நூற்றாண்டு நினைவு வெளியீடு புலவர் குழந்தை படைப்புகள் - 2 அரசியலரங்கம் அனைத்து நூல்களும் ஒருசேரத் தொகுத்து, பொருள் வழிப்பிரித்து, கால வரிசையில் ஒரே வீச்சில் வெளிவருகின்றன. ஆசிரியர் புலவர் குழந்தை நூற்பெயர் : புலவர் குழந்தை படைப்புகள் - 2 ஆசிரியர் : புலவர் குழந்தை பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 384 = 400 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உரூபா. 250/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906இல் தோன்றி 1973இல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர். தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் பட்ட அவலங்களை எண்ணி யெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளை எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு பதிவுகளாக எழுதி வைத்துச் சென்றவர். தமிழ் இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி 1 முதல் 15 படைப்புகளாக ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய முத்து மாலையாகத் தந்துள்ளோம். இவர் நூல்கள் அனைத்தும் தமிழ்மொழி இன நாட்டின் மேன்மைக்கும், வாழ்வுக்கும், வளத்துக்கும் வித்திடுபவை. குறிப்பாக இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிழ் மண்ணில் தன்மானக் கொள்கைகள் நிலைத்து நிற்பதற்கு செயற்கரிய செயல்களைத் தமிழ் இளைஞர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும் எனும் இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடு கின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்ற தமிழ்ப்பெரு மக்களுக்கும், இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும்புலவர் இரா. வடிவேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன் கொள்ளும் வகையில் பிழையற்ற பதிப்பக வெளிவருகின்றது. வாங்கிப் பயனடையுங்கள். (இராவண காவியம் நூலுக்கு மிகச்சிறந்த தெளிவுரை எழுதப்பட்டு வருவதால் இப்படைப்பு வரிசையில் சேர்க்க முடியவில்லை. விரைவில் வெளிவரும்.) கோ. இளவழகன் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்கள் கொங்கு நாட்டில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஓலவலசு’ என்னும் சிற்றூரில், பண்ணையக்காரர் என்னும் பழங்குடியில், முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையாருக்கு 1-7-1906இல் பிறந்தார். இவர்தம் பெற்றோருக்கு ஒரே மகனாக வளர்ந்தார். தாம் பிறந்த சிற்றூரில் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார்; தொடர்ந்து படிக்காமல் இடையிடையே விட்டு விட்டுப் படித்தார். மொத்தத்தில் எட்டு மாதங்களே திண்ணைப் பள்ளியில் பயின்றார். கருவிலே திருவுடையவராகிய இவர் பத்தாம் ஆண்டில் இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். யாரேனும் ஒருவர் ஒரு பாட்டைப் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசையில் புதுப்பாட்டு ஒன்றினைப் பாடுவார். எப்போதும் ஏதேனும் ஒருபாட்டை எழுதிக் கொண்டே இருப்பார். பாட்டு எழுதுவது இவருக்குக் கைவந்த கலையாக அமைந்து விட்டது. இவர் காலத்தில் இவர் வாழ்ந்த பகுதியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தானாகவே முயன்று படித்துக் கவிபாடும் திறம் பெற்றிருந்தார். இவர் முதன் முதலில் இசைப்பாடல்களைப் பாடினார். இவர்தம் கல்லாமல் பாடும் கவித் திறனை யும், பாடல்களின் சிறப்பினையும் கண்டு வியந்த அறிஞர்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிக்குமாறு தூண்டினர்; ஊக்குவித்தனர். தாம் பிறந்த ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர்கள் எவரும் அக்காலத்தில் இல்லை. ஆகவே இவர் ஆசிரியர் துணையின்றித் தாமாகவே முயன்று இலக்கிய இலக்கணங்களைப் படித்துத் தமிழில் சிறந்த புலமை பெற்றார். மேலும் இவர் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகத் தேர்வு எழுதிப் புலவர் பட்டயம் பெற்றார். இவர் பவானியில் மாவட்டக் கழகப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். 1940வரை தமிழாசிரியராகத் தொண்டாற்றினார். 1941 முதல் 1962ஆம் ஆண்டுவரை தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்கள் வியந்து பாராட்டும்வகையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியினின்று ஓய்வு பெற்ற பின்பும் எழுத்துப் பணியினின்று ஓய்வு பெறவில்லை. வாழ்நாள் முழுமையும் தமிழுக்காகத் தொண்டாற்றினார்; பல நூல்களைப் படைத்தார்; தமது கவிதைகள் வாயிலாகச் சமுதாய உணர்வை - பகுத்தறிவை மக்களிடையே பரப்பினார். இவருக்கு முன் ஓலவலசில் படித்தவர் எவருமில்லை. அவ்வூரில் உள்ளவர்களுக்குக் கையொப்பம் இடவும் தெரியாது. இளமைப் பருவத்திலேயே பொதுத் தொண்டில் - சமுகாயத் தொண்டில் ஆர்வமுடையவராக இருந்தார். தாமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தம் ஊரிலிருந்த தம்மையொத்த அகவையுடைய இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்தார். அவர்கள் மூலமாகப் பெரியவர்களுக்குக் கையொப்பம் போடப் பயிற்சியளிக்கச் செய்தார்; கை நாட்டு போடுவதை அறவே ஒழித்தார். அக்காலத்தில் இவரைவிட மூத்தவர் பலர் இவரிடம் கல்வி கற்றனர். ஓலவலசில் கல்லாமை இருளைப் போக்கினார். வேளாளஇன மக்களிடையே இருந்த பலபிரிவினரையும் ஒன்று சேர்ப்பதற்காகவும், அவ்வின இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்காகவும் 1946 முதல் 1950வரை ‘வேளாளன்’ என்னும் திங்களிதழை நடத்தினார். அவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் அவ்வின இளைஞர்களிடையே புத்துணர்ச்சியை வளர்த்தது. விதவை மணம், கலப்புத்திருமணம், சீர்த்திருத்த மணம் முதலியன செய்யவும் அம்மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். வேளாள சமூகத் தலைவரான திரு. வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் தலைமையில், தகடூர் (தருமபுரி) மாவட்டத்திலுள்ள அரூரில் வேளாள மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் புலவர் குழந்தை அவர்கள் ‘விதவை மணம்’ தீர்மானங் கொண்டு வந்தார்; ஒருமனமாக நிறைவேறச் செய்தார். அதன்படி நூற்றுக்கணக்கான விதவை மணங்களைச் செய்து வைத்தார். இச்செயல்கள் இவர்தம் சமூகத் தொண்டிற்குச் சிறந்த சான்றுகளாகும். இவர், யாப்பிலக்கணம் படிப்பதற்கு முன்னே 1918இல் ‘கன்னியம்மன் சிந்து’ என்னும் கவிதை நூலை வெளியிட்டார். இவர் பாடிய அச்சாகாத பாடல்களும் நூல்களும் பல உள்ளன; சில நூல்கள் அச்சாகி வெளியிடப்பட்டன. யாப்பிலக்கணம் கற்பதற்கு முன்பு பாடிய பாடல்கள் யாப்பிலக்கணப்படி அமைந்துள்ளன. இவர் இதுவரை எழுதியுள்ள நூல்கள் : இராவண காவியம் உள்படச் செய்யுள் நூல்கள்-7, உரைநூல்கள் - 3, இலக்கண நூல்கள் -3, உரைநடை நூல்கள் -16 ஆகமொத்தம் 29 நூல்கள் படைத்துள்ளார். தீரன் சின்னமலை நாடகம் இன்னும் அச்சாகவில்லை. ‘விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர்கம்பன்’ என இதுவரையில் போற்றப்பட்டு வரும் புகழுரைக்கு ஈடாகப் புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் பாடிப் புகழ்பெற்றார். ‘காமஞ்சரி’ என்னும் செய்யுள் நாடக நூல், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் என்னும் நூலுக்குப் பிறகு எழுதப்பட்ட சிறந்த நாடக நூலாகும். ‘நெருஞ்சிப் பழம்’ என்னும் நூல் தமிழில் இதுவரை வெளிவராத கற்பனைக் கருவூலமான காதல் கதையாகும். புலவர் குழந்தை அவர்கள் பெருங்கவிஞர் மட்டுமல்லர். சிறந்த எழுத்தாளர்; கேட்போர் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசும் பெரும் பேச்சாளர். இவருடைய எழுத்துகள் உறுதியும் அஞ்சாமையும் ஆய்வும் செறிந்த புரட்சிக் கனல் தெறிக்கும் இயல்புடையவை. இவருடைய செய்யுள் நடையும் உரைநடையும் எளிய இனிய தனித்தமிழில் அமைந்தவை. இவர் படைத்த நூல்களெல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன. தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இவர் அவ்வியக் கத்தில் சேர்ந்தார்; பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். அன்று முதல் சுயமரியாதை இயக்கம் அதன் மறு பதிப்பான திராவிடர் கழகம், அதன் மறுமலர்ச்சியான திராவிட முன் னேற்றக் கழகம் ஆகியவற்றுள் இணைந்து தொண்டாற்றியவர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். பள்ளித் தமிழாசிரியராக இருந்துகொண்டே, அத்தொழிலுக்குச் சிறிதும் இடையூறு இல்லாமல், ‘பெரியார் சீடர்’, ‘கருப்புச் சட்டைக்காரர்’ என்று பொது மக்கள் கூறும்படி கட்சித் தொண்டாற்றியவர். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் படைக்கத் தூண்டியது; இவருக்குப் புகழைச் சேர்த்தது. 1948இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திருக்குறளுக்குப் பகுத்தறிவிற்கு ஏற்ப உரை எழுதுவதற்குத் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தரபாரதியார் தலைமையில் ஐவர் கொண்ட குழுவை அமைத்தார். அக்குழுவில் புலவர் குழந்தையும் ஒருவர். இவரே தனிஒருவராக இருந்து திருக்குறளுக்கு உரை எழுதி ‘திருக்குறள்-குழந்தையுரை’ என்று வெளியிட்டார். அவ்வுரையை 28 நாட்களில் எழுதி முடித்த பெருமைக்குரியர். அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்ட இவர்தம் இராவண காவியத்திந்கு, தமிழக அரசால், தமிழ் வாழத் தாம் வாழும் தமிழவேள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் 17-5-1971இல் தடை நீக்கப்பட்டது. அதைக்கண்டு தமிழகமே அகமிக மகிழ்ந்தது; தமிழவேள் கலைஞரை உளமார வாழ்த்தியது. புலவர் குழந்தை ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கொண்டவர். இவர் ஒரு புரட்சிப் புலவரே எனினும் அமைதியும் அடக்கமும் உடையவர்; ஆடம்பரமின்றி எளிய வாழ்வு வாழ்ந் தவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடமை தவறாதவர்; எதிர்க் கட்சி யானாலும், மாற்றுக் கருத்து உடையவராலும் நன்கு மதிக்கத் தக்கவர். புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார். கல்வியறிவு பெற வாய்ப்பில்லாதவராயினும் பொது அறிவு நிரம்பப் பெற்றவர்; தன்மானக் கொள்கையுடையவர்; தம் கணவரின் கொள்கைக்கேற்ப இல்லறத்தை இனிது நடத்தியவர். இவ்விணையருக்குச் சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர். தமிழுக்குத் தொண்டு செய்து வந்த புலவர் பெருந்தகை தமது 68ஆம் அகவையில் 24-9-1973இல் இயற்கை அடைந்தார். மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் புலவர் குழந்தையிடம் அன்பும் மதிப்பும் உடையவர். அவர் மறைந்த பிறகு, அவர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நூல்கள் 8-7-2006 அன்று அரசுடைமை ஆக்கப்பட்டதாக அறிவித்தார். குழந்தை அவர்களின் மகள்கள் இருவருக்கும் தலா ரூ.5 இலட்சம் பரிவுத் தொகை வழங்கினார். நன்றி : நித்திலக் குவியல் (திபி 2037 - டிசம்பர் 2006) மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு. புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல்களையும் அரசுடைமை யாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது. பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர். அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது. 4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார். அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார். அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார். “இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3). புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தையானா லும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள்தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழுதினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும். விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார். “புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்து வதற்காக எழுதப்பட்டதேயாகும். நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப்படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார். புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக் கியத்தனங்களையெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப்படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளையெல்லாம் சாமியாக்குகின்றான். அதுபோல நமக்காகப் பாடுபடுகின்றவர்களை, தொண்டு செய்கிறவர்களை, எழுதுகிறவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன்வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத்துரைத்தார்கள். சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை 1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடைபோட்ட காட்சி கண் கொள்ளாதது. 1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட! எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர். வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது. இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு! கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார். “தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!” நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப் பிட்டதிலிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது. கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள் கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார். “ இனியொரு கம்பனும் வருவானோ? இப்படி யும்கவி தருவானோ? கம்பனே வந்தான்; அப்படிக் கவிதையும் தந்தான் ஆனால், கருத்துதான் மாறுபட்டது” என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது. கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை. தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற்பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இராவண காவிய மாநாடு இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன; முதல் மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டதுண்டு. இத்திசை யில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு. தீர்மானங்கள் 28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும். இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும். மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும். இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல் படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005) அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான். மத்திய அரசு தொலை தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத் துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005). தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது. கலைஞரின் சாதனை! இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார். வாழ்க அப்பெருமகனார்! (நன்றி : விடுதலை 2.7.2006) பொருளடக்கம் அரசியலரங்கம் பதிப்புரை iii புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு vi மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை vii தமிழ்த்தாய் 3 எங்கள் நாடு 4 1. அரசு பிறந்த கதை 5 2. அரச மரபு 33 3. பழந்தமிழாட்சி 45 4. அயலாட்சி 181 5. குடியாட்சி 290 அரசியலரங்கம் தமிழ்த்தாய் வெண்பா உலக முதன்மக்கள் உள்ளுணர்வைக் கிள்ளி உலகுக் களித்த ஒருத்தி - இலகுதமிழ் அன்னை உலக அரங்கில் அமர்ந்தரசு தன்னையரங் கேற்றிடுமெந் தாய். 1 அலகில் அரசுகளுக் காணையிட்டாள் சங்கப் புலவர் புகழ்மதுரைப் பூவை - உலகத்தே முன்பிறந்தாள் மூவா முறைசிறந்தாள் மூத்தகுடித் தன்பிறந்தாள் எங்கள் தமிழ்த் தாய். 2 அரசு முறைப்போட்டிக் காகவிது காறும் பரிசு பலபெற்ற பாவை - அரசியலின் முன்னோர் முடியுடைய மூவர் புகழ்போலத் தன்னே ரிலாததமிழ்த் தாய். 3 ஊமை யுலகத் தொருத்தி உவந்துவந் தாமென் றியன்றிசைந் தாடினாள் - மாமதுரைச் சங்கத்தாள் பஃறுளி தண்குமரி வையைவாய்த் தங்கத்தாள் எங்கள் தமிழ்த் தாய். 4 எங்கள் நாடு பல்லவி உலகினி லேயுயர் நாடு - புகழ் ஓங்கிடும் இந்திய நாடெங்கள் நாடு - உல கண்ணிகள் பலகலைச் செல்வமும் பழுத்தநல் நாடு பழமையும் இளமையும் கெழுமிய நாடு மலைகளும் மலைவரும் யாறுக ளோடு வளமிகும் இந்திய நாடெங்கள் நாடு - உல 1 ஆந்திரம் கன்னடம் அணிமலை யாளம் அன்னையென் றழைத்திடும் அருந்தமிழ் நாடு சேர்ந்த திராவிடத் தென்னகத் தோடு திகழ்தரும் இந்திய நாடெங்கள் நாடு - உல 2 அத்திரா விடத்தினை அடுத்தம ராத்தி அண்ணல்நம் காந்தியை அருள்குச ராத்தி மத்திய உத்தர வளப்பிர தேயம் மருவிடும் இந்திய நாடெங்கள் நாடு - உல 3 பஞ்சாப் பரசத்தான் சம்முகாட்ச் மீரம் பாங்கொரி யாபீ கார்வங்கம் அஃச்ஃசாம் எஞ்சாப் புகழுடை இம்மா நிலங்கள் எமதெனும் இந்திய நாடெங்கள் நாடு - உல 4 மன்னிய நடுநிலை வகுத்திடும் நாடு வல்லர சுகளெல்லாம் மதித்திடும் நாடு பன்னலம் பழுநிய பழம்பெரு நாடு பார்புகழ் இந்திய நாடெங்கள் நாடு - உல 5 1. அரசு பிறந்த கதை சிந்து ஒற்றைக் குடும்பமொன்று - மற்றதில் உள்ளவர் நாலைந்துபேர் பெற்றதாய் தந்தையொடு - பெற்ற பிள்ளைக ளேயவர்கள். 1 பேசிய பிள்ளைகளில் - ஆண் பிள்ளைக ளோரிருவர் மாசியின் தண்மதிபோல் - பெற்றோர் வளர்த்திட வேவளர்ந்தார் 2 கான்முளை யாமவர்கள் - பெற்றோர் கண்டு களித்திடவே மேன்முளை போல்நாளும் - இன்பம் மேவிட வேவளர்ந்தார். 3 தாயின் அரவணைப்பால் - செல்வத் தந்தையின் அன்பிணைப்பால் சேயர்கள் நாடோறும் - சங்கச் செந்தமிழ் போல்வளர்ந்தார் 4 உக்க நறுந்தமிழ்த்தேன் - பாலி னோடு கலந்ததுபோல் மக்க ளெனும்பெயர்க்குத் - தக்க மாண்புட னேவளர்ந்தார் 5 சுற்ற முவப்பூட்ட - நண்பர் தொன்னலம் பாராட்ட மற்றவ்வூ ரார்மகிழ - இள மாமதி போல்வளர்ந்தார் 6 கண்டவர் கண்களிக்க - பிறர் காணத் துடிதுடிக்க ஒண்டொடி யாரெடுக்க - இன் பூட்டி வளர்ந்துவந்தார். 7 நல்ல மனையதற்கு - நன்கலம் நன்மக்கட் பேறெனவே சொல்லிய வள்ளுவர்தம் - குறளின் சொற்பொருள் போல்வளர்ந்தார். 8 கட்டிக் கரும்பினைப்போல் - அன்னை கன்னித் தமிழ்பாடித் தொட்டிலி லிட்டாட்ட - இன்பாய்த் தூங்கி வளர்ந்தார்கள். 9 மழலை மொழியாடித் - தாயின் மடியில் விளையாடி குழலை மணியாழைப் - பகை கொள்ள வளர்ந்தார்கள். 10 குதலை மொழிபேசி - அன்பு கொண்டிளங் கைவீசி மதலைக ளென்பதற்குத் - தக்க வகையினி லேவளர்ந்தார். 11 கூடி விளையாடி - அன்னை கொஞ்ச வருகோடி ஓடி விளையாடி - உள்ளம் ஒப்ப வளர்ந்தார்கள். 12 தாவி யெடுத்துமுத்தம் - தந்த தாய்க்கெதிர் முத்தந்தந்தே ஓவியர் கைத்திறம்போல் - எழில் ஓங்க வளர்ந்தார்கள். 13 காலை யிளங்கதிர்போல் - முற்றக் கற்றவர் நுண்மதிபோல் மாலை யிளமதிபோல் - நாளும் வண்ண மொடுவளர்ந்தார். 14 இரட்டைப் பின்னலைப்போல் - அங்கு மிங்கு முவந்தாடி திரட்டு நூல்நயம்போல் - ஒன்று சேர்ந்து வளர்ந்தார்கள். 15 தந்தை யுணுங்காலை - எடுத்துத் தங்கச்செங் கையாலே சிந்தி யுடம்பெல்லாம் - இன்பம் செய்து வளர்ந்தார்கள். 16 வாயில் மறுத்திருந்த - தந்தையின் மாண்புறு தூதாகித் தாயி னருகோடி - ஊடல் தணித்து வளர்ந்தார்கள். 17 குடிபழி தூற்றாத - செங் கோன்முறை மாற்றாத முடியுடை மூவேந்தர் - ஆட்சி முறையினைப் போல்வளர்ந்தார் 18 ஓரியின் மாக்கொடையும் - ஆயின் ஓங்கியா னைக்கொடையும் பாரியின் ஊர்க்கொடையும் - போலப் பாங்குட னேவளர்ந்தார். 19 பொன்னியின் கால்வளமும் - சங்கப் புலவர்செய் பாவளமும் அன்னையின் கைவளமும் - போல அன்புட னேவளர்ந்தார். 20 நீரின் நிலையளந்து - காலின் நின்ற நிலைதிரியா ஈரிதழ்த் தாமரைபோல் - பன்மை இன்றி வளர்ந்தார்கள். 21 தேடித் திசைமாறி - ஓடும் செங்கட் சினப்புலியை ஓடிப் பிடிப்பவர்போல் - சிறுதேர் ஊர்ந்து வளர்ந்தார்கள். 22 பெற்றவர் கண்டுவக்க - இளம் பெண்கள்மைக் கண்சிவக்க சிற்றில் சிதைத்தோடி - உள்ளம் செருக்கி வளர்ந்தார்கள். 23 மூத்து முதிராத - தமிழ் மூன்றி லிரண்டான கூத்திசை யாளர்கள்போல் - சிறுபறை கொட்டி வளர்ந்தார்கள். 24 தூங்கா திரவினிலும் - உடன் துன்றியெப் போதும்விட்டு நீங்கா நிழல்போல - ஒன்றி நின்று வளர்ந்தார்கள். 25 அன்பு ததும்பிடவே - என் அண்ணா! வெனவழைப்பான்; இன்ப மிகுந்திடவே - தம்பி! ஏனிதோ வந்தேனென்பான். 26 எடுத்து முடித்துத்தமிழ் - வளர்த்த இரட்டைப் புலவரைப்போல் அடுத்து முடித்துவிளை - யாடி அன்புட னேவளர்ந்தார். 27 கையி லடிபட்டால் - காணும் கண்ணீர் விடுவதுபோல் பொய்யி லிருவரென - ஒன்று போல வளர்ந்தார்கள். 28 விண்ணும் ஒளியும்போல் - வான வெளியும் வளியும்போல் பண்ணுந் திறமும்போல் - ஒன்று பட்டு வளர்ந்துவந்தார். 29 ஓருயிர் ஈருடலாய் - மனம் ஒன்று படவளர்ந்து சீரிய பைங்காய்போல் - இளஞ் செம்மல்க ளானார்கள். 30 நட்ட பயிர்போல - நாளும் நன்குற வேவளர்ந்து கட்டளை யிட்டதுபோல் - இளங் காளைக ளானார்கள். 31 கற்ற அறிவினையும் - கற்ற கல்வி ஒழுக்கினையும் பெற்றவர் கண்டவரைப் - பெற்ற பேற்றினி லுமுவந்தார். 32 சான்றவ ரென்றறிவோர் - புகழ்ந்து சாற்றிட வேகேட்டே ஈன்ற பொழுதினிலும் - பெற்றோர் இன்புற் றினிதுவந்தார். 33 பாற்பட வள்ளுவனார் - மக்கட் பண்பென ஓதியதற் கேற்ப வினிதொழுகி - அதன் இலக்கிய மாய்வளர்ந்தார். 34 சேயர்க்குப் பெற்றோர்கள் - திருமணம் செய்து மகிழ்ந்தார்கள். தூயர்க்குத் தூயவர்போல் - வாழ்க்கைத் துணைவர்க ளானார்கள். 35 தோழமை யுற்றவர்கள் - இன்பந் துய்த்தினி தேவாழ வாழை யிளங்கன்றுபோல் - வேறு வைத்தனர் பெற்றோர்கள். 36 தங்கள் குடிமரபு - ஆல்போல் தழைத்தி னிதோங்க மங்கல மாய்வாழ - வேறு வைத்து மகிழ்ந்தார்கள். 37 கண்ணு மனமாரப் - பெற்றோர் கண்டு களித்திடவே மண்ணு மணிபோல - இல் வாழ்க்கை நடத்திவந்தார். 38 ஒக்க லொடுநட்பும் - நாளும் உவந்து தற்சூழ மிக்க விருந்தோம்பி - இன்பம் மேவிட வாழ்ந்துவந்தார். 39 வன்சொல் வழங்காது - நாடி வந்தவ ருள்ளுவக்க இன்சொ லுடனீந்து - நாளும் இன்புற வாழ்ந்துவந்தார். 40 உள்ளுறை மேம்பாட்டால் - உள் ளூரவர் பாராட்ட வள்ளுவர் வாய்மொழிபோல் - மனை வாழ்க்கை நடத்தி வந்தார். 41 தந்தையைப் போன்றவரும் - குடும்பத் தலைவர்க ளானார்கள் தந்தையின் கால்வழியாய் - மக்கட்குத் தந்தையும் ஆனார்கள். 42 மக்க ளெனவழைக்க - பெற்றோர் மகிழ்ந்து வாழ்ந்தவர்கள் மக்க ளெனவழைத்து - மனம் மகிழ்ந்து வாழ்ந்தார்கள். 43 பிள்ளைக ளென்றழைக்க - இன்பம் பெருகி வாழ்ந்தவர்கள் பிள்ளைக ளென்றழைத்தே - இன்பம் பெருகி வாழ்ந்தார்கள். 44 செல்வர்க ளென்றழைக்க - மனம் செருக்கி வாழ்ந்தவர்கள் செல்வர்க ளென்றழைத்து - மனம் செருக்கி வாழ்ந்தார்கள். 45 தம்பொரு ளென்றுசொல - மனம் தருக்கி வாழ்ந்தவர்கள் தம்பொரு ளென்றுசொலி - மனம் தருக்கி வாழ்ந்தார்கள். 46 மைந்தர்க ளென்றழைக்க - இன்பம் மருவி வாழ்ந்தவர்கள் மைந்தர்க ளென்றழைத்தே - இன்பம் மருவி வாழ்ந்தார்கள். 47 குதலை மொழிபேசிப் - பெற்றோர் கொஞ்ச வாழ்ந்தவர்கள் குதலை மொழிபேச - நாளும் கொஞ்சி வாழ்ந்தார்கள். 48 மழலை மொழிபேசிப் - பெற்றோர் மகிழ வாழ்ந்தவர்கள் மழலை மொழிபேசக் - கேட்டு மகிழ்ந்து வாழ்ந்தார்கள். 49 வாரி யெடுத்தணைத்து - முத்தம் வழங்க மகிழ்ந்தவர்கள் வாரி யெடுத்தணைத்து - முத்தம் வழங்கி மகிழ்ந்தார்கள். 50 சின்ன நடைநடக்கக் - கண்டு சிரிக்க வளர்ந்தவர்கள் சின்ன நடைநடக்கக் - கண்டு சிரித்து வளர்த்தார்கள். 51 ஓடி விளையாடக் - கண் டுவக்க வளர்ந்தவர்கள் ஓடி விளையாடக் - கண் டுவந்து வளர்த்தார்கள். 52 தின்னுக வென்றூட்டத் - தின்று சிந்தை மகிழ்ந்தவர்கள் தின்னுக வென்றூட்டித் - தின்னச் சிந்தை மகிழ்ந்தார்கள். 53 உண்ணுக வென்றூட்ட - உண் டுள்ள மகிழ்ந்தவர்கள் உண்ணுக வென்றூட்டி - உண்ண உள்ள மகிழ்ந்தார்கள். 54 பள்ளிக்குச் செல்லுவதைப் - பெற்றோர் பார்த்து மகிழ்ந்தார்கள் பள்ளிக்குச் செல்லுவதை - இவர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள். 55 பாடி யாடுவதைப் - பெற்றோர் பார்த்து மகிழ்ந்தார்கள் பாடியாடுவதை - இவர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள். 56 ஓடிப்பந் தாடுவதைக் - கண் டுவக்க வளர்ந்தார்கள் ஓடிப்பந் தாடுவதைக் - கண் டுவந்து வளர்ந்தார்கள். 57 பேரன் பேர்த்திகளைத் - தாம் பெற்ற செல்வரைக்கண் ணாரக் கண்டுபெற்றோர் - ஈன்ற அன்றினு மேயுவந்தார். 58 பொன்னில மாடாடு - மற்றைப் பொருள்க ளத்தனையும் தன்னிரு மக்களுக்கும் - தந்தை தான்பகுத் தேகொடுத்தான். 59 வீடு வாசல்களை - மித மிஞ்சிய சொத்துக்களை காடு தோட்டங்களைப் - பங்கிக் கண்ணிய மாய்க்கொடுத்தான். 60 கோலக் குலைபழுத்த - முக் கொட்டைப் பனம்பழம்போல் மூலக் குடிப்பொருளும் - இன்று மூன்றுபங் காயினதே. 61 மண்ணில் வளர்கொடிகள் - பூ மலர்ந்து பொலிவனபோல் கண்ணிய மிக்கவரும் - பண்ணையக் காரர்க ளானார்கள். 62 தந்தை கொடுத்ததன்மேல் - மேலும் தக்க பொருளீட்டி மைந்த ரிருவோரும் - பெருஞ்செல் வாக்குடன் வாழ்ந்துவந்தார். 63 ஊக்க மொடுநாளும் - நாளும் ஒன்றுக்குப் பத்தாக மீக்குற வேபெருக்கி - மிக்க மேன்மையாய் வாழ்ந்துவந்தார். 64 தன்னெனும் உள்ளுணர்வு - மிகத் தானெழ வேமுயன்று மன்னிய செல்வாக்காய் - வாழ்ந்து வந்தனர் செந்தமிழ்போல். 65 காணு பழங்குடியின் - பெருங் கண்ணியங் குன்றாமல் நாணய மாய்நடக்க - தந்தை நன்குமேற் பார்த்துவந்தான். 66 ஒற்றைக் குடும்பமது - கிளை யுற்றவோர் கொம்பினைப்போல் முற்றைக் குடும்பமதாய் - வளம் முற்றி முகிழ்த்ததுவே. 67 இங்ஙனம் பல்கினவே - உலகில் ஏய குடும்பமெல்லாம் நங்குடும் பத்தலைவர் - கதையை நாமினிப் பேசிடுவாம். 68 தாழிசை இங்ஙனமக் குடும்பத்தின் இசையுலக மிசைபோக மங்கலமா யிருவோரும் மனைவாழ்க்கைத் தலைநின்றே; 69 பொன்கலத்திற் பால்பெய்தாற் போலமைநல் லில்லறத்தின் நன்கலமென் றுலகேத்தும் நன்மக்கட் பேறுபெற்றே; 70 பெற்றோர்க ளுடனுவப்பப் பெருங்காதற் றுணைவியரோ டற்றார்க ளருநிதியம் பெற்றாற்போல் அகமகிழ்ந்தே; 71 வள்ளுவர்சொல் இல்லறத்தின் வழிநின்று பழிசேரா நள்ளியபே ரின்பமொடு நனிவாழ்ந்து வந்தார்கள். 72 மேற்படி சிந்து இங்ங னமவர்கள் - இன்புற் றினிது வாழ்க்கையிலே திங்க ளின்மறுப்போல் - உளம் திரிய லானார்கள். 73 உருப்ப டியாக - உள்ளம் ஒன்றி வாழ்ந்தவர்கள் துருப்பி டியிரும்பு - போலத் தொன்ன லந்திரிந்தார். 74 புளியங் காய்போல - உளம் பொருந்தி வாழ்ந்தவர்கள் புளியம் பழம்போல் - உளம் புரைப டலானார். 75 விளைத்த வித்தினைப்போல் - மனம் மேவி யிருந்தவர்கள் முளைத்த வித்தினைப்போல் - மனம் முறுகி வேறானார். 76 குயிலும் தேமாவும் - போலக் கூடியிருந்தவர்கள் வெயிலு நிழலும்போல் - மனம் வேறுப டலானார். 77 உண்டுடுத் துவாழ்வ - தலால் உற்ற பொருட்பெருக்கால் கண்டது வேறில்லை - எனக் கற்றத னைமறந்தார். 78 சோறுந் துணியுமலால் - பெருஞ் சொத்தினைச் சேர்ப்பதனால் வேறு பயனில்லை - எனும் மெய்ம்மை யினைமறந்தார். 79 காலையி னில்தோன்றிப் - பகலில் கடுங்க திர்பரப்பி மாலையி னில்மறையும் - பகலோன் வரன்மு றைமறந்தார். 80 பூத்துப் பொலியுமரம் - அப் பூவுட னேயிலையும் நீத்து நிழலின்றி - வெயிலில் நிற்பதை யுமறந்தார். 81 நீரின் நிரம்புகுளம் - அந் நீரத னையிழந்து காரை யெதிர்பார்த்து - நிற்கும் காட்சியை யுமறந்தார். 82 எனதெ னதெனவே - கண்ட எப்பொ ருளினையும் தனதெ னவிரும்பி - உளம் தருக்கி டலானார். 83 அடைத ருபொருளின் - நிலை யாமை யையறியார் கடைத ருமிகுபே - ராசைக் கடலி டைவீழ்ந்தார். 84 ஆசை மாக்கடலில் - வீழ்ந் தாழ்ந்த ழுந்தியவர் பூசை போல்நாளும் - பொருள் பொருளெ னவலைந்தார். 85 அவனி லுஞ்செல்வன் - தான் ஆகி டவிரும்பி அவனும் இவனும்பே - ராசைக் கடிமை களானார். 86 இன்ன ணமிவர்கள் - மன வியல்ப துதிரிந்தே தன்ன லப்பெருக்கால் - மிகத் தருக்கி டலானார். 87 கல்வி யின்பயனை - வாழும் கடமை யைமறந்து செல்வச் செருக்கினால் - மனம் திரிந்தி டலானார். 88 உடன்பி றப்பினையும் - கூடி ஒருங்கு வாழ்ந்ததையும் மடம்பொ ரமறந்து - மனம் மாறு பட்டார்கள். 89 ஆளுக் காளாக - மனம் அமைந்தி ருந்தவர்கள் தேளுக் கொடுக்கைப்போல் - மனம் திரிந்தி டலானார். 90 அடைந்த மட்கலம்போல் - மனம் அமைந் திருந்தவர்கள் உடைந்த மட்கலம்போல் - பிரிந் தொன்னல ரானார்கள். 91 வலியும் ஆண்மையும்போல் - மனம் மருவி வாழ்ந்தவர்கள் எலியும் பூனையும்போல் - இன் றெதிரிக ளானார்கள். 92 கூம்பும் பாய்களும்போல் - ஒன்று கூடி வாழ்ந்தவர்கள் பாம்புங் கீரியும்போல் - இன்று பகைவர்க ளானார்கள். 93 புண்ணிய ஆன்பாலும் - நீரும் போல இருந்தவர்கள் எண்ணெயுந் தண்ணீரும் - போல் இனப்பகை யானார்கள். 94 வெண்ணில வுமொளியும் - போல மேவி யிருந்தவர்கள் கண்ணிமை யில்லாத - பங் காளிக ளானார்கள். 95 வாயும் கையும்போல் - அன்பு மருவி வாழ்ந்தவர்கள் நாயும் முயலும்போல் - பகை நண்ணிட லானார்கள். 96 வானியும் காவிரியும் - போல மருவி வாழ்ந்தவர்கள் வேனிலும் கூதிரும்போல் - மனம் வேறு படலானார். 97 குஞ்சுங் கோழியும் போல் - ஒன்று கூடி வாழ்ந்தவர்கள் பஞ்சுங் கொட்டையும்போல் - வேறு பட்டிட லானார்கள். 98 பாவும் ஊடையும்போல் - ஒன்று பட்டு வாழ்ந்தவர்கள் ஆவும் பாய்புலியும் - போல் அரும்பகை யானார்கள். 99 பூவும் மணமும்போல் - உளம் பொருந்தி யிருந்தவர்கள் மாவுந் தீவளியும் - போல மாறுப டலானார். 100 இனிமை யுந்தமிழும் - போல இயைந்து வாழ்ந்தவர்கள் பனியும் வெயிலும்போல் - பெரும் பகைகொள லானார்கள். 101 ஓங்கி வளர்மூங்கில் - ஒன்றை ஒன்று தேய்ப்பதுபோல் ஆங்ஙன மேயிவரும் - இகலி அடிதடி போட்டுக்கொண்டார். 102 அருகில் வளர்பயிரைக் - கீழ் அமுக்கு மொருபயிர்போல் ஒருகுடி யில்வளர்ந்தோர் - ஒருவர் ஒருவரை ஈடழித்தார். 103 ஊசற் கயிறுகள் போல் - மனம் ஒன்றி யிருந்தவர்கள் தோசை திருப்பியைப் போல் - இன்று சுடுபகை யானார்கள். 104 ஈன்ற குலைவாழை - தாயின் இன்னுயிர் மாய்ப்பதுபோல் ஈன்ற குடிப்பெருமை - தனை இன்றெனச் செய்தார்கள். 105 தானெனும் ஆணவத்தால் - மக்கட் டன்மை யினைமறந்து நானென வேதருக்கிக் - கால நஞ்சென வாழ்ந்துவந்தார். 106 ஒருவன் உடைமையினை - என் உடைமையென் பானொருவன் இருவரு மிப்படியே - பகைகொண் டிகலியே வாழ்ந்துவந்தார். 107 அண்ணன்மா டாடுகளைத் - தம்பி ஆளைவிட் டோட்டிடுவான் அண்ணனு மவ்வாறே - செய் தடித்துதைத் துக்கொண்டார். 108 தம்பி நிலத்தினைப்போய் - அண்ணன் தனதென வேயுழுவான் தம்பியு மவ்வாறே - செய்து சண்டைகள் போட்டுக்கொண்டார். 109 கூலிக் காளமர்த்து - வலி கொண்டி ருவோரும் ஆலைக் கரும்புபோல் - ஊரை ஆட்டிப் படைத்துவந்தார். 110 ஒன்றியே வாழ்ந்துவந்த - அவ் வூரையி ரண்டாக்கிக் கன்றிய வான்பகைய - இரு கட்சிக ளாக்கிவிட்டார். 111 எள்ளு மியல்புடைய - பல்குழு இல்லது நாடென்ற வள்ளுவர் சொற்கெதிராய் - ஊரை வாட்டி வதைத்துவந்தார். 112 இன்ன படியவர்கள் - செய்வ தேற்ற தல்லவெனச் சொன்னவர் தங்களையும் - கடுஞ் சொற்களி னாலடிப்பார். 113 ஊருக் கடங்காராய்ப் - பெரி யோர்சொல்லைக் கேளாராய் நேருக்கு மாறாக - இருவரும் நெஞ்சு வலித்திருந்தார். 114 தந்தை தகவுரைத்தால் - கையால் தக்க விடைபகர்வார் செந்தமிழ் வாய்திறக்க - தாயும் சிந்தை கலங்கிடுவாள். 115 மந்தையில் கண்கொண்ட - காளை மாடென வேசெருக்கி இந்தப் படியவர்கள் - ஊருக் கின்ன லிழைத்துவந்தார். 116 வேறு எடுபிடி யாட்களைக் கொண்டுமே - அவர் எதிரெதி ராயெதிர்த் தென்றுமே அடிதடி போட்டுக்கொண் டய்யகோ! - ஊரை அல்லோல கல்லோல மாக்கினார். 117 அண்ண னதுகட்சி யாட்களைத் - தம்பி ஆளைவிட் டேயடித் தோட்டுவான்; அண்ணனுந் தம்பியி னாட்களை - எதிர் அப்படி யேசெய் தனுப்புவான். 118 கும்பலாய்க் கூடி யெதிரிகள் - வீட்டைக் கொள்ளை யடிப்பர்; அவர்களும் வெம்பி வெகுண்டுசெய் தங்ஙனே - ஊரை வெம்புலிக் காடெனச் செய்தனர். 119 காலை யெழுந்ததும் ஊரிலே - மக்கள் காண்பது கட்சிக் கலகமே ஆலை படுங்கரும் பென்னவே - ஊரை ஆட்டிப் படைத்தனர் அம்மகோ! 120 ஏரிக் கரையினை வெட்டுவர் - கிணற் றேற்றைப் பிடுங்கி யெறிகுவர் வாரிக்குட் கற்களைப் போடுவர் - ஆற்று வாய்க்காலை வெட்டியே கேடுவர். 121 ஆடு குட்டிகளை ஓட்டுவர் - பண்ணை ஆட்களை அடித்து வாட்டுவர் காடு கரைக்குப்போ காமலே - இன்னும் கண்ட படியெல்லாம் செய்குவர். 122 வேலியை வெட்டி யெறிகுவர் - வெட்டி வேலையென் னென்னவோ செய்குவர் காலிகள் கூலிகள் வாழவே - கட்சி கட்டிக்கொண் டூரைக் கலக்கினர் 123 பூட்டை யுடைத்துவீட் டுக்குள்ளே - போய்ப் புகுந்து தடுப்போரைத் தாக்கியே மூட்டை முடிச்சுக ளுள்ளதை - எலாம் மூட்டை கட்டிக்கொண்டு செல்லுவர். 124 பிள்ளையைத் தாயழச் செய்குவர் - தாயைப் பிள்ளைகள் நின்றழச் செய்குவர் கொள்ளை கொலைகள் புரிகுவர் - செய்யாக் கொடுமைகள் செய்து திரிகுவர். 125 கெடுபிடி செய்வதி லேயவர் - மிகக் கெட்டிக்கா ரரெனச் சொல்லவோ கொடுமைகள் செய்குநர் போலுமே - சொலக் கூசுது நாநமக் கல்லவோ! 126 தானென்று கொண்டு தருக்கியே - அண்ணனும் தம்பியும் எண்ணிய செய்தனர். ஏனென்று கேட்பவர் யாருமே - இனி இல்லையென் றாயதவ் வூரிலே. 127 தாழிசை சிற்றி லிழைத்துச் சிறுமியர்கள் சேர்ந்தே யாடுந் தெருவெல்லாம் வெற்றம் பலமுங் குடிபோன வீடும் போலக் கிடந்தனவே. 128 கோலச் சிற்றில் சிதைந்தோடும் குறுங்காற் சிறுவர் குலமின்றிக் காலைத் தெருவாங் குவரில்லாக் கடைபோல் வறிதே கிடந்தனவே. 129 சின்னஞ் சிறுவர் நடைபழகும் சிறுதேர் செல்லாத் தெருவெல்லாம் தன்னொன் றெழுதாக் கரும்பலகை தனைப்போற் பொலிவற் றிருந்தனவே. 130 பொழுது புலர மாக்கோலம் போடா வீட்டு வாயிலெலாம் அழுது பொழுதைக் கழித்தேங்கும் அறுதலி போல இருந்தனவே. 131 எண்ணு மெழுத்துங் கண்ணெனவே எழுதிப் படிக்கும் பள்ளியெலாம் நண்ணும் விருந்தில் வீடேபோல் நலப்பா டின்றிக் கிடந்தனவே. 132 கொல்வேல் விழிமென் கொடியிடையார் குடிநீர் கொணரும் ஊருணிகள் செல்வோர் வருவோர் இல்லாத தேநீர்க் கடைபோல் கிடந்தனவே. 133 மெல்லாக் கரும்பு நல்லியலார் விளையாட் டயரும் வெண்ணிலவு வல்லே கடலில் பெய்மழைபோல் வறிதே வீசிக் கழிந்ததுவே. 134 வலைபாய் மான்போற் பாவினிடை வல்லே பாய்நூற் றாறெல்லாம் அலைபாய் கில்லாக் கழிச்சங்கின் அவ்வப் படியே கிடந்தனவே. 135 கொட்டித் தட்டிக் கருவிகள் செய் கொல்லம் பட்டறை உலைக்கூடம் அட்டிற் புகுந்து சோறாக்கா அடுப்பே போலக் கிடந்ததுவே. 136 கோடும் வளையும் பொரமகளிர் குடைந்தே யாடுங் குளமெல்லாம் ஆடு மகளிர் இல்லாவா டரங்கு போலக் கிடந்தனவே. 137 குயில்போற் பாடி மயில்போலக் கூடி மகளிர் விளையாட்டுப் பயில்காச் சிறுவர் இல்லாத பள்ளி போலக் கிடந்ததுவே. 138 குரலி னொலியைப் பாவிசையில் கூட்டிப் பாடும் யாழெல்லாம் சிரல்வாய் தப்பித் தரைசேர்ந்த சேல்போல் வாளாக் கிடந்தனவே. 139 மயங்கா மாலை மலரெல்லாம் மலர்ந்து மணமும் வறிதேகப் பயன்பா டில்லாப் பொருள் போலப் பதம்போய்த் தரையிற் கிடந்தனவே. 140 கொழுவால் உலகை வாழ்விக்கும் கொடைநேர் பழன வயலெல்லாம் உழுவா ரின்றி உட்காரா உயர்கம் பளம்போற் கிடந்தனவே. 141 நாற்று நடப்பைஞ் சேறாக்கி நலஞ்செய் திட்ட வயலெல்லாம் வேற்று நிலம்போல் காய்ந்துலர்ந்து வெடித்துப் பாழாய்க் கிடந்தனவே. 142 கிண்ணம் படவே முற்றிமுதிர் கிள்ளுக் கீரைப் புறவெல்லாம் வண்ணம் படவே நறுக்காத மயிர்த்தலை போலக் கிடந்தனவே. 143 பாலைப் பழித்த மொழியார்போய்ப் பறியாப் பருத்திக் காடெல்லாம் காலைத் துவைத்த வெள்ளாடை காயுந் துறைபோ லிருந்தனவே. 144 கொய்யாக் கதிரி லிருந்துமணி குலைந்து கீழே விழுங்காட்சி அய்யோ தாங்கோ மெனப்பயிர்கள் அழுவது போலத் தோன்றிடுமே. 145 காண்டா ரில்லாப் புன்புலத்தில் காய்ந்த தட்டைக் காயெல்லாம் வேண்டா மினித்தாங் கிடவென்றே வெடித்து நிலத்தில் விழுந்திடுமே. 146 மடைக ளுடைந்து புடையிடந்து வறண்ட நிலங்கள் செஞ்சீனப் படைகள் புகுந்த இமயமலைப் பகுதி போலக் கிடந்தனவே. 147 அற்றம் பார்த்துப் புல்மேயும் ஆடு மாட்டுப் பட்டியெலாம் குற்றஞ் செய்யா ரடைபட்ட கொடுஞ்சிறை போலக் கிடந்தனவே. 148 அம்மா அம்மா! எனக்கன்றும் அண்ணாந் தரற்றி அழக்கற்றா சும்மா அடக்க முடியாமல் சுரந்து பாலை நிலமூட்டும். 149 தாய்போற் பயிர்க்குக் கிணறுகளில் தண்ணீர் இறைக்கும் பறியெல்லாம் வாய்போல் சுருங்கிக் கிளையினிடை வௌவால் போலத் தொங்கினவே. 150 இவ்வா றவ்வூர்ப் பொதுமக்கள் இன்னாங் கெய்தி யிருந்தேங்க அவ்வா றவர்க ளிருவோரும் அலையா நின்றா ரவ்வூரை. 151 குறள் வெண்டுறை தாய்போல அன்புடைய தமிழ்க்குடிவந் தோர்கள்வெறி நாய்போலவ் வூரினரை நடுங்கிடச் செய்தார்கள். 152 வான்வெளி வீரர்கள்போல் வாழ்விக்க வந்தவர்கள் கான்வெளி வீரர்கள்போல் கண்கலங்கச் செய்தார்கள். 153 புல்லும் புறவிதழ்போல் பொருந்தி யிருந்தவர்கள் கொல்லும் புலிபோலக் கொடியவர்க ளானார்கள். 154 எருக்கிலம் பூப்போல இன்பா யிருந்தவர்கள் எருக்கிலம் பால்போல இன்னா தவரானார். 155 கட்டிக் கரும்பினைப்போல் கனிவா யிருந்தவர்கள் எட்டிக் கனிபோல இருங்கசப் பானார்கள். 156 தத்தமது தாய்மொழிபோல் தகவொடு வாழ்ந்தவர்கள் தொத்து மயல்மொழிபோல் துன்புறுத்த லானார்கள். 157 ஆய்போல அன்புடைய ராகவிருந் தோர்கள்தொழு நோய்போலவ் வூரினரை நொந்திடச்செய் திட்டார்கள். 158 தேன்கலந்த பாலினைப்போல் தித்திக்க வாழ்ந்திருந்தார் ஊன்கலந்த நஞ்சினைப்போல் ஊறுசெய்ய லானார்கள். 159 வள்ளுவர்செய் வான்குறள்போல் மாண்புடன் வாழ்ந்திருந்தோர் கள்ளுவர்செய் நூல்போலக் கழிகடைக ளானார்கள். 160 ஆவலொடு நல்லெருவிட் டன்போடு நட்டபயிர் சாவையாய்ப் போனதுபோல் தறுதலைக ளானார்கள். 161 யாழி னிசைபோல இனிமையாய் வாழ்ந்தவர்கள் காழி னுனிபோலக் கடியவர்க ளானார்கள். 162 செந்தமிழி னின்சுவைபோல் சேர்ந்தினிது வாழ்ந்தவர்கள் வெந்தழலின் வெம்மையைப்போல் வெய்யவர்களானார்கள். 163 பொடிவைத்த பொன்னகைபோல் பொருந்தியிருந்தவர்கள் வெடிவைத்த கற்சிலைபோல் வேறுபட்டுப் போனார்கள். 164 நல்ல பொருள்கள்கண்டே நாட்டைவாழ் விப்பதுபோய்க் கொல்ல அறிவரணு குண்டுகள் செய்வதுபோல்; 165 உற்ற பொருட்பெருக்கால் ஊரைவாழ் விப்பதுபோய் மற்றதனா லவ்வூர்க்கு வன்கொடுமை செய்தார்கள். 166 உற்றா ருடன்மகிழ ஊர்ந்துசென்ற வானூர்தி மற்றோ ரழுதிரங்க வழியிலே வீழ்வதுபோல்; 167 ஈட்டிவைத்த வான்பொருளால் இன்புற் றிருப்பதுபோய் ஆட்டிவைத்தே யவ்வூரை அலக்கழிக்க லானார்கள். 168 பஞ்சினிற்றீப் பட்டாற்போல் பதைபதைத்தவ் வூர்மக்கள் அஞ்சியஞ்சி வாழ்ந்திடவே அட்டூழி யங்கள் செய்தார். 169 பேணாப் பொதுவுடைமை பேசுமச் செஞ்சீனர் வீணாப்பொன் மண்ணாசை வெறிகொண் டலைவதுபோல்; 170 ஒப்புரவு செய்தூரை ஓம்புதற்குப் போந்தவர்கள் வெப்பெரிபோ லவ்வூரை வெய்தலைத்து வந்தார்கள். 171 நோய்தீர்க்கக் கண்டபொருள் நோய்போல நல்லுயிரைப் போய்தீர்க்க வானதுபோல் பொல்லா தவரானார். 172 வைத்து வளர்த்தகடா மார்பிலே பாய்ந்ததுபோல் ஒத்துவளர்ந் தூரினையின் றுருக்குலையச் செய்தார்கள். 173 மக்கள்நலம் பேணுதற்கு வகுத்தமைத்த ஓர்கட்சி மக்கள்நலக் கேடுசெய்யு மாறுதலைப் பட்டதுபோல்; 174 ஊர்க்கு நலஞ்செய்ய உற்றசெல் வக்குடியோர் ஊர்க்குப் பொறுக்கவொண்ணா ஊறுசெய்யலானார்கள். 175 உடம்பொடு வாழுயிர்போல் ஒன்றி யிருந்தவவ்வூர் கடும்புலி வாழ்கொடிய காடாகப் போயினதே. 176 இன்ன படியவர்க ளிருவருங் கட்சிகட்டி மன்னியவவ் வூரினரின் வாழ்வைக் குலைத்துவந்தார். 177 அல்லும் பகலுமந்தோ! அஞ்சியஞ்சி யவ்வூரார் கொல்லும் புலிக்காட்டிற் குடியிருந்து வந்தார்கள். 178 எண்சீர் விருத்தம் கொடும்புலியுங் கொல்களிறுங் கோட்டு மாவும் கொலைக்கஞ்சா அரிமாவுங் கொத்திக் கொல்லும் கடும்பாம்புங் கனல்கக்கும் நச்சுக் கண்ணும் கடித்தவுடன் உயிர்போக்கும் கருஞ்செந் தேளும் படும்பொருளொன் றின்றெனினும் வேலால் குத்திப் பார்த்துவக்குங் கொடியவரும் பகைவர் போல அடும்பெரிய நச்சுயிர்கள் அனைத்தும் வாழும் அருங்காடாப் போயிற்றந் தோவவ் வூரே! 179 இன்னபடி யுடன்பிறந்த இரண்டு பேரும் எதிரெதிராய்க் கட்சிகட்டிக் கொண்டு நாளும் கன்னலினை ஆலையிலிட் டரைத்தல் போலக் கருங்கூடு கையிலேந்திக் கலக்கங் கொண்டு சின்னபின்னப் பட்டவ்வூர் மக்கள் என்ன செய்வதென அறியாது திகைத்து நிற்க, அன்னவர்தம் மனம்போன படிசெய் யொண்ணா அட்டூழி யங்கள்செய்து வந்தா ரம்மா! 180 பெற்றவர்சொற் கேளாராய் ஊரி லுள்ள பிறர்சொலையும் மதியாராய்ப் பெரிதும் பூசல் உற்றவர்க ளவ்வாறே கொடுமை செய்ய, ஊரிலுள்ள பெரியவர்கள் ஒன்று கூடி மற்றவரும் இவர்களைப்போல் கிளம்பி விட்டால் மண்மேடாய்ப் போய்விடுமூர் எனவே அஞ்சி முற்றியதம் மதிநலத்தால் இனிதி னாய்ந்து முடிவாயேற் பாடொன்று செய்தா ரம்மா! 181 அடற்றகையும் ஆற்றலும்பே ரளவும் கேட்டிற் கஞ்சாத தறுகண்ணும் ஒருங்கே வாய்ந்து படைத்தகையாற் பாடெய்தும் படையே யேனும் படைத்தலைவன் இன்றெனிற்பா டெய்தா தாங்கே, உடைப்பொருளும் குடிச்சிறப்பும் ஒருங்கே யுள்ள ஊரெனினும் அவ்வூரின் ஒருமைப் பாடு தடைப்படுமவ் வூர்முழுதும் தன்சொற் கேட்கும் தலைவனையின் றெனினெனுமத் தகுதி யோர்ந்தே; 182 சிறந்தபொரு ளுடைமையுமப் பொருளுக் கேற்ற செல்வாக்கும் பெருங்குணமும் அறிவும் அன்பும் மறந்துமொரு வருக்குங்கே டெண்ணாப் பண்பும் வாய்த்தவொரு தொல்குடியின் வழியே வந்து பிறந்தவொரு வனையவ்வூர்த் தலைவ னாக்கிப் பின்னெவரும் அவனாணைக் கடங்கி யென்றும் அறந்தவறா திருத்தலினிக் கடனா மென்றே ஆக்கினதே அவ்வேற்பா டாகுந் தானே. 183 ஆங்கவனுக் குறுதுணையாய் அருளும் அன்பும் அயராத ஆள்வினையும் அறிவும் மாண்பும் ஓங்கியபே ருடல்வலியும் ஊறஞ் சாத உறுதியுந்தம் உயிர்போல ஊரை யெண்ணும் பாங்குமொருங் கமைந்தசிலர் தமையன் னான்சொற் படிநடந்தூர் காத்துவரும் படியே செய்து, தீங்கெதுவு மினியில்லா தவ்வூர் மக்கள் சிறந்தினிது வாழ்ந்திருக்கச் செய்தா ரம்மா! 184 இன்னுமவ னவ்வூரை யினிது காத்தற் கேற்பனவெ லாமொருங்கே இயற்றி, மேலும் மன்னியசெல் வாக்குடைய னாக்கி, அன்னார் மற்றுமவற் குரியவெலாம் வகுத்துத் தந்தே `அன்னவனுக் கடங்காரூர்க் கடங்கா ராவர் அவனாணை ஊர்மக்கள் ஆணை யாகும்’ என்னவவர் ஊர்க்கட்டுப் பாடு செய்தே இயலுமுதல் அரசையரங் கேற்றி னாரே. 185 இன்னணமவ் வூர்ப்பெரியோர் ஒன்று கூடி இயற்றியவவ் வேற்பாட்டின் படியே அவ்வூர் மன்னவனாய்த் தோன்றியவத் தலைவ னாங்கு மாறுபட்ட இருவரையும் அடக்கி யொன்றாய்த் தன்னடிக்கீழ் அமைந்திருக்கச் செய்தான்; அன்னான் தலைமையின்கீழ் ஒருசேர அவ்வூர் மக்கள் முன்னியவவ் வேற்பாட்டின் படியே நாளும் முன்னினுமேம் படவாழ்ந்து வந்தா ரம்மா! 186 பெரியவர்கள் கூடியவ்வூர்த் தலைவ னாகப் பெருமையுடன் ஒருமனமாய்த் தேர்ந்தெ டுத்த பெருமகனும் தமதுகுடிப் பெருமைக் கேற்பப் பெரியோர்கள் கட்டளையைத் தலைமேற் கொண்டே ஒருகுறையு மில்லாமல் அவ்வூர் மக்கட் குரியனவெல் லாமுவப்ப ஒருங்கு செய்தே அருமையுட னுயிர்காக்கும் ஒருவன் போல அன்புடனவ் வூர்காத்து வந்தா னம்மா! 187 அத்தகவி னொருகுறையும் அணுகா வண்ணம் ஆருயிர்போ லவ்வூரைக் காத்து வந்த அத்தலைவன் நாளடைவில் அந்த வூரை அடுத்தபல ஊர்களையும் தன்னாட் சிக்குள் ஒத்தினிது வாழ்ந்திடச்செய் தவ்வூர்க் கெல்லாம் ஒப்பற்ற தலைவனாய் விளங்கி வந்தான். இத்தரையி னிவ்வாறே இனிது தோன்றி இயங்கினகாண் பலவரசும் எனக்காண் பீரே. 188 நல்லமண மொடுநிறந்தே னுள்ள பூவை நாடிவரும் வண்டுகள்போல் ஊரைக் காக்கும் வல்லமையும் குறைதீர்க்கும் மாண்பும் கோடா மாட்சிமையும் முறைசெய்யும் மரபுங் கண்டே நல்லனிவன் அமைதியுடன் இவனாட் சிக்கீழ் நாமிருத்தல் நல்லதெனப் பக்கத் தூரார் எல்லவரும் விரும்பியவன் குடிக ளானார் இனிதவனுங் குடிகாத்து வந்தான் றானே. 189 ஆல்பழுத்தால் வௌவாலை வருக வென்றே அழைத்திடவேண் டியதில்லை, அதுபோல் வற்றாக் கால்பழுத்த காவிரியின் வளமிக் கோங்கும் கரையதனில் குடியிருக்க அழைக்க வேண்டா. நூல்பழுத்த ஆட்சிமுறை யதுவே யாகி நுண்ணறிவின் பாற்பட்டு நடக்கு மானால், பால்பழுத்த தெனவிரும்பிப் பக்கத் தூரார் பருகவரு வதுவியப்போ பகரு வீரே? 190 தன்னோடவ் வூர்காக்கத் துணையாய் மேலோர் தந்தவர்க்குப் படைப்பயிற்சி தந்தான் அன்னான். முன்னோடும் பிள்ளைகளாய் அன்னார் தங்கள் முறைகாக்குந் தலைவன்சொற் படிநின் றாங்கே இன்னாத வொருபோதும் அணுகா வண்ணம் இனிதூரைக் கண்ணிமைபோற் காத்து வந்தார். இன்னாரே இவ்வுலகின் அமைதி காக்கும் இயல்மறவர் தமதுகுல முதல்வ ராவர். 191 பாங்குடனவ் வூர்த்தலைவன் தன்னாட் சிக்குட் பட்டபல வூரினரும் பன்மை யின்றி ஓங்கியவோர் குலைக்காய்போல் ஒருமையாகி ஒற்றுமையாய் ஒருமுகமாய் வாழ்ந்துவந்தார். ஆங்கொருவன் ஆட்சிக்கீழ் அமைந்த தான அப்பகுதி நாடென்னும் நற்பேர் பெற்றுத் தேங்குதிரைக் கடலுலகின் ஆட்சிக் கெல்லாம் சிறப்பிடமாய்க் கால்கொண்டு சிறந்த தம்மா! 192 எங்குநிலை கொள்ளாதிச் சொந்த நாட்டில் எவ்வூருந் தம்மூராய் இனிதாங் காங்கே தங்கியநா டோடிகளாய் வெறுமை வாழ்வு தான்வாழு நரிக்குறவர் களுந்தங் கட்குள் அங்கொருவன் தனைத்தங்கள் தலைவ னாக்கி அடங்கியவன் ஆணைக்கீழ் ஒன்று கூடி இங்குகுடி மக்களைப்போல் இயன்று வாழும் இக்குறவர் ஏற்பாடே இதற்குச் சான்றாம். 193 இன்றுநம தூர்தோறும் இருப்போ ரெல்லாம் இனவாரி யாய்ப்பிரிந்தும் இயல்பின் வாழ ஒன்றியசெல் வாக்குடைய ஒருவர் தன்னை ஊர்த்தலைவர் இனத்தலைவர் ஆக்கிக் கொண்டு நன்றவர்கள் தமைக்கொத்துக் கார ரென்றும் நாட்டாண்மைக் காரரென்றும் நயந்தே வாழ்தல் தொன்றுதொட்டு நிலவிவரும் மரபே யன்றோ? துணைசெய்யு மிதற்கென்றல் துலக்க மாமே. 194 இம்முறையி னாலுலகில் நாடு காக்க ஏற்பாடு செய்ததனால் அரசு தோன்றி அம்முறையே நாளடைவில் உலக மெல்லாம் ஆட்சிமுறை ஏற்பட்டே அந்த ஆட்சி செம்முறையில் நடந்துவரத் தேயந் தோறும் செழித்தோங்கிப் பலவரசாய்த் திகழச் சில்லோர் தம்முறையால் நாட்டரச ராகிப் பாரில் தன்னாட்சி நடத்தியதுந் தானுண் டாமே. 195 தோள்வலியால் பொருள்வலியால் சூழ்ச்சி தன்னால் சொல்வன்மை யாலறிவால் துடுக்க ரான ஆள்வலியால் யாமுமிவ்வூர்த் தலைவ ராகி அரசிருக்க வேண்டுமெனும் ஆசை தன்னால் வாள்வலியால் கெடுபிடிசெய் வலிமை தன்னால் வன்முறையால் வணங்காரை வணக்கி மிக்க தாள்வலியால் முயன்றுசிலர் அவரைப் போலத் தாமாகத் தாந்தோன்றித் தலைவ ரானார். 196 அமைதியுடன் ஊர்காக்கப் பெரியோர் தம்மால் ஆய்ந்தினிதேற் படுத்தியவத் தலைவர் சில்லோர் அமைதியுடன் ஊர்வாழ்தற் கெதிராய் நாளும் அஞ்சியஞ்சி வாழ்வதற்கே அரச ரானார். அமைதியுடன் ஊர்மக்கள் இனிது வாழ அக்கொடியோர் தமையடக்கி அந்த நாட்டைத் தமதாக்கிக் குடிகாத்து வந்த தாலித் தாரணியிற் பேரரசு தான்றோன் றிற்றே. 197 மிடைவலியால் ஒருசிலபேர் ஊரைக் காக்க மேலோரால் ஏற்படுத்த முறையை விட்டு நடைமுறையால் பேரரசாய் வாழ மேலும் நாட்டாசை பிடித்துந்த நயனி லாத படைவலியால் பக்கத்தே பாங்கி னாண்ட பலவரசை வென்றடக்கிப் பணியா வொற்றைக் குடையரசாய் விளங்கிவந்த கொடுமை யாலும் குவலயத்தில் பேரரசுக் குலந்தோன் றிற்றே. 198 இல்லரச ரேயவ்வூர்க் கிறைவ ராக இயன்றுபடிப் படியாய்நாட் டரசரான தொல்லரச மரபினில்கால் வழியாய் வந்து தோன்றிநரும் அரசர்களாய்த் தொடர்ந்து நாளும் நல்லரசு புரிந்துமுறை பிறழா வண்ணம் நாட்டினிலே அமைதிநிலை நாட்டி னார்கள். வல்லரச ராயுலகை மரபின் ஆண்ட மாவரச மரபையினி வகுத்துச் சொல்வாம். 199 கட்டளைக் கலித்துறை தரிசு கிடந்த நிலத்தினைப் பண்படத் தான்றிருத்திப் பரிசு படவிளை வித்துநல் வாழ்வுறும் பான்மையைப்போல் வரிசை படக்குடி மக்களைக் காத்திட மாநிலத்தில் அரசு பிறந்த கதையிது வாமென் றறிகுவிரே. 200 2. அரச மரபு சிந்து அரசு பிறந்தகதை - இஃ தாமென வினிது தாமுரைத்தாம் வரிசை யுடனந்த - அரச மரபினை யினிதினி வகுத்துரைப்பாம். 1 ஊரினைக் காப்பதற்குப் - பெரி யோர்களால் முதல்முதல் உலகினிடைச் சீருடன் நாட்டுவித்த - அரசு சிறப்புடன் கிளைத்துச் செழித்ததுவே. 2 செழுங்குடிச் செல்வர்களால் - அன்று சீருடன் நாட்டிய ஊரரசு ஒழுங்குடன் நாட்டரசாய் - பின்னர் உலகர சாய்த்தழைத் திலகியதே. 3 இங்ஙன முலகினிடை - அர சேற்பட் டதுபல பாற்படவே. தங்கிய அரம்பையின்கீழ்க் - கன்றும் தானதன் பின்மர மாவதுபோல்; 4 மன்னவர் மைந்தர்களே - அம் மன்னர்பின் மன்னராய் வரன்முறையாய் மன்னர்க ளானார்கள் - அவர் மைந்தரு மன்னர்க ளானார்கள். 5 அரசின் இளங்கொம்பு - இள வரசாய் வளர்ந்தர சாவதுபோல் அரசரின் மைந்தர்களும் - இள வரசா யிருந்தர சானார்கள். 6 தலைமுறை தலைமுறையாய் - வரும் தந்தையின் பின்னவர் மைந்தர்களே தலைவர்க ளானதினால் - மக்கள் தலைவர்க ளெனவோ ரினமானார். 7 பலதலை முறைசெலவே - மக்கட் பன்மையை ஆண்டிடத் தொன்முதலே உலகத னிடைவந்து - பிறந் தோரென மதித்திடும் உயர்வடைந்தார். 8 வாழையி னடிவாழை - என மன்னவர் பின்னவர் மைந்தர்களே ஆழிசூ ழுலகதனை - அர சாண்டிடு முரிமை பூண்டார்கள். 9 அரசனி லாநாடு - நாடா காதென மதிப்புடன் ஓதிடவே வரிசையா யுலகினிடை - அரச மரபுகள் விளங்கின பெருமையுடன். 10 தோன்றிய முதல்தெரியா - மிகு தொன்மையா யரசியல் வன்மையொடு வான்றரு மழைபோல - நாட்டு மக்களைக் காத்துமே வந்தார்கள். 11 உழவன் மகனுழவன் - அவன் உழுதொழில் எளிதினிற் பழகிடுவான். மழவன் மகன்மழவன் - அவன் மறத்தொழி லினில்மிகச் சிறப்புறுவான். 12 கொல்லன் மகன்கொல்லன் - அவன் கொற்றொழில் எளிதினில் கற்றிடுவான். மல்லன் மகன்மல்லன் - அவன் மற்றொழில் தனிற்புகழ் பெற்றிடுவான். 13 வணிகன் மகன்வணிகன் - எளிதில் வணிகத்தின் இயல்பினை வகுத்தறிவான் கணிவன் மகன்கணிவன் - நூலின் கருத்தினை எளிதினில் கணித்தறிவான். 14 அவரவர் குலத்தொழில்கள் - கல் லாமலே எளிதினில் அமைவனபோல் துவளறக் குடிகாக்கும் - ஆட்சித் தொழிலுமவ் வாறே எளிதமையும். 15 குலமயில் ஆடுவதைப் - பார்த்துக் குஞ்சுக ளாடிப் பழகுதல்போல் நிலமகன் அரசியலை - மகனும் நேரினிற் பார்த்துப் பழகிடுவான். 16 இம்முறை அரசியற்கும் - ஏற்கும் எனப்பெரி யோர்தேர்ந் தெடுத்தார்கள். அம்முறை யினில்நாட்டை - இள வரசனும் அரசனும் ஆண்டுவந்தார். 17 தமிழரசர் அத்தகு வழிமுறையில் - அமைந் ததன்படி உலக முதலரசாய் முத்தமி ழகமதனை - ஆண்டனர் முறையொடு பழந்தமி ழிறைவர்களும். 18 நன்னெறி யினில்நாட்டை - ஆள நலத்தகை யொருவனைக் குலப்பெரியோர் மன்னவ னாக்கினமை - போல வந்தது வேதமிழ் மன்னர்குலம். 19 பெரியவ னிறந்திடவே - அவன் பிள்ளையை நாட்டவ ரெல்லவரும் அரியணை தனிலேற்றும் - பிள்ளை யாட்டெனுந் துறையதன் காட்டாகும். 20 குடிமுறைத் தொழில்போலச் - செங் கோன்முறை பழகிய குடிமரபே முடியுடை மூவேந்தர் - கோன் முறைபிற ழாவகை நெறிபுரந்தார். 21 பழந்தமிழ்க் குடிமரபில் - வந்த பாண்டியர் சோழர் சேரரெனும் செழுந்தமிழ் மூவர்களும் - சீருஞ் சிறப்புடன் ஆண்டனர் முறைப்படியே. 22 யாவரும் இயல்பாக - அமைதியாய் இன்புடன் வாழ்ந்திட அன்புடனே மூவரும் முறைபுரந்தார் - அம் முதுதமி ழகத்தினைப் பொதுவறவே. 23 வடபெருங் கல்லிமயம் - பெரு மாக்கட லாகநல் வளமிகுதென் கடல்வள நாடாக - இருந்த காலதில் தமிழர்செங் கோலிருந்தார். 24 தீப்பிழம் பாச்சுழலும் - ஞாயிற்றிற் சிதறிய வோர்பொறி யேயுலகாம். ஆப்பழம் பொறிமுதலில் - சூ டாறிய ததனடுக் கூறதுவாம். 25 ஆடிடும் பம்பரத்தின் - நடுவிட மதுசுழல் வதுபோல் உலகநடுக் கோடிடம் மிகச்சுழல - முதலில் குளிர்ந்ததவ் விடமுயிர் மலர்ந்திடவே. 26 ஆதலால் அவ்விடமே - பழந்தமி ழகமெனு முதலர சகமாகும். ஈதலால் தமிழர்களின் - அர சியற்பழம் பெருமைக் கயற்சான்றேன். 27 அப்பழந் தமிழ்மக்கள் - பேசிய அம்முதன் மொழியே ஆங்காங்கின் வெப்பதட் பினுக்கேற்ப - வெவ் வேறுபன் மொழியாய் விரிந்ததுவே. 28 அலகு படவியலா - அக்கால் அமைதரு மப்பழந் தமிழகமே உலக முதன்மாந்தர் - தோன்றிய உறையுளென் றறிவர்க ளறைகுவரே. 29 பருவளக் குமரியொடு - தெற்கில் பஃறுளி யாறளப் பருவளஞ்செய் பெருவள நாடெனப்பேர் - பெற்றுப் பெருமையோ டிருந்ததப் பெருநாடு. 30 பாயிரம் பனிக்கடலின் - வடக்கில் பருவளக் குமரி யதன்தெற்கில் ஆயிரங் கல்லதினும் - அகன்ற அப்பெரு வளநா டொப்பிலதாம். 31 கமரிடைக் கயல்பிறழும் - செழுங் கழனிகள் சூழிரு கரையிலகும் குமரிபாய் தருதலினால் - அதனைக் குமரிநா டென்றனர் தமிழர்களே. 32 நனிவள மிகுகுமரி - நாடு நாற்பத் தொன்பதுள் நாடுடைய இனிமையி னிருப்பிடமாய் - அமைந் திருந்தது தமிழ்மகள் விருந்தயர. 33 நப்பெரு நலமெல்லாம் - அமைந்த நானில மதிற்பழ மாநிலமாம் அப்பெரு வளநாட்டை - இனி தாண்டவர் பாண்டியர் ஆவார்கள். 34 நன்புலம் படத்தமிழர் - நனி நாகரி கத்தொடு வாகுறவே தென்புல மதையினிதே - ஆண்டனர் தென்னராம் பாண்டிய மன்னவர்கள். 35 நிலந்தரு திருவுடைய - முந் நீர்விழ வயர்நெடி யோனிறுவாய்க் கலந்தரு கடற்செழியர் - வழிவழி காத்ததை மாப்புகழ் பூத்தனரே. 36 தன்னிகர் தமிழன்னை - முதற் சங்கத் திருந்தது மங்கலமாய் மன்னுபஃறுளியாற்றின் - கரைவாய் மதுரையே யாமெனு முதுதமிழ்நூல். 37 அப்பெரும் பழநாட்டைக் - கடல் அள்ளியே உண்டபின் அதன்வடபால் தப்பிய தமிழகத்தை - வந்து சார்ந்தனர் பாண்டியர் தீந்தமிழ்போல். 38 குமரிக் கரையதனில் - அமைந்த கோநகர் மதுரையில் தானிருந்து தமரிற் குடிபுரந்தார் - அதையும் சாப்பிடக் கடல்வையைப் பாற்படர்ந்தார். 39 இவையே முச்சங்கம் - ஆகும் என்பதை யறிவீர் தென்புலத்தீர் அவையே பாண்டியர்கள் - முறையே ஆண்டமுந் நாடென அறிந்திடுவீர். 40 அக்கொடுங் கடல்கோளால் - பஃறுளி யாற்றொடு குமரி பாற்றிடவே மிக்கசெந் தமிழ்நாட்டை - மூவரும் விரும்பியே ஆண்டனர் அரும்பொருள்போல். 41 புலவர் புகழ்பாடும் - வையையும் பொன்னியும் பொருநையும் தன்னிகரில் குலவு வளம்பலவும் - ஒருங்கு கூடிய முத்தமிழ் நாடதுவாம். 42 வண்புகழ் மூவரெனத் - தொல்லோர் வழங்கிய மூவரும் ஒழுங்குடனே தண்பொழில் வரைப்பென்னும் - பழந் தமிழகந் தனையினி தாண்டுவந்தார். 43 திங்கள்வெண் குடைநிழற்ற - நன்கு சேரரும் சோழரும் பாண்டியரும் மங்கல மொடுபுரந்த - தமிழ் மாநில மதுதமிழ் நானிலமாம். 44 வேயிடை முத்தொளிரும் - வட வேங்கட மொடுதெற் காங்குமரி ஆயிடைத் தமிழ்கூறு - நல்லுல கத்தினை யாண்டனர் ஒத்தினிதே. 45 அறுசீர் விருத்தம் மூத்து முதிர்ந்த முதுக்குடியில் முறையே வந்த முதற்குடியில் பூத்து மணக்கும் பொன்போலப் புலவோர் கண்ட பொருள்போலத் தேத்து மணக்கும் திறல்மேய சேர சோழ பாண்டியரென் றேத்து மரபே தமிழரசர் இயலு மரபென் றறிவீரே. 46 அயலரசர் மேற்படி சிந்து செழுஞ்சா வகஞ்சீனம் - பார சீகஞ்சு மேரியம் சாலடியம் எழும்பா பிலோன்யவனம் - உரோமம் ஏலம் கிரேக்கம் எகுபதியம். 47 கீழ்த்திசை மேற்றிசையில் - வளங் கெழுமிய நாடு களினும்பலவே வாழ்த்திசை முழங்கிடவே - முடி மன்னர்தம் அரசியல் மன்னியவே. 48 மீயுயர் வேங்கடத்தின் - வடபால் விண்ணுயர் பனிமலை திண்ணுறவே ஆயிடைப் பலநாட்டை - அர சாண்டனர் மணிமுடி பூண்டுபலர். 49 கங்கை சிந்துவங்கம் - மகதம் கலிங்கம் குருபாஞ் சாலமச்சம் அங்கம் மிதிலையுஞ்சை - கோசலம் அவந்தி முதலவந் நாடுகளாம். 50 வழிவழி வடவரசர் - மேலும் வகுத்தனர் நாடுகள் மிகுத்திடவே மொழிவழி நாடுகளும் - பின்னர் முகிழ்த்தன பலப்பல முறைப்படவே. 51 அவ்வட நாடுகளோ - ஐம்பத் தாறென வரையறை கூறிடுவர். செவ்விய நெறிசெல்லா - மன்னரால் சென்றன பலசில நின்றனவே. 52 கட்டுக்கதை வடவரசர் அவ்வட நாட்டரசர் - நா ளடைவினில் தங்க ளுடைமரபை இவ்வுல கினையாள - வானின் றிழிந்துவந் தவரென மொழிந்தனரே. 53 விண்வெளி தனிற்காணும் - வியாழனும் வெள்ளியுஞ் சனிசெவ் வாய்புதனும் மண்வெளி தனையாளும் - கதிரும் மதியுமெங் குலமுத லெனவுரைத்தார். 54 மண்ணவர் மதித்தறியா - உயர் வான்வெளிக் கோள்களின் மரபெனவே கண்ணிய மொடுநம்பக் - கட்டுக் கதையினைப் புதுவதாய்க் கட்டிவிட்டார். 55 திங்களும் செங்கதிரும் - முன்பு செப்பிய கோள்களும் ஒப்புறவே இங்குள மக்களினும் - உயர் வெய்திய தேவர்க ளெனவுரைத்தார். 56 மக்களில் மிக்குயர்ந்தோர் - உயர் வானுறை தேவர்கள் தானெனவே மக்களில் மிக்கவரும் - எண்ணி மதித்திட மதிப்பொடு வாழ்ந்துவந்தார். 57 செங்கதிர் வழிவந்தோர் - எனவும் திங்களின் வழிவந் தோரெனவும் தங்களின் வழிமுதலை - மக்கள் தம்மினும் வேறெனத் தாமுரைத்தார். 58 பலதலை முறையளவே - ஆண்ட பாரத ராமா யணவரசர் இலகுவெண் செங்கதிரின் - மர பெனவறைந் திடுமவ் விருநூலும். 59 காசிபன் அதிதியெனும் - பெற்றோர் காதலன் கதிரவன் காதலியாம் மாசிலாச் சஞ்ஞிகைமுன் - பெற்ற மகன்வை வசுவத மனுவென்பான். 60 வைவசு வதமனுவின் - செல்வ மகனவன் இட்சு வாகுவென்பான் கைவரு மவன்வழியோர் - செங் கதிரவன் மரபெனுங் காவலர்கள். 61 தசரத குலராமன் - அரிச் சந்திரன் முதலியோர் இம்மரபில் வசையறப் போந்துலகை - ஆண்ட மன்னர்க ளாமெனப் பன்னிடுவர். 62 அத்திரி அனசூயை - பெற்ற அரும்பெறற் புதல்வன்வெண் மதிகுருவின் பத்தினி தாரைதனைக் - கூடிப் பயந்தவன் புதனெனப் பகர்ந்திடுவர். 63 பாண்டவ கௌரவர்கள் - இப் பனிமதி மரபென இனிதுரைப்பர். ஈண்டுரை யிக்கதையை - ஆமென இன்றுநம் பாதவர் எத்தனைபேர்? 64 மக்களில் மிக்கவனை - மேலோர் மன்னவ னாக்கிய மரபிருக்க மக்களைக் காத்திடுவோர் - தேவர் மரபென மயங்கிட வைத்தனரே. 65 இயற்கையின் இயல்முறையை - ஆராய்ந் தெரிகதிர் மதியின் இயல்பதனைச் செயற்கையின் படியறிவர் - கண்டு செப்பிய தோடிதை ஒப்பிடுவீர். 66 தமிழரசர் இத்துடன் நின்றனரா? - இல்லை, இங்ஙன மேபழந் தமிழரசர் முத்தமிழ்க் குடிமரபைத் - தேவர் முதல்மர பாமென மொழிந்தனரே. 67 திங்களின் வழிவந்தோர் - பாண்டியர் செங்கதிர் வழிவந் தோர்சோழர் இங்ஙன மவர்மரபை - அறி வீரெனப் பொய்க்கதை கூறினரே. 68 பொருந்தாப் பொய்க்கதையை - உண்மைப் பொருளெனக் கொண்டே மருளுணர்வால் அருந்தா அமிழ்தேபோல் - தமிழ் அரசர்தம் மரபினை ஆக்கிவிட்டார். 69 அத்தமிழ் மூவர்களில் - ஒருவர் ஆகிய சேரர் மரபினுக்கோ இத்தகு குலமரபு - இல்லா திருப்பதே யிதுபொய்க் கிருப்பிடமாம். 70 தம்மினத் தலைவரெனும் - உணர்வு தலைப்படா வகைசெய் கலப்படமே இம்முறை யாகுமெனத் - தமிழர் இனியே னுந்தெளிந் திடுவாரே. 71 அறுசீர் விருத்தம் இன்னுமொரு கதைகேளீர் மதியின்மகன் புதனென்பான் ஈன்ற மைந்தன் மன்னுபுரூ ரவன்மைந்தன் ஆயுவென்பான் மகன் நகுடன் மகன்ய யாதி அன்னவன்றன் மகன்புரூ அவன்வழிவந் திட்டோனா சிரிதன் ஆவான் இன்னவனீன் றெடுத்தவர்க ளேசேர சோழபாண் டியரென் போர்கள். 72 ஆசிரிதன் ஈன்றெடுத்த அம்மக்கள் மூவருமா ளாகிப் பின்னர்ப் பேசுமர சில்லாது கிடந்தவிந்தத் தென்னகத்தைப் பிரித்து மூன்றாய் மாசிலவாய் நூனெறியின் முறைபிறழா வகையாண்டு வந்த தாலே வீசுபுக ழார்சேர சோழபாண் டியநாடாய் விளங்கிற் றென்ப. 73 இத்தகைய பொய்க்கதையைப் பிற்காலத் தமிழர்கள்மெய் யெனவே நம்பி முத்தமிழர் முதுக்குடியின் மூத்தமுதுக் குடியான மூவர் தம்மை அத்தகைய தேவர்மர பாமென்று கொண்டகருத் ததைவே ரோடு கத்தரித்துத் தமிழரசர் மரபினைத் தூய் தாக்குதல்நம் கடமை யாமே. 74 கட்டளைக் கலித்துறை மின்னி விளங்கி விலைமதிப் பாகி மிசைபொலியும் பொன்னி னொளியினை மூடிய மாசினைப் போக்குதல்போல் மன்னு மரச மரபினை மூடிய மாசகற்றி அன்ன வரச மரபிது வாமென் றறிகுவிரே. 75 3. பழந்தமிழாட்சி 1. அரசியல்முறை 1. இறைமாட்சி சிந்து மாட்சிமை யாய்முடி மன்னர்கள் - குடி மக்களைத் தாயினு மன்புடன் ஆட்சி புரிந்த முறையினை - இனி தாய்ந்தடை வாயெடுத் தோதுவாம். 1 தொன்று பழந்தமிழ் நாட்டினைச் - சேர சோழபாண் டியரெ னப்படும் துன்று முடியுடை மூவரும் - தமிழ்ச் சொல்லென ஆண்டன ரல்லவோ! 2 மண்புகழ் மன்னர் மரபிலே - முதல் மன்னர்க ளென்றுதொல் காப்பியர் வண்புகழ் மூவர் எனத்தமிழ் - மொழி வாயுற வாழ்த்து மரபினார். 3 வெந்திற லோடு விறலுடை - வட வேங்கடங் குமரி யாயிடைச் செந்தமிழ் கூறு நிலத்தினை - மூவரும் சீருடன் ஆண்டு சிறந்தனர். 4 வாளிடை யாடிடுங் கூத்திபோல் - குடி மக்களை யன்புடன் காத்துமே ஆளு முறையினில் நின்றுமே - அர சாண்டனர் மூவரும் அன்றுமே. 5 குஞ்சை யணைத்திடும் கோழிபோல் - பகை கொண்டவ ரண்டிட லின்றியே தஞ்ச மெனக்குடி மக்களைப் - பெற்ற தாயினு மன்பொடு காத்தனர். 6 குன்றினை யன்ன குறைகளும் - பகல் கூடிருள் போலகன் றோடவே கன்றினை யோம்புங் கறவைபோல் - குடி காத்துமே கோன்முறை மூத்தனர். 7 நாவலர் சொற்பொருள் நாடியே - நாட்டு நன்மையும் வன்மையுங் கூடியே காவலர் என்பதற் கேற்பவே - குடி காத்துமே வண்புகழ் பூத்தனர். 8 கல்வியுங் கேள்வியு முற்றியே - ஆய்ந்து கற்ற வழியைப்பின் பற்றியே கல்விகல் லாமையை யெற்றியே - குடி காத்துமே நல்லிசை யாத்தனர். 9 நுண்ணிய நூன்முறை யாய்ந்துமே - தகு நுண்மாண் நுழைபுலம் வாய்ந்துமே கண்ணிய தண்ணருள் தோய்ந்துமே - குடி காத்துச்செங் கோன்முறை மீத்தனர். 10 அறம்பொரு ளின்பங்கள் முற்றியே - முன்னோர் ஆட்சி முறையைப்பின் பற்றியே மறம்படு தீதினை யெற்றியே - குடி மக்களைக் காத்தன ரொக்கவே. 11 காட்சிக் கெளியவ ராகவே - வெங் கடுஞ்சொற் பயிலாது போகவே மாட்சிக் குரியன செய்துமே - குடி மக்களைக் காத்துமே வந்தனர். 12 பொருள்வரு வாயைக் கவித்துமே - மலை போற்பொரு ளீட்டிக் குவித்துமே அருளொடு மக்களுக் குப்பயன் - பட ஆக்கியே வான்புகழ் தேக்கினர். 13 ஊக்கமோ டாண்மைமிக் கோங்கவே - மடி ஓடி யொளித்துப்பின் வாங்கவே ஆக்கமோ டஞ்சாமை வீங்கவே - அறத் தாற்றினில் மக்களைப் போற்றினர். 14 அஞ்சிக் குடிகளய் யோவென - நொந் தழவெரு வந்தசெய் யாமலே வஞ்சிக் கொடியன்னார் வாழ்த்தவே - இறை மாட்சியோ டாட்சி புரிந்தனர். 15 ஓர்ந்துகண் ணோடா தெவர்கணும் - நிகழ் உண்மையை யுள்ளுற யாங்கணும் தேர்ந்ததற் கேற்ப வொறுத்துமே - முறை செய்துல கப்பழி கொய்தனர். 16 ஈயா திவறும்பண் பின்றியே - நாளும் இன்சொ லுடனீகை யொன்றியே மாயாச் சினஞ்செருக் கன்றியே - இறை மாட்சி யுடனர சோச்சினர். 17 சிற்றினஞ் சேரா தகன்றுமே - தமிழ்ச் செல்வப் பெரியாரை யென்றுமே நற்றுணை யாக்கொடு நின்றுமே - அறம் நாடியே கோன்முறை கூடினர். 18 வரிவரி யென்றுங் கன்றியே - குடி மக்களை வாட்டுத லின்றியே உரிய முறையினை யொன்றியே - கொண் டொப்புர வுசெய்தா ரெப்பவும். 19 கருமங் கெடாதுகண் ணோடியே - என்றும் கையிகந் ததண்ட மூடியே ஒருமை யுறமுறை நாடியே - குடி ஓம்பியே தீநெறி கூம்பினர். 20 உண்மை நிலையை யறிந்துமே - கடி தோச்சியே மெல்ல வெறிந்துமே திண்மையோ டன்மை தெரிந்துமே - முறை செய்துமே நன்மதிப் பெய்தினர். 21 கால மிடம்வலி கண்டுமே - இடுக் கண்ணழி யாதுவப் புண்டுமே நூலின் முறையினைக் கொண்டுமே - அறம் நோக்கியே ஆண்டனர் ஊக்கமாய். 22 கொடியவன் என்னுஞ்சொல் விஞ்சியே - தங் குடிபழி தூற்றுதற் கஞ்சியே படுபழி நாணிக் குடிகளைப் - பரி பாலனம் பண்ணினர் ஏலவே. 23 குற்றங் குறைக ளகற்றியே - செங் கோன்முறை கோடா தியற்றியே சுற்றந் தழீஇநட்பு முற்றியே - மேலோர் சொன்முறை யாண்டனர் நன்முறை. 24 திட்பமுந் தூய்மையும் நட்புற - வினை செய்து பகைத்திறங் கொட்புற ஒட்பமும் வாய்மையும் பெட்புற - முறை ஓங்கவே செங்கோன்மை தாங்கினர். 25 நன்னிலை நின்று நவையறத் - தமிழ் நானிலந் தன்னை நலனுறத் தன்னிலை நாடித் தகவுறக் - குடி தாங்கியே வான்புக ழோங்கினர். 26 மக்களுக் காகவே மன்னவர் - எனும் வாய்மை யுணர்ந்துமே யன்னவர் அக்கறை யோடுதம் மக்களைத் - தமிழ் அன்னை யுவந்திட ஆண்டனர். 27 அடிக்கடி நாட்டினைச் சுற்றியே - ஆளும் அலுவல ரோடதி காரிகள் குடிக்கிடர் செய்திடாப் பெற்றியே - உறக் கோன்முறை காத்தனர் மேன்முறை. 28 மாப்பகை வெயில்கா யாவணம் - வெண் மதிக்குடை நீழலோ வாவணம் காப்புடைச் செங்கோல்கோ டாவணம் - குடி காத்துமே மாப்புகழ் பூத்தனர். 29 இன்னுங் குடிகளுக் கென்னென - குறை என்பதை யாய்ந்தரும் பொன்னென அன்னவை மேவுறத் தன்னென - நாளும் ஆவன செய்தனர் மூவரும். 30 2. நாட்டாட்சி நாட்டைப் பலசிறு நாடுகள் - ஆக நல்லர சாட்சி நடக்கவே வீட்டைப் பலவறை மேவவே - கட்டும் மேதக விற்பிரித் தாண்டனர். 31 பண்ணையில் நன்குநீர் பாயவே - சிறு பாத்திகள் கட்டுதல் போலவே நண்ணியல் பீட்டிட நாட்டினைச் - சிறு நாடுக ளாப்பிரித் தாண்டனர். 32 அன்னவுள் நாடொவ்வொன் றுங்குடி - மக்கள் ஆட்சியின் பாற்பட் டணிமுடி மன்னவர் கீழிருந் தேமுடி - சூடா முன்னவர் களாண்டு வந்தனர். 33 வீரங் கொடைபுகழ் மூன்றுமே - மன்னர் மேவும்பண் பாடெனத் தோன்றுமே - அதன் சார மெனப்படும் அன்னவர் - தாய் தந்தைபோல் நாடாண்டு வந்தனர். 34 வேளிர் எனப்பெயர் பெற்றிடும் - உயர் மேழிக் கொடிச்செல்வ முற்றிடும் ஆளு முறையறக் கற்றிடும் - உயிர் அன்னரே உள்நாட்டு மன்னவர். 35 கோன்முறை மூவர் பெருமையும் - பெண் கொண்டு கொடுக்கும் உரிமையும் மேன்முறை யாளும் அருமையும் - மேய வேளிரே மூவர்கீ ழாளுநர். 36 மூன்று பெருநில மன்னரும் - அவர் மூவரின் கீழ்வழி யாவரும் ஆன்ற குறுநில மன்னரும் - தமிழ் ஆட்சி புரிந்தனர் மாட்சியாய். 37 தாயெனச் சேயென அன்புடன் - குடி தாங்கியே மன்னர்க ளோங்கினர். சேயெனத் தாயென அன்புடன் - தமிழ்ச் செல்வக் குடிகள் சிறந்தனர். 38 கோல்வளை யாது குடிகளைக் - காத்தல் கோன்முறை யானசெங் கோன்முறை நூல்வளை யாதுநன் னூன்முறை - தனை நோக்கியே நன்முறை யாக்கினர். 39 ஊராட்சி வழிவழி யாகச்செல் வாக்குடன் - வாழ்ந்து வருங்குடி யொன்றன் தலைமையில் மொழிவழி நின்றொவ்வோ ரூரரும் - நன் முறையொடு வாழ்ந்துமே வந்தனர். 40 சின்னஞ் சிறுவூரே யாயினும் - ஒரு செல்வப் பழம்பெருந் தொல்குடி தன்னைத் தலைமையாக் கொண்டுமே - என்றும் தானடங் கிவாழ்ந்து வந்தனர். 41 மலைதலை மேல்வந்து வீழினும் - ஊரில் மண்மாரி கன்மாரி பெய்யினும் தலைவர் சொலையொரு போதினும் - ஊரார் தட்டாமல் வாழ்ந்துமேம் பட்டனர். 42 தங்கிளை போலவே கொண்டுமே - ஊர்த் தலைவரவ் வூர்நலங் கண்டுமே திங்களை நேரருள் உண்டுமே - ஊரைச் சீருடன் ஓம்பினர் என்றுமே. 43 குற்றங் குறைகளி லாமலே - மனம் கோடியுட் பகைகொ ளாமலே மற்றவர் செற்றமு றாமலே - ஊரை வள்ளுவத் திலோம்பி வந்தனர். 44 நானிலம் மற்று மியற்கை யமைப்பினை - ஒட்டி மாட்சியாய் ஆட்சி நடக்கவே நற்றமிழ் நாடு முழுமையும் - இயல் நானில மாப்பிரித் தாண்டனர். 45 வேறு - சிந்து மருவி முகில்வாழு மரங்கள் - வளர் மலையும் மலைசார்ந்த இடமும் ஒருவன் ஒருத்தியெதிர்ப் பட்டுப் - புணர்தற் குரிய குறிஞ்சிநில மாகும். 46 கனியுங்கா யுங்கூல வகையும் - தரும் கானும் கான்சார்ந்த இடமும் இனிய தலைமகனைப் பிரிந்து - தலைவி இருத்தற் குரியமுல்லை நிலமாம். 47 காடும் மலையுங்கடு வெயிலால் - வளங் காய்ந்து தீய்ந்துசுடு சுரமே தேடும் பொருள்கருதித் தலைவன் - பிரிந்து செல்லும் பாலைநில மாகும். 48 உறுபுனல் சேர்வயலும் அயலும் - தலைவி ஊடத் தகுமருத நிலமாம். எறிதிரை யார்கடலும் கரையும் - தலைவி இரங்கற் குரியநெய்தல் நிலமாம். 49 முல்லை குறிஞ்சிநெய்தல் மருதம் - என முறையி னமைதருநா னிலமும் வல்ல தலைவர்களின் காப்பில் - அமைய வகையுட னேயாண்டு வந்தார். 50 புதுப்பயன் கொள்ளுமக வாழ்வின் - முப் பொருள்களி லேயிந்நா னிலத்தை முதற்பொரு ளாக்கொண்டு வாழ்ந்த - நம் முன்னோர் திறத்தினையென் னென்பேன்! 51 முத்தமிழ் நாட்டினிலும் உள்ள - அம் முல்லை முதலியநா னிலமும் அத்தமிழ் நாட்டுடனே யுறழத் - தமி ழகம்பன் னிருநிலமா யமையும். 52 இப்பன் னிருநிலத்தி னுள்ளே - பகுத் தியலும் பிரிவுகளுண் டாக ஒப்புயர் வின்றியமை வாகத் - தமிழ் உலகினை மூவர்களும் ஆண்டார். 53 3. நாட்டுவளம் முன் - சிந்து மேட்டு நிலத்தினை வெட்டியே - வள மிக்கிடக் குட்டைகள் கட்டியே பாட்டின் பயனுறக் கூட்டினர் - பசிப் பாவியை நாட்டைவிட் டோட்டினர். 54 குண்டு குழியை நிரப்பியே - சமங் கொள்ளமண் கொட்டிப் பரப்பியே பண்டம் பலவிளை வாக்கினர் - பசிப் பாவியின் இன்னுயிர் போக்கினர். 55 கல்லுங் கரட்டையும் போக்கியே - வளங் கண்டு கழனிக ளாக்கியே நெல்லுங் கரும்பும் விளைத்தனர் - பொலி நெற்குவை கண்டு களித்தனர். 56 ஆற்றுநீர் வீணே கடல்புகா - வண்ணம் அங்கங்கே கட்டி அணைகளை ஊற்றுநீர் வற்றாக் கிணறுகள் - வளம் ஊட்டிட வேவிளை வீட்டினர். 57 ஏரி குளங்க ளெடுத்தனர் - நா டெங்குநீர் பாயப் படுத்தனர் வாரி யெனவள மாக்கினர் - குடி மக்கள் பசிப்பிணி போக்கினர். 58 கண்புனல் சோர்ந்திட வைக்கினும் - பெய்யும் காலத்தே பெய்யாது பொய்க்கினும் தண்புனல் தேங்கிட வைத்தனர் - எங்கும் தண்ணெனக் கண்டுக ளித்தனர். 59 அன்றொரு காலத்தே காவிரி - வட ஆறெனக் கொங்கின் வடக்கிலே சென்றது நேர்கிழக் காகவே - ஊடிச் செல்லுந் தலைமகள் போலவே. 60 நாட்டு நலத்தினில் அக்கறை - கொண்ட நல்லர சன்சோழ மன்னனும் காட்டு நிலத்தினில் காவிரி - செலுங் காட்சியைக் கண்டு கருதினான். 61 ஏற்ற மிறைத்து வருந்திடும் - நாட் டென்குடி மக்கள் கவலையை மாற்றி வளமுறச் செய்வதும் - என் மாண்கட னென்றுமே எண்ணினான். 62 வன்னிலந் தன்னிலே வித்தியே - நாளும் வானத்தைப் பார்த்து வருந்தலை இன்னினி யேபோக் கிடுதலே - இனி என்கட னென்று துணிந்தனன். 63 காவல் மலைகொன்று பொன்னிக்கு - வழி கண்டசோ ழனெனச் சொல்லவே ஆவலோ டம்மலை வெட்டியே - பொன்னி யாற்றினைத் தெற்கோட விட்டனன். 64 தெற்குநோக் கோடிய பொன்னியும் - சோழ தேயத் தினைவள மாக்கியே பொற்குவை நெற்குவை யாகிட - அதைப் பொன்னி வளநாடாக் கண்டதே. 65 தண்டமிழ்ப் பொன்னிநீர் தேங்கியே - அந்தத் தங்க வயலுமுண் டானதே. பண்டை யரசர்கள் பண்பினைப் - பின் பற்றுதல் நங்கட னல்லவோ? 66 பின்னொரு காலத்தி லேயினும் - புகழ் பெற்ற கரிகால் வளவனும் கன்னலெனநெல் விளைத்திடும் - வளக் காவிரிக் குக்கரை கட்டினான். 67 மேவு மிவர்கள்முன் னோனொரு - சோழன் மேற்கு மலையினை வெட்டியே காவிரி யாற்றினைக் கண்டனன் - தமிழ்க் காவலர் மாட்சி கணிக்கவோ! 68 மேலை மலையிலே தோன்றியே - சென்று வீணாக மேல்கட லில்விழும் நாலைந்தா றேனுங் கிழக்குறச் - செயல் நாட்டையின் றாள்வோர் கடமையே. 69 கன்னிக்குப் பொன்னியைக் காட்டிய - கரி கால னெனுமந்தச் சோழனும் இன்னும் பலநலஞ் செய்தனன் - மக்கள் இன்புற அன்பினைப் பெய்தனன். 70 காடு கெடுத்துநா டாக்கினான் - ஏரிகள் கட்டியே குளங்கள் வெட்டினான் நாடு நகர்களா மாற்றினான் - அருவா நாட்டினி லேகுடி யேற்றினான். 71 நன்செயும் புன்செயும் ஒப்பவே - பயன் நல்கி வளஞ்செய விப்பவே பொன்செயுங் கூடத்தைப் போலவே - நற் பொலிவுறச் செய்து பொலிந்தனர். 72 தள்ளா விளையுளுந் தக்காரும் - என்றும் தாழ்விலாச் செல்வரு மிக்கதே எள்ளாநல் நாடெனும் வள்ளுவர் - மொழிக் கேற்ப விளங்கிடச் செய்தனர். 73 கன்ன லெனநெல் விளையவே - கன்னல் கழையென ஓங்கி வளையவே இன்னணம் மஞ்சளும் வாழையும் - இகல் எய்திட வேவளஞ் செய்தனர். 74 பாத்தி பொதிய விளையவே - ஏர்க்களம் பாடியே பாணர் கிளையவே ஈத்துவந் தேரோர் களியவே - குறை இன்றியே கோன்முறை யொன்றினர். 75 உள்ள முவந்தே ருழவர்கள் - தங்கள் உற்றா ருறவினர் கூடவே பள்ளுப்பா டிவிளை யாடவே - வளம் பண்ணியே யாள்முறை கண்ணினர். 76 நீர்நிலை யெங்கு மிருந்திடின் - விளை நிலம்வள முற்று விளைந்திடும் ஊர்தொறு மோரிரு செல்வர்கள் - உள்ள தூரின்நல் வாழ்வுக் குகந்ததாம். 77 என்னும் பெரியோர் மொழிப்படி - நா டெங்கு முடையமூ தூர்தொறும் உன்னருஞ் செந்தமிழ்ச் செல்வர்கள் - எலாம் ஒப்புர வுசெய்து வந்தனர். 78 ஏரி குளங்கிண றாறுபோல் - நா டெங்கு முளபெருஞ் செல்வர்கள் வாரி வழங்கியே வந்ததால் - வாழ வழியற்றோர் யாருமே இல்லையே. 79 பசியொடு நோய்பகை யின்றியே - மக்கட் பண்பல நாட்டினி லன்றியே வசியொடு பல்வள மொன்றியே - மக்கள் வாழ்ந்திட நூன்முறை சூழ்ந்தனர். 80 4. ஐம்பெருங்குழு 1. அமைச்சர் செய்யுந் தொழிலி னருமையும் - அதைச் செய்வதா லெய்தும் பெருமையும் செய்யு முறையி னுரிமையும் - மன்னர்க்குச் செப்பவோ ராள்வேண்டு மல்லவா? 81 கால மிடத்தை யறிந்துமே - செய்யும் காரியப் போக்கைத் தெரிந்துமே வேலின் திறத்தைப் புரிந்துமே - சொல வேறொரு வன்வேண்டு மல்லவா? 82 எப்படிச் செய்குவ தென்றுமே - மனத் தெண்ணி யிருக்கையில் நன்றுமே இப்படிச் செய்குவ மென்றுமே - சொல ஏற்றவோ ராள்வேண்டு மல்லவா? 83 நாட்டுக் குடிமக்கள் வாழ்விலே - காணும் நன்மையுந் தீமையு நாடியே கேட்டுக் குரியதை வேருடன் - அன்றே கிள்ளவோ ராள்வேண்டு மல்லவா? 84 குற்றங் குறைகளி லாமலே - சொலுங் கோளினைக் கேட்டுவ வாமலே இற்றெனப் பொய்கல வாமலே - சொலற் கேற்றவோ ராள்வேண்டு மல்லவா? 85 ஆய பொருளி னளவையும் - பொருள் ஆக்க வியற்றும் வழியையும் மேய செலவின் வகையையும் - சொல மேதக வோன்வேண்டு மல்லவா? 86 வண்ண முடனே வளர்ந்திட - உடல் வன்மையுந் திண்மையும் முந்திட எண்ணெயை வார்த்திடும் அன்னைபோல் - மன்னர்க் கின்னவோ ராள்வேண்டு மல்லவா? 87 அப்படி யங்குசெல் லாதெனப் - பிள்ளை அழவழ ஈர்த்திடும் அன்னைபோல் இப்படிச் செய்தல்த காதென - ஆங் கிடித்துரைப் போன்வேண்டு மல்லவா? 88 செய்திடு நன்மையைத் தீமையாத் - தீமை செய்திடுந் தீமையை நன்மையாச் செய்திட வெண்ணிடும் போதினில் - தடை செய்யவோ ராள்வேண்டு மல்லவா? 89 அல்லவை செய்யவி டாமலே - தடுத் தாக்கத்திற் றாழ்வுப டாமலே நல்லவை செய்தல்கெ டாமலே - செய்ய நல்லவோ ராள்வேண்டு மல்லவா? 90 ஆன்றவர் கூடி யுலகியல் - தனை ஆயு மவையை யறிந்துமே சான்றவர் கண்டிடு முண்மையைக் - கூறத் தக்கவோ ராள்வேண்டு மல்லவா? 91 திட்டங்கள் தீட்டலில் வல்லவன் - முறை செய்வதி லேமிக நல்லவன் சட்டங்கள் செய்துநா டாளவே - கூடத் தக்கவோ ராள்வேண்டு மல்லவா? 92 மக்களுக் காகவே வாழ்பவன் - மக்கள் வாழ்க்கை நலத்தினைச் சூழ்பவன் அக்கறை யோடுசெய் யாட்சியை - இனி தாக்கவோ ராள்வேண்டு மல்லவா? 93 அஞ்சாம லான்றோ ரவையினை - அடைந் தாய்ந்தறிந் துள்ள அறிவினை எஞ்சாமற் சொல்லி முடிவினை - அறிந் தெய்தவோ ராள்வேண்டு மல்லவா? 94 நோக்கி யொருவர் முகத்தினை - அவர் நுண்ணிய உள்ளக் கருத்தினை ஊக்கி யுணர்ந்த குறிப்பினை - எடுத் தோதவோ ராள் வேண்டு மல்லவா? 95 கன்னெறி சென்றுகெ டாமலே - குடி காத்திடு மவ்வாட்சித் தேரினை நன்னெறி சென்று நலனுறச் - செய நல்லவோ ராள்வேண்டு மல்லவா? 96 அல்வழி செல்லவி டாமலே - ஆட்சி யந்திரத் தின்திண் பொறியினை நல்வழி செல்ல இயக்கிடத் - தக்க நல்லவோ ராள்வேண்டு மல்லவா? 97 ஓங்கி யெரிவிளக் காயினும் - ஆங் கொருசிறு தூண்டுகோல் வேண்டுமே ஆங்ஙன மேயர சோச்சிட - மன்னர்க் கத்தகை யோன்வேண்டு மல்லவா? 98 கொன்னெயில் சாய்வெறி யானையும் - குத்துக் கோலினா லேபெரும் பாடுறும் தன்னெறி செல்லு மரசனும் - அன்ன தன்மைய னாற்பெரும் பாடுறும். 99 இக்குண மெல்லா மொருங்கமைந் - துயர் வெய்தியோ னேநல் லமைச்சனாம் ஒக்க வமைநல் லமைச்சரை - ஆங் குடையவ னேநல் லரசனாம். 100 அமைச்சருக் கோதுங் குணமெலாம் - ஒருங் கப்படி யேநன் கமைதரும் அமைச்சர் துணைக்கொடு மூவரும் - இனி தாண்டுமே நற்புகழ் பூண்டனர். 101 குதிரையி னோடுபின் னோடியே - நடை குட்டி பழகுதல் போலவே மதியமைச் சர்களின் மைந்தரும் - தந்தையின் வாழ்வியல் தன்னைப் பழகுவர். 102 இளவர சோடென்றுங் கூடவே - கூடி யிருந்துமே மந்திரி மைந்தரும் வளமிகும் ஆட்சி முறையினை - மனம் வைத்துப் பழகியே வந்தனர். 103 தந்தையின் பின்னவர் மைந்தரே - முடி தாங்கிடு மம்முறை போலவே மந்திரி பின்னவர் மைந்தரே - நல்ல மந்திரி யாகியே வந்தனர். 104 ஆலம்வீழ் போலு மமைச்சரும் - அவ் வடிமரம் போலும் அரசரும் சாலுங் கிளைபோற் குடிகளும் - ஆகச் சமைந்ததப் பழந்த மிழகம். 105 2. தூதர் வழிவழி வந்த பழங்குடி - தனில் வந்து பிறந்தவ னல்லவோ மொழிவழி சென்று பிறரிடம் - அவர் முன்னின்று கூறிட வல்லவன்? 106 அன்பு மறிவுமஞ் சாமையோ - டொன்றை ஆய்ந்துமே சொல்பவ னல்லவோ தென்பொடு சென்று செலச்சொலித் - தம் செய்தி முடித்திட வல்லவன்? 107 கால மிடமறிந் தஞ்சிலான் - தமிழ் கற்றவின் சொல்லின னல்லவோ சாலவே சென்று பகைவர்பால் - தம் தகுதி யுரைத்திட வல்லவன்? 108 ஏதிலார் பாற்செய் இகலினால் - வரும் ஏதங்கள் இன்னின்ன வென்றுமே தூது விடுத்துத் துணிவுடன் - பகை சோரவே யாண்டனர் சீருடன். 109 3. ஒற்றர் ஆட்சித் தொழிலதி காரிகள் - அவ் வலுவலர் சுற்றம் பகைவர்தம் ஆட்சியும் மாட்சியும் இன்னென - அறி யாதறிந் தேயினி தாண்டனர். 110 ஐயப் படாத உருவமும் - கண் ணஞ்சாமை யென்னுந் திருவமும் உய்யச் சொலாத உறுதியும் - உள ஒற்றினால் ஒற்றிநூல் முற்றினர். 111 உள்ள தறியுந் திறமையும் - அதை ஓர்ந்துமே கூறு முறைமையும் உள்ளந் திரியா இறைமையும் - உள ஒற்றினால் கோன்முறை முற்றினர். 112 ஒற்றென ஒற்றறி யாமலே - ஒற் றொற்று முறைகுறி யாமலே ஒற்றர்க்குச் செய்யுஞ் சிறப்பினைப் - பிறர் ஓராம லாண்டனர் சீருடன். 113 ஒற்றினா லொற்றி யறிந்ததை - மற்றோர் ஒற்றினா லொற்றி யறிந்துமே குற்றங் குறைக ளிலாமலே - செங் கோன்முறை செய்தனர் மேன்முறை. 114 உண்ணுழைந் தோர்ந்தறி யொற்றரும் - அறம் ஓதும் உரைசான்ற நூல்களும் கண்ணெனக் கொண்டு கருத்துடன் - குடி காத்துமே ஒண்புகழ் பூத்தனர். 115 4. அறிவர் நூற்றுறை முற்றி நுணங்கிய - மிகு நுண்மாண் நுழைபுலச் செல்வர்கள் ஆற்றினில் நின்றறங் கூறிடும் - நல் லறிவரோ டாய்ந்தர சாண்டனர். 116 தன்னல மற்ற தகையினர் - பிறர் தந்நல மேதந் நலமென இன்னலஞ் செய்யும் அறிவர்கள் - சொலை ஏற்றவர் கூற்றினைப் போற்றினர். 117 இல்லற முற்றி யினிதுற - எழும் யானென தென்னுஞ் செருக்கற நல்லற முற்ற அறிவர்கள் - துணை நாடியே நன்முறை கூடினர். 118 நாடிமுக் கால முணர்ந்துமே - கூறும் நல்லறி வாளர் துணையினால் ஆடியின் நன்னிழல் போலவே - அர சாண்டுமே நற்புகழ் பூண்டனர். 119 5. நாற்படை வீரர் கோடை வளிவருத் தாவணம் - மாட்டுக் கொட்டிலுக் கொதுக்குக் கட்டல்போல் ஆடை யணியினு மேலதாய்ப் - படை யாள ரதுதுணை யாக்கினர். 120 உள்ள முடல்வலி யுள்ளரைத் - தொழில் ஊக்கமும் ஆக்கமும் வல்லரை வெள்ள மெனப்படை வீரராய்க் - கொடு வெம்பகை யஞ்சிடச் செய்தனர். 121 எல்லோரு நல்லவ ரென்றுமே - சொலற் கில்லை யுலகினி லென்றுமே நல்லோரை யல்லோர் நலிந்திடா - வகை நாட்டினைக் காத்தல் கடமையே. 122 மாட்டுக்குக் கொம்புகள் உள்ளதும் - கலை மானுக்கு மேகொம் பிருப்பதும் காட்டுக்குள் முள்மரங் காண்பதும் - தற் காப்பினுக் கேவீரர் கைப்படை. 123 வேற்படை வாட்படை விற்படை - கொண்ட வீரர்க ளாயிர மாயிரம் நாற்படை தன்னிலோ ராட்படை - என நாட்டினைக் காத்தியல் நாட்டினர். 124 வள்ளுவர் வான்குறள் தன்னிலே - உள வன்படை யாளர் செருக்கிலே கொள்ளு மறக்குடி மைந்தரின் - வீரக் குறிப்பினைக் கண்டு களிக்குவீர். 125 வெட்டின கையை எடுத்துமே - வாள் வீசியே வீரம் விளைக்குவர் கொட்டின போர்ப்பறை போலவே - ஆங்கு கொக்கரித் தாடுங் குறையுடல். 126 விழுந்தவர் மேல்விழு முன்னரே - வாள் வீசுதல் வீரர்தம் வீரமாம். பழந்தமிழ் வீரர் மறத்தினைப் - புறப் பாட்டிலே கண்டு களிக்குவீர். 127 தோழ மனையதொல் காப்பியப் - புறத் துறைகளை யோர்முறை பார்த்திடின் கோழையும் வாளெடுத் தோடியே - களங் கொண்டனை மெச்சிட மீளுமே. 128 படை வீரன் மகன்வீர னாகவே - வரும் வீரரைக் கொண்டவத் தொல்படை போரில் நிலைகுலைந் தாலுமே - வீரம் பொன்றிப்பின் வாங்காப் பொருபடை. 129 கோடி கொடுப்பதாய் ஒன்னலர் - வந்து கூவி யழைப்பினுந் தொல்குடிப் பீடற வேயறை போகிலா - உரம் பெற்றவர் மேவிய தப்படை. 130 மானம் அறமறம் முன்னையோர் - செல் வழிச்செல வோடுவல் லாண்மையும் ஆன குணங்கள் அமைந்திறை - வன்பால் அன்புடை யார்மேய தப்படை. 131 விழித்தகண் வேல்கொண் டெறிந்திடின் - அதன் வெம்மைகண் டுள்ள நடுங்கியே அழித்திமை யாத மறக்குணங் - கொண்ட அத்தகை யார்மேய தப்படை. 132 மன்னவர் கண்ணீர் வடிக்கவே - போரில் மாற்றலர் உள்ளந் துடிக்கவே இன்னுயி ரீயுமறக்குணங் - கொண்ட இத்தகை யார்மேய தப்படை. 133 விழுப்புண் படாததந் நாளெலாம் - வாழ்வின் வீணெனக் கொண்டு வெறுத்துமே வழுக்கினுள் வைக்கு மறக்குணங் - கொண்ட வாள்மற வர்மேய தப்படை. 134 ஒண்டியாய் நின்றுதன் மேல்வரும் - நூ றோராயி ரம்பகை வீரரைக் கண்டு கலங்கா மறக்குணங் - கொண்ட காளையர் மேவிய தப்படை. 135 வெள்ள மெனவேதம் மேல்வரும் - பகை வீரரைக் கண்டுவாள் வீசியே உள்ளங் கலங்கா தெதிர்நிற்கும் - வீரர்கள் உள்ளதச் செந்தமி ழோர்படை. 136 வெற்றிச் சிறப்பினைக் கண்டுமே - பகை வீரர் கழல்கட்டிக் கொண்டுமே சுற்றிநின் றாடு மறக்குணங் - கொண்ட சூரர்கள் மேயதத் தொல்படை. 137 மக்களுக் காகத்தம் வாழ்வினைத் - தமிழ் மாநில நல்லாள் மகிழவே தக்க படியுறத் தாங்கிடும் - அத் தகுதியோர் மேய தமிழ்ப்படை. 138 படைத்தலைவன் மறக்குண மிக்க மறவரை - அணி வகுத்து நிறுத்துந் திறமையும் அறத்துறை முற்றிய ஆண்மையும் - உளோன் ஆணைக் கடங்கிய தப்படை. 139 வெல்லும் வழியை யறிந்துமே - படை வீரரின் போக்கைத் தெரிந்துமே செல்லும் வழியிற் செலுத்திடும் - ஒரு செம்மலின் கீழ்ப்பட்ட தப்படை. 140 இன்ன லணுகா தியற்றலும் - இடர் எய்திடின் அஞ்சா உறுதியும் தன்னல மற்ற ஒருவனைத் - தானைத் தலைவனாக் கொண்ட தகைப்படை. 141 தொல்குடி தன்னில்வந் துற்றவன் - போர்த் துறைமுழு துநன்கு கற்றவன் அல்குண மேதுமே யற்றவன் - அவன் அத்தகு தானைத் தலைவனே. 142 யானை கோட்டை மதிலினை யானைகள் - கொம்பால் குத்தி மறத்தினைக் கூறிடும் நீட்டிய கையால் பகைவரைச் - செந் நீரிலே தோய்த்துத் துவைத்திடும். 143 அம்பினை வேலினை மேலெலாங் - கொண் டாயிரங் கொம்பினே மென்றுமே வெம்பி யெழுந்து பகைவர்மேல் - பாய்ந்து வீரஞ் சிறந்திடும் வேழங்கள். 144 இற்றவோர் கோட்டை யெடுத்துமே - பகை இன்றெனச் சீறி யடிக்குமே அற்றகை கண்டு நகைத்துமே - காலால் அத்தனை பேரையுந் தேய்க்குமே. 145 தென்னை பனங்காயைப் போலவே - பாய்ந்து திருகி யெறியுந் தலைகளை தன்னை மறந்துதன் கொம்பினைக் - கையால் தானொடித் துப்பார்க்கும் யானைகள் 146 வட்ட மதியினைக் கண்டுமே - பகை மன்னர் குடையெனக் கொண்டுமே எட்டிப் பிடிக்கக்கை நீட்டுமே - இன்னும் என்னென்ன மோவீரங் காட்டுமே. 147 கோட்டை மதிலின் கதவினை - அணு குண்டெனப் பாய்ந்து நொறுக்கிடும் காட்டை யழித்துக் கிடங்கினைச் - சேறு கலக்கி யுழக்குங் களிறுகள். 148 போகும் புகைவண்டி வாய்விடும் - புகை போக்கியைப் போலப் புழைக்கையால் வேகும் வெகுளி வெளிப்படச் - சாடி வென்று களங்கொள்ளும் வேழங்கள். 149 குதிரை ஓடியே வட்டமாய் வீரர்கள் - உடல் உள்ளதோ இல்லதோ என்னவே ஆடியே ஓய்ந்த அரங்குபோல் - படை ஆளை யழிக்குங் குதிரைகள். 150 நின்பகை யன்று நெடுந்தகாய்! - இனி நின்கைப் படையோய்ந் திருக்கட்டும் என்பகை! என்று குதிரைகள் - சீறி இன்னலர் இன்னுயிர் போக்குமே. 151 போரினைக் கண்டு களித்திடக் - கடல் பொங்கி வருவது போலவே தேரினைப் பூணாக் குதிரைகள் - ஓடிச் சென்று பகையறச் செய்யுமே. 152 ஈட்டு மரபிக் குதிரைகள் - ஆத்தி ரேலிய நாட்டுக் குதிரைகள் நாட்டுக் குதிரைகள் நட்பினைக் - கொண்டு நற்புகழ் பெற்றுத் திகழ்ந்திடும். 153 மறம் தன்மறந் தன்னால் தருக்கியே - வீரர் தம்மொடி யானை குதிரைகள் பொன்மரம் பூத்து மணத்தல்போல் - நாட்டைப் போற்றியே வந்தனர் பொற்பவே. 154 அம்முப் படையின் செருக்கினைத் - தானை யானை குதிரை மறமென விம்முற் றுவந்துதொல் காப்பியர் - மறம் மேம்படக் கூறி வியந்தனர். 155 தேர் எட்கிட மின்றிப் பகையுடல் - கெட ஏகிய தேர்கள் எதிரிகள் உட்கிட ஓடி யெழுந்துமே - வான ஊர்தியைப் போலப் பறந்திடும். 156 தேரை யிழுக்குங் குதிரைகள் - அத் தேருக்கு முன்விரைந் தோடவே யாரெனை மீறுவோ ரென்றுமே - தேர்கள் அவற்றினை முந்தியே ஓடுமே. 157 பொது குதிரை மறவர்க ளோர்புறம் - வெறிக் கொல்களி றூர்பவ ரோர்புறம் அதிர நிலம்பகை தேரிலே - ஏறி அங்ஙன மேபொரு வார்களே. 158 யானை குதிரைதேர் ஆளெனப் - படும் அந்நூற் படையின் சிறப்பினை மோனை யெதுகைத் தொடைபடத் - திகழ் முன்னையோர் பாடலில் காண்கவே. 159 நீரிடை யிட்ட நிலங்களில் - வாழும் நீள்முடி சூடு மரசெலாம் காரென நீரிற் கடற்படை - செலுங் காட்சியைக் கண்டு கலங்குமே. 160 நாற்படை கொண்டுதந் நாட்டினைப் - பகை நண்ணிடா துட்பகை யோட்டியே பாற்பட வள்ளுவர் நூற்படி - மூவரும் பாலனம் பண்ணினர் சாலவே. 161 செந்நாப் புலவர் புகழ்ந்திடும் - வீரச் செல்வச் செருக்கில் திகழ்ந்திடும் அந்நாற் படையுமோர் வீரனின் - பே ராணையின் பாற்பட் டிருந்தவே. 162 காவலர் ஏவற் படையாங் கியங்கவே - நாட் டெல்லைப் படைநிலை கொள்ளவே காவற் படையாங்கு காக்கவே - நாட்டைக் காத்துமே வந்தனர். அன்றியும், 163 நாட்டினி லுள்ள நகர்தொறும் - நாட்டின் நானிலத் துள்ளசிற் றூர்தொறும் காட்டினி லுள்ள கடந்தொறும் - பாது காத்துமே வந்தனர் காவலர். 164 அல்லும் பகலும் உயிரினைக் - காக்கும் யாக்கையைப் போலுமவ் யாக்கையும் புல்லு முயிரினைக் காத்தல்போல் - இமைப் போது மகலாமற் காத்தனர். 165 ஊரினைச் சுற்றி யிரவெலாம் - கொம் பூதியெச் சரிக்கை செய்குவர் காரிரு ளில்மழை பெய்யினும் - ஊரைக் கண்ணிமை போற்காவல் பண்ணுவர். 166 உள்வரு மைக்கிட மின்றியே - பயிர் ஓரத்தில் வேலி யடைத்தல்போல் கள்வமென் பார்க்கிட மின்றியே - ஊரைக் காத்துமே வந்தனர் காவலர். 167 ஒன்றி யொருத்தி தனிமையாய் - வேற் றூருக்கு மச்சம தின்றியே சென்று வரவழி தன்னிலும் - காவல் செய்துமே வந்தனர் சீர்க்கவே. 168 வண்டியி லே கூல வாணிகர் - எவ் வழியிலு மேநள் ளிருளிலும் கொண்டு கொடுத்தச்ச மின்றியே - மகிழ் கொண்டுமே வாணிகஞ் செய்தனர். 169 வல்லவர் மாட்டா தவரிடம் - வீண் வம்புதும் புகள்செய் யாமலே அல்லவர் நல்லவர் தம்மிடம் - அணு காமலே யஞ்சி நடந்தனர். 170 வழியிலே நின்று கயவர்கள் - கெட்ட வார்த்தைகள் பேசிட அஞ்சவே பழியிலே செல்லுவோ ரின்றியே - ஊரைப் பாதுகாத் துவந்தார் காவலர். 171 தப்பி மறந்துமே சென்றதை - அவர் தப்பாம லேயடை கிற்பரே அப்படி யேகிடந் தாலுமே - கறை யானு மரித்திட அஞ்சுமே. 172 மடிபிடி கூச்சல்க ளின்றியே - வீண் வம்பு வழக்குக ளின்றியே அடிதடி சண்டைக ளின்றியே - ஊரின் அமைதியைக் காத்தன ரொன்றியே. 173 கெடுபிடி யின்றியக் காவலர் - நாளும் கேளுங் கிளையுங் கெழுமியே குடிக ளமைதியாய் வாழவே - அன்பு கொண்டுமே ஊர்காத்து வந்தனர். 174 காப்பது நங்கட னென்றுமே - கொண்டு காத்துவந் தார்களக் காவலர் நாப்பயி லின்சுவை போலவே - நாளும் நாட்டி லமைதி நடந்தது. 175 நம்பு மமைச்சருந் தூதரும் - ஒற்றரும் நல்லறி வர்படை வல்லரும் ஐம்பெருங் குழுவெ னுமிவர் - தம்மோ டாய்ந்தர சாண்டிசை வேய்ந்தனர். 176 5. எண்பேராயம் அதிகாரிகள் நாட்டுக் குடிகளின் வாழ்விலே - நிகழ் நன்மையுந் தீமையு நாடியே கேட்டினைப் போக்கியே நன்னலம் - செயுங் கெட்டிக்கா ரரதி காரிகள். 177 மக்களுக் கின்னலம் செய்திடும் - நாட்டு மன்னவன் ஆணை நடத்திட தக்கவ ரென்றதி காரிகள் - எண்ணித் தக்கன செய்துமே வந்தனர். 178 குடிகள் உரைக்குங் குறைகளை - மனங் கொள்ளவே கேட்டுக் குணமுடன் கடுகடுப் பின்றியே அன்புடன் - அதி காரிகள் ஆவன செய்தனர். 179 ஆட்சித் தொழிலின் அடிப்படை - அது வான அலுவலர் தங்களை மாட்சியி னாட்சித் துணைவராக் - கொண்டு மக்களுக் காவன செய்தனர். 180 கீழமை வுற்றுத்தம் ஆணையர் - ஆகக் கெழீஇய அலுவலர் தம்முடன் தோழமை யுற்றுநல் லாட்சியின் - இரு தூணென மக்களைப் பேணினர். 181 நாமதி காரிநம் சொற்படி - மக்கள் நடக்க வுடையா ரெனக்கொளார் தாமவர்க் கேவல்செய் வோரெனக் - கொண்டு தக்கன செய்தனர் ஒக்கவே. 182 கொள்ளென அள்ளிக் கொடுப்பினும் - கைக் கூலி பெறுமக் கொடுமையைக் கள்ளெனச் சூதெனப் பொய்யெனக் - கொலை களவெனக் கொண்டு கடிந்தனர். 183 தங்குடும் பத்தினை மேம்படச் - செயும் தக்க குடும்பத் தலைவர்போல் கங்குல் பகலொரு நாளெனக் - குடி காத்துவந் தாரதி காரிகள். 184 அலுவலர் தங்கள் தலைவன தாணையை - என்றும் தாழ்க்குத லின்றித் தகவுடன் நங்கள் கடமையி தென்றுமே - கொண்டு நாடுவ செய்வர் அலுவலர். 185 மக்களுக் காகத்தம் வாழ்வெனும் - அவ் வாழ்க்கை முறையை யறிந்துமே அக்கறை யோடது செய்துமே - நல் லாட்சி நடந்திடச் செய்தனர். 186 அலுவ லகத்தை யடைந்துமே - அய் யாவிது செய்ங்களென் னாமலே அலுவ லகத்தை யெவருமே - அணு காமலே யாவன செய்தனர். 187 செய்தி தெரிய வருபவர் - மீது சில்லெனச் சீறி விழாமலே எய்திய வென்னென அன்புடன் - கேட்டே இன்னெனக் கூறி யனுப்புவர். 188 ஆட்சி யலுவ லெதுவுமே - நாளும் அங்கு மிங்குஞ்செல லின்றியே தாழ்ச்சியில் தங்காமற் செய்துமே - மக்கள் தந்நலம் பேணியே வந்தனர். 189 அன்றன்று செய்வதை யன்றன்றே - அய ராமல் முயன்றமை யச்செய்து நன்றென்று தம்மதி காரியும் - மக்களும் நம்பிக்கை வைக்க நடந்தனர். 190 மெய்யி னுறுப்புக்க ளொவ்வொன்றும் - செயும் வேலையைப் போலத்தம் வேலையை எய்யவே செய்தர சாட்சியை - நன் கிலகிடச் செய்தா ரலுவலர். 191 அமையு முலகியல் அங்ஙனே - செல அரசியல் என்னுமச் சக்கரம் இமையுமோ யாது சுழலவே - ஆங் கியன்றன அன்னார் முயன்றனர். 192 ஆட்சித் தொழிலதி காரிகள் - அவ் வலுவலர் தம்முட னாய்ந்துமே மாட்சிப் படக்குடி மக்களைக் - குறை மாற்றிநல் வாழ்வுறப் போற்றினர். 193 வாயிற்காவலர் கண்ணிமை போலநற் கோயிலை - நாளும் காத்திடும் வாயிலார் தங்களை நண்ணிடும் போதெலா மின்புறப் - பேசி நல்லர சாட்சி புரிந்தனர். 194 கருவூலக்காவலர் கோயிற் கருவூலம் நாடொறும் - கோடி கோடியாப் பல்கிட வோம்பிடும் ஞாயிலைப் போலுமக் காவலர் - தமை நாடியே நல்வளங் கூடினர். 195 நகரப்பெரியோர் தன்னென நன்னகர் மக்களைப் - பெற்ற தாயினு மன்புடன் ஓம்பியே நன்னக ராட்சி நடத்துவர் - அந் நன்னக ரப்பெரி யோர்களே. 196 நன்னக ரப்பெரி யோர்களை - வேண்டும் நாளினிற் கூட்டியெந் நாளுமே இன்னலந் துன்னவாய்ந் தன்னவே - மக்கள் இன்புறக் காத்தனர் அன்புடன். 197 தானை யானை குதிரைத்தலைவர் தானைத் தலைவர் தகைப்புற - மா தாங்குமா வீரர் மிகைப்புற யானைத் தலைவர் அகைப்புறத் - தமிழ் அன்னை யுவப்பநா டாண்டனர். 198 எண்பே ராயம் எனப்படும் - இங் கெண்ணிய எண்மரும் இன்புறக் கண்போல் நாளுங் கருதியே - குடி காத்துமே மாப்புகழ் பூத்தனர். 199 ஐந்து மெட்டுமென எண்ணியோர் - தம் அரிய கருத்துட னாடியே செந்தமிழ் நாட்டினை மூவரும் - நன்கு சீருஞ் சிறப்புடன் ஆண்டனர். 200 6. அறங்கூறவையம் ஒன்று மியல்பு திரிந்திகல் - கொண் டுடற்றும் வழக்கினைத் தீர்த்திட இன்று முறைமன் றிருத்தல்போல் - அன்றும் இருந்தது நன்மை பொருந்தவே. 201 கொள்ளை கொலையின் வழக்கையும் - பொருள் கொடுக்கல் வாங்கல் வழக்கையும் உள்ள படியாய்ந்து தீர்த்தனர் - மக்கள் ஒன்றுபட் டுவாழ யாத்தனர். 202 மக்கள் தொடரும் வழக்கினை - முறை மன்றத் தவரொடு மன்னரும் ஒக்க விருந்துதீர்த் திட்டனர் - நாட்டில் ஒற்றுமை யோங்கச்செய் திட்டனர். 203 ஊருக் குறையூர் எனப்படும் - அவ் வுறந்தை யறங்கூ றவையகம் பாருக்குள் மூவர்கோற் சீரினை - எங்கும் பட்டப் பகலெனக் காட்டுமே. 204 எண்சீர் விருத்தம் ஆன்றகுடிப் பிறப்பொழுக்கம் கல்வி வாய்மை அழுக்காறோ டவாவின்மை தூய்மை கோடா ஊன்றுநடு நிலைமையெனுங் குணங்க ளெட்டும் ஒருங்கமைந்து தாயினுமன் புடைய ராய சான்றவர்க ளுடனிருந்து தீர்ப்புக் கூறும் தக்கவறங் கூறவைக்குத் தலைவ ராகி ஏன்றதுலாக் கோல்போல வழக்குத் தீர்த்தே இனிதுகுடி மக்களைக்காத் திட்டா ரம்மா! 205 பன்முறையவ் விருவரையும் அவர்க்குச் சான்று பகர்வரையு மிடைமடக்கிப் பரக்கக் கேட்டச் சொன்முறையை நுண்ணுணர்வால் தொகுத்துப் பின்னும் சொலச்சொல்லித் தொகுத்ததனோ டொப்பு நோக்கித் தொன்முறையின் நூல்களையுந் துருவிப் பார்த்துத் துணிந்தகையவ் விருவருமே ஒப்புக் கொள்ள நன்முறையில் முறைசெய்து குடிகள் மெச்ச நாகரிக நல்லாட்சி நடத்தி னாரே. 206 `இதுவுமறங் கூறவையோ, தீர்ப்புக் கூறும் இவனிளைஞன் உரைமுடிவு காண மாட்டான், அதுவுமலால் இவன்புதியன் பழக்க மில்லான், அறநூலைப் பார்த்தேனும் அறியான்’ என்று முதியவர்கள் இகழுநரை முடித்துப் போந்தம் மூத்தோர்கள் வாழ்த்தெடுப்ப வழக்குத் தீர்த்த கதவிடைநீர் மதகெதிர்கா விரிநன் னாடன் கரிகாலன் முறையீங்கு காட்டா காதோ! 207 நல்லமைச்ச ரொடுதூதர் அறிவர் ஒற்றர் நாற்படையின் பெருந்தலைவ ரொடுநாட் டாட்சி வல்லவதி காரிகளவ் வலுவ லாளர் வாயிலொடு கருவூலங் காப்போர் மாப்போர் வெல்லுகரி பரிதானைத் தலைவ ரோடும் மேதக்க நகர்ப்பெரியா ரோடுஞ் சூழ்ந்தே எல்லவரும் இனிதுவக்கும் வகையில் மக்கள் இன்புறவே மூவருமாங் கினிதாண் டாரே. 208 2. செங்கோன்மை சிந்து உயிர்பி றந்தவுடன் - பசியும் உடன்பி றந்ததுவே உயிர்பி றந்தவுடன் - நசையும் உடன்பி றந்ததுவே. 1 உயிர்பி றந்தவுடன் - பகையும் உடன்பி றந்ததுவே உயிர்பி றந்தவுடன் - சினமும் உடன்பி றந்ததுவே. 2 உயிர்பி றந்தவுடன் - களவும் உடன்பி றந்ததுவே உயிர்பி றந்தவுடன் - கொலையும் உடன்பி றந்ததுவே. 3 உயிர்பி றந்தவுடன் - கரவும் உடன்பி றந்ததுவே உயிர்பி றந்தவுடன் - பொய்யும் உடன்பி றந்ததுவே. 4 உயிரு டன்பிறவாக் - குணம் ஒன்று மேயிலையால் உயிர்பு ரிவதெல்லாம் - அதற் குரிய தென்றறிவீர். 5 ஒவ்வொ ருவுயிர்க்கும் - இயல் பொன்ற மைவதனால் ஒவ்வொ ருவுயிரும் - அதன் ஒழுங்கி னில்நடக்கும். 6 அதனத னியல்பின் - படி அதுந டப்பதனால் அதனத னியல்பை - அறிந் தமைவ துகடனே. 7 அதனத னியல்பை - அறிந் ததன்ப டிநடவார் அதனத னெதிராய் - அமைந் தல்ல லுட்படுவார். 8 உயிர்ப்பொ ருட்டன்மை - ஒக்கும் உயிரி லாப்பொருட்கும் உயிர்ப்பு யிர்ப்பின்மை - அலால் ஒக்கு மேயிரண்டும். 9 கரும்புச் சாற்றினிலே - இனிமை கலந்தி ருப்பதுமேன்? இரும்புக் கம்பியிலே - துரு ஏறித் தின்பதுமேன்? 10 பூவி னில்மணமும் - நிறமும் பொருந்தி யிருப்பதேன்? பாவி னில்மோனை - எதுகை படிந்தி ருப்பதுமேன்? 11 செம்பி னிற்களிம்பு - மிகச் செறிந்தி ருப்பதுமேன்? அம்பொ னிற்பொருந்தி - ஒளி அமைந்தி ருப்பதுமேன்? 12 பட்டுப் பாவாடை - மிகப் பளப ளப்பதுமேன்? முட்டிக் குள்ளிருக்கும் - விதை முளைத்தி டாததுமேன்? 13 முத்தும் பவழமும் - கடலில் மூழ்கி யிருப்பதேன்? கத்தி யேகாக்கை - அதி காலை யெழுப்பலேன்? 14 பாலுக் குள்ளொளிந்து - நெய் பதுங்கி யிருப்பதேன்? சாலுக் குட்போட்டால் - விதை தான்மு ளைப்பதுமேன்? 15 கண்ணுக் குட்கறுப்பும் - வெள்ளையும் கலந்தி ருப்பதுமேன்? மண்ணுக் குள்மணியும் - பொன்னும் மறைந்தி ருப்பதுமேன்? 16 பலநி றமாட்டுப் - பாலும் பறவை முட்டைகளும் அலரு மல்லிகைபோல் - வெளுப் பாயி ருப்பதுமேன்? 17 உண்ணும் பண்டமெலாம் - சுவை யோடி ருப்பதுமேன்? பண்ணும் பாவிசையும் - யாழிற் படிந்தி சைப்பதுமேன்? 18 முட்டைக்குள் ளேகுஞ்சு - படுத்து முடங்கிக் கிடப்பதேன்? சட்டைக்குள் ளேபாம்பு - மமைந்து தான்றி ரிவதுமேன்? 19 சேவற் கோழிக்குக் - கொண்டை சிவந்தி ருப்பதுமேன்? கூவக் குயிலுக்கு - இனிய குரலி ருப்பதுமேன்? 20 கழுதை கத்துவதைக் - கேட்டுக் காதைப் பொத்துவதேன்? பழுதை யைக்கண்டு - ஐயோ! பாஅம் பென்பதுமேன்? 21 பாம்பின் பல்லுக்குளே - நஞ்சு படிந்தி ருப்பதுமேன்? வேம்பின் காயெல்லாம் - கசப்பு மிகுந்தி ருப்பதுமேன்? 22 போட்டு வளர்பயிரில் - புழுப் பூச்சி விழுவதுமேன்? மாட்டு வயிற்றினிலே - கோரோசனை மறைந்தி ருப்பதுமேன்? 23 நுண்ணிய நச்சுயிர்கள் - கொடிய நோய்நொடி செய்வதுமேன்? தண்ணென வெண்ணிலவு - மிகத் தான்கு ளிர்வதுமேன்? 24 கிழங்கு களெல்லாம் - கொடியின் கீழ்வி ழுவதுமேன்? முழங்கி யேகடலும் - அலை மோதிய டிப்பதுமேன்? 25 சிற்று யிர்க்கெல்லாம் - நஞ்சு செறிந்தி ருப்பதுமேன்? மற்றி தன்கருத்தை - அறிதல் மக்க ளின்கடனே. 26 தாயைக் கண்டவுடன் - சேய் தாவி யோடுவதேன்? சேயைக் கண்டவுடன் - தாய் சென்ற ணைப்பதுமேன்? 27 இரும்பைக் கண்டவுடன் - காந்தம் இழுத்துக் கொள்வதுமேன்? அரும்பைக் கண்டவுடன் - வண்டினம் அணுகி யூதுவதேன்? 28 மதியைக் கண்டவுடன் - குமுதம் வாய்ம லர்வதுமேன்? கதிரைக் கண்டவுடன் - இருள் கலங்கி யோடுவதேன்? 29 எலியைக் கண்டவுடன் - பூனை எகிரிப் பாய்வதுமேன்? புலியைக் கண்டவுடன் - மான் போயொ ளிப்பதுமேன்? 30 முயலைக் கண்டவுடன் - நாய் முடுக்கி யடிப்பதுமேன்? மயிலைக் கண்டவுடன் - பாம்பு மயங்கிக் கிடப்பதேன்? 31 அரியைக் கண்டவுடன் - யானை அஞ்சி நிற்பதுமேன்? நரியைக் கண்டவுடன் - ஆடு நடுங்கி யோடுவதேன்? 32 பருந்தைக் கண்டவுடன் - குஞ்சு பதுங்கிக் கொள்வதுமேன்? மருந்தைக் கண்டவுடன் - நோய் வலிகு றைவதுமேன்? 33 நீரைக் கண்டவுடன் - எருமை நெருங்கிச் செல்வதுமேன்? காரைக் கண்டவுடன் - மயில் களித்தெ ழுவதுமேன்? 34 மீனைக் கண்டவுடன் - சிரல் மிகைத்துப் பாய்வதுமேன்? வானைக் கண்டவுடன் - பயிர் வண்ணங் கொள்வதுமேன்? 35 பாம்பைக் கண்டவுடன் - பெரும் படைந டுங்குவதேன்? வேம்பைக் கண்டவுடன் - முகம் விறைத்துக் கொள்வதுமேன்? 36 தன்னைத் தொட்டதனில் - மின் சாரம் பாய்வதுமேன்? பொன்னைத் தொட்டதனில் - ஒளி பொலிந்து தோய்வதுமேன்? 37 பிறக்கக் கண்டவுடன் - கூடிப் பேசி மகிழ்வதேன்? இறக்கக் கண்டவுடன் - யாரும் இரங்கி யழுவதேன்? 38 படமெ டுத்தாடும் - நல்ல பாம்பைக் கொல்வதுமேன்? உடலி டைப்படினும் - பல்லி உய்ந்து போவதுமேன்? 39 பூச்சி புழுக்களை - மருந்து போட்டுக் கொல்வதுமேன்? வீச்சி டைப்படினும் - பருந்தை விட்டு விடுவதேன்? 40 நொரித்து டல்வருத்தும் - பல நோய்கள் வருவதேன்? வருத்தி டுநோய்கள் - தீர்க்க மருந்தி ருப்பதுமேன்? 41 குஞ்சுக ளைத்தாய்மீன் - பிடித்துக் கொன்று தின்பதுமேன்? குஞ்சுக ளேதந்தாய் - நண்டைக் கொன்று விடுவதுமேன்? 42 புலிக்குக் கொண்டாட்டம் - மானுக்குப் பொருந்துந் திண்டாட்டம் எலிக்குத் திண்டாட்டம் - பூனைக் கெய்துங் கொண்டாட்டம். 43 பாம்புக்குக் கொண்டாட்டம் - தவளை படுமே திண்டாட்டம் பாம்புக்குத் திண்டாட்டம் - கீரிக்குப் பருத்த கொண்டாட்டம். 44 இன்ன படியெல்லாம் - அதனதன் இயல்பெ னவறிவீர் அன்னவி யல்பினை நாம் - அறிந் தமைவ துகடனே. 45 வேறு புலியைக் கொல்வது வீரம் - வீட்டுப் பூனையைக் கொல்வது பாரம். அலியைக் கொல்வதுங் குற்றம் - படை யாளைக் கொல்வது கொற்றம் 46 மன்னனைக் கொல்வது வீரம் - தன் மகனைக் கொல்வது பாரம். தன்னைக் கொல்வதுங் குற்றம் - ஆயிரந் தலையைக் கொல்வது கொற்றம். 47 உருவைக் கொல்வது பாரம் - படை யொருங்கக் கொல்வது வீரம். கருவைக் கொல்வதுங் குற்றம் - ஆயிரங் களிற்றைக் கொல்வது கொற்றம். 48 மலையி லேறுதல் வீரம் - உயர் மரத்தி லேறுதல் பாரம். கொலைசெய் வதுவோ குற்றம் - அணு குண்டு செய்வதோ கொற்றம். 49 இன்னுமென் னென்னவெல் லாமோ - உல கியல்பி னைச்சொலப் போமோ? பன்னு முரையிறந் தேகும் - வரும் பழக்க வழக்க மாகும். 50 நல்லதன் தீயதன் பயனே - இங்கு நன்மையும் தீமையு மாகும். நல்ல திதுவிது தீது - என நாடுதல் கூடுமோ ஓது. 51 தீமையு நன்மையுந் தானே - உயிர் செய்யுந் தொழிற்பய னாகும். தீமை யிதுவிது நன்மை - எனத் தெரிந்து ரைப்பதோ வன்மை. 52 கள்வர்க்கு நல்லது திருட்டு - பணக் காரர்க்குத் தீயது திருட்டு. கள்வர்க்கும் செல்வர்க்கு மொன்றாய் - நன்மை காணுவ துமியல் பாமோ? 53 ஏமாற்று வோர்க்கது நன்று - அங் கேமாறு வோர்க்கது தீது. ஏமாற்று வோர்க்கு மவர்க்கும் - நன்மை எண்ணுவ துமியல் பாமோ? 54 ஊருவோ ருக்கது நன்று - சுமந் தோடுவோ ருக்கது தீது. ஊருவோ ருக்கும வர்க்கும் - நன்மை உன்னுவ துமியல் பாமோ? 55 ஆடுவோ ருக்கது நன்று - நின் றாட்டுவோ ருக்கது தீது. ஆடுவோ ருக்கும வர்க்கும் - நன்மை ஆயுவ துமியல் பாமோ? 56 தின்னுவ தற்கது நன்று - கொன்று தின்னற் படற்கது தீது. தின்னுவ தற்கும தற்கும் - நன்மை தேறுவ துமியல் பாமோ? 57 வேறு இன்னப டிநடக்கும் - உல கியற்கை யினடப்பை இன்னப டிநடக்க - வேண்டுமென் றெண்ணுவ துமியல்பே. 58 எண்ணுவ தன்படியே - உல கியல துநடக்கப் பண்ணில ரிதெனினும் - முயன்று பார்த்தனர் மேலோர்கள். 59 ஆற றிவுடையோர் - மக்கள் ஆமெ னவறிவோர் கூறு வரதனில் - ஒரு குறையு முண்டுகொலாம். 60 நடக்கை யிற்றவறித் - தீமை நாடி டுமனத்தை அடக்கி யாளுவதே - பகுத் தறிவ தன்பயனாம். 61 பகுத்த றிவதனைப் - பயன் படுத்தி வாழ்வதுவே வகுத்த மன்னுயிரில் - வரும் மக்க ளின்றகவாம். 62 ஆக்கு மவ்வறிவின் - பயன் அமைகி லாதவரை `மாக்கள்’ என்றிகழ்ந்தார் - நம் வள்ளு வப்பெரியார். 63 மாக்கள் மக்களுடன் - ஒன்றி வாழ வைப்பதுவே ஆக்கி டுந்தொழிலிற் - படும் அரசி யலமைப்பாம். 64 அரசி யலமைப்பை - ஏற் றாண்டி டுமவனும் வரிசை தப்பிடுதல் - அம் மாக்க ளினியல்பாம். 65 மாக்க ளினியல்பை - மாற்றி மக்க ளினியல்பை ஆக்கி டுமவனே - நல் லரசெ னப்படுவான். 66 எண்சீர் விருத்தம் நல்லரசி னியற்படிமூ வருமுன் தங்கள் நாட்டுமக்கள் தங்களைத்தம் உறுப்பாக் கொண்டங் கெல்லவரும் ஓருயிரி னுடம்பு போல இயன்றொருமை யுறவுடம்பின் உறுப்புத் தம்முள் பல்லதனைக் கைவருத்தின் கையும் நோகும் பல்கடித்தால் கையுடனே பல்லும் நோகும் வல்லரசு மவ்வாறே நோகு மென்னும் வாய்மையறிந் தினிதாண்டு வந்தா ரம்மா! 67 கால்வலித்தால் கைவலிக்கும் கண்ணும் நோகும் கைவலித்தால் தலைவலிக்கும் காலும் நோகும் மேல்வலித்தால் அம்மேல்மே விடுமற் றெல்லாம் மிகவலிக்கும் அவ்வலியும் மேலே போகும் போல்வலிக்கும் அவ்வாறே கொடியார் தம்மால் பொதுமக்க ளோடரசும் வருந்தும் என்னும் நூல்வலிக்கும் படிகொடுமை நிகழா வண்ணம் நுனித்தாய்ந்து முறைபுரந்தாங் கினித்தா ரம்மா! 68 காலிலோர் கட்டி வந்தால் கிழித்துப் புண்ணைக் கசக்கிச்சீ வெளிப்படவே பிதுக்கித் தீயைப் போலவே கொளுத்துகின்ற மருந்து போட்டுப் புண்ணாற்றி நலனுறுவர்; சும்மா விட்டால், காலொடுகை முதலியமற் றுறுப்பி னோடு கடுவலியா லவ்வுடலும் வருந்து மாறு போலவே கொடியர்களை யொறுக்கா விட்டால் புரைபடுமென் றேயொறுத்துப் புரந்தார் மன்னே. 69 கட்டியதைக் கிழித்தாற்றா திருந்தோ மானால் கடுவலியா லுடல்வருந்த லோடக் காலை வெட்டியெடுத் திடவேநேர்ந் தாலும் நேரும்; மிகுந்திடுபல் வலியைமருந் திட்டாற் றாமல் விட்டிருப்பின் மற்றபற்கும் பரவு மந்நோய் வெடுக்கெனவப் பற்பிடுங்கி நலங்காண் மாறு கெட்டவரை யொறுத்துமக்க ளினிது வாழக் கெழுதகவோ டுடல்காக்கு முறையிற் காத்தார். 70 கய்யில்வருங் கட்டிதனை யறுத்துச் சுட்டுக் காரமிட்டாற் றுதல்போலக் கொடுமை நாளும் செய்யுமிழி தகையினரைச் சிறையி லிட்டும் திருத்தியுமா டிடும்பல்லைப் பிடுங்கி யந்நோய் மெய்யதனிற் பரவாமற் செய்தல் போல மிகைசெய்யுங் கொடியாரைத் தூக்கி லிட்டும் வய்யமெலாம் இசைபரவ மக்கள் மெச்ச வண்டமிழ்நன் னாடாண்டு வந்தா ரம்மா! 71 பள்ளவய லிடைமுளைத்துப் பருத்துச் செந்நெற் பயிர்வளர வொட்டாமற் செய்யும் புல்லைப் பள்ளர்கள்கண் ணோடாமல் அறவே ரோடு பறித்தெறிந்து நெல்வளர்க்கும் படியே போல, உள்ளபடி கொடியவரைக் கொலையில் வேந்தன் ஒறுத்தல்கட னென்னவரை யறுத்துச் சொன்ன வள்ளுவர்வாய் மொழிப்படியே வன்கண் ணாரை வலிதொறுத்துக் குடிகாத்து வந்தா ரம்மா! 72 தொட்டிலிலே வளருகின்ற குழந்தை அம்மா சோச்சியென்றும் பாச்சியென்றும் கேளா வேனும் அட்டிலிலே சோறுசா றாக்கு கின்ற அவ்வேலைக் கிடையிடையே சென்று பார்த்து வட்டிலிலே பால்வார்க்குந் தாயைப் போல மக்கள் நலந் தமைத்தாமே ஆய்ந்து கண்டு முட்டுறவி லாதினிது வாழ நந்தாய் மொழிபோல மூவருநன் முறைசெய் தாரே. 73 பேரரசுஞ் சிற்றரசும் பெருமை மிக்க பெரும்படையும் தமிழகத்தை யொருகு டைக்கீழ் ஓரரசின் கிளைபோல உரிமை தாங்கி ஒற்றுமையாய்க் கொற்றமெனும் உடைமை யெய்திப் பாரரசர் புகழ்ந்தேத்திப் பரவ நாளும் பாவலர்செந் தமிழ்பாடிப் பதிவு செய்யச் சீரரசு செய்துதமிழ்க் குடிகள் மெச்சச் செங்கோல்கோ டாதுமுறை செய்தா ரம்மா! 74 சிந்து புறவி னுயிரினைக் காக்கவே - துலை புக்க பெரியோன் எனப்புகழ் அறநெறி மிக்கவச் சோழனின் - செங்கோல் ஆட்சியின் மாட்சியைச் சொல்லவோ! 75 வகையறி யாதுதேர்க் காலினில் - வீழ்ந்து மாண்டவான் கன்றினுக் காகவே மகனை முறைசெய்த சோழனின் - செங்கோல் மாண்பினை யென்னென்று காண்பது! 76 மைந்தர் எதிர்த்தபின் வாழ்வது - வீண் வாழ்வெனக் கோப்பெருஞ் சோழனும் வெந்துள நொந்துவ டக்கிருந் - துயிர் விட்டதிங் கெம்முறைப் பட்டது! 77 யாரிந்த ஊரில் துணையெனக் - கென அரசு துணையெனப் போயின கீரந்தை சொல்லையம் மாறனும் - நாளும் கெட்டியாய்க் காத்துவந் திட்டுமே; 78 ஐயுற்ற கீரந்தை என்பவன் - ஐய மகற்றக் கதவினைத் தட்டிய கையைக் குறைத்தவப் பாண்டியன் - குடி காப்பினை எங்ஙனம் யாப்பது! 79 கண்ணகி சிலம்பைக் கண்டதும் - அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் கன்னித் தமிழர்செய் கோன்முறைக் - கெடுத்துக் காட்டாக நிற்கவும் மாட்டானோ? 80 இன்னுயிர் விட்டுச்செங் கோலினைக் - காத் திட்ட செழியன் செயலினை பொன்னெனப் போற்றிய குட்டுவன் - முறை போலிது வென்றலும் ஏலுமோ! 81 கொடியவன் என்று குடிமிக - நொந்து கூறுமச் சொல்லைத்தம் மேல்வரும் படையினு மஞ்சிச்செங் கோலினை - மிகப் பாதுகாத் துவந்தார் மூவரும். 82 மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் - என வல்லிய செங்கோல் வளைவுறின் உயிர்நீப்பர் என்னும் உரையினைத் - தம் உயிரினுங் காத்தினி தோம்பினர். 83 நூலி னளந்து நுணுக்கமாய்ச் - செயும் நுண்வினை யாளர்கள் போன்றுசெங் கோலி னளந்து குடிகளை - நலங் கொள்ளவே செய்திசை யள்ளினர். 84 கட்டளைக் கலிப்பா யாது மூரேயா வருங்கே ளிரெனும் ஆன்ற வருரை யைத்தலை மேற்கொடு போது கின்ற அயல்நாடர் தங்களைப் போது கவென வேவர வேற்றவர்க் கேது மேகுறை யின்றியே யன்புடன் இனிது போற்றியே வந்தனர்; இல்லையேல், தீதி லாதின் றயல்மொழி யாட்டியர் திரிவ ரோவினி தேதமிழ் நாட்டிலே? 85 அன்று விந்த வடக்கி லிருந்துமே அணுகி வந்தமூ தாரிய மக்களை `நன்று போதுக’ வென்றின் முகத்துடன் நயந்து நல்விருந் தேற்று. `நலத்துடன் ஒன்றி வாழ்கநும் சொந்தநா டென்னவே உடனி ருந்தெம் அறிவர்கள் தம்முடன்’ என்றிங் கேநிலை யாக விருந்திட இனிது போற்றினர் இந்நில மன்னரே. 86 வணிக நங்கைநங் கண்ணகி தன்னிடம் மங்கை தேவந்தி தோழமை பூண்டதும், நணிகி யிங்கு குடிபுகுந் திட்டவந் `நான்ம றையாளர் வாழ்த்துகை யின்னெதிர் பணிக வென்றலை’ என்றொரு பாண்டியன் பகர்ந்த துமய லாரைத் தமிழர்கள் மணிக லந்த வொளியெனப் போற்றிய மாண்பி னுக்கு வழிமொழி யாகுமே. 87 வாயில் வேண்டித் தலைமகள் தன்னிடம் வந்த ஆரியத் தோழியை அன்புடன் வாயில் நேர மறுக்கத் தலைவியும் வறிது செல்லத் துணிகிலாத் தோழியும் கோயில் மேயநுந் தோழியர் தம்முடன் கொண்ட னையொன்றாய்ப் போலும் செவிலியென் தாயெ னவறி கின்றிலை நன்றிலை தகவி லையென் றுரிமைகொண் டாடினாள். 88 காக்கை காக்கா வெனக்கரை யக்கரை கட்டி யங்கூற ஒட்டுவால் காரியும் சேக்கை வீசி யிளங்கதிர்ச் செல்வனும் சிறுந கைபுரிந் தேகீழ்த் திசையினில் ஏக்க ழுத்த முடன்வரக் கண்டுமே யவன மங்கையர் அப்பகற் செல்வனைப் பூக்கள் தூவிக் கொடுவர வேற்பவர் போல முன்றில் தொறுங்கோலம் போடுவர். 89 தைய லர்கொடு கண்ணியு மாலையும் தான்றொ டுப்பர் தகவுற வேசீனத் தைய லர்நறுஞ் சாந்தக் குழம்பினைத் தகுதி யாகக் கலக்குவர் ஆரியத் தைய லர்கமழ் தொய்யிற் குழம்பினைத் தண்ணெ னத்தகக் கூட்டுவர் யவனத் தைய லர்ஒப்ப னைசெய்கு வார்தமிழ்த் தைய லர்தந் தலைவியர் மெச்சவே. 90 அரசு நீழல் அறமுதற் செல்வனும் அசோக நீழல் அமர்ந்த வொருவனும் பரிசு போல வுலகிடை வாழுநர் பகுத்து ணர்ந்து பயன்பட வாழவே வரிசை யாக அருளறந் தன்னையவ் வஞ்சி பூம்புகார் மாமது ரையொடு புரிசை சூழ்நகர் ஊரக மெங்கணும் பொருள்வி ரித்தனர் புத்தரும் போதரும். 91 முத்த மிழ்போல் முடியுடை மூவரும் முடியி ழந்து கொடுகி மிடிதெற மத்த ளைந்த தயிரின் வழிவரும் மதிப்பி ழந்து வரிசை தவறியே கொத்த டிமைக ளாக அயலவர் கொடிப றக்கத் தமிழக மெங்கணும் ஒத்து வாழ்ந்தது முன்னவ் வடிகளை உலவ விட்ட உயர்குண மல்லவோ? 92 சொல்லி யன்ற புலவர் குழாத்தொடு துறையி யன்ற தமிழினி தாய்ந்துமே நல்லி யன்ற புகழ்க்கொடி யைநிலை நாட்டி வாழ்ந்தவப் பாண்டிய மன்னனும் அல்லி என்றதம் ஆருயிர்ச் செல்வியை அர்ச்சு னற்குக் கொடுத்து மகிழ்ந்தது கல்லி யன்ற இமத்தொடு தென்மலை கலந்து நின்றதைக் காட்டுவ தல்லவோ! 93 பார தப்போர்ப் பதினெட்டு நாளினும் பாண்ட வர்படைக் குப்பசி தோற்றிட ஊர தில்விருந் தோம்புதல் போலவே உவந்து மேபெருஞ் சோறது நல்கிய சேர வேந்த னுதியஞ்சே ரலினச் செயலை யெண்ணிற் றிசைதெரி யாவணம் காரு றங்கு மிமத்தொடு தென்மலை கலந்து நின்றதைக் காட்டுவ தல்லவோ! 94 அமைவி லாதுமண் ணாசைப் பெருக்கினால் ஐவ ரோடவ ரீரைம் பதின்மரும் தமது வில்வலி காட்டி யெதிரெதிர் தாம்பொ ருதவப் பாரதப் போரினில் தமிழ கத்துமூ வேந்தரும் ஐவர்க்குத் தான மைந்து படைத்துணை யானமை இமய மோடு பொதியி லுறவுகொண் டிருந்த தென்றற் கெடுத்துக்காட் டல்லவோ? 95 வெய்த லைப்படு மேல்கடல் தீவினில் வெறிதி ருந்து விழுக்குடி கட்கிடர் பெய்த லைத்த அறனில் யவனரைப் பிடித்து வந்து திரைதொழு வஞ்சியில் நெய்த லைப்பெய்து கைபிற் கொளீ இயவர் நிலைதி ருந்தி யினியணு கேமெனச் செய்த தப்பினை யொப்பிடப் போவென்ற சேரன் கோன்மையைச் செப்புதல் ஒப்புமோ! 96 பொலஞ்செ லுத்திப் பொருள்கொடு கப்பலில் போது கின்ற பொழுதவ் வணிகரை வலஞ்செ லுத்தி வழிமறித் தையகோ! வலிதிற் கொள்ளை யடிப்ப தொழிந்திடக் கலஞ்செ லுத்தி வணிகர் கலக்கறக் கடற்க டம்பர் தமையழித் தவ்வழி நலஞ்செ லுத்திய சேரன்செங் கோலைமேல் நாட்டு மக்களுங் கேட்டு நயந்தனர். 97 ஆண்மை யற்ற வடபுல வேந்தர்கள் ஆசை யுற்றுமுன் தென்புல மண்ணினைக் கேண்மை யற்றுக் கெடுபிடி செய்ததால் கிழக்கி டாத நெடுஞ்சேர லாதனும் தோண்மை யுற்றவ் விமய வரம்பனாய்ச் சூடி வாகை துலங்கின னேயலால், வாண்மை யுற்றிம மண்கொளற் காமெனில் வடக்குத் தெற்கெனும் வார்த்தை வழங்குமோ! 98 அமைவி லாது தமிழ்பழித் திட்டவவ் வறிவி லாத கனக விசயர்க்குத் தமிழர் வீரமிஃ தாமெனக் காட்டவே தந்தை போலவச் சேரன்செங் குட்டுவன் இமய மீது படையெடுத் தானலால் ஏதி லார்நிலங் கொள்ளுதற் காமெனில், சுமடு தள்ளி வடக்குத்தெற் கென்றிடும் சொல்லி னுக்குப் பொருளின்று செல்லுமோ? 99 வஞ்ச மேய வடபுல மன்னர்கள் வந்து வந்து படைகொடு தென்புலம் நஞ்சு போலக் கொடுமைகள் செய்ததால் நாம வேற்கரி காலன் வெகுண்டுபோய் மஞ்சு தோயிம யத்தில் புலிக்கொடி வைத்த தன்றிம மண்கொளற் காமெனில், பிஞ்சு வாயும் வடக்குத்தெற் கென்றிடும் பேச்சி னுக்குவாய் வீச்சின் றிருக்குமோ? 100 மடமை யுந்த வடவர் தமிழர்தம் மறம றிகில ராகிமண் ணாசையால் கடமை யின்றிக் கெடுபிடி செய்ததால் கனன்றெ ழுந்து கடலென ஆரியப் படைக டந்த நெடுஞ்செழி யனெனும் பட்டம் பெற்றவப் பாண்டியன், அன்னவர் உடைமை கொண்டிட எண்ணி யிருப்பனேல், உலவு மோவடக் குத்தெற் கெனுஞ்சொலே? 101 மிகுதி கொண்ட எதிரில் வடவரை வென்றி மமுடி மீது புலிபொறித் தகுதி கண்ட கரிகால் வளவனும் அவந்தி நாட்டவன் தோரண வாயிலும் மகத நாட்டவன் பட்டிமண் டபமும் வச்சி ரநாட்ட வன்கொற்றப் பந்தரும் தகுதி யாகப் புகார்கொடு வந்தமை தமிழர் மண்கொளாத் தன்மையைக் காட்டுமே. 102 பொங்கு வான்படை கொண்டுசென் றேயிமப் பொருப்பி னிற்பாய் புலிபொறித் தன்புடன் அங்கு ளார்தந்த வென்றிப் பரிசுடன் அருளி மீண்ட அடற்கரி காலனும் தங்கி யப்படை சேர வடபுலந் தன்னை யாண்டிடத் தான்சென் றிருப்பனேல், கங்கை யைத்தமிழ்க் காவிரி தன்னொடு கலந்து செல்லென விட்டிருப் பானன்றோ? 103 அன்று செந்தமிழ் வேந்தர் திறமறி யாமை யால்வட மோரியர் தம்படை சென்று செந்தமிழ் கொண்டிடு வோமெனச் செருக்கி மண்ணசை வந்து `செருப்பாழி வென்ற’ என்ற சிறப்புப் பெயரினை மேவ வேயிளஞ் சேட்சென்னி அன்னவர் பின்றுந் தென்புலம் மேயது சோழனின் பிறர்நி லங்கொளாப் பீடுடை மையன்றோ? 104 வலிய வந்தவம் மௌரியர் வெம்படை வடக்கு நோக்கி மகதங்கண் ணீர்விட ஒலிய விந்து புறங்கொடுத் தோடவே ஓட விட்டு வறிதே திரும்பிய கலிய விந்தகீழ் கொங்கிற் புரவலன் கடிம தில்வள மோகூர்ப் பழையனும் அலிய லன்பிறர் மண்கொள வெண்ணிலன் ஆத லாலோட விட்டிவண் மீண்டனன். 105 சிலம்புச் செல்விக்குச் சேரன்செங் குட்டுவன் செய்த அவ்வழி பாட்டு விழாவினில் இலங்கை மன்னவ னுங்கொங்கு வேளிரும் இளஞ்செ ழியனொ டுபெருங் கிள்ளியும் உலங்கொள் வேற்படை வேந்தர் பிறருமாங் குடனி ருந்தமை மூவரு மற்றவர் நிலங்கொ ளாது நெடிதுகோ லோச்சிய நெறிமு றைக்கோ ரெடுத்துக்காட் டல்லவோ? 106 முன்று வந்த முடியுடை மூவரும் முத்த மிழ்ப்பிரி வொத்தம் மொழியென ஒன்றி மூன்றா யொருதமிழ் நாட்டர சோச்சி வந்தன ரன்றி ஒருவர்மண் வென்று கொள்ள விரும்பி யிருப்பரேல் வீர மேயுரு வாகிய தன்மையால், இன்று சேரசோ ழபாண்டி நாடென யாமொ ழிந்தின் புறுவதற் கில்லையே. 107 புழுதி தோய இமயப் பொருப்பிடைப் போது வேமென வேவஞ்சி சூடுமப் பொழுதி லேயன்று சேரன்செங் குட்டுவன் புலவிற் கெண்டை பொறித்தவோ ரேட்டினில் எழுதி னானென் றிளங்கோ வடிகளும் இயம்பு கின்றவச் செய்தியம் மூவரும் பழுதி லாதொன்று பட்டுத் தமிழகப் பரப்பை யாண்ட துரைப்பதொன் றல்லவோ? 108 கண்கொ ளமறங் காலுந் தமிழ்ப்படை கனன்றெ ழுந்து திசைதொறுஞ் சென்றது மண்கொ ளற்கன்று; மாற்றலர் மண்ணசை மடிய வாகை முடிவதற் கேகொலாம். எண்கொ ளப்பகை வெல்லற் கமைந்துமே எவர்பி றர்மண்கொண் டாண்டனர் மூவரில் மண்கொ ளவேலி மங்கும ரியிடை வண்ட மிழொன்றே யின்று வழங்குமே. 109 பண்கொ ளவிசை பாடுதல் போன்மெனப் பசிகொ ளவுணும் பாலமு தாமெனக் கண்கொ ளவுளங் காணுங் குறிப்பெனக் காத்து வண்புகழ் பூத்தன ரன்றியே, புண்கொ ளவுளங் கண்கள் புனல்கொளப் புலம்பி யேகுடி மக்க ளிரங்கிடப் பெண்கொ லைபுரி நன்னனை யன்றியே பிழைபு ரிந்தவர் யார்தமிழ் மன்னருள்? 110 சுமையெ னநில மேங்கப் படைகொடு தொடித்தோட் செம்பியன் என்னுமச் சோழனும் இமய நாட்டிறை வேண்டிடச் சென்றவன் எதிரி தூங்கெயில் என்னுமக் கோட்டையைக் குமைய வென்றிம வானவர் கோமகன் கோட்டை யைப்பாது காத்ததன் சான்றதாய் அமைய யந்திரப் பாவை கொடுத்தனன். அங்ங னந்தமிழ் மன்னர்க ளாண்டனர். 111 படைபு காது பெருஞ்சுவர் கட்டியே பாது காத்தனர் சீனர்; நிலக்குறை உடைய ஆலந்து நாட்டினர் நீள்கடல் ஓரத் தேகரை கட்டியே வாழ்ந்தனர். தடையி லாதுளம் பொங்கி யெழுந்துசெந் தமிழை யுண்டிட வந்தவத் தென்கடல் அடைகி லாதுவேல் நாட்டியே திண்கரை ஆக்கி னானொரு பாண்டிய மன்னனே! 112 சிந்து கங்கையர் விந்த வடக்கினர் சீன நாட்டினர் தீவம் பலவினர் நந்து மேல்கடல் சூழ்தர மேவுமேல் நாட்டி னர்பலர் நந்தமிழ் நாட்டினில் வந்து கைத்தொழில் வாணிகம் ஏவலில் வாழ்ந்து வந்தனர்; மக்களும் மன்னரும் முந்து வந்த முறையினிற் போற்றினர். மூவ ராட்சி முறைமையிஃ தாகுமே. 113 இங்கு போந்துவாழ்ந் திட்ட அயலவர் இனிது நந்தம் இயல்பிற் றிரியராய்த் தங்கள் தாய்மொழி பேசித் தமரொடு தத்தம் வாழ்வியல் ஒத்துத் தகவினின் எங்கு வாழ்கிறோம் என்ற நினைப்பெதும் இன்றி யேதங்கள் சொந்தத்தாய் நாட்டினில் அங்கு வாழ்வதே போலிங்கு வாழவன் பாய்த்த னித்தமிழ் ஆட்சி புரிந்தனர். 114 அன்று மண்ணசை யாலக் கிரேக்கநாட் டலெக்குச் சாண்டர் படைகொடு கீழ்த்திசை சென்று வென்று சிறப்புறு வேமெனச் சிந்தை செய்துநம் இந்தியா வந்தவன் கொன்று கொன்று குவித்துநம் மக்களைக் குருதி வெள்ளம் குடகடல் சேப்புற வென்றி வீரன் எனமடிந் திட்டன்மூ வேந்த ரிலெவர் இங்ஙனஞ் செய்தனர்? 115 உற்றெ ழுந்துமண் ணாசை பிடர்பிடித் துந்த வேயப் பிரான்சுநெப் போலியன் மற்ற நாடு களைவென்று தானொரு வல்ல ரசனாய் வாழப் படைகொடு கொற்றங் கொண்டிடக் கொன்று குவித்துமே குருதி வெள்ளங் கரைபுரண் டோடிட வெற்றி வீரன் எனமடிந் திட்டன்மூ வேந்த ரிலெவர் இங்ஙனஞ் செய்தனர்? 116 பன்மு றைநம திந்திய நாட்டின்மேற் படையெ டுத்துக் கசினிபொன் னாசையால் வன்மு றையினால் இந்திய மக்களை வாளி னுக்கிரை யாக்கியே ராளமாய்ப் பொன்ம ணிமுத லாய பொருள்களைப் பொதிபொ தியாகக் கொள்ளைகொண் டய்யகோ! அன்மு றையா லழிவுசெய் தான்தமிழ் அரச ரிலெவர் அங்ஙனஞ் செய்தனர்? 117 அங்க வன்பின் முகமது கோரிமண் ணாசை யுந்தப் படைகொ டடிக்கடி இங்கு வந்துவந் திந்திய மன்னரோ டிகன்று வென்று முடிவினி லிங்ஙனே தங்கி யீங்கு முகமதி யராட்சி தனைநி லைநாட்டி விட்டனன். இங்ஙனம் எங்கு சென்றெந்த நாட்டினை வென்றவண் எவரி ருந்தனர் எந்தமிழ் வேந்தரில்? 118 இன்ன வாறுமண் ணாசைப் பெருக்கினால் இயன்ற வாகும் அரசியல் மாற்றங்கள். சொன்ன வாறிவ் வுலகில் அரசுகள் தோன்றித் தோன்றி மறைந்தவை எண்ணில. அன்ன வாறொரு மாற்ற மிலாதுபல் லாயி ரக்கணக் காகிய ஆண்டுகள் என்ன வாறு தமிழர சொன்றுதான் இயன்ற வாறு தொடர்ந்திங் கிருந்ததே. 119 தமிழ ராட்சியாங் காண்டுபல் லாயிரந் தான்தொ டர்ந்து நடந்ததன் காரணம், தமிழர் தம்மைத் தமிழரே ஆண்டதால் தமிழர் என்னும் உணர்ச்சி தலைப்படத் தமிழர் ஆட்சி தமதென மக்களும் தமிழர் வாழ்வு தமதென மன்னரும் தமிழர் என்னும் தனிப்பொற் றளையினால் தானி றுக்கித் தளைத்தமை யாகுமே. 120 தாழிசை குமரியொடு வடவிமயத் தொருமொழிவைத் தாண்ட குட்டுவர்கோன் வில்வலியின் கோன்முறையைக்காணின், இமயகொடு குமரியிடை இருந்தவர செல்லாம் இவன்முறையின் படியொருமித் தினிதாண்டா ரெனலே. 121 பகையறுத்தல் அரசர்களின் பான்மையினா லன்றோ பனிமலையில் வில்புலிமீன் பொறித்தனரே யன்றி, திகைமுழுதும் பிடித்தாள நினைத்திருப்பா ராயின் சீனரின்று மண்வேண்டித் திரிகுவரோ சொல்லீர்? 122 அன்றுதமிழ் மூவர்தமி ழகத்தினையாண் டிருப்பின் ஐம்மூன்று பத்தாண்டிங் காங்கிலவ ராட்சி நின்றுநிலை பெற்றிருக்கு மோவவரிந் நாட்டை நினைத்திருப்பா ரோவாள நினைத்தொருகாற் பாரீர்! 123 முடியுடைமூ வேந்தர்களும் முறையொடிது காறும் முன்போலத் தமிழகத்தை யாண்டிருப்பா ராயின், அடியொடுல கத்தினையே அழித்தொக்குங் கொடிய அணுகுண்டின் பெயரையவர் அறிகுவரோ சொல்லீர்? 124 பிற்காலத் தமிழரசர் பெருகியமண் ணசையால் பேரரசு மூன்றினையும் ஓரரசு கண்டு நற்காலத் தயல்நாடர் நாட்டரசர் ஆக நாமடிமை யாயலையத் தாமுதவி விட்டார். 125 நடக்குமர சாட்சியினைப் பிடித்தயலா னாள நாட்டுமக்கள் ஒருநாளுங் கேட்டிருக்க மாட்டார். அடக்குமுறை யாட்சியென்றும் அகன்றொழித லியல்பே ஆங்கிலவ ராட்சியிதற் காமெடுத்துக் காட்டே. 126 சுமையதனைப் பெரிதேற்றித் தொட்டடித்திட் டாலும் தொடர்ந்துபொதி மாடுசுமை சுமந்துசெலா ததுபோல், அமைதியிலா மக்களைத்தம் படைவலியால் அடக்கி ஆண்டிடினும் மக்களதற் கடங்கிநட வாரே. 127 அமைதியுடன் வாழ்வதற்கே அறைகடல்சூ ழுலகில் அரசியலேற் பட்டினிதே யாண்டுவந்த தல்லால், அமைதியிலா மக்களையா ளடிமைகளா யடக்கி ஆளுமர சாட்சியர சாட்சியுமா காதே. 128 தம்மரபோன் தம்மொழியோன் தந்நாட்டிற் பிறந்தோன் தம்மரச னாவிருக்கத் தாம்விரும்பு மல்லான், அம்மரபி லாவொருவேற் றாட்சியினி லிருக்க அந்நாட்டு மக்களென்றும் அமைந்திருக்கி லாரே. 129 தம்மினத்தான் தம்மொழியான் தந்நாட்டான் ஆளல் தகுதியுடைத் தாமிதற்குத் தமிழரசே சான்றாம். தம்மினத்தான் தம்மொழியான் தந்நாட்டான் அல்லான் தந்நாட்டை யாளுவது தகுதியுடைத் தன்றே. 130 இம்முறையே தாய்நாடு தாய்மொழிநாட் டரசும் இயன்றுநடந் திட்டதுகாண் இருங்கடல்சூ ழுலகில் அம்முறையே அரசியல மைப்பதனை வகுத்தே அமைதியுடன் வாழ்ந்திடுதல் அறிவுடைமை யாமே. 131 3. நாகரிகம் சிந்து வெள்ளி முளைத்தது போல - மூ வேந்தரு மக்கள் விரும்பவே சால உள்ளிய வாறியல் பூண்டார் - வளம் ஓங்கிட நாட்டினைப் பாங்குடன் ஆண்டார். 1 ஊணுடை யேமுத லான - பொருள் ஒன்றுங் குறைவிலா தொன்றியங் கீன நாணுடை நல்லவர் போல - நாளும் நாடியே நல்வாழ்வு கூடிடச் செய்தார். 2 தத்த முடைமைக ளோடு - அவை தம்மை நுகர்ந்து தகவொடு வாழும் ஒத்த வுரிமையி னோடு - குடி ஓம்பியே நாட்டினை மேம்பட ஆண்டார். 3 கற்பன கற்றறி வெய்த - உயர் கல்விக் கழகங்கள் காணுமூ ரெங்கும் சொற்பொரு ளின்சுவை பெய்த - நூல் தொக்க வகங்களூர் தோறும்வி ளங்கும். 4 நாட்டை யணிநக ரங்கள் - நனி நாகரி கத்தின் நடுநிலை யங்கள் கோட்டைகொத் தளங்க ளெங்கும் - மாட கூடங்கள் வான்வெளி யூடுவி ளங்கும். 5 மாமதி வெள்குமக் கோயில் - வெள்ளி மலைகுடைந் தாக்கிய மாமதில் வாயில் காமுறு கோபுரங் கண்டு - செங் கதிரு மொதுங்கிச் செலுமச்சங் கொண்டு. 6 வானை யகலென மோது - மதில் வாயில் கதவு திறவாத போது யானை குதிரைவில் லாளும் - சென் றகழின்கீ ழுள்ள சுரங்கையில் மீளும். 7 தீயினி லேயுரு காத - தனிச் செம்பினா லாய செழுமதிற் கோட்டை வாயினி லேயரு காத - பொருள் மாற்றலர், மற்றோர் வழக்கறாப் பாட்டை. 8 சூழ்ந்தக லாதெயில் மூழும் - வீரர் தொப்புத்தொப் பென்று விழுந்துமி தக்கும் ஆழ்ந்தக லாறகழ் சூழும் - மதில் ஆழிசூ ழிவ்வுல கத்தினை யொக்கும். 9 ஏப்புழை ஞாயிலி னின்று - வீரர்கள் ஏவும் பொறியுங் கருவியுஞ் சென்று கூப்பிடு தூரத்தே யூக்கும் - ஒன்னார் கொல்படை தன்னையக் கொல்படை யாக்கும். 10 ஆண்டொரு பத்தள வேனும் - பகை யாளர்கள் முற்றுகை யிட்டன ரேனும் வேண்டிய வேண்டிய வெல்லாம் - ஆங்கு வேண்டிய வேண்டியாங் குள்ளதக் கோட்டை. 11 உள்ள வுழிஞையின் போதும் - அகத் தோர்வெளி யேசென்று மீளவெப் போதும் கள்ள வழியொடு திண்மை - உயர்வ கலம ருமையு டையதக் கோட்டை. 12 ஈயெறும் புபுகு மேனும் - துண் டிரண்டாகு மாறிமை யாமலெப் போதும் கோயிலின் வாயிலைக் காப்பர் - அடுங் கோளரி போலவை வாளி யவனர். 13 ஆறகன் றன்னதெ ருக்கள் - ஆற் றங்கரை யன்னவில் லங்களில் மக்கள் சோறுசா றாக்கவி ழைக்கும் - அட்டில் தூம்புகை நல்விருந் தோம்பவ ழைக்கும். 14 சேணிப்ப டிச்செல்வோ மென்று - வெண் திங்களைப் போல்முக நங்கையர் செல்லும் ஏணிப்ப டிபோல்வி ளங்கும் - உயர் ஏழ்நிலை மாடங்கள் சூழ்மறு கெங்கும். 15 பாவையர் கூடிப்பந் தாடும் - அப் பாடமை யும்வேயா மாடங்க ளூடும் ஓவியச் சிற்பமி லங்கும் - அவை ஓங்கி மலையி னுயர்ந்துவி ளங்கும். 16 ஓவியப் போதிகை யோங்கும் - தூண்கள் ஓரத்தில் நின்றுதாழ் வாரத்தைத் தாங்கும் போவதற் கேவிடாக் கண்ணை - வழிப் போக்கர்கள் தூங்கிச் செலுந்தெருத் திண்ணை. 17 தோட்டிகால் மாட்டியக் காட்டில் - ஓடுவோர் தொப்புத்தொப் பென்று விழவவர் பாட்டில் கூட்டமாய் மாடி மேல் நின்று - கை கொட்டிச் சிரிப்பர்பூங் கோதையர் கண்டு. 18 பாடி யவனர்கை போற்றிச் - செய்த பாவை விளக்கினைப் பாவைய ரேற்றி ஊடி யொதுங்கிய மாண்பர் - தமை ஒப்பனை செய்பவர் ஒப்பவே காண்பர். 19 காலத ரின்வழி யாகத் - தென் காலொடு போதுமப் பால்வெண் ணிலவைப் பாலென உண்ணவே யூக்கும் - இளம் பைங்கிளி பள்ளிகொள் நங்கையை நோக்கும். 20 வான்வழி செல்மதி தன்னை - உயர் மாடந் தடுக்க வளியதர் தன்னைத் தான்வழி யென்றுபோய்ப் பார்த்து - துயில் தையல் முகங்கண் டகலுமே பேர்த்து. 21 தூங்கி விழித்தவோர் மின்னாள் - இ தோவென வீசுமத் தூவெண் ணிலவை நீங்கிய மேலாடை யென்றே - கை நீட்டியே மாந்துகண் கோட்டிப்ப டுப்பாள். 22 ஊடி வழித்தங் கெறிந்த - சாந்தம் ஊறிய சேற்றில் தலைவர்க ளூர்மா ஓடி வழுக்கிடக் கண்டே - மனம் உட்கித் தலைவியர் ஊடல் தணிவார். 23 மீன்விழி மங்கையர் கூடி - மாடி மீது புலர்த்துமைம் பாற்புகை யோடி வான்வெளி யைச்சென்று கூடி - அகில் மணத்தொடு வீழும் மழைத்துளி மாடி. 24 பஞ்சிதோய் வாயினைக் கிள்ளை - கோவைப் பழமென் றுணவாய் திறக்கவச் செள்ளை அஞ்சி யகற்றுங்கை நகத்தைக் - கண் டக்கக்கா வென்று சுளிக்கு முகத்தை. 25 இன்னென மானிளங் கன்று - தோளில் எழுதிய தொய்யிற் கொடியினை மென்று தின்ன வருவதைக் கண்டு - அவள் சிரித்து மகிழ்வா ளணைத்துமே கொண்டு. 26 ஆரிய மங்கைய ரோர்பால் - அழ கான யவன மகளிர்மற் றோர்பால் காரிகை பாடிக்கொண் டாட்டத் - தமிழ்க் கன்னிய ராடிக் களிக்குவர் நீட்ட. 27 சீனத்துச் சிற்றிடை யாரும் - யவனச் செல்விய ரும்வட தேயமின் னாரும் வானத்து மீனெனச் சூழத் - தமிழ் மங்கையர் ஆடிக் களிக்குவ ராழ. 28 நச்சினா ருக்கின்ப நல்க - அயல் நாட்டியர் அன்பொடு கூட்டியே பேசும் கொச்சைத் தமிழினைக் கேட்டே - தமிழ்க் கோதையர் அன்புகொள் வாரவர் மாட்டே. 29 சீனத்துப் பாட்டுக்கள் பாடி - உளந் தித்திக்கச் செய்வாளோர் செந்தமிழ்ச் செல்வி தேனொத்த செந்தமிழ் பாடி - இன்பஞ் செய்விப்பா ளவ்வாறோ ராரியச் செல்வி. 30 மெல்லென வோர் தமிழ்ச் செல்வி - யாழை மீட்டியே யேழிசை கூட்டியே பாடச் சில்லரிக் கண்யவ னத்தி - அதைச் சேர்ந்துமே பாடிச் சிறப்புறச் செய்வாள். 31 பாவைய ரிங்ஙனங் கூடி - நாளும் பன்மொழிப் பாடல்கள் பாடவே கூடப் பூவையுங் கிள்ளையுங் கூடி - அவர் போலவே பின்னணி சாலவே பாடும். 32 பூவையர் கூடிநீ ராடும் - வையை பொன்னி பொருநைதென் கன்னியன் றாடும் ஆவலி னாவலர் பாடும் - மணம் அத்தனை யுங்கமழ்ந் தொத்துமே யோடும். 33 தூறிய ஐவிரை மட்டோ - பத் துத்துவர் நாலெட்டோ மாலிகை யிட்டே ஊறிய நீரினில் மூழ்கிப் - பின் உற்றுநீ ராடுவர் பொற்றொடி நல்லார். 34 பூங்குழற் குப்புகை யூட்டி - ஈரம் புலர்த்திய பின்னர்ப் புனுகுநெய் யாட்டிப் பாங்குடன் ஐவகை யாக - ஒப்பனை பண்ணியே பூங்கொடி யென்னப் பொலிவார். 35 பன்மலர்ப் பைங்கொடி யென்கோ - பொற் பாவையென் கோமணிக் கோவையா மென்கோ சொன்மலர்த் தீந்தொடை யென்கோ - எனச் சொற்றிட ஒப்பனை யுற்றுத்தி கழ்வர். 36 கொண்டற் குழலாய நீங்கிச் - செய் குன்றினி லாடுங் குறிப்பினைப் பாங்கி கண்டவ் விடத்தினை நீங்கி - இடங் காட்டியே காதலர்க் கூட்டுவ ரோர்பால். 37 மீன்கவர் தாராவை முத்தால் - ஓட்ட மேற்பறக் குஞ்சிரல் மேற்பட வத்தால் தான்கவர் கெண்டையம் மின்னார் - முன்னர்த் தான்விழக் கண்ணைத் தடவுவரன்னார். 38 பாவையர் ஆலோல மென்னும் - தமிழ்ப் பாட்டிசை கேட்டவப் பைங்கிளிக் கூட்டம் போவது மாவது மாக - அப் பூவையர் கண்டுபொற் பாவைய ராவர். 39 செற்ற மொடுபகை மன்னர் - முடியைத் திருகி யெறியுங் களிறுக ளென்ன முற்றிழை நல்லார்நேர் படவே - நாற்று முடியைத் திருகி யெறிவர் நடவே. 40 மாலையைக் கண்டிளங் கன்று - அம் மாவெனக் கேட்டவம் மாதிடுக் கென்று வேலையை விட்டோடிச் சென்று - பிள்ளைக்கு மெத்தென முத்தங் கொடுக்குவள் நன்று. 41 பள்ளிச் சிறார்தாயு வப்ப - நன்கு பாவைப்போர் செய்து பழகுவ ரொப்ப பள்ளிச் சிறுமியர் அன்பாய் - சங்கில் பாவைக்கு வாத்துப் பழகுவ ரின்பாய். 42 பாவையைத் தொட்டிலி லிட்டே - இளம் பாவையர் பாடிக்கொண் டாட்டித்து யிற்பர் பாவையை வெட்டிய வாளை - இதோ பாரெனச் சிறுவர் காட்டிக்க ளிப்பர். 43 சிற்றி லிழைத்திளங் கொம்பர் - அன்பாய்ச் சின்னக் குடும்பம் நடத்திக்க ளிப்பர் சிற்றில் சிதைத்திள வம்பர் - அன்னார் செய்கையைக் கண்டு சிரித்துந டப்பர். 44 பாவையைப் பாடென்று கூட - இளம் பாவையர் செந்தமிழ் பாடுதல் கேட்டுப் பூவையுங் கிள்ளையும் பாட - இன்பம் பொங்கவே பாடுவர் அங்கதை மீட்டு. 45 சந்தி சதுக்கங்கள் தோறும் - உயர் தண்டமி ழின்பட்டி மண்டப மேவும் பைந்தமிழ்ப் பாக்களைக் கூறும் - அப் பாவலர் மீதுபூங் காவலர் தூவும். 46 பொங்கலை யார்கடல் மீதில் - கரை போதருங் கப்பலை யேதுறை மீதில் இங்குவா வென்றுகண் ணுழைக்கும் - ஒளி இட்டுயர் மாட விளக்க மழைக்கும். 47 வில்புலி மீன்குறி யிட்டுக் - கரை மீது கிடக்கும் பொதிமலை மீது கொல்புலி போற்குரைத் திட்டுக் - காக்கும் கூட்டமாய் நாய்களந் நீட்டிராப் போது. 48 அங்காடி கல்லாப் பொருள்களி னெல்லை - நாளங் காடியல் லங்கா டிக்கடை தோறும் இல்லாப் பொருளொன்று மில்லை - வாங்கு வீர்வரு வீரென்றவ் வக்கொடி கூறும். 49 கான்பூத்த பன்மலர் போல - அல்லங் காடி யெரியும் விளக்கொளி சால மீன்பூத்த வானெனத் தோன்றும் - முத்த மென்குவை வான்மதி யின்குவை போன்றும். 50 வேண்டும்பல் பண்டம்ப கர்வோர் - இது வேண்டும துவேண்டு மென்றுநு கர்வோர் மூண்டொலி யோவென மிக்கும் - தமிழ் மூவர்தம் மும்மை முரசினொ லிக்கும். 51 தாழிசை உண்பனவுந் தின்பனவுஞ் சுவைப்பனவும் பருக உடையனவும் உடுப்பனவும் முடிப்பனவுங் காண்போர் கண்பருகப் பூண்பனவும் புகைப்பனவுங் கமழக் களிப்பனவுங் குளிப்பனவும் உடையகடைக் கடலே. 52 வில்லெழுதிப் புலியெழுதி மீனெழுதி மேலே விண்வெளியிற் பறந்திடுமக் கொடியுயர்வி னாலே அல்லெழுதிப் பகலெழுதி அமைதருமங் காடி அம்மூவர் நாகரிக ஆட்சிவிளங் காடி. 53 வேறு சாலை மரமே தூணாகச் சமைந்த நகரத் தங்காடி காலை மாலைக் கடைப்பண்டம் கமழ்பூங் காயுங் கனிபோலும். 54 குழுமி யாங்கு பல்பண்டம் கொள்ளு நறும்பூங் கொம்பன்னார் பழமுங் காயும் பன்மலரும் பறிப்பார் போலத் தோன்றுவரே. 55 ஈதிங் கில்லை யிதுவில்லை என்போர்க் கீயும் பரிசேபோல் ஓதுங் குறையொன் றில்லாமல் உலகே போன்மவ் வங்காடி. 56 பொது களிறு பிளிறும் பேரொலியும் காலை முரசின் சீரொலியும் ஒளிறு கோயில் முன்றில்தொறும் உருமே றென்ன ஒலித்திடுமே. 57 சுரிசங் காரும் மறுகுதொறும் சோருங் கழிநீர்த் தூம்புகள்போல் பொருவெங் களிறுகள் பூங்காக்குப் புழைக்கை யால்நீ ரூற்றிடுமே. 58 தேனே புழங்கும் மட்கலங்கள் செய்வேட் கோவர் திரிகையைப்போல் நானே முந்தி எனப்பரிகள் நகுமண் டிலமாய் ஓடிடுமே. 59 வேலும் வாளுங் காய்ந்திடவே வெருவி யாங்கூ துலைக்குருகு போலி மறவர் குலமேபோல் பொருமிப் பெருமூச் சதுவிடுமே. 60 மருவி யிழைத்துக் கருவிகள்செய் மரங்கொல் தச்சர் இழைப்புளி போல் தெருவை யிழைத்து முன்னொடுபின் செல்லும் பெரிய கல்லுருளே. 61 கடலில் விளையும் மணிகளையும் கல்லில் விளையும் பொன்னினையும் உடலில் விளைய மின்னனையார் ஒளிரச் செய்வார் பொன்வினையார். 62 நல்லார் புலவர் நாற்பாவால் நன்காய்ந் திழைக்கும் நூற்போல இல்லார்க் கிடுவார் போற்பஞ்சை இழைத்தே தாறுக் கிடுவாரே. 63 நெய்வார் கைகா லேதனதா நெய்யு மொலியே முழவொலியாக் கொய்வார் குழலார் போல்தாற்றுக் குழல்கூத் தாடிக் களிப்பிக்கும். 64 தையலர் கண்டு கண்ணிமையாத் தானே விழித்துப் பார்த்திடவே தையலர் கண்ட படியெல்லாம் தானே வெட்டித் தைத்திடுவார். 65 கையைப் பிடித்து நோயளவு கண்டே மருந்து கொடுப்பார்போல் கையைப் பிடித்து நோயளவு கண்டே வளைகாப் புண்டிடுவார். 66 பொய்ப்போர்ச் சிலம்பக் கூடத்தே போர்செய் வீரர் செயல்கண்டே மெய்ப்போ ரென்றே அயலொற்றர் வெரீஇத் தமிழர் திறஞ்சொல்வார். 67 ஒருப்படு கணவன் கல்லாக ஒருமக னல்ல தில்லாதாள் செருப்பறை கேட்டு வாள்தந்தே செல்கெனப் போருக் கனுப்புவளே. 68 வாகை மார்பை வாள்போழ மாண்டது கேட்ட அவன்றாயும் ஆகு பொருளென் றவனீன்ற அந்நா ளினுமிக் குவந்தனளே. 69 வாளிடை வீழ்ந்தே ஒருகாளை வல்லுயி ரீயுந் திறங்கண்டே கேளிடை நின்ற அவனன்னை கெக்கெக் கென்று சிரித்திடுவாள். 70 வருதார் தாங்கி யுயிரீந்த வாள்வாய் மறவர் நடுகற்குத் திருநா ளன்று நகர்மக்கள் சீருஞ் சிறப்புஞ் செய்குவரே. 71 அயரா நின்ற வாள்மறவர் அருகே சென்று விறலியர்கள் உயிரோ வியம்போல் உவந்தாடி ஊக்கி வென்றி யாக்குவரே. 72 மன்னர் பிறந்த வெள்ளணிநாள் வரிக்கூத் தாடும் ஒருநங்கை மன்னர் கோலந் தனைக்கண்டே மகளிர் கோலந் தனைப்பார்ப்பர். 73 மணிமுடி புனைமங் கலநன்னாள் வாரி வழங்கி வருநரற அணிநகர் மக்கள் சிறைசென்றார் ஆண்டும் வறிதா மீண்டனரே. 74 கூடுஞ் சந்தி சதுக்கத்தின் குளிர்பூங் காவி னிடைமேவும் ஆடல் பாடல் அரங்கங்கள் அல்லும் பகலும் அடையாவே. 75 கல்லுங் கமழ இயற்கைமணம் கமழ்பொன் மேனிக் கருங்கண்ணார் இல்லம் பொலிய விளக்கேற்றி இரவுக் கோலம் கொள்வாரே. 76 புள்ளார் கமலப் பூந்தடத்தில் புக்கே யாடும் பொன்னன்னார் கள்ளார் கமலக் கவிமொட்டைக் கண்டே முகத்தைக் கைசெய்வார். 77 புகையா லுலர்த்தும் பூங்குழலின் புகையைக் கண்டே ஒருசிறுமி உகையா தீத்தீ தீத்தீயென் றோடிக் கையால் தேய்த்திடுவாள். 78 உள்ளுடை யுடுத்துப் பாவாடை உடுத்ததன் மேலோர் மெல்லாடை புள்ளுடை போல மேலாடை போர்த்துக் கச்சை யார்த்திடுவார். 79 வீரங் கொடைநேர் தருகொங்கு வேண்மாள் திருமண விருந்தேபோல் வாரைங் குழலார் காண்போர்க்கு வண்ண விருந்து செய்வாரே. 80 முல்லை முகையைப் பறித்தொருத்தி மோந்து பார்க்க அங்கொருத்தி பல்லை மெல்லா தெனவுவமை பார்த்தேன் வாயை மூடென்பாள். 81 தமிழ்தமி ழென்றால் அமிழ்தாகும் தமிழும் அமிழ்தும் இனிதாகும் அமிழ்தமிழ் தென்றால் தமிழாகும் அமிழ்தாம் நந்தாய் மொழியென்பார். 82 காலை யரும்பிப் பகலெல்லாம் கடும்போ தாகி அப்போது மாலை மலர்ந்து மணங்கமழும் மலரெம் மலரென் பாளொருத்தி. 83 அருகே சென்றால் சில்லென்னும் அகன்றே சென்றால் கொல்லென்னும் ஒருகா லேனும் அவியாதீங் குண்டோர் தீநீ கண்டாயோ! 84 காலை யொருத்தி தொழுதிடுவாள் கையை யொருத்தி பிடித்திடுவாள் மாலை யொருத்தி முடித்திடுவாள் மயிலே கண்டு மகிழ்வாயே. 85 வளையை யறுப்பா ளங்கொருத்தி வளையைத் தொடுவா ளிங்கொருத்தி வளையைப் பறிப்பா ளுங்கொருத்தி வளையைக் குறிப்பாய் வளை யோயே. 86 கொடியார் பூவைப் பறித்திடுவார் கொடியார் மாலை தொடுத்திடுவார் கொடியார் காண முடித்திடுவார் கொடியார் கூறாய் கொடியோயே. 87 வேயுரை யொற்றர் மிகவார்ப்ப விரிச்சி யுரைத்தார் பெயர்பூப்ப மேயு நிரையை இனிதோட்டி வெட்சி மறவர் ஊர் புகுவார். 88 வஞ்சி மறவர் குடையோடு வாணாட் கொள்ள மாற்றலர்கள் கஞ்சி காலில் விழுந்தாற் போல் கடிதே யோடிக் கதவடைப்பார். 89 குறியா வந்த கொல்புலியைக் கொன்றே யொருவன் இவளுள்ளம் பறியா நின்றான் எனமகளின் படரைக் குறிப்பாள் அவள்தோழி. 90 வானப் பிறையைத் தொழுகென்றே வடிவேற் காளை வரவஞ்சும் கூனப் பிறையைப் பொருகண்ணாள் குறிப்பை யறிவாள் ஒருதோழி. 91 இவர்ந்தே தன்மேற் பாய்ந்திடுகொல் ஏற்றை யடக்கித் தன்னுள்ளம் கவர்ந்தாள் கண்ணைத் தன்கண்ணால் கண்டே மகிழ்வான் ஒருகாளை. 92 தாவிப் பாயுந் தன்னேற்றைத் தழுவ அஞ்சித் தனிநிற்கும் சாவிப் பயிரைப் போன்றானைத் தழலிற் பார்ப்பாள் ஒருகன்னி. 93 சட்டென வோடிக் காதலனைத் தழீஇக் கொண்ட தகைகண்டே விட்டவ னொடுசெல் கென்றுதமர் மீள்வா ருறையுள் வாள்சேர. 94 ஓருயி ரீருட லாயன் பின் ஒருவனும் ஒருத்தியும் செல்கின்றார் சேரிட முந்தாய் சேய்த்தன்று திரும்பிச் செல்கென் றரும்புவரே. 95 உற்றவர் வாழ்த்த இயமார்ப்ப ஒண்கலன் பூட்டி யுள்மகிழப் பெற்றவர் அவள்தன் பிரியாற்கே பெண்ணைக் கொடுத்து மகிழ்வாரே. 96 கண்ணாம் பூச்சி விளையாட்டில் கரந்தே யுறையும் ஒருசிறுமி அண்ணாந் தேவான் மதிகண்டே அவளென் றெழுந்தே ஓடுவளே. 97 ஆம்புரி தாண்டும் ஒருசிறுமி ஆடும் பின்னல் நீழலினைப் பாம்பென வெண்ணி அக்கயிற்றால் படார்ப்ப டாரென் றடித்திடுவாள். 98 அம்புலி பார்த்தங் கண்ணாந்தே அவளு மிவளுங் கைகோத்தே தும்பிலி பறக்கும் துடியிடையார் தூவெண் மதிபோல் தோன்றுவரே. 99 வட்ட மதியைப் பந்தென்று மயங்கா நின்ற ஒரு சிறுவன் எட்டி யுதைத்தே திரும்பிவரும் என்றே காலைத் தூக்கிடுவான். 100 கம்பறக் கத்தி தனைச்சிறுவன் கல்லில் தீட்டத் தாய்கேட்க வெம்பகை யறுத்து வரப்போறேன் வில்லும் வேலுந் தாவென்பான். 101 ‘எம்மீர் போல அயல்நாடீர் இனிதே வாழ இந்நாட்டில் வம்மீர்’ எனவே தமிழ்க்கொடிகள் வானி லாடிப் பறந்திடுமே. 102 ‘கனவே யேனுந் தமிழ்நாட்டில் காலை வைக்க எம்பகைவீர் நினைவே கொள்ளீர்’ எனக்கொடிகள் நிமிர்ந்தே யாடிப் பறந்திடுமே. 103 வில்லும் புலியும் கயல்மீனும் மேவி யிருக்குங் குறிப்பதனைச் சொல்லும் படிதன் தாத்தாவைத் துடியாய்த் துடிப்பான் ஒருசிறுவன். 104 படையை யஞ்சா வில்லப்பா பகையை யஞ்சாப் புலியப்பா கடலை யஞ்சா மீனப்பா காண்பா யென்பார் அத்தாத்தா. 105 சிறுதே ரூர்ந்து விளையாடும் சின்னஞ் சிறுவர் வருகின்ற உறுதேர் கண்டே கொடிவில்லை உயர்த்திப் பிடித்தே எதிர்நிற்பர். 106 சிறுபறை கொட்டி விளையாடும் சின்னஞ் சிறுவர் மானன்னார் உறுபறை கேட்டே கொடிப்புலியை உயர்த்திப் பிடித்தே எதிர்நிற்பர். 107 சிறுபந் தாடி விளையாடும் சின்னஞ் சிறுவர் சேற்கண்ணார் உறுவது கண்டே கொடிமீனை உயர்த்திப் பிடித்தே எதிர்நிற்பர். 108 ஓடிக் கூடி ஒளிர்மின்போல் ஒடியா வஞ்சிக் கொடியன்னார் ஆடிப் பாடி விளையாடி ஆயத் தோடு களிக்குவரே. 109 நாட்டு வாழ்த்து வாரி வழங்கும் வள்ளியர்போல் மலிநீர் மேலை மலைவளஞ்செய் சேரர் செங்கோ லதுவோச்சும் செந்தமிழ் நாட்டை வாழ்த்துவமே. 110 களமர் உளம்போற் கலங்கலமாய்க் கழனி விளையக் காவிரிபாய் வளவர் செங்கோ லதுவோச்சும் வண்டமிழ் நாட்டை வாழ்த்துவமே. 111 பழன வயலின் பயன்போலப் பைந்தமிழ்க் கழகப் பயனெதிரச் செழியா செங்கோ லதுவோச்சும் தென்றமிழ் நாட்டை வாழ்த்துவமே. 112 காவல் முரசங் கடையார்ப்பக் கருதார் மகளிர் கண்போர்ப்ப மூவர் செங்கோல் முறையோச்சும் முத்தமிழ் நாட்டை வாழ்த்துவமே. 113 நகர் வாழ்த்து செருநர் நினையாத் திறல்வாய்ந்த சேர ரிருந்து தமிழ்காக்கும் பொருநை கடலைப் புணரின்பப் பூவா வஞ்சியை வாழ்த்துவமே. 114 துன்னு பகையை அறியாத சோழ ரிருந்து தமிழ்காக்கும் பொன்னி கடலைப் புணரின்பப் புகாஅர் நகரை வாழ்த்துவமே. 115 பெற்றோர் போல இருபிரிவாய்ப் பிரிந்து வளவர் தமிழ்காக்கும் வற்றா வளநீர்க் காவிரியை மருவும் உறந்தையை வாழ்த்துவமே. 116 செய்ய புலவர் கழகநிறீஇச் செழிய ரிருந்து தமிழ்காக்கும் வையை மணந்து மகிழின்ப மதுரை நகரை வாழ்த்துவமே. 117 பந்தாடல் செற்றா ரஞ்ச வில்லுயர்த்த சேரன் செங்கோல் வாழ்கென்றே பற்றா நின்ற குழலவிழப் பாடி யாடிப் பந்தடிப்பார். 118 தொடுபூங் கானப் புலியுயர்த்த சோழன் செங்கோல் வாழ்கென்றே ஒடியா நின்ற இடைநுடங்க ஓடி யாடிப் பந்தடிப்பார். 119 மலிநீர் வேலை மீனுயர்த்த வழுதி செங்கோல் வாழ்கென்றே ஒலியா நின்ற இடைநுடங்க ஓடி யாடிப் பந்தடிப்பார். 120 மொழிபோல் புலிவில் மீனுயர்த்த மூவர் செங்கோல் வாழ்கென்றே ஒழியா நின்ற இடமின்றி ஓடி யாடிப் பந்தடிப்பார். 121 வள்ளைப் பாட்டு புலிவிற் கெண்டை இமமுடியில் பொறித்த மூவர் திறம்பாடி பொலிவிற் கொண்ட செந்நெல்லைப் பொன்னங் கொடியார் குற்றுவரே. 122 மூவர் வாழ்க முறைவாழ்க முதலா கெந்தாய் மொழிவாழ்க நாவர் வாழ்க வாழ்கென்றே நறும்பொற் சுண்ணம் இடித்திடுவர். 123 தமிழர் திறமை யறியாதார் தந்நா டழிதற் கோவிரங்கி அமிழ்தி னினிய மொழிநல்லார் அந்தீந் தினைமா இடித்திடுவர். 124 குரவை குரல்முத லெழுவர் ஏழிசையாக் கொண்டுகை கோத்து மண்டிலமாய்த் திருவுடை மூவர் திறம்பாடிச் சேர்ந்து குரவை யாடுவரே. 125 கொச்சகக் கலிப்பா வென்று பனிமலையில் விற்பொறித்த வானவன் இன்றுநம் பண்ணை வருமேல் அவன்மார்பில் அன்றலர் போந்தை காணாமோ தோழீ! அலர்போந்தை கண்டின்பம் பூணாமோ தோழீ! 126 போந்து பனிமலையில் புலிபொறித்த செம்பியன் வாய்ந்துநம் பண்ணை வருமேல் அவன்மார்பில் ஏந்தெழில் ஆரம் காணாமோ தோழீ! எழிலாரம் கண்டின்பம் பூணாமோ தோழீ! 127 சென்று பனிமலையில் சேல்பொறித்த பஞ்சவன் இன்றுநம் பண்ணை வருமேல் அவன்மார்பில் மன்றலர் வேம்பு காணாமோ தோழீ! மலர்வேம்பு கண்டின்பம் பூணாமோ தோழீ! 128 வேறு பொருநைத் துறைவன் புலர்போந்தைத் தார்மார்பன் வருபுகார்ச் செல்விசிலை வைத்தவன்கை வில்லன்றே இருநீ ருலகேத்த இமமுடியில் விற்பொறித்தே பொருவற வான்பகைமுன் போக்கிய வல்வில்லே. 129 பொன்னித் துறைவன் புனையாத்தித் தார்மார்பன் மன்னு மகனைமுறை செய்தவன்கை வாளன்றே முன்ன ரிகலிமய முடியிற் புலிபொறித்தே துன்னு நெடியபகை தொலைத்த சுடர்வாளே. 130 வையைத் துறைவன் மலர்வேப்பந் தார்மார்பன் மெய்யை யுயிர்கொடுத்துக் காத்தவன்கை வேலன்றே வையம் புகழவிம மலையிற் கயல்பொறித்தே ஐய மறப்பகையன் றட்ட நெடுவேலே. 131 அம்மானை அடிமடக்கு மல்லாற் செழித்தகடல் வஞ்சி நகர்ச்சேரர் வில்லாற் கடற்பகையை வென்றனர்கா ணம்மானை. வில்லாற் கடற்பகையை வென்றனரே யாமாயின் பொல்லாப் பகைநிலத்திற் போதாவோ அம்மானை? போதா திருந்திடத்தான் புறங்கண்டா ரம்மானை. 132 பூவிரியுஞ் சோலை பொலிபூம் புகார்ச்சோழர் காவிரிக்குக் கல்லணைமுன் கட்டினர்கா ணம்மானை. காவிரிக்குக் கல்லணைமுன் கட்டினரே யாமாயின் காவிரி போய்க்கடலிற் கலக்காதோ அம்மானை? கலந்துவீ ணாவதைத்தான் கட்டினா ரம்மானை. 133 தெங்கிற் பனைவளரும் தென்மதுரைப் பாண்டியர்கள் சங்க நிறுவித் தமிழ்வளர்த்தா ரம்மானை. சங்க நிறுவித் தமிழ்வளர்த்தா ராமாயின் அங்கதனுக் காண்டுநிறை வாகாதோ அம்மானை? ஆண்டுநிறைந் துங்கன்னி யாகுங்கா ணம்மானை. 134 ஊசல் வேறு நீரார் நிறைசால்போல் நின்று நிலம்புரக்கும் பேரா றுகள்தோன்றிப் பேணிக் குடிவளர்க்கும் நேரி பொதியில் நெடுமலையுந் தாம்பாடிச் சீரார் திருவூசல் ஆடாமோ தோழீ! செங்கோன்மூ வேந்தர்திறம் பாடாமோ தோழீ! 135 மின்னி நெடுவான் பொழியா விடுங்காலும் மன்னு மலைதோன்றி வந்து வளஞ்செய்யும் பொன்னி பொருநை புகழ்வையை தாம்பாடிச் சின்னஞ் சிறுவூசல் ஆடாமோ தோழீ! செங்கோன்மூ வேந்தர்திறம் பாடாமோ தோழீ! 136 மஞ்சு தவழ்மாட கூடங்கள் வான்பொலியும் அஞ்சி நிலைபே றறியாப் பழங்குடிவாழ் வஞ்சி புகாருறந்தை மாமதுரை தாம்பாடிக் கொஞ்சு திருவூசல் ஆடாமோ தோழீ! குலமன்னர் மூவர்திறம் பாடாமோ தோழீ! 137 வெல்லுந் தமிழ்ப்பாடி வீட்டின் மிசையாட அல்லும் பகலும் அடங்கார் நினைத்தஞ்சும் வில்லும் புலியும் மிளிர்மீனுந் தாம்பாடி முல்லைத் திருவூசல் ஆடாமோ தோழீ! முடியுடைமூ வேந்தர்திறம் பாடாமோ தோழீ! 138 கும்மி சுற்றந் தழீஇயின்ப முற்றிடுவோம் - வாழ்க்கைச் சூழலின் நற்பயன் பெற்றிடுவோம் குற்றங் குறையை விடுத்திடுவோம் - பாடிக் கூடியே கும்மி யடித்திடுவோம் 139 நண்பர்க ளோடளா யின்புறுவோம் - அவர் நல்லுரை கேட்டு நலம்பெறுவோம் பண்பல வற்றைக் கெடுத்திடுவோம் - ஆடிப் பாடியே கும்மி யடித்திடுவோம். 140 இன்புட னேவிருந் தேற்றிடுவோம் - இனி தின்னமு தூட்டியே போற்றிடுவோம் அன்புடன் ஆவல் முடித்திடுவோம் - பாடி ஆடியே கும்மி யடித்திடுவோம். 141 முத்தமிழ்ச் சொற்பொலி தூற்றிடுவோம் - தமிழ் மூவர்செங் கோலினைப் போற்றிடுவோம் கைத்தொழி லேர்வணி கத்தினைப் போற்றிக் களித்துமே கும்மி யடித்திடுவோம். 142 ஆற்றுவரி அடிமடக்கிவந்த அறு சீர் விருத்தம் செங்கண் சேப்பப் படைசெலுத்திச் சேரன் வாகை யதுசூடிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் கவலாய் போலும் கான்பொருநை! கங்கை தன்னைப் புணர்ந்தாலும் கவலா தொழிதல் கயற்கண்ணாய்! இங்கு சொன்னார் வாய்காவா இயல்பே போலும் ஈர்ம்பொருநை! 143 சுமைய வென்னப் படைசெலுத்திச் சோழன் வாகை யதுசூடி யமுனை தன்னைப் புணர்ந்தாலும் இகலாய் போலும் காவேரி! யமுனை தன்னைப் புணர்ந்தாலும் இகலா தொழிதல் இயற்கண்ணாய்! இமய மகன்றார் வாய்காவா இயல்பே போலும் காவேரி! 144 மைந்து முறுகப் படைசெலுத்தி வழுதி வாகை யதுசூடிச் சிந்து தன்னைப் புணர்ந்தாலும் சினவாய் போலும் செழுவையை! சிந்து தன்னைப் புணர்ந்தாலும் சினவா தொழிதல் சேற்கண்ணாய்! வந்து சொன்னார் வாய்காவா மரபே போலும் வளவையை! 145 கடல்வரி சிந்தியல்வெண்பா மாந்தையைப் போற்றி மகிழ்ந்துவிளை யாடிடுவோம் போந்தயல் நாடெங்கும் பொன்மணிமுத் தெப்பொருளும் ஈந்துகொண் டேதருத லான். 146 தொண்டியைப் போற்றித் தொழுதுவிளை யாடிடுவோம் எண்டிசையுஞ் சென்றே இயலும் பொருளெல்லாம் கொண்டுவந் தேகொடுத்த லான். 147 பூம்புகார் போற்றிப் புகழ்ந்துவிளை யாடிடுவோம் ஆம்பொருள்க ளெல்லாம் அயல்நா டெலாஞ்சென்று தாம்புணர வேதருத லான். 148 கொற்கையைப் போற்றிக் குலவிவிளை யாடிடுவோம் விற்கொளுயர் முத்தீந்து வேண்டும் பொருளெல்லாம் தற்கொண்டு தான்தருத லான். 149 எனவாங்கு - தனிச்சொல் நாறிரு மைம்பாற் காரிகை நல்லார் ஆறுங் குளமுங் காவும் பிறவும் ஆயத் தோடினி தாடி மேய வின்பம் மிகப் பொலி குவரே. 150 இது, ஆசிரியச் சுரிதகம். வாணிகம் சிந்து எங்கணும் எப்பொருளும் எல்ல வருக்கும் - இல்லை என்னாமற் கிடைத்துநல் வாழ்க்கை நடத்த அங்கணு மிங்கணும் உள்ள பொருளை - அவ ரவர்பெறச் செய்துலகை ஆண்டு வந்தனர். 151 கைத்தொழில் ஏர்த்தொழிலிற் கண்ட பொருளை - அவை காணாத மக்களுக்குக் கொண்டு கொடுத்தே முத்தொழில் ஒத்துயரின் பத்தொடு வாழ - மக்கள் முடியுடை மூவரும் முறையுட னாண்டார். 152 நூலினும் பயில்வினும் நுண்ண றிவினும் - ஒன்று நூறாகப் பெருகிட ஊக்க முடனே காலினும் கலத்தினும் கொண்டு கொடுத்தே - தம் கடமையைச் செய்துவந்தார் வாணிக மக்கள். 153 கொம்பு படின்வலிக்கும் என்ப தறிந்தோர் - ஒரு கோலால் பிறரையடி யாரது போலத் தம்பொருள் போலவே பிறர்பொ ருளையும் - ஒன்றாய்த் தாமெண்ணி வாணிகஞ் செய்துமே வந்தார். 154 பிறரிடம் கொள்வது மிகைகொ ளாமலே - அதே பெற்றியில் யார்க்குமே குறைகொ டாமலே அறவழி நின்றுரிய வாணிகஞ் செய்தே - நாளும் அரும்பொரு ளீட்டிவள மாக்கியே வந்தார். 155 காவிரி நெல்லதனைக் கொண்டு கொடுத்து - மேல் கரைவிளை நன்மிளகை வாங்கி வருவார் நாவலந் தீவுகளின் நற்பொ ருள்களைப் - பொதிகை நல்லகில் சாந்தினுக்கு மாற்றி வருவார். 156 சிந்து வெளியினிற் கொண்ட பொருளைக் - கீழ்த் திசைப்படுங் கங்கையிடைக் கொண்டு கொடுத்தே விந்தப் பகுதியிலே விற்று முதற்கு - அங்கு விளையும் பொருள்களை வாங்கி வருவார். 157 பொதியத்துச் சாந்தமகில் கொற்கையின் முத்தும் - இமப் பொன்னு மணிக்குவிற்று மீள்கையில் கொண்ட மதியத்துப் பிள்ளையெனுங் கோட்டு நிரையை - நீல மலைக்களிற் றுநிரைக்கு மாற்றி வருவார். 158 கைவிர லெண்ணியே தலைவிய ரேங்க - விட்டுக் காலினும் கலத்தினும்பி ரிந்துமே சென்று மைவரு முன்னரயல் நாடு களிலே - போய் வான்பொரு ளீட்டிவந்து வாணிகஞ் செய்தார். 159 கூம்பிலே பாய்புலிவிற் கெண்டை யசையச் - சீனங் கொண்டுகொடுத் தங்குவருங் கப்பலைக் கண்டே தாம்புணர் காதலர் வருகையை யெண்ணி - நெய்தற் றலைவியர் ஓடியே வலையை யெடுப்பார். 160 கொற்கைநன் முத்துங்கீழ்க் கடற்ப வழமும் - யானைக் கொம்பொடு மயிலிறகும் வெம்பு மிளகும் எற்கெனக் கென்றுமேமேல் நாட்டு மகளிர் - கை ஏந்திட ஈந்துபொரு ளீட்டி வருவார். 161 பாம்புரி யன்னபட் டாடை யழகும் - எழும் பாலாவி போன்றபஞ் சாடை யழகும் காம்புரி யன்னமெல் லாடை யழகும் - கிரேக் கம்மகளிர் கண்டுகளித் துண்ம கிழுவார். 162 பெய்யு மழையெனமீன் வில்புலி யாட - அர பிக்கடல் மீதுவருங் கப்பல்கள் கண்டே மெய்யை அழகுசெய்யும் ஆடை யணியைப் - பார்த்து மெலிந்த எகுபதியப் பெண்கள் மகிழ்வார். 163 ஆழியிடை யாடிவருங் கப்பல் களிலே - இருந் தாரமகி லம்பர்குங்கு மங்க மழவே தோழிய ருடன்பாபி லோனியப் பெண்கள் - மென் றோளொடு குழலைநிலை யாடியிற் பார்ப்பர் 164 நீலத் திரைக்கடலில் சேல்முத லாடத் - தங்கள் நீள்நகர் நோக்கிவரும் கப்பலைக் கண்டே ஏலத்து மங்கையர்தம் கோலத்தை நீத்தே - புனையும் எதிரிய கோலத்தினுக் கேங்கியே நிற்பர். 165 ஆடிய வில்புலிமீன் தேடி யழைக்கக் - கரை அடைந்திடும் பாய்விரிநா வாய்களைக் கண்டே ஊடிய கணவர்குறிப் பால றியவே - கிழிந்த உடைகளைப் பார்ப்பர்சா லடிய மகளிர் 166 சேலும்வில் லும்புலியும் சேர்ந்த சையவே - மேல் திரைக்கடல் மீதுவருங் கப்பல்கள் கண்டே நூலுமூ சியுங்கொள் கிரேக்க மங்கையர் - தம் நுண்ணிய கைத்திறத்தை எண்ணி மகிழ்வார். 167 தெந்தினந் தினாவெனத் திரைக்க டலிடை - அசைந்து செந்தமிழ் பாடியாடுந் தேமொழி போல வந்திடுங் கப்பல்களைக் கண்டு மகிழ்ந்தே - தேய்ந்த வளைகளைப் பார்ப்பர்பார சீக மகளிர். 168 விற்கொடி யோடுகயல் மீன்பு லிக்கொடி - விண் மிசையசைந் தாடவருங் கப்பல்கள் கண்டே கொற்கையின் முத்தெனக் கெனக்கென வென்று - கை கொட்டியே யார்ப்பர்யவ னக்கு மரிகள். 169 விண்ணளவு கண்ணிய மரக்க லங்களில் - வந்து மேல்கரையி லேதமிழர் கொண்டி றக்கிய தண்ணிலவு போன்றவெள்ளிக் கட்டியைக் கண்டே-அதன் தரமறி யாதுரோம மன்ன ரயர்வார். 170 சேலொடுவல் வில்புலியி லச்சினை யிட்டு - நம் செந்தமிழ்நாட் டுவணிகர் கொண்டு கொடுத்த பீலிபெய்மே லாடைகொள்சு மேரிய மின்னார் - தமிழ்ப் பெண்டிரின் கைத்திறத்தைக் கண்டு மகிழ்வார். 171 மாடமலி கொற்கையரவ் வாழ்க டலிலே - மூழ்கி வாரியெடுத் திட்டவம் மறத்தினை மெச்சி ஆடவர்க ளின்புற அரபி மகளிர் - முத் தாரமணிந் தன்புட னருக ணைகுவார். 172 சுவைமிகு தேனொடு மணப்பொ ருள்களும் - மயிற் றோகைமிள கேலமகில் ஆர முங்கொடு யவனர்கண் டேமகிழச் செந்தமிழ் நாட்டுக் - கப்பல் அரபிக் கடலிடை யசைந்து மேசெலும். 173 வண்டமிழ்க் கொற்கை மகளி ரிழைத்த - சங்க வளைக ளணிந்துமே னாட்டு மகளிர் கொண்ட கணவரவை கண்டு களிக்க - ஆங்கு குறுகிமுன் கொண்டிருந்த ஊடல் தணிவார். 174 மின்னொடு வில்புலிமீன் மேவி யசையத் - தமிழ் விறலிபோ லாடிவருங் கப்பலில் வந்த பொன்னோடு பத்தெனும் மணிகளைக் கொண்டு - யவனர் பூவையர் மெய்யினைப்பொய் யாகவே செய்வார். 175 மாரியிடை வில்புலிமீன் தான்வரக் கண்டே - மதி மானொடுவிண் மீனினம திமருண் டோட காரிகையார் கண்டுதிடுக் கிட்டெழுந் தோடத் - தமிழ்க் கப்பல்கள் பூம்புகார்க் கரையை யணுகும். 176 எட்டியக் கரையினைத் தமிழ்க்கொடிக் கப்பல் - அங் கிறக்கிய பல்வகைச் சரக்கினைக் கண்டே அட்டிலிற் புழங்கிய மட்க லங்களை - எடுத் தப்புறப் படுத்துவர் யவன மகளிர். 177 காதற் கனியைப்பிரிந் தாண்மை யுடனே - அலை கடலைக் கடந்துவெளி நாடு களிலே ஓதற் பிரிவெனுமூன் றாண்டி னகத்தே - அங் குள்ள நடைமுறையைக் கற்று வருவார். 178 மலையெனப் போர்முனையில் மண்டியே நின்று - போர் மலைந்து களம்பெறுந் தமிழ்ம றவர்கள் அலைகடல் தொண்டியினில் வந்தி றங்கிடும் - உயர் அரபிக் குதிரைகளைக் கண்டு களிப்பார். 179 போந்தை மிலைந்துவிற் பொலிந்த சைந்திட - விலைப் பொருள்களைக் கொண்டுமேல் நாட்டினில் விற்று மாந்தைத் துறைமுகத்தை வந்த டைந்திடும் -நா வாய்களைக் கண்டுசேர மக்க ளுவப்பார். 180 வேம்பு மிலைந்துகயல் மேல சைந்திடக் - கடல் விளைவினைக் கொண்டுவெளி நாட்டினில் விற்று வாம்புனல் கொற்கையை வந்த டைந்திடும் - கப்பல் வரிசையைக் கண்டுபாண்டி மக்க ளுவப்பார். 181 ஆர மிலைந்துபுலி ஆடி யசைய - விளை அரும்பொருள் கொண்டுகீழ் நாட்டினில் விற்று காரென வந்துபூம்பு காரை யடையும் - மரக் கலங்களைக் கண்டுசோழ மக்கள் களிப்பார். 182 கடலிடைத் தீவுகளில் கண்ட பொருளை - நாட்டுக் கருப்பொருட் குமாற்றிக் கொண்ட கலங்கள் மடலிடை நாரைதுயில் கான லந்துறை - தொறும் மக்கள்கண் டேயுவக்க வந்தணுகுறும். 183 கிழக்கொடு மேற்கில் கடல்வ ணிகத்தால் - வளங் கெழுமிய நாகரிக நாடு பலவும் வழக்கொடு பட்ட வணிக வழியாய் - இருந்து வந்தது செந்தமிழ் வழங்கு நிலமே. 184 முல்லை நிலப்பயறு சாமை யளந்து - மலை மூங்கிலகில் சந்தனமுந் தேனும் பெறுவார் நெல்லை யளந்துகட லுப்பினைப் பெற்று - மாட்டு நெய்க்குவா ழைப்பழமுங் கன்னலு மீவார். 185 காலினுங் கலத்தினும் வாணிகஞ் செய்தே - தங்கள் கடமை தவறாத வாணிக மக்கள் சேலினும் புலியினுஞ் சிலையினுங் காக்கும் - மூவர் செல்வக் களஞ்சியஞ் சிறந்திடச் செய்வார். 186 4. தாய்மொழி தாழிசை பாவலர் புகழ்பாடப் - பாவையர் மகிழ்ந்தாட மூவர்கள் முறையாக - முத்தமி ழகங்காத்தார். 1 குடிவளங் குன்றாமல் - குடைநிழல் பொன்றாமல் முடியுடை மூவேந்தர் - முறையொடு தமிழ்காத்தார். 2 நூன்முறை தவறாமல் - நுவன்முறை யிவறாமல் கோன்முறை பிறழாமல் - குளிர்தமி ழகமாண்டார். 3 நன்னெறி பிறழாமல் - நடுநிலை தவறாமல் முன்னெறி கடவாமல் - மூவர்கள் முறைகாத்தார் 4 மறநெறி சேராமல் - வழிநெறி தூராமல் அறநெறி சோராமல் - அருந்தமி ழகமாண்டார். 5 குடிபழி கூறாமல் - கொள்கையில் மாறாமல் நடைமுறை மீறாமல் - நற்றமி ழகங்காத்தார் 6 ஆய்மொழி மாறாமல் - அனல்மொழி கூறாமல் தாய்மொழி யாறாமல் - தமிழக மதுகாத்தார். 7 ஈமொழி மாறாமல் - எரிமொழி கூறாமல் தாய்மொழி யாறாமல் - தமிழக மதுகாத்தார். 8 ஏய்மொழி மாறாமல் - இழிமொழி கூறாமல் தாய்மொழி யாறாமல் - தமிழக மதுகாத்தார். 9 காய்மொழி கூறாமல் - கனிமொழி மாறாமல் தாய்மொழி யாறாமல் - தமிழக மதுகாத்தார். 10 சாய்மொழி கூறாமல் - தகுமொழி மாறாமல் தாய்மொழி யாறாமல் - தமிழ்நில மதுகாத்தார். 11 சேய்மொழி மாறாமல் - சினமொழி கூறாமல் தாய்மொழி யாறாமல் - தண்டமி ழகமாண்டார். 12 தீமொழி கூறாமல் - திருமொழி மாறாமல் தாய்மொழி யாறாமல் - தமிழக மதுகாத்தார். 13 தூய்மொழி மாறாமல் - சுடுமொழி கூறாமல் தாய்மொழி யாறாமல் - தமிழக மதுகாத்தார். 14 தேய்மொழி கூறாமல் - தென்மொழி மாறாமல் தாய்மொழி யாறாமல் - தண்டமிழ் நாடாண்டார். 15 நோய்மொழி கூறாமல் - நுண்மொழி மாறாமல் தாய்மொழி யாறாமல் - தண்டமிழ் நாடாண்டார். 16 மாய்மொழி கூறாமல் - மலர்மொழி மாறாமல் தாய்மொழி யாறாமல் - தமிழ் நில மதுகாத்தார். 17 மீமொழி மாறாமல் - வெம்மொழி கூறாமல் தாய்மொழி யாறாமல் - தமிழக மினிதாண்டார். 18 வாய்மொழி மாறாமல் - வறுமொழி கூறாமல் தாய்மொழி யாறாமல் - தண்டமி ழகமாண்டார். 19 தம்முயி ரினுமேலாத் - தாயினு மொருபாலா மும்மையின் மொழியாளை - மூவரு முறைகாத்தார். 20 சிந்து உலக முதன்மொழியாள் - உலகம் உம்மெனு முயர்தனிச் செம்மொழியாள் புலவர் புகழ்மொழியாள் - திகழ்செம் பொன்மொழி யாள்மிளிர் நன்மொழியாள் இலகு மியல்மொழியாள் - எளிமையும் இனிமையும் உடையநற் கனிமொழியாள் அலகில் வளமொழியாள் - தமிழ் அன்னைமும் மன்னரின் இன்னுயிராள். 21 தேனினுஞ் சுவையுடையாள் - சொலச்சொலத் தித்தித் திடுமியல் பொத்துடையாள் வானினு முயர்வுடையாள் - குன்றா வளமுடை யாளில குளமுடையாள் கானினுங் கமழ்வுடையாள் - எக் காலமு மலர்காய் கனியுடையாள் ஆனினும் பயனுடையாள் - தமிழ் அன்னைமும் மன்னரின் இன்னுயிராள். 22 எண்ணெண் கலையுடையாள் - இசையோ ரேழுடை யாள்பயில் யாழுடையாள் பண்ணுந் திறமுடையாள் - இசைப் பாடலும் ஆடலும் பயில்வுடையாள் எண்ணு மெழுத்துடையாள் - உலகில் இல்லாப் பொருளிலக் கணமுடையாள் கண்ணுங் கருத்துடையாள் - தமிழ்க் கன்னிமும் மன்னரின் இன்னுயிராள். 23 காதற் கனியுடையாள் - இன்பக் களவுடை யாள்பயில் கற்புடையாள் ஓதற் கினியுடையாள் - இன்ப ஊற்றுடை யாளுயர் மாற்றுடையாள் ஈதற் குணமுடையாள் - யாரும் எளிதினி லடைந்திடும் ஒளியுடையாள் ஆதற் பயனுடையாள் - தமிழ் அன்னைமும் மன்னரின் இன்னுயிராள். 24 அறம்பொரு ளின்புடையாள் - இன்ப அகமுடை யாளதன் புறமுடையாள் மறம்படு குணமுடையாள் - பிறர் மண்கொள விரும்பாப் பண்புடையாள் புறம்படு பொருளெவையும் - சொல்லும் புலமுடை யாள்பொருள் நலமுடையாள் திறம்படு துறையுடையாள் - தமிழ்த் தேவியம் மூவரின் ஆவியினாள். 25 இலக்கியப் பெருங்கடலாள் - ஐந் திலக்கண மெனும்பெரு வலக்கரையாள் துலக்கிய அகத்துறையாள் - அறந் துறப்பிலா மறப்படு புறத்துறையாள் சொலச்சொல இனிப்புடையாள் - எண் சுவையுடை யாள்வேத் தவையுடையாள் கலக்கமில் கருத்துடையாள் - தமிழ்க் கன்னிமும் மன்னரின் இன்னுயிராள். 26 வன்புடைச் செயலறியாள் - வாழ வகையறி யாதிங்கு வருபவரை அன்புடன் வரவேற்றுப் - போற்றும் அருளுடை யாளரும் பொருளுடையாள் தென்புடன் பேசிடுவாள் - உள்ளத் தெளிவுடை யாள்மிக நெளிவுடையாள் தன்பெயர் தனைக்கூறாள் - தமிழ்த் தாயவள் மூவரின் மீயுயிராள். 27 ஒன்றொழி முப்பதினால் - இவ் வுலகினை யாள்முது கலைமொழியாள் அன்றைய உலகுடையாள் - அரசியல் அறிவுடை யாள்பொருட் செறிவுடையாள் தொன்றறி துணிவுடையாள் - அறிவுத் துறையுடை யாள்சொன் னிறையுடையாள் கன்றிய கனிவுடையாள் - தமிழ்க் கன்னிமும் மன்னரின் இன்னுயிராள். 28 பன்னெறி நூலுடையாள் - மிகு பழமையும் இளமையும் ஒருங்குடையாள் நன்னெறி நடையுடையாள் - நன் னலமதை யாய்தரு புலமுடையாள் புன்னெறி புகலறியாள் - சொற் பொருளுணர் திறமிகு தரவுடையாள் சென்னெறி செலவுடையாள் - தமிழ்த் தேவியம் மூவரின் ஆவியினாள். 29 நடைமுறை நன்குடையாள் - நிலம் நான்குடை யாள்பொருள் மூன்றுடையாள் இடைமுறை யியல்புடையாள் - திணை ஏழுடை யாள்கை கோளுடையாள் படைமுறை பயில்வுடையாள் - மக்கட் பண்புடை யாள்பழ நண்புடையாள் அடைமுறை யறிவுடையாள் - தமிழ் அன்னைமும் மன்னரின் இன்னுயிராள். 30 சிற்பக் கலையுடையாள் - பல்கலைச் செல்வமுங் கல்வியுஞ் சேர்ந்துடையாள் பொற்புப் புனவுடையாள் - செய்ய பொன்மணிப் பணியணி புலமுடையாள் கற்புக் கலையுடையாள் - பெருங் காவிய மோவிய மேவுடையாள் அற்புத் தளையுடையாள் - தமிழ் அன்னைமும் மன்னரின் இன்னுயிராள். 31 நாட்டுநன் னலமுடையாள் - புலவர் நாவுடை யாள்மனப் பூவுடையாள் பாட்டுரை நூலுடையாள் - நாற் பாவுடை யாளின மேவுடையாள் ஏட்டினி லிருப்புடையாள் - பாட எதுகையும் மோனையும் அதியுடையாள் ஆட்டொடு பாட்டுடையாள் - தமிழ் அன்னமும் மன்னரின் இன்னுயிராள். 32 கட்டளைக்கலிப்பா இன்ன தன்மையெ லாமொருங் கெய்தியே இன்று தோன்றிய தென்றிட லின்றியே இன்னு மன்ன வியல்பு கெடாமலே இயலு கின்ற இளந்தமிழ்த் தாயினை இன்னு யிரினும் ஈன்றநற் றாயினும் இனிது போற்றி யிருங்கடல் வைப்பினில் முன்னு கின்ற மொழிகளில் முன்னுற முறைசெய் தாரம் முடியுடை மூவரும். 33 பாடு கின்ற புலவரும் பாட்டினைப் பண்ண மைந்திடப் பாடிடும் பாணரும் கூடு கின்ற முழவொடு யாழ்குழல் கூட்டு கின்ற குயிலுவர் தம்முடன் ஆடு கின்ற பொருநருங் கூத்தரும் அவரொ டாடும் விறலிய ருந்தக நாடு கின்றதை நாடி யளித்துமே நற்ற மிழ்வளர்த் தாரவர் மூவரும். 34 பாடிப் பாடிப் பழந்தமிழ்ப் பாவலர் பத்து நூறா இயலை வளர்த்தனர் பாடிப் பாடிப் பயிலியாழ்ப் பாணர்கள் பண்ண மைந்த இசையை வளர்த்தனர். ஆடி யாடிக்கூத் தர்முதல் மூவரும் அங்ங னேநாட கத்தை வளர்த்தனர் மூடி மூடி முகந்து கொடுத்துமே முத்த மிழைவ ளர்த்தனர் மூவரும். 35 பாட லோசையும் பண்ணுந் திறத்துடன் பயிலு மோசையும் யாழுங் குழலுடன் ஆட லோசையுங் கூடுமெய்ப் பாட்டுடன் அளிக்கு மோசையும் அன்பு முகத்துடன் கோட லோசையுங் கூர்ந்து கொளக்கொளக் கொடுக்கு மோசையுங் கூடிமுக் கோயிலில் கூட லோசையிற் கூடி யொலித்திடக் குளிர்த மிழ்வளர்த் தாரவர் மூவரும். 36 எம்மொ ழிக்கும் இலாத வொருசிறப் பெமது தாய்மொழிக் குண்டுமஃ தென்னெனில், இம்மொ ழிக்கிது குற்றங் குறையிதாம் என்ப தின்றி இயலு முறையினில் தம்மொ ழிக்குத் தனிச்சிறப் பெய்திடும் தகுதி யாய்ந்திட எண்ணி யுயர்தனிச் செம்மொ ழிக்கம் மதுரைச் செழியர்கள் சீர்தி ருத்தக் கழக நிறீஇயதே. 37 அக்க ழகத்த மர்ந்து துலையென ஆய்ந்து குற்றங் குறைகளி லாமலே சிக்க றுத்துத் திகழ்ந்திட ஆடிபோல் சீர்தி ருத்தத் திறமையுஞ் செம்மையும் மிக்க கல்வியும் வாய்மையுந் தூய்மையும் மேவு றமுத்த மிழ்த்துறை போகிய தக்க சால்பு தழைத்த புலவர்கள் தமையி ருத்தியத் தண்டமி ழாய்ந்தனர். 38 அப்பு லவர மர்ந்த கழகத்தே அகம்பு றத்தோ டறம்பொரு ளின்பெனும் அப்பொ ருளமை பாட்டு முரைகளும் அருந்த மிழகத் துள்ளோ ரியற்றிவந் தப்பொ ருள்விரித் தோதக் கழகத்தார் ஆய்ந்து கூறுமப் பாட்டுரைக் கண்ணுள அப்பி ழைகளைந் தேசீர் திருத்திநன் கமையு மாறு கவியரங் கேற்றினர். 39 தொன்று பஃறுளி யாற்றங் கரையினில் தோன்றி யத்தொன் னகர்கடல் வாய்ப்பட நன்று போந்து குமரிக் கரையினில் நடக்க வந்நக ருங்கடல் நாக்குறப் பின்று வையைக் கரையின் மதுரையில் பெருமை யோடு நடந்தவச் சங்கமும் முன்று தோன்றி நடந்த இடத்தினால் முதலி டைகடை யென்றுமூன் றாயதே. 40 தாழிசை நன்னா வலர்கள் நடுநின்று நாடி யறிந்த குறையெல்லாம் இன்னார் இனியார் என்னாமல் எடுத்துக் காட்டித் திருத்துவரே. 41 எழுத்துச் சொற்பொருள் யாப்பணியென் றெய்துங் குற்றங் குறையெல்லாம் அழுத்தந் திருத்த மாய்க்கூறி அப்பழுக் கில்லா தாக்குவரே. 42 சங்கப் புலவர் தகவாய்ந்து தாங்கூ றியவக் குறையெல்லாம் அங்கப் புலவர் சீர்திருத்தி அழியாப் பொருளா ஆக்குவரே. 43 குற்றங் கண்டு தன்தலையில் குட்டிக் கொண்டு சீப்பிடித்து மற்றப் பெயர்கொள் அச்சாத்தன் வரலாற் றினையும் அறிவீரே. 44 சங்க மரீஇய பாடல்களைத் தரமும் தகவும் படவகுத்தே அங்கச் சங்கப் புலவோர்கள் அகம்புற நூலாத் தொகுத்தனரே. 45 சங்க மரீஇய பாட்டுரையைத் தண்டமிழ் நாட்டு மக்களெலாம் அங்கினி தேகற் றுணர்ந்தவர்கற் றதன்படி நடந்து வந்தனரே. 46 இன்று நமக்குக் கிடைத்துள்ள எல்லாப் பழந்தமிழ் நூல்களுமே அன்று மதுரைத் தமிழ்ச்சங்கத் தரங்கே றியவென் றறிவீரே. 47 பழுமரந் தேடும் பறவைகள்போல் பாடும் புலவர் பரிசுபெறச் செழுங்குடிச் செல்வர் மனை நாடிச் சென்றே தமிழை வளர்த்தனரே. 48 பரிசில் வாழ்க்கைப் புலவோர்கள் பாடிக் குவித்த பாடல்களில் ஒருசில வேனும் நாம்பெற்ற துறுபய னென்றே அறிவீரே. 49 பாவல ரன்றிப் பரிசீந்து பழந்தமி ழகத்தை யினிதாண்ட காவலர் தாமுங் கவிபாடிக் கன்னித் தமிழை வளர்த்தனரே. 50 குளிறு முரசக் கொடைமன்னர் குதிரை கொடுத்தும் நிரைகொடுத்தும் களிறு கொடுத்தும் பிடிகொடுத்தும் கன்னித் தமிழை வளர்த்தனரே. 51 நாடு கொடுத்தும் நகர் கொடுத்தும் நறும்பொன் மணியணி கலன்கொடுத்தும் காடு தோட்டங் களைக்கொடுத்தும் கன்னித் தமிழை வளர்த்தனரே. 52 அறம்பொய்க் காத புலவோருக் கவனூர் முந்நூ றுங்கொடுத்த பறம்பிற் பாரி கொடைத்திறத்தைப் பன்னிப் பன்னி மகிழ்வீரே. 53 அங்கவன் வரையா தமைகடனா அவ்வா றீந்து பழகினதே பைங்கொடி முல்லை படர்தரவே படைத்தே ரீந்த கொடைத்திறனே. 54 குளிரு மயிலுக் கென்றுள்ளங் கொண்டு போர்வை யதுபோர்த்த பிளிறுங் களிறார் தருநல்லூர்ப் பேகன் கொடையை யறிவீரே. 55 எறியாப் படைபோ லிவறாமல் ஏற்பா ருவப்ப எமக்கென்று குறியாக் கொடையே இவ்வாறு கொடைமடம் பட்ட குறிப்பாமே. 56 சொல்ல ஊர்பேர் விரும்பாது தொடையாழ்ப் பாணர்க் கணியீந்த கொல்லி மலைவல் வில்லோரி கொடையின் றிறத்தை யறிவீரே. 57 குன்றென் றுயர்ந்த யானைகளைக் கொள்க வென்று புலவோருக் கன்றன் றீந்த வேள்பொதினி ஆயின் கொடையை யறிவீரே. 58 அரிதிற் கொண்ட அருநெல்லி அந்தீங் கனியை அவ்வையுணத் தருமெய்ப் பயன்கூ றாதீந்த தகடூர் அதியன் கொடையென்னே! 59 வண்டமிழ் வாணர் இல்லின்கண் வாளா விருந்து தமிழ்பாடக் கொண்டு கொடுத்த பெருநள்ளி கொடையின் றிறத்தை யறிவீரே. 60 திளைக்கத் தமிழ்கேட் பதைவிட்டுச் செல்லா திருக்க ஒளவைக்குக் களைக்கொட் டீந்த பழையனூர்க் காரி கொடையை யறிவீரே. 61 குழைந்து கொடுக்குங் கொடைமிழலைக் கூற்றத் தலைவன் ‘வேளெவ்வி இழந்த வறுமை யாழ்ப்பாணர்’ என்னு முரையை யறிவீரே. 62 இசைப்பயிர் வளருஞ் சிறுகுடியில் என்றும் புலவர் குடிகொள்ளப் ‘பசிப்பிணி மருத்துவன்’ எனப்பட்ட பண்ணன் கொடையை யறிவீரே. 63 ‘எள்குத லின்றி எம்பியிடம் என்றலை கொடுதந் தேபரிசு கொள்குவி’ ரென்று வாள்தந்த குமணன் கொடையை யறிவீரே. 64 எழாஅ வூசல் இருந்தாடும் இளமென் கொடியார் இசைபாடும் உழாஅ நாஞ்சில் வள்ளுவனின் உம்பற் கொடையை யறிவீரே. 65 திரைசெய் வேலி நெடுஞ்செழியன் செந்நாப் புலவர் பாடாது வரைக வென்னில வரையென்ற வஞ்சின மதனை யறிவீரே. 66 பூணுங் கோவைக் கவிக்கொன்றாப் பொய்யா மொழிக்குப் புகழ்தஞ்சை வாணன் தேவி பொற்றேங்காய் வழங்கிய பரிசை யறிவீரே. 67 பட்டினப் பாலைப் பாட்டினுக்குப் பதினா றுந்நூ றாயிரம்பொன் கொட்டிக் கொடுத்த கரிகாலன் கொடையின் பெருக்கை யறிவீரே. 68 கன்னித் தமிழ்க்கம் பன்வீட்டுக் கட்டுத் தறியுங் கவிபாடும் என்னு முரைநந் தமிழ்க்கந்தாள் இருந்த மதிப்பை யியம்பாதோ! 69 மாரி போல வரையாது வரவர வரவரக் குறையாது வாரி வாரி ஈந்தீந்து வண்டமிழ் வளர்த்து வந்தனரே. 70 பாரி வெள்கத் தம்மீது பதிற்றுப் பத்தினைப் பாடிநர்க்குச் சேரர் பதின்மர் கொடுத்ததையச் செந்நூ லிற்கண் டறிவீரே. 71 அரசு கொடுத்தா னொருசேரன், ஐந்நூ றூர்கொடுத் தானொருவன், பரிசு கொடுத்தான் தன்மகனைப் பத்துப் பாட்டுக் கொருசேரன். 72 பொலங்கல னுக்கா ஒன்பதுகாப் பொன்னொடு தன்னரு கேயிருக்க இலங்கிழை காக்கை பாடினியார்க் கிருக்கை கொடுத்தா னொருசேரன். 73 நாலாம் பத்துக் கொருசேரன் நாற்பது நூறா யிரமீந்தும் சாலா தெனத்தான் ஆள்வதனில் சரிபங் கீந்து சிறப்பித்தான். 74 மாமலை யேறிக் கண்டநில வருவாய் கொடுத்தா னொருசேரன். ஆமிவர் வழியோர் இன்றுமலை யாளிக ளாய்த்தமி ழறியாரே! 75 தவறி முரசு கட்டிலின்கண் தான்றுயில் புலவன் எழுங்காறும் கவரி வீசிய காவலனின் கடமை யறிந்தின் புறுவீரே. 76 தமிழறி கில்லாப் பிரகத்தன் தனையறி வுறுத்த வேகபிலர் அமிழ்தி னியன்ற குறிஞ்சிப்பாட் டதனைப் பாடிய தறிவீரே 77 தமிழைப் பழித்த வடவரசர் தலையில் இமயக் கல்லேற்றித் தமிழர் மானந் தனைக்காத்தோன் தாய்மொழிப் பற்றை யறிவீரே. 78 வேளவை கூடிக் குடிகாக்கும் வெள்வேல் மூவர்க் குப்புலவர் நாளவை யென்று பெயர் கூறல் நயப்பும் வியப்பும் உடைத்தன்றோ? 79 கட்டளைக் கலிப்பா ஈத்து வந்த தமிழ்ப்பெருஞ் செல்வரும் எந்த மிழ்ப்பெரு மன்னரும் பின்னரும் பாத்து வந்து பரிசு கொடுத்தலால் பழந்த மிழ்ப்பெரும் பாவலர் தம்மொடு கூத்தர் பாணர் பொருநர் விறலியர் கூடி யேமுத் தமிழை வளர்த்தனர்; மூத்து வந்த பழந்தமிழ்ச் செல்வியும் முன்னு வந்திளங் கன்னியாய் வாழ்ந்தனள். 80 மும்மை யாகி ஒருமை தலைப்பட முத்த மிழ்த்துறை போகிய மூவரும் தம்மை யாண்ட பழந்தமிழ்ச் செல்வர்கள் தம்மை யாண்டு தமது புலமையால் இம்மை வாழ்வுதந் தாய்மொழி போற்றலே என்று கொண்டிளை யாம லுழைத்துமே செம்மை யோடு செழுமை யுறத்தமிழ்ச் செல்வி தன்னைச் சிறப்புறச் செய்தனர். 81 தரிசு கொண்ட நிலத்தினைப் பண்படத் தான்றி ருத்திப் பயன்கொள் பவர்கள்போல் பரிசு தந்து தமிழை வளர்த்தனர் பயன்ப டநன்கு வாழ்பெருஞ் செல்வர்கள். பரிசு கொண்டு தமிழை வளர்த்தனர் பயன்ப டநன்கு வாழ்ந்த புலவர்கள் பரிசு தந்த பரிசிலே இன்றுநாம் படித்து வக்கும் பழந்தமிழ் நூல்களே. 82 பரிசு பெற்று வருமொரு பாணனைப் பரிசு வேண்டிய பாணன் எதிர்ப்படின் பரிசு பெற்றவப் பாண்மகன் தான்பெற்ற பரிசு மப்பரி சைத்தனக் கீந்தவன் பரிசு மின்னெனப் பன்னி யனுப்பவப் பரிசு வேண்டிய பாணனவ் வள்ளல்பால் பரிசு வேண்டிற் பரிவுடன் அன்னவர் பரிசு நல்கிப் பழந்தமிழ் போற்றினர். 83 இன்ன வாறவ ரேனைய நால்வரும் எதிர்ப்ப டுந்தமர்க் கெண்ண நிறைவுற அன்ன வாறுசென் றப்பரி செய்தவே அவரை யாற்றுப் படுப்பர் அவர்கள் பால்; சொன்ன வாறவர் சென்று தொடைநடை சுவைய வைபடப் பாடியும் ஆடியும் முன்ன வாறவர் மொண்டு கொடுக்கவே முத்த மிழ்வளர்த் தாரவ ரொத்துமே. 84 அன்று கப்பல் கவிழவோர் தீவினை அடைந்த சாதுவ னையந்தத் தீவில்வாழ் கொன்று தின்னுங் கொடியர் குறுகவக் கொடியர் தாய்மொழி யாலவன் பேசவே, கொன்று தின்பதை விட்டவன் பாலன்பு கொண்டு போற்றினர் அக்கொடு நாகர்கள் என்ற இச்செய்தி தாய்மொழிப் பற்றினுக் கெடுத்துக் காட்டாகு மல்லவோ சொல்லுவீர்? 85 குட்டி யேதலை யிலதி வீரனும் குடைந்து காதை யறுத்துமே வில்லியும் வெட்டி யேதலை யையொட்டக் கூத்தனும் வெந்தொ ழில்புரிந் தார்களென் றெண்ணலீர்; கட்டி யேகளை பைங்கூழ் வளர்த்திடும் களமர் போலவத் தாய்மொழிப் பற்றினால் முட்டி யேகுறை குற்றங் களைந்துமே முத்த மிழ்வளர்த் தாரென் றறிகுவீர். 86 இன்பி னோடுயர் செந்நாப் புலவரும் இயல்பி னோடிசைப் பாணரும் மாணவே தென்பி னோடுகூத் தர்முதல் மூவரும் தெளிவி னோடு முதுகுடிச் செல்வரும் முன்பி னோடு முடியுடை மூவரும் முடியி லாரும் முறையொடு போற்றிட அன்பி னோடு பழந்தமி ழன்னையும் அரிய ணையில மர்ந்துல காண்டனள். 87 5. வாழ்க்கைமுறை குறிஞ்சி தாழிசை மூவேந்தர் வேல்போல மின்னி யன்னார் முரசினதிர்ந் தவர்கொடைபோல் மொய்வான் பெய்யப் பாவேந்தர் பாட்டிசைப்ப மலைக ளென்னும் பருஞ்சால்கள் நிறைந்துவளம் பயக்கு மாதோ. 1 ஈட்டியநற் செல்வமதை யினிதின் இல்லார்க் கீத்திசையி னாலுயரும் இனியார் போல்நீர் ஊட்டியுல கத்தினுக்கவ் விசையி னாலே உயர்ந்தோங்கும் மலைகளென உரைப்பர் மேலோர். 2 பொருகளிறுஞ் சினப்புலியும் பொருமங் கோர்பால், புயல்கண்டு மயிலாடிப் பொலியு மோர்பால், முருகவிழு நறுந்தேனுங் கிழங்குங் கொள்ளும் முயற்சியிலே மலைக்குறவர் முனைவா ரோர்பால். 3 புலிபுலியென் றுயர்ந்தோங்கிப் பொலியும் வேங்கைப் பூப்பறித்துப் புனங்காத்துப் பொழுது நேர ஒலிகெழுநீ ரருவியொடு சுனைபுக் காடி ஓங்குமலைக் குறத்தியரின் புறுவா ரோர்பால். 4 திருந்துசிறு குடிப்போதும் விருந்து கண்டு செந்தேனுந் தினைமாவுஞ் சிறக்க வூட்டிப் பருந்தடங்கட் குறத்தியரப் பகல் செல்காலைப் பாய்புலித்தோற் பாயிலிற்கண் படுக்கு வாரே. 5 அடுங்களிறும் பன்றியுஞ்செந் தினையுண் ணாமல் அஞ்சியகன் றிடக்குறவர் செந்தீ மூட்டிக் கடுங்குளிர்காய்ந் திடும்புகையி னாலே நாளும் காரகிலுஞ் சந்தனமுங் கமழு மெங்கும். 6 கொடிமிளகு படர்கோங்கக் குறிச்சி முன்றில் குறத்தியர்கள் ஆடிடுமக் குரவைக் கூத்தைக் கடிமிளகுப் பந்தரின்கீழ் மந்தி கூடிக் கைகோத்தா டக்கண்டு களிக்கு வாரே. 7 இளவேனில் தமிழ்த்தென்றல் இன்பஞ் செய்ய இலங்கருவி சுனையாடிப் புனமுங் காத்து வளவேனில் கழிகாறும் எதிர்ப்பா டுற்றும் வழிநிலைக்காட் சியுங்கண்டு மகிழு வாரே. 8 களவு வானோங்கு மலைச்சிலம்புப் புனத்தே வந்து மருவுகிளி கடிந்துநின்ற ஒருத்தி தன்னைத் தானீங்கித் தோழர்களை இயற்கை யீர்ப்பத் தனியாக ஆங்குவந்த ஒருவன் கண்டான். 9 மிக்கின்ற அணிச்சுமையாள், மிஞிற்றுக் காப்பாள், மேலெல்லாங் கொடி படர்ந்து விளங்கு கின்றாள், இக்குன்றாள் இவ்வூராள் செல்வ மிக்காள் என்னோக்குக் கெதிர்நோக்கும் எனவுட் கொண்டான். 10 ஒப்புடைய அவருளமப் பால்கள் தூண்ட ஒன்றுபட்டுக் கூடி மகிழ்ந் தொருநாள் போல அப்படியே மறுநாளும் ஆங்குக் கண்டார் ஆங்கவனும் அவளுங்கா தலர்க ளானார். 11 மடந்தலைப்பட் டினிதகல மற்றை மூன்றும் வழிபார்த்தவ் வழிநின்ற மயிலன் னாளை இடந்தலைப்பட் டுப்புணர்ந்தே இனிதின் நீங்கி இயன்றுநடந் தியற்றோழன் இடத்தைச் சார்ந்தான். 12 குன்றுறழ்தோள் உடைந்ததென்னே தலைவ! என்னக் கொடிச்சிசெய்த கொடுமையெனக் கூறப் பாங்கன் சென்றுகண்டு வந்துண்மை தெளிந்தேன் என்னத் திருநுதலை மறுநாளும் சிலம்பன் கண்டான். 13 மான்வினவித் தோழியொடு தலைவி நிற்க வரக்கண்டு தலைவிமுக வண்ணங் கண்டு தான்வினவித் தோழியவர் கூட்டம் உண்மை தானறிந்தாங் கவளுமுடன் தான்பட் டாளே. 14 கூன்பிறையைத் தொழமறுக்க, அம்பு பட்ட கொலைக்களிற்றின் வரவுரைக்க அச்சங் கொள்ள தேன்பிறையை முசுக்குத்தச் சிறுமான் நக்கும் சிலம்பனுடன் அவளுறவைத் தெளிந்து தேர்ந்தாள். 15 கையுறையாப் பைந்தழையைக் கையி லேந்திக் கதிர்வேலான் ஆங்குவரக் கண்டு தோழி தையுறையைம் பாற்குறிப்பால் தழையை ஏற்கத் தமிழ்த்தலைவன் தலைவியெனத் தனிப்பேர் பெற்றார். 16 தோழியுடன் பட்டவளை அவன்போய்க் கூடும் தூயகுறி யிடங்காட்டத் துணிந்து நாளும் ஏழிசைநூற் றமிழ்ப்புலவர் இலக்க ணத்திற் கிலக்கியமா யவர்கூடி யின்புற் றாரே. 17 தேரூர்ந்தும் பரியூர்ந்தும் யானை யூர்ந்தும் சிந்தையிடங் கொண்டவனைச் சென்று கூடிக் காரூர்ந்து வளம்பொலியக் கழனி வாய்ப்பக் கைதூவா உழவரைப்போற் களித்திட் டாரே. 18 பேயிருளில் மலைப்பாம்பு பிறழுஞ் சாரல் பெருவிலங்கு நடமாடும் வாரல் ஐய! தாயருளிற் கூற்றுரைப்பாள் தரியா ளெங்கை. தங்குடிக்கு வரைதலினித் தகுதியாமே. 19 எப்போதும் சொல்வாள்போல் இன்றுஞ் சொன்னாள் எனச்செவிடன் போற்கேளா திருந்தான் வாளா, இப்போதும் குளிர்தூங்கும் இடையா மத்தும் எப்போதும் போன்றுகுறி யிடத்தே வந்தான். 20 புள்ளொலியும் பொய்கையிடைக் கனிகாய் வீழும் புனலொலியும் தலைவன்செய் குறியென் றெண்ணிக் கள்ளொலியுங் கருங்குழலும் சென்றன் னானைக் காணாது குறிபிழைத்துக் கலங்கி னாளே. 21 தாய்துஞ்சாள் தாய்துஞ்சின் நாயோ துஞ்சா, தான்துஞ்சின் நிலவெறிக்கும் ஊர்காப் பாளர் வாய்துஞ்சா அவர்துஞ்சின் மலர்க்கண் துஞ்சும் வடிவேலான் பார்த்தலுத்து வருந்திச் செல்வான். 22 இரண்டொருநாள் வாராம லிருந்தா னேனும் இரண்டாண்டாக் கொண்டவளும் இரங்கா நிற்பாள். திரண்டபடைத் துணைச்சிலம்பன் செல்லின் ஆங்கச் செறிதொடியும் என்படுமோ தெரியா தம்மா! 23 ஆன்றபெரு மையுமுரனும் உடைய அன்னான் அவட்பிரியப் பெறானெனினும் அமைதி காக்கும் சான்றபெருந் தகைதனது தலைமைப் பாட்டால் சார்துணைசென் றவட்பிரிந்து தலைப்பட் டானே. 24 நின்வரவும் இவளுறவும் அறியா ளன்னை நேற்றொருவன் விருந்தானான் இவளுங் கண்டாள். தன்வரைவு நேரிலுயிர் தரியா ளாகத் தான்வரைதல் ஆண்மகற்குத் தகுதி யாமே. 25 துன்பத்தில் இன்பத்தைக் காண்போன் போலத் தோழியுரை செவிக்கொள்ளான் சொந்த மானால் இன்பத்தின் இனிமைகுன்றும் எனவே ஆற்றின் இடையூற்றைப் பொருட்படுத்தா திருந்தான் முன்போல். 26 ஆங்கவர்கள் பகலிரவுக் குறியிற் கூடி அகத்துறையின் பாற்படவூர் அலர்மீக் கூர, ஈங்கவர்கள் களவொழுக்கம் அறியாத் தாயும் இற்செறித்து நோயறியா திடருற் றாளே. 27 பாலுண்ணாள் பழமுண்ணாள் பந்துந் தீண்டாள் பைங்கிளிமான் பூவையைப்பேர்ம் பகையாக் கொண்டாள் காலுண்ணாள் ஊசலிடைப் பண்ணை நண்ணாள் கண்கொள்ளாள் பித்தியைப்போல் கலங்கி னாளே. 28. தன்காதற் கொழுந்துருவும் பேரும் ஊரும் தானெழுதி மடலேந்திப் பரிமா வூர்ந்து தென்காதற் கொழுந்திருந்து வாழும் ஊரின் தெருவிடைச்சென் றூரலரைச் சிறப்பித் தானே. 29 உற்குறித்திவ் வூரவரென் னென்னெல் லாமோ உளறுகிறார் இல்லாதும் பொல்லா தும்மா, எற்குறித்துக் குடிப்பெருமைக் கிழுக்குத் தேடல் இயல்போகாண் எனத்தாயும் எரிந்து வீழ்ந்தாள். 30 அன்றுவிருந் தாகவந்த அவனிவ் வூருக் கடிக்கடிவா ரானாமூர் அறிந்து தூற்ற, ஒன்றுமறி யாதவள்போல் அவளும் வாளா உன்போன்றாள் அவன்மடலும் ஊர்ந்தா னாமே. 31 ஊரவர்வாய் அலர்எருவாத் தாய்சொல் நீரா ஓங்கியந்நோய் உடல்மெலிய, உவந்து கூறும் நீரவர்வாய்ச் சொற்கேளாத் தலைவி உய்யும் நெறிகாணா தந்நிலையை நினைந்து நொந்தாள். 32 கறிவளரு மலைக்குறத்தி கட்டுக் காணக் கதிர்வேலன் வெறியாட்டுக் காண மேலும் வெறிவளர மகள்நிலைகண் டன்னை யேங்க, மெல்லியலும் அதைக்குறிப்பால் வெளியிட் டாளே. 33 அன்னாயாம் அன்றொருநாள் புனத்தே மாக அடைந்தகொலைக் களிற்றினைக்கண் டஞ்சுங் காலை பொன்னாரம் பூண்டவொரு பொருப்பன் ஆங்கே பொருக்கென்று போந்தச்சம் போக்கி னானே. 34 பின்னொருநாள் சுனையாடிக் களைத்துக் கைகால் பிறக்கிடவே கரையேறப் பெறாதே மாக அன்னவனே கைகொடுத்துக் கரையில் விட்டெம் ஆருயிரைக் காத்தன்போ டகன்று போனான். 35 எட்டாத பூப்பறித்தீந் தான்மற் றோர்நாள் இத்தனையும் இவளுளத்தை ஈர்த்த போலும்! தட்டாத பேருதவித் தகையா ளன்பால் தன்னுளத்தைப் பறிகொடுத்தாள் போலுந் தானே! 36 என்றுநடந் ததைத்தோழி தனது நற்றாய்க் கிவ்வாறாங் கெடுத்துரைப்பச் செவிலி கேட்டுக் கன்றியதன் மனத்தகத்துக் கவலை நீங்கிக் கடப்பாட்டின் தலைநிற்கக் கருத்துட் கொண்டாள். 37 தோழிசெவி லிக்குரைக்கச் செவிலி தாய்க்குச் சொல்லவுடன் பட்டெந்தை சுடர்வே லாற்கே வாழியெனத் தம்மகளைக் கொடுக்க அன்னார் மனைவாழ்க்கைத் தலைநின்று வாழ்ந்து வந்தார். 38 தந்தையுடம் பட்டவுடன் தலைவன் தன்னின் தகுதியதற் கேற்றபடி தன்னூர் சென்று வந்துபொருள் கொண்டுமணங் கொண்டான். இஃது வரைவினிடைப் பிரிவென்னும் வகைய தாமே. 39 மற்றொருத்தி யிவ்வாறே ஒருவ னோடு மனங்கலந்து களவொழுக்கம் ஒழுகி வந்தாள்; பெற்றவர்கள் மணமறுக்க அறியா வண்ணம் பிணையெனவக் காளையுடன் பின்சென் றாளே. 40 ஆங்கவளைக் கொண்டுதலைக் கழிய அன்னாற் கருந்துணையாய் முன்னின்ற அருமைத் தோழி, ஆங்கவளின் அருமையினை எடுத்துக் கூறி அவளையவன் கையடையா அடைவித் தாளே. 41 இக்குடியின் தனிக்கொம்பர், எங்கள் செல்வம், என்தாயின் ஆருயிர், நான் இவளே யாவள், மொக்குவிரி புதியமலர், முன்பின் காணாள் மொய்குழல்நும் கையடையாம் முறையிற் கொள்வீர். 42 இம்மென்றால் சோறுண்ணாள் இரண்டு நாளைக் கேனென்றால் படுக்கையைவிட் டெழவே மாட்டாள் அம்மென்றால் கண்கள்மலை யருவி யாகும் ஆங்கருமை யாய்வளர்ந்த அமிழ்த மன்னாள். 43 தாயிவளை இக்குடிக்குத் தந்தாற் போலத் தருகின்றேன் நானுனக்கித் தமிழன் னாளை நீயிவளை அவளென்று நினைத்தல் வேண்டா நீயவளா அவள்நீயா நினைத்தல் வேண்டும். 44 முத்துதிர்ந்து கருமுகிலும் வெண்பஞ் சாக மூப்படையப் பெண்மையெனும் முதலும் போக அத்தையெனப் பாட்டியென அழைக்க லாகும் அன்றுமின்றே போலிவளை அளித்திர் ஐய! 45 நங்கைகொழுந் தியரக்கை தங்கை யாக நங்கையிவர் பெற்றோர்நின் பெற்றோ ராக அங்கிவர்தம் பெருஞ்சுற்றம் நமது சுற்றம் ஆகவொழு கிடல்கடப்பா டாகு மம்மா! 46 தாய்போல அன்புடையார் தமிழர். அன்பின் தலைநின்ற தமிழரிவர் தயங்க வேண்டா, சேய்போல எண்ணாதே இனிநம் வாழ்க்கைச் செழுந்துணைவர் யான்விரைவில் வருவல் அங்கே. 47 போய்வாம்மா! எனத்தோழி, பூங்கொம் பன்னாள் பொலபொ லென்று முத்துதிர்த்துப் புறம்போய் நிற்ப வாய்வாம்மா! எனக்கையவள் மலர்க்கை பற்ற மயிற்பெடையும் அவனுடனே வழிக்கொண் டாளே. 48 கண்காணு மட்டுமவர் கண்ணுள் ளாகக் கனையிருளில் கழற்சிலம்புக் கால்கள் செல்ல, பெண்காணும்! எனத்தோழி பெயர்ந்து வந்து பேதுற்றாற் போற்பிரிவால் மோதுற் றாளே. 49 இரைகாணாச் சுரத்தவரும் இனிது சென்றார் இனிநமக்கிங் கென்னெனவவ் விரவுஞ் செல்ல, கரைகாணாத் தாய்துயரங் காண்பான் போலக் கதிரவனுங் குணகடலின் கண்ணுற் றானே. 50 செவிலிசெயல் காலையிலே யெழுந்துமகட் காணாத் தாயும் கன்றுபிரி காராவிற் கலங்கி யேங்கி வேலையிலே கவிழ்கலம்போல் விம்முற் றவ்வூர் வீடுதோறுந் தேடியவள் வெறிதே மீண்டாள். 51 மனையைவிட்டுச் சென்றுவழிச் செல்வோர் பாற்றன் மகளொருவன் பின்செல்லும் வழியைக் கேட்டே அனையன்புக் கெடுத்துக்காட் டாகத் தாயும் அவ்வழியே தனியாக அரற்றிச் செல்வாள். 52 எந்தலைவன் பெருமலையே! என்செல் வத்தை, என்னுயிரை எங்குநீ ஏகச் செய்தாய்? செந்தமிழின் சுவைக்கனியே! என்னை விட்டுச் சென்றனையே ஒருவனுடன் தெரிந்தி லேனே. 53 காத்திருந்த தினைப்புனமே! கதிரை வந்து கவராவோ கிளிகளினிக் காப்பார் யாரே? பூத்தலர்ந்த பூங்கொம்பே! என்னை விட்டுப் போயினையே ஒருவனுடன் புரிந்தி லேனே. 54 புக்காடும் பூஞ்சுனையே! மலையின் வீழும் புனலருவி! இனியின்பம் புல்லு வீரே! அக்காடி! எனவாயம் ஏங்க விட்டே அவனோடு போயினையே அறிந்தி லேனே. 55 பல்வளமும் பிரிந்துமலைப் பாங்கும் காடும் பாலையெனப் படும்வேனிற் பருவந் தன்னில் வில்வளங்கொண் டெயினர்கள்வாழ் கொடுமை மிக்க வெஞ்சுரத்தே தாய்தேடி மேவி னாளே. 56 இலைபிரிய நிலையின்றி என்னைப் போல ஏங்கிநிற்கும் பாதிரியே! குராஅ! மராவே! கலைபிரியச் சிலைதொடுமோர் காளை யோடென் கன்னிசெலக் கண்டீரோ? கழறு வீரே. 57 கணையருந்த வழிச்செல்வோர்க் காலம் பார்க்கும் கடுமறவர் நிலைகடந்த காளை யோடு பிணையருந்தக் கலையுசுப்பும் சுனைய தான பெருஞ்சுரத்தி லெவ்வேறு பின்சென்றாளோ? 58 கானலைநீ ரென்றுண்ணக் கலைமான் கூட்டம் கடிதோடிக் களைத்திளைத்துக் கலங்கி யேங்கும் வேனில்முதிர் கடுஞ்சுரத்தவ் விடலை யோடென் மெல்லியலும் எவ்வாறு வியங்கொண் டாளோ? 59 வற்றியயாக் களிறுரித்துப் பிடிக்குண் பிக்கும் வறுத்தமைபோல் பரல்கொதிக்கும் வழிய தான முற்றியவிக் கடுஞ்சுரத்தக் காளை யோடென் பொய்குழலெவ் வாறுசெல முற்பட் டாளோ? 60 காய்ந்தஞெமை இருப்பைசுள்ளி கள்ளி வேகும் கடுவெயிலால் பருந்திறகு கருகி வீழும் தீய்ந்தகடுஞ் சுரத்திலந்த மீளி யோடென் சிறுமகளும் எவ்வாறு சென்றிட் டாளோ? 61 வெய்யவன்செங் கதிர்நிழலைக் காண்கி லாது வெடித்தநில வெடிப்பினுழைச் சென்று தேடும் வெய்யசுரந் தனில்நடந்தென் கொடியன் னாளவ் விடலையொடெவ் வாறுசெல்ல விரும்பி னாளோ? 62 களிற்றுநிழல் பிடிசெலத்தாய்க் காலின் நீழல் கன்றுசெலுங் காட்சியினை நின்று கண்டு வெளிற்றுநிழற் சுடுசுரத்தவ் விடலை யோடு மெல்லியல்போக் கினைநினைந்துள் வெதும்பி னாளே. 63 பருந்துநிழ லதிற்புறவு பறக்கக் காந்தும் பாயெரியின் கொழுந்துசுடப் பதைத்து வீழும் மருந்தறியாக் கடுஞ்சுரத்தக் காளை யோடென் மகள் நடந்தீங் கெவ்வாறு வழிக்கொண் டாளோ? 64 வான்வெளியில் கழுகேவு கணையைப் போல வட்டமிட்டு வெயில்சுடக்கீழ் வரவே மிங்குக் கான்விளியும் அனல்சுடவே கலங்குங் காட்டில் காளையொடென் கன்னிசெலக் கடம்பட் டாளே? 65 பகைப்புலத்து நிரைகவரும் பறையி னோசை பறந்தலையில் இடியினெதிர் படவே யார்ப்பத் திகைப்புறுத்தி உயிர்கொலுமிச் சுரத்தெவ் வாறு சென்றனளோ மீளியொடென் செல்வ வம்மா? 66 காட்டிலெழுந் தீப்பறந்து கடுகிக் காயக் கதிரவனுஞ் சினஞ்சிறந்து கனன்று காயும் ஏட்டிலெழு தற்கருமிச் சுரத்தென் செல்வி எவ்வாறவ் விடலையுடன் ஏகி னாளோ? 67 செங்குருதி தோய்வேலின் இலையைப் போலச் செந்நாய்நா வறண்டுதொங்க நீர்கா ணாதே எங்குருதி போல்துடிக்கும் இக்கா னத்தே என்மகளெவ் வாறவனோ டேகி னாளோ? 68 நிலங்காய்ந்து கடுவெயிலால் நெருப்புப் பற்ற நீள்புகையைப் புறவுநிழ லென்னச் சென்று வலங்காய்ந்து கருகிவிழுங் கொடுங்கா னத்தென் மலரனையாள் எவ்வாறு வழிச்சென் றாளோ? 69 கூடையிலே நெருப்பையள்ளிக் கொட்டி னாற்போல் கொடுங்கதிருங் கடுவெயிலுங் கொட்டுங் கானில் ஓடையிலே மலரனிச்சம் உறுத்தும் மென்கால் உறத்துடித்தெவ் வாறவளோ டோடி னாளோ? 70 ஆறலைத்துச் சூறைகொள்ள மறவர் கொட்டும் அப்பறையி னொலிகேட்டஞ் கஞ்சி யஞ்சித் தூறலைத்துப் புலிசீறச் செந்நா யோடும் சுரம்போக்கும் ஒருபோக்கோ! துணிந்தாய் தோகாய்! 71 இரவினிலும் அடிசுடுமிக் கொடிய அத்தம் இடைப்பகலில் என்செயுமோ! எய்யாத் தையல் அரவினிலுங் கொடியவனோ டனுப்பி வைத்தாள் அணிமயிலிச் சுரத்தையெவ்வா றகன்றிட் டாளோ? 72 நல்லவெயில் எனப்படுமக் கொடும்பா விக்கு நண்பகலுந் துணைசெய்ய நடுங்கச் செய்யும் கொல்லவயில் போற்கூர்ங்கல் கொதிக்கும் பொல்லாக் கொடுஞ்சுரத்தின் கொடுமையைத்தாய் கூறி நொந்தாள். 73 கல்லுருக வெயில்காயும் கடிய தாமக் காட்டிடத்தே கண்டாரோர் காளை அன்னாய்! வில்லுருக அம்புதொட்டு வெருக்கொள் ளாதோர் மெல்லியலை அழைத்தேகக் கண்டோம் என்றார். 74 கலைநிழலின் பிணைசெலுமிக் காட்டில் ஆங்கோர் காளையொடோர் கன்னிசெலக் கண்டோம் அன்னாய்! இலையவளுக் கொருகுறையும் இரங்க வேண்டா, இன்றிருந்து நாளையும்மூர்க் கேகு வாயே. 75 காதலெனும் பொன்கயிற்றால் கட்டுண் டன்னாள் கணவனுடன் செல்கின்றாள் கடமை பூண்டாள். ஆதலினால் அன்னாரைப் பிரிக்க வெண்ணல் அறமாகா தெனத்தாயும் ஆமென் றாளே. 76 நற்றாயிரங்கல் ஒருவனுடன் மகள்சென்றாள் என்னக் கேட்ட வுடனவளைப் பெற்றநற்றாய் உள்ளஞ் சாம்பி ஒருவரையுங் குறைகூறாள் உலகப் போக்கை உணர்ந்திலேன் எனத்தனையே உவர்த்துக் கொண்டாள். 77 பின்னவளை யறியாமல் அழைத்துச் சென்ற பிழையுடையான் எனவவனை நொந்து கொண்டாள். தன்னிடமும் சொல்லாமல் ஒருவ னோடு தான்சென்றாள் எனமகளைச் சலித்துக் கொண்டாள். 78 எப்படியோ தொலைந்தனளென் றிருந்திட் டாளா? இல்லையிலை, அவள்சென்ற இடம்வான் பெய்தே எப்படியோ மரந்தழைத்து நிழலும் நீரும் இனிதிருக்க வேண்டுமென எண்ணு வாளே. 79 ஊறின்றி யவள்செல்ல வேண்டும். அன்னான் உடனழைத்துச் செல்லுமின்று போன்றே தானிவ் வாறென்றும் அன்புடனே நடத்த வேண்டும் வாழட்டும் நன்றெனவே வாழ்த்து வாளே. 80 ‘பெற்றமனம் பித்து, பிள்ளை மனங்கல்’ லென்னும் பெரியார்சொற் கிலக்கியமாய்ப் பிரிவாற் றாது மற்றவளும் அந்நோய்க்கு மருந்து காணாள். மகள்போக்கை எண்ணிமனம் வருந்தி னாளே. 81 எச்சரிக்கை யில்லாமல் இருந்திட் டேனே எவ்வாறவ் வருஞ்சுரத்தே ஏகின் றாளோ! நச்சிருக்குங் கூர்வேலான் அன்பில் லாமல் நடத்துவனோ நன்றாக, எனவே நைவாள். 82 பின்சென்றார் என்செய்து பெயர்கின் றாரோ! பெருங்கண்கள் குளிரக்காண் பேனோ! விட்டுத் தன்சென்றாள் பிரிவெண்ணித் தவித்தாள் தாயும், தாயுள்ளத் தகைமையினைச் சாற்றப் போமோ! 83 வந்திடுவாள் எனப்பேசும் வார்த்தை கேட்பாள், மலைக்குறத்தி வடிவேலன் வாக்குக் கேட்பாள், நொந்திடுவாள் தன்னோடாங் கிவளும் நோவாள் நோக்கியகண் பஞ்சடைய நோக்கி நொந்தாள். 84 தேடியவள் சுற்றத்தார் சென்று கண்டு சிலைவளைத்துக் கணைதொடுக்க கண்டே யன்னாள் ஓடியவன் றனைத்தழுவிக் கொளக்கண் டன்னார் உவந்தவளை யுடன்போக்கி ஊர்போந் தாரே. 85 இச்செய்தி தனைக்கேட்டவ் வீன்ற தாயும் இனிதவளும் வாழ்கவென இனிது வாழ்த்தி, அச்செய்தி தனைச்சுற்றத் தார்க்குக் கூறி ஆங்கவரோ டவளுமகிழ் வடைந்திட் டாளே. 86 விழுந்ததுளி விண்ணகத்தே வேகும் அந்த வெஞ்சுரத்தைக் கடந்தவர்கள் விரும்பிச் சென்று செழுந்தமிழ னூர்புக்குப் பெற்றோர் சுற்றம் சிந்தைமகிழ்ந் திடமணந்து சிறக்க வாழ்ந்தார். 87 ஆங்குடன்போ கியவொருத்தி தனைச்சுற் றத்தார் அன்பொடவ னோடழைத்து வந்து தம்மூர் பாங்குடனே மகிழ்ந்துமண முடிக்க அன்னார் பைந்தமிழ்க்கற் பியற்றுறையிற் படிந்து வாழ்ந்தார். 88 மற்றவர்க ளறியாமல் தாமே காதல் வழியொழுகித் துணைவர்களாய் வாழ வெண்ணிப் பெற்றவருக் குரைத்துமணம் பெற்று வாழ்தல் பெருவழக்கா மெனத்தமிழ்நூல் பேசுந் தானே, 89 முல்லை - மனையறம் சிந்து சென்றவ னூரினிலே - மணம் செய்துகொண் டவ்வத் திருமண மக்கள் ஒன்றிய கற்பியலில் - மேலோர் ஓதிய வண்ணம் ஒழுகியே வந்தார். 90 களவெனும் ஆழ்கடலில் - நின்று கற்பெனும் இன்பக் கரையினி லேறி உளமகிழ் காதலர்கள் - வாழ்வின் ஒத்த கிழவன் கிழத்தியு மானார். 91 காத லெனுங்கயிற்றால் - இறுகக் கட்டிய அன்னார் கருத்தொரு மித்துத் தீதணு காதவணம் - இன்பத் தேனினை யுண்டு திளைத்துக் களித்தார். 92 அஞ்சி யஞ்சியன்று - பிறரறி யாவணங் கண்டோர் அமைவுட னின்று நெஞ்சு தளையவிழ - உளம் நேர்ந்து புணர்ந்தின்பங் கூர்ந்து மகிழ்ந்தார். 93 காணற் கரியவளாய் - அன்று காப்புக்கை மிக்க கருந்தடங் கண்ணாள் பூணற் கருங்கலமாய் - எப் போது மவன்கைப் பொருளென வானாள். 94 ஊரவர் வாய்க்கஞ்சி - குறியிடத் தோடியே கள்வர்போல் கூடியே வந்தோர் ஊரவர் பாராட்ட - இன்றுளம் ஒன்றிய காதலர் என்றிட லானார். 95 அல்ல குறிப்பட்டே - கா ணாது கலங்கிய காதல ரின்று நல்ல குறிப்பட்டே - இன்பம் நயந்துதம் வாழ்வை வியந்திட லானார். 96 கடவல வென்றிகழ்ந்தே - அன்று காத்த அனைமகிழ் பூத்திட வின்றே இடவலப் பூணிகளாய் - அமைந் திணையிலா வாழ்க்கைத் துணைவர்க ளானார். 97 பூங்கொடி யேயனையாள் - அன்பிற் புலந்துங் கலந்தும் புதுக்கினா ளின்பம்; ஓங்குமின் சொல்லுடையாள் - அன்போ டூடியுங் கூடியும் ஊட்டினா ளின்பம். 98 மனைத்தக்க மாண்புடையாள் - என மற்றவர் போற்றவப் பொற்றொடி நல்லாள் தனைத்தக்க வற்பேணி - வளத் தக்களாய்த் தற்காத்து மிக்களாய் வாழ்ந்தாள். 99 நல்லபெண் என்றூரார் - மிக நாணு மியல்புடன் வாணுதல் நங்கை வல்லபெண் என்றிடவே - இல்லற மாட்சியின் மேம்பட்டுக் காட்சி யளித்தாள். 100 காணவு நாணியன்று - முதற் காட்சியில் நின்றவுன் மாட்சியி னாலே பேண வரும்பொருளே - தமிழ்ப் பெண்டிரின் மாண்பினைக் கண்டு களித்தேன். 101 ஊர்துஞ் சிரவினிலே - இடை யூற்றினைப் பாராது காற்றென வந்தே கார்துஞ்சு பூங்குழலி! - என்னைக் கண்டின்பந் தந்ததற் குண்டோகைம் மாறே. 102 கட்டுக்கா வல்கடந்தே - என்னைக் காணவே வந்தன்று காணாது செல்ல, முட்டுப் படநடந்த - என்பால் முன்னிலு மன்பு முதிர்ந்தபைம் பொன்னே! 103 அன்னை தனைவிட்டே - உன் ஆருயிர்த் தோழி யவளையும் விட்டே என்னைத் தொடர்ந்துவந்த - துணிவை என்னென்று சொல்வேனென் பொன்னங் கொடியே! 104 பட்டப் பகலினிலே - வேனிற் பருவத்தே கல்லும் உருகத்தந் தன்னில் சிட்டுக் குருவியைப்போல் - சுடு தீயிடை யென்னொடு மேயபூங் கொம்பே! 105 களவெனுங் கற்கொண்டே - அழகிய கற்பெனுங் கோட்டையைக் கட்டி முடித்த வளவிய உன்றிறத்தை - உரைக்க வல்லவ னோதமிழ்ச் செல்வியே சொல்லாய்! 106 என்று பலவாறு - கிழத்தியின் இன்னலந் தன்னையவ் வண்ணல்பா ராட்ட கொன்றையம் பூங்குழலும் - அவன் குறிப்பை யறிந்து சிறப்புற லானாள். 107 அன்றுதன் தோழிசொன்ன - சொல்லை அப்படி யேக டைப்பிடித் தின்று நன்று நடந்துகொண்டாள் - நனி நாகரி கத்தமிழ்த் தோகை மயிலாள். 108 நங்கை கொழுந்தியரை - என் நாத்தூ ணெனாமலப் பாத்தூ ணரிவை அங்கைநெல் லிக்கனிபோல் - அன்போ டக்கை தங்கையென் றழைத்துக் களித்தாள். 109 மாமி வரக்கண்டால் - ஓடி வாருங்கள் அம்மா! என அனை நேரத் தாமரைத் தாள்மலரில் - முகத் தாமரை பூத்திட ஏமுறச் செய்வாள். 110 தோழமை யைப்பெருக்கி - அதுபோல் சுற்றந் தழுவியம் முற்றிழை நல்லாள் மேழியர் கைவளம்போல் - குடி மேம்பட ஆவன தாம்படச் செய்வாள். 111 திருந்திழைத் தேமொழியும் - நாளும் செல்விருந் தோம்பி வருவிருந் துபார்த் திருந்து தமிழ்ப்பண்பாட் - டுக்கோர் எடுத்துக்காட் டாக இருந்துமே வந்தாள். 112 கற்றுத் துறைபோய - தமிழ்க் காவல ராகிய நாவலர் தம்மைச் சுற்றத்துட் சுற்றமெனக் - கொண்டு சொல்வழிப் பட்டற நல்வழிப் பட்டாள். 113 ஆன்றவிந் தேயமைந்த - கொள்கை அறிவர்கள் கூறும் அறவழி நின்று வான்றரு மாமழைபோல் - ஏவல் மக்களைப் பேணியே தக்கன செய்வாள். 114 உள்ளுவ ருள்ளமகிழ் - கொள்ள ஒருமனப் பட்ட பெருமனை யாட்டி வள்ளுவர் வாய்மொழிபோல் - மனை மாட்சியோ டில்லற ஆட்சி புரிந்தாள். 115 ஆறு குளங்காவும் - மலையும் ஆடியா யத்தொடு கூடி மகிழ்ந்து வீறு பெறவின்ப - வாழ்வு வெற்றிச் சிறப்பொடின் புற்றுத் திகழ்ந்தார். 116 ஆழி யிழைப்பதுபோல் - வரு வாரென வாக்கி யமைத்தின் னடிசில் தோழி யுடனிருக்க - கை தொட்டுண விட்டின்பம் பட்டிடச் செய்வாள். 117 நல்லியல் மேம்பட்ட - அந் நங்கை யுவக்கவச் செங்கதிர் வேலான் மெல்லியல் தொட்டதுநீ - எனக்கு வேம்புங் கரும்பென ஓம்பியே உண்பான். 118 இருத்தல் வெம்பகை வென்றிடுவான் - வடி வேன்முனை நோக்கவம் மான்விழி மங்கை அம்பெனுங் கண்மலர்ந்து - முத் தார மணிந்தவன் நேரிலே நின்றாள். 119 வண்டமிழ் மாமறத்தி! - நீ வாகை புனைந்தனை யாகையி னாலே ஒண்டொடி யான்தோற்றேன் - என ஓவியப் பாவையை நீவியே நின்றான். 120 தோல்வி யறியாத - தமிழர் தொல்குடிப் போந்தவென் நல்குடி யாள! மேல்வரும் வெம்பகையைச் - சென்று வென்று வருகென ஒன்று மொழிந்தாள். 121 மெல்லியிவ் வேனில்செலக் - கார் மேவுமுன் வெம்பகை வென்று வருவேன் செல்லல் தவிர்த்திருப்பாய் - நான்கு திங்களு மொன்றன்றோ எங்குல நங்காய்! 122 கார்வர இவ்வேனில் - புறங் காட்டுதல் போற்பகை ஓட்டியே மீள்வேன் நீர்வர உண்கண்கள் - அதன்மேல் நீட்டியேன் என்மனை யாட்டியே என்றான். 123 வாழ்த்திவாள் கைகொடுத்து - சென்று வாகை புனைந்தேயவ் வான்பகை தன்னை வீழ்த்தி வருகவென்றாள் - வரு வேனென அண்ணலுந் தானடந் தானே. 124 தோல்வி எனுஞ்சொல்லும் - மெய்த் தோழியும் ஆயமுஞ் சுற்றமும் சூழ வேல்விழி யாள்பிரிவை - எளிதில் வென்றனள் திங்களோ சென்றன நான்கு. 125 கொல்லையி னில்வரகு - சாமை கொய்துமே ஆய்ச்சியர் எய்துவர் பாடி. முல்லையும் மல்லிகையும் - பல்லின் மூத்துளேம் என்பபோல் பூத்துப் பொலியும். 126 கூடையில் கான்கோழி - முட்டை கொண்டுமே ஆய்க்குலப் பெண்டிர்கள் விற்பர். காடை கவுதாரிப் - போரைக் கண்டுமே ஆயர்சூள் கொண்டு களிப்பர். 127 வேலிக் கடவினிலே - ஓர்முயல் மேவி வலையில் விழவங் கெழுந்த போலிக் குரல்கேட்டுக் - கொன்றைப் புதரினின் றோர்முயல் பொள்ளென ஓடும். 128 ஆடுமா டுமேய்த்து - கான் யாற்றுநீர் காட்டியவ் வாய்க்குறு மக்கள் கோடு களிலேறி - ஒன்று கூடியே தெம்பாங்கு பாடிக் குதிப்பர். 129 வாயிற் குருந்தினிலே - கட்டிய மானிளங் குட்டியைத் தானெண்ணிக் கத்த வேயிற் றிரள்தோளி - குட்டியை விட்டுத்தா யன்பைக்கண் கொட்டாது பார்ப்பாள். 130 ஏழிசை யாகநின்று - தா தெருமன்றத் தாடுங் குரவையைக் கிள்ளை யாழிசை போற்பாட - ஆய்ச்சியர் ஆகவான் கோழிகள் தோகைபோ லாடும். 131 தன்னிளங் கொல்லேற்றைக் - கட்டித் தழுவிய வற்கத் தொழுவங்கை தட்டப் பொன்னிளங் கொம்பனையாள் - மாலை போட்டுத் திருமுகங் கோட்டியே நிற்பாள். 132 புலிவரு கின்றதென - அஞ்சிப் பொள்ளென மானினந் துள்ளியே யோட வலிவரு கைவீசி - ஆய்ச்சியர் மத்துரு மத்தயிர் மெத்தக் கடைவார். 133 நெய்தயிர் மோர்பாலும் - கொண்டு நெல்லுக்கு விற்றுப்புக் கல்லுஞ் சுமந்து வெய்துயிர் பிள்ளையெதிர் - கொள்ள வெண்ணகை ஆய்ச்சியர் நண்ணுவர் சேரி. 134 மூவர்கை வேல்முரசின் - மின்னி முழங்கியே வானம் வழங்கிய தன்னார் மேவரு மாலையைப்போல் - வான வில்லிட வந்தது நல்லகார் காலம். 135 செம்பவ ளம்போல - மூதாய் சிதறிடச் செல்லும் அதரிடைக் கண்டே அம்பவ ளவாயாள் - தன் அகத்தவன் சொல்லை அகத்து நினைப்பாள். 136 பறந்து துளிபருக - இசை பாடிவா னம்பாடி யாடவே கோடி கறந்தவன் பால் மொழியும் - தன் கண்ணுளான் சொன்னசொல் எண்ணி யினைவாள். 137 குணவான் சிலைதோன்றக் - கண்டு குடவான் பிறைமேல் நடவாது போக நிணவாள் விழிமானும் - தன் நெஞ்சகத் தான்சொன்ன அஞ்சொல் நினைப்பாள். 138 படுதுளிப் புன்மாலை - கண்டு படையெனக் கூட்டை அடைதரப் புட்கள் வடுவகிர் கண்ணாளும் - தன் மனத்தவன் சொல்லை நினைத்துளம் நைவாள். 139 ஆயர் குழலோசை - கேட்டே ஆடுமா டுவந்து கூடிடப் பாடி சேயரி யுண்கண்ணாள் - தன் சிந்தையான் சொல்லிய செந்தமி ழோர்வாள். 140. மாலை வரக்கன்றும் - அம் மாவெனத் தாயுமம் மாவெனக் கேட்டே நீல நெடுங்கண்ணாள் - தன் நெஞ்சுடை யான்சொன்ன செஞ்சொல் நினைப்பாள். 141 மல்லிகை மாமலரில் - வரி வண்டினம் யாழினிற் கண்டிசை பாட முல்லையம் பூங்கோதை - தன் முகத்தவன் சொல்லை அகத்து நினைப்பாள். 142 பிரிவு நினைவுறுத்த - பூத்த பீர்க்கம்பூப் போலுடல் போர்க்கப் பசலை வரிவளை கைநழுவ - அவன் வரவினை யெண்ணிப் பருவர லானாள். 143 வழிமேல் விழிவைத்துப் - பார்த்து வண்ணமும் எண்ணமும் கண்ணும் பசப்ப விழிமேல் வழிமுத்தை - எடுத்து வீசையில் தேர்வரும் ஓசையைக் கேட்டாள். 144 வான்கண்ட மாமயில்போல் - வான் மதிகண் டலர்கு முதம்போல் மலர்வாய்த் தேன்கண்ட வண்டினம்போல் - அத் திசையினை நோக்கி நசையொடு நின்றாள். 145 பைந்தமிழ் வல்லானும் - செலுத்துக பாக! மிகவிரை வாக எனவே வந்தெதிர் நின்றாளை - வாகை மாலைமேல் மாலை மலர்ந்திடக் கண்டான். 146 சென்றதும் வென்றதுவும் -வந்து சேர்ந்ததுங் கேட்டுச் செம் மாந்து மகிழ்ந்தாள். இன்றதும் நின்றதுவும் - ஆற்றி இறந்ததுங் கேட்டுத் திருந்த மகிழ்ந்தான். 147 ஊசி முனைபோல - அவர் உள்ளத் திறந்தின்ப வெள்ளம் பெருகப் பேசி மகிழ்ந்தார்கள் - கூடிப் பிரிந்தவர் கூடினால் பேசவு முண்டோ? 148 நெய்தல் - இரங்கல் சிந்து - வேறு முல்லை நிலத்திருந்து வாழ்ந்தாள் - அலை முழங்கு கடற்கரைக்கண் போந்தாள் சொல்லிப் பிரிபருவஞ் செல்ல - நம் துறைவி தனித்திரங்கி வாழ்வாள். 149 ஆறு வயல்வளமுண் டாக்கிக் - கடல் அடையுங் கழிமுகத்துப் பாக்கி வீறு பெறக்கடலி லூக்கி - மிக மேம்படு நெய்தல்நிலப் பாக்கம். 150 கடல்வளங் கொண்டினிது வாழும் - நம் காதலர் மேன்மையுறச் சூழும் உடல்வள முள்ளவக் காலே - பொருள் உடைமை பெருக்குவது மேலே. 151 புன்னை நறுமலரின் தாது - மீன் புலவினை மாற்றுகடற் சேர்ப்பன் சின்னஞ் சிறுவியவாழ் நாளில் - பெருஞ் செல்வந் திரட்டிடவே எண்ண; 152 இடையறா தின்பநுகர்ந் திருக்கும் - அவர் இளமையவ் வெண்ணமதைத் தடுக்க, தடையகற் றிப்பிரிய முயல - அவர் தகுதி யுணர்ச்சியதைத் தடுக்க; 153 இன்மை யதனிளிவை யெண்ணிப் - பிரிந் திரும்பொருள் தேடிவர எண்ண, அன்மை யிலுமுடைமை மேலாம் - எனும் அவ்வுணர்ச்சி தோன்றியதை யகற்ற; 154 பிரிவதால் அன்போடு பொருளும் - மிகப் பெருகு மெனப்பிரியத் துணிய, அரிது பிரிந்திருத்த லென்னும் - அவ் வாற்றாமை அத்துணிவை மாற்ற; 155 ஆன்ற அறிவுடைய அன்னார் - பொருளின் அருமை பெருமைகளை எண்ணி ஈன்ற குடிக்குயர்வு நல்கும் - பொருள் ஈட்டி வரமுடிவு செய்தார். 156 ‘பொருளிலார்க் கில்வுலக மில்லை’ எனும் பொய்யா மொழிப்பொருள் தெளிந்தார் தெருளுட னேபிரிந்து சென்று - மிகச் சிறந்த பொருளீட்டத் துணிந்தார். 157 அலையெறி சங்கீனு முத்தம் - புன்னை அரும்பின் மயங்குகடற் றுறைவன் விலையிலா மெல்லியலை விட்டுப் - பொருள் விருப்ப முடன்பிரிந்து சென்றான். 158 நூலிற் பொருட்பிரி விரண்டாய் - மேலோர் நுவன்றுளர் அன்னவற்றி லொன்று காலிற் பிரிந்துபொரு ளீட்டல் - ஒன்று கலத்திற் பிரிந்துபொருள் - கூட்டல். 159 அன்ன விரண்டினுநம் முன்னோர் - முயன் றரும்பொரு ளீட்டிநன்கு வாழ்ந்தார். சொன்ன விரண்டிலுமே சென்று - நம் துறைவன் பொருளீட்ட லானான். 160 குமரிக் கடற்றுறைவர் செல்வி - கொண்கன் குறித்த பருவமதை யெண்ணி தமருக் குவப்புவரப் பண்ணிக் - குடும்பந் தனையினி துநடத்தி வந்தாள். 161 பெரும்பொருள் வேண்டுமெனும் விருப்பும் - தலைவன் பிரிவில் தலைவியது பொறுப்பும் அரும்பொரு ளாமறிவி யவளும் - பிரிவை ஆற்றி யினிதிருக்க லானாள். 162 ஊக்க முடனுவரிக் கழிக்கண் - வெள் ளுப்பு விளைத்துவண மக்கள் ஆக்கு முணவுகளுக் கெல்லாம் - மேல் அதிகாரஞ் செய்திடவே செய்வார். 163 அச்ச மிலாதுதிமி லேறி - வீசும் அலைவழி யாக்கடலில் சென்று மெச்சு கடற்பரத மக்கள் - நல்ல மீன்வளங் கொண்டினிது வாழ்வார். 164 ஊரி வருமலையிற் சென்று தொழில் உஞற்றிவா ழும்பரத மக்கள் மாரி வறப்பினுமே தங்கள் - பெரு வலைவளந் தப்பாமல் வாழ்வார். 165 அரிபறி தூண்டில்வலை திமிலும் - கருவி யாகவந் நெய்தல்நிலத் துழவர் விரிதிரை வீசுகடல் வயலில் - மீன் விளைத்துண்டு வாழ்ந்தினி திருப்பர். 166 உப்பொடு மீனுணங்கல் விற்று - நெல் லொடுதயிர் பால்பழமும் பெற்று துப்பித ழப்பரத்தி மார்கள் - தம் தொல்குடி மேம்படவே செய்வார். 167 நெய்தல் மலர்கான லாங்கண் - தாழை நிழலி லிருந்துவெயி லதனில் பெய்தவம் மீனுணங்கல் காத்து - நெய்தற் பெண்டிர் குடும்பவளங் கொண்டார். 168 வண்ட லிழைத்துவிளை யாடி - கானல் வரியும் கடல்வரியும் பாடி கண்டல் விழுதூச லாடி - இளங் கன்னிப் பரத்தியருங் களிப்பர். 169 வேழம் வளைத்துவிடு மூங்கில் - என மீன்படு தூண்டிலினை வீசி ஆழ நெடியகடற் றுறையில் - பரத வச்சிறுவர் மீன்பிடித்துப் பயில்வர். 170 காரொடு கூதிருந்தோற் றோட - மாலைக் காலப் பனிவாகை சூட தேரொடு சென்றகடற் சேர்ப்பன் - சொலைச் செந்தமி ழச்சியெண்ணி நொந்தாள். 171 கார்வரு முன்னரன்று வந்து - அவளைக் காத்த தலைவனவன் இன்று தேர்வரு மாலைபனி வந்தும் - ஏனோ திரும்பி வராதுதுயர் செய்தான். 172 முத்துக் குளித்துவரி முன்றில் - கடலில் முளைமதி போற்குவிக்குஞ் சேர்ப்பன் பத்தெட்டுத் திங்களுக்கா சென்றான் - எனநகை பண்ணிக்கண் முத்துதிர்த்து நிற்பாள். 173 செம்ப வளக்கொடிக்கா லதர்கள் - இருள் சீக்குநல் லில்லுடைய சேர்ப்பன் வெம்ப வளத்தினுக்குச் சென்றான் - என வெறுநகை செய்திரங்கி நிற்பாள். 174 கனையிரு ளோட்டியிளங் கதிரோன் - படு காலை யெழுந்துகரை சென்று பனைவளர் அன்றில்களைப் பார்த்து - மேனி பசப்ப வருங்கலத்தைப் பார்ப்பாள். 175 கூம்பில்நீர்க் காக்கைபெடை யோடு - கரைந்து கொஞ்சிக் குலவுவதைக் கண்டு தேம்பொதி யுங்கிளவி சாம்பி - அவன் செயலை நினைந்துவளை செறிப்பாள். 176 கழிக்கட் கராமெருமைக் காலைக் - கவ்வக் கண்டு பிணாக்கதறக் கண்டு விழிக்கட் கடையுதிர்க்க முத்தம் - வளை வீழக்கை விட்டிரங்கி மீள்வாள். 177 பாய்சுறாப் பட்டவலை கண்டே - அப் பட்டினம் பட்டவொலி கேட்டு காய்சுறாக் கட்டிலைவிட் டோடி - அது கண்டு மனங்கலங்கி விண்டாள். 178 தனித்திரங்கல் தாழிசை அரத்த முடுத்தி இருள்போர்த்தி அவர்வாள் போலப் பிறைசூடி வருத்து முனக்கு நான்செய்த வகைதா னென்னே மருள்மாலை! 179 காலை யதற்கு நான்செய்த கைம்மா றெதுவோ கவல்செய்யும் மாலை யுனக்கு நான் செய்த வகைதா னென்னே உரையாயே! 180 என்றுணை போலப் பிரியாமல் இரவும் பகலும் உடனாக உன்றுணை யுளதோ? இரவறிய உண்மை யுரையாய் உறுமாலை! 181 கொலைவாள் போலக் குடவானில் கொடிதே செய்யுங் கொடுமதியே! வலைவாழ் எம்மோர் வருமுன்னம் மாலை யோடு மறைவாயே. 182 மண்ணே துயில வகைசெய்து வழிபறி கள்வர் தமைப்போலென் கண்ணே துயிலா திடர்செய்து கழியா நின்ற காரிருளே! 183 புணந்தார் தமக்கோர் நொடியாகிப் புலரா நின்றே தந்துணையைத் தணந்தார் தமக்கோர் ஊழியுமாய்த் தடுமா றுவதேன் தனியிருளே! 184 பூப்போ லுண்கண் பஞ்சடையப் பொன்போல் மேனி பசப்பூரத் தீப்போல் காயும் வெண்ணிலவே! தெரியேன் நானுன் புதுவரவே! 185 இத்தனை நாளும் ஒத்திருந்தாய் எங்கள் முகத்துக் கினியொவ்வாய், எத்தனை சூடு! தீமூழ்கி எழுந்தா யோசொல் வெண்ணிலவே! 186 வருவாய் போவாய் அவர்போல மணிபோல் மணலைக் கரைசெய்வாய் தருவாய் இல்லை என்னெழிலைத் தமிழ்தேர் வில்லாப் பேரலையே! 187 நிலையா நில்லாப் பொருள்போல நேரங் காலம் பாராமல் அலையா நின்றாய் என்னுயிரை அவர்போல் அமையாய் பேரலையே 188 காவா யில்லை என்னுயிரைக் கயவர் போலக் கருங்கடலில் நாவா யோடு வருகின்றாய் நடவா நின்றாய் பேரலையே! 189 உள்ளங் கொண்ட ஒருவன்போல் ஒருநா ளேனும் ஓய்வில்லாய், கள்ளங் கண்டுங் கரைகாணாக் கயமை யென்கோ கருங்கடலே! 190 செலுத்திச் சென்ற நாவாயைத் திருப்பித் தருதல் முறையன்றோ! வலித்துச் சென்ற வலைவாழ்நர் வன்கண் ணாளர் வளைகடலே! 191 பொன்போல் மலர்ந்து பொலிபுன்னை புலவை மாற்றுங் கடற்கானல்! என்போல் நீயும் துணையின்றி இருந்தால் தெரியும் இப்பொலிவே. 192 கண்போல் அலைசேர் கடற்கானற் கழிக்கண் மலருங் கருநெய்தல்! பெண்போல் பயனில் பிறப்பொன்றைப் பெரும்பே ருலகில் கண்டனையோ! 193 கலையோ டுமுன்கை வளைசோரக் கண்பஞ் சடையக் கலுழ்வேன்முன் அலைசேர் கானல் மலர்வண்டே! யாழ்போல் பாடல் அழகேயோ! 194 அவர்தேர் சென்ற தாரையினை அழித்தே எனக்குத் துயர்செய்யும் கவர்கால் கள்வ! நின்பெண்டும் கண்டால் சும்மா விடுமோகாண்? 195 பெருநா வாயார் கழிக்கனாற் பெண்ணை வருத்தும் அன்றில்களே! இருநா வாயார் வருமுன்னே ஏகீ ரோவிவ் விடம்விட்டே. 196 காக்கா வென்றே கடற்கானில் கரையா நின்றென் உயிருண்ணும் காக்கா வுனக்கிப் பேர்தகுமோ? கழறாய் அலையார் கடற்காக்கா! 197 பெண்ணைப் பிரிந்து பெயராமல் பிறழ்மீன் தேர்மணி வாய்ச்சிரலே! பெண்ணைப் பிரிந்து பெயர்ந்தாரின் பெருமை யதனைத் தெரிவாயோ? 198 வளையார் கானல் மணலெக்கர் வண்டல் அயரும் பெண்டுகளே! களையார் போலும் நுங்கணவர் கவல்வீர் எனநுங் கைவளையே! 199 எல்லா வுயிரும் உடனுறைய ஏனோ யானுந் தனியுறைய வல்லாய் போல வந்தென்னை வாட்டி வதைப்பாய் மலிர்வாடை! 200 சங்கத் தமிழின் சுவையுண்டென் றனையே வருத்தும் தென்காலே! இங்கெற் பிரிந்து நினையாமல் இருப்போ ரிடத்தே ஏகாயோ? 201 முன் - சிந்து அடம்படர் ஆழ்கடலின் எக்கர் - பொறி அலவன் பெடைதழுவுஞ் சேர்ப்பன், உடம்படு தேமலறி யானோ! - சொன்ன உரையை மறந்தானோ தோழி! 202 தாழை மடலைப்பெடை யென்றே - அன்னந் தழுவி மகிழ்கானற் சேர்ப்பன், கோழை யுடையவனோ அன்றி, - பெண் குலத்தை மதித்திலனோ தோழி! 203 குருகுமுட் டாழைமுகை தன்னைத் - தன் குஞ்சென்று கொண்டணைக்குஞ் சேர்ப்பன், வருகுவ னல்லானோ அன்றி, - உலக வாழ்வை மறந்தானோ தோழி! 204 கரையில் திரைதருவெண் முத்தம் - கலங் கரைவிளக் கம்போலத் தோன்ற, திரையில் கலஞ்செலுத்துஞ் சேர்ப்பன் - நம் செய்தி யறியான்கொல் தோழி! 205 கொள்ளைப் பெருந்திமிலர் கூடி - மீன் கோட்பறை ஆர்ப்பரிக்குஞ் சேர்ப்பன், பிள்ளைப் பருவமுடை யானோ? - நம் பிரிவை மறந்தானோ தோழி! 206 என்று தலைவிபல வாறு - சொலி இரங்க, அவ்வாறவரை எண்ணேல், இன்றுவந் தாலும்வரு கிற்பார் - எண்ணி இரங்கேலென் றாற்றுவித்தாள் தோழி. 207 உள்ள எழிலையெல்லாம் அள்ளி - அள்ளி உண்ட பசலைபறந் தோட, கள்ள மிலாதுவளை யுடைய - தலைவி கண்டு மகிழஅவன் வந்தான். 208 வந்த தலைவனையத் தலைவி - மலர் மாலை யணிந்துவர வேற்றுச் சிந்தை மகிழ்ந்தினிது கூடி - இன்பம் சிறக்க நனிவாழ்ந்து வந்தார். 209 வேறு சிந்து இங்ஙன மன்னவர் கூடியே - கலந் தின்புற்று வாழ்ந்தங் கிருக்கையில், அங்ஙன மேயவன் தூதுவன் - ஆக ஆற்றி யிருமெனப் போயினான். 210 நண்ணும் பகைபோர் விலகவே - நம் நாட்டில் அமைதி நிலவவே பெண்ணவ ளெண்ணியே அன்னவன் - தன் பிரிவினை யாற்றி யிருந்தனள். 211 மருதம் - ஊடல் காவிரி வையை பொருநையும் - பல காலென யாறுகள் ஏரிகள் பூவிரி பொய்கையும் நீர்வளம் - செயப் பூத்துப் பொலியும் மருதமே. 212 தெங்கென வாழைவளரவும் - வயற் செந்நெல் கரும்பி னுயரவும் சங்கென மஞ்சள் பயிறவும் - செழுந் தண்பழ னஞ்சூழ் மருதமே. 213 ஏரி னுழுதுசே றாக்கியே - எரு விட்டடித் துச்சம மாக்கியே நீரினைத் தண்ணெனத் தேக்கியே - குண்டு நெடுகுற நாற்றை நடுகுவர். 214 காத்துநீர் பாய்த்துக் கருத்துடன் - களை கட்டுர மிட்டுக் களமர்கள் பூத்து முதிர்ந்து பொலியவே - உளம் பொங்கி யுவந்துவி ளங்குவர். 215 பொதிபொதி யாக விளையவே - தமிழ் போலவே செல்வந் தழையவே பதிபெயர் கில்லாப் பழங்குடி - வாழ் பழவிறல் மூதூர் பரந்தன. 216 அறுத்துக் களத்தி லடித்துமே - தொழி லாள ருவக்கக் கொடுத்துமே வெறுத்துக் களித்துண் டுடுத்துமே - இன்பம் மிக்கிட வாழ்ந்தனர் ஒக்கவே. 217 போர்க்களம் பாடும் பொருநர்கள் - அப் பொருபடை வெற்றி தரவியல் ஏர்க்களம் பாடி யுழவர்கள் - செயும் ஏற்றத்தை இன்னெனப் போற்றினர். 218 அங்கவர் ஆண்களும் பெண்களும் - கூடி ஆடிடும் பள்ளுப் பறையொலி அங்குயர் சோலை யகம்புகி - ஆடுங்கள் ஆமாம் ஆமாமென ஊக்குமே. 219 மடையைக் கலக்கி எருமைகள் - கடை மாணவர் போலக் குடிக்குமே. பெடையைத் தழுவித்தா ராவிரை - வாழும் பெற்றிய தாமெனத் துற்றுமே. 220 சேற்று மடையில்நீர்க் கோழிகள் - குறி செய்யநீர் நாய்கவ்வத் தப்பியே நாற்று நடுவோர் நடுக்குற - அந் நாயொடு வாளையும் பாயுமே. 221 வஞ்சியும் காஞ்சி மருதமும் - நறு மாமலர் தூவ வயலிடை நெஞ்சுவந் தவ்வயல் மிஞ்சியே - கழு நீரொடு தாமரை பூக்குமே. 222 ஆலைக் கரும்பின் புகையினை - முகில் ஆமென மாமயி லாடவே, சோலைக் குயில்கண் துளிபட - மாந் தூவலைப் பாரெனக் கூவுமே. 223 வெயிலிற்சங் கீன்முத்தம் மின்னவே - கண்டு வெண்மதி மீனென எண்ணியே வயலிற் குமுத மலரவே - தா மரைகுவி யவண்ட லமரும். 224 முற்றிய நெல்லின் கதிரினை - வாத்து முட்டிப்பொன் சூட்டி விளங்கிடும். மற்றும் பழந்தமிழ் நூல்களில் - இம் மருத வளத்தினைக் காண்குவீர். 225 பகையிடைத் தூது நடந்தவன் - அப் பகைதணி வித்துப் பசந்தவள் தகையுற வந்திலன், தாழ்த்தனன் - செல்வத் தருக்கவன் உள்ளந் திருக்கவே. 226 மாலையும் வந்திலன், மாமயில் - பார்த்து மயங்கிருள் சென்று புலர்ந்திடும் காலையும் வந்திலன், தூங்கிடும் -வை கறையில் வரவுமக் கார்குழல்; 227 போதுகென் னாது புலந்தனள் - சினம் பொங்கவே ஊடிக்க லங்கினள் மாதுயர் கண்ணில் வழியவே - கைகால் மடக்கி முடக்கிப் படுத்தனள். 228 செய்வ தறியாது செம்மலும் - மனம் திக்குமுக் காடியே நிற்கவே, உய்வ தறியா துயங்கிடும் - என ஊடல் தணிந்துமே கூடினாள். 229 என்னினும் ஏனென்று கேட்டிலள் - அவனும் ஏதுவுமே காரணங் காட்டிலன். தன்னடத் தையவள் ஐயுறும் - எனத் தானினைத் தானவள் தானுமே. 230 கண்ணகி என்னும் ஒருபெயர் - கொண்ட கற்புடை நல்லா ரிருவரின் பெண்ணியல் ஏகப் பரத்தைமை - கொண்ட பேகன் அக் கோவலன் போலவே; 231 செல்வ மிகுந்த ஒருசிலர் - அச் செல்வச் சிறப்பின் செருக்கினால் செல்வியை விட்டுப் பரத்தையர் - தமைச் சேர்ந்து பிழைபட வாழ்ந்தனர். 232 செல்வ முடையரைச் சேர்ந்துமே - பொருள் தேடுவோர் சேரிப் பரத்தையர். கல்வியைப் போலக் கலவியின் - இன்பம் காணுவோர் காதற் பரத்தையர். 233 மனைவியைப் போல ஒருவனை - வைத்து வாழ்பவர் காமக் கிழத்தியார். அனையவ ரால்தமிழ்ப் பெண்குலம் - சிறப் பற்றுச் சிறுமையும் உற்றதே. 234 நல்ல மரத்தைக் கெடுத்திடும் - உயர் நற்றமிழ் வாழ்வின் நலங்கெடப் புல்லுரு விபோலொ ருசிலர் - அப் புறத்தொழுக் கத்தினைப் போற்றினர். 235 ஆதிரை யென்னும் அமிழ்தனாள் - ஏங்க அங்கவர் சேரியில் தங்கிய சாதுவன் என்னும் தகவிலான் - கதை தன்னை யறிகுதிர் அல்லிரோ? 236 ஆடவர் தங்களா திக்கத்தால் - கொண்ட அடங்காப் பிடாரித் தனமதே ஈடு மெடுப்புமின் றாகிய - தமிழ் இனத்தினுக் கேயிழி வாகுமே. 237 ஓங்கிய செல்வ முடைமையால் - நம் ஊரனும் அன்னவர் போலவே பாங்குடை யாள்துயர் பட்டிட - அப் பரத்தைய ரோடு பயின்றனன். 238 பரத்தையிற் பிரிந்து வந்தனன் - அப் பண்பிலா ளனைநம் பாவையும் உரத்தொடு நீக்கி நிறுத்தியே - அவன் ஊடும் படிமிக ஊடினாள். 239 ஆங்கவ னூடவே தோழியும் -‘நீ அன்பிலை கொடியை’ என்னவே, ஈங்குநான் இறந்தா லுஞ்சரி - அவ்வா றேசேலென் றாள்நம் இறைவியும். 240 அங்கது கண்ட தலைவனும் - அவள் அன்பின் திறத்தை யறிந்துமே எங்குலக் கொம்பே! பொறுக்கென - தோழி இன்புறத் தழுவிக் கொண்டனன். 241 மற்றொரு நாள்வரி வண்டினம் - தா மரைப்புறந் தேர்வயல் ஊரனும் பொற்றொடி முன்வந்து நிற்றிடக் - கண்டு புலந்துமே நீக்கி நிறுத்தினாள். 242 நீக்கி நிறுத்த தலைவியை - நம் நீளிலை வேலான் பணியவே தாக்கணங் கன்ன தகையினாள் - ஊடல் தணிந்தவன் தன்னைத் தழுவினாள். 243 வீட்டுக்கு வந்தோர் பரத்தையும் - அவன் விட்டுப் பிரிந்தனன் என்னவே, கேட்டுப் பிரிவுக் குவந்தனள் - அவள் கிழமையை யெண்ணிப் புலந்தனள். 244 எங்கையர் நோக விடுத்துமே - ஓடி இங்கெதற் காகநீர் வந்தனிர்? மங்கையர் ஓர்புறம் போக்கெனில் - ஆடவர் மாடுமேய்ப் பதோவென் றூடினாள். 245 ஊடி யிருந்த தலைவியால் - அவ் வூடல் தணித்திடும் வாயிலாய்ப் பாடியாழ்ப் பாணன் குறுகியே - காவற் பாங்கினன் ஆங்கலன் என்றனன். 246 உண்மைதான் பாணவுன் சொல்லவன் - இவ் வூரவர் கண்டதும் உண்மைதான்; அண்மையி லுமுவந் தாடினான் - காவும் ஆறும் குளமும் அவருடன். 247 என்று மிலாத வழக்கமாய் - ஓர் நாள் எய்தவே மாலைப் பொழுதிலே மன்றலம் பூங்குழல் மங்கையும் - கண்டு வறுநகை செய்துமே நின்றனள். 248 என்னருங் கண்ணேயுன் அன்பினை - யான் என்னென் றறைகுவல் என்னவே, அன்னவள் அன்பினும் என்னதோ! - என, ஆய்தொடி ஊடல் அறிந்தனன். 249 தலைவி இயல்பத் தனையையும் - எடுத்துச் சாற்றியே தோழி பரத்தைபால் இலையவற் றொன்றுமே என்பதை - அவன் இனிதுணர்ந் தன்புறச் செய்தனள். 250 காயில் நறுங்கனி காணல்போல் - நெற் கழனியில் புல்வளர் ஊரனும் வாயில் விடுத்துச் சலித்துமே - தானே வந்தனன் ஆற்றாமை வாயிலாய். 251 பொதியத்துச் சந்தன மார்பனைத் - தமிழ்ப் பூவையுங் கண்டு புலக்கவே, மதியத்துக் கண்மறு மாற்றிய - முக மானே! உலகத்து மங்கையர்; 252 காவுங் குளமும் அருவியும் - தம் காதல ரோடுசென் றாடியே ஆவலோ டின்பம் நுகரநீ - ஊடல் அழகோவென் றூடல் தணித்தனன். 253 சாந்தழிந் ததடந் தோளிலே - தொய்யில் தாரை விளங்கவத் தையலார் கூந்தலின் மாலை குலுங்கவே - இரட்டைக் கோலத்தோ டோர்நாட் குறுகினான். 254 உற்றவ னோடுபே சாமலே - தலைவி ஓர்புற மாச்சென் றிருந்தனள். மற்றவ னுமங்கி ருக்கவே, - தோழி மாற்றியே ஊடலைக் கூட்டினாள். 255 கூடிப் பிரிந்துமே சென்றவன் - மதி கூனிக் குடப்படு நாளிலே ஆடி யசைந்தங்கு வந்துமே - தமிழ் அமிழ்தக் கனியை அணுகினான். 256 அணுகணு கவவள் நீங்கவே - நிற்பிரிந் தாற்றேன் ஆற்றேனென் றுணுகவே, அணுகணு கப்பின்னு நீங்கவே - அச்சுற் றகலா துடனிருந் தானவன். 257 ஏனவள் என்போ லிருக்கணும் - தேடுவாள் ஏகுங்கள் என்ன, இலையென, ஏனெனைச் சும்மாதொந் தரவு - செய்கின் றீரென எழுந்து போயினாள். 258 உந்தைபோ லாயினால் என்னைநீ - காப்பா யோவென, ஊவென மைந்தனும், மைந்தனைக் காமக் கிழத்தியும் - கேட்டதை வந்தவன் பாற்சொல்லி நொந்தனள். 259 வாழிய வென்றுபூச் சூட்டியே - தன் மைந்தனோ டாடி யிருக்கையில், தோழியர் காணக்கை காட்டியே - மெல்லத் தொடவடி வந்து தலைவனும்; 260 அறியாமல் பின்வந்து நிற்கவே - பிள்ளை அத்தா! அத்தா! என, அத்தாவா! அறியாயோ அத்தா இருப்பிடம்? - என, அத்தா! எனப் பார்த்து வர்த்தனள். 261 கொட்டிலில் மாமுர லூரனும் - வெயில் கொல்லுமந் நண்பகற் போதிலே வெட்டிவே லைசெயுஞ் சுட்டிபோல் - அங்கு வேத்துப் பூத்துவந்து நின்றனன். 262 ஏனிவ் வலங்கோலம் என்றனள், - குதிரை ஏறிவந் தேனென, உண்மைதான்; நானும் அறிவேன் நீர் ஏறிய - குதிரை நல்ல குதிரையென் றூடினாள். 263 எங்கொடு மைபொறுப் பாயென, - அவ் வேந்தலுங் காலில் விழுந்தனன். எங்கையர் காணினென் எண்ணுவர்? - என ஏந்திழை ஊடல் தணிந்தனள். 264 தந்தை யணியொடு மைந்தனும் - வரத் தானணிந் தாரெவர்? போனையேல்! மைந்தனைக் கூட்டிப்போ கீரென - அவன் வந்தபோ துகூறி நொந்தனள். 265 செல்லின் தலைவி எழில்நலம் - செல்லும் செல்லாம லேயதைச் செய்துமே செல்லும் எனத்தோழி, அன்னவள் - பேச்சுத் திறமையை மெச்சி யிருந்தனன். 266 தங்கையா வேனென் றொருத்தியும் - வந்து தலைவியை நீவிக் கொடுத்தனள் அங்கதை நாணினள். ஐயன்மீர்! - ஈதா காதெனத் தோழியும் ஓதினாள், 267 நன்மக்கள் யாரும் பரத்தைமை - இன்றி நல்லொழுக் கத்துடன் வாழவே, புன்மக்கள் போல ஒழுகுதல் - நும் போன்றோர் பெருமைக்குச் சான்றதோ? 268 என்று தலைவனைத் தேற்றுவாள் - முன்னின் றிருவர்தம் ஊடலை மாற்றுவாள், ஒன்று மிவர்கட்குத் தோழிபோல் - வே றுற்ற துணைவரும் உண்டுமோ? 269 ஊடுதல் காமத்திற் கின்பமென் - றெடுத் தோதிய வள்ளுவர் ஊடற்கும் கூடுதல் இன்பமென் றோதல்போல் - ஊடியும் கூடியும் இன்புற்று வாழ்ந்தனர். 270 அன்னவள் தன்னுடன் பாட்டுடன் - மூன் றாண்டகஞ் சென்றயல் நாடுகள் அன்னவர் வாழ்க்கை முறைகளைக் - கண் டறிந்துமே வந்து சிறந்தனன். 271 அத்தக வோதற் பிரிவினும் - அஃ தல்லாத ஏனைப் பிரிவினும் ஒத்த தலைவன் தலைவியின் - நல்ல உடன்பாடு பெற்றே பிரிகுவன். 272 ஓதல் பகைபொருள் தூதெனும் - பிரி வுண்மையில் வாழ்க்கை உறுப்புகள்; ஆதலி னால் நம் தலைவியும் - பிரிந் தாற்றி யிருந்தில்லம் போற்றினாள். 273 மக்கள் தமருடன் கூடியே - இன்ப வாழ்க்கை நடத்தி முதுமையும் புக்கபின் வாழ்க்கைப் பொறுப்பினை - நீத்துப் பொதுநலஞ் செய்துமே வந்தனர். 274 ஒத்த ஒருவன் ஒருத்தியும் - ஒத்த உரிமையும் வாழ்வின் பெருமையும் முத்தமிழ் வாழ்க்கை முறைமையும் - மூத்தோர் மொழிவழி மும்மையும் வாழ்கவே. 275 கட்டளைக் கலித்துறை உலக முதலர சாய்த்தமிழ் நாட்டினை ஒப்புயர்வு விலக முடியுடை மூவரும் போற்றிய மேன்முறையும் இலகுசெங் கோலும் நனிநா கரிகமும் எந்தமிழும் அலகில்நல் வாழ்வும் பழந்தமி ழாட்சியென் றாய்குமினே. 276 4. அயலாட்சி 1. தமிழர் வீழ்ச்சி சிந்து செல்லுந் திசைதடு மாறியே - ஞாயிறு தெற்கு வடக்காகச் செல்லினும் அல்லும் பகலுமொன் றாயினும் - வீரமும் ஆண்மையும் மாறாத் தமிழர்கள். 1 உண்மைக ளின்மைக ளாயினும் - உலகம் ஓய்ந்துமே சுற்றாது போயினும் அண்மையுஞ் சேய்மையுந் தோயினும் - வீரமும் ஆண்மையும் மாறாத் தமிழர்கள். 2 மாரிபெய் யாது வறக்கினும் - கடல்கள் வற்றிப் புழுதி பறக்கினும் மேருவில் வெம்மை பிறக்கினும் - ஆண்மையும் வீரமு மாறாத் தமிழர்கள். 3 வானம் இடிந்துகீழ் வீழினும் - எல்லா மலைகளும் மண்ணுக்குள் ஆழினும் வேனிலில் தண்குளிர் மூழினும் - ஆண்மையும் வீரமு மாறாத் தமிழர்கள். 4 ஞாயிறு தண்ணென வாயினும் - திங்கள் நாளுங் கடுவெயில் காயினும் ஆயிர ஆண்டுமுன் போயினும் - வீரமும் ஆண்மையு மாறாத் தமிழர்கள். 5 மண்ணிலங் கன்னில மாயினும் - ஒளி மண்டிலந் தோன்றாது, போயினும் விண்ணொளி மீனில மேயினும் - ஆண்மையும் வீரமு மாறாத் தமிழர்கள். 6 பகலவன் தோன்றாது போயினும் - மூன்று பருவமு மேயில வாயினும் அகலிடத் தாரழல் மூயினும் - வீரமும் ஆண்மையு மாறாத் தமிழர்கள். 7 வெடிப்பட வான மதிரினும் - விண் மீனினம் பூப்போல் உதிரினும் அடிப்படை யாடி வெதிரினும் - வீரமும் ஆண்மையு மாறாத் தமிழர்கள். 8 வல்லிருள் சூழ்ந்திடர் செய்யினும் - நாளும் மண்மாரி கன்மாரி பெய்யினும் வில்லென மின்னொளி யெய்யினும் - ஆண்மையும் வீரமு மாறாத் தமிழர்கள், 9 உம்பரில் இம்பர் ஒழியினும் - வானம் ஓயாது செந்நீர் பொழியினும் ஐம்பெரும் பூதம் அழியினும் - வீரமும் ஆண்மையு மாறாத் தமிழர்கள். 10 பொன்னொளி யின்றி வெளிறினும் - பொன் போலிரும் போங்கி யொளிறினும் மின்னியிவ் வண்டங் குளிறினும் - ஆண்மையும் வீரமு மாறாத் தமிழர்கள். 11 பாம்புக்கு நஞ்சில வாயினும் - புலி பாய மறந்துமே போயினும் வேம்புக்குக் கைப்பில வாயினும் - ஆண்மையும் வீரமு மாறாத் தமிழர்கள். 12 எட்டி யெருக்க மினிக்கினும் - கரும் பெட்டிக் கசப்பாய்க் கசக்கினும் அட்ட பொருள்கள் முளைக்கினும் - வீரமும் ஆண்மையு மாறாத் தமிழர்கள். 13 புட்கள் பறக்க மறக்கினும் - புட்கள் போல்விலங் கெல்லாம் பறக்கினும் வெட்கமில் மக்கள் பிறக்கினும் - ஆண்மையும் வீரமு மாறாத் தமிழர்கள். 14 பூனையான் பாலை வெறுக்கினும் - பாய் புலிவன் கொலையைத் துறக்கினும் மீனினம் நீந்த மறக்கினும் - ஆண்மையும் வீரமு மாறாத் தமிழர்கள். 15 தூங்கு முயிரெல்லாம் பொன்றினும் - என்றும் தூங்கா நிலையுயிர்க் கொன்றினும் வேங்கையை மான்கொன்று தின்றினும் - ஆண்மையும் வீரமு மாறாத் தமிழர்கள். 16 மாக்கள் கயமை மறக்கினும் - மேன் மக்கள் பண் பாட்டைத் துறக்கினும் ஆக்கள்செந் நீராய்க் கறக்கினும் - வீரமும் ஆண்மையு மாறாத் தமிழர்கள். 17 காக்கையெ லாம்வெளுப் பாயினும் - கொக்கெலாம் கன்னங் கறேலெனப் போயினும் யாக்கை யெலாம்வாய்கள் மேயினும் - வீரமும் ஆண்மையு மாறாத் தமிழர்கள். 18 புத்தமிழ் தங்கடு வாயினும் - உயிர் போக்கிடு நஞ்சமிழ் தாயினும் வித்து முளையாது போயினும் - ஆண்மையும் வீரமு மாறாத் தமிழர்கள். 19 சந்தகில் நாறாது போயினும் - பச்சைத் தண்ணீர்செந் தீப்போலக் காயினும் வெந்தழல் தண்ணென வாயினும் - ஆண்மையும் வீரமு மாறாத் தமிழர்கள். 20 காண்பன யாவையும் மாயினும் - எங்கும் காற்றசை யாதுபோ யோயினும் ஆண்பெண் ணுணர்வற்றுப் போயினும் - வீரமும் ஆண்மையு மாறாத் தமிழர்கள். 21 வெம்பகை துண்ணெனச் சூழினும் - தலை மீதினிற் பேரிடி வீழினும் அம்பயில் மார்பினைப் போழினும் - வீரமும் ஆண்மையு மாறாத் தமிழர்கள். 22 உள்ள பொருளெலாம் போயினும் - இவ் வுலக மெலாம்பகை யாயினும் வெள்ளந் திடீரென மேயினும் - ஆண்மையும் வீரமு மாறாத் தமிழர்கள் 23 பகைப்புலத் துச்சிறை யுய்யினும் - மக்கட் பண்பின்றி யின்னல்கள் செய்யினும் மிகைப்பட மெய்யினைக் கொய்யினும் - ஆண்மையும் வீரமு மாறாத் தமிழர்கள். 24 உயிரொடு தோலை யுரிக்கினும் - உறுப் பொவ்வொன்றாய் நாளுந் தறிக்கினும் அயில்கொடு கண்ணைப் பறிக்கினும் - வீரமும் ஆண்மையு மாறாத் தமிழர்கள். 25 உடுக்குலம் போற்பகை மூயினும் - நாளும் உண்ண உணவின்றிப் போயினும் அடுக்கடுக் காய்த்துன்ப மேயினும் - வீரமும் ஆண்மையு மாறாத் தமிழர்கள். 26 பொறியும் புலனும் அடங்கினும் - உயிர் புக்கில்விட் டேகத் தொடங்கினும் அறிவு முணர்வு மொடுங்கினும் - வீரமும் ஆண்மையு மாறாத் தமிழர்கள். 27 அம்பென நோயுடல் தோயினும் - மேனி அணுவணு வாய்ச்சிதைந் தோயினும் வெம்பசி யாலுயிர் வீயினும் - ஆண்மையும் வீரமு மாறாத் தமிழர்கள். 28 ஒப்புடை யார்தம்மை விற்கினும் - இவ் வுலகெலா மொருங்கு தொக்கினும் கைப்படை போய்த்தனி நிற்கினும் - புறம் காட்டி யறியாத் தமிழர்கள். 29 ஊன்றிய வேலகத் தொன்றினும் - களத் தொல்லென வொருங்கே பொன்றினும் தோன்றிய நாள்முத லென்றினும் - என்றும் தோல்வி யறியாத் தமிழர்கள். 30 தாழிசை இத்தகைய மறப்பண்பும் அதனுக் கேற்ப இயன்றிடுபே ராண்மையுமாங் கொருங்கு வாய்ந்த அத்தகைய தமிழர்நிலை பிற்கா லத்தே அடைந்தநிலை தனையெம்மீர் அறையப் போமோ! 31 வீரத்தின் பிறப்பிடமே தமிழ்நா டாகும் வீரர்க்குள் வீரர்தமிழ் வேந்த ராவர். பாரித்த வுலகிலென்றுந் தமிழ ரோடு பகைகொண்டு வென்றவரோ எவரு மில்லை. 32 அஞ்சாமை மறமாண்மை எனுமுப் பண்பும் அப்படியே ஓருடம்பின் உறுப்புப் போல எஞ்சாமை யமைந்ததமி ழரசர் தம்மில் இதுகாறுந் தோல்விகண்டார் எவருமில்லை. 33 மேனாட்டுக் கீழ்நாட்டு வேந்த ரெல்லாம் மேவியநட் புடையர்களாய் இருந்தாரன்றித் தானாட்டித் தமிழருடன் பகைமை பூண்டு தானிருந்தா ரென்றவர லாறொன் றுண்டோ? 34 தந்நாட்டில் தமிழரசு சாய்ந்த பின்பு தானன்றோ மேனாட்டார் தருக்கி வந்தே இந்நாட்டை நூற்றைம்ப தாண்டுக் காலம் எளிதாகப் பிடித்தடக்கி யாள லானார்! 35 ஆணரியே றெனமூவ ராட்சிக் காலத் தயல்நாடர் போந்துதமி ழகத்தெந் நாளும் வாணிகஞ்செய் தனரன்றிக் கனவி லேனும் மண்ணாள வெண்ணியதா வரலா றுண்டோ? 36 சிந்துகங்கை வெளிவேந்தர் பலரும் இன்பத் தேமதுரத் தமிழகத்துச் செல்வம் வேட்டு வந்துவந்து தமிழர்கள்தோள் வலிக்காற் றாது வறிதுபுறங் காட்டிவந்த வழியே சென்றார். 37 மண்ணாசை யாற்றமிழ்ப்பொன் னாட்டை நோக்கி வந்தவரோ கணக்கில்லை, வந்தோ ரெல்லாம் புண்ணாசை யாற்போட்டி போட்டுக் கொண்டு புறங்காட்டி யோடுவதிற் புகழ்பெற் றாரே. 38 பாருலகை யொருகுடைக்கீழ் ஆள வெண்ணிப் படைவலியாற் செருக்கிவந்த மகத நாட்டு மோரியரு மவ்வோட்டப் பந்த யத்தில் முதற்பரிசு பெற்றெவர்க்கும் முந்தி னாரே. 39 அப்பன்மகன் அவன்மைந்தன் அவ்வா றாக அவ்வடமோ ரியருள்ளம் அமையா ராகி முப்புரிபோல் ஒற்றுமையில் மூவர் மேன்மேல் முறுக்கேறத் தொடர்ந்தேயம் முறைநின் றாரே. 40 பன்முறையும் புறங்காட்டி யோடி யோடிப் படைகுறைந்து வலிகுன்றி உளம்பாழ் பட்டு நன்முறையில் தமிழர்களை வெல்ல வெண்ணல் நடக்காத தென்றுள்ளம் நலிந்தா ரம்மா! 41 சினவேங்கைப் புலியிளஞ்சேட் சென்னி தன்னைத் திசைகடந்த திறல்மோகூர்ப் பழையன் தன்னைக் கனவில்நினைத் தாலுநடு நடுங்கி யன்னார் கலைத்தமிழர் திறமுள்ளிக் கலங்கி னாரே. 42 திதியன்கைத் திறத்தினையும் பிட்டங் கொற்றன் செறிதொடித்தோள் வலியினையும் எண்ணுந் தோறும் மதிகலங்கிச் செல்லூரும் வளவாட் டாறும் மனக்கண்முன் வந்துவந்து வருத்திற் றம்மா! 43 பொருப்பாழிப் படையுடைந்து வடக்கு நோக்கிப் புறங்காட்டி யோடியவப் பொழுது வென்ற செருப்பாழிப் படைகண்டு வெறுங்கை கொட்டிச் சிரித்தசிரிப் பினையெண்ணித் தியங்கி னாரே. 44 மாமகதப் பேரரசை யெதிர்த்து வென்ற மழகளிற்றுப் படைக்கலிங்கக் கார வேலன் தேமதுரத் தமிழ்மூவர் திறங்கண் டஞ்சிச் செயலற்றுக் கூறியதைச் செப்பற் பாற்றோ! 45 ‘முடியுடைமூ வேந்தர்கள்தோள் வலியி னாலும் முத்தமிழ்போல் முறுகியவொற் றுமையி னாலும் படியின்மிசை யெனதரசு விரிகி லாது பாழ்பட்டுப் போயினதே பதினோ ராண்டாய்!’ 46 என்றுசொலித் தமிழர்திறங் கார வேலன் இனைந்துமனம் புண்ணாகி எழுச்சி குன்றி இன்றுமதை நாமறிந்தின் புறவே கல்லில் எழுதிவைத்தான்; தமிழர்திறம் இயம்பற் பாற்றோ! 47 வழிவழியாய்த் தமிழகத்தே வந்து வந்து வறிதுபுறங் காட்டினதே வாகை யல்லால் கழியவொரு காலேனும் அன்னார் வெற்றி காணாது நொந்துள்ளங் கலங்கி னாரே. 48 முடியுடைமூ வேந்தர்களுந் தொடர்ந்து கி. மு. மூன்றுமுத லாக்கி, பி. மூன்று காறும் படையெடுத்தவ் வடவரைவென் றடக்கி யன்னார் பனிமலையில் புலிகயல்வில் பதித்து மீண்டார். 49 பனிமலையைக் கடக்க வெணிப் பருவம் மாறிப் பனியுறையச் சினந்துபுலி பொறித்து மீண்ட கனிதமிழ்க்கா விரிநாடன் கால வேலான் கரிகாலன் திறநினைந்து கலங்கி னாரே. 50 சினக்கொலைவேல் நெடுஞ்செழியன் திறனும் வீரச் சேரன்செங் குட்டுவனின் சினமும் அன்னார் மனக்கண்முனங் கனவினிலும் வந்து தோன்ற மதிகலங்கிக் கதிகலங்கி மாழ்கி னாரே. 51 திசைகடந்த புகழுடையான் சினங்கால் வில்லான் திறலிமய வரம்பனெடுஞ் சேர லாதன் வசைகடந்த செயலையின்னும் மறந்தா ரில்லை, மறப்பதற்கு விடவில்லை வழிவந் தோரே. 52 மறத்தமிழர் தமைவெல்ல மாட்டா ராகி வலியிழந்த வடவரசர் பலரும் பாவம்! புறத்துறையில் தமிழகத்திற் போத அஞ்சிப் பொறிகலங்கி மனமுடைந்து போனா ரம்மா! 53 தோள்வலியால் படைவலியால் துணைமை தன்னால் தொலையாத படையெடுப்பால் தொடர்ந்து போரால் வாள் வலியால் தமிழர்களை வெல்ல வெண்ணல் மடமையெனத் தெளிந்தனரவ் வடவ ரம்மா! 54 புறப்பகையால் வெலமுடியாப் பொருவி லாரைப் புறங்காணற் கமைந்தவரும் பொருளே யான சிறப்புடைய அகப்பகையின் திறத்தை யுன்னிச் செயற்படுத்த அவர்முடிவு செய்தா ரம்மா! 55 எட்பகவின் சிறிதேனும் உறுதி யாக எண்ணியதைக் கட்டாயம் முடிக்க வல்ல உட்பகையி னாற்றமிழர் வலியி னோடவ் வொற்றுமையுங் குலைக்கவவர் உறுதி பூண்டார். 56 படைக்கஞ்சா மறவர்களும் உலக வாழ்வைப் பற்றாத பொருளான சமய மென்னும் படைக்கஞ்சிப் புறங்கொடுப்பர்; எனவே யந்தப் படையெடுக்க முடிவுசெய்து பயனுங் கொண்டார். 57 அருளறமாம் பெரும்படையால் தமிழர்க் குள்ள ஆண்மையொடஞ் சாமைமறம் ஆற்றல் எல்லாம் ஒருவழியே எஞ்சாமல் ஒழித்துக் கட்டி உற்றிடவே வெற்றியவர் உறுதி கொண்டார். 58 போதிமுனி அசோகநிழற் புனிதன் வாய்மைப் பொருளுரையைத் தமிழருய்யப் போந்தே நீவிர் ஓதியருள் வீரனெவவ் வடியார் தம்மை உதவியுடன் தமிழகத்திற் கனுப்பி னாரே. 59 யானைவரும் பின்னேயம் மணியி னோசை அறிகுறியாய் வருமுன்னே யஃதே போலத் தானைவரும் அறிகுறியாய்த் தெற்கு நோக்கிச் சாக்கியரும் சமணர்களும் வந்தா ரம்மா! 60 இவர்க்குச்சின் னூறாண்டு கட்கு முன்னே எய்தியிருந் தமிழகத்தை இயன்ற வாறு தவர்க்குப்பண் பா கியவத் தகவி னோடு சாக்கமணக் குருக்கள் பலர் இருந்து வந்தார். 61 தமிழர் தலை நகரினுமத் தகைய பேரூர் தம்மினுமன் னாரினிது தங்கி யின்பத் தமிழ்பயின்று தமிழினிலே யினிது தங்கள் சமயநெறி தனையெடுத்துச் சாற்றி வந்தார். 62 மன்னவரும் பெருங்குடிமக் களுமன் போடு மதிப்பொடவர் தமைப்போற்றி வரலா னார்கள். அன்னவரின் அருளுரையை விரும்பிக் கேட்டே அவர்நெறியைச் சிலதமிழர் தழுவி வந்தார். 63 இந்நிலையிற் புதிதாக ஈங்கு வந்தோர் இனிது தமர் இருக்கின்ற இருக்கை யெய்தித் தந்நிலையை அவர்க்கெடுத்துச் சாற்ற வன்னார் தமிழர்நிலை தனையவர்க்குச் சாற்றி னரே. 64 அதற்கவர்கள் மகிழ்ந்தவரோ டளவ ளாவி அனையர்நெறிக் காற்றுதிற மதுபா ராட்டி இதற்கெனவே கொண்டுவந்த பொருளை யன்பாய் இனிதுவழங் கிடத்தமிழ ரிடத்தே வந்தார். 65 வந்தவரை முகமலர்ந்து வருக வென்று வரவேற்றுப் போற்றுவதில் மலிநீர் சூழும் இந்தவுல கத்தினிலே இணையொன் றில்லா இருந்தமிழர் பெருங்குணத்துக் கிலக்கா னார்கள். 66 புறச்சமய மெனத்தமிழர் பிற்கா லத்தே போரிட்டுப் புறங்கண்ட அருக புத்த மறப்படைஞர் தமையன்பாய் வருக வென்று வரவேற்றன் னாரடியை வணங்கி னாரே. 67 வரவேற்று வணங்கியசெந் தமிழர்க் குக்கைம் மாறாக அன்னார் தாங் கொண்டு வந்த கரவேற்ற புறச்சமய மெனுமின் கள்ளைக் கலங்கலமாய்த் தமிழர் செவிக் கலத்திற் பெய்தார். 68 இமயத்தில் தமிழ்க்குறியைப் பொறித்து மீண்ட எந்தமிழர் அவ்விமயத் தியன்று போந்த சமயமெனுங் கள்ளுண்ட களிப்பி னாலே தமிழைமறந் தவ்வடவர் சார்பா னாரே. 69 மூவரசர் முடிசாய்த்து முகமன் கூற முன்னோடும் பிள்ளைகளாய் முறைமை யோடு நாவரசர்க் கிணையாக நாடு காக்கும் நாளோலக் கத்திருப்பை நண்ணி னாரே. 70 புறக்கடைப்பச் சிலைமருந்துக் குதவா தென்னும் பொருளுரைபோல் தமிழர்கள்தம் சமயம் விட்டே புறக்கடையிற் போந்தபுதுச் சமயந் தன்னைப் பொன்போலப் போற்றியதன் பொருளா னாரே. 71 பிற்காலத் தமிழர்கள்மேல் நாட்டி னின்று பெருகிவந்த இருசமயப் பெருவெள் ளத்தே தற்கால நிலையடைய மூழ்கி னாற்போல் சங்கத்துத் தமிழர்களுந் தாமா னாரே. 72 தாயினுந்தம் முயிரினுமே லாகக் கொண்ட தமிழ்மொழியைத் தமிழகத்தைத் தமிழி னத்தைப் போயவுயிர்ப் பொருள்போல எண்ணி யந்தோ! புறக்கணித்துப் புதுநெறியிற் புகலா னாரே. 73 மன்னுலக மெனத்தமிழர் பெருமை யோடு மதித்தினிது வாழ்ந்துவந்த உலக வாழ்வைப் புன்னுனிமேல் நீர்போல நிலையா மாயப் பொருளென வெண் ணிப்பொழுதைப் போக்கி னாரே. 74 ‘பொருளில்லார்க் கிவ்வுலகம் இல்லை’ என்னும் பொன்மொழியை மறந்துலகப் பொறுப்பொன் றின்றிப் பொருளீட்டும் முயற்சியின்றி உலகி லெந்தப் பொருளுநிலை யாதென்றே புலக்கொண் டாரே. 75 இன்பத்துக் கிருப்பிடமாய் எழுச்சி பொங்க இனிதமைந்த எழிலொழுகும் இளமை தன்னைத் துன்பத்துக் கிருப்பிடமென் றிழிவா யெண்ணி துவறவெறுத் தின்பநலந் துறந்தா ரம்மா! 76 உயிர்வாழ்வுக் கிருப்பிடமாய் அரிதின் வாய்த்த உடம்புநிலை யில்லதென உறுதி பூண்டே உயிர்வாழும் உடம்பைவெறுத் துணங்கி யேங்கி உலகில்நடைப் பிணம்போல உழல லானார். 77 உலகம்பொய் உடம்புபொய் உயிர்வாழ் வும்பொய் உற்றமனை மக்கள்தமர் உறவும் பொய்பொய் இலகுபொருள் அனைத்தும்பொய் இன்ப மும்பொய் எனநம்பிப் பொய்யுலகில் இயங்கி னாரே. 78 இவ்வுலக வாழ்வந்தோ பெருந்துன் பத்துக் கிருப்பிடமாம் இன்பமிலை இதனை நீத்தே அவ்வுலக வாழ்வினைப்பெற் றின்பந் துய்க்க அருந்துறவே தகுமெனக்கொண் டலைய லானார். 79 இல்லறநல் லறமென்றே யிறுகப் பற்றி இன்பநுகர்ந் தினிதிருந்த தமிழர் அந்தோ! இல்லறம்பொல் லறமென்றோ இனிது நம்பி இளந்துறவாம் படுகுழியி லிறங்கி னாரே. 80 இல்லறமுற் றிப்பினதை இயல்பி னீத்தே இயன்றபொது நலஞ்செய்த தமிழ ரந்தோ! இல்லறவின் பத்தையறி யாக்கா லத்தே இளந்துறவு பூண்டின்பம் இழந்து வாழ்ந்தார். 81 அமையுமர சியற்றுணையா யமைந்து நாட்டை ஆண்டிடவப் பழம்பெருதொல் குடியுட் போந்த இமயவரம் பன்காதற் புதல்வ னான இளங்கோவின் துறவிதனுக் கெடுத்துக் காட்டாம். 82 காளையரே யன்றியிளங் கன்னி மாரும் கட்டழகைக் காதலையக் களவு கற்பைப் பாளையென வெண்ணியின்பப் பருவந் தன்னைப் பயனின்றிக் கழித்தின்னற் பட்டா ரம்மா! 83 கங்கைவெளிப் புறநெறியால் கமழுங் காதற் கனியாகி யினிதுவா ழப்பி றந்த மங்கைமணி மேகலையே தமிழர் வாழ்வு வறிதுகெட்டுப் போனதற்கோர் வழிக்கோ ளாவாள். 84 ஒத்தபரு வந்திருவ மெனுமப் பத்தும் ஒருங்கமைந்த இருவருளம் ஒத்துப் பேரின் பத்துடனே கூடிவாழ் வதுதீ தென்று பழந்தமிழி னகப்பொருளைப் பழித்திட் டாரே. 85 ஆண்பெண்ணா வுலகுயிர்க ளனைத்து மீங்கே அமைந்துள்ள இயற்கைக்கு மாறா யந்த ஆண்பெண்ணின் கூட்டுறவே யாகா தென்னும் அடாவழியை அறமெனக்கொண் டலைந்தா ரம்மா! 86 ஈருயிரு மோருயிரா யிணைந்தே காதல் இன்பநுகர்ந் தினிதிருந்த தமிழர் பாவம்! ஓருயிரும் இன்பமிலா தொடுங்கி வாழும் ஒருநெறியை பெருநெறியென் றுயங்கி னாரே. 87 மாரியினீர் செம்பாட்டிற் கலந்தாற் போல மனங்கலந்தாண் பெண்ணொன்று கூடி வாழும் பேரின்ப மதனைச்சிற் றின்ப மென்று பேசிவெறுத் துலகியலை யேசி னாரே. 88 அகப்பொருளுக் கிலக்கணஞ்செய் தாண்பெண் கூடி அமைதியொடு வாழ்ந்துவந்த தமிழர் அஃதோர் பகைப்பொருளென் றிளந்துறவுற் றுலக வாழ்வைப் பயனின்றிக் கழித்தந்தோ! பாழ்பட் டாரே. 89 வாழ்வினிலே யுயர்ந்ததமிழ்க் காதல் வாழ்வு வாழ்ந்துவந்த தமிழரந்த வாழ்வை நீத்துத் தாழ்வினிலே தமிழ்மரபைத் தாழச் செய்து தமிழினத்தின் பெருமையையே தகர்த்திட் டாரே. 90 இன்பத்தைத் துறப்பதுவே மக்கட் பேற்றின் இரும்பயனா மெனுமுரையை இயல்பாய் நம்பித் துன்பத்திற் சுழன்றின்பந் துறந்தே வீணிற் சோற்றுப்பை யாவுடம்பைச் சுமக்க லானார். 91 அன்புடனே யாண்பெண்ணுங் கூடி யின்புற் றரும்பெறற்கா தற்செல்வ மாமக் கட்பெற் றின்புடன்வாழ் வதுவேமக் கட்பி றப்பின் இரும்பயனா மென்பதனை யிழந்து வாழ்ந்தார். 92 ஆண்பெண்ணின் கூட்டுறவே உலக மென்றும் அழியாமைக் கேதுவென்ப தறியா ராகி ஆண்பெண்ணின் கூட்டமின்றித் தனித்து வாழ்வ தாகுமுயிர்க் கின்பமென அலைய லானார். 93 பிறந்ததுல கிடையுயிர்கள் ஆண்பெண் கூடிப் பேரின்பந் துய்த்துமகப் பெறவே யென்னும் சிறந்தவுல கியற்கையினை மறந்தே வாழ்வைச் சிதைத்துமரப் பாவையைப்போல் திரிய லானார். 94 ஓரறிவி னுயிராண்பெண் கூடிப் பெற்ற ஒண்பொருளை யுண்டாண்பெண் உறவை நீக்கும் பேரறிவின் திறத்தையவை பேசு மாயின் பெருமையுடன் பாராட்டிப் பேசுந் தானே! 95 ஆண்பெண்ணின் கூட்டுறவே கூடா தென்றால் ஆண்பெண்ணா உலகுயிரேன் பிறக்க வேண்டும்? ஆண்பெண்ணாப் பிறந்துதனித் தனியே வாழ்தற் கப்பிரிவின் றிப்பிறத்தல் அமையு மன்றே? 96 மக்களலா வுயிரனைத்தும் ஆண்பெண் கூடி மருவியினம் பெருக்கியின்புற் றினிது வாழ, மக்கள்மட்டும் ஏனாண்பெண் கூட்ட மின்றி வறிதுலகில் அலிகளைப்போல் வாழ வேண்டும்? 97 இல்லறம்வாழ் தமிழர்களும் அவ்வில் வாழ்வோ டியன்றதமிழ்ப் பழஞ்சமய மதனை விட்டு நல்லறமென் றயற்சமயந் தழீஇயந் நோன்பு நாணாளும் நோற்றுடலம் நலிய லானார். 98 அறச்சமய மெனப் பெருமை யடித்துக் கொள்ளும் ஆருகதம் பௌத்தமெனும் அமைவொன் றில்லாப் புறச்சமய மயக்குற்ற தமிழர் வாழ்வு பொலிவில்லாப் பொன்போலப் போயிற் றம்மா! 99 வெளிச்சமயக் கள்ளுண்ட தமிழர் அந்தோ! மெலிவுற்று வேங்கைபோல் வீரங் குன்றி வெளிச்சமிலாக் கருமதிபோல் பயன்பா டின்றி வெற்றுடம்பு சுமந்துலக மிசைவாழ்ந் தாரே. 100 வெறுப்புற்றுப் பகைவர்சினந் தெறியு மக்கூர் வேல்கண்டஞ் சாதமறத் தமிழர் அந்தோ! இறப்புக்கும் முதுமைக்கும் நோய்க்கும் அஞ்சி இறவாத நிலைக்கேங்கி இரங்கி னாரே! 101 எதிர்த்துவரும் பகைவர்க்கு மறந்தே யேனும் இன்னாசெய் யாமலவர்க் கினிதே செய்தல் மதித்தவரு ளறமாகும் என்னுஞ் சொல்லை மதித்துமறப் பண்பிழந்து வாழ லானார். 102 கொல்லவரும் பகைவரையுங் கொல்ல வெண்ணக் கூடாது கொல்லாமை யதனைப் போல நல்லவரு ளறமில்லை என்னுஞ் சொல்லை நம்பிநடைப் பிணமாகி நலிவுற் றாரே. 103 மறச்செயலும் படைப்பயில்வும் வாள்வே லேந்தி மாற்றாரை வென்றுகளங் கொள்ளும் வாழ்வும் அறச்செயலா காவென்னும் அயலார் சொல்லை அப்படியே கடைபிடித்துச் சப்பிட் டாரே. 104 வெட்டொன்று துண்டிரண்டாய்ப் பகைவர் வீழ வேலெறிந்து வாள்வீசி வில்வ ளைத்துக் கட்டொன்று படக்களங்கொள் மறவர் பெற்ற காளையரெல் லாம்பீலி கைக்கொண் டாரே. 105 வேலேந்தும் மறவரெலாஞ் சீல ரானார் வினையேந்தும் அமைச்சரெலாம் முனிவ ரானார் கோலேந்தும் அரசரெலாங் குருக்க ளானார் கொடியேந்துங் குடிகளெலாம் அடிக ளானார். 106 குடைவீரர் புறங்காட்டி யோடக் கண்டு கொல்லென்று சிரித்துநின்று கொற்றங் காணும் படைவீரர் குடியிருக்கும் பாடி யெல்லாம் பள்ளிகளும் பாழிகளும் ஆயிற் றம்மா! 107 வேலெறிந்து வாள்வீசி அம்பு தொட்டு வீரர்படை பயில்சிலம்பக் கூட மெல்லாம் மேலெறிந்து கொல்லாத அருள றத்தை மிகப்பேசும் மேடைகளாய் விளங்கிற் றம்மா! 108 நாவேந்த ரோடமைச்சர் பெரியோர் கூடி நல்லரசி னியலாய்ந்து முடிவு காணும் கோவேந்தர் அவையெல்லாஞ் சமயப் போர்செய் கொடும்பட்டி மன்றங்க ளாயிற் றம்மா! 109 முத்தமிழை யினிதாய்ந்து முதியோர் கூடி முறையொடுதாய் மொழிவளர்த்த மதுரைச் சங்கம் புத்தமண மோடுபிற சமயப் போர்செய் பொதுமேடை யாய்மாறிப் போயிற் றம்மா! 110 இயலைவளர்த் திடவமைந்த இசையுங் கூத்தும் இன்பத்தைத் தூண்டுமிழி பொருளாக் கொண்டே அயலவர்போல் தமிழர்களும் அவ்வி ரண்டும் அழிந்தொழியப் பயிலாது விட்டா ரம்மா! 111 பாலைநிகர் ஏழிசையாழ்ப் பாணர் கூத்தர் பயில்பொருநர் விறலியர்தம் பாடி ழந்தே வேலையிலாத் திண்டாட்டத் திற்கா ளாகி வெறுமையெனும் பெருநோயால் மெலிவுற் றாரே. 112 அவ்விருசெந் தமிழ்நூலும் மூத்த தாரத் தருமைமகப் போன்றுபுறக் கணிக்கப் பட்டே இவ்வுலகில் பெயர்நிறுத்திச் செல்லுஞ் செல்வர் எனப்பெயரை நிறுத்துநிலை எய்திற் றம்மா. 113 தமிழ்போல இயல்பாகத் தனிப்பா டின்றித் தானமைந்து வாழ்வியலுந் தானே யான தமிழர்பழஞ் சமயமயற் சமயச் சார்பால் தன்னுருவந் திரிந்ததனின் சார்பா யிற்றே. 114 வாழ்வியலின் ஒருகூறா அமைந்த தான வண்டமிழர் பழஞ்சமயம் வடவர் சார்பால் வாழ்வியலின் புறம்பாகி வறுமை யெய்தி வலிகுன்றி மாற்றாந்தாய் மகவா யிற்றே. 115 காதலமைந் திடவியற்கைக் கடவுள் வாழ்த்திக் களவுமுற்றிக் கற்பியலிற் கலந்து வாழ்ந்தோர் காதல்கல வாதபுறச் சமயந் தன்னைக் கடைப்பிடித்து வீண்காலங் கழித்தா ரம்மா! 116 பாருலகில் தமிழர்கள்தோன் றியநாள் தொட்டுப் பயின்றுவந்த முதியபழந் தமிழை அந்தோ! ஆரியத்தி லிருந்துபிறந் ததுவா மென்ற அவர்சொலைச்செந் தமிழர்களும் ஆமென் றாரே. 117 மூவருயிர் போல்வளர்த்த தமிழை மக்கள் மொழியென்றும், ஆரியத்தை முதன்மை யான தேவமொழி யென்றுமுறை திரியக் கொண்டு செந்தமிழி னுயர்ந்ததெனச் சிறப்பித் தாரே. 118 ஆரியமில் லாததமிழ் அறிவு மட்டும் அறிவாகா தெனமனக்கொண் டவ்வா றேயவ் வாரியத்தைத் தமிழ்த்தாயோ டரசி ருக்க அரியணையி லேற்றியதற் காளா னாரே. 119 நெல்லோடு பதர்கலக்குங் கயவர் போல நினைத்தமன மினித்திடுசெந் தமிழின் தூய சொல்லோடு வடசொல்லைக் கலந்தே யின்பச் சுவைத்தமிழின் தூய்மையினைத் தொலைத்தா ரம்மா! 120 கலக்கியநீ ரதையுண்ணுங் காராப் போலக் கனித்தமிழர் இனித்ததமிழ்க் கனிக ளான இலக்கியத்தில் இலக்கணத்தில் இனிய வாழ்வில் இயன்றமட்டும் ஆரியத்தைக் கலந்தா ரம்மா! 121 கமழ்மதுரத் தேனொழுகக் கனிந்த தான கனியிருப்பக் காய்கவருங் கள்வர் போல அமிழ்துறழுந் தமிழிருப்ப அதற்கு மாறும் ஆரியத்துப் பொருள் தேடி யலைந்தா ரம்மா! 122 ‘ஒன்றேனுந் தனித்தமிழிங் குண்டோ’ வென்றே ஒருபுலவன் துணிந்துரைத்த உரையே போன்று நன்றாய தமிழ்முழுவதும் ஆரி யத்தை நாணாமற் கலந்துநலங் கோணி னாரே. 123 தமிழ்நாட்டு முகமதியர் அரபி தன்னைத் தாய்மொழிபோல் மிகவருந்திக் கற்றல் போலத் தமிழ்நாட்டுச் சாக்கமணத் தமிழ ராங்கே தாய்மொழிபோல் வடமொழியைத் தான்கற் றாரே. 124 தமிழ்நாட்டுக் கிறித்துவர்கள் தமிழை விட்டுத் தம்மையயல் மொழிப்பெயரிட் டழைத்தல் போலத் தமிழ்நாட்டுப் புத்தமணத் தமிழ ராங்கே தமிழைவிட்டு வடமொழிப்பேர் தான்பூண் டாரே. 125 தமிழ் நாட்டுப் பொதுவுடைமைத் தமிழர் இன்று தமதகமா வேறெதையோ தான்கொள் வார்போல் தமிழ்நாட்டுச் சாக்கமணத் தமிழ ராங்கே தமதகமா எதையெதையோ தான்கொண் டாரே. 126 புலிபோலப் பாய்ந்துபகை பொருது வென்று புகழோடு வாழ்ந்துவந்த தமிழர் பாவம்! அலிபோல வீரமிகல் ஆண்மை குன்றி அங்காடிப் பாவைகள்போ லாயி னாரே. 127 முத்தமிழின் மூத்தமுதுக் குடிக ளான முடியுடைமூ வேந்தர்களும் முறைமை கெட்டுப் புத்தமணத் தமிழ்ச்சமய வீரர் செய்யும் போர்த்தானைத் தலைவர்களாய்ப் பொலிந்தா ரம்மா! 128 ஒவ்வொருவ ரொருசமயம் உடைய ராகி ஒற்றுமையோ டருந்திறலும் ஒருங்கி ழந்தே அவ்வியராய் மூவர்களும் பகைவ ராகி அயலாருக் கெளியவர்க ளானா ரம்மா! 129 இன்றுதமிழ் மக்கள்பல கட்சிச் சார்புற் றெதிரிகள்போல் வேறுபட்டீங் கிருத்தல் போல அன்றுதமிழ் மக்கள்பல சமயச் சார்புற் றவ்வாறே யிருந்துபகைக் களிய ரானார். 130 அருங்கலைநா கரிகமொழி சமயம் பண்பா டனையதனித் தமிழ்மர பாங் கனைத்தும் அந்தோ! ஒருங்குகலப் படமாக்கித் தமிழர் என்னும் உருத்தெரியா துயிர்மெய்போல் உலவி னாரே. 131 தம்மரபு தம்மொழிதம் சமயம் என்னும் தனித்தமிழின் சார்பற்றுத் தகுதி குன்றிச் செம்மரபுத் தமிழர்வட மரபுக் காளாய்ச் சீர்குலைந்து தமிழியல்பு திரிந்து வாழ்ந்தார். 132 வீரமற்றுத் திறமையற்று மேன்மை யற்று மிகுதியற்றுத் தகுதியற்று வெறுமை யுற்றுச் சாரமற்றுத் தமிழினந்தன் தன்மை யற்றுத் தலைகெட்டுத் தடுமாறித் தான்போ யிற்றே. 133 மொழிப்பற்றும் இனப்பற்றும் நாட்டுப் பற்றும் முப்புரியாக் கொண்டதமி ழர்களம் மூன்றும் கழிப்புற்றுப் பொறுப்பற்றுக் கடமை யற்றுக் கழிகடைக ளாய்க்காலங் கழிக்க லானார். 134 சிந்து இன்ன படிதமிழர் - தங்கள் இயல்பு திரிந்தனரே, அன்ன நிலையதனை - வட வரசர் அறிந்தனரே. 135 தக்க பொழுதெனவே - தங்கள் தாழ்வத னைநினைத்தார் மிக்க வகமகிழ்ந்து - வெற்றி வெற்றி யெனக்குதித்தார். 136 தங்கள்முன் னேற்பாட்டை - மிகவும் சரிசரி யென்றுவந்தார் வெங்கனல் நீர்போலத் - தண்மை மேவிய தைவியந்தார். 137 அரிகள் தம்மவரால் - தம் ஆண்மை தனையிழந்து நரிக ளாயினதை - நினைந்து நன்கு மனங்குளிர்ந்தார். 138 புலிகள் தம்மவரால் - தம் போர்க்குணத் தையிழந்தே எலிக ளாயினதை - நினைந் தேக்கழுத் தமடைந்தார். 139 யானைகள் தம்மவரால் - தம் ஆற்ற லினையிழந்து பூனைக ளாயினதை - நினைந்து புந்தி மிகமகிழ்ந்தார். 140 உட்பகை யாற்றமிழர் - வீரம் ஒடுங்கி யடங்கினதை கட்புலன் இன்புறவே - கண்டு களித்திட வேதுடித்தார். 141 அரசை அசோகதனை - மன மாரப் புகழ்ந்தார்கள் வரிசை யொடுதுணிவாய்ப் - புது வஞ்சி புனைந்தார்கள். 142 அடிக ளுருவினிலே - படை யாளர்பல் லாயிரமாய்க் கொடிக ளசைந்திடவே - முன் கூட்டி யனுப்பினரே. 143 வேண்டும் படைத்துணையை - மிக்க விரைவினி லேகூட்டித் தூண்டுமண் ணாசையினால் - கண் துஞ்சுத லுமறந்தார். 144 உள்ள படையனைத்தும் - அடைவே ஒருங்கு திரட்டினரே வெள்ள மெனப்படையும் - தமிழ் வேட்டு நடந்ததுவே. 145 இமயமே செல்லுகின்றோம் - பொதியில் ஏந்திழை யைமணக்க நமது கொடிபறக்கக் - கண்டு நாண மகற்றிடுவாய். 146 கங்கையாம் செல்லுகின்றோம் - தமிழ்க் காவிரி யைமணக்க இங்கினி யோடிவரோம் - இனிநீ எம்மை மறந்திடுவாய். 147 யமுனையாம் செல்லுகின்றோம் - வையை அணங்கை மணந்திடவே எமையினி நீமறப்பாய் - நாங்கள் இங்கினி யோடிவரோம். 148 சிந்துயாம் செல்லுகின்றோம் - பொருநைச் செல்வி தனைமணக்க சிந்தை கலங்காதே - இனித் திரும்பியிங் கோடிவரோம். 149 கூடியாம் செல்லுகின்றோம் - தமிழ்க் குமரி தனைமணக்க பேடிகை யொள்வாளும் - இனிப் பெருமை யடைந்திடுமே. 150 கங்கைப் பெருவெளியே! - உன் களங்க மகற்றிடுவோம் சங்கத் தமிழ்நாட்டை - வென்று தன்னடி யிற்படுப்போம். 151 சிந்துப் பெருவெளியே! உன் சிறுமையைப் போக்கிடுவோம் சந்தத் தமிழ்நாட்டை - வென்று தளிரடி யிற்படுப்போம். 152 ஆரியப் பொன்னாடே! - எங்கள் அருமைத் தாய்நாடே! வீரத் தமிழகத்தை - இதோ வென்றிடச் செல்லுகின்றோம். 153 இனியிங் கோடிவரோம் - உன்றன் இழிவைப் போக்கிடுவோம் தனியிங் கேயிருந்து - தமிழர் தாழ்வு கண்டுவப்பாய். 154 முதுகில் வேலெறியாத் - தமிழர் முற்றிய பண்பாட்டால் இதுவ ரையிருந்தோம் - திரும்பி இனியிங் கோடிவரோம். 155 ஈரைம்ப தாண்டுக்குமேல் - நாங்கள் எய்திய தோல்விகளை ஆரியப் பொன்னாடே - பொறுத் தருள வேண்டுகிறோம். 156 பெற்ற திருநகரே - இனிப் பேடிபோ லோடிவரோம் வெற்றி யடைந்திடுவோம் - தமிழர் வீர மிழந்துவிட்டார். 157 புத்தன் அருளாலும் - அசோகமர் புண்ணியன் பேராலும் இத்தனை யாண்டுகளாய் - அடைந்த இழிவைப் போக்கிடுவோம். 158 விந்தமே நீவாழ்க - இங்கு மீண்டினி நாங்கள் வரோம் செந்தமிழ்ச் செல்வமேபோல் - இங்கொரு செல்வமும் உண்டுகொலோ! 159 ஆந்திரப் பேரரசே! ஆட்சி யாளரால் வீழ்ந்துவிட்டாய் தீந்தமி ழைவீழ்த்த - உன் செய்தி துணையாமே. 160 ஒண்டமி ழர்க்குடைந்தே - அடிக்கடி ஓடியே வந்தவழி கண்டினி யுன்மேலே - வையோம் காலென வேநடந்தார். 161 கோதை யைத்துறந்து - காரிக் கொடியி னைமறந்து காதம் பல்கடந்து - அன்னார் கடுகி யேநடந்தார். 162 வெட்டுக் கிளிகள்போல் - பரவி விருப்பம் பிடித்துந்தப் பட்டுப் பூச்சிகள்போல் - விரைந்து பறந்து சென்றார்கள். 163 காடும் மலைகளும் - ஆறும் கரையும் துறைகளும் நாடு நகர்களும் - பின் நடக்க முன்னடந்தார். 164 ஓட்ட நடையுமாய் - முன்னெல்லாம் ஓடிய தாலறியாக் காட்டு மழகெல்லாம் - இனிது கண்டு மேநடந்தார். 165 புலியைக் கண்டஞ்சி - ஓடிய பூனை குட்டியெலாம் புலியைப் போற்செருக்கித் - தம்மைப் புகழ்ந்து சென்றனவே. 166 அரியைக் கண்டஞ்சி - ஓடிய ஆடு குட்டியெலாம் அரியைப் போற்செருக்கி - விரைந் தார்த்துச் சென்றனவே. 167 களிற்றைக் கண்டஞ்சி - ஓடிய கன்று காலியெல்லாம் களிற்றைப் போல்நிமிர்ந்து - வெறி கமழச் சென்றனவே. 168 பருந்தைக் கண்டஞ்சி - ஓடிய பாடு பேடையெல்லாம் பருந்தைப் போலுயர்ந்து - விரைந்து பறந்து சென்றனவே. 169 அங்கங் கேயுறையும் - தம்மவர் அன்பாய் வரவேற்கத் தங்கு தடையின்றி - உளந் தருக்கி யேநடந்தார். 170 இழந்த தம்பொருளைத் - தேடி எடுக்கச் செல்பவர்போல் விழைந்து முன்னோக்கி - மிக விரைந்து சென்றார்கள். 171 மாம னாரூர்க்குப் - போகும் மருமக் கள்போல ஏமு றவடையும் - பரிசை எண்ணி யேநடந்தார் 172 அனையர் பல்பகல் - விரைந் தங்ங னம்நடந்து தனைநி கர்த்திலகும் - செல்வத் தமிழ கமடைந்தார். 173 மேருவெ னவுனையே - வட வேங்கட மேதொழுவோம் மேருவைப் போலெமக்கு - வடக்கில் விளங்குவை நீயினியே. 174 நீல மலைத்தொடரே - இனி நீயெங்கள் சொந்தமலை காலையு மாலையுநீ - கண்கொளாக் காட்சி யளித்திடுவாய். 175 தேமலர் போற்கமழும் - தமிழ்த் தென்றலே நீவாழ்க நாமினி மெய்யுறவே - கூடி நலமுடன் வாழ்ந்திடுவோம். 176 பைந்தமிழ்ப் பண்பாடி - மகிழ்விக்கும் பைங்கிளிப் பூவைகளே! இந்த முறைநாங்கள் - உங்கள் ஏச்சினுக் காளாகோம். 177 இங்ஙன மண்ணசையால் - அவர்கள் எண்ணிய வாறுசொலித் தங்கள் நாட் டுள் நுழைதல் - போலத் தமிழகத் துள்நுழைந்தார். 178 சொல்லி யபடியே - தமிழர் தொன்னி லைதிரிந்து புல்லி யநிலையைக் - கண்டு பொலிவு டனடந்தார். 179 எண்ணி யபடியே - தமிழர் இருத்த லைக்கண்டு பண்ணி யதமரின் - திறத்தைப் பலப டப்புகழ்ந்தார். 180 மட்ப கையினிலும் - சிறந்த வலிமை மிக்குடைய உட்ப கைத்திறனைப் - புகழ்ந் துவகை மீக்கூர்ந்தார். 181 சாக்க மணவர்களின் - திறந் தனைமி கப்புகழ்ந்தே ஊக்க மிக்கவர்கள் - மன உறுதி யுற்றார்கள். 182 புத்த மணர்களின் - திறத்தைப் புகழ்ந்து பாராட்டி முத்த மிழகத்தே - அவர்கள் முனைப்பு டன்புகுந்தார். 183 வடுக வழியிலே - தமர் வலிமை யுற்றதனால் குடகு வழியிலே - துளுவங் கொங்கி னைக்கடந்தார். 184 எலியைப் போன்றுமுனம் - ஓட்டம் எடுத்த லுத்தவர்கள் புலியைப் போற்பாய்ந்தே - இன்று பொருதி டலானார். 185 நரியைப் போன்றுமுனம் - ஓடி நலிவ டைந்தவர்கள் அரியைப் போற்பாய்ந்தே - இன் றடர்த்தி டலானார். 186 ஆண்மை யுந்திறலும் - ஒருங்கே அருகி யதமிழர் வாண்மை யற்றவராய்ப் - பகையை வளர விட்டார்கள். 187 வீர முந்திறலும் - இழந்து வெறுவி யதமிழர் ஆரி யப்படையைத் - தமி ழகத்து விட்டார்கள். 188 பகைந லிவாலும் - ஐந்தாம் படைவ லியாலும் இகல றுதமிழர் - தமை எளிதில் வென்றார்கள். 189 பன்மு றையெளிதில் - ஆரியப் படைக டந்தவர்கள் அன்மு றைத்தொடர்பால் - எதிர்க்கும் ஆற்ற லையிழந்தார். 190 புலியைப் போற்பாய்ந்து -வாகை புனையும் மூவர்களும் எலியைப் போலோய்ந்து - பகைவர்க் கெளிய ரானார்கள். 191 அரியைப் போற்பாய்ந்து - பகை அறுக்கும் மூவர்களும் நரியைப் போலோய்ந்து - தோல்வி நண்ணி டலானார் 192 தோன்றி யமுதலாய் - என்றும் தோல்வி கண்டறியா மூன்று பேரரசும் - அந்தோ! முதுகு காட்டினவே. 193 வீர மாண்மையெலாம் - பிறர்க்கு விலைக்கு விற்றதனால் ஆரி யப்படைக்குத் - தோற்ற தருந்த மிழினமே. 194 தாழிசை முன்னர்நூ றாண்டு காலம் முதுகினைக் காட்டிக் காட்டி இன்னலுற் றுழந்தா ரின்றோ எளிதினில் வெற்றி பெற்றார். 195 களைத்துயிர் கையிற் கொண்டு கலக்கமுற் றோடி யோடி இளைத்திட ருற்றா ரின்றோ எளிதினில் வெற்றி பெற்றார். 196 தோற்றுயிர் கையிற் கொண்டு துடிதுடித் தோடி னோர்கள் ஏற்றெதி ரிலதா லின்றோ எளிதினில் வெற்றி பெற்றார். 197 தமிழர்வேற் கிரையா காது தப்பியே பிழைத்தோ மென்றன் றிமயமோ டியவ ரின்றோ எளிதினில் வெற்றி பெற்றார். 198 வன்றமிழ்ப் படைக்காற் றாது வடக்கு நோக் கோடி நொந்தோர் இன்றுசெந் தமிழர் தம்மை எளிதினில் வெற்றி பெற்றார். 199 பழந்தமிழ்ப் படைக்காற் றாது படையெறிந் தோடி நொந்தோர் இழந்ததை யடைந்தாற் போலின் றெளிதினில் வெற்றி பெற்றார். 200 பைந்தமிழ் மகளிர் வள்ளை பாடிட ஓடி யோடி நொந்தவ ரின்றோ அன்னார் நொந்திட வென்றா ரம்மா! 201 செந்தமிழ்ச் சிறார்கை கொட்டிச் சிரித்திட ஓடி யோடி நைந்தவர் இன்றோ அன்னார் நைந்திட வென்றா ரம்மா! 202 மனைவியர் தம்மைக் காண மாழ்கியே புறத்தே நின்றார். நனைமலர்க் குழலார்க் காண நயந்துள மகிழ்ந்தா ரம்மா! 203 வெற்றியுந் தோல்வி யும்போர் வீரருக் கியற்கை, ஆனால், நற்றமிழ் வீரர் தோல்வி நாடறி கிலாவொன் றாமே. 204 படைக்கலந் தொடுநாட் டொட்டுப் பாரினில் தோல்வி காணாத் தொடைக்கலத் தமிழர் அந்தோ! தோல்விகண் டொல்கி னாரே. 205 மாற்றலர் புறத்தைக் கண்டு மகிழ்ந்தசெந் தமிழர் அந்தோ! மாற்றலர் மகிழ்ந்து காண வலப்புறங் காட்டி னாரே. 206 வேறு பாவேந்த ரிசைபாடப் பகைவர் மெச்சப் பகலவன்போல் தமிழகத்தை ஆண்டு வந்த மூவேந்தர் முடியிழந்து முதன்மை கெட்டோர் மூலையிலே குறுகுறுத்து முடங்கி வாழ்ந்தார். 207 தகையொடுவெம் பகையறுத்துத் தாழ்வில் லாது தமிழகத்தைக் காத்துவந்த வேளி ரெல்லாம் பகைவரிட்ட கட்டளைக்குப் பணிந்து பெட்டிப் பாம்பினைப்போல் மனம்புழுங்கிப் பரிந்து வாழ்ந்தார். 208 நோக்கியகண் வேல்நுனிகண் டிமைக்கி லாத நுனித்தமறத் தனித்தறுகண் மறவ ரெல்லாம் சாக்கமண வடித்தொண்ட ராக்கப் பட்டுத் தன்மான மிழந்துடலந் தாங்கி வாழ்ந்தார். 209 வேற்படையும் வாட்படையும் பறிக்கப் பட்டு வெறுங்கைய ராய்த்தமிழ வீர ரெல்லாம் நூற்பவர்தம் விரல்வெட்டப் பட்டாற் போல நொய்தினுயி ருடலோம்பி நொந்தா ரம்மா! 210 வாட்படையி னால்விழுப்புண் படாநா ளெல்லாம் வழுக்கினுள்வைத் துடல்வளர்த்த மறவ ரெல்லாம் ஞாட்பறியா அலிகளைப்போல் பயனொன் றின்றி நாளெண்ணி யுடலோம்பி நலிந்தா ரம்மா! 211 மெய்யுறையை நீத்துவெறு மேனி தாங்கி வேல்பிடித்த கையில்மயிற் பீலி தாங்கிப் பொய்யுறையும் எளியவிலைப் பொருள்போற் சோற்றுப் பொதிசுமந்து மறவர்கள் நாட் போக்கி னாரே. 212 வளமிகுசெந் தமிழர்தலை நகர்க ளான வஞ்சிபுகார் உறந்தைதமிழ் மதுரைக்கோயில் ஒளிமிகவே ஆடுதமிழ்க் கொடிக ளின்றி ஒன்னலரின் கொடியுயர்ந்து பறந்த தம்மா! 213 தகவின்றித் தமிழர்புறச் சமயச் சார்பால் சாரமற்று வீரமற்றுச் சக்கை யாகி மிகவின்றிப் பகைவென்றி வெறுத்தி ருந்த வேளையிலே எளிதிலவர் வெற்றி கண்டார். 214 அளப்பரிய திறற்றமிழ்மூ வரசை வீழ்த்தி அருந்தமிழ்நாட் டினைமுந்நூ றாண்டுக் காலம் களப்பிரராண் டனரெனவவ் வடவர்க் குப்பிற் காலத்தார் ஒருபெயரைக் கற்பித் தாரே. 215 உலகமுதன் மொழியாகி உலகி லொன்றும் உவமையின்றி மூவர்முடி மணியாய் வாழ்ந்த இலகுதமி ழன்னையரி யணையி னின்றும் ஏதிலரா லிறக்கிவிடப் பட்டா ளம்மா! 216 மூவரசு தோன்றியவம் முதல்நாள் தொட்டு முத்தமிழி னகத்தாட்சி மொழிய ளாகி நாவரசர் புகழ்ந்தேத்தக் கொலுவி ருந்த நற்றமிழ்த்தாய் அரசிழந்து நலிவுற் றாளே. 217 தன்னேரி லாததமிழ்த் தாயெந் நாளும் தானிருந்த அரியணையில் கமலப் போதில் இன்னாத புன்காகம் இருந்தாற் போல இனிதேறி வடமொழிப்பெண் இருந்தா ளம்மா! 218 வெருவியெதிர் நிற்கமுடி யாதெக் காலும் வெந்நிட்டோ டியவடவர் விளக்கங் கொள்ள அரியணையி லமர்ந்துதமி ழன்னை காண ஆரியஞ்செந் தமிழகத்தை ஆண்ட தம்மா! 219 மூவரசு தோன்றியவம் முதல்நாள் தொட்டு முத்தமிழை யினிதாய்ந்து முறையி னோடு பாவரசர் வீற்றிருந்த மதுரைச் சங்கம் பகைப்புலம்போல் அழிந்தொழிந்து போயிற் றம்மா! 220 பன்னுதமிழ்ப் பாவலர்பா மாலை சூட்டிப் பழந்தமிழ்வேந் தரைப்பாடிப் பரிசு பெற்ற மன்னரவைக் களத்துவட மொழிப்பா வாணர் மகிழ்ந்தமர்ந்து வடமொழியை வளர்த்தா ரம்மா! 221 நாற்றிசையுந் தமிழினிசை பரவ நாளும் நற்றமிழர் தொன்மரபு நலிந்தி டாமல் போற்றிவந்த இனியதமிழ்ப் புலவ ரெல்லாம் புறம்போக்குப் பொருளாகப் போயி னாரே. 222 அகம்புறமா யறம்பொருளின் பங்க ளான அருந்தமிழர் வாழ்வியலை ஆய்ந்து நன்கு தரும்புலவர் செய்தபழந் தமிழ்நூ லெல்லாம் தரிசுநிலம் போற்பயனிற் சரக்கா யிற்றே. 223 தமிழர்கலை நாகரிகம் சமய வாழ்வு தனித்தமிழ்ப்பண் பாடெல்லாந் தகர்ந்த ழிந்தே இமயவர்தங் கலைமுதலா கியமற் றெல்லாம் இருந்தமிழர் பெருவாழ்வா யியன்ற வம்மா! 224 எல்லையிது வெனவறியாத் தமிழர் வாழ்விங் கிருந்தவிடந் தெரியாமல் அழிந்தொ ழிந்தே அல்லிமல ரினைப்புகைசூழ்ந் தடர்த்தாற் போல ஆரியப்பே ரிருள் சூழ்ந்தே அடர்த்த தம்மா! 225 நுவலுமர சியற்றுறையில் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு முதல்முந்நூ றாண்டுக் காலம் தவலருந்தொல் சீர்மிகுசெந் தமிழர் வாழ்வாம் தமிழகத்தின் இருட்காலம் ஆகுந் தானே. 226 அருந்தமிழ் நாட் டினையிவர்க ளடைந்த போதே ஆந்திரப்பே ரரசினதி காரி யாக இருந்தரசு புரிந்தசிவக் கந்த வர்மன் என்னும்பல் லவன்படையில் ஏற்ற முற்றான். 227 பெரும்படையோ டெழுந்துதெற்கே பெயர்ந்து தொண்டைப் பெருநாட்டை யடைந்துதொண்டை மானை வென்று கரும்படையில் தேனூறுங் கழனி சூழ்ந்த காஞ்சியிலே தன்கொடியைக் கட்டி னானே. 228 எஞ்சியவத் தமிழ்நாடும் வடவ ராட்சிக் கிரையாகத் தமிழன்னை இரங்கி யேங்கத் தஞ்சமய நீழலின்கீழ்த் தமிழ கத்தைத் தமிழ்பேசா அயல்மொழியார் தானாண் டாரே. 229 படிப்படியாய்ச் சோழநா டதையுந் தங்கீழ்ப் படுத்தந்தப் பல்லவர்கள் அறுநூ றாண்டு தடுப்பரிய தமிழ்மரபு தகர்ந்து போகத் தமிழகத்தே ஆரியத்தை வளர்த்திட் டாரே. 230 பள்ளிகளும் பாழிகளும் மலிய எங்கும் பரந்தடிகள் சமயப்போர் பயிற்ற நாளும் புள்ளிமிரும் பள்ளவயற் புடைசூழ் காஞ்சி புறச்சமயத் திருப்பிடமாய்ப் பொலிந்த தம்மா! 231 நாடெல்லாம் சாக்கமணச் சங்கம், நாட்டு நகரெல்லாம் வடமொழிக்கல் லூரி, வாழும் வீடெல்லாம் வாழ்க்கையிலே வெறுப்புச் செய்யும் வினையெல்லாம் மெய்வருத்தும் வேலை யாமே. 232 ஊரெல்லாஞ் சமயப்போர்க் களங்கள், ஊரின் உருவெல்லாம் தமிழல்லா உருவம், மக்கட் பேரெல்லாம் தமிழல்லாப் பேர்கள், பேசும் பேச்செல்லாம் நிலையாமைப் பேச்சே யாகும். 233 இமயவர்தம் அரசுநிலை யாக வீங்கே இடையறவு படாதுநடந் திடவே வேண்டிச் சமணர்களும் புத்தர்களுங் கணக்கில் லாது தமிழகத்தே குடியேற்றப் பட்டார் தானே. 234 மங்கலநல் லியங்கறங்க மக்கள் வாழ்த்த மணவறைபோ லிருந்ததமிழ் வளப்பொன் னாடு பொங்கியசாப் பறையொலிப்பப் பொரியி றைப்பப் புலம்பிழவு வீடேபோல் போயிற் றம்மா! 235 மலர்முடித்துக் கலனணிந்து மணக்கப் பூசி மணமகள்போல் இருந்ததமிழ் மணிப்பொன் னாடு கலவைமலர் அணியிழந்து வெள்ளை போர்த்த கைம்மையெனப் பொலிவிழந்து கலங்கிற் றம்மா! 236 புள்ளிமிரும் பொலியுநறும் பூக்கள் பூத்த பூங்காவைப் போன்றதமிழ்ப் பொன்னன் னாடு கள்ளலர்பூங் காய்கனியோ டிலையு மின்றிக் காய்ந்தமரக் காடேபோல் காண லாச்சே. 237 சிறுமியர்கள் அழகொழுகத் தெருவில் செய்த சிற்றிலைப்போ ருந்ததமிழ்ச் செழும்பொன் னாடு சிறுவர்களால் பெருமையெனச் சிதைக்கப் பட்ட சிற்றிலைப்போல் பொலிவிழந்து சிதைந்த தம்மா! 238 ஓங்கியகைத் திறம்படநன் கெழுதப் பட்ட ஓவியம்போல் பொலிந்ததமிழ் உயர்பொன் னாடு பாங்கறியாச் சிறுவர்களால் சிதைக்கப் பட்டுப் பழுதுபட்ட ஓவியம்போல் போயிற் றம்மா! 239 ‘என்னேசெந் தமிழர்நிலை யிவ்வா றாச்சே இதுவுமொரு காலத்தின் கோலந் தானோ? அன்னேயிந் நிலைநீங்கித் தமிழர் முன்போல் ஆவாரோ யார்கண்டார்? அந்தோ அந்தோ!’ 240 என்றுபிறர் பழமைநினைந் திரங்கி யேங்க இனியசுவைப் பால்களிம்புற் றிழிந்தாற் போல் அன்றுதமி ழகம்வடவர் ஆட்சி யின்கீழ் அருமையிழந் தந்நிலையை அடைந்த தம்மா! 241 தமிழர்எழுச்சி தாழிசை - வேறு இன்ன வாறு தமிழர் அரசிழந் தியல்பு குன்றி இனவுணர் வின்றியே முன்னெ வாறுயாம் வாழ்ந்தனம் என்பதை மொழிய வேண்டு நிலையி லிருந்தனர். 1 மொழியி ழந்து முதுமை யிழந்துநன் முறையி ழந்து முதன்மை யிழந்துவாழ் வழியி ழந்து வழிவழி வந்ததொன் மரபி ழந்து மதிப்பிழந் தாரரோ. 2 சங்க காலத் தமிழர்தம் வாழ்வியல் தாறு மாறாத் தலைதடு மாறியே மங்கி மாழ்கி மருண்டு புரண்டயல் மக்கள் போற்புது மக்களாய் வாழ்ந்தனர். 3 அரசு மாற மொழிகலை நாகரி கந்தொல் வாழ்வு சமயம்பண் பாடென பரிசு மாறிப் பதர்களாய் வாழ்வியற் பாதை மாறிப் பழிபட வாழ்ந்தனர். 4 பண்ண மைதமிழ்ப் பாடலை யாழொடு பாடி யாடும் பரிசை யிழந்தனர் கண்ண மையக் கருத்தமை கூத்தினைக் கண்டு வக்குங் கடமை யிழந்தனர். 5 கிழந்த மிழ்ப்புல வோர்கள் உரையினைக் கேட்டு வக்குங் கிழமை யிழந்தனர். பழந்த மிழ்த்தொகை நூல்களை யன்பொடு படித்து வக்கும் பரிசை யிழந்தனர். 6 அலைக டலுல கத்து மொழியெதும் அறிந்தி லாத அகம்புற வாழ்வியற் கலைய ழகையி னிதெடுத் தோதுதொல் காப்பி யத்தினைக் கற்ப திழந்தனர். 7 தனக்கு நேரொன் றிலாது தனைநிகர் தமிழர் வாழ்வியற் சட்டநூ லாகிய மனக்கு கந்த வளர்புகழ் வள்ளுவன் வான்கு றளுரை வாழ்வை யிழந்தனர். 8 பிறர்க்க டிமைக ளாய தமிழர்தம் பிறப்பு ரிமையி ழந்துதாய் நாட்டிலே பறக்கும் புட்கள் இறகை யிழந்துவாழ் பரிசின் வையம் பழித்திட வாழ்ந்தனர். 9 ஆங்கி லேயரின் ஆட்சியின் கீழவர்க் கடிமை யாக அடங்கியே வாழுதல் ஈங்க டாதெனக் காந்தி யடிகள் நன் கெண்ணி யாமென் றெழுந்தது போலவே. 10 அயல ரசுக்க டங்கியே மூன்றுநூ றாண்டுக் காலம் அடிமையா யையகோ! துயிலு கின்ற தமிழர் உணர்வுறத் தூண்ட வெண்ணினர் ஆன்றவ ரோர்சிலர். 11 ஆன்ற மைந்த அறிவுடை யோர்சிலர் அடிமை வாழ்வை வெறுத்தது நன்றெனத் தோன்று மாறு புகன்று தமிழரைத் துயிலெ ழுப்பத் துணிந்து தொடங்கினர். 12 சொந்த நாட்டிற் பிறர்க்கடி மைசெய்து சொரணை யின்றித் துயின்று விழிக்குதல் வெந்த சோறுண்டு வெற்றுடம் போம்புதல் வீட்டு நாயும் விரும்புமொன் றல்லவே. 13 காக்கை கூடதி காலையி லேயெழுங் கடமை மாறா திருக்கையில், மக்களின் யாக்கை தாங்கி அடிமையாய்த் தூங்குதல் அடாதெ னவெண்ணி னார்பெரி யோர்சிலர். 14 ஒன்றி வாழ்வின் ஒருபெருங் கூறதாய் உலகங் கண்டறி யாத பழமையாய்த் தொன்று தொட்டுமேற் கொண்டநங் கொள்கையைத் துறந்த தால்வந்த தேயிந்தச் சூழ்நிலை. 15 சமய மென்னும் மயக்க மருந்தினால் தமிழர் வாழ்வைத் தகர்த்து வடவர்கள் இமய மீது தமிழ்பொறித் தோர்களை எளிதில் வென்றனர் என்ப தறிதிரோ? 16 மயல கத்துப் படவத னாற்பிற வாழ்வைப் போற்றித்தம் வாழ்வைத் துறப்பதா? அயல கத்து மகவினைப் போற்றிநம் அருமைச் சேயினைக் கைவிடல் ஞாயமோ? 17 பாலி ருப்பக் கடுவினை யுண்பரோ? பழமி ருக்கவெக் காயினைத் தின்பரோ? காலி ருப்ப நடப்பரோ கைகளால்? கலமி ருக்கக் கடலில் குதிப்பரோ? 18 முத்தி ருக்க அணிவரோ முள்ளிதாய் மொழியி ருக்க அயல்மொழி கற்பரோ, பத்தி ருக்கப் பிறர்கையைப் பார்ப்பரோ, பைந்த மிழ்க்கு நிகரோ பனிமொழி? 19 கண்ணி ழந்த முகத்தினைப் போலவும் கலையி ழந்த மதியினைப் போலவும் பண்ணி ழந்தசெம் பாடலைப் போலவும் பசையி ழந்துநாம் வாழ்வது கூடுமோ? 20 ஒலிய விந்த கடலென ஊமராய்! உறங்கு கின்ற இளந்தமிழ்க் காளைகாள்! புலியை வென்றது பூனை யெனப்படும். பதுமை யன்றே நமையிமம் வென்றதே! 21 வீர மென்பது காசுக்கிங் கெத்தனை விற்ப தெங்கெனக் கேட்கும் வடவர்கள் பாரில் வீரப் பயிர்விளை தென்னகப் பைந்த மிழரை வென்றது பார்மினே! 22 மார றுத்திட வாளை யெடுத்தவள் மரபில் வந்த மறத்தமிழ் மக்களைச் சேர வென்ற செயலின் கருத்தினைத் தெளிந்து பார்மின் செழுந்தமிழ்க் காளைகாள்! 23 சிறுவன் கையில்வே லீந்துநீ போருக்குச் செல்லென் றேவிய செல்வி வழியினீர்! குறுந ரிக்குக்குற் றேவல்செய் தேயரிக் குட்டி சேர்ந்த குகையினில் வாழுமோ? 24 எண்ணிப் பார்மின் நமதுமுன் னோர்திறம், இமயத் துள்ள இலைச்சினை நோக்குமின்! மண்ணில் யானை யோர் பூனைக் கடங்கியே வாழ்த லென்பது வையத் தியற்கையோ? 25 சிறுத்தை மானைக்கண் டஞ்சி யடங்குமோ? செந்த மிழிளங் காளைகாள்! நம்முனோர் திறத்தை யின்னெனத் தொல்காப்பி யப்புறத் திணையை யோர்முறை பார்த்துத் தெளிகுவீர்! 26 கடம்ப றுத்துக் கடற்கொள்ளைக் கூட்டத்தைக் கட்ட றுத்தவச் சேரன் மரபினீர்! உடம்பெ டுத்த பயனை யறிகுவீர் ஓர்மு றைபுறப் பாட்டினை நோக்கியே. 27 வேலை நாட்டிக் கரையெடுத் தேகடல் விழவ யர்ந்த நெடியோன் வழியினீர்! வாலை நீட்டுமோ பூனைமுன் சுண்டெலி, வடக்குத் தெற்கை யடக்கியீங் காளவோ? 28 எழுந்த ஞாயிறு வீழு முலகினில் எதிரி லாத தமிழிளங் காளைகாள்! பழந்த மிழர்தி றத்தை மறந்துவீண் படுத்துத் தூங்குதல் பாவையுஞ் செய்யுமோ? 29 தமிழ்ப ழித்த வடவர் தருக்கினைத் தகர்த்த குட்டுவன் செய்கையை நோக்குவீர்! இமிழ்தி ரைக்குமீ னஞ்சுமோ குட்டுவன் இளவல் வஞ்சியை யோர்முறை நோக்குமின்! 30 நெஞ்சைத் தொட்டு நினையுங்க ளோர்முறை நெடுஞ்செ ழியன்ம ரபின ரோவெனப் பஞ்சைக் கண்டுதீ யஞ்சுமோ வான்குறட் படைச்செ ருக்கினைப் பார்க்குவீ ரோர்முறை. 31 கனவிற் காணினும் அஞ்சி யிமயங்கண் கலங்கி டுங்கரி காலன் வழியினீர்! நினைவிற் கொள்ளுமின் அன்னவன் செய்தியை, நெருப்பிற் கஞ்சித்தண் ணீர்நிலை கொள்ளுமோ? 32 என்று தட்டி யெழுப்ப வெழுந்தனர் இமயம் வென்ற இனத்திளங் காளைகள்; குன்று போல நிமிர்ந்துநின் றையன்மீர்! கொடுமை யின்றே யொழிந்ததென் றார்த்தனர். 33 குடிப்பெ ருங்குலக் காப்புடை யீர் தூண்டு கோலி லாதொளி குன்றிக் கிடந்தனம்; அடிப்பெ ருந்துணை யாலய லார்தமிழ் அகத்து நாளையி லாமலே செய்குவம். 34 நாளை நாளிரண் டாக நமதுதாய் நாட்டை யாளயல் நாடர்கள் தங்களை வாளி னுக்கிரை யாக்கி விடுகிறோம் வாழ்த்தி வாள்தரீர் என்று வணங்கினார். 35 வாழ்க உங்கள் மறக்குணம் வாழ்கநம் மரபு வாழ்கநம் மாற்றலர் மாமுடி வீழ்க இன்றொடு மீள்கநம் தாயகம் வெற்றி வெற்றிநும் வீரஞ் சிறக்கவே. 36 எண்ணி யவெண்ணி யாங்குநீர் செய்குவீர் என்ப திலெங்கட் கில்லை யினியையம்; விண்ணி னிலிருள் நிற்குமோ செங்கதிர் வெளிப்ப டினிளங் காளைகாள்! ஆயினும், 37 ஆயி னுமெனும் ஐயமெம் ஐயன்மீர்! அடுத்த தென்னவெம் ஆற்றலை யையுறின், தீயி னுங்குதிப் போம்வாள் விழுந்தையம் தீர்க்கு வோமினிச் செய்வது கூறுமின்! 38 என்று வேண்டி இளைஞர் வணங்கவே, எதிரி லாத இளந்தமிழ்க் காளைகாள்! ஒன்று மையம் இலையுங்கள் ஆற்றலில் உண்ணும் வேளையில் உண்ணுதல் வேண்டுமே. 39 காக்கை கூகையை வெல்லும் பகலினில் கண்டு கூகையை யஞ்சு மிரவினில், வீக்கி யேபகை வெல்லுதற் குக்காலம் வேண்டு மென்பது வள்ளுவர் மேன்மொழி. 40 பருதி போற்பகை வெல்லுந் திறலரும் பகைவெ லற்குரித் தாகிய காலத்தைக் கருதி யேயிருப் பாரென வள்ளுவர் காலத் துக்கோர் இலக்கணங் காட்டுவர். 41 உரிய காலம் உறுகின்ற காறுங்கொக் கொத்தி ருந்துநற் காலம் துற்றிடின் அரியெ னப்பகை வென்று சிறந்திடல் அறிவு டைமை யெனவறங் கூறுமே. 42 குறள் வெண்டுறை ஐயமில்லை யுங்களிடத் தாணரி யேறுகளே! செய்யும் வினைத்திறத்தைச் செப்புகின்றோம் கேட்டிடுவீர். 43 வாள்வலியால் தோள்வலியால் வன்கண்மை யால்மிகுந்த ஆள்வலியி னால்வடவர் அன்று நம்மை வெல்லவில்லை. 44 புதுவிருந் துண்பார்போல் புறச்சமயத் தாற்றமிழர் மதியிழந் தேயுலக வாழ்வை வெறுத்திருந்தார். 45 சொந்தச் சமயமதைத் துறந்து புதிதாக வந்த வயற்சமய வாழ்வுதலைப் பட்டிருந்தார். 46 தோண்மை துறந்து சொரணையின்றி நம்முன்னோர் ஆண்மை யிழந்திருந்த அவ்வேளை வெற்றிகண்டார். 47 களித்தானை யேமாற்றிக் கையெழுத்து வாங்குதல்போல் வெளித்தானை வந்தெளிதில் வெற்றிகண்ட தவ்வேளை. 48 தம்மை மறந்துபுறச் சமய மயக்கமதால் நம்மவர்கள் பித்தர்கள்போல் நாளைக் கடத்துகின்றார். 49 ஆகையினால் நம்மவரவ் வயற்சமயப் பாதையிலே ஏகுவது தீதெனவே இனிதுணரச் செய்யவேண்டும். 50 தங்குடும்பம் பேணாது தகைந்துல குக்குழைக்கும் வெங்கொடுமை தன்னையவர் விளங்கிடச் செய்யவேண்டும். 51 பெற்றபிள்ளை யைவிடுத்துப் பிறர்மகவைப் பேணுகின்ற குற்ற மதையுணர்ந்து கொள்ளவே செய்யவேண்டும். 52 பித்தை யொருவாறு பெயர்க்கமுடி யுஞ்சமயப் பித்தையவ் வாறெளிதில் பெயர்க்க முடியாது. 53 கொள்ளநோயை மருந்து கொடுத்தெளிதில் போக்கிடலாம் உள்ளநோ யையெளிதில் ஒழித்தல் அரிதாகும். 54 விடாப்பிடி மிக்குடைய வெளிச்சமயச் சார்பினரை அடாப்பிடிசெய் தாலெதுவும் ஆகா தொருபோதும். 55 அப்படியே கைவிடுங்கள் அயற்சம யத்தையென்றால் ஒப்பவே மாட்டார்கள் உள்ளந் திரிந்தவர்கள். 56 கட்டி யினைப்பூசிக் கைப்புமருந் தூட்டுதல்போல் ஒட்டி யயற்சமயத் துறுதிகெடச் செய்யவேண்டும். 57 கூட்டுமருந் தாகவயற் கொள்கை சிலகலந்து நாட்டுமருந் தைக்கொடுத்து நலமுறச் செய்யவேண்டும். 58 தக்க படிகலந்து தருகிறோம் நீங்கள்தமிழ் மக்களுக் குக்கொடுத்து வரவேண்டும் பக்குவமாய். 59 என்று பெரியோர்கள் எடுத்தியம்ப மற்றவர்கள் நன்றுநன்று நன்றிதுவே நல்லஏற் பாடாகும். 60 தாங்களிடுங் கட்டளையைத் தலைமேற்கொண் டவ்வாறே நாங்கள்செய்கின் றோமதுவெம் நற்பிறப்பின் பேறாகும். 61 தோன்றியவித் தாய்நாட்டுத்தொண்டு செய்தற் கல்லாமல் ஆன்றவரே இப்பிறப்பின் ஆயபயன் வேறுமுண்டோ? 62 வனப்புற்ற மேனியொடு மக்களெனப் பேர்தாங்கி இனப்பற்றில் லாப்பதர்கள் இருந்தென்ன போயென்ன? 63 தாய்நாட் டினுக்குதவாத் தங்கமோ எங்களுயிர்? சேய்நாட் டினுக்கவர்தம் செலவை அமைத்திடுவோம். 64 நாட்டு விடுதலைக்கே நங்களை ஒப்படைத்தோம் காட்டு நெறியினிலே கட்டாயஞ் செல்லுகின்றோம். 65 தலையைக் கொடுத்தேனுந் தாயகத்தைச் சூழ்ந்துள்ள கலியை யகற்றுவதெங் கழியகடப் பாடலாவோ? 66 அறப்பெரி யீர்நந்தாய் அகமதனைச் சூழ்ந்துள்ள புறச்சமயப் பேரிருளைப் போக்குவ தெங்கடனே. 67 தயக்கமினி வேண்டாநந் தாயகத்தைச் சூழ்ந்துள்ள அயற்சமயப் பேரிருளை அகற்றுவ தெங்கடனே. 68 வாழ்த்தி விடை கொடுங்கள் வண்டமிழ் மாப்பகையை வீழ்த்தியே கட்டாயம் வெற்றிபெற்று மீளுகிறோம். 69 என்றிறைஞ்ச மற்றவர்கள் எம்மினத்துச் செல்வர்களே! வென்று குலப்பகையை வீறுடன் மீண்டிடுவீர். 70 ஏய மருந்திதனை ஈந்து புறச்சமய நோயகற்றி நம்மவர்கள் நொடிவினைப் போக்கிடுவீர். 71 பக்குவமாய் நம்மவர்கள் பருகும் வகையளித்துப் புக்க அயற்பிணியைப் போக்கியே காத்திடுவீர். 72 உண்ணும் வகையறிந்தாங் கூட்டியே இம்மருந்தை நண்ணு மயற்பிணியை நலிந்தொழியச் செய்திடுவீர். 73 என்றப் பெரியோர்கள் எடுத்துரைத் தம்மருந்தைக் குன்றைப் பொருவார்பால் கொடுத்து விடைகொடுத்தார். 74 மேதக்க சான்றோர்பால் விடைபெற்ற காளையர்கள் நோதக்க நந்தமிழர் நோயகற்றச் சென்றார்கள். 75 கண்ணுங் கருத்துடனே கடப்பா டுடையவன்னார் உண்ணுந் திறமறிந்தே ஊட்டிவர லானார்கள். 76 ஆளுக் கொருபுறமாய் அளவறிந் தூட்டிவந்தார் நாளுக்குநா ளக்கொடுநோய் நலிந்துவரக் கண்டுவந்தார். 77 கூடும் புறச்சமயக் கொடுநோ யகன்றிடவே நாடெங்குஞ்சென் றம்மருந்தை நல்கியே வந்தார்கள். 78 சூரும் புறச்சமயத் தொத்துநோய் நீங்கிடவே ஊரெங்குஞ் சென் றம்மருந்தை ஊட்டியே வந்தார்கள். 79 வருத்தும் புறச்சமய மயக்கந் தெளிந்திடவே பொருத்தமுட னம்மருந்தைப் புசிப்பித்து வந்தார்கள். 80 தீக்கும் புறச்சமயத் தீநோ யகன்றிடவே ஊக்கமுட னம்மருந்தை ஊட்டியே வந்தார்கள். 81 அக்கறையோ டன்னர்தரும் அம்மருந்தை யுண்டுதமிழ் மக்கள் புறச்சமய மயக்கந் தெளிந்துவந்தார். 82 அன்புடனே அன்னர்தரும் அம்மருந்துண் டேதமிழர் தென்புடனே யப்பெருநோய் தீருங் குறிப்பறிந்தார். 83 பிள்ளைத் தமிழ்மருந்தின் பிறங்குபே ராற்றலினால் உள்ளப் பிணியகன்றே உறுதியுற லானார்கள். 84 தம்மை மறந்தயன்மை சார்ந்திருந்த செந்தமிழர் தம்மை யுணர்ந்தறிவு தலைப்பட லானார்கள். 85 கிழமை யதையிழந்து கேடுற்ற செந்தமிழர் பழமை யதைத்திரும்பிப் பார்க்கமுற் பட்டார்கள். 86 சிறைபட்ட வேங்கையைப்போல் திகைத்து நின்ற செந்தமிழர் முறைபட்ட கோளரிபோல் முனைப்புற் றெழுந்தார்கள். 87 இளைய வினத்தமிழர் எருவுண் டுறக்கிளைத்து விளையும் பயிர்போல மேக்குற் றெழுந்தார்கள். 88 சிந்து இத்தகு நல்ல நிலையினைத் - தமிழ் ஏறிளங் காளையர் எய்தவே அத்தகு நல்ல நிலையினைத் - தமிழ் ஆன்றவர் கண்டு மகிழ்ந்தனர். 89 தூங்கி யெழுந்தவர் போலவே - தமிழ்த் தோன்றல்கள் யாவருஞ் சாலவே வேங்கைபோல் மார்தட்டி நின்றனர் - முன்போல் விரும்பிச் சிலம்பம் பயின்றனர். 90 வீர மதுவினை மாந்தினர் - வடி வேலையும் வாளையும் ஏந்தினர் ஆரெதிர் என்றுளம் வேர்த்தனர் - பகை அஞ்சி நடுங்கிட ஆர்த்தனர். 91 நாங்கள் பயனின்றி வாழவோ - தாய் நாட்டை அயலவர் ஆளவோ? வேங்கைகள் தூங்கிக் கிடக்கவோ - மான்கள் வீறிட்டண் ணாந்து நடக்கவோ? 92 குகைக்குளே வேங்கைகள் தூங்கவோ - அங்கே குள்ள நரிகள்வாய் வீங்கவோ? பகைப்புலத் தாரிங்கே ஆளவோ - நாங்கள் பயனின்றி ஊணுண்டு வாழவோ? 93 விற்கை படப்பகை யேகிய - படை வீரத்தின் தாயக மாகிய தெற்கு வடக்குக் கடங்கவோ - புலி செச்சையைக் கண்டு நடுங்கவோ? 94 பூனை யெலியடி தாழவோ - தென் புலத்தை வடபுலம் ஆளவோ? யானைபுல் வாயைக்கண் டஞ்சவோ - தமிழ் ஆரியத் தின்காலைக் கெஞ்சவோ? 95 புலிகளைப் பூனைகள் வெல்லவோ - அவர் பொங்கெல்லா மினியிங்கே செல்லவோ? அலிகள் தமிழ்க்களங் கொள்ளவோ - தமிழ் அன்னையை மற்றவள் எள்ளவோ? 96 வழிவழி வந்த முறையினை - முன்னோர் வாழ வகுத்த நெறியினைப் பழிபட விட்டுயிர் வாழவோ - வட பாலுக்குத் தென்பால் தாழவோ? 97 என்று மொழிந்துநின் றார்த்தனர் - வாள் எடுத்துச் சுழற்றியுள் வேர்த்தனர் குன்றெனத் தோள்களைக் கொட்டினர் - கொட்டிக் கோளரி போலவ தட்டினர். 98 பகைவர்கண் டஞ்சி நடுங்கவே - களம் பாடப் பொருநர் தொடங்கவே மிகைபட வூக்கி விளங்கினர் - வெற்றி வெற்றியென் றார்த்து முழங்கினர். 99 நன்றுநன் றென்றசொல் வந்தது - பாண்டி நாடே குமுறியெ ழுந்தது வென்றி மடந்தையை ஏத்தினர் - தமிழ் மேலவர் வெல்கென வாழ்த்தினர். 100 வீரர்கள் வீறிட் டெழுந்தனர் - மலர் வேம்பொடு வஞ்சி புனைந்தனர் காரின் முரச மதிர்ந்தது - தமிழ்க் கன்னியின் உள்ள முவந்தது. 101 கோளரி போல எழுந்தனன் - கடுங் கோனெனும் பாண்டிய மன்னவன் வாளரி வீரர் தொடர்ந்தனர் - ஆக மதுரையை நோக்கி நடந்தனன். 102 பகைவ ருடற்றசை தின்னவே - வானிற் பருந்துகள் செல்லுத லென்னவே தொகைவகை யாகத் தமிழ்க்கொடி - தோம் தோமென வேசென்ற தப்படி. 103 இடியெனச் சங்கு தழங்கின - கார் என்ன முரசு முழங்கின வெடியெனக் காலடி முன்னின - வாளும் வேலும் பளீரென மின்னின. 104 வண்ணக் கொடிக்கையை ஆட்டியே - எம்மீர் வாருங்கள் என்றுவப் பூட்டியே திண்ணிய பொன்வாய் குழைத்தனள் - தமிழ்த் தென்மது ரைத்தா யழைத்தனள். 105 பக்குவ மிக்க வழியிடை - அப் பகைவர்கண் டஞ்சத் தமிழ்ப்படை மக்க ளுவப்ப வியன்றது - மாட மதுரையை நோக்கியே சென்றது. - 106 கண்டு பகைவ ரெதிர்த்தனர் - களங் காணலா மோவென் றதிர்த்தனர். தண்டமிழ் வீரர்க ளூக்கினர் - காலத் தழலெனப் பாய்ந்துமே தாக்கினர். 107 ஊக்கித்தாக் கிக்களங் கொண்டனர் - தோற் றோடும் பகைப்புறங் கண்டனர் வீக்கி நகைத்துக்கை கொட்டினர் - கோயில் மீது தமிழ்க்கொடி கட்டினர். 108 ஓடுங்கள் ஓடுங்கள் என்னவே - கொடி ஓங்கிப் பறந்தது மின்னவே பாடுங்கள் பாடுங்கள் என்றனர் - களம் பாடிப் பொருநர்கள் வென்றனர். 109 மின்னென வேம்பு மலர்ந்தது - வானில் வென்றி முரச மதிர்ந்தது ஒன்னலர் ஆட்சி யொழிந்தது - மதுரை உள்ளும் புறமும் உவந்தது. 110 கன்னித் தமிழ்ப்பகை நூறினான் - நம் கடுங்கோன் அரியணை யேறினான் நன்னகர்ச் சான்றவர் கூடினர் - தமிழ் நாவலர் மங்கலம் பாடினர். 111 குடிதழீஇக் கோலோச்சி வந்தனன் - மக்கள் கொண்டாடக் கோன்மைசி றந்தனன் அடிதழீஇ நின்றது மாநிலம் - அவ்வா றாண்டனன் பாண்டிய நானிலம். 112 கொடுமைப் பகைப்புலச் சூழ்ச்சியால் - கொடுங் கோற்பகை யாளரின் ஆட்சியால் அடிமைச் சிறையிடை மேயினாள் - தமிழ் அன்னை விடுதலை யாயினாள். 113 நச்சுப் பகைதொலை வுற்றது - பாண்டிய நாடு விடுதலை பெற்றது அச்ச மகன்றது நாட்டிலே - மக்கள் அமைந்துவாழ்ந் தாரவர் பாட்டிலே. 114 ஞாயிறு போற்றமி ழுற்றது - பாண்டிய நாடு விடுதலை பெற்றது. ஆயினு மற்ற விரண்டினும் - அய லாட்சியே அம்மகோ வுண்டினும். 115 சமயப்போர் தாழிசை இரைமிக வுண்ட வப்பாம் பென்னவே தமிழர் ஏலாப் புரைமிகு சமயக்கள்ளைப் பொறுக்கவுண்டருக்கி வாழ்ந்தார். 1 வியலகத் தொப்பில் லாத வீரமோ டாண்மை குன்றி அயலவர்க் கடிமை யாகி அந்நிலை மறந்து வாழ்ந்தார். 2 தந்நிலை மறந்து வாழ்ந்த தமிழ்நிலைக் கிரங்கிச் சான்றோர் அந்நிலை யுணரச் செய்த ஆய்வினை யறிவா மன்றே. 3 ஆன்றவா ராய்ந்து கண்ட அப்புதுச் சமயந் தன்னை ஈன்றவ ரிரங்க மாறும் இளைஞரின் செய்கை போல; 4 மாற்றியே புதிய சைவம் மாலியம் எனப்பே ரிட்டே போற்றியே தமிழர் வாழ்வைப் புறம்பட வாக்கி னாரே. 5 அருந்தமிழ் நாட்டை விட்டவ் வயலர சகன்ற தல்லால் பொருந்தயற் சமய மோமுன் போலவே யிருந்த தம்மா! 6 நீரறா நிலத்தின் மேய நிமிர்தரு பசும்புல் லற்றும் வேரறா வறுகு போல மீந்ததச் சமய மிங்கே. 7 அப்புறச் சமயத் தாரும் அருந்தமிழ்ச் சமயத் தாரும் ஒப்புறப் பொருது வந்தார் ஒருங்கற வென்று வந்தார். 8 மதுவெறி யதினுந் தீய மதவெறி கொண்டு நாளும் எதுசெய வெனவெண் ணாமல் எதிர்மலைந் திகன்று வந்தார். 9 கைபடத் தமிழர் கட்சி வெறியினா லின்று செய்யும் வகையெலா மன்றுஞ் செய்து வந்தனர் சமயக் காழ்ப்பால். 10 அகம்புறச் சமய மென்ன ஆயவக் கொள்கை தம்மால் இகம்பெறத் தமிழ ரந்தோ! இனப்பகை யாகி னாரே. 11 மல்லினாற் பொருது வெல்லும் மறத்தமிழ் வீரர் போலச் சொல்லினாற் பொருது வென்று தொன்னல மிழந்துவந்தார். 12 மன்னர்கள் துணையால் தங்கள் மாற்றலர் தமைய டக்கி இன்னெனப் பகரவொண்ணா இன்னல்கள்செய்து வந்தார். 13 அத்தகு சமயப் போர் நாட் டரசர்தஞ் சார்புற் றந்தோ! இத்தரை காணாப் போரா இயன்றிடர் விளைத்த தம்மா! 14 பற்றிய சமய மாறப் படைவலி கொண்டு மக்கள் கொற்றுறை யிரும்பு போலக் கொடுமைக்கா ளாக்கி னாரே. 15 ஊறிய பயிற்சி தன்னால் உற்றதம் சமயம் விட்டு மாறிட மறுத்திட் டாரை வன்மையால் மாற்றி னாரே. 16 சிந்து ஆளரசர் கள்சமயச் சூழலிற் சிக்கி - நா டாள்வதை விடுத்தடியார்க் காள டிமையாய் வாளரசி னைமறந்தவ் வாள்வ லியினால் - சமயம் மாறி மாறி மக்களை வருத்தியே வந்தார். 17 கேடாவகையில் நூன்முறையைக் கேட்டு மறிந்தும் - ஆங்கு கெட்டமுறை யைத்திருத்திக் கட்டு மரசர் அடாவழியில் மக்களை அலக்க ழித்துமே - நிலம் ஆள்வதைவிட் டேசமய ஆட்சி புரிந்தார். 18 இன்றுசைவ னாக இருந்த வரசன் - நாளை எங்களரு கன்கழல்வாழ் கென்று தொழுவான். இன்றுபுத்த னாக இருந்த வரசன் - நாளை எங்கள்திரு மால்வாழ்க என்று தொழுவான். 19 நேற்றுநாம தாரியா யிருந்த வரசன் - இன்று நீறுபூசி வாழ்கசிவன் என்று தொழுவான். நேற்றுமுக் குடைமுதல்வன் வாழ்கவென்றவன் - இன்று நெற்றியிலே நாமமுடன் காட்சி யளிப்பான். 20 காலைபுத்த னாக இருந்தவரசன் - மாலை கைநிறைய நீறெடுத்துப் பூசி மகிழ்வான். காலைமாலை யன்புடன் வணங்கி யெழுந்தோன் - மாலை காட்சியளிப் பான்சமணப் பள்ளி தனிலே. 21 நேற்றொருமால் கோயிலைக் கட்டி முடித்தோன் - இன்று நிலம்பட விடித்தமணப் பள்ளி யாக்குவான். நேற்றொருபுத் தமடத்தைக் கட்டி முடித்தோன் - இன்று நீறணிவோன் கோயிலாக மாற்றி யமைப்பான். 22 இப்படி யரசர்தம் இயல்பு திரிந்தே - அரசர் என்னுநிலை மாறிமக்கட் கின்ன லிழைத்தார். அப்படி யவர்கள்செயும் ஆட்சி யின்கீழே - மக்கள் அப்படியிப் படியாகி அல்ல லடைந்தார். 23 மக்களையா ளப்பிறந்த மன்னர் செயலால் - தமிழ் மக்கள்பட்ட பாட்டினை வகுத்து ரைக்கவோ? சிக்கியவா லைக்கரும்பிற் சின்ன பின்னமாய் - மக்கள் சீரழிந்து தாறுமாறாய்ப் பேரி ழந்தனர். 24 மன்னவர்க ளின்சமய மாற்ற மதனால் - ஒழுங்காய் வாழவழி யின்றியவர் வன்முறைக் கஞ்சி சொன்னபடி யேசமயம் மாறி மாறியே - மக்கள் தொகை தொகையாய்ச் சேற்றில் நட்ட தூண்களாயினார். 25 தம்மரச ரின்சமய மாற்ற மதனைக் - குடிகள் தாமறிவ தேகுடும்ப வாழ்வதாக் கொண்டே அம்மியிடை அக்குழவி ஆடுதல் போல - நாளும் அச்சமய மிச்சமய மாய லைந்தனர். 26 வேறு கவலை யின்றிவாழ - மக்களைக் காக்க வேண்டுமரசர் குவளை நஞ்சுபோல - நாளும் கொடுமை செய்யலானார். 27 குற்றங் குறைகள்போக்கி - நாட்டுக் குடியைக் காக்குமரசர் குற்றங் குறையிலாரை - நாளும் கொடுமை செய்யலானார். 28 நீறு பூசினாரைப் - பிடித்து நெருப்பில் போடலாச்சு நீறு பூசிலாரை - அவ்வாறே நிறுத்திக் கொல்லலாச்சு. 29 நாமம் போட்டவரைக் - கழுவில் நாட்டிக் கொல்லலாச்சு நாமம் போட்டிலாரை - அவ்வாறே நலிந்து கொல்லலாச்சு. 30 மொட்டை யடித்தவரைக் - கண்டால் முடுக்கிக் கொல்லலாச்சு மொட்டை யடுக்கிலாரை - அவ்வாறே முனிந்து கொல்லலாச்சு. 31 தாடி வளர்த்தவரைக் - கிணற்றில் தள்ளிக் கொல்லலாச்சு தாடி வளர்க்கிலாரை - அவ்வாறே தவிக்கக் கொல்லலாச்சு. 32 காவி கட்டினாரைக் - கண்டால் கனன்று கொல்லலாச்சு காவி கட்டிலாரை - அவ்வாறே கடிந்து கொல்லலாச்சு. 33 பீலி பிடித்தவரைக் - கண்டால் பிடித்துக் கொல்லாச்சு பீலி பிடித்திலாரை - அவ்வாறே பெயர்த்துக் கொல்லலலாச்சு. 34 வாழ்ந்த வாழ்வும்போச்சு - மக்கள் மதிக லங்கலாச்சு சூழ்ந்து வருந்தலாச்சு - அரசு சொரணை கெட்டுப்போச்சு. 35 நீதி நெறியும்போச்சு - அரசு நிலைகு லையலாச்சு சாதிச் சண்டையாச்சு - அரசு தடம்பு ரண்டுபோச்சு. 36 பெருமை யழியலாச்சு - மக்கள் பிழைத்த பிழைப்பும்போச்சு பொருநர் வாழ்வும்போச்சு - சமயப் போரில் முனையலாச்சு. 37 கோட்டைகட் டுதல்போச்சு - மடங்கள் கோயில் கட்டலாச்சு நாட்டைக் காத்தல்போச்சு - யாத்திரை நாளும் போகலாச்சு. 38 கட்டளைக் கலிப்பா இன்ன வாறு தமிழக மன்னர்கள் இயல்ப லாத வழியினிற் சென்றுமே மன்னெ வாறு முறைசெய வேண்டுமவ் வழியை விட்டுத் தகாவழி யாயமேற் சொன்ன வாறு சமயச் சூழலிலே சுழன்று மக்கள் துடிதுடித் தேங்கவே முன்னெ வாறு சமயச் சழக்கினால் முடியி ழந்த முறையினை யெய்தினார். 39 அரசு மக்க ளமைதியாய் வாழ்வதற் காய மைந்ததே யாமெனு முண்மையை வரிசை தப்பிய மன்னர்க ளையகோ! மறந்து மக்கள் துயர்க்கடல் வாய்ப்படப் பரிசி ழந்தவ் வரசினால் பஞ்சினும் படாத பாடு படச்செய் கொடுமையை உரைசெ யப்புகின் ஓரர சுண்டுகொல் உலகி லென்றெணி யுள்ள மொடுங்குவீர். 40 காட்ட ரசர்க ளாட்சியி தென்றிடக் கடமை யின்றிக் கெடுபிடி செய்திடும் ஆட்ட ரசர்கள் போலவே லாதசெய் தருந்த மிழர ழுதுபு லம்பிட நாட்ட ரசுந டத்திய அன்னர்தம் நாக ரிகந டத்தை யயலார்மண் வேட்ட ரசர்கள் வீரமே போல்மத வெறிபி டித்து விலங்கர சாண்டனர். 41 அடிக ளாட்சிக் கடிமைக ளாயர சாண்டு வந்த அடாவவ் வரசர்கள் முடிகள் தாங்கியம் முன்னோர் வழியினில் முறைசெ யும்மம் முறையினை விட்டுமே தடிகள் தாங்கித் தனிவழிச் செல்லுவோர் தம்மைக் கொன்று தணிவது போன்றுதம் குடிகள் தங்களைக் கொன்று தொலைத்தவக் கொடுமை யெண்ணிற் குலையு நடுங்குமே. 42 நாவி னுக்கர சின்னலை நண்ணிட நல்ல ரசின லமறி யாதவன் ஏவி னுக்கர சென்னும் மகேந்திரன் எந்த மிழ்மக்க ளாயிர மாயிரம் சாவி னுக்கர சோச்சிய வக்கொடுந் தன்மை யைநினைத் தாலு மெமதுளம் காவி னுக்கர சாகுடி மக்களைக் களைவி னுக்கர சாவென வஞ்சுமே. 43 சொலிய வப்படி யேகாழிப் பிள்ளையின் சொல்லை நம்பிய பாண்டிய மன்னனும் கொலிய வல்லர சோச்சியந் தோதமிழ்க் குடிக ளெண்ணா யிரவரைக் கூட்டொடு வலிய வன்கழு வெற்றினன் என்னுமவ் வன்கொ டுஞ்செயல் தன்னை நினைக்கினும் ஒலிய டங்கி யுலக மவிந்தென உள்ள முள்ளுவ தோய்ந்து நடுங்குமே. 44 ஆறு மாறு மெனவே எதிரெதிர் அகம்பு றமென ஆய சமயத்தால் தாறு மாறாத் தகவில வாகிய சமயப் போரினால் தண்டமிழ் மக்கள்பல் கூறு பட்டிழி கொள்ளை கொலையெனும் கொடுமை யால்நலிந் தோரைக் கணக்கிடின் ஏறு மெண்ணினில் வெள்ளம் எனப்படும். இறுதி யெண்ணையும் ஈறுகண் டேகுமே. 45 மாறு கொண்டு தமிழகந் தன்னிலே வந்து புக்க அயற்சம யங்களால் ஏறு போல எதிர்ந்து பகைவரை இறுதி கண்ட முடியுடை மூவரும் வீறு குன்றி யினப்பகை மேவுற மெலிவு கண்ட வெறுமையி னாலன்றோ ஆறு கண்ட பெருவெள்ளம் போலயல் ஆட்சி மேய தருந்தமிழ் நாட்டிலே? 46 ஈண்டு கின்ற சமய வெறியினால் இன்ன வாறு கொடுமை யிரண்டுநூற் றாண்டு காலம் தமிழக மெங்கணும் அமைதி யின்றியல் லோலகல் லோலமாய் மூண்டு நின்றது, மன்னரும் பின்னரும் முறைமை யின்றிச் சமயக் குருக்கள்மார் வேண்டுகின்றது செய்து கொடுமைகள் வித்தி நன்கு விளைத்துக் களித்தனர். 47 தாழிசை இத்தகைய அரசியலின் எதிரியபுன் முறையால் என்றுமுள தென்றமிழென் றேத்தவிசை பூத்த முத்தமிழர் வழிவழியா மூத்துமுதிர் வாழ்க்கை முறைகெட்டுப் போயினதே இறைகெட்டாற் போலே. 48 கடைச்சங்கத் ததனிறுதிக் காலமுதற் றமிழர் கலைமரபுங் கவிமரபுங் கருதிநூன் மரபும் பெடைச்சங்கின் முத்தினிறம் பெயர் ந்துகரி தாகிப் பெயர் மட்டும் மாறா பெற்றியினை யடைந்த. 49 செந்தமிழர் ஈட்டிவைத்த செல்வமெனப் போற்றும் சிறுபெருங்காப் பியங்களெனச் செப்புமவை பத்தும் எந்தமிழ ரிடையவயற் சமயமதைப் பரப்ப எழுந்தவையென் றாலதனுக் கெதிருரையு முண்டோ? 50 அகம்புறமும் அவையேயாம் அறம்பொருளின் பம்மும் அருந்தமிழின் புறம்போக்குப் பொருளாக, வந்து புகுந்தபுதுச் சமயமொடிங் கிருந்தபுதுச் சமய பொருள் பாடும் பொருளாகிப் போயதமிழ்ப் பாவே 51 இன்றுபிற கட்சிகளை எள்ளிநகை யாடி இயற்றுமுரை யேகட்சிக் கேற்றமெனல் போல, அன்றுபிற சமயமதை அருவருக்கத் திட்டி ஆக்கினவே அச்சமய அருமறைக ளான. 52 வீரத்தைச் சிறப்பித்து மிகப்பாடி மக்கள் மேம்படமிக் கமைதியொடு வாழ்வித்த திறம்போய் வீரத்தை விலையில்லாப் பொருளாகக் கொள்ள வேண்டாத பொருள்பாடி மேம்பாட்டைக் குறைத்தார். 53 மக்களைப்பா டிப்பாடி வாழ்க்கைமுறை காட்டி வண்ட மிழை யாவளர்த்து வந்தமுறை யதுபோய் மக்களைப்பா டுதல்குற்ற மாகுமெனப் பாடி வாழ்க்கை முறையோடு தமிழ் வளர்ப்பதையும் விட்டார். 54 நாவார அகப்பாட்டும் புறப்பாட்டும் பாடி நற்றமிழை வளர்த்துவந்த நல்லமுறை யதுபோய்த் தேவாரத் திருமுறையும் திருநாலா யிரமும் திருப்பாட்டும் மிகப்பாடி வெறுப்பூட்ட லானார். 55 வளம்பாடிக் குடிமக்கள் மறம்பாடி மன்னர் மருவாரைப் புறங்கண்டு மலர்வாகை சூடும் களம்பாடும் முறைமாறி அடியார்கள் சமயக் கதைபாடி மறமற்றுக் கடைகாணச் செய்தார். 56 முடிமன்னர் திறம்பாடிக் குடியோம்பி மன்னர் முறைசெய்யப் புலவோர்கள் முறைசெய்த முறைபோய் முடிமன்னர் குடியோம்பும் முறைவிட்டுச் சமய முறையோம்ப அடியார்கள் முறைசெய்ய லானார். 57 மற்போரை விற்போரை வாட்போரைக் கண்டு மறமிக்க முடிமன்னர் முரண்மிக்க சமயச் சொற்போரைத் தோலாது தொடுப்போரைக் கண்டு தொடைதட்டித் தலையாட்டிச் சுவைதுய்க்க லானார். 58 அறநூலும் பொருள்நூலும் ஆராய்ந்து நாளும் அன்போடு குடிகாத்து ஆள்வாரோ சமயத் துறைநூலும் பொருநூலும் துருசாயா ராய்ந்தே துன்போடு குடிகாத்துத் துயரோடு வாழ்ந்தார். 59 அரசியலின் திறம்பாடி அரசர்களை யூக்கி அமைதியொடு நாடாள ஆக்கியவம் முறைபோய் வரிசையொடு தஞ்சமய வளம்பாடி யரசை மாற்றுவதை யடியார்கள் மரபாகக் கொண்டார். 60 எஞ்சமயம் பெரிதுலகில் இதனைவிடச் சிறந்த தில்லையெனக் குருமார்கள் இனிதெடுத்துக் கூறித் தஞ்சமயந் தனையரசர் தழுவிடவே செய்து சமயப்போர் தனில்வெற்றி தான்கண்டு வந்தார். 61 முடிவாக அகச்சமயக் கொடியேந்துந் தமிழர் முயன்றுமுனைப் பொடுபொருது மொழிமாறி வந்து குடிவார மாயிடையே கூர்ந்துதமிழ் நாட்டைக் கொண்ட புறச் சமயமதைக் குடிபெயரச் செய்தார். 62 பாவிசையின் திறத்தாலும் பழமையிணைப் பாலும் பரந்தவகச் சமயத்தார் பலபடியாய் முயன்று மேவியவப் புறச்சமயத் தோடிகல்வெம் போரில் வெளிப்படையாய் உளப்படவே வென்றுபுறங் கண்டார். 63 அந்நால்வ ருடனெண்ணும் அறுபத்து நால்வர் ஆழ்வார்கள் பன்னிருவர் ஆமென்னுந் தொகைதான் அந்நாளின் சமயநிலை இன்னாகு மென்னும் அறிவிப்பே யாமென்னுங் குறிவைப்பே யாகும். 64 நாட்டுநெறி யதுபாடி நாகரிக மாக நல்லரசு நடந்திடவே நயக்குமுறை யதுபோய் வீட்டுநெறி யதுபாடி நாட்டுமக்க ளிடையே வேற்றுமையுண் டாக்கியிகல் விளைத்துமனங் களித்தார். 65 வாழ்விலொரு கூறாக வாழ்க்கைமுறை யாக மக்களெல்லாம் பின்பற்றி வாழ்ந்துவந்த சமயம் வாழ்வையொரு கூறாக்கி வாழ்வைவிட்டு வேறாய் வாழ்வுகெட வேற்றுமையை வளர்த்துவர லாச்சே. 66 4. இடைக்காலத் தமிழரசர் (கி.பி. 600 - 1070) சிந்து கோட்புலி போன்ற திறலினான் - கடுங் கோனெனும் பாண்டிய மன்னவன் வாட்புலி போற்பகை வென்றுமே - பாண்டி மண்டலத் தையாண்டு வந்தனன். 1 வெட்டிய கட்டை தழைத்தல்போல்- பகை வென்று களங்கொண்டம் மாறனும் கட்டிய கட்டை யவிழ்த்துமே - குடி காத்துமே வன்புகழ் பூத்தனன். 2 பகைவர் முதுகெனும் பட்டயந் - தனில் பாவலர் பாடுந்தன் வெற்றியை வகைபட வேநன் கெழுதியே - வாகை மலைந்தனன் வேம்போ டிலங்கவே. 3 கன்னி மணந்த நிலத்தினை - விட்டுக் காரிரு ளாம்பகை யோடவே தென்னர் மரபு விளங்கவே - தமிழ்ச் செங்கதி ரென்னவி ளங்கினான். 4 வண்டமிழ்ப் பாண்டிநன் னாட்டினைச் - சூழ்ந்த மாசினைப் போக்கி மகிழ்வுடன் தண்டமி ழன்னைமுன் போலவே - முடி தாங்கிடச் செய்திசை யோங்கினன். 5 அயலவ ராட்சிக் கொடுமையால் - முந்நூ றாண்டு சிறையிருந் தேங்கிய குயின்மொழி யன்னை யுவப்பவே - செங் கோன்முறை காத்தனன் நூன்முறை. 6 மன்னன் கடுங்கோன் வழியிலே - வந்த மன்னவர் தென்னவர் மாண்பினை இன்ன வெனவறி யாமலே - முற்றும் ஏறுக்கு மாறாய் நடந்தனர். 7 பாலும் பழமுமப் பால்படும் - வெல்லப் பாகும் பசுந்றுந் தேனெனும் நாலுங் கசக்க வினித்திடும் - தமிழ் நன்னெறி விட்டு விலகினர். 8 நாறு நறுமலர் விட்டுமே - கெட்ட நாற்ற மலர்சூடு நங்கைபோல் மாறன் வழுதி செழியனை - விட்டு வர்மன் எனும்பெயர் பூண்டனர். 9 மன்னன் கடுங்கோன் திருமகன் - மாற வர்மன் அவனிசூ ழாமணி இன்னவன் றன்முத லேதமிழ் - பாண்டிய ரின்பெயர் சொல்ல மறந்தது. 10 பெற்று வளர்த்தவப் பிள்ளைக்குத் - தாயின் பேருங் கசந்தது பேணிய மற்றவ் வடமொழி மங்கையின் - செய்கை வன்மையே யென்ப தறிகுவீர் 11 பேருங் கசந்தது மட்டுமா - தமிழ்ப் பெட்புங் கசந்தது பெட்புடன் சீருங் கசந்தது சீருடன் - செய்யும் செய்கை யனைத்துங் கசந்ததே. 12 தத்தம் நிலத்தினைக் காத்துமே - தமிழ்த் தாயின் தனிநலம் பேணிய முத்தமிழ் மூவர் முறையினை - விட்டு முன்னுக்குப் பின்னாய் நடந்தனர். 13 நாட்டுக் குடிகளைக் காப்பதே - மன்னர் நற்றொழி லென்பதை விட்டுமே நாட்டுக் குடிகள் நலியவே - பக்கத்து நாட்டினைக் கொள்ள நயந்தனர். 14 தோன்றிய நாள்முதல் மூவரும் - சென்ற தொன்னெறி விட்டு விலகியே மூன்றையு மாண்டிட வேண்டியே - தத்தம் மொய்வலி கொண்டு முனைந்தனர். 15 ஆற்ற லிழந்துமே சோழர்கள் - பல்லவர் ஆட்சியின் கீழ்ச்சிற் றரசராய் ஏற்ற மிழந்துதந் நாட்டிலே - அங்கு மிங்குமா கத்தங்கி வாழ்ந்தனர். 16 தம்மவர் கீழ்மைய கற்றியே - தமிழ்த் தாயின் குறையினை யெற்றியே செம்மை புரிந்திட எண்ணிலர் - சோழர் சிறுமை யகலவே பண்ணிலர். 17 தமிழ்ப்பகை போக்க நினைந்திலர் - தமிழ்த் தாயினற் சேயென் றுணர்ந்திலர் தமிழ்ப்பகை போற்கொ டினைந்தனர் - மாறர் தனிக்கொடி நாட்ட முனைந்தனர். 18 மாறவர் மனரி கேசரி - பாண்டிய மன்னர்கள் சென்ற வழியினை மாறியே யேனை யிருவரைத் - தமிழ் மாற்றல ராக மதித்தனன். 19 அண்ணனுந் தம்பியு மாயவர் - பங் காளிக ளாய்ப்பகை யாதல்போல் மண்ணசை யேனை யிருவரை - அம்மாறன் வாள்வலி யால்வென் றடக்கினான். 20 உள்ள மொடுங்கி யடங்கியே - உறை யூரி லிருந்தவோர் சோழனைத் தள்ளிவிட் டவ்வரி கேசரி - அங்கு தன்னர சாட்சி நிறுவினான். 21 எந்தமி ழெண்ணா யிரவரைக் - கழு வேற்றிய அம்மாற வர்மனும் செந்தமிழ்ச் செங்கோற் பொறையனை - வென்று சேரநாட் டையுங்கைக் கொண்டனன். 22 பல்லவன் ஆற்றலைப் போக்கியே - தமிழ்ப் பாண்டிய நாட்டினை நோக்கியே வல்லமை யோடுசா ளுக்கிய - விக்கிர மாதித்த னின்படை வந்தது. 23 வம்புக்கு வந்தசா ளுக்கிய - விக்கிர மாதித்த னையரி கேசரி கம்புக்கு வந்தபுன் காரிபோல் - புறங் காட்டியே யோடிடச் செய்தனன். 24 கோளரி போலரி கேசரி - மைந்தன் கோச்சடை யன்ரண தீரனும் ஆளரி போலவன் மைந்தனை - மங்க லாபுரத் தேசென் றடர்த்தனன். 25 அச்சடை யன்மக னாகிய - ப ராங்குச னாமாற வர்மனும் கட்சியில் காடவர் காட்சியை - ஒற்றிக் கண்டரி போலக் கனன்றனன். 26 நந்தி புரத்தி லிருக்கையில் - இரண்டாம் நந்திவர் மப்பல்ல வமல்லன் செந்தமிழ்ப் பாண்டிய மன்னனும் - அதைச் சென்றுமே முற்றுகை யிட்டனன். 27 தன்னிறை முற்றகப் பட்டதை - உதய சந்திரன் என்னும் படைவலான் முன்னுறக் கண்டு முனைந்துமே - பகை மூளக் களம்பல கண்டனன். 28 வேங்கையும் வில்லும் ஒடுங்கவே - மாடும் மீனும் இகலித் தொடங்கவே பாங்குட னெண்ணூ றதனிடை - மூண்டது பாண்டிய பல்லவப் போருமே. 29 வெற்றியுந் தோல்வியுங் கிட்டவே - மாடும் மீனும் அடிக்கடி முட்டவே கற்றவ ருள்ளங் கலங்கவே - நாட்டைக் காடுமே டாக்கிக் கலக்கின. 30 தத்தம தெல்லை தனிலவர் - வெற்றி தானடைந் தாரன்றி யேயவர் இத்துடன் இப்போர் முடிந்தது - போர் இல்லையென் னாமல் இருந்தது. 31 எனினு முடிவினிற் பல்லவன் - வெற்றி எய்தின னேனுமவ் வெற்றியைத் தனதெனக் கொள்ளுத லின்றியே - அவன் தன்னகர் நோக்கி நடந்தனன். 32 வேளையோ டுவேளை யாகவே - இரண்டாம் விக்கிர மாதித்த னென்பவன் காளையா டுமாடக் காஞ்சியை - வந்து கைப்பற்றி னானதற் காகவே; 33 சென்று விரைந்துசா ளுக்கியன் - பெருஞ் சேனை கலங்கச் செருவிலே வென்று துரத்தியே பல்லவன் - மாறனை வெல்லும் வேளைபார்த் திருக்கையில்; 34 சங்கப்பிற் காலத் திருந்தெண்ணூ - றாண்டு தன்வரை யாண்டவர் பாண்டியர் தங்கத் தமிழ்வர லாற்றினைச் - செப்பேடு தந்தவந் நெடுஞ்ச டையனும்; 35 தந்தையை வென்றவப் பல்லவ - மல்லன் தன்னைப் பெண்ணாகடந் தன்னிலே வந்த வழியே துரத்தினான் - தென்னவர் மானத்தை நிலைநி றுத்தினான். 36 தந்தையின் தோல்வியைக் கண்டவன் - மைந்தன் தந்திவர் மனெதிர் வந்தனன் வந்தவன் அவ்வழி யோடவே - முதல் வரகுணன் வென்று துரத்தினான். 37 வரகுணன் மைந்தன்சீ மாறனும் - தந்தி வர்மன் மகன்மூன்றாம் நந்தியும் பொருபுலி போல எதிர்த்தனர் - தெள்ளாற்றுப் போரினிற் பாண்டியன் தோற்றனன். 38 தோற்றவப் பாண்டிய மன்னனும் - தம் தொன்மையை யெண்ணி வருந்தியே மாற்றல னைக்குட மூக்கினில் - துணை வந்தவ ரோடு துரத்தினன். 39 துரத்திய மாறன் துணுக்குற - நிருப துங்க னெனுநந்தி தன்மகன் அரிசிற் கரையிடைப் பாண்டிய - மன்னன் ஆண்மை கெடக்களத் தார்த்தனன். 40 தந்தையின் தோல்விமுன் வந்துமே - தலை தட்டவி ரண்டாம் வரகுணன் நந்தமிழ் காக்க நடந்தனன் - அப ராசிதன் ஏற்றெதிர் வந்தனன். 41 அல்லும் பகலும் பொருதிடக் - கண் டடங்கி யொடுங்கியோர் மூலையில் வெல்லுங்கா லம்பார்த் திருந்தனன் - சோழன் விசயா லயனெனும் வேந்தனும். 42 பாண்டிய பல்லவப் போரிடை - காலம் பார்த்திருந் தவிச யாலயன் வேண்டிய காலமுங் கூடவே - தஞ்சையில் வேந்தனா கமுடி சூடினான். 43 நற்கால மின்றியோ ரேழுநூ - றாண்டு நலிந்திருந் தேயர செய்திய பிற்காலச் சோழப்பே ராட்சிக்கு - வித்திட்ட பேரிசை யாளனிச் சோழனே. 44 புலியு மாடுமொன்று கூடியே - திருப் புறம்பியத் தேபோ ராடியே வலிய மீனையெண்ணூற் றெண்பதில் - இரண்டாம் வரகுணன் தோற்றோட வென்றன. 45 பாண்டியன் தோற்றனன் ஆயினும் - அத்துடன் பல்லவ ராட்சி முடிந்தது. வேண்டிய காலங்கை கூடவே - சோழர் வெற்றி முரச மதிர்ந்தது. 46 அப்பெரும் போரின் முடிவினால் - விச யாலயன் மைந்தனா தித்தனும் துப்புறழ் சோழநன் னாட்டொடு - பல்லவர் தொண்டை யினையுங்கைக் கொண்டனன். 47 படைநலிந் தேயப ராசிதன் - எனும் பல்லவன் அப்பெரும் போரினால் நடைமெலிந் தம்மர போயவே - தொண்டை நாட்டை யிழந்து நலிந்தனன். 48 அத்துடன் சோழர்கள் நின்றிலர் - அவ் வாதித்தன் மைந்தன் பராந்தகன் முத்தமிழ்ப் பாண்டிநன் னாடனின் - ஓடும் முதுகினைக் கண்டு மகிழ்ந்தனன். 49 கொண்ட லடித்தது போலவே - கடுங் கோடையு மாறி யடித்தல்போல் தொண்டையை இராட்டிர கூடரும் - கங்கரும் தோள்வலி கொண்டுமே தாக்கினர். 50 இந்தநற் கால மறிந்துமே - வாள் ஏந்தியே அவ்வீர பாண்டியன் தந்தை யிழந்ததன் நாட்டினை - மீட்டுத் தன்னர சாட்சி நிறுவினான். 51 பாடமை மாட மதுரையில் - வீர பாண்டியன் ஆட்சி புரிகையில் ஆடு புலிக்கொடிச் சோழனும் - பாண்டியன் ஆட்சியைக் கைப்பற்ற எண்ணினான். 52 தென்றலை வாடை செறுத்தல்போல் - ஆ தித்த கரிகாலச் சோழனும் கொன்றனன் வீரபாண் டியனை - முளை கொல்லுங் கொடியரைப் போலவே. 53 பத்திடை நூற்றி லிருந்துமே - மூன்று பத்துப்பத் தாண்டந்தப் பாண்டியர் அத்தமிழ் நாட்டிடைச் சோழர்கீழ்ச் - சிற் றரசர்க ளாய்வாழ்ந்து வந்தனர். 54 அவ்விடைக் காலத்துச் சோழர்கள் - மண் ணாசையால் கொண்டபே ராட்சியை இவ்விடை நீங்கள் அறிகுதல் - மேலும் இவ்வர லாற்றினுக் கேற்றதாம். 55 அன்ன பராந்தகன் பேரனின் - மைந்தன் ஆன முதல்ராச ராசனும் தன்னர சாட்சியி னெல்லையை - முத் தமிழக மட்டிலு மன்றியே; 56 கன்னடம் ஆந்திரம் இராட்டிரம் - ஈழம் காந்தளூர் வேங்கி கலிங்கமும்; தன்னர சுக்குட் படுத்தியே - வென்றான் தண்கட லுட்பழந் தீவையும். 57 மன்னர்மன் னனெனும் அன்னவன் - முதல் மைந்தனா யவிரா சேந்திரன் இன்னுந்தன் ஆட்சியி னெல்லையைக் - கட லெல்லை கடந்து பெருக்கினான். 58 இக்கரை யக்கரைக் கங்கையை - ஆண் டிருந்த அரசர் பலரையும் ஒக்கவே வென்று புலிக்கொடி - வானில் ஓங்கிப் பறந்திடச் செய்தனன். 59 கங்கைகொண் டதோட மைந்திலன் - கடல் கடந்து கடாரமுங் கொண்டனன் கங்கைகொண் டபுரங் கட்டினான் - சோழ கங்கமும் ஆங்கவன் வெட்டினான். 60 வெந்திறல் மேவிரா சேந்திரன் - வட மேற்கிந்தி யாவொன் றொழியவே இந்திய நாடு முழுதுந்தன் - ஆட்சியின் எல்லையாக் கொண்டே இலங்கினான். 61 வெங்கலி போன்றுமூ வாறுகால் - இந்தியா மேய கசினி மிடலினைக் கங்கைமன் னன்மகி பாலனும் - சோழன் கடற்படை கொண்டே யொழித்தனன். 62 அங்கவன் ஆட்சி நிலைத்திருந் - திருந் தால்முக மதிய ராட்சியும் இங்காங்கி லேயரின் ஆட்சியும் - ஏற்பட் டிருக்குமோ சொல்வீர் சுருக்கமாய்? 63 பேரர சென்னும் பெயருடன் - வென்று பிடித்ததைக் கட்டிப் பிடிக்கவே பாரர சனிரா சேந்திரன் - பாடு பட்டுவா ணாளைக் கழித்தனன். 64 மாடு பிடித்திடு மாசையால் - தம் மதிப்பை யிழக்கும் மறவர்போல் நாடு பிடித்திடும் ஆசையால் - தம் நல்லர சாட்சி யிழந்தனன். 65 ஆட்சித் தொழிலி னடிப்படை - மக்கள் அமைதியாய் வாழ்ந்திடச் செய்திடும் மாட்சியே யென்றல் மறந்துமே - ஆட்சி மாற்றமே ஆட்சியாக் கொண்டனர். 66 உடலினைக் காக்கும் உயிரதே - அவ் வுடலை யழித்திடுந் தன்மைபோல் குடிகளைக் காக்கும் அரசரே - அக் குடிகளைக் கொன்று குவித்தனர். 67 காடு கெடுத்துநா டாக்கியே - குடி காத்த கரிகாலன் ஆட்சியை நாடு கெடுத்துக்கா டாக்கிய - இவர் நாடில தேநலக் கேடதாம். 68 மன்னனி ராசேந்தி ரற்குப்பின் - அவன் மைந்தர்கள் மூவருந் தந்தையின் தன்னர செல்லையைக் காப்பதே - செய்து தங்கள்வா ணாளைக் கழித்தனர். 69 பாயிரு ளோடப் பொருதிடும் - இருள் பாய்ந்திட வோய்ந்து பதுங்கிடும் ஞாயிறு போல் இவர்களும் - அந்தோ! நாளும் பொருது நலிந்தனர். 70 போரினில் வாணாளைப் போக்கிய - அப் புலிக்கொடிச் சோழர்கள் மூவரில் வீரரா சேந்திரன் மைந்தனும் - முடி வேய்ந்தனன் அதிரா சேந்திரன். 71 அன்னவன் மன்னவ னாகிய - கி.பி. ஆயிரத் தோடெழு பத்திலே துன்னிய உட்பகை கொன்றது - தமிழ்ச் சோழர் மரபுயிர் நின்றது. 72 இத்தகு சூழ்நிலை தன்னிலே - முன்னர் இழந்ததந் நாட்டைக்கைப் பற்றியே முத்தமிழ்ப் பாண்டிய மன்னவர் - சிலர் மொய்ம்புட னாண்டுமே வந்தனர். 73 கும்மி பல்லவர்க் குந்நாட்டைக் கோட்டைவிட் டாங்கு பதுங்கி யிருந்த பழஞ்சோழர் பல்லவ ரோடுகூ டிப்பகை யோட்டிய பாண்டிய ரைவென்ற தெம்முறையோ? 74 மாப்பகை வென்றுதன் நாட்டினை மீட்டவம் மன்னன் கடுங்கோ னுடன்கூடி ஆப்பகை யைச்சோழர் வென்றிருந் தாலயல் ஆட்சியிந் நாட்டை யலைக்குறுமோ? 75 நாடு பிடிப்பதே நாகரி கம்மென நம்பிய இக்காலச் சோழர்களால் ஆடு தமிழ்க்கொடி ஆடிய அவ்விடத் தாடவு மான தயற்கொடியே. 76 நாட்டினை யாள்வதை விட்டுவிட் டுப்பிற நாடு பிடிப்பதே நாட்கடனாய் வேட்டினம் வீழ்த்தித் தமிழ்க்கொடித் தூண்களில் வேற்றுக் கொடியாடச் செய்துவிட்டார். 77 மக்களைக் காப்பதை விட்டுவிட் டுமக்கள் மன்னரைக் கண்டு மனநடுங்க மக்களைக் கொன்று குவித்தவர் கண்டவம் மாண்பயன் யாதோ வறிந்திலமே! 78 மூவரு முந்தையோர் போற்றந் நிலத்தை முறையுட னாண்டுமே வந்திருந்தால் ஏவரும் போற்றத் தமிழர சின்னும் இனிதுமுன் போல விருக்காதோ? 79 வீர மெனுமறப் பண்பின் பொருளினை வேறு படக்கொண்ட வாறதனால் போரினிற் கொல்வதே வீர மெனக்கொன்று பொய்யினால் மெய்யைப் புதைத்துவிட்டார். 80 அஞ்சாமை யாண்மை யருளுறுதி யஃகா ஆற்றல் இனத்தொண் டவையனைத்தும் எஞ்சாமை யுள்ளதே வீரமல் லாற்றம் எதிரியைக் கொல்வதே வீரமன்று. 81 கங்கைகொண் டானக் கடாரங்கொண் டானதால் கண்ட பயனென்றன் கான்முளைகள் பொங்கிய போரிற் புகுந்துவா ணாளினைப் போக்கிய தேயப் புதுப்பயனாம். 82 அயலவர் நாட்டைப் பிடிப்பதும் ஓர்சில ஆண்டி லிழப்பது மங்ஙனமே முயன்று பிடிப்பதும் போர்முறை யாக முயன்றுவா ணாளை முடித்தனரே. 83 மற்றொரு நாட்டினைக் கைக்கொளின் அந்நாட்டு மக்களைக் காத்திட வேண்டுவதால் உற்றதன் னாட்டினைக் காத்தலே மேலெனும் உண்மை யறியா துழன்றனரே. 84 தனித்தனி யாகத் தமிழகத் தைமுடி தாங்கிய மூவரும் பாங்குடனே இனைத்தென வெண்ணறி யாதினி தாண்டதை எண்ணிலர் மண்ணசை கண்ணிலதால். 85 தத்தங் குடிகளைக் காத்தலே - அவ்வத் தலைவர் கடமை யதைவிடுத்து கத்து கடலுல கத்தினைத் தன்னிழல் காண்பது மன்னரின் மாண்பலவே. 86 ஏரி குளங்களோ வெட்டிலர் - ஆற்றின் இடையினிற் பாலமோ கட்டிலரே ஏரி குளங்களை வேருட னேயழித் தின்னலெந் நாளும் இழைத்தனரே. 87 ஊரினைச் சீருறச் செய்தில ரேவள மோங்கிட நன்னலம் பெய்திலரே ஊரெரி யூட்டி யுறுபொருள் வீட்டியவ் வூரழு தேங்கிடச் செய்தனரே. 88 அரிதின் முயன்றுமே கட்டிய செந்தமிழ் ஆட்சித் தலைநகர்க் கோட்டைகளை எரியுணச் செய்தும் இடித்தும் தமிழர்தம் எய்ப்பினில் வைப்பை யழித்தனரே. 89 சிற்றில் சிதைக்குஞ் சிறுவர்கள் போல்நாட்டுச் செல்வங்கள் யாவுஞ் சிதைத்திடுதல் வெற்றியின் தோற்ற மெனக்கொடு நாட்டினை வெங்கடுங் காடாகச் செய்தனரே. 90 கொள்ளை கொலைகள் புரிவதுஞ் செய்யாக் கொடுமைகள் செய்து திரிவதுமாங் குள்ள பொருளை யழிப்பதும் போரின் உறுப்பெனக் கொண்டே யுவந்தனரே. 91 உயிரொடு தோலை யுரித்தலும் ஒவ்வோர் உறுப்பாச் சிதைத்தலும் மங்கையர் தம் மயிரொடு மூக்கை யறுத்தலும் மன்னவர் வன்றிற லாக மதித்தனரே. 92 சுமக்க முடியாச் சுமையை யொருவன் சுமக்கத் துணியின் சுமையதனைச் சுமக்க முடியா திடர்ப்படல் போலிவர் தோள்வலி குன்றித் துயருழந்தார். 93 ஓங்கு நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி னுயிர்போ யொழிவரெனும் பாங்கறி யாது பகைபல கொண்டுதம் பாடுந்தந் நாடும் பலரிழந்தார். 94 செப்பேடு பட்டயங் கல்வெட்டி லன்னார் செதுக்கிவைத் துள்ளமெய்க் கீர்த்தியெலாம் அப்போர்கள் வெற்றியும் கோயில் குருக்கட் களித்த கொடைகளின் ஆவணமே. 95 நாட்டுமக் கட்குறுங் கேட்டினை யன்றியோர் நன்மையுஞ் செய்ததாக் காணவில்லை நாட்டு வளத்தை யழித்தொழித் தன்னார் நடுங்கிடச் செய்ததே நன்மைகளாம். 96 5. போலிச்சோழர் (1070-1279) சிந்து முத்தமிழ்க் காவல ராய முடியுடை மூவரும் - தமிழ் மூன்றெனச் செங்கோல் முறைதவ றாது முறைப்படி தத்த நிலத்தினைத் தாயென அன்பு தழைக்கவே - ஒரு தப்புமில் லாமலே எப்பொழு துங்காத்து வந்தனர். 1 ஆண்மையும் வீரமும் மானமு முள்ள அரசர்கள் - தம் ஆற்றலி னாற்பகைத் துப்போர் புரிவ தியற்கையே. வாண்மை மிகுந்தவம் மூவரி லேயெவ ராயினும் - என்றும் மற்றவர் நாட்டினைக் கொள்ள நினைத்தது மில்லையே. 2 ஆனால் முதல்ராச ராசச்சோ ழன்முத லாயினார் - மண் ஆசையால் தமிழ கத்தினை யோர்குடை நீழலில் தானாள வெண்ணித் தமிழ்முறை விட்டுத்த மாற்றலால் - தமிழ்ச் சங்க மதுரையும் வஞ்சியுங் கொண்டு தருக்கினார். 3 வாயும் மனமுஞ் செவியு மொருங்கே யினித்திடும் - தமிழ் வண்பெயர் விட்டிரா சபர கேசரி யென்றுமே வாயும் மனமுஞ் செவியு மொருங்கே கசந்திடும் - அவ் வடமொழிப் பட்டம் புனைந்து தமிழை மறந்தனர். 4 செந்தமி ழன்னையு வந்தழைத் துக்களிப் பெய்திய - அச் சென்னி வளவன்கிள் ளியெனு மப்பெயர் விட்டுமே நந்தமிழ்த் தாயுள நாணிக்கை யாற்செவி பொத்தவே - தமிழ் நாவும் வெறுத்திடும் பேர்வைத்துக் கொண்டனர் மெத்தவே. 5 சுமக்க முடியாச் சுமையை வலுவில் சுமப்பவர் - அச் சுமையைச் சுமக்க முடியாமல் துள்ளித் துடித்தல்போல் தமக்கய லார்நிலங் கொண்டு தனித்த தருக்கினால் - பகை தாங்க முடியாது தத்தளித் துத்தடு மாறினார். 6 வில்லின் முனைகள் வளைந்து கொடுமை விளைத்தல்போல் - வட மேலைச் சளுக்கரும் கீழைச் சளுக்கரும் மேவியே அல்லும் பகலுமச் சோழர் படைக்கட லாழவே - தமிழ் ஆட்சி யினிது நடக்காம லேசெய்து வந்தனர். 7 மூண்ட பகையினை முற்றிலும் வெல்ல முடியுமோ? - தீக்குறை மூளுதல் போற்பகை மூண்டுமே தொல்லை கொடுக்கவே ஆண்டு பலபெரும் போரிற் கழித்தே அலுத்ததால் - என்றும் அமைதியில் லாம லிருந்த முதல்ராச ராசனும்; 8 உரலுக் கொருபுறம் மத்தளத் துக்கோ இருபுறம் - இடி உண்டெனு முண்மை யதனை யினிதி னுணர்ந்துமே விரலுக் கிடுங்கணை யாழி விரலினைக் காத்தல்போல் - பகை வென்றுமே மேம்படக் கண்டுமே யோர்வழி மேயினான். 9 தன்மகள் குந்தவை தன்னைத் தமிழ்முறை யன்றியும் - கீழைச் சாளுக்கி யவிம லாதித்த னுக்குக் கொடுத்துமே தென்முக மான முழவை யுரலெனச் செய்துமே - என்றுந் தீராப் பகையி லிருந்தொரு வாறு திருந்தினான். 10 குந்தவை மைந்தன் தனக்கவள் தம்பிரா சேந்திரன் - தன் குலக்கொடி யான குயின்மொழி அம்மங்கை தேவியைத் தந்துமே கீழைச்சா ளுக்கியர் வெம்பகை தள்ளினான் - அம்மங்கை தன்மக னான குலோத்துங்கன் என்னுஞ்சா ளுக்கியன். 11 வண்புகழ் மூவர் வழிவழி நூலின் வழியிலே - தமிழ் மக்களைத் தாயினு மன்புடன் காத்துமே வந்தவித் தண்பொழில் வேலித் தமிழக மன்னவன் ஆகவே - அவன் தன்மனத் தெண்ணி யதுபெறச் சூழ்ந்துமே வந்தனன். 12 மாங்கனி கண்ட குரங்கென வான்வளம் மல்கிய - தமிழ் மண்ணினைக் கண்டதன் மன்னவ னாய்வாழ எண்ணியே வேங்கி யிளவர சாய்முடி சூட்டிடப் பெற்றுமே - அதை விட்டுக்கங் கைகொண்ட சோழ புரத்தே யிருந்தனன். 13 கங்கைகொண் டசோழன் மைந்தனாம் வீரரா சேந்திரன் - தன் கான்முளை யாமதி ராசேந்தி ரன்றனைக் காட்டிலும் தங்கை மகன்குலோத் துங்கனை யன்பு தழைக்கவே - மகன் தன்னிலை தன்னிலே பொன்னெனப் போற்றியே வந்தனன். 14 வெற்றி மிகுந்தவவ் வீரரா சேந்திரன் வீயவே - அவன் மேமக னாந்தமிழ் மாமகன் அதிரா சேந்திரன் பெற்றவன் பின்சோழப் பேரர சாய்முடி சூடியே - பகை பின்னிடத் தென்னகந் தன்னை யினிதாண்டு வந்தனன். 15 மற்றவற் குப்பிள்ளை யின்றெனுங் காரணங் காட்டியே - தாய் மாமன் மகனெனும் அந்த வுறவையும் ஓட்டியே நற்றிறல் மன்னவன் நோயால் நலியுமந் நாளிலே - உள் நாட்டுக் குழப்பத்தைத் தோற்றுவித் தானந்த நன்றிலான். 16 காரண மென்னவோ கண்டிலம் ராசரா சன்முதல் - நம் கன்னித் தமிழ ரிருக்க வடக்கி லிருந்துமோர் ஆரியன் தன்னை யழைத்துவந் தவ்வய லாளனைக் - குரு வாக்கியே யன்னவன் ஆணைப்ப டியாண்டு வந்தனர். 17 அங்ஙன மேயவ னேதமி ழாட்சியைப் போக்கியே - வட ஆட்சி யினைத்தமிழ் நாட்டினி லேநிலை நாட்டிடக் கங்கணங் கட்டிக்கொண் டல்லும்ப கலுமு ழைக்குங்கு - லோத்துங் கன்குரு வானஈ சான சிவனெனுங் கல்லனான். 18 எப்பாடு பட்டேனும் முத்தமிழ் மூவ ரினத்தினை - இங் கில்லாம லொழித்துக் கட்டியே அந்த விடத்திலே மப்பூடு போன்ற குலோத்துங்கன் தன்னையும் வைத்துமே - தமிழ் மாநில மன்னவ னாக்க முனைந்துள வஞ்சகன். 19 அன்னவ னேயதற் காகவே மன்னவ னாகிய - நா டாண்டு வருமதி ராசேந்தி ரற்கெதி ராகவே நன்னல மற்றவன் ஆளுந் திறமிலா னென்றுமே - உள் நாட்டுக் குழப்பத்தை முன்னின்று நடத்தி வந்தனன். 20 உட்பகை யாளர் கொடுமையா லுள்ள முடைந்துமே - நாளும் உள்ளும் புறமுநோய் தின்ன வுடம்பு நலிந்துமே மட்புகச் சோழ அரச மரபுமண் மீதிலே - தமிழ் மக்க ளிரங்கிட மன்னவன் அந்தோ மறைந்தனன்! 21 இன்ன வெனவறி யாதவக் காலத் திருந்துமே - புக ழேந்திய மூவர் மரபிலொன் றாக விருந்துமே மன்னவ னாமதி ராசேந்தி ரனொடிம் மண்ணிலே - வழிவழி வந்த பழந்தமிழ்ச் சோழர் மரபு மறைந்ததே. 22 கோமகன் வீவெதிர் நோக்கி யிருந்த குலோத்துங்கன் - தன் குருவின் திறத்தினை மெச்சிநன் னாளுங் குறித்துமே மாமன் மகள்மது ராந்தகி தன்னை மணந்துமே - தமிழ் மன்னவ னாய்முடி சூடி யரியணை யேறினான். 23 செந்தமிழ்ச் சோழர் திருவடி தாங்கிய அவ்வணை - தன் சீருஞ் சிறப்புஞ்செல் வாக்கு மிழந்து திரங்கியே வந்து புகுந்துதன் வஞ்சனை யாலர செய்திய - வட மன்னவன் காலடி தாங்கி யிரங்கி மருண்டதே! 24 விழிவழிக் கோளு மணமிகு மையை மிகைக்கவே - மூக்கு மிசைவழிக் கோளும் வகையினைப் போல மிசைக்கவே வழிவழிச் சோழ மரபினர் சூடு மணிமுடி - குறுக்கு வழியிலே வந்தவம் மன்னன் மணிமுடி யானதே! 25 பாண்டியை யாண்டமீ னாட்சியைப் போல்மது ராந்தகி - சோழப் பட்டத் தரசியாய்ப் பட்டந் தரிக்குத லேமுறை. ஈண்டு குலோத்துங்கன் சோழர் மணிமுடி சூடியே - அணை ஏறிய தென்முறை யோவிது காறுந் தெரிந்திலேம். 26 ஈங்கினு மெத்தனை யோபெண் ணரசிய ரிந்நிலந் - தனை எழின்முடி சூடி அரசு புரிந்தா ரிசையுடன் ஆங்கில நாட்டைமுன் ஆண்டவிக் டோரியா அன்றியும் - இன் றாண்டிடும் எலிச பத்தும் எடுத்துக்காட் டாவரே. 27 வம்பிலே சோழ மணிமுடி சூடியம் மன்னனாய் - ஆண்டு வந்த குலோத்துங்கன் ஆதியா யன்னவ ரெண்மர்கள் செம்புனல் சிந்தி யழத்தமி ழன்னை தெருவிலே - வட செல்வியைப் போற்றி வளர்த்துமே வந்தனர் சீருடன். 28 நல்லதன் காதல் மனைவி குடும்பம் நடத்தவே - வேறொரு நங்கையைத் தன்மனை தங்கிடச் செய்யு நடத்தைபோல் மல்லலந் தண்டமி ழன்னை வழிவழி வாழவே - இங்கு வடமொழி நங்கையைப் போற்றி வளர்த்துமே வந்தனர். 29 ஆயிர மாயிர மாகத் தமிழகந் தன்னிலே - வட ஆரிய ரைக்குடி யேற்றி யடிக்கடி யன்னவர் ஆயிரங் கால மமைதியா யின்பொடு வாழவே - எங்கும் அகர மமைத்து நிலபுல மற்றும் அளித்தனர். 30 உண்ணா துறங்கா துழைக்குந் தமிழர்செல் வத்தினை - அன்னார் உண்டு களிக்க இறையிலி யாக உதவினர். எண்ணா யிரத்தார் குலமெனத் தன்னையோர் ஐயரும் - மிக ஏக்கழுத் தமொடு கூறுதல் சான்றிதற் காகுமே. 31 தொல்வர வின்றிப் புதுவழி யில்வந்து தோன்றிய - போலிச் சோழர்க ளெண்மரும் ஈருநூ றாண்டிங்கு வாழவே நல்வர வேற்று வடமொழி நங்கை நலம்பெறச் - சோழ நாட்டினை யாண்டதை ஏட்டி லெழுதவுங் கூடுமோ! 32 தாழிசை அயற்படு மரசு நந்தம் அருந்தமி ழகத்தை யாளச் செயற்படுத் தியவீ சான சிவனது செயலைக் கண்டாம். 33 செந்தமிழ் சிதையச் செய்யுஞ் செயற்பட அவன்போ லீங்கு வந்தவ னான ஈசு வரசிவன் அவனில் மிக்கான். 34 அன்னவ னவ்வா றேமூன் றாங்குலோத் துங்கன் தன்னால் பொன்னில மதனில் நச்சுப் பூண்டினை வளர்த்து வந்தான். 35 குடிவழிப் படுந்தாய் நாட்டுக் குடிகளைக் காத்தல் விட்டு வடவரைக் குடியேற் றித்தென் மரபினைச் சிதைக்கச் செய்தான். 36 இத்தகு செய்கை யாலே இனைத்தென வறிகிலாத முத்தமிழ் மரபு கெட்டு முன்னுக்குப் பின்னா யிற்றே. 37 இலக்கண வரம்பு விட்டே இலக்கிய மரபு கெட்டே கலக்கிய நன்னீர் போலக் கசந்தது தமிழர் வாழ்வே. 38 பாவலர் மரபு மாறிப் பைந்தமிழ்ப் பாடல் மாறி நாவலர் நாவு கோடி நலிந்தது தமிழர் வாழ்வே. 39 தமிழர்கள் வெறுத்து வந்த தமிழ்ப்பகைக் கதைக ளெல்லாம் தமிழினில் முனைந்து பாடத் தாழ்ந்தது தமிழர் வாழ்வே. 40 பைந்தமிழ் மன்னர் வீரம் பாடிய புலவர் செந்நா நொந்தயல் மன்னர் வீரம் நுவன்றிட லான தம்மா! 41 நிடதமும் அயோத்தி யுந்நன் னெறியது புகட்டு கின்ற இடமெனப் புலவர் பாடும் இழிநிலை யடைந்தா ரம்மா! 42 மதுரையும் புகாருஞ் சேரர் வஞ்சியும் உறந்தை யுந்தம் முதுபுக ழிழந்து மாற்றார் மொழிவழி நடந்த தம்மா! 43 தனித்தமிழ்ப் புலவர் செந்நாத் தன்னியல் பிழந்து கோடிப் பனித்தயல் மொழியைக் கைப்பப் பயின்றுநொந் திட்ட தம்மா! 44 இடம்பொரு ளேவ லற்ற எளியளாய்த் தமிழ்த்தாய் சொந்த இடமதில் குடிகூ லிக்காங் கிருந்திடர்ப் பட்டா ளம்மா! 45 6. பிற்காலத் தமிழரசர் சிந்து தொல்வர வின்றிநா டெய்திய - போலிச் சோழன் குலோத்துங்க மன்னனும் நல்வர வின்றிப்போர் செய்துமே - வாழ் நாளைக் கழித்து நலிந்தனன். 1 பாரிய தன்படை வன்மையால் - செய்த பத்தினுக் கெட்டுப் பழமையில் காருல வும்பொழில் சூழ்தரும் - அக் கலிங்கத்துப் பரணி கொண்டதே. 2 மற்றிவன் செய்தது தாய்வழி - வந்த மன்னர்கள் கொண்டபே ராட்சியைச் சுற்றித் திரிந்துமே காத்ததே - அலால் சொல்லுதற் கொன்றும்வே றில்லையே. 3 இன்னவன் பின்ன ரெழுவரும் - தொடர்ந் திச்செய லேசெய் திளைத்தனர். தென்னவ ரோடிவ ராற்றிய - போர்ச் செய்தி யினையினிக் காணுவாம். 4 யானைக்கால் பட்டுத் தளிர்த்தபூங் - கொடி யாமெனப் பாண்டிய ரைவரைத் தானக்கால் கண்டு குலோத்துங்கன் - தமிழ்த் தாயினைந் தேங்க வடர்த்தனன். 5 தென்னவ ரைவரைப் போலவே - சோழர் செம்மர போய்ந்தவக் காலையில் தன்னர செய்திய சேரனை - அவன் தன்படை கொண்டே யடக்கினான். 6 சடையவர் மன்குல சேகரன் - எனும் தண்டமிழ்ப் பாண்டிய மன்னனும் அடைவுடன் நெல்லையில் ஆண்டனன் - மண் ஆசை மிகுதியும் பூண்டனன். 7 மாட மதுரையை முற்றுகை - இட்டான்; மன்னன் பராக்கிரம பாண்டியன் நாடி யிலங்கைப் பராக்கிரம -பாகுவின் நற்றுணை கிட்டிடும் முன்னரே. 8 சினையலர் வேம்பு மிலைந்திடும் - குல சேகரன் என்னுமத் தீயவன் மனைவி மக்களுடன் மன்னனைக் - கொன்று மதுரையைக் கைப்பற்றி யாண்டனன். 9 இலங்கை யரசன் அனுப்பிய - அவ் விலங்கா புரித்தண்ட நாயகன் குலங்கெடக் கொன்ற கொடியனை - வென்று கோமகன் வீரபாண் டியனை; 10 அரியணை யேற்றி மதுரையில் - இருந் தாண்டிட வேமுடி சூட்டினான். கரியவ னாங்குல சேகரன் - பின்னும் கைக்கொண்டான் மாட மதுரையை. 11 மற்று மிலங்கா புரிமுன்போல் - தீய மன்னனை வென்று மதுரையைப் பற்றிமுன் போல்வீர பாண்டியன் - தனைப் பாங்குடன் ஆண்டிடச் செய்தனன். 12 தோற்றவத் தீக்குல சேகரன் - போலிச் சோழ னுதவியை நாடினான் ஆற்றவி ரண்டாமி ராசாதி - ராசன் அக்கொடி யோனுக் குதவினான். 13 சென்று பெரும்படை தம்முடன் -திருச் சிற்றம் பலமுடை யானுமே கொன்றிலங் காபுரி தன்னையும் - கூடற் கோட்டையில் தொங்க அவன்றலை; 14 செய்துமே அக்குல சேகரன் - தனைச் செந்தமிழ் நாட்டர சாக்கினான். செய்த உதவி மறந்துமே - குல சேகரன் சோழன் சினமுற; 15 இலங்கை யரசன் பரிசினை - இனி தேற்றவன் உறவைப் போற்றினான். வலங்கொடு சோழனம் மாறனை - மாட மதுரையை விட்டுத் துரத்தியே; 16 ஆண்டிட வேவீர பாண்டியன் - தனை ஆக்கினான் அந்நன்றி கொன்றவன் ஈண்டு மிலங்கை யரசுடன் - கூடி இகலினன் சோழ வரசுடன். 17 வென்றுமே மூன்றாங் குலோத்துங்கன் - அவ் வீரபாண் டியனைத் தந்தையைக் கொன்றவன் மைந்தன்விக் கிரமனை - மாடக் கூட லிறையவ னாக்கினான். 18 சேர னோடுவீர பாண்டியன் - கூடிச் சென்று மதுரையைத் தாக்கினான் சேரனும் மாறனும் ஓடவே - சோழன் செய்துமுன் போலர சாக்கினான். 19 தந்தைவிக் கிரம னுக்குப்பின் - முதல் சடையவர் மன்குல சேகரன் முந்துசெய் நன்றி மறந்துமே - சோழன் முனியப் பகைமைபா ராட்டினான். 20 வென்றமை யாம லரண்மனை - தன்னை வெகுண்டு தரைமட்ட மாக்கினான் சென்று தொழவர சீந்துமே - சோழன் சினந்தணிந் தூரினை நோக்கினான். 21 மூன்றாமி ராசரா சன்றனை - வென்று முதல்மாற வர்மன்சுந் தரனும் சான்றோ ரிரங்கிடச் சென்றுறை - யூரையும் தஞ்சையை யும்பாழ் படுத்தினான். 22 கொடிமுடி யார்மாட மாளிகை - கூட கோபுர முள்ள அனைத்தையும் இடியிடி யென்றே இடித்தனன் - தமிழர் எய்ப்பினில் வைப்பைக் கெடுத்தனன். 23 கட்டழி யாதவோர் கட்டிடம் - உருத்திரங் கண்ணனார்க் குக்கரி காலனும் பட்டினப் பாலைப் பரிசிலாய்த் - தந்த பதினாறு கால்மண்ட பமொன்றே! 24 பின்னவற் குச்சோழ நாட்டினை - ஈந்து பெயர்ந்தனன் சுந்தர பாண்டியன் தென்னவற் கிறைம றுக்கவே - சினந்து சென்றுமே சோழனை வென்றனன். 25 தோற்று வடபுல நோக்கியே - உரிமைச் சுற்றத் துடன்சோழன் செல்கையில் மாற்றலன் கோப்பெருஞ் சிங்கனும் - சேந்த மங்கலத் திற்சிறை வைத்தனன். 26 வீர நரசிம்மப் போசளன் - பல்லவ வேந்த னொடுமாற வர்மனைச் சேரவென் றேசோழ மன்னனைச் - சோழ தேயத்தி னையாளச் செய்தனன். 27 மன்னன்மூன் றாமிரா சேந்திரன் - இரண்டாம் மாறவர் மன்சுந்த ரன்றனை வெந்நுறச் செய்தனன் சோழனைப் - போசள வீரசோ மேச்சுரன் வென்றனன். 28 வென்று மதுரைமா நாட்டினைப் - பாண்டி வேந்தனை யாண்டிடச் செய்தனன். சென்றதிவ் வாறவ் வரசியல் - மதித் தேய்வும் வளர்வுந் தெளிக்கவே. 29 சடையவர் மன்முதல் சுந்தர - பாண்டியன் தண்புனற் சோழநன் னாட்டினை அடைவுடன் வென்றுமூன் றாமிரா - சேந்திரன் ஆட்சிதன் கீழ்ப்படச் செய்தனன். 30 நாற்றிசை யும்புகழ் பூத்திடும் - சோழ நாட்டர சேற்று நடத்திய தோற்றவி ராசேந் திரனொடு - போலிச் சோழர்க ளாட்சி முடிந்தது. 31 தெருவில் மணல்வீடு கட்டியே - ஆடும் சின்னஞ் சிறார்களைப் போலவே அரசியற் போர்விளை யாட்டினால் - தமிழ் ஆட்சியை யிவ்வா றழித்தனர். 32 7. முகமதியராட்சி சிந்து மாறவர் மன்குல சேகரன் - எனும் மாமது ரைப்பாண்டி மன்னவன் வீறுடன் நாட்டினை யாண்டிடும் - ஆண்மையும் வீரமும் மிக்கவ னென்றுமே. 1 பட்டத் தரசி பயந்திலா - வீர பாண்டியன் என்னும் இளவலைப் பட்டந் தரித்தர சாக்கினான் - சுந்தர பாண்டியன் என்னும் முதல்மகன்; 2 கோளரி யென்ன வெழுந்துமே - தந்தையைக் கொன்றர சாட்சியை எய்தினான். ஆளரி யன்ன இளவலும் - எதிர்த் தண்ண னொடுசமர் செய்தனன். 3 வீறுடன் சுந்தர பாண்டியன் - தம்பியை வென்றூரை விட்டுத் துரத்தினான். ஊறிய வெஞ்சின முட்சுட - உறை யூரை யடைந்தவ் விளவலும்; 4 நீறுபூத் தநெருப் பென்னவே - மானம் நெஞ்சினைத் தின்னவே வென்றிடும் ஆறுபார்த் தேயப் பகுதியை - அர சாண்டுவந் தானவன் என்னினும்; 5 தடிக்கடி பட்டவப் பாம்புபோல் - அண்ணன் தன்னை யெதிர்த்துமே வந்தனன். அடிக்கடி யண்ணனுந் தம்பியும் - தங்கள் ஆண்மையைக் காட்டியே வந்தனர். 6 சென்னெறி மாறிய அண்ணனும் - அலாவு தீன்படைத் தலைவ னாகிய நன்னெறி மாறிப் பிறர்நிலம் - கொள நாடிடும் மாலிக்கா பூரினை; 7 மோப்பம் பிடிக்கும் புலியினைப் - பாய மூக்கைச் சொறியுதல் போலவே ஏப்ப மிடத்தமிழ் நாட்டின்மேல் - படை எடுத்து வருமா றழைத்தனன். 8 தேடியே சென்ற வொருபொருள் - எதிர் தென்படல் போலப் படைவலான் கூடிய தூதன் உரையினால் - உள்ளங் குளிர்ந்து மலர்ந்து களித்தனன். 9 காலங் கருதி யிருப்பவன் - அது கைகூடக் கண்டு களித்தல்போல் மாலிக்கா பூரும் படையுடன் - தமிழ் மண்ணினை நோக்கியே வந்தனன். 10 தெறுதரு தீயெனச் சீறியே - ஆங்கு டில்லித் துலுக்கர் பெரும்படை உறுவது கண்டந்தப் பாண்டியன் - உறை யூரைவிட் டோடி யொளித்தனன். 11 ஊரை யடைந்த படைவலான் - மன்னன் ஊரிலில் லாமை யறிந்துமே பாரிய தன்படை வீரரால் - ஊர் பாழ்பட வேசூறை யாடினான். 12 பொன்னு மணியும் அணிகளும் - கொண்டு போன களிறா றிருபதை அன்னவன் கொண்டு மதுரையை - நோக்கி ஆரவா ரத்தொடு சென்றனன். 13 அம்மவோ ரூரிரண் டுபட்டால் - கூத் தாடிக்குக் கொண்டாட்ட மென்றல்போல் நம்மவ னால்மாலிக் காபூரும் - பாண்டி நாட்டையந் தோசூறை யாடினான். 14 கொள்ளை கொலைகள் புரிந்தனன் - பல கோயிலை யிடித்தெ றிந்தனன் உள்ளுவோ ருள்ள முருகவே - அட் டூழியங் கள்பல செய்தனன். 15 பிஞ்சு முகையும் உதிரவே - கடும் பேய்வளி வீசுதல் போலவே அஞ்சி யலறித் துடிக்கவே - நாட்டை அல்லோல கல்லோல மாக்கினான். 16 செல்லும் வழிப்பட்ட ஊர்களை - அத் தீத்தொழி லோன்சூறை யாடியே மல்லலந் தண்புனல் வையைசூழ் - மாட மதுரை யினைச்சென் றடைந்தனன். 17 கேட்டை விலைதந்து வாங்கிய - அக் கெடுமதி யாளனுங் கண்டுமே கோட்டையை விட்டுமே ஓடினான் - மகிழ் கொண்டு பகைவனுங் கூடினான். 18 அய்யகோ அப்படை வீரர்கள் - ஊரில் அல்லும் பகலும் புகுந்துமே செய்யவொண் ணாத கொடுமைகள் - எலாம் செய்து செருக்கித் திரிந்தனர். 19 கோயில் மடங்கள் இடிந்தன - மாட கூடங்கள் சாய்ந்து கிடந்தன தாயிலாச் சேய்கள்த வித்தன - ஊரில் தாறுமா றாய்ப்பிணம் மொய்த்தன. 20 இன்னுமென் னென்ன கொடுமைகள் - சொல எந்தமிழ்ச் செந்நா நடுங்குதே தன்னல மிக்க தமிழனால் - சங்கத் தமிழ்நகர் ஆங்கு தகர்ந்ததே. 21 ஆடியல் யானை குதிரைகள் - பல ஆயிர மாயிர மாயிரம் கோடியீ ராறுநூ றாகவே - பொன் கொண்ட கருவூல மட்டுமா! 22 பொன்னும் அணியும் பொருள்களும் - திசை போகிய முத்துப் பொதிகளும் பின்னும் மணிக்குவை யுள்ளவும் - வாரிப் பெட்டி பெட்டியாகக் கொண்டனன். 23 தம்பிசெல் வத்துடன் நாட்டிலே - பகை தன்னை யழைத்தவன் செல்வமும் வெம்பகை யாளன்கைக் கொண்டுமே - மிக்க வெற்றிக் களிப்புடன் சென்றனன். 24 நினைக்குங்கே டுதனக் கேவரும் - எனும் நீதி யறியாக் கயவனும் குனிக்கும்வில் வாங்குங் குரங்குபோல் - நாட்டைக் குட்டிச் சுவராக்கி விட்டனன். 25 நளிரு மனத்தவன் செய்கையால் - பாண்டி நாட்டவர் செல்வ மனைத்தையும் களிறு களிறாகக் கொண்டுமே - நாட்டைக் காலியாக் கிவிட்டுப் போயினான். 26 அப்படை செய்த கொடுமையால் - தமிழ் ஆட்சி யலங்கோல மாகவே ஒப்புந் தமிழ்க்குறு மன்னர்கள் - ஆங் கொருங்கு தனியர செய்தினர். 27 சம்புவ ராயரும் செந்தமிழ்க் - காவல் தாங்கிய வாணாதி ராயரும் வம்பவிழ் வாகை மலர்த்திய - முடி மன்னர்போல் தன்னர செய்தினர். 28 அன்னவன் சென்றசில் லாண்டிலே - டில்லியை ஆண்டபின் துக்களக் கென்பவன் தென்னக நோக்கி யனுப்பினான் - சலாலு தீனெனுந் தானைத் தலைவனை. 29 மற்றவன் மாப்படை சூழவே - வந்து மாட மதுரையை எய்தினான். நற்றமிழ்ப் பராக்கிரம பாண்டியன் - கண்டு நாற்படை கொண்டே எதிர்த்தனன். 30 மண்டிய அப்பெரும் போரிலே - பாண்டிய மன்னவன் தோல்வி யடைந்தனன். தண்டமிழ்ப் பாண்டி மதுரையோ - அச் சலாலுதீன் கையகப் பட்டது. 31 வென்றிவாள் வேங்கைப் படுக்கையில் - நரி மேவி யிருந்தது போலவே இன்றமிழ்ப் பாண்டிய மன்னர்கள் - வீற் றிருந்த அரியணை யேறினான். 32 கையறி யாத கயவன்கைப் - பட்ட கமழு நறுமலர் போலவே ஐயகோ செல்வத் தமிழகம் - அஃதறி யாதவன் ஆட்சிக்குட் பட்டது. 33 அன்னவன் டில்லித் தொடர்பினை - முற்றும் அறுத்துத் தனிக்காட் டரசனாய் தென்னவ னாகவே எண்ணியே - தன்னிற் சிறக்க விருந்தர சாண்டனன். 34 அன்னவ னோடவ ரெண்மர்கள் - ஐம்ப தாண்டுகள் சங்க மதுரையில் மன்னவ ராக இருந்தனர் - தமிழ் மக்கள்துன் புற்று வருந்தினர். 35 தண்டமி ழன்னை தயங்கவே - மக்கள் தந்நிலை யெண்ணி யிரங்கவே வண்டமிழ்ச் சங்க மதுரையில் - முக மதியர தாட்சி நடந்தது. 36 உற்றிடர் நாளும் பொருந்தவே - மக்கள் உரிமை யிழந்து வருந்தவே கற்றவ ருள்ளங் கலங்கவே - புலிக் காட்டர சாட்சி நடத்தினர். 37 அல்லல் இடும்பைபுன் கண்படர் - இன்னல் அலக்கண்கை யாறு துயரிடர் செல்லல் இடுக்கணின் னாவினும் - துன்பங்கள் சேரக் கொடுங்கோல் செலுத்தினர். 38 பேரும் புகழும் ஒழியவே - பெற்ற பேறுகள் முற்றும் அழியவே சீருஞ் சிறப்புஞ் சிதையவே - மக்கள் செத்த பிணமென வாழ்ந்தனர். 39 ஓவியச் சிற்ப வுறையுளாய் - வான் ஓங்கிய கோயில்கள் பாழ்படக் கூவி யழக்கொல் கொடியர்போல் - வெறி கொண்டே யிடித்து நொறுக்கினர். 40 செந்தமிழ் போற்றிருக் கோயில்கள் - செய்யுஞ் சிறப்பொடு பூசனை யின்றியே மந்திரி யில்லா அரசுபோல் - ஆ! மங்கல மன்றிக் கிடந்தவே. 41 பள்ளிகள் கோயிலாப் பாழிகள் - மடம் பள்ளியா கவன்று மாற்றிய வள்ளிய செந்தமிழ் மன்னர்போல் - பள்ளி வாயிலாக் கோயிலை மாற்றினர். 42 மறநிலை மேயவம் மன்னரால் - தமிழ் மாநில மெங்கும் வளம்பொலி அறநிலை யங்களுங் கோயிலும் - ஐம்ப தாண்டுகள் மூடிக் கிடந்தன. 43 ஓது பழந்தமிழ் நூலெலாம் - அந்தோ1 ஒள்ளெரி வாய்க்கிரை யாயின. நீதி நெறிகள் பிறழ்ந்தன - சமய நெறிகள் தடைசெய்யப்பட்டன. 44 கைவிளக் கின்றி யிரவினில் - உவாக் காலத்தி னில்வெளிச் செல்லல்போல் மைவள மிக்குத் தமிழர்கள் - துன்ப வாழ்க்கை நடத்தியே வந்தனர். 45 மண்டிணி ஞால மதனிலே - மிக்க மதவெறி கொண்டவம் மன்னர்கள் வண்டமிழ் மக்களை ஐயகோ! - தங்கள் மதமாறச் செய்து வருத்தினர். 46 அம்மத மாற மறுத்தவர் - தமை ஆடு குட்டிகளைப் போலவே தம்மனம் போலக் கொடியவர் - துயர் தாங்கொணா வன்கொலை செய்தனர். 47 கண்களைத் தோண்டி யெடுத்தனர் - அந்தோ! காதொடு மூக்கை யறுத்தனர் புண்களில் தீக்கோல் புதைத்தனர் - உயிர் போகும் வரையும் வதைத்தனர். 48 கட்டி வெயிலில் கிடத்தினர் - நகக் கண்களில் ஊசி கடத்தினர் கட்டையில் வைத்தெரி மூட்டினர் - உந்தியில் கம்பியை விட்டுமே ஆட்டினர். 49 உயிரொடு தோலை யுரித்துமே - தோலின் உள்ளேவைக் கோலைத் துறுத்துமே துயரொடு மக்கள்கண் டஞ்சவே - கட்டித் தொங்கவிட் டார்தெரு வெங்குமே. 50 கன்னெஞ்சர் என்பதைக் காட்டவோ - பசுங் காய்போலுஞ் செந்தமிழ்ச் சேய்களை வன்னெஞ்ச முள்ள கொடியவர் - தாயின் மார்பில் கிடத்தியே கொன்றனர். 51 மதுரைப் புறநகர்த் தோங்கிய - தென்னை மரங்களை வெட்டிவிட் டங்கெலாம் புதிய மரங்களை நாட்டினார் - உயிர் போக்குங் கழுமர மேயவை. 52 தண்டமிழ் மக்களின் வெண்டலை - ஓடுகள் தங்கிடுந் தோரணந் தொங்கிடும் கண்டவ ரஞ்சி நடுங்கிடும் - படி காணுங் கழுமரக் காட்சியே. 53 ஒட்டணி நல்லார் குளித்தலால் - கமழ்ந் தோடிய வையை முதலன வெட்டிய மாட்டுக் குருதியால் - முடை வீசியே செவ்வென ஓடின. 54 அத்தகு துன்ப நிலையினில் - தமிழ் அன்னையும் மக்களும் ஐயகோ! செத்த பிணத்தி னுயிர்ப்பொடு - வாழ்க்கை செய்துயிர் வாழ்ந்துமே வந்தனர். 55 இன்று தமிழக மெங்கணும் - வாழ்ந் திருக்குந் தமிழிஃச் லாமியர் அன்றவர் செய்த கொடுமையால் - முஃலீம் ஆன தமிழரே யாகுவர். 56 தண்டமிழ் நாட்டினி லங்கங்கே- கொடுஞ் சாவினுக் கஞ்சித் தமிழர்கள் கண்டு நடுங்கி யொடுங்கவே - பாது காப்புப் படைகளை வைத்தனர். 57 அன்னவர் செய்த கொடுமைகள் - இன் னவையென் றெடுத்துரைக் கப்புகின் இன்னல் பெருகு மெனினுமே - ஈங் கியம்புவ லோர்சில இன்னென. 58 வேறு டில்லித் துலுக்கவீரர் - அன்று செய்த கொடுமையெல்லாம் சொல்லுந் தரத்ததாமோ - சொல்லித் துன்பம் விளைக்கலாமோ? 59 படைகள் வருவதாச்சு - மக்கள் பறந்து திரியலாச்சு உடைமை யிழக்கலாச்சு - மக்கள் ஓடி யொளிக்கலாச்சு 60 குஞ்சு குழந்தையெல்லாம் - அந்தோ! கோவென் றலறலாச்சு அஞ்சி யஞ்சிநாளும் - மக்கள் அலறித் துடிக்கலாச்சு. 61 பட்டப் பகலிலுமே - வழி பறித்துச் செல்லலாச்சு குட்டிச் சுவராச்சு - நாடு கொடுமை மிகுந்துபோச்சு. 62 பட்டி தொட்டியெல்லாம் - அந்தோ! பாழ டைந்துபோச்சு முட்டி தூக்கலாச்சு - மக்கள் முடுகி யோடலாச்சு. 63 ஆடு மாடுகளைக் - கொள்ளை அடித்துப் போகலாச்சு நாடு நகரமெல்லாம் - புலிவாழ் நல்ல காடுகளாச்சு. 64 குடியி ருக்கும் வீட்டில் - புகுந்து கொள்ளை யடிக்கலாச்சு விடிவ தற்குமுன்னே - ஊரும் வெந்து தணியலாச்சு. 65 அடித்த களத்தினிலே - கொள்ளை அடித்துப் போகலாச்சு பிடித்த பொருள்களெல்லாம் - அவர்கள் பெற்ற பொருள்களாச்சு. 66 தெருவினில் குலமகளிர் - நடந்து செல்லு முரிமைபோச்சு உரிய வுடைமையெல்லாம் - இழந்தே ஒடுங்கி வாழலாச்சு. 67 வீடு வாசலெல்லாம் - அந்தோ! வெறுச்சென வேபோச்சு காடு தோட்டமெல்லாம் - சுடு காடு போலவாச்சு. 68 பிழைத்த பிழைப்பும்போச்சு - வாழ்ந்த பெருமை யிழக்கலாச்சு உழைத்த உழைப்பும் போச்சு - உயிருக் கூச லாடலாச்சு. 69 இன்ன வாறுதமிழர் - துலுக்கர் இன்ன லுக்கிடையே என்ன வாறுவாழ்வோம் - என்றே ஏங்கி யிருக்கையிலே; 70 வேறு வெற்றி நகர்மன்ன னாகிய - இரண்டாம் வீரகு மாரகம் பண்ணனும் மற்றத் துலுக்கர் கொடுமையும் - தமிழ் மக்கள் துயரையுங் கேட்டனன். 71 இங்கவ ராதிக்கம் போக்கவும் - தேயும் இந்து சமயத்தைக் காக்கவும் தங்கள் அரசைப் பெருக்கவும் - தக்க தருண மெனவவன் எண்ணினான். 72 தென்றிசை நோக்கியே கம்பண்ணன் - வீரத் தெலுங்கப் படையை நடத்தியே கொன்றன்ன இன்னா புரிந்திடும் - அக் கொடியரை யோட்டிட வந்தனன். 73 வந்தவன் சம்புவ ராயரைத் - தொண்டை மண்டலத் தேசென்று வென்றுமே செந்தமிழ்ச் சோழநா டாண்டிடும் - தமிழ்ச் சிற்றர சரையும் வென்றனன். 74 வென்றவன் தென்றிசை நோக்கியே - அங்கு விரைந்து படையைச் செலுத்தியே சென்றவன் மாட மதுரையை - ஆள்வோர் சிந்தை கலங்க அடைந்தனன். 75 அடைந்து துலுக்கரை வென்றுமே - தமிழ் ஆட்சியைப் பாண்டியர்க் கீந்துமே கடந்தடு தானைக்கம் பண்ணனும் - அதி காரிகள் காப்பும் அமைத்தனன். 76 தண்டமிழ் நாட்டினில் நாயக்கர் - ஆட்சி தனக்கடி கோலிய கம்பண்ணன் கொண்ட கருத்து முடியவே - மகிழ் கொண்டு மதுரையை விண்டனன். 77 அரும்பு மலர்ந்து கமழ்தல்போல் - தமிழ் ஆட்சிதன் னாட்சியர்க் காக்கிட விரும்பிய வெற்றி யடைந்தனன் - சென்று வெற்றி நகரை யடைந்தனன். 78 8. நாயக்கராட்சி சிந்து இங்ஙனம் கம்பண்ணன் ஏற்பாடு - செய்தே அங்ஙனம் போகிய பிற்பாடு. 1 ஆண்டனர் நூற்றைம்ப தாண்டுவரை - தமிழ்ப் பாண்டியர் அவ்வா றியன்றவரை. 2 செந்தமிழ்ப் பாண்டிநா டாண்டனனே - தமிழ்ச் சந்திர சேகர பாண்டியனே. 3 ஏகி மதுரையை முற்றினனே - வீர சேகர சோழன்கைப் பற்றினனே. 4 தோற்றவப் பாண்டியன் நெஞ்சுடைந்து - திசை போற்றிடும் வெற்றி நகரடைந்து; 5 கிருட்டின ராய னிடமுரைக்க - அவன் தெருட்டியே பாண்டிமன் னனுவக்க. 6 ஓகை யுடனே அரவணைத்து - வீர நாகம நாயக்க னையழைத்து; 7 சோழனை யோட்டியே பாண்டியனை - நா டாளவே செய்துவா வென்றனனே. 8 அன்னவ னுமன்னன் சொற்படியே - பாண்டி மன்ன னுடன்வந்தா னப்படியே. 9 மாட மதுரை யடைந்தனனே - சோழன் ஓடவே வாகை புனைந்தனை. 10 ஆண்டவ னின்று பெயர்ந்திலனே - தமிழ்ப் பாண்டிய னுக்கர சீந்திலனே. 11 கூடிய தன்னலம் பூண்டனனே - முடி சூடி மதுரையை ஆண்டனனே. 12 தாழிசை நெறிதவறி நாகமனு நீள்மதுரை யாள அறிதலுமே மன்னவனுக் கதிகசின மூள 13 வந்திடுக வென்றசொலை மறுத்தவனு மிருக்க. வெந்தழலின் கொழுந்தெனவே வெய்யசின மிகுக்க. 14 நேரிலனைக் கொண்டென்முன் நிறுத்துகவென் றுரைக்க பேரவையி லிருந்தோர்கள் பேசாம லிருக்க. 15 ஆங்கிருந்த ஓரிளைஞன் ஆண்மையுடன் எழுந்தான் ஈங்கவனைக் கொடுவருவேன் இறையிலென மொழிந்தான். 16 அன்னவன்யா ரெனவிளைஞன் அவையிலுள்ளார் வியக்க மன்னவனே படைத்தலைவன் மகனெனவே யுரைக்க. 17 மன்னவனும் அதுகேட்டு மனமிகவு மகிழ்ந்தான் சின்னவனைப் படைசூழச் செல்லவிடை தந்தான். 18 வேறு நாற்படை சூழ மதுரையை விசுவ நாதன் அடைந்தனனே காப்புடை யரணை முற்றுகை யிட்டுக் கடும்போர் புரிந்தனனே. 19 தந்தையு மகனும் எதிரெதிர் நின்று சங்கு முழக்கினரே மைந்தன் வெகுண்டு முன்செல வீரர் மண்டி யுழக்கினரே. 20 வலிமிகு விசுவ நாதன் முடிவில் வாகை புனைந்தனனே கலிமிகு தந்தையைக் கள்வனைப் போலக் கட்டி நடந்தனனே. 21 கொண்டுபோய் வெற்றி நகரத் தரசன் கொலுமுன் விட்டனனே. கண்டுமே கிருட்டின ராயனும் வியப்புக் கடலிடைப் பட்டனனே. 22 வேண்டுவ தருவேன் கேளென மன்னன், மேதகு மாமன்னா! ஆண்டரு ளெந்தை யின்னுயிர் ஈந்தென ஆகுக வேயென்னா; 23 தந்தையி னுயிர்காத் தருளிய மைந்தன் தன்னையம் மன்னவனும் செந்தமிழ் மதுரை மன்னவ னாகச் செய்தனன் அன்னவனும்; 24 சிந்து ராயரி டம்விடை பெற்றுமே - அரிய நாதன் படைத்துணை யுற்றுமே ஆயிர மாயிரம் வீரர்கள் - சூழ அணிமது ரையை யடைந்தனன். 25 அன்ன மிருந்த மலரிலே - காகம் ஆடி யமர்ந்தது போலவே தென்னவ ராண்ட மதுரையில் - அத் தெலுங்க னிருந்தர சாண்டனன். 26 எந்தமி ழன்னை வழிவழி - வீற் றிருந்த அரியணை தன்னிலே வந்தவத் தெலுங்க மங்கையும் - மிக்க மதிப்புட னேறி யிருந்தனள். 27 ‘வாலுப்போச் சுக்கத்தி வந்தது’ - என்னும் வழக்கினைப் போலத் துலுக்கர்போய் மாலத் தெலுங்கரி னாட்சியில் - தமிழ் மக்கள் மயங்கிட லானது. 28 மூண்ட பகையின் கொடுமையால் - அம் முத்தமிழ்ப் பாண்டிய நாட்டினை ஆண்டவப் பாண்டிய மன்னர்கள் - நாயக்கர் ஆட்சியை யேற்க மறுத்தனர். 29 வழிவழி வந்தபண் பாட்டினைப் - பாண்டிய மன்னர்க ளன்றுமேற் கொண்டனர்; மொழிவழி யன்மை மறுத்தது - நம் முன்னையோர் கொண்ட முறைமையே. 30 ‘வெள்ளைய னேவெளி யேறுக’ - என மீசை முறுக்கிய நம்மபோல், தெள்ளு தமிழ்ப்பாண்டி மன்னர்கள் - அவ்வாறு செய்தது மன்ன ருரிமையே. 31 நற்றமிழ் பேசிடு நாவினான் - அரிய நாதனும் நாயக்க னேவலால் மற்றவர் தம்மை யடக்கியே - தமிழ் மண்ணில் தெலுங்கை வளர்த்தனன். 32 தட்டுக்கட் டித்தடு மாறியே - செந் தமிழர்கள் தலைதூக் காவணம் கட்டுக்கட் டிநாட்டை யாளவே - பாளையக் காரர்க ளையேற் படுத்தனன். 33 பேருக்கி ரண்டொரு பேர்களே - தமிழ் பேசுந் தமிழர் அவர்களில் ஊருக்கு வந்த உளவர்போல் - பாளையத் துள்ளவ ரெல்லாந் தெலுங்கரே. 34 வண்டமிழ் மன்னவ ரென்றிடும் - சிறு வாடையு மின்றி யொழிந்தது; தெண்டிரை யார்தமிழ் மாநிலம் - எங்கும் தெலுங்குப் பெருவளி சூழ்ந்தது. 35 செந்தமிழ் வாணர் துளங்கிட - ஆங்கு தெலுங்கப் புலவர் விளங்கிட அந்தமி ழன்னை கலங்கிட - நாயக்கர் ஆட்சி நடந்தது மாட்சியாய். 36 சங்க மதுரையிற் போலவே - தமிழ்த் தஞ்சைவே லூரொடு செஞ்சியில் தங்கியே நாயக்க மன்னர்கள் - தமிழ்த் தாயக முற்றிலும் ஆண்டனர். 37 வம்பி லுழுவோனை ஓட்டியே - அவ் வயலை யுழுவோனைப் போலவே வெம்பகை யோட்டிய நாயக்கர் - தமிழ் வேந்தர்க ளாயின தென்னவோ! 38 கொள்ளையிட் டோனைத் துரத்தியே - வீட்டைக் கொண்டவன் போலவந் நாயக்கர் கொள்ளைத் துலுக்கரை யோட்டியே - தமிழ்க் கோமக ராயின தென்னவோ! 39 தெய்வப் பணிசெய்த ராயினும் - தமிழ்த் தேவி பணியவர் செய்திலர். தெய்வத் தினுஞ்சிறப் பாயது - தாய்த் திருமொழி யென்ப தறிந்திலர். 40 ஏழிசைச் செந்தமிழ் நாட்டிலே - தெலுங் கின்னிசைப் பாடல்கள் பாடியோன் வாழிசை பெற்றது நாயக்கர் - ஆட்சியின் மாட்சி தெரித்திடுங் காட்சியே. 41 செந்தமிழ் நாட்டிலே ராளமாய் - அத் தெலுங்கருங் கன்னட நாடரும் வந்து குடியேறிச் சொந்தநா - டென வாழ வகைசெய்து வைத்தனர். 42 தங்க ளிடைத்தமிழ் பேசிலாப் - பல சாதியைச் செந்தமிழ் நாட்டிலே தங்கித் தமிழர்க ளென்னவே - வாழுந் தாழ்நிலை தன்னையுண் டாக்கினர். 43 வடுகருங் கன்னட மக்களும் - குடி வாழ்க்கைத் தொழில்களைக் கைக்கொடு நடைமுறை யாக நிலைத்துமே - இங்கு நாலுக்கி ரண்டாகி விட்டனர். 44 வழிவழி யாகத் தொழில்பல - செய்து வந்த தமிழரி டந்தனில் மொழிவழி மாறிய அன்னவர் - நாட்டு முதுக்குடி போல அமர்ந்தனர். 45 தனித்தமிழ்ச் சாதி மலர்மணம் - வீசத் தான்பொலிந் ததமிழ் நாட்டிலே கனிக்கிடை வெக்காய் கலந்தபோல் - வடுக கன்னடச் சாதி கலந்தன. 46 அன்னவ ராயிரத் தேழ்நூற்று - முப்பத் தாறுகா றிருநூ றாண்டுகள் மன்னர்க ளாய்த்தமி ழன்னையை - அயல் மங்கைகண் காணிக்க ஆண்டனர். 47 அத்தமிழ் மதுரை நாயக்கர் - மீ னாட்சியீ றாப்பதின் மூவர்கள் முத்தமி ழன்னையோர் மூலையில் - ஏங்கி முடங்கிக் கிடக்கநா டாண்டனர். 48 மராட்டியர் தஞ்சையை யாண்ட செங் கமல - தாசன் தன்னைத் தளவாயாக் காததால் வஞ்சகன் வெங்கண்ணா என்பவன் - சிவாசி மன்னவன் தம்பிவெங் காசியை; 49 வேண்டவெங் காசியுங் தஞ்சையை - வந்து வென்று மராட்டிய ஆட்சியை ஆண்டு நிலைபெறச் செய்தனன் - அவன் அண்ணனும் செஞ்சியை ஆண்டனன். 50 ஆங்கில ஆட்சியிங் கேற்படும் - வரை ஆண்டனர் அன்னவர் தஞ்சையை ஈங்கவ ரேராள மாகவே - குடி யேறி யிருக்கின்றா ரின்னுமே. 51 9. ஆங்கில ஆட்சி சிந்து அவாப்பெரு கப்பெரு கப்பல - வகை அரசுகள் தோன்றி முடிவினில் நவாப்புகள் என்னும் துலுக்கர்கள் - தமிழ் நாடு முழுவதும் ஆண்டனர். 1 ஆட்சி யெனும்பொரு ளற்றுமே - எங்கும் அடிதடி கொள்ளை படுகொலைக் காட்சி மலிந்துநா ணாளுமே - பாது காப்பின்றி மக்கள் கலங்கினர். 2 வெம்புலி வாழ்கொடுங் காடுபோல் - நாடு வேட்டைக்கா டாகி வெருவுற அம்புலி யில்லா இரவுபோல் - மக்கள் அஞ்சிவாழ் கின்ற அளவிலே. 3 கிறித்து சமய நெறியினை - விளக் கித்தமிழ் நாட்டிற் பரப்பிய கிறித்து சமய குரவர்கள் - தங்கள் கிளையின ரானமே னாட்டினர். 4 மற்றவர் கொண்ட மரபினில் - இங்கு வாணிகஞ் செய்து பிழைக்கவே உற்றனர் வாயிற் கதவிலா - வீட்டி னுட்புகல் போல ஒழுங்குற. 5 போர்த்துக்கீ சியர்முன் போந்தனர் - அன்னார் போலவா லந்தர்பின் வந்தனர் ஆர்த்தவர் பின்னர்ப் பிரஞ்சியர் - உடன் ஆங்கிலே யரும டைந்தனர். 6 அடைந்தவ ரிந்நாட் டரசர்கள் - துணை யாலிங்கு தங்கி யமைதியாய் மடந்தைய ரின்ப வளம்பெறல் - போல வாணிகஞ் செய்துமே வந்தனர். 7 பின்ன ரிருவரும் அன்னரில் - மிக்க பெரும்பொரு ளீட்டி வருகையில் நன்னல ஆட்சிய தின் றியே-உள்ள நாட்டு நிலைமையைக் கண்டனர். 8 தோணியி லேறியே செல்பவர் - அத் துறையினைக் கொள்ள விரும்பல்போல் வாணிகஞ் செய்திட வந்தவர் - இந்த மண்ணினை யாண்டிட எண்ணினர். 9 பூக்கள் பறிக்கவே வந்தவர் - அந்தப் பூங்காவைக் கொள்ள நினைத்தல்போல் ஆக்க மடைந்திட வந்தவர் - நாட்டை ஆட்சி புரிந்திட எண்ணினர். 10 உண்டிக்கு வாயிலில் நிற்பவன் - வாள் உருவிப் பிடிக்கும் உவமைபோல் அண்டிப் பிழைத்திட வந்தவர் - படை யாளரைக் காவற் கழைத்தனர். 11 கரவுக் கயவர்கை கூப்பியே - பட்டாக் கத்தியைக் காட்டுங் கொடுமைபோல் இரவுக் கிரவாக வீரர்கள் - வந்தே ஏராள மாகக் குவிந்தனர். 12 சின்ன பின்னமாக நாட்டிலே - எங்கும் சிதறிக் கிடந்த குறுநில மன்ன ரொருவர் ஒருவரைத் - தாக்கவவ் வாணிகர் சூழ்ச்சியுஞ் செய்தனர். 13 படைத்துணை யாவது போலவே - ஒருவர் பக்கத்து நின்றவர் நாட்டினை கிடைத்த பரிசெனக் கொண்டுமே - மன்னரைக் கிள்ளுக் கீரையாக்கி வந்தனர். 14 ஈட்டிக் கிடாய்கள் குருதியைக் - குடித் தேப்ப மிடுநரி போலவே நாட்டுக் குடிமன்னர் போட்டியால் - அன்னவர் நாட்டினைக் கைப்பற்றி வந்தனர். 15 வாளிற் பிரஞ்சு வணிகரும் - ஆங்கில வாணிக ருமிந்த நாட்டினை ஆளப் பெரும்போட்டி போட்டனர் - முடிவில் ஆங்கிலே யர்வெற்றி பெற்றனர். 16 குண்டிற் பிரஞ்சு வணிகரும் - வெள்ளைக் கும்பினி யாருமிந் நாட்டினைக் கொண்டற் கரும்போட்டி போட்டனர் - முடிவில் கும்பனி யார் வெற்றி பெற்றனர். 17 வாணிகஞ் செய்து பிழைத்திட - இங்கு வந்தவவ் வெள்ளையர் சூழ்ச்சியால் காணியா ளராயிந் நாட்டினைக் - கொடி கட்டிமூ வைம்பதாண் டாண்டனர். 18 பத்தொன்ப துநூற்று நாற்பத்தேழ் - வரை பத்துப்பத் தைந்துபத் தாண்டுகள் கொத்தடி மைப்பட வெள்ளையர் - முறை கோடியிந் நாட்டினை ஆண்டனர். 19 அயலவர் நாட்டினை யாளுதல் - முறை யன்றெனு முண்மை யறிகிலார் அயலவ ரென்பதற் கேற்பவே - நம்மை அடக்கி யொடுக்கியே ஆண்டனர். 20 கத்தரிப் பூவொடு மல்லிகை - தனைக் கட்டுதல் போல்மற் றவற்றொடு முத்தமிழ் நாட்டையொன் றாக்கியே - தமிழ் முந்நலம் போக்கினர் அன்னவர். 21 என்றுந் தனியர சோச்சியே - இணை யின்றிருந் ததமிழ் நாட்டினை வென்றவர் இந்திய நாட்டொடு - சேர்த்து மேன்மை யிழக்கச்செய் திட்டனர். 22 ஓங்கு மொருகுடை நீழலில் - அர சோச்சிய செந்தமி ழன்னையை ஆங்கில நங்கை யுவக்கவே - பா ழடிமைச் சிறையினி லிட்டனர். 23 கண்கவர் பொன்வளைக் கையிலே - இரும்புக் காப்பினை யிட்டது போலவே பண்கவர் செந்தமிழ் நாட்டினை - ஆங்கிலப் பாவையை ஆண்டிடச் செய்தனர். 24 பேரினைக் கேட்கினும் வெள்ளையர் - அஞ்சிப் பிறப்பக நோக்கி நடுங்கிய தீரன் சின்னமலை காட்டிய - வீரச் சிறப்பினைப் போற்றியே வாழ்குவோம். 25 தூக்குமே யடைமீது நின்றுமே - அவன் சொன்னசொல் லைநமக் கென்றுமே காக்குவோம் அவ்வுரை நோக்குவோம் - வீர காவிய மேதமி ழோவியம். 26 வீரபாண்டி கட்டப் பொம்மனும் - மற்ற விடுதலை வீரத் தமிழரும் ஆருயி ரீந்துமே போற்றிய - நாட் டன்பினைப் போற்றியே வாழ்குவோம் 27 நாட்டு விடுதலைக் காகவே - தம் நல்லுயி ரீந்தபல் லாயிரர் ஊட்டிய வீர உணர்ச்சியை - என்றும் உள்ளத்து நீங்காது கொள்ளுவோம். 28 நாளுங் கொடுந்துயர் எய்தியே - தாய் நாட்டு விடுதலைக் காகவே ஆளு மடிமை யொழித்தவர் - தமை அல்லும் பகலும் வணங்குவாம். 29 வெள்ளைய னேவெளி யேறுக - என வீர முழக்கம் முழக்கிய பிள்ளைகுட் டிகளெல் லோரையும் - நாளும் பேச்சிலும் மூச்சிலும் போற்றுவாம். 30 அடக்கு முறையை எதிர்த்துமே - தடி அடிக்கும் வெடிக்குமஞ் சாமலே வெடிக்கும் விடுதலைக் கின்னுயிர் - ஈந்த வீரரைப் போற்றி வணங்குவாம். 31 வேட்டுக்கு முன்மார்பு காட்டியும் - நாட்டு விடுதலை வேட்கையை யூட்டியும் நாட்டுக் கொடிக்குயிர் வீட்டியும் - உயர் நாற்றிசை வீரரைப் போற்றுவாம். 32 வீடுவா சலையி ழந்துமே - பொல்லா வெஞ்சிறை தன்னிற் கிடந்துமே நாடு விடுதலை பெற்றிடச் - செய்த நல்லவர் தொண்டினைப் போற்றுவாம். 33 சொத்துச் சுகத்தை யிழந்துமே - வாழ்வைத் துறந்து துயரி லுழந்துமே வித்தி விளைத்து விடுதலை - தந்த மேலவர் தொண்டினைப் போற்றுவாம். 34 காந்தியடிகள் பிறந்தனர் - வெள்ளைக் காரர்கண் டஞ்சிப் பறந்தனர். நாந்தமிழ் பாடவாய்ப் புற்றது - இந்திய நாடு விடுதலை பெற்றது. 35 10. பதிகம் தாழிசை முற்காலத் தமிழகத்தை முறையி னாண்ட முடியுடைமூ வேந்தர்கள் தம் முறையி னின்றும் பிற்காலத் தமிழரசர் பிறழ லானார் பெருகியதம் மண்ணாசைப் பெருக்கி னாலே. 1 முத்தமிழ்போல் முடியுடைமூ வருமுந் நாட்டை முறையாக ஆண்டுவந்த முறையி னீங்கிப் பித்தர்கள்போல் தம்மரசைப் பெருகச் செய்து பேரரசாய் வாழவெண்ணிப் பிழைத்திட் டாரே. 2 மூவருமுந் நாடுமொரு முழுமை யாக முடியரசாய் மற்றவர்கள் முடங்கி நிற்க ஆவலுடன் முனைந்திட்ட அறிவுக் கொவ்வா அறமல்லா அடாச்செயலால் அழிய லானார். 3 வெற்றியொரு வருக்கல்லால் இருவர்க் கில்லை வெல்வதுதோற் பதுமக்கட் கியற்கை யெல்லை மற்றிதனைத் தமிழறிந்தும் அறியா வன்னார் மடமையினால் தமிழரசு மறைந்த தம்மா! 4 ஆற்றலினால் நாடுபல வற்றை வென்றவ் வரசர்முடி தாழ்ந்திடப்பே ரரச ரானார் ஈறறுவரை யமைதியின்றிப் பெரும்போர் செய்தே இறந்துண்டார்; தமிழரசுக் கிறுவாய் கண்டார். 5 கங்கைகொண்டான் கடல்கடந்து கடாரங் கொண்டான் கடலுலகில் பேரரசன் இவனே யாவான்; இங்கவன்கொண் டிட்ட பெரு வெற்றி யெல்லாம் இறக்கும்வரை போர்செய்தான் என்றல் தானே? 6 பாண்டியனை வென்றானச் சோழன், சேரன் பாண்டியனால் தோற்கடிக்கப் பட்டான் என்றால், ஈண்டவர்தம் வெற்றிதோல் வியினாற் கண்ட தென்னதமிழ் மக்கள்பட்ட இன்னல் தானே? 7 தமிழகத்தை வெல்லவில்லை தோற்க வில்லை, தமிழர்தனி நாகரிகந் தகர்த்த தோடு, தமிழரச மரபதனை யொழித்துக் கட்டித் தமிழ்நாட்டை அயலார்க்குத் தந்திட் டாரே. 8 வெற்றியுந்தோல் வியுங்கண்ட விளையாட் டாலே வெளியாரை யெளிதில்வர விட்டே நாட்டுள் நற்றமிழ்த்தாய் அரசிழந்து நலங்கி யேங்கி நாலாம்பேர் போல்வாழ நடித்திட் டாரே. 9 கையறியா தொன்றையொன்று தாக்கிக் கொண்டு கையுடையான் றனையொழித்துக் கட்டல் போல, மெய்யறியா திவரடித்துக் கொண்டு மேமூ வேந்தர்மர பினையொழித்து விட்டா ரம்மா! 10 தமிழறியா ராட்சியிலே தமிழர் தங்கள் தரமிழந்து தலைகவிழ்ந்து தகுதி குன்றி இமிழ்கடல்சூ ழுலகினிலோ ரினமென் றாலே எள்ளுநிலை தனையடைய இயன்றிட் டாரே. 11 வடுகருங்கன் னடருமராட் டியரும் ஈங்கு வந்தமுக மதியரொடாங் கிலரும் வல்லே அடிமைநிலை யடைந்துதமி ழன்னை யேங்க அருந்தமிழ்நாட் டினையடக்கி ஆளச் செய்தார். 12 அடைமொழிவேண் டாததமி ழன்னை யுண்மை அறிவிழந்து மயக்கவுணர் வடைந்தாள் போல, வடமொழியாக் கங்கண்டு மயங்கி நிற்க மனமாரக் கெடுவழியை வகுத்திட் டாரே. 13 வாழ்க்கையினோர் கூறாக வழங்கி வந்த வண்டமிழர் பழஞ்சமய மரபைப் போக்கி வாழ்க்கையத னொருகூறா வழங்கு மாறு மதவெறிகொண் டெதிர்மலைந்து வாழச் செய்தார். 14 தமிழினத்து முதியபழங் குடிக ளான தமிழ்நாட்டு முகமதியர் தமைம றந்து தமிழிருக்க அரபியைத்தாய் மொழியா வெண்ணித் தமிழ்மரபு திரிந்தவுடந் தான்செய் தாரே. 15 தெலுங்கருங்கன் னடருமராட் டியருஞ் சௌராட் டிரருமொரு தமிழகமாத் தெரியா வண்ணம் கலங்குறுணிச் செங்கொள்ளுங் கருங்கொள் ளும்போல் கலந்தநிலை யடைந்திடவுங் கைசெய் தாரே. 16 ஆங்கிலர்தஞ் சமயமதை மேற்கொண் டாருக் களித்தரச வலுவலினால் அவர்ப்பெ ருக்கி ஈங்கவர்கள் தமிழ்மரபை யிழந்து வாழும் இன்னாத நிலையதனை யியற்றி விட்டார். 17 தாய்நாட்டுப் பெயர்மாற்றி அரசை மாற்றித் தமிழ்த்தாயைச் சிறையிட்டிந் நாட்டை விட்டுத் தாய் நாட்டுக் காங்கிலவர் தாம்போய் விட்டார். தமிழ்நாட்டின் நிலையையினிச் சரிசெய் வீரே. 18 கட்டளைக்கலித்துறை சூழ்ச்சி வலியுந் தொடர்ந்த சமயத் தொடர்புமஃதால் வீழ்ச்சி யடைந்து முடியுடை மூவரும் வெம்பகையால் தாழ்ச்சி யடையத் தமிழகம் அன்னவர் தாளடிக்கீழ் ஆழ்ச்சி யடையய லாட்சியிஃ தாமென் றறிகுவிரே. 19 5. குடியாட்சி கொச்சகக்கலிப்பா காந்தியைப் போற்றுதும் காந்தியைப் போற்றுதும் மாந்தருள் நம்மடிமை வாழ்வை யகற்றிடப் போந்தவன் ஆதலி னால். 1 அடிகளைப் போற்றுதும் அடிகளைப் போற்றுதும் விடுதலை வேட்கையை வித்தி விளைத்துநம் அடிமையைப் போக்கிய தால். 2 அண்ணலைப் போற்றுதும் அண்ணலைப் போற்றுதும் மண்ணிடை நாந்தனி வல்லர சாகிடப் பண்ணிய கண்ணியத் தால். 3 - இவை மூன்றும் தரவு. வெடிபிடித்துக் களங்குதித்து மெய்வீரங் காட்டி வெம்போர்செய் தேவாகை வேயாமல், நாட்டுக் கொடிபிடித்தவ் வயலாட்சிக் கொடுமையினை வென்று குடியாட்சி நமக்கீந்த குணக்குன்றம் வாழ்க! 4 மறப்போரால் களங்கண்டு வாளேந்தி நின்று மக்களைக்கொன் றேவாகை மலையாமல் மறுவில் அறப்போரால் அயலாட்சி யதுபோக்கி மக்கள் ஆட்சிமலர்ந் திடச்செய்த அருளாளன் வாழ்க! 5 எந்நாட்டு மக்களர சியலடிமை யாக இருக்கவினிப் பொறுக்கேனென் றெதிர்த்தறப் போர்செய்தே இந்நாட்டு மக்களர செய்திடவே செய்த எம்மடிக ளாங்காந்தி இனியபெயர் வாழ்க! 6 தட்டுமுட்டுக் களைமூட்டை கட்டிக்கொண் டிமையும் தாழ்க்காமல் எங்களுயர் தாய்நாட்டை யின்றே விட்டுவிட்டு வெள்ளையனே வெளியேறு கென்றே வீரமுழக் கஞ்செய்த மேதக்கோன் வாழ்க! 7 அயலாட்சி யாளரொடொத் துழையாத வீரன் அடிப்போர்க்கும் இன்னாசெய் யாவினிய தீரன் அயலாட்சிக் கொடுங்கோலுக் கஞ்சாத சூரன் அருளாள னாங்காந்தி யடிகள்பெயர் வாழ்க! 8 அணுகுண்டு வெடித்திடினும் அஞ்சாத நெஞ்சன் அருஞ்சிறையில் கிடந்திடினும் அயராத வுள்ளன் நணுகுண்டோ ருளங்கவரும் நகைமுகத்தெம் மையன் நந்நாட்டை நமக்கீந்த நற்பெயரோன் வாழ்க! 9 - இவை ஆறும் தாழிசை. எனவே, - இது தனிச்சொல். வாயுற வாழ்த்தி வணங்கி யவன்செயலை மாயிரு ஞாலத்தே வள்ளுவன் வான்குறள்போல் மாட்சி யொடுபொலிந்து வாழ்க குடிமக்கள் ஆட்சி யதைப்போற்று வாம். 10 - இது வெண்சுரிதகம். 1. வாக்காளர் சிந்து நாட்டுக்கு நல்லது சொல்வேன் - நான் நன்மை தெரிந்தது சொல்வேன் கேட்டுக் கடைப்பிடிப் பீரே - வருங் கேட்டினுக் கஞ்சிடு வீரே. 11 அயலவ ராட்சியின் றில்லை - மக்கள் ஆட்சிநம் நாட்டினுக் கெல்லை. வயலை யுழுதுநெல் நட்டார் - அவ் வளங்கொள வேகடன் பட்டார். 12 வாக்கு வழங்கும் பருவம் - அது வந்தவர் ஒவ்வொரு பேரும் வாக்கத னாலர சாளும் - நாட்டு மன்னவ ரென்ப தறிவீர். 13 உங்களை நீங்களே யாளும் - அர சுண்மை யதையறி வீரே எங்ஙன முங்களை நீங்கள் - ஆள்கின் றீரென்ப தையறி வீரே. 14 சாறுமொண் டூற்றிடுங் கரண்டி - அதைச் சட்டியில் பொட்டென்று போட்டால் சோறுமிஞ் சிப்போகு மன்றே? - இதன் சூழ்ச்சியை யறிதல் நன்றே. 15 ‘வீட்டுக் கரசர்கள் நீங்கள் - வாக்கு வேண்டிவந் தோமிங்கு நாங்கள் நாட்டுக் கரசர்க ளாக்கி - வேண்டும் நன்மைசெய் வீர்குறை போக்கி. 16 எந்தெந்த வேளையும் நீங்கள் - எங்கட் கிட்டகட் டளையை நாங்கள் அந்தந்த வேளையே செய்வோம் - உங்கள் ஆணைப் படிநடந் துய்வோம். 17 வாவெனில் வீசியெ றிந்து - விட்டு வந்து விடுவோமப் போதே. போவெனச் சட்டமன் றத்துக் - குங்கள் பொன்மொழி யைத்தரு வீரே, 18 என்றெல்லா முங்கள்சார் பாளர் - இன்னும் என்னென்ன வெல்லாமோ சொல்வார் ஒன்றில்லா தாய்ந்துபார்த் தன்னார் - இயல் புள்ள படியறி வீரே. 19 அத்தை மகனவ னென்பார் - மாமிக் கக்காவின் மாப்பிள்ளை யென்பார் சித்திக்குச் சித்தப்பன் என்பார் - உங்கள் செல்லத்துக் குத்தம்பி யென்பார். 20 கைத்தறித் துணியே நாங்கள் - என்றும் கட்டி வருகிறோ மென்பார். கத்தரிக் காய்வணி கத்தில் - வாரிக் காரனுக் குத்தம்பி யென்பார். 21 மஞ்சள் மண்டிக்காரர் எங்கள் - சின்ன மாமனார் தம்பிக்கு மச்சான். பஞ்சுக் கடைக்காரர் மாமன் - எங்கள் பாட்டியார் தம்பிக்குப் பேரன். 22 கூட்டுறவு வுக்கடைத் தலைவன் - என் கொழுந்தியின் நங்கைக்கு மச்சான். வீட்டு வரியதி காரி - எங்கள் வேலைக்கா ரிதம்பி பையன். 23 மாவட்ட ஆட்சித் தலைவர் - எங்கள் மைத்துனன் சொல்லை மறுக்கார். தீவட்டி தள்ளிய நடுவர் - எங்கள் சின்னக்கண் ணுமாமி தம்பி. 24 காய்கறி வாங்குதல் நாங்கள் - உங்கள் கடையிலே தானென்றும் என்பார்; போய்வரு கின்றோம் வணக்கம்! - நாளை போடத் தவறாதீர் என்பார். 25 கூசாம லேயெதிர் நின்று - கைக் கூலி கொடுக்கவுங் கூசார். காசுக்கு நாலைந்து விற்க - கண்டங் கத்தரிக் காயல்ல வாக்கு! 26 தாக்கும் புலிக்கஞ்சா யானை - தன் தலையில்மண் போட்டுக்கொள் வதுபோல் வாக்கை வழங்கித் தகார்க்கு - உங்கள் வாழ்வைக் கெடுத்துக்கொள் ளாதீர். 27 ஊருக் கிவர்செய்த நன்மை - என்ன உண்டென்று பார்த்திடல் வேண்டும். பேருக்கு வேட்பாள ரென்று - வாக்குப் பெட்டி நிரப்புதல் தப்பு. 28 நாட்டுக் கவர்செய்த நன்மை - ஒரு நாலைந்தே னுங்காண வேண்டும் வீட்டுக்குப் பன்முறை வந்தார். - என வீசி யெறியாதீர் வாக்கை. 29 அவர்க்கு முன்னரிவர் வந்தார் - இவர் அண்ணனுங் கூடமுன் வந்தார். இவர்க்குத்தான் போடுவே னென்று - சும்மா ஏமாந்து போடாதே தம்பி. 30 சட்ட மன்றத்திலே சென்று - செய்யும் சட்ட திட்டங்களை நன்று ஒட்டியும் வெட்டியும் பேசும் - திறம் உண்டோ வெனப்பார்க்க வேண்டும். 31 ஒருவருக் காயினும் என்றோ - ஓர் உதவிசெய் ததுண்டோ இன்றோ? கருவினி லேயீர முண்டோ? - எனக் காணுதல் மக்கள் கடமை. 32 போக்கு வரத்தினைப் போல - மெய் போலப் புளுகுவர் சால வாக்கு நயத்தினை நம்பி - ஏ மாறுதல் கூடாது தம்பி. 33 தீச்செயல் செய்திட நாணும் - ஒரு செம்மலைத் தேறுதல் வேணும், வாய்ச்சொல்லை மெய்யென நம்பி - வரு வார்க்கு வழங்காதே தம்பி. 34 நம்பிக்கை நாணய முள்ளோன் - என்றும் நல்லவர் கூட்டுற வுள்ளோன் தம்பிக்கெ னினுந்தீ வழியில் - செல்லாத் தக்கோனைத் தேர்ந்தெடு தம்பி. 35 சொந்தக் குறையினைப் போலப் - பிறர் சொன்னதைச் செய்துமு டிப்போன் மைந்தர்க் கெனினுந்தீ வழியில் - செல்லா மாண்பனைத் தேர்ந்தெடு தம்பி. 36 சொன்னசொல் லுத்தவ றாதான் - பிறர் சொல்வதைக் கேட்கம றாதான் நன்நெறி யிற்பொரு ளீட்டும் - ஒரு நல்லோனைத் தேர்ந்தெடு தம்பி. 37 குற்றங் குறையுடை யானை - கொண்ட கொள்கை எதுவுமில் லானை சிற்றினஞ் சேர்வுடை யானை - மறந்தும் தேர்ந்தெடுக் காதேநீ தம்பி. 38 கொள்ளை கொலைபுரிந் தானை - கடன் கொண்டு கொடுக்கிலா தானை உள்ள மிளகிலா தானை - தம்பி ஒருக்காலும் தேர்ந்தெடுக் காதே. 39 எளியர்க் கிரங்கிலா தானை - மக்களை ஏமாற்றி வாழ்ந்திடு வானை தெளியத் தகாவொழுக் கானை - மறந்தும் தேர்ந்தெடுக் காதேநீ தம்பி. 40 கல்வி யறிவிலா தானைப் - பிறர் கைப்பொருள் கொண்டுவாழ் வானை செல்வஞ் சிறிதுமில் லானைக் - கட்டாயம் தேர்ந்தெடுக் காதேநீ தம்பி. 41 தாய்மொழிப் பற்றிலா தானை - இனந் தன்னைக்காட் டிக்கொடுப் பானை வாய்மொழி காக்கிலா தானை - நீ மறந்தேனுந் தேர்ந்தெடுக் காதே. 42 தன்னல மிக்குடை யானை - வாழும் தாய்நாட்டுப் பற்றிலா தானை சின்ன வறிவுடை யானைக் - கட்டாயம் தேர்ந்தெடுக் காதேநீ தம்பி. 43 அஞ்சுவ தஞ்சாத வர்க்கும் - ஆளும் அறிவு சிறிதுமில் லார்க்கும் வஞ்சக நெஞ்சுடை யார்க்கும் - உனது வாக்கை வழங்காதே தம்பி. 44 காலத்துக் கேற்றவா றாகத் - தம் கருத்தை மாற்றிக்கொள்ளா தார்க்கும் போலிக்கொள் கையுடை யார்க்கும் - வாக்கைப் போட்டுக் கெடுக்காதே தம்பி. 45 குடித்துக் களித்திடு வார்க்கும் - சூதர் கூட்டத் தொடுதிரி வார்க்கும் அடுத்துக் கெடுத்திடு வார்க்கும் - வாக்கை அள்ளி வழங்காதே தம்பி. 46 ஐம்பெருங் குற்றஞ்செய் வார்க்கும் - மக்க ளாட்சிப் பொறுப்பறி யார்க்கும் வம்பு வழக்குடை யார்க்கும் - உன் வாக்கை வழங்காதே தம்பி. 47 எக்குறை பாடுமி லானை - பொறுப் பேற்று நடந்துகொள் வானை பக்குவ மானபண் பானை - நன்கு பார்த்துமே தேர்ந்தெடு தம்பி. 48 இன்னுஞ் சிலசொலக் கேளீர் - கை யேந்தியே வாக்களிக் காதீர் அன்ன படிநீங்கள் செய்தல் - மக்க ளாட்சியை விற்பது போலாம். 49 தோற்றசார் பாளர்வாக் காளர் - தங்கள் தோல்வியை யன்றே மறந்து போற்றுதல் வேண்டும்வென் றோனை - அஃதே போலும்வாக் காளர் பொறுப்பாம். 50 சாதிப் பிரிவைநோக் காதீர் - ஏற்ற தகுதி யினைமறக் காதீர் சாதிக் கரசியல் மேடை - செந் தளிருக் கடாததீ வாடை. 51 உன்விலை போன்றதுன் வாக்கு - மக்கள் உரிமைய தாமென நோக்கு பொன்விலை போன்ற அவ் வாக்கை - நீ போடா திருக்காதே தம்பி. 52 ஓரிரு வாக்கினால் தோற்றோர் - சிலர் உண்டெனு முண்மை யறிவாய் யாரெனின் ஆட்சியி லப்போ - உரிமை இன்றென வாயுனக் குப்போம். 53 உங்கள் தொகுதியின் சட்ட - மன்ற உறுப்பினர் பாலன்று பட்ட உங்க ளதுகுறை பாட்டை - எடுத் தோதியே போக்குதல் வேண்டும். 54 ஆட்சியா ளரவ்வப் போது - செய்யும் ஆட்சிமன் றச்சட்ட திட்ட மாட்சி யலாதவை நோக்கி - அவை மாண்புறச் செய்திட வேண்டும். 55 ஆக்கிவைத் தாற்போ தாது - பகுத் தன்புடன் உண்டிட வேண்டும். வாக்கை வழங்கியே விட்டோம். - என மல்லாந்து தூங்கிட வேண்டாம். 56 அரசர்க ளாட்சியின் றில்லை - மக்கள் ஆட்சி நடக்கிற தின்று. அரசர்க ளாகிய நீவிர் - நல் லாட்சி நடக்கத்தூ தாவிர். 57 மன்னர்க ளாட்சியின் றில்லை - நாட்டில் மக்களாட் சிநடக் கிறது. மன்னர்க ளாகிய நீவீர் - அதை மாண்புறச் செய்துயர் வாவீர். 58 வண்டிபூட் டினாற்போ தாது - பூட்டிய வண்டியை ஓட்டுதல் வேண்டும். வண்டிபோல் ஆட்சிந டக்க - நீங்கள் வண்டிக்கா ரனாக வேண்டும். 59 தித்திக்குந் தேம்பாகு மொன்றே - நாளும் தின்னிற் றெவிட்டிடு மன்றே? அத்தக்க நல்லாட்சி போற்றீர் - ஐந் தாண்டுக் கொருமுறை மாற்றீர். 60 காந்தி யடிகள்பேர் வாழ்க! அவர் கண்ட குடியாட்சி வாழ்க! வேந்தர்க ளாகிய நீங்கள் - என்றும் வெற்றிச் சிறப்புடன் வாழ்க! 61 2. சார்பாளர் சிந்து காந்தி கழல்வாழ்க! - விடுதலைக் காட்சி யதுவாழ்க! மாந்தர் குலம்வாழ்க! - ஆட்சி மாட்சி யுறவாழ்க! 1 மக்களால் தேர்ந்தெடுத்த - சட்ட மன்ற உறுப்பினரே! மக்கள் குறைதீர்த்து - வாழ்கென வாழ்த்திட வாழ்ந்திடுவீர். 2 நல்லரெஞ் சார்பாளர் - என நம்பிக்கை கொண்டிடவே நல்லன செய்திடுவீர் - உங்கள் நற்பணி யுமதுவே. 3 உங்கள் தொகுதியிலே - அடிக்கடி உள்ள குறையறிந்து தங்கள் குறைதீர்த்து - வாழ்வு தழைத்திடச் செய்திடுங்கள். 4 ஆண்டுக ளோரைந்தும் - ஆட்சி அலுவலர் தந்நிலையில் தூண்டு நாட்டன்புடனே - மக்கட்குத் தொண்டு புரிந்திடுவீர். 5 எதிரிக்கு வாக்களித்தார் - இவர் என்றுளத் தெண்ணாதீர் அதர்பல வூர்க்கிருந்தால் - ஒருவழி யார்விடுத் துச்செல்வார். 6 மக்க ளுரிமையது - விரும்பும் வழியிலே சென்றிடுதல் அக்குறை நின்றவர்க்கே - உரித் தாகு மெனவறிவீர். 7 உள்ள கடைகளிலே - எல்லோரும் ஒன்றிலே வாங்குவரோ? புள்ளிக் கணக்கெடுத்தால் - ஊதியம் போகு மொருகடைக்கே. 8 உங்களுக் காகமக்கள் - வாக் குரிமை வழங்கவில்லை தங்களுக் காகவவர் - வாக்குத் தந்தன ரென்றறிவீர். 9 காரம் பிடிக்காதென்பார் - இனிப்பைக் கையில்தொட் டில்லேமென்பார் மோரு படிகுடிப்பார் - பாலை மோந்துபார்க் கமறுப்பார். 10 மாரி மிகப் பொழியும் - ஒருபக்கம் வான்பொழி யாதொழியும். வாரி யொருவருக்கே - வாக்கை வழங்குத லெங்கமையும்? 11 இத்தகை யவியல்பே - தேர்ந் தெடுக்கு மவர்முடிவும். அத்தகை யவியல்பை - ஆய்ந் தறிவது நுங்கடனே. 12 வாழ்க்கைத் தொழிலகமாய்ச் - சட்ட மன்றத்தை யெண்ணாதீர் வாழ்க்கைக் குறைதீர்த்து - மக்களை வாழ்விப்ப துங்கடனே. 13 வருவாய் வருவழியாய்ச் - சட்ட மன்றத்தைக் கொள்ளாதீர் வருவா யதைப்பெருக்கி - மக்களை வாழ்விப்ப துங்கடனே. 14 செல்வந் திரட்டுதற்கா - ஆட்சித் திசையினை நோக்காதீர் செல்வந் திரண்டிடவே - நாட்டில் செய்வது நுங்கடனே. 15 செய்த செலவதனைச் - சரிசெய்யத் திட்டங்கள் தீட்டாதீர் செய்ததீர்ப் பாளர்களை - வாழ்விக்குந் திட்டங்கள் தீட்டிடுவீர். 16 ஆட்சியின் செல்வாக்கால் - பெரும்பொருள் ஆக்க நினையாதீர் மாட்சியன் றோடுமக்கள் - தமையே மாற்றுத லுமாகும். 17 மன்ற நிகழ்ச்சியிலே - கட்டாயம் வருஞ்சட்ட திட்டங்களை நன்றல சிப்பார்த்து - மக்கட்கு நல்லன செய்திடுவீர். 18 கையெழுத் துப்போடல் - நுங்கள் கடனெனக் கொள்ளாதீர் கையெழுத் துப்போட்ட - மக்கள் கருத்தை யுணர்ந்திடுவீர். 19 பள்ளிக்குச் செல்லாமல் - படம் பார்க்கச் செல்லுதல்போல் வெள்ளிப் பணத்தையெல்லாம் - வீணாய் விழலுக் கிறைக்கா தீர். 20 பாட்டிக் கதைகேட்கும் - இளம் பால்வாய்ச் சிறுவர் கள்போல் கூட்டத்தோ டுகூடி - அரகர கோவிந்தாப் போடாதீர். 21 நாட்டு நடப்பினையும் - சட்டத்தின் நன்மையும் தீமையையும் காட்டித் தெளிவுபட - உங்கள் கருத்தை யுரைத்திடுங்கள். 22 மாட்டுக்குக் கொம்பில்லை - எனினும் வாய்திற வாதுங்கள் பாட்டுக் கிருந்துவிட்டுக் - கைதூக்கிப் பாவைக ளாகாதீர். 23 தலைவர்கள் சொல்லுவதே - ஆட்சிச் சட்ட மதுவானால் செலவில்லை யேபலரை - மக்கள் தேர்ந்தெடுத் தேயனுப்பல்? 24 கட்சிக் கட்டுப்பாடு - கட்சிக்குக் கட்டாயம் வேண்டியதே வெட்சியை வேலெனினும் - பேசாமை வீண்கட்டுப் பாடாகும். 25 காணுந் தவறுகளை - எடுத்துக் காட்டித் திருத்துதலே மாணுற நல்லாட்சி - மலர்ந்து மணந்திடற் கேதுவுமாம். 26 தலைவர்கள் கூறுவதை - நாம் தட்டியே பேசுவது நலமல வென்றிருத்தல் - ஆட்சி நடைமுறைக் கொவ்வாது. 27 குற்றங் குறைகாட்டி - நல்ல குணத்தினைக் கொள்வதற்கே மற்றவை யோர்முன்னர் - திட்டத்தை வைப்ப தெனவறிவீர். 28 பல்லா யிரம்பேரின் - நல்வாழ்க்கைப் பாதை யமைத்திடுநீர் அல்லாம லேயிருந்தே - வீணேஐந் தாண்டைக் கழிக்காதீர். 29 அடுத்த முறைநோக்கி - அதற் காவன செய்யாதீர் கொடுத்த அவர்வாக்கின் - உரிமை கொல்லுதல் போலாகும். 30 மேய கடமையெனத் - தொகுதிக்கு வேண்டிய நன்மைகளை ஆய நடைமுறையில் - பிற ழாதுமே செய்திடுவீர். 31 பேரும் புகழுமுற - இவரைப் பெற்றனம் என்றுவக்க சீருஞ் சிறப்புமுறத் - தொகுதிக்குச் செய்வன செய்திடுவீர். 32 ஒவ்வொ ருறுப்பினரும் - இங்ஙனம் உண்மை யுடனியன்றால் தெவ்வருங் கண்டுமெச்ச - நாடு சிறப்புற் றிலங்கிடுமே. 33 மக்களாட் சிவாழ்க! - இந்நாட்டு மன்னர்க்கு மன்னர்களாய் மிக்க சிறப்புடனே - நீவிர் மேம்பட வேவாழ்க! 34 3. ஆள்வோர் தாழிசை கதிர்ப ரப்பி இலகொளி வீசியே காந்தி யென்னும் கதிரவன் தோன்றவே மதிம ருண்டய லாட்சி யிருள்கெட மக்க ளாட்சி மலர்ந்தது நாட்டிலே. 1 மக்க ளாட்சி மலர்ந்திட மக்களால் மன்ன ராகிட வாக்கு வழங்கிடத் தக்க வாட்சி நடத்திடத் தக்கராய்த் தான மைந்தநல் லாட்சித் தலைவர்காள்! 2 அன்று மன்னர் அணிமுடி சூடல்போல் அமைந்த தேபொதுத் தேர்தல்; அம் மன்னவர் நன்ற மைச்சோ டமைந்தது போன்றதே நல்ல மைச்சின் றுறுப்போ டமைந்ததே. 3 அரசர் களன்ற மைச்சவை கூட்டியே ஆய்ந்த ரசுந டத்தின ரங்ஙனே, அரசர் களின்ற மைச்சரே யாகையால் அவையைக் கூட்டியாங் காட்சி நடத்துக. 4 மன்ன ருக்கன் றரசியல் வாழ்வினில் வழிவ குக்க அமைச்ச ரமைந்தனர். மன்ன ரின்றிலர்; மன்னர் நிலையினில் மாட்சி யோடர சாட்சி புரிகுவீர். 5 அன்று மக்களை மன்னவர் ஆண்டனர் அதைந டத்த அமைச்ச ரமைந்தனர். இன்று மக்களை மக்களே ஆள்வதால் இதைந டத்த இயன்ற அமைச்சர்காள்! 6 மன்ன ராட்சிக் குதவிய மாண்புபோல் மக்க ளாட்சிக் குதவுதல் மாண்பதாம். மன்னர் மக்களே யாதலால் மக்கள்தம் மாட்சி மேம்பட ஆட்சி புரிகுவீர். 7 எடுத்து ரைத்த பழந்தமிழ் நல்லமைச் சியலி னோடவ் வரசியல் மாட்சியை மடுத்து ணர்ந்திந்தக் காலத்துக் கேற்பவும் மதியி னாய்ந்து புரிகுவீர் மாட்சியே. 8 ஆளு வோரெனும் அந்நிலை எய்தினும் ஆயின் ஆளப் படுபவர் நீவிரே. நாளு மக்கள் நலத்தினை நாடியே நல்ல செய்தவர் நன்மதிப் பெய்துவீர். 9 எக்கு றையும் இலாம லமைதியாய் இனிது வாழ்ந்திட எண்ணியே நுங்களை தக்க வாக்கு வழங்கியே தேர்ந்தெடுத் தார்க ளென்பதைச் சற்றும் மறக்கலீர். 10 உணவு டையுறை யுள்ளெனும் மூன்றுமே உலக வாழ்வுக் குறுதி யுடையவாம். உணவு டையுறை யின்றி யொருமகன் உலவு நாடர சுள்ளநா டல்லவே. 11 தனியொ ருவற்கு ணவிலை யாமெனில் தாய கத்தை யழித்திடு வாமென முனிவி னோடு மொழிந்தத னுட்பொருள் முன்னை மூன்றும் உறவர சாள்வதே. 12 இன்னு மிந்தப் பழம்பெரு நாட்டிலே இங்கு மங்குநா டோடிக ளாய்ச்சிலர் மன்னு றுதொழி லின்றித் திரிவது மக்க ளாட்சி யதற்கழ கல்லவே. 13 போட்டி யிட்டுநின் றேபொதுத் தேர்தலில் பொருது வெற்றிபெற் றாட்சிக்கு வந்ததும். நாட்டு மக்களைக் கட்சிக் கொடியின்கீழ் நயப்ப துமக்க ளாட்சிக் கடாதுகாண். 14 ஆட்சி யிற்குரிய தாய அமைச்சர்கள் அன்றெ திர்த்தவ ரென்றோர் சிலருக்குக் காட்சி யிற்கரி தாதல் அரசியற் கடமை யன்றஃ துடைமையு மன்றரோ. 15 ஊட்டுங் கைக்கணி யாடை யணிந்துண வூட்டி லாதகை தன்னை வெறுப்பரோ! நாட்டு மக்களை ஆள்பவர் பத்துக்கு நாலு பேரை யொதுக்குதல் ஞாயமோ? 16 மணமு டிந்ததும் மற்றவர் மைந்தனை மரும கனென்று றவுகொண் டாடல்போல், அணவும் ஆட்சித் தலைவர்க ளானதும் அவரி வரென்ற ழைக்குதல் ஆகுமோ? 17 அடிக்குஞ் சேயை அணைத்திடுந் தாயென அரவ ணைத்திடல் ஆள்வோர் கடமையாம். வடிக்குஞ் சோறுகை யைச்சுடின் மற்றதை வாசல் பக்கத்தில் வீசி எறிவரோ? 18 வெறுக்கும் பிள்ளைக ளென்னினும் பெற்றவர் வெறுப்ப ரோமக்க ளாட்சி நடத்துவோர் ஒறுக்கும் அன்னவர் தன்னையுங் கையணைத் தொருங்கு போற்றுதல் உற்ற கடமையாம். 19 வருத்து கின்ற வயிற்று வலியுறின் வடையைச் சுட்டுவிட் டோமென்று தின்பரோ? உரைத்த கொள்கையின் றொத்ததன் றாமெனின் ஒதுக்கி விட்டுப் புதுக்குதல் வேண்டுமே. 20 இன்ன செய்குவம் என்றதை நம்பியே எம்மைத் தேர்ந்தெடுத் தாரதைச் செய்திலேம் என்னின் அன்னவர் என்னினைப் பாரென எண்ணி யின்றுவேண் டாதது செய்யலீர். 21 குடுமி நாகரி கத்தைவிட் டுக்குறுங் குஞ்சி நாகரி கத்தைமேற் கொண்டதும், கடுமை யான குலமுறை தேய்ந்ததும் காலத் தச்சனின் கைவினைப் போக்கன்றோ? 22 வழிவ ழிவரு மன்ன ரொழிந்ததும், மக்க ளாட்சி மலர்ந்ததும், மக்களின் மொழிவ ழிவரு வோர்முறை செய்வதும் முன்பி லாத புதுமுறை யல்லவோ? 23 மக்க ளாட்சி யினிது நடந்திட மன்ன ராயஅம் மக்கள் கருத்தினைத் தக்க வாறுரைக் கவிரு கட்சிகள் தான மைதலவ் வாட்சி யிலக்கணம். 24 இன்ன வின்ன இனியவை யாமென இனிதி னாய்ந்துசெய் தின்புற்று வாழவே அன்ன வாறு குடிமக்க ளாட்சியில் அமைந்த வேயெதி ராயிரு கட்சிகள். 25 மக்க ளுக்கு நலஞ்செயத் தோன்றிய மாற்றுக் கட்சிகள் செய்யுமவ் வாட்சியில் மிக்க கட்சிநா டாளுமவ் வாட்சியை மேம்ப டநடத் தும்மெதிர்க் கட்சியே. 26 எதிரெ னும்பெய ராலியல் கட்சிகள் எதிரி யாகவே எண்ணியே மற்றதை அதிர வெம்பகை கொண்டு நடக்குதல் அரசி யற்கட்சி கட்கியல் பல்லவே. 27 நன்ன லஞ்செயத் தோன்றிய கட்சிகள் நாளும் வெம்பகை யாளர்போல் மக்களுக் கின்னல் எஞ்சலி லாதுசெய் தேகட்சி ஏற்றங் கண்டிட எண்ணல் தகாதுகாண். 28 மக்க ளுக்கு நலஞ்செயத் தோன்றிய மாற்றுக் கட்சிகள் கட்சி வெறிகொடம் மக்க ளுக்கிடை யூறுகள் செய்குதல் மள்ளர் நெல்லினைக் கொல்லுதல் போலுமே. 29 மாற்றுக் கட்சியி லுள்ளரும் இந்நாட்டு மக்க ளேயென்ப தைமறந் தன்னரை ஆற்றுக் கட்சியர் போன்று கொடுமைக்கா ளாக்கு தல்மக்க ளாட்சியின் மாட்சியோ? 30 ஆளுங் கட்சி எதிர்க்கட்சி என்பன அன்னை தந்தைபோன் றன்பி னணைத்தலாம் வாளுங் கத்தியும் போல்மக்க ளஞ்சுதல் மாற்றுக் கட்சியின் தோற்றம தன்றுகாண். 31 தட்டுக் கெட்ட சமய வெறியினால் தமிழர் வாழ்வு சரிந்தது போலன்று கட்டுக் கெட்டவிக் கட்சி வெறியினால் கையி கந்து கடமை தவறவோ! 32 பல்கு ழுவும்பாழ் செய்யுட் பகையும்பண் பாடி லாதாள்வோ ரோடெதிர்த் தேவரும் கொல்கு றும்பு மிலாதது நாடெனக் கூறி னார்சொலை மீறி நடக்கவோ? 33 எந்தக் கட்சிவென் றாலுமவ் வெற்றியால் எய்து கின்ற பயன் தமிழ் மக்களே அந்தக் கட்சியோர் கண்ணுக்கு வெண்ணெயும் அடுத்த கட்சியோர் கண்ணுக்குச் சுண்ணமோ! 34 இருவர் கண்ணியும் ஆரென ஓதியே இகல்த விர்த்தவக் கோவூர்க் கிழாருரை இருவர் கட்சி யினருந் தமிழரென் றெடுத்து ரைத்தற் கெடுத்துக்காட் டல்லவோ? 35 மக்க ளென்னும் பயிர்க்கிரு கட்சியாம் மதகி ரண்டினில் நன்மையாம் நீரினைத் தக்க வாறு தகவினிற் பாய்ச்சியே தழைக்க அப்பயிர் தான்செயல் தக்கதே. 36 நன்மை தீமை இவையிவை யாமென நாட்டு மக்களுக் கோதுத லல்லது வன்மை யாற்றத்தம் கட்சி வளர்க்குதல் மக்க ளாட்சியின் மாட்சிய வல்லவே. 37 அந்த நாளின் எதிர்ப்பினை எண்ணியே ஆளுங் கட்சி எதிர்க்கட்சிக் காரர்கள் எந்த நாளும் பகைமைபா ராட்டியே இருத்தல் கூடா களிறும் புலியும்போல். 38 ஆளுங் கட்சி எதிர்க்கட்சிக் காரர்கள் அண்ணன் தம்பியர் போன்ற நிலையினில் நாளுங் கூடி நயந்து நலம்பட நாட்டு மக்கட்கு நன்மைகள் செய்கவே. 39 மாறி மாறியே ஞாயிறுந் திங்களும் வந்து மக்களை வாழ்வித்தல் போலவே, மாறி மாறிவந் தேயிரு கட்சியும் மக்க ளுக்கு நலஞ்செய வேண்டுமே. 40 மக்க ளுக்காக வேஆட்சி என்பதை மறந்தொ ரேகட்சி ஆள நினைப்பது மக்க ளாட்சியின் மாட்சியா காதது மக்கள் நன்மைக்கும் வாய்ப்புடைத் தல்லவே. 41 ஆள வெங்கள்கட் சியேத கவுடைத் தாமெ னல்மக்க ளாட்சிக் கடுக்குமோ? ஆள வேண்டு முறையுட னேமக்கள் ஆட்சி யினியல் புமறி யாமையாம். 42 இரண்டு கட்சியும் அந்தந்தக் காலத்துக் கேற்ற திட்டங்கள் தீட்டி இயையுடன் இரண்டு கட்சியும் மாறிமா றியாட்சி ஏற்று மக்கட் கியன்றன செய்கவே. 43 மாற்றுக் காவலர் வாய்வழி காப்பதும் வழியை மாற்றுப் பரியால் கடப்பதும் மாற்றுப் பேர்களால் மாதொழில் செய்வதும் மானு மேமாற்றுக் கட்சியி னாட்சியே. 44 மந்த மின்றிச் சுறுசுறுப் பாகவே மக்க ளாட்சி யினிது நடந்திட இந்த மாற்றம் இனிது பயன்படும் என்னும் உண்மையை ஏற்று நடக்கவே. 45 வாயில் வந்த படிமாற்றுக் கட்சியை வைவை யென்றுகண் டபடி வைதந்த வாயி னிலொரு மைப்பாடு பேசுதல் மரத்தை வெட்டி நிழல்காண்ப தொக்குமே. 46 ஒருபக் கமொரு மைப்பாடு பேசிமற் றொருபக் கம்மாற்றுக் கட்சியைத் திட்டினால் வெருவிக் கொண்டொரு மைப்பா டெனக்கிங்கு வேலை யில்லை யெனவெளிச் செல்லுமே. 47 மக்க ளுக்கு நலம்பய வாதவம் மாற்றுக் கட்சியின் கொள்கையை மக்கள்பால் தக்க வாறுதங் கொள்கையோ டொப்பிட்டுத் தானு ரைத்தல் தகவுடைத் தாகுமால். 48 ஆளுங் கட்சிமக் கட்கு நலம்பய வாத வொன்றைச்சட் டஞ்செய முற்படின் கேளுஞ் சுற்றமும் போலப் பரிவொடு கேட்கு மாறு கிளத்தல் கடமையே. 49 ஏற்ற தேனும் எதிர்க்கட்சி சொல்வதை ஏற்றல் கூடா தெனுமவ் வடாப்பிடி ஆற்றல் சான்ற அரசியல் கட்சிக்கும் அடுப்ப தன்றணை யாற்றை யறிகுவீர். 50 இன்ன செய்வது நன்றிது தீதென எடுத்துக் கூறும் எதிர்க்கட்சிக் கூற்றினைப் பொன்ன வாவும் புனைமணி போற்கொளல் பொருந்தும் மாட்சிப் புலமையின் பாற்படும். 51 ஆட்சி யேற்று நடத்தும் அமைச்சர்கள் ஆளுங் கட்சி எதிர்க்கட்சி என்பன மாட்சி யோடு வலமிடப் பூணியா மதித்த ரசியல் வண்டி நடத்தலே. 52 காலின் மிக்குக் கடுகுங் குதிரைக்கும் கையில் வேண்டுங்கட் டாயஞ் சிறியகோல்; நூலின் நல்லர சாளும் அமைச்சர்க்கும் நுவலெ திர்க்கட்சி வேண்டுங்கட் டாயமே. 53 ஏற்ற வோர்சிறு கோலின் உதவியால் எதிர்த்து நீரில் எளிதில் செலும்புணை; ஆற்றல் மிக்க அமைச்சுக்கும் நல்லர சாள வேண்டும் எதிர்க்கட்சி அங்ஙனே. 54 கொடுவெ றிக்கொல் களிறும் ஒருசிறு குத்துக் கோலின் குறிப்பினிற் சென்றிடும்; கொடியு யர்த்துநா டாளும் அமைச்சர்க்கும் குறித்துக் காட்ட எதிர்க்கட்சி வேண்டுமே. 55 பாய்பு லிபோற்ப றந்திடும் காங்கயப் பழைய கோட்டை மயிலைக்கும் பாய்ந்திட ஆய்பொ ழுதுவேண் டுஞ்சிறு சாட்டைகை ஆளுங் கட்சிக்கும் வேண்டும் எதிர்க்கட்சி. 56 மனைவி சொல்வதைக் கேட்டுக் கணவனில் வாழ்க்கை மேம்பட ஓம்பி வருகுவன். அனைய வாறெதிர்க் கட்சியின் ஆய்வுரை ஆளுங் கட்சி யரசுக்கு வேண்டுமே. 57 நாடித் தங்கட்கு நன்னலஞ் செய்யவே நாட்டு மக்கள் நயந்துமைத் தேர்ந்தனர். கூடிச் செய்வன செய்திரு கட்சியும் குடிக ளன்பினைக் கொள்ளுதல் நல்லதாம். 58 எக்கை யூட்டினும் வாய்க்கினி தின்பமாம். இடக்கை யூட்டின் இனிப்புக் கசக்குமோ? மக்க ளாட்சி மலரும் வழிவகை வகுப்ப தேகட்சி யாட்சியின் மாட்சியாம். 59 ஒருகைத் தாளம தோசை யுறாமைபோல் ஒற்றைக் கட்சியின் ஆட்சி யொழுங்குறா. இருகைத் தாளம்போல் ஆளுங்கட் சிக்குநேர் எதிர்க்கட் சியொன்றி ருத்தல்கட் டாயமே. 60 முட்டுக் கட்டை கொடாதவெத் தேருமூர் மூலை யிற்சென்று வீட்டினும் மோதுமால்; வெட்டித் தட்டி இடித்து விளக்கிட வேண்டும் ஆற்றல் மிகுமெதிர்க் கட்சியே. 61 விருப்பி லாப்பிள்ளை வெல்லப்பா காயினும் வேப்பங் காயைப்போல் வீசி யெறிதல்போல், கருப்பொ ருளெனி னுமெதிர்ப் பதெதிர்க் கட்சிக் கொள்கையாக் காணுதல் தீமையாம். 62 கன்றக் கைசெங் கரத்துப் படாரெனக் கடித டிக்கினும் இல்லெனச் சொல்லல்போல், நன்றைச் செய்யினும் அன்றெனுங் கொள்கையால் நாட்டு மக்கட்கு நன்மையுண் டாகுமோ? 63 தேர்ந்தெ டுத்த திருவுடை மக்கட்குச் செய்ய வேண்டிய செய்திரு கட்சியும் நேர்ந்தெ டுத்த நெறிகட வாமலே நிற்ற லேயாள்வோர்க் குற்ற கடமையாம். 64 தாளக் கையில் தகவிரு கட்சியும் தமது கொள்கை தவாது தகவுடன் ஆளத் தக்க தறிந்து கடைப்பிடித் தாட்சி செய்குதல் மாட்சிய தாகுமே. 65 எருவும் நீரும் நிலமும் இயையுற இயன்று பைங்கூழ் இனிது வளர்தல்போல், திருவுங் கல்வியும் சீரும் உறச்சட்ட திட்டங் கள்செய்து செங்கோற் செலுத்துவீர். 66 கொடுத்த வாக்கினைக் கொன்றுவிட் டேமுறை கோடு தலற மோவெனக் கூறிடின், அடுத்த தேர்தலில் எங்களைத் தேர்ந்தெடுக் காதிர் என்றல் அரசியல் மாட்சியோ? 67 நம்மைத் தேர்ந்தெடுத் தார்மக்கள் நல்லவை நாடிச் செய்து நடைமுறைக் கேற்பவை தம்மைக் காத்திட வென்ப துணர்ந்துமேற் சட்ட திட்டங்கள் செய்திடல் தக்கதாம். 68 ஆளுங் கட்சி எதிர்க்கட்சி யாகவே அமைந்த தான வலமிடப் பூணிகள் நாளு நன்மக்க ளாட்சி யெனும்வண்டி நன்கி னிதுந டக்க நடக்குக. 69 4. நல்லாட்சித்திட்டம் 1. அரசியலமைப்பு சிந்து காந்தி யடிகளெண்ணம் - இனிது கையது கூடும்வண்ணம் வாய்ந்து மக்களாட்சி - அரும்பி மலர்ந்ததிந் நாட்டாட்சி. 1 நம்மையே நாமாளும் - ஆட்சிமுறை நன்கமைந் தேநாளும் செம்மை யொடுநடக்கும் - படிபொதுத் தேர்த லதுநடக்கும். 2 வாய்ந்தவூ ராட்சிமன்றம் - பேரூர் மன்றம் நகர்மன்றம் தேர்ந்தமா நகர்மன்றம் - சட்டமன்றம் தேர்தல் நடக்குமன்றம். 3 இம்மன்ற மைந்தனுக்கும் - பொதுத்தேர்தல் ஏற்ற படிநடக்கும். அம்மன்றத் துத்தொடர்பாய்ப் - பிறவும் அமையுமவ் வாறியல்பாய். 4 ஆளுநர்க் காறைந்து - பொதுவாக் காளர்க்கு நாலைந்து நாளுயர்க் கவமைந்து - தேர்தல் நடக்கு மிகச்சிறந்து. 5 ஆட்சிமன் றத்தேர்தல் - ஐந் தாண்டினுக் கொன்றாதல் மாட்சி யுடனடக்க - வாக்கு வழங்கியே தேர்ந்தெடுக்க. 6 ஊர்மன்றம் ஒவ்வொன்றும் - ஊராட்சி உறுப்பது வாயொன்றும் பேர்மன்ற மேமுன்போல் - தேர்தல் பிரிவு படுமிதன்பால். 7 ஒன்றிய ஊர்மன்றப் - பகுதிக் கொவ்வோ ருறுப்பினராய் நன்றது தேர்ந்தெடுக்கும் - ஊராட்சி நற்கழ கநடக்கும். 8 பெரிய ஊர்மன்றம் - தேர்ந்தெடுக்கப் பெற்ற தலைவர்களும் உரிய ஊராட்சி - மன்ற உறுப்பின ராவார்கள். 9 மேயவூ ராட்சிமன்றம் - ஊர்க்கு வேண்டிய அத்தனையும் ஏய முறைப்படியே - செய் திடுத லதன்பொறுப்பாம். 10 மாவட்டந் தன்னிலுள்ள - ஊராட்சி மன்றத் தலைவரெலாம் மாவட்ட மன்றதனுக் - கியல்பாய் மன்னர்க ளாவார்கள். 11 ஓங்கிய நாட்டாண்மைக்- கழக உறுப்பினர் தங்களுக்குள் பாங்குட னேதலைவர் - தம்மைப் பார்த்துமே தேர்ந்தெடுப்பர். 12 அத்தலை வருடைய - அவ்வூ ராண்மைக் கழகத்திற்கு அத்தக வேயொருவர் - தலைவராய் ஆக்கிக் கொளப்படுவர். 13 தாங்கிய நாட்டாண்மைக் - கழகத் தலைவர் இருவர்களும் பாங்குட னூராட்சிக் - கழகப் பதவியி லுமிருப்பர். 14 ஆளுமூ ராட்சிமன்ற - மொடுநாட் டாண்மைக் கழகங்களும் ஆளுந கர்மன்றமும் - கட்சிச்சார் பற்று விளங்கிடுமே. 15 ஏற்புற ஊராண்மைக் - கழகம் இனிது நடைபெறவே மேற்பார்வை பார்ப்பதுவும் - பொதுத்துறை வேலை நடத்துவதும்; 16 கற்றறி வைப்பெறவே - உயர்தரக் கல்வி யளிப்பதுவும் மற்றவந் நாட்டாண்மைக் - கழகத்தின் மாண்புறு நற்பணியாம். 17 அமைதரு மிம்முறையே - காந்தி யடிகள்கண் டமுறையாம்; அமையும் படிப்படியாய் - மக்க ளாட்சி முறையிதுவே. 18 ஊராட்சி மன்றமதன் - தொடர்பாய் ஓங்குமா வட்டமன்றம் ஆராய்ச்சி யாலமைந்த - மக்க ளாட்சி யமைப்பாகும். 19 கட்டிநா டாளுகின்ற - நாட்டாண்மைக் கழகத் தலைவரெலாம் சட்டமன் றத்தினுக்கும் - உறுப்பினர் தாமாகு வாரியல்பாய். 20 ஒவ்வொரு கோட்டத்திற்கும் - இருப துறுப்பினர்க் குள்ளாக செவ்விய சட்டமன்றம் - அதற்குத் தேர்ந்தெடுக் கப்படுவர். 21 இத்தொகை யிற்குறைந்தும் - தேர்ந் தெடுப்பது வும்பொருந்தும். இத்தொகை யைக்கடத்தல் - தேவை யில்லை யதுநடத்தல். 22 மக்கள் அளவதனுக் - கேற்றபடி மாநில மாநகர்க்கு மிக்கவ ரைந்தாகக் - கொண்டு விளங்குமச் சட்டமன்றம். 23 இருபெருங் கட்சிகளே - தேர்தலில் ஈடு படுதல்நலம். இருபெரும் பூணிகள்போல் - வலிய எதிர்க்கட்சி யுமமையும். 24 ஒருகட்சி யேநிலையாய் - ஆளின் ஓங்கு மெதிர்ப்புமிக கருகுங் கு டியாட்சி - செய்வன கண்ணுக்குத் தோன்றாவே. 25 தம்முறைத் தேர்தலின்பால் - சலிப்புத் தட்டும்வாக் காளருக்கும். அம்முறை யத்துடனே - கட்சி ஆட்சிக்கு மேற்றதன்றே. 26 செம்மையோ டாட்சிமன்ற - உறுப்பினர் தேர்ந்தெடுக் கும்போதே இம்மா நிலத்தலைவர் - தேர்ந் தெடுக்கப் படுவார்காண். 27 வாக்கு வழங்கியொரு - மிக்க மாநில மக்களெல்லாம் ஆக்குந் தலைவரேதான் - மாநில ஆட்சித் தலைவராவார். 28 இம்மா நிலத்திலுள்ள - சட்டமன்ற எல்லாத் தொகுதியிலும் இம்மா நிலத்தலைவர் - தேர்ந் தெடுக்கப் படுவாரே. 29 ஆன்ற அறிவினரும் -நாற்பத்தைந் தாண்டின்மேற் பட்டவரும் ஆன்ற வொழுக்கினரும் - கட்சிச்சார் பற்றோரு மாவரிவர். 30 தாய்மொழி தாய்நாட்டுப் - பற்றுத் தகவே உடையவரும் வாய்மொழி மிக்கவரும் - பொதுநல மாட்சியு மேயரிவர். 31 மக்களால் தேர்ந்தெடுக்கப் - பட்டஇம் மாநிலத் துத்தலைவர் தக்க பெரும்பான்மைக் - கட்சித் தலைவர் தமையழைத்தே; 32 ஆட்சி நடத்திடவே - வேண்டும் அமைச்ச ரவையமைத்து மாட்சி யுடனாட்சி - நடத்திடு மாறு பணித்திடுவர். 33 கும்மி ஆட்சிமன் றத்தினர் செய்யுஞ்சட் டங்களை ஆய்ந்து குறையற வாக்கிடவே மாட்சி யொடுதேர்ந் தமைக்கப் படுமாய்வு மன்றம தொவ்வொரு மாநிலத்தும். 34 சட்டமன் றத்தாராட் சித்தலத் தாரித் தனிமா நிலத்தின் தலைவரொடு பட்டம் பெற்றார்பள்ளி கல்லூரி மார்களும் பப்பத்துப் பேராகத் தேர்ந்தெடுப்பர். 35 முத்தொழில் கல்வி பொதுப்பணி யாட்சி முறைகாவல் போக்கு நலவழியாம் பத்துத் துறையதி காரிக ளும்மொரு பத்துப்பே ரைத்தேர்ந் தெடுத்திடுவர். 36 முன் - சிந்து அந்தந்தச் சட்டமன்ற - உறுப்பினர் அளவுக்குத் தக்கபடி இந்திய மன்றினுக்குத் - தேர்ந் தெடுப்பரைம் மூவருக்குள். 37 மாநில மையமன்ற உறுப்பினர் வாக்கு வழங்கியேநம் தாய்நிலம் போற்றுகுடி - அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பர். 38 அன்னவ ரிந்நாட்டின் - பழம்பே ரரச ரதுநிலையில் தன்னர சுநடத்தும் - கட்சிச் சார்பற்ற வராவார். 39 மற்றவ ரிந்நாட்டுக் - குடி மக்கள்தம் மக்களெனப் பெற்றதாய் தந்தையைப்போல் - இனிது பேணும் பொறுப்புடையார். 40 ஆன்றாய்ந் தவிந்தடங்கிப் - பே ரறிவின் தலைநிற்கும் சான்றாண்மை மிக்கவரே - இதற்குத் தகவுடை யோராவர். 41 ஆங்கும் பெரும்பான்மைக் - கட்சி ஆட்சிப் பொறுப்பேற்கும்; ஈங்கியன் றற்போல - அமைச்சர்கள் ஏற்படுத் தப்படுவர். 42 பற்றும் பகைமையின்றி - நாட்டைப் பாது காத்திடுதல் உற்றுநம் நாடெங்கும் - அமைதி ஓங்கச் செய்திடுதல். 43 போக்கு வரத்துக்களை - இனிது போற்றி நடத்திடுதல் தேக்கமி லாதறிய - நாளும் செய்தி பரப்பிடுதல். 44 செய்ய துலாக்கோல்போல் - நல்ல தீர்ப்பு வழங்கிடுதல் வையக முற்றினிலும் - தொடர்பு வைத்துற வைப்பெருக்கல். 45 மன்னு பொருளியற்றல் - நாணய மாற்றினைப் போற்றிவைத்தல் இன்ன பொறுப்பேற்கும் - நம் இந்தியப் பேரரசே. 46 அவ்வர சுநடக்க - இனி தாகுஞ் செலவதனை ஒவ்வொரு மாநிலமும் - தனக் குள்ளள வுகொடுக்கும். 47 ஒவ்வொரு மாநிலத்தும் - உள்ள உயர்முறை மன்றத்தினர் செவ்விய மூவர்களை - ஆய்ந்து தேர்ந்தெடுத் தேயனுப்ப; 48 அன்னவ ரிலொருவர் - தமை ஆய்ந்திந்நாட் டுத்தலைவர் மன்னுமிந் நாட்டினுயர் - முறை மன்றுக்குத் தேர்ந்தெடுப்பர். 49 தத்தம துநாட்டைக் - காத்தல் தங்கடன் ஆகுமென்னும் புத்துணர் வுண்டானால் - போரும் பூசலு மின்றாகும். 50 அத்தக விலுலகம் - அமைதி யாக இயன்றிடவே ஒத்த நிறுவனமாய் - அமைந் துள்ள துலகமன்றம். 51 இவ்வுல கத்தினிலே - தன்னாட்சி ஏற்று நடத்திவரும் ஒவ்வொரு நாடுகளும் - உறுப்பாய் உள்ள துலகமன்றம் 52 எந்த ஒருநாடும் - கட்டாயம் இருக்கவேண் டுமுறுப்பாய்; அந்த உலகமன்றம் - உலகின் அமைதி காத்துவரும். 53 கட்டாயம் எந்நாடும் - அறிவியற் கண்டு பிடிப்புகளை திட்டமொ டம்மன்றத்தில் - பதிவு செய்து விடவேண்டும். 54 எப்பெரி யநாடும் - அம்மன்றம் இடுகின்ற கட்டளையை அப்படி யேயேற்றுக் - கட்டாயம் அடங்கி நடக்கவேண்டும். 55 தட்டாம லெந்நாடும் - அம்மன்றம் தானிடும் ஆணைப்படி கட்டாய மாய்நடக்கும் -அதி கார மதுவேண்டும். 56 சொன்னசொற் கேளாத - ஒருவன் தொழிலை இழப்பதுபோல் தன்னர சைப்பறிக்கும் - உரிமை தானிருக் கவேண்டும். 57 பாரிலொவ் வோரரசும் - அதனதன் பாட்டுக் கினிதிருக்க போரெனுஞ் சொல்லறியா - துலகம் பொலிதர வேவேண்டும். 58 இவ்வுல கொற்றுமையாய் - அமைந்தினி தின்புற்று வாழ்ந்திடவே அவ்வுல கமன்றம் - பொறுப்புள தாயமை யவேண்டும். 59 பத்தியா ஒவ்வொர்நாடும் - உள்நாட்டுப் பாதுகாப் புக்கான அத்துணை யபடையே - வைத்துக்கொண் டமைதி காக்கவேண்டும். 60 ஒவ்வொரு நாட்டினிலும் - பெரிய உலகமன் றத்தின்படை செவ்வியு டன்வைத்தே - அமைதி செலுத்தி வரவேண்டும். 61 அந்தந்த நாட்டிலுள்ள - உலகமன் றப்படை யையோம்பல் அந்தந்த நாட்டினது - பொறுப் பாகு மெனவறிக. 62 அந்த உலகமன்றப் - பெரும்படை அம்மன்றத் தாதிக்கத்தி ருந்துல கவமைதி - காத்தல் உரிய பொறுப்பாகும். 63 ஒப்புர வோடமைதி - பாதுகாப் புடைமை இம்மூன்றே அப்பெரு மன்றினது - பொறுப்பாய் அமைந்திட வேண்டும். 64 இவ்வகை யிலுலகம் - பகைமை இன்றி யமைதியுடன் செவ்வை யுடனடக்க - அரசு செய்தினி துவாழ்வோம். 65 அடிப்படை யாயமைந்த - ஊ ராட்சியி னிலிருந்து படிப்படி யாயுயர்ந்து - மாடம்போல் பாராளு மன்றமுறும். 66 இத்திட்ட மேயியல்பாய் - அமைந் திட்டனற் றிட்டமென அத்திட்டத் தையவையோர் - ஒருமுக மாகவேற் றேயமைந்தார். 67 2. ஆட்சி முறை தாழிசை காந்தியடி கள்வாழ்க வாழ்க அன்னான் கண்டகுடி யாட்சிமுறை கமழ மக்கள் தேர்ந்தெடுத்த அரசியலார் குழீஇநல் லாட்சித் திட்டமது நன்காய்ந்து தீட்டி னாரே. 1 உலகமெனும் நிலப்பரப்பில் உலகம் போற்றும் உயரிமய மொடுகுமரி ஊட தாக இலகுவள மொடுபழநா கரிக மேய இந்தியா வெனுநமது சொந்த நாடு. 2 எந்நாளும் இந்நாடோர் ஆட்சி யின்கீழ் இருந்ததில்லை ஒரு நாடாய்; இயல்பு மில்லை. இந்நாடு தனியரசாய் இயன்ற உள்நா டெத்தனையோ வுடையதொரு பெரிய நாடே. 3 எந்நாடந் நாட்டுமக்கள் பேசு கின்ற இனியமொழி வழங்கிவரு கின்ற தோதான் அந்நாடம் மக்களுக்குதத் தாய்நா டாகும் அத்தாய்நாட் டரசுரிமை அவர்க்கே யாகும். 4 தமிழகம்போற் பழம்பெருமை யுடைய தாய தாய்நாடு பலவுடைய தாகை யாலே நமதுகுடி யரசியலுக் கேற்ற வாறு நற்பெருநா டென்றிதனை நவில லாமே. 5 உள் நாடு பலவற்றை உறுப்பாக் கொண்ட ஒப்பில்லா நாடுகட லுலக மேலாக் கொள்நாடு வளம்பலவுங் குலவு நாடு குடியரசுப் பெருநாடிந் தியநன் னாடே. 6 தனியாட்சி யுரிமையொடு தாய்நா டெல்லாம் தான்றிகழ இந்தியமே லாட்சி தாங்க இனியாட்சித் திட்டம்வகுத் திடுவோம் மக்கள் எம்மரசென் றன்புடனே இயம்பு மாறே. 7 உற்றகிளைக் குடிகள்முதுக் குடியி னோடெவ் வுரிமையுடன் ஒருபடித்தாய் ஒழுகு மாபோல் உற்றமுழுப் பொறுப்பாட்சி உடைய வாக உள்நாடு பெருநாட்டோ டொழுக வேண்டும். 8 தன்னுரிமை யதுமுழுதும் அமையு மானாற் றானெவர்க்கும் பொறுப்புணர்ச்சி தானுண் டாகும். அன்னவகை யால்மக்க ளாட்சி யோங்கும் அவர் பாட்டுக் கவர்வாழ அதுவே சாலும். 9 மேற்பார்வை யொடுமையம் அமைய வேண்டும் மிகுதியெலாம் உள்நாட்டின் தகுதி யானால், தோற்பாவை யாட்டுபவன் கைகாற் போலத் துருசாக நடந்திடுநாட் டரசு தானே. 10 தற்காப்பும் வெளியுறவும் தலைமைப் பாடும் தனித்தீர்ப்பும் செய்தியறி விப்பும் போக்கும் சொற்காப்பும் அன்றிப்பா ராளு மன்றம் தொட்டதற்கெல் லாங்குறுக்கே நிற்றல் கூடா. 11 தனிக்குடிமக் களைவைத்து விட்டுத் தந்தை தான்வரவு செலவதனை வைத்துக் கொள்ள எனக்கிதுதந் தருள்கெனக்கை யேந்தி மக்கள் எதிர்பார்க்கும் முறையாட்சிக் கேற்ற தன்றே. 12 காய்வாங்க இலைவாங்கக் காசு கேட்டுக் கடைத்தலையில் போய்நிற்கும் மருகி போலப் போய்வாங்கி வருகின்றோம் பொறுங்க ளென்னும் பொறுப்பாட்சி குடியாட்சிப் பொறுப்பா காதே. 13 வகைகேட்டு மாநிலங்கள் வரியை வாங்கி மையத்துக் கனுப்பிவிட்டுத் தமக்கு வேண்டும் தொகைகேட்டு நிற்குநிலை தலையைக் கொல்லே சுற்றிமூக் கினைக்கையால் தொடுதல் போன்மே. 14 மழைநீரைக் குளந்தேக்கி வயற்குப் பாய்ச்சி வழிநீர்யா றடையவிடல் வழக்கா றன்றோ? மழைநீர்போல் மாநிலத்து வருவா யாக வழிநீர்போல் மையத்து வருவாய் காண்போம். 15 கன்றூட்ட விடாதுகன்றால் சுரக்கும் பாலைக் கறந்துகன்றுக் கதைவாத்தல் கடப்பா டாமோ? கன்றூட்டி மிகும்பாலைக் கறந்துண் போமேல் கன்றுமுரம் பெறுநாமும் களிக்க லாமே, 16 உரன்முறையாய் உழைத்துண்டொப் புரவு செய்தே உலகைநிரல் படச்செய்யும் உயர்ந்தோர் போல, வரன்முறையாய் வரிவாங்கி மாநி லங்கள் மக்களுக்கா வனசெய்தல் வழக்கா றாமே. 17 வேருண்டு நீரினைமே லனுப்ப லல்லால் வேருறிஞ்சி நீரினைமே லனுப்ப, மேலும் நீருண்டு வாழ்கவென மரம்வே ருக்கு நீருதவல் நிகழிற்கை நிலைமை யாமோ? 18 மையத்துச் செலவுக்கிவ் வளவென் றேதம் வரவளவுள் நாடுகள்தாம் வழங்க லன்றி, மையத்தை எதிர்பார்த்த லோதந் தைக்கு மக்கள்தர லேயுலக வழக்கா றன்றே. 19 தனிக்குடும்பம் நடத்திவரும் மக்கள் தம்மைத் தக்கபடி மேற்பார்த்தல் தந்தைக் குள்ள தனிக்கடனாம்; அன்றிமக்கள் தமக்குத் தானே தனித்தலைமை பூண்டிருத்தல் தகுதி யன்றே. 20 மக்களுக்குத் தன்சொத்தை வழங்கி விட்டு மக்கள்தனித் தனியினிது வாழ விட்டுத் தக்கபடி மேற்பார்க்குந் தந்தை போலத் தானமைதல் அம்மன்றத் தகுதி யாகும். 21 இவ்வாறு தனியாட்சி யுரிமை தாங்கி இயலுமுள்நா டுகளெல்லாம் இனிதி னாள, அவ்வாறிங் கினிதுநடந் திடமேற் பார்த்தல் அம்மையைப் பொறுப்பாக அமைய வேண்டும். 22 அன்றிமையம் மாநிலத்தை அடிமை கொண்டே ஆதிக்கஞ் செலுத்தல்மக்க ளாட்சி யாகா; நன்றமைய மாநிலங்க ளனைத்துக் காகும் நற்பொறுப்பை யேற்றுமையம் நடத்தல் வேண்டும். 23 ஆலிருந்தாம் வீழ்போற்கீ ழிருந்து மேலா அமைதல்குடி யாட்சியிலக் கணமே யன்றி, மேலிருந்து கீழாட்சிப் பொறுப்புச் செல்லல் மேயமுடி யாட்சியிலக் கணமே யாகும். 24 மாநிலமன் றத்தினர்தேர்ந் தெடுத்த மைந்த மையமன்ற மென்பதனை மறத்தல் கூடா; மாநிலமன் றங்கள்பல வற்றுக் குள்ளோர் வழக்காறாய் அமைதல்மைய மன்ற மாகும். 25 தன்னுரிமை யொடுமுயன்று தனக்குத் தானே தனிக்குடும்பம் நடத்துகின்ற தலைவன் போலத் தன்னுரிமை யொடுதகமா நிலங்கள் தாமே தனியாட்சி நடத்துதலே தக்க தாகும். 26 வகைபெறவிவ் வாறாட்சி வகுத்தோ மானால் மனம்புழுங்கி மாறுபட்டோர் வீட்டில் வாழும் பகைவர்கள்போல் இருந்துவரும் பாகித் தானும் பழையபடி ஒன்றாகும் பரிசும் உண்டே. 27 பழையபடி பாகித்தான் ஒன்று பட்டால் பாரிலிந்தி யாவொருவல் லரசா யோங்கும்; நுழையவெனும் செஞ்சீனா நுடக்கும் வாலை நூல்வல்லீர்! இன்னுமொன்றை நோக்குவீரே. 28 அமையுமெனிற் பாகித்தான் இந்தி யாவின் அகப்படுமா நிலமென்னும் அளவிற் பட்டே, இமயமுடி யமையியற்கை வள க்காட்ச் மீரை எனக்குனக்கென் றிடும்பரிசும் இலையா மன்றே? 29 செஞ்சீனாத் தாக்குதலுக் கஞ்சி யஞ்சித் தென்னோக்கும் நேபாளம் சிக்கிம் பூடான் அஞ்சாம லிருப்பதற்கும் இந்தி யாவே அரணாகு மெனிலதற்கோ ரட்டி யுண்டோ? 30 நீடிமையச் சாரலமை சிக்கிம் பூடான் நேபாளம் எனுமிவைதந் தனிமை நீக்கிப் பாடமையிந் தியவரசுக் குட்பட் டீங்கு பயில்தருமா நிலங்களெனும் பரிசு முண்டே. 31 அங்ஙனமிந் தியவர சியல மைப்பும் அமையுமெனில் உரசையுடன் அமெரிக்காவோ பொங்குகட லுலகிடையெவ் வரசும் போற்றிப் புகழ்ந்திடும்பே ரரசாகப் பொலியு மன்றே! 32 களவியலிற் போற்றாயின் கண்கா ணிப்பில் கற்பியலில் வாழ்தலவர் கடப்பா டாமோ? உளமகிழக் கூடியுவந் திருப்ப தன்றோ ஓதுமனை வாழ்க்கைமுறைக் குரிய தாகும்? 33 ஈதெனது கருத்தாகும் அறிவு சான்றீர்! இனியிமயங் கடலிடைநம் இந்தி யாவின் யாதுமென தெனாதுநம தெனுமிவ் வாறே அமையுமர சியலெனிலாய்ந் தறிகு வீரே. 34 என்றொருவ ரெடுத்துரைக்க, இதோகா ணிஃதோர் எடுத்துக்காட் டெனவொருவர்; இருந்தோ ரெல்லாம் நன்றெனவே, ஒருகுடியின் நடக்கை தன்னை நயம்படவே எடுத்தினிது நவின்றார் தானே. 35 எண்சீர்விருத்தம் நல்லப்ப னுக்குமக்கள் நாலு பேர்கள் நால்வருமப் பன்சொத்தைப் பங்கிட்டுக் கொண்டார்; செல்லப்பன் குடும்பமிகச் செழிக்க லாச்சு, சின்னப்பன் குடும்பமுமவ் வாறே யாச்சு, மல்லப்பன் குடும்பமிக வளர லாச்சு, மாறப்பன் குடும்பமுமவ் வாறே யாச்சு, நல்லப்பன் மேற்பார்க்க நாலு பேரும் நல்லநிலை யினிற்குடும்பம் நடத்தி வந்தார். 36 தன்பிள்ளை தன்மனைவி தனது சுற்றம் தன்னட்புத் தன்குடும்பம் தனது வீடு தன்காடு தோட்டங்கள் தனது செல்வம் தன்வாழ்க்கை என்றெல்லாம் தன்தன் என்றே அன்புள்ளம் பெருகவரு ளணைக்க நாளும் அயராத ஊக்கமொடாள் வினைமிக் கோங்கத் தென்புள்ள மோடுழைத்துக் குறையொன் றின்றிச் செல்வாக்காய் வாழ்ந்துவரு கின்ற போது; 37 எல்லப்பன் என்றொருவன் குறுக்கே வந்திங் கேனப்பா பிரிந்துதனி யானீ ரப்பா! செல்லப்பா! நால்வருமோர் குடும்ப மாகிச் சின்னப்பன் முதலானோர் உன்னை ஏவல் சொல்லப்பா எனக்கேட்டுச் செய்ய நீயும் சொல்லப்பா! அக்குடும்பத் தலைவ னாக நில்லப்பா, செல்லப்பா! இதுதான் நல்ல நெறியப்பா சரியப்பா நினையப் பாநீ. 38 அன்னவனும் இவ்வாறு சொல்லக் கேட்டே அப்படியே செய்வமென்றார் தம்பி மாரும். முன்னவனும் எல்லப்பன் சொல்லு கின்ற முறைநல்ல முறையேதான் ஆகு மென்றான். பின்னவரும் முன்னவனும் பிரிந்தொன் றாகிப் பெருங்குடும்பம் என்றுசொலப் பெருமை யாக மன்னுமனை மக்களோடு கூடி வாழ்ந்து வந்தார்கள்; அவ்வாறு வாழும் போது; 39 தன்னுடைய தெனும் பொறுப்பொன் றின்மை யாலே தன்முயற்சி யின்றியொற் றுமையுங் குன்றி என்னுடைய தாவென்னும் எண்ணந் தோன்றி எனக்கென்ன எனுநிலைமை எய்தி யன்னார் முன்னிருந்த நிலைமாறி முதல்வன் சொன்னால் முணுமுணுக்கு நிலையாகி நாளா காகப் பின்னடைய அக்குடும்பம் குடும்பம் என்னும் பெயரளவி லேநடந்து வந்த தம்மா! 40 தமதுமனை மக்கள்தமர் தமது செல்வம் தமதாடு மாடுகன்று தமது வீடு தமதுடைமை தமதுரிமை என்னும் எண்ணம் தானெழுந்து தாமவரைத் தடுத்தாட் கொள்ள, எமதெமதென் றெப்பொழுதும் எண்ணி யெண்ணி இருந்தனரே யன்றியவர் எந்த நாளும் நமதுடைமை யெனுமொருமை யுணர்வில் லாமல் நடப்பதுபோல் பொதுக்குடும்பம் நடத்தி வந்தார். 41 அவள்செய்வா ளென்றெண்ணி இவளி ருக்க, அவளுமிவள் செய்வாளென் றாங்கி ருக்க, இவள்செய்வா ளென்றெண்ணி அவளி ருக்க, இவளுமவள் செய்வாளென் றேயி ருக்க, எவள்செய்வ தென்பதின்றி வீட்டு வேலை இப்படியப் படியாகக் கிடக்க லாச்சு. அவளென்ன, அவன் செய்வான் இவன்செய் வானென் றவர்களுமே அந்நிலையை அடைய லானார். 42 ஆங்கவர்க ளிவ்வாறு கொஞ்ச மேனும் ஆர்வமொடக் கறையின்றிக் கூட்டு வாழ்வில் நாங்களுமொன் றாக்கூடிக் கூட்டு வாழ்வு நடத்துகின்றோ மென்றமட்டில் நாலு பேரும் தாங்கள் தங்கள் பாட்டுக்குத் தமது பேணித் தத்தமக்கு விட்டநிலந் தன்னைப் பேணுங் பாங்கமைகி லாவுரைசை நாட்டுக் கூட்டுப் பண்ணைமுறை போல்வாழ்வு பண்ணி னாரே. 43 மல்லப்பன் ஒருநாள்முன் னவனைப் பார்த்து, ‘வரவரநங் குடும்பநிலை மாறிப் போச்சவ் எல்லப்பன் கெடுத்துவிட்டான்; நாமுன் போல இனிப்பிரிந்து வாழ்வதுவே இயல்பா’ மென்ன, செல்லப்பன். ‘வேண்டாம் நாம் பிரிந்தால் வாழ்வு சிதறிவிடும் சீர்திருத்தி வாழ்வோம்’ என்றான். மல்லப்பன் பிரிவதுவே நன்மை யென்றான். மற்றவரும் பிரிந்துமுன்போல் வாழ்வோம் என்றார். 44 முன்னவன்‘வேண் டாம்பிரிந்து போவோ மானால் முதலில்நம தொற்றுமைபோம் செலவு மாகும், இன்னல்புரி வாரயலார் மதியார் ஊரார், இனப்பகையாம் நன்கெண்ணிப் பாரீர்’ என்றான். பின்னவர்கள் இல்லையினிப் பிரியா விட்டால் பெருமைகெடும், எனமுன்போற் பிரிந்து சென்று தன்னுடைய தெனுமார்வம் தளிர்க்க முன்போல் தான்வாழ்ந்தார்; வாழ்வியலின் தகுதி யாமே. 45 மற்றவர்நால் வருங்கடமை வழுவா வண்ணம் வாழ்ந்துவர மேற்பார்த்து வந்த தோடங் குற்றகுறை நேராமல் உறுதி கூறல், ஊராரோ டொத்துநடந் திடவே செய்தல், சுற்றமொடு நட்பினர்தம் நன்மை தீமைத் தொடர்பதனில் கலந்துகொளல், சுற்றத் தார்பால் பற்றுறவே சிறிதுமுரண் பயிலா வண்ணம் பகல்போல நல்லப்பன் பார்த்து வந்தான். 46 செல்லப்பன் முதல்நால்வர் தந்தைக் காகும் செலவுக்கு வேண்டியதைக் கொடுத்து வந்தார். நல்லப்பன் தனிவாழ்க்கை நடத்திக் கொண்டு நாற்றிசையுந் தங்குடியைப் போற்று மாறு நல்லப்ப னாகமிக நடந்து மக்கள் நால்வரையும் அமைதியுடன் நடத்தி வந்தான். நல்லப்பன் முதுக்குடியும் மக்கள் நால்வர் நற்குடியும் போலாட்சி நடத்து வோமே. 47 நல்லப்பன் மக்களைப்போல் நமது நாட்டுள் நாடெல்லாந் தன்னுரிமை நாட தாகிச் செல்லப்பன் முதல் நால்வர் குடும்பம் போலச் சிறப்பாக நடத்திடவே செய்வோம். செய்து, நல்லப்பன் மேற்பார்வை போல்மே லாட்சி நடந்திடவே ஒற்றுமையாய் நன்கு வாழ்வோம்; எல்லப்பன் ஏற்பாட்டின் படியே செய்தால் எள்ளளவும் ஒருமைப்பா டெய்தா தன்றே. 48 இவ்வுலக நடக்கையினை எடுத்துச் சொன்னேன் இனிதுவிளங் கிடஎடுத்துக் காட்டுந் தந்தேன் அவ்வளவே எனதுகருத் தாகும் இந்நாட் டரசியற்கும் அவ்வுரிமை யாகு மன்றோ? ஒவ்வுமெனில் மேற்கொள்க ஒவ்வா தென்னின் உவந்ததையாய்த் தோதிடுக, உலகந் தன்னில் இவ்வளவு சாதியினப் பிரிவும் நாடும் இருத்தலுமீங் கிதற்காகும் எடுத்துக் காட்டே. 49 சிந்து நல்லப்பன் மைந்தர்களின் - குடும்ப நடக்கை யதுகேட்டோர் சொல்லப்ப னைப்புகழ்ந்தே - அவன்றன் சொல்லைமேற் கொண்டார்கள். 50 உலக நடக்கையினை - இனிதெடுத் தோதி விளக்கினதைக் கலகல வென்றவர்கள் - உவந்து கைதட்டி யேற்றனர்காண். 51 மக்கள் குடும்பங்கள்போல் - மாநில வல்லர சையமைப்போம்; மக்களின் தந்தையைப்போல் - பாராளு மன்ற மதைய மைப்போம். 52 நல்லப்பன் மக்களைப்போல் - நந்தாய் நாட்டினை ஆண்டிடுவோம்; நல்லப்ப னைப்போல் - இந்திய நாட்டினை ஆண்டிடுவோம். 53 என்னவே எல்லோரும் - இது நல்ல ஏற்பா டென மொழிந்தார். அன்னவே நல்லாட்சித் - திட்டம் அதையவர் களமைத்தார். 54 3. அமைதி பல்லவி அமைதி அமைதி அமைதி - உலக அமைதி அமைதி அமைதி பல்லவி எடுப்பு அமைதி யிலையேல் அமையா உலகம் சுமையாம் உயிரின் தொகையே அதனால் அமைதி அமைதி அமைதி கண்ணிகள் அன்பும் அருளும் அறமும் மலிக ஆறா மறிவின் அப்பயன் வலிக துன்பந் தரும்பாழ்ம் பகைபோர் தொலைக தூயோ ருளம்போல் உலகம் பொலிக. 1 தமதே போலும் பிறர்தம் பொருளும் தமக்குள் ளதுபிறர்க் குண்டெனு முணர்வும் நமதே போதும் எனும்பொன் மனமும் நற்பண் பாடும் நனிசேர் வுறுக. 2 நாளுங் கதிரோன் வரவும் உயிர்வாழ் நாள்போ யொழியும் முறையும் அறிவீர்! கேளுங் கிளையும் புலம்பப் பகையால் கெடுமிவ் வுலகில் கொடும்போ ரொழிக! 3 இகலெனும் எவ்வ நோயென எள்ளி இகழ்ந்தனர் வள்ளுவர் என்பதை அறிமின்! அகலிடத் தமைதி நிலவிடப் போரும் அக்கொடும் பகையும் அறவே புரிமின்! 4 புண்ணசை நாய்நரி புள்ளினம் தொடர, பொருள்நசைப் போர்வெறி பொறிபுலன் இடர, மண்ணசை மற்றவர் நாட்டிடைப் படர மனத்தினும் நினைக்கலிர் மாண்புடைத் தலைவீர்! 5 வழிவழி வருமர சோவின் றில்லை, மக்களின் வாக்கு வழிவரு தலைவீர்! பழிவழி நின்று பகையும் போரும் பயிலீர் ஆட்சிப் பயன்பா டுறுமின்! 6 தேர்ந்தெடுத் ததுதமை ஆண்டிட வல்லால் சென்றயல் நாட்டினை வென்றிட வன்றே ஓர்ந்துணர்ந் ததனைப் பகையும் போரும் ஒழிந்தே அமைதி உறவே புரிவீர்! 7 மறுமுறை வருத லோவிலை உறுதி வான்பழி தேடிக் கொள்ளலிர் அறுதி பெறுமுறை அமைதி அவரவர் நாட்டைப் பேணுத லவரவர் பெருங்கட னாமே. 8 போரும் பகையும் பூசலும் இன்றிப் பொறுப்புட னுலகைப் புரந்திட அன்றே ஏரும் புலமும் போற்குடி ஆட்சி ஏற்பட் டதுவாம் என்பதை அறிவீர்! 9 ஒன்றே குலமிவ் வுலகென் றிடுமவ் வுரையின் பொருளை உணர்ந்தே பகைபோர் இன்றே யுலகம் இனிதே நனிவாழ்ந் திடவே அமைதி யுடனே புரிவீர்! 10 ஓதுங் குறையொன் றிலவா கிடவே உலகம் அமைதிக் குறையா யடைவே ஏதுங் கவலை யிலவாய் மக்கள் இனிதே நாளும் நனிவா ழியவே. 11 தாழிசை ஆகை யாலிவ் வுலகம் அமைதியாய் அமைய ஆளுதல் ஆள்வோர் கடமையாம். ஈகை யாற்புக ழெய்தலின் ஓர்குறை இன்றி வாழ்ந்திடச் செய்குதல் நன்றதாம். 12 அமைதி யாக உலகினை ஆளவே அரசு தோன்றிய தாகையால் ஆளுவோர் அமைதி யென்னுமச் சொல்லின் பொருளினை அமைதி யாகநன் காய்ந்தினி தோம்புக. 13 எலியைக் கொல்லுதல் பூனைக் கியற்கையாம் எனினும் சேர்ந்து பழகினப் பூனையும் கொலுமச் செய்கையை விட்டுமே நட்புளங் கொண்டவ் வாகொடு கூடிக் குலாவுமே. 14 நாயும் பூனையும் போலெனும் அச்சொலின் நற்பொ ருளுக்கெ டுத்துக்காட் டாகவே தாயும் பிள்ளையும் போலப் பழகினால் தலையி லேறியுந் தம்பட்டங் கொட்டுமே. 15 குலப்ப கைப்படும் ஆவும் புலியுநீர் குடிக்கு மோர்துறை தன்னி லெனுமுரை அலப்ப கைப்பட மன்னுயிர் வாழ்ந்திடும் அமைதி வேண்டி எழுந்ததே யல்லவோ? 16 பருந்தும் பைங்கிளி யுமொரு கூட்டினில் பாலு ணீஇத்தம் பகைமை புறக்கிட இருந்து வாழ உலகினை யாண்டனன் என்னுஞ் சொல்லும் அமைதிக் கெழுந்ததே. 17 வைய மீதினில் வாழும் உயிரறு வகைய தாகும் அவற்றினுள் மக்களே பைய வேயுயர் வாவர றாவதாம் பகுத்த றிவின்பாற் பட்டதா லென்குவீர். 18 புள்ளும் மாவும் பொருந்திய தம்பகை போக்கி யன்பு பொருந்திட, ஆறறி வுள்ள மக்கள் பகைகொ டொருவரை ஒருவர் கொல்லுதல் உண்மை யுயர்ச்சியோ? 19 மாவும் மாக்களும் ஐயறி வேயென வாயிற் கூறி மறிந்து செயற்படல் நாவுங் கையும்வே றாமெனிற் கொல்லுமந் நஞ்சி னையமிழ் தென்றல் நயக்குமோ? 20 அரித ரிதிவ்வு லகிடை நன்மக்க ளாய்ப்பி றத்தல் அரிதரி தாமெனப் பெரிது கூறியவ் வேனை யுயிரினும் பிற்ப டலப்பி றப்பின் அருமையோ? 21 வாழ்க்கைச் சட்ட மிலாதுதம் இச்சையாய் வாழு மேனை யுயிரினு மேலென வாழ்க்கைச் சட்டத்தை மீறுதல் மேலதோ? மாவும் புள்ளுமீன் வாழ்கடல் வவ்வுமோ? 22 அவையின் மக்கள் உயர்ந்தவ ராம்பகுத் தறிவின் பாற்பட லாலென ஐயகோ! சுவைய தாகவீண் வாய்ப்பறை சாற்றியே சுடுதொ ழிற்படல் தூய வுயர்ச்சியோ! 23 உண்ணக் கொல்லுந்தம் இன்னுயிர் தப்பிட உடன்று கொல்லுமே யல்லது மக்கள்போல் மண்ணைக் கொள்ள வலிந்தயல் நாட்டுவாழ் மக்க ளைக்கொலல் மற்றவைக் கில்லையே. 24 பசிக்கி லாதவப் போதரி யேறுந்தன் பக்கஞ் செல்லுமம் மானையுங் கொல்கிலா பசிக்கி லாத வளமிகு நாடரும் பக்கத் தார்நிலங் கொன்றுகைக் கொள்வதோ? 25 பகுத்த றிவிலா ஏனை உயிரினும் பகையும் போரும்பண் பாடெனக் கொள்ளுதல் வகுத்த நூன்முறை யோவவ் வறிவினன் மாட்சி யோவர சாட்சியோ மற்றெதோ! 26 கொல்லும் பாம்புமஃ தாட்டியைக் கொத்திலா, கொள்கைக் காப்பகை கொள்வதும் கொல்வதும் புல்லும் பாம்பெனக் கல்லா லடித்திடல் போலு மன்றிப் பொருளறி யாமையே. 27 இந்த நாட்டினுக் கோவுல குக்கெலாம் எந்தை யாகிய காந்தி யடிகளைச் சொந்த நாட்டிற் பிறந்தவோர் கீழ்மகன் துணிந்து நெஞ்சமந் தோசுட்டுக் கொன்றதும்; 28 முன்பி ரிந்தவப் பாகித்தா னின்முதல் முதல மைச்சர் லியாகத் அலிகானை அன்பி றந்த கொடியனந் நாட்டினன் அந்த கோதுணிந் துசுட்டுக் கொன்றதும்; 29 இலங்கை நாட்டு முதலமைச் சாகிய ஏந்தல் பண்டார நாயகா வையந்தோ! இலங்கை நாட்டிற் பிறந்து வளர்ந்தவோர் இழிம கன்பொட் டெனச்சுட்டுக் கொன்றதும்; 30 அறிவு லகைப்ப டைத்த கிரேக்கநாட் டறிஞன் சாக்கரட் டீசையந் நாட்டினர் கறுவி யந்தோ! கலுழ்ந்திவ் வுலகமே கலங்க நஞ்சினை யூட்டி ஒழித்ததும்; 31 தாழ்வு யர்வொழிந் திவ்வுல கமக்கள் தன்னு ரிமைத ழைத்துச் சரிநிகர் வாழ்வு வாழத்தொண் டாற்றிய ஏசுவை வன்சி லுவையில் அந்தோ! அறைந்ததும்; 32 ஒருவ னேதேவன் ஒன்றே குலமெனும் உயரி யகொள்கை யையெடுத் தோதிய திருவு ளன்நபி நாயகத் துக்கந்தோ! செய்யொ ணாத கொடுமைகள் செய்ததும்; 33 இவ்வு லகமை திக்கிருந் தஅமெ ரிக்க நாட்டுத் தலைவன் கென்னடியை அவ்வி யக்கொடும் பாவியந் நாட்டவன் ஐய கோதுணிந் துசுட்டுக் கொன்றதும்; 34 அன்ற டிமையொ ழித்த அமெரிக்க அருந்த லைவன் ஆ பிரகாம் லிங்கனை நன்றி கெட்ட அறிவிலி அந்தோவந் நாட்டுப் பாவி யொருவனே கொன்றதும்; 35 பின்னு மப்பெரு நாட்டுத் தலைவர்கார் பீல்டும், மிக்கென்லே யுங்கொல்லப் பட்டதும் இன்னும் எத்தனை யோபேரந் தோவந்தோ! இங்ங னம்வன் கொலைசெய்யப் பட்டதும்; 36 கொள்கைக் காக எனினந்தக் கொள்கையின் கொடுமை யின்னெனக் கூறவும் வேண்டுமோ? கொள்கைக் காகத் தலைவரைக் கொல்லுமக் கொள்கை யைக்குழி தோண்டிப் புதைக்கவே. 37 அலகில் வாழ்வியற் சீர்திருத் தக்கொள்கை, அரசி யற்கொள்கை, அச்சம யக்கொள்கை உலக மக்களை வாழ்விக்க வோமக்கள் உயிரைக் கொன்று குவிக்கவோ ஓதுவீர்! 38 இன்று காறுமிப் பேருல காண்டவர் இவ்வ ளவினர் என்பது கூடுமோ? வென்று கொண்டவந் நாட்டையவ் வேந்தர்கள் விட்டுச் சென்றது வேடிக்கை யல்லவோ! 39 வெற்றி தோல்வி ஒருவர்சொத் தல்லவே மெய்வ லிக்குட் படுவதோ வெற்றியும்? பொற்ற லைச்சிறு கோழியும் யானையைப் போரில் வென்ற புகழுரை கேட்டுளீர். 40 எடுத்த யாவினும் வெற்றியைக் கண்டஅவ் விரும்பொ றைசிறைப் பட்டுயிர் வீந்ததும், தொடுத்த போரில் இருவரும் வீயுமத் தொகைநி லையாந் துறையும் அறிகுவீர். 41 செய்வி னைசெயப் பாட்டு வினையெனும் செந்த மிழினி லக்கணச் செய்கையால் மெய்வ லுத்தவர் வெல்வதும் வென்றவர் மீண்டு வெல்லப் படுவதும் மெய்ம்மையே. 42 மேற்கு நாட்டை வெருட்டிநம் நாட்டினை விழுங்க வந்த அலெக்குசாண் டருல கேற்கு கில்லாப் படுபழி யைநிறுத் திறந்தொ ழிந்தனன் என்ப தறிதிரோ? 43 உலகை யாட்டிப் படைத்தநெப் போலிய னொடுமு சோலினி இட்லர் எனுமிவர் உலகி டைப்பேர்ம் பழியை நிறுத்தியே ஒழிந்த னரெனும் உண்மை யறிதிரே. 44 வல்ல ரசெனப் பல்லவி பாடியே மற்ற நாட்டினை இற்றெனக் கொள்வதும், கொல்ல வல்லணு குண்டுகள் செய்வதும் கொடுமை யாமெனக் கூறுதல் வேண்டுமோ? 45 அழிக்கு வோமுல கத்தினை என்பபோல் அமெரிக் காவும் உரசையும் ஏனவும் கொழிக்கும் வல்லுயிர் கொல்லிக ளோடணு குண்டு செய்து குவிக்குதல் கூடுமோ? 46 மருந்து கண்டுநோய் தீர்த்திட மக்களை வாழ வைக்கும் அறிவிய லார்களே கரிந்து மக்கள் அழிய அணுகுண்டு காணு கின்ற கருத்தையென் னென்பது! 47 அறிவ ரென்று சொலிக்கொடு மக்களை அழித்தொ ழிக்க அணுகுண்டு செய்யுமவ் அறிவர் தம்மறி வுக்கொரு நல்லபாம் பதுவும் ஒத்தல் அருமை யருமையே! 48 கதையி லேவரும் அச்சுக்க மாந்தடி கைய தாக அணுகுண்டுச் செல்வரைப் புதைய மண்ணிடைச் செய்கென ஏவினப் போதன் னார்தம் புலமை வெளிப்படும். 49 மற்ற நாட்டினை வென்றந்த மக்களை வறுமை தின்னத்தம் மக்களை யோம்புதல் உற்ற நல்லிறை மாட்சிய தாகுமோ? ஒருகண் குத்திமற் றொன்றினை யோம்பவோ? 50 கஞ்சி கஞ்சி யெனவழக் கத்தியைக் காட்டுஞ் சேயிற் கடியவ ராய்மக்கள் அஞ்சி யஞ்சி அமைதி யிலாதுவாழ் ஆட்சி மக்கள தாட்சியு மாகுமோ? 51 அடுத்த நாட்டினைக் கொள்ளினந் நாட்டினை ஆளும் பார மதுமிகும் அல்லவோ? எடுத்த வன்சுமை கொள்ளின் அதுசுமந் தெய்ப்ப தல்ல திரும்பய னென்னவோ? 52 மக்க ளாட்சி நடத்துந் தலைவர்கள் மன்னர் போலயல் மண்கொள எண்ணுதல் பொக்க வாய்ச்சிபொய்ப் பல்லை மறந்துமே பொறுக்கிக் கொள்ளைக் கொறிக்குதல் போலுமே! 53 ஆவ லோடினி தாளவே தேர்ந்தெடுத் தார்வெ றுத்திட ஐகோ அன்னவர் காவ லென்னும் பொருளை மறந்துமக் களைக்கொன் றாளுங் கயமையை என்சொல்கோ! 54 எல்லை யிட்ட அவரவர் நாட்டினை இனிதி னோம்பி இகலொடு போரெனும் தொல்லை விட்டுத் தொலைந்திட இன்புடன் தோழ மையெனும் ஆழியி லாடுவோம். 55 உலக மென்ப தொருவன், உறுப்பினை ஒக்கும் நாடுகள், ஓருறுப் பூறுறின் இலகு நன்னலம் ஏகும், உறுப்பறை என்னும் பேரெய்தும் என்ப தறிகுவீர். 56 ஆத லாலுல கத்துள நாடுகள் அனைத்தும் இவ்வுல கத்துறுப் பாமெனக் காத லோடுடல் காக்கும் ஒருவனிற் காத்த லேயுல காள்வோர் கடமையாம். 57 இன்னும் அன்ன உலகம் எனப்படும் இரும்புப் பாதை யினிற்றொடர் வண்டிகள் என்னு நாடுகள் ஏக அமைதியாய் இயக்க வேண்டும் உலக அரசியல். 58 தானி யங்கிடும் அத்தொடர் வண்டியைத் தடம்பு ரண்டு செலாது தடத்தினில் தானி யக்கிட வேண்டுமப் பாகனும் தடைய றிந்து தவிர்த்துத் தகவினை. 59 அமைதி யைக்கொன் றழித்திடும் காரணம் அதனை யாய்ந்திங் கடியோ டொழிப்பதே அமைதி யோடுல கந்தன் இயல்பினில் அமைந்தி யங்கிடற் கேதுவு மாகுமே. 60 கண்டு காரணத் தைக்களை யாமலே காரி யத்தைக் களையுதல் கூடுமோ? உண்டு நஞ் சை உடலினை யோம்புதல் உலகி லில்பொரு ளுவமை யாமன்றோ? 61 பசிவ றுமைய டக்கு முறையினால் பகையும் போரும் புரட்சியுந் தோன்றலால் பசிமு தன்மூன்றும் இல்லா துலகிடைப் பண்ண லேயுல காள்வோர்பண் பாடதாம். 62 பறந்து போம்பசி வந்திடப் பத்துமென் பாரு ரையின் பயனைப் பழிக்கவோ? அறந்த வறாத பெரியருங் காய்பசிக் காள தாகின் அறந்தடை செய்யுமோ? 63 கள்வர் என்ற கடும்பட்டஞ் சூட்டிடக் கண்டு மேவெட்க மின்றிப் பிறர்பொருள் கொள்வர் வாழ வகையறி யாதவக் குறையு டையோர் கொடியரென் றெள்ளவோ? 64 எண்ணெய் பொன்முத லாவொரு நாட்டில்மிக் கிருக்கும் பல்பொருள் இல்லவர் களந்த மண்ண சைக்கொள எண்ணுவர் இன்னதே மற்ற நாட்டைப் பிடித்திடுங் காரணம். 65 எந்த நாட்டினுக் கின்றி யமையாத இல்லை யோஅவை மிக்குள நாடுகள் அந்த நாட்டுக் களித்துல கொப்புர வாகச் செய்தல் அமைதிக் கியன்றதாம். 66 இன்ன வாறொப் புரவை இயல்புடன் இதுவ ரையமெ ரிக்கத் தலைவனாம் கென்ன டிசெய்து வந்தனன் என்பது கிழக்கு மேற்கும் அறிந்ததொன் றல்லவோ? 67 அமரிக் காவினைப் போலப் பிரிட்டனும் அவ்வு ரசைமு தல்வன் குருசேவும் நமருக் காக உதவி வருதல்போல் நாற்றி சையும்பின் பற்றுதல் நல்லதே. 68 அடிக்க டிக்க எதிர்த்தெழும் பந்துபோல் அடக்க டக்க எதிர்ப்பும் முதிர்ப்புறும். தொடக்கூ டாதென் றடக்கின் விளக்கினைத் தொட்டுப் பிள்ளையும் துன்புறு மல்லவோ? 69 தன்னு ரிமையு டனுயி ரொவ்வொன்றும் தான டிமையி லாமலே வாழ்ந்திட, மன்னு யிரிலு யர்வென மக்களை வலித டக்குதல் மக்கட்பண் பாகுமோ? 70 தன்னு ரிமைம றுப்பதும் எய்திடத் தான்மு யலின டக்கியே ஆள்வதும் துன்னு மப்புரட் சிக்குவித் தாமெனச் சொல்ல வேண்டிய தில்லை யறிகுவீர். 71 பிறப்பு ரிமைம றுப்பே யுலகினில் பெரும்பு ரட்சி தலைப்படுங் காரணம் பொறுப்ப ரென்று பெரும்பொறை யேற்றிடின் பொறுமை யெல்லை கடத்தல் அடாமையோ? 72 இனவ டிமைபொ ருளடி மையர சியல டிமைமொ ழியடி மையாமிவ் வனவ டிமைபு ரட்சியின் வித்தென்ப தைய மில்லை, அமைதிக் கெதிரியாம். 73 அடிமை யென்னுமப் பாவி யுலகினில் அமைதி கொன்றிடும்; ஆகையால் தாங்கொணாக் கொடுமை செய்யினுஞ் செய்க; உறுதியாய்க் கொத்த டிமைகொள் ளாதிர்கொள் ளாதிரே. 74 இன்று காறும் உலகில் நடந்துள எலாப்பு ரட்சிக ளின்வர லாற்றையும் ஒன்று கூட விடாமல் தலைவர்கள் உன்னிப் பாய்ப்படித் துள்ளுதல் நல்லதே. 75 குடிக்கக் கஞ்சியும் இல்லாக் கொடுமையும் கொள்ள வோர்காசும் இல்லா மிடிமையும் அடக்கி யாளப் படுமக் கடுமையும் ஆம்பு ரட்சியின் வித்துக்க ளல்லவோ? 76 செல்வத் துப்பயன் ஈதலே என்பதைத் தெளிந்த ளித்த பழந்தமிழ்ச் செல்வர்போல் செல்வத் துப்பயன் கொள்ளின் உலகத்துச் செல்வர் களமை திப்புக ழெய்துமே. 77 இனியின் றாகப் பசியும் வறுமையும் இவ்வு லகிற்பி றந்த எவர்க்குமே; இனியொ ருவர்க்கொ ருவர டிமையாய் இருத்த லென்னும் இழிவுமின் றாகவே. 78 புதைத்து வஞ்சம்பே ராசைசூ தாதிக்கம் பொறாமை தன்னலம் பொய்பகை யாதியை மதித்துச் சட்டத் துடனே ஒழுங்கையும் வாழ்தல் வேண்டுமன் மக்கள் அமைதியாய். 79 இனநி றஞ்சம யவேறு பாடின்றி இயலு மன்பரு ளோடற மேயெனில், தனது ரிமையொ டுமக்க ளாட்சியும் தான்ம லர்ந்து கமழு மமைதியே. 80 பின்றை யொன்றும்வேண் டாந்தனக் குள்ளது பிறர்க்கும் உண்டெனும் பேரற மேற்கொளின் அன்றை யப்பொழு தந்நொடி யேயுல கமைதி நின்று நிலவிடு மல்லவா? 81 உலக மன்றத் தொருகுடை நீழலில் உரிமை யோடுல கத்துள நாடெலாம் அலக மன்றவின் பத்தொடு போர்பகை அறிகி லாதமை தியொடு வாழ்கவே. 82 4. ஆட்சிமொழி சிந்து உலகம் என்பதோர் உருண்டை - எண்ணில் உயிர்க ளுண்டதில் திரண்டே. உலகம் என்பதோர் துண்டம் - அதில் உண்டு நாலைந்து கண்டம். 1 கண்டம் என்பதோ ஒன்று - அதில் காணும் பிரிவைந்தா றன்று. கண்டந் துண்டமா யூடு - பிரிந்து காண்ப தேயொரு நாடு. 2 இந்தியா என்பதோர் நாடு - அதில் எத்தனை யோவுண்டுள் நாடு. இந்தியா ஓர்பெரு நாடு - உள்நா டென்பவெ லாந்தாய் நாடு. 3 ஆந்திரங் கன்னட நாடு - மலை யாள மராட்டிய நாடு தீந்தமிழ் நாடொரு நாடு - இவை சேர்ந்ததே இந்திய நாடு. 4 இந்திய நாட்டினி லின்னும் - உள்நா டெத்தனை யோவுள பின்னும். அந்தவுள் நாடுக ளோடு - கூடி ஆனதே இந்திய நாடு. 5 எம்மொழி வழங்கு நாடு - அப்பெயர் ஏற்குமே அத்திரு நாடு அம்மொழி பேசுவோர் நாடு - அவர்க் காகிடு மேதாய் நாடு. 6 மொழிகள் பற்பல உண்டு - தாய் மொழியொ ருவருக் கொன்று. வழிவ ழிவரு மொழியைப் - போற்றி வளர்ப்ப துநல்ல வழியே. 7 முன்னவர் போலடை வுடனே - தாய் மொழியைப் போற்றுதல் கடனே. நன்னல மேவிட யாண்டும் - தாய் நாட்டைப் போற்றுதல் வேண்டும். 8 மொழியும் நாடும் இனமும் - மக்கள் மூச்சும் உணர்வும் மனமும். மொழிவ ழிப்படு நாடு - நாட்டின் முறைவ ருமினப் பாடு. 9 தமிழர் என்பதோர் இனமே - உலகில் தமிழ்பி றந்தது முனமே. தமிழ்வ ழங்கிடு நாடு - தமிழர் தாய கத்தமிழ் நாடு. 10 நான்மு தலினில் தமிழன் - பின் நானோர் இந்திய னாவேன். ஏன்பின் ஆசியாக் காரன் - முடிவில் இலகி டுமிந்த உலகன். 11 இங்ஙன மேயிவ் வுலகில் - வாழ்ந் திடுமொவ் வொருநாட் டினரும் தங்களைக் கூறிக் கொள்வர் - இது தப்பில் லைச்சரி தானே. 12 நாடு மொழியினம் பேணான் - மக்கள் நடுவி னிலின்பங் காணான். மாடுகன் றுகளைப் போல - வயிறு வளர்த்து வாழ்பவன் சால. 13 எந்தமிழ் நாட்டினுக் குழைப்பேன் - நம் இந்திய நாட்டினுக் குழைப்பேன் இந்த வுலகினுக் குழைப்பேன் - உல கினிது வாழநன் குழைப்பேன். 14 எந்தமிழ் நாடு வாழ்க - நம் இந்திய நாடு வாழ்க! இந்த வுலகெலாம் வாழ்க! - மக்கள் இனிது வாழ்க வாழ்க! 15 எந்தமிழ்த் தாய்மொழி வாழ்க! - நம் இந்திய மொழிகள் வாழ்க! இந்த வுலக மொழிகள் - எலாம் இனிது வாழ்க வாழ்க! 16 கொச்சகம் தாய்மொழியைப் பேசாதான் ஊம னாவான் தாய்மொழியைக் கேளாதான் செவிட னாவான் தாய்மொழியைப் படியாதான் குருட னாவான் தாய்மொழியை எழுதாதான் முடவ னாவான். 17 தாய்மொழியைப் போற்றாதான் பதட னாவான் தாய்மொழியைச் சாற்றாதான் சிதட னாவான் தாய்மொழியை மதியாதான் எதிரி யாவான் தாய்மொழியைப் பதியாதான் உதிரி யாவான். 18 அறுசீர் விருத்தம் தாய்மொழி பேசா வாயும் தாய்மொழி பயிலா நாவும் தாய்மொழி கேளாக் காதும் தாய்மொழி காணாக் கண்ணும் தாய்மொழி எழுதாக் கையும் தாய்மொழி நினையா நெஞ்சும் தாய்மொழி அறியாச் சேயும் தகவிலை யிருந்துந் தானே. 19 தாய்மொழி சொல்லாத் தாயும் தாய்மொழி கல்லாச் சேயும் தாய்மொழி பேசாக் கேளும் தாய்மொழி ஏசா நட்பும் தாய்மொழி பயிலா வீடும் தாய்மொழி இயலா நாடும் தாய்மொழி அறியா வேந்தும் தகவிலை யிருந்துந் தானே. 20 வேறு தாய்மொழி அறியா அதிகாரி தடிமுன் செல்லுங் குருடாவார். தாய்மொழி யறியாத் தீர்ப்பாளர் தன்குர லறியாச் செவிடாவார். தாய்மொழி யறியா மருத்துவரோ தமரொடு பேசா ஊமாவார். தாய்மொழி யறியா வழக்கறிஞர் தானம் மூன்றும் ஆவாரே. 21 பன்னிருசீர் விருத்தம் ஆட்டம் நன்றாய் உளதென்றான் அவன்குர லறியா அச்செவிடன் ஆட்டம் ஆடு வோர்கோலம் அஆ! நன்றென் றானூமன் பாட்டு நன்றாய் உளதென்றான் பாரா முகமுள அக்குருடன் பார்த்துங் கேட்டுஞ் சொல்லாதார் பார்த்த கூத்துப் பயன்போலும்; காட்டு வழியி லோரூமன் கண்ணு மில்லான் காதில்லான் கண்ட காட்சி களையெல்லாம் கழறுந் தன்மை யதுபோலும்; நாட்டு மக்கள் பேசாத நயவா வோரயல் மொழியாட்சி நடக்கு நாட்டில் நடைப்பிணம்போல் நலிந்து மெலிந்து வாழ்வதுவே. 22 கட்டளைக் கலிப்பா தமது நாட்டில் தமது மொழியினில் தம்மி னத்தவர் ஆண்டிடும் ஆட்சியில் தமது வாழ்க்கைத் தடத்தில் தகுதியாய்த் தமது ரிமையொ டுவாழ்ந் திருப்பது, தமது ழைப்பில் தமது நிலத்தினில் தான்வி ளைத்த விளைவைத் தகவுடன் தமது சுற்ற மொடுந்தம் மனையினில் தாம்ப குத்துண்டு வாழ்வது போலுமே. 23 பட்டம் பெற்றுப் படித்து முடித்துயர் பதவி யேற்றதி காரம் புரிநரும் சட்டங் கற்றுத் தகுமுறை செய்திடும் தகுதி யாளரும் தம்மவர் களெதிர்ப் பட்ட மட்டிற் பயிலுமவ் வாங்கிலப் பாவை கண்கொடு பார்த்தெதிர் நிற்கவே, அட்டம் பட்டுத்தந் தாய்மொழி யாலவர் அளவ ளாவுதல் ஆய்வுக் குரியதே. 24 திங்கள் வாள்முகச் செங்கனி வாய்நறுந் தேனும் பாலுந் தெவிட்டுங் குயின்மொழி மங்கை நல்லார் மகிழ மருங்கினில் வளரும் பைங்கிளிப் பிள்ளையும் மாசற நங்கை மாருடன் அங்கவர் போலவே நல்ல செந்தமிழ் நாடொறும் பேசியும் அங்க தனினம் காணிற்கீக் கீயெனும் ஆய்மொ ழியின்சி றப்பினைச் சொல்லவோ? 25 உயிரி னோடு கலந்தங் கிரண்டற ஒன்றி யுள்ள வுணர்வும், உணர்வினும் உயிரி னுமூடு ருவிக்க லந்தொன்றி உள்ள தாயவத் தாய்மொழி யின்னியல் பயிரி னூடு கலந்த பசுமையும் பாலி னூடு கலந்த இனிமையும் மயிரி னூடு பிறழினும் வீண்படும் மானம் போனபின் வல்லுயிர் வாழுமோ? 26 தாயைப் போற்றுதல் தந்தையைப் போற்றுதல் தமரைப் போற்றுதல் தங்கிளை போற்றுதல் சேயைப் போற்றுதல் செல்வத்தைப் போற்றுதல் செல்வ மிக்கதாய் நாட்டினைப் போற்றுதல் தாயைக் காட்டினும் தம்முயிர் தம்மினும் தான்சி றந்ததந் தாய்மொழி போற்றுதல் வாயைப் போற்றி வயிற்றைப்போற் றியுயிர் வாழு மொவ்வொரு மக்கள் கடமையே. 27 சேயி லாதநற் றாய்க்கு மதிப்பிலை திடமி லாதவீ ரர்க்குச் சிறப்பிலை வாயி லாத குரலுக் கினிப்பிலை மயிரி லாத தலைக்கு வனப்பிலை தாயி லாதவோர் சேய்க்குல கத்தினில் தான்பி றந்த பிறப்பின் பயனிலை ஆயி லாதசேய் வாழ்வினுந் தாய்மொழி ஆட்சி யில்லாத்தாய்! நாட்டினில் வாழ்வதே. 28 தாய்த வித்துத் தயங்கி மயங்கிடத் தள்ளி வைத்து வெளியில் ஒருத்தியைத் தாய்மு றைசொலித் தாயி னிடத்திலே தானி ருத்தித் தகவொடு போற்றினும் தாய்த னக்குள அன்பும் தகுதியும் தாய லாதவத் தாய்க்கு வருங்கொலோ! தாய்மொ ழியலா ஓர்மொழி ஆட்சியும் தாய லாதவத் தாயினைப் போலுமே! 29 தக்க வாறு தகவுடை யோர்களைத் தாங்கள் தேர்ந்தெடுத் தேதமை யாண்டிடும் மக்க ளாட்சி நடக்குமோர் நாட்டினில் மற்றொ ருமொழி ஆட்சி செலுத்துதல் மக்க ளாட்சிக் கிலக்கண மன்றது மன்ன ராட்சிக்கும் மாட்சியல், மன்னவர் தக்க வாறுதந் நாட்டைவே றோர்மொழி தன்னி லாளுதல் சாலுமோ சொல்லுவீர்? 30 காலி ருக்க மரக்கால் நடப்பதும் கையி ருக்கக் கரண்டியா லுண்பதும் பாலி ருக்க வெறிநீர் பருகலும் பழமி ருக்கவெக் காயினைத் தின்பதும் கோலி ருக்கக்கை கொண்டே அளப்பதும் குடையி ருக்கக்கை கூட்டி மறைப்பதும் தாலி ருக்கத்தந் தாய்மொழி யோர்மொழி தமது நாட்டினை ஆள்வதுந் தக்கதோ? 31 மக்கள் பேசும் மொழியொன் றிருக்கவே மற்றொ ருமொழி ஆட்சி செலுத்துதல் தக்க தன்றென்ப தற்காங்கி லேயர்கள் தாம டக்கிநம் நாட்டினை ஆள்கையில் அக்க ழுக்கொன்றி லாது தமிழ்முழு தறிந்த நல்லறி வாளரும் ஐயகோ! மக்க ளுக்குட் பதடிக ளாயொரு மதிப்பி லாதிங்கு வாழ்ந்தது போதுமே. 32 ஆங்கி லேயரின் ஆட்சியிந் நாட்டினில் அமைந்த போதேபி சீடி படித்தவன் ஆங்க வனுநி லவரி மேற்பார்வை யாள னாக வரவதி காரமும் ஓங்கு செல்வமும் கல்வியும் மேம்பட உடைய ரானஊ ராளர் அவன்முனம் மூங்கை போலக்கை கட்டிவாய் பொத்தியே முடங்கி நின்ற கொடுமையைச் சொல்லவோ! 33 வழக்கு ரைமுறை மன்றத் தலைவரும் வழக்க றிஞரும் மாற்றுரை யாடிட, வழக்கு ரைமுறை மன்ற மதனிடை வந்து நல்ல மரங்க ளெனும்படி வழக்கு ரைதர வந்த இருவரும் வாயைப் பார்த்துக்கை கட்டி மதிப்பொடு கிழக்கு மேற்கறி யாத நிலையினில் கிடுகி நின்ற கொடுமையைக் கூறவோ! 34 சென்ற காலச்செய் தியொன்று கேட்குவீர்! சிறந்த செல்வத் தமிழ்க்குடி வந்தவன் சென்ற வனுமோர் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து பள்ளிப் படிப்பை முடித்தபின் சென்று கற்றுமா நிலக்கல் லூரியில் தேர்ந்து பட்டமும் பெற்றனன்; என்னினும், சென்றொ ருதமிழ் நூலை எடுத்திடத் தெரிந்தி லனென்ன செய்குவன் ஐயகோ! 35 தமிழ கத்துப் பிறந்து வளர்ந்தவன் தமிழைத் தாய்மொழி யாகவே கொண்டவன் தமிழ கத்துள பள்ளிகல் லூரியில் தான்ப டித்து முடித்தவன்; என்னினும், தமிழ னென்று தனைச்சொலிக் கொள்பவன் தமிழ்ப டித்தறி யாதவன் என்பது, தமிழ கத்தினி லன்றிவே றெங்கணும் தான டந்து மிருக்குமோ சாற்றுவீர்! 36 இன்னும் ஈங்கோர் புதுமையைக் கேட்குவீர்! இருந்த மிழ்க்குடி வந்து பிறந்தவன் அன்ன வன்கல்லூ ரிப்பட்டம் பெற்றவன் ஆங்கி லத்தில் சிறந்தபேச் சாளனும் பின்ன வன்முற்றக் கற்றும் தமிழினில் பேசி டத்தெரி யாதுளம் வெள்கினான். இன்ன வன்ஆர். கே. சண்முகம் என்றிடில் இதுபு துமைபு துமையென் னீர்களோ! 37 ஆத லால்தாய் மொழியேநம் நாட்டினில் ஆளும் ஆட்சி மொழியாக வேண்டுமல் லாது வேறோர் மொழிநம்மை யாளுதல் அடாத வோர்செய லாகும் அறுதியாய். காத லாலொன்று பட்டுக் கலந்துளம் கடிம ணஞ்செய்து கொண்டவ ளாலன்றி ஏதி லானுக் கியலு மொருத்தியால் இல்ல றமினி தாக இயலுமோ? 38 இன்ன வாறு மொழிய ஒருவர்மற் றெவரும் ஆமாம்ஆ மாமெடுத் தேயிவர் சொன்ன வாறோர் அயல்மொழி ஆளுதல் சொந்த நாட்டுக் குகந்ததல் லென்னவே, பின்னெ வாறு பலமொழி பேசுமிப் பெரிய நாட்டினில் ஆட்சி நடத்துதல் என்ன வாறென் றியம்புக என்னவே, இயலு மாறங் கொருவர் இயம்புவார். 39 உலக மெங்கும் ஒளியைப் பரப்பியே ஒளிறு கின்ற ஒருசுடர் போன்மென உலக மெங்கும் வரையறை யின்றியே உள்ள நாடுகள் எல்லா மொருங்குற விலக லின்றி வழங்கு மொருமொழி விரும்பி யாவரும் கற்று வருமொழி, இலகு கின்ற அறிவொளி வீசியே இயலு கின்ற ஒருமொழி ஆங்கிலம். 40 தந்த மதுயிர் போன்ற அவரவர் தாய்மொ ழியுடன் கற்றுநாம் ஆங்கிலம் இந்த நாட்டினை ஆளலாம் என்னவே, இல்லை யில்லை, அயல்மொழி ஆங்கிலம்; சொந்த நாட்டைப் பிறமொழி ஆளுதல் சொரணை யற்றகீழ் மக்களின் செய்கையாம். இந்த நாட்டு மொழிகளி லொன்றினை இந்தி யாவின் பொதுமொழி யாக்குவோம். 41 இந்த நாட்டில் பலமொழி பேசலால் எம்மொ ழியைப்பொ துமொழி யாக்குதல்? முந்தை யோர்கள் மொழிந்தனர் இந்தியே மூன்றி னிலொரு பங்கினர் பேசலால் இந்த நாட்டுப் பொதுமொழி யாக்கலாம் என்று, முன்னவர் சொன்ன படியேநாம் இந்தி யாவின் பொதுமொழி யாகஅவ் விந்தி யைக்கொ டினிதர சாளுவோம். 42 மூன்றி னிலொரு பங்கினர் பேசிடும் மொழியெ னின்மூன் றிலிரு பங்கினர் ஏன்று கொள்வரோ? மூன்றிலி ரண்டென்ப தேற்ற மன்றோவீ ரேழிலொன் றேயன்றோ? ஈன்ற மக்களில் ஏழெட் டொருவனுக் கிருவர்க் கொவ்வொரு பிள்ளைக ளென்னினும், ஈன்ற வர்சொத்தை யன்னாற்கே யீயின்மற் றிருவ ருமிசை வாரோ! இயல்பதோ? 43 மொழிந்த வாறிந்த நாட்டில் வழங்கிடும் மொழியி லொன்றைப் பொதுமொழி யாக்கினால் ஒழிந்த தாய்மொழி பேசுமிந் நாட்டினர் ஒத்துக் கொள்ளமாட் டாரொருக் காலுமே; கழிந்த பூசல் கிளம்பிடும்; வெற்றிலைக் காம்பு கைப்படி னுங்காணி காணியா வழிந்த செல்வ முடையரும் ஓர்சிறு வரப்புக் கேனும் வழக்குத் தொடுப்பரே. 44 ஆகை யாலிந்த நாட்டி னொருமொழி ஆட்சி செய்தல்கட் டாயமா காதுகாண். கூகை காக்கைக் குலத்திடைச் சென்றுமே குளறின் காக்கைகள் வெல்லுதல் கூடுமோ? தோகை சென்றுவான் கோழிமுன் ஆடிடின் சுட்டிக் கூறவக் கோழி துலங்குமோ? வாகை சூடுவர் தாய்மொழி யாளர்கள்; மற்றை யோர்வெல வல்லரோ சொல்லுவீர்! 45 கையைக் காலை அசைக்க வராமலே கயிற்றைக் கட்டிப் பிடித்தும் புருடையைப் பையக் கட்டி உடம்பினைத் தூக்கியும் படாத பாடுகள் பட்டுமே நீரினில் மெய்யைத் தூக்கி மிதக்கப் பழகுவர். மீனுக் குஞ்சுக்கு நீத்தம் பழக்கவோ? ஐயப் பாடிலைத் தாய்மொழி யாளரின் ஆதிக் கம்மிகும் என்பதில் அப்புறம். 46 எழுத்த றிந்தவத் தாய்மொழி யாளரோ டியன்ற வாறு பயின்றம் மொழியினிற் பழுத்த நல்லறி வெய்திடப் பெற்றரும் பரிசுப் போட்டியில் வெல்லுதல் ஒல்லுமோ? தொழுத்தி றந்துபா லூட்ட விடுக்கின்ஆத் தொகையில் தாய்மடி கன்றுக் கரியதோ? உழுத்த கொள்ளொடு காரா மணிப்பயி றொப்ப வேமெனச் செப்புதல் கூடுமோ? 47 இமயங் கண்ட தமிழிங் கிருக்கையில் இடையில் வந்த தெலுங்கிசைப் பாடலால் தமிழர் கண்ட அரசரண் ணாமலை தமிழி சைக்கழ கங்கண்டு வென்றதே அமையு மோர்மொழி ஆட்சி மொழியானால் அவர்தம் ஆதிக்கம் அளவுக்கு மீறியே நமதெ னுமுணர் வற்றடி யோடுநம் நாட்டின் ஒற்றுமை கேட்டுக்குள் ளாகுமே. 48 பிறக்கு முன்னேயப் பிள்ளையின் பெற்றவர் பிறரை ஆதிக்கங் கொள்ளத் துடித்திடின் பிறக்கு மேலவர் என்செய்வர் என்பதைப் பேச வேண்டுமோ? பெற்றவர் போலவே, அறத்து டித்திடும் இந்தியர் தாய்மொழி ஆளு மேலிந்தி யாவினை அப்புறம் பறக்கு மன்னர் கொடிமற் றவரெலாம் பணிந்து கைகட்டிப் பண்ணையஞ் செய்வரோ? 49 ஈனு முன்னேசேங் கன்றெனு மிந்தியர் இந்தி யாவின் பொதுமொழி இந்தியே தானு மாகின் பிறரிந்த நாட்டிலே தன்மா னத்துடன் வாழ விடுவரோ? கானு லாவும் உயிர்க ளொருமையைக் கட்டிக் காக்கும் வகையிற் கலந்துயிர் ஊனு மான உருப்படும் இந்தநாட் டொற்று மைக்குலை வைக்குமித் திட்டமே. 50 இந்த நாட்டின் தனிப்பே ரரசியாய் எங்கள் தாய்மொழி யேயிருக் கவேண்டும் இந்தி யிலேதான் பேசுதல் வேண்டுமென் றிப்ப வேயிப்ப டியடஞ் செய்பவர், இந்தி யிந்நாட் டரியணை யேறினால் என்ன செய்வரவ் விந்தியர்? மற்றையோர்க் கிந்த நாட்டுக்கு வந்தவ ராட்சியின் ஏழு கோடி கொடுமை யிழைப்பரே. 51 இந்தி யாவின் பொதுமொழி யாவதற் கிந்தி யேதகு தியுடைத் தாமெனின், இந்தி யாளுமவ் விந்திய நாட்டினை இந்தி பேசா தவரெங்கள் நாடென எந்த நாளும் உரிமைகொண் டாடிட ஏற்றுக் கொள்ளுவ ரோஅந்த இந்தியர்? இந்தி யாளுமேல் இந்தியர் வாழுவர்; ஏனை யோரவர் காலடித் தாழுவர். 52 அன்று போந்த வடமொழி யாதிக்கத் தாற்ற மிழர்தம் வாழ்க்கை முறைமையும் தொன்று தொட்டபண் பாடும் சமயமும் சுவைத ருங்கலை யுமக்கட் பேர்களும் நின்ற நூலின் நிலையும் இலக்கண நிலையும் மாறிய அந்நிலை எண்ணிய தன்ற னிமகள் இந்தி வரவினைத் தமிழர் அஞ்சுதல் சாற்றவும் வேண்டுமோ? 53 திருந்து செங்கோற்செங் குட்டுவன் தம்பியின் சிலம்புச் செல்வத் தமிழ்மலை யாளமாய், இருந்த மிழ்க்கொடை நன்னன் எயினவேள் எருமை யூரன் தமிழ்க்கன் னடமதாய், பெருந்த கையவே ளண்டிரன் நன்றன்று பேசி யவத்த மிழ்தெலுங் காயின்று திரிந்த தென்றால் வடமொழி யாலிந்திச் செய்கைக் கஞ்சாத் தமிழர் இருப்பரோ? 54 செந்த மிழ்த்திரு நாலா யிரத்திற்குச் செய்ம ணிப்பிர வாள உரையையும், அந்த மிழினைப் போற்றி வளர்த்தஅவ் அருக ரின்தமிழ்ச் சீபுரா ணத்தையும் வந்து செந்தமி ழைக்கெடுத் திட்டஅவ் வடமொ ழியின்செ யலென எண்ணினால், இந்தி யாலேகட் டாயந் தமிழ்கெடும் எனத்த மிழர்கள் அஞ்ச லியற்கையே. 55 குமரி யோடு வடவிம யத்துமுக் கொடிப றக்க முடியுடை மூவரும் இமிழ்க டலகத் தெல்லை கடந்துமே இசைவி ளங்க ஒருமொழி வைத்தாண்ட இமய மன்ன பெருமை யதையுமின் றிந்நி லையுந் தமிழர்கள் எண்ணினால், தமிழ்கெ டுமிந்தி யாலென அஞ்சுதல் தவறெ னப்படு மோதக வெண்ணுவீர். 56 இந்துக் கோயிலில் ஏனையோர்க் குமதிப் பில்லை, அங்ஙன மேபள்ளி வாசலில் வந்துட் காரற்கு மற்றவர் அஞ்சுவர், மந்தைப் பிள்ளையா ருக்கு மொருசிலர் சொந்தக் காரரென் றோர்சில மக்களைத் தூரப் போவெனத் தூற்றித் துரத்துவர்; இந்திக் காரர் வெறிக்குமற் றோர்களை ஈடு வைக்குதல் ஏற்புடைத் தாகுமோ? 57 உலக மக்கட் கொருவனே தேவனென் றுரைப்பர் வாயள விலொரு தேவன்வாழ் இலகு கோயிலோர் சாதிக்குச் சொந்தமாய் இருக்கு மாகிலக் கோயிலிற் சீருடன் நிலவு கின்ற திருவிழா விற்றிரு நீறச் சாதியா ரேபெறு வார்முதல். கொலுவி ருக்கும் மொழியினர் அன்னரில் குறைந்து போவரோ ஆதிக்கஞ் செய்வதில்? 58 ஒருவர்க் குச்சொந்த மான கிணற்றினில் ஊர வர்நீ ரெடுக்கிற் றண்ணீருக்கு வருவர்க் குச்சொந்தக் காரர் கடுமையாய் வாயி னாலடிப் பார்கள் வரவர ஒருவர்க் குமில்லைப் போங்கள்தண் ணீரென உருளை யையெடுத் துவைத்துக் கொள்ளுவர். ஒருவர்க் குச்சொந்த மான பொதுமொழிக் குண்மை யிலிக்கு றையெலாம் உண்டுமே. 59 அன்ன வாறோர் மொழியினர் ஆதிக்கம் ஆகு மேல்நாட் டொருமை அகன்றிடும். சொன்ன வாறு நடக்குதல் ஆதிக்கச் சொல்லுக் கஞ்சியே யல்லவோ? அச்சொலும் முன்னெ வாறிங்கு வெள்ளைய ராதிக்கம் முகடு முட்டி யிருந்தும் முடிவினில் என்ன வாறு முடிந்தஃ தென்பதை இதற்குள் ளாக மறந்துவிட் டீர்களோ? 60 பெற்ற பெண்ணை அவனுக் கிவளேதான் பிறந்து ளாள்பெண்டாட் டியெனப் பெற்றவர் மற்ற வளைம ணந்துகொள் வாயென வற்பு றுத்துதல் வையத் தியற்கையோ? மற்றொ ருவன்வி ரும்பி மணத்தலே மரப தாகும். ஒருமொழி யைப்பிறர் சற்று மேவிரும் பாமற்கட் டாயமாய்த் தலையில் கட்டுதல் சால்புடைத் தாகுமோ? 61 அமைதி யாகநம் நாட்டினை யாண்டிட அமைத்துக் கொள்வதே ஆட்சி மொழியலால் அமைதி யின்றி அடக்கு முறையினால் அமையு மோவோர் பொதுமொழி யாட்சியும்? சுமைய தென்றொரு வன்மனத் தெண்ணினும் தொத்து நோய்போல் தொடருமஃ தல்லவோ? நமது நாட்டு நலத்தினை எண்ணியே நடக்க வேண்டும் பொதுமொழிக் கொள்கையில். 62 சாற்றுங் கல்வியின் றேனுமிவ் வேலைக்குத் தகுதி யற்றவ னேனும் இவனையே ஏற்றுக் கொள்ளுதல் வேண்டுங்கட் டாயமென் றீன்ற வர்வற் புறுத்துதல் ஏலுமோ? மாற்றுக் காண்பவர் போல அவனுடை மாட்சி கண்டு தெரிந்து தெளிந்துமே ஏற்றுக் கொள்ளுதல் மற்றவர் பாலதே. இந்தி யாட்சி மொழியுமப் பாலதே. 63 போட்டி போடும் ஒருகட்சிக் காரரைப் போடு தல்முறை யாமோ நடுவராய்? ஆட்டுக் குட்டிவிற் கவுமூன் றாவதோர் ஆளைத் தேடுதல் நாட்டு நடக்கையாம். நாட்டுக் கோரர சாட்சி மொழியெனில் நாலி லொன்றினை நாட்டுதல் ஞாயமோ? பாட்டுப் பாடும் அரங்கினிற் பின்னணி பாடு வோரில் ஒருவர் பணிக்கவோ? 64 இந்த நாட்டு மொழிகளில் ஒன்றுநம் இந்தி யாவின் பொதுமொழி யாகுமேல் நந்தம் நாட்டில்நம் சொந்த மொழியாட்சி நடக்கி றதெனும் நச்சுணா வேற்பாடும் இந்த நாட்டினர்க் கென்றிடின், அவ்வுணர் விந்தி பேசும் அவர்க்கன்றோ ஏற்படும்? இந்தி பேசா தவர்களுக் கங்ஙனே எதிரு ணர்ச்சியன் றோமிக ஏற்படும்? 65 பத்துக் கும்மேற் படுந்தாய் மொழிகளும் பால்வ கைப்படு பல்வே றினங்களும் தத்த மக்குத் தகுந்த இயல்புடன் தனித்து வாழ்ந்திடும் இப்பெரு நாட்டினை அத்து மீறி ஒருமொழி நானென அடக்கி யாள நினைக்குமேல் மற்றையோர் ஒத்துப் போவரோ, ஒற்றுமை நிற்குமோ, உலகி யல்புக் கடுக்குமோ? உள்ளுவீர்! 66 எண்ணிப் பாருமின் எம்மொழி யாளரும் எங்கள் தாய்மொழி யேயிந்த நாட்டினில் பண்ணு மாட்சிப் பொதுமொழி யாகிடும் பால தாமெனச் சாலப் பரிவுடன் எண்ணு தல்தவ றாகுமோ? அங்ஙனம் எலாரும் எண்ணிடில் என்படும் ஒற்றுமை? கண்ணி லானைக் குருடனென் றாலவன் கடிந்து கொள்ளுதல் காணு மியற்கையே. 67 இந்த நாட்டின் அரசியற் சிற்பிகாள்! ஈது போன்றவஃ தோர்சொந்தக் கொள்கைக்காச் சொந்த நாட்டவன் காந்தி யடிகளைச் சுட்டுக் கொன்றது போலத் துணிவுடன், இந்த நாட்டு மொழியென இந்தியால் என்று மில்லா தியன்று வருகின்ற இந்த நாட்டின் ஒருமையைக் கொல்வதோ? எண்ணிப் பார்மின்! இதுசிறார் சிற்றிலோ? 68 படையெ டுக்கும் பெருவல் லரசுகள் பார்வை மாவினைப் பார்த்துநந் நாட்டுநாற் புடையி ருக்கும் நிலையை மறந்துமே, போர்த்த ஆன்தோல் புலியென உட்பகை இடையி ருக்கும் நிலையையும் எண்ணிடா தியலும் ஆட்சி யிடைப்படும் கேள்விக்கு விடையி றுக்கும் மொழியின் பொருட்டிங்கு வெறுப்பு ணர்ச்சியை வேண்டி வளர்ப்பதோ? 69 பரந்து பட்டஇந் நாட்டில் இனம்பல பாகு பட்டும் பலமொழி பேசியும் சுரந்து பட்டஇக் காலச் சுழலினால் தோன்றி யுள்ள ஒருமை யுணர்ச்சியை, நிரந்து பட்ட நிலப்பயிர் போல்தலை நிமிர்ந்தி டாதுசெய் திந்தி மனத்துளே கரந்து பட்டஅவ் வேற்றுமை எண்ணத்தைக் கல்லிப் பேர்க்குங் கருவியு மாகுமே. 70 இந்தி யாலிந்தி யமக்கள் ஒற்றுமை எய்துவ ரெனும் எண்ணத்தின் மாறாக, முந்தி யெந்தநா ளுமொன்று பட்டிலா முறைதி ரிந்திந்த நாட்டுமக் களெலாம் இந்தி யாவிந்தி யரெனும் பேரையுமே ஏற்க லாதஅவ் வெண்ணம் மறந்துமே இந்தி யாவெங்கள் சொந்தநா டாகுமென் றெண்ணும் எண்ணத்தை இந்தி கெடுத்திடும். 71 மொழியி னாலொரு மைப்பாடுண் டாமெனில், மூவ ரசர்க ளுமுரண் பட்டதும், பழியெ னாதென்றும் பாண்டவர் கௌரவர் பகைவ ராகவே வாழ்ந்து முடிவினில் ஒழிய லானதும் நோக்கின் மொழியினால் ஒருமைப் பாடுண்டா காமை வெளிப்படும், மொழிய லாரும் தமிழ்தமிழ் நாடென முரண்ப டாதொன்றி வாழ்வது காண்கவே. 72 இமய மோடு குமரி யிடைப்படும் எண்ணி றந்த மொழிபேசு வோர்களும் இமையும் வேறுபா டின்றியுள் ளொன்றியே இருப்ப துமொரு கட்சி யுணர்ச்சியால், தமது நாடெனும் நல்லுணர் வேற்படும் நாளை யேவொரு மைப்பாடு மேற்படும். தமது தாய்மொழி என்னு முணர்ச்சியைத் தந்தொ ருமைப்பாட் டைக்கொலும் இந்தியே. 73 மலையுங் காடும் மதிலும் அகழுமே வல்ல ரணாகொண் டநிலை மாறியும் சிலையும் வேலும்வா ளும்வெடி யும்வீரர் சிலருங் கூடத்தே வையிலா தேநின்ற நிலையில் ஓரணு குண்டிவ் வுலகையே நீறு செய்யுமிக் கால நிலையினில் தலையுங் காலுந் தெரியாதிந் நாட்டினில் தனித்து வாழ விரும்பா ரெவருமே. 74 சாது வனைக்கொ லாதுநா கர்பொருள் தான்கொ டுத்தது தாய்மொழிப் பற்றினுக் கேது வாகுமன் றோஇந்திக் காரரும் ஏனை யமொழிக் காரரும் வாயினால் மோதிக் கொள்ளுவ ராயின் தமதுதாய் மொழியின் காரண மாக அடிக்கடி ஆது மக்க ளொருமை யுணர்ச்சியை அழிக்கும் என்பதில் ஐயமும் உண்டுமோ? 75 தீமை யெல்லாந் திரண்டுரு வானது சிந்தை யோடு பிறந்தது தீயபொ றாமை யென்னும றக்கொடும் பாவியொன் றாமை யுள்ளம றாமையோ டொன்றுப டாமை யென்னும டாமை யதனையுண் டாக்கி யேமுரட் டாட்சி புரியுமெஞ் சாமை யாகுமிஞ் சாமைய தனுக்கெஞ் சாமை யிந்தியஞ் சாத்துணை யாகுமே. 76 குறிப்ப றிந்துகுற் றேவல்கள் செய்யினும் கொடுஞ்சொல் யாவுங் குணமெனக் கொள்ளினும் மறுப்பி லாது வழிநின் றொழுகினும் மாற்றா ளோடு மனமொத்து வாழ்வரோ? வெறுப்ப செய்யினும் வேலைக்கா ரியிடம் விரும்பக் கூறியும் வேலைகொள் வாரன்றோ? நெறிப்ப டாட்சி மொழிக்குமிந் நேர்முறை நேரு மென்பதை யாரு மறிகுவீர். 77 உண்மை யாகவே சொல்கிறேன் இந்தியர் ஒன்று பட்டுணர் வுற்றுநா மொன்றென உண்மை யாவொவ் வொருவருள் ளத்தும்வே ரூன்றி யவ்வுணர் வுள்ள படியேயத் திண்மை யான ஒருமைப்பா டுற்றுநாம் திசைம திப்பத் திகழ விரும்பினால் உண்மை யாகவே இந்தி யிதற்கெதிர் உறுதி யாகவே செய்வ துறுதியே. 78 இந்தி யாவின தெல்லை நிலையினும் இயலு இன்றவிக் கால நிலையினும் இந்தி யாவினுள் ஒவ்வொரு நாட்டரும் இந்தி யாவி லிருந்து பிரிந்தினி இந்தி யாவினுள் ளேதனி நாடதா இருக்க எண்ணிடார் என்பதில் ஐயமில். இந்தி யாலவ் வுணர்வெழி னுமெழும் என்ப தினுமி லையைய மில்லையே. 79 தனிப்பெ ருமைத னித்தபண் பாடுறு தனிப்ப ழமைத னித்தாய் மொழிதனி இனமெ னத்தா மிதுநாள் வரையிலும் எடுத்து ரைத்தவ்வா றெண்ணி யிருந்தவர் இனைய யவையும் விட்டுக் கொடுத்துமே எங்கள் நாடிந்தி யாநாங்க ளிந்தியர் எனவ மைந்த ஒருமை யுணர்ச்சியை இந்தி யென்னும் இதற்காகக் குலைப்பதோ? 80 இன்ன காரணந் தன்னை மதித்திலா திந்தி தன்னை வலுவில் புகுத்துதல், தன்னு ரிமைம றுத்துவாக் காளரைத் தான்ம தித்திலாத் தன்மையா வதொடு மன்னு மவ்வொரு மைப்பா டியன்றிடா; மக்க ளுள்ளமும் மாற்ற மடைந்துமே நென்னல் இன்றுநா ளையென எண்ணியே நீறு பூத்த நெருப்பினைப் போலுமே. 81 அன்று காந்தி யடிகளும் இந்தியே ஆகு மிந்திய நாட்டுப் பொதுமொழி என்று கண்டனர்; அங்ஙனே இந்தியா இந்தி என்னும் பெயரின் ஒருமையால் நன்று நன்றெனக் கொண்டிந்தி வாழ்கென நாட்டு மக்கள் முழக்கினர்; ஆகையால் இன்று நாமதைக் கைவிடல் ஏற்றதோ என்னின், காலத்துக் கேற்புடைத் தாகுமோ? 82 அடிமை வாழ்வை அகற்றுந் தலைவர்கள் யாது சொல்லினும் அட்டியில் லாமலன் றடிமை செய்தே அலுத்தவர் கேட்டதில் அமையும் இந்தி மொழியுமொன் றாகையால், அடிமை நீங்கி விடுதலை யுற்றிடும் ஆர்வ மேயது வாகும்நம் ஆட்சியின் கடமை யெண்ணிநல் லாட்சி நடத்திடும் கருவி காணல் நமது கடமையே. 83 கொள்ளை யாட்சி நடத்தியே செய்யொணாக் கொடுமை கள்செய் தடிமைப் படுத்திய வெள்ளை யாட்சி அகற்றுங் கருவியாய் விரும்பிக் காந்தி யடிகள்மேற் கொண்டதால், எள்ளி யேயல் நாட்டுப் பொருள்மறுப் பின்று கொள்ளுதல் ஏற்புடைத் தாகுமோ? பிள்ளை யாட்சி எனினுமக் காலத்தின் பெற்றிக் கேற்பன கொள்ளுதல் வெற்றியே. 84 கந்தில் யாத்த களிறுந்தன் பாகனின் கைவ ழிப்பட் டியன்றிடுங் காட்சிபோல் தந்த மூத்த தலைவர்கள் சொற்படி தான டக்குந் தகுதிய தன்றியே, இந்தி பேசா தவர்களி லேயெவர் இயல்பி லேயிந்த நாட்டின் பொதுமொழி இந்தி யாக இருந்திட வேண்டுமென் றெண்ணு வோர்நடு நின்றுநன் கெண்ணுவீர். 85 முந்து காந்தி மொழிந்தனர் என்னவும் முடிய இந்தியிந் தியிந்தி என்னவும் வந்த கொள்கையை மாற்றத் துணிகிலா மனமு டையவொ ருசிலர் அன்றியும், கந்தில் யாத்த களிறென வேகட்சிக் கட்டுப் பாட்டினால் கட்டுப்பட் டோரலால், இந்தி பேசா தவர்களில் உண்மையாய் இந்தி வேண்டுமென் பாரில்லை யாருமே. 86 அன்ன ருமிந்தி வந்தாற்போ கப்போக அதன்வி ளைவை யறிய வறியவே முன்னி ருந்த நிலைமையில் மாறியே மும்மொ ழித்திட்டம் வேண்டாமவ் விந்தியால் மன்னு மொற்றுமை போய்விடுந் தாய்மொழி மதிப்பி ழந்து விடும். மொழிப் பூசலாம், தன்னு ரிமையொ டுமக்க ளாட்சியும் தாறு மாறாகும் என்பதில் ஐயமில். 87 இந்தி யாவிந்தி என்றிடும் போதுளத் தெழுமொ ருமையு ணர்ச்சிச் சிறப்பினால், இந்தி யாவின் பொதுமொழி இந்தியே என்று கொள்வதே ஏற்புடைத் தென்பதும், இந்தி யாவின் பெயரின்று பாரதம் என்ப துவேபெ ருவழக் காதலால், இந்தி பாரதம் என்றிடின் அவ்வுணர் வெழாமை யாலுமஃதேற்புடைத் தல்லவே. 88 இப்பெ ரும்பழ நாட்டின் நலத்தினை எண்ணி யுமன்று வெள்ளைய ரையெதிர்த் தெப்பெ ருந்தன் னலத்தை யிழந்துமாங் கெய்தி யவ்வவ் வுரிமையை எண்ணியும் செப்பி டுந்தம் மொழியின் உரிமையைச் சிறிது விட்டுக் கொடுக்கினவ் விந்தியர் அப்பொ ழுதேயிவ் வாட்சி மொழிச்சிக்கல் அகன்று நன்முடி வாகிடு மல்லவா? 89 அடக்கி யாண்ட அடிமைத் தளையினை அறுத்தெ றிந்து விடுதலை யுற்றிடத் தடிக்குங் கண்ணீர்ப் புகைக்குங் கொடுஞ்சிறை தனக்குங் கடுந்தண் டனைக்கும் உயிர்கொல் வெடிக்கும் அஞ்சா தடைந்த உரிமையை விடாது காக்கவாய்ச் சொல்லைக்கொஞ் சம்விட்டுக் கொடுக்க அஞ்சுதல் நாட்டுப்பற் றினுக்கோர் குறைய தாகுமன் றோவின்றோ கூறுவீர்? 90 ஆட்டுக் கல்லுக் கடிதடி யாங்கொலோ! அடிப ணிந்து மிகப்பணி வன்புடன் கேட்டுக் கொள்கிறேன்; நாட்டொரு மைநிலை கெடாத வண்ணமெம் இந்தியீர்! சொந்தநும் வீட்டுக் கொள்கையை நாட்டிற் புகுத்திட விடாப்பி டியின்றி விட்டுக் கொடுத்திந்த நாட்டுக் குங்கள் கடமையைச் செய்குவீர் நாட்டுக் கின்னுயிர் ஈந்தார் வழியினீர்! 91 ஒருசி லர்செய் கெடுபிடித் தன்மையால் உடலி னோரிரு பாங்கி னெதிரெதிர் வருசி லந்தியா றாதழி புண்பட்டு வருத்து கின்ற வருத்தம் பொறுக்கிலா துருகு கின்றநம் இந்தியத் தாய்துயர் ஒழிக்கி லாததற் கூட்டங் கொடுப்பதை அருகி ருந்தும் பொருட்படுத் தாததற் காக்கந் தேடல் அழகிதோ எம்மனீர்! 92 தமிழக் கந்தனும் வள்ளியும் காட்டிய தகவைக் கண்டு வியந்துமே புன்னகை கமழக் காந்தி யடிகளும் ‘வெள்ளையர் கப்ப லேறிய அப்புறம் காரினில் இமிழச் சங்கம் இமத்தில் விடுதலை இந்தி யாவின் பொதுமொழி யாவது தமிழுக் கேயுரித் தாம்’ எனச் சாற்றிய சான்று காட்டத் தமிழர்முன் வந்திலர். 93 தொன்மை யானது லகில ரசியல் தோன்றி யவன்று தொட்டுநா டாண்டது சொன்மை யோடு பொருண்மை நிறைந்தது தொலைவி லாததி மயங்க டந்தது வன்மை யானது காலப் பகைவெலும் வளமை யானது சொல்வதற் கோர்குறை இன்மை யானதாம் எங்கள் தமிழ்மொழி என்று கூறித் தமிழர்முன் வந்திலர். 94 ஐம்பத் தாறுநா டாக விருந்ததும் ஐந்நூற் றின்மேலும் சிற்றர சாண்டதும் கம்புக் கொல்லைக் கதிருணும் புட்கள்போல் காலம் பார்த்தயல் நாடர் கவர்ந்ததும் நம்பிக் கையுடன் ஒன்றுபட் டுள்ளதிந் நாட்டின் நல்லகா லமாகு மல்லவா? கொம்புத் தேனைக்குத் தும்முசுப் போல்மொழிக் கொள்கைக் காகக் குலைத்த லழகிதோ! 95 ஒருமொ ழிக்கா பிறதம வெண்ணுதல், ஒருமொ ழிக்கா ஒருமை குலைக்குதல், ஒருமொ ழிக்கா விடாப்பிடி செய்குதல், ஒருமொ ழிக்கா வெறுப்பை வளர்க்குதல், ஒருமொ ழிக்கா பகையை அழைக்குதல், ஒருமொ ழிக்கா எதிர்ப்பையுண் டாக்குதல், ஒருமொ ழிக்காநம் இந்தியா ஒன்றெனும் உள்ளு ணர்ச்சியைக் கிள்ளி யெறிகுதல்? 96 எண்ணி லாத்தன் னலமறுத் தெய்திய இந்தி யாவின்நல் வாழ்வை இயற்றுவீர்! கண்ணி லான்கைத் தடிவழி காட்டல்போல் கருத்தி னைப்பரி மாறுங் கருவிக்கா உண்ணி லாவும் வெறுப்புடன் நாட்டினில் உடனி ருக்குநர் தம்மையுண் டாக்கலீர். பண்ணும் பாவைக்குப் பூசிடுஞ் சாயத்தைப் பற்றி மாறு படுதல் அழகிதோ! 97 இந்தி யாவொரு நாடென இந்தியர் ஈரைந்து நான்கு கோடிய ருமெண்ணி இந்தி யாவொரு தன்வல் லரசுநா டென்று லகநா டெல்லா மதித்திட இந்தி யாவின் தலைவர்கள் எண்ணினால், இந்த நாட்டின தாட்சிப் பொதுமொழி இந்தி யென்னுமவ் வெண்ணத்தை விட்டுமே இருக்கின் எண்ணிய எண்ணியாங் கெய்துவர். 98 சொந்த நாட்டு மொழியெனுங் கொள்கையைச் சொல்லொ ணாத துயர்பட் டடைந்திட்ட இந்த நாட்டின் உரிமை நிலைத்தினி திருக்க வேண்டும் எனும்பெரு நோக்குடன் இந்த நாட்டுநல் வாழ்வினுக் காகவாழ்ந் திடுந்த லைவர்கள் விட்டுக் கொடுத்துமே அந்த நாட்டு மொழியெனா தாங்கிலம் அதனை யேற்றல் அமைவுடைத் தாகுமே. 99 இந்தி யாவின் பொதுமொழி இந்தியே என்னும் இந்தி வெறிக்கடி மைப்படின் அந்த நாளி லிருந்திந்தி யாநம தாகு மென்னும் உணர்ச்சி யகன்றிடும்; எந்த நாளும் எதிர்ப்பு வலுத்திடும் எமதெ மதெனும் ஏட்டிக்குப் போட்டியும் சொந்த மென்னும் மொழிவெறி யுந்தலை தூக்கும் ஒற்றுமை தூர விலகுமே. 100 வெறியெ னும்பித்து மட்டுமொன் றோகுடி வெறியும் நானுயர் வென்னும் இனநிற வெறியும் ஐந்தில்நான் மேலோ னெனுஞ்சாதி வெறியும் மற்றவை தாழ்ந்த தெனுமத வெறியும் எங்கொள்கை யேமே லெனுங்கட்சி வெறியும் மக்களைக் கொன்று குவிக்கும்போர் வெறியும் சேர்ந்தொன்று கூடினும் இம்மொழி வெறியி னுக்கிணை யாமென லாகுமோ? 101 இன்று கற்றவர் யாவருங் கற்றவர், இனித ரசுபு ரிகிற தின்றுமே, அன்று நாற்பத்தேழ் ஆகஃச்ட்டு மூவைந்தில் அவர்க ளோடே அனுப்பிவிட் டோமிலேம். குன்று போற்பெருஞ் செல்வக் குடும்பமும் குறியெ திர்ப்புப் பெறுவது குற்றமோ? நன்று நாட்டின் நலத்தினை எண்ணியே நாலு பேருமொத் துக்கொளல் நல்லதே. 102 சொந்த நாட்டு மொழியலா வொன்றனைத் தொடுதல் இந்தியர் தொன்மைக் கடாதென இந்த நாட்டு மொழிகளி லொன்றனை இந்தி யாவின் பொதுமொழி யாக்கின்வே றெந்த நாட்டவ ரோடும்பே சாமலே இருப்ப தேகொல் கிணற்றுத் தவளைபோல்? உந்தி யாட்டம தாடுமின் னார்கள்போல் உலகஞ் சுற்றுவ தெங்ஙனம் ஓதுவீர்? 103 இந்த நாட்டில் வழங்கு மொழியொன்றை இந்த நாட்டின் பொதுமொழி யாக்கினால், இந்த நாட்டில் பிறமொழி பேசுவோர் ஏற்றுக் கொள்ளார் இயல்புமஃ தன்றியும், இந்த நாட்டின் ஒருமை குலைந்திடும் எமதெ மதெனும் ஏசலுண் டாகும்வே றெந்த நாட்டுத் தொடர்புமில் லாமலே இருக்க நேர்ந்திடும் என்ப தறிகுவீர். 104 பத்துப் பேரி லொருவனை மற்றவர் பங்கை யுண்டு பயன்பட வாழ்கெனின், ஒத்துப் போவரோ மற்றவர்? அல்லதூம் உலகி யலினுக் கொத்தது மாகுமோ? முத்துப் போன்ற முறுவலள் என்னினும் மொழியி லாட்கும் சரிநிகர் தந்திலான் பொத்துப் போன குடத்தை அடைக்கவும் போக்க வுங்காலம் போக்குவா னல்லவோ? 105 எவர்க்கும் ஆங்கிலம் தாய்மொழி யாகவே இல்லை, அன்றியும் இவ்வுல கெங்கணும் கவர்க்கும் பல்கலைச் செல்வமாக் கொண்டுமே கற்கப் பட்டு வருதலான் அம்மொழி, உவர்க்கும் உப்பை உணவு வகைகளில் ஒப்பக் கொள்ளுத லொப்பவே யாவரும் இவர்க்குச் சொந்த மெனாமலே கற்குவர் என்ப திலைய மில்லை அறிகுவீர். 106 அயல்மொ ழியெனில் ஆங்கிலம், இந்தியா அதனி டையே வழங்கு மொழியெலாம் அயல்மொழி யாகு மன்றோ ஒருமொழி அன்றி வேறோர் மொழிபேசு வோர்க்கெல்லாம்? அயல வன்மகள் தன்னை மணப்பதும் அனைத்து நாட்டினுங் கொண்டு கொடுப்பதும் அயல வன்றோ? அயல் தெனும்பொருள் அடைகி லாத பொருளே யறிகுவீர். 107 அயல்மொ ழியுடன் ஆங்கிலம் வெள்ளையர் அடிமை யாட்சியை நினைவு றுத்தலால் இயல்பு டனதை இந்தியர் கற்பதோ ஏற்பு டைத்தன் றெனப்படின், இந்தியும் அயல்மொ ழியுடன் மற்றவர்க் குமொக லாய ராட்சிக் கொடுமையைக் கண்முனம் செயல்ப டக்கொண்டு காட்டுறு மல்லவோ சிறிது முன்னுக்குச் சென்றுமே பார்க்கினே? 108 அயல வர்மொழி யாகையால் ஆங்கிலம் அதனைக் கொள்ளல் தகாது நமக்கெனின், வியல கத்தை ஒருநொடிப் போதென விரைந்து செல்லுமுந் தியும்வா னூர்தியும் செயல கத்துத் தொழிலைச் செயற்படச் செய்தி டும்பல் பொறிகளும் ஏனவும் அயல வர்பொரு ளாமென நீக்குதல் அறிவு டைமை யதன்பாற் படுவதோ? 109 உண்ணு கின்ற உணவுப் பொருள்களை உவந்து வாங்கியே உண்கின்றோம், பல்தொழில் பண்ணு கின்ற பொறிகள் கருவிகள் பல்வ கைப்பட வாங்குகின் றோமிங்கு நண்ணு கின்ற பகையை யகற்றவே நாலு பேருத வியைநா டுகின்றோம், எண்ணு கின்ற எழுத்து மொழியயல் என்றொ துக்குதல் ஏற்புடைத் தாகுமோ? 110 எண்ணெ ழுத்திரு கண்ணெனப் பேசுவர். எண்ணி லேனை யளவும் அடங்குமக் கண்ணி லொன்றினைப் போற்றிமற் றொன்றினைக் கலுழ விட்டிடல் போல அயல்மொழி எண்ணை மேற்கொண் டெழுத்தை அயலென எள்ளி நீக்குதல் ஏற்புடைத் தாகுமோ? கண்ணி ரண்டையும் போல்மைய ஆட்சியின் கருவி யாவாங் கிலத்தினைக் கொள்ளுவோம். 111 ஆகை யால்தாய் மொழியொடிந் நாட்டவர் ஆங்கி லத்தையும் கற்றுக்கட் டாயமாய் ஓகை யோடுளம் ஒன்றி ஒருமைப்பா டுற்று நாளும் உலக வரங்கினில் பாகை நேர்மொழி யாளொடு கூடிமேம் பட்டு வாழ்குடி போல அரசியல் வாகை சூடியிவ் வையகம் போற்றிட மக்க ளாட்சி மலர்ந்திட வாழ்குவோம். 112 மைய வாட்சி நடத்தவும் மாண்புடன் மற்ற மாநிலத் தோடுற வாடவும் வைய மெங்குந் தொடர்புகொண் டங்கெலாம் வணிகஞ் செய்துநல் வாழ்வு பெருகிடச் செய்ய வும்வெளி நாடுக ளெங்கணும் சென்றந் நாட்டு நடைமுறை தேறவும் அய்ய மின்றிப் பொதுமொழி யாகநாம் ஆங்கி லத்தைமேற் கொள்ளுத லாகுமே. 113 அன்றி, ஆங்கிலம் ஆகும் அயல்மொழி அதனை விட்டிந்த நாட்டு மொழிகளில் ஒன்றை நாட்டுப் பொதுமொழி யாக்குதல் உறுதி யென்று விடாப்பிடி செய்திடின், என்றும் நாட்டில் அமைதி நிலைபெறா திருக்கும் ஒற்றுமை எய்த லரிதினும் நன்று கூறிடின் நாகரி கத்தொடு நாலு பேருடன் வாழ்தலுங் கூடுமோ? 114 ஆங்கி லமொழி யேயிந்த நாட்டையொன் றாக்கி வைத்ததோ ராட்சிக் கொடியின்கீழ். ஆங்கி லமிங்கு போதுமுன் இந்தியா அமைந்த தில்லையெப் போதுமோ ராட்சியில். ஆங்கி லமிங்கு நீங்கு முணர்வினை அளித்த துமந்த ஆங்கில மல்லவா? நீங்கி னுமந்த ஆங்கில மேநிலை நிறுத்து மொற்றுமை நிற்கவிந் நாட்டிலே. 115 ஆட்சி தோன்றிய அந்தநாள் தொட்டிந்தி யாவோ ராட்சிக்குட் பட்டிருந் ததில்லை; மாட்சி யாய்முடி மன்னவர் பற்பலர் வல்ல ரசுபு ரிந்தனர்; இங்குவந் தாட்சி செய்தஅவ் வாங்கிலே யரேயொன் றாக்கி யாண்டனர் ஓர்குடை நீழலில். ஆட்சி மாற்றம் அடைகினும் ஆங்கிலம் ஆகு முன்போலிந் நாட்டினை யாளவே. 116 அன்றிந் நாட்டினை ஆங்கிலர் ஆண்டனர் ஆதிக் கந்தந்த தன்னவர்க் காங்கிலம். இன்றிந் நாட்டினில் அன்னவ ரின்மையால் இந்த நாட்டுப் பொதுமொழி யாவதில் ஒன்று மேதடை யில்லை; எமதென உரிமை கொண்டாடு வாரெவர் நாட்டிலே? அன்றி நாட்டு மொழியொன்று நாட்டினை ஆளு மேற்பிறர் தாழுவர் ஐயமில். 117 எமது தாய்மொழி யாகுமற் றாங்கிலம் என்று சொந்தம்பா ராட்டுவா ரிங்கிலை, நமது தாய்மொழி கட்கெவ் வகையிலும் நாடின் ஆங்கிலத் தால்வருங் கேடிலை. தமது தாய்மொழி யோடுநன் காங்கிலம் தன்னைக் கற்றுத் தகவுடன் யாவரும் உமதெ மதெனும் உள்ளுணர் வின்றியே ஒன்று பட்டிவ் வுலகிடை வாழுவோம். 118 இடுக்கி போல்நம் உரிமை பறித்துமுன் இந்தி யாவினை நூற்றைம்ப தாண்டுகள் அடக்கி யாண்டவர் தாய்மொழி யாகிய ஆங்கி லத்தை அரியணை யேற்றுதல் அடுக்கு மோவெனின், ஊர்சுடு தீயினை அடுப்பில் மூட்டிச்சோ றாக்க வெறுப்பரோ? அடக்கி யாண்ட அவரொ டளவளாய் அவர்மொ ழியைவெ றுப்ப தழகிதோ? 119 எய்த கையைக் குலுக்கி அவருடன் இனிது பேசி யளவளாய்க் கொண்டிது வெய்த தாகுமென் றம்பினை நோதல்போல் வெடியைக் காட்டி யடக்கிக் கொடுமைகள் செய்த கையைக் குலுக்கி யவருடன் சிரித்துப் பேசிச் செழுங்கிளை யாக்கொடு மொய்த விர்ந்துற வாடி யவர்கள்தாய் மொழியை மட்டும் வெறுத்தல் முறையதோ? 120 அடக்கி யாண்ட கொடியவர் தாய்மொழி அதனை நாவினால் தீண்டலுந் தீதெனக் கடுக்கப் பேசி இனி ஏ.பி.சீ.டி.யும் கற்கக் கூடா தெனவே அடியொடு விடுக்கின் ஆங்கிலத் தைப்போரும் பூசலும் மேவு றாமல் உலகினைக் காத்திட நடக்கும் அவ்வுல கம்மன்றிற் கும்வெளி நாட்டுத் தூதற்கும் ஆட்கெங்கே போவது? 121 வேற்று நாட்டவர் தாய்மொழி ஆங்கிலம் விரலில் தீண்டவுங் கூடா தெனக்கொளின், வேற்று நாட்டுக்குச் செல்லாமல் குச்சுக்குள் விட்ட பெண்போல் இருக்கினும் நம்மவர், வேற்று நாட்டா ரிங்குவர வேண்டாவோ? வெளியு லகப்பு றம்பா யிருக்கவோ? வேற்று நாட்டவர் தூதுவர் வந்திங்கு வீட்டுக் குள்ளேமுக் காடிட் டிருக்கவோ? 122 அந்த நாட்டினர் ஆய்ந்துமே கண்டிடும் அறிவி யற்கலைச் செல்வங்க ளின்னென இந்த நாட்டினர் கேட்டலும் தீமையோ? இருந்தும் பட்டினி என்ப தியற்கையோ? இந்த நாட்டுச் சிறப்பை யுலகினர்க் கெடுத்து ரைப்ப தரசியல் குற்றமோ? சொந்த நாட்டுப் பொதுமொழிப் பற்றினால் தொட்டில் பிள்ளைபோல் தூங்குதல் வேண்டுமோ? 123 அப்ப டியே நாம் வானொலி வாயிலாய் அமைதி யாக உலக நிகழ்ச்சியை எப்ப டிக்கேட் டறிவை வளர்ப்பதும், இயலும் வானொளிக் காட்சியைப் பேச்சுடன் எப்ப டிநாமுங் கண்டின் புறுவதும், ஏதும் வேண்டா மெனவே இருப்பதோ? உப்புச் சப்பில்லாச் செய்தியை யுமக்கள் ஓடிக் கேட்டிடுங் காலமி தல்லவோ? 124 பயிலு கின்ற அறிவியற் செல்வங்கள் பழமை யான நமதுபண் பாட்டினுக் கயல வென்று விலக்கிவிட் டின்னுமோர் ஆயி ரவாண்டு பின்சென்று வாழுதல் இயலு கின்றவொன் றோவய லென்பதும் எய்தி லாத பொருளேமுன் னேறிட முயலு கின்ற பொருளில் தகவுடை மொழியு மொன்றாகு மன்றோ? முனிவதேன்? 125 அயலெ னப்படும் அம்மொழி யாலன்றோ ஆளு கின்றோம் பதினாறாண் டுகளாய்? அயலெ னப்படும் அம்மொழி யாட்சியால் அரசி யற்குறை பாடுமுண் டானதோ? வியல கத்தெங்கும் இந்தியா வின்புகழ் மேவு தற்குத் தடையாக நின்றதோ? செயுந்த குந்தொழில் விட்டோர் புதுத்தொழில் செய்ய வெண்ணுதல் வையத் தியற்கையோ? 126 சொன்ன சொன்ன படியெத் தொலைவினும் தொடர்ந்து செல்லுநல் லவண்டி மாட்டினை அன்ன வரிடம் வாங்கிவந் தவிந்த அயலெ ருதினி யாகா தெனவிட்டுத் தன்ன தென்னப் பழக்க மிலாதகைத் தடிக்கஞ் சாமுரட் டுப்புதுக் காளையைப் பொன்னுஞ் சின்னு மொடுபுதுப் பாதையில் பூட்டி வண்டியி லோட்டப் புகுவரோ? 127 இந்தி யாவில் வழங்கு மொருமொழி இந்தி யாவின் பொதுமொழி யாவதே இந்தி யாவின் பெருமைக் குரியதாம் என்று கொண்டு விடாப்பிடி செய்திடின், இந்தி யாவின் ஒருமை நிலைபெறா தேமொ ழிவெறி தாண்டவ மாடிடும். இந்தி யாவின் ஒருமை நிலைபெறற் கேற்ற தாங்கிலம் என்ப தறிகுவீர். 128 கரிச னத்தொடு கற்கவும் இந்தியில் கருதும் பல்வகை நூல்கள் இலாததோ டரசி யலைந டத்துதற் கேற்றதோர் அத்த குதியு டையது மன்றென்பர். பரிசி லாதாடிப் பாடி வருந்தவோ, பலன்ப டாநிலத் தைப்பாது காக்கவோ, வரிசை யாகவிந் நாட்டுநல் லாட்சியும் மலர ஆங்கிலம் வாய்ப்புடைத் தாகுமே. 129 இலகு பல்கலைச் செல்வ முடையதாய் எவருந் தம்மெனக் கூறவி லாததாய் உலக மெங்கும் உலவி உலகினுக் குரிமை யான பொதுமொழி யாயதாய் உலக மன்றத் துடைமை மொழியதாய் ஒளிறு கின்ற ஒருமொழி ஆங்கிலம். கலக மின்றிநம் தாய்மொழி யோடதைக் கற்று மேதக வுற்றுத் திகழுவோம். 130 பாரி லொத்த பரிசுடன் வாழவும் பகைமை யின்றி அமைதி நிலவவும் மாரி யொத்த வளம்பொலி மாநில மக்க ளொன்றி மனமொத் திருக்கவும் மேரு வொத்த விறலுடன் இந்தியா விளங்க வுமொரு மித்தே அரசியற் காரி யத்தை நடத்துதற் கானவோர் கருவி யாக்கொடு கற்குவோம் ஆங்கிலம். 131 தக்க வாறுமூன் றாண்டுகள் யாவரும் தாய்மொ ழியினில் எண்ணும் எழுத்தையும் அக்க றையொடு கண்ணெனக் கொண்டுகற் றறிதல் வேண்டும் குறையற, அப்புறம் மிக்க பாடங்கள் தம்மைப் பொதுப்பட விரும்பிக் கற்கு முறையிற்கற் பித்துமே தொக்க பாடத்திட் டப்படி ஆங்கிலம் தொடங்க வேண்டுமந் நான்காம் வகுப்பிலே. 132 ஊங்க மைந்த அறிவியற் பாடமோ டுள்ள பாட மனைத்தும் ஒழுங்குறப் பாங்கு டன்தாய் மொழியினி லேநன்கு பயில வேண்டுங்கல் லூரி முடியவே. ஆங்கி லம்மொழிப் பாட அளவிற்கற் றறிதல் வேண்டுங்கட் டாயம் அனைவரும். ஆங்கி லத்துணைப் பாடப் பகுதியா அறிவி யற்கலை கற்றல் அமையுமே. 133 ஏட்டுக் கல்விக்குத் தாய்மொழி, ஆண்டிட இந்தி யாவிற் கொருமொழி, மற்றயல் நாட்டுக் காங்கிலம் என்னவே கற்றிட நயக்கு மும்மொழித் திட்டத் தினைவிட, ஏட்டுக் கல்விக்கும் மாநில ஆட்சிக்கும் ஏற்ற தாய்மொழி கற்குதல், இந்திய நாட்டுக் கும்வெளி நாட்டுத் தொடர்புக்கும் நாடி ஆங்கிலம் கற்குதல் நல்லதே. 134 இந்தி யென்றகட் டாயம தில்லைநம் இந்தி யாவில் வழங்குமீ ரேழினில் எந்த வோர்மொழி யேனும் பயின்றிடல் ஏற்ற தாகுநந் தாய்மொழி யோடெனில், அந்த வோர்மொழி கற்கிற் பிறமொழி யாளர் தம்மோ டளாவுதல் கூடுமோ? இந்த மும்மொழித் திட்டத் தினைவிட ஏற்ற தன்றோ இருமொழித் திட்டமே? 135 மூல மான முளைமுளைக் காதவோர் மூன்றி லொன்றுபொய்க் கொட்டைப் பனம்பழம் போலும் மும்மொழித் திட்டம்; சிறார்கட்குப் பொழுது போக்கும் பொறையுமே அம்மொழி. நாலு பேருடன் தாய்மொழி பேசுதல், நடக்கும் ஆட்சியில் ஆங்கிலம் பேசுதல் சாலு மல்லவோ? அம்மொழிக் காலத்தில் தாய்மொ ழியிற்ற கவுற லாகுமே. 136 தெலுங்கு கற்றிடின் கன்னட மாநிலஞ் செல்வ தெப்படி? கன்னடங் கற்றிடின் தெலுங்கு நாட்டிடைச் செல்லுவ தெப்படி? செய்தி கேட்டிறை செப்புவ தெப்படி? இலங்கு மீரேழ் மொழிகளி லோர்மொழி எழுதிக் கற்பதால் ஏனையோர் தம்முடன் குலுங்கிப் பேசுதல் கூடுமோ? ஓர்கூட்டுக் குருவி காடெலாங் குஞ்சு பொரிக்குமோ? 137 ஒன்று கற்கின்மற் றேனைய மாநிலத் துற்று வாணிகஞ் செய்வதெவ் வாறெனில், சென்று வாணிகஞ் செய்குவோர் அம்மொழி தெரிந்து கொள்ளுவர் என்னினெ லாருமே சென்ற வாறு தெரிந்துகொள் வாரன்றோ? சிறாருக் கேனச் சுமையைச் சுமத்துதல்? மன்றி னிலொரு மாட்டு மனையினை வைத்து நாளும்நீர் பெய்து வளர்ப்பரோ? 138 பயின்று பள்ளிப் படிப்பை முடித்தபின் பல்சு வைக்கவி பாடுங் கவிஞர்போல் இயன்ற வாறு முயன் றொவ் வொருவரும் எத்த னைமொழி யேனுமே கற்கலாம். அயின்ற பின்னன்றி வெற்றிலை யையுணும் அப்பொ ழுதேசு வைத்த லமையுமோ? முயன்று செய்யுந் தொழில்முடித் தல்லவோ முனைகு வராடல் பாடலில் மூழ்கவே? 139 ஒருங்கெ ணப்படும் ஈரேழ் மொழிகளில் ஒன்று கற்கின்மற் றேனையீ ராறதன் மருங்கு செல்லுதல் ஒல்லுமோ? வீணிலே மாற்றுப் பிள்ளை சுமந்து வருந்தவோ? கருங்கு ழலினில் ஒன்றை முடித்திடின் கட்ட ழகிம யிரைம்பா லாகுமோ? பெருங்கு ணத்தோ டிருமொழிக் கொள்கையைப் பேணி நாட்டின் பெருமையைப் பேணுவோம். 140 அந்த நோயினைத் தீர்க்கும் மருந்திவை அல்ல வென்னினும் அட்டியில் லாமலே சொந்த நாட்டு மருந்திவை யானதால் துளியுங் கூடப் பயனில வென்னினும் இந்த நாட்டு மருந்திவை தம்மிலே தேனு மொன்றை யினிதுண்கு வீரென நொந்து நோயால் வருந்து பவரிடம் நுவற லொக்குமிம் மும்மொழித் திட்டமே. 141 பொருந்தி டும்பயன் அவ்வள வின்றியே புதுமொ ழியொன்றைக் கற்குமந் நேரத்தில் திருந்த ஆழமாய்த் தாய்மொழி யிற்கலைச் செல்வ மிக்குச் சிறந்து திகழலாம். வருந்திக் கற்கும் வருத்தமும் மிச்சமாம், வகுக்குந் திட்டத்தின் காலமும் மிச்சமாம். விருந்தெ னினுமி கைபட வுண்ணெனின் விளையு மின்பப் பயனு மிகுக்குமோ? 142 மற்றொ ருமொழி கற்றிடின் அம்மொழி மருவ ரும்பே ரிலக்கிய நூல்களைக் கற்று வக்கலாம் என்றிடின். இவ்வுல கத்து ளபன்மொ ழிகளி லொன்றனூற் பெற்று வத்தல் பெரும்பய னாகுமோ? பிறமொ ழிநூற்க ருத்துக் களையெலாம் முற்ற வுமறிந் தின்புற நன்கனம் மொழிபெ யர்த்துக் கொளல்முறை யல்லவோ? 143 உலகி லுள்ள சிறந்த மொழிகளில் உள்ள நல்ல கருத்துக் களையெலாம் இலகு மாங்கிலத் திற்பெயர்த் துப்படித் தின்பு றலாம டங்குமவ் விந்தியும்; பலக லைகற்க வாய்ப்பு முறுமொழிப் பார முங்குறை யுஞ்சிறார் கட்குமற் றுலகி யற்பே ரறிவுந் தலைப்படும் உறுதி யாக இருமொழித் திட்டத்தால். 144 அண்மை சேய்மைப்பார் வைக்கண் ணாடிபோல் ஆங்கி லந்தாய் மொழியொ டமையுமே, கண்மை போலுமே லுமோர்கண் ணாடியைக் காது மூக்குநோ கச்சுமப் பார்களோ? பெண்மை மேய மனைவியுந் தோழியும் பேணு மில்லறம் போலு மிவையலால் உண்மை யாகவம் மும்மொழித் திட்டத்தால் உறுப யனிலைக் கால முழைப்பலால். 145 தகத கதக வென்னப் பகலவன் தலைக்கு மேலே தழைத்து விளங்குநண் பகலில் பந்தம் பிடிப்பதைப் போலொரு பயனு மின்றித் திருமணக் காலத்தில், மிகவெ னாதுகட் டாயம் படித்திட வேண்டும் இந்தியை யாவரும் இந்தியர் தகவ தாகும் எனுமிது வுமந்தச் சடங்கு போலோர் சடங்குபோ லுங்கொலோ! 146 ஆத லாலெம்ம னீரிங் கொருமனம் ஆக நாட்டு நலத்தினை எண்ணியே காத லாற்சொந்த நாட்டு மொழியெனக் கருதி யாரும் விடாப்பிடி செய்யலீர்! தீதி லாதுநன் றாக இருமொழித் திட்டத் தைநிறை வேற்றுவீர் திட்டமாய். ஈத லாலிந்த நாட்டின் ஒருமைக்கொன் றில்லை யில்லைவே றில்லைவே றில்லையே. 147 எதிர்ப்பி னிலுரு வாவதே மக்களுக் கேற்ற திட்டம்; எதிர்ப்பை மதிக்கிலா தெதிர்ப்ப துதகா தென்றே யெதிர்ப்பிலா தேற்க வேண்டலும், வேண்டுவ தோடதன் அதர்ப்ப டவற்பு றுத்துத லுமக்கள் ஆட்சிக் கேற்ற தலாதொடத் திட்டமும் சிதர்ப்ப டுமக்கள் தெற்றென மேற்கொளச் செய்கி லாரிந்தித் திட்டம் விலக்குறா. 148 என்றோ Uவரி யன்ற அளவினில் எடுத்துக் காட்டோ டினிதெடுத் தோதவே, நன்று நன்றென நல்லவை யோரந்த நல்ல திட்ட மதைநயந் தேற்றனர். மன்ற மேற்று வழங்கிய திட்டத்தை மக்க ளேற்று மகிழ்ந்தனர். இந்தியா ஒன்றி யிந்த உலகம் மதித்திட உரிமை ஆட்சி புரிந்து சிறந்ததே. 149 கட்டளைக் கலித்துறை தமையுந் தமதுசார் பாளர் தகுதியுந் தாந்தெரிந்தே இமையுந் தகவுற வாக்காளர் தேர்ந்தெடுத் தேயரசுச் சுமையும் அமைப்பும் முறையும் அமைதியும் சொல்வழக்கும் அமையுங் குடிமக்க ளாட்சியிஃதாமென் றறிகுவிரே. 150 வாழ்த்து கட்டளைக் கலிப்பா இமையம் வாழ்க பொதியமும் வாழ்கவே, இடைய விந்தம் நெடுமலை வேங்கடம் அமைய நீர்வளம் ஆழ்கடல் போன்றுவற் றாத ஆறுகள் தோன்றி நிலம்படர் சிமைய மால்வரைச் செல்வங்கள் வாழ்கவே, சிறந்து செல்வக்குன் றங்களும் வாழ்கவே, தமிழர் வாழ்க தமிழென இந்தியர் தாமும் வாழ்க தழைத்திவ் வுலகமே. 151 குமரி பஃறுளி யாறுகள் போல்வளங் கொழித்து நாட்டின் கொடைவளக் கையர்போல் அமையுங் காவிரி வையை பொருநைபா லாறு பெண்ணைகோ தாவரி காரிமச் சிமைய மேயவக் கங்கை யமுனைதண் சிந்து வாழ்க, செழும்புனல் வாழ்கவே, தமிழர் வாழ்க தமிழென இந்தியர் தாமும் வாழ்க தழைத்திவ் வுலகமே. 152 ஆந்தி ரங்கன் னடமலை யாளம ராட்டி யங்குச ராத்தி யரசத்தான் வாய்ந்த பஞ்சாப்பு மத்தியம் உத்தரம் வங்கம் பீகா ரொரிசாவஃ சாங்காட்ச்மீர் ஏய்ந்த மாநிலந் தம்மொடு நம்மென இன்னு மீங்கே இயலுமுள் நாடுகள் தீந்த மிழகத் தோடியல் இந்தியா திகழ்ந்து சீருஞ் சிறப்புடன் வாழ்கவே! 153 ஓங்கு செல்வமும் கல்வியும் பாங்குற உடைமை யுற்றுக் கடமைகள் முற்றியே தீங்கி லாது சிறந்திட நன்கெலாம் சிறுமை யின்றிப் பெருமைக ளொன்றிட மூங்கை போல முடங்கி யொடுங்கிடும் முறையி லாது முழுக்க வுரிமையும் தாங்கி மக்கள் தகவொடு காந்தியார் தந்த தன்னர சிந்தியா வாழ்கவே! 154 கலிவிருத்தம் வாழ்க இந்தியா வாழ்க தமிழகம் வாழ்க மற்றைய மாநிலம் யாவையும் வாழ்க இந்திய மக்க ளரசியல் வாழ்க ஒற்றுமை வாய்ந்திவ் வுலகமே! 155 1.ஏற்றிடும் - ஏற்றம்; முக்காலமும் உணர்த்தும். 4. இயன்று இசைத்து ஆடினாள் - முத்தமிழ். இசைந்து - மெலித்தல் விகாரம். பஃறுளி குமரி வையை மதுரைவாய் சங்கத்தாள்- அம்மூன்றாற்றங்கரையில் இருந்த மதுரையில் இருந்த சங்கத்தாள். வாய் - இடம். தங்கத்தாள் - தங்கம் போன்றவள். 4. காட்ச்மீரம் - காஷ்மீரம். பாங்கு - பக்கம். 31. கட்டளை - அளவு கருவி. 39. ஒக்கல் - சுற்றத்தார். 85. பூசை - பூனை. 93. கூம்பு - பாய்மரம். 94. புண்ணிய - நல்ல. 139. சிரல் - மீன்கொத்திப் பறவை. சேல் - கெண்டைமீன். வாளா - சும்மா. 160. கள்ளுவர் - திருடர். 162. காழ் - குத்துக் கோல். 6. கொம்பு இள - என, விட்டிசைத்தலான், உயிர் வரக், குற்றுகரம் கெடவில்லை. 12. மழவன் - வீரன். 15. துவளற = பொருந்த. 20. தொல் - புறத் - 5. 43. தொல் - செய் - 79. 46. தேத்து - தேயத்து - பிறநாடுகளில். 63. குரு - வியாழன் 3. தொல். செய். 79 52. உறழ்தல் - பெருக்குதல். 3 X 4 = 12 64. ‘மலை கொன்று பொன்னிக்கு வழிகண்ட சோழன் வரராச ராசன்கை வாளென்ன வந்தே’ - தக்கயாகப்பரணி 75. கிளைய - கிளைக்க. களிய - களிக்க. 99. கொன் - பெருமை. எயில் - மதில். 128. தோழம் - கடல் 164. காவலர் - போலீசு. 167. மை - ஆடு. 195. ஞாயில் - மதில். 196. தன் என்பது ஒவ்வொருவரையும் குறிக்கும். 46. பாரம் - தீமை, குற்றம் 90. தை அலர் - தைமாதத்து மலர்ந்தமலர். 99. சுமடு - சும்மாடு. 102. அகுதி - தனிமை. 111.. இமயமலைப் பரப்பில் அன்று வாழ்ந்த மக்களுக்கு வானவர் என்னும் பெயர் வழங்கியது. சேரர்க்கும் வானவர் என்னும் பெயருண்மை அறிக. இமய நாட்டு மக்கள். இமயவர்- இமையவர் எனவும் படுவர். தூங்கெயில் - தொங்குவதுபோல உயரத்தில் உள்ளகோட்டை. இது, இமயநாட் டரசனது பகைவன் கோட்டை. 10. ஏப்புழை ஞாயில் - அம்பெய்யும் துளைகளை யுடைய மதில் மேடை. ஞாயில் - மதில். பொறி - யந்திரப் படை. அவை - அரி நூற் பொறி, ஆண்டலைப்புள் முதலியவை. கருவி - வில், வேல் முதலியன. 12. உழிஞை - மதில்முற்றுதல். 15. மறுகு - தெரு. 18. தோட்டி - இரும்புக் கொக்கி, காடு - கோட்டையைச் சூழ்ந்துள்ள காவற்காடு. 20.காலதர்- ஜன்னல். தென்கால் - தென்றல் காற்று. 21. வளியதர் - ஜன்னல். 25. பஞ்சி - செம்பஞ்சுக் குழம்பு. செள்ளை - பெண். 26. தொய்யில் கொடி - சந்தனக் குழம்பால் தோளில் எழுதும் கொடிபோன்ற கோலம். 34. தூறிய - மிக்க. விரை - மணப்பண்டம். ஓமாலிகை - ஒரு வகை மணப்பண்டம். 59. தேனே - தேன் போன்றவளே. 62. கல் - மலை. 63. நல்லார் - பெண்கள். 71. தார் - தூசிப்படை 78. உகையா - எழுந்து 85. கை - கை, ஒழுக்கம். 87. கொடி ஆர் - கொடியிலுள்ள. கொடியார் - கொடி போன்ற மகளிர். கொடியார் காண - பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் காண. 90. படர் - துன்பம். 96. இயம் - பறை, குழல் முதலிய இசைக் கருவிகள். 106. உறு - பெரிய. 107. பறை - ஒலி 118. ‘பந்தடிப்போம்’ எனத் தன்மையிலும் பாடுக. 125. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளை, விளரி, தாரம் - ஏழிசை. 126. வானவன் - சேரன், போந்தை- பனை. பண்ணை - மகளிர் விளையாட்டு, 127. ஆரம் - ஆத்தி. 143. வாய்காவாமை - நம்பாமை 149. வில் - ஒளி 159. மை - கார், கார்காலம். 162. பாம்பு உரி - பாம்புச்சட்டை. காம்பு - மூங்கில். உரி - மேல் தோல். 7. ஆறுதல் - குன்றுதல், குறைதல் 28. ஒன்றொழிமுப்பது -ஐ - அய். ஒள - அவ். இவ்விரண்டொழியத் தமிழ் எழுத்து 29 ஆதல் காண்க. 36. கோடல் - கொள்ளுதல். கூடல் - தமிழ்ச் சங்கம் 65. நாஞ்சில் - கலப்பை. உழா நாஞ்சில் - நாஞ்சில் என்னும் ஊர். உம்பல் - யானை 80. ஈத்து உவந்த, பாத்து உவந்து. பாத்து - பகுத்து. 81. மூவர் - இயல் இசை நாடகப்புலவர்கள். 83. ஈந்தவன் பரிசும் - கொடையாளன் தன்மையும், 84. நால்வர் - பாணரல்லாத - புலவர், கூத்தர், பொருநர், விறலி எனும் நால்வர். 85. இச்செய்தி மணிமேகலையில் உள்ளது. 5. சிறுகுடி - குறிஞ்சிநிலத்தூர். குறிச்சி - குறிஞ்சி நிலத்தூர். 8. வளவேனில் - முதுவேனில். எதிர்ப் பாடுறுதல் - ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்படுதல். அது - இயற்கைப் புணர்ச்சியும், இடந்தலைப்பாடும், பாங்கற்கூட்டமும், தோழிமதியுடம் பாடும் ஆம். வழிநிலைக் காட்சி - தடம்வழியில் ஒருவரை யொருவர் காணுதல். 9. சிலம்பு - மலைச்சாரல். 10. மிஞிறு - வண்டு. கொடி - தொய்யில்கொடி. 11. பால்கள்- ஆண்பால், பெண்பால் - ஆண்மை, பெண்மை. 12. மற்றை மூன்று - நாணம், அச்சம், பயிர்ப்பு. 15. பிறை - இங்கு முழுநிலா. தேன்பிறை - மதிபோன்ற தேன்கூடு. 16. கையுறை - காணிக்கை. தழை - தழையுடை. தை - அலங்காரம். ஐம்பால் - கூந்தல். தலைவி; ஆகுபெயர். 18. கைதூவல் - செயலற்றிருத்தல். 19. வரைதல்- மணத்தல். இது தோழிகூற்று. 21. கள் -வண்டு. 23. இரண்டொரு நாள் - சில நாள். இது இட்டுப் பிரிவு எனப்படும். படைத்துணை - துணைப்பிரிவு, தன் நட்பரசனுக்குத்துணையாக, அவன் பகை வெல்லச் செல்லுதல். 24. அவள் பிரிந்து துணை சென்று தலைப்பட்டான். தலைப்பட்டான் - வந்து சேர்ந்தான். 26. ஆறு - வழி, தலைவன் வரும் வழி. 27. அலர் - பழிச்சொல். மீக்கூர -மிக. 28. பண்ணை- மகளிர்விளையாட்டு. 30. எற்குறித்து - என் குறித்து - என்னை நினைத்து. தாய் -செவிலி. 31. அவள் என்றது தோழியை. 33. மெல்லியல் - தோழி; தலைவியுமாம். 37. தோழி - செவிலிமகள். கடப்பாடு- இதை நற்றாய்மூலம் தந்தைக்குக் கூறி இருவர்க்கும் மணமுடித்தல். 46. நங்கை - விளி, தலைவி. 47. சேய் - தூரம், அயலார். 48. வாய் - தலைவன் வாய். 50. இரை - உண்ணும் பொருள். சுரம் - அரியவழி. 51. தாய் - செவிலி. 55. ஆயம் - விளையாட்டுமகளிர், தோழியர். 58. பிணை - பெண்மான். உசுப்புதல் - குடிப்பதுபோல் வாயைச் சப்புதல். 63. வெளிறு - இன்மை. வெளிற்றுநிழல் - நிழலின்மை. 66. பறந்தலை - பாலைநிலத்தூர். 69. வலம் - பறக்கும் ஆற்றல். காய்ந்து; தீர்ந்து. 72. அத்தம் - சுரம். எய்யாமை - அறியாமை. தையல் - தோழி. காணாமையால் அகன்றிட்டாள் என்றாள். 73. மிக்க வெயிலை- நல்ல வெயில் என்பது வழக்கு. கொல் அவ் அயில். அயில் - வேல். 77. உவர்ப்பு - வெறுப்பு. 80. ஊறு - இடையூறு. 97. கடவல - கடவு அல. கடவு - கடமை. 105. அத்தம் - சுரம். 108. அன்று - தலைவனுடன் அனுப்பும்போது, பாட்டு - 46. 109. நாத்தூண் - கணவனுடன் பிறந்தார். 110. ஏமுறுதல் - மகிழ்தல். 111. தோழமை - நட்பு, நண்பர். 120. அவள் கண்ணீரை வாகை மாலை என நகையாடினான். 121. ஒன்றுமொழிதல் - மேம்படக் கூறுதல். 122. நான்கு திங்கள் - இரு வேனிலுமாகிய நான்கு மாதங்கள். நான்கு மாதமும் ஒரே மாதமாகக் கழியும். நான்கு மாதத்தில் வருவதும் ஒரே திங்களே. 123. உண்கண் - மையுண்ட- மை எழுதிய - கண். 129. கோடு - மரக்கிளை. 131. ஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், எழுவர் இவ்வேழிசைப் பேர்வைத்து நின்று. தாதெரு மன்றம் - ஊர்ப் பொதுமன்றம். கிள்ளை - கிளி; வளர்த்துங் கிளி. குரவைப் பாட்டைக் கிளிபாட, வான்கோழிகள் ஆச்சியர்போல் நின்று, மயில்போல ஆடும். தோகை - மயில். 133. உரும - முழங்க, ஒலிக்க. 134. வெய்துயிர்த்தல்- (தாயைக் காணாது) பெருமூச்சு விடுதல். 135. வேல் போல் மின்னி, முரசுபோல் முழங்கி, கைபோல வழங்கியது வானம்; எதிர்நிரனிறைப் பொருள் கோளின்வகை. 136. மூதாய் - தம்பலப்பூச்சி. அதர் - வழி. சொல் - கார் வருமுன் வருவேன் என்ற சொல். 137. இனைதல் - வருந்துதல். 138. குணவான் சிலை - கிழக்கில் வானவில். 143. பருவரல் - துன்பம். 144. முத்து - கண்ணீர்த்துளி. 149. இருந்து - ஆற்றியிருந்து. 150. பாக்கம் - நெய்தல் நிலத்தூர். 152 - 156. பாட்டுக்களின் கருத்து -‘நாள துசின்மையும்’ என்னும், தொல். அகத் 41 சூத்திரத்திற் காண்க. 157. தெருள் - தெளிவு. 159. மேலோர் நூலில் நுவன்றுளர். காலில் பிரிதல் - பிரிந்து உள்நாட்டிற் பொருளீட்டல் 1672. உணங்கல் - கருவாடு. 164. திமில் - மீன்பிடிபடகு. 165. உஞற்றி - செய்து. 166. பறி- மீன்பிடி படகு. அரிபறி - மீனை அரிக்கும்பறி. 169. வண்டல் - மணல்வீடு. கண்டல் - தாழை. 172. அன்று - பகைப்பிரிவில். 173. உவரி - கடல். 174. காலதர் - சாளரம். சீக்குதல் - போக்குதல். வெம்ப - தலைவி வருந்த. வளம்- பொருள். வெம்பவளம் - சிறப்பில்லாத பவளம். 175. வருங்கலத்தை - வருகின்ற கப்பலை. அருங்கலத்தை - கழலும்வளையலை. கலம் - கப்பல். நகை. 177. கராம் - முதலை. பிணா- பெண்ணெருமை. வளைகைவீழ விட்டு - வனைகையினின்றும் வீழ எடுக்காமல். 179. அரத்தம் - சிவப்புச் சேலை; இங்கு செக்கர்வான். 181. உறு - நெடிய. 182. எம்மோர் என்றது - தலைவனை. 183. கழியா - கழியாமல், செல்லாமல். 184. தணத்தல் - பிரிதல். 190. கள் அங்கு அண்டும் - கரையி லுள்ள மலர்த்தேன் கடலை அடையும். கள்ளம் - களவு. கரை - கற்பு. கள்ளம் கண்டு - களவில் இடை விடாது இன்பநுகர்ந்தும். கரை காணாது- கற்பாகிய இன்று அதை எண்ணிப் பாராது பிரியும். 192. வலித்து - செலுத்தி, வற்புறுத்தி. வன் கண்ணாளர் - கொடியவர். எனவே திருப்பித் தருவாய் என்பதாம். 193. குவளை உலகெங்கும் உண்மையாலும், கண்போறலினாலும் கண் டனையோ என்றாள். 194. கலை - மேகலையும் சேலையும். கலுழ்தல் - அழுதல். கலை ஓடும் முன் - மேகலை நழுவுமுன், சேலை அவிழுமுன். கைவளைசோர. கலையோடு- மேகலையோடு - முன்கை வளைசோர. சோர்தல் - கழலுதல். 195. கள்வன்- நண்டு. 196. நாவாய் ஆர் - கப்பல்கள் தங்கும். பெண்ணை வருத்தும் - பனையிலிருந்து எனக்கு வருத்தம் செய்கின்ற. பெண்ணை - பனை மரம். இருநாவாய் - இரட்டை நாக்குடைய வாய். பிரியும் போதொன்றும் வந்தபோதொன்றும் கூறுதல். 197. காக்கா உனக்கு - பெண்ணைக் காவாத உனக்கு. 198. பெண்ணை - பனைமரம், பெண்ணைத் தரித்து பெயராமல் - பெண்ணுடன் பனைமரத்திலிருந்து . மணி - வளம். சிரல் - மீன்கொத்திப் பறவை. 199. வளை - சங்கு. எக்கர் - மணல்மேடு. வண்டல் - மணல் வீடு. பெண்டுகள்- சிறுமியர்; என்றது நகை. 200. ஏனோ என்றது - தலைவன் இல்லாமையை. 201. நான் ஒரு தமிழச்சி என்று வருத்துகிறாய் போலும் என்பதாம். 202. அடம்பு - ஒருவருகைக் கொடி. அலவன் - நண்டு. 204. குருகு - நாரை 219. இது எதிரொலி. 220. துற்றுதல் - உண்பித்தல். 223. தூவல் - தளிர். புகையால் தளிர் வாடவே அங்ஙனங்கூவின. 224. சங்கை மதியென்றும், முத்தை மீனென்றும். அலமரும் - வருந்தும். 225. முட்டுதல், தழுவுதல். 229. உயங்குதல் - வருந்துதல். 230. அவள் தானுமே - அவள் அங்ஙனம் ஐயுற்றதனால் தான் ஏனென்று கேட்டிலள். 231. மயிலுக்குப் போர்வை கொடுத்த வள்ளலாகிய பேகன் மனைவியும் கண்ணகியே. அவனும் கோவலனைப் போல அவளைப்பிரிந்து ஒரு பரத்தையிடம் இருந்து வந்தான். 235. நல்ல மரத்தைக் கெடுத்திடும் புல்லுருவிபோல், வாழ்வின் நலங்கெட ஒரு சிலர் அப் புறத்தொழுக்கத் தினைப் போற்றினர். 236. இக்கதை - மணிமேகலையில் உளது. 238. பாங்குடையாள் - வாழ்க்கைத் துணைவி. 239. இது முதல் - புலவி, ஊடல், உணர்வுத் துறைகள். உரம் - மனவுறுதி. 241. தோழி இன்புறும் படி தலைவியைத் தழுவிக் கொண்டனன். 242. தாமரைப் புறம். தாமரையை விட்டுமற்ற மலர்களை. தேர்தல் - தேனுண்ண ஆராய்தல். தலைவியை விட்டுப் பரத்தையரின்பம் நுகரும்ஊரன் என்பதாம். 245. எங்கையர் என்றது - பரத்தையரை. புறம் போக்கு - தரிசு நிலம். 246. காவல் பாங்கினன் - நாடுகாவலுக்குக்காகச் சென்றனன். ஆங்கு என்றது - பரத்தையர் சேரியை. 248. வறுநகை - அன்பில்லாத புன்முறுவல். எப்போதும் வைகறையில் வருவன். 250. தலைவி இயல்பு - தொல். கற், 11 சூத்திரத்தில் காண்க. 256. மதி - மதியம். கூனி குடப்படுநாள்- பிறையாகி மேற்கில் தோன்றும் நாள். குட - குடக்கு. பதினைந்தா நாள். 257. அச்சுற்று - துனியால் தலைவி இறந்து படவுங் கூடுமெனத் தலைவன் அஞ்சி. 259. உந்தை - தந்தை. மைந்தன் - தலைவிமகன். 260. கைக்காட்டி - சும்மா இருங்கள் என்று கையால் சாடைகாட்டி. 261. உவர்த்தல் - வெறுத்தல், ஊடல். 262. கொட்டில் - மாட்டுக் கொட்டில். மா - வண்டு. முரலும் - பாடும், மாட்டுத்தீனிப் பூவில் பாடும். வண்டு பொய்கையில் பூத்த பூவைவிட்டு மாடு தின்னும் பூவை ஊதுதல் போல, தலைவியை விட்டுப்பரத்தையரை விரும்பும் ஊரன் என்பது. 263. தலைவி குதிரை என்றது - பரத்தையை. 265. போனையேல் - அவள் வீட்டுக்கு இனிப் போனால் அடிப்பேன் என்பது. 267. ஈது என்றது - பரத்தைமையை. 271. மூன்று ஆண்டு அகம் மூன்றாண்டுக்குள். 273.இல்லம் - இல்வாழ்க்கை. 275. மும்மை - அறம் பொருளின்பம். 38. புண் - காயம் - உடம்பு. 46. கி. மு. 171 - 159 என்ப. 47. அத்திக்கும்பம் கல்வெட்டு. 53. புறத்துறை - படையெடுத்தல். 68. கரவு - மறைவு. வடவரசர்கள் மறைத்துக் கூறியதை உட்கொண்டது. 69. தமிழர் - தமிழ்ப் பண்பாடு, சமயம் முதலியன. 71. புறக்கடை - அயல்நாடு. 74. மன்னுதல் - நிலைபெறுதல். 76. துவற - மிகவும். 83. பாளை - பதர். 84. வழிக்கோள் - மேற்கோள். 107. ஆயிற்று - சுவைநோக்கிய பன்மை ஒருமை மயக்கம். மேலும் இங்ஙனம் அமைக்க. 118. ‘தேவர் பாடையில் இக்கதை செய்தவன்’ - கம்பர். 121. காரா - எருமை. 123. இலக்கணக் கொத்து - சூத்.7. 128. புத்தகயை முதலியன. 194. தோற்றது - கி. பி. 250ல். 211. ஞாட்பு - போர். 212. மெய்யுறை - கவசம். 215. வேள்விக்குடிச் செப்பேடு. 79. சூரும் - வருத்துகின்ற. 94. செச்சை - வெள்ளாட்டுக்கிடாய். 95. புல்வாய் - மான். 111. அரியணை ஏறியது - கி. பி. 575. 43. மகேந்திரன் - கி. பி. 615 - 630. 44. இவன் அரிகேசரி மாறவர்மன். கி.பி. 640-70. காழிப்பிள்ளை. திருஞானசம்பந்தர். 52. “மறைவ ழக்கமி லாதமா பாவிகள் பறித லைக்கையர் பாயுடுப் பார்களை” “மூட்டு சிந்தை முரட்டமண் குண்டரை” - சம்பந்தர். மகேந்திரவர்மன் செய்த - மத்தவிலாசப் பிரகசனம். 9. மாறவர்மன், சடையவர்மன். 19. இவன் - கி.பி. 640 - 75. 25. மங்கலாபுரம் - மங்களூர். விக்கிரமாதித்தன் மைந்தன் - விசயாதித்தன். 27. நந்திவர்மன். கி. பி. 710-75. 29. வேங்கை - புலி. மாடு - பல்லவர் கொடி. 35. இவன் பராங்குசன் மைந்தன். செப்பேடு. வேள்விக்குடி, சீவரமங்கலம் செப்பேடுகள். 39.துணை வந்தவர் - கங்கரும், சோழரும். 41. அபராசிதன் - நிறுபதுங்கன் மகன் - 880-90. 43. விசயாலயன் - கி. பி. 846 -81. 47. ஆதித்தன் - கி. பி. 881-907. 48. அபராசிதன் - கி. பி. 880 -890. 49. தோற்ற பாண்டியன் - மூன்றாம் ராசசிம்ம பாண்டியன் இவன், இரண்டாம் வரகுணன் தம்பி பராந்தக பாண்டியன் மகன். 910. 51. இவன், இராச சிம்ம பாண்டியன் மகன் - கி. பி. 946-66. 53. ஆதித்த கரிகாலன் - இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் மகன். 56. முதற் பராந்தகன் மகன் - அரிஞ்சயன். அரிஞ்சயன் மகன் - சுந்தர சோழன். சுந்தரசோழன் மகன் - முதல் இராசராசன் - கி. பி. 985-1014. 58. முதல் இராசேந்திரன் கி. பி. 1014-1044. 62. மகிபாலன் - வங்காள மாநிலத்தை ஆண்டவன். அன்று வங்கம் பல உள்நாடுகளை உடைத்தாயிருந்தது. அவ்வுள்நாட் டரசர்களெல்லாம் மகிபாலனுக்குக் கீழ்ப்பட்டிருந்தனர். கடற்படை - கடல் போன்ற படை. 69. மூவர் - 1. முதல் இராசாதிராசன், 2. இரண்டாம் இராசேந்திரன், 3. வீரராசேந்திரன். 1044-1070. 75. ஆப்பகை - எருதுக் கொடியை யுடைய பல்லவர். 89. எய்ப்பினில் வைப்பு - சேமநிதி. 95. ஆவணம் - பத்திரம். 4. இராசசேகரி. பரகேசரி. 11.. குந்தவை விமலாதித்தன் மைந்தன் - இராசராச நரேந்திரன். இவன் அம்மங்கை கணவன். 26. மீன் ஆட்சி - மீனக் கொடியை உடைய பாண்டி நாட்டை ஆண்டவள். 28. எண்மர்கள் (1070 முதல் 1279முடிய) 1. முதற் குலோத்துங்கன். 2. விக்கிரமன், 3. இரண்டாங் குலோத்துங்கன். 4. இரண்டாம் இராசராசன். 5. இரண்டாம் இராசாதி ராசன். 6. மூன்றாங் குலோத்துங்கன். 7. மூன்றாம் இராசராசன், 8. மூன்றாம் இராசேந்திரன். 31. உ. வே. சாமிநாதையர் - சுய சரித்திரம். 7. கி. பி. 1162ல் பட்டம். 10. வீரபாண்டியன் - பராக்கிரம பாண்டியனின் கடைசி மகன்; கொலைக்குத் தப்பி ஒளிந்து வாழ்ந்து வந்தான். 13. கி.பி. 1167, 16. கி. பி. 1175ல், 18. கி.பி. 1180. 22. கி.பி. 1219இல். 25. பின் அவற்கு - பின்பு அச்சோழனுக்கு. இறை - கப்பம். வென்றது - 1231ல். 27. பல்லவவேந்தன் - கோப்பெருஞ்சிங்கன். 28. இப்போசள மன்னன் சுந்தர பாண்டியனுக்கு மாமனாவன். 30. கி.பி. 1258ல். 31. கி.பி. 1279உடன். 2. வீரபாண்டியன் பட்டம். கி. பி. 1296ல். 3. தந்தையைக் கொன்றது -1310ல். 10. மாலிக்காபூர் வந்தது - கி.பி. 1310இறுதி. 22. ஆடுஇயல் - கொல்லுந் தன்மையுடைய. 612. யானைகள். 20000 குதிரைகள். கோடி ஈராறு நூறு - 1200 கோடி. 23. 96000 மணங்கு பொன்னும், முத்துக்களும், அணிகலன்களும் அடங்கிய பெட்டிகள். 25. குனிக்கும் - வளையும். வாங்குதல் - வளைத்தல். 27. தளிர் - பகை. 35. மதுரையில் முகமதியர் ஆட்சி - 1330 - 1378. எண்மர்கள், 1. ஜலாலுதீன், 2. அலாவுதீன் உடான்ஜி, 3. குத்புடீன், 4. கியாசுதீன், 5. நாசுருதீன், 6. அடில்ஷா, 7. பக்ருதீன் முபாரக்ஷா, 8. சிக்கந்தர்ஷா. 42. கோயில்கள் பாழிகளாகவும், பாழிகள் மடங்களாகவும், மடங்கள் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டன என்பதாம். 45. உவா - அமாவாசை. மை - கொடுமை. 70. தமிழ் நாட்டில் அத்துலுக்க மன்னர்கள் செய்த கொடுமைகளை, கம்பண்ணன் மனைவி கங்காதேவி செய்த மதுராவிஜயம் என்னும் நூலில் காண்க. பாண்டியர்வரலாறு, மதுரைநாயக்கர் வரலாறுகளிலும் காணலாம். 71. வெற்றிநகர் - விஜயநகரம். 73. கம்பண்ணன் வந்தது - 1365. 17. படைத்தலைவன் - நாகமன். 26. நாயக்கராட்சித் தொடக்கம் - 1529. 36. துளங்குதல் - நடுங்குதல், வருந்துதல். 43. தங்களிடைத் தமிழ் பேசிலா - தமக்குள்-வீட்டில் - தெலுங்கு முதலிய மொழிகள் பேசுகின்ற, 47. 1529-1736. 50. ஆட்சித் தொடக்கம் - 1676. 13. வடமொழி ஆக்கம் - வடமொழியினது உயர்வு, வடமொழியைத் தமிழாக்கும் இலக்கண முறை. 2. கலிப்பாவின் உறுப்பாதலின் இச்சிந்தியல் வெண்பா தளை தட்டி வந்தது. 21. வாரி - லாரி. 27. தகார்க்கு - உங்கள் என, விட்டிசைத்தலான், உயிர்வரக்குற்றியலுகரம், கெடாது நின்றது. மேல்வரினும் இங்ஙனம் கொள்க. 3. உறுப்பு - சட்டமன்ற உறுப்பினர். 8. இறைமாட்சி, அமைச்சர் என்ற தலைப்பைப் பார்க்க. 17. அணவுதல் - பொருந்துதல். 19. ஒறுத்தல் - தீங்குசெய்தல். 22. குறுங்குஞ்சி - கிறாப்பு. 29. மள்ளர் - உழவர். 30.ஆற்றுக் கட்சியர் - ஆறலைகள்வர். ஆறு - வழி. 38. அந்த நாள் - தேர்தல் காலம். 44. வாய் - வாயில். வழி- தெரு. மானும் - ஒக்கும். 52. பூணி - எருது. 53. கால் - காற்று. நுவலல் - சொல்லல். 56. பாய்தல் - விரைதல். ஆய்பொழுது - எண்ணும் போது. 63. செங்கரம் - தட்டுக்கர விளையாட்டு நேர்கோடு. 3. ஊராட்சி மன்றம் - பஞ்சாயத்து யூனியன். பேரூர் மன்றம் - மேஜர்ப் பஞ்சாயத்து. மாநகர் மன்றம் - கார்ப்பரேஷன். 4. பிற - நாட்டாண்மைக் கழகம், மாநில ஆய்வு மன்றம் - (மேல்சபை), பாராளுமன்றம். 5. நாள் உயர்க்க - ஆண்டு முற்றுப் பெற - முறையே உறுப்பினர்க்கு வயது முப்பதும், வாக்காளர்க்கு இருபதும் முடிந்திருக்க வேண்டும். 7. ஊர் மன்றம் - கிராமப் பஞ்சாயத்து. இது ஓர் ஊராட்சி மன்ற உறுப்பினர் பகுதியாகும். கிராமப் பஞ்சாயத்துத் தனியாக வேண்டியதில்லை. பேர்மன்றம் - பேரூர் மன்றம். 11. மாவட்டமன்றம் - நாட்டாண்மைக் கழகம். மன்னர் - உறுப்பினர். 14. பதவி - உறுப்பினர் பதவி. 27. மாநிலத் தலைவர் - கவர்னர். 35. ஆட்சித் தலத்தார் - தல ஆட்சியார் - ஊராட்சி மன்றத்தார், நகர் மன்றத்தார், நாட்டாண்மைக் கழகத்தார். 36. துறை என்பதை பத்துடனும் கூட்டுக. முத்தொழில்துறை - உழவுத்துறை, கைத்தொழில் துறை, வாணிகத்துறைப், கல்வித்துறை, பொதுப்பணித்துறை, ஆட்சித் துறை. முறை - நீதித்துறை, காவற்றுறை, போக்குவரத்துத் துறை, நலவழித்துறை. இப்பத்து அரசியல் துறை அதிகாரிகளும் அவ்வத்துறை வல்லுநர் ஒவ்வொருவரைத் தேர்ந்தெடுப்பர். 38. மையமன்றம் - இந்திய மன்றம், பாராளுமன்றம். 51. உலக மன்றம் - ஐ. நா. 60. பத்தியா - ஒழுங்காக. 64. ஒப்புரவு - இலா நாடுகட்கு உள்ள நாடுகள் உதவுதல். 10. மையம் - இந்திய ஆட்சி. 15. வழிநீர் - மிக்கநீர்; வயலுக்குப் பாய்ச்சியது போக மீதியான நீர். 18. ‘பொருளாதார வளர்ச்சியின் முயற்சிக்காக அமைக்கப்பட்ட திட்டக் குழுவின் செல்வாக்கு வலுத்து, மாநில அரசுகளின் அதிகாரங்களை வலுக்குறைவடையச் செய்துவிட்டது. மாநிலங்களின் வலிமை குறைந்ததற்கு இன்னொரு காரணம், பணத்திற்கு மைய அரசை மாநில அரசுகள் எதிர்பார்ப்ப தாகும். பணத்திற்குக் கையேந்தி நிற்கும் நிலைமை ஏற்பட்டால் அரசியல் ஆதிக்கத்திற்கு உட்படத்தான் வேண்டியிருக்கும்.’ - இந்திய உயர்முறை மன்ற (சுப்ரீம் கோர்ட்) நீதிபதி, திரு. சுப்பராவ் அவர்கள், சேலம் சி.வி. ஆச்சாரியார் நினைவு நூலகப் பேச்சில். 30. 1. 63 தினமணி. 27. பரிசு - தன்மை. 30. அரண் - பாதுகாப்பு. 31. பாடு - பெருமை. 45. உரசை - ருஷ்யா. 4. இகல் - பகை. 5. புண்- உடல், தசை. நசை - விரும்பி. 14. ஆகு - எலி. 16. அலப்பகை - பகையின்மை. 27. புல் - நெல்லம்புல் புரி. 28. கொன்றது - 30-1-1948-கோட்சே. 29. கொன்றது -16-10-1951-அக்பர். பிரிந்த- இந்தியாவிலிருந்து பிரிந்த. 30. கொன்றது - 26-9-1956-சோமராமதேரோ. 31. கறுவி- சினந்து. கலுழ்ந்து-அழுது. 34. கொன்றது - 22-11-1963. ஆசுவால்டு. அவ்வியம்-பொறாமை. 35. கொன்றது-24-4-1865-பூத். 36. கார்பீல்டு-2-7-1881-குயித்தே. மிக்கென்லே-6-9-1901-ஜேம்ஸ்கோஸ். 40. யானையைக் கோழி வென்றதால் உறையூர் - கோழி என்னும் பெயர் பெற்றதென்பது. 41. கணைக்கா லிரும்பொறை என்னும் சேரன், சோழன் செங்கணானால் சிறையிடப்பட்டுச் சிறையி லிறந்தான். 52. எய்த்தல் - வருந்துதல். 73. இவ் அன - இத்தகைய. 82. அலகு - அளவு. அமன்ற-மிக்க. அளவு மிக்க இன்பத்தோடு. 18. பதடன்-பதர். சிதடன் - அறிவிலி. பதித்தல் - மனங்கொள்ளல். உதிரி-பயனற்றவன். 20. ஏசுதல் - இடித்துரைத்தல். 21. இவர்கள் - அயல்மொழியாளர்கள். 24. அட்டம் படுதல் - அருகிலுறுதல். 31. தால் - நா. நாவிலிருக்க. 48. இமயம் கண்ட தமிழ்- இமயமலை தோன்று முன்னரே ஆட்சி மொழியாக இருந்த தமிழ். 49. இந்தியர் - இந்தியைத் தாய்மொழியாக உடையவர். 50. ஊன் உடல். மான - ஒப்ப. 53. அதன் தனி மகள். 63. மாற்றுக்காணல் - பொன்னை உரைத்து அதன் மதிப்பை அறிதல். 69. பார்வைமா - பழக்கப்பட்ட விலங்கு; காட்டு விலங்கைப் பிடிக்கப் பயன்படுவது. 72. மொழி அலார் - வேறுமொழி பேசுவோர். தமிழ் நாட்டில் உள்ள தெலுங்கு. கன்னடம் முதலிய மொழிபேசுவோர். 73. இமையும் - இமைப் பொழுதும், சிறிதும். 75. சாதுவன்கதை- மணிமேகலையில் உள்ளது. 77. மாற்றாள் - இளையதாரம். 85. கந்து - யானைகட்டுந்தறி. களிறு - யானை. தந்தம் மூத்த தலைவர்கள் - அவரவர் பெருந்தலைவர்கள். 89. தன்னல மிழத்தல் - தியாகஞ்செய்தல். இந்தியர் - இந்தி பேசுவோர். 92. பாங்கு - பக்கம். புண். பாகித்தான். 93. இமிழ - ஒலிக்க. தென்னாஃபிரிக்காச் சட்டமறுப்பின்போது முதல் முதல் முன்வந்தவர் தமிழ்க் கந்தனும் வள்ளியும். நாகப்பன் என்பது கந்தனின் பிள்ளைப் பெயர். இவர்கள் ஊர் - தரங்கம்பாடி. அப்போது காந்தியடிகள் இவ்வாறு கூறினார். 95. முசு - ஒருவகைக் குரங்கு - குலைத்தல் - கெடுத்தல். ஒற்றுமையைக் குலைத்தல். 96. ஒரு மொழிக்கா. ஒரு ஆட்சிமொழி பற்றியா - ஆட்சிமொழிக்காகவா. 97. தன்னல மறுத்தல் - தியாகம் செய்தல். உள்நிலாவும். நிலவுதல் - பொருந்துதல். 99. கொள்கையை விட்டுக்கொடுத்து. 101. ‘இந்தியாவின் ஒற்றுமையை இந்திவெறி அழித்துவிடும்’ இந்தியாவின் ஒரே மொழி இந்தி. அதுதான் இந்தியாவின் ஆட்சி மொழி என்ற அரசியல் சட்டம் வற்புறுத்துகிறது என்று சிலர் எண்ணுகிறார்கள். அது தவறு. இந்தியை ஆட்சிமொழி ஆக்கியிருக்கிறார்கள். ஆனால், அந்த அளவு அது வளரவில்லை’ - திரு.சி. சுப்பிரமணியம் அவர்கள் - மையக் கனரகத்தொழில் அமைச்சர். 10-12-63-ல் கல்கத்தா பாரதி விழாவில். 102. யாவருங் கற்றவர் - ஆங்கிலங் கற்றவர். 107. கொண்டு கொடுத்தல் - வாணிகம் செய்தல். 109. உந்தி - மோட்டார். 111. கலுழ்தல் - அழுதல். மீட்டர், லிட்டர், கிராம் என்பவை- ஆங்கில அளவைகள். 112. ‘ஆங்கிலம் முக்கியமான மொழியாக வெகுகாலம் இருக்கப் போவதால், பள்ளிகளில் அம்மொழியை முறைப்படியாகக் கற்றுத் தருவது அவசியமாகும். ஆகவே, ஆங்கிலத்துக்கு எதிராக நடைபெறுகிற அறிவீனமான இயக்கங்களை நிறுத்திவிட வேண்டும்.’ - திரு. M. C. சாக்ளா - மையக் கல்வி அமைச்சர் அவர்கள். 15-1-64ல் ஜாதவ்பூர்ப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாப் பேச்சு. 120. மொய் - பகை. 124. வானொளி - டெலிவிஷன் 135. ‘பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகள் உலகமொழியான ஆங்கிலத்தையும் கட்டாயமாகக் கற்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியைக் குழந்தைகள் கட்டாயமாகக் கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசாங்கம் உத்தரவிடவில்லை. இந்திக்குப் பதில் தெலுங்கோ, மலையாளமோ, மராத்தியோ கற்றுக் கொள்ளலாம்’ திரு. M. பக்தவத்சலம் அவர்கள் - சுதேசமித்திரன் தீபாவளி மலர் - 1963. 137. இறை - விடை. ஈரேழ்மொழி என்பதில் தாய்மொழியும் அடங்கும். 138. மாடு - பக்கம். 139. அயிலுதல் - உண்ணுதல். 141. நுவறல் - சொல்லுதல். 145. கண் மை. மை - கறுப்பு. கறுப்புக் கண்ணாடி. கண்மை - கண்ணுக்கழகு. அண்மை சேய்மை - பக்கம் தூரம். பக்கப்பார்வை தூரப்பார்வைக் கண்ணாடிக்குமேல், ஒரு கறுப்புக்கண்ணாடி போடுவது போன்றது இந்தி. 148. அதர்- வழி. சிதர்ப்படல் - சிதறுதல். 150. இமையும் - விளங்கும். அரசச்சுமை - ஆட்சிப் பொறுப்பு. சொல் - மொழி - ஆட்சிமொழி. 151. சிமையம் - மலைமுடி. 152. காரி இமயச் சிமையம். காரி - கிருஷ்ணை.