பாவேந்தம் காப்பிய இலக்கியம் – 3 காதலா? கடமையா? தமிழச்சியின் கத்தி ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 4 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2009 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 216 = 248 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 230/- படிகள் : 1000 நூலாக்கம் : திருமதி வ. மலர், சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : திருமதி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு தியாகராயர்நகர் சென்னை – 17. தொலைபேசி : 044 2433 9030 பாவேந்தர் பாரதிதாசன் 119 ஆம் ஆண்டு பிறந்தநாள் நினைவு வெளியீடு பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! பாரதிதாசன் பெற்ற பேறு ‘பாவேந்தத் தொகுதிகளை ஒரு சேரப் பதிப்பிக்கப் பெற்ற பேறு! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. இதனை எதிர்த்துப் பெரியார் தலைமையில் மறைமலை அடிகள், திரு.வி.க., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப் படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின் மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  காதலா? கடமையா? பாரதிதாசனின் ‘காதலா? கடமையா?’ ஒரு கற்பனை வரலாற்றுக் கதைப் பாடல். நல்ல காவிய அமைப்புடையது; காதலை உட் பொருளாகக் கொண்டது; கடமையை உணர்த்துவது; இனிய சுவை மிக்க இன்பியல் காவியமாக அமைந்தது. இந்நூல் 38 இயல்களைக் கொண்டது. ஒவ்வோர் இயலிலும் அந்தந்த இயலில் பயிலும் உயிரோட்டமான இரண்டு அடிகளைத் தலைப்பாகக் குறித்துள்ளமை கவிஞரின் பிற கதைப் பாடல்களில் காண இயலாப் புதுமை ஆகும். ‘காதல் பெரிதன்று, கடமையே பெரிது? என்று மகிணன் கருதியதால் இந் நூலுக்குக் ‘காதலா? கடமையா? என்ற தலைப்பினை அளித்தார் கவிஞர் எனலாம். 1948க்கு முன்னர் இருந்த நாட்டின் பஞ்ச நிலையைச் சித்தரிப்பதும் நூலுக்குச் சிறப்புத் தருகிறது. “செய்திகளைச் சுவைபடச் சொல்லுதல், இனிய உவமைகளை ஆளுதல், உயர்ந்த கருத்துகளை வழங்குதல் இவை கவிஞர்தம் சிறப்பு. இதற்கு எடுத்துக்காட்டு இவரது பல கவிதைகள். அவற்றிலே காதலா? கடமையா? ஒன்று’ என்று சாலை இளந்திரையன் பாராட்டுகிறார். “பாண்டியன் பரிசுக்கு அடுத்தபடியாக வந்துள்ள சிறந்த காவியம்; பிறமொழி கலவாத இனிக்கும் தமிழில் உள்ளது” என்று பொன்னி இதழ் பாராட்டுகிறது. குயில் 1.3.48 இதழில் இக் காப்பியம் பற்றி வந்துள்ள விளம்பரம்: காதலா? கடமையா? - தனித்தமிழ்க் காப்பியம். எளிய நடை; விறுவிறுப்பான கதைப்போக்கு; எளிய உவமைகள். மகிணன்பால் சென்ற உள்ளம் மற்றவனை ஒப்பாது என்கிறாள் தலைவி. தமிழச்சியின் கத்தி நான் சுவைத்த காப்பியம் உள்ளத்து உணர்ச்சிகளை, எண்ணங்களின் எழுச்சிகளை, சிந்தனைச் சிதறல்களை வார்த்தைகளில் வடித்து எழுத்துகளில் கோர்த்து விடுகிறான் கவிஞன், தனது உணர்ச்சிகளையும் எழுச்சிகளையும் தான் படைக்கும் பாத்திரங்களின் வழியாக அவன் வாழ வைக்கின்றான். பாட்டுடைத் தலைவனைத் தன்னிகரற்ற தலைவனாகப் படைத்து, நாட்டு வளம், நிலவளம், மலைவளம் சொல்லி ஆறு, கடல், காடு வருண னைகள் கூட்டி, நாற்பொருள் நல்கி யாக்கும் கவிதைகளை நாம் காப்பிய மென்று கொள்ளளாகுமன்றோ? தண்டியாசிரியர் கூறிய இலக்கண விதிப்படியும் அப்படைப்பு காப்பியமெனப்படுவதில் தவறுண்டோ? இவ்வழி நின்றுதான் பாரதிதாசன் படைத்த “தமிழச்சியின் கத்தி” எனும் நூலை நான் காப்பியமென்று கூறுகிறேன். அக் காப்பியம் என் உள்ளத்து உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பியது. என் சிந்தனை அலை களைப் பொங்கவைத்தது. தமிழன் என்ற உணர்வை எனக்கு ஊட்டி, தமிழ் வீரம் ஒரு தனி வீரம் என்ற எண்ணத்தை எனக்கு அளித்து, ஓர் இலட்சியத் தமிழனாக வாழ எனக்கு ஊன்றுகோலாய் உதவியது. பாரதிதாசன் ஒரு மதத்தைப் பரப்ப இதை எழுதவில்லை. நாடாள் வோனைப் புகழ்ந்து பாடிப் பொருள்பெற அவன் இதைப் படைக்கவில்லை. தன் புகழுக்காகவும் அவன் இதை யாக்கவில்லை. இத்தனைக்கும் மேற் சென்று, பாரதியார் வழிநின்று ஓர் இலட்சிய நோக்குடன் அவன் இதைப் படைத்தான் என்ற எண்ணம் அந் நூலைப் படிக்கும்பொழுதே புரிகின்றதே. தமிழச்சியின் வீரம் இது ஒரு கற்பனைக் கதை: பாட்டுடைத் தலைவியாக வரும் சுப்பம்மா ஒரு குடிசை வாழ் தமிழ்ப்பெண். அவள் அன்புக் கணவன் திம்மன் ஒரு விவசாயி. திராவிட மக்களை அடக்கி ஆள ஆணவம் கொண்டு எழுந்த ஆரியரை அடக்குவதற்காக இதை எழுதினான்: தெற்கை வடக்கு அடக்காது என்று அடித்துக் கூறினான்: இதையே பாரதிதாசன் தன் கவிதையில், “... ... ... வடநாட்டார் தமிழர் தம்மை வாழவிடாமற் செய்யத் திட்டமிட்டார் மறம் வீழும் அறம் வாழும் என்பதெண்ணார் தாழ்வுற்றுப் போகவில்லை தமிழரெல்லாம்; தமிழகத்தைப் பிறர்தூக்கிச் செல்லவில்லை, வாழ்கின்ற காவிரியைப் பெண்ணை யாற்றை வடநாட்டான் எடுத்துப்போய் விட ஒண்ணாது” என்று எடுத்துரைத்தான்: கதை ஓட்டத்தில் இக் கவிதையைப் படிக்கும் பொழுது எமது உணர்ச்சிகள் உயிர்பெற்று எழுகின்றன; அநீதியை அகற்றி நீதியை நிலைநாட்ட எமது இதயம், இல்லை. தமிழ் நெஞ்சம் பொங்கித் துடிக்கிறது: “தந்தோம் எம் தங்கச்சி வெல்க! வெல்க! தமிழச்சி உன் கத்தி வெல்க” என்றுரைத்து சுப்பம்மாள் கையில், அவள் வேண்டுகோளுக்கிணங்கி திருவண்ணாமலைத் தமிழர் குத்துக் கத்தியொன்றைக் கொடுத்துச் செல்கின்றார்கள். இதைப் படிக்கும்பொழுது எமது உள்ளத்தில் பல்வேறு சிந்தனைகள் தட்டி எழுப்பப்படுகின்றன. எமது தமிழ் இரத்தப் பிணைப் பில் உடன்பிறந்தாள் போருக்குப் போவதாக எண்ணுகிறோம்! அவள் கையில் அவள் அண்ணன்மார் கத்தி கொடுத்தனுப்புவதாக நினைக் கின்றோம்: எமது தமிழ் இரத்தம் துடிக்கிறது. அவளோடு சேர்ந்து நாமும் அவளுக்குத் துணையாக வாள்கொண்டு போகவேண்டுமென்று எண்ணங்கள் துடிக்கின்றன. அன்று வீரத் தமிழ்த்தாய் வீட்டுக்கொரு ஆண்மகனைப் போருக்கு அனுப்பினாள். இன்று, அந்த ஆண்மக்கள் தங்கள் ஆண்மையை இழந்து, வீரத்தை இழந்து கோழைகளாக நிற்கையில் அந்தத் தமிழ்த் தாயே போருக்குச் செல்கின்றாளா என்று எண்ணத் தோன்றுகின்றது: ஆனால் அந்தத் தமிழ்த்தாய் தன் வீரத்தை நிலைநாட்டுகின்றாள். பாரதிதாசனும் தன் கவிதையின் அழகை நிலைநிறுத்தி விடுகிறார். “மங்கையின் மேல் ஒருகை வந்துபட்டது வாள் பட்டதால் விட்டது - அட இங்குச் செல்லாதென்று மங்கை சொன்னாள்! ... ...” எதிரிகள் கோழைகள் நேருக்கு நேர் நின்று அறவழிநின்று போர் புரியத் தெரியாத பேடிகள் தமிழச்சியின் ஓலை வேய்ந்த குடிசையைக் கொளுத்தினர். “கூரை எரிந்தது! கொள்ளி எரிந்தது” சிப்பாய்களின் தலைவன் சுதரிசன் காத்திருந்த வேளையும் வந்தது. அவன் காமமும் எரிந்தது. கொடியிடையாளைக் கொள்ளத் துடித்தான். தன் கைகளை நீட்டினான். அப்பொழுது தமிழச்சி என்ன செய்தாள்? பாரதிதாசனே தன் அழகு நடையில் சொல்லட்டும். “கத்தியை நீட்டினன்; தீ என்னை வாட்டினும் கையைத் தொடாதேயடா - இந்த முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதென்றி மூச்சுப் பெரிதில்லை காண்!” என்று “குத்தும் குறிப்பும் கொதித்திடும் பார்வையும்” கொண்ட கோவை யிதழாள் கொட்டி நின்றாள் வீர வார்த்தைகளை. வருணனை அழகு இவ்வாறு பாரதிதாசனின் காப்பியம் ஒரு குறிக்கோளோடு வீறு நடை போட்டுச் செல்கின்றது. சொற்களே உயிர்பெற்றுத் துடிப்பது போன்ற உணர்ச்சி ஏற்படுகின்றது. ஒவ்வோர் இயலிலும் உள்ள சொற்களை வைத்தே அவ்வியல் வெறும் இயற்கை வருணனையா அன்றேல் வீரச் சொற்களா அன்றேல் வெறியோடு பேசும் போதைச் சொற்களா, அன்றேல் துன்பம் கலந்த சோகச் சொற்களா என்று பார்த்த பார்வையிலே, சொற் கோர்வையினால் எழும் ஓசை நயத்திலே சொல்லிவிடலாம். இது காப்பியத்தின் தனிச் சிறப்புகளில் ஒன்றன்றோ? “நீரடை பாசியில் தாமரை பூத்தது போலே - நல்ல நீலத் திரைகடல் மேலே - பெருங் காரிருள் நீக்கக் கதிர் வந்து பூத்ததினாலே” பாரதிதாசனின் இயற்கை வருணனைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. “முற்புறத்தும் தமிழ்நாட்டின் முரசுமாக முழங்குகின்ற திரைகடலைப் பகைவர் வந்து கைப்புரத் தேந்திப்போக முடிவதுண்டோ? கன்னலது சாறுபட்டுச் சேறு பட்டு முப்பழத்தின் சுளைபட்டு முன்னாள் தொட்டு முளை செந்நெல் விளைநிலத்தை இழந்தோமில்லை எப்புறத்தும் வளங் கொழிக்கும் மலைகள் உண்டு பறித்துவிட எவராலும் ஆவதில்லை” எவ்வளவு ஆழகாக ஆனால் எளிமையான நடையில் நாட்டு வளம், மலைவளம், கடல்நிலை பற்றிப் பாரதிதாசன் பாடியுள்ளான். பண்போடு பாட்டியற்றும் கவிஞன் பாரதிதாசன், சுப்பம்மா உணர் வற்ற நிலையில் வடக்கிலிருந்து வந்த மனித மிருகத்தினால் அவள் பெண்மை அழிக்கப்பட்டது. இதை வெகு அழகோடும், பண்போடும் கவிதை நயத்தோடும் பாரதிதாசன் பாடுகின்றான். “கொட்டிக் கிடந்திட்ட பூப்போல் - அந்தக் கோதை கிடந்திட்ட போது தொட்டனன்! தொட்டனன்! மீளாப் - பழி சூழ்ந்தனன்! சூழ்ந்தனன்! ... ...” இந்தக் கொடுமையை, வடக்கனின் மிருக வெறியைப் பார்த்து இயற்கை பொங்கி எழுந்தது. “பொங்கிற்று வானில் முழக்கம் - மின்னல் பொல்லாங்கு காட்டிற்று! நல்ல மங்கைக் கிரங்கு இருட்டும் - அழும் வண்ணம் பொழிந்தது மாரி.” கற்பனைக்கு அப்பால் ... இலட்சியத்தோடு கவிதைபாட வந்த கவிஞனுக்கு தமிழச்சியின் பெண்மை மட்டும் கறை படிந்ததாகத் தோன்றவில்லை. தமிழினத்தின் தூய்மையே கெட்டதாக வெகுகின்றனன். தமிழினத்தின் மானமே மடிந்தது என்று மார்தட்டினான். பொறுத்திருந்த பெருமக்கள்கூட இக் கேடுகெட்ட நிலை கேட்டுப் பொங்கி எழுவரன்றோ? தமிழச்சி பொங்கினாள். கவிஞன் வார்த்தைகளில் வீரத்தை வடித்தான். “... ... அறமறியான் சுபேதார் என்னைத் தீண்டினான் தேசிங்கு தமிழர் தங்கள் மெய்யுரிமை தீண்டினான், மாய்ந்தான், மாய்வான் விதி கிழிந்து போயிற்று மீள்வதில்லை.” கீழ்த்தரமாக சென்ற ஓர் ஆட்சி நிலைக்குமா? அறம் காக்க வேண்டிய காவலர் கட்டுப்பாடின்றி காமவெறிகொண்டு நாய்கள் போல் அலைந்தால், “நாயும் பிழைக்கா தம்மா - இவர் ஆட்சியில் நல்லவர் ஒப்பாரம்மா தீயும் புயற்காற்றுமே - இவர் நெஞ்சிலே செங்கோல் செலுத்து மம்மா ஓயாது மக்கட்கெல்லாம் - இடையூறுதான் உண்டாயிற் றம்மா” காப்பியத்தின் முடிவு ஓர் உச்சக் கட்டத்தை அடைகிறது. காப்பியத்தை நுகர்பவரின் உணர்ச்சிகளும் எழுச்சிகளும் உச்ச நிலைமை அடை கின்றன. செஞ்சிக் கோட்டையில் கொலு இருக்கிறான் செங்கோல் ஓச்சும் வடக்கன் தேசிங்கு. “... ... ... அலையுங் கூந்தல் இருட்காட்டில் நிலவு முகம் மறைந்து தோன்றக் கொதிக்கின்ற நெஞ்சத்தால் கொல்லு வான்போல் கொலு முன்னே வந்துநின்றான் அவ்வடக்கன் உதிர்க்கின்ற கனல் விழியால் அவனைப் பார்த்தான்!” பார்வையில் மட்டுமல்ல அங்கு போர் நடந்தது. சொற்போரும் அங்கு இடம் பெற்றது. “குற்றம் புரிந்தார் யார்? - உனது கோலை இகழ்ந்தவர் யார்? கற்பை இகழ்ந்தவர் யார்? - உனது கருத்தை மேற்கொண்டவன்!” இதைப் படிக்கும்பொழுது, இளங்கோ அடிகள் உருவாக்கிய கற்புக்கரசி, கண்ணகி “என் கணவன் கள்வனோ?” என்று மதுரை மன்னனை எதிர்த்து வாதாடி, மதுரையை எரித்த வீரக் காட்சி எமது கண்களில் தோன்றி மறைகின்றது. இங்கும் சுப்பம்மாவின் வீரச் சொற்கள், சுடுசொற்கள், தீச் சொற்கள் செஞ்சிக் கோட்டையில் செங்கோலோச்சிய கல் நெஞ்சினை கரையவைத்து, கனிய வைத்து அவன் இறப்பில் அறத்தை அடையவைத்தன. “முறை தெரியா முட்டாளே திருந்தச் சொன்னேன் முன் இழைத்த குற்றத்தை இனிச் செய்யாதே சிறையோடா? கொலையோடா எனக்குத் தண்டம் செப்படா என்றுரைத்து தீப்போல் நின்றாள். ... ... ... ... ... ... ... ... ... ... ... ... மூளுதடா என்நெஞ்சில் தீ! தீ! உன்றன் முடிவேக மூளுதடா அக்கொடுந் தீ நீளுதடா என் நெஞ்சில் வாள்! வாள்! உன்றன் நெடுவாழ்வை வெட்டுதடா அந்தக் கூர்வாள் நாளில் என்னைப் பிரிக்குதடா சாவு! வந்து நடுவிலுனைத் தின்னுமடா அந்தச் சாவே! ஆளனிடம் பிரித்ததடா என்னை! என்னை! அன்பு மனையாள் பிரிவாள் உன்னை! உன்னை! ... ...” “என்றதிர்ந்த” சுப்பம்மாள் “நிலத்தில் சாய்ந்தாள்.” ஆனால், “நெடுவாழ்வின் பெரும்புகழைச் சாவில் நட்டாள்” என்று பாரதிதாசன் தமிழச்சியின் புகழ் பாடினான். “தோன்றின் புகழொடு தோன்றுக - அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்ற உலகப் பொதுமறை தந்த வள்ளுவனின் வழுவா வாக்கின்படி வாழ்ந்து புகழ்விட்டுச் சென்ற சுப்பம்மா வீட்டின்பத்தை நுகராது போவாளா? இவ்வாறு பாரதிதாசன் ஒரு சமுதாயத்தின் நிலை உணர்ந்து, அந்த இனத்தின் உணர்ச்சிகளை அறிந்து, அந்த மக்கள் வாழ்ந்த காலத்தைப் புரிந்து அவற்றிற்கேற்பத் தன் காப்பியத்தைப் படைத்துள்ளான். டுவைநசயவரசந டiஎநன லெ எசைவரந டிக வாந டகைந றாiஉh வை நஅbடினநைள என்றுதான் இலக்கியத்தை வருணிக்கின்றான் ஆங்கில இலக்கியப் பேராசிரியர் றுடைடயைஅ ழநசேல ழரனளடிn (ஐn ஐவேசடினரஉவiடிn வடி வாந ளவரனல டிக டுவைநசயவரசந ஞ.10). இதைப்போன்றே பாரதிதாசனின் “தமிழச்சியின் கத்தி” காலத்தின் கொடுமைகளை, தமிழினத்தின் தாழ்வு மனப்பான்மையையும், அடிமை வாழ்வையும் பார்த்துக் கொதித்து, இலட்சம் இலட்சமாக வாழும் தமிழ் மக்களுக்கு வீரத்தையும் மானத்தையும் ஊட்ட எழுந்தது. எல்லோராலும் புரிந்துகொள்ளக்கூடிய எளிய தமிழ்நடையில் தவழ்ந்தது. இச் சிறப்பு இக்காப்பியத்தின் தனிச்சிறப்பு. மொழியும் நடையும் ஒவ்வொரு கவிஞனின் தனிப் பண்பாகும். அவை ஆங்கில இலக்கிய ஆசிரியர் ஞடியீந அவர்கள் கூறியதுபோல “கூhந னசநளள டிக வாடிரபாவ” அல்ல. எண்ணங்களுக்கும் உணர்ச்சி களுக்கும் எழுத்தாளன் போட்டுவிடும் சட்டை அல்ல. ஆனால் ஊயசடலடந கூறுவது போல “ளை nடிவ வாந உடியவ டிக ய றசவைநச, ரெவ hளை ளமin” ஆசிரியனின் உடலின் தோல் போன்றது. இந்த மொழியாலும் நடையாலும் பாரதிதாசனின் காப்பியம் சங்ககாலத்துக் காப்பியங்களாகிய - கம்பராமாயணம். சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சிந்தாமணி போன்ற பெருங்காப்பியங்களிலிருந்து வேறுபட்டது. இப் பெருங் காப்பியங்கள் பெருஞ்சிறப்புப் பெற்றிருந்தும் இன்று வாழ் தமிழ் மக்கள் எல்லோ ராலும் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளக்கூடியனவாக இல்லை. படித்து முடித்துவிடும் மனநிலையும் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. ஆனால் பாரதிதாசனின் ‘தமிழச்சியின் கத்தி’ அவ்வாறன்று. காப்பியம் சிறிதாக இருப்பதாலும், விறுவிறுப்பாக ஓடுவதினாலும் காப்பியத்தைப் படித்து முடித்த பிற்பாடே மூடிவைக்க மனம் இசைகின்றது. தமிழச்சியின் இலட்சிய ஈடேற்றத்தைப் பார்த்த பின்னரே எமது தமிழ் மனத்திற்கும், கொதித்த தமிழ் இரத்தத்திற்கும் அமைதியும் சாந்தியும் ஏற்படுகின்றது. வெல்க தமிழ்த்தாயின் வீரம்! வாழ்க பாரதிதாசனின் காப்பியம்! - கரவையூர்ச் செல்வம் அறிஞர்கள் பார்வையில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்க்கவி; தமிழரின் கவி; தமிழின் மறுமலர்ச்சிக் காகத் தோன்றிய கவி; தமிழரின் புகழ் மீண்டும் மேதினியில் ஓங்க வேண்டு மெனப் பிறந்த கவி; அவர் நமது கவி. - கோவை அ. அய்யாமுத்து  நிமிர்ந்த பார்வை, அச்சமில்லை என்ற முறுக்கான மீசை வயதை விழுங்கிய வாலிப வீறு உரப்பான பேச்சு புதுமை வேட்கை கொண்ட உள்ளம் - இவையே பாரதிதாசர்! - சுத்தானந்த பாரதியார்  பாரதிதாசன் மொழிவரையறையால் தமிழ்க் கவிஞர் ஆனால் கருத் தளவையால், கவிதைச் சுவையளவையால், மொழி எல்லையையும், நாட்டு எல்லையையும், கால எல்லையையும் கடந்த உலகக் கவிஞர் களுள் ஒருவர். - கா. அப்பாத்துரையார்  மதத்தின் பேராலும், சாதியின் பேராலும் தர்மத்தின் பேராலும் நீதியின் பேராலும் யார் யார் கொள்ளையடிக்கிறார்களோ, யார் யார் மற்றவர்களை ஏமாற்றுகிறார்களோ யார் யார் பிறர் உழைப்பில் இன்பம் அனுபவிக்கின்றார்களோ அத்தனை பேர்களையும் துவேசிக்கிறார் பாரதிதாசன். - ஏ.கே. செட்டியார்  சாதி மதக் கொடுமைகளைத் தூள்தூளாக்க குருட்டுப் பழக்க வழக்கங்களைத் தகர்த்தெறிய, பகுத்தறிவை விரிவாக்க, தமிழ்ப் பற்று பொங்கியெழ, பெண்ணடிமைத்தனம் நொறுங்க, பொதுவாக நில, பண முதலாளிகளின் கொடுமையை உணர்த்த, சுருங்கச் சொன்னால் தொழி லாளித்துவ சீர்திருத்தமான பாடல்களைத் தந்துள்ளார் பாரதிதாசன் - ப. ஜீவானந்தம்  பாரதியாரின் பாடல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தில் சுதந்திர உணர்ச்சியை உண்டுபண்ணியது போல, பாரதிதாசனுடைய பாடல்கள் சமூகச் சீர்திருத்த உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டி வருகின்றன என்றால் மிகையாகாது. மதங்களிலும், பழைய ஆசாரங்களிலும் ஊறிக் கிடந்த மக்களிடையே இவருடைய பாடல்கள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணியிருக்கின்றன. ஆதலால் இவர் ஒரு புரட்சிக்கவி. அமெரிக்கப் புரட்சிக்கவி வால்ட்விட்மன். தமிழ் நாட்டுப் புரட்சிக்கவி பாரதிதாசன் - கவிமணி தேசி விநாயகம் பிள்ளை  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1 : இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி - 2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஒருநாள் நிகழ்ச்சி) இரண்டாம் பகுதி (விருந்தோம்பல்) மூன்றாம் பகுதி (திருமணம்) நான்காம் பகுதி (மக்கட்பேறு) ஐந்தாம் பகுதி (முதியோர் காதல்) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10 : உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரஸ்புடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (தீபாவளி) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (முத்துப் பையன்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஒரு காட்சி சிறு நாடகம்) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் ஐ & ஐஐ 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா 1. ஆக்கம், 2. தீவினை 7. கொய்யாக் கனிகள் (கவிதை நாடகம்) தொகுதி -12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி -13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி - காரியக்காரன் (கடவுள் விஷயத்தில் ஜாக்கிரதை) 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை (செவ்வாயுலக யாத்திரை) 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (விதவைகள் துயர்) 14. திருந்திய ராமாயணம்! (பால காண்டம் - டெலிபோன் படலம்) 15. இதயம் எப்படியிருக்கிறது? (ஏழைகள் சிரிக்கிறார்கள்) 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி (மான்களின் ஒற்றுமை கண்டு அஞ்சி இறந்தது) 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (னுசைநஉவடிச)யின் தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (அவளும் நானும்) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. “வாரி வயலார் வரலாறு” அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி -14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி -15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி -16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி -17 : பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி -18 : பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி -19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி -20 : கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி -22 : கட்டுரை இலக்கியம் - 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி -23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி -24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் (தொகுதி 23இன் தொடர்ச்சி) 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி -25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (நெடுங்கதை) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (சூநபயவiஎந): பிராசசு இந்தியா (ஞசடிஉநளள ஐனேயை) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. *என் முன்னுரை இந்நூலை நான் பல ஆண்டுகளின் முன் எழுதினேன். சில ஆண்டுகளின் முன் அச்சிட எண்ணினேன். அச்சிட்டேன் பல திங்கள் முன். ஒரு திங்கள் ஆயிற்று மேலட்டை போட. மிகவிரைவில் நூல் வேலை முடிந்துவிட்டதல்லவா? ஏன் இப்படி? - நானே என் நூலை வெளியிடவேண்டும். எனக்குரிய அச்சகத்தில்தான் அச்சாக வேண்டும். - இப்படி ஓர் உறுதி. உறுதி சரிதான். அவ்வுறுதியை நிறைவேற்ற அச்சகம் நல்ல முறையில் விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டதா? அதுதான் கிடையாது. மிகச் சிறிது. இந்தப் பதிப்பு மிக மட்டம். என் வாடிக்கைக்காரர் உயர்ந்த பதிப்பைப் பெருவிலை கொடுத்து வாங்க வருந்துகிறார்கள். பணக்காரர் மட்டும் வாங்கினால் போதும் என்றும் நான் நினைப்பதில்லை. இந்நூலின் நடை சிறிது கடினமாகத் தோன்றலாம். படிப்பவர்க்கு - அருகிலிருக்கும் மொழிகளையே அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. சிறிது தொலைவில் குவிந் திருக்கும் அரிய மொழிகளில் சிலவற்றையேனும் புலப்படுத்தத்தான் வேண்டும். என் தோழர் புலவர் சுந்தர-சண்முகனார் இந்நூலைப் படித்தார். படிப்பாரின் இலேசு கருதி முன்னே கதைச் சுருக்கத்தை உரைநடையில் தந்தால் நலமாயிருக்கும் என்றார். நீவிரே செய்க என்றேன். புலவர் எழுதிய கதைச் சுருக்க உரைநடையை முன்னே சேர்த்துள்ளேன். இக்கதையில் இடை நிகழ்ச்சிகள் பலவற்றைக் குறைத்துவிட்டேன். ஆதலால் என் எண்ணப்பதிப்பின் சுருக்கந்தான் இந்த அச்சுப் பதிப்பு. 30.4.1948 - பாரதிதாசன் என்னுரை இரண்டாம் பதிப்பு இது. முன்னைய பதிப்பு இலேசான நிலையில் அமைந்தது; இலேசான விலையில் அமைந்தது. அழகிய உயர்ந்த பதிப்பையே வேண்டுகின்றனர் மக்கள், மக்கள் விருப்பம் என் விருப்பம். இது அழகிய - உயர்ந்த பதிப்பென்றே நான் நினைக்கிறேன்; சாந்தி ஆர்ட் உடையவர், ஓவியப் புலவர் திரு. மாதவன் அவர்கள் தீட்டிய மேலட்டை ஓவியமும், புதுவை திரு. கிருஷ்ண மூர்த்தியவர்கள், திரு. குறள் அவர்கள் ஆகியோர் தீட்டிய உட்புற ஓவியங்களும் என் நூலை மிக உயர்வுபடுத்தி விட்டன. இதன் முதற்கண், இந்நூலின் கதைச்சுருக்கம் அமைந்திருக் கின்றது. அது, திரு.சுந்தரசண்முகம் என்பவர் எழுதியதாகும். கதைச் சுருக்கத்தைப் படித்துப் பின் கவிதைநூலைப் படிப்பது நல்லது. இனி, தமிழ் ஆய்வு இல்லாமலே சினிமா, நாடகம் எழுதுகின்ற இளைஞர்களுக்கு இங்கு ஒன்று சொல்ல வேண்டும். சினிமா, நாடகம் இவற்றிற்கு வேண்டிய கதைகள் பிற நாட்டினிடமிருந்து பார்த்து எழுதப்பட்டவை; அவற்றில் அமைக்கப்படும் நாகரிகமுறை, உடை அனைத்தும் அப்படி; பாட்டின் மெட்டு அப்படி; தமிழகம் தன்னுள்ளத்தையே இந்த வகையில் இழந்துவிட்டதா என்னும்படி இருக்கிறது. மானம் போகிறது! இவைகள் இப்படி என்றால், கதைக்கு அமையும் பேச்சும் பாட்டும் நாடகக் கதை எழுதியவர் அமைத்ததாகத் தெரிவதில்லை. தமிழன், தமிழன் எழுதிய நூலிலிருந்து இரவல் கொள்ளுவதால், எண்ணும் ஆற்றல் இல்லாமல் போய்விடுகிறது. அது எப்படியோ! என் நூலிலிருந்து கருத்தையோ வரிகளையோ எடுப்பதானால் கேட்டுச் செய்யுங்கள். பிறர் எழுதியவைகளை நானே எழுதினேன் என்று சொல்லிக்கொள்வது உடனே வெளுத்துவிடக் கூடியதுதானே! புதுச்சேரி - பாரதிதாசன் 21. 2. 53 கதைச்சுருக்கம் கொன்றை நாடு ஓர் அடிமை நாடு. அந்நாட்டின் உரிமையில் நாட்டங்கொண்ட அந்நாட்டு மறவர் சிலர், ஓரிடத்தில் ஒன்று கூடினர். உரிமை பெறும் முறையைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போழ்து, கொன்றை நாட்டை அடிமைப்படுத்தி ஆண்டு வரும் மாழைநாட்டு மாப்பேரரசனிடமிருந்து ஒரு திருமுகம் வந்தது. பிரித்துப் படித்தனர். ஐந்து நாட் பின்னை நாம் அங்கு வருவோம் வந்து விடுதலை வழங்குவோம் நன்றே” என்று வரையப்பட்டிருந்தது. நற்செய்தி யறிந்த நாட்டு மறவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லை யில்லை. ஆனால், அம்மறவர்க்குத் தலைவனும், ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து நாட்டின் விடுதலைக்குத் தொண்டாற்றுபவனு மாகிய மகிணன் என்பான், விடுதலை என்பது ஒருவன் கொடுக்க வாங்கக் கூடியதன்று; கொடுத்தவன் மீண்டும் பறிக்கலாம்; ஆதலின், ‘வெற்றி நிலத்தில் விளைவதாம் விடுதலை’ என்று பகர்ந்தான். அதுகேட்டு, அவன் காதலியும் கொன்றை நாட்டை முன்னாண்ட மன்னனின் பேர்த்தியுமாகிய கிள்ளை என்பாள் ‘ஆம் ஆம்’ என்றாள். ஆயினும் அங்கிருந்த சிலர், எப்படியாயினும் நாட்டிற்கு முதலில் விடுதலை தேவை, மறுக்க வேண்டாம் என்றனர். அதுகேட்ட கிள்ளையின் முகத்தில் அச்சம் அரும்பிற்று. உடனே, மறுக்கவில்லை என்றான் மகிணன், பின்னரே கிள்ளையின் முகத்தாமரை மலர்ந்தது. இந்தச் செய்தியை அந்நாட்டுப் பொதுமக்களுக்கு முரசறைந்து தெரிவித்தான் வள்ளுவன். மக்கள் மட்டற்ற மகிழ்ச்சியினராய் ஆடினர்; பாடினர்; ஓடினர்; ஒருவர்க்கொருவர் உவப்புடன் உரைத்துக் கொண்டனர். நிற்க, மகிணனின் தொண்டைப் போற்றிப் புகழ்ந்தவளாய் அவனை அடையும் நெறியைப் பற்றித் தோழியிடம் உரையாடிக் கொண்டிருந்தாள் கிள்ளை. அப்போது அன்னை அழைக்கவும் காதல் வருத்தவும் எழுந்து சென்றாள். முன் கூட்டி அறிவித்திருந்தபடி, மாழை நாட்டு மாப்பேரரசன் பல்வகைப் படையுடன் கொன்றைநாடு புக்கான். மக்கள் அனைவரும் ஊரை அணி செய்து, அன்புடனும், ஆவலுடனும் வரவேற்றனர். திருவுலாப் போந்த மன்னன், ஒரு பொது மன்றில் உற்றிருந்தனன். அரசனை அனைவரும் சூழ்ந்தனர். மகிணன் அரசனை நோக்கிக், கொன்றை நாட்டின் பழம் பெருமையினையும், அடிமைப்பட்டதால் அஃதடைந்த சீர்கேட்டினையும், இப்போதைய மக்களின் எழுச்சி யினையும், விழிப்பினையும், நாட்டின் தேவையினையும் நன்கு விளக்கினான். விடுதலை நல்க விரும்பியதைப் பாராட்டி நன்றியும் செலுத்தினான். கேட்ட மன்னன் மகிழ்ந்து, ‘கொன்றை நாட்டினரே! அடுத்த கோழிநாட்டான் கொடியவன். அவனை வெல்ல நீங்கள் எனக்கு உதவவேண்டும்’ என்றதோர் உடன்படிக்கையினைப் பெற்றுக் கொண்டான். விரைவில் விடுதலைப்பட்டயம் எழுதியளிப்ப தாகவும் மொழிந்தான். மறுநாள் மன்னன் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, விடுதலைப் பட்டயம் எழுதுவதற்காக அமைச்சனை எதிர்நோக்கி மாடியில் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது, அண்மையிலுள்ள ஒரு குளத்தில் தோழிமாருடன் நீராடிக் கொண்டிருந்த கிள்ளையைக் கண்டு உள்ளம் இழந்தான். பின்னர் அங்குவந்த தன் அமைச்சனிடம், கிள்ளை தன் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டதைக் கூறி, அவள் ஆரென்று கேட்டான். ‘அவள் மகிணன் காதலி’ எனக் கேள்விப் பட்டதாக அமைச்சன் மொழிந்தான். கேட்ட மன்னன், ‘அவளை நான் அடையும் படிச் செய்வாயாக,’ எனச் செப்பி, ‘நாளை விடுதலை நல்குவேன்’ என்று நாட்டினர்க்கு அறிவுறுத்திவிட்டான். அரசனின் ஆணைதாங்கிக் கொன்றைநாட்டை ஆண்டு வரும் ஒள்ளியோன் என்பான், கிள்ளையின் தமையனாகிய வாட்பொறையை நோக்கிக், ‘கிள்ளை மன்னனை மறுக்காது மணக்கும் வண்ணம் ஏற்பாடு செய்வாயாக’ என்று வற்புறுத்தியனுப்பினான். கொன்றை நாட்டை முன்னாண்ட அரசனின் அமைச்சன் பேரனாகிய தங்கவேல் என்பவனிடம், நாட்டின் விடுதலைக்குப் பட்ட பாட்டினைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தான் மகிணன். ‘இனிக் கிள்ளையே அரசி’யென்றான் தங்கவேல். ‘அனைவரும் ஒப்ப வேண்டுமே’ என்றான் மகிணன். இப்படி உரையாடிய பின்னர் தங்கவேல் சென்றான். தனித்துக் கிள்ளையை எண்ணி உருகிக் கொண்டிருந்த மகிணனை அமைச்சன் அடைந்தான். ‘விடுதலைப் பட்டயம் வெளியாயிற்றா?’ என்றான் மகிணன். அமைச்சன், மன்னனின் காதலை உணர்த்தி, அதற்குத் தடைசெய்யவேண்டாம் என்றும் மகிணனைக் கேட்டுக் கொண்டான். அதற்கு மகிணன் வருந்தித், தன் பெற்றோரின் எளிமை யினையும், தான் நாட்டிற்குத் தொண்டாற்ற முற்பட்ட வரலாற்றினையும், கிள்ளையின் உள்ளத்தில் குடிபுகுந்த திறத்தினை யும் கல்லுங்கரையு மாறு உணர்த்தினான். உணர்ந்த அமைச்சன் ஒன்றும் தோன்றாதவ னாய்ச் சென்றான். வாட்பொறை, தன் தங்கை கிள்ளையை அடைந்து ‘மன்னனை மணந்தால் வருவது விடுதலை. மறுத்தால் வருவது கெடுதலையாகும்’ என்று அறிவுறுத்தினான். ஆனால், கிள்ளை மறுத்து வறிதே அனுப்பினாள் வாட்பொறையை. அமைச்சனை அணுகி, எப்போது விடுதலை என்றான் தங்கவேல். அரசனின் கருத்தை அறிவித்தான் அமைச்சன். கிள்ளை அங்ஙனமே செய்து நாட்டைக் காக்கலாமே என்றான் தங்கவேல். ‘இருவரின் காதலில் இன்னொருவர் தலையிடல் சரியல்ல’ என்று புகன்று சென்றான் அமைச்சன். மக்கள் உரிமைக்காக ஆர்ப்பரித்தனர். அவர்கட்கு ஆறுதல் கூறி அனுப்பிவிட்டு, அரசனையடைந்தான் தங்கவேல். அரசன் கிள்ளையின் கருத்தை வினவினான். தாங்கள் நேரே செல்லின் கிள்ளை வயப்படுவாள் என்றான் தங்கவேல். மங்கையை நோக்கி மன்னன் நடந்தான். தன் கருத்துரைத்துக் கசிந்தான். மங்கையின் மனமோ மாறவேயில்லை. ஏமாந்த அரசன் ஏகினான் வெளியே. பின்னர் அரசன் ஒள்ளியோனிடத்தில், அமைச்சன் தனக்கு ஒத்துவராததை உணர்த்தி, நீயாவது ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டான். அப்போது, உரிமைக்காக ஆர்ப்பரித்த (வாட் பொறையின் மாமன் மகனாகிய) தாரோன் முதலிய அனைவரையும் கடிந்து பேசி அனுப்பினான் ஒள்ளியோன். பின்பு, கொன்றைநாட்டு மக்கள்மேல் குற்றம் பல சுமத்தி, அதன் வாயிலாக மகிணன் முதலிய தலைவர்களைச் சிறையிலிட வேண்டும் என்று மன்னனும் ஒள்ளியோனும் சூழ்ச்சி செய்தனர். அதன்படி மன்னன் கிழவனாகவும், ஒள்ளியோன் கிழவியாகவும் உருக்கொண்டு ஊர் சுற்றினர். மக்களின் சீர்திருத்தம், முன்னேற்றம் முதலியவற்றைக் கண்டு ஒவ்வொன்றையும் குற்றமெனக் குறித்தனர். மன்னன் கட்டளைப்படி மகிணன், வாட்பொறை, தாரோன் முதலியோர் சிறைப்பட்டனர். ஒருவரும் வெளியில் உலவாதபடி மக்களும் துன்புறுத்தப்பட்டனர். கிள்ளையை வயப்படுத்துமாறு தங்கவேல் அனுப்பப்பட்டான். கிள்ளையை யடைந்து கெஞ்சினான் தங்கவேல். கிள்ளையோ, தங்கவேல் என்னும் தமிழனைக் காண்கிலேன் இங்கொரு கோழையை யான்காண் கின்றேன்” என்று இடித்துரைத்து அனுப்பிவிட்டாள் அவனை. மன்னன் மேலும் சிலரைச் சிறையிட்டான். மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறும், கடைகளையும் தொழிற்சாலைகளையும் திறக்காதவாறும் படைத் தலைவனைக் கொண்டு செய்தான். தங்கவேல் பல கெஞ்சியும் பயனில்லை. சிறையிலுள்ள தாரோன், மகிணன் முதலியோர் நாட்டை யெண்ணி நைந்தனர். மக்களோ, இருந்த உணவை உண்டு, மேலும் உண்ண உணவின்றிக் ‘கோ’வென்று கூக்குரலிட்டு அழுதுகொண்டு கிடந்தனர். ஒள்ளியோன் மன்னனை நோக்கி, விடிவதற்குள் பசியால் மக்கள் மடிவர்; கிள்ளையின் நிலையும் ஐயமே என்றான். பின்பு, மகிணன் முதலியோரையும் மக்களையும் வெளியில் விடுவித்துக், கிள்ளைபாற் சென்று நிலைமையை அறிவிக்கச் செய்தான் அரசன். அனைவரும் கிள்ளையை அடைந்தனர். மக்கள் பசியாற்றாது குய்யோ முறையோ என்று கூவி, “ மங்கை கிள்ளை மன்னனை மணக்க மகிணன் இதனை மறுத்தல் வேண்டாம்” என்று அறிவுறுத்தினர். மகிணனும் கிள்ளையும் செய்வதறியாது திகைத்தனர். மக்கட்குப் போதிய உணவளிக்கப்பட்டது. பசியாறிய மக்களை நோக்கி, நாளை தக்க ஏற்பாடு செய்யப்படும் எனச்செப்பி வழியனுப்பினான் வாட்பொறை. மன்னனிடம் மக்கள் நிலையை உணர்த்தினான் வாட்பொறை. மன்னனோ கிள்ளையைப் பற்றிய பழைய பாட்டையே பாடினான். கிள்ளையோ, பஞ்சணை மீது படுத்துப் புரண்டு, “ நாட்டுக் குரிமை நன்றா? என்னுயிர் வாட்டும் காதற்கு வகைசெயல் நன்றா? என்றெண்ணிக் கிடந்தாள். தன் கருத்தை வினவிய தாரோனிடம், ‘மன்னனை மணப்பதினும் மாய்வதேமேல்’ என்ற அவளும் பழைய பாட்டையே பாடினாள். அன்றிரவு பூங்காவில் புலம்பி உலாவிய மகிணனை அமைச்சன் அடைந்தான். தங்கவேல் அனுப்பியதாக ஒரு கடிதத்தைத் தந்தான். அதில், ‘மகிணரே! மன்னனின் மனத்தை மாற்றி மக்கட்கு விடுதலை வாங்கும் வழி உங்கையால் கிள்ளையின் உயிரைப் போக்குவதே. யானும் என் வாழ்வை முடித்தவனாவேன்’ என்று எழுதப்பட்டிருந்தது. படித்த மகிணன் அமைச்சனிடம் வாளொன்று பெற்றுக் கிள்ளையை நோக்கி நடந்தான். மன்னனோ, நாமே சென்று வழங்கிக் கெஞ்சினால் கிள்ளை வயப்படுவாள் என்றெண்ணி, அமைச்சனைப்போல் உருக்கொண்டு விடுதலைப்பட்டயத்துடன் அவள் துயிலிடம் அடைந்தான். மகிணனுக்கோ மங்கையைக் கொல்ல மனம் வரவில்லை. ஆயினும் கடமையை முடிக்கக் கைதூக்கினான். கையில் வலுவில்லை. வாள் பொத்தென்று விழுந்தது கீழே. கிள்ளை விழித்துத் திடுக்கிட்டாள். மகிணன் வந்த வரலாற்றை உணர்த்தி, மீண்டும் வெட்டுவதற்குத் தலை குனியச் செய்தான்; மீண்டும் வாள் கீழேயே விழுந்தது. கிள்ளையோ, தானே வாளை வாங்கி வெட்டிக் கொள்ளத் தொடங்கினாள். மறுத்தான் மகிணன். மறித்து மீண்டும் தொடங்கினான். அப்போது மறைந்து நின்ற மன்னன் கிள்ளையைத் தடுத்தான். காதலர் இருவரின் கடமையை வியந்து புகழ்ந்தான். விடுதலைப் பட்டயத்தையும் வழங்கினான். ‘நும் விருப்பம் போற் செய்வீர்’ என்று வாழ்த்தினான். மகிணனும் கிள்ளையும் மன்னனை வணங்கி நன்றி செலுத்தினர். பின்னர் மூவரும், தங்கவேலின் பிரிவுக்கு வருந்தித் தத்தம் இடம் சார்ந்தனர். மறுநாள் காலை மக்கள் விடுதலை நோக்கி நின்றனர். மன்னன் இரவு நடந்த நிகழ்ச்சிகளை மக்கட்குரைத்து, “நாங்கள் நல்கிய தல்ல அவ்விடுதலை நீங்களே பெற்றீர் என்று நிகழ்த்தி” மகிணன் கிள்ளை முதலியோரிடம் நாட்டை ஒப்படைத்துத் தன்னாடு சென்றான். மக்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர். பின்பு, மகிணன் கிள்ளையுடன் பெற்றோரை அடைந்தான். நிகழ்ந்தவை உணர்ந்த பெற்றோர் மணமக்களை வாழ்த்தினர். தந்தை மைந்தனை நோக்கி. நம் நாட்டில் இப்போது பல வசதிகள் இல்லையே என்றார். அதற்கு மைந்தன், ‘இல்லையென்பது இனியில்லை. ஒவ்வொரு வர்க்கும் ஒரு வீடு, ஒரு நிலம், ஓர் ஏர் மாடுகள், ஒரு தொழில் அளிக்கப்படும்; ‘அனைவரும் ஒரு நிகர்’ என்றான். கேட்ட தாய், ‘மைந்தனே! நானும் அவற்றைப் பெற வேண்டுமே! சென்று பெற்றுவர ஒரு நல்லுடை இல்லையே!’ என்று புகன்றாள். எப்படி நடுநிலை! எனவே, இத்தகைய விடுதலைக்கும் நல்லாட்சிக்கும் காரணம், காதலர்களின் காதலா? கடமையா? - எண்ணிப் பாருங்கள்! - சுந்தரசண்முகனார் கதை உறுப்பினர் மாழைப் பேரரசு1 : மாழை நாட்டு மன்னன் ஒள்ளியோன் : கொன்றை நாட்டில் இருந்தரசாள்வோன் மகிணன் : கொன்றை நாட்டன்பர் தலைவன் வாட்பொறை : கொன்றை நாட்டை முன் ஆண்ட மன்னனின் பேரன் தாரோன் : வாட்பொறையின் மாமன் மகன் தங்கவேல் : முன் ஆண்ட மன்னரின் அமைச்சர் பேரன் கிள்ளை : வாட்பொறையின் தங்கை; மகிணனின் மெய்க்காதலி ஏனையர்2 : பொதுமக்களும், அரசவை உறுப்பினர்களும் இயல் - 1 (“ஐந்துநாட் பின்னைநாம் அங்கு வருவோம் வந்து விடுதலை வழங்குவோம் நன்றே”) *இடம் : கொன்றை நாட்டின் ஒருபுறத்து வெளி *உறுப்பினர் : கிள்ளை, மகிணன் முதலியவர் நாட்டினை முன்னின்று நடத்தும் மறவர், கூட்டம் கூடினர்; “அன்று நாட்டுக் காவன என்ன” என்று தம்மில் எண்ணி இருந்தனர். அப்போது, “மாழை நாட்டின் மாப்பே ரரசன் தந்த திருமுகம் இந்தா” என்று தந்தான் வந்தொரு தலைப்பாகைக் காரன். தலைவனின் இருகை தாங்கின அதனை. படித்தான்: “கொன்றை நாட்டின் தலைவர்க்கு மாழை நாட்டின் மாப்பே ரரசன் இயம்புதல் என்னெனில், ஐந்துநாட் பின்னை நாம் அங்கு வருவோம் வந்து விடுதலை வழங்குவோம் நன்றே.” என்றது கேட்டு, மறவர் மகிழ்ந்தனர்; மலைத்தோள் விம்மினர். “இறைவனை வாழ்த்துவோம்” என்றனர் சில்லோர். “நாட்டுக் குழைத்தோம் நற்பயன் கண்டோம் ஆட்பட்டோம் எனும் அல்லல் இல்லை” என்றான் ஒருவன். எழுந்து விழுந்து சிரித்தான் ஒருவன். செங்கை கொட்டிஆர்ப் பரித்தான் ஒருவன். பாடினான் ஒருவன். அவர்களில் ஒருத்தி அறிஞன் எழுதிய ஓவியம் போன்றாள்; ஒன்றும் உரையாமல் ஆவிநேர் தலைவன் அறைவது கேட்கும் விருப்பால் சும்மா இருப்பா ளாயினாள். தலைவன் சாற்றினான்: “தோழமை உள்ளீர் தோழமை உள்ளீர் மாழை நாட்டின் மாப்பே ரரசன் உரிமை தருவதாய் உரைத்தான்; தருவதோர் பொருளோ உரிமை? தருவதோர் பொருளெனில், மீண்டும் பறிப்பதோர் பருப்பொருள் அதுவே யன்றோ? வென்ற தோளோடு, மீண்டும்நம் தோள்எனும் குன்று, சாடிய குருதி தோய்ந்த வெற்றி நிலத்தில் விளைவதாம் விடுதலை. மற்றது கெடுதலை மறவர் மாட்சிக்கே.” இது கேட்டுக் கிள்ளை என்னும் அவ் அழகியோள் “ஆம் ஆம்” என்றாள். ஆயினும், பிறர், பெரு மூச்செறிந்து பேச லுற்றார்: ஒருவன், “தலைவரே, ஒன்று கேட்பீர். வருவது வருக; மறுத்தல் வேண்டா. ஆட்சிநாம் அடைவோம்; அதன்பின், நாட்டுக் காவன நன்று முடிப்போம்!” என்றான். “மாழை நாட்டு மக்கள், இந்த ஏழை நாட்டின் இருப்பை யெல்லாம் குந்தித் தின்று கொழுத்திருக் கின்றனர். அந்தமிழ் நாட்டுக் காவன செய்யப் பொருளும் போத வில்லை” என்றுமற் றொருவன் இயம்பினான். அங்கி ருந் தஅவ் வழகின் பிழம்பு, தங்கப் பாவை, தையல்மின் னிதழில் அச்சம் அரும்பிற்று; “மறுக்க வில்லை மறுக்க வில்லை;” என்று தலைவன் இயம்பிய அளவில் அஞ்சிய இதழ்கள் ஆங்கே கொஞ்சின, “வெல்க கொன்றைநா” டென்றே. இயல் - 2 (“பொதுத்திருமன்று போந்திடு கின்றான் புதுக்குக நகரைப் பொன்புதுக்கு தல்போல்”) இடம் : கொன்றை நாட்டின் தெருக்கள் உறுப்பினர் : முரசறைவோன், பொதுமக்கள் வானேறும் மீசை வள்ளுவன், யானைமேல் தானே றிக்குறுந் தடியால் இடியென முழக்கிய பெரியதோர் முரசொலி, மக்களை அழைத்தது; செவியில் ஆவல் வார்த்தது. வள்ளுவன் சொன்னான்; “தெள்ளுதமிழ்க் கொன்றைத் திருநா டுள்ளீர், மாழை நாட்டின் மன்னர் மன்னன் வாழநாம், விடுதலை வழங்கும் நோக்கோடு பொதுத்திரு மன்று போந்திடு கின்றான் புதுக்குக நகரைப் பொன்புதுக் குதல்போல். தோளை இப் பணியில் தோய்ப்பீர் நன்றே நாளை விடியலில் நடக்கும் இச்சிறப்பே” என்னலும், மக்கள் மகிழ்ந்தார் வரையறை யிலாது! “தக்கது தக்கது தக்க” தென்றார் சிலர்; ஒலலென ஒலித்தனர் சில்லோர்; பாடினர் சில்லோர் பழம்பெரு நாட்டினை! ஒருவன் தன்உயிர் ஒப்பான் வாழும் தெருநோக்கி ஓடிச் செப்பினான் மகிழ்ச்சியை! மரத்தில் ஏறி மகிழ்ச்சியால் குதித்துச் சிரித்தான் கால்வலி தெரியான் ஒருவன். இப்படி “ஒன்றுவை” என்றான் ஒருசேய்; அப்பாவை முத்தம் அளியா திருந்தாள். “நமக்கு விடுதலை நல்க அரசன் வருகின்றா னேதெரி வையே!” என்னலும், இருபது முத்தம் எண்ணா தளித்தாள். பல்லிலாக் கிழவி கல்லுரல் தன்னில் மெல்லிலை காயினை மெல்ல இடிக்கையில் விடுதலைச் செய்தி விளம்புதல் கேட்டதால் தடதட என்றே இடிபட் டதுகல். எடுத்தவாய் கொழகொழ என்னும்; அதன்பொருள் அயலான் நம்மைப் படுத்தி யபாடு பறந்த தென்பதாம். கூரைவேய்ந் திருந்த கூலியாள் அங்கிருந்து - ஆரையோ விரல்நொடித் தழைத்துப் “பார் இனி ஒருபணத்துக் கொருகலம் அரிசி தருவார்” என்று சாற்றி, முன்னிலும் விரைவாய்த் தன்பணி ஆற்றினான். பெரியதோர் மகிழ்ச்சியைத் திருநாடு மணந்ததே. இயல் - 3 (“புல்லெனப் போர்த்தஎன் புறவுடல் காண்பவர் அல்லலிற் புதைந்தஎன் அகத்தை அறியார்”) இடம் : கொன்றை நாட்டின் முன்னாள் அரண்மனை உறுப்பினர் : கிள்ளை தோழி கொதிக்கும் நெஞ்சையும் குளிர்விக்கும் மாலை மறைந்தது! வந்தது மாய்க்கும் இரவு. புல்லெனப் போர்த்தஎன் புறவுடல் காண்பவர் அல்லலிற் புதைந்தஎன் அகத்தை அறிவரோ!” கிள்ளைஇவ் வாறு கிளத்தினாள். தோழி நடுங்கிச் சொன்னாள்: “என்கடன் யாதோ? என்கடன் யாதோ? பொன்கடைந் தெடுத்த புத்தொளிப் பாவையே, உன்நெஞ்சும், இளைத்த உடற்கு மருந்தும், பின்னாள் விரும்புமுன் பெருவாழ்வின் நோக்கமும், தன்னுளம் நாட்டுக்குத் தந்த தலைவன்பால் சொல் எனில் சொல்வேன்,” என்னலும், “ஏசினேன் தோழி யான்உனை, மறந்துவிடு, பிறந்தார் எல்லாம் பிழைசெயல் உண்டு. பொய்கைதன் நீரால் புன்செய் காத்தல்போல் ஐயன் உள்ளத் தன்பெலாம் நாட்டுக் காக்கினான் தோழி, ஆம் ஆம். ஆயினும் என் செய்வேன்? உன்னை ஒன்று கேட்பேன்: நினைவும், தொண்டும் நிழலும் உடலுமாய்ப் பிழையாது பிறழாது பெருநாடு காப்பவன் ஆயினும் ஆகுக. மோப்பதும் பார்ப்பதும் முடுகலும் குட்டியைக் காப்பதற் கென்னும் கருவரிப் பூனைபோல் கொன்றை நாட்டின் குடிகட் கென்றே என்றும் உழைப்பான் இம்மியும் தாழான் ஆயினும் ஆகுக. கைவிரைந் தில்லம் காப்பவள், தெருவில் ஐயம் என்றால் அளிக்க அணுகல் போல், என்நிலைக் கிரங்கி என்பாற் சிறிது பொழுது, சிறிது பேசி நிறைய என் நெஞ்சில் நறவு பெய்து போனால் என்ன? புகல்வாய்” என்றாள். “ உன்னரும் முகத்தில் ஒளியும் குறைந்ததே” என்றாள் தோழி. “ திங்கள் ஒளிபெறல் செழுங்கதிர் வரவால்” என்றாள் கிள்ளை. அதே நேரம், கள்ளிருந்த மொழியாளின், அன்னை உள்ளிருந் தழைக்க, ஓடினாள் பறந்தே. இயல் - 4 (“ பெருமக்கள் கூட்டம் பெருவானம் போன்றது திருமிக்கான் முகம் செழுநிலவு போன்றது.”) இடம் : கொன்றை நாட்டின் தெருக்கள் உறுப்பினர் : மாழைப் பேரரசு, மக்கள் “புலர்ந்தது புதுநாள் புதுநாள்,” என்றனர். மலர்ந்தன முகங்கள், மலர்ந்தன உள்ளம், எங்கணும் ஆர்வம், எங்கணும் எழுச்சி, கொன்றை நாடு கொள்ளா மகிழ்ச்சியில் அன்று குளித்தது. காற்சி லம்பு கைவளை குலுங்க, மேற்பொன் னாடை விண்ணில் மிதப்ப, இல்லம் புதுக்கினர் மெல்லியர்; அழகின் செல்வம் விளைத்துச் சிறப்புச் செய்தனர். வாழையும் தெங்கும், வளர்தரு கமுகும், தாழைப் பெருங்குலை தாங்க வரிசையாய் அடர்ந்தன. வானை அளாவும் பந்தர்கள் தொடர்ந்தன, இடைவெளி தோன்றா வண்ணம். மணியுடை மணியிழை மக்கள் அணிந்தே அணிபெறத் தெரு அனைத்தும் நின்றனர். வீட்டு வாயிலில் வேந்தன் வரவெண்ணிக் காட்டி மறைவன காதல்மின் னார்முகம். தெருவில் அமைந்த திருமன்று தோறும் உருவில் அமைந்த ஒண்டொடி மாதர் ஆடினர்; பாடினர். நீடிசைக் கருவிகள் நிறைத்தன அமுது. முரசம் அதிர்த்தன. “அரசன் வந்தான், அரசன் வந்தான்” என்றசொல் கடலென இரைதல் ஆனது. தேன்நிறை மலர்க்காடு செலும்வண் டுகள்போல் யானை வரும்வழி ஏகின விழிகள். எள்ளும் விழாவணம் இருந்த கூட்டத்தில் குள்ளன் ஒருவன் குதித்துக் குதித்து மன்னன் ஆங்கே வருவது பார்த்தான். கமழ்பொடி இறைத்தன கைகள்; வாயெலாம் தமிழ் மலர்ந்தது “தமிழகம் வாழ்”கென. நிரல்பட நின்ற நெடுங்குன் றங்கள் வரல்என வந்தது மாக்கா லாட்படை; காலடி போல்இசைக் கருவிகள் முழங்கின. சாலடி நீலத் தலைப்பா கையினர், வாளொடு சுமந்து வருங்குதி ரைப்படை தாளத் திற்குத் தாள்ஒத்து வந்தது. கையலைத்து யானைக் கடற்படை வந்தது. வையத்தில் காலும் வானத்தில் முடியுமாய்த் தேர்ப்படை வந்தது. சிம்புள் வடிவின் அம்பாரி மீதில் செம்பரிதி போலத் திருமாழைப் பேரரசு வீற்றிருக்க, விரிகருங் கடல்போல் தோற்றஞ்செய் யானை சுமந்து வந்தது. பெருமக்கள் கூட்டம் பெருவானம் போன்றது. திருமிக் கான்முகம் செழுநிலவு போன்றது. செவியெலாம் இன்னிசை, செழுமணம் மூக்கெலாம் தவழ்ந்தன. திருவுலாப் போந்த மன்னன் ஒருபொது மன்றில் உற்றிருந் தனனே. இயல் - 5 (“பாலின் நுரைநிகர் பருத்தி உண்டெனினும் மேலுக்கோர் கந்தை மிஞ்ச வில்லை.”) இடம் : கொன்றையில் ஊர்ப் பொதுமன்று உறுப்பினர் : மாழைப் பேரரசு, கொன்றைத் தலைவர்கள், மக்கள் ஊர்ப்பொது மன்றில் மாப்பே ரரசன் சீர்பெரு மேடையிற் சென்றமர்ந்தான். அமைச்சன் அருகில் இருந்தான். கொற்றவன் பேரால் கொன்றை நாட்டில் உற்றர சாளும் ஒள்ளியோன் இருந்தான். நாட்டை முன்னின்று நடத்து கின்ற வாட்பொறை இருந்தான், மகிணன் இருந்தான், தாரோன் இருந்தான், தங்கவேல் இருந்தான். தலைவன் மகிணன் எழுந்தான். பொலந்தார் மன்னற்கு நலம்பல புரிந்து தலை வணங்கிச் சாற்றுவா னானான்: “ஆழிசூழ் வையத் தழியாப் பெரும்புகழ் மாழை நாட்டு மாப்பே ரரசே! வாழிய! கொன்றையை வெற்றி கொண்ட ஏந்தலே! நன்றுநும் செங்கோல், நாளும் வாழிய! பன்னா ளாக இந்நாட்டு மக்கள் நன்னிலை நோக்கி நடப்பார் ஆயினர்; செந்தமிழ் என்னும் தேனாறு பாயாத உள்ளம் ஒன்றும் இல்லை. கல்வியைக் கண்ணும் கருத்துமாய்க் கற்றனர். அதனால், இந்நாட்டில் பிறரால் இறக்குமதி பெற்ற சாதி, நினைப்பிலும் தங்கா தகன்றது. பெண்கள் விடுதலை பெற்றனர். கைம்மை இல்லை. சமயப் பிணக்கெனும் சழக்கும் இல்லை. ஆனால், அன்புடை அரசே, நிலத்தின் வருவாய் நிறைய உண்டெனினும் உலைக்கரிசி மக்கள் உணவுக்குப் போதா. பாலின் நுரைநிகர் பருத்திஉண் டெனினும், மேலுக்கோர் கந்தை மிஞ்ச வில்லை, தேக்கும் பனையும் தென்னையும் இருக்கையில், மூக்குமுனை தரையில் முட்டக் குனிந்து புகும் குடிசைகள் நகும்படி உள்ளன. ஆதலின், பிணிகள் பெருகின. மன்ன! நின் பேரால் கொன்றை நாட்டில் நன்முறை ஆட்சி நடத்தும் ஒள்ளியோன் இந்நிலை உம்பால் இயம்பிய தாலே விடுதலை அருள விரும்பினீர்; கெடுதலை நீக்கிடக் கேட்டோம் யாமுமே!” இயல் - 6 (“விடுதலைப் பட்டயம் விரைவில் எழுதி முடிப்பதாய் மன்னன் மொழிந்தான்”) இடம் : கொன்றையில் ஊர்ப் பொதுமன்று உறுப்பினர் : மாழைப் பேரரசு, கொன்றைத் தலைவர்கள், மக்கள் “வாழிய! கொன்றை நாட்டு மக்களே! அந்தக் கோழி நாட்டான் கொடியவன் கண்டீர். அன்னோன் இந் நாட்டின் அருகில் வாழ்கின்றான்; என்நாட் டின்மேல் எரிவுகொண் டுள்ளான்; படை திரட்டுகின்றான். மாழை நாட்டை மாய்த்திட எண்ணினான். ஆதலின், மாழை நாடும் மாப்பெருங் கொன்றையும் என்றும் போரில் ஒத்திருத்தல் வேண்டும் அப்படி நமக்கும் ஓர்ஒப்பந்தம் தேவை. எழுதுக இன்றே; இடுக கைச்சாத்தே” என்றான் மன்னன். இதுகேட் டனைவரும், தப்பா தொப்பந்தம் தந்து முடித்தனர். விடுதலைப் பட்டயம் விரைவில் எழுதி முடிப்பதாய் மன்னன் மொழிந்தான். *மொழிந்தவன் மன்றின் உயர்ந்த ‘மேல் மாடியில்’ அன்றிரவு துயின்றான் அக மகிழ்ந்தே. இயல் - 7 (“தெள்ளுநீர் ஆடுவார்க் கண்டான். கிள்ளையைக் கண்டான் உள்ளம் இழந்தானே”) இடம் : மாடி, நிலா முற்றம் உறுப்பினர் : மாழைப் பேரரசு, கிள்ளை மாடியில் துயின்ற மன்னன் எழுந்தான். பாடி வாழ்த்திய பலரையும் அனுப்பிக் காலைக் கடனைக் கடிது முடித்தான். பாலில் நனைந்த பண்ணியம் அருந்தி ஏட்டை எடுத்தான்; எழுதுகோல் தொட்டான்; நாட்டுக்கு விடுதலை நல்குதல் எழுத எச்சொல் புணர்ப்ப தென்று நினைத்தான். “ அச்சொல் அமைக்க அமைச்சன் அறிவான்” என்றான், எழுந்தான் இளங்கதிர் எழுந்து பொன்ஒளி கொழிக்கும் புதுமை காண மாடிநிலா முற்றம் வந்து லாவினான். பாடின பறவைகள், பருகினான் செவியால். மலர்மணம் தூக்கி வந்தது காற்று. நெடுவிழி போக்கினான் நேரில்ஓர் சோலை அழகு பொழியக் கண்டான். கடிமலர்ச் சோலையின் நடுவில் ஒருகுளம். அக்குளம் நிறைய அழகிய தாமரை. அம்மலர் பறிக்கும் கைம்மலர் பலப்பல. சேலொடு சேலாய்த் திகழ்விழி பலப்பல. மேலுடை நனைய மின்னுடல் பலப்பல. தெள்ளுநீர் ஆடுவார்க் கண்டான். கிள்ளையைக் கண்டான் உள்ளம் இழந்தானே. இயல் - 8 (“செம்மாதுளை உடைந்ததெனச் செவ்விதழ் மின்னிக் கொடிமுல்லையெனக் குலுங்கச் சிரித்தாள்.”) இடம் : மாடி, நிலா முற்றம், சோலை உறுப்பினர் : மாழைப் பேரரசு, நீராடியோர், மக்கள், அமைச்சன் விண்மீன் எனப்பலர் விளங்க, நிலாமுகப் பெண்ணாளைக் கண்ட பேரரசு வியந்து கொடுத்ததை வாங்காக் கொடையா ளர்போல் விடுத்த விழியை மீட்கா திருந்தான். நீரா டியபின் நீள்விழி மடந்தையர், நனைஉடை நீக்கி நல்லுடை உடுத்தனர் கனியிதழ், கண்ணாடிக் கன்னஞ் சிவக்கச் சிரித்தபடி சென்றார்; வியர்த்தபடி நின்றான்! மன்னனின் பின்புறமாக அமைச்சன் வந்தே “அரசே!” என்றான் இமைக்காது பார்த்தவன் இப்புறம் திரும்பி, “உள்ளம் கொள்ளை கொண்டு பிள்ளையன் னம்போல் தெள்ளுநீர் ஆடிச் செல்கின்றாள் அதோ, அவள்யார்? அமைச்சனே! அவள் யார்?” என்றான். “தவழ்முகில் போலும் தாழ்குழலுடன் அதோ இடதுகை முடக்கி இடைமேல் ஊன்றித் தடமலர்க் கையசைத்துத் தனி ஒருவஞ்சிக் கொடிஇடை துவளச் சிலம்பு கொஞ்ச நடையழகு காட்டும் நாடக மயிலா? அவள்தான் மகிணன் உளத்தில் வாழும் கிள்ளை, அவனும் அவள்பால் அன்பு மிக்கவன். நேற்று மாலை, நேரிழை, தென்றற் காற்றினில் உலவுதல் கண்டு யார்என ஒள்ளி யோனை உவப்புடன் கேட்டேன். வெள்ளையாய் அப்படி விளம்பினான் என்னிடம் விண்ணோ நிலவால் விளக்கம் அடைந்தது. தண்கடல் முத்தால் தனிச்சிறப் புற்றது. தரையோ தானறிந்தது பிறர்க்குச் சாற்றும் அருமை மக்களால் பெருமை பெற்றது. மாண்புறு மக்களோ மங்கையர் தம்மால் தள்ளொணாப் பெருமை சார்ந்தனர் - மங்கைமார் கிள்ளை ஒருத்தியால் கெடாதசீர் பெற்றனர்; யான்பெற்ற முதுமையும் இவள்போல் ஒருமகவை ஏன்பெறா திருந்தேன் என்றவா வுற்றது!” “பழிஒன்று சொல்லப் படாத மேனி அழகால் வையத் தாட்சி நடாத்தினாள்” என்றான் அமைச்சன். இவ்வுரை வேந்தற்கு நின்றெரி தீயில் நெய்யா யிற்று. மன்னன் சொன்னான்: “அன்புடை அன்னை என்னை வளர்க்கையில் பொன்னுடை, மணி இழை, புதுச்சுவைப் பண்டம் இவற்றால் நான்மிக இன்பம் பெற்றதாய் நவின்றாள். பின்னர் நான் அரசு பெற்றே இந்நிலம் வாழ்த்த இருக்கையில் நான்மிக நன்நிலை உற்றதாய் நவின்றனர். பகைவரை வென்ற போதில் என் வெற்றியை வியந்தனர். அன்றுநான் மணந்த அழகிலா ஒருத்தியால் இன்பம் பெற்றதாய் எண்ணினேன். இதுவரை துன்பம் உற்றேன்இத் தோகையைப் பெறாததால், நெஞ்சு நெருப்பாயிற்று நேரில் கண்டதும்; வஞ்சி எனக்கெனில் வாழ்வெனக் குண்டு; மணமா காத மங்கை: மண்ணில்நான் பிணமாகு முன்பு பெறத்தக்க பேறு! சற்றுமுன் என்கண் பெற்றது கேட்பாய், சும்மா, கைப்புறம் தோழி தொட்டாள், அம்மங்கை, செம்மாதுளை உடைந்ததெனச் செவ்விதழ் மின்னிக் கொடிமுல் லையெனக் குலுங்கச் சிரித்தாள். வைய விளக்கை, என் வாழ்வின் பத்தைநான் கையோடு கொண்டுபோய் உய்யு மாறு “செய்க அமைச்சனே!” என்று செப்பினான். அப்போது, மன்றினை நோக்கி மக்கள் மொய்த்தனர் இன்றுதான் விடுதலை என்று கூவினர். மாடியில் இருந்த மன்னன் உணர்ந்தான். ஓடி அங்கே உள்ளவரிடத்தில் “நாளை விடுதலை நல்குவேன்” இதனைக் கூறுக என்று கோமான் கூறினான். அதனை அமைச்சன் கூற புதுமை இதுஎன்று போயினர் மக்களே. இயல் - 9 (“நின்னருந் தங்கையை என்னருமன்னன் விரும்பினான், கிள்ளை விரும்புவாள் அன்றோ?”) இடம் : கொன்றை நாட்டு மன்று உறுப்பினர் : ஒள்ளியோன் வாட்பொறை திருந்திய கொன்றைத் திருநாடு தன்னில் இருந்தர சாளும் எழிலுடை ஒள்ளியோன் தனக்கென அமைந்த தனிமணி மன்றில் வனப்புற அமர்ந்து, வாட்பொறை வரவை எண்ணி இருக்கையில் எதிர்வந்தான் அவன்; “வருக வருக வாட்பொறை, அமர்க. திருமணம் பற்றிய செய்தி கேட்பாய், நின்னருந் தங்கையை என்னரு மன்னன் விரும்பினான். கிள்ளை விரும்புவாள் அன்றோ? பார்புகழ் மாழையின் பட்டத் தரசியாய்ச் சீர்பெறல் உனக்கும் சிறப்பே அன்றோ?” என்னலும், வாட்பொறை உரைப்பான்: “கிள்ளையை அன்றோ கேட்டல் வேண்டும்? கிள்ளையின், உள்ளம் பறித்தவன் ஒருவன் உள்ளான் அவனும் அவள்பால் அன்புளான் போலும்” என்னலும், “வாட்பொறை, வாட்பொறை, கேட்பாய், கேட்பாய், ஆட்பட்ட நாட்டை மீட்டல் வேண்டும்நீ! இணங்கா ளாயின் எத்தீங்கு நேருமோ! மணந்திடச் சொல்க! வஞ்சி இதனை மறுப்பது விடுதலை மறுப்ப தாகும். அதனால் கொன்றை நாட்டினர் கொடுமை ஏற்பார், என்றும் உன்னையும் இளையாள் தன்னையும் தூற்றுவ ரன்றோ? சொல்க அவட்கிதை” என்றான் ஒள்ளியோன். நாளை விடுதலை ஏடு நல்குதல் உண்டோ” என்று கேட்டான் எழிலுறும் வாட்பொறை. “இன்று கிள்ளை இணங்குதல் உண்டோ” என்றான் ஒள்ளியோன். “ஐயகோ மக்கள் அவாவும் விடுதலை எய்தல் வேண்டுமே” என்றான் வாட்பொறை! “என்றன் நாட்டுப் படையும் யானும் கொன்றை நாட்டினின்று நீங்கிட, அரசனோடு கிள்ளையை அனுப்புக, அனுப்புக, விரைக” என்று விளம்பினான் ஒள்ளியோன். சாவுபடு முகத்தொடு வாட்பொறை ஆவன செய்வதாய் அறைந்து சென்றானே. இயல் - 10 (“ஓர்உளம் பெருநாட்டை ஓம்புதல் ஒண்ணுமோ? சீருளம் ஒருநாள் தீயுளம் ஆகும்.”) இடம் : கொன்றை நாட்டில் ஒரு தனியிடம் உறுப்பினர் : தங்கவேல், மகிணன் “நாளும் சொற்பெருக்கு நடத்தியும் அலைந்தும் தோளும் உள்ளமும் துன்புறப் பெற்றேன். இன்றுதான் அமைதி எய்தினேன். மக்கள் ‘என்று விடுதலை என்று விடுதலை’ என்று பன்னாளாய் இடரில் மூழ்கினர், இன்றுதான் மகிழ்ச்சி எய்தினர்” என்று தங்கவே லிடத்தில் சாற்றினான் மகிணன். “நாட்டுக் கான நல்ல சட்டங்கள் தீட்டுதல் வேண்டுமே. திருநாட்டி னின்று மாழை நாட்டின் மாப்பெரும் படையும், ஆழக் குந்தி அலுவல் பார்க்கும் ஒள்ளியோன் கூட்டமும் ஒழிந்தபின் இங்குக் கிள்ளைக்கு மணிமுடி கிடைக்கும் வண்ணம் முயலுதல் வேண்டும். மொய்குழல் தன்னினும் அயலவர் பல்கலை ஆய்ந்தார் அல்லர். மேலும், பெண்கட்கு விடுதலை தருவதாய் ஏலு மட்டும் இயம்பி வந்தோம். அதற்கடை யாளம் அமைத்தல் வேண்டும். இது என் எண்ணம்” என்றான் தங்கவேல். “ஓர்உளம் பெருநாட்டை ஓம்புதல் ஒண்ணுமோ? சீருளம் ஒருநாள் தீயுளம் ஆகும் ஆதலால், பல்லார் கூடி நல்லன நாடி அல்லலை நீக்கும் ஆட்சியே ஆட்சியாம்” என்று மகிணன் இசைக்கத், தங்கவேல், “பல்லார் கூடிப் பாங்குற அமைத்த நல்லதோர் முடிவை நடத்து தற்கும் மேல்ஒரு தலைவன் வேண்டு மன்றோ? சேலினை நிகர்விழித் தெரிவையைத் ‘தலைவி’ ஆக்குதல் நன்றே அன்றோ” என்றான். “ஆக்குவோர் நீ, நான் அல்லோம், நாட்டினர் அனைவர் ஒப்பமும் அதற்கு வேண்டும். இனிநாம் கூடிச் சட்டம் இயற்றுவோம்” என்று மகிணன் கூற “நன்”றெனத் தங்கவேல் நடந்தான் ஆங்கே. இயல் - 11 (“ஏழையேன் அவட்கும் தாழ்குழல் எனக்குமாய் வாழுகின்றோம்”) இடம் : கொன்றை நாட்டில் ஒரு தனியிடம் உறுப்பினர் : மகிணன், அமைச்சன் தங்கவேல் போனபின் தனிமையில் மகிணன் மங்கையை நினைத்து வாட லானான். அவன் கண்ணெதிரில், வெயில் தழுவியதோர் வெறுவெளி தனில், அவ் வயில்விழிக் கிள்ளை அழகு காட்டினாள். மங்கா உடலெனும் மாற்றுயர் பொன்னையும், பொங்கும் சிரிப்புப் புத்தொளி முகத்தையும் வகைபெறு கழுத்து வலம்புரிச் சங்கையும் விழிநீ லத்தையும் மொழிஅமு தத்தையும் இதழ்ப்பவ ழத்தையும் இந்தா என்றே எதிரில் வைத்தே எழிலுறு கிள்ளைதன் அன்பெனும் நீர்வார்த் தளித்து நின்றாள் இன்பத்தை மகிணன் இருகையால் தாவினான். இருவிழி ஏமாந்து போக, இஃதவள் உருவெளித் தோற்றமென் றுணர லானான் ஏழையேன் அவட்கும் தாழ்குழல் எனக்குமாய் வாழு கின்றோம் மணந்தின் பம்பெற இன்றுநான் எண்ணினும் இயலும். ஆயினும் கொன்றை நாட்டைமுன் னின்று நடாத்தத் தலைமை ஏற்கச் செய்தனர் நாடு தந்த நல்லதோர் புகழால் தேடரும் கிள்ளையைத் தேடிக் கொண்டான் என்று வையம் என்னை இகழும் என்றே எண்ணி இருக்கையில், அமைச்சன் வந்தான். “விடுதலை அறிக்கை வெளிவந்ததுவோ” என்று மகிணன் இயம்ப, அமைச்சன் “கொன்றை, கிள்ளையைக் கொடுப்பின் அன்றே மாழை, விடுதலை வழங்குமாம்” என்றான். கேட்டவன் யார்என்று கேட்டான் மகிணன் வாட்படை கொண்ட மன்னன்என் றானவன். “பறித்தார் பெறுவது பாவை உளமலர்: மறுத்தாள் என்னின் மன்னன் செய்வதென்? பெண்தந்து விடுதலை பெறச்சொல் வதுவோ? கண்ணிருக்க மேன்மைக் கருத்திழந் தானோ” என்று மகிணன் இசைத்தான் அமைச்சன். “ஒன்றுகேள் மகிணனே உன்னால் ஒரு தடை நேராது நடத்தல் நின்கடன்” என்றான். மகிணன் புகல்வான்: “சூல்கா ணினும் கதிர்பால் காணாத காலே அரைக்கால் காணி அளவில் விளையா நிலத்தை வித்தி, அறுத்தும் எளியார்க் கீந்தபின் எஞ்சிய நெல்லால் தன்னையும் தன், உடல் தளர்மனை வியையும், என்னையும் காக்குமோர் ஏழை உழவனின் மைந்தன் நான்; ஒருநாள் களத்தில் ஒட்டிய நெல்லைத் தருவோர்க்குத் தந்தபின் வருவாய் நோக்கினேன். செக்கேற்றம் இறைத்தவன் வைக்கோலைக் கூலியாய்க் கைக்கொண்ட தால்வெறுங் கையோடு நின்றேன். நின்றஎன் அண்டையில் நீர்தேங்கி நின்றதால் என்றன் உடல்நிழல் யான்அதில் கண்டேன். கற்பாறை போலக் கண்டேன் என் தோளை, நிற்கும் என்னுடலை நெடுநாள் ஓம்பிய ஏழை யன்னையார் ஏழை அப்பர், கூழின்றி வாடும் கொடும்பசி யுடையார், அம்முதி யோர்க்கே இம்மலை யுடலதால் இம்மியும் - பயனே இல்லை யன்றோ? எங்கே நெல்லென எனைஅவர் கேட்டால் இல்லை என்பதோ இருக்கும்இக் கொடியேன் என்று வருந்தினேன். அன்றுதான் என்னருங் கொன்றைநாட் டன்பர் மக்களுக் குழைக்க வா என்ற ழைத்தனர் நான் அதைத் தந்தையார்க்கு நவின்றேன், தந்தையார் கூனுடல் தாயார்பால் கூறினார் தாயார் சாற்றினார்: காலே அரைக்கால் காணியை விற்றும் பாலே றியநம் பசுவை விற்றும், செம்புழுக் கலரிசி சேர்த்து வாங்கித் தும்பைப் பூவெனச் சோறு சமைத்தே எருமை முதுகெலும்பு பருமனில் கொல்லை முருங்கை மரத்திற் பெருங்காய் பறித்துக் குழம்பிட்டுன் தந்தைக்குக் கும்பிட்டுப் படைப்பேன், தொழும்பு பட்ட நாட்டுக்குத் தொண்டுசெய், என்றருள் செய்தார். நன்றென்று வந்தேன். தந்தை யார்க்கும் தாயார் தமக்கும் எந்த நலமும் இல்லா என்னுடல் எழிற்பெரு மக்களை ஈன்றநாட் டுக்கு விழிப்பொடு சிறிது வேலை செய்ததாய் இருப்பின், இன்பம் எனக்கதைப் பார்க்கிலும் இராது. கிள்ளை என்னை விரும்பினாள்; என் உளம் ஐயா என்சொற் கேட்காது தென்னையின் வரியணில் புன்னையில் பாய்தல்போல் கொடியிடைக் கிள்ளைபால் குடிபோ யிற்றே. விடுதலை விரும்பாக் கொடியன் நானோ.” என்று பெருமூச் செறிய நின்றான்! “இன்னல் என்ன எய்துமோ” என் றுநல் லமைச்சன் ஏகி னானே. இயல் - 12 (“மன்னனை மணந்தால் வருவது விடுதலை மறுத்தால் வருவது கெடுதலையாகும்.”) இடம் : கொன்றை நாட்டின் முன்னாள் அரண்மனை உறுப்பினர் : கிள்ளை, வாட்பொறை “என்னருந் தங்கையே , எழிலுறு கிள்ளையே, இன்னல் வந்ததே உன்னால்” என்றான். அண்ணன் இவ்வா றறைதல் கேட்ட கிள்ளை, “என்னால் கேடோ விளைந்தது? விளைந்த தெவ்வாறு விளம்புக” என்றாள். மன்றின் மாடியில் மன்னன் உலவினான் அன்றுநீநன்னீர் ஆடச் சென்றனை. கண்ணாற் கண்டான் காதல் பொங்கினான். புண்பட மன்னன் புகல்வ தென்எனில், ‘அவள்என் பட்டத் தரசி ஆனபின் இவண்நான் விடுதலை ஈவேன்’ என்றான். என்று வாட்பொறை இயம்பி நின்றான். இவ்வுரை கேட்ட எழில் சேர் கிள்ளையின் செவ்விதழ் துடித்தது, சேல்விழி எரிந்தது. “மகிணனைக் கொண்டவள் மன்னனைக் கொள்வளோ! அகன்ற மார்பினன்; அடல்மலைத் தோளினன்; பெருமக்கள் நலம் பேணும் ஆற்றலன்; அருள்மிக்க விழியினன்; அன்புளான் என்பால்! இதனை மன்னனுக் கெடுத்துரைத் தீரோ?” என்று கிள்ளை இயம்பிய அளவில் ஒன்று சொல்வேன் உற்றுக் கேள் என்று வாட்பொறை சொல்வான்: “நீ, இன்று மன்னனை மணப்பதால் மாட்சி குறையாது; மணந்தால் வருவது விடுதலை, மறுத்தால் வருவது கெடுதலை யாகும். நனிபசி கொண்ட நாட்டு மக்கள், கிள்ளையால் வந்தது கெடுதலை என்று விள்ளுவார், விழிநீர் வெள்ள மாக அழுவார். ஏழையர் அழுத கண்ணீர் கூரிய வாள்எனக் கூறினர் பெரியோர். மேலும் கேட்பாய். மன்னனை மணப்பதால் மாட்சி குறையாது; மகிணனை மணந்தால் நகுவர் உறவினர்! வயிறொட்டிய நாயும் வெயில்கண்டு கூவாது துயில்கின்ற சேவலும் பயில்சிற் றூரில் காட்டா மணக்கும் கள்ளியும் மறைக்குமோர் மோட்டு வளை சுரை மூடிய குடிசையில் அரிசி கிடைப்பின் அடுப்பு மூட்டும்நாள் திருநா ளாகக் கருதும் எளியார்க்குக் கந்தை சுமந்து கையாற் கசக்கி வந்து மரவட்டை மண்ணில் உலர்த்தும் நகுமகன் அன்றோ மகிணன்? கருதுவாய், தகுமகள் அன்றோ தையல்நீ” என்னலும், கண்ணீர் அருவி வெண்துகில் நனைத்து மண்ணிற் சாய்ந்து வழியக், கைம்மலர் முகமலர்க் கண்ணை மூட, விம்மி அகமலர் மெய்ம்மலர் அதிரக் கிள்ளை ஒய்எனக் கூறினும் ஓயா தழுதாள் சேயிழைக் குரிய செம்மல் மகிணனை இகழ்ந்தது பற்றி அகம்கொதித் தாள்என வாட்பொறை எண்ணினான். வஞ்சி, “ஐயகோ! பொருளிலார் இழிந்தோர் என்று புகலும் இருளுளம் படைத்தோர் இருக்கின்றாரே அயர்ந்தார் அயர அகப்பட்டது சுருட்டப் பயின்றார் கையிற் பட்ட பழிப்பொருள், இழிஞன்என் றொருவனை இயம் புமாயின் அழிபொருள் இன்றே அழிதல் வேண்டும். அழிபடத் தக்க வழிதான் என்னெனில் உண்ண உடுக்க உறைய நுகர ஆம் மண்பொருள் சரிநிகர் மக்கட் பொதுவெனச் சட்டம் செய்வதாம். அண்ணா நீவிர் என் அன்பனைப் பழித்தீர் எண்ணிலாப் பெரும்பொருள் எனக்கும் உண்டு மாயாது நான் உயிர் வைத் திருப்ப தற்கோ அகப்பொருள் காரணம் அல்ல அல்ல. தக்கஅம் மேலோன் மக்கள் நலத்திற்குத் தொண்டு செய்து தொலைக்கும் நாட்களில் ஒருநாள் ஒருபொழு தொருநொடி, என்னெதிர் வருவான்; மின்என மறைவான் அதனால் மாயாது மண்ணில் வாழு கின்றேன், ஒன்றுதான் என்றன் உறுதி: உயர்வுறு குன்றினில் சுடர்படு கொடிபடர்ந் ததுபோல் அவன்தோள் என்னுடல் ஆரத் தழுவுதல்” என்றாள். வாட்பொறை நின்றான் சென்றான் கீழ்நோக்கு கின்ற முகத்தோடே. இயல் - 13 (“அங்கே அரசன் அவள் நினைவாக இருந்திடுகின்றான் எரிந்திடும் உளத்தொடு”) இடம் : கொன்றை நாட்டின் அரண்மனை உறுப்பினர் : அமைச்சன், தங்கவேல் “செங்கதிர் இல்லையேல் திங்கட்குச் சீர்இலை என்பது போல, எங்கை, மகிணன் இல்லையேல் வாழேன் என்றாள்” மகிணனோ, “தன்னைக் கிள்ளைக்குத் தந்ததாய்ச்” சாற்றினான் என்றான் அமைச்சன். “எங்ஙனம் விடுதலை” என்றான் தங்கவேல். “அங்கே அரசன் அவள்நினை வாக இருந்திடு கின்றான் எரிந்திடும் உளத்தொடு! மருந்தொன்றும் அறியேன் மக்கள் நோய்க்கு! மகிணனும் கிள்ளையும் மற்றவர் தம்மினும் மிகுந்த விருப்பினர் விடுதலை பெறுவதில். அவர்பால் என்னநாம் அறைதல் கூடும்? தவறோ இழைத்தனர்? சற்றும் இல்லையே” என்றான் அமைச்சன். தங்கவேல், “தீங்கைத் தவிர்க்க எண்ணி, அம் மங்கை மன்னனை மணந்து கொள்வது நன்றே அன்றோ” என்று கூறினான். “முன் ஒருவன்பால் முழுதும் சென்று பின் ஒருவன்பால் பெயர்வ தென்பதை ஒப்பார் தமிழர். பிற இனம் ஒப்பும். இருவர் கொண்ட எண்ண மதனில் தலையிடல் என்பது சரியல; இதுதான் மக்கட்கு மக்கள் வைக்கத் தக்க உயர்வாம்” என்று கூறி அயலில் சென்றான் அமைச்சன் ஆங்கே. இயல் - 14 (“கோடையிற் குளிர்மலர் ஓடைஎங்கே? ஆடுமயில் எங்கே? பாடுகுயில் எங்கே?) இடம் : ஊர்ப் பொதுமன்று உறுப்பினர் : மாழைப் பேரரசு, தங்கவேல், பொதுமக்கள் மறுநாள் ஊர்ப்பொது மன்று சூழ நிறைபெறு மக்கள் நின்றனர். மன்னனை விடுதலை அறிக்கை வேண்டிக் கூவினர்; விடுவழி விடுவழி வேந்த னிடத்துச் சென்று நானே செய்தி அறிவேன் என்றான் ஒருவன்! நன்றோ இதுதான் என்றான் ஒருவன்! எந்நாள் கொடுப்ப தென்றான் ஒருவன்! இன்றே அளிக்க என்றான் ஒருவன்! இந்த நிலையில் தங்கவேலன் அங்கு வந்தான், அங்கிருந்தார்க் கெலாம் அறிவிக் கின்றான்: “அமைதியாய் இருப்பிடம் அடைவீர், விடுதலை நமைஅடையத்தகும் நாள் தொலைவில்லை! உமக்கிதை உறுதியாய் உரைத்தேன்” என்னலும் நன்றென நவின்று சென்றனர் மக்கள். தங்கவேல் மன்றில் தனித் திருந்து பொங்கு காதலால் புழுவாய்த் துடிக்கும் மன்னனைக் கண்டான். மன்னன், “எங்கே புன்னகை? எங்கே புதிய நிலவு? கோடையிற் குளிர்மலர் ஓடை எங்கே? ஆடுமயில் எங்கே? பாடுகுயில் எங்கே? எங்கே கிள்ளை என்று பதறினான் “அங்கே அவளை அடைவோம்,” என்று தங்கவேல் தணிவு சாற்றினான். மன்னன் “அவள் தன் விருப்பம் அறிவித்தாளா? இவண் அதை உரைப்பாய்”என்றான். தங்கவேல் “வெயில்நிகர் மணிகள் அயல் ஒளிப்பதக்கம் பயிலும் மார்பும் பட்டு சட்டையும் படர்விழி பறிக்கும் பன்மணி முடியும் கடலிடை எழுந்த சுடர்நிகர் முகமும் கட்டிள மையும் கிள்ளையின் கண்ணில் பட்டால் அவள்உளப் பறவை நும் வலையில் கட்டா யம்படும்! கடிது புறப்படும்!” என்னலும் மன்னன் ஏதும் உரையாது பொன்னு டைமணி இழைபூண்டு, தங்கவேல் வழிநடக்க நடந்து சென்றான் அழகிய தங்கத் தேரென ஆங்கே. இயல் - 15 (“குருந்து படர்முல்லை பெருந்தேக்கிற் சென்று பொருந்துதல் இல்லையோ?”) இடம் : கொன்றை நாட்டின் முன்னாள் அரண்மனை. உறுப்பினர் : தங்கவேல், கிள்ளை, மாழைப் பேரரசு. “என்னால் தடையோ எழில்விடு தலைக்கே? சொன்னால் நலம்” எனத் தோகை கேட்டாள். “கிள்ளையே உன்னால் கெடுதலை இராதுதான். அள்ளக் குறையா அழகும், இளமையும், வைய மாட்சியும் எய்திய மன்னன், தையல் உன்னிடம் தனிமையிற் பேச, வாயிலின் புறத்தே வந்துநிற் கின்றான், தூயோய் வருகெனச் சொல்லுக” என்று தங்கவேல் கெஞ்சினான். மங்கை ஒப்பினாள் அங்கது தெரிந்தே அரசன் வந்தான். இருக்கை காட்டினாள். இருந்தான் அரசன். முருக்கிதழ்க் கிள்ளையும் முனைவேல் அரசனும் தம்மில் பேசினார். தங்கவேல் மறைந்தான். “இம்மா நிலத்தில் எனக்கொன்று வேண்டும். அதுவோ, எனக்கோர் ஆவி யாகும். புதியதாய் ஓவியர் புனைந்த பாவையே உனக்கொன்று தேவை. உனக்கும் அஃதுயிர். இனிப்புக் கினிப்பென எழுந்த செங்கரும்பே, உன்றன் தேவை என்றன் கையிலும் என்றன் தேவை உன் கையிலுமாம் எனவே, உன்னுயிர் என்னிடம் என்னுயிர் உன்னிடம் மன்னி இருப்பது மறைப்பதற் கில்லை” என்று மன்னன் இயம்பிய அளவில், “நாட்டுரிமை மக்கட்கு நல்குவோர் தாம்ஒன்று கேட்டு நிற்பது கேட்டதில்லையே,” என்றாள் கிள்ளை. வையமன்னனும் மணி முடிதாழ்த்தி “ ஐயம் என்றுவாய் அங்காந்து கேட்பதோர் உயர்பொருள் உன்னிடம் உள்ளதே” என்றான். “ அயல் ஒருவர்க்கதை அளித்தேன்” என்றாள். வருந்திய மன்னன் “குருந்துபடர் முல்லை பெருந்தேக்கிற் சென்று பொருந்துதல் இல்லையோ?” என்றான். “ காதல் என்னுமோர் கைதேர்ந்த தச்சன் வாழ்தலில் சிறப்பொன்று மாட்டக் கருதி என்னுடல் மற்றுமோர் பொன்னுயிர் இரண்டையும் முன்னரே பொருத்தி முடித்தான்” என்றாள்! “ முடிவை மாற்ற முடிந்தால் உனக்கும் குடிகள் தமக்கும் கொற்றவன் எனக்கும் நல்லது மயிலே! நல்லது மயிலே! அல்லது தீமை அனைவர்க்கும் அன்றோ!” என்று மன்னன் இரங்கிச் சொன்னான். ஒன்றும் உரையாது நின்றாள் கிள்ளை. தன்சொற் கேளாது தள்ளாடி ஓடித் தின்பண்டம் நாடும் சிறுகு ழந்தைபோல் மொய்குழல் மீது மொய்த்த தன் விழியை வெய்துயிர்த்து மீட்டு, மன்னன் வாயோய்ந்து வெளியில் வந்தான். அவனைக் காயோ பழமோ கழறுக என்று தங்கவேல் கேட்டான். மன்னன் தங்கம் உருகுதல் தணற்கென் றேகினனே. இயல் - 16 (“மாழை நாட்டினர் வந்தபின் அன்றோ ஏழைமை தன்னை எய்திற்றுக் கொன்றை!”) இடம் : கொன்றை நாட்டு அரண்மனை. உறுப்பினர் : ஒள்ளியோன், மாழைப் பேரரசு, பொதுமக்கள், தாரோன். “கெஞ்சிப் பார்த்தேன். கேள்நீ ஒள்ளியோய் அஞ்சுமாறு கிள்ளைக்கும் அனைவர்க்கும் சொன்னேன் சென்றஎன் உள்ளமோ திரும்புவ தின்றி மின்னிடை தன்பால் வீழ்ந்தது! துன்பம் கடக்குமுறை எதுவெனக் காணின், நாட்டில் அடுக்குமுறை ஒன்றினால் ஆகும். ஒள்ளியோய் உன்னிலும் எனக்கோ ஒருவரும் நற்றுணை இந்நி லத்தில் இல்லை. அமைச்சனோ கொன்றை நாட்டுக்குக் கொடுக்கும் உரிமையை இன்றே கொடுத்தல் ஏற்றதென் கின்றான்.” என்று மன்னன் இயம்பும் போதே அன்றுபோல் இன்றும் மன்று சூழ ஊர்ப்பெரு மக்கள் ஒன்று சேர்ந்து தீர்ப்பீர் “குறை” எனச் சென்று கூவினர். மாடியில் அரசன் மக்கள் குரல் கேட்டு வாடிய முகத்தோடு வாளா இருந்தான் ஒள்ளியோன் மாடியின் உச்சியினின்றே வெள்ளம்போல வெளியில் இருப்பார்க்குச் சொல்லுகின்றான்: “கொன்றை நாட்டினரே, கூறுவது கேளீர் மன்னன் விடுதலை வழங்கு முன்பு இந்நாடு விடுதலைக் கேற்ற தகுதி உடையதா என்பதை நடைமுறை தன்னில் கடிதில் ஆராய்தல் கடமை அன்றோ? ஆதலால், பொறுப்பீர்என்று புகன்றான்.” மக்கள் நீவிர் இங்கு நெடுநாள் தங்கி யாவும் அறிந்துளீர். எந்நிலை அறியீர்? அரச னிடத்தில் அறைந்திரோ என்று வெறுப்புடன் நின்றனர். விளம்புவான் ஒருவன்: “விரைவில் விடுதலை வேண்டும் எமக்கே. கற்றனர் நாட்டினர் கண்டீர் அன்றோ! ஒற்றுமை உடையோம் உணர்ந்தீர் அன்றோ! வேற்றுமைக் குள்ள வித்தும்அங் குளதோ? ஆற்றுந் தொண்டெலாம் அறத்தொண் டல்லவோ? மாழைநாட்டினர் வந்தபின் அன்றோ ஏழைமை தன்னை எய்திற்றுக் கொன்றை! ஆளுந்திறமை அற்றோமா? எம் கேளும் கிளையும் கெட்டொழிந்தனவோ? ஆளி சுமந்த அருமணி இருக்கையும், மங்காது மின்னும் மணிக் கொடிமதிலும்இன்னும் முன்போல் இருத்தல் அறியிரோ? மன்னர் பெருங்குடி வாழ்வதும் அறியிரோ?” என்று கூறினான். வாட்பொறை மாமன் மகனாம் ‘தாரோன்’ கேட்பாய் ஒள்ளியோய் கிளத்து கின்றேன்: “கோழி நாட்டுக் கொற்றவன் உன்றன் மாழை நாட்டை வளைப்பதற்குப் பெரும்படை திரட்டினான். விரைவிற் கிளம்புவான் தருவதோர் விடுதலை தந்து முடித்தால் உன்றன் நாட்டுக் குதவியாய்க் கொன்றை நன்று முயற்சி நடத்து மன்றோ? இச் செயல் விரைவில் இயற்றீராயின் எத்தீங்கு நேருமோ எண்ணுக இதனை” என்றான். ஒள்ளியோன் “எம்இறை ஆணையை இன்றுநீவீர் இகழாது செல்வீர்.” என்று சினத்தொடும் இயம்பினான். மக்கள் சென்றனர். தாரோன் சிரித்துச் சென்றான். ஒள்ளியோன் அரசனிடத்தில் விள்ள லானான் நடந்ததை விரித்தே. இயல் - 17 (“தன்உரு மாற்றினான் மன்னன். அன்னவன் மனைவி ஆனான் ஒள்ளியோனே.”) இடம் : கொன்றை நாட்டின் ஒருபுறம் உறுப்பினர் : மாழைப் பேரரசு, ஒள்ளியோன் (மாற்றுருவினர்) “நன்று கூறினை நாட்டாரிடத்து நீ கொன்றை மக்கள்மேல் குற்றங் காட்டிச் சிலரைப் பிடித்துச் சிறையில் அடைத்தும் பலரை இன்னற் படுத்தியும் பார்க்க எண்ணி இருந்தேன் என் எண்ணம் போல் நண்ணிய மக்கள்பால் நன்று கூறினை. நம்உரு மாற்றி நாட்டைச் சுற்றுவோம் இம்மக்கள்பால் எக்குறை காணினும் நாட்டைமுன் னின்று நடத்துவோர் மேல் அதைப் போட்டுச் சிறையில் புகுத்த வேண்டும் என்னஉன் எண்ணம்” என்றான் மாழையான்! “அன்னதே என்றான்” வன்புடன் ஒள்ளியோன்! பழந்துணித் தலைப்பாகையும், சட்டையும், முழந்துணித்த மேல் விரிப்பும் நரைத்த தாடியும் மீசையும் தடியும் குடையும் வாடிய முதுமையும் வாய்க்கும் வண்ணம் தன்உரு மாற்றினான் மன்னன்! அன்னவன் மனைவி ஆனான் ஒள்ளியோனே. இயல் - 18 (“பாரிடைப் படர்ந்து பறிபடாச் சாதியின் வேரிடை வெந்நீர் விட்டுக் களைந்தனர். ”) இடம் : கொன்றை நாட்டின் ஊர்ப்புறம் உறுப்பினர் : மாழைப் பேரரசு, ஒள்ளியோன், (மாற்றுருவினர்), ஏற்றம் மிதிப்பவர் ஏற்றம் மிதிப்பார் இருவர். ஒருவன் சேற்றுநீர்ச் சாலினைச் செங்கை பற்றிப் பாடி இருந்தான் பழமை பற்றியே பாடல் என் எனில், “ஐந்து சாதிகள் அந்தநாள் இருந்தன. கொந்தி எடுக்குமே குடிகளை அவைகள். மேலான சாதி வேலைசெய் யாமல் பாலான சோறும் பருப்பொடு நெய்யும் உண்டு வாழுமே! ஊரில் மற்றவை கண்டு நடுங்குமே கைகட்டி நிற்குமே கீழான சாதி எக்கேடு கெட்டேனும் கூழேயும் இன்றிக் குடிசையில் தூங்குமே அப்போது நானோ ஆர்என்று கேட்டால் தப்புடைய மேல் சாதியைச் சேர்ந்தோன்.” உழவன் பாட்டை ஒருசொல் விடாமல் கிழவனும் மனைவியும் கேட்டிருந் தார்கள். “பாரிடைப் படர்ந்து பறிபடாச் சாதியின் வேரிடை வெந்நீர் விட்டுக் களைந்தனர் ஆரும் மறவா ஐந்து சாதியின் பேரும் மறந்தார் பெருநாட்டார்கள்” என்றான் கிழவன். இயம்புவாள் மனைவி “நற்றொண் டாயினும் நாம் இதை இன்று குற்றமென்று கூற வேண்டுமே?” எனலும், “ஆம்ஆம்” என்றான் கிழவன் “மனு எனும் கடவுள் மக்களுக் களித்த சாதி ஒழுக்கம் தலைகீழ் ஆம்படி தீது செய்தீர் தீது செய்தீர் என்றுநாம் குற்றம் இயம்ப வேண்டும்” என்றாள் மனைவி. “எழுதிவை ஏட்டில்” என்றான் கிழவன். ஏட்டில், மனைவி, நிறத்தின் வேறுபாட்டை அறுத்தது குற்றம்என் றழுத்தினாள் எழுத்தையே. இயல் - 19 (“செலவுக்குத் தருக என்றான். நின்ற இலவுக்குநிகர் இதழ் ஏந்திழை மகிழ்ந்தாள்.”) இடம் : கொன்றை நாட்டின் ஊர்ப் பொதுமன்று உறுப்பினர் : மாழைப் பேரரசு, ஒள்ளியோன் (மாற்றுருவினர்), பொதுமக்கள் ஆல மரத்தின் அடியில் ஒருவன் காலைச் சப்பளித்துக் கணக்கனொடு குந்தி உறுதி மொழியை உரைத்]தான். என்னெனில் “குறைவிலா எனது கொன்றைநாட் டாணையில் இந்த அறமன் றில்என் உள்ளம் அறியநான் வந்தார்க்குத் தீர்ப்பு வாய்மையில் வழங்குவேன்.” என்னலும், உடனே ஒருத்தி மடமயில் போன்றாள் நெடுவிழி நீரால் நிறைய அழுது “மன்றுளீர் மன்றுளீர் என்றன் தலைவன், மணமாகாத மங்கையை நாடிப் பணமாய்ப் பட்டாய் அணியாய் அவட்கு நாடொறும் நாடொறும் நல்குவான் ஆனான் ஈடேறும் வகை எதுவும் காணேன். இருக்கும் சொத்தில் என் விழுக்காட்டை அளிக்கும் படியும், அன்றைய மணத்தைக் கிறுக்கும் படியும் கேட்பதென் வழக்கென,” மன்றுளான் சான்றினர் வருக என்னலும் அறுவர் சான்றினர் ஆம்எனப் புகலவும் மறம் இழைத்தானை வருக என்னலும் வந்தவன், பிழையை மறைக்க முயலலும் இந்தா தீர்ப்பென இயம்புவான் மன்றினன்: “மங்கை தன்னை மதியாமை குற்றம், பங்குக்குரியவள் பகர்ந்த மறுப்பையும் எண்ணாதொருத்திக் கீந்தது குற்றம்! ஆதலின், நாட்டின் பேழைக்கு நாற்பது வராகன் கட்டுக, சொத்திரு கூறு படுத்துக, ஒருகூறு தருக ஒண்டொடி தனக்கு! வரும்உன் பங்கில் இருபது வராகன் சேயிழை இனிமேல் செயத்தகு மணத்தின் செலவுக்குத் தருக” என்றான். நின்ற இலவுக்கு நிகர் இதழ் ஏந்திழை மகிழ்ந்தாள். மறைவில் நின்று வழக்கு நடந்த முறையை அறிந்த முதியனும் மனைவியும் தம்மில் பேசுவார்: “இம்முறை நன்றென” இயம்பினான் கிழவன் “அரசினர் மன்றம் அங்கே இருக்கையில் ஒருமன்றிவர்கள் உண்டாக் கினர்” எனக் குற்றம் சுமத்தினாள். “கூறியது சொற்றிறம்” என்று சொன்னான் கிழவனே. இயல் - 20 (“கொழுத்த பன்றியின் கழுத்தையறுத்துப் படையலிட்டுப் பணிவதுண்டாம்”) இடம் : கொன்றை நாட்டின் ஒரு சிற்றில். உறுப்பினர் : மாழைப் பேரரசு ஒள்ளியோன் (மாற்றுருவினர்) மருத்துவன், நோயாளி. சிறியதோர்* வீட்டின் அறையினுள்ளே சிறுவிசிப் பலகையில் உறு நோயாளி படுத்திருந்தான். அடுத்தொரு மருத்துவன் எடுத்துப் பலபல இயம்புகின்றான்: “கழலையை அறுத்தேன் கட்டினேன் மருந்திட்டு- இன்னும் இரண்டுநாள் எனை அழைக்காமல் முன்போல் வாளா மூடி வைத்திருந்தால் சாக்காடு தான்” என்று சாற்றிய அளவில், நோக்காடு குறைந்த நோயாளி கூறுவான்: “அன்னை, எதையோ அறைத்துப் பூசினால், இன்னே இந்நோய் இராதென்று சொன்னதால் நாட்கள் சென்றன” என்று நவில நாட்டு மருத்துவன் நகைத்து, “முன்னெலாம் அச்சம் தரும்படி முச்சியன் வரைந்ததை மெச்சும் உருவென மேற் சுவரில் மாட்டி அதற்குச் சோறு முதற்பல படைத்தும் எதிர்கீழ் வீழ்ந்தும், இருகை கூப்பியும், இறையே இறையே எனக்கும் மனைக்கும் உறைமக் களுக்கும் கறவை மாட்டுக்கும் பிணியென ஒன்றும் அணுகா வண்ணம் அணித்திருந் தருள்வாய் என்ப துண்டாம், அன்றியும், மைந்தர்க்கு நோய் வரின் மலையின் உச்சியில் குந்தி இருப்பதாய்க் கூறும் இறைக்குக் கைப் பொருள் கொண்டு காலிடை வைப்பதாய் செப்பி, அங்குளான் தின்னத்தருவதோர் உறுதி சொல்லி, உறுநோய் மைந்தன் இறுதி பெறும்வரை இருப்பாராம் வாளா! எல்லைக் கடவுள் என்பதொன் றுண்டாம் தொல்லை தீர்க்கச் சொல்லி அதற்குக் குருதியும் சோறும் தெருவில் இட்டே இருகை கூப்பி இறைஞ்சு வாராம். கூரை சலசலப்புக் கொள்ளு மாயின் சீரிலாக் கடவுள் சீறிற் றென்று தோப்பில் மண்ணால் ஏற்ப டுத்திய காப்புக் கடவுள் கருத்து மகிழக் கொழுத்த பன்றியின் கழுத்தை யறுத்துப் படையலிட்டுப் பணிவதுண்டாம்! நோய்வராதிருக்கவும் நோய் வரின் தணிக்கவும் போய்ப் பல கடவுளைப் போற்றுவ துண்டாம்! நடைமுறை பிழையாது நடத்தல் இல்லையாம்! மடைமையை ஒழிக்கும் வழி காணாராம்! கல்வி அறிவு காண எண்ணாராம்! அவர்போல் நீவிரும் கவலை யின்றிக் கழலைக்கு நல்ல கருவியிட்டாற்றாது வாளா இருந்து வந்தீர்” என்றான். ஒளிந்திருந்து கண்ட ஒருத்தியும் கிழவனும் தெளிந்த பகுத்தறிவு தெரிந்தனர் ஆயினும் கடவுளைக் கடிந்தது குற்றம் விடப்படாதென்று விண்டு சென்றனரே. இயல் - 21 (“தமிழர் செல்வந் தன்னைச் சுரண்டி உமது நாட்டுக் கோடுதல் ஒப்போம்”) இடம் : கொன்றை நாட்டின் புறநகர். உறுப்பினர் : மாழைப் பேரரசு, ஒள்ளியோன், (மாற்றுருவினர்), வடநாட்டு மக்கள், குள்ளன். புறநகர் தன்னில் ஓர் அற விடுதி தனில் மறைவுள் ளத்தினர் வட நாட்டு மக்கள், கொன்றையில் பிறந்த ஓர் குள்ளனி டத்தில் நின்றுகண் ணீரொடு நிகழ்த்துவாரானார்: “சுமைப்பொரு ளோடும் இத் தமிழ் நாடுசேர்ந்தோம் எமை, இங் குள்ளார் இகழ்வா ரானார் ‘வடக்கில் வழங்கும் இடக்கு மொழியை அடக்கடா’ என்றெமை அதட்டிய தாலே ஓராண் டாக உயர்வுறு தமிழை நேருறக் கற்றோம் நிலையாய் இங்குத் தங்கி வாணிகந் தான்செய் வதற்கே! இங்குளார் நெஞ்சம் இரங்கக் கேட்டோம். ‘தமிழர் செல்வந் தன்னைச் சுரண்டி உமது நாட்டுக் கோடுதல் ஒப்போம். வாணிகம் என்று வந்துட் கார்ந்து மாணுறு தமிழர் வாழ்வுக் கொவ்வாச் செயல்கள் செய்ய முயலவும் கூடும். அயலவர் ஆதலின் அகல்வீர்’ என்றார்.” மற்றிது கேட்டார் இருவரும்! குற்றம் என்று குறித்தாள் மனைவியே. இயல் - 22 (“துணிவும் கண்டாள் தூய நெஞ்சின் தணிவு கண்டாள் தமிழ்ப்பற்றுக் கண்டாள்.”) இடம் : கொன்றை நாட்டின் ஒரு வீட்டுப் புறம். உறுப்பினர் : மாழைப் பேரரசு, ஒள்ளியோன், (மாற்றுருவினர்). காதல் நறுக்கைக் கைப்பட எழுதி மாதுக் கனுப்பினான் மறவன் ஒருவன்! எழுதிய தன்றி, இன்பம் அடைந்திடும் முழுநம் பிக்கையால் மொய்குழல் வீட்டின் கொல்லைப் புறத்தில் குந்தி யிருந்து வருவாள் என்று வழிபார்த் திருக்கையில் அன்னவன் காதை, அவளும், அவளின் அன்னையும் பேசுதல் அதிரச் செய்தது. மங்கை சொன்னாள்: “எங்கும் எப்போதும், இதனை எழுதிய சேயிடம் என்னுளம் சென்ற தில்லை. ஆயினும் தெருவில் அவன்பேர் சொல்லி நீட்டி அழைத்தது கேட்டதுண் டாதலால் பேர் தெரியும், தோட்டத்து வருவதாய்ச் சொல்லு கின்றான் பிழைபட நினைத்தான் அவன் என்மானம் அழிக்கும் எண்ணமோ” என்னலும்: அன்னை அன்னவன் அனுப்பிய நறுக்கைத் தன்கையில் தாங்கித் தலைநட்டுப் படிப்பவள், இடையிடை அவனை இகழ்ந்தாள், இகழ்ந்த சொல் தொடர்ந்துதான் வரைந்த தூய தமிழிலும் பட்டது, கேட்டான் பதைத்தான். ஐயகோ “கெட்டவன் நானே. கெட்டவன் நானே. என்னை இகழ்ந்த அன்னை, என்னால் பொன்னிகர் தமிழை இன்னுயிர் ஒப்பதை இகழ்ந்தாள் என்றே இடையில் தொங்கிய வாளை உறையினின்று வாங்கி அன்னைபால், ‘காளை’ நான் கொண்ட கருத்தின் பிழைக்கு வாட்டுக என்னை, வாட்டிய பின்னை நாட்டின் தமிழை நலிவுற இகழ்ந்ததற்கு நின்கொடு நாவினை இன்னற் படுத்துக.” என்றெதிர் நின்றான்! அன்னவன் துணிவும் கண்டாள் தூய நெஞ்சின் தணிவு கண்டாள் தமிழ்ப் பற்றுக் கண்டாள் மங்கையோ, காதல் மடுவிற் குதித்தாள். மங்கையின் தாயோ “மங்காத் தமிழை மங்க உரைத்தது மாப்பிழை” என்றே அங்கு நலிந்தாள், அவனையும் வியந்தாள் மகளின் கடைவிழி மடைபாய் கயலென அவன் பால் நடப்பது கண்டு நன்றே வாழ்த்தினாள்! “நாளை மண”மென நவின்றாள் அந்தக் காளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தான். இதையெலாம் கிழவனும் ஏந்திழை தானும், பக்கத்தி லிருந்து பார்த்தும் கேட்டும் வியந்தனர் ஆயினும் குற்றம் உயர்ந்த தென்றே உரைத்தே கினரே. இயல் - 23 (“எத்தனை பேர்க்குநீ எழுத்தைச் சொல்லி வைத்தனை?” இடம் : கொன்றை நாட்டு நெற்களம். உறுப்பினர் : மாழைப் பேரரசு, ஒள்ளியோன், (மாற்றுருவினர்), காதலர் இருவர். நெற்களத் திட்ட நெடும் பரண் மீது சற்றும் விழிப்புத் தளரா தொருத்தி உட்கார்ந் திருந்தாள். ஒருவன் வந்தே, “எட்பூ மூக்கும், இளைத்த இடையும், அரும்பும் இளைமையும் அடைந்தோய், என்னை விரும்பு தல் நன் றென”வி ளம்பினான். “அரசினர் கல்வி அளிப்பதன்றியே விரைவில் கொன்றை மேன்மை எய்தத் திட்டங் கொண்டஇச் செந்தமிழ் நாட்டில் எத்தனை பேர்க்குநீ எழுத்தைச் சொல்லி வைத்தனை? நீயோ வண்டமிழ் எவ்வளவு கற்றனை”? என்று கனிபோல் கழறினாள். பெற்ற புலமை பெரிதெனக் காட்டினான். பயிற்றிய சிறார்கள் பலர்என விளக்கினான் வியப்புற்று மெல்லி, மேலோன் தோளினை நயப்புற்ற பொன்னுடல் நன்றுறத் தழுவினாள். கிழவன் கண்டான், கேடு நவிலும் பிழையினள் கண்டாள் “பெரிதும் குற்றம்” என்று கூறி, அங்கிருந்து சென்றனர் ஊர்ப்பொது மன்று நோக்கியே. இயல் - 24 (“தலைவரைச் சிறையில் தள்ளியது கொடிது புலையோ களவோ கொலையோ புரிந்தார்?”) இடம் : கொன்றை நாட்டுத் தெரு மணிப் பொதுமன்று. உறுப்பினர் : பொதுமக்கள், மாழைப்பேரரசு, தங்கவேல், கிள்ளை விடிந்தது. ஒவ்வொரு தெருவிலும் வேல், வாள் படிந்த தோளொடு படை மற வர்கள் நெடுவிழி எரிபட நின்றனர். தெருவில் நடப்பதும், தவறென நவில்வா ரானார். படுப்பதும் தீதெனப் பகர்வா ரானார். வியந்தனர் சிலரே. வெகுண்டனர் சிலரே. துயரில் கொன்றை தோய்ந்ததென் றார்சிலர். என்ன நடக்குமோ என்றனர் சில்லோர். ஈவான் விடுதலை என்றனர் சில்லோர். காவான் என்று கழறினர் சில்லோர். திடுதிடு என்றொரு சிறு படை சென்று மகிணனைச் சிறையில் வைத்து மீண்டது! சடுதியில் ஒருபடை தாரோன் தன்னையும் வடுவொன் றில்லா வாட்பொறை தன்னையும் சிறையில் சேர்த்துச் சிரித்து நின்றது! தங்கவேல் கண்டு தளர்வுற்றிருந்தான். கிள்ளை பெருந்துயர் வெள்ளத்தாழ்ந்தாள். கொன்றை நாடழுதது; கொதித்தது நெஞ்சம். அன்று, மணிப்பொது மன்றில் அரசன், தனிமையில் அழைத்தான் தங்க வேலனை. “இனியும் கிள்ளை இணங்க மாட்டாளோ” என்று கேட்டான். இசைத்தான் தங்கவேல்: “ஒன்று கேட்க! ஊர்ப்பொது மக்களின் தலைவரைச் சிறையில் தள்ளியது கொடிது புலையோ, களவோ, கொலையோ புரிந்தார் குற்றம் என்ன கோவே? வாட்பொறை, மற்றவர் இழைத்த குற்றமும் சொல்வீர்? ஒருவனை விரும்பிய ஒண்டொடி யைப்பெறத் திருவுடை நாட்டின் சீர ழிப்பதோ?” என்று தோள் அதிர, இருநீர் விழியுடன் சொன்னான். சிரித்து மன்னன் சொல்வான்: “தங்கவேல், இங்கிருந்து தைய லிடம்போய் அங்கே, மன்னனின் அழுகை நீக்கி நாட்டு மக்களின் நலிவை நீக்கென்று” கூறுக. உன்றன் குறையைப் பின்னர் கூறுக என்று கூறிய அளவில் தங்கவேல் கிள்ளைபால் சென்றான் அங்கவள் உளத்தை அரசனுக் காக்கவே. இயல் - 25 (“தங்கவேல் என்னும் தமிழனைக் காண்கிலேன் இங்கொரு கோழையை யான்காண் கின்றேன்.”) இடம் : கொன்றை நாட்டு முன்னாள் அரண்மனை. உறுப்பினர் : தங்கவேல், கிள்ளை. “ தங்கவேல், இதுவும் தகுமோ உனக்கே? எங்குளாய்? கொன்றை இகழ வாழ்ந்தனை. அன்பரை, அண்ணலை அரசன் வருத்திட உன்துணை பெரிதும் உதவிற் றேயோ? நாட்டினைப் பிறன்பால் காட்டிக் கொடுத்தும் வாழஒப் பிற்றோ மற்றுன் உள்ளமும்? மாழை நாட்டான் மகிழ நடந்திவ் வேழை நாட்டை ஏற்கஎண் ணினையோ? எங்கே வந்தாய்? என்னுளம் மாற்றவோ? சிங்கம் உண்பதைச் சிறுநரிக் காக்கவோ? கொன்றை நாட்டைக் குறைவு படுத்தவோ? உன்றன் கருத்தை ஒப்பேன். போய்விடு. தங்கவேல் என்னும் தமிழனைக் காண்கிலேன் இங்கொரு கோழையை யான்காண் கின்றேன். போ” எனச் சொன்னாள் பூவிழி நெருப்புக. கோஎன அழுதே கூறுவான் தங்கவேல்; “சிறையினில் எனையும்அத் தீயோன் சேர்ப்பான் பிறகெவர் உள்ளார்? அறைக கிள்ளையே. அரசனை அணுகி அறிவு புகட்டினேன். ‘திருமுகத் தாளைநான் சேரும் படிசெய்’ என்று நஞ்சென இயம்பினான், வந்தேன் உன்னுளம் சொல்லுக. உரைப்பேன் அவனிடம்.” என்று சொல்லவும், “என்னுளம் என்னிடம் ஏது, கூறுக மகிண னிடத்தில் வாழ்வ தன்றோ? என்னிடம் இம்மொழி இயம்பவும் ஒண்ணுமோ உன்னிடம் அறிவும் ஒழிந்த தேயோ?” என்று கூறினாள் கிள்ளை. சென்றான் தங்கவேல் மன்ன னிடத்தே. இயல் - 26 (“கொன்றை நாடு கொடுமை பொறுக்குமோ? நன்றிதோ நன்றிதோ” என்று கெஞ்சினான்”) இடம் : கொன்றை நாட்டு அரண்மனை. உறுப்பினர் : மாழைப் பேரரசு, ஒள்ளியோன், தங்கவேல். கொள்ளாக் காதலொடு கொற்றவன் இருந்தான் ஒள்ளி யோனும் உடன்அமர்ந் திருந்தான். படையின் தலைவனோர் பாங்கர் இருந்தான். தடதட வென்று தங்கவேல் வந்து “கிள்ளை என்மொழி கேட்கிலள்”, என்றான் துள்ளி எழுந்து சொல்வான் மன்னன்: “ஒள்ளியோய் நேற்றுமுன் உன்னை எதிர்த்துத் துள்ளிய பலரையும் சுட்டிக் காட்டுக. படையின் தலைவனே கடிதே அவர்களை அடைக்க சிறையில். அதுவும் அன்றி, வீட்டினின்று மக்கள் வெளிவரா மற்செய், கூட்டம் எங்கும் கூடா வகைசெய். கடைகள், தொழிலகம் கதவடைக் கச்செய். தடவயல் உழவும் நடவா மைசெய். ஒருவீட்டி னின்றும்மற் றொருவீட்டுக் கொருவன் வருத லின்றி வழுவாது பார்த்திடு. மன்னனின் ஆணை மறவேல்” என்றான். தங்கவேல் பதைத்துத் தரையிற் புரண்டு “மங்காப் புகழுடை மன்னா மன்னா கொன்றை நாடு கொடுமை பொறுக்குமோ? நன்றிதோ நன்றிதோ!” என்று கெஞ்சினான். ஆணையை நடத்த அவ்வொள்ளி யோனும் படையின் தலைவனும் பறந்தார். மன்னன் “தங்கவேல், மங்கையைத் திருத்துக. இங்கிரேல்” என்றான். ஏகினான் அவனுமே. இயல் - 27 (“ஓம்புதல் பெற்றீர் உயிர் துடிக்கின்றீர் பாம்புநிகர் மன்னனைப் பழிவாங்கேனோ”) இடம் : கொன்றைநாட்டுச் சிறைக்கூடம். உறுப்பினர் : தாரோன், மகிணன், வாட்பொறை. தாரோன் சிறையின் சன்னலின் கம்பியை ஆரும் அறியா தகற்ற முயன்றான். அவனுளம் அரசன் ஆவியைப் போக்க ஓடிற்று; நல்லுயிர் உலகை வெறுத்தது. ஆடின இருதோள். அலறின உதடுகள். “கொன்றை நாட்டு மக்காள், கொடுமையால் இன்று நலிந்திரோ” என்று கூவினான். “இமைகள் இரண்டும் இருவிழி காத்தல்போல் தமிழரே, மகிணன் தலைமையில் நாடொறும் ஓம்புதல் பெற்றீர் உயிர்துடிக் கின்றீர் பாம்புநிகர் மன்னனைப் பழிவாங் கேனோ” என்று துடிதுடித் திருந்தான். மகிணனோ, “இன்றுநான் இடர்பல ஏற்பேன். அஞ்சிடேன். என்னைத் தன்னுயிர் என்று நினைப்பாள் தையல் என்நிலை தாங்காள், உலகில் உய்ய மறுத்தே உயிர்விடு வாளோ! அவள்பொருட் டஞ்சினேன் ஐயகோ! அந்தத் துவளிடைக் கிள்ளையின் துயரம் மாற்றத் தங்கவேல் உள்ளான்; தகுபண் புள்ளான்; மங்காத ஆற்றல் வாய்ந்தவன்” என்று சிறையிடைத் துன்பச் சேற்றில் சிக்கி உறுவரிப் புலிபோல் உலாவி இருந்தான். வாட்பொறை, கிள்ளையை மகிணனை எண்ணி “மீட்சி என்று, நம் ஆட்சி என்று மன்னன் தீமை மாறுவ தெந்நாள்?” என்று துடித்தான் இருண்ட சிறையில். வீடு தோறும் நாட்டுமக் கள்படும் பாடு, நவிலவும் படுவ தன்றே. இயல் - 28 (“ஒருவீட்டுக்குள் ஒரு குழந்தைதன் மரப்பாவை கடித்து வாய்நொந் தழுதது”) இடம் : கொன்றை நாட்டின் வீதிகளும், வீடுகளும். உறுப்பினர் : கொன்றைநாட்டு மக்கள். வீதியில் மாழையான் விட்ட படையன்றி நாட்டினர் எவரும் நடத்தல் இல்லை. வீடொவ் வொன்றும் வெஞ்சிறை விடுதி, விடுதி தோறும் படுதுயர் மக்கள், பசிஎன அழுகுரல் பாய்ச்சி யிருந்தனர். அரிசி யில்லை, ஆவன இல்லை. புரிவ தொன்றும் புரிந்தபா டில்லை குழந்தைகள் வீட்டில் புழுவெனத் துடித்தனர் எழுந்த நிலாமுகம் எரிந்தனர் மங்கைமார்! தின்பன வாங்கத் தெருவில் வந்தாரை முன்னின்று தீயர் முகத்தில் அறைந்தனர். “சாகின் றோமே சாகின் றோமே வேகின் றோமே விடைகொடும் ஐயா” என்று கெஞ்சும் எளிய மக்களைக் “கொன்று போடுவோம் குதிகால் வெட்டுவோம் வீட்டை விட்டு வெளிவந்தால்” என்று நீட்டினர் கத்தியை நிற்கும் காவலர். இருந்த பண்டம் அருந்திய பின், சிலர் எரிந்த வயிற்றுக் கில்லா தழுதனர்! நெல்லைக் குற்றிய நல்ல அரிசியை மெல்ல லாயினர். விறகில் லாமையால் கூளம் எரித்துச் சோளம் வதக்கி மாளா திருக்க வயிற்றுக் கீந்தனர்! உலைக்கொன் றின்றி உட்புறம் வளர்ந்த இலைக்கறி, சிலபேர் குலைக்குள் இட்டனர். உள்நாக்கி லிட்டுப் பிண்ணாக் கைச்சிலர் மண்ணாங் கட்டியோடு வயிற்றை நிறைத்தனர். உழுந்தைப் பச்சையாய் உண்டனர் சில்லோர். கொழுந்து மாவிலை விழுங்கினர் சில்லோர். புளிதின் றார்சிலர். பூண்டுதின் றார்சிலர். மிளகும் தீர்ந்தது. வெந்தயம் தீர்ந்தது. ஒருவீட் டுக்குள் ஒருகுழந்தை, தன் மரப்பாவை கடித்து வாய்நொந் தழுதது. சுண்ணாம் பள்ளிச் சோறென உண்டு, வாய் புண்ணாம் படியாய்ப் புரளும்ஓர் மகவு. கன்னமும் நெற்றியும் கண்ணும் சுருங்க, வாய் செந்நீர் போலச் சிவக்க அழும்! ஓர் அருமைக் குழந்தைக் கன்னை துடித்தழ உருகி உள்ளம் உடையவன் கதற வளர்ப்பு நாய்ஒன்று வாய்விட் டுளற இளைத்த காக்கை களைப்பாற் கரைய எய்திய இந்நிலை இங்குப் போலவே வீடு தோறும் வீதி தோறுமாய் நாடுறு கொன்றை நகர முழுதும் செறிந்தது. மக்கள் திறந்தவாய் நிறைந்த அழுகுர லால்நிலம் அதிர்ந்ததுவே. இயல் - 29 (“பின்னிய சிலந்திநூல் பெருங்காற்றைத் தாங்குமோ துன்பம் நனி பெரிது தூய் உடல் நனி மெலிது”) இடம் : கொன்றை நாட்டு அரண்மனை. உறுப்பினர் : ஒள்ளியோன் மாழைப் பேரரசு. ஒள்ளியோன் வேந்தனுக் குரைக்க லானான்: “ கிள்ளை துன்ப வெள்ளத்தில் வீழ்ந்தாள். அவள்வாழ் கின்ற அரண்மனை தன்னில் துவள்இடை இரண்டு துண்டாய் விடுமோ எனும்படி, கரையில் இட்டமீ னைப்போல நனிதுடிக் கின்றாள். நன்னீர், குளம்நிறைந்து வழிதல் போல விழிநீர் பெருகப் பிழிதேன் மொழியாள் பெருங்குரல் பாய்ச்சி ஐயகோ என்ன அழுதிருக் கின்றாள். ஐயுறு கின்றேன் அவள்உயிர் வாழ்வதில். பின்னிய சிலந்திநூல் பெருங்காற்றைத் தாங்குமோ; துன்பம் நனி பெரிது தூய உடல் நனிமெலிது. தங்க வேலுடன் நான்அங்கு மறைந்திருந்து மங்கை நிலையறிந்து வந்தேன்,” என்னலும் “எதற்கவள் அழுதாள்” என்றான் மன்னன் “மதிற்சிறை தன்னில் வாழ்வார் தம்மை எண்ணி”என் றொள்ளியோன் இயம்பினான். மன்னன், “பெண் அவள், காதலன் பிரிவு பற்றி வருந்தினாள் எனில், அவ் வருத்தம் கொல்லாது பொருந்த நெஞ்சில் பூத்துக் காய்த்த காதல்நோய் சாக்காடு கடிவதோர் மருந்தே! ஆதலின், நானும் அஞ்சுதல் தீர்ந்தேன். நெடுநகர் மக்களின் நிலை யா” தென்றான். “விடிவதற்குள் மிகுபசித் தீயால் சாவார்” என்று சாற்றினான் ஒள்ளி யோன். “இந்நிலை கிள்ளைக்குச் சொன்ன துண்டோ” என்று மன்னன் கேட்டான். “இல்லை” என்றான் ஒள்ளியோன். “எழுந்து போ கடிதில், படையின் தலைவனை அழைஎன” விடைதந் தனுப்பினான் வேந்தன் அவனையே. இயல் - 30 (“செல்லச் செய்க, சேயிழை, என்னைத் திருமணம் புரியச் செப்பிடச் சொல்க”) இடம் : கொன்றை நாட்டு அரண்மனை. உறுப்பினர் : மாழைப் பேரரசு. “மங்கை கிள்ளை மன்னனை மணந்தால் இங்குள தொல்லைகள் ஏகும் என்றும், இதற்கே மகிணன் இடையூ றாக இருந்திடு கின்றான் என்றும், நகரத்து வீடு தோறும்நீர் விரைவிற் சென்று சொல்ல வேண்டும். சொன்னபின் அவர்களை மகிண னிடத்திலும் மற்றவரிடத்திலும் செல்லச் செய்க சேயிழை, என்னைத் திருமணம் புரியச் செப்பிடச் சொல்க சிறையினை உடனே திறந்து விடுக மகிணன், தாரோன், வாட்பொறை ஆகியோர் எங்கணும் போகலாம் என்று கூறுக. விரைவிற் செல்லுதல் வேண்டும்” என்று மன்னன் உரைத்தான் நன்றெனச் சென்றனர் படைத்தலை வன்முதல் சிலரே. இயல் - 31 (“மங்கை கிள்ளை, மன்னனை மணக்க! மகிணன், இதனைமறுத்தல் வேண்டாம்” இடம் : கொன்றை நாட்டின் முன்னாள் அரண்மனை. உறுப்பினர் : மகிணன், தாரோன், வாட்பொறை, கிள்ளை, மக்கள். கடுத்தபசி என்னும் காட்டாறு, மாந்தராம் மடித்த சருகுகளை அடித்து வந்து சேயிழை வீட்டிற் சேர்த்தது. சிறையின் வாயிலி னின்று மகிணன் வாட்பொறை, தாரோன் அனைவரும் தையல்பால் வந்தனர். யாரே வெறுப்பார் எளியோர் நிலையை? கிள்ளையோ தனது கீற்றுப் புருவம் நெற்றி பெறநீள் இமைஆ டாது பற்றுளம் பதறப், பார்த்தனள் மாந்தரை. மகிணன், பதைத்தான்! வாட்பொறை அழுதான்! தாரோன், மக்கள் சாற்றும் மொழிகளை நேருறக் கேட்டு நின்று தயங்கினான். மக்கள் ஒருங்கே வாய்விட்டுக் கூறினார்: “இக்கொடு மைக்கெலாம் இருவரே காரணர். மங்கை கிள்ளை மன்னனை மணக்க, மகிணன் இதனை மறுத்தல் வேண்டாம்.” இவ்வாறு கூறி இடுப்புத் தளர்ந்தே எவ்வாறு நடப்போம் எவ்வாறு வாழ்வோம் பசிநோய், பசிநோய். பதைப்புறச் செய்ததே புசிஎன எவரும்ஒன்று போடா ரோஎனப் படுத்தார் அங்கே பற்பலர். வீழ்ந்து துடித்தார் சில்லோர். தொழுதார் சில்லோர் இமைக்கும் நேரத்தில் தமிழர் எதிரில் சுமைசுமை யாகத் தூய பழங்களும், கிழங்கு பலவும் தழலிட் டெடுத்த கொழும்பயறு கொட்டைபலவும் தழற்காட்டு மழைஎனச் சாய்த்தனர். அவரவர் விழுக்காடு பெற்று விழுங்கினர். உடனே கல்மலை மூன்றின்மேல் பொன்மலை ஒன்றென அடுப்புமேல் தாழியில் அரிசி யிட்டு வெள்ளி மலைபோல் வெஞ்சோறு படைக்க அள்ளூறு சுவைக்கறி ஆக்கியும் படைக்கக் கலந்துண்ட மக்களின் கருத்தில், மன்னனை இலங்கிழை மணக்கா திருப்பா ளாயின் இன்று பட்டதே இனிப்பட நேருமே என்ற நினைவே எழுந்ததால், நடுங்கி, “மகிணத் தலைவர் மறுக்க வேண்டாம் தகுமன்னனுக்கும் தையலுக்கும் மணம்புரி வீர்” என்று வாய்விட்டுக் கூவினார். பணமிலார் பொங்கல்நாள் அணுகினார்போலச் செல்வியும், மகிணனும் திடுக்கிடு நெஞ்சொடு சொல்வ தொன்றும் தோன்றா திருந்தனர். தாரோன் அவர்நிலை நேரில் அறிந்து நீராழ்ந்த மூச்சு, நிலை காண எண்ணல்போல் செய்வகை நாடினான். தெரியாது துடித்தான். நெய்உகுத்த நெருப்பு நெஞ்சொடு வாட்பொறை. “கொன்றை நகரக் குடிகளே, கேளீர், இன்றிதோ மன்ன னிடம்நான் செல்வேன். மாலைஇது போகக் காலையில் மணத்தின் வேலையோ, அன்றி வேறெதோ ஆம்என்று கூறி, அருள்செய்யு மாறுகேட்பேன். தேறுக உள்ளம். செல்க” என்றான். ஊராளும் வாட்பொறை சொல்லை யாரே விலக்குவார்? ஏகினார் ஆங்ஙனே. இயல் - 32 (“இந்தத் தெவிட்டாக் கவிதையைப் புகழ்ந்தால் புகழே புகழ்பெறும் அன்றோ”) இடம் : கொன்றை நாட்டின் அரண்மனை. உறுப்பினர் : வாட்பொறை, மாழைப் பேரரசு. ஏழை வாட்பொறை, ஏந்தலைக்கண்டான் மாழை நாட்டு மாப்பே ரரசே, மக்கள் பசியால் வருந்தினர். வீட்டில் புக்கவர் வெளியிற் போகா தடைத்தீர் குற்ற மற்ற குடிகளை வாட்டுதல் கற்ற மக்கள் காட்டும் திறனோ? அவள்உளம் அவன்மேல் ஆழ்ந்து கிடப்பதாம். குவிபொருள் வறியவன் கொண்டது போலத் துவரிதழ்க் கிள்ளைபால் தோய்ந்த நெஞ்சை மாற்ற முடியாது மகிணன் கிடந்தான். உலகுக் கழகை ஊட்டுமோர் காதற் கலவை நிகழ்ச்சியைக் காணினும் கேட்பினும் மாந்தரின் தந்தைநேர் மன்னன் மகிழ்வதா? போந்து சிதைப்பதா? வேந்தே வேந்தே. உண்ணும் உணவிலான் உடுக்கத் துணியிலான் கண் உறங் கக்கால் முடங்கு கூரையான் பொன்னு ளத்தைப் பொதுவுளம் ஆக்கியும். வீட்டுக் கன்னை மிகவுழைப் பதுபோல் நாட்டுக் குழைக்கும் நாட்டம் மிகுத்தும் இகழ்ந்திடும் எதிரியும் இருகை ஏந்திப் புகழ்ந்திடப் பெற்ற மகிணன், நாடொறும், தோகையின் அன்பில் துளிவிழுக் காடு நோகாது பெற்று நுண்ணிடை யாளுடன் இரண்டுடல் இரண்டுயிர் இனமாற்றிப் பிணைந்தவாறு திகழ்ந்தான். இந்தத் தெவிட்டாக் கவிதையைப் புகழ்ந்தால் புகழே புகழ்பெறும் அன்றோ? தீப்பட்டுக் குதிப்பொடு சேர்ந்தார் போலக் கூப்பாடு போட்டனர் கூட்ட மக்கள்! நெருக்கினர். மணவினை நிகழ்த்தினர். தேறுதல் உரைத்தனுப்பி ஓடிவந் தேனிங்கு! மன்னவன் மலர்வாய், இன்னல் இன்றி நன்மொழி ஒன்று நவிலுக” என்றான். என்னுயிர், கிள்ளையால் இங்கு நிலைப்பது. மன்னிய மக்களின் வாழ்வென் னிடத்தது. மாற்றம் இலையென மன்னன் சொன்னான். காற்றில் கனல்ஏறும் கடுமொழி கேட்ட வாட்பொறை, நன்று மன்னா, காலையில் இன்னது விடையென இயம்புகின்றேன் இன்னல் அதுவரை இழைத்தல் வேண்டாம் என்று சொன்னான். சொன்னதும், நன்றென மன்னன் நவின்றிருந் தானே. இயல் - 33 (“நாட்டுக் குரிமை நன்றா? என்னுயிர் வாட்டும் காதற்கு வகை செயல்நன்றா?”) இடம் : கொன்றை நாட்டின் முன்னாள் அரண்மனை. உறுப்பினர் : கிள்ளை, தாரோன். பஞ்சணை மீது பச்சை மயில்கிடந்து நெஞ்சு புண்ணாக நினைந்து நினைந்து வழியறி யாமல் அழுத கண்ணும் செழுநிலா முகமும் சிவக்க லானாள். வாழ்வு, மகிணனை மணப்ப தாகும். சாவு, மகிணனைத் தவிர்ப்ப தாகும். வஞ்சிநான் மன்னனை மணப்ப துண்டோ, நெஞ்சு பொறாததை நிகழ்த்தினான் மன்னன். படைவலி மிக்க கொடியவன் சொன்னான். நடைமுறை அறியாது நவின்றான். அந்தோ மக்களைப் பசிக்கனல் வாட்டச் செய்தான். எக்கடன் உடையேன், என்பதும் அறியேன். நாட்டுக் குரிமை நன்றா? என்னுயிர் வாட்டும் காதற்கு வகை செயல் நன்றா? காதல் என்னில். சாதலோ மக்கட்கு? மீட்சி என்னில், வீழ்ச்சியோ கற்புக்கு? நல்லிராப் போதும் நலிஇரக் கம்கொளச் செல்வி படுப்பதும் திடுக்கிட் டெழுவதும் ஆகஇருக்கையில், அப்போ தங்கே தாரோன் வந்து தையல்பால் கூறுவான்: “மக்கள் விடுதலை மறுப்பது நன்றா? விடிந்தால் என்ன கொடுமை நேருமோ, அடிவயிறு தீப்பட அங்கவர் நைந்தனர் என்னசொல் கின்றாய் இந்நாட்டு மக்கட்கு? மின்னும் முடிபுனை வேந்தனோ, வாட்பொறை என்ன சொல்லியும் இம்மியும் ஒப்பிலான், கிள்ளையை மணந்து கொள்ளவேண்டும். எள்ளளவும் பொறேன். இதனை ஒப்பினால் கொன்றை நாடு கொழுந்துவிட் டெரிவதை என்கை விலக்கும்; இயற்றுக” என்றான், என்று தாரோன் இயம்ப, ஏந்திழை, “ஈக்களும் நுழையா தாக்கித் தொங்கவிடு தூக்கணம் புட்கள் கூட்டொடு தொலைந்தாங்கு நானும் என்னுளம் நண்ணும்அச் செல்வனும் தீநனி வளர்த்ததில் செத்தொழிந் திடவோ? அன்றி, எம்மை அறுத்துக் கழுத்தைக் கொன்று போடும் கொள்கை யுடையிரோ? ஆயினும், நாடுபடும் அல்லல் நினைக்கில் தீயினில் வீழ்வதும் சிறந்ததே ஆகும். சாவதும் என்னைச் சார்ந்த செய்தியோ? நாவால் அவரே நவில வேண்டும். என்றன் வாழ்வில் இரண்டைக் கேட்டேன். ஒன்று விடுதலை, ஒன்று மகிணன்! மகிணனை வேண்டின் மாயும் விடுதலை! விடுதலை வேண்டின் வீழும் என்னுயிர், ஒன்றினை ஒன்றே ஓடி மறித்தது. நன்றிது நானிதில் ஒன்றும் கூறேன். துன்பமும் நானும் தனியே இன்னல் இரவில் இருக்கவிட் டேகுவையே!” இயல் - 34 (“உன்கையால் கிள்ளையின் உயிரைப் போக்கு வேறு வழி ஏது? விளம்பினேன் இதனை”) இடம் : கொன்றை நாட்டில் மலர்ப் பூங்கா. உறுப்பினர் : மகிணன், அமைச்சன். நான்இறப் பேனேல், மான்இறந் திடுவாள் இறந்திடு வாள்எனில், இறக்கும்அவள் கற்பும். அவளைநான் அணுகி, ஐயோ ஐயோ துவரிதழ்க் கிள்ளையே, துணைவனாய் மன்னனைக் கொள்க என்பது கொள்கை யல்லவே, கொள்கை என்று கூறினும் அவளோ தாங்காள், இறப்பாள், சற்றும் பொறாளே. ஏங்குமென் நிலையை எவர்தாம் அறிவார்? மக்கட்குநான் இன்று வழுத்துவ தென்ன? தக்கது யாவரே சாற்றுவார் எனக்கே? என்று மகிணன் இரவில் தனியாய் ஒன்றும் அறியா துலாவி யிருந்தான். மகிணன் உலாவும் மலர்ப்பூங் காவில், புகுவான் ஓர்ஆள், “மகிணனே” என்றான். அமைதியொடு மகிணன் “ஆர்”என்று கேட்டான் “அமைச்சன் “நான்” என் றறைந்தெதிர் வந்தான் கண்ணீ ரால் மகிணன் கழறுவான்: “எண்ணிப் பார்த்திரோ என்னிலை ஐயா? நாட்டினர்க் கென்ன நவிலுவேன், காதற் கேட்டினுக் கென்ன கிளத்துவேன்” என்றான். அமைச்சன் அழுதான். இமைக்காது நோக்கினான். “நேற்று நாட்டினர் நிலைகெட்டிருந்தார், காற்றெலாம் அழுகுரல் கலந்தது. பசியின் தீயோ அவரைச் சிதைக்க லாயிற்றே தாயனைய அன்பன் தங்க வேலன், அரசனை அணுகி, அறிவு றுத்தினான். அரசன் நெஞ்சையும் அறிந்துகொண்டான். தெருத்தோறும் சென்றான். தீமையில் துடிக்கும் பெருமக்கட்குப் பெரிதும் இரங்கினான். ஆழ எண்ணினான். அறிந்தான் ஒருவழி. வீழும் மக்கள் வாழவும், கிள்ளையின் கற்புக் கிடையூறு காணா திருக்கவும் தோன்றிய அவ்வழி சொல்ல நினைத்தான். தான் அதைச் சொல்லத் தகாதெனச் சொன்னான். இவ்வா றென்னிடம் இயம்பிச் சென்றவன் சிறிது போழ்து செல்ல, ஓர்ஓலை அனுப்பினான். “இந்தா அன்பனே” என்று கனற்படு மெழுகெனக் கருத்துருகி நின்று தந்தான் அமைச்சன். தந்த ஓலையை மகிணன் ஆவலோடு வாய்விட்டுப் படித்தான்: “மன்னன், கிள்ளையை மணக்க எண்ணி இன்னல் பலவும் இழைக்க லானான். நாட்டினர் பட்டதை நானே கண்டேன். கேட்க. நானொன்று கிளத்த எண்ணினேன். உன்னெதிர் நின்றே உரையேன் அதனை. என்னினும் நானதை இயம்புதல் என்கடன். அடிமையி னின்றும், மிடிமையி னின்றும் விடுதலை பெறுதல் வேண்டும் மக்கள். அதற்குக் கிள்ளை அவனை ஒப்புவாளோ? மிதித்துத் தள்ளாள் மெல்லிதன் கற்பை. உடனே செய்க ஒருசெயல், நாட்டுக்குன் கடமை செய்கநீ, கடிது செய்க. உன்கையால் கிள்ளையின் உயிரைப் போக்கு! வேறுவழி ஏது? விளம்பினேன் இதனை. மாறுபடும் உன்னிலை, மங்கும் உன்முகம். உன்னிலை காணுமுன் என்றன் வாழ்வைக் கன்னல் அருந்திக் கசடு நீக்கல்போல் முடித்துக் கொண்டேன். விடுதலை. விடுதலை. கடிது கொணர்க கண்ணிகர் தோழரே இங்ஙனம் தங்கவேல்” - என்று படித்தபின், “எங்ஙனம் என்னை இவண்விட்டுச் சென்றனை. நாளெலாம் நல்லுரை நல்கிநீ இறக்கும் வேளையும் நாட்டின் விடுதலை மருந்தை அருளினாய் அப்பா, ஆருனை ஒப்பார்? உருள்பெருந் தேர்க்கோ ஓர்அச் சாணிபோல் இந்நாட்டு நட்புக் கிருந்தாய் ஒருவன் நீ. பொன்னை வறியான் போக்கினான் போல உன்னைநான் இழந்தேன் உன்னைநா டிழந்ததே என்னைநீ இயற்று மாறு சொன்னதை இன்னே புரிவேன் இன்னல் புரியேன். ஆம்அவ ளுயிரே அகற்றத் தக்கது! தீமை போகும் திருநாடு வாழும். கொடியான் தானும் கொடுமை ஏற்று, விடுவான் நாட்டை, வேறுவழி ஏது? அமைச்சரே ஒரு ‘வாள்’ அளிக்க வேண்டும். இமைக்குமுன் அவளுயிர் ஏகு மாறு செய்வேன். கடன்இது, செய்வேன், தக்கது. தையல் உயிரால் தருக விடுதலை, அணங்கினள் ஆவி, அனைவர்க்கும் மீட்சியைக் கொணர்ந்த தென்னில் கொண்டாடத் தக்கது. காதல் பெரிதன்று! கடமை பெரிது! ஈதல் உண்டோ எழில்வாள்” என்றான் அமைச்சன் வாள்ஒன் றளித்தான் தமிழன் கொண்டு போனான், தையலை நோக்கியே. இயல் - 35 (“நன்மொழி சொல்லடி நங்கையே என்றால் பொன்மொழி ஒன்றுபுகலினும் புகல்வாள்”) இடம் : கொன்றை நாட்டு அரண்மனை. உறுப்பினர் : மாழைப் பேரரசு. கிள்ளை என்னைக் கேடன்என் றெண்ணி எள்ளுவாள்; ஏசுவாள் இன்ன லுற்றாள். அன்னாள் அன்பினை அடைய எண்ணும் நான், இன்னல் இழைத்தேன், என்னே மடமை! தங்கவேல் கொடுமை தாங்கிய மக்களை அங்குக் கண்டான். அவன்உயிர் நீக்கினான். ஏனை யோரும் இறந்து படுவரோ. மாநிலம் பழிக்குமே மன்னன் என்னை. விடியுமுன் என்ன விளையுமோ, கிள்ளை பொடிபட்டு நெஞ்சுபொ றாதுமாய் வாளோ மங்கை கிள்ளைக்கு மகிழ்ச்சியை விளைத்துத் திங்கள் முகத்தில் சிரிப்பை விளைத்து நன்மொழி சொல்லடி நங்கையே என்றால் பொன்மொழி ஒன்று புகலினும் புகல்வாள், ஆதலின், எழுதிய விடுதலை ஏட்டை நானே முழுநிலா மறையும் முன்னரே சென்று அவள்பால் நல்குவேன். அங்குநான் சென்றால் தவறு விளையுமோ. சட்டை மாற்றி முகத்தடை யாளம் முழுதும் மாற்றித் தகும்என் அமைச்சனின் தளர்உரு எய்திச் செல்வேன் என்று மன்னன் நல்லதோர் திட்டம் நண்ணினான் ஆங்கே. இயல் - 36 (“கலைக்கழகு நல்குதிருக் கண்ணமுதை மாய்க்கக் கொலைக்கருவி நான் கொண்டதை அறியாள்”) இடம் : கொன்றை நாட்டின் முன்னாள் அரண்மனை. உறுப்பினர் : மகிணன், கிள்ளை, மாழைப் பேரரசு. “உளக்கோ யிலிலே உற்ற சுடர்மணி விளக்கவிக்க வாளொடு விரைந்து செல்கின்றேன் என்று தன்னை இகழ்ந்தா னாகி அரண்மனை எதிரில் அணுகினான் மகிணன். இருண்டடர் கூந்தல் ஏந்திழை இப்போது துயின்றிருப்பாளா? துயரிலே நெஞ்சு பயின்றிருப் பாளா? பற்பலர் அவளிடம் சூழ்ந்திருப் பாரா? அறியேன்! என்று மகிணன், அரண்மனை வாயிலை மிதித்தான் கலைத்தால் மற்றொன்று காணரும் ஓவியம் நிலைத்தால் இந்த நீணிலப் புதுமை பாவலர்க்குப் புதிய பாடம் அவள் என்று காவல் வாயிலைக் கடந்து சென்றான். விட்டுவிட் டன்றி விடாது மின்னுமோர் கட்டழகு தன்னை வெட்டவும் வேண்டுமே. பொலிவிருக்கும் புதுப்பூ என்று கொலுவி ருக்கும் கூடம்க டந்தான். பெண்ணழ கொன்று பேர்சொல இருந்ததென்று மண்ணும் இரங்குமே, மக்கள் கூட்டம் நிலா இருந்தது நீணில மதிலும் இலா தொழிந்ததே என்றும் இரங்குமே நாடிரங் குமேநகர் இரங்கு மேஎன் றாடரங்கு முதல்அ னைத்தும் கடந்தான். அணிவிளக் கெரியும் அறையின் நாற்புறம் பணிப்பெண் கட்குறு பல்அறை நோக்காது பஞ்சணை ஒன்றில் பாய்ச்சிய நெஞ்சொடு வஞ்சியறை வாளொடு மாப்பிளை புகுந்தான். இருபொற் பாவை ஏந்து விளக்கிடையில் ஒருதமிழ்ப் பாவை உறங்கக் கண்டான். அசைவறு முகநிலா மிசைவிற் புருவமும் இசையுறு மலர்வாய் இருகனி யுதடும் கொஞ்சுதல் போலவும் கிடந்தன ஒளியில், சரிந்து கிடந்த கருங்குழல் மீது தெரிந்த அவள்முகச் செந்தா மரையில் ஓடிய அவன்விழி உளத்தை யசைத்ததால் “தேட முடியாச் செல்வம். மண்ணிடைப் பார்க்க முடியாப் பலர்புகழ் ஓவியம். வார்க்காது நெஞ்சை மகிழ்விக்கும் தேன். தனக்கென்று வாழாள்; எனக்கென்று வாழ்வாள் தனைக்கொன்று வாழ நினைக்கும் தீயேன், ஒருவாளொடு நிற்கையில் உறக்கத் திரைக்குள் இருவாள் விழியையும் இட்டு வைத்தாள். கலைக்கழகு நல்குதிருக் கண்ணமுதை மாய்க்கக் கொலைக்க ருவிநான் கொண்டதை அறியாள். இன்பக் கனவுலகு தனில்வாழ்ந் தாளோ துன்பம் நெருங்குவது தோன்றா திருந்ததோ, பொன்னுடலில் எங்குப் புகுத்துவேன் வாளை, மென்மை உடலை வெட்டிச் சிதைப்பதோ ஐயோ, நானோ? அவளையோ அன்பு பொய்யோ” என்று புலன்கள் கலங்கும் போதில் நெடுவாள் பொத்தேன்று வீழ்ந்தது! காததிர்ந்து கிள்ளை கண்ணை விழித்தாள். “நீவிரோ! நீவிரோ! நீந்தத் தெரியாது. தீவின் நடுவில் திகைத்துத் துயர்க்கடல் பாய்ந்தழி வேனுக்குப் பாய்விரித்துக் கப்பல் வாய்ந்த தெனவே வந்தீர் வருக! நீவிரோ” என்று நிகழ்த்தி, மகிணனின் பூவிழியில் சொட்டும் புனலொடு வாளைக் கண்டாள் முகத்தில் களையிழந்து நிற்றலைக் கண்டாள். நடுங்கும் கைகள் கண்டாள். “என்ன என்ன என்ன” என்றாள். “கொன்றை விடுதலை கொள்ள வேண்டும். உரிமை இழந்தும் உடலைச் சுமந்து திரிவார்க்கு விடுதலைச் சிறப்பை இதுவென்று காட்டுதல் வேண்டும். காதலைப் பார்க்கிலும் நாட்டுக் கடமையே நனிபெரி தென்று குறிக்க வேண்டும். கொல்லவந் தேன்உனை. மறுக்காது நாட்டு நிலையை மறக்காது மாந்தர் நலத்துக்கு மாய்ந்திட மகிழ்ச்சிகொள் சாய்ந்து கொடுப்பாய் தலையை” என்றான். எதிர்பா ராத இடிக்குமுடி சாய்த்தாள்; அதிர்ந்த மின்னலுக் கணுவும் இமைத்திடாள். தன்னலத் துக்கே எந்நிலை மைகளும் என்னும் தீயர் இருக்கும்இத் தரையைக் காணு தற்கும் நாணுவாள் போல இறுக விழியை இமையால் மூடி உறுதியாய்த் தன்னிரண் டுள்ளங் கைகளைக் கன்னம் இரண்டிலும் கவித்துக் குனிந்தே ‘இன்னுடல் நாட்டுக் கிந்தா’ என்று நின்றாள். அவள்குழல். நீல அருவி குன்றி னின்று வீழ்வதென்று சொலும்படி சரிந்து விழுந்து தரையில் புரண்டது. திருந்து தங்கத் தேர், நடு முறிந்து விழுகையின் தோற்றம் விளைத்தது வளைந்தமெய்! வாளைக் குனிந்து மகிணன் எடுத்தான். காளையின் விழிகள் கவிழ்ந்த முகத்தை அடைந்தன. அவன் உளம் ஐயோ என்றது. தடந்தோள் கீரைத் தண்டாய்த் துவண்டது. தொட்ட வாளைத் தூக்கவும் வலியிழந்து பட்ட மரம் போல், பாவையைப் பார்த்து நின்றான், மீண்டும்வாள் நிலத்தில் வீழ்ந்தது. திரும்பினாள். கண்டாள் செயலற்ற மகிணனைத் தரும்படி வேண்டினான் தன்கையில் வாளை. வாளைத் தூக்கி வஞ்சிபால் நல்கக், காளை ஒருபாதிக் கருத்தி சைந்தான். பாதியைக் காதலுக்குப் பறிகொடுத்தான். ஏதிலார் கேட்பினும் இரங்கும் குரலில் “அன்பை என்பால் ஆக்கிய பிழையால் என்பும் தோலும் இணைந்தஇவ் வுடலைப் பின்நாள் நோய்வந்து பிளக்கும் கட்டையை இந்நாள் தீர்க்க இரங்கி நின்றீர்” என்று கூறி எடுத்தடி வைத்து நின்றோன்கை நெடுவாளை நெருங்கித் தொடுவாளைத் தொட்டு மலர்மெய்ச் சுனைமூழ்கி “என்றன் கட்டிக் கரும்பே விட்டுப்போ வாயோ” என்று நெஞ்சம் இளகிக் கிடந்தான் “கொன்றை விடுதலைக்குக் கொடுப்பீர் என்னை, என்றன் கற்பை எளிதாய் நினைப்போன் நன்று திருத்த நல்குவீர் என்னுயிர் என்று வாளைத் தன்கையில் மீட்டு நின்றாளை, “அன்பே” என்று கெஞ்சி வாள்பிடித்தான். அவன்தாள் பிடித்தே அவள், “சிறிது மறைவில் சென்றிருங்கள். குறை தவிர்ப்பேன் கொன்றையை மீட்பேன்” என்ன உரைத்தும் ஏகா திருந்தான். பின்னே நாலடி பெயர்த்து வைத்து வாளைத் தூக்கினாள் வளைகழுத் துநேரில். ஆள்வந்து பின்புறம் வாளைப் பிடித்து, “விடுதலை பெற்றது நெடிய கொன்றை. விடுக அன்னையே, விடுக வாளை” என்றகுரல் கேட்டுத் தன்முகம் திரும்பினாள் நின்ற அமைச்சன், “மன்னன் நானே என்னுரு மாற்றி இங்கு வந்தேன் பன்னுமோர் விடுதலைப் பட்டயம் இதுவாம் அன்னை எனக்குநீ, அருமைக் கொன்றைக்குத் தன்னுயிர்விடவும் தயங்காக் கிள்ளையே மகிணனுக்கென்று வாய்ந்த அமுது நீ. இந்நிலம் இந்நாள் எதிர்பார்த் திருக்கும் தன்னலம் மறுத்த தன்மைக்குத் தாயும்நீ! தகுசீர்க் கொன்றை தழைத்து வாழிய! மகிணன் கிள்ளையொடு வாழிய!” என்று மன்னன் நெஞ்சார வாழ்த்தி நின்றான். மெருகடைந்து பொன்னங்கு மின்னியது போல அருகிருந்த கிள்ளை அழகன் இருவர் மகிழ்வடைந்து தாமரைமுகம் மலர “வாழிய மன்னா” என்று நாழிகை கருதி நடந்தார் துயிலவே. இயல் - 37 (“நாங்கள் நல்கியதல்ல அவ்விடுதலை நீங்கள் பெற்றீர் என்று நிகழ்த்தினான்”) இடம் : கொன்றை நாட்டு அரண்மனை மன்று. உறுப்பினர் : மாழைப் பேரரசு, கிள்ளை, மகிணன், அமைச்சன், ஒள்ளியோன், வாட்பொறை, தாரோன். இளங்கதிர் விளக்கம் ஏந்தக் குளம், வயல், களம், கதிர் விளக்கம் கண்டன; கொன்றை விழித்தது; வல்லிருள் அழிந்தது; நலத்தில் செழித்தது; தீமை ஒழிந்தது; மக்கள் எழுந்தனர். மன்னன் இருக்கும் மன்றில் நுழைந்தனர் பல்லோர் நுழைய முடியாது, தெருவில் நிறைந்தனர்; திருநகர் நிறைந்தனர். “வருவார்; நமக்கும் வாய்திறந் துரைப்பார்; தருவதாய் உரைத்ததை இரவே தந்தார்;” என்றார் பல்லோர். “அன்றாடந்தான் இப்படிச் சொல்லி ஏய்ப்பர்” என்றார்பலர். “தலைவர் வந்தார் தலைவர் வந்தார் இலகுசீர்க் கிள்ளை இதோவந் திட்டாள் தாரோன் வந்தான்; தகுதி மிக்க வாட்பொறைதானும் வந்தான்” என்று கடலென முழங்கினர்; கைகள் கொட்டினர். மன்றின் அழகிய மாடி உச்சியில் நின்று, கடல்மிசை நிறைந்த பரிதிபோல் மலர்முகம் காட்டினான். மக்கள் மகிழ்ந்து கலகல என்று கைதட்டி னார்கள். “வாழ்க மன்னன் வாழ்க மன்னன்” என்று வாழ்த்துரை இயம்பி னார்கள். வையம் பயன்மழை கண்டது போலச் சிரித்த முகத்தொடு தெரிந்தாள் கிள்ளை. பருத்ததோள் மகிணனைப் பார்த்தார் அண்டையில், வாட்பொறை தாரோன் மகிழ்வோடு நின்றார். தோட்புறம் தாடி தொங்கும் அமைச்சன் மன்னன் அண்டையில் நின்றி ருந்தான். ஒள்ளியோன் இருந்தான்; உடன்பலர் இருந்தார். மாழை நாட்டின் மாப்பே ரரசன் “வாழிய கொன்றை மக்களே” என்றான். “கொன்றை விடுதலை கொண்ட” தென்றான். நன்றென மக்கள் நனிமகிழ்ந் தார்கள். “நாங்கள் நல்கிய தல்லஅவ் விடுதலை நீங்கள் பெற்றீர் என்று நிகழ்த்தினான்.” மக்கள் வியந்தனர் மகிழ்வு கொண்டனர்! “நானே உங்களை நலிவு செய்தேன். தானது பொறாத தங்கவேல் தற்கொலை செய்துகொண்டான். செய்தி யறிந்துநான் எய்திய துன்பம் இயம்பொ ணாததே என்றன் உளத்தை இரங்கச் செய்தது தன்னல மற்ற தங்கவேல் சாவே. இன்றிரவு நான்ஓர் இலக்கியம் பெற்றேன். தன்னிகர் இல்லாத் தனியெழிற் கிள்ளை என்னை யடைதல் வேண்டும் என்றேன். அடையாள் ஆயின் அளியேன் விடுதலை என்றேன். அதற்கே எழிலுறு கிள்ளையைக் கொன்று போடக் கொடுவாள் ஏந்தி மகிணன் கிள்ளைபால் வந்தான். கிள்ளை தூங்கினாள்! மகிணன் தொடங்கினான் கொலையை. ஏங்கினான். விம்மினான். இருகை நடுங்கின. அழகில் ஒருத்தியின் அகத்தில் மகிணனை எழுதிவைத் திருந்தாள்; அவனும் அப்படி. மகிணன் கைகள் மங்கையைக் கொல்லத் தகும்வலி இல்லைவாள் தவறி விழுந்தது. மங்கை விழித்தாள். மகிணனைக் கண்டாள். ‘எங்கு வந்தீர்கள்’ என்றுகேட்டாள். `கொல்ல வந்தேன்’ கொன்றை நாட்டுக்கு நல்ல விடுதலை நாட்டவேண்டும் என்றான். எழுந்து நின்று பெண்ணாள், தன்தலை குனிந்தாள்; ‘தமிழர் வாழ என்னைக் கொல்லுக’ என்று மொழிந்தாள். பின்னும் மகிணன், பெருவாள் தூக்கி, ஓச்ச முடியா துழலும் போது மீண்டும் கைவாள் வீழ்ந்தது நிலத்தில்! மங்கை திரும்பி வாளை வாங்கி எய்க விடுதலை ஓங்குக என்றுதன் தூய்கழுத்து வெட்டத் தூக்கினாள் கத்தியைப் பின்னே ஓடிப் பெருவாள் பற்றினேன். என்னே நாட்டில் இவர்க்குள அன்பு! கடமையின் இலக்கணம் கண்டேன்! கண்டேன்! சுவையுறு வாழ்வின் தூய இலக்கியம் இவைகள் கண்டேன்! யானோ தந்தேன்? விடுதலை தந்தவன் வேந்தன் நானோ? விடுதலை உள்ளமே விடுதலை விளைக்கும்” என்றான் மன்னன். இதனைக்கேட்கையில் அழுதார் மக்கள். அழுதுகொண்டே தொழுதார் மகிணனை! தோகை கிள்ளையை!. தங்கவேலின் சாக்காடு கேட்டே “எங்களுக் காக எங்களுக் காக” என்று நெஞ்சம் இரங்கி அழுதார். மன்னன் கூறினான் பின்னும், “மக்களே, இந்நிலம் துன்பமும் இன்பமும் கலந்தது! மனிதன் உள்ளமும் மறம்,அறம் கலந்ததே. இனிது செய்பவன் இன்னாது செய்வதும் இன்னா செய்பவன் இனியவை நாடலும் உண்டெனல் நானே கண்டேன் என்னிடம்! இன்று நானும், என்பெரும் மறவரும் கொன்றை நாட்டி னின்று செல்வோம். வாட்பொறை யுள்ளான் மாப்பே ரறிஞன். தாரோன் உள்ளான் தகுதி யுள்ளான். மகிணனும் கிள்ளையும் மற்றும் பலரும் இருக்கின் றார்கள் இவர்கள் கொன்றைக்குப் பொருத்த மான புதுமுறை வகுப்பர். நல்லதோர் ஆட்சியில் எல்லீரு மாக மல்கு சீரொடு வாழிய” என்றான். மக்கள் மீண்டும் மன்னனை மிக்க அன்பினால் வாழ்த்தினர் நன்றே. இயல் - 38 (“திருக்கிளர் நாட்டின் செல்வர்கட்கும் இருக்கக் குடிசை இல்லை என்றார்”) இடம் : மகிணனின் இல்லம். உறுப்பினர் : கிள்ளை, மகிணன், மகிணனின் பெற்றோர். இரண்டு குதிரைமேல் இரண்டுபேர். ஒருத்தி இருண்ட முகிற்குழல் ஏந்திழை கிள்ளை; ஒருவன் மகிணன்; ஓடின குதிரைகள்; திருமண மக்கள் சென்று, குடிசையில் கிழவி கிழவனைக் கிட்டி நின்றார். தொழுது நிகழ்ந்தவை சொன்னார். சொன்னதும், அன்னை, கிள்ளையின் கன்னம் தொட்டுப் “பொன்னே” என்று புரிந்த முத்தம் கிள்ளையின் உள்ளத் தெள்ளமு தாயிற்றே. கிள்ளையின் மாமனார் உள்ள மகிழ்ந்து வாழ்த்துரை அனைத்தும் வழங்கி யிருந்தார். அனைவரும் ஒருபுறம் அமர்ந்திருக்கையில் “உனையொன்று கேட்பேன் உரையடா” என்று முதிய தந்தை மொழியலானார், “ஏரி தோண்ட இல்லையே” என்றார். “இல்லை என்ப திராதென் றான்”மகன். “திருக்கிளர் நாட்டின் செல்வர் கட்கும் இருக்கக் குடிசை இல்லை” என்றார். “இல்லை என்ற சொல் இரா” தினி என்றான். “கடல் நிகர் நாட்டில் கணக்கிலா மக்கள் உடல் நலமில்லா தொழிந்தனர்” என்றார். “இல்லை என்பதே இராதினி” என்றான். “எப்படி அரசியல்” என்றார் கிழவர். “ஒப்பிட எவர்க்கும் ஒருவீ டொருநிலம் ஒரு தொழில், ஓர் ஏர், உழவு மாடுகள் விரைவிற் சென்றால் தருவார்” என்றான். கிழவி இதுகேட்டு விழியிற்புனல் சேர்த்துக் “குழந்தாய், இப்போது கூறிய அனைத்தையும் விரைவில் நான்போய் வேண்டிப் பெற்று வரநினைக் கின்றேன் வருந்து கின்றேன்; எட்டஊர் செல்ல வேண்டுமே கட்டஓர் நல்லுடை இல்லை” என்றாளே. றறற தமிழச்சியின் கத்தி முதற்பதிப்பின் முன்னுரை இதற்குமுன், தன்படை வலியுடன் அண்டிய செஞ்சி அதிகாரியை எதிர்த்த ஒரு தமிழச்சியின் கத்தி எழுதப்பட்டது. அது இன்னும் அச்சுக்கு வரவில்லை. அதை நோக்க, இது தமிழச்சியின் கத்தி இரண்டாம் பிரிவு என்றே கூறவேண்டும். புதுவை 25.4.49 - பாரதிதாசன் கதைச் சுருக்கம் டில்லியில் பாதுஷா செங்கோல் செலுத்துகிறான். ஆர்க்காட்டுப் பகுதி அவன் ஆணைக்கு உட்பட்டிருந்தது. ஆர்க்காட்டின் அதிகாரி நவாப். ஆர்க்காடு 172 பாளையப் பட்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. செஞ்சிப் பாளையப்பட்டு, தேசிங்கு; வடக்கன்; தமிழரை இகழ்பவன். சிப்பாய்களிலே சிலர்க்கு ஒரு தலைவன் இருப்பான். அவன் சுபேதார். சுதரிசன் சிங்கு ஒரு சுபேதார்; அவனும் அவன் தோழனான மற்றொரு சுபேதார் ரஞ்சித் சிங்கும், புதுச்சேரி சென்று, வளவனூர் வழியாக வருகையில், வளவனூர்ப் புறத்துத் தென்னந் தோப்பொன்றில் திம்மனைக் கண்டார்கள். இளநீர் வெட்டிக் கொடுத்த திம்மன், அதோடு நிற்காமல், அவர்களை வீட்டுக்கும் அழைத்துப் போய்ச் சாப்பாடும் போட்டான். சாப்பாடு போட்ட திம்மனுக்கு, அவர்கள் ஏதாவது போடவேண்டுமே, சுதரிசன் சிங்கு, திம்மன் மனைவி சுப்பம்மாவின் மேல் கண்ணைப் போட்டான். குதிரைகளைத் தோப்பில் கட்டி வந்தோம்! அவைகளைப் போய்ப் பார்த்து வா என்கிறார்கள் வடக்கர். போகிறான் திம்மன். தன் உள்ளத்தைச் சுப்பம்மாவிடம் சிறிது அவிழ்க்கின்றான் சுதரிசன். செல்லவில்லை. இவன் போக்கிரித் தனத்தை அவள் அறிந்து கொண்டதுதான் இவன் கண்டபலன். சுப்பம்மாவை அடைய வழி தேடினான் சுதரிசன். அவன் திம்மனிடம் தனியாக, உன்னைச் செஞ்சிக் கோட்டையில் சிப்பாயாக்கி வைக்கிறேன் என்று ஆசை காட்டுகிறான். திம்மன் அந்த ஆசையில் வீழ்கிறான். திம்மனும் சுப்பம்மாவும் ஏறிய கட்டை வண்டி செஞ்சி நோக்கிச் செல்கிறது. சுதரிசன் சிங்கும் குதிரைமேல் செல்லுகிறான் வண்டியை ஒட்டி. நடுவழி! நல்ல இருட்டு; யாரோ சிலர் வண்டியை நோக்கி வருவதாகச் சுதரிசனுக்கு ஓர் அச்சம் பிறக்கிறது. அவ்வளவுதான். அவன் குதிரை பறக்கிறது. வந்தவரால் வண்டி நிறுத்தப்படுகிறது. யார் நீங்கள்? எங்கே போகிறீர்கள் என்கிறார்கள் வந்தவர்கள். உண்மை கூறுகிறான் திம்மன். வந்த தமிழர்கள். வடக்கர் தீச் செயலைக் கூறிப், போவது தன்மானத் துக்கே இழிவாகும் என்று தடுக்கக் கேட்கவில்லை திம்மன். ஆயினும் நீ ஒரு தமிழன் என்பதை மறக்காதே; விழிப்போடு நடந்துகொள் என்று விடுகிறார்கள். இதை எல்லாம் கேட்டிருந்த சுப்பம்மா ‘அண்ணன்மாரே எனக்கொரு கத்தி கொடுங்கள்’ என்று கேட்கிறாள். வியப்பு! அவளை வாழ்த்தி ஒரு குத்துக் கத்தி கொடுத்து அனுப்புகிறார்கள். செஞ்சியில் ஒரு சேரியின் குடிசையில் சுப்பம்மாவை, குப்பு முருகி ஆகிய இரு தீய மாதர்களுடன் விட்டுத் திம்மனுக்குப் பொய்யுடை ஒன்று தந்து கோட்டையில் ஒரு மூலையில் அடைத்துவிட்டுக் குடிசையில் சுப்பம்மாவிடம் தன் விருப்பத்தினைக் காட்டினான். அவள் ஒப்புகின்றவள் இல்லை என்று கண்டு அன்றிரவு அவளிருந்த குடிசையைக் கொளுத்திவிட்டு, அவள் உள்ளே திண்டாடும்போது உருத்தெரியாமல் அவளை நெருங்கித் தொடுகிறான். சுப்பம்மாவின் கத்தி, தொட்ட கையை விலக்கி விடுகிறது. சுதரிசன் கூட்டம் மறைகிறது. சுப்பம்மா சேரியில் அடைக்கலம் புகச், சேரி முதியோன் செங்கான் வீடு தந்து இருக்கச் செய்கிறான். மறுநாள் இரவு சுதரிசன் எண்ணப்படி குப்பும் முருகியும் செங்கான் வழியாக நஞ்சிட்ட உணவை அனுப்புகிறார்கள். இதை யறியாத செங்கான், அவ்வுணவைச் சுப்பம்மாவிடம் வைத்துச் செல்லுகிறான். சுப்பம்மா உண்டு மயங்கி வீழ்கிறாள். பதுங்கியிருந்த சுதரிசன் உள்ளே புகுந்து, சுப்பம்மாவின் கற்பைக் கெடுத்துச் செல்லுகிறான். கண் விழித்த சுப்பம்மா கற்பிழந்ததை உணர்ந்து செங்கானையும் கேட்டுத் தெளிந்து, சுதரிசன் எங்கே என்று கத்தியைத் தூக்கி ஓடச், செங்கான் உடன் ஓடுகிறான், சேரி ஓடுகிறது, மனந்தாளாமல். கதவைத் தட்டினாள் சுப்பம்மா. திறந்து கொண்டு வெளி வந்த சுதரிசனின் மார்பில் சுப்பம்மா குத்துக்கத்தி புதைந்தது. புதைந்தபடி சாவில் புதைகிறான், சுதரிசன். அதே நேரத்தில் அங்கு ஒருபுறம் இருந்த குப்பு முருகி செங்கான் கொடுவாளால் செத்தொழிகிறார்கள். அத்தான் அத்தான் என்று கூவியபடி சுப்பம்மா கோட்டையிற் புகுந்து கூவுகிறாள். பயனில்லை. திரும்புகிறாள். செங்கானும் சுப்பம்மாவும் ஓர் ஆலின் நிழலில் தங்கியிருக்கிறார்கள். திம்மனைப் பார்க்கும் ஆசையால். கொலைச் செய்தி பரவுகிறது. தேசிங்கு குதித்தோடி வந்து சுதரிசன் உடலண்டை நின்று அங்குச் சேர்ந்த கூட்டத்தினரை நோக்கி ‘யார்செய்தார்’ என்று உசாவுகிறான். அங்கிருந்த ரஞ்சித்சிங்கு தனக்குத் தெரிந்தவரைக்கும் சொல்லி முடிக்கிறான். ‘எங்கே அந்தத் திம்மன் பெண்டாட்டி’ என்று அதிர்ந்தான் மன்னன். அதன் பிறகு, எங்கே அந்தத் திம்மன் என்றான். நான் தான் என்று எதிர்வந்தான் திம்மன். திம்மனைக் கட்டி இழுத்துக்கொண்டே சென்று சுப்பம்மாவைக் காட்டச் சொல்லுங்கள், நீங்களும் தேடுங்கள் என்று மன்னன் சொல்ல, அவ்வாறே கூட்டிச் செல்லுகிறார்கள் சில சிப்பாய்கள். செங்கானும் சுப்பம்மாவும் சிப்பாய்களைக் கொன்று திம்மனை மீட்கிறார்கள். சுப்பம்மா நடந்தவற்றைக் கூறி, நான் சாகின்றேன் நீர் நலமே வீடு செல்வீர் என்கிறாள். திம்மன் போகவில்லை. மற்றொரு புறமிகுந்த ஓர் ஆலின் மேல் இருவரும் உட்கார்ந்த படி சாவுக்கு வரவேற்பும் வாழ்த்தும் கூறிப்பாடி இருக்கிறார்கள். செங்கான் எதிரிகள் வருகிறாரா என வேவு பார்க்கின்றான். சில சிப்பாய்கள் வந்து, அதே மரத்தடியில் உட்கார்ந்து, “நாம் சுப்பம்மாவையும் திம்மனையும் சுறுசுறுப்புடன் தேடுகிறோமா என்று மேற்பார்வை பார்க்கத் தேசிங்கு வரக்கூடும்.” என்று பேசிக் கொள்கிறார்கள். அது போலவே ஒரு கூட்டம் வருகின்றது. சுப்பம்மா வும் செங்கானும் திம்மனும் அக்கூட்டத்தில் பாய்கிறார்கள். கூட்டத்தின் தலைவன் சாகிறான். மற்றும் பலர் சாகிறார்கள். ஆனால் திம்மனும் சாகிறான். சுப்பம்மா பிடிபடுகிறாள். சுப்பம்மா தேசிங்கின் அவை நடுவில் கட்டோடு நிறுத்தப் படுகிறாள். சுவையான சொற்போருக்குப் பின் தேசிங்கு தீர்ப்பைச் சொல்லுகிறான்; எல்லோரும் பார்க்க இவளை நிறுத்தி ஒரு கையை வெட்ட வேண்டும். மறுநாள் ஒரு கை! மறுநாள் ஒரு மார்பு! மூன்றா நாள் முதுகினில் சதையைக் கிழிக்க! பின்னர் மூக்கறுக்க! பின்னர் காதுகள்! இடையிடையே கொதி நீரை மேலே ஊற்றுக. குதிகாலைக் கொளுத்துங்கள்! இது கேட்டாள் நங்கை. அவள் மூச்சை இயங்காது உள்நோக்கி இறுக்குகிறாள். சாக்காட்டை வலிந்திழுக்கிறது அவள் உணர்வின் ஆற்றல். அவை யினர் அச்சத்தையும் வியப்பையும் தழுவுகிறார்கள். அவள் சாவைத் தழுவுகின்றாள். 1 சுதரிசன் சிங்க் துடுக்கு அகவல் தில்லியில் பாதுசா செங்கோல் செலுத்தினான்; ஆர்க்காட்டுப் பகுதி, அவன்ஆ ணைப்படி நவாப்பினால் ஆட்சி நடத்தப் பட்டது. நுவலும்அவ் வார்க்காடு நூற்றெழு பத்திரண்டு பாளைய மாகப் பகுக்கப் பட்டது; பாளையத் தலைவர்பேர் பாளையப் பட்டுகள்; பகர்நற் செஞ்சிப் பாளையப் பட்டாய்த் தேசிங்கு வாழ்ந்தான் சிற்சில ஆண்டுகள். தேசிங்கு வடக்கிருந்து தென்னாடு போந்தவன்; தமிழரை இகழும் தன்மை வாய்ந்தவன்! தேசிங் கினையும் தென்னாடு வெறுத்தது. சிப்பாய் களிலே சிலர்க்கொரு தலைவன், இருப்பான்: “சுபேதார்” என்பதவன் பெயர்! “சுதரிசன் சிங்க்”எனும் சுபே தாருக்குத் தேசிங் கிடத்தில் செல்வாக் குண்டு! புதுவைக் கடற்கரை போனான் சுதரிசன்; வருகையில், இடையில், வளவனூர்ப் புறத்தில் தென்னந் தோப்பில், திம்மனைக் கண்டான். தெளிவிலாத் தமிழில் திம்மனைக் கேட்டான்: உன்னதா இந்தத் தென்னந்தோப் பென்று! திம்மன் ஆம் என்று செப்பி வரவேற்றுக் குளிர்ந்த இளநீர் கொடுத்து தவினான். சுதரிசன், ‘உன்வீடு தொலைவோ’ என்றான். அருகில் என்றான் அன்புறு திம்மன். சுதரிசன் அவன் தோழன் ரஞ்சித்தும், திம்மன் வீடு சேர்ந்தனர்; இருந்தார்! மாடு கறந்து வழங்கினான் பாலும், ஆடு சமைத்தும் அருத்தினான் திம்மன்! திண்ணையில் சுதரிசன், திம்மன், ரஞ்சித், உண்ட இளைப்பொடும் உட்கார்ந் திருந்தனர். திம்மன் மனைவி “சுப்பம்மா” என்பவள் எம்மனி தனையும் ஈன்ற பிள்ளையாய்க் கொள்ளும் உள்ளம் கொண்டவள் பிள்ளை இல்லாதவள் ஆத லாலே! 2 சுதரிசன் சூழ்ச்சி எண்சீர் விருத்தம் சுதரிசன்சிங்க் திம்மனிடம் பேசு கின்றான்; தோகைமேல் அவன்உளத்தைச் செலுத்து கின்றான். எதையோதான் பேசுகின்றான் சுப்பம் மாமேல் ஏகியதன் நெஞ்சத்தை மீட்டா னில்லை! இதையறியான் திம்மன் ஒருகவட மில்லான்; இளித்த வாயால் “உம்உம்எனக் கேட்கின்றான்! கதைநடுவில் சுதரிசன்சிங்க் தண்ணீர் கேட்பான்; கனி இதழாள் வர,மகிழ்வான்; போனால், நைவான்! உளம்பூத்த சுதரிசனின் ஆசைப் பூவும், ஒருநொடியில் பிஞ்சாகிக் காயும் ஆகித், தளதளத்த கனியாகிப் போன தாலே தாங்காத நிலையடைந்தான் சூழ்ச்சி ஒன்றை மளமளென நடத்தஒரு திட்டம் போட்டான்; “வாஇங்கே திம்மாநீ விரைவிற் சென்று குளத்தெதிரில் மரத்தினிலே கட்டி வைத்த குதிரையினைப் பார்த்துவா’ என்று சொன்னான். விருந்தினரை வரவேற்பான் தமிழன்; அந்த விருந்தினர்க்கு நலம்செய்வான் தமிழன்; சாவா மருந்தேனும் வந்தவர்கள் பசித்தி ருக்க வாயில்இடான் தமிழன்;இது பழமை தொட்டே இருந்துவரும் பண்பாகும். எனினும், வந்தோன் எவன்,அவனை ஏன்நம்ப வேண்டும்” என்று துரும்பேனும் நினையாத தாலே இந்நாள் தூய்தமிழன் துயருற்றான்! வந்தோர் வாழ்ந்தார்! ‘குதிரைகண்டு வருகின்றேன்’ என்று திம்மன் குதித்துநடந் தான்!சென்றான்!, சுதரி சன்சிங் முதிராத பழத்துக்குக் காத்தி ருந்து, முதிர்ந்தவுடன் சிறகடிக்கும் பறவை யைப்போல், அதிராத மொழியாலே, அதிரும் ஆசை அளவற்றுப் போனதோர் நிலைமை யாலே, ‘இதுகேட்பாய் சுப்பம்மா சும்மா வாநீ ஏதுக்கு நாணுகின்றாய், என்று சொன்னான். ‘ஏன்’என்று வந்துநின்றாள்! ‘சுப்பம் மாநீ இச்சிறிய ஊரினிலே இருக்கின் றாயே, நானிருக்கும் செஞ்சிக்கும் வருகின் றாயா, நகைகிடைக்கும், நல்லநல்ல ஆடை யுண்டு, மான்அங்கு திரிவதுண்டு, மயில்கள் ஆடும், மகிழ்ச்சியினை முடியாது சொல்வ தற்கே, கானத்தில் வள்ளிபோல் தனியாய் இங்கே கடுந்துன்பம் அடைகின்றாய் என்று சொன்னான். ‘இல்லையே நான்வேல னோடு தானே இருக்கின்றேன் உளமகிழ்ச்சி யாக’ என்று சொல்லினாள்; சுதரிசனின் வஞ்சம் கண்டாள்; துயரத்தை வெளிக்காட்டிக் கொள்ள வில்லை; இல்லத்தின் எதிரினிலே சிறிது தூரம் எட்டிப்போய் நின்றபடி ‘போனார் இன்னும் வல்லை’ என்று முணுமுணுத்தாள்! சுதரிசன்சிங்க் வந்தவழியே சென்றான் தோழ னோடே! ‘சுப்பம்மா வுக்கிழைத்த தீமை தன்னைச் சுப்பம்மா திம்மனிடம் சொல்லி விட்டால் தப்புவந்து நேர்ந்துவிடும்; கொண்ட நோக்கம் சாயாதே’ எனஎண்ணிச் சுதரி சன்சிங்க், அப்போதே எதிர்ப்பட்ட திம்ம னின்பால் அதைமறைக்கச் சிலசொற்கள் சொல்லு கின்றான்; ‘அப்பாநீ இங்கிருந்து துன்ப முற்றாய் அங்கேவந் தால்உனக்குச் சிப்பாய் வேலை தரும்வண்ணம் மன்னரிடம் சொல்வேன்; மன்னர் தட்டாமல் என்பேச்சை ஒப்புக் கொள்வார். திரும்புகின்ற பக்கமெலாம் காடு மேடு சிற்றூரில் வாழ்வதிலே பெருமை இல்லை விருந்தாக்கிப் போட்ட உனைமறக்க மாட்டேன் வீட்டினிலே சுப்பம்மா தனிமை நன்றோ? கரும்புவிளை கொல்லைக்குக் காவல் வேண்டும் காட்டாற்றின் ஓட்டத்தில் மான்நிற் காதே. இளமங்கை உன்மனைவி நல்ல பெண்தான் என்றாலும் தனியாக இருந்தால் தீது! ‘குளக்கரைக்குப் போ”என்றேன் நீயும் போனாய் கோதையொடு தனியாக நாங்கள் தங்க உளம்சம்ம தித்ததால் வந்தோம் உன்பால்! உனக்குவெளி வேலைவந் தால்போக வேண்டும் இளக்கார மாய்ப்பேசும் ஊர்,பெண் ணென்றால் உரைக்கவா வேண்டும்,நீ உணர்ந்தி ருப்பாய். ஒருமணிநே ரம்பழகி னாலும், நல்லார் உலகம்அழிந் தாலும்மறந் திடுவ தில்லை பருகினேன் உன்வீட்டுப் பசும்பால் தன்னைப்! பழிநினைக்க முடியுமா? திம்மா உன்னை ஒருநாளும் மறப்பதில்லை. செஞ்சிக் கேநான் உனைக்கூட்டிப் போவ’தென முடிவு செய்தேன். வருவாய்நீ! சிப்பாய்என் றாக்கி உன்னை மறுதினம் சுபேதாராய்ச் செய்வேன் உண்மை. இரண்டுநா ளில்வருவேன் உன்க ருத்தை இன்னதென்று சொல்லிவிட வேண்டும். செஞ்சி வருவதிலே உனக்குமிக நன்மை உண்டு! வரவழைத்த எனக்குமொரு பேரு முண்டு கருதாதே நம்நட்பைப் புதிய தென்று! கடலுக்குள் ஆழத்தில் மூழ்கி விட்டேன்; பெரிதப்பா உன்அன்பு! கரையே இல்லை! பிறகென்ன? வரட்டுமா? என்றான்! சென்றான். 3 திம்மன் பூரிப்பு தென்பாங்கு – கண்ணிகள் ‘நற்காலம் வந்ததடி பெண்ணே - இங்கு நாமென்ன நூறுசெல விட்டோம்? சொற்போக்கில் வந்தவிருந் தாடி - அவன் சூதற்ற நல்லஉளம் கொண்டோன் பற்காட்டிக் கெஞ்சவில்லை நாமும்- நம் பாங்கில் அவன் நல்ல உள்ளம் வைத்தான் புற்காட்டில் நாளும்உழைத் தோமே - செஞ்சி போய்அலுவல் நான்புரிய வேண்டும். என்றுபல திம்மன்உரைத் திட்டான் - அவன் இன்ப மனையாளும் உரைக்கின்றாள்; ‘தென்னை இளந்தோப்பு முதிராதா? - நம் தெற்குவெளிப் புன்செய் விளையாதா? சின்னஎரு மைவிலைக்கு விற்றால் - கையில் சேரும்பணம் ஏர்அடிக்கப் போதும் என்னஇருந் தாலும்சுபே தாரை - நான் என்வரைக்கும் நம்பமுடி யாது. நம் குடிக்கு நாம்தலைமை கொள்வோம் - கெட்ட நாய்ப்பிழைப்பில் ஆயிரம்வந் தாலும் பங்கமென்று நாமும்அறி வோமே - இதில் பற்றுவைக்க ஞாயமில்லை’ என்றாள். ‘தங்க மயி லேஇதனைக் கேட்பாய் - என்சொல் தட்டிநடக் காதிருக்க வேண்டும் பொங்குதடி நெஞ்சில் எனக்காசை - செஞ்சிப் பொட்டலில் கவாத்து செய்வ தற்கே! தின்றதனை நாடொறுமே தின்றால் - நல்ல சீனியும் கசக்குமடி பெண்ணே! தென்னையை யும் குத்தகைக் குவிட்டுப், - புன் செய்தனையும் குத்தகைக்கு விட்டுப், பின்னும்உள்ள காலிகன்று விற்று - நல்ல பெட்டையை யும்சேவலை யும்விற்றுச், சின்னதொரு வீட்டினையும் விற்று - நல்ல செஞ்சிக்குடி ஆவமடி’ என்றான். நாளை இங்குநல்ல சுபேதாரும் - வந்து நம்மிடத்தில் தங்குவதி னாலே காளைஒன் றைவிற்று வருகின்றேன் - உன் கைந்நிறையக் காசுதரு கின்றேன் வேளையொடு சோறுசமைப் பாயே - அந்த வெள்ளரிப்பிஞ் சைப்பொரிக்க வேண்டும் காளிமுத்துத் தோட்டத்தினில் பாகல் - உண்டு கட்டிவெல்லம் இட்டுவை குழம்பு! கார்மிளகு நீர்இறக்கி வைப்பாய் - நல்ல கட்டித்தயிர் பாலினில் துவைப்பாய் மோரெடுத்துக் காயமிட்டுத் தாளி - நல்ல மொச்சைஅவ ரைப்பொரியல் வேண்டும் சீருடைய தாகிய தென்பாங்கு - கறி செய்துவிடு வாய்இவைகள் போதும் நேரில்வட பாங்கும் மிக வேண்டும் - நல்ல நீள்செவிவெள் ளாட்டுக்கறி ஆக்கு பாண்டியனின் வாளையொத் தவாளை - மீன் பக்குவம் கெடாதுவறுப் பாயே தூண்டிலில் வரால்பிடித்து விற்பார் - பெருந் தூணைஒத் ததாய்இரண்டு வாங்கு; வேண்டியதைத் தின்னட்டும் ‘சுபேதார்’ - என்று வெள்ளைமனத் திம்மன்உரைத் திட்டான். தாண்டிநடந் தார்இரண்டு பேரும் - உண்ணத் தக்கபொருள் அத்தனையும் சேர்க்க! 4 சுதரிசன் நினைவு எண்சீர் விருத்தம் செஞ்சிக்குச் சென்றிருந்த சுதரி சன்சிங்க் செஞ்சியிலே தன்உடலும் வளவ னூரில் வஞ்சியிடம் நினைவுமாய் இருந்தான். அன்று மலைக்கோட்டை காத்துவரும் சிப்பாய் மாரைக், கொஞ்சமுமே தூங்காமல் விடியு மட்டும் குதிரைமேல் திரிந்து,மேற் பார்வை பார்க்கும் நஞ்சான வேலையிலே மாட்டிக் கொண்டான்! நள்ளிரவில் சுதரிசன்சிங்க் தென்பால் வந்தான். ‘தெற்குவா சல்காப்போன் எவன்காண்’ என்று செப்பினான் சுதரிசன்சிங்க், ‘ரஞ்சித்’ என்று நிற்கும்சிப் பாய் உரைத்தான். சுதரி சன்சிங்க் ‘நீதானா ரஞ்சித்சிங்க்! கேட்பா யப்பா. முற்றிலுமே அவள்நினைவால் நலிந்தே னப்பா அன்னவளை மறப்பதற்கு முடியா தப்பா விற்புருவ, அம்புவிழி பாய்ந்த தோஎன் விலாப்புறத்தில் தானப்பா, செத்தே னப்பா. அப்படியோர் மங்கையினைப் பார்த்த தில்லை. நானுந்தான் ஆனபல்லூர் சுற்றி யுள்ளேன்! ஒப்படிஎன் றால்அவளோ ஒப்ப மாட்டாள் உருப்படியை இவ்விடத்தில் கொண்டு வந்து கைப்பிடியில் வைத்துவிட்டால் என்க ருத்துக் கைகூடும். பொழுதுவிடிந் ததும்நா னங்கே எப்படியும் போய்ச்சேர வேண்டும்’என்றான் இன்னும்அவன் கூறுகின்றான் அவளைப் பற்றி: 5 அவன் பொய்யுரை பஃறொடை வெண்பா என்மீதில் ஆசை அவட்கில்லா மலும்இல்லை; என்மீதில் ஆசையே இல்லாதவள் போலே ஏன்நடந்தாள் என்றுகேள்: என்னைஇன் னானென்று தான்அறிவதற் குள்தன்னைக் காட்டிக் கொள்வாளா! மட்டுப் படுத்தினாள் நெஞ்சை! வளர்காதல் கட்டுப் படுத்தினேன் நானும் கடைசிவரை! அன்னவளின் நெஞ்சத்தின் ஆழத்தை என்சொல்வேன்? என்மீதில் ஆசையே இல்லாதவள் போலும் வீட்டுக்கா ரன்மேல் விருப்ப முடையாள் போலும் காட்ட, நடந்துபோய்க் கண்ணால் வழிபார்த்து நெஞ்சத்தை மட்டும்என் நேயத்தில் வைத்தாளே! வஞ்சி திறமை வரைதல் எளிதா? குறுநகைப்பும் கொஞ்சும் கடைநோக்கும் கூட்டி உறுதிகுறித் தாள் உனக்குத் தெரியாமல்! மேலும் இதுகேட்பாய் வீட்டில் நடந்தவற்றை ஓலைத் தடுக்கில்நான் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன்; உள்ளிருந்து பார்ப்பாள் ஒளிந்துகொள்வாள்; என் முகந்தான் கள்ளிருந்த பூவோ! களிவண்டோ மாதுவிழி! ‘தன்கணவன் எப்போது சாவானோ, இச்சுதரி சன் கணவன் ஆவதென்றோ’ என்பதவள் கவலை. இன்னும் விடியா திருக்குதடா ரஞ்சித்சிங்க்! பொன்னங் கதிர்கிழக்கில் பூக்கா திருக்குதடா! சேவலும் கூவா திருக்குதடா! செக்குந்தான் காவென்றும் கர்ரென்றும் கத்தா திருக்குதடா! மாவின் வடுப்போன்ற கண்ணாள்காண்! மாங்குயிற்கும் கூவும் இனிமைதனைச் சொல்லிக் கொடுப்பவள்காண்! யாவரும் தன்அடிமை என்னும் இரண்டுதடும் கோவைப் பழமிரண்டின் கொத்து!நகை, முல்லை! அன்னம் பழித்தும், அகத்தில் குடிபுகுந்தும், பின்னும்எனை வாட்டுகின்ற பெண்நடைபோற் காணேன்! கொடிபோல் இடைஅசைந்து கொஞ்சுகையில், யானைப் பிடிபோல் அடிகள் பெயர்க்கையிலே அம்மங்கை கூட்ட வளையல் குலுங்கக்கை வீசிடுவாள் பாட்டொன்று வந்து பழிவாங்கிப் போகுமடா! அன்னவள்தான் என்னுடைய வாழ்வே! அழகுடையாள் என்னைப் புறக்கணித்தல் என்பதென் றன்சாவு! நிலவுமுகம் அப்பட்டம்! சாயல் நினைத்தால் கலப மயிலேதான்! கச்சிதமாய்க் கொண்டையிட்டுப் பூச்சூடி மண்ணிற் புறப்பட்ட பெண்ணழகை மூச்சுடையோன் கண்டுவிட்டேன் செத்தால் முகமறப்பேன்”. என்று சுதரிசன்சிங்க் சொன்னான். இரவில்நொடி ஒன்றொன்றாய்ப் போமோஎன் றோட்டி, ஒருசேவல் நெட்டைக் கழுத்தை வளைக்க, நெடும்பரியைத் தட்டினான்; வீட்டெதிரே சாணமிடும் சுப்பம்மா அண்டையிலே நின்றான்! வரவேற்றாள் அன்னவனைக் கண்ட இனியகற் கண்டு! 6 சுப்பம்மா தொல்லை கலி வெண்பா அப்போது தான்திம்மன் கண்விழித்தான்! ஆஎன்றான்; எப்போது வந்தீர்கள் என்றெழுந்தான்- இப்போது தான்வந்தேன் என்றான் சுதரிசன்! தங்கட்கு மீன்வாங்க நான்போக வேண்டுமே - ஆனதினால் இங்கே இருங்கள் இதோவருகின் றேனென்று தங்காது திம்மன் தனிச்சென்றான் - அங்கந்தச் சுப்பம்மா தன்னந் தனியாகத் தோட்டத்தில் செப்புக் குடம்துலக்கிச் செங்கையால் - இப்புறத்தில் வைக்கத் திரும்பினாள்; வந்த சுதரிசன்சிங்க் பக்கத்தில் நின்றிருந்தான் பார்த்துவிட்டாள் - திக்கென்று தீப்பற்றும் நெஞ்சோடு ‘சேதிஎன்ன’ என்றுரைத்தாள். தோப்புக்குப் போகின்றேன் சொல்லவந்தேன்- சாப்பிட்டுச் செஞ்சிக்குப் போவதென்ற தீர்ப்போடு வந்தேன்,நீர் அஞ்சிப்பின் வாங்காதீர்; அவ்விடத்தில் - கெஞ்சி அரசரிடம் கேட்டேன்; அதற்கென்ன என்றார் அரசாங்கத் துச்சிப்பாய் ஆக்கி - இருக்கின்றேன் திம்மனுக்கு நான்செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன் ஐம்பதுவ ராகன் அரசாங்கச் - சம்பளத்தை வாங்கலாம் நீங்கள் வயிறாரச் சாப்பிடலாம் தீங்கின்றி எவ்வளவோ சேர்க்கலாம் - நாங்களெல்லாம் அப்படித்தான் சேர்த்தோம் அதனால்தான் எம்மிடத்தில் இப்போது கையில் இருப்பாக - முப்பத்து மூவா யிரவராகன் சேர்த்துமூ லையிலே யாவருங்கா ணாமல் இருத்தினோம் - சாவுவந்தால் யாரெடுத்துப் போவாரோ, பெண்டுபிள்ளை யாருமில்லை ஊரெடுத்துப் போவதிலும், உங்கட்குச் - சேருவதில் ஒன்றும் கவலையில்லை; உங்கட்குப் பிள்ளைகள் இன்றில்லை யேனும் இனிப்பிறக்கும் - என்பிள்ளை வேறு; பிறர்பிள்ளை வேறா? இதைநீயே கூறுவாய்” என்று சுதரிசன் - கூறினான் ‘திண்ணையிலே குந்துங்கள்’ என்றுரைத்தாள் சேல்விழியாள் வெண்ணெய்என்ற பிள்ளைக்கு மண்ணையள்ளி- உண்ணென்று தந்ததுபோல் இவ்வாறு சாற்றினளே - இந்தமங்கை என்று நினைத்த சுதரிசன், திண்ணைக்கே ஒன்றும்சொல் லாமல் ஒதுங்கினான் - பின்அவளோ கூடத்தைச் சுற்றிக் குனிந்து பெருக்கினாள் ‘மாடத்திற் பற்கொம்பு வைத்ததுண்டோ - தேடிப்பார்’ என்றுரைத்துக் கொண்டே எதிர்வந்து சுப்பம்மா! ஒன்றுரைக்க நான்மறந்தேன் உன்னிடத்தில் - அன்றொரு நாள் செஞ்சியில் ஒருத்தி சிவப்புக்கல் கம்மலொன்றை அஞ்சு வராகன் அடகுக்குக் - கெஞ்சினாள் முற்றுங் கொடுத்தேன் முழுகிற்று வட்டியிலே. சிற்றினச்சி வப்போ குருவிரத்தம் - உற்றதுபோல், கோவைப் பழத்தில் மெருகு கொடுத்ததுபோல் தீவட்டி போல்ஒளியைச் செய்வதுதான்- தேவையுண்டா? என்று சுதரிசன் கேட்டான். ‘எனக்கது’ஏன்? என்று சுப்பம்மா எதிர்அறைக்குச் - சென்றுவிட்டாள். திண்ணைக்குச் சென்றான் சுதரிசன்சிங்க், இன்னுமென்ன பண்ணுவேன் என்று பதறுகையில் - பெண்ணாள் தெருவிலே கட்டிவைத்த சேங்கன்று தின்ன இருகையில் வைக்கோலை ஏந்தி - வரக்கண்டே இப்பக்கம் நன்செய்நிலம் என்னவிலை? என்றான், அப்பக்கம் எப்படியோ அப்படித்தான் - இப்பக்கம் என்று நடந்தாள். இவனும் உடன்சென்றே இன்றுகறி என்ன எனக்கேட்டான் - ஒன்றுமே பேசா திருந்தாள். பிறகுதிண் ணைக்குவந்தான். கூசாது பின்னும் குறுக்கிட்டு - “நீ சாது வேலைஎலாம் செய்கின்றாய் வேறு துணையில்லை காலையி லிருந்துநான் காணுகின்றேன்- பாலைக் கறப்பாயா எங்கே கறபார்ப்போம்” என்றான் அறப்பேசா மல்போய் அறைக்குள் - முறத்தில் அரிசி எடுத்தாள். அவனும் அரிசி பெரிசிதான் என்றுரைத்தான். பேசாள் - ஒருசிறிய குச்சிகொடு பற்குத்த என்பான். கொடுத்திட்டால் மச்சுவீ டாய்இதையேன் மாற்றவில்லை? சீச்சீ இதுபோது மாஎன்பான். சுப்பம்மா இந்தப் புதுநோயை எண்ணிப் புழுங்கிப் - பதறாமல் திம்மனுக் கஞ்சித் திகைத்தாள்.அந் நேரத்தில் திம்மனும் வந்தான் சிடுசிடுத்தே - ‘இம்மட்டும் வேலையொன்றும் பாராமல் வீணாக நீவீட்டு மூலையிலே தூங்கினாய் முண்டமே - பாலைவற்றக் காய்ச்சென்றான். சென்றாள் கணவனது கட்டளைக்குக் கீச்சென்று பேசாக் கிளி. 7 திம்மன் ஆவல் தென் பாங்கு – கண்ணிகள் காலை உண வருந்திச்- சுதரிசன் காய்ச்சிய பால் பருகி ஓலைத் தடுக்கினிலே - திண்ணைதனில் ஓய்ந்து படுத் திருந்தான் ‘வேலை கிடைக்கும் என்றீர் - உடனே விண்ணப்பம் போடுவதா? நாலைந்து நாட்களுக்குப் - பிறகு நான் அங்கு வந்திடவா?’ என்று திம்மன் வினவச் - சுதரிசன் “ யாவும் முடித்து விட்டேன் இன்று கிளம்பி வந்தால் - நல்லபயன் ஏற்படும் அட்டி இல்லை. ஒன்றும் பெரிதில் லைகாண் - திம்ம, நீ ஊருக்கு வந்த வுடன் மன்னர் இடத்தினிலே - உன்னையும் மற்றும் மனைவி யையும் காட்டி முடித்த வுடன் - கட்டளையும் கையிற் கிடைத் துவிடும் வீட்டுக்கு நீ வரலாம் - சிலநாள் வீட்டினிலே தங்கிய பின் போட்ட தலைப் பாகை - கழற்றிடப் போவ தில்லை நீதான் மாட்டிய சட்டை யினை - கழற்றியும் வைத்திடப் போவதில்லை. எண்பது பேருக்கு நான் - உதவிகள் இதுவரைக்கும் செய்தேன் மண்ணில் இருப் பவர்கள் - நொடியினில் மாய்வது திண்ண மன்றோ! கண்ணிருக் கும் போதே - இவ்வரிய கட்டுடல் மாயு முன்னே நண்ணும் அனைவ ருக்கும் - இயன்றிடும் நன்மை செய்தல் வேண்டும். வண்டி யினை அமர்த்து - விரைவினில் மனை வியும் நீயும் உண்டி முடிந்த வுடன் - வண்டிதான் ஓடத் தொடங் கியதும் நொண்டி எரு தெனினும் - செஞ்சியினை நோக்கி நடத்து வித்தால் கண்டிடு பத்துமணி - இரவினில் கட்டாயம் செஞ்சி நகர். வீட்டையும் பேசி விட்டேன் - இருவரை வேலைக் கமைத்து விட்டேன் “ கோட்டையிற் சிப்பா யாய் - அமரும் கொள்கையி லேவரு வார் காட்டு மனிதர் அல்லர்”- என்றுநான் கண்டித்துப் பேசி விட்டேன் கேட்டு மகிழ்ந் தார்கள் - நிழல்போல் கிட்ட இருப் பார்கள்: திம்மன் இது கேட்டான் - கிளம்பிடத் திட்டமும் போட்டு விட்டான்! ‘பொம்மை வரும்’ என்றதும் - குழந்தைகள் பூரித்துப் போவது போல் ‘உம்’ என்று தான் குதித்தான் - விரைவினில் உண்டிட வேண்டு மென்றான். அம்முடி வின்படியே - தொடங்கினர் அப்பொழு தே பயணம்! 8 காடு எண்சீர் விருத்தம் ‘நாளைநடப் பதைமனிதன் அறியான்’ என்று நல்லகவி விக்தர்யுகோ சொன்னான். திம்மன் காளைஇரண் டிழுக்கின்ற வண்டி ஏறிக் கதைஇழுக்க மனைவியைக்கை யோடி ழுத்துத் தேளையொத்த சுதரிசனின் பேச்சை நம்பிச் செஞ்சிக்காட் டின்வழியே செல்லு கின்றான் வேளைவர வில்லைஎன்று சுப்பம் மாவும் வெளிக்காட்ட முடியவில்லை தன்க ருத்தை! குதிரைமேல் சுதரிசனும் ஏறிக் கொண்டு கோணாமல் மாட்டுவண்டி யோடு சென்றான். முதிர்மரத்தில் அடங்கினபோய்ப் பறவை யெல்லாம். முன்நிலவும் அடங்கிற்று! முத்துச் சோளக் கதிர்அடிக்கும் நரிகள்அடங் கினமு ழைக்குள் காரிருளும் ஆழ்ந்ததுபோய் அமைதி தன்னில் உதிர்ந்திருந்த சருகினிலே அதிர்ச்சி ஒன்றே உணர்ந்தார்கள். பின்அதனை அருகில் கேட்டார். மெதுவாகப் பேசுகின்ற பேச்சுங் கேட்டார்; விரைவாகச் சிலர்வருவ தாய்உ ணர்ந்தார். சுதரிசனின் எதிர்நோக்கி வந்திட் டார்கள்; தோள்நோக்கிக் கத்திகளின் ஒளிகண் டார்கள்; எதிர்வருவோர் அடையாளம் தெரிய வில்லை. எலிக்கண்போல் எரிந்ததுவண் டியின் விளக்கும்; இதோகுதிரை என்றார்கள் வந்த வர்கள், எதிர்த்தோன்றும் மின்னல்கள் வாளின் வீச்சு! பறந்துவிட்டான் சுதரிசன்போய்! வண்டிக் குள்ளே பதறினார் இருந்தவர்கள்! வண்டிக் காரன் இறங்கி,‘எமை ஒன்றும்செய் யாதீர்’ என்றான்! ‘எங்கிருந்து வருகின்றீர்?’ என்றார் வந்தோர்! ‘பிறந்துவளர்ந் திட்டஊர் வளவ னூர்தான்; பெயர்எனக்குச் சீனன்’ என்றான் வண்டிக் காரன். ‘உறங்குபவர் யார்உள்ளே’ என்று கேட்டார். உளறலோடு திம்மன் ‘நான்வளவ னூர்தான்’ என்றுரைத்தான். ‘இன்னும்யார்’ என்று கேட்டார். ‘என்மனைவி’ என்றுரைத்தான் திம்மன்! கேட்ட கன்னலைப்போல் மொழியுடையாள் துடிது டித்தாள்! ‘காரியந்தான் என்ன’வென்றார்! நடுங்குந் திம்மன், தன்கதையைக் கூறினான்! கேட்டார்! அன்னோர் சாற்றுகின்றார்: ‘திம்மனே மோசம் போனாய்; பன்னாளும் தமிழர்களின் மானம் போக்கிப் பழிவாங்கும் வடக்கருக்குத் துணைபோ கின்றாய்; தமிழ்மொழியை இகழ்கின்றான்; தமிழர் தம்மைத் தாழ்ந்தவர்என் றிகழ்கின்றான்; தமிழ்ப் பெண்டிர் தமதுநலம் கெடுக்கின்றான்; தன்நாட் டாரைத் தான்உயர்வாய் நினைக்கின்றான்; அவன்தான் நாளும் சுமைசுமையாய்ச் செய்துவரும் தீமை தன்னைச் சொன்னாலும் கேட்பதில்லை. அந்தோ அந்தோ அமுதான மனைவியுடன் வடக்கன் ஆட்சி அனலுக்கா செல்கின்றீர் வண்டி ஏறி? நல்லதொரு தொண்டுசெய்வாய்; செஞ்சி யாளும் நாய்க்கூட்டம் ஒழிந்துபட எம்பால் சேர்ந்து வெல்லஒரு தொண்டு செய்வாய்; கள்வரல்ல வீணரல்ல யாம்;தமிழை இகழ்ந்தோர் வாழ்வின் சல்லிவேர் பறிப்பதுதான் எமது மூச்சே! சலிப்பதிலே தோன்றுவதே எம்சாக் காடே! இல்லையெனில் உன்எண்ணம் போல்ந டப்பாய்; என்ன’என்றார். திம்மன்,‘விடை தருவீர்’ என்றான். ‘போகின்றாய்? போ! பிறன்பால் வால்கு ழைக்கப் போ! அடிமைக் குழிதன்னில் வீழ்ந்தி டப்போ! போ,கிண்ணிச் சோற்றுக்குத் தமிழர் மானம் போக்கப் போ! ஒன்று சொல்வோம் அதையே னுங்கேள்: சாகின்ற நிலைவரினும் நினைப்பாய் முன்னைத் தமிழர்மறம்! தமிழர்நெறி!’ என்றார்! நங்கை ‘போகின்றேன் என்னிடத்தில் கத்திஒன்று போடுங்கள்’ என்றுரைத்தாள் ஆஆ என்றார்! ஐந்துபேர் தரவந்தார் குத்துக் கத்தி! அவற்றில் ஒரு கத்தியினை வாங்கிக் கொண்டாள்! ‘தந்தோம்என் தங்கச்சி வெல்க! வெல்க! தமிழச்சி உன்கத்தி வெல்க’ என்றார். வந்தோரின் வியப்புக்கு வரையே இல்லை. மாட்டுவண்டி சென்றதுசெஞ் சியினை நோக்கி! பந்தாகப் பறந்திட்ட சுபேதார் சிங்கைப் பத்துக்கல் லுக்கப்பால் திம்மன் கண்டான்! 9 சிங்கம் தென்பாங்கு - கண்ணிகள் ‘ காட்டு வழிதனிலே சிங்கமே - எம்மைக் காட்டிக் கொடுத்துவந்த சிங்கமே ஓட்டம் பிடித்துவிட்ட சிங்கமே - உங்கள் உள்ளம் பதைத்ததென்ன சிங்கமே? நீட்டிய உங்கள் கத்தி, கள்ளரைக் - கண்டு நெட்டுக் குலைந்ததென்ன சிங்கமே? கூட்டி வழிநடந்து வந்திரே’- என்று கூறிச் சிரித்தான் அத் திம்மனும்! ‘ அங்கே வழிமறித்த யாவரும் - திரு வண்ணா மலைநகர வீரர்கள்; இங்கே எமக்கவர் விரோதிகள் - தக்க ஏற்பாட்டிலே எதிர்க்க வந்தவர்; உங்கட் கிடர்புரிய எண்ணிடார் - இந்த உண்மை தெரியும்எனக் காதலால் எங்கே உமைவிடுத்த போதிலும் - உங்கட் கிடரில்லை’ என்றனன் சுதரிசன்! 10 சுப்பம்மா எண்சீர் விருத்தம் இவ்வாறு கூறிப்பின், சுதரி சன்சிங்க் இதோகாண்பீர் செஞ்சிமலை சார்ந்த சிற்றூர்! அவ்விடத்தில் தனிக்குடிசை ஒன்றில் நீவிர் அமைதியாய் இருந்திடுவீர்; உணவு யாவும் செவ்வையுற ஏற்பாடு செய்வேன், என்றன் சேவகத்தை நான்பார்க்க வேண்டு மன்றோ? எவ்விதத்தும் விடிந்தவுடன் வருவேன் இங்கே; எவற்றிற்கும் ஏற்பாடு செய்வேன்’ என்றான். கைவேலைக் காள்கொடுத்தான்; துணைகொ டுத்தான்; கழறியது போலவே உணவுந் தந்தான்; வைவேலை நிகர்கண்ணாள் கண்ணு றக்கம் வராதிருந்தாள்; அவளுடைய நெஞ்ச மெல்லாம் பொய்வேலைச் சுதரிசன் செய்திட இருக்கும் பொல்லாங்கில் இருந்தது! குத்துக் கத்திக்கு மெய்யாக வேலைஉண்டோ, அவ்வா றொன்றும் விளையாமை வேண்டுமென எண்ணிக் கொண்டாள். 11 பொன்துளிர் எண்சீர் விருத்தம் சுப்பம்மா கால்தூக்கம், சுப்பம் மாவின் துணைவனின்ஒன் றேமுக்கால் தூக்கம் எல்லாம் தொப்பெனவே இல்லாது மறையும் வண்ணம், துளிர்த்ததுபொற் றுளிர்கிழக்கு மாம ரத்தில்! அப்போதில் சுப்பம்மா, ‘அத்தான்’ என்றாள்; ‘அவசரமா’ எனத்திம்மன் புரண்டான் ஆங்கே. ‘இப்படிப்போ’ என்றுபகல், இருளைத் தள்ளி எழுந்துவந்து திம்மனெதிர் சிரித்த தாலே. ‘அம்மா’என் றிருகையை மேலே தூக்கி, ‘ஆ என்று கொட்டாவி விட்டுக் குந்தித், திம்மன்எழுந் தான்!அவனும், சுப்பம் மாவும், சிறுகுடிசை விட்டுவெளிப் புறத்தில் நின்றே, அம்மலையின் தோற்றத்தைக் கண்டார். காலை அரும்புகின்ற நேரத்தில் பொற் கதிர்போய்ச் செம்மையுறத் தழுவியதால் மலைக்கோட் டைமேல் சிறகுவிரித் தெழுங்கருடக் கொடியைக் கண்டார். 12 வானப்படம் தென்பாங்கு - கண்ணிகள் ‘பொன்னான வானப் படத்தில் - வயிரப் புதிதான வண்ணம் குழைத்துத் தன்னேர் இலாதமலை எழுதித், - திகழ் தளிர்படும் பூஞ்சோலை எழுதி உன்னை மகிழ்வித்த காட்சி - எனக்கும் உவகை கொடுத்ததடி பெண்ணே’ என்றுரைத் தான்நல்ல திம்மன் - அந்த ஏந்திழை தான்புகல் கின்றாள்: ‘விண்மீதில் அண்ணாந்த குன்றம் - அதனை மெருகிட்டு வைத்தசெங் கதிர்தான் ஒண்ணீழல் செய்திடும் சோலை - யதனை ஒளியில் துவைத்ததும் காண்க! கண்காணும் ஓவியம் அனைத்தும் - அழகு காட்டப் புரிந்ததும் கதிர்தான்! மண்ணிற் பிறந்தோர் எவர்க்கும் - பரிதி வாய்த்திட்ட அறிவாகும்’ என்றாள். மங்கையும் திம்மனும் இயற்கை - அழகில் வாழ்கின்ற போதிற் சுபேதார், செங்கையில் மூட்டையோடு வந்தான் - புதுமை ‘தெரியுமோ உங்களுக்’ கென்றான். அங்காந்த வாயோடு திம்மன் - விரைவில், ‘அதுவென்ன புகலுவீர்’ என்றான்! ‘சிங்கன் முயற்சி வீணாமோ - புதிய சிப்பாயும் நீயாகி விட்டாய். இந்தா இதைப்போடு! சட்டை! இதுவும் எழிலான சல்லடம்! மாட்டு! இந்தா இதைப்போடு! பாகை! - இன்னும் இந்தா இடைக்கச்சை! கட்டு! செந்தாழை மடல்போன்ற கத்தி- இடையில் சேர்த்திறுக் கித்தொங்க வைப்பாய்! வந்துபோ என்னோடு திம்மா! - விரைவில் வா’ என் றழைத்தனன் சிங்கன்! 13 புதிய சிப்பாய் எண்சீர் விருத்தம் ‘சுதரிசன்சிங் செய்தநன்றி பெரிது கண்டாய்! சுப்பம்மா விடைகொடுப்பாய்! என்றான் திம்மன். இதற்கிடையில், சுதரிசன்சிங்க் ‘நாளைக் குத்தான் இங்குவர முடியும்நீ’ என்று ரைத்தான். ‘அதுவரைக்கும் நான்தனியாய் இருப்ப துண்டோ, அறிமுகமில் லாவிடத்தில்?’ என்றாள் அன்னாள். ‘இதுசரிதான் இன்றிரவே உனைய னுப்ப ஏற்பாடு செய்கின்றேன்’ என்றான் சிங்கன். ‘சிங்குநமக் கிருபெண்கள் துணைவைத் தாரே- சிறிதும்உனக் கேன்கவலை?’ என்றான் திம்மன். ‘இங்கெதற்கும் அச்சமில்லை சுப்பம் மாநீ இரு’என்று சிங்கனுரைத் திட்டான். திம்மன், பொங்கிவரும் மகிழ்ச்சியிலே பூரித் தானாய்ப் புறப்பட்டான் சிங்கனொடு! சுப்பம் மாவும், சுங்குவிட்ட தலைப்பாகை கட்டிக் கொண்டு துணைவன்போ வதுகண்டு சொக்கி நின்றாள்! 14 அன்றிரவு அகவல் மாலை ஆயிற்று! வரும்வழி பார்த்துச் சோலை மலர்விழி துளிகள் உதிர்க்கக், குடிசையின் வாசலில் குந்தி யிருந்தாள்! சுப்பம் மாவுக்குத் துணையாய் இருந்த குப்பும் முருகியும் செப்பினர் தேறுதல் குப்பு, ‘மங்கையே, சிப்பாய் இப்போது வருவார்; அதற்குள் வருத்தமேன்’ என்றாள். முருகி, ‘இதற்கே உருகுகின்றாயே சிப்பாய் வேலைக் கொப்பிச் சென்றவர் மாசக் கணக்காய் வாரக் கணக்காய் வீட்டை மறந்து கோட்டையில் இருப்பார்; எப்படி உன்னுளம் ஒப்பும்’ என்றாள். கோதைசுப் பம்மா கூறு கின்றாள்: ‘புயற்காற்று வந்து, போகாது தடுப்பினும், அயலில் தங்க அவருக்குப் பிடிக்காது; நெஞ்சம் எனைவிட்டு நீங்கவே நீங்காது; பிரிந்தால் எனக்கும் பிடிக்கா துலகமே! வீட்டை விட்டவர் வெளியே செல்வது கூட்டை விட்டுயிர் வேறுகூடு செல்வதே அதென்ன மோயாம் அப்படிப் பழகினோம். அயல்போ வாரெனில் அதுவும் எங்கே? வயல்போ வதுதான். வலக்கைப் பக்கத்து வீடு, மற்றொரு வீடு, தோப்பு மாமரம் அதனருகு வயல்தான்! முருகியே இப்போ தென்ன இருக்கும் மணி?அவர் எப்போது வருவார்?’ என்று கேட்டாள். குப்பு,மணி ஆறென்று கூறினாள்! முருகி விளக்கு வைக்கும் வேளை என்றாள்! குப்பு, முருகி, சுப்பம் மாஇவர் இருந்த இடமோ திருந்தாக் குடிசை! நாற்பு றம்சுவர் நடுவிலே ஓர் அறையு மில்லை. மறைவு மில்லை. வீட்டு வாசல், தோட்ட வாசல், இருவா சல்களும் நரிமுழை போலக் குள்ள மாகவும், குறுக லாகவும், இருந்தன. முருகி எழுந்து விளக்கை ஏற்றிக் கும்பிட்டுச் சோற்றை வட்டித்தாள். குப்பு, மகிழ்ந்து குந்தினாள் சாப்பிடச் சுப்பம் மாமுகம் சுருக்கிக் கூறுவாள்; ‘கணவர் உண்டபின் உணவு கொள்வேன். முதலில் நீங்கள் முடிப்பீர்’ என்றனள். குப்பு ‘வாவா சுப்பம் மாநீ இப்படி வா! நான் செப்புவ தைக்கேள் வருவா ரோஅவர் வராமாட் டாரோ சிப்பாய் வேலை அப்படிப் பட்டது உண்டு காத்திரு. சிப்பாய் வந்தால் உண்பார்; உணவு மண்ணாய் விடாது. சொல்வதைக் கேள்’ என்று சொல்லவே மங்கை ‘சரிதான் என்று சாப்பிட் டிருந்தாள். காலம் போகக் கதைகள் நடந்தன. முருகி வரலாறு முடிந்ததும் குப்பு, மாமியார் கதையை வளர்த்தினாள், பிறகு மூவரும் தனித்தனி மூன்று பாயில் தலையணை யிட்டுத் தலையைச் சாய்ந்தனர். அப்போது தெருப்புறம் அதிக மெதுவாய் ‘என்னடி முருகி’ என்ற ஒருகுரல் கேட்டது. முருகி கேட்டதும் எழுந்துபோய் ‘ஏனிந் நேரம்’ என்று வரவேற்று, வீட்டில் அழைத்து வெற்றிலை தந்தாள். இருவரு மாக ஒரேபாய் தன்னில் உட்கார்ந் தார்கள்! உற்றுப் பார்த்த சுப்பம் மாஉளம் துண்டாய் உடைந்தது! சிங்கன் இரவில் இங்கு வந்ததேன்? முருகியும் அவனும் அருகில் நெருங்கி உரையாடு கின்றனர் உறவும் உண்டோ! என்று பலவா றெண்ணி இருக்கையில், முருகிக்குச் சிங்கன் முத்த மிட்டான். குப்பும் கதவினைத் தொப்பென்று சாத்திச் சூழ நடந்து சுடர்விளக் கவித்தாள் ‘மேல் என்னென்ன விளையுமோ கண்ணிலாள் போல்இவ் விருளில் புரளு கின்றேன் சுதரிசன் சிங்கின் துடுக்குக் கைகள் பதறிஎன் மீது பாய்ந்திடக் கூடுமோ, என்று நினைத்தாள்; இடையில் கத்தியை இன்னொரு தரம்பார்த்துப் பின்னும் மறைத்தாள். கரைகண்டு கண்டு காட்டாற்றில் மூழ்கும் சேய்போல் நங்கை திடுக்கிடும் நினைப்பில் ஆழ்வதும் மீள்வது மாக இருந்தாள். கருவிழி உறங்கா திரவைக் கழிக்கக் கருதினாள் ஆயினும் களையுண் டானதால் இருட்சேற் றுக்குள் இருந்த மணிவிழியைக் கரும்பாம் பாம்துயில் கவர இரவு போயிற்றே! இரவு போயிற்றே! 15 மகிழ்ந்திரு தென்பாங்கு - கண்ணிகள் நீரடை பாசியில் தாமரை பூத்தது போலே - நல்ல நீலத் திரைகடல் மேலே - பெருங் காரிருள் நீக்கக், கதிர்வந்து பூத்ததி னாலே வாரிச் சுருட்டி எழுந்தனன் சிங்க னப் போது - உடை மாற்றினன் தன்னுடல் மீது - அவன் நேரில் அழைத்தனன் வந்துநின் றாளந்த மாது ‘ஆயிரம் பேரொடு திம்மனும் அங்கிருக் கின்றான் - கவாத் தாரம்பம் செய்திருக் கின்றான் - அவன் ஞாயிறு செல்லத், திங் கட்கிழமை வருகின்றான். போயிருந் தாலென்ன? அச்சம் உனக்கென்ன இங்கு - நீ பொன்போலப், பாயில் உறங்கு – இரு தாய்மாரும் உண்டு! துயர்செய்வ தெந்தக் குரங்கு? ஆவிஉன் மேல்வைத்த திம்ம னிடத்திலும் சென்று - நான் ஆறுதல் கூறுவேன் இன்று -நீ தேவை இருப்பதைக் கேள் இங்குத் தங்குதல் நன்று. கோவை படர்ந்திட்ட கொய்யாப் பழந்தரும் தோட்டம் - இங்குக் கூவும் பறவையின் கூட்டம் - மிக நாவிற்றுப் போகும் இனிக்கும் பழச்சுளை ஊட்டம். தெற்குப் புறத்தினில் ஓடி உலாவிடும் மானும் - அங்குச் செந்தினை மாவோடு தேனும் - உண்டு சற்றே ஒழிந்திடில் செல்லுவ துண்டங்கு நானும்! சிற்றோடை நீரைச் சிறுத்தையின் குட்டி குடிக்கும் - அதைச் செந்நாய் தொடர்ந்து கடிக்கும் - அங்கே உற்ற வரிப்புலி நாயின் கழுத்தை ஒடிக்கும். மாங்குயில் கூவி, இவ் வண்ணத் தமிழ்மொழி விற்கும்- இந்த வையமெலாம் அதைக் கற்கும் - களி தாங்காது தோகை விரித்தாடி மாமயில் நிற்கும். பாங்கிலோர் காட்டில் படர் கொடி ஊஞ்சலில் மந்தி- ஒரு பாறையின் உச்சியை உந்தி - உயர் மூங்கில் கடுவனை முத்தமிடும் அன்பு சிந்தி. கைவைத்த தாவில் பறித்திட லாகும்ப லாக்காய் - நீ கால்வைத்த தாவில் க ளாக்காய் - வெறும் பொய்யல்ல நீஇதைப் போயறிவாய் காலப் போக்காய். ஐவிரல் கூட்டி இசைத்திடும் யாழ்கண்ட துண்டு - யாழின் அப்பனன் றோவரி வண்டு? - மக்கள் உய்யும் படிக்கல்ல வோஇவை செய்தன தொண்டு? ‘போய்வருவேன்’ என்று சொல்லிச் சுதரிசன் போனான்- அந்தப் பூவையின் மேல்மைய லானான் - அவன் வாய்மட்டும் நல்லது; உள்ளம் நினைத்திடில் ஈனன். தூய்மொழி யாளும் சுதரிச னைநம்ப வில்லை-என்று தொலையுமோ இப்பெருந் தொல்லை - என்று வாய்மொழி இன்றி இருந்தனள் அக்கொடி முல்லை. 16 சுதரிசன் மயக்கம் அறுசீர் விருத்தம் சுதரிசன் தொலைந்தான்! அன்னோன் கூத்திமார் இரண்டு பேரும் ‘எதற்கும் நீஅஞ்ச வேண்டாம்’ என்றுபக் கத்தில் குந்தி சுதரிசன் புகழை யெல்லாம் சொல்லிடத் தொடங்கி னார்கள். புதுத்தொல்லை யதனில் மங்கை புழுவாகத் துடிக்க லானாள். அழகுள்ள ஆளாம் எங்கும் அவன்போலே அகப்ப டாராம்! ஒழுக்கமுள் ளவனாம் சொத்தும் ஒருநூறா யிரமும் உண்டாம்! ஒழுகுமாம் காதில் தேனாய் ஒருபாட்டுப் பாடிவிட்டால்! எழுதினால் ஓவி யத்தை எல்லாரும் மயங்கு வாராம்! நடுப்பகல் உணவா யிற்று! நங்கைக்குக் கதையு ரைக்க எடுத்தனர் பேச்சை நங்கை ‘தப்புவ தெவ்வா’ றென்று துடித்தனள். ‘எனக்குத் தூக்கம் வருகின்ற’தென்று கூறிப் படுத்தனள்; கண்கள் மூடிப் பகற்போதைக் கழித்து விட்டாள். ‘பகலெல்லாம் கணவ ருக்குப் பலபல வேலை யுண்டு முகங்காட்டிப் போவ தற்கும் முடியாதா இரவில்’ என்று நகம்பார்த்துத் தலைகு னிந்து நங்கையாள் நலிவாள்! அந்த அகம்கெட்ட மாதர் வந்தே ‘சாப்பிட அழைக்க லானார்.’ உணவுண்டாள் நங்கை, அங்கே ஒருபுறம் உட்கார்ந் திட்டாள்! முணுமுணு என்று பேசி இருந்திட்ட இருமா தர்கள் அணுகினார் நங்கை யண்டை! அதனையும் பொறுத்தி ருந்தாள்! தணல்நிகர் சுதரி சன்சிங்க் தலைகண்டாள்; தளர்வு கொண்டாள். எதிரினில் சுதரி சன்சிங்க் உட்கார்ந்தான்; ‘என்ன சேதி? புதுமலர் முகமேன் வாடிப் போனது? சுப்பம் மா,சொல்! குதித்தாடும் பெண்நீ சோர்ந்து குந்திக்கொண் டிருக்கின் றாயே? அதைஉரை’ என்றான், நங்கை ‘அவர்எங்கே’ என்று கேட்டாள். ‘திம்மனைச் சிங்கம் வந்தா விழுங்கிடும்? அச்சம் நீக்கிச் செம்மையாய் இருப்பாய்’ என்றான். இதற்குள்ளே தெருவை நோக்கி அம்மங்கை முருகி சென்றாள் அவள்பின்னே குப்பும் போனாள் ‘உம்’என்றாள்; திகைத்தாள் நங்கை! சுதரிசன் உளம கிழ்ந்தே. ‘நங்கையே இதனைக் கேட்பாய் நானுன்றன் கணவ னுக்கே இங்குநல் லுத்தி யோகம் ஏற்பாடு செய்து தந்தேன்; பொங்கிடும் என்னா சைக்குப் புகலிடம் நீதான்; என்னைச் செங்கையால் தொடு;மறுத்தால் செத்துப்போ வதுமெய்’ என்றான். ‘நான்எதிர் பார்த்த வண்ணம் நடந்தது; நங்கை மாரும் யான்இங்குத் தனித்தி ருக்க ஏற்பாடு செய்து போனார் ஏன் என்று கேட்பா ரில்லை இருக்கட்டும்’ என்று வஞ்சி தேன்ஒத்த மொழியால் அந்தத் தீயன்பால் கூறு கின்றாள்: “ கொண்டவர்க் குத்தி யோகம் கோட்டையில் வாங்கித் தந்தீர் அண்டமே புரண்டிட் டாலும் அதனையான் மறக்க மாட்டேன். அண்டையில் வந்துட் கார்ந்தீர்; அடுக்காத நினைவு கொண்டீர்; வண்கையால் “தொடு”ம றுத்தால் சாவது மெய்யே என்றீர். “ உலகில்நான் விரும்பும் பண்டம் ஒன்றுதான்; அந்தச் செம்மல் தலைமிசை ஆணை யிட்டுச் சாற்றுவேன் எனது கற்பு நிலைகெட்ட பின்னர் இந்த நீணில வாழ்வை வேண்டேன் மலையும்தூ ளாகும் நல்ல மானிகள் உளந்து டித்தால்! “ கொண்டஎண் ணத்தை மாற்றிக் கொள்ளுவீர்; நரியும், யானைக் கண்டத்தை விரும்பும்; கைக்கு வராவிடில் மறந்து வாழும்; கண்டஒவ் வொன்றும் நெஞ்சைக் கவர்ந்திடும், அந்நெஞ் சத்தைக் கொண்டொரு நிலையிற் சேர்ப்பார்; குறைவிலா அறிவு வாய்த்தோர்” என்றனள். சுதரி சன்சிங்க், ஏதொன்றும் சொல்லா னாகி, ‘நன்றுநீ சொன்னாய் பெண்ணே நான்உன்றன் உளம்சோ தித்தேன் இன்றிங்கு நடந்த வற்றைத் திம்மன்பால் இயம்ப வேண்டாம்.’ என்றனன், கெஞ்சி னான்;‘போய் வருகின்றேன்’ என்றெ ழுந்தான். இருளினில் நடந்து போனான் எரிமலைப் பெருமூச் சோடு! இருளினை உளமாய்க் கொண்ட இருமாதர் உள்ளே வந்தார். அருளினால் கூறு கின்றாள் சுப்பம்மா அம்மா தர்க்கே: ‘ஒருபோதும் இனிநீர் இந்த உயர்விலாச் செயல்செய் யாதீர்! ஆயிரம் வந்திட் டாலும் அடாதது செயாதீர்; ஆவி போயினும் தீயார் நடபிற் பொருந்துதல் வேண்டாம்; உம்மைத் தாயினும் நல்லார் என்று தான்நினைத் திருந்தேன். தாழ்வை வாயினால் சொல்லிக் காட்ட வரவில்லை என்னே என்னே! கண்ணகி என்னும் இந்தத் தமிழ்நாட்டின் கண்ணே போன்ற பெண்கதை கேட்டி ருப்பீர்; அப்பெண்ணைப் பெற்ற நாட்டுப் பெண்களே நீரும்! அந்தப் பெரும்பண்பே உமக்கும் வேண்டும் எண்ணமேன் இவ்வா றானீர்? திருந்துங்கள்’ என்று சொன்னாள். ‘யாம்என்ன செய்து விட்டோம்? எம்மிடம் நீதான் என்ன தீமையைக் கண்டு விட்டாய்! தெரிவிப்பாய் தெருவிற் சென்றோம் சாமிக்குத் தெரியும் எங்கள் தன்மை நீ அறிய மாட்டாய் ஏமுரு கியேஇ தென்ன வெட்கக்கே டெ’ன்றாள் குப்பு. ‘சிங்க்இங்கே இருந்தார்; நாங்கள் தெருவிற்குச் சென்றால் என்ன? பங்கமோ இதுதான்? மேலும், பயந்துவிட் டாயா? சிங்கு தங்கமா யிற்றே! சிங்கு தறுதலை யல்ல பெண்ணே எங்களை இகழ்ந்த தென்ன’ என்றனள் முருகி என்பாள். 17 சுப்பம்மா நிலை அறுசீர் விருத்தம் விடிந்தது சுப்பம் மாவும் விழித்தனள், திம்ம னில்லை; வடிந்தது கண்ணீர்! மெய்யும் வாடிற்று! நுண்ணி டைதான் ஒடிந்தது! தேனி தழ்தான் உலர்ந்தது! தூளாய் உள்ளம் இடிந்தது! ‘செய்வ தென்ன’ என்றெண்ணி இருந்தாள் மங்கை! காலையில் உணவை உண்டார் அனைவரும்! முருகி சொன்னாள்; ‘மாலையில் வருவோம் நாங்கள் மைத்துனர் வீடு சென்று! மூலையில் தூங்கி டாதே; முன்கத வைமூ டிக்கொள்; வேலை யைப்பார்; சமைத்துக் கொள்என்றாள். வெளிச்சென் றார்கள். தனிமையில் இருந்தாள் அந்தத் தனிமயில்! கணவன் என்ற இனிமையில் தோய்வாள் அந்த எழில்மயில்! மீண்டும் ‘தீயன் நனிமையற் பெருக்கால் என்ன நடத்திட இருக்கின் றானோ? இனிமெய்யாய் இங்கி ருத்தல் சரியல்ல!’ எனநி னைத்தாள். 18 திம்மன் நிலை எண்சீர் விருத்தம் கோட்டையிலே அடைபட்டுக் கிடந்தான் வீட்டில் கோழிஅடை பட்டதுபோல் அந்தத் திம்மன்! ஓட்டையிலே ஒழுகுவது போ லேநீரை ஒழுகவிடும் இருவிழியும், உடைந்த நெஞ்சும், வாட்டமுறும் முகமுமாய் இருந்தான்! என்றன். மனைவிநிலை எப்படியோ? இங்கு வைத்து வாட்டுகின்றார்! கவாத்தெங்கே! வீணில் தூங்க வலுக்கட்டா யம்செய்யும் வகைதான் என்னே! ஏதோஓர் சூழ்ச்சிஇதில் இருக்கக் கூடும் இல்லைஎனில் எனக்கிந்த நிலைஎ தற்கு? மாதுதனை எனைவிட்டுப் பிரிப்ப தற்கே வம்பன்இது செய்தானோ! சுப்பம் மாவும் தீதேதோ கண்டதால் அன்றோ, அன்று செப்பினாள் “அவனைநான் நம்பேன்” என்று! ‘தாதுசிங்கைக் கேட்கின்றேன்; வீடு செல்லத் தக்கவழி கூறுவான்’ என்று சென்றே எதற்கிங்கே நான்பத்தொன் பதுநாள் தங்கி இருப்பதென்று வினவினான். அந்தச் சிப்பாய் அதற்கென்ன காரணமோ அறியேன்; அந்த அதிகாரி வைத்ததுதான் சட்ட மென்றான். மிதக்கின்ற பாய்க்கப்பல் மூழ்கிப் போக வெறுங்கட்டை அதுவுங்கை விட்ட தைப்போல் கொதிக்கின்ற மனத்தோடு கோட்டைக் குள்ளே குந்தினான் கண்ணீரைச் சிந்தி னானே! கோட்டைக்குள் இவ்விருளாம் கரிய பாம்பு கொடியவால் காட்டியெனை அஞ்ச வைத்தால் காட்டைநிகர் சேரியிலே அந்தப் பாம்பு கண்விழித்தால் சுப்பம்மா நிலைஎன் ஆகும்! ‘தோட்டமுண்டு; வயலுண்டு; போக வேண்டாம் தொல்லை’என்று சொன்னாளே கேட்டே னாநான்! கேட்டேனா கிளிக்குச்சொல் வதுபோல் சொன்னாள் கெட்டேனே’ என்றலறிக் கிடந்தான் திம்மன்! 19 சுதரிசன் நிலை தென்பாங்கு – கண்ணிகள் மாவடு வொத்த விழிக்கும் - அவள் மாம்பழம் போன்ற மொழிக்கும் காவடிப் பிச்சை என்றேனே - அந்தக் கள்ளி மறுத்துவிட் டாளே! தூவடி என்உடல் மீதில் - உன் தூயதோர் கைம்மலர் தன்னை ஆவி நிலைத்திடும் என்றேன் - அவள் அட்டி உரைத்துவிட் டாளே! என்று சுதரிசன் எண்ணி - எண்ணி ஏங்கி இருந்தனன்! பின்பு; ஒன்று நினைத்தனன் சூழ்ச்சி! - மிக ஊக்கம் மிகுந்தது நெஞ்சில்! பின்புறக் கோட்டையை நாடிச் - சில பேச்சுக்கள் பேசிட ஓடித் தன்துணை வர்களைக் கண்டான் - கண்டு தன்கருத் துக்களைச் சொன்னான். கோட்டையில் வேறொரு பக்கம் -வந்து குப்பு, முருகியைக் கண்டான் நாட்டம் அனைத்தும் உரைத்தான் - அவர் நன்றென்று கூறி நடந்தார். ‘பாட்டு நிகர்மொழி யாளை - என் பக்கம் திருப்பிடச் செய்வேன் காட்டுவேன் வேடிக்கை’ என்றே - சிங்கன் கையினை வீசி நடந்தான். 20 இங்கே செல்லாது தென்பாங்கு – கண்ணிகள் தூங்கும் குயிலினை நோக்கி ஓராயிரம் துப்பாக்கி சூழ்ந்தது போல், - துயர் தாங்கருங் கிள்ளையை நோக்கிக் கவண்பலர் தாங்கி நடந்தது போல், ஏங்கும் விளக்கினை நோக்கிப் பெரும்புயல் ஏற்பட்டு வந்தது போல், - நொடி ஆங்கிருக் கும்சுப்பம் மாவின் குடிசையை ஆட்கள் பலர் சூழ்ந்தார்! தீய முருகியுங் குப்பும் இருந்தனர் சேயிழை பக்கத் திலே - வீட்டு வாயிற் கதவினைத் தட்டிய தட்டோடு வந்தது பேச்சுக் குரல்! ‘ஆயிரம் ஆயிரம் ஆக வராகன் அடித்துக் கொண்டோடி வந்தீர் - நீர் தூயவர் போலிந்த வீட்டில் இருந்திடும் சூழ்ச்சி தெரியா தோ’. என்று வெளியினில் கேட்ட குரலினை இவ்விரு மாதர்களும் - உயிர் கொன்று பொருள்களைக் கொள்ளை யடிப்போர் குரலிது வென்று ரைத்தார். புன்மை நடையுள்ள அவ்விரு மாதரும் பொத்தெனவே எழுந்தார்; - அவர் சின்ன விளக்கை அவித்துக் கதவைத் திறந்தனர்; ஓடிவிட் டார்! மங்கை இருந்தனள் வீட்டினுள் ளேஇருள் வாய்ந்த இடத்தினிலே, - பின்னர் அங்கும் இங்கும்பல ஆட்களின் கூச்சல் அலைவந்து மோது கையில் மங்கையின்மேல் ஒருகைவந்து பட்டது. வாள்பட்ட* தால்விட்டது. - அட இங்குச் செல்லாதென்று மங்கை சொன்னாள்! வந்த இழிஞர்கள் பேசவில்லை. மேலும் நடப்பது யாதென்று மங்கை விருப்புடன் காத்தி ருந்தாள் - அந்த ஓலைக் குடிசைக்குத் தீயிட்ட தாக உணர்ந்து நெஞ்சந் துடித்தாள்! மூலைக்கு மூலை வழிபார்த் தாள் புகை மொய்த்த இருட்டினிலே, - அவள் ஏலுமட் டும்இரு தாழைத் திறந்திட என்னென்ன வோ புரிந்தாள். கூரை எரிந்தது! கொள்ளிகள் வீழ்ந்தன! கூட்டத்தி லேஒருவன் - ‘சொல் ஆரங்கே’ என்றனன்; தாழைத் திறந்தனன் ‘அன்னமே’ என்றழைத்தான். கூரை எரிந்தது! கொள்ளி எரிந்தது கொல்புகை நீங்கிய தால் - ‘முன் ஆரங்கே’ என்றவன் சுதரிசன் என்பதை அன்னம் அறிந்தவளாய். கத்தியை நீட்டினள்; ‘தீஎன்னை வாட்டினும் கையைத் தொடாதேயடா - இந்த முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி மூச்சுப் பெரிதில்லை காண்!’ குத்தும் குறிப்பும் கொதித்திடும் பார்வையும் கொண்டிது கூறிநின்றாள் - வந்த தொத்தல் பறந்தது! சூழ இருந்தவர் கூடத் தொலைந்து விட்டார். 21 சேரிக்குள் சென்றாள் எண்சீர் விருத்தம் எட்டிஇருந் திட்டபல சேரி மக்கள் இல்லங்கள் நோக்கிஅவள் மெல்லச் சென்றே இட்டகனல் வெப்பத்தால் தோழி மாரே. என்நெஞ்சு வெந்ததுண்டு தோழி மாரே, மட்டற்ற நாவறட்சி தோழி மாரே, வாட்டுவதால் நீர்கொடுப்பீர் தோழி மாரே, எட்டுணையும் மறுப்பீரோ தோழி மாரே, என்றுநடு வீதியிலே கூவி நின்றாள். சேரியிலே வீடுதொறும் விழித்தி ருந்து சேதிதெரிந்திட நினைத்த சேரி மக்கள் ஓரொருவ ராய்வந்தார் வெளியில்; ‘அம்மா உற்றதென்ன உன்றனுக்கே? உரைக்க வேண்டும். நீர்குடிப்பீர்; நில்லாதீர்; அமைதி கொள்வீர்; நிலவில்லை; இந்தஇருள் தன்னில் வந்தே, கூரைகொளுத் தியதீயர் எவர்? உமக்குக் கொடுமைஇழைத் தவர்யாவர்? உரைப்பீர்’ என்றார். ‘திரிநெருடி நெய்யூற்றி விளக்கை ஏற்றிச் சிறுதடுக்கும் இட்டு,நீர் குடிக்கத் தந்த பெரியீரே, என்அருமைத் தோழி மாரே, பெருந்தீயால் சிறுவீடு வேகும் கோலம் தெருவினிலே கண்டீரே இரங்கி னீரோ! செயும்உதவி செய்தீரோ? மக்கள் கூட்டம் ஒருமுனையிற் பெற்றதீ, முழுதும் தீர்க்கும்; என்னுமோர் உண்மையினை மறக்க லாமோ? குளக்கரையின் சிறிதசைவு குளத்த சைவே கொல்புலியால் ஒருவன்இடர், பலர்க்கும் அன்றோ? இளக்காரம் தாராமல், தீமை ஒன்றை இயற்றியோ ரைஊரார் எதிர்க்க வேண்டும். களாப்புதரும் தன்னகத்தே இடங்கொ டுத்தால் கவ்விவிடும் வேரினையே காட்டுப் பன்றி! விளாஓடும் பழமும்போல் பிரிதல் தீமை வெளியானைக் கொட்டும் தேனீக்கள் வாழும்! சுதரிசனாம் சுபேதாராம் தோழி மாரே, துணைவருக்குச் சிப்பாயின் உத்தி யோகம் உதவுவதாய் அழைத்துவந்தான்; கோட்டைக் குள்ளே, ஒளித்துவைத்தான் எனைவிட்டுப் பிரித்து வைத்தான் இதன்நடுவில் குடிசையிலே இருக்கும் என்னை எடுத்தாள எண்ணமிட்டான் சூழ்ச்சி யெல்லாம் புதிதுபுதி தாய்ச்செய்தான்; கூரை தன்னைப் பொசுக்கினான் நான்கலங்கிப் போவே னென்று. தீஎரியும் நேரத்தில், தீமை வந்து சீறுகின்ற நேரத்தில், எனைஇ ழுத்துப் போய்,அழிக்க எண்ணமிட்டான் எனது கற்பை! புதைத்திருந்தேன் என்இடையில் குத்துக் கத்தி தோயுமடா உன்மார்பில் என்று காட்டித், ‘தொலையில்போ’ என்றேன்நான்! சென்றான் அன்னோன் நாய்குலைக்க நத்தம்பா ழாமோ சொல்வீர் நான்அடைந்த தீமைகளைச் சுருக்கிச் சொன்னேன். உயிர்போன்ற என்கணவர் இருக்கும் கோட்டை உட்புறத்தை நான்அடைய வேண்டும். அங்கே துயரத்தில் ஆழ்த்தப்பட் டிருக்கின் றாரா? துயரின்றி இருக்கின் றாரா துணைவர்? முயல்வதே என்கடமை, உளவு தன்னை மொழிவதுதான் நீங்கள்செய் யும்உதவி’ என்றாள். ‘துயரோடு வந்திட்ட எம்பி ராட்டி தூங்கிடுக விடியட்டும்’ என்றார் அன்னோர். கண்மூட வழியிலையே! விடியு மட்டும் காத்திருக்க உயிரேது? தோழி மாரே, விண்மூடும் இருட்டென்றும், பகல்தா னென்றும் வேறுபா டுளதேயோ வினைசெய் வார்க்கே? மண்மூடி வைத்துள்ள புதுமை யைப்போல் மனமூடி வைத்திருப்பார் சூழ்ச்சி! இந்தப் பெண்மூடி வைத்திடவோ என்உ ணர்வை? பெயர்கின்றேன் வழியுரைப்பீர் பெரியீர் என்றாள். கையோடு கூட்டிப்போய்க் காட்டு கின்றோம் காலையிலே ஆகட்டும்; இரவில் போனால் செய்வதொன்றும் தோன்றாது; தெருத்தோன் றாது; சிப்பாய்கள் நம்மீதில் ஐயம் கொள்வார். மெய்யாலும் சொல்கின்றோம் கணவர் உள்ள வீட்டையோ கோட்டையை யோஅறிவ தெங்கே ஐயாவைக் காணுவதும் முடியா தென்றார் அரிதான மாண்புடையாள் சரிதான் என்றாள். 22 மன்னனைக் கண்டாள் தென்பாங்கு – கண்ணிகள் தேசிங்கு மன்னன் - சில சிப்பாய்க ளோடு பேசிச் சிரித்தே - தன் பெருவீடு விட்டு மாசற்ற தான - புனல் மடுவிற் குளிக்க வீசுங்கை யோடு - மிக விரைவாய் நடந்தான்! எதிர்ஓடி வந்தாள் - நல் எழிலான மங்கை! ‘சுதரிசன் சிங்கன் - என் துணையைப் பிரித்தான்; மதில்வைத்த கோட்டை - தனில் வைத்தே மறைத்தான்; எதைநான் உரைப்பேன்? - அவன் எனையாள வந்தான். குடிபோன வீட்டை - அக் கொடியோனும் நேற்று நடுவான இரவில் - அவன் நாலைந்து பேரால் முடிவாய்ந்த மன்னா - அனல் மூட்டிப் பொசுக்கிக் கடிதாக என்னை - அவன் கைப்பற்ற வந்தான்; தப்பிப் பிழைத்தேன் - இதைத் தங்கட் குரைக்க இப்போது வந்தேன் - இனி என்கணவ ரைநான் தப்பாது காண - நீர் தயை செய்யவேண்டும் ஒப்பாது போனால் - என் உயிர் போகும்’ என்றாள். ‘சுதரிசன் சிங்கன் - நம் சுபேதாரும் ஆவான்; இதைஅவன் பாலே - சொல்! ஏற்பாடு செய்வான். இதையெலாம் சொல்ல - நீ ஏனிங்கு வந்தாய்? சதையெலாம் பொய்யே - இத் தமிழருக்’ கென்றான். தேசிங்கு போனான் - சில சிப்பாய்கள் நின்று ‘பேசினால் சாவாய் - நீ பேசாது போடி வீசினாய் அரசர் - வரும் வேளையில் வந்தே, பேசாது போடி’ - என்று பேசியே போனார். என்றசொற் கேட்ட - அவ் வேந்திழை, தீயில் நின்றவள் போல - ஒரு நெஞ்சம் கொதித்து நன்றுகாண் நன்று! மிக நன்று நின் ஆட்சி! என்றே இகழ்ந்து - தணல் இரு கண்கள் சிந்த, படைவீடு தன்னை - அவள் பலவீதி தேடி கடைசியிற் கண்டு - நீள் கதவினைத் தட்டி, ‘அடையாத துன்பம்.... இங் கடைகின்ற என்னை விடநேர்ந்த தென்ன? - நீர் விள்ளுவீர்’ என்றாள். ‘கொண்டோன் இருக்க - அவன் கொடுவஞ்ச கத்தால் பெண்டாள எண்ணி - மிகு பிழைசெய்த தீயன் உண்டோ என் அத்தான் - அவன் உம்மோடு கூட? எண்ணாத தென்ன - எனை? இயம்புவீர்’ என்றாள். ‘உள்ளிருக் கின்றீர்? என்? உரைகேட்ப துண்டோ? விள்ளுவீர்’ என்றாள் - அங்கு விடைஏது மில்லை. பிள்ளைபோல் விம்மிப் - பெரும் பேதையாய் மாறி தெள்ளுநீர் சிந்தும் - கண் தெருவெலாம் சுற்ற, கோட்டையை நீங்கி - அக் கோதையாள், சேரி வீட்டுக்கு வந்து - தன் வெறுவாழ்வை நொந்து மீட்டாத வீணை - தரை மேலிட்ட தைப்போல பாட்டொத்த சொல்லாள் - கீழ்ப் படுத்துக் கிடந்தாள்! 23 இரு மாதரும் அழைத்தார்கள் தென்பாங்கு - கண்ணிகள் ‘எப்படி இங்கு வந்தாய்? - சுப்பம்மா எழுந்திரு விரைவாய் எப்படி? நீ இளைத்தாய் - அவர்கள் இன்னல் புரிந்தாரோ? செப்படி அம்மா நீ - உனக்கோர் தீமையும் வாராமல் மெய்ப்படி யேகாப்போம் - எமது வீட்டுக்கு வா’ என்றனர். முருகியுங் குப்பும் - இப்படி மொழிந்து நிற்கையிலே ‘வருவது சரியா - உங்களின் வழக்கம் கண்ட பின்னும்? தெரியும் சென்றி டுவீர்’ - என்றுமே சேயிழை சொல்லிடவே அருகில் நில்லாமல் - அவர்கள் அகன்று விட்டார்கள். 24 சேரித்தலைவன் செங்கான் எண்சீர் விருத்தம் சேரிவாழ் செங்கானை, இரண்டு பேரும் தெருவினிலே தனியிடத்தில் கூட்டி வந்து, ‘சேரிக்கு நீ தலைவன் உன்வீட் டில்தான் சேயிழையும் இருக்கின்றாள். அவள் இப் போதில் ஆரையுமே வெறுக்கின்றாள். நல்ல தெல்லாம் அவளுக்குப் பொல்லாங்காய்த் தோன்றும் போலும். நேரில்அவள் கற்பழிக்கச் சிலபேர் செய்த நெறியற்ற செய்கையினால் வெறிச்சி யானாள். இங்கேயே இருக்கட்டும் சமையல் செய்தே இவ்விடத்தில் அனுப்புகின்றோம்; சாப்பி டட்டும். அங்கிருக்கும் அதிகாரி சொன்ன தாலே அனுப்புவதாய்ச் சம்மதித்தோம். இதையெல் லாம்நீ மங்கையிடம் சொல்லாதே! சொல்லி விட்டால் மறுபடிநீ பெருந்துன்பம் அடைய நேரும் இங்கே வா இதையும் கேள்:அவள் இருக்கும் இல்லத்தில் மற்றவர்கள் இருக்க வேண்டாம்’ என்றந்த இருமாதர் சொல்லக் கேட்ட இணக்கமுறும் செங்கானும் உரைக்க லுற்றான்: ‘அன்றைக்கே யாமறிந்தோம் இவைகள் எல்லாம், அதிகாரி கள்கலந்த செயல்க ளென்று! நின்றதில்லை அவ்விடத்தில்! நெருங்கி வந்து நீயார்என் றொருவார்த்தை கேட்ட தில்லை. சென்றுவருவீர்! நீங்கள் சொன்ன தைப்போல் செய்கின்றேன்’ என்றுரைத்தான்! சென்றார் தீயர். 25 செங்கான் உண்ண அழைத்தான் தென்பாங்கு – கண்ணிகள் ஆனைத் தலைப் பாறையாம் - அத னண்டையில் அல்லி மலர்ப் பொய்கையாம் மேனி முழுக்காட்டியே - வரு வாயம்மா வெம்பசி தீர்ப்பா யம்மா கூனல் அவரைப் பிஞ்சு - பொறித்தோம்; சுரைக் கூட்டு முடித்தோம் அம்மா; ஏனம் நிறைவாகவே - கருணைக் கிழங் கிட்டுக் குழம்பும் வைத்தோம். சென்று வருவாயம்மா - புனலாடியே தின்று துயில்வா யம்மா என்றுசெங்கான் சொல்லவே - அந்த ஏந்திழை ஏகினாள்; நீராடினாள். அன்னவள் சோறுண்டனள் - அவள் நெஞ்செலாம் அன்னவன் மேல் வைத்தனள். தின்பன தின்றானதும் - அந்தச் சேயிழை செங்கா னிடம் கூறுவாள். ‘உண்டு களைப்பாறினோம் - மற வேனையா உரைப்பது கேட்பீரையா அண்டி இருந்தேன் உமை ஒரு நாளுமே அன்பு மறவேனையா சண்டிச் சுதரிசன்சிங்க் - இன்றி ராவிலும் தையல் எனைத் தேடியே கொண்டதன் எண்ணத்தையே - நிறை வேற்றிடக் கூசிட மாட்டா னையா அம்மையும் அப்பாவும் நீர் - என எண்ணினேன் ஆன துணை செய்குவீர் இம்மொழி கள்கூறினாள் - அந்த ஏந்திழை! இயம்பிடு கின்றான் செங்கான்: எம்மைத் துரும்பாகவே - நினைக்கின்றனர் இங்கே அதிகாரிகள் வெம்மைக் கொடும் பாம்புபோல் - அவர் சீறுவார் வெள்ளையை வெள்ளை என்றால்! தீய வடநாட்டினர்! இவர் ஏதுக்கோ செஞ்சியில் வந்தா ரம்மா நாயும் பிழைக்கா தம்மா - இவர் ஆட்சியில் நல்லவர் ஒப்பா ரம்மா தீயும் புயற்காற்றுமே - இவர் நெஞ்சிலே செங்கோல் செலுத்து மம்மா ஓயாது மக்கட் கெல்லாம் - இடை யூறுதான் உண்டாயிற் றம்மா என்றான். 26 சோற்றில் நஞ்சு தென்பாங்கு – கண்ணிகள் உண்டால் கசக்காது; கண்டால் வெறுக்காதே உண்ணக் கொடுத்து விடடி - அடி கொண்டைக் கருங்கூந்தல் கோதை அருந்தினால் கொல்லாது; சோற்றில் இடடி! தொண்டைக்குள் சென்றவுடன் தோகை மயக்கமுறக் கெண்டை விழிகள் சுழலும் - அடி தண்டா மரைமலரின் தண்டாய் உடம்பில் நெளி உண்டாக, மண்ணில் உழலும். இந்தா மருந்துப்பொடி தந்தேன் கலந்திடு: வி ரைந்தே புறப்படு பெண்ணே! - அந்தச் செந்தேன் உதட்டு மங்கை தின்பாள் ஒளிந்திருந்து வந்து நுழைகுவேன் கண்ணே! அந்தச் சுதரிசனும் இந்த வகையுரைத்துத் தந்த மயக்க மருந்தைக் - குப்பும், அந்தி உணவொடுக லந்து கொடுத்து விட்டு வந்தாள் திரும்பி விரைந்தே. 27 உண்ண எழுந்தாள் பஃறொடை வெண்பா குப்பு மகிழ்வோடு கொண்டு கொடுத்திட்ட செப்புக்குண்டான் சோற்றைச், செய்த கறிவகையைச் சேரிச்செங் கான்வாங்கித் திண்ணையிலே வைத்திருந்தான். யாரையும் நம்பும் இயல்புடையான் ஆதலினால் நஞ்சக் கலப்புணவை நல்லுணவே என்றெண்ணிக் கொஞ்சம் இருட்டியதும், கோழி அடைந்தவுடன் கூப்பிட்டான் நங்கையினை! ‘ஏன், என்றாள் கோதையும்! ‘சாப்பிடம்மா’ என்றுமே சாற்றினான். அப்போது கள்ளர்கள் போலே இருமாதர் கண் உறுத்தே உள்ளே வராமல் ஒளிந்துகொண்டு பார்த்திருந்தார். சிங்கன் தெருவை அடைகின்றான் அந்நேரம்! நங்கை எழுந்தாள் நலிந்து. 28 நஞ்சுண்டு வீழ்ந்தாள் தென்பாங்கு - கண்ணிகள் வாழை இலைதனில் சோற்றைச் - செங்கான் வட்டித்துக் கூப்பிட்ட போது சூழ நடந்த சுப்பம்மா - தன் துணைவன் நினைப்போடு வந்தாள்! ஆழும் அலைகட லுக்குள் - சூழல் ஆயிரம் வாய்த்திடக் கூடும் ஏழைத் துணைவனை எண்ணி - நையும் ஏந்திழை எப்படிக் காண்பாள்? சோற்றினை உண்டனள் நங்கை - நீர் தூக்கிப் பருகிய பின்னர் காற்றினில் ஆடும் கிளைபோல் - அவள் கட்டுடல் ஆடிற்று! நெஞ்சம் மாற்றம் அடைந்தது! கண்ணில் ஒளி மாறி மயங்கி விழுந்தாள். சோற்றில் “மயக்க மருந்தா” - என்று சொல்லி விழுந்தனள் மண்ணில்! தன்னிலை தன்னைவிட்டோட - அதைத் தான்தொடர்ந் தேபற்றி வந்த மின்னல் அசைவது போலத் - தன் மேனி தள்ளாட எழுந்தாள் சின்னதோர் பாயினை நோக்கிச் - சென்று திம்மனை எண்ணி விழுந்தாள். பொன்னுடல் வாடிற்று! நெஞ்சு - துயில் புக்கு மறைந்திடு முன்னே, மெல்லிடையில் வைத்த கத்தி - தனை மென்கையினால் தொட்டுப் பார்த்தாள் சொல்லினில் தீயைக் கலந்து - சில சொற்களைச் சொல்லினள் மெல்ல: கல்லிடை நார் உரிக் கின்றான்! - அனற் காற்றினில் நீர்வேண்டு கின்றான் வல்லியைத் தொட்டிடு வானேல் - அவன் வாழ்வினை மீட்பவர் இல்லை! இவ்வுரை சொன்ன மறத்தி - மயக் கேறினாள்; மெய்ம்மறந் திட்டாள்! செவ்விதழ் சோர்ந்தது! கண்கள் - ஒளி தீர்ந்தன! வேர்வையின் நீரில் அவ்வுடல் மூழ்கிற்று! மேகம் - திசை ஆர்ந்தது போற்கருங் கூந்தல் எவ்விடத் தும்பரந் தோடி - நிறைந் திட்டது கட்டுக் குலைந்தே! செங்கான் உடல்பதைத் திட்டான் - என்ன செய்வதென் றேஅறி யாமல் அங்கும் இங்கும் பறந்தோடி - வீட்டின் அக்கம்பக் கம்சொல்லப் போனான். சிங்கனைக் கண்டனன்! “ஏடா - செங்கான், செல்” என்று கூறினன் சிங்கன். செங்கான் பயந்து நடந்தான் - அந்தச் சின்னக் குடிசையின் பின்னே. சிங்கன் அவ்வீட்டில் நுழைந்தான் - உற்ற சேதிகள் யாவும் தெரிந்தான் அங்குச்சுப் பம்மாவின் அண்டை - அவன் அண்டினன்! மற்றவர் இல்லை. பொங்கிற்று வானில் முழக்கம் - மின்னல் பொல்லாங்கு காட்டிற்று! நல்ல மங்கைக் கிரங்கி இருட்டும் - அழும் வண்ணம் பொழிந்தது மாரி. காட்டை முறித்திடும் காற்றும் - அவன் கையை முறிப்பது போலே, தோட்டத்து வாசலி னோடு - சென்று தூள்பட வைத்தது வீட்டை! கூட்ட மலர்ச்சிறு கொம்பை,- வையம் கும்பிடத் தக்கஓர் தாயைத், தீட்டுப் படாத நெருப்பை - விரல் தீண்டக் கடித்திடும் பாம்பை, ஒட்டுற வில்லா வடக்கன்! உல கொத்தது காணாத தீயன்! எட்டுத் திசைகளில் எல்லாம் - பின்னர் ‘ஏஏ’ எனச்சொல்லி ஏசக், கொட்டிக் கிடந்திட்ட பூப்போல் - அந்தக் கோதை கிடந்திட்ட போது தொட்டனன்! தொட்டனன்! மீளாப் - பழி சூழ்ந்தனன்! சூழ்ந்தனன்! சிங்கன்! பொழுது விடிந்திட வில்லை! - இன்னும் பொற்கோழி கூவிட வில்லை எழுந்து வெளியினிற் சென்றான் - மாதர் இருவர் இருந்திடும் வீட்டில்! நுழைந்தனன் அத்தீய சிங்கன் - இதை நோக்கி யிருந்தஅச் செங்கான் அழுத கண்ணீரில் நனைந்தான் - சுப் பம்மாவைக் கண்டிட நின்றான். போயிற்று மங்கை மயக்கம் - இன்னும் பொழுதோ வெளுத்திட வில்லை போயிற்று மானம்; உணர்ந்தாள் - உடல் போயிற்று! நல்லுயிர் தானும் போயிற்றுப் போவதன் முன்னே - சென்று போக்கிடு வேன்அவ னாவி! வாயிலில் நின்ற செங்கானைச் - “சிங்கன் வந்ததுண் டோ” என்று கேட்டாள்! உண்டதும் நீவிர் மயங்கிப் - பாயில் உருண்டதும் கண்டேன் துடித்தேன். கண்டதும் இப்பாழும் கண்தான் - இக் கையில் வலியில்லை தாயே அண்டையில் நானின் றிருந்தேன் - பின்னர் அச்சிங்கன் உள்ளே நுழைந்தான் அண்டையில் நில்லாது போடா - என்ற அவன்சொல்லை மீறா திருந்தேன். இருட்டோடு வெளிவந்த சிங்கன் - அவன் இங்கிருந் தேபுறப் பட்டான் புரட்டனோ டேகினேன் நானும் - கால் பொத்தென்ற சத்தமி லாமல்! திருட்டுநடை கொண்ட குப்பு - வீடு சென்றனன் நானிங்கு வந்தேன் கருத்துக் கலங்கினேன் தாயே - என் கடமையை நான்செய்ய வில்லை. சேரியெல் லாமிதைச் சொன்னேன் - அவர் சீறிக் குதித்தனர் தாயே சேரியின் மக்களைப் பாரீர் - இதோ தீயெனச் சீறிநிற் கின்றார். ஊரும் கிளம்பிடும் தாயே - மொழி ஒன்றுசொல் வீர்இந்த நேரம் வாரிக் குவிப்பார்கள் தாயே - அந்த வடக்கரை’ என்றனன் செங்கான். ஓடினள் சிங்கனை நோக்கி - உடன் ஓடினர் சேரியின் மக்கள் ஓடினன் செங்கானும் அங்கே - உம் உம் என்று தட்டினள் கதவை நாடித் திறந்தனன் சிங்கன் - கதவின் நடுநின்ற அவன்மார்பு நடுவைச் சாடிப் புகுந்ததே கத்தி - குத்திச் சாய்த்தனள் பெண்இந்நி லத்தில்! காம்பில் வளைந்திட்ட கொடுவாள் - செங்கான் கையோடி ருந்திட்ட தாலே பாம்புகாள் ஒழியுங்கள் என்றான் - இரு பழிமாத ரும்தீர்ந்து போனார். தேம்பாத அழுகையும் நீரின் - துளி தெரியாத கண்களும் கொண்டாள் வேம்பாக எண்ணினாள் வாழ்வை - கோட்டை விடியாத முன்னமே சேர்ந்தாள். கோட்டையின் வாசலைக் காப்போர் - பெருங் கொட்டாவி விட்டுக் கிடந்தார் பாட்டையைப் பார்க்கவே யில்லை - உயிர்ப் பாவையும் காவல் கடந்தாள் கோட்டைப் புறத்தினில் எங்கும் - தூக்கக் கோல மல்லால்விழிப் பில்லை பூட்டும் படைவீடு கட்குள் - நெடும் புன்னை மரத்திற்கு நேரில் தன் கணவன் சேர்படை வீடும் - முற்றும் சாத்திக் கிடந்ததைக் கண்டாள் ‘என்னுயிர்ப் பொருளே திறப்பீர் - கதவை இன்னுமோ தூக்கம் என் அத்தான்? ஒன்று மறியேனைச் சிங்கன் - தொடும் உள்ளம் படைத்தனன் கேளீர் என்னை மயக்கத்தில் ஆழ்த்திக் - கற்பை ஈடழித் தான்வெறும் பேடி செந்தமிழ்ச் சேய்தொட்ட மேனி - தன்னைத் தீண்டிட்ட தீயனைக் கொன்றேன் அந்தோ உமைக்காண வேண்டும் - என்றன் ஆவிதான் போய்ச்சேரு முன்னே! எந்த நிலைதனில் உள்ளீர்? - உம்மை என்னென்ன செய்தனன்! காணேன்! அந்தோ எனக்கூவி மங்கை - அவள் அங்குமிங் கும்பறக் கின்றாள். 29 மன்னன் வந்தான் எண்சீர் விருத்தம் காட்டுத்தீப் போலேசு பேதார் சாவு கடிதோடித் தேசிங்கின் காதுக் குள்ளும் கோட்டைக்குள் எப்புறத்தும் சென்ற தாலே குலுங்கிற்றுக் கோட்டையெலாம்! மார்பில் குத்திப் போட்டிருந்த சுபேதாரைச் சிப்பாய் மார்கள் புடைசூழ்ந்தார். தேசிங்கும் அங்கு வந்தான். கேட்கலுற்றான் என்ன இது என்ன என்றே கிட்டஇருந் தோரெல்லாம் தெரியா தென்றார். படைவீரர் தமக்குள்ளே நடந்த தென்றால் படுகொலை செய்தோன் யாவன்? என்று கேட்டான் படைவீரன் அல்லாது பிறரே என்றால் பலகாவற் கட்டங்கள் தாண்டி எந்தக் கடையன்இங்கு வரமுடியும்? கோட்டை வாசல் காந்திருந்தோன் என்னசெய்து கொண்டி ருந்தான்! நடைமுறைகள் இப்படியா? பகைவர் கையை நத்திடுவோர் இங்குண்டா? புதுமை யன்றோ! போட்டசட்டை யைத்துளைத்து மார்பெ லும்பைப் புறம்விலக்கிப் பாய்ந்திருக்கும் கத்தி தன்னை மீட்காமல் சென்றவனைப் பிடிக்க வேண்டும்; விளைவுக்குக் காரணத்தை யறிதல் வேண்டும்; கேட்டுக்கொண் டிருக்கின்றீர்; தெரிந்தி ருந்தால் கேடில்லை! செப்பிடுவீர் உண்மை தன்னை! வாட்டுகின்றீர் என்னுள்ளம்; சூழ்ச்சி தானோ! மற்றென்ன மற்றென்ன எனத்து டித்தான்! கூட்டத்தில் திம்மனுளம் பட்ட பாடு கூறத்தான் முடியுமோ! அந்தோ அந்தோ! காட்டிவைத்தான் எனக்கிந்த வேலை தன்னைக் கடல்போன்ற அன்புடையான் என்னிடத்தில்! நீட்டிவைத்த வில்லைப்போல், மணித்தேர் போலே நிலைகெட்டு வீழ்ந்திட்ட புலியைப் போல ஊட்டத்து மார்புடையான் சுபேதார் மண்ணில் உயிரின்றிக் கிடக்கின்றான் எவன்செய் தானோ? மன்னவரோ, அறிவீரோ எனக்கேட் கின்றார் வாய்திறவா திருக்கின்றேன்; வாய்தி றந்தால் என்னவரு மோஅறியேன், வழிதான் என்ன? என்றுபல வாறெண்ணி இருக்கும் போது, மன்னவரே பணிகின்றேன் என்று கூறி வந்தெதிரில் நின்றுரைப்பான் ரஞ்சித் சிங்கன் என்நண்பன் சுதரிசன்சிங்க்! அவனைப் பற்றி என்றனுக்குத் தெரிந்த வற்றைக் கூறுகிறேன்: திம்மன்எனும் பேருடையான் வளவ னூரில் தென்பட்டான் சுதரிசனின் கண்ணில் ஓர்நாள்! அம்மட்டே அவனோடு வீடு சென்றான்; அங்கோர்நாள் விருந்துண்டான் அவன்ம னைவி செம்மையுறும் அழகுடையாள்; அவளின் மீதில் சுதரிசன்சிங்க் திருப்பினான் உளத்தை! அன்னாள், திம்மனையல் லால்வேறு மனிதர் தம்மைத் திரும்பியும்பார்ப் பவளில்லை; சுதரிசன் சிங்க் திம்மனையும் மங்கையையும் அழைத்துக் கொண்டு செஞ்சிக்கு வந்துவிட்டான். ஆசை காட்டித் திம்மனுக்கு வேலைதருவ தாகச் சொன்ன சேதியினால் திம்மனவன் ஒப்பி வந்தான் அம்மங்கை கணவன்சொல் தட்ட வில்லை! அவள்மட்டும் சுபேதாரை நம்ப வில்லை! திம்மனையும், வஞ்சியையும், சுபேதார் செஞ்சிச் சேரியிலே குடிவைத்தான் வந்த அன்றே! குப்பென்றும் முருகிஎன்றும் சொல்லி டும்தன் கூத்திமார் இருவரையும் அவர்க ளோடு நற்பணியா ளர்போலே இருக்கச் செய்தான். நானுரைக்கும் அப்பெண்கள் இப்பி ணங்கள்! அப்பரே இதுதான்நான் அறிவேன் என்றான். ‘அழையுங்கள் அழையுங்கள் திம்மன் தன்னைத் துப்பியது காயுமுன்னே’ என்று தேசிங்க் துடிதுடித்தான் நெருப்புப்பட் டவனைப் போலே. 30 திம்மன் நான் என்றான் எண்சீர் விருத்தம் திம்மன்பெண் டாட்டிஎங்கே என்றான் மன்னன்! தெரியவில்லை என்றார்கள் சிப்பாய் மார்கள்! திம்மனெங்கே எனக்கேட்டான் பின்னும் மன்னன் நான்தான்என் றெதிர்வந்தான் தமிழத் திம்மன் திம்மன்எனல் நீதானா? யார்கொ டுத்தார் சிப்பாய்வே லையுனக்குச் செப்பாய் என்றான். திம்மன்‘இவ ரே’என்றான் பிணத்தைக் காட்டி! தேசிங்கும் சுதரிசனின் சூழ்ச்சி கண்டான். பொய்யுடையைச் சுதரிசன்சிங்க், திம்ம னுக்குப் போட்டஒரு குற்றத்தை அறிந்த மன்னன் மெய்பதைத்தல் இல்லாமல் திம்மா இந்த மிகக்கொடிய செயல்செய்தோன் யாவன் என்றான். செய்யாத குற்றத்தைச் செய்தி ருப்பான். செத்திருப்பான். நள்ளிரவிற் செஞ்சி வந்தேன் வெய்யில்வரா முன்னமே சிங்கன் என்னை வீட்டிலிருந் திவ்விடத்தில் அழைத்து வந்தான். இதுவரைக்கும் வெளிச்செல்ல வில்லை என்றான். உன்மனைவி எங்கென்றான் தேசிங்க் மன்னன் அதுஎனக்குத் தெரியாதே என்றான் திம்மன்! அவளுக்கு வேறுதுணை உண்டோ என்றான். புதியஊர், துணையில்லை என்றான் திம்மன். பொய்ஒன்றும் கூறாதே என்றான் மன்னன். பதறியே பொய்யல்ல என்றான் திம்மன்! பழஊராய் இருந்திட்டால் பத்தி னிக்கே பலதுணைவர் இருப்பாரோ என்றான் மன்னன். பலஉறவோர் துணையிருப்பார் என்றான் திம்மன். தலையுருண்டு போகுமடா திம்மா அந்தத் தமிழச்சி இருப்பிடத்தைக் காட்ட வேண்டும்! * நிலையறியாத் திம்மனைநீர் இழுத்துச் செல்வீர் நெடுவீதி தொறுந்தேடச் செய்வீர் இன்னோன் கொலைக்கொத்த தோழரையும் அஞ்சா நெஞ்சக் கூத்தியையும் பிடிப்பீர்என் றுரைத்தான் மன்னன். அமுதொத்த பெண்ணாளைக் கற்பின் வைப்பை அயலானின் கூத்திஎன்று சொல்லி விட்டீர் தமிழச்சி கத்திஐயா அந்தக் கத்தி! தடமார்பில் நுழைத்தகத்தி நுழைத்த வண்ணம் அமைத்துவிட்டுப் போயினாள். அவளின் பேரை அதுசொல்ல வேண்டுமென நினைத்தாள் போலும் தமைக்கெடுக்க வந்தவனைக் கொல்லும் பெண்கள் தண்டிக்கப் படவேண்டும் என்று சொன்னால், நான்தேடி அழைத்துவர அட்டி இல்லை, நடுமார்பில் நிற்கின்ற கத்தி யே!உன் தேன்போன்ற சொல்லாளைத், தலைவி தன்னைத் தெரிவிப்பாய். எங்குள்ளாள்? செங்குத் தாக வான்பார்த்து நிற்கின்றாய் சிங்கன் மார்பில். வானத்தில் அவளாவி அளாவிச் செல்லத் தான்மறைந்து போனாளா வாழ்கின் றாளா? சாற்றுவாய் எனத்திம்மன் வாய்ப தைத்தான். அருகிருந்த சிப்பாய்கள் இருவர், திம்மன் இருகையைப் பின்கட்டி அழைத்துச் சென்றார் குரலொலியும் உள்அழுந்த நடந்தான் திம்மன்! கூர்வாளை உயர்த்திநடந் தார்சிப் பாய்கள். பெரிதுயர்ந்த குன்றத்தின் சாரல் தன்னில் பெண்ணாளும், செங்கானும் ஓர்ஆ லின்கீழ் தெரியாமல் நின்றிருந்தார்! திம்மன் மற்றும், சிப்பாய்கள் வரும்நிலையைத் தெரிந்து கொண்டார். 31 அத்தான் என்றெதிர் வந்தாள் எண்சீர் விருத்தம் ‘அத்தான்’ என் றெதிர்வந்தாள். ஐயோ என்றாள் அவன்என்னைக் கற்பழித்தான்; உடனி ருந்த அத்தீய மாதரினால் மயக்கந் தந்தான்; உணர்விழந்தேன் அவ்விரவில்! விடிந்த பின்உம் சொத்தான என்னைஅவன் தொட்டா னென்று தோன்றியது மறைந்துவிட்டான் தேடிச் சென்று குத்தினேன்! சிறுக்கிகளை இவர்ம டித்தார். கூவினேன் கோட்டையிலே உம்மை வந்தே. பேழைக்குள் இந்நாட்டை அடைத்தோம் என்ற பெருநினைப்பால், வடநாட்டார் தமிழர் தம்மை வாழவிடா மற்செய்யத் திட்ட மிட்டார். மறம்வீழும் அறம்வாழும் என்ப தெண்ணார். தாழ்வுற்றுப் போகவில்லை தமிழ ரெல்லாம்; தமிழகத்தைப் பிறர்தூக்கிச் செல்ல வில்லை, வாழ்கின்ற காவிரியைப் பெண்ணை யாற்றை வடநாட்டான் எடுத்துப் போய்விட ஒண்ணாது. முப்புறத்தும் தமிழ்நாட்டின் முரசு மாக முழங்குகின்ற திரைகடலைப் பகைவர் வந்து .கைப்புறத்தேந் திப்போக முடிவ துண்டோ? கன்னலது சாறுபட்டுச் சேறு பட்டு முப்பழத்தின் சுளைபட்டு முன்னாள் தொட்டு முளைசெந்நெல் விளைநிலத்தை இழந்தோ மில்லை. எப்புறத்தும் வளங்கொழிக்கும் மலைகள் உண்டு பறித்துவிட எவராலும் ஆவ தில்லை. செந்தமிழர் இருக்கின்றார் சிங்கங் கள்போல் திறலழித்து விடஎவரும் பிறந்தா ரில்லை. பைந்தமிழன் மொழியுண்டு வாழ்வைச் செய்யப் படைகொண்டு வஞ்சகர்கள் பறிப்ப துண்டோ? வந்துநுழைந் தார்சி றிதுநாள்இ ருப்பர். வளைந்துகொடுத் ததுசெஞ்சி நிமிர்தல் உண்டு. சந்தையவர் வாழ்வென்று நினைத்தா ரில்லை தமிழ்நாடு பணிவதில்லை வடநாட் டார்க்கே! தேசிங்கன் அறியவில்லை அறிந்து கொள்வான், தென்னாட்டைத் துரும்பாக மதித்து விட்டான். வீசுங்கோல் செங்கோலாய்த், தமிழர் நாட்டை விளையாட்டுக் கூடமாய்த் தமிழப் பெண்கள் பேசுந்தோற் பாவைகளாய் மறவர் தம்மைப் பேடிகளாய்த் தேசிங்கன் நினைத்து விட்டான். மாசொன்று நேர்ந்திடினும் உயிர்வா ழாத மன்னர்களின் மக்களென நினைக்க வில்லை. கையோடு கூட்டிவந்து வடநாட் டார்கள் காணுகின்ற பெண்டிர்களைக் கற்ப ழிக்கச் செய்கின்றான். அறமறியான் சுபேதார் என்னைத் தீண்டினான். தேசிங்கு தமிழர் தங்கள் மெய்யுரிமை தீண்டினான். மாய்ந்தான், மாய்வான். விதிகிழிந்து போயிற்று மீள்வ தில்லை. ஐயகோ அத்தான் என்ஆவல் கேட்பீர் ஆனமட்டும் பார்ப்போமே வடக்கர் தம்மை! என்றுரைத்தாள்! பாய்ந்தார்கள் சிப்பாய் கள்மேல் இருகத்தி வாங்கினார் திம்மன் செங்கான். குன்றொத்த சிப்பாய்கள் இறந்து வீழ்ந்தார். கொடியொத்த இடையுடையாள் சிரிப்பில் வீழ்ந்தாள். ‘என்றைக்கும் சாவுதான் அத்தான்’ என்றாள். ‘இன்றைக்கே சாவோமே’ என்றான் திம்மன். நன்றுக்குச் சாகலாம் என்றாள் நங்கை. நாட்டுக்கு நல்லதொண்டாம் என்றான் திம்மன். நிலையற்ற வாழ்வென்பார் கையி லுள்ள நெடியபொருள் நில்லாவாம் என்பர்; ஆனால் தலைமுறையின் வேர்அறுக்க நினைப்ப வர்க்குத் தாழ்வதிலும் தம்முயிரே நல்ல தென்பார்! சிலர்இந்நாள் இப்படியே என்றான் செங்கான்! புதுமைதான் புதுமைதான் என்றான் திம்மன்! இலைபோட்டு நஞ்சுண்ட வீட டைந்தார் இவ்விடந்தான் நஞ்சுண்டேன் என்றாள் நங்கை! மயக்கத்தால் தலைசாய்ந்தேன் இவ்வி டத்தில்! மணவாளர் தமைநினைத்து மெதுவாய்ச் சென்று துயர்க்கடலில் வீழ்வதுபோல் பாயில் வீழ்ந்து சோர்ந்ததும் இவ்விடந்தான் என்று ரைத்தாள். புயலுக்குச் சிறுவிளக்கு விண்ணப் பத்தைப் போட்டழைத்த திவ்விடந்தான் போலும் பெண்ணே வயற்காட்டு வெள்ளாடு புலி யிடம்போய் வலியஅழைத் திட்டஇடம் இதுதான் போலும்! என்றுரைத்தே அடடாஓ எனநி மிர்ந்தே இடிமுழக்கம் போற்சிரித்துப் பின்னும் சொல்வான் குன்றத்தைக் குள்ளநரி கடித்துப் பற்கள் கொட்டுண்ட திவ்விடம்போ லும்சுப் பம்மா, நன்றான தமிழச்சி, எண்கண் ணாட்டி நற்றமிழர் மானத்தின் சுடர்வி ளக்கே அன்றந்தச் சுதரிசன்சிங்க் உன்னைத் தொட்டே அழிவைஅழைத் திட்டஇடம் இதுதான் போலும்! தேசிங்கன்உனைப் பழித்தான் ஒருவ னைநீ சேர்த்துக்கொண் டாய்என்றான். அவனைக் கொண்டே தூசிநிகர் சுதரிசனைக் கொன்றாய் என்றான். துடுக்கான அவன்வாயைக் கிழித்தே னில்லை! ஆசைமயி லேநீயும் அங்கே இல்லை. அன்புன்மேல் இருந்ததனால் அவன்பி ழைத்தான் ‘நீசாவாய் நான்செத்தால்’ எனநி னைத்தேன். நிலைகெட்டுப் போனேண்டி; மன்னி’ என்றான். ‘ஒருவனையும் நத்தவில்லை: சிங்கன் மார்பில் ஊன்றியது தமிழச்சி கத்தி என்று உருவழிந்த சுதரிசன்சிங்க் அறிவ தன்றி, ஊராளும் அரசறிய உலகம் காண, துரையேநீ ருங்காண, அவனின் மார்பில் சுடர்விளக்குத் தண்டுபோல் நாட்டி வைத்தேன் திருடரென வழிமறித்த அந்நாள் அந்தத் திருவண்ணா மலைத்தமிழர் தந்த கத்தி!’ என்றுரைத்தாள். திம்மனது கேட்டி ருந்தான் இதற்குள்ளே செஞ்சிமலை கிளம்பிற் றங்கே! ஒன்றல்ல; பத்தல்ல நூறு பேர்கள் உயர்குதிரை மேலேறிச் சேரி நோக்கிக் குன்றத்தின் வீழருவி போல்இ றங்கும் கோலத்தைக் கண்டிருந்த ஊரின் மக்கள் இன்றிங்குப் புதுமைஎன்ன என்று ரைத்தார்; ‘ஏ’ என்றார் ‘ஆ’ என்றார் கடலார்ப் பைப்போல். தமைநோக்கி வருகின்றார் என்ற சேதி தனையறிந்தாள் சுப்பம்மா; பதற வில்லை. அமைவான குரலாலே கூறு கின்றாள்; ‘அத்தான்என் விண்ணப்பம் கேட்க வேண்டும். நமைஅவர்கள் பிடிப்பாரேல் தேசிங்கின்பால் நமைஅழைத்துப் போவார்கள்; வடக்கர் கைகள் நமைக்கொல்லும்; சரியில்லை. என்னைத் தங்கள் நற்றமிழக் கையாலே கொன்று போட்டு திருவண்ணா மலைநோக்கி நீவிர் செல்க. செய்வீர்கள் இதைஎன்று சொல்லக் கேட்ட பெருமறவன் கூறுகின்றான், பெண்ணே என்னைப் பிழைசெய்யச் சொல்லுகின்றாய்; தேசிங் குக்குத் தருவதொரு பாடமுண்டு; தீப்போல் வானின் தலைகிடைத்தால் மிகநன்மை தமிழ்நாட் டுக்குப் பெரிதான ஆலமரம் அதோபார் என்றான். பெட்டையும் ஆண்கிளியுமாய் அமர்ந்தார் ஆலில். பெரியவரே கருத்துண்டோ எங்க ளோடு பெருவாழ்வில் ஈடுபட? கருத்தி ருந்தால் உருவிக்காட் டாதிருப்பீர்; கத்தி தன்னை! உள்மறைத்து வைத்திருப்பீர்; எதிரே சென்று வருவோர்கள் வரவுபார்த் திருப்பீர்; வந்தால் வந்துசொல்ல வேண்டுகின்றேன் என்றான் திம்மன் சரிஎன்று செங்கானும் உளவு பார்க்கத் தனியாக உலவினான் புலியைப் போலே! 32 மறவர் திறம் பாடு நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா பாட்டொன்று பாடு! பழைய மறவர்திறம் கேட்டுப் பலநாட்கள் ஆயினவே கிள்ளையே ஊட்டக் கருத்தில் உயிர்ப்பாட்டை என்றனுக்கே ஊட்டா துயிர்விடுதல் ஒண்ணுமோ என்றானே. அச்சத்துக் கப்பால் அழகுமணி வீட்டினிலே எச்சமயம் எச்சாதி என்றுமே பாராமல் மச்சான் வருகையிலே மங்கையுறும் இன்பத்தை வைச்சிருக்கும் சாவே! எனைத்தழுவ வாராயோ! தன்னலத்துக் கப்பால் தனித்தமணி வீட்டினிலே இன்னார் இனியார் எனயாதும் பாராமல் பொன்னைப் புதியதாய் வறியோன்கொள் இன்பத்தை மன்னியருள் சாவே எனைத்தழுவ வாராயோ! நான்பாடக் கேட்பீரே என்றுரைத்த நல்லாளைத் தான்பாடக் கேட்பதற்குத் திம்மனவன் சாற்றுகின்றான்; கான்பாடும் வன்னக் கருங்குயிலாள் காதுகளை ஊன்பாடு தீர்க்க உடன்படுத்தி வைத்தாளே! ஆயிரம் மக்களுக்கே ஆனதுசெய் தோன்ஆவி ஓயுமெனக் கேட்கையிலும் உள்ளங் களிக்கும்;உயிர் ஓயினும்வந் தென்றும் ஓயாத இன்பத்தை ஓயும்படி யளிக்கும் சாவே எனைத்தழுவே! ஏழை ஒருவனுக்கே ஏற்றதுசெய் தோன்ஆவி பாழாதல் கேட்கையிலும் அன்பு பழுக்கும்;உயிர் பாழாகிப் போனாலும் ஊழிவரை இன்பத்தைத் தாழாது நல்குவாய் சாவேஎனைத் தழுவே! 33 குதிரைவீரர் வருகின்றார்கள் எண்சீர் விருத்தம் நாவினிக்கப் பாடினார் மரத்தி னின்று! நற்செங்கான் அங்குவந்தான்! குதிரை யெல்லாம் தாவின அச்சேரியிலே! வீட்டை யெல்லாம் தனித்தனியாய் ஆராய்ந்து பார்த்தார். பின்பும் நாவிழந்த ஊமைகள்போல் சேரி தன்னை நாற்புறமும் சுற்றினார். அடுத்தி ருந்த கூவங்கள் உட்புறத்தும் துழாவிப் பார்த்தார்; குலைக்கின்ற நாய்கள் போல்கூவிப் பார்த்தார். சேரியிலே வாழுமக்கள், கிழக்கில் தோன்றும் செங்கதிரை வயற்புறத்தில் கண்டார் பின்னர். ஊரிருண்ட பின்வருவார் பகலைக் காணார். ஒருவரும்ஆங் கில்லையெனில் புதுமை யில்லை. நேர்ஆல மரத்தடியில் வந்துட் கார்ந்தார் நெடுங்குதிரை ஏறிவந்த சிப்பாய் மாரில் ஓரிளையான் மற்றவர்பால் குற்ற வாளி ஒருவனையும் நாம்பிடிக்க விலையே என்றான். பெரியசிப்பாய் கூறிடுவான்: நாமெல் லாரும் பெரும்பரிசு பெறநினைத்தோம் அரசர் கையால்! ஒருநான்கு திசைகளிலும் சிப்பாய் மாரை ஓட்டினார் நம்மன்னர்; நம்மை மட்டும் கருத்தாளர் எனநம்பிச், சேரி தன்னில் கண்டுபிடிப் பீர்கொலைஞர் தம்மை என்றார். தரப்போகின் றார்பரிசு பெறப்போ கின்றோம் தக்கபடி சாத்துப்படி என்று சொன்னான். இன்னொருவன் கூறுகிறான்; அந்த மன்னர் இவ்விடத்தில் மேற்பார்வை பார்ப்ப தற்குக் கன்னக்கோல் காரர்போல் வரவும் கூடும் கால்சோர்ந்து நாம்உட் கார்ந் திருத்தல் தீதே. என்றுரைத்தான் இதைக்கேட்ட திம்ம னுக்கும் இளங்கிளியாள் சுப்பாம்மா வுக்குந் தோன்றும் புன்னகைக்குப் புதுநிலவும் தோற்றுப் போகும். பூவாயைத் திறக்கவில்லை காத்தி ருந்தார். 34 மேற்பார்வையாளன் தென்பாங்கு - கண்ணிகள் வெட்டிக் குத்திச் சாய்க்கக் கட்டுக் கத்தியோடு வெள்ளைக் குதிரையில் ஏறித் - தலைக் கட்டோடு வந்தனன் சீறி எட்டுத் திக்குட் பட்ட மக்கட் கூட்டந் தன்னை ஏங்கிட வைப்பவன் போலே - இமை கொட்டாமல் பார்த்தனன் மேலே சொட்டச் சொட்ட வேர்வை! உட்கார்ந்தி ருந்தவர் துள்ளி எழுந்தங்குத் தாவிச் - சிரித் திட்டனர் அன்னோனை மேவி திட்டுத் திட்டென்றடி வைக்கும் பரிமீது தேசிங்கு வந்தனன் என்றே - திம்மன் பட்டாவை ஏந்தினன் நன்றே சுற்றி இரையினைக் கொத்தும் பருந்தென உற்றுவி ழித்தசுப் பம்மா - அங்குச் சற்றும் இருப்பாளோ சும்மா? வெற்பும் அதிர்ந்திட வேற்றுவர் அஞ்சிட மேற்கிளை விட்டுக் குதித்தாள் - பகை அற்றிட நெஞ்சம் கொதித்தாள். சுற்றின கத்திகள் தூறிற்றுச் செம்மழை துள்ளி யெழுந்தன மெய்கள் - அங்கே அற்று விழுந்தன கைகள் முற்றும் முன்னேறி நெருங்கினன் திம்மனும் கண்டனன் அவ்வதி காரி-கண்டு தெற்றென வீழ்ந்தனன் பாரில் உற்றது திம்மனின் வாள் அவன் மார்பில் ஒழிந்ததுவே அவன் ஆவி - கண் ரற்றினர் சிப்பாய்கள் மேவி மற்றவர் திம்மனைக் குத்தினர் திம்மனும் மாய்ந்தனன் மண்ணில் விழுந்து-கண் ணுற்றனள் இன்பக் கொழுந்து. சுற்றிய வாள்விசை சற்றுக் குறைந்ததும், தோகை பதைத்ததும் கண்டார் - கைப் பற்றிட எண்ணமே கொண்டார் பற்பலர் வந்தனர் பாவையைச் சூழ்ந்தனர் பாய்ந்தனர் அன்னவள் மேலே - மிகச் சிற்றின நாய்களைப் போலே! 35 அவள் பிடிபட்டாள் எண்சீர் விருத்தம் திம்மன்மேல் சென்றவிழி திரும்பு தற்குள் சேயிழையாள் பிடிபட்டாள் பகைவ ராலே! அம்மங்கை மறுமுறையும் பார்த்தாள் அங்கே அன்புள்ள அகமுடையான் கிடந்த கோலம்! மெய்ம்மை நெறிஎய்தினீர், தேசிங் கென்னும் வீணனையும் நாம்தொலைத்தோம் அன்றோ என்றாள். மும்முறையும் பார்த்திட்டாள் “அத்தான் வந்தேன்” முடிவடைந்த தென்பணியும் என்று சொன்னாள். 36 தேசிங்குக்குச் சேதி எட்டிற்று தென்பாங்கு – கண்ணிகள் செஞ்சிப் பெருங் கோயில் - தன்னிலே தேசிங்கு வீற் றிருந்தான் அஞ்சி அரு கினிலே - இருந்தார் அமைச்சர், மற் றவர்கள் பஞ்சு பெருந் தீயைப் - பொசுக்கப் பார்த்தும் இருப்பீரோ செஞ்சிப் படி மிதித்தார் - இங்குள்ள சிப்பாய் தனை மடித்தார் சென்று பிடித் தாரோ - அல்லது செத்து மடிந் தாரோ ஒன்றும் தெரிய வில்லை - நடந்த தொன்றும் தெரிய வில்லை என்று துடி துடித்தான் - தேசிங்கன்! இருவர் சிப் பாய்கள், நின்று தலை வணங்கி - அவ்விடம் நிகழ்ந்தவை உரைப்பார்; திம்மனும் சுப் பம்மா - எனுமோர் சேயிழையும் எதிர்த் தார் நம்மவர் சிற்சில பேர் - இறந்தார் நம்அதி காரியின் மேல் திம்மன் அவன் பாய்ந்தான் - ஒரு சொல் செப்பினன் அப்போது ‘செம்மையில் என்னிடமே - சிக்கினாய் தேசிங்கு மாய்க’ என்றான். என்றுசிப் பாய் உரைத்தான் - தேசிங்கன் ‘என்னை மடிப்பது தான் அன்னவ னின் நினைப்போ - சரிதான் அப்படியா அடடே இன்று பிழைத்தேன் நான் - அடடே என்றுபு கன்றவனாய்ப்; ‘பின்னும் நடந்த தென்ன? - இதனைப் பேசுக’ என்று ரைத்தான். திம்மன் மடிந்து விட்டான் - மனைவி சேயிழை சிக்கி விட்டாள் செம்மையில் அன்னவளின் - இரண்டு செங்கையைப் பின் இறுக்கி நம்மவர் இவ்வி டத்தை - நோக்கியே நடத்தி வருகின் றார் திம்மன் மனைவியைப்போல் - கண்டிலோம் திறத்தில் என்று ரைத்தார். 37 சுப்பம்மாவை இழுத்து வந்தார்கள் தென்பாங்கு – கண்ணிகள் கோட்டை நெடும் வாயிலினைக் குறுகிவிட்டார் -அந்தக் கோதையை நடத்திவரும் கூட்ட மக்களும்! போட் டிறுக்கிப் பின்புறத்தில் கட்டிய கையும் - முகில் போற் பரவி மேற்புரளும் நீண்ட குழலும் நீட்டி வைத்த வேலின்முனை போன்றவிழியும் - வந்து சீறுகின்ற பாம்பையொத்த உள்ளமும் கொண்டாள் “ கோட்டையினில் யாரிடத்தில் கொண்டுசெல் கின்றீர்-என்னைக் கூறிடுவீர்“ என்றவுடன் கூறுகின்றனர்: “ ஆளுபவர் தேசிங்கெனக் கேட்ட தில்லையோ? - அவர் அவ்விடத்தில் வீற்றிருத்தல் கண்டதில்லையோ? தோளுரத்தை இவ்வுலகம் சொன்ன தில்லையோ? - என்று சொன்னமொழி கேட்டனள் வியப்படைந்தனள் ஆளுகின்ற தேசிங்கென நாங்கள் நினைத்தோம் - அவன் அங்கு வந்த பேர்வழியை ஒத்தி ருந்ததால்! வாளுக்கிரை ஆனவனை நாங்கள் அறியோம் - அந்த மன்னன் நினைவாய் அவனை வெட்டி மடித்தோம். செஞ்சியினி லேஇருக்கும் செந்தமிழர்கள் பெற்ற தீமையின்னும் தீரவில்லை என்க ணவரோ செஞ்சிமன்னன் தீர்ந்தனன் இனித்த மிழர்க்கே - ஒரு தீங்குமில்லை என்னும்உளப் பாங்கொடு சென்றார் செஞ்சியினை ஆளுகின்ற அவ் வடக்கரை - என் செவ்விழிகள் காணும்; என்கை காணவசமோ? மிஞ்சும் என்றன் ஆவல்நிறை வேறுவ துண்டோ - என மெல்லி அவள் நெஞ்சில் வெறி கொண்டு நடந்தாள். 38 தேசிங்கு முன் வந்தாள் எண்சீர் விருத்தம் புதுப்பரிதி இருவிழிகள் ஒளியைச் சிந்த விடுமூச்சுப் புகைசிந்தக் குறித்துப் பார்த்த எதிர்ப்பான பார்வையினாள்! அலையுங் கூந்தல் இருட்காட்டில் நிலவுமுகம் மறைந்து தோன்றக் கொதிக்கின்ற நெஞ்சத்தால் கொல்லு வாள்போல் கொலுமுன்னே வந்துநின்றாள். அவ்வ டக்கன் உதிர்க்கின்ற கனல்விழியால் அவளைப் பார்த்தான் அப்பார்வை அற்றொழிய உறுத்திப் பார்த்தாள்! 39 முற்றிய பேச்சு தென்பாங்கு – கண்ணிகள் உண்மையைச் சொல்லிடுவாய்! - எவன்தான் உன்னை அனுப்பி வைத்தான்? மண்ணிடை மாண்டானே - தெரியா மனிதன் உன் உறவா? எண்ணும் என் ஆட்சியிலே செய்ததேன் இந்தக் கலக மடீ? திண்மை உனக் குளதோ - என்றந்தத் தேசிங்கு சொன்னவுடன், “ பொய்யினைச் சொல்வ தில்லை - தமிழர் பொய்த்தொழில் செய்வதில்லை மெய்யினைப் பேசுதற்கும் - தமிழர் மெய்பதைத் திட்ட தில்லை கையினில் வாளாலே - உனது காவல் தலைவன்தலை கொய்தவர் யார்’ எனிலோ - எனையே கொண்டவர் என்றறிவாய்! யாரும் அனுப்பவில்லை - எமையே இட்டுவந் தான் ஒருவன் சேரியில் ஓர்குடிசை - தந்துமே. தீய இரு மாதர் கோரிய வேலை செய்வார் - எனவே கூட இருக்க விட்டான் சீரிய என் துணைக்கே - அவன் ஓர் சிப்பாய் உடை கொடுத்தான். கோட்டைக் கழைத் தேகித் - திரும்பக் கூட்டிவ ராதிருந் தான் வீட்டில்என் சோற்றி னிலே - மயக்கம் மிஞ்சும் மருந்தை யிட்டான் ஆட்டம் கொடுத்த துடல் - உணர்வும் அற்ற நிலை யினிலே காட்டு மனிதன் அவன் - எனது கற்பை அழித் தானே! கற்பை அழித் தானே - தன்னைத்தான் காத்துக்கொள்ளும் திறமை அற்பனுக்கில்லை அன்றோ? - திறமை ஆருக்கி ருக்க வில்லை! வெற்பை இடித்து விடும் - உனது வீரத்தை-யும் காணும் நிற்க மனமிருந்தால் - நின்றுபார் நெஞ்சைப் பிளக்கும் என்கை! குற்றம் புரிந்தவர் யார்? - உனது கோலை இகழ்ந்தவர் யார்? கற்பை இகழ்ந்தவர் யார்?- உனது கருத்தை மேற்கொண்டவன்! சொற்கள் பிழை புரிந்தாய் - “அடியே” என்றெனைச் சொல்லுகின்றாய் நற்றமிழ் நாட்டவரை - இகழ்தல் நாவுக்குத் தீமை என்றாள். சென்ற உன் கற்பினுக்கே - எத்தனை சிப்பாய் களை மடித்தாய்? என்று வினவலுற்றான் - அதற்கே ஏந்திழை கூறுகின்றாள்: “ என்னருங் கற்பினுக்கே - உன்னரும் இன்னலின் ஆட்சியையும் உன்னரும் ஆவியையும் - தரினும் ஒப்பில்லை” என்றுரைத்தாள். “ இந்த வடக்கத்தியான் - செஞ்சியினை ஆள்வதை ஏனிகழ்ந்தாய்? இந்து மதத்தவன் நான் - மதத்தின் எதிரி நானல்லவே சொந்த அறிவிழந்தாய் - பிறரின் சூதையும் நீ அறியாய் இந்தத் தமிழ் நாட்டில் - பிறரின் இன்னல் தவிர்ப்பவன் நான். சொல்லினன் இம்மொழிகள் - `சுப்பம்மா’ சொல்லுகின் றாள் சிரித்தே; தில்லித் துருக்கரையும் - மற்றுமொரு திப்புவின் பேரினையும் சொல்லி இத் தென்னாட்டைப் - பலபலத் தொல்லையில் மாட்டி விட்டார்; மெல்ல நுழைந்து விட்டார்; - தமிழரின் மேன்மைதனை அழித்தார். அன்னவர் கூட்டத்திலே - உனைப்போல் ஆரும் தமிழ்நாட்டில் இன்றும் இருக்கவில்லை - பிறகும் இருக்கப் போவதில்லை அன்று தொடங்கி இந்தத் - தமிழர் அன்புறு நாடு பெற்ற இன்ன லெல்லாம் வடக்கர் - இழைத்த இன்னல்கள் என்று ரைத்தாள். ஆளும் நவா பினையோ - தமிழர் ஆரும் புகழு கின்றார் - தேளென அஞ்சு கின்றார் - செஞ்சியின் தேசிங்கின் பேரு ரைத்தால்! ‘நாளும் வரும்; வடக்கர் - தொலையும் நாளும் வரும்; அதைஎம் கேளும் கிளைஞர்களும் - விரைவில் கிட்டிட வேண்டும்’ என்றாள். 40 தேசிங்கு சினம் எண்சீர் விருத்தம் நாள்வரட்டும்; போகட்டும்; ஆனால் இந்த நலமற்ற தமிழர்மட் டும்வாழ மாட்டார்: தோளுரமும் மறத்தனமும் அவர்கட் கில்லை; சொல்லேடி தமிழச்சி! இருந்தால் சொல்லு! “ நாள்வரட்டும்” எந்தநாள்? தமிழர் வெல்லும் நாள்தானோ! அந்தநாள் வருவ தற்குள் வாள்வீரர் வடநாட்டார் வளர்ச்சி யின்றி மலைக்குகையில் தூங்குவரோ ஏண்டி?” என்றான். தமிழரெல்லாம் வாழார்கள் நீதான் வாழ்வாய்; தமிழர்க்கு மறமில்லை நன்று சொன்னாய் இமயமலைக் கல்சுமந்த வடநாட் டான்பால் சேரனார் இயல் - புதனைக் கேள்விப் பட்ட உமதுநாட் டானிருந்தால் கேட்டுப் பார்ப்பாய் உயிர்பதைப்பார் தமிழ்மகனைக் கனவில் கண்டால்! எமதருமைத் தமிழ்நாட்டின் எச்சி லுண்டாய் எச்சலிட்ட கையைநீ இகழ்ச்சி செய்தாய். யாமெல்லாம் சாகத்தான் வேண்டும் போலும் இருந்தாலோ வடநாட்டார் வாழார் போலும்! நீ, மற்றும் உன்நாட்டார், வளர்ச்சி எய்தி நீளும்நிலை யைத்தானே எதிர்பார்க் கின்றோம்! தூய்மையில் லை;நீங்களெல் லாம்கலப் படங்கள் துளிகூட ஒழுக்கமிலாப் பாண்டு மக்கள்; நாய்மனப்பான் மைஉமக்கு! வளர்ச்சி பெற்றால் நடுநிலைமை அறிவீர்கள்! அடங்கு வீர்கள்! வஞ்சகத்தைத் தந்திரத்தை, மேற்கொள் ளாத வாய்மையுறு தமிழ்நாட்டார் தோற்றார், அந்த வஞ்சகத்தைத், தந்திரத்தை உயிராய்க் கொண்ட வடநாட்டார் வென்றார்கள்; இதன்பொ ருள்கேள்: நெஞ்சத்தால், தமிழ்நாட்டார் வென்றார், அந்த நிலைகெட்டார் தோற்றார்கள் என்று ணர்வாய். கொஞ்சமுமே உயர்நோக்கும் தறுகண் வாய்ப்பும் கொள்ளாத வாழைக்குக் கீழ்க்கன் றேகேள், ஆட்சிஎனில் ஐம்பொறியை ஆள்வ தாகும்! அடுக்காத செயல்செய்தோன் ஆளக் கூடும்: காட்சியிலே காணுமுகில் ஓவி யந்தான் கலைந்துவிடும் ஒருநொடிக்குள்; நிலைப்ப தில்லை! காட்டிலொரு முயற்குட்டி துள்ளக் கூடும்; கருஞ்சிறுத்தை கண்விழித்தால் தெரியும் சேதி! தோட்டத்துப் புடலங்காய் தமிழர் நாடு தூங்கிவிழித் தால்உடையோன் உரிப்பான் தோலை! ‘அறம்’ எனுமோர் அடிப்படைகொண் டதுதான் வீரம் அவ்வீரம் தமிழரிடம் அமைந்த தாகும் பிறவழியால் வெற்றியொன்றே கருத்தாய்க் கொண்ட பிழைபட்ட ஒழுக்கத்தைத் தமிழர் ஒப்பார்! முறைதெரியா முட்டாளே திருந்தச் சொன்னேன் முன்இழைத்த குற்றத்தை இனிச்செய் யாதே. சிறையோடா? கொலையோடா? எனக்குத் தண்டம் செப்படா என்றுரைத்துத் தீப்போல் நின்றாள். கட்டோடு பிடித்திருந்த சிப்பாய் மாரைக் கண்ணாலே எச்சரிக்கை செய்து, மன்னன் ‘இட்டுவா கொலைஞரைப்போய், இதையும் கேட்பாய், எல்லார்க்கும் எதிரினிலே, பொதுநி லத்தில், பட்டிஇவ ளைக்கட்டி நிற்கச் செய்து பழிகாரி இவளுள்ளம் துடிக்கு மாறு வெட்டுவிப்பாய், ஒருகையை; மறுநாட் காலை வெட்டுவிப்பாய் ஒருமார்பை; மூன்றா நாளில் முதுகினிலே கழியுங்கள் சதையை; பின்னர் மூக்கறுக்க! காதுபின்பு; ஒருகை பின்பு; கொதிநீரைத் தெளித்திடுக இடைநே ரத்தில்; கொளுத்துங்கள் குதிகாலை! விட்டு விட்டு வதைபுரிக; துவக்கிடுக வேலை தன்னை; மந்திரியே உன்பொறுப்பு; நிறைவே றச்செய் இதுஎன்றன் முடிவான தீர்ப்பே’ என்றான் எதிர்நின்ற தமிழச்சி இயம்பு கின்றாள்; “ மூளுதடா என்நெஞ்சில் தீ! தீ! உன்றன் முடிவேக மூளுதடா அக்கொ டுந்தீ! நீளுதடா என்நெஞ்சில் வாள்! வாள்! உன்றன் நெடுவாழ்வை வெட்டுதடா அந்தக் கூர்வாள்! நாளில்எனைப் பிரிக்குதடா சாவு! வந்து நடுவிலுனைத் தின்னுமடா அந்தச் சாவே! ஆளனிடம் பிரித்ததடா என்னை! என்னை! அன்புமனை யாள்பிரிவாள் உன்னை! உன்னை! என்றதிர்ந்தாள் திசையதிர்ந்து போகும் வண்ணம்! எல்லாரும் சுப்பம்மா நிலைமை தன்னை ஒன்றுபடப் பார்த்திருந்தார்! அவளு டம்பில் ஒளிகண்டார்; கரும்புருவம் ஏறக் கண்டார், குன்றத்தைக் கண்டார்கள் கொலுவின் முன்னே! குரல்வளையின் கீழ்நோக்கி மூச்சை ஆழ்த்தி நின்றிருந்த பெருமாட்டி நிலத்தில் சாய்ந்தாள்: நெடுவாழ்வின் பெரும்புகழைச் சாவில் நட்டாள்! பேச்சில்லை! கேட்கவில்லை எதையும் யாரும்! பெருமன்னன் நடுக்கமுறும் புதுமை கண்டார்! ஏச்சுக்கள், கொடுஞ்செயல்கள் எனக்கேன் என்றான்; இரக்கத்தை‘வா’என்றான். அன்பை நோக்கி ஆச்சியே எனக்கருள்வாய் என்று கேட்டான். ‘அறமேவா’ எனஅழைத்தான்! அங்கே வேறு பேச்சில்லை கேட்கவில்லை எதையும் யாரும்! பிறகென்ன? தேசிங்கு தேசிங் கேதான். முற்றும்