பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 48 மறுப்புரை மாண்பு ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 48 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2001 மறுபதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8 + 144 = 152 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 95/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை .iii வான்மழை வளச்சுரப்பு v நூலடக்கம் 1 குரலே சட்சம் 1 2. குரல் சட்சமே; மத்திமமன்று 6 3. நன்னூல் நன்னுலா? 13 4. நன்னூல் நன்னூலா - மறுப்பறுப்பு 24 5. சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதபடைகட்கே 30 6. பேரா. தெ.பொ.மீ. தமிழுக்கதிகாரியா? 46 7. தெ.பொ.மீ. யின் திரிபாராய்ச்சி 75 8. பாணர் கைவழி மதிப்புரை (மறுப்பு) 115 9. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் மதிப்புரை மறுப்பு 128 மறுப்புரை மாண்பு 1 குரலே சட்சம் இயற்றமிழுணர்ச்சி போன்றே இசைத்தமிழுணர்ச்சியும் மிக்குவரும் இக்காலத்தில், இசைத்தமிழைப் பலரும் பலவாற்றால் தத்தமக் கிசைந்தவாறு ஆராய்வது தக்கதே, ஆனால், ஒரு படத்தைத் தலைகீழ்த் திருப்பிப் பார்ப்பதுபோல், முதனூலை, வழிநூலாகவும், வழிநூலை முதனூலாகவும் பிறழக்கொண்டு ஆராய்ச்சி நடாத்துவது ஒரு சிறிதும் தக்கதன்று. முத் தமிழில் எத்தமிழை ஆராயினும் முன்னதாக இன்றியமையாது அறிய வேண்டிய உண்மைகள் மூன்றுள. அவை தமிழும் தமிழரும் தோன்றியது குமரிநாடென்பதும், ஆரியர் வருமுன்னரே தமிழர் பல துறையிலும் முழுநாகரிக மடைந்திருந்தன ரென்பதும், தமிழர் அல்லது திரவிடரிடத்தி னின்றே ஆரியர் நாகரிகத்தையடைந்தன ரென்பதுமாம். ஆரியர் வருமுன்னரே தமிழ் முத்தமிழாய் வழங்கியதாதலின், ஒருவர் எத்துணைக் கலைபயில் தெளிவும் ஆராய்ச்சி வன்மையும் வாய்ந்தவ ரெனினும், ஆரிய வேதங்களை இசை முதனூலாகக் கொண்டு ஆராயின், விளக்கின்றிப் புத்திருள் வழி போவார் போல் இடர்ப்படுவாராவர். தமிழ்க் கலைகளையும் நூல்களையும் வடமொழியில் பெயர்க்கும்போது குறியீடு, பாகுபாடு, தொகையீடு முதலியவற்றை இயன்றவரை மாற்றி வழிநூலையே முதனூலாகக் காட்டுவது ஆரியர் வழக்கம். தமிழ்ப்பொழில் 17ஆம் துணர் 4ஆம் மலரிலிருந்து இசைத் தமிழைப்பற்றி விபுலானந்த அடிகள் எழுதிவந்த ஆராய்ச்சிப் பகுதிகளிற் சிலவற்றைப் படித்துப் பார்த்தேன். அவற்றால், அவ் வாராய்ச்சி முதலி லேயே கோணியதாக என் சிற்றறிவிற் கெட்டிற்று. உடனே இசைத்தமிழ்த் தோற்றத்தை யானே ஆராயத் தொடங்கினேன். அதன் பலனாகக் குரலே சட்சம் எனத் தோன்றுகின்றது. ஆயினும், இதை அறிஞர் ஆராய்ந்து உண்மை காணுமாறு இங்கு வரையலானேன். குரலே சட்சம் என்பதற்குச் சான்றுகள் 1. தன்மத நிறுத்தல் (1) ஏழிசை வரிசையில் குரல் முதலிற் கூறப்படுதல். இதுகாறும், எத் தமிழ்நூலினும், குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்ற வரிசையிலேயே ஏழு சுரங்களும் கூறப்படு கின்றன. (2) மத்தளத்திற்கு வலக்கண் குரலென்றல் சிந்தாமணியில், 675ஆம் செய்யுளுரையில், இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய் நடப்பது தோலியற் கருவி யாகும் என்பது மேற்கோள். தண்ணுமை, முழவு, மத்தளம், மிருதங்கம் எனப் பலவாறு சொல்லப்படும் ஓரினத் தோற்கருவிகளில், தொன்றுதொட்டு வலக்கண்ணே சட்சமா யிருந்துவருகின்றது. (3) குரலை முதற்றான மென்றல் 11ஆம் புறப்பாட்டில், குரல் புணர்சீர் என்னுந் தொடருக்கு முதற் றானமாகிய குரலிலே வந்து பொருந்தும் அளவையுடைய பாட்டை என்பது பழையவுரை. (4) கேள்விச் சுரம்(சுருதி) இயல்பாய்ச் சட்சமாயிருத்தல் எவர் பாடினும் இயல்பாய்ப் பாடும்போது மத்திமமன்றிச் சட்சமே சுருதியாயிருத்தலின், அதனையே முதற் சுரமாக நம் முன்னோருங் கொண்டிருக்க வேண்டும். (5) குரல் என்னுஞ் சொல் தொண்டையையும் அதிற் பிறக்கும் ஓசையையுங் குறித்தல் குல் > குர் > குரல். குலவு = வளை. L. curvus, E. curve. குரவை = வட்டமாக நின்று ஆடுங் கூத்து. E.,L. chorus, Gk. choros, orig . a dance in a ring. குரல் = வளைந்த துளை, துளையுள்ள தொண்டை, தொண்டையிற் பிறக்கும் ஓசை. ஒ.நோ: வளை = குழி. தொண்டை = தொளையுள்ளது. (தொள் + தை). Dan. kroc, E. craw, the throat of fowls, Dan. kroe, Ger. kragen, Scot. craig, the neck, E. crop, the craw of a bird, A.S. crop, Dut. crop, a bird’s crop. எல்லா ஓசையுங் குரலெனப்படுமேனும், இயல்பான கேள்வி யிசையே (சுருதி), குரலென்னுந் தொண்டைப் பெயராற் கூறப்படுதற் கேற்றல் காண்க. (6) குரலே சட்சமாக மாபெரும் புலவர் ஆபிரகாம் பண்டிதர் கொண்டமை இசைத்தமிழ்க் கடலை (சாகரத்தை)த் தனிப்படக் கடைந்து கருணாமிர்தம் என்னும் அரிய அமுதையெடுத்து நாம் உண்ண வைத்த காலஞ்சென்ற இராவ்சாகிபு ஆபிரகாம் பண்டிதர் அவர்களின் இசை யாராய்ச்சி நூலில், இரண்டொரு சிறு சருக்கல்களிருப்பதாகத் தெரியினும், குரலிசையைப்பற்றிய கொள்கை வலியுறுவதாகவே தோன்றுகின்றது. 2. பிறன்மத மறுத்தல் (விபுலானந்த அடிகள் குரல் மத்திமம் என்று கூறுவதை மறுப்பது.) (1) கூற்று: ``ச ரி க ம ப த நி என்னும் ஏழு சுரங்களுக்கும் பொருந்திய சுருதிகள் 4, 3, 2, 4, 4, 3, 2 ஆகும். ``குரல்துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாங் குரையா உழைஇளி நான்கு - விரையா விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார் களரிசேர் கண்ணுற் றவர்' என்றமையின், குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழும் இளிக் கிரமத்திலே, 4, 4, 3, 2, 4, 3, 2, என அலகு பெற்று நின்றன. இவைதமையே இளி முதலாக இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழையென நிறுத்துமிடத்து அலகுகள் 4, 3, 2, 4, 4, 3, 2 என நிரல் பெறுதல் காண்க. மறுப்பு: முதலாவது, அலகுகளே இன்னும் இத்தனை யென்று திட்ட மாகவில்லை. அலகு மொத்தம் 24 என்றும், 22 என்றும் இருவேறு கொள்கைகள் இருந்துவருகின்றன. இரண்டாவது, பண்ணுக்கேற்றபடி அலகுப் பகுப்பு வேறுபடுவதாகத் தெரிவதால், ஒரு பண்ணுக்கு வகுத்த அலகு முறையைப் பொதுமைப்படுத்துவது பொருந்தாது. மூன்றாவது, இசைத்தமிழ் முதனூல்கள் அழிந்தபின், ஆரிய வழிநூல்களைத் தழுவியும் தமிழிசை நூலும் நூற்பாவும் தோன்றியிருக்கலாமாதலின், தமிழிலுள்ள நூலெல்லாம் தனித்தமிழ்க் கொள்கைகளைக் கூறுபவையே யென்று கொள்வதற்கும் இடனின்று. (2) கூற்று: (வடநூல்) (தமிழ்நூல்) நாரத சங்கீத பிங்க திவாகரமும் சிட்சை ரத்தினாகரம் லந்தை சூடாமணியும் ச - மயில் மயில் குரல் ம வண்டு வண்டு ரி - பசு சாதகம் துத்தம் ப கிளி கிளி க - ஆடு ஆடு கைக்கிளை த குதிரை குதிரை ம - கொக்கு கிரௌஞ்சம் உழை நி யானை யானை ப - குயில் குயில் இளி ச குயில் தவளை த - குதிரை குதிரை விளரி ரி பசு பசு நி - யானை யானை தாரம் க ஆடு ஆடு இருஷபம் (விளரி), பசு, காந்தாரம் (தாரம்), ஆடு, தைவதம் (கைக் கிளை), குதிரை, நிஷாதம் (உழை), யானை என்பன இருமொழி மரபுக்கும் ஒத்துநின்றன. மறுப்பு: முதன்முதல் யாழிற் பல நரம்புகளைக் கட்டி மீட்டியபோது, கீழ்க் குரலோடொத்த மேற்குரலையும் அவற்றுக் கிடையிலுள்ள பிற சுரங்களையுங் கண்டு ஏழிசைகளை யறிந்தார்களேயொழிய, மேற்கூறியவாறு மயில் பசு முதலிய பறவை விலங்குகளின் ஓசைகளை ஒருங்கேயோ தனித் தனியோ கேட்டறியவில்லை. ஏழிசைகளைப் புள்ளொடும் விலங்கொடும் இசைத்துக் கூறுவது, புள்நூலையும் குறிநூலையும் ஒட்டிய கற்பனைக் கொள்கையாகவும் இருக்கலாம். இவ்வாறே, பிற்காலத்தாரும், எழுதீவு, எழுமுனிவர், எழுமரபு, ஏழாறு, எழுதேவதை, எழுநிறம் முதலியவாக ஏழென்னுந் தொகைபெற்ற பொருள்களோ டெல்லாம் தத்தம் விருப்பிற்கும் உன்னத்திற்கும் ஏற்றவாறு ஏழிசையை இசைத்துக் கூறுவாராயினர். இக் கூற்றெல்லாம் இசைநூலோடு எள்ளளவும் தொடர்புற்றவல்ல. குரலை மத்திமமாகக் கொண்டு, இருமொழி நூல்களிலும் கூறப்பட் டுள்ள புள் விலங்குகளை ஒப்புநோக்குமிடத்தும் ரி க த நி என்னும் நாற் சுரங்கட் குரியவையே ஒத்திருக்கின்றன; ஏனை முச்சுரங்கட்கும் ஒவ்வ வில்லை. குரலைச் சட்சமாகக் கொண்டு நோக்குமிடத்தும், இருமொழியிலும் பஞ்சமத்திற்குக் கூறிய பறவை (குயில்) ஒத்திருக்கின்றது. இனி, சங்கு குயில்மயில் யானை புரவி செங்கா லன்னம் காடையிவற் றோசை என்னுங் கல்லாட மேற்கோளில், வடநூல்களிற் கூறப்படாத மூன்றும் தமிழ் நூல்களிற் கூறப்படாத நான்குங் கூறப்பட்டுள்ளன. இதனால். புள் விலங்குக் குறிப்பைக்கொண்டு ஒரு கொள்கையை நிறுவ முடியாதென்பது போதரும். (3) கூற்று: குரலது மிடற்றிற் றுத்த நாவினிற் கைக்கிளை யண்ணத்திற் சிரத்தி னுழையே இளிநெற் றியினில் விளரி நெஞ்சினில் தார நாசியிவை தம்பிறப் பென்ப எனக் கூறியிருப்பதை வடமொழி நூல்கள் கூறும் பிறப்பிடங்களோடு ஒப்பவைத்து நோக்குமிடத்து, குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்னும் ஏழும் ம ப த நி ச ரி க வாம் என்பது தெளிவாகின்றது. மறுப்பு: மேற்கூறிய நூற்பாவில், குரலுக்குக் கூறிய இடந்தவிரப் பிற வெல்லாம் உடல்நூற்கும் ஒலிநூற்கும் ஒவ்வாவென்பது, கண்ட அல்லது கேட்ட மட்டிலேயே தெள்ளத்தெளிவாம். இனி, முற்கால யாழெல்லாம் ஒருதொகை நரம்பினவும் ஒரு திறத்தவுமல்ல. சிலவும் பலவுமான நரம்புகளைக் கொண்ட பல யாழ்களில், சில குரலிலும் சில உழையிலும் சில இளியிலும் சில தாரத்திலும் தொடங்கின. உழையில் (மத்திமத்தில்) தொடங்கிய கோவையைச் சில பண்ணுக்குக் குரன் முதலதாகக் கொண்டு வாசித்தனர். இதனால், ஒரே கோவை (மேளம்) இசை வகையால், ஒன்றும் இடவகையால் ஒன்றுமாக இருவேறுபட்டு, குரலுக்குக் கூறியதை மத்திமத்திற்கும் மத்திமத்திற்குக் கூறியதைக் குரலுக்குமாக மயங்கக் கொண்டனர். பண்ணுக்கேற்றபடி எந்தச் சுரத்தையுங் குரலாகக்கொண்டு வாசித்ததை, குரல் குரலாயது, துத்தங் குரலாயது, கைக்கிளை குரலாயது முதலிய தொடர்களாலுணர்க. (4) கூற்று: இளி நரம்பிற்குப் `பட்டடை என ஒரு பெயருண்டு, ``வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்தாங்கு'' (அரங்கேற்று காதை, 63) என்பதற்கு அடியார்க்குநல்லார் கூறும் உரையினை நோக்குக. `எல்லாப் பண்ணிற்கும் அடிமணையாதலின் இளி இப் பெயர் பெற்றது. `ஷட்ஜம் என்னுஞ் சொல்லும் ஏனை ஆறு சுவரமும் பிறத்தற்கு இடமாகியது என்னும் பொருளினைத் தரும். மறுப்பு: ச-ப என்னும் சுரப்பிடிப்பே பண்களுக்கெல்லாம் அடிப்படையாதலின், பஞ்சமம் (இளி) பட்டடை யென்றும், `வண்ணப் பட்டடை' யென்றுங் கூறப்படுவதாயிற்று. பல பண்ணுச் சக்கரங்கள் ச-ப முறையில் இயங்குவதை அடியார்க்குநல்லா ருரையிலும் கருணாமிர்த சாகரத்திலுங் கண்டுகொள்க. தாரத்துட் டோன்றும் உழைஉழை யுட்டோன்றும்ஓருங்குரல்குரலிலுட்டோன்றிச்... சேரும் இளி.... என்றதும் இம் முறைபற்றியே. இனி, இதன் விரிவை, ஆபிரகாம் பண்டிதனார் மகனார் வரகுண பாண்டியனார் எழுதியுள்ள இசைத்தமிழ் விளக்கத்திற் கண்டு தெளிக. காய்த லுவத்த லகற்றி யொருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே. (இக் கட்டுரையிற் பெரும்பகுதி எனது இசைத்தமிழ்ச் சரித்திரம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.) - ``செந்தமிழ்ச் செல்வி'' கடகம் 1943 2 குரல் சட்சமே; மத்திமமன்று 1. தம் மறுப்பில் விபுலாநந்த அடிகளைப்பற்றி முதலிற் குறிப்பிடும் போதே, பழந்தமிழிசை மரபினை ஆராய்தலையே தமது வாழ்க்கை நோக்கமாகக் கொண்டுழைத்துவரும் அருட்டிரு விபுலாநந்த அடிகளார் என்று கூறியிருக்கிறார் நண்பர் வெள்ளைவாரணர். அடிகளார் பல ஆண்டுகளாகத் தமிழிசையை ஆராய்ந்து வருவது தமிழுலகனைத்தும் அறிந்ததே. ஆனால், பிறர் தமிழிசையை ஆராயவில்லை என்பது இதனால் எங்ஙனம் பெறப்படும்? யான் இயற்றமிழில் இறங்கிய அளவு இசைத்தமிழில் இறங்காவிடினும், சென்ற பன்னீராண்டுகளாக என்னாலியன்றவரை இசைத்தமிழையும் ஆராய்ந்து வருகிறேன் என்பதையும், நால்வகை இசைக் கருவிகளும் என்னிடமுள என்பதையும், ஒவ்வொரு வகையிலும் ஒன்றேனும் ஓரளவு இயக்குவேன் என்பதையும், அச்சில் முடிகல (கிரௌன்) அளவில் 200 பக்கம் வரும் இசைத்தமிழ்ச் சரித்திரம் என்னும் நூலையும் சென்ற ஆண்டிலேயே எழுதி முடித்தேன் என்பதையும் நம் நண்பர் அறியக்கடவர். ஆனால், இதுவரை சொற்பொழிவு வாயிலாகவோ கட்டுரை வாயிலாகவோ சிறிதும் ஆரவாரம் செய்திலேன். ஆயினும், என்னோடு நெருங்கிப் பழகிய சில நண்பருக்கு எனது சிற்றளவான இசையாராய்ச்சி தெரியாமலிருந்திருக்காது. மேலும், எத்துறை ஆராய்ச்சியாயினும், அது நெறிமுறையும் உண்மை முடிபும்பற்றிப் போற்றப்படுமே யன்றி அளவும் உழைப்பும்பற்றி மட்டும் போற்றப்படாது. 2. நம் அடிகளுக்குமுன் இசைத்தமிழை ஆராய்ந்தவ ரெல்லாரும் இயல்நூற் பயிற்சி இசைப் பயிற்சி இவ் விரண்டுள் ஒன்றே யுடையார் என்று குறித்துள்ளார் நம் நண்பர். காலஞ் சென்ற ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் இவ் விரண்டிலும் இணையறத் தேர்ந்தவர் என்பது வெள்ளிடையாதலின், அவரிடத்து இக் குறையை ஏற்றிக் கூறுதல் நன்றிக்கேடும் புறன் பழிப்புமே யன்றி வேறாகாது. மேலும், இவ் விரு பயிற்சியோடு சொல்லாராய்ச்சியும் இன்றியமையாதது என்பதை நம் நண்பர் அறிவாராக. 3. அடிகள் தமிழிசை மிகத் தொன்மை வாய்ந்தது எனக் கூறி யிருப்பது உண்மையே. ஆனால், துத்தம் என்னும் சுரப்பெயர் உதாத்தம் என்னும் வடசொல்லினின்று வந்திருக்கலாம் என்றும், யாழ் வேறு வீணை வேறு என்றும், சுரத்திற்கு ஒரு நரம்பாகக் கட்டி எழீஇய யாழ் தமிழரது என்றும், ஒரே நரம்பில் பல சுரம் எழூஉம் வீணை ஆரியரது என்றும் கூறியிருப்பது, தமிழ் நாகரிகத்திற்கும் இசைத்தமிழுக்கும் உண்மைக்கும் மாறாம். வீணையென்னும் பெயர் வேறுபாட்டானேயே யாழ் வேறென்று கொள்வது, விருத்தாசலத்தின் வேறு பழமலை(முதுகுன்றம்) என்று கொள்வதே யாகும். 4. கரந்தைத் தமிழ்க் கழகத்தினரால் அடிகளார் யாழ்நூல் அண்மையில் வெளியிடப்படும் என்று அறிவிக்கிறார் நண்பர். இது இக்காலத்தில் தமிழைப் போற்றி உண்மையை யெழுதுபவர்க்கு வெளி யீட்டு வசதியில்லை யென்பதைத் தவிர வேறொன்றையும் தெரிவிப்பதாய்த் தெரியவில்லை. யாமும் காலம் வாய்க்கும்போது எம் நூல்களை வெளி யிடுவோம் என்று கூறுவதல்லது வேறென் சொல்லக் கடவேம்! நூல்களைக் கண்டு மயங்குவதோ தெளிவதோ படிப்பார்க்கே தெரிந்துவிடும். 5. ஏழிசை முறைக்கும் யாழ்நரம்பு முறைக்கும் வேறுபாடு தெரியாமல், முன்னதற்கு உழைமுதற் கைக்கிளை யிறுவாய்க் கட்டி என்பதைச் சான்று கூறுகிறார் நம் நண்பர். எல்லா நூல்களிலும் எப்போதும் ஏழிசை குரல் முதலவாகவே கூறப்படுமென்றும், யாழின் நரப்புமுறை, மரபையும் வாசிப்பாரின் ஆற்றலோடு கூடிய விருப்பத்தையும் பொறுத்த தென்றும் நம் நண்பர்க்கு அறிவுறுத்துகின்றேன். அதோடு சிலப்பதிகாரத்தை மறுபடியும் ஒருமுறை படிக்கத் தூண்டுகின்றேன். இவர் மயக்கப்படியே யாழ் நரப்புமுறையை ஏழிசை முறையாகக் கொள்ளினும், ஏழிசைகள் இளிமுதல என்னும் இவர் கொள்கை யழிந்து ஒவ்வோரிசையும்(சுரம்) ஏழிசைக்கு முதலாம் என்று பெறப்படுதல் காண்க. எழுவகை நிலமாவன: ச ரி க ம ப த நி என்னு மெழுவகைப்பட்ட எழுத்தடியாகப் பிறக்கும் குரன்முதலாகிய ஏழும் என்று அடியார்க்கு நல்லார் (சிலப். 14: 152-4) கூறியிருத்தலைக் கண்விழித்துக் காண்க. 6. மத்தளத்திலும் அதன் குறுமையான மிருதங்கத்திலும் அதன் வேறுபாடான தபேலாவிலும் இன்னும் இடக்கண் இளி (மெலிவுப் பஞ்ச மம்) யாகவும் வலக்கண் குர(சமன்சட்சம்) லாகவுமே இருந்து வருகின்றது. இதையறியாமல், இளியென்பது மந்தர ஷட்ஜம் என்று கூறுகிறார் நம் நண்பர். இவர் எந்த மத்தளத்தைப் பார்த்தா ரென்று தெரியவில்லை. மேலும், வலக்கண்ணாகிய குரலை இன்னதென்று திட்டமாய்க் கூறாமல் மழுப்பி விட்டிருக்கிறார். 7. நரப்புக் கருவிகளில், சுரம் எழும் அல்லது அமைந்த இடத்தை இன்னும் சுரத்தானம்(சுரஸ்தானம்) என்பர். இது வழக்கில் இல்லை என்கிறார் நம் நண்பர். வேற்றுமைகளை எழுவாய் வேற்றுமை செய்பொருள் வேற்றுமை என்று பொருள்பற்றியும், முதலாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமை என முறைபற்றியும் இருமுறையாய்க் கூறுவதுபோல, சுரவிடங்களையும் குரல்தானம் துத்தத்தானம் என இசைபற்றியும், முதற்றானம் இரண்டாந்தானம் என முறைபற்றியும் இருமுறையாய்க் கூறுவதற் கேற்கும். ஏழிசைத் தொடரான ஒரு நிலைக்குத் தானம் என்னும் பெயரிருப்பினும், உரையாசிரியர் முதற்றானத்திற்குரிய குரல் என்று வேற்றுமைத் தொடராகக் கூறாமல் முதற்றானமாகிய குரல் என்று பண்புத் தொடராகக் கூறியிருத்தலால், தானம் என்னும் பெயர் இங்கு நிலையைக் குறிக்காமல் இசையைக் குறிக்குமென்று கொள்வதே பொருத்தமானதாம். 8. கேள்விச்சுரம் எந்தச் சுரமாகவு மிருக்கலாம் என்கிறார் நம் நண்பர். ஓர் இடத்தை அதைச் சூழ்ந்துள்ள பலபொருள் நோக்கி எத்திசையாகவுங் கூறலாம். ஆனால், பொதுவாக நம்மை நோக்கி ஓர் இடத்தை இன்ன திசை யென்று கூறுதலே மரபு. அதுபோல, எந்தச் சுரத்தையுங் கேள்வியாகக் கொள்வதற் கேற்குமேனும் ஒன்றைக் கேள்விச் சுரமாகக் கொண்ட பிறகு அதைக் குரலென்று கொள்வதே மரபாம். 9. குரல் என்னும் சொல் இயற்றமிழில் ஏழிசைக்கும் பொதுவான ஓசையையே குறிக்குமேனும், இசைத்தமிழில் அவ்வப்போது தொண் டைக்கு இயல்பாயுள்ள கேள்விச் சுரமாகிய குரலோசையைக் குறிக்கு மென்று கொள்வதல்லது, இயல்புக்கு மாறாய் ஏற்றியும் இறக்கியும் ஒலிக்கும் பிற திரிபு (விகார) இசைகளைக் குறிக்குமென்று கொள்வது பொருந்தாது. 10. கருணாமிர்த சாகரத்தில் இருப்பனவாக யான் கூறிய இரண்டொரு சிறு சருக்கல்கள் பெரும்பாலும் சரித்திரமும் சொற்பிறப்பியலும் பற்றியவை யாதலால், என் கூற்றைப் பிறழக் கொண்டு தமது தவற்றுக் கொள்கைக்குத் துணையளிப்பதாக நம் நண்பர் கருதி மகிழற்க. 11. ஏழிசை அலகுகள் மொத்தம் 24 என்றே என் இசையாசிரியர் காலஞ்சென்ற மன்னார்குடி யாழ்ப்புலவர் இராசகோபால ஐயரவர்கள் எடுத்துக் கூறினார்கள். இதை (அண்மையில் 20 ஆண்டுகட்குமுன்) மேனாட்டார் கண்டுபிடிப்பும் வலியுறுத்துகிறது. நம் முன்னோர் கருவி யில்லாமல் தம் நுண்மாண் நுழைபுலத்தால் கண்டுபிடித்தவற்றையே மேனாட்டார் இன்று கருவியினால் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு வானூ லும் சான்று பகரும். தமிழ்நூலை வடமொழியில், மொழிபெயர்க்கும்போது இயன்றவரை திரித்தெழுதுவது வடநூலார் வழக்கம். இதைப் பூர்வீக சங்கீத உண்மை என்னும் நூலிற் கண்டு தெளிக. பிற்காலத் தமிழ் நூற்பாக்களிற் சில, வடமொழி வழூஉ நூற்பாக்களின் மொழிபெயர்ப்பாகவு மிருக்கலாம். ஆலாபன இசையை அல்லது பண்களை இந்தியாவில் முதன்முதல் பாடியவர் தமிழரே யென்பதையும் அது பண்டைக்காலத்தில் எழுத் துச்சரிப்பை அணுவும் பிறழவிடாத ஆரியவேத மந்திரத்திற்கும் ஆரியப் பார்ப்பனருக்கும் விலக்கப்பட்டிருந்தது என்பதையும் அறிதல் வேண்டும். குரலிற் பாதியும் தாரத்திலொன்றும் இரண்டின் அந்தரத்திலே கிளையாக்கித் தாரத்திலே நின்ற ஓரலகை விளரியின்மே லேறட விளரி குரலாய்ப் படுமலைப் பாலையாம் என்று அடியார்க்குநல்லார்(சிலப். 8:35) ஒரு நூற்பா விற்கு உரை கூறுவதை நோக்குமிடத்து, பண்ணுக்கேற்றபடி அலகு பகுத்துக் கொடுக்கப்படும் என்பதை அறியலாம். குரல்துத்தம் நான்கு கிளைமூன் றிரண்டாங் குரையா உழைஇளி நான்கு - விரையா விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார் களரிசேர் கண்ணுற் றவர் என்று கூறியது, ஒரு பண்ணுக்குரிய அலகுப் பகுப்பே யன்றி மொத்த அலகுக் கணக்கன்று. முதலிலிருந்து இறுதிகாறும் இசையிலக்கணங்களை யெல்லாம் தொடர்பாகக் கூறுகின்ற பண்டை இசைத்தமிழ் நூல்களுள் ஒன்றேனும் இன்று முழுமையாகக் கிடையாமையால், ஆங்காங்குத் தனித்துநிற்கும் ஓரொரு நூற்பாவை மட்டுங் கொண்டு இசைத்தமிழியல்பு முழுவதையும் துணிந்துவிட முடியாது. ஆயத்துக் கீரா றறுநான்கு வட்டத்துக் கேயுங்கோ ணத்துக் கிரட்டிப்புத் - தூயவிசை நுண்மைக் கதிலிரட்டி நோனலகு மோர்நிலைக்கிங் கெண்மூன்று கேள்விகொண் டெண் என்பது இசைமரபு. இதில் அலகு 24 எனத் தெளிவாகக் கூறியிருத்தல் காண்க. இசை நுண்மை-நுண்பாலை-சதுரப்பாலை. அலகு 24 (சதுர்விம்சதி) என்று கணக்கிட்டுக் கூறும் வடமொழிச் சுவடியிரண்டும் தெலுங்குச் சுவடியொன்றும் இன்றும் தஞ்சைச் சரசுவதி மகாலில் உள. 11. குரலை மத்திமமாகக் கொண்டு பறவையோசையால் ஒப்புக் காணுமிடத்து நாற்சுரங்களேனும் ஒத்துவருகின்றனவே என்கிறார் நம் நண்பர். கல்லாட மேற்கோளை நோக்குமிடத்து அந் நான்கும் இல்லாமற் பறந்துபோகின்றனவே! மேலும், தமிழ்நூற்கும் வடநூற்கும் பறவை விலங்குத் தொடுப்பிலுள்ள ஒப்புமைகூடத் தன்னேர்ச்சியே (accidental) யன்றி வேறன்று. இத்தகைய தன்னேர்ச்சிகள் பல துறையிலும் காணலாம். (எ-கா:) உண்மை வாய்மை மெய்ம்மை. இவை முக்கரணம் பற்றியவை என்பது பொதுக் கொள்கை. யானும் இதற்குடம்பட்டு எனது மொழிநூலிற் கூறினேன். ஆனால், இற்றையாராய்ச்சியால் அது தன்னேர்ச்சி யென்று பட்டுவிட்டது. உள்ளது உண்மை; வாய்ப்பது வாய்மை; மெய் (உடம்பு) போன்றது மெய்ம்மை. ஒ.நோ: E. substance-substantial = true. முற்காலத்தில் கட்புலனும் மெய்ப்புலனுமானதே உண்மை யென்று கொள்ளப்பட்டது. இயேசு உயிர்த்தெழுந்த பின் தோமா என்னும் மாணவன் அவரைத் தொட்டுப் பார்த்துத்தான் நம்பினானென்று கிறித்தவ மறையிற் கூறப்பட்டுள்ளது. 13. சட்சம் ஏனைய ஆறு சுரங்கட்கும் அடிப்படையாதலால் அதுவே வண்ணப்பட்டடை என்கிறார் நம் நண்பர். வண்ணம் அல்லது பண் சுரத்தா லமைவதெனினும், அச் சுரங்கள் ஆரோசை (ஆரோகணம்) யாகவும் அமரோசை(அவரோகணம்) யாகவும் நேராகவோ வளைந்தோ இயங்கிக் கலந்தொலித் தன்றித் தனித்தனி யிசைத்து வண்ணமாகாமையாலும், அங்ஙனங் கலத்தற்குக் குறைந்தது இரு சுரங்கள் வேண்டுமாதலானும், சச, சரி, சக, சம, சப, சத, சநி என இவ்விரு சுரங்களா யிணைக்கும்போது சப என்ற இணையே சிறந்தொலித்தலானும், தாரத்துட் டோன்றும் உழை என்னும் நூற்பாவால் சப முறையிலேயே நரப்பிசை யமைத்தார்கள் முன்னோர் என்று தெரிதலானும், வண்ணத்திற்கு அடிப்படையாகிய இணையெனப்படும் 7ஆம் நரம்பாகிய இளியையே(பஞ்சமம்) வண்ணப் பட்டடை யென்றழைத்தனர் முன்னோர் என அறிக. ஐ ஔ என்னும் புணரொலிகளில் அகரக்கூறு மிருந்தாலும் அதைப் பொதுவென்று தள்ளி விட்டுச் சிறப்பான இகர வுகரங்களையே முறையே அவற்றுக் கினக்குறிலாகக் கொண்டாற்போல, சப என்னும் இணையில் பொதுவான `ச'வைத் தள்ளிவிட்டுச் சிறப்பான `ப' வை வண்ணப்பட்டடை என்றனர். மேலும், சட்சம் மற்ற ஆறு சுரங்கட்கும் அடிப்படையாதல்பற்றிப் பட்டடையெனப்படின், சுரப்பட்டடையென்று கூறப்படுவதன்றி வண்ணப் பட்டடை என்று எங்ஙனங் கூறப்படும்? 14. நம் நண்பர் குரல் என்னும் சொல் வந்தவிடமெல்லாம் அஃது ஏழிசை முதலைக் குறியாதென்றும், குரல் குரலாகத் தற்கிழமை திரிந்தபின் என்னும் அடியில் முந்தின குரல் ஓரிசையையும் பிந்தின குரல் தொடங்குமிசையையுங் குறிக்கு மென்றும் என்னை மறுப்பதுபோல எண்ணிக்கொண்டே தம்மையறியாமல் என்னைத் தாங்கியுரைத்திருப்பது பற்றி மிக மகிழ்வதுடன் அவருக்கு நன்றியும் கூறுகின்றேன். குரல் என்னும் சொல் முதலாவது ஏழிசையில் தொடங்கு மிசையாகிய சட்சத்தைக் குறிக்கும்; இரண்டாவது எந்த இசையையும் குரலாக அல்லது தொடங்கு மிசையாகக் கொள்ளும்போது அதைக் குறிக்கும். எந்த இசையில் தொடங்கினாலும் அதுவே குரல் என்றும், குரல் என்பது முதலிசையாகிய சட்சத்தின் பெயராயிருத்தலாலேயே அது தொடங்குமிசையைக் குறித்ததென்றும் நம் நண்பர் அறியாது போயினர். `குரல் குரலாக,`துத்தம் குரலாக, `கைக்கிளை குரலாக, `உழை குரலாக,`இளி குரலாக, `விளரி குரலாக,`தாரம் குரலாக என்று நூல்களிற் கூறியிருப்பதெல்லாம், எமது கொள்கைக்கே சான்றா மென்பதை இனியேனும் நம் நண்பர் அறிவாராக. ஆர்மோனியம் என்னும் சுரப்பெட்டியில் ஒவ்வொரு கட்டையாய் ஏற்றியேற்றிக் கேள்வி (சுருதி)யாக வைத்துக்கொண்டு போனால், ஒவ்வொரு கட்டைக்குரிய சுரமும், தான் கேள்வியாகும்போது குரல்(சட்சம்) அல்லது தொடங்குமிசையாம் என்றும், இங்ஙனம் கேள்வியேற்றுவது பண்ணுப் பெயர்த்தல், உயர்த்திப் பாட வல்லார்க்கு ஏற்பித்தல் ஆகிய இருபயனோக்கி என்றும், இவ் விரு பயனை யும் முறையே சங்கராபரண மேளமும் கலியாணி மேளமும் அமைந்த சுரப்பெட்டிகளிலும் ஒன்றரைக் கட்டை இரண்டரைக் கட்டை நாலு கட்டை நாலரைக் கட்டை முதலியவாகப் பல்வேறு கட்டைக் கேள்வி (சுருதி) களுக்குப் பாடும் வழக்கத்திலும் காணலாமென்றும், இம் முறை பற்றியே யாழ் நரம்புகளும் ஏற்றி அல்லது மாற்றியமைக்கப்படும் என்றும் நம் நண்பர்க்கு அறிவுறுத்துகின்றேன். உழைகுரலாகிய கோடிப் பாலை நிற்க இடமுறை திரியுமிடத்துக் குரல்குரலாயது செம்பாலை..... விளரி குரலாய்ப் படுமலைப் பாலையாம்..... துத்தம் குரலாயது செவ்வழிப் பாலையாம். இளி குரலாயது அரும்பாலையாம். கைக்கிளை குரலாயது மேற்செம்பாலையாம். தாரம் குரலாயது விளரிப்பாலையாம் என்று அடியார்க்குநல்லார் (சிலப். 8:35) கூறியிருத்தலை நோக்குக. இக் குரன்முத லேழினும் முற்றோன்றி யது தாரம்; தாரத்துட் டோன்று முழையுழை யுட்டோன்று மோருங் குரல்குரலி னுட்டோன்றிச் - சேருமிளி யுட்டோன்றுந் துத்தத்துட் டோன்றும் விளரியுட் கைக்கிளை தோன்றும் பிறப்பு என்பதனால், தாரத்தில் முதற் பிறப்பதாகிய உழை குரலாய்க் கைக்கிளை தாரமாகிய கோடிப்பாலை முதற் பிறக்கக் கட்டி யென்க (சிலப். 8: 31-2) என்று அடியார்க்குநல்லார் கூறியிருத்தலை ஓர்ந்தறிந்து கூர்ந்துணர்க. குரல் சட்சமன்றி இளியே சட்சமாயிருப்பின், ஏழிசையைக் குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் எனக் கூறாது இளி விளரி தாரம் குரல் துத்தம் கைக்கிளை உழை என்றும், கேள்வி மாற்றிப் பண்ணுப் பெயர்க்கும்போது குரல் குரலாய், துத்தம் குரலாய் என்று கூறுவதற்குப் பதிலாக `இளி யிளியாய்', `விளரி யிளியாய்' என்றும் கூறியிருப்பர். இங்ஙனம் யாண்டும் கூறாமையான் குரலே சட்சம் என்பது தெளியப்படும். உழைமுதற் கைக்கிளை யிறுவாய்க் கட்டி என்றும், தாரத்துட் டோன்றும் உழை என்றும் கூறியிருப்பது யாழ்களின் வெவ்வேறு நரப்படைவைக் குறிக்குமே யன்றி ஏழிசை முறையைக் குறியா. இக்காலத்தும் வீணை கின்னரி(பிடில்) முதலியவை ச ப ச ப என்னும் முறையிலும் சித்தார் தில்ரூபா முதலியவை ம ச ப ச என்னும் முறையிலும் நரப்படைவு பெற்றுள்ளன. நரப்படைவும் திவவென்னும் மெட்டுக் கட்டினின்று வேறுபட்டதென மற்றுமோர் வேறுபாடறிதல் வேண்டும். இவையெல்லாம் துலுக்க வாத்தியங்களெனப்படும் வடக்கத்து இசைக் கருவிகளை ஆராய்ந்தாலொழிய விளங்கா. பண்டைத் தமிழ்ப் பழக்கங்கள் சில தமிழ்நாட்டில் மதமயக்கினால் ஒழிக்கப்பட்டிருப்பினும் வடநாட்டில் இன்றும் தொடர்ந்து வழங்குகின்றன. தொகையராப் பாட்டென்னும் உரையிடையிட்ட பாட்டும், டக்காவென்னும் இடக்கையும், தரப்புத் தந்திகள் என்னும் ஆர்ப்பு நரம்புகளும் பண்டைத் தமிழ்நாட்டில் இருந்தனவே. இவற்றையெல்லாம் இங்கு விரிப்பிற் பெருகும். குரலே சட்சம் என்பதற்கு வேறு சில சான்றுகளும் உள. அவற்றைப் பின்னர்க் கூறுவேன். அடிகள் ஏழிசைபற்றி மட்டுமன்றிப் பிற பகுதிகள் பற்றியும் தவறான கருத்துகளைக் கொண்டுள்ளமை, யான் அடுத்துச் செல்வியில் வெளியிடும் ஆளத்தி, யாழே வீணை, ஏழிசைப் பெயர்கள் என்னும் கட்டுரைகளில் விளக்கப்படும். அறிஞர் நடுநிலைக் கண்கொண்டு ஆராய்வாராக. குறிப்பு (1) வித்துவான் வெள்ளைவாரணர் மத்தளத்தின் இருகட் சுரங்களை யும் கூறியவிடத்தில் இசைப் பேராசிரியர் பொன்னையா பிள்ளை அவர்களின் பெயரைப் புகுத்தியிருப்பது அவர்கட்குத் தெரியாதென்று நினைக்கிறேன். இசையறிவிற் சிறந்த அவர்கள் அங்ஙனங் கூறியிரார்கள் என்பது எனது கருத்து. (2) வித்துவான் வெள்ளைவாரணர் யான் இத்துணை கூறிய பின்பும் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று வலிப்பாராயின், தமிழிசை யரசு தண்டபாணிப் பிள்ளையும் வேலூர்த் தேவார இசைவேந்தர் அப்பா துரை ஆச்சாரியாரின் மகனார் சம்பந்தமூர்த்தி யாச்சாரியாரும் போன்ற அறிஞர்முன் மிடற்றினாலும் கருவியினாலும் தம் கொள்கையை மெய்ப் பித்து அவர்தம் உடம்பாட்டைப் பெற்றுவிடின், யான் என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். (3) பண்டைத் தமிழர் நம் போன்ற புல்லறிவுப் போலித் தமிழரல்லர். அவரது மதிநுட்பமும் நுழைநோக்கும் பலதுறைப்பட்ட கலைத்திட்பமும் நாகரிகப் பண்பும் பழந்தமிழ் நாகரிகம் என்னும் எனது நூலிற் பரக்கக் காட்டுவேன். - ``செந்தமிழ்ச் செல்வி'' துலை 1943 3 நன்னூல் நன்னூலா? பவணந்தியார் தம் நூலுக்கு நன்னூல் எனப் பெயரிட்டிருப்பினும் சுவாமிநாத தேசிகர் அந் நூலைப்பற்றி, முன்னூ லொழியப் பின்னூல் பலவினுள் நன்னூலார் தமக்கெந்நூலாரு மிணையோ வென்னுந் துணிவே மன்னுக'' வெனக் கூறியிருப்பினும், தொல்காப்பியம் முதலிய நிறை யிலக்கண நூலொடு ஒப்பு நோக்கியும் மொழிநூற்குப் பொருந்தவும் காணுங்கால், அது பெரும்பாலும் நன்னூலன்று என்பதே பெறப்படும். தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் என முப்பாற்றாதலின் எழுத்தும் சொல்லும் மட்டும் கூறும் இலக்கண நூல்கள் எத்துணை விரிவுபட்டனவாயினும், நிறைவுடையனவாகா. ஒருகாலத் தொரு பாண்டியன், என்னை? எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொரு ளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம் எனக் கவன்றதாக இறையனா ரகப்பொருளுரை கூறுதல் காண்க. பண்டைத் தமிழ்நூல்களெல்லாம் செய்யுள் வடிவில் இயற்றப்பட்ட மையானும், இருவகை யணிகளும் செய்யுளில் அடக்கப்பட்டமையானும் தமிழிலக்கணத்தை எழுத்து, சொல், பொருள் என மூன்றாகப் பகுப்பதே பண்டை மரபாம். நன்னூல், நூற்பாவும் இயலும் அதிகாரமும் ஆகிய மூன்றுறுப்பு மடக்கிய பிண்டமேனும் தலையான பொருளதிகாரம் இல்லாமையின் முண்டமே யென்க. அதோடு பல இலக்கணங்களில் வழுவியுமுள்ளமை அதன் குறைபாட்டை மிகுத்துக் காட்டுவதாகும். நன்னூல் வழீஇயுள்ள இடங்களிற் சில வருமாறு: 1. எழுத்தியல் (1) சார்பெழுத்து வகை தொல்காப்பியர், சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே (1) எனச் சார்பெழுத்தின் தொகையும், அவைதாம் குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன (2) என அதன் வகையும் உண்மைக்கொப்பவும் உத்தியொடு பொருந்தவும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருப்பவும், நன்னூலார், உயிர்மெய் யாய்தம் உயிரள பொற்றள பஃகிய இஉ ஐஔ மஃகான் தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும் (60) என அதன் வகையைப் பெருக்கி, உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம் எட்டுயி ரளபெழு மூன்றொற் றளபெடை ஆறே ழஃகு மிம்முப் பானேழ் உகர மாறா றைகான் மூன்றே ஔகான் ஒன்றே மஃகான் மூன்றே ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப (61) என அவ் வகைகளின் தொகையை விரித்து விழுமிய பயனின்றி மாண வர்க்கு வீணாக வெறுப்பை விளைத்துள்ளார். அவற்றை இக் காலத்துப் பொதுக்கல்வி மாணவர்க்கும் பாடமாக விதித்து அவரை வருத்துவது மேலும் வருந்தத்தக்க செய்தியாகும். இன்னின்ன எழுத்துகள் இன்னின்ன இடத்தில் குறுகியொலிக்கும் என, மாத்திரை குறிக்குமிடத்தும் புணரியலிலும் கூறினாற் போதுமானதாம். அஃதன்றி, குறுகியொலிக்கு மிடமெல்லாம் வெவ்வேறெழுத்தெனக் கூறுவது பிள்ளைத் தன்மையேயன்றிப் புலமைத் தன்மையாகாது. (2) ஆய்தப் பிறப்பு தொல்காப்பியர், சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் தத்தம் சார்பிற் பிறப்பொடு சிவணி ஒத்த காட்சியிற் றம்மியல் பியலும் (101) என்று சார்பெழுத்துகள் தத்தம் முதலெழுத்துகளைச் சார்ந்து பிறப்பதைக் கூறியிருப்பவும் நன்னூலார், ஆய்தக் கிடந்தலை அங்கா முயற்சி (87) எனப் புதுவது புணர்த்தலாக விதித்துள்ளார். ககரவொலியை யொட்டிய ஆய்தம் தலையை இடமாகக் கொண்டு பிறக்குமென்றும் மெய்த்தன்மையுடைய அது அங்காத்தலால் தோன்று மென்றும் அவர் எங்ஙனம் அறிந்தனரோ அறிகிலம். ஒருகால் தொல் காப்பியர்க்கு முந்தியவராயோ தூய தமிழராயோ இருந்திருப்பின் அவர் கூற்றைக் கொள்ள ஒருசிறிது இடமுண்டு. அவர் ஆரியச் சார்பான பிராமணராதலாலும் 12ஆம் நூற்றாண்டினராதலாலும் தமிழிலக்கண விலக்கியங்களைக் கற்று இலக்கியவதிகாரி யாயினரேயன்றி, தமிழ் மொழிக்கும் ஒலிக்கும் அதிகாரியாயினரல்லர் என அறிக. (3) மொழிமுத லெழுத்துகள் ஆவோ டல்லது யகரமுத லாது (65) என்றார் தொல்காப்பியர். இவ் வியல்பையே கழக (சங்க) இலக்கியத்திற் காண்கின்றோம். ஆயின், இதற்கு மாறாக, அஆ உஊ ஓஔ யம்முதல் (104) என விதித்துள்ளார் நன்னூலார். இதற்குக் காரணம், அவர் வடசொற்கட்குத் தமிழில் தாராளமாய் வழிவகுத்துள்ளதே. தொல்காப்பியர் ஙகரத்தை மொழிமுதலெழுத்தாகக் கொண்டிலர் ஆயின் நன்னூலார், சுட்டியா வெகர வினாவழி யவ்வை ஒட்டி ஙவ்வு முதலா கும்மே (106) என நூற்பா யாத்தார். ஙகரம் இற்றைத் தமிழ்நாட்டில் மட்டுமன்றி மூக்கொலி மிக்குள்ள மலையாள நாட்டிலும் ஒருவகை வழக்கிலும் வழங்குவதில்லை. ஙனம் என்னும் வடிவம் அங்ஙனம் இங்ஙனம் எங்ஙனம் எனச் சுட்டெழுத்தையும் வினாவெழுத்தையும் ஒட்டியல்லது தனித்து வருவதில்லை. அவ்வகை எவ்வகை என்பன அந்தவகை எந்தவகை என்றும், அவ்வண்ணம் எவ்வண்ணம் என்பன அந்தவண்ணம் எந்தவண்ணம் என்றும், வழங்குவதுபோல் அங்ஙனம் எங்ஙனம் என்பன அந்த ஙனம் எந்த ஙனம் என்று வழங்குவதை ஓரிடத்தும் காண்கின்றிலம். ஆகவே, ஙனம் என்னும் வடிவின் முதலெழுத்து மற்றோரெழுத்தின் திரிபாயே யிருத்தல் வேண்டும். ஆங்கு ஈங்கு என்னும் சுட்டுச் சொற்களும், எங்கு, யாங்கு என்னும் வினாச் சொற்களும் அனம் என்னும் ஈற்றை யேற்று வருவது இயல்பு. அவ் வீறேற்ற அச் சொற்களே குறுகியும் குறுகாதும் நின்று மூக்கொலிப்பாடு (Nasalization) பெறுங்கால் அவற்றிடையேயுள்ள ககரம் ஙகரமாகத் திரியும். எ-கா: ஆங்கனம் - ஆங்ஙனம் ஈங்கனம் - ஈங்ஙனம் எங்கனம் - எங்ஙனம் யாங்கனம் - யாங்ஙனம் அங்கனம் - அங்ஙனம் இங்கனம் - இங்ஙனம் இக்காலத்து மொழியாராய்ச்சியும் ஒலியாராய்ச்சியும் அக்காலத் தில்லாமையும், நன்னூலார் வழுவியதற்குக் காரணமாகும். இனி, சுட்டையும் வினாவையும் ஒட்டி ஙகரமும் மொழிமுதலாகும் என்று நன்னூலார் கூறியது சரியே என்று வலிப்பார் உளரெனின் அந்த வண்ணம், இந்த வண்ணம், எந்த வண்ணம் என்பன, முறையே அன்னணம், இன்னணம், என்னணம் எனத் தொக்கும் திரிந்தும் வருமாதலின், சுட்டுட னெகர வினாவழி யவ்வை ஒட்டி னவ்வு முதலா கும்மே எனவும் விதித்தல் வேண்டும் எனக் கூறி விடுக்க. 2. பதவியல் (1) பண்புப் பெயர் செம்மை சிறுமை சேய்மை தீமை வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர் இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே (135) என்னும் நூற்பாவால், பண்புப் பெயர்களெல்லாம் மையீறு பெற்றே நிற்கும் என்பது படவும் பண்புப் பகுதியின் திரிபுகளைக் கூறும் நூற்பாவில் (136) ஈறு போதல் என்னுந் தொடரால் பண்புத்தொகைச் சொற்களிலுள்ள நிலைமொழி யெல்லாம் ஈறுகெட்டவையே யென்றும் குறிப்பாய்க் கூறியுள்ளார் நன்னூலார். அன்பு, அழகு, சினம், பச்சை முதலிய பண்புப் பெயர்கள் பிறவீறும் பெற்று வருவதால் பண்புப் பெயரீறு மையொன்றே யென்பது குன்றக் கூறலாம். செம்மை சிறுமை முதலிய மையீற்றுப் பண்புப் பெயர்களெல்லாம் சொல்நிலையாற் பகுசொல்லாயினும் பொருள்நிலையாற் பகாச்சொல்லாம் என்பது அறிவித்தற்குப் பண்பிற் பகா என்று ஆசிரியர் கூறியதாக உரை யாசிரியர் சிலர் கூறுவர். மையீற்றுப் பண்புப் பெயர்கள் சொல்நிலை யால் மட்டுமன்றிப் பொருள்நிலையாலும் பகுசொல்லே யென்பது நுணுகி நோக்குவார்க்குப் புலனாம். மையீறு தன்மை குறிக்குஞ் சொல்லாதலின் மையீற்றுப் பண்புப் பெயர்களெல்லாம் பண்பும் பண்புத் தன்மையுமாகிய இரு கருத்துகளை யுணர்த்தும் பகுசொல்லே யென வறிக. ஒன்று என்பது ஓர் எண்ணையும் ஒருமை என்பது ஒன்றாயிருக்குந் தன்மையையும் உணர்த்தும். இங்ஙனமே பச்சை என்பது ஒரு நிறத்தையும் பசுமை என்பது பச்சையாயிருக்கும் தன்மையையும் உணர்த்தும். மேலும் செந்தமிழ், சிறுநாவல் முதலிய பண்புத்தொகைச் சொற் களின் நிலைமொழிகள் செம், சிறு என இயல்பாக நின்றவையே யன்றி, செம்மை, சிறுமை, முதலியன ஈறுகெட்டு நின்றனவல்ல. சிறு, புது, மேல் முதலிய பண்புச் சொற்கள் இயல்பாக நின்று குறிப்புப் பெயரெச்சமா யிருக்குமென்றும், பண்புப் பெயராகும் போது மையீறு பெறுமென்றும், அறிதல் வேண்டும், செம், சேய், தீ, வெம், மெல், திண் முதலிய அடிச் சொற்கள் சிறு, புது முதலியனபோல, எளிதாய் அல்லது விளக்கமாய்ப் பொருளுணர்த்தாமைக்கு அவற்றின் வழக்கின்மை அல்லது அருகிய வழக்கே காரணம். Red, small, remote முதலிய ஆங்கிலக் குறிப்புப் பெயரெச்சங்கள் ness என்னும் ஈறுபெற்ற பின்னரே redness, smallness, remoteness எனப் பண்புப் பெயராகும். அஃதன்றி redness என்னும் பண்புப் பெயரே ness என்னும் ஈறுகெட்டு red என நின்றது எனின் அதை ஆங்கில இலக்கணி யரும் ஒப்புக்கொள்ளார். ஆகவே, ஈறு போதல், என்பது வழுப்படக் கூறலே என அறிக. அஃதாயின் பண்புத்தொகைச் சொல்லிடையே ஆகிய என்னும் பண்புருபு விரியுமா றெங்ஙனெனின் பண்புத்தொகைச் சொல் தொகை யெனப் பெயர் பெற்றிருப்பினும் உண்மையில் ஒரு சொல்லுந் தொக்கதன்று என்றும் செம்மையான தமிழ், பனையாகிய மரம் என்று விளக்க நடையில் விரித்துக் கூறும் வழக்கு நோக்கி, செந்தமிழ், பனைமரம் என்பன பண்புத் தொகையெனப்பட்டன வென்றும் மொழிநூலொட்டிய இலக்கணப்படி அது ஒரு மயக்கே என்றும் கூறி விடுக்க. சிவந்த நீர் என்னும் எளிய வழக்கில் எங்ஙனம் ஒரு சொல்லும் தொக்கிலதோ, அங்ஙனமே செந்நீர் என்னும் உயர்வழக்கிலும் என்க. (2) வினையிடைநிலை (1) இறந்தகால இடைநிலை தடறவொற் றின்னே யைம்பால் மூவிடத் திறந்த காலந் தருந்தொழி லிடைநிலை (142) என்றார் நன்னூலார். எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (தொல். 640) என்றும், தனித்து நின்று பொருள் தராத இடைச்சொற்களும் ஒரு காலத்துத் தனித்து நின்று பொருள் தந்த பெயர் வினைச் சொற்களின் சிதைவே யென்றும் அறிவார்க்கு த், ட், ற் என்னும் தனி மெய்கள் சொற்குறுப்பாய் நின்று பொருளுணர்த்தும் என்பது நகையாடத்தக்க செய்தியாம். இறந்த கால வினைமுற்றுகள் மலையாளத்திற் போன்றே முதற் காலத்தில் இற்றை இறந்தகால வினையெச்ச வடிவிலிருந்து பின்பு ஈரெண் ஐம்பாலீறுகளைப் பெற்றனவாதலின், அவற்றைப் பகுக்கும்போது முதற்கண் எச்சமும் ஈறுமாகவே பகுத்தல் வேண்டும். எ-கா: செய்தான் = செய்து + ஆன் படித்தான் = படித்து + ஆன் உண்டான் = உண்டு + ஆன் கொண்டான் = கொண்டு + ஆன் கட்டான் = கட்டு + ஆன் தின்றான் = தின்று + ஆன் நின்றான் = நின்று + ஆன் கற்றான் = கற்று + ஆன் இங்ஙனம் பகுத்து நோக்குங்கால் எச்சத்தின் இறுதியில் நிற்பது அது என்பதன் முதற் குறையான துவ் விகுதியே என்பதும் அதுவே டுவ்வென்றும் றுவ் வென்றும் புணர்ச்சியால் திரிந்ததென்பதும் புலனாம். உள்+து=உண்டு என்பது போன்றதே கொள்+து=கொண்டு என்பதும். இல்+து=இன்று என்பது போன்றதே நில் + து = நின்று என்பதும். நிலைமொழி யீற்றிலுள்ள ணகர ளகர னகர லகர மெய்கள் அது என்னும் விகுதியோடு புணரின் இயல்பாகவும் துவ்விகுதியொடு புணரின் முறையே டகர றகர மெய்களாகத் திரிந்தும் புணரும். எ-கா : கண் + அது = கண்ணது தாள் + அது = தாளது அன் + அது = அன்னது பால் + அது = பாலது கண் + து = கட்டு தாள் + து = தாட்டு அன் + து = அற்று பால் + து = பாற்று புக்கான், சுட்டான், அற்றான் எனப் பகுதி யிரட்டித்து இறந்த காலங் காட்டிய வினைமுற்றுகளையும் புக்கு - ஆன், சுட்டு - ஆன், அற்று - ஆன் என எச்சமும் ஈறுமாகவே பகுத்தல் வேண்டும். புக்கான் என்பதில் க் எங்ஙனம் இறந்தகால இடைநிலை யன்றோ, அங்ஙனமே படித்தான் என்பதிலும் த் இறந்தகால இடைநிலையன்று என அறிக. இனி உறங்கினான், போனான் முதலியன எங்ஙனம் புணர்ந்தன வெனின் அவையும் மேற்கூறியவாறு எச்சமும் ஈறுமாகவே யென்றறிக. எ-கா: உறங்கி + ஆன் = உறங்கியான் - உறங்கினான். போயி + ஆன் = போயியான் - போயினான். போயி + போய் = ஆன் - போயான் - போனான். சொல்லாக்கத்தில் யகரம் நகரமாக (அல்லது னகரமாக)த் திரிதல் இயல்பு. எ-கா: யான் - நான், யாம் - நாம். சேரநாட்டுத் தமிழின் திரிபான மலையாளத்தில், ஆயி, போயி என்னும் இறந்தகால வினை வடிவுகளே இன்றும் வழங்குகின்றன. (3) நிகழ்கால இடைநிலை நன்னூலார் கூறிய நிகழ்கால யிடைநிலை மூன்றனுள், ஆநின்று என்பது சரியன்று. அது செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினை யெச்சமும் அதனைத் தொடர்ந்த இறந்தகால வினைமுற்றுமாகிய செய்யா நின்றான் என்னும் தொடரின் இடைநின்று தவறாய்ப் பிரித்துக்கொண்ட ஒரு சொற்பகுதியே. ஆநின்று என்பதும் ஓர் இடைநிலையே யெனக் கொள்ளின், உண்ணாகிடந்தான் என்னும் வழக்கினின்று ஆகிடந்தான் என்பதும் ஓர் இடைநிலையெனக் கோடல் வேண்டும். இனி, உண்ணாகிடந்தான் என்பது எச்சமும் முற்றுமாக இரு சொல் லாயின் உண்ணாக்கிடந்தான் என்றிருத்தல் வேண்டுமாதலின் உண்ணா கிடந்தான் என இயல்பாய் நிற்கும் சொல் உண்ணாநின்றான் என்பது போல் ஒருவகை நிகழ்கால வினைமுற்றே யெனின், அது ஆகிடந்து என ஓர் இடைநிலை வேண்டுவார் இடைக்காலத்துத் திரித்துக் கொண்ட வழக்கே யன்றித் தொன்றுதொட்டு வந்த மரபன்று எனக் கூறி விடுக்க. செய்யா என்னும் வாய்பாட்டு எவ்வினைச் சொல்லும் நின்றான் என்பதனொடு என்றும் இயல்பாகவே புணருமாதலின், அதனோ டொப்ப உண்ணாக் கிடந்தான் என்றிருக்க வேண்டுவதையும் உண்ணா கிடந்தான் என இயல்பாக்கிக் கொண்டனர் என்க. செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம், செய்யாநின்றான் செய்யாநிற்கின்றான், செய்யாநிற்பான் என முக்கால முற்றொடும் கூடிவருதலின், அவற்றுள் இறந்த கால முற்றொடு கூடியதை மட்டும் ஒரு சொல்லாகக் கொள்வது பொருந்தா தென்க. இனி, செய்யாநின்றான் என்பது செய்கின்றான் என நிகழ்காலப் பொருளன்றோ தருகின்றதெனின், அது ஒரு சாரார் ஆட்சி பற்றியதே யன்றிச் சொல்வகை பற்றியதன்றெனக் கூறி மறுக்க. (4) எதிர்கால இடைநிலை பவ்வ மூவிடத் தைம்பா லெதிர்பொழு திசைவினை யிடைநிலை.. (144) என்றார் நன்னூலார். முற்றும் எச்சமுமாகிய செய்யும் என்னும் வாய்பாட்டு எதிர்காலப் பாற்பொது வினை, பால் பிரிந்திசைத்தற்கு வெவ்வேறு விகுதிகளுடன் கூடி நிற்கும் நிலையில் நிலைமொழியீற்று மகரம் வகரமாகவும் சிலவிடத்துப் பகரமாகவும் திரியும். அத் திரிபால் வந்த மெய்நிலையே எதிர்கால இடை நிலையென்றார் நன்னூலார். முற்றம் பாலீறும் எ-கா: செய்யும் + ஆன் = செய்யுமான் - செய்யுவான் -செய்வான் செய்யும் + ஆர் = செய்யுமார் - செய்யுவார் - செய்வார் செய்யும் + அ = செய்யும - செய்யுவ - செய்வ உண்ணும் + ஆன் = உண்ணுமான் - உண்ணுவான் உண்ணும் + ஆன் = உண்ணுமான் - உண்மான் - உண்பான் தின்னும் + ஆன் = தின்னுமான் - தின்னுவான் தின்னும் + ஆன் = தின்னுமான் - தின்மான் - தின்பான் நடக்கும் + ஆன் = நடக்குமான் - நடக்குவான் - நடக்கான் - நடப்பான் படிக்கும் + ஆன் = படிக்குமான் - படிக்குவான் - (படிக்கான்) - படிப்பான் படிப்பான் என்பதைப் படிப்பு + ஆன் எனப் பிரிப்பின் நன்றெனத் தோன்றும், ஆயின். தருவான் வருவான் என்பன தருவு+ஆன், வருவு + ஆன் எனப் பிரியாமையின், தொழிற்பெயரும் ஈறுமாகப் பிரிப்பதினும் முற்றும் ஈறுமாகப் பிரிப்பதே நன்றென வறிக. மேலும், செய்து செய்கின்று என்னும் ஏனை யிருகாலப் பண்டை முற்றுகள் போன்றே, செய்யும் என்னும் எதிர்கால முற்றும் பாலீறொடு புணர்ந்ததெனக் கோடல் பொருத்த முடைத்தாம். பெயரெச்சமும் பாலீறும் எ-கா: செய்யும் + அவன் = செய்யுமவன் - செய்யுபவன் - செய்பவன் செய்யும் + அது = செய்யுமது-செய்யுவது-செய்வது செய்யும் + அவை = செய்யுமவை - செய்யுபவை - செய்பவை. (5) வடமொழி யாக்கம் இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (880) வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. (884) சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் (885) எனத் தொல்காப்பியர் கூறியதே மிகையாயிருக்க நன்னூலார், பொதுவெழுத் தானுஞ் சிறப்பெழுத் தானும் ஈரெழுத் தானும் இயைவன வடசொல். (276) இடையில் நான்கு மீற்றில் இரண்டும் அல்லா வச்சை வருக்கமுத லீறு யவ்வாதி நான்மை ளவ்வாகு மையைம் பொதுவெழுத் தொழிந்தநா லேழுந் திரியும் (146) அவற்றுள் ``ஏழாமுயி ரிய்யு மிருவுமை வருக்கத் திடையின் மூன்று மவ்வம் முதலும் எட்டே யவ்வும் முப்பது சயவும் மேலொன்று சடவும் இரண்டு சதவும் மூன்றே யகவு மைந்திரு கவ்வும் ஆவீ றையு மீயீ றிகரமும். (147) ரவ்விற் கம்முத லாமுக் குறிலும் லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற் கிய்யு மொழிமுத லாகிமுன் வருமே (148) இணைந்தியல் காலை யரலக் கிகரமும் மவ்வக் குகரமும் நகரக் ககரமும் மிசைவரும் ரவ்வழி யுவ்வு மாம்பிற (149) என வடசொற்கள் கட்டுமட்டும் கங்குகரையுமின்றித் தமிழில் தாராளமாய் வந்து வழங்குமாறு வழிவகுத்துப் பாழ்படுத்தியதுமன்றி, பல தென் சொற்களை வடசொற்களென மயங்கவும் வைத்தார். வடசொற்களால் தமிழ் வளம் பெற்றதெனக் கூறுவார், தம் அறியாமையையும் ஆராய்ச்சி யின்மையையும் பகைமையையுமே வெளிப்படுத்துவர். வடமொழியால் தமிழடைந்த கேடு கொஞ்சநஞ்சமன்று. வடசொற்கள், வேண்டாது தமிழிற் புகுத்தப்பட்டன என்பதற்கு, ஊசி(உதீச்சி-வடக்கு), பாசி(ப்ராச்சீ-கிழக்கு), என்ற புறநானூற்றுச் சொற்களே (229 ஆம் பாட்டு) போதுமானவை. சொன் மறைவு, வழக்கு வீழ்ச்சி, ஒலிமாற்றம், பொருட்கேடு ஆகிய நால்வகையிலும், வடசொல்லால் தமிழுக்கு நேர்ந்த தீங்கு வரம்பற்றதாம். நன்னூலார் செய்த வழுக்களுள் தலையானது வடமொழி யாக்கமே. (6) பெயரியல் தொல்காப்பியர், எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே'' (640) மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா'' (877) எனக் கூறியிருப்பவும் நன்னூலார், இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின (62) இடுகுறி காரண மரபோ டாக்கம் ஏற்பவும் பொதுவு மாவன பெயரே (275) என வடநூற் கொள்கை தழுவி, தமிழிலும் இடுகுறி யுண்டென உண்மைக்கு மாறாகக் கூறினார். உரையாசிரியர் இடுகுறிக் கெடுத்துக்காட்டாகக் கூறுவன வெல்லாம், மரம், பனை, பலா, பரம், பொன், விள என்பவையே. இவையும் காரணக் குறியே என்பதைக் கீழ்வரும் மொழிப்பொருட் காரணத்தாலும் பொருள் விளக்கத்தாலும் கண்டுகொள்க. மரத்தல் = உணர்ச்சியறுதல், மரம் உணர்ச்சியற்றது. பல் - பன் - பனை. பல் = ஒரு கூரிய உறுப்பு, கூர்மை. பன் = அரி வாட்பல். பனை = பற்போல் கூரிய கருக்குமட்டையுடைய மரம். பல் - பரு - பெரு. பல் - பலா = பெரும்பழம், பெரும் பழத்தை யுடைய மரம். புரம் = உயரம், உயரமானது, மேன்மாடம் ``புரை உயர்வாகும்''. (தொல்.785) புரம் - பரம் = மேல், மேலிடம், வானுலகம். உ-அ. ஒ.நோ: குடும்பு - கடும்பு, முடங்கு - மடங்கு. பொல் - பொன் = அழகு, அழகிய தாது(உலோகம்). பொல் + பு = பொற்பு = அழகு. பொற்ற = அழகிய (சீவக. 885). பொற்றது = பொலிவுற்றது (சீவக. 2247). விள் - விள = வெள்ளையான தோட்டை யுடைய பழம், அதனை யுடைய மரம். விள்-வெள்-வெள்ளை. முடிபு தொல்காப்பியத்துக்கும் நன்னூற்கும் பொதுவான பல வழுக்க ளிருப்பினும், அவற்றை நீக்கி, நன்னூற்குச் சிறப்பானவையே ஈங்குக் கூறப்பட்டன. இதுகாறும் கூறியவற்றால், நன்னூல் சில காரணம் பற்றி நன்னூலாயினும், பல காரணம் பற்றி நன்னூலன்று என்பதே முடிபாகக் கொள்க. - சென்னை மாணவர் மன்றம் வெள்ளிவிழா மலர் 1957; ``தென்றல்'' 21.9.1957 4 நன்னூல் நன்னூலா - மறுப்பறுப்பு சென்ற வாரத் தென்றல் இதழில் நன்னூல் நன்னூலே என்றொரு கட்டுரை, என் நன்னூல் நன்னூலா? என்னும் கட்டுரைக்கு மறுப்பாக வெளிவந்ததைக் கண்டேன். அம் மறுப்பின் போலித் தன்மை தமிழாராய்ச்சி யாளர்க்குத் தெளிவாகத் தெரிவது தேற்றமாயினும், மாணவருலகின் மயக்கறுத்தற்பொருட்டு, இம் மறுப்பறுப்பை விடுகின்றேன். `நன்னூல் நன்னூலே' என்னும் கட்டுரையாசிரியர் சென்னைச் சௌக்கார்பேட்டை ஜெயின் உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழா சிரியர் வித்வான் எஸ்.பி. கெம்பீர நைனார் என்னும் செய்தியொன்றே அவர் பவணந்தி என்னும் சமண முனிவர் இயற்றிய நன்னூற் குறையை மறைத்தற் காரணத்தை அறிஞர்க்குணர்த்தப் போதுமானதாம். மதப்பற்று மதப் பற்றன்றோ. இனி, மறுப்பாசிரியர் மறுப்புகளையெல்லாம் ஒவ்வொன்றாய் எடுத்தறுப்பாம். மறுப்பு : நன்னூல் நன்னூலா? என்று கேட்டிருப்பது, மரத்தைக் கண்ட ஒருவன், இந்த மரம் மரமா? என்று கேட்பது போல் வினாவில் தவறுபட்டு வினா வழுவாய் அமைந்துள்ளது. அறுப்பு : மரத்தை மரமென்று கண்ட ஒருவனுக்கு, இது நன்மரமா என்று ஐயம் எழுமேயன்றி மரமா என்று ஐயம் எழாது. அதுபோல் ஒரு நூலைக் கண்டவனுக்கு இது நன்னூலா என்று ஐயம் எழுமேயன்றி நூலா என்று ஐயம் எழாது. பவணந்தி முனிவர் தம் நூலுக்கு நன்னூல் என்று பெயரிட்ட அளவிலேயே அது நன்னூலாகிவிடாது. பொருளுக்கும் பெயருக்கும் பொருத்தம் இருப்பினும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். இரு கண்ணுமில்லானுக்குத் தாமரைக்கண்ணன் என்றும், இரு காலு மற்றவனுக்குத் தாண்டவராயன் என்றும், பெயரிடப்பட்டிருக்கலாம். குற்றம் நிறைந்த வேறுசில நூல்கள்கூட நன்னூல் என்று பெயர்பெறலாம். ஒரு கனியை உண்டமட்டில் அது நன்றென்று ஒரு பொதுமகன் கொள்ளுதல் தகாது. அதனை ஆய்ந்து அதன் உண்மைத் தன்மையைக் காண்பவன் மருத்துவனே. அதுபோல், ஒரு நூலையும் ஒரு மாணவன் கற்ற அளவில் அது நன்றென்று கொள்ளுதல் முடியாது. ஆராய்ச்சியாளனே அதன் உண்மைத் தன்மையைக் காண இயலும். நன்னூல் என்ற பெயரளவில் அதை நன்னூலென்று தாம் மயங்கியது மன்றி, தம்மைப்போற் பிறரையுங் கருதி அம் மயக்கத்தைப் பிறர் மீதும் ஏற்றிக்கொள்கின்றார், நம் மறுப்பாசிரியர்.நன்னூல் நன்னூலா? என்னும் வினாவை, நல்லெண்ணெய் நல்லெண்ணெயா? நன்மாறன் நன்மாறனா? நல்ல பாம்பு நல்ல பாம்பா? என்றித் தகையவற்றுள் ஒன்றற்கு ஒப்பிடலா மேயன்றி, இந்த மரம் மரமா? என்னும் வினாவுக்கு ஒப்பிடலாகாது. இதை உவமையிலக்கணம் செவ்வையாய் அறிந்தாரே உணர்வர். மேலும், வினாவில் தவறுபட்டு வினா வழுவாயமைந்துள்ளது. என்னும் சொற்றொடர், கூறியது கூறலாம். வினாவில் தவறுபட்டுள்ளது வினா வழுவாயமைந்துள்ளது என்னும் இவ் விரண்டில் ஒன்றே அமையும். மறுப்பு 2 : இன்னின்ன எழுத்துகள் இன்னின்ன இடத்தில் குறுகி ஒலிக்கும் என மாத்திரை குறிக்கும் இடத்தும், புணரியலிலும் கூறினாற் போதுமானதாம். எனக் கூறி, முன்பு தாம் மறுத்த அச் சார்பு எழுத்துகளின் வகைகளை ஏற்றுக்கொள்ள உடன்படுகிறது. அறுப்பு : சில எழுத்துகள் சிலவிடத்திற் குறுகி யொலித்தமட்டில் சார்பெழுத்துக ளாகிவிடா. எழுத்துகள் குறுகி யொலித்தல் மட்டுமன்றி நீண்டும் ஒலிக்கும். ஆவியு மொற்றும் அளவிறந் திசைத்தலும் மேவு மிசைவிளி பண்டமாற் றாதியின் (101) என்று நன்னூலாரே நன்றாய் (தெளிவாய்)க் கூறியுள்ளார். ஆகவே, குறுகியும் நீண்டும் ஒலிக்குமிடமெல்லாம் சார்பெழுத் தியல்பைப் பிறழ வுணர்தலாம். குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகிய மூன்றும், குறுகி யொலித்தலால் மட்டுமன்றித் தத்தம் முதலினின்று திரிந்தொலித்தாலும் சார்பெழுத்துகளாயின என்றறிதல் வேண்டும். மறுப்பு 3 : சன்மதி, யசோமதி யென்ற பெயர்களும், பவணந்தி, தரும நந்தி என்ற பெயர்களும் பண்டுதொட்டு இன்றுகாறும், தமிழ்நாட்டு ஜைனர்களுக்கே யிட்டு வழங்கப்படும் பெயர்களாக அமைந்துள்ளன..... இப்படியிருக்க யாதொரு ஆதாரமுமின்றி நன்னூலாரை ஆரிய அந்தணர் என்றால், அதை ஆராய்ச்சியுலகம் அடியோடு ஏற்காது. அறுப்பு : சன்மதி, யசோமதி, பவணந்தி, தருமநந்தி என்பன தமிழ்ப் பெயர்களல்லவென்பதும், சமணம் வடநாட்டினின்று வந்த அயன்மதம் என்பதும், யாவரும் அறிவர். பவணந்தியார் ஒருகால் பிறப்பளவில் திரவிடராயிருந்திருப்பினும், கருத்தளவில் மாறுபட்டவர் என்பதை எவரும் மறுக்கவொண்ணாது. ஒருவரை ஓர் இனத்தோடு சார்புபடுத்துவது, சிறப்பாக அவர் மனப்பான்மைபற்றியே யன்றிப் பிறப்புப் பற்றியன்று. மறுப்பு 4 : நம் தமிழ்நாடு தொல்காப்பியர் காலத்திற்குப் பின்பும் நன்னூலார் காலத்திற்கு முன்பும் ஆகிய இடைப்பட்ட காலத்தில் தொடர்பைப் பெரிதும் மேற்கொண்டு, அவர் தம் நடையுடை பாவனை களில் பெரிதும் ஈடுபட்டு இருந்ததோடன்றி, அவர் தம் வடமொழியையும் தமிழில் கலந்து வழங்குதலை உயர்ந்த நாகரிகமாகக் கருதிவந்தது. அறுப்பு : நம் மறுப்பாசிரியர் தமிழ் நாகரிகத்தையும் தமிழ் வரலாற்றையும் செவ்வையாய் அறியாமையை அவர் மறுப்பு அறிவிக்கின் றது. அதற்கு விடை விளக்கம் ஒரு பெருநூலாய் விரியும். வடமொழியாளர் தென்னாட்டுக்கு வந்த பின்பு, தமிழ்ப் புலவருள், தமிழன்பரும் (காட்டிக் கொடுக்கும்) தமிழ்ப் பகைவரும், (கவலையற்ற) நொதுமலருமாக மூவேறு சாரார் தோன்றினர். இடைக்காலத்தில் தமிழன்பர் கை முற்றும் தாழ்ந்து விட்டதினால், வடவர் வாழ்க்கை முறையும் வடமொழியும் போற்றப்படத் தொடங்கினவேயன்றி வேறன்று. இந்திய நாகரிகப் பண்பாட்டின் அடிப்படை தமிழரதே யென்பதும், தமிழ் தெற்கில் மூழ்கிப் போன குமரிநாட்டில் தோன்றி வடக்கே சென்று திரவிடமாய்த் திரிந்ததென்பதும், திரவிடமே ஆரியத்துக் கடிப்படை யென்பதும், தமிழ் வடமொழியால் தளர்ந்ததேயன்றி வளர்ந்ததன்று என்பதும், கடந்த ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நூல்கள் ஒளிக்கப்பட்டும் ஒழிக்கப்பட்டும் வந்தன என்பதும், உலகம் அறியும் காலம் அடுத்து வருகின்றது என்பதை நம் மறுப்பாசிரியர்க்கு உணர்த்த விரும்புகின்றேன். மறுப்பு 5 : சீயகங்கன் அரும்பொருள் ஐந்தையும் தருகவெனக் கேட்டதாகவும், பன்னருஞ் சிறப்பிற் பாடித் தந்ததாகவும் பாயிரஞ் செப்பு கின்றது. ஆதலின், ஐந்தும் அமைந்ததாய் அந் நன்னூல் நிறைநூலே ஆம் என்க. அறுப்பு : சீயகங்கன் ஐந்திலக்கணமும் இயற்றித் தருமாறு பவணந்தி முனிவரைக் கேட்டிருக்கலாம். அவரும் இசைந்திருக்கலாம். ஆயின், அந் நோக்கம் நிறைவேறியதென்பதைக் காட்டற்கு யாதொரு சான்றுமில்லை. பாயிரம், நூலியற்றியதைக் குறிக்குமிடத்து, முன்னோர் நூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன் என்று மட்டும் கூறுகின்றதே யன்றி, ஐந்திலக்கணமும் வகுத்தனன் என்று ஐயமறக் கூறவேயில்லை. பெயரியலில் (11) பல்வகைத் தாதுவி னுயிர்க்குடல் போற்பல சொல்லாற் பொருட்கிட னாக வுணர்வினின் வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள்'' என்று செய்யுளிலக்கணம் கூறியிருப்பது, சொல்லின் பொதுவிலக்கணம் கூறிய நூற்பாவில் உள்ள ``வழக்கொடு செய்யுளின்'' என்னும் பாகுபாட்டின் ஒரு பகுதியை விளக்க எழுந்ததாயினும், தொல்காப்பியத்தில் அங்ஙனம் கூறப்படாமையை நோக்கும் போது, நன்னூலில் செய்யுளதிகாரம் என ஒன்று என்றேனும் அமைந்திருந்ததாகத் தெரிகின்றிலது. மேலும், சமணம் சம்பந்தர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் தலை தாழ்ந்து போயினும், ஓரளவு இன்றுவரை இடையறாது தொடர்ந்து வருவதால், ஒரு சமணர் வீட்டிலும் ஐந்ததிகார நன்னூலில்லாமையும், ஏனை மூவதிகாரங்களுள் ஒன்றேனும் ஓரிடத்துமின்மையும், அவை ஆசிரியரால் இயற்றப்பட்டில என்பதே யுணர்த்தற் பால. மறுப்பு 6 : தமிழ்ப் புலவராம் குடிகள்........ முன்னோர் ஒழியப் பின்னோர் பலரிலும் நன்னூலார் தமக்கு எந்நூலாரும் இணையோ எனப் புகழ்வராயினர். அறுப்பு : இது, குயக்கொண்டான்மாரும் சுவாமிநாத தேசிகன் மாரும் வையாபுரிகளும் ஆகிய கோடரிக்காம்புகளின் கூற்றேயெனக் கூறி விடுக்க. மறுப்பு 7 : ``ஒன்றொழி முந்நூற்று எழுபான் என்ப'' என்று விரிவைக் கண்ட வர்களையும் காட்டுகின்றார். அறுப்பு : என்ப என்பது அசைச் சொல்லாயும் வரும் என்பதை மறுப்பாசிரியர் அறியார் போலும். தொல்காப்பியம் - சொல்லதிகாரம் 293ஆம் நூற்பா வுரையைக் காண்க. மேலும், ஒன்றொழி முந்நூற்றெழுபான் என விரிக்கும் முன்னை நூலொன்றும் இதுபோதில்லை. மறுப்பு 8 : உயிரெழுத்தாயினுஞ் சரி, மெய்யெழுத்தாயினுஞ் சரி எல்லா எழுத்துகளையும் மனத்தால் நினைக்கும்போது மாத்திரம் வாய் திறவாமல் நினைக்கலாமே யொழிய, எதிராளிக்குத் தாம் கூறிக் காட்டுங் காலத்து வாய் திறந்தே கூற வேண்டுதலின் மெய்த்தன்மையையுடைய ஆய்தம் அங்காத்தலில் தோன்றாது எனக் கொள்ளுதல் எப்படிப் பொருந்தும்? அறுப்பு : மெய்யெழுத்துகளையும் கூறிக் காட்டுங்காலத்து அங்காந்தே கூற வேண்டியிருத்தலின், ஆய்தத்துக்குமட்டும் ஏன் அங்கா முயற்சியை விதந்து கூற வேண்டும்? மேலும் பவணந்தி முனிவரே, ``அவற்றுள் முயற்சியுள் அஆ அங்காப் புடைய (76) என முதலீருயிர்கட்கும், இஈ எஏ ஐஅங் காப்போ டண்பன் முதனா விளிம்புற வருமே (77) என ஏனைச் சில வுயிர்கட்குமாக, அங்கா முயற்சியை இதழகல் உயிர்கட்கு மட்டும் ஏன் வரையறுத்தல் வேண்டும்? மறுப்பு 9 : தும்மல் ஒலிபோன்று ஆய்த ஒலி தலையில் பிறப்பதை யெப்படி மறுத்தல் இயலும் எனக் கேட்க நேரிடுகின்றது. அறுப்பு : தும்மல் ஒலிபோன்று எங்ஙனம் ஆய்த வொலி தலையில் பிறக்கும் எனக் கேட்க நேரிடுகின்றது. மறுப்பு 10 : ஙகரம் மொழிக்கு முதலாகும் எனக் கூறும் ஒரு கட்சி யினரும், ஙகரம் மொழிக்கு முதலாகாது எனக் கூறும் மற்றொரு கட்சி யினரும் இருந்தனர். அவ் விரு சாராரையும் ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே என ஒன்றுபடுத்துதற்கே நன்னூலார்.... கூறிய அதனைக் குற்றமாகக் காட்டினால் அறிஞர் உலகம் ஆதரிக்குமா? அறுப்பு : ஙகரம்பற்றி மாறுபட்ட இரு சாராரும் எத்தனை முறை எங்கெங்குப் போரிட்டு எத்தனை பேர் மாய்ந்தனர்? ஒரு பொருளின் இயல்புபற்றி இருவர் அல்லது இரு சாரார் மாறுபடின், அறிஞன் அல்லது ஆசிரியன், தவறான கருத்துடையாரைத் திருத்துவதா? கோமுட்டிச் செட்டியார் கூற்றுப்போல் மாணவர்க்கு மயக்கமுண்டாகும் வண்ணம் இரு திறம்படக் கூறுவதா? மறுப்பு 11 : அங்ஙனம் என்று கூறலே தொன்றுதொட்ட மரபாகும் என்க. அறுப்பு : ஆங்கன மாகிய வாதிரை கையால் என்று மணி மேகலையிலும்(16, 128), ஆங்ஙனம் விரிப்பின் என்று தொல்காப்பியத்தி லும் (1308) வந்திருப்பதால், நெடின் முதல் வடிவமே முந்தியதென்பது பெறப்படும். தொல்காப்பியம் மணிமேகலைக்கு முந்தியதாயினும், ஆங்ஙனம் என்பது ஆங்கனம் என்பதன் திரிபென்பது ஆராய்ச்சியால் தெளிவாம். அங்கிட்டு, இங்கிட்டு என்னும் சொற்கள் முறையே, அங்ஙோட்டு இங்ஙோட்டு என மலையாளத்தில் வழங்குவது கவனிக்கத் தக்கது. ஆங்கனம் ஆங்ஙனம் என்னும் வடிவங்களே, முறையே, அங்கனம் அங்ஙனம் எனக் குறுகி வழங்குகின்றன. இங்ஙனமே, இங்கனம் இங்ஙனம் முதலியனவும், இவை யெல்லாம், பாண்டிநாட்டு வழக்கை யறிந்த சொல் லாராய்ச்சியாளர்க்கன்றிப் பிறர்க்குச் செவ்வன் விளங்கா. மறுப்பு 12 : இடுகுறிப் பெயர், காரணப் பெயர், காரண இடுகுறிப் பெயர் என்ற இவற்றின் வேறுபாட்டைச் சூடாமணி நிகண்டு முதலிய பண்டைய நூல்களை ஓதியுணர்ந்தவர் மறுக்க முன்வரமாட்டார். அறுப்பு : சூடாமணி நிகண்டு மண்டலபுருடன் என்னும் சமணர் 16ஆம் நூற்றாண்டில் தொகுத்த சொற்பொருட்டொகுதி. அது இலக்கண நூலுமன்று, பண்டைய நூலுமன்று. ஆதலால், அதை அளவையாகக் கொள்பவர் தமிழியல்பை யறியார் என்பது தேற்றம். 1. ஆங்ஙனம் என்பது ஆங்கு-அனம் எனப் பிரியும். 2. அங்கிட்டு என்பது அங்கு-இட்டு எனப் பிரியும். எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே. என்னும் தொல் காப்பியம் உண்மையானதாம். முடிவு: நன்னூல் நன்னூலே என்னுங் கட்டுரைக்கு உண்மையில் எதிர்மறுப்புத் தேவையில்லாவிடினும், பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் கொல்குறும்பும் சேர வியலும் இற்றைத் தமிழ்நாட்டின் சீர்கெட்ட நிலை நோக்கி, தமிழ் மாணவர் மருள் நீங்கித் தெருளும் வண்ணம் தென்றலிதழின் கட்டுரையிடச் சிறுமைக் கும் என் ஒழிவு நேரக் குறுமைக்கும் ஏற்ப, சுருங்கச் சொல்லன் முறையில், ஓரளவு வரைந்தேன். தமிழ்நாடு தமிழுக்குச் சிறப்புரிமையின்றிப் பொது நாடாயிருக்கு மளவும், தமிழக் கொள்கைகள் தலையெடா. அறியாமையிலும் அடிமைத் தனத்திலும் மயங்கிக் கிடக்கும் இளங்காளையர் உள்ளம் தளிர்ப்பெய்துமாறு, தென்றல் வீசுகின்றது. தெளிந்தெழுக. இதனால், நன்னூல் அறவே தீ நூல் என்பதன்று. அதிலும் சில நற்கூறுகள் உள. ஆயின், தமிழின் உயிர்நாடியான தனித் தன்மைக்கும் தமிழ்மொழி நூலுண்மைக்கும் மாறான பல கருத்துகள் உண்மையின், அது முற்றும் நன்னூலன்று என்பதே, நன்னூல் நன்னூலா? என்னும் கட்டுரைக்கும் இம் மறுப்பறுப்புக்கும் முடிபும் என்க. - ``தென்றல்'' 16.11.1957 5 சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைகட்கே 1 தமிழ்ப் பொழில் 36ஆம் துணர் 4ஆம் மலரில் மயிலை சீனி. வேங்கடசாமியார் பெயரில் வந்துள்ள சேரலாதன் அளித்த பெருஞ்சோறு என்னும் கட்டுரையைக் கண்டு திடுக்கிட்டேன். கடந்த ஐயாயிரம் ஆண்டாக மெலிவுற்றும் நலிவுற்றும் வந்து குற்றுயிராய்க் கிடக்கும் தமிழ், அயன்மொழியாரால் மட்டுமன்றித் தமிழ ராலும் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், மயிலை சீனி, வேங்கடசாமியார் ஒருவரே தமிழ்ப் பகைவரின் கூற்றுகளை ஆற்றலொடு மறுத்து வருகின்றார் என்று பற்றுள்ள தமிழ்ப் புலவர் உற்றுவரும் மகிழ்ச்சிக்கு மாறாக எழுந்துள்ளதக் கட்டுரை. தமிழின் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தைக் கடல் கொண்டு ஆரிய வருகைக்கு முற்பட்ட பழந்தமிழிலக்கியமனைத்தும் இறந்துபட்டபின், தமிழின் முதுபழந் தொன்மையைக் காட்டி நிற்கும் சான்றுகள், பஃறுளி யாற்றுச் செய்தியும், சேரலாதன் பெருஞ்சோற்றுச் செய்தியும் ஆகிய இரண்டே. இவற்றுள் பஃறுளியாறு மலையாள நாட்டின் தென்கோடியில் ஓடும் பறளியாறேயென்று ஒரு பிராமணத் தமிழ்ப் புலவரால் ஏற்கனவே கூறப்பட்டுளது. இன்று, சேரலாதன் பெருஞ்சோறும் கடைக்கழகக் காலத்ததேயென்று ஒரு தமிழகத் தமிழ்ப் புலவரால் கூறப்பட்டுவிட்டது. எவ்வினத்தரேனும், காய்தல் உவத்தல் அகற்றி நடுநிலையாய் ஒரு பொருளை ஆய்ந்து அதன் உண்மை கண்டுரைப்பின் ஒப்புக்கொள்ளத் தக்கதே ஆயின், சேரலாதன் அளித்த பெருஞ்சோறு என்னுங் கட்டுரை அங்ஙனம் ஆய்ந்தெழுதியதா என்பதை இங்கு ஆய்ந்து காண்பாம். மண்டிணிந்த நிலனும் என்று தொடங்கும் புறநானூற்று இரண்டாஞ் செய்யுளில், வான வரம்பனை நீயோ பெரும! அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என்னும் பகுதிக்குப் பழைய உரையாசிரியர் உரைத்த உரை, வான வரம்ப, பெரும, நீ, அசைந்த தலையாட்டமணிந்த குதிரையை யுடைய பாண்டவ ரைவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் பொருது போர்க்களத்தின்கட் படுந்துணையும் பெருஞ் சோறாகிய மிக்க உணவை இருபடைக்கும் வரையாது வழங்கினோய்! என்பது. ஐவர் என்னும் தொகையடிப்பெயர், பாரதக் காலத்திற்குப் பின் தமிழிலக்கியத்திலும் வழக்கிலும் பாண்டவரையே குறித்து வந்துள்ளமை, ஐவரென் றுலகேத்தும் அரசர்கள் என்னும் கலித்தொகைத் தொடராலும் (25), ஐவருக்குந் தேவி அழியாத பத்தினி'' என்னும் பழமொழியாலும், அறியப்படும்.) நூற்றுவர் என்னும் பெயரும், தனித்துவருமிட மெல்லாம், நூற்றுவர்பால்.... தூது நடந்தானை (சிலப். ஆய்ச்சியர் குரவை) என்பதிற் போல் துரியோதனன் முதலியோரையே குறிக்கும். இதனால் தொகைக் குறிப்பு என்னும் நன்னூல் இலக்கணத்திற்கு (நூற்பா 269), ஐவர் நூற்றுவர் என்னும் பெயர்களையே இலக்கியமாக எடுத்துக் காட்டுவர் உரையாசிரியர். ஐவர் என்பதற்கு நேரான பஞ்சவர் என்னும் வடசொல்லும், பஞ்சவர்க்குத் தூது நடந்தானை என்னும் ஆய்ச்சியர் குரவைத் தொடரில் (சிலப். 17) பாண்டவரையே குறித்தது. பண்டைத் தமிழகப் பாண்டியர் ஐவராக இருந்து ஆண்டு பஞ்சவர் எனப் பெயர்பெற்றமை, இலக்கியத்தாலும், கல்வெட்டுகளாலும் நிகண்டு என்னும் உரிச்சொற்றொகுதிகளாலும் அறியப்பட்டதே. பதினாறாம் நூற்றாண்டில் விசுவநாத நாயக்கரோடு பஞ்ச பாண்டியர் பொருதார் என்னும் செய்தியும் இதை வலியுறுத்தும். ஆயின், அப் பாண்டியர் ஐவருள்ளும் ஒருவனே தலைமையாக மதுரையிலிருந்து ஆண்டான் என்பதும், அவனுக்குள் ஏனைய நால்வரும் அடக்கம் என்பதும், பஞ்சவன் என்னும் ஒருமைப் பெயரே உணர்த்தும். பாண்டவர் ஐவருள் ஒவ்வொருவரையும் பஞ்சவன் என்னும் வழக்கமில்லை; பாண்டவர் என்பதே மரபு. புறநானூற் றிரண்டாஞ் செய்யுளில் வரும் ஐவர் என்னும் சொல், வழக்கும் இடமும் பற்றிமட்டுமன்றி ஈரைம் பதின்மரும் என்னும் தொடர்புடைய தொகையடிப்பெயராலும், நிலந்தலைக் கொண்ட எனத் துரியோதனன் முதலியோர்க்கு வந்துள்ள அடைமொழியாலும், பொருது களத் தொழிய என்னும் வினை முடிபாலும், பாண்டவரையே குறித்தல் வெளிப்படை. இனி, பாண்டவருள் ஒருவனான நகுலன் குதிரையேற்றத்தில் தேர்ச்சி பெற்றவனாதலின், அலங்குளைப் புரவி என்னும் அடைமொழி பாண்டவருக்குக் கொடுக்கப்பட்டுளதெனக் கொள்ளினும் பொருந்தும். பாரதப்போர் நாடுபற்றி நிகழ்ந்ததென்பது யாவரும் அறிந்தது. நூற்றுவர் யாவரும் அப் போரில் மாண்டனர் என்பதும் ஐயமறுப்பற்றதே. மேலும், பஞ்சவர் என்னும் பன்மைப் பெயர், பாண்டியரைக் குறிக்கும்போது, முன் பின் ஆண்ட ஐந்து தலைமைப் பாண்டியரைக் குறிக்குமேயன்றி, சமகாலத் துணைப்பாண்டியரை உளப்படுத்தாது. துணைப்பாண்டியரை உளப்படுத்துமிட மெல்லாம் பஞ்ச பாண்டியர் என விரித்துக் கூறுவதே வழக்கம். பாண்டவரைக் குறிப்பதாயின் பஞ்ச பாண்டவர் என இருசொல் வேண்டுவதில்லை; பஞ்சவர் எனினே அமையும். ஐவர், அல்லது பஞ்சவர் என்னும் சொல், பாண்டியர் பாண்டவர் ஆகிய இருசாரார்க்கும் பொதுவேனும், ஈரைம் பதின்மர் என்பது பாண்டியர் ஐவரின் நூறு படைத்தலைவர் என்று கொள்வது நூலிற்கு முற்றும் மாறானதாம். ஒரு பாண்டியனுக்கு இருபதின்மர் விழுக்காடு ஐவர் பாண்டியர்க்கும் நூற்றுவர் படைத்தலைவர் இருந்தனர் என்பது, வரம்பிறந்த உயர்வுநவிற்சியாம். ஐவர்க்கும் வெவ்வேறு படைத்தலைவர் என்று கொள்ளினும், ஐவர்க்குமேல் படைத்தலைவர் இருந்திருக்க முடியாது. ஓர் அரசனுக்கு எத்துணைப் பெரும்படையிருப்பினும், பெருந்தலைவன் ஒருவனாகவே யிருப்பான். பல, துணைப்படைகள் ஒருங்கு சேரினும், ஒருவனே அவற்றுக்கெல்லாம் பொதுத்தலைவனா யிருப்பான். அல்லாக் கால், படைகள் வெற்றிபெற ஒற்றுமையாகப் பொரமுடியாது. வெற்றி பெற்றெழினும் பொருது களத்தொழியினும் புறங்காட்டியோடினும், போர் விளை வெல்லாம், அரசர் அல்லது பெரும்படைத்தலைவர் மேலேயே வைத்துக் கூறப்படும். பாண்டியர் ஐவரின் படைத்தலைவர் நூற்றுவர் எனின், அவருட் பலர் செய்யுளில் விதந்து குறிப்பிடத்தகாத சிறு படைத்தலைவரே யாவர். இனி, நூற்றுவர் படைத்தலைவர், என்பது நூலுத்தி வழக்குக்குப் பொருந்தா தென்று கண்ட கட்டுரைகாரர்தாமே, ஈரைம் பதின்மர் என்பது ஈரொன்பதின்மர் (பதினெண்மர்) என்பதின் பாடவேறு பாடாயிருக்கலா மென்று புதுவதாகக் கருதுகின்றார். பாடவேறுபாடு கொண்டு தம் கொள்கையை நாட்டக் கருதியவர், ஈரும்பதின்மரும் என்னும் பாடம் கொண்டு, படைத்தலைவர் தொகையைப் பத்தாகக் குறைத்திருக்க லாமே! இனி, உதியஞ்சேரலாதன் பதினெட்டு நாளும் பாரதப் படைகட்கு வழங்கிய பெருஞ்சோற்று மிகுபதத்தை, பிற்காலத்துச் சேரனொருவன் தன் படைமறவர்க்களித்த பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையாகக் காட்டுகின்றார் கட்டுரைகாரர். தொல்காப்பியத்தில் வஞ்சித்திணைத் துறையாகக் குறிக்கப்பட்டுள்ள பிண்ட மேய பெருஞ்சோற்று நிலை வழிவழி வந்த மூவேந்தர்க்கும் பொதுவேயன்றி அவருள் ஒருவனுக்கு மட்டும் சிறப்பாக வுரியதன்று. ஓர் அரசனைச் சிறப்பித்துப் பாடும் இயன்மொழி வாழ்த்தில், அவனுக்குச் சிறப்பாகவுரிய இயல்களையும் செயல்களையும் குறிப்பிடுவதன்றி, எல்லார்க்கும் பொதுவானவற்றைக் குறிப்பது மரபன்று. மேலும், ஒரு வேந்தன் போருக்குச் செல்லும் தன் படைஞர்க்கு அளிக்கும் விருந்து, வணிக முறையில் கைம்மாறு கருதிச் செய்யுங் கடமையேயன்றி, வள்ளன்மை முறையில் வழங்கும் கொடை யாகாது. போர்க்களத்தில் தன் வேந்தன்பொருட்டு உயிரைத் துறக்கத் துணியும் மறவனுக்கு ஓர் உருண்டை சோறு கொடுத்தல்தானா பெரிது! இதனாலேயே ``பிண்ட மேய பெருஞ் சோற்று நிலை பாடாண் பாட்டுகளில் இடம் பெறுவதில்லை. உதியஞ் சேரலாதனது பெருஞ்சோற்று மிகுபதம் பிண்ட மேய பெருஞ் சோற்று நிலையேயாயின் போர் நிகழ்த்திய எல்லா வேந்தரும் பெருஞ் சோற்று என்னும் பெயரடை (மொழி) பெற்றிருக்க லாமே! உதியஞ்சேரலாதனது பெருஞ்சோற்று மிகுபதத்துக்குப் பல சிறப்பியல்களுண்டு. அவையாவன: 1. கைம்மாறின்மை 2. படைப்பெருமை 3. நடுநிலை 4. வரையாமை 5. சேய்மை இச் சிறப்புப் பற்றியே உதியஞ்சேரலாதன் ஒப்புயர்வற்ற அடை மொழி பெற்றான். முடிநாகராயர் பாட்டில் பெருஞ்சோறு என்று மட்டும் குறியாது பெருஞ்சோற்று மிகுபதம் என மிகுத்துக் கூறியதும், வரை யாது என்னுங் குறிப்பும், பிண்டம் என்னுஞ் சொல்லின்மையும், கவனிக்கத்தக்கன. ராயர் என்னும் பெயர் கடைச்சங்க காலத்தில் வழங்கப் பெறவில்லை என்பது கட்டுரைகாரர் கருத்து. அது கடைச்சங்கத்திற்கும் முந்தி வழங்கியதென்பதற்குத் தொல்காப்பியமே சான்றாம். தொல்காப்பியர் காலம் கி.மு.7ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகாது. ஓர் ஆள்வினைத் துறைத் தலைவன் அரசனாற் பெறுஞ் சிறப்பு மாராயம் எனப்பட்டது. மாராயம் பெற்ற நெடுமொழி யானும் (பொருள். 63) என்பது தொல்காப்பியம். மாராயமாவது மாராயன் என்று அரசனாற் பட்டம் பெறுகை. பஞ்சவ மாராயன்......கொங்காள்வான்” என்று கல்வெட்டில் வருதல் காண்க. அரசனாற் சிறப்பெய்திய வெற்றி மறவரின் பெற்றிமை கூறும் புறத்துறையை மாராய வஞ்சி எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் (3 : 11). அரசன் - அரைசன் - அரையன் -ராயன். மாவரையன்- மாராயன். நாகர் என்பார் பண்டைக் காலத்தில் நாகவணக்கம் மிகுந்திருந்த கீழ்நாட்டார். அவர் முடிநாகர், ஒளிநாகர், நீலநாகர் எனப் பல வகையர். முடிநாகர் நாகமுடியணிந்திருந்தவர். அவர் சூட்டு நாகர் எனப்படுவர். முடிநாகவரையர் - முடிநாகராயர். இரு சொற்றொடர்களில் அரையன் என்பது வருஞ்சொல்லாக நின்று ராயன் என்று திரிவதை மரூஉவாக அல்லது சிதைவாகக் கொள்ளல் வேண்டும். அரையன் என்னும் பெயர் தலைவன் என்னும் பொருளதாகவோ, இடுகுறிப் பெயராகவோ, இருந் திருக்கலாம். வேத காலத்திலேயே ஆரியர்க்குத் தமிழ்நாட்டொடு தொடர் பிருந்ததென ஆராய்ச்சியாளர் கூறுவதால், தென்சொற் சிதைவான ஆரியச் சொற்கள் வேதத்தில் இடம்பெற்றமை வியப்பன்று. வானவரம்பன் என்பது வானளாவும் மலையரசன் என்றும், இமயவரம்பன் என்பது பனிமலையை (இமயத்தை) எல்லையாகவுடைய நாட்டரசன் என்றும் பொருள்படுவதாகும். இவை சேரர் பெயர்கள். இவற்றுள் முன்னது எல்லார்க்கும் பொது; பின்னது வடநாட்டை அடிப்படுத்திய ஒரு சிலர்க்கே சிறப்பு. நூறடி உயரமுள்ள மாடங்களும் இருநூறடி யுயரமுள்ள nகாபுரங்களும்,வன்றோய்வனவாகவும்வனத்தைத்துளைத்துமீச்சென்றனவகவும்உயர்வுநவிற்சியாகக்கூறப்படும்போது,பத்தாயிரம்அடிஉயர்ந்தகுடமலைஏன்வனவரம் பென்றுமீக் கூறப்பட முடியாது? தமிழகத்தின் வடவெல்லை வரலாற்றிற்கெட்டிய காலமெல்லாம் வேங்கட மலையாகவே இருந்திருப்பினும், மூவேந்தருள்ளும் வலிமை மிக்கவர் அவ்வப்போது பனிமலைவரை படையெடுத்துச் சென்று நாவலந்தேய முழுவதையும் தம் ஆட்சிக்குட்படுத்தியமை தமிழிலக்கியமும் தமிழ்நாட்டு வரலாறும் கற்றார் அனைவரும் அறிந்ததே. கி.பி.11ஆம் நூற்றாண்டிலிருந்த இராசேந்திரச் சோழன் கங்கைவரை சென்று அதைக் கைக்கொண்டான். 3ஆம் நூற்றாண்டிலிருந்த செங்குட்டுவன் வடவரசரை யெல்லாம் வணக்கிப் பனிமலையிலிருந்து கண்ணகி சிலைக்குக் கற் கொணர்ந்தான். அவன் தந்தையாகிய சேரலாதன், குமரியொடு வடவிமயத் தொருமொழிவைத் துலகாண்ட பெருவேந்தன். 2ஆம் நூற்றாண்டிலிருந்த கரிகால்வளவன், பனிமலை வரை வென்று, அதற்குமப்பால் படையெடுக்க முயன்றவன். வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் (பொருள். 391) என்று தொல்காப்பியம் கூறுவதாலும் தமிழகத்தில் முதற் காலத்தில் மூவேந்தர்க்கே முடியணியும் உரிமை இருந்ததினாலும் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டுவரும் சேரசோழ பாண்டியர் குடி எனப் பரிமேலழகர் பாராட்டுவதாலும், கடைக்கழகக் காலத்திற்கு முன்பே முத்தமிழ் வேந்தரும் முழுவலி பெற்றிருந்தனர் என்பதும், அவருட் சிலரேனும் பனிமலைவரை செங்கோல் செலுத்தியிருக்க வேண்டுமென்பதும், அவ் வரலாற்றுச் சான்று களெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன என்பதும், உய்த்துணரப்படும். இனி சோழர் காலத்திலும் கங்கைக்கரையில் தெலுங்கச் சோழர் ஆண்டனர் என்னும் செய்தியும், வடநாட்டுக் கதிரவன்குல அரசர்க்கும் திங்கள்குல அரசர்க்கும் முறையே சோழ பாண்டியரோ டிருந்தவுறவும் குமரிநாட்டுத் தோன்றிய தமிழின் தொன்மையும், இன்னும் வடநாட்டில் திரவிட மொழி களுண்மையும், ஆரிய வருகைக்குமுன் நாவலந் தண்பொழில் முழுதும் மூவராட்சிக்குட்பட்டிருந்ததோ என ஐயுறத் தூண்டும். உதியன் என்பது சேரர்குடிப் பெயர். ஆதன் என்பது பண்டைக் காலத் தியற்பெயர்களுள் ஒன்று. பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் வேறு; செங்குட்டுவன் தந்தையாகிய சேரலாதன் வேறு; தமிழின் தொன்மையைக் குறைக்க விரும்பும் தமிழ்ப் பகைவரே, இவ் விருவரையும் ஒருவராக மயக்குவர். இமயமலையை எல்லையாகக் கொண்டு சேரமன்னர் எந்தக் காலத்திலும் அரசாண்டதாகத் தெரியவில்லை என்று கட்டுரைகாரர் கூறுவது, கிறித்துவுக்கு முற்பட்ட சேரவேந்தர் வரலாற்றையெல்லாம் கண்ட பின் கூறுவதுபோல், வேடிக்கையாகத் தோன்றுகின்றது. செங்குட்டுவனிலும் சேரலாதனிலும் பெரிய சேரவேந்தர் எத்தனையோபேர், வரலாற்றுக் காலத்துக்கு முன் குமரிமுதல் பனிமலைவரை ஆண்டிருக்கலாமே! தென்குமரி வடபெருங்கற் குணகுடகட லாவெல்லை குன்றுமலை காடுநா டொன்றுபட்டு வழிமொழியக் கொடிதுகடிந்து கோறிருத்திப் படுவதுண்டு பகலாற்றி யினிதுருண்ட சுடர்நேமி முழுதாண்டோர் வழிகாவல! (புறம். 17) என்று, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறையை, இமயமலையை எல்லையாகக்கொண்டு ஆண்ட சேரவேந்தரின் வழிவந்தோனாக, குறுங் கோழியூர்கிழார் பாடியிருப்பது எத்துணைத் தெள்ளிதுந் தேற்றமுமாக வுள்ளது! பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11 : 19 : 22) என்று இளங்கோவடிகள் பொதுப்படக் கூறினும், அது ஒரு தனிப்பட்ட பண்டைப் பாண்டியன் செய்தியையன்றோ எடுத்துரைக்கின்றது! அப் பாண்டியன்போல் சில, சேரவேந்தரும் பனிமலைவரை ஆண்டிருக்க லாமே! ஒரு தமிழ் வேந்தன் பனிமலையை எல்லையாகக் கொண்டு ஆள்வதென்பது, முத்தமிழ் நாடுகளுள் ஒன்றை ஆள்வதுபோல் நேரடியாக இருந்திருக்க முடியாது. தமிழகத்துக் கப்பாற்பட்ட வடவரசரிடமெல்லாம் திறைகொண்டு தன் அதிகாரத்தைச் செலுத்தியதாகவே இருந்திருக்க முடியும். அதுவும் ஆட்சியின்பாற்பட்டதே. ஆதலால், இமயமலையை எல்லையாக வுடையவன் என்னும் பொருட்கு இழுக்கில்லை யென்க. இனி, முடிநாகராயர் பாட்டில், `ஐவர்' என்பது பஞ்ச பாண்டியரையும், `ஈரைம் பதின்மர்' என்பது அப் பஞ்ச பாண்டியரின் படைத் தலைவர் நூற்றுவரையும், குறிக்குமென்று புத்துரை வரையும் கட்டுரைகாரர், தம் உரைக்குச் சான்றாக, நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின் வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும் (புறம். 2) என்னும் பகுதியைக் காட்டுகின்றார். குமரிக்கண்டம் கடலுள் முழுகிய பின், தமிழகத்தின் தென்கோடி குவிந்து முனையாக முடிந்ததினாலும், அம் முனைவரை சேரனுக்கு ஆள்நில மிருந்ததினாலும், அவனாட்சிக் குட்பட்ட கடலிலேயே கதிரவன் தோன்றி மறைவதாயிற்று. இவ் வியற்கையான நிலைமையினின்று, உதியஞ் சேரலாதன் சோழநாட்டையும் கைப்பற்றி ஆண்டானென்றும், அதனால் பாண்டியர் ஐவரும் அஞ்சிப் படையெடுத் தனர் என்றும், உய்த்துணர இடமில்லை. பாண்டியநாட்டுக் கப்பாலுள்ளதும் அதினும் பெரியதுமான சோழநாட்டைக் கைப்பற்ற வல்லவன் முதலிற் பாண்டிய நாட்டையே கைப்பற்றியிருப்பான். ஆதலால், பாண்டிய நாட்டைத் தாண்டிச் சென்று சோணாட்டைப் பிடித்தான் என்னும் செய்தி, கொக்குப் பிடிக்கும் கலை (வித்தை) போன்றதே. இனி, பண்டைச் சேரர் கலப்படையும் வைத்திருந்ததினால், சோணாட் டையோ பாண்டிநாட்டையோ கருதாது நேரே ஈழஞ்சென்று, அதன் வடபகுதியைக் கைப்பற்றிச் சில்கால் ஆண்டிருக்கலாம். வெயிலத்துச் சென்றான், மழையத்துப் போனான் என்பன போன்ற அத்துச் சாரியை வழக்குகள், சோழ பாண்டிய நாடுகளில் வழங்காமல், சேரநாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் இன்றும் வழங்குவது இதற்குச் சான்றாயிருக்கலாம். சேரர் ஆட்சி யாழ்ப்பாணத்தில் சின்னாள் இருந்திருப் பினும், கதிரவன் சேரர் கடலிலேயே தோன்றி மறைந்த செய்தி அக்கால நிலைமைக்கு முற்றும் ஏற்பதே. முடிநாகராயரின் முரஞ்சியூர் ஈழத்தைச் சேர்ந்ததென்னும் அறிஞர் கருத்தும், அப் புலவரின் பெயருக்கும் ஞாயிற்றைப்பற்றிய அவர் கூற்றிற்கும் மிகப் பொருந்துவதாகும். இனி, நால்வேதம் முடிநாகராயரின் பாட்டிற் குறிக்கப் பெற்றிருப்ப தால், அதுபற்றியும் அவர் தொன்மையைப்பற்றிச் சிலர் ஐயுறுவர். பாரத காலத்திலேயே ஆரிய வேதம் வியாசரால் நான்காகப் பகுப்பட்டுவிட்ட தென்றும், அதனால் அவர் வேதவியாசர் எனப்பட்டார் என்றும், புராணங் கூறும். முடிநாகராயர் பாட்டு பாரதப் போருக்குப் பிற்பட்டதென்பது வெளிப்படை. ஆதலால், நால்வேதத்தை அவர் குறிப்பிட்டது அவர் தொன்மையை மறுக்காது. வேதத்தை மறை என்னுஞ் சொல்லாற் குறிக்கவில்லையே யென்றும் சிலர் மயங்குவர். பாட்டிற் குறிக்கப்பட்டது ஆரியமறை. அதற்குரிய பெயர் வேதம் என்பதே. ஆதலால், ஆரிய மறையை ஆரியச் சொல்லாலேயே குறித்தது முறையானதே. கிறித்தவ மறையைப் பைபிள் அல்லது விவிலியம் என்றும், இசலாமிய மறையைக் குரான் என்றும், குறிக்காது வேறு எச் சொல்லாற் குறிக்கமுடியும்? தமிழிலுள்ள தமிழ்மறையே மறை என்னும் சொல்லால் யாண்டும் குறிக்கப்படற்குரியதாம். உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான என்னும் தொல்காப்பிய நூற்பா (அகத். 31) இறந்துபட்ட தமிழ்மறையை உணர்த்தும். தமிழுக்கு வேறெம்மொழிக்கும் இல்லா வகையில், அயலாராலும் தமராலும் வலிய எதிர்ப்புண்மையாலும், ஆரிய வருகைக்கு முற்பட்ட தமிழ் இலக்கியமனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டமையாலும், வரலாறும் மொழிநூலும் துணைகொண்டல்லது பெருந்தமிழ்ப் புலவரும் தமிழைச் செவ்வையாய் அறிய முடியாது. அவ் விரு நூலையும் துணை கொண் டறிந்த விடத்தும், தன்மானமும் நெஞ்சுரமும் இல்லாக்கால் உண்மையுணர முடியாது. பிறப்பொடு தொடர்புபடுத்தப்பட்ட ஆரியக் குலப்பிரிவினை யுளையில் நெடுங்காலம் முழுகிக் கிடந்தமையால், அடிமைத்தனம் ஊறிப் போன குடியிற் பிறந்த சிலர், ஆங்கில ஆட்சியும் ஆங்கிலக் கல்வியும் கண்ட பின்னரும், தம் அடிமைத்தனத்தை விட்டு உய்வதில்லை. சில்லாண்டு கட்குமுன், ஒரு தமிழ்ப் புலவர், வானவரம்பன், இமயவரம்பன் என்னும் பெயர்கள், முறையே, வானவர் அன்பன், இமையவர் அன்பன் என்ப வற்றின் சிதைவென்றும் அவ் விரு பெயரும் பிராமணர் அடிமை என்று பொருள்படுமென்றும் எழுதியிருந்தார். இனி, வறுமையினாலும் சிலர் அடிமைத்தனத்தை ஏற்பதுண்டு இதற்குத் தமிழைக் காக்கும் தமிழரசின்மையும் புலவரைப் போற்றும் வள்ளல்களின்மையுமே காரணம். எது எங்ஙனமிருப்பினும், பால்புளிப்பினும் பகல்இருளினும் கோல்சாயினும் குறள்தவறினும் நடுக்கின்றி நிற்கும் என் மதிப்புக்குரிய நண்பர் மயிலை-சீனி. வேங்கட சாமியார், தாம் வரைந்ததை மீண்டும் ஆய்ந்து பார்ப்பாராக. 2 தமிழ்ப்பொழில் 36ஆம் துணர் 7ஆம் மலரில் யான் எழுதியிருந்த கட்டுரையைக் கண்டு, வரலாற்றாராய்ச்சியாளரும் என் நண்பருமாகிய புலவர் மயிலை சீனி. வேங்கடசாமியார் அவர்கள் அமைவார்கள் என்று கருதியிருந்தேன். ஆயின், அதற்கு மாறாக அதை மறுத்ததுடன் வேறுஞ் சில வழூஉக் கருத்துகளையும் தோற்றியுள்ளார்கள். அவர்களது எதிர்மறுப்பு பொதுவகையான செய்திபற்றியதாயின், யான் அமைந்திருப்பேன். ஆயின், தமிழுக்குப் பேரிழுக்கம் விளைப்பதாதலின், இவ் விறுப்பை விடுக்கத் துணிந்தேன். இதற்கும் மறுப்பு வரின், அதற்கும் இறுக்க அணியமாய் (தயாராய்) இருக்கின்றேன். 1. ஓர் அரசனைச் சிறப்பித்துப் பாடும் இயன்மொழி வாழ்த்தில் ...... பொதுவானவற்றைக் குறிப்பது மரபன்று என்னும் என் கூற்றில், சிறப்பித்து என்னும் சொற்பொருளை நண்பர் செவ்வையாய் உணர வில்லையென்று தெரிகின்றது. சிறப்பு என்பது, பொதுச்சிறப்பு, தனிச்சிறப்பு என இருவகைப்படும். இவற்றுள், முன்னது பலர்க்குப் பொதுவானது; பின்னது ஒருவரிருவர்க்கே சிறப்பானது. இரவலர் ஒரு பெரும்பொருள் வேண்டின், அதனை இல்லையென்னாது ஈவது பொதுச்சிறப்பு. பெருந்தலைச் சாத்தனார்க்குக் குமணன் தன் தலையைக் கொடுக்கத் துணிந்தது தனிச்சிறப்பு. பெருஞ்சமந் ததைந்த........ தழங்குகுரன் முரசே என்னும் பதிற்றுப் பத்துப் பகுதியுள், பெருஞ்சோறு உகுத்தற் கெறியும் என்பது தனிச்சிறப்பு மன்று, பொதுச்சிறப்புமன்று. முரசுமுழங்கு தானை மூவருள்ளும் என்று வெள்ளைக்குடி நாகனார் பாடுவதால் (புறம்.35), பல்யானைச் செல்கெழு குட்டுவன் உகுத்த பெருஞ்சோறும், சேரன் செங்குட்டுவன் நிகழ்த்திய பெருஞ்சோற்று வஞ்சியும் பிண்ட மேய பெருஞ்சோற்று நிலை என்னும் வஞ்சித்துறைக்கு எடுத்துக்காட்டான பொதுச் செய்திகளே. பெருஞ்சோறு கொடுப்பது மூவேந்தருக்கும் பொதுவான தென்றா லும், அதுவும் ஓர் அரசனுக்குரிய சிறப்பாகப் புலவர்களால் குறிப்பிடப் பட்டுள்ளன, என்று நண்பர் கூறியிருப்பது முன்னுக்குப் பின் முரணாதல் காண்க. ஒருவரைப் பாடும் பாட்டில் பொதுச்செய்தியும் கூறப்படும்; சிறப்புச் செய்தியும் கூறப்படும். சிறப்புச் செய்தியே சிறப்பித்துப் பாடும் இயன்மொழி வாழ்த்திற்குரியதாம். ஔவையார் முல்லானைப் பாடிய பாட்டு இதற்கு ஓர் எடுத்துக்காட்டாம். பிண்ட மேய பெருஞ்சோற்று நிலை என்னும் பொதுவான வஞ்சித் துறை பற்றியே உதியஞ் சேரலாதன், பெருஞ்சோற்று என்னும் அடை மொழி பெற்றானாயின், அதனை நிகழ்த்திய பிறவேந்தருள், நண்பரால் சிறப்பாக எடுத்துக்காட்டப் பெறும் பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் சேரன் செங்குட்டுவனும் உதியஞ்சேரலும், ஏன் அவ் வடைமொழி பெறவில்லை? எல்லாருக்கும் பல்லிருக்க, ஒருவனைமட்டும் ஏன் பல்லன் என்றழைக்க வேண்டும்? அதனால் அவன் பெரும்பல்லன் என்பது பெறப்பட வில்லையா? அதுபோல், எல்லா வேந்தரும் போர்க்கு முன் பெருஞ்சோறு வழங்கியிருக்கவும், அவருள் ஒருவன்மட்டும் பெருஞ் சோற்று என்னும் அடை ஏன் பெற்றிருக்கவேண்டும்? அவனைப் பாடிய புலவரெல்லாரும் நடுநிலை திறம்பியவரா? இதனாலேயே உதியஞ் சேரலாதன் வழங்கிய பெருஞ்சோறு, பிறவேந்தர் வழங்கிய பெருஞ் சோற்றினும் வேறானதென்று தெரிகின்றதே! 2. பெருஞ்சோறு என்பது அரசன் உடனிருந்துண்ணுவதால் பெருமை பெற்ற சோறு என்று நண்பர் கருதுகின்றார். அது உண்பாரின் தொகைப் பெருமையால் ஆன அளவுப் பெருமையேயன்றி வேறன்று. சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே (புறம். 235) என்னும் ஔவையார் புறப்பாட்டடிகளையும் அவற்றின் உரையையும் நோக்குக. இன்றும் நாட்டுப்புறத்துக் காளியம்மை விழாப் படைப்புகளில், ஊராரெல்லாம் உடனுண்ணும் பெருஞ்சோற்றமலையைக் காணலாம். ஒரு வேந்தனின் நாற்பெரும் படைமறவரும் உடனுண்ணத்தக்க சோற்றுத் திரளை, எத்துணைப் பெரிதா யிருந்திருத்தல் வேண்டும்! பிண்டம் என்பது பிண்டிக்கப்பட்ட உருண்டை, அது ஒரு சிறு கவளமன்று; ஓர் ஆடவனுக்குப் போதிய பேருருண்டை. சுவை மிக்கதும் சத்துள்ளதும் மணங்கமழ்வதும் மறவுணர்ச்சிக்குப் பொருந்திய சரக்குகள் கலந்ததுமான சிறந்த புலவுவுருண்டையே, அப் பிண்டமென்றறிதல் வேண்டும். ஆயினும், போரில்லாவிடின் புலந்து கொள்ளும் தறுகண் மறவர், மறமிகுதியும் நன்றியறிவும்பற்றிப் பொருதனரேயன்றி, அரசனுடன் அமர்ந்துண்ணும் உண்டியினால் மட்டும் பொரவில்லை. அரசன் அமைதிக் காலத்தில் உயர்ந்தவனாயினும், போர்க்காலத்தில் தன் படைமறவரொடு கூடித் தானும் பொருததினாலும், போரால் ஏற்படக்கூடிய யாக்கை நிலையாமை தனக்குமுண்மை யறிந்திருப்பனாதலாலும், பிண்டமேய பெருஞ்சோற்று நிலையில் அவனுக்கு இரக்க வுணர்ச்சியினும் சமநிலைப் பட்ட மறவுணர்ச்சியே விஞ்சியிருந் திருக்கும். 3. ராயர், வானவரம்பன், இமயவரம்பன் என்பன பற்றியும் தேவநேயர் தமது கருத்தைக் கூறியுள்ளார். அவையும் ஏற்கத் தகுந்தனவல்ல. இதுபற்றித் தனியே வேறு கட்டுரை எழுதியிருக்கிறேன், என்றார் நண்பர். அக் கட்டுரை வரின் அதையும் மறுப்பேன். 4. முரஞ்சியூர் முடிநாகராயர் செய்யுளில் ஐவர் ஈரைம் பதின்மர் என்றும், சிலப்பதிகார வாழ்த்துக் காதை ஊசல் வரியில், ஓரைவர், ஈரைம் பதின்மர் என்றும் வருபவை பாண்டவர் கௌரவர் என்னும் சொல்லின்மை யால், பாண்டவரையும் கௌரவரையும் குறியாவென்றும், அத் தொகைப் பட்ட வேறிரு சாராரையே குறிக்குமென்றும், நண்பர் கூறுகின்றார். காய்தல் உவத்தல் அகற்றி நடுநிலையில் நின்று ஆராயும் பழக்க முடைய நண்பர். வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் வேறுபடு வினையினும் இனத்தினுஞ் சார்பினும் தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே (தொல்.536) என்னும் நூற்பாவையும், உய்த்துக்கொண் டுணர்தல் (தொல். 1610 ) என்னும் உத்தியையும் சரியாய் உணர்ந்திருப்பாராயின், இத்தனைத் தடுமாறி இடர்ப்படார். காலத்தாலும் இடத்தாலும் வேறுபட்ட முடிநாகராயரும் இளங்கோ வடிகளும், பாரதப் போர்ச் செய்தியையே முறையே, புறப்பாட்டிலும் (2) சிலப்பதிகார வூசல்வரியிலும் பாடியுள்ளனர் என்பது, சொல்லையும் பொருளையும் நடுநிலையாய் நோக்குவார் எவர்க்கும் புலனாகாமற் போகாது. 5. முடிநாகராயர் 2ஆம் புறப்பாட்டில் பாடிய உதியஞ் சேரலாதனும், மாமூலனார் 233ஆம் அகப்பாட்டிற் குறித்த உதியஞ் சேரலும், ஒருவனென மயங்குகிறார் நண்பர். வான வரம்பனை நீயோ பெரும அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் (புறம். 2) என்பது புறப்பாட்டுப் பகுதி. மறப்படைக் குதிரை மாறா மைந்தின் துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ் சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை இரும்பல கூளிச் சுற்றம் குழீஇஇருந் தாங்கு (அகம். 233) என்பது அகப்பாட்டுப் பகுதி. இவ் விரண்டையும் ஒப்புநோக்கின், கீழ்வரும் வேற்றுமை புலனாம். புறப்பாட்டு அகப்பாட்டு 1) பெருஞ்சோறு வழங்கியது பெருஞ்சோறு வழங்கியது பிண்ட மேய பெருஞ்சோற்று தென்புலத்தார் கடன் நிலை போன்ற விருந்து. போன்ற சடங்கு. 2) பாண்டவரையும் கௌரவரையும் பாண்டவரையும் கௌரவரையுங் குறிக்கும் ஐவர், `ஈரைம்பதின்மர் குறிக்கும் ஒரு சொல்லுமில்லை. என்னும் சொற்கள் உள. 3) பாடப்பட்டவன் பெயர் பாடப்பட்டவன் பெயர் உதியஞ் உதியஞ்சேரலாதன் சேரல். 4) பாடியவர் தலைக்கழகத்தார் பாடியவர் கடைக்கழகத்தார். இங்கிலாந் தரசருள், என்றி என்ற பெயர் கொண்டு, எண்மரும், வில்லியம் என்று பெயர் கொண்டு நால்வரும், எட்வர்டு என்று பெயர் கொண்ட எண்மரும், சியார்சு என்று பெயர் கொண்ட அறுவரும் இருந் திருக்கின்றனர். இதை நோக்கின், உதியஞ் சேரலாதன், உதியஞ்சேரல் என்னும் பெயர்களின் ஒருபுடை யொப்புமை ஒருவனைக் குறிக்குஞ் சான்றன்மை புலனாம். 6. கடைக்கழகக் காலத்துப் பராசரன் என்னும் சோணாட்டுப் பிராமணன் சேரனிடம் பரிசுபெறச் சென்றதை, பெருஞ்சோறு பயந்த திருந்துவேற் றடக்கை திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை ......................................... வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த திண்டிறல் நெடுவேல் சேரலற் காண்கெனக் காடு நாடு மூரும் போகி நீடுநிலை மலையம் பிற்படச் சென்று'' (சிலப். கட்டுரை, 55-66) என இளங்கோவடிகள் பாடுகின்றார். இதில் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனின் சோற்றுக் கொடை குறிக்கப்படுகின்றது. அருஞ்சொல் உரையாசிரியரும், பெருஞ்சோறு பயந்த என்றது சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் பாரத யுத்தத்தில் எல்லோர்க்கும் உணவளித்த செய்தியை என மரபு வழாது வரைந் திருக்கின்றார். ஓர் அரசனை ஒரு புலவன் புகழும் பாட்டில், அவன் முன்னோர் செயலையும் அவன்மீது ஏற்றிக் கூறுவது செந்தமிழ்ப் பாடன் மரபு. இதை யுணராத நண்பர், பாரதப் போரில் சோறு கொடுத்த சேரனிடம் பரிசு பெற்ற பராசரன், பாரத காலத்திற்குப் பிறகு (1500 ஆண்டுக்குப் பின்னர்) இருந்த சேர அரசர்களை எப்படி வாழ்த்த முடியும்? எனக் கால மலைவு கண்டவர்போல் கேட்கின்றார்? கோவலனுக்குக் காட்டு வழியில் எதிர்ப்பட்ட மறையோன், அக் காலத்துப் பாண்டியனை, வாழ்க வெங்கோ மன்னவர் பெருந்தகை யூழிதொ றூழிதொ றுலகங் காக்க வடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச் செங்கணா யிரத்தோன் றிறல்விளங் காரம் பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென் றிடியுடைப் பெருமழை யெய்தா தேகப் பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்கெனத் தீதுதீர் சிறப்பிற் றென்னனை வாழ்த்தி'' (சிலப்.11:15-30) வந்திருந்ததாக இளங்கோவடிகள் பாடியுள்ளார். இதில் முன்னோர் மூவர் செயலை ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன் மீது ஏற்றிக் கூறியிருத்தல் காண்க. திருவாவடுதுறை மடவளாகம் திருக்கயிலை வழிமரபு என்னுங் கொள்கைபற்றி, அவ் வளாகத் தம்பிரான் ஒருவர்மீது சிவபிரான் செயலை யேற்றிப் பாடிய புலவரும் உளர். இதனோடு ஒப்புநோக்கின், பெருஞ்சோற் றுதியஞ் சேரலாதன் செயலைக் கடைக்கழகக் காலத்துச் சேரன் மீதேற்றிக் கூறியது வியப்பாகாது. 7. இரண்டு அரசர் போர் செய்தால், ஒருவர் பக்கத்திற் சேர்ந்து போர் செய்யவேண்டுவது முறை. அதனை விட்டு இரண்டுதரத்தாருக்கும் சோறு இட்டான் என்பது உலகத்திலே எங்கும் எப்பொழுதும் நிகழாத ஒன்று என எங்கு முண்மை, என்றுமுண்மை, எல்லாமறிதல் முதலிய இறைவன் தன்மைகளைத் தன்மீது ஏற்றிக்கொள்கிறார் நண்பர். என்றி தியூனன்று ஆத்திரியப் போர்க்களத்திற் செய்த அரும்பெரு நடுநிலைத் தொண்டையும், அவன் அமைத்த செஞ்சிலுவைக் கழகம் ஆற்றிவரும் அரும்பணியையும், நண்பர் எண்ணிக் காண்க. முதல் உலகப் போரில் அமெரிக்கர் வணிகம் பற்றியேனும் இரு கட்சியாருக்கும் நெடுங்காலம் பொருளுதவியே வந்தனர். இன்றும், நல்லுறவின்றிக் கரந்த பகைகொண்ட இந்தியாவிற்கும் பாக்கித்தானுக்கும் அவர் பல்வகையில் உதவி வருகின்றனர். நடுநிலையுதவியை இன்றுங் காணவேண்டின், நாட்டுப்புறத்தூர் ஒன்றில் அயலார் இருவரைச் சண்டையிட்டுக் காயம் பட்டு வீழச்செய்து நண்பர் காண்க. 8. போர் செய்யும் இரு கட்சியாரும் நெருங்கிய உறவாயின் ஒரு பக்கத்திலும் சேர முடியாதென்பதும், உறவுமுறை யிருந்தால்தான் ஒருவன் பிறர்க்கு உணவளிக்க முடியும் என்பதும், நண்பர் கருத்து. பாரதப் போரில் கலந்தவருட் பெரும்பாலார் நெருங்கிய உறவினரே. போர் செய்யும் இரு படைகட்கும் உணவளிக்க வேண்டிய நிலைமைகள், பெருஞ்செல்வம், வண்மை, அன்பு, நடுநிலைமை என்பவையே. பண்டைத் தமிழ் வேளாளரின் விருந்தோம்புந் திறனையும், விருந்து என்னுஞ் சொல்லின் பொருளையும் நண்பர் ஆய்ந்து பார்க்க. 9. தமிழின் சிறப்பையோ தமிழன் சிறப்பையோ வடநூல்கள் கூறுவதில்லை. இதை நண்பர் நன்றாய் அறிந்திருந்தும் அறியாதவர்போல், மகாபாரத நூல் உதியஞ் சேரலாதன் வழங்கிய பெருஞ்சோற்றை ஏன் கூறவில்லை யென்று கேட்கின்றார். 10. தங்கள் சேனைக்குச் சோறு கொடுக்கக்கூட இயலாத அவ்வளவு வறியவர்களா பாண்டவரும் கௌரவர்களும்? என்பது நண்பர் ஐய வினாக்களுள் ஒன்று. பாண்டவர் வறுமையை, முந்தூர் வெம்பணிக் கொடியோன் மூதூரி னடந்துழவர் முன்றி றோறு நந்தூரும் புனனாட்டின் றிறம்வேண்டு நாடொன்று நல்கா னாகி லைந்தூர்வேண் டவையிலெனி லைந்தி லம்வேண் டவைமறுத்தா லடுபோர் வேண்டு சிந்தூரத் திலகநுதற் சிந்து ரத்தின் மருப்பொசித்த செங்கண் மாலே என்னும் பாரதப் பாட்டாலறிக. கௌரவர் செல்வரேனும் கடும் பெரும்போர் மூண்ட நிலையில் தம் உணவு வசதியைப் பிறர்போற் கவனித்திருக்க முடியாது. இதை இழவு விழுந்த பெருஞ் செல்வர் வீட்டிலும் ஏனை யுறவினர் உணவளித் துதவுவதைக் கண்டு தெளிக. 11. இருதரத்தார் போர் செய்யும்போது, இரண்டு படைக்கும் சோறு அளித்த செய்தி உலகத்தில் யாண்டும் கேட்டதும் இல்லை; கண்டதும் இல்லை என்கிறார் நண்பர். நண்பர் கண்டதில்லை யெனினும் முடிநாக ராயரும் இளங்கோவடிகளும் வழிவழி வந்த உரையாசிரியர் பலரும் கூறக் கேட்டிருக்கின்றாரே! பண்டாரகர் (Dr.) உ. வே. சா. அவர்கள், தங்கள் புறநானூற்றுப் பதிப்பில், பாடப்பட்டோர் வரலாற்றில் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்: இவன், பாரதப்போரில் பாண்டவர் துரியோத னாதியரென்னும் இரு வகையார் சேனைக்கும் உணவளித்தான். இவ் வரலாற்றை, ஓரைவ ரீரைம் பதின்ம ருடன்றெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக் கார்செய் குழலாட வாடாமோ வூசல் கடம்பெறிந்த வாபாடி யாடாமோ வூசல் (சிலப். வாழ்த்து. 25) என்னும் சிலப்பதிகார வாழ்த்துக் காதைச் செய்யுளும் நன்கு புலப்படுத்தும். இதனாலேயே இவன் இப் பெயர் பெற்றான். இவனைப் பாடிய புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர், என வரைந்திருப்பதையேனும் நண்பர் கண்டு தெளிக. குமணன் தலைகொடுக்கத் துணிந்ததும், கண்ணப்பன் கண்ணிடந் தப்பியதும். இயற்பகை நாயனார் மனைவியை அளித்ததும், சிறுத்தொண்டர் மகவரிந் தூட்டியதும், வேறெங்கேனும் கண்டதுங் கேட்டதும் உண்டோ? ஆயினும், அவை உண்மையன்றோ! 12. நண்பரது 6ஆம் ஐயவினா 4ஆம் ஐயவினாவின் மறுகூற்றே. இது நண்பரின் மனக்கலக்கத்தையே மறுசாய லிடுகின்றது. 13. முடிநாகராயர் புறச் செய்யுள் பெருஞ்சோற் றுதியஞ் சேரலாதன் பாரதப் படைகட்குச் சோறு வழங்கியதைப் பற்றியதாயின், அதற்கும் கடைக் கழகக் காலத்திற்கும் இடைப்பட்ட செய்யுள்களெல்லாம் எங்கேயென்று, திரு.வையாபுரிப் பிள்ளையவர்கள் மனப்பான்மையுடன் விளவுகின்றார் நண்பர். ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதஞ் சாலம் தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம் மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள என்னும் பழஞ் செய்யுளே இதற்குத் தக்க விடை. பல நூல்களுஞ் செய்யுள் களும், தமிழ்ப் பகைவரால் அழிக்கப்பட்டும்விட்டன. அழிந்துபோன தமிழ்நூல்களைப்பற்றிச் செந்தமிழ்ச் செல்வியில் தொடர்ந்து அழகாக எழுதிவந்த நண்பர், தாமே தம் கூற்றை மறுப்பது மிகமிக வருந்தத்தக்கது. இதற்கொரு காரணமு மிருக்கலாம். இக் காலத்தில், உண்மையான தமிழ்ப் புலவர்க்கு வழங்கும் வள்ளல் ஒருவருமில்லை, காட்டிக் கொடுக்கும் கொண்டான்கட்கு வாரிக்கொடுக்கும் கொடைமடமே மிகுந்துள்ளது. கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக நலிந்தும் மெலிந்தும் வந்து குற்றுயிராய்க் கிடக்கும் தமிழைக் கொன்றுவிடக் கூலி வாங்கும் கோடரிக் காம்புகட்குப் போன போன விடமெல்லாம் பொன் னாடை; கண்ட கண்ட விடமெல்லாம் காசு மூட்டை; இறுதிவரை பதவியுறுதி. தமிழ் வாழ்தல் வேண்டுமாயின், திரு.மயிலை சீனி. வேங்கட சாமியார்க்கும், கணியர் இ.மு. சுப்பிரமணியப் பிள்ளைக்கும் இனியேனும் தமிழர் இயன்றவரை சிறப்புச் செய்க. - ``தமிழ்ப்பொழில்'' துலை 1960, கும்பம் 1961 6 பேரா. தெ.பொ.மீ. தமிழுக்கதிகாரியா? சுதேசமித்திரன் (தன்னாட்டு நண்பன்) என்னும் நாளிதழ் தொடர்பில் சென்ற விளக்கணி (தீபாவளி) விழாவன்று வெளிவந்த சிறப்பு மலரை, அண்மையில் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அதில், தமிழில் பிறமொழிச் சொற்கள் என்றொரு கட்டுரை, பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரால் வரையப்பட்டுள்ளது. எனக்கு ஏற்கெனவே அவர்தம் ஆரியச் சார்பும் தமிழறிவுத் திறமும் தெரியுமேனும், அக் கட்டுரை கண்டவுடன், இதுதானா இத்தகைய கட்டுரை வெளிவரற்கேற்ற சமையம் என்னும் வினா என் உள்ளத்தெழுந்து வருத்தியது. கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக, முன்பு வேத ஆரியத்தாலும் பின்பு அதனோடு சமற்கிருதம் இணைந்த வட மொழியாலும் நைந்து குற்றுயிராய்க் கிடக்கும் தமிழை, நாளடைவிற் கொல்ல வரும் இந்தியைச் சிறுபான்மையரான அறிவுடைத் தமிழர் எதிர்த்துக்கொண்டிருக்கும் இந் நாளில், தமிழ் ஒரு கலவை மொழியென்றும் இந்தியால் எள்ளளவும் தாக்குண்ணா தென்றும் தவறான கருத்துகள் அமைச்சருள்ளத்திலும் அறிவாராய்ச்சி யில்லாத மாணவர், பொதுமக்களுள்ளத்திலும் படுமாறு, அக் கட்டுரையைத் தமிழுக்குச் சிறப்பாக அமைக்கப் பெற்றதாகச் சொல்லப் பெறும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த தலைமைத் தமிழ்ப் பதவியிலிருப்பவர் வரைந்திருப்பது, மிகமிக வருந்தத்தக்கதாகும். பிராமணர் தென்னாட்டிற்கு வந்ததிலிருந்து தமிழ் தாழ்த்தப்பட்டே வந்திருக்கின்றது. தமிழ் பொது வழிபாட்டுக்குத் தகாத மொழியென்று தள்ளப்பட்டதே அதன் தாழ்வுத் தொடக்கம். பிராமணர் நிலத்தேவரும் (பூசுரர்) அல்லர் ; வடமொழி தேவமொழியு மன்று. சிவநெறியும் மால் நெறியும் முறையே, குமரிநாட்டுச் சேயோன் வணக்கத்தினின்றும் மாயோன் வணக்கத்தினின்றும் தோன்றிய தமிழர் சமயங்கள். ஆதலால், வடமொழி தமிழ்நாட்டு வழிபாட்டு மொழியாதற்குச் சிறிதும் தக்கதன்று. தென்னா டுடைய சிவனே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி என்பது, தென்னா டுடைய மாலே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி என்று திருமால் நெறிக்கும் செல்லும். உலகப் பழம்பெரு மொழிகளுள் தமிழைப்போல், வளமும் தூய்மையும் உள்ளது வேறொன்றுமில்லை. ஈராயிரங் கல் தொலைவு தெற்கே பரவியிருந்த குமரிக்கண்டப் பல்லாயிரம் உலக வழக்குச் சொற்களும், முதலிரு கழகப் பல்லாயிரம் தமிழ்நூல்களும், மறைந்த பின்பும்; தமிழ் தனித்து வழங்கும் அளவு சொல்வளங் கொண்டுள்ளது. மேலையாரியத்தில் இன்றும் நூற்றுக் கணக்கான தென்சொற்கள் உள்ளன. கீழையாரியமாகிய வடமொழியில் ஐந்திலிரு பகுதி தமிழ். பேரா.தெ.பொ.மீ.யின் பேச்சினின்றும் எழுத்தினின்றும் அவர் செவ்வையாய்த் தமிழை அறியவில்லையென்று தெரிகின்றது. முதலாவது, அவர் சென்னைவாணர்; நெல்லைநாட்டுச் சிறப்புச் சொற்களையும் தமிழொலிப்பு முறையையும் அறிந்திலர். வடமொழி யிலக்கியத்தை முன்னும் தென்மொழி யிலக்கியத்தைப் பின்னும் கற்றதாகத் தெரிகின்றது. தமிழர் கிரேக்க நாட்டுப் பாங்கரினின்று வந்தவர் என்னும் கொள்கையை ஏற்கின்றவர். தொல்காப்பியர் காலம் கி.பி.முதலாம் இரண்டாம் நூற்றாண் டென்று என் எதிரிலேயே வடநாட்டாருள்ள ஒரு பொதுக் கூட்டத்திற் சொன்னவர். மேற்குறித்த கட்டுரையில், தூய தென்சொற்களைப் பிற மொழிச் சொற்களென்றும், தேவையில்லாத ஆங்கிலச் சொற்களை இன்றியமையாத தமிழ்ச்சொற்கள் என்றும், கூறியிருப்பதும்; சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியை அளவை நூலாகக் கொண்டிருப்பதும்; அவர்தம் தமிழ்ப் பற்றின்மையைப் பறை சாற்றுகின்றன. பொதுவாக, பிராமணர் வெளியிடும் சிறப்பு மலர்களில், மறைமலை யடிகளைப் பின்பற்றுவோரின் கட்டுரைகள் இடம்பெறுவதில்லை. இங்ஙனமே, தமிழ்த் தூய்மை வேண்டுவோர் வெளியீடுகளிலும் வையாபுரி வழியினர் கட்டுரைகள் இடம் பெறுவதில்லை. இவ் வேறுபாடு தொடராத வாறு அறிஞர் அம்பலத்தில் தருக்க வாயிலாய் உண்மை நாட்டப்பெறல் வேண்டும். பண்டைநாளில் தமிழர்க்குத் தமிழுணர்ச்சி நிரம்பியிருந்ததினால், வெளிநாட்டினின்று வந்த பொருள்கட்கெல்லாம் உடனுடன் தனித்தமிழ்ப் பெயரிடப்பெற்றன. கரும்பு சீன நாட்டினின்று வந்தது. அதன் செங்கருமைபற்றிக் கரும்பெனப்பட்டது. அரும்பெறல் மரபின் கரும்பிவட் டந்து .................................... தொன்னிலை மரபினின் முன்னோர் போல'' (புறம். 99) என்று ஔவையார் அதிகமான் நெடுமானஞ்சியைப் பாடிய புறப்பாட்டடி கட்கு, பெறுதற்கரிய முறைமையையுடைய கரும்பை விண்ணுலகத்தி னின்று இவ்வுலகத்தின்கட் கொண்டு வந்து தந்ததும் ...... சக்கரத்தை நடாத்திய ...... நின்குடியிற் பழையோரை யொப்ப என்று, பழைய வுரைகாரர் உரைத் திருத்தலை நோக்குக. சீனநாடு வானவர் நாடு (Celestial Empire) என்று பெயர் பெற்றிருந்ததும், தமிழர் தொன்றுதொட்டுச் சீனநாட்டொடு வணிகம் செய்து வந்ததும், இங்குக் கருதத்தக்கன. சூடமும் சீனநாட்டி னின்று வந்ததே. நிலக்கடலை(வேர்க்கடலை), கூவைக் கிழங்கு (arrow root), பெருங் காயம், அட்டிகம்(சாதிக்காய்), கிள்ளை (சாதிபத்திரி), கராம்பூ முதலியவை கீழிந்தியத் திட்டுகளினின்றும்; உருளைக்கிழங்கு, புகையிலை, குச்சுக் கிழங்கு, அண்டிமா (kuKªâÇ - cashew) முதலியவை தென்னமெரிக்கா வினின்றும்; செந்தாழை (pine apple) ஆத்திரேலியாவினின்றும்; பேரீந்து அரபி நாட்டினின்றும் வந்தவையாகும். மிளகாயும் வெளிநாட்டினின்று வந்ததாகச் சொல்லப்படுகின்றது. மிளகுபோற் காரமான காய் மிளகாய். மக்கைச் சோளம் வடஅமெரிக்காவினின்று வந்தது. மொக்கை-மக்கை = பெரியது. சில பொருள்கட்கு வட்டகைதோறும் வேறு பெயருமுண்டு. எ-கா : ஏழிலைக் கிழங்கு (நெல்லை), குச்சுக்கிழங்கு (சேலம்), மரவள்ளிக்கிழங்கு அல்லது சவரிக்கட்டை (தஞ்சை), ஆழ்வள்ளிக் கிழங்கு (மேல் வடார்க்காடு). இதள் (பாதரசம்) மேல்நாட்டினின்று வந்தது. ஒட்டகமும் குதிரையும் அரபி நாட்டினின்று வந்தவை. ஒட்டகத்துக்கு நெடுங்கழுத்தன்-ல், நெடுங் கோணி என்றும் பெயருண்டு. ஒட்டகம் என்பது ஒட்டை என மருவும். வான்கோழி துருக்கிநாட்டினின்று வந்தது. வரிக்குதிரையும் (zebra), நீர்யானையும் (hippopotamus), ஒட்டகச்சிவிங்கியும் (camelopard or giraffe) ஆப்பிரிக்காவினின்றும் வந்தவை. தீக்கோழியை ஒட்டகப் பறவை என்பர் புதுச்சேரியார். வெளிநாட்டினின்று வந்த விலங்குகளுள் குதிரை பல வகைப்பட் டிருந்ததனால், அவ் வகைகளின் நுண்ணியல்புக்கேற்பப் பாடலம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கந்துகம், புரவி என எண்வேறு பெயரிட்டிருந்தனர். இனி, பாண்டியன் குதிரை கனவட்டம் என்னும் வகையையும், சோழன் குதிரை கோரம் என்னும் வகையையும், சேரன் குதிரை பாடலம் என்னும் வகையையும், குறுநில மன்னர் குதிரை கந்துகம் என்னும் வகையையும் சேர்ந்தவை. சிறு குதிரை (pony) மட்டம் என்றும், நாட்டுக் குதிரை தட்டு என்றும் சொல்லப்படும். மேனாட்டினின்று வந்த வண்டிவகைப் பெயர்களுள் புகைவண்டி (train), மிதிவண்டி (cycle) என்பன பொதுமக்களிட்டவை; மின்வண்டி (train), இயங்கி (motor) என்பன புலமக்க ளிட்டவை. மக்கட்குத் தாய்மொழி யுணர்ச்சியும் தூய்மை போற்றும் எண்ணமு மிருப்பின், வெளிநாட்டினின்று வந்த எப்பொருட்கும் தமிழ்ப்பெயரிடுவது அரிதன்று. உள்நாட்டுப் பொருள்கட்குப் பெயரிடும் நெறிமுறைகளே, வெளிநாட்டுப் பொருள்கட்குப் பெயரிடுவதையும் தழுவும். ஒரு பொருளுக்கு முதலில் அதன் சிறப்பியல்புபற்றிப் பெயரிடப்பெறும். பின்பு அதையொத்த பொருள்கட்கெல்லாம் அப் பெயரே வெவ்வேறு ஏற்ற அடை மொழி கொடுத்திடப்பெறும். எ-கா : வெம்புங்காலத்தில் அல்லது நிலத்தில் தழைப்பது வேம்பு. அதையொத்தவை, நாய்வேம்பு, கறிவேம்பு, நிலவேம்பு முதலியவை. சில இனப்பொருள்கட்கு வெவ்வேறு பெயரும் இடப்பெற்றுள. எ-கா : தட்டையாயிருப்பது தட்டைப்பயறு அல்லது தட்டான் பயறு; கருத்துத் திரண்டிருப்பது காராமணி; வரியுடையது வரிக்கொற்றான். இடங்கர், கராம், முதலை என்னும் உயிரிவகைப் பெயர்களும் இம் முறை பற்றியனவே. தண்டோடு ஒட்டியிருப்பதைத் தாள் என்றும். அது நீண்டு தொங்கின் தோகை என்றும், திண்ணமாயிருப்பின் ஓலை யென்றும், மெல்லியதா யிருப்பின் இலை என்றும், மாம்பிஞ்சை வடுவென்றும், பலாப்பிஞ்சை மூசு என்றும், வாழைப்பிஞ்சைக் கச்சல் என்றும், வேறுபடுத்துச் சொன்ன நுண்மாண் நுழைபுலத் தமிழர்க்குப் பெயரிட அரிதாம் பொருள் இவ் வுலகத்தில் ஏதேனும் உண்டோ? இவ் வாற்றல் இன்னும் அழியா திருப்பதை நாஞ்சில் நாட்டு வைத்தூற்றி (Funnel) என்னும் சொல்லிற் காண்க. தமிழரின் தாய்மொழியுணர்ச்சி முதற்கண் ஆரியத்தாலும் பின்னர் வேற்றரசுகளாலும் பெரும்பாலும் கொல்லப்பட்டது. கொண்டான்மாரும் புத்தமித்திரன்மாரும் சுவாமிநாத தேசிகன்மாரும் வையாபுரிகளும் பல்கினர். செந்தமிழைக் காக்கும் நக்கீரர்க்கும் பொய்யாமொழியர்க்கும் படிக்காசர்க்கும் பிழைப்பில்லாது போயிற்று. ஆங்கிலர் ஆட்சியாலும் ஆங்கிலக் கல்வியாலும் தமிழருள் ஒரு சாரார்க்குப் புத்துணர்ச்சி பிறந்தது. அதன் விளைவாக மறைமலையடிகள் தோன்றினர். தமிழ் புத்துயிர் பெற்றது. அது நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வருங் காலத்தில், ஆரியம் மீண்டும் தலையெடுத்து அதை அழித்து வருகின்றது. அதற்கு அடிதாங்கி நிற்பவர் பேரா.தெ.பொ.மீ.யே. தமிழாசிரியர் தமிழ்ப் பற்று, தொடக்கப்பள்ளிப் பதவியினின்று பல்கலைக்கழகத் தலைமைப் பதவிவரை மேனோக்கிச் செல்லச் செல்லக் குன்றிக்கொண்டே போய், பேரா.தெ.பொ.மீ.யண்டை மறைந்துவிடுகின்றது. அவருக்கடுத்துள்ள பர்.மு.வ.போன்றாரும் தமிழைக் கவனிப்பதில்லை. தலைமைப் பதவி தாங்கும் தமிழ்ப் பேராசிரியர் தமிழைக் காத்திருப்பின், இந்தி தமிழ் நாட்டிற்குள் கால்வைத்தே யிருக்காது. பெரும்பாலும் எளியரான உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரிய ரெல்லாரும், இந்தியை எதிர்க்காதவாறு கல்வியமைச்சரால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். தமிழாசிரியர் தலையிடாததினால், இந்தியெதிர்ப்பு ஓர் அரசியற் கட்சி வேலையாகத் தோற்றமளிக்கின்றது. உரிமையுணர்ச்சியும் அறிவு விளக்கமும் கொழுந்து விட்டெரியும் இளம் காளையரான மாணவர், மேய்ப்பனில்லா ஆடுகள் போல் இடர்ப்பட்டுத் தவிக்கின்றனர். உள்ளத்தில் உணர்ச்சியுள்ள கல்லூரித் தமிழாசிரியர் ஒருசிலர், தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்க்கஞ்சியும் தமிழ்த் தேர்வாண்மைப்பேறு நோக்கியும், வெளிப்படையாய் எதுவுஞ் செய்ய இயலாதிருக்கின்றனர். தமிழைக் காத்தல் தமிழாற் பெருஞ் சம்பளம் பெறும் தலைமைப் பேராசிரியர் தலைமேல் விழுந்த தலையாய கடமை. இதை அவர் எள்ளளவும் உணர்கின்றிலர். தமிழால் வேலையிழந்த என் போன்றார் அரும்பாடுபட்டு இந்தியை எதிர்க்க வேண்டியுள்ளது. குத்துக்கு நிற்பான் வீரமுட்டி, கொள்ளை கொண்டுபோவான் தவசிப் பிள்ளை. தமிழைக் காக்குந் தகுதியின்றேல் தலைமைப் பதவி தாங்குதல் தவறாம். பொதுவாகப் பதவிபற்றியே மக்கள் புலமை மதிக்கப்படுவதால், தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் இந்தியை ஏற்கின் அல்லது எதிர்க்காவிடின், பிறர்க்கு மொழியுணர்ச்சி குன்றுவதொடு, அதுதான் சரிபோலு மென்று பிறழ்ந் துணரவும் இடமுண்டாகின்றது. பேராசிரியர் சிலர் செந்தமிழ்க் காவலரென்று சிறப்புப்பெயர் தாங்கிக்கொண்டு இந்தியை எதிர்க்காதிருப்பது, பெரிதும் வியப்பிற்கிடமானதே. பேரா.தெ.பொ.மீ.முதலாவது வழக்கறிஞராய் வரவேண்டிச் சட்டம் பயின்று பட்டம் பெற்றவர். பின்பு அத் துறையை விட்டுவிட்டுத் தமிழ்த் துறைக்குட் புகுந்தார். உண்மைத் தமிழ்ப் பற்றுள்ளவர் ஒரு கட்சியையும் சார்ந்திருக்க முடியாது. பேரா.தெ.பொ.மீ. பேராயக் கட்சியைச் சேர்ந்தவர். இந்தி தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்ட பின்பு, நாவலர் சோமசுந்தர பாரதியார், கலைத் தந்தையார் கருமுத்து தியாகராசர் முதலிய தூய தமிழர் பேராயக் கட்சியினின்று விலகிவிட்டனர். பேரா. தெ.பொ.மீ.யோ விலகவில்லை. அவர் கருத்திற்கு அக் கட்சிக் கொள்கை மிகப் பொருத்தமானது. மேலும், அவர் பதவி மேம்பாட்டுக்கும் அக் கட்சியாட்சி உதவி வருகின்றது. ஆங்கிலராட்சிக் காலத்தும், மறைமலையடிகள் மறையும் வரையும் தமிழ்த்துறையில் இருக்குமிடம் தெரியாமலிருந்த அவர், இன்று தமிழ்நாட்டுத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்கின்றார். இதுவரை அவர் இந்தியை எதிர்த்ததேயில்லை. இனி, அவரது கட்டுரையைத் தொடர் தொடராய் ஆராய்ந்து தடை விடை கூறுவோம். 1. உயிருள்ள மொழிகள் வழக்கில் இருக்கும்பொழுது கொடுக்கல் வாங்கல் இருக்கவே செய்யும். உயிரற்ற வேத ஆரியமும் உயிரில்லாத சமற்கிருதமும், அடிநாள் முதல் கொடுக்கல் வாங்கல் செய்து வந்திருக்கின்றனவே! 2. பல பொருள்கள் ஒருமொழி பேசுபவரிடையே சிறந்திருக்கும். அவற்றை மற்றொரு மொழி பேசுவோர் பயன்படுத்தப் புகுவது உலக இயற்கை. இக் கூற்று மிகப் பொருத்தமானது. என் கருத்தும் இதுவே. பேராசிரியர், பல சொற்கள் என்று குறியாமல் பல பொருள்கள் என்று குறித்திருப்பது மிகவும் போற்றத்தக்கதாம். தமிழ் பிறமொழிகளிலுள்ள சொற்களையன்றிக் கருத்துகளையே தழுவும். இதை ‘Intussusception’ என்பர் ஆங்கிலர். 3. நம்முடைய மாம்பழமும் மாங்காயும் ஆங்கிலேயருக்குச் சுவை மிகத் தந்தன. ஆகையால், மாங்காய் என்பது ‘mango’ என்று பல நூற் றாண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயர் தமிழ்நாட்டுக்கு வந்ததிலிருந்தே ஆங்கில மொழியில் புகுந்துள்ளது. இது சரிதான், ஆயின், மாங்காய் ஆங்கிலேயருக்குச் சவைமிகத் தந்ததா என்பது தெரியவில்லை. வடார்க்காடு மேலைப் பகுதியிலுள்ள ஆம்பூர் வட்டத்தில், மா என்னும் பெயர் மாங்காய் என்னும் வடிவிலேயே வழங்குகின்றது. காயைக் குறியாதவிடத் தெல்லாம், மாங்காய்ப் பழம், மாங்காய்த் தோப்பு, மாங்காய் மரம், மாங்காயிலை, மாங்காய்ப்பிஞ்சு என, மாங்காய் என்பதே நிலைமொழியாய் வழங்குகின்றது. ஆம்பூர் சென் னைக்கு அண்மையிலிருப்பதால், கிழக்கிந்தியக் குழும்பார் வந்திருந்த தொடக்கத்தில். மா என்னும் பெயர் மாங்காய் (mango) என்னும் வடிவில் ஆங்கிலத்திற் புகுந்திருக்கலாம். 4. அப்படியே ஆங்கிலேயர் வழியாக `மோட்டார்க் கார்' நம் நாட்டுக்கு வந்தது. அதனோடு `கார்' என்ற சொல்லும் தமிழுக்குள் நுழைந்தது. எனவே கொடுத்தும் வாங்கியும் வந்தது மக்கள் பண்பாட்டு வளர்ச்சியையே காட்டுகிறது. இயங்கி (Motor car) நம் நாட்டிற்கு வந்தது மெய்தான். ஆயின் கார் என்ற சொல் அப் பொருளில் தமிழுக்குள் நுழையவில்லை. மொழியுணர்ச்சி யும் அறிவுமில்லாத மக்கள் வாய்க்குள் மட்டும் நுழைந்தது. அது தமிழுக்குள் நுழைந்ததாகாது. மக்கள் வாய்க்குள் நுழைந்ததற்கும் வையாபுரி வகையார் ஆட்சியில் அன்று தமிழிருந்ததே கரணியம். செந்தமிழ்க் காவலர் அன்று இருந்திருந்தால், ஆண்டுதோறும் அருந்தமிழ் நூல்கள் ஆடிப் பெருக்கில் அமிழ்ந்திருக்குமோ? கார் என்னும் ஆங்கிலச் சொல்லும் இயங்கியையும் தேரையையும் வேறுபாடின்றிக் குறிப்பதால், அத்துணைச் சிறந்த சொல்லுமன்று. தமிழுக்குள் ஒரு சொல் நுழைந்ததெனின், அது நீக்கவும் மாற்றவும் முடியாததாயிருக்கும். ஆகவே கார் என்னும் சொல் மக்கள் வாய்க்குள் நுழைந்தது, மொழித்துறையிற் புண்பாட்டு வளர்ச்சியேயன்றிப் பண்பாட்டு வளர்ச்சியன்று. திரு.மகிழ்நன் தமிழில் எழுதியுள்ள தாமசு ஆல்வா எடிசனின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்க. அதில் இயங்கி என்னும் சொல்லைக் காணலாம். 5. மயில் இந்திய நாட்டுப் பறவை. திராவிடமொழியைச் சேர்ந்த சொல். திராவிடமொழிச்சொல் என்பதினும் தமிழ்ச்சொல் என்பது தகும். திராவிடம் இன்று 19 மொழிகளாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் தமிழைத் திராவிடத்தினின்று பிரிக்க வேண்டிய நிலைமை இன்று நேர்ந்துள்ளது. மயில் என்னும் சொல் திராவிடமொழிகளிற் பின்வருமாறு வேறு பட்டும் உளது. தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு துளு மயில் மயில் நவில் நமலி மைரெ மலையாளம் பண்டைச் சேரநாட்டுத் தமிழே. 6. வடமொழியில் இருந்தும் உயிருள்ளவையாய் வழக்கில் இருந்த சொற்கள் தமிழில் வந்துதானே வழங்கும்? வடமொழி என்பது, வேத ஆரியம் அல்லது வேதமொழி, சமற் கிருதம் என இருநிலைகளையுடையது. வேத ஆரியம் வேதகாலத்தி லேயே வழக்கற்றுப்போய்விட்டது. வழக்கற்றுப்போன வேத ஆரியத்தோடு, அக்காலத்து வட்டார மொழிகளாகிய பிராகிருதங்களைச் சேர்த்து ஆக்கிக் கொண்ட அரைச் செயற்கையான இலக்கிய நடைமொழியே (Literary dialect) சமற்கிருதம். பிராகிருதம் முந்திச் செய்யப்பட்டது; முன்னுள்ளது; இயற்கையானது. சமற்கிருதம் நன்றாய்ச் செய்யப்பட்டது; பிற்பட்டது. செயற்கையானது. ஆதலால், வடமொழிச் சொற்களை உயிருள்ளவையாய் வழக்கிலிருந்தவை என்று சொல்வது தவறாம். தமிழையும் அதன் வழிப்பட்ட திரவிடமொழிகளையும் ஆரியவண்ண மாக்குவதற்கு, வேண்டுமென்று புகுத்தப்பட்ட வேண்டாச் சொற்களே வடமொழிச் சொற்கள். அவை, தமித்து வாழும் ஆற்றலின்றிப் பிற வுயிரிகளைச் சார்ந்தே வாழும் உண்ணிகளைப் (parasites) போன்றவையே. 7. புத்தர் என்ற பெயர் தமிழல்ல என்று தள்ள முடியுமா? புத்தர் என்பது ஒருவரின் இயற்பெயர் (proper name). அதை எங்ஙனம் மொழிபெயர்த்தல் சாலும்? புத்தன் என்பது, பொதுச் சொல்லாயின், தமிழில் அறிவன் என்று பெயரும். மேலும், புத்தரையே அறிவன் என்று பண்டைநாளில் வழங்கியிருக்கின்றனரே! ... ... ... ... ... ... ... ... ... ... புனிதன் சினன்வரன் அறிவன் பிடகன் போதி வேந்தன் புத்தன் பெயரே (102) என்பது பிங்கலம். 8. சங்கம் என்பதை அப்படியே தள்ளிவிட முடியுமா? ஏன் தள்ளிவிட முடியாது? கழகம், மன்றம் முதலிய சொற்கள் இருக்கின்றனவே! கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து என்று பரஞ்சோதி முனிவர் பாடியிருக்கின்றாரே! பிராமணர் வருகைக்கு முற்பட்ட முதலிரு கழகங்களிலும் சங்கம் என்னும் வடசொல் வழங்கியிருக்க முடியாதே! மேலும், சங்க (Sangha) என்னும் வடசொல்லின் வேராகிய சம் (sam) என்பது, கும் என்னும் தென்சொல்லின் திரிபே. கும்முதல் கூடுதல். கும் என்னும் முதனிலை ஆரிய மொழிகளில் ஒரு முன்னொட்டாகி, இலத்தீனில் cum என்று இயல்பாயும்; ஆங்கிலத்தில் com, con, co என்றும், கிரேக்கத் தில் sym, syn என்றும்; வேத ஆரியத்திலும் சமற்கிருதத்திலும் சம் (sam) என்றும் திரிந்தும் நிற்கும். கும் என்பதன் மூலம் உம் என்பதாம். உம்முதல் கூடுதல். இவ் வினை இன்று வழக்கற்றது. இது உகரத்தோடு கூடிவரும் க ச த ந ப ம என்னும் அறு மெய்களோடும் சேர்ந்து, கும், சும், தும், நும், பும், மும் என்னும் அறு வேறு வழியடிகளைப் பிறப்பிக்கும். இவற்றுட் சில அகரமுதலாகவும் திரிந்துள்ளன. உகரமுதற் சொற்கள் மோனைத்திரிபு கொண்டு வேறுசில சொற்களைத் தோற்றுவிக்கும். எடுத்துக்காட்டில்லாதன இறந்துபட்டனவென அறிக. எ-கா : உம் : உம்முதல் = கூடுதல், இப் பொருளிலேயே இச் சொல் எண்ணுப்பொருள் இடைச்சொல்லாகிய கூட்டிணைப்புச் சொல்லாய் வரும். எ.கா : அறமும் பொருளும் இன்பமும் வந்தும் போயும் உம்-அம். அம்முதல் = கூடுதல், நெருங்குதல் பொருந்துதல், கலத்தல், ஒத்தல். அம்-அந்து-அந்தி = 1. இரவும் பகலும் கூடும் காலை. பகலும் இரவும் கூடும் மாலை. காலை யந்தியும் மாலை யந்தியும்'' (புறம்.34) 2. ஒரு தெருவோடு இன்னொரு தெருக் கூடுமிடம். அந்தியும் சதுக்கமும் (சிலப்.14 : 213) அந்தித்தல் = நெருங்குதல், கூடுதல், முடியிட்டுவைத்தல். அந்து - அத்து, அத்துதல் = சேர்த்துத் தைத்தல். கும் : கும்முதல் = கூடுதல், கும் = கும்மல் - L .cumulus. கும் - கம்-கமம். கம்முதல் = கூடுதல், நிறைதல். கமம்நிறைந் தியலும் (தொல்.உரி.57) கும் - குந்து - கொந்து. குந்து - குத்து - கொத்து. கம் - கந்து = திரட்சி, திரண்ட தூண், சார்பு, பற்றுக்கோடு. சும் : சும்-சும்மை = தொகுதி. சும் - சொம் = செல்வம். சொம் - svam(Skt.) சொம் - சொந்து - சொந்தம் = உடன் கூடியது. சொந்து - சொத்து. சும் - சம் - சந்து = கூட்டு, பொருந்து. சந்து செய்தல் = இருபகைவரை ஒப்புரவாக்கிக் கூட்டி வைத்தல். சந்து - சந்தை = விற்பாரும் கொள்வாரும் கூடுமிடம். தும் தும் : துந்து - தொந்து - தொந்தம் = கூட்டு, தொடர்பு, புணர்ச்சி. தொந்தம் - dvandva(Skt.) தொந்து - தொத்து = கொத்து , திரள், தொடர்பு. நும் : நும் - நம் - நந்து. நந்துதல் = வளர்தல், தழைத்தல், பெருத்தல். பும் : பும் - (புந்து) - பொந்து - பொந்தன் - பருத்தவன். பொந்தன் - போந்தான் = பருத்த கோழி. போந்து - போந்தி = யானைக்கால். பொந்து - பொத்து, பொத்துதல் = சேர்த்தல், சேர்த்துத் தைத்தல். பொத்து - பொத்தை = பருமையானது, பருமிளகாய். பொத்து - பொட்டு = பொருத்து. பொட்டு + அணம் = பொட்டணம் (சேர்த்துக் கட்டியது). மும் மும் : முந்து - மொந்து - மொந்தன் = பருத்தவன், பருத்தது, பருத்த வாழைக்காய். மொந்து - மொந்தை = சோற்றுத் திரளை. மொந்து - மொத்து - மொத்தம் = திரட்சி. மொந்தை - மொத்தை = திரளை, பருமன். மொத்தை - மோத்தை = பருத்த ஆட்டுக்கடா. 9. போதியார், இளம்போதியார் என்பனவற்றுள் போதி என்பது புத்தமதச் சொல்லல்லவா? ஆம்; புத்தமதத்தைச் சேர்ந்த வடசொல்தான். ஆயின், அது புத்த மதம் தென்னாட்டில் வந்து பரவியதைக் குறிக்கின்றதேயன்றி, தமிழுக்கு இன்றியமையாத சொல்லென்று எங்ஙனம் ஆகும்? அதற்குப் பகரமாக அறிவைக் குறித்தற்கு ஓதி என்னும் சொல்லும், மரத்தைக் குறித்தற்கு அரசு என்னும் சொல்லும் இருக்கின்றனவே! 10. உலோச்சனார் - சைன மதத்தில் லோச்சு என்ற மயிர்கழிக்கும் நோன்பில் எழுந்த பெயரல்லவா? நமது நாட்டுப் பொருளை நீக்க முடியாததுபோல இவற்றையும் தள்ளிவைக்க முடியாது. லோச்சு என்பது லுஞ்ச் (lunc) அல்லது லுச் (luc) என்னும் வடசொற் றிரிவாகும். அதற்குப் பறித்தல் என்பதுதான் பொருள். லுஞ்சித கேச (luncitakesa) என்று சொன்னால்தான், தன் தலையினின்றும் (உடம்பி னின்றும்) மயிரை ஒவ்வொன்றாய்ப் பறித்துள்ள சமணத்துறவியைக் குறிக்கும். உலோச்சனார் என்னும் சொல்லை, அக்காலத்திலேயே தமிழர் அல்லது தமிழ்ப்புலவர் பறிதலையர் என்று அழகாக மொழிபெயர்த்திருக் கின்றனரே! பறிதலையராற் சாலப் பழுதா மன்றே (திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், 37 : 7) 11. தமிழிற் புகுந்த வடசொற்களை எண்ணி முடியாது; இரண்டா யிரத்துக்குமேல் இருக்கும். தொடர்களை இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழிற் புகுந்த வடசொற்கள் என்று சொல்வதைவிட, தமிழ்நூல்களிற் புகுத்தப்பட்ட வடசொற்கள் என்று சொல்வதே மிகப்பொருத்தமாகும். அவை ஈராயிரமாயிருந்தாலென்ன? இருபதினாயிரமாயிருந்தாலென்ன? அவை தமிழுக்குத் தேவையல்லவே! அவற்றால் தமிழ்ச்சொற்கள் பொருளிழந்தும் வழக்கற்றும் இறந்துபட்டும் போனதன்றி வேறு என்ன கண்டோம்? மேலும், வடசொற்கள் என்று பேராசிரியர் குறிக்கும் சொற்றொகுதி யுள், ஏறத்தாழ 1/5 பகுதி தமிழ்ச்சொல்லும், 1/5 பகுதி தமிழ்த்திரிசொல்லும், 1/5 பகுதி தமிழ் வேர்கொண்ட சொல்லும், ஆகும் என்பதை அவர் அறியார் போலும்! 12. ``வடமொழி இந்த நாட்டிற்கு வருவதற்கு முன்னரும் முண்டா இனத்து மொழிகள் இந்தியாவில் வழங்கியிருத்தல் வேண்டும். அம் மொழிகளைப் பேசுவாரோடு தொடர்புகொள்ள வந்தபொழுதெல்லாம் ஒரு சில சொற்களேனும் அவர்களிடமிருந்து தமிழில் நுழையாதிருக்க முடியுமா? வழுதுணங்காய், தவளைக்காய், மீசை முதலியன அத்தகையன என்று கருதுகிறார்கள். இளநீர் என்று சொல்லுகிறோமே, அந்தப் பெயரை எண்ணிப் பார்த்தோமா? இளந்தேங்காய் என்பதுதானே அதன் பொருள்? அப்படியானால் நீர் என்பது தேங்காயையல்லவா குறிக்கவேண்டும். அப்படி, தேங்காய் என்ற பொருளிலேயே நீர் என்ற சொல் முண்டா மொழியில் வழங்குகிறது. இந்தியாவில் இன்று வழங்கும் மொழிகள், தமிழம் (திரவிடம்), முண்டா, மான்குமேர், திபேத்த சீனம், ஆரியம், சேமியம் என்னும் அறு குடும்பங்களாகவும், வகைப்படுத்தப் பெறாத சிலவுமாக வகுக்கப் பெற்றிருக்கின்றன. நக்கவார மொழி மலையப் பாலினீசியக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இவற்றுள் முண்டா மொழிகள் வேத காலத்திலேயே, அதாவது கி.மு.1500 ஆண்டுகட்கு முன்பே, வழங்கியிருக்கின்றன. இவை சோட்டா நாகப்பூர் என்னும் சின்ன நாகபுரியிலும், அதையடுத்துள்ள வங்க, ஒட்டர, சென்னை, நடுவண் (மத்திய) நாடுகளைச் சேர்ந்த மாவட்டங்களிலும், விதர்ப்ப (Berar) நாட்டுக்கு வடக்கிலுள்ள மகதேவ மலைத்தொடரிலும் பேசப்படுகின்றன. இவற்றிற்கும், நக்கவாரத்திலும் சில கிழக்கிந்தியத் திட்டுகளிலும் பேசப்படும் மான்குமேர்க் குடும்ப மொழிகட்கும் ஒரு பொதுக் கூறுண்டென்று, கிரையர்சன் கூறுகின்றார். இவ்விரு குடும்பங்களும் முதலில் ஒன்றாயிருந்திருக்கலாம் என்பது அவரது உய்த்துணர்வு. முண்டா மொழிகளைப் பேசும் மாந்தர் பெரும்பாலும் இந்தியாவின் கீழ்ப்பாகத்தை யடுத்திருப்பதாலும், மான்குமேர் என்னும் கிழக்கத்து மொழிகளை அவர்களுடையவை ஒருபுடை ஒத்திருப்பதாலும், இடைக் கழக விருக்கையை முழுக்கிய 2ஆம் கடல்கோளுக்குப்பின் அவர்கள் வந்து இந்தியாவிற் குடியேறியிருக்கலா மென்றெண்ண இடமுண்டு. தீங்கனி நாவல் ஓங்குமித் தீவிடை ... .... .... ... ... ... ... ... ... பூமி நடுக்குறூஉம் போழ்தத் திந்நகர் நாகநன் னாட்டு நானூறு யோசனை வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும் (9 : 16 - 21) என்னும் மணிமேகலைப் பகுதி அக் கடல்கோளைக் குறித்ததாகலாம். முண்டா மொழிகள் எழுத்தும் இலக்கியமுமற்றுப் பண்பாட்டில் தமிழினும் மிகத் தாழ்ந்திருப்பதனாலும், தலைக்கழகக் காலத்திலேயே தமிழ் முழு வளர்ச்சியடைந்துவிட்டதனாலும், தமிழ் முண்டாமொழியினின்று சில சொற்களைக் கடன் வாங்கும் நிலையிலிருந்த தென்பது, வேண்டுமென்று தமிழைத் தாழ்த்திக் கூறுவதாகவே தோன்றுகின்றது. வணிகத்திற்கு முதலோ, ஒரு பொருள் வாங்கப் பணமோ, இல்லாதவர், செல்வர் ஒருவரிடம் சென்று கடன் கொள்ளலாம். ஆயின், நப்பீல்டும் இராக்குப்பெல்லரும் பிருளாவும் போன்றார், எங்ஙனம் ஒருவரிடம் கடன் கொள்ள நேரும்! தவ்விச் செல்வது தவளை. தவ்வுதல் தாவுதல், இனி தவழ்ந்து செல்லும் நீருயிரி தவளை எனினுமாம். தவழ்தல் = தத்திச் செல்லுதல், தத்துதல். ஓதங் கரைதவழ்நீர் வேலி யுலகினுள் (பு.வெ.8 : 9). சிறுவர் நீர்மேல் தவளைபோல் தத்தித் தத்திச் செல்லுமாறு எறியும் தட்டையான காய், தவளைக்காய் எனப்படும். காயில்லாத விடத்து ஓட்டாஞ் சல்லியை எறிவர். தோளில் அடித்தவிடத்துத் திரளும் சதையையும் தவளைக்காய் என்பர். பழுக்காத புண்கட்டியைக் காய் என்பதுண்டு. இனி, நுணல் என்னும் மணற்றவளையை மணற்காடை, மணற் காளான், மணற்கூகை என்னும் வழக்குண்மையால், அதை உண்ணும் வகுப்பார் அதைத் தவளைக்காய் என்றும் அழைத்திருக்கலாம். தவளைக்காய் என்பது தவக்களை, தவக்கை என்றும் திரியும். கி.பி.2ஆம் நூற்றாண்டினதான குறுந்தொகைச் செய்யுளிலும், 9ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்பெறும் பெருங்கதையிலும், 10ஆம் நூற் றாண்டினதான சீவகசிந்தாமணியிலும், 12ஆம் நூற்றாண்டிலிருந்த பேரா சிரியர் உரையிலும், 13ஆம் நூற்றாண்டினதான நன்னூலிலும், தவளை குறிக்கப்பட்டுள்ளது. தவளை வாய பொலஞ்செய் கிண்கிணி (குறுந்.148) தவளைத் தண்டுறை கலங்கப் போதி (பெருங்.மகத.3,21) தவளைக் கிண்கிணி ததும்புசீ றடியர் (பெருங். உஞ்சைக். 46,246) தத்துநீர்த் தவளைக்குரற் கிண்கிணி (சீவக.2481) தத்துவனவற்றுக்குங் குட்டிப் பெயர் கொடுக்கப்படும்; தவளைக் குட்டி எனவரும் (தொல்.பொருள்.561, பேரா.உரை) ஆற்றொழுக் கரிமா நோக்கந் தவளைப் பாய்த்துப் பருந்தின்வீழ் வன்ன சூத்திரநிலை (நன்.19) தவளை நீருள்ளவிடமெல்லாம் காணக்கூடிய உயிரியாதலாலும், அதன் பொதுவான இனத்திற்கு வேறு பெயரின்மையாலும், தவளை என்னுஞ் சொல் தமிழ்நாடு முழுதும் வழங்கும் உலக வழக்குச் சொல்லாத லாலும், அது தொன்றுதொட்டு வழங்கிவரும் தென்சொல்லேயெனத் தெளிக. தவளையினத்திற் பலவகையுண்டு. வெளிறித் தேய்ந்து போயிருப் பது தேரை; சொறியுள்ளதாயிருப்பது சொறியன்; பருத்துப் பச்சையா யிருப்பது மொங்கன்; மணலுக்குள்ளிருப்பது நுணல்; வாலறாத தவளைக் குட்டி அரைத் தவளையென்றும், தலைப்பிரட்டையென்றும் சொல்லப்படும். தேரை பாய்வதால் குழந்தை நோய்ந்து போமென்றும், இளநீர் சொத்தை யாகிவிடு மென்றும், பொதுமக்கள் கருதுவர். தேரைக்கால் பெற்றுத் தேய்ந்துகா லோய்ந்ததே (ஔவையார்) தேரையர் தெங்கிளநீ ருண்ணார் பழிசுமப்பர் (தமிழ்நா. 74) எதுகைபற்றிச் சிறப்புச் சொற்களைப் பொதுப் பொருளில் ஆள்வது பிற்காலப் புலவரியல்பு. எ-கா : நாரை துயில்வதியும் ஊர குளந்தொட்டுத் தேரைவழிச் சென்றா ரில். (பழ. 23) வழுதுணங்காய் என்பது கத்தரிக்காய். அதன் மறுவடிவம் வழுதலை என்பது. காய்களுள் மிக வழுக்கையாயிருப்பது கத்தரிக்காயாதலால், அது வழுதலையெனப் பெற்றது. வழுதலை, வழுதுணை என்னும் இரண்டும் கத்தரிக்காயையும், அதற்கினமான கண்டங்கத்திரியையும் குறிக்கும். வழுதலை = 1. கத்தரி (பிங்.) 2. கண்டங்கத்தரி (மூ. அக.). வழுதுணை = 1. கத்தரிக்காய் வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் (ஔவையார் பாடல்) வழுதுணங்காய் முதலிய காய்களையும் (மதுரைக். 529, நச்.உரை) 2.கண்டங்கத்திரி. வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே (நாலடி. 264) மிகுதி - மீதி, மிகு - மீ - மீது = மேல். மீது - மீசு = மேல். துவராடை மீசு பிறக்கிய மெய்யி னாரும் (தேவா. 38 : 11) மீசு வைத்தல் = மேலே வைத்தல் (யாழ். அக.). மீசு - மீசை = 1. மேலிடம் மீசை நீள் விசும்பில் (சீவக.911) 2. மேலுதட்டில் முளைக்கும் மயிர். துடித்த தொடர் மீசைகள் (கம்பரா. மாரீச.49) மீசை - மிசை = மேல். மீசை-வீசை (உலகவழக்கு) மீசை தமிழ்ச்சொல் லன்றென்பது மீசையில்லார் கூற்றே. இளநீர் என்பது தேங்காயன்று; குரும்பைக்கும் தேங்காய்க்கும் இடைப்பட்ட வழுக்கையும் தோன்றாத நிலையிலுள்ள இளமையான நீரே. பின்பு, அது வழுக்கை தோன்றிய நிலையிலுள்ள நீரையும் குறித்தது. அதுவும் இளமையான நீரே. மருந்துக்குச் சிறந்தது வழுக்கை தோன்றாத இளநீர்தான். ஆயின், குளிர்ச்சிக்காகவும் நீர்வேட்கை தணிப்பதற்காகவும் மட்டும் குடிக்கும் உடல்நல நிலையர், வழுக்கையும் தின்ன விரும்புவதால், வழுக்கையிளநீர் வெட்டத் தரப்படும். இன்றும் இளநீர்க் கடைகளில் வழுக்கையில்லாத இளநீர்க் காய்களைக் காணலாம். முற்றின காயிலுள்ள நீரை இளநீரென்று எவரும் கூறார். அதைத் தேங்காய்த் தண்ணீர் என்றே சொல்வது மரபு. இளநீர் என்னும் தொடரின் இரு சொற்களும் பொருள் நிரம்பியவை. இளமையும் நீரும் உள்ளதே இளநீர். நீர் ஒரு கொள்கலத்திலன்றித் தனித்திருக்க முடியாது. ஆகவே, இளநீர் என்பது தெங்கமட்டையோடு கூடித்தானிருக்கும். இளநீர் என்பது நீரைமட்டும் குறிப்பின் இயற்பெயர். அதையுடைய மட்டையையுங் குறிப்பின் (அடையடுத்த) ஆகுபெயர். இளநீர்க் கடைக்குச் சென்று தேங்காய் இருக்கிறதா என்றாலும், தேங்காய்க் கடைக்குச் சென்று இளநீரிருக்கிறதா என்றாலும், இல்லையென்றுதான் சொல்வர். தமிழுக்கென்று சிறப்பாக நிறுவப் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழிநூல்துறைப் பேராசிரியராக வுள்ளவரும், மாநிலக் கல்லூரியில் அவருக்குரிய தலைமைத் தமிழ்ப் பேராசிரியப் பதவி தக்கார் வேறொருவருமின்மையால் வெறுமையாயிருக்கிறதென்று, மேனாட் கல்வியமைச்சர் திரு. சுப்பிரமணியத்தால் புகழப் பெற்றவருமான பேரா.தெ.பொ.மீ. முண்டா நிலத்திற் பிறந்து வளர்ந்தவர்போல் கூறிக்கொண் டிருப்பது பெருவியப்பாகவே யிருக்கின்றது. தமிழ்நாட்டில் தெங்கு தொன்றுதொட்டு வளர்ந்து வருகின்றது. முழுகிப்போன குமரிக்கண்டத்திலும் ஏழ்தெங்க நாடுகள் இருந்தன. சின்ரிகுசா (jinrickshaw = ஆள்வலி வண்டி) என்பது ரிகுசா என்றும், பைசைக்கிள் (bicycle) என்பது சைக்கிள் என்றும், குறுகி வழங்குதல் போல், இளநீர் என்பது முண்டாவில் நீர் என்று குறுகி வழங்கித் தேங்காயையும் குறித்திருக்கலாம். அல்லது, இது வேறொரு சொல்லாகவு மிருக்கலாம். 13. கீழைத் தீவுகளிலிருந்து பல நறுமணப் பொருள்கள் நம் நாட்டில் வந்து, நம் மக்கள் மனத்தையும் மூக்கையும் கவர்ந்தன. தக்கோலி, அரு மணவன் முதலியவை அந்த நறுமணப் பொருள்களுள் ஒருசில. இவை, தாம் விளையும் இடத்தின் பெயரையே தம் பெயராகக் கொண்டவை என்று அடியார்க்குநல்லார் எடுத்துக் காட்டுகிறார். இவற்றை எப்படி ஒழித்துத் தள்ளுவது? கீழைத் தீவுகளிலிருந்து நறுமணப் பொருள்கள் நம் நாட்டுக்கு வலிய வரவில்லை. நம் நாட்டு வணிகரே அங்குச் சென்று அப் பொருள் களைக் கொணர்ந்தனர். முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை என்று கி.மு.7ஆம் நூற்றாண் டினதான தொல்காப்பியம் பண்டைத் தமிழ்க் கடல்வாணிகரைக் குறிக் கின்றது. குமரிக்கண்டத்து வடிம்பலம்ப நின்ற பாண்டியன், சாலித் (சாவகம்) தீவிற்குச் சென்று அதைக் கைப்பற்றியதிலிருந்து, அல்லது அதற்கு முன்பிருந்தே கீழைநாட்டு வாணிகத் தொடர்பு நம் நாட்டிற்கு இருந்து வந்திருக்கின்றது. அகிலின் வகைகளை, அருமணவன், தக்கோலி, கிடாரவன், காரகில் என்று சொல்லப்பட்ட பல்வகைத்தாகிய தொகுதியும் என்றே அடியார்க்குநல்லார் குறிப்பிடுகின்றார். இதற்கு, இங்குக் கூறப்படும் பெயர்கள் இக்காலத்து வழங்காமையாற் புலப்படவில்லை. என்று பர். உ.வே.சா. அடிக்குறிப்பு வரைந்திருக்கின்றார். அருமணம் அல்லது அருமணவன் என்பது ஒரு தீவுப் பெயராகத் தெரிகின்றது. அஃது அரிய மணப்பொருள்கள் விளைவது என்று பொருள்படும் தமிழ்ப் பெயராகவும் இருக்கலாம். முதுபண்டைக் காலத்தில் கிழக்கத்துத் தீவுகளையும் நாடுகளையும் தமிழரசர் கைப்பற்றியிருந்ததால், அவற்றுட் சில இன்னும் தமிழ்ப் பெயர்களையே தாங்கி நிற்றலைக் காண்க. எ-கா : மதுரை - மதுரா , மலையம் - மலாயா, பொருநை - போர்நியோ. சாலி என்பது யவ என்று வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டுப் பின்பு சாவா என்று வழங்கி வருகின்றது. சுமதுரை (சுமதுரா - சுமத்ரா) என்பது, சு என்னும் வடமொழி முன் னொட்டுப் பெற்றது. அகில் என்பது பழஞ் சேரநாடாகிய மலையாள நாட்டிலும் விளை கின்றது. அது வெள்ளகில். அதன் பிற வகைகளே கீழ்நாட்டினின்று வந்தவை. அருமணம் என்னும் தீவினின்று வந்த யானை அருமணவன் எனப்பட்டதால், தமிழ்நாட்டில் யானை யில்லை என்பது பெறப்படாது . இது பிறவற்றிற்கும் ஒக்கும். அகில் என்னும் சொல் முள்ளுள்ளது என்னும் பொருளது. அக்கு = முள், அகில். அக்கு + இல் = அக்கில் - அகில். கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் என்றார் விளம்பிநாகனார். கள் = முள். கள்ளி = முள்ளுள்ளது. அகில் தமிழ்நாட்டினின்று மேனாடுகட்கு ஏற்றுமதி யானதினால், மேனாடுகளிலும் அதன் தமிழ்ப் பெயரே திரிந்து வழங்கி வருகின்றது . அகலிம் (ahalim) என்பது எபிரேயம். அகலோக்கோன் (agallochon) என்பது கிரேக்கம்; அகலோக்கா (agallocha) என்பது இலத்தீனம். அகில் என்பதே மலையாளமும், அகலோ (agallo) என்பது மலாயம். அகரு (agaru) என்பது சமற்கிருதம். எல்லாவற்றிலும் பிற்பட்டது சமற்கிருதம். ஆயினும் அச் சமற்கிருதச் சொல்லினின்று தமிழ்ச்சொல் வந்ததாக, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சொற்களஞ்சியம் காட்டி யிருப்பது, ஆரிய ஏமாற்றுத் தன்மையையும் தமிழர் ஏமாறுந் தன்மையை யும் எத்துணை விளக்கமாகக் காட்டுகின்றதென்பதை எண்ணிக் காண்க. தக்கோலம் என்பது வால்மிளகு, திப்பிலி, பாகடை (தாம்பூலம்), சிறுநாவல், பெருநாவல் என்னும் ஐம்பொருள்களையே உணர்த்தும். ஆகையால், தக்கோலி என்பது உவமை அல்லது தன்மை பற்றியதாகவு மிருக்கலாம். காரகில் என்பது வெள்ளகில் என்பதற்கு எதிராகையால் தன்மை பற்றியதே. கிடாரவன் என்பது கிடாரத்தினின்று வந்ததாக இருக்கலாம். இக்காலத்தில் அருமணவன், தக்கோலி என்னும் பொருளு மில்லை; சொல் வழக்குமில்லை. இவை தாமாக ஒழிந்துபோயின. ஆயினும், இவற்றை எப்படி ஒழித்துத் தள்ளுவது? என்று நம் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் கவன்று பெரிதும் இடர்ப்படுகின்றார். ஒருகால், அப் பொருள்கள் அவர் இல்லத்தில் இடத்தையடைத்துக் கொண்டுள்ளன போலும்! 14. நாம் நம்முடைய பண்பாட்டை அங்கெல்லாம் பரப்பினோம் என்பதற்கு நிலையான சின்னங்களாக, அங்கிருந்து வந்த சொற்கள் இன்றும் விளங்குகின்றன. நாம் நம் பண்பாட்டை அங்குப் பரப்பியிருந்தால், நம் சொற்கள் அங்குச் சென்றிருக்குமேயொழிய, அங்கிருந்து சொற்கள் இங்கு வந்திரா. வந்திருப்பின், நம் பண்பாடின்மையைக் காட்டுமேயன்றிப் பண்பாட்டைக் காட்டா. 15. நாம் மிகமிக விரும்பிச் சுவைக்கும் முருங்கைக்காய்ச் சாம் பாரில் விளங்கும் முருங்கை சிங்களவர்கள் நமக்குக் கொடுத்த அன்பின் காணிக்கை. முருங்கை தொன்றுதொட்டுத் தமிழரால் உண்ணப்பட்டு அல்லது தின்னப்பட்டு வரும் தமிழ்நாட்டுக் காயே; ஆதலால், முருங்கைமரம் தமிழ்நாட்டு மரமே. முருங்குதல் (தன்வினை) = 1 முறிதல். கூம்பு முதன்முருங்க (மதுரைக். 377) 2. அழிதல். அமரு ளேற்றார் முரண்முருங்க (பு.வெ. 1 : 7) முருக்குதல் (பிறவினை) = 1. முறித்தல். காப்புடைய வெழுமுருக்கி (புறம்.14). 2. அழித்தல். விறல்வேல் மன்னர் மன்னெயில் முருக்கி (சிறுபாண். 247) 3. கொல்லுதல், (திவா.) முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முரிதல் = ஒடிதல், கெடுதல். முருங்கைமரம் அல்லது கிளை எளிதாய் ஒடியும் மரம். முருங்குவது முருங்கை. முருங்கைக்காய்போற் காய்ப்பதும் முள்ளுள்ளதுமான முள் முருங்கை மரம், முருக்கு எனப்பட்டது. இது வலித்துத் திரிந்த திரிசொல். முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புற ழடைகரை (பதிற். 23 : 26) முருக்கமலர் செந்நிறமாயிருப்பதால் எரிமலர் எனப்படும். எரிமலர்ப் பவளச் செவ்வாய் (சீவக. 662) முருக்கு என்பது முருங்கு என்றும் நிற்கும். புத்தமித்திரன் என்னும் பித்தமித்திரன் பிதற்றிய வீரசோழியத்துக்கு உரை கண்ட பெருந்தேவனார், முருங்கா வென்னுஞ் சிங்களச் சொல் முருங்கையென வந்தவாறுங் கொள்க என்று 11ஆம் நூற்றாண்டிற் கூறிய வுரையை, வரலாறு, மொழி நூல் முதலிய நூலறிவும் ஆராய்ச்சியும் மிக்க இக்காலத்திற் கொண்டு கூறுவது எத்துணைப் பேதைமையும் அடிமைத்தனமும் ஆகும்! கங்கைக்கரை நாட்டைச் சேர்ந்த விசயன் என்னும் இளவரசன், கி.மு. 543-ல் ஒரு படையோடு வந்து இலங்கையில் இறங்கிச் சிங்கள இனத்தைத் தோற்றுவித்தான் என்பது பழைய வரலாறு. அதனால், இலங்கையும் அதன் மொழியும் சிங்களம் எனப்பட்டன. பெருந்தேவனார் முருங்காவென்னும் சிங்களச் சொல் என்று இடத்தின்மேல் மட்டும் ஏற்றிக் கூறியிருப்பவும், நம் பேராசிரியர் சிங்கள வர்கள் நமக்குக் கொடுத்த அன்பின் காணிக்கை என்று அவ் வினத்தார் மீதே ஏற்றிக் கூறிவிட்டனர். விசயன் கங்கைக்கரை நாட்டினின்று வந்த பொழுதே முருங்கை மரத்தையும் உடன்கொண்டுவந்தான் என்பது அவர் கருத்துப்போலும்! முருங்கைக்காய் என்றதும் முறிந்ததாம் பத்தியம் முருங்கை பருத்து முட்டுக்கால் ஆகுமா? முருக்கம்பூ சிவந்ததினால் முடிப்பார் உண்டா? என்பவை தொன்றுதொட்டு வழங்கி வரும் பழமொழிகள். முருங்கைப் பட்டை, முருங்கைப் பிசின் ஆகியவை பிள்ளை மருத்துவத்திற் பெயர் பெற்ற மருந்துகள். முருங்கைக்காயும் முருங்கைக் கீரையும் தமிழர் தொன்று தொட்டு உண்டு வரும் உணவு வகைகள். முருங்கை என்னும் சொல், மலையாளத்தில் முரிஞ்ஞ என்றும், தெலுங்கில் முனக என்றும், சமற்கிருதத்தில் முருங்கீ என்றும் திரிந்து வழங்குகின்றது. ஐகார வீற்றுத் தமிழ்ச்சொற்கள் பொதுவாய் ஆரிய மொழிகளில் ஆகாரவீறாய் நிற்கும். அம் முறைப்படி, ஆரியச் சார்பான சிங்களத்திலும், முருங்கை என்பது முருங்கா எனத் திரிந்தது. சமற்கிருதச் சொல் வேத ஆரியர் தமிழ்நாட்டுக்கு வந்தபின் கடன்கொண்டதால், முருங்கீ என்னும் வடிவு கொண்டது. உண்மை இங்ஙனம் இருக்கவும், முருங்கீ என்னும் சமற்கிருதச் சொல்லே சிங்கள மொழியில் முருங்கா எனத் திரிந்ததென்றும், பின்பு அது தமிழில் முருங்கை எனப் புகுந்ததென்றும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியில், பிராமணரான மு.இராகவையங்காரும் கோடரிக்காம்பான வையாபுரியும் கூடித் தலை கீழாய்க் குறித்திருப்பதை, ஆயிரக்கணக்காய்ச் சம்பளம் வாங்கிக்கொண்டு தமிழைப் பேணாத பேடித் தமிழ்ப் பேராசிரியர் கவனிப்பாரா? முருங்கை, முருக்கு என்னும் இரு பெயரும் தொன்றுதொட்டு இரு வகை வழக்கிலும் வழங்கி வரும் தமிழ்ச்சொற்களாகும். முருக்கைப் புனமுருக்கு, புனமுருங்கை என்பதுமுண்டு. முதலிரு கழக நூல்களனைத்தும் கடைக்கழக நூல்களிற் பலவற் றொடு இறந்துபட்டமையால், இன்று சில பழந் தமிழ்ச்சொற்கட்கு இலக்கியச் சான்று காட்ட இடமில்லை. தொல்காப்பியம் இலக்கண நூலேயன்றி அகர முதலியன்று. இதைப் பலர் உணர்வதில்லை. 16. சீனர்களோடும் நமக்குத் தொடர்பு உண்டு. படகுவகையைச் சேர்ந்த சம்பான் என்ற சொல்லும், பெரிய மண்கலத்தைக் குறிக்கும் `காங்கு' என்ற சொல்லும், `பீங்கான்' என்ற சொல்லும், நாம் விரும்பும் சீனப் பட்டைப்போலச் சீனநாட்டிலிருந்து வந்தவையே ஆம். குமரிக்கண்டத் தமிழர் நீர்வழியும் நிலவழியும் உலக முழுதும் சுற்றினவர். அல்லாக்கால், வடவையைக் கண்டிருக்க முடியாது; ஞாலத்திற் கும் உலகம் என்று பெயரிட்டிருக்க முடியாது. உலகில் முதன்முதல் நீர்வழிச் செல்லக் கலம் புனைந்தவரும், கடலைக் கடந்தவரும் தமிழரே. நாவாய் என்ற தமிழ்ச்சொல்லே navis என்றும், படகு என்ற தமிழ்ச்சொல்லே barca, அல்லது barga என்றும் இலத்தீனில் திரிந்துள்ளன. Navy, bark, barge என்ற ஆங்கிலச் சொற்கள் இலத்தீனினின்றும் திரிந்தவை. கோதியத்தில் skip என்றும், மூதாங்கிலத்தில் scip என்றும், மூதுயர் செருமானியத்தில் scif என்றும், ஆங்கிலத்தில் ship என்றும், வழங்குவதும் கப்பல் என்னும் தென்சொல்லின் சிதைவே. கப்பலும் நாவாயுமல்லாத சிறுகலங்கள், பரிசல், ஓடம், அம்பி, பஃறி, திமில், தோணி, படகு முதலியனவாகப் பல வகைய. சம்பான் என்பது (E.sampan) ஒருவகைக் சிறிய சீனப் படகு. அது பஃறி, திமில், தோணி, படகு என்பவற்றுள் ஒன்றுக்குச் சமமாகும். அது முப்பலகையாற் செய்யப்பட்டதினால் அப்பெயர் பெற்றது. Chinese san -pan. san = மூன்று, pan= பலகை. ஆதலால், சம்பான் என்ற சொல்லே தமிழுக்குத் தேவையில்லை. மொழி யுணர்ச்சியுள்ளவர் மண்ணெண்ணெய், மிதிவண்டி என்று தூய தமிழ்ச்சொற்கள் வழங்கவும் மொழியுணர்ச்சியில்லார் கெரோசின் ஆயில், சைக்கிள் என்று ஆங்கிலச் சொற்களையே வழங்குவது போன்றதே, சம்பான் என்னும் சீனச் சொல்லை வேண்டாது வழங்குவதும் என்க. அதைப் படகு என்றே சொல்லலாம். சீனச்சொல்லை வழங்குவது தமிழுக்குக் கேடேயன்றி ஆக்கமன்று. காங்கு என்னும் சீனச்சொற்கு நேரானது வளந்து என்பது. யாழ்ப் பாண அகரமுதலியையும் சென்னைப் ப.க.க. அகரமுதலியையும் பார்க்க. பானை யொத்த கலங்களுள்; மிகச் சிறியது சுண்டான்; அதிற் பெரியது முட்டி; அதிற் பெரியது பானை; அதிற் பெரியது மிடா; அதிற் பெரியது வளந்து. அதுவே கலங்கிற்குச் சமமானது. மிகப் பெரிய தவளையை மிடாத்தவளை என்பர். பீங்கான் என்பது சீனநாட்டினின்று வந்த ஒருவகைச் சுடுமட்கல மாகும். பீங்கான் என்னும் சொல் பிங்கான் (pingan) என்னும் பாரசீகச் சொல்லின் திரிபாக, சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலியிற் குறிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டுச் சுடுமட் கலங்களுள், சிவந்தவற்றைச் செஞ்சுள்ளை யென்றும், கரியவற்றைக் கருஞ்சுள்ளையென்றும், சொல்வது மரபு. பீங்கான் கலங்கள் பெரும்பாலும் வெண்ணிறமா யிருப்பதால் அவற்றை வெண் சுள்ளை என்னலாம். அக் கலங்களைச் சுள்ளாங்கலம் என்னலாம். சுடப் பட்ட கலம் என்பது அதன் பொருள். வெண்கலம் என்பது செய்பொருளாகு பெயராய் முறி என்னும் கருவியைக் குறிப்பது போன்றே, சுள்ளாங்கலம் என்பதும் செய்பொரு ளாகுபெயராய்ப் பீங்கான் கருவியைக் குறிப்பது பொருத்தமானதே. இனி, இற்றை நூல்களிற் பீங்கானைக் குறிக்கும் சொல்லின்மையால், பண்டை நூல்களிலும் இருந்திராது என்ற முடிவுக்கு வரமுடியாது. kÂyh(Manilla) என்னும் பிலிப்பைன் தீவுக்கணத் தலை நகரினின்று இறக்குமதியான கடலை வகையை, நிலக்கடலை, வேர்க்கடலை, கடலைக்காய் என்று தனித்தமிழ்ப் பெயரால் வழங்குவதே தமிழ்நாட்டுப் பெருவழக்கு. ஆங்கிலேயரும் நிலக்கடலை என்னும் சொல்லையே groundnut என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆயினும், மணிலாக் கொட்டை என்ற பெயரையே சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி அளவையாகக் கொண்டுள்ளது. இதனால், தூய தமிழ்ச்சொற்களை இயன்ற வரை மறைத்து, அயற் சொற்களை வழங்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ள ஒரு வகுப் பாருண்மையை அறியலாம். மணிலாக்கொட்டை என்பது இன்று மல்லாக் கொட்டை என்று மருவி வழங்குகின்றது. 17. நம்முடைய தந்தமும் முத்தும் மேனாட்டிற்குப் போனது போலக் கிரேக்க மொழிச் சொற்களும் தமிழில் வந்துள்ளன. நம்முடைய தந்தம் என்று தந்தம் என்னும் பொருளோடு அச் சொல்லையும் நம்மோடு தொடர்புபடுத்திக் கூறுகின்றார் பேராசிரியர். தந்தம் என்பது அச் சொல்லையும் குறிக்கும்; அச் சொல்லாலுணர்த்தப் பெறும் பொருளையும் குறிக்கும். அவற்றுள், பொருள் நமது; சொல் நமதன்று. தந்தம் என்பது ஆரியச் சொல். danta (வ), dentis (L.). தந்தத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல் மருப்பு அசனி வேகமதன் மருப்பூசி யாக (சீவக.1121) மருப்பு = யானைக் கொம்பு (பிங்.). அரிமந் திரம்புகுந்தா லானை மருப்பும் (நீதிவெண்பா, 2) முத்து என்பது தூய தமிழ்ச்சொல். ஆயினும், அது முக்தா என்னும் வடசொல்லின் திரிபாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகர முதலியிற் காட்டப்பட்டுள்ளது. பேராசிரியர் கருத்து யாதோ அறிகிலம். 18. சாட்டையைக் குறிக்கும் மத்திகை என்பதும், தரைக்குள்ளே செல்லும் வழியைக் குறிக்கும் சுருங்கை என்னும் சொல்லும், கன்னல் என்ற நாழிவட்டிலின் பெயரும், இரண்டரை நாழிகையைக் குறிக்கும் ஓரை என்பதும், கிரேக்கச் சொற்களேயாம். இக் கூற்றினால், பேராசிரியர் தம் தமிழறியாமையைத் தெள்ளத் தெளிவாகவும் முற்ற முடியவும் காட்டுகின்றார். மேற்குறித்த நாற்சொல்லும் தூய தென்சொல்லே. மத்திகை மத்திகை = குதிரைச்சாட்டை அல்லது சம்மட்டி (horse whip) மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை (முல்லைப். 59) மொத்துதல் = அடித்தல். சாட்டையால் அடித்தல், மொத்து - மொத்திகை - மத்திகை. ஒ-அ. ஒ.நோ : ஒட்டு - அட்டு, கொம்பு - கம்பு, மொண்டை (மொந்தை) - மண்டை. சமட்டுதல் = சாட்டையால் (சம்மட்டியால்) அடித்தல். சமட்டு - சமட்டி - சம்மட்டி. சமட்டு - சவட்டு - சவட்டை - சாட்டை. rh£l - catta(M.), rh£o - cati (K.), ஜாட்டி - jati(T.). ஜாட்டி jati(U.). மத்திகை - Gk. Mastix, mastigos. சுருங்கை சுல்-சூல். சூலுதல் = தோண்டுதல். நுங்குசூன் றிட்டன்ன கண்ணீர்மை (நாலடி,44). சுல்-சொல்-சொலி. சொலித்தல் = கிழித்து உரித்தல். சொலி = உரித்த தோல். சொல்- சொள்-சொள்ளல் = உள்ளீடற்ற சொத்தை. சொள் - சொள்ளை = துளை, உள்ளீடற்றது, சொத்தை. சொள் - சொண்டு = சொத்தை. சொண்டு மிளகாய் வற்றல் என்பது பாண்டிநாட் டுலக வழக்கு. சொள் - சொட்டு. சொட்டுதல் = குழியக் கொத்துதல். சொட்டு - சொட்டை - சொத்தை. சுல் - (சுன்) - சுனை = உள்ளிருந்து ஊறும் நீர்நிலை. சுள்-சுர்-சுர. சுரத்தல் - துளைவழியாய் ஊறுதல். சுர - சுரங்கு - சுரங்கம் = கள்வர் இடும் கன்னம், வெடிமருந்து வைக்கும் குழி, நிலவறை, கீழ்நிலவழி, சுரங்கம் - suranga (Skt.). சுர் - சுரி. சுரித்தல் = துளையிடுதல். சுரி = 1. Jis(âth.), 2. ஏட்டுத்துளை, 3.ஏட்டில் துளையிடுங் கருவி. சுர - சுரை = உட்டுளை, சிறு குழாய், குழிந்த இடம், முற்றி உட்டுளையுள்ளதாகும் காய், சுரப்பு. சுர் - சுரு - சுருவம் = குழிந்த அகப்பை, சுருவம் - sruva (Skt.). சுரு - சுருவை = அகப்பை. ஒ.நோ: முழை - மூழை = அகப்பை. சுரு - சுருங்கு = அங்கணம் (சலதாரை). சுருங்கு - சுருங்கை =அரசர் கரந்தோடித் தப்பும் கீழ்நிலவழி (சூடா.); 2. நீர் செல்லும் கரந்த படை. பெருங்குள மருங்கிற் சுருங்கைச் சிறுவழி (மணிமே. 12 : 79) 3. நுழைவாயில் (பிங்.). சுருங்கை - surunga (Skt.) சொலி - சொரி. சொரிதல் = உள்ளிருந்து விழுதல். சொல் - சோல் - சோர். சோர்தல்= உள்ளிருந்து கசிதல், வடிதல், விழுதல், தளர்தல், சோர்(க.) , சோலு (தெ.). சோர் - சோரி-வடியும் அரத்தம். சோல் - (சோன்) - சோனம் = சொரியும் முகில். சோன் - சோனை = பெருமழை வீழ்ச்சி, கார்முகில். சோனையா (ம்) மாரி-சோனாமாரி. இச் சொற்களால், சுருங்கை என்பது சுல் என்னும் அடிவேரினின்று, தோன்றி, சுரி என்னும் சொல்லோடு தொடர்புடையதாய், துளைக்கப்பட்டது என்னும் பொருளில் கீழ்நில வழியைக் குறிக்கும் என்பது தெளிவாம். கன்னல் கல்லுதல் = கில்லுதல், தோண்டுதல், குடைதல். மலைகல்லி எலிபிடிக்கிறது என்பது ஒரு சொலவடை. கல் -கலம் = மரம், கல் முதலியவற்றிற் குடைந்து செய்யும் ஏனம், தோணி. கல் - கன் = உட்குழிந்த துலைத்தட்டு, செப்புக் கலம், செப்புக்கலத் தொழில், செம்பு. கன்-கன்னான் = செப்புக்கலம் செய்யும் கம்மாளன். கன்-கன்னம் = துளையுள்ள காது, காதை யடுத்த அல்லது உட்குழிந்த கதுப்பு (ஒ.நோ: செவி-செவிடு = காதை யடுத்த கன்னம்), துலைத்தட்டு, கள்வர் சுவரிலிடும் துளை. செவிட்டைக் கட்டி அடித்தான் என்னும் வழக்கை நோக்குக. கன்- கன்னல் = 1. நீர்க்கலம். தொகுவாய்க் கன்னல் தண்ணீ ருண்ணார் (நெடுநல். 65). 2. நாழிகை வட்டில். கன்னலின் யாமங் கொள்பவர் (மணிமே. 7 : 65). 3. நாழிகை வட்டிலால் அறியப்படும் கால அளவு. 4. உட்டுளையுள்ள புல்வகையைச் சேர்ந்த நாணற்கரும்பு. 5. கருப்பஞ் சாற்றிலிருந்து செய்யப்படும் சருக்கரை அல்லது கற்கண்டு. 6. சருக்கரை கலந்து அடும் அடிசில் (பாயசம்). ஒ.நோ. : நுள் - நள்-நாளம் = உட்டுளை, உட்டுளையுள்ள தண்டு. நள்-நாள்-நாளி-நாழி = உட்டுளையுள்ள மூங்கிற்படி, படி, அம்புப் புட்டில், நெசவுக்குழல், நாழிகை வட்டில், நாழிகை. நாழி-நாழிகை = நாழிகைவட்டில், நாழிகை நேரம். உண்ணாழிகை = படிம அறை (கருப்பக்கிருகம்). நாள்-(நாளல்)-நாணல் = உட்டுளையுள்ள புல்வகை. கன்னல் - Gk. kanna (read). L.kanna, OF. cane, ME, can(n)e, E.cane, Hele.ganeh. E.sugar - cane = கரும்பு. இனி, கல் = கருமை, கல்-கன்-கன்னல் = செங்கருப்பானது என்றுமாம், ஒ. நோ: கரு - கரும்பு = கரியது, கல் - கள் - காள் - காளம் = கருமை. கல் + து = கஃறு (கருமை). ஓரை ஒல்லுதல் = பொருந்துதல், கூடுதல். ஒல்-ஒர்-ஓர்-ஓரை=கூட்டம். மகளிர் கூட்டம், உடுக்களின் கூட்டம் (இராசி, sign of zodiac) இலக்கினம் என்னும் ஒரை யெழுச்சி (இராசியுதயம்) நன்முழுத்தம் (சுபமுகூர்த்தம்). ``மகளிர் ஈட்டமும் மற்றவ ராடலும் அவர்விளை யாடுங் களமும் இராசியும் ஓரிடைச் சொல்லும் குரவையும் ஓரை (10 : 225) என்பது பிங்கலம். இராசி (ராசி) என்னும் வடசொல்லும், constellation என்னும் இலத்தீன் வழி யாங்கிலச் சொல்லும், (உடுக்களின்) கூட்டத்தை உணர்த்துதல் காண்க. ஒரு மணி நேரத்தைக் குறிக்கும் hour என்னும் ஆங்கிலச் சொல்லின் மூலமான hore என்னும் கிரேக்கச் சொல் வேறு; பன்னிரு விண்மீன் கூட்டத்தையும் அவை எழும் மங்கல அல்லது ஆட்சி நேரத்தையும் குறிக்கும் ஓரை என்னும் தமிழ்ச்சொல் வேறு. இவ் விரண்டையும் தொடர்பு படுத்தியது தென்சொல்லை வடசொல்லாகக் காட்டும் ஆரியத் தமிழ்ப் பகைவர் செயல். அதை அவரடியாரும் பின்பற்றி வருகின்றனர். களவொழுக்கத் தலைவன் தன் இன்ப முதிர்ச்சி யொன்றே கருதுவதனால், அதற்குத் தடையாயுள்ள வழியருமை, விலங்கச்சம், வேளைத்தீங்கு, தலைவியுறவினர் சினம் முதலியவற்றைச் சிறிதும் பொருட்படுத்துவதில்லை. இதனையே, மறைந்த வொழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த வொழுக்கம் கிழவோற் கில்லை (1081) ஆற்றின தருமையும் அழிவும் அச்சமும் ஊறும் உளப்பட அதனோ ரன்ன (1082) என்னும் தொல்காப்பிய நூற்பாக்கள் குறிக்கும். (நாள் - நட்சத்திரம். ஓரை-இராசி. இலக்கினம்) கடக லக்கினம், சிங்க லக்கினம் என்று வடசொல்லாற் குறிப்பவற்றை, கடகவோரை, மடங்கலோரை (அல்லது அரிமாவோரை) என்றே செந்தமிழிற் குறித்தல் வேண்டும். கிரேக்க மொழியில் நூற்றுக்கணக்கான அடிப்படைச் சொற்கள் தென்சொற்களாக உள்ளன. அவற்றுள் இரண்டொன்றைக் கண்ட வளவானே அவற்றைக் கிரேக்கச் சொல்லென்றே வலிப்பது, வரலாற்றறிவும், மொழிநூலாராய்ச்சியும் இல்லாதார் கூற்றே. இதை விரிப்பிற் பெருகும்; விளக்கின் மற்றொன்று விரித்தலாம். ஆதலால், இம்மட்டில் இதனை இங்கு நிறுத்துகின்றேன். 19. யூதர்கள் பழந்தமிழ் நாட்டில் இப்போது கேரளம் என்ற பகுதியில் பிறருடைய கையினின்றும் தப்பிச் சரண்புகுந்தார்கள். `யூதர்' என்ற பெயர் `யௌதி' என்று வழங்கப்படும் ஹீப்ருச் சொல்லாகும். யூதர் என்பார் கானான் நாட்டுக்குரிய அயல் இனத்தார். பகைவராற் சிறைப்பிடிக்கப்பட்டும் பகைவர்க்குத் தப்பியும் உலகத்தின் பல பகுதி களிலும் பரவி வாழ்ந்துவந்தவர். அவர்க்குப் பிற இனத்தார்க்குப் போன்றே அவர்தம் மொழிச் சொல்லாற் பெயர் அமைந்துள்ளது. இதில் என்ன வியப்பு! ஆங்கிலரை ஆங்கிலர் என்னாது வேறெப் பெயரால் அழைப்பது? இதனால் பிறமொழிச் சொல் தமிழிற் புகுந்துள்ளதெனல் எத்துணைப் பேதைமையும் பகுத்தறிவின்மையும் ஆகும்! மராட்டியர், குச்சரர், சிங்களர், சீனர், சோனகர், யவனர் முதலிய எத்துணையோ வேற்று நாட்டார் வேற்றுமையின்றித் தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக் கின்றனரே. இது தமிழ்நாட்டின் வணிக வளர்ச்சி, செல்வப் பெருக்கம், அரசியற் சிறப்பு, மக்கள் பண்பாடு முதலிய சிறப்பியல்புகளையன்றோ உணர்த்தும். இவ் வுண்மைக்கு மாறாக, இதனால் உயர்தனிச் செம்மொழி யாகிய தமிழைக் கலவை மொழியாகக் காட்ட முயல்வது, ஒரு பேராசிரி யர்க்கு, அதுவும் தமிழ்ப் பேராசிரியர்க்கு, அதுவும் அண்ணாமலைப் பல்கலைகழகத் தமிழ்ப் பேராசிரியர்க்கு, எத்துணை இளிவரல் என்பதை எண்ணிக் காண்க. 20. அரபியர்களும் இங்கே வந்து தங்கினார்கள். முகமது நபிகள் தோன்றுவதற்கு முன்னிருந்தே தமிழரோடு சேர்ந்து அரபியரும் கப்பலோட்டியவர்கள். மகமது முன்னறிவர் கி.பி.6ஆம் நூற்றாண்டினர். அரபியரின் முதற் பெற்றோனான ஆபிரகாம் கி.மு.2000 ஆண்டுகட்கு முற்பட்டவன். அவன் காலத்துக்கும் முன்பு தமிழர் தென்கடலிலும் கீழைக் கடலிலும் மேலைக் கடலிலும் கப்பலோட்டினர். 21. சென்னைப் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள தமிழ் அகரமுதலி யில் 891 அரபிச் சொற்கள் வந்துள்ளன. இசுலாம் மதத்தைச் சேர்ந்த சொற்களும் அரசியற் சொற்களும் இவற்றில் நிறைய வருகின்றன. சென்னைப் பல்கலைக் கழகம் தொகுத்துள்ள தமிழ் அகரமுதலி (மறைமலையடிகள் போலும்) உண்மையான உரிமைத் தமிழறிஞரால் தொகுக்கப் பெற்றதன்று. அவ் வகரமுதலிக் குழு, அதன் பதிப்பாண்மைக் குழு முதலியவற்றின் உறுப்பினர் பெயரைக் கீழே குறிக்கின்றேன். நடுநிலைப் பகுத்தறிவாளர் பட்டிகளினின்று அறியத் தக்கவற்றை அறிந்துகொள்க. தமிழ் அகரமுதலிக் குழு (The Tamil Lexicon Committee) 1. திருமான் (M.R.Ry.) (கே.வி.) கிருட்டிணசாமி அவர்கள் 2. (எசு. (S.) அனவரதவிநாயகம் அவர்கள். 3. (ஏ.) சக்கரவர்த்தி அவர்கள். 4. பெரும்பேராசிரியர் (மஹாமஹோபாத்யாய) கலை நாவல (வித்யாவாசஸ்பதி) பண்டித (எசு.) குப்புசாமி அவர்கள். 5. அராவ ஆண்டகை (ராவ் பஹதூர்) (ஏ.) இலக்குமண சாமி அவர்கள். 6. கனம் (Rev.) காடன் மத்தேயு. 7. திருமான் பண்டித கா. நமச்சிவாயம் அவர்கள். 8. அமைச்ச ஆண்டகை (திவான் பஹதூர்) (vR.ஈ.) அரங்கநாதன் அவர்கள். 9. அராவ ஆண்டகை (பி.) சம்பந்தம் அவர்கள். 10. (தி. (T.) சிவராமசேது அவர்கள். 11. (சி.கே.) சுப்பிரமணியம் அவர்கள். 12. பெரும் பேராசிரிய தென்கலைச்செல்வ (தாட்சிணாத்ய கலாநிதி) பண்டித வே.சாமிநாதர் அவர்கள். 13. (டபிள்யூ எயிச்) வாரென் பெருமான் (Esg.) 14. (எசு.) வையாபுரி அவர்கள். இப் பதினால்வருள், நால்வரே தமிழ்ப் புலவர். இருவர் ஒவ்வொரு சமயச் சார்பான தமிழறிஞரேயன்றி, இலக்கண விலக்கியம் முற்றக் கற்றவரல்லர். இவ் வறுவருள்ளும், ஒருவரேனும் தனித்தமிழாற்றலும் உலக வழக்கறிவும் பிறரை மேற்கொள்ளும் நெஞ்சுரமும் உடையவரல்லர். பர்.சாமிநாதர் தமிழ் இலக்கியத்துக்கு ஈடும் எடுப்புமற்ற அதிகாரியரே; ஆயின், தமிழ்மொழிக்கல்லர். கனம் காடன் மத்தேயுவும் வாரென் பெருமானும் மேனாட்டார். திருமான் (ஏ.) இலக்குமணசாமியார் தமிழறியாதவர்; தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர். ஆட்சி மன்ற அகரமுதலிக் குழு (The Syndicate Lexicon Committee) 1. கனம் (சி. (G.) பித்தெந்திரிகு. 2. திருவாளர் (Mr.) மார்க்கு அண்டர். 3. பர். (Dr.) (சே. (J.) எயிச்.) தோண் (Stone) 4. மதிதகு (Hon’ble) திரு. (Mr.) முறையாளியர் (Justice) (பி.ஆர்.) சுந்தரம்). 5. வயவர் (Sir) (கே.) இராமுண்ணி மேனன். 6. கனம் பர்.(ஈ.) மாண்டேய்து மேக்பேல். இவ் வறுவருள்ளும் ஒருவரேனும் தமிழ் இனத்தாரல்லர். தமிழ் அகரமுதலிக் குழுத் தலைவரின் தொடர்முறைப் பட்டி (Succession list of Chairmen of the Tamil Lexicon Committee) 1. fd« (nr.(J.) எசு.) சாந்திலர். 2. வயவர் (பி.எசு.) சிவசுவாமி. 3. மதிதகு திரு. முறையாளியர் (தி.வி.) சேசகிரி. 4. அராவ ஆண்டகை (கே.வி.) கிருட்டிணசாமி. இந் நால்வருள்ளும் ஒருவரேனும் தமிழ் இனத்தாரல்லர். பதிப்பாளர் தொடர்முறைப்பட்டி (Succession list of Editiors) 1. கனம் (சே. (J.) எசு.) சாந்திலர். 2. திருமான் (எசு.) அனவரதவிநாயகம் அவர்கள். 3. (சி.பி.) வேங்கடராமன் அவர்கள். 4. பர். (பி.எசு.) சுப்பிரமணியம். 5. (எசு.) வையாபுரி அவர்கள். இவ் வைவருள், கனம் சாந்திலர் தமிழ்ப் பற்றும் நடுநிலையும் ஊக்கமும் தொகுப்பு முறையறிவும் உடையவரேனும், மேனாட்டார். திரு.அனவரதவிநாயகம் தமிழ் வரலாறறியாது பிராகிருதத்திற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பிறழ வுணர்ந்தவர். திரு.வேங்கடராமன் தமிழ்ப் புலமை நிரம்பாத பிராமணர். பர்.சுப்பிரமணிய (சாத்திரியார்) சமற்கிருத அடிப்படையில் தமிழைக் கற்றுத் தலைகீழாகவும் தாறுமாறாக வும் தமிழிலக்கணத்துக்கு உரை கூறுபவர். திரு.வையாபுரியாரோ தமிழைக் காட்டிக் கொடுப்பதில் குயக்கொண்டானை மேற்கொண்டவர். தமிழ் அகரமுதலிப் பதிப்பாண்மைப் பணிக்குழு (The Editorial staff of the Tamil Lexicon) 1. பதிப்பாளர் - திருமான் (எசு.) வையாபுரி அவர்கள். 2. உதவிப் பதிப்பாளர் - திருமான் (வி.) நாராயணன் அவர்கள். 3. தலைமைத் தமிழ்ப் பண்டிதர் - திருமான் பண்டித (எம்.) இராகவன் அவர்கள். 4. சமற்கிருதத் தமிழ்ப் பண்டிதர் - திருமான் பண்டித (வி.எம்.) கோபாலகிருட்டிணன் அவர்கள். 5. கூடுதல் (Additional) தமிழ்ப் பண்டிதர் - திருமான் பண்டித (எசு.) சோமசுந்தரம்) அவர்கள். 6. உதவியாளர் - திருமான் (பி.ஆர்.) மீனாட்சிசுந்தரம் அவர்கள். இவ் வறுவருள், முதல் நால்வரே முதன்மையும் பொறுப்பும் வாய்ந் தவர். அவருள்ளும், பதிப்பாளரும் தலைமைத் தமிழ்ப் பண்டிதருமே தலைசிறந்த பொறுப்பு வாய்ந்தவர். பதிப்பாளரின் தமிழ்ப்பணிச் சிறப்பு முன்னரே குறிக்கப்பட்டது. அரசியல் துறையில் இறவாப் பெயர் தேடிக் கொண்ட குவிசுலிங் (Quisling) என்னும் நார்வே படைத்தலைவர் போல், மொழித்துறையில் இறவாப் பெயர் தேடிக்கொண்ட பெருமான் அவர். பண்டித (எம்.) இராகவ(ஐயங்கார்) கம்பர் தனிப்பாடலில் முட்டிபுகும் பார்ப்பார் என்று இருப்பதனை இட்டமுடன் பார்ப்பார் என்று திரித்தும், ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்னும் தொல்காப்பிய அடியிலுள்ள ஐயர் என்னும் சொற்கு ஆரிய மேலோர் என்று உரை வரைந்தும் அருந்தொண்டாற்றியவர். பண்டித (வி.எம்.) கோபாலகிருட்டிணமாச்சாரியார் அவர்களின் தமிழ்த் தொண்டு வடசொல் மிக்கனவும் அடிப்படைத் தென்சொற்களை யெல்லாம் வடசொல்லாகக் காட்டுவனவுமான அவர்கள் உரைநூல்கள் நன்கு விளக்கும். ஒரு நாட்டு இலக்கியத்தில் எந்நாட்டவரும் தேர்ச்சி பெற முடியும். ஆயின், ஒரு நாட்டு மொழியில் அந் நாட்டாரே யன்றி அயலார் தேர்ச்சிபெற முடியாது. ஒரு மொழியின் மரபும் (Idiom) வழக்காறும் (Usage), ஒலிப்பியலும் (Intonation) நூல் வாயிலாய் அயலார் அறிந்துகொள்ள இயலாவாறு, அம் மொழியாளரின் உள்ளத்திலிருந்து தோன்றுவன. ஆதலால், ஒரு நாட்டிற் குடிபுகுந்தவரின் வழித்தோன்றியவரே, பல தலை முறைக்குப்பின் அந் நாட்டுப் பழங்குடி மக்கள்போல் மொழித்தேர்ச்சி பெற முடியும். அதற்கு அம் மொழிப் பற்றும் அந் நாட்டுப் பழங்குடி மக்களோடு இரண்டறக் கலப்பு அல்லது நெருங்கிய தொடர்பும், இன்றியமையாதன வாகும். தமிழ்நாட்டுப் பிராமணர், தமிழையே தாய்மொழியாகக் கொண் டிருப்பினும், அவருள் ஒரு பகுதியாரின் முன்னோர் இங்கு வேத காலத்தி லேயே வந்தவரேனும், தமிழ் இலக்கியத் தலைமை அதிகாரியான பர். சாமிநாதரும் தமிழ்மொழியில் தேர்ச்சி பெறாமைக்குக் கரணியம் வருமாறு. 1. தமிழ்ப் பற்றின்மை அல்லது தமிழை வடமொழிக்குத் தாழ்வாகக் கொண்டிருத்தல். 2. இயன்றவரை மேன்மேலும் வடசொல்லையும் பிற சொல்லையும் வேண்டாது புகுத்தித் தமிழைக் கலவை மொழியாக்கல். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியில் ஆயிரக் கணக்கான தென்சொற்கள் விட்டுப் போயிருப்பதும், பல தமிழ்ச் சொற்கட்குத் தவறாகப் பொருள் கூறியிருப்பதும், பல சொற்கட்கு எல்லாப் பொருளும் கூறாமையும், .ஆயிரக்கணக்கான அயற்சொற்களை வேண் டாது சேர்த்திருப்பதும், அடிப்படைத் தென்சொற்களிற் பெரும்பாலான வற்றை வடசொல்லாக அல்லது பிற சொல்லாகக் காட்டியிருப்பதும், சொற்களையும் மரபு வழக்காறுகளையும் தவறான வடிவிற் குறித்திருப்ப தும், இவ் வழுக்களை யெல்லாம் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இருமுறை தெளிவாக எடுத்துக் காட்டியும் எள்ளளவும் பொருட்படுத்தாமையும், சென்னைப் பல்கலைக்கழகம் தமிழுக்கு மாறான தென்பதையும் இன்று நடைபெறும் இந்திய பாக்கித்தானப் போர் இந்தியாவுக்கு வெற்றியாக முடிந்த பின் அதனை மாற்றியமைக்க வேண்டுமென்பதனையுமே நமக்கு வற்புறுத்திக் காட்டுகின்றன. `சென்னைப் பல்கலைகழகத் தமிழகராதியின் சீர்கேடு' என்னும் என் திறனாய்வைக் கண்ட பின்னும், நம் பேராசிரியர் அவ் வகரமுதலியை ஓர் அளவைநூலாகக் கொண்டிருப்பது, காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாந் தான்கண்ட வாறு. (குறள். 849) என்னுந் திருக்குறளையே நினைவுறுத்துகின்றது. தமிழ்நாட்டில் எத்தனையோ பிற நாட்டு மக்கள் வந்து வாழ்கின்றனர். அவர்களின் அரசியற் சொற்களும் சமயவியற் சொற்களும் பிற துறைச் சொற்களும் தமிழ்நாட்டில் வழங்குகின்றன. ஆயின், அவற்றை யெல்லாம் தமிழ் அகரமுதலியிற் சேர்ப்பதும், தமிழ்ச்சொற்களென்று கொள்வதும், பேதைமையாகும். ஒரு நாட்டுப் பொதுவழக்கான மொழிவழக்கும் குழு வழக்கான அயலார் வழக்கும் வெவ்வேறாம். இஜ்ஜத்து (கண்ணியம், மானம்), இஜாஸத்து (உத்தரவு), இஷா (மாலை, மாலைத் தொழுகை), இஷாரா (குறிப்பு), இஷுக்கு (அன்பு, பற்று), இஷுராக்கு (விடியல், பொழுது புறப்பாடு), இஸ்திக்பார் (மன்னிப்பு வேண்டல்), இஸ்திலாக்கு (குழூஉக்குறி), இஸம் ( பெயர்), இஸீராபு (ஊதாரித்தனம்), இஹஸான் (நன்றி) - இத்தகைய சொற்களைத் தமிழென்று கொள்பவன் தமிழறியாதவன் அல்லது தமிழ்ப் பகைவனாகவே யிருத்தல் வேண்டும். 22. ``வசூல், தபா (முறை) ரஜா, இமாம், இலாகா, பிஸ்மில்லா, உருசு, கலிமா, காயம்(உறுதி), ஜேப்பி, சைத்தான், தகவல், தாக்கீது, தலாலி, நகாரா, மக்கர், மால்(மகால்) முதலிய பல சொற்கள் அன்றாடப் பேச்சில் புகுந்து தமிழொடு தமிழாய் வழங்குகின்றன''. வேதகாலப் பிராமணர் தென்னாட்டுக்கு வந்ததிலிருந்தே தமிழ் தாழ்த்தப்பட்டு வந்திருப்பினும் பல் வேள்விச்சாலை முதுகுடுமிப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்னும் பேதை வேந்தர் காலத்திலேயே அது தன் பெருமையை முற்றும் இழக்க நேர்ந்தது. தமிழரின் தாய்மொழி யுணர்ச்சி கொல்லப்பட்டதினால் பிற்கால மூவேந்தர் காலத்தில் பல அயன்மொழிச் சொற்கள் மொழிபெயர்க்கப் பெறாது தமிழில் தாராளமாய்ப் புகுந்து வழங்கத் தலைப்பட்டன. அதன்பின் நாயக்க மன்னரும் மராட்டிய மன்னரும் ஆண்ட காலத்தில், தமிழ்நிலை முன்னினும் பன்மடங்கு கெட்டது. இறைவ னருளால் ஆங்கிலேயர் வந்த பின்பே, தமிழர் ஆங்கிலக் கல்வியின் பயனாக மீண்டும் அறிவுக்கண் திறக்கப்பெற்று, தமிழின் தனிப் பெருமை யையும் ஆரிய ஏமாற்றையும் கண்டு தமிழைத் தூய்மைப்படுத்தி வருகின்றனர். பிறமொழிச் சொல்லால் தமிழ்த்தூய்மை கெடுவதுடன் தமிழ்ச்சொற்கள் வழக்கிறந்தும் இறந்துபட்டும் போகின்றன. மேற்கண்ட அரபிச் சொற்கள் கீழ்வருமாறு மொழிபெயர்க்கப் பெறும். அரபிச்சொல் தமிழ்ச்சொல் அரபிச்சொல் தமிழ்ச்சொல் வசூல் - தண்டல் காயம் - நிலைப்பு தபா - தடவை ஜேப்பி - சட்டைப்பை ரஜா - விடுமுறை சைத்தான் - அலகை இமாம் - தொழுவாசான் தகவல் - செய்தி இலாகா - திணைக்களம், துறை தாக்கீது - கட்டளை பிஸ்மில்லாஹி - கடவுள் தலாலி - தரகு திருப்பெயரால் நகாரா - பேரிகை உருசு - திருவிழா மக்கர் - இடக்கு கலிமா - நம்பக மந்திரம் மால் - அரண்மனை தமிழைப் பிறமொழிகள்போற் கருதிக்கொண்டு, கடன் சொல் எல்லாம் வளர்ச்சியெனக் கருதுவது கண்மூடித்தனமாகும். விவசாயம் என்னும் வடசொல் உழவு, பயிர்த்தொழில், பாண்டியம், வெள்ளாமை, சாகுபடி முதலிய தென்சொற்களை வழக்கு வீழ்த்தி வருவதையும், ஜன்னல் என்னும் போர்த்துக்கீசியச் சொல் பலகணி, சாளரம், காலதர் என்னும் தென் சொற்களை வழக்கு வீழ்த்தியிருப்பதையும், கண்டு உண்மை தெளிக. - ``தென்மொழி'' 1965 7 தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி தமிழிலக்கணத்தில் அயன்மொழி யமைப்புகள் (Foreign Models in Tamil Grammar) இறைவனருளால் இயன்ற அரைநூற்றாண்டாராய்ச்சியால், தமிழ் வேர்ச்சொற்பொருள் பெரும்பாலும் காணப்பெற்று, தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமான உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி யென்னும் உண்மை வெள்ளிடைமலையாய் விளங்கியபின், அதை உயிர்முதல் வேர்ச்சொற்கள், உயிர்மெய்ம்முதல் வேர்ச்சொற்கள் என்னும் இரு வேறு கட்டுரைத் தொடர்களால் ஒருவாறு காட்டி, இறுதியில், தமிழின் தலைமையை நாட்டும் தனிச்சொற்கள் என்றும் தொகுதிச் சொற்கள் என்றும் இருவகைக் கட்டுரைத் தொடர்களால் நாட்டி வருங்கால், தமிழைக் காட்டிக் கொடுக்கும் வையாபுரிகளின் வேலை மீண்டும் வலுத்து அரசையும் பல்கலைக்கழகங்களையும் மயக்கி, தமிழ் முன்னேற்றம் சாணேறியபின் முழஞ்சறுக்கியிருப்பதனால், வீடு ஒரு புறத்தில் தீப்பற்றி வேகும்போது அதை யணைக்கும் வரை வேறொரு புறத்தில் புதிதாய் வேய்தலை நிறுத்தி வைத்தல் போன்று, என் மொழியாராய்ச்சிக் கட்டுரைத் தொடர் வெளி யீட்டைக் குறுங்காலிகமாக நிறுத்திவிட்டு, பர். (Dr.) தெ.பொ.மீ. யின் தமிழிலக்கணத்தில் அயன்மொழி யமைப்புகள் என்னும் தீய நூல் தீந்தமிழ்க்கு மேலுந் தீங்கு விளைத்தலைத் தடுத்தற்பொருட்டு, அதைச் சிறுசிறு பகுதியாகப் பகுத்துச் சீரிய வரலாற்று மொழிநூன் முறையிற் செகுத்து, தவிடுபொடியாய்த் தகர்த்தெறிதலைக் குறிக்கோளாகக் கொண்டது இத் தொடர் கட்டுரை யென்று தெரிந்துகொள்க. நன்னாட்டின் இலக்கணங் கூறுமிடத்து, பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு (குறள், 735) என்றார் தென்னவர் தலைவர் திருவள்ளுவர். அவர் குறித்த முக்கேடுகளும் முற்றி முதிர்ந்தது முத்தமிழ் நாடு. பல்குழு முதற்கண் பிறநாடுகளிற் போன்றே பிறப்பொடு தொடர்பில்லாது இயங்கி வந்த அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வகைத் தலைமைத் தொழில் வகுப்புகளும், வேளாளரின் பதினெண் பக்கத் தொழில் வகுப்புகளும், பிற்காலத்தில் ஆரியச் சூழ்ச்சியால் பிறப்பொடு தொடர்பு படுத்தப்பட்டு, நூற்றுக்கணக்கான அகமணக் குலங்களாகப் பல்கிக் காற்றிற் பறக்கும் பூளைப் பஞ்சுபோற் பறக்கடிக்கப்பட்டுச் சிறிதும் ஒற்றுமையின்றிச் சின்னபின்னமாகச் சிதையுண்டு போயின. அதோடு கல்வியுரிமையிழந்து, முதற்காலத்தில் நூற்றிற்கிருபத்தைவர் பாவலராயிருந்த தமிழ் இனம் நூற்றிற்குத் தொண்ணூற்றுவர் தற்குறிகளான தொகுதியாகவும் மாறிற்று. பிறவிக்குலப் பிரிவினைக்குமேல் ஆரிய மத வேறுபாட்டாலும் தமிழர் ஒற்றுமை குலைந்தது. இன்று அரசியற் கட்சிகளால் ஏற்பட்டுள்ள ஒற்றுமைக்கேடு கொஞ்சநஞ்ச மன்று. இந் நிலையில், தமிழைக் காத்தற்கும் வளர்த்தற்குமென்று தோன்றிய கழகங்களும் ஒன்றுபட்டவையல்ல. மதுரைத் தமிழ்ச்சங்கம், கரந்தைத் தமிழ்ச்சங்கம், திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச்சங்கம், தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழகப் புலவர் குழு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பெங்களூர்த் தமிழ்ச்சங்கம் முதலிய பல்வேறு கழகங்களும் மன்றங்களும் குழுக்களும், பழைய பாண்டியன் தமிழ்க் கழகம்போல் ஒரே அமைப்பக மாக ஒன்றினாலன்றித் தமிழுக்குப் பெருநன்மை செய்தல் இயலாது. உட்பகை பழங்காலப் பேதை மூவேந்தரும், ஆரியப் பூசாரியரின் வெண் ணிறத்தால் அவரை நிலத்தேவ ரென்றும், எடுப்பொலியால் அவரது இலக்கிய மொழியைத் தேவமொழியென்றும், முற்றும் நம்பிவிட்டதனால், வடமொழியை வழிபாட்டு மொழியாக உயர்த்தவும் தமிழைத் தாழ்த்தவும் நேர்ந்துவிட்டது. அக் கால வேந்தர் கண்கண்ட தெய்வமாதலாலும், அரசன் எப்படி, குடிகள் அப்படி என்பதனாலும், புலவர் பலரும் அவரைப் பின்பற்றிவிட்டனர். இங்ஙனம் அரசரும் குடிகளும் ஆரிய வழிப்பட்டதற்கு, ஆரியப் பூசாரியர் சிவனியம் மாலியம் என்னும் இரு தமிழ் மதங்களையும் தழுவி அவற்றைத் தமவென்று ஏமாற்றியதே அடிப்படைக் கரணியம். ஆரியப் பூசாரியரின் வழியினர் பல அரசியற் பதவிகள் ஏற்றதையும், பாட்டும் கூத்தும் பயின்றதையும், பல தொழிலாளரையும் பிறப்பொடு தொடர்புபடுத்தியதையும், கல்வியைத் தமக்கே உரிமையாக்க முயன்ற தையும், தமிழரைத் தாழ்த்தித் தம்மை உயர்த்தி வந்ததையும், நுண்மாண் நுழைமதித் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் நோக்கி, ஆரியச் சூழ்ச்சி யென்று கண்ட பின்னரே, தமிழர்க்கு விழிப்புணர்ச்சியூட்டத் திருக்குறளை இயற்றினார். அக்காலத்தில் உலக வரலாற்றறிவும் மொழிநூலாராய்ச்சியும் இன்மையால், திருவள்ளுவர் மொழித்துறையில் ஆரியத்தை எதிர்க்க வில்லை. ஆயின், அவர் நூலால் தமிழாரிய வேறுபாட்டுணர்ச்சி தோன்றிவிட்டதனாலேயே, 2ஆம் நூற்றாண்டில் வையாபுரிப் பிள்ளை போன்ற கொண்டான் அல்லது கோடன் என்னும் குயவன், ஆரியம் நன்று, தமிழ்தீது எனவுரைத்து, பரிதிமாற் கலைஞன் போன்ற நக்கீரரால் சாவிக்கவும் பின்னர் உயிர்ப்பிக்கவும் பட்டான். 11ஆம் நூற்றாண்டில் புத்தமித்திரன் மதவெறியாலும் ஆரியத்திற் கடிமையாலும்,18ஆம் நூற்றண்டில் சுவாமிநாத தேசிகர் ஆரியத்திற் கடிமையாலும் தமிழைக் காட்டிக் கொடுக்க நேர்ந்தது. இவ் விருபதாம் நூற்றாண்டில், உலக வரலாற்றறிவும் ஒப்பியல் மொழி நூலாராய்ச்சியும் ஆங்கிலக் கல்வியும் பேச்சுரிமை, யெழுத் துரிமையும் மிகுந்திருப்பதால், தமிழைக் காட்டிக்கொடுக்கக் காரணமே யில்லை. ஆயினும், ஆங்கிலத்திற் பட்டக் கல்வியும் சட்டக் கல்வியும் பெற்றும், வேறெம் மொழியிலு மில்லாத பொருளிலக்கணங் கொண்ட தமி ழிலக்கியங் கற்றும், வையாபுரிப் பிள்ளையும் பர். தெ. பொ. மீ.யும் தமிழை வடமொழி வழியதாகக் காட்டியதற்கு, நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும் (குறள். 373) என்பதே காரணமாதல் கூடும். பார்த்தமட்டில் தோன்றா அல்லது தெளிவாய்த் தோன்றா என்று பொருள்படும் விழிப்பத் தோன்றா என்னும் எளிய தொல்காப்பியத் தொடருக்கு, தோன்றவே தோன்றா (beyond ascertainment) என்று வையாபுரிப் பிள்ளை கூறியதும், மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப புகரறக் கிளந்த அஃறிணை மேன (மொழி. 49) என்னும் போலிபற்றிய தொல்காப்பிய நூற்பாவை ஒருமை, பன்மை எண் பற்றியதென்று பர். தெ.பொ.மீ. கூறியதும், மேற்குறித்த குறளாலேயே விளங்கும். ஏறத்தாழ மூவாயிரமென்று, ஒருவகையிற் கணிக்கப்படும் உலக மொழிகளுக்குள், தமிழுக்குப் போன்று உட்பகை வேறெதற்கும் இருப்பதாகத் தெரியவில்லை. கொல்குறும்பு தொன்றுதொட்டுத் தமிழரிடை வதிந்து, தமிழரிடமிருந்தே ஊணுடை யுறையுள் பெற்று, தமிழையே தாய்மொழியாகவும் வாழ் மொழியாகவுங் கொண்டு, தமிழராலேயே முன்னேறி, தமிழர் துணை யாலேயே வாழ்ந்து வரும் தமிழ்நாட்டுப் பிராமணர், செய்ந்நன்றி கொன்று வளர்த்த கடா மார்பிற் பாய்ந்தாற் போன்று தமிழரை யெதிர்த்துப் பிறப்பிலிழிந்தவரென்று தாழ்த்தி, அறிவாராய்ச்சி மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டிலும் தமிழை முன்போல் வழிபாட்டு மொழியாகாதவாறு தடுத்து, அதன் தூய்மையை இயன்றவரை கெடுத்து, தமிழ்க் கலையறிவியல் மூல நூல்களையும் வடமொழி மொழிபெயர்ப்பு நூல்களின் வழியினமாகக் காட்டிவருகின்றனர். இதற்குமேல், வடநாட்டு இந்தியாரும் இன்னொரு கொல்குறும்பாகத் தோன்றியுள்ளனர். வடமொழியும் இந்தியும் ஒன்றுக்கொன்று துணை செய்கின்றன. இவ் விரண்டையும் ஏற்கும் பேராயத் தமிழர் உட்பகையாக மாறியுள்ளனர். பர். தெ.பொ.மீ. இவர் வையாபுரிப் பிள்ளையை அடியொற்றிச் செல்பவர்; மாந்தன் தோன்றியகத்தையும் தமிழன் பிறந்தகத்தையும் ஆரியம் தோன்றிய வகையையும் ஆராய்ந்தறியாதவர்; தமிழின் குமரிநாட்டுத் தோற்றத்தை ஒப்புக்கொள்ளாதவர். தமிழரின் முன்னோர் நண்ணிலக் கடற்கரை நாடுகளி னின்று வந்தவ ரென்று வாயினாற் சொல்லாவிடினும் உள்ளத்தில் ஒப்புக் கொள்பவர்; தமிழ் வேர்ச்சொற்களை அறியாதவர்; அதனால் ஆரியத்தை முதன்மையாகவும் தமிழை வழிநிலையாகவும் வைத்து மொழியிலக்கிய வரலாறுகள் எழுதி வருபவர் (History of the Tamil Language, A History of Tamil Literature), இவர் தமிழ்க் கலைக் களஞ்சியத்தில் சில கட்டுரைகளும் வரைந்துள்ளார். அடிப்படை தவறானபடியால் முடிபுகளும் பெரும்பாலும் தவறாகவே யிருக்கும். இவர் இறுதியாக எழுதி 1974-ல் வெளியிட்ட ஆங்கில நூல் , தமிழிலக்கணத்தில் அயன்மொழியமைப்புகள் என்று பொருள்படும். ‘Foreign Models in Tamil Grammar’ என்னும் தலைப்புக்கொண்டது. எகர ஒகரத் தியற்கையு மற்றே (நூன்மரபு, 16) என்னும் தொல்காப்பிய நூற்பா இவர் முடிபிற்குப் பெருந் துணை செய்வதாகத் தோன்றுகின்றது. தொல்காப்பியம் இயற்றமிழிலக்கணம் முழுவதையும் ஓரளவு விரிவாகக் கூறும் ஒரே பண்டை நூலாயினும், இடையிடைப் பல படுகுழி களையும் கவர்வழிகளையும் கொண்டிருப்பதால், தமிழ் வேர்ச் சொல் லாராய்ச்சியும் தமிழன் பிறந்தக ஆராய்ச்சியும் இல்லாதார் எத்துணைத் தென்மொழியும் வடமொழியும் கற்றிருப்பினும், தொல்காப்பியத்தை மொழி வரலாற்றிற்குப் பயன்படுத்த இயலாது. இந் நூலை இவரைக்கொண்டு எழுதுவித்தது, கேரளப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த V.I. சுப்பிரமணியம், கன்னடப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த R.C. இரேமத்து (Hiremath), திருப்பதிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த K. மகாதேவ சாத்திரி (Sastri) ஆகிய மூவர் குழு. இம் மூவருள் முதல்வர் தமிழைத் தலைகீழாகப் படித்தவர்; ஏனையிருவர் தமிழறியாத பெருமாளர். இந் நூல், புத்தமித்திரன் இயற்றிய வீரசோழியம், சுப்பிரமணிய தீட்சிதர் இயற்றிய பிரயோக விவேகம், சுவாமிநாத தேசிகர் இயற்றிய இலக்கணக் கொத்து ஆகிய மூன்று தள்ளுபடி நூல்களையும் விழுமிய அளவை நூலாகக் கொண்டு, உண்மைக்கு மாறானவும் தமிழுக்குக் கேடானவுமான முடிபுகளைக் கூறுவது. தமிழிலக்கணம் வடமொழி வழியதென்று திரித்துக் கூறுவதால், நல்லிசைப் புலவராலும் அடிப்பட்ட சான்றோராலும் உண்மைத் தமிழ ராலும் உயரிய இலக்கண நூலாராலும் உதவாக் கடையென்று ஒதுக்கப்பட்ட கழிசடை நூல்களையே, இந் நூலாசிரியர் கருவி நூல்களாகத் தேடி யெடுத்துக் கொண்டதனால், இவரது மனப்பான்மை எவருக்குந் தெற்றென விளங்கும். இவரது இத் திருப்பணிக்கு 40,000 (நாற்பதினாயிரம்) உருபா உதவியது தி.மு.க. அரசே. இங்ஙனம் தமிழனே தமிழனிடம் பெற்ற தமிழ்ப் பணத்தைக் கொண்டு தமிழ்நிலத்திலேயே தமிழுக்குக் கேடான ஒரு போலிப் புன்னூலை யுருவாக்கித் தமிழ்ப் புலவர் முன்பே உலகிடைப் பரப்பியிருப்பதை, உள்ளுந்தொறும் உள்ளஞ் சுடும். சமற்கிருத அடிப்படையில் தமிழைக் கற்றுத் தமிழைப் பிறழ வுணர்ந்த இவரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒரு தமிழதிகாரியாக அமர்த்திற்று. அதனால் தமிழுக்கு விளைந்த தீங்கு கொஞ்சநஞ்ச மன்று. முதலாவது, அப் பல்கலைக்கழகத்தில் என்னால் தொகுக்கப்பட விருந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலிப் பணி தடுப்புண்டது. அதனால் வெளியேற்றப்பட்டேன். என்னொடு தமிழும் வெளியேறிற்று. அவ் வகரமுதலியைப் பர். தெ.பொ.மீ.யும் தொகுத்தாரல்லர். அவரால் தொகுக்கவும் இயலாது. இரண்டாவது, கால்டுவெலார் காலம்வரை கையாளப்பட்டு வந்த கொடிவழியியல் மொழிநூல் விலக்கப்பட்டு, அறிவியலல்லாத அமெரிக்க வண்ணனை மொழிநூல் புகுத்தப்பட்டது. கொடிவழியியல் மொழிநூலால் ஆரிய ஏமாற்றுக் குட்டு வெளியாகிவிடும். ஆதலாற் பிராமணர் அதை விரும்புவதில்லை. அதனால், அவர்வழிச் செல்லும் தெ.பொ.மீ.யும் அதைப் புறக்கணித்துவிட்டார். மூன்றாவது கிளைமொழியியல் என்னும் பெயரால், செந்தமிழ் மரபை மீறிக் கொடுந்தமிழினுங் கேடான கடுங் கொச்சைச் சொற்களும் உயர்ந்தோர் வழக்கிற் கொப்பாகத் தொகுக்கப்படுகின்றன. இது, கீழோர் பழக்கவழக்கங்களையும் மேலோர் மேற்கொள்ள வேண்டும் என்பது போலாகின்றது. நான்காவது, உலக வரலாறு (World History), ஒப்பியன் மொழிநூல் (Comparative Philology), குமுகாயப் பண்பாட்டு மாந்தனூல் (Social and Cultural Anthropology) என்னும் உலகந்தழீஇய மூவறிவியல்களின் வளர்ச்சி குன்றுகின்றது. ஐந்தாவது, ஆரியம் என்னும் இலக்கியப் பிராமணியம் வலுத்து வருகின்றது. இதன் விளைவாக, அண்மையில், பதுமா சுப்பிரமணியம் என்னும் பிராமண நடிகையார், தமிழருக்கு நடக்கலையே தெரியாதென்றும், காசுமீரப் பரத முனிவரின் பரத சாத்திரத்தைக் கற்றே அக் கலையை அறிந்தனரென்றும், ஒர் இடுநூல் இட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திற் பண்டாரகர்ப் பட்டம் (Doctroate) பெற்றதாகச் சொல்லப்படுகின்றது. இது, மீன்குஞ்சே தாய்மீனை நீந்தப் பயிற்றியது என்னுங் கூற்றை யொத்தது. இப் பட்டவளிப்பு, அண்ணாமலைப் பல்கலைக்கழக நடப்பேராசிரியரை மட்டு மன்றித் தமிழ்ப் பேராசிரியரையும் ஆட்சிக் குழுவையும் தலைமை யதிகாரி களையும் தாக்குகின்றது. இதனால், முத்தமிழ் என்னும் பெயரே முழுப் பொருளையும் இழக்கின்றது. அரசவயவர் அண்ணாமலைச் செட்டி யார் அவர்களின் தமிழிசைப் போராட்டம் முற்றும் பயனற்றதாகின்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்ச்சிக்குத் தோன்றிய தென்ப தும் தவறாகின்றது. உலகத் தமிழ்ப் புலவர் அனைவரும் அடிமடையரும் அஃறிணையும் ஆகின்றனர். தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலக முதற்றாய் உயர்தனிச் செம் மொழி யென்றும், கி.மு. 10,000 ஆண்டுகட்கு முற்பட்ட தலைக் கழகத்தி லேயே முத்தமிழ் தோன்றிவிட்ட தென்றும், தமிழின் 4ஆம் மடித்திரிபான மேலை யாரியத்தின் கிரேக்கப் பிரிவை யொத்த ஒரு மொழியைப் பேசிக்கொண்டு இலக்கியமும் எழுத்துமின்றி முல்லை நாகரிக நிலையில் கி.மு. 1500 போல் இந்தியாவிற்குட் புகுந்து தம் மொழி வழக் கிழந்து, வேதமொழியையும் அதற்குப் பிற்பட்ட சமற்கிருத மொழியையும் இலக்கிய மொழியாகவே கொண்டு, இந்திய மொழிகளையே பேசிவரும் ஆரிய வழியினர் எல்லா வகையிலும் தமிழராலேயே நாகரிகமடைந்து சூழ்ச்சி யாகத் தம்மை யுயர்த்திக் கொண்டு, தமிழ் மூலநூல்களை யெல்லாம் வடமொழியில் மொழிபெயர்த்துக் கொண்டபின் அழித்துவிட்டனர் என்பதை, அறிந்து அம்மையார்க்குக் கொடுத்த பட்டத்தை அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தை மீட்டுக் கொள்ளும் காலம் அண்மையி லிருக்கின்றது என்பதை, இன்று குதித்துக் கூத்தாடிக் குலவிக் கொண்டாடிக் கொட்டமடிக்கும் தமிழ்ப் பகைவர் அறிவாராக. குறிப்பு: தனிப்பட்ட முறையில் பர்.தெ.பொ.மீ. யொடு எனக்கு எட்டுணையும் பகைமையில்லை. அவரை என் உண்மை நண்பர் எனவும் பின்வாங்கேன். ஆயின், அவருக்கும் எனக்கும் பொதுவான தாயைப் பழிப்பதும் முன்னோரைத் தகவிலர் என்பதும் போன்ற கொள்கையையும் கூற்றையுமே வன்மையாய் எதிர்க்கின்றேன். மூவாயிரவாண்டு மறையுண்டு கிடந்த முத்தமிழ் மாண்பு மீண்டும் உலகுக்கு வெளிப்படவிருக்கின்றது. இது இறைவன் ஏற்பாடு. இதை எவருந் தடுக்க வியலாது. ஆதலால், வையாபுரிப் பிள்ளைபோல் வசைபெற வாழாது, இனிமேலாயினும் திருந்தி உண்மை விளம்பியென்று பெய ரெடுக்க. மேலையறிஞர் இற்றை அறிவியல்களுக்கன்றிப் பண்டு தோன்றிய மொழிகட்கு அதிகாரிகளாகார் என்பதைத் தெற்றென வுணர்க. பர்.தெ.பொ.மீ.யின் தமிழிலக்கணத்தில் அயன்மொழி யமைப்புகள் (Foreign Models in Tamil Grammar) என்னும் தமிழிலக்கண ஆராய்ச்சி நூல், 9 அதிகாரங்களும் 4 பின்னுரைகளுமாக 13 கட்டுரைகளைக் கொண்டது. அவற்றுள் முதலது, தமிழிலக்கண வரலாறு' (A History of Tamil Grammar) என்னுந் தலைப்பையுடையது. தமிழிலக்கண வரலாறு இதில், ஆசிரியர் தம் ஆராய்ச்சி நூல் முழுமைக்கும் முன்னுரையாகத் தொல்காப்பியம் முதல் இவ் விருபதாம் நூற்றாண்டில் மாணவர்க்கு எழுதப்பட்ட உரைநடை யிலக்கணச் சுவடிகள் வரை, இற்றைத் தமி ழிலக்கண நூல்களையெல்லாம் பெரும்பாலுங் காலமுறைப்படி எடுத்துக் கூறி, அவற்றின் ஆசிரியர், உரையாசிரியர், புரவலர், மரபுச்சார்பு, இலக்கணப் பிரிவு. மொழிநடை முதலிய குறிப்புகளையும் சுருக்கமாகக் குறித்திருக் கின்றார். தமிழிலக்கணத்தை ஆரியச் சார்பினதாகக் காட்டுவதே பர். தெ.பொ.மீ.யின் அடிப்படைக் குறிக்கோளாதலால், தொல்காப்பிய மரபு, நன்னூல் மரபு, சமற்கிருத மரபு எனத் தமிழிலக்கண நூல்களை மூவேறு மரபினவாக வகுத்துக் கூறுவதை முதன்மையாகக் கொண்டிருக்கின்றார். இங்ஙனம் வேறுபட வகுத்திருப்பினும், முதலிரண்டும் அடிப்படையில் அல்லது ஒருமருங்கு சமற்கிருதச் சார்பென்றும், இறுதியது முற்றும் சமற் கிருதச் சார்பென்றும், கொள்வதே அவர் கருத்து. இது தொல்காப்பியம் பாணினீய வழியதென்று பின்னர்க் கூறுவதால் தெரியவரும். தமிழிலக்கணம் தனிப்பட்டதென்றும் இன்றும் ஒப்புயர்வற்ற தென்றும் அறிதற்கு, அதன் பொருளதிகாரமே போதிய சான்றாம். சமற்கிருதத்திற் பொருளிலக்கண மின்மையால், சொல்லதிகாரமே அதற்குச் சிறந்ததாகக் கொள்ளப்படும். தமிழிலோ, பொருளிலக்கணமே இலக்கண மென்றும், அதை யறிதற்குக் கருவியே எழுத்துஞ் சொல்லுமென்றும் கொள்ளப்படும். அரசன், இனி நாடு நாடாயிற்றாகலின் நூல் வல்லாரைக் கொணர்க வென்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க, எழுத்ததிகாரமுஞ் சொல்லதிகார மும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலே மென்று வந்தார். வர, அரசனும் புடை படக் கவன்று, என்னை? எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதி காரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின், இவை பெற்றும் பெற்றிலேம் எனச் சொல்லா நிற்பஎன்று இறையனா ரகப்பொருளுரை உரைத்தல் காண்க. இங்ஙனமிருந்தும், இற்றை அகப்பொருள், புறப்பொருள் இலக்கண விலக்கியமெல்லாங் கற்றும், தமிழின் பெருமையையும் அதன் இலக்கண வுயர்வையும் இற்றைத் தமிழ்ப் பேராசிரியர் பலரும் உணராதிருப்பதற்கு, அவர் முன்னோர் மூவாயிர வாட்டை யாரிய வடிமைத்தனத்தில் உழன்ற தனாற் பகுத்தறி விழந்தமையே காரணமா யிருத்தல் வேண்டும். இனி, ஒரு தனிப்பட்டவர் அல்லது சாரார் உயர்நிலை யடைந் திருப்பின், அந் நிலை தொன்றுதொட்டதென்றே துணிய வியலாது. களவு செய்தும் பிறர்பொருள் பறித்தும் அவர் அந் நிலை யடைந்திருக்கலாம். அதை வரலாறு கொண்டு அறிதல் வேண்டும். ஆங்கிலர் 1765-ல் நீராவிப் பொறி புனையுமுன் இலக்கியத்தில் தமிழரினும் தாழ்ந்தன்றி உயர்ந்திருந்ததில்லை. அங்ஙனமே, இந்திய ஆரியரும் தமிழரொடு தொடர்புகொள்ளு முன், சிறுதெய்வ வழுத்துத் திரட்டாகிய வேதந்தவிரத் தமிழர்போல் இலக்கிய விலக்கணம் உடையரா யிருந்ததில்லை. இன்றோ, ``குப்பை யுயர்ந்தது, கோபுரந் தாழ்ந்தது'' என்னும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், வேத ஆரியரின் முன்னோர் மொழியும் ஒருவகைத் தமிழ்த் திரிபே என்பது பின்னர் விளக்கப்படும். பர். தெ.பொ.மீ. தமிழாரிய மொழிகளின் தோற்றத்தையும் நெட் டிடைப்பட்ட முன்மை பின்மையையும் தென்மை வடமையையும் ஆராய்ந்தறியாமையால், அவ் விருமொழிகளும் இற்றை நிலையிலேயே தொன்றும் இருந்ததாகக் கொண்டு, தொல்காப்பியமே தமிழிலக்கண முதனூலென்றும், அது பாணினீயத்திற்குப் பிற்பட்டதென்றும் கிறித்தவ வூழித் தொடக்கக் காலத்தின தென்றும், அதிற் கூறப்பட்டுள்ள ஆற்றுப்படை யிலக்கணம் பத்துப்பாட்டு ஆற்றுப்படைகளையே மூல இலக்கியமாகக் கொண்டதனால் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தோன்றிய பிற்காலத் தொல் காப்பியத்தைச் சேர்ந்ததென்றும், பன்னிருபடல ஆசிரியர் பன்னிரு வரின் ஆசிரியர் ஒருவரே அகத்தியரென்றும், அவர் உடம்படுமெய்பற்றி முற்காலத் தொல்காப்பியரொடு கருத்து வேறுபடுகிறாரென்றும், தமக்குத் தோன்றியவாறெல்லாம் பலபடக் கூறியுள்ளார். தமிழ் உலக முதல் உயர்தனிச் செம்மொழியாதலால், அதன் முதற்கால இலக்கணங்களெல்லாம் வரலாற்றிற் கெட்டாத தொன்முது பழைமையன; எண்ணிறந்தன; பெயருந் தெரியாவாறு இறந்துபட்டன. தொல்காப்பியச் சிறப்புப் பாயிர ஆசிரியரான பனம்பாரனார், செந்தமிழ் வழக்கொடு சிவணிய நிலத்து முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் என்று, தொல்காப்பிய முதனூல்கள் பலவெனப் பொதுப்படக் குறித்தார். தொல்காப்பிய முதல் நூற்பாவே, எழுத்தெனப் படுப, முப்பஃ தென்ப என்று முன்னூலையும் முன்னூலாசிரியரின் பன்மையையும் குறிக் கின்றது. ஆதலால், தொல்காப்பியம் சார்பிற் சார்பான பண்டைப் பன்னூல் தொகுப்பேயன்றிப் புதுப்படத் தோன்றிய தனிநூலன்று. பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பே ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர். (தொல்.செய்.78) ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே (செய்.104) மருட்பா பரிபாட் டெனவிரு வகையும் மருவிய கலவைப் பாவென மருவும் வண்ணந் தானே நாலைந் தென்ப. (செய்.204) வனப்பியல் தானே வகுக்குங் காலை அம்மை அழகு தொன்மை தோலே விருந்தே இயைபு புலனே இழைபென எண்வகை யாமென் றியம்பினர் புலவர். பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் பாட்டி னியல பண்ணத்தி யியல்பே. (செய்.178) இங்ஙனம் பல்வேறு வகைப்பட்ட யாப்பியற் கூறுகட்கும் எடுத்துக் காட்டிலக்கியம், தொல்காப்பியத்திற்கு முந்தியதே யன்றிப் பிந்தியதன் றென்பது வெளிப்படை. இயைபு என்னும் வனப்பிற்குச் சிலப்பதிகாரமும் மணிமேகலையுமே மூல இலக்கியம் என்பதற்கும் இடமில்லை. அவ் விரு பாவியங்களும் னகர மெய் யொன்றையே பாட்டிறுதியாகக் கொண்டுள்ளன. ஞகார முதலா னகார வீற்றுப் புள்ளி யிறுதி இயைபெனப் படுமே (தொல்.செய்.238) என்பது இயைபிலக்கண மாதலால், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஐம்மெல்லின வீற்றிலும் இற்ற பாட்டுகளைக் கொண்ட ஐவகை இயைபு வனப்பிற்கும் மூலவிலக்கியம், தொல்காப்பியத்திற்கு முந்தியதாகவே இருத்தல் வேண்டும். அதுபோன்றே, கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும் (தொல். புறத். 36) என்னும் ஆற்றுப்படை யிலக்கணத்திற்கும் மூல இலக்கியம், தொல் காப்பியத்திற்கு முந்தியதே யென்பது தானே பெறப்படும். பாணினிக்கு முந்திய கி.மு.7ஆம் நூற்றாண்டுத் தொல்காப்பியரும், கி.பி.7ஆம் நூற்றாண்டுபோ லியற்றப்பட்ட பன்னிருபடல ஆசிரியருள் ஒருவரான தொல்காப்பியரும், ஆக இருவர் தொல்காப்பியர் என்று கொள்ள இடமுண்டு. ஆயின், இரு தொல்காப்பியம் இருந்ததில்லை. முற்காலத் தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என்னும் முக்கூறும் பற்றிய இயற்றமிழிலக்கணம் முழுமையும் தொகுத்தவர். அந் நூலே தொல் காப்பியம் என அன்றிருந் தின்றுவரை வழங்கி வருகின்றது. பிற்காலத் தொல்காப்பியர், பர். தெ.பொ.மீ. கூறுகின்றவாறே, பன்னிருபடலத்துள் முதலதாகிய வெட்சிப் படலத்தை இயற்றியவர். ஆற்றுப்படையிலக்கணம் பொருளதிகாரத்தில் பாடாண்திணைக் குரியதேயன்றி வெட்சித் திணைக் குரியதன்று. இனி, வெட்சிப்படலம் இயற்றியவரே பாடாண் படலமும் இயற்றி யிருக்கவும் முடியாது; ஒருகால் இயற்றியிருப்பினும் அதைப் புலவர் தொல்காப்பியத்தோடு மயக்கியிருக்கவும் முடியாது. இறையனா ரகப்பொருளொடு நம்பியகப்பொருளை மயக்குவாரில்லை. அதுபோன்றே இதுவும். இலக்கியங் கண்டதற் கிலக்கணம் இயம்பலின் (நன். 141) இலக்கிய மின்றி யிலக்கண மின்றே (பேரகத்.) என்பதனால், இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு முன் எத்துணையோ இலக்கிய வனப்புகள் இருந்திருத்தல் வேண்டும். இனித் தொல்காப்பியத்தில் சில ஆரியக் கருத்துகளும் குறிப்புகளு மிருப்பதால், தனித்தமிழ் நூல்களெல்லாம் அதற்கு முற்பட்டே யிருந்து இயற்கையாலும் செயற்கையாலும் அழியுண்டிருத்தல் வேண்டும். ஆயின் பர். தெ.பொ.மீ. தொல்காப்பியத்தையே தமிழ் முதனூலாக வும், ஆற்றுப்படை யிலக்கணத்தைப் பத்துப்பாட்டிற்குப் பிற்பட்டதாகவும், தொல்காப்பியரை அகத்தியருக்கு முந்தியவராகவும், காட்டியிருப்பதால், அவர் காலத்திற்குமுன் மூவேந்தராட்சியும் புலவர் பாணர் கூத்தர் பொருநர் விறலியர் முதலியோர் வாழ்க்கையும், தமிழிலக்கிய விலக்கணமும் தமிழ நாகரிகமும் இருந்ததில்லையென்றே, ஆராய்ச்சியில்லார் கருத வைத்துள் ளார். இம் மயக்கை அறவே மறுத்தற்குப் பாட்டுரை நூலே என்ற தொல் காப்பிய நூற்பா ஒன்றே போதியதாகும். தொல்காப்பியர் போன்றே அகத்தியரும் இருவராவர். முதலகத்தியர் வான்மீகியார் காலத்தவர். அவரே முதன்முதலாகத் தென்னாடு வந்த ஆரியர். அதனால், பனிமலை யெழுச்சியும் குமரிமலை முழுக்கும் அவர் வரவொடு தொடர்புபடுத்திக் கதை கட்டப்பட்டது. அவர் முத்தமிழுங் கற்றுத் தம் பெயரில் ஒரு முத்தமிழிலக்கண நூலியற்றினா ரென்பது, வீரமா முனிவர் செய்தியை நோக்கின் ஐயுறவிற் கிடந்தருவதன்று. அம் முத்தமிழகத்தியம் இறந்துபட்டது. என்றுமுள தென்றமிழி யம்பியிசை கொண்டான் (ஆரணிய. அகத். 47) என்று கம்பரும் பாடுதல் காண்க. இரண்டாவது அகத்தியர், கி.பி. 7ஆம் நூற்றாண்டுப் பன்னிருபடல ஆசிரியன்மாரின் ஆசிரியரா யிருந்திருக்கலாம். அவரியற்றிய இயற்றமி ழிலக்கண நூலாகிய அகத்தியத்தினின்றே, உரையாசிரியன்மார் சில நூற்பாக்களை எடுத்தாண்டுள்ளனர் போலும்! பிற்காலப் பேராசிரியத் திரட்டு என்பது ஆராய்ச்சிக்குரிய தன்று. ஈருயிரொலிகள் இடையீடின்றி யொலிக்கும்போது, இடையில் யகர மெய் அல்லது வகரமெய் தோன்றுவது எல்லா மொழிகட்கும் பொது வியல்பாம். அங்ஙனம் தோன்றும் மெய் உடம்படுமெய் எனப்படும். அதை எல்லா மொழிகளும் எழுத்திற் குறிப்பதில்லை. எ-கா: மணி + ஓசை = மணியோசை உடம்படுமெய் குறிக்கப்படும் பல + ஆறு = பலவாறு } தமிழ் my + object = my object, உடம்படுமெய் குறிக்கப்படா you + are = you are } ஆங்கிலம் தமிழிலும் உடம்படுமெய் முதற்கால எழுத்திற் குறிக்கப்படாதிருந் திருக்கலாம். ஒலியறிவும் மெய்ப்பொருளறிவும் மிக்க பிற்காலத்தில், அது குறிக்கப்பட்டது. எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார் (புணரியல் 38) என்பது, உடம்படுமெய்பற்றிய தொல்காப்பிய நூற்பா. இதற்கு நச்சினார்க்கினியர் உரை வருமாறு: நிலைமொழியும் வருமொழியுமாய்ப் புணரும் எவ்வகை மொழிக் கும், உயிர் முதன்மொழி வருமிடத்து, உடம்படுமெய்யினது வடிவை உயிரீறு கோடலை நீக்கார் கொள்வார் ஆசிரியர். அவை யகரமும் வகரமும் என்பது முதனூல்பற்றிக் கோடும்; உடம்படு மெய்யே யகார வகாரம் உயிர்முதன் மொழிவரூஉங் காலை யான எனவும், இறுதியு முதலும் உயிர்நிலை வரினே உறுமென மொழிப உடம்படு மெய்யே எனவும் கூறினாராகலின். முதலகத்தியர் பாரதக் காலத்திற்கு முந்திய இராமாயண காலத்தவ ராதலால், கி.மு. 12ஆம் நூற்றாண்டினரா யிருந்திருக்கலாம்; இரண்டாம் அகத்தியர் கி.பி. 7ஆம் நூற்றாண்டினரா யிருந்திருக்கலாம்; என்பது முன்னர்க் கூறப்பட்டது. ஆகவே, கி.மு. 7ஆம் நூற்றாண்டினரான முதல் தொல்காப்பியர் அவ் விருவர்க்கும் இடைப்பட்டவராவார். தமிழின் தொன்மை தென்மை முன்மை முதலிய தன்மைகள் அதன் தாய்மையையும் தலைமையையும் காட்டுவதால் அவற்றை மறைத்தற் பொருட்டு, பர். தெ.பொ.மீ. முதலகத்தியரைத் தமிழொடு தொடர்புபடுத்தாது விட்டுவிட்டு, தொல்காப்பிய உடம்படுமெய்ந் நூற்பாவுரையில் நச்சினார்க் கினியர் முதனூல் நூற்பாக்களாக எடுத்துக் காட்டிய மேற்கோள் இரண்டை யும், ஓர் அகத்தியருடையனவென்று சான்றில்லாது கொண்டு, தொல் காப்பியர் காலத்தில் வழக்கூன்றாத உடம்படுமெய்யைத் தம்காலத்தில் வழக்கூன்றியதாகக் கூறும் அகத்தியர் தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்டவர் என்று துணிந்து கூறியுள்ளார். குமரி நாட்டு முதற்காலத் தமிழில் உடம்படுமெய் எழுத்து மொழியிற் குறிக்கப்படாதிருந்திருக்கலாமேனும், தலைக்கழகமும் இடைக்கழகமுந் தாண்டிவந்த தொல்காப்பியர் காலத்தில் அது வழக்கூன்றாதிருந்த தென்பது பொருந்தாது. மேலும், உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார் என்னும் தொல்காப்பியர் கூற்று, அக்காலத்திற் புதிதாகத் தமிழ் கற்ற ஆரியப் புலவர் சிலரின் தவற்றைக் கண்டித்ததாகவும் இருக்கலாம். உடம்படுமெய் கொளல்வரையார் என்று கூறாது, உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார் என்று கூறியது, உடம்படுமெய் எழுத்து மொழியிற் குறிக்கப்படாவிடினும், ஒலிப்புமொழியில் இயல்பாக இருக்கவேயிருக்கின்றது என்னும் உண்மையை நுண்ணிதின் உணர்த்துதல் காண்க. நச்சினார்க்கினியர், உடம்படுமெய் நூற்பாவுரையில் தாம் எடுத்துக் காட்டிய மேற்கோட்கு ஆசிரியர் பெயர் அல்லது நூற்பெயர் குறியாமை மட்டுமன்றி, இருவேறு முதனூலினின்று எடுத்துக்காட்டி யிருப்பது பர். தெ. பொ. மீ. கூற்றைப் பொருளில தாக்கும். முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் என்னும் சிறப்புப் பாயிரமும், என்ப, என்மனார் புலவர், நுண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே, எனமொழிப, உணரு மோரே வரையார், என்றிசி னோரே என்றெல்லாம் ஆசிரியர் நெடுகலுங் கூறிச் செல்லும் பெருவழக்கும், தொல்காப்பிய முதனூல்களின் பன்மையை மட்டுமன்றி, அவற்றுட் பலவற்றின் பெயர் அறியப்படாது போனமையையும் குறிப்பாய்த் தெரிவிக்கும். இனி, வினையெஞ்சு கிளவிக்கும் முன்னிலை மொழிக்கும் நினையுங் காலை அவ்வகை வரையார் (தொல். உயிர். 62) கொடிமுன் வரினே ஐஅவண் நிற்பக் கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி (தொல்.உயிர். 83) என்னும் நூற்பாக்களை நோக்கின், வரையார் என்பது முற்கால நிலைமை யுணர்த்தும் ஒரு சிறப்புக் குறிப்புச் சொல்லன்றென்பதும் தோன்றும். அதனால், நச்சினார்க்கினியர், நீக்கார் கொள்வர் என்றே பொருள் கூறி யமைந்தார். தொல்காப்பியத்திற்கு முந்திய மூல நூல்களெல்லாம் உடம்படு மெய்யைத் திட்டவட்டமாகக் கூறியிருப்பதால், தொல்காப்பியமும் அத்தகையதேயெனக் கொள்வதே தக்கதாம். கால் மாத்திரை யொலிக்கும் ககரக் குறுக்கத்தையும் மகரக் குறுக்கத்தையும் நுண்ணிதா யுணர்ந்த முன்னைத் தமிழறிஞர், உடம்படுமெய் கண்டறிந்தாரென்பது இம்மியும் வியத்தற்குரியதன்று. சேனாவரையர், பெருந்தேவனார் முதலிய உரையாசிரியரும், புத்தமித்திரன், சுப்பிரமணிய தீட்சிதர், சுவாமிநாத தேசிகர், வையாபுரிப் பிள்ளை, பர். தெ. பொ. மீ. முதலிய நூலாசிரியரும், கொண்ட சமற்கிருத மயக்கமும் தமிழிகழ்வும் அடுத்த கட்டுரை மறுப்புகளில் தெளிவாக விளக்கப்பெறும் 2ஆம் அதிகாரம் கூற்று: தொல்காப்பியக் காலம் (Age of Tolkappiam) தொல்காப்பியமும் சமற்கிருதமும் தொல்காப்பியம், சமற்கிருதச் சொற்கள் திரிக்கப்பட்டுத் தமிழிலக்கி யத்தில் வழங்கி வந்ததை நோக்குகின்றது. (தொல். 880, 884, 885. கழகப் பதிப்பு, 1954). தொல்காப்பியரே சமற்கிருதச் சொற்களை ஆண்டிருப்பதைப் பிரயோக விவேகம் குறிப்பிடுகின்றது. ஏற்கெனவே வேறோரிடத்திற் குறிப்பிட்டுள்ளவாறு கருத்துவேறுபாடுக ளிருந்தன வேனும், ஒலியியலும் இலக்கணமும்பற்றி ஓர் அனைத்திந்தியக் கொள்கையிருந்தது. தொல் காப்பியர் மேலையர் கொள்கையையும் சீனர் கொள்கையையும் பின்பற்றாது அவ் வனைத்திந்தியக் கொள்கையையே பின்பற்றினார் என்பதுபற்றிக் கருத்துவேறுபா டிருக்கமுடியாது. சமற்கிருத நெடுங்கணக்கின் அமைப்பு முறை ஏற்கெனவே வேறொரு கட்டுரையில் ஆயப்பட்டுள்ளது. அவ் வெழுத்துகளின் தெள்ளிய ஒலிப்புமுறை இக்கால ஒலிநூலை நினைவுறுத்தி னும், இந்தியாவிற்கே சிறப்பாக வுரியதாகும். அவை யாவும் மொழிகளின் உலகப் பொதுவியல்புகள் தொல்காப்பியர் அவற்றை உணர்ந்துகொண்டார். அதனால், அவர் அனைத்திந்தியக் கொள்கையைப் பின்பற்றுவதில் தமிழின் சிறப்பியல்பைக் கெடுக்கவில்லை. வடக்கொடு நெருங்கிய தொடர்பு கொண்டபின் இவை யாயும், சமற்கிருத இலக்கண முறைமையொடு நெருங்கிய தொடர்புகொண்ட பின்னரே தொல்காப்பியம் தோன்றிற்றென்பதை மெய்ப்பிக்குஞ் சான்றுகளாகின்றன. மேலையர் 19ஆம் நூற்றாண்டிற் சமற் கிருத இலக்கணத்தைக் கண்டுபிடித்ததே மேற்கில் மொழிநூல் வளர்ச்சிக்கு வழிகாட்டியது போன்று, கிழக்கில் சமற்கிருதத்தோடும் திரவிடமல்லாத மொழிகளோடும் தொடர்புகொண்டதே, தமிழின் ஒலியியலையும் இலக்கண அமைப்பையும் வண்ணிக்கும் முயற்சியை மேற்கொள்ள நேரடியான தூண்டுகோலா யிருந்திருத்தல் வேண்டும். இது இயற்கைதானே கையாளும் இனக்கலப்புப் போன்றது. இங்ஙனமே உலகமெங்கும் நாகரிகங்களும் கலைப்பண்பாடுகளும் தோன்றியுள்ளன. இம் முயற்சியும் முதலியன்மை யுள்ளதே. கி.மு. 4ஆம் நூற்றாண்டுக் காத்தியாயனர் திரவிடர் இருக்கு வேதக் காலத்தில் ஆரியரொடு தொடர்பு கொண் டிருக்கலாம். ஆனால், சமற்கிருதத்திற்குத் தமிழ் நாகரிகக் கலைப் பண்பாட் டோடு ஏற்பட்ட தொடர்பு திட்டவட்டமான தொன்றாகையால் பிந்தியே நேர்ந்திருத்தல் வேண்டும். சடங்குமுறைமைக்கும் பிற பயன்பாட் டிற்கும் வேதங்கள் தோரா. கி.மு. 1000 போல் தொகுக்கப்பட்டதாகச் சொல்லப்படு கின்றது. வேதமந்திரங்களின் ஒலியியல் இலக்கணக் கூறுகளைப் போற்றிக் காத்தற்குத் தோதாகப் பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் விளைவாக, இலக்கணமும் ஒலியியலும் சொல்லியலும் சொற்றொடரியலும் வளர்ச்சியுற்றன. பாணினியின் இலக்கணமுறை நிறைவு பெறப் பல தலைமுறைக் காலஞ் சென்றிருத்தல் வேண்டும். பாணினி காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு அல்லது சற்று முன்பு என்று குறிக்கப்பட் டுள்ளது. பாணினிக்குத் தமிழரொடு அல்லது அவர் கலைப்பண்பாட்டொடு ஏதேனும் தொடர்பிருந்ததாகப் பாணினி மொழியில் யாதொரு குறிப்பு மில்லை. கி.மு. 4ஆம் நூற்றாண்டினரான வரருசி என்னும் காத்தியாயனர், பாணினி நூற்பாக்களின் குறை நிரப்பலாகிய வார்த்திகங்கள் என்னும் திருத்தவுரையை இயற்றினார். அவர் தமிழரையும் அவர் கலைப் பண்பாட்டையும் நன்றாய் அறிந்திருந்தார். அவர் வார்த்திகங்களுள் ஒன்று சோழ பாண்டியங்களைக் குறிப்பிடுகின்றது. சோழபாண்டியம் என்பது, குருபாஞ்சாலம் என்பது போன்றே அரசரையும் அவர் நாட்டையுங் குறிக்கும். ஆதலால், கி.மு. 4ஆம் நூற்றாண்டில் அல்லது ஒருகால் 5ஆம் நூற்றாண்டில், தொலைவிலுள்ள வடவர்க்கும் தென்றிசைத் தமிழர்க்கும் இடையே கலைப் பண்பாட்டுத் தொடர்புகள் வளர்ச்சியடைந் திருக்கலாம். ஆனால், தொல்காப்பியம் நெருங்கிய தொடர்பை அதினும் பேரளவிற் காட்டுகின்றது. எங்ஙனமிருப்பினும், ஒருவர் தொல்காப்பியத்தைக் கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்கு முந்தியதாகக் கூற முடியாது. (பக். 17-18). மறுப்பு இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (தொல். எச். 1) வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (தொல்.எச். 5) சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் (தொல். எச். 6) என்னும் தொல்காப்பிய நூற்பாக்கள், பாண்டியரின் இரண்டாம் தலைநகர் முழுகி இரண்டாம் தமிழ்க் கழகமும் குலைந்து, தூய தமிழ்க் காவலரின்றித் தமிழ் ஆரியர் வயப்பட்டுப்போன காலத்தில், ஆரியம் வேரூன்றிய சேர நாட்டில் வாழ்ந்த தொல்காப்பியர், செந்தமிழ் மரபையும் சொல் வளத்தையும் ஒருங்கே சிதைத்து நாளடைவில் தமிழை ஆரிய வண்ண மாக்கும் பொருட்டு, ஆரியத் தமிழ்ப் பகைவர் தமிழில் வேண்டாது புகுத்திய ஒருசில தொடக்க வடசொற்களை அயற்சொற்களென்ற வகையில் குறித்ததைக் காட்டுமேயன்றி, அச் சொற்கள் தமிழுக்கு இன்றியமையாதன வென்றும், அவற்றால் தமிழ் வளம் பெற்றதென்றும், உணர்த்தா. பிராமணியம் தமிழரின் தாய்மொழிப் பற்றையும் உணர்ச்சியையும் பெரும்பாலுங் கொன்றுவிட்டதனால், அயன்மொழியாரின் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் ஒருசில அயற்சொற்களையும் வழக்கிற் புகுத்திக் கொண்டனர். சன்னல் (ஜன்னல்), சாவி என்பன போர்த்துக்கீசியச் சொற்கள். ஆயின், அவை தமிழ்ச்சொற்களை வழக்கு வீழ்த்தித் தூய தமிழ்ச்சொற்கள் போன்றே வழங்கிவருகின்றன. அவற்றுள், முன்னது பலகணி, சாளரம், காலதர் என்னும் மூன்று அழகிய தமிழ்ச்சொற்களையும், பின்னது திறவுகோல், துறப்புக்குச்சு, தாழக்கோல் என்னும் மூன்று தெளிபொருட் சொற்களையும், இலக்கியச் சொல்லும் அருஞ்சொல்லும் ஆக்கியுள்ளன. இதனால், போர்த்துக்கீசியச் சொற்கள் தமிழுக்கு இன்றியமையாதன வென்றும், போர்த்துக்கீசியமே தமிழுக்கு மூலமென்றும், ஒருவரும் சொல்லத் துணியார். இங்ஙனமே வடசொல் நோக்கியும் உணர்க. போர்த்துக்கீசியச் சொல்லிற்கும் வடசொல்லிற்கும் வேறுபா டென்னை யெனின், முன்னது தன்னவரே புகுத்திக்கொண்டதென்றும், பின்னது வேற்றாரும் மாற்றாருமான ஆரியர் புகுத்தியதென்றும், அறிந்து கொள்க. தொல்காப்பியர் தாமே ஆண்டனவாகப் பிரயோக விவேகம் குறிக்கும் வடசொற்கள் அடுத்த கட்டுரையில் விளக்கப்படும். தமிழ் வேர்ச்சொல்லாராய்ச்சியும் தமிழன் பிறந்தகமும் ஆரியன் தோன்றியகமும் பற்றிய ஆராய்ச்சியும் தமக்கின்மையால், பர்.தெ.பொ.மீ. தமிழரும் ஆரியரும் தொடர்பற்ற வெவ்வேறினத்தா ரென்றும், ஒரே காலத்தில் தோன்றியவரென்றும், இன்று போன்றே முன்பும் இருந்தன ரென்றும், ஆரியராலேயே தமிழர் நாகரிகப்படுத்தப்பட்டன ரென்றும், எண்ணிக்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. தமிழர் என்றது திரவிடரையும் தழுவும். அவர் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராயிருந்த காலத்தில், குமரிமுனைக்குத் தெற்கே ஒருகாலத்தில் நிலமட்டும் இருந்ததென்றும், அதில் மக்கள் குடியிருக்கவில்லையென்றும், ஒரு முறை சொன்னதாகப் பர்.மெ. சுந்தரனார் சொன்னார். தமிழரின் முன்னோர் குமரிநாட்டுப் பழங்குடி மக்கள் என்பது, தமிழ் அல்லது தமிழர் வரலாற்றிற்கு அடிப்படையான உயிர்நாடிச் செய்தியாகும். இதை யுணராதார் எத்துணை கற்பினும் தமிழறிந்தவராகார். பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11 : 19-22) என்னும் பகுதியும் அதற்கு அடியார்க்குநல்லார் வரைந்த உரையுமே, தமிழன் குமரிநாட்டுத் தோற்றத்திற்குப் போதிய சான்றாம். இஃதல்லாது இருபதிற்கு மேற்பட்ட ஏனைச் சான்றுகளுமுள. குமரிநாட்டுத் தமிழரே, தமிழின் பல்வேறு நிலையில் பல்வேறு திசை சென்று உலக முழுதும் பரவினர். (V.R.) இராமச்சந்திர தீட்சிதரின் தமிழரின் தோற்றமும் பரவலும் (Origin and Spread of the Tamils) என்னும் ஆங்கில நூலைப் பார்க்க, வடபாற் சென்ற தமிழர் திரவிடராயினர். வட திரவிடர் பிராகிருதராயினர். பிராகிருதர் ஐரோப்பாவும் மேல்ஆசியாவும் சென்று ஆரியராயினர். “First as to the Aryan family, called also Indo-European, which takes in the languages of part of South and West Asia, and almost the whole of Europe. The original tongue whence these are all descended may be called the Primitive Aryan. What the roots of this ancient language were like, and how they were put together into words, the student may gain an idea from Greek and Latin, but a still better from Sanskrit, where both roots and inflexions have been kept up in a more perfect and regular state...... “.....The early home of the Aryans is supposed to have been in Inner Asia, perhaps in the present Turkestan, in the region of the Oxus and Yaxartes, for here the practicable way of migration for nomads with flocks and herds lies open down into Persia on the one side, and India on the other. As India and Persia have preserved in their sacred languages the Aryan tongue less changed than else where, it may be judged that the land whence the invading Aryans, came was not far off.”(Anthropology by Edward. B. Tylor, pp.156-7) ‘The Cradle of the Aryas’ “The fact....is in perfect harmony with the theory that the original home of the Aryas was on the slopes of the mountains which form the junction between the Hindukush and the Karakorum chains, what may be called the Northern Kohistan. “........the region drained by the feeders of the Indus, the Oxus, and Yaxtartes.” (Three Lectures on the Science of Language by F. Max Muller, pp. 64-5). இந் நடுமேலை ஆசியாவினின்றே வேத ஆரியரின் முன்னோர், கிரேக்கத்திற்கு நெருங்கிய ஒரு மொழியைப் பேசிக்கொண்டும், ஆடு மாடு மேய்த்துக்கொண்டும், மாட்டிறைச்சி யுண்டுகொண்டும், இயற்கையையும் ஐம்பூதங்களையும் இரு சுடரையும் வணங்கிக்கொண்டும், எழுத்தும் இலக்கியமு மின்றி முல்லை நாகரிக நிலையிற் சிறுசிறு கூட்டமாகக் கி.மு. 2000-1500 போல் இந்தியாவிற்குட் புகுந்தனர். அவர் மொழி கிரேக்கத்திற்கு நெருங்கிய தென்பது, கீழ்வரும் தா என்னும் வினைமுற்றின் நிகழ்கால வடிவொப்புமையால் அறியப்படும். தமிழ் கிரேக்கம் வழக்கொழிந்த ஆரியம் தருகின்றேன் திதோமி jjhÄ-dadha#mi ஒருமை தருகின்றாய் திதோஸ் jjhÌ-dadha#si { தருகின்றான் திதோஸி(ன்) ததாத்தி -dadha#ti --- --- தத்வஸ்-dadhvas இருமை --- திதொத்தொன் தத்வஸ்- dhatthas { --- திதொத்தொன் தத்தஸ் -dhattas தருகின்றேம் திதொமென் தத்வஸ்-dadhmas பன்மை தருகின்றீர் திதொத்தெ தத்த -dhattha { தருகின்றனர் திதொஆஸி(ன்) ததத்தி -dadhati தா என்னும் ஓர் அடிப்படைத் தமிழ் வினைச்சொல், இலத்தீனிலும் கிரேக்கத்திலும் வேதமொழியிலும் பல்வேறு வடிவில் திரிந்து வழங்கு கின்றது. தமிழின் முதன்மையையும் மூலத் தன்மையையும் காட்ட இஃதொன்றே போதும். அதனால், இதை மறுக்குமாறு, ஈராண்டிற்கு முன்பே பர்.தெ. பொ. மீ. அவர்கட்கு ஓர் அறைகூவல் விடுத்தேன். அதற்கு இதுவரை மறுமொழி யில்லை. கீழையாரியர் கால்நடை மேய்த்தலைச் சிறப்புத் தொழிலாகக் கொண் டிருந்தனரென்பது, கோத்திரம் என்னும் குடும்பப் பெயராலும் துஹித்ரு என்னும் மகட்பெயராலும், உழவுத்தொழிலை மேற்கொள்ளவில்லை யென்பது, அவர் நாடோடித் தன்மையாலும், மேலையாரிய மொழிகளி லுள்ள ஏர் என்னுந் தென்சொல் அவர் மொழியி லின்மையாலும், உழவுத் தொழிலைக் கொலைத்தொழிலென்று அவர் தரும சாத்திரம் பழிப்பதாலும்; அறியப்படும். (கோ = ஆன் (பசு), துஹ் = கற) அவர் மொழிக்கு மேனாட்டில் வழங்கிய பெயர் மறைந்தொழிந்தது. ஆரியம், சமற்கிருதம் என்னும் இரண்டும் அவர் இந்தியாவிற்கு வந்து தமிழரொடு தொடர்பு கொண்ட பின்னரே தோன்றியவை. ஆரியம் என்னும் சொல் இந்தியாவினின்றே மேலை நாடுகட்குப் பரவிற்று. ஆரியம் என்பது தமிழ்ச் சொல்லே. அரு -ஆரி = அருமை, அழகு, மேன்மை. ஆரி யாகவஞ் சாந்தந் தனித்தபின் (சீவக. 129) ஆரி - ஆரியன் = மேலோன். இது ஆரியரே தமிழரை ஏமாற்றித் தமக்கு இட்டுக்கொண்டது. ‘aristos’ (best) என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் அரு என்பதே மூலமாயிருத்தல் வேண்டும். ஏர்-Ar-Arya என்பது தவறு. கும் - சும் - சம்(ஸம்). கும்முதல் = குவிதல், கூடுதல், கலத்தல், கருமை = மிகுதி, பெருமை. கள்ளுதல் = கலத்தல், கூடுதல். கள் - களம் = கூட்டம், அவை. கள் - கர் - கரு. கருத்தல் = மிகுதல், மிகுத்தல், செய்தல். கரு - கருமம். கரு - கருவி. கரு - கரணம். கரு(வ.) க்ரு - க்ருத. ஸம்க்ருத - ஸம்ஸ்க்ருத = பிராகிருதமும் தமிழும், அல்லது வேதமொழியும் தமிழும் கலந்து செய்யப்பட்ட மொழி. ப்ராக்ருத சமற்கிருதத்திற்கு முந்து செய்யப்பட்ட மொழி. புதிதாகச் செய்யப்பட்ட பொருளால் அப் பொரு ளினம் மிகுதல் காண்க. இனி, கருத்தல் = கை கருத்துக் காழ்ப்பேறு மளவு உழைத்துச் செய்தல் என்றுமாம். கருங்கைக் கொல்லர் (சிலப். 5:29) என்னும் வழக்கை நோக்குக. கருத்தல் என்னும் வினை தமிழில் முன்பே வழக்கற்றது. பிரா = முன். க்ருத = செய்யப்பட்டது தமிழர் கி.மு. 100,000 ஆண்டுகட்கு முன்பே குமரிநாட்டில் தோன்றிய மூல மக்களினத்தாரின் வழிவந்தவர். இற்றை இலக்கியத்தினும் விரிவான, எழுநிலச் செய்யுளாலியன்ற பல்துறை முழுத் தூய இலக்கியத்தையும் முத்தமிழிலக்கணத்தையும் கொண்டிருந்தவர். தொல்காப்பியம் நூலினியல்பை, ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும் இனமொழி கிளந்த வோத்தி னானும் பொதுமொழி கிளந்த படலத் தானும் மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானுமென் றாங்கனை மரபி னியலு மென்ப. (செய். 166) நேரின மணியை நிரல்பட வைத்தாங் கோரினப் பொருளை யொருவழி வைப்ப தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர். (செய். 168) ஒருநெறி யின்றி விரவிய பொருளாற் பொதுமொழி தொடரினது படல மாகும். (செய். 169) மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயிற் றோன்றுமொழிப் புலவர் பிண்ட மென்ப (செய். 170) என விளக்கி, ஈருறுப்படக்கிய நூல் என்றும், மூவுறுப்படக்கிய பிண்டம் என்றும், நூலை இருவகையாக வகுத்துக் கூறிற்று. மேற்கூறிய பிண்ட நூற்பாவிற்கு. அம் மூன்று உறுப்பினையும் அடக்கி வருவது பிண்டம் என்றவாறு. அம் மூன்றனையும் உறுப்பெனவே, பிண்டமென்பனதாம் உறுப்பினவென்பது பெற்றாம். தொல்காப்பியம் என்பது பிண்டம்; அதனுள் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகார மென்பன படலமெனப் படும்; அவற்றுள் ஓத்துஞ் சூத்திரமும் ஒழிந்த இரு கூறுமெனப்படும். தோன்றுமொழிப் புலவர் பிண்ட மென்ப என்றதனால், பிண்டத் தினையும் அடக்கிநிற்பது வேறு பிண்டமுளதென்பது. அது முதனூலாகிய அகத்தியமே போலும்; என்னை? அஃது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழென்னும் மூன்று பிண்டத்தினையும் அடக்கி நிற்றலின் என்று உரைத்தார் பேராசிரியர். ஒத்து எனினும் இயல் எனினும் ஒக்கும். அதிகாரம் எனினும் படலம் எனினும் பால் எனினும் ஒக்கும். பாணினீயம் சூத்திரம், பாதம், அத்தியாயம் என்னும் மூன்றுறுப் படக்கியதேனும் அதைப் பிண்டமென்னும் வழக்கு வடமொழியிலில்லை. மேலும், அது எழுத்தும் சொல்லும் ஆகிய இரண்டே கூறுவதால், ஈருறுப் படக்கியதாகவே கொள்ளப்படும். ஆதலால், அது நூலன்றிப் பிண்டமாகாது. தொல்காப்பியத்திலுள்ள பொருளதிகாரம் என்னும் மூன்றா முறுப்பு, யாப்பு, அணியென்னும் பொதுவகைக் கூறுகளொடு வேறெம் மொழியிலு மில்லாத பொருளிலக்கண மென்னும் தனிச்சிறப்புக் கூற்றைக் கொண் டிருத்தலால், தொல்காப்பியத்துக் கிணையான இலக்கணநூல் இவ் வுலகில் ஒன்றுமே யில்லையென்பது தெள்ளத் தெளிவாம். பொருளிலக்கணத்தைப் பாட்டியலென்று கூறி அதன் பெருமையைக் குறைக்கவும் மறைக்கவும் முயல்பவர் தம் அழுக்காற்றின் அளவின்மையைக் காட்டுவதோடு, நேர் நின்று கருங்காக்கையை வெண்புறா வென்னும் கடுந்துணிச்சற் பொய்யரே யாவர். இறையனா ரகப்பொருளுரை கூறும் தொன்னூல்களை நம்பாதும், தொல்காப்பியர் ஆங்காங்குக் குறிப்பிடும் முன்னூல்களைக் கருதாதும், வடநூல்களிலில்லாத தொல்காப்பியப் பொருளிலக்கணத்தைக் கண்டுங் காணாததுபோற் கண்மூடியும், நன்னூலும் சின்னூலும்போல் எழுத்துஞ் சொல்லுமே கூறும் பாணினீயத்தினின்று மூன்றுறுப்படக்கிய பிண்டமான தொல்காப்பியந் தோன்றிற்றென்பது, பூனை வயிற்றினின்று புலிக்குட்டி வந்ததென்றும், நரிமா அரிமாவை ஈன்றதென்றும் கூறுவது போன்றதே. உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூவகையெழுத்துக் கொண்ட நெடுங்கணக்கு, இந்தியாவில் மட்டுமன்றி உலகிலேயே முதன்முதல் தமிழில்தான் தோன்றிற்று. அதைப் பின்பற்றியே பிராமியும் கிரந்தமும் தேவநாகரியும் தோன்றின. இது பின்னொரு கட்டுரையில் விரிவாக விளக்கப்படும். வேதமந்திரங்கட்குச் சிட்சை என்னும் ஒலியியலும், பிராதிசாக்கியம் என்னும் தனிமறை அல்லது மந்திரத் தொகுதிக்குரிய இலக்கண முறையும், தமிழிலக்கணத்தைப் பின்பற்றியே எழுந்தன. இந்திய ஆரியரின் வழக்கிறந்த தாய்மொழியும் பிராகிருதமுங் கலந்ததே வேதமொழி. வேதமொழியும் தமிழும் கலந்ததே சமற்கிருதம் என்னும் பலதுறை உலகியல் இலக்கியமொழி. வேதமொழியைச் சமற் கிருதம் என்பது முற்காலப்படுத்தம் (Prochronism) என்னும் வழுவாகும். சமற்கிருதத்திற்கு எழுதப்பட்ட இலக்கணமே வியாகரணம். முதன் முதல் தோன்றிய ஐந்திரம் என்னும் சமற்கிருத இலக்கணம், தமிழகத்தி லேயே தோன்றித் தமிழகத்திலேயே அழிக்கப்பட்டது. ஐந்திரத்திற்குப் பிற்பட்டதே அஷ்டாத்யாயீ என்னும் பாணினீயம். தொல்காப்பியர் பாணினிக்கு முற்பட்டவராதலின் ஐந்திரம் மட்டும் கற்றிருந்தார். அதனா லேயே, ஐந்திரம் நிறைந்த தொல்காப்பி யன்எனத் தன்பெயர் தோற்றி என்று பனம்பாரனார் பாயிரத்திற் பாடினார். தொல்காப்பியர் காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு; பாணினி காலம் கி.மு.5ஆம் நூற்றாண்டு. வடமொழியிலக்கணம் தமிழிலக்கணத்தினின்று தோன்றிற்றேயன்றி, தமிழிலக்கணம் வடமொழி யிலக்கணத்தினின்று தோன்றவில்லை. எழுத்துமுறை, எழுத்துச்சாரியை, எழுத்துப்பிறப்பியல், உயிர்மெய்த் தனிவடிவம், புணரியல்விரிவு, சொல்லமைப்பு, சொல்வகை, தொகைதொடர் வகை, எண்வேற்றுமை, முதலியவற்றில், வடமொழியிலக்கணம் தமிழிலக் கணத்தைத் தழுவியிருப்பது, தெற்றெனத் தோன்றும். தொல்காப்பியர் மூவதிகாரத்தையும் ஒவ்வொன்பது இயல்களாக வகுத்திருப்பது போன்று, பாணினியார் எண்ணத்தியாயத்தையும் நந்நான்கு பாதமாக அமைத் திருப்பது, கவனிக்கத்தக்கது. பாணினீயம் படிப்படியாகத் திருந்திவந்த பல இலக்கண நூல்கட்குப் பிற்பட்டதாகும். அதன் முன்னூல்கள் 60 என்பர் கா.சு. பிள்ளையார். பதினெட்டாம் நூற்றாண்டிறுதியில், சார்ல்ஸ் வில்கின்சு (Charles Wilkins), உவில்லியம் சோன்சு (William Jones) முதலிய மேலையறிஞராற் சமற்கிருதம் வெளிப்படுத்தப்பட்ட பின், மேனாட்டார் ஆரிய ஒப்பியன் மொழிநூலை வளர்த்தனர். ஆயின், ஆரியத்தின் மூலமொழியை அறியா மையால், அம்மட்டில் நிறுத்திக்கொண்டு அதற்கு வண்ணனை மொழிநூல் (Descriptive Linguistics) என்று பெயரிட்டனர். ஆரியம் திரிமொழியாத லால், அதன் வாயிலாக வேர்ச்சொற்களையும் அவற்றின் பொருளையும் மூலமொழி தோன்றிய வகையையும் அறிய முடியாது. அவற்றை அறிவிக்கக் கூடிய இயன்மொழி தமிழ் ஒன்றே. உண்மையான மொழிநூல், ஒப்பியலும் வண்ணனையியலும் வரலாற்றியலும் ஒருங்கே கொண்டு கொடிவழியல் (Geneological) முறைப்பட்டதாகவே யிருத்தல் வேண்டும். ஆதலால், வண்ணனை மொழிநூல் என்பது ஓர் அறிவிய லாகாது. இது பின்னரும் விளக்கப்படும். சமற்கிருதத்தைக் கண்டுபிடித்தபின் மேனாட்டார் ஒப்பியன் மொழிநூலை வளர்த்துக்கொண்டதுபோல், தமிழரும் பாணினீயத்தைப் பின்பற்றியே தமிழிலக்கணம் அமைத்துக்கொண்டனர் என்பது, பேரனே பாட்டனைப் பெற்றான் என்பது போன்றதே. தொல்காப்பியர் சமற்கிருத இலக்கணமும் இலக்கியமுங் கற்றிருந்தார் என்பது உண்மையே. ஆயின். பாணினீயத்தைப் பின்பற்றித் தொல்காப்பியத்தை இயற்றினார் என்பது அறியாமை பற்றியதே. இதை அவர் கூற்றும் பொருளதிகாரமும் தெற்றெனப் புலப்படுத்தும். கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன் தோன்றிய தலைக்கழகக் காலத்திலிருந்து எழுத்து சொல் பொருள் என்னும் மூவதிகாரப் பட்டு, யாப்பையும் அணியையும் பொருளுள் அடக்கி, ஒண்டீந்துறை யென்று மாணிக்கவாசகரும் வியக்குமளவு நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்க அகப்பொருள் கொண்டு, மரபாக வழங்கி வந்த தெய்வத் தமிழிலக்கணத்தை, கி.மு. 5ஆம் நூற்றாண் டில் தோன்றி எழுத்துஞ் சொல்லுமே கூறும் பாணினீயத்தின் வழியதாகக் கூறுவது, தமிழைக் காட்டிக் கொடுக்கும் செயலின் பாற்பட்டதேயன்றி வேறாகாது. இனி, வேதக் காலத்தில் ஆரியர் தமிழரொடு தொடர்பு கொள்ள வில்லையென்றும், காத்தியாயனர் காலமாகிய கி.மு. 4ஆம் நூற்றாண்டி லேயே அத் தொடர்பு ஏற்பட்டதென்றும் கூறுவதும் வரலாற்றொடு முற்றும் முரண்பட்டதாகும். ஒரு காலத்தில் இந்தியா முழுதும் தமிழரே பரவியிருந்தனர். வடக்கே செல்லச் செல்ல மொழியும் நாளடைவில் மெல்ல மெல்லத் திரிந்தது. அதனால், வடநாடுகளைப் பிற்காலத்தில் மொழிபெயர் தேயம் என்றனர். மொழிபெயர் பன்மலை யிறப்பினும் ஒழிதல் செல்லா தொண்டொடி குணனே. (ஐங். 321) மொழிபெயர் தேஎந் தருமார் மன்னர் கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன. (அகம். 67) பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும். (குறுந். 11) மொழிமாறு தேயம் என்னாது மொழிபெயர் தேயம் என்றதை நோக்குக. பெயர்தல் = ஒரே மொழி மெல்ல மெல்லத் திரிதல். குமரிமலையும் பஃறுளியாறும் மூழ்கியபின், அவற்றுக் கீடாகப் பாண்டியன் பனிமலையையும் கங்கையாற்றையுங் கொண்டான். அடியார்க்குநல்லார் சிறப்புக் குறிப்பைப் பார்க்க (சிலப். 11:17-22). குமரிநாட்டுச் சிவநெறியார் அணிந்து வந்ததும் நேபாள நாட்டுச் சிவமணியே (உருத்திராக்கமே). வங்க நாடு சென்று வாழ்ந்த தமிழ வணிகரே, காளிகோயில் சமைத்துக் காளிக்கோட்டம் என்று நகர்ப்பெயரிட்டனர். அஃது இன்று கல்கத்தா என்று ஆங்கிலத்தில் திரிந்து வழங்குகின்றது. தமிழகம் (Tamluk) என்றொரு நகரும் அந் நாட்டில் தோன்றிற்று. நிலவாணிகமும் நீர் வாணிகமும் வடநாடுகளொடு தொடர்ந்து நிகழ்ந்துவந்தன. வடநாட்டார் குமரியாடவும் தென்னாட்டார் கங்கையாடவும் வந்து செல்வது, தொன்றுதொட்ட வழக்கமா யிருந்துவந்தது. பாரதக் காலத்தில் அர்ச்சுனனும் குமரியாட வந்து பாண்டியன் குமரியை மணந்தான். வேத ஆரியருள் முதன் முதலாக விந்தியமலை தாண்டித் தென்னாடு வந்த ஆரிய முனிவர் அகத்தியர், அதனால் விந்தமலையின் செருக் கடக்கியவர் எனச் சிறப்பிக்கப்பட்டார். அவருக்குப் பின் வந்தவர் நாரதர். பின்னர்த் தக்கணபதம் என்னும் ஒழுங்கான பாதையை அமைத்துக் கொண்டனர் ஆரியர். இயற்கையையும் ஐம்பூதங்களையும் இருசுடரையும் ஆவிகளையும் சோமச்சாறான கள்ளையுமே வணங்கிவந்த வேத ஆரியர், தமிழரொடு தொடர்புகொண்ட பின்னரே, காளி வணக்கத்தையும் குமர வணக்கத் தையும் சிவதிருமால் மதங்களையும் மேற்கொண்டனர். அதன்பின் பதினெண் புராணங்களும் இதிகாசங்களும் உபநிடதங்களும் ஆகமங் களும் காவிய நாடகங்களும் வியாகரணங்களும் நிகண்டுகளும் சாத்திரங் களும் பிறவும் எழுந்தன. இங்ஙனமிருக்கவும், தொல்காப்பியமே முதல் தமிழ்நூலென்றும், அதுவும் பாணினீயத்தைத் தழுவியதென்றும் முதன்முதலாக நளியிரு முந்நீர் நாவா யோட்டிச் (புறம். 66) சுற்றுக் கடலோடியாய்த் (circumna vigator) திகழ்ந்து வடவை (Aurora Borealis) கண்ட தமிழனைக் கி.மு. 4ஆம் நூற்றாண்டுவரை வடஇந்தியாவும் அறியாதவன் என்று, இறப்ப இழித்துக் கூறுவது இளஞ்சிறாரும் எள்ளி நகையாடத்தக்கதே. குறிப்பு: மூலத் தமிழ் நாடக நூலினின்று மொழிபெயர்க்கப்பட்ட காசுமீர வடமொழிப் பரத சாத்திரம், மறிநிழலீடாக மீண்டும் மூல மொழி யான தமிழில் மொழிபெயர்க்கப்பட விருக்கின்றது. இதைக் கண்டு அல்லது கேட்டு மூல மொழிபற்றி மயங்கற்க. நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களும் இறந்தன என்று அடியார்க்குநல்லார் தம் உரைப் பாயிரத்தில், உரைத்திருப்பதால், வடமொழி மொழிபெயர்ப்பின் மூலத் தமிழ்ப் பரதம் அழிக்கப்பட்டதென உய்த்துணர்க. இது என் முத்தமிழ் என்னும் நூலில் விரிவாக விளக்கப்படும். கூற்று: அசோகனும் தமிழ்நாடும் சந்திரகுப்தன் காலத்தில், விதப்பாக அசோகன் காலத்தே, (வடவர் தென்னவர்) தொடர்பு நெருங்கியிருந்தது. அசோகன் கட்டளை வாசகங்கள் பிரமகிரிவரை தெற்கிற் காணப்படுகின்றன. அவன் விடுசெய்திகள் தமிழரசர் உட்பட அனைவர்க்கும் விடப்பட்டுள. அவரொடு தொடர்பு நெருங்கியதாகி யிருத்தல் வேண்டும். அசோகன் சேரர், சோழர், பாண்டியர், சத்தியபுத்திரர் அல்லது அதிகமானர் என்னும் தமிழ்நாட்டரசர் நால்வரைப் பற்றிக் கூறுகின்றான். அவருள் முதல் மூவரே அரசரென்றும், அதிகமானர் சேரரொடு உறவுகொள்ள முயன்ற சிற்றரசரே யென்றும், தமிழ் மரபுவழிச் செய்தி கூறுகின்றது. சங்கக் காலத்திலும் தொல்காப்பியத்திலும் இந் நிலை மையே காண்கின்றோம். அதிகமானர் வல்லமையுள்ளவராயிருந்து ஏனை மூவரசரொடும் அரசியல் தலைமைக்குப் போட்டியிட்ட காலம் ஒன்று, அதற்கு முன் இருந்திருத்தல் வேண்டும். அது அசோகன் கட்டளை வாசகங்கள் உருவான காலமாயிருந்திருத்தல் வேண்டும். தமிழ் எழுத்து முறை அனைத்திந்திய எழுத்துமுறையின் தழுவிய அமைப்பே யென்றும், அதைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் என்றும், இன்னொரு கட்டுரையிற் சொல்லாடப்பட்டுள்ளது. அசோகன் விடுசெய்தி பொதுமகன் உள்ளத்தைக் கவர்ந்ததனால், அவனுக்கு எழுத்தறிவின்மீது வேட்கை வளர்ந்தது. அது அனைத்திந்திய வெழுத்தைத் தழுவித் தமிழெழுத்தை யமைத்தற்கு அகத் தூண்டுகோலாயிற்று அல்லது அதை விரைவுபடுத்திற்று. இது அங்ஙன மாயின், தொல்காப்பியம் அசோகன் காலத்திற்குப் பின்னரே தோன்றி யிருத்தல் கூடும். புள்ளிக்கொள்கை புள்ளிக்கொள்கை பற்றியும் பலவிடத்துக் கூறப்பட்டது. கி.பி. 2ஆம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்பும்தான் புள்ளி தோன்றுகின்றது என்று குறிப்பிடப்பட்டது. வெட்டெழுத்துகளின் எழுத்து முறைமை இலக்கணக் கொள்கையைப் பின்பற்றுவதற்கு ஒரு நூற்றாண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலம் சென்றிருக்கு மென்று நாம் கருதிக்கொள்ளலாம். வெட்டெழுத்துகள் பொதுமக்கள் எல்லார்க்குமென்று ஏற்பட்டவை. பொது மக்கள் வழக்கங்கள் எளிதில் மாறுவதில்லை. ஆதலால், தொல்காப்பியம் கிறித்தவவூழித் திருப்பத்தில் அல்லது அதற்குச் சற்று முந்தித் தோன்றிய தாகக் கொள்ளலாம். எங்ஙனமிருப்பினும், சமற்கிருதத்திற் போல் எழுத்து முறைமைக்குத் தேவையின்றியே இலக்கணக் கூறுபடுப்பு வளர்ச்சி யடைந்திருக்கக் கூடியதே. இனி, எழுத்து முறையைப் பற்றிய குறிப்புக ளெல்லாம் பிற்கால வளர்ச்சிகள் என்பதும் கொள்ளக்கூடியதே. இலக்கணம் ஆனால், அங்ஙனமாயினும் அது காத்தியாயனார் காலத்துக்கு முந்தியதாகாது. காத்தியாயனரே இலக்கணம் என்னும் சொல்லாட்சியை, `லக்ஷ்ய' அல்லது வழக்கு என்பதை அடிப்படையாகக் கொண்ட அணங் கத்தைக் (இலக்கணத்தைக்) குறித்ததென்று விளக்க வேண்டியிருந்தது. ஏனெனின், தமிழிலக்கணம் தமிழ்நாட்டில் இக் கல்வியின் நெடுந் தொன்மை யைக் காட்டுகின்றது. தொல்காப்பியத்தில் வெவ்வேறு படைகள் முற்காலத்தவர் ஒருவரும் பிற்காலத்தவர் ஒருவருமாக இருபெரு நூலாசிரியர் தொல்காப்பியர் என்னும் பொதுப்பெயர் கொண்டிருந்ததனால் ஏற்பட்ட மயக்கத்தையும் குழப்பத்தையும் யாம் ஏற்கெனவே விளக்கி யிருக்கின்றேம். இக் கருத்துப்படி மயக்கம் நேரக் கூடியதாதல் இற்றைத் தொல்காப்பியத்தைக் கவனமாகக் கூறுபடுத்தி ஆயத் தூண்டுகின்றது. அத்தகைக் கூறுபாட்டாய்வுதான் அந் நூலின் பல்வேறு படைகளை வெளிப்படுத்திக் காட்டவொண்ணும். அப் படைக்கு வேறு காரணங்கள் பற்றிக் காலங் குறித்தல் வேண்டும். மறுப்பு அசோகன் காலம் கி.மு. 272-31. குமரிநாட்டினின்று முதற்கால மக்கள் வடகிழக்கும் வடக்கும் வடமேற்குமாக வடஆசியாவிற்கும் ஐரோப்பா விற்கும் சென்றபின், அவர் வழியினர் இந்தியாவுக்குத் திரும்பி வரு முன்னும், வடஇந்தியாவரை திரவிடர் பெரும்பான்மையராகவும் தமிழர் சிறுபான்மையராகவும் பரவியிருந்தனர். தமிழரே திரவிடராகவும் திரவிடரே பிராகிருதராகவும் மாறியதனால், ஆரியர் வந்த காலத்தில் வடஇந்தியர் பெரும்பாலும் பிராகிருதராகவும், நடுவிந்தியர் பெரும்பாலும் திரவிட ராகவும் இருந்தனர் என்று கொள்ளலாம். கி.மு. 4ஆம் நூற்றாண்டுவரை, சமற்கிருத இலக்கியத்திற் சேர சோழ பாண்டியம் என்னும் முத்தமிழ்த் தென்னாட்டரசுகளே குறிக்கப்பட்டுள்ளன. ஆயின், கி.மு. 3ஆம் நூற்றாண்டிற் பொறிக்கப்பட்ட அசோகன் கல்வெட்டு களில், பாண்டியம் சோழம் கேரளபுத்திரம் (சேரலம்) என்னும் முத்தமிழ் அரசக் குடிகளுடன் சத்தியபுத்திரர் என்னும் வேறோர் அரச மரபினரும் குறிக்கப்படுகின்றனர். அச் சத்தியபுத்திரரைத் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த அதிகமானர் என்னும் சிற்றரசக் குடியினராகப் பர். தெ. பொ. மீ. கூறியிருக்கின்றார். அதிகமானர் ஒரு பழஞ்சேரர் கிளையைச் சேர்ந்த சிற்றரச ராதலின், அவரைத் தனியே பிரித்துக் கூறத் தேவையில்லை. கடைக்கழகக் காலத்தில் மூவேந்தருக் கடுத்தபடியாக வல்லமை யோடிருந்து, கோசர் என்னும் ஒரு வகுப்பார் தமிழகத்தின் வடமேலைப் பகுதியான துளுநாட்டை ஆண்டு வந்ததாக, எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சிலப்பதிகாரமும் குறிக்கின்றன. நாலூர்க் கோசர் நன்மொழி (குறுந். 15), ஒன்றுமொழிக் கோசர் (குறுந். 73), மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர் (அகம். 15), வடுவுடை முகத்தர் கடுங்கட் கோசர் (அகம். 90), காப்புக்கை நிறுத்த பல்வேற் கோசர் (அகம். 113), ஒன்றுமொழிக் கோசர் (அகம். 196), வாய்மொழி நிலைஇய சேண்விளக்கு நல்லிசை வளங்கெழு கோசர் (அகம். 205), பல்லிளங் கோசர் (அகம். 216), வெல்கொடித் துனைகா லன்ன புனைதேர்க் கோசர் (அகம். 251), ஊர்முது கோசர் (அகம். 262), வென்வேல் இளம்பல் கோசர் (புறம். 169), வலம்புரி கோசர் (புறம். 283), நனைக்கள்ளின் மனைக் கோசர் (புறம். 369). அவையகம் விளங்க நான்மொழிக் கோசர் (மதுரைக். 508-9), கடந்தடு வாய்வா ளிளம்பல் கோசர் (மதுரைக். 773), அதுகேட்டுக் கொங்கிளங் கோசர் தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழைதொழில் என்றும் மாறாதாயிற்று. (சிலப். உரைபெறு கட்டுரை.) கோசர்.....JSeh£ டன்ன என்று அகநானூற்றுப் பா (15) கூறுவதால் அவர் துளுநாட்டை ஆண்டுவந்தவரென்று தெரிகின்றது. சிலப்பதிகாரம் சேரன், சோழன், பாண்டியன், கயவாகு என்னும் வேந்தரொடு கோசரையுஞ் சேர்த்துக் கூறுவதால், அவர் பெருமை அறியப்படும். ஒன்றுமொழிக் கோசர், நன்மொழிக் கோசர், வாய்மொழிக் கோசர் என்று பலவிடத்தும் சிறப்பித்துக் கூறப்பட்டிருப்பது, அவரது சொற்றவ றாமைப் பண்பைத் தெற்றெனக் காட்டும். அதனால், அவர் ஒருகால் சத்தியபுத்திரர் என்று அசோகன் கல்வெட்டுகளிற் குறிக்கப்பட்டிருக்கலாம். சொற்றவறாமை என்பது, வாய்நேர்ந்த உதவியைச் செய்யும் அறப் பண்புக்கும் வஞ்சினத்தை நிறைவேற்றும் மறப்பண்புக்கும் பொதுவாம். கடைக்கழகச் செய்யுள்கள் கோசரை வம்ப மள்ளர் என்று குறியாமை யின், அசோகன் காலத்திலும் அவர் குடியூன்றிய ஒரு தமிழக மறவர் வகுப்பினரா யிருந்திருக்கலாம். துனைகா லன்ன புனைதேர்க் கோசர் தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர்'' (அகம். 251) என்னும் அகநானூற்றுப் பகுதியும் இதை ஒருவாறுணர்த்தும். ஐம்பெரு வேளிருட் சிலர், ஒரோவிடத்துத் தமக்கு ஆற்றல் விஞ்சிய போது வேந்தர் ஒருவரையும் பலரையும் எதிர்த்தாரேனும் தமிழகம் தொன்றுதொட்டுத் தொல்காப்பியர் காலம்வரை மூவேந்தராட்சிக்குட்பட்டே யிருந்துவந்ததென்பது, வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் (செய். 78) என்னும் தொல்காப்பிய அடியால் விளங்கும். அசோகன் காலத்தில் அதிகமான் கை தமிழகத்தில் ஓங்கியிருந்த தென்பதற்கு யாதொரு சான்றுமில்லை. இற்றைத் தமிழ்ப் புலவியத்துள் தொல்காப்பியமே முதற் பொத்தகமா யிருத்தல் பற்றி, ஆராய்ச்சியில்லாரெல்லாரும் அதுவே முதல் தமிழ்நூல் என மயங்கிக் கொண்டிருக்கின்றனர். வையாபுரியாரோ வெனின், அதையும் பாணினீயத்தின் வழிநூலாகக் காட்டி வருகின்றனர். தொல்காப்பியம் படுகுழிகளும் கவர்நெறிகளும் நிறைந்தது. ஆதலால், மாந்தன் வரலாற்றாராய்ச்சியும் மொழிவரலாற்றாராய்ச்சியும் தமிழ் வேர்ச்சொல்லாராய்ச்சியும் இல்லாதவர், கி.மு.1200 போல் தோன்றிய இலக்கியத் திரிமொழியாகிய சமற்கிருத அறிவைக்கொண்டு, கி.மு. நூறாயிரம் ஆண்டுகட்கு முன் குமரிநாட்டில் தோன்றிய மாந்தன் முதன்bமாழியாகியதமிழியல்பைஅறியப்புகுவது,நழிகொண்டுஆழியைஅளந்தறியத்துணிவதேbயாக்கும்.அசோகன் கல்வெட்டுச் செய்திகளாற் கவரப்பட்ட தமிழகப் பொது மக்கள், அவற்றைத் தாமே படித்தறிய வேண்டுமென்னும் அவாவினால் உந்தப்பட்டு, அவற்றின் பிராமியெழுத்தைப் பயின்றுகொண்டன ரென்றும். அதுவே தமிழ் நெடுங்கணக்குத் தோற்றமென்றும், பர். தெ.பொ.மீ. தம் நுண்மாண் நுழைபுலத்தாற் கண்டிருப்பது, ஆகா! எத்துணை அருமையான உய்த்துணர்வு! இது விண்ணுலகத்தும் மண்ணுலகத்தும் வேறெவர்க்கும் தோன்றியிருக்கக் கூடாத விழுப்புல மணிக்கருத்தே! ஒரு கல்லறைத் தோட்ட வாயிலின் மேல் நாய்கள் புகற்க! என்று ஆங்கிலத்தில் எழுதி யிருந்த பலகையைக் கண்டவுடன், ஒரு நாய் புகாது நின்றுவிட்ட தென்று கூறும் பிக்குவிக்குத் தாள்களை (Pickwick papers) விட இது நகைச் சுவை விஞ்சியதே! இதனால், திக்கென்சை (Dickens) வென்றுவிட்டார் பர். தெ. பொ. மீ. யார் என்றே சொல்லலாம். அசோகன் கல்வெட்டுப் பிராமியெழுத்தைத் தமிழ்ப் பொதுமக்கள் கற்றபின், தொல்காப்பியம் தோன்றிற்றென்று, தமிழை இழித்தும் பழித்தும் புறக்கணிக்க வேண்டுமென்னுங் கருத்திருந்தாலன்றி, தொல்காப்பியங் கற்ற எவருஞ் சொல்லத் துணியார். மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் (எழுத். 15) என்னும் நூற்பாவுக்குப் பின், எகர ஒகரத் தியற்கையும் அற்றே (எழுத் 16) என்றுள்ள நூற்பா தொல்காப்பியப் படுகுழிகளுள் ஒன்றாகும். இது பின்னர் வேறொரு கட்டுரையில் விரிவாக விளக்கப்படும். தமிழ் நெடுங்கணக்கு அசோகன் கல்வெட்டுப் பிராமி யெழுத்தி னின்று பொதுமக்கள் தோற்றுவித்ததென்னும் முழுத் தவறான கருத்தை அடிப்படையாக வைத்தே, பர். தெ.பொ.மீ. மேற்கொண்டு ஆராய்ந்து செல் கின்றார். முதற் கோணல் முற்றும் கோணல் என்றவாறு, அவர் ஆராய்ச்சி அடிப்படைத் தவற்றினால் முற்றுந் தவறாக முடிகின்றது. உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூவகை யெழுத்து வேறுபாடும், அவற்றுக்கு வரிவடிவ வேறுபாடும் உள்ள நெடுங்கணக்கு முறை உலகில் முதன்முதல் தமிழிலேயே தோன்றிற்றென்பது, முன்னரே கூறப்பட்டது. மெய்க்குத் தனிவடிவில்லாது தோன்றிய குகைக் கல்வெட்டுப் பிராமி யெழுத்தை அடிப்படையாகக் கொண்டதனால், தமிழ் மெய்யெழுத்திற்கும் புள்ளிக்குறி கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே தோன்றிற்றென்பது, உண்மைக்கு முற்றும் மாறாகும். ஒரு நாட்டு மக்களை நல்வழிப்படுத்த அந் நாட்டு அரசனுக்கே இயலுமாதலால், அசோகன் தன் ஆட்சியெல்லைக்குள் பொறித்த பாறை, குகை, கம்பம் ஆகிய மூவிடக் கல்வெட்டுகளிலும், தன் அதிகாரத்துக் குட்பட்டவர்க்குக் கட்டளையாகவும் உட்படாத எல்லைப்புற நாட்டரசர்க்கு நட்பு முறைப்பட்ட நல்லுரையாகவும், துன்புறுத்தாமையை அடிப்படை யாகக் கொண்ட அன்பு நெறியீடுகளைக் குறித்தது, தமிழகத்தைப் பொறுத்தவரையில் அரசரை நோக்கியதேயன்றிப் பொதுமக்களை நோக்கியதன்று. ஓர் அரசன் நட்பு நிலையில் மற்றோர் அரசனின் குடிகட்கு நேரடியாக ஏதேனும் எழுதுவது இயல்புமன்று; முறையுமன்று. கீழ்வரும் அசோகன் கல்வெட்டுச் செய்தியை நோக்குக. 2ஆம் பாறைக் கல்வெட்டு (உவில்சன் (Wilson) மொழிபெயர்ப்பு) “In all the subjugated territories of the king Priyadasi, the beloved of the gods, and also in the hordering countires, as Choda, Palaya (or Paraya) Satyaputra, Keralaputra, Tambapani it is proclaimed, and Antiochus by name the Yona (or Yavana) raja and those princes who are nearer to or allied with that monarco, universally are apprised that two designs have been cherished by Priyadasi, one (design) regarding men, and one relating to animals; and whatever herbs are useful to men or useful to animals wherever there are none, such have been everywhere caused to be conveyed and planted and roots and fruits wherever there are none, such have been everywhere conveyed and planted; and on the roads wells have been caused to be dug, and trees have been planted for the respective enjoyment of animals and men.” (Corpus Inscriptionum Indicarum, Vol I. pp. 117-8) இதில் `Palaya' என்றது பாண்டியனை; Tambapani (தாம்பிரபரணி) என்றது இலங்கையை. அசோகன் கல்வெட்டுச் செய்தி சேர சோழ பாண்டிய சத்தியபுத்திரராகிய அரசரையே நோக்கியதென்பது. இதனால் தெள்ளத் தெளிவாம். மேலும் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டது வடவெல்லைப் புறத்திலேயே யன்றித் தமிழகத்துள்ளன்று. அதனால் தமிழ்ப் பொதுமக்கள் அதனை அறிந்தேயிரார்; கண்டிரார் என்பதைச் சொல்லவே வேண்டுவ தின்று. ஒரு மொழியிற் குறுங்கணக்காகவேனும் நெடுங்கணக்காகவேனும் வண்ணமாலை ஏற்படுவது, அறிஞராலேயேயன்றிக் கல்லாப் பொது மக்களாலன்று. ஆகவே, தமிழப் பொதுமக்கள் அசோகன் கல்வெட் டினின்று தமிழெழுத்தைக் கற்றுக்கொண்டது, முடவன் முண்மரமேறிக் கொம்புத்தேனைக் கொணர்ந்த செய்தியே யாகும். இனி, எழுத்தின்றியே சமற்கிருத இலக்கணம் தோன்றினாற் போன்று தமிழிலும் தோன்றியிருக்கலா மென்றும், தொல்காப்பியத்திலுள்ள இலக்கணக் குறிப்புகளெல்லாம், பிற்காலத்தனவென்றும், பர். தெ.பொ.மீ. கூறியிருப்பது, அவருக்குத் தமிழிலக்கணத்தைப் பற்றித் தெளிவான கருத்தின்மையைத் தெளிவாகக் காட்டும். இலக்கணம், இலக்கியம் என்னும் சொல் வரலாறு பின்னர்த் தெரி விக்கப்படும். கூற்று : தொல்காப்பியம் எழுத்ததிகாரம் I. நூன்மரபு ஒலியன்களின் பட்டி, அவற்றின் பாகுபாடு தொல்காப்பியத்தின் முதற்பாகம் எழுத்ததிகாரம் எனப்படும். அதன் முதற்பிரிவு நூன்மரபு, அதாவது தமிழிலக்கண நூல்களின் மரபு எனப்படும். தொல்காப்பியர் முதற்கண் எழுத்ததிகாரத்தையே இயற்றினா ரென்றும், அதனால் நூல் என்பது எழுத்ததிகாரத்தையே குறிக்குமென்றும், ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கின்றேன். நூன்மரபு தமிழ் ஒலிகளையும் அவற்றின் பாகுபாட்டையும் மெய்ம்மயக்கங்களையும் எடுத்துக் கூறு கின்றது. அவை யாவும் எழுத்தையே குறிக்கின்றன. கண்டுள்ள விளக்கங் களும் இயல்வரையறைகளும் பெரும்பாலும் அக்காலத்து வழக்கிலிருந்த நெடுங்கணக்கொலிகளின் வரிசை முறையைத் தழுவி யுள்ளன. அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் முதலெழுத்துகள் முப்பது; அவை இயற்கை யாக நெடுங்கணக்கு முறையைக் குறிக்கின்றன. மீண்டும் அவர் (நெடுங் கணக்கில்) ஔவொடு முடியும் பன்னீரொலிகளை உயிர் என்றும், அவற் றுக்குப் பின் வந்து னவ்வொடு முடியும் பதினெட்டை மெய் என்றும் கூறு கின்றார். அதன்பின் வெவ்வேறொலிகளின் அளபு தொடர்கின்றது. அவ் வடிப்படையில், ஒரு மாத்திரையுள்ள உயிர் குறில் என்றும், இருமாத்திரை யுள்ள உயிர் நெடில் என்றும் பாகுபாடு செய்யப்படுகின்றது. மெய் யெழுத்தின் மாத்திரை அரை. மறுப்பு வடமொழியெழுத்துகள் மொத்தம் 48 என்றும், 52 என்றும், 53 என்றும், பிறவாறும் இலக்கண நூலாசிரியரிடைக் கருத்துவேறுபாடிருந்து வருவது போன்று, தமிழிலும் சார்பெழுத்துப்பற்றிக் கருத்துவேறுபாடு தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றது. தொல்காப்பியர் சார்பெழுத்து மூன்றென்றார். அது முன்னூல்களைத் தழுவியது. பவணந்தியார் சார்பெழுத்துப் பத்தென்றார். இவ் விருவர்க்கும் இடைப்பட்ட அமிதசாகரனார், சார்பிற் றோன்றுந் தன்மைய வென்றா என்று தொகை குறியாது கூறினும், அதன் உரையாசிரியர், அவைதாம் குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன என்னுந் தொல்காப்பிய நூற்பாவை யொட்டிய, குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தப் புள்ளி யென்றிவை மூன்றும் சார்பிற் றோற்றத் துரிமையி னுளவே என்றொரு பழநூற்பாவை எடுத்துக்காட்டினார். எனினும், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இதுபற்றிக் கருத்துவேறுபாடிருந்திருத்தல் வேண்டும். முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் என்னும் பனம்பாரனார் பொதுப்பாயிரமும் இக் கருத்துக்கு இடந்தரும். இனி, தொல்காப்பியர் காலத்தில் நூல் என்றது பொதுவகைப்பட்ட பொத்தகத்தையன்று; ஏதேனும் ஒருவகை அறிவியலையே (Science). இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் தனித்தனி இலக்கியம், இலக்கணம் என இருதிறப்படும். அவற்றுள் இலக்கணமெல்லாம் அறிவியல் போன்றிருப்பதால் நூல் எனப்படும். மருத்துவம், கணிதம், கணியம் (வானநூல்) என்பனவும் அவை போன்ற பிறவும் அறிவியல்களே யாதலால், அவையும் நூலெனப்படும். பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் ................................. யாப்பின் வழிய தென்மனார் புலவர் (செய். 78) என்னும் தொல்காப்பிய நூற்பாவையும் அதன் உரையையும் நோக்குக. இலக்கணம் ஒரு மொழிபற்றிய அறிவியலா யிருத்தலால் நூல் எனப்பட்டது. அதனைக் கூறும் பொத்தகமும் நூல் எனவேபடும். எ-டு: மதிவாணனார் நாடகத் தமிழ்நூல். ஆகவே, நூன்மரபு என்பது, தமிழிலக்கண நூல்களில் மரபாகக் கொள்ளப்பட்டுவரும் எழுத்துகளும் அவற்றின் பாகுபாடும் என்று பொருள் படுமே யன்றி, நூன்மரபு ஒன்றே தொல்காப்பியர் முதன்முதல் எழுதிய இலக்கணநூல் என்று பொருள்கொள்ள இடந்தராது. எழுத்ததிகாரம் நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புணரியல் எனத் தொண் (ஒன்பான்) பகுதிப்பட்டிருப்பதும், நூன்மரபு என்பது எழுத்ததிகாரம் முழுவதையும் குறிக்கவியலாதென்பதைத் தெற்றெனத் தெரிவிக்கும். தமிழ் நெடுங்கணக்கு அசோகன் கல்வெட்டுப் பிராமி யெழுத்தி னின்று தோன்றியதென்றும், அதையே முதல் தொல்காப்பியர் நூலாக வடித்தார் என்றும், அதற்குப் பிற்பட்ட இலக்கணங்களெல்லாம் அவராலும் இரண்டாம் தொல்காப்பியராலும் பிந்திச் செய்யப்பட்டவையென்றும், இரு தவறான அடிப்படையிலேயே பர். தெ.பொ.மீ.யின் ஆராய்ச்சி இயங்கு வதால், முதற்கோணல் முற்றுங் கோணலா யிருப்பதை நெடுகலுங் காணலாம். [“Then follows....on which basis the classification of long and short vowels are made as having one and two matras respectively,” என்னும் மூலப் பகுதியிலுள்ள நிரனிறை வழு அச்சுப் பிழையாகத் தெரி கின்றது.] வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல். என்னும் பனம்பாரனார் பொதுப்பாயிரத்தொடு பர். தெ.பொ.மீ.-யின் கொள்கை முற்றும் முரண்படுதல் காண்க. கூற்று புள்ளி அவர் (தொல்காப்பியர்) சில எழுத்துகளின் வரிவடிவைக் கூறப் புகுமிடத்துப் புள்ளிக்கொள்கையைப் புகுத்துகின்றார். வேறோ ரிடத்தில் விளக்கியுள்ளவாறு, அவர் புள்ளியுடைய மெய்யெழுத்துகளொடு தொடங்கியிருக்க வேண்டுமென்பது விளங்கக்கூடியது. எகர ஒகர உயிர்க் குறில்களும் புள்ளி பெற்றுள்ளன. இது உயிர்மெய் என்னும் அசை யெழுத்தைப்பற்றிக் கூற வழிகாட்டுகின்றது. இவற்றிற்கிடையே மிகக் குறுகிய மகரமாகிய மகரக்குறுக்கத்தின் வண்ணனை வருகின்றது. அதன் வரிவடிவம் புள்ளிக்கு அல்லது மெய்யெழுத்திற்கு முன்பே கூறப்படு கின்றது. இன்னோ ரொழுங்கின்மையும் உள்ளது. நூன்மரபு எழுத்தொலி களைத் தனித்த வடிவிற் கூறுகின்றது. மொழிமரபு அவற்றின் புணரியல் வேறுபாடுகளைக் கூறுகின்றது. இவ் வேறுபாட்டிற்கு மாறாக, ஒரு புணரியல் வேறுபாடாகிய மகரக் குறுக்கம் நூன்மரபிற் கூறப்பட்டுள்ளது. தெளிவாக, இது ஓர் இடைச்செருகல். மயிலைநாதர் மகரக்குறுக்கத்திற்கு மேற்கோள் வேறு நூல்களினின்று காட்டித் தொல்காப்பியத்தினின்று காட்டாமை, சிறப்பாகக் கவனிக்கத் தக்கது. மகரக்குறுக்கம் பற்றிய தொல்காப்பிய நூற்பா பிற்காலத் தொல்காப்பியத்தைச் சேர்ந்ததாயிருக்கலாமா? மறுப்பு புள்ளியென்பது தொல்காப்பியர் புதிதாக வகுத்ததன்று. உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூவகை யெழுத்தும் முதன்முதலாகக் கொண்ட தமிழ் நெடுங்கணக்கு, வரலாற்றிற்கெட்டாத குமரிநாட்டு வினையினீங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது. மெய்யெழுத்திற்குக் குறியாகக் கொள்ளப்பட்டது புள்ளி. இது பின்னர் விரிவாக விளக்கப்படும். தொல்காப்பியர் நூன்மரபில் எழுத்துகட்கு அளவு கூறிவருமிடத்து, மெய்யி னளபே யரையென மொழிப (11) என்று மெய்யெழுத்திற்கு அளபு குறித்தபின், சார்பெழுத்து மூன்றும் அவ்வளபே கொள்வதால், அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே (12) என்று நூற்பாவியற்றி, அரையினுங் குறுகிக் காலாக வொலிக்கும் மகரக் குறுக்கத்தை, ``அரையளவு குறுகல் மகர முடைத்தே இசையிடன் அருகுந் தெரியுங் காலை (13) என்று கூறி, அதன் சிறப்பான வரிவடிவத்தை, உட்பெறு புள்ளி யுருவா கும்மே (14) என்று அறிவித்தார். இங்ஙனம், உரிய இடத்திலும் தொடர்ச்சியான முறையிலும் கூறப்பட் டுள்ள புள்ளிச் செய்தியை, மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல் (15) என்னும் புள்ளியெழுத்துப் பற்றிய நூற்பாவுக்கு முற்படக் கூறியது, இடவழு என்னும் குற்றமெனக் கொள்வது பொருந்தாது. எழுத்தெனப் படுப. .............. முப்பஃதென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே. (1) அவைதாம் குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன (2) என்று நூல் தொடக்கத்திலேயே புள்ளிச் செய்தி கூறப்பட்டிருப்பதால், அதை ஆசிரியன்வாய்க் கேட்டறிந்த மாணவனுக்கு, உட்பெறு புள்ளி யுருவா கும்மே. என்பது புதியதாகவும் விளங்காததாகவும், முற்படக் கூறல் என்னுங் குற்றத்தின் பாற்பட்டதாகவும், கொள்ளப்படா தென்க. இனி, தொகுத்துச் சுட்டல், வகுத்துக் காட்டல், விரித்துக் கூறல், ஒப்பின் முடித்தல், ஒன்றினம் முடித்தல், தன்னின முடித்தல், மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்றி முடித்தல் முதலிய உத்திகளை நோக்கினும், உட்பெறு புள்ளி யுருவா கும்மே என்னும் நூற்பா நூன்மரபில் இடம் பெற்றிருப்பது வழுவாகத் தோன்றாது. மயிலைநாதர், நன்னூலின் சார்பெழுத்துத் தொகை நூற்பாவுக்கு, எழுத்தெனப் படுப........மூன்றலங் கடையே என ஆசிரியர் தொல்காப்பியனாரும் இவ்வாறு முதல் சார்பென வகுத்துக்கொண்டா ரென்க. அஃதே, அவர் சார்பெழுத்து மூன்றே கொண்டா ராலோ வெனின், அஃதே, நன்று சொன்னாய்! ஒழிந்தவை எப்பாற்படு மென்றார்க்கு மூன்றாவதொரு பகுதி சொல்லலாவ தின்மை யானும், முதலெழுத்தாந் தன்மை அவற்றிற்கின்மையானும், சார்பிற் றோன்றுத லானும், இப் பத்தும் சார்பாகவே கொள்ள வேண்டுமென்பது. அஃதே அமைக. ஒற்றளபெடையும் ஐகாரக் குறுக்கமும் யாண்டுப் ஔகாரக் குறுக்கமும் மகரக் குறுக்கமும் ஆய்தக் குறுக்கமும் பெற்றாமோ வெனின், வன்மையொடு ரஃகான் ழஃகா னொழிந்தாங் கன்மெய் ஆய்தமோ டளபெழும் ஒரோவழி. அளபெடை தனியிரண் டல்வழி ஐஔ உளதாம் ஒன்றரை தனிமையு மாகும். பதினெண் மெய்யும் அதுவே மவ்வோ டாய்தமும் அளபரை தேய்தலும் உரித்தே என்றார் ஆசிரியர் அவிநயனாரும் எனக் கொள்க என வுரைத்துள்ளார். இதில், அவிநய நூற்பாவே போதுமாதலின், தொல்காப்பிய நூற்பா எடுத்துக் கூறப்படவில்லை. அதனால், தொல்காப்பிய மகரக் குறுக்க நூற்பாவைப்பற்றி நாம் ஐயுற வேண்டியதில்லை. இகரக் குறுக்கம், உகரக் குறுக்கம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் முதலியன வும் தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ளன. ஆயினும், அவற்றையெல்லாம் மயிலைநாதர் மேற்கோளாகக் காட்டவில்லை, அங்ஙனமே மகரக் குறுக்கமும் என்க. இனித் தொல்காப்பிய மகரக் குறுக்க நூற்பா பிற்காலத்ததாயின், செய்யுள் இறுதிப் போலி மொழிவயின் னகார மகாரம் ஈரொற் றாகும். (மொழி. 18) னகாரை முன்னர் மகாரங் குறுகும் (மொழி. 19) என்பனவும் பிற்காலத்தனவேயாதல் வேண்டும். அங்ஙனம் ஆகாமை காண்க. கூற்று ஒலியன்களின் பாதீடு பிராதிசாக்கியங்களும் ஒலியன்களின் பாதீட்டை விரித்துக் கூறு கின்றன. நன்னூல் அதை முதலீறிடைநிலை யென்கின்றது. தொல் காப்பியர், எங்ஙனமிருப்பினும், முதலிலும்இறுதியிலும்வரும்ஒலியன்களைமொழிமரபிலும்,மெய்ம்மயக்கங்களைநூன்மரபிலும்,எடுத்துக்கூறுகின்றார்.....இம் மெய்ம்மயக்கம் தனிச் சொல்லிலும் தொடர்ச் சொல்லிலும் கூட்டுச் சொல்லிலும் நிகழும். எங்ஙன மிருப்பினும், நச்சினார்க்கினியர் தனிச் சொல்லில் வழங்கும் மெய்ம்மயக்கங்களையே எடுத்துக் கூறி, எடுத்துக் காட்டில்லாத மெய்ம்மயக்கங்களெல்லாம் இறந்துபட்டன என்றொரு கொள்கையை மேற்கொள்கின்றார். உண்மையில் நூன்மரபிற் கொவ்வாத சுட்டுவினா அடிகளும் அதிற் கூறப்பட்டுள்ளன. மறுப்பு ஆரிய இனம் தோன்று முன்பே முத்தமிழிலக்கணம் குமரிநாட்டில் முழு வளர்ச்சியடைந்திருந்ததனாலும், முல்லை நாகரிக நிலையினரான ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலத்தில் வடஇந்தியாவில் தமிழரும் வதிந்திருந்ததனாலும், இராமாயணக் காலத்திலேயே அகத்தியர் தென்னாடு வந்து என்றுமுள தென்றமிழ் இயம்பி மாபிண்டமாகிய அகத்தியம் இயற்றியதனாலும், ஆரிய முதலிலக்கியமாகிய இருக்கு வேதம் இந்தியா விலேயே இயற்றப்பட்டதனாலும், பல பிராதிசாக்கிய நூற்பாக்கள் தொல்காப்பிய நூற்பாக்களை ஒத்திருப்பதனாலும், பாணினீயத்துக்கு முந்திய முதற் சமற்கிருத இலக்கணமாகிய ஐந்திரம் தமிழகத்திலேயே தோன்றி மறைந்ததனாலும், பிராதிசாக்கியங்கட் கெல்லாம் தமிழிலக்கணமே மூலம் என்பது வெள்ளிடை மலையாம். உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்னும் இருவகை மெய்ம்மயக்கங்களுள், பின்னதைப் பற்றிய தொல்காப்பிய நூற்பாக்களின்படி, பல மெய்ம்மயக்கங்கள் தொகைச்சொல் என்னும் கூட்டுச் சொற்களிலும் தொடர்ச் சொற்களிலுமே நிகழும். எ-கா : ள்ச - நீள்சினை, ல்ய - கொல்யானை, ள்ய - வெள்யாறு, ண்ச - வெண்சாந்து, ண்ஞ - வெண்ஞாண், ண்ய - மண்யாறு, ண்வ - எண்வட்டு, ன்ச - புன்செய், ன்ஞ - மென்ஞாண், ன்ய - இன்யாழ், ன்வ - புன்வரகு, ம்வ - வரும் வண்ணக்கன், ய்ச - எய்சிலை, ர்ச - வார்சிலை, ழ்ச - வாழ்சேரி, ய்ஞ - பாய்ஞெகிழி, ர்ஞ - நேர்ஞெகிழி, ழ்ஞ - வாழ்ஞெண்டு, ர்ய - போர்யானை, ழ்ய - வீழ்யானை, ய்ங - வேய்ங்ஙனம், ர்ங - வேர்ங்ஙனம், ழ்ங - வேழ்ங்ஙனம். ஞ்ய, ந்ய, ம்ய, வ்ய, என்பவற்றிற்கு உரையாசிரியர் காட்டிய உரிஞ்யாது, பொருந்யாது, திரும்யாது, தெவ்யாது என்பவற்றை உரிஞ் யானை, பொருந்யாறு, திரும்யாமை, தெவ்யாடு என மாற்றின், நச்சினர்க் கினியர் கூறும் குற்றம் நீங்கிவிடும். எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய (எச்ச. 24) என்று தொல்காப்பியமே கூறுவதால், மெய்ம்மயக்கத்துக்குத் தனிச்சொற் போன்றே கூட்டுச் சொல்லும் கொள்ளப்படும். இன்று தனிச்சொல் எடுத்துக்காட்டில்லா மெய்ம்மயக்கங்கள் சிலவற்றுக்கு, முன்காலத்தில் தனிச்சொல்லிருந்து பின்னர் இறந்துபட் டிருக்கலாம். ஆயின், தனிச்சொல்லே எடுத்துக்காட்டுக்குத் தகும் என வரையறுப்பது பொருந்தாது. ஒரே சொல் அல்லது எழுத்தமைதி வெவ்வேறு வகையில் வெவ்வேறு இயலுக்கு உரியதாகலாம். அம்ம என்னும் விளிப்பெயர் கேட்பிக்கும் இடைச்சொல்லாயின் இடையியலுக்குரியது. கருவி என்னும் தொகுதிப் பெயர் செய்யுள் வழக்குப்பற்றி உரியியலுக்குரியது. இங்ஙனமே சில மெய்ம் மயக்கங்களும் எழுத்தியலுக்கும் புணரியலுக்கும் உரியனவாகும். ஆதலால், கட்சிறார் கற்சிறார் என்பன இருமொழிப் புணர்ச்சியாகலின் ஈண்டைக்காகா என்று நச்சினார்க்கினியர் விலக்குவது பொருந்தாது. இனி, ந்ய, ண்ய, ம்ய, ன்ய என்பன போன்ற மெய்ம்மயக்கங்கள் தமிழில் தனிச்சொற்குப் பொருந்தாவாதலின், என்றும் கூட்டுச் சொல்லி லேயே நிகழும். அவற்றைத் தனிச்சொற்கும் உரியனவென்று கூறி, தமிழை வடமொழி வண்ணமாக்கவும் வடமொழி வழியதெனக் காட்டவும் முயல்வர், அகப்பகையும் புறப்பகையுமாகிய தமிழ்ப்பகைவர் சிலர். சுட்டெழுத்துகளும் வினாவெழுத்துகளும் தமிழ் மரபெழுத்து களாதலின், அவையும் தொல்காப்பிய நூன்மரபிற் கூறப்பட்டுள்ளன. அசோகன் கல்வெட்டுப் பிராமி யெழுத்தினின்று தமிழ் நெடுங்கணக்குத் தோன்றிற்றென்று மயங்கியோ மயங்காதோ கூறுவதனாலும், இச் சுட்டெழுத்தும் வினாவெழுத்தும் வடமொழியிலின்மையால வடமொழி யிலக்கணத்தில் கூறப்படாமையாலும், இவ் விருவகை யெழுத்துகளும் நூன் மரபிற்குப் பொருந்தாவெனப் பர். தெ. பொ. மீ. கூறுவது அவர் பிறழ் வுணர்ச்சியையே பிறங்கக் காட்டும். கூற்று மொழிமரபு அடுத்த இயல் மொழிமரபு. இதில் அவர் இ,உ, ஆய்தம் என்னும் மூன்றன் குறுக்கங்களாகிய புணரியல் வேறுபாடுகளைக் கூறுகிறார். அம் மூன்றும் தனிச்சொற்களிலும் புணர்ச்சொற்களிலும் நிகழ்கின்றன. சமற்கிருதப் புலுதம் (ப்லுத) என்னும் உயிரளபெடையை அறிந்துகொண்டு, இருமாத்திரைக்கு மேலொலிக்கும் நெட்டுயிர் தமிழில் இல்லை யென்று ஏற்கெனவே வாசகரை எச்சரித்திருக்கின்றார். ஆயின், ஆறாம் நூற்பாவிற் கூறியுள்ளதையே ஏன் இங்குத் திருப்பிக் கூறவேண்டு மென்பது தெளிவா யில்லை. ஒருகால், அளபெடை உயிர்நெடிலின், புணரியல் வேறுபாடாக நிகழ்கின்றதென்று இங்குக் கூறுகின்றார் போலும்! மறுப்பு தொல்காப்பியம் இடைக்கழகக் காலத்தில் இயன்ற பல்வேறு தனித்தமிழ் முன்னூல்களினின்று தொகுத்த தொகைச் சார்பு நூலாதலின், வடமொழிப் புலுத அறிவைக்கொண்டு. மூவள பிசைத்தல் ஓரெழுத் தின்றே (எழுத்து. 5) என்று தொல்காப்பியர் கூறினார் என்னுங் கூற்று, கூற்றுப்போற் கொடியதே. எழுத்தெனப்படுப.......முப்பஃதென்ப.” (எழுத்து. 1) அ இ உ எஒ.......குற்றெழுத் தென்ப. (எழுத்து. 3) ஆ ஈ ஊ ஏ ஐ ஓஓள.....நெட்டெழுத் தென்ப. (எழுத்து. 4)நீட்டம்வேண்டின்....... என்மனார் புலவர். (எழுத்து. 6) என்று பலர்பாலிலேயே தமிழமுன்னூலாரைத் தொல்காப்பியர் குறித் திருத்தல் காண்க. ஈரளபிசைத்தல்ஓரெழுத்தின்றே”என்றுவரையறுத்ததனால்,அதற்குவிலக்காகவரும்சிறுபான்மநிகழ்ச்சியானஅளபெடையமாணவன்அறிதற்பொருட்டு,அதனையடுத்து,நீட்டம்வேண்டின்..... என்மனார் புலவர், என்று பொதுப்படச் சுருக்கிக் கூறினார். ஆயின், உயிரள பெடை என்று எவ்வாறு நிகழுமென்றும், அதற்கு அடையாளம் எதுவென் றும், எத்தனை மாத்திரையென்றும், விரிவாகத் தெரியவேண்டுதலின், அவற்றை இங்கு மொழிமரபிற் கூறினார். எழுத்தின் தனிநிலை பற்றியது எழுத்தியல்; அதன் சொன்னிலை பற்றியது மொழியியல். ஓரெழுத்துச் சொல்லாயின், தனிநிலையிலும் இருவகை வழக்கிலும் அளபெடை நிகழும். எ-கா : ஏஎஎஎ அண்ணா!-உலகியலளபெடை ஓஒ இனிதே (குறள். 1176) - செய்யுளியலளபெடை கூற்று ஒலியியற் சொல்லைப் பின்னர் ஆயத்தொடங்கி ஓரெழுத்துச் சொல், ஈரெழுத்துச் சொல், மூவெழுத்துச் சொல் என அதை மூவகையாக வகுக்கின்றார். அதன்பின் முதலெழுத்துகளைப் பற்றிக் கூறுகின்றார். மகரக் குறுக்கம் மீண்டும் ஒருமுறை சொல்லப்படுகின்றது. ஐகாரக் குறுக்கமும் சொல்லப்படுகின்றது. மூன்றிற்கு மேற்பட்ட புணரியல் எழுத்து வேறுபாடு களை அவர் ஒப்புக்கொள்ளாவிடின், இக் குறுக்கங்களை இவ்விடத்திற் கூறுவது பொருந்தாது. பிற்காலத்தார் ஐகார ஔகாரங்களை நெடில்களாகச் செய்யுளில் ஆள்வதன் இடர்ப்பாட்டை உணர்ந்த போது, போலிக் கொள்கையைப் புகுத்தியிருத்தல் வேண்டும். மறுப்பு மகரக்குறுக்கத்தை மொழிமரபிற் கூறியது, கூறியது கூறல் என்னுங் குற்றமன்று. நூன்மரபில் எழுத்துகளின் மாத்திரை யளவைக் கூறுமிடத்து, மகரக்குறுக்க மாத்திரை காலென்று கூற நேர்ந்தது. மொழிமரபில் மகரக் குறுக்கம் நிகழும் இடத்தைச் சொல்ல வேண்டியிருந்ததனால், செய்யு ளிறுதிப் போலி மொழிவயின் னகார மகாரம் ஈரொற் றாகும் (18) னகாரை முன்னர் மகாரங் குறுகும் (19) என்றார் ஆசிரியர். ஈரிடத்தும் கூறவேண்டியது கூறலேயன்றிக் கூறியது கூறலன்று. அரையளபு குறுகல் மகர முடைத்தே இசையிடன் அருகும் தெரியுங் காலை (நூன். 13) உட்பெறு புள்ளி யுருவா கும்மே (நூன். 14) என்னும் இவ் விரு நூற்பாக்களையும், மேற்கூறிய மொழிமரபு நூற்பாக்க ளுடன் ஒப்புநோக்கி உண்மை காண்க. தொல்காப்பியத்தின் முன்னூல்களான தனித்தமிழ் நூல்களெல்லாம், இயல்பான தமிழெழுத்துகளை மொத்தம் முப்பதென்றே கொண்டு, அவற்றுள் நான்கின் இடவேறுபாட்டாலும் புணர்ச்சி விளைவாலும் ஏற்பட்ட முத் திரிபொலிகளைச் சார்பெழுத்துகளென்றும், இயல்பான மூலமுப்பதை யும் முதலெழுத்துகளென்றும், வேறுபடுத்தி வழங்கினும், முதலெழுத்து களையே முதன்மையாகக் கருதினவென்பது, எழுத்தெனப் படுப அகரமுதல் னகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே என்னும் தொல்காப்பிய முதல் நூற்பாவால் அறியக் கிடக்கின்றது. எல்லா மெய்யொடுங் கூடா ஈருயிரும் உயிரேறா ஒரு மெய்யுமான முச்சார்பெழுத்துகளுள் இரண்டு சற்றுக் குறுகியொலிப்பினும், ஒலித்திரிபே சார்பெழுத்துகளின் சிறப்பியல்பாம். பிற்காலப் பதின்மூன்றாம் நூற் றாண்டினரான நன்னூலார், ஒலிக் குறுக்கமும் நீட்டமும் கலப்புமான இயல்புகளையுஞ் சேர்த்து, சார்பெழுத்துப் பத்தென விரித்தார். இக் கொள்கை தொல்காப்பியருக்கில்லை. ஆயின், ஒலித்திரிபு போன்றே ஒலிக்குறுக்க நீட்டமும் சொன்னிலைக் குரியவாதலின், அவற்றை மொழி மரபிற் கூறினார். ஆதலால், மகரக் குறுக்கமும் ஐகாரக் குறுக்கமும் கூறுவதற்கு மொழிமரபே தக்க இயலாம். ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔஎனும் அப்பால் ஏழும் ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப. (4) அகர இகரம் ஐகார மாகும். (54) அகர உகரம் ஔகார மாகும் (55) என்று தொல்காப்பியம் கூறுவதால், ஐகார ஔகாரங்கள் jனிநிலையில்நன்றும்நருமாத்திரைநெடிலே.ஈஎள பிசைக்கும் இறுதிஇல் உயிரே ........................ குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும் (766) என்பதனால், ஐவியப் பாகும் (868) என்னுமிடத்தும், ஐகாரம் இருமாத்திரை நெடிலேயாதல் வேண்டும். இனி, ஐகார ஔகாரம் சொல்லுறுப்பாக வந்து மாத்திரை குறையினும்,செய்யுளில்எதுகை நேக்கிஅய், அவ்எனவரி மாற்றத் தேவையில்லை. பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப (1091) என்னும் நூற்பாவில், ஐயர் என்னும் வடிவமே தொன்றுதொட்டு மூலத்திலும் உரையிலும் வழங்கிவருதல் காண்க. கூற்று யகரத்தின் மட்டிட்ட வழக்கு வேறோரிடத்திற் குறிக்கப்பட்டுள்ளது. சகரமெய் அகரத்தொடும் ஐகார ஔகாரங்களோடும் கூடி வருவதில்லை. அகரத்தொடு வராமைக்குக் காரணம், அண்ணமெய்யாகிய சகரத்தின் பின்வரும் அகரம் அண்ணவுயிராகிய எகரமாகத் திரிந்துவிடுவதே. இது தொல்காப்பியர் கால மொழிநிலையைக் குறிக்கின்றது. அந் நிலை பல சகர முதற்சொற்கள் வந்துள்ள கழக இலக்கியக் கால நிலையினின்று வேறு பட்டதாயிருத்தல் வேண்டும். மறுப்பு தொல்காப்பியர் காலத்திற் சகர முதற்சொல் ஒன்றேனும் தமிழில் வழங்கவில்லையென்பது சற்றும் பொருந்தாது. சக்கரம், சகடம் முதலிய ஒருசில (வடமொழி தென்மொழியாகிய) இருமொழிப் பொதுச் சொற்களை நீக்கினும், பெருவாரி உலக வழக்கும் இன்றியமையா அடிப்படையுமான சக்கு, சக்கை, சகதி, சங்கு, சச்சரவு, சட்டம், சட்டி, சட்டு, சட்டை, சடங்கு, சடார், சடை, சடைவு, சண்ணு, சண்பு, சண்டி, சண்டு, சண்டை, சணாய், சதக்கு, சதுப்பு, சதை, சந்து, சந்தை, சப்பட்டை, சப்பளி, சப்பாணி, சப்பு, சப்பை, சம்பளம், சம்பா, சம்மணம், சமட்டி, சமம், சமழ், சமை, சர், சரசர, சரட்டு, சரள், சரி, சருகு, சருவு, சரேல், சல்லி, சலக்கு, சலசலப்பு, சலங்கை, சலவை, சலி, சவ்வு, சவட்டு, சவர், சவளி, சவை, சழக்கு, சழி, சள், சள்ளை, சளப்பு, சளார், சளி, சற்று, சறாம்பு, சறுக்கு முதலிய ஏராளமான சகரமுதற் சொற்கள் தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னரே தமிழில் தோன்றின என்பது, எள்ளளவும் இயற்கைக்கு ஏற்காது. ஆரியர் வந்த காலத்தினின்று ஆங்கிலர் வந்த காலம்வரை, தமிழுக்குப் படிப்படியாக மேன்மேலும் கேடு நேர்ந்ததேயன்றி ஆக்கம் நேரவில்லை. தம்மைச் சூத்திரர் என்றும், தம் மொழியை இழிந்தார் மொழியென்றும் தாமே தாழ்த்திக்கொண்டு, ஆரியரை நிலத்தேவரென்றும் அவரது இலக்கியமொழியைத் தேவமொழி யென்றும் நம்பி, இயன்றவரை தமிழ்ச் சொல்லை வழக்கு வீழ்த்திச் சமற்கிருதச் சொல்லையே மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் வழங்கிவந்த அடிமைத் தமிழர், எங்ஙனம் புதுத் தனித்தமிழ்ச் சொற்களைப் புனைந்திருத்தல் கூடும்? ஆகவே, கடைக்கழகக் காலச் சகரமுதல் தமிழ்ச்சொற்க ளெல்லாம் ஆரியர் வருகைக்கு முற்பட்ட பழங்காலத்தனவே, இதை, சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி சளிசகடு சட்டை சவளி - சவிசரடு சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும் வந்ததனாற் சம்முதலும் வை என்னும் மயிலைநாதருரை மேற்கோளாலும் தெளிக. இனி, துடிசைகிழார் அ. சிதம்பரனார் கருத்துப்படி, சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அஐஔ எனும் மூன்றலங் கடையே (தொல். மொழி. 27) என்னும் நூற்பாவின் ஈற்றடிக்கு, அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே என்னும் பாட வேறு பாடு கொண்டு, ஔ என்னும் ஓருயிரொழிந்த ஏனைப் பதினோருயி ரொடுங் கூடிச் சகர மெய்யும் சொன்முதலாம் என்று பொருள் கூறின், சகரக் கிளவித் தொல்காப்பிய நூற்பா இம்மியும் மயக்கிற்கும் மறுப்பிற்கும் இடமின்றித் தெளிதலும் காண்க. கூற்று பிறப்பியல் பிறப்பியல் எழுத்துகளின் ஒலிப்பு முறையைப்பற்றிக் கூறுகின்றது. அதன் இறுதி நூற்பா, அவர் நோக்குப் புறநோக்காக வுள்ளதென்றும், ஒலிப்புமுறைக்கு முன் நிகழ்வதை வண்ணிக்கவில்லை யென்றும் கூறுகின்றது. ஒலிப்புமுறைக்கு முற்பட்ட நிலைகள் பற்றிய பல செய்திகள் அந்தணர் மறையில் வண்ணிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடுகின்றார். சமற்கிருத ஆசிரியர் கொள்கையை அவர் அறிந்திருந்ததை இது தெளிவாகக் குறிக்கின்றது. விளக்கம் இது பிறன்கோட் கூறல் என்னும் உத்திக்கு இனம். என்னை? உந்தியில் எழுந்த காற்றினைக் கூறுபடுத்தி, மாத்திரை கூட்டிக்கோடலும், மூலாதாரம் முதலாகக் காற்றெழுமாறு கூறலும் வேதத்திற்கு உளதென்று இவ் வாசிரியர் கூறி, அவர் மதம்பற்றி அவர் கொள்வதோர் பயன் இன்றென்ற லின், என்னும் நச்சினார்க்கினியர் கூற்று, இந் நூற்பாவின் தேவை யின்மையையும் பயனின்மையையுமே குறிக்கின்றது. உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற் றமைய நெறிப்பட நாடி எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப் பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல திறப்படத் தெரியுங் காட்சி யான (தொல். எழுத்து. 83) என்று பிறப்பியல் முதல் நூற்பாவிற் கூறிய முகவுரையே, ஒலிப்புமுறைக்கு முற்பட்ட நிகழ்ச்சியைத் தெரிந்துகொள்ளப் போதுமானதாம். நுண்ணொலி (சூக்குமை), பருவொலி (பைசந்தி) இடையொலி (மத்திமை), எழுத்தொலி (வைகரி) என்று, ஆரியச் சிவக்கொண்முடிபு கூறும் நால்வகை யொலியுள், முதல் மூன்றும் அறிவியலோடு பட்டவையல்ல. தனியெடுப்பொலியும் மூச்சொலியும் தமிழுக்கின்மையின், அவற்றின் பிறப்பைப் பற்றியும் தமிழிலக்கணத்திற் கூறவேண்டிய தில்லை. இன்பமும் பொருளும் அறனும் என்றாங் கன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டம் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே (தொல். களவு. 1) என்பது போன்ற பல பிற நூற்பாக்கள் தொல்காப்பியரின் சமற்கிருத அறிவைத் தெரிவிக்கப் போதுமானவை. ஆதலால், பிறப்பியல் இறுதி நூற்பா நின்று பயனின்மை என்னும் குற்றத்தின் பாற்பட்டதே. - ``செந்தமிழ்ச் செல்வி'' பெப்பிரவரி சூலை 1980 8 `பாணர் கைவழி'மதிப்புரை(மறுப்பு) திருவாளர் பி. சாம்பமூர்த்தி அவர்கள் பாணர் கைவழியைப் பற்றிய தம் மதிப்புரையைத் தொடங்கு முன்னரே, காலஞ்சென்ற மறைத்திரு விபுலாநந்த அடிகள் இயற்றிய யாழ்நூல் மதிக்கொணாக் களஞ்சிய மென்றும், அதுபற்றி இற்றை யுலகம் அவர்கட்கு மிகக் கடமைப் பட்டுள்ளதென்றும், அவர்கட்குப் புகழ்மாலை சூட்டுகின்றார்கள். இதற்குக் காரணம், அந் நூலின் போலி முடிபுகளெல்லாம் மதிப்புரையாளரின் விருப்பத்திற் கிசைந்திருத்தலே. தமிழரென்று தம்மைச் சொல்லிக்கொண்டு ஆராய்ச்சியின் பேரால் தமிழுக்குப் பெருவசை விளைத்து ஆரிய ஏமாற்றத்திற்கு அரண் செய்தவருள் விபுலாநந்த அடிகளும் ஒருவர் என்பது, இசையியல்புந் தமிழிசைத் தரமும் அறியாத பலர்க்குத் தெரியாதுபோயினும், அவற்றை யறிந்த ஒரு சிலர்க்கேனும் தெரியாததன்று. அவர்கள் உடல் தாங்கியிருந்த போதே குரல் மத்திமம் என்னும் அவர்கள் கொள்கையைக் கண்டித்துக் குரல் சட்சமே என்று செல்வியில் ஒரு கட்டுரை வரைந்தேன். அதற்கு அவர்கள் ஓர் இளைஞர் பெயரால் மறுப்பெழுதினார்கள். யான் அம் மறுப்பிற் கொரு மறுப்பு வரைந்தேன். அத்தோடு நின்றது அவர்கள் தருக்கு. முதற்கோணல் முற்றுங்கோணல் ஆதலின் அடிப்படைக் கொள்கையே தவறாயிருக்கும்போது, அவர்கள் நூன்முடிபு எத்தகையதாயிருக்கும்? ஒரு மூலை முடங்கியில் கூட்டங்கூட்டி, எதிர்ப்பாளரைச் செலவிற்குப் பணங் கொடுத்து வரவழைக்காது, இசைத்தமிழ் மரபறியாதார் முன்னிலை யில் அவர்கள் தங்கள் யாழ்நூலை அரங்கேற்றியதாலும்; கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் அதனை வெளியிட்டதாலும்; அது புரையற்ற நூலாகப் போற்றப்பட்டுவிடாது. துவராடை யணிந்தவர் நூலெல்லாம் துகளற்றன என்னும் கொள்கை எம்மனோர்க் கில்லை. இனி, மதிப்புரையாளரின் உடம்படாக் கூற்றுகளை யெல்லாம் ஒவ்வொன்றாகக் கூறி மறுப்பாம். கூற்றுகள் யாவும் இயன்றவரை சுருங்கிய அளவிற் கூறப்பெறும். 1. 8ஆம் நூற்றாண்டிற்கும் 13ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் வீணை என்னும் பெயர் யாழிசையோடு கூடிய மிடற்றிசையையே குறித்த தாயின், வீணை வாசிப்பின் செயல்முறையும் அதுபற்றிய இடக்கை வலக்கைத் தொழில் வேறுபாடுகளைக் குறிக்கும் மிகப் பலவாகிய குறியீடுகளும் பொய்யாய்ப் போம். இப்போது வீணையென வழங்கும் கருவி 8ஆம் நூற்றாண்டிற்கும் 13ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தமிழ்நாட்டிலிருக்கத்தான் செய்தது. ஆனால், அது தொன்றுதொட்ட முறைப்படி யாழ் என்னும் தமிழ்ப் பெய ராலும் சிறுபான்மை வீணை என்னும் வடமொழிப் பெயராலும் அழைக்கப் பெற்றது. இவ் வடமொழிப் பெயர் கடைச்சங்க கால இறுதியில்தான் தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்டது. அதற்குமுன் வடசொற்கள் தமிழில் மிக அருகியே வழங்கின. வடசொல்லே கலவாத தனித்தமிழ் வழங்கிய காலமுமுண்டு. அது ஆரியர் தென்னாட்டிற்கு வருமுன்னதாகும். வீணை என்னும் பெயர் தனித்து வரும்போது, செங்கோட்டி யாழையே அல்லது பிற யாழையே குறிக்கும். மங்கல மிழப்ப வீணை மண்மிசை என்று இளங்கோவடிகளும், மாசில் வீணையும் மாலை மதியமும் என்று திருநாவுக்கரசரும், குழலி னோசை வீணை மொந்தை கொட்ட முழவதிர என்று திருஞான சம்பந்தரும் கூறுதல் காண்க. சிந்தாமணியில், கந்தருவதத்தையா ரிலம்பகத்தில், யாழ் என்னும் பெயரும் வீணை என்னும் பெயரும் ஒருபொருட் கிளவியாய் ஒன்றுக் கொன்று பதிலாக வருகின்றன. தேவாரத்தில் யாழ் என்னும் பெயர் வருமிடத் தில் வீணை என்னும் பெயரும், வீணை என்னும் பெயர் வருமிடத்தில் யாழ் என்னும் பெயரும் விலக்கப்பட்டன. நாரதயாழ் நாரதவீணை என ஒரே கருவி குறித்து இருபெயர் வழக்குமுள்ளது. வீணை என்னும் பெயர், யாழ் என்னும் பெயரோடு கூடி வருமிடத் தில் மட்டும், தனி மிடற்றிசையையோ யாழிசையொடு கூடிய மிடற்றிசை யையோ குறிக்கும். இதற்குச் சிந்தாமணி மூலத்தின் உரையினின்றும் பாணர் கைவழியாசிரியரால் போதிய சான்றுகள் தரப்பட்டுள்ளன. யாழ் என்னும் சொல்லும், பொதுப்பட்ட இசையையும் இசைப் பகுதியான பண்ணையும் இசைக்கருவியான யாழையும், இடத்திற்கேற்பக் குறிக்கும். செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ (தொல். அகத். 18) துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே (தொல். களவு. 1) என்று தொல்காப்பியரும், யாழோர் மணவினைக் கொத்தனள் என்றே (மணிமே. 22 : 86) என்று சீத்தலைச் சாத்தனாரும், யாழ் என்னும் சொல்லை இசையென்னும் பொருளில் ஆண்டனர். பாலை குறிஞ்சி மருதஞ்செவ் வழியென நால்வகை யாழா நாற்பெரும் பண்ணே என்று பிங்கல முனிவர் அச் சொல்லைப் பண் என்னும் பொருளில் ஆண்டனர். நரப்புக் கருவியைக் குறித்து அச் சொல் சங்க நூல்களிற் பயின்று வருதலானும், அற்றை உலக வழக்கிலும் அதற்கு அதுவே பொருளாத லானும், அதற்குச் சான்றுகள் வேண்டுவதில்லை. ஆகவே, 8ஆம் நூற்றாண்டிற்கும் 13ஆம் நூற்றாண்டிற்கும் இடையில், இக்காலத்து வீணையைப் பெரிதும் ஒத்த செங்கோட்டியாழ் இருந்ததென்றும்; அதற்கு வீணையென்னும் பெயரும் சிறுபான்மை வழங்கிற்றென்றும்; அப் பெயர் ஆகுபெயராக மிடற்றிசையையும் உணர்த்தினதினால், இருபெயரும் இணைந்து வரும் இடைக்கால நூற்பகுதி கட்கு உரையாசிரியர் உரை வரைந்தபோது, அவற்றுள் தென்சொல்லைக் கருவிப் பெயராகவும் வடசொல்லை மிடற்றிசை குறித்ததாகவும் கொண்டனர் என்றும்; செங்கோட்டி யாழினும் வேறாகச் சிறந்ததொரு நரப்புக்கருவி இந்தியாவிலேயே இதுவரை யிருந்ததில்லை யென்றும்; யாழ், வீணை என்னும் இரு சொற்களும் ஒருபொருட் கிளவியாய் ஒரே கருவியையே குறிக்குமென்றும்; இதனால் வீணை வாசிப்புச் செயன் முறையும் அதுபற்றிய குறியீடுகளும் பொய்யாய்ப் போகா என்றும் அறிந்துகொள்க. 2. யாழ் வடிவைப்பற்றி விபுலாநந்த அடிகள் ஒரு வகையாகவும், திரு. வரகுணபாண்டியனார் மற்றொரு வகையாகவும், வரைந்துள்ளனர். செங்கோட்டி யாழைப்பற்றி அடிகள் வரைந்து காட்டியுள்ள படமே உண்மையானதாயின் வறுவாய், கவைக்கடை, உந்தி, ஒற்றுறுப்பு, தந்திரிகரம், மாடகம், தகைப்பு, வணர் முதலிய உறுப்புகளெல்லாம் எங்கே? அவற்றைக் கூறியுள்ள இளங்கோவடிகளும் அடியார்க்குநல்லாரும் பித்தரோ? அன்றிப் பொய்யரோ? மறைத்திரு. விபுலாநந்த அடிகள் தமிழிசைத் தரத்தை அறியாத வர்கள் என்பது முன்னரே கூறப்பட்டது. அதையே உண்மை யென்று கடைப்பிடிக்க. 3. உருவச்சிலைச் சான்றை நோக்குவோமாயின், மேல்நாட்டிலும் கீழ்நாட்டிலும் பண்டைக் காலத்திலும் இடைக் காலத்திலுமிருந்த யாழ் வில்யா ழொத்திருந்ததேயன்றி வீணை யொத்திருந்ததன்று என்பது அறியப்படும். இவ் வியல்பிற்குத் தென்னாடு விலக்கன்று. பண்டைத் தமிழர் இற்றைத் தமிழர் போன்றவரல்லர். முன்னவர் நாகரிகத்திலும் அறிவிலும் நாயகம்பெற்றவர்; பின்னவர் அடிமைத் தனத்திலும் பேதைமையிலும் பெயர் பெற்றவர். ‘செய்கலைக் கரசி செய்யுள்’(Poetry is the Queen of Arts) என்பர் சீரியோர். பண்டைத் தமிழர் செய்யுட் கலையில் ஒப்புயர்வற்றவர் என்பது உலகறிந்த வுண்மை. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் பாகுபாடு தமிழுக்கே சிறந்தது. .அவற்றுள்ளும், வெண்பாவும் கலிப்பாவும் போன்ற யாப்பு வகைகளை வேறெந்நாட்டாரும் கனவிலும் கருதியிருக்க முடியாது. யாப்பிலக்கணத்தை யுள்ளிட்ட பொருளிலக்கணமோ மொழி யிலக்கணத்தின் கொடுமுடியாய்த் தமிழரைத் தனிவகுப்பினராகக் காட்டுவது. இத்தகைய இலக்கணத்தாற் பொலிவு பெற்ற இயற்றமிழோ டமையாது, இசைநாடகக் கலைகளையும் அதனொடு கூட்டி முத்தமிழ் என வழங்கிய தொன்றே, பண்டைத் தமிழரின் இசைப்புலமை யேற்றத்தையும் நாடகப்புலமை நாயகத்தையும் மொழித்திற முதன்மையையும் மதிநுட்ப மாண்பையும் ஐயந்திரிபற விளக்கப் போதிய சான்றாம். இத்தகை மொழி வளர்ச்சிக்கேற்ப, வாழ்க்கைமுறை ஒழுக்கம் தொழில்திறம் பொறி வினை முதலிய பிற நாகரிகத் துறைகளிலும் பண்டைத் தமிழர் ஏற்றம் பெற்றிருந்தனர். சிறப்பாக, செய்யுட்கலையில் சீரிய புலமை வாய்ந்திருந்த அவர், அதனொடு நெருங்கிய தொடர்புள்ள இசைக்கலையிலும் ஏற்றம் பெற்றிருந்தனர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? பழந்தமிழ் இலக்கியம் பலவகையில் இறந்துபட்டமையையும், தற்காலத் தமிழன் குலப்பிரிவினையால் தாழ்வுண்டிருப்பதையும், இந்திய வரலாறு தலைகீழாய் எழுதப்பட்டிருப்பதையும், பயன்படுத்திக்கொண்டு பண்டைத் தமிழன் கண்ட யாழ் வில்யாழே என்பது நடுநிலை திறம்பிய நலமில் கூற்றாம். 4. திருஞானசம்பந்தர் பாடிய யாழ்முரிப் பண்ணைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம் யாழிலிட்டுக் காட்ட முடியவில்லை. அவ்யாழ் வீணையா யிருந்திருந்தால் அங்ஙனம் தவறியிருக்க முடியாது. ஏனெனின், மிடற்றி சையின் எத்திற நுணுக்கத்தையும் வீணையிற் காட்ட இயலும், ஆதலால், 9ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்திலிருந்தது வில்யாழ் வகையே. அதன் பின் (வடநாட்டினின்று) வீணை வந்தது. அது வந்ததும் யாழ் நெகிழவிடப் பட்டது. திருநீலகண்ட யாழ்ப்பாணர், யாழ்முரிப் பண்ணைத் தம் யாழி லிட்டுக் காட்ட முடியாமைக்கு, முதலாவது, அவரது அளவிறந்த சிவபத்தியே காரணம். தருமபுரத்திலுள்ள அவருடைய உறவினர், அவர் திருஞானசம்பந்தரின் திருப்பதிக இசையை யாழ்ப்படுத்தி வந்த திறனைப் புகழ்ந்தபோது, அவர் அதற்கு மிக வருந்தி, யாழிலிட்டுக் காட்ட முடியாத வாறு திருப்பதிகம் பாடும்படி தாமே திருஞானசம்பந்தரை வேண்டினார். இதனால், யாழிலிட்டுக் காட்ட முடியாத பெருமை, திருப்பதிக இசைக் கிருத்தல் வேண்டுமென்று அவர் பேரவாக் கொண்டமை புலனாகும். இத்தகைப் பத்தி நோக்குடையவர் எங்ஙனம் தம் திறமையை அன்று காட்டியிருக்க முடியும்? அவர் காட்ட முயன்றிருப்பினும், அவரது அச்ச மனப்பான்மை எங்ஙனம் இடந்தந்திருக்கும்? இரண்டாவது, யாழில் மட்டுமன்றி வேறெவர் மிடற்றிலும் இசைக்க முடியாதவாறு, இறைவனருளால் இறும்பூதுச் செயலாக யாழ்முரிப் பண்ணைத் திருஞானசம்பந்தர் பாடினாரென்று, சேக்கிழார் மிகத் தெளிவாகக் கூறுகின்றார். வேறெவர் மிடற்றிற்கும் இயலாத இசை யாழுக்கு மட்டும் எங்ஙனம் இயன்றிருக்கும்? இதனால் யாழ்முரிப் பண்ணைப் பாணர் யாழிலிட்டுக் காட்டமுடியாமை அவர் யாழ் வில்யா ழொத்தது என்னும் போலி யூகிப்பிற் கேதுவாகாமை பெறப்படும். மேற்காட்டிய காரணங்களின் உண்மையைப் படிப்போர் அறிதற்கு, அந் நிகழ்ச்சியைக் கூறும் பெரியபுராணச் செய்யுள்களை ஈண்டுக் காட்டு கின்றேன்: தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர் பிறப்பிடமாம் அதனாற் சார வருமவர்தஞ் சுற்றத்தார் வந்தெதிர்கொண் டடிவணங்கி வாழ்த்தக் கண்டு பெருமையுடைப் பெரும்பாணர் அவர்க்குரைப்பார் பிள்ளையார் அருளிச் செய்த அருமையுடைப் பதிகந்தாம் யாழினாற் பயிற்றும்பே றருளிச் செய்தார். கிளைஞருமற் றதுகேட்டுக் கெழுவுதிருப் பதிகத்திற் கிளர்ந்த ஓசை அளவுபெறக் கருவியில்நீர் அமைத்தியற்று மதனாலே அகில மெல்லாம் வளரஇசை நிகழ்வதென விளம்புதலும் வளம்புகலி மன்னர் பாதம் உளம்நடுங்கிப் பணிந்துதிரு நீலகண்டப் பெரும்பாணர் உணர்த்து கின்றார். அலகில்திருப் பதிகஇசை அளவுபடா வகைஇவர்கள் அன்றி யேயும் உலகிலுளோ ருந்தெளிந்தங் குண்மையினை அறிந்துய்ய உணர்த்தும் பண்பால் பலர்புகழுந் திருப்பதிகம் பாடியரு ளப்பெற்றால் பண்பு நீடி இலகுமிசை யாழின்கண் அடங்காமை யான்காட்டப் பெறுவன் என்றார். வேதநெறி வளர்ப்பவரும் விடையவர்முன் தொழுதுதிருப் பதிகத் துண்மை பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்துநூல் புகன்ற பேத நாதஇசை முயற்சிகளால் அடங்காத வகைகாட்ட நாட்டு கின்றார் மாதர்மடப் பிடிபாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த. வண்புகலி வேதியனார் மாதர்மடப் பிடிஎடுத்து வனப்பிற் பாடிப் பண்பயிலுந் திருக்கடைக்காப் புச்சாத்த அணைந்துபெரும் பாண னார்தாம் நண்புடையாழ்க் கருவியினால் முன்புபோல் கைக்கொண்டு நடத்தப் புக்கார்க் கெண்பெருகும் அப்பதிகத் திசைநரம்பில் இடஅடங்கிற் றில்லை யன்றே. திருஞானசம்பந்தரினும் முதியரான திருநாவுக்கரசர், மாசில் வீணையும் என்று பாடியிருத்தலானும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழ்முரிப் பண்ணை இசைத்தற்கியலாமைபற்றித் தம் யாழை உடைத்தற் கெழுந்தபோது, அதைத் தடுத்த சம்பந்தர் `யாழை விட்டுவிட்டு வீணையை மேற்கொள்ளும் என்னாது, `திருப்பதிக இசையை இயன்றவரை இயக்கும் என்றமையானும்; பாணரும் வேறொரு நரப்புக் கருவியை மேற்கொள் ளாமையானும் அவர் கையாண்டது வீணையொத்த கருவியே யன்றி வேறன்று என்பது துணியப்படும். இனி, வீணை எத்துணைச் சிறப்பினதாயினும், அதை இயக்குவோர் எத்துணைத் திறவோராயிருப்பினும், அது எவ்வெவர் மிடற்றிசையையும் இட்டுக் காட்டற்கேற்றது என்பது முற்றும் உண்மையானதன்று. இறைவன் அமைத்த மிடற்றிற்கும் மாந்தன் அமைத்த வீணைக்கும் சிறிதேனும் வேறுபாடு இருக்கத்தான் செய்யும். 5. யாழும் வீணையும் வெவ்வேறு கருவிகள் ஒரு நரம்புள்ள சுரையாழ் முதல் ஆயிரம் நரம்புள்ள ஆதியாழ் வரை எல்லா நரப்புக் கருவிகட்கும் யாழ் என்பது பொதுப் பெயராகும். எவ்வெவ் வடிவிலிருப்பினும், எவ்வெவ் அமைப்பைக் கொண்டதாயினும், எவ்வெம் முறையில் இசைக்கப்படினும், எவ்வெந் நாட்டிற்குரியதாயினும், நரம்பு அல்லது கம்பிகொண்ட இசைக்கருவிகளெல்லாம் தமிழில் யாழ் என்றே பெயர் பெறுதற்குரியன. கின்னரி அல்லது சீறியாழ் (Fiddle), கித்தார், சுரமண்டலம், மண்டொலின், பேஞ்சோ, புல்புல்தாரா, சுரகெத், சித்தார், கச்சுவா, தாவூஸ், தில்ரூபா, எஸ்ராஜ், சாரிந்தா (சாரங்கி), வில்லடி, சுரைவீணை, அகப்பைக் கின்னரி, வில்யாழ், தம்புரா(கேள்வியாழ்), வீணை முதலிய எல்லா நரப்புக் கருவிகளும் பொதுப்பட யாழ் என்றே அழைக்கப் பெறுவன. ஆகவே யாழ் என்பது ஒரு தனிப்பட்ட கருவியின் சிறப்புப் பெயராகாது. அது தோற்கருவி துளைக்கருவி நரப்புக்கருவி கஞ்சக்கருவி என்னும் நால்வகைக் கருவியுள் நரப்புக்கருவியை யெல்லாம் பொதுப்படக் குறிக்கும் பொதுப் பெயராகும். இப் பாகுபாட்டின்படி இற்றை வீணையும் ஒருவகை யாழாயிருக்க, அதை மட்டும் எங்ஙனம் வேறு பிரித்துக் கூற முடியும்? யாழும் வீணையும் வெவ்வேறு கருவியாயிருப்பின், நாரதயாழ் நாரதவீணை எனச் சிலப்பதிகாரத்தும், மகரயாழ் மகரவீணை எனச் சிந்தாமணியிலும், ஒரே கருவி ஏன் இரு பெயராலும் அழைக்கப்பெறல் வேண்டும்? ஆதி (பெரு), மகர, சகோட, செங்கோட்டு, முண்டக, சிறு முதலிய அடையடுத்தாலன்றி, யாழ் என்னும் பெயர் ஒரு சிறப்புவகை நரப்புக் கருவியைக் குறிக்காது. ஆயினும், சுருக்கம்பற்றி, துப்பாக்கியிற் பலவகை யிருப்பினும் அவற்றுட் சிறந்ததும் துப்பாக்கியென்றே அழைக்கப்பெறுதல் போல, யாழுட் பலவகையிருப்பினும் அவற்றுட் சிறந்ததும் யாழ் என்றே அழைக்கப்பெறும். நரப்புக்கருவி வில்நாணொலியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிதலால், வில்யாழே முதன்முதல் தோன்றிய யாழ்வகையாக இருத்தல்வேண்டும். அதன்பின், பத்தர் (குடம்) உள்ள வில்யாழும், பத்தரும் கோடும் (தண்டியும்) உள்ள கோட்டியாழும், பத்தரும் கோடும் திவவுமுள்ள திவவியாழும், முறையே தோன்றியிருத்தல் வேண்டும். தலைச்சங்க காலத்திலேயே தமிழ் முத்தமிழாய் வழங்கியதால், கடைச்சங்க காலத்துச் சிறந்த யாழ்வகைகளாகக் கொள்ளப்பட்ட பேரியாழ், மகரயாழ், சகோட யாழ், செங்கோட்டியாழ் என்னும் நால்வகை திவவியாழாகவே இருந் திருத்தல் வேண்டும். அவை முறையே யாழும் ஒன்றினொன்று ஏதேனு மொரு வகையில் சிறந்ததாயு மிருந்திருத்தல் வேண்டும். அவற்றுள், செங் கோட்டியாழ் கருவியமைப்பில் இற்றை வீணையை ஒத்ததாகும். நரம்பிற்குப் பதிலாய்க் கம்பியும் வார்த்திவவிற்குப் பதிலாய் வெண்கல மெட்டும் தோற் போர்வைக்குப் பதிலாய் மரப்பலகையும் வறுவாய்க்குப் பதிலாய் நுண் துளைத் தகடும், கொண்டிருத்தலே இற்றை வீணையின் வேறுபாடாம். குட வடிவிற் சிறிது மாறுதல், கோல் எனப்படும் மெட்டுத் தொகையிற் கூடுதல், ஆகியவற்றையும் வேறுபாடாகச் சேர்த்துக்கொள்ள லாம். இவையெல்லாம் காலவளர்ச்சியில் வசதிக்கேற்ப ஏற்பட்டவை. ஈராயிரம் ஆண்டுக்கு முற் பட்ட செங்கோட்டியாழ் இன்று இத்துணை வேறுபட்டிருப்பது வியப்பன்று. பேரியாழ் பின்னு மகரஞ் சகோடமுடன் சீர்பொலியுஞ் செங்கோடு செப்பினார் - தார்பொலிந்து மன்னுந் திருமார்ப வண்கூடற் கோமானே பின்னு முளவே பிற என்பதனால், கடைச்சங்க காலத்தில் பலவகை யாழ்கள் இருந்தன என்பதும், அவற்றுள் நான்கு சிறந்தன என்பதும், அவற்றுள்ளும் செங்கோட்டியாழ் தலைசிறந்தது என்பதும் அறியப்படும். காலமுறைப்படி நோக்கின், இசைவல்லார் கையாளும் கருவிகளுள் பிந்தினது சிறந்திருக்குமேயன்றி முந்தினது சிறந்திருக்காது. நால்வகை யாழுள் இறுதியது செங்கோட்டி யாழாதலின், அது ஏனையவற்றினும் சிறந்ததாயிருத்தல் வேண்டும். ஆகவே, யாழ் என்பது தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகமெங்கணும் முக்காலும் வழங்கும் நரப்புக் கருவிகட்கெல்லாம் பொதுப்பெயர் என்றும், அச் சொல்லைச் சிறப்புப் பெயராகக் கொண்ட ஒரு தனிக் கருவியும் கடைச்சங்க காலத்திருந்ததில்லை யென்றும், அன்றிருந்த பலவகை யாழுள் தலைசிறந்த செங்கோட்டியாழே இன்று வீணை என்னும் வடசொற் பெயர் கொண்டு வழங்கிவருகிறதென்றும். யாழ் வேறு வீணை வேறு என்பது இரு வகையில் தவறான திரிபுக்கொள்கை என்றும் அறிந்துகொள்க. யாழ் என்னும் தென்சொல் பிற்காலத்து வழக்கற்றதினாலேயே முற்காலத்தில் சுரையாழ் என வழங்கியது. இன்று சுரைவீணை அல்லது வீணை என உலக வழக்கில் வழங்குகின்றது. 6. “யாழில் விரலுறுகோடு (Finger-board) இல்லை. அதன் குடத்தி னின்றெழுந்த நரம்புகள் நேரே அதன் வளைவுக்கோட்டில் கட்டப்பட்டன. இதற்கு மறுப்பு, ஏனை மறுப்புகளிலும், திரு. வரகுண பாண்டியனார் இலக்கியச் சான்றும் மேற்கோளும் காட்டி விளக்கியுள்ள செங்கோட்டி யாழின் 18 உறுப்புகளின் வரணனையுள்ளும், படங்களுள்ளும் கண்டு கொள்க. கோடே பத்த ராணி நரம்பே மாடக மெனவரும் வகையின வாகும் மாட்டிய பத்தரின் வகையு மாடகமுந் தந்திரி யமைதியுஞ் சாற்றிய பிறவு முந்திய நூலின் முடிந்த வகையே என்னும் பழஞ் சூத்திரங்களையும், மணிகடை மருப்பின் வாளார் மாடக வயிரத் தீந்தேன் அணிபெற வொழுகி யன்ன அமிழ்துறழ் நரம்பின் நல்யாழ் (722) என்னும் சிந்தாமணிச் செய்யுளையும் நோக்குக. 7. யாழும் வீணையும் இடைக்காலத்தில் இறுதிவரை தமிழ்நாட்டில் பக்கம் பக்கமாயிருந்து வந்தன. மாணிக்கவாசகரின் திருப்பள்ளி யெழுச்சி யில், இரு கருவிகளும் உடன் குறிக்கப்படுகின்றன. புதுக் கோட்டைத் திருமயத்திலுள்ள திருமால் கோவிலுள் எழுமுனிவர்(சப்தரிஷி) சிலையில் இரு கருவி வடிவங்களும் உடன் பொறிக்கப்பட்டுள. வேத இலக்கியத் துள்ளும் யாழும் வீணையும் பற்றிய குறிப்புள்ளது. நால்வகை யாழுள் செங்கோட்டியாழ் சிறந்ததாதலானும், குலப் பிரிவினையால் நேர்ந்த இழிவு காரணமாகப் பாணர் தம் பிழைப்பிழந்து பாண்தொழிலை அடியோடு கைவிட்டமையானும், ஏனை மூன்று யாழ்களும் படிப்படியாய் வழக்கிறந்தன. ஆரியர் தென்னாடு வருமுன் அல்லது வடசொல் தமிழ்நாட்டில் வழக்கூன்றுமுன், செங்கோட்டியாழ் செந்தமிழ்ப் பெயராலேயே வழங்கி வந்தது. அதன்பின், அதற்கு வீணை என்னும் வடசொற் பெயர் புகுத்தப் பட்டது. சிறிது காலத்தின் பின் தமிழ்ப் பெயர் வழக்குவீழ்ந்தது. அதன் பின்னர், செங்கோட்டியாழ் வீணை என்னும் வடசொற் பெயராலும், இசை யெளியார் கையிலுள்ள பன்னரம்பு வில்யாழ் யாழ் என்னும் தமிழ்ப் பெயராலும், வழங்கிவந்தன. இடைக்காலத்தின் பின், அவ் வில்யாழும், கருவியும் பெயரும் ஒருங்கு வழக்குவீழ்ந்தது. பண்ணிசைத்தற்குரிய பண்டை யாழ்வகைகளுள், செங்கோட்டியாழ் ஒன்றே இன்று சிறிது உருக்கரந்தும் பெயர் மாறியும் வழங்கி வருகின்றது. தமிழ நாகரிகப் பழக்க வழக்கங்களுள்ளும் பொருள்களுள்ளும், தலைசிறந்தவற்றைத் தழுவிக் கொண்டு அவற்றைத் தமவாகக் காட்டுவது, ஆரியர் வழக்கம். செங்கோட்டியாழ் வீணையெனப் பிரிக்கப்பட்டபின் னெழுந்த நூல்களிற் சில, வில்யாழையும் செங்கோட்டியாழையும் முறையே யாழும் வீணையும் என உடன் கூறுகின்றன. திருமயம் சிலை இக் கொள்கை பற்றியதே. எந்நாட்டிலும் உயர்ந்த கருவியுடன் தாழ்ந்த கருவியும் பயில்வது இயல்பு. மதங்கம் (மிருதங்கம்) இருக்கும்போது கஞ்சிராவும், வீணையிருக்கும்போது புல்புல்தாராவும் வழங்குதல் காண்க. `யாழ்', `வீணை' என்னும் பெயர்கள் அடுத்துவரும்போது, அவற்றுள் ஒன்று மிடற்றிசை யைக் குறியாவிடின், முன்னது வில்யாழையும் பின்னது செங்கோட்டி யாழையுமே குறிக்கும். ஆரியர் கி.மு. 1500 ஆண்டுகட்கு முன்பே தமிழ்நாட்டிற் சிறுசிறு குடும்பங்களாகக் குடியேறிவிட்டதனால், வேத இலக்கியத்தில் யாழும் (வில்யாழும்) வீணையும் (செங்கோட்டியாழும்) பற்றிய குறிப்பிருப்பது வியப்பன்று. முல்லை நாகரிக நிலையிலிருந்த நாடோடிகளான வேத ஆரியர் இந்தியாவிற்குள் புகுமுன்னரே, தமிழ் முத்தமிழாய் வழங்கிற்றென்பதையும், தமிழ் நாகரிகம் பனிமலை (இமயம்) வரை பரவியிருந்ததென்பதையும் நினைவிலிருத்துதல் வேண்டும். பண்டைக் காலத்தில் யாழ் என்னும் தமிழ்ப்பெயர் நரப்புக் கருவி களையெல்லாம் குறித்தவகை யொட்டி, இன்று வீணை என்னும் வடசொற் பெயரும் ஒரு கம்பியுள்ள இரப்போன் யாழ்முதல் எழு கம்பியுள்ள செங்கோட்டியாழ் வரை எல்லாக் கம்பி யிசைக்கருவிகளையும் குறித்து வருகின்றது. செங்கோட்டியாழ் வடசொற் பெயர் பூண்டபின் தமிழ்ப்பெயரை யிழந்தமைக்கு, முதுகுன்றம் மறைக்காடு முதலிய தமிழ்நாட்டூர்கள் முறையே விருத்தாசலம் வேதாரணியம் என வடமொழிப் பெயர் பூண்டபின் தம் தமிழ்ப் பெயர்களை யிழந்தமை சிறந்த ஒப்பனையாம். அவ் வூர்கள் தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டைச் சேர்ந்தனவாயுள்ளமை அனைவரும் அறிவர். ஆயினும், அவற்றை வடசொற் பெயராலன்றித் தென்சொற் பெயராற் குறிப்பின், இன்று புலமக்கள் தவிரப் பொதுமக்கள் பொருளறியார். 8. பண்டைத் தமிழ்யாழ் வீணைபோன்றிருந்ததாயின், ஒவ்வொரு யாழிசைஞனும் விலக்க வேண்டியிருந்த `அதிர்வு என்னுங் குற்றத்திற்கு எங்ஙனம் காரணங்காட்ட முடியும்? யாழின் மெலிவு நரம்பைத் தெறித்த போது, அது ஏனை நரப்பிசையி னின்பம் நுகரப்படாதவாறு அதிர்ச்சியை உண்டுபண்ணிய தாதலின், அதை உடனே நிறுத்துதற்கு யாழோன் கையில் ஒரு கோல் இருந்தது. இக் கோலுருவம் அமராவதி யாழோன் சிலையில் பொறிக்கப்பட்டுள்ளது. பேரியாழ் முதலிய மூன்றியாழ்களிலும், ஒலிபெருக் குறுப்பாகத் தரப்புச்சித்தாரில் பண்மொழி நரம்பிற்குக் கீழ் அமைத்திருக்கும் அதிர்வு நரம்புகளைப்போல், சில அதிர்வு நரம்புகள் அமைக்கப் பெற்றிருந்தன. பண்மொழி நரம்புகளை இசைக்கும்போது, அவ் அதிர்வு நரம்புகள் ஒலி பெருக்குவதுடன் அதிர்வையும் உண்டுபண்ணும். யாழ் இசைப்பவரின் தேர்ச்சிக்குத் தக்கவாறு அவ் அதிர்வு குறையும், அல்லது நீங்கும். இத் தகைய அதிர்ச்சி அல்லது இரைச்சல் நிகழாதவாறு, ஒவ்வோர் யாழிசைஞனும் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இவ் வதிர்ச்சி அதிர்வு நரம்புகளால் நேர்ந்ததேயன்றி யாழால் நேர்ந்ததன்று. இவ் வதிர்வு நரம்புகளால் இனிமை கெடுகிறதென் றறியப்பட்டபின், பேரியாழிலிருந்த 14 அதிர்வு நரம்புகள் மகரயாழில் 12 ஆகவும் சகோடயாழில் 7 ஆகவும் குறைக்கப்பட்டு, இறுதியில் செங்கோட்டியாழில் அடியோடு விலக்கப்பட்டன. மேலும், நரம்பின் அதிர்வு யாழின் மரக்குற்றத்தாலும் பிறக்கும். இதை, நரம்பினிசையாற் பிறந்த பொல்லாமையாவன: செம்பகை யார்ப்புக் கூட மதிர்வு.... அதிர்வெனப் படுவ திழுமென லின்றிச் சிதறி யுரைக்குந ருச்சரிப் பிசையே (சீவக. 718) என்பன. இவை மரக் குற்றத்தாற் பிறக்கும்: நீரிலே நிற்றல் அழுகுதல் வேதல் நிலமயங்கும் பாரிலே நிற்றல் இடிவீழ்தல் நோய்மரப் பாற்படல்கோள் நேரிலே செம்பகை யார்ப்பொடு கூடம் அதிர்வுநிற்றல் சேரினேர் பண்கள் நிறமயக் கம்படும் சிற்றிடையே (சீவக. 719) என்னும் நச்சினார்க்கினியர் உரையான் அறிக. யாழோன் கையிலிருந்த கோல், அவன் தன் யாழ்ப் புலமையை அரங்கேற்றிய காலத்து அவனுக்கு அளிக்கப்பட்ட வரிசைச் சின்னமே யன்றி, மெலிவு நரம்பதிர்ச்சியைத் தடுக்கும் இசைக்கருவி யுறுப்பன்று. மாதவி தன் ஆடல்பாடலை அரங்கேற்றித் தலைக்கோற் பட்டம் பெற்றாள். அப் பட்டம் ஒரு கோலுடன் கொடுக்கப்பெறுவது. அக் கோல் தலைக்கோல் எனப்படும். தலைக்கோல் இசைநாடகக்கலையில் தலைமை குறிக்கும் கோல். தலைக்கோல் தானம், தலைக்கோலாசான், தலைக்கோலரிவை முதலிய வழக்குகளை நோக்குக. 9. வீணை ஒருகாலும் தமிழ்நாட்டி லிருந்ததில்லையென்று நூலாசிரியர் கூறுகின்றார். செங்கோட்டியாழினும் வேறாக வீணையென்றொரு சிறந்த கருவி ஒருகாலும் தமிழ்நாட்டிலிருந்ததில்லை என்பது ஆசிரியர் கருத்தேயன்றி, வீணையே ஒருகாலும் தமிழ்நாட்டிலிருந்ததில்லை என்பதன்று. 10. 21 நரம்புள்ள பேரியாழிலும் பண்மொழி நரம்புகள் ஏழேயாகவும் ஏனைய வெல்லாம் அதிர்வு நரம்புகளாகவு மிருந்திருப்பின், அதற்குப் பெரும் பத்தர் எதற்கு? இசைபெருக்க அதிர்வு நரம்புகளே போதுமே! முற்கால மக்கள் உருவத்திற் பெரியவராயிருந்ததினால், அவர் கையாண்ட கருவிகளெல்லாம் பெரியனவாகவே யிருந்தன. மக்கள் உருவம் வரவரச் சிறுத்துவருவதினால், அவர்கள் கையாளும் பலவகைக் கருவிகளும் சிறுத்துவருகின்றன. பேரியாழ் மிகப் பழையதாதலின், அது முதுபழங்கால மக்கட்கேற்றபடி மிகப் பெரியதாயிருந்திருக்கின்றது. அது நால்வகை யாழில் முதற் குறிக்கப்பெறுவதற்கு அதன் பழைமையே காரணம். கடைச்சங்க காலத்திலும் அது வழங்கினதாகக் கூறப்படினும், அது உருவத்திற் பெரியவர்க்கே உரியதாய் அருகின வழக்காகவே வழங்கின தாகத் தெரிகின்றது. அதிர்வு நரம்புகளால் இசையைப் பெருக்கலாம் என்ற எண்ணம் உண்டானபின், பெருங்கலம் என்னும் பேரியாழில் முதன்முதலாக அதிர்வு நரம்புகள் சேர்க்கப்பட்டிருத்தல்வேண்டும். ஆகவே, அவ் யாழில் பெரும் பத்தர் முந்தினதும் அதிர்வு நரம்பு பிந்தியதுமாகும். தலைச்சங்க காலத்து மக்கள் தம் உடற் பருமனுக்கேற்றபடி, இயல்பாகவே பெரும் பத்தர் அமைத்திருத்தல் வேண்டும். பிற்காலத்துச் சிற்றுருவ மக்களின் சீறியாழ்க ளோடு ஒப்புநோக்கிய பின்னரே, அதற்குப் பெருங்கலம் அல்லது பேரியாழ் என்று பெருமைச்சொல் அடைகொடுத்துப் பின்னோர் பெயரிட்டதாகத் தெரிகின்றது. முதற்காலத்தில் அது அளவான கருவி யாகவே கருதப்பட்டிருக்கலாம். பழங்காலத்திற் பெருவழக்காக வழங்கிய தாக நூல்களிற் கூறப்படும் மத்தளம், அதன் பருமை காரணமாக இன்று பயன்படுத்தப்படாமல் சில சிற்றூர்களிற் பதுங்கிக் கிடக்கின்றது. அதன் சிறுவடிவான மதங்கம் (மிருதங்கம்) இன்று பெருவழக்காயுள்ளது. இங்ஙனமே, பேரியாழ் சீறியாழ் நிலைமைகளும் கடைச்சங்க காலத்தில் இருந்திருத்தல் வேண்டும். பேரியாழினும் பேரியாழான ஆதியாழ் (பெருங்கலம்) வேறு; நாரதப்பேரியாழ் என்பதும் வேறு. பெருங்கலமாவது பேரியாழ்; அது கோட்டினதளவு பன்னிரு சாணும், வணரளவு சாணும், பத்தரளவு பன்னிரு சாணும், இப் பெற்றிக் கேற்ற ஆணிகளும் திவவும் உந்தியும் பெற்று, ஆயிரங்கோல் கொடுத் தியல்வது; என்னை? ஆயிர நரம்பிற் றாதியா ழாகும் ஏனையுறுப்பு மொப்பன கொளலே பத்தரளவுங் கோட்டின தளவும் ஒத்த வென்ப இருமூன் றிரட்டி வணர்சாணொழித்தென வைத்தனர் புலவர் என்பது அடியார்க்குநல்லார் உரைப்பாயிரம். நாரதப் பேரியாழ் வில்யாழ் வகையாகும். இதுகாறும் கூறியவாற்றால், திருமான் வரகுணபாண்டியனார் அவர்களின் பாணர்கைவழி முடிபுகள் அனைத்தும் உண்மையே என்றும், அதற்குத் திருமான் சாம்பமூர்த்தி அவர்கள் வரைந்த மறுப்பு சற்றும் பொருந்தாதென்றும் அறிந்துகொள்க. குறிப்பு: வீணை என்னும் பெயர், வடசொல் என இம் மறுப்புரையிற் கூறியுள்ளேன். அது விண் என்னும் பகுதியடியாகப் பிறந்த தென் சொல்லே யென்று மூதறிஞர் துடிசைகிழார் கூறியுள்ளனர். விண்ணென ஒலித்தது, விண்ணென இசைத்தது, விண்ணென இரைந்தது, விண்ணெனத் தெறித்தது என இருவகை வழக்கினும் வழங்குதலானும், விள் என்னும் வேர்ச்சொற்கு ஒலித்தல் சொல்லுதல் என்னும் பொருள்க ளுண்மையானும், அவர்கள் கூற்றும் ஒப்புக்கொள்ளத் தக்கதே. இனி, முகவீணை என ஒரு குழற்கருவி யிருத்தலானும், அதன் இசை ஒருவகையில் வீளையை(சீழ்க்கை யொலியை) யொத்திருத்தலானும், வீணை என்னும் பெயர் மிடற்றிசையையுங் குறித்தலானும், வீளை யென்னும் சொல்லினின்று வீணை யென்னும் பெயர் திரிந்ததோ எனவும் ஐயுறக் கிடக்கின்றது. விண் என்னும் சொல்லினின்று நீட்டல் திரிபாகவோ, வீளை யென்னுஞ் சொல்லினின்று போலித்திரிபாகவோ, வீணை யென்னும் பெயர் தோன்றியிருக்கக்கூடியது பொருத்தமே. ஒரு பொருள்பற்றித் தென் சொல்லின் வேறாக வழங்கும் வடசொற் சில, தென்சொல்லி னடியாகவே பிறந்திருத்தலின், மேற்கூறிய கூற்று வியப்பிற்கிடமானதன்று. - ``செந்தமிழ்ச் செல்வி'' சனவரி 1951 9 சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் மதிப்புரை மறுப்பு ஈராண்டுகட்குமுன் என் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளைப் பற்றி இந்துத் தாளில் ஒரு மருங்கு போற்றியும் ஒரு மருங்கு தூற்றியும் ஒரு மதிப்புரை வந்திருந்தது. அதை எனக்கு ஒரு நண்பர் கொண்டுவந்து காட்டினார். அதன் பின்னர்த்தான், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் ஒரு படி இந்துச் செய்தித் தாட்குத் திருவாளர் வ. சுப்பையாப் பிள்ளையவர் களால் மதிப்புரைக்காக விடுக்கப்பட்டிருத்தல் வேண்டும் என ஊகிப்பால் அறிய நேர்ந்தது. எனக்குச் சொல்லாமல் விடுத்ததினால் அதை முன்னறிய வில்லை. என்னைக் கேட்டிருந்தால் நான் தடுத்திருப்பேன். ஏனெனில், விளைவு முன்தெரிந்தது என்பது மட்டுமன்று, என் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளை ஆயும் ஆற்றலுடையார் இந்து நிலையத்திலாவது அந் நிலையச் சார்பிலாவது இல்லை என்பதே என் கருத்து. மதிப்புரையைப் படித்தவுடன் திருவாளர் சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தங்கள் கொள்கைக்குச் சார்பான அல்லது மாறல்லாத பகுதியைப் போற்றியும் மாறான பகுதியைத் தூற்றியும் வரைந்துள்ளார்கள், என்று என் நண்பரிடம் சொன்னேன். அவர் உடனே ஒரு மறுப்புரை விடுக்க வேண்டும் என்றார். நான் அம் மதிப்புரையைப் பொருட்படுத்தாததினால் அவர் விருப்பிற்கிசையாது வாளா இருந்துவிட்டேன். இன்று, என் பாணர் கைவழி மதிப்புரை மறுப்பைப் பார்த்தவுடன், என் நண்பர் மீண்டும் என்னிடம் ஓடிவந்து, ஐயா! ஏனையர் இயற்றிய நூல்பற்றி யெழுந்த மதிப்புரைக்கு மட்டும் மறுப்புரை விடுத்தீர்களே! ஏன் தாங்கள் இயற்றிய `சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்' மதிப்புரைக்கு இன்னும் மறுப்புரை விடுக்கவில்லை? இதனால், திருவாளர் சுப்பிரமணிய சாத்திரியா ரவர்கள் வரைந்த மதிப்புரை சரியானதே யென்றும், தங்கட்கு அதை மறுக்கும் மதுகை யில்லை என்றும் அல்லவா படும்? என்று எனக்கு மான வுணர்ச்சி தோன்றுமாறு ஒரு முறை கூறியதோடமையாது திரும்பத் திரும்பச் சொல்லி வற்புறுத்தியதின் பயனாக, இம் மறுப்புரை வருகின்ற தென்க. சாத்திரியார் அவர்கள் கூற்றுகளை எம் வழக்கம்போல் ஒவ்வொன்றா யெடுத்து மறுப்பாம்: 1. அந்தணர் என்பார் ஒரு குலத்தார் என்பது தொல்காப்பியத் திலேயே குறிக்கப்பெற்றுள்ளது. அந்தணர் என்னும் பெயர் முதலாவது முனிவரை அல்லது துறவோரையே குறித்ததென, அச் சொல்லமைப்பே காட்டும். அந்தண்மையுடையார் அந்தணர். அந்தண்மை அழகிய அருளு டைமை, ஆதலின், அந்தணராவார் அழகிய அருளுடைய முனிவர். அந்தண்மைபூண்ட.... அந்தணர்.” (திருமந்திரம் 234) அந்தண் பொதியி லகத்தியனார் (நக்கீரர்) (பொதியில் என்பது இங்கு இடைப்பிறவரல்) அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள். 30) எனத் திருவள்ளுவர் தெள்ளத் தெளியப் பொருளுணர்த்தியதுமன்றி, இக் குறளைத் துறவோரைப் பற்றிக் கூறும் நீத்தார் பெருமை யதிகாரத்தில் வைத்தது குறிப்பிடத்தக்கது. பிங்கலத்தின், குரவரைப் பற்றிக் கூறும் ஐயர் வகையில், முனிவர் மாதவர் இலிங்கிகள் முனைவர் படிவர் உறுவர் பண்ணவர் ஐயர் அறவோர் தபோதனர் அறிஞர் அந்தணர் துறவோர் கடிந்தோர் மோனியர் யோகியர் கோபங் காய்ந்தோர் நீத்தோர் மெய்யர் தாபதர் இருடிகள் தம்பெய ராகும் என இருடிகள் (முனிவர்) பெயரைக் கூறும் முதற் சூத்திரத்தில் அந்தணர் என்னும் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. துறவியர் சிறந்த அறவோரும் தூயோருமாதலின் அந்தணன் என்னும் பெயர் அறவோன் தூயோனையுங் குறிக்கும். முதன்முதலாக மக்களால் அறியப்பட்ட அருளுடையோர் முனிவரே யாயினும் உண்மையில் இறைவனே சிறந்த அருளுடை யோனாதலின், அந்தணன் எனும் பேர் இறைவனையுங் குறிக்கும். மணிமிடற் றந்தணன் (அகம். கடவுள் வாழ்த்து) செந்தீ வண்ண ரந்த ணாளர் (தேவாரம் 1816) உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. (குறள். 261) தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். (குறள். 251) என்னுங் குறள்களாலும், அருளுடைமை, `புலான் மறுத்தல், கொல் லாமை என்னும் அறங்களை வள்ளுவர் துறவறவியலில் வைத்து வற்புறுத்துவதாலும், துறவறத்தின் இயல்பாலும், அந்தணர் என்னும் பெயர் துறவியர்க்கே பொருந்தும் என்பது தேற்றம். தொல்காப்பியர், துறவியரை அந்தணர் அறிவர் ஐயர் தாபதர் என்னும் சொற்களாலும், கல்வித் தொழிலால் அவரோ டொருமருங்கொப் புடைய இல்லறத்தாரைப் பார்ப்பார் என்னும் சொல்லாலும் வேறுபடுத்திக் காட்டுவது கவனிக்கத்தக்கது. நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய (1570) எனத் தொல்காப்பியர் கூறும் அந்தணர் சின்னங்களே, அவர் துறவியரைச் சுட்டிக் கூறியமையை யுணர்த்தும். அந்தணர் என்னும் பெயர் இவ்வாறு துறவியர்க்கே யுரியதாயினும் பொருளிலக்கணத்தின் பொருட்டுப் பல்வேறு தொழில்களையும் கல்வி போர் வணிகம் கைத்தொழில் என்னும் நால்வகையுள் அடக்கி எல்லாக் குலங்களையும் நாற்பாற்படுத்துக் கூறும்போது. ஒருபெயர்ப் பொதுச்சொல் உள்பொரு ளொழியத் தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும் உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும், (தொல். 532) என்னும் விதிப்படி உவச்சர், பூசாரியர், தேவராளர், குருக்கள், பண்டாரவர், புலவர், கணக்காயர், கணியர், வள்ளுவர், பார்ப்பார் முதலிய பல்திறக் கல்வித் தொழி லாளரும் அந்தணர் என்னும் தலைமைச் சொல்லாற் குறிக்கப் பெறுவர், அல்லது அந்தணருள் அடக்கப் பெறுவர். (இங்குக் குறிக்கப் பெற்றா ரெல்லாருந் தமிழ்க் குலத்தாரே). இதனால், அந்தணர் என்னும் பெயர் சிறுபான்மை இல்லறத்தாரான கல்வித் தொழிலாளரையுங் குறிக்கும். இங்ஙனங் குறிப்பது நூல் (செய்யுள்) வழக்கேயன்றி உலக வழக்கன்று. ஆரிய இனத்தைச் சேர்ந்த பிராமணர் தென்னாடு (தமிழகம்) வந்து குடியேறியபோது, அவருள் துறவு அல்லது துறவொத்த நிலையிலுள்ளார் அந்தணர் என்றும், இல்லறத்தார் பார்ப்பா ரென்றும், நிலையொப்புமையும் தொழிலொப்புமையும் பற்றி அழைக்கப்பட்டார். பின்பு, இனவொருமை யாலும் ஆரிய வருணாசிரம தருமம் பற்றிய குலப்பிரிவினையாலும், இரு சார் பிராமணரும் ஒரு சாரராகி, அந்தணர் பார்ப்பார் என நூல் வழக்கிலும், பார்ப்பார் என மட்டும் உலகவழக்கிலும், அழைக்கப்பட்டனர். பிராமணரை மட்டும் அந்தணர் எனக் கூறும் தமிழ்நூல்க ளெல்லாம் பிற்காலத்தனவன்றி முற்காலத்தனவல்ல. அந்தணர் பார்ப்பார் என்னும் இருபெயரும் தூய தென்சொல்லாயிருத்தலே, அப் பெயராற் குறிக்கப்பட்ட தமிழ் வகுப்பார் அல்லது குலத்தார் தொன்றுதொட்டுத் தென்னாட்டிலிருந்து வந்தமையைப் புலப்படுத்தும். மேனாட்டினின்று வந்த ஐரோப்பியர் (ஆட்சித் தொழில் பற்றித்) துரைமார் என்னும் தமிழ் அல்லது தெலுங்கச் சொல்லாற் குறிக்கப் பட்டது போன்றே, வடநாட்டினின்று வந்த பிராமணரும் அந்தணர் அல்லது பார்ப்பார் என்னும் தமிழ்ச்சொல்லாற் குறிக்கப்பட்டனர் என்க. ஆயினும், பிராமணர் தம்மைத் தமிழரினும் உயர்ந்தவராகக் காட்டிக் கொள்வதால், தம்மைப் பிராமணர் என்னும் வட சொல்லாலன்றிப் பார்ப்பார் என்னும் தென்சொல்லாற் குறிக்க விரும்புகின்றிலர். ஆயின், தமிழ்நாட்டில் எல்லாவகையிலும் தலைமை பெற்ற முனிவரைக் குறிக்கும் ஐயர் அந்தணர் என்னும் தென்சொற்களால் தம்மைக் குறிப்பதில் பெருமையும் பெரு மகிழ்வுங் கொள்கின்றனர். அதோடு, அவ் விரு தென்சொற்களையும் வடசொல்லாகக் காட்டவும் முயல்கின்றனர். இம் முயற்சியின் நோக்கம், பிராமணரே தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் ஐயரென்றும் அந்தண ரென்றும் அழைக்கப்பெற்று வந்தவர் எனக் காட்டுவதேயாகும். இதனால். தமிழ் நாகரிகம் ஆரிய நாகரிகமாகக் கொள்ளப்பட்டுவிடும் என்பது கருத்து. பிராமணர் வந்தபோதிருந்த தமிழப் பார்ப்பார் பிராமணரொடு கலந்துவிட்டமையால், இன்று பார்ப்பார் என்று (வடமொழியறியாது தமிழி லேயே வழிபாடியற்றும்) ஒரு தமிழக் குலத்தார் இல்லை. இங்ஙனங் கலந்து போனமையால், பிராமணருக்குத் தொகைப் பெருக்கமும் தமிழ்ப் பார்ப் பார்க்குக் குலவுயர்வும் பயன். குருக்கள் என்னும் ஒருசார் தமிழப் பூசனைக் குலத்தாருள் ஒரு பகுதியினர், அண்மையிலேயே வட மொழியைக் கற்றுக் கொண்டு அதில் வழிபாடியற்றுவதன் பயனாகப் பிராமணராகியுள்ளனர் என்று சொல்லப்படுகின்றது. தூய தமிழ்க் குலத்தாரான செட்டிமார் தம்மை வைசியரென்றும், நாடார்கள் தம்மைச் சத்திரியரென்றும், வேளாளர் தம்மைச் சூத்திரர் அல்லது சற்சூத்திரர் என்றும், சொல்லிக்கொள்வது மேற்கூறியதை நன்கு விளக்கும். இதுகாறுங் கூறியவற்றால், அந்தணர் என்னும் சொல் முனிவரையே சிறப்பாகக் குறிக்குமென்றும், பொருளிலக்கணப் பாகுபாடுபற்றிச் சிறுபான்மை கல்வித் தொழிலைப் பொதுவாக வுடைய பல்குலத்தாரையும் சுட்டுமென்றும், ஒரு நிலையாரையன்றி ஒரு குலத்தாரையுந் தனிப்படச் சுட்டாதென்றும், பிராமணரை அந்தணரென்றது பிற்கால வழக்கென்றும், அறிந்துகொள்க. 2. பத்தினி என்னும் சொல் பத்நீ என்னும் வடசொல்லின் திரிபன்றி, பத்தன் (பக்தன்) என்பதன் பெண்பால் வடிவமன்று. வடமொழியில் கணவனைக் குறிக்கும் பதி என்னும் சொல்லின் பெண்பால் வடிவமான பத்நீ என்பது, மனைவி என்று மட்டும் பொருள் படுவதேயன்றித் தமிழிற்போல் கற்புடைய மனைவியையே குறிப்பதன்று. பத்தினி அல்லது பத்தினிப்பெண் என ஒரு பெண்ணைக் குறித்துத் தமிழர் சொல்லும்போதெல்லாம், கணவன்மாட்டுப் பத்தி யுடையவள் என்றே கருதிச் சொல்கின்றனர் என்பதைச் சாத்திரியார் அவர்கள் அறியாதிருப்பது வருந்தத்தக்கது. பத்தினி என்னும் சொல் மனைவி என்றே பொருள்படு மாயின், பத்தினிப்பெண் (மனைவிப்பெண்) என்னும் இருபெயரொட்டு வழக்கிற்கே இடமிராது. இத் தொடரில், பத்தினி என்பது சிறப்புப் பெயரும் பெண் என்பது பொதுப் பெயருமாகும். தெய்வத்தினிடத்தும் தெய்வத் தன்மையுள்ள அரசன் ஆசிரியன் முதலியோரிடத்தும் காட்டும் அச்சத் தோடு கூடிய அன்பு பத்தி எனப்படும். பத்தியுடையவன் பத்தன். பத்தியுடையவள் பத்தினி. குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல், கற்புடை மனைவிக்குக் கணவனே தெய்வம் என்னும் பண்டைக் கொள்கைபற்றி, சிறந்த மனைவி கணவனிடத்தே பத்திபூண் டொழுகினமையால், பத்தினி எனப்பட்டாள். ஆகவே, பத்தன் என்னும் ஆண்பாற் பெயர் தெய்வபத்தி யுடையவனையும், பத்தினி என்னும் பெண்பாற் பெயர் கணவன் பத்தியுடையவளையும் குறிப்பனவாகும். தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை (குறள். 55) என்னும் குறளும், பத்தினி என்னும் பெயர்க் காரணத்தை ஓரளவு உணர்த்தும். இங்ஙனம், பத்தினி என்னும் சொல் பத்தியுடையாள் என்று பகுசொற் பொருள் கொண்டிருப்பவும், அதைப் பத்நீ என்னும் வடசொல்லோ டிசைத்ததற்கு, பத்தி என்னும் சொல் பக்தி என்னும் வடசொல்லின் திரிபெனச் சாத்திரியார் அவர்கள் கொண்டமையே காரணமாகும். பத்தி என்னும் சொல், பற்று என்பதன் மறுவடிவான பத்து என்பத னின்று திரிந்த தூய தென்சொல்லாகும். றகரவிரட்டை தகரவிரட்டையாகத் திரிவது இயல்பு. எ-கா : ஒற்று - ஒத்து; குற்று - குத்து. தஞ்சை மாவட்டத்தில் பொற்கொல்லரைப் பத்தர் என்பது மரபு. ஒருகால், பொன்னை நெருப்பிற் பற்றவைப்பவர் என்பது அப் பெயர்ப் பொருளாயிருக்கலாம். பத்துடை யடியவர்க் கெளியவன் என்னும் திவ்வியப் பனுவல் (திருவாய்மொழி 1:3:1) தொடரில், பத்து என்னும் சொல் பத்தி எனப் பொருள்பட்டது காண்க. வயலைக் குறிக்கும் பற்று என்னும் சொல்லும் பத்து எனத் திரிந் திருப்பது கவனிக்கத்தக்கது. பத்தில் ஆறுபோனால் என்ன வாகும்? என்பது ஒரு விடுகதை. பற்று என்னும் சொல் பத்தியை அல்லது அன்பைக் குறிப்பதைப் பற்றி ஒன்றும் கூறவேண்டுவதில்லை. பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (குறள். 350) என்னுங் குறளே போதியதாகும். குற்றியலுகரவீறு இகரவீறாகத் திரிவது பெருவழக்கு. எ-கா : குச்சு - குச்சி; குஞ்சு - குஞ்சி; பஞ்சு - பஞ்சி; முட்டு - முட்டி இவ்வாறே, பத்து என்னுஞ் சொல்லும் பத்தி எனத் திரிந்துள்ளது. பழைமையான தென்சொற்கட்கெல்லாம் தென்மொழி வழியாகப் பொருள்கொள்ளுதல் வேண்டுமேயன்றி, வடமொழி வழியாகப் பொருள் கொள்ளுதல் கூடாது. அங்ஙனங் கொள்வார் இருட்டுவீட்டில் குருட் டெருமைபோல் இடர்ப்படுவது திண்ணம். பத்தினி என்னும் சொல்லைப் பத்நீ என்னும் சொல்லோ டிணைத்தத னாலேயே, முன்னதன் பகுதி பத்து அல்லது பத்தி என்பதை உணர முடியாமற் போயிற்று. அங்ஙனம் உணர முடியாமையினாலேயே, பத்தன் என்னும் ஆண்பாற் பெயர் சென்னைப் பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பெறவில்லை. நூற்றுக்கணக்கான தென்சொற்களை வடமொழியில் கொண்டு அவற்றை வடசொல்லாகக் காட்டுவதும், தூய தென்சொற்கட்கும் ஒலி யொப்புமைபற்றி வடசொன்மூலங் காட்டுவதும், எத்துணை நாட்குச் செல்லும்? 3. எழுத்து என்பதன் பகுதி எழு என்பதேயன்றி எழுது என்பதன்று என்பது தொல்காப்பியத்தாலறியக் கிடக்கின்றது. எழுத்து என்பதன் பகுதி எழு என்பதே என்று தொல்காப்பியர் ஓரிடத்துங் கூறவில்லை. எழுத்தொலியுண்டாவதைக் குறிக்குமிடத்து, எழுதல் எழுவுதல் முதலிய சொற்களை ஆள்கின்றாரேயன்றி எழுது வதைக் குறிக்குமிடத்தன்று. கருது என்னும் சொல் கருத்து என இரட்டித்துத் தொழிற்பெயரும் தொழிலாகு பெயருமாவதுபோல், எழுது என்னும் சொல்லும் எழுத்து என இரட்டித்துத் தொழிற்பெயரும் தொழிலாகு பெயருமாகும். வரிவடிவு ஒலிவடிவைக் குறிப்பதனாலும், பயிற்சி மிகுதியால் அது ஒலிவடிவோ டொன்றியது போலத் தோன்றுவதாலும், எழுத்து என்னும் சொல் வரிவடிவைக் குறிப்பதுடன் ஆகுபெயர் முறையில் ஒலிவடிவையுங் குறிக்கும். இவ் வொலிவடிவுப் பொருளில் அஃது இருமடியாகு பெயராகும். ஓவிய வரைவைக் குறிக்கும் எழுத்து (எழுதுதல்) என்னும் சொல்லே, வரிவரைவையுங் குறிக்கும், வரிவடிவும் ஒருவகை யோவியமாதலின், எழுதுதல் வரைதல். “Letter. Fr. lettre, L. litera, from lino. litum, to besmear, an early mode of writing being by graving the characters upon tablets smeared over with wax, என்று The Imperial Dictionary என்னும் ஆங்கில அகராதியிற் குறித்திருப்பது ஒப்பு நோக்கத்தக்கது. எழு என்னும் பகுதியினின்று எழும் தொழிற்பெயர், எழல், எழால், எழில், எழுதல், எழுகை, எழூஉ என இருக்குமேயன்றி, எழுத்து என இருக்காது. ஆகவே, அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பதுபோல, ஒலியை நினைத்துக்கொண்டு வரியைக் குறிக்கும் பெயர்க்குப் பகுதி கூறுவது பொருந்தாது. 4. தென்சொற்கட்குப் பொருள் விளக்கவந்த புத்தகத்திற் சில வட சொற்களும் தென்சொற்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. வடசொற்களிவை, தென்சொற்களிவை யென யான் அறியாம லில்லை. சில வடசொற்கள் தமிழில் வழக்கூன்றி யுள்ளமை காரணமாகத் தன்னின முடித்தல் என்னும் உத்திபற்றி அவற்றைத் தொடர்புடைய தென்சொற்களொடு சேர்த்துக் கூறியிருக்கின்றேன். அங்ஙனம் கூறப் பட்டவை இரண்டொன்றே. அவற்றை வடசொல்லென விதந்து குறித்து மிருக்கின்றேன். அங்ஙனங் குறிக்கப்படாதவை யெல்லாம் தென்சொல் லாகவே யிருக்கும். அவற்றை யெல்லாம் அல்லது அவற்றுள் ஒரு பகுதியைச் சாத்திரியார் அவர்கள் வடசொல்லென மயங்கியிருப்பார்களா யின், அது அவர்களது குற்றமேயன்றி என் குற்றமன்று. 5. ஆசிரியர் மொழியொலி நூல் (Phonology), சொல்வடிவு நூல் (Morphology), பொருட்பாட்டு நூல் (Semasiology), ஆகியவற்றைப் பயின்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும். கடந்த இருபானாண்டுகளாக மொழிநூலில் மூழ்கிக் கிடந்த எனக்கு, மீன்குஞ்சுக்கு நீச்சுப் பயிற்றுவதுபோலும், கொல் தெருவில் குண்டூசி விற்பதுபோலும், சாத்திரியார் அவர்கள் மொழிநூல் துறைகளை யுணர்த்த விரும்பியது, மிக வியப்பை விளைக்கின்றது. பார்ப்பான் தமிழும் வேளாளன் கிரந்தமும் வழவழா கொழகொழா என்பது ஒருபுறமிருக்க, வடமொழியை இயன்மொழியாகவோ, தமிழுக்கு முந்திய மொழியாகவோ கொள்பவ ரெல்லாம், ஒப்பியன் மொழிநூல் மாணவராதற்கும் உரியவரல்லர் என்பது எனது ஆய்ந்த முடிபு. செயற்கை வல்லொலியெல்லாம் சிறந்து, பலுக்க (உச்சரிக்க) அரிதான சொல்லமைப் பெல்லாம் பெற்று, ஆசியா, ஐரோப்பா ஆகிய இருபெருங் கண்டங்கட்குப் பொதுவான சொற்களையெல்லாம் தழுவி, எண்ணரு நூற்றாண்டுகளாக இடுகுறிமுறையில் வளம்படுத்தப்பட்ட வடமொழியை; இயல்பாயெழுந்து, எளியவொலி கொண்டு இளஞ்சிறாரும் ஒலிக்கும் சொல்லமைப்புப் பெற்று, மாந்தன் தோன்றிய காலந்தொட்டு மாண்பாக வளர்க்கப்பெற்ற தமிழுக்கு முந்தியதாகவும் மூலமாகவுங் காட்டத் துணிவார்; மொழிநூற்றுறைகளில் முற்றத் துறைபோய முதுபெரும் புலவராகத் தம்மைத் தாமே மதித்துத் தருக்கின், அவருக்கு விடையாக யானொன்றும் விடுத்தற்கில்லை. இனி, என் `சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளில்' சாத்தியார் அவர்கள் குறிப்பிடாத இரண்டொரு குற்றங்குறைகள் உள. அவை சொற்பொருள் பற்றியவை. அவற்றை அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்வேன். - ``செந்தமிழ்ச் செல்வி'' சூன் 1951 ----- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள் தி.பி. 1933 (1902) : திருநெல்வேலி மாவட்டம், சங்கரநயினார் கோயிலில் சுறவம் - 26ஆம் நாள் (7.2.1902) பிறந்தார். தந்தை : ஞானமுத்து தாய் : பரிபூரணம் தி.பி. 1938 (1907) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி தொடக்கக்கல்வி : நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப் பள்ளி. உயர்நிலைக்கல்வி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9,10,11 - வகுப்பு) தி.பி. 1950-52(1919-21) : முகவை மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப் பள்ளியில்முதற்படிவ ஆசிரியப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1952-53(1921-22) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளி யில் (தாம் பயின்ற பள்ளி) உதவி ஆசிரியராய்ப் பணியாற்றினார். தி.பி. 1955 (1924) : மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம்நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றார்.(ï› வாண்டில் பாவாணரைத் தவிர வேறொருவரும்வெற்றி பெறவில்லை). உதவித்தமிழாசிரியர், சென்னை, திருவல்லிக் கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1956 (1925) : தமிழாசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். சிறுவர் பாடல் திரட்டு நூல் வெளியீடு. தி.பி. 1957 (1926) : திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1959 (1928) : தலைமைத் தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு. தி.பி. 1961 (1930) : நேசமணி அம்மையாரை மணந்தார். தி.பி. 1963 (1932) கிறித்தவக் கீர்த்தனம் - நூல் வெளியீடு. தி.பி. 1965 (1934) : தலைமைத் தமிழாசிரியர், பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளியில் பணியாற்றி னார். கீழைக்கலைத் (B.O.L.) தேர்வில் வெற்றி பெற்றார். தி.பி. 1968 (1937) : முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு - செந்தமிழ்க்காஞ்சி நூல் வெளி யீடு. இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார். ``கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்''நூல் வெளியீடு. தி.பி. 1971 (1940) : ஒப்பியன் மொழிநூல் முதற்பாகம் இயற்றமிழ்இலக்கணம்ஆகிய நூல்கள் வெளியீடு. கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கண நூல் வெளியீடு. தி.பி. 1972 (1941) : ``தமிழர் சரித்திரச் சுருக்கம்'' வெளியீடு : தமிழக இளைஞர் மன்றம், திருச்சிராப்பள்ளி. ``தமிழன் எப்படிக் கெட்டான்'' ஆகிய நூல்கள் வெளியிடல். தி.பி. 1974 (1943) : தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1974 (1943) : சுட்டு விளக்கம் - நூல் வெளியீடு. - பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடை பெற்ற முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். தி.பி. 1975 (1944) : - தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றினார். - திரவிடத்தாய் - நூல் வெளியீடு. தி.பி. 1980 (1949) : சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - நூல் வெளியீடு. பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். பாவாணர் அவர்கள் சேலம் கல்லூரியில் பணி யாற்றியபோது தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திர னார் அவர்கள் அக்கல்லூரியில் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1981 (1950) : உயர்தரக் கட்டுரை இலக்கணம் (மு.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1982 (1951) : உயர்தரக்கட்டுரை இலக்கணம் (இ.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1983 (1952) : சென்னைப்பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர் (M.A.) பட்டம் பெற்றார். பழந்தமிழாட்சி - நூல் வெளியீடு. தி.பி. 1984 (1953) : முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் - நூல் வெளியீடு. தி.பி. 1985 (1954) : தமிழ்நாட்டு விளையாட்டுகள் - நூல் வெளியீடு. தி.பி. 1986 (1955) : `A Critical Survey of Madras University Lexicon' என்னும் ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது. தி.பி. 1987 (1956) : தமிழர் திருமணம் - நூல் வெளியீடு. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1988 (1957) : பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் சேலம் தமிழ்ப் பேரவை இவரின் தொண்டைப் பாராட்டித் `திராவிட மொழிநூல் ஞாயிறு' எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. திசம்பர் 27, 28, 29-ல் தில்லியில் நடைபெற்ற அனைத் திந்தியக் கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார். தி.பி.1990 (1959) : தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல் லாக்கத்தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித்தமைக் காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப்பட்டது. மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட `தென்மொழி' இதழ் பாவலரேறு பெருஞ் சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ் விதழ் இன்றளவும் பெரும் பங்காற்றி வருகிறது. தி.பி. 1992 (1961) : சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியின் சீர்கேடு - நூல் வெளியீடு. - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், மக்களும் உண்டு - அதோடு எனக்கு மானமும் உண்டு - என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார். தி.பி. 1994 (1963) : துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு. தி.பி. 1995 (1964) : முனைவர் சி.இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் - தமிழ்ப் பெருங் காவலர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. ``என் அண்ணாமலைநகர் வாழ்க்கை'' என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது. தி.பி. 1997 (1966) : இசைத்தமிழ்க் கலம்பகம் பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் ``The Primary Classical Language of the World'' என்னும் நூல்கள் வெளியீடு. தி.பி. 1998 (1967) : தமிழ் வரலாறு வடமொழி வரலாறு “The Language Problem of Tamilnadu and Its Logical Solution” ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 1999 (1968) : மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணிவிழாவைக் கொண்டாடி மொழிநூல் மூதறிஞர் எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 06-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழிநூலின் வழுவியல் - ``Is Hindi the logical solution of India'' ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2000 (1969) : பறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் சி. இலக்குவனார், முனைவர் வ. சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது. இம் மாநாட்டில் - திருக்குறள் தமிழ் மரபுரை இசையரங்கு இன்னிசைக் கோவை “தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?” - ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2002 (1971) : பறம்புமலையில்தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்றபாரி விழாவில்பாவாணர் செந்தமிழ்ஞாயிறு என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தென் மொழியில் அறிவிக்கப்பட்ட `செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்டம்' வகுக்கப் பெற்றது. தி.பி. 2003 (1972) : தஞ்சையில் இவர் தலைமையில் உலகத் தமிழ்க்கழக மாநாடு - தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக நடந்தது. - தமிழர் வரலாறு, தமிழர் மதம் ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2004 (1973) : வேர்ச்சொற் கட்டுரைகள் நூல் வெளியீடு. தி.பி. 2005 (1974) : 8.5.1974-ல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநராகத் தமிழ்நாட்டரசால் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் அமர்த்தப்பட்டார். செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் பேரகர முதலியின் முதல் மடல முதற் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகு 1985-ல் வெளியிடப்பட்டது. தி.பி. 2009 (1978) : மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை - நூல் வெளியீடு. சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரனார் தலைமை தாங்கினார். தி.பி. 2010 (1979) : தமிழ் இலக்கிய வரலாறு - நூல் வெளியீடு. வாழ்நாள் முழுவதையும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய இப் பெருமகனுக்குத் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் `செந்தமிழ்ச் செல்வர்' என்னும் சீரிய விருது வழங்கப்பட்டது. தி.பி. 2011 (1980) : `Lemurian Language and Its Ramifications - An Epitome' எனும் ஆங்கில நூல் மதுரையில் நடை பெறவிருந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு அயல் நாட்டுப் பேராளர்களுக்காக (52 பக்க அளவில்) உருவாக்கப்பட்டது. தி.பி. 2012 (1981) : மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் என்னும் தலைப்பில் தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார். சுறவம் 2ஆம் நாள் சனவரி 15-ல் இரவு 12.30-க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார். தாய்மொழிப்பற்றே தலையாயப்பற்று தாய்மொழிப் பற்றில்லாத் தன்னாட்டுப் பற்றே தன்னினங் கொல்லவே தான்கொண்ட புற்றே மொழியொன் றில்லாமலே இனமொன்று மில்லை இனமொன்றில் லாமலே நாடொன்று மில்லை! மதியுணர் வின்றியே மடிவெனுந் தூக்கம் மயங்கிக் கிடக்கின்றாய் மறுத்தெழு தமிழா! கரந்தும் அண்டைவீட்டுள் கால்வைத்த லின்றிக் கண்மூடித் தூங்குவாய் கடிதெழு தமிழா! வருமானங் குன்றியே வறியவ னானாய் வாழ்நாள் வீணாகாமல் வல்லெழு தமிழா! அருசுவை யுண்டியே ஆக்கிடின் உன்கை அருந்த மறுக்கின்றார் ஆய்ந்தெழு தமிழா! ஒலியொடு வரியும்பின் ஒழியவே அண்மை உறும்தேவ நாகரி உணர்ந்தெழு தமிழா! பார்முதல் பண்பாடு பயின்றவன் தமிழன் பலரையும் உறவெனப் பகர்ந்தவன் தமிழன். பிறப்பாலே சிறப்பில்லை தமிழா - இதைப் பெருநாவ லன்சொன்னான் தமிழா! மறத்தாலும் திறத்தாலும் தமிழா - மேன்மை மதியறி வொழுக்கத்தால் தமிழா! தமிழினுக் குலகினில் தகுவதே தலைமை தமிழரும் அடையவே தாழ்விலா நிலைமை இமிழ்தரு மொழியியல் எய்துக நலமே எமதுமெய் வரலாறே எழுகவே வலமே. வேனிலிற் கான்மலை வெம்மைகொள் பாலையின் விளைநில மாவதிந் நாடு மின்னும்பல் மணிகளும் மிகுவிலை யாற்பெற மேலுலகும் விரும்பும் நாடு கொன்றுதன் மகனையே கொடுமையை நிமிர்த்துச்செங் கோன்முறை குலவிய நாடு நீலியின் கணவற்கு நிகழ்த்திய வாய்மொழி நிறைவேற்றின வேளாளர் நாடு அறியாது முரசணை அயர்ந்திடும் புலவர்க்கும் ஆலவட்டம் விசிறும் நாடு சித்தரின் மருத்துவம் சிறந்தபொன் னாக்கமும் சிலம்பொடு திகழ்ந்ததிந் நாடு பாவாணர் பொன்மொழிகள் அன்பென்பது ஏசுவும் புத்தரும்போல் எல்லாரிடத்தும் காட்டும் நேயம். ஆட்சி ஒப்புமை நட்புறவிற்கே அன்றி அடிமைத்தனத்திற்கு ஏதுவாகாது. ஓய்வகவையைத் தீர்மானிக்கும் அளவையாய் இருக்க வேண்டியது பணித் திறமையேயன்றி அகவை வரம்பன்று. துறவு தம்மாலியன்றவரை பொதுமக்கட்குத் தொண்டு செய்வது சிறந்த துறவாகக் கருதப்படுகின்றது. இந்தியாவில் விலங்கினம் இருக்கும் நிலைமையை உணர்த்த அவற்றின் கழுத்துப்புண்ணும் விலாவெலும்புத் தோற்றமும் போதும். கட்டுப்பாட்டில்லாவிடின் காவலனுங் காவானாதலாலும் செங்கோலாட்சியொடு கூடிய இருகட்சியரசே குடியரசிற் கேற்றதாம். மாந்தன் வாழ்க்கை, இல்லறம் துறவறம் என இருவகைத்து. மனைவியோடு கூடி இல்லத்திலிருந்து அதற்குரிய அறஞ் செய்து வாழும் வாழ்க்கை இல்லறம்; உலகப் பற்றைத் துறந்து அதற்குரிய அறத்தோடு கூடிக் காட்டில் தவஞ் செய்து வாழும் வாழ்க்கை துறவறம். ஒருவன் இல்லத்தில் இருந்து மனையாளோடு கூடிவாழினும் அறஞ் செய்யாது இருப்பின் அவன் வாழ்க்கை இல்லறமாகாது வெறுமனான இல்வாழ்க்கை யாம். இலங்கையில் இடர்ப்படும் மக்கள் பெரும்பாலும் தமிழராயிருத்தலின் அவர்களின் உரிமையைப் பேணிக்காத்தற்கு அங்குள்ள இந்தியத் தூதாண்மைக் குழுத்தலைவர் தமிழராகவே இருத்தல் வேண்டும். கருத்துவேறுபாட்டிற் கிடந்தந்து ஒரு சாராரை ஒருசாரார் பழிக்காதும் பகைக்காதும் இருப்பதே உண்மையான பகுத்தறிவாம். இவ் வுலகில் தமிழனைப் போல் முன்பு உயர்ந்தவனு மில்லை; பின்பு தாழ்ந்த வனும் இல்லை. இற்றைத் தமிழருட் பெரும்பாலாரும் தம்மைத் தாமே தாழ்த்துவதிலும், இனத்தாரைப் பகைத்துப் பகைவரை வாழவைப்பதிலும், பகைவர் மனங்குளிரத் தம் முன்னோரைப் பழிப்பதிலும், தம்மருமைத் தாய்மொழியைப் புறக்கணித்துப் பகைவரின் அரைச்செயற்கைக் கலவை மொழியைப் போற்றுவதிலும் ஒப்புயர்வற்றவராய் உழல்கின்றனர். 