டாயம்நானும் - படிக் கண்ணிகள் அய்யாசொல்லை அண்ணாசொல்லை அம்மாநானும் தட்டியே அப்பாவாயில் வந்தபடி அழுகஅழுகத் திட்டியே எய்யாதோயா தடித்தேயென்னை இருதுண்டாக வெட்டியே எறிவேனென்றச் சுறுத்தினாலும் இந்திவகுப்பைக் கிட்டியே - படிக் 1 காலுங்கையுங் கட்டிமணலிற் கடுவெயிலிற் படுக்கினும் கண்ணைக்கட்டி ஆளிலாத காட்டிற்கொண்டு விடுக்கினும் மேலுந்தோலும் உரியப்புளிய மிலாறுகொண்டே அடிக்கினும் மேனிமுழுதும் ஊசிகொண்டு விடியவிடிய இடிக்கினும் - படிக் 2 கண்டதுண்ட மாகவென்னைக் கத்தியாலே அரியினும் கஞ்சியின்றி யுடம்புதேய்ந்து கருகியாவி பிரியினும் மண்டையிலே நெருப்புச் சட்டி வைத்துத்தீமூண் டெரியினும் மாறுகால்கை வாங்கி யென்னை வன்கொலையே புரியினும் - படிக் 3 குடிக்கத்தண்ணீ ரின்றியுடம்பு குழியைநோக்கி யேகினும் கொடுமைபலவும் புரிந்துமுடிவில் கொல்லக்கொண்டு போகினும் அடிக்குப்பஞ்ச மில்லையாக அல்லும்பகலு மாகினும் அழுகஅழுக உம்மைவிட்டே அலறிக்கொண்டு சாகினும் - படிக் 4 நெஞ்சிலீர மின்றிக்காய்ந்த நெய்க்குளென்னை விடுக்கினும் நீக்குப்போக்கி லாமலந்தோ நெஞ்சிலாணி யடிக்கினும் எஞ்சியீங்கோர் கொடுமையின்றி எல்லாஞ்செய்து முடிக்கினும் எங்களின்பத் தமிழைப்படித் திடாதுசிறையி லடைக்கும் - படிக் - 5  5. ஆள்வோர்க்கு (1948இல் பாடியது) பல்லவி வேண்டாங்கட் டாயமே விலைகொடுத் தாலும்இந்தி - வேண் முடுகு விருப்ப மிலாது படித்திடி னொருமொழி உருப்படு மோவக லாது பெரும்பழி - வேண் விலக்கிய கலைக்குண மேயத னூல்வழி இலக்கிய விலக்கண மேதுமி லாமொழி - வேண் வெட்டுப்பழி குத்துப்பழி யொடுகழி முட்டுப்படு தட்டுப்படு கடுமொழி - வேண் மேருவினை வென்றடிப் படுத்தவர்க்கு நேருவினை நின்றடிப் பிடிப்பதற்கு - வேண் வெந்தபுண்ணில் வேல்நுழைக்கும் இந்திமொழி செந்தமிழ ழிந்திடத்த குந்தமொழி - வேண் வெள்ளைத் தமிழர்க ளுள்ளத் தினிலொரு கள்ளப் புதர்படு முள்ளைச் சொருகுதல் - வேண் பல்லவி எடுப்பு ஆண்டாலும் நீங்கள்நாட்டை ஆண்டுகொண் டேயிருங்கள் ஆரியத் துக்கடிமை ஆக்காம லேயிருங்கள் மாண்டாலும் நல்லபெயர் வாங்கத் தகவிருங்கள் வாய்க்குவரா இந்திநுழைக் காதீர் - தமிழ் மக்களுக்குத் தீமையிழைக் காதீர் - தமிழ்த் தாய்க்கயலாள் தன்னையழைக் காதீர் - கனி தன்னைவிட்டுக் காஞ்சிரங்காய் உண்ணநினைப் பாருமுண்டோ - வேண் கண்ணி இந்தியி னாற்கட்டாயம் இன்பத் தமிழழியும் என்று தமிழறிஞர் எடுத்தெடுத் தேமொழியும் அந்த அறிவுரைகேட் டடிமை நினைவொழியும் ஆரியத்தைக் காக்கமுனை யாதீர் - தமிழ் அன்னையைக் கெடுக்கநினை யாதீர் - வெறும் சாரமற்ற ஓட்டைவனை யாதீர் - எங்கள் தாளமுத்து நடராசன் போலவெத்த னைபேரின்னும் - வேண்  6. மாணவர் இந்தியெதிர்ப்பு - 1965 (1965இல் பாடியது) பல்லவி அந்தோசொல் லொண்ணாக் கொடுமை - இருபத் தைந்தொன் றறுபத் தைந்தில் ஆட்சியா ளர்செய்தது - அந் பல்லவி எடுப்பு இந்திஒழிக வாழ்க எந்தமிழ் என்றூர்வலம் வந்தமா ணவரைவ லிந்துசுட்டுக் கொன்றது - அந் கண்ணிகள் வையகந் தன்னிலிது வரையினுங் கேட்டதில்லை வருங்கால மன்னரையாள் வார்கொன்றா ரென்றசொல்லை ஐயோஆள் வோர்செய்கொடு மைக்கோ ரளவேயில்லை அடிமைத் தமிழராட்சி யால்வந்த திந்தத்தொல்லை - அந் 1 காட்டு விலங்குகளை வேட்டையா டுதல்போலக் கையோயும் வரைசுட்டே ஐயோகொன் றார்கள்ஞால மாட்டுக்காட் டாட்சிக்கொரு காட்டாநின் றார்கள்போல மக்களாட் சிக்கீதோரி லக்கணம் ஆகும்போலும் - அந் 2 ஊர்வல மாகஇந்தி ஒழிக எனச்சென்றாரை ஓடஓடத் துரத்தி உதைத்தடித் துக்கொன்றாரை யார்வல முடையரென் றடித்துப்பார்த் துநின்றாரை அம்மா கொடுமையிலொப் பாருல கத்தின்றாரே - அந் 3 குண்டாந் தடியினாலே மண்டையி னையுடைத்தார் கொட்டுங் குருதியினைக் குடிக்கும் படிபுடைத்தார் உண்டோ இனியும்இந்தி ஒழிப்பென வேயிடித்தார் ஒழிக தமிழென்றந்தோ உரைக்கும் படியடித்தார் - அந் 4 தமிழ்வாழ்க என்றுசொன்ன அமிழ்தவா யனைஅன்றார் சாலா ஆணிச்செருப்புக் காலால் மிதித்துக்கொன்றார் அமிழாதோ பெருநாவா யதுவும் புயலாலென்றோ அடுத்ததேர் தலிற்சீட்டுக் கொடுத்து விடுவாரன்றோ - அந் 5 தெருவிலூர் வலமாகச் செல்லாம லேதடுத்தார் சென்றாரைக் கீழேதள்ளிச் செருப்புக்கா லாலுதைத்தார் அருவிபோற் செங்குருதி பெருகும் படிபுடைத்தார் ஐயோ தாறுமாறாக எய்யாம லேயடித்தார் - அந் 6 போகாதே என்னவோர்சேய் போவேனென் றோடஒன்றார் போட்டுக்கா லால்மிதித்துத் தீட்டுக்கல் போலக்கொன்றார் வேகாதோ பெற்றோர்மனம் வேகப்பே ராயமன்றார் வேட்டைக்கா டாகத்தமிழ் நாட்டையெண் ணியாள்கின்றார் - அந் 7 இந்திப் பலகையினை எடுக்கக்கம் பத்தின்மேலே ஏறவோர் மாணவன்பாய்ந் தேயவன் காலின்மேலே அந்தோகுண் டாந்தடியால் அடித்துவீழ்த் ததுபோலே அட்டூழி யங்களெல்லாம் அறைந்தா லாகுமோர்நூலே - அந் 8 கன்னித் தமிழர்களைக் காற்பந் தெனநினைத்துக் கண்ட படிசெருப்புக் காலால் உதைத்துதைத்துத் தின்னக்காஞ் சிரங்காயைத் தேடித்தே டிப்பறித்துத் திரிவார்போ லேகொடுமை செய்தாரை யோகறுத்து - அந் 9 பள்ளிகல் லூரிகளிற் பகற்கொள்ளை போற்புகுந்தார் பைந்தமிழ்ச் செல்வங்களை அந்தோ அடித்தலைந்தார் கொள்ளை கொலைஞரைப்போற் கொடுமை பலபுரிந்தார் குடியர சென்றுசொல்லிக் கொடியர சாய்நடந்தார் - அந் 10 பஞ்சாப் படுகொலைஞன் பாவி டயர்கண்டஞ்சிப் பாவமென் றேயிரக்கப் படவவன் றனைமிஞ்சி அஞ்சா தடித்துக்கொன்றார் அடாச்செயல் தன்னில்விஞ்சி ஐயோ மக்களாட்சியீ தாமோ எண்ணுவீர்நெஞ்சில் - அந் 11 அந்தோ எழுதவொண்ணா ஆள்வோர்செய் தகொடுமை ஆகாதவ் விந்தியென்றால் அடிப்பதோ ஆள்கடமை தந்தே உயிரைத்தங்கள் தாய்மொழி யாமுடைமை தன்னைக்கா வாதமக்கள் தாமல்ல ரோவடிமை - அந் 12  7. தீக்குளித்த செம்மல்கள் அறுசீர்விருத்தம் இந்தியை எதிர்த்துக் கொல்லும் எரிபுகுந் துயிரை விட்ட செந்தமிழ்ச் சின்னச் சாமி சிவலிங்கம் அரங்க நாதன் சந்தவீ ரப்பன் முத்து சாரங்க பாணி என்போர் தந்தமிழ்ப் பற்றை எண்ணித் தமிழென வணங்கு வோமே.  8. இந்தி - தமிழ் ஏசல் சிந்து தமிழ் மானவெட்க மில்லையோ சொல்லும் - இந்தியே தமிழ் மண்ணைமிதிக் காமலே செல்லும் போனபத்தாண் டுக்குமுன்தான் ஆனமட்டும் பார்த்துவிட்டு நானிருக்க வில்லையென்று போனையே வடக்குநோக்கி -மான இந்தி ஒன்றுமறி யாதவள் போலே - வழவழாவென் றுளறுகிறாய் போடியப் பாலே அன்றுவெள்ளைக் காரர்துணை யாலென்னை யெதிர்த்துவென்றாய் இன்றெனது காலடிக்கீழ் இருந்துகொண்டேன் பற்றுகின்றாய் - ஒன் தமிழ் இமயமுதல் குமரி வரையும் - ஒருமொழிவைத் திந்நிலத்தை யாண்ட வரையும் தமிழர்திற மறியாதவுன் தந்தையர்முன் பட்டபாட்டை நிமையுமெண்ணிப் பாராதுநா நீட்டுகிறாய் கெட்டகேட்டை -இம இந்தி ஊர்ந்தனனென் பாட்டன் குதிரை - எனவேநீயும் உளறுகிறாய் போட்டி மூதுரை வாழ்ந்தபெரு வாழ்வையெண்ணி வக்கணைபே சாதேகெட்டாய் ஆழ்ந்தனையின் றோவெனக்கோ ராளடிமை யாகிவிட்டாய் -ஊர் தமிழ் இந்தவறி வதுநிற் கிலையோ - உலகில்திடீ ரென்றுவந்த வாழ்வு நிலையோ? எந்தமிழர் களேமாந்து நொந்தழு திரங்கக்கண்டு தந்தனரி டம்புதிதாய் வந்தவ ளெனவேகொண்டு - இந் இந்தி வேண்டுமென்றி டந்தர வில்லை - வெள்ளையரை வென்றுகொண்ட தறிந்தனை யில்லை பூண்டனனிந் நாட்டையாளும் புதியவர சக்கிழமை ஈண்டைய நிலையினைவிட் டேன்புகல்கின் றாய்பழமை -வேண் தமிழ் அதோவெங்களண் ணாவரு கின்றார் - தம்பிமாரும் அவரொடுகூ டவரு கின்றார் எதோவிருந்து தொலைந்துபோறா ளென்றிருந்தா ரிதுநாள்மட்டும் இதேநொடியி லிங்குநில்லா தேயுனது கடையைக்கட்டும் -அதோ இந்தி அண்ணாதம்பி மார்கள்தா மென்னே - அவர்களுடை அய்யாவேனும் வரட்டுமே யின்னே எண்ணாதேயவ் வளவெளிதா என்னையோட்டி விடலாமென்று மண்ணாளுமென் னோடுசும்மா வம்புக்குவா ராதேயின்று - அண் தமிழ் சட்டமெனும் வாளினை யேந்தி - அதோவெங்கண்ணா தம்பியருடன் வருகிறார் காந்தி கெட்டுத்தொலை யாதேயின்றே சட்டெனத் தமிழகத்தை விட்டுத்தொலைந் தேயடைவாய் பொட்டெனவுன் தாயகத்தை - சட் இந்தி சட்டமென்ன செய்திடு மோது - டில்லியிலென் தலைவரிருந் தாளுமிப் போது வெட்டிவீம்பு பேசாதேயுன் வேலையைப்போய்ப் பார்ப்பாயடி தட்டிப்பேசி னாற்சிறையில் தள்ளுவேன்யார் கேட்பாரடி - சட் தமிழ் தப்புக்கணக்குப் போடுவ தொண்ணா - உனையொழிக்கச் சட்டஞ்செய்து விட்டாரெங் கண்ணா இப்பவேநீ மூட்டைமுடிச்சை எடுத்துக்கொண்டோட் டம்பிடிப்பாய் அப்புறமுன் பாடெனைநொந் தாவதாற்பய னிலைகண்டிப்பாய் - தப் இந்தி அம்மா அறிவு வந்தது பிழைத்தேன் - தமிழர்திறம் அறியாமலே வம்புக் கழைத்தேன் சும்மாகூடத் தெற்கேதலை தூக்கியினிப் பார்க்கமாட்டேன் அம்மா வெனைச் சும்மாவிட்ட அண்ணாபெயரை மறக்கமாட்டேன் - அம்  9. ஒழிந்ததிந்தி (23 - 1 - 1968 இல் தமிழகச் சட்டமன்றத்தில் இந்தி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்டபோது பாடியது.) சிந்து ஒழிந்ததிந்தி இருபத்துமூன் றொன்றறுபத் தெட்டினிலே உலகத்தமிழ் மக்களெல்லாம் மகிழவே - அண்ணாவின் உண்மைத்தமிழ்ப் பற்றையுலகம் புகழவே. 1 உலகம்புகழ்ந் தேத்தத்தமிழ் உலகையாளும் அண்ணாவினால் ஒருபடியா ஒழிந்ததிந்தித் தொல்லையே - தமிழர் உவப்பினுக்கோர் அம்மாஇல்லை எல்லையே. 2 அன்றுமுப்பத் தெட்டினிற்கட் டாயஇந்தி யதனைத்தமிழர் அஞ்சியோட எதிர்த்துவிரட்டி யடித்தனர் - தமிழுக் காகவுயிரைக் கொடுத்துவாகை முடித்தனர். 3 இந்தியாவின் பொதுமொழிய திந்தியெனத் தமிழர் தலையில் இந்தியினைச் சுமத்தவேமுற் பட்டனர் - அதற் கேற்றசட்ட திட்டமுஞ்செய் திட்டனர். 4 ஆட்சிமொழி யாகுந்தகுதி அணுவுமில்லை இந்திக்கென்ற அறிஞருரையை ஏற்கமறுத் திட்டாங்கோ - இந்தி யதுதான் ஆட்சி மொழியெனமுற் பட்டாங்கோ. 5 ஆகாதிந்தி யாதிக்கமென் றடுத்தடுத்துப் படிப்படியா அறிவறிந்த பெரியாரெல்லாஞ் சொன்னாங்கோ - ஆனா அதனையிந்தியர் கேட்கமாட்டே மென்னாங்கோ. 6 கூட்டாளித் தமிழர்களைக் கொண்டேஇந்தி யாதிக்கத்தைக் கொண்டுவர வடவர்முனைந்து நின்றாங்கோ - அதனால் கோட்டைவிட்டே அறுபத்தேழில் சென்றாங்கோ. 7 தமிழர்கள்மேல் குதிரையேறத் தலைமையாட்சி இந்தி வெறியர் தாங்களாகச் சட்டஞ்செய்து கொண்டாரே - தமிழர் தலைவர் அறிஞர் அண்ணா அதனைக் கண்டாரே. 8 தமிழைத்தாழ்த்தச் செய்தஅந்தச் சட்டத்தைத் தகர்த் தெறிதல் தமிழர்கடமை யாமெனமுற் பட்டனர் - இந்தியொழிப்புச் சட்டஞ்செய்ய உடனேதிட்ட மிட்டனர். 9 தம்பிதங்கை மார்களோடு சட்டமென்னும் படையாலிந்தி தனைமுதுகிட் டோடத்துரத்தி யடித்தனர் - தமிழ்த் தாய்மகிழ அண்ணாவாகை முடித்தனர். 10 ஓடுகிறாள் ஓடுகிறாள் ஓட்டமாக வடக்குநோக்கி ஓடுகிறாள் இந்தியென்னும் சிறுக்கியே - தமிழர் உவந்துகைகொட் டிச்சிரிக்க வெறுக்கியே. 11 வகையறியா தையோதெற்கே வந்துவிட்டேன் இனி யெந்நாளும் வரவேவர வில்லையென்று செப்பியே - தமிழர் மகிழ்ந்துகாண ஓடுகிறாள் தப்பியே. 12 தமிழர்திற மறியாமலே தப்புக்கணக்குப் போட்டஎம்மோர் தமைநம்பித்தமி ழகத்திடைக்கால் போட்டனே - தெற்கே தலைவைத்தினிக் கூடப்படுக்க மாட்டனே. 13 பைந்தமிழ்மா ணவர்தம்பெரும் படைக்கெதிரே நிமிர்ந்துமுகம் பார்த்துநிற்கும் உறுதியெனக் கில்லையே - முன்னே எண்ணிப் பாராமலே அடைந்தேனிந்தத் தொல்லையே. 14 என்றுகூறி வடக்குநோக்கி இந்திஎன்னும் சிறுக்கிஓட்டம் எடுத்தாள்கைகூப் பித்தொழுது கெஞ்சியே - பாவம்! எங்கள் அறிஞர் அண்ணாதிறங்கண் டஞ்சியே. 15 வெற்றிவெற்றி இந்தியொழிப்பு வெற்றிபழந் தமிழர்கண்ட வெற்றிபோலும் அண்ணாகண்ட வெற்றியே - உலகம் வியந்துபுகழ்ந் தேத்திடுமா வெற்றியே. 16  3. தமிழ் நாடு 1. நாட்டுப் பண் (இது, 1948 இல் வெளியான தமிழ் வாழ்க என்னும் நாடகத்தில் உள்ளது.) எண்சீர் விருத்தம் விண்ணுயர் முடியும் அடியும் உடைய வேங்கட முதலா ஓங்குபன் மலையும் தண்ணென வொளிறுங் காவிரி முதலாத் தகுவளஞ் செய்யும் பலவுயி ராறும் கண்ணென உளமும் உணர்வுங் கவரும் காடும் மலையும் கடலும் வயலும் உண்ணென உணவும் பிறவும் உதவும் உலகோர் விருப்பும் உயர்தமிழ் நாடே. 1 அந்தணர் வகுத்த அறமுதல் மூன்றும் ஆணொடு பெண்ணும் அமைவொடு நுகரச் செந்தமிழ் வாணர் தாய்மொழி வளர்க்கத் திசைதொறும் வணிகர் பெரும்பொரு ளீட்ட வெந்திறல் மறவர் விழைவொடு காக்க விருந்தினர் தெவிட்ட வினைதக நிகழ முந்தையொர் முறையை உயிரெனப் போற்ற முறையொடு பொலியும் முத்தமிழ் நாடே. 2  2. பழந்தமிழகம் அறுசீர் விருத்தம் இமயமது தலைதூக்கா அக்காலத் தேதமிழர் எனப்பேர் பெற்றே அமைதியொடு தகவாழ உலகமுதற் கருவாக அமைந்து பொய்யாக் குமரியொடு பஃறுளியா றிடைபாயப் பல்வளமுங் கொழித்து நின்ற எமதுபழந் தமிழகத்தைத் தலைதாழ்த்து நினைத்திறைஞ்சி ஏத்து வேமே. 1 சிந்துவெளி நாகரிகந் திசைபரவ இசைபரப்பிச் சிறந்து வாழ்ந்து வந்தபழந் தமிழர்களாந் திராவிடரீங் காரியர்கள் வாரா முன்னர் முந்துபல ஆயிரவாண் டினியதமிழ் மொழிபேசி முறையின் வாழ்ந்த எந்தமிழ்நன் னாடதனைத் தலைதாழ்த்து நினைவதுகூர்ந் திறைஞ்சு வேமே. 2 நண்ணாமற் பகையிருளைக் காத்துயிர்நீத் தார்போல நயந்துன் பேரை உண்ணாமல் உயிர்நீத்த சங்கரலிங் கம்பெயரை ஒளிரச் செய்த அண்ணாவின் பிறந்தகமே தமிழ்மக்கள் தாயகமே அமிழ்தின் மிக்க பண்ணாருந் தமிழ்நாடே வாழ்கவென வாழ்த்திநினைப் பரவு கின்றேம். 3  3. எந்தமிழ் நாடு கும்மி எந்தமிழ் நாடெனும் போதினிலே - நனி இன்ப மளாவுதென் காதினிலே முந்தையர் நாடென்று சொல்லையிலே - புகழ் முன்வந்து நிற்குதவ் வெல்லையிலே. 1 கற்றுமேம் பட்ட தமிழ்நாடு - மாதொல் காப்பியங் கண்ட தமிழ்நாடு முற்று முணர்ந்த முதுக்குறை நல்லார் மொழிவழிப் பட்ட தமிழ்நாடு. 2 செப்ப முடைய தமிழ்நாடு - மேழிச் செல்வஞ் சிறந்த தமிழ்நாடு ஒப்புயர் வில்லாத் திருக்குற ளையிவ் வுலகினுக் கீந்த தமிழ்நாடு. 3 நந்தா வளஞ்சேர் தமிழ்நாடு - வெளி நாட்டார் விரும்புந் தமிழ்நாடு சிந்தா மணியும் மணிமே கலையும் சிலம்பு மொலிக்குந் தமிழ்நாடு. 4 பத்துப்பாட் டெட்டுத் தொகைதனிப் பாடலும் பாவும் இனமும்பல் காப்பியமும் வித்தி விளைத்து விழுப்பயன் கொண்டு விழுத்தக வாழ்ந்த தமிழ்நாடு. 5 ஒளவை பிறந்த தமிழ்நாடு - பன்னூல் ஆய்ந்து தெளிந்த தமிழ்நாடு செவ்விய செங்கோ லதற்குயிர் விட்ட செழியன் பிறந்த தமிழ்நாடு. 6 மேருவில் வில்புலி மீன்பொறித் திட்டமூ வேந்தர்க ளாண்ட தமிழ்நாடு போரெனில் வாழ்த்தி விடைகொடுக் கும்மிளம் பூவையர் வாழ்ந்த தமிழ்நாடு. 7 காத லிருவர் கருத்தொரு மித்துக் களித்துவாழ்ந் திட்ட தமிழ்நாடு சாத லுறினும் ஒழுக்கந் தவறாத் தகவினர் வாழ்ந்த தமிழ்நாடு. 8 கண்ணகி போன்றுல கம்புகழும் - மறக் கற்பின்மேம் பட்டுக் கதழ்ந்துயர்ந்த பெண்ணலஞ் சான்றநல் வீரமா பத்தினிப் பெண்டிர்கள் வாழ்ந்த தமிழ்நாடு. 9 ஞாயிறு தோன்றி யமையுல கின்முதல் நாடெனப் பெற்ற தமிழ்நாடு மாயிரு ஞாலந் தனில்முதல் மாந்தர்கள் வந்து பிறந்த தமிழ்நாடு. 10 நீல மலைநீர்கொள் சாலென மேற்கினில் நின்றரண் செய்யுந் தமிழ்நாடு கோலக் குமரிபோல் வேங்கடத் தைப்பிறர் கொள்ளவிட் டிட்ட தமிழ்நாடு. 11 பஃறுளி யாறுங் குமரியும் பாய்ந்து பருவளம் பட்ட தமிழ்நாடு அஃகமும் காசும் பொலிதர மக்கள் அமைவொடு வாழ்ந்த தமிழ்நாடு. 12 காவிரி வையை பொருநைதென் பெண்ணையான் காஞ்சிபா லாறுபூ வானியெனும் மாவளம் பட்டபல் லாறுகள் பாய வயல்வளம் பட்ட தமிழ்நாடு. 13 வில்லும் புலியுங் கயலும் மிசையுற மேற்குங் கிழக்குங் கடலினிடைச் செல்லுங் கலங்கண் டுவக்குற வாணிகச் செல்வஞ் சிறந்த தமிழ்நாடு. 14 கைத்தொழில் வாணிகம் ஏர்த்தொழி லென்னக் கணிப்புற வாழ்வுக் கணிப்புறுமாம் முத்தொழில் வையம்பு கழ்த்தொழி லாக முறையொடு வாழ்ந்த தமிழ்நாடு. 15 மாரியும் வெள்கிட வாரி வழங்கிய வள்ளல்கள் வாழ்ந்த தமிழ்நாடு போரையும் ஏரையும் பாடிய பொய்யிற் புலவர்நாப் பூத்த தமிழ்நாடு. 16 போரிற் புறங்கொடா வீரர்களும் - முறை போய முடியுடை மூவர்களும் காரிற் கொடையெதிர் செல்வர்களும் - தங்கள் கண்ணெனக் காத்த தமிழ்நாடு. 17  4. வானாரும் நீலமலை சிந்து வானாரும் நீலமலை எங்கள் மலையே - மலை வளங்காண இதுபோற் பிறிதொன் றிலையே கானாரும் காவிரியா றெங்கள் ஆறே - நெற் களஞ்சியங் காணுமா றில்லை வேறே தேனாருந் திருக்குறள் எங்கள் நூலே - எத் திசையினு மில்லையொரு நூலிது போலே கோனாரும் செந்தமிழ்நா டெங்கள் நாடே - போற்றிக் கொள்ளுவோ மிதையெமக் கில்லை யீடே. 1 முந்தையோர் வாழ்க்கைமுறை முற்றிய நாடு - நல் மூதறி வாளரறம் பற்றிய நாடு வெந்திறல் வேல்மறவர் வெற்றிகொள் நாடு - மூ வேந்தர்கள்செங் கோன்முறை விளங்கிய நாடு கொந்தலர் கூந்தலார்மீக் கூர்ந்த நன்னாடு - ஆனாக் கொடைமடம் பட்டசெல்வர் வாழ்ந்த பொன்னாடு பைந்தமிழ் நாடு பழம்பெரு நாடே - புகழ்ந்து பாடுவோ மிதையெமக் கில்லை யீடே. 2 கத்து கடலிடைக் கலங்கள் செலுத்தி - அக் கரையினி லுள்ள அயல் நாட்டை யடைந்து முத்தும் அகிலுமயிற் றோகையுங் கோடும் - சங்க முறியும் மணப்பொருளும் விற்ற முதற்குப் பத்துநூ றாயிரமாப் பண்டங்க ளேற்றிக் - கடற் பட்டினம் புக்கலம் பார்த்து மகிழ்ந்த மெத்த வளத்தமிழ்நா டெங்கள் நாடே - இதை விரும்பியே பாடுவோமெங்கட் கில்லை யீடே. 3 பகைவரின் அஞ்சியயற் பாடி யடையோம் - பிறர் பசியால் வருந்தவே கதவை யடையோம் நகைவரச் சொற்றவரும் நாவினை யாப்போம் - எம் நல்லுயிர் ஈந்துமேதாய் நாட்டினைக் காப்போம் வகைவகை நெல்லும் கரும்பும் மஞ்சளும் - கமுகும் வாழையும் மாவும் பலாவும் விளையும் தகைமிகு செந்தமிழ்நா டெங்கள் நாடே - இதைத் தான்பாடு வோமெங்கட் கில்லை யீடே. 4  5. தமிழ்கூறு நல்லுலகம் (22 - 2 - 70 இல் நடந்த பேரூர்த் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரிக் கவியரங்கத் தலைமையுரை.) எட்டடிக் கொச்சகம் கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்டே யுறப்பேசும் மீத்தொடைய மாத்தமிழ்ச் செம் பாட்டால் முதுவாப் பழந்தமிழ்ச்செந் நாப்புலவர் மாட்டா ரிவரிவரே வல்லா ரெனக்குறியாத் தோட்டார் குலச்சுரும்பர் போலச் சுவைத்துண்டு நாட்டாரி யாவோரும் நல்வாழ்வு தாம்வாழ ஏட்டார் சுவைத்தே னெனப்பாடி யேவளர்த்த தாட்டா மரைமலர்த்த தமிழ்கூறு நல்லுலகே. 1 தமிழ்கூறு நல்லுலகத் தொன்மை தனைப்பேசின் இமிழ்மாக் கடலிரங்கி யீன்றவட மேருவினை உமிழாமுன் ஆங்கே உலக முதன்மாந்தர் கமழ்நா கரிகமொடு காலூன்றிப் பன்னெடுங்கால் சிமிழ்போல் நலம்பொலிய வாழ்ந்தவத் தென்றேயம் அமிழாமுன் மாக்கடலுள் அம்மா நிலமுழுதும் தமதாகக் கொண்டு தனியரசு செய்தமொழி நம்தாய் மொழியென்னும் நல்லுரையைக் கேட்டீமின். 2  4. தமிழினம் 1. தமிழினம் ஒரு தனியினம் சிந்து தமிழி னமொரு தனியினம் தனக்குத் தானே நிகரினம் அமிழ்தெ னுமவ ரதுமொழி அதுபோ லிலைவே றொருமொழி. 1 உலக முதல்வந் திலகினம் ஒழுக்கந் தவறா ஓரினம் இலையெ னாதுவந் தீயினம் எவர்க்கு மின்னாசெய் யாவினம். 2 தொலையா வீர முடையினம் தோல்வி காணாத் தொல்லினம் நலியா வாழ்வு வாழினம் நன்னா கரிக முடையினம். 3 கண்ணுங் கருத்து மொத்துநற் காதல் கொண்டு கமழினம் பெண்ணும் ஆணும் சரிநிகர் பெருமை பெற்ற பேரினம். 4 உயர்வு தாழ்வி லாவினம் ஒரேஎ குலமாய் வாழ்ந்தினம் அயர்வி லாவாள் வினையினம் அச்ச மற்ற அகவினம். 5 உயிரை நீத்துத் தாய்மொழி உயரச் செய்த உயரினம் தயிரை நீத்த நெய்யெனத் தகம ணங்கமழ் தனியினம். 6 நாடும் மொழியும் உடையினம் நடைமு றைபிற ழாவினம் பாடும் பயனும் உடையினம் பழமை யான தமிழினம். 7  2. எங்கள் தமிழினம் சிந்து மைந்த ரெதிர்க்கவூ ணுண்ணா திருந்துதன் வல்லுயிர் விட்டவினம் - சிறை வாயில் மதியாநீ ருண்ணா துயிர்விட்டு மானங்காத் திட்டவினம் சிந்திய செம்மணி கண்டுயிர் விட்டுத்தன் செங்கோலைக் காத்தவினம் - கணவன் செல்லுயி ரோடுதன் வல்லுயிர் விட்டுச் சிலையெழுத் தானவினம் தந்தை யரசைமுன் னோன்பெற வாழ்வினைத் தான்துறந் திட்டவினம் - கதவு தட்டிய கையைக் குறைத்துநன் னீதி தவறாது காத்தவினம் இந்தி நுழைப்பை எதிர்த்துமே தீக்குளித் திட்டிசை பட்டவினம் - எல்லாம் எங்கள் தமிழினம் எங்கள் தமிழினம் எங்கள் தமிழினமே.  3. நாடு, மொழி, இனம் பல்லவி வாழ்க தமிழகம் வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழினமே. கண்ணிகள் சூழ்கலி நீங்கித் தமிழினம் முன்போல் தொழுதக வாழியவே - மீண்டும் ஆழ்கடல் சூழுல கிற்றமி ழன்னை அரசியாய் வாழியவே - என்றும் தாழ்குறை நீங்கிப் புதுவளம் தேங்கித் தமிழகம் வாழியவே - போ கூழ்கெட ஆகூழ் ஒன்றுக வென்றுள் உவந்துவமே பாடுவமே - நாளும் வாழ்க. 1 ஞாயிறு தோன்றிய நாள்முதல் ஆட்சி நடப்பதும் இந்நாடு - பிற நாடுகள் காணாநன் னாகரி கவாழ்வு நாட்டிய திந்நாடு - பல் லாயிர மாயிரம் ஆண்டுமூ வேந்தர்கள் ஆண்டதும் இந்நாடு - எங்கள் அன்னைதந் தையரின் முன்னவர் வாழ்ந்த அருந்தமிழ் நான்னாடே - என்றும் வாழ்க. 2 தோன்றிய நாளறி யாது வளர்ந்து துலங்குவ தெங்கள் மொழி - சொல்லச் சொல்லவா யின்பத்தே னூறிய றாதின்பஞ் சொட்டுவ தெங்கள் மொழி - நன்கு மூன்று கழகப் புலவர்க ளாய்ந்து முற்றிய தெங்கள் மொழி - எங்கள் முந்தையோர் போற்றி வளர்த்துமேம் பட்டு மூத்த தமிழ்மொழியே - நாளும் வாழ்க. 3 இவ்வுல கத்து முதல்முதல் தோன்றி இயங்கிய மூத்தவினம் - நாக ரிகச்சரக் கேற்றிநல் வாழ்க்கைக் கடற்கரை ஏறியின் புற்றவினம் - என்றும் எவ்வகை யான குறையுமின் றிநிறை வெய்திவாழ்ந் திட்டவினம் - பகை யின்றிவென் றிப்புகழ் எய்திமேம் பட்டநல் எங்கள் தமிழினமே - இனிது வாழ்க. 4  4. தமிழன் சிந்து தாய்மொழிப் பற்றுமிக் குடையான் - கற் றதற்குத் தகவுள்ள நடையான் வாய்மொழி யென்றுமே தவறான் - நாடி வந்தவர்க் கின்றென இவறான். 1 நம்பிக்கை நாணயந் தள்ளான் - தாய் நாட்டுப்பற் றுமிக உள்ளான் வம்பு வழக்குக ளில்லான் - எல்லா மக்கட்கு மேமிக நல்லான். 2 ஈயெனச் சென்றுபல் லிளியான் - தன் இனப்பகை சேர்ந்துளங் களியான் தாயினப் பற்றுமிக் குடையான் - பிறர் தம்மை யிகழ்வதுங் கிடையான். 3 வள்ளுவர் சொற்படி நடப்பான் - அற வாழ்வலா வாழ்வினைக் கடப்பான் எள்ளுவ தொன்றுமே செய்யான் - உயிர் ஏகுவ தாயினும் பொய்யான். 4 மற்றவர் ஏற்றத்தை வெறுக்கான் - பெண் மக்க ளுரிமையை மறுக்கான் கற்றவர் சொல்லினைக் கடவான் - எக் காலுந்தீ வழியில் நடவான். 5 போதுமென் றமன முள்ளான் - எப் போதும் முயல்வதை விள்ளான் சூதுவா துதெரி யாதான் - தன்னிலை தோழர்பா லும்விரி யாதான். 6 அன்படக் கம்பொறை யுள்ளான் - அழுக் காறுதீ ராச்சினங் கொள்ளான் துன்புறுந் தீயசொல் சொல்லான் - இன்சொலே சொல்வான் புறங்கூற லில்லான். 7 அடிக்கடி கட்சிமா றாதான் - மாறினும் ஆங்கதைக் குறைகூ றாதான் மடிக்குளத் தைக்கொடுக் காதான் - தன் மானந் தனைக்கெடுக் காதான். 8 பொதுநலம் பூத்தவு ளத்தான் - பிறர் பொருளை வெஃகாதவ ளத்தான் எதுநல மென்றெணிச் செய்வான் - பிறர் இன்னாமை கண்டுளம் நைவான். 9 கடம்பட்டு வாழவுட் கொள்ளான் - கடமை கண்ணியங் கட்டுப்பா டுள்ளான் இடம்பட இத்தக வெல்லாம் - ஒருங் கெய்தப் பெற்றவனே தமிழன். 10  5. இக்காலத் தமிழன் சிந்து உலக முதற்பிறந்தும் ஒப்பிலா மற்சிறந்தும் தலைமையை ஏன்மறந்தாய் - தமிழா! தன்மான மேன்துறந்தாய்? 1 சேரன் குடிப்பிறந்தும் செழியன் வழியில்வந்தும் வீரத்தை யெங்குவிட்டாய் - தமிழா! வெளியார்க் கடிமைப்பட்டாய். 2 சோழன் குடிப்பிறந்தும் தொல்லோர் வழியில்வந்தும் கோழையாய்ப் போனதுமேன் - தமிழா! குணங்கெட லானதுமேன்? 3 வேளிர் குடிப்பிறந்தும் வீரர் மரபில்வந்தும் பாளையாய்ப் போனதுமேன் - தமிழா! பகைவர்க்கா ளனதுமேன்? 4 அன்றுமட் டுமனுமன் அனையார் இருந்தாரில்லை இன்றும் அனையாருண்டு - தமிழா! ஏமாந்து போகவேண்டா. 5 தமிழைத் தமிழினத்தைத் தாழ்வென எண்ணுவோரை நமரென்று கொள்ளவேண்டா - தமிழா! நரியாட்டுக் குக்காப்பாமோ! 6 தமிழ்தமிழ் என்பாய்ஆனால் தமிழைப் படிக்கமாட்டாய் அமிழ்தமிழ் தென்றுசொன்னால் - தமிழா! அரும்பசி யாறிடுமோ? 7 தித்திக்குந் தேனிருக்கத் தெவிட்டாக் கரும்பிருக்க கைத்தவெட் டிக்காயினைத் - தமிழா! கனியென உண்ணலாமோ? 8 கட்சிக் கட்டுப்பாடென்று கன்னித் தமிழ்க்கெதிராய் வெட்சி புனையலாமா - தமிழா! வெளியார்க் குதவலாமா? 9 மானவெட் கத்தைவிட்டு வயிறு வளர்ப்பதினும் மான மழியாமலே - தமிழா! மடிவது மேலல்லவா? 10 அரசிய லுக்காநம்மோர் ஆளுக்கொ ருகட்சியா வரிசை யிழக்கலாமா - தமிழா! வான்பகை கொள்ளலாமா? 11 இனியாகி லுங்கட்டாயம் இனப்பகை கொள்ளாமலே மனமொன்றி வாழ்ந்திடுவாய் - தமிழா! மக்கட்பண் பாடதுவே. 12  6. பாண் பாட்டு சிந்து எங்கள் தமிழ் வாழ்கவெனப் பாடுவோமே - பாடி இனிது பொருள்விளங்க ஆடுவோமே தங்குபுகழ் ஏழிசையும் யாழிலமைத்தே - இன்பந் ததும்ப இனிதுபாடி யாடுவோமே. 1 அச்சமின்றி யாழ்கடலிற் கப்பல்செலுத்தி - வாழ்வுக் கானபொருள் அத்தனையுங் கண்டுமடுப்போம் நச்சிநமைப் பார்த்துவழி நாடியிருக்கும் - அயல் நாட்டினர்க்கு வேண்டுவன கொண்டுகொடுப்போம். 2 ஊக்கமுடன் நாட்டுவளம் ஓங்கவுழைப்போம் - உயர் உழவுத் தொழில்புரிந்தே உண்டுகளிப்போம் ஆக்கமுடன் பல்தொழிலும் செய்துமுடிப்போம் - அய லார்க்குறையுள் ஊணுடையன் போடுகொடுப்போம். 3 வெற்றியுட னேபுலிவில் மீனக் கொடியை - வட மேருமலை யிற்பொறித்து மீளுவோமே ஒற்றுமை யெனுநிறைகோல் கொண்டு நிறுத்தே - இவ் வுலகை யொருமொழிவைத் தாளுவோமே. 4 (பாண் - பாணர்)  7. மாலை தொடுத்திடுவோம் கும்மி செந்தமிழ் நாட்டுச் சிறுமியரே - ஒன்றாய்ச் சேர்ந்துநாம் கும்மி யடித்திடுவோம் தந்தைதாய் போற்றி வளர்த்த - தமிழ்ப்பகை தன்னைத் துரத்தி யடித்திடுவோம். 1 மூடப் பழக்க வழக்க மெனும்புலி முட்புதர் தன்னை வளைத்திடுவோம் கூடிப் பகுத்தறி வென்னுங்குத் தீட்டியால் குத்தியே கொன்று களித்திடுவோம். 2 சீரிய வாழ்வு சிறந்திடுக - கொடுந் தீயவை யெல்லா மிறந்திடுக ஆரிய மாயை யகன்றொழிக - தமிழ் அன்னையின் பண்பா டதுபொலிக. 3 பொல்லாத சாதிக் கொடுமை எனும்பிணி போயடி யோடுவே ரற்றிடுக கல்லாத பேர்களிங் கில்லாமல் யாவரும் கற்றுப் பகுத்தறி வுற்றிடுக. 4 நல்லதோர் யாப்பெனு நாரினிலே - தமிழ் நாள்மலர் மாலை தொடுத்திடுவோம் அல்லவை தேய அறம்வளர்க - என ஆடியே கும்மி யடித்திடுவோம். 5 (6, 7பாடல்கள், 1948இல் வெளிவந்த தமிழ் வாழ்க என்னும் நாடகத்தில் உள்ளவை)  8. அருந்தமிழினம் சிந்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென் றேமுனம் பேசிய வள்ளுவன் பேச்சதும் பொய்யோ சிறப்பிக்கும் தொழிலன்றி வேற்றுமை யில்லாச் செந்தமி ழினமின்று சிதைந்ததே ஐயோ! 1 சீரிய ஒருகுலைக் காயென முதிர்ந்த செந்தமிழ்ப் பண்பினால் இருந்தது முனமே ஆரியச் சூழ்ச்சியால் ஆயிரங் குலமாய் ஆயின தந்தோ அருந்தமி ழினமே. 2 தாழ்வுயர் வென்பது தமிழர்க்குள் இல்லை சார்ந்தபூத் தேவரால் விளைந்ததித் தொல்லை வாழ்வுயர்ந் திடவவர் உரைத்தவச் சொல்லை வாய்மையென் றேநம்பித் தாழ்ந்தோமிவ் வெல்லை. 3 தினைவிதைத் தவன்தினை யறுப்பதும் பொய்யே திறமுடை யவன்தினை யறுப்பதும் மெய்யே வினையெனப் புகல்வது வீணர்தம் பேச்சே வெற்றுரை களைநம்பி வெம்பிட லாச்சே. 4  9. இராவணன் எண்சீர் விருத்தம் தென்றமிழ்மா வேந்தனிரா வணன்வாழ் கென்று தெருவிலிளந் தமிழர்குழாம் முழங்கிச் செல்லச் சென்றுகொடி யரக்கனையேன் தமிழன் என்று செப்புகின்றீ ரெனவவரும் இலங்கை வேந்தன் கொன்றுணுமக் கொலைவேள்வி யொடுசோ மக்கட் குடிமறுக்க ஆரியர்மா கொடிய ரக்கன் என்றெழுதித் தமிழர்களை நம்ப வைத்தார் எதற்கையம் இராவணகா வியத்தைப் பாரும். 1 என்றவரும் செலநானென் நண்பன் றன்பால் இருந்தொருகா வியம்வாங்கிப் படித்துப் பார்த்தேன் இன்றுவரை அறக்கொடிய அரக்கன் என்றே இடித்துரைத்தோம் தமிழ்மகனென் றின்று கண்டேன் அன்றுதமிழ் மன்னரையே அரக்க ரென்றவ் ஆரியர்கூற் றினைநம்பி யாவே மாந்தோம் தென்றமிழ்க்கா உயிரீந்து புகழ்மேம் பட்ட செந்தமிழ்வேந் திராவணனும் வாழ்க மாதோ. 2 என்றுதமிழ் மக்களெல்லாம் வாழ்த்தும் வண்ணம் எந்தலைவன் இராவணன்பே ரிசைப ரப்பல் என்றனது கடப்பாடாம்; யாண்டு தோறும் எந்தமிழர் திருநாளில் ஒருநா ளாக வென்றியிரா வணன்திருநா ளதுகொண் டாடி வெருண்டோட நாட்டைவிட்டா ரியப்புன் மாயை மன்றுதொறு மியலிசைநா டகமம் மூன்றும் மலர்ந்துபுகழ் மணங்கமழ வாழ்கு வோமே. 3  5. பாப்பாப் பாட்டு சிந்து தெள்ளு தமிழ்பாடும் பாப்பா - ஒரு செய்தி யுரைத்திடக்கேள் பாப்பா வள்ளுவர் வான்குறளைப் பாப்பா - நாளும் மனப்பாடம் செய்திடுவாய் பாப்பா. 1 பாலை வெறுத்தாலும் பாப்பா - தமிழ் படிக்க வெறுக்காதே பாப்பா வேலை வெறுத்தாலும் பாப்பா - வீரன் வெடியை வெறுப்பானோ பாப்பா. 2 தாயை மறந்தாலும் பாப்பா - இன்பத் தமிழை மறக்காதே பாப்பா வாயை மறந்தவனோ ஊமை - அதனால் மறவாதே நந்தமிழைப் பாப்பா. 3 தமிழ்தமிழ் என்று சொன்னால் பாப்பா - அது தானே அமிழ்தாகும் பாப்பா அமிழ்தமிழ் தென்றுசொன்னால் பாப்பா - தமிழ் ஆகும் இதையறிவாய் பாப்பா. 4 கற்றத னைமறவேல் பாப்பா - அதி காலை யெழுந்துபடி பாப்பா மற்றோ ருடன்கூடிப் பாப்பா - நாளும் மாலை விளையாடு பாப்பா. 5 சின்னஞ் சிறார்களுடன் கூடி - நீ சிரித்து விளையாடு பாப்பா அன்னை தந்தையரிடம் பாப்பா - மிக அன்புட னேயிருப்பாய் பாப்பா. 6 எல்லா ரிடத்திலுமே பாப்பா- நீ இனிமையாய்ப் பேசிடுவாய் பாப்பா இல்லாரை எள்ளாதே பாப்பா - உயர் வென்றுனைக் கொள்ளாதே பாப்பா. 7-யசதமிழ ரெவரையுமே பாப்பா - நீ தாழ்வென்று கொள்ளாதே பாப்பா அமிழ்தம் ஒருநிகரா மன்றோ - தமிழர் அவ்வாறே ஓரினமாம் பாப்பா. 8 சோம்பி யிருக்காதே பாப்பா - மான்போல் துள்ளிக் குதித்தாடு பாப்பா வீம்புநீ பேசாதே பாப்பா - பிறர் வெறுப்பன செய்யாதே பாப்பா. 9 உண்மை யுயர்வுதரும் பாப்பா - பொய் ஒருபோதும் பேசாதே பாப்பா திண்மை யுளம்பெறுவாய் பாப்பா - தீராச் சினங்கொள்ளக் கூடாது பாப்பா. 10 யானை யிடத்துமன்பாய் இருந்தால் - அது யாதொன்றும் செய்யாது பாப்பா பூனையென் றெண்ணியிடர் செய்தால் - அது புலிபோலப் பாயுமடி பாப்பா. 11 உயர்வுதாழ் வில்லையடி பாப்பா - மக்கள் ஓரினம் ஆவாரடி பாப்பா வெயிலும் நிழலும்போல் பாப்பா - செயலால் வேறுபட் டுள்ளாரடி பாப்பா. 12 அருந்தமிழ் நாடுதன்னைப் பாப்பா - பெற்ற அன்னையெனப் போற்றிடுவாய் பாப்பா வருந்த எவரிடத்தும் பாப்பா - நீ வன்சொல் வழங்காதே பாப்பா. 13 பள்ளிப் பிள்ளைகளொடு பாப்பா - நீ பகைகொள்ளக் கூடாது பாப்பா கொள்ளுமிந் நற்பழக்கம் பாப்பா - பெருங் குணமா யமையுமடி பாப்பா. 14 உன்னைப் பிறரடித்தால் பாப்பா - நீ ஓவென் றழுவையன்றோ பாப்பா அன்னவா றேபிறரை யடித்தால் - அவரும் அழுவார் எனவறிவாய் பாப்பா. 15 தோழரை வையாதே பாப்பா - பெரியோர் சொல்லினைத் தட்டாதே பாப்பா வாழும் வகையிதுவே பாப்பா - நீ வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா. 16  6. நல்ல பெண் கட்டளைக் கலிப்பா பிறந்த கத்தின் பெருமைகுன் றாமலே பேணு கின்ற ஒழுக்க முடையவள் மறந்த கத்தினும் மாமியை மாமனை மற்ற வரென எண்ணா ஒழுக்கினள் அறந்த வாதவள் நங்கை கொழுந்தியை அக்கை தங்கைய ராகவே கொள்ளுநள் நறுந்த மிழ்க்குல நங்கையர் போற்றிட நயந்து வாழுநல் நங்கையே நல்லபெண். 1 உற்ற தன்குடி யோங்கிடச் செய்குநள் உவந்து சுற்றந் தழுவிக் களிப்பவள் அற்ற வர்க்கென்றும் ஆவன செய்பவள் அடிக்க டிபிறர் இல்லஞ்செல் லாதவள் தெற்றி யேறித் தெருத்திரட் டாதவள் சிறந்த செல்வத்தும் சிக்கன வாழ்க்கையள் நற்ற மிழ்க்குல நங்கையர் போற்றிட நயந்து வாழுநல் நங்கையே நல்லபெண். 2 இல்லை யென்று தெருவிற் சொலாதவள் ஏறு மாறா நடந்துகொள் ளாதவள் வல்ல தொன்றைச் செயத்தவ றாதவள் வருவி ருந்தை மனமுவந் தோம்புநள் முல்லை வென்றவெண் முத்து நகையினள் முறைமை யோடு குடும்பம் நடத்துநள் நல்லை யென்றுநல் நங்கையர் போற்றிட நயந்து வாழுநல் நங்கையே நல்லபெண். 3 கேளி ரோடு கெழுமி யிருப்பவள் கெட்ட காலத்துங் குட்டை விடாதவள் ஆளு மில்லறத் தார்வ முடையவள் ஆள னுக்கெதி ராநட வாதவள் வேளை பார்த்துக் கொழுநர்க்கின் பூட்டுநள் வீணை போலநன் னாண முடையவள் நாளுஞ் செந்தமிழ் நங்கையர் போற்றிட நயந்து வாழுநல் நங்கையே நல்லபெண். 4 ஈகை யின்முகம் இன்சொல் லுடையவள் எய்ப்பி னில்வைப் பெனும்பொருள் சேர்ப்பவள் பாகெ னுமொழிப் பாவையர் தம்முடன் பாடி யாடிப் பயன்பட வாழுநள் ஓகை யோடாங்கு வாழ்வாங்கு வாழுநள் ஊடிக் கூடியன் புற்றிடத் தக்கவள் நாக ரிகநல் நங்கையர் போற்றிட நயந்து வாழுநல் நங்கையே நல்லபெண். 5 இனிது மக்களைப் பெற்று வளர்ப்பவள் இன்சு வையுண வாக்கிப் படைப்பவள் மனையை யொப்பனை செய்து மகிழுநள் வரவுக் கேற்ற செலவுகள் செய்குநள் கனிமொ ழியினால் காதல் வளர்ப்பவள் கணவற் கேற்ற வகையில் நடப்பவள் நனியு வந்துநல் நங்கையர் போற்றிட நயந்து வாழுநல் நங்கையே நல்லபெண். 6 உள்ளத் துள்ளும் ஒழுக்க முடையவள் உலகு வக்குறும் ஊர்நா ணியல்பினள் அள்ளிக் கொள்ளும் அழகு படைத்தவள் அறிவ டக்கம் பொறையன்பு மிக்கவள் கள்ள மற்றதூ வெள்ளை யுளத்தினள் கடமை கண்ணியம் கட்டுப்பா டுள்ளவள் நள்ளிச் செந்தமிழ் நங்கையர் போற்றிட நயந்து வாழுநல் நங்கையே நல்லபெண். 7 ஒன்றி ரண்டின்மேற் பிள்ளை பெறாதவள் உற்ற இல்லின் உறவை வெறாதவள் சென்ற காலச் சிறப்பை விடாதவள் செல்லற் காலத்தும் சீர்மைகுன் றாதவள் நின்ற நன்னெறி நீங்ககில் லாதவள் நிலைய றிந்து குடும்பம் நடத்துநள் நன்று செந்தமிழ் நங்கையர் போற்றிட நயந்து வாழுநல் நங்கையே நல்லபெண். 8 முந்தை நல்லார் முறையின் நடப்பவள் முயன்று நன்னடை மேலும் பயில்பவள் தந்தை தாயர் உவக்குற வாழ்பவள் தனக்குத் தன்னிகர் என்னுந் தகையினள் வந்த கல்வியும் செல்வமும் வாய்ந்தவள் வள்ளு வன்குறள் வாழ்வினில் வாழ்பவள் நந்து செந்தமிழ் நங்கையர் போற்றிட நயந்து வாழுநல் நங்கையே நல்லபெண். 9  7. வள்ளுவன் குறள் அறுசீர் விருத்தம் இற்றைநாள் காறும் இந்த இருங்கட லுலகந் தன்னில் மற்றொரு புலவன் உண்டோ வள்ளுவன் போல, அன்னான் சொற்றவான் குறளைப் போலித் தொல்லுல கதனிற் காட்ட மற்றொரு நூலும் உண்டோ வழுத்துவீ ருலகத் தீரே. 1 இறப்பினை வென்று யர்ந்த எந்தமிழ்த் தாயின் ஆன்ற சிறப்பினுக் கெடுத்துக் காட்டு திருக்குறள் ஒன்றே போதும். மறப்பினும் மறக்க வொண்ணா வள்ளுவன் ஒருவன் போதும் அறப்பெருந் தமிழ்ச்சான் றோர்நுண் ணறிவினுக் கெடுத்துக் காட்டே. 2 சிந்து வள்ளுவன் குறளை வையகம் எல்லாம் வாரி வழங்கிடுவோம் - அற வாழ்வு தலைப்பட வாழுங்கள் என்றே வானின் முழங்கிடுவோம் உள்ளுதோ றுள்ளம் உவக்கும் குறள்நெறி ஓங்கிடச் செய்திடுவோம் - இவ் வுலக மெலாமுயர் வுற்றுமே வாழும் உணர்வினைப் பெய்திடுவோம் அள்ளிமுப் பாலை உலகோர் விரும்பி அருந்திடப் பண்ணிடுவோம் - மக்கள் அறம்பொரு ளின்பம் நுகர்ந்துபே ரின்பம் அடைந்திடக் கண்ணிடுவோம் பள்ளிகள் தோறும் குறளினைக் கட்டாயப் பாடம தாக்கிடுவோம் - மக்கட் பண்பும் பயனும் ஒருங்குற வாழ்விற் பயின் றிட வூக்கிடுவோம். 3 4. வள்ளுவன் கண்ட மருந்து (இது, கோவை, பாவேந்தர் பாரதிதாசன் மன்றத்தாரால் 15 - 9 - 1970 இல் வெளியிடப்பட்ட திருவள்ளுவர் ஈராயிர மாண்டு நிறைவு விழா மலரில் வெளிவந்தது.) பல்லவி ஒரும ருந்துயர் அரும ருந்ததை ஒண்டமி ழகத்தே கண்டேன் கண்டேன் - ஒரு பல்லவி எடுப்பு குரும ருந்தின்பந் தரும ருந்துநற் குணமு மணமுமிக் குள்ள மருந்து - ஒரு கண்ணிகள் இவ்வுல கத்தெங்கும் இல்லா மருந்து எம்மொழி யினுமே சொல்லா மருந்து எவ்வகை நோயையுந் தீர்க்கு மருந்து இனிதயின் றார்க்கின்பம் பூக்கு மருந்து - ஒரு 1 தன்னேரி லாது தனித்த மருந்து சான்றவ ருளத்தினும் இனித்த மருந்து முன்னோருண் டுநலங் கொண்ட மருந்து முடியுடை மூவரும் உண்ட மருந்து - ஒரு 2 அறம்பொரு ளின்பங்கொண் டாக்கு மருந்து அறியாமைப் பிணியினைப் போக்கு மருந்து திறம்படு பொருணலஞ் செறிந்த மருந்து திசைதொறும் பரந்து நிறைந்த மருந்து - ஒரு 3 ஒருவனும் ஒருத்தியும் உவக்கும் மருந்து ஊடிக்கூ டியின்பந் துவக்கு மருந்து வருமுல கினுக்குமே வாய்த்த மருந்து வாழ்வாங்கு வாழ்ந்திட யாத்த மருந்து - ஒரு 4 அரசினைப் புறக்கணி யாத மருந்து அமைச்சர்க் கின்றியமை யாத மருந்து பொருசினப் படைஞர்க்குப் பொருந்து மருந்து புலனழுக் கற்றோரும் அருந்து மருந்து - ஒரு 5 ஆண்டிரண் டாயிர மான மருந்து அகத்திருள் போக்குந்தன் மான மருந்து ஈண்டிரண் டடிகளால் இயலு மருந்து இல்லறம் துறவறம் பயிலு மருந்து - ஒரு 6 வான்புகழ் வள்ளுவன் கண்ட மருந்து வாழ்வியல் முறையெலாங் கொண்ட மருந்து தேன்புகல் மலரென மாண்ட மருந்து 'திருக்குறள்' எனப்பெயர் பூண்ட மருந்து - ஒரு 7 விதிவிலக் கறிந்துண விளக்கு மருந்து விழுமிய பொருளெலாம் அளக்கு மருந்து பொதியிலார் போதென அரும்பு மருந்து புலவர் குழந்தை விரும்பு மருந்து - ஒரு 8 (குரு - சிறந்த. 1. அயிலுதல் - உண்ணுதல். 4. வரும் உலகம் - எதிர் கால மக்கள். யாத்த - செய்த. 7. தேன் - வண்டு. புகலுதல் - விரும்புதல். மாண்ட - மாட்சிமைப்பட்ட. 8. 'மருந்து' என்பதற் கேற்ப, 'உண' எனப்பட்டது. உண - உண்ண, இங்கே நடக்க. பொதியில் - ஊர்மன்றம். ஆர் - பொருந்திய.)  8. பெண் பிறப்பு (உண்மை வரலாறு) சிந்து தெந்தின மென்னத் திரைக்கடல் - தனில் தேனெனச் செந்தமிழ் பாடியே பைந்தொடி நூபுரம் பாடகம் - பண் பாடரங் காடும் விறலிபோல், அந்தமில் செல்வஞ் சிறந்திடும் - நியூ யார்க்கெனும் அத்துறை நோக்கியே வந்திடுங் கப்பலைப் பார்த்துமே - அந்நாட்டு மக்கள் திரண்டுமே நின்றனர். 1 கூடியந் நின்றமக் கட்குலம் - கண் கொட்டாமற் பார்த்துமே நின்றிட, வாடி யுலர்ந்த மலரென - மலர் வண்ண மிழந்த குழலென ஊடி யெறிந்த அணியெனக் - கலத் துண்டு மிகுந்த உணவென நீடிய துன்ப நிலையுடன் - கப்பலில் நின்றே யொருத்தி யிறங்கினாள். 2 அன்னவள் பாரசீ கம்மெனும் - நட்டினை ஆளும் முகமது சாவெனும் மன்னவன் பட்டத் தரசியாய் - வாழ்ந்து வந்தவள் இன்பமி குந்தவள் அன்ன நடைமின் னிடையினாள் - சுரை யா வெனும் பேர்பெ றமிழ்தனாள் தன்னிக ரில்லா எழிலினாள் - அங்கு தன்னந் தனியாக வந்தனள். 3 வந்தவள் அங்கெதிர் கொள்ளவே - நின்ற மகளிரைக் கண்டு மகிழ்ந்திலள் வெந்தசெம் புண்ணினுட் காய்ந்தவோர் - வடி வேல்நுழைந் தாலென வெம்பியே நைந்தவள் முன்னிலை தன்னுடன் - இன்று நண்ணிய இந்நிலை யெண்ணியே நொந்தவள் வெந்துயர் முந்தவே - அன்னாரை நோக்கியே இன்ன நுவன்றனள். 4 மன்னவற்கு வாழ்க்கைப் பட்டனன் - இன்ப வாரியி லேதிளைத் திட்டனன் மன்னிய செல்வச் செருக்குடன் - நன்கு வாழ்வாங்கு வாழ்ந்துமே வந்தனன் மின்னென அப்பெரு வாழ்வெனும் - குன்றின் மீதிருந் தந்தோ விழுந்தனன் என்னினிச் செய்குவன் ஐயகோ! - நான் எம்மனீர் என்றழு தேங்கினள். 5 ஏனிந் நிலையெனக் கெய்திய - தெனின் எம்மனீர் என்னென் றியம்புகேன் நானொரு பிள்ளை பெறவில்லை - அந்த நாட்டினை யாளுதற் கென்றுமே தேனுகர் பூவென எண்ணியே - நான் செய்தவக் குற்றத்திற் காகவே வானிழி கொள்ளியைப் போலவே - மன்னன் மணவிலக் குச்செய்து விட்டனன். 6 மன்னன் பெருந்தேவி யென்னவே - மிக்க மதிப்பொடு வாழ்ந்த நிலைமைபோய்ப் பொன்னணி யாடை சுமந்துமே - பாவை போலப் பொழுதினைப் போக்கியே தன்னந் தனித்துண் டுறங்கியே - ஐயகோ சாகவோ பெண்ணாப் பிறந்தனன்? என்னினிச் செய்குவேன் எம்மனீர் - என ஏங்கி யழுதுமே நின்றனள். 7 நங்கை யவள்தன் நிலையினைக் - கண்டு நல்வர வேற்றிட வந்துமே அங்கு குழீஇநின் றவர்களில் - ஓர் அருந்தமிழ்ப் பெண்மணி கூறுவாள்: எங்கையே யீது புதிதல - முன்னர் எத்தனை யோநம் இனத்தினர் தங்கள் கணவரால் இங்ஙனம் - வாழ்வு தன்னை யிழந்தவர் எண்ணிலர். 8 ஆடவர்க் கெல்லா வுரிமையும் - உள தாகையி னாலேநம் மோர்களின் பாடறி யாமலவ் வாடவர் - விலைப் பண்ட மெனக்கொண்டு பெண்டிரை நாடறி யக்கொண்டு கூடியே - பின்னர் நட்ட நடுவிற்கை விட்டுமே ஓடென ஓட்டி விடுவதை - ஓர் ஒழுக்கமாக் கொண்டனர் ஒள்ளிழாய்! 9 வீரமா பத்தினி யென்றுமே - சேர வேந்தன் புகழ்ந்துபா ராட்டிய காரிகை பூம்புகார்க் கண்ணகி - வாழ்வைக் கற்பினா லிறுக்கிக் கட்டியே ஓரியாய் வாழ்நாள் முழுவதும் - இல் லுள்ளிருந் தேகாலந் தள்ளவே வீர னெனவந்த கோவலன் - புகழ் மேவினன் ஆதலால் மெல்லியால்! 10 பெண்ணினந் தன்னையவ் வாடவர் - சும்மா பிள்ளை பெறுமோர் கருவியாய் எண்ணியே கொள்ளும் வழக்கினை - இனி இல்லாது கைவிட் டிருக்கவே பண்ணுவோ மென்னவே அத்தமிழ் - மகள் பன்னவோர் ஆரியப் பாவையும் மண்ணிலம் மாவுனைப் போலவே - மன்னவன் மாபெருந் தேவியா வாழ்ந்தவள். 11 ஈருயி ருக்காரி யாகவே-ஆ! இருக்கையி லேயந்தச் சீதையும் ஊரவர் கௌவை யுளதென - உரைத் தொண்டொடி சீதையைக் கொண்டுபோய் வீரன் எனப்புகழ் மேவிய - அந்த வெய்யன் தசரத ராமனும் ஓரியாய்க் காட்டினில் விட்டனன் - அம்மா உன்னிலுஞ் சீதைவாழ் வென்னவே! 12 காட்டினி லேபிள்ளை பெற்றுமே - அக் காரிகை ஏழிரண் டாண்டையக் காட்டினி லேயே கழித்தனள் - ஆண் களுக்கிது மோர்நல் லொழுக்கமே பூட்டுவிற் போற்புரு வத்தினாய் - சீதை போன்றிலை இவ்வமெ ரிக்கநன் னாட்டி லமைதியாய் வாழுவாய் - என்றந் நங்கையுந் தேற்றினள் அங்ஙனே. 13 அய்யறி வுள்ள வுயிரெலாம் - என்றும் ஆணும்பெண் ணுங்கூடி வாழவே மெய்யறி வுள்ளவ ரென்றுமே - நம்மை விழலெனச் செய்குநர் ஆடவர் வெய்யவர் ஆயிடின் அன்னரை - விட்டு விலகி யிருப்பதே மேலலால் செய்யியர் என்னென அன்னளைக் - கூட்டிச் சென்றன ராலங்கு நின்றுமே. 14  9. கலைவாணர் பெருந்தொண்டு 1. வித்தைதான் என்னவோ? பன்னிருசீர் விருத்தம் புத்தராற் செய்யமுடி யாததை உலகப் புலவரெல் லாமொருங்கு போற்றிப் புகழ்ந்ததிரு வள்ளுவர் குறளினால் போக்கமுடி யாததைமுனம் சித்தராற் செய்யமுடி யாததைச் சமயவினச் சீர்திருத் தக்காரரால் செய்யமுடி யாததை வடலூரர் உள்ளஞ் சிதைந்துகை விட்டதைநலப் பித்தராற் செய்யமுடி யாததை மனநொந்து பெரியார்கள் முதுகிட்டதைப் பேச்சளவி லேகாசை யுங்கொடுத் தெதிர்மொழி பேசாமல் உலகையேய்க்கும் எத்தரா யினுமெமக் கறிவுவந் திட்டதினி என்றுகேட் டிடும்வித்தைதான் என்னவோ மென்மதுர மன்னுநற் கலைவாண ரெனுநகைச் சுவையரசனே! (மதுரம் - டி. ஏ. மதுரம்) 2. முரட்டுக் களிறு மேற்படி வேறுவண்ணம் முன்னோர் போற்றி வளர்த்தியபாழ் மூடப் பழக்க வழக்கமெனும் முரட்டுக் களிற்றை அருளறமாம் முனைகூர் குத்துக் கோல்கொண்டு தன்னா லான வரைதாக்கிச் சலித்துப் புத்தர் முதுகிட்டார், தமிழ்வாள் கொண்டு சித்தர்களும் தாயு மானப் பெரியாரும் மன்னா தெதிர்த்து வளவடலூர் வள்ள லாரும் வடக்கானார், மற்றோர் போல அல்லாமல் மதுரங் கலந்த நகைச்சுவையால் தென்னா டுடையார் மகிழ்வெய்தத் திசைகெட் டந்தக் களிறோடச் செய்யுங் கலைவா ணாவுன்றன் திறந்தா னென்னே தெரியேமே. 3. மூத்த தொழுநோய் ஈயுங் கொசுவுங் குடிவாழ ஈன்ற தாயும் மனங்கோண எப்பேர்ப் பட்ட மருத்துவரும் எம்மா லாகா தெனச்செல்ல மூயுந் துணிமேற் புழுநெளிய முடையுஞ் சீயுங் குடல்பிடுங்க மூடப் பழக்க வழக்கமெனும் முதிர்ந்து மூத்த தொழுநோயை வாயுந் தெவிட்டா தேகுடரும் மனமுங் குமட்டா தேயினிக்கும் மதுரங் கலந்த நகைச்சுவையாம் மருந்து கொடுத்தந் நோய்தீர்த்துத் தேயுங் குடியை வாழ்வித்துத் தென்னாட் டவரை மகிழ்விக்கும் சீருஞ் சிறப்புந் தகுதியொடு திறமு முடைய மருத்துவனே. 4. நகைச்சுவை பஃறொடை வெண்பா வண்டமிழர் போற்றுகலை வாணர் நகைச்சுவையைக் கண்டுதமிழ் மக்கள் களிக்கக் களிக்கஅவர் கொண்ட மடமை கொடியமூ டப்பழக்கம் தொண்டுமனப் பான்மை தொடைநடுங்குந் தன்மையுளம் மண்டு மறியாமை மானமிலா வாழ்வுகுள நண்டு முழுமூட நம்பிக்கை ஆளடிமை இண்டத் தனமோ டினவிரண்ட கங்களெலாம் பெண்டுபிள்ளை சுற்றமொடு பேந்தப்பேந் தவ்விழித்துக் கொண்டு வெருண்டு குலைநடுங்கிக் கொண்டடா! பண்டு தமிழப் படைகண்டோட் டம்பிடித்த அண்டரைப்போ லோடுகின்ற ன. 5. வேங்கைப் புலி கலிவெண்பா ஒன்றே குலமாய் உலக முதலினமாய் நன்றே யுலக நடையிற் பிறழாது கள்ளங் கரவின்றிக் கைசெய்து போதுநருக் குள்ள முவந்துவிருந் தோம்பியரு ளன்புகமழ் போதா யுலகவளி புக்குணவே மாந்திருந்த போதா ரியமுட் புதரி லிருந்துவந்து வேதமனு ராமகதை வீண்பொய்ப் புராணமொடு சாதி சமயமெனும் சந்து களின் வழியாய் முட்டித் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் எட்டிக் குதித்தறியா தேதவத்தான் தோல்போர்த்துப் பட்டப் பகலினலப் பட்டிபுகுந் தேபெருமை கொட்டிக் கவிழவுயர் கொள்கை யெனும்ஆடு குட்டிகளைத் தின்று கொழுத்த கொடுமைநமை விட்டுத் தொலைந்ததென மெய்குலுங்கத் தம்மிருகை கொட்டிச் சிரித்துவகை கொள்ளத் தமிழ்மக்கள், தட்டுத் தடுமாறித் தன்மான மாளிகையின் வெட்டுக் குழியில் விழுந்தெழுந்து வெய்துயிர்த்துக் குட்டிக் கரணமிட்டுக் குர்ரென் றொலித்தலறி எட்டுத் திசையுமிட மில்லையினி யென்றுடலம் வெம்பிக் களைத்து விடாய்த்து வெலவெலத்துப் பம்பிப் பகுத்தறிவாம் பாசறையைக் கண்டருண்டு துள்ளிக் குதித்துத் துவண்டு துடிதுடித்துக் கள்ளக் குறுவழியில் கால்வாங்கிக் கண்கலங்கி உள்ளத் துடிப்புடனே ஓடுகின்ற தேயடடா! கொள்ளைப் பொருளெறிந்து கூர்த்தோடுங் கள்வனைப்போல் தப்பிப் பிழைத்தேன் தமிழ்நாட் டினிலினிக்கால் வைப்பதில்லை யென்று வடித்த மனத்துறுதி ஒப்பித் தமிழ்மதுரத் தோடு கலைவாணர் கப்பிப் புலந்து கனன்றுகலை வில்லைவளைத் தொல்லையிந் நாட்டினைவிட் டோடுனக்கிங் கேவேலை இல்லையினி யென்றுபுகன் றெய்த நகைச்சுவையாம் அம்பிற் கெதிர்நிற்க லாற்றாம லேமூட நம்பிக்கை யென்னும் நயப்பா டொருசிறிதும் இல்லாத வெய்ய இழிய கடுங்கொடிய பொல்லாத வேங்கைப் புலி. (கைசெய்தல் - பாதுகாத்தல், போதுநர் - அயல்நாடு களிலிருந்து தமிழகத்திற்கு வருவோர். போது - மலர். அளி - வண்டு. உலக அளி - உலக மக்களாகிய வண்டுகள். தவத்து ஆன் தோல் - தவக்கோலமாகிய மாட்டுத்தோல். நலப்பட்டி - நன்மையாகிய தமிழினம். வடித்த - கூர்மையான. ஒப்பி - ஒத்து. கப்பி - விரைந்து. ஆரிய முட்புதரிலிருந்து வந்து, தமிழர் கொள்கை என்னும் குட்டிகளைத் தின்று கொழுத்த மூட நம்பிக்கை என்னும் வேங்கைப்புலி, மதுரமும் கலைவாணரும் கலைவில்லை வளைத்து எய்த நகைச் சுவை அம்பிற்கு எதிர் நிற்கலாற்றாமல் ஓடுகிறது. 1 - 5 இப்பாடல்கள் 1948 இல் பாடியவை.)  10. படைத்தோனே! எண்சீர் விருத்தம் இப்பெரிய உலகுயிரைப் படைத்தோன் என்போய் இயற்றியவப் பழம்படைப்போ இன்றைக் கொவ்வா தப்பெனநீ கருதாதே தாய்க்குப் பிள்ளை தகவெனப்பட் டதைக்கூறல் தவறா காதே அப்பொழுது நீஉலகைப் படைத்த வாறே அஃதில்லைப் பெருமாற்றம் அடைந்து விட்ட திப்பொழுதம் மாற்றத்திற் கேற்ற வாறா இயற்றுவதே படைப்போனின் இயல்ப தாமே. 1 குடுமியென்றால் படம்போட்டுக் காட்டா விட்டால் குழந்தைகட்கு விளங்காது, கொப்பைக் காது கொடுமையென விட்டதது முன்போல் காதில் கொலுவிருக்க எவரொப்புக் கொள்வார்? விற்கும் அடிமைமுறை உடன்பாடோ? ஐவர்க் கில்லாள் ஆவாளோ இன்றொருத்தி? அறியா நீயந் நெடுமையிலே படைத்ததனை மாற்றிக் கொள்வாய் நெருநலுள தின்றுபழம் பொருளாய்ப் போச்சே! 2 மண்விளக்கை மின்விளக்கா மாற்றி விட்டோம் வானுலவுங் கோளுலவ வழிகண் டிட்டோம் கண்விளக்கும் தொலையுளதைக் காதுங் கேட்கும் கருவியெலாம் பொறியாக்கித் தொழில்மேம் பட்டோம் பண்விளக்கிப் படம்பாடும் ஆடும் இல்லின் பாலிருந்த வாறுலக நிகழ்ச்சி கேட்போம் எண்விளக்கி நீபடைத்த படைப்பு மட்டும் இருந்தபடி யிருந்துவரல் பொருந்து மோகோல்! 3 கடல்கடந்த நாட்டரையீங் கிருந்த வாறே கண்டவர்தம் சொற்கேட்டுக் களிக்கின்றோம்எம் உடல்கடந்துள் ளுறுப்பையெலாம் படமெ டுத்தாங் குளநிலையை யறிகின்றோம் தொலைவிற் பேச்சை மடல்வரைந்து தருகிறது வாழ்க்கைப் போக்கிவ் வாறுபட்ட தறியாநீ வழக்கம் போலப் படலறிந்துன் படைப்பைமக்கள் வெறுக்கின் றார்கள் படைப்போனே புத்தறிவு படக்கா ணோமே. 4 நோயாக்கும் நச்சுயிரைப் படைத்திட் டந்த நோய்க்குமருந் தினைப்படைத்தல் நோக்கற் பாற்றே, சேயாக்கும் தாயர்கரு வுற்றால் ஐயோ செத்திடுவோம் என அஞ்சல் சிறப்ப தாமோ? ஆயார்க்கும் அறிஞர்எங்கள் அண்ணா வைக்கொல் அக்கொடுநோ யினைப்படைத்தல் அறிவ தாமோ? நீயாக்கும் படைப்பினிலே நேர்மை யில்லை நினக்குவந்தால் தெரியுமந்நோய் நினைத்துப் பாரே. 5 ஆறுபத்தோ ஏழுபத்தோ யாதா னாலும் அதுகாறும் உடலுறுதி அணுவும் மாறா வாறுபட்டுப் படுத்துறங்கும் போது தானே மடிந்திடட்டும் கொடுநோயால் வருந்தா வண்ணம் நாறுபட்டுப் பற்கழன்று கண்கள் மங்கி நடைதளர்ந்து நரைதிரைமூப் புற்று யாக்கை ஊறுபட்டுப் படுக்கையிலே யுழன்று சாக ஒருவரையும் இனிப்படைப்ப தொழிகு வாயே. 6 எல்லரையும் நல்லவராய் இயற்று, மண்மேல் இனிக்கொடியர் ஒருவரையும் இயற்ற வேண்டா; எல்லரையும் அறிவர்களா யியற்று, வீணே இனிமூடர் ஒருவரையும் இயற்ற வேண்டா; எல்லரையும் உள்ளவரா யியற்று, வாழ இயலாஇல் லாரையினி யியற்ற வேண்டா. எல்லரையும் ஒருநிகரா இயற்று, மாட்டாய் எனிற்படைப்புத் தொழிலைவிட்டோய் வெடுத்துக் கொள்ளே. 7 வஞ்சரையுங் கள்வரையுங் கொலைக்கஞ் சாத வன்கணரை யுஞ்சிறிதும் இரக்கம் இல்லா நெஞ்சரையுஞ் சூதரையும் ஒழுக்கம் இல்லா நெறியரையுங் குறியரையும் நெடிதே மாற்றும் நஞ்சரையுங் கயவரையும் பொய்யே பேசும், நாவரையுஞ் சாவரையும் நாட்டுக் காப்புக் கஞ்சரையும் அறியாது படைத்திந் நாட்டை அல்லோல கல்லோல மாக்கா தப்பா! 8 படைத்துவிட்டாய் தெரியாமல் கடித்துக் கொல்லும் பாம்பனைய நச்சுயிரைப் பாய்ந்து கொன்று குடித்துயிரை யேப்பமிடும் இரக்க மில்லாக் கொடுவிலங்கைக் கடும்புயலைச் சூறைக் காற்றை இடித்துலகை மடித்திடும்பே ரிடியைப் பொல்லா எரிமலையை நிலநடுக்கை அறிவில் லாமல் படைத்ததுபோ கட்டுமினிப் படைக்க வேண்டா படைப்பவனே நல்லதையே படைக்கு வாயே. 9 ஒருசிலரை மலடாக்கி, ஒன்று பத்தா ஒருசிலர்க்குப் பலபிள்ளைப் பேறுண் டாக்கும் பரிசதனைப் பார்க்கினொழுங் காப்ப டைக்கும் பயிற்சியுனக் கில்லையெனப் பகர வேண்டா. குரிசிலுன்றன் செயற்குறைவால் மக்கட் பேற்றைக் குறைக்கவரும் பாடுபட்டு வருகின் றேமால். ஒருசிறிதும் பழக்கமிலாத் தொழில்மேற் கொள்வான் உருப்படமாட் டானெனுஞ்சொல் உணர்கிற் பாயே. 10 பெண்ணொன்று பிள்ளையொன்று போதும் யார்க்கும் பிறந்தவுடன் எழுந்தோடிப் பெற்ற அன்னை கண்ணென்று மகிழ்ந்திடவான் கன்று போலக் கருவுறமக் களைப்படைப்பா யினிக்கட் டாயம் புண்ணென்று தாய்வெறுக்க மலங்கால் சோரப் புரண்டதன்மே லுருண்டுவிழப் போய்த்தாய் கையால் திண்ணென்று தொடக்கூசும் படிநீ மட்டும் செத்தாலும் இனிப்படையேல் தெரிவா யப்பா. 11 நட்டபயிர் பட்டுவிட்டால் பாடு பட்டு நட்டவனுக் கென்னபயன்? படைத்து மண்ணில் விட்டவுடன் அக்குழந்தை இறந்து விட்டால் வீண்வேலைப் பாடன்றோ? இனிமேல் யாரும் இட்டவொரு காலவெல்லை யதனைக் கண்டே இறக்கும்வகை படைத்திடுவாய், இறக்கு மட்டும் கட்டிளமை மாறாமல் தொழில்செய் துண்டு களிக்கும்வகை படைப்ப துன்றன் கடப்பா டாமே. 12 உறுப்பறைகூன் குருடுசெவி டூமோ வின்றி ஒழுங்காக மக்களெலாம் பிறக்க வேண்டும் வெறுப்பொடுபல் வீழாமல் கண்கெ டாமல் மெய்தளரா துடல்நலத்தோ டிருக்க வேண்டும் இறப்பினுமே மாக்களைப்போல் மக்கள் தம்மை இனிப்படைக்கா தேமறந்தும் இதுகட் டாயம் பொறுப்பொடிவ்வா றினியுலகைப் புதிய வாகப் புலமையொடு படைத்தேவான் புகழ்துய்ப் பாயே. 13 விடியளவு மந்தோகண் ணயர்ந்து தூங்க விடாதுமுற்றும் பகைபோலென் மேனி முற்றிக் கடிகடியென் றேகடிக்கும் கொசுவைப் பொல்லாக் கள்வரைப்போ லியமூட்டைப் பூச்சி தன்னை மடைமையினாற் படைத்துவிட்டா யெனினும் தப்பில் வணங்குகின்றேம் இனிமறந்தும் படைக்க வேண்டா படைகொடுபோந் திடும்பகையிற் கொடிய தாமுட் பகையெனும்வள் ளுவர்குறளைப் படித்தி லாயோ? 14 காலத்தே மழைபொழியச் சிற்றா றெல்லாம் காவிரிபோல் வளங்கொழிக்கக் காடும் மேடும் நூலொத்த சமனாகி நுண்ணூல் செய்வோர் நோக்கிடுநன் னிலமாக, உழவ ரெண்ணம் போலொத்து முப்போகம் விளையப் பொய்யிற் புலவருளம் போல்நாடு பொலிய இந்த ஞாலத்தார் குறைவின்றி வாழ நாட்டை நன்னாடா மாற்றிடுவாய் இன்னே யப்பா. 15 ஞாயிறுபோல் இராமுழுதும் திங்கள் போந்து நாடோறும் நன்னிலவு தருதல் வேண்டும்; ஏயகடுங் குளிர்வெயில தின்றி என்றும் இனியதட்ப வெப்பமதே யியல வேண்டும்; ஆயவறி வியலுலகை ஆக்கற் கன்றி அழித்தற்குப் பயன்படா தமைய வேண்டும்; மாயிருஞா லம்புதிய தாயிவ் வாறு மாற்றியொழுங் காப்படைத்த லேற்ற தாமே. 16 அவனன்றி யோரணுவும் அசையா தென்பர் ஆனால்நீ அசையவணு குண்டு செய்தே அவனென்ற அச்சுட்டின் மதிப்பைப் போக்கி அழித்துலகை விடப்பார்த்தல் அழக தாமோ? எவனென்றும் உலகழிக்கும் அணுகுண் டைப்போல் இனியெதையும் செய்திடநீ ஏவ வேண்டா இவன்செய்தான் இதையென்றால் இரண்டும் உன்னை யேகுறிக்கும் என்பதறிந் திலைநீ போலும்! 17 மாளாமல் இடையினிலே மாயா நோயால் வருந்தாமல் நரைதிரைமூப் படக்கி யெம்மை ஆளாமற் கட்டிளமை யதுமா றாமல் ஐம்புலனுங் குன்றாமல் ஆறாத் துன்பம் மூளாமற் புத்துலகைப் படைக்கு மாற்றை முறையாக எடுத்துரைத்த முறையை நீயும் கேளாமற் பழையபடி படைப்பா யானால் கெட்டொழிவாய் கட்டாயம் அட்டி யின்றே. 18  11. வெண்ணிலா சிந்து வானி லுலவிடும் வெண்ணில வேயுன் வரன்முறை யாதுரையாய் - ஏனெனில் ஆனவுன் றன்வர லாற்றினி லெங்களுக் கையமுண் டுதெரிவாய். 1 தக்கன் மகளிர்மூ வொன்பது பேரினைத் தான்மணங் கொண்டனையாம் - அவருள் மிக்க அழகி உரோகணி வீட்டிலே மெய்விருந் துண்டனையாம். 2 மற்றவர் சென்றுதந் தந்தைபா லோதஅம் மானவன் சீறினனாம் - சீறிச் சிற்றறி வாளமெய் தேய்ந்தொழி கவெனத் தீமொழி கூறினனாம். 3 மனைவிய ரோடு பிறந்தாள் கணவனை வாழ்விக்க வேண்டினையாம் - அன்னான் தனதரு ளாலுடல் தேய்ந்து வளர்ந்திடும் தன்னிலை பூண்டனையாம். 4 காதல் பெருக்கால்நின் மாமனார் வாக்கால் கரைந்துடல் தேய்குநையாம் - பின்னர் மாதொரு பாகன் சிவபெரு மான்திரு வாக்கால் வளர்குநையாம். 5 என்று புராணங்கள் நின்வர லாற்றை இயம்புந வெண்ணிலவே - அஃதுண்மை அன்றென்றப் போலோ அமெரிக்கர் அம்பலம் ஆக்கினர் வெண்ணிலவே. 6 மாமனார் சாபத்தால் அன்றேநீ மாண்டு மடிந்தது கண்டுநொந்தார் - சான் றாமுன்றன் கல்லறை மண்ணொடு கல்லையவ் வமெரிக்கர் கொண்டுவந்தார். 7 கண்டனம் நாங்களக் கல்லையும் மண்ணையும் காட்சிப் பொருளாகக் - கண்டு கொண்டனம் மிக்க வருத்தம் அதுநின் குடும்பப் பொருளாக. 8 இத்தகு பொய்ப்புரா ணப்புளு கல்தனை இன்னும் புளுகுவதோ - உண்மையில் செத்த பிணத்தை யுயிருடை யதெனத் தேர்ந்து தொழுகுவதோ! 9  12. குடும்பக் கட்டுப்பாடு 1. வெண்பா ஒன்று கரும்பினடி ஓங்குநுனி யேயிரண்டு துன்றுபுளிப் பேமூன்று தோகாய்வேம் - பொன்றதன்மேல் பின்னும் பலபிள்ளைப் பேறுடையா ரின்விருப்பிற் கென்னுவமை சொல்வே னினி. (இது, 1929 இல் திராவிடன் என்னும் நாளிதழில் வெளி வந்தது.) 2. சிந்து ஒரோவோ ரூரில் ஒருத்தி யிருந்தாள் ஒருபிள்ளை யையவள் பெற்றாள் ஒரோவோ ரூரில் ஒருத்தி யிருந்தாள் ஒருபெண்ணி னையவள் பெற்றாள். 1 பிள்ளைக்கும் பெண்ணுக்கும் செய்து திருமணம் பெற்றோ ரகமகிழ்ந் தார்கள் பிள்ளையும் பெண்ணும் பெருமையாய் வாழ்ந்திடப் பெற்றோரேற் பாடுசெய் தார்கள் 2 கட்டில்மெத் தைகாலங் காட்டியின் னூர்திநாற் காலிபெட் டிவண்டி தொட்டில் வட்டில்செம் புகுடம் வாளியண் டாகுண்டா வாற்கிண்ணங் கோப்பைசீப் பட்டில். 3 நன்செய் நிலமிரு பத்தைந்து வள்ளம் நன்குமுப் போகம் விளையும் புன்செய் நிலமிரு பத்தைந்து வள்ளம் போட்டது போட்டாற்போல் விளையும். 4 காளைமா டைந்தாறு கன்றுமா டேழெட்டு காப்பட்டி யாடாறே ழெட்டே ஆளமா டாட்டையாள் நாலைந்து பண்ணையத் தாளவ ரைந்தாறு பேர்கள். 5 ஏதுங் குறைவின்றி வாழ்க்கைத் துணைவர்கள் இன்பமாய் வாழ்ந்துவந் தார்கள் மாதம்பத் துச்செல்ல மக்களைப் பெற்றவர் வாழத் தொடங்கிவிட் டார்கள். 6 ஆண்டுக்கொன் றாகப்பத் தாண்பிள்ளை தம்மையும் அன்புடன் பெற்றெடுத் தார்கள் வேண்டும் பருவத்தி லேமணம் செய்து விருப்புடன் வேறுவைத் தார்கள். 7 பங்கி நிலத்தைநா லைந்து படியாகப் பண்ணையம் போட்டுமே வந்தார் அங்கவர் ஒவ்வோ ரொருவரும் பத்துப்பத் தாண்பிள்ளை தம்மையும் பெற்றார். 8 மக்களைக் கற்றறி வாளர்க ளாக்கி மகிழ்ந்து வளர்த்துமே வந்தார் தக்க பருவம் உறவே திருமணம் தான்செய்து வேறாக வைத்தார். 9 பையன்கள் பத்தும் படிக்கத் திருமணம் பண்ணப் பெருங்கடன் பட்டார் பையப்பை யக்கடன் கட்ட முடியாமல் பாதி நிலத்தினை விற்றார். 10 ஆளுக் கொருபடி தந்தை நிலத்தினை ஆங்கவர் பங்கியே கொண்டார் நாளிப் படியா நடக்கவே யன்னார் நடைப்பிண மாய்நலி வுண்டார். 11 அவருக்குப் பிள்ளை பிறக்காதோ நாலிரண் டானாலெவ் வாறுவாழ் வார்கள்? சுவருக்கு மேலோர் மலையினை வைத்தால் சுமக்குமோ அச்சுவர் சொல்லீர். 12  13. தலையெழுத்து (இது, 12 - 11 - 70 இல், கிழக்குப் பாகித்தானில் ஏற்பட்ட புயலின் கொடுமைகண் டஞ்சிப் பாடியது.) கட்டளைக் கலிப்பா படைக்கு முன்னரே ராம கதையினைப் பாடி விட்டனன் வான்மீகி யென்னல்போல் படைக்கும் போதே உயிர்கள் உலகிடைப் பட்டு வாழும் பரிசிது காணெனப் படைக்கு வாயெனப் பன்னுவர்; அங்ஙனம் படைத்த வாநீ படைத்த படியலால் நடக்க கில்லா வெனவுல கத்தினர் நம்பி வாழ்குநர் என்ப தறிகுவாய். 1 உண்மை யாகவே யங்ஙன நீயுல குயிர்க ளைப்படைப் பதுண்மை யாமெனில் உண்மை யாகவே நானுன் றனக்குமோர் உண்மை கூறுவன் கேட்டியஃ தியாதெனில், உண்மை யாகவே உயிர்க ளனைத்தையும் ஓர்கு றையுமி லாவோர் நிகரவாய் வண்மை யாக மகிழ்வொ டுலகிடை வாழு மாறு படைக்குதல் மாணதே. 2 ஈர றுபதி னொன்றெழு பத்தினில் எழுந்த வங்கக் கொடிய புயலினால் ஈர றுநூறா யிரம்பே ரையகோ இறக்கு மாறேன் அவர்கள் தலையினில் நேரி லாம லெழுதினை யப்படி நினைத்துப் பார்த்திட நேரம தில்லையோ? கூர றிவிலா தேனொருங் கிப்படிக் கொல்ல வீணிற் படைத்தனை கூறுதி. 3 பெற்ற தாய்தந்தை மாரொடு பெற்றநற் பிள்ளை குட்டிக ளோடு பெறலரும் உற்ற நண்பர் உறவொ டுடனுறை ஒக்க லோடொருங் கெஞ்சா தொருவரும் மற்றிவ் வாறு திடீரென மாண்டிடு மாறே னன்னர் தலையி லெழுதினை? சற்று நீயெண்ணிப் பாரும் படைத்திடத் தகுதி யுள்ளவன் தானாநீ யென்றுமே! 4 விழவெ டுக்கவோர் தீவுக்குச் சென்றஅம் மெய்யன் பர்பத்து மூவா யிரவரும் அழவெ டுக்கென் றவர்கள் உயிர்களை ஐய கோபறித் துக்கொள அப்புயல் இழவெ டுக்கவன் னார்பெண்டு பிள்ளைகள் எழுத லாமோ அவர்கள் தலையினில்? உழவெ டுத்திட எல்லாப் பயிரையும் உழவர் களுழு வார்களோ உன்னுவாய். 5  14. அண்ணாவின் அருளுள்ளம் (உண்மை வரலாறு) எண்சீர் விருத்தம் கைக்குழந்தை யோடொருத்தி கண்ணீர் வெள்ளக் காட்டினிடைப் பெருந்துயரக் கடலி னுள்ளே புக்கழுந்திக் கரைகாணாப் புலம்பி யேங்கிப் புகைபடிந்த ஓவியம்போற் புழுங்கி யுள்ளம் ஒக்கலுடன் தனக்குரிய உடைமை யெல்லாம் ஒருங்கிழந்தாள் போற்கலங்கி உணர்வு சாம்பித் தொக்கசில பேருடனென் மாடி மீது தோகையவள் தடதடவென் றேறி வந்தே; 1 அம்மா அம் மாஏழை எளியெங் கம்மா! அடைக்கலமுங் கட்குவழக் கறிஞர் அம்மா! அம்மாவென் றழைத்திடநான் வெளியே வந்தே யார்நீங்கள் வந்தென்னை அழைத்த வாறென் சும்மாசொல் லுங்களென்றேன் தொழுத வாறே துயர்தாங்கா தழுதுகொண்டத் தோகை தந்தை அம்மாவே வேங்கடசுப் பம்மா! ஐயோ! அறுதலியா வாளிவளெங் கம்மா நாளை. 2 நடந்ததனைச் சொல்லுங்கள் என்றேன் அம்மா நான்உருக்கு மணியிவளின் தந்தை யாவேன் மடந்தையிவள் கணவன் அப்புக் குட்டன் என்பான் மணவாளக் குறிச்சியினில் வாழ்ந்து வந்தார்; நடந்தவொரு கைகலப்பால் இறந்து விட்டான் ரகுவீரன் அதைமதுரை நடுவர் ஆய்ந்து கடந்ததற்கா என துமரு மகனைத் தூக்குக் கயிற்றினிலே தொங்கவவர் தீர்ப்புச் சொன்னார். 3 மதுரைமுறை மன்றத்தார் செய்த தீர்ப்பை மாற்றவில்லைச் சென்னையுயர் நீதி மன்றம். கொதிகொதித்தென் மகள்புலம்பி எழுதிப் போட்டாள் குடியரசுத் தலைவருக்கோர் அருள்விண் ணப்பம் அதைவாழ்நாள் தண்டனையா மாற்றும் வண்ணம் அருளவில்லைத் தமிழாட்சித் தலைவர் கூட. மதுரையினி லேநாளைக் காலை தூக்கு மரமேறும் அவனைக்காப் பாற்றுங் கம்மா! 4 இவட்கின்னும் பதினெட்டாண் டாக வில்லை இக்குழந்தைக் கிரண்டாண்டு நிரம்ப வில்லை இவட்கிவ்வா றிடிவிழுமென் றெண்ண வில்லை இனியெவ்வா றிவள்காலங் கழிப்பா ளம்மா! இவட்கினித்தாய் தந்தைதமர் எல்லாம் நீங்க ளேதானம் மாதுணைவே றில்லை யம்மா! இவட்குமறு வாழ்வளித்துப் பாது காப்பீர் என்றுறுதி யாகநம்பி வந்தோ மம்மா! 5 என்றழுதார். உருக்குமணி துயரக் கோலத் தேங்கிநின்றாள். அவள்நிலையை எண்ணிப் பார்த்தேன் இன்றுபதின் மூன்றுபன்னொன் றறுபத் தெட்டாம் இதுவிடிந்தால் உருக்குமணி கைம்மை யாவாள் இன்றிதனை நிறுத்திவைக்க முதல மைச்சர்க் கேயதிகா ரமுண்டென் றறிந்த யானும் என்றனைநம் பியவவட்கா ஒருவிண் ணப்பம் எழுதியதன் முடிவிலிவ்வா றெழுதி னேனே. 6 வண்டமிழர் பாராட்டத் தமிழ்நா டாளும் மாண்புமிகு அறிஞர் அண்ணா! வணக்கம், ஓர்சொல் உண்டதெனில், தங்களையிவ் வுயர்நி லைக்கீங் குயர்த்தியிருப் பதுதாங்கள் மக்கள் மாட்டுக் கொண்டவுயர் பற்றுமெலா ரிடத்துந் தாங்கள் கொண்டுளநல் லெண்ணமுமே யாகும். நாளை ஒண்டொடியின் தாலியறா திருக்கத் தாங்கள் உதவிபுரிந் தேயருள வேண்டு கின்றேன். 7 என்றெழுதிக் கொண்டுசென்றோம் அறிஞர் அண்ணா இல்நாடித் தற்செயலா எங்கள் அண்ணி முன்றிலுக்கு வந்தார்கள் என்னைப் பார்த்து முகமனொடு யாரம்மா நீயென் றார்கள். என்றனையான் இன்னாரென் றறியச் செய்தே எடுத்துரைத்தேன் செய்தியினைச் சுருக்க மாக; அன்றிலனா ளைச்சேயோ டழைத்துச் சென்றுள் அன்புடனே பால்பழந்தந் தார்கள் அண்ணி. 8 அண்ணியெனை மட்டுமே அழைத்துச் சென்றே அண்ணாவுக் கறிமுகஞ்செய் தார்க ளென்னை நண்ணியமெ ரிக்கமருத் துவம்பெற் றுத்தாய் நாடடைந்த அலுப்பையுடல் நலிவைச் சற்றும் எண்ணிலர்கட் டிலிற்படுத்தாங் கிருந்த வாறே இருகைகூப் பியவண்ணம் என்னைப் பார்த்துக் கண்ணியமாய் அம்மாவுங் கட்கு யான்செய் கடப்பாடுண் டோவென்று கனிவாய்க் கேட்டார். 9 விரித்துரைத்தவ் வழக்கதனை வெளியில் நிற்கும் மீளாத பெருந்துயரத் தாளைப் பற்றிச் சுருக்கியுரைத் திவள்கணவன் தன்னை நாளை தூக்காமல் காப்பதுங்கள் கடப்பா டென்றேன். சிரித்தபடி ஆவனசெய் கின்றே னென்று செயலரையச் சிறையதிகா ரிக்கப் போதே நெரித்தகுழ லவள்கணவன் றனைத்தூக் காது நிறுத்திவைக்கு மாறுதந்தி கொடுக்கச் சொன்னார். 10 அன்பொடியான் விடைபெற்று வெளியில் வந்தேன் அவள்கையால் தாலிதனை இறுகப் பற்றித் துன்பமொரு பெண்வடிவாய் அழுது நின்றாள் துயரேல்நன் முடிவெனயான் சொல்லா முன்னம் தன்பொருசேய் தனையண்ணி யடியில் இட்டுத் தான்விழுந்து வணங்கினளத் தையல் தந்தை அன்பொடண்ணா கொடுத்ததந்தி கிடைத்த செய்தி அறியினெங்கட் குயிர்வருமம் மாவென் றாரே. 11 மதுரையிலே யிருந்துகம்பிச் செய்தி யன்று மாலைவந்த துருக்குமணி மகிழும் வண்ணம் அதிலிருந்த தப்புக்குட் டன்றூக் குத்தண் டனைவாழ்நாள் தண்டனையாக் குறைத்திட்டோமென் றிதையறிந்த உருக்குமணி பிழைத்தே னென்றாள் இனுங்காந்தி நூற்றாண்டு விழாவை யொட்டி அதுகுறைக்கப் பட்டதென அறிந்தின் புற்றேன் அண்ணாவின் அருளுள்ளம் வாழ்க மாதோ. 12 (இது, 2- 12 - 69 'குமுதத்' தில் வெளிவந்த, வழக்கறிஞர், குமாரி ஏ. வேங்கடசுப்பம்மா எழுதிய, 'விடிந்தால் தூக்கு' என்னும் உண்மை நிகழ்ச்சிக் கட்டுரையின் கவியாக்கம்.)  15. பொது 1. தைத்திருநாள் சிந்து மங்கல மாய்த்தமி ழாண்டின் முதலாய் வழங்கிய தெம்மாதம்? - புதுப் பொங்கல்வைத் தேநிலம் போற்றி யகமகிழ் பூத்திடுந் தைமாதம். 1 அலகுற வாண்டுதொ றுந்தமிழ் மக்கள்கொண் டாடுவ தெத்திருநாள்? - இல்லம் பொலிவுறு செல்வம் பொருந்திய தைப்புதுப் பொங்கல் பெருந்திருநாள். 2 செங்கைச் சிறுமியர் பூப்பறித் தாடித் திகழுவ தெப்பகலில்? - உயர் மங்கல வில்லம் பொலிய விளையுந்தை மாத முதற்பகலில். 3 ஆக்கள் குளித்துப்பொட் டிட்டுப் புதுச்சோ றருந்துவ தெவ்விரவில்? - நறும் பூக்கள் மலர்ந்து புதுமணம் வீசுந்தைப் பொங்கற்புத் தாண்டிரவில். 4 ஒக்கலோ டுண்டுக ளித்துப்புத் தாடை உடுத்துவ தெந்நாளில்? - நிலம் தக்க படிவிளைந் தேவள மல்கிடும் தைமுதல் நன்னாளில். 5 காளை பிடித்தடக் கித்தமிழ் மக்கள் களிக்குவ தெந்நாளில்? - அலர் பூளை யுதிர்த்திளந் தென்றலின் பூட்டிடும் பொங்கல் திருநாளில். 6  2. உழவுத்தொழில் சிந்து - ஆனந்தக் களிப்பு உன்னையே நீயெண்ணிப் பாரு - இந்த உலகத்தில் உணவின்றி உயிரேது தேரு பொன்னைப் பெட்டியிலிட்டுப் பூட்டி - காவல் புரிவோர்க்கும் உயிர்க்காவல் புரிவானே ரோட்டி. 1 அரசிய லதிகாரி என்போர் - ஏ ராளர்தம் உழைப்பினை அளந்தினி துண்போர் வரிசையாய் வாழ்பவர்க் கெல்லாம் - உடல் வாடாமல் காப்பது வயல்வரு நெல்லாம். 2 கற்றமே தையரெனும் பேச்சு - நாளும் காராளர் ஓய்வின்றி உழைப்பதா லாச்சு மற்றபல் தொழிற்றிறப் பேச்சு - சேற்று வயலிடை உழவர்செய் தொழிலினா லாச்சு. 3 பொலிவொடு நகர்வாழு மாந்தர் - ஏர் பூட்டாவிட் டால்முடி போகிய வேந்தர் உலகினைக் காக்கும்போர் வீரர் - காலை உணவினை ஒருநாளும் மறவாத தீரர். 4 பசியாற நாளுமுண் போரே - நாளும் படக்காட்சி நாடகம் பார்ப்போமென் பாரே இசைபாடி யாடிக் களிப்பார் - உண வின்றாயின் துன்பக் கடலிற் குளிப்பார். 5 ஆகையால் உலகுயிர் வாழ்வே - உழ வால்நடை பெறுவதை யறியினில் தாழ்வே தோகையர் இலையிடைத் தாழ்வீர் - பயிர்த் தொழிலினைப் பெருக்கியே இனிதுண்டு வாழ்வீர். 6 உழுவோர் உலகத்தார்க் காணி - என ஓதிய வள்ளுவன் உண்மையைப் பேணி வழுவா துழுதுண்டு வாழ்வோம் - இல்லையேல் வயிற்றுப் பசிக்கு வழியின்றித் தாழ்வோம். 7  3. உழவரின் காலைக் குரல் பல்லவி நேர மாச்சடா - தம்பி - நேர மாச்சடா நிலத்தை யுழுது விதைவி தைத்திடக் கலப்பை தூக்கிப் புலத்தை யுடையும் - நேர கண்ணிகள் வாய்க்கால் தண்ணீர்வருகு முன்னே வண்டல் மண்ணை எடுக்கணும் மதகைப் பழுது பார்த்துத் தண்ணீர் வயலிற் பாய விடுக்கணும் காய்க்கா முன்னே தழையை வெட்டிக் கரையின் மேலே குவிக்கணும் காளைக் கன்றை ஏரிற் பூட்டி வேளை தோறும் பழக்கணும் - நேர 1 வரம்பு வெட்டி மேடெ டுத்து வயலைச் சமனாப் புதுக்கணும் வாங்கி வந்த கொழுஞ்சித் தழையை வயலி லுதறி மிதிக்கணும் பரம்ப டித்து நாற்றை நட்டுப் பலனை நன்கெதிர் பார்க்கணும் பாதை யோரம் வேலி போட்டுப் பயிரைப் பாது காக்கணும் - நேர 2 களைக ளைந்து நிலமி ளக்கங் காணும் வகைகை யோச்சணும் கட்ட பயிர்பண் பட்டு நிமிரக் கருத்து டன்நீர் பாய்ச்சணும் மளம ளென்று செழித்துப் பயிரும் வளர வேயுரம் போடணும் மாயப் பூச்சி மருந்த டித்து வான்ப யன்கை கூடணும் - நேர 3 கலப்பை யைக்கீழ்ப் போட்டு விட்டால் காப்ப தாரிந் நாட்டிலே கழனி யதில்நெல் விளையா விட்டால் கஞ்சிக் கேது வீட்டிலே மலைப்பை விட்டுப் பாடு பட்டு வருமு ழவர்கள் இல்லையேல் வாய ரட்டை யடிப்ப வர்க்கு வயிற்றுக் காவ தில்லையே - நேர 4  4. உழைப்பின் சிறப்பு எண்சீர் விருத்தம் நாட்டினிலே யுள்ளவர்கள் நாகரிகம் பேசி நாச்சுவைக்க உண்டுடுத்து நல்வாழ்வு வாழப் பாட்டினிலே நாடோறும் பகலிரவைப் போக்கிப் பனியாலும் வெயிலாலும் பாவியுடல் கருக வீட்டினிலே அவள்வேலை வெட்டியெலாம் முடித்து வெயிலாலே தன்கணவன் வெம்பசியை யறிந்து காட்டினிலே விரைந்து வரக் கண்டுகளித் துழவன் கையொட்டி உணவருந்துங் காட்சிதனைப் பாரீர். 1 இலையில்லை, நீர்ச்செம்பும் இலைகால் மடக்கி இருந்துண்ண மணையில்லை, இலைமுன்னர் அமரும் நிலையில்லை, அவளேனும் நிமிர்கின்ற தாக நினைவில்லை, வாய்வைத்த நீள்கையை வாங்க மலையில்லை, அதுநேரம் வறிதேகும் பிள்ளை வரவெண்ணும்; இதுபோக மனைமூன்று வேளை உலையில்லை, ஏராளன் உழுதுண்டு நாளும் உயிர்வாழ உணவுண்ணும் முறைபோலும் உலகீர். 2  5. வேளாண்குடியின் இயல்பு சிந்து காலையிலே எழுந்திருந்து காடுகரை செல்வோம் கலப்பையினால் உலகமக்கள் கடும்பசியைக் கொல்வோம் வேலையிலே சலிப்படைந்தால் வியர்வையினைத் துடைப்போம் வெட்டியிலே உண்பவர்க்கு வெளிக்கதவை அடைப்போம் சாலையிலே நடப்பவரைத் தடுத்திள நீர் குடிப்போம் தண்டமிழி னிசைபாடிக் கொண்டு தொழில் முடிப்போம் மாலையிலே குவளைமலர்ந் தாற்பொழுதை யறிவோம் வயமிகுவே ளாண்குடியின் இயல்பிதுகா ணையே!  6. எண்ணிப்பார் குறள்வெண் செந்துறை போரேறி வான்குலுங்கப் பொலியுந் தமிழகத்தில் ஓரே ருழவனிலம் உழுது சலிப்படைய, பத்தே ருழவன்வயற் பக்கமெட்டிப் பாராமல் தத்தேறி யாய்நகரைத் தானடைந்து சீரழிய, உள்ள துலகுயிரை ஓம்பும் உழவர்நிலை பள்ள வயற்பருவம் பார்த்து வருந்துதுகாண். காடுகரை போகாமல் கண்டபக்கம் சுற்றிவிட்டு மாடெனவே பட்டணத்தில் வண்டியிழுத் தோயாதே; உழக்கு நிலந்தனக்கா ஒருவள்ளந் தன்னைவிற்று வழக்கறிஞர் வாசலிலே வாயுலர்ந்து நிற்காதே; அயலான் வரப்பைவெட்டி அடிதடிபோட் டப்பாடா கயிலே விலங்கணிந்து கடுஞ்சிறையில் வாடாதே; மல்லுக்கட்டிக் கொண்டுமுறை மன்றமதிற் கண்கசிந்து கல்லுப்பிள்ளை யார்போலக் கைகட்டி நிற்காதே; சுவையாரத் தின்றுதின்று தோட்டத்தை விற்றுவிட்டுக் கவையரிவாள் தோளில்வைத்துக் கைக்கூலி செய்யாதே; கதைபேசி யேவிதைப்புக் காலமதை வீண்கழித்து முதுகெரிய வேசரிபோல் மூட்டை சுமக்காதே; இலமென் றசைஇபருவத் தேர்பூட்டப் போகாமல் நிலமெனுநல் லாள்நகவே நெஞ்சுடைந்து போகாதே; உழவினா லிவ்வுலகம் உண்டென்னும் உண்மையினை வழுவாமற் கொண்டுலகை வாழ்விப்ப துன்கடனே; ஒன்று மினத்தினரை ஒதுக்கிவிட்டு மாற்றார்போல் நின்று தனிமரம்போல் நிலவுலகில் வாழாதே; எற்றி யகத்தெழுந்த இனப்பற்றா லீதுரைத்தேன் சிற்றுரையா னாலுமிதைச் சிறிதெண்ணிப் பார்த்திடுக.  7. மேழிக்கொடி பல்லவி வண்ணமே ழிக்கொடி பாரீர் - அதை வாழ்த்தியே தாழ்ந்து வணங்குவோம் வாரீர் - வண் கண்ணிகள் கண்ணுக் கினியவோர் காட்சி - திசைக் காற்றினா லாடிப் பறந்திடு மாட்சி மண்ணுக் கணிகல மாகும் - நாளும் வாழ்த்தினால் மக்கள் பசிப்பிணி யேகும் - வண் 1 சேர்ந்து முகில்விளை யாடும் - மிகு சேணுயர் வான முகட்டினும் நீடும் ஆய்ந்துமே நட்ட மரத்தில் - இனி தாடுது பாரீர் அதோவுய ரத்தில் - வண் 2 செக்கச் செவேலென்ற தோற்றம் - எட்டுத் திசையிலும் வாழ்வோர் தொழில்களுக் கேற்றம் தக்க தொழில்உழ வென்னும் - பெயர் தாங்குங் கலப்பை நடுவினில் மன்னும் - வண் 3 தூய கருத்தடி மீதில் - அதோ தோன்றுங் கருங்குயில் பல்கலை யோதும் ஆய தொழிற்றிறக் கூறு - அதை அண்ணாந்து பார்க்குமவ் வாணரி யேறு - வண் 4 பாருல கமினி துய்யும் - நல்ல பசுமைப் புரட்சிப் பயனுறச் செய்யும் சீரும் சிறப்பும் சிறக்கும் - இளந் தென்றலி னாடிச் சிறந்து பறக்கும் - வண் 5 உழுவா ருலகத்தார்க் காணி - என ஓதிய வள்ளுவன் சொல்லினைப் பேணி வழுவா துலகினைக் காக்கும் - ஏரின் வாழுநர் போற்றி வயல்வள மாக்கும் - வண் 6 உற்ற பசிப்பிணி யேகும் - படி உண்ணுநர் யார்க்கும் இதுபொது வாகும் கொற்ற முடனேயாள் வோரும் - கை கூப்பிடு மேழிக் கொடியது பாரும் - வண் 7  8. தொழிலாளர் சிந்து ஆற்றுந் தொழில்பல நன்று - தொழி லாளத்தோ ழர்களுக் கொன்று சாற்றுவன் கேட்டிடு வீரே - நாட்டின் தாழ்வினை யோட்டிடு வீரே. 1 உடலுக்கு நல்ல துழைப்பு - அவ் வுழைப்பினா லுள்ளது பிழைப்பு கடலுக்குள் வாழ்ந்திடும் முத்து - அதைக் காணும் உழைப்புநம் சொத்து. 2 கூலிக்கா வேலைசெய் யாதீர் - கூலி கொடுப்போரும் வேலைசெய் கின்றார் வேலைக்கா வேலைகள் செய்தே - நாட்டை மேம்படச் செய்குதல் வேண்டும். 3 எனக்கென்ன வோகூலி தானே - என எண்ணித் தொழில்புரி யாதீர் தனக்கெனச் செய்யுந் தொழில்போல் - எண்ணித் தான்தொழில் செய்திட வேண்டும். 4 ஒப்படைத் தவொரு தொழிலை - தன் னுடைத்தொழி லாக்கொளல் வேண்டும் அப்படிச் செய்யுந் தொழிற்கு - சப் பானியர் காட்டாவர் காணும். 5 உண்பது மேயொரு தொழிலே - உண் டுறங்குவ துமொரு தொழிலே உண்ப துறங்குவ தேபோல் - தொழிலை ஊக்க முடன்செயல் வேண்டும். 6 சிற்றி லிழைத்துமே யாடும் - அச் சிறுமியர் செய்கையுந் தொழிலே சிற்றில் சிதைத்துமே யோடும் - அச் சிறுவர்கள் செய்கையுந் தொழிலே. 7 என்றொழில் உன்றொழில் என்னும் - அவ் வெண்ணத்தை விட்டினி யாரும் தன்றொழி லைச்செய்தல் போலப் - பிறர் தந்தொழி லைச்செய்தல் வேண்டும். 8 பத்துப்பேர் செய்யுந் தொழிலை - மேற் பார்ப்பது மேயொரு தொழிலே இத்தனை பேரித் தனைநாள் - என் றெழுதிவைப் பதுமோர் தொழிலே. 9 எறும்புக் குடும்பத்தைக் கண்டு - அவற்றின் எய்யா உழைப்பினைக் கொண்டு ஏறும்புபோல் நாமுமு ழைத்து - நாட்டை ஏற்ற முறச்செய்தல் வேண்டும். 10 எச்சிலால் மண்ணைக் குழைத்து - கோபுரம் என்னவே புற்றையுண் டாக்கும் அச்சிதல் ஊக்கத்தைப் போல - நாம் அயரா துழைத்திடல் வேண்டும். 11 ஏவாம லொவ்வோ ருயிரும் - வாழ்தற் கியன்ற தொழில்செய்தல் போல ஓவாமல் நாம்தொழில் செய்தே - நாட்டை ஓங்கிடச் செய்குதல் வேண்டும். 12 சொல்லுவோர் பேச்சினைக் கேட்டுச் - செய்யும் தொழிலை முடக்குதல் தப்பு செல்லுமக் காலத்தை மீண்டும் - நாம் திரும்பப் பெறுதலு மாமோ? 13 போரிடை வீரன் தவிர்ந்தால் - உயிர் போக்குடன் நாட்டுக்குந் தோல்வி தேரிடின் வேலை நிறுத்தம் - அது செய்வது மன்னவே தேரீர். 14 அந்தந்தக் கட்சிகள் வெல்ல - விளை யாடுவோர் கொள்ளுமக் கறைபோல் அந்தந்த வேலைகள் செய்வோர் - கொளல் அன்னார் கடமை தாமே. 15 பொழுதினை யண்ணாந்து பார்த்துப் - பார்த்துப் பொழுதினைப் போக்குதல் தப்பு உழுது பலன்கொள லாமோ - ஈரம் உலர்ந்துழ லாகாது போனால்? 16  9. முதலாளியியும் தொழிலாளியும் எண்சீர் விருத்தம் முதலாளி தொழில்செய்வோர் முதல்போட்டுத் தொழிலை முடிக்குமவர் தொழிலாளி எனப்படுவர் முறையே முதலாளி தொழிலாளி முதலுக்கும் தொழிற்கும் முறையேஊ தியம்பெறவே முயலுதலு மியல்பே. முதலாளி தொழிலாளி முரண்பாடு கொள்ளின் முதலோடு தொழிற்காமவ் வூதியமும் முடங்கும். முதலாளி தொழிலாளி முயன்றுசெய்யுந்தொழிற்கு முசியாத பங்காளி முறையாகு வாரே. 1 ஆலையிலே வேலைசெய்வோர் அங்கறிசங் கூதின் அத்துடனே யவர் பொறுப்பு முடிந்துவிடும். ஆனால், ஆலைமுத லாளியச்சங் கூதியபின் அன்றைக் கானதொழி லென்னவரு வாயென்ன நாளைக் காலையிலே வேண்டுபொருள் காண்டிடுமோ வாங்கக் காசுளதோ எனப்பார்த்துக் கணித்தறிந்தி ராவில் வேலைசெய்தால் தான்ஆலை விளைவாக்க இரவு விடிந்ததுமே நிற்காமல் தொடர்ந்தோடுங் காணும். 2 பாங்குடனே தொழில்நடத்தப் பணம்வேண்டும் வங்கி பலவற்றும் பலரிடத்தும் பணம்வாங்க வேண்டும் வாங்கியவக் கடனுக்கு வட்டிதர வேண்டும் மறவாமல் தவணையினில் வழங்கிடுதல் வேண்டும் வீங்குபொருள் தேங்கிடினும் விலையிறங்கி விடினும் விடாதுதொழில் நடத்திவரவேண்டு மெவ்வா றேனும் ஈங்குமுத லாளிபடும் இன்னலிவை தம்மில் இலையொன்றுந் தொழிலாளிக் கென்பதறி வீரே. 3 மேற்படி வேறு வண்ணம் இடம்பூணி வலம்பூணி யிரண்டும் ஒத்தே இழுத்தால் தான் வண்டியினி தியங்கு மென்னும் அடங்கைமுத லாளிதொழி லாளி என்போர் அறிந்துதத்தம் கடமைதவ றாம லாற்றி உடம்பொடுயிர் அமைந்தமைபோ லமைந்தே யென்றும் ஒற்றுமையாய்த் தொழில்செய்தே ஓங்க வேண்டும் இடங்கைவலங் கையிரண்டு மிசைந்தா லன்றி இனிதோசை யுண்டாமோ இயம்பு வீரே. 4 கையூட்டும் உணவினைவாய் உண்ணாக் காலை களைத்துடம்பு படுத்துவிடும், கால்வாய் நீரைச் செய்யூட்ட விலையெனில்நெல் விளையா, செய்யும் செயலுமுதல் போட்டவரும் செயல்செய் வோரும் மெய்யூட்ட முறவுணவை விழைந்து கைவாய் வேளைதொறும் ஊட்டுதல்போல் விரும்பி யொற்று மையூட்டித் தொழில் செய்து வாழும் வாழ்வே வாழ்வாங்கு தொழிற்றுறைவாழ் வாழ்வா கும்மே. 5 மேற்படி வேறு வண்ணம் உடலு முறுப்பு மேபோல உளமுத லாளி தொழிலாளி, உடலு முறுப்புஞ் சேர்ந்தான ஒருவன் போலும் தொழிலகமே. உடலு முறுப்பும் நலமாயின் உடையோன் நலமா யிருப்பானவ் உடலோ உறுப்போ நலிவுற்றால் உடையோன் நலிவுற் றவனாவான். உடலு முறுப்புநன் னலமானால் உடையோன் நன்னல முறலேபோல் உடலு முறுப்பு மேபோல உளமுத லாளி தொழிலாளி உடலு முறுப்பும் போல்நலமா உடையான் போன்ற தொழிலகத்தை ஊறொன் றன்றி யிருவோரும் ஓம்பல் அவர்தம் கடனாமே. 6  10. விறகு வெட்டி எண்சீர் விருத்தம் வேகாத வெயிலினிலே வேர்வைசொட்டச் சொட்ட மேனியெலாங் கூனிமிர வேங்கையென ஓங்கி ஆகாத தொன்றுமிலை அஞ்சாதே நெஞ்சம் ஆண்மையுட னேயடித்தால் ஆயிரஞ்சுக் காகப் போகாதோ வென்றுசொலிப் பொய்யுடல மூக்கப் பொட்டிமக னும்விறகை வெட்டுகின்ற போது நோகாத வாழ்வுடைய நோயுடலத் தாரை நோக்குமவன் நோக்கினுக்குப் போக்குமரந் தானோ!  16. புரட்சிப் புயல் எண்சீர் விருத்தம் இமயமுதற் குமரிவரை எனவே சேரன் எல்லைவரை யறைசெய்த இந்த நாட்டில் அமையவுயி ரியற்கையினி தாணும் பெண்ணும் அவரவர்தம் உரிமைதக வமைந்து வாழக் குமையவுடல் நலங்கொல்லுங் கொடுநோய் போலக் குடியேறி ஆரியமாங் கொடிய கூட்டம் சுமையெனவிந் நாட்டினரைச் சுரண்டி யுண்டு தொழுங்குலமாய் வாழ்ந்திருக்கத் துணிந்த தம்மா. 1 கொண்டதவக் கோலமுடன் கொழுகொம் பில்லாக் கொடிபோன்ற நிலையினராய்க் குறுகி னாரைக் கண்டபழந் தமிழ்மக்கள் கழிகண் ணோடிக் கனிந்தவுள முடையினராய்க் காமின் என்றிங் கண்டினரைப் பரிந்தேற்றுப் போற்றும் பண்பா டதனாலவ் வயல்நாடர் தம்மை யன்னார் உண்டியுடை யுதவியொரு குறையு மின்றி உரிமையுட னினிதேயீங் குறையச் செய்தார். 2 உண்டியுடை யுறையுள்பிற உதவிச் சொந்த ஊர்போலிங் கிருந்திடச்செய் யுதவிக் கேற்ற தண்டனையா இந்நாட்டு மக்க ளுக்குச் சமயமெனு மயக்கமருந் தூட்டி யன்னார் கொண்டவியற் கையவாழ்வைக் குலைத்துத் தங்கள் கொள்கையினைப் புகுத்திமனங் குழம்பச் செய்து கண்டதைவிட் டேகண்ணால் காணா வாழ்வைக் கனவுகண்டு வீண்காலங் கழிக்கச் செய்தார். 3 நல்வினைதீ வினைக்கேற்ப உயிர்க ளெய்தும் நற்பிறப்புந் தீப்பிறப்பும் நாட்டில் வாழும் செல்வர்கள்முன் நல்வினைசெய் தவர்கள் இல்லார் தீவினைமுன் செய்தவராம்; செய்ய வேள்வி சில்வகைய பொருளுதவி செய்கு வோரும் செல்வர்களாய் மறுப்பிறப்பில் சிறக்க வாழ்வர்; தொல்வருமப் பழமறைகள் துணிந்திவ் வாறு சொல்லுகின்ற வெனமுழுப்பொய் சொன்னா ரம்மா. 4 மறைவேள்வி யாற்கடவுள் மகிழ்ந்து நாட்டில் மழைபொழிய நிலம்விளைய மக்கட் குள்ள குறையகல அருள்புரிவர்; இதையுங் கட்குக் கூறிமறை வேள்விசெய்து குறைவின் றாக்க இறைவனெமை யனுப்பினன்வா னுலகின் கண்ணின் றிறங்கிவரு கின்றேமென் றுண்மை போல அறையவதை நம்பிமெய்யென் றப்பூத் தேவர்க் கடிமைகளா னார்கள்சிலர் அவாவாய்ப் பட்டே. 5 மடங்கலந்த மதியுடையார் மயங்கி னார்தன் மானமொடு பகுத்தறிவு வாய்ந்தார் புற்றுள் ஒடுங்கியுறை பாம்பனையார் உரைத்த பொய்யை உண்மையெனக் கொள்ளாமல் எதிர்ப்புக் காட்டத் தொடங்கவவர் சூழ்ச்சியினால் பெரும்பா லோரைத் தோல்விகண்டு நாளடைவில் தொழும்ப ராக அடங்கினரை அடிமை யென்றும் அடங்கா தாரை அரக்க ரென்றும் இழிபெயரிட் டழைத்தா ரம்மா. 6 இதையவர்தம் மறைநூலில் எழுதி வைத்தார் இன்றுமதை யப்படியே காண லாகும். இதுதொடர்ந்து நடந்துவரத் தி. மு. ஓரா யிரத்தினில்நம் பெரியார்போல் இருவர் ஆன்ற மதியுடைச்சார் வாகர்சா ரிணிப்பேர் பூண்ட மணவாளன் மனையாட்டி யாவார் உள்ளம் பதைத்தெழுந்தவ் வாரியர்தம் சூழ்ச்சி தன்னைப் பறையறைந்து மக்களிடைப் பரப்பி னாரே. 7 ஊரூராய்ச் சென்றன்னா ருடைய சூதை உணர்ந்துபகுத் தறிவுபெற்றவ் வூணர் சொல்லை நேராராய் வாழ்ந்தமுனை நிலையை எண்ணி நிகழ்த்துகின்ற புறவாழ்வை நீத்து முன்போற் சீராராய் இந்நாட்டு மக்கள் வாழச் செய்யுமத்தொண் டினுக்கெதிர்ப்பைச் சிறிது மெண்ணிப் பாராராய் அயர்வின்றிப் பகலி ராவாய்ப் பகுத்தறிவை நாடெங்கும் பரப்பி வந்தார். 8 சிந்து இன்னவா றன்ன ரிருவரும் - நா டெங்குமா ரியவி ருள்கெடத் துன்னு மிருசுட ரென்னவே - ஊர்தொறும் சுற்றி வருகையி லுற்றனர் தன்னுடை மாணவ ரோடொரு - காட்டில் தவஞ்செய்வா னென்றுகண் மூடியோர் மன்னு மறைமுனி என்பவன் - தங்கி வாழுமவ் விலைக்கு டிலினை. 9 கண்டு முனியை வணங்கவே - அகக் கண்ணிலான் சாரிணி தேவியைக் கண்டு பதறி யெழுந்தனன் - வெங் கனலெனச் சீறி விழுந்தனன் பெண்டிவள் யார்தவச் சாலையுள் - பாவப் பிறவி புகலாமோ என்றுவெ குண்டுலை நீர்போற் குமுறியே - வாயால் கூறா தனவெலாங் கூறினான். 10 தீவினை யாலிவ் வுலகினில் - பெண்கள் தீட்டுடன் வந்து பிறந்தனர் பாவியே என்றவச் சாலையை - வாலாமை பண்ணினை சண்டாளி நண்ணியே ஆவினி என்னயான் செய்குவேன் - வேள்வி ஆயிரம் ஈடோ இதற்குமூ தேவியென் றேயந்தப் பாவியும் - வாயால் திட்டா தனவெல்லாந் திட்டினான். 11 கேட்டம் மொழியைச்சார் வாகரும் - அக் கிழமுனி வன்றனைப் பார்த்துமே தீட்டெனப் பெண்ணைப் பழித்திடும் - பூத் தேவரீர் எங்குப் பிறந்தனிர்? காட்டிற் கிடக்குமக் கல்லிலா - நும் கண்முனர் நிற்கும் மரத்திலா? தீட்டுத் திரண்டுரு வானநீர் - அத் தீட்டுப்பா லையேன் குடித்தனிர். 12 தீட்டு வயிற்றிற் கிடந்ததை - ஐயிரு திங்கள் மறந்தனிர் ஐயகோ! தீட்டெனும் பெண்ணின் பெருமையை - நீர் சிறிதும் அறிந்திலிர் திட்டுமத் தீட்டிலை யேலிவ் வுலகுயிர் - இன்றிச் செம்மண் ணுருண்டையாய் மாறுமே. வேட்டிடும் வேள்வி விறகினும் - உண்ணும் விலங்கினும் தீட்டென்ப தில்லையோ? 13 என்றுசார் வாகர் இயம்பவே - முனி ஏதும் மறுமொழி ஓதிலன் என்றன் தவவலி யாலிவள் - தன்னை எரித்திடு வேனென் றியம்பியே கன்றிக் கறுத்துக் கனலெழ - இரு கண்ணுஞ் சுழன்று கதழுறத் தின்றிதழ் நிமிர்ந்து நின்றுமே -தீப்பொறி சிந்தவே சேந்து விழித்தனன். 14 சாரிணி கண்டு சிரித்துமே - நும் தவவலித் தீயென் றகுவலி நீரி லவிந்துநீ றானதே - என்ன நிலங்கவிழ்ந் தம்முனி நிற்கவே பாரிய மாணவர் பாயவே - அதைப் பார்க்கவந் தேயங்கு கூடிய ஊரின ரோட்டி யுவப்புடன் - அன்னவ ரோடுசென் றூரை யடைந்தனர். 15 அடைந்தவவ் வூரார் அகத்தினின் - றவ் வாரிய மாயை யகன்றிடக் கடைந்த தயிரி னுருண்டெழும் - மணங் கான்றிடும் வெண்ணெயைப் போன்றுமே மடந்தப மெய்யறி வூட்டினர் - தன் மான வுணர்ச்சி திரண்டெழ விடிந்த திராவென் றுவந்துமே - ஊரர்பால் வெற்றி யுடன்விடை பெற்றனர். 16 வேறு சிந்து ஊரவர் பால்விடை பெற்றே - அவ் வூரினை விட்டுவே றூரினை நாடிச் சாரிணி யோடுசார்வாகர் - தம் தன்மானப் பேரொளி தன்னைப் பரப்பி ஆரியப் பேரிரு ளோட - அவர் அல்லும் பகலும் அயர்ச்சி யுறாது மாரிபோ லுண்மை வழங்கிச் - செல்லும் வழியிலோ ரூரையவ் வாண ரடைந்தார். 17 அன்னவர் துன்னிய போது - கண்டார் அந்தவூர்ச் சாவடி அந்தவூ ராக அன்னதை என்னென் றறிய - அவர் ஆவலாய்க் கூட்டத்தை மேவிய போதில் என்னெனில் ஓரிள மங்கை - ஆளன் இல்லாத போதொரு நல்லா னிடத்துப் புன்னெறி தன்னிலே போகி - அப் பொற்றொடி யாள்கரு வுற்றன ளம்மா! 18 தந்தவாண் பிள்ளையை விட்டே - அத் தையலின் மீதம் பெய்திட வூரார் வந்தவ்வூர்ச் சாவடி தன்னில் கூடி வழுக்கிய அன்னாள் இழுக்கினைக் கேட்க வந்த வகையை மறாது - சற்றும் வாதுசூ தேதுமி லாதவம் மாது சிந்தை கலங்கிமுன் வந்து - நின்று தெற்றென இன்னவா றுற்றதைச் சொன்னாள். 19 கைப்பிடித் திட்ட கணவன் - போர்க் களத்திடை வீரம் விளைத்தங் கிருந்தான் தப்புத் தவறிலை என்பால் - இயற்கை தன்னைவெல் லமுடி கில்லையென் னாலே எப்படி யிப்பரு வத்தில் - இன்னும் இருபதும் ஆகா இளையாள் தனியாய் அப்பழுக் கில்லா திருப்பேன்? - ஒருவனை அன்போ டணைந்திதை என்பா லடைந்தேன். 20 ஆனால் எனக்கிதைத் தந்த - அந்த ஆண்மகன் தன்னைவிட் டாண்மையில் லாமல் ஏனோ எனையொழுக் கில்லாள் - என்றே ஏசுறீர் வீண்பழி பேசுறீர் ஈது தானோ முறைநான் தனித்தே - இந்தத் தப்பினைச் செய்குவ தெப்படிச் சொல்லீர்? நானோ நடந்ததைச் சொன்னேன் - இனி நல்லதீர்ப் புக்கூற வல்லவர் நீரே. 21 என்றவள் உண்மையைக் கூற - அங் கிருந்த மகளிர் பொருந்துமிக் கேள்வி மன்றினி லேயோர வஞ்சம் - சொலல் மாட்சியோ பெண்பிள்ளைப் பூச்சியோ நேர்மை அன்றவன் தன்னையுங் குற்ற - வாளி ஆக்கலே ஒழுக்கங் காக்குத லாகும் ஒன்றிய மக்கட் பிறப்பில் - ஆணுக் கொருசட்டம் பெண்ணுக் கொருசட்ட மாமோ? 22 என்னவே பெண்டிர்க ளெல்லாம் - ஒருங் கீதுத காதென ஓதவே, ஆண்கள் புன்னகை பூத்துப் புகல்வார் - ஆணின் பொருளெனப் பெண்ணைப் புலமையோ ராய்ந்து சொன்ன படிமறை சொல்லும் - ஆயிரந் தோகையை யாடவன் தோய்தற் குரியன் பொன்னிள மாதர்க ளெல்லாம் - ஆண்களின் போகப் பொருளென ஓகையோ டார்த்தார். 23 ஆடவ ரவ்வா றறைய - நாட் டாண்மைக்கா ரனெனுங் கோண்மைக்கா ரன்பெண் பாடறி யாது பகர்வான் - நம் பழக்க வழக்க ஒழுக்கிற்கு மாறாக் கூடியோ ராணைச்சூல் கொண்ட - இவளைக் கொல்லுவ தேகுடிப் பொல்லாமை நீங்கற் கீடதா மென்ன இசைப்ப - அங் கிருந்தசார் வாகர் பொருந்த உரைப்பார். 24 கட்டிள மைப்பரு வத்தின் -வலுக் கட்டாயத் தாலிதேற் பட்டதென் றெண்ணி விட்டு விடுவதே மேலாம் - இவளை வெட்டிக்கொல் வதனால் கெட்டது போமோ? பட்டதன் உண்மை பகர்ந்தாள் - ஆண் பாலும்பெண் பாலுமோர் பாலின ரன்றோ? சட்டம் ஒரேதரம் அன்றோ? - எனத் தன்மானத் தந்தை கொலையைத் தடுத்தார். 25 ஒப்புக் கொள்ளவில்லை ஆண்கள் - கொன் றொழிக்கத் தலைவன் உறுதி யளித்தான் கைப்பிடித் திட்ட கணவன் - போர்க் களத்தி லிருந்து களங்கொண்டு மீண்டே அப்போது தானங்கு வந்தான் - கொலைக்குரித் தானவள் தன்மனை யாளென் றறிந்தான் ஒப்பிய ஊருக்கு மாறா - அவன் ஒன்றும்பே சாமலே நின்றான் மரம்போல். 26 அன்னவன் உள்ளம் நடுங்க - தன்மனை யாட்டியைக் கொல்ல அவன்கையி லோர்வாள் தன்னைக் கொடுத்தான் தலைவன் - அவன் தான்பல மின்னார்க் கிழைத்த தவற்றை உன்னி யுளங்கலக் குற்றான் - அதை ஒப்பிட்டுத் தன்மனை தப்புடன் பார்த்தான் அன்னவள் தன்னினுந் தானே - குற்ற வாளியென் றுள்ளியம் மீளிநொந் திட்டான். 27 பாகன சொல்லியர் மீது - ஏற்றும் பழிக்குத்தன் போன்ற பதர்களே காரணம் ஆகுவ ரென்றவ னுள்ளம் - ஆங் கறிவுறுத் தவேகொல் லாம லிவளைப் போகென ஓட்டிடு கின்றேன் - எனப் பொங்கி யெழுந்தனள் அங்கவன் அன்னை மாகுடி கேடியைச் சும்மா - விட்டு வைத்தாலிவ் வூரும் மதித்திடா நம்மை. 28 கொன்று தொலைப்பதே மேலாம் - நம் குடும்பத்தைப் பார்க்கவ் விடும்பியென் மேலா! என்றவள் கொல்லிவள் போனால் - உனக் கின்னொருத் தியிலை யோவென, அங்கு நின்ற மகளிர்க ளெல்லாம் - காட்டு நெருப்பெனப் பொங்கி யெழுந்து நெருங்கிச் சென்றொருத் திகுற்றம் செய்ய - மற்றொரு சீருயி ரைக்கொலல் நேரிய தாமோ? 29 குற்றஞ் சுமத்தப்பட் டுள்ள - இக் கொம்பின் வயிற்று ளிருக்கும் குழந்தை குற்றமென் செய்தது கொல்ல? -அதைக் கொல்லவோ ரேதுவு மில்லையே காணும் மற்றவ ளைக்கொன்றீ ரேனும் -இவள் வயிற்றி லிருக்கும் மகவி னுடலை இற்றை யழிக்கத் தகாது - முறை யின்றெனப் பெண்டிர்முன் னின்றே யெதிர்த்தார். 30 அல்லென் றிருண்ட மனத்தர் - ஆயவவ் வாடவர் நூன்முறை யாய்ந்தங் குரைத்த மெல்லியர் சொல்லையேற் காது - தலை வெட்டத் தயங்கிய வீரன் றனக்குக் கொல்லென் றபினைக் கொடுக்க - உட் கொண்டதை மற்றவ னும்வெறி கொண்டு வல்லிதி னேதன் மனைவி -உயிர் வாங்க அவன்கொலை வாளினை ஓங்க, 31 வேறு சிந்து நிறுத்து நிறுத்து நிறுத்தெனக் - கூட்டத்துள் நின்றொரு பேரொலி மன்றுற கறுத்த மனத்தர் கலங்குற - அந்நின்ற காரிகை வெள்ளந் துலங்குற ஒறுத்தது போதும் நிறுத்தெனத் - தடி யூன்றிமூ தாட்டி யொருத்தியும் வெறுத்த அவனும் வெருக்கொளக் - கூட்டத்தை விட்டதிர்த் தேவெளிப் பட்டனள். 32 அன்றொரு நாள்விழா மன்றினில் - மக்கள் ஆடியும் பாடியும் ஆர்த்தனர் சென்று பகலிரா வொன்றியும் - வீடு திரும்பிலர் ஆட விரும்பினர் கன்றி யிருட்டிய காலையில் - இளங் கன்னி தனித்தங் குறங்கினாள் துன்றி யிரண்டு முரடர்கள் - அத் தோகையைச் சீர்குலைத் தேகினர். 33 யாரவள் நானேதான் வேறிலை - எழுப தாண்டின்முன் ஈது நடந்தது பூரிய ரிருவர் யாரெனில் - ஒருவன் பொன்னுயி ரீந்திடத் துன்னுமிந் நாரியைக் கொல்லெனச் சொல்லிய - இந்த நாட்டாண்மைக் காரனே, மற்றவன் காரிகை யென்றன் கணவனே - ஊரார் கட்டளை யால்மணந் திட்டனன். 34 ஈங்கவள் வாய்திற வாமுனம் - அவ் விருவரு மாங்குநின் றேகினர் தீங்கிலள் என்றத் திருமகள் - நல்ல தீர்ப்பை யடைந்தனள் ஆர்ப்புடன் ஆங்குசார் வாகர் அறிவுரை - யதால் அவளை அவன்மகிழ்ந் தேற்றனன் பாங்கொடு சார்வாக சாரிணி - ஊரார் பாராட் டதனுக்காட் பட்டனர். 35 தம்மின வாழ்வு தழைக்கவே - நம் சார்வாக சாரிணி பேச்செனும் கம்மி யிருண்டு கருத்தெழுந் - தெக் காலுமோ யாமலெப் பாலுமே விம்மி யுருமிமின் னியிடித் - தோங்கி வீசும் புரட்சிப் புயலினை அம்மவவ் வாரியந் தாங்கிலா - தஞ்சி அல்லோல கல்லோலப் பட்டதே. 36 இவ்வா றவரிரு வோர்களும் - நா டெங்கும் அறிவொளி வீசவே ஒவ்வாவவ் வாரியப் பேரிருள்- மக்கள் உளத்தைவிட் டோடி யொளிந்ததே அவ்வாறு மக்களை ஆக்கியே - மேம்பா டாக வாழ்ந்துவர, ஆரியர் எவ்வாறே னுமவ்வி ருவரை - ஒழிக்க எண்ணியே சூழ்ச்சிகள் பண்ணினார். 37 பன்முறை சிறையி லிட்டனர் - மக்கள் பாய்ந்து விடுதலை ஈந்தனர் என்முறை யோவுள் ளிருக்கையில் - வீட்டில்தீ இட்டக் கொடியர்கொன் றிட்டனர் தன்முறை மாறா இருசுடர்-எனச் சார்வாக சாரிணிப் பேரொளி மன்முறை யாக மனவுணர் - வென மக்கள் உளத்தென்றும் வாழ்கவே. 38 அன்னரை ஐயகோ கொன்றதோ- டமை யாதவ ராய்ந்தாய்ந் தெழுதிய பன்னரு நூல்களைத் தீயுணச் - செய்து பாழ்செய்து விட்டாரப் பாவிகள் வன்னெஞ்ச ரன்னரை வைதுமே - எழுதி வைத்த மறையி லிருந்துமே அன்னைதந் தையன்ன அன்னரை -ஒருவா றறிந்துநா மின்புற லானதே. 39 ('இண்டியன் ரேஷனலிஸ்ட்' என்னும் இதழில் வெளிவந்த கட்டுரைக் கருத்தைத் தழுவி, 20, 21, 23 - 7 - 53, 2 - 8 - 53 இல் எழுதிய 'விடுதலை'க் கட்டுரைகளைக் கொண்டு 1953 இல் பாடப்பட்டது.)  17. தலைவி செயல் சிந்து சின்னச்சின் னச்சிற் றெறும்பே - என்னவே தேடியே சென்றிடும் எறும்பே தின்னக்கற் கண்டுநான் தருவேன் - வேறு தேவைப்பட் டாலதுந் தருவேன் உன்னையொன் றுவேண்டு கின்றேன் - எனக் குதவுத லுன்கட னாகும் என்ன வெனில்தெளி வாக - எடுத் தியம்புவன் கேட்டிசிற் றெறும்பே. 1 ஒன்றரை மாதங்க ளாக - வெளி யூருக்குப் போயவ ரிருந்தார் இன்றுதான் காலையில் வந்தார் - வந்ததும் என்னவோ செய்துகொண் டிருந்தார் அன்று முதலின்று காறும் - பிரிந் தாற்றி யிருந்தவென் னோடும் ஒன்றுமே பேசிலர் படுத்தே - இன்னும் உறங்குகின் றாரவர் காணாய். 2 எட்டுமுப் பத்தைந்தா கிறது - பன் னிரண்டு மணிக்குப் படுத்தார் சட்டென் றுறங்கியே விட்டார் - பகல் சாப்பாடும் சாப்பிட வில்லை திட்டத் தொடுபடுத் தாரோ - இன்னும் தேநீர் குடிக்கவு மில்லை கட்டிலைப் போடென்றார் போட்டேன் - அது காதுக் கினிக்கிற தின்னும். 3 அஞ்சல்வந் தமூன்று நாளாய் - நான் அதேநினைப் பாக இருந்தேன் நெஞ்சைவிட் டந்த நினைப்பை - என்னால் நீக்க முடிந்திலை கண்டாய் வஞ்சியென் கண்க ளுறங்க - ஏனோ மறுத்துவிட் டனகண் டிப்பாய் கொஞ்சி யொருமொழி யேனும் - அவர் கூறாமல் தூங்கிவிட் டாரே. 4 அடிக்கடி போயெட்டிப் பார்த்தே - எனக் கலுப்புத் தட்டிவிட்ட தன்றி முடிக்கமழ் பூக்களும் வாடப் - பூசிய முகப்பொடி வெள்ளெனப் போக நொடிக்கொரு தரங்கண் ணாடி -முன்னர் நோக்கிநோக் கிக்கண்ணும் பூத்தேன் கடிக்குவை மெல்ல விழிக்க - உன் கடப்பாடு காணுஞ்சிற் றெறும்பே. 5  18. புரட்சிப் பெண் 1. இகழ்ச்சி எண்சீர் விருத்தம் சேய்களென்று கண்டவுடன் செல்வமெனக் கொண்டு திருமுலைப்பா லூட்டிமலச் சிக்கறுத்து வளர்த்த தாய்களென்றும் பாராமல் தங்கையுடன் ஈன்ற தன்மகளென் றெண்ணாமல் தருக்கியிழி வாயால் நாய்களென்றும் பேய்களென்றும் நமபடர்க ளென்றும் நன்றிகொன்ற உங்களுக்கோர் நற்கதியும் உண்டோ? பேய்களெனில் நீங்களப்பேய்ப் பிள்ளையன்றோ நாயின் பேய்வயிற்றி லேன்பிறந்தீர் பெருமையுடை யீரே. 1 பெற்றவருந் தாய்க்குலத்தின் பெருமையறி யாது பேய்களென்றும் நாய்களென்றும் பிதற்றுகின்றீர் உலகில் உற்றதனைப் புண்ணென்றும் ஒழுகுறுசீ யென்றும் உளறுகிறீர் சீதிரண்டுண் டானவுரு வீரே துற்றமுலை தனைப்பழித்துத் தூற்றுகின்றீர் நன்கு சுவைத்தினிதுண் டேவளர்ந்த துணைப்படுமாண் மக்காள்! கற்றதனைக் கொண்டிகழும் கயமையதை விட்டுக் கண்மணிகாள் பெண்மையதன் உண்மையறி வீரே. 2 எங்கள்வயிற் றினிலிருந்தே இப்பெரிய வுலகத் தியங்குமுயி ரத்தனையு மேபிறந்த வல்லால் உங்கள்வயிற் றினிலுதித்த துண்டோகாண் கூறீர் உதித்ததென்றால் எங்களுக்கே னோசுமக்க விட்டீர்? எங்கள்வயிற் றினிலுதித்தும் எங்கள்முலை யுண்டும் எங்களையே இல்லவாழ்க்கைத் துணையாகக் கொண்டும் எங்களின்ந் தாழ்ந்ததுங்கள் இனமுயர்ந்த தெவ்வா றெடுத்துரைப்பீர் விளக்கமுற இணைப்படுமாண் மக்காள்! 3 நீதிக்குள் நின்றரிய மெய்த்துறவு பூண்ட நித்தனெனும் பட்டினத்துப் பித்தனினை வெழுந்தால் வீதிக்குள் நல்லவிலை மாதர்களுண் டென்ற வித்தகன்போ லெங்களிலோர் வித்தகப்பெண் ணரசி வாதிக்கும் பெண்ணடிமை வாணிகத்தைப் போக்கி மடமேக எங்கள்சுய மரியாதைப் படியாண் சாதிக்குள் நல்லவிலை யாடவருண் டென்று சாற்றிடிலம் மொழிதனக்கோர் மாற்றுரையு முண்டோ? 4 கருணையெனும் பெயரறியான் கவிவாண னென்று கண்டபடி வாய்புழுக்கக் கத்தியவப் பண்பில் அருணகிரி திருப்புகழை அடியோடு போக்கி அப்புகழை வெட்கமின்றி அணிந்தனெனப் பேசும் முருகனெனு மவனாங்காங் கினிதிருக்குங் கோயில் முன்றிலினை யினியென்றுஞ் சென்றுமிதி யாமல் ஒருநொடியு மினியீங்கு நமைப்பழிக்கும் பாடல் ஒன்றேனு மில்லாமல் ஒழித்திடுவோம் வாரீர்! 5 வாய்கூசும் மனங்கூசும் படிமகளிர் தம்மை வாய்க்குவந்த படிவையுமவ் வசைகேட்கிற் பெற்ற தாய்கூசுந் தமர்கூசும் தங்கைமனங் கூசும் தமக்கையொடு பாட்டிமனந் தான்கூசும் ஈன்ற சேய்கூசும் படியமைந்த அருணகிரி நாதர் திருப்புகழைப் கேட்கினைய கோவெங்கள் தமிழத் தாய்கூசும் ஆனாற்கூ சாமலந்தப் பாடல் தமைப்பாடும் பெரியார்தம் தரமறிகி லேமே. 6 அன்னையுமப் பனுங்கூடி யன்புறவே யின்பம் அமைத்துகரு வுருவாகி ஐயிரண்டு திங்கள் தன்னைவயிற் றிடைகழித்துத் தரையினிலே வந்து தாய்முலைப்பா லிருவருமே சரிநிகரா வுண்டோம் என்னையவர் பெறப்புரிந்த திழிதொழிலோ உன்னை ஈன்றெடுக்கப் புரிந்ததொழி லிணையிலுயர் தொழிலோ? என்னையிதை யெண்ணாமல் என்னையிழிந் தவளாய் எண்ணுவதன் காரணத்தை முன்னவனே யோதாய். 7  2. அடிமை வாழ்வு கண்டறியாக் கேட்டறியாக் கருத்திலுமே கருதாக் கனவிலுமே பெண்மைநலங் கருதாதோன் றனக்குப் பெண்டெனவே கொடுத்துமனை வாழ்க்கையினைப் பெரிதும் பேணிடுவீ ரென்றுமணம் பேசுகின்ற பெரியீர்! கொண்டவன்செய் கொடுமைகளைக் கூறிடின்நீ முன்செய் கொடியதலை விதியெனவே குறுக்கடியாய்ப் பேசித் தொண்டுசெய்வாய் நளாயினிபோ லெனவெங்கள் வாழ்வைத் தொலைத்திடுமப் பழங்கதையைத் தொலைத்திடுவீ ரினியே. 8 கல்லானும் கற்றவர்சொற் காதினிற்கொள் ளானும் கனவிலுமே பெண்மைநலங் கருதானும் உண்மை சொல்லானும் கொலைகளவு சூதுகுடி யானும் தொழுநோயன் கழிகாமன் துன்றுபொருள் சிறிதும் இல்லானும் கைத்தொழிலொன் றேனுமறி யானும் இருபால ராயுலகில் இருப்பவரெல் லார்க்கும் பொல்லானு மானவொரு நல்லானுக் கீயும் பொறுப்பையினிக் கைவிடுவீர் சிறப்புறுபெற் றோரே. 9 அடித்தாலும் உதைத்தாலும் அருள்சிறிது மின்றி அழிதகவு பேசிடினும் அறிவுதடு மாறக் குடித்தாலும் கொன்றன்ன கொடுமைபுரிந் தாலும் கொடியபடு நோய்களினால் குறைந்தழுகி யுடலம் வெடித்தாலும் புழுநெளிசீ வீறிவடிந் தாலும் வெறிநாய்போல் அறிவிழந்து மேனிதுடி துடிக்கக் கடித்தாலும் பொறுப்பவளே கற்பரசி யென்று கட்டுரைக்கும் பழங்கதையை விட்டிடுமாண் மக்காள். 10 கல்லுக்குப் பெண்டெனவே கட்டியெனைக் கொடுத்தார் கல்லெனவே மெய்வருந்திக் காலமதைக் கழித்தேன் சொல்லுக்குப் பெண்டெனவே துணிப்பாவை போலச் சோற்றுக்குப் பயனற்ற தொழில்செய்து வந்தேன் புல்லுக்கு நீர்பாய்ச்சிப் பொன்னுடலந் தேய்ந்தேன் பொருளுக்குத் தன்மானப் பொருள்விற் றலைந்தேன் கல்லுக்குக் கட்டியவக் கட்டறுத்துக் கொண்டேன் காளையரே கைகொடுத்துக் காத்திடவே வாரீர். 11  3. உரிமை ஓதுமிரு வருங்கலவி யுண்மையொடு புரிந்தோம் உங்களுக்கக் கலவியினி லொருநொடியே வேலை; காதலது கழிந்தவுடன் கனவிலுமே கருதீர் கலவியினா லக்காதல் கருவுருவ தாகி மாதமொரு பத்தெமது வயிற்றினிலே தாங்கி மகப்பெறவே பால்கொடுத்து வாஞ்சையொடு வளர்த்தோம் ஆதலினால் எங்களுக்கே உங்களினு முரிமை அதிகமுண்டு மறுக்கவழி யாதெமதாண் மக்காள்! 12 நாங்களிளம் பருவவுணர் தாங்கமுடி யாமல் நடைதவறின் குடிகேடி யெனப்பழிக்கும் நல்லீர்! நீங்களிளம் பருவமென்ன நினைத்தபொழு தெல்லாம் நினைவெழுந்தால் குடிகெடுத்தல் நெறிமுறைய தாமோ? நீங்களின்றி நாங்கள்தனி நின்றநிலை தப்பி நெறிதவறல் எவ்வாறு நிகழ்த்திடுவீ ரெடுத்து நீங்கள்நெறி தவறாமல் நிற்பீர்க ளானால் நீணிலத்தில் அக்களங்கந் தானொழியு மன்றே. 13 மற்றொருவ னிடம்பேசி வந்தவளைத் தீண்டல் மாகொடிய பாவமென மனுவழக்குப் பேசின் மற்றொருத்தி யிடம்பேசி வந்தவனைத் தீண்டல் மாகொடிய பாவமென மனுவழக்கே னில்லை? உற்றொருவன் றனைத்தீண்டல் உங்களுக்குப் பாவம் உண்டாயி னெங்களுக்கஃ துண்டாவ தின்றோ? மற்றொருத்தி யிடம்பேசும் வழக்கையொழிப் பீரேல் மறுநொடியே அவ்வொழுக்கம் மாண்டொழியு மன்றோ? 14 காதலென்ப தேயுலகின் காரணம தாகும் காணுமுயி ரத்தனைக்கும் காதல்பொது வாமே காதலிலை யேலுலகைக் காணுதலு மிலையே காதலிலை யேலின்பக் கலவியது மிலையே காதலுட னேயின்பங் காணுகின்றீர் எங்கள் காதலதைப் போக்குவதன் காரணமு மென்னே? காதலுடன் அன்புமணங் கண்டிருபா லாரும் களித்திடுவோம் சரிநிகராக் கருத்திசைந்தாண் மக்காள்? 15 பெண்ணென்று கேட்டவுடன் பெரியிழவ தென்றீர் பேதைமையாய் வளர்த்தெனையோர் பெருச்சாளிக் கீந்தீர் எண்ணென்ற குட்டிபல எனக்கீந்தப் பாவி இருந்தபொருள் முழுதுமழித் திறந்துவிட்டா னந்தோ? கண்ணென்ற பொருளோடு கற்றறிவு மில்லேன் காலமதை யெவ்வாறு கழித்துடுவே னையோ! உண்ணென்று சொத்துரிமை பெண்களுக்கீ யீரேல் ஒழித்திடுமின் பெண்பெறலை ஒருங்கினிப் பெற்றோரே. 16  4. கைம்மை இருவருக்கு மொருதொழிலே யியன்றினிது பெற்றீர் இருவரையு மொருபடியே யின்பமுடன் வளர்த்தீர் இருவருக்கு மொருநாளே யினிதுமண முடித்தீர் இருவர்களுந் துணைவர்களை யிழந்துதனி யானோம் அருவருப்பென் றப்பொழுதே அண்ணனுக்கு மணந்தீர் அடியவளின் தனித்துயரைக் கனவிலுமே கருதீர் இருவருக்கு மொருகடமை யில்லாதீர் என்னை ஏன்பெற்றீர் தனித்துறங்கி யிருக்காம லந்தோ! 17 பூத்தவுடன் கற்பழிந்து போகுமென அஞ்சிப் புறம்போகா தில்லக்கத்துப் போட்டடைத்துக் காவல் காத்தெவரு மணுகாமற் கள்வனைப்போ லொருவன் கையினிலே கொடுத்தீன்ற கடன்கழித்தீர் அவளை நீத்தவுடன் கற்பழியா நின்றிடுமோ கற்பின் நினைவதனைக் கனவினுமே நினையாம லெனது மூத்தவினை யெனப்பேசி முடிக்கின்றீர் என்றன் முன்னவனுக் கந்தவினை மூளாத தென்னே! 18 அண்ணாநீ வந்தபடி அடியவளும் வந்தேன் அருந்தியநம் தாய்முலைப்பால் அடியவளும் உண்டேன் அண்ணாநீ மணந்தபடி அடியவளும் மணந்தேன் அன்றிழந்து விதவையென அவமான மடைந்தேன் உண்ணாம லுறங்காமல் உடலமது மெலிந்தேன் உன்பெருமை காணவுளம் உயிர்போகா துடைந்தேன் எண்ணாம லொருபிறப்புக் கிருநீதி யெதற்கோ என்துயரங் கண்டிரங்கா திருப்பதுடன் பிறப்போ! 19 வேதமெனப் பாரதத்தை மிகப்போற்றும் பெரியீர் விதவைமணக் காவிடிலவ் வேதமதுண் டாமோ? காதலுடன் விதவையரும் கன்னியரும் பெற்ற காளையரன் றோவேதக் கருத்தாக்க ளானார்? ஆதலினால் மறுமணத்தை மறுக்கவழி யில்லை ஆடவர்கள் பெண்ணுலகை அடிமைகொளச் செய்த சூதையறிந் தோமறிந்து துணிந்து வெளிப் பட்டோம் துணைவர்களே கைகொடுக்கத் துணிந்துவரு வீரே. 20 (இது, 1931இல் பாடியது.)  5. வேற்றுமை சிந்து ஆணுக் கொருசட்டம் பெண்ணுக் கொருசட்டம் ஆக்கிமுன் வைத்தவர் யாவரோ வேணுமென் றேசெய்து வைத்தவர் யாரேனும் வேரோ டொழிந்துமே போவரோ! 1 பெற்றவர் ஆண்களைப் போலவே சற்றேனும் பெண்களை யெண்ணுவ தில்லையே மற்றவர் பெண்களைப் பெற்றுவீ ணாக வளர்ப்பது மேபெருந் தொல்லையே. 2 பல்லுப்போ னகிழ வனுங்கொ டிபோன்ற பத்துப்பே ரைமணஞ் செய்யலாம் நல்ல பருவமங் கையுமே கைம்மையா னாற்கா தலைத்தடை செய்யலாம். 3 ஒக்கப் பிறந்தும் ஒருமுலை யுண்டும் உயர்வுதாழ் வாயின தென்னவோ! தக்கதன் றென்று குழந்தைசொன் னால்வாயைச் சப்புவ தன்பொருள் உன்னவோ! 4 (இது, 1931இல் எழுதிய காதலின் வெற்றிஎன்னும் நாடகத்தில் உள்ளது.)  6. அடக்குமுறை பல்லவி அடக்கி யாள்வதே னையா - பெண்களை அடிமை யாகவுங்கள் கடமை தவறியே - அடக் பல்லவியெடுப்பு அடக்கி யாள்வதுங்கள் ஆண்மைக் கடுக்குமோ அருமை யானபிறப் புரிமை யில்லையென்று- அடக் கண்ணிகள் கற்பெனப் பொய்க்கதை கட்டி - மெய்க் காதலைப் பாழிலே கொட்டி இற்பழி யெனவேமி ரட்டி - பெண் இனமதைப் பிணமெனத் திட்டி -அடக் 1 முண்டையென் றிழிபெயர் சூட்டி - வாழ்வின் முழுப்பய னையுமே ஓட்டி பெண்டிர் குலந்தனை வாட்டி - எதிர் பேசினால் கைகாலை நீட்டி - அடக் 2 கணவ னேதெய்வ மென்றும் - ஆணின் கலவிப் பொருளேபெண் ணென்றும் குணமொடு நலமெலாங் கொன்றும் - புலவர் குழந்தை சொல்லைமறுத் தின்றும் -அடக் 3  7. விதவைத்துயர் பல்லவி விதவைக ளின்துயர் வாழ்வு - தனை விளம்பவென் றாலெனக் கேவருந் தாழ்வு - வித கண்ணிகள் அஞ்சு வயதில்தாலி அறுத்தோரெண் ணில்லை அவர்களுக் கென்றுமே விடுதலை யில்லை நெஞ்சு துடிப்பதனை நினைப்பாரிங் கில்லை நிலைகெட்ட வாழ்வினை நினைக்கவுந் தொல்லை - வித 1 பருவ விதவைகளின் பாடென்ன பாடோ பழக்க வழக்கங்கள் காதலுக் கீடோ உருவைக் குலைப்பதி னுங்கொலை கேடோ ஒருமை யிலாவிந்த நாடொரு நாடோ-வித 2 மஞ்சள் கலவைபூச மனமிகத் துடிப்பார் மலர்சூடி னாரைக்கண் டாற்பல்லைக் கடிப்பார் தஞ்செய லைக்கடந்தால் தலையினி லடிப்பார் தவறு நடந்துவிடு மேல்நஞ்சைக் குடிப்பார் - வித 3 பள்ளிப் பிள்ளைகள் செய்கைப் பாவைபோற் கெடுவார் பட்டாடை யுடுத்தாரைப் பார்த்தாசைப் படுவார் வெள்ளை யுடுத்துவெளிப் படவெட்கப் படுவார் வெறுங்கழுத் தைமுகத்தை அடிக்கடி தொடுவார் - வித 4 காதலைக் கற்பினால் கட்டியே பழிப்பார் கைவிர லெண்ணியே காலத்தைக் கழிப்பார் வாதனைப் படமுடி யாதுயி ரிழப்பார் மதிமோசம் போனாலக் கருவினை யழிப்பார் - வித 5 பெண்டிறந் ததுமணம் பேசலே னையோ பெண்களுக் கதுசெயப் பிரியமு மிலையோ கண்டபெண் டிரைக்கூடிக் களிப்பதே னையோ கற்பிரு வர்க்கும்பொ தல்லவோ ஐயோ! - வித 6 களவினிற் புணர்வது கடவுள்சம் மதமோ கடிமணஞ் செய்தாற்பா ழாமிந்து மதமோ அளவிடற் கரியபெண் பாலைவீண் வதமோ ஐயையோ ஆடவர் களுக்கிவை யிதமோ? - வித 7 இன்னுங் கொடுமையென் னாற்சொல்லத் தொலையா இருவரும் மறுமணம் செய்வது மலையா தன்னலங் கொண்டஆண் களுக்கிவை யிலையா தன்மானக் குழந்தைசொல் உணர்ந்துமிந் நிலையா - வித 8 (6, 7 பாடல்கள்1929 இல் எழுதிய குடியின் கொடுமை  என்னும் நாடகத்தில் உள்ளவை.)  8. பேதையர் என்றிகழேல் சிந்து பேதையர் என்றிகழ்ந்து - பெண்களைப் பேசுதல் கூடாதையா பேதையர் பெற்றஆண் பிள்ளையென் றேவிழி பேரெடுக் காதீரையா. 1 நம்மிரு பாலிலுமே - பேதையர் நாலுக்கி ரண்டுண்டையா எம்மைமட் டுநீங்கள் பேதைய ரென்றே இழித்துரை யா தீரையா. 2 அறிவின் திருவுருவாம் - பழந்தமிழ் ஒளவையும் எங்களினம் பெறலரு மாண்புடைக் கண்ணகி வந்து பிறந்ததும் எங்களினம் 3 அகப்பை பிடித்திடுவோம் - அதேகையால் ஆட்சியும் செய்திடுவோம் உகப்புடன் விட்டுக்கொடுத்தெங்கட் கேயதன் உண்மை யுணருங்கையா. 4 தொட்டிலை யாட்டிடுவோம் - அதேகையால் துன்னாரை ஓட்டிடுவோம் விட்டுக் கொடுத்துச்சற் றெட்டநின் றேயெங்கள் வீரத்தைப் பாருங்கையா. 5 காய ரியுங்கையால் - பகைவர் கழுத்தை யரிந்திடுவோம் ஆயிழை அல்லிமீ னாட்சிதம் ஆற்றலை அறிந்தின் புறுங்களையா. 6 கோலம் போடுங்கையால் - அணு குண்டும் போட்டிடுவோம் மேலம் புறாவம் மறத்தமிழ்த் தாடகை வீரத்தைக் காணுங்கையா. 7 ஊச லாட்டிடுவோம் - அதேபோல்வா னூர்தியும் ஓட்டிடுவோம் வீசு புகழ்ஆமி சான்சன் வரலாற்றை விரும்பி யறியுங்கையா. 8 வெந்தழ லிற்கொடிய -பாகித்தான் வெய்யரை வென்றுயர்ந்த இந்திரா காந்தியும் எம்மினம் என்பதை எண்ணியே பாருங்கையா. 9 வளைய ணிந்திடுவோம் - அக்கையிற்போர் வாளையும் ஏந்திடுவோம் முளையி லேவீர மூட்டி வளர்த்தும்மை முன்னுறச் செய்வோமையா. 10 பாடி யாடிடுவோம் - ஆண்களைப் பணிந்திடச் செய்திடுவோம் ஊடியுங் கூடியும் உங்கட்குப் பேரின்பம் ஊட்டிக் களிப்போமையா. 11  19. சுயமரியாதைச் சுடர் சிந்து சுயமரி யாதைச் சுடரெனும் ஓர்மகன் தோன்றினன் ஈரோட்டில் - புரட்சிப் புயலென மூலை முடுக்குக ளெல்லாம் புகுந்தனன் இந்நாட்டில். 1 ஆயிரத் துத்தொள் ளாயிரத் திருபத் தைந்தினில் தோன்றினனே - இந்த மாயிரு ஞாலம் விழித்தெழப் போதுறும் வான்கதிர் போன்றனனே. 2 கண்டு தமிழர் களித்துளந் தம்மிரு கண்ணெனப் போற்றினரே - உரிமை கொண்டு தமிழர்கள் கொண்ட அடிமைக் குணத்தினை மாற்றினனே. 3 தந்தை பெரியார் கண்டு மகிழத் தகவுற வூக்கினனே- வழிவழி வந்தஅம் மூடப் பழக்க வழக்க மயக்கினைப் போக்கினனே. 4 பகுத்தறி வென்னுங் கருத்தொடு செந்தமிழ் பாங்கொடு பேசினனே - மக்கள் அகத்திரு ளேகத் தமிழக மெங்கும் அறிவொளி வீசினனே. 5 சாதி சமயப் பிணிக்கு மருந்தாய்ச் சமைந்திசை நாட்டினனே -ஆரிய வேத புராணேதி காச மனுவெனும் வீங்கிருள் ஓட்டினனே. 6 தீண்டாமை யென்னுந்தீ ராத கொடியவத் தீப்பிணி போக்கினனே- மக்கள் ஆண்டா னடிமைக் கொடுமை யிலாவாழ் வதுபெற வூக்கினனே. 7 மாத ரடிமை வழக்க மொழித்து மறுமணஞ் செய்தனனே - மற்றும் காதல் கலப்பு மணம்புரிந் தன்னார் களித்திடச் செய்தனனே. 8 ஒன்றே குலமெனும் உண்மை யுணர்வினை உள்ளுற ஊட்டினனே - இங்கு நின்றே தொலையென் றடிமைப் புலியை நிழல்கெட ஓட்டினனே. 9 சூத்திரப் பட்டந் துறந்து தமிழர் துலங்கிடச் செய்தனனே -அம் மாத்திரை யேதமிழ் மக்கள்தன் மானம் மலர்ந்திடச் செய்தனனே. 10 தன்மான மின்றித் துயின்ற தமிழரைத் தட்டி யெழுப்பினனே - எழுப்பிப் பொன்மானத் தாயினம் போற்றிப் புதுவாழ்வு பூப்பக் கழிப்பினனே. 11 ஆரிய மாயை அகற்றிட அறிஞர் அண்ணாவைத் தந்தனனே - முத்தமிழ் மாரி பொழிந்து தனித்தமி ழாட்சி மலரவ மைந்தனனே. 12  20. சொல்லும் செயலும் பன்னிருசீர் விருத்தம் ஒன்றே குலமென்றும் ஒருவனே தேவென்றும் ஓதினார் திருமூலனார் ஒவ்வொன்றும் ஓரியாண் டோர்ந்தாய்ந்து கண்டறிந் தோதிய பாடலாகும்; தன்றேவன் என்றேவ னென்றெலாச் சமயமும் தருக்கொடு வழக்காடுதல் தவறாகும் ஒருவனே தெய்வமா மென்றனர் தாயுமா னவர்,வள்ளலார் நன்றே யுணர்ந்துமுன் னோர்நெறியை நூனெறியை நன்காய்ந்து கண்டுதெளிவாய் நான்கண்ட சமயமெல் லாமொரு நிகரென்று நாட்டினார் என்றுநவில்வர். அன்றே லவ்வாறுபன் மேடையதி லேறியே அழகாகப் பேசுவதலால் அணுவேனு மதைக்கடைப் பிடித்தொழுகு மன்பரொரு வரையுநா னறிகிலேனே. 1 எண்சீர் விருத்தம் மெஞ்ஞானத் தமிழ்ச்சித்தர் தெய்வமென்றொன் றில்லை மெய்யறிவே தெய்வமதை மேவிடுக வென்றார்; விஞ்ஞானப் பெரியார்கள் இருபொருள்சேர்ந் தல்லால் விளைவில்லை யெனவாய்ந்து வெளிப்படுத்தி யுள்ளார். கைஞ்ஞான மாயவற்றைக் கண்ணாரக் கண்டும் கண்டபொருட் பயனுகர்ந்தும் கண்மூடித் தனமாய் அஞ்ஞானத் தாலெதுவோ ஆட்டிவைக்கு தென்னும் அறியாமைக் கேதுவொன்று மறிகின்றி லேனே. 2  21. தாழ்ந்த தமிழினம் 1. வாழ்க்கை நிலை எண்சீர் விருத்தம் இரவுபக லோயாமல் உழைப்போர் கஞ்சி இல்லாமற் பட்டினியால் உடம்பு தேய ஒருதொழிலுஞ் செய்யாம லிருக்கும் செல்வர் உண்டுகொழுத் திடல்முறையோ என்றால், முன்னை ஒருவினையின் படியவர்க ளில்லா ராகி ஓயாமற் கஞ்சியின்றி உழைக்கின் றார்மற் றொருவினையின் படியிவர்கள் செல்வ மெய்தி உழையாமல் உண்டுவரு கின்றா ரென்பர். 1 என்றமைந்த தோவறியேன் எழுநூற் றின்மேல் இருக்குமெங்கள் பழந்தமிழர் தெருவு தானும் அன்றிருந்தத் தெருவினிலோர் பிறவி கூட அடைந்ததில்லைக் கல்விசெல்வப் பெயரை; ஆனால், என்றனது முப்பாட்டன் பெரிய செல்வன் என்றகப்பன் தற்குறியான் புலவ னாவேன் என்றனது பண்ணையாத்தாள் எனது தோட்டத் தேபாதி வாங்கிவிட்டான் இதன்போக் கென்னே! 2 இப்பிள்ளை பெரியபணக் கார னாவான் ஏழடுக்கு மாடிவீ டிரண்டெ டுப்பான் ஒப்பில்லாப் பணக்காரன் ஒருபெண் கொள்வான் ஊராளும் நல்வினையுண் டென்பார்; ஆனால் தப்பின்றி யுழைத்துவரும் தாழ்த்தப் பட்டோர் தமக்கெவருங் கணியுரைப்பார் தம்மைக் காணோம்; உப்பில்லை யொருகாசும் இல்லா தாருக் குரைப்பாரோ அவ்வுலகம் புரப்பா ரப்பா! 3 விளைத்தவனுக் குணவில்லை வீணர் கூட்டம் விருந்துண்டு களித்திருக்கும், வீடு கட்டி இளைத்தவனுக் கொண்டஇடம் இல்லை, உள்ளோர் ஏழடுக்கு மனைவாழ்வர், மாடு மேய்த்துக் களைத்தவனுக் கப்பாலைக் காணற் கில்லை கறந்துகுடிப் பாருயர்ந்தோர் கலப்பால், நெய்ய முளைத்தவனுக் கரைமூடக் கந்தை யில்லை முழுச்சோம்பர் வகைவகையா உடுத்து வாரே. 4 உழைப்பதனுக் கொருகூட்டம், உழைத்துப் போட உண்பதனுக் கொருகூட்டம், உழைப்பில் லாது பிழைப்பதனுக் கொருகூட்டம், பிழைப் பில்லாது பேதுறுதற் கொருகூட்டம், பெரிதும் இன்னல் இழைப்பதனுக் கொருகூட்டம், இழைக்கும் இன்னல் ஏற்பதனுக் கொருகூட்டம், எதற்கும் வாலைக் குழைப்பதனுக் கொருகூட்டம் ஆக அந்தோ! கூறுபட்டுப் போயினதே தமிழர் கூட்டம்! 5 ஒருதொழிலும் செய்யாமல் உண்ணி போல உறிஞ்சியுண்டு வாழ்பவரோ ரிருபத் தைவர், இரவலரென் றுலகினையே மாற்றி நாளும் இரந்துண்ணும் பதடிகளோ ரிருபத் தைவர்; அரியவுடல் தேயவுயி ரலுக்க நூற்றுக் கைம்பதுபேர் விலைப்பட்ட அடிமை போல இரவுபக லோயாமல் உழைத்துப் போடல் ஏனென்றால் கடப்பாடு தானென் பாரே. 6 உடல்வருந்த இரவுபக லோய்வில் லாமல் உழைத்துழைத்து வலிகுன்றி உணவில் லாமல் உடல்வருந்த வேயுணவு செரியா நோயால் உழலுகின்றான் ஒருவன்மற் றொருவன் நாளும் உடல்வருந்த வேலையின்றிப் பொழுது போகா துண்டியையெந் நேரமுமுண் டுண்டோ யாமல் உடல்வருந்த வேயுணவு செரியா நோயால் உழலுகின்றான் எனவாழ்வு சுழலுந் தானே. 7 காடழித்து நிலந்திருத்தி நாடுண் டாக்கிக் கல்லுடைத்து வீடுகட்டிக் கிணறு வெட்டிப் பூடழித்து நிலமுழுது நெல்வி ளைத்துப் பொருகளத்துப் பகையெதிர்த்துப் பொருபாட் டாளர் ஓடெடுத்துப் பசிதணித்துக் காலந் தள்ள ஓந்தியொடக் கானுமொண்ட வந்த பாம்பும் ஏடெடுத்து நாட்டரசர் எனவே மார்த்தல் என்னமுறை யோமனுவின் அண்ணன் தானே! 8 உழுதுண்டு வாழுமொரு குடும்பந் தன்னில் ஒன்பதுபேர் பாட்டாளர் உள்ளார்; ஆனால், பழுதுண்ட நிலமெட்டுப் படிதா னுண்டு பாடுபடார்க் கெண்ணூறு படியுண் டிந்த எழுதுண்ட முறைகேட்டால் உழுவோர் வாழ இயலாது கடல்தாண்டி அயல்நா டேகித் தொழுதுண்டு நாள்தள்ள லானார்; நாமும் சோறில்லை யெனும்படியிவ் வாறா னோமே. 9 மலமெடுக்குந் தோட்டிக்கு வயிற்றுக் கில்லை வாலாமை போக்கிடநன் னீரோ இல்லை தலைவைத்து முடக்கவிலைக் குடிலோ இல்லை தன்மானங் காத்திடவோ கந்தை யில்லை; மலரெடுத்து முணுமுணுத்து வீட்டி னுள்ளே மல்லாந்து படுத்திருக்குஞ் சோம்பர்க் கோநற் பொலங்கலத்துச் சுவையுணவு மாடி வீடு பொன்னாடை மணிக்கலனீ தென்னே காணும்! 10 அடர்மழையிற் கடுவெயிலில் ஆடிக் காற்றில் அரும்பசியின் மெலிவொடுமா டாடு மேய்த்துக் கொடுகிவரும் சக்கிலிக்கம் மாட்டுப் பாலைக் குடிப்பதற்குக் கடவுள்வந்து குறுக்கே நிற்கும்; துடிதுடிக்கும் மாட்டினுக்குத் துரும்புங் கையால் தொட்டெடுத்துப் போடாத வெட்டித் தெண்டம் மடிவருத்திக் கறந்தெடுத்தம் மாட்டுப் பாலை வயிறாரக் குடிக்கவது வழங்குந் தானே. 11 முடத்தாமஞ் செட்டிக்கு நால்வர் மக்கள் மூத்தமகன் அயல்நாட்டு வணிகச் செல்வன், அடுத்தமகன் நகர்மன்ற ஆணை யாளன், அதற்கடுத்தோன் சிறந்தபொரு ளமைச்சன் ஆவான், படைத்தலைவன் கடைப்பிள்ளை; ஆனால்,எங்கள் பண்ணையத்துச் சக்கிலிக்கோ பத்துப் பிள்ளை தடிப்பயல்கள் ஒருவனுந்தன் தகப்பன் வேலை தன்னைவிட வில்லைகருத் தென்னே யண்ணே! 12 பண்ணையிலே யறுபதுநா ழிகையும் பாடு படுகின்ற சக்கிலிக்கோ பன்னி ரண்டாம் எண்ணையுடை மாதமதில் ஏழெட் டாகா, ஏழிலறு நாளாகா; ஆனால் சுற்றுத் திண்ணையிலே படுத்துறங்கி நீறு பூசிச் சிவாயவெனுஞ் சக்கலிக்கோ வணக்கஞ் செய்து வெண்ணெயிலே நெய்யுருக்கி இலையும் போட்டு விருந்திடுமப் பதுமையினைத் தெரிந்தி லேனே. 13 2. குல வேற்றுமை மலந்தனிலே பிறந்தபுழு வதினுந் தாழ்த்தி வைத்திருக்கும் பழந்தமிழர் மரபி லுள்ள குலந்தனிலே யுள்ளபல குலத்தி னோரும் கொண்டுகொடுத் துண்டொன்றாய்க் கூடித் தம்முட் கலந்துவரு கின்றனரா? செம்மான் தொட்ட கால்வாய்நீ ரைப்பறையன் கையால் தீண்டான்; வலந்தளர்ந்து துடிதுடித்திச் சாதிப் பாம்பு மடியாதோ பெரியார்சொல் இடிமேல் வீழ்ந்தே. 14 முன்னொருசெந் தமிழன்வர யார்நீ என்றேன் முடுக்காகக் கவுண்டனென்றான், முறையே கேட்க மன்னியவே ளாளனென்றான், மடக்கிக் கேட்க மதிப்பொடுசெந் தலையென்றான், மறித்துக் கேட்க நன்னலஞ்சேர் ஆந்தைகுலம் என்றான், பின்னும் நான்கேட்க மாந்தைநகர் ஆந்தை என்றான். இன்னுமவன் தனையறிந்தேன் இல்லை யாரென் றிப்படியா தமிழன்வழி தப்பிப் போவான்! 15 செந்தலைவே ளாளருயர் வென்பார், இல்லைத் திருவுடைய படைத்தலைமேல் என்பார், நெல்லைக் கொந்தகைவே ளாளருயர் வென்பார், தொல்லைக் குடநாட்டுத் துளுவருயர் வென்பார், முன்னர் வந்தரைய நாட்டார்மேல் என்பார், நல்ல வடகரைவே ளாளருயர் வென்பார், நாங்கள் வெந்தணல்வெண் ணீறணிவ தாலே சைவ வேளாளர் எல்லார்க்கும் மேலென் பாரே! 16 ஆரியத்தை யேற்கமறுத் தெதிர்த்து வந்த ஐந்தொழிலாச் சாரியர்கள் அவர்க்கு மாறாய் ஆரியத்தே வனுக்குமுகம் நான்கென் றாலோ ஐந்தொழிற்றே வனுக்குமுகம் ஐந்தென் றோதி ஆரியத்தை யெதிர்த்தவர்பின் பணிந்தே பூணூல் ஆரியர்போல் உடைநடைய ராகிப் பின்னர் ஆரியத்தின் சடங்கையெல்லாம் அடங்கச் செய்தே அருந்தமிழ்மேன் மைக்கிழிவு புரிந்தா ரப்பா! 17 ஒட்டியொன்றா யிருந்ததமி ழினப்பொன் பாண்டம் உடைந்துவண்ணான் நாவிதன்பண் டார மென்றும் செட்டியென்றும் நாயுடென்றும் தெலுங்க னென்றும் தேவனென்றும் பறையனென்றும் சிவியா னென்றும் கட்டியென்றும் முதலியென்றும் நாடா னென்றும் கவுண்டனென்றும் கண்டனென்றும் கருமா னென்றும் விட்டதெல்லாம் பிள்ளையென்றும் பட்டம் பெற்றே வெவ்வேறா ஆரியத்தால் இவ்வா றாச்சே! 18 வந்தேறி யவருறவால் பெருமை யாக வாழ்ந்தபெரு வாழ்வதுபோய் மடைமை யெய்தி அந்தோசெந் தமிழரினம் அயலா ரெள்ள ஆலைவாய்ச் செங்கரும்பின் பாளை போலும் பந்தாடு மடநல்லார் கையை நீத்த பாற்சங்க வளைபோலும் பதர்நெல் போலும் கொந்தாருங் குழல்நீத்த மயிரைப் போலும் குப்பையிலே யெறியுமொரு துப்பாய்ப் போச்சே! 19 உண்டொருங்கு கொண்டுகொடுத் தொன்றா யீன்ற ஒருகுலைக்காய் போன்றேதாழ் வுயர்வொன் றின்றிப் பண்டிருந்த தமிழரினம் அந்தோ! அத்திப் பழத்தையிரண் டாய்ப்பிட்டுப் பார்த்தாற் போலக் கொண்டவொரு குலம்பலவா யவையொவ் வொன்றும் குடமுடைந்தாற் போன்றுபல குலங்க ளாகி விண்டதுமேல் கீழ்பலவாய் விதிர்ந்தே வேறு வேறாகி முடிவினிலிவ் வாறா யிற்றே! 20 வண்டமிழர் பெருங்குலத்தின் வரலா றெல்லாம் வடமொழியி லேயெழுதி வைத்த தேனோ? தண்டமிழி லெழுதமுடி யாதோ? சங்கத் தமிழனுக்கு வடமொழிதான் தாய்வீ டாமோ? கொண்டகுல குருக்களெல்லாம் தமிழ்பே சாத கோதமன்போ தாயனன்கார்க் கோடன் தானோ? நண்டினுக்கு நரிகுருக்கள் நரிக்கு நாயோ நறுந்தமிழா? இனவுணர்ச்சி பெறுவ தென்றோ! 21 நாகரிகச் சரக்கேற்றி வாழ்க்கை யென்னும் நடுக்கடலிற் பகுத்தறிவாந் தமிழ்மீ காமன் போகவிட ஆரியமீ னேறு பாயப் புராணவிதி காசமெனும் அலைகள் மோதப் பாகுபடு சமயவளி தாக்க மூடப் பழக்கமெனும் பெரும்பாறைக் கல்லிற் பட்டே ஆகலைச்செந் தமிழரினக் கப்பல் மூழ்க ஆடுதிளந் தமிழர்களே ஓடி வாரீர்! 22 3. பெண்ணுரிமை நடப்பனவும் பறப்பனவும் பிறவும் தத்தம் நல்லறிவுக் கேற்றபடி ஆணும் பெண்ணும் தடுப்பனவில் லாதுபிறப் புரிமை யெல்லாம் தாமடைந்தன் போடுசரி நிகராய் வாழப் படைப்பதனில் உயர்படைப்பென் றுயர்த்துப் பேசிப் பகுத்தறிவ துடையமக்கட் பதர்கள் மட்டும் பிடித்தமுயற் கிரண்டேகொம் பெனப்பெண் மக்கள் பிறப்புரிமை யில்லையென மறுப்ப தேனோ! 23 அஞ்சினிலே பாழ்ந்தாலி யறுத்தே பாவம் அகத்தினில்மூண் டெழுங்காமக் கனலால் தீந்து மஞ்சளொடு கலவைமண மலர்பட் டாடை மணிக்கலன்க ளிழந்துலகப் பழிக்கா ளாகிப் பிஞ்சினிலே வாடியபூம் பிஞ்சு போலப் பெண்பிறப்பின் பயனிழந்து பிழைக்கு மோரை நெஞ்சினிலே நினையாத மாந்தர் தம்மை நினைத்தாலும் நடுங்குதுமென் நெஞ்சந் தானே! 24 நாட்பார்த்து வாழுமட நல்லார் கோடி நல்லாடை யணிகலவை யில்லார் கோடி பீட்பார்த்துக் கதறியழும் பெண்ணார் கோடி பெண்பிறப்பை வெறுக்குமலர்க் கண்ணார் கோடி ஆட்பார்த்துக் களவுலகில் அலைவார் கோடி அருநோயால் வருந்தியுடல் நலிவார் கோடி கேட்பாரற் றேதாயர் குலமிவ் வாறு கிடப்பதனைக் கண்டுமனந் துடிப்பா ரின்றே! 25 பெண்டிழந்த முண்டையனுக் கடடா! அந்தப் பேரிழவு வாசலிலே மறுபெண் பேசிக் கொண்டவளுந் தவறிவிட்டால் பின்னும் பின்னும் கொள்ளுவதும் எழில்பூத்த கொழுகொம் பன்னாள் கொண்டவனை யிழந்துவிட்டால் ஊரா ரெல்லாம் கூடியவள் அணிகளைந்து வெள்ளை போர்த்து முண்டையெனப் பெயர்சூட்டி உரிமை கொல்லும் முட்டாளுத் தனமெங்குங் கிட்டா தப்பா! 26 உண்டுறங்கித் தோய்ந்தின்ப முறுவ தல்லால் உரகத்து மக்களிதை விடவே றாகக் கண்டபயன் என்னதமிழ்க் கனிபோன் றாரைக் கற்பெனுநச் சுக்கயிற்றாற் கட்டிப் பொல்லா முண்டையெனப் பெயர்சூட்டி வெள்ளை போர்த்து மூலையிலே போட்டடைத்தம் மூன்று மின்றிப் பெண்டிர்குலந் தன்னைநடைப் பிணம்போற் செய்யும் பிழைபொறுக்க முடியாத பிழைய தாமே. 27 கணிகையரென் றொருகுலத்தைப் படைத்தன் னாரைக் கண்டவரைப் புணர்ந்தேநாள் கடத்தச் செய்தே கணவனைவிட் டயலானை ஒருத்தி கண்ணால் காணுவதுங் கற்பழிவு பூணு மென்றும் கணவனிழந் தவளொருநற் கல்லைப் போல்நாள் கழிக்கவென முறையின்றி வகுத்த சட்டம் பிணமெனப்பெண் ணுலகினைவிட் டாண்க ளின்பம் பெறப்புரிந்த சூழ்ச்சியெனும் அறப்பா டாமே. 28 ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தா றேழெட் டொவ்வொரியாண் டிடைவிட்ட மக்க ளுள்ளாள் குன்றனைய அவள்கணவன் மாதம் நூறு கொண்டுவரக் குறைவின்றி உண்டு டுத்தே கன்றுகளோ ராறுபள்ளிக் கூடஞ் சென்று கற்றுவருங் காலையவள் கணவன் அந்தோ! பொன்றிடவே கையிலொரு காசும் இல்லாப் பொன்னனையாள் தன்னிலைமை என்னே யென்னே! 29 கோடிபணக் காரன்மகள் கொண்டோன் மேலும் கூடியசெல் வக்கோமான் கொடியன் ஆனால், கூடியறி விலரோடு குடித்தும் நாளும் கூடாத வொழுக்கத்திற் குளித்தும் முன்னோர் தேடியவச் சொத்தையெலாந் தொலைத்துப் போட்டுச் சென்றுவிட்டான்; பணக்காரன் செல்வி பாவம்! போடியென அண்ணிமனப் புண்ணிற் குத்தப் போய்விட்டாள் இவ்வுலகப் பாய்விட் டம்மா! 30 4. தமிழர்களுள் ஒருசிலர் தமிழரென வாயினிக்கக் கூறிக் கொள்வார் தமிழிருக்க வடமொழியை விரும்பிக் கற்பார் தமிழரென இனியதமிழ் நாட்டைப் போற்றார் தமிழ்வழங்கா ஆரியந்தந் தாய்நா டென்பார் தமிழரென ஆரியத்தைப் பேணும் மாணில் தமிழர்களுள் இத்தகையோர் தம்மால் இன்று தமிழரர சியற்றுறையில் அயலார்க் காளாத் தன்மான மிழந்தந்தோ தவிக்கின் றாரே. 31 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று சொன்னால் தன்னையொரு தமிழனெனக் கூறிக் கொண்டு தமிழ்நாடு கொதித்தெழவோர் தமிழால் வாழ்வோன் தருக்கி 'எலி வளைகள்எலி களுக்கே' என்று தமிழரிடை யிருந்துதமிழ்த் தலைவர் தம்மைத் தான்கேலி செய்யவதைச் சரிதான் என்னு ம் தமிழர்களின் இழிசெயலை நினைக்க உள்ளம் சாக்காட்டு நிலையடைந்தல் லாக்குந் தானே. 32 தமிழர்களுள் இத்தனையோர் தமிழ ரானால் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று கூறித் தமிழ்நாட்டுப் பற்றுடன்செந் தமிழைக் கற்றுத் தமிழரைப்போல் தமிழ்மரபில் தமிழைப் பேசித் தமிழ்நாட்டுள் திரியும்வட மொழியை ஓட்டித் தனித்தமிழில் உரையாடி எழுதிப் பாடித் தமிழ்நாட்டைப் பிறநாட்டார் பொருளாக் காமல் தமிழரொடு சரிநிகராத் தாம்வாழ் வாரே. 33 5. பொதுவுடமை பொதுவுடைமை யதுபேசும் புரட்சித் தோழர் புகுந்தொருவ ருடைமையினைக் கவர்ந்து மற்றோர் புதுவுடைமை யதுவாக்க முனைதல் ஏர்க்குப் போமெருத்தை யிளைக்கவைத்தொப் புரவு செய்வான் மதியுடைமை போன்மிலரை யுள்ளோ ராக்கும் வகையினைவிட்டு ளரையில்லோ ராக்கி நாட்டைப் பொதுவுடைமை யாக்குதலம் மாட்டுக் காரன் போக்குமிவர் போக்குமொரு போக்கா மன்றே! 34 களர்நிலத்தைத் திருத்திநல்ல கழனி யாக்கக் கருதாது விளைநிலத்தைக் களர தாக்கி விளைநிலமும் பழுதாக வெறுமை யெய்தி மெலியுழவன் போன்றுபொது வுடைமைத் தோழர் உளவொருவ னுடைமைகவர்ந் தொருவர்க் காக்கி ஒப்புரவு செயலைவிட்டில் லோருள் ளோராய் வரிமையுறச் செய்துலகை வாழ வைக்கும் வகைகாணல் பொதுவுடைமைத் தகைய தாமே. 35 வாடுகின்ற பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சி வளர்ப்பதுவே முறையாகும் அன்றிச் சற்றும் வாடாமல் வளர்பயிரைத் தண்ணீ ரின்றி வாடவைத்துச் சமன்செய்தல் வழக்கா றாமோ? வாடுகின்ற ஏழைசெல்வம் வாய்த்து வாழும் வகைகண்டிங் கில்லாரே யில்லா ராக நாடுகண்டு பொதுவுடைமை நன்னா டாநம் நாடாக்கி வாழுவதே நல்வாழ் வாமே. 36 ஒல்லியர்க்குப் பருவுடலோர் ஊன்கொண் டூட்டி உடல்பெருக்கச் செய்குதல்போல் உள்ளோர் சொத்தை இல்லவர்க்குக் கவர்ந்துகொடுத் துளோரை யெல்லாம் இலராக்கிப் பொதுவுடைமை காண வெண்ணல் நல்லதல்ல இம்முறைநம் நாட்டை ஏழ்மை நாடாக்கி யிலம்பாட்டால் நலியச் செய்யும் எல்லவரும் நாட்கூலி யாகி விட்டால் எவர்கூலி கொடுப்பவர்நன் கெண்ணிப் பாரீர். 37 6.விடுதலை மேருவினில் விற்பொறித்த வெற்றிச் சேரர் விழுக்குடியின் வழிவந்த தமிழர் இன்றேன் தாருமென நமதுரிமை தன்னைக் கேட்கத் தயங்கியிரு கைகூப்பி மயிலைத் தோகை நேருமென வேவேண்டி நிற்பார் போல நின்றுதியங் கிட வேண்டும்; உரிமைப் போரில் வீரமுடன் போராடிப் பெறுவோம் இன்றேல் வெடியாலே தமிழரெலாம் மடிகு வோமே. 38 வடவரையிற் புலிபொறித்த வாகைச் சோழர் மரபில்வரு தமிழரெதற் காக இன்று கொடுமெனவே நமதுரிமை யதனைக் கேட்கக் கூடாதோ மதியார்முன் கொடுகி நிற்கும் மடவரைப்போ லேநின்று மாழ்க வேண்டும்? மானமதில் உயிர்பெரிதோ? உரிமைப் போரில் திடமுடனே போராடி வெல்வோம் இன்றேல் செத்துமடிந் தொண்புகழை வித்து வோமே. 39 பனிமலையிற் கயல்பொறித்த பாண்டி மன்னர் பழங்குடியின் வழிவந்த தமிழர் இன்றேன் இனியெமது பிறப்புரிமை யீக வென்றே எஞ்சாம லேகேட்க அஞ்சி யஞ்சிப் பனிமூடி மரம்போல வேகை கட்டிப் பணிவொடுநின் றிடவேண்டும்? உரிமைப் போரில் தனிநின்று போராடி வெல்வோம் இன்றேல் தமிழரெனும் பெயரொழியத் தான்செய் வோமே. 40 (இது, 1940இல் பாடியது)  7. எழுச்சி பல்லவி எம்மவரே எழுங்கள் - எழுங்களினி எம்மவரே எழுங்கள் இத்தனைநா ளாகஉறக் கத்திலிருந் ததுபோதும் - எம் கண்ணிகள் தம்மவர் தாழ்நிலை தனைநினை கிலராகித் தமதுதாழ் விலாவாழ்வே தகுமெனு நினைவாகி இம்மி யளவுங்கூட இனப்பற் றிலாதராகி இருந்தது போதும்போதும் இனியுணர் வினராகி - எம் 1 ஆறுமூன் றறுபத்தே ழதனில் தமிழகத்தே அண்ணாவின் தனித்தமி ழரசமைந் ததகத்தே மாறுபா டின்றிமறு மலர்ச்சியுற் றொருமித்தே வாழ்குவோம் தமிழ்வாழ்வு மதிப்புட னேகளித்தே - எம் 2 அயல்மொழி யானஇந்தி அதையடித் துத்துரத்தி அன்னைத் தமிழைமுன்போல் அரியணை யிலமர்த்தி கயல்புலி வில்லுயர்த்தக் கால நிலைக்குயர்த்திக் கன்னித் தமிழர்வாழ்வு காணுவோ மேதிருத்தி - எம் 3  8. உலகியலுண்மை பல்லவி மனமே மயங்காதே - மதி - தியங்காதே மனமே மயங்காதே. பல்லவி எடுப்பு முனமே அறவோர் முதுநூல் தெரியார் மொழிதே றுதல்முறையோ - தமிழ் முதுநெறியோ - மன கண்ணிகள் இல்லறம் என்பதோர் இனிமையின் எல்லை இதைவிட மக்களுக் கின்பம் இல்லை நல்லறம் பிறவென நவிலுவோர் சொல்லை நம்பிநீ தனிமையை நாடுதல் தொல்லை - மன 1 அன்னையும் தந்தையும் அன்பினுக் கிடமே அதையொழித் திடுகவென் றறைகுதல் அடமே பின்னையிப் பிறப்பினை வெறுப்பது மடமே பிறப்பிறப் பியல்பெனக் கொள்ளுக திடமே -மன 2 உடலியக் கம்பொறி யியக்கம தனைத்தே உயிரென ஒருபொருள் இலையறி தனித்தே உடல்நல மாயுள வரையது வினைத்தே உடல்நலங் கெடச்செயேல் உயிர்நலம் நினைத்தே -மன 3 (இது, 1948- தமிழ் வாழ்க என்னும் நாடக்த்தில் உள்ளது.)  22. பெரியார் வருகைப் பத்து பன்னிருசீர் விருத்தம் இந்து சமுக நிலந்திருத்தி இன்சொற் பெருக்காம் எருவட்டி இயல்சீர் திருத்த வித்திட்டே எய்து மவ்வொப் பறப்பொலிவை நந்து முலகோ ரனைவோரும் நாளுங் கூட்டுண் டேவாழ நவில்பத் தொன்பது நூற்றினொடு நாலெட் டாண்டில் நாகரிகம் முந்து மைரோப் பாவென்னும் மூரிக் கடலில் நீர் மொண்டு மொழிநீர் காணா தகம்வாடி முறுகு முயிர்ப்பைங் கூழ்தழைக்க வந்து சொன்மா மழைபொழியும் வளமார் முகிலே வருகவே வைக்கம் வீரர் எனுமெங்கள் மாண்பார் பெரியார் வருகவே. 1 சிங்க மெனவே உளமாவைத் திருத்து முகத்தோய் வருகவுழல் தீண்டா தவரைக் காண்டொறுநீர் சிந்தும் விழியோய் வருகநலம் தங்கு சொன்மா மழைபொழியும் சலியா வாயா வருகபடித் தவர்நெஞ் சுருகும் படியெழுதும் தளராக் கையா வருகவுடல் உங்க வுழைக்கும் ஏழைகளுக் குருகு முளத்தோய் வருகநிதம் ஊரூ ராய்ச்சென் றேயடிமை ஒழிக்கு மடியோய் வருகஅற மங்கை நாகம் மைமகிழும் வடிவோய் வருக வருகவே வைக்கம் வீரர் எனுமெங்கள் மாண்பார் பெரியார் வருகவே. 2 காணா வுதவாப் பொய்ப்பொருளைக் கடவு ளெனவே நனிநம்பிக் காணு முலகைப் படைப்பதுவுங் காத்தே முடிவி லழிப்பதுவுங் ஆணா உலகின் றலைவனென அவனா வியங்கு முலகமென அவனா ணையினப் படியின்றி ஆகா நம்மா லொன்றெனவும் வீணா யுளறி யெதற்குமூழ் வினையென் றேதா முயலாமல் விதியை மீறல் பாவமென விஞ்ஞா னத்தையும் நம்பாமல் வாணாட் கழிக்கும் மயக்கறுக்கும் வள்ளால் வருக வருகவே வைக்கம் வீரர் எனுமெங்கள் மாண்பார் பெரியார் வருகவே. 3 இந்து சமயப் படுகுழியில் எக்கா லத்தி லோவீழ்ந்தே ஏற முடியா நோநொந்தே ஏங்கு மக்கள் தமக்கிரங்கி வந்து முயலா முயன்றுசுய மரியா தையெனும் படிவெட்டி வரையா வீகைக் குடியரசாம் மலர்க்கை கொடுத்து மேடேற்றி அந்த மதப்பாழ்ங் குழியைப்பாத் தறிவா கியமண் கொடுமூடி அதன்மீ தொத்த உரிமையெனும் அணிவீ டெடுத்ததி லனைவோரும் வந்து வாழக் குடிவைத்த வள்ளால் வருக வருகவே வைக்கம் வீரர் எனுமெங்கள் மாண்பார் பெரியார் வருகவே. 4 சாதி பேதப் பெரும்போரில் தளர்வுற் றுழந்து முதுகிட்டுத் தாழ்வுயர் வெனும்பாழ்ம் பெருவிலங்கைத் தறியாப் பட்டப் பெயரென்னும் பேத முறுக்கா ணியைமுறுக்கிப் பெரும்பா ழடிமைச் சிறையிலிடப் பேதுற் றழுது தனித்தேங்கும் பெயராத் துயரைப் பொறாதெழுந்து போத மெனுஞ்சீர்க் கூர்வேலால் பொல்லாப் பகைவன் றனைவீழ்த்திப் புனையாப் பட்ட விலங்கறுத்துப் பொருந்தா வடிமைச் சிறைமீட்டு வாதை யகற்றி வாழ்வித்த வள்ளால் வருக வருகவே வைக்கம் வீரர் எனுமெங்கள் மாண்பார் பெரியார் வருகவே. 5 அடிமை யென்னும் பெருவிலங்கை அணியா வணிந்து பெண்டிர்களுக் கடுப்பூ திடவும் மகப்பெறவும் ஆண்பாற் காமங் கழித்திடவும் குடிமை யாக்கிக் குழவியிலே கொhண்டோன் கைபார்த் தவனிறந்தால் கொண்ட வுணர்வு தனையடக்கிக் கோல மிழந்து நடைப்பிணம்போல் படியின் மிசையின் பதுவின்றிப் பாழு முண்டைப் பெயர்பூண்டு பாழ்ம்பெண் பிறவி தனைநொந்து பல்லைக் கடித்துக் கொடுவாழ்ந்த மடைமை யகற்றிச் சமவுரிமை வகுத்தோய் வருக வருகவே வைக்கம் வீரர் எனுமெங்கள் மாண்பார் பெரியார் வருகவே. 6 சழக்கு மறைமா மனுமுதலாம் சாத்திரம் புராணம் இதிகாசம் சாற்றுந் துறக்கம் நரகமறு சன்மம் வினைபுண் ணியம்பாவம் விழுக்கு நற்பே றெனும்புரட்டை மெய்யென் றோதி எய்யாது விரதம் வழிபா டுருவேற்றல் மேய மூர்த்தி தலதீர்த்தம் ஒழுக்க மாக்கொண் டோர்பிறப்பற் றுறுவார் வீடென் றிறக்குமட்டும் ஓயா தலைந்தோர் பயனுமிலா துழலும் பழமூ டப்பழக்க வழக்க மொழித்தே வாழ்வித்த வள்ளால் வருக வருகவே வைக்கம் வீரர் எனுமெங்கள் மாண்பார் பெரியார் வருகவே. 7 ஒருவன் பழங்கஞ் சிக்கலைய ஒருவ னுண்டு கொழுத்திருக்க ஒருவன் கந்தை யரைபொத்த ஒருவன் பொற்பட் டுடையுடுத்த ஒருவன் தெருவோ ரிடைமுடக்க ஒருவன் மேல்மா டியிலுறங்க ஒருவன் இரவு பகலுழைக்க ஒருவன் உழையா துண்டுலவ ஒருவன் அடிமை யாயலைய ஒருவன் ஆண்டா னெனவாழ ஒருவ னுடைமை யதுபோக்கி உளவவ் வெல்லாம் பொதுவுடைமை மருவ வுழைத்து வருமெங்கள் வள்ளால் வருக வருகவே வைக்கம் வீரர் எனுமெங்கள் மாண்பார் பெரியார் வருகவே. 8 தழங்கு முயர்வெண் செங்கதிரால் ததும்பு முலகின் புறத்திருளைத் தகர்த்தே யுலகப் பொருள்விளக்கும் தகைசா லிரவி மதிபோல துழங்கு மறிவால் ஈரோட்டில் தோன்றி யருமைக் குடியரசால் தோழ ரென்னும் துணைக்கதிரால் சொற்பொழி வெனும்வெண் செங்கதிரால் புழங்கு மொருசீ றூர்தோறும் போயவ் வூரார் அகத்திருளைப் போக்கி யுண்மைப் பொருள்விளக்கிப் பொருந்து மியற்கைப் புதுவாழ்வை வழங்கி யுலகை வாழ்விக்கும் வள்ளால் வருக வருகவே வைக்கம் வீரர் எனுமெங்கள் மாண்பார் பெரியார் வருகவே. 9 அருந்தி மலத்தில் வளர்புழுவோ டரவீ யெறும்பு கோழிபுறா ஆடு பன்றி நாய்பூனை அலவன் தவளை யொடுங்கூடி இருந்து களிக்கும் அறிவோர்க ளேனோ மக்கள் தமிற்சிலரை இழிந்த சாதி யிழிபிறப்போ ரென்றே பேசி யேசிநலம் திருந்து பொருள்மற் றவர்தொட்டால் தீட்டென் றிழிந்த மலந்தின்னும் சிற்றுயி ரினுந்தாழ் வாயெண்ணித் தீண்டா தொதுக்குங் கொடுமைக்கு வருந்து குழந்தை மொழிக்குகந்த வள்ளால் வருக வருகவே வைக்கம் வீரர் எனுமெங்கள் மாண்பார் பெரியார் வருகவே. 10  23. பெரியார் பிறவாதிருந்திருந்தால்! அறுசீர் விருத்தம் பேசுங் கிளிவாய் மொழியேநம் பெரியார் பிறவா திருந்திருந்தால், ஏசுங் கிளவிக் கெதிர்நாணா இரப்போ னுமுயர் பிறப்பென்று தூசுங் கூட மதியாது சூத்திர னென்று சுடச்சொன்ன மாசிங் கின்றித் தமிழ்மக்கள் மதிப்புட னின்று வாழுவரோ? 1 பேடைக் குயிலின் மொழியேநம் பெரியார் பிறவா திருந்திருந்தால், மூடப் பழக்க வழக்கமெனும் முரட்டுக் களிறு முதுகிட்டே ஆடிக் காற்றின் அலர்பூளை யாமென் றோடத் தமிழ்மக்கள் கூடிக் குலவிப் புதுவாழ்வு கூடி யுவத்தல் கூடுங்கொல்! 2 பேதை தனிக்கப் பெயர்ந்தோய்நம் பெரியார் பிறவா திருந்திருந்தால், சாதி சமயப் படுகுழியில் தள்ளப் பட்டுத் தமிழ்மக்கள் யாது செய்கம் எனவெண்ணா அயர்ந்தாங் கிருந்த அந்நிலையில் மீது போத வழிகண்டு வெளிப்போந் திருத்தல் கூடுங்கொல்! 3 பெற்றோற் பேணும் பெண்ணேநம் பெரியார் பிறவா திருந்திருந்தால், கற்றா விற்பால் கறவாமல் காளை மாட்டிற் கறக்கெண்ணும் அற்றே மறுமை வாழ்வுக்கா அலைந்து திரிந்த தமிழ்மக்கள் நற்றா மரைவாழ் அனம்போல நல்வாழ் வெய்தல் கூடுங்கொல்! 4 பிறைநேர் நுதல்மான் பிணையேநம் பெரியார் பிறவா திருந்திருந்தால், செறிசீ வடிய முடைநாறும் தீண்டா மையெனும் அக்கொடுநோய் அறைவீ ழருவிக் கறையேபோல் அலமந் தொழியத் தமிழ்மக்கள் நறையா னகன்ற மரமேபோல் நலமுற் றிருத்தல் கூடுங்கொல்! 5 பெட்டைப் புறவின் நடையேநம் பெரியார் பிறவா திருந்திருந்தால், சட்டப் படியே தமிழ்மக்கள் தாழ்ந்த பிறப்பென் றாரியர்முன் கட்டிப் புகுத்த பொய்க்கதையாங் கட்டை யவிழ்த்துச் சூத்திரப்பாழ்ம் பட்டத் தினைவிட் டுலகேத்தப் பாடுற் றிருத்தல் கூடுங்கொல்! 6 பிடிமென் னடைமின் கொடியேநம் பெரியார் பிறவா திருந்திருந்தால், உடைமை யிழந்து நுகரின்ப உரிமை யிழந்து மீளாத அடிமை யெனும்பாழ்ஞ் சிறைப்பட்டே அயரா நின்ற பெண்ணுலகக் கொடுமை தவிர்ந்து புதுவாழ்வு கூடி யுவத்தல் கூடுங்கொல்! 7 பிந்தி நடவாப் பெண்ணேநம் பெரியார் பிறவா திருந்திருந்தால், நந்தமி ழன்னைக் கெதிராக நானே யரசி யெனக்கூறி வந்து குலுங்கி வாலாட்டி வலிதிற் புகுந்த வடவிந்தி உந்தி யெறியப் புறங்காட்டி ஓடி யிருத்தல் கூடுங்கொல்! 8 பெண்ணா ரணங்குப் பிழம்பேநம் பெரியார் பிறவா திருந்திருந்தால், மண்ணா மணியா ஒளிவீசி வையம் புகழ வாழ்ந்திட்ட அண்ணா வைப்பெற் றிருப்பேமோ! ஆவ லோடு தமிழரெலாம் எண்ணா நின்ற தமிழாட்சி எய்தி யிருத்தல் கூடுங்கொல்! 9 பிள்ளைக் குருகி னிறையேநம் பெரியார் பிறவா திருந்திருந்தால், அள்ளிக் கொள்ளும் படியான்ற அறிஞர் அண்ணா வழிநின்று கள்ளக் குறும்பர் குலநாணக் கலைஞர் கருணா நிதியின்று தெள்ளத் தெளியத் தமிழ்நாட்டைச் செங்கோ லோச்சல் கூடுங்கொல்! 10 வாளாண் மையினால் உலகோம்பும் மறவன் போலத் தமிழ்மக்கள் ஆளாண் மையினால் ஆரியத்துக் கடிமைப் பட்ட அந்நிலையைத் தோளாண் மையினால் தள்ளாஇத் தொண்ணூற் றிரண்டி னுங்கடியும் தாளாண் மைமிக் குடையநம் தந்தை பெரியார் வாழியவே! 11 கண்ணூற் றிருந்து கால்பாயக் கலுழுங் குழவிக் காய்போல எண்ணூற் றிருந்து தன்மானம் இயன்று வாழத் தமிழர்க்கித் தொண்ணூற் றிரண்டாண் டினுமுள்ளஞ் சோரா தியன்று தொண்டாற்றும் தண்ணூற் றிரண்ட தமிழ்போல்நம் தந்தை பெரியார் வாழியவே! 12 குறிப்பு: இது தந்தை பெரியார் 92 -வது பிறந்த நாள் விழா 17 - 9 - 70 'விடுதலை' மலரில் வெளிவந்தது. (1) ஏசுங்கிளவி -இகழ்ச்சி. (3) பேதை தனிக்கப் பெயர்ந்தாள் - பெதும்பை. (4) பெற்றோன் - கணவன். (5) அறை-பாறை. (7) பெண்ணுலகு அக்கொடுமை. (10) பிள்ளைக்குருகு -சிறுவளையல். இறை -முன்கை. குறும்பர் - சிற்றரசர்; இங்கு எதிர்க்கட்சியினர். (11) ஆளாண்மையினால் - ஆதரித்ததால். கடிதல் - நீக்குதல். தாளாண்மை - விடாமுயற்சி. (12) எண் - எண்ணம்; எண்ணமாகிய ஊற்றிலிருந்து. தண்நூல் - திரண்ட தமிழ்.  24. அறிஞர் அண்ணா 1. தமிழக முதல்வர் 6 - 3 - 67 அன்று தமிழக ஆட்சிப்பொறுப் பேற்றபோது வாழ்த்திய வாழ்த்துப்பா வெண்பா வாழ்க அறிஞர்அண்ணா! வாழ்கதமிழ்த் தம்பிமார்! வாழ்கதமிழ் நாடுதமிழ் மக்கள்தக - வாழ்கதமிழ் அன்னைமகி ழத்தமிழ்நா டாள்தரு தி. மு. கழகம் மன்னிமிக வாழ்க மகிழ்ந்து. 1 இருமூன்று மூன்றறுபத் தேழில் தமிழர் ஒருமூன்று மெய்தி யுவப்ப - வருமான்ற ஆட்சிப் பொறுப்பேற் றமைதரு தி. மு. கழகம் மாட்சியுடன் ஆள்க மகிழ்ந்து. 2 தன்னரசு பெற்றார் தமிழர், இனியதமிழ் அன்னை அரியணையி லாங்கமர்ந்தாள் - மன்னுமதி யீடாறு மூன்றறுபத் தேழில் தி. மு. கழகம் நாடாளப் போந்தவந்நல் நாள்! 3 அண்ணா எனத்தமிழர் அன்போ டழைக்குமெங்கள் அண்ணா முதலமைச்சர் ஆனதுகண் - டண்ணாவாழ் கென்று தமிழகமே ஏத்தத் தமிழன்னை தன்றலைம கன்றலைமோந் தாள். 4 இருளிரிய மக்களகத் தின்பம் பெருக அருக இலமென்ப வாங்கே - வருமுதய சூரியன்போல் மக்களுக்குத் தொண்டுசெய் தி. மு. கழகம் சீருடன்நா டாள்க சிறந்து. 5 எந்தன் குறையறுபத் தேழோ டகன்றொழிய வந்த தி. மு. கழக மைந்தர்காள்! - அந்தநாள் ஆண்டமூ வேந்தர்கள்போல் அண்ணாவும் தம்பியரும் ஆண்டிடுகென் றாள்தமிழன் னை. 6 மக்களுக்கா ஆண்டதமிழ் மன்னர்களைப் போன்றுதமிழ் மக்களுக்கா ஆள மடிதற்றுத் - தக்கபடி காக்கவமை தி. மு. கழக அமைச்சவையை நாக்குளிர வாழ்த்துகின்றேன் நான். 7 எட்டுத் திசையும் இசைபரவத் திட்டமிட்டுக் கட்டமையத் தி. மு. கழகமைச்சீர்! - முட்டின்றி மூவேந்தர் போல முறைசெய்க நன்காய்ந்து நாவேந்தர் பாராட்ட நன்கு. 8 எக்குறைவு மில்லராய் ஏக்கழுத்தத் தோடுதமிழ் மக்கள்வாழ் வாங்கினிது வாழவே - தக்கோர் பழகு தமிழ்வாயால் பாராட்டத் தி. மு. கழக அமைச்சவைவாழ் க! 9 குறிப்பு : (2) ஒரு மூன்று - அறம் பொருள் இன்பம், (3) மதியீடு - திங்கட்கிழமை. (1), (6) தங்கைமாரையுங் குறிக்கும்.  15 - 4 - 68 அன்று 2. வெளிநாடு சென்றபோது வாழ்த்தியது அறுசீர் விருத்தம் வாழி எங்கள் அண்ணா வண்டமி ழரச வானைச் சூழிரு ளகல வந்து தோன்றினிர் சுடரே யென்ன, ஆழிசூ ழுலகிற் செல்வ அமெரிக்கா முதலாச் சென்றே ஏழிசைத் தமிழர் தங்கள் இசையினை நாட்டி மீள்வீர். 1 எங்கள்பே ரறிஞர் அண்ணா இதுவரை அயலார் யாரும் பங்குறா அமெரிக் காஏல் பல்கலைக் கழகந் தன்னில் செங்கதிர் போலத் தங்கிச் சிறப்புறு பட்டந் தாங்கிச் சங்கமிக் குயர்ந்த இன்பத் தமிழென விளங்கு வீரே. 2 உலகிரு ளகலத் தோன்றும் உதயசூ ரியனைப் போன்று நலிதரு தமிழர் தங்கள் நலிவகன் றிடவே போந்தீர் அலைகட லுலக மெல்லாம் அருந்தமி ழாற்றல் காண வலம்வரு வான்செல் அண்ணா வாழ்கநும் செலவு மாதோ! 3 அன்றுமூ வேந்தர் செங்கோ லதனிடைத் தமிழர் வாழ்வும் இன்றமி ழன்னை யந்நாள் இருந்தநன் னிலையும் அண்ணா! ஒன்றுமே விடாமல் இந்த உலகெலாம் அறியச் செய்யச் சென்றுமே வருக! நுந்தம் செலவுநன் றாக மன்னோ! 4 கேட்டவ ரோகே ளாரும் கெழீஇயநும் பொருள்வாய்ச் சொல்லை வேட்டிட இனிது பேசும் மேயசொற் செல்வ! அந்த நாட்டினர் நுமது சொல்லின் நயத்தினில் மயங்கி, 'அண்ணா! மீட்டுமீங் குறுக' என்ன வேட்டிட மீள்கு வீரே! 5 தான்பொரு தமிழர் தங்கள் தனிப்பெருந் தலைவ! அன்னார் ஊன்புகு முயிரே போன்றீர் உலகெலாம் பயணம் செய்தே தேன்புகும் அளிபோற் செல்லும் திசையெலாந் தமிழர் தங்கள் வான்புகழ் பரப்பி மீண்டு வருகுவீர் வாகை வேய்ந்தே. 6 (இது, 13 - 4 - 68 'முரசொலி'யில் வெளிவந்தது)  3. அறிஞர் அண்ணா வருகைப் பத்து 1. பன்னிருசீர் விருத்தம் எந்நாட் டவரும் இதுகாறும் எய்தாப் பெருமை யைத்தமிழர் எய்தும் படிசெய் திட்டதமிழ் இறைவா வருக! பிறந்துவளர் தந்நாட் டவரின் பெரும்பேறே தம்பே றாக்கொண் டமெரிக்கர் தமிழின் பெருமை அறிதரச்செய் தலைவா வருக! தமிழ்வாழும் இந்நாட் டவரும் உளமுட்க இனிதே நுகர முப்பாலை எடுத்தேல் பல்கலைக் கழகத்தார்க் கீந்தோய் வருக! இன்புற்றே அந்நாட்டவர்கள் வழியனுப்ப அன்பாய்த் தமிழர் வரவேற்க அலர்செங் கதிர்போல் வருமெங்கள் அண்ணா வருக வருகவே! 2. எண்சீர் விருத்தம் உலகமுழு துஞ்சுற்றி மண்ணோர் மகிழவே உவரிமிசை யெழுதரும் விண்ணார் கதிரென இலகுபல செல்வமும் தண்ணார் கடலென இயலுமமெ ரிக்கர்தம் கண்ணார் பொருளென விலகரிய தொல்புகழ்ப் பண்ணார் தமிழினை மிகநனி விரும்பியவர் உண்ணா வுவந்திட அலகில்புக ழோடீங்கு நண்ணா வருகவே! அறிவுலக வொளியெங்கள் அண்ணா வருகவே! 3. மேற்படி வேறு வண்ணம் தாய்கண்ட சேய்போல அமெரிக்கா வாழும் தமிழ்மக்கள் கண்டேதந் தமையற்றோ ராகச் சேய்கண்ட தாய்போல உளநெக் குருகித் திகழுற்று நீர்நின்ற திறங்கண் டுவந்தே மூய்கொண்ட அமெரிக்கர் தங்கேள் மறந்தே முன்னின்ற தமிழ்வாணர் முறைதொக்கு நிற்ப ஆய்கொண்ட சொன்மாரி பெய்தாங் கணைத்த அறிவுக்கொண் மூவெங்கள் அண்ணா வருக! 4. பதினான்குசீர் விருத்தம் இதுநாள் காறும் எத்தலைவர் இத்தகுமி கைப்படுசி றப்பினை இப்படியினில் எய்தா நின்றார் எத்திசையு மொத்தினித ளித்திடும திப்பினை இத்தகவிலே முதுநாள் காறும் முக்கடல கத்தினிடை யித்தகுநி வப்பினைய டுத்தவரென மொழிவா ருண்டோ! முற்படுபொ ருட்சுவைகொள் அத்தகுத மிழ்த்தலைவர் முப்பொருளென எதுநாள் வந்தே இப்படிந மக்கினிய கப்படுமு வப்பினைய ளிக்குவரென இசைமே வந்த இப்பெருக டற்படியி னிற்பொருள்மி குத்தவமெ ரிக்கரெவரும் அதுநாள் காறும் அத்தலைவ ரைப்பிரிந் தெப்படியி ருக்குவமெ னக்கவலவே அறிஞர் அண்ணா! அப்பெரும திப்பொடுத மிழ்த்தலைவி மிக்குளமு வக்கவருக! 5. பதினாறுசீர் விருத்தம் போம்பொழு துலகச்சுற் றுப்பயணம் வாடிகனிற் போப்பாண்ட வரைக்கண்டு பிரான்சின் வழியாய்ப் போதுக வெனவுவந் தமெரிக்கர் வரவேற்கப் புகழ்மிகு மந்நா டடைந்து மகிழ்வாய் தேம்பழுது படவினித் திடுதமிழ்ச் சுவையையவர் செவிக்கல நிரம்பவார்த் துலகு புகழத் திகழும்ஏல் பல்கலைக் கழகமா ணவருடன் சேர்ந்திருந் தோரைந்து நாள வருணத் தீம்பொழு திலாதுமுப் பாலுடன் அறிவுரைத் தேன்பெய் துவப்பித்து வான்பு கழுறீஇச் செல்வங் கொழிக்குமமெ ரிக்கநகர் பலகண்டு திகழான லூலுசப் பான்வ ழியதா ஆம்பொழுது புலர்தல்போல் வான்வழி வருமெங்கள் அறிஞரண் ணாவருக வருக வினிதே! அமெரிக்கர் பாராட்டும் அறிவுலக வொளியெங்கள் அறிஞரண் ணாவருக வருக வினிதே! 6. எண்சீர் விருத்தம் தம்பிதங்கை மார்களான தமிழராம் பெருங்கடல் தடதடென்று கைகளாம் தரங்கமார்த்து நின்றுமே இம்பரின் உவமையற்ற எங்களண்ணா வாழ்கவென் றேறுபோல் முழங்கவே இளங்கதிர் குணக்கினில் உம்பரி னிவர்ந்துசென் றுலகஞ்சுற்றி வந்துவா னூடிழிந்த வாறுவான வூர்திநின் றிறங்கியிவ் அம்பலம் மகிழவெங்கள் அறிஞரண்ணா வருகவே! அமெரிக்காவி னுலவியெங்கள் அறிஞரண்ணா வருகவே! 7. பன்னிருசீர் விருத்தம் காயுங் கதிரோன் ஒருபோதும் காயா வருளோன், ஆழ்கடலும் கலங்கும் என்றும் ஏதுறினும் கலங்கா வுள்ளன், வான்மதியும் தேயும் என்றும் அணுவேனும் தேயா மதியன், உயர்வானும் சினக்குஞ் செய்யா தனசெயினும் சினவாப் பொறையன், துலாக்கோலும் சாயும் என்றும் ஒருபக்கம் சாயா நடுவன், வேற்கட்டும் தளரும் ஊக்கம் ஒருபோதும் தளரான் எனவே அமெரிக்கர் ஆயுங் குணங்கள் அத்தனையும் அமைந்தோன் என்னப் பாராட்டும் அருமைத் தலைவ ராமெங்கள் அண்ணா வருக வருகவே! 8. மேற்படி வேறு வண்ணம் செஞ்சுடர் வேலை யெழுந்துல கத்திருள் தேய வுலகதனைத் திகழொளி வீசி வலம்வரல் போலச் செந்தமி ழகத்தேமூ வஞ்சுநான் கறுபத் தெட்டிற் புறப்பட் டைரோப் பாவழியாய் அலைகட லிடையார் அமெரிக் காவை அடைந்தே யந்நாட்டு மஞ்சிவர் மாட மாநகர் பலவும் வலம்வந் தந்நாட்டார் மனவிரு ளிரிய அறிவொளி வீசி வண்டமி ழின்சுவையை அஞ்செவி நிறையப் பெய்துயர் சப்பான் அடைந்தே நாலேழில் அருந்தமி ழகத்தை யடைதரு மெங்கள் அண்ணா வருகவே! 9. கட்டளைக் கலிப்பா குமரிக் காவில் குலவுமோர் பைங்கிளி கோலக் கோபுர மாநகர் போந்துமே நமருக் கோரிரு காதுபோ தாவென நகர மக்கள் வருந்திட நல்லிசை தமரிற் பெய்துமே மீளுதல் போலவே தன்னி கர்த்த தமிழர் பெருமையை அமெரிக் காவில் பரப்பியே போதரும் அறிஞர் எங்கள்நல் அண்ணா வருகவே! 10. அறுசீர் விருத்தம் கேட்டார் உளத்தைப் பறிகொடுத்துக் கிழமைப் படவே கேளாதார் வேட்டா ராகி நின்சொல்லை விரைதேர் அளிபோல் மேவாக்க மாட்டார் விழையும் பேச்சாளா! வளமார் செல்வ அமெரிக்க நாட்டார் விரும்பும் நல்லண்ணா! நலமே வருக வருகவே! (இது, 12 - 5 - 68 அன்று உலகச் சுற்றுப்பயணஞ் செய்து மீண்டபோது, கடற்கரை வரவேற்பில் படித்துக் கொடுத்தது.)  25. தமிழர் வீரம் சிந்து செல்லுந் திசைதடு மாறியே - ஞாயிறு தெற்கு வடக்காகச் செல்லினும் அல்லும் பகலுமொன் றாயினும் - வீரமும் ஆண்மையும் மாறாத் தமிழர்கள். 1 மாரிபெய் யாது வறக்கினும் -கடல்கள் வற்றிப் புழுதி பறக்கினும் மேருவில் வெம்மை பிறக்கினும் -ஆண்மையும் வீரமும் மாறாத் தமிழர்கள். 2 வானம் இடிந்துகீழ் வீழினும் - எல்லா மலைகளும் மண்ணுக்குள் ஆழினும் வேனிலில் தண்குளிர் மூழினும் -ஆண்மையும் வீரமும் மாறாத் தமிழர்கள். 3 ஞாயிறு தண்ணென வாயினும் -திங்கள் நாளுங் கடுவெயில் காயினும் ஆயிர ஆண்டுகள் போயினும் - வீரமும் ஆண்மையும் மாறாத் தமிழர்கள். 4 பகலவன் தோன்றாது போயினும் - மூன்று பருவமு மேயில வாயினும் அகலிடத் தாரழல் மூயினும் - வீரமும் ஆண்மையும் மாறாத் தமிழர்கள். 5 உம்பரில் இம்பர் ஒழியினும் - வானம் ஓயாது செந்நீர் பொழியினும் ஐம்பெரும் பூதம் ஒழியினும் - வீரமும் ஆண்மையும் மாறாத் தமிழர்கள். 6 பாம்புக்கு நஞ்சில வாயினும் -புலி பாய மறந்துமே போயினும் வேம்புக்குக் கைப்பில வாயினும் - ஆண்மையும் வீரமும் மாறாத் தமிழர்கள். 7 எட்டி யெருக்கம் இனிக்கினும் - கரும் பெட்டிக் கசப்பாய்க் கசக்கினும் அட்ட பொருள்கள் முளைக்கினும் - வீரமும் ஆண்மையும் மாறாத் தமிழர்கள். 8 வெம்பகை துண்ணெனச் சூழினும்- தலை மீதினிற் பேரிடி வீழினும் அம்பயில் மார்பினைப் போழினும் - வீரமும் ஆண்மையும் மாறாத் தமிழர்கள். 9 உயிரொடு தோலை யுரிக்கினும் - உறுப் பொவ்வொன்றாய் நாளுந் தறிக்கினும் அயில்கொடு கண்ணைப் பறிக்கினும் - வீரமும் ஆண்மையும் மாறாத் தமிழர்கள். 10 (ஆசிரியரின் அரசியலரங்கம் என்னும் நூல் 4 : 1)  26. பழந்தமிழ் வாணிகம் சிந்து சிந்து வெளியினிற் கொண்ட பொருளைக் - கீழ்த் திசைப்படுங் கங்கையிடைக் கொண்டு கொடுத்தே விந்தப் பகுதியிலே விற்ற முதலுக் -கங்கு விளையும் பொருள்களை வாங்கி வருவார். 1 பொதியத்துச் சாந்தமகில் கொற்கையின் முத்தும் -இமயப் பொன்னு மணிக்குவிற்று மீள்கையிற் கொண்ட மதியத்துப் பிள்ளையெனுங் கோட்டு நிரையை - நீல மலைக்களிற் றுநிரைக்கு மாற்றி வருவார். 2 கூம்பிலே பாய்புலிவிற் கெண்டை யசையச் - சீனங் கொண்டுகொடுத் தங்குவருங் கப்பலைக் கண்டே தாம்புணர் காதலர் வருகையை யெண்ணி - நெய்தற் றலைவியர் ஓடியே வலையை யெடுப்பார். 3 கொற்கைநன் முத்துங்கீழ்க் கடற்ப வழமும் - யானைக் கொம்பொடு மயிலிறகும் வெம்பு மிளகும் எற்கெனக் கென்றுமேமேல் நாட்டு மகளிர் -கை ஏந்திட ஈந்துபொரு ளீட்டி வருவார். 4 பெய்யு மழையெனமீன் வில்புலி யாட -அர பிக்கடல் மீதுவருங் கப்பல்கள் கண்டே மெய்யை யழகுசெய்யும் ஆடை யணியைப் - பார்த்து மெலிந்த எகுபதியப் பெண்கள் மகிழ்வார். 5 ஆழியிடை யாடிவருங் கப்பல் களிலே - இருந் தாரமகில் அம்பர்குங்கு மங்க மழவே தோழிய ருடன்பாபி லோனியப் பெண்கள் - மென் றோளொடு குழலைநிலை யாடியிற் பார்ப்பார். 6 நீலத் திரைக்கடலிற் சேல்முத லாடத் - தங்கள் நீள்நகர் நோக்கிவருங் கப்பலைக் கண்டே ஏலத்து மங்கையர்தம் கோலத்தை நீத்தே -புனையும் எதிரிய கோலத்தினுக் கேங்கியே நிற்பார். 7 ஆடிய வில்புலிமீன் தேடி யழைக்கக் - கரை அடைந்திடும் பாய்விரிநா வாய்களைக் கண்டே ஊடிய கணவர்குறிப் பால றியவே - கிழிந்த உடைகளைப் பார்ப்பர்சா லடிய மகளிர். 8 சேலும்வில் லும்புலியுஞ் சேர்ந்த சையவே - மேல் திரைக்கடல் மீதுவருங் கப்பல்கள் கண்டே நூலுமூ சியுங்கொள் கிரேக்க மகளிர் - தம் நுண்ணிய கைத்திறத்தை எண்ணி மகிழ்வார். 9 தெந்தினந் தினாவெனத் திரைக்க டலிடை - அசைந்து செந்தமிழ் பாடியாடுந் தேமொழி போல வந்திடுங் கப்பல்களைக் கண்டு மகிழ்ந்தே - தேய்ந்த வளைகளைப் பார்ப்பர் பார சீகமகளிர். 10 விற்கொடி யோடுகயல் மீன்பு லிக்கொடி - விண் மிசையசைந் தாடவருங் கப்பல்கள் கண்டே கொற்கையின் முத்தெனக் கெனக்கென வென்று - கை கொட்டியே யார்ப்பர்யவ னக்கு மரிகள். 11 சேலொடுவல் வில்புலியி லச்சினை யிட்டு - நம் செந்தமிழ்நாட் டுவணிகர் கொண்டு கொடுத்த பீலிபெய்மே லாடைகொள்சு மேரிய மின்னார் - தமிழ்ப் பெண்டிரின் கைத்திறத்தைக் கண்டு மகிழ்வார். 12 மலையெனப் போர்முனையில் மண்டியே நின்று - போர் மலைந்து களம்பெறுந் தமிழ்ம றவர்கள் அலைகடல் தொண்டியினில் வந்தி றங்கிடும் - உயர் அரபிக் குதிரைகளைக் கண்டு களிப்பார். 13 வேம்பு மிலைந்துகயல் மேல சைந்திடக் - கடல் விளைவினைக் கொண்டுவெளி நாட்டினில் விற்று வாம்புனற் கொற்கையை வந்த டைந்திடும் - கப்பல் வரிசையைக் கண்டுபாண்டி மக்க ளுவப்பர். 14 ஆர மிலைந்துபுலி யாடி யசைய - விளை அரும்பொருள் கொண்டுகீழ் நாட்டினில் விற்று காரென வந்துபூம் புகாரை யடையும் - மரக் கலங்களைக் கண்டுசோழ மக்கள் களிப்பர். 15 போந்தை மிலைந்துவிற் பொலிந்த சைந்திட - விலைப் பொருள்களைக் கொண்டுமேல் நாட்டினில் விற்று மாந்தைத் துறைமுகத்தை வந்த டைந்திடும் - நா வாய்களைக் கண்டுசேர மக்கள் மகிழ்வர். 16 (ஆசிரியரின் அரசியலரங்கம் என்னும் நூல் 3 : 3)  27 கையறம் 1. காந்தியடிகள் தோற்றம் 2 - 10 - 1869; மறைவு : 30 - 1 - 1948 அறுசீர் விருத்தம் மெய்யறம் பாடி யுந்தன் மேன்மையை உலக முட்டச் செய்யறம் பாடு மெங்கள் செந்தமிழ் மொழியால் இன்று கொய்யற முடைய பாவி ஒருவன்செய் கொடுமை தன்னால் கையறம் பாடி யேங்கக் காலமும் ஆச்சே எந்தாய்! 1 சுட்டனன் என்ற தீச்சொல் சுருக்கெனச் செவிபு காமுன் கெட்டன முணர்வு தேம்பிக் கிடையைவிட் டெழுந்தோ டிப்போய் வட்டம தாகப் பேசும் வானொலி யதனைக் கூடி விட்டனம் 'அதுபொய்' என்னும் விழைவுடை நெஞ்சத் தேமே. 2 பொய்யல மெய்யே யென்று புகலவா னொலியுங் கேட்டே ஐயகோ! உள்ளம் சாம்பி அழுதனம், அழுதை யாவென் செய்யவோ! என்று தேம்பிச் செயலறு நிலைய ரானோம் உய்யுமா றெவ்வா றெந்தாய்! ஒருமுடி விலாதே மந்தோ! 3 அலையெறி கடலுக் கப்பால் ஆஃபிரிக்கா விடைவாழ் நம்மோர் தலைவரி தவிர்த்தாய் நம்மோர் தன்னுணர் வடையச் செய்தாய் மலையென வுயர்ந்தாய் அந்தோ! மதியிலா ஒருவன் உன்னைக் கொலைபுரிந் திடநீ என்ன கொடுமைசெய் தாயோ எந்தாய்! 4 விடுதலை பெறநம் நாடு வெஞ்சிறை புகுந்தே ஒன்னார் கெடுதலை யினிதென் றேற்றுக் கிளர்பகை யாளர் மாட்டும் அடுதலை வெறுத்த காந்தி அடிகள்நின் அருமை தேறாச் சுடுதொழி லாளன் அந்தோ! சுட்டுமே கொன்றிட் டானே! 5 பகைவனுக் கிரங்கும் பண்பும் பகலவ னனைய தென்பும் நகைமுகத் தெழும்பே ரன்பும் நடைமுறை பிறழா முன்பும் வகையபுத் தறிவும் நன்னெஞ் சழுத்தமும் வாய்ந்தோய்! அந்தத் தகவிலான் சுட்ட போதெத் தகுதியி லிருந்திட் டாயோ! 6 நன்னல முடைய எந்தாய் நமதுநன் னாட்டு மக்கட் கின்னுமென் னென்ன செய்ய எண்ணிநீ யிருந்தை யோதான் அன்னவை தம்மை எண்ணி ஆயுமுன் அருமை யுள்ளம் புன்னெறி யாளன் சுட்ட போதிலென் னெண்ணிற் றேயோ! 7 கொன்றவன் கோட்சே யல்லன், கொடுமத வெறியே சுட்டுக் கொன்றதக் கொடிய கோட்சே கோலத்தில், அவன்கை தன்னில் ஓன்றிய வெடியின் குண்டின் உருவத்தில், அடிகள் தம்மை என்றழிந் தொழியு மோதான் இம்மத வெறியும் அந்தோ! 8 கொச்சகம் நந்தா ஒளிவிளக்கே! நாட்டுரிமைப் போர்புரிய வந்தாய்! உடைந்த மனவுறுதி யைமீட்டுத் தந்தாய்! ஒருவன்கை தன்னால் மடிந்தனையோ அந்தோ! இனியமைதிக் காருளரே இந்நாட்டில்! 9 பேருலக மேயுன் பிரிவாற்றா தேயழுத, ஊருடனே அவ்விரவும் உறங்கா திருந்தழுத, நேருபடே லும்புலம்பி நின்றழுதா ரென்றாலக் காரறிவா ளன்மனமென் கல்லோ இரும்போகாண்! 10 கொன்னே உனைச்சுட்டுக் கொன்றொழித்த அக்கொடியோன் என்னே யிரக்கம் எனும்பொருளி லாதவனோ? அன்னே! அலாதுநீ அன்னாற் கிழைத்ததென்னே! இன்னாசெய் யாமைக் கினியாரிப் பேருலகில்! 11 அடங்காப் பிடாரிகளாம் ஆங்கிலரை யாட்டிவைத்த மடங்காத் துணிவுடைய மன்னா! அமைதிநிலை தொடங்காமுன் னேயுன்னைத் தோற்றோம்நீ சென்றுளதெவ் இடங்காண் புகலுமெளி யேமைத் தனிவிட்டே. 12 எந்தாயுன் எண்ணத்தை யீடேற்றி வைப்பதினில் பிந்தோ மொருபோதும் பேதுறா தேயமைவாய் தந்தாய்! நிலையாமை தன்னையுணர்ந் தாற்றுகினும் எந்தாயிவ் வன்கொலையை எண்ணி யிரங்குகின்றேம். 13 ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்கும் பொருளொன் றிலையென்றே அன்றோது வள்ளுவனார் ஆய்மொழிபோல் எம்மடிகாள்! நின்று நிலவுகவிந் நீணிலத்துன் நீள்புகழே! 14 2. நேரு தோற்றம் : 14 - 11 - 1889; மறைவு : 27 - 5 - 1964 (குழந்தைகள் துயரம்) சிந்து மேருவினும் இந்தியாவை நேருமாமா! - மிக மேதகவிற் காத்துவந்த நேருமாமா! யாரினியவ் வாறுகாப்பார் நேருமாமா! - நட் டாற்றினில்விட் டெங்குச் சென்றீர் நேருமாமா! 1 எங்களைத் தவிக்கவிட்டு நேருமாமா! - நீர் எங்குச்சென் றொளிந்துகொண்டீர் நேருமாமா! எங்களுடன் கூடியாட நேருமாமா! - இனி ஏறுபோல் வருகுவீரோ நேருமாமா! 2 இந்நாட்டுச் செல்வமென நேருமாமா! - இனி எங்களை யழைப்பவரார் நேருமாமா! எந்நாட்டுச் செல்வங்கட்கும் நேருமாமா! -இனி யானைக்கன் றளிப்பவரார் நேருமாமா! 3 இயற்கைத் தனித்தலைவா நேருமாமா! - அந்த இடத்தை நிரப்புவோரார் நேருமாமா! செயற்கைத் தலைமையினால் நேருமாமா! - உலகம் செல்வுழிச்சென் றின்புறுமோ நேருமாமா! 4 காந்திகென் னடியல்லால் நேருமாமா! - சுட்டிக் காட்ட ஒருவருண்டோ நேருமாமா! மாந்தர்குல மாமணியே நேருமாமா! - விட்டு மாயமாய் மறைந்தனிரே நேருமாமா! 5 வேறுதுணை யாருமின்றி நேருமாமா! - தவிக்க விட்டுவிட்டுப் போயினிரே நேருமாமா! சாறுசோறு வேண்டுகில்லேம் நேருமாமா! - எங்கள் தலைவரென் றிருந்தாற்போதும் நேருமாமா! 6 அணையா வொளிப்பிழம்பே நேருமாமா! - எங்கள் ஆசியாவின் பேரொளியே நேருமாமா! துணையா ரினியெமக்கு நேருமாமா! - ஒன்றும் சொல்லாமற் போய்விட்டீரே நேருமாமா! 7 அன்புநன் னீர்பாய்ச்சி நேருமாமா! - உலக அமைதிப் பயிர்வளர்த்த நேருமாமா! இன்ப விளைவுறுமுன் நேருமாமா! - எம்மை ஏமாற்றிப் போயினிரே நேருமாமா! 8 பாருலகப் பேரொளியே நேருமாமா! - இனியும் பார்த்துக் களிக்குவமோ நேருமாமா! நேருநிக ரில்லாத நேருமாமா! - நடு நிலைக்கினி யாருலகில் நேருமாமா! 9 மலர்ந்த ரோசாமுகத்து நேருமாமா! - இனியம் மலரை மதிப்பவர்யார் நேருமாமா! புலர்ந்து மறைகதிர்போல் நேருமாமா! - ஏனோ பொசுக்கென்று போயினிரே நேருமாமா! 10 தொழுந்தக விற்புரந்த நேருமாமா! - நீர் தோன்றியவந் நன்னாளை நேருமாமா! குழந்தைகள் நாளாக நேருமாமா! - என்றும் கொண்டாடிப் போற்றிடுவோம் நேருமாமா! 11 உலகக் குழந்தைகளேம் நேருமாமா! - அன் புணர்ச்சிப்பா மாலையினை நேருமாமா! புலவர் குழந்தைசொல்லால் நேருமாமா! - நும் புகழொளிக்குச் சூட்டுகின்றோம் நேருமாமா! 12  3. கவிமணி தோற்றம் : 27 - 7 - 1876; மறைவு : 26 - 9 - 1954 வெண்பா இன்றமிழால் யாத்த எழிலார் மணிக்கூண்டில் தென்றமிழர் தங்கள் செவியினிக்க - நன்றொலிக்க ஆய்ந்துநா டோறும் அடித்த கவிமணிநா ஓய்ந்துவிட்ட தின்றோடை யோ! 4. பாவேந்தர் பாரதிதாசன் தோற்றம் : 29 - 4 - 1891; மறைவு : 21 - 4 - 1964 கட்டளைக் கலித்துறை காவேந் தியதமிழ்ப் பாண்டியில் நல்லிலின் கண்முளைத்துத் தாவேந் தியதமிழ் மக்கள்மூ டப்பிணி தானகல நாவேந் தியமருந் துத்தமிழ்த் தீங்கனி நல்கிவந்த பாவேந்த ரென்னுமச் செந்தமிழ் மாமரம் பட்டதுவே. 5. அறிஞர் அண்ணா தோற்றம் : 15 - 9 - 1909; மறைவு: 3 - 2 - 1969 அறுசீர் விருத்தம் பட்டது செவியிற் பட்டுப் பாய்ந்தது நெஞ்சில் பாய்ந்து சுட்டது மனத்தைச் சுட்டுத் தோய்ந்ததெம் உணர்வில் தோயக் கெட்டதைம் புலனுங் கெட்டுக் கீண்டது, தெருவில் நம்மை விட்டனர் அண்ணா என்னும் வெய்யதீக் கொடிய அச்சொல்! 1 வெடித்து வகுத்த திட்டம் வீழ்ந்தது தமிழர் நல்வாழ் விடித்தது தலையில் வானம் இடிந்ததெம் எண்ணக் கோட்டை முடித்தது கொடிய காலம் முடிந்ததெம் அறிவுச் செல்வம் அடித்தது வயிற்றில் தீக்கல் ஐயகோ எங்கள் அண்ணா! 2 இறந்தனிர் என்னும் அச்சொல் எஞ்செவி புகுதா முன்னம் துறந்தனம் உணர்வு யாக்கை சுமந்தனம் வறிதி னேமெய்ம் மறந்தனம் அண்ணா ஈதோ வந்தனம் என்று கூறிப் பறந்தனம் சென்னை நோக்கிப் பதறினம் கதறி னோமே. 3 எண்ணினோ மில்லை யெங்கட் கிப்படிச் செய்வீ ரென்று பண்ணினோம் என்னெல் லாமோ பதறினோம் கதறிக் கொண்டு நண்ணினோம் அழுதோம் கண்டு நடுங்கினோம் ஒடுங்கி யுள்ளம் கண்ணினோம் ஓவென் றண்ணா கத்தினோம் பித்தா னோமே. 4 எங்களைத் தனியா யீங்கே இருமெனத் தவிக்க விட்டே எங்குநீர் சென்றீர் அண்ணா! என்செய்தோம் எவ்வா றுய்வோம்? திங்களை யின்றி வானந் திகழுமோ? திரும்பி அண்ணா இங்குநீர் வரமாட் டீரோ? யார்துணை யெங்கட் கண்ணா! 5 அன்னையுன் பிரிவை யெண்ணி அழுதழு துள்ளஞ் சாம்பித் தன்னையே மறந்து கல்லாய்ச் சமைந்தனள் தமிழ அத்தாய் இன்னலைத் தவிர்க்க எம்மால் இயலுமோ அதுகண் டிந்தி துன்னினால் அவளை வென்று துரத்தவல் லேமோ அண்ணா! 6 எங்கெயோ வானஞ் சீறி இடித்ததென் றிருந்தோம் ஐயோ! எங்கள்தந் தலையி லேயே இடித்ததென் செய்கோம் அண்ணா! தங்கையர் வெறுத்திட் டாரோ, தம்பியர் வெறுத்திட் டாரோ? அங்கவர் தங்க ளுக்கவ் வாறுசெய் வாரோ அண்ணா! 7 தம்பியர் ஏங்கி நிற்கத் தங்கையர் அழுது நிற்க நம்பிநீ ஒருவ னாக நடந்தது முறையோ? அன்னார் வம்புசெய் தாரோ நின்சொல் மறுத்தரோ பொறுத்து வாழ்வோர் தம்பிழை பொறுத்தல் தன்னேர் தலைவனின் கடமை யன்றோ? 8 கடமையில் தவறி னேமோ, கண்ணிய மிழந்தே வீணாட் படவுஞற் றினேமோ, கட்டுப் பாட்டினைக் கடந்திட் டேமோ? விடவழி யில்லா எம்மை வெறுத்துநீர் பொறுக்க லாற்றா முடிவிலாத் துயரில் விட்டு மோசஞ்செய் தீரே அண்ணா! 9 உலகறி வொளியே நேர்மைக் கொருவனே பெருமை மிக்கோய்! நிலவுல கதனில் யாரும் நிகரிலாத் தலைவா! ஆன்ற கலைவலோய்! கடமை யோடு கண்ணியங் கட்டுப் பாடு நிலவுறத் தமிழ கத்தை நெறிப்பட ஆள்வோர் யாரே! 10 ஆறுமூன் றறுபத் தேழில் அருந்தமி ழகத்தை யாளு மாறுநீ யமைந்த போது வண்டமி ழன்னை கண்டெவ் வாறுள மகிழ்ந்த ளோவம் மகிழ்ச்சியில் மண்ணைப் போட்டிவ் வாறுநீ செல்லல் மூத்த மகன்செய லாமோ அண்ணா! 11 மூன்றிரண் டறுபத் தொன்ப தென்னுமம் முறையிற் காலம் சான்ற வரிரங்க எல்லாத் தமிழரும் அண்ணா வென்ன, ஈன்றவத் தமிழ்த்தாய் கண்ணே என்றழு தேங்கி நிற்க ஆன்றபே ரறிஞர் அண்ணா ஆருயிர் குடித்த தந்தோ! 12 இன்றொரு வாறு நேற்றை யிருந்ததை விடவே நன்று நன்றுநன் றெனவன் றன்று நாளிதழ் பார்த்துப் பார்த்தின் றின்றுநன் றென்ற எங்கள் எண்ணத்தில் மண்ணைப் போட்டுச் சென்றனிர் நாங்கள் ஒன்றும் செய்குவ தறியேம் அண்ணா! 13 எப்படி மறப்போம் அண்ணா! இனியநின் முகத்தை, ஒன்றும் ஒப்புத லில்லா வுன்றன் உயர்தகு குணத்தை, யாரும் செப்புதற் கரிய வுன்றன் செந்தமிழ்ப் பேச்சை, வண்ணக் கைப்பட எழுதும் உன்றன் கலைத்தமி ழெழுத்தை யண்ணா! 14 கொச்சகம் அண்ணா எனத்தமிழர் அன்போ டழைத்த எங்கள் அண்ணா! இனியாரை அண்ணா வெனவழைப்போம்? மண்ணா மணியே மணியொளிரும் பேரொளியே! எண்ணா தெமைவிட்டே எங்குசென்றீர் அண்ணாவே! 15 அன்றமெரிக் காச்சென் றரும்புக ழீட்டிவந்தீர், பின்றமெரிக் காச்சென்று பேரிடரோ டேமீண்டீர், இன்றமெரிக் காவொன்றோ இவ்வுலக மேபுலம்பச் சென்றினிரே எம்மைவிட்டுத் தீக்கனவு போலந்தோ! 16 கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்டேமேன் மேலும் விரும்புந் தமிழ்வாயா! ஈட்டாப் பெருஞ்செல்வ மேயுன்றன் நோய்போக்க மாட்டாம லேயுன்னை மாய்த்தழுக லானோமே! 17 அன்றூர் வலமாக அண்ணாநும் பொன்னுடலம் சென்ற தெருவெல்லாஞ் சேர்ந்தழுத அத்தெருவில் நின்ற மனைகளெலாம் நெக்கழுத நிற்கண்டு கன்றியோ வென்றக் கடலும் அழுததுவே! 18 வங்கக் கடற்கரையை வந்தடைய நின்னுடலம் அங்கக் கடல்போல் அமர்ந்திருந்த எந்தமிழர் பொங்கிப் புகைந்தழவப் போதப் பெருங்கடலும் அங்கவர்போ லேங்கி யழுததைநீ கேட்டாயோ! 19 தாழ்ந்த தமிழகத்தைத் தன்முயற்சி யால்முன்போல் வாழ்ந்திடச்செய் திட்டஎங்கள் மாதலைவா! எந்தமிழர் ஆழ்ந்த துயரால் அழுங்கண்ணீ ரைத்துடைக்கப் போந்தக் கடற்கரையிற் புக்கமர்ந்தீ ரேபோலும்! 20  28. தனிப்பாடல்கள் 1. கவிபாடிப் பழகினது கட்டளைக் கலித்துறை படிப்பேன் தினமுநும் போன்ற கவிவாணர் பாடல்களைப் பிடிப்பேன் அதனதன் ஓசை நடையினைப் பின்பவைபோல் முடிப்பேன் எழுதிக் கவிவாணர் தங்களின் முன்னிருக்கத் துடிப்பேன் இவையா னொருகவி யாகத் துணைசெய்தவே. 1 (இது, 1923 இல், குட்டப்பாளையம் திரு. பழனிவேற் புலவர் கேட்கப் பாடியது.) 2. சொந்த ஊர் வெண்பா என்னை யலாதார் எழுதப் படிக்கறியார் தன்னை எழுத்தறியத் தான்செய்தேன் - என்னைகொல் சால வலசியன்னார் சங்கத் தமிழ்பயிலும் ஓல வலசெங்க ளூர். 2 (இது, 1927இல், ஈரோட்டில், திரு. ச. து. சு. யோகியார் கேட்கப் பாடியது. 'தன்' என்பது, பன்மையில் ஒருமை.) 3. கீரைக்காரி அம்மா விலையென்றேன் இல்லை அடகென்றாள், சும்மா விலையொன்று சொல்லென்றேன் - அம்மாதும் இந்தா வொருகாசென் றாளென்பால் இல்லையிலை இந்தா வொருகாசென் றேன். 3 (இது, கீரைக்காரி, 'இந்தா ஒரு காசு' என்றதைச் சுட்டி, ச.து. சு. யோகியார் கேட்கப் பாடியது. அம்மா விலை, மாவிலை. என்பால் ஒரு காசு இல்லை, இலை இந்தா என்றேன்.) 4. நல்லதம்பிச் சர்க்கரை மன்றாடியார் வினாவிடை வேண்டுகுணம் பின்னவன்பேர் வேழப் பொருளவைப்பேர் ஈண்டுருவங் காட்டி இசைச்சோழர் - பூண்டொடையென்? அக்கறையோ டாப்புரக்கும் அண்ணலெவர்? நல்லதம்பிச் சர்க்கரைமன் றாடியார் தான். 4 (இது, 7 - 6 - 36 அன்று திருப்பூர்த் தேரின்போது, பழைய கோட்டை திரு. ஓ. எஸ். இராமையா பிள்ளை அவர்கள், 'சர்க்கரைமன் றாடியார் தான்' என்னும் ஈற்றடி கொடுத்துப் பாடச் சொல்ல, ஆசுகவியாகப் பாடியது. இது, வினா - விடை 'வினாவுத்தரம்' என்னும் சித்திரகவி. வேழம் - கரும்பு.) கொங்கிலா னூருடையான் கோடாக் கொடையுடையான் செங்குவளை மாலைத் திருவுடையான் - பைங்கூழ் உழக்கொட்டு மெங்கோன் உயிர்போலும் ஆக்கள் கொழுக்கட்டை மேயமஞ்சங் கு. 5 (இஃது அன்னார், 'கொங்கு' என்று எடுத்து, 'சங்கு' என்று முடிக்கும்படி கேட்கப் பாடியது. பைங்கூழ் உழ, ஆக்கள் கொழுக்கட்டை மேய அங்கு மஞ்சு கொட்டும். மஞ்சு - முகில்.) 5. கரும்பாலை கட்டளைக் கலித்துறை ஆலை யடுப்பிற் கனிதருஞ் சாறுமவ் வாறுதரும் பாலை யடுப்பிற் சுடச்செயும் மேனியிற் பாய்ந்துசுடும் சேலை யடுப்பின் உடுத்துவக் குங்கொத்தித் தின்றுவக்கும் வேலை யடுப்பின் உடற்படும் ஈரமும் வீரமுமே. 6 (இது, 1938 இல், ஒரு நாள் கரும்பாலையைப் பார்த்தபோது, நயமாகப் பாடியது. ஆல் - ஆலமரம். ஆலை - கரும்பாலை. பாலை - பாலை நிலம். பால் + ஐ. சேலை - உடுக்கும் சேலை. சேல் + ஐ. சேல் - கயல் மீன். வேலை - கடல். வேல் + ஐ.) 6. பெரியார் பெருந்துணை கட்டளைக்கலித்துறை கரையேயிவ் வாய்க்கால்நீ ரோடுதற் குத்துணை காணும் அண்ணாத் துரையே விடுதலை யுங்கெழுத் திற்குத் துணையெழுதும் வரையே யெழுத்துங்கட் குத்துணை யாந்தமிழ் மக்களுக்குப் பெரியார் ஈ. வே. ராம சாமியெந் நாளும் பெருந்துணையே. 7 (இது, 1938இல், ஈரோட்டில், அண்ணா விடுதலை ஆசிரியராக இருந்தபோது, ஒருநாள் மாலை காரைவாய்க்கால் மேட்டில், 'பெரியார் பெருந்துணை' என்று பாடச் சொன்னபோது பாடியது.) 7. வள்ளல் அழகப்பா வினாவிடை வெண்பா இல்லையெனா தீவார்யார்? ஏரெனநீர்ப் பேர்வேறென்? முல்லை நிலத்தாயர் மொய்வளமென்? - மெல்லியல்! கண்போற் கலைவளர்த்த காரைக் குடியான்யார்? பண்பார்வள் ளல்லழகப் பா. 8 (இது, வள்ளல் அழகப்பா நினைவுமலரில் வெளிவந்தது. இல்லை எனாது ஈவார் - வள்ளல். ஏர் - அழகு. நீர்ப்பேர் வேறு - அப்பு. ஆயர் வளம் - ஆ. காரைக்குடியான் - வள்ளல் அழகப்பா.)  8. கலைஞர் கருணாநிதி 1. கல்லக் குடிகொண்டான் அறுசீர் விருத்தம் முடிகொண்டான் கரிகாலன் தன்னடிக்கீழ்ப் பனிமலையின், முனிந்து மாறன் அடிகொண்டான் கடல்வடிம்பில், இமயவரம் பன்மேரு வதன்பால் வல்விற் கொடிகொண்டான், அஞ்சாது தொடர்வண்டிக் கீழ்த்தலையைக் கொடுத்துக் 'கல்லக் குடிகொண்டான்' கலைஞர்கரு ணாநிதியென் னுந்தமிழ்நற் குரிசில் தானே. 9 (கரிகாலன் தன்னடிக் கீழ்ப் பனிமலையின் முடிகொண்டான், மாறன் கடல் வடிம்பில் அடிகொண்டான் எனக் கூட்டுக.) 2. கடல்கடந்து தமிழ் பரப்பிய கலைஞரே வருக! பன்னிருசீர் விருத்தம் ஈண்டு தமிழ்நா கரிகமெனும் இயல்பொன் மணியாஞ் சரக்கேற்றி எதிர்கொள் மேனா டுகள்பலவும் எய்தி யாங்காங் கவையிறக்கி ஆண்டு காணும் அரியவைகொண் டருந்தமிழ் நாவா யதிலேற்றி அந்நாட் டவர்பால் விடைகொண்டே அன்பார் ஐரோப் பாநின்று மீண்டு பிரிந்த கற்றாபோல் விரும்பித் தமிழர் தமைக்காண மிக்கு விரைந்த கலஞ்செலுத்தி மிகுமூ வேழே ழெழுபதினில் காண்டு தமிழர் களிப்பெய்தக் கனிவாய் வருக! மாண்புமிகு கலைஞர் கருணா நிதியெனுமீ காமா வருக வருகவே! 10 (இது, தமிழக முதலமைச்சர், கலைஞர் கருணாநிதி அவர்கள் 1 - 7 - 70இல் வெளிநாடு சென்று, 21 - 7 - 70 இல் மீண்ட போது பாடி வரவேற்றது.) 3. தமிழ்நாட்டின் முதல்வர் யார்! வினா விடை நேரிசை வெண்பா ஆடையின்பேர் நான்காமெய் ஐந்தாமீ றாயுறலாக் கூடுறுமா றாமுடல்பொற் கொள்குவையென்? - பாடும் புலவர்தமிழ் நாட்டின் புகழ்முதல்வர் யார்நம் கலைஞர்கரு ணாநிதியே காண். 11 குறிப்பு : ஆடையின் பேர் என் - கலை. நான்காம் மெய் என் - ஞ். ஐந்தாம் ஈறு என் - அர். ஈறு - விகுதி. (அன், ஆன், அள், ஆள், அர், ஆர்). ஞ் + அர் = ஞர். கலைஞர். ஆய் உறல் என் - கரு. ஆய் - தாய். ஆ கூடுறும் ஆறாம் உடல் என் - ணா. (ண் + ஆ=ணா) பொற் கொள் குவை என் - நிதி. கலைஞர் கருணாநிதி. 'என்' என்பதை எல்லாவற்றோடும் கூட்டுக. புலவர் பாடும் தமிழ்நாட்டின் புகழ் முதல்வர் யார் - கலைஞர் கருணாநிதி என இயைக்க. வினாவிடை - 'வினாவுத்தரம்' என்னும் சித்திரகவி. 9. இயற்கை 1. வேத்தவை எண்சீர் விருத்தம் மாவிலிளங் குயில்பாட மயில்கூத் தாட மணியாழி னிசைவண்ண வண்டர் பாடப் பூவைகிளி பின்பாடப் போத்துத் தாளம் போடமணிப் புறமுழ வடிக்கச் சுள்ளி ஓவெனவொத் தூதிடமற் றுயிர்மெய் காண ஒளிமுத்த விளக்கேந்தத் திரையு லாவ மூவரச ரென அரிமாக் கொலுவி ருக்க முல்லையொடு மல்லிகைதூ வினதென் காலே. 12 2. தமிழ்வாய் வண்டு மல்லிகையின் தாதூதித் தமிழ்வாய் வண்டு மங்கலப்பண் பாடியதன் மருங்கே யுள்ள முல்லையிலே சென்றூத முகைப்பெண் வண்டு முத்தமிட அஃதுமெதிர் முத்தந் தந்தே புல்லும்உழை விளரிஇளை தாரம் துத்தம் பொருந்துகுரல் கைக்கிளையாம் இசையோ ரேழும் ஒல்லும்வகை பாடியெனை யுவப்பித் தொய்யென் றுதடினிக்கப் போயினவோர் புதரி னூடே. 13 3. இரவுப் பெண் செங்கதிரோன் போய்மறையச் செவ்வா னேகத் திங்களிளம் பிறைநுதலைத் தெரியக் காட்டிக் கங்குலெனப் புலவர்சொலும் இரவுப் பெண்ணும் காரிருளாம் குழல்விரித்துக் களிக்கை வீசிப் பொங்கொளிவிண் மீன்களெனும் முத்துப் பற்கள் புறந்தோன்ற வேசிரித்துப் போந்தாள் போத மங்கையவள் புன்னகையால் மயங்கி யிந்த வையகமே ஆழ்துயிலில் வைகிற் றம்மா! 14 10. மக்கள் கடமை பதினான்குசீர் விருத்தம் கற்றோரை யினிதுவர வேற்றுமுக மன்செய்து கல்வியை வளர்க்க வேண்டும் கசடறக் கற்பவை கற்றுமே நாடொறும் கற்றபடி நிற்க வேண்டும் பெற்றோரை முதுமையிற் போற்றவேண் டும்பெற்ற பெண்ணையாண் பிள்ளை போலப் பெரியோர்கள் மெச்சும்வகை பிச்சைபுக் காயினும் பேரறிவி யாக்க வேண்டும் உற்றோரை யொருநாளுங் கைவிடுதல் செய்யாமல் உதவியது செய்ய வேண்டும் உலகத்தி னோடொட்ட வொழுகவேண் டுஞ்செல்வர் ஒப்புரவு செய்ய வேண்டும் அற்றோரை யினிதுவந் தோம்பவேண் டும்பகுத் தறிவினைப் போற்ற வேண்டும் ஆராயி னிவைமக்கள் கடமையாக் கொண்டொழுகும் அறமெனத் தெளிகு வீரே. 15 11. குருவாயூரப்பன் வெண்பா அப்பா குருவாயூ ரப்பாதீப் பற்றியபோ தப்பாநீ தூங்கிவிட் டாயோகாண் - அப்போதவ் வாறாகச் செய்யவவன் வந்திலனேல் கோயிலைப்போல் நீறாகப் போயிருப்பாய் நீ. 16 (29 - 11 - 70 அன்று கோயிலில் தீப்பற்றியது கண்டு பாடியது. அவ்வாறாகச் செய்ய - கோயிலிலிருந்து எடுத்துச் செல்ல. அவன் - கோயில் பூசாரி.)  29. இந்தியா - பாகித்தான் போர் (டிசம்பர் - 1971) 1. எழுக பைந்தும்பை வேய்ந்தே அறுசீர் விருத்தம் 'என்னருந் தமிழ மக்காள்! யானெனச் செருக்கி வந்தே இன்னல்செய் பாகித் தானக் கொடியரை எதிர்த்து வீழ்த்தத் துன்னுக' எனவே அன்னை அழைத்திடும் துயர்ச்சொல் கேட்டும் இன்னமுந் தாழ்ச்சி யேனோ? எழுமெழும் எழுமின் இன்னே. 1 'இந்தியத் தாய்க்குற் றுள்ள இடர்களைந் திடுக' என்னச் செந்தமி ழனைய ழைத்தல் செவிப்புலம் படவு மின்றோ? முந்தையோர் வீர வாழ்வை முறையொடு கற்றுத் தேர்ந்த எந்தமிழ் வீர மக்காள்! எழுகபைந் தும்பை வேய்ந்தே. 2 வலியமண் ணாசை யாலே வம்புசெய் பாகித் தானர் ஒலியவிந் தஞ்சி வெந்நிட் டோடவே மேற்கு நோக்கிப் புலியென விரைவீர், வீரப் புறப்பொருட் டுறைகள் முற்றும் பலமுறை பயின்று தேர்ந்த பைந்தமி ழிளைஞீ ரின்றே. 3 வீட்டுக்குள் நச்சுப் பாம்பை விட்டுவைப் பதுபோல் நந்தாய் நாட்டுக்குள் பகைவர் தம்மை நம்பிவிட் டிருந்த தேயிக் கேட்டுக்கே தாம்பா கித்தான் கேடரை யொழிக்க இன்றே வீட்டுக்கோர் தமிழர் வீதம் வீறுகொண் டெழுகு வீரே. 4 ஒருமக னல்ல தில்லாள் ஒன்னலர் தம்மை வென்று வருகென வாள்கை தந்தாள் வழிவரு தமிழத் தாய்மீர்! வெருவியே அப்பா கித்தான் வீணர்கள் ஓட வென்று வருகென வாழ்த்தி யுங்கள் மைந்தரை யனுப்பு வீரே. 5 தம்மினம் தம்ம தத்தைச் சார்ந்தவர் தமது நாட்டார் தம்மையே மக்கட் பண்பு தானொரு சிறிது மின்றி அம்மகோ சுட்டுக் கொல்லும் அக்கொடுங் கோல ராட்சி எம்மவ ரேயில் லாமற் செய்திட எழுகு வீரே. 6 இந்தியத் தாயின் கைகள் இரண்டையும் பகைவர் கையில் தந்தது போலப் பாகித் தானென நாட்டைப் பங்கித் தந்ததால் வந்த திந்தத் தலைவலி மருந்தி தற்குத் தந்தபோ லதனை மீட்டுத் தான்கொளல் ஆகுங் கண்டீர். 7 வல்லவர் களத்தில், செல்வ வளமையர் பணத்தில், வல்ல சொல்லவர் பேச்சில், நல்லார் தூயசிக் கனத்தில், கையில் இல்லவர் உழைப்பில் இவ்வா றெதிரியை ஒழித்துக் கட்ட எல்லவ ருந்தாம் தம்மால் இயலுமா றுதவு வீரே. 8 அல்லிமீ னாட்சி போல அரசிய லறிவு மிக்க எல்லமர் தலைவி யான இந்திரா காந்தி யின்கீழ் எல்லரும் ஒன்று கூடி இந்தியத் தாயு வப்ப வெல்லுவோம் பாகித்தான வீணரை நமதே வெற்றி! 9 செருக்கொடு பகைமேம் பட்ட தீயவப் பாகித் தானர் வெருக்கொடு வெந்நிட் டோட விடுதலை பெற்று வங்கம் மருக்கொடு மலர வாகை மலைந்தஇந் தியத்தாய் வெற்றிக் கருக்கொடு புகழ்மேம் பட்ட இந்திரா காந்தி வாழ்க! 10  2. வாழ்க இந்திரா காந்தி! பல்லவி காந்தி வாழ்கவே - இந்திரா காந்தி வாழ்கவே. பல்லவி எடுப்பு மாந்தருள் மாணிக்க மாகிய நேருவின் மாமகள் இந்தியக் கோமகள் இந்திரா - காந்தி கண்ணிகள் வம்புக்கு வந்தஅப் பாகித்தான் வீணரை வாலை யறுத்தேயப் பாலே துரத்திய ஐம்பத்தைந் துகோடி இந்திய மக்களின் அன்புத் தலைவிகண் முன்புள்ள இந்திரா - காந் வீரத்தோ டீரேழு நாளிற்பா கித்தானை விரட்டிவங் கத்திற்கு விடுதலை தந்தே பாரத தேவியின் வீர மகளெனப் பாருல கெல்லாம்பா ராட்டிடும் இந்திரா - காந் யாகியா கானென்னும் பாகித்தா னப்புலி அடங்கிடப் பல்லைப் பிடுங்கினேன், ஓடிப் போக மறுத்துவா லாட்டும் பூட்டோவெனும் பூனையெம் மாத்திரங் காணெனும் இந்திரா - காந் அக்கொடும் பாகித்தான் கொடுமைக்கஞ் சித்தஞ்சம் அடைந்தவோர் கோடிவங் கமக்கள் தம்மை ஒக்கலாக் கொண்டூ ணுடையுத விக்காத்த உயர்குணக் குன்றென் றுலகேத்தும் இந்திரா - காந் பெண்ணுல கத்தின் பெருமைக்கோர் சான்றதாப் பிறந்தவர் என்றுல கறைந்திட இந்திய மண்ணைப் பகைவர்கள் நண்ணிடா தேஇறை மாட்சி யுடனேநல் ஆட்சிசெய் இந்திரா - காந் ஆடவர் வெள்கிட ஆண்மை யுடனிந்தி யாவினை யாளும்வீ ராங்கனை; உவந்து பாடும் புலவர் குழந்தைசொற் போலென்றும் பாரதத் தலைவியாய் வாழ்கவே இந்திரா - காந்  30. அரசியல் 1. வாக்காளர் சிந்து நாட்டுக்கு நல்லது சொல்வேன் - நான் நன்மை தெரிந்தது சொல்வேன் கேட்டுக் கடைப்பிடிப் பீரே - வருங் கேட்டினுக் கஞ்சிடு வீரே. 1 வாக்கு வழங்கும் பருவம் - அது வந்தவர் ஒவ்வொரு பேரும் வாக்கத னாலர சாளும் - நாட்டு மன்னவ ரென்ப தறிவீர். 2 வீட்டுக் கரசர்கள் நீங்கள் - வாக்கு வேண்டிவந் தோமிங்கு நாங்கள் நாட்டுக் கரசர்க ளாக்கி - வேண்டும் நன்மைசெய் வீர்குறை போக்கி. 3 எந்தெந்த வேளையும் நீங்கள் - எங்கட் கிட்டகட் டளையை நாங்கள் அந்தந்த வேளையே செய்வோம் - உங்கள் ஆணைப் படிநடந் துய்வோம். 4 வாவெனில் வீசி யெறிந்து - விட்டு வந்து விடுவோமப் போதே போவெனச் சட்டமன் றத்துக் - குங்கள் பொன்மொழி யைத்தரு வீரே. 5 என்றெல்லா முங்கள்சார் பாளர் - இன்னும் என்னென்ன வெல்லாமோ சொல்வார் ஒன்றில்லா தாய்ந்துபார்த் தன்னார் -இயல் புள்ள படியறி வீரே. 6 அத்தை மகனவ னென்பார் - மாமிக் கக்காவின் மாப்பிள்ளை யென்பார் சித்திக்குச் சித்தப்பன் என்பார் - உங்கள் செல்லத்துக் குத்தம்பி என்பார். 7 மஞ்சள் மண்டிக்காரர் எங்கள் -சின்ன மாமனார் தம்பிக்கு மச்சான் பஞ்சுக் கடைக்காரர் மாமன் - எங்கள் பாட்டியார் தம்பிக்குப் பேரன். 8 கூட்டுற வுக்கடைத் தலைவர் - என் கொழுந்தியின் நங்கைக்கு மச்சான் வீட்டு வரியதி காரி - எங்கள் வேலைக்கா ரிதம்பி பையன். 9 மாவட்ட ஆட்வித் தலைவர் - எங்கள் மைத்துனன் சொல்லை மறுக்கார் தீவட்டி தள்ளிய நடுவர் -எங்கள் சின்னக்கண் ணுமாமி தம்பி. 10 காய்கறி வாங்குதல் நாங்கள் - உங்கள் கடையிலே தானென்றும் என்பார்; போய்வரு கின்றோம் வணக்கம்! - நாளை போடத் தவறாதீர் என்பார். 11 கூசாம லேயெதிர் நின்று - கைக் கூலி கொடுக்கவுங் கூசார் காசுக்கு நாலைந்து விற்கக் - கண்டங் கத்தரிக் காயல்ல வாக்கு. 12 ஊருக் கிவர்செய்த நன்மை - என்ன உண்டென்று பார்த்திடல் வேண்டும் பேருக்கு வேட்பாளர் என்று - வாக்குப் பெட்டி நிரப்புதல் தப்பு. 13 அவர்க்குமுன் னேயிவர் வந்தார் - இவர் அண்ணனுங் கூடமுன் வந்தார் இவர்க்குத்தான் போடுவே னென்று - சும்மா ஏமாந்து போடாதே தம்பி. 14 சட்டமன் றத்திலே சென்று - செய்யும் சட்டதிட் டங்களை நன்று ஒட்டியும் வெட்டியும் பேசும் - திறம் உண்டோ வெனப்பார்க்க வேண்டும். 15 ஒருவருக் காயினும் என்றோ - ஓர் உதவிசெய் ததுண்டோ இன்றோ? கருவினி லேயீர முண்டோ - எனக் காணுதல் மக்கள் கடமை. 16 நம்பிக்கை நாணய முள்ளோன் என்றும் நல்லவர் கூட்டுறவு ள்ளோன் தம்பிக் கெனினுந்தீ வழியில் - செல்லாத் தக்கோனைத் தேர்ந்தெடு தம்பி. 17 சொன்னசொல் லுத்தவ றாதான் - பிறர் சொல்வதைக் கேட்கம றாதான் நன்னெறி யிற்பொரு ளீட்டும் - ஒரு நல்லோனைத் தேர்ந்தெடு தம்பி. 18 எளியார்க் கிரங்கிலா தானை -மக்களை ஏமாற்றி வாழ்ந்திடு வானைத் தெளியத் தகாவொழுக் கானை -மறந்தும் தேர்ந்தெடுக் காதேநீ தம்பி. 19 கல்வி யறிவிலா தானைப் - பிறர் கைப்பொருள் கொண்டுவாழ் வானைச் செல்வஞ் சிறிதுமில் லானைக் - கட்டாயம் தேர்ந்தெடுக் காதேநீ தம்பி. 20 தாய்மொழிப் பற்றிலா தானை - இனந் தன்னைக்காட் டிக்கொடுப் பானை வாய்மொழி காக்கிலா தானை - நீ மறந்தேனுந் தேர்ந்தெடுக் காதே. 21 எக்குறை பாடுமி லானைப் - பொறுப் பேற்று நடந்துகொள் வானைப் பக்குவ மானபண் பானை - நன்கு பார்த்துமே தேர்ந்தெடு தம்பி. 22 (ஆசிரியரின் அரசியலரங்கம் என்னும் நூல் - 5 : 1. ஊர்மன்றம் முதலிய எல்லாவற்றிற்கும் கொள்க.)  2. சட்டமன்ற உறுப்பினர் சிந்து மக்களால் தேர்ந்தெடுத்த - சட்ட மன்ற உறுப்பினரே! மக்கள் குறைதீர்த்து - வாழ்கென வாழ்த்திட வாழ்ந்திடுவீர். 1 உங்கள் தொகுதியிலே - அடிக்கடி உள்ள குறையறிந்து தங்கள் குறைதீர்த்து - வாழ்வு தழைத்திடச் செய்திடுவீர். 2 ஆண்டுக ளோரைந்தும் - ஆட்சி அலுவலர் தந்நிலையில் தூண்டுநாட் டன்புடனே - மக்கட்குத் தொண்டு புரிந்திடுவீர். 3 எதிரிக்கு வாக்களித்தார் -இவர் என்றுளத் தெண்ணாதீர் அதர்பல வூர்க்கிருந்தால் - ஒருவழி யார்விடுத் துச்செல்வார். 4 வாழ்க்கைத் தொழிலகமாய்ச் - சட்ட மன்றத்தை யெண்ணாதீர் வாழ்க்கைக் குறைதீர்த்து - மக்களை வாழ்விப்ப துங்கடனே. 5 வருவாய் வருவழியாய்ச் - சட்ட மன்றத்தைக் கொள்ளாதீர் வருவா யதைப்பெருக்கி - மக்களை வாழ்விப்ப துங்கடனே. 6 செல்வந் திரட்டுதற்காக - ஆட்சித் திசையினை நோக்காதீர் செல்வந் திரண்டிடவே - நாட்டில் செய்வது நுங்கடனே. 7 செய்த செலவதனைச் - சரிசெய்யத் திட்டங்கள் தீட்டாதீர் செய்ததீர்ப் பாளர்களை - வாழ்விக்குந் திட்டங்கள் தீட்டிடுவீர். 8 ஆட்சியின் செல்வாக்கால் - பெரும்பொருள் ஆக்க நினையாதீர் மாட்சியன் றோடுமக்கள் - தமையே மாற்றுத லுமாகும். 9 மன்ற நிகழ்ச்சியிலே - கட்டாயம் வருஞ்சட்ட திட்டங்களை நன்றல சிப்பார்த்து - மக்கட்கு நல்லன செய்திடுவீர். 10 கையெழுத் துப்போடல் - நுங்கள் கடனெனக் கொள்ளாதீர் கையெழுத் துப்போட்ட - மக்கள் கருத்தை யுணர்ந்திடுவீர். 11 பள்ளிக்குச் செல்லாமல் - படம் பார்க்கச் செல்லுதல் போல் வெள்ளிப் பணத்தையெல்லாம் - வீணாய் விழலுக் கிறைக்காதீர். 12 பாட்டிக் கதைகேட்கும்- இளம் பால்வாய்ச் சிறுவர்கள்போல் கூட்டத்தோ டுகூடி - அரகர கோவிந்தாப் போடாதீர். 13 நாட்டு நடப்பினையும் - சட்டத்தின் நன்மையும் தீமையையும் காட்டித் தெளிவுபட - உங்கள் கருத்தை யுரைத்திடுங்கள். 14 மாட்டுக்குக் கொம்பில்லை - எனினும் வாய்திற வாதுங்கள் பாட்டுக் கிருந்துவிட்டுக் - கைதூக்கிப் பாவைக ளாகாதீர். 15 கட்சிக் கட்டுப்பாடு - கட்சிக்குக் கட்டாயம் வேண்டியதே வெட்சியை வேலெனினும் - பேசாமை வீண்கட்டுப் பாடாகும். 16 குற்றங் குறைகாட்டி - நல்ல குணத்தினைக் கொள்வதற்கே மற்றவை யோர்முன்னர்த் - திட்டத்தை வைப்ப தெனவறிவீர். 17 பேரும் புகழுமுற -இவரைப் பெற்றனம் என்றுவக்கச் சீருஞ் சிறப்புமுறத் - தொகுதிக்குச் செய்வன செய்திடுவீர். 18 (ஆசிரியரின் அரசியலரங்கம் என்னும் நூல் - 5 : 2)  31. பகவத்சிங் தூக்குப் பாடல் 1. 'சுருளிமலை மீதில்மேவும் சீலா' என்ற மெட்டு இந்திய மணிகளைநாம் இழந்தோம் - அடிமை என்பதற் குதாரணமா யுழந்தோம் - இந்த ஏழையிந்தி யாவினிலே வாழநொந்தை யையோமடிந் திட்டார் - புகழ் - நாட்டார். 1 பாரதியின் வீரமக்க ளானார் - நல்ல பக்குவத்தி லேமடிந்து போனார் - சர்தார் பகவத்சிங் ராசகுரு சுகதேவர் மூவர்களும் பட்டார் - ஆள்வோர் - கெட்டார். 2 பொதுவுடைமைக் கட்சிக்கொடி நட்டார் - நம் பூரண சுயேச்சைக்குயிர் விட்டார் - அவர் போற்றிய புரட்சியதை ஏற்றியே சமதர்மப்போர் புரிவோம் - வழி - தெரிவோம். 3 இந்திய விடுதலைக்காப் பிறந்தார் - லார்டு இர்வின் கடுமையா லிறந்தார் - நாம் என்னசெய்வோம் பாழடிமை தன்னையன்றி வேறுபொருள் இல்லை - பெருந் - தொல்லை. 4 முப்பத்தைந்து கோடிமக்கள் கூடி - ஐயோ முறையிட்டழு தேங்கியேமன் றாடி - ஆள்வோர் மூர்க்கமுட னேமறுத்துத் தூக்கியேகொன் றிட்டாராட்சி முறையோ - மக்க - ளிறையோ! 5 பாதகமாய்க் காங்கிரசொப் பந்தம் - தேச பக்தர்க ளுயிர்க்கிலையோ சொந்தம் - காலிற் பட்டமுள்ளி னைப்பிடுங்கா விட்டதே பெருவியப்புப் பாரீர் - உண்மை - தேரீர். 6 கொள்கையதற் காகவுயிர் விட்டார் - நம் குழந்தைதமிழ்ப் பாவிசையுட் பட்டார் - நம் கொத்தடிமை யாலுண்மைக்கு ழைத்தவரி யேறுகளைக் கொன்றோம் - ஏங்கி - நின்றோம். 7  2. 'நாதசங் கீதப்பொன் மணிமண்டபம்' என்ற மெட்டு பாஞ்சால வீரரைப் பலிகொடுத்தோம் பாரத மக்களெல்லாம் கிலிபிடித்தோம் பாதக மாகவே பழிகாரர் பக்குவத் திலொழித்தார் வெளியூரர் படுகொலையே படுகொலையே பழிகார வெள்ளையர்செய் படுகொலையே. 1 தேச விடுதலைக்கா அவதரித்தார் திறமை யுடனேபொதுச் செயல்தரித்தார் ஆசை யுடனேசெய்தார் சிறைவாசம் அயலவ ராதிக்கத்தா லேநாசம் ஆகினரே ஆகினரே அழுதிரங் கநம்மைவிட் டேகினரே. 2 நாளதி லாமெனக்காங் கிரசைவிண்டார் நவஜவான் பாரத சபையுங் கண்டார் தோழர்க ளொடுதேசத் தொண்டுசெய்தார் துரோகிக ளென்றேயாள்வோர் கைதுசெய்தே தூக்கிலிட்டார் தூக்கிலிட்டார் சுதந்தர வீரர்களைத் தூக்கிலிட்டார். 3 தத்தர் சிறையினிலே தனித்தேங்கத் தாய்நாட்டு மக்கள்பரி தவித்தேங்க ஒத்ததல் லென்றுகாந்தி புறக்கணிக்க உடனேசண் டாளர்தூக்குக் கயிறிழுக்க ஒருங்கிழந்தோம் ஒருங்கிழந்தோம் உத்தமத் தோழர்களை ஒருங்கிழந்தோம். 4 ஈண்டிய எங்கள்செல்வம் என்றுநாட்டும் இந்திய மக்களெல்லாம் இரங்கிக்கேட்டும் வேண்டுமென் றேயந்தோ தூக்கிலிட்டார் வேண்டாத் திறத்தையெல்லாங் காட்டிவிட்டார் வேண்டுமோதான் வேண்டுமோதான் வெள்ளைய ராட்சியினி வேண்டுமோதான்! 5 மனந்துடித் திந்துமுப்பத் தைந்து கோடி மக்களுந்தூக் காதீரென் றேமன்றாடி இனந்தனை யெண்ணியேகொன் றார்களந்தோ இந்தியாவை யாளஇவர்க் கென்னசொந்தம் இல்லையேதான் இல்லையேதான் இந்தியர் களேவெட்கம் இல்லையேதான். 6 கர்வம் பிடித்தவெள்ளைக் கவர்ன்மேண்டார் கருவிபோல் நம்மையாண்டு கைகண்டார் இர்வின் நினைத்ததெல்லாம் சட்டமாச்சு இந்தியத் தோழர்களை யிழக்கலாச்சு என்னசெய்வோம் என்னசெய்வோம் இலையொற் றுமைநம்முள் என்னசெய்வோம். 7 லாகூர்ப் பகவத்சிங்கம் ராசகுரு யதீந்த்ரநாத் தோடுசுக தேவதரு கோகுல வீரர்சிறைக் குடிபுகுந்தார் கொள்ளையைக் காத்துமேயா ருயிர் துறந்தார் கொல்லலாமோ கொல்லலாமோ! குழந்தை யழுதிரங்கக் கொல்லலாமோ! 8 3. 'தேசீயப் போராட்டமே' என்ற மெட்டு பல்லவி சர்தார் பகவத்சிங்கம் - சம தர்மத் தங்கம் -சர் கண்ணிகள் சர்தார் கிருஷ்ணசிங் கத்தின்கு மாரன் சமதர்மக் கொள்கையைத் தான்கண்ட தீரன் குர்தார்க்கு மூத்தநம் குன்றாவை வீரன் குழந்தைமொழி தெளிந்தடிமை யொழிந்திடவே யெழுந்ததிட - சர் தொகையறா (எண்சீர் விருத்தம்) அடிமையெனும் பிணியொழிய ஆள்வோர் செய்யும் அடக்குமுறைக் கொடுமையடி யோடு வீழப் படியின்மிசை யினிமக்க ளிடையே யுள்ள பணக்கார னேழைஎனும் பிணக்கு மாள மடைமையொழிந் தொற்றுமையாய் மக்க ளெல்லாம் மன்னர்களா யினிவாழ வைப்ப தெங்கள் கடமையெனக் கொண்டுயிரைக் கொடுத்துக் கொள்கை காத்துயர்ந்த நால்வரையுங் காண்ப தென்றோ! பாட்டு ராச குருசுக தேவரும் பட்டார் யதீந்த்ரர் சிறையிலுண் ணாதுயிர் விட்டார் பேசுமெய்த் தத்தர் பெருஞ்சிறைப் பட்டார் பேட்டிபெற நாட்டில்வழி காட்டியக ணோட்டமிகு - சர் தொகையறா (அறுசீர் விருத்தம்) கல்வியதைக் கைவிடுத்துக் கடிமணஞ்செய் திடமறுத்துக் கணக்கி லாத செல்வமதைப் புறக்கணித்துத் தேசீயப் பெருந்தொண்டு செய்வான் வேண்டி மல்கிடுங்காங் கிரசைவிட்டு நவஜவான்பா ரதசபையை வகுத்து மக்கள் பல்பொருளுஞ் சரிநிகரா நுகர்ந்திடவே யரும்பாடு பட்ட தீரர் பாட்டு அன்னிய ராதிக்கத் தாற்சிறைப் பட்டார் ஐயகோ தூக்கினி லாருயிர் விட்டார் எண்ணிய எண்ண மெலாமிழந் திட்டார் எங்கும்புகழ் தங்கிந்திய ரின்சிங்கமெ னுங்கங்கண - சர் 4. 'காப்பதுன் கடன்மு ருகையா' என்ற மெட்டு பல்லவி தூக்குமரம் நோக்கி யழுதாள் - பாரதமாதா - தூக் பல்லவி எடுப்பு ஊக்கமுட னேயடிமை போக்கியே யினிதுநம்மைக் காக்கவே பயந்தவீர யாக்கையர் மூவருந்தொங்கும் - தூக் தொகையறா (அறுசீர் விருத்தம்) அன்னியரா திக்கமதால் அடிமையெனும் பாழ்ஞ்சிறைப்பட் டல்லல் எய்தும் தன்னைவிடு தலைசெய்ய அரும்பாடு பட்டுழந்து சாகும் போதும் உன்னைவிடு தலைசெய்வேம் தாயேநீ அஞ்சலென உறுதி வார்த்தை சொன்னதிறல் சேர்தலைமைக் கண்மணிகள் மூவரையும் தொலைத்திட் டேனே. பாட்டு முப்பத்தைந்து கோடிமக்க ளைப்பயந் திருந்துந்தூக்க ஒப்படைக்க லானதேநான் எப்படிப்பொ றுப்பேனென்று - தூக் தொகையறா (அறுசீர் விருத்தம்) வைத்தடிமைச் சிறையினிலே வருத்துமய லாருடனே வலிய எந்தன் புத்திரர்க ளெண்ணிறந்தோர் போராடி யயர்ந்திறந்து போனா ரையோ! அத்துயரந் தீராமுன் வீரசிங்க மூன்றினையும் அந்தோ தோற்றேன் எத்தனைநா ளைக்குவயி றெரிந்திடவே பெற்றிழப்பேன் ஏழை யேனே. பாட்டு என்றுமே மனமுருகி நின்றுமேகண் ணீர்பெருகி வன்றுய ரொடுகுழந்தை இன்றமிழொப் பாரிபாடித் - தூக் 5. 'கந்தா காருண்யனே' என்ற மெட்டு சர்தார் பகவத்சிங்கம் - சம தர்மத் தங்கம் சர்தார் கிருஷ்ணசிங்கம் - பெற்ற தலைமைத்தங்கம் மக்களுக்குள் தாழ்வுயர்வி ருக்கவேதுயர் மிக்கவே ஆகா தெனமொழிந்தார் - செயல் அதில்நுழைந்தார் மாகா ரியம்புரிந்தார் - செய்யும் வழிதெரிந்தார் நவஜவான்பா ரதசபையை நாட்டினார்வழி காட்டினார் கல்வி யதைவிடுத்தார் - பேச்சுக் கலைதொடுத்தார் செல்வம் புறக்கணித்தார் - சேவை செய்யப்பணித்தார் நல்லரசு செய்யநாங்கள் வல்லவரென டில்லியின் சட்ட சபையினட்டார் - குண்டு தன்னையிட்டார் பட்டப் பகலிலொட்டார் - தமைப் பாய்ந்துசுட்டார் எங்குமேபு கழ்பாஞ்சால சிங்கத்தையுயர் தங்கத்தை ஐயோ தூக்கிலிட்டார் - ஆவி போக்கிவிட்டார் எய்யாப் பழியைநட்டார் - தட்டி எழுப்பிவிட்டார் தந்தையோடு தம்பிசுற்றம் வந்துமேகாண நொந்துமே வெட்டித் துணித்துவிட்டார் - பகை விளைத்துவிட்டார் சுட்டுக் கரைத்துவிட்டார் - வீணாய்த் தொலைத்துவிட்டார் தோழர்கள் படுந்துயர்தெ ரிந்துமேமனம் நைந்துமே உண்ணா திருந்திளைத்தே - வெறும் உடல்பொறுத்தே அண்ணா யதீந்த்ரநாத்தே - உயிர் அகன்றசித்தே சிங்கமோடொ ருங்குமாய்ந்து சென்றுமேபுக ழொன்றிய தீரா ராசகுரு - சுக தேவதரு வீரா யார்நிகரு - தக்க விடைபகரு எந்தநேர முங்குழந்தை ஏங்கவேதுயர் தாங்கவே காந்தி புறக்கணித்தார் - தூக்குக் கயிறிழுத்தார் சாந்தி யெனத்தணித்தார் - ஹர்த்தால் தனைப்பணித்தார் - சர்தார்.  6. 'தேயிலை தோட்டத்திலே' என்ற மெட்டு பல்லவி தூக்கு மரத்தினிலே - ஐயோ! தொங்கும் படிவீர சிங்கங் களைவிட்டோம் - தூக்கு கண்ணிகள் காக்க முடியவில்லை - வெள்ளைக் காரர்கை நின்றுநம் பாரத வீரரைத் தீக்கிரை யாக்கிவிட்டோம் - இந்து தேச சுதந்தர ராசர்கள் மூவரை - தூக் 1 பாரத தேவியழ - சர்தார் பகவத்சிங் ராச குருசுக தேவரும் சேர மடிந்தனரே - பர தேசத்தா ராதிக்க மோசத்தா லையையோ - தூக் 2 பஞ்சாப் படுகொலைஞன் - ஆன பாவி யடர்க்குயர் பதவிபட் டந்தந்தே நஞ்சாக வேயடித்து - லாகூர் லாலா லசபதி ராயைக்கொன் றபாழும் 3 சண்டாள ஸ்காட்டெனவே - எண்ணிச் சாண்டர்சைச் சுட்டதை நீண்டதோர் குற்றமாய்க் கொண்டு சிறையிலிட்டுத் - தூக்கிக் கொன்றன ரையகோ வென்றிவை வீரரை 4 ஞாயம் நமக்கில்லையே - அவர் நாட்டின தேசட்டம் போட்டது வேதிட்டம் தாயக மக்களெல்லாம் - கூடித் தப்பிக்கா துதூக்க ஒப்பிக்க லானதே - தூக் 5 மாண்ட வுடலையுமே - காட்ட மாட்டேனென் றேசுட்டுப் போட்டன ரையகோ வேண்டா மினிநமக்கு - அந்த வெள்ளைய ராதிக்க மெள்ளள வேனுமே - தூக் 6 நாட்டிலுள் ளோர்களெல்லாம் - சேர்ந்து நல்லவ ரென்றுமே சொல்லவும் அன்னிய நாட்டினர் கொல்லுவது - வெகு ஞாயமோ ஆதிக்க மாயமோ ஐயையோ - தூக் 7 கொல்லாமல் விட்டிருந்தால் - அக் கொடியவ ராதிக்கம் அடியோ டொழியுமோ பொல்லாத வெள்ளையரால் - பாரத புத்திரர் நால்வரும் செத்து மடிந்தாரே - தூக் 8 ரத்தங் கொதிக்குதையோ - வெளி நாட்டினர் செய்முறை கேட்டினை யெண்ணினால் பத்தி யொடுகுழந்தை - பாடல் பாடிமுப் பத்தைந்து கோடிபே ருமழத் - தூக் 9 7. 'தசரத ராசகுமாரா' என்ற மெட்டு பல்லவி சுதந்தர வீரரைத் தோற்றோம் - பழி ஏற்றோம் - துயர் - ஆற்றோம் - உயிர் - போற்றோம் கண்ணிகள் இதந்தரும் இந்திய அன்னையின் பாலர் இங்கிலீஷ் கொடிக்கீழ்வாழோம் என்றசு சீலர் பதந்தரும் புரட்சியைப் பரப்பிய மூலர் பழிக்குப் பழிவாங்கி விட்டார் - சிறைப் பட்டார் - தூக்கில் - இட்டார் - உயிர் - விட்டார். 1 சமதர்மக் கொள்கையில் தலைசிறந் திட்டார் தாய்நாட்டு விடுதலைக் காய்வெளிப் பட்டார் நமதடி மைத்தனந் தனக்குயிர் விட்டார் நன்மை கடைபிடிக்க வாரும் -இனி யாரும் - அச்சம் - தீரும் - வெற்றி - சேரும். 2 தன்னர சாண்டிடச் சமர்புரிந் துழந்தார் தன்மானத் தொடுபாழுஞ் சிறையினில் நுழைந்தார் அன்னிய ராட்சியால் ஆருயி ரிழந்தார் ஐயோ இனியடிமை யாமோ - வீரர் நாமோ - துயர் - போமோ - வெல்லு - வோமோ. 3 பாரத தேவியின் பாலர்கள் மூவர் பகவத்சிங் ராச குருசுக தேவர் சார மிகுமுத்தமிழ்க் குழந்தைசொல் லாவர் தங்களைப் பின்பற்றி வாழ்வோம் - இனி மீள்வோம் - அர - சாள்வோம் - இன்றேல் - வீழ்வோம். 4  8. 'குறவர் மடமகள்' என்ற மெட்டு பல்லவி எழுத முடியாத அழகுடை யதங்கம் ஏர்தரும் லாகூர்சர் தார்பக வத்சிங்கம் - எழு பல்லவி எடுப்பு அழுத குழந்தையும் தொழுது விளையாடும் அழகுட னேவீரம் ஒழுகு மெவராலும் - எழு கண்ணிகள் அன்னிய ராதிக்கந் தன்னைத் துரும்பாக எண்ணி வணங்காத முடியான் - தாயகந் தன்னை விடுதலை பண்ணவோ யாதலைந் தின்னுரு வம்பூண்ட அடியான் - எழு 1 நோக்கிய கொள்கையைக் காக்கவே அன்னியர் தூக்கிலும் பூரித்த மெய்யான் - வெள்ளையி ராக்கத ராதிக்கம் போக்கிட வாயதன் ஊக்க முடன்செய்த கையான் - எழு 2 கண்டவ ருணர்ச்சி கொண்டிடப் பகைவெ ருண்டிட நோக்கிடும் விழியான் - நான் கொண்டகொள் கையதை விண்டுயிர் காப்பதும் உண்டோவென் றவீர மொழியான் - எழு 3 தேச விடுதலை யேசதா காலமும் பேசுஞ் சுதந்திர வாயான் - பிர யோசன மோடுநன் னேசமி லாப்பர தேசிய ராதிக்க நோயான் - எழு 4 தூக்கியே யின்னுயிர் போக்கிய போதும் சுதந்தரம் பூத்தொளிர் முகத்தான் - தூங்கும் தூக்கத்தும் அன்னிய நீக்கத்தைச் செய்திடும் ஊக்கத்தைத் தேக்கிடும் அகத்தான் - எழு 5 வெள்ளையி ராணுவக் கொள்ளையைக் கண்டுமே எள்ளள வேனுமே அஞ்சான் - பாழும் புல்லிய ரேபேடி யல்லவெ னைச்சுட்டுக் கொல்வெனக் காட்டிய நெஞ்சான் - எழு 6 இந்தியர் பேசுஞ்சு தந்தரப் பேச்சையே எந்நேர முங்கேட்குஞ் செவியான் - முப்பத் தைந்துகோ டிபேரும் சிந்தைநொந் துபாடும் செந்தமிழ்க் குழந்தை கவியான் - எழு 7  9. இருபத்தெண் சீரடி விருத்தம் 1. தந்தையாம் கிருஷ்ணசிங் கம்சிறை யிருக்கையில் தான்பிறந் திட்ட சிங்கம் தாயகந் தன்னைவிடு தலைசெய்கு வேனெனச் சபதமிட் டெழுந்த சிங்கம் சரியான படிகற்க வும்மணஞ் செய்யவும் தான்மறுத் திட்ட சிங்கம் சமதர்மக் கொள்கைக்கு மாறான காங்கிரசைத் தான்விட் டகன்ற சிங்கம் 2. சொந்தமாய் நவஜவான் பாரத சபையைத் தோற்றுவித் திட்ட சிங்கம் சுதந்தர வீரர்க்குப் படைக்கலப் பயிற்சியது துணிந்துகற் பித்த சிங்கம் சுயேச்சையாய்ப் பற்பல வெடிகுண்டுத் தொழிலகம் துகளறக் கண்ட சிங்கம் தோழர்க ளொடுகூடித் தாய்நாட்டி னுக்கரிய தொண்டுசெய் திட்ட சிங்கம் அந்தமறி யாவெள்ளைப் படையினைக் கண்டுளம் அஞ்சாத வீர சிங்கம் 3. அதிகார வெறிகொண்ட அயல்நாட ராதிக்க மதனோ டெதிர்த்த சிங்கம் அரும்பாவி ஸ்காட்டென உருமாறிச் சாண்டர்சை அறியாது சுட்ட சிங்கம் ஆளவல் லோமெனப் பாராளு மன்ற மதில்வெடிகுண் டிட்ட சிங்கம் 4. சொந்தமென வேசிறையை விடுதலைக் கிடமெனச் சொல்லியே யிருந்த சிங்கம் சுதந்தரப் போர்வீர னாகிய என்றனைச் சுட்டுக்கொல் லென்ற சிங்கம் சுகதேவர் ராசகுரு வெனுமுயிர்த் தோழரொடு தூக்கினில் மடிந்த சிங்கம் சுத்தசுய ராச்சியப் புத்தியை நமக்கறி வித்த பகவத் சிங்கமே.  10. 'பூங்கா வினோதமே' என்ற மெட்டு பல்லவி பாஞ்சால சிங்கமே பகைவர்கொண் டாடுந் தங்கமே - பாஞ் பத்திக்கும் புத்திக்கும் பெருநிதி வித்தைக்கும் சித்திக்கும் அதிபதி - பாஞ் பஞ்சம் கொஞ்ச மிலையுணர் வஞ்சம் நெஞ்சந் தொலையெனும் - பாஞ் பண்டையருங் கண்டுநடுங் கிடவெடி குண்டுபல உண்டுசெய்த கடனறி - பாஞ் பாருக்கு ளேயதி தீரத்தி லேயய லாருக்கு ளேயெவர் பேருக்கு நேரெனும் - பாஞ் பள்ளி வைத்தயல வெள்ளை யர்க்கினிய நல்லு ணர்ச்சியது கொள்ள வைத்தகுரு - பாஞ் பட்டப் பகலில் வெடிகுண் டைமுந்த இட்டுச் சட்ட சபையி லுயர்ந்த - பாஞ் பாரத தேவியின் வீரசொ ரூபகு மாரன பாரதி தீரவு தாரண - பாஞ் பகைவர் கண்டுந டுங்கிப் பணிவுறும் வகைதெ ரிந்துதொ டங்கிச் சமர்புரி - பாஞ் பழகிய புலவரும் முழுவடி வமதனை எழுதிட வலமரும் அழகிய வுருவமை - பாஞ் பல்லவி எடுப்பு மாஞ்சோலை போற்சிறையில் வந்துபு குந்ததி ருந்திய தங்கமே - பாஞ் கண்ணி செயமுற இந்துதேச சேவை புரிந்திசை மேவிய தீரன் சேவா தளத்தலைவன் செஞ்சுடர் போன்றொளி மிஞ்சிய வீரன் சுயமரி யாதைமிக்க சொந்தமி குந்தகு ழந்தையு தாரன் சுகதேவ ராசகுரு தோடர வேசிறை கூடிய சூரன் தீக்குண மேயுரு வாக்கிய வெள்ளையி ராக்கத ராலிழி தூக்கினி மேலடி - பாஞ்  11. 'கழுகும லைக்கதிபா' என்ற மெட்டு பல்லவி அன்னிய ஆதிக்கமே - இந்தி யாவைவிட் டென்றுநீ போவையோ காணையோ! - அன் பல்லவி எடுப்பு முன்னவர்வந் திந்திய மன்னருக் குட்சண்டை மூட்டிவிட் டிந்திய நாட்டையாண் டுவரும் - அன் கண்ணிகள் வர்த்தகம் செய்திட வந்தவர்க் கிந்திய மக்களைக் காத்திட அக்கறை ஏனோ? சுத்தவீ ரதேச பத்தர்கள் மூவரைத் தூக்குவ துங்காக்கும் போக்கது தானோ? - அன் 1 எத்தனை யோமன்ன ரைத்தொலைத் தெங்களுக் கென்னசெய் தீரவர் தன்னிலுஞ் சொல்லும்? வர்த்தகத் துக்காளும் புத்தியோ டுவரி மாறின தோகப்ப லேறியே செல்லும் - அன் 2 ஆறாயி ரங்கல்லுக் கப்பாலுள் ளவும்மை யாரழைத் தார்காக்க வாருங்க ளென்று மாறாக வீரரை வணிகரென் றேயே மாற்றியே தனிக்கொடி ஏற்றினீ ரன்று - அன் 3 படுகொலை செய்தோரை விடமுடி யாதெனில் பாவி டயர்க்கென்ன சாபவி மோசனம் படுகொலை செய்யாமற் பாரத நாட்டைக்கைப் பற்றிய தெப்படி விற்றன ரோமுனம் - அன் 4 பாரதப் போர்முதல் படுகொலை களைப்பள்ளிப் பாடமாய் வைப்பது கூடிய நீதியோ? பாரத வீரர்செய் தீரத்தைக் குழந்தை பாடுவ துகுற்ற மோடத நீதியோ? அன் 5  12. நொண்டிச் சிந்து அனியாயம் அனியாயம் - வெள்ளை ஆட்சியா ளர்கள்செய்யும் அனியாயம் அனியாயம் என்றுசொன்னால் - உடனே அடக்குமுறைச் சட்டமெழுந் தடக்கிவிடும் ஞாயமதைச் சொன்னாலும் - நூற்று நாற்பத்து நான்குவந்து காற்பரப்பும் செய்தித்தா ளிலெழுதினால் - உடனே திட்டமிட்ட பாதுகாப்புச் சட்டமுறுமும் தாய்நாடு வாழ்கவென்றால் - பிடித்துத் தள்ளிவிடும் சிறையினில் வெள்ளையாதிக்கம் வெள்ளையருக் கொருநீதி - ஆனால் வேண்டுமென்றே இந்தியருக் கொருநீதி வெள்ளையருக் கோர்சம்பளம் - அதே வேலைசெய்யும் இந்தியருக் கோர்சம்பளம் அனுமதி யில்லாமலே - வெள்ளையர் ஆயுதங்கள் வைத்துக்கொள்ள லேயிதமாகும் அனுமதிபெற் றிருந்தாலும் - இந்தியர் ஆபத்திலும் கொண்டாலதே ஆபத்தாகும் சொந்தநாட் டுப்பொருள்களைக் - கையால் தொட்டாலும் அடக்குமுறைச் சட்டமெழும்பும் இந்தியரை வெள்ளையர்கொன்றால் - கொன்றவருக் கேற்றபட்டம் பதவிதந்து போற்றுவதென்னே வெள்ளையரை இந்தியர்கொன்றால் - அவரை வேணுமென்றே தூக்கிலிடல் காணுமுறையோ? ஆளுந் தகுதியிந்தியர்க் - குண்டோவென ஆய்ந்தறிய இந்தியாப் போந்த அவ்வெள்ளைச் சைமன் கமிசனதனைத் - திரும்பித் தான்செல்கவென் றூர்வலமாய்த் தான்செல்கையிலே பட்டப் பகலினிலே - எங்கள் பாஞ்சால சிங்கமெனும் ஆண்சிங்கமாம் லாலா லஜபதியை - மார்பில் ஞாயமின்றி யேதடியால் மாயவடித்த சண்டாள ஸ்காட்டெனவே - எண்ணிச் சாண்டர்சைக் கொன்றதொரு நீண்டகுற்றமா வீரரைக் கொல்லலாமோ? - தூக்காது விட்டிருந்தால் உங்கள்குடி கெட்டுப்போகுமோ? சதிவழக்கில் சேர்ந்தவர்களை - அதற்கே சாட்சியாகக் கொள்ளல்வெள்ளை ஆட்சிமுறையோ? அவர்க்கந்தக் குற்றமில்லையோ -உளவர் ஆனவுடன் செய்தகுற்றம் போனதோசெத்து சட்டப்புத் தகங்களிலே - இல்லாத சட்டமெல்லாம் வீரரைக்கொல் சட்டமாச்சு நிலையான மன்றமில்லை - முதல் நீதிபதி யில்லையுண்மை நீதியுமில்லை எல்லாம் புதிதாச்சு - எதிரிகள் இல்லாமலே தீர்ப்புச் சொல்லவுமாச்சு ஐயோ தூக்குத் தீர்ப்புச்செய்தும் - இதுபோல் ஆறுமாதம் ஒத்திப்போட்ட வேறுகேசுண்டோ? தூக்குத்தீர்ப்புச் சொல்லியதெங்கே - வீரரைத் தூக்கியதெங் கேயுயிர் போக்கியதெங்கே அந்தோவெள்ளை யாதிக்கமே -இந்தி யாவிலின்னும் எத்தனைநாள் வாழ்வையோசொல்லும்? அப்பா பகவத்சிங்கமே! -இந்நாட்டை ஆளவந்து மேபிறந்த வாளரியேறே சுகதேவ் ராசகுரு - என்னும் தோழருடன் எங்குசென்றாய் வாழியநும்பேர் எங்களகம் தங்குகவென - வாழ்த்துகின்றோம் எந்தநேர முங்குழந்தை செந்தமிழ்பாடி - அனி (இப்பாடல்கள், 1931 -இல், பகவத்சிங் முதலியோரைத் தூக்கிக் கொன்றபோது பாடியவை.அயல்மொழிப் பெயர் கட்கும் கருத்திற்கும் ஏற்றவாறு அயற்சொற்கள் கலந்த நடை யானது.)  4. வள்ளை - உலக்கைப்பாட்டு 6. பாத்து - பகுத்து 7. எழுதாக் கிளவி - வடமொழி 10. தொடக்கத்தார் - இளங்கவிஞர், எழுத்தாளர். குடக்கு - மேற்கு. முடக்கத்தார் - முடக்கு வாதம் பேசுவோர். 7 - 10 இவை 1942 இல் பாடியவை. 1. இக்கு - கரும்பு. இக்குஅன வாய் தமிழ்த்தாய் - கரும்பு போன்ற இனிமையான வாயையுடைய தமிழ்த்தாயே. 2. வீழ் அத்தகவிலான். தகவிலான் - பீடணன். 3. எண் ஓவிலா - கணக்கில்லாத. 3. வீரன் - அதிவீரராமபாண்டியன் 2. செத்தநரி - வடமொழி வல்லியம் - புலி. வாரி - லாரி. 6. அந்த நாள் - 1938 3. சண்முகம் - கோவை, சர் . ஆர். கே. சண்முகம் 5. அன்றார் - பகைவர். 7. ஒன்றார் - பகைவர். பேராயமன்றார் - காங்கிரசுக் கட்சியார். 9. கறுத்து - சினந்து, வெகுண்டு. பத்தாண்டுக்கு முன் - 1938. காந்தி - வெகுண்டு. 2. முதுக்குறைவு - பேரறிவு 2. தெற்றி - திண்ணை 7. நள்ளி - விரும்பி. 8. செல்லல் - வறுமை. 9. நந்நுதல் - விளங்குதல் 4. அண்டர் - பகைவர் 3. எண் விளக்கி - நன்கு எண்ணி. 4. மடல் வரைதல் - டெலிப் பிரிண்டர். 5. ஆயார்க்கும். ஆ - இரக்கம். (4. நாலுபடி - 1 வள்ளம் படி - ஏக்கர். 5. ஐந்தாறு - முப்பது. ஏழெட்டு - 56. காப்பட்டி - ஆட்டுப்பட்டி. ஆறு x ஏழு x எட்டு (6 x 7 x 8) = 336. நாலைந்து - 20. இது நயம்.) 2. மாணது - மாண்புடையது, நல்லது. 3. ஈரறு நூறாயிரம் - 12 இலக்கம். 5. பத்துமூவாயிரவர் - 13 ஆயிரம். உழவு - பயிருழவு 1 - 7 இவை, 1946, 7 ‘வேளாளன்’ என்னும் மாத இதழில் வெளிவந்தவை. 10. எய்யா உழைப்பு - ஓயாத, சலியாத உழைப்பு. 11. சிதல் - கறையான். 1. ‘முதல் போட்டுத் தொழில் செய்வோர் முதலாளி’ என மாற்றுக. முசியாத - குறையாத, சிறந்த. 3. வீங்குதல் - மிகுதல் 4. இடம்பூணி - வண்டியில் இடப்பக்கம் பூட்டும் எருது. அடங்கை - நடைமுறையை. 5. செய் - வயல். மெய் ஊட்டமுற - உடம்பு உறுதியுற, வளர. ஒற்றுமை ஊட்டி - ஒற்றுமையாக, ஒருமனப்பட்டு. 6. உடையோன் - உடலும் உறுப்பும் உடையவன். ஊறு - இடையூறு. 5. துன்னார் - பகைவர். 8. ஆமிசான்சன் - வானூர்தியில் உலகைச் சுற்றி வந்த முதல் பெண்மணி. 2. கைஞ்ஞானம் - உண்மையாக. ஏது - காரணம். 25. பீள் - கரு. 1.ஒப்பு அறம் - சமதர்மம். நந்துதல் - விளங்குதல். வைக்கம் வீரர் - மலையாள நாட்டில் உள்ள வைக்கம் என்னும் ஊரில், தீண்டாமை யொழிப்பு அறப்போர் வெற்றியால் பெற்ற பெயர். 2. உங்க - வருந்த. 3. ஆணா - இனிமையான. 4. பாத்தறிவு - பகுத்தறிவு. 7. சழக்கு - தீமை, பயனின்மை. 9. தழங்குதல் - விளங்குதல். துழங்குதல் - ஆராய்தல். இது, 1932 இல், வெளிநாடு சென்று மீண்டபோது பாடியது. 9. எல்லமர் - விளக்கம் பொருந்திய.