பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 50 பாவாணர் நோக்கில் பெருமக்கள் ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 51 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1995 மறு பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 80 = 96 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 60/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித்திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப்படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். சான்றிதழ் பண்டித ஞா. தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய சொல்லாராய்ச்சி, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய மொழியறிவியல், பேராசிரியர் சாய்சு எழுதிய ஒப்பியல் மொழிநூல் முதலிய ஆங்கிய நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு, பண்டாரகர் கால்டுவெல் எழுதிய திராவிட மொழி களின் ஒப்பியல் ஆய்வு நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்த தொரு முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர்பார்ப்பதற் கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மைத் தூண்டியது. எனவே `ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. அவர் வருந்தியுழைத்து ஆராய்ச்சி செய்துவரும் அறிஞர் ஆதலால் அவரைப் பணியில் அமர்த்தும் எந்த நிலையத்துக்கும் அவரால் பேரும் புகழும் கிடைக்கப் பெறும் என்று யாம் முழு நம்பிக்கையோடு கூறுகின்றேம்.*- மறைமலையடிகள் * மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம். உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை ... iii வான் மழை வளசிறப்பு ... vi சான்றிதழ் ... viii நூல் 1. மறைமலையடிகளின் மும்மொழிப் புலமை ... 1 2. நாவலர் பாரதியார் நற் றமிழ்த் தொண்டு ... 5 3. நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்றமிழ்த்தொண்டு ... 10 4. gHªjÄœ¤ புதுக்கும் பாரதிதாசன் ... 14 5. தவட்திரு குன் றக்குடி அடிகளாரின் தவப்பெருஞ் சிறப்பியல்புகள் ... 16 6. தமிழெழுத்து மாற்றம் தன் மானத் தந்தையார் கொள்கையா? ... 20 7. தமிழ்நாடு ஆளுநர் உயர்திரு கே.கே.சா. அவர்கட்குப் பாராட்டு ... 24 8. என் தமிழ்த்தொண்டு இயன்றது எங்ஙனம்? ... 29 9. ஐந்தாம் உலகட்தமிழ் மாநாடு! அடிப்படை எவர்பட்ட அரும்பாடு? ... 32 10. செந்தமிழ்ச் செல்விக்கு உட்கரணம் கெட்டதா? ... 38 11. வரிசையறிதல் ... 42 12. மகிழ்ச்சிச் செய்தி ... 44 13. துரைமாணிக்கத்தின் உரைமாணிக்கம்! ... 45 14. வல்லான் வகுத்த வழி ... 49 15. தீர்ப்பாணர் மகராசனார் திருவள்ளுவர் ... 51 16. திருவள்ளுவரும் பிராமணியமும் - மதிப்புரை ... 68 பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள் ... 72 பாவாணர் நோக்கில் பெருமக்கள் 1 மறைமலையடிகளின் மும்மொழிப் புலமை இவ் விருபதாம் நூற்றாண்டில் ஈடும் எடுப்புமின்றித் திகழ்ந்த மாபெரும் புலவர் மறைமலையடிகள் என்பது, எல்லார்க்கும் ஒப்ப முடிந்த வுண்மையாகும். உலக மொழிகள் (ஏறத்தாழ) மூவாயிரத்துள், ஒருபோதும் வழங்கா இலக்கியப் பெருமொழி யென்னும் வகையிற் சமற்கிருதமும், என்றுமுள்ள உலகமுதல் உயர்தனிச் செம்மொழி யென்னும் வகையில் தமிழும், உலகப் பொதுக் கலவைப் பெருமொழி யென்னும் வகையில் ஆங்கிலமும், தலைசிறந்த மொழிகளாகும். இம் மூன்றும் ஒருங்கே கைவந்தார் பலர் இருந்தாரேனும், அவரனைவருள்ளும், எவரெத்து (Everest) என்னும் வெள்ளிமலைபோ லுயர்ந்தும், அமேசான் (Amazon) என்னும் அமெரிக்க ஆறுபோ லகன்றும், அமைதி வாரியின் (Pacific Ocean) தென்னகழி போலாழ்ந்தும், பிறங்கித் தோன்றிய பெரும் புலமை வாய்ந்தவர் மறைமலையடிகளே யென்பது, மிகையாகாது. தமிழ்ப் புலமை தமிழகத்துத் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த புலவர் பல்லாயிரவருள் ஒவ்வொருவரும், வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும் வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது (ஔவை. தனிப்.) என்னும் இயற்கை நெறிக்கிணங்க, ஒவ்வொரு துறையிலேயே வல்லுநரே னும், அடிகள் எல்லாம் வல்ல இறைவனருளால் இந்நெறிக்கு விலக்காகவே படைக்கப்பட்டாரென்பது, வெள்ளிடைமலை. எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந் துய்த்துணர் வில்லெனி னில்லாகும் - உய்த்துணர்ந்துஞ் சொல்வன்மை யின்றெனி னென்னாமஃ துண்டேற் பொன்மலர் நாற்ற முடைத்து. அடிகட்குக் கல்வன்மையோடு சொல்வன்மையுங் கலந்திருந்ததனால் அவர் கல்வி நன்மணப் பொன்மலராயிற்று. கல்வன்மை மட்டுமுள்ளார் என்றும் மாணவராயே யிருப்பர்; கல்வன்மையொடு சொல்வன்மையு முடையாரே ஆசிரியராய் விளங்கிப் பிறர்க்குப் பயன்படுவர். சொல்வன்மை, உரைநடை வன்மையும் செய்யுள் வன்மையும் என இரு திறத்தது. அவ் விருதிறனும் உடையாரான அடிகள், நாவலரும் பாவலருமாகவும், நூலாசிரியர், நுவலாசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், பெயர்ப்பாசிரியர் முதலிய பல்வகை யாசிரியராகவு மிருந்ததொடு, தலைசிறந்த ஆராய்ச்சியாளராகவும் விளங்கினமை நாடறிந்தது, உலகறிந்தது. ஆங்கிலப் புலமை எழுத்தொலி யொழுங்கின்மை, (shall, will, should, would முதலிய) சில துணைவினை யாட்சி, வினையின்பின் முன்னீடு (Preposition) சேர்ந்து வரும் மரபு வழக்குப் (Idioms and Usages) பெருக்கம், சில சொற்றொடர்ப் பொருள் மயக்கு, இலத்தீன், பிரெஞ்சு முதலிய பிறமொழிச் சொற்றொடர்க் கலப்பு, சொற்பெருவளம் முதலியவற்றால், ஆங்கிலம் ஐரோப்பியரும் அவர் வழியினரு மல்லாதார் கற்கச் சற்றுக் கடினமான மொழியே. அதனால், மதிநுட்பம், நினைவாற்றல் முதலிய அகக்கரண வலிமையும், பேச்சுப் பயிற்சியும் எழுத்துப் பயிற்சியுங் கூடிய பல்லாண்டுழைப்பும் உள்ளவரே ஆங்கிலப் புலமையும் பேச்சாற்றலும் பெறுதல் கூடும். அங்ஙனம் பெற்ற பின்பும், அழகிய இலக்கிய நடையிற் பேசுதலும் எழுதுதலும் அரிது. அடிகளோ இந்தியருள் ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற ஆங்கிலப் பேராசிரியரும் எற்றே யிவர்க்குநா மென்று கருத்தழியவும், ஆங்கில ருள்ளும் பெரும்பாலார் அம்மா பெரிதென்று அகமகிழவும், அழகிய இனிய இலக்கண நடையில் கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப, தமிழர் மதம், மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, சைவசித்தாந்த ஞானபோதம், வேளாளர் நாகரிகம், சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா, பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம், முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை முதலிய பல நூல்களில் ஆங்கில முகவுரை வரைந்ததோடு, 133 பக்கங் கொண்ட “The Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge” என்னும் ஆங்கில நூலையும் வெளியிட்டுப் போந்தார். “Ancient and Modern Tamil Poets”, “Can Hindi be the Lingua Franca of India?” என்பனவும் அவரியற்றிய ஆங்கில நூல்களாகும். தம்மிடம் ஆங்கில நற்சான்று பெற வந்தவர்க்கெல்லாம், அவர் வேண்டியவுடன், அவர் விரும்பியவாறே ஒரு சிறிதும் முயற்சியின்றித் தாய்மொழியிற்போல் மிக எளிதாக விரைந்து எழுதித் தந்த அடிகளின் அளவிறந்த ஆற்றலை, அவரிடம் பெற்றவர் அனைவரும் அறிவர். சமற்கிருதப் புலமை ஆங்கிலத்தினும் மிக மிகக் கடினமானது சமற்கிருதம். எழுத்துப் பெருக்கம் (51), ஒலிக்கடுமை, மூவெண், இலக்கணப்பால், பிரியா வேற்றுமை யுருபு, புணர்ச்சி நெறிகளின் பல்வேறு விலக்கு, பெயர்களின் வேற்றுமைப் பாடும் (Declension of Nouns) வினைகளின் புடைபெயர்ச்சியும் (Conjugation of verbs) பல்வேறு முறைப்படல், பேச்சு வழக்கின்மை, பன்மொழிச் சொற்கலப்பு, வேர் தெரியாச் சொற்சிதைவு முதலியன பொதுவாக மொழி வெறியரும் கடுவுழைப் பாராய்ச்சியாளருமன்றிப் பிறர் கற்க முடியாவாறு சமற்கிருதத்தைக் கடினமாக்குங் கூறுகளாம். ஆயினும் அடிகள் அம் மொழியையும் அதன் இலக்கியத்தையும் அமைவுறக் கற்றுத் தேர்ந்தது வியக்கத்தக்கதே. அடிகளின் சமற்கிருதப் புலமை, காளிதாசனின் சாகுந்தல நாடகத் தெள்ளிய தமிழ் மொழிபெயர்ப்பு நூலாலும்; ஆரிய வேதநூற் கல்வி, சிவநெறி தமிழரதே என்று நிலைநாட்டும் வண்ணம் தம் மதம்பற்றிய நூல்களிலெல்லாம் வேதபிரமாண உபநிடத இதிகாசப் புராணங்களினின்று எடுத்துக்காட்டும் சான்றுகளாலும், தென்புலத்தார் யார்? என்பது போன்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளாலும், தெற்றெனத் தெரியலாகும். இதுகாறும் எவரும் அவற்றைப்பற்றிக் குறைகூறாமையும் இதனை உறுதிப்படுத்தும். பொதுநலத் தொண்டு பொதுமக்களாயினும் புலமக்களாயினும், மக்கள் மனப்பான்மை இருவேறு வகைப்பட்டதாகும். அவற்றுள், ஒன்று பெரும் பொருளீட்டித் தம் குடும்பத்தையே பேணுவதையும், இன்னொன்று தெளிந்த அறிவு பெற்றுப் பொதுநலத் தொண்டே சிறப்பாக ஆற்றுவதையும், குறிக்கோளாகக் கொண்டனவாகும். இதனையே, இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு (குறள். 374) என்றார் திருவள்ளுவர். தமிழர் தம் முன்னோர் நிலையினின்று இறப்ப இழிந்து, அறிவிலி களாய் அடிமைத்தனத்தில் உழல்வதைக் கண்டு பொறுக்கமாட்டாது, அவரைக் கரையேற்றுவதற்கே அடிகள் வருந்திக் கற்று மும்மொழிப் புலமையும் செம்மையிற் பெற்றார். அவர்க்கு வேண்டிய படைக்கலம் பரந்த கல்வியறிவே. ஆற்றவும் கற்றார் அறிவுடையார் என்றார் முன்றுறை யரையனார். இக்கால வுயர்கல்வி அறிவியலும் (Science) கம்மியமுமே (Techno -logy) யாதலாலும், அதனைப் பெறும் வாயில் ஆங்கிலமே யாதலாலும், அதிற் புலமை பெறுவது இன்றியமையாத தாயிற்று. அஃதின்றி, தொலை விலுணர்தல், மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி முதலிய நூல்களை இயற்றியிருக்கவும் முடியாது; மேனாட்டாரின் மெய்ப்பொருள் நூல்களைக் கற்றிருக்கவும் முடியாது; தம் ஆங்கில முகவுரைகளாலும் ஆங்கில நூலாலும் மேலையர்க்குத் தமிழ் நாகரிகத்தின் மேம்பாட்டைத் தெரிவித்திருக்கவும் முடியாது. சமற்கிருதக் கல்வி ஆங்கிலக் கல்விபோல் அறிவடைய அத்துணை உதவா விடினும், தமிழ்ப் பகைவரின் போலிக் கூற்றுகளை மறுக்கவும், ஆரிய நாகரிகத்தின் தாழ்நிலையை உள்ளவாறு தமிழர்க்கும் உலகிற்கும் எடுத்துக்காட்டவும், அதனையுங் கற்க வேண்டியதாயிற்று. அடிகள் எழுதியுள்ள சிறியவும் பெரியவுமான (ஏறத்தாழ) அறுபான் நூல்களுள் எதையெடுப்பினும், அது தமிழரினப் பொதுநலத்திற்கன்றித் தந்நலத்திற்காக எழுதப்பட்ட தன்றென்பது எவரும் மறுக்கொணா அங்கை நெல்லிக்கனி. ஒரு மொழியிற் புலமை பெறுவதே அரிதாயிருக்க, முப்பெரு மொழி களில் தப்பரும் புலமை பெற்றுத் தமிழிலும் ஆங்கிலத்திலும், பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய் நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி ஐயிரு குற்றமும் அகற்றியம் மாட்சியோ டெண்ணான் குத்தியின் ஓத்துப் படலம் என்னும் உறுப்பினில் பல்வகை நூலியற்றி, ஆசிரியர்க்கும் மாணவர்க்கும் அறிவுறுத்திய திறம், இறைவன் திருவருள் நிரம்பப் பெற்றாரன்றி, ஏனையர் எவரும் எய்துதற்கு எட்டுணையும் இயலாததேயாம். அடிகள் மறைந்து கால் நூற்றாண்டு கடந்தும், அத்தகு பெரியோர் அண்மையில் தோன்றும் நிலைமை அணுவளவு மின்மை, எத்துணை ஏக்கமுறக் காட்டுகின்றது அவர்தம் மும்மொழிப் புலமையை! - மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் 1977 2 நாவலர் பாரதியார் நற்றமிழ்த் தொண்டு ``தந்தைதாய்ப் பேண்'' என்ற முறையில், ஒவ்வொருவனும் தன் தாய் மொழியையும் தாய்நாட்டையும் பேணக் கடமைப்பட்டவன். தாய்மொழி யைப் பேணுதலாவது, அதிற் பற்று வைத்தலும் அதனை வளர்த்தலும் அழியாமற் காத்தலுமாம். சொல் வளப்படுத்தலும் இலக்கிய வளப்படுத்தலும் வளர்த்தலாகும். இலக்கிய வளப்படுத்தல் புலவர்க்கே இயல்வது; ஏனைய பொதுமக்கட்கும் இயல்வன. இற்றை யுலகில் தாய்மொழியைப் பேணாமைக்குத் தலைசிறந்தது தமிழ்நாடு. தாய்மொழியை ஒரு கட்சியொடு தொடர்புபடுத்துவதும், தாய் மொழியைத் தாழ்மொழியென்று தூற்றி, வேற்று மொழியைத் தேவமொழி யென்று போற்றுவதும், தாய்மொழியைப் பேணுவானுக்கு `மொழிவெறியன்' என்று பட்டஞ் சூட்டுவதும், அவனை அலுவலினின்று அகற்றுவதும், தாய் மொழி யிசையும் தாய்மொழியில் வழிபாடும் தகாதனவென்று மேடையில் அமைச்சர் சாற்றுவதும், தாய்மொழிச் சொல்லை வேற்று மொழிச் சொற்கும் தாய்மொழியையே வேற்று மொழிக்கும் மாற்றுவதும், இத் தமிழ்நாட்டில்தான் நிகழும். இத்தகைய நிலையில், தமிழுக்கு அயலாரால் ஊறு நேர்ந்தவிடத்து அரிமாபோல் அஞ்சாமல் எதிர்ப்பாரும், காரியோத்துப்போல் காட்டிக் கொடுப்பாரும், இருதலைமணியன்களாய் இங்குமங்கும் கலப்பாரும், `எங்கெழிலென் ஞாயிறெமக்கு' என்று ஏதுமுணர்ச்சியற்றிருப்பாருமாய்த் தமிழாசிரியர் நால்வகையர். இவருள் நாவலர் பாரதியார் தலைவகையர் (முதல் வகுப்பார்). 1. மொழித்தொண்டு இச் சென்னை மாகாணத்தில் திரு. இராசகோபாலாச்சாரியார் முதலமைச்சராகி முதன்முதல் கட்டாய இந்தியைப் புகுத்தியபோது, தாய் மொழியுணர்ச்சியுள்ள தமிழரிடையே பெருங் கொதிப்பெழுந்தது. அதனால் இந்தியெதிர்ப் பியக்கம் தோன்றிற்று. அதை எதிர்க்கட்சியார் செயலென எளிதாய் அடக்கிவிடப் பார்த்தார் ஆச்சாரியார். ஆயின், கட்சிச் சார்பற்ற தமிழ் மாணவரும் ஆசிரியரும் அதிற் பெருந்தொகையினராய்க் கலந் திருந்தனர். அவருக்கும் பிறருக்கும் பெருந்தலைவராய்ப் பிறங்கித் தோன்றிய பேராசிரியர் இருவரே. அவர் மறைமலையடிகளும் நாவலர் சோ.சு.பாரதியாருமாவர். இவ் இருவராலேயே இந்தியெதிர்ப் பியக்கம் வன்மை பெற்று வெற்றி கண்டது எனின் மிகையாகாது. நாவலர் பாரதியார் கட்டாய இந்தி வெறுப்பினால், `காங்கிரசு' என்னும் பேராயக் கட்சியினின்று விலகி, நாடு நகரெங்கும் சுற்றி, எண்ணிறந்த இந்தியெதிர்ப்புக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் தலைமை தாங்கித் தமிழ் முழக்கஞ் செய்து, கட்டாய இந்தியின் முதுகந்தண்டை முறித்தார். அதன் பயனாகவே, ஆங்கிலேயர் மீண்டும் அதிகாரத்தைப் பெற்ற இடைக்கால ஆட்சியில், கட்டாய இந்தி கதுமென விலக்கப்பட்டது. எடுப்பான வளர்த்தியும், ஏக்கழுத்தும், எழில்முகமும், வீறுபெற்ற மீசையும், ஏறு நச்சும் பீடுநடையும், மறலியும் அஞ்சும் தறுகட் பார்வையும் உடைய நாவலர் பாரதியார், இடியோசை கேட்ட நாகம்போல் எதிரிகள் நடுங்கி யொடுங்குமாறு, குமுறிய இந்தியெதிர்ப்பு மறமுழக்கம், கண்டார் கேட்டார் அகக்கண் முன்பும் அகச்செவியிலும் இன்னும் தொலைக் காட்சி யும் தொலைபேசியும் போல், தோன்றிக்கொண்டும் ஒலித்துக் கொண்டும் இருக்கத்தான் செய்கின்றன. 2. இலக்கியத் தொண்டு உரையாசிரியருள் நுண்மாண் நுழைபுல முடையாரும் மண்மாண் புனைபாவையாகி மயங்குமாறு, உயரிய இலக்கணமான ஒல்காப் பெருமைத் தொல்காப்பியத்தின் மூவியல்கட்கு முன்னரே உரைகண்ட உளம் பூரணரான இளம்பூரணரும் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியரும், கூராசிரிய ரான பேராசிரியரும், பிறரும் காணமுடியாத காழுரையை நம் நாவலர் பாரதியார் கண்டார். அவ் வுரைக்கு ஓரரிசிப் பதமாக உள்ள ஓர் எடுத்துக் காட்டு வருமாறு: ``கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே'' (33) என்பது ஒரு தொல்காப்பியப் புறத்திணையியல் நூற்பா. இதில், குறிக்கப்பெற்ற கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் புறத் துறைகட்கு, புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியராகிய ஐயனாரித னார் பின்வருமாறு பொருள் கொண்டார். கொடிநிலை ``மூவர் கொடியுளும் ஒன்றொடு பொரீஇ மேவரு மன்னவன் கொடிபுகழ்ந் தன்று'' ``இதன் பொருள்: அரி, அயன், அரன் என்னும் மூவர் கொடியுள்ளும் ஒன்றோ டுவமித்துப் பலரும் பொருந்துதல் வரும் வேந்தனுடைய கொடியைப் புகழ்ந்தது.'' கந்தழி ``சூழு நேமியான் சோவெறிந்த வீழாச்சீர் விறன்மிகுத் தன்று,'' இ-ள்: வளைந்த சக்கரப்படையையுடைய கண்ணன், வாணாசுரனது சோ என்னும் மதிலரணை அழித்த கெடாத தன்மையையுடைய வெற்றியைச் சிறப்பித்தது. வள்ளி ``பூண்முலையார் மனமுருக வேன்முருகற்கு வெறியாடின்று.'' இ-ள்: அணிகலத்தாற் சிறந்த மார்பையுடைய பெண்டிர்மனம்நெகிழ வேலினையுடைய முருகனுக்கு வெறியென்னுங் கூத்தை ஆடியது. இனி, நச்சினார்க்கினியர் மேற்கூறிய நூற்பாவிற்கு உரைத்த கண்ணழித்துரை வருமாறு: ``கொடிநிலை - கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர் மண்டிலம் (கதிரவன்); கந்தழி - ஒரு பற்றுக்கோடின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள்; வள்ளி - தண்கதிர் மண்டிலம் (திங்கள்); என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் - என்று சொல்லப்பட்ட குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய முற்கூறப்பட்ட மூன்று தெய்வமும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே - முற்கூறிய அமரரோடே கருதுமாற்றால் தோன்றும்.'' இனித் தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, ஆசிரியர் மு. இராகவையங்கார் அவர்களின் தனி விளக்கம் வருமாறு: ***``இச் சூத்திரத்திற்கு என் கருத்திற்றோன்றிய சில கருத்தையும் அறிஞர் ஈண்டே ஆராய்ந்துகொள்ளக்கடவர். அஃதாவது தெய்வப் புலமைத் திருவள்ளுவர், தம் பெருநூற்றொடக்கத்தே கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கதிகாரங் களைப் பாயிரமாகத் தனியே நிறுத்திக் கூறுகின்றாரன்றோ? ``ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும் பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின்'' என்று சங்கப் புலவர் ஒருவர் இவற்றை வேறு பிரித்துக் கூறுதலுங் காண்க. இங்ஙனம் இந் நான்கதிகாரங்களைமட்டும் பாயிரமாக வள்ளுவர் தனியே கொண்டது எக்காரணம் பற்றி? என்ற கேள்வி நெடுக நிகழ்ந்து வருவது உண்டு, இதற்குத் தக்க விடை இதுகாறும் பெறப்பட்டதாகத் தெரிந்திலோம். ஆயின் தொல்காப்பியனார் கூறிய ``கொடிநிலை கந்தழி'' என்ற இச் சூத்திரம் அக் கேள்விக்கு விடை தரவல்லதோ என்பது எமக்குள் நெடுநாள் நிகழ்ந்து வரும் ஆராய்ச்சியாகும். அஃதாவது-இச் சூத்திரத்திற் கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் கடவுள் வாழ்த்தொடு வரும் என உயிர்பின் வழி வரும் ஒருவினையொடுச் சொல்லைக் கடவுள் வாழ்த்துக்குக் கூறுதலால், அவ் வாழ்த்து முதலிற் கூறுஞ் சிறப்புடையதென்பதும் மற்றவை அதன் பின்னர் வைத்து வாழ்த்தப்படுதற்கு உரியவென்பதும் அறியத்தக்கன. இனிக் `கொடிநிலை' என்பது மேகத்தை யுணர்த்தும்; கீழ்த்திசைக் கண்ணே நிலைபெறுதலுடையது, நீடனிலையுடையது என்பன இதன் பொருளாம் (கொடி கீழ்த்திசை). நச்சினார்க்கினியரும் இவ் விரு பொருள்களையே பற்றிச் சூரியனுக்கு இப் பதத்தை இணக்குதல் காண்க. மேகவாகனனாகிய இந்திரனது திசை கிழக்காதலின் அத் திசையே மேகத்துக்கும் உரியதென்ப தும், அங்கு நின்றெழுந்த கொண்டல்களே உலகதாபந் தீரப் பெய்வன என்பதும் அறியத் தக்கவை. குணக்கினின்று எழுவது பற்றியே மேகம் கொண்டலெனப் பெயர் பெற்றதென்க. ``ஞாலம் வறந்தீரப் பெய்யக் குணக் கோடி காலத்திற்றோன்றிய கொண்மூப்போல்'' (கலித்.82) என்பதனால் கிழக்கிலெழும் கொண்டல்களே பெயலிற் சிறந்ததாதல் அறியப்படும். இவ்வாறன்றி மின்னற்கொடிக்கு நிலைக்களமாதல்பற்றி மேகம் `கொடி நிலை' எனப்பட்டதெனினும் அமையும். இவற்றால் கொடிநிலை என்பது மேகத்தைக் குறிக்கும் ஆற்றல் பெரிதுடையதாதல் தெளியலாம். இரண்டாவது கந்தழி என்பது-கந்து-பற்று, அழி-அழிவு; அஃதாவது பற்றழிந்தார் அல்லது நீத்தார் தன்மை என்றபடியாம். மூன்றாவதான வள்ளி என்பது அறத்தைக் குறிக்கும். என்னை? அவ்வறம் சிறப்பாக வண்மை பற்றியே நிகழ்வதாகலான். `ஈதலறம்' என்றார் ஔவையாரும். நச்சினார்க்கினியர் தங்கொள்கைக் கியையச் சந்திரனுக்கு இப் பதத்தை இணக்குமிடத்து, ``வெண்கதிர் தேவர்க்கு அமிர்தம் வழங்க லான் வள்ளி யென்பதூஉமாம்'' என்று கூறுதலினின்று வண்மையடியாகவே வள்ளி என்ற சொல் வழங்கியமை தெளியப்படும். படவே வண்மையாகிய அறத்துக்குரிய கடவுள் வள்ளி எனப்பட்ட தென்க; இங்ஙனம் மேகம், நீத்தார், அறக்கடவுள் என்ற மூன்றும், கடவுளை முதலாகக் கொண்டு வாழ்த்தப் படுதலும் இப் பாடாண் பகுதியாம் என்பது, சூத்திரப் பொருளாதல் கண்டுகொள்க.'' இனி, இதற்கு நம் நாவலர் கண்ட புத்துரை வருமாறு: ``கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற - கொடிநிலை காந்தள் வள்ளி என்னும் பெயருடைய; வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் - போர்த் துவக்கமாம் வசையற்ற வெட்சியின் `மறங்கடைக் கூட்டிய' சிறப்பு வகை மூன்றை முதலாகக் கொண்டு வரும் பாடாண் பகுதி மூன்றும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும் - கடவுட் பரவுதலுடன் பொருந்தி வரும். ``குறிப்பு: ஈற்றேகாரம் அசை. பொதுவாகப் பாராட்டு நுவலும் பாடாணின் சிறப்பு வகை மூன்று, கடவுள் வாழ்த்தைத் தழுவி வருதல் குறிக்கக் கடவுள் வாழ்த்துக்கு `ஒடு'க் கொடுத்துரைக்கப்பட்டது. போரைத் தொடங்குந் திணை வெட்சி; அதன் பொதுவாக ஆகோள்; சிறப்பு வகைகளுள் பாடாணாய்க் கடவுள் வாழ்த்துக் கண்ணுவன இதிற் குறித்த மூன்றுமேயாதலின், முற்றும்மை கூட்டப்பட்டது. இதிற் குறித்த மூன்றும் தம்மளவில் வெட்சி வகைகள். அவற்றை முதலாகக் கொண்டு வரும் பாடாண் பகுதி மூன்றே கடவுள் வாழ்த்தொடு வருமெனற்கு, ``முதலன மூன்றும்'' என்று கூறப்பட்டது. ``அகர முதல எழுத்தெல்லாம்'' என்றதுபோல, கடவுள் கண்ணிய பாடாண் வகை இதிற் குறித்த `மூன்று முதலன' எனக் கொள்க. ``முதலன'' ஈண்டுக் குறிப்பு வினை; `முதலாகவுடைய' என விரியும். இனி, நம் நாவலர் புத்துரை பெற்ற இலக்கணத் துறைகளும் குறியீடுகளும் தனிச் செய்யுள்களும் பலப்பல. இவராற் பாடப்பெற்ற சில செய்யுள்களுமுள. இவர் எழுதிய சேரர் தாயமுறையும் தொல்காப்பியப் புத்துரையும், இவருடைய இலக்கண விலக்கியக் கல்விப் பரப்பையும், கூர்த்த மதியையும், நுணுகிய நோக்கையும், ஆராய்ச்சி யாற்றலையும், ஒருங்கே புலப்படுத்தும். இனி, இவர் குலவொழிப்பு மாநாடுகளிற் கலந்துகொண்டதும் பெரியாருக்கிட்ட சிறைத்தண்டனையைக் கண்டித்ததும், குடிசெயல் வகைத் தொண்டின் பாற்படும். இத்தகைய தமிழ்ப் பெரியார் நலமும் வலமும் நிரம்பப் பெற்று நீடு வாழ்க! - ``தென்றல்'' 8.8.1959 3 நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்றமிழ்த் தொண்டு பாரதியென்று பெயர் கொண்ட முத்தமிழ்ப் புலவருள், தமிழ்க் காப்புப் பற்றி முதன்மை பெற்றவர் பசுமலை நாவலர் ச. சோ. பாரதியார் ஆவார். எம்மொழிப் புலமைக்கும் இலக்கண அறிவு இன்றியமையாதது. அதிலும் தமிழ்ப் புலமைக்கு அது தனிப்பட வேண்டுவது. சிலர் இலக்கணக் கல்வியின்றியே சிறந்த மேடைப் பேச்சாளராயிருக் கலாம். அதுபற்றி அவர் புலவர் வரிசையில் வைத்தெண்ணப்படார். புலவரும் துறைபற்றிப் பலவகையர்; ஒவ்வொரு துறையிலும் தலையிடை கடையென முத்திறத்தர். ஒரு புலவரின் புலத்திறத்தை அவர் துறைப்புலமை மிக்காரே அளந்தறிதலொண்ணும். ``புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புன லூர பொதுமக்கட் காகாதே பாம்பறியும் பாம்பின கால்'' (பழ. 7) என்றார் முன்றுறையரையனார். நாவலர் பாரதியார் ஆங்கிலப் பொதுக் கல்வியில் முதுபட்டமும் சட்டக் கல்வியில் இளம்பட்டமும் பெற்றபின், தமிழிலக்கண விலக்கியம் திறம்படக் கற்று, தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத் திணையியல், மெய்ப்பாட்டியல் என்னும் மூவியற்குப் புத்துரையும் வரைந்து வெளியிட்டார். அகத்திணையியல் உரைப் பாயிரத்தில், ``தற்காலம் தமிழில் தலைசிறந்து நிலவுவது தொல்காப்பியர் நூலே. அது, ஆரியப் பாணினிக்கும் தூரிய மேல்புல யவன அரித்தாட்டிலுக்கும் காலத்தால் முந்திய தொன்மையுடையது. பாணினியின் செறிவும், பதஞ்சலியின் திட்பமும், அரித்தாட்டிலின் தெளிவும், அவையனைத்திலு மில்லா வளமும் வனப்பும், அளவை நூன்முறை யமைப்பும் பெற்றுச் செறிவும் தெளிவும் நெறியா நெகிழவும் நிரம்பியமைந்தது'' என்று கூறி யிருப்பது நாவலரின் தமிழ்ப் புலமையையும் பற்றையும் ஒருங்கே காட்டும். 1942-லேயே அவர் இங்ஙனம் எழுதியிருந்தும், பர்.தெ.பொ.மீ. 1974-ல் வெளியிட்ட `தமிழிலக்கணத்தில், அயன்மொழி அமைப்புகள்' (Foreign Models in Tamil Grammar) என்னும் ஆங்கிலப் பொத்தகத்தில், தொல் காப்பியம், கி.மு. 6ஆம் நூற்றாண்டில் எழுந்த பாணினீயத்தைப் பின்பற்றிய தென்றும், கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றிய தென்றும், துணிந்து தமிழைக் காட்டிக் கொடுத்திருக்கின்றார். அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியதும், திருவையாற்று அரசர் கல்லூரியில் பர். சுப்பிரமணிய சாத்திரியார் முதல்வராகவும் பேரா. புருடோத்தம நாயுடு தமிழ்ப் பேராசிரிய ராகவும் இருந்த காலத்தில், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் அராவ அண்ணல் (ராவ் சாஹிப்) எசு (S) வையாபுரிப் பிள்ளையின் கீழ்த் துணை விரிவுரையாளராகப் பணியாற்றிய நான்மொழிப் புலவர் வேங்கடராசலு ரெட்டியார், தம் பதவிச் செருக்காலும் தம் மேலவர் துணை யாலும், தமிழ் வடமொழி வழியது என்பதைக் குறிப்பாகவும் மறைமுக மாகவும் காட்டுமாறு, குற்றியலுகரம் மெய்யீறே யென்று ப.க. கழக வெளி யீடாக வெளியிட்டதை மறுத்து, குற்றியலுகரம் உயிரீறேயென்று நாட்டுதற் பொருட்டு, மேற்குறித்த கல்லூரித் தமிழ்ப் புலவர் வகுப்பு மாணவர் என்னை அழைத்திருந்தபோது, என் சொற்பொழிவிற்குத் தலைமை தாங்கத் தக்கவர் அவரே (நாவலர் பாரதியாரே) யென்று அவரை அதற்கு அமர்த்தியதும், அவர் இலக்கியப் புலமைக்கும் இலக்கணப் புலமைக்கும் தலைசிறந்த சான்றாம். இத்தகைய புலமையும் பற்றும் இருந்ததனால், தமிழுக்கு எவராலும் எவ்வகையிலும் எத்துணையும் ஊறு நேர்வதை இம்மியும் பொறாதவராய், கடுந்தொலைவும் நோக்குங் கூரிய கழுகுக்கண் கொண்டு எத்துன்பத்தையும் எதிரதாக் காக்கும் விழிப்புடையவராய், இந்தி இந்தியப் பொது மொழி யாவதை முந்தியே தடுக்குமாறு, அதுபற்றிப் பேசி முடிபு கொள்ளும் வாரதாக் கூட்டத்தில் அதை வன்மையாய் எதிர்க்க வேண்டுமென்று பண்டகர் (Dr.) சுப்பராயனுக்கு எழுதியும், இந்தி அரசகோபாலாச்சாரியா ரால் தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்டபின், அல்லும் பகலும் அலைப்புண்டு, நாடு முழுதும் நகர்தொறும், தொடர்ந்து நிகழ்ந்த மாலைக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் அரிமாபோல் உரறி இந்தியெதிர்த்தும், அரசகோபாலாச்சாரி யார்க்கு ஆங்கிலத்தில் திறந்த திருமுகம் விடுத்தும், இயன்றவரை முயன்று எதிர்கால முழுவெற்றிக்கு அரணான அடிகோலினார். இந்தி யெதிர்ப்புப் போராட்டத்தில் நாடு முழுதுங் கொந்தளித்தது; உண்மைத் தமிழர் அனைவரும் குல மத கட்சி வேறுபாடின்றி ஓரினமாய் ஒன்றினர். மறைமலை யடிகள் எழுதிய ‘இந்தி பொதுமொழியா?’ என்னும் அரிய ஆராய்ச்சி எதிர்நூலும் வயிரவாளாக உதவியது. இங்ஙனம், அறிவுத் துறையில் மறைமலையடிகட்கு அடுத்தபடியாக வும், போராட்டத் துறையில் ஈடிணையற்ற கருணாகரத் தொண்டைமான் போலும் படைத்தலைவராகவும், தமிழ்க்காப்புத் தொண்டாற்றி, ``எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்'', (குறள். 429) ``சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது'', ( 647) ``இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி'' ( 1029) முதலிய குறள்களை விளக்கும் வகையில் வாழ்ந்த நாவலர் பாரதியார், தமிழர் என்றும் மறவாது போற்றற்குரியார். ஆங்கிலக் கல்வியும், சட்டநூலறிவும், ஏரண முறையில் எதிரியை வெல்லும் தருக்க ஆற்றலை வளர்க்கும் தன்னுரிமை வாழ்க்கைப் பணியான வழக்கறிஞர் தொழிலும், இயற்கையாகப் பெற்ற அஞ்சா நெஞ்சமும், இந்தியெதிர்ப்புப் போரில் அவருக்குப் பெரிதும் துணைசெய்தன. அவர் போன்று, அவையடக்கும் அரிமாத் தோற்றமும், சுவை மடுக்கும் வினைநல மாற்றமும்; அழகிய வசிய முகமும், பழகிய வளமை யகமும்; கூரிய வங்கிமீசை முறுக்கும், ஆரிய வன்கட் கூற்று நறுக்கும்; விளங்குரை வெண்கலக் குரலும், விழுமிய பொருள் விளக்குந் திறலும்; காமஞ் செப்பாது கண்டது மொழியும் கட்டாண்மையும், ஏமமுஞ் சாமமும் இன்றமிழ் காக்கும் பற்றாண்மையும்; பரந்த நோக்கும், பாங்கான போக்கும்; ஒருங்கேயுடைய வழக்கறிஞரேனும் தமிழ்ப் பேராசிரியரேனும் பிற தொழிலாரேனும் இன்று தமிழகத்திலும் இப் பாரில் வேறெப் பகுதியிலும் காணவியலுமோ? நாவலர் பாரதியாரைப் பாராட்டுங் கூட்டத்திற்குப் பெரும்புலவரும் இந்தி யெதிர்ப்பவருமான ஒருவரே தலைமை தாங்கல் வேண்டும். அல்லாக்கால் முதலமைச்சரும், அவருமன்றேல் ஒரு வள்ளலாரும் தலைமை தாங்கலாம். முதலமைச்சர் தலைமை தாங்கின், கூட்டம் பெருக்கும்; கொண்டாட்டஞ் சிறக்கும்; கொள்ளும் முடிபுகள் நிறைவேற வழிவகை பிறக்கும். வள்ளலார் தலைமை தாங்கின், கொண்டாட்டச் செலவு முழுவதையும் தாமே ஏற்றுக்கொள்வார். பாராட்டுக் கூட்ட அறிவிப்பு நாடு முழுதும் தலைநகரிற் சிறந்தும் பரவுதல் வேண்டும். புலமையும் இந்தியெதிர்ப்பும் மிக்க புலவரை வரிசையறிந்து பேச்சாளராகக் குறித்த அச்சிட்ட நிகழ்ச்சி நிரலைத் தப்பாது கடைப்பிடித்தல் வேண்டும். பாராட்டு நாள் பொது விடுமுறை நாளாயிருத்தல் வேண்டும். பேச்சாளர் பதின்மரும் மேற்பட்டவருமாயின் பிற்பகல் நான்கு மணிக்கும், இருவர் மூவராயின் மாலை ஆறு மணிக்கும் தொடங்கி 8 மணிக்குள் முடித்துவிடல் வேண்டும். பாரதியார் படத்தொடு கூடிய வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை அச்சிட்டு, அவையோர்க்கு வழங்கலாம். ஆண்டுதொறும் பாராட்டுவிழா நிகழ்த்தலாம். விழாவைச் சிறப்பிக்கும் வேறு வழிவகைகளையும் கையாளலாம். - ``செந்தமிழ்ச் செல்வி'' ஆகத்து 1979 4 பழந்தமிழ் புதுக்கும் பாரதிதாசன் பாவலர் பாரதிதாசன் அவர்கள், பெரும்பாலும் ஆசிரியப் பாவிலும், ஆசிரிய மண்டிலத் (விருத்தத்)திலும், இக்காலத்திற்கும், இந்நாட்டிற்கும் ஏற்றவாறு பொதுமக்கட்கு விளங்கும் எளிய - இனிய - இலக்கண நடையில், சீர்திருத்தக் கொள்கைகளையும், முன்னேற்ற வழிகளையும், உணர்ச்சிக் கருத்துகளையும், எழுச்சிச் செய்திகளையும், அறிவுக் கதிர்களையும், அழகிய சிறு நூல்களாகவும், தீஞ்சுவைப் பாட்டுகளாகவும், இடைவிடாது எழுதி வெளியிட்டுவரும் நாட்டுத் தொண்டு ஒப்பற்றதாகப் போற்றத் தக்கதாம். பண்டைக் காலத்தில் அறிஞர் சிலர் தத்தம் ஊருக்கு மட்டுமன்றித் தமிழ்நாடு முழுமைக்குமே ஆசிரியராக, நூலாலும்-உரையாலும் அறி வுறுத்தினர். இவருள், மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனாரும், மதுரை ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினியரும் சிறந்தவராவர். இவர் போன்றே நம் பாவலரும், புதுச்சேரிக்கு மட்டுமன்று, தமிழ்நாடு முழுமைக் குமே ஆசிரியராவர். இவ் வாசிரியர் இருபாலர்க்கும் தந்த எதிர்பாராத முத்தத்தின் பின், விலை யேறப்பெற்ற பல முத்தங்கள் (முத்துகள்) இவர் வாயினின்று ஒவ்வொன்றாய் வந்துகொண்டே யிருக்கின்றன. இவற்றுள், இருண்ட வீடு, குடும்ப விளக்கு என்னும் ஈர் உரையாணிகளும் ஒவ்வொரு வீட்டிலும், அழகின் சிரிப்பு ஒவ்வொரு மாணவனிடத்தும் இருக்கத்தக்கன. இவற்றுள் முன்னவை நல்வாழ்க்கைக்கும், பின்னது இயற்கை வள்ளலிடம் புலமையும், பாவன்மையும் பெறுவதற்கும் ஆற்றுப்படுப்பன. அழகின் சிரிப்பு என் னும் பெயரே பல சிறந்த கருத்துகளை உள்ளடக்கிய ஒரு சிறு செய்யுளாகும். இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் (குறள். 1040) என்னும் குறளுக்குக் கல்விச் செல்வத்திற்கும் ஏற்ற உரையைக் கொள்வதற்குத் தூண்டுவது அழகின் சிரிப்பாகும். இங்ஙனம், பண்டு செய்யுள் மொழியாயிருந்து, இன்று உரைநடை மொழியாயிருக்கும் தமிழை, முன்பு முத்தமிழாயிருந்து இன்று இயற்றமிழ் அளவாயிருக்கும் தமிழை, ஒருகால் திருந்திய கருத்துகளையே கொண்டிருந்து. இன்று மூடப் பழக்கவழக்கங்களையும் பொய்க்கதை களையுங் கூறுந் தமிழை, மீண்டும் செய்யுள் மொழியாயும், முத்தமிழ் மொழியாயும், செந்நெறி மொழியாயும், மாற்றுவதால் பழந்தமிழ் புதுக்கும் பாரதிதாசன் என்றேன். இவரைச் சிலர் புரட்சிப் பாவலர் என்பர். புரட்சி என்பது கீழ்மேலாய்ப் புரளுவ தாதலாலும், இடைக்காலத்திலிருந்து சீர்கெட்ட தமிழை மீண்டும் தலைக்காலம் போலச் சீர்ப்படுத்துவது நம் பாவலர் தொழிலாதலாலும், பழந்தமிழ் புதுக்க லென்றாலும் புரட்சி என்றாலும் ஒன்றே யென்க. இவர் பலர்க்கும் ஏற்பப் பல பொருள்படுமாறு தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டதே ஒரு புரட்சி என்க. பொதுமக்கட்குரிய அறிவு விளக்க நூல்களைப் பிற்காலம்போல் உரைநடையில் வரையாது முற்காலம்போற் செய்யுளிலே வரைந்தது மற்றுமொரு புரட்சி யென்க. இவரைப் பின்பற்றியே பொதுமக்கட்கு எளிய செய்யுள் நடையில் நூல் யாத்த ஏனோருமுளர். ஆயினும், இவர் என்றும் சிறந்தே நிற்பார் என்பதற்கு, எட்டுணையும் ஐயமில்லை. இப் புரட்சிப் புலவர் நீடு வாழ்ந்து நிலவுலகிற்கு, சிறப்பாக, எம் தமிழ்நாட்டிற்கு, ஒரு பெரும் காரிருள் நீக்கும் கதிரவனாக விளங்குமாறு எல்லாம் வல்ல இறைவன் அருள் மீதூர்வாராக. - ``புரட்சிக் கவிஞர்'' நூல் 1946 5 தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தவப்பெருஞ் சிறப்பியல்புகள் நான் ஏறத்தாழ முப்பதாண்டுகட்கு முன், தவத்திரு குன்றக்குடி அடிகளைத் திருநெல்வேலித் (வீரராகவபுரம்) திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில், தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளையுடன் சென்று கண்டேன். அடிகளின் தோற்றமும் உரையும் அவர்கள் துறவுநிலைக்கேற்ப ஏற்றமாயிருந்தன. அன்றிருந்து அவர்களது தொடர்பு. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு (குறள். 782) பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும் - வரிசையால் வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே தானே சிறியார் தொடர்பு (நாலடி. 125) நளிகடற் றண்சேர்ப்ப நாணிழற் போல விளியுஞ் சிறியவர் கேண்மை - விளிவின்றி அல்கு நிழல்போ லகன்றகன் றோடுமே தொல்புக ழாளர் தொடர்பு (நாலடி. 166) கனைகடற் றண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை நுனியிற் கரும்புதின் றற்றே - நுனிநீக்கித் தூரிற்றின் றன்ன தகைத்தரோ பண்பிலா ஈர மிலாளர் தொடர்பு (நாலடி. 138) என்னுஞ் செய்யுட்கிணங்கத் தொடர்ந்து வளர்ந்தோங்கி வருகிறது. நான் இதுகாறும் அவர்களிடங் கண்ட சிறப்பியல்புகளாவன : செம்பொருட் காட்சி எப்பொருள் எத்தன்மைத்தாயினும் யார்யார்வாய்க் கேட்பினும், அப் பொருளின் மெய்ப்பொருள் காண்பதே அடிகள் இயல்பு. வேத ஆரியர் இந்தியாவிற்குட் கால் வைக்குமுன்னரே, தென்பெருங் கடலில் மூழ்கிய குமரிநாட்டில் தோன்றி முழு வளர்ச்சியடைந்திருந்த தூய செந்தமிழ்ச் சிவநெறியில், கடந்த மூவாயிரம் ஆண்டாகக் கலந்துள்ள பயனற்ற சொற்களையும் கருத்துகளையும் கதைகளையும் கொள்கை களையும் நீக்கித் தூய்தாக்கும் துணிவும், உலகியலினின்றும் மதவியலைப் பிரித்துணராமையும், இறைவழிபாட்டிற் செய்யுஞ் சீர்திருத்தங்களும், உருவ வழிபாட்டிற்குச் சிறப்புக் கொடாமையும், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் உரத்த நம்பிக்கையும், சமயப் பொதுநோக்கும், எல்லா மொழிகளும் மக்கள் மொழிகளே என்னும் மெய்யறிவும், அடிகளின் செம்பொருட் காட்சியாம். சான்றாண்மை சான்றாண்மைக்கு உறுப்பாகிய அன்பு, நாண், ஒப்புரவு, கண் ணோட்டம், வாய்மை என்னும் ஐந்தும் அடிகளிடம் அமைந்துள்ளன. பண்புடைமை இரப்போன் முதற் புரப்போன் வரை அவரவர் மனப்பான்மையும் தகுதியும் அறிந்து, அதற்கேற்ப ஒழுகுதல் பண்புடைமையாகும். பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல் (கலித். 133) என்றார் நல்லந்துவனார். நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (குறள். 469) என்றார் தெய்வப் புலமைத் திருவள்ளுவர். வள்ளன்மை அடிகளின் வள்ளன்மைக்கு அவர்களின் உறுதுணையாற் கல்வி பயின்றவர்கள் வெளியிடும் இச் சிறப்பு மலரே போதிய சான்றாம். கடைக்கழகக் காலத்தில் வாழ்ந்ததனாற் கடையெழு வள்ளல்கள் எனப் பெயர் பெற்றவருள் தலைசிறந்த பாரியின் வள்ளன்மையை, இக்காலத் தார்க்கு எடுத்துக்காட்டும் முகமாக, அடிகள் ஆண்டுதோறும் பறம்பு மலையில் சிறப்பாக நடாத்தி வரும் பாரி கொடைவிழா, சிறு பிள்ளைகளும் கண்ணாரக் கண்டு வியக்கத்தக்க வள்ளன்மைச் செயலாம். அடக்கமுடைமை யானை, ஒட்டகம் முன்செல்ல, தாரையூதிப் பல்லியங் கறங்க, இருபுறத்தும் வெண்கவரி வீச, குடை கொடி முதலிய விருதுகளுடன் சிவிகையேறி ஆரவாரமாகச் செல்லாதும், அக்கமாலையை அளவிற்கு மிஞ்சி அணியாதும், மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன் ஆகுல நீர பிற (குறள். 34) என்னும் குறட்கு இலக்கியமாவதும், காட்சிக் கெளிமையும் கடுஞ் சொல்லின்மையும், அடிகளின் அடக்கமுடைமையைக் காட்டும். அடிகள் தம் பல்வகைத் தொண்டிற்கும் எள்ளளவும் விளம்பரம் நாடாமையும், அவர்களது ஆன்றவிந்தடங்கிய கொள்கைக்குச் சான்றாம்; தமிழ்க் காப்பு இந்தியெதிர்ப்பு, திருக்கோவில் தமிழ் வழிபாடு, தமிழ்த்தொண்டரைப் பொருளுதவியால் ஊக்கல், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி உருவாக்கத்திற்கும் வெளியீட்டிற்கும் தமிழக அரசு போதிய அளவு பொருளுதவுமாறு இடைவிடா முயற்சியை மேற்கொள்ளல், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழைக் கற்பிப்பு வாயிலாக்கச் செய்துவரும் தொண்டு, பொதுமேடைச் சொற்பொழிவுகளில் தமிழர்க்குத் தமிழுணர்ச்சியூட்டுதல் முதலியன அடிகளின் அளவற்ற தமிழார்வத்தையும் தமிழ்க்காப்புத் தொண்டையுங் காட்டும். பறம்புமலைப் பாரி விழாவில், புலவர், பாணர் (இசைவாணர்), கூத்தர் (நடிகர்), பொருநர் முதலிய முத்தமிழ்க் கலைவாணர்க்கு வரிசைக்கேற்பப் பரிசளிப்பதும், திருப்புத்தூர்த் திருக்கோவில் விழாவில் தருமிக்குப் பொற்கிழியளித்தல் என்னும் மரபுபற்றிப் பல்திறப் புலவர்க்கும் கொடை வழங்குவதும், வள்ளன்மையை மட்டுமன்றி, கலைவளர்ச்சி வாயிலாகத் தமிழ் வளர்க்குந் திறனையுந் தெரிவிக்கும். இங்ஙனம் முத்தமிழையும் உண்மையாக வளர்த்தும் முத்தமிழ்க் காவலர் எனும் பட்டம் பெறாமையும் விரும்பாமையும், மறுமையிற் பெரும்பயன் பெறற்கே போலும்! பிறர்க்கென வாழ்கை ஐங்கோவில் வருமானமே யுள்ள குன்றக்குடித் திருமடத்தலைவர், சிறுதொகையே பெற்றுக்கொண்டு, நாடுமுழுதும் அல்லும் பகலும் அலைந்து, தூக்கங் கெடினும், ஊக்கங் கெடாது, நள்ளிரவும் நாலாஞ்சாமமும், பல்வேறு கல்வி நிலையங்களிலும் மன்றங்களிலும் மனைகளிலும், திருக்கோவிலிலும் தெருக்கோடியிலும், சொற்சுவையும் பொருட்சுவையும் நிரம்பிய சொற்பொழிவுகளாற்றிக் கற்றோரும் மற்றோருமாகிய எல்லா மக்களும் எல்லா வகையிலும் திருந்தவும் தெளியவும், முனைந்து முயலவும், முன்னேறி வாழவும் மதவியல் அரசியல் கல்வியியல் பொருளியல் பண்பாட்டியல் முதலிய துறைகளிற் செய்து வரும் பல்திறப் பொதுநலத் தொண்டு, உண்டா லம்மவிவ் வுலகம் (182) என்னும் புறநானூற்றுப் பாட்டையே நினைவுறுத்துகின்றது. மறைமலையடிகள், திரு.வி.க., பெரியார், கோ.து. நாயுடு (G.D. நாயுடு) முதலியோர் இல்லாத காலத்து, அடிகள் நெடுவாழ்வும் தொண்டும் தமிழகத்திற்கு இன்றியமையாதனவாகும். எல்லாம் வல்ல இறைவன், இதன் மேலும் ஒரு நூற்றாண்டு அடிகளை வாழவைப்பதன் மூலம் தமிழ்நாட்டின் மீது தண்ணருள் பொழிக. தமிழ்நாட்டு அரசும் தமிழ்நாட்டுச் சிவனியக் கோயில்களை யெல்லாம் ஆண்டு நடாத்துமாறு கந்தர்புரித் தலைமை மேற்காணியார் (Arch Bishop of Canterbury) போன்ற ஒரு தலைமைப் பதவியில் அமர்த்துக. ``குணமேறு குன்றக் குடியடிகள் எக்கர் மணன்மீறு பன்னெடுநாள் வாழி - கணமேறு தெய்விகப் பேரவை தீந்தமிழாற் பேரின்ப உய்விகத் துண்மை யுரைத்து.'' - தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களது 50ஆம் ஆண்டு விழா மலர் (நாண்மங்கலத் திருவிழா மலர்) 1974 6 தமிழெழுத்து மாற்றம் தன்மானத் தந்தையார் கொள்கையா? ஆரியச் சூழ்ச்சியால் அடிமைப்பட்டு ஆயிரக் கணக்கான ஆண்டுகள் அலமந்துழலும், அருமொழித் தமிழரை விடுவித்து முன்னேற்ற முயன்ற முனைவர் மூவருள் இறுதியரான, பெரியாரின் நூற்றாண்டு விழாவென்று விளம்பிய மட்டில், ஏற்கெனவே இருந்த இடம் தெரியாமல் இருந்தவரும், பெரியாரொடு ஒருமுறையேனும் பேசியறியாதவரும், தன்மான வுணர்வும் தமிழ்ப் புலமையும் தக்கவாறில்லாதவரும், தன்மானப் போர்ப் படைத்தலைவர் போன்றும், தன்னேரில்லாத் தமிழதிகாரி போன்றும், நடித்துக்கொண்டு, தமிழ் உலகப் பொதுமொழியாகவும் தமிழின் ஒன்றிய நாட்டினங்களின் தலைவனாகவும் ஒரே வழி `விடுதலை' யெழுத்தை மேற்கொள்வதே என்று மேடைகளிற் பிதற்றியும், ஓரளவு அதிகாரம் பெற்றுக் குழுக்கள் அமைத்தும் கூட்டங்கள் கூட்டியும், தமிழ்ப் பகைவரும் தமிழறியாத பெருமாளரும் கற்றுக்குட்டிகளுமான தகுதியில்லா மக்களின் கருத்தைத் துணைக்கொண்டும், தம்வயப்பட்ட ஏடுகளிலெல்லாம் தமிழெழுத்தை மாற்றி, உலகில் இதுவரை எவரும் நிலைநாட்டாத தொன்றை நிலைநாட்டி விட்டதாகக் கொட்டமடித்துத் திரிவாராயினர். அரசகோபாலாச்சாரியார் 1937-ல் தமிழ்நாட்டில் கட்டாய இந்திக் கல்வியைப் புகுத்தியதிலிருந்து, நான் இந்தியெதிர்ப்புப்பற்றிப் பெரியா ருடன் தொடர்புகொண்டு இறுதிவரை நெருங்கிப் பழகினேன். அக் கால மெல்லாம், தமிழர் `விடுதலை' யெழுத்தை மேற்கொள்ள வேண்டுமென்று, பெரியார் ஒரு கூட்டத்திலேனுஞ் சொன்னதுமில்லை; ஓர் இதழிலேனும் எழுதினதுமில்லை. எனக்கு முன்பே பெரியாரை யடுத்து அவர் தன்மானக் கொள்கையைக் கடைப்பிடித்து அவருக்கு வலக்கைபோல் துணையா யிருந்துவந்த பர். (Dr.) கி.ஆ.பெ. விசுவநாதம் என்னும் உலக நம்பியாரும், இதற்குச் சான்று பகர்வர். நான் திருச்சிராப்பள்ளியிற் பணியாற்றிய காலத்தில், 1938ஆம் ஆண்டில் பெரியார் ஈரோட்டிலிருந்து எனக் கெழுதியிருந்த 5 பக்கக் கடிதம் மரபெழுத்திலேயே எழுதப்பட்டிருந்தது. நான் சேலம் நகராட்சிக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவனாயிருந்த காலத்தில், 1947ஆம் ஆண்டில், பேரா. தி. வை. சொக்கப்பனாரும், பேரா.பெரியசாமியும் எனக்குச் சிறப்புச் செய்ய ஏற்படுத்தியிருந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பெரியார், தம் கையினால் எனக்கு வழங்கிய வெள்ளிப் பட்டயத்திற் பொறிக்கப்பட்டுள்ள பாராட்டு வாசகம் மரபெழுத்திலேயே உள்ளது. நான் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேலை நீங்கிக் காட்டுப்பாடி விரிவிலிருந்தபோது, நான் வருமானமின்றி யிருந்த நிலைமையறிந்து பெரியார் தாமே என் உறையுள் தேடிவந்து இருநூறு உருபா வழங்கினார். அன்றும், தமிழெழுத்து மாற்றம்பற்றி என்னிடம் ஒன்றும் சொன்னதில்லை. பெரியாருக்கு என்றும் தன்மான இயக்கத்திலன்றித் தமிழ் வளர்ச்சியில் ஈடுபாடு இருந்ததே யில்லை. நான், ஒருகால், அரைக்கால் உருபாக் காசில் இந்தியெழுத்தும் தெலுங்கெழுத்தும் இருந்தபோது தமிழெழுத் தில்லாமை பற்றிக் கிளர்ச்சி செய்யவேண்டுமென்று பெரியாருக் கெழுதினபோது, அவர், ``நான் உங்களைப் போற் பண்டிதனல்லேன். பொதுமக்களிடம் தொண்டு செய்து அவர் மூடப் பழக்கவழக்கங்களைப் போக்குபவன், நீங்களும் உங்களைப்போன்ற பண்டிதருமே சேர்ந்து அக் கிளர்ச்சி செய்யுங்கள்'' என்று மறுமொழி விடுத்துவிட்டார். இதிலிருந்து, தமிழ்மொழியோ எழுத்தோ பற்றி அவருக்குக் கடுகளவும் கவலையிருந்ததில்லை யென்பது வெட்ட வெளிச்சமாகின்றது. அவர் இந்தியை யெதிர்த்ததெல்லாம், பேராயக் கட்சியை யெதிர்ப்பதும் ஆரியச் சூழ்ச்சியைக் கண்டிப்பதும் தமிழ திரவிடர் நல்வாழ்விற்கு வழிவகுப்பதும் குறிக்கோளாகக் கொண்டதே யன்றி வேறன்று. இதை அவர் பல பொதுக் கூட்டங்களிலும் வெளியிட்டுச் சொல்லியிருக்கின்றார். `விடுதலை', `குடியரசு' ஆகிய இதழ்களில் சில எழுத்து வடிவங்களை அவர் மாற்றியது, முற்றும் சிக்கனம் பற்றியதே. பெரியார் சிக்கன வாழ்வு நாடறிந்தது; உலகறிந்தது. தமிழெழுத்து மாற்றம் என்பது தேவையில்லாத ஒரு சிறு செயல். பெரியார் செயற்கரிய பெருஞ்செயல்களைச் செய்தவர். அவர்மீது ஒரு சிறு புன்செயலையேற்றுவது, அவர் பெயருக்கு இழுக்கே யாகும். பெரியாரைப் பின்பற்றல் பெரியார் செய்த பெருஞ்செயல்களும் கொண்டிருந்த அருங் குணங்களும் வருமாறு: 1. பிறவிக்குல வொழிப்பு தமிழ திரவிடர் விடுதலையடைந்து முன்னேற முடியாவாறு, இந்தியக் குலங்கள் தொழில்பற்றாது மொழியும் பெற்றோர் அல்லது முன்னோரும் பற்றியே ஆரியச் சூழ்ச்சியால் வகுக்கப்பட்டுள்ளன. கன்னடியரான நாய்க்கர் தமிழ வெள்ளாளப் பெண்ணை மணந்தது இருமடிப் பிறவிக்குல வொழிப்பாகும். 2. தீண்டாமை விலக்கு `வைக்கம் வீரர்' என்னும் விருதுப் பெயரே இதை விளக்கப் போதுமானது. 3. தன்மானங் காத்தல் தமிழன் தன்னைச் `சூத்திரன்' என்று சொல்லவும் பிராமணன் சொல்லவிடவும் பிராமணனைச் `சாமி' என்று விளிக்கவும், மரக்கறி யூண் வெள்ளாளன் வீட்டிலும் உண்ணாத பிராமணன் உண்டிச்சாலையில் உண்ணவும், கூடாதென்று தடுத்தது தன்மானங் காத்தலாகும். எனக்குத் தெரிந்தவரை பிராமணர் வீட்டிலும் உண்டிச்சாலையிலும் எந் நிலைமையிலும் உண்ணாமையைக் கடைப்பிடித்து வரும் உண்மைத் தன்மானியர், தகடூர்த் (தர்மபுரித்) தமிழ மருத்துவர் அ. செல்லையா ஒருவரே. 4. மடமை யகற்றல் நாளும் புள்ளும் பற்றிய மூடநம்பிக்கை விடுகை, வீண்சடங் கொழிப்பு, திருமணச் சீர்திருத்தம், உருவ வழிபாடு - சிறப்பாக யானைமுகப் பிள்ளையார் வணக்க விலக்கு, தொன்மக் (புராணக்) கதைகளை நம்பாமை, இழிவான கட்டுக்கதை பற்றிய விளக்கணி (தீபாவளி)ப் பண்டிகையைக் கொண்டாடாமை முதலியன பற்றிய விளக்கச் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் மடமை யகற்றலாகும். 5. அஞ்சாத் தொண்டு சிறைத்தண்டனை யடைந்ததும் கட்டாய இந்தியை யெதிர்த்ததும், கல்லெறியுஞ் சாணியெறியும் பட்டும் தொண்டுவிடாமையும் பெரு வாரியான பல்வேறு வகுப்பார் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமையும், அஞ்சாத் தொண்டாம். 6. கடைப்பிடி சிறுநீர் நோய்க்கு அறுவை மருத்துவம் செய்துகொண்டும், நாள்தொறும் இடர்ப்பட்டும், கழிபெரு மூப்புத் தளர்ச்சியுற்றும், இடைவிடாது இறுதிவரை தொண்டிற் படிந்தது கடைப்பிடியாம். 7. தன்னலமின்மை தனக்கென்று பொருளீட்டாது பொதுநலத் தொண்டிற்கென்று தொகுத்தது தன்னலமின்மை. 8. பண்புடைமை மறைமலையடிகள் போலும் அறிஞரை மதித்ததும், பொறுப்பு வாய்ந்த புலவர் ஒருவர் `நாய்க்கர்' என்னும் குலப்பெயரை இருபிறப்பி (hybrid) யாக்கித் தம்மைப் பழித்தபோது திருப்பிப் பழியாது நாகரிகமாய்க் கண்டித்ததும், சங்கராச்சாரியர் வேண்டுகோட் கிணங்கி ஒரு கல்வி நிலையத்தைத் திறந்து வைத்ததும், இன்னோரன்ன பிறவும், பெரியாரின் பண்புடைமையைப் புலப்படுத்தும். 9. உண்மையுடைமை பெரியார் என்றேனும் உண்மையை மறுத்ததாகவும் இல்லாததைச் சொன்னதாகவும், ஒரு குறிப்புமில்லை. 10. பகுத்தறிவூட்டல் கல்வியமைச்சரும் பெரும் பேராசிரியரும் கல்வித்துறை யியக்குந ரும் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், நோபெல் பரிசு பெற்றோரும், உலக ஆராய்ச்சி மன்றத் தலைவரும் போலும், உயர்கல்வியாளர்க்கும் இல்லாத பகுத்தறிவை, எழுதப் படிக்கத் தெரியாத எளிய பொதுமகனுக் கூட்டியது, செயற்கரிய பெருஞ்செயலே. இங்ஙனம் பெரியார் இயலும் செயலும் பல்வகைப்பட்டிருக்கவும், அவற்றுள் ஒன்றேனும் பின்பற்றாது, அவர் கருதாத எழுத்து மாற்றத்தையே மேற்கொள்வார், சாற்றை விட்டுச் சக்கையே பற்றும் பன்னாடை போல்வார். பெரியாரைப் பின்பற்றல் சிறியார்க்கு எளிதன்று. பல்லாயிரவாண்டு பண்டாடு பழநடையாக வழங்கிவரும் தமிழ் மரபெழுத்தை, மறைமலையடிகளும் மாபெரும் புலவர் தலைவர் உ.வே. சாமிநாதையரும் போலும் தமிழதிகாரிகள் விருப்பத்திற்கு மாறாகவும், உலகெங்குமுள்ள தமிழ் நூலகமுடையார்க்கும் நூல் வெளியீட்டாளர்க்கும் பேரிழப்புண்டாகுமாறும், தமிழுக்கு ஒருவகையிலும் நலந்தரா முறையிலும், மாற்றுவதை விளம்பர விருப்பினர் உடனே விட்டொழிவாராக. - ``செந்தமிழ்ச் செல்வி'' மார்ச்சு 1980 7 தமிழ்நாடு ஆளுநர் உயர்திரு கே.கே. சா அவர்கட்குப் பாராட்டு 21-9-1975 அன்று, சென்னையில் நிகழ்ந்த, தமிழ் சமற்கிருத ஏனை யிந்திய மொழிகள் ஆராய்ச்சிக் களரிக் கருத்தரங்குக் கட்டுரைகளைப் படித்தேன். எத்துறையிலேனும், சிறப்பாகத் தமிழ்த்துறையில், ஆராய்ச்சி செய் வதற்கு, மதிநுட்பம், பரந்த கல்வி, நடுநிலை, அஞ்சாமை, தன்னல மின்மை, மெய்யறியவா என்ற ஆறு திறங்களும் இன்றியமையாது வேண்டும். கருத் தரங்கிற் கட்டுரை படித்தவருள், அல்லது உரை நிகழ்த்திய வருள் தமிழ்நாடு ஆளுநரும், ஓய்வுபெற்ற சென்னை உயரற மன்றத் தலைமை நடுவாளர் உயர்திரு. பி.வி. ராஜமன்னாருமே, இவ் வறு திறங்களையும் உடையவராகத் தெரிகின்றது. தமிழ் உலகமுதல் உயர்தனிச் செம்மொழி என்பது, ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட உண்மை. (Beatertrack). ``ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்'' என்பது பேரறிஞர் ஒருவர் பாடிய பழந் தனிப்பா. கால்டுவெலார் கிறித்தவ சமயக் குரவராதலால், ஏதேன் தோட்டக் கதையை எழுத்துப்படி நம்பியவர். அதனால், தமிழரின் முன்னோர் வடமேலை நாட்டினின்று வந்தவர் என்னும் கொள்கையர். அவர் காலத்தில், தொல்காப்பியமும், பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் என்னும் கடைக் கழகப் பாட்டுகளும் பனுவல்களும், சிலப்பதிகாரம் போன்ற கழகமருவிய வனப்புகளும், தலைமைத் தமிழ்ப் புலவர்க்குந் தெரியாது மறைந்து கிடந்தன. அவர்க்கு வழிகாட்ட மறைமலையடிகள் போலும் தமிழ்ப் புலவரும் ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும், அவர் நடுநிலையாகத் தமிழை ஆழ்ந்து ஆராய்ந்ததனால், அம் மொழி ஆரியத்திற்கு (சமற் கிருதத்திற்கு) முந்திய தென்றும், உலக முதன்மொழிக்கு மிக நெருங்கிய தென்றும் அ இ உ என்னும் தமிழ் முச்சுட்டே ஆரிய மொழிகளிலுள்ள சுட்டுச் சொற்கட்கெல்லாம் மூலமென்றும், திட்டவட்டமாகக் கூறியுள்ளார். யாழ்ப்பாண ஞானப்பிரகாச அடிகள், 1938-ல் தாம் வெளியிட்ட சொற்பிறப்பு- ஒப்பியல் தமிழ் அகராதி முகவுரையில், ``But It was only some ten years ago that the present writer had the good fortune of stumbling on the fact that DR and I E words were actually derived from the same primitive roots,'' என்று கூறியுள்ளார். இந்திய வரலாற்றுத் தந்தையான வின்சென்று சிமிது (Vinsent Smith), தம் `முந்திய இந்தியா' (Early India) என்னும் வரலாற்று நூலில், மனோன்மணிய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை கருத்தை முற்றும் ஒப்புக் கொண்டு, இந்திய வரலாற்றைத் தெற்கினின்றே தொடங்க வேண்டுமென்று நெறியிட்டுச் சென்றார். அதைத் தழுவியே, பி.தி. சீனிவாசையங்கார் `இந்தியக் கற்காலம்' (Stone Age in India), `ஆரிய முன்னைத் தமிழப் பண்பாடு' (Pre-Aryan Tamil Culture), `தமிழர் வரலாறு' (History of the Tamils) முதலிய நூல்களும், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் `தமிழர் தோற்றமும் பரவலும் (Origin and Spread of the Tamils), `வரலாற்று முன்னைத் தென்னிந்தியா' (Pre-Historic South India) என்ற நூல்களும் வெற்றிபெற எழுதிப் போந்தனர். கால்டுவெலார்க்குப் பிற்பட்ட மேலை மொழிநூலாரெல்லாம், பேரனைப் பாட்டனாகப் பிறழவுணர்ந்து வரலாறு தீட்டுவார் போல், சமற்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு மொழியாராய்ச்சி செய்ததனால், முட்டுப்பட்டு மதிமருண்டு, ``எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே,'' என்னும் (தொல். பெயர்.1) தமிழ் நெறிமுறைக்கு நேர்மாறாக, `எல்லா மொழியும் இடுகுறித் தொகுதியே,' என்று தம் இரு கண்ணையும் இறுகக் கட்டிக்கொண்டு, ஓர் உயிரியின் தலையும் வாலும் நீக்கி முண்டத்தை மட்டும் வரைந்தாற்போன்று, முன்பின் வரலாற்றை முற்றும் புறக்கணித்து மொழி களின் இற்றை நிலையை மட்டும் எடுத்துக் கூறும் `வண்ணனை மொழி நூலை' (Descriptive Linguistics) வளர்த்து, மாணவரையும் ஆசிரியரையும் மயக்கி வருகின்றனர். வண்ணனை, ஒப்பியல், வரலாறு ஆகிய மூவியல் களையும் ஒருங்கே கொண்டதே மொழிநூல். `வண்ணனை மொழிநூல்' இலக்கண நூலின் ஒரு கூறேயன்றி, மொழி நூலோ முழு நூலோ அன்று. அவர் கூறும் வரலாற்று மொழிநூல் இலக் கியத்தை அடிப்படையாகக்கொண்டதே யன்றி, மொழியை அடிப்படை யாகக் கொண்டதன்று. மொழி இலக்கியத்திற்கு முந்தியது. இலக்கியத்திற்கும் பிந்தியது இலக்கணம். வெள்ளையர் கூறுவதெல்லாம் விழுமிய அறிவியலன்று. ஒரு மொழியின் இலக்கியத்தை, (அம் மொழியைத் தாய் மொழியாகக் கொள்ளாத) பிறமொழியாளரும் கற்று முழுத்தேர்ச்சி பெறலாம். ஆயின், அம் மொழியில் முழுப்புலமை பெறுவது குதிரைக் கொம்பு. தமிழ் குமரிநாட்டில் தோன்றிய, மிகப் பழைமையான, வரலாற்றிற் கெட்டாத உலக முதன்மொழியாதலின், அதை ஆழ்ந்து ஆராய்ந்து மூலங் காண்பது, தமிழ்ப் பெரும்புலவர்க்கும் அரிதாகும். தமிழையும் திராவிட மொழிகளையும் இருபத்தொன்றென்று கணக்கிட்டு, ஒப்பியல் அகரமுதலி தொகுத்துள்ள பேரா. பரோவும், பேரா. எமனோவும், ஓரளவு சொற்களைத் தொகுத்தவரேயன்றி அவற்றின் மூலத்தை அல்லது வேர்ப்பொருளைக் கண்டவரல்லர். ஆதலால், அவர் திரவிட அகரமுதலி ஒப்பியல் அகர முதலியேயன்றிச் சொற்பிறப்பியல் அகர முதலியன்று. மேலும், அது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியை (Tamil Lexicon) அடிப்படையாகக் கொண்டதனால் வழுவுற்றது மாகும். உலகில் முதன்முதல் தோன்றிய தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கு அல்லது நெடுங்கணக்கு) தனியொலியன்களைக் கொண்டதேயன்றி, ஆங்கில வண்ணமாலைபோல் ஓரொலிக்குப் பலவரியும் ஒருவரிக்குப் பல வொலியும் கொண்ட குழறுபடைத் தொகுதியன்று. சென்ற நூற்றாண்டிறுதி யில் ஒலியன்களைக் கண்ட மேலை மொழிநூலார், தமிழருக்கு ஒலியன்களைக் கற்பிக்க வந்தது, கொற்றெருவில் ஊசி விற்பதே. மேலை மொழிநூலாரின் நூல்களைப் படித்தமட்டில், ஒருவர் தம்மை மொழியாராய்ச்சியாளராகக் கருதிக்கொள்வது அறியாமையின்பாற்பட்டதே. படிப்பு வேறு; ஆராய்ச்சி வேறு. படிப்பிற்கும் ஆராய்ச்சிக்கும் உள்ள வேற்றுமை, கடற்கரையில் முத்துச்சிப்பிகளைக் காண்பதற்கும் கடலுள் மூழ்கி அவற்றை எடுத்துக்கொண்டு வருவதற்கும் உள்ள வேற்றுமையாகும். பல்லாண்டு பொறுமையுடன் பாடுபட்டுச் செய்ய வேண்டிய மொழி யாராய்ச்சியை, ஒன்பான் கிழமை மொழிநூற் பள்ளியிற் பெற்றுவிட முடியாது. இனம், மதம், மொழி, நாடு ஆகிய நான்கும் எத்துணைப் பேரறிஞர்க் கும் வெறி அல்லது பெரும் பற்று ஊட்டக்கூடிய நெருங்கிய தொடர்பு களாகும். தமிழ்நாட்டுப் பிராமணர், தமிழர் துணைகொண்டு தமிழால் வாழ்ந்தும், தமிழரைத் தமக்கும் தமிழைச் சமற்கிருதத்திற்கும் என்றும் அடிப்படுத்தியே வைத்திருக்க வேண்டுமென்று திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர். இந் நன்றிக்கேடு இனப்போரைத்தான் வளர்க்கும். கிரேக்கத் திற்கு நெருங்கியதாயிருந்து வழக்கற்றுப்போன கீழையாரிய மொழியும், வடநாட்டுப் பண்டை வட்டார மொழிகளாகிய பைசாசி, சூரசேனி, மாகதி என்னும் முப்பிராகிருதங்களும் கலந்ததே வேதமொழி யாகும். அவ் வேதமொழியுந் தமிழுங் கலந்ததே, சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கை யான இலக்கிய வகைமொழி (Semi-artificial literary dialect) யாகும். பிராகிருதம் முந்திச் செய்யப்பட்டது; சமற்கிருதம் (சங்கிருதம்) கலந்து செய்யப்பட்டது. இவ் வியல்பை அவற்றின் பெயர்களே தெரிவிக்கும். சமற்கிருதம் ஒருகாலும் பேசப்பட்ட மொழியன்று. இனியேனும் பேசப்படும் மொழியுமன்று. புல்லுருவியும் உண்ணியும்போல், வழக்கு மொழிகளைச் சார்ந்தே அது வழங்க முடியும். தொடர்பில்லாத் தனிமொழிகளை வரலாற்று முறையிலும், தொடர்புள்ள இனமொழிகளைக் கொடிவழி முறையிலும், (Geneological method) ஆராய்வதே அறிவியல் முறைப்பட்டதாகும். அம் முறையில் ஆராயின், சமற்கிருதம் தேவமொழி யென்றும் பிராமணர் நிலத்தேவ ரென்றும் கூறும் ஈராரிய (நூற்) கூற்றுகளின் ஏமாற்றும் வெட்டவெளியாகி விடுமென்றே பிராமணரும் அவரடியாரும் வண்ணனை மொழிநூலை ஏற்றுப் போற்றிவருகின்றனர். பிராமணர் பெரும்பாலும் தமிழுக்கு மாறாயிருப்பதால், அவரைக் கொண்டு தமிழை ஆராய்வது, பாலுக்குப் பூனையையும், ஆட்டுக்கிடைக்கு ஓநாயையும் காவல் வைப்பது போன்றதே யாகும். (To set the fox to keep the geese.) தென்மொழி வடமொழிப் பிணக்கைத் தீர்க்க அவரை நடுவராக அமர்த்துவது ஆட்டுக் குட்டிக்கும் நரிக்கும் இடைப்பட்ட வழக்கைத் தீர்க்க, ஓர் ஓரியை அமர்த்துவது போன்றதே (A fox should not be of the jury at a goose's trial) தமிழர் பிராமணருக்குப் பிறப்பால் தாழ்ந்தவரென்று கடந்த மூவாயிரம் ஆண்டாக ஆரிய நூல்கள் பறையறைந்து வந்ததனாலும், தமிழ மூவேந்தரும் அதை ஏற்று ஆட்சிக்குக் கொண்டுவந்தமையாலும், ``பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்'' (குறள். 972) என்று திருவள்ளுவர் பாடி ஈராயிரம் ஆண்டான பின்பும்; ஆங்கிலர் நடுநிலையாட்சியும், ஆங்கில அறிவியற் கல்வியும் ஒன்றரை நூற்றாண்டும், நயன்மைக் கட்சியின் (Justice party) திரவிடர் முன்னேற்றத் தொண்டும், மறைமலையடிகளின் தனித்தமிழ்த் தொண்டும் கால் நூற்றாண்டும், பெரியாரின் பகுத்தறிவுத் தொண்டு அரை நூற்றாண்டும், நடைபெற்ற பின்பும்; பகுத்தறிவு, தன்மானம், நெஞ்சுரம் ஆகிய மூவகக் கரணவியல்பும், பேராசிரியர் உட்பட இற்றைத் தமிழருள் நூற்று மேனி தொண்ணூற்றுவர்க்கு இல்லவே யில்லை. எல்லா நாடுகளிலும் நாட்டையும் மொழியையும் காட்டிக் கொடுக்கும் இரண்டகர் இருக்கவே யிருக்கின்றனர். ஆயின், அவரின் வெற்றித் தொகை தமிழ்நாட்டிற்கே யுரிய தனிச்சிறப்பாகும். அகக்கரண வலிமையிழந்த அடிமையர்க்குத் தமிழாராய்ச்சி செய்யுந் தகுதியில்லை. இந் நிலையில், குசராத்தியரான தமிழ்நாடு ஆளுநர் பெருந்தகை திரு. கே.கே.சா அவர்கள் தம் பல்வேறு பணிகட்கிடையே தமிழைப் பல்லாண்டு பற்றொடு கற்றாய்ந்து, தமிழ் ஆரியத்திற்கு நெருங்கியதென்றும், சமற்கிருதம் தமிழை வளம்படுத்தியிருப்பினும் தமிழினின்றே தோன்றிய தென்றும், நடுநிலையாகவும் துணிந்தும் கூறியும் எழுதியும் வருவது, ``உடன்பிறந்தார் சுற்றத்தா ரென்றிருக்க வேண்டாம் உடன்பிறந்தே கொல்லும் `வியாதி'-உடன்பிறவா மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும் ஆமருந்து போல்வாரு முண்டு'' என்னும் ஔவையார் ஒருவர் கூற்றையே நினைவுறுத்துகின்றது. இதுவரை எந்த ஆளுநரும் இத்தகைய மொழியாராய்ச்சியோ தமிழ்ப்பணியோ செய்ததில்லை. (வெண்பாவில் `வியாதி' என்பது `பிணிகள்' என்றிருப்பதே பொருத்த மாகும்.) குச்சரம் (Gujarat) ஒரு காலத்தில் ஐந்திரவிட (பஞ்ச திராவிட) நாடுகளில் ஒன்றாகக் கொள்ளப்பட்டதேனும், இற்றை நிலையில் அஃது ஓர் ஆரிய நாடாகவே கருதப்படுகின்றது. ஆதலால், ஆளுநர் அவர்கள் தமிழிற் பற்று வைக்க எவ்வகை இயற்கைத் தொடர்புமில்லை. ஆகவே, உண்மைத் தமிழர் அனைவரும், உடனே தனிப்பட்ட முறையிலோ, கழக மன்றச் சார்பிலோ, ஆளுநர்க்குப் பாராட்டு விடுப்ப துடன், கலைஞர் முதல்வர் அவர்கட்கு, தமிழ் சமற்கிருத ஏனையிந்திய மொழிகள் ஆராய்ச்சி முடியும்வரை, தமிழ்நாட்டிலேயே ஆளுநர் அவர்களை இருத்திக்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தலும் வேண்டும். சிறப்பாக, உலகத் தமிழ்க்கழகக் கிளைகளெல்லாம் இதை உடனே நிறைவேற்றுதல் வேண்டும். இது தமிழுக்கு உயிர்நாடியான செய்தி என்பதை உணர்ந்துகொள்க. தமிழ்நாட்டின் உச்சநிலை அதிகாரியான ஓர் அயல்நாட்டார் இங்ஙனம் தமிழைக் காக்க வந்தது, இறைவன் பேரருள் என்றே துணிந்து வழுத்துக. - ``செந்தமிழ்ச் செல்வி'' அகுதோவர் 1975 8 என் தமிழ்த்தொண்டு இயன்றது எங்ஙனம்? நான் வடார்க்காடு மாவட்ட ஆம்பூரில் மிசௌரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய (M.E.L.M) நடுநிலைப் பள்ளியிற் படிப்பு முடித்த பின், நெல்லை மாவட்டப் பாளையங்கோட்டையில் திருச்சவை விடையூழியக் கூட்டரவு (C.M.S) உயர்நிலைப் பள்ளியிற் பள்ளியிறுதிக் கடவைக்குச் சேர்ந்து, 4ஆம் படிவத்தில் பூதநூல் உடல்நூல் நிலைத்திணை நூல் (Botany) தொகுதியையும், 5ஆம் படிவத்தில் சுருக்கெழுத்து தட்டச்சு கணக்கு வைப்புத் (Book-keeping) தொகுதியையும், 6ஆம் படிவத்தில் வரலாறு தமிழ்த் தொகுதியையும், சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தேன். அன்று ஆங்கிலப் பற்றாளனாகவும் பேச்சாளனாகவும் மாணவர் (ஆங்கில) இலக்கிய மன்றச் செயலாளனாகவும் இருந்ததனால், ஆங்கில இலக் கியத்தைக் கரை காணவும், ஆக்கசுப்போர்டு (Oxford) என்னும் எருதந் துறை யிற் பணி கொள்ளவும் விரும்பினேனாயினும்; இறுதியில் தமிழ் கற்றதினாலும், இசைப்பாட்டும் செய்யுளும் இயற்றி வந்ததனாலும், இசைத் தமிழ்ப் பித்தனானதனாலும் நான் அறியாவாறு இறைவன் என் மனப் பாங்கை மாற்றியதனாலும், நான் கற்ற ஆம்பூர்ப் பள்ளியிலேயே, அது உயர்நிலைப்பள்ளியாக வளர்ச்சியுற்றிருந்தபோது, உதவித் தமிழாசிரியனாக 1921ஆம் ஆண்டில் அமர நேர்ந்தது. அதன்பின், அப் பதவிக்கும் தலைமைத் தமிழாசிரியப் பதவிக்கும் முழுத் தகுதி பெறுமாறு, 1924ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வெழுதித் தேறினேன். அதனால் எழுந்த செருக்கினாலும் தமிழ்வெறியினாலும், ஆங்கிலத்தை அறவே புறக்கணித்து நான் ஆங்கிலம் பேசக் கூடாதென்றும் பிறர் பேசின் செவி மடுக்கக் கூடா தென்றும், சூளிட்டுக்கொண்டேன். அம் மயக்குப் பத்தாண்டு தொடர்ந்தது. அதனால், தமிழாராய்ச்சியில் ஆழ முழுகித் தமிழின் அடிமட்டத்தைக் கண்டேனாயினும், ஆங்கிலப் பேச்சாற்றலை இழந்து விட்டதனால், ஆங்கிலப் பட்டம் பெறும் வரை கல்லூரியுட் கால்வைக்க முடியாது போயிற்று. அதனாற் பதவியுயர்வும் பொருளியல் முன்னேற்றமும் இல்லாதுபோயின. 1938-ல் நான் திருச்சிராப்பள்ளிப் புத்தூர் ஈபர் மேற்காணியார் (Bishop Heber) உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியனாக இருந்தபோது, திரு (C) அரசகோபாலாச்சாரியார் தமிழ்நாட்டு முதலமைச்ச ராகி, இருநூறு உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாகப் புகுத்தினார். உடனே தமிழர் எதிர்ப்பு எழுந்தது. இந்தி புகுத்தப்பட்ட பள்ளி கட்கு முன் மறியல் செய்த தமிழ்த்தொண்டர் சிறையிலிடப்பட்டனர். பெரியாரும் அதற்காளாயினார். முறைப்பட்ட தமிழ்க்காப்பு வகுப்பு வேற்றுமைக் கிளர்ச்சியாகத் திரிக்கப்பட்டது. சிறைத் தண்டனையுற்ற தமிழ்த்தொண்டரின் தற்காப்பிற்காக `ஒப்பியன் மொழிநூல் முதற் புத்தகம்-முதற் பாகம்' என்னும் நூலை எழுதினேன். ஆயின், அதனை வெளியிடத் தமிழ்ச் செல்வரும் தமிழ்க் கட்சித் தலைவரும் முன்வரவில்லை; சிறு தொகையும் உதவவில்லை. அதனால், என் அடங்காத் தமிழ்ப்பற்றும் மடங்காத் தன்மானமும், என் கைப்பொருள்கொண்டு அதை வெளியிட்டு ஓராயிரம் ரூபா இழக்கச் செய்தன. அங்ஙனந் தாங்கொணாச் சூடு கண்ட தினால் அதன்பின் என் சொந்தச் செலவில் எத்தகை நூலையும் வெளியிட மிகவும் அஞ்சினேன். துணிந்து வெளியிடப் பொருளும் என்னிடமில்லை. அந் நிலையில், இலக்கணம், சொல்லாராய்ச்சி, மொழியாராய்ச்சி, அரசியல், வரலாறு, விளையாட்டு முதலிய இலக்கியப் பொருள் பற்றியன வும், புலமக்களன்றிப் பொதுமக்கள் வாங்காதனவும், விரைந்து விலை யாகாதனவும், ஆரிய வெறியர்க்கு மாறானவும், வெளியீட்டிற்குப் பெருஞ் செலவு செய்ய வேண்டியனவும், சிறியவற்றோடு பெரியனவுமான இயற் றமிழ் இலக்கணம், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், திரவிடத் தாய், சுட்டுவிளக்கம், முதற்றாய் மொழி, பழந்தமிழாட்சி, மாணவர் உயர்தரக் கட்டுரையிலக்கணம் (2 பாகம்) என்னும் எண்ணூல்களொடு, நான் ஏற்கெனவே வெளியிட்ட கட்டுரை வரைவியல் என்னும் நூலையும், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சி மேலாளரான தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளை அவர்கள் வார முறை யில் (Royalty System) ஒவ்வொன்றாக வெளியிட்டு, விற்பு விலையில் நூற்றுமேனி 15 விழுக்காடு உரிமைத் தொகையும் ஆண்டிற் கிருமுறை கணித்து ஒழுங்காக அனுப்பிவந்திருக்கின்றார்கள். இதனால், நான் ஒருபோதும் வெளியிட்டிருக்க முடியாத பல அரிய நூல்கள் வெளிவந்து என் பெயர் உண்ணாடும் வெளிநாடும் பரவியதுடன், என் தமிழ்த்தொண் டும் பன் மடங்கு சிறந்து வந்திருக்கின்றது. அவர்கள் ஒப்பந்தப்படி விடுத்து வந்த அரையாட்டைத் தொகை, என் குறைந்த சம்பளக் காலத்தும் வேலை யில்லாக் காலத்தும் பெரிதும் உதவியதென்பதை நான் சொல்ல வேண்டுவ தில்லை. அதோடு, அவ்வப்போது நான் `செந் தமிழ்ச் செல்வி'க்கு, விடுத்த வேர்ச்சொல் பற்றிய என் உரிமைக் கட்டுரைகட்கும், அவர்கள் அளித்து வந்த அன்பளிப்புத் தொகை எனக்குப் பேருதவியாயிருந்த தென்பதைச் சொல்லாமலிருத்தற்கில்லை. இனி அவர்கள் என் சொந்த வெளியீடான தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு, இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழி நூலின் வழுவியல், திருக்குறள் தமிழ் மரபுரை என்னும் நூல்கள் அச்சானபோதும், எனக்கு மறைமலையடிகள் நூல்நிலையத்தில் தங்க இடந்தந்தும், இறுதிப் படிவ மெய்ப்புகளையெல்லாம் மூலத்துடன் ஒப்புநோக்கிப் பொறுமை யாகவும் செவ்வையாகவும் திருத்திக் கொடுத்தும், அச்சானவுடன் அழகாகக் குறித்த காலத்திற்குள் கட்டடம் செய்வித்தும், அனுப்பச் சொன்ன இடங்கட்கெல்லாம் தப்பாது அனுப்புவித்தும் வேண்டும்போதெல்லாம் வேண்டிய அளவு கடன் தந்துதவியும், பல்வேறு வகையிற் செய்துவந்த உதவியும் வேளாண்மையும் முற்றச் சொல்லுந் திறத்தவல்ல. அவற்றுட் சிறப்பாக, அண்மையில் வெளிவந்த திருக்குறள் தமிழ் மரபுரைக்கு அவர்கள் திருத்தம், அச்சீடு, கட்டடம், விடுக்கை, கடன் கொடுப்பு ஆகிய ஐவகையிற் செய்த அரும்பேருதவிக்குத் தமிழுல கனைத்தும் என்றும் கடப்பாடுடையதாகும். தங்கள் பல்துறைப் பணிகட் கிடையே இறுதிப் பதின் படிவங்களையும் மெய்ப்புத் திருத்தியதுடன், ஈற்றிரு படிவங்களைத் தங்கள் சொந்தப் பணியாள்களைக் கொண்டும் அடுக்குவித்து, ஒரு கிழமை வினையை ஒருநாளுக்குள் முடித்துப் பறம்புக் குடி உலகத் தமிழ்க்கழகத் திருவள்ளுவர் ஈராயிர ஆண்டு விழாவிற்கு நூறு படிகள் விடுத்துதவியது ஓரளவு இறும்பூதுச் செயலேயாகும். சுருங்கச் சொல்லின், 1968ஆம் ஆண்டு, நவம்பர்த் திங்கள் முதற் பக்கல் பாரி அச்சகத்தில் அச்சிடக் கொடுத்த என் திருக்குறள் தமிழ் மரபுரை 1969 திசம்பர் 24ஆம் பக்கல் வெளிவரச் செய்தவர்கள் திரு. வ. சுப்பையாப் பிள்ளை அவர்களே. அவர்கள் தலையிட்டிராவிடின், அவ் வுரை குறைந்த பக்கம் ஆறு மாதம் பொறுத்தே வெளிவந்திருக்கும். அதனால், எனக்குப் பெரும் பொருளிழப்பும் நேர்ந்திருக்கும். இனி, அண்மையில் நான் என் வலக்கண் படல அறுவை செய்து கொண்டபோது, இருகிழமை படுக்கையும் உணவும் மருந்தும் விடுத்தும் ஊர்தியனுப்பியும் உதவியதை ஒருபோதும் மறவேன். என் நூல் வெளியீட்டிற்கு என் உடல் நலமும் இன்றியமையாததாதலின், இதையும் இங்கே கூற வேண்டியதாயிற்று. இங்ஙனம் பலவகையிலும் என் தமிழ்த்தொண்டை இயல்வித்து, மும்மொழிப் புலமை செம்மையிற் பெற்ற நிறைபுல முடியாம் மறைமலை யடிகளும் என்னை உளமுவந்து பாராட்டுமாறு செய்த திரு. வ. சுப்பையாப் பிள்ளை அவர்கட்கு நான் செய்யக்கூடிய கைம்மாறு, உலகத் தமிழ்க்கழக உறுப்பினரையும் ஏனைத் தமிழன்பரையும், என்றும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடுகளையே வாங்கியும் வாங்குவித்தும், அவர்கள் வெளியீட்டுக் கலை வெற்றியை வியந்தும் நயந்தும், இன்னும் கழி பல்லாண்டு கட்டுடம்புடன் வாழ்ந்து அவர்கள் தங்கள் செந்தமிழ்த் தொண்டைத் தொடர்ந்து செய்யுமாறு ஊக்கிவர வேண்டுமென்று, ஆர்வத்துடன் வேண்டிக்கொள்வதேயன்றி வேறன்று. சைவசித் தாந்தநூல் சார்பதிப்ப கம்வாழி தெய்வத் திருவள் ளுவம்வாழி - செய்வெற்றச் சுப்பையா வாழி சொரிமுகில் நீடூழி தப்பாது வாழி தமிழ். - ``செந்தமிழ்ச் செல்வி'' சனவரி 1970 செய் - செயல். வெற்றம் - வெற்றி. 9 ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு! அடிப்படை எவர்பட்ட அரும்பாடு? ``வையம் ஈன்றதொல் மக்கள் உளத்தினைக் கையி னாலுரை காலம் இரிந்திடப் பைய நாவை அசைத்த பழந்தமிழ் ஐயை தாள்தலை கொண்டு பணிகுவாம்'' உலகமுதல் உயர்தனிச் செம்மொழியும் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமான குமரித்தமிழ்; தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு ம. கோ. இராமச்சந்திரன் என்னும் அழகமதியார், இதுவரை இத்தகைய மாநாடு இம் மாநிலத்தில் எம் மொழிக்கும் எங்கும் நடந்ததேயில்லை யென்று எவரும் வியக்குமாறு, அடுத்த ஆண்டுத் தொடக் கத்தில் மாடமதுரையில் மாபெருஞ் சிறப்பாக நடத்தவிருக்கும் உலகத் தமிழ் மாநாட்டால், மாட்சிமைப்படவிருப்பது மட்டில்லா மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சியே. ஆயினும், மூவாயிரம் ஆண்டாக வரலாறு முற்றும் மறையுண்டும், அடிப்படை முதனூலனைத்தும் வாரிகளாலும் ஆரியராலும் அழியுண்டும், வழிபாட்டிற்குத் தகா மொழியெனத் தள்ளுண்டும், இழிந்தோன் மொழி யெனப் பழியுண்டும், வரவரச் சொல் வழக்கொழிந்து வறுமையுண்டும், தலைமைப் புலவர்க்கும் கழக (சங்க) நூல் தெரியாது கரவுண்டும், ஐயெழுத்து மொழியென்றும் ஆரிய வழிமொழியென்றும் வையாபுரிகளால் வசை யுண்டும், இரங்கத்தக்க நிலையிற் கிடந்த இம் மொழி, இன்று இத்தகைய பெருமையை மீண்டும் பெறுதற்குத் தக்க காரணங்கள் இருத்தல் வேண்டும். கடைக்கழகக் காலத்தில், பிராமணன் நிலத்தேவன் என்றும், அவன் முன்னோர் மொழியுடன் வடநாட்டுப் பிராகிருதங் கலந்த வேதமொழியும், அதனொடு தமிழ் கலந்த சமற்கிருதம் என்னும் உலகியல் இலக்கிய மொழியும், தேவமொழியென்றும், இரு நச்சுக் கருத்துகள் மூவேந்தர் உள்ளத்திற் பசுமரத் தாணிபோற் பதிக்கப்பட்டு, ஆரியம் தமிழகத்தில் வேரூன்றியிருந்தபோதே, நக்கீரர் என்னும் வேளாளப் பிராமணர் ``ஆரியம் நன்று; தமிழ் தீது'' என வுரைத்த குயக்கொண்டானைச் சாவித்தும் உயிர்ப்பித்தும், தென்மொழியே தேவமொழியென்று வலியுறுத்தினார். கி.பி. 7ஆம் நூற்றாண்டிற்கும் 9ஆம் நூற்றாண்டிற்கும் இடையில், தேவாரமூவரும் மாணிக்கவாசகரும் பன்னீராழ்வாரும் திருப்பாடல் களால் தமிழின் தெய்வத் தன்மையை நிலைநாட்டினர். 19ஆம் நூற்றாண்டில், ஆறுமுக நாவலர் தில்லையிலும் யாழ்ப் பாணத்திலும் கல்லூரிகள் நிறுவியும்; சென்னையில் ஓர் அச்சகம் அமைத்துப் பரிமேலழகருரை, திருக்கோவையுரை, நன்னூற் காண்டிகை, தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் முதலிய சிறந்த நூல்களை அச்சிட்டும்; பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் முதலிய சிறந்த தொன்மங்கட்கு உரைநடை வரைந்தும்; சிறுவர்க்கேற்ற பாடப் பொத்தகங்கள் இயற்றியும், இலங்கையிலும் தமிழகத்திலும் தமிழுக்கும் சிவநெறிக்கும் சிறந்த தொண்டாற்றினார். கால்டுவெல் மேற்காணியார் தம் திரவிட ஒப்பியல் இலக்கணத்தி னாலும், போப்பையர் திருக்குறள் நாலடியார் திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பினாலும், தமிழின் பெருமையை ஒல்லும் வகையில் உலகறியச் செய்தனர். இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில், பாலவநத்தம் வேள் பாண்டித் துரைத் தேவர், `மதுரைத் தமிழ்ச்சங்கம்' நிறுவியும், அரிய கட்டுரைகளைக் கொண்ட `செந்தமிழ்' என்னும் மாதிகை நடாத்தியும், முந்நிலைப் பண்டிதத் தேர்வுகட்குரிய பாடச்சாலை யேற்படுத்தியும், ஓர் அச்சகம் அமைத்து எழுபது அரிய நூல்களை வெளியிட்டு விற்பனை செய்தும், நல்ல தமிழ்த்தொண்டு செய்தார். அச் சங்கத்தில் தலைமையாயிருந்த பிராமணப் புலவரின் வடமொழிப் பற்றினால் நேர்ந்த சில தீங்குகள், பாண்டித்துரைத் தேவரையும் அவர் பின்னோரையும் கடுகளவுஞ் சாரா. 1912ஆம் ஆண்டில், தஞ்சைத் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை, `கரந்தைத் தமிழ்ச்சங்கம்' தோற்றுவித்தும், தமிழ்ப்பொழில் என்னும் மாதிகை நடாத்தியும், தமிழ்ப் புலவர் கல்லூரி நிறுவியும், சில சிறந்த ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டும், 1925 முதல் தமிழ்ப்பொழில் என்னும் திங்களிதழைத் தொடர்ந்து வெளியிட்டும் இயன்றவரை தமிழ்த் தூய்மை போற்றியும், இந்தித் திணிப்பை வன்மையாயெதிர்த்தும், சிறந்த தமிழ்ப்பணி யாற்றினார். அவர் தொடங்கிய நற்பணிகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. சி.வை. தாமோதரம் பிள்ளையும் பவானந்தம் பிள்ளையும் சிற்சில அரும்பெரு நூல்களை வெளியிட்டனர். பெரும் பேராசிரியர் தென்கலைச் செல்வர் பண்டாரகர் உ.வே. சாமிநாதையர் நூற்பதிப்புத் துறையிற் பெரும்பெயர் பெற்ற மறக்கொணாத் தனிப்பெரும் புலவராவர். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுள் ஐந்தும், பெருவனப்பு (பெருங்காவியம்) நான்கும், பனுவல்கள் (பிரபந்தங்கள்), தொன்மங்கள் (புராணங்கள்), இலக்கண நூல்கள், கட்டுரைத் தொகுதிகள், வாழ்க்கை வரலாறுகள் முதலியன பற்பலவும், பெரும் புலவர்க்கும் பயன் படும் அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் அவரால் வெளியிடப்பட்டுள்ளன. உரைநடைப் பொத்தகங்களெல்லாம் அவராலேயே எழுதப்பெற்றவை. சுந்தரம் பிள்ளை பல நூல்களை இயற்றாவிடினும் அல்லது வெளியிடாவிடினும், மனோன்மணீயத் தமிழ்த்தாய் வாழ்த்தினால், தமிழனை மூவாயிர வாட்டை யாரிய அடிமைத்தன அகக்கரண வுறக்கத்தி னின்று தட்டியெழுப்பிய பெருமைக்குரியவராவர். இந் நூற்றாண்டில் மட்டுமன்றி, இக் கிறித்தவ வூழியிலேயே திருவள்ளுவர்க் கடுத்தபடியாக வைத்தெண்ணப்படத்தக்க தனித்தமிழ்த் தந்தையார் மறைமலையடிகளே. தமிழ் ஆங்கிலம் வடமொழி ஆகிய மும்மொழியுஞ் செம்மையாய்க் கற்று, வரலாறு, நல்வாழ்வியல், சமயம், குலவியல், உணவியல், சீர்திருத்தம், மாந்தன் வசியம், அறிதுயில், தொலைவிலுணர்தல், மறுமைநிலை முதலிய பல்வேறு அறிவியல் துறைகள் பற்றி, முதனூல், உரை, மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி, திறனாய்வு, அங்கதம், மறுப்பு முதலிய பன்முறைகளில்; உரைநடை, செய்யுள் என்னும் இருவகை மொழிநடையிலும், பனுவல், நூல், நாடகம், புதினம், கட்டுரை, கடிதம் முதலிய பல்வகை வடிவிலும், ஐம்பதிற்கு மேற்பட்ட அரும்புலத் தனித் தமிழ்ப் பொத்தகங்களைத் தாமே எழுதி அடுக்கி அச்சிட்டு வெளியிட்டு, தமிழை வடமொழிப் பிணிப்பினின்றும், தமிழனை ஆரிய அடிமைத் தனத்தினின்றும் மீட்டுப் பல்வகை வாகை சூடிய, தனிப் பெரும்புலவர் மறைமலையடிகள். அவர்போலும் மற்றொருவர் அடுத்த நூற்றாண்டிலும் தோன்றுதலரிது. மறைமலையடிகளுடன் தனித்தமிழ் மறைந்ததென்று பறையறைவர் வையாபுரிகள். மறைமலையடிகளின் அடியொற்றித் தனித்தமிழை வளர்க்கவும் பரப்பவும், `உலகத் தமிழ்க் கழகம்' என்னும் பொதுமக்கள் இயக்கம் ஒன்று தமிழரிடைத் தோன்றி வளர்ந்து வருகின்றது. அதன் முதற்காலச் செயலாளராக விருந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், தென்மொழி யென்னும் தனித்தமிழ் மாதிகை நடாத்தியும், ஐயை, மக புகுவஞ்சி, நூறாசிரியம், உலகியல் நூறு முதலிய தனித்தமிழ்ப் பனுவல்களை வெளியிட்டும் வருகின்றார். பால் என்பது தனிப்பாலே. தமிழ் என்பது தனித்தமிழே. ``என்றுமுள தென்றமிழ்'' என்ற கம்பர் கூற்றுப்படி, தமிழ் மாந்தனுள்ள காலமெல்லாம் மறையாது நின்று, எல்லையறு பரம்பொருள் போல் முன் குமரிநாட்டிலிருந்தபடியே இனியும் என்றும் தனித்தமிழாகவே யிருக்குமென்று எதிர்காலத் தமிழரால் வையாபுரிகள் குறும்பியளவாக் குடைந்து தோண்டிச் செவியுறுத்தப்படுவர் என்பது திண்ணம். உலகில் தமிழை நிலைநாட்டிய உடன்பிறந்தார் இருவர் திருவள்ளுவர் முதல் மறைமலையடிகள் வரை பெரும்புலவர் எத்துணையர் தோன்றியிருப்பினும், அவரெல்லா ரறிவாற்றலையும் தொகுத்து ஓரகத்தே தேக்கி, எண்ணற்றவர் வந்துண்ணினும் வற்றா வாரி போன்றும், எடுக்க எடுக்கக் குறையா உலவாக்கோட்டை போன்றும், நாடெங்கும் வறளினும் கேடறியா மூலபண்டாரம் போன்றும், புலவ ரெல்லாருங் கூடும் பொதுமண்டபம் போன்றும் அறிஞர் கண்டுகளிக்கும் அரும்பொருட் காட்சியகம் போன்றும், ஆராய்ச்சியாளர்க் கெல்லாம் ஐயமுதம் (பஞ்சாமிர்தம்) அளிக்கும் ஆவினன்குடி போன்றும், குன்றாது உணவு பெருக்குங் கூட்டுப்பண்ணை போன்றும், பகைவரெல்லாங் கூடி முற்றுகையிடினும் புறங்காட்டுவிக்கும் படைக்கலக் கொட்டில் போன்றும், தமிழுக்கு ஊறு நேர்வதைத் தடுத்துத் தமிழ்மொழியிலக்கிய நாகரிகப் பண்பாட்டைக் காக்கும் தனிக்காவற்கூடம் போன்றும், விளங்கும் ஒரு நூலகத்தொடு கூடிய தமிழ்நூல் வெளியீட்டு மட்டிட்ட கூட்டுப் பங்குக் கழகத்தை 1920ஆம் ஆண்டில் தோற்றுவித்து வளர்த்து வருபவர், நெல்லைத் திருவரங்கம் பிள்ளையும் அவர்க்குப் பின் அவரிளவலான தாமரைத் திரு செந்தமிழ்ச் செல்வர் வ. சுப்பையாப் பிள்ளையுமே. திருவரங்கம் பிள்ளை பண்பு அமர்ந்த தமிழ நோக்கும் அமைந்த இன்சொல்லும் இயல்பாகக் கொண்டு, தமிழார்வமே வடிவாகத் திரண்டவர் திருவரங்கம் பிள்ளை. அவரது தமிழார்வமாகிய காந்தமே, அவரை மறைமலையடிகளொடும் அவரின் மூத்த மகளார் தனித்தமிழ்த் திருவாட்டி நீலாம்பிகையம்மை யாரொடும், ஒருங்கே இறுகப் பிணித்திணைத்தது. அதனால், திருணத்திற்கு முன்பே இலங்கையிற் பன்முறை பணந்தண்டி அடிகட்கனுப்பி, அவர்களது தனித்தமிழ் நூல் வெளியீட்டிற் குதவினார். திரு. வ. சுப்பையாப் பிள்ளை பண்பு திரு. வ. சுப்பையாப் பிள்ளை அவர்கள், பொது அன்பில் தமையனாரிற் சற்றுக் குன்றியவரேனும், தமிழார்வத்தில் இம்மியுங் குன்றியவரல்லர்; நூல் வெளியீட்டுத் திறனிலும் வணிகத் திறனிலுமோ தமையனாரிலும் பன்மடங்கு விஞ்சியவரே. ``மூத்தது மோழை'' என்பது தமையனார்க்குச் சற்றும் பொருந்தாவிடினும், ``இளையது காளை'' என்பது தம்பியார்க்கு முற்றும் பொருந்தும். சிவக்கொண்முடிபு (சைவ சித்தாந்த) நூற்பதிப்புக் கழகமும் மறைமலையடிகள் நூல்நிலையமும், இன்றுள்ள விரிவும் பெருமையும் பெற்றிருப்பதற்குத் திரு. சுப்பையாப் பிள்ளையின் அகப்புறக் கரணவுழைப்பே முற்றுங் காரணம். நூல் வெளியீடு ஒவ்வொரு தொழிற்கும் ஒவ்வொரு தனித்திறன் உள்ளது. நூல்வெளி யீட்டுத் திறனை இயற்கையாகவே முற்றும் பெற்றவர் திரு. வ. சுப்பையாப் பிள்ளை. தமிழ்நூல் வெளியீட்டிற்கென்றே, திரு. வ. சுப்பையாப் பிள்ளை இறைவனாற் படைக்கப்பட்டுள்ளார் என்பதை, கடவுள் நம்பிக்கையுள்ளவர் அனைவரும் ஒப்புக்கொள்வர். வெளியிடவேண்டிய பொருட்டுறைகளைத் திட்டஞ் செய்தலும், ஒவ்வொரு துறையிலும் வல்லுநரைத் தேர்ந்து தெளிதலும், அவரை வரிசையறிந்து போற்றலும், தெளிவாகவும் திருத்த மாகவும் சிக்கனமாகவும் அச்சிட்டுக் கண்கவர் கவின் கட்டடஞ் செய் வித்தலும், தக்க அதிகாரிகளை எளிய முறையில் வயப்படுத்தலும் விற்பனைக்கு வலக்காரமான வழிகளையெல்லாங் கையாடலும் நேர்மை விலைக்கு விற்றலும் ஆகிய வினைகளில், மேலையரும் அவரிடம் வந்து பயிற்சி பெறுமளவு அவர் தேர்ச்சி பெற்றவராவர். இதுகாறும் வெளி யிடப்பட்ட பொத்தகங்கள் ஏறத்தாழ ஈராயிரமாயிருக்கலாம். அவற்றுட் சில ஆங்கில நூல்கள். `செந்தமிழ்ச் செல்வி' ஒரு தனியிதழ்போலத் தோன்றினும், அதுவும் நூல் வெளியீட்டின்பாற்பட்டதே. அதில் வெளிவரும் ஆராய்ச்சிக் கட்டுரைகள், பெரும்பாலும் நூற்றிறன் வாய்ந்துள்ளமையால், மாதந்தொறும் விலையாகாத இதழ்கள் ஆண்டு வாரியாகக் கட்டடஞ் செய்யப்பட்டுப் பிற பொத்தகங்கள் போன்றே விற்கப்படுகின்றன. எத்துணையோ நூல்கள் நீண்ட காலமாக அச்சீடின்றி யிருந்தமை யால், அவற்றின் பழம்படிகள் பழம்பொத்தகக் கடைகளிற் செல்வரே வாங்கத்தக்க கடுவிலைக்கு விற்கப்பட்டன. `ஆயிரத் தெண்ணூறாட்டை முற்றமிழர்' (Tamils, Thousand and Eight Hundred Years Ago) என்னும் ஆங்கில நூல் திரு. வ. சுப்பையாப் பிள்ளையால் வெளியிடப்பெற்று 12 உருபாவிற்கு விற்கப்பட்டபோதும், அதை அறியாத ஒரு மேலைச் செல்வர், அதன் பழம்படியொன்றை, மூர் அங்காடியில் 600 உருபா கொடுத்து வாங்கிச் சென்றார். இதிலிருந்து, திரு. சுப்பையாப் பிள்ளையின் நூற்பதிப்புத் தொண்டின் பெருமையை உணரலாம். இதுபோது, தமிழ்நூல்களுட் பெரும்பாலனவற்றை வாங்கக்கூடிய பொத்தக விற்பனை நிலையம் சை. சி. நூ. ப. கழகம் ஒன்றே. பிறர் வெளியீடு களும் அதன் வாயிலாகப் பெறலாம். ஆகவே, அது இன்று மாக்குமில்லன் (Mac Millan & Co.), ïyh§k‹R (Longmans Green & Co.), இகின்பாதம் (Higginbotham) ஆகிய மூன்று ஆங்கிலக் குழும்புகளும் ஒன்றுசேர்ந்த தொக்கும். ஆதலால், ஒப்புயர்வற்ற உலகமாபெரு வெளியீட்டகம் இதுவே. மறைமலையடிகள் நூல்நிலையம் சிவக்கொண்முடிபு (சைவசித்தாந்த) நூற்பதிப்புக் கழகத்தைச் சேர்ந்ததும், பொதுமக்கட்கு மிகப் பயன்படுவதும், திரு. வ. சுப்பையாப் பிள்ளையின் பணித்திறமையை விளக்குவதுமான நிறுவனம் `மறைமலை யடிகள் நூல்நிலையம்' ஆகும். இது 35,000 நூல்களே கொண்டதாயினும், பிற நூலகங்களில் இல்லாதனவும் மிகப் பழையனவுமான பல அரிய வெளியீடுகளைக் கொண்டுள்ளது. இவற்றைத் தொகுக்கத் திரு. வ. சுப்பையாப் பிள்ளை 40 ஆண்டு பட்டபாடு கொஞ்சநஞ்சமன்று. சேய்மையிலும் அண்மையிலுமுள்ள உலகத்தின் பல பாகங்களிலுமிருந்து, ஆராய்ச்சியாளர் இங்கு வந்து இதனாற் பெரும் பயன் பெற்றுச் செல்கின்றனர். தமிழ்ப் பற்று வணிக மதிநுட்பம், சூழ்வுத்திறன் முதலியவற்றொடு திரு. வ. சுப்பையாப் பிள்ளைக்கு உள்ள அளவிறந்த தமிழ்ப்பற்று, அவரைத் தமிழ் வெளியீட்டாளருள் தன்னந்தனியராகச் சிறப்பித்துக் காட்டும். அது அவரது சிக்கனத்தையும் மேற்கொள்ளும். அதனாலேயே, விரைந்தும் மிகுதியாக வும் விலையாகாத என் பல்வேறு சொல்லாராய்ச்சி, மொழியாராய்ச்சி நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றை வெளியிடும் வேறு வெளியீட் டாளர் ஒருவருமில்லை. ஆங்கில நூல்களையும் வெளியிடுவதும், கையெழுத்துப் படிகளையும் நல்விலை கொடுத்து வாங்குவதும், ஓய்வு பெற்ற வறுமைப் புலவரை வேலைக் கமர்த்துவதும், இந்தித் திணிப்பை எதிர்ப்பதும், அவரது தமிழ்ப் பற்றையே சிறப்பக்காட்டும். எண்வகை வனப்பும் பல்துறை நூலும் உள்ளிட்ட குமரிநாட்டு எழுநிலச் செய்யுளிலக்கியம் அனைத்தும் இருவகையில் அழியுண்டபின், எஞ்சியிருந்த இயற்றமிழிலக்கணத்தின் சார்பு நூலாக வேறெம் மொழியிலும் இல்லாத பொருளிலக்கணங் கூறும் தொல்காப்பியமும், கடவுளை முதன் முதலாகக் கண்ட தமிழர் இம்மைக்குரிய அறம்பொரு ளின்பத்தொடு மறுமைக்குரிய வீடுபேறும் சேர்த்து வகுத்த நாற்பொருளை, நவில்தொறும் நயம் தோன்ற முப்பாலில் விளக்கும் திருக்குறளும், இன்றும் தமிழை ஈடிணையற்ற மொழியாக ஏனையவற்றினின்று பிரித்தே காட்டுகின்றன. ஆயினும், வாள்போற் பகைவரும் கேள்போற் பகைவரும், தமிழை ஒரு சிறப்புமற்ற பன்மொழிக் கலவையான புன்சிறு புதுமொழியாகக் காட்டி வருகின்றனர். இதைக் கடந்த அறுபான் ஆண்டாகச் சை. சி. நூ. ப. கழகம் பல்வகையில் எதிர்த்து வருவதைத் தமிழுலகம் நன்கறியும். இக் கழகம் இன்றேல் தமிழ் இன்று இந் நிலையில் இருந்திராது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளும் நடந்திரா. ``செந்தமிழ்ச் செல்வி'' செப்பிடெம்பர் 1979 10 `செந்தமிழ்ச் செல்வி'க்கு உட்கரணம் கெட்டதா? தமிழ்நாட்டிற் பொதுவாக முதுவேனிற் காலத்தில் தாங்கொணா வெப்பமிக்கு, ``வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருகத்தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங்'' கொள்ள. மருத நெய்தலையும் வாட்டி வருத்துவது தொன்று தொட்ட மரபே. ஆயின், கடந்த வேனிலில் ஏனையோர்க் கெல்லாம் உடம்பு மட்டும் தாக்குண்ண, தாமரைச் செல்வர். திரு. வ. சுப்பையா (ப்பிள்ளை) அவர்கட்கு உட்கரணமும் தாக்குண்டது மிகமிக இரங்கத்தக்கதாகும். இல்லெனில் கடந்த `செந்தமிழ்ச் செல்வி' (சிலம்பு : 52 ; பரல் : 9)-ல் `தமிழில் பல துறை அறிவியல் நூல்களை ஆக்கும் முறை' என்னும் தலைப்பில் குழப்பமான, அறிவுக்குப் பொருந்தாத பல போலிக் கருத்துகளை வெளிப்படுத்தியிரார். மேலையறிஞர் திங்கள் செவ்வாய் மண்டிலங்களையடுத்தும், மேலை மொழிகளில் புதுப்புதுப் பல்துறை அறிவியல் நூன்மணிகள் மேன் மேலுங் குவித்து வருவதும் ஏனையோரும் ஏற்கனவே அறிந்தனவே. தமிழில் அறிவியற் கலைக்குறியீடுகள் போதிய அளவிற்கு ஆக்கப் படவில்லையென்பதும், அரசும் பல்கலைக் கழகங்களும் இதில் ஒரு சிறிதும் அக்கறை கொள்ளவில்லை யென்பதும், இந் நிலைமை நீடிப்பின் தமிழினம் இருளில் அழுந்தும் என்பதும் அறிந்தே உலகத்தமிழ்க் கழகம் தோற்று விக்கப்பட்டுள்ளது. அதைத் தாமரைச் செல்வர் ஊக்கியதுமில்லை; அதன் மாநாடுகளில் உருக்காட்டியதுமில்லை. பிற நாடுகளிற் கல்விவாயில் எம்மொழி யென்பதும், அதன் அமைப்பு எத்தகைய தென்பதும், அந் நாடுகட்குச் சென்றுதான் அறிதல் கூடும் என்பதில்லை. ஞாலநூல் (geography), வரலாற்று நூல், மொழிநூல், செய்தித்தாட்கள் ஆகியவையே செவ்வனே அறிவிக்கும். ஒருவர் ஓர் உயர்பதவி யடைந்துவிட்டதனால் திடுமென்று ஒரு பெரும் புத்தறிவு தோன்றிவிடாது. (இவ்விடத்தில், அண்மையில் மதுரைப் பல்கலைக்கழகத் துணைக்கண்காணகர் (Vice-Chancellor) பதவியில் அமர்த்தம் பெற்ற பர்.வா.செ. குழந்தைசாமி அவர்கள், ஆங்கிலத்தில் உள்ள அறிவியல் சொற்களை அப்படியே தமிழில் பயன்படுத்த வேண்டும், என்னும் போலிக் கருத்தை வெளிப்படுத்தித் தமிழ் மாணவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்திய செய்தியைப் பொருத்திப் பார்க்க.) எக் கருமத் திற்கும் எத் தொண்டிற்கும் அதற்குரிய தகுதிகள் வேண்டும். தமிழ்த் தொண்டிற்குத் தமிழ்ப்புலமை, தமிழாராய்ச்சி தமிழ்ப்பற்று ஆகிய மூன்றும் இன்றியமையாதன. ஓர் அறிவியல் துறையிற் பயிற்சி பெற்றவர் தமிழ்த் துறைக்குத் தகுதியுள்ளவராகார். பயிற்சித்துறை மாற்றிப் பணியமர்த்துவது, உழவனைத் தச்சு வேலைக்கும், தச்சனை நெசவுத் தொழிலுக்கும் அமர்த்துவது போன்றதே. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டமட்டில், ஒருவர் தமிழ்ப் பற்றாளராகார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகர முதலியைச் சீர்கெடுத்து, வளர்தமிழைத் தளரச் செய்த வையாபுரியாரும் ஒரு தமிழரே. சமற்கிருத வெறியர்க்கும் பேராயக் கட்சியார்க்கும் பெரியாரைப் பின்பற்றுவோருட் பலருக்கும், தமிழ்ப்பற்றிருத்தல் இயலாது. தமிழ் ஒரு காட்டுவிலங்காண்டி மொழி (காட்டுமிராண்டிப் பாஷை) என்று பெரியார் சொன்னதை மறந்துவிடக் கூடாது. ``ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்-ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்.'' இத் தன்னேரிலாத தமிழின் இரு சிறப்பியல்புகள் மென்மையும் தூய்மையும்-இவ்விரண்டும் நீங்கிவிடின், தமிழ் தமிழாகாது, மலையாளம் போல ஒரு கொடுங்கலவைத் திரவிட மொழியாக மாறிவிடும். அதன்பின் தமிழைப்பற்றிப் பெருமை பாராட்ட இம்மியும் இடமிராது. இந் நிலைமையே தமிழ்ப் பகைவர் நீண்ட காலமாக எதிர்பார்ப்பது. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனியியல்புண்டு. அது அதன் ஒலித் தொகுதியையும் சொல்லமைதியையும் பொறுத்தது. தமிழிலுள்ள முப்பதொலிகளே அதன் இயல்பிற்கேற்கும், அயலொலிகள் சேரின் அதன் இயல்பு கெடும். உலகில் தமிழ் ஒன்றே மெல்லோசை மொழி. பிறவெல்லாம் வல்லோசை மொழிகள். நொய்ய மெல்லாடையொடு திண்ணிய வல்லாடையை இணைத்தால், அவ் விணைப்பைத் தாங்காது மெல்லாடை கிழியும். அங்ஙனமே வல்லோசைப் பிற மொழிச் சொற்கள் சேரின், மெல்லோசைத் தமிழ் கெடும். வல்லியன் மேனியுள்ள ஆடவரை நோக்க, மெல்லியன் மேனியுள்ள பெண்டிர் பெரிதும் பெருமையும் பாராட்டும் பெறத் தக்கவரேயன்றி, இழித்துக் கூறப்படத்தக்கவ ரல்லர். அங்ஙனமே தமிழின் மெல்லோசை அதன் தனிச் சிறப்பைக் காட்டுவதே. தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவை முதலிய நூல்களை ஓதிக் காண்க. ஒரு மொழிச் சிறப்பிற்கு இன்றியமையாது வேண்டுவது எல்லாக் கருத்துகளையும் தெரிவிக்கக்கூடிய சொல் வளமேயன்றி ஒலி வளமன்று. சில மரங்கள் கரந்து பூக்கும். சில மரங்கள் வெளிப்படையாய்ப் பூக்கும். மரத்தின் பயன் கனியே யன்றிப் பூவன்று. பலா மரத்திற்கு வெளிப்படைப் பூவில்லையென்று, அதற்கு ஒருவரும் பூ வொட்டக் கருதார். முக்கனிகளுள் ஒன்றானதும் எல்லாவற்றிலும் பெரியதுமான அதன் நற்கனியே தேவையானது. அதுபோன்று, திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமான தமிழின் சொல்வளமே தேவையானதும் போதுமானதுமாகும். ஆங்கிலம் சொல்வள மின்மையாற் பிறமொழிச் சொற்களை ஏராளமாகக் கடன் கொண்டது. அங்ஙனமே பிறமொழிகளும். ஓர் ஏழை வணிகன் கடன்கொண்டு பயன்பெறலாம். ஆயின், பிர்லா போன்ற மாபெருஞ் செல்வர் கடன் கொள்ள வேண்டியதில்லை. மேலை மொழிகளிலுள்ள அறிவியற் கம்மியக் குறியீடுகளை யெல்லாம் மொழிபெயர்க்கப் போதிய கருவிச் சொற்கள் தமிழில் உள்ளன. யான் எழுதியுள்ள `மண்ணில் விண்' என்னும் நூலின் இறுதியிற் காட்டப்பட்ட மொழிபெயர்ப்பு நெறிமுறைகளைக் கையாளின், எல்லாக் கலைச்சொற்களையும் இன்னும் பத்தாண்டிற்குள் தமிழில் ஆக்கிக் கொள்ளலாம். மேலைமொழிக் கலைச்சொற்களை அப்படியே கையாண்டு, தனித் தமிழை வளர்க்க வேண்டுமென்பது, ஒரு சிலரொடு மட்டும் பழகிக் கொண்டு ஒரு கன்னி தன் கற்பைக் காத்துக் கொள்ளலாம் என்பது போன்றதே. மொழிகள் பெருமரங்கள் போன்று மெல்ல வளரிகள். செடி கொடிகள் போன்ற விரைவளரிகளல்ல. ஆங்கிலம் 5ஆம் நூற்றாண்டி லிருந்து வளர்ந்து வருகின்றது. நீராவிவலியும் மின்வலியும் கண்டபின்னும், இற்றை வளர்ச்சியுற அதற்கு முந்நூற்றாண்டாகிவிட்டது. ஆகவே, தமிழ்க் கலைச்சொல் வளர்ச்சிக்கு இன்னும் பத்தாண்டு வேண்டுமென்பது மிகையாகாது. வகைவகையாய்ப் பல்வேறு இன்கனிகள் பயக்கும் ஒரு மாந்தோப்பின் வளர்ச்சிக்குப் பல்லாண்டு செல்லும். அதுவரை பொறுமை இன்றியமையாதது. பிற மரங்களின் கிளைகளை வெட்டிக்கட்டி ஒரே நாளில் ஒரு புதுமரம் உண்டாக்க முடியாது. அது போன்றே மொழி வளர்ச்சியும். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமும், திரு. வ. சுப்பையா(ப்பிள்ளை) அவர்களும் தனித்தமிழை விரும்புவதாகப் பன்முறை விளம்பரஞ் செய்தும், இன்னும், `மட்டிட்டது' என்பதை `லிமிடெட்' என்றும், உரிச் சொற்றொகுதிகளிலுள்ள அறிவன், காரி என்னும் சொற்களைக் கையாளாது புதன், சனி யென்னும் வடசொற்களையே வழங்கியும் வருகின்றதை யாவரும் அறிவர். தாமரைச் செல்வர் திரு. வ. சு. அவர்கள் மறைமலையடிகளொடும் நம்மொடும் பழகியும், அடிகள் விழாவை ஆண்டுதொறும் கொண்டாடியும், எம் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளைச் செல்வியில் வெளியிட்டும், கலவை மொழியை விரும்புவது, ``நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்'' (குறள். 373) என்னும் குறளுக்கே இலக்காகும். மும்மொழிப் புலமை முற்றத் துறைபோகி அரும்பாடு பட்டு ஆரிய மறை பயின்று தனித்தமிழைத் தகைபெற நாட்டிய நிறைமலையாம் மறைமலையடிகளும், அரை நூற்றாண்டு சொல்லாராய்ச்சியும் மொழி யாராய்ச்சியும் செய்த யானும், திரு. வ. சுப்பையா(ப்பிள்ளை)யும், திரு. வா.செ. குழந்தைசாமியும் அறிந்ததாகக் கூறும் உண்மைகளை அறியாதவர்கள் அல்லர். - தென்மொழி ஆடவை 1978 11 வரிசையறிதல் சென்ற மாதச் `செல்வி' யிதழில், ``கழக நூலாசிரியர் இருவருக்கு மதுரைக் காமராசர் பல்கலைக்கழக விருது'' என்னும் கட்டுரைத் தலைப்பு என் கண்ணைக் கவர்ந்தது. கட்டுரையில் ``கழக நூலாசிரியர்களான, உரைவேந்தர் சித்தாந்தக் கலாநிதி வித்துவான் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, தமிழ் ஆராய்ச்சியறிஞரான மயிலை சீனி. வேங்கடசாமி ஆகிய புலவர் பெருமக்கள் இருவருக்கும் கடந்த 29-3-80 அன்று, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்னும் சிறப்புப் பட்டத்தினை வழங்கிப் பொன்னாடை போர்த்திப் பாராட்டியது.... விருதினைப் பெற்றதன் மூலம் புலவர் இருவரும் மதுரைப் பல்கலைக் கழகத்தின் கல்விக்குழு உறுப்பினராயினர்.'' என்று மட்டும் இருந்தது. பொற்பதக்கம் பற்றியோ பொருட்கொடை பற்றியோ ஒரு குறிப்புமில்லை. பண்டைக்காலப் புலவர் பெருமக்கள், ஐந்நூறு ஊர் முற்றூட்டும், நாற்பது நூறாயிரம் பொன்னும், ஒரு நாட்டு முழு வருவாயும், நூறாயிரம் பொற்காசொடு ஒன்பது துலாம் பொன்னும், நூறாயிரம் பொற்காசொடு ஒரு நாடும், இன்னோரன்ன பிறவும், அரசரிடம் பரிசாகப் பெற்றனர். இக்காலத் தரசு, ஓய்வு பெற்ற ஏழைப் புலவர்க்கு, மாதந்தோறும் முன்பு 100 உருபாவும் இன்று 250 உருபாவும் ஆக உதவித்தொகை அளித்து வருகின்றது. அஃதொடு ஒரு பாவலர்க்குப் பத்தாயிரம் உருபா நன்கொடை யும் நல்கியுள்ளது. பண்டைப் புலவரெல்லாரும் பாவலராகவே யிருந்தனர். அவர்க்குப் புலமையும் பாவன்மையும் ஒருங்கே யமைந்திருந்தன. இக் காலத்தில் ஒரு சிலரே பாவலர். அவருட் பெரும்பாலோர் புலவரல்லர். உணர்ச்சியேயூட்டும் பாவன்மையினும் அறிவு புகட்டும் புலமையே சாலச் சிறந்தது. புலவர் புலத்துறைபற்றிப் பலவகையர்; ஆற்றல்பற்றிப் பல திறத்தர். இயலர், இசையர், நாடகர், கணியர், மருத்துவர் முதலியோர் பலவகையர்; நாவலர், பாவலர், விளக்கியர், தருக்கியர், நூல்வலர், உரைவலர், ஆய்வலர், கதைவலர், கட்டுரைவலர் முதலியோர் பலதிறத்தர். இவ் விரு சாராரும், மீண்டும், தலையர், இடையர், கடையர் என முந்நிலையர். இவ்வகையும் திறமும் நிலையும் அறிந்தே அவரவர்க்குத் தக்கவாறு பரிசளித்தல் வேண்டும். இங்ஙனம் பகுத்தறிதலையே வரிசையறிதல் என்றனர் முன்னோர். ``பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கி' (புறம். 6) ``வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை'' ( 47) ``ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப் பலரும் வருவர் பரிசின் மாக்கள் வரிசை யறிதலோ அரிதே பெரிதும் ஈதல் எளிதே மாவண் டோன்றல் அதுநற் கறிந்தனை யாயின் பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே.'' ( 121) ``வரிசை யறிதலின் தன்னுந் தூக்கி இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர் பெருங்களிறு நல்கி யோனே.'' ( 140) ``வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க் கடையா வாயி லோயே'' (ஷெ 206) என்பன புலவரின் வரிசையறிதலைக் குறிப்பன. உரைவேந்தர், கொண்முடிபுக் கலைச் செல்வர், ஔவை சு. துரைசாமிப் பிள்ளையும், வரலாற்றாராய்ச்சியாளர் மயிலைச் சீனி. வேங்கட சாமியும், இன்றுள்ள மூத்த தலைமுறையைச் சேர்ந்த ஒப்புயர்வற்ற இருபெரும் புலவராவர். யசோதரகாவியவுரை, புறநானூற்று விளக்கவுரை, பண்டைச் சேர மன்னர் வரலாறு முதலியன ஔவை. சு.து. வும்; கிறித்தவமும் தமிழும், பௌத்தமும் தமிழும், இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், மறைந்து போன தமிழ்நூல்கள், மகேந்திரவர்மன், தெள்ளாறெறிந்த நந்திவர்மன், பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கியம், தமிழர் வளர்த்த அழகு கலைகள், துளுநாட்டு வரலாறு, காவியப் புலவனும் ஓவியக் கலைஞனும், முதலியன மயிலை சீ. வே.யும்; எழுதிய அரும்புலப் பொதுநலப் படைப்புகளாகும். இவை பெரும்பாலும் ஏனையரால் எழுதப்படாதவை. இவ் விருவர்க்கும் தனித்தனிக் குறைந்த பக்கம் பத்தாயிரம் உருபாவேனும் பொற்பதக்கத்துடன் வழங்குதல் வேண்டும். இவ் விருவரும் கழிபெரு மூப்பெய்தியுள்ளதொடு, புலவர் மயிலைச் சீனி. வேங்கடசாமியார் நோய்வாய்ப்பட்டுப் பாயும் படுக்கையுமாயுள்ளார். ஆதலால், அரசோ, ஒரு பல்கலைக்கழகமோ, இரண்டும் இணைந்தோ, இச் சிறப்பை இயன்ற விரைவிற் செய்து தம் கடனைத் தீர்ப்பனவாக. நோயுண்டவர்க்கு மருத்துவஞ் செய்வதும் அரசின் கடமையே. ஒரு புலவரைக் குன்றச் சிறப்பித்தல் போற்றாமையின்பாற்பட்டதே. Damn with faint praise a commend so frigidly as to suggest disapproval. - ``செந்தமிழ்ச் செல்வி'' மே 1980 12 மகிழ்ச்சிச் செய்தி பண்டாரகர் பட்டம் பெற்ற பெருந்தமிழ்ப் புலவருள் பிறவியிலேயே தமிழ்ப்பற்றுத் ததும்பப்பெற்ற மூவருள் ஒருவரும், காரைக்குடி அழகப்ப னார் கலைக்கல்லூரி முதல்வரும் ஆகிய, பேரா. வ. சுப. மாணிக்கனார் அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக அமர்த்தப் பெற்றமை, இதுவரை அங்குத் தமிழுக்கு நிகழ்ந்த தீங்குகட்கெல்லாம் கழுவாய் என்றும், தமிழுக்கு நற்காலம் வருதற்கு முற்குறி என்றும், அறிந்து மட்டிலா மகிழ்ச்சி கொள்கின்றோம். அப் பல்கலைக்கழக நிறுவனர் போன்று இளமையில் அண்ணா மலை யென்று பெயர் வழங்கப்பெற்று, இன்று தில்லைக் கூத்தன்போல் மாணிக்கம் என்று பெயர் பூண்டுள்ள, இவர்தம் கல்விப் பரப்பும், பட்டச்சிறப்பும், பேராசிரிய வூழியமும், முதற்றரக் கல்லூரி முதல்வர் பதவிப் பட்டறிவும். பணித் திறமையும், ஆள்வினை யாற்றலும், தமிழ்த்தொண்டும், ஆன்றவிந் தடங்கிய சான்றாண்மையும் நோக்கின், நாளடைவில் அப் பல்கலைக்கழகத் துணைக்கண்காணகராகக் கிளர்வதற்கே இறைவனால் அமர்த்தப் பட்டிருப்பதாகத் தெரிகின்றது. தமிழ்ப் பகைவரால் தடைப்பட்டுள்ள செந்தமிழ்ச் சொற்பிறப்பியல். அகரமுதலியைத் தக்காரைக் கொண்டு தொகுப்பித்தும், பல்கலைக்கழக முன்னை வகுப்பையும் (P. U. C.) கலையிளைஞன் பட்ட வகுப்பையும் (B.A) ஆங்கிலர் காலத்திற் போன்றே ஈராட்டைக் கடவைகளாக மாற்றியும், தமிழ்நாட்டு ஏனையிரு பல்கலைக்கழகங்களும் பின்பற்றும் வகையில் சீர்திருத்தத் திட்டங்களை வகுத்து வழிகாட்டுமாறு, எல்லாம் வல்ல இறைவன் இவர்க்கு நீடிய வாழ்வும் கூடிய நலமும் அருள்வானாக. - ``தென்மொழி'' மேழம் 1970 13 துரைமாணிக்கத்தின் உரைமாணிக்கம்! தமிழ் இற்றைக்கு ஐம்பதினாயிரம் ஆண்டுகட்கு முந்தித் தோன்றிய உலக முதற்றாய் மொழியாதலாலும், அது தோன்றிய குமரிக்கண்டம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே இந்துமாவாரியில் மூழ்கிப் போனமை யாலும், அக் கண்டத்தில் வழங்கிய முதலிரு கழக நூல்களும் ஆரியர் வந்தபின் அழிக்கப்பட்டொழிந்தமையாலும், இற்றைத் தமிழ்நூல்களுள் முந்தியனவான தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலையும் திருக்குறள் என்னும் இலக்கிய நூலையும், வரலாறு, மொழிநூல், மாந்தனூல் (Anthropology) ஆகிய முந்நூலறிவுடையாரே செவ்வையாய் ஆய்ந்துணர முடியும். இற்றைத் தமிழ்ப் புலவர் சிலர் பண்டாரகர் (Dr.) என்னும் ஆங்கிலப் பட்டம் பெற்ற அளவிலேயே, தம்மை முற்றறிஞராக இறைவனோடொப்பக் கருதி இறப்ப மதித்து, அப் பட்டம் பெறாதாரை யெல்லாந் தம்மினுந் தாழ்ந்தவராக எண்ணத் தலைப்பட்டுவிடுகின்றனர். தமிழ்நாட்டு அரசியலிலும் பல்கலைக்கழகங்களிலும் இன்று, ஆரியம் வேரூன்றித் தமிழைத் தாழ்த்தியிருப்பதால், மதிநுட்பம், பரந்த கல்வி என்னும் இரண்டொடு நடுநிலை, அஞ்சாமை, தன்னலமின்மை, மெய்யறிஅவா ஆகிய பண்புகளை உடையார் உண்மையான ஆராய்ச்சி நூல்களை இடுநூலாக (Thesis) விடுத்து ஆராய்ச்சிப் பட்டம் பெறக்கூடிய சூழ்நிலையில்லை. அதனாலேயே, தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமையாகிய பெருமைகளை எடுத்து விளக்கும் நூல்களையே இடு நூலாக விடுத்து, ஆராய்ச்சிப்பட்டம் பெறவேண்டுமென்னுங் குறிக்கோள் கொண்ட என்போன்றார், அப் பட்டம் பெறாதிருக்கின்றனர். இன்று பெறப்படும் பண்டாரகர்ப் பட்ட இடுநூல், ஆரியத்தை யுயர்த்திக் கூறுவ தாகவோ அதை முற்றுந் தழுவாததாகவோ இருக்கவேண்டி யிருப்பதால், இற்றைப் பண்டாரகர்ப் பட்டம் அதைப் பெற்றவர் சில நூற்பாக்களையோ செய்யுள்களையோ பிற செய்திகளையோ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அல்லது எழுத முடியும் என்னும் ஆற்றலையே பெரும்பாலுங் காட்டுவ தாகும். மேலும், அரசியலிலும் பல்கலைக்கழகங்களிலும் அவற்றைச் சார்ந்த கல்லூரிகளிலும் பெரும்பதவி தாங்குவோரும், கட்சிச் சார்பான புலவரும் பேராசிரியரும், அதிகாரிகட்கும் கட்சித்தலைவர்க்குங் கட்டுப்பட்டே யிருக்கவேண்டியிருப்பதால், ஆராய்ச்சியாளர்க்கு இன்றியமையாத மேற் குறித்த அறுபண்புகளையும் அவரிடத்திற் காணமுடியாது. ஆதலால், மறைமலையடிகள் போன்றாரே என் நூல்களை மதிப்பிடத் தகுதி யுள்ளவராவர். பிறரெல்லாம் அவற்றைப் படித்தற்கும் பாராட்டற்குமே யுரியர். இனி, மொழிநூல் துறையிற் குழந்தைப் பருவத்திலுள்ள புலவர் சிலர் என் முன்நின்று சொல்லாராய்ச்சிபற்றிக் கூறுவதும், என் கூற்றை மறுப்பதும், ``தேவதூதருங் கால்வைக்க அஞ்சுமிடத்திற்குள் முழுமக்கள் புகுகின்றனர்.'' (``Fools enter where angels fear to tread.''), ``தான் அறியாதான் என்பதை அறியாதான் முட்டாள்'' (``He who knows not that he knows not is a fool.'') என்னும் ஆங்கிலப் பழமொழியையும் பொன்மொழியையுமே நினைவுறுத்துகின்றன. இவ் விருபதாம் நூற்றாண்டில் பனிமலை போலப் பரந்தும் நீண்டும் உயர்ந்தும் தலைசிறந்து விளங்கிய தமிழ்ப்புலவர் மறைமலையடிகள் ஒருவரே. அவர்களே, ஒரு தமிழ்ப்புலவர் ஒருகால் தம் தவறான சொல்லாராய்ச்சி யொன்றைக் கூறியபோது, அது பொருத்த மன்றென மறுத்துரைக்க, அஃது என்னாராய்ச்சி யென்று அப் புலவர் பொய்த்தபின், ``அங்ஙனமாயின் நான் அதை ஏற்றுக்கொள்கின்றேன்'' என்று திருவாய் மலர்ந்தார்களாயின், அவர்கள் என்னை மொழிநூற்றுறையில் எத்துணை மதித்திருந்தார்களென்பதை அறிந்துகொள்க. ஓர் அடிப்பட்ட கதையை மாற்றிப் பாவினப் பனுவல் பாடிய துணையானே, ஒருவர் தம்மைக் கம்பரென்றும் கம்பரினும் மிஞ்சிய கொம்பரென்றும் மதித்துக் கொள்ளலாம். ஆயின், தாம் கல்லாத துறையில் ஆழந்தெரியாதிறங்கி யமிழ்ந்துபோவது புல்லறிவாண்மையின்பாற் பட்டதாம். மொழிநூல் என்பது ஒரு தனிப்பட்ட அறிவியல் என்பதையும், அதற்குப் பன்மொழி யிலக்கண அறிவும் சொற்றொகுதி யறிவும் வேண்டுமென்பதையும், மொழியாராய்ச்சி யில்லாதவர் சொல்லாராய்ச்சியில் இறங்குதல் கூடாதென்பதையும், இன்னும் பல தமிழ்ப் புலவர் அறிவதில்லை. இசை, நாடகம், மருத்துவம், கணியம் முதலியன எங்ஙனம் மொழியினின்று வேறுபட்டனவோ, அங்ஙனமே மொழிநூல் என்பதும் வேறுபட்டதாகும். ஒவ்வொரு துறையிலும் அததிற் பயின்றவரே அறிவுடையவராவர். ``அறிவார் அறிவர்? அறிவார் அறிவர்'' என்பது பழமொழி. ``வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும் வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது'' என்னும் தனிப்பாடலை நோக்குக. இனி, செய்யுளியற்றுந் திறத்தை நோக்கினும், பாரதிதாசனுக்குப்பின் பெருஞ்சித்திரனும் முடியரசனுமே சிறந்தவராவர் என்பதை நடுநிலைத் திறனாய்வாளர் அறிவர். இனி, கருத்துவேறுபாட்டிற் கிடமான ஒரு பொருள்பற்றி ஒரு கூட்டத்தில் இறுதியிற் பேசுபவர் கூற்றே வலிமையுள்ளதெனப் புல்லறி வாளராற் கொள்ளப்படுகின்றது. சொற்பொழிவாளருள் இறுதியிற் பேசு வார்க்கு ஏனையோர்க் கில்லாத வாய்ப்புண்டு. ஆயின், அவைத் தலைவர்க்கோ முன்னும் பின்னும் இடையும் பன்முறை பேசி எவ்வெவர் கூற்றையும் மறுத்துரைக்கப் போதிய வாய்ப்புள்ளது. ஆயினும், அறிஞர் ஓர் உரையின் உறுதியை உண்மை பற்றியேயன்றி இறுதி நிகழ்ச்சிபற்றி ஒப்புக்கொள்ளார். ஓர் அறமன்றத்தில் தீர்ப்பாளர் கூற்றே இறுதியாயினும், வட்டமன்றத் தீர்ப்பு மாவட்டமன்றத் தீர்ப்பாலும், மாவட்ட மன்றத் தீர்ப்பு மாநில மன்றத் தீர்ப்பாலும், மாநிலமன்றத் தீர்ப்பு நடுவண் மன்றத் தீர்ப்பாலும் தள்ளப்படுதல் காண்க. எத்தகைச் செய்தியாயினும், ஒருவர் இன்னொருவரை உண்மை யாகப் பாராட்டுதற்கு நடுநிலை இன்றியமையாததாகும். அந் நடுநிலையோ தன்னலமும் பொறாமையு முள்ளவிடத் தமைவது குதிரைக்கொம்பே. ஒருவன் தன் மகளுக்கு மணமகனைத் தேடுமாறு அல்லது திட்டஞ் செய்யுமாறு மணப்பருவ மகளுள்ள இன்னொருவனை அனுப்புதல் கூடாது. அனுப்பின், அனுப்பப்பட்டவன் தன் மகளை உயர்த்தியும் தன்னை அனுப்பினவன் மகளைத் தாழ்த்தியுமே பேசுவான். அங்ஙனமே ஒருவர் ஒரு நூற்கு வரைந்த உரையைப் பாராட்டற்கும், அந் நூற்கே உரைவரைந்த பிறரை அமர்த்துதல் கூடாது. அமர்த்தின் ஏதேனும் ஒரு குற்றம் அல்லது குறை கூறத்தான் முயல்வர். அண்மையிற் பறம்புக்குடியில் நடைபெற்ற உலகத் தமிழ்க் கழக முதலாட்டை விழாவில் இத்தகைய செய்தியே நிகழ்ந்தது. மறைமலையடிகள் இல்லாத காலத்தில் என் ``திருக்குறள் தமிழ் மரபுரை'' யை ஒருவரும் பாராட்டத் தேவையில்லை. உண்மைத் தமிழர் அனைவரும் விலைக்கு வாங்கும் முறையிலேயே அஃது எழுதப்பட் டுள்ளது. அதைப் பிறர் பழித்தாலும் விற்பனை குன்றாது; பாராட்டினால் விற்பனை கூடிவிடாது. அஃது என் அரைநூற்றாண்டுக் கல்வியாராய்ச்சி யின் பயனாக மொழிநூல், வரலாறு, மாந்தனூல் என்னும் முத்துறை நூலறிவு கொண்டு நடுநிலையாக இறைவனன்றி வேறெவர்க்கும் அஞ்சாது எழுதப்பெற்றது. பரிமேலழகருரையினும் விரிவாகவும் விளக்கமாகவும் உள்ளது. சிறப்பாகப் பழைய உரைகளின் ஆரிய நஞ்சை அறவே நீக்கித் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் போற்றிக் காப்பது. அவ் வுரையைப் பாராட்டத் தாமரைத்திரு. வ. சுப்பையாப்பிள்ளை அவர்களையே குறித் திருந்தேன். அவர்கள் உடல்நலக் குறைவால் வரவியலாதுபோயிற்று. ஏனை மூவரை விழாக் குழுவாரே அமர்த்தினர். அஃது என் குற்றமன்று. அம் மூவரும் தத்தம் இயல்பிற்கேற்பப் பேசினர். அதுவும் அவர் குற்றமன்று; அவரை அமர்த்தினவர் குற்றமே. அன்று பெருஞ்சித்திரன் என்னும் துரைமாணிக்கம், மாணிக்கத்தை யும் சிறிது உரைத்து மாசுபோக்கும் முறையில் இறுதியிற் பேசியிராவிடின். ஆராய்ச்சியில்லாத இளைஞரும் பொதுமக்களும் நடுநிலையறிஞர் வாயினின்று உண்மை தெரிந்து கொள்ளும்வரை, என் `திருக்குறள் தமிழ் மரபு' உரையைச் சற்றுத் தாழ்வாகவே கருதியிருக்கலாம். ஆயின், அதன் பின்பும் பண்டாரகர் வ. சுப. மாணிக்கனார், பெருஞ்சித்திரன் வரைந்த பெருஞ்சித்திரத்தைக் கலைப்பதுபோன்றும். துரைமாணிக்கம் வீசிய பேரொளியை மறைப்பது போன்றும் வேண்டாத சில சொல்லித் தம் முன்னுரையின் சிறப்பைக் கெடுத்துக் கொண்டது மிகமிக வருந்தத் தக்கதாகும். நச்சினார்க்கினியர், பேராசிரியர், அடியார்க்குநல்லார், பரிமேலழகர் முதலிய பண்டையுரையாசிரியரின் உரைகளைப் பன்முறை படித்துணர்ந்து பயன்பெற்றபின், அவ் வுரைகளெல்லாம் தேவையற்றவை என்று கூறுவது நன்றியறிவின்பாற்படாது; உண்மை நவிற்சியுமாகாது. அவ் வுரைகள் வேண்டாதன வென்பார் அவற்றைப் பாராதே தமிழ் இலக்கண விலக்கியங்களைப் படித்துப் பொருளுணர்ந்திருத்தல் வேண்டும். ``பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்'' (1336) என்று தொல்காப்பியங் கூறுவதால், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே கூர்ங்கண்ணும் எஃகுச் செவியும் நுண்மாண் நுழைபுலமுங் கொண்ட குமரிநாட்டுத் தமிழ்மக்கட்கும் உரை வேண்டியிருந்ததென்பது புலனாம். ஆதலால், உரைத்துணையின்றி மூலத்தையே படிப்பவர், மூலநோயாளிகள் என்னுமளவு பலவிடத்தும் பொருளுணராது இடர்ப்படுவர் என்பது தேற்றம். இனி, அறிவையன்றிப் பட்டம், பதவி, செல்வம், கட்சிச்சார்பு முதலியவற்றை அளவையாகக் கொண்டு ஒரு புலவனையும் அவன் நூல்களையும் மதிப்பதும், அறியாமையின்பாற்பட்டதே யென்று அறிந்து கொள்க. - ``தென்மொழி'' கும்பம் 1970 14 வல்லான் வகுத்த வழி நான் பள்ளியிறுதி மாணவனாயிருந்தபோது ஆங்கிலப் பற்றாளனாக வும் பேச்சாளனாகவு மிருந்ததனால், என் பயிற்சி முடிந்தபின் ஆங்கில இலக்கியத்தை, சிறப்பாகச் சேக்கசுப்பியரின் முப்பானேழ் நாடகங்களையும், கற்றாய்ந்து கரைகண்டு எருதந்துறை யாங்கிலப் பேராசிரியனாக அமர விரும்பினேன். ஆயின், எதிர்பாராத சில சூழ்நிலைகளால் என் மனம் தமிழ்ப் பணிக்கு ஈர்க்கப்பட்டுவிட்டது. அதன்பின், மொழியாராய்ச்சியில் ஆழ மூழ்கித் தமிழின் அடிநிலை கண்டு தமிழே திரவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமும் என்னும் உண்மையுணர்ந்ததனாலும், அவ் வாராய்ச்சி முற்றுமாறு மேனாள் சேலங் கல்லூரி முதல்வர் பேரா. இராமசாமி (க்கவுண்டர்) அவர்கள் அக் கல்லூரியில் என்னைத் தமிழ்த்துறைத் தலைவனாக எளிதா யமர்த்திக்கொண்டமை யாலும், நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள் என்னைப் பாராட்டி ஊக்கியமையாலும், என் மொழியாராய்ச்சி நூல்கள் பல வெளிவர வாய்ப்பு நேர்ந்தமையாலும், என்னையன்றி வேறெவரும் இவ் வாராய்ச்சி செய்யாமை யாலும், இவ் வாராய்ச்சிக்கு இன்றியமையாத பண்புகளையெல்லாம் இறைவன் என் பிறப்பிலேயே அமைத்துவிட்டமையாலும், ஆங்கிலப் பணியாற்ற விருந்த என்னை இறைவன் தமிழ்ப்பணிக்குத் தடுத்தாட் கொண்டதாகவே கருதுகின்றேன். நான் எத்தனையோ நூல்கள் எழுதினும், என் அரைநூற்றாண் டாராய்ச்சியின் தலைசிறந்த பயன், தமிழ்ப் பகைவர் தொகுத்த சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியைத் திருத்துவதும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியொன்று தொகுப்பதுமே. இவ் விரண்டிற்கும் பெருஞ்செலவு செல்லுமாதலால், பல்கலைக்கழகமும் அரசுமே இப் பணியை மேற்கொள்ளத் தக்கன. அறிவாராய்ச்சி மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டிலும், தமிழகத்தில் ஆரியம் வேரூன்றியிருப்பதால், ஆரியர் ஆண்ட பேராய ஆட்சியிலும் ஆரிய அடிமையர் ஆண்ட பேராய ஆட்சியிலும், மேற்குறித்த பணி நிகழும் நிலைமை ஏற்படவில்லை. இந்தியை அடியோடொழிப்போ மென்றும், தமிழிற்காக உயிரைக் கொடுப்போமென்றும், சொல்லிப் புகுந்த தி. மு. க. அரசும், ஆட்சியேற்று நாலாண்டாகியும் பேராசிரியரும் பெருமக்களும் எத்துணையோ எடுத்துச் சொல்லியும், இதுகாறும் தமிழுக்கு எத்தகைய ஆக்க வேலையுஞ் செய்யவில்லை. தி. மு. க. அரசிற்குத் தமிழ்ப்பற்று இல்லாமலில்லை யென்றும், ஏதேனும் திட்டம் வகுத்துக்காட்டினால் உடனே அதை நிறை வேற்றுமென்றும், சிலர் கூறியதால் அதையுஞ் சிறப்பாகச் செய்து பார்த்தோம். ``தானாகக் கனியாதது தடியாலடித்தாலுங் கனியாது'' என்னும் உண்மையே விளங்கிற்று. ``வாதக்கோன் நாளையென்றான் வத்தக்கோன் பின்னையென்றான் ஏதக்கோன் யாதேனும் இல்லையென்றான் - ஓதக்கேள் வாதக்கோன் நாளையினும் வத்தக்கோன் பின்னையினும் ஏதக்கோன் `இல்லை' இனிது.'' என்று ஔவையார் பாடியவாறு, தி. மு. க. வின் பின்னையினும் பேராயத்தின் `இல்லை'யே இனிது என்னுமாறாயிற்று. தி. மு. க. சார்பான தமிழன்பர் சிலர், இன்னும் சற்றுப் பொறுத்திருந் தால் அரசு உதவும் என்பர். இலவுகாத்த கட்டுக்கதைக் கிளியும் பஞ்சு வெடித்தபின் ஏமாற்றமடைந்ததேயன்றி, இன்னும் சற்றுப் பொறுத்திருந்தாற் பழுக்குமென்று கருதவில்லை. ஆதலால், இன்னும் தி. மு. க. உதவுமென்று காத்திருப்பது, அஃறிணையினும் இழிந்த பகுத்தறிவின்மையையே காட்டும். மேலும், ஆராய்ச்சிக்கு இன்றியமையாத தகுதியாகிய மூப்பையே தகுதியின்மையாகக் காட்டுவதும், ஒரு வினைக்குச் சிறந்த தகுதியுள்ள ஒருவரை அமர்த்தாது தகுதி சிறிதுமில்லாத பலர் சேர்ந்த குழுவை அமர்த்துவதும், அறிவுடைமையின்பாற் படாத பயனில் செயலேயாகும். இனி, பொதுத் தேர்தலைச் சுட்டிக் கடமையைக் கடத்துவதும், விரைசெயல் தூண்டுகோலையே முட்டுக்கட்டையாகக் காட்டுவதாகும். தமிழ் எதிர்காலத்தில் வாழவும் வளரவும் இன்றியமையாத பணி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பேயாதலாலும், இதை என்னையன்றி வேறெவரும் செய்யவியலாதாகையாலும், எனக்கு வரவர மூப்பு மிகுவதாலும், தமிழன்பரான பொதுமக்களின் உதவி கொண்டு இப் பணியை இன்னே செய்ய உ. த. க. பொதுச் செயலாளர் பாவலர் பெருஞ்சித்திரனார் தாம் வகுத்திருக்கும் திட்டத்தை, உடனே செயற்படுத்த என் முழு இசைவையும் இதனால் தருகின்றேன். எல்லாம் வல்ல இறைவன் வகுத்த வழி இதுவேயாகும். - ``தென்மொழி'' சிலை 1970 15 தீர்ப்பாளர் மகராசனார் திருவள்ளுவர் தமிழ் நாட்டரசுச் சட்டவியற் குறியீடுகள் மொழிபெயர்ப்புக் குழுத் தலைவர் ஓய்வு பெற்ற சென்னை உயர்மன்ற நடுத்தீர்ப்பாளர் திரு. மகராசனார் எழுதி, புதுத்தில்லி இலக்கிய மன்றம் (Sahitya Akademi) வெளியிட்ட, `திருவள்ளுவர்' (Tiruvalluvar) என்னும் ஆங்கிலச் சின்னூலைப் பார்வையிட்டேன். அதன் அட்டை முகத்திலுள்ள ஒரு முனிவர் உருவப்படம் முதற்கண் என் கண்ணைக் கவர்ந்தது. அது திருவள்ளுவர் உருவப்படம் என்று கண்டேன். இதற்கு முன் பத்திற்குக் குறையாத திருவள்ளுவர் உருவப் படங்கள் வெளிவந்தும், புலவர் தெய்வநாயகம் தம் ‘திருவள்ளுவர் கிறித்தவரா?’ என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்பான் மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன. இன்று, மகராசனார் சுவடிப் படம் புலவர் தெய்வநாயகம் வகுத்ததினுஞ் சற்றுத் திருந்தியிருத்தல் கண்டு, கழிமகிழ்கொண்டு ஒரு கவலையும் விண்டேன். இனி, சுவடிப் புறத்துள்ள வரையோவியம் போன்றே அகத்துள்ள உரையோவியமும் திருந்தியிருக்குமோ என்னும் ஐயமும், ஒருசில பக்கங்களைப் புரட்டியவுடன் அறவே அகன்றது. திருக்குறட்கு, இதுவரை எத்தனையோ உரைகள் தமிழிலும் பல அயன்மொழிகளிலும் வெளிவந்துள்ளன. எனினும், இன்னும் எவரும் அந் நூலின் நயங்களையெல்லாம் சொல்லி அல்லது கண்டு தீர்ந்தபாடில்லை. ``நவில்தொறும் நூனயம் போலும்'' என்ற திருவள்ளுவர் திருவாய் மலர்விற்கு, அவர் நூலே எடுத்துக்காட்டா யிருந்துவருகின்றது. இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில், பாலவநத்தம் வேள் பாண்டித் துரைத் தேவர் அரும்பாடுபட்டுத் தொகுத்து வைத்திருந்த, ஆயிரக்கணக் கான அரிய பண்டைத் தமிழ் ஏட்டுச் சுவடிகள், அவர் நிறுவிய மதுரைத் தமிழ்ச் சங்கப் பொத்தகக் களஞ்சியத்தில், யார் சூழ்ச்சியாலோ, ஒருநாள் திடுமென்று எரியுண்டு சாம்பராயின. அவ் வேட்டுத் தொகுதியுள், இதுவரை அச்சேறாத பத்துத் திருக்குறளுரையும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. அவற்றிற்கு முன்னும் இயற்கையாகவும் செயற்கையாகவும் அழியுண்ட திருக்குறளுரைகள் எத்தனையோ, அவை புலப்படுத்திய சிறப்பு நயங்கள் என்னென்னவோ, அறியோம். பொதுவாக, பாட்டிற்கும் நூலிற்கும், குறிப்புரை, சொல்லுரை, சொற் றொடருரை, பொழிப்புரை, கருத்துரை, சிற்றுரை, விரிவுரை (பேருரை, விளக்கவுரை) என உரைகள் எழுதிறப்படும். அவை முழு நூற்குமோ, அதன் ஒரு பகுதிக்கு மட்டுமோ இருக்கலாம். பகுதியுரையும், தொடர்ச்சியான ஒரு பகுதிக்கோ, அங்கு மிங்கும் தெரிந்தெடுக்கப்பட்ட சில பல பாவிற்கோ இருக்கலாம். எண்வகை வனப்பாக வகுக்கப்படும் நூற்றுக்கணக்கான பனுவல் வகைகளும், இசை நாடகம் கணியம் மருத்துவம் அறிவியல் கம்மியம் முதலிய அறமல்லாத பிற நூல்களுமாயின், ஆசிரியன் வரலாற்றுத் தொடர்பின்றியே பெரும்பாலும் மூலமும் உரையும் இயலும். நல்வழியும் திருக்குறளும் போன்ற அறநூலாயின், ஆசிரியன் தன் வாழ்க்கையிற் கடைப்பிடித்த நெறிமுறைகளையே அவன் நூலும் மறுநிழலிட்டுக் காட்டுதலால், ஆசிரியன் வாழ்க்கை வரலாறு அவனியற்றிய அறநூலொடு வெளிப்படையாகவோ குறிப்பாகவோ இரண்டறப் பின்னிக்கிடக்கின்றது. இதனால், திருவள்ளுவரின் வாழ்க்கைச் செய்திகள் பல அவரியற்றியருளிய திருக்குறளாலேயே விளக்கம் பெறுகின்றன. இதை யுணர்ந்தே திரு. மகராசனாரும், திருவள்ளுவர் ஒப்புயர்வற்ற உலகப் பொது அறநூலாசிரியராதலாலும், அவர் பெருமையும் தலைமையும் தமிழ்ப் பகைவரால் இயன்றவரை மறைக்கப்பட்டு வருதலாலும், அவரைப் பின்பற்றிப் போற்றுவதனாலேயே தமிழர் தம் ஆரிய அடிமைத்தனத்தி னின்று மீண்டு தம் முன்னோர்போல் முன்னேற முடியுமாதலாலும், ஆசிரியர்க்கே சிறப்புக் கொடுத்துத் தம் சின்னூற்குத் திருவள்ளுவர் என்றே பெயரிட்டு, அவர் அருமை பெருமைகளை அகச்சான்று கொண்டே விளக்கிக் காட்டுகின்றார். மகராசனார் திருவள்ளுவரின் சிறப்பியல்கள் இதுவரை ஏனை யுரையாசிரியர்க்கும் ஆராய்ச்சியாளர்க்கும் புலனாகாது, திரு. மகராசனார்க்குப் புத்தம் புதுவதாகத் தோன்றிய திருவள்ளுவர் எழு சிறப்பியல்கள் வருமாறு: 1. இம்மையையும் மறுமையையும் ஒன்றாயிணைத்தவர் இதுவரை உலகில் தோன்றிய பல்வேறு மதத் தலைவரும் குரவரும், உலகியலையும் மதவியலையும் இருவேறாகப் பிரித்து இம்மையையும் மறுமையையும், வெவ்வேறுலகத்திலும் வெவ்வேறு காலத்திலும் ஒன்றன் பின் ஒன்றாக நிகழும் இருவேறு வாழ்க்கை நிலைகளாகவே கூறியுள்ளனர். திருவள்ளுவரோ, அவ் விரண்டும் இம்மையிலேயே இவ்வுலகத்திலேயே ஒருங்கே நிகழக்கூடியவை யென்றும், மக்களுள்ளும் ஒருசாரார் தேவரா யிருத்தலொண்ணு மென்றும், மண்ணுலகமும் அவர்க்கு விண்ணுலகமே யென்றும், கூறியுள்ளார். ``வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும்'', (50) ``செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து'', (413) ``ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து'', (353) ``ஆரா வியற்கை யவாநீப்பின் அந்நிலையே பேரா வியற்கை தரும்'', (370) ``முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும்'', (388) ``ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல்'' (702) என்னுங் குறள்கள் இதற்குச் சான்று பகரும். 2. பல்வகைப்பட்ட மக்களொடு பழகியறிந்தவர் திருவள்ளுவரைக் காணவும் கண்டுரையாடவும் புலவர் பலர் அவ்வப்போது அவர் இல்லம் வந்திருப்பர். மாலை நேரம் மயிலைக் கடற்கரை யோரம் உலாவப் போந்தவிடத்து, வழக்கமாகவும் புதிது புதிதாகவும் பலர் தலைக்கூடி அளவளாவியிருப்பர். கருத்தொத்த புலவர் பிரிவின்கண் மனம் வருந்தியதையும், அறிவிலாப் பேதையர் பிரிவின்கண் மனம் வருந்தாதிருந்ததையும், ``உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்'', (394) ``பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில்'' (839) என்னுங் குறள்களாலும், ஓர் உண்மையை எத்துணை விரிவாகவும் தெளிவாகவும் விளக்கி யும் தான் கொண்டதே கோலமென்று வலித்த முரண்டன் ஒருவன் செய்தியை, ``காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாந் தான்கண்ட வாறு'' (849) என்னுங் குறளாலும் குறித்திருக்கலாம். ``அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை யளாவிய கூழ்'', (64) ``மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பஞ் செவிக்கு'', (65) ``குழலினிது யாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொற் கேளா தவர்'' (66) என்னுங் குறள்கள். திருவள்ளுவர்க்கு மக்கள் பலர் இருந்தமையைத் தெரிவிக்கும். இங்ஙனமே பிறவும். 3. அறத்தை அறத்தின்பொருட்டே வலியுறுத்தியவர் ஏனை அறநூலாரெல்லாம், நல்விளைவைச் சுட்டி ஆசைகாட்டி ஏவல் (விதி) அறவினையையும், தீவிளைவைச் சுட்டி அச்சமூட்டி விலக்கற வினையையும், செய்யுமாறு தூண்டியிருக்க; திருவள்ளுவரோ, சிறிதும் விளைவை நோக்காதும் தீமையே விளையினுஞ் சிறிதும் அஞ்சாதும், உடன்பாடும் எதிர்மறையுமாகிய இருவகை அறவினைகளையும் அறம் நோக்கியே செய்தல் வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். ``நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று'', (222) ``ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோட் டக்க துடைத்து'' (220) என்னுங் குறள்களை நோக்குக. 4. எல்லா நிலைமையிலும் மாந்தன் இயல்பை ஆய்ந்தறிந்தவர் உறவும் எதிரும்பற்றிப் பல்வேறு வகைப்பட்ட இரட்டைப் பகுப்பு (dichotomy) நிலையில், ஒவ்வொருவரும் கொண்ட குணத்தைப் பாராட்டி யும், செய்யுங் குற்றத்தைக் கண்டித்தும், செய்ய வேண்டிய கடமையை எடுத்துரைத்தும், நல்வழிப்படுத்தியவர் திருவள்ளுவர். இறைவன் -அடியான், அரசன் - குடிவாணன், கணவன்- மனைவி, தந்தை - மகன், இல்வாழ்வான் - துறவி, செல்வன் - வறியன், கற்றோன் - கல்லான், தாளாளன் - சோம்பேறி, இரவலன் - புரவலன், சிறியர் - பெரியர், வலியன் - மெலியன், சான்றோன் - கயவன், நண்பன் - பகைவன், உட்பகை - வெளிப்பகை, நோயாளி - நோயிலி, இளையன் - முதியன், குறுவாழி - நெடுவாழி முதலியன இரட்டைப் பகுப்புகள். எ-டு: தந்தை - மகன் ``தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்.'' (67) ``மகன்றந்தைக் காற்றும் உதவி யிவன்றந்தை என்னோற்றான் கொல்லெனுஞ் சொல்.'' (70) இல்வாழ்வான்-துறவி ``துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.'' (42) ``நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.'' (28) தாளாளன்-சோம்பேறி ``முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.'' (616) ``ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை.'' (594) ``நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.'' (605) இங்ஙனமே ஏனையவும். 5. மக்களெல்லாரையும் சான்றோராக்கத் திட்டமிட்டவர் ஒருவன் இளமையிற் கல்லாதவனாயினும் கற்றோரையடுத்து அவர் சொற்பொழிவுகளை ஒழுங்காகக் கேட்டும் கல்விமானாகலாம் அல்லது அறிவடையலாம் என்பதை, ``கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்(கு) ஒற்கத்தின் ஊற்றாந் துணை'', (414) ``செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து'' (413) என்னுங் குறள்களால் பெறவைத்தார் திருவள்ளுவர். இனி, அவர், ``நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்(கு) இனத்தியல்ப தாகும் அறிவு'', (452) ``மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்'' (455) என்றும் கூறினார். நல்லோர் கூட்டுறவால் ஒருவன் நல்லோனாகலாம் என்பதை, பின்வரும் ஆங்கிலப் பழமொழிகளும் தெரிவிக்கும். Tell me the company you keep, and I will tell you what you are. Tell me your friend and I will tell you your character. Tell me with whom thou goest and I will tell thee what thou doest. He that walketh with the virtuous is one of them. Keep good company and you shall be of the number. அறிவும் நற்குணங்களும் நிறைந்தவனே சான்றோன். சாலுதல் நிறைதல். சால்வது சால்பு. சால்புடையோன் அல்லது சான்றவன் சான்றோன். ``குணநலம் சான்றோர் நலனே'', (982) ``அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு) ஐந்துசால் பூன்றிய தூண்'' (983) என்றார் திருவள்ளுவர். ``ஈன்றுபுறந் தருதல் என்றலைக் கடனே சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே'' (புறம். 312) என்று ஒரு மறக்குலத் தாய் கூற்றாகப் பொன்முடியார் பாடியுள்ளார். ``தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்'', (67) ``ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்'', (69) ``மகன்றந்தைக் காற்றும் உதவி யிவன்றந்தை யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்'' (70) என்றதனால், ஆறறிவு படைத்து உயர்திணை யென்று உயர்த்திச் சொல்லப்படும் மக்களினத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் சான்றோனாதல் வேண்டுமென்பதே, திருவள்ளுவர் நோக்கமாம். 6. இல்லறத்தை நல்லறமாக்கியவர் மேனாட்டுக் கிறித்தவக் குரவர் இரண்டொருவர் மட்டுமன்றி, தமிழ்நாட்டுத் துறவியார் ஒருவரும், திருக்குறட் காமத்துப்பால் என்னும் இன்பத்துப்பாலைப் பிறழவுணர்ந்து, திருக்குறள் துறவியர் கற்கத் தகுந்த நூலன்று என்று புறக்கணித்துள்ளனர். இனி, ``நோய்கொண்டா லுங்கொளலாம் நூறுவய தாமளவும் பேய்கொண்டா லுங்கொளலாம் பெண்கொள்ள லாகாதே'' என்று பெண்ணினத்தைப் பழித்த சிவப்பிரகாச அடிகட்கும் மேல், பெண் ணுடம்பையே பிணக்கழுகுபோற் சின்னபின்னமாகச் சிதைத்து, இம்மை யின்பத்தை அறவே வெறுப்பவர்போல் இறைவனை இழித்தும் பழித்தும் அறிவிலியாக்கியுள்ள சில துறவியருமுளர். மற்ற உயிரினங்களைப் போன்றே மக்களினத்தையும் இறைவனே ஆணும் பெண்ணுமாகப் படைத்து, இனப்பெருக்கத்தை இன்ப நுகர்ச்சி யொடு இரண்டறப் பிணைத்திருக்கின்றான். பெண்ணைப் பழிப்பவர், இறைவனையும் பெற்ற தாயையும் ஒருங்கே பழிப்பவராவர். ஒவ்வொரு மொழியிலும், சிறந்த இலக்கியத்திற் பெரும்பகுதி பெண்பற்றி யெழுந்ததே. இறைவனுக்கும் பத்தி முற்றிய அடியானுக்கும் இடைப்பட்ட உறவிற்குக் காதலன் காதலியுறவே உகந்த உவமமாகின்றது. தமிழ்ப் பொருளிலக்கணத்தைச் சேர்ந்த அகப்பொருளே திருக்குறள் இன்பத்துப்பாலிற்கு அடிப்படையாயினும், திருக்குறள் அறநூலாதலின், இன்பமொன்றே நோக்கிய இலக்கணநூல் போலாது, அறமும் இன்பமும் ஒருங்கே நோக்கிய ஒருவகைத் தனிக்கோவைப் பாடலே திருவள்ளுவர் இன்பத்துப்பால் என்பதை அறிதல் வேண்டும். ஆகவே, இலக்கண அகப்பொருளிற் போல் முன்பின்னாக மணக்கப்படும் பல தலைவியரும், இடையிடை தொடர்புகொள்ளும் பரத்தையரும், திருவள்ளுவர் இன்பத்துப் பாலில் இல்லவேயில்லை என்பது வெளிப்படை. பொருட்பாலில் உள்ள `பிறனில் விழையாமை', `வரைவின் மகளிர்' என்னும் அதிகாரங்களும் இதை ஐயந்திரிபற வலியுறுத்தும். எனவே, ஒரே கற்புக் காதலனும் ஒரே கற்புக்காதலியும் முதலிலிருந்து முடிவுவரை நுகரும் காமத்துக் காழில் கனியான ஈடிணையற்ற பேரின்பமே, திருவள்ளுவர் இன்பத்துப்பாற் பொருள் என்று தெளிக. இவ்வகையில் இது பரத்தையிற் பிரிவு கூறும் திருச்சிற்றம்பலக்கோவையினும் மிகச் சிறந்ததாகும். ``அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்'' என்று மாமூல னாரும், ``இன்பம் பொருளறம் வீடென்னு மிந்நான்கும்'' என்று நரிவெரூஉத் தலையாரும், ``இன்பத் திறமிரு பத்தைந்தால்'' என்று மதுரைப் பெருமருத னாரும், ``இன்பு சிறந்த நெய்'' என்று நப்பாலத்தனாரும், ``இன்பின் திறனறிந்தேம்'' என்று கொடிஞாழன் மாணிபூதனாரும். திருவள்ளுவ மாலையிற் பாடியிருப்பதால், இன்பத்துப்பால் என்றே ஆசிரியராற் பெயரிடப்பட்டிருந்து பின்னர்க் காமத்துப்பால் என்று சிலரால் மாற்றப் பட்டுப் பரிமேலழகராலும் தழுவப்பட்டிருத்தல் வேண்டும். காமத்துப்பால் என்ற பெயரைக் கண்டவுடன் அப்பால் வாற்சாயனர் காமசூத்திரத்தைத் தழுவியதென்று கொண்டுவிட்டார், தமிழைக் காட்டிக் கொடுப்பதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்த வையாபுரிபிள்ளை. காதலின்பத்தையும் அறத்தையுங் கடுகளவுங் கருதாது புணர்ச்சி வினையே சிறந்த பொருளாகக் கொண்டு, பொதுமகளிரொடும் பிறர் மனைவியரொடும் புணரும் பெருந்திணைக் காமத்தைக் கூறும் பரத்தை நூல் (pornography) தெய்வக் காதலைக் கூறும் திருக்குறள் இன்பத்துப்பாலினின்று பெரிதும் வேறுபட்டதாகும். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருட் பாகுபாடு பற்றி இன்பத்துப்பால் என்றொரு தனிப் பகுதியில் இன்பம் பிரித்துக் கூறப்பட் டிருப்பினும், உண்மையில் அது அறத்துப்பாலில் இல்லறவியலொடு இணைந்ததே. இவ் வுலகில் தலையான இன்பம் பெண்ணின்பம். அது இல்வாழ்வான் தன் வாழ்க்கைத் துணையான மனைவியிடம் பெறுவது. அறம் செய்து இல்வாழும் வாழ்க்கை இல்லறம். அதற்கு இன்றியமையாத நிலையான துணை மனைவி. ஆகவே, அறப்பயனும் இன்பமும் ஒரே வாழ்க்கை நிலையிற் பெறப்படுகின்றன. நிலையான காதன் மனைவியிடம் பெறும் இன்பமே உண்மையானது; சிறந்தது. நிலையில்லாத காதலற்ற பொது மகளிர் தரும் இன்பம் பொய்யானது; இழிந்தது. அதனால், ``பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ யற்று'' (913) என்றார் திருவள்ளுவர், இறைவனால் இணைக்கப்பெற்ற கற்புடைக் கணவனும் மனைவியும் காதலொடும் மனத் தூய்மையொடும் அறஞ் செய்து வாழும் தெய்வத் தன்மையான இல்லறம், துறவறத்தினும் நல்லறம் என்பது, திருவள்ளுவ ராலும் பிறராலும் முடிந்த முடிபாகத் தீர்க்கப்பட்ட தீர்ப்பாதலால், திருவள்ளுவரின் இன்பத்துப்பாலை இகழ்பவர் இறைவன் ஏற்பாட்டை இம்மியும் அறியாதவரேயாவர். ஆகவே, பேரின்ப நுகர்ச்சியை அல்லகூறி (Allegory) போல் உவமையாகக் காட்டும், இன்பத்துப்பால், மறைநூலின் பாற்படுமேயன்றி வடவர் காமநூலாகாது. 7. சொற்றிறன் முற்றுங் கற்றவர் திருவள்ளுவர், ஒரு தமிழ்ப் பேரகரமுதலித் தொகுப்பாசிரியர் போல் தமிழ்ச் சொற்றொகுதி யனைத்தையும் அறிந்தவர்; தொல்காப்பியத்தினுஞ் சிறந்த மூவதிகார முற்றிலக்கண நூலாசிரியர்போல், தலைசிறந்த இலக்கணப் புலமை வாய்ந்தவர்; இக்காலச் சொல்லாராய்ச்சியாளர்போல் சொற்களின் அமைப்பையும் பல்வேறு வடிவங்களையும் அவற்றின் சிறப்புப் பொருள்களையும் ஆய்ந்தவர்; ஓரளவு புதுச் சொற்களையும் புனைந்தவர். அவர் கூற்றுகளினின்று பின்வருமாறு அவர் சொல்லியல்பையும் சொல் வன்மையையும் உய்த்துணரலாம். என்றும் அகனமர்ந்தும் முகனமர்ந்தும் இன்சொற் சொல்பவர் (92), ஒருபோதும் பயனில சொல்லாதவர் (190-200), கேட்பாரை வயப்படுத்திப் பகைவரும் விரும்புமாறு சொல்பவர் (643), தன் சொல்லை வெல்லுஞ் சொல் இல்லாதவாறு சொல்பவர் (645), சோராதும் எவருக்கும் அஞ்சாதும் சொல்பவர் (647), கோவைபட இனிது சொல்பவர் (648), பொருள்பெருக்கிச் சொற்சுருக்கிச் சொல்பவர் (649), பிறர்க்குத் தெளிவாக விளங்கச் சொல்பவர் (650), அவையறிந்து சொல்லின் தொகை யறிந்து சொல்லுந் தூய்மையர் (711), வேளையறிந்து நன்குணர்ந்து சொல்பவர் (712), நுண்ணறிஞர்முன் நுண்ணறிஞராயும் புல்லறிஞர் முன் புல்லறிஞர் போன்றும் சொல்பவர் (714), அறிவால் மூத்தோர்முன் முந்திச் சொல்லாதவர் (715), அறியும் ஆற்றல் இல்லாதவரிடை ஒன்றுஞ் சொல்லாதவர் (719). இனி, குறியெதிர்ப்பை (221), வைப்புழி (226), நெடுநீர் மறவி மடிதுயில் (605) என்னுஞ் சொற்களால், அவரது தகுந்த சொல்லையாளுந் திறமும் அறியப்படும். திருக்குறட் சிறப்பியல்கள் திருவள்ளுவரின் சிறப்பியல்களைக் கூறியது போன்றே, திருக் குறளின் சிறப்பியல்கள் சிலவற்றையும் சிறப்பாகக் கண்டு கூறியுள்ளார் திரு. மகராசனார். இவற்றுட் சில ஏனையோராலும் ஏற்கெனவே கூறப்பட்டிருப் பினும், அவற்றைத் தெளிவாக விளக்கியும் திறம்பட வலியுறுத்தியும் கூறியிருப்பது புதுச்சிறப்பாகும். 1. ஒப்புயர்வற்றது பல மதங்கட்குரிய மறைநூல்கள் அவ்வம் மதத்தார்க்குத் தலை சிறந்தனவேனும், நாடு இன குல மத கட்சிச் சார்பற்று மன்பதை முழுவதற்கும் பொதுவான உயரிய நாற்பொருண் மறைநூல் திருக்குறளே யென்பது, எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததொன்றே. ஆய்ந்து பாராது ஆரியத்தையேற்றுத் தம்மையும் தம் குடிகளையும் அடிமைப்படுத்தி, ``ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாந் துயரம் தரும்'' (792) என்னும் குறட் கிலக்கியமாகிய மூவேந்தரின் பேதைமைச் செயலால், வேதம் தேவமொழி யென்றும் வேதியன் நிலத்தேவன் என்றும் வழங்கிவரும் (அல்லது வந்த) கூற்று, கூற்றாகித் தமிழரின் மதியைக் கொன்றுவிட்டதனால், ``அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத் திறமிருபத் தைந்தாற் றெளிய - முறைமையால் வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார் ஓதவழுக் கற்ற துலகு.'' ``நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூன்முறையை வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ் சிந்திக்க கேட்க செவி.'' ``சாற்றிய பல்கலையுந் தப்பா அருமறையும் போற்றி யுரைத்த பொருளெல்லாம் - தோற்றவே முப்பான் மொழிந்த முதற்பா வலரொப்பார் எப்பா வலரினு மில்.'' ``ஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர் உள்ளுதொ றுள்ளுதொ றுள்ள முருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு.'' ``ஐயாறு நூறு மதிகார மூன்றுமா மெய்யாய வேதப் பொருள்விளங்கப் - பொய்யாது தந்தா னுலகிற்குத் தான்வன் ளுவனாகி அந்தா மரைமே லயன்.'' ``எப்பொருளும் யாரும் இயல்பி னறிவுறச் செப்பிய வள்ளுவர்தாம் செய்பவரும் - முப்பாற்குப் பார தஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை நேர்வனமற் றில்லை நிகர்.'' ``ஏதமில் வள்ளுவர் இன்குறள்வெண் பாவினால் ஓதிய ஒண்பொரு ளெல்லாம் - உரைத்ததனால் தாதவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த வேதமே மேதக் கன.'' ``இன்பம் பொருளறம் வீடென்னும் இந்நான்கும் முன்பறியச் சொன்ன முதுமொழிநூல் - மன்பதைகட் குள்ள அரிதென் றவைவள் ளுவருலகங் கொள்ள மொழிந்தார் குறள்.'' ``வேதப் பொருளை விரகால் விரித்துலகோர் ஓதத் தமிழா லுரைசெய்தார் - ஆதலால் உள்ளுந ருள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப வள்ளுவர் வாய்மொழி மாட்டு.'' ``ஒருவ ரிருகுறளே முப்பாலி னோதுந் தரும் முதனான்குஞ் சாலும் - அருமறைகள் ஐந்துஞ் சமயநூ லாறுநம் வள்ளுவனார் புந்தி மொழிந்த பொருள்.'' ``சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார் பன்னிய இன்குறள்வெண் பா.'' என்னும் பதினொரு வெண்பாக்கள், கடைக்கழகப் புலவர் பதினொருவர் பெயரில் திருவள்ளுவ வெண்பா மாலையிற் காணப்படுகின்றன. அப் பதினொருவரும் உண்மையாய் அவற்றைப் பாடியிருப்பினும், அவர் ஆரிய வேதத்தைக் கற்றோ கேட்டோ அறிந்தவராகார். அறிந்தவராயின் அங்ஙனம் பாடியிரார். ஏனெனின், பல்வகைச் சிறுதெய்வ வழுத்துத் திரட்டாகிய வேதத்திற்கும் முழுமுதற் கடவுள் வணக்கத்தொடு கூடிய நான்மாண் பொருள் நூற்கும், ஒப்பு நோக்கற்குரிய பொருள் தொடர்பு ஒன்றுமில்லை. இனி, இதற்கு நேர்மாறாக, ``தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால் ஆனா அறமுதலா அந்நான்கும் - ஏனோர்க்(கு) ஊழி னுரைத்தார்க்கும் ஒண்ணீர் முகிலுக்கும் வாழியுல கென்னாற்று மற்று'' என்று நக்கீரர் பெயரிலும், ``அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின் திறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும் வள்ளுவன் என்பானோர் பேதை யவன்வாய்ச்சொல் கொள்ளார் அறிவுடை யார்'' என்று மாமூலனார் பெயரிலும், ``ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின் அன்றென்ப ஆறு சமயத்தார் - நன்றென எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி'' என்று கல்லாடர் பெயரிலும், ``பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு தெரிந்து திறந்தொறுஞ் சேரச் - சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல் வல்லாரார் வள்ளுவரல் லால்'' என்று அரிசில்கிழார் பெயரிலும், ``ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும் பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர் வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்'' என்று நத்தத்தனார் பெயரிலும், ``உள்ளுத லுள்ளி யுரைத்த லுரைத்ததனைத் தெள்ளுத லன்றே செயற்பால - வள்ளுவனார் முப்பாலின் மிக்க மொழியுண் டெனப்பகர்வார் எப்பா வலரினு மில்'' என்று முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் பெயரிலும், ``அறநான் கறிபொரு ளேழொன்று காமத் திறமூன் றெனப்பகுதி செய்து - பெறலரிய நாலு மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார் போலு மொழிந்த பொருள்'' என்று தொடித்தலை விழுத்தண்டினார் பெயரிலும், ``எல்லாப் பொருளும் இதன்பா லுளவிதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லாற் பரந்தபா வாலென் பயன்வள் ளுவனார் சுரந்தபா வையத் துணை'' என்று மதுரைத் தமிழ்நாகனார் பெயரிலும், ``அறமுதல் நான்கும் அகலிடத்தோ ரெல்லாம் திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப் பன்னிய வள்ளுவனார் பான்முறைநே ரொவ்வாதே முன்னை முதுவோர் மொழி'' என்று கோவூர்கிழார் பெயரிலும், ``இம்மை மறுமை யிரண்டும் எழுமைக்கும் செம்மை நெறியில் தெளிவுபெற - மும்மையின் வீடவற்றி னான்கின் விதிவழங்க வள்ளுவனார் பாடின ரின்குறள்வெண் பா'' என்று இழிகட் பெருங்கண்ணனார் பெயரிலும், ``உள்ளக் கமல மலர்த்தி யுளத்துள்ள தள்ளற் கரியவிருள் தள்ளுதலால் - வள்ளுவனார் வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்குமெனக் கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு'' என்று குலபதி நாயனார் பெயரிலும், ``பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால் வையத்து வாழ்வார் மனத்து'' என்று தேனீக்குடிக் கீரனார் பெயரிலும், ``அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின் திறனறிந்தேம் வீடு தெளிந்தேம் - மறனெறிந்த வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயாற் கேளா தனவெல்லாங் கேட்டு'' என்று கொடிஞாழன் மாணிபூதனார் பெயரிலும், ``ஆற்ற லழியுமென் றந்தணர்கள் நான்மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவர் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று'' என்று கோதமனார் பெயரிலும், பதினாறு வெண்பாக்கள், திருக்குறளின் தனிநிலையையும் முதன்மையையும் பொதுமையையும் தலைமையையும் திட்டவட்டமாய்த் தெரிவிப்பனவாகத் திருவள்ளுவ வெண்பா மாலையி லேயே இருத்தல் காண்க. இனி, ``ஆரியமுஞ் செந்தமிழும் ஆராய்ந் திதனினிது சீரிய தென்றொன்றைச் செப்பரிதால் - ஆரியம் வேத முடைத்துத் தமிழ்திரு வள்ளுவனார் ஓது குறட்பா வுடைத்து'' ``செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருளொன்றே - செய்யா அதற்குரிய ரந்தணரே ஆராயி னேனை இதற்குரிய ரல்லாதா ரில்'' என்று, முற்றும் உரிமையருமாகாது அடிமையருமாகாது நடுநிலையாளர் போல் நடித்த நெஞ்சுரமிலிகள் இருவர் பாக்களும் திருவள்ளுவ வெண்பா மாலையில் உள. 2. ஆரியத் தொடர்பற்றது துறவறவியல் வீடு நோக்கிய தாதலாலும், ``அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன்'' (46) என்னும் குறட்படி இல்லறத்தாலும் வீடு பெறலாம் என்பது தமிழக் கொள்கையாதலாலும், சிவனடியார் அறுபத்து மூவருட் பெரும்பாலார் இல்லறத்தில் நின்றே வீடுபெற்றதாகப் பெரியபுராணங் கூறுவதாலும், இன்பத்துப்பாலும் திருக்கோவைபோல் அல்லகூறியாய் (Allegory) உட்கருத்து விளக்கம் பெற இடமுண்மையாலும், திருக்குறள் முப்பாலில் நாற்பொருளுங் கூறும் நிறைநூல் என்பதே உண்மையாம். இனி, பொய்யுடை யாரியர் சொல்வன்மையினாலும் மெய்யுடைத் தமிழர் சொலமாட்டாமையாலும், நாற்பொருட் பாகுபாடே ஆரியர் வகுத்ததென்றும், அகம் புறம் என்பதே தமிழர் பொருட் பாகுபாடென்றும், இன்றும் `தமிழ்ப் புலவர்' பலர் கருதிக்கொண்டுள்ளனர். அகம் புறம் என்பது பொருளிலக்கணப் பாகுபாடேயன்றி, அறநூற் பாகுபாடன்று; ஒவ்வொரு நூலிலும் பொருட்கேற்பப் பாகுபாடு வேறுபடும். எ-டு: நூல்வகை பாகுபாடு பொருளிலக்கணம் - அகம், புறம். அறநூல் - அறம், பொருள், இன்பம், வீடு. ஏரணம் - பொருள், குணம், கருமம், பொதுமை, சிறப்பு, ஒற்றுமை, இன்மை. கொண்முடிபு (சித்தாந்தம்) - கடவுள், கட்டுணி, கட்டு (பதி,பசு, பாசம்). இனி, இலக்கண நூற்குள்ளேயே, உயிர், மெய்,உயிர்மெய் (பிராணி - animal) என்பது எழுத்ததிகாரப் பாகுபாடு; பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பதும், உயர்திணை, அஃறிணை என்பதும், சொல்லதிகாரப் பாகுபாடு. நாற்பொருளுள் இம்மைக்குரிய முதன் மூன்றும் மூன்றன் பகுதியெனப்படும். ``மூன்றன் பகுதியும்'' (தொல். அகத். 41)- இதையே வடவர் திரிவர்க்கம் என்றனர். வேத ஆரியர் வழிபட்டவை, வானம், நிலமகள், ஐம்பூதம், கால நிலைகள், கோள்கள், ஆவிகள், இறந்த முன்னோர், சோமக்கள் முதலிய சிறு தெய்வங்களே; அவற்றுட் சில அஃறிணைப் பொருள்களே. முத்தொழில் இறைவனேயன்றிக் கருதுகோட் சிறுதெய்வங்களும் முன்னோராவிகளும் வீடுபேறு நல்கா. வேத ஆரியர் தமிழரொடு தொடர்புகொண்டு சிவநெறியும் திருமால் நெறியுமான தமிழ் மதங்களைத் தழுவிய பின்னரே, அறம் பொருள் இன்பம் வீடென்னும் தமிழ அறநூற் பாகுபாட்டைத் தர்மார்த்த காம மோட்சமென்று வடமொழியில் மொழிபெயர்த்துக் கொண்டனர். இனி, திருமால் மதத்தைக் கடைப்பிடித்த ஆரியக் கண்ணனை ஒரு தோற்றரவு (அவதாரம்) ஆக்கியபின் இயற்றிய பகவத் கீதையும், நுண்வலக்காரமாகப் பிறவியொடு தொடர்புபடுத்திய நால்வருணப் பாகுபாட்டையும் பிராமண வுயர்த்தத்தையுமே அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதால், வேதம் போன்றே திருக்குறளினின்று வேறுபட்டதும் அதை ஒவ்வாததுமாகும். ``The fourfold caste was created by Me, by the differentiation of Guna and Karma.'' (பக. கீ. 4:13). ``Of Brahmanas and Kshatriyas and Vaishyas, as also of Sudras, O Scorcher of foes, the duties are distributed according to their Gunas born of their own nature.'' ( 18: 41.) அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் பற்றிய தமிழர் கருத்தும் கொள்கையும், ஆரியத்தினின்று முற்றும் அல்லது பெரிதும் வேறுபட்டவையாகும். பொருள் வகை தமிழம் ஆரியம் அறம் ஈகை அல்லது நல்வினை. அடிப்பட்ட வழக்கு (தருமம்) அல்லது பிறவிக்குல ஒழுக்கம் (வருணாசிரம தருமம்), கடமை. பொருள் அறவழியில் ஒவ்வொரு அரசியல் தொழில் (அர்த்தம்) வரும் ஒவ்வொரு அல்லது கலை. தொழிலாற் பொருளீட்ட (Political Science) அரசன் துணையாயிருந்து, தானும் தன் காப்புத் தொழிலாற் பொருளீட்டல் இன்பம் ஒருகணவ ஒரு மனைவி விலங்கியற் காமவின்ப (காமம்) அறவழி இருதலைக் நுகர்ச்சி. காதலின்பம். வீடு இல்லறத்தாலும் துற துறவு நிலையாற் பிராமணன் (மோட்சம்) வறத்தாலும் எல்லாரும் மட்டும் பெறத்தக்கது. பெறத்தக்கது. நாற்பொருளுங் கூறும் நூல் `திருக்குறள்' ஒன்றே. அதுபோன்ற தொன்று வடமொழியில் இல்லை. நாற்பொருளும் தனித்தனி கூறும் தமிழ் நூல்களுள் பொருள் நூல்கள் இறந்துபட்டன. ``மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள'' (தனிப்பா :) 3. தமிழப் பண்பாட்டின் உயர்வு காட்டுவது எ-டு: `ஒழுக்கம் உடைமை குடிமை யிழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.'' (குறள். 133) ``ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.'' ( 656) 4. நூலமைப்புச் சிறப்பு மிக்கது மக்கள் வாழ்வுபற்றிய அனைத்துச் செய்தியும் அடங்கும் நாற் பொருளுள்ளும் வீட்டை அறத்துள் அடக்கி முப்பாலாக்கி, நானூறு துறை கொண்ட அகப்பொருளை இருபத்தைந்து துறையாக ஒடுக்கிப் பனை நிழலைக் காட்டும் பனித்துளிபோல் பெரும் பொருள் விரியச் சுருங்கிய சொல்லமையும் குறட்பாவைக் கையாண்டு, அதிகாரந்தொறும் பப்பத்துக் குறள் கொண்ட ஓரியலமைப்புப் பகுதிகளையெல்லாம் ஆற்றொழுக்காக ஒழுங்குபடுத்தி வலம்புரி முத்துகள் பெய்த பொலம்புரிச் சிமிழ்கள்போல் விழுவிய கருத்துகள் கெழுமிய 1330 குறள்களையும் அணிபெறத் தொகுத்து, நால்வகை யரண்போன்ற கடவுள் மழை முனிவன் அறம் என்னும் நாற்பொருட் பாயிரத்தைச் சேர்த்துத் `திருக்குறள்' என்னும் அன்மொழித்தொகைப் பெயர் தெய்வத் தன்மையைக் காட்டி என்றும் நிலவ, திருவள்ளுவர் இயற்றிய உலகத் திருவாய்மொழி இதுவரை எந் நாட்டிலும் இயன்றிராத பொத்தகப் புதுமையே. 5. ஒப்பற்ற உவமைச் சிறப்பினது எ-டு: ``உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது மிக்கற்றால் நீள விடல்.'' (குறள். 1302) ``தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு.'' ( 1107) ``களித்தானைக் காரணங் காட்டுதல் நீருட் குளித்தானைத் தீத்துரீஇ யற்று.'' ( 929) ``தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர் நிலையி னிழிந்தக் கடை.'' ( 964) ``வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.'' ( 552) மகராசனார் திருவள்ளுவர் வரலாறு வரைவுத் திறன் 1. திருக்குறள் இயற்றப்பட்ட சூழ்நிலை தெரிவித்தல். 2. திருவள்ளுவர் மனை வாழ்க்கையை இன்று நிகழ்வதுபோல் அகக்கண்முன் காட்டல். 3. ஆராய்ச்சியைத் தூண்டுதல். 4. உலகப் பேரறிஞரொடு திருவள்ளுவரை ஒப்புநோக்கல். 5. சில சிறப்புக் குறிப்புகளைச் சேர்த்தல். ``காமத்துக் காழில் கனி'' என்னும் தொடர்பற்றிய குறிப்பும்; திருவள்ளுவர் நகையாடியும், வினைவிலக்கியும், குற்றங் கூறியும், விளைவு கூறி எச்சரித்தும், அறிஞர் செயலை எடுத்துரைத்தும், உவமை கூறியும், கடிந்துரைத்தும், சினந்தும் வைதும், சாவித்தும் பல்வேறு வகையில் தீயோரைத் திருத்துகின்றார் என்பதும் ஆராய்ச்சியைத் தூண்டுவனவே. திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகளைத் தெரி வித்திருப்பதும், T.K. சிதம்பரநாத முதலியாரின் இரண்டொரு குறள் விளக்கவுரைகளை எடுத்துரைத்திருப்பதும், உலக மரக்கறியூண் மாநாட்டு விடைமுகவர் கோவை வரவையும் திருவள்ளுவரைப் பாராட்டியதையும் குறித்திருப்பதும், சிறப்புக் குறிப்புகளாம். முடிபு ஆங்கிலங் கற்ற தமிழர் அனைவரும், திரு. மகராசனார் Tiruvalluvar' என்னும் ஆங்கிலச் சின்னூலை வாங்கிப்படிக்க. விலை 2½ உருபாதான். ஏற்கெனவே தமிழ்நாட்டிற் பரவியுள்ள திருவள்ளுவர் திருவுருவப் படத்தில் வடநாட்டு ஆரியச் சாயை கலந்திருப்பதால், பட விற்பனையாளர் திரு. மகராசனாரின் ஆங்கிலச் சுவடிப் படத்தையே இனிமேற் பெரிதாக்கி நாடு முழுதும் பரப்புவாராக. - செந்தமிழ்ச் செல்வி'' சனவரி, பெப்பிரவரி 1980 16 `திருவள்ளுவரும் பிராமணியமும்'-மதிப்புரை தமிழே உலக முதல் உயர்தனிச் செம்மொழியாயும் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாயும், தமிழரே உலகெங்கும் ஒளி பரவுமாறு முதல் முதல் நாகரிகப் பண்பாட்டு விளக்கேற்றினவராயும், இருந்தும்; இற்றைக்கு 2500 ஆண்டுகட்குமுன் நாவலந்தேயத்திற்குள்ளும் 2000 ஆண்டுகட்கு முன் தென்னாட்டிற்குள்ளும் வந்து புகுந்த பிராமணர் என்னும் ஆரியப் பூசாரியர், தாமுந் தம் எச்சமரபும் பழங்குடி மக்களான தமிழரையும் திரவிடரையும் என்றும் அடிமைத்தனத்துள்ளும் அறியாமை யுள்ளும் அமிழ்த்தி மேனத்தாக வாழுமாறு, தம் வெண்ணிறத்தையும் தம் முன்னோர் மொழியின் எடுப்பொலியையும் பயன்படுத்தித் தம்மை நிலத்தேவராகவும் தம் வழக்கற்ற முன்னோர் மொழியைத் தேவமொழியாக வும் காட்டி, தமிழ நாகரிகத்தின் தனிப்பெருஞ் சான்றாயிருந்த பல்லாயிரக் கணக்கான முதலிரு கழக நூல்கள் அத்தனையையும் அழித்துவிட்டனர். இன்று தமிழ் நாகரிகத்தின் தனிச் சிறப்பைத் தாங்கி நிற்கும் இருபெருந் தூண்கள், இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் இடையிலெழுந்த தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலும் திருக்குறள் என்னும் இலக்கிய நூலுமே. இவ் விரண்டனுள், பொதுமக்களும் புலமக்களுமான இருசாரார்க் கும் விளங்குவதும், மன்பதை முழுவதற்கும் உலகுள்ள வளவும் பயன்படுவதும், இன்றும் எம்மொழியிலும் இணையில்லாததும் திருக்குறளாகும். இவ்விரு நூல்களையும், தமிழ்நாட்டையே தாய்நாடாகவும் தமிழையே தாய்மொழியாகவும் கொண்டு தமிழாலேயே பெரும்பாலும் வாழ்ந்து வரும் பிராமணருட் சிலர், நூலாசிரியரும் நுவலாசிரியரும் உரையாசிரியரும் பதிப்பாசிரியரும் தாளாசிரியருமாயிருந்து ஆரிய வழியினவாகக் காட்டிக், கட்டுப்பாடாகவும் நன்றிகெட்ட தனமாகவும் தம் முன்னோர் ஏமாற்றை இன்றும் போற்றி வருகின்றனர். நூலாசிரியருட் சிறப்பாகக் குறிப்பிடற் குரியவர் வரலாற்றாசிரியர். முன்பு காளிக்கோட்டப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை வாசகராகவும், பின்பு சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுப் பழம்பொருட்கலைப் பேராசிரியராகவும், இருந்த (S) கிருட்டிணசாமி ஐயங்காரால் 1920-ல் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட `இந்தியக் கலை நாகரிகத்திற்குத் தென்னிந்தியா உதவிய சில கூறுகள்' (Some Contributions of South India to Indian Culture) என்னும் நூல், 1942-ல் காளிக்கோட்டப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப் பெற்றது. அதன் 6ஆம் அதிகாரம் `குறள் - ஒரு பண்பியல் தமிழ் இலங்கு நூல்' (The Kural-A Characteristically Tamil Classic') என்னுந் தலைப்பினது, அதில், திருக்குறளை ஓர் ஆரியவழி நூலாகவும் திருவள்ளுவரை ஓர் இழிகுலமகனாகவும், தம்மால் இயன்ற அளவு காட்டியுள்ளார் அதன் ஆசிரியர். அதைப் பொறுக்க மாட்டாத உண்மைத் தமிழ்மகனாரும் மானியருமான (M.) சோமசுந்தரம் பிள்ளை என்னும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர், 1946-லேயே அதைக் கண்ட துண்டமாக நறுக்கிச் சின்னபின்னமாகச் சிதைத்து வரலாற்றிற்கும் உண்மைக்கும் ஏற்ப வன்மையாகக் கண்டித்துத், `திருவள்ளுவரும் பிராமணியமும்' (Tiruvalluvar and Brahminism) என்னும் தலைப்பில் ஓர் ஆங்கிலச் சுவடியை இயற்றினார். அஃது இதுவரை புதையுண்டு கிடந்தது. இன்று தெள்ளிய தமிழறிஞரும், தேற்றிப் போற்றும் அருநூற் களஞ்சியரும், தமிழ்ப் பேராசிரியர்க் கெல்லாம் வழிகாட்டும் மொழித் தொண்டரும், கோடி பெறினுங் குன்றுவ செய்யாக் குடிப்பிறந்தாரும், உலகத் தமிழ்க் கழக நெறியீட்டுக் குழு வுறுப்பினரும், காஞ்சிப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவரும், ஆகிய பேரா. கோ. `இராமச்சந்திரன்' என்னும் நிலவழகனாரால் அது, சுந்தரம் பிள்ளை, பூரணலிங்கம் பிள்ளை, மறைமலை யடிகள், கா.சுப்பிரமணியப் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், துடிசைக்கிழார் முதலிய தமிழச் சான்றோர் இல்லாக் காலத்தில், ஆரிய அடிமை நோய்க்கு அருமருந்தாக எளிய விலைக்கு வெளியிடப்பட்டுள்ளது. திருக்குறளின் பொருட்டமிழ்மையை எவரும் மறுக்கொணாச் சான்று காட்டி ஏரண முறைப்படி நிறுவும் இந் நூல் நெடுங்கால வுறக்கந் தெளியும் இற்றைத் தமிழனுக்கு மிகமிக வேண்டியதாம். இதை, ஆசிரியர், 1. பர். (Dr.) எசு. (S.) கிருட்டிணசாமி ஐயங்கார் பொத்தகத்தினின்று எடுத்த பகுதி (Extract from Dr. S. Krishnaswamy Iyengar's Book.) 2. திருக்குறளும் பிராமண வாழ்க்கையின் நானிலையும் (The Kural and the Four Stages of the Brahminical Divisions of Life), 3. பரிமேலழகர் திருவள்ளுவரைப் பிறழவுணர்ந்தமை (Thiruvalluvar Misunderstood by Parimel-Alagar), 4. வரலாற்றாசிரியர் திருவள்ளுவரைத் தவறாகக் காட்டியுள்ளமை (Tiruvalluvar Misrepresented by the Historian), 5. திருக்குறளும் தென்னிந்திய இந்துக் குமுகாயமும் (Kural and the Hindu Society of South India), 6. அருத்தசாத்திரத்திற்குத் திருவள்ளுவர் கடப்பாடு (Thiru valluvar's Indebtedness to Artha Sastra), 7. திருவள்ளுவரும் அவர் குலமும் (Tiruvalluvar and His Caste). என்னும் எழு பிரிவாக வகுத்துள்ளார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டுரை வடிவிலுள்ளது. முதற் கட்டுரைக் கூற்றுகளை மற்ற ஆறும் பகுதி பகுதியாக மறுக்கின்றன. இரண்டாம் பிரிவில், திருவள்ளுவர் தமிழ முறைப்படி இல்வாழ்க்கை, துறவு என்னும் இருவகை அறவாழ்க்கை நிலைகளையே அறத்துப்பாலில் வகுத்துக் கூறியுள்ளாரென்றும்; ஆரிய அல்லது பிராமண வாழ்க்கையின் நால் நிலையுள் முதலதான பிரமசரியம் அடியோடு விடப்பட்டுள்ளதென்றும், கிருகத்தன் இன்றியமையாது கடைப்பிடிக்க வேண்டிய வேதமோதுதலும் எரியோம்பலும் கூறப்படவே யில்லையென்றும், இல்லறத்திற்கு இன்றி யமையாத விருந்தோம்பலறம் பிராமணர்க்கு நெறியிடப்பட வில்லை யென்றும், துறவுநிலை இல்வாழ்க்கையின் தொடர்ச்சியாகாது தனிப்பட்ட தென்றும்; மனைவியோடு காட்டில் வாழும் வானப்பிரத்தம் துறவு நெறியன்மையின் கொள்ளப்படவில்லை யென்றும், துறவுநிலை வானப் பிரத்தமும், சந்நியாசமும் என இரண்டாகாது ஒன்றேயென்றும், இருவகைத் தமிழ அறவாழ்க்கையும் எல்லார்க்கும் பொதுவாயிருக்க, நால்வகை ஆரிய நிலையும் பிராமணர்க்கே சிறப்பாக வுரியவென்றும்; திருக்குறள் அறத்துப் பால் இங்ஙனம் இம்மியும் ஆரியச் சார்பில்லதென்றும், விளக்கப்பட் டுள்ளது. மூன்றாம் பிரிவில், திருவள்ளுவர் ஆரியத்திற்கு மாறாகவே நூலியற்றி யிருக்கவும், பரிமேலழகர் அதற்குச் சார்பாக அதை இயற்றி யிருப்பதாகக் கூறியிருப்பது காட்டப்பட்டுள்ளது. நாலாம் பிரிவில், 38ஆம் குறள் மனுதரும சாத்திரம் 5ஆம் அதிகாரத்திலுள்ள 155 அல்லது 156ஆம் சொலவத்தை யொத்ததென்றும், 166ஆம் குறட்கருத்து மகாபாரதப் பீடும பருவத்திலுள்ள தென்றும், 259 ஆம் குறள் மனுதரும சாத்திரம் 5ஆம் அதிகாரத்திலுள்ள 53ஆம் சொலவத் தொடு ஒப்பு நோக்கத்தக்க தென்றும், வரலாற்றாசிரியர் கூறியுள்ளது மறுக்கப் பட்டுள்ளது. ஐந்தாம் பிரிவில், திருக்குறள் தமிழ்நாட்டுப் பிராமணரைப் போற்றுகின்ற தென்னுங் கூற்றுப் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆறாம் பிரிவில், 501ஆம் குறள் சாணக்கியரின் அருத்த சாத்திரத்தைப் பின்பற்றியதென்னுங் கூற்றின் புரைமை காட்டப்பட்டுள்ளது. ஏழாம் பிரிவில், இக்காலக் குலப்பிரிவு அக்காலத்திலில்லை யென்பதும், திருவள்ளுவர் குலம் இன்னும் அறியப்படவில்லையென்பதும், தெரிவிக்கப்பட்டுள்ளன. அழகிய நடையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இவ் வரிய நூல், பகுதி (Demy) யளவில் வழுவழுப்பான வெண்டாளில், முகவுரையுட்பட, 55 பக்கங் கொண்டுள்ளது. விலை 1½ உருபா. பொத்தகம் வேண்டுவோர், பேரா. கோ. இராமச்சந்திரன், எம்.ஏ., தமிழ்த்துறைத் தலைவர், பச்சையப்பன் கல்லூரி, காஞ்சிபுரம்-3, என்னும் முகவரிக் கெழுதிப் பெற்றுக் கொள்க. ஆங்கிலங் கற்ற தமிழர் அனைவரும் இதை வாங்குதல் தக்கதாம். ஆயிரக்கணக்காகச் சம்பளம் பெறும் பெரும் பதவித் தமிழ்ப் பேராசிரியர் ``எங்கெழிலென் ஞாயி றெமக்கு'' என்றிருப்பவும், தமிழைப் பழிக்கும் ஒரு நூலைக் கண்டித்துத் தமிழ்ப் பெருமையைக் காத்த தலைமையாசிரியரைத் தமிழ்நாட்டு அரசும் பல்கலைக்கழகங்களும் போற்றக் கடப்பாடுடையன. அவை அது செய்யாது போயினும், உலகத் தமிழ்க் கழகம் இவ்வாண்டிறுதியில் நடைபெறும் ஆட்டை விழாவில் அவரைப் பாராட்டி, `திருக்குறட் காவலர்' என்னும் பட்டமும் அளிக்கும் என உறுதி கூறுகின்றேன். - ``செந்தமிழ்ச் செல்வி'' மே 1970 ----- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள் தி.பி. 1933 (1902) : திருநெல்வேலி மாவட்டம், சங்கரநயினார் கோயிலில் சுறவம் - 26ஆம் நாள் (7.2.1902) பிறந்தார். தந்தை : ஞானமுத்து தாய் : பரிபூரணம் தி.பி. 1938 (1907) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி தொடக்கக்கல்வி : நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப் பள்ளி. உயர்நிலைக்கல்வி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9,10,11 - வகுப்பு) தி.பி. 1950-52(1919-21) : முகவை மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப் பள்ளியில்முதற்படிவ ஆசிரியப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1952-53(1921-22) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி) உதவி ஆசிரியராய்ப் பணியாற்றினார். தி.பி. 1955 (1924) : மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம்நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றார்.(ï› வாண்டில் பாவாணரைத் தவிர வேறொருவரும்வெற்றி பெறவில்லை). உதவித்தமிழாசிரியர், சென்னை, திருவல்லிக் கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1956 (1925) : தமிழாசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். சிறுவர் பாடல் திரட்டு நூல் வெளியீடு. தி.பி. 1957 (1926) : திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1959 (1928) : தலைமைத் தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு. தி.பி. 1961 (1930) : நேசமணி அம்மையாரை மணந்தார். தி.பி. 1963 (1932) கிறித்தவக் கீர்த்தனம் - நூல் வெளியீடு. தி.பி. 1965 (1934) : தலைமைத் தமிழாசிரியர், பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளியில் பணியாற்றி னார். கீழைக்கலைத் (B.O.L.) தேர்வில் வெற்றி பெற்றார். தி.பி. 1968 (1937) : முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு - செந்தமிழ்க்காஞ்சி நூல் வெளி யீடு. இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார். ``கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்''நூல் வெளியீடு. தி.பி. 1971 (1940) : ஒப்பியன் மொழிநூல் முதற்பாகம் இயற்றமிழ்இலக்கணம்ஆகிய நூல்கள் வெளியீடு. கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கண நூல் வெளியீடு. தி.பி. 1972 (1941) : ``தமிழர் சரித்திரச் சுருக்கம்'' வெளியீடு : தமிழக இளைஞர் மன்றம், திருச்சிராப்பள்ளி. ``தமிழன் எப்படிக் கெட்டான்'' ஆகிய நூல்கள் வெளியிடல். தி.பி. 1974 (1943) : தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1974 (1943) : சுட்டு விளக்கம் - நூல் வெளியீடு. - பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடை பெற்ற முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். தி.பி. 1975 (1944) : - தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றினார். - திரவிடத்தாய் - நூல் வெளியீடு. தி.பி. 1980 (1949) : சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - நூல் வெளியீடு. பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். பாவாணர் அவர்கள் சேலம் கல்லூரியில் பணி யாற்றியபோது தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திர னார் அவர்கள் அக்கல்லூரியில் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1981 (1950) : உயர்தரக் கட்டுரை இலக்கணம் (மு.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1982 (1951) : உயர்தரக்கட்டுரை இலக்கணம் (இ.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1983 (1952) : சென்னைப்பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர் (M.A.) பட்டம் பெற்றார். பழந்தமிழாட்சி - நூல் வெளியீடு. தி.பி. 1984 (1953) : முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் - நூல் வெளியீடு. தி.பி. 1985 (1954) : தமிழ்நாட்டு விளையாட்டுகள் - நூல் வெளியீடு. தி.பி. 1986 (1955) : `A Critical Survey of Madras University Lexicon' என்னும் ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது. தி.பி. 1987 (1956) : தமிழர் திருமணம் - நூல் வெளியீடு. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1988 (1957) : பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் சேலம் தமிழ்ப் பேரவை இவரின் தொண்டைப் பாராட்டித் `திராவிட மொழிநூல் ஞாயிறு' எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. திசம்பர் 27, 28, 29-ல் தில்லியில் நடைபெற்ற அனைத் திந்தியக் கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார். தி.பி.1990 (1959) : தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல் லாக்கத்தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித்தமைக் காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப்பட்டது. மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட `தென்மொழி' இதழ் பாவலரேறு பெருஞ் சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ் விதழ் இன்றளவும் பெரும் பங்காற்றி வருகிறது. தி.பி. 1992 (1961) : சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியின் சீர்கேடு - நூல் வெளியீடு. - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், மக்களும் உண்டு - அதோடு எனக்கு மானமும் உண்டு - என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார். தி.பி. 1994 (1963) : துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு. தி.பி. 1995 (1964) : முனைவர் சி.இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் - தமிழ்ப் பெருங் காவலர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. ``என் அண்ணாமலைநகர் வாழ்க்கை'' என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது. தி.பி. 1997 (1966) : இசைத்தமிழ்க் கலம்பகம் பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் ``The Primary Classical Language of the World'' என்னும் நூல்கள் வெளியீடு. தி.பி. 1998 (1967) : தமிழ் வரலாறு வடமொழி வரலாறு “The Language Problem of Tamilnadu and Its Logical Solution” ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 1999 (1968) : மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணிவிழாவைக் கொண்டாடி மொழிநூல் மூதறிஞர் எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 06-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழிநூலின் வழுவியல் - ``Is Hindi the logical solution of India'' ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2000 (1969) : பறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் சி. இலக்குவனார், முனைவர் வ. சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது. இம் மாநாட்டில் - திருக்குறள் தமிழ் மரபுரை இசையரங்கு இன்னிசைக் கோவை “தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?” - ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2002 (1971) : பறம்புமலையில்தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்றபாரி விழாவில்பாவாணர் செந்தமிழ்ஞாயிறு என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தென் மொழியில் அறிவிக்கப்பட்ட `செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்டம்' வகுக்கப் பெற்றது. தி.பி. 2003 (1972) : தஞ்சையில் இவர் தலைமையில் உலகத் தமிழ்க்கழக மாநாடு - தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக நடந்தது. - தமிழர் வரலாறு, தமிழர் மதம் ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2004 (1973) : வேர்ச்சொற் கட்டுரைகள் நூல் வெளியீடு. தி.பி. 2005 (1974) : 8.5.1974-ல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநராகத் தமிழ்நாட்டரசால் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் அமர்த்தப்பட்டார். செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் பேரகர முதலியின் முதல் மடல முதற் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகு 1985-ல் வெளியிடப்பட்டது. தி.பி. 2009 (1978) : மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை - நூல் வெளியீடு.சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரனார் தலைமை தாங்கினார். தி.பி. 2010 (1979) : தமிழ் இலக்கிய வரலாறு - நூல் வெளியீடு. வாழ்நாள் முழுவதையும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய இப் பெருமகனுக்குத் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் `செந்தமிழ்ச் செல்வர்' என்னும் சீரிய விருது வழங்கப்பட்டது. தி.பி. 2011 (1980) : `Lemurian Language and Its Ramifications - An Epitome' எனும் ஆங்கில நூல் மதுரையில் நடை பெறவிருந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு அயல் நாட்டுப் பேராளர்களுக்காக (52 பக்க அளவில்) உருவாக்கப்பட்டது. தி.பி. 2012 (1981) : மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் என்னும் தலைப்பில் தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார். சுறவம் 2ஆம் நாள் சனவரி 15-ல் இரவு 12.30-க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார். 