நூற்றாண்டு நினைவு வெளியீடு புலவர் குழந்தை படைப்புகள்- 1 நெருஞ்சிப் பழம் திருநணாச்சிலேடை வெண்பா உலகப் பெரியோன் கென்னடி அனைத்து நூல்களும் ஒருசேரத் தொகுத்து, பொருள் வழிப்பிரித்து, கால வரிசையில் ஒரே வீச்சில் வெளிவருகின்றன. ஆசிரியர் புலவர் குழந்தை நூற்பெயர் : புலவர் குழந்தை படைப்புகள் - 1 ஆசிரியர் : புலவர் குழந்தை பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 224 = 240 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 150/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906இல் தோன்றி 1973இல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர். தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் பட்ட அவலங்களை எண்ணி யெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளை எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு பதிவுகளாக எழுதி வைத்துச் சென்றவர். தமிழ் இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி 1 முதல் 15 படைப்புகளாக ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய முத்து மாலையாகத் தந்துள்ளோம். இவர் நூல்கள் அனைத்தும் தமிழ்மொழி இன நாட்டின் மேன்மைக்கும், வாழ்வுக்கும், வளத்துக்கும் வித்திடுபவை. குறிப்பாக இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிழ் மண்ணில் தன்மானக் கொள்கைகள் நிலைத்து நிற்பதற்கு செயற்கரிய செயல்களைத் தமிழ் இளைஞர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும் எனும் இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்ற தமிழ்ப்பெருமக்களுக்கும், இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும்புலவர் இரா. வடிவேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன் கொள்ளும் வகையில் பிழையற்ற பதிப்பக வெளிவருகின்றது. வாங்கிப் பயனடையுங்கள். (இராவண காவியம் நூலுக்கு மிகச்சிறந்த தெளிவுரை எழுதப்பட்டு வருவதால் இப்படைப்பு வரிசையில் சேர்க்க முடியவில்லை. விரைவில் வெளிவரும்.) கோ. இளவழகன் ‘செந்தமிழ்க் குழந்தை’ பள்ளி சென்று படித்த காலம் 5 ஆண்டு எட்டு மாதம்தான்! ஆனால் திருக்குறளுக்கும், தொல்காப்பியத்துக்கும் உரை எழுதி, பேரிலக்கியம் ஒன்றைப் படைத்து, நாடகக் காப்பியம் உருவாக்கிப் பல இலக்கண நூல்களையும், வரலாற்று நூல்களையும் எழுதியவர் பெரும்புலவர் அ.மு. குழந்தை. ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த ஓல வலசில் 1.7.1906 அன்று முத்துசாமிக் கவுண்டர், சின்னம்மையார் தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர் குழந்தைசாமி; பின்பு தன்னைக் ‘குழந்தை’ என்றே குறிப்பிட்டுக் கொண்டார். ஈரோடு லண்டன் மிஷன் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் “எலிமெண்டரி கிரேடு”, “லோயர் கிரேடு”, ஹையர் கிரேடு” ஆசிரியர் பயிற்சி பெற்ற அவர் திருவையாறு சென்று தேர்வு எழுதி 1934இல் ‘வித்துவான்’ பட்டம் பெற்றார். மொத்தம் 39 ஆண்டுகள் ஆசிரியப் பணிபுரிந்தார். பவானி மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் மட்டும் தொடர்ந்து 21 ஆண்டுகள் பணி புரிந்தார். தொடக்க காலத்தில் கன்னியம்மன் சிந்து, வீரக்குமாரசாமி காவடிச்சிந்து, ரதோற்சவச் சிந்து போன்ற பக்திப் பாடல்களைப் பாடினாலும் 1925க்குப் பின் பெரியாரின் பெருந் தொண்டராகவே விளங்கினார். ‘தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக விளங்கும் நூல் திருக்குறள்; அது மனித வாழ்வின் சட்ட நூல்’ என்ற கொள்கையுடைய குழந்தை 1943, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற திருக்குறள் மாநாடுகளில் பெரும் பங்காற்றினார். தான் எழுதிய பள்ளிப்பாட நூல்களுக்கு ‘வள்ளுவர் வாசகம்’ வள்ளுவர் இலக்கணம்’ என்று பெயரிட்டார். வள்ளுவர் பதிப்பகம் வைத்துப் பல நூல்களை வெளியிட்டார். அவற்றுள் பெரியார் நூல்கள் நான்கு. பள்ளிக்கு வெளியே வந்தவுடன் கருப்புச்சட்டை அணிந்து கடவுள் மறுப்பாளராக விளங்கினாலும் பள்ளிப் பாடங்களில் உள்ள பக்திப் பாடல்களை மிகவும் சுவைபட நடத்துவார். தான் இயற்றிய ‘யாப்பதிகாரம்’ ‘தொடையதிகாரம்’ போன்ற நூல்களில் திருஞான சம்பந்தர் தேவாரப் பாடல்கள் பலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அரசியல் அரங்கம், நெருஞ்சிப்பழம், காமஞ்சரி, உலகப் பெரியோன் கென்னடி, திருநணாச் சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல்கள் போன்றவை கவிதை நூல்கள், ‘காமஞ்சரி’ பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மனோண்மனியத்திற்குப் பின் வந்த மிகச் சிறப்பான நாடகக் காப்பியம் ஆகும். தொல்காப்பியர் காலத் தமிழர், திருக்குறளும் பரிமேலழ கரும், பூவா முல்லை, கொங்கு நாட்டு வரலாறு, தமிழக வரலாறு, தமிழ் வாழ்க, தீரன் சின்னமலை, கொங்குக் குலமணிகள், கொங்கு நாடும் தமிழும், அருந்தமிழ் அமுது, சங்கத் தமிழ்ச் செல்வம், அண்ணல் காந்தி ஆகியவை உரைநடை நூல்கள். ‘தமிழ் வாழ்க’ நாடகமாக நடிக்கப்பட்டது. தீரன் சின்னமலை பற்றி முதன்முதலில் நூல் எழுதி அவர் வரலாற்றை வெளிக் கொணர்ந்தவர் புலவர் குழந்தை. தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்குப் புதிய எளிய உரை எழுதினார். திருக்குறளுக்குப் புத்துரை எழுதியதுடன் தமிழில் வெளிவந்த அனைத்து நீதி நூல்களையும் தொகுத்து உரையுடன் “நீதிக் களஞ்சியம்” என்ற பெயரில் பெரு நூலாக வெளியிட்டார். தமிழ் அறிந்தவர்கள் அனைவரும் கவிஞராக ‘யாப்பதிகாரம்’, ‘தொடையதிகாரம்’ என்ற யாப்பு நூல்களை எழுதினார். கும்மி, சிந்து ஆகியவற்றிற்கும் யாப்பிலக்கணம் வகுத்துள்ளார். இலக்கணம் கற்க நன்னூல் போல ஒரு நூல் இயற்றி ‘இன்னூல்’ என்று பெயரிட்டார். ‘வேளாளர்’ ‘தமிழோசை’ போன்ற இதழ்களையும் நடத்தினார். வகுப்பில் பாடம் நடத்தும்போது பாடல்களை அதற்குரிய ஓசை நயத்துடன் ஒலிப்பார். உரைநடைபோலத் தமிழாசிரியர்கள் பாடல்களைப் படிக்கக் கூடாது என்பது அவருடைய கருத்தாகும். தமிழைப் பிழையாகப் பேசினாலோ, எழுதினாலோ கண்டிப்பார். ஈரோட்டில் வாழ்ந்த மேனாட்டுத் தமிழறிஞர் ‘பாப்லி’லியுடன் நெருங்கிப் பழகியவர். அவரைப் பற்றிப் ‘பாப்புலி வெண்பா’ என்ற நூலே எழுதியுள்ளார். அவர் படைப்பில் தலையாயது ‘இராவண காவியம்’ ஆகும். பெயரே அதன் பொருளை விளக்கும். 5 காண்டங்கள், 57 படலங்கள், 3100 பாடல்கள். இந்நூல் 1946-ல் வெளிவந்தது. பின் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. தடை நீங்கி 1971-ல் இரண்டாம் பதிப்பும் 1994-ல் மூன்றாம் பதிப்பும் வெளிவந்தது. அண்மையில் நான்காம் பதிப்பை சாரதா பதிப்பகம் (சென்னை - 14) வெளியிட்டுள்ளது. மிகச்சிறந்த நயமுடைய இராவண காவியத்தைக் கம்பனில் முழு ஈடுபாடு கொண்ட அறிஞர்களும் பாராட்டியுள்ளனர். ‘கம்பன் கவிதையில் கட்டுண்டு கிடந்தேன். இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது’ என்று ரா.பி.சேதுப் பிள்ளை கூறினார். கம்பர் அன்பர் ஐயன்பெருமாள் கோனார் ‘இனியொரு கம்பன் வருவானோ? இப்படியும் கவிதை தருவானோ? ஆம், கம்பனே வந்தான்; கவிதையும் தந்தான்’ என்று புலவர் குழந்தையைப் பாராட்டுவார். அறிவியல் தமிழ் அறிஞர் பெ.நா.அப்புசாமி போன்றோரின் துணையுடன் அரிய செய்திகள் சேகரித்துத் ‘திராவிட காவியம்’ பாட முயன்றபோது 24.9.1972 அன்று புலவர் குழந்தை மறைந்தார். பாரதிதாசன் ‘செந்தமிழ்க் குழந்தை’ என்று பாராட்டியது போலத் தமிழாக வாழ்ந்த அவருடைய நூற்றாண்டு நிறைவு நாள் 1.7.2006 ஆகும். புலவர், முனைவர் ஈரோடை இரா. வடிவேலன் 32. தியாகி குமரன் தெரு, ஈரோடை - 638 004. மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு. புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல்களையும் அரசுடைமையாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது. பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர். அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது. 4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார். அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார். அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார். “இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் - (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3). புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தை யானாலும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள் தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழு தினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும். விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார். “புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்து வதற்காக எழுதப்பட்டதேயாகும். நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப் படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார். புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக் கியத்தனங்களையெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப்படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளை யெல்லாம் சாமியாக்குகின்றான். அதுபோல நமக்காகப் பாடுபடு கின்றவர்களை, தொண்டு செய்கிறவர்களை, எழுதுகிறவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன்வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத்துரைத்தார்கள். சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை 1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடைபோட்ட காட்சி கண் கொள்ளாதது. 1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட! எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர். வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது. இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு! கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார். “தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!” நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப்பிட்டதி லிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது. கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள் கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார். “ இனியொரு கம்பனும் வருவானோ? இப்படி யும்கவி தருவானோ? கம்பனே வந்தான்; அப்படிக் கவிதையும் தந்தான் ஆனால், கருத்துதான் மாறுபட்டது” என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது. கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை. தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற் பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இராவண காவிய மாநாடு இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன; முதல் மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டதுண்டு. இத்திசையில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு. தீர்மானங்கள் 28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும். இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும். மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும். இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல் படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005) அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான். மத்திய அரசு தொலை தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத் துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005). தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது. கலைஞரின் சாதனை! இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார். வாழ்க அப்பெருமகனார்! பொருளடக்கம் நெருஞ்சிப் பழம் பதிப்புரை iii செந்தமிழ்க் குழந்தை v மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை viii முகவுரை 5 வாழ்த்துரை 5 நெருஞ்சிப் பழம் 6 1. மழைப் பேறு 6 2. தலைவி சிறப்பு 10 3. நெருஞ்சிப் பழத்தின் சிறப்பு 14 4. தலைவி தூதுவிடல் 21 5. தலைவன் சிறப்பு 29 திருநணாச் சிலேடை வெண்பா அணிந்துரை 45 முகவுரை 49 திருநணாச் சிலேடை வெண்பாபாயிரம் 63 உலக பெரியோன் கென்னடி முன்னுரை 149 1. தலைவன் சிறப்பு 153 2. கொலையின் கொடுமை 154 3. உலகத் துயர் 156 4. கொலை நிகழ்ச்சி 167 5. ஆற்றாதிரங்கல் 170 6. ஐயுற் றிரங்கல் 172 7. அற்றநினைந் திரங்கல் 174 8. தலைவர்கள் அச்சம் 174 9. உசாப்பு 178 10. வாக்குமூலம் 180 11. தீர்ப்பு 205 12. உலகோர் அச்சம் 208 13. உலகோர் பழித்தல் 209 14. உலகோர் வெறுத்தல் 210 15. அமைதி இரங்கல் 212 16. கொலைஞன் வருந்தல் 213 17. திருமணம் 214 18. உலக ஆட்சி 217 19. வாயுறை வாழ்த்து 219 நெருஞ்சிப் பழம் (1954) முகவுரை பழந்தமிழ் மக்கள், தம் வாழ்க்கை முறையை அகம், புறம் இருகூறாகப் பகுத்து, அவ்வாழ்க்கை முறையாகிய உலக வழக்கினைப் புனைந்துரை வகையால் இலக்கிய இலக்கணம் செய்து, அப்புலனெறி வழக்கினைக் கடைப்பிடித்து இனிது வாழ்ந்து வந்தனர். அகப்பொருள் - களவு, கற்பு என இருவகைப்படும். களவாவது - பருவமுற்ற ஓர் ஆணும் பெண்ணும் தாமே எதிர்ப்பட்டு ஒருவரை யொருவர் காதல் கொள்வது. கற்பாவது - காதல் முதிர்ந்து மணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துவது. இல் வாழ்க்கையாகிய கற்பிற்குக் காரணமான களவே கற்பினும் சிறப்புடையதாகும். அக்களவு - இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என நால்வகைப்படும். தோழியிற் கூட்டம் - மதியுடம்பாடு, குறியிடம், வரைவு கடாதல், அறத்தொடு நிலை என நால் வகைப்படும். கள வொழுக்கம் இவ்வாறு பலபடப் புனைந்துரைக்கப்படும். இவற்றின் விரிவை, அகப்பொருள் பற்றிய பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களிற் காண்க. அக்களவொழுக்கத்தை - புனைந்துரை யின்றி, உலகியல் முறையில், பழந்தமிழர் வாழ்க்கை முறையில் வழுவாது, தற்கால வாழ்க்கை முறைக்கேற்ப விளக்குவதே ‘நெருஞ்சிப் பழம்’ என்னும் இச்சின்னூல். அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் என, வள்ளுவர் கூறிய உவமையை, நெருஞ்சிப் பழங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பது கருத்தாக இந்நூல் புனைந்துரைக்கப் பட்டுள்ளது. அன்புயர் தமிழ்த் தாத்தா கவிமணி அவர்கட்கு இந்நூல் அன்புத் தொடையல் ஆவதோடு, அப்பெரியார் வாய்மொழிப் படியே தமிழ் மக்கள் ‘யார்க்கும் இனிய விருந்தாகி’ இன்பம் பயப்பதாக. பவானி அன்புள்ள 25 - 8 - 54 குழந்தை வாழ்த்துரை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் ‘கனியும் அன்பால் அரியபல கவிதந் துள்ளம் கவர்ந்திடுவோன் புனித தமிழன்’ என்றறிஞர் போற்றும் புலவர் குழந்தை தரும் இனிய “நெருஞ்சிப் பழம்” உலகில் யார்க்கும் இனிய விருந்தாகி நனியெம் இறைவன் அருளாலெந் நாளும் வாழ்க வாழ்கவே! நெருஞ்சிப் பழம் 1. மழைப் பேறு நேரிசைக் கலிவெண்பா வானோக்கி வாழும் வகையொழிய மாநிலத்தைத் தானோக்கி வாழுந் தகுதியுற - மேனோக்கிப் பைம்புற் றலைகாட்டப் பட்டிமறிக் குட்டியெலாம் தெம்புற் றெழுந்து செவியாட்டத் - தம்புற்றை விட்டகன்று தாய்மை விளக்குவபோற் சிற்றெறும்பு முட்டைகொண்டு மேலே முனைந்தேறக் - கட்டெறும்பு 6 கூர்த்துப் பகழியன்ன கூர்வாயான் மற்றெறும்பு பார்த்துப் புழுங்கப் பரித்தேறச் - சீர்த்தமிழ்வாய் அம்புவிழி யாய்தொடிநல் லார்மென்று துப்பியநற் றம்பலம்போற் செந்நீர்த் தடம்போலச் - செம்பவள, மாலை யறுந்து மணிசிதறி யூர்வதுபோற் சாலை யருகினின்மூ தாவூரக் - காலையிலே 12 ஏரிழுக்க வேண்டுமென வெண்ணியிரங் கிப்பகடு நீரிழுக்க லில்லையென நெஞ்சுவக்கக் - காரொழுக்கங் கண்டு சொறித்தவளை கத்தவிளஞ் சேறெடுத்து நண்டு வளையடைக்க நத்தைபிள்ளை - பெண்டுடனே ஓடிக் குடவளையி னுட்புகுதக் கோலமயில் ஆடிக் குயிலுக் கசைப்பூட்டப் - பாடினிபோல் 18 பச்சைக் கிளியழைக்கப் பைங்கட் சிறுபூவை மெச்சிக் கிளையின் மிசையேற - நச்சி ஒருநா ளுலகி லுயிர்வாழ்தல் போதும் இருநா ளிருக்கினிட ரெய்தும் - வருநாளில் என்றறி விப்பதுபோல் ஈசல் வெளிக்கிளம்ப நன்றறி தென்றமிழ்நன் னாடதனை - அன்று 24 குடியி னொருகுடியாய்க் கொண்டாண்ட மூவர் குடையி னினைவுக் குறியாய் - விடிபொழுதில் மாட்டுப்பா லுண்டுநில மாதுவெள்ளிக் கிண்ணமதை மாட்டுப்பால் மேற்கவிழ்த்து வைத்தாற்போல் - நாட்டுப்பாற் கொட்டுவெயி லாலெழுந்த கொப்புளம்போ லேகாளான் பொட்டெனவே யெங்கும் புடைக்கநிறம் - முட்டவொரு 30 பான்றுபட்டுப் பல்வகைய பட்டுடுத்திப் பாவையரைப் போன்றுபட்டுப் பூச்சி புறப்படவே - தோன்றுமட்டும் பாடியொரு கோடியல பார்ப்பிடமெ லாம்வானம் பாடியொரு கோடி பறந்திடவே - ஆடரவின் ஆயிரங் காலுடைய அட்டைபுகை வண்டிசெலப் போயிரங் காநாகம் புற்றடைய - ஞாயிறுதன் 36 வெப்பந் தணிய விருந்து மழைக்கீந்து கைப்பந் தெனமேற் கடலொழிக்கத் - தைப்பொங்கல் போல வுலகருளம் புத்துணர்ச்சி யானிரம்பக் காலை யெழுந்த தூஉங் கட்டாயங் - கோலநெடுஞ் சிற்றி லிழைத்துத் தெருவில்விளை யாடுமெனக் கொற்றச் சிறுமியருட் கொண்டுவப்பச் - சிற்றில் 42 சிதைத்தாட வாய்த்ததெனச் செல்வச் சிறுவர் குதித்தோடி யாடிமகிழ் கொள்ள - மதித்தோடிப் பண்ணடுத்த செந்தமிழ்வாய்ப் பாவையர்க ளேந்துதொடிக் கண்ணடுத்த தாமரைச்செங் கையினிற்செம் மண்ணெடுத்து மெய்முழுதும் பூசி விதைக்குடத்துக் கக்குடத்துக் கய்முழுதுஞ் சுண்ணக் கரைகட்டிச் - செய்முழுதும் 48 வண்டமிழ் வாணர் மனம்போல் விளைகவெனத் தண்டமிழ் மானவிதை தாமிடவே - கொண்டுவகை ஏரோர் கலப்பை யெடுத்துத் திருத்திவைக்கப் பாரோர் வயிற்றுப் பசியகல - நேராக ஈழமலை யாளத் தெதிர்மின் னதுமின்னி வேழமலை போலமுகில் மேக்கெழுந்து - ஊழுறவே 54 குன்றக் குறமகளின் கோலநெடுந் தோளிலகும் மன்றற் றெரியலென வாளருவி - சென்றுபுகச் சிற்றாறு பேராறாய்ச் செல்லத் தமிழ்முழுதுங் கற்றார் மனம்போலக் காலிறங்கி - வற்றாத ஏரிகுள மெல்லாமிங் கெப்போது வந்ததுகொல் வாரிவள மென்னும் வகைநிரம்பப் - போரணிந்த 60 மூவரசர் தானை முடுகிப் பகைப்புலத்தே நாவரசர் பாட நடப்பதுபோற் - பாவரசுப் பள்ளம் படுகையெலாம் பைந்தமிழர் கைவளம்போல் வெள்ளம் பெருகி விளையாட - வள்ளுவர்வாய் ஈன்ற குறள்வளம்போ லெங்கும் பெருமகிழ்வு தோன்ற மழைபொழிந்த து. 66 2. தலைவி சிறப்பு மழைபொழிய வானம் வளம்பொழிய வெள்ளம் முழைபொழிய வெங்கும் முடுகப் - பிழைபொழிய ஞாலத் துயிர்வாட நற்றமிழ்க்கொன் றீயாதார் போலத் திகழ்வானம் பொய்த்திட்ட - காலத்தும் கற்றா வெனச்சுரந்து கன்னித் தமிழ்நாட்டை உற்றா ரெனக்கனிவோ டுண்பிக்கும் - வற்றாத 72 பொன்னித் துறையருகே பூவையொடு பைங்கிளியும் கன்னித் தமிழ்பேசுங் காட்டூரில் - தன்னொத்த செஞ்சொற் கிளிமொழியார் சேர்ந்துநலம் பாராட்டும் அஞ்சொற் கிளிமொழிநல் லாளொருத்தி - மஞ்சுமிழும் மின்னற் கொடியோவம் மின்சாரப் பேரொளியோ பொன்னிற் கடைந்தெடுத்த பொம்மையோ - தன்னாற்றல் 78 அத்தனையுங் காட்டி யழகென்னு மைகொண்டு கைத்திறனில் வல்லான் கருத்துடனே - யெத்தனைநாள் தேர்ந்து தெளிந்து செயலு மனமுமொன்ற ஓர்ந்து புதுக்கியநல் லோவியமோ - தீர்ந்திடாத் தங்கைப் பொருளைத் தகவுண்பார் போன்மகிழும் மங்கைப் பருவ வளருருவஞ் - செங்கைக் 84 கெதிர்நிற்க மாட்டாம லேதோற்றுத் தானோ வெதிர்புக்கு விட்டதுயர் வெற்பில் - விதிர்விதிர்த்து நீரு ளொளித்ததுகாண் நீர்ப்பாசி, நீர்பொழிந்து காரும் வெளுத்த, கவரிமான் - நேரிழையாள் கூந்தல்போல் வேறொருத்தி கூந்தலுள தோவெனத்தன் கூந்தலைவிட் டேதேடுங் கூந்தலாள் - ஏந்திழையாள் 90 வட்டமுகங் கண்டு மதிதேய்ந்த, வாணுதலாற் கெட்டமதி வட்டமதைக் கிட்டினதால் - எட்டநின்று பார்த்தெழிலை யப்புருவப் பண்பில்லே மென்றோவில் போர்த்தொழிலை விட்டொழிந்தே போயிற்றோ - ஈர்த் தொழிலைக் கய்கழுவி விட்டே கதிர்வேலுங் கூர்வாளும் பொய்கெழுமி னார்போலப் போயினதும் - மொய்குவளை 96 சேற்றுட் பதுங்கியதும் செங்கயனீர் மூழ்கியதும் ஆற்றற் படாதுவிழிக் கஞ்சியோ - ஆற்ற உகிர்க்கு மிதழுக்கு மொப்பாகே மென்றோ துகிர்க்கடலுட் புக்கதோ, தோன்ற - நகைக்கினவள் முன்னிற்க மாட்டாமல் முத்தொளிவெண் பல்லுக்கு வெந்நுற்று மாக்கடலுள் மேவிற்றோ - இன்னிசையோ 102 ரேழுங் கலந்தான வின்சொல்லுக் காற்றாமல் யாழுங் குழலுமிசை யற்றனவோ - யாழொன்றோ அந்தநாள் போனிறைய வான்பாலுஞ் செந்தேனும் இந்தநாள் இல்லாமைக் கீதன்றோ - செந்தமிழ்ச்சொற் போட்டியிட்டுத் தோற்றதனாற் பூவையும் பைங்கிளியும் வீட்டைவிட்டுக் காட்டகத்தை மேவினவோ - தோட்டெழிற்கு 108 வள்ளை யிரங்கிநிற்கும் வள்ளுகிரைக் கண்டுகிளிப் பிள்ளை குறுகும் பெயர்த்தகலும் - பள்ளவயல் அன்ன நடைபழக மாரணங்கு நானிலத்தே இன்று மவளழகை யென்சொல்ல - மன்னுமெழில் ஏந்தி யெழிலுக் கெழிலா யிரும்புலவர் மோந்து தருவன் மொழித்தொகையாள் - போந்த 114 அழகு சுமந்திளைத்த வாக்கையாள் காதல் பழகு தமிழ்மொழிப்பொற் பாவை - ஒழுகுபுனல் ஓட்டத் திடையி னொளிருங் கதிரொளிபோல் நாட்டத் திடைக்காதல் நல்குவாள் - ஆட்டத்தின் கண்ணிகழு முட்குறிபோற் கைவீசிக் கண்ணிமைத்து வண்ணவுட லவ்வே வளைத்தசைத்துப் - பெண்ணுருவந் 120 தானோ புனமயிலோ தங்கச் சிலையோவென் பூனோ டமைந்தவுயி ரோவியமோ - மானோவென் றையுறவே கண்டோ ரணிதிகழைம் பாற்றலைமேற் பையரவு மண்டலித்த பான்மைபோல் - தையலவள் துப்புறமுன் றானையினாற் சும்மாடு வைத்ததன்மேல் எப்புறமுஞ் சாயா திருக்கவொரு - கைப்பிடியா 126 ஆய மணைமே லழகு படவினிது மேய வடுக்கு மிடாப்போலத் - தூயதமிழ்ச் சொல்போற் சுவைமிகுந்த சோறுகொண்டு சிற்றிடைமேற் கொல்வேற்கண் ணாளோர் குடம் வைத்து - வெல்போர்ப் படையோடப் போதுகரும் பாம்பெனவே பின்னல் முடியோடப் போதுசெல முந்த - அடியாதி 132 பாவை முடிகாறும் பார்த்துலகப் பாவையர்தம் ஆவி யனைய வழகெல்லாம் - மேவியொரு நல்லுருவ மாகி நனிபெருகி நாணத்தால் சில்லுருவ மாகியுடன் செல்லுதல்போல் - மெல்லியலை விட்டகலா தேநீழல் வீறுகொடு பின்செலவே கட்டழகி கண்ணுங் கருத்துமாய்த் - தொட்ட 138 சிலையுமிழ்ந்த கூர்ங்கணை போற் செம்மாந்து வானத் தலையுமிழ்ந்த வெள்ள மதனாற் - கலையுமிழ்ந்த அம்மதிபோற் றோன்றா தழிந்த வழிநடந்தாள் தம்மதிபோற் றோன்றுமிளக் தையலாள் - இம்மெனப்பெண் மானின் விழிமருள வட்ட முகஞ்சுழிக்கத் தேனின் மொழிகுழறச் செந்தளிர்போன்ம் - மேனி 144 சதைக்க மலரடியில் தைத்ததுவே யுள்ளம் பதைக்க நெருஞ்சிப் பழம். 3. நெருஞ்சிப் பழத்தின் சிறப்பு நெருஞ்சிப் பழந்தைக்க நின்றிட்டாள் பாவம்! கருஞ்சிப் பழம்போன்ற கன்னி - அருஞ்செப்பின் உள்ளெனவே காட்டு முயர்நன் மணம்போலப் பொள்ளெனவே வேர்வை புறங்காட்டத் - தெள்ளுதமிழ்ப் 150 பாவென்று சோலைப் பசுங்கிளியை வென்றகுரல் ஆவென்று வெய்துறவா யங்காக்கக் - காவென்று மெய்யி னிடையிங்கு மின்சாரப் பேருணர்ச்சி பொய்யி னிடையியங்கும் போதேபோல் - ஒய்யெனவே முத்து முலகுயிரை முத்தாம லேயியக்கு வித்து மனத்தகத்தே வீற்றிருக்கும் - புத்துணர்வாம் 156 உள்ளத் தலைவனிட மோடோடிப் போயுரைக்க எள்ளத் தனைபொழுது மில்லாமல் - உள்ளத்தைத் தங்கு மொருபேச்சுத் தந்தி யகமாக்கொண் டெங்கு மிசைத்தேற் றினிதாளும் - அங்கவனும் அப்பொழுதே யவ்வே யவணிவணே யாமென்ன இப்போழுதே போய்க்காத் திடுகென்று - துப்புரவாய்க் 162 கட்டுக் கரும்பனைய கைமலர்க்குக் கட்டளைய திட்டுத் திரும்ப வெதிர்நோக்க - அட்டியிலை எந்தங் கடப்பாடு மேயாகு மானாலும் இந்த விடத்துதவற் கில்லையே - நொந்துபயன் இல்லையெம் தையன்மீர்! என்செய்கோம் பல்லனைய முல்லைமலர் மல்லிகையின் முன்மலர - அல்லிமலர்க் 168 காம்பரிந்து தாமரையின் கள்ளுமொரு பாரமெனத் தாம்பரிந்து வண்டர் தமக்கீந்து- தேம்பரிந்து கூட்டுறவு கொண்டலர்ந்த கோங்கொடுசெங் காந்தளிளந் தோட்டுறவு கொள்ளச் சுரும்புதமிழ்ப் - பாட்டுறவு மன்னப் பொலிவு மருவு மருக்கொழுந்தும் புன்னைப் புதுமலரும் பொற்புறவே - இன்னுமுள 174 எல்லா மணமலரு மின்னிலைவே ரத்தனையுங் கல்லா வறிவுடைய கைவல்லோன் - நல்லாடன் ஒன்று முறுப்பெல்லா மொன்றுபட்டுச் சென்றுமணந் துன்று குழலெழிற்கட் டுன்றினவோ - அன்றியுல கைந்திணையு மொன்றா யரிவை சுரிகுழற்கண் வந்திணைய நின்று மலர்ந்தனவோ - தந்துணைய 180 நீர்ப்பூ நிலப்பூ நெடுங்கோட்டுப்பூ பூகொடிப்பூ மாப்பூ வெனுநால் வகையாய - நார்ப்பூவாம் பொன்னேர் புதுமலரின் பூந்தொடையோ வல்லாது தன்னே ரிலாததமிழ்த் தண்ணறுஞ்சீர்ச் - சொன்னாறும் பாப்பா வினமலரின் பைந்தொடையோ வென்றுவியந் தேப்பா விதன்பெயரென் னென்றிடவே - யாப்பாரத் 186 தம்முன் னவர்வழியே தாம்பயின்று தேறியகைக் கம்முன் னவர்வழியே கட்டிய - நம்முன்னோர் கண்டறியா மாலைக் கதம்பமணிந் தேகமழ வண்டறியா நெய்தடவி வார்ந்தடர்ந்தே - உண்டறியா ஐம்பா லெனும்பெயர்பெற் றாயிழைதன் பேரழகின் செம்பால்யா னென்று செருக்குற்று - வம்பாலும் 192 ஊட்டு புகையாலு மூட்டமுற்று மெய்பொருமிச் சூட்டு வகையாற் சுரிபட்டு - நாட்டுவமை இல்லையெனச் செம்மாந் திருண்ட கருங்குழலும் செல்லுமென நாட்டகத்தே தேடியதை - நில்லுமென வைத்துச் சுமையடையை வைத்தாள் எடுத்தடுக்கிப் பத்துக் கரைச்சோற்றுப் பானையின்மேல் - வைத்தவுடன் 198 சாயாம லவ்வடுக்கைத் தான்பிடித்து ளேன்றலைவ! ஓயாம லென்ற னுயிர்த்தோழன் - நீயாமல் மங்கையவள் மெல்லிடைமேல் வைத்தகழு நீர்க்குடந்தை அங்ஙனமே தாங்கியுளா னாகையினால் - எங்களைநீர் நம்பிப் பயனில்லை நான்சொல்வ துண்மையெமை வெம்பிப் பயனிலையான் விட்டேனல் - கொம்பனையாள் 204 கூந்தல் மகிழ்கூரக் குப்புறமண் வாய்க்கொள்ள வீழ்ந்து விடுஞ்சோறு வீணாக - ஓர்ந்திடுக இவ்வளவு தான்சோ றிருந்ததிவள் கண்காண அவ்வளவு நானேதா னள்ளியிட்டேன் - எவ்வளவும் இல்லையினிச் சட்டியிலே ஏருழுவோர் பார்த்திருப்பர் தொல்லையினித் தானிரவுஞ் சோறில்லை- நல்லையினி 210 ஆடிக்கை வீசி யசைந்தங்கு மிங்குமாய் வேடிக்கை பார்த்துடைத்து விட்டாயே - வாடிக்கை யாக வருந்தடத்தி லங்கேது முட்டுக்கல் காக மெனநிமிர்ந்து கண்டாயோ - பாகுமொழி! உன்கண்ணைப் போல வுகளுங் குறுமுயல்தான் புன்கண்ணைச் செய்தோடிப் போயிற்றோ - வன்கண்ண 216 நாய்கண்டு குள்ள நரியோடிற் றோவறண்ட காய்கண்டு செம்போத்துக் கத்திற்றோ - தாய்கண்டு பிள்ளை யணிலெழுந்து பேசிற்றோ வாய்பவளக் கிள்ளை யினியதமிழ் கேட்டதோ - பொள்ளெனமுன் மாடோட்டிச் செல்வோனின் வாயினிசை கேட்டிருகண் பாடோட்டி யேமாந்து பார்த்தனவோ - கேடோட்டி 222 நல்லனசெய் வாரென்று நாட்டுமக்கள் தேர்ந்தெடுக்க அல்லனசெய் தேயலைக்கு மாள்வார்போல் - தொல்லுலகில் என்று மிலாததினி யெப்போது மில்லாத பொன்று முலகமெனும் பொல்லாத - நன்றறியாப் பாழும் படியரிசி பஞ்சமிதிற் பாத்துண்டு வாழும் படியரிசி வாங்கவுண்டோ - கூழுங் 228 குடியா திராத்தூக்கங் கொள்ளாது போழ்து விடியா ததைமறந்து விட்டாய் - வடியாது மண்ணுக் கிரையாக்கி வந்தனையே யெம்வயிற்றைப் புண்ணுக் கிரையாக்கிப் போட்டென்று - கண்ணுக்குள் ஊசிவிட்டு வாங்குதல்போ லும்மொடுவண் டேழிசையும் பேசிவிட்டு நீங்குதல்போற் பேதுற்று - மூசிநட்டும் 234 மட்டுவார் பூங்குழலை வாய்வலிக்க வேதந்தை திட்டுவார் நான்விடுதல் செய்யேனாற் - கிட்டுவார் யாரேனு முண்டே லழைக்கும் படிசொல்க சாரேனு மின்பத் தமிழ்வாய்க்கு - நீரேனும் வேறுவழி செய்கவென மென்கரும்புக் கைவிரித்துக் கூறுகிற போதக் கொடியிடையாள் - ஏறுறுகண் 240 நீர்மல்க வாம்பல் நெகிழமுத்துச் செம்பவளப் போர்மல்க வுள்ளம் புகைமல்கக் - கார்மல்கு மின்னற் கொடிபோன்ற மெல்லிடைமெய் தாங்காது பின்னற் கொடிபோன்று பேதுறவே - அன்னதுமெய்ப் பாடுற்று மேனி பசந்துமயிர்க் கூச்செறிய மூடுற்ற வேர்வை முகமுற்றத் - தோடுற்ற 246 வள்ளை நெகிழ வளைநெகிழ மேனியெழிற் கொள்ளை கொடுத்துக் குறுகுறுப்பப் - பொள்ளெனவே உள்ள நெகிழ வுடனெகிழ வேநெகிழ்ந்த கள்ளவிழு மைம்பாற் கருங்கூந்தல் - உள்ளவெலாம் கண்களவு போகியவக் காலையவன் கைதீண்டப் பெண்களவு போகியவப் பெட்பேபோல் - உண்களவு 252 பெய்வ தறியாவப் பேதை யுடைநெகிழச் செய்வ தறியாத் திகைப்புற்றுப் - பெய்வளையும் செந்தா மரைமலரைத் தேய்த்துத்தேய்த் துப்பார்த்தாள் அந்தோ! வவள்மெல் லடியழகை - நந்தா வதற்குள்ளே பார்த்தமைய லாமோ வடடா! இதற்குள்ளே யென்ன விவளுக் - கெதற்குமே 258 யின்னுஞ் சிறுபோ திருப்போ மெனவெண்ணிப் பொன்னஞ் சிலையனையாள் பொன்னடியைத் - துன்னியதும் விட்டுப் பிரியமன மில்லாம லன்னவையும் மட்டுப் பெரியதமிழ் வண்டினங்கள் - சட்டெனவுட் போத மலரனிச்சப் பூவுமனத் தூவியுநல் மாத ரடிக்குநமை மானுமென - ஓதுதிரு 264 வள்ளுவர் வாய்மொழியை வாய்மையுட னாராய்ந்து கொள்ளுவர் போலக் குணமுழுதும் - உள்ளபடி கண்டறிவா மென்று கழறவொன்று மற்றவையுங் கண்டறிவா மென்றுசொலிக் கால்கொள்ள - ஒண்டோடியும் இப்படியே தானோ வெனவேங்கி யோயாமல் அப்படியே போலவிருந் தாள். 270 4. தலைவி தூதுவிடல் முயற்சி அப்படியே போலவிருந் தாளவ் விடத்தினிலே செப்படியே நன்கூறுந் தேமொழியுந் - தப்படியே செய்தும் பயனில்லை தேய்த்தும் பயனில்லை வய்தும் பயனில்லை வாய்நோக - நெய்து பழகு பவள்போலப் பாடகங்கால் நீவி அழகு சுமந்திளைத்த வன்னே! - கழலணிந்து 276 கொள்ளெனயா னெவ்வளவோ கூறியுங்கேட் டில்லையெனப் பொள்ளெனவாய் விட்டுப் புலம்பவே - தெள்ளுதமிழ்க் கட்டி யெனப்பாடுங் காரிகையுங் காலினிசைப் பெட்டி யினைப்பாடப் பேணினாள்- தொட்டிலிலே தாலாட்ட வாய்தமிழைத் தான்கேட்டுப் பைங்குழவி காலாட்ட மாட்டுங் கலைபயின்றாள் - நூலேட்டுப் 282 பாட்டின் பொருள்விளங்கப் பாங்கொடுமெய்ப் பாடுறவே ஆட்டம் பயிலுமயி லாமெனமேல் - நாட்டினரும் பண்டறியா தொன்றலவிப் பாருலகை யாட்டிவைக்கக் கண்டறியா கண்டறியிக் காலையினுங் - கண்டறியா தெண்மிதித்துப் புக்கயனின் றேக்கறுக்க மட்கலஞ்செய் மண்மிதித்துப் பக்குவஞ்செய் வாள்போலப்- பண்மிதித்துப் 288 பாட்டிசைக்குஞ் செந்துவர்வாய்ப் பைங்கிளியும் பாய்பரிபோ லாட்டிசைக்குஞ் சிற்றிளைஞ ராயினாள் - காட்டு வெதிர்மிதிக்கு மென்கையினாள் வெய்துயிர்த்துக் கம்மங் கதிர்மிதிக்கும் பாவையைவெந் கண்டாள் - அதிர்மிதிக்கும் நல்லா ரெவருமிந்த நாட்டிலிலை யோவன்றி எல்லாரும் வேற்றுநா டேகினரோ - பொல்லாத 294 காலமென்று நீங்காத கையா றிடையழுந்தி மேலெழமாட் டாதோர் விளம்புவது - ஞாலமதில் என்போல நீங்கா தினைக்குமிரும் பேரிடுக்கண் தன்பா லகப்பட்டோர் சாற்றுவதாம்;- மின்போலத் எறும்பு தங்காம லோரிடத்துத் தாளாள ரெல்லோரும் மங்காம லுங்களிடம் வந்தடுத்து - நுங்காதல் 300 தீராத மாணிகளாய்த் தெள்ளத் தெளியவகம் ஆராத வார்வமுட னந்நின்று - வாராத எல்லா மொருங்குவர வேசறக்கற் றுத்தெளிந்து வல்லா ரெனப்பெரும்பேர் வாங்கினுஞ் - செல்லாத செப்புக்கா சென்னச் சிறுமைப் படவுயர்ந்த ஒப்புக்கா சில்லா துயர்புலவர் - மெய்ப்புக்கா 306 சென்னவரும் பாவகத்து மேற்ற சுறுசுறுப்புக் குன்னவரும் பேருவமைக் குள்பொருளாய் - மன்னிவரும் சிற்றெறும்பே! நுங்களுக்குச் சேரும் பெரியபுகழ் மற்றெறும்பே போலாது மாநிலத்துப் - புற்றெறும்பே யென்ன மதியா திருப்ப வரையொன்றோ தன்னைமதி யாச்சோம்பர் தங்களையும் - இன்னினியே 312 எம்பெருமை யீதெனவு மேற்ற சுறுசுறுப்புந் தெம்புமுற வுங்கடித்துச் செப்புதல்போல் - நம்புகிறேன் என்கரும்புக் கைகூப்ப வேலா நிலையுடையேன் புன்கரும்புக் கோநீவிர் போதுவீர் - மென்கரும்புக் கோரா யிரத்ததிக முள்ளவென துள்ளன்பை நீரா யிரத்ததிக நேரினுந் - தாராள 318 மாய்ந்தந்தேன் யாரேனு மங்குசெலி னன்புடனீர் போய்த்தந்து பேரிடுக்கண் போக்குவீர்; - தோய்த்தந்தப் பட்டுப் பூச்சி பல்வகைய சாயமதிற் பார்த்துப்பார்த் தேயவகை நல்வகைய தாயமைய நன்கமைத்துத் - தொல்வகைய புத்தம் புதுமையுடன் பொற்புறவே நெய்தாலும் ஒத்தம் பலமுவப்ப வுங்களுடை - தத்தம் 324 இயற்கை படவமைந்த வேபோல வெங்கள் செயற்கை யுடையாமோ தேரின் - முயற்கையுடற் பாய்ச்சியோ யாது பறந்து செலும்பட்டுப் பூச்சிகாள்! நீர்போம் புதுவழியில் - நேர்ச்சியுடன் தென்பட்டால் யாரேனுஞ் செம்மையுடன் றப்பாமல் அன்பிட்டுப் பேருதவி யாக்குவீர் - நும்பட்டைப் 330 போன்றுடுத்து மாநிலத்தும் பொற்பின் றகைமைக்குச் சான்றடுத்து நிற்குமெமைத் தானினையும் - ஈன்றெடுத்த தாயன்றோ நீரெமக்குச் சார்ந்த வுடையமைப்பிற் சேயன்றோ யாமுமக்குச் செப்புவதும் - வாயன்றோ எம்முன்னோ ருந்த மியற்கையுடை யைக்கொண்டே அம்முன்னோர் தம்முடைய யாக்கியதும் - நம்முன்னோர் 336 கொண்டவியற் கைசெயற்கைக் கூறுமுரண் பட்டாலும் உண்டவினத் தாலுடைய வொற்றுமையைக் - கண்டுணர்வீ ராயினமக் குள்ளவுற வாய்சே யெனத்தெரிவீர் தாயுதவல் சேய்க்குமுறை தானன்றோ; ஞாயொருநாட் காக்கை கய்ம்முறுக்குச் சுட்டெனது கையிற் கொடுத்தகல மெய்ம்முறுக்குப் பொய்படவவ் வேளையிலே - செய்ம்முறுக்குப் 342 பொய்யாக்கி நீபிடுங்கிப் போகவொன்றுஞ் செய்யாமல் எய்யாக்கி யானிருக்க வில்லையா - மெய்யாக்கி வைக்கவெனக் குச்சான்று வண்டிவண்டி யாகவுள கைக்கவுனக் குச்சொலுவேன் காதலுடன் - தைக்கவுளங் கேட்பாய் கருத்துடனுங் கேண்மையதை நிற்கீயா நாட்போ யொழித்ததொரு நாளுண்டோ - வாட்போரில் 348 வல்லான் வரக்கரையாய் வட்டிலிற்சோ றிட்டினிய நல்லான் றனிப்பாலில் நான்றருவேன்- வல்லேயென் றன்பா யுனைப்பாடி யப்பெயர்பெற் றாடனது பின்பா யவளன்றோ பெண்டிரலான் - முன்பேயும் எவ்வா டவருன்றன் ஏற்றமதை யாற்றலுடன் செவ்வே யெடுத்தினிது செப்பினவர் - எவ்வாறும் 354 என்ற னதுபே ரிடர்நீக்கி யேகாத்தல் நின்ற னதுபேர் நினதாகும் - உன்றனது பேரின் பொருட்கொன்றும் பீழையதுண் டாகாமற் காரின் கறுத்தகருங் காக்கையே! - சீருடனே நின்னினத்தைக் கூட்டியுணு நீர்மைப் பயிற்சியினால் என்னினத்தைக் கூட்டவுனக் கேலுமால்- தன்னினத்துக் 360 கன்னி யொருத்தியென்றாற் கட்டாயந் தட்டார்கள் பொன்னி யுனக்கும் புகழுண்டாம் - இன்னினியே யாரா யினுமொருவர்க் கன்பா யுரைத்தழைத்து வாரா யெனைவந்து வாழ்விப்பாய்;- தீராத கிளி துன்ப மெனைத்தேனுஞ் சொல்லளவி லேயகற்றி யின்ப மிகவகத்தே யெய்துவிக்கும் - அன்புருவ 366 மாக்கு மினிக்கு மவிர்க்கு மகத்திருளைப் போக்கு முளத்தைப் புதுப்பிக்கும் - யார்க்கும் எளிய வினிய வியல்ப வகலா வொளிய விணையி லுலகில் - தெளிவுடைய அய்வகைய முக்கூற்ற வாறுடல வேழ்திணைய மெய்வகைய மென்மையினு மென்மையதா - முய்வகையின் 372 மேய பொருளெல்லா மேம்பட்டுப் பிள்ளைபல வாய விவள்கன்னி யாமென்னத் - தூய வழிநில்லார் புல்லாத மாண்பும், பழமை யொழிநில்லார் புல்லா வுலக - மொழிநல்லார் எல்லார்க்கு மூத்த விளைய தமிழணங்கை யல்லார்க்கி யாமுரைப்பே மல்லேமால் - சொல்லோர்க்குங் 378 கிள்ளையென வேனென்று கேட்கும் பசியகிளிப் பிள்ளையென நாவலர்கள் பேசுவதும் - உள்ளபடி மெய்யானால் யானுன்னை வேண்டு வதுகேட்பாய் பொய்யானாற் கேளாது போவெழுந்து - செய்யாத தொன்றல்ல, வென்பேச்சுக் குன்பேச் சினையுவமை யின்றல்ல வென்று மியம்புவர் - அன்றியுநின் 384 செம்முகத்தைக் கண்டலவோ சேயிழையார் செம்பஞ்சால் தம்முகத்தைக் கால்கைத் தளிருகிரை - அம்முகத்தைப் போலாக்கிக் கொண்டார்கள் பொற்பெனவே யீதுநினை மேலாக்கிக் கொண்ட மிகையன்றோ - நூலாக்கி நின்னையதிற் றூதாக நேர்ந்து செயல்கொண்ட அன்னவரில் யானொருத்தி யல்லனோ - அன்னதுதான் 390 இப்போது வேண்டுவது மென்மென் மொழிக்கிள்ளாய்! எப்போதும் யான்மறவே னிந்நன்றி - தப்பாது பாரா துடல்வருத்தம் பட்டெனவே நீயோடி வாரா தவரேனும் வாவென்று - யாரா வதொருவ ரையழைத்து வாராய் விரைவில் இதொருவர் செய்யுதவிக் கீடோ - அதொருவர் 396 உன்சொல்லைக் கேட்டலோ வொன்றுந் தடைசொல்லார் என்சொல்லைக் கேட்டால்நீ யேகுவாய் - தென்சொல்லைத் தட்டுவா ரிங்கொருவர் தானுண்டோ நின்மழலை மட்டுவா ருங்கடக்க மாட்டுவரோ - இட்டுவா போப்போ வினிப்போது போக்காதே மற்றவரைக் காப்போர் செயலைக் கடைபிடிப்பாய் - தீப்போற் 402 சுடுசொற் கலவாது தூய்மையொடு வாய்மைப் படுசொற் கடையினிமை பாய்ந்தால் - தடுசொல்லைக் காண முடியாது கட்டாயங் கேட்டிடுவர் கோண முடியாது கோக்கிள்ளாய்! பேணியிதைச் செய்யெவருங் கேளாரேற் றேன்போற் றமிழிசையைப் பெய்யவர்தங் காதிற் பிழையின்றி- வெய்யவருங் 408 கட்டுப் படுவார் கடிதேசெல் வாய்சென்று தட்டுப் படுவாரைத் தானழைத்துச் - சட்டெனவே வாவென்று தேமொழியும் வண்டமிழின் பைங்கிளியைப் போவென்று மேதூது போக்கினாள் - ஆவென்று வாய்திறந்தாள் 'அக்கக்கா வா'வென்ற வக்கிளியும் ஆய்திறந்தாள் உள்ளமுவந் தாள். 414 5. தலைவன் சிறப்பு உள்ள முவந்தாள் ஒருவனை யன்றொருநாட் கள்ள முவந்த கருங்கண்ணாள் - பள்ள வயல்பாயு நீர்போல மானன்னாள் மைக்கட் கயல்பாயு முள்ளபுட் காணுஞ்- செயல்பாயுஞ் செந்தா மரையிரண்டுஞ் செம்மாக்குஞ் சென்றுதவா நந்தா மரையிரண்டு நாணியழுந் - தந்தாயைக் 420 கண்டுவக்குஞ் சேய்போலக் காரிகையு மந்நிரையைக் கண்டுவக்கு மூக்குங் கருத்துப்பும் - வண்டுவக்குங் கூந்தலினா ளிவ்வாறு கொள்ளுங் குறிப்புடைய ஏந்தலினா லாவதனுக் கேகுவாம் - தீந்துவர்வாய்க் கிள்ளையின மாவலுடன் கேட்குந் தமிழ்வாயாள் அள்ளியிசை யோரேழு மாராய்வாள் - உள்ளுவந்து 426 காட்டூரி லேபாடுங் கன்னித் தமிழ்கேட்கும் மேட்டூரி லேவாழு மேவலான் - காட்டாரு மில்லா துயர்ந்த விளமை நலனுடையான் செல்லா துயர்ந்த திறலுடையான் - மல்லாருங் கட்டுடம்பு நோயெதுவுங் காணா நலமிகுதி பட்டுடம்பு மேவியநற் பாக்கியத்தான் - சுட்டுடைய 432 நல்ல வுயரம் நயத்தக்க நற்பருமன் எல்ல வருமுவக்கு மின்னுருவன் - வல்லவரி வண்டார் விரும்புமண மாண்புடைய மேனியினான் கண்டார் விரும்புமெழிற் கட்டழகன் - தண்டாத அன்பு பொருந்தி யருள்விரவி யாராத தென்பு கலந்து தெருள்மருவி - யின்பளவிப் 438 பொற்புறவே நோக்கும் புலிப்பார்வை, காண்போரன் பொற்புறவே யூக்கு மிதழ்ப்பொலிவு- தற்பெறவே மூக்குக்குக் காப்பாய் முளைத்து முறுக்கியெழும் போக்குக்குக் காப்பாய்ப் பொலிமீசை - நோக்குக்குத் தாங்கரிய தாய்க்குணக்கிற் றண்ணென் றினிதெழூஉ மீர்ங்கதிர் போன்றவரி யேறுமுகம் - பூங்குறிஞ்சி 444 வண்டரினங் கண்டு மயங்க மதிசூடுங் கொண்டலெனத் தோன்றுங் குறுங்குஞ்சி - தண்டமிழில் தானாய்ந்து நல்லதம்பிச் சர்க்கரை யாக்குவித்த கானார்ந்த காங்கயங் காளையன்னான் - மீனார்ந்த விண்ணென் றுயர்ந்து விரிந்து செறிந்தாழ்ந்து தண்ணென் றுயர்ந்த தமிழ்வாயான் - கண்ணென்று 450 பெற்றுத் தெளிந்த பெரும்புலவர் பானன்கு கற்றுத் தெளிந்த கலைவல்லான் - முற்றறிந்த பல்காப் பியத்தின் பயனடைந்தான் பாரித்த தொல்காப் பியத்தின் றுறைபடிந்தான் - நல்காப்ப உள்ளுவ தெல்லா மொருங்கு தலைப்பெய்த வள்ளுவர்முப் பாலை வகையுண்டான் - தெள்ளுகலைத் 456 திட்டமது முற்றுவந்த தேர்ந்துதெளி கல்லூரிப் பட்டமது பெற்றுயர்ந்த பார்வல்லான் - வெட்டவெளி போன்ற செயலுடையான் பொய்யாத சொல்லுடையான் ஆன்ற நலஞ்சே ரகமுடையான் - சான்றவர்கள் மெச்சுந் தகவுடையான் வேண்டுவர்வேண் டாரின்றி நச்சுந் தகவதினு நன்குடையான் - எச்சரிக்கை 462 யின்றியொரு செய்தியினு மீடுபடான் ஏலார்க்கும் நன்றிபய வாதசெய நாணுடையான் - பொன்றினுமே புன்மதிப்புக் காகவுயிர் போலச் சிறந்துயர்ந்த தன்மதிப்புக் கேலாத தான்செய்யான் -தன்மதிப்பை விற்போர்க்குக் கெட்டித்த வேம்பன்னான் நன்மதிப்பைக் கற்போர்க்குக் கட்டிக் கரும்பன்னான் - முற்போக் 468 குடையான் பகுத்தறிவுக் கொவ்வாத செய்தல் கிடையான் பெரியார்சொற் கேட்பான் - நடையேதுங் குன்றான் குறளையர்சொற் கொள்ளான் மனஞ்சிறிதுங் கன்றான் வராதவந்து கையுறினும் - நன்றாகு மாக்கம் பெரிதெனினு மான்றோர் பழிக்குவன நோக்கம் படவகத்து நோக்ககில்லான் - மீக்கொள்ளுங் 474 கல்விச் செருக்கில்லான் கைநிறைய வுண்டெனினுஞ் செல்வச் செருக்குச் சிறிதுமிலான் - பல்வகைய தேட்டாளர் நாணுஞ் சிறந்த முயலுடையான் ஈட்டாத பல்வே றியல்புடையான் - பாட்டாளர் உள்ளங் குடிகொண்ட வோயா வுழைப்புடையான் கள்ளங் கரவற்ற கண்ணியவான் - எள்ளுவன 480 செய்யான் கனவிலுமே தீண்டான் பிறர்பொருளை வய்யா னொருவரையும் வாய்திறந்து - மெய்யார்சொற் றட்டா னறிவிலரைத் தாழான் கடிந்தெவருங் கெட்டா னெனும்பழிச்சொற் கேளாஅன்- கிட்டாத எண்ணா னெளியவரை யெள்ளா னிழிதகவு நண்ணான் பயனிலதை நாடாஅன்- கண்ணாரக் 486 கண்டதையில் லென்னாத காட்சியுளான் றன்னறிவுட் கொண்டதையா ராய்ந்துசெயுங் கொள்கையுளான் - தண்டமிழர் முன்னு மரிய முயற்சியெலா மொன்றாக உன்னு மரிய வுயர்வுடையான் - மன்னுதிரு வள்ளுவர் வாய்மொழிக்கு வாய்த்தவெடுத்துக் காட்டாக் கொள்ளுமுயர் பண்பெல்லாங் கூடியவன் - கள்ளவியல் 492 பைந்துடையான் காத லமைந்திலக வாண்டிருபத் தைந்துடையா னின்ப மலர்தரவ - மைந்துடையான் ஒத்த பருவ முருவமுத லொப்புடைமை பத்து மொருங்கமையாண் பாலுடையான் - பத்துடையாள் காதற் கருங்குவளை கண்டு மலரவிருள் போதப் புகுந்த புதுமதிபோல் - மேதக்கான் 498 நோயிடைய வேயுதவி நோக்கியெதிர் நின்றாளை ஆயிடைகண் டுள்ளமுவந் தான். 6. எதிர்ப்பாடு ஆயிடைகண் டுள்ளமுவந் தானங் கணுகணுக நோயடைய நின்றாளு நோக்கநிலந் - தாயடைய இன்புற்ற சேயை யினியுவமை சொல்லுதலோ அன்புற்ற காதல்வழக் கன்மையால் - முன்புற்ற 504 கார்கண்ட மஞ்ஞையெனக் கால்கண்ட வேலையென நீர்கண்ட பைங்கூழ் நிலமென்னத் - தார்கண்ட கூந்தலென வந்நின்ற கோற்றொடியுந் தன்னோயை ஏந்தலறி யக்குறிப்பா லேயுணர்த்தப் - போந்தவனும் மற்றவள்நோய் போக்கி மலர்ந்த முகநோக்கிப் பெற்றவள்பா லின்னினைய பேசுவான் - பொற்றொடீஇ! 510 நானிலத்தை வாழ்விக்க நன்னோக் குடனுகந்து மேனிலத்தி லேபோந்த மெய்யறிவர் - வானிலத்து மின்னலையை மண்ணகத்து மேய வரும்பொருளைப் பொன்னுலையி லேயுருக்கிப் பொற்புடனே - பன்னரிய வானேயும் பல்பொருளை வட்டித் திடநமக்குத் தானாயு மாராய்ச்சிச் சாலையென - மானேயுன் 516 செம்பொன் னடித்தளிரைத் தேர்ந்தெடுத்த வோவிவையும் அம்பொன் னடிக்கெதிர்மை யாவதனைத் - தெம்புடனே ஆய்ந்தாய்ந்து கண்டறிய வாகாமை யாலுடல மோய்ந்தோய்ந்து மேன்மேலு மூக்கினவோ - சேந்தோய்ந்து போயசெந் தாமரையின் பொற்பினைக்கா ணக்காண ஆயதோ காத லவைக்கதிகஞ் - சேயிழையுன் 522 தீராத மென்மலரின் செம்மைத் திறங்கண்டால் ஆராத காதலுறா ராருலகிற் - பேராத அன்பா லவைதம் அழகிய கூர்முகத்தால் இன்பாய்ப் பலமுத்த மிட்டனவோ - தென்போடு நன்முறையி லேயமைநின் னல்லடியின் மென்மையினைப் பன்முறைதொட் டுத்தொட்டுப் பார்த்தனவோ - பின்முறையும் 528 முற்றுந் தெரியாமல் மொய்ம்புட னேமுனைந்து மற்றுந் தெரிதரக்கை வைத்தனவோ - முற்றிழையுன் தண்டமிழின் கூத்தைச் சரியாக வுள்ளபடி கண்டுகொள நின்காலைக் கட்டினவோ- ஒண்டொடியுன் நல்ல நடிப்பின் நலப்பட்டு நல்லடியைப் புல்லி விடாதுநின்று போற்றினவோ - மெல்லியல்யான் 534 நின்னை யெதிர்ப்படவே நீபோகா தேயிருக்க உன்னை நிறுத்திவைத்த வோகாணும்- முன்னையவர் காணாத வாயிலிது காணுங் களவியலில் வீணோதி னால்மறுத்தல் மேவுமன்றோ - நாணாது காவியங் கண்ணிநீ கைவல்லோன் தீட்டியநல் லோவியம் போலயா னுன்னுடம்பை - நீவுமட்டும் 540 இம்மன்றே தேனு மிடையூறு செய்யாமற் கம்மென்றி ருந்ததன்மெய்க் காரணமென்- உம்மென்று மெய்தொட்ட போதன்று வேல்விழியுன் மெல்லியசெங் கய்தொட்ட அவ்வடுவைக் காண்டியால் - நெய்தொட்ட அய்ம்பாலை நீவியதற் காகச் சினந்தன்று கொம்பேறி நாகமெனக் கொத்தினையே - வம்பாருங் 546 கூந்தலை மோந்ததனாற் கொம்பனையா யன்றுனது மாந்தளிர் சோர்ந்தயர்ந்து வாடினதே - ஏந்திழையான் மண்குத்திப் பூம்பள்ளி வண்ணமுறப் பண்ணுகையில் கண்குத்திப் பாம்பென்னக் கண்டனையே - பண்குத்தி! என்முறுவல் பார்த்தோ ரிளங்கொம்பர் நின்போலப் புன்முறுவல் பூத்துப் பொலிந்ததன்றோ - தென்மொழியுன் 552 தத்தரிக்கண் காணவெதிர் தான்வரயா னின்னுதலும் முத்தெடுத்து மாணவன்று மூடினதே - பத்தடுத்த ஆன்றோரைப் போல வடக்கமுடன் வாய்முத்தந் தோன்றாமற் செம்பவளந் தோன்றினதே - சான்றேயுங் கட்டழகி யுன்னுள்ளத்தைக் காட்டிலைநீ யுன்னுடம்பு வெட்ட வெளியாக்கி விட்டதன்றோ! - கிட்டவந்துன் 558 தொய்யி லெழுதியமென் றோள்தொடவுன் மென்குழலும் ஒய்யென வேயவீழ்ந்தன் றொல்கினதே - பையெனவுன் தாதுபட்ட மேனி தடவவுன்றன் பொற்றோடு காதைவிட்டே யோடினதே காதவழி - மாதரசென் கண்ணில் விழுந்தவுன்மேற் கைபடவுன் கைவளைகள் மண்ணில் விழுந்துடைந்து மாண்டனவே - பண்ணரிய 564 பாவையுந்தன் பொற்றுகிலைப் பாங்கா யுடுத்துடுத்துப் பூவையந்தன் கையோய்ந்து போயினவே - காவியங்கண்! நின்னுடைய மேனிதொட நேர்ந்தெழுந்துன் பட்டாடை உன்னிடையை விட்டெங்கோ வோடினிதே - என்னுடைய பூவாடைக் காரியுடை போலவிடை யைப்பகைக்கப் பாவாடைக் காரிடுக்கண் பண்ணினவர் - நாவாடச் 570 சொற்போர் புரிந்தெவர்க்குந் தோலாத வென்னோடு மற்போர் புரிந்துவென்ற மாமறத்தி - பிற்பாடுன் கைபட்ட பாட்டைக் கழறிலுன்றன் காமருபூ மெய்பட்ட பாட்டைவிட மேலாமே - எய்பட்ட தோகை மயில்போலச் சோருநினைத் தெம்புடைமை யாக வுதவுதலிங் கார்கடமை? - பாகுமொழி! 576 கையின் கடமையன்றோ காரிகைநிற் காணுதற்குக் கையின் கடமை கழிந்திடுமோ? - பையவன்று நாற்று நடுகையிலே நான்வீச வேதவறி நாற்று நடுகையிலே நாண்மலர்போல் - நாற்று முடிபடவே தான்வெறுத்த மொய்குழலே! யின்றுன் அடிபடவே யான்பொறுத்தே னன்றோ? - நொடிபடவான் 582 கன்றின் தலைக்கயிற்றைக் காணாம லேமிதிப்பக் கன்றின் குரலன்று காட்டினையே - அன்றொருநாட் கீரை பறிக்கையிலே கிட்டிவர வேயண்ணன் மாரை யழைத்தேங்க வைத்தனையே - கூரையின்மேற் காக்கா வெனக்காக்கை கண்டதுமே பைங்கிள்ளை வாக்கா வெனவெளியே வந்தென்னை - நோக்கா 588 விருந்தானே னென்பதனை வேம்பன்றோ யன்று மருந்தானேன் போலின்று மன்ற - திருந்தாத செங்கோல் மறமன்னர் செல்வம்போற் பெண்ணொருத்தி வெங்கோலங் கொள்ளுவது வீணன்றோ? - பைங்கூழ்க் களைகளைய வென்றலையைக் காண்டலுமே முன்கை வளைகளைய மன்றறிய வைத்தாய் - இளைகளைய 594 அவ்வண்ணந் தண்ணிலவி லாடையிலே நீசெய்த இவ்வண்ணந் தன்னைமற வேனென்றுஞ் - செவ்வண்ணக் குன்று குளிரக் கொழுங்கொண்டல் பெய்வதுபோல் ஒன்றுபெய் துள்ள முவப்பித்தாய் - அன்று பருத்தி பறிக்கையிலே பார்த்துப்பார்த் தென்னை வருத்தி யுடல்நலிய வைத்தாய் - ஒருத்தி 600 பறிக்கையிலே வாவென்று பார்வையிலே குட்டி மறிக்கையிலே சொன்ன மயிலே - முறிக்கையிலே தீண்டி யெதனாலுந் தீராத நோய்தீர வேண்டி மருந்தளித்த மெல்லியலே! - ஆண்டொருநாள் தாய்துஞ்ச வில்லையெனச் சாற்றியே மாற்றினைபின் நாய்துஞ்ச வில்லையென நாப்பிழைத்தாய் - வாய்துஞ்சப் 606 பொய்ப்புள் ளொலிகேட்டுப் பொம்மெனவந் தேமாந்து கைப்புள்ள திட்டுக் கலுழ்ந்தகன்றாய் - மெய்ப்புள்ள அற்றம் பிழைத்துன்னை யல்லாக்கச் செய்தவென்றன் குற்றம் பொறுத்தகுணக் குன்றன்னாய்! - மற்றொருகால் நந்தமிழர் முன்வாழ்ந்த நாகரிக நல்வாழ்வை எந்தமிழர் காண வெடுத்துரைக்கப் - பைந்தொடிநம் 612 தண்டமிழ்நாட் டூர்தோறுந் தான்சென்ற காலத்தே வண்டமிழைத் தான்பிரிந்த வாறேபோல் - ஒண்டொடிநீ எத்தியா யில்லாம லென்பிரி வாற்றாது பித்தியா யுள்ளமது பேதுறவே - கத்தியாய் நோய்பிடித்த காரணத்தை நோக்கி யறியாது பேய்பிடித்த தென்றுமனம் பேதுற்று - ஞாய்பிடித்த 618 அன்பாலுன் னோயகல அவ்வுடுக்கைக் காரரைக்கொண் டுன்பா லிருந்தபே யோட்டுவிக்கத் - தென்பாலின் வன்மையறி யாத வடவர் முடித்தலையில் இன்மையுற வன்னா ரிகழ்வெண்ணம் - நன்மையுறக் கட்டுவன்போற் பத்தினியின் கல்லேற்றிக் கொண்டுவந்த குட்டுவன்போற் பைந்தொடியுன் கூந்தலின்மேற் - பட்டுவரிக் 624 கல்லேற்றி யச்சுறுத்திக் காட்டியும்போ காதப்பேய் சொல்லேற்றி யான்வரவே தொண்டொருநாள்- வில்லேற்றி வந்திளஞ் சேட்சென்னி வாள்வலிக்காற் றாவடவர் தந்திர ளோடினபோற் றானோடச் - செந்துவர் வாய்ச்சி! யறிந்து மகிழ்ந்தேனுன் உள்ளன்பை ஆய்ச்சி யறியுமோ வப்பொருளை? - பேய்ச்சி! 630 உளவியலின் றன்மையெலா மொப்ப வமைந்த களவியலின் தன்மையெலாங் கண்டார் - களவமையப் பூவும் புனலும் பொருகளிறுஞ் செந்நாயும் ஆவுந் தருபுணர்ச்சி யாமென்பர் - கோவையிதழ்ப் பாவாய்! நெருஞ்சிப் பழந்தரு மிப்புணர்ச்சி பூவாய்! நமது புதுப்புணர்ச்சி - மேவாக 636 அன்னைக் கிதனை யறத்தொடு நிற்பாய்காண் என்னப் பனிமொழியு மிம்மென்ன - என்னுயிரே! இவ்வா றெதிர்பாரா தேநிகழ்வ தையேதான் ஒவ்வாத வூழென்ற தொண்குறளில் - அவ்வாறே இன்றெதிர்ப் பட்டோ மெனநடந்தாள்; எந்தமிழர் அன்றெதிர்ப் பட்டதிது வாம். 642 அணிந்துரை திருநணாச்சிலேடை வெண்பா புலவர், முனைவர் ஈரோடை இரா. வடிவேலன் 32. தியாகி குமரன் தெரு, ஈரோடை - 638 004. மக்களை மாக்களின்று வேறுபடுத்துவது மொழியேயாகும். மொழியே மக்களின் முன்னேற்றத்திற்குக் காரணமாகும். முது நூலும், புதுநூலும் மக்கள் கற்றால் முன்னேற முடியும். உலக வழக்கு, செய்யுள் வழக்கு என இரு பிரிவுகள் உண்டு. உலகில் எழுத்தி லில்லாத மொழிகள் பல உண்டு. ஆனால் தமிழுக்குப் பண்டைக்கால முதலே இலக்கண இலக்கியங்கள் உண்டு. பண்டைக்காலம் முதலே செல்வச் செவிலியாக விளங்குவது செய்யுள் ஆகும். அழியா இளமை நலத்துக்கும், வளத்திற்கும் செய்யுள் நடையே சிறந்ததாகும். தமிழ்மொழியின் பழைமைக்கும் பெருமைக்கும் செய்யுள் நூற்களே சிறந்தவையாக உள்ளன. பாடல்களை இசையுடன் பிறர் பாடக்கேட்டு இன்புறுவதோடு, இசையுடன் பாடி இன்புறலாம். வெண்பா முதலிய பாக்கள் செப்பலோசை முதலிய ஓசை ஒழுங்குடன் பாடப்படு கின்றன. தமிழில் சொல்லணி, பொருளணி போன்ற அணிவகைகள் பல உண்டு. இவற்றைச் செய்யுள் நடையிலே அமைக்க முடியும். மக்கள் வாழ்க்கைமுறையை அகம், புறம் என்று வகுத்ததோடு தமிழில் செய்யுட்களை இயற்றி வந்தனர். கழகக்காலம் முதலே நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை போன்ற நூல்களைத் தமிழர் படைத்தார்கள். சிலேடை வெண்பா 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பா, பாவினம், காளமேகப் புலவர், கடிகைமுத்துப்புலவர், சைவ எல்லப்ப நாவலர், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் முதலியோர் சிலேடை எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்தனர். சிலேடை நூல்கள் தலபுராணத்தின் மறுபதிப்பாகும். குற்றாலச் சிலேடை வெண்பா, சிங்கைச் சிலேடை வெண்பா, கலைசைச் சிலேடை வெண்பா, நெல்லைச் சிலேடை வெண்பா என்பன சிலேடை நூல்களாகும். சிலேடை வெண்பாவில் முன்னிரண்டு அடிகளில் சிலேடை என்னும் பொருளணியும் பன்னிரண்டு அடிகளில் மடக்கணி அல்லது திரிபு என்னும் சொல்லணியும் அமைந்திருக்கும். இவை செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இருவகைப்படும். திருநணாச்சிலேடை வெண்பா என்னும் இந்நூல் பவானி என்னும் பெயர் பெற்ற திருநணா ஊராகிய கூடுதுறையின் சிறப்பினைக் கூறும் நூலாகும். திருநணாவின் இயற்கை வளம், காவிரி, பவானி ஆற்றுவளம், கூடுதுறைச் சிறப்பு, திருநணாவில் உள்ள பல்வேறுவகையான தொழில்கள், வணிகம், உழவின் சிறப்பு, மக்கள் வாழ்க்கைமுறை, பண்பாடு பற்றியெல்லாம் சிலேடையில் அமைத்துப் புலவர் குழந்தை பாடியுள்ளார். இது புதுமைத்தன்மை வாய்ந்த நூலாகும். இந்நூலின் வெண்பாக்கள் முதலடி இயைபுத்தொடையாக அமைந்துள்ளமை தனிச்சிறப்பாகும். பவானிக்குத் திருநணா என்றும் பெயர் தொன்று தொட்டு வழங்கி வருகிறது. இது இலக்கியப் பெயராகும். தேவாரம், திருவாசகம் முதலிய நூல்களில் இத்தலம் எடுத்துக் கூறப் பட்டுள்ளது. வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழியில் வண்டு பாடச் செந்தேன் தெளியொளிரத் தேமாங் கனி உதிர்க்கும் திருநாணா பெரிய புராணத்திலும், பவானித் தல புராணத்திலும் கொங்கு மண்டல சதகத்திலும் இவ்வூர் புகழ் பெற்றுள்ளது! கழகக் (சங்க) காலத்தில் பவானிக்குக் கழார் என்னும் பெயர் வழங்கியதாகக் கூறுவர். கரிகால் வளவனின் மகள் ஆகிமந்தியும் அவள் கணவனான ஆட்டன் அத்தியும் நீர் விளையாடிய போது காவிரி கவர்ந்தது என்பர். ஆட்டனத்தி சேர நாட்டு மன்னன். இதில் பவானி ஆற்றில் காளிங்கராயன் அணை கட்டப்பட்டுள்ளது. பவானி போர்வை, விரிப்புக்குப் (சமுக்காளத்திற்கு) பெயர் பெற்றது. பவானி என்பது ஈரோட்டின் பத்தாவது கல்லில் அமைந்துள்ளது. இங்குதான் பவானி என்னும் வானியாறும் காவிரியும் கூடுகிறது. நூற்பாக்கள்: பொன்னிவாய் வானி புகுவானி கூடல்நணாப் பன்னு பவானி வெண்பா பாடுதற்கு - மன்னுதமிழ்ச் செஞ்சொல் மடக்கும் திரிபுஞ் சிலேடையுமென் நெஞ்சில் உறுக நினைந்து! மடக்கணி - என்பது வந்த சொல்லே வந்து பொருள் மாறுபடுதல் - இது சிலேடை யணியாகும். திரிபு - ஒரு சொல், தொடர் பல பொருட்களுக்கு இயைதல் சிலேடை. மடக்கும், திரிபும் சொல்லணியாகும். பூமருவும் காவிரினிலும் பொன்மருவுங் கோவினினும் தேமருவி நாறுந் திருநணா - தாமரைப்பூங் கைப்பவள மெய்யார்தங் காதற் கணவருளங் கைப்பவள மெய்யார்தங் காப்பு. தேம் அருவி - நாறும் பொன் பொருந்திய மலையில் இனிய நீரருவி தோன்றும். கைப்பவளம் - தாமரை போன்ற கை, கணவர் மனம் மகிழும்படி செலவு செய்யார். ஆண்டார் அகமலரும் அன்னவயற் காவலரும் தீண்டாமை போக்கும் திருநாணா - வேண்டா தவையார்க்குங் செய்யார் தகவான் உயர்மூத் தவையார்க்குஞ் செய்யார்தஞ் சார்பு. ஆண்டார் அகமகிழும் - தீண்டாமை போக்கும். வயலைக் காப்பவர், வேண்டாதவை - தகாதவை, பெரியார் கூட்டம் பொருந்துதல். பெரியோர் இனத்தைச் சார்ந்திருப்பது - என்பது போலச் சிலேடையும், திரிபும் வந்த பாக்கள் பலப்பல உண்டு. திருநணாச்சிலேடை வெண்பா முகவுரை "மக்கள் தாமே ஆறறி வுயிரே" என்பது தொல்காப்பியம். அவ் வாறாவ தறிவாகிய பகுத்தறிவின் பயனே மொழி என்பது. மக்களை மாக்களினின்று வேறுபடுப்பது மொழியே யாகும். மொழியே மக்களின் நாகரிக முன்னேற்றத்திற்குக் காரணம் எனலாம். "மொழியிலார்க் கேது முதுநூல்" என்ற முதுமொழிப் படி, மொழியின்றேல் முதுநூலும் புது நூலுங் கற்று மக்கள் முன்னேற்றமுற முடியா தல்லவா? உலகில் பன்னூற்றுக் கணக்கான மொழிகள் வழங்கி வருகின்றன. அவற்றுள், பெரும்பான்மையான மொழிகட்கு எழுத்தே இல்லை. ஒரு சில மொழிகளே பேசவும் எழுதவும் உரியனவாக உள்ளன. பேசுவதற்கு- உலக வழக்கு எனவும், எழுதுவதற்கு - செய்யுள் வழக்கு எனவும் பெயர். செய்யுள் வழக்கு- செய்யுள் நடை, உரைநடை என இரு வகைப்படும். ஒரு மொழி வளர்ச்சிக்கும், அம்மொழியின் அழியா இளமை நலத்துக்கும் உரைநடையினும் செய்யுள் நடையே சிறந்ததாகும். இது, இலக்கிய வளமும் இலக்கண வரம்பும் உடைய எல்லா மொழிகட்கும் ஒத்த இயல்பினதாகும். தமிழ் மொழியின் பழமைக்கும் இளமைக்கும் செழுமைக்கும் வளமைக்கும் தமிழிலுள்ள செய்யுள் நூற்களே சிறந்த காரண மாகும். தமிழ்க் குழவியை நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்த்துவரும் செல்வச் செவிலி செய்யுள் நடையேயாகும். சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளை எண்வகைச் சுவையும் இனிதின் அமைய, சொல்லணி பொருளணி என்னும் இருவகை அணி நலத்துடன், சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் முதலிய அழகு மிளிர, கருத்தை யள்ளுங் கற்பனைத் திறத்துடன், திட்பமும் நுட்பமும் செறிவும் தெளிவுந் திகழ்தரச் செம்மையாய் அமைக்க ஏற்ற இடம் செய்யுளே யாகும். எளிதில் மனப்பாடஞ் செய்யவும், கற்பதை அமைவுறக் கருத்தில் இருத்தவும், உன்னியுன்னி ஓர்ந்துணர்ந் துவக்கவும், இயன்றாங்கு இனிதின் எடுத்து இயம்பவும் ஏற்றது செய்யுளே யாகும். மோனை எதுகை முதலிய தொடை யழகும், சீர்களின் சிறப்பினால் அமையும் நடை யழகும் பொருந்த, இனிய ஓசை நலத்தால் படிப்போர்க்கும் கேட்போர்க்கும் இன்பூட்டி, உள்ளக் கிளர்ச்சியையுண்டாக்கி, கருத்துணர்ச்சியில் கருத்தைத் தோய்விக்க வல்லது செய்யுள் நடையே யாகும். திருப்பித் திருப்பிப் பன்முறை படித்துச் சுவைத்து இன்புறற் கேற்றது செய்யுள் நடையேயன்றோ? 'தாமின்புறுவதும் உலகின்புறுவதும் அதனால் காமுறுவதும்' செய்யுளேயாகும். மொழிப் புலமை பெறச் செய்யுட் பயிற்சியே சிறந்த கருவியாகும். பாட்டுக்களை இசையுடன் பிறர் பாடக் கேட்டு இன்புறுவ தோடு நாமும் இசையுடன் பாடி இன்புறலாம். இசைப் பாக்களே யன்றி, வெண்பா முதலிய பாக்களும் செப்பலோசை முதலிய ஓசை நலத்துடன் அமைந்திருப்பதால் அப் பாக்களையும், இசை நலம் இனிதின் அமைந்த தாழிசை முதலிய பாவினங் களையும் இசையுடன் பாடி இன்புறலாம். இன்னும், மாத்திரை, மரபு, தூக்கு, நோக்கு, அளவு, பயன், எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு, வண்ணம் முதலிய செய்யுள் உறுப்புக்கள் அமைய (தொல், செய்- 1), நயம் என்னும் நன்னலம் பொலிவது செய்யுளேயாகும். இத்தகைய சிறப் பியல்புகள் உரைநடைக் கின்மையறிக. நமது முன்னையோர் இலக்கியம், இலக்கணம், கணக்கு, ஒழுக்கம், மருத்துவம், வாகடம், அரசியல் முதலிய எல்லா நூல் களையும் செய்யுள் நடையிலேயே செய்தமை இத்தகைய சிறப்புடைமை பற்றியேயாகும். தமிழன்னையின் உயிர்நாடி செய்யுள் நடையேயாகும். செய்யுள் நடை ஒழிந்தால் தமிழ் மொழியின் சீரும் சிறப்பும் ஒருங்கே சிதைந்தொழிந்து விடு மென்பதில் சிறிதும் ஐயம் இல்லை. எனவே, பழமை நோக்கம் புதுமை யாக்கம் என்னும் முன்னேற்றப் பண்புகட் கேற்ப, பழங் கருத்துக்களோடு அவ்வக் காலத்துக் கேற்ற புதுக் கருத்துக்களை யமைத்து, அவ்வப் போது ஒவ்வொரு துறைக்கும் செய்யுள் நூற்கள் சில பல செய்து தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தல் தமிழ்ப் புலவர் பெருமக்களின் நீங்காக் கடமையாகும். செய்யுள் மரபு: பழந்தமிழ்ப் புலவர் பெருமக்கள், மக்கள் வாழ்க்கை முறையை அகம் புறம் என இருவகைப் படுத்து, அவற்றுள், அகத்திணைக்கு முதல் கரு உரி என முப்பொருள் படைத்து, அவற்றைப் புறத்திணைக்கும் பொருந்துமாறு தொகுத்து, கருப் பொருள் என்னும் இயற்கைப் பொருள்களைக் கற்போர் விருப்புறும் வகையில் கற்பனை நலத்துடன் பொற்புறவமைத்துச் செய்யுள் செய்து மக்களை வாழ்வித்து வந்ததோடு, தமிழ் மொழியையும் வளர்த்து வந்தனர். இம் மரபு கடைச்சங்க காலம் வரை தொடர்ந்து நடந்து வந்தது. அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, கலித் தொகை முதலிய கடைச் சங்க நூல்களெல்லாம் அவ்வாறு செய்யப்பட்ட செய்யுட்களின் தொகுப்பே யாகும். அகம் புறம் தழுவி, அறம் பொருள் இன்பப் பாகு பாட்டினும் செய்யுட் செய்து வந்தனர். திருக்குறள், நாலடியார் முதலிய நூல்கள் அத்தகைய அமைப்புடையனவே யாகும். கடைச் சங்கப் பிற்காலப் புலவர்கள் அவ்விரு மரபினையுங் கைவிட்டு, கதை தழுவிய நூல்கள் செய்யத் தொடங்கினர். ஐம்பெருங் காப்பியங்களும், ஐஞ்சிறு காப்பியங்களும் இம் முறையிற் செய்யப்பட்டனவேயாகும். சிலப்பதிகாரமே இதன் தொடக்க நூலாகும். இவ்விரு வகை ஐங்காப்பிய நூல்களும் கதை தழுவிய சமயச் சார்புடையவை யாகும். இனி, கி. பி. 7- ஆம் நூற்றாண்டு முதல் அம்முறையையுங் கைவிட்டு, சமயச் சார்புடைய அன்புப் பாடல்கள் பாடத் தலைப் பட்டனர். மூவர் தேவாரம், மணிவாசகர் திருவாசகம், ஆழ்வார் நாலாயிரம் முதலியன இத்தகையவையாகும். 12- ஆம் நூற்றாண்டு முதல் சமயப் புராணங்கள் செய்ய லாயினர். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலி யவை அத்தகையவை. கந்த புராணம், கம்ப ராமாயணம் போன்ற வையும் இதன் பாற்படும். இக்கால முதற்கொண்டு கோவை, உலா, அந்தாதி, பிள்ளைத் தமிழ், கலம்பகம் முதலிய தொண்ணூற்றாறு வகைப் பனுவல்கள் தோன்றலாயின. இப்பனுவல்கள் தெய்வங்கள் மீதும் செல்வர்கள் மீதும் பாடப் பெற்றன. அருட் பரிசும் பொருட் பரிசும் கருதிப் பாடப் பெற்ற இப் பனுவல்கள் தமக்குரிய தமிழ் வளர்ச்சித் தொண்டை ஒருவாறு ஆற்றின எனலாம். 16- ஆம் நூற்றாண்டில் தலப் புராணங்கள் தோன்றின. ஒவ்வொரு தலத்திற்கும் (கோயில்) புராணம் இன்றிமையாச் சிறப்புடையதாயிற்று. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றும் தலப் புராணத்தின் கருப்பொருளாகும். தமிழ் நாட்டி லுள்ள எல்லாத் தலங்கட்கும் புராணம் உண்டு என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. சிலேடை வெண்பா: 17- ஆம் நூற்றாண்டைச் சிலேடை வெண்பாவின் தொடக்க காலம் எனலாம். பிள்ளைப் பெரு மாளையங்கார், சைவ எல்லப்ப நாவலர், கடிகை முத்துப் புலவர், காளமேகப் புலவர் முதலியோர் சிலேடையைப் புலமைத் தலைக்கோலாகக் கொண்டனர். இதில், காளமேகப் புலவர் முதலிடம் பெறுவர். திரிகூட ராசப்ப கவிராயர் என்பார், குற்றாலச் சிலேடை வெண்பா என ஒரு தனிச் சிலேடை நூல் செய்தனர். அவ்வாறே, நமச்சிவாயக் கவிராயர் என்பார் சிங்கைச் சிலேடை வெண் பாவும், தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் என்பார் கலைசைச் சிலேடை வெண்பாவும், வெ. ப. சுப்பிரமணிய முதலியார் என்பார் நெல்லைச் சிலேடை வெண்பாவும் செய்தனர். இச்சிலேடை வெண்பா நூல்களைத் தலப் புராணத்தின் மறுபதிப் பெனலாம். சிலேடை வெண்பாவின் இலக்கணம்: சிலேடை வெண்பா நூல் - நேரிசை வெண்பா நூறு கொண்டது; வெண் பாவின் முதலடியில் இரண்டும் இரண்டுக்கு மேற்பட்ட பொருளும், இரண்டாவதடியில் அவற்றிற்கேற்ற சிலேடையும் அமைய வேண்டும்; தனிச் சீரிலும், பின்னிரண்டடிகளிலும் அத்தல இறைவனின் திருவிளையாடல்கள் அமைய வேண்டும்; பின்னி ரண்டடிகளில் மடக்கு அல்லது திரிபு என்னும் சொல் லணிகள் அமைய வேண்டும். குற்றாலச் சிலேடை வெண்பா முதலியவை இவ்வாறு அமைந்தவையே யாம். இச்சிலேடை வெண்பா என்னும் நூல், 96 வகைப் பனுவல் களில் ஒன்றாகாவேனும், இஃதும் ஒருவகைப் பனுவலேயாகும். சிலேடை என்பது பொருளணிகளில் ஒன்றாகும். அது சிலேடை யணி எனப்படும். எனவே, சிலேடை வெண்பாவில், முன்னிரண் டடிகளில் சிலேடை யென்னும் பொருளணியும், பின்னிரண் டடிகளில் மடக்கு, அல்லது திரிபு என்னும் சொல்லணிகளும் அமைந்திருக்கும். செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை எனச் சிலேடை இருவகைப்படும். ஒரு சொற்றொடரை அப்படியே பல பொருளுக்கு இயையப் பொருள் கொள்வது - செம் மொழிச் சிலேடை எனப்படும். இந்நூலின் 18-ஆம் பாட்டைப் பார்க்க. ஒரு சொற்றொடரைப் பிரித்துப் பல பொருளுக்கு இயையப் பொருள் கொள்வது - பிரிமொழிச் சிலேடை எனப் படும். இந்நூலின் 7-ஆம் பாட்டைப் பார்க்க. சிலேடை- பல் பொருட் சொற்றொடர். திருநணாச் சிலேடை வெண்பா: இது திருநணா என்னும் ஊரின் சிறப்பினைக் கூறும் சிலேடை வெண்பா என விரியும். திருநணா- பவானி. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே. (நன்னூல்) என்ற விதிப்படி, இந்நூல் காலத்துக் கேற்றவாறு புதிய முறையில் செய்யப்பட்டுள்ளது. வெண்பாவின் தனிச் சீரிலும், பின் னிரண்டடி களிலும் திருநணாவின் இயற்கை வளம், காவிரி வானியாறுகளின் சிறப்பு, கூடுதுறைச் சிறப்பு, சுற்றுப்புற ஊர்களின் சிறப்பு, நணாவின் வரலாறு, நணாவில் நடக்கும் பல்வகைக் கைத்தொழிற் சிறப்பு, வணிகச் சிறப்பு, உழவின் சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, ஒழுக்கமுறை, கல்விச் சிறப்பு முதலியன நன்கு கூறப்பட்டுள்ளன. முன்னிரண்டடிகளிலும் பெரும்பாலும் இத்தகைய பொருள்களே அமைந்துள்ளன. சிலேடை வெண்பாவின் முன்னிரண்டடிகளில் சிலேடையும், பின்னிரண்டடி களில் மடக்கு அல்லது திரிபும் அமைய வேண்டிய இலக்கணப்படியே இந்நூல் வெண்பாக்களிலும் அமைந்துள்ள தால், செய்யுள் பழமை நோக்கப் பண்பைத் தழுவியும், பொருள் புதுமையாக்கப் பண்பைத் தழுவியும் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூல் வெண்பாக்களின் முதலடி இயைபுத் தொடையாக அமைந்துள்ளமை தனிச் சிறப்பாகும். புலவர் பெருமக்கள், ஒரு நாட்டைப் பாடும் போது, அந்நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் களோ அந்நாடு அவ்வாறு இருப்பதாகவே கூறுவர். அங்ஙனமே, அந்நாட்டு மக்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என்று விரும்பு கிறார்களோ அவர்கள் அவ்வாறு நடப்பதாகவே கூறுவர். இது புலவருலகம் எனப்படும். (இந்நூலின் 92- ஆம் பாட்டைப் பார்க்க) இவ்வாறு நன்னாட்டையும் நன்மக்களையும் படைத்துக் கூறி, அப்புலவருலகைப் பின்பற்றி, மக்கள் தம் நாட்டை அவ்வாறு நன்னாடாக்கி நன் மக்களாக வாழும்படி தூண்டி, மக்களை வாழ்விப்பது புலவர் மரபாகும். பழைய தமிழ் நூல்களில் நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு என்ற உறுப்புக்கள் அமைந்தமை இம்முறை பற்றியேயாகும். அப்புலவர் மரபுப்படியே, இந் நூலுள்ளும் மக்கள் இவ்வாறு நடக்க வேண்டும் என்பதை அவ்வாறு நடப்பதாகவே கூறப்பட்டு ள்ளது. அதாவது, நன் மக்கட் குரிய நடக்கை முறைகள் நணா மக்களின் நடக்கை முறைகளாகவே கூறப்பட்டுள்ளன. இந்நூலைக் கற்போர் அப்பயனுறுவார்களாக. இந்நூல் வெண்பாக்கள் தனித் தமிழில், இனிய எளிய செந்தமிழ் நடையில் அமைந்துள்ளமை குறிப்பிடற் பாலது. திருநணா இச்சிலேடை வெண்பாவைப் படிப்பவர் இதன் பிறப் பிடமான திருநணாவைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புவது இயல்பே. திருநணா என்பது பவானியின் மறு பெயர். இது இலக்கியப் பெயராகப் பயன்பட்டு வருகிறது. பவானிக்கு திருநணா என்னும் பெயர் தொன்றுதொட்டே வழங்கி வருகிறது. இப்பெயர் நண்ணா, நண்ணாவூர் எனவும் வழங்கும். வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச் செந்தேன் தெளியொளிரத் தேமாங் கனியுதிர்க்குந் திருநணாவே. (சம்பந்தர்- தேவாரம்) அப்பாலைப் குடபுலத்தின் ஆறணிந்தார் அமர்கோயில் எப்பாலுஞ் சென்றேத்தித் திருநணா வினையிறஞ்சி. (பெரிய புராணம் - 327) ஞானக் - கண்ணாகி நண்ணாவில் வீற்றிருந்த சிவக் கொழுந்தை. (பவானித் தலப்புராணம்) வாலிப காசிநண் ணாவூர் பயில்கொங்கு மண்டலமே. (கொங்கு மண்டல சதகம்) எனக் காண்க. திருஞான சம்பந்தர் கி. பி. 7-ஆம் நூற்றாண் டினராதலால், திருநணா என்னும் பெயரின் பழமை விளங்கும் திருநணா என்னும் பெயர்க் காரணம் விளங்கவில்லை. மிகப் பழமையால் வழக்கொழிந்தது போலும். 'பவானி என்னும் இத் திருப்பதியைத் தரிசித்தோர்க்கு யாதொரு தீங்கும் நண்ணாத நற்றலமாதலின் நண்ணாவூர், அல்லது திருநணா எனப் பெயர் பெற்றது' (பவானித் திருத்தல வரலாறு- பக்-4) என்பது பொருத்தமாக இல்லை. 'யாதொரு தீங்கும் நண்ணாதாகலின் நண்ணாவூர் எனப் பெயர் பெற்றது' என்பது பொருந்து மேனும், 'திருநணா' என்பதற்கு அக்காரணம் சிறிதும் பொருந்தாது. திருநணா- திருநண்ணா என எதிர்மறைப் பொருள் படுதல் காண்க. திரு - செல்வம், அல்லது மங்கலம். செல்வம் நண்ணா - நண்ணாது, மங்கலம் நண்ணாது - அணுகாது - பொருந்தாது என்றா ஓர் ஊர்க்குப் பெயர் வைத்திருப்பர்? திருக்கோவையாரின் உரையாசிரியர், 'திரு என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்' என்கிறார். அவ்வுரைப்படி, திருநணா - கண்டாரால் விரும்பப் படாத தன்மையை யுடையது என்றாகிறது. திருநணா என்பதன் பெயர்க் காரணத்தை யறியாமலா புலவர்கள் அப்பெயரைத் தம் பாட்டி லமைத்துப் பாடியிருப்பர்? எனவே, இப்பெயர்க்கு வேறு காரணம் இருத்தல் வேண்டும். ஒரு கோயில் அல்லது தலத்தில் உள்ள மரத்தின் பெயர் அத்தலத்திற்கும், அஃதுள்ள ஊர்க்கும் பெயராக வழங்குதல் உண்டு. 'தில்லை' என்னும் மரத்தின் பெயரே சிதம்பரத்திற்குத் 'தில்லை' என்னும் பெயர் ஏற்பட்டதற்குக் காரணமாகும். தில்லை என்பது சிதம்பரம் கோயிலிலுள்ள ஒரு மரம். 'திருவீழி மிழலை' என்னும் ஊர்க் கோயிலில் வீழிமிழலை உள்ளதால் அவ்வூர்க்கு அப்பெயர் ஏற்பட்டது. வீழி- விழுமி- விழும்பிச் செடி. மிழலை - புதர். வீழிமிழலை- விழுமிப் புதர். இங்ஙனமே 'நணா' என்பதும் ஒரு மரத்தின் பெயராக இருக்கலாம். அது தலமரமாக இருந்ததால் பவானிக்கு அப்பெயர் ஏற்பட்டது போலும். தமிழிலுள்ள நிகண்டு, அகராதி முதலியவற்றில் நுணா (தணக்கு) என்னும் பெயர்தான் காணப்படுகிறது. நணா என்னும் பெயர்வரிவிடுப்பு காணப்படவில்லை. நணா என்னும் சொல் நுணா எனத் திரிந்திருக்க வேண்டும்; அல்லது நணா என்னும் பெயர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டினரான சம்பந்தர் காலத்தி லேயே பெரு வழக்குடையதாய் இருந்திருப்பதால் நாளடைவில் பெயர்க் காரணம் வழக்கு வீழ்ந்தது போலும். இப்போது திருநணாக் கோயிலில் இருக்கும் தலமரம் வதரி மரமாகும். வதரி- இலந்தை. அதனால், திருநணாச் சிவனுக்கு வதரிவனேச் சுரர் என்னும் பெயர் வழங்குகிறது. பவானிக்கு இரண்டுகல் வடக்கில் ஊராட்சிக் கோட்டை மலை என்னும் மலை இருக்கிறது. அது எளிதில் ஏறமுடியாத செங்குத்தான உயர்ந்த முடியை உடையது. அதனால் அதற்கு நண்ணாமலை என்னும் பெயர் வழங்கி வந்தது. நண்ணாமலை; நண்ணாத - நண்ணமுடியாத - எளிதில் அடையமுடியாத உயர மான முடியை உடைய மலை என்பது பொருள். அண்ணா மலை என்பது காண்க. அண்ணா- அணுகமுடியாத. பதிற்றுப் பத்து என்னும் சங்க நூலின் ஏழாம் பத்துப் பதிக இறுதியில், "பாடிப் பெற்ற பரிசில், சிறுபுறமென நூறாயிரங் காணங் கொடுத்து, நன்றா என்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ" என்னும் உரை காணப்படுகிறது. 'நண்ணா என்னும் குன்று' என்பதையே எதுகை நோக்கியும், ஏட்டெழுத்தின் உருவ ஒப்புமை பற்றியும், ஏடு பெயர்த் தெழுதுவோர் 'நன்றா என்னும் குன்று' என்று எழுதினர் போலும். சென்னிமலை, சிவமலை, பழனி, திருப்பரங்குன்றம், திருப்பதி, திருவண்ணாமலை என்னும் மலைகளின் பெயர்களே அம்மலைகளின் அடிவாரத்தில் உள்ள ஊர்கட்கும் பெயர் களாய் வழங்கி வருதல் காண்க. நண்ணாமலைக்கு ஊராட்சிக் கோட்டை மலை என்பது பிற்காலத்தில் ஏற்பட்ட பெயராகும். நண்ணா என்பது, நணா என இடைக் குறையாகவும் வழங்க லானது. எனவே, நண்ணா என்னும் இம்மலையின் பெயரே, பவானிக்கு நண்ணாவூர், நணாவூர், திருநணா எனப்பண்டு வழங்கி வந்துள்ளது. வானி கூடல்: வானி கூடல் என்பது பவானியின் பழைய பெயர். வானியாறு காவிரி யாற்றுடன் கூடும் இடத்தில் பவானி என்னும் இவ்வூர் அமைந்திருப்பதால் இதற்கு 'வானி கூடல்' என்ற பெயர் ஏற்பட்டது. வானி யாறு பவானி யாறு எனத் திரித்து வழங்கப்பட்டபின், வானிகூடல் என்பது 'பவானி கூடல்' என வழங்கலானது. நாளடைவில் கூடல் என்பது விடுபட்டு, பவானி என்றே வழங்கலானது. இன்னும் இவ்வூர் அர்பன் பாங்கு, 'பவானி கூடல் அர்பன் பாங்கு' என்றே வழங்கி வருகிறது. இவ்வூர் வெளிமுகத் துறைக்கு, 'பவானி கூடல் அவுட ஏஜன்சி' என்பது பெயர். பவானி யாற்றுக்கு வானி யாறு என்னும் பெயருண்மை, பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும் சாந்துவரு வானி நீரினும் தீந்தண் சாயலன் மன்ற தானே. (பதிற்றுப் பத்து- 86) எனக் கடைச்சங்க நூலான பதிற்றுப்பத்தில் வானி என்றே இவ்வாற்றின் பெயர் வழங்கப் பெற்றுள்ளது. குடகில் வருகா விரிபுகு வானிக் கொழுநாடு. என, அவிநாசித் தலப்புராணத்திலும் இவ்வாறு வானி என்றே குறிக்கப்பட்டுளளது. வரைகொண்டபூந்துறைநன்னாடுவாழ்கஅவ்வானி தனைக் கரைகொண் டடைத்தவன் வெள்ளோடைச் சாத்தந்தை காளிங்கனே. (தனிப்பாட்டு) எற்று திரைப்பொன்னி கூடுறு வானி யிடைமடங்க வெற்றி மிகுந்த அதிவீர பாண்டிய வேந்தமைச்சன் கற்ற வறிவினன் காளிங்க ராயன்செய் கால்கழிநீர் உற்ற வனத்தை வளவய லாக வுயர்த்தியதே. (தனிப்பாட்டு) காவிரி யோடு கலக்குறு வானியைக் கட்டணைநீர் மாவிச யம்பெறு காளிங்க னுங்கொங்கு மண்டலமே. (கொங்கு மண்டல சதகம்) சீர்கொண்ட பொன்னிநதி வானிஆன் பொருநையுஞ் சேர்கொங்கு மண்டலத்தில். (கொங்கு மண்டல சதகம்) என்பன காண்க. காளிங்கராயன் கி.பி. 13- ஆம் நூற்றாண்டினன். கொங்கு மண்டல சதக ஆசிரியர் 18- ஆம் நூற்றாண்டினர். எனவே, கடைச் சங்க காலத்திலிருந்து, 18-ஆம் நூற்றாண்டு வரையிலும் பவானி யாற்றுக்கு வானியாறு என்னும் பெயரே வழங்கி வந்தி ருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைச் சாரலின் உயர்ந்த மேட்டு நிலத்தில் இருந்து சேர நாட்டை ஆண்டு வந்த சேர மன்னர் - வானவர் (புறநானூறு- 36, 126) எனப் பெயர் பெற்றதுபோல், அம்மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த இடத்தில் தோன்றி வரும் இவ்வாறு வானி எனப் பெயர் பெற்றது. வான் + இ - வானி. வான் - உயர்வு. இ- பெயர் விகுதி. பொன் + இ - பொன்னி என்பது போல. கோவை நகர்க்குக் குழாய்த் தண்ணீர் கொண்டு வரும் ஆற்றின் பெயர் சிறுவானி என்பதும், பவானி யாற்றுக்கு வானி என்னும் பெயருண்மைக்குச் சான்று பகரும். பவானியின் மேற்கில் 12 கல் தொலைவில் வானியாற்றின் இருகரையிலும் கீழ்வானி, மேல்வானி என்னும் ஊர்கள் இருப்பதும் இதற்குத் துணை செய்யும். கீழ்வானி - வானி யாற்றின் கீழ்கரையில் உள்ள ஊர்; மேல்வானி - வானியாற்றின் மேல் கரையில் உள்ள ஊர் என்பது பொருள். "மலைமேவு மாயக் குறமாதின் மனமேவு வாலக் குமரேசா சிலைவேட சேவற் கொடியோனே திருவானி கூடல் பெருமாளே." - (திருப்புகழ்) என, வானிகூடல் என்னும் பெயரை, 16- ஆம் நூற்றாண்டினரான அருணகிரி நாதர் வழங்குவதால், மிக அண்மைக் காலம் வரை, பவானிக்கு - வானி கூடல் என்னும் பெயர் வழங்கி வந்துள தென்பது தெரிகிறது. மேலும், பவானி வேத நாயகி கோயில் முன் மண்டபத்தில், "பார்த்திப ஆண்டு, தை மாதம், 20-ஆம் நாள், திருவானி கூடல் பண்ணார் மொழியம்மை (வேத நாயகி) முன் மண்டபம், இம்முடிக் கட்டிமுதலியார் சின்னம்மாள் உபயம்" என்று பொறிக்கப் பட்டுள்ளது. இச்சின்னம்மையார், இம்முடிக் கட்டி முதலியார் மனைவி யாராவர். இவ்விருவர் சிலைகளும் வேதநாயகி கோயில் முன் மண்டபத் தூண்களில் செதுக்கப்பெற்றுள்ளன. "விக்கிரம வருடம், சித்திரை மாதம் ஸ்ரீமத் முதலியார் நல்லுடை யப்பா இம்முடிக் கட்டி முதலியார், நண்ணாவுடை யார் சாமியாருக்கு, சுத்துத் திருநடை, மாளிகை, முன்நிருத்த மண்டபம், சிகரம், பண்ணார் மொழியம்மை கர்ப்ப கிரகம், அர்த்த மண்டபம், மகர மண்டபம், ரங்க மண்டபம், குமாரும் கோயிலும் (குமாரர் கோயில்), யாகசாலை, வசந்த மண்டபம், கோபுரம், மதில், உயிர் லிங்கமும் பிரதிட்டை பண்ணினார்" சங்கமேச்சுரர் கோயில் முன்மண்டபத்தில் இக் கல்வெட்டு உள்ளது. 1672-இல் தொட்ட தேவராயன் என்னும் மைசூர் மன்னன், வணங்கா முடிக் கட்டி என்பவனை வென்று கட்டி நாட்டைக் கைக்கொண்டனன். இவ் வணங்காமுடிக் கட்டியே கட்டி மரபின் கடைசி அரசனாவான். இம்முடிக் கட்டி, இளமன் கட்டி, வேம்பன் கட்டி, மும்முடிக் கட்டி, சீயால கட்டி, வணங்காமுடிக் கட்டி என்னும் அரச மரபுப்படி, வணங்காமுடிக் கட்டி, இம்முடிக் கட்டியின் ஆறாந் தலை முறையினன் ஆவான். 1957 துன்முகி ஆண்டாகிறது. 1672- (1957 - 1672 - 260) விரோதிகிருது ஆண்டாகிறது. விரோதிகிருதுக்கு 31 ஆண்டு கட்கு முன்னது விக்கிரம ஆண்டு; விக்கிரம ஆண்டுக்கு கி. பி. (1672 - 31 -) 1641. தலைமுறைக்கு 20 ஆண்டாக, 5 தலை முறைக்கு (20 x 5) 100 ஆண்டு போக (1641 - 100 - ) 1541. இதுவே இம்முடிக் கட்டி முதலி திருநணாக் கோயில் கட்டி முடித்த ஆண்டாகும். சின்னம்மையார், பண்ணார்மொழி யம்மை கோயில் முன்மண்டபம் கட்டினது ஐந்தாண்டுக்குப் பின்னர். அதாவது பார்த்திப ஆண்டு. அது (1541 + 5=) 1546-ஆம் ஆண்டாகும். எனவே, ஒரே காலத்தில் பவானிக்கு, வானி கூடல், திருநணா (நண்ணா) என்னும் பெயர்கள் வழங்கி வந்தன என்பது தெரிகிறது. ‘பவானி கூடல்’ என்பது ‘பவானி’ என வழங்குதல் போல, ‘வானி கூடல்’ என்பது ‘வானி’ எனவும் வழங்கி வந்திருக்கிறது என்பது, அந்தியூ ரும்பட்டி லூருங் குறிச்சிபூ லாம்பட்டி சம்பை வானி. (கொங்கு மண்டல சதகம்) என்பதால் தெரிகிறது. பவானி என்பது, பார்வதி பெயர்களிலொன்று. பிற் காலத்தே வானி என்னும் காரணப் பெயரை நீக்கி, காரண மில்லாத பவானி என்னும் பெயர் புகுத்தப் பட்டதாகும். இந்நூலினுள் - திருநணா, வானி கூடல், பவானி என்னும் மூன்று பெயர்களும் பயில்கின்றதெனினும், இலக்கியப் பெயரும், பெரும்பான்மையும் பற்றித் ‘திருநணாச் சிலேடை வெண்பா’ என இந் நூற்குப் பெயரிடப் பெற்றது. ஊரின் சிறப்பு சென்னையிலிருந்து கள்ளிக் கோட்டை செல்லும் பெரு வழியில், சேலத்திற்கு 36 கல் மேற்கில், காவிரியின் மேல்கரையில் திருநணா என்னும் பவானி இருக்கிறது. அப்பெருவழி பவானியின் இடையேதான் செல்கிறது. ஈரோடு மேட்டூர் வழியும் நணாவூரின் நடுவேதான் செல்கிறது. ஈரோட்டின் வடக்கில் 10-வது கல்லில் உள்ளது பவானி. பவானியிலிருந்து கோவை 64 கல். ஊரின் கீழ்புறம் காவிரி யாறும், மேல்புறம் பவானி யாறும் வந்து, ஊரின் தென்புறத்தில் ஒன்று கூடுகின்றன. அவ் விரண்டாறுகளும் ஒன்று கூடும் இடமே கூடுதுறை எனப்படும். பவானியின் பெருமைக்கும் சிறப்புக்கும் காரணமாய் அமைந் திருப்பது இக் கூடுதுறையே யாகும். சங்க காலத்தில் பவானிக்கு - கழார் என்னும் பெயர் வழங்கி வந்ததெனவும், கரிகால் வளவன் மகளான ஆதிமந்தியும், அவள் கணவனான ஆட்டனத்தியும், இக்கழார்த்துறையில் நீராடும் போது தான் ஆட்டனத்தியைக் காவிரி கவர்ந்தது எனவும் ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். ஆட்டன் அத்தி - சேர மன்னன். இன்றும் ஆடி 18 அன்று மலையாளிகள் மிகுதி யாக வந்து பவானிக் கூடுதுறையில் குளித்துச் செல்கின்றனர். காவிரி யாறு, பவானி யாறு இரண்டிலும் பாலங்கள் உள்ளன. ஊர்க்கு மேல்புறம், காளிங்கராயன் என்னும் பெரு மகனால் வானி யாற்றில் கட்டப் பெற்ற காளிங்கராயன் அணைக்கட்டும், அவ்வணையை அடுத்து அணைத் தோப்பும் உள்ளன. “அரங்கம் என்பது ஆற்றிடைக் குறையே” என்னும் திவாகரப் படி இவ்வணைத் தோப்பு ஒரு சிற்றரங்கம் ஆகும் (பாட்டு 57). காளிங்கராயன் அணைக்கட்டிலிருந்து காளிங் கராயன் வாய்க்கால் என்னும் கால்வாய், வானியாற்றின் மேல்புற மாய் வளஞ் செய்துகொண்டு ஆற்றையடுத்துத் தெற்குநோக்கிச் செல்கிறது. இவ்வாய்க்காலின் மேல்புற நிலப் பரப்பைக் கீழ் பவானி வாய்க்கால் வளஞ் செய்கிறது. ஊரின் வடபக்கம் மேட்டூர் மேல்வாய்க்காலும், ஊரின் கிழபக்கம் - குமார பாளையத்தின் கிழபக்கம் - மேட்டூர்க் கீழ்வாய்க்காலும் வளஞ் செய்கின்றன. ஊரின் கிழமேல் தெரு ஒவ்வொன்றுக்கும் காவிரியாற்றில் படித்துறைகள் - படிக்கட்டுகள் - உண்டு. பவானியில் ஊர்முற்றும் படித்துறைகள் அமைந்திருப்பது போல, காவிரிக் கரையிலுள்ள வேறு எந்த ஊரிலும் அமையவில்லை. தமிழ் நாட்டுப் பழவிறல் மூதூர்களில் பவானியும் ஒன்றாகும். கி. பி. 7-ஆம் நூற்றாண்டினரான திருஞான சம்பந்தர் காலத்திற்கு முன்னரே இவ்வூர் தலச்சிறப்புடைய தாய் இருந்திருப்ப தால் இவ்வூரின் பழமையும் பெருமையும் இனிது விளங்கும். இன்று இது பவானிக் கூற்றத்தின் தலைநகராக உள்ளது. ஒரு காலத்தே பவானி, கட்டி நாட்டின் நாட்டாட்சிக் கோட்டைகள் பதினொன்றில் ஒன்றாகத் திகழ்ந்தது. பின்னர் ஆங்கில ஆட்சியில் கோவைக் கோட்டமும் சேலங் கோட்டமும் ஒன்றாக இருந்த போது இது அதன் தலைநகராக விளங்கிற்று (பாட்டு - 73). கோயிலும், கோயிலை அடுத்துள்ள தங்குமாளிகையும் (Traveller’s Bunglow) கோட்டைக்குள் அமைந்துள்ளன. தங்குமாளிகை, முன்னர்க் கட்டி மரபினர் அரண்மனையாகவும், பின்னர்த் தண்டல் நாயக அலுவலகமாகவும் (கலைக்டர் ஆபீஸ்) இருந்தது. பவானி, யாத்திரைத் தலங்களுட் சிறப்புடைய தொன்றாம். பவானிச் சமுக்காளம் உலகப் புகழ் பெற்றது. தமிழ்ச் செய்யுள் மரபு நின்று நிலவவும், காலத்திற்கேற்ற புதிய கருத்துக்கள் நூல்வழக்கடையவும், இலக்கிய வளர்ச்சி யடையவும், தனித் தமிழ் இலக்கியந் தழைக்கவும் செய்தலே இந்நூல் செய்தற்குக் காரணமாகும். இந்நூல் ஓரூரைப் பற்றிய தேனும், இதில் கூறப்படும் பொருள்களில் பெரும்பாலும் பொதுப் படையாகவே உள்ளமையால் இது தமிழ் மக்கள் எல்லார்க்கும் உரிய பொது நூலேயாகும். இந்நூல் வெளிவரப் பொருளுதவி செய்த குமாரபாளையம் திரு. S. S. M. சுப்பிரமணியம் அவர்கட்கும், குமாரபாளையம் சுந்தரம் நூலாலைச் சொந்தக்காரரில் ஒருவரான திரு. J. K. K. சுந்தரராசன் அவர்கட்கும், படங்கள் உதவிய, பவானி ஆண்டவர் ரைஸ்மில் சொந்தக்காரர் திரு. T. K. இராமசாமிக் கவுண்டர் அவர்கட்கும், இந்நூலை அன்பளிப்பாக நன்கு அச்சிட்டுதவிய சென்னை, இராசன் எலக்ட்ரிக் பிரஸ் சொந்தக்காரர் அவர்கட்கும் எமது அன்பு கலந்த நன்றி உரித்தாகுக. அன்புள்ள, புலவர் குழந்தை. திருநணாச் சிலேடை வெண்பா பாயிரம் 1. பொன்னிவாய் வானி புகுவானி கூடனணாப் பன்னு பவானிவெண்பாப் பாடுதற்கு - மன்னுதமிழ்ச் செஞ்சொல் மடக்குந் திரிபுஞ் சிலேடையுமென் நெஞ்சில் உறுக நிறைந்து. பொன்னி - காவிரியாறு. வாய்- இடம். கூடல் நணா. பன்னுதல் - புகழ்தல், பாராட்டுதல். பொன்னிவாய் வானி புகு வானி கூடல் - காவிரியாற்றோடு வானியாறு கலக்கும் இடத்தில் இருப்பதால், பவானி வானிகூடல் எனப் பெயர் பெற்றது. வானிகூடல் பவானியின் பழம் பெயர். நணா பவானியின் இலக்கியப் பெயர். மன்னுதல் - நிலை பெறுதல். மடக்கு - வந்த சொல்லே வந்து பொருள் வேறுபடுதல். திரிபு - மடக்கின் முதலெழுத்து மட்டும் வேறுபட்டுப் பொருள் வேறுபடுதல். சிலேடை - பல்பொருட் சொற்றொடர். ஒரு சொற்றொடர் பலபொருட்கியைதல் சிலேடை எனப்படும். மடக்கும் திரிபும் - சொல்லணிகள். சிலேடை - பொருளணி. பாயிரம் - முகவுரை. 2. பாடற் பனுவற் பயன்பா டுறவானி கூடற் சிலேடைவெண்பாக் கூறுதற்குத் - தேடித் திரியாம லெம்முளத்தே செம்பொருட் மின்பந் திரியாமற் சேர்க சிறந்து. பனுவல் - நூல். பயன்பாடு - பயன். உற - உண்டாக. பனுவல் பயன்பாடு உற - தமிழிலுள்ள தொண்ணூற்றறு வகைப் பனுவல்கள் போல இந்நூலும் மக்கட்குப் பயன்பட. செம் பொருள் - சிறந்த பொருள். தேடித் திரியாமல் செம்பொருள் தம் இன்பம் திரியாமல் எம் உளத்தே சேர்க எனக் கூட்டுக. 3. வானிக் கொடிபொன்னி மாவிற் படர்தருப வானிச் சிலேடைவெண்பா மாலைகட்டத் - தேனிற்குஞ் செந்தமிழ்நற் சொன்மலர்கள் செய்ய மணங்கமழ எந்தனுளத் தேமலர்க வே. வானி - வானியாறு. பொன்னி - காவிரியாறு. மா - மாமரம். படர் தரு - படர்கின்ற. வானிக் கொடி பொன்னிமாவில் படர்தல் - உருவகம். தேன் நிற்கும் - தேன் பொருந்தும். தேன் - தேன், இனிமை. செய்ய - நல்ல. உளம் - உளமாகிய குளம். இது ஒருகூற்றுருவகம். 4. நாடற் கினியபுது நாகரிகம் போல்வானி கூடற் சிலேடைவெண்பாக் கூறுகின்றேன் - நாடுபுகழ் பொன்னித் தமிழ்வானி போலவளங் குன்றாமற் கன்னித் தமிழ்நிலவு க. நாடுதல் - ஆராய்தல். நாடு புகழ் - நாட்டினர் புகழ்கின்ற, புகழ் நாடுகின்ற பொன்னி என இருபொருள் கொள்க. தமிழ் என்பதைப் பொன்னி யோடுங் கூட்டுக. தமிழ் - இனிமை. ‘பொன்னித் தமிழ்’ என எதுகை நோக்கித் தகரம் மிக்கது. கன்னித் தமிழ் - இளமை நலம் குன்றாத தமிழ். நிலவுதல் - என்றும் இவ்வாறே இருத்தல். 5. வண்டமிழ்ப்பா வாணர் மரபுத் தொடர்விளங்கத் தண்டமிழ்நற் றாய்நற் றடந்தோட்கு - மண்டுமணிப் பொன்மாலை சூட்டுகில்லேன் பொன்வானி கூடனணாச் சொன்மாலை சூட்டுகின்றேன் சூழ்ந்து. மரபுத் தொடர் - வழிமுறை. மண்டுதல் - நிரம்புதல். மணி - முத்து பவளம் முதலிய ஒன்பான் மணி. பொன் - அழகிய, செல்வம். சூழ்ந்து - ஆராய்ந்து. சூழ்ந்து சொல்மாலை சூட்டு கின்றேன் எனக் கூட்டுக. இவை ஐந்தும் பாயிரம். நூல் 6. பூமருவுங் காவினிலும் பொன்மருவுங் கோவினிலுந் தேமருவி நாறுந் திருநணா - தாமரைப்பூங் கைப்பவள மெய்யார்தங் காதற் கணவருளங் கைப்பவள மெய்யார்தங் காப்பு. பூ மருவும் காவினில் தேம் மருவி நாறும் - பூக்கள் பொருந்தி யுள்ள சோலையில் தேன் பொருந்தி மணக்கும். பொன் மருவும் கோவினில் தேம் அருவி நாறும் - பொன் பொருந்தியுள்ள மலையில் இனிய நீரருவி தோன்றும். மருவுதல் - பொருந்துதல். கா - சோலை. கோ - மலை. தேம் - தேன், இனிமை. நாறுதல் - மணத்தல், தோன்றுதல். தாமரைப் பூங் கை பவள மெய்யார் - தாமரை மலர் போன்ற கையையும் பவளம் போன்ற மேனியையும் உடைய மகளிர், காதல் தம் கணவர் உளம் கைப்ப வளம் எய்யார் - அன்புடைய தம் கணவர் மனம் வருந்தும்படி செல்வத்தை வீண் செலவு செய்யார். மெய் - மேனி - உடம்பு. கைப்ப - வருந்த, வெறுக்க. வளம் - செல்வம், வருவாய். எய்தல் - போக்குதல் - வீண் செலவு செய்தல். வளம் எய்யார் - குடும்பத்தின் செல்வ நிலையை - வருவாயை - அறியாமல் ஆடம்பரச் செலவு செய்யார்; வரவறிந்து செலவு செய்வார் என்பதாம். காப்பு - ஊர். தாமரைப் பூங்கை பவள மெய்யார் தம் காதல் கணவர் உளம் கைப்ப வளம் எய்யார் தம் காப்பு, ‘காவினிலும் கோவினிலும் தேமருவி நாறும் திரு நணா’ எனக் கூட்டிப் பொருள் கொள்க. பின்வரும் வெண்பாக்கட்கும் இவ்வாறே பொருள்கோள் கொள்க. (1) 7. ஆண்டா ரகமலரும் அன்னவயற் காவலருந் தீண்டாமை போக்குந் திருநணா - வேண்டா தவையார்க்குஞ் செய்யார் தகவா னுயர்மூத் தவையார்க்குஞ் செய்யார்தஞ் சார்பு. ஆண்டார் அகமலர் தீண்டாமை போக்கும் - மேல் வகுப்பினர் மனம் தொடுவது தீட்டு என்னும் நம்பிக்கையை ஒழிக்கும். வயல் காவலர் தீண்டு ஆ மை போக்கும் - வயலைக் காப்பவர் நெற்பயிரைத் தின்ன வரும் மாடு ஆடு எருமை முதலியவற்றை ஓட்டும். ஆண்டார் - மேல் வகுப்பினர், உயர்குலத்தோர் எனப் படுவோர். அகமலர் - மனம். மை - ஆடு, எருமை. வேண்டாதவை யார்க்கும் செய்யார் - தகாதவற்றை எவர்க்குஞ் செய்யார். தகவான் உயர் மூத்த அவை ஆர்க்கும் செய்யார் - தகுதி மிக்க பெரியோர் கூட்டத்தைப் பொருந்தும் நல்லவர்; வேண்டாதவை யார்க்கும் செய்யாத நல்லவர். வேண்டாதவை - தகாதவை, கெட்டவை. தகவு - தகுதி. மூத்த அவை - பெரியோர் கூட்டம். தகவான் உயர் மூத்த அவை- தகுதி மிக்க பெரியோர் கூட்டம். ஆர்த்தல் - பொருந்துதல். செய்யார் - செம்மையுடையவர், நல்லவர். சார்பு - இடம். வேண்டா தவை யார்க்கும் செய்யாதவரும், பெரியோரினத்தைச் சார்ந்தி ருப்பவரு மாகிய நல்லவர் தம் சார்பு என்க. (2) 8. வந்தாரிற் செந்தமிழின் மாதுளையி னைந்தொகையின் சிந்தா மணிசேர் திருநணா - செந்தா மரைவிரும்புங் கையார் மனைவிரும்புந் தந்த மரைவிரும்புங் கையார் மனை. (1) வந்தாரில் சிந்தாமணி சேர் - வந்திரந்தவரிடம் நிறைந்த செல்வம் பொருந்தும். தம்மை அடைந்த இரவலர்க்கு நிறையப் பொருள் கொடுப்பர் என்பதாம். சிந்தாமணி - குன்றாத பொற் குவை. (2) தமிழில் சிந்து ஆம் அணி சேர் - தமிழில் சிந்து என்னும் அணிகலன் பொருந்தும். சிந்து - ஒருவகைப் பாடல். காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, வளையற் சிந்து என்பன காண்க. அணி கலன் - நகை. அணி- அழகுமாம். (3) மாதுளையில் சிந்தாமணி சேர் - மாதுளம் பழத்தில் நிறைய முத்துக்கள் (விதை) இருக்கும். மணி - விதை. (4) ஐந்தொகையில் சிந்தாமணி சேர் - ஐந்தொ கையில் சிந்தாமணி என்னும் நூல் சேரும். ஐந்தொகை- ஐம்பெருங் காப்பியம். அவை - சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்பன. செந்தாமரை விரும்பும் கையார் - செந்தாமரை மலர் போன்ற கையையுடைய மகளிர், தம் மனை விரும்பும் தமரை விரும்பும் கையார் - தமது குடும்பத்தை விரும்பும் சுற்றத் தாரை விரும்பும் ஒழுக்கமுடையார். கையையுடைய ஒழுக்கமுடைய மகளிர் என்க. மனை - குடி - குடும்பம். தமர் - சுற்றத்தார். கை- ஒழுக்கம். கையார் - ஒழுக்கமுடையார். மனை - வீடு; சினையாகு பெய ராய் ஊரினை யுணர்த்திற்று. (3) 9. அட்டுணுகட் காவியரும் ஆய்ந்தெழுது மோவியரும் வட்டிகை கொள்ளும்ப வானியே - கட்டியெயி னாப்பண் பொலியு நகர்மேய நல்லறமா னாப்பண் பொலியு நகர். அட்டு உணு கண் காவியர் வட்டி கைகொள்ளும் - உணவுண்ணும் மகளிர் வட்டிலைக் கையால் எடுப்பர். ஆய்ந்து எழுதும் ஓவியர் வட்டிகை கொள்ளும் - ஆராய்ந்து ஓவியம் எழுதும் ஓவியர் எழுதுகோலைக் கொள்வர். அட்டு - உணவு. கண் காவியர்- காவிமலர் போன்ற கண்ணை யுடைய பெண்கள். காவி- கருங் குவளை. வட்டி - வட்டில் - உண்கலம். ஓவியம் - சித்திரம். வட்டிகை - ஓவியம் எழுதுங் கருவி. கட்டி எயில் நாப்பண் பொலியும் நகர் மேய - கட்டி மரபினர் கட்டிய கோட்டையின் உள்ளே விளங்குகின்ற கோயில் பொருந்திய. நல் அறம் ஆனா பண்பு ஒலியும் நகர் - நல்லறத்தி னின்றும் நீங்காத பண்பாடு தழைக்கும் ஊர். கட்டி - கட்டி மரபினர். இக் கட்டி மரபினர், சேலங் கோட்டத்திலுள்ள தாரமங்கலத்தை அடுத்த அமரகுந்தி என்னும் ஊரிலிருந்து, கடைச்சங்க காலத்திற்கு முன்னிருந்து கி.பி. 1672 வரை கட்டி நாட்டை ஆண்டுவந்த குறுநில மன்னராவர். நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி (அகநானூறு - 44) பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் (சிலப் - 25 : 157) எனக் காண்க. கட்டி நாடு என்பது, வடக்கே - தகடூர் (தர்மபுரி); கிழக்கே - தொப்பூர், பொன்முடி, தலைவாசல்; தெற்கே - இராசிபுரம்; மேற்கே - வானியாறு; இவற்றை எல்லையாக உடைய நாடாகும். சிற்ப வேலைப் பாட்டில் ஒப்புயர்வற்ற, உலகப் புகழ் பெற்ற தாரமங்கலம் சிற்பக் கோயிலைக் கட்டியவர் இக்கட்டி மரபினரே யாவர். பவானிக் கோட்டை, கோயில், கூடுதுறைப் படிக்கட்டு, புக்கில் (T. B.) ஆகியவற்றைக் கட்டினவர் இக் கட்டி மரபினரே. இப்போதுள்ள கோயிலைக் கட்டினவன் இம்முடிக் கட்டி என்பான். முகவுரையில் உள்ள இவன் கல்வெட்டைப் பார்க்க.* பவானிக் கோட்டை, கட்டி நாட்டின் நாடாட்சிக் கோட்டைகள் பதினொன்றில் ஒன்றாகும். எயில் - மதில், கோட்டை. நாப்பண் - நடுவில். பொலிதல் - விளங்குதல். நகர் - கோயில். மேய - பொருந்திய. ஆனா - ஆனாத - நீங்காத. ஒலிதல் - தழைத்தல், மிகுதல். நகர் - ஊர்.(4) 10. கஞ்சக் கழனியிலுங் கல்விபயில் பள்ளியிலுஞ் செஞ்சொல் விளைக்குந் திருநணா - வஞ்சிக் கொடியனையார் வாழுங் குடியருக வஞ்சிக் கொடியனையார் வாழுங் குடி. கஞ்சக் கழனியில் செஞ்சொல் விளைக்கும் - தாமரை பூத்த வயலில் நல்ல நெல்லை விளைவிக்கும். கல்வி பயில் பள்ளியில் செம்சொல் விளைக்கும் - படிக்கின்ற பள்ளியில் செவ்விய சொற்களைக் கற்கும். கஞ்சம் - தாமரை. இது நீர் வளத்தைக் குறிக்கும். கழனி - வயல். சொல் - நெல், சொல். செஞ்சொல் - நல்ல நெல். ‘செஞ்சாலி’ எனல் காண்க. சாலி - நெல். சொல்லாகு பெயராய்ச் செவ்விய பொருளுங் கொள்க. வஞ்சிக் கொடி அனையார் - வஞ்சிக் கொடி போன்ற மகளிர், வாழும் குடிஅருக அஞ்சிக்கொடு - தமது குடிப்பெருமை சுருங்குதற்கு அஞ்சி, இயல் நையார் - தன்மை குன்றார், வாழும் குடி - வாழ்கின்ற ஊர். வஞ்சி - ஒருவகைக் கொடி. அஞ்சிக் கொடு - அஞ்சிக் கொண்டு - அஞ்சி. வாழும் குடி - தாம் உள்ள குடி - தமது குடி. அருகுதல் - சுருங்குதல். தன்மை - பெண் தன்மை. நைதல் - குன்றுதல். தாம் பெண்டன்மை குன்றினால் தமது குடிப் பெருமை குன்றுமென் றஞ்சிக் குலமகளிர் பெண்டன்மைக் குன்றார் என்பதாம். குடி - ஊர். (5) 11. தாதார் கருங்குயிலுஞ் சங்கத் தமிழியலுஞ் சேதாரம் பாடுந் திருநணா - மாதேநற் பாளையம் பட்டியெனாப் பண்பாரூர் சூழ்நகர்காப் பாளையம் பட்டியெனாப் பற்று. தாது ஆர் கருங்குயில் சேதாரம் பாடும் - பூந்தாதை உண்ணும் கருங்குயில் தேமா மரத்தில் பாடும். சங்கத் தமிழ் இயல் சே தாரம் பாடும் - சங்கமருவிய தமிழ்ப் பாட்டுக்களைச் செவ்விய நாவினால் பாடும். தாது -பூந்தாது - மகரந்தம். ஆர்தல் - உண்ணுதல். தமிழ் இயல் - தமிழ்ப்பாட்டு. சேதாரம் - தேமாமரம். தாரம் - நா. மாதேம் நல் - பெரிய இடமுடைய நல்ல. பாளையம் பட்டி எனா பண்பு ஆர் ஊர் சூழ் - பாளையம் பட்டி என்னும் பெயர் களையுடைய அழகு பொருந்திய ஊர்கள் சூழும். எனா - என்னும். பண்பு - அழகு. நகர்காப்பாள் ஐயம்பட்டு இ எனா பற்று - ஊர்க்காவலன் ஐயுற்று ‘இ! யாரது?’ என்னாத ஊர். தேம் - இடம். இ - ஒலிக்குறிப்பு. பற்று - இடம் - ஊர். இங்ஙனம் திருடர் முதலியோர் இல்லாத ஊர் என்பதாம். பாளையம் - குமார பாளையம், சின்னப்ப நாய்க்கன் பாளையம், காளிங்கராயன் பாளையம், பெருமா பாளையம், மாரப்பம் பாளையம், பூலப்பாளையம், அய்யம் பாளையம், மூலப் பாளையம், கரையெல்லைப் பாளையம், விருமாண்டம் பாளையம், வளையக்கார பாளையம், தயிர்ப் பாளையம், மோழ பாளையம், சீத பாளையம், திப்பிசெட்டி பாளையம், சேர்வை காரன் பாளையம், தொட்டிய பாளையம், குறுப்ப நாய்க்கன் பாளையம் முதலியன. பட்டி - காடையாம்பட்டி. ஊர் - பெரிய புலியூர், சின்னப் புலியூர் முதலியன. ஜம்பை முதலிய வேறு பெயருள்ள ஊர்களுங் கொள்க. (6) 12. தாய்க்குத்தா யானாருந் தண்கதலி யின்றாருஞ் சேய்க்குத்தா லாட்டுந் திருநணா - நோய்க்கு மருந்தனையர் மேவு மனைமகிழ நன்க மருந்தனையர் மேவு மனை. தாய்க்குத் தாய் ஆனார் சேய்க்குத் தாலாட்டும் - பாட்டியர் குழந்தைக்குத் தொட்டிலாட்டும். தண் கதலியின் தார் சேய் குத்தால் ஆட்டும் - குளிர்ச்சி பொருந்திய வாழைக்குலை பக்கக் கன்று குத்துதலால் ஆடும். தாய்க்குத் தாயானார் - பாட்டியர். தண்- குளிர்ச்சி. கதலி - வாழை. தார் -குலை. ஆட்டும் என்னும் பிறவினை ஆடும் எனத் தன்வினைப் பொருள் தந்தது. கன்று குலையில் முட்டு தலால் குலை மரத்தை ஆட்டும் என்றுமாம். நோய்க்கு மருந்து அனையர் - நோய்க்கு மருந்து போன்றவர். மேவும் அனை மகிழ நன்கு அமரும் தனையர் மேவும் மனை - விரும்புகின்ற தாய் மகிழும்படி நன்கு அடங்கி நடக்கும் மக்கள் பொருந்தும் ஊர். மேவுதல் - விரும்புதல். அமர்தல் - அடங்கி நடத்தல். தனையர் - மக்கள். மேவுதல் - பொருந்துதல்- வாழ்தல். நோய்க்கு மருந்துபோல் தாயின் துயர் தீர்ப்பவரும், தாய் மகிழும்படி அடங்கி நடப்பவரும் ஆகிய மக்கள் வாழும் ஊர் என்க. மனை - ஊர். (7) 13. நாட்டைவளம் பண்ணுநரு நற்றெளிநீ ருண்ணுநருங் கோட்டைகட்டு வார்வானி கூடலே - ஏட்டுப் படிப்பகத் திற்படுப்பார் பன்னூற் பயனைப் படிப்பகத் திற்படுப்பார் பற்று. நாட்டை வளம் பண்ணுநர் கோடுஐ கட்டுவார் - நாட்டை நீர்வளமுறப் பண்ணுவார் ஏரி குளங்களின் கரைகளை உயர் வாகக் கட்டுவர். நல்தெளிநீர் உண்ணுநர் கோட்டை கட்டுவார் - தென்னை பனையின் நல்ல தெளிவு குடிப்போர் பனையோலை யால் கோட்டை கட்டுவர். கோடு - கரை. ஐ - உயர்வு. தெளிநீர் - பதனி. கோட்டை - பச்சைப் பனையோலையால் கட்டிய தெளிநீர் குடிக்கும் கலம். ஏட்டுப் படிப்பு அகத்தில் படுப்பார் - பள்ளியில் படிப்ப வர்கள், நூல்களைப் படிக்க விரும்புவோர். பல்நூல் பயனை - பல நூல்களில் உள்ள பொருள்களை - கருத்துக்களை. படிப் பகத்தில் படுப்பார் - வாசக சாலையில் அடைவார்கள். படிப்பகம் எனவே, நூலகமும் அடங்கும். பவானியில் கோவைக் கோட்ட நூலகக் கிளை நூலகமும் படிப்பகமும், திருமேனி படிப்பகமும் உள்ளன. பற்று - இடம், ஊர். (8) 14. மெய்ந்நின்ற வாழ்வினரும் மேழிக் கொடியினருஞ் செய்ந்நன்றி மாறாத் திருநணா - குய்ந்நின் றெழும்புகை யில்லா ரெனினுந்தம் மின்னின் றெழுப்புகை யில்லா ரிருப்பு. மெய்ந்நின்ற வாழ்வினர் செய்ந்நன்றி மாறா - உண்மை வாழ்வு வாழ்வோர் பிறர் செய்த உதவியை மறவார். மேழிக் கொடியினர் செய் நன்றி மால் தா - உழவர்கள் வயலினது பயனை மிகுதியாகக் கொடுப்பர்; மிகுதியாக விளைவிப்பர் என்பதாம். உண்மை வாழ்வு - வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல். குய் நின்று எழும் புகை இல்லார் எனினும் - தாளிப்பி லிருந்து மேலே எழுகின்ற புகை இல்லாத வறியவர் என்றாலும். தம் இல் நின்று எழும்புகை இல்லார் இருப்பு - தம் வீட்டை விட்டு இரத்தற்குப் புறப்படாதவர் ஊர். குய் -தாளிப்பு. குய் நின்று எழும் புகை இன்மை - அடுப்பில் தீமூட்டாத அத்தகு வறுமை. மிக்க வறுமையுற்ற போதினும், அதாவது சோற்றுக்கு இல்லாத போதினும் பிறரிடம் ஏற்றுண்ணுதற் பொருட்டு வீட்டை விட்டுப் புறப்படார் என்பதாம். இருப்பு - ஊர். (9) 15. தாயரொளி மிக்கணியுந் தண்டமிழ றப்பணியுஞ் சேயருக்குச் செய்யுந் திருநணா - தூய மலர்மாலை கட்டுவார் வாழ்த்தவய றூற்று மலர்மாலை கட்டுவார் வைப்பு. தாயர் சேயருக்கு ஒளிமிக்க அணி செய்யும் - தாயர் மக்களுக்கு ஒளி பொருந்திய அணியணிந்து அழகு செய்யும். தமிழ் அறப்பணி சேயருக்குச் செய்யும் - தமிழறத்தைப் பரப்புந் தொண்டைத் தொலைவி லுள்ளவர்க்குச் செய்யும். சேயர் - மக்கள். தண்தமிழ் - குளிர்ச்சி பொருந்திய தமிழ். குளிர்ச்சி - எளிமையும் இனிமையும். சேயர் - தொலைவிலுள்ள பிறமொழியினரும், அயல் நாட்டினரும். அயல் தூற்றும் அலர் மாலை கண் துவார் - ஊர்மகளிர் தூற்றுகின்ற அலரினால் இரவில் தூங்கார். அயல் - ஊர்மகளிர். அலர் - களவொழுக்கத்தைப் பற்றி ஊர் மகளிர் பேசுதல். தூற்றுதல் - பலரறியச் சொல்லுதல். துவார் - துவ்வார் - தூங்கார். வைப்பு - ஊர். அலருக் கஞ்சிய அவர் அறத்தொடு நிற்பர். அதனால் விரைவில் திருமணங் கூடும். இதுகாறும் மலர் மாலை வாங்கி யணிந்து வந்தவராகையால், இனி மணமாலை யணிந்து பொலிவர் என்னும் கருத்தால், மலர்மாலை கட்டுவார் வாழ்த்தினரென்க. அறத்தொடு நிற்றல் - உண்மையுரைத்தல். அதாவது தாங்கொண்ட காதலை வெளியிடுதல். (10) 16. மேவாரத் தாரகமு மெய்க்கா தலர்முகமுந் தேவாரம் பாடுந் திருநணா - மாவீழும் பூவைகுழ லார்பாடும் போதுநரம் பார்கிளியார் பூவைகுழ லார்பாடும் போது. மே வாரத்தார் அகம் தேவாரம் பாடும் - மேன்மையான அன்பர் கூட்டம் மூவர் தேவாரப் பாடலைப் பாடும். மெய்க் காதலர் முகம் தே வார் அம்பு ஆடும் - உண்மைக் காதலர் முகங் களில் தேனொழுகும் பூப்போன்றதும் அம்பு போன்றதுமான கண்கள் ஆடும். மே - மேன்மை. வாரம் - அன்பு. அகம் - கூட்டம். இங்கு சைவ அன்பர் கூட்டம். தே - தேன். வார்தல் - ஒழுகுதல். ஆடுதல் - உள்ளக் குறிப்பைக் குறித்துக் காட்டுதல்; ‘கண்ணொடு கண்ணினை நோக்கொத்தல்’ (குறள் - 1100) மா வீழும் பூ வை குழலார் பாடும்போது - வண்டுகள் விரும்புகின்ற பூச்சூடுகின்ற கூந்தலையுடைய பெண்கள் பாடு கின்ற போது. நரம்பார் குழலார் கிளியார் பூவை பாடும் - நரம்புக் கருவியும் குழலும் கிளியும் பூவையும் பாடும். மா - வண்டு. வீழ்தல் - விரும்புதல். நரம்புக் கருவி - வீணை, கின்னரம் (வயலின்) முதலியன. குழல் - புல்லாங்குழல் முதலியன. பூவை - மைனா என்னும் பறவை. போது - எழில்மிக்க இடம். பெண்கள் பாடும்போது, நரம்பு குழல் முதலிய பின்னணிக் கருவிகள் இசைக்கப்படும்; அவர் பாடுவதைக் கேட்டுக் கிளியும் பூவையும் பாடும் எனினுமாம். (11) 17. வீடுதொறும் வானொலியும் மேலோர் நலம்பொலியும் பாடிமகிழ் பூட்டும் பவானியே - கூடுதுறை யாடுந னாடா னடும்போட்டி யிற்களைப்பை யாடுந னாடா னகம். வீடுதொறும் வானொலி பாடி மகிழ்பு ஊட்டும் - வீடுகள் தோறும் வானொலி பாடி மகிழ்ச்சியை யுண்டாக்கும். மேலோர் நலம்பொலியும் பாடி மகிழ் பூட்டும் - மேன்மக்கள் நன்மை மிக்க ஊரினர் கள்ளுண்டலைத் தடுக்கும். மகிழ்பு - மகிழ்ச்சி. நலம் பொலியும் - நன்மை மிக்க. பாடி - ஊர். இங்கு இடவாகுபெயராய் ஊரிலுள்ள குடியரைக் குறித்தது. மகிழ் - கள், கள்ளுண்டு களித்தல். பூட்டுதல் - தடுத்தல், நீக்குதல். கூடுதுறை ஆடும் நல் நாள்தான் - உவா (அமாவாசை) கிரகணம், ஆண்டுப் பிறப்பு, தலையாடி, ஆடிப் பதினெட்டு, ஐப்பசி போன்ற நன்னாட்களில் மக்கள் வந்து கூடுதுறையில் குளிப்பர். ஆடுநன் அடும் போட்டியில் களைப்பை நாடான் - விளையாடுவோன் வெற்றிபெறும் போட்டி விளையாட்டில் களைப்பைப் பொருட்படுத்தான். அடுதல் -வெற்றி பெறுதல். அகம் - இடம். கூடுதுறை - காவிரியுடன் வானியாறு கூடும் இடம். (12) 18. பிள்ளையறி யாமையையும் பெய்புலத்துத் தீமையையும் பள்ளி களையும் பவானியே - தெள்ளுதமிழ்க் கட்டி யெடுத்துவைப்பார் கட்டத்தி லார்க்குணவுக் கட்டி யெடுத்துவைப்பார் காப்பு. பிள்ளை அறியாமையை பள்ளிகளையும் - இளமைப் பருவத்தின் அறியாமையைப் பள்ளிக்கூடம் போக்கும். பெய் புலத்துத் தீமையை பள்ளிகளையும் - நாற்றுநட்ட வயலிலுள்ள புல்லைப் பள்ளன் மனைவி பிடுங்கி யெறியும். பெய்புலம் - நாற்று நட்ட வயல். பெய்தல் - நடுதல். புலம் - வயல். தீமை - புல்; பயிர்க்குத் தீங்கு செய்வது. பள்ளி - பள்ளிக் கூடம், பள்ளன் மனைவி. பள்ளர்- வயலுழுவோர், மருதநில மக்கள். களைதல் - நீக்குதல். தெள்ளு தமிழ் கட்டி எடுத்து வைப்புஆர் கட்டத்தில் - தமிழ் மகனாகிய கட்டி மரபினன் கட்டிய கூடுதுறையில், இலார்க்கு உணவுக்கட்டி எடுத்துவைப்பார் - ஏழைகளுக்குச் சோறு போடுவார். எடுத்தல் - கட்டுதல்; புது வீடெடுத்தல் எனக் காண்க. வைப்பு ஆர் - வைத்தல் பொருந்திய, வைத்த. வைப்பு - வைத்தல்; தொழிற் பெயர். எடுத்துவைத்தல் - எடுத்தல். கட்டம் - நீராடுந் துறை, படித் துறை. இங்கு கூடுதுறை. சிறப்பு நாட்களில் கூடு துறையில் ஏழைகளுக்குச் சோறாக்கிப் போடுவர். காப்பு - ஊர். கட்டி மரபினர் வரலாற்றை 9-ஆம் பாட்டுரையில் காண்க. (13) 19. வையாருஞ் சொற்குவையை வாய்நாறும் பாற்சுவையைச் செய்யா னளிக்குந் திருநணா - செய்யா நகைக்கடையார் செல்வ நலங்காணாப் பூணு நகைக்கடையார் செல்வ நகர். வை ஆரும் சொல் குவையைச் செய்யான் அளிக்கும் - வைக்கோலிற் பொருந்திய நெற்பொலியை நிலத்துக்குடையவன் உதவும். வாய் நாறும் சுவைப் பாலைச் செய் ஆன் அளிக்கும் - வாய் மணக்கும் சுவையுடைய பாலை நிலத்தில் மேயும் மாடுகள் கொடுக்கும். வை - வைக்கோல். ஆர் - பொருந்திய. சொல் - நெல். குவை - பொலி - குவியல். நாறும் - மணக்கும். பால்சுவை - சுவைப்பால். செய் - நிலம். ஆன் -மாடு. செய்யா நகைக்கு அடையார் - பிறர் பழிக்கும்படி நடந்து கொள்ளார்; கெட்ட வழியில் நடவார். செய்யா நகை - சிரிப்பு, பழிப்பு. இது வெளிப்படை. செல்வம் நலம் காணப் பூணும் - தமது செல்வச் சிறப்பைப் பிறர் காணும் பொருட்டு அணியும். நகைக்கடை ஆர் நகர் - நகைக் கடைகள் பொருந்திய ஊர். (14) 20. பொற்புடம்பு மேவியரும் போதுநிழ லோவியரும் நற்படம்பி டிக்குமொளிர் நண்ணாவே - சொற்படும்புல் வாய்ப்பேசி மீக்கூர்வார் வாய்வாய்த் தொலைப்பேசி வாய்ப்பேசி மீக்கூர்வார் வாய். பொற்பு உடம்பு மேவியர் நற்பு அடம்பு இடிக்கும் - அழகிய உடல் பொருந்திய சிறுமியர் நன்கு அடம்பை இடிப்பர்; போது நிழலோவியர் நல் படம் பிடிக்கும் - அழகிய படம் பிடிப்போர் நன்கு படம் பிடிப்பர். பொற்பு - அழகு. நற்கு - நன்கு. அடம்பு - ஒருவகைக் கொடி. இதன் இலையை இடித்துப் பொடியாக்கி அழுக்குப் போக உடம்புக்குத் தேய்த்துக் கொள்ளுதல் உண்டு. போது - அழகு. நிழலோவியர் - போட்டோக் கிராப்பர். ஒளிர் நண்ணா - விளங்கு கின்ற திருநணா. பவானியில் - அஜந்தா போட்டோ ஸ்டுடியோ, கிருஷ்ணா போட்டோ ஸ்டுடியோ, ஜெயம் போட்டோ ஸ்டுடியோ என்னும் மூன்று நிழலோவியச் சாலைகள் உள்ளன. சொல்படும் புல்வாய்ப்பு ஏசி மீக்கு ஊர்வார் - புகழ் கெடுதற் கேதுவான புல்லிய பேற்றை இகழ்ந்து உயர்வான செயலையே மேற்கொள்வார். வாய்வு ஆய் - வாய்ப்பாக - நன்கு. தொலைப் பேசி - வாய் - தொலைப்பேசியின் வாய் பேசி மீக்கூர்வார் - தொலைப்பேசி மூலம் பேசி மேம்படுவார். சொல் - புகழ். படுதல் - கெடுதல். புல்வாய்ப்பு - புல்லிய பேறு. வாய்ப்பு - பேறு, உறுபயன். ஏசுதல் - தீய பயனுறும் செயலினை இகழ்ந்து, செய்யாமை. மீ - உயர்வு. ஊர்தல் - மேற்கொள்ளுதல். வாய்வு - நன்கு. தொலைப் பேசிவாய் - தொலைப்பேசியின் மூலம். தொலைப்பேசி - டெலிபோன். மேம்படுதல் - வணிகத் துறையில் மேம்படுதல். வாய் - இடம். (15) 21. தாடருமேம் பாடுஞ் சமுக்காளப் பண்பாடும் நாடுமேற் கொள்ளு நணாவூரே - கூடுதுறை யாடிக் களிப்பா ரருளொடுசெல் வார்க்காலை யாடிக் களிப்பா ரகம். தாள் தரும் மேம்பாடு நாடுமேல் கொள்ளும் - முயற்சி யால் உண்டாகும் மேன்மையை ஆராயின் மேற்கொள்ளும். அதாவது முயற்சியால் உண்டாகும் மேம்பாட்டினை ஒருவர் ஆராய்ந் தறிந்தால் அம்முயற்சியை மேற்கொள்ளும் என்பதாம். தாள் - முயற்சி. சமுக்காளப் பண்பாடு நாடு மேற்கொள்ளும் - சமுகாளத்தின் தொழிற்றிறமைச் சிறப்பினை நாட்டினர் மேன்மையாகக் கொண்டு பாராட்டுவர். நாடு - உலக நாடுகள். பண்பாடு - நல்ல வேலைப் பாடு, தனிச் சிறப்பு. பவானிச் சமுக் காளம் உலகப் புகழ் பெற்றது. கூடுதுறை ஆடிக் களிப்பார் - கூடுதுறையில் குளித்து மகிழ்வார். செல்வார்க்கு அருளொடு ஆலையாடு இக்கு அளிப் பார் - வழிச் செல்வோர்க்கு அருளினால் ஆலையாடு கின்ற கருப்பஞ்சாறு வழங்குவர். இக்கு - கரும்பு. கரும்புச் சாற்றோடு கரும்புங் கொடுப்பர். அகம் - இடம். (16) 22. இலகுறுநல் வாழ்நருங்கொய் தீர்தச் சருஞ்செய் பலகைத் தொழிலார் பவானி - உலகவழக் கைக்கடையார் வாய்மை கலவார் விரும்புமளி கைக்கடையார் வாய்மைக் களம். இலகுறு நல் வாழ்நர் செய் பல கைத்தொழில் ஆர் - விளங்கு கின்ற நல் வாழ்வினை யுடையார் செய்யும் பலவகைப் பட்ட கைத் தொழில்கள் பொருந்தும். கொய்து ஈர் தச்சர் செய் பலகைத் தொழில் ஆர் -செதுக்கியும் அறுத்தும் தச்சர் செய்யும் மரபுத்தொழில்கள் பொருந்தும். இலகுதல் - விளங்குதல். இலகுறு நல்வாழ்வு - மேம் பாடான சிறந்த வாழ்வு. கொய்தல் - வெட்டுதல், செதுக்குதல். ஈர்தல் - அறுத்தல், துளைத்தல். பலகை - பலகை, மரம். உலக வழக்கை கடையார் - உலக வழக்கைக் கெடுக்கார். வாய்மை கலவார் - சொல்லின்கண் குற்றங் கலவார். வாய்மை விரும்பும் மளிகைக் கடையார் களம் - உண்மையை விரும்பு கின்ற மளிகைக் கடைக்காரர் வாழும் இடம். உலக வழக்கு - உயர் குடி மக்கள் ஒழுகும் ஒழுக்கம். கடைதல் - தேய்த்தல், கெடுத்தல். வாய் - வாக்கு - சொல். மை - குற்றம். வாய்மை - உண்மை. மளிகைக் கடை - பலசரக்குக் கடை. களம் - இடம். (17) 23. கமஞ்சூலுங் கண்ணயலுங் கண்டு கதழ்ந்து ஞமலி யகவு நணாவே - அமிழ்தங் கசக்குந் தமிழ்ச்சொல்லார் காதுங் கருத்துங் கசக்குந் தமிழ்ச்சொல்லார் காப்பு. கமஞ்சூல் கண்டு கதழ்ந்து ஞமலி அகவும் - முகிலைக் கண்டு விரைந்து மயில் ஆடும், கண் அயல் கண்டு கதழ்ந்து ஞமலி ஆகவும் - வருகின்ற அயலாரைக் கண்டு விரைந்து நாய் குலைக்கும். கமஞ்சூல் - முகில். கண் அயல் வருகின்ற அயலார். கதழ்ந்து - விரைந்து. ஞமலி - மயில், நாய். அகவல் - ஆடுதல். அழைத்தல் - குலைத்தல். அமிழ்தம் கசக்கும் தமிழ்ச் சொல்லார் - பாலும் ஒப்பா காத இனிமையான சொல்லையுடையார். காதும் கருத்தும் கசக்கும் தமிழ் சொல்லார் - கேட்போர் காதும் கருத்தும் வெறுக்கும் படியான கொச்சைத் தமிழ் பேசமாட்டார். அமிழ்தம் - பால். கசத்தல் - ஒப்பாகாமை; சொல்லின் இனிமை பாலுக்கின்மை. தமிழ் - இனிமை. கசத்தல் - வெறுத்தல். கசக்கும் தமிழ் - கொச்சைத் தமிழ். ‘தமிழ் சொல்லார்’ என்பது இயல்பின் விகாரம். காப்பு - ஊர். (18) 24 பாயங் கயல்வளமும் பட்டுநூற் கம்பளமுந் தேயம புகழுந் திருநணா - நேயம்பு கட்டிவளஞ் செய்வார் களைகளைந்து காவெனணை கட்டிவளஞ் செய்வார் களம். பாய் அம் கயல் வளம் தேய் அம்பு உகழும் - நீந்துகின்ற அழகிய கெண்டை மீன் கூட்டம் குறைந்த நீரில் துள்ளும். பட்டு நூல் கம்பளம் தேயம் புகழும் - பட்டாலும் பருத்தி நூலாலும் நெய்யப் படும் சமுக்காளம் உலகம் புகழும். பாய்தல் - நீந்துதல். அம் - அழகிய. கயல் - கெண்டை மீன். கம்பளம் - சமுக்காளம் . தேய்தல் - குறைதல். அம்பு - நீர். உகளுதல் - துள்ளுதல். உகள் - உகழ் - போலி. நேயம் புகட்டி - பயிர்த் தொழிலின்மீது அன்புண்டாகும் படி அறிவுரை கூறி. செய் வளம் வார் - நிலத்திற்கு நன்கு எருப் போடு. களை களைந்து காஎன - புல்லில்லாமல் களைந்து, நோயணு காமலும், ஆடுமாடுகள் தின்னாமலும் காவல் செய் என்று கூறி. இது அணை கட்டி வளஞ் செய்வார் கூற்று. அணை கட்டி வளம் செய்வார் - ஆற்றில் அணைகட்டி நீர்வளம் உண் டாகும் படி செய்வார். இது பவானிக்கருகில் வானி யாற்றில் கட்டப்பட்டுள்ள காளிங்கராயன் அணையைக் குறிக்கும். 57-ஆம் பாட்டுரை பார்க்க. நேயம் - அன்பு. வளம் - எரு. செய் - நிலம். செய்வார் - கால வழுவமைதி. களம் - இடம். (19) 25. மாலையறு வைக்கடையில் வாவியுள்ளா னீர்க்கிடையிற் சேலை யெடுக்குந் திருநணா - நூலை யிழைத்துப் பிழைப்பா ரெனினுமில் லோர்க்குக் கழைத்துப் பிழைப்பார் களம். மாலை அறுவைக் கடையில் சேலை எடுக்கும் - வரிசை யாக உள்ள துணிக் கடையில் துணிகள் வாங்குவர். வாவி உள்ளான் நீர்க் கிடையில் சேலை எடுக்கும் - பாய்ந்து மீன் கொத்திப் பறவை நீர் நிலையில் கெண்டை மீனை எடுக்கும். மாலை - வரிசை. மாலை வேளையுமாம். அறுவை - ஆடை. அறுவைக் கடை -துணிக்கடை (ஜவுளிக் கடை). வாவுதல் - பாய்தல். உள்ளான் - மீன்கொத்திப் பறவை. சேல் - கெண்டை மீன். நூலை இழைத்துப் பிழைப்பார் எனினும் - நூல் சுற்றிப் பிழைப்பாரானாலும். இல்லோர்க்கு கழை துப்பு இழைப்பார் - ஏழைகட்குக் கரும்பு போன்ற இனிய உணவை இடுவர். நூல் இழைத்தல் - தாறுச் சுற்றுதல். கழை - கரும்பு; இனிமைக்கு எடுத்துக் காட்டு. துப்பு - உணவு. இழைத்தல் - இடுதல். எளிய வாழ்வு வாழினும் தம்மிடம் வந்த ஏழைகட்கு நல்லுணவிட்டுப் போற்றுவர் என்பதாம். இது குடிப்பிறந்தார் பண்பு. 105-ஆம் பாட்டைப் பார்க்க. களம் - இடம். (20) 26. குழந்தைவிளை யாட்டாருங் கூடுதுறை யூரும் பழந்தமிழ்நா டொக்கும் பவானி - செழுந்தமிழ்மேம் பாட்டுக் குழைப்பார் பசும்பொடியை யெண்ணெய்தேய்ப் பாட்டுக் குழைப்பார் பதி. குழந்தை விளையாட்டு ஆர் பழம் தமிழ் நாடு ஒக்கும் - இளங் குழந்தைகள் விளையாடுதல் பழத்தின் இனிமையை நாடு தலை ஒக்கும். கூடுதுறை ஊர் பழந்தமிழ் நாடு ஒக்கும் - ஒன்று கூடும் இரண்டாறுகளும் பவானியும் பழந்தமிழ் நாட்டை ஒக்கும். விளையாட்டு ஆர் - விளையாடல். கூடுதுறை - ஒன்று கூடும் இரண்டாறுகள்; வானியும் பொன்னியும். துறை - ஆறு. ஊர் - பவானி. இளங் குழந்தைகள் பொம்மை முதலிய பொருள்களை எடுத்தும் வாயில் வைத்தும் எறிந்தும் விளையாடும். அது பழத்தை எடுத்து மோந்து பார்த்தும் சுவைத்துப் பார்த்தும் நல்ல பழங் களைத் தேர்ந்தெடுத்தலை ஒக்கும். தமிழ் - இனிமை, நன்மை. ஊரின் இரு பக்கமும் வந்து இரண்டாறுகள் கூடும் தோற்றம் பழந்தமிழ் நாட்டைப் போலும். பழந்தமிழ் நாடு - கடைச் சங்க காலத்துக்கு முன்னர், மலையாள நாடு சேர நாடாக இருந்த தமிழ் நாடு. அப்பழந் தமிழ் நாடு மூன்று பக்கமும் கடல் சூழ இருந்தது போலவே, பவானி மூன்று பக்கமும் ஆறு சூழ அமைந்திருக்கிறது. தமிழ் மேம்பாட்டுக்கு உழைப்பார் - தமிழின் மேன்மைக்கு - வளர்ச்சிக்கு - பாடுபடுவார். பசும்பொடியை எண்ணெய் தேய்ப்பு ஆட்டுக் குழைப்பார் - அரைப்பை எண்ணெய் தேய்த்து நீராடக் கரைப்பார். பசும்பொடி - அரைப்பு. சீக்காய்த்தூள், பாசிப்பயிற்று மா முதலியனவுங் கொள்க. ஆட்டு - ஆட. பதி - ஊர். (21) 27. வற்றா மழைநீரும் மாவிடையும் பாவிடையுஞ் சிற்றாறு பாயுந் திருநணா - பெற்றோரை யூட்டிப்பின் னுண்பா ருவந்தோர்க் குறுதியுரை யூட்டிப்பின் னுண்பா ருறை. (1) வற்றா மழைநீர் சிறு ஆறு பாயும் - வற்றாத மழைநீர் சிற்றாற்றில் செல்லும். (2) மா விடை சில் தாறு பாயும் - வண்டுக் கூட்டம் சிறிய பூக்குலையிற் சென்று தேனுண்ணும். (3) பா இடை சில் தாறு பாயும் - நூற்பாவின் ஊடே சிறிய நூற்றாறு செல்லும். இது ஊடை. மா - வண்டு. விடை - கூட்டம். மாவிடை - வண்டுக் கூட்டம். பா - நூற்பா - துணி நெய்யும் பா. பெற்றோரை ஊட்டிப் பின் உண்பார் - பெற்றோரை உண்பித்துத் தாம் பின்பு உண்பர். வயது சென்ற பெற்றோர்க்கு உண விட்டு உண்ணுதல் பேரறமாகும். உவந்தோர்க்கு உறுதி யுரை ஊட்டி பின்னுண்பார் - விரும்பினோர்க்கு அறிவுரை புகட்டி நட்புக் கொள்வர். விரும்பினோரிடம் நட்புக் கொண்டு அறிவுரை புகட்டி நல்லோராக்குவரென்பதாம். பின்னுண்ணல் - நட்புக் கொள்ளுதல். உறை - இருப்பிடம். (22) 28. தகையெய்து மூரலருஞ் சால்பொற் கொலரு நகைசெய்து வாழு நணாவே - வகைவகையாத் தையல ருள்ளமிகுஞ் சார்பு தகத்தைக்குந் தையல ருள்ளமிகுஞ் சார்பு. தகை எய்து - தகுதி வாய்ந்த. மூரலர் - நகைச்சுவை யாளர், முதிர்ந்தவர். தகை எய்து மூரலர் - தகுதி வாய்ந்த நகைச் சுவையாளர், தகுதியில் முதிர்ந்தவர் - தகுதி மிக்கவர். இவ்விரு பொருளும் கொள்க. (1) தகை எய்து மூரலர் நகை செய்து வாழும் - தகுதி வாய்ந்த நகைச்சுவையாளர் நகைச்சுவையால் பிறரைச் சிரிக்க - மகிழச் செய்து வாழும். (2) தகை எய்து மூரலர் நகை செய்து வாழும் - தகுதி மிக்கவர் சிறந்த ஒழுக்கமுடையராய் வாழும். ந - சிறப்பு. கை- ஒழுக்கம். கை செய்தல் - ஒழுகுதல். (3) சால் பொன் கொல்லர் நகை செய்து வாழும் - சிறந்த பொற் கொல்லர் பொன்மணி நகைகள் செய்து வாழும். தையலர் உள்ளம் மிகும் சார்பு தக - பெண்களின் மனம் மிகவும் விரும்புவது போல. வகைவகையாத் தைக்கும் - விதவித மாகத் தைக்கும். சார்தல் - விரும்புதல். தையலர் உள்ளம் மிகும் சார்பு - தையற்காரர் முயற்சியால் மிகும் இடம். முயற்சியால் மிகல் - முயன்று வேலைப்பாட்டில் உயர்வடைதல். உள்ளம் - ஊக்கம், முயற்சி. சார்பு - இடம். (23) 29. செந்தமிழாய் வோரிடத்துஞ் சிற்றிளைஞ ருண்ணிடத்துஞ் சிந்தனக்குன் றோங்குந் திருநணா - வந்தவர்க்குப் பட்டுவிரிப் பார்தமிழ்த்தீம் பாறருவார் பார்புகழ்நூல் பட்டுவிரிப் பார்தமிழ்தீம் பால். செந்தமிழ் ஆய்வோர் இடத்து சிந்தனம் குன்று ஓங்கும் - நல்ல தமிழை ஆராய்வோரிடம் பெரிய எண்ணங்கள் தோன்றும். சிற்றிளைஞர் உண் இடத்து சிந்து அனம் குன்று ஓங்கும் - இளங் குழந்தைகள் உண்ணும் இடத்தில் சிந்துகின்ற அன்னங் குன்று போலக் குவியும். சிந்தனம் - சிந்தனை; சிந்தனையாகிய குன்று - உருவகம். அன்னம் - சோறு. குன்று - மிகுதி. தம் வீடு அல்லது கடைக்கு வந்தவர்க்கு; பட்டு விரிப்பார் - பட்டுச் சமுக்காளம் விரித்து உட்கார வைப்பார். தமிழ்த் தீம் பால் தருவார் - இன் சொல் சொல்லித் தேநீர் தருவார். பார்புகழ் நூல் பட்டு விரிப்பார் - உலகம் புகழும் நூல். பட்டுச் சமுக்காளத் தொழிலையுடையார் வாழும். தமிழ்த் தீம்பால் - மிக்க இனிமை யான இடம். தமிழ் - இனிமை. விரிப்பு - சமுக்காளம். விரிப்பார் - சமுக்காளத் தொழிலையுடையார். நூல் பட்டு விரிப்பு - நூல் சமுக்காளமும் பட்டு சமுக்காளமும். தமிழ் - இனிமை. தீம் - தித்திப்பு, இனிமை. தமிழ்த் தீம் - மிக்க இனிமை. பால் - இடம். (24) 30. பூவையர்பூஞ் செவ்வாயும் பூந்துறையு மீந்துறையுங் கோவை நிகர்வானி கூடலே - பாவை யனையார் கணிப்பா ரகப்படுசெல் வங்கை யனையார் கணிப்பா ரகம். (1) பூவையர் பூ செவ்வாய் கோவை நிகர் - பெண்களின் அழகிய இதழ் கோவைப் பழத்தை ஒக்கும். (2) பூந்துறை கோவை நிகர் - அழகிய கூடுதுறை தாழ்வடத்தை யொக்கும். தாழ்வடம் - மகளிர் கழுத்தில் அணியும் பொற்சங்கிலி. மார்பில் சங்கிலி தொங்குவது போல் உள்ளது கூடுதுறை. ஊர் - மார்பு. இரண்டாறு களும் கூடுவது - சங்கிலி. (3) ஈம் துறை கோவை நிகர் - ஈவோர் பால் மாட்டை ஒப்பர். ஈம் துறை - ஈயும் இடம் - ஈவோர். ஈம் - ஈயும். துறை - இடம். கோ - மாடு. “சுரந் தமுதம் கற்றாதரல் போல் கரவா தளிப்பரேல்” என்பது காண்க. பூ - அழகு. பாவை அனையார் கண் - தலைவியர் பால். இப்பார் அகப்படு செல்வம் - களவொழுக்கத்தை, கைஅனையார் கணிப்பார் - செவிலித் தாயர் ஆராய்வர். இப்பார் அகப்படு செல்வம் - இவ்வுலக இன்பப் பேறு - கள வொழுக்கம். பார் -உலகம். தலைவியின் களவைச் செவிலி ஆராய்தல் - நாட்டம் எனப்படும். அது நாண நாட்டம், நடுங்க நாட்டம் என இரு வகைப்படும். கணித்தல் - ஆராய்தல். அகம் - இடம். அவ்வாறு ஆராயும் தாயர் வாழும் இடம். (25) 31. மாக்கண் வளருநரும் வன்குருகும் பொன்குருகுஞ் சேக்கை கிடக்குந் திருநணா - பூக்குமதி யாசிரி யப்பயிற்சி யாமரசர் கல்லூரி யாசிரி யப்பயிற்சி யாம். (1) கண் வளருநர் சேக்கை கிடக்கும் - தூங்குவோர் படுக் கையில் படுக்கும். (2) வண் குருகு சேக்கை கிடக்கும் - இளம் பறவைக் குஞ்சு கூட்டில் இருக்கும். (3) பொன் குருகு சே கை கிடக்கும் - பொன் வளையல் சிவந்த கையில் கிடக்கும். மா - கரிய. கண் வளர்தல் - தூங்குதல். குருகு - பறவை, வளையல். சேக்கை - படுக்கை, குருவிக் கூடு. பூக்கும் மதி - மலரும் அறிவு. ஆசுஇரிய - குற்றம் அகல. பயிற்சி ஆம் - பயிற்சி பெறும். அரசர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி ஆம் - அரசினர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி இருக்கும் இடம் ஆகும். மலர்தல் - விரிதல். மதி - மனம், அறிவு. ஆசு - குற்றம், அறியாமை. அறிவில் உள்ள குற்றம். அகல - நீங்க. அரசினர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி, பவானிக் குமாரபாளையத்தில் இருக்கிறது. இது 1955-ல் ஏற்பட்டது. (26) 32. முற்றா மொழிச்சியரும் மோழையருங் காளையருஞ் சிற்றாடை கட்டுந் திருநணா - கற்றாரைத் தம்மனைக்கண் போற்றுவார் தாய்மொழியாந் தண்டமிழைத் தம்மனைக்கண் போற்றுவார் சார்பு. (1) முற்றா மொழிச்சியர் சிற்றாடை கட்டும் - சிறுமியர் சிற்றாடை உடுத்துவர். (2) மோழையர் சில் தாள் தை கட்டும் - மொட்டையடித்துக் கொண்டவர் சிறிய கயிற்றை அழகாகக் கட்டிக் கொள்ளும். தாள் - கயிறு. தை - அழகு. மொட்டை யடித்துக் கொண்டவர் கறுப்புக் கயிற்றை அழகுக்காகக் கையில் கட்டிக் கொள்ளுதலை அறிக. (3) காளையர் சில்தாடை கட்டும் - இளைஞர்க்குச் சிறிய தாடி முளைக்கும். இளைஞர்க்கு முகத்தில் மயிர் அரும்பும் என்பதாம். மனை - வீடு. தமிழைத் தம் அனை கண் போற்றுவார் - தமிழைத் தம் தாய் போலவும் கண் போலவும் போற்றுவார். அனை - அன்னை. சார்பு - இடம். (27) 33. காவியங்கண் ணார்களவுங் கைக்கொள்ளற் காமளவும் பாவலர் தூற்றும் பவானியே - ஆவணஞ்சென் றேனங்கை வாங்குவா ரிற்குடைய திக்கடையென் றேனங்கை வாங்குவா ரில். காவி அம் கண்ணார் களவு பா அலர் தூற்றும் - கருங்கு வளை போன்ற அழகிய கண்களையுடையார் களவொழுக்கத் தைப் பரந்த அலர் தூற்றும். பரந்த - மிக்க. அலர் தூற்றல் - களவொழுக்கத்தைப் பற்றிப் பேசுதல். கைக்கொள்ளற்கு ஆம் அளவு - கைக் கொள்ளத் தக்க அறத்தை. அதாவது நல்லறம். பாவலர் தூற்றும் - புலவர்கள் பரப்பும். புலவர்கள், அறத்தைக் கடைப்பிடித்து நடக்கும்படி மக்கட்கு அறிவுறுத்துவரென்ப தாம். அளவு - அறம். ஆவணம் சென்று - கடைத் தெருவுக்குப் போய், ‘ஏன் நங்கை! வாங்குவார் இற்கு உடையது இக் கடை’ இது ஒருத்தி கூற்று. இற்கு உடையது - வாங்குவார் வாழ்க்கைக்குத் தகுதி யுடையது. அதாவது வேண்டிய தகுதியான ஏனங்கள் உடையது. என்று - என்று கூறிக்கொண்டு. ஏனம் கை வாங்குவார் - பாத்திரங்கள் வாங்குவார். ஏனம் - பாத்திரம். கை - துணைவினை. கைவாங்குவார் - வாங்குவார். கையால் வாங்குவார் எனினுமாம். இல் - இடம். (28) 34. தாய்மை யிரும்பலனைத் தன்னலமற் றோர்நலனைச் சேய்மை விரும்புந் திருநணா - வாய்மை கடைப்பிடித்தார் மேவுங் களஞ்சார் வழிப்போக் கடைப்பிடித்தார் மேவுங் களம். தாய்மை இரும் பலனை சேய் மை விரும்பும் - தாயெரு மையின் மிக்க பாலை இளங் கன்று விரும்பும். தன்னலம் அற்றோர் நலனை சேய்மை விரும்பும் - தன்னலமற்றோர் நற்குணத்தை, நல்வாழ்வை - தொலைவிலுள்ளோர் விரும்புவர். மை - எருமை. பலன் - பால். நலன் - நற்குணம், நல்வாழ்வு. சேய்மை - தொலைவு, தொலைவிலுள்ளோர். வாய்மை கடைப் பிடித்தார் மேவும் - உண்மை கடைப் பிடித்தொழுகுவோரைப் பொருந்தும். களம் சார் வழிப்போக்கு அடைப்பு இடித்தார் - இடத்தை அடையும் வழியில் செல்லும் போதுள்ள தடையைப் போக்கினார். மேவுதல் - பொருந்துதல், நட்புக் கொள்ளுதல். நட்புக்கு வரும் இடையூற்றைப் போக்கி, நட்பைக் கடைப்பிடித்து நடப்போர் என்பதாம். அடைப்பு - தடை. இடித்தல் - அத்தடையைப் போக்குதல். மேவும் - பொருந்தி யிருக்கும். களம் - இடம். (29) 35. பல்வணிக ரின்குழுவும் பாய்நீர்ப் பசுங்கழிவுஞ் செல்வங் குவிக்குந் திருநணா - கல்விப் பொருளாக்கு விப்பார் புயல்போலத் தீம்பா லருளாக்கு விப்பா ரகம். பல் வணிகரின் குழு செல்வம் குவிக்கும் - பல வணிகர் கூட்டம் பொருளை மேன்மேல் ஈட்டும். பாய் நீர் பசும் கழிவு - நீர் செல்லும் புதிய வாய்க்கால்; அதாவது புதிதாக நீர் செல்லும் வாய்க்கால். செல் வங்கு விக்கும் - நீர் செல்லுகின்ற வங்கை நிரப்பும். வங்கு - வெடிப்பு, குழி. கல்விப் பொருள் ஆக்குவிப்பார் - கல்வியாளராக்குவார். புயம் போல தீம்பால் அருள் ஆ குவிப்பார் - மேகம்போலத் தித்திப்பான பால் தரும் மாடுகளைப் பெருகச் செய்வார். மாடு தமிழ் நாட்டின் சிறந்த செல்வமாகும். அகம் - இடம். (30) 36. பூப்பழகு நற்றலையைப் பொற்கனிவா ழைக்குலையைச் சீப்பழகு செய்யுந் திருநணா - மூப்பு வருமுன் னறஞ்செய்வார் வான்புகழோ டின்பு வருமுன் னறஞ்செய்வார் வாழ்வு. பூ பழகு நல் தலையை சீப்பு அழகு செய்யும் - பூ வைக்கின்ற அழகிய தலை மயிரைச் சீப்பு அழகு செய்யும். பொன்கனி வாழைக் குலையை சீப்பு அழகு செய்யும் - பொன் போன்ற பழங்களையுடைய வாழைக் குலையைச் சீப்பு அழகு செய்யும். சீப்பு - மயிர் வாருங் கருவி, வாழைச் சீப்பு. மூப்பு வருமுன் அறஞ் செய்வார் - முதுமைப் பருவம் வரு முன்னர் அறங்கள் செய்வார். வான் புகழோடு இன்பு வரும் - மிக்க புகழோடு இன்பம் வளரும், மிகும். முன் அறம் செய்வார் - இல்லறம் நடத்துவார். வாழ்வு - வாழுமிடம் - ஊர். துறவறம் இல்லறத்தின் பின் நிகழ்தலான், இல்லறம் ‘முன்னறம்’ எனப் பட்டது. புகழும் இன்பமும் வளரும் இல்லறம் என்க. (31) 37. திங்களுந்து சோலையினிற் றேனினமு மீனினமுங் கொங்கருந்தி வாழ்வானி கூடலே - பொங்கியவான் பானிச்ச முக்காளம் பாற்பயன்போற் பார்புகழ்ப வானிச்ச முக்காள வைப்பு. திங்கள் உந்து சோலையினில் தேனினம் கொங்கு அருந்தி வாழ் -சந்திரனை முட்டும்படி உயர்ந்த சோலையில் வண்டுகள் தேனை யுண்டு வாழ்கின்ற. மீனினம் கொங்கர் உந்தி வாழ் - மீன்கள் காவிரியாற்றில் வாழ்கின்ற. தேன் - வண்டு. கொங்கு - தேன். உந்தி - ஆறு. கொங்கர் - கொங்கு நாட்டார். காவிரி தோன்றும் மேற்குத் தொடர்ச்சி மலை கொங்குநாட்டைச் சேர்ந்ததாகலின், காவிரி கொங்கர் ஆறு எனப் பட்டது. வானியாறுங் கொள்க. பொங்கிய ஆன்பால் நிச்சம் முக்கு ஆள் -மிக்க மாட்டுப் பாலை எப்போதும் குடிக்கின்றவன். அம்பால் பயன்போல் - தோட்டத்தில் சிறந்த பயனைக் கொள்வதுபோல. நிச்சம் - எப் போதும். முக்குதல் - உண்ணுதல். அம்பால் - தோட்டம். எப்போதும் மாட்டுப் பால் மிகுதியாக உண்பவன் நல்ல உடலுறுதியுடன் இருப்பான் ஆகையால், அவன் திறமை யாகப் பாடுபட்டு நிலத்தில் மிகுந்த பலன் எடுப்பான். அதுபோல, சிறப்புடன் நெய்யும் பார்புகழ் பவானிச் சமுக்காளத்தின் இருப்பிடம் கூடல் என்பதாம். வைப்பு - இடம். திங்களுந்து சோலை - உயர்வு நவிற்சி யணி. (32) 38. வம்பலர்தங் கைத்தலத்தை வாட்டுவறு மைக்குலத்தைச் செம்பொன் றணிக்குந் திருநணா - அம்புலியை வானிவந்து போதருமார் மாபந்தாச் சிற்றிளைஞர் கானிவந்து போதருமார் காப்பு. வம்பலர்தம் கைத்தலத்தை செம்பு ஒன்று அணிக்கும் - விருந்தினர் கையை நீர்ச் செம்பு பொருந்தி அழகு செய்யும். ஒன்றுதல் - பொருந்துதல். உண்ணுநீர் கொடுத்து வரவேற்றல். வாட்டு வறுமைக் குலத்தை செம்பொன் தணிக்கும் - வருத்து கின்ற மிக்க வறுமையை சிவந்த பொன் போக்கும். வாட்டுதல் - வருத்துதல். குலம் - மிகுதி. பொன் - பொருள். அம்புலியை வான் நிவந்து போதரும் - சந்திரனை, வானத்தே உயர்ந்து சென்று கீழே வருகின்ற, ஆர் மா பந்தா - அழகிய பெரிய பந்தாக எண்ணி, சிற்றிளைஞர் கால் நிவந்து போதருமார் - இளஞ் சிறுவர்கள் அப்பந்தை உதைக்கக் காலைத் தூக்கிக்கொண்டு செல்வார்கள். அம்புலி - சந்திரன். இங்கு முழுமதி. நிவத்தல் - உயர்த்தல். போதருதல் - வருதல், செல்லுதல். போதருமார் - போதருவார் - செல்வார். சின்னஞ் சிறார்கள், இரவில் வான வெளியில் விளங்கும் வட்ட மதியை, பிறரால் உதைக்கப்பட்டு மேலே சென்று திரும்பி வரும் பெரிய பந்தென்று எண்ணி, அதை உதைக்கக் காலைத் தூக்கிக் கொண்டு செல்வார்கள் என்பதாம். இது மயக்கவணி. காப்பு- ஊர். (33) 39. மங்கையர்தம் பொற்றொடியு மன்றுணடிப் போர்படியுஞ் செங்கையிடை யார்க்குந் திருநணா - சங்கத் தொகைநூ லிழைப்பார் சுடர்கம் பளநெய் தொகைநூ லிழைப்பார் துறை. மங்கையர் தம் பொன்நொடி செம் கையிடை ஆர்க்கும் - பெண்களுடைய பொன் வளையல் சிவந்த கையின்கட் பொருந்தும். மன்றுள் நடிப்போர் படியும் செங்கை இடை ஆர்க்கும் - நடன அரங்கில் நடிப்பவர், ஆட்டத்திற்கு ஏற்றவாறு அமையும் சிவந்த கையை இடுப்பில் வைக்கும். தொடி - வளையல். மன்று - ஆடரங்கு. இடை - இடுப்பு. சங்கத் தொகை நூல் இழைப்பார் - சங்க நூல்களை நுண்ணிதாக ஆராய்வார். சுடர் கம்பளம் நெய் தொகு ஐ நூல் இழைப்பார் - அழகிய சமுக்காளம் நெய்கின்ற நூலை மிகுதியாக நன்கு சுற்றுவார். சங்கத் தொகை நூல் - பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகிய சங்க நூல்கள். இழைத்தல் - நுண்ணிதாக ஆராய்தல். சுடர் - அழகு. கம்பளம் - சமுக்காளம். தொகுதல் - மிகுதல். ஐ - உயர்வு, நன்கு. இழைத்தல் - தாறுச் சுற்றுதல். சமுக்காள நெய்யும் நூல் சுற்றுவோரும் சங்கத் தமிழ் நூல்கள் படிப்பர் என்பதாம். துறை - இடம். (34) 40. கானாரும் பூம்பிழியுங் காதிடைநல் லார்மொழியுந் தேனீர்த்துச் செல்லுந் திருநணா - ஆனாநூ லாலைப்பாட் டாள ரயர்வுற்ற போதுதெனூ லாலைப்பாட் டாள ரயர். கான் ஆரும் பூம் பிழி தேன் ஈர்த்துச் செல்லும் - காட்டில் உள்ள பூந்தேனை வண்டுகள் எடுத்துச் செல்லும். காதிடை நல்லார் மொழி தேன் நீர்த்துச் செல்லும் - கேட்போர் காதின் கண் பெண்கள் சொல் இனிய தன்மையாய்ப் புகும். கான் - காடு. ஆரும் - பொருந்தும். பிழி - தேன். தேன் - வண்டு. நல்லார் - பெண்கள். தேன் - இனிமை. நீர்மை - தன்மை. ஆனா நூல் ஆலைப் பாட்டாளர் - இடையறவுபடாத நூலாலைத் தொழிலாளர். அயர்வு உற்ற போது - சோர்வடைந்த போது, தென்நூல் ஆல் ஐ பாட்டாளர் - தமிழ்ப் பாட்டுக்களை மகிழ்ச்சி மிகப் பாடுவர். ஆனா - ஆனாத - இடையறாத, குறையாத; தொடர்ந்து குறைவின்றி நடக்கும். அயர்வு - சோர்வு, சலிப்பு. தென் நூல் - தமிழ் நூல். இங்கு தமிழ்ப் பாட்டைக் குறித்தது; காரியவாகு பெயர். தென் - இனிமை, இசை. தென்நூல் - இனிய தமிழிசைப் பாட்டு. ஆலுதல் - மகிழ்தல். ஐ -மிகுதி. பாட்டாளர் - பாட்டுப் பாடுபவர். ஆலைத் தொழிலாளர் சோர்வுற்றபோது, இன்பமிக்க தமிழ்ப் பாட்டுக்களைப் பாடி, அச் சோர்வைப் போக்கிக் கொள்வர் என்பதாம். அயர் - அத்தகைய ஆலைத் தொழிலாளர் விரும்பி வாழும் இடம். அயர் - விரும்பி வாழும் இடம். அயர்தல் - விரும்புதல். குமாரபாளையத்தில் சுந்தரம் நூலாலை என்னும் நுலாலை உள்ளது. (35) 41. மேனியுமின் னார்நிமிரு வேணி முகமுமிரு வானிலவு போலும்ப வானியே - கானற் கருங்குவளைக் கண்ணார்தங் காமமிக வாற்கை யொருங்குவளைக் கண்ணார்தம் மூர். மின்னார் மேனி இருவான் நிலவுபோலும் - பெண்கள் உடம்பு பெரிய வானின் ஒளி போலும். இரு - பெரிய. நிலவு- ஒளி. நிமிரு வேணி முகம் இரு வால் நிலவு போலும் - நீண்ட சடையையுடைய முகம் இரண்டு வால்களையுடைய சந்திரன் போலும். நிமிர்தல் - நீளுதல். வேணி - சடை. சடை - இரட்டைச் சடை. நிலவு - சந்திரன். நிலவு - முகத்திற்கும், இருவால் - இரட்டைச் சடைக்கும் உவமை. இருவான், இருவால் எனக் கொள்க. கான் நல் கருங் குவளைக் கண்ணார் - மணம் பொருந்திய அழகிய கருங் குவளை போன்ற கண்ணையுடைய மகளிர். தம் காம மிகவால் - தமது மிக்க காமத்தால். கை ஒருங்கு வளைக்கு அண்ணார் - கையினின்று வளை கழலும்படி இரங்குதலைச் செய்யார். ஒருங்குதல் - நீங்குதல். அண்ணார் - அணுகார்; அச்செயலை அணுகார். மிக்க காமத்தால் மிகவும் வருந்தின் உடல் இளைத்து வளை கழலுமென்க. வணிகத்தின் பொருட்டு வெளியூர் சென்ற கணவன் வரவு நீட்டிக்கின், மனைவி மிக்க காமத்தால் பிரிவாற்றாது வருந்துதல் ஒத்த காமமாகாது - நல்லொழுக்கமாகாது; ஒவ்வாக் காமமாகிய “தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம்” (தொல், அகத் - 51) என்னும் பெருந்திணைக் குறிப்பாகுமாகையால், அங்ஙனம் இரங்குதலைச் செய்யாரென்பதாம். இது, பொருட் பிரிவு. (36) 42. தார்பொருந்து மாமணத்துந் தண்டமிழ்ப்பாப் பாவினத்துஞ் சீர்பொருந்தி நிற்குந் திருநணா - கார்பொருந்தி யிட்டுக் கிளிப்பா ரிசைகேளாப் போதேய கட்டுக் களிப்பார் களம். தார் பொருந்து மாமணத்து சீர் பொருந்தி நிற்கும் - மாலை பொருந்தும் சிறந்த திருமணத்தில் சீர் பொருந்தியிருக்கும். தார் - மாலை. சீர் - மணவினை முடிக்கும் சிறப்புக்கள், சடங்கு; பெண்ணுக்குப் பெற்றோர் கொடுக்கும் வரிசையுமாம். தமிழ் பா பாவினத்து சீர் பொருந்தி நிற்கும் - தமிழ்ப் பாவிலும் பாவினத்திலும் சீர்கள் பொருந்தி யிருக்கும். பா - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன. பாவினம்-தாழிசை, துறை, விருத்தம் என்பன. சீர்- மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர் என்பன. இவற்றின் விரிவை யாப் பிலக்கணத்தில் காண்க. கார் பொருந்தி இட்டு களிப்பார் - மேகம் போலப் பிறர்க்குக் கொடுத்து மகிழ்வார். இசை கேளாப் போதே அகட்டுக்கு அளிப்பார் - தமிழிசையைக் கேளாத போதே வயிற்றுக்கு உணவூட்டுவார்; உண்பார். கார் - மேகம். இசை - தமிழிசை, தமிழ்ப் பாட்டு. அகடு - வயிறு. “செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.” -(குறள்) என்பது வள்ளுவர் வாய்மொழி. (37) 43. மங்கையர்பொற் றாலியும்பாய் மாகயல்வில் லுந்தமிழ்த்தாய் செங்கொடியிற் றோன்றுந் திருநணா - சங்கத் தமிழ்தங் குடிப்பார் தகுமென்று மும்மைத் தமிழ்தங் குடிப்பார் தலம். மங்கையர் பொன் தாலி செம் கொடியில் தோன்றும் - பெண்களின் பொன்னால் செய்த தாலி சிவந்த பொன்னால் செய்த கொடியில் கோக்கப்பட்டிருக்கும். பாய்மா கயல் வில் தமிழ்த் தாய் செம்கொடியில் தோன்றும் - புலியும் மீனும் வில்லும் உயரிய தமிழ்க் கொடியில் இருக்கும். பாய்மா - புலி. கயல் - மீன். வில் புலி மீன் என்பவை முறையே சேர சோழ பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தரின் கொடிகளின் குறிகளாகும். வில் முதலிய மூன்றும் அமைந்ததே தமிழ்க் கொடியாகும். செங்கொடி - உயரிய கொடி. தமிழ் தம் குடி பார் தகும் என்று - தமிழ் தமது குடியாகிய வண்டிக்கு நெடுஞ்சட்டம் எனத் தகும் என்று கொண்டு, மும்மைத்து அமிழ்தம் குடிப்பார் - முப்பால் குடிப்பர். பார் - வண்டியின் நெடுஞ் சட்டம். இச்சட்டங்களே வண்டியின் உடலாகும். மும்மைத்து அமிழ்தம் - மூன்றாகிய பால் - முப்பால் - திருக்குறள். மும்மைத்து - மூன்று. அமிழ்தம் - பால். திருக்குறள் படிப்பார் என்பதை, ‘முப்பால் குடிப்பார்’ என்பது உபசார வழக்கு. தலம் - இடம். (38) 44. அங்கோதை யார்கடத்தும் ஆய்பிள்ளைப் பாட்டிடத்துஞ் செங்கீரை கொள்ளுந் திருநணா - மங்கா விரிப்புத் தொழிலுலக மேற்றும் படிசெய் விரிப்புத் தொழிலுலக மேற்று. அம் கோதையார் கடத்து செங்கீரை கொள்ளும் - அழகிய மகளிர் விளை நிலத்தில் நல்ல கீரை பறிக்கும். கடம் - காடு - விளைநிலம். செங்கீரை - நல்ல கீரை, ஒருவகைக் கீரையுமாம். ஆய் பிள்ளைப் பாட்டிடத்து செங்கீரை கொள்ளும் - தாய் பிள்ளைப் பாட்டின்கண் பிள்ளையை மழலைச் சொல் பேசும் படி கேட்கும். பிள்ளைப் பாட்டு - தமிழிலுள்ள 96 வகை நூல்களிலொன்று. செங்கீரை - பிள்ளைத் தமிழின் பத்துப் பருவங்களிலொன்று. செம் கீரை - செவ்விய சொல், மழலைச் சொல். கீரை - சொல். ‘செங்கீரை ஆடியருளே’ எனத் தாய், பிள்ளையை மழலைச் சொல் சொல்லும் படி கேட்பதாகப் பாடப்படும் செங்கீரைப் பருவம். மங்கா விரிப்புத் தொழில் உலகம் மேற்றும்படி செய் - மங்காத சமுக்காளத் தொழில் உலகம் மேற்கொண்டு புகழும் படி செய்கின்ற. உலக விரிப்பு தொழில் மேற்று - உயர்ந்த மிகுதியான தொழிலாக உள்ள இடம், திருநணா. விரிப்பு - சமுக்காளம். மேற்றுதல் - மேலாகக்கொண்டு பாராட்டுதல். உலகம் - உயர்வு. விரிப்பு - விரிவு - மிகுதி. மேற்று - இடம். பவானியில் சமுக்காளத் தொழிலே சிறந்த மிகுதி யான தொழிலாகும். 45. ஊடையும்பா வுந்துணியை யூர்வானி தண்பொனியைக் கூடிப் பெறுவாளி கூடலே - ஆடிப் பதினெட்டிற் கூடும் பதிபெயர்ந் தார்கைப் பதினெட்டிற் கூடும் பதி. ஊடையும் பாவும் கூடி துணியைப் பெறும் - ஊடையும் பாவும் சேர்ந்து துணியை உண்டாக்கும். ஊடை பாவின் ஊடே - குறுக்கே - பாய்ச்சும் நூல். வானி பொன்னியைக் கூடி வானி கூடல் பெறும். வானியாறு காவிரியாற்றைக் கூடி வானிகூடலைப் பெறும். வானியாறு காவிரியைக் கூடுமிடத்தில் இருப்பதால், பவானி - ‘வானி கூடல்’ என்னும் பெயர் பெற்றது. ஊர்தல் - செல்லுதல், எப்போதும் நீர் வற்றாது செல்லுதல். தண் - குளிர்ச்சி. பொனி - பொன்னி - காவிரி. ஆடிப் பதினெட்டில் கூடும் - ஆடிப் பதினெட்டன்று கூடு துறையில் நீராட வெளியூர் மக்கள் பவானியை அடைவர். ஆடிப் பதினெட்டு - கூடுதுறையில் குளிக்கும் சிறப்பு நாட்களில் தலையாயது. பதி பெயர்ந்தார் - ஊரை விட்டு நீங்கி வெளியூர் சென்ற தங் கணவர். கைப்பதில் நெட்டிற்கு ஊடும் - கடிதம் எழுத நீண்ட நாளானதற்காக மனைவியர் ஊடுவர். கைப்பதில் - கடிதம். நெட்டு - நெடுநாள். வணிகத்தின் பொருட்டு வெளியூர் சென்றிருந்த கணவர் வரவே, நெடுநாள் கடிதம் எழுதாமல் இருந்தமைக்காக மனைவியர் ஊடுவரென்க. ஊடுதல் - பிணங்குதல். பதி - ஊர். (40) 46. பாறியுள்ளான் பாய்விடத்தும் பைங்கா னடுமிடத்துஞ் சேறடித்துச் செல்லுந் திருநணா - ஊறுசுவைக் கண்டொன்று சொல்லார் களந்தப்பிக் கையறினுங் கண்டொன்று சொல்லார் களம். உள்ளான் பாறி பாய்விடத்து சேல் தடித்துச் செல்லும் - மீன் கொத்திப் பறவை எழுந்து பாயும்போது கயல் மீன்கள் மின்னல் போல் விரைந்து செல்லும். பைங்கால் நடும் இடத்து சேறு அடித்துச் செல்லும் - வயலில் நாற்று நடும் போது வயலைச் சேறாக்குவர். பாறுதல் - நிலை பெயர்தல். பாறி - எழுந்து. உள்ளான் - மீன் கொத்திப் பறவை. பைங்கால் - வயல். சேல் - கெண்டை மீன். தடித்து - மின்னல். ஊறு சுவை கண்டு ஒன்று சொல்லார் - மிக்க சுவை யுடைய சர்க்கரை போன்ற இனிய சொல்லையுடைய மகளிர், களம் தப்பி கையறினும் - குறி பிழைத்து மிகவும் வருந்தினும், கண்டு ஒன்று சொல்லார் - ஒன்றைக் கண்டு மற்றொன்றைச் சொல்லார் - பொய் சொல்லார். “கண்டொன்று சொல்லேல்” - ஒளவையார். களம் - இடம். ஊறுசுவை - மிக்க சுவை. கண்டு - சர்க்கரை. ஒன்றுதல் - பொருந்துதல். களம் - குறியிடம். கையறுதல் - வருந்துதல். களந் தப்புதல் - குறி பிழைத்தல், அல்லது அல்ல குறிப் படுதல். அதாவது, களவொழுக்கம் ஒழுகும்போது, தலைவி குறித்த இடத்தில் தலைவன் சென்று தலைவியை எதிர்ப்படு வான். இது பகற் குறி, இரவுக் குறி என இரு வகைப்படும். இரவுக் குறியில் தலைவன், புள்ளெழுப்பியும், புனலொலித்தும் தனது வருகையைத் தலைவிக்குத் தெரிவிப்பான். பறவைகள் தாமாகவே எழுதலும், கிணற்று மேட்டிலுள்ள மரங்களிலிருந்து காய் கனிகள் கிணற்றுக்குள் தாமாகவே விழுதலும் கூடுமாகை யால், இவற்றைத் தலைவி, தலைவன் செய்த குறியென்று மயங்கி, குறியிடம் சென்று தலை வனைக் காணாது வறிதே திரும்புவாள். இவ்வல்ல குறிப்பாடு தலைவிக்கு மிக்க வருத்தத் தைத் தருவதாகும். இன்றும் இது நிகழ்தலுண்டு. (41) 47. வண்ணமனை வாய்தோறும் வண்டமிழை யாய்வோருந் திண்ணைக் குறடேர் திருநணா - பண்ணைவயல் வாய்மை களையார் வளமுடையார் யாதுறினும் வாய்மை களையார் மனை. வண்ணமனை வாய்தோறும் திண்ணை குறடு ஏர் - அழகிய வீட்டு வாயில்கள் தோறும் திண்ணையும் வாயிற்படியும் அழகு செய்யும். வண்டமிழை ஆய்வோர் திண் ஐ குறள் தேர் - வளவிய தமிழை ஆராய்வோர் திண்ணிய அழகிய திருக்குறளை ஆராயும். வண்ணம் - அழகு. வாய் - வாயில். குறடு - வாயிற்படி. ஏர் - அழகு. திண்மை - அசைக்கக் முடியாத பொருட்செறிவு. அழகு - சொல்லழகும் பொருளழகும். தேர்தல் - ஆராய்தல். பண்ணை வயல் வாய் மை களை ஆர் - குளத்தையடுத்த வயலின்கண் எருமைகள் புல் மேயும். வளம் உடையார் - நீர் நில வளத்தினை உடையார். யாது உறினும் வாய்மை களை யார் - எவ்வளவு துன்பமுற்றாலும், அல்லது எவ்வளவு பொருள் கிடைத் தாலும்; வாய்மை களையார் - உண்மையை ஒளியார், நீக்கார். பண்ணை - குளம். மை - எருமை. புல் களையப்படு தலால் ‘களை’ எனப்பட்டது. ஆர்தல் - உண்ணுதல். மனை - இடம். (42) 48. நாற்றுநடு வார்விரலு நற்குரலும் பொற்சிரலுஞ் சேற்றுக்கண் பூக்குந் திருநணா - நாற்று நடுங்கையர் பின்னனிழல் நச்சரவென் றுள்ள நடுங்கையர் துன்னு நகர். (1) நாற்று நடுவார் விரல் சேற்றுக்கு அண்பு ஊக்கும் - நாற்று நடுவோர் விரல் சேற்றினை அணுக முயலும். சேற்றினுள் செல்லும் என்பதாம். (2) நல்குரல் சேற்றுக்கண் பூக்கும் - தாமரை மலர் சேற்றின்கண் பூக்கும். குரல் - பூங்கொத்து - பூ. ‘பூவுக்குத் தாமரையே’ என்பதால், நல்பூ - தாமரையாயிற்று. “சேற்றில் பிறந்திடும் கமல மலர்” என்பது காண்க. (3) பொன் சிரல் சேல் துக்கு அண் பூக்கும் - அழகிய மீன்கொத்திப் பறவை கெண்டை மீனை உண்ண அணிமையில் இருக்கும். பொன் - அழகு. சிரல் - மீன்கொத்தி. துக்கு - துக்க - உண்ண. அண் - அணிமை. பூத்தல் - இருத்தல். நாற்று நடும் கையர் - நாற்று நடும் கையையுடைய மகளிர், பின்னல் நிழல் நச்சு அரவு என்று - சடை நிழலை நஞ்சுடைய பாம்பென்று எண்ணி. உள்ளம் நடுங்கு ஐயர் துன்னும் - மனம் அஞ்சுகின்ற பெரியோர் - அப்பாம்பை அடிக்க அணுகும். இது மயக்க அணி. (43) 49. தேன்மொழியா ரின்முகமுந் தேங்கமலப் பூவகமும் வான்மதி போலும்ப வானியே - மேன்மைமிகூர் மன்றத்தா ரேய்ந்துமகிழ் மக்கள்மனம் போன்றுநல மன்றத்தா ரேய்ந்துமகிழ் வாழ்வு. தேன் மொழியார் இன்முகம் வால் மதி போலும் - தேன் போலும் இனிய சொல்லையுடைய மகளிர் இனிய முகம் வாலுள்ள திங்கள் போலும். முகம் - மதி. சடை - வால். இது, இல்பொருளுவமையணி. தேம் கமலப்பூ அகம் வான்மதி போலும் - தேன் பொருந்திய தாமரைப் பூவுள்ள குளம் வானும் மதியும் போலும். அகம் - இடம். கமலப் பூ உள்ள இடம் - குளம். கமலப் பூவும் குளமும் மதியும் வானும் போலும். வான் போலக் குளமும், மதிபோலக் கமலப் பூவும். மேன்மைமிகு ஊர் மன்றத்தார். ஏய்ந்து மகிழ் மக்கள் மனம் போன்று - ஒத்து மகிழ்கின்ற மக்கள் மனம் போன்று. நலம் மன்ற தார் ஏய்ந்து மகிழ் - நலம் மிக வெற்றி அடைந்து மகிழ்ந்து. வாழ்வு - வாழுமிடம். ஏய்தல் - ஒத்தல், அடைதல். ஒத்து மகிழ்தல் - மன்றத் தார் மகிழ்வது போல் மகிழ்தல். மக்கள் மனம் போன்று நலம் மன்ற - மக்கள் விரும்புகின்ற நலமெல்லாம் மிக. மன்ற - மிக. தார் - வெற்றி மாலை. (44) 50. மாணிழையா ரின்குமுத வாயிதழு மாயிதழு நாணிகழ்வு கூறு நணாவூரே - வாணிகத்தே மிக்கார்வங் கொண்டார் விருந்துபுறந் தந்துவள மிக்கார்வங் கொண்டார் மிசை. மாண் இழையார் இன் குமுத வாய் இதழ் நாண் நிகழ்வு கூறும் - மாட்சிமைப்பட்ட நகைகளையுடைய மகளிர் இனிய குமுதம் போன்ற வாயிதழ் நாணொடு பேசும்; நாணத்தக் கதைப் பேசா தென்பதாம். ஆய்இதழ் நாள் நிகழ்வு கூறும் - செய்தித் தாள்கள் நாடோறும் உலகில் நிகழும் நிகழ்ச்சிகளைக் கூறும். ஆய்இதழ் - ஆராயத் தக்க பொருளுடைய இதழ்; செய்தி களை, பொருள்களை ஆராய்ந்து கூறும் இதழ். இதழ் - பத்திரிகை. நாளிதழ், வார இதழ், மாத இதழ் எல்லாம் கொள்க. இதழ் - சாதியொருமை. மிக்க ஆர்வம் - மிகுந்த விருப்பம். விருந்து புறந் தந்து விருந்தினரை உணவிட்டு உபசரித்து. வளம் மிக்கார் வங்கு ஒண்டார் - செல்வ மிக்கவர் கரவார். வங்கு ஒண்டல் - கரத்தல்; அதாவது ஏற்பாரைக் கண்டு ஒளிந்து கொள்ளுதல். மிசை - இடம். (45) 51. உவ்வாநூற் பிள்ளைதம ருண்கையிலா ளின்சொலிலார் செவ்வாயிற் கூடுந் திருநணா - ஒவ்வாச் செயலொன்றுஞ் செய்யார் திசைமேவு நன்மைச் செயலொன்றுஞ் செய்யார் திசை. உ வாம் நூல் - பாவின் இடையே செல்லும் ஊடை நூல். அதாவது, நூனாழிக்குள் வைத்துப் பாவின் ஊடே செலுத்தும் ஊடை நூற்றாறு. உ - இடை, நடு. வாம் - வாவும் - செல்லும். நூனாழி - நாடா. முதலடியிலுள்ள பொருள்கள்: (1) நூற்றாறு, (2) பிள்ளை, (3) தமர் - சுற்றம், (4) உண்கை - உண்ணுங்கை; அதாவது உணவெடுத் தூட்டுங் கை, (5) இலாள் - இல்லாள் - மனைவி, (6) இன்சொல், (7) இலார் - இல்லார் - வறியவர். (1) நூற்றாறு செம் வாயிற் கூடும் - நூற்றாறின் நூனுனி சிவந்த வாயினால் உரிஞ்சி நூனாழித் துளை வழியே இழுக்கப் பட்டு, பாவில் ஊடையாகப் பொருந்தும். ‘இழை நக்கி நூல் நெருடும் ஏழை’ எனல் காண்க. (2) பிள்ளை செம் ஆயில் கூடும். - குழந்தை நல்ல தாயைப் பொருந்தும். (3) தமர் செம் வாய் இல் கூடும் - சுற்றத்தார் நேர்மை பொருந்திய மனையிற் கூடுவர், அதாவது நல்ல உறவினர் வீட்டையடைவர். (4) உண் கை செம் வாயில் கூடும் - உணவூட்டுங் கை சிவந்த வாயின் கட் சேரும். (5) இலாள் செம் வாயிற்கு ஊடும் - மனைவி தகுதியான வாயிலுக்காக ஊடும். வாயில் - தூது. தகுதியான வாயில் - தலைவனே தூதாதல்; அவனே வந்து உடலுணர்த்துதல். ஊடுதல் - மன வேறு பாடுறுதல். (6) இன்சொல் செம் வாயில் கூடும் - இனிய சொல் நேர்மை யுடையோர் வாயின்கட் பொருந்தும். (7) இலார் செம் வாயில் கூடும் - வறியவர் ஈவோர் மனை வாயிலிற் கூடும். செம்மை - ஈகைக் குணம். அது பண்பாகு பெயராய் ஈவோரை உணர்த்திற்று. ஒவ்வா செயல் ஒன்றும் செய்யார் - தகாத செயல் ஒன்றும் செய்யமாட்டார். திசைமேவு நன்மைச் செயல் ஒன்றும் செய்யார் - உலகம் விரும்பும் நற்செயல் பொருந்தும் நல்லவர். ஒவ்வா - ஒவ்வாத - தகாத. திசை - உலகம். மேவுதல் - விரும்புதல். ஒன்றுதல் - பொருந்துதல். செய்யார் - நல்லவர். திசை - இடம்; நல்லவர் வாழும் இடம். (46) 52. வாலிழையார் கூர்விழியும் வானிபொன்னி நீருழியுஞ் சேலெதிரச் செல்லுந் திருநணா - நூலெச் சியற்றுவார் தேமெச் சிடம்பட நன்கச் சியற்றுவார் தேமெச் சிடம். வாலிழையார் கூர் விழிச் சேல் எதிரச் செல்லும் - தூய்மை யான நகைகளையுடைய பெண்களின் கூரிய கண்கள் கெண்டை மீன் எதிர்க்கச் செல்லும். சேலோடு ஒவ்வாது மிகும்; சேல் ஒப்பாகாது என்பதாம். வானி பொன்னி நீருழி - வானி, காவிரி யாற்று நீரின் கண். சேல் எதிரச் செல்லும் - கெண்டை மீன்கள் நீரின் எதிரில் நீந்திச் செல்லும். உழி - இடம். நூல் எச்சு இயல் துவார் - நூல்களில் கூறப்படும் உயர் குணங்களில் நீங்கார். தேம் மெச்சிடு அம் பட - உலகம் மெச் சிடும்படி அழகுபட. நன்கு அச்சு இயற்றுவார் - நன்கு அச்சடிப் பார். தேம் எச்சு இடம் - இன்ப மிக்க இடம். அத்தகைய அச்சகத் தார் உள்ள இன்ப மிக்க இடம் என்க. நூல் - அச்சுத் தொழில் நூல். எச்சு - உயர்வு, மிகுதி. இயல் - இயல்பு, குணம். துவார் - துவ்வார் - நீங்கார். நீங்காமல் அழகு பட அச்சியற்றுவார் என்க. தேம் - உலகம், இனிமை. அம் - அழகு. பவானியில் - ராமு பிரஸ், பாரதி பவர் பிரஸ், ராசாம்ராம் பிரஸ் என்னும் அச்சகங்களும், குமார பாளையத்தில் சண்முகாப் பிரசும் உள்ளன. (47) 53. கள்கமழ்பூங் காவிரியுங் கார்நிகர்வங் கிப்புரியுங் கொள்கட னேர்வானி கூடலே - புள்குழுமிக் காவலரைத் தேருங் களம்படர்ந்து மக்களூர்க் காவலரைத் தேருங் களம். கள்கமழ் பூ காவிரி - தேன் கமழும் பூக்களையுடைய காவிரி யாறு, கொள் கடல் நேர் - தான் நீர் கொண்ட கடலை ஒக்கும்; கடல் போல் வற்றாதது. முகில் கடலில் முகந்து வந்து பொழிந்ததே ஆற்று நீராதல் அறிக. அல்லது கடலைப் பொருந்தும்; கடல் சென்றடையும் பேராறு என்பதாம். கட்கமழ் என்பது இயல் பாக நின்றது. கள் - தேன். கமழ்தல் - மணத்தல். கரையினி லுள்ள சோலைப் பூக்கள் உதிர்ந்து நீரின்மேல் மிதந்து செல்லும். கார் நிகர் வங்கி புரி - மேகம்போல் உதவும் பாங்குகளின் செயல். கொள் கடன் நேர் - மக்கள் கொள்ளும் - கேட்கும் கடனைக் கொடுத்துதவும். வங்கி - பாங்கு - கடனுதவகம். புரி - செயல். பவானியில் அர்பன் பாங்கு, ஸ்டேட் பாங்கு, சௌத் இந்தியன் பாங்கு முதலிய பாங்குகள் உள்ளன. இவற்றுள் அர்பன் பாங்கு பழமையானது. புள் குழுமி கா அலரைத் தேரும் - வண்டுகள் கூடிச் சோலையி லுள்ள பூக்களைத் தேன் நாடி ஆராயும். களம் படர்ந்து மக்கள் ஊர்க் காவலரைத் தேரும் - வாக்குச் சாவடிக்குச் சென்று மக்கள் ஊர் மன்றத்தினரைத் தேர்ந்தெடுப்பர். பொதுமக்கள் ஊர்மன்ற உறுப்பி னரையும், தலைவரையும் தேர்ந்தெடுப்பர் என்க. புள் - வண்டு. கா - சோலை. களம் - இடம் - வாக்குச் சாவடி. படர்தல் - செல்லுதல். களம் - இடம். (48) 54. மங்கையர்பூண் பொன்னணிக்கும் மாமனைச்சு வர்ப்பணிக்குஞ் செங்க லடுக்குந் திருநணா - செங்க மலக்கண்ணார் தங்கொழுநர் மாண்பிலினுந் தீங்க மலக்கண்ணார் வாழ்வுமிகும் வாழ்வு. மங்கையர் பூண் பொன் அணிக்கு செங்கல் அடுக்கும் - பெண்கள் அணிகின்ற தங்க நகைகட்குச் செந்நிறமுள்ள வைரக் கற்கள் பதிக்கும். அணி - காதணி, பதக்கம் முதலியன. மாமனைச் சுவர் பணிக்கு செங்கல் அடுக்கும் - சிறந்த வீட்டுச் சுவர் கட்டும் வேலைக்குச் செங்கல்லை அடுக்கும். அடுக்குதல் - ஒன்றன்மேல் ஒன்று வைத்தல். செம் கமலக் கண்ணார் - செந்தாமரை மலர் போன்ற கண்ணை யுடைய மகளிர், தம் கொழுநர் மாண்பு இலினும் - தம் கணவர் நற்குணம் நற்செயல் நல்லொழுக்கம் இல்லாவிட்டாலும், தீங்கு அமல கண்ணார் - தீமை நெருங்கக் கருதார். தீமை - அன்பு மாறுதல், தாய் வீடு செல்லல் முதலியன. வாழ்வு மிகும் வாழ்வு - நல்வாழ்வு வாழும் இடம். வாழ்வு - ஊர். அமலுதல் - நெருங்குதல், மிகுதல். கண்ணுதல் - கருதுதல். அவ்வாறு செய்ய எண்ணார் என்பதாம். (49) 55. வாரத் தயலாரை வண்டமிழ்ப்பா வின்சீரைச் சேரத் தளைகொள் திருநணா - காரிருட்கண் மின்றிரி கைபிடிப்பார் மெல்லிய லார்வனையு மின்றிரி கைபிடிப்பார் வீடு. வாரத்து அயலாரை சேரத் தளை கொள் -அன்பினால் பிறரைத் தம்மோ டொருங்குறப் பிணித்துக் கொள்ளும்; பிரியா நட்பினராக்கிக் கொள்ளும். பாவின் சீரைச் சேரத்தளை கொள் - வெண்பா முதலிய பாக்களின் சீரை இருசீர் ஒன்றுபடத் தளை என்னும் உறுப்பைக் கொள்ளும். வாரம் - அன்பு. அயலார் - பிறர். சீர் - மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர் என்பன. தளை கொள்ளல் - நின்ற சீரின் ஈற்றசையையும் வருஞ் சீரின் முதலசையையும் இணைத்தல். அத்தளை - நேரொன்றாசிரியத் தளை, நிரை யொன் றாசிரியத் தளை முதலாக ஏழு வகைப்படும். அவற்றின் விரிவை யாப்பி லக்கண நூலிற் காண்க. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன செய்யுளுறுப்புக்களாகும். கார் இருட் கண் - மிக்க இருளின் கண், இரவில். மின்திரி கை பிடிப்பார் - மின் விளக்குப் பிடித்துக் கொண்டு வெளிச் செல்வார். மின் திரி - மின் கலம் (பேட்டரி). அது ஆகு பெயராய் மின் விளக்கை யுணர்த்திற்று. மெல்லியலார் வனையும் இன் திரிகை பிடிப்பார் - மட்கலம் வனைவோர் மகளிர் பாண்டம் வனையும் நல்ல சக்கரத்தைச் சுற்றுவார். பிடித்தல் - பற்றிச் சுற்றுதல். வீடு - இடம். (50) 56. இக்கரம்பைக் கன்றதனா யேல்குறியெ திர்ப்பினரேய் பக்கத்தின் மேவும் பவானியே - மக்கட்பண் பாட்டிற்க ணிப்பார் பழந்தமிழர் வாழ்வையவர் பாட்டிற்க ணிப்பார் பதி. இக்கு அரம்பைக் கன்று அதன் ஆய் பக்கத்தில் மேவும் - தேன் போல இனிக்கும் வாழைக் கன்று அதன் தாய் மரத்தின் பக்கத்தில் தோன்றும். ஏல் குறி யெதிர்ப்பினர் ஏய் பக்கத்து இல் மேவும் - குறியெதிர்ப்புக் கொள்வோர் தகுதியான பக்கத்து வீட்டை யடைவர். இக்கு - தேன். அரம்பை - வாழை. இக்கு அரம்பை - தேன்போல இனிக்கும் பழமுடைய வாழை; ‘தேன் கதலி’ எனல் காண்க. ஆய் -தாய். குறியெதிர்ப்பு - அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய் முதலியவற்றை அளவு குறித்து வாங்கி அவ்வளவே திருப்பித் தருவது. இது உலக வழக்கில் ‘குறியாப்பு’ என வழங்குகிறது. மக்கள் பண்பாட்டிற்கு அணிப்பார் - மக்கட் பண் பாட்டை அணுகச் செல்வார்; பண்பாட்டின்படி நடப்பார் என்பதாம். பழந்தமிழர் வாழ்வை, அவர் பாட்டில் கணிப்பார் - பழந்தமிழர் பாடியுள்ள பாட்டுக்களால் அறிவர். கணித்தல் - வரை யறுத்தறிதல். பதி - ஊர். (51) 57. நற்றமிழுங் காளிங்க ராயன் பெரும்புகழுஞ் சிற்றரங்கம் பாடுந் திருநணா - தெற்றெனவந் துற்றார்க்கு மாறார் துணைசெய் திசையமிழ்தந் துற்றார்க்கு மாறார் துணை. நற்றமிழ் சிறு அரங்கம் பாடும் - நற்றமிழை அணைத் தோப்பிலுள்ள பூவை, கிளி முதலிய பறவைகள் பாடும். அரங்கம் - இடவாகுபெயர். காளிங்கராயன் பெரும்புகழ் சில் தரங்கம் பாடும் - காளிங்கராயன் பெரும் புகழை அணையிலும் வாய்க் காலிலும் வீசும் சிறிய அலைகள் பாடும். அலைகள் ஒலிப்பது அவன் புகழைப் பாடுதல் போலும். இது தற்குறிப்பேற்ற அணி. அணையும் வாய்க்காலும் அவன் புகழுக்கு அறிகுறியாக நின்று நிலவுகின்றன என்பதாம். தரங்கம் - அலை. காளிங்கராயன் என்பான், பவானிக்கருகில், வானியாற்றில் கட்டப்பட்டுள்ள அணையைக் கட்டி, வாய்க்கால் வெட்டி நாட்டை வளஞ் செய்த ஓர் நல்லறிவாளன். அவ்வணையும் வாய்க் காலும் காளிங்கராயன் அணை, காளிங்கராயன் வாய்க் கால் என அப் பெருமகன் பெயராலேயே வழங்குகின்றன. அணையை அடுத்துள்ள காளிங்கராயன் பாளையம் என்பது, அவ்வள்ளலின் நினைவுக் குறியாக ஏற்பட்ட ஊராகும். அந் நற்செல்வன், தன் கைப்பொருள் கொண்டே அவ்வணையைக் கட்டி வாய்க்கால் வெட்டினான் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாய்க்கால், பவானியிலிருந்து காவிரியை அடுத்தே மேல் புறமாகத் தெற்கு நோக்கி 58கல் சென்று காவிரியில் கலக்கிறது. இவ்வாய்க்கால் 14ஆயிரம் படி (ஏக்கர்) நிலங்கட்கு முப்போகமும் பாய்கிறது. இவ்வள்ளல் வெள்ளோட்டுச் சாத்தந்தை குலத்தைச் சார்ந்த வேளாண்குடிச் செல்வன்; அதிவீர பாண்டிய மன்னனது (கி. பி. 1250 - 1280) அமைச்சனாக விளங்கியவன். எற்று திரைப்பொன்னி கூடுறு வானி யிடைமடங்க வெற்றி மிகுந்த அதிவீர பாண்டிய வேந்தமைச்சன் கற்ற வறிவினன் காளிங்க ராயன்செய் கால்கழிநீர் உற்ற வானத்தை வளவய லாக வுயர்த்தியதே. (தனிப் பாட்டு) எனவே, காளிங்கராயன் அணை, சுமார் 680 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டதாகும். கோவைக் கோட்டம், பொள்ளாச்சிக் கூற்றத்து ஊற்றுக் குழிப் பாளையக்காரர் இக்காளிங்கராயன் வழியினராவர். அவர்கள் இன்னும் காளிங்கராயன் என்னும் பட்டப் பெயரை இட்டு வழங்கி வருகின்றனர். இந்நூல் 24 - ஆம் பாட்டைப் பார்க்க. அரங்கம் என்பது ஆற்றிடைக் குறை. அதாவது, ஆற்றின் இடையிலுள்ள நிலப் பகுதி. காவிரியாற்றில் மைசூர் நாட்டில் முதலரங்கமும், திருச்சிராப்பள்ளி யடுத்துத் திருவரங்கமும் இருத்தல் போல, காளிங்கராயன் அணையை அடுத்துள்ள அனைத் தோப்பு நாற்புரம் நீர் சூழப் பெற்ற சிறிய நிலப்பகுதியாகையால் அதைச் திருச்சிச் சிற்றரங்கம் எனலாம். தெற்றென வந்து உற்றார்க்கு - உறுதியாக நம்பி வந்து அடைந்தவர்க்கு. மாறார் துணை செய்து - மறுக்காமல் உதவி. இசை அமிழ்தம் துற்று ஆர்க்கும் ஆறார் - புகழாகிய அமிழ்தத்தை உண்டு களிக்கும் இயல்பினர். மாறார் - முற்றெச்சம். இசை -புகழ். துற்று - உண்டு. ஆர்த்தல் - களித்தல், மகிழ்தல். துணை - இடம். தங்கி வாழுந் துணையாக உள்ளது. (52) 58. கம்பாதி வித்துநருங் கைத்தொழிலு ஞற்றுநருஞ் செம்பாடு செய்யுந் திருநணா - சம்பா வரியெடுப்பார் செல்வ மனையெடுப்பார் பண்ணை வரியெடுப்பார் செல்வ மனை. கம்பு ஆதி வித்துநர்செம்பாடு செய்யும் - கம்பு முதலிய புன்செய்த் தவசங்கள் பயிர் செய்வோர் நிலத்தை ஈரம்போக உழுது புழுதியாக்குவர். செம்பாடு - ஈரம் போக உழுது உலர்த்திய புழுதி. ‘தொடிப் புழுதி கஃசா உணக்கல்’ (குறள்). கைத் தொழில் உஞற்றுநர் - கைத்தொழில் செய்வோர். செம் பாடு செய்யும் - செம்மையாக - சரியாக - வேலை செய்யும்; பொறுப் புணர்ந்து வேலை செய்வர் என்பதாம். சம்பா அரி எடுப்பார் - நெற்கட்டு எடுத்துச் செல்பவர். செல் அம்மனை எடுப்பார் - அம்மனை யாடிக்கொண்டு செல்வர். பண்ணை வரி எடுப்பார் - மருத நிலப் பண்பாடுவர். பண்ணை - வயல். வரி - இசைப் பாடல். வரி எடுத்தல் - பாட்டுப் பாடுதல். பண்ணை - மகளிர் விளையாட்டு. பண்ணை வரி - விளையாட்டுப் பாட்டு என்றுமாம். செல்வ மனை- அத்தகைய செல்வ மிக்க ஊர். மனை - ஊர். சம்பா - ஒரு வகை நெல். அரி - நெற்கட்டு. அம்மனை - ஒரு மகளிர் விளையாட்டு. அது, மூன்று பெண்கள் மரத்தால் செய்த அம்மனைக் காய் கொண்டாடுதல். இருந்தாடும் அதை, இவர்கள் நெற்கட் டெடுத்துக் கொண்டு நடந்து கொண்டே ஆடுவர் என்பதாம். செல் + உழி - செல்வுழி என்று புணர்வது போல, செல் + அம்மனை - செல்வம்மனை என்று புணர்ந்தது. அம்மனை - அமனை - தொகுத்தல் விகாரம். (53) 59. கற்குந் தமிழ்வாயுங் காவிரிவா னிப்பாயுந் தெற்கொந்தி நிற்குந் திருநணா - நற்கந்த சாமிகல்வி மன்றமது சார்குமர பாளையத்துக் காமிகல்வி மன்றமது காப்பு. கற்கும் தமிழ்வாய் தென் கொந்தி நிற்கும் - தமிழ் கற்கும் வாய் இனிமை மிக்கிருக்கும். தென்- இனிமை. கொந்துதல் - மிகுதல். காவிரி வானி பாய் - காவிரியும் வானியும் ஒன்று கூடும் இடம். பாயும் - பாயும் இடம் - கூடுதுறை. தெற்கு ஒந்தி நிற்கும் - ஊரின் தெற்கில் இருக்கும். கந்தசாமி கல்வி மன்றம் அது சார் - கந்தசாமி கல்வி மன்றம் உள்ள, குமாரபாளையத்துக்கு, மிகல் ஆம் வி மன்ற காப்பு - சிறப்பாகும் அழகு மிக்க ஊர். சிறப்பு - ‘பவானிக் குமார பாளையம்’ என அடைமொழியாகச் சொல்லப்படும் சிறப்பு. மிகல் - சிறப்பு. வி - அழகு. மன்ற - மிகுதி குறிக்கும் இடைச் சொல். மன்றமது. மது - அசை. கந்தசாமி கல்வி மன்றம் உள்ள குமாரபாளையத்துக்கு ‘பவானிக்குமாரபாளையம்’ என அடைமொழியாகச் சொல்லப் படும் அழகுமிக்க ஊர் திருநணா எனக் கூட்டுக. கந்தசாமி கல்வி மன்றம் என்பது, குமாரபாளையம் திரு. ஜ. கு. கந்தசாமி செட்டியார் அவர்களின் நினைவாக, அவர்தம் மக்கள், குமாரபாளையம் உயர்நிலைப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி (B.T. கல்லூரி) இவற்றிற்காக, நன் கொடையாகக் கட்டிக் கொடுத்திருக்கும் பெரிய கட்டிடம். பவானி, காவிரியாற்றின் மேல்கரையில் உள்ளது. குமார பாளையம், காவிரியாற்றின் கீழ்கரையில் உள்ளது. இரண்டூர் களும் காவிரிப் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளன. (54) 60. பொழுதலரை நல்லாரும் பூஞ்சேற்றி லூருங் கொழுதணிந்து செல்வானி கூடல் - உழுத கருமைநிறச் சேற்றுவயற் காதங் கமழுங் கருமைநிறச் சேற்றுவயற் காப்பு. பொழுது அலரை நல்லார் கொழுது அணிந்து செல் - அன்று பூத்த பூக்களை மகளிர் பறித்துச் சூடிச் செல்லும். பூ சேற்றில் ஊரும் கொழு தணிந்து செல் - பொலிவுள்ள அல்லது பூப் போல மணக்கும் சேற்றில் உழுகின்ற கொழு ஆழ்ந்து செல்லும். பொழுது அலர் - நாட்பூ - அன்று அலர்ந்த பூ. நல்லார் - பெண்கள். பூ -பொலிவு. கொழுதுதல் - பறித்தல். வயல் உழுத கரு மை நிறம் சேறு - வயலில் உழுத கரு நிறமுள்ள எருமையின் உடலில் ஒட்டிய சேறு, காதம் கமழும் - நெடுந்தூரம் மணக்கும். கருமை நிறச் சேற்று வயல் காப்பு - அவ்வாறு மணக்கும், கருமை நிறமுள்ள சேற்றையுடைய வயல் சூழ்ந்த ஊர். மை - எருமை. நிறம் - உடல். காதம் - நெடுந்தூரம். (55) 61. கல்வித் துறையவருங் காணிநில முள்ளவருஞ் செல்வத் தமிழார் திருநணா - இல்வித்தை யேற்றத்தாழ் வில்லா ரினியதமிழ் மக்களிடை யேற்றத்தாழ் வில்லா ரிருப்பு. கல்வித் துறையவர் செல்வம் தமிழ் ஆர் - கல்வி கற்பவர் வளவிய தமிழ் மொழியைப் பயில்வர். காணி நிலம் உள்ளவர் செல்வத்து அமிழார் - சொந்த நிலமுள்ளவர் செல்வச் செருக்குக் கொள்ளார். ஆர்தல் - பயில்தல். காணி - உரிமை. ‘காணியாளர்’ எனல் காண்க. இல் வித்தை ஏற்றத்து ஆழ்வு இல்லார் - குடும்ப வருவாயை வளரச் செய்யும் முயற்சியில் குறையார். தமிழ் மக்களிடை ஏற்றம் தாழ்வு இல்லார் - தமிழ் மக்களிடத்து உயர்வு தாழ்வு கருதார். இருப்பு - ஊர். இல் - குடும்பம். வித்து - காரணம். குடும்ப வளர்ச்சிக்குக் காரணம் - வருவாய். (56) 62. உற்றமழைக் காலையிலு மொல்லியரூர்ச் சாலையிலுஞ் சிற்றி லிழைக்குந் திருநணா - உற்றுப் படித்துறையு மாறுமமை பாங்குமிங்கூர் முற்றும் படித்துறையு மாறுமமை பாங்கு. மழை உற்ற காலையில் சிறு இல் இழைக்கும் - மழை பெய்த காலையில் சிறிய ஓலை வீடுகளைப் பிரித்து வேய்வர். ஒல்லியர் ஊர்ச் சாலையில் சிற்றில் இழைக்கும் - சிறுமியர் ஊர்த் தெருவில் மணல் வீடு கட்டிக்கொண்டு விளையாடும். உற்று படித்து உறையு மாறும் அமை பாங்கும் -வெளி யூர்களிலிருந்து வந்து, படித்துக் கொண்டு உண்டு உறையுமாறு அமைந்த உணவு விடுதியும். பவானியிலும் குமாரபாளையத் திலும் மாணவரில்லங்கள் - உணவு விடுதிகள்- உள்ளன. இங்கு ஊர் முற்றும் படித்துறையும் ஆறும் அமை - இங்கே ஊர் நெடுகப் படித்துறைகளும் அப்படித்துறைகள் உள்ள ஆறும் அமைந்துள்ள. பாங்கு - இடம். (57) 63. கற்றுணர்ந்த மேலோர் கடியுநவுஞ் செய்யுநவுஞ் சிற்றினஞ் சேராத் திருநணா - முற்றுலகப் பாளையத்தார் போற்றுமென்னார்ப் பட்டுத் தொழிற்குமர பாளையத்தார் போற்றும் பதி. கற்றுணர்ந்த மேலோர், கடியுந சில் தினம் சேரா - தகாதவை என நீக்குவன ஒருநாட்கூடப் பொருந்தா. கற்றோர் கடிவன வற்றை ஒருநாளும் செய்யார் என்பதாம். செய்யுந சிற்றினம் சேரா - நல்லவை கீழ் மக்களைச் சேரா. கடியுந - நீக்குவன - தகாதவை - கெட்டவை. செய்யுந - நல்லவை. முற்று உலகப் பாளையத் தார் போற்றும் - உலகமாகிய ஊர் முழுதும் போற்றும். பாளையம் - ஊர். உலகப் பாளையம் - உலகமாகிய ஊர் - உலகம். மெல்நார்ப்பட்டுத் தொழில் குமாரபாளையத்தார் - மெல்லிய நார்ப்பட்டுத் தொழிற்றிறம் உடைய குமார பாளையத்தார். தொழில் திறம் - வேலைப்பாடு. நார்ப்பட்டுத் துணி நெய்வதில் குமாரபாளையம் தனிச் சிறப்புடையதாகும். இத்தொழில்இவ்வளவு வேலைப்பாட்டுடன் இந்தியாவில் வேறு எங்கும் நடைபெறுவதில்லை. கைத்தறியில் இத்தகைய வேலைப்பாடு உலகிலேயே இல்லையெனலாம். போற்றும் பதி - ‘பவானிக் குமாரபாளையம்’ என உரிமை யுடன் கூறும் ஊர் - திருநணா என்பதாம். பதி - ஊர். (58) 64. செழுங்கழனிக் காலுமிளஞ் செம்மாருந் தாரும் பழங்கழனி மைக்கும் பவானி - புழங்கு மடைக்கலம்பு துக்குவார் மணங்கொளுங்காற் றூம்பின் மடைக்கலம்பு துக்குவார் வைப்பு. (1) செழுங் கழனிக் கால் பழங் கழனி மைக்கும் - செழிய வயலிடைப் பாயும் வாய்க்கால் பழைய வயலை இளகச் செய்யும். (2) இளஞ் செம்மார் பழங்கழல் நிமைக்கும் - சக்கிலிச் சிறுவர்கள் பழைய செருப்புக்கு மெருகிடும். (3) தாருப் பழம் கழனி மைக்கும் - மா பலா முதலிய பழங்கள் வயலில் விழுந்து அழுகி மக்கும். கழனி - வயல். கால் - வாய்க்கால். மைத்தல் - இளகுதல். செம்மார் - சக்கிலியர். தாரு - மரம். தாருப் பழம் என்பது தாரும் பழம் என மெலித்தல் விகாரம். நிமைத்தல் - மெருகிடல், மினுக்குதல் (பாலீஷ் போடுதல்). புழங்கும் மடைக்கலம் புதுக்குவார் - வீட்டில் புழங்குகின்ற மட்கலங்கள் செய்வார். மண் கொளுங்கால் - களிமண் எடுத்து வரச் செல்லும் போது, மடைத் தூம்பின் கல் அம்பு துக்குவார் - மடை மதகின் பாவு கல்லிலிருந்து விழும் நீரைக் குடிப்பர். கல் - மடையிலிருந்து மதகின் வழியாய் வரும் நீர் தள்ளி விழும் படி, மதகின் வெளியே நீட்டி வைத்திருக்கும் கல். அக்கல்லின் மீதிருந்து விழும் நீரைக் குடிப்பர் என்க. மடை - சோறு. மடைக்கலம் - சோற்றுப் பானை. இங்கு பொதுவாக மட்கலத்தைக் குறிக்கும். புதுக்குதல் - புதிதாகச் செய்தல். தூம்பு - மதகு. மடை - நீர்த் தேக்கம். அம்பு - நீர். துக்குதல் - குடித்தல். வைப்பு - ஊர். (59) 65. தங்குறையை நாடுநருந் தைக்கிழித்தட் டாடுநருஞ் செங்கரத்தை நோக்குந் திருநணா - வெங்கண் மருத்துவஞ் செய்வார் மகிழநோய் நாடி மருத்துவஞ் செய்வார்தம் வாழ்வு. தம்குறையை நாடுநர் செம் கரத்தை நோக்கும் - தமது குறையைத் தீர்த்துக் கொள்ள எண்ணுவோர் ஈவோரின் செவ்விய கையைப் பார்க்கும். தை கிழித்திட்டு ஆடுநர் செங்கரத்தை நோக்கும் - தை மாத நிலாவில் கிழித்தட்டு விளையாடுவோர் செங்கரத்தை நோக்கும். குறை - இன்மை. தை - தைமாதம். இது விளையாடுதற் கேற்ற நல்ல நிலாக் காலம். கிழித்தட்டு - ஒரு வகை விளை யாட்டு. செங்கரம் - நெடுங்கரங்களுக்குச் சரிநடுவில் குறுக்கே யுள்ள நேர்கோடு. கரம் - கோடு. இரண்டு நெடுங்கரங்களுக் கிடையே, அச்செங்கரத்தின் இரு பக்கமும் உள்ள இடம் வீடு எனப்படும். நெடுங்கரத்தைக் கடக்க, வீட்டுக்கு வீடு அங்கு மிங்கும் ஓடு வோரைச் செங்கரத்தில் தொடலாம். அதற்காகவே - கட்டுவோர் முட்டுவோரைத் தொட - செங்கரத்தை நோக்கும். கிழித்தட்டு - ‘தட்டுக்கரம்’ எனவும் வழங்கும். வெங்கண் மரு துவ அஞ்சு எய்வார் மகிழ - நோய் விருந்து போல் உடம்பை உண்ண உடல் வருந்துவார் மகிழும்படி. நோய் நாடி மருத்துவம் செய்வார் தம் வாழ்வு - அவர்தம் நோயை ஆராய்ந்தறிந்து மருத்துவம் செய்வார் - மருத்துவர் (டாக்டர்) வாழ்விடம். வெங்கண் - நோய். மரு - விருந்துணவு. புது மருமகனுக்கு மாமியார் இடும் விருந்தை - ‘மருவலம்’ எனல் கொங்கு நாட்டு வழக்கு. துவ - துவ்வ - உண்ண. அஞ்சு - நிலம் நீர் தீ காற்று வெளி என்னும் ஐம்பெரும் பூதங்கள். இவ்வைம்பெரும் பூதங்களா லானதே உடம்பு. ‘பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்’ (குறள் 271) என்பது காண்க. அஞ்சு - உடம்பு. ஐந்து - அஞ்சு - போலி. எய் - வருத்தம். எய்வார் - வருந்துவார். பவானியிலும் குமாரபாளையத்திலும் நாட்டாண்மைக் கழக மருத்துவ சாலை மருத்துவர்களும், பவானியில் நாலைந்து தனி மருந்துவர்களும் உள்ளனர். (60) 66. அம்பலகு கோடுநரும் ஆடிநீ ராடுநருஞ் செம்புன லாடுந் திருநணா - வம்புக் கரும்புகை கண்டுவக்குங் கான்முளைநட் பட்டிற் கரும்புகை கண்டுவக்குங் காப்பு. அம்பு அலகு கோடுநர் செம்புனல் ஆடும் - அலகு குத்திக் கொள்வோர் குருதி யொழுக ஆடும். ஆடிநீர் ஆடுநர் செம்புனல் ஆடும் - ஆடிப் பதினெட்டன்று கூடுதுறையில் குளிப்போர் புது நீரில் குளிப்பர். ஆடி மாதத்தில் காவிரியிலும் வானியிலும் புது வெள்ளம் வரும். அம்பு அலகு - கூரிய கம்பி. அலகு - கூர்மை. இது, அலகு என்றே வழங்குகிறது. அலகு கோடல் - உடம்பில் அலகு குத்திக் கொள்ளல். வம்பு கரும்பு கை கண்டு கான்முளை உவக்கும் - தாயின் கையில் இனிய கரும்பைக் கண்டு பிள்ளை மகிழும். தோட்டத்தி லிருந்து தாய் கரும்பு கொண்டு வருவாள். சந்தை அல்லது கடையில் வாங்கி வருதலுங் கொள்க. நட்பு அட்டில் கரும்புகை கண்டு உவக்கும் - நண்பர்கள் சமையலறையில் மிக்க புகையைக் கண்டு மகிழும். தொலைவில் வரும்போதே வீட்டுக் கூரைமேற் கிளம்பும் புகையைக் கண்டு வீட்டரசியார் வீட்டிலிருப்பதைக் கண்டு உவக்கும் என்க. நட்பு - நண்பரும் சுற்றத்தாரும். அட்டில் - சமையலறை. கருமை - பெருமை. வீட்டுக் கூரைமேல் கிளம்புவதால் மிக்க புகையாகும். கரிய புகையுமாம். காப்பு - ஊர். (61) 67. உய்யுமுயிர் வாயடையு மொண்புலவர் வாயிடையுஞ் செய்யுட் பிறக்குந் திருநணா - பொய்யுரைகாண் செல்லாண்டி யம்மன் றிருவிழாக் காணாது செல்லாண்டி யம்மன் றிரு. உயிர் உய்யும் வாயடை செய்யுள் பிறக்கும் - உயிர் உடலோடு கூடி வாழ்தற் கேதுவாகிய உணவு சமையலறையில் உண்டாகும்; உணவுப் பொருள், செய் உள் - நிலத்தில் விளையும். இஃதொரு வகைச் சிலேடை. வாயடை - உணவு. உணவுப் பொருள். செய்உள் - சமையல் செய்யும் அறை, நிலத்தில். செய் - நிலம். உள் - இல்; ஏழனுருபு. ஒண்புலவர் வாயிடை செய்யுள் பிறக்கும் - சிறந்த புலவர்கள் வாயின்கண் தமிழ்ச் செய்யுட்கள் தோன்றும். பொய்யுரை காண் - நீ சொல்வது பொய். செல்லாண்டி யம்மன் திருவிழாக் காணாது, அம்மன் செல்லாண்டி - தலைவன் செல்லமாட்டான். திரு - என்பாள் திருநகர். இது, தலைவன் பிரிவானென்ற தோழிக்குத் தலைவி சொல்லியது. ‘பிரிந்து செல்வான்’ என்றதால், ‘அம்மன்’ எனத் தலைவனைப் பிறன்போலக் கூறினாள். அம்மன் - அவன் - தலைவன். என்பாள் என்பது இசையெச்சம். திரு - செல்வம், அழகு. அது ஆகுபெயராய் அவை பொருந்திய ஊர்க்கானது. சினையாகு பெயர். செல்லாண்டியம்மன் திருவிழா, பவானியில் மாசி மாதத்தில் நடக்கும் ஒரு சிறந்த திருவிழா. (62) 68. மாலுமயிற் சாயலையும் வாயிலையு மேர்செய்யுங் கோலக் குழல்வானி கூடலே - பாலொடுநற் கண்டுண் டுவப்பார் கனிவாய் விருந்துண்ணக் கண்டுண் டுவப்பார் களம். மாலும் மயில் சாயலை கோலக் குழல் ஏர் செய்யும் - அழகிய மயில் போன்ற சாயலையுடைய பெண்ணை அழகிய தலை மயிர் அழகு செய்யும். வாயிலை கோலக் குழல் ஏர் செய்யும் - வீட்டு வாயிலைக் கோலக் குழல் அழகு செய்யும். மால் - அழகு. ஏர் - அழகு. கோலம் - அழகு. குழல் - தலைமயிர். கோலக்குழல் - கோலம் போடுங் குழல். பாலொடு நல்கண்டு உண்டு உவப்பார் - பாலும் சர்க்கரையும் உண்டு மகிழ்வார். கனிவாய் விருந்து உண்ண கண்டு உண்டு உவப்பார் - கனிவாக விருந்தினர் உண்பதைக் கண்டு தாமும் உண்டு மகிழ்வார். கண்டு - சர்க்கரை. நல்கண்டு - வெள்ளைச் சர்க்கரை (அஸ்கா). காப்பி, தேநீர் முதலானவுங் கொள்க. கனிவாக - மகிழ்வாக. விருந்து - விருந்தினர். விருந்தினர் மகிழ்வாக உண்பதைக் கண்டு தாமும் உண்டு மகிழ்தல் குடிப்பிறந்தார் பண்பாகும். இதனால், விருந்து புறத்ததாத் தாமுண்ணாமை பெறப்படும். கனிவாய் - கோவைக்கனி போன்ற வாய். ‘கனிவாய் விருந்து உண்ணக் கண்டு’ என்னும் நயத்தையறிக. களம் - இடம். (63) 69. ஒய்யாப் பசிப்பொருளை யொவ்வுலகப் பேரிருளைச் செய்யோ னகற்றுந் திருநணா - எய்யாத வம்பன்ன கையார் வறியோர் மனம்புழுங்க வம்பன்ன கையார் மனை. ஒய்யா பசிப்பொருளை செய்யோன் அகற்றும் - நீங்காத பசியை நிலத்துக் குரியவன் போக்கும். ஒவ்வுலகப் பேர் இருளை செய்யோன் நகற்றும் - பொருந்திய உலகத்தின் மிக்க இருளைச் சூரியன் ஒளியுடையதாக்கும். ஒய்யா - ஒய்யாத - நீங்காத. பசிப்பொருள் -பசியாகிய பொருள். பசியை, பொருள் என்றது இகழ்ச்சி. ஒவ்வுதல் - பொருந்துதல். ஒவ்வுலகப் பேரிருள் - உலகின்கண் பொருந்திய மிக்க இருள். செய் - நிலம். நகல் - ஒளி. எய்யாத அம்பு அன்ன கையார் - மூங்கில் போன்ற கையை யுடைய மகளிர், வறியோர் மனம் புழுங்க - எளியவர் மனம் வருந்த, அம் பல் நகையார் - அழகிய பல்தோன்றச் சிரித்திகழார். அம்பு - மூங்கில். எய்யாத அம்பு - வெளிப்படை. புழுங்குதல் - வருந்துதல். தம்பால் வந்திரக்கும் வறியோர் மனம் வருந்தும்படி இகழார் என்பதாம். மனை - இடம். (64) 70. ஏர்தருமூர் மன்றினுக்கு மேயகலை வென்றினுக்குந் தேர்தல் நடக்குந் திருநணா - சோர்தல் அரும்பா வினையா ரறம்பொரு ளின்பந் தரும்பா வினையார் தலம். ஏர்தரும் ஊர் மன்றினுக்கு தேர்தல் நடக்கும் - அழகு பொருந்திய ஊராட்சிக் கழகத்திற்குத் தேர்தல் நடக்கும். ஏய கலை வென்றினுக்கு தேர்தல் நடக்கும் - பொருந்திய கல்வியின் வெற்றிக்குத் தேர்தல் நடக்கும். ஏர் - அழகு. தேர்தல் - ஊர்மன்ற உறுப்பினரையும் தலைவரையும் தேர்ந்தெடுக்கும் தேர்தல். ஏய - பொருந்திய. கலை - கல்வி. வென்றி - வெற்றி. தேர்தல் - பரீட்சை. கலை வெற்றி - கல்வித் தேர்ச்சி. வென்றிஇன் உ கும். இன் உ - சாரியை. சோர்தல் அரும்பா வினையார் - சோர்வில்லாத தொழி லாளர், அறம் பொருள் இன்பம் தரும் பாவின் ஐ ஆர் - திருக் குறள் கற்று மேன்மை யடைவார். திருக்குறளுக்கு ‘முப்பால்’ என்னும் பெயருண்மையால், ‘அறம் பொருள் இன்பம் தரும்பா’ எனப்பட்டது. அம்மூன்றுங் கூறுதல் காரண்ம. ஐ - உயர்வு, மேன்மை. தலம் - இடம். (65) 71. தம்மெருவை மாக்களுக்குஞ் சார்ந்தறிஞர் மக்களுக்குஞ் செம்மறி வாக்குந் திருநணா - தம்ம வரைப்பேணி வாழ்குவார் மாநிலமீக் கூற்றின் வரைப்பேணி வாழ்குவார் வைப்பு. தம் எருவை மாக்களுக்கு செம்மறி வாக்கும் - தமது சாணியை விளை நிலங்களுக்குச் செம்மறியாடுகள் வழங்கும். அறிஞர் சார்ந்து மக்களுக்கு செம் அறிவு ஆக்கும் - அறிஞர்கள் அடிக்கடி போந்து மக்களுக்குச் சிறந்த அறிவை உண்டாக்குவர். மா - நிலம். விளைநிலம் - நன்செய் புன்செய் என இரு வகைப் படுதலின் ‘மாக்கள்’ எனப் பன்மை கூறப்பட்டது. செம்மறிவு - நல்லறிவு - பகுத்தறிவு. ‘மாக்கள் மக்கள்’ என்னும் நயங்காண்க. தம்மவரை பேணி வாழ்குவார் - தம் இனத்தவரை, சுற்றத் தினரைப் போற்றி வாழ்வார். மாநில மீக்கூற்றின் வரைப்பு ஏணி வாழ்குவார் - உலகப் புகழின் எல்லையிலுள்ள ஏணிப் படிமேல் வாழ்வார். மாநிலம் - உலகம். மீக்கூற்று - புகழ். மீக்கூற்றின் வரைப்பு - புகழின் எல்லை. மீக்கூற்றின் வரைப்பு ஏணி - புகழின் எல்லை யிலுள்ள ஏணிப்படி. ஒப்பிலா மிக்க புகழெய்தி வாழ்வார் என்பதாம். வைப்பு - ஊர். (66) 72. ஏடணியூர் முப்பாலு மேழிசையை யெப்பாலும் பாடப் பழகும் பவானியே - நீடுவயல் ஏர்பூட்டி யோட்டுவா ரெய்ப்பதனை யின்மொழியார் ஏர்பூட்டி யோட்டுவா ரில். ஏடு அணி ஊர் முப்பாலும் பாடு அப்பு அழகும் - மேன் மையும் அழகும் பொருந்திய ஊரின் மூன்று புறமும் ஒலிக் கின்ற நீர் அழகு செய்யும். ஏழ் இசையை எப்பாலும் பாட பழகும் - தமிழிசை ஏழையும் எல்லாப் பக்கமும், ஆண் பெண் எல்லோரும் பாடுதற்குப் பழகும். ஏடு - மேன்மை. அணி - அழகு. முப்பால் - கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று புறம். ஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உளை, இளி, விளரி, தாரம் என்பன. பாடுதல் - ஒலித்தல், பாடுதல். அப்பு - நீர். நீடுவயல் ஏர் பூட்டி ஓட்டுவார் எய்ப்பதனை - பெரிய வயலின்கண் ஏரோட்டுவார் இளைப்பினை, இன்மொழியார் - இனிய சொல்லையுடைய மனைவியர். ஏர்பு ஊட்டி ஓட்டு வார் - எழுச்சியை ஊட்டிப் போக்குவார். இல் - இடம். எய்ப்பு - இளைப்பு, களைப்பு. ஏர்பு - எழுச்சி, மன வெழுச்சி - ஊக்கம். மனவெழுச்சியை உண்டாக்கிக் களைப்பைப் போக்குவ ரென்க. (67) 73. உங்கோல மெல்லியரு மூராளுந் துல்லியருஞ் செங்கோல்கைக் கொள்ளுந் திருநணா - நங்கோவைக் கோட்டத் தலைநகருங் கூடுதுறை யாடுநருங் கோட்டத் தலைநகருங் கூடு. உம்கோல மெல்லியர் செம்கோல் கைக்கொள்ளும் - உயர்ந்த அழகிய மகளிர் உலக்கையைக் கைக்கொள்வர். ஊராளும் துல்லியர் செம்கோல் கைக் கொள்ளும் ஊரை யாளும் தக்கோர் முறையினை மேற்கொள்ளும். உம்கோலம் - உயர்ந்த அழகு. மெல்லியர் - பெண்கள். செம்கோல் - நேர்கோல் - உலக்கை. மையெழுதுங் கோலுமாம். துல்லியர் - தக்கோர். செங்கோல் - முறை - நீதி, ஆட்சிமுறை. நாடாளுந் தக்கோருங் கொள்க. நம் கோவைக் கோட்ட தலை நகரும் - நமது கோவைக் கோட்டத்தின் தலைநகரும், கூடுதுறை ஆடுநர் - கூடுதுறையில் நீராடுவோர், உங்கு ஓட்டத்து அலை நகரும் - அங்குமிங்கும், நீந்துவதால் அலையடிக்கும். கூடு - இடம். தலைநகராகிய அலையடிக்கும் இடம் திருநணா என்க. கோவைக் கோட்டமும் சேலங் கோட்டமும் ஒன்றாக - ஒரே கோட்டமாக - இருந்தபோது, பவானி அதன் தலை நகராக இருந்தது. (68) 74. வம்பார்வா ழைக்காலும் மாதெங்கங் காப்பாலுஞ் செம்போத்து மேவுந் திருநணா - அம்பாலைப் பண்ணாரப் பாடுவார் பாடிப்பொன் னித்துறையிற் றண்ணாரப் பாடுவார் சார்பு. வம்பு ஆர் வாழைக் கால் செம்போத்து மேவும் - தேன் பொருந்திய வாழை மரத்தின் அடியில் சிவந்த பக்கக் கன்றுகள் தோன்றும். மா தெங்கு காப்பால் செம்போத்து மேவும் - மாந் தோப்பிலும் தென்னந் தோப்பிலும் செம்போத்து என்னும் பறவை இருக்கும். வம்பு - தேன். ஆர்- பொருந்திய. கால் - அடிப்பாகம், தெங்கு அம். அம் - சாரியை; அழகிய என்றுமாம். போத்து - பக்கக் கன்று. செம்போத்து - ஒரு பறவை. அம் பாலைப் பண் ஆரப் பாடுவார் - அழகிய பாலைப் பண்ணைப் பொருந்தப் பாடுவார். பாடி பொன்னித் துறையில் தண் ஆர் அப்பு ஆடுவார் - அங்ஙனம் படி காவிரியாற்றில் குளிர்ச்சி பொருந்திய நீரில் குளிப்பார். அம் - அழகிய, பாலைப்பண் - ஒரு வகைத் தமிழ்ப்பண். பண் - இசை (ராகம்). ஆர - பொருந்த. பொன்னி - காவிரி. தண் ஆர் - குளிர்ச்சி பொருந்திய. அப்பு - நீர். சார்பு- இடம். (69) 75. வன்னப்பூ ஞாணர்களும் வண்டமிழ்ப்பா வாணர்களுஞ் சின்னப்பூச் சூடுந் திருநணா - இன்னலொருங் கோட்டையரண் செய்யுங் குடியுடைய தூராட்சிக் கோட்டையரண் செய்யுங் குடி. வன்னப்பூ ஞாணர்கள் சின்ன பூ சூடும் - அழகிய பூங்கொடி போன்ற மகளிர் மல்லிகை, முல்லை இருவாட்சி முதலிய சிறிய பூக்களைச் சூடுவர். வண்டமிழ் பாவாணர்கள் சின்னப் பூ சூடும் - வண்டமிழ்ப் புலவர்கள் சின்னப்பூ என்னும் பாமாலையைச் சூட்டுவர். வன்னம் - அழகு. ஞாண் - கொடி. ஞாணர் - கொடி போன்றவர். சின்னப்பூ தமிழிலுள்ள 96 வகை நூல்களுள் ஒன்று. அது மலை, ஆறு, நாடு முதலிய பதிற்றுறுப்பை (தசாங்கம்) நேரிசை வெண்பா 100, 90, 70, 50 ஆகப்படுதல். சூடும் - சூட்டும். தமிழன் னைக்குச் சூட்டுவர். ஞாணர்களும் - ரகரத்தைக் கெடுத்து, ஞாணர்களும் - நேர் நிரை நேர் - கூவிளங்காய் ஆகக் கொள்க. வாணர்களும் என்பதையும் இங்ஙனமே கொள்க. இன்னல் ஒருங்கு ஓட்டு ஐயர் - மக்கள் துன்பம் முழுவ தையும் போக்குகின்ற பெரியோர்கள். அண் செய்யும் குடி உடையது - துணை செய்யும் குடிமக்களை உடையது. குடி மக்கள் துன்பத்தைப் போக்கித் துணை செய்யும் பெரியோர் களையுடையது என்க. ஊராட்சிக் கோட்டை அரண் செய்யும் குடி - ஊராட்சிக் கோட்டை என்னும் ஊர் பாதுகாப்புச் செய்யும் ஊர். பெரியோர்களை யுடையதும் ஊராட்சிக் கோட்டை பாதுகாப்புச் செய்யும் ஊரும் திருநணா என்க. அண் - அண்மை - துணைமை. அரண் - பாதுகாப்பு. ஊராட்சிக்கோட்டை என்பது, பவானிக்கு இரண்டு கல் வடக்கில் உள்ள ஊர். இவ்வூர் ஒரு குன்றின் அடிவாரத்தில் இருக்கிறது. அக்குன்று ஊராட்சிக் கோட்டை மலை எனப்படும். இங்கு இடிந்த கோட்டை ஒன்று இருக்கிறது. கட்டிமரபினர் ஆட்சிக்காலத்தே இங்கு பவானிக் கோட்டையின் பாதுகாப்புப் படை இருந்து வந்தது. மூன்று பக்கமும் நீரரண் உள்ள பவானிக்கு இது மலையரண் ஆகும். பண்டு இது ‘நண்ணாமலை’ என வழங்கிற்று. முகவுரை பார்க்க. அரண் செய்யும், முன்பு. குடி - ஊர். (70) 76. ஓர்த்தறி சிறார்க்காண்டுக் கோர்முறையும் பன்முறையுந் தேர்த்திருநாள் மேவுந் திருநணா - கார்த்திகைமு னையாறு மாடுவார் நட்புலவத் தந்தமரி னையாறு மாடுவார் நட்பு. ஓர்த்து அறி சிறார்க்கு ஆண்டுக்கு ஓர் முறை தேர்த்து இருநாள் மேவும் - கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மேல் வகுப்புக்கு அனுப்பும் பெருநாள் வரும். ஆண்டுக்கு பன்முறை தேர்திரு நாள் மேவும் - ஆண்டில் பல முறை தேர்த்திருநாள் நிகழும். ஓர்த்தல் - உணர்தல். ஓர்த்து அறிதல் - உணர்ந்தறிதல். சிறார் - மாணவர். தேர்த்தல் - தெளிவித்தல். அறிவுத் தெளிவைத் தந்து மேல் வகுப்புக்கு அனுப்புதல். இரு - பெரிய. இருநாள் - பெருநாள். மேல் வகுப்புக்குச் செல்லுதல் மாணவர்க்குப் பெரு நாளாதல் அறிக. பவானியில் - பங்குனியில் இரண்டு தேரும், சித்திரையில் இரண்டு தேரும், மாசியில் செல்லாண்டியம்மன் தேரும் ஓடுகின்றன. கார்த்திகை முன் ஐயாறும் ஆடுவார் - ஐப்பசி மாதம் முப்பது நாளும் - முழுதும் - கூடுதுறையில் நீராடுவர். இது துலாக் காவிரி, துலாமுழுக்கு எனப்படும். துலா மாதம் - ஐப்பசி மாதம். கார்த்திகை முன் - ஐப்பசி. வெளியூரினர் பலர் பவானியில் வந்து தங்கித் துலாக்காவிரி யாடுவர். நட்பு உலவ தம் தமர் இல் - அன்பு பொருந்தத் தமது சுற்றத்தார் குடும்பம், நை யாறு மாடு வார் - நைந்தபோது பொருள் வழங்குவார். நட்பு - அன்பு கொண்டு வாழும் இடம். நட்பு - அன்பு. தமர் - சுற்றம். இல் - குடி- குடும்பம். நைதல் - பொருள் குறைதல் - வறுமையுறுதல். மாடு - பொருள். வார்த்தல் - வழங்குதல். வார்ப்பார் என்பது, வார் என முதனி லையாக நின்றது. (71) 77. திண்ணியபாட் டாலையிலுஞ் சிற்றுண்டிச் சாலையிலும் பண்ணியஞ் செய்யும் பவானியே - கண்ணிய மாகத் திகழ்வார் மனையலதை யஃதியங்கு மாகத் திகழ்வார் மனை. திண்ணிய பாட்டு ஆல் ஐயில் பண் இயம் செய்யும் - சிறந்த பாட்டின் மிக்க இன்பத்தை இசையும் இசைக் கருவி களும் செய்யும். சிற்றுண்டிச் சாலையில், பண்ணியம் செய்யும் - பலகாரம் செய்யும். திண்ணிய - சிறந்த. ஆலுதல் - இன்புறுதல். ஐயில் - மேல், மிக்க. ஆல் ஐயில் - மிக்க இன்பம். பாட்டின் மிக்க இன்பம். பண் - இசை. இயம் - இசைக்கருவிகள். அவை - யாழ், வீணை, கின்னரம், புல்லாங்குழல், மத்தளம், தாளம் முதலியன. கண்ணியமாக திகழ்வார் - பிறர் மதிக்கும்படி நடந்து கொள்வார், மனை அலதை - இல்வாழ்வுக்குத் தகாததை, அஃது இயங்கும் மாகத்து இகழ்வார் - அது நிகழும் தொலைவி லேயே இகழ்ந்து விலக்குவார்; அணுகவிடார். மனை - இல்வாழ்க்கை. மனையறம் எனக் காண்க. மனை அலது - இல்வாழ்க்கைக்குத் தகாதது, கெட்டது. மாகம் - தூரம். தகாத காரியத்தைச் செய்யார் என்பதாம். மனை - இடம். (72) 78. மும்மையறி வாளுநரும் மொய்ம்மலருங் கைம்மலருஞ் செம்மைகட் டங்குந் திருநணா - இம்மைப் பயனிகழ வுள்ளார் பதிபுகழுஞ் செல்வப் பயனிகழ வுள்ளார் பதி. (1) மும்மை அறிவு ஆளுநர் செம்மைக்கண் தங்கும் - முக்காலத்தையும் ஒருங்காராய்ந்தறியும் நுண்ணறிவுடையோர் நன்னெறிக்கண் நிற்கும். (2) மொய்மலர் செம்மைகள் தங்கும் - செழிய மலரில் சிறந்த தேன் பொருந்தியிருக்கும். (3) கைமலர் செம் கண் மை தங்கும் - கையில் செவ்வரி படர்ந்த கண்ணுக்கு எழுதும் மை இருக்கும். மை எழுதுங் கோலுங் கொள்க. மும்மை யறிவாளர் - அறிவர்; “மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்” (தொல், புறத் 20) என்பது காண்க. மொய்மலர் - செழியமலர். இம்மைப் பயன் இகழ உள்ளார் - பிறர் இகழும்படி யான காரியத்தைச் செய்ய நினையார்; பதி புகழும் செல்வப் பயன் நிகழ உள்ளார் - உலகம் புகழும்படியான செல்வம் பொருந்தவுள்ளார். பிறர்க்குப் பயன்படுவதால், உலகத்தார் புகழ்வரென்க. இம்மை - இப்போது, உலகில் வாழுங்காலம். இம்மைப் பயன் - பயன், செய்யுங்காரியம். பயன் இகழ - இகழ் பயன். இகழ் பயன் - பிறர் இகழத்தக்க காரியம். பதி - உலகம், ஊர். (73) 79. பாமே வியற்சீரும் பைங்கட் குயிலாருந் தேமாப் பயிலுந் திருநணா - தாமேவன் பாலிப்பார் மூடப் பழக்கவழக் கங்களைந்து பாலிப்பார் வாழும் பதி. பா மேவு இயற்சீர் தேமா பயிலும் - வெண்பா முதலிய பாக்களில் பொருந்தும் இயற்சீர் ‘தேமா’ என்னும் வாய் பாட்டால் வழங்கும். பைங்கண் குயிலார் தேமா பயிலும் - கரியகண்ணை யுடைய குயில் தேமா மரத்தில் தங்கியிருக்கும். இயற்சீர் - ஈரசைச்சீர். அது, தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என நால்வகைப்படும். அவற்றுள் தேமா ஒன்று. தேமா - ஒருவகை மாமரம். (74) 80. நெல்லாதி காக்குநரும் நீத்தங் கடக்குநருஞ் செல்லோடத் தேறுந் திருநணா - கல்லா மகவளர்த்த லில்லார் மடியின்றிக் குன்றா மகவளர்த்த லில்லார் மனை. நெல் ஆதி காக்குநர் செல் ஓட தேறும் - நெல்முதலிய தவசங்களைப் பழுதுபடாமல் காப்பவர் செல் என்னும் பூச்சிகள் போகும்படி தெள்ளும், நீத்தம் கடக்குநர் செல் ஓடத்து ஏறும் - ஆற்று வெள்ளத்தைக் கடப்பவர் அக்கரைக்குப் போகின்ற பரசலில் ஏறும். செல் - நெல், சோளம், பயிறு முதலியவற்றி லுண்டாகும் சிறு பூச்சி. உழு எனவும்படும். பரசல் - படகு. கல்லா மகவு வளர்த்தல் இல்லார் - கல்லாமல் பிள்ளையை வளர்க்கார். மடி இன்றி குன்றா மகம் வளர்த்தல் இல்லார் - சோம்பலின்றிக் குறையாத இன்பத்தினை வளர்க்கும் இல்வாழ்க் கையை உடையார். மடி - சோம்பல். குன்றாத - குறையாத. மகம் - இன்பம். இல் - இல்வாழ்வு. மனை - இடம். (75) 81. பாவலரும் பாத்தோயும் பாவலரும் பாத்தலகு பாவடியிற் கொள்ளும் பவானியே - பாவையர்பூங் காவிரிவா யாடுங் களங்காத் தமிழ்பாடிக் காவிரிவா யாடுங் களம். பாவலர் பாத்து பா அடியில் அலகு கொள்ளும் - புலவர்கள் அசைபிரித்துப் பாக்களின் அடிகளில் அலகு கொள்ளும். பாத் தோயும் பா வலர் பாத்து பாவடியில் அலகு கொள்ளும் - துணிநெய்யும் பாத்தோயும் பாவில் வல்லவர் பா நூல்களைப் பிரித்துப் பாவடியில் அலகு கொள்ளும். பாவலர் - பாட்டுப்பாடும் புலவர். புலவர்கள் அலகு கொள்ளல் - பாட்டின் அடியிலுள்ள சீர்களை அசைபிரித்து வாய்பாடு கண்டு தளைகூறுதல். பாட்டின் அடி - குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்து வகைப்படும். சீர் - மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீர் என நான்கு வகைப் படும். அசை - நேரசை, நிரையசையென இருவகைப்படும். இவற்றின் விரிவை யாப்பிலக் கண நூலில் காண்க. பாத்தோய்வோர் அலகு கொள்ளல் - பாவடிக்கற்களின் மேல் பாவை இழுத்துக் கட்டி, கஞ்சி போட்டு, பாவின் பிணி களில் அலகு கோல்களைப் பாய்ச்சி, மேலும் கீழும் இழுத்து, கஞ்சி தோய்த்த பாநூலைத் தனித்தனியாக்குதல். பாத்தோயும் பா வலர் - பாத்தோய்வதில் வல்லவர்; மிகுந்த பயிற்சி யுள்ளவர். பாத்தோய்தல் - பாவுக்குக் கஞ்சி போடுதல். பாத்தோயும் பா வலர் - பாவுக்குக் கஞ்சிப்போட்டுப் பாவைப் பக்குவஞ் செய் வதில் வல்லவர். பாவையர் பூங்காவிரி வாய் ஆடும் - பெண்கள் அழகிய காவிரியில் நீராடுவார். களம் கா தமிழ் பாடி - சங்கத்தார் காத்த தமிழைப் பாடிக் கொண்டு, கா விரிவாய் ஆடும் - மரங்கள் அடர்ந்துள்ள சோலையில் விளையாடுவர். கா -மரம். விரிதல் - அடர்தல், பரவுதல். வாய் - இடம். காவிரிவாய் - சோலை, தோப்பு. இது, ஊரின் மேல்புறம், காளிங்கராயன் அணைக் கட்டுக்கு அருகில் உள்ள அணைத்தோப்பு. (இந்நூலின் 57, 89 பாட்டுக் களைப் பார்க்க.) ஆறும் காவும் ஆடுவர் என்க. களம் - சங்கம். கா தமிழ் - காத்த தமிழ். சங்கப் புலவர்கள் காத்த தமிழ். களம் - இடம். (76) 82. இல்லாண்மை யூரருங்கை யேரரும்பைங் கூழுண்ணச் செல்லாமை போக்குந் திருநணா - கல்லூரி மாணவரா லிப்பார் வளமுறுதல் கண்டுள்ள மாணவரா லிப்பார் வளம். இல்லாண்மை ஊரர் செல்லாமை போக்கும் - குடும்பத்தை யாளுந்தன்மையை மேற்கொண்டவர் வறுமையைப் போக்கும். கை ஏரர் பைங்கூழ் உண்ண செல் ஆ மை போக்கும் - உழவுத் தொழில் செய்வோர் பயிரை உண்ணவரும் மாடு ஆடு எருமை முதலியவற்றை ஓட்டும். இல் -குடும்பம். இல் ஆண்மை - குடும்பத்தை ஆளுந் தன்மை. ஊர்தல் - மேற்கொள்ளல். இல்லாண்மை ஊரர் - மேம் பாடுறக் குடும்பம் நடத்துவோர். கை - செயல். பைங்கூழ் - பயிர். செல்லாமை - வறுமை. ஆ - மாடு. மை - ஆடு, எருமை. கல்லூரி மாணவரால் - மாணவர் செய்யும் சமூகத் தொண்டி னால், இ பார் வளமுறுதல் கண்டு - இந்நாடு முன்னேற்ற முறுதல் கண்டு. உள்ளம் மாண் அவர் ஆலிப்பார் - மனமாட்சி யுடைய பெரியோர்கள் மகிழ்வர். ஆலித்தல் - மகிழ்தல். குமாரபாளையத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் சமூகநலத்தொண்டு செய்வார்கள். வளம் - வள முடைய ஊர். (77) 83. வெண்பஞ் சுமிவிதையை வீடுறுபுன் மாப்புதையைத் திண்பொறிவே றாக்குந் திருநணா - பண்பொதிந்த வாயார் களைகளைவார் வாழ்வறுநர் பூம்பழன வாயார் களைகளைவார் வாழ்வு. வெண்பஞ்சு உமி விதையை திண்பொறி வேறு ஆக்கும் - வெண்ணிறமுள்ள பஞ்சையும் கொட்டையையும் உமியையும் அரிசியையும் வலிய இயந்திரம் வெவ்வேறாகப் பிரிக்கும். விதை - பருத்திக் கொட்டை, அரிசி. பஞ்சாலையிலும் நெல்லாலையிலும் இச்செயல்கள் நிகழும். பவானியில் ஆனந்தா மில், ஆண்டவர் ரைஸ்மில், தனலட்சுமி மில், முருகானந்தா மில், ராஜா மில் என்னும் ஆலைகள் உள்ளன. வீடு உறு புன்மா புதையை திண்பொறி வேல் தாக்கும் - வீட்டினுள் புகும் எலி முதலிய தீமை செய்யும் உயிர்களை வலிய பொறியும் வேலும் தாக்கும். புன்மா - புல்லிய உயிர்கள். அவை - எலி, பெருச்சாளி, பாம்பு முதலியன. புதை - உடம்பு. பொறி - எலிப்பொறி, பெருச்சாளிப்பொறி, மின் பொறி முதலியன. வேல் - குத்துக்கோல். குத்துக்கோலால் குத்துவர். பண் பொதிந்த வாயார் - இனிமையான சொல்லை யுடைய மகளிர். வாழ்வு அறுநர் களைகளைவார் - வறுமையால் வாழ்விழந் தோரின் துன்பத்தைப் போக்குவர். பூம்பழனவாய் ஆர் களை களைவார் - அழகிய வயலின் கண் உள்ள புற்களைப் பிடுங்கி யெறிவர். வாழ்வு - வாழுமிடம். பண் - இசை. களை - துன்பம்.(78) 84. மானார்வாய்ச் செம்மொழியும் வண்டினம்பூங் காவழியுந் தேனாடிச் செல்லுந் திருநணா - மேனாடர் ஒப்பித் தகன்றா ருரிமையதற் குத்தம்மை ஒப்பித் தகன்றார்வா ழூர். மானார்வாய் செம்மொழி தேன் ஆடி செல்லும் - மான் போன்ற மகளிர் வாயிலிருந்து வரும் செவ்விய சொல் இனிமை பொருந்தியிருக்கும். வண்டினம் பூங்கா வழி தேன் நாடி செல்லும் - வண்டுகள் சோலையின் இடத்திற்குத் தேனை நாடிச் செல்லும். தேன் - இனிமை. வழி - இடம். மேல்நாடர் உரிமை ஒப்பித்து அகன்றார் - வெள்ளைக் காரர் இந்நாட்டுரிமையை நம்மிடம் ஒப்பித்துச் சென்றார், அதற்கு - அந்நாட்டுரிமைப் போர்க்கு; அதாவது, வெள்ளைக் காரர் ஒப்பித்தகலுமுன் (1947 க்கு முன்) நடத்திய உரிமைப் போர்க்கு. தம்மை ஒப்பித்தகன்றார் வாழ் ஊர் - தம்மை ஒப்படைத்த முதிர்ந்த நாட்டுத் தொண்டர்கள் வாழ்கின்ற ஊர். கன்றுதல் - முதிர்தல். கன்றார் - கன்றினார். (79) 85. ஈடறுநல் லார்தாளு மின்னிசைகேட் பார்நாளும் பாடகஞ் சேரும் பவானியே - நாடக மாடுமரங் காக்கு மகநீ ரிடையேகு மாடுமரங் காக்கு மகம். ஈடு அறு நல்லார் தாள் பாடகம் சேரும் - ஒப்பில்லாத நற்குணமுள்ள மகளிர் கால்கள் பாடகம் என்னும் அணிகலம் பொருந்தும். இன்னிசை கேட்பார் நாளும் பாடு அகம் சேரும் - இனிய இசையைக் கேட்போர் நாடோறும் இசைபாடும் இடம் செல்லும். ஈடு - ஒப்பு. பாடகம் - ஒரு காலணி. பாடகம் - இசை யரங்கு. நாடகம் ஆடும் அரங்கு ஆக்கும் - நாடக அரங்கு உண்டாக்கும். அகநீரிடை - ஆற்று வெள்ளத்தில், ஏகும் ஆடும் மரம் காக்கும் - செல்லும்போது ஆடுகின்ற பரசலைக் கவிழாமல் காக்கும். அகநீர் - வெள்ளம். மரம் - மரக்கலம் - கப்பல். இங்கு பரசல். அத்தகு பயிற்சி யுடையரென்க. இசை நாடகத் தமிழ் போற்றுதல் பெறப்படும். அகம் - ஊர். (80) 86. குறுங்கரும்புட் காடுஞ்செய்க் கோடுங் கொழுவால் நறுங்குவளை மேவு நணாவே - மறுகெங்குந் துப்புரவு செய்வார் துறைபடுநோய் வேரறுத் துப்புரவு செய்வார் துறை. குறும் கரும்புள் காடு நறும் குவளை மேவும் - சிறிய வண்டுக் கூட்டம் மணம் பொருந்திய குவளை மலரைப் பொருந்தும். செய்க்கோடு கொழுவால் நறுங்குவளை மேவும் - வயலின் வரப்பின் கண், கலப்பையின் கொழுவால் நறுங்கிய சங்குகள் பொருந்தும். கரும்புள் - வண்டு. காடு - கூட்டம். செய் - வயல். கோடு - வரப்பு. வளை - சங்கு. கொழுவால் நறுங்கிய சங்குகள் வரப்பில் ஒதுக்கப் படும். மறுகு எங்கும் துப்புரவு செய்வார் - தெருவெங்கும் சுத்தம் செய்வார். துறைபடுநோய் வேர்அறுத்து புரவு செய்வார் - பல வகையான நோய்களும் அணுகாமல் பாதுகாப்பவராவர். மறுகு - தெரு. துப்புரவு - சுத்தம்; தெருவைக் கூட்டிச் சுத்தம் செய்தல். துறைபடல் - பலவகைப்படல். புரவு செய்தல் - காத்தல். வேரறுத்தல் - நோய்களை அடியோடு போக்குதல். ஊர்நலப் பாதுகாவலர் துப்புரவுத் தொழிலாளரேயாவர். துறை - இடம். (81) 87. வண்மைச்செந் தண்ணடைக்கும் வாலறிவர் நம்மிடைக்குந் திண்மைத்தொண் டாற்றுந் திருநணா - பெண்மைக் குணங்குறையா நல்லார் குறிப்பறிந்து வாழ்க்கைக் குணங்குறையா நல்லார் குடி. வண்மைசெம் தண்ணடைக்கு திண் மை தொண்டு ஆற்றும் - வளப்பம் பொருந்திய சிறந்த வயலுக்கு வலிய எருமைக் கடாக்கள் உழவுத் தொழில் புரியும். வாலறிவர் நம் இடைக்கு திண்மை தொண்டு ஆற்றும் - உண்மை யறிவாளர் நம் நாட்டிற்கு வலிய தொண்டு செய்வர். ‘வன்றொண்டர்’ எனல் காண்க. செம்மை - நன்மை. தண்ணடை - வயல். வால் அறிவு - உண்மை யறிவு. நம்இடை - நாம் வாழும் இடம் - நம்நாடு. மை - எருமை. பெண்மை குணம் குறையா நல்லார் - பெண்மைக் குணத்திற் குறையாத மகளிரின், குறிப்பு அறிந்து வாழ்க்கைக்கு உணங்கு உறையா நல்லார் குடி - குறிப்பறிந்து அவர்கள் வாழ்க்கையில் வருத்தம் சேராத நல்ல கணவரது ஊர். குறையா - குறையாத. நல்லார் - பெண்கள், நல்ல கணவர். உணங்குதல் - வருந்துதல். உணங்கு - வருத்தம். உறையா - உறை யாத - தங்காத - சேராத. மனைவியரின் குறிப்பறிந்து அவர் தம் வாழ்க்கையில் வருத்தம் சேராதபடி நடந்து கொள்ளும் நல்ல கணவர். குடி - ஊர். (82) 88. தண்ணடைக்குப் பல்காலுந் தானைவெளுப் பார்மேலும் வண்ணம் படுக்கும்ப வானியே - எண்ணத் திரைக்காட்சி காண்பார் சிறுபோது போக்காத் திரைக்காட்சி காண்பார்தஞ் சேர்பு. தண்ணடைக்கு பல்கால் வண் அம்பு அடுக்கும் - வயலுக்குப் பல வாய்க்காலினின்று நிறைய நீர் பாயும். தானை வெளுப்பார் மேலும் வண்ணம் படுக்கும் - துணி வெளுப் போர் நன்கு வண்ணம் செய்யும். கால் - வாய்க்கால். தானை - ஆடை, துணி. மேலும் - மிகவும் - நன்கு. வண்மை - வளம். அம்பு - நீர். பவானிக்கு மேல்புறம் (1) காளிங்கராயன் வாய்க்கால், (2) அதற்கு மேல் புறம் கீழ்பவானி வாய்க்கால், (3) வடபுறம் மேல்கரை மேட்டூர் வாய்க்கால், (4) கீழ்புறம் கீழ்கரை மேட்டூர் வாய்க்கால் என்னும் நான்கு வாய்க்கால்கள் பாய்கின்றன. வண்ணம் - சலவை. எண்ணத்து இரைக்கு ஆட்சி காண்பார் - ஆராய்ச்சி யுடன் உணவுப் பொருளை உண்டாக்கும் பயிற்சியை மேற் கொள்வார். சிறுபோது போக்கா திரைக்காட்சி காண்பார் - கொஞ்ச நேரம் பொழுது போக்காகப் படக்காட்சி காண்பர். எண்ணம் - ஆராய்ச்சி. இரை -உணவு. ஆட்சி - பயிற்சி. புதிய ஆராய்ச்சி முறைப்படி பயிர் செய்ய முயல்வர் என்பதாம். சிறுபோது போக்கா - சிறிது நேரம். திரைக்காட்சி - சினிமா. பவானியில் - மோகன் பாலஸ், ராயல் தியேட்டர் என்னும் கொட்டகைகளும், குமாரபாளையத்தில் முருகன் தியேட்டரும் உள்ளன. சேர்பு - ஊர். (83) 89. மொய்த்தன்று தேடியதை மூக்குலமு மாக்குலமும் வைத்தின்று வாழும்ப வானியே - தைத்திருநாட் கூடலிறை கொள்ளுங் குடிமக்கள் சாறயர்ந்து கூடலிறை கொள்ளுங் குடி. மொய்த்து அன்று தேடியதை மூக்குலம் வைத்து இன்று வாழும் - இளமைப் பருவத்தே தேடிய பொருளை முதுமைப் பருவமுடையோர் கைமுதலாகவைத்து இப்போது வாழும். ஆக்குலம் வை தின்று வாழும் - மாடுகள் வைக்கோலைத் தின்று வாழும். மொய்- வலிமை. மொய்த்து அன்று - உடல் வலியுள்ள இளமைப் பருவத்தே. மூக்குலம் - முதியோர். ஆ - மாடு. வை - வைக்கோல்; மற்ற புல்லும் தட்டுங் கொள்க. குடிமக்கள் தைத்திருநாள் சாறு அயர்ந்து கூடல் இறை கொள்ளும் - ஊர் மக்கள் தைத் திருநாளில் திருநாட் கொண்டாடி அணைத்தோப்பில் தங்குவர். கூடலிறை கொள்ளும் குடி - சங்கமேச்சுரர் கோயில் கொண்டுள்ள ஊர். தைத்திருநாள் - பொங்கல் திருநாள். சாறு - திருநாள். அயர்தல் - கொண்டாடுதல். சாறு அயர்தல் - திருநாட் கொண் டாடுதல். கூடல் - தோப்பு. இங்கு, அணைத்தோப்பு. இது, ஊர்க்கு மேல்புறம் காளிங்கராயன் அணைக்கட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறது (57-ஆம் பாட்டைப் பார்க்க). இறை கொள்ளல் - தங்குதல். தைப் பொங்கல் திருநாளில், கரிநாளன்று ஊர் மக்கள் அணைத்தோப்பில் சென்று தங்கி அத்திரு நாளைக் கொண் டாடுவர். இவ்வூர் மக்கட்கு இது ஒரு சிறந்த மனமகிழ் திரு நாளாகும். கூடலிறை - சங்கமேச்சுரர். இது, திருநணாச் சிவன் பெயர். (84) 90. நம்பிமுயல் வாரகத்தும் நன்மனத்தும் பைம்புலத்துஞ் செம்பருத்தி பூக்குந் திருநணா - வெம்பசிக்கா காரம் பயில்வார் கலைக்குச் சிலப்பதி காரம் பயில்வார் களம். நம்பி முயல்வார் அகத்து செம்பு அருத்தி பூக்கும் - நம்பிக்கை கொண்டு முயல்வார் வீட்டில் விரும்பப்படும் பொன் - செல்வம் உண்டாகும். நல் மனத்து செம்பு அருத்தி பூக்கும் - நல்ல மனத்தில் விரும்பப்படும் பொருள் உண்டாகும். பைம் புலத்து செம்பருத்தி பூக்கும் - விளை நிலத்தில் நல்ல பருத்திச் செடி பூக்கும். அகம் - வீடு. செம்பு - பொன், பொருள். அருத்தி - விரும்பப் படும் பொருள். வீட்டில் பொன்னும் மனத்தில் விரும்பப்படும் பொருளும் உண்டாகும். நிரனிறையணி. எண்ணிய எண்ணி யாங் கெய்தும் என்க. செம்பருத்தி - பூணூhல் பருத்திச் செடி. செம்பருத்தி என்னும் பூச் செடியுமாம். வெம் பசிக்கு ஆ கார் அம்பு அயில்வார் - மிக்க பசிக்காக மழை நீரை உண்பார். கலைக்கு சிலப்பதிகாரம் பயில்வார். வெம்பசி - மிக்க பசி; மக்களைப் பல கெட்ட செயலுஞ் செய்விக்கும் கொடிய பசி. கார் - மழை. அம்பு - நீர். ‘பசிக்கு ஆகாரம்’ என்னும் நயங்காண்க. கலைக்கு - கலைப்பசிக்கு. பயில்வார் - படிப்பார். வெறுந்தண்ணீரைக் குடித்துப் பசி தணியும் வறுமை நிலையினரும் சிலப்பதிகாரம் படிப்பர் என்பதாம். ‘செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கு மீயப் படும்’ என்னும் குறட்கருத்துங் கொள்க. களம் - இடம். (85) 91. அய்துமழிப் பார்குழலை யாவுணுமென் பூவிழலைக் கொய்துமழிப் பார்வானி கூடலே - பெய்துமலர் கோவில் வழிபடுவார் கொட்குங் கயவர்கடங் கோவில் வழிபடுவார் கூறு. அய்து மழிப்பார் குழலை கொய்து மழிப்பார் - நன்கு சவரஞ் செய்வார் மயிரைக் கத்தரித்து நீக்குவார். ஆ உணும் மென்பூ விழலை கொய்து மழிப்பார் - மாடு உண்ணும் மெல்லிய பூவையுடைய புல்லை அறுத்து மொட்டையாக்குவார். ஐது - மென்மையாக - நன்கு. மழித்தல் - சவரஞ் செய்தல். குழல் - மயிர். கொய்து மழித்தல் - தலைமயிரைக் கத்தரித்து முகமயிரை முழுதும் நீக்குதல். கொய்தல் - நறுக்குதல். மழித்தல் - மொட்டை யடித்தல். ஆ - மாடு. விழல் - புல். மென் பூ விழல் - மெல்லிய பூவுடைய புல் - சீமைப்புல். மலர் பெய்து கோவில் வழிபடுவார் - மலர் தூவிக் கோவிலில் பூசனை செய்வார். தேங்காய் பழம் முதலியன படைத்தலுங் கொள்க. கொட்கும் கயவர்கள் தம் கோ இல் வழிபடுவார் - சுற்றித்திரியும் கீழ்மக்களுடைய கண்கள் படாத வழியில் செல்வர். கொட்குதல் - சுற்றித்திரிதல். கயவர்கள் - கீழ்மக்கள். கோ - கண். கயவர்கள் கண் படாத வழியில் செல்லல் - ஒப்பனை யின்றிச் செல்லுதல். ஒப்பனை - அலங்காரம். கீழ்மக்கள் பார்க்கும்படி ஆடையணிகளால் தம்மை அலங்காரம் செய்து கொள்ளாமல் வெளிச் செல்லுதல் குலமகளிர்க் கழகாகும். கூறு - இடம். (86) 92. பம்பிளஞ்சேய் காலகத்தும் பாவையர்கை கானகத்துஞ் செம்பஞ்சு பூசுந் திருநணா - தம்புலமை யுள்ளத் தனைய ரொழுங்கொடுகற் றொண்புலவர் உள்ளத் தனைய ருறை. பம்பு இளஞ்சேய் கால் அகத்து செம்பு அஞ்சு பூசும் - இளங் குழந்தைகள் காலின்கண் செம்பு முதலிய ஐம்பொன்னாற் செய்யப் பட்ட ஐவண்ணக் காப்புப் பொருந்தும். பாவையர் கை கால் நகத்து செம்பஞ்சு பூசும் - பெண்கள் கை கால் நகங் களுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசுவர். பம்புதல் - மிகுதல். பம்பிளமை - மிக்க இளமை. ஐவண்ணக் காப்பு - பஞ்சவர்ணக் காப்பு. இளங் குழந்தைகளுக்கு, செம்பு பொன் வெள்ளி இரும்பு ஈயம் என்னும் ஐவகைப் பொன்னாற் செய்யப்பட்ட கால் காப்பணிதல் வழக்கம். செம்பஞ்சு - நகங் களுக்குப் பூசும் செம்பஞ்சுக் குழம்பு. தன் ஐயர் தம் புலமை. உள்ள - தமது தமையன்மார் தமது அறிவுச் சிறப்பை எண்ணி வருந்த. தாம் அங்ஙனம் கற்று அறிவைப் பெறவில்லையே என்று வருந்துவ ரென்க. ஒழுங் கொடு கற்று - ஒழுங்காகக் கற்று. ஒண்புலவர் உள்ளத்து அனையர் - சிறந்த புலவர்கள் எவ்வாறு ஒருவர் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அத்தகைய அறிவொழுக்கமுடையவர். புலவர் அங்ஙனம் எண்ணி, அவ்வாறு பாடுதல் புலவருலகம் எனப்படும். புலமை - அறிவு. உள்ள - எண்ண. தன் ஐயர் - தமையன் மார். ‘முன்னின்று மொய்யவிந்தார் என்னையர்’ (புறப்பொருள் வெண்பா மாலை) என் ஐயர் - எனது தமையன்மார் எனல் காண்க. (87) 93. இடுகலைகற் றச்சினரு மேரினரு மாரு நடுகன்னல் வெட்டு நணாவே - நெடுகக் கொழுநருட னாடுவார் கோடலைப்பொன் கொள்ளக் கொழுநருட னாடுவார் கூறு. இடு கலை கல்தச்சினர் நடு கல் நல் வெட்டும் - சிற்பக் கலைத் தொழில் செய்யும் சிற்பியர் வீரர்களுக்கு நடும் கல்லில் வீரருடைய பேரும் புகழும் செதுக்கும். ஏரினர் ஆரும் நடு கன்னல் வெட்டும் - உழவர்கள் தகுதியான நடுகின்ற கரும்பினை வெட்டுவார். இடுதல் - செய்தல். கலை - சிற்பக்கலை. இடு கலை - செய்கின்ற சிற்பக்கலைத் தொழில். நாட்டுக்காகப் போர்புரிந்து உயிர்விட்ட வீரர்களுக்கு நடுகல் நாட்டிப்பெருமைப் படுத்தும் வழக்கம் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே தமிழ் நாட்டில் இருந்து வந்தது (தொல்,புறத் 5). பெரியார்களுக்கு நினைவு மண்டபம் கட்டுவதும் இத்தகையதே. ஏரினர் - உழவர். தகுதியான கரும்பு - நடுதற்குத் தகுதியான கரும்பு. நெடுக கொழுநருடன் ஆடுவார் - படித்துறையில் நெடுக ஆண்களும் பெண்களுமாக நீராடுவர். கொள் தலைப் பொன் கொள்ள கொழுநர் உடன் நாடுவார் - தலையில் வைத்து முழுகுங் காசை எடுக்கச் சிறுவர்கள் உடனே தேடுவர். கொள் தலை - கோடலை. பொன் - காசு. ஆடிப் பதி னெட்டுப் போன்ற நன்னாட்களில் கூடுதுறையில் நீராடுவோர் தலையில் காசை வைத்து முழுகுதல் வழக்கம். அந்தக் காசு களைச் சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கித் தேடுவர். கொழுநர் - சிறுவர். கூறு - இடம். (88) 94. பாவையர்வாய்ப் பாற்கணிப்பும் பாப்பிணைப்பும் பைங்கிள்ளை கோவையுண னேர்வானி கூடலே - காவற் பணிமனையிற் செய்யும் பதிபுரப்பா ராட்சிப் பணிமனையிற் செய்யும் பதி. பாவையர் வாய்ப்பாற்கு அணிப்பு பைங்கிள்ளை கோவை உணல் நேர் - பெண்கள் இதழுக்குச் சிவப்புச் சாயம் பூசுதல் கிளி கோவைப் பழம் உண்ணுதலை ஒக்கும். பால் - பகுதி. வாய்ப்பால் - இதழ். அணிப்பு - அழகு செய்தல். இதழுக்குச் சிவப்புச் சாயம் பூசும் போது, சிவப்புச் சாயம் பூசிய விரல்களின் நகங்கள் கிளிமூக்குப் போல் தோன்றும். அதனால், அது கிளி கோவைப் பழத்தை உண்பதை ஒக்கும். இதழ் - கோவைப்பழம். நகம் - கிளிமூக்கு. பா பிணைப்பு கோ வை உணல் நேர் - துணி நெய்யும் பாத் தீர்ந்து விட்டால், புதுப்பாவை அக்குறைப்பாவுடன் பிணைத்தல் மாடு வைக்கோல் தின்பதை ஒக்கும். கோ - மாடு. வை - வைக்கோல். குறைப்பாவில் தொங்குகின்ற நூல்களை எடுப்பது மாடு வைக்கோலைத் தின்ன எடுப்பது போல் தோன்றும். பதிபுரப்பார் ஆட்சிப் பணிமலையில் செய்யும் காவல் பணி - ஊரினையும் நாட்டினையும் ஆளும் அதிகாரிகளும் அலுவ லாளர்களும் தத்தம் பணிமனைகளில் செய்யும் அரசியல் வேலைகளை, மன் ஐயில் செய்யும் - மிகவும் நன்கு செய்யும். பதி - ஊர், நாடு. பதிபுரத்தில் - ஊரினையும் நாட்டினையும் காத்தல். புரத்தல் - காத்தல். காத்தலாவது - தத்தம் அலுவல் களைப் பொறுப்புடன் செய்து, குற்றங் குறை நேரா வண்ணம் குடிமக்களைப் பாதுகாத்தல். பதிபுரப்பார் - ஆட்சியாளர். அவர் - பலவகை அரசியல்துறை அதிகாரிகளும் அலுவலாளர்களுமாவர். ஆட்சிப் பணிமனை - அலுவலகம் - ஆபீஸ். காவல்பணி - அரசியல் வேலைகள். அரசு - காவல். பணி - வேலை. பதி - ஊர். பவானியிலுள்ள ஆட்சிப் பணிமனைகளாவன: ஊராட்சி மன்றம், கூற்றப் பணிமனை (தாலுகா ஆபீஸ் ), துணைத் தீர்ப்புக் களரி (சப் மாஜிஸ்ட்ரேட்), உள்ளாவணக் களரி (சப் ரிஜிஸ்தார் ஆபீஸ்),காப்பகம் (போலீஸ் ஸ்டேஷன்), மின்சார நிலையம், உழவுப் பணிமனை (விவசாய ஆபீஸ்), துணைப் பொறித் துறையகம் (அஸிஸ்டன்ட் இஞ்சினீயர் ஆபீஸ்), துணை விற்பனை வரியகம் (D.C.T.O. ஆபீஸ்), பள்ளித்துணை ஆய்வகம் (டிப்டி இன்ஸ்பெக்டர் ஆபீஸ்), வட்டப் புகையிலை வரியகம் (புகை யிலை வரிச் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆபீஸ்), துப்புரவாய் வகம் (சானட்டரி இன்ஸ்பெக்டர் ஆபீஸ்), அஞ்சலகம் (போஸ்டா பீஸ்) பழுது பார்ப்புக் கண்காணிப்பகம் (P.W.D. சூப்ரவைசர் ஆபீஸ்), தொலைப்பேசி மாற்றகம் (டெலிபோன் எக்ச்சேஞ்சு ஆபீஸ்), மீன்வளர்ப்புக் கண்காணிப்பகம் ஆகியவை. (89) 95. பொங்குஞ் சுரும்பினமும் புல்லருந்து மானினமுஞ் செங்கழுநீ ருண்ணுந் திருநணா - அங்குறுநாள் அஞ்சலகத் தேபெறுவ லஞ்சலெனு மஞ்சலினை அஞ்சலகத் தேபெறுவ லாறு. பொங்கும் சுரும்பினம் செங்கழுநீர் உண்ணும் - மிகுந்த வண்டுக் கூட்டம் செங்குவளை மலரிலுள்ள தேனையுண்ணும். புல் அருந்தும் ஆனினம் செம் கழுநீர் உண்ணும் - புல் மேயும் மாடுகள் சிவந்த அரிசி கழுவிய நீரை உண்ணும். பொங்குதல் - மிகுதல். சுரும்பு - வண்டு. ஆன் - மாடு. இனம் - கூட்டம். செங்கழுநீர் - செங்குவளை. அங்கு உறும் நாள் அஞ்சுஅல் - நான் அங்கு வரும்நாள் ஐந்து அல்ல. அகத்தே பெறுவல் அஞ்சல் - அதற்கு முன்னரே அடைவேன். ‘நான் எப்போது வருவேனோ என்று எண்ணி’ அஞ்சற்க எனும் அஞ்சலினை அஞ்சலகத்தே பெறுவள் - என்று எழுதிய கடிதத்தை அஞ்சலகத்தே பெற்றேன். ஆறு - என்பாள் இடம். இது, தலைவன் வர நாளாகும் என்ற தலைவிக்கு, தலைவன் எழுதிய அஞ்சல் பெற்ற தோழி கூறியது. அகம் - உள். அகத்தே பெறுவல் - அதற்குள்ளே - அதற்கு முன்னே அடைவேன், அந்த நாளை. அஞ்சல் - அஞ்சற்க. எதிர்மறைவியங்கோள் வினைமுற்று. அஞ்சலகம் - தபாலாபீஸ். அஞ்சல் - கடிதம். பெறுவல் - பெற்றேன். கால வழுவமைதி. என்பாள் என்பது இசையெச்சம். (90) 96. பெய்த மழைநீரும் பெய்ம்முறை செய்வாருஞ் செய்தவணை மேவுந் திருநணா - கைத வழக்கொழியாப் போற்பண்ட மாற்றிவரும் வாரி வழக்கொழியாப் பேரதரின் வைப்பு. பெய்த மழைநீர் செய்த அணை மேவும் - பெய்த மழைத் தண்ணீர் கட்டிய அணையை அடையும். இது, காளிங்கராயன் அணையைக் குறிக்கும். பெய்முறை செய்வார் செய் தவணை மேவும் - இந்நேரம் இன்னார் வேலை செய்வதென வரையறை செய்து கொண்டு வேலை செய்வோர் தாம் செல்லும் நேரத்தே அங்குச் செல்லும். பெய்முறை - இந்நேரம் இன்னார் வேலை செய்வதென வரையறுக்கப்படுதல். அதாவது, முறை வைத்துக் கொண்டு வேலை செய்தல். இது தொழிற்சாலைத் தொழிலாளரின் கடமை யுணர்ச்சியைக் குறிக்கும். தவணை - முறை. கை தவழ கொழி ஆ போல் - கையால் தடவச் சுரந்து பால் தரும் மாட்டைப்போல, பண்டம் மாற்றி வரும் வாரி - நிரம்பப் பொருள்களை அங்குமிங்கும் கொண்டு செல்லும் வாரிகள், வழக்கு ஒழியா - செல்லுதல். ஒழியாத - இரவு பகல் எந்நேரமும் செல்கின்ற. பேர் அதரின் வைப்பு - பெருவழியின் இருப்பிடம். அதர் - வழி. இது, சென்னையிலிருந்து கள்ளிக் கோட்டை செல்லும் பெருவழி. அதரின் வைப்பு - அதரை யுடைய ஊர். வாரி - லாரி. (91) 97. ஆக்குபுன லைப்பயிர்க்கு மத்தகுதி யுள்ளவர்க்கும் வாக்குரிமை நல்கும்ப வானியே - தீக்கரும நாடார் விரும்பு நலஞ்செய்வார் நல்லதமிழ் நாடார் விரும்பு நகர். ஆக்கு புனலை பயிர்க்கு வாக்கு உரி மை நல்கும் - கிணற்று நீரைப் பயிர்க்கு நீரிறைக்கும் பறி மேகம் போல் வாக்கும். அ தகுதி உள்ளவர்க்கு வாக்குரிமை நல்கும் - தேர்ந்தெடுக்கும் இடங்களுக் கேற்ற தகுதி உள்ளவர்க்கு வாக்குரிமையை வழங்கும். ஆக்குபுனல் - கிணற்றுநீர். வாக்கு - உரி - வாக்குகின்ற உரி- பறி. வாக்குதல் - நீர் இறைத்தல். உரி - தோல். அது, கருவியாகு பெயராய்த் தோலால் செய்த பறியை உணர்த்திற்று. பறி - நீர் இறைக்கும் தோற்கருவி. மை - மேகம். வாக்குரிமை - வாக்கு - ஓட்டு. நல்குதல் - வழங்குதல், போடுதல். ஊர்மன்றம், நகர் மன்றம், நாட்டாண்மைக் கழகம், சட்டமன்றம், பாராளு மன்றம் ஆகிய இடங்கட்கு ஏற்றவரைத் தேர்ந்தெடுத்தல் வாக் காளர் கடமையாகும். தீகருமம் நாடார் - கெட்டகாரியங்களை நினையார், எண்ணார். விரும்பும் நலம் செய்வார் - பிறர் விரும்புகின்ற தன்மைகளைச் செய்வார். தமிழ் நாடார் விரும்பும் நல்ல நகர் - தமிழ்நாட்டு மக்கள் விரும்பிவந்து நீராடிச் செல்லும் நல்ல ஊர். காவிரியாற்றின் கரையிலுள்ள ஊர்களில், பவானி போல நீராடு துறைகள் அமைந்த ஊர் வேறொன்றும் இல்லை. தீக்கருமம் நாடாரும் நலஞ் செய்வாரும் வாழும் நாடார் விரும்பும் நகர் என்பதாம். (92) 98. நெட்டிரவை மின்விளக்கும் நேர்கரையை மன்வளக்கும் பட்டப் பகல்செய் பவானியே - கட்டிக் கரும்பொன்று கையார் கரும்பீர்வாள் செய்யுங் கரும்பொன்று கையார் களம். நெடுஇரவை மின்விளக்கு பட்டப் பகல் செய் - மிக்க இருளுடைய இரவை மின்விளக்குகள் ஒளியுடைய பகல் போல் செய்யும். நேர்கரையை மன்வளக்கும் அப்பு பட்டு அகல் செய் - வெள்ளத்தின் எதிரில் உள்ள கரையை எப்போதும் வெள்ளம் பட்டு அகலச் செய்யும். நெட்டிரவு - நெடுஇரவு. பட்டப்பகல் - மப்புமந்தார மில்லாத பகல். மன் - நிலையாக - எப்போதும். வளக்கும் - மிகும். வளக்கும் அப்பு - மிக்க நீர் - வெள்ளம். கட்டிக் கரும்பு ஒன்று கையார் - கட்டியாகும் கரும்பு போன்ற கையையுடைய மகளிர், கரும்பு ஈர்வாள் செய்யும் - கரும்பு வெட்டும் அரிவாள் செய்யும், கரும்பொன் துகையார் களம் - இரும்பு வேலை செய்வார் இடம். கட்டி - கருப்புக்கட்டி - வெல்லம். ஈர்தல் - வெட்டுதல். வாள் - அரிவாள். கரும்பொன் - இரும்பு. துகைத்தல் - காய்ச்சித் தட்டுதல். இரும்பைக் காய்ச்சித் தட்டி இரும்புக் கருவிகள் செய்வார் - கொல்லர். களம் - இடம். (93) 99. மன்னார்பல் லூரிகளும் வண்சேற்றில் வேரிகளுஞ் சென்னாற் றிசையுந் திருநணா - முன்னேற்ற நோக்க முடையார் நுவன்று தமர்வெகுண்டு நோக்க முடையார் நுவல். மன் ஆர் பல் ஊரிகள் செல் நால் திசையும் - நிலையாக அழகிய பல ஊரிகள் நாலாபக்கமும் செல்லும். வண்சேற்றில் வேர்கள் செல் நாற்று இசையும் - வளவிய சேற்றில் வேர்கள் செல்லும் நாற்றுத் தழையும். மன் - நிலையாக. ஆர் - அழகு. ஊரி- பஸ், கார். வண்சேறு - வளவிய சேறு. வேர் இ கள். இ- சாரியை. பவானியிலிருந்து - ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை, திருப்பூர், கோவை, கவந்தப்பாடி, கோபி, சத்தியமங்கலம், அத்தாணி, கள்ளிப்பட்டி, அந்தியூர், உலகடம், வெள்ளிதிருப்பூர், குருவரெட்டியூர், மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி, பள்ளியபாளையம், திருச்செங் கோடு, நாமக்கல், திருச்சி, பாண்டமங்கலம், சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பழனி முதலிய ஊர்களுக்கு ஊரிகள் செல்லுகின்றன. இசைதல் - இயைதல் - தழைதல். முன்னேற்ற நோக்கம் உடையார், தமர் நுவன்று வெகுண்டு நோக்க முடையார் நுவல் - சுற்றத்தார் கடிந்து கூறி வெகுண்டு நோக்கினும் வருந்தார். நுவன்று - கடிந்துகூறி. முடைதல் - வருந்துதல். தாழ்த்தப் பட்டாரோடு பழகுதல், புழங்குதல், மூடப்பழக்க வழக்கங் களை ஒதுக்கிப் புதிய முறைகளைக் கைக் கொள்ளுதல் போன்ற சமூக முன்னேற்றத் தொண்டு செய்தல் கூடாதெனப் பெற்றோர் முதலிய சுற்றத்தார் கடிந்து கூறிக் கோபங்கொள்ளின், அதற்காக வருந்தித் தம் முன்னேற்றத் தொண்டைக் கைவிடார் என்பதாம். நுவல் - விருப்பம் - விரும்பிவாழும் இடம். (94) 100. பார்கிழியச் செல்லுநரும் பந்தயத்தில் வெல்லுநரும் வார்கிழிகைக் கொள்ளும்ப வானியே - மார்கழி மாதந் திருமுறைசெய் வைகறையி லோதுநர்க்கு மாதந் திருமுறைசெய் வைப்பு. பார் கிழிய செல்லுநர் வார் கிழி கைக்கொள்ளும் - மிக விரைவாக ஓடுவார் கச்சையும் அரையுடையும் அணிந்து கொள்வர். பந்தயத்தில் வெல்லுநர் வார் கிழி கைக் கொள்ளும் - போட்டிப் பந்தயத்தில் வெல்வோர் பெரிய பண முடிப்பைப் பெறுவர். பார் - நிலம். கிழிய - பிளக்க - குழிபட. மிகவிரைவாக ஓடுவோர் என்பதாம். வார் - கச்சை, பெரிய. கிழி - அரையுடை, பணமுடிப்பு. வார் கிழி - பெரிய பணமுடிப்பு. கை - துணை வினை. கைக்கொள்ளும் - கொள்ளும். பணமுடிப்பு - பரிசு. மார்கழி மாதம், திருமுறை செய் வைகறையில் ஓதுநர்க்கு - தேவாரத் திருமுறையை மக்கள் தொழில் செய்யத் தொடங்கும் அதிகாலையில் ஓதுவோர்க்கு. மா தந்து - பெருமையோடு வரவேற்புத் தந்து. இருமுறை செய் - பெரிய வரியை செய்கின்ற. வைப்பு - ஊர். வைகறை - அதிகாலை. மார்கழி மாதம் முழுவதும் அதி காலையில் திருமுறைக் கழகத்தார் தேவாரம் ஓதிக்கொண்டு ஊர்வலம் வருவர். மா - பெருமை. முறை - வரிசை - சிறப்பு. அதாவது மாலையிடுதல் முதலியன. மா தந்து - பலகாரம் முதலிய சிற்றுண்டி தந்து என்றுமாம். தேவாரம் ஓதி வரு வோர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் சிற்றுண்டி வழங்கிப் பெருமைப் படுத்துதல் உண்டு. (95) 101. மல்யாப் பிளமையிலும் மாமுத் தமிழியலும் பல்யாப் பிலகும் பவானியே - நல்யாப் பியம்பயில்வார் வாழ்வு பெறவிழைந்து தொல்காப் பியம்பயில்வார் வாழ்வுமிகும் பேறு. மல் யாப்பு இளமையில் பல் யாப்பு இலகும் - உடல் வலியுள்ள உறுதியான இளமைப் பருவத்தில் பற்கள் உறுதியாக விளங்கும். மா முத்தமிழ் இயல் பல் யாப்பு இலகும்- பெருமை பொருந்திய முத்தமிழின் தன்மை பல செய்யுட்கள் விளங்கும். மல் - உடல்வலி. யாப்பு - உறுதி. இயல் - தன்மை. யாப்பு - செய்யுள். முத்தமிழ் - இயல் இசை நாடகம். பழைய முத்தமிழும் செய்யுள் வடிவானவை என்பதாம். நல் யாப்பு இயம்பு அயில்வார் - நல்ல உறுதிச் சொல்லைக் கேட்பார். வாழ்வு பெற விழைந்து - நல்வாழ்வு பெற விரும்பி. தொல்காப்பியம் பயில்வார். வாழ்வு மிகும் பேறு - சிறந்த வாழ்வு வாழும் இடம். யாப்பு - உறுதி. இயம்பு - சொல். அயில்தல் - கேட்டல். விழைந்து - விருப்பி. பேறு - நிலைபெற்றுள்ள இடம். (96) 102. வடுக்குற்று வாரும் வழக்குரைப் பாரும் நடுக்கற்றுப் பேசு நணாவே - மடுக்கண் வலைதப்பு வாளை வலிதேகப் போந்த வலைதப்பு வாளையுறும் வைப்பு. வடு குற்றுவார் நடுக்கு அற்றுப் பேசும் - குற்றத்தை நீக்கும் பேச்சாளர் அச்சமில்லாமல் பேசுவார். வழக்கு உரைப் பார் நடு கற்று பேசும் - வழக்கறிஞர் நீதி நூல்களைக் கற்றுப் பேசுவர். வடு - குற்றம். குற்றுதல் - நீக்குதல். குற்றம் - சொற் குற்றமும் பொருட் குற்றமும். இவர் பேச்சாளர். வழக்குரைப் பார் - வக்கீல். நடு - நீதி, நீதிநூல். மடுக்கண் வலை தப்பு வாளை - ஆழமான நீர்நிலையில் வலைக்குத் தப்பிய வாளைமீன். வலிது ஏக போந்த அலை தப்பு வாள் - விரைந்து செல்ல உண்டான அலையினால் தப்பிய மனைவியை. ஐ உறும் வைப்பு - கணவன் அடையும் ஊர். மடு - ஆழமான நீர்நிலை. ஐ - தலைவன், கணவன். நீராடும்போது மடுவில் மூழ்கியவள், வாளைமீன் போன விசை யினால் உண்டான அலையினால் கொண்டு வந்து கரை சேர்க்கப் பெற்றாள் என்க. இதனால், அது மிகப் பெரிய மீன் என்பது பெறும். வைப்பு - இடம், ஊர். (97) 103. தக்கோல வாட்டியருஞ் சாத்தெண்ணெ யாட்டியருஞ் செக்கோலங் கொள்ளுந் திருநணா - மிக்காங்கு மஞ்ச டரும்பழன மாவளத்த தாகவுள மஞ்ச டரும்பழனவைப்பு. தக்கோல ஆட்டியர் செம் கோலம் கொள்ளும் - தகுதி யான அழகுடைய பெண்கள் கை கால் நகங்கள், இதழ் இவற்றை சிவப்பாக அழகு செய்துகொள்ளும். சாத்து எண்ணெய் ஆட்டு இயரும் செக்கு ஓலம் கொள்ளும் - வணிகர் எண்ணெ யாட்டும் செக்கு ஓசை செய்யும். தக்க கோலம். தகுதியான அழகு. தக்கோலம் - தொகுத்தல் விகாரம். ஆட்டியர் - பெண்கள். கோலம் - அழகு. சாத்து - வணிகம், வணிகர். ஆட்டு இயரும் - ஆட்டும். இவ்வூர்த் தனலட்சுமி மில்லில் எண்ணெய் ஆட்டப்படுகிறது. இயர் - இயல்; போலி. மிக்கு மஞ்சள் தரும் பழனம் மாவளத்தது ஆக உள - மிக மஞ்சள் விளைகின்ற வயல் மிக்க வளமுடையதாக உள்ள. மஞ்சு அடரும் பழன வைப்பு - மேகஞ் சூழ்ந்த பொய்கையை உடைய ஊர். மிக்கு - மிக. பழனம் - வயல். மா - மிக்க. மஞ்சு - மேகம். பழனம் - பொய்கை. பொய்கை- ஏரி, குளம். வயல் வளமுடைய தாகும்படியுள்ள பொய்கை சூழ்ந்த ஊர் என்க. (98) 104. மாவளையுங் கூவளையும் வாலரியும் போலரியுஞ் சேவடிக்க ணார்க்குந் திருநணா - மாவடுக்கட் டேமொழியார் வாழ்வகலத் தேம்பினுஞ்சுற் றத்தார்மாட் டேமொழியார் வார்வகலத் தேம். (1) மாவளை சேஅடிக்கண் ஆர்க்கும் - வயலிலுள்ள சங்கு எருத்தின் காற்கீழ்ப் பட்டுக் கத்தும். (2) கூ வளை சேவடிக் கண் ஆர்க்கும் - ஒலிக்கின்ற சிலம்பு சிவந்த அடியின் கண் ஒலிக்கும். (3) சே வால் அரி கண் ஆர்க்கும் - சிவந்த தூய்மை யான கோடு கண்ணைப் பொருந்தும். (4) வடி போல் அரி கண்ஆர்க்கும் - மாவடுவின் ஒப்புமை கண்ணைப் பொருந்தும். அதாவது, மாவடு கண்ணுக்கு உவமையாகும். மா - வயல். வளை - சங்கு. சே - எருது. கூ வளை - ஒலிக் கின்ற வளை - சிலம்பு. வால் - தூய்மை. போல் அரி - உவமை; ஒருபொருட் பன்மொழி. வடி - மாவடு - மாம்பிஞ்சு. மாவடு கண் தேம் மொழியார் - மாம்பிஞ்சு போன்ற கண்ணையும் தேன்போன்ற இனிய சொல்லையுமுடைய பெண்கள், வாழ்வு அகல தேம்பினும் - வறுமையால் வாழ்வு கெட வருந்தினும், சுற்றத்தார் மாட்டு ஏம் ஒழியார் - சுற்றத் தாரிடம் இன்புறுதலை விடமாட்டார். சுற்றத்தாரை வரவேற்று அளவளாவுவர் என்பதாம். இது, நற்குடி மகளிர் பண்பாகும். குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதுங் கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினுங் கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி மாதர் மனைமாட்சி யாள். (நாலடியார்) என்னும் நாலடியாரைக் காண்க. வாழ்வு அகல் அம் தேம் - வாழ்வு மிகும் அழகிய இடம். அகல - நீங்க, பெருக, விரிய. தேம்புதல் - வருந்துதல். ஏம் - இன்பம். அம் - அழகு. தேம் - இடம். (99) 105. அற்ககல்செல் வத்துகளு மாயகணக் காயர்களு நற்கலைகற் பிக்கு நணாவூரே - பொற்குமுதச் செவ்வாய்ச் சியர்வாழுஞ் செய்குடும்பக் கைபயிற்றுஞ் செவ்வாய்ச் சியர்வாழுஞ் சேர்பு. அற்கு அகல் செல்வ துகள் - வருதலையும் போதலையும் உடைய செல்வத்தின் இயல்பை, அலை நற்கு கற்பிக்கும் - ஆற்றில் வீசும் அலை தெளிவாகக் காட்டும். அலை கரைக்கு வருதலும் போதலும் போல செல்வம் வருதலும் போதலும் உடைய தென்பதாம். ஆய கணக்காயர் நல்கலை கற்பிக்கும் - தகுதியாய ஆசிரியர்கள் நன்கு கல்வி கற்பிக்கும்; நல்ல கலைகள் கற்பிக்கும் என்றுமாம். அற்குதல் - அடைதல், வருதல். அகலுதல் - நீங்குதல், போதல். செல்வத்துகள் - செல்வத்தின் இயல்பு. துகள் - குற்றம். அது, அற்க கல் செல்வத்தின் இயல்பாயிற்று. கணக்காயர் - ஆசிரியர். நற்கு - நன்கு. கலை - கல்வி, மொழி. பொன் குமுத செவ்வாய்ச்சியர் - அழகிய ஆம்பல் மலர் போலச் சிவந்த வாயையுடைய இளம் பெண்கள்; வாழும் குடும்பம் செய் கை பயிற்றும் - பின்னர் மேற்கொண்டு வாழும் குடும்பம் நடத்தும் ஒழுங்கினைப் பழக்கும், செவ் ஆய்ச்சியர் வாழும் சேர்பு - சிறந்த தாயர் வாழும் ஊர். கை - ஒழுக்கம், ஒழுங்கு. (100) 106. வாழ்க திருநணா வாழ்க பவானிநகர் வாழ்க திருவானி மாக்கூடல் - வாழ்கநனி வண்டமிழ்ப்பண் பாடு மறுமலர்ச்சி யுற்றினிது தண்டமிழர் வாழ்க தழைத்து. நூற்பொருள் அகர வரிசை அச்சகத்தினர் அழகாக அச்சிடுதல். (52) அணைத்தோப்பில் பூவை கிளி முதலிய பறவைகள் தமிழ் பாடுதல். (57) அதிகாரிகளும் அலுவலாளரும் தத்தம் வேலையைப் பொறுப் புடன் நன்கு செய்தல். (94) அரிவையர் பிறர் விரும்பும் வண்ணம் ஆடம்பரமாக வெளிச் செல்லாமை. (91) அல்லகுறிப்பட்டு வருந்தினும் அரிவையர் பொய் பேசாமை. (46) அறிஞர்கள் அடிக்கடி வந்து அறிவுரை நிகழ்த்துதல். (71) அன்பால் பிறரை நட்பின ராக்கிக் கொள்ளுதல். (55) அன்புடையோர் மக்களின் மூடப்பழக்க வழக்கத்தைப் போக்கி வாழ்வித்தல். (79) ஆசிரியர்கள் நல்ல கலைகளை நன்கு கற்பித்தல். (105) ஆடிப் பதினெட்டன்று வெளியூர் மக்கள் திரண்டு வந்து கூடு துறையில் நீராடுதல். (45) ஆடிப்பெருக்கில் காவிரி நீராடிக் களித்தல். (66) ஆராய்ந்து புதிய பயிர்த்தொழில் முறையைப் பழகுதல். (88) ஆலைத் தொழிலாளர்கள் சோர்வுற்ற போது தமிழ்ப் பாட்டுக்கள் பாடி அச்சோர்வைப் போக்கிக் கொள்ளுதல். (40) ஆலைப்பொறி பஞ்சையும் விதையையும், உமியையும் அரிசியையும் வேறாக்குதல். (83) ஆற்றில் அணைகட்டி வளஞ்செய்தல். (24) இசையரங்கிற் சென்று மக்கள் இன்னிசை கேட்டல். (85) இல்லறம், புகழும் இன்பமும் தருதல். (36) இளமைப் பருவத்துத் தேடியதை முதுமைப் பருவத்து வைத்து வாழ்தல். (89) உடன் பிறந்தார் உள்ளும்படி கற்று, புலவர் மனம் போல வாழ்தல். (92) உண்மையாளரோடு கொண்ட நட்புக்கு வரும் இடையூற்றைப் போக்குதல். (34) உண்மை யுணர்ந்தோர் செய்ந்நன்றி மறவா திருத்தல். (14) உலகத்தார் புகழத்தக்க செல்வமுடையார், பிறர் இகழத்தக்க காரியத்தை நினையாமை. (78) உலகப் புகழ் பெற்ற சமுக்காளத் தொழிலே பவானியில் பெரும் பான்மைத் தொழிலாகும். (44) உழவர்கள் மிகுதியாக விளைவித்தல். (14) உழுத எருமையின் மேல் ஒட்டிய சேறு நெடுந்தூரம் மணத்தல். (60) உறுதிச் சொற் கேட்டல். (101) ஊராட்சிக் கோட்டை யென்னும் ஊர் முன்னர்ப் பவானியின் பாதுகாப்பிடமாக இருந்தமை. (75) ஊர் நெடுகக் காவிரியாற்றில் படித்துறை யமைந்திருத்தல். (62) ஊர் மன்றத்தார் மக்கள் விரும்பும் நலங்களைச் செய்தல். (49) ஊர் மன்றத்தாரைப் பொதுமக்கள் தேர்ந்தெடுத்தல். (53, 70) ஊர் மன்றத்தார் முறை தவறாது ஆட்சி புரிதல். (73) எண்ணெயாட்டும் செக்கு ஓலமிடுதல். (103) எத்தகைய வறுமை யுற்றபோதும் பிறரிடம் சென்று இரவாமை. (14) ஏரி குளங்கள் வயலை வளமுடைய தாக்குதல். (103) ஏரோட்டுவோர் களைப்பை அவர் மனைவியர் ஊக்கமூட்டிப் போக்குதல். (72) ஏழிசையை ஆண் பெண் இருபாலாரும் பாடப்பழகுதல். (72) ஐப்பசி மாதம் முழுவதும் வெளியூர் மக்கள் வந்து கூடுதுறையில் துலாக்காவிரி யாடுதல். (76) ஓடத்திலேறி ஆற்று வெள்ளத்தைக் கடத்தல். (80) கணவர் தகாத செய்யினும் மகளிர் தீங்கெண்ணாமை. (54) கந்தசாமி கல்வி மன்றம் பொருந்திய பவானிக் குமார பாளையம். (59) கரும்பாலை யாட்டுவோர் வழிச்செல்வோர்க்குக் கருப்பஞ்சாறுங் கரும்பும் நல்குதல். (21) கரும்புக் கையார் கரும்பு வெட்டக் கரும்பொன் தொழிலார் கத்தி செய்தல். (98) கல்தச்சர் நடுகல்லில் வீரரின் பேரும் புகழும் செதுக்குதல். (93) கல்லாமல் மக்களை வளர்த்தல் இல்லாமை. (80, 35) கல்லூரி மாணவர் சமூகத் தொண்டு செய்தல். (82) கற்றோரையும் தமிழையும் ஒருங்கு போற்றுதல். (32) காதலர் கண்களால் பேசுதல். (16) காவிரி கொங்கர் யாறெனல். (37) காவிரி வற்றாத கடல் போன்றது. (53) காளிங்கராயன் பெரும்புகழை அவன் கட்டிய அணையின் அலையும், வெட்டிய வாய்க்காலின் அலையும் பாடுதல். (57) குடும்ப வருவாயை வளரச் செய்யும் முயற்சியில் குன்றாமை. (61) குமாரபாளையம் நார்ப்பட்டுத் தொழிலில் தனிச்சிறப் புடையது. (63) குலமகளிர் குறியெதிர்ப்புக் கொள்ளுதல். (56) குறையுற் றடைந்தோர்க்கு நிரம்பப் பொருளுதவல். (8) கூடலிறை என்பது திருநணாவில் கோயில் கொண்டுள்ள சிவன் பெயர். (89) கூடுதுறை கட்டி மரபினர் கட்டியது. (18) கூடுதுறையில் ஏழைகளுக்குச் சோறுபோடுதல். (93) கூடுதுறையில் நீராடுவோர் தலையில் வைத்து முழுகுங் காசைச் சிறுவர்கள் தேடி யெடுத்தல். (98) கூடுதுறையும் ஊரும் தையலர் கழுத்தில் தாழ்வடம் தொங்குவது போறல். (30) கெட்ட காரியத்தை விரும்பாமை. (97) கெட்ட காரியம் தம்மை அணுகாமல் நடந்து கொள்ளுதல். (77) கொடைக்குண முள்ளோர் பிறர் வறுமையைப் போக்குதல். (82) கொழுவால் நறுங்கிய சங்கு வயல் வரப்பில் தங்குதல். (86) கோதையர் கொச்சைத் தமிழ் பேசாமை. (23) சக்கிலிச் சிறுவர் பழைய செருப்புக்கு மெருகிடுதல். (64) சமுக்காள நெய்யும் நூல்சுற்றுவோரும் சங்கத் தமிழ்நூல் பயிலுதல். (39) சிறுபொழுது போக்காகப் படக்காட்சி பார்த்தல். (88) சிறுமியர் தெருவில் சிற்றிலிழைத்து விளையாடுதல். (62) சிற்றுண்டிச் சாலையில் பண்ணியம் செய்தல். (77) சின்னஞ் சிறார்கள், வட்ட மதியை உதைக்கப்பட்டு மேல் சென்று கீழ்வரும் பெரிய பந்தென்று எண்ணி, காலைதூக்கிக் கொண்டு உதைக்கச் செல்லுதல். (38) சுற்றத்தார் வறுமையுற்றபோது பொருள்கொடுத் துதவுதல். (76) செய்தித்தாள் நாள் நிகழ்ச்சி கூறுதல். (50) செய்வன தவிர்வன வற்றை மக்கள் கடைப்பிடித்து நடத்தல். (63) செல்லாண்டியம்மன் திருவிழாக் காணாது தம் கணவர் செல்ல மாட்டார் எனல். (67) செல்வம் வருதலும் போதலும் உடைய தென்பதை அலை விளக்கிக் காட்டுதல். (105) செல்வர்கள் ஏழைகளைக் கண்டு ஒளிந்து கொள்ளாமை. (50) செல்வர்கள் செருக்கின்றி வாழ்தல். (61) செவிலித் தாயர் தலைவியர் களவை ஆராய்தல். (30) சைவ அன்பர்கள் தேவாரம் பாடுதல். (16) சோம்பலின்றி யுழைத்துக் குன்றாத இன்பத்துடன் வாழ்தல். (80) தகுதி மிக்கவர் சிறந்த ஒழுக்க முடையரா யிருத்தல். (28) தகுதியுள்ளவர்க்கே மக்கள் வாக்குரிமை வழங்குதல். (97) தமிழறத்தை அயல்மொழியாள ரிடையினும் அயல் நாடுகளினும் பரப்புதல். (15) தமிழிசைபாடிப் பொன்னித் துறையில் நீராடுதல். (74) தமிழின் மேம்பாட்டுக் குழைத்தல். (26) தமிழை ஆராய்வோர் திருக்குறளை ஆராய்தல். (47) தமிழை ஆராய்வோர்க்குப் பெரிய எண்ணங்கள் தோன்றுதல். (29) தமிழ் கற்கும் வாய் இனிமை மிகுதல். (59) தமிழ்க்கொடி புலிவிற்கெண்டை யுடையதாதல். (43) தமிழ்ப் பாட்டுக்களைக் கேளாத போதே வயிற்றுக்கு அளித்தல். (42) தமிழ் மக்களிடை ஏற்றத்தாழ்வு கருதாமை. (61) தம்மவரைப் பேணி மிக்க புகழுடன் வாழ்தல். (71) தலைவியர் களவைச் செவிலித் தாயர் ஆராய்தல். (30) தன்னல மற்றோர் நலனைச் சேய்மையிலுள்ளோர் விரும்புதல். (34) தாயர் இளம் பெண்மகளுக்குக் குடும்பம் நடத்தும் ஒழுங்கினைப் பழக்குதல். (105) திருக்குறளைத் தமது வாழ்க்கைச் சட்டமெனக் கொண்டு தமிழர் கற்றல். (43) திருக்குறள் கற்று மேன்மையடைதல். (70) திருடர் முதலிய தீயோர் இல்லாத ஊர். (11) திருநணாக் கோயில் கட்டி மரபினர் கட்டியது. (9) திருமுறைக் கழகத்தினர் மார்கழி மாதம் முழுவதும் அதி காலையில் தேவாரம் ஓதிக் கொண்டு ஊர்வலம் வருதலும், ஊர் மக்கள் அவர்களை வரவேற்றுப் பெருமை படுத்துதலும். (100) தீச்செயலை விட்டு நற்செயலே செய்தல். (20) துப்புரவுத் தொழிலாளரே நோயின் வேரறுத்து மக்களை வாழ்விப்போராவர். (86) தைப் பொங்கல் திருநாளன்று ஊர்மக்கள் அணைத்தோப்பில் சென்று விழாக் கொண்டாடுதல். (89) தையலர் விரும்புவது போல் தையற்காரர் தைத்தல். (28) தையற்காரர் வேலைப்பாட்டில் மேம்பாடுற முயலுதல். (28) தொலைப்பேசி மூலம் பேசி மேம்படுதல். (20) தொழிலாளர் தங்கள் முறைப்படி சென்று தொழில் செய்தல். (96) தொழிலாளர் பொறுப்புணர்ந்து வேலை செய்தல். (58) தோகையர் வறியோரின் துன்பந் துடைத்தல். (83) நகைச்சுவையாளரும் பொற்கொல்லரும் நகை செய்து வாழ்தல். (28) நங்கையர் தம் செல்வச் சிறப்பைப் பிறர் அறியும் பொருட்டு நகையணிதல். (19) நங்கையர் நாணங் கெடாமல் பேசுதல். (50) நங்கையும் கொழுந்தியும் பாத்திரக் கடைக்குச் சென்று பாத்திரம் வாங்குதல். (33) நல்லறத்தினின்று நீங்காத பண்பாடு மிகுதல். (9) நல்லறிவாளர் நாட்டுக்கு நற்றொண் டாற்றுதல். (87) நல்வாழ்வு பெறத் தொல்காப்பியம் பயிலுதல். (101) நற்செயல் செய்வார் தீச்செய லொன்றும் செய்யாமை. (51) நன்கு பேசிப் பழகிற பேச்சாளர் அச்சமின்றிப் பேசுதல். (102) நன்னாட்களில் மக்கள் திரளாக வந்து கூடுதுறையில் நீராடுதல். (17) நாடகம் ஆடும் ஆடரங் கமைத்தல். (85) நாட்டு விடுதலைப் போர்க்குத் தம்மை ஒப்பித்த நல்லோர். (84) நாட்டைவளம் செய்வோர் ஏரி குளங்களின் கரையை உயர மாகக் கட்டுதல். (13) நாற்று நடும் மகளிர் சடைநிழலைப் பாம்பென்று எண்ணிப் பெரியவர்கள் அடிக்க வருதல். (48) நிறையப் பால்தரும் மாடுகளை நிரம்பப் பெருக்குதல். (35) நீராடும்போது மடுவில் மூழ்கிய ஒருத்தி, வலைதப்பிய வாளை மீன் செல்லும் விசையினால் உண்டான அலையினால் கரை யேறுதல். (102) நீர் வற்றாத கிணறுகளில் தோற்பறிகளால் நீரிறைத்தல் மேகம் மழை பொழிதல் போறல். (97) நூல்களிற் கூறப்படும் உயர் குணங்களில் நீங்காமை. (52) நூல்சுற்றிப் பிழைப்போரும் இல்லோர்க்கு நல்லுணவிடுதல். (25) பசிக்கு மழைநீரை யுண்போரும் கலைக்குச் சிலப்பதிகாரம் பயிலுதல். (90) படகோட்டிகள் பெருவெள்ளப் பெருக்கிலும் கவிழாமல் பட கோட்டுதல். (85) படிப்பகத்தில் படித்து மக்கள் நூலறிவைப் பெறுதல். (13) பண்ணும் இசைக் கருவிகளும் பாட்டுக்கு இன்பஞ் செய்தல். (77) பந்தயத்தில் வென்று பரிசு பெறுதல். (100) பவானிச் சுற்றுப்புற ஊர்கள். (11) பவானிச் சமுக்காளம் உலகப் புகழ் பெற்றது. (21, 24, 29, 37, 39, 44) பவானி, தமிழ் நாட்டினர் விரும்பி வந்து நீராடிச் செல்லும் பெருமை யுடையது. (97) பவானி பழந்தமிழ் நாடு போறல். (26) பவானியின் மூன்று பக்கமும் ஆறு அழகுசெய்தல். (72) பவானி முன்னர்க் கோவைக் கோட்டத்தின் தலைநகராக இருந்தமை. (73) பவானியில் ஆண்டுக்குப் பன்முறை தேர்த் திருநாள் நடை பெறுதல். (76) பவானியைச் சுற்றிலும் பல வாய்க்கால்கள் வளஞ்செய்தல். (88) பவானியிலிருந்து நாலா பக்கமும் ஊரிகள் (பஸ்) செல்லுதல். (99) பழங்கள் வயலில் விழுந்து மக்குதல். (64) பழந்தமிழ் நூல்களால் பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை வரலாற்றை யறிதல். (56) பள்ளி மாணவர்க்குத் தேர்வு நடத்தல். (70) பாங்குகள் மக்களுக்குத் தேவையான கடனைக் கொடுத்துதவுதல். (53) பாத்தோய்வோர் பாவடியில் அலகு கொள்ளுதல். (81) பாப்பிணைத்தல் மாடு வைக்கோல் தின்னுதல் போறல். (94) பாவலர் அறத்தைப் பரப்புதல். (33) பாவலர் பாவடியில் அலகு கொள்ளுதல். (81) பாவையர் இதழுக்குச் சிவப்புச் சாயம் பூசுதல், கிளி கோவைப் பழம் தின்பது போறல். (94, 103) பாவையர் காவிரியில் நீராடி அணைத் தோப்பில் விளையாடுதல். (81) பாவையர் பாடுதல் கேட்டுப் பூவையும் கிளியும் பாடுதல். (16) பாவையர் பிறர் பழிக்கும்படி நடந்து கொள்ளாமை. (19) பிறர் விரும்பும் நலம் செய்தல். (97) புலவர்கள் 'சின்னப்பூ' என்னும் பாமாலையைத் தமிழன்னைக்குச் சூட்டுதல். (75) புற்கட் டெடுக்கும் பூவையர், அம்மனையாடிக் கொண்டும் தமிழிசை பாடிக் கொண்டும் நடத்தல். (58) புன்செய் நிலத்தை உழுதுழுது செம்பாடு செய்தல். (58) பெண்களின் சொல் இனிமை யுடைய தாதல். (84) பெண்கள் தம் கை கால் நகங்களுக்குச் சிவப்புச் சாயம் பூசிக் கொள்ளுதல். (92, 103) பெண்டிர் தம் குடிப் பெருமை குன்றுமென அஞ்சிப் பெண்டன் மையிற் குன்றாதொழுகுதல். (10) பெரியோர்கள் தகாதனவற்றை யார்க்கும் செய்யாமை. (7) பெற்றோரை உண்பித்துப் பின்னுண்ணுதல். (27) பொருள்வள மிக்கார் யாதுறினும் பொய்யுரையாமை. (47) மகளிர் இரட்டைச் சடைமுகம் இருவால் நிலவு போறல்.(41) மகளிர் பிரிவாற்றாது மிகவும் வருந்தாமை. (41) மகளிர் மட்கலம் வனையும் திரிகை சுற்றுதல். (55) மகளிர் வருவா யறியாது ஆடம்பரச் செலவு செய்யாமை. (6) மகளிர் வறுமை யுற்றபோதும் சுற்றத்தார் மாட்டு அளவளாவு தலை விடாமை. (104) மக்கள் பெற்றோர்க்கு அடங்கி நடத்தல். (12) மட்கலம் வனைவோர் மண்கொளச் செல்லுங்கால் மதகில் வீழும் நீரைப் பருகுதல். (64) மருத்துவர் நோய்நாடி மருத்துவம் செய்தல். (65) மலர்பெய்து கோவில் வழிபடுதல். (91) மலர்மாலை கட்டுவார், தலைவியர் களவொழுக்கத்தை ஊரார் அலர் தூற்றுதல் கண்டு வாழ்த்துதல். (15) மழிப்போர் நறுக்கி மழித்தல். (91) மளிகைக் கடைக்காரர் மாட்சி. (22) மனைவியர் வருத்தமுறா வண்ணம் கணவன்மார் குறிப்பறிந்து நடந்து கொள்ளுதல். (87) மாணவர் உண்டுறையும் மாணவரில்லம் பவானியிலும் குமார பாளையத்திலும் உள்ளமை. (62) மாணவர்க்கு ஆண்டுக் கொருமுறை மேல் வகுப்புக்குச் செல்லும் பெருநாள் வருதல். (76) மாணவர் மனமாசகலப் பயிற்சி பெறுதல். (31) மாலை அறுவைக்கடையில் மகளிர் சேலை யெடுத்தல். (25) முயற்சியாலுண்டாகும் மேம்பாட்டினை யறிவோர் அம் முயற்சி யை மேற்கொள்ளுதல். (21) முயற்சியுடையார் எண்ணிய வெண்ணியாங் கெய்துதல். (90) முன்னேற்ற நோக்கமுள்ள சமூக சீர்திருத்தக் காரர் பிறர் பழிப்பைக் கண்டு பின்வாங்காமை. (99) மூதறிஞர்கள் நன்னெறிக்கண் நிற்றல். (78) மூப்பு வருமுன் அறஞ்செய்தல். (36) மேலோர் குடியின் கொடுமை கூறிக் குடியை யொழித்தல். (17) மெல்லியலார் தம் சுற்றத்தாரை விரும்புதல். (8) மேல் வகுப்பினர் தீண்டாமையைப் போக்குதல். (7) வணிகத்தின் பொருட்டு வெளியூர் சென்றிருந்த கணவர் வரவே, நெடுநாட் கடிதம் எழுதாமைக்காக மனைவியர் ஊடுதல். (45) வணிகத்தின் பொருட்டு வெளியூர் சென்றுள்ள கணவர் விரைவில் வருவதாக மனைவியர்க்குக் கடிதம் எழுதுதல். (95) வணிகர் பொருளை மேன்மேலும் ஈட்டுதல். (35) வந்தவர்க்குப் பட்டுச் சமுக்காளம் விரித்து இன்சொற் கூறித் தேநீர் வழங்குதல். (29) வழக்கறிஞர்கள் நீதி நூல்களைக் கற்றுப் பேசுதல். (102) வறியோர் மனம் வருந்தும்படி மகளிர் இகழாமை. (69) வாரிகள் (லாரி) பொருள்களை ஏற்றிக் கொண்டு இரவு பகல் எந்நேரமும் ஊரிடைப் பெருவழியில் செல்லுதல். (96) வானியாறு காவிரியைக் கூடி, 'வானி கூடல்' என்னும் பெயர் பெறுதல். (45) விருந்தினரை உண்ணுநீர் தந்து வரவேற்றல். (38) விருந்தினர் உண்பதைக் கண்டு உவத்தல். (68) விரும்பினவரிடம் நட்புக் கொண்டு அறிவுரை புகட்டி நல்லோ ராக்குதல். (27) விளையாட்டுப் போட்டியில் விளையாடுவோர் களைப்பைக் கருதாமை. (17) வீட்டுக் கூரைமேற் செல்லும் அட்டிற் புகை கண்டு நட்பும் சுற்றமும் உவத்தல். (66) உலக பெரியோன் கென்னடி (1964) முன்னுரை கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதைக் கேட்டதும் உள்ளத்தே உண்டான அதிர்ச்சியால் எழுந்த உணர்ச்சியின் உருவமே 'உலகப் பெரியோன் கென்னடி' என்னும் இந்நூல். அமெரிக்க நாட்டுத் தலைவர், ஜான் கென்னடி ஒரு வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதைக் கேட்டதும் உண்டான உணர்ச்சியின் பாற்பட்ட என் உள்ளம் 'உலகப் பெரியோன் கென்னடி' என்றது. அதையே நூலின் பெயராகக் கொண்டு இச்சிறு செய்யுள் நூலைச் செய்தனன். 'உலகப் பெரியோன் கென்னடி' என்ற இந்நூல், வெறும் கையறமாக - இரங்கற் பாக்களாக - இல்லாமல், உலகியலைப் படம் பிடித்துக் காட்டும் ஒரு சிறு நாடகக் காவியமாக அமைந்தது. அமெரிக்கக் குடியரசின் 35-ஆவது தலைவராகிய ஜான் கென்னடி, அமெரிக்காவின் தென்மாநிலமான டெக்ஃசாசின் தலைநகரான டெல்லாஃச் நகரில் 22- 11 - 1963 வெள்ளிக் கிழமை பகல் 1 மணிக்கு (இந்தியாவில் இரவு 12- 30 மணி) தன் மனைவி ஜாக்குவிலினுடன் திறந்த இன்னூர்தியில் ஊர்வல மாகச் சென்றபோது 'ஆசுவால்டு' என்னும் ஓர் இனவெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார். 25 - 11 - 63 திங்கட் கிழமையன்று தலைவர் கென்னடியின் பூதவுடல், அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டனில் உள்ள ஆர்லிங்டன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. கென்னடியின் பூதவுடல் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப் பட்ட போது, உலகில் உள்ள எல்லா நாட்டுத் தலைவர் களும் வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டு, மறைந்த மாதலை வர்க்கு இறுதி வணக்கம் செலுத்தினர். உலகில் அரசியல் முறை தோன்றிய நாள் தொட்டு இதுநாள் காறும் எந்த ஒரு பேரரசர்க்கும், அரசியற் பெருந்தலைவர்க்கும் இத்தகைய பெருமை ஏற்பட்டதில்லை. தலைவர் கென்னடி 29 - 5 - 1917 இல் பிறந்தார்; 22 - 11 - 1963இல் மறைந்தார்; 46 ஆண்டு, 5 மாதம், 23 நாட்களே உலகில் வாழ்ந்தார். ஆனால், உலகப் புகழேணியின் உயர் படியைக் கடந்து விட்டார். கென்னடி கொலையுண்டது கேட்டு உலகமே ஆராப் பெருந்துயரில் ஆழ்ந்தது. காந்தியடிகளுக்கன்றி, இதுவரை உலகம் வேறு யார்க்கும் இத்தகைய பெருந்துயரம் அடைந்ததே இல்லை. கென்னடியின் இழப்பு உலகுக்கு அத்தகைய பேரிழப் பாகும். இதுகாறும் வரலாற்று நிகழ்ச்சி. இனி, 'இலக்கியப் படைப்பு' என்னும் கற்பனை நிகழ்ச்சி. கென்னடியை ஆசுவால்டு சுட்டுக் கொன்றான். ஆசு வால்டை ரூபி என்பவன் சுட்டுக் கொன்றான். ரூபியை முறை மன்றத்தார் எப்படியோ கொல்லலாம். இத்துடன் இதுமுடிந்து விடும். ஆனால், ஒப்புயர்வற்ற உலகப் பெருந்தலைவர்களை இப்படியே ஒவ்வொரு வெறியன் சுட்டுக் கொன்று கொண்டே இருக்க வேண்டியது தானா? இதற்கொரு முடிவில்லையா? மக்கட் பண்பு, பகுத்தறிவு என்பதெல்லாம் இதுதானா? மக்களைக் காக்க அரசு என்பதொன்று இருக்கிறது என்பதன் பெருமை இதுதானா? என உலக மக்கள் நொந்து கொண்டனர். இனிப் போர் முதலிய கொடுமைகளிலிருந்து தப்ப என் செய்கோம் என ஆற்றாதும், இப்படி எங்களை விட்டு விட்டுச் சென்று விட்டாயே என ஐயுற்றும் கொலை நிகழ்ந்த அந்நிலையை நினைந்தும் உலக மக்கள் பலவாறு இரங்கினர். கென்னடியின் கொலையால் அச்சங்கொண்ட உலகத் தலைவர்கள் உலக மன்றத்தில் ஒன்று கூடி, இனி இத்தகைய கொடுங்கொலைகள் நடக்காமல் செய்ய வேண்டும்; இத்தகைய கொலைகளின் காரணங்களை ஒழிக்க வேண்டும்; பொல்லாத கொடிய போர்க் கருவிகள் செய்வதை நிறுத்திவிட வேண்டும்; இனிப் பகையும் போரும் இன்றி உலகம் அமைதியாக வாழும் படி செய்ய வேண்டும் - என ஒருமுகமாக முடிவு செய்தனர். இங்கு 'கொலைஞன்' என்பது - தலைவர் கென்னடியைச் சுட்டுக் கொன்ற ஆசுவால்டை அன்று. உயிரும் உடலும் பிரியும் அந்நேரம் அல்லது காலத்தை - 'காலன்' என்பதுபோல, கொலையே, கொலைத்தொழிலே - கொலைஞன் என உருவகஞ் செய்யப் படுகிறது. பகுத்தறிவு - நடுவர் (ஜட்ஜ்) ஆகவும்; அன்பு, அருள், ஒழுக்கம், வாய்மை, அறம், நடுநிலைமை, தென்பு என்பன - அறங்கூறவையத்தார் (ஜூரிகள்) ஆகவும் உருவகம். பகை - பகைவன் ஆகவும், சின முதலிய தீக்குணங்கள் படைஞர்களாகவும், நோய்கள் முதலியன கொலைக் கருவி களாகவும் உருவகம். உசாப்பில் (விசாரணையில்) உசாவப்படும் பலவகையான தீக்குணங்களையுமே கொலைஞன் வாக்கு மூலத்தில் கொலைக்குக் காரணங்கள் எனவும், தான் பகையின் ஏவலன் எனவும், கொல்வது தனது தொழில் எனவும், தான் தன் கடமை யைச் செய்ததால் குற்றமற்றவன் எனவும் கூறுகிறான். அறங்கூறவையத்தார் - அவனை விடுதலை செய்து விட்டுக் கொலைக்குக் காரணமான அத் தீக்குணங்களை மீளாக் கடுங்காவல் சிறையில் இடுவது - அத்தீக்குணங்கள் கூடா என்பது கருத்து. அக்குணங்களைத் தூக்கிக் கொல்வது கொலைக் குற்றம் என்பதன் கருத்து - ஒரு பொருளோடு உடன் தோன்றி, அப்பொருள் அழியும்போது தானும் உடன் அழிவது - குணம் எனப்படும். பொருள் - குணி எனப்படும். எனவே, குணியை விட்டுக் குணத்தை அழிக்க முடியாது. ஆகையால், உலகில் மக்கள் உள்ளவரை அக்குணங்களும் இருந்தே தீரும். அவற்றைச் செயல் பட விடக்கூடா தென்பதே. கென்னடி உலக அமைதிக்காகப் பெரிதும் முயன்று வந்ததால், அமைதி - கென்னடியின் மகள் எனப்பட்டது. அமைதி உலகத் தாயின் ஒரே மகள்; உலக மன்றத்தார் உதவி யோடு உலக மன்றத்தில் வளர்ந்து வருகிறாள். முறைமன்றத்தார் கொலைஞனை விடுதலை செய்ததால் உலகோர் அஞ்சி, அவனைப் பழித்து வெறுக்கின்றனர். அமைதியும் கொலைஞனது விடுதலை கேட்டு இரங்குகிறாள். தோழி, கொலைஞன் மனமாறுதலைக் கூற, அமைதியின் உள்ளம் அவன் பால் செல்கிறது. உலகோர் பழித்து வெறுப்பதற்காகக் கொலைஞன் வருந்து கிறான். அவன் வருந்துவது கண்ட ஒருவர், உலகத் தலைவர்கள் அமைதியிடத்தில் அளவுகடந்த அன்புடையவர் களாக உள்ளனர். அமைதியும் உன்னைக் காண விரும்புகிறாள். அவள் அன்பைப் பெற்றாள் உன் துயரம் ஒழியும் என, கொலைஞன் அவ்வாறே நியூயார்க்கு நகரில் உள்ள உலக மன்றத்திற்குச் செல்கிறான். தோழி, அமைதிக்கு அவனை அறிமுகப்படுத்த இருவரும் காதல் கொல்கின்றனர். கொலையின் காரணங்கள் சிறைப்பட்டதால், கொலைஞன் கொலைத் தொழிலை விட்டுவிட்டான். கொலை இல்லாததே அமைதி ஆகையால், அமைதி கொலைஞனை மணக்க விரும்பு கிறாள். உலகத் தலைவர்கள் உடன்பட்டு நடத்த அமைதி கொலைஞன் திருமணம் சிறப்பாக நடந்தது. உலக அமைதியை நிலைநாட்டுவதே உலக மன்றத்தின் கடமையும் பொறுப்பும் ஆகையால், உலகத் தலைவர்கள் உலக அரசியாக அமைதிக்கு முடிசூட்டினார்கள். கென்னடியின் நிலையில் உள்ள ஜான்சன் திருமுடியை எடுத்துக் கொடுக்க, குருசேவ் வாங்கி எலிசபெத் அரசியிடம் கொடுக்க, மற்ற உலக நாட்டுத் தலைவர்களெல்லாம் வாழ்த்த, அரசி என்னும் நிலையில் உள்ள அவ்வம்மையார் வாங்கி அமைதிக்கு முடிசூட்டுதலின் கருத்து - இம் மூன்று வல்லரசு களும் ஒன்றுபட்டு, எல்லா உலக அரசுகளுடனும் ஒத்துப் போரும் பூசலும் இன்றி, உலக அமைதியை உண்டாக்க வேண்டும் என்பது. கொலைஞன் - அன்புத்துறை, அருட்டுறை, அறிவுத் துறை, அறத்துறை, ஒப்புரவுத் துறை - இவற்றின் தலைமை ஏற்று உதவ, அமைதி அமைதியாக உலகை ஆண்டுவந்தாள் என்பது - அன்பு முதலிய அத்துறைகளே அமைதிக்குக் காரணம் என்பது. உலக மன்ற ஆட்சியின்கீழ் உலகநாடுகள் எல்லாம் அமைந்து, உலகில் போரும் பூசலும் இல்லாமல் அமைதி நிலவும் படி செய்தல் உலகத் தலைவர்களின் இன்றியமையாக் கடமையும் பொறுப்பும் ஆகும். இந்நூற்பயனும் அதுவே. வாழ்க கென்னடி வான்புகழ்! வாழ்க அமைதி! உலகப் பெரியோன் கென்னடி 1. தலைவன் சிறப்பு தாழிசை 1. உலகப் புகழ்தன் உயர்வுக்கா உதவி வேண்ட உவந்துதவும் உலகப் பெரியோன் கென்னடியின் உயர்வுக் குவமை அவ்வுயர்வே! (1) 2. தன்போற் பிறரும் இன்பாகத் தாம்வாழ் குவதே தகவென்ன அன்பால் ஒப்புர வாக்குவதில் அவனுக் கவனே ஒப்பாவான். (2) 3. பாரில் இனிமேல் ஒருபோதும் பகையும் போரும் இலவாக நீரில் அசையா நிழல்போல நிலையா நின்ற மலையாவான். (3) 4. மக்கள் நலமே தன்னலமா மதித்திங் கதற்கே வாழ்ந்துவந்த தக்க தலைவன் கென்னடியின் தகவே உலகின் தகவாமே. (4) 2. கொலையின் கொடுமை கலிவிருத்தம் (படர்க்கை) 5. கொலையேகொலை உலகத்துயிர் கொல்லுங்கொலை கொலையே! கொலையேகொலை கொள்கைக்குயிர் கொல்லுங்கொலை கொலையே! கொலையேகொலை வெறிகொண்டுயிர் கொல்லுங்கொலை கொலையே! கொலையேகொலை திடுகுப்பெனக் கொல்லுங்கொலை கொலையே! (5) 6. கொலையேகொலை மேன்மக்களைக் கொல்லுங்கொலை கொலையே! கொலையேகொலை இனமக்களைக் கொல்லுங்கொலை கொலையே! கொலையேகொலை அறவோர்களைக் கொல்லுங்கொலை கொலையே! கொலையேகொலை ஆள்வோர்களைக் கொல்லுங்கொலை கொலையே! (6) 7. கொலையேகொலை அறமஞ்சிடக் கொல்லுங்கொலை கொலையே! கொலையேகொலை மறமிஞ்சிடக் கொல்லுங்கொலை கொலையே! கொலையேகொலை முறைசாய்ந்திடக் கொல்லுங்கொலை கொலையே! கொலையேகொலை அருளோய்ந்திடக் கொல்லுங்கொலை கொலையே! (7) 8. கொலையேகொலை அறியாமலே கொல்லுங்கொலை கொலையே! கொலையேகொலை எதிரின்றியே கொல்லுங்கொலை கொலையே! கொலையேகொலை சால்பின்றியே கொல்லுங்கொலை கொலையே! கொலையேகொலை மனமொன்றியே கொல்லுங்கொலை கொலையே! (8) 9. கொலையேகொலை படுபாவிகள் கொல்லுங்கொலை கொலையே! கொலையேகொலை முழுமூடர்கள் கொல்லுங்கொலை கொலையே! கொலையேகொலை அழிகேடர்கள் கொல்லுங்கொலை கொலையே! கொலையேகொலை பழிகோடிகள் கொல்லுங்கொலை கொலையே! 9) அறுசீர் விருத்தம் (முன்னிலை) 10. கொலையே யெத்தனை உலகறி வாளரைக் கொன்று தொலைத்தனையோ! கொலையே யெத்தனை அறிவிய லறிஞரைக் கொன்று தொலைத்தனையோ! கொலையே யெத்தனை அரசிய லறிஞரைக் கொன்று தொலைத்தனையோ! கொலையே யெத்தனை யெத்தனை பேர்களைக் கொன்று களித்தனையோ! (10) 11. கொலையே யெத்தனை காதலர் தங்களைக் கொன்று தொலைத்தனையோ! கொலையே யெத்தனை கன்னிய ரின்னுயிர் கொன்று தொலைத்தனையோ! கொலையே யெத்தனை காளைய ராருயிர் கொன்று தொலைத்தனையோ! கொலையே யெத்தனை யெத்தனை பேர்களைக் கொன்று களித்தனையோ! (11) 12. கொலையே யெத்தனை அன்பமர் தாயரைக் கொன்று தொலைத்தனையோ! கொலையே யெத்தனை தந்தையர் தங்களைக் கொன்று தொலைத்தனையோ! கொலையே யெத்தனை ஆருயிர்ச் சேயரைக் கொன்று தொலைத்தனையோ! கொலையே யெத்தனை யெத்தனை பேர்களைக் கொன்று களித்தனையோ! (12) 13. கொலையே யெத்தனை குடும்ப முழுமையுங் கொன்று தொலைத்தனையோ! கொலையே யெத்தனை ஊரை யடியோடு கொன்று தொலைத்தனையோ! கொலையே யெத்தனை மாநக ரங்களைக் கொன்று தொலைத்தனையோ! கொலையே யெத்தனை யெத்தனை பேர்களைக் கொன்று களித்தனையோ! (13) 14. கொலையே எத்தனை மணிமுடி மன்னரைக் கொன்று தொலைத்தனையோ! கொலையே யெத்தனை வீர மறவரைக் கொன்று தொலைத்தனையோ! கொலையே யெத்தனை தூதுவ ரொற்றரைக் கொன்று தொலைத்தனையோ! கொலையே யெத்தனை யெத்தனை பேர்களைக் கொன்று களித்தனையோ! (14) 3. உலகத் துயர் கொச்சகம் 15. ஆகொலையா! கென்னடியை யா! உண்மை யாகவா! ஆகொலையா! கொன்றவன் யார்! ஐயோ அடகெடுவாய்! ஆகொலையா! செய்தாய்? அடடாஅம் மாதலைவன் ஆகொலையா! கொல்லவுனக் கப்படி என்செய்தான்! (15) 16. ஐயோ கொலைஞா! அறிவிலி! ஆகொடியா! ஐயோ படுபாவி! ஆகெடுவாய் ஏன்கொன்றாய்! ஐயோ அமெரிக்க அன்னாய்!உன் செல்வனெங்கே? ஐயோ! இனியமைதிக் காரிந்தப் பேருலகில்! (16) 17. ஏன்கொன்றாய் பாவீ! இழிஞா! எதிர்பாரா தேன்கொன்றாய் கென்னடியை? இல்லை, உலகமைதி தான்கொன்றாய், கேளாமல் தானேமுன் வந்துதவும் வான்கொன்றாய், மக்கள்நல வாழ்வினையுங் கொன்றாயே! (17) 18. படுகொலையா! மக்கட்பண் பாடறி யாப்பதரே! கெடுகொலையா! ஏன்கொன்றாய் கென்னடியை? அஆஅ! அடுகொலையா! பாவைவிளை யாட்டோதான் இக்கொலையும்! சுடுகொலையா! ஓர்நொடியில் சுட்டுக்கொன் றிட்டாயே! (18) 19. வருமணு குண்டுலகை மாய்க்கா தெதிர்த்துநின்ற பெருமலை கென்னடியிப் பேருலகம் ஏங்கியழ இருபதி னொன்றுபதி னொன்றொன்பத் தேழ்வெள்ளி ஒருபகல் ஓர்மணிக்கை யோசாய்ந்து விட்டதுவே! (19) 20. புன்கொலையால் பொன்றாப் புகழ்பூத்த கென்னடியே! உன்கொலையை வானொலியில் கேட்டும், உலகோருன் வன்கொலையைச் செய்த்தித்தாள் வாயிலாய்த் தான்கண்டு தன்கொலையாக் கொண்டு தவியாய்த் தவித்தனரே! (20) 21. கன்னெஞ்சர் என்பதனைக் காட்டவோ, காழ்த்தகொடு வன்னெஞ்சர்க் குக்காட்டு வாய்க்கவோ, பாகித்தான் புன்னெஞ்சச் செஞ்சீனாப் போகயார் இவ்வுலகில் தன்னெஞ் சுருகியழா தாருன் கொலைகேட்டே! (21) எட்டடிக் கொச்சகம் 22. கொன்றாயே பாழ்ங்கொலைஞா! கொன்றேன் எனவெதிரில் சென்றாயா, இன்னதற்காச் செய்தேன் கொலையெனநேர் நின்றாயா இல்லை, நினதுகொலைக் கொள்கையினால் வென்றாயா இல்லை, வெறியாஜான் கென்னடியைக் கொன்றாயா இல்லை, உலக அமைதிதுணை இன்றேயா றாத்துயரால் ஏங்கியழு தேதெருவில் நின்றே கதற நினையாநல் வாழ்வினையும் கொன்றாயே பாவீ! கொடியா கொடுங்கொலைஞா! (22) 23. ஆவ தறியா அறிவிலீ! ஆகொடியா! நோவ தறியா நுனிநோக் கிலாப்பாவி! சாவ தறியாத் தறுதலையே! சண்டாளா! ஈவ தறியா இழிஞா! உனக்கிதனால் மேவ தறியா வெறியா! உலகநிலை போவ தறியாப் பொறியில் பொடிசுட்டி! ஓவ தடாதென்ப தோராமல் இவ்வுலகக் காவ லனையடடா!கண்ணிமைக்குள் கொன்றனையே! (23) 24. மண்ணுக் கலங்க மலைகலங்க வானொலியின் பண்ணுக் கலங்கப் படைகலங்கப் பாருல குண்ணுக் கலங்கவந்தோ! கொல்லக் குறிபார்த்த கண்ணுக் கலங்கலையோ! கைகலங்க லையோஉன் எண்ணுக் கலங்கலையோ! என்பிறந்தாய்! குண்டுபட்ட புண்ணுக் கலங்கப் பொறிபுல னுங்கலங்க வண்ணக் குருதி வழியமனை யாள்மடிமேல் உண்ணுக்கு வீழக்கொன் றோகெடுத்தா யேகொலைஞா! (24) 25. நீயழுகா யேனுமிந்த நீடாழி சூழுலகன் பாயழுகா தோநேரில் பார்த்தேங்கி நின்றார்தம் வாயழுகா தோபத்து மாதம் சுமந்துபெற்ற தாயழுகா ரோகாதல் திருவாட்டி கென்னடியும் மேயழுகா ளோஎரிவாய் மெழுகாய் உளமுருகி ஆயழுகி றார்தந்தை அழுகிறார் சேய்களென்று கூயழுகா ளோஅழுகக் கொன்றனையே பாழ்ங்கொலைஞா! (25) 26. கொலையே! உனக்கிறுதி கூடாதோ, நல்லுயிர்கொல் கொலையே! உலகமக்கள் கோவென் றழுவதுகேட் கிலையோ? உனக்கெங்கள் கென்னடி வாழமன மிலையோ? உலகநல மேதன் நலமாக்கொண் டுலையா துழைப்பதுகண் டோமகிழ்ந்து நீதந்த விலையோ? கெலையா! வெறியா! உனக்கிரக்கம் இலையோ? தனித்தலைவன் என்றும்பா ராதுகொன்ற புலையாநீ கெட்டழிந்து போயொழிய மாட்டாயோ! (26) 27. உன்னை அவனறிவா னோஇன்னா னென்றில்லை; அன்னை வரையந் நொடிவரை அச்செயல் தன்னை அறிவானோ தானில்லை; ஆங்காகப் பின்னை எதனால் பெருந்தலைவன் கென்னடி தன்னை யடாசுட்டுத் தான்கொன்றாய்? சண்டாளா! என்னை ஒருதலைக் காமம்போல் இப்பகையும் உன்னைச்சுடுசுடென உள்ளிருந்து தூண்டிற்றோ? என்னை இதன்கா ரணத்தை இயம்பாயோ? (27) 28. பற்குச்சிக் காவழியில் வைத்துவளர் பைங்கொம்பை அற்குப் படாமல் அடியோ டொடிப்பது? விற்கும் விறகுக்கா மாபலவை வெட்டுவது? புற்கட்ட வாநெற் புடையை அறுப்பது? கற்கொட்ட வாவீட்டின் கல்லை எடுப்பது? விற்கட்ட வாமாட்டின் கால்நரம்பை வெட்டுவது? கொற்கொட் டினவெறிக்கா கென்னடியைக் கொல்லுவது? மற்கட்டி இன்னுயிர்கொல் மாகொடிய பாழ்ங்கொலையா! (28) 29. கொலையே! உனைப்போல் கொடிய கொடும்பாவி இலையேஆ! இவ்வுலகில் ஏனிவ் வுலகைவிட்டுத் தோலையே எனக்கடிந்து சொல்லிய அவ்வுறுதிச் சொலையே அடாதிருப்பிச் சொல்லுனைபோல் போர்வெறியாம் அலையேநில் என்றவ் அணுகுண்டைத் தாங்கிநின்ற மலையே சரிந்துவிழ வன்கொடுமை செய்தனையே, விலையே யிலாவுலக மேதக்கோன் கென்னடியைக் கொலையே புரிந்தந்தோ கொன்றனையே மாகொலையா! (29) 30. இந்த உலகிலுள்ள ஏனோ இரண்டொழிய உந்த னதுகொலைகேட் டோவென் றழுதிரங்கிச் சிந்தியகண் ணீராறாச் செல்லத் தியங்கிநின்றே எந்தலைவா! என்கொடுமை! இல்லை, இதுபொய்யோ இந்தவொரு வன்கொடுமை என்றுங்கேட் டில்லோமே, அந்த வெறியன்மகன் அல்லனோ? அய்யாவோ! எந்தலைவா! கென்னடியே! என்செய்தாய்? என்றேங்கி நொந்துலக நாடெல்லாம் நொந்நோக எங்குசென்றாய்? (30) 31. ஏங்கி யுலகமக்கள் இன்னாத் துயரமுடன் தூங்குவது போலுலகம் துஞ்சிவிடு மோவறியோம் ஈங்கினி என்செய்கோம்! என்றொன்றுந் தோன்றாமல் மூங்கையரைப் போல முணுமுணுத்துக் கொண்டிருப்ப, நீங்க ளிதற்கஞ்சேல் நெஞ்சாரச் சொல்லுகிறேன் தீங்கணுகா மற்காப்பேன் தேர்மின்என்ற கென்னடீஇ! ஆங்குல கத்தலைமேல் வீழா தணுகுண்டைத் தாங்கிப் பிடித்தஅக்கை தானோய்ந்து போயிற்றே! (31) 32. தன்னுரிமை யோடுமக்கள் தாம்வாழச் செய்வதுவே என்னுரிமை, மக்கள் இயலுரிமை, எல்லோரும் முன்னுரிமை, எய்தும் முதலுரிமை, இவ்வுலகின் மன்னுரிமை - என்று மடிதற்றுக் கொண்டெழுந்தென் இன்னுரிமை என்றே இடிமுழக்கம் செய்துவந்த பொன்னுரிமை போன்ற புகழுரிமைக் கென்னடியே! உன்னுரிமை தன்னை உணராலக் கொடுங்கொலைஞன் தன்னுரிமை யென்றுசுட்டுத் தான்கொன்று விட்டானே! (32) 33. ஆட்சி யுடனுலகில் நின்றுநிலை பெற்றமன்னர் ஆட்சி யொழிந்தேயவ் வாறாங் குலகில்மக்கள் ஆட்சியினிதே அலர்ந்து மணங்கமழ்ந்து ஆட்சி யொடுபுதிது வாழ்வாங்கு வாழுமக்கள் ஆட்சியது கண்டு களிக்க அதற்காக ஆட்சி புரிந்துவந்த அண்ணல்எம் கென்னடியே! ஆட்சி யுடையமக்கள் மன்னா! வறுங்கொடுங்கோல் ஆட்சி யினுங்கொடியோன் ஐயோகொன் றிட்டானே! (33) 34. பகைமையினால் உண்டாகும் பாழ்ங்கொடும்போ ரால்மக்கள் ..கையொருங்கு மீளாத் துயரத்தி லேதவிக்கும் ..கையொழிந்து மக்களெல்லாம் அச்சமின்றி வாழ்வதூஉம் ..கைய உலக அமைதி நிலைநிற்கப் ..லுமிர வுந்துணிந்து பாடுபட்டு வந்ததன்னேர் ..கைய உலகத் தலைவஜான் கென்னடியே! ..கைய புலிபோற் கொடியன் அடடவிழி ..கையனத் தோசுட்டுத் தான்கொன்று விட்டானே! (34) 35. ..றே குலமென்னும் உண்மை நிலைமறந்தே ..றாம லொன்றாய் உலகமக்கள் வெவ்வேறாய் .. றே இனத்தால் நிறத்தால் சமயத்தால் ..றே தனியாய்ப் பிரிந்திருக்கும் தாழ்வுயர்வைக் ..றேயம் மக்கட் குலத்தையொன் றாக்குதற்குக் .. றாது பாடுபட்டு வந்தகுணக் குன்றம்நீ ..றேஎம் கென்னடியே! அத்தொண்டுக் காகவுனைக் .. ன்று தொலைத்தானே கொலையோ அதன்பரிசு! (35) 36. ஓவுலக மக்களெல்லாம் உன்கொலையைக் கேட்டதுமே ஆவென வேயலறி அந்தோ மதிகலங்கிப் பாவி யெவனிப் படிச்செய்தான்? பாங்கறியாச் சாவெனு மோர்கொடியோன் தான்சாவ தில்லையோ! யாவ ரினியிவ் வுலகமைதிக் காகொலையின் நாவினிற் பட்டெம்மை நட்டாற்றில் விட்டுவிட்டுப் போவதெங் கென்னடிநும் போன்றார்க் கியல்போதான் கூவியழு கின்றஅந்தக் கூக்குரலைக் கேளாயோ! (36) 37. இந்த உலகிலர சேற்பட்ட நாள்தொட்டு வந்துலகை யாண்டுவந்த மாமன்னர் எத்தனைபேர்! இந்தநாள் காறும் இருநா டதுவொழிய நந்து முலகிலுள்ள நாட்டுத் தலைவரெல்லாம் உந்த னதுகொலைகா துற்றது மேநேரில் வந்தழுது கண்ணீர் வடித்து மலர்தூவி நொந்துருகி நேர்மை நுவன்றிறு திவ்வணக்கம் தந்ததுநின் போலோர் தலைவர்க்கும் உண்டோதான்! (37) 38. இந்தவுல கிற்பகைபோர் இல்லாமல் செய்வதற்கு வந்துல கிற்பிறந்த மாதலைவன் கென்னடியே! இந்த உலகையினி இல்லா தழித்தொழிக்க வந்து பிறந்தவனான், வந்தீரேல் என்னெதிரே அந்த நொடியே அழித்திடுவேன் என்றறைகூம் அந்த அணுகுண்டும் அஞ்சி அலறிஐய! வந்தவழி பார்க்கின்றேன் என்று வணங்குமெனின், உந்தனைம றக்குமோ இவ்வுலகம் உள்ளளவும்? (38) 39. இந்த உலகில் இருப்பதா சாவதா எந்த ஒருமுடிவும் இல்லாமல் சொல்லாமல் இந்த நிலையில் எனைவிட்டுச் சென்றனையே உந்தன் கருத்தை உணர்வாரோ இவ்வுலகோர்! எந்த நிலையில் எனைவைக்கப் போறாரோ? அந்தோவென் செய்வேன்யான் அப்பாவென் கென்னடியே! உந்தனைக்கொன் றென்னைவிட்டான் ஓகொடிய பாவியென்றே அந்தவணு குண்டும் அழுது புலம்புமன்றோ? (39) 40. தீமைகளெ லாந்திரண்ட தீமையினும் தீமையப்பொ றாமையத னாலுளமொன் றாமையமை யாமைதீண் டாமையுல கொன்றுப டாமைமக்க ளொற்றுமையில் லாமை முதலியபொல் லாமையுற லாலப்பொ றாமை மனத்தகத்த றாமையத னேதுவறி யாமையெனு முண்மை யறிந்துலகத் தந்தவறி யாமையதைப் போக்க அரும்பாடு பட்டதறி யாமையினால் கென்னடியை ஆகொன் றனைகொலையா! (40) 41. கொல்லுங் கொடுங்கொலையே! கொல்லாமல் கொல்லுதியே! சில்லஞ் சிறுபருவம் சிற்றிலிழைத் தேயாடச் செல்லுந் தெருவெல்லாம் செல்லாத கொள்கையினார் சொல்லம்பு வந்து சுடுதீ யெனச்சுடுதே, நல்லன்பு ளாருலகில் நாலுபே ருங்கிடையா, வில்லம்பின் றில்லை வெடிகுண்டுக் காலமிதே இல்லம் புகுஞ்சிறியேன் எந்தையைக்கொன் றாயேயென் றல்லும் பகலும் அழுவாள் உலகமைதி. (41) 42. அந்தோ! உலக அமைதி எனுங்குழந்தாய்! எந்தாய்! எனைத்தனிவிட் டெங்குசென்றீர்? என்றுமனம் நொந்தே கதறிமுகம் நோக்கிநின் றேயுளங்க சிந்தே அழாதெகுரு சேவிருக்கி றார்மனமி சைந்தே யுதவத் தயங்காருன் தந்தையைத்தொ டர்ந்தே யுனைக்காத்தி டத்தலைமை பூண்டவர்பின் வந்தே யுளார்ஜான்சன் இந்தியராம் யாங்களுமு கந்தே யுனைகட்டிக் காத்து வளர்த்திடுவோம். (42) 43. தந்தை பிரிந்ததுயர் தாங்காது தானிரங்கிச் சிந்தை கலங்கித் திகைக்கும் அமைதியெனும் பைந்தொடி யேஎலிச பத்தரசி யுன்மீதில் உந்தன் அனையின் ஒருகோடி அன்புடையார், உந்தைஜான் கென்னடியி னாலே உயர்வுற்ற அந்த உலகமன்றத் துள்ளநா டத்தனையும் உந்த னிடத்தே உள்ளூற அன்புடையர் வந்த துயரினிதா மாற்றி வளர்த்திடுவார். (43) 44. துடுக்கொடுமண் ணாசைதலை தூக்கவந்தச் செஞ்சீனன் மிடுக்குட னேவந்தென் மேற்பாயக் கண்டதுமே எடுக்கு மெடுப்பினில் யானிருக்கின் றேனம்மா! அடுக்கும் பகைவனைக்கண் டஞ்சேல் எனவுதவி கொடுக்கமுன்வந் தேபகைவன் கொட்ட மடக்கியதும், உடுக்கை யிழந்தவன் கைபோ லொருவன் இடுக்கண் களைவதாம் நட்பென்ற இன்குறளைக் கடுக்குமன்றோஅப்படியே? காணமரிக் கத்தோழீ! (44) 45. எஞ்சேயர் சும்மா இருக்கவே மண்ணசையால் செஞ்சீனக் காரன் திடுகுப்பென் றேபாய நெஞ்சால் நினையா நிலைகண்டு நான்வருந்த, அஞ்சாதே அம்மாநான் ஆமுதவி செய்வேனென் றெஞ்சாம லேயுதவி என்துயர்போக் கிக்காத்த உஞ்சேயன் கென்னடியின் அப்பே ருதவிதனை நஞ்சேனும் உண்டமைவேன் நானென்று மேமறக்கேன் எஞ்சாப் பெருஞ்செல்வி யேயமரிக் கத்தங்காய்! (45) 46. பொல்லாத செஞ்சீனன் போர்க்கோலம் பூண்டெழுந்து வல்லேயெம் நாட்டின்மேல் வந்ததுகே ளாமுன்னம், நில்லாயங் கேயடா, நீவந்த வாதிரும்பிச் செல்லாய் எனக்கூறிச் செய்தஅப் பேருதவிக் கில்லே மெதிர்மாறே எந்தோழா கென்னடியே! சொல்லாமுன் முன்வந்து தோன்றாத் துணையான நல்லாயுன் பேருதவி நாங்கள் மறந்தாலும் பொல்லாத சீனர்களெப் போது மறவாரே. (46) 47. அம்மா மகனை இழந்தே அழுதிரங்கும் அம்மா துயர்தாங்கா அமெரிக்கத் தங்கையே! இம்மா நிலவுலகில் யானுமொரு பெண்ணாக அம்மா அடிமை அகற்றியெனை வாழ்வித்த எம்மா மகன்காந்தி என்னைத் தவிக்கவிட்டே அம்மா ஒருகொடிய னால்சுட்டுக் கொன்றதுயர் அம்மா! இன்னுந்தீர வில்லை, அதற்குள்ளே உம்மா மகன்கென் னடிகொலைகேட் டோநொந்தேன். (47) 48. ஐயோ!என் அன்பே!என் ஆருயிரே! ஆகெட்டேன்; பொய்யோ கனவோயான் பித்தேறிப் போனேனோ! மெய்யோ எனைத்தனியே விட்டீரே நட்டாற்றில்! ஐயோஇவ் வாறுசெய்ய யார்துணிந்த தாகொடுமை! செய்யாவென் மெய்யணியே! தேம்பா அறிவொளியே! கையாத ஆண்பாலே! காதற் கனிச்சுவையே! எய்யா வுலகிலினி என்செய்கேன் யான்தமியேன்! உய்யா வகைதெருவில் ஓவிட்டுச் சென்றீரே! (48) 49. எங்கேயோ வானம் இடித்ததென்று நானிருந்தேன், எங்கேயும் இல்லை, இடித்தஅப் பேரிடிதான் இங்கே இதோவென் தலையில் இடித்ததுவே, மங்கா ஒளிவிளக்கே! வான்வழங்கும் பேரொளியே! பங்காவென் உள்ளப் பயனே! பயன்படா வெங்கான கத்திடையே விட்டகலும் வெய்யோர்போல் இங்கே எனையழவிட் டெங்குசென்றீர்? ஏதுசெய்கேன்? எங்கோ மகனே! இனியார் துணையெனக்கே! (49) 50. அன்புத் திருமுகத்தை, ஆணழகை, ஆரருளை முன்புற் றிடுவிழியை, மூவாத் திருவுருவை, நன்புற்று நின்று நகையா வருகவென இன்புற்றேன் கண்ணால் இனியொருகால் காண்பேனோ! தென்புற்றேன் செஞ்செவியும் உள்ளமும் தித்திக்க பின்பற்றி என்னோடு பேசுங் கனிமொழியை இன்புற்றென் காதால் இனியொருகால் கேட்பேனோ! என்பற்றி வாழ்வேன்கொல்! என்வாழ்வே எங்குசென்றீர்? (50) 51. கண்ணே கெரோலின்என் கண்மணிஜான்! எங்குடியை விண்ணார் சுடர்போல் விளக்குமின்வி ளக்குகளே! நண்ணா நறுமலர்காள்! நானுங்கள் கைபடா துண்ணேன் ஒருபோதும், உங்கள்மெய் தீண்டினல்லான் பண்ணார் குழல்நரம்பு பாவினிமை யுங்கேட்க எண்ணேன் எனவுங்கள் எந்தையினிக் கொஞ்சுவதைக் கண்ணாரக் கண்டு களிப்பேனோ! கண்மணிகாள்! (51) 52. மன்னே இனியொருகால் வாவென்று வாய்மணக்க அன்னே அழைக்க அகமகிழ்ந்து கேட்பேனோ! என்னே இனியுங்கள் வாழ்வதூஉம் எந்தலைவன் மன்னே பயன்படுத்தி வந்த உடைமைகளே! கொன்னே இனியொருகால் அவ்வாழ்வு கூடுங்கொல்! பன்னாளும் என்தலைவன் பாற்பயில்நன் னூல்களே! மன்னே இனியுங்கள் வாய்மலர வாய்க்குங்கொல்! என்னே உலகியலின் மன்னா இயற்கைத்தே! (52) 53. என்றலைவா! என்னுயிரே! என்னன்பே! என்மக்க ளின்றலைவா! என்வாழ்வின் இன்பே! இனித்துணையோ தென்றழுதே யேங்கும் திருவாட்டி கென்னடியே! உன்றலைவன் மட்டுந்தா னோகென் னடியுலகத் தின்றலைவன், போர்வெறியைச் சென்றெதிர்த்து வெல்லவல்ல வன்றலைவன், இவ்வுலகை வாழ்விக்கப் போந்தஎங்கள் மன்றலைவன், மக்கள் மறுமலர்ச்சி யாமமைதிப் பொன்றலைவன் நம்மைவிட்டுப் போயினா னையகோ! (53) 54. பொங்கா அலைகடல்போல் பொங்கியெழும் போர்வெறியை இங்கே தலைகாட்டா தேயுனது வாலிடுக்கி அங்கே கிடவென் றதட்டியுல கைக்காத்து மங்காப் புகழ்படைத்த மாதலைவன் மாமனைவி! எங்கோ மகளேயோ! எந்தலைவி! ஜாக்குவிலின்! நங்காய்! உனைப்பார்த்துன் நல்லமக ளும்மகனும் இங்கேன் வரவில்லை இன்னும் எமதுதந்தை எங்கே? எனக்கேட்டால் என்சொல்லித் தேற்றுவையோ! (54) 55. ஐயோ அவன்சுட, அவ்வெடிக் குண்டுபட ஐயோவென் றேமடிமே லேசாய்ந்த அப்பொழுதத் தையோ வெனக்கதறிச் செய்வ தறியாது கையாலப் புண்பொத்திக் கண்ணீரா லேகழுவி ஒய்யா தழுதழு தோய்ந்தழுகை அப்படியே செய்யாத பாவையெனத் திருவாட்டி கென்னடி! மெய்யோ உடலுயிரின் வீற்றிருக்கை யோவென்ன எய்யா நிலையதனுக் கேதுவமை சொல்கேனே! (55) 56. என்றைக் கிருந்தாலும் என்றோ ஒருநாளைக் கின்றைக்குக் கேட்டதுபோல் கேட்ப தியல்பன்றே? அன்றைக்கும் இவ்வா றழுவா திருப்பாயோ? முன்றைப் பெரும்புகழ்க்கும் மூத்த முதியபுகழ் பின்றைப் பெரும்புகழ்க்கும் பேசவுமெட் டாதபுகழ்க் குன்றைஅப் போர்வெறியைக் கொன்றமைதி காத்துயர்ந்த ஒன்றைத் தலைவனாப் பெற்ற உனைப்போல என்றைக் கெவருலகில் இப்பேறு பெற்றுயர்ந்தார்! (56) 57. இருந்துமுண் ணாதுடா தீயா திவறுவோர் இருந்துமுல குக்கவரால் யாதுபயன் ஒன்றுமில்லை; பொருந்துவது யார்க்கும் பொருந்தும் படியாக வருந்து முலகோர் வறுமை யெனுநோய்க்கு மருந்தென வேண்டுவன வாரிவா ரிவ்வரையாத் தருந்தலைவன் கென்னடியைத் தானிழந்தந் தோதவித்து வருந்தும் அமெரிக்க மக்களே! உங்களினும் வருந்துவரன் றோஅவன்கை வண்மைநினைந் திவ்வுலகோர்? (57) 58. ஆவுன் கொலைகேட் டதுமம ரிக்கமக்கள் ஓவென்று கூவியழு துள்ளந் துடிதுடித்து நாவொன்று பேச நனவு கனவாக மாவென்றி கண்டஎம் மாதலைவ கென்னடி! தாவொன்றும் இன்றெம்மைத் தானோம் பியதலைவா! ஏவொன்று மாமயில்க ளென்னயாம் ஏங்கிநொந்து கோவென்று வாய்விட்டுக் கூவியழ எப்படியோ போவென் றெமைவிட்டுப் போயினையே எந்தலைவா! (58) 59. வெள்ளி! அறுவரினும் மேம்பட்ட மிக்கபுகழ் உள்ளவன்நீ அன்றே, உலகமைதிக் காவிருந்த வள்ளலெம் கென்னடி மட்டுமா! மன்னடிமை தள்ளிய லிங்கனொடு சாக்கரட் டீசென்னும் ஒள்ளறிவுச் சிற்பி உயர்வுதாழ் வுக்கொடுமை எள்ளிய ஏசு பெருமான், எவரிடத்தும் கள்ளமிலா உள்ளன்எங்கள் காந்தி யடிகளையும் கொள்ளைகொண் டேபெருமை கொண்டகுணக் குன்றன்றே! (59) 60. கொலையேஎம் கென்னடியைக் கொன்றாய், அடாகொடிய கொலையேஎம் ஜாக்குவிலின் கோக்கொழுந னைக்கொன்றாய், கொலையே கரோலின்ஜான் கோத்தந்தை யைக்கொன்றாய், கொலையே ரோஃச் யூசப்பின் கோக்குழந்தை யைக்கொன்றாய், கொலையே அமெரிக்கக் கோமகனைக் கொன்றாய்,வன் கொலையே அமைதிக் குழந்தைதந்தை யைக்கொன்றாய், கொலையே விளையாட்டாக் கொல்லுங் கொடும்போரும் கொலையேநீ அஞ்சுமணு குண்டுஞ் சிரிக்காவோ! (60) 61. ஒன்றிரண்டு பேரோடா ஓகொடிய மாகொலையா! அன்றடிமை போக்கியஅவ் ஆபிரகாம் லிங்கனையும் பின்றை யவன்போல்கார் பீல்டுமிக்கென் லேயினையும் கொன்றை யடபாவி! கோவென்று தாயிழந்த கன்றுகள் போலக் கலங்கியம ரிக்கமக்கள் நின்று கதறி நிலைகுலைந் தேங்கியழ இன்றன் னவர்தம் இருந்தலைவன் கென்னடியைக் கொன்று தொலைத்தாயே கொல்லுங் கொடும்பாவீ! (61) 62. அறிவுல கச்சிற்பி யாஞ்சாக் கரட்டீசை, இறவா ஒளிவடிவன் ஏசு பெருமானை, அறமுவக்க வேவாழ்ந்த அண்ணல்எம் காந்திதனை, முறையறப்பா கித்தான் முதல்முதல் மந்திரியாய் நிறைதரவே போந்த லியாகத் அலிகானை, பறையார் கடலிலங்கைப் பண்டார நாயகாவை இறையும் இரக்கமின்றி யேகொன்ற வன்கொலைஞா! குறியெதிர்ப்பாக் கென்னடியைக் கொன்றுகைக் கொண்டனையே! (62) 4. கொலை நிகழ்ச்சி ஆசிரியப்பா 63. நல்லோன் கென்னடி டெல்லாஃச் நகரில் எல்லோன் போலொழி வில்லா தவ்வூர்ப் பல்லா யிரங்கண் ஒல்லே களிக்கப் புல்லா ஊர்தியில் இல்லாள் தன்னொடு வல்லே ஊர்வலம் செல்லா நிற்கையில், இரண்டிரண் டிரண்டொன் றேழொன் பதுநாள் பகலொரு மணிக்கு முகமறி யாத வெய்யோன் ஒருவன் சுட்டனன் ஐயோ என்றுல கலறிட அந்தோ! (63) கட்டளைக் கலிப்பா 64. இந்தி யாவின் விடுதலைத் தந்தையாம் எங்கள் காந்தி யடிகள்கோட் சேயினால் அந்த வாறவ் வடிமை வழக்கினை அடர்த்த ஆபிர காம்லிங்கன் பூத்தினால் எந்த வாறுமுன் கொல்லப்பட் டார்களோ ஈவி ரக்கமில் லாமல்சுட் டையகோ! அந்த வாறுநம் கென்னடி தன்னையும் ஆசு வால்டெனும் பாவியுங் கொன்றனன். (64) தாழிசை 65. கலைநிகர் மாட மலியம ரிக்கத் தலைநகர் வாசிங்டன் வந்துல கத்தலை வர்களொருங் கிறுதி வணக்கம் செலுத்தியெழு தலையலை போலூர் வலஞ்சென் றேஆர் லிங்டன் கல்லறையில் அடியோன் உடலை அடக்கம் செய்தனர்; நீள் புகழ் வாழியவே. (65) வெண்பா 66. உலகென்னும் நல்லாள்தன் ஒத்ததுணை யையும் இலகமைதி தந்தை யினையும் - உலகமக்கள் தன்னிகரில் லாத தலைவனையுந் தாமிழப்பக் கென்னடிபோக் கைக்காண் கிலம். 67. நாற்பத்தா றைந்துதிங்கள் நாலைந்து முந்நாளே ஏற்பத்தான் இவ்வுலகேன் எண்ணியது? - மேற்படவே ஊங்கிருக்கின் கென்னடியின் ஒண்புகழைத் தன்னாலே தாங்கமுடி யாதெனவே தான். கட்டளைக் கலித்துறை 68. தன்னடி நீங்கா நிழல்போற் பெருங்குணந் தானமைந்து மன்னடி மைபகை போரின் றமைதியாய் மாநிலத்தில் என்னடி மையென இல்லாது செய்திட வேயுழைத்த கென்னடி போன்ற வரையிது நாள்வரை கேட்டிலமே. (68) வெண்பா 69. கென்னடியை ஆசுவால் டென்னுமோர் கீழ்மகன் கொன்னொடியி லேசுட்டுக் கொன்றிட்டான் - அன்னவனை அப்படியே கொன்றிட்டான் ரூபி; அவனையறம் எப்படியோ கொல்லும் இனி. (69) கலிவெண்பா 70. இத்துடனிச் செய்தி முடிந்துவிடும். என்றாலும் வித்திருக்க எட்டி விளையாவோ? - இவ்வுலக மாந்தர்க்குள் மாந்தர் மதிக்குமுயர் மாந்தர்களாம் காந்தி யடிகள்லிங்கன் ஏந்துபுகழ்க் கென்னடிபோன்ம் ஒப்புயர் வில்லா உலகத் தலைமக்கள் இப்படியே ஒவ்வொருவ ராக இனவெறிக் கந்தோ இரையாக வேண்டி யதுதானோ? கந்தோ கரையோ இலாக்களிறோ காட்டாறோ? நல்லோர்க்குக் காலமில்லை என்னுமித் தொல்லுரையும் எல்லோர்க்கு மேலிறுதி இல்லா ஒருபொருளோ? நச்சுமிள காய்ப்பூண்டை விட்டுவிட்டு நாட்பூக்கும் அச்செடியி னைப்பிடுங்கு வாருண்டோ? அஆ! இதுதானா மக்களுயர் வென்தூஉம்? அன்றி இதுதானா மக்கட்பண் பென்பதூஉம்? இல்லை இதுதானா ஆறறி வென்பதூஉம்? அந்தோ! இதுதானா ஞாலத் தியற்கையூஉம்? என்னே! இதுதானா மாக்கட்கும் மக்கட்கும் ஏற்றம்? இதுதானா காவல் எனுமரசுக் காப்புடைமை? என்றுலக மக்கள் இரங்கியே தம்வாக்கால் சென்றுலக நாட்டரசு செய்யுந் தலைவர்களை நொந்தகமு டைந்துணர்வு நொள்கியாற் றாதறிவி ழந்தமைதி யின்றியிருந் தார். (70) 5. ஆற்றாதிரங்கல் எழுசீர்விருத்தம் 71. எக்கா ளத்தொடு மிக்குல கப்போர் எனுமக் கொடியோன் இறுமாப்பாய் தக்கோர் தொக்கொரு மிக்கேங் கக்கெடு தலையா நின்றவந் நிலைகண்டே, எஏ! வாலை யொடுக்கென் றேயார்த் தெழுந்தோய் மண்ணில் விழுந்தாயே! அஆ! கென்னடி! என்செய் கோசொல் லாயோ இனிவரு வாயோதான்! (71) 72. இம்மா வுலகை இனியோர் நொடியில் இல்லா தழிக்க வல்லேனான் எம்மா லழியா இலவென் றணுகுண் டெதிரா வெழுந்த அதுகண்டே, சும்மா குதியேல் எனவே எழுந்த துரையே! மண்ணுக் கிரையானாய்! அம்மா! கென்னடி! என்செய் கோசொல் லாயோ இனிவரு வாயோதான்! (72) 73. செந்தே ளெனவே இனநிற வெறியும் சினந்தே சீறி வரவஞ்சி நொந்தே யுலகோர் அலறித் துடித்து நொடியா நின்ற படிகண்டே, வந்தேன் உலகீர் அஞ்சே லென்ற வல்லோன் வெடிவாய்ப் புல்லானாய்! அந்தோ! கென்னடி! என்செய் கோசொல் லாயோ இனிவரு வாயோதான்! (73) 74. பொய்யோ வுலகம் எனவோர் சிலர்தம் போகூ ழெண்ணிப் புலனெக்குக் குய்யோ முறையோ எனவே வறுமைக் கொடுமைக் கிடைவாழ் படிகண்டே, மையோ வெனவே வாரி வழங்கி வந்தோய்! மாண்டும டிந்தாயே! ஐயோ! கென்னடி! என்செய் கோசொல் லாயோ இனிவரு வாயோதான்! (74) 75. இப்பே ருலகத் தினில்மக் களர சில்லா நாடொன் றில்லாகத் தப்பா தெவரும் அவர்தம் உரிமை தகமக் கள்சரி நிகராக எப்போ துமுழைத் திட்டோய்! இனியிங் கெவரே உன்போன் றவர்தானே! அப்பா!கென்னடி! என்செய் கோசொல் லாயோ இனிவரு வாயோதான்! (75) 76. பொய்ச்சா தியின நிறவேற் றுமையும் போரும் பகையும் பொருவின்றி எச்சா கியெநா னேநா னென்றே இறுமாத் திடலுக் கறியாமை துச்சா மெனவவ் வறியா மைகெடத் துடித்தோய்! மண்ணிற் படுத்தாயே! அச்சோ!கென்னடி! என்செய் கோசொல் லாயோ இனிவரு வாயோதான்! (76) 6. ஐயுற் றிரங்கல் எழுசீர் விருத்தம் - வேறு 77. கருவிலே யமைந்த உயர்பிறப் பென்று கருதியே ஒருசிலர் தம்மை, உருவிலே கரியர் என்றொரு சிலரை ஒருபொரு ளாமதி யாமல் வருவதை அடியோ டொழித்திட உழைத்து வந்தனை இருந்திருந் தாற்போல் தெருவிலே யலைந்து திரிகென விட்டுச் சென்றனை போலுங்கென் னடியே! (77) 78. பொருந்திய உணவுப் பொருள்களும் ஏனைப் பொருள்களும் செல்வமும் இன்றி இருந்திடும் உலக நாடுகட் கெல்லாம் இலையெனா முன்னுவந் துதவித் திருந்திட உலக மதனையொப் புரவு செய்துவந் ததைவிடுத் தந்தோ! வருந்தியே வறுமை யால்நலி கென்று மறைந்தனை போலுங்கென் னடியே! (78) 79. கடமையி னின்று தவறியே மிகவும் கைவலுத் தவர்படை வலியால் குடிமையைப் பறித்துக் கொண்டுதாய் நாட்டுக் குடிகளை அடக்கியே ஆளும் கொடுமையைப் போக்கல் கடமைய தாகக் கொண்டனை அதைவிடுத் தையோ! அடிமையா யலைந்து திரிகவென் றெமைவிட் டகன்றனை போலுங்கென் னடியே! (79) 80. கடந்தடு தானைப் பெருக்கினைக் கட்டுப் படுத்தியே காப்புடை யுலகில் இடந்தொறும் மக்கள் அடிமையி னீங்கி இயன்றதம் உரிமைக ளெல்லாம் அடைந்ததுமே மக்கள் ஆட்சிநா டெங்கும் அரும்பியே மலர்ந்துநன் கினிது நடந்திட உழைத்தோய்! நலிகென விட்டு நடந்தனை போலுங்கென் னடியே! (80) 81. ஓங்குபோர் வெறியின் அறிகுறி யான உலகினை ஒருநொடிப் போதில் ஆங்குநீ றாக அழித்திட வல்ல தாகிய அவ்வணு குண்டைத் தாங்கியே உலகத் தலையில்வீ ழாமல் தடுத்திருந் ததைவிடுத் தந்தோ! போங்களெப் படியோ என்றெமை விட்டுப் போயினை போலுங்கென் னடியே! (81) 82. உலகினிற் போரும் பூசலும் இன்றி ஒன்றுபட் டுலகநா டெல்லாம் இலகிட அமைதி நிலவிடற் காக இயன்றஅவ் உலகமன் றத்தின் தலைமைபூண் டமைதி காத்துமே வந்த தகைமிகு தலைவஇவ் வுலகை அலைகெனத் தெருவில் விட்டுமே நீங்கி அகன்றனை போலுங்கென் னடியே! (82) 83. இருங்கட லுலகில் தற்குறி ஒருவன் இருப்பதும் இப்பெரும் உலகுக் கருங்குறை யாகும், அவ்வறி யாமை யாலுல கத்தெலாத் தீங்கும் ஒருங்குறும் எனவம் மடமையைப் போக்க உலகுடன் முயன்றதை வித்தே இருங்களெப் படியோ என்றெமை விட்டே ஏகினை போலுங்கென் னடியே! (83) 7. அற்றநினைந் திரங்கல் கலித்துறை 84. ஏசு பெருமான் சேசு வெனப்பட லேபோல, மாசு நிறத்தினி லின்றெனும் உண்மை மனக்கொள்ளப் பேசவே சென்ற கென்னடி! உந்தன் பேச்செல்லாம் பேசவே செய்தான் ஆசுவால் டெனுமப் பெரியோனே! (84) 85. நிலவிரி மதியுடு விடைவரு வதுபோல் நிரல்நின்று கலகல வெனவூர் கண்டு களிக்கக் களித்தேயூர் வலம்வரு போது கென்னடி! உன்பெரு மைகளெல்லாம் சொலும்வகை செய்தான் ஆசுவால் டெனுமத் தூயோனே! (85) 86. மழகளி றதனிளம் பிடியொடு சோலை மலர்காணூ வழிவரு போதிடி வீழ்வென நகர்வலம் வருகின்ற விழவொலி கேட்ட காதப் போதே விதிர்ப்பெய்த இழவொலி கேட்கக் கென்னடி! யாமுனக் கென்செய்தேம்! (86) 87. கருவிழி யின்றி வெள்விழி பொருளைக் காணுங்கொல்! இருவிழி யுஞ்சேர்ந் தியல்வதே கண்ணுக் கியல்பேபோல்! ஒருநிற முயர்வொரு நிறந்தாழ் வெனும்வேற் றுமைபோக்க வருவது கண்டந் நிறவெறி கொண்டது வரவேற்பே! (87) 88. எந்தா யுலகே வாழ்ந்தது போதும் இனியிவுடல் இந்தா எனவீந் தேயமெ ரிக்கா வின்முப்பத் தைந்தா வதுகுடி யரசுத் தலைவ னாவுலகில் வந்தே புகழுடம் பெய்தினை கென்னடி! வாழியவே! (88) 8. தலைவர்கள் அச்சம் கலிவிருத்தம் 89. மாக்கொலைத் துயர்பொறா உலக மன்றினர் பூக்கொலை போன்றுகென் னடியின் பொன்னுயிர் போக்கிய கொடுமையைப் போன்ற அத்தகு கோக்கொலைக் கஞ்சியே ஒன்று கூடினர். (89) 90. மாந்தருள் உவமையில் மாந்தராகிய காந்தியை லிங்கனைக் கவலை யின்றியே யீந்திட இன்றுகென் னடியை விட்டதும் பாந்தநல் லரசியற் பொறுப்ப தாகுமோ? (90) 91. இக்கொலை போலினி ஏற்ப டாவணம் இக்கொலைக் கேதுல கினிலில் லாமலே தக்கது செய்தலே தக்க தாமென ஒக்கவெல் லோருமே உறுதி செய்தனர். (91) 92. கொலையினை வெறுத்தலிற் கொலைக்குக் காரண நிலையினை வெறுத்ததை மக்கள் நீக்கிடும் நிலையினை யாக்கல்நன்னெறிய தாமெனத் தலைவர்க ளொருங்குதீர் மானித் தார்களே. (92) 93. இனவெறி முதலிய கொலைகட் கேதுவாம் கனையெரி யனையதீக் குணங்கள் கண்டிப்பாய் இனியுல கத்திடை இருந்தி டாவணம் சினையற வொழித்திட முடிவு செய்தனர். (93) 94. உடையதம் உடைமையும் உரிமை யுள்ளவும் அடைதர விடுகிலா தடக்கி யாண்டிடும் கொடுமையும் கொலைவெறி கொண்டி டாவணம் விடுதலை வாழ்வினை வகுத்தல் வேண்டினார். (94) 95. படைபெருக் குதல்பகை பெருக்கல் பாழ்ங்கொலைக் குடையபோர்க் கருவிகள் பெருக்கல் ஒன்றுமே நடைபெறா துலகிடை நச்சுப் போரையும் தடைசெயத் துணிந்தனர் தலைவர் யாவரும். 95 96. அறிவிய லெனவுல கழித்தற் காங்கொடும் பொறிகளும் அவ்வணு குண்டும் போன்றவை குறிகொடு செய்திடும் கொடுமை யாயபோர் வெறியதை யொழித்திட விரும்பி னார்களே. (96) 97. பகையெனும் சுழலிடைப் படாது நட்பெனும் தகையினில் அவரவர் தத்தம் நாட்டினை வகையுடன் பசிபிணிவறுமை யின்றியே மிகையுடன் அமைதியாய் ஆள மேயினார். (97) அறுசீர் விருத்தம் 98. இன்னொரு படியுங் கேளீர் எம்மனீர்! உலக நாட்டுள் என்னென எவ்வெந் நாட்டுக் கில்லையோ அவையுள் நாட்டார் தன்னெனப் பிறரை எண்ணித் தகவுடன் உதவிப் போற்றும் பொன்னன குணமேற் கொள்வீர் கென்னடி போல, மேலும். (98) 99. ஒருகுலைக் காய்கள் போல உலகநா டுகளைக் கொண்டு திருகுத லின்றி யொன்றிச் செந்துகிர்க் கொடிபோல் ஒன்றும் அருகுத லின்றி எங்கும் ஒப்புர வாக்கி நாளும் பெருகிய அன்பி னோடு பேணுதல் கடப்பா டாகும். (99) 100. இற்றென ஒவ்வோர் நாடும் இனிதர சியற்று மாறு மற்றதன் எல்லை தன்னை வரையறுத் திடுதல் வேண்டும் உற்றஇவ் வுலக மன்றத் துயர்குடி மக்கள் போல நற்றக உலகத் துள்ள நாடுகள் நடக்க வேண்டும். (100) 101. அடிமையா யடக்கி யாளும் அடாவழக் காய பொல்லாக் கொடுமைபோய் உலகி லுள்ள எச்சிறு குட்டி நாடும் விடுதலை யுடைய தாகி மேம்பட உலக மன்றக் குடியர சாக வாழ்வு கூர்ந்திடச் செய்ய வேண்டும். (101) 102. எச்சிறு நாடே யேனும் இனியுல கத்தோர் நாடு நச்சுயிர் கொல்லி போலோர் நாடுமேற் பாயும் என்ற அச்சம தின்றி யேதன் னரசுவீற் றிருக்க வேண்டும். இச்செயல் உலக மன்றத் ததனிடம் இருக்க வேண்டும். (102) 103. ஒவ்வொரு நாடும் தத்தம் அளவினுக் குகந்தாற் போல உவ்வுல கத்து மன்றப் படையைவைத் தோம்பல் வேண்டும் இவ்வகை யுலக மன்றத் தாட்சிய தியலு மானால் அவ்வியம் ஒழியும் என்றார் அமெரிக்கத் தலைவர் ஜான்சன். (103) 104. ஏற்றநற் றிட்டம் ஆகும் எனக்குரு சேவும், ஃஓமும் போற்றுதற் குரிய தெங்கள் அரசியும் புகழ்வர் என்று சாற்றவும், உலக நாட்டுத் தலைவரெல் லோரும் ஆமாம் மாற்றருந் திட்டம் என்ன வழிமொழிந் தேற்றுக் கொண்டார். (104) மேற்படி - வேறு 105. நோயொழிய, நல்வாழ்வு வாழவழி காணலன்றி நோய்போல் கொல்லும் தீயவைகா ணலையொழித்தல் தகவெனஇந் தியத்தலைவர் செப்ப ஃஓமும் ஏயதென, ஜான்சனும்ஆம் எனக்குருசேவ் இனியுலகோர்க் கிப்போ ரச்சம் போயொழியச் செய்திடுவோம் எனஅவையோர் மகிழ்ந்திருகை புடைத்தே ஆர்த்தார். (105) முறை மன்றம் 9. உசாப்பு கலிவிருத்தம் 106. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது குண்டே, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது வெடியே, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது கையே, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன். (106) 107. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் உறுதி, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் உணர்ச்சி, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் உள்ளம், யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன். (107) 108. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது பகையே, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது சினமே, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது பொறாமை, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன் (108) 109. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றத வாவே, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது கயமை, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது மடமை, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன். (109) 110. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது பசியே, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது வறுமை, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது மடியே, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன். ( 110) 111. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதவ் வுயர்வு, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது தாழ்வு, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது மானம், யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன் (111) 112. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது சாதி, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது நிறமே, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதவ் வினமே, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன் (112) 113. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது சமயம் யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது கட்சி, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது கொள்கை, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன். (113) 114. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் அடிமை, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் உரிமை, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் இழிவு, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன். (114) 115. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது தறுகண், யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது வெறுப்பு, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது கோழை, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன் (115) 116. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது வெறியே, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது விடாமை, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது செருக்கு, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றதென் ஐயன் (116) 117. யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது கடமை, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது கொடுமை, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது கொலையே, யார்கொன்றது நீயாஇலை, யார்கொன்றது நான் . . . தான். (117) விளக்கம் நடுவர் : யார்கொன்றது, நீயா? கொலைஞன்; இலை. (இல்லை) நடுவர் : யார் கொன்றது? கொலைஞன் : குண்டு. நடுவர் : யார் கொன்றது, நீயா? குண்டு : இலை. நடுவர் : யார் கொன்றது? குண்டு : வெடி. நடுவர் : யார் கொன்றது, நீயா? வெடி : இலை. நடுவர் : யார் கொன்றது? வெடி: கை நடுவர் : யார் கொன்றது, நீயா? கை : இலை. நடுவர் : யார் கொன்றது? கை : என் ஐயன். இவ்வாறே கொள்க. ஐயன் என்றது - கொலைஞனை. 10. வாக்குமூலம் நடுவர் : அறுசீர் விருத்தம் 118. கொன்றது கொலையே ஒத்துக் கொண்டது நான்தான் என்று; சென்றது நிகழ்வ தெல்லாம் தெளிவுறத் தேர்ந்து மேலும் ஒன்றிய கரியும் ஏதும் ஒழுங்குற நூலோ டாய்ந்து மன்றினீர்! துலாக்கோல் போல வழங்குக நல்ல தீர்ப்பே. (118) 119. ஏன்கொலை யேநீ கொன்றாய்? என்னவன் உனக்குச் செய்தான்? நான்கொலை செய்ய வில்லை, நடந்ததை நடந்த வாசொல் வேன்கொலை நான்செய் கில்லா விடினுல கத்தின் உண்மை தான்கொலை செய்து கொள்ளும் சான்றுடன் உசாவித் தேர்மின்! (119) 120. உடலுயிர் ஒன்று கூடி ஓரறி வுயிரா மாதி உடலுயி ரினங்கள் தோன்றும். உயிரிரண் டொன்று கூடின் உடலுயிர் ஒன்றித் தோன்றும். உடலுயிர் கூட னாற்போல் உடலுயிர் பிரியும் அந்தத் தொழிலினுக் குரியன் யானே. (120) 121. தொல்லுல கதனில் செய்யும் தொழிலினால் பெயருண் டாகிச் சொல்லுமப் பெயர்பல் வேறு சாதியாய்த் தோன்றி னாற்போல், கொல்லுமத் தொழிலி னாலே கொலையெனப் பேரு பெற்றேன். நல்லது தீய தென்ப தவரவர் நயக்கு மாறே. (121) 122. வலியவர் வருத்த மெத்த வருந்தியே உதவி வேண்டும் மெலியவர்க் குதவி செய்தல் மேலவர் கடமை யன்றோ? ஒலிபுன லுலகந் தன்னில் உற்றுழி யுதவி தன்னைப் பொலிதரு கடனாக் கொண்டு போற்றியே வருகின் றேனால். (122) 123. இப்பெரு முலகந் தோன்றி உயிரினம் இயங்க லான அப்பொழு திருந்தே கொல்லும் அத்தொழி லதைமேற் கொண்டேன். எப்பெரு முதவி யேனும் வேண்டுவா ரெவரே யேனும் தப்புத லின்றிச் செய்யும் தகுதியு முடையே னையா! (123) 124. பகலவன் தோன்றா னேனும் பனிமதி தேயா வேனும் அகலிரு விசும்பி லேனை யாவுமே காணா வேனும் புகலரு முயிர்க ளெல்லாம் பொன்றினும், பொன்றா உண்மை நகலரு மணுவுங் கூட நடுநிலை பிறழு கில்லேன் (124) 125. கான்வழி புட்போல் ஏவு கணையெனப் பறக்க வாய்த்து வான்வழி சனிவி யாழன் மதிபுதன் செவ்வாய் வெள்ளி தான்வழி சென்று வாழும் தகுதியேற் படினும் ஐய! நான்வழி வழியா வுள்ள நடுநிலை தவற மாட்டேன். (125) 126. ஒன்றிய உலகந் தன்னில் ஓருயி ருள்ள மட்டும் என்றொழில் ஒழிந்து சோம்பி இருந்திடேன்; உயிர்க ளெல்லாம் கொன்றிடும் பகைவிட் டொன்று கூடியே வாழு மானால், அன்றுயிர் கோற லின்றி அமைதியோ டினிது வாழ்வேன். (126) 127. ஐயயான் தொழில்செய் யேனேல் அறமெனும் பொருளின் றாகும், வையக மதனில் மக்கள் மாக்களென் வகையின் றாகும், மெய்யினை அழித்துப் பொய்யும் மேம்படும், உயிர்க ளெல்லாம் செய்யுந செய்யா, வாழ்வு சீர்குலைந் திடவுஞ் செய்யும். (127) 128. உயிருயி ரில்ல வாக அமைதரும் உலகந் தன்னில் உயிருடைப் பொருளில் மக்கள் உயர்வெனப் பகர்வர் மக்கள் உயிரொடு பிறந்தொன் றான உயிர்க்குண மிருவ கைத்தாம். செயிரெனுங் குற்றந் தன்னுள் சினமுதற் குற்ற மாகும். (128) 129. அடைதர விரும்பு மொன்றை அடைதர முடியா வண்ணம் தடையது செயினும், நாளும் தாங்வொண் ணாது மேன்மேல் உடைதர உள்ளம் பல்வே றூறுசெய் திடினும், ஆற்றா திடைதரும் ஒருவன் உள்ளத் தெரிசினம் எழுந்து தோன்றும். (129) 130. பச்சிளம் குழவி யேனும் பார்க்குமே தேனு மொன்றை நச்சிடின் கொடுக்கா விட்டால் ஞாயர்பால் சினந்தான் கொள்ளும்; அச்சினந் தோன்ற வேசீ ராடியே அழுது காட்டும் இச்சினத் தீயைப் போலோர் தீயிந்த உலகத் தில்லை. (130) 131. தாயெனப் பாரா, அன்புத் தந்தையென் றெண்ணா, பெற்ற சேயெனக் கருதா, வாழ்க்கைத் துணையெனச் சிறிதும் உள்ளா, தூயநட் பெனவு நோக்கா, சுற்றமென் மற்றும் வேண்டா, தீயினுஞ் சுடலால் மேலோர் செப்பினர் சினத்தீ யென்றே. (131) 132. அப்பெரு சினத்தீ யால்வெந் தழலுசூட் டாணி போல, ஒப்பிய ஒருவ னுள்ளத் தேபகை உணர்ச்சி தோன்றும். அப்பகை யுணர்ச்சி காழ்ப்புற் றதுநிக ருறுதி யாகி இப்பெரு முலகி லொன்றும் எதிரிலாப் பொருள தாகும். (132) 133. மனமெனும் உலையில் தீய வையெனும் கரியால் மூண்ட சினமெனும் சுடுசெந் தீயில் சேப்புறப் பழுக்கக் காய்ந்த இனமெனுங் குறடு கொண்டே எடுத்தெதிர் சுடும்ப கைமை எனுங்கொடும் பொருளைப் போலோர் கொடும்பொருள் உலகத் தில்லை. (133) 134. வஞ்சம்பொய் களவு சூது மடமின்னா வறுமை வெஃகல் வெஞ்சொல்கோள் மானங் காம வெறிகுடி இழிவாற் றாமை அஞ்சுமஞ் சுதலஞ் சாமை செருக்கவா பொறாமை யாதி நஞ்சுமஞ் சும்ப கைக்கு நற்படைத் துணைக ளாமே. (134) 135. அப்படைத் துணைக ளோடும் அத்துணைத் தலைமை தாங்கும் செப்பருஞ் சினத்தீ யென்னும் திறலுடை அமைச்ச னோடும் ஒப்பறு முலகை யாளும் ஒருதனித் தலைவ னான அப்பெரும் பகைவன் கொல்லென் றாற்கொலும் அலுவ லேன்யான். (135) 136. ஐம்புலன் களையும் ஆட்டிப் படைத்திடும் அவாஅ என்னும் பம்பியே புதரி னின்று பாய்ந்துதன் இரையைக் கொல்லும் வெம்புலி வாழுங் காட்டில் விட்டமான் குட்டி போல நம்பியே உள்ளக் காட்டில் மனமிக நலிந்து வாழும். (136) 137. அவ்வவாப் புலியின் மூத்த அரும்பெறல் குட்டி யான ஒவ்வுமோர் பொருளு மின்றி உயர்ந்துதன் ஒப்ப தான அவ்விய முதலா வுள்ள தீக்கொடுங் குணங்க ளான எவ்வகை யினுநற் பண்பில் குட்டிகள் இன்னல் செய்யும். (137) 138. மற்றவர் பெருமை கண்டு மனம்பொறாத் தன்மை யாலே பெற்றது பொறாமை யென்னும் பெரும்பெய ரதுவே உள்ளம் பற்றுதீக் குணங்க ளான பகைமுத லவற்றுக் கெல்லாம் உற்றகா ரணமாய்த் தாயின் தூண்டலால் ஊறு செய்யும். (138) 139. ஈனிய வாழைபோல இடம்பொரு ளேவல் வாய்க்கின் தானெனத் தருக்கி ஏனோர் தமையெலாம் அடக்கி யாள்வோன் நானெனச் செருக்கி மேலோர் நடுங்கவே நாளும் வான மீனெனக் கொடுமை செய்வான் மிகவெனக் குதவி செய்வான். (139) 140. தீயினால் கருகி வெந்து சிதைவுறும் பொருளே போல நோயினால் உடம்பு நொந்து நுகருறுப் பொருங்கு கெட்டுப் போயினால் உயிரத் துன்பம் பொறுக்கிலா தகலுங் காலம் ஆயினால் இரக்கங் கொண்டப் பொழுததற் குதவி யாவேன். (140) 141. அரியநச் சுயிர்க ளேது வாகுமந் நோய்க ளென்னும் கருவிக ளோடு மற்றைக் கருவிகள் கொண்டு கொல்வேன். பொருகட லுலகந் தன்னில் புகலென உதவி வேண்டி வருபவர்க் கெந்த நாளும் மறுத்திடும் வழக்க மில்லேன். (141) 142. வாய்க்கட னாகக் கேட்டு வாங்கிய கடனைச் சின்னாள் போய்க்கடன் கொடுத்தோன் கேட்கும் போதந்த நன்றி கொன்றோன், ஏய்க்கவெப் போது தந்தாய் என்னவே, வழக்கில் தோல்வி வாய்க்கவே கொடுத்தோன் நொந்தவ் வஞ்சனைக் கொலெனக் கொன்றேன். (142) 143. அரும்பொரு ளெனவே வைத்த அடைக்கலப் பொருளை அன்னான் பெரும்பொழு தகன்று போந்து கேட்கவே பீடொன் றில்லான் இரும்பினை எலிகள் தின்ற தெனுங்கதை போலக் கூறப் பெரும்பொரு ளிழந்தான் சீற்றம் பெருகிக்கொல் லெனவே கொன்றேன். (143) 144. கன்றிய வெயிலில் செய்த கடுந்தொழிற் குரிய கூலி இன்றிலை நாளை வாவென் றிப்படி யேநா டோறும் சென்றிட நீயெப் போது செய்தனை வேலை போடா என்றவன் கடிந்து கூற எளியவன் வெகுளக் கொன்றேன். (144) 145. பள்ளநீர் வயலில் பாயும் பான்மைபோல் மிக்க செல்வம் உள்ளவர் இலார்க்கு நாளும் உதவியொப் புரவு செய்தல் தெள்ளிய கடனாக் கொள்ளா திவறியார் செல்வத் தாலே வெள்ளையர் கறுப்பர் போல வேற்றுமை தோன்றக் கொல்வேன். (145) 146. ஒன்றுமே அறியான் பாவம்! ஊரினும் இலையன் றேனும் கொன்றனன் எனப்பொய் கூறிக் கொடுஞ்சிறைப் படவே செய்த நன்றிலி தனைப்பத் தாண்டு நலிவுறு காவற் கூடம் சென்றுமீண் டதுமே தீயிற் சினந்துகொல் லெனவே கொன்றேன். (146) 147. உள்ளவோர் தொழிலு மின்றி உடையவர் வீட்டிற் புக்குக் கொள்ளைகொண் டதனால் வாழும் கொடுந்தொழி லாள னான கள்ளனை எதிர்த்த வீட்டுக் காரனைக் குத்திக் கொன்றேன். கள்ளனைக் கொலென வீட்டுக் காரர்வேண் டிடவே கொன்றேன். (147) 148. கடாப்படி குளத்து நீர்போல் கலங்கிட மக்க ளுள்ளம் குடாப்படி நரிபுக் காட்டுக் குட்டியைக் கொள்ளு மாபோல், அடாப்பிடி யாக ஊரார் அரும்பொருள் கவர்ந்து நாளும் விடாப்பிடி செய்யும் பொல்லா வெறியரைக் கொலெனக் கொல்வேன். (148) 149. அஃகிய பொருள்மீக் கூர அயலவர் பொருளை நாளும் வெஃகியே அடைதற் கான வேளைபார்த் துழலல் மேலும் அஃகிய தாவ தோடே அச்செயல் அடர்க்கும் வெங்கூர் எஃகதாக் கொண்டே அன்னார் இடருற வெகுண்டு கொல்வேன். (149) 150. போதென விளக்கில் வீழும் விட்டிலைப் போலப் பாரில் சூதினால் பொருளி ழந்த துயரினால் என்பால் வைத்த காதலார் கணக்கில் லாதார் கடந்தவப் பார தப்போர் சூதினால் நடந்த தென்னில் அதன் திறஞ் சொல்லப் போமோ! (150) 151. குடிகுடி யெனவே முட்டக் குடித்துமே வெறியுங் கொண்டோன் அடிதடி கலகம் செய்தே யாதொரு தீங்கும் செய்யா துடையவர் தம்மைக் குத்திக் கொல்லென உடனே கொல்வேன். குடிவெறி யனையும் மற்றோர் கொல்லென அடித்துக் கொல்வேன். (151) 152. காய்ச்சிய எண்ணெய் போலக் கனன்றுமே கொடுவெங் காமத் தீச்சுடப் பொறுக்க கில்லா தான்சட்ட திட்டம் பாரான் பேய்ச்சொறி பிடித்தான் போலப் பெயர்கெடத் திரிய அன்னான் தீச்செயல் பொறுக்கா ஊரார் சினந்துகொல் லெனவே கொல்வேன். (152) 153. அறன்கடை யெனவே பாரா அற்றம்பார்த் தஞ்சா நாணாப் பிறன்கடை காத்து நின்ற பேதையை அடித்துக் கொன்றேன். உறங்கிடுங் கணவன் காணா தகன்றுவந் துடனு றங்கும் குறங்கிடைக் கழலை போன்ற கொடியளைக் குத்திக் கொன்றேன். (153) 154. விருப்பெழும் வகையில் நேரில் கரும்பென விரும்பப் பேசி விருப்பது வெறுப்ப தாக்கண் மறைந்ததும் வேம்பின் மிக்க உருப்படும் வகையிற் பேசும் ஒழுக்கமில் நீறு பூத்த நெருப்பன கொடியர் தம்பால் நிகழ்கொலைக் களவு முண்டோ! (154) 155. தீயினால் சுட்ட புண்ணுள் ஆறுமா றாது தீயின் ஆயிர மடங்கு தீய தாகுமக் கொடிய தான வாயினால் சுட்ட அந்த வடுவெனும் வள்ளு வத்தைத் தோயிலான் சொன்ன வெஞ்சொல் சுடப்பொறான் சுளிக்கக் கொல்வேன். (155) 156. கொடுக்கினால் மேனி யெங்கும் கொட்டுகொட் டெனவெ டுக்கு வெடுக்கெனக் கொட்டுந் தேள்போல் வேண்டுமென் றேமேல் மேல்மேல் அடுக்கடுக் காக இன்னா அடுத்தடுத் தேசெய் தந்தோ! கெடுத்திடுங் கொடியர் தம்மைக் கீரைபோல் கிள்ளிக் கொல்வேன். (156) 157. பழியெனப் பெரியோர் நாளும் பழகிய பழக்கத் தாலே ஒழியெனப் பழிக்கஞ் சாமல் ஒழுக்காமக் கொண்டு வாழும் வழியெனக் கொடுசெய் யொண்ணா வான்பழி செய்யும் பொல்லார் விழியிடைப் படாது நல்லோர் வெறுக்கவே வெகுண்டு கொல்வேன். (157) 158. நாணிலான் தீமை செய்ய, நன்மையே தேனு மொன்றும் பேணிலான், அறத்தை வாயால் பேசிலான், குற்றஞ் செய்யக் கோணிலான், பழிக்கஞ் சில்லாக் கொடுமையான், மகன்தா னென்று தோணிலான் துயரத் தாலே துடிதுடித் தொழியச் செய்வேன். (158) 159. உடைமையால் தருக்கி மேலோ ரொடுபகை கொள்ளல், செய்யுங் கடமையில் தவறல், சாதி இனநிறம் சமயம் கட்சிக் கொடுமையால் செருக்கி என்னைக் கொல்கொல்கொல் என்னல் எல்லாம் மடமையால் விளைவ தென்னின் யானதை மறக்கிற் பேனோ? (159) 160. சிறப்பெனப் படுதற் கேது செய்தொழிற் சிறப்பே யாகப் பிறப்பினில் உயர்வு தாழ்வு பேசியோர் சிலரைப் பாவம் இறப்பவும் இழிஞ ராய்க்கொண் டிழைக்குமக் கொடுமைக் காற்றாப் புறப்படும் புரட்சித் தீக்கப் புல்லியர் விறகாச் செய்வேன். (160) 161. கரும்பறை ஆலைத் தீயில் விடாய்கொடு கழியத் தாழ்த்துத் தரும்பிறர் நீரை யுண்ணான் மானத்தால் தாக்குண் டாவி பெரும்பொறை எனவே எண்ணி எண்ணியே பெயர்ந்த யாக்கை இரும்பொறை போல மாய்ந்தோர் எத்தனை பேரென் கையால்! (161) 162. பகலிர வின்றிப் பாடு படட்டுமே பசியைப் போக்க வகையிலை வறுமை வாட்ட மனைமக்கள் மயங்கி நிற்கப் புகையிலை அடுப்பில் உள்ளம் புகைந்துவெஞ் சினத்தீ மூளப் பகைகொடெம் உழைப்பால் வாழும் பதரைக்கொல் லெனவே கொல்வேன் (162) 163. நூறினி லொன்றே யாக நுவலுமோர் காசுக் காக மாறுபா டுடைய ராகி ஏறியே வழக்கு மன்றம் ஏறுமா றாகச் செல்வம் இழந்துமே தோல்வி யுற்றோன் மீறிய மானந் தின்ன வெகுண்டுகொல் லெனவே கொன்றேன். (163) 164. ஒருசிறு வரப்புக் காக உடைமையை விடாமை யென்னும் உரிமையால் காடு தோட்டம் உள்ளசொத் தெல்லாம் விற்றும் பெருவழக் கதனில் வெற்றி பெற்றிடா வருத்தம் தாங்கா துரிமையை இழந்தோன் வேண்ட உடைமைகொண் டோனைக் கொன்றேன். (164) 165. தொடுத்தவோர் துணையு மின்றித் தொடுப்பறு கலப்பை போல நடுத்தெரு வினிலே வைத்த விளக்கென நலிந்து பாவம் அடுத்தவர் தம்மைக் காப்ப தாகவே உறுதி கூறிக் கெடுத்தவர் தம்மைச் சீறிக் கிளையல றிடவே கொல்வேன். (165) 166. தன்னிகர் தமிய ராகத் தாமெதிர்ப் பட்டே யுள்ளம் கன்னலி னினிமை போலக் கலந்தமெய்க் காதல் தப்ப, மன்னிய உலக வாழ்வை வெறுத்துயிர் மாய்த்துக் கொண்ட கன்னியர் காளை யர்தம் கணக்கென்கைக் கணக்கே யாகும். (166) 167. இட்டுக்கட் டியகட் டுப்பா டென்னப்பெண் பாற்கு மட்டும் முட்டுக்கட் டையதா மூடப் பழக்கமா முடிந்த சாதிச் சட்டத்தால் தனிமை வாழ்க்கை தாங்கிய இளைய நல்லார் கட்டுக்கெட் டொழிந்து பட்டார் இற்றெனக் கணிக்கப் போமோ! (167) 168. காந்துதிண் கற்புச் செல்வி கண்ணகி சிலம்பைக் கண்டு சாய்ந்ததென் குடையென் செங்கோல் தளர்ந்தது யானே கள்வன்! ஆய்ந்துபா ராது கொன்றேன் கெடுகவென் ஆயுள் என்று நேர்ந்தஅச் செழியன் கோலை நிமிர்த்தியே அவனைக் கொன்றேன். (168) 169. ஆதகா தெனவே மாறன் அரசுகட் டிலிலே துஞ்சக் காதலாற் கட்டுப் பட்ட காவலன் தேவி கண்டே மாதுயர் தாங்காள் ஈங்கு வறிதுயிர் வாழாள் ஏங்கி ஊதுலைக் குருகு போல உயிர்த்தனள் உடன்கொன் றேனே. (169) 170. ஆண்டகை தமிழுக் காக ஆரூயிர் விட்ட பூதப் பாண்டியன் தேவி ஒன்று பட்டதால் கைம்மைக் கோலம் பூண்டுவாழ் வதைநீத் தன்னம் பூங்கயம் புகுதல் போல மூண்டெரி கணவ னோடு மூழ்கவ ளுயிர்கொன் றேனே. (170) 171. தலையிடை யன்பிற் பட்ட தையலர் கோடா கோடி அலையிடைத் துரும்பு போற்றம் ஆருயிர் தன்னை எண்ணி மலையிடைப் பிறவாப் புள்ளி மானென மஞ்ஞை யென்னக் கொலையிடைப் பட்டார் காதற் கொழுநர் தம்பிரிவாற் றாமே. (171) 172. இத்தகு செய்கை பின்னர் இயன்றவோர் பழக்கமாகி அத்தக வுயிரைப் போக்கு அன்பிலா ரையுங்கட் டாயம் கத்தியே கதறி யுள்ளங் கலங்கியே அழுது கெஞ்சச் செத்ததங் கணவ ரோடு தீயிடைத் தள்ளிக் கொன்றேன். (172) 173. அத்தகு கொடுமை தன்னை அகற்றுமுன் மோகன் ராயும் எத்தனை கோடி கோடி இளமயி லனையார் தம்மைச் செத்ததங் கணவ ரோடு செல்கென இரக்க மின்றி ஒத்தவோர் கடமை யாக்கொண் டுடன்கட்டை ஏற்றிக் கொன்றேன். (173) 174. சாதியி லுயர்ந்த சாதி தாமெனத் தருக்கி வாழ்வோர் சாதியில் தாழ்ந்த சாதி யாமெனத் தாழ்த்தப் பட்டோர் சாதியி லுயர்ந்த சாதிச் சட்டதிட் டங்கள் தப்பின் சாதியி லுயர்ந்தோர் சீற்றந் தணியுமா றடித்துக் கொல்வேன். (174) 175. மாக்களி லுயர்ந்தோர் மக்கள் மக்களில் வெள்ளை மக்கள் மீக்குலம்; கரியைப் போலும் மேனியார் இழிந்தோ ராவர் நீக்குக அணுகா தென்னும் நிறவெறி யவனைக் கொன்று காக்குக எனவே அந்தக் கயவனைக் காய்ந்து கொன்றேன். (175) 176. நீக்கரோ நிறத்தில் தாழ்ந்த நிறமென நினைக்கும் வெள்ளை மாக்களின் கொடுமை தாங்கா மக்களுக் கிரங்கி யுள்ளம் போக்கியே உயர்வு தாழ்வைப் பொன்னுட னிரும்பை யொன்றாய் ஆக்கிட முயல்வோ னைக்கொன் றருளுதி எனவே கொன்றேன். 176 177. அன்றிதற் காக வேதான் ஆபிரகாம் லிங்கன் தன்னைக் கொன்றனன் உயர்ந்தோர் வேண்டிக் கொண்டதால் ஒருவன் மூலம்; பின்றையும் இதனுக் காகப் பெருங்கொலை பலசெய் துள்ளேன். இன்றுகென் னடிகொ லைக்கும் இத்தொடர் பிலாம லில்லை. (177) 178. எம்மின மொன்றே மக்கள் இனத்தினி லுயர்ந்த தென்றச் செம்மன மில்லா இட்லர் செருக்குடன் கூறி யூதர் தம்மினம் எமது நாட்டில் இருப்பது தகுதி யன்றால், அம்மர பினரைக் கொல்லென் றாணையின் படியே கொன்றேன். (178) 179. இனவெறி பிடித்த இட்லர் ஈசலைப் போல மக்கள் இனமதை எண்ணி யேயோர் இடத்தினி லடைத்த டைத்தே மனவெறி யடங்கு மட்டும் வன்கொலை செய்செய் செய்செய் எனவேயை யைந்து நூறா யிரரைமின் விசையாற் கொன்றேன். (179) 180. அன்றன்றங் கங்கே ஆறாம் அறிவின்றித் தாறு மாறாய்க் கொன்றொன்று குவிக்கும் கண்ட பேர்களைக் குலைந டுங்கக் கன்றொன்று மவ்வ குப்புக் கலகங்க ளினிலே அந்தோ! வென்றொன்று மிலைவ குப்பு வெறியினால் விரைந்து கொல்வேன். (180) 181. செந்தமிழ் மாறன் செங்கோல் முறையது திரிந்தே அந்தோ! மந்திரி மனைவி தம்மால் மதவெறி தலைமீக் கொள்ள எந்தமிழ் மக்கள் எண்ணா யிரவரைக் கழுவி லேற்றி அந்தகோ! கொல்லெ னாமுன் அழவழக் கொன்றிட் டேனே. (181) 182. கல்லெனாக் கடின வுள்ளப் பல்லவன் கடமை தப்பி இல்லெனா உயிர்போல் நாவுக் கரசருக் கிழைத்த அந்தச் சொல்லொணாக் கொடுமை யெல்லாம் சமயத்தின் தொடக்கா லன்றோ? கொல்லெனாச் சொல்லா தாலே கொன்றிலேன் அரசை யன்றே. (182) 183. தென்றமிழ் நாட்டை யன்று சீர்குலைத் ததனைப் போல அன்றுமே னாட்டில் ஆளும் அரசொடு சமயம் பின்னி ஒன்றல பலநூற் றாண்டு சமயத்தின் உரிமைப் போரில் கொன்றுயான் குவித்தேன் வேண்டிக் கொளக்கொள அங்கு மிங்கும். (183) 184. அன்றிருந் தின்று காறும் அகம்புறச் சமயப் போரால் ஒன்றொரு சமயத் துள்ளே உள்ளவுட் பிரிவுப் போரால் வென்றிதோல் விக்காச் செய்யும் வேந்தர்போல் செய்த போரால் கொன்றவன் கொலைகள் வெம்போர்க் கொலையினும் கொடிதே யய்யா! (184) 185. ஒருமனப் பட்டு வாழும் ஊரினை ஏய்த்து வாழ்வோர் இருமனப் பட்டவ் வூரை இரண்டுகட் சிகள தாக்கிக் கருமனப் பட்டே அவ்வூர்க் கட்சிக ளொன்றை யொன்று செருமனப் பட்டே தாக்கச் சினந்திரு மாட்டுங் கொல்வேன். (185) 186. எனதுயர் கட்சி தன்னை இகழுநை, இகழ்ந்தெ திர்க்கும் உனதுயிர் குடிப்பேன் என்னும் உணர்ச்சியா லுந்தப் பட்டுத் தனதுயிர் எனுமக் கட்சி வெறிதலைக் கேறத் தானே அனையவன் வெகுள அந்த எதிர்க்கட்சி யானைக் கொல்வேன். (186) 187. அறிவினால் நாட்டு மக்கட் காய்ந்துநல் லனசெய் யுஞ்செந் நெறியென அமைத்துக் கொண்ட நெறியதற் கெதிர்மா றாகப் பொறியினால் கருத வொண்ணாப் புன்மைய தான கட்சி வெறியினா லேயான் கொன்ற அளவினை விளம்பப் போமோ! (187) 188. மடமையும் பசியும் நோயும் வறுமையும் வருத்தத் தண்டக் கடுமையும் உரிமை யின்றிக் கலங்கிய உரசை மக்கள் அடிமையை அகற்று மாறு வேண்டஅவ் அடக்கி யாண்ட கொடியனா கியஜார் மன்னன் குடியடி யோடு கொன்றேன். (188) 189. அடிமையின் சின்ன மான ஆங்கில ஆட்சி யாளர் கொடுமையைப் பொறுக்கி லாது கொதித்துளங் குமுறிச் சீறி விடுதலை வேட்கை பொங்கி வெடித்தெழு புரட்சி வீரர் சுடுதொழி லாளர் தம்மைச் சுட்டுக்கொல் லெனவே கொன்றேன். (189) 190. அடுதொழி லவராம் வெள்ளை ஆட்சியா ரடக்கி ஆண்ட கெடுபிடி தாக்கி லாது கிளர்ந்தெழும் இந்நாட் டாரைச் சுடுதொழில் டையர்கை யோயச் சுட்டுத்தள் ளியபஞ் சாப்புப் படுகொலை போலப் பின்னும் பலபடு கொலைகள் செய்தேன். (190) 191. வீரமே யுருவா நாட்டு விடுதலைக் காக வெள்ளைக் காரர்க ளொடுபோ ரிட்ட கட்டபொம் மனையும், வெள்ளைக் காரரை வெருட்டி யேதாய் நாட்டையைந் தாண்டு காத்த சூரனாம் தீரன் சின்ன மலையையும் தூக்கிக் கொன்றேன். (191) 192. அயிரத் தெண்ணூற் றைம்பத் தேழினில் அடிமை வாழ்வு போயொழிந் திடவே வீரர் விடுதலை யுணர்ச்சி பொங்க ஏயென வேபு ரட்சிக் கொடியுயர்த் திடவே யன்று மேயவவ் வுரிமைப் போரில் வியந்திரு புறமுங் கொன்றேன். (192) 193. எட்பக வளவும் தோன்றா திருந்துமே வெளிக்கு மிக்க நட்புற வுடைய னாக நடந்துநம் பிக்கை வைக்க மட்பகை வனுக்குக் காட்டிக் கொடுத்திடும் வஞ்ச நெஞ்ச உட்பகை வனைக்கொல் லென்னா உடன்துடித் திடவே கொல்வேன். (193) 194. ஊருடன் பகைகொண் டூரை ஒருபொருட் டாயெண் ணாமல் நீருடன் பகைகொண் டுள்ள நெருப்பென நீக்குப் போக்கில் பூரிய னொருவன் செய்யட் டூழியம் பொருக்கா ஊரார் வேருடன் கொல்க என்று வெகுளஅவ் வாறே கொல்வேன். (194) 195. அடுத்தவர் நாட்டை வென்றே ஆண்டபே ரரசெ னப்பேர் எடுத்திட வேண்டு மென்றே எழுந்தபே ராசை யாலே கடுத்தபோர் மறவ ரோடு கரிபரி தேர்க ளென்னத் தொடுத்தநாற் படைக ளோடு சென்றுபோர் தொடுக்கக் கொன்றேன். (195) 196. எதிரெதி ராக வீரர் எனச்சொலி நிறுத்தி வானின் அதிரவே முரசம் வேல்வாள் அம்புகள் மின்னின் மின்னி உதிரவே அங்கு மிங்கும் குருதியா றோடக் காண்போர் விதிரவே உயிரும் மெய்யும் வேறுவே றாகக் கொன்றேன். (196) 197. நாள்செலச் செலவே போரும் நாகரி கத்த தாக, வாள்செல வேல்வில் லோடு, வந்தன வெடியும் குண்டும், கோள்சொல்வார் போல வந்து குறுக்கிட வான்போர், வன்மைத் தோள்செலக் குண்டு மாரி சொரிந்துகொல் லெனவே கொன்றேன். (197) 198. உளத்திலே உவகை பொங்க உடனுறைந் தின்பந் தந்து வளத்திலே மிகுந்த வாழ்க்கைத் துணைவியை மாற்றார் கொள்ளக் குளத்திலே குவிந்த கொட்டிப் பூவெனக் கொடுமைக் கஞ்சாக் களத்திலே பட்ட மன்னர் களைக்கணக் கிடுதற் காமோ! (198) 199. கரிபரி மறவ ரோடு களத்திடைப் பொருத மன்னர் இருவரும் வேல்வா ளோச்சி எதிரெதிர் பொருது நின்றே ஒருவரும் ஒழியா தந்தோ! ஒருகளத் தொழிந்த அந்த வெருவரு காட்சி கண்டு வியந்ததற் களவு முண்டோ! (199) 200. போரெனக் கேட்கின் தோளைப் புடைத்தெழுந் துருத்துச் சீறி யாரெனக் கெதிர்நிற் கிற்பார் இவ்வுல கத்தி லென்றே, காரெனக் கடிது சென்று களத்திடைப் பொருது வீழ்ந்த வீரர்கள் தொகையிற் றென்று விளம்புதற் குரிய தாமோ! (200) 201. ஆட்சியேற் பட்ட காலத் திருந்துமண் ணாசை யாலே மாட்சிய தாகப் போரை மதித்துமண் ணாண்ட மன்னர் நீட்சியாய்ப் படையைக் கொண்டு நிறுத்தியே பொருது கொல்லும் காட்சியைக் கண்டு கண்டு களிப்புறக் களித்து வந்தேன். (201) 202. ஒன்றிரண் டுலகப் போரில் உலகநா டுகளே யெல்லாம் நின்றிரண் டாகக் கூடி நிலங்கடல் வான மெங்கும் பொன்றுக எனவே குண்டு மாரியா! பொழிந்தை யோடா! கொன்றத னளவைக் கேட்கின் கோடியே கோடிப் போகும். (202) 203. மாறுபட் டெழுந்து ஜப்பான் வலிந்துபோர் வெறிகொண் டாட ஊறுபட் டியலி ரண்டாம் உலகப்போர் முடிய வேண்டி நீறுபட் டொழிய வென்றே நேயநா டுகள்வேண் டப்போர் கூறுபட் டொழிய ஜப்பான் மேலணு குண்டு போட்டேன். (203) 204. இங்ஙனம் உலகில் யான்நச் சுயிர்பிணி கருவி ஏனை அங்கியல் பொருளால், தீய குணங்களால், அழலைப் போலப் பொங்கிய சினத்தால் தோன்றும் பகைமையால் போரால் நாளும் மங்கல மாகக் கொல்லும் தொழில்செய்து வாழ்கின் றேனால். (204) கென்னடி செய்த குற்றம் 205. கொலைசெயற் கேது வாகக் கென்னடி செய்த குற்றம், மலைநிலங் கடல்தீ காற்று வானினும் பெரிய வாறாம். உலகையோர் நொடிக்குள் ளாக ஒழித்திடும் அணுகுண் டாய்வை வலிகெடும் படிநி றுத்தி வைத்ததோர் பெரிய குற்றம். (205) 206. கொடையெனா முன்னம் பற்றாக் குறையுடை நாட்டுக் கெல்லாம் தடையிலா தளித்த ளித்துத் தமிழ்ப் பழஞ் செல்வர் போல, உடையஅவ் வேற்றத் தாழ்வை ஒழித்துமே உலக மெல்லாம் நடைபெற வேயொப் பாக நடந்ததி ரண்டாங் குற்றம். (206) 207. படைவலி மிகவே யுள்ள நாடுகள் பகைத்து வன்மை உடையவல் லரசுப் போட்டி யால்நிகழ் உலக மாப்போர் நடைபெறா தமைதி யோங்க நஞ்சன படைப்பெ ருக்கத் தடைசெய முயன்று வந்த தகைமையே மூன்றாங் குற்றம். (207) 208. குன்றமும் கடலும் போலக் கொள்கையால் வேறு பட்டும் ஒன்றிய அமைதி யோடிவ் வுலகமின் புற்று வாழ்தல் நன்றெனக் குருசே வோடு நட்புக்கொண் டுலகை யோம்பும் மன்றினில் தலைமை பூண்டு வந்ததே நாலாங் குற்றம். (208) 209. வலியவர் வலியி லாதார் மண்ணினைக் கொள்ள வேண்டி வலியவந் நாட்டின் மீது பாய்ந்துமே வருதல் கண்டு மெலியவர் மெலிவைப் போக்க வேண்டிய உதவி செய்தவ் வலியவர் செருக்கைப் போக்கி வந்ததே ஐந்தாங் குற்றம். (209) 210. நீக்கரோக் களையும் வெள்ளை நிறத்துமக் களையும் ஒன்றாய் ஆக்கிவெள் ளையரைத் தாழ்த்த அவன்றலைப் பட்ட தாலே மேக்குலத் தவர்க ளான வெள்ளையர் பெருமை தன்னைக் காக்கவே ஆசு வால்டின் கையினால் சுட்டுக் கொன்றேன். (210) 211. மற்றினிக் கூறு தற்கு மாற்றமொன் றில்லை, வாழ்வில் உற்றவென் செயற்பா டெல்லாம் உள்ளதை யுள்ள வாறே சொற்றனன் விடாம லொன்றும், தொழில்முறைப் பட்டே னல்லால் குற்றமொன் றில்லேன்; ஆய்ந்து கூறுக நல்ல தீர்ப்பே. (211) 11. தீர்ப்பு தாழிசை 212. அன்பருள் ஒழுக்கம் வாய்மை அறம்நடு நிலைமை சால்பு தென்பெனும் அவ்வ றங்கூ றவையத்தார் தேர்ந்து கூற; (212) 213. படுங்குணம் குற்றம் நாடிப் பகுத்தறி வெனுந்தீர்ப் பாளர் கொடுங்கொலை வழக்கைக் கேட்டுக் கூறுவார் நல்ல தீர்ப்பு. (213) தாழிசை - வேறு நடுவர் : 214. உள்ளபடி நடந்ததனை உள்ள வாறே ஒன்றனையும் ஒளிக்காமல் உள்ள வாறே எள்ளளவு மேனும்பொய் கலவா வண்ணம் இனிதுரைத்த கொலைஞனுரை தன்னை நோக்கின்; (214) 215. இக்கொலைக்கும் இன்னுமெக் கொலைக்குங் கூட இக்கொலைஞ னொருதொடர்பும் இல்லா னாவான்; எக்கொலைக்கும் தொடர்பில்லான் ஆகை யாலே இவனைவிடு தலைசெய்கின் றேன்காண். ஆனால், (215) 216. உலகமக்க ளோடமைதி ஏங்கச் சென்ற உயர்தலைவன் கென்னடிபோன் றுலகம் போற்றும் பலதலைவர் கொலைக்குங்கா ரணம்யா ரென்று பார்க்கினத னுண்மைபுலப் படுங்கண் டீரே. (216) 217. மூலமதை விட்டறுகைப் பிடுங்கின் முன்போல் முளைகிளம்பும், அதுபோலக் கொலைக்குண் டான மூலமதைக் கண்டுகளை யாது விட்டால் முன்போலக் கொலைநிகழு முறைதப் பாதே. (217) 218. சுட்டவனை விட்டுவெடி தனைநோ தல்போல் துணிந்துகொலை செயவிவனைத் தூண்டி னாரை விட்டிவனைக் கொலைஞனொன்று பட்டஞ் சூட்டல் வெடியைவிட்டுக் குண்டதனை வெறுத்தல் போலும். (218) குறள் வெண்டுறை 219. வெண்ணிறமும் செந்நிறமும் மேலான தாகுமென எண்ணிக் கருநிறத்தை எள்ளும் நிறவெறியும்; (219) 220. எம்மினமே மேலா மினமாமற் றேனையவை எம்மினத்துக் கீடலவென் றெண்ணும் இனவெறியும்; (220) 221. எஞ்சாதி யேயுயர்ந்த சாதிமற் றேனையவை எஞ்சாதி யிற்றாழ்ந்த தென்னுஞ்சா தித்திமிரும்; (221) 222. ஒன்றே குலமென்னும் உண்மையுண ராதுயர்தாழ் வென்றே பலசாதி இனநிற வேற்றுமையும்; (222) 223. இனம்போ லெரிசினங்கொண் டெதிர்ப்பட்ட பேரையெலாம் மனம்போன வாறுகொல்லும் வகுப்பு வெறிச்செயலும்; (223) 224. எஞ்சமய மேசிறந்த தேனைச் சமயமெலாம் எஞ்சமயத் திற்றாழ்ந்த தென்னு மதவெறியும்; (224) 225. எங்கொள்கை யேசிறந்த கொள்கைமற் றேனையவை எங்கொள்கை யிற்றாழ்ந்த தென்னுங்கொள் கைவெறியும்; (225) 226. எங்கட்சி யேசிறந்த கட்சிமற் றேனையவை எங்கட்சி யிற்றாழ்ந்த தென்னுங்கட் சிவ்வெறியும்; (226) 227. ஆளப் பிறந்தவர்யாம் அல்லாரெம் மாலடக்கி ஆளப் படப்பிறந்தார் எனுமாதிக் கவ்வெறியும்; (227) 228. இவ்வுலக மெல்லாமென் ஏவலின்கீ ழாகவென அவ்வகையி லேமுயலும் அவ்வதிகா ரவ்வெறியும்; (228) 229. அயலா ருடைமையைத்தான் ஆளவெண்ணி யேயடைய முயலு முயற்சியுமம் முறையில் தகாவொழுக்கும்; (229) 230. தக்க வழியிலன்றி யேதகா தவ்வழியில் புக்க கொடிய பொருந்தாக்கா மப்பெருக்கும்; (230) 231. உடைய பிறப்புரிமை யுள்ளபடி யவ்வவர்கள் அடைய விடாதடக்கி யாளுமடக் கும்முறையும்; (231) 232. தேடா திருந்துழைத்துத் தேடியதை உண்டுறங்கும் பாடா வதித்தனமும் பண்பிலா டம்பரமும்; (232) 233. அழுக்கா றவாவெகுளி அஞ்சுதலஞ் சாமையெலாம் ஒழுக்காறாக் கொண்டே ஒழுகுகய மைத்தனமும்; (233) 234. நன்னலமும் தன்மான நல்வாழ்வை யுங்கெடுக்கும் தன்னலமும் தற்புகழும் தற்பெருமை யுந்தருக்கும்; (234) 235. பொறியும் புலனுமனப் போக்குமிணங் காச்செலவும் அறிவதறி யாமையொட டங்காமா றித்தனமும்; (235) 236. எண்ணித் துணியா இழிகுணமும்; எண்ணியதைப் பண்ணு மிழிவு மக்கட் பண்பொடுப டாச்செயலும்; (236) 237. பொல்லாப் பகைக்குணமும் போர்வெறியும் ஆறறிவுக் கொல்லாப்புன் தீக்குணமாம் உள்ளவை அத்தனையும்; (237) 238. ஆகுங் கொலைகளுக்குக் காரணங்கள் ஆகையினால் ஆகுமிவையேகுற்ற வாளிக ளாகையினால்; (238) 239. வாளாப் படுகொலைசெய் மாகொடுமிப் பாவிகளே மீளாக் கடுங்காவல் வெஞ்சிறைபு கற்குரியார்; (239) 240. குணியொடு தோன்றியதன் கூட அழிதலினால் குணியைவிட் டுக்குணத்தைக் கொல்லுதலுங் கூடாதே. (240) 241. கொல்லுங் கொடியபெருங் குற்றத்திற் காத்தூக்கிக் கொல்லல் கொலைக்குற்றம் ஆகுங் குறித்தறிவீர். (241) 12. உலகோர் அச்சம் அடிமடக்கி வந்த கொச்சகம் 242. கொல்லுதலை யேதொழிலாக் கொண்ட கொலைமகனைக் கொல்லவில்லை யென்றறவோர் கூறினரா மேதோழீ! கொல்லவில்லை யென்றறவோர் கூறினரே யாமாயின், நல்லவர்கட் கிவ்வுலகில் நன்மையிலை யோதோழீ! நன்மையுண்டேல் கென்னடியை நாமிழப்பே மோதோழீ! (242) 243. கெடுதலை யேதொழிலாக் கொண்டவக் கீழ்மகனை விடுதலைசெய் தேயறவோர் விட்டனரா மேதோழீ! விடுதலைசெய் தேயறவோர் விட்டனரே யாமாயின், வடுவிலார் இவ்வுலகில் வாழ்வதரி தோதோழீ! வாழ்வதெளி தேல்தலைவன் மறைந்திருப்பா னோதோழீ! (243) 244. மாதலைவன் கென்னடியை வன்கொலைசெய் புல்லியனை ஏதுமறி யாதவனென் றியம்பினரா மேதோழீ! ஏதுமறி யாதவனென் றியம்பினரே யாமாயின், மாதலைவர் கள்வாழ வகையினியின் றோதோழீ! வாழவகை யற்றவர்க்கு வகையினியின் றேதாழீ! (244) 245. உலகத் தலைமகனை ஓகொன்ற பூரியனைக் கொலவிலையென் றேதீர்ப்புக் கூறினரா மேதோழீ! கொலவிலையென் றேதீர்ப்புக் கூறினரே யாமாயின், உலகிலுயர்ந் தோர்வாழ்தற் குரிமையிலை யோதோழீ! உரிமையன்றோ கென்னடியின் உயிர்குடித்த தேதோழீ! (245) 246. மக்களைவாழ் விக்கவந்த மாமகனைக் கொல்கொலைஞன் எக்கொலைக்கு மேதொடர்பில் லாதவனா மேதோழீ! எக்கொலைக்கு மேதொடர்பில் லாதவனே யாமாயின், தக்கோர் வாழ் தற்குலகில் தகவிலையே யோதோழீ! தகவிருந்தால் கென்னடியைத் தானிழப்பே மோதோழீ! (246) 13. உலகோர் பழித்தல் கொச்சகம் 247. கொன்றெந்தை யைத்தாயும் யாங்களும் கோவென்று நின்றழச் செய்தவனை நல்லன் நெறிபிறழான் என்றறவோர் கூறியதும் இயல்பேதான் போலும்! இனிவாய்மைக் கிவ்வுலகில் இடமில்லைப் போலும்! (247) 248. கொன்றெந்தை யைத்தாயைக் கோவென்று யாங்கதறி நின்றழச் செய்தவனை நல்லன நெறிபிறழான் என்றறவோர் கூறியதும் இயல்பேதான் போலும்! இனிவாய்மைக் கிவ்வுலகில் இடமில்லைப் போலும்! (248) 249. கொன்றெங் குழவிகளைக் கோவென்று யாங்கதறி நின்றழச் செய்தவனை நல்லன் நெறிபிறழான் என்றறவோர் கூறியதும் இயல்பேதான் போலும்! இனிவாய்மைக் கிவ்வுலகில் இடமில்லைப் போலும்! (249) 250. கொன்றென் கொழுநனைக் கோவென்று யாங்கதறி நின்றழச் செய்தவனை நல்லன் நெறிபிறழான் என்றறவோர் கூறியதும் இயல்பேதான் போலும்! இனிவாய்மைக் கிவ்வுலகில் இடமில்லைப் போலும்! (250) 251. கொன்றென் துணைவியைக் கோவென்று யான்கதறி நின்றழச் செய்தவனை நல்லன் நெறிபிறழான் என்றறவோர் கூறியதும் இயல்பேதான் போலும்! இனிவாய்மைக் கிவ்வுலகில் இடமில்லைப் போலும்! என்று - தனிச்சொல் (251) 252. தாயைத் தந்தையை இழந்த சேயரும், சேயை இழந்த தாயும் தந்தையும், மனைவியை இழந்த கணவனும், கணவனை இழந்த மனைவியும் அழுந்திய துயரால் விடுதலை செய்ததை வெறுத்துப் படுகொலை யாளியைப் பழித்தனர் மன்னே. இது - ஆசிரியச் சுரிதகம். (252) 14. உலகோர் வெறுத்தல் எண்சீர் விருத்தம் 253. கல்லேனுங் கரையுமுளம் கரையாப் பாவி! கடுங்கொலைஞா! எம்காந்தி அடிகள் தம்மைக் கொல்லாம லிருந்திருந்தால் அணுகுண் டென்னும் கொடுஞ்செல்வப் பெருக்கினால் கொக்க ரிக்கும் பொல்லாய்எம் மான்உலக மன்றத் தின்கண் பொலிந்தமைதி புடையமர உலக மக்கள் எல்லாரும் ஒருங்கன்புற் றினிது வாழ இவ்வுலக மன்னவனா இருப்பா ரன்றோ! (253) 254. அடுங்கொலைஞா! என தருமைப் புதல்வ னான ஆபிரகாம் லிங்கனைக்கொன் றிலையே யானால் நெடுங்கொலைக்குக் காரணமா கியவப் பொல்லா நிறவினவேற் றுமையொழிந்து நெடுநா ளாகிப் படுங்கொலையால் கென்னடியை இழந்தே வாடும் படியிருக்கா தென்றமரிக் கத்தா யேச, ஒடுங்கியுளம் உட்கியவக் கொலைஞன் பாவம்! ஒருவழியுந் தோன்றாமல் உழல லானான். (254) 255. நிறவெறிக்கீங் கிரையாகா தெம்மைக் காத்தந் நிறவெறியை யொழிக்கமுனைந் ததனுக் காக, அறநெறிக்கப் பாற்படுபுன் மாக்கட் காக ஆகெடுவாய் கென்னடியை ஐயோ கொன்றாய்! புறவெரிக்கும் விலங்கினம்போல் அழிந்தொழிந்து போகாயோ எனநீக்க ரோக்கள் ஏச, குறிபிழைத்த காதலர்போல் உள்ளஞ் சோம்பிக் குறுகுறுத்தக் கொலைமகனுங் கொடுகிப் போனான். (255) 256. பொல்லாத படுகொலையா! நில்லா தீங்கு போபோபோ கொடி யவென உலக மக்கள் எல்லோரும் இகழ்ந்தொதுக்க அவனும் பாவம்! இருக்கவிடம் அறியாதிவ் வுலக மெங்கும் செல்லாத காசாகிச் சிறுமை யுற்றுத் திசைகெட்டு மதிகெட்டுத் தேம்பி நொந்து நில்லாத நிலையாகி விட்டு நீங்கா நிழல்போலத் துயரமொடு நெக்கு நின்றான். (256) 257. கட்டழகும் இளம்பருவத் துடிப்பும் கண்டோர் கண்கவரும் திருவுருவும் கருத்தி னுள்ளே இட்டெழுதிப் பார்த்துவக்கும் எழிலுங் கண்டே எல்லோரும் அமைதியெனும் இனியாள் அன்பில் பட்டெவரும் முகமெடுத்துப் பாரா ராகப் பாவியந்தக் கொலைஞனுந்தன் பழைய போக்கை விட்டெவருந் துணையில்லாத் தனிய னாக வெறுமைநிலை யினில் வாழ்வை வெறுத்து வந்தான். (257) 258. மாக்கொலைக்குக் காரணங்க ளாகி மக்கள் மாக்களினும் கீழாக வாழச் செய்யும் தீக்குணங்க ளத்தனையும் கடின காவல் சிறையிருக்கப் பகைவனுந்தன் திறமை குன்றிப் போக்கிடமற் றெங்கேயோ ரிடத்திற் புக்குப் புற்கென்று தான்முடங்கிப் படுக்க லானான். ஈக்கொலைக்கும் சிலந்திமுயல் கில்லா வாக இயல்திரிந்து கொலைஞனுமாங் கிருக்க லானான். (258) 15. அமைதி இரங்கல் வெண்பா 259. மன்ற மழவுலக மக்களழக் கென்னடியைக் கொன்ற கொலைஞனைக் குற்றமற்றோன் - என்றே அறங்கூ றவையத்தார் ஆய்ந்துரைத்த தீர்ப்பின் திறங்கூறி யேங்குமமை தி. (259) 260. என்னை யழத்தனிவிட் டெந்தையை என்னருமை அன்னை யழக்கொலைசெய் யன்னவனை - என்னை! அடுதலைசெய் திட்டிலனென் றெல்லா! அறவோர் விடுதலைசெய் திட்டனரா மே. (260 ) 261. இந்த இளம்பருவத் தென்னோ டனையழவென் தந்தை தனைக்கொல் தகவிலனை - அந்த அறங்கூ றவையத்தார் ஆய்வதனை நோக்கின் புறங்கூ றவையத்தார் போன்ம்! (261.) 262. பட்டப் பகலில்மக்கள் பார்த்திருப்ப எந்தைதனைச் சுட்டுக்கொன் றிட்டவனைத் தூயனென - விட்டுவிட்ட அம்முறை மன்றத் தவர்தீர்ப்பை ஆராயின் இம்முறை மன்றமினி யேன்? (262) 263. அன்னாய்! இனவெறியும் அத்தகைய தீக்குணமும் கொன்னேயுன் தந்தையைக் கொன்றனவாம் - அன்னான் அவைதூண்ட லால்கொன்ற தாலவனை விட்டே அவைதமைச்சி றையிலிட்டா ராம். (263) 264. அப்படி யா! வுண்மை யாகவா? இப்போது செப்படி யாதவன் செய்கின்றான்? - இப்போ தமைதி யுடனிருக்கின் றானாம்போ ஏடீ! அமைதி யுடனிருப்பி டம். (264) 265. அமைதி யுடனென்ற அச்சொல்லும், அன்னான் அமைதி யுடனிருக்கும் அஃதும் - அமைதியின் உள்ளத்தே சென்றதவள் உள்ளம் உளப்படுக்கக் கள்ளத்தே சென்றதவள் கண். (265) 266. கொண்ட கொலைத்தொழிலை விட்ட குணக்குன்றைக் கண்டு மகிழவுளங் கண்ணினாள் - வண்டலிடைப் பாய்மா கடல்சூழப் பட்டுத் திகழுலகத் தாய்மா மகளமைதி தான். (266) 16. கொலைஞன் வருந்தல் தாழிசை 267. தெருக்கூட்டி மலமெடுத்தூர்த் துப்புரவு செய்யுநரைத் தீண்டாதா ரெனத்தாழ்த்திச் சிறுமையுறச் செய்வதுபோல், கருங்கூட்டி லிருந்துயிரைக் கவலையறக் கொல்வதையே கடப்பாடாக் கொண்டவெனைக் கயவனென இகழுநரே! (267) 268. தலைக்கழகு தருங்கூந்தல் அழகியவள் தனைப்பறட்டைத் தலைச்சியெனப் பழம்பெயரால் தானழைக்கு மதுபோலக் கொலைத்தொழிலை விடுத்துயர்நற் குணத்தொடுவாழ் இப்பொழுதும் கொலைஞனென முன்போலக் கூப்பிடுதற் கென்செய்கேன்? (268) 269. அக்கொடிய தீக்குணங்க ளாகியவை அத்தனையும் அருங்காவற் சிறையிருக்க யாருமற்ற ஒருதனியேன் எக்கொடிய தீச்செயலும் எண்ணாமல் என்பாட்டில் இருப்பதறி யாதுலகோர் இனுமிகழ்தற் கென்செய்கேன்! (269) 270. திருட்டைவிடி னும்பழைய திருடர்களை நம்புவரோ? தில்லுமுல்லை விட்டிடினும் தெளிவாரோ புரட்டர்சொலை? வெருட்டியுயிர் கொலுந் தொழிலை விட்டிடினும் எனைக் கண்டால் வெருண்டோடிப் பழித்துலகோர் வெறுப்பதனுக் கென்செய்கேன். (270) 271. வெங்கொடுங்குண் டிலையெனினும் வெடிக்கெதிர்நிற் பவருண்டோ? விளையாட்டா வேலெறியின் மெய்யினிற்பட் டுருவாதோ? எங்கொடுங்கொல் தொழிலினைவிட் டிருந்தாலும் எனையுலகோர் இனுங்கொலைஞ னெனவேகொண் டேசுதலுக் கென்செய்கேன்! (271) 17. திருமணம் அறுசீர் விருத்தம் 272. கண்டா ரெவருங் கண்கலங்கக் கலங்கிக் கவலை கைம்மிகவே உண்டோ எனக்கே இவ்வுலகில் உய்தி யினியென் றுளநொந்து மண்டா நின்ற மானத்தால் மாழ்கிக் கொலைஞன் வருந்துவதைக் கண்டா ரொருவர் மனமிரங்கிக் கைசெய் தவனைத் தேற்றுவரால். (272) 273. மக்கள் வாழ்வே தம்வாழ்வா மதித்து வாழும் குருசேவும் தக்க வாறக் கொள்கையையே தாமேற் கொள்ஜான் சனுமேயோ! அக்கொள் கையையப் படியேகொண் டாளும் பிரிட்டன் அரசினரும் ஒக்க உலக மன்றத்தே இருக்க உனக்கோர் குறையுண்டோ? (273) 274. அம்மூ வரசோ டிந்தியநாட் டரசுஞ் செவிலித் தாயாக இம்மூ துலகத் தாயன்போ டினிதீன் றெடுத்த ஒருமகளாம் அம்மா தலைவன் கென்னடியின் அன்புக் குரிய திருமகளாம் அம்மா தலைவி அமைதியினை அன்பால் வளர்த்து வருகின்றார். (274) 275. மற்று முலக நாடுகளின் மதிப்பிற் குரிய தலைவர்களும் பெற்று வளர்த்த கென்னடியின் பிரிவால் வருந்தாப் பெற்றியினில் உற்ற உலக மன்றத்தே ஒருங்கு வளர்த்து வருகின்றார்; நற்றாய் மகிழ அவ்வமைதி நங்கை வளர்ந்து வருகின்றாள். (275) 276. அன்னார் வளர்த்து வருகின்ற அமைதி என்னும் அம்மங்கை தன்னை ரனைய தகைபுடையாள் தக்க பருவ முற்றுடையாள் உன்னால் காணும் உவப்புடையாள் உலக அரசுத் திருவுடையாள் அன்னாள் விரும்பின் தலைவரெலாம் அப்பால் உன்னை விடமாட்டார். (276) 277. அன்னாள் அன்பைப்பெறின் நீயும் அவள்தாய் உன்னை விருந்தேற்பாள் அன்னே யுனது தனித்துயரம் அகலும் பகல்காண் பனிபோல, முன்னாள் நீகொள் அத்தொழிலை விட்டே வாழும் முறைமையினை அன்னாள் முன்னே அறிந்துள்ளாள் அவளைக் காண ஆகையினால்; (277) 278. இன்றே செல்க எனவவரும் இனிதே கூற அக்கொலைஞன் அன்றே சென்றான் நியூயார்க்காம் அணிமா நகருக் கவ்வுலக மன்றே வருக என்பதுபோல் மாடக் கொடிகள் வரவேற்க நன்றே மாடத் திருந்தமைதி நங்கை அவனைக் கண்டாளே. (278) 279. கண்டா னவனும் கண்ணொடுகண் களிக்கத் தோழி அவற்கூறக் கொண்டாள் காதல் பருவமொடு குணமுங் குறியும் ஒப்புறவே; தண்டா வதனைத் தாயறியக் குறிப்பாள் தோழி சாற்றிடவே வெண்டா மரையைத் திருவன்னம் மேயாப் போற்றாய் விருந்தேற்றாள். (279) 280. ஒருவ ருள்ளத் தேயொருவர் மாறிப் புக்கே உளம்போல இருவர் கருத்தும் ஒன்றுபட இயலும் வாழ்க்கைத் துணைவர்களாய் மருவி யின்புற் றேவாழ மனத்துட் கொண்ட அக்குறிப்பைத் தெரியப் பேசி அம்முடிவைத் தெரிந்து தாயும் மகிழ்பூத்தாள். (280) 281. உலக மன்றத் தலைவர்களுக் குணர்த்த அவரும் உவப்பெய்தி இலகு மன்றல் நாட்குறித்தே எல்லா நாட்டுத் தலைவர்களும் உலகு முவப்ப ஒருங்கிருந்தே உயர்மங் கலவாழ்த் தொழிமுழங்க இலகும் அமைதி கொலைமகனுக் கினிது செய்தார் திருமணமே. (281) 282. கொள்ளும் பொழுதில் மணஞ்செய்து கொண்ட அமைதி யுங்கொலையும் கள்ளங் கரவி லாதொன்று கலந்த உள்ளங் களிப்பெய்த உள்ளும் புறமும் உடம்பாக உயிரு முயிரும் ஒன்றாக எள்ளும் பொழுதொன் றின்றாக இன்புற் றினிது வாழ்ந்தார்கள். (282) 18. உலக ஆட்சி எழுசீர் விருத்தம் 283. இப்பெரு முலகத் தொருதனி யரசி யாகவே இருந்தினி துலகம் வெப்பகை யொடுபோர் இன்றியே அன்பு மேவவோர் குடைநிழ லதன்கீழ் ஒப்புர வுடனே உலகநா டுகளின் தலைவர்க ளொருவழிப் படவே திப்பிய முடனாள் கெனவமை திக்குத் திருமுடி சூட்டிட இசைந்தார். (283) 284. தந்தையின் நிலையில் உள்ள நம்ஜான்சன் எடுத்துமே தரக்குரு சேவும் இந்தமா வுலக நாட்டுநற் றலைவர் யாவரும் ஒழுங்குற வாழ்த்த அந்தமர் முடியை எலிசபெத் தரசி அணிவளைக் கையினிற் றரவே முந்துற வாங்கிப் புனைந்தனள் அமைதி முடியினில் அம்மணி முடியை. (284) 285. அவ்வுல கரசி யாகிய அமைதி அமைதியா யிவ்வுல கதனை ஒவ்வொரு நாடும் தத்தம தெல்லைக் குட்பட உலகர சியற்கீழ்ச் செவ்விய ஆட்சி நடத்திடச் சட்ட திட்டங்கள் செய்ததன் படியே வெவ்விய பகையும் போருமில் லாமல் மேம்பட ஆண்டுமே வந்தாள். (285) 286. எச்சிறு நாடும் உலகினில் அடிமை இன்றியே மன்றர சியற்கீழ் நச்சிடு முரிமை யொடுதனி மக்கள் நலிபசி பிணிமிடி மடமை அச்சமும் இன்றி யேமக்க ளாட்சி அலரமுத் தொழிலொடு மக்கள் மெச்சிடும் வகையில் குறையிலா துலகை மேம்பட ஆண்டுமே வந்தாள். (286) 287. அப்பெரு முலக அரசியின் கணவன் ஆகிய கொலைஞனும் ஆட்சி துப்புற நடக்கன் பருளற மறிவொப் புரவெனுந் துறைகளின் தலைமை நப்புறத் தாங்கி அமைதியோ டிருந்து ஞாயிறுந் திங்களும் போல முப்பழந் தமிழர் கோன்முறை யதனில் முறைபுரிந் துதவியே வந்தான். (287) 288. தீக்குண மெல்லாஞ் சிறையினி லிருக்கச் சினம்பகை போர்அறி யாமே மாக்களும் மக்கட் பண்படைந் தின்பாய் வாழவே ஒருமனப் பட்டுக் காக்குமா றினிது காத்தனள் அமைதி கருத்தொடு வளர்த்தவப் பூங்காப் பூக்கமழ் தரஜான் கென்னடி புகழ்போல் பொலிதர அமைதியோ டுலகே. (288) 19. வாயுறை வாழ்த்து மருட்பா இப்பே ருலகில் இதுகாறும் ஈன்றாள்போல் ஒப்பா ரிலேமெனவே ஓர்குடைநீ ழற்கீழ் மொழிவழி யேதத்தம் முன்னோர் முறையின் வழிவழி யேயாண்டு வந்தபெரு மாமன்னர் ஆழ்கடல் நீள்கரை யார்மணலி னும்பலரே. வாழ்கடன் மேம்பட்ட வண்டமிழர் தொன்மரபின் மூத்த குடியாம் முடியுடை மூவேந்தர் பூத்த புகழ்மரபிப் போதெங்கே? மாத்தமிழர் கங்கைகொண்ட சோழன் கடாரங்கொண் டானென்பர் எங்கவ் வரசேந் திரன்வழியார்? மங்கலமாய்ப் 10 பாட்டளவி லேபுலவர் பாடிப் பரிசுபெற்ற ஏட்டளவி லேயின் றிருக்குனவே. எட்டுத் திகைபுகழைம் பத்தாறு தேயமெலா மெங்கே? மொகலாயப் பேரரசும் மோரியப் பேரரசும் எங்கேசப் பான்சீனத் தின்பழைய மன்னரினம் எங்கே? இனிமேனா டென்று புகழ்பூத்த ஏலங் கிரேக்கம் எகுபதுரோம் பாரசிகம் சாலடியம் பாபிலோன் சால்யவன மேமுதலா அப்பழம் பேரரசெல் லாமெங்கே? நீர்மேலாம் கொப்புளம் போலக் குமைந்தழிந்த வல்லவோ? 20 போர்த்தெழுந்த அவ்அலெக்கு சாண்டருநெப் போலியனும் பார்த்துமகிழ்ந் தாராவிப் பாருலகைக் கண்குளிர? இவ்வுலகி னையொழிப்பேன் என்றெழுந்த இட்லரைப்போல் இவ்வுலகி லேயெழுந்தோர் எத்தனைபேர்? இவ்வுலகம் இன்னுமவ் வாறே யிருக்க அவரெல்லாம் என்னானா ரென்பதனை யேமறந்தோம். இவ்வுலகைக் கொன்று குவிப்பதையே கொற்றமென அன்றுமுதல் இன்றுமே எண்ணுவதும் என்கொல்லோ யாமறியேம்! எக்கொடுமை யேனுஞ்செய் தீவிரக்க மில்லாமல் மக்களைக் கொல்வதன்றோ மன்னர் பெருங்கொற்றம்? 30 ஊரெரி யூட்டல் ஒருங்கு களத்தொழிதல் பாரரசர் கொற்றமெனப் பாராட்டு மிவ்வுலகம் அக்கலிங்கப் போரால் அசோகன்மன மாறியதும் மக்களைக்கொன் றேகுவித்த வன்கொலைக்குப் பின்னன்றோ? இன்றுமப் பாழும் கொலைகளையன் றேவரலா றென்றுநாம் கற்றுவரு கின்றோங்கொல் அந்த முடிசார்ந்த மன்னரெவாம் மூதுலகை விட்டுப் பிடிசாம்ப லாயரெனும் பேச்சல்ல வோமிச்சம்? சென்றகா லத்தரசர் செய்கையினை விட்டுவிட்டே இன்றுலகை யாள்வோர் இயல்பை யினிக்காண்போம். 40 மக்க ளரசாள மக்களால் தேர்ந்தெடுத்து மக்கள் தலைவரென வந்துமக்க ளாட்சிசெய்வீர்! மக்களால் தேர்ந்தெடுத்த மக்கள் தலைவர்களம் மக்களைக் கொல்லுவதா மக்க ளரசாட்சி? ஓர் நாட்டு மக்களைக்காத் தோம்புந் தலைவர்கள்மற் றோர்நாட்டு மக்களைக்கொன் றோம்புவதன் உட்பொருளென்? தந்நாட்டைப் போலவொரு தாய்நாட்டை வென்றுபிடித் தந்நாட்டு மக்களைக்காப் பாற்றுதலி னாற்பயனென்? ஓரடிமண் கொள்ளினுமாங் குள்ளோர் தமைக்காக்கும் பாரமல்லால் வேறு பயனுண்டோ அச்செயலால்? 50 தன்னுடம் பைச்சுமந்து தானடத்த லோடொருவர் தன்னுடம்பு மேன்சுமந்து தள்ளா டிடவேண்டும்? காப்பதற்குத் தேர்ந்தெடுத்த காவலர்கள் மக்களுயிர் நீப்பதற்குக் கச்சைகட்டி நிற்றல்முறை யாமோகாண்? எல்லைகடந் தேயயல்நாட் டெள்ளளவு மண்கொளப்போய்க் கல்லறைபோய்ச் சேர்ந்தோர் கணக்குவழக் குண்டோகாண்? இக்கொள்கை அக்கொள்கை என்றுமக்க ளைக்கொல்லும் அக்கொள்கை மக்களர சக்கொள்கை யாமோகாண்? நென்னல் முதலமைச்சர் இன்றிங்கே நிற்குமிவர் இன்ன படியாய் இயலும் அரசியலும். 60 இன்றிச் சிறையிருப்போர் நேற்றிந்நாட் டின்தலைவர் இன்றித் தகையசெய்தி யைக்கேட்கின் றேம்நாளும். அந்நாட்டுப் போர்வீரர் ஆர்ப்பாட்டம் செய்தின்று தந்நாட்டாட் சிப்பொறுப்பைத் தான்மேற்கொண் டிட்டனராம். அக்குடியாட் சித்தலைவ ரைப்புரட்சிக் காரர்பிடித் துக்கொடிய னென்றுசொலிச் சுட்டுக்கொன் றிட்டனராம். மன்னரைக்கொன் றாட்சியெய்தி மாதமொன் றாகவில்லை அன்னரைக்கொன் றேபடைஞர் ஆட்சியைக்கைப் பற்றினராம். அப்புரட்சிக் காரரறி யாதந்நாட் டுத்தலைவர் தப்பிச்சென் றோர்நாட்டில் தஞ்சம் புகுந்தனராம். 70 சென்றவா ரம்புரட்சி செய்தர சேற்றவரை இன்றுபடை யாளர்சிறை யிட்டரசை யேற்றனராம். நேற்றாட்சி யாளரைக்கொன் றேயந் நிலத்தாட்சி ஏற்றாரை யின்றுகொன் றேபிறரேற் றாரரசை தற்காப்பு மந்திரியைத் தான்பிடித்துச் சென்றுகரும் பொற்காப்பிட் டேசிறையில் போட்டனராம் போர்வீரர் உட்டுறை மந்திரியின் றூர்க்காவ லாளர்களால் சுட்டுக் கொலப்பட்டார் சுற்றுலாப் போம்போ தெனநாளும் வானொலியி லேகேட்ப தெல்லாம் கனவோ இலை நனவோ கைப்புணுக்கேன் கண்ணாடி? 80 கட்டியங் காரன் கதையின் கருத்தின்று வெட்ட வெளிச்சமாய் விட்டதன்றோ மெய்யாக? சாம்போ தறியாத் தறுதலைபோ லக்காங்கோச் சோம்பே நிலைமறக்கும் சோம்பே றிகளுண்டோ? ஆட்சியர சுங்காவல் ஆகுமெனின் மக்களைக்கொல் ஆட்சியினர் கொண்டபொருள் யாதென் றறிகிலமே. கட்சி வகுப்புக் கலகங்கட் குங்குறைவோ? வெட்சியென்றார் அன்றின்று வேறுபட்ட கொள்கைஎன்பர் பக்கத்து நாட்டைப் பகைப்பதால் தாய்நாட்டு மக்கட்கு மேலும் வரும்பயன்தான் என்னே? 90 பகுத்தறிவு மக்கட்பண் பாடுமிது தானா? பகுத்துணரா தவ்வறிவைப் பாழ்படுத்த லாமா? அடுத்த முறைதலைவ ராகிட வேதேர்ந் தெடுத்திடுவார் கட்டாயம் என்ப துறுதியுண்டோ? மன்னரன்று மண்கொண்டார் மாமன்னர் ஆவதற்கா; என்னபயன் உங்களுக்கே சொந்தமா இப்பதவி! கட்டுபணம் போகவொரு கையா ளிடம்தோற்று விட்டார் முதலமைச்சர் என்பது வெற்றுரையோ? நாட்டுக்கு நாடுபகை நாடொறுமாட் சிப்புரட்சி ஏட்டிக்குப் போட்டி இதுதானா ஆட்சிமுறை? 100 ஆக்குமணு குண்டுகளுக் கஞ்சியஞ்சி இவ்வுலகோர் மாக்களினுங் கேடுகெட்டு வாழுவதா ஆட்சிமுறை? மாதலைவன் கென்னடியை வன்கொலைக்கா வாக்கொடுத்து மாதலைவர் காளின்னும் வன்மமும டாதுடியும்? இக்கொடுமை இப்படியே இன்னும் நடைபெறுதல் மக்க ளரசியற்கு மாண்புடைத் தாமோகாண்? அங்கங் கவர்பாட்டுக் கக்கடாவென் றாண்டுவந்தால் இங்கமைதி யாகமக்கள் இன்புற் றிருப்பரன்றோ? மக்களெல்லாம் உண்மையிலே மக்களா வாரானால் இக்கொடுமை யன்றே ஒழியும் எனலுறுதி. 110 மக்கள் மக்கள் ஆகுமட்டும் மக்கள் தலைவரெலாம் தக்கபடி தந்நாட்டைத் தானாள லேதகவாம். அன்பும் அருளும் அறமும் நடுநிலையும் தன்போற் பிறரையெண்ணித் தானடக்கும் அத்தகவும்; ஒன்றே குலமுலகம் ஒன்றேதான் இன்பதுன்பம் ஒன்றே எனுமுணர்ச்சி ஒன்றேதான் - நன்றாக இத்தகுநிலையை எய்திடச் செய்யும் அத்தகு நிலையை ஆக்கியே எம்மீர்! பொறாமையும் பகையும் போரும் உறாமையிவ் வுலகினை ஓம்புதல் கடனே. 120 (289) வாழ்த்து வெண்பா 290. வாழ்க உலகமைதி, வாழ்க உலகமன்றம், வாழ்கதிருக் கென்னடியின் வான்பெரும்பேர், - வாழ்க மக்கள் ஆட்சியொடு தன்னுரிமை ஆலறுகு போன்று மக்கள் மாட்சியொடு வாழ்க மகிழ்ந்து. (290) 3. மறிக்குட்டி- செம்மறியாட்டுக்குட்டி. 4. தெம்பு - மனத் தெளிவு. 5. தாய்மை - தாயன்பு. 7. கூர்த்துப் பகழி அன்ன - மிகக் கூரிய அம்பு போன்ற. 8. பரித்தல் - சுமத்தல். 10. செந்நீர்த் தடம் - ரத்தக் குளம். 12. மூதா- தம்பலப் பூச்சி. 13. பகடு - எருது. 14. கார் - மேகம். 18. அசைப்பூட்ட - சொல்ல. 22. இருநாள் இருக்கின் வருநாளில் இடர் எய்தும். ஈசல் ஒரு நாள் வாழ்வுடையது. 28. மாட்டு - மாட்டுதல், மாடு கட்டுந்தறி. மாட்டுப் பால் மேல் - கட்டுத் தறியின் மேல். 31. பான்று - பான்மை, தன்மை. 33. ஒருகோடி- ஒருபக்கம். 35. புகை வண்டியைப் போலச் செல்ல. 36. இரங்கா - இரங்கி. 41.ஆடும் - ஆடுவம் என்பதன் மரூஉ. 44 - 45. பண்- இசை. பண் மதித்து ஓடி அடுத்த வாய் - இசையானது அவர்கள் சொல்லினிமையை மதித்து ஓடிச் சென்று அடுத்த வாய். 45. தொடி - வளையல். 47. மெய் - குடத்தின் மேற்புறம். 48. கை - கைப்பிடி, குடத்தின் கழுத்து. சுண்ணம் - சுண்ணாம்பு. விதைக்குடத்துக்குச் செம்மண் பூசிச் சுண்ணாம்புக் கரை கட்டுதல் வழக்கம். செய் - நிலம். 50. மான - போல. 54. வேழமலை - யானை மலை, யானையும் மலையும். ஊழ் - ஒழுங்கு. 56. மன்றல்- மணம், திருமணம். 60. வாரி - கடல். 62. பா- பரவுதல், பரத்தல். அரசு - நாடு. பா அரசு - பரந்த நாடு. 68. முழை - வெடிப்பு. பொழிய - நிறைய. பிழை பொழிய - குற்றம் மிக. மழையின்மையாற் குற்றம் மிக்கதென்க. 76. மஞ்சு - முகில். 86. வெதிர் - மூங்கில். விதிர்விதிர்த்து - நடுநடுங்கி. 88- 89. கவரிமான் மயிர் கடைகளில் விற்றல் இவள் கூந்தல் போல் வேறோருத்தி கூந்தல் உளதோவெனத் தேடுதல் போன்றது. 91. நுதல் - நெற்றி. 94. ஈர்த்தல் - அறுத்தல், வெட்டுதல். 97. கயல் - கெண்டை மீன். 99. உகிர் - நகம். 100. துகிர் - பவளம். 101. ஒளிமுத்து. 102. வெந் - முதுகு. வெந் உறல் - முதுகு காட்டி யோடுதல், தோற்றல். 104. யாழ் ஒன்றோ - யாழ் மட்டுமா. 108. தோடு - காது. 109. வள்ளை - ஓர் இலை. வள் - கூர்மை. 114. அன்மொழித் தொகையாள் - பொற்றொடி, ஆயிழை, கருங்குழல், துடியிடை போன்ற உடைமைச் சிறப்பினை யுடையவள். 118 - 9 ஆட்டத்தின்கண். உட்குறி - மெய்ப்பாடு (அபிநயம்). 121-2 என்பு - எலும்பு. ஊன்- தசை. 123. ஐம்பால் - மயிர்; ஐந்து வகையாக முடித்தலாற் பெற்ற பெயர். 131. போதுதல் - வருதல். 132. முடியோடு அப்போது செலமுந்த - முன்னோக்கி ஆட. 139-40. வானத்து அலை. அலை - முகில். கலை - ஒளி. கலை யிழந்த உவாமதி, வெள்ளத்தால் அழிந்த தடத்திற்கு உவமை. 142. இம்மென - திடுக்கென. 145. சதைக்க - நடுங்க. 146. நெருஞ்சிப் பழம் - நெருஞ்சி முள். 148. செப்பு - சிமிழ். 152. வெய்துற - துன்புற. அங்காக்க - திறக்க. கா என்று - காப்பாற்றுக என்று. 154. பொய்யிடை இயங்கும்போது - அப்போதே. ஒய்யென - விரைவாக. 155. முத்துதல் - முதிர்தல், முடிதல். மின்சாரப் பேருணர்ச்சி காவென்று உள்ளத் தலைவனிடம் போயுரைக்க. 160. அவன் - உள்ளத் தலைவன். 162. துப்புரவாய் - நன்றாக. 165. கடப்பாடு - கடமை. 167. 'ஐயன்மீர்' என்றது உள்ளத் தலைவனை. 169. காம்புஅரிந்து. காம்பு - பூவின்காம்பு. 170. பரிந்து - இரங்கி, விரும்பி. தேம் - தேன். 172. தோடு - பூவிதழ். 176. நல்லாள்தன். 177. உறுப்பு எல்லாம் - உறுப்புகளுக்கு வமையான மலர்களெல்லாம். 179. ஐந்திணையும் - முல்லை முதலிய ஐந்நிலப் பூவும். 182. மாப்பூ - சிறந்த பூ. 185. பாப்பா இனம் - பாவும் பாவினமும். 186. யாப்பார - நன்றாக. 188. கம் - தொழில். நன்கு பழகிய கைவல்லோன் கட்டிய கதம்பம். 189. கதம்ப மாலை. 167'பல்லனைய' என்பது முதல். 189. 'கதம்பம்' என்பது வரை கதம்பத்தின் சிறப்பு. முன்னோர் கண்டறியாமை - கதம்பம் என்னும் பெயர் முன்பின்மை. 190. வார்ந்து - நீண்டு. உண்டறியா ஐம்பால் - கூந்தல். 192. செம்பால் - சரிபாதி; அழகின் சரிபாதி. வம்பு - மணம். 193. ஊட்டம் - செழிப்பு. 'மெய்' என்றது மயிரை. பொருமி - பருத்து. 194. நாட்டு உவமை- ஒப்பிட்டுக் காட்டக்கூடிய உவமை. 197. சுமையடை - சும்மாடு. கருங்குழல் உவமை தேடி நாட்டகத்தே செல்லுமெனச் சுமையடையை வைத்து. 198. பத்துக்கு அரை - ஐந்து, பல. 199. 'தலைவ' என்றது உள்ளத் தலைவனை. 190- 5 கூந்தலின் சிறப்பு. 200. உயிர்த் தோழன் - மற்றொருகை. நீயாமல் - நீங்காமல். 208. எவ்வளவும் - கொஞ்சங்கூட. 210. தொல்லை - துன்பம். இனி இரவும் சோறில்லை. தான்- அசை. 215. உகளுதல் - தாவுதல். 216. புன்கண் - துன்பம். 219. அணிற்பிள்ளை. 222. பாடு ஓட்டி - பெருமையை விட்டு. கேடு ஓட்டி - குறைகளைப் போக்கி. 227. பாத்து - பகுத்து. 230. வடித்தல் - சோறு போடுதல். 210. 'நல்லை' என்பது முதல். 232. 'புண்ணுக் கிரையாக்கிப் போட்டு' என்பது வரை தந்தை கூற்று. இரையாக்கிப் போட்டு வந்தனையே எனக் கூட்டுக. 233. 'உம்' என்றது உள்ளத் தலைவனை. 234. பேதுற்று - வருத்தமுற்று. மூசி - மொய்த்து. நடுதல் - நட்புக் கொள்ளுதல். 235. மட்டு - தேன். வார்- நீண்ட. கண்ணுக்குள் ஊசிவிட்டு வாங்குதல் போல் உம்மையும் இவளையும் தந்தை திட்டுவார். மூசி நட்டும் வண்டு ஏழிசையும் பேசவிட்டுப் பேதுற்று நீங்குதல் போல் நான் விடுதல் செய்யேன். 238. சார் ஏனும் - பழச்சாறு போலும். சார் - சாரம் - வடித்தெடுத்தது. 164 'அட்டியிலை' என்பது முதல் 239 'வேறு வழிசெய்க' என்பது வரை கையின் கூற்று. 240. ஏறு - உயரம், பெரிது. 241. ஆம்பல் - ஆம்பல் மலர் போன்ற வாய். முத்து - பல். பவளம் - இதழ். முத்து - செம்பவளப் போர்மல்க - இதழைக் கடிக்க. 244. மெய்ப்பாடுற்று - உடம்பின் கண் வெளிப்பட்டு. 246. முற்ற - நிரம்ப. 250-1 உள்ளவெலாம் கண்களவு போகிய அக்காலை - இயற்கைப் புணர்ச்சியின் போது. 252 பெண் - பெண்மை. பெட்பு- தன்மை, விதம். உண்கு அளவு பெய்வது அறியா - உண்ணும் அளவு சோறு போட்டுக் கொள்ளுதலை அறியாத, இது குறிப்பு. 255. செந்தாமரை மலர் - அடி. 256. நந்தா - குறையாத. நந்தாஅடி யழகை. 260. துன்னுதல்- பொருந்துதல், தைத்தல். 261 அன்னவை - நெருஞ்சி முட்கள். 262. மட்டு - தேன். தேன்போன்ற தமிழ் பாடும் வண்டினம். 265. வள்ளுவர் வாய்மொழி- "அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்" (குறள் 1120). 266. குணம் - அடியின் தன்மை. 267 ஒன்று - ஒரு நெருஞ்சி முள். 268. கால் கொள்ளுதல்- தொடங்குதல், காலைப் பற்றிக் கொள்ளுதல். 256 'அந்தோ' என்பது முதல் 268 'கண்டறிவாம்' என்பது வரை நெருஞ்சிப் பழத்தின் கூற்று. 272 செப்பு அடியே - சொல்லி னிடத்து, பேசும்போது. தப்படி- கால் மாற்றி மிதித்தல். 275. பாடகம் - ஒருவகைக் காலணி. நீவி- தடவி. 276 கழல் - செருப்பு. 278 புலம்ப- ஒலிக்க. 278 - 8 பாடகம் காலை நீவி என்பேச்சைக் கேட்கவில்லை என வாய்விட்டுப் புலம்பிற்று. 279 கட்டி- கற்கண்டு. இசைப் பெட்டி- ஆர்மோனியம். 281 ஆய் - தாய். 282. நூல்ஏடு - நூலாகிய ஏடு. 286 கண்டறியா கண்டறிதல் - விஞ்ஞான ஆராய்ச்சியால் புதியன கண்டுபிடித்தல். 287 எண் மிதித்து - எண்ணத்தைத் தாழ்த்தி. ஏக்கறுதல் - ஆசையால் தாழ்ந்து நிற்றல். மட்கலஞ் செய்தல் தமிழர்க்குரிய சிறப்புத் தொழில்களில் ஒன்றாகும். 288 பண் மிதித்து - இசையைத் தாழப்பண்ணி. 289 பரி - குதிரை. குதிரைபோல மரக்குதிரை யோட்டுதல். 292 அதிர்மிதிக்கும் - நடுக்கத்தைப் போக்கும். 295 கையாறு - துன்பம். 297 இனைக்கும் - வருத்தும். 'பொல்லாத காலம்' என்பது, மீளாத துன்பமுற்றவர் சொல்வதே யாகும். 299 தாளாளர் - முயற்சி யுடையோர். 300 மங்காமல் - மனங் கூசாமல். 301 மாணி - மாணவன். 302 அந்நின்று - உள்ளார்முன் இல்லார்போல் ஏக்கற்று நின்று. 303 ஏசு அற - குற்றமற. 306 ஒப்புக்கு - உவமைக்கு. ஆசு - குற்றம். 306 - 7 மெய் புக்கு ஆசு என்ன வரும் - மனத்துட் புகுந்து ஆசுகவி என்று வெளிப் படுகின்ற. 308 உன்ன - நினைக்க. மன்னி - நிலைபெற்று. 311 ஒன்றோ - மட்டுமோ. 312 இன்னினியே - இப்போதே. மதியாதவர்க்குத் தம் பெருமையை உணர்த்தவும், சோம்பர்க்குச் சுறுசுறுப்பும் தெம்பும் உண்டாகவும் எறும்பு கடிக்கும். 314 நம்புகிறேன் - உங்களை உறுதியாக நம்புகிறேன். 316 புன்கரும்புக்கோ நீவிர் போதுவீர் - புல்லிய கரும்புக்கும் நீங்கள் வருவீர்கள்; கரும்பல்லாத என் கையையோ நீர்விரும்புவீர் இது சிலேடை. 320 போய்த்தந்து - சென்று அழைத்துக் கொண்டு வந்து. 320 - 1 அந்தப் பல்வகைய சாயமதில் தோய்த்து. ஏயவகை - பொருந்திய வகை. 322 - 3 தொல்வகைய புத்தம் புதுமையுடன் பொற்புற - பழைய வகைகளும் புதிய வகைகளும் ஒன்றாக அமைந்து அழகுற. 324 அம்பலம் - கூட்டம். அம்பலம் ஒத்து உவப்ப - பலரும் உடன்பட்டு மகிழ. பலருங் கண்டு மகிழும் உங்கள் இயற்கை யுடைபோல எங்கள் செயற்கையுடை அழகுடைய தாகுமோ? 326 முயற்கை - முயற்சி. 328 நேர்ச்சி - அன்பு. 330 அன்பு இட்டு அன்புடன் அழைத்து வந்து. 337 இயற்கை செயற்கை - முரண்தொடை. 338 இனம் - உடை என்னும் இனம். 340 சேய்க்குத் தாயுதவல் முறையன்றோ. ஞாய் - தாய். 342 முறுக்கு - வலிமை. 344 எய்யாக்கி - சும்மா, துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு. 346 கைக்க - மிக. 349 - 50 ஆன் - மாடு. வட்டிலில் நல்ஆன் இனிய தனிப் பாலில் சோறு இட்டு நான் தருவேன். வாட்போரில் வல்லான் வல்லே வரக் கரையாய். வல்லே - விரைவில். 351 உனைப் பாடி அப்பெயர் பெற்றாள் - காக்கை பாடினியார். பெற்றாள் தனது பின்பாயவள் - அவள் மரபில் வந்தவள். 356 நின்றனதுபேர் நினதாகும் - காக்கை - காத்தல். 357 உன்றனது பேரின் பொருள் - காக்கை - காத்தல். பீழை - குற்றம். 359 நீர்மை - தன்மை. 360 ஏலும் - கூடும், இயலும். 362. பொன் - இரும்பு, கறுப்பு. பொன்னி - கரு நிறமுடைய காக்கை. 365 சொல் அளவில் - சொன்ன மாத்திரத்தில். 367 அவிர்க்கும் - விளங்கச் செய்யும். 368 யார்க்கும் - வேற்று மொழி யார்க்கும். 371 ஐவகைய - எழுத்துச் சொற்பொருள் யாப்பணி. முக்கூற்ற - இயலிசை நாடகம். ஆறுடல் - எழுத்தசை சீர்தளை அடிதொடை. ஏழ்திணைய - முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை கைக்கிளை பெருந்திணை. புறத்திணை யேழுங் கொள்க. 373 பிள்ளை பல - கன்னடம் தெலுங்கு மலையாளம் முதலியன. 375 புல்லா - புல்லாத, பொருந்தாத. 376 பழமை ஒழிநில்லார் புல்லா - பழமையை ஒழித்து நில்லாதவர் பொருந்தாத. அதாவது புதுமை யுடையார் பொருந்துகின்ற உலகமொழி. உலக மொழிகள் அனைத்தும் தமிழ்மொழிக்குப் பிற்பட்டவை என்பதாம். 365 - 77 தமிழின் சிறப்பு. 378 அல்லார்க்கு - வேறு பறவைகளுக்கு. ஓர்த்தல் - கேட்டல். 382 செய்யாதது ஒன்றன்று - நான் சொல்வது உன்னால் செய்ய முடியாததொரு காரியமன்று. 386 உகிர் - நகம். 387 பொற்பு - அழகு. உன் முகத்தைப் போல் இதழ் கை கால் நகங்களைச் சிவப்பாக்கிக் கொள்ளுதல் அழகுடைத் தென அவ்வாறாக்கிக் கொண்டனர். 388 ஈது நினை மேலாக்கிக் கொண்ட மிகை அன்றோ - இது உன்னைப் பெருமைப் படுத்திய தாகுமல்லவா? 388 - 9 நூலாக்கி. . .தூதாகச் செயல் கொள்ளல் - கிள்ளைவிடு தூது. 390 அன்னது - தூது. 396 அதுவும் ஒருவர் - உம் தொக்கது. 398 தென் சொல் - தமிழ். 399 - 400 மட்டுவாரும் நின் மழலை - தேனொழுகுகின்ற உன் மழலைச் சொல். 403 வாய்மைப் படுசொற்கடை - உண்மைச் சொல்லின் கண். 404 தடுசொல் - தட்டிச் சொல்லுஞ் சொல். 406 கோண - மாறுபட. 408 பெய்தல் - ஊற்றுதல். 412 ஆ என்று - காலில் முள் தைத்ததால் 'ஆ' என்றாள். ஆ - மாடு. மாடு வருகிறது என்றாள்; சிலேடை. அக்கிளியும் 'அக்கக்கா வா' என்றது - மரக்கிளையிலிருந்த கிளி, தலைவன் மாடோட்டி வருதலைக் கண்டு, 'அக்கக்கா வா' என்றது. அக்கக்கா என்பது கிளிப்பேச்சு. 414 ஆய்திறந்தாள் - ஆராய்ச்சியைத் திறந்தாள்; நன்கு ஆராய்ந்தாள். அதுகேட்ட தலைவி மாடுகள் வருவதையும் கிளியின் சொல்லையும் ஆராய்ந்து பார்த்துத் தலைவன் வருகிறானென்பதை அறிந்து மனமகிழ்ந்தாள். தலைவிக்கு மாடுகளின் அடையாளமும் தெரியுமல்லவா? 416 கள்ளம் - களவு. 418 செயல்பாயும் - தேய்த்துக் கொண்டிருக்கின்ற. 419 செந்தாமரையிரண்டு - கால்கள். செம்மாத்தல் - செருக்குக் கொள்ளுதல். 420 நந்தாமரை - கைகள். தம்மால் உதவி செய்ய முடியாமைக்கு நாணியழும். 428 மேவலான் - விரும்பத் தக்கவன். 430 செல்லாது - நீங்காது. மல் ஆரும் - வலி பொருந்திய. 431 - 2 நலம் மிகுதிபட்டு உடம்புமேவிய - நலம் மிகுந்த உடம்பு பொருந்திய. சுட்டுடைய - சுட்டிக் காட்டக்கூடிய. 434 வரிவல்ல - இசையில் வல்ல. 438 தெருள் - தெளிவு. 440 எற்பு - எலும்பு. அன்பு என்பு உற - அன்பு எலும்புக்குள் செல்ல, அன்புமிக. 'தன்' என்றது மீசையை. தன் பெறவே முளைத்து - தன்னை மூக்குக் காப்பாகப் பெற முளைத்து. 441 - 2 மூக்குக்குக் காப்பு - மூக்கள வுள்ளது. முறுக்கி யெழும் போக்குக்குக் காப்பு - முறுக்கி யெழாமல் நறுக்கி விடப்பட்டது. மூக்களவு நறுக்கி விட்ட மீசை. 443 குணக்கு - கிழக்கு. 444 ஈர்ங்கதிர் - குளிர்ச்சியான இளஞ்சூரியன். அரியேறு - சிங்கம். 444 - 6 குறிஞ்சி - மலை. கொண்டல் - மேகம். குறுங் குஞ்சி - கிராப்பு. பழந்தமிழரின் குஞ்சியைக் குறைத்ததே இன்றையக் கிராப்பாகும். மலைமேல் மதி, மதிமேல் முகில் - தலைவன் உடல் முகம் குறுங்குஞ்சிக் குவமை. முகத்தை மலரென்று வண்டுகள் மயங்கின. 446 - 8 நல்லதம்பிச் சர்க்கரை என்பவர் பழைய கோட்டைப் பட்டக்காரர். இவர் தானாக நன்கு ஆராய்ந்து கலப்பு முறையால் உண்டாக்கியவையே உலகப் புகழ்பெற்ற அழகிய காங்கய மாடுகள். 452 முற்றித்த - முழுமையும். 454 நல்காப்ப - நன்மையைக் காக்க. 457 முற்றுவந்த - முற்றிய. 458 பார்வல்லான் - ஆராய்ச்சி வல்லான். 467 கெட்டித்த - மிக்க. 470 நடை - ஒழுக்கம். 492 - 3 கள்ள இயல்பு ஐந்து - புணர்தல் முதலிய உரிப்பொருள் ஐந்து. 495 - 6 ஒப்புவமை பத்து - தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் சூ. 25 - ல் காண்க. 499 இடைய - நீங்க. 505 மஞ்ஞை - மயில். வேலை - கடல். 506 பைங்கூழ் - பயிர். 510 பெற்றவள் - அன்புக்குரியவளாகப் பெற்றவள்.தார் - பூ. 5125 மேனிலம். மேல்நாடு. மெய்யறிவர் - விஞ்ஞானிகள். 513 மின் அலை - மின்சார இயக்கம். 514 பொன் - உலோகம். 515 வானேயும் - உயர்ந்த, சிறந்த. வட்டித்திட - உதவ. 517 இவை - நெருஞ்சி முட்கள். 520 சேந்து - சிவந்து. 521 செந்தாமரை - அடி. 529 மொய்ம்பு - வலிமை. 537 வாயில் - தூது, உதவி. களவியலில் பார்ப்பான், பாங்கன், தோழி முதலிய வாயில்கள் உண்டே யன்றி நெருஞ்சிப்பழ வாயில் இல்லை. 538 ஓதினால் வீண்மறுத்தல் மேவும் - வாயில் வேண்டினால் மறுக்கவுங் கூடும் அதனால்தான் இவை நில் என்று சொல்லாமல் நின் காலில் தைத்து உன்னை இங்கேயே நிறுத்தின என்பதாம். 541 இம்மென்று - கொஞ்சங்கூட 542 கம்மென்று - சும்மா. 511 'நானிலத்தை' என்பது முதல் 542 'காரணமென்' என்பது வரை நெருஞ்சிப் பழத்தின் செயல். இனி 543 முதல் 574 வரை இயற்கைப் புணர்ச்சியில் நிகழ்ந்தன கூறுகின்றான். 542 உம் - ஒலிக்குறிப்பு. 544 வடு - தழும்பு. 546 வம்பு - மணம். 548 மாந்தளிர் - உடம்பு. 550 பண் குத்தி - பண்ணைக் குத்தும் சொல்லையுடையவளே. 551 முறுவர் - புன் சிரிப்பு. 552 புன்முறுவல் - புன் சிரிப்பு. 553 தத்து அரி - அடர்ந்த வரி. 554 மாண - நன்கு. பத்தடுத்த - மிகச் சிறந்த. 555 முத்தம் - பல். 556 பவளம் - இதழ். சான்று ஏயும் - எடுத்துக் காட்டத் தக்க. 559 தொய்யில் - தோளில் எழுதும் கோலம். 560 ஒல்குதல் - சுருங்குதல். பையென - மெதுவாக. 561 தாது - பூந்தாது. தாதுபட்ட மேனி - பூந்தாது போல இயற்கை மணமுடைய உடம்பு. 573 காமருபூ மெய்யும் இது. 566 காவி - குவளை. 567 நேர்தல் - உடம்படுதல். 570 நா ஆட - நா வெல்ல; நாவாட - பிறர் நாவாட. 551 முதல் 574 வரை முறையே புகுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நகுநய மறைத்தல், சிதைவு பிறர்க்கின்மை, கூழை விரித்தல், காதொன்று களைதல், ஊழணி தைவரல், உடை பெயர்த்துடுத்தல், அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல், இல்வலியுறுத்தல், இருகையு மெடுத்தல் என்னும் மெய்ப்பாட்டுக் குறிப்புக்கள் (தொல். மெய்ப். 13, 14, 15) பன்னிரண்டும் வந்துள்ளமை காண்க. 574 எய் - அம்பு. 577 - 8 கை அவளுக் குதவாமையும் தனக்குதவினமையும் கூறுகின்றனான். 579 முதல் 610 வரை களவொழுக்க நிகழ்ச்சிகள். 580 நடுகையிலே - நடுகின்றகையிலே. 582 அடிபடல் - காலைப் பிடித்து முட்பிடுங்குதல். நொடிபட - தடையுண்டாக; தடம் மேடு பள்ளமாக - நொடியாக. 584 கன்றின் குரல் - அம்மா. 588 நோக்கா - நோக்கி. 589 தாய் விருந்திடலாமெனத் தலைவி மறுத்தாள். 590 மன்ற - உறுதியாக. 592 வெங்கோலம் - தலைவனை வருத்தி அவனுக்குப் பயன் படாததால் 'வெங்கோலம்' என்றான். கோலம் - அலங்காரம். பைங்கூழ் - பயிர். 594 மன்று - களைகளைந்த மற்றைப் பெண்டிர். இளை - உடல் இளைப்பு. 595 அவ்வண்ணம் - அவ்வாறு. 596 இவ்வண்ணம் - இக்குறி. 598 ஒன்று - ஓரடி. விளையாடும்போது தலைவி தலைவனை விளையாட்டடி யடித்தாள். 601 - 2 குட்டி - ஆட்டுக்குட்டி. மறித்தல் - தடுத்தல். பார்வை - கண்ணின்குறி. பார்வையிலே சொன்ன மயில் என்க. முறி - தளிர். 606 நாப்பிழைத்தல் - பொய். வாய் - உண்மை. வாய்துஞ்ச - உண்மையின்றாக. 607 - 8 புள் - பறவை. பொய்ப்புள் - தலைவனெழுப்பாது தானாக எழுந்து ஒலிசெய்த பறவை. பொம்மென - மகிழ்ச்சியாக. கைப்புள் - வளையல். வந்து போனதற்கு அடையாளமாக வளையலை இட்டு. கலுழ்ச்சி - வருத்தம். மெய்ப்பு உள்ள - உண்மையான. 609 அற்றம் - குறித்தகாலம். அல்லாக்க - வருந்த. பொய்ப்புள்ளொலி, அற்றம்பிழைத்தல். இவை யிரண்டும் குறிபிழைத்தல். 610 - 3 பொது நலப்பிரிவு. 615 எத்தி - ஏமாற்றுக்காரி. 616 பேதுற - மன மயக்கங் கொள்ள. ஆய்கத்தி - தாய் பலவாறு அரற்றி. 618 - 9 ஞாய் - தாய். பிடித்த அன்பு - கொண்ட அன்பு. 620 தென்பால் - தமிழ்நாடு. இங்கே தமிழர். 621 வடவர் - கனகவிசயர். 622 இகழ்வு எண்ணம் இன்மையுற. 622 - 3 உறக்கட்டல் - பொருந்தச் செய்தல். 624 பட்டு வரிக்கல் - உளியடிக்கல். 626 தொண்டு - பண்டு, முன்பு. 627 - 8 திரள் - கூட்டம். தமிழகத்தின் மேல் படை யெடுத்து வந்த வடவராகிய மோரியரை (பிந்துசாரன்) இளஞ் சேட் சென்னி என்னும் சோழ மன்னன் முறியடித்தோட்டினான். 630 ஆய்ச்சி - தாய். பேய்ச்சி - பேய் பிடித்தவளெனப் பெயர் பெற்றவள். 615 - 28 தலைவன் பிரிவாற்றாது தலைவி பேதுற்று வருந்த, தாய் பேய் பிடித்ததென்று உடுக்கைக்காரரைக் கொண்டு பேயோட்டு வித்தாள். அவர்கள் எவ்வளவோ முயன்றும் போகாத அப்பேய் தலைவன் வரத் தானாகவே ஓடிவிட்டது. பேய் - அச்சம். பெண்களின் காதல் நோயைப் பேய் பிடித்ததெனக் கொள்ளுதல் மகளிர் வழக்கம். செங்குட்டுவன் கனக விசயர் முடித்தலையில் கண்ணகியின் படிமக்கல் ஏற்றி வந்ததுபோல் தலையில் கல்லேற்றி அச்சுறுத்தியும் போகாது. தலைவன் வரவே, இளஞ்சேட் சென்னியைக் கண்டு வடவரான மோரியர் ஓடினது போல் அப்பேய் ஓடிற்று என்பதாம். 632 களவு அமைய - களவு வெளிப்பட. 633 - 4 இவை பூத்தரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி, களிறுதரு புணர்ச்சி, நாய்தரு புணர்ச்சி, ஆத்தரு புணர்ச்சி எனப்படும். 636 மேவு ஆக - பொருந்த. 638 இம் என்ன - சரியென. 640 ஒவ்வாத - பொருந்தாத; மக்கள் எண்ணம் செயலுக் கொவ்வாத. 641 - 2 எந்தமிழ் - தலைவனும் தலைவியும்; பழந்தமிழர். அன்று எதிர்ப்பட்டது -களவொழுக்கம். *பொதுமக்களின் நன்கொடையைக் கொண்டு, சங்க மேச்சுரர் கோயில் திருப்பணிக் குழுவினரால், இப்போது (1957ல்) சங்க மேச்சுரர் கோயில் பிரித்துப் புதிதாகக் கட்டப்பட்டுவருகிறது. 3. நிலையா - நிலையாக. 5. கொலை ஏ, ஏ - இரக்கத்தொடு வியப்பு. கொலைகொலை என்னும் அடுக்கு - வெறுப்பு 18. கொச்சகம் ஆதலின், யாப்பதரே ஓ கெடுகொலையா - எனக் கலித்தளை வந்தது இனி இவ்வாறு வருவதும் இங்ஙனமே . . . . 22 - 11 - 63 23. ஈவு - இரக்கம். ஓ அது அடாது ஓர்தல் - நினைத்தல் 24. உலகு உள்நுக்கு அலங்க - உலகத்தார் உள்ளம் உருகி வருந்த. எண் - எண்ணம். உள்நுக்கு - உள்ளங் கலங்கி. 28. அற்குப் படாமல் - சிறிதும் தங்கவிடாமல். புடை - புடைப்பயிர். கல் கொட்ட - சல்லிக்கல் உடைக்க. கொல்கொட்டு - கொல்லன் சுத்தி. மல் கட்டி - வம்பில். முன்னுதல் - கருதுதல். மடிதற்றல் - வேட்டியைச் சுருட்டி இறுக்கிக் கட்டல். அகைய - பொருந்த. 36. . . . . . . . 41. இல்லம் புகும் சிறியேன் - வீட்டுக்கு விலக்காகாத சிறுபருவதேன். 43. நாடு அத்தனையும் - அத்தனை நாட்டுத் தலைவரும், இடவாகு பெயர். 44. இது முதல் 4 பாட்டுக்கள் இந்தியத்தாய் கூற்று, கடுக்கும் - ஒக்கும். 46. இது மக்கள் கூற்றாக. 48. இது முதல் 9 பாட்டுக்கள், திருவாட்டி கென்னடி பற்றியவை. 51. மண்ணுதல் - குளித்து ஒப்பனை செய்தல். 55. . . . . . . . . . 57. இது முதல் 2 பாட்டு அமெரிக்க மக்கள் பற்றியவை. 58. ஏ - அம்பு. ஒன்றுதல் - உடலில் தைத்தல். 59. வெள்ளி - வெள்ளிக்கிழமை, இவ்வைவரும் வெள்ளிக்கிழமையன்றே இறந்தனர். அறுவர் - சனிக்கிழமை முதலிய ஆறும். 61. ஆபிரகாம்லிங்கனை 24 - 4 - 1865 - பூத். கார்பீல்டை 2 - 7 - 1881 - குயித்தே. மிக்கென்லேயை 6 - 9 - 1901- ஜேம்ஸ்கோஸ். 62. பறை - ஒலி இறையும் கொஞ்சமும் குறியெதிர்ப்பு - கைம்மாற்று காந்தியை 30 - 1 - 1948 கோட்சே. லியாகத் அலிகானை 16 - 10 - 1951 - அக்பர். பண்டாரநாயகாவை - 26 - 9 - 59 சோமராமதேரோ. 63. எல்லோன் - சூரியன். ஒல்லே - விரைந்து, பொருந்த. புல்லா - மூடாத, திறந்த. இரண்டிரண்டு - 22. இரண்டொன்று - 11. ஏழொன்பது - 63. 22 - 11 - 63. 64. கொல்லப்பட்டார்கள், கொன்றனன் என - செயப்பாட்டு வினையும் செய்வினையும் சுவைபடவந்தன. 67. கென்னடி தோற்றம் - 29 - 5 - 1917. மறைவு 22 - 11 - 63 வாழ்ந்தது 46 - 5 - 23. ஊங்கு - இன்னும். 69. கொன் நொடியில், கொன் - பயனின்றி வீணாக. 70. கந்து - யானைகட்டுந்தறி. நொள்கி - சுருங்கி. 71. எஏ. அஆ - விட்டிசை வல்லொற் றெதுகை. எஏ - ஏண்டா. அஆ - இரக்கம். 74. மை - மேகம். 76 பொருவு - ஒப்பு. துச்சு - காரணம். துடித்தல் - மிகமுயற்சி செய்தல். 79. குடிமை - குடிமக்களுரிமை, குடியுரிமை. 81. நீறு - சாம்பல். 85. நிரல் - வரிசை. 86. விதிர்ப்பு - நடுக்கம். 89. உலகமன்றினர் - உலகமன்ற உறுப்பினராகிய உலக நாட்டுத்தலைவர்கள். 90. வீந்திட - இறந்திடச் சுட்டுக்கொல்ல. 93. சினை - கரு. 94. வேண்டுதல் - விரும்புதல். 97. மிகையுடன் - மிகவும் மேயினார் - விரும்பிமுடிவு செய்தார்கள். 98. இது முதல் 6 பாட்டுக்கள், அமெரிக்கத் தலைவர் ஜான்சன் கூற்று. துகிர் - பவளம் ஒரு சில பவளப் பூச்சிகள் உண்ணும் உணவு உண்ணாத. . . . . . . . . . . . . 103. அவ்வியம் - பொறாமை. பொறாமையே பகைக்கும் போர்க்கும் காரணமாகும். 104. ஃஓம் - ஹோம்பிரபு, பிரிட்டன் முதலமைச்சர். 105. நோய் ஒழிய - மருந்து. 118. கரி - சாட்சி. ஏது - காரணம். மன்றினீர் என்றது - அறங்கூறவைத் தாரை. அதாவது - ஜூரிகளை. 119. வா - வாறு. உசாவி - விசாரணை செய்து. 126. 'அமைதியோடு இனிது வாழ்வேன்' என்பது - அமைதியாக வாழ்வேன் என்பதோடு, அமைதி என்னும் மனைவியோடு இனிது வாழ்வேன் என்னும் நயமும் கொள்க. 133. இனம் - மற்ற தீக்குணங்கள். 134. அஞ்சு - ஐம்பெரும்பூதங்கள், ஐம்பொறிகளுமாம். 137. அவ்வியம் - பொறாமை. 138. தாய் - அவா. ஊறு - துன்பம். 145. இவறுதல் - உலோபஞ் செய்தல். 149. அஃகுதல் - சுருங்குதல், குறைதல். 149. எஃகு - வேல். 161. பெரும்பொறை - பெரியசுமை. இரும்பொறை -கணைக் காலிரும்பொறை என்னும் . . . . . . . . 169. . . . . . . . . . . . 179. ஐயைந்து நூறாயிரம் - 25 00 000. 180. கன்றொன்றும். . . . . . . . . 182. தொடக்கு - பற்று, வெறி. 196. விதிர - நடுங்க. 203. நாகஷாகி, யுரேஷிமா என்ற இடங்களில். 204. அங்கு - அப்போது அவ்விடத்து. 212. அறங்கூறவையத்தார் - ஜூரிகள். 213. தீர்ப்பாளர் - நடுவர், நீதிபதி. 217. மூலம் - வேர், காரணம். 237. ஒல்லா - பொருந்தா. 240. குணத்தை உடையது - குணி பச்சைக் கிளி, பச்சை - குணம். கிளி - குணி. 247. இது, கென்னடியின் மக்கள் கூற்றாதவம் கொள்க. 255. புறவு - காடு. 259. மன்றம் - மக்கட்கூட்டம். திறம் - தன்மை. 260. எந்தை - தந்தை. என்றது - கென்னடியை. அன்னை என்றது - உலகை அடுதல் - கொல்லுதல். என்னை - என்ன. எல்லா - தோழி. 261. ஆய்வு - விசாரணை, தீர்ப்பு. புறம் - அறத்தின் புறம். அறம் - முறை. புறம் - முறையின்மை. 263. அன்னாய் என்றது - அமைதியை இதுதோழி கூற்று. கொன்னே - வீணாக. 264. அமைதியுடன் இருக்கின்றானாம் என்றது - கொலைத் தொழிலை விட்டுச் சும்மா இருக்கிறானாம்; அமைதியாகிய உன்னை விரும்பி இருக்கிறானாம் என இருபொருள். 266. கண்ணுதல் - கருதுதல். வண்டல் - மணல் வீடு. 272. உய்தி - வாழ்வு. மண்டுதல் - மிகுதல். மாழ்கி - மயங்கி. 275. நற்றாய் என்றது - உலகை. 279. அவற் கூற - அவன் இன்னானெனக்கூற. 283. திப்பியம் - மங்கலம். 287. துப்புற - திறம்பட. நப்புற - நன்கு. 13. திகை - திசை. 20. கொப்புளம் - நீர்க்குமிழி. 21. போர்த்து - போர்வெறி கொண்டு. 45. காத்தோம்பல் - காத்தல். ஓம்புதல் - நீக்கல், ஒழித்தல். 59. நென்னல் - நேற்று. 75. கரும்பொன் - இரும்பு. காப்பு - விலங்கு. 77. உள்துறை மந்திரி. 81. கட்டி யங்காரன் - சீவகன் தந்தையான சச்சந்தன் மந்திரி. இவன் சச்சந்தனைக் கொன்று அரசெய்தினான். 88. வெட்கி - நிரைகவர்தல், போருக்கு வித்திடல். 97. கட்டுபணம் - முன்பணம். 103. காவு - பலி கொடுத்துமா. 104. வன்மம் - தீராப்பகை. அடாதுடி - தீம்பு, தகாதசெயல்கள்.