பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 44 மொழிநூற் கட்டுரைகள் ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 44 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2001 மறு பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 10 + 102 = 112 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 70/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். சான்றிதழ் பண்டித ஞா. தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய சொல்லாராய்ச்சி, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய மொழியறிவியல், பேராசிரியர் சாய்சு எழுதிய ஒப்பியல் மொழிநூல் முதலிய ஆங்கிய நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு, பண்டாரகர் கால்டுவெல் எழுதிய திராவிட மொழி களின் ஒப்பியல் ஆய்வு நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்த தொரு முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர்பார்ப்பதற் கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மைத் தூண்டியது. எனவே `ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. mt® tUªâíiH¤J MuhŒ¢á brŒJtU« m¿P® Mjyhš mtiu¥ gÂÆš mk®¤J« vªj Ãiya¤J¡F« mtuhš ngU« òfG« »il¡f¥ bgW« v‹W ah« KG e«ã¡ifnahL TW»‹nw«.* - மறைமலையடிகள் * மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம். உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை iii வான்மழை வளசிறப்பு .v சான்றிதழ் vii நூல் 1.ஒப்பியல்இலக்கணம்...1 2. சொற்பொருள் வரிசை 10 3. வண்ணனை மொழிநூல் 16 4. பொருட் பாகுபாடு .22 5. உலக வழக்குக் கொச்சை வழக்கன்று .28 6. எல்லாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியா? . 34 7. வடசொல் தென்சொல் காணும் வழிகள் .43 8. பாவை என்னுஞ் சொல் வரலாறு .47 9. திரு என்னும் சொல் தென்சொல்லா? வடசொல்லா? . 50 10. உத்திரம், தக்கணம் எம்மொழிச் சொற்கள்? . 56 11. மதி விளக்கம் 62 12. உவமை தென்சொல்லே 67 13. திரவிடம் தென்சொல்லின் திரிபே 76 14. தமிழ் முகம் 82 15. வள்ளுவன் என்னும் பெயர் 87 16. கழகமெல்லாம் சூதாடுமிடமா? 91 17. இந்தி பயிற்சி 95 மொழிநூற் கட்டுரைகள் 1 ஒப்பியல் இலக்கணம் பொருள் வரையறை ஒப்பியல் இலக்கணமாவது, மொழிகளின் இலக்கணங்களை ஒன்றோ டொன்று ஒப்புநோக்கி, அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை அறிதல். இந்நாடு திரவிட eட்டின்Tறானjமிழ்eடாதலானும்ïக்கட்டுரைkதுரைத்jமிழ்ச்rங்கப்bபான்விழாkலரிதழாதலானும்,xப்பியல்ïலக்கணbமன்பதுâரவிடbமாழிகளின்ïலக்கணவமைதிகளைxப்புnநாக்குtதையே<ண்டுச்áறப்பாகக்Fறிக்கும்.MÆD«, பல்வேறு மொழிகட்கும் ஏதேனுமொரு வகையில் தொடர்போ ஒப்புமையோ இருத்தலானும், ஒரு குடும்ப மொழிகளை ஒப்பு நோக்குவது போன்றே பல மொழிக் குடும்பங்களை யும் ஒப்பு நோக்குவதும் ஒப்பியல் இலக்கணமே யாதலானும், இக்கட்டுரை யிறுதியில், திரவிட மொழியமைதி ஆரிய மொழியமைதியொடும் ஒரு சிறிது ஒப்பு நோக்கப்பெறும். கால்டுவெல் கண்காணியாரும் இம்முறையை விரிவாகக் கடைப்பிடித்திருத்தல் காண்க. ஒப்பியற் சிறப்பு ஒப்பியல் என்பது, எல்லாக் கலைத் துறைகளிலும் உண்மையைக் காண்பதற்கு இன்றிமையாத முறையாம். ஆகவே, ஒப்பியல் என்று பெயரும் வாய்ந்த கலைகட்கும் நூல்கட்கும் அதன் இன்றியமையாமையைச் சொல்ல வேண்டுவதில்லை. கால்டுவெல் ஐயர் ஒப்பியலின் தேவையைத் தம் இலக்கண முகவுரையில் (ப. 10) பின்வருமாறு வற்புறுத்துகின்றார்: ``அவர்கள் (திரவிடர்) தங்கள் மொழிகளைப் பிறவற்றுடன் ஒப்பு நோக்க ஒருபோதும் முயன்றதில்லை; தங்கள் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பிறமொழிகளுடன்கூட ஒப்பு நோக்கியதில்லை. மொழிக்குடும்பம் என ஒன்றுண்டு என்னும் கருத்தைக்கூட அவர்கள் மனம் பற்றியதில்லை. இதனால், அவர்கள் தங்கள் மொழியைப் படிப்பதில் எடுத்துக்கொண்ட அக்கறையானது, மதி நுட்பத்தோடும் பகுத்துணர்வோடும் கூடியதாயிராமல், நேர்மையாக எதிர்பார்த்த அளவிற்கு மிகக் குறைவான பயனை விளைத்துள்ளது. அவர்கள் மொழிநூல், அப்பெயராற் குறிக்கப்படக் கூடுமாயின், நம் காலம் வரையும், ஊழிகட்கு முன்னிருந்தவாறே தொடக்க நிலையிலும் துண்டு துணிக்கையாக வும் இருந்து வந்திருக்கின்றது. ஒப்பியல் தன்மையில்லாமையால் அது அறிவியல் திறமும் முன்னேற்றமும் அடையவில்லை. ஒப்பியற் கல்வி ஒவ்வோர் அறிவியல் துறையிலும் ஐரோப்பாவில் பெருநலம் பயத்திருக் கின்றது. இந்தியாவிற்கும் அது பெரிதுதவும் என்று எதிர் பார்க்கக் கூடாதா? தென்னிந்திய மக்கள், தங்கள் சொந்த மொழிகளை ஒப்புநோக்கிப் படிப்பதிலும் பொதுவாக ஒப்பியல் மொழி நூலிலும் விருப்பங் கொள்வாராயின் அது, அவர்களின் தனி யிலக்கணக் கல்வி இதுவரை பயன்பட்டதைவிட மிகமிகப் பல்வேறு வகைகளிற் பயன்படும் என்பதைக் காண்பார்கள். அவர்கள் செய்யுள் நடைப்பட்ட பிதிர்களையும் இன்னோசைப்பட்ட வெற்றெனத் தொடுப்பு களையும் உருப்போட்டுப் படித்துப் பொந்திகை (திருப்தி) கொள்வதை விட்டு விடுவார்கள்.'' வரலாற்றடிப்படை எல்லாக்கலைகளும் நூல்களும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன வென்பது, எவரும் அறிந்த வுண்மை. வரலாற்றொடு முரணும் எந்நூலும் நூலாகாது. ஆதலால், மொழி நூலும் அதனை அடிப்படையாகக் கொள்ளல் வேண்டும். தென்னாட்டு வரலாறு உண்மையான முறையில் இதுவரை எழுதப் பெறவில்லை. இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து தொடங்க வேண்டுமென்று சென்ற நூற்றாண்டே சுந்தரம் பிள்ளையும் வின்செண்டு சிமித்தும் கூறிப் போயினர். ஆயினும், இன்னும் அம்முறை கையாளப் பெறவில்லை. இதற்கு மாறாகத் தென்னாட்டு வரலாறு திறமையுடன் மறைக்கப்பட்டே வருகின்றது. இதனால், மகன் தந்தைக்கும் பேரன் பாட்டனுக்கும் முந்தியவர் என்பதுபோல் தலைகீழாகத் தமிழ் வரலாறும், தமிழ் நாட்டு வரலாறும், இருந்து வருகின்றன. இந்து மாவாரியில் மூவேறு கடல் கோளால் முழுகிப்போன குமரி (Lemuria) நாட்டுச் செய்தியே தென்னிந்திய அல்லது தமிழக வரலாற்றுத் தொடக்கம். குமரி நாட்டுண்மை, ``முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே'' (9: 9-11) என்னும் புறநானூற்றடிகளாலும், ``பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி'' (11: 19-22) என்னும் சிலப்பதிகார அடிகளாலும், ``மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப் புலியொடு வின்னிக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச் சீர்த்தென்னவன்'' (104) என்னும் முல்லைக்கலித் தரவாலும், அக்காலத்து அவர் (தலைச் சங்கப் பாண்டியர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னுமாற்றிற்கும் குமரியென்னு மாற்றிற்குமிடையே எழுநூற்றுக்காவதவாறும்-நாற்பத்தொன்பது நாடும்-பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின் காறும் கடல்கொண் டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க.'' என்னும் அடியார்க்கு நல்லார் உரைப்பகுதியாலும் (சிலப். சாமிநாதையர் பதிப்பு, பக். 230), ``.......jiy¢ சங்கமிருந்தார்............jÄHhuhŒªjJ கடல் கொள்ளப்பட்ட மதுரையென்ப''என்றும், ``........ïil¢சங்கமிருந்தார்..................jÄHhuhaªjJ கபாடபுரத் தென்ப,''என்றும், இறையனாரகப் பொருளுரை கூறுவதாலும் (பக். 6, 7), பிறவற்றாலும் அறியப்படும். திரவிடரெனப் படுவார் தென்னாட்டுப் பழங்குடி மக்களே யென்று, இராமச்சந்திர தீட்சிதர் எழுதியுள்ள வரலாற்று முன்னைத்தென்னிந்தியா (Pre-Historic South India), தமிழரின் தோற்றமும் பரவலும் (Origin and Spread of the Tamils) என்னும் நூல்களிலும், P. T. சீனிவாசையங்கார் எழுதியுள்ள இந்தியக் கற்காலம் (Stone Age of India) என்னும் நூலிலும் பரக்கக் கூறியிருத்தல் காண்க. குமரிநாட்டு உண்மையை அறிந்தால்தான், தமிழர் தெற்கே தோன்றி வடக்கே சென்று திரவிடராய்த் திரிந்தாரென்ற வுண்மையையும், திரவிடர் மீண்டும் வடமேற்கே சென்று ஆரியராய்த் திரிந்தாரென்ற வுண்மையையும், தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் என்ற வுண்மையையும் உணர்தல் இயலும். ``தென்னாட்டு மொழிகளுக்குள் தமிழ் மிகத் தொன்மையான தென்றும், என் கருத்தின்படி அது திரவிடத் தாய் என்றும் நம்புவதற்கு ஒரு பாணிப்பும் தேவையில்லை'' என்று தமிழரின் தோற்றமும் பரவலும் என்ற நூலிலும், ``தமிழேனும் வேறு எத்தென்னிந்திய மொழியேனும் சமற்கிருதத்தி னின்று தோன்றியதன்று என்பது மட்டுமன்று; நாம் நெருங்கி ஆயுங்கால், திரவிட மொழிகள் சமற்கிருதத்திடத்தும் வேதமொழிக் கிளைகளிடத்துங்கூட மிகுந்த அளவு செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன என்னும் எம் கொள்கையை வலியுறுத்த மிகுந்த ஒப்புமைகள் காண்கின்றோம்'' என்று திரவிட முன்னைத் தென்னிந்தியா என்னும் நூலிலும், இராமச்சந்திர தீட்சிதர் கூறியிருப்பதைக் கவனிக்க. திரவிட மொழிகள் ஆரிய மூலமொழிக்கு மிக நெருங்கியவை என்று கால்டுவெல் தம் ஒப்பியல் இலக்கணத்தில் ஆங்காங்குக் கூறியிருப்பது, ஆழ்ந்து நோக்கத்தக்கது. திரவிட மொழிகளின் உறவியல் வரிசை திரவிட மொழிகள்: 1. தமிழ் 2. மலையாளம் 3. தெலுங்கு 4. கன்னடம் 5. துளு (துளுவம்) 6. குடகு (குடகம்) எனத் திருந்தியவை ஆறும், 1. தோடா (தொதுவம்) 2. கோட்டா 3. கோண்டு (கோட்டி) 4. கூ 5. ஒராஒன் 6. அரசமகால் (ராஜ்மஹால்) எனத் திருந்தாதவை ஆறும், ஆக மொத்தம் பன்னிரண்டு எனக் கூறினர் கால்டுவெல் ஐயர். இவற்றுடன் பிராகுவீ, பர்சி (பர்ஜி) என்னும் இரு திருந்தா மொழிகளும் சேர்க்கப் பெறும். திருந்திய திரவிட மொழிகள் ஆறும், தூய்மை பற்றிய இறங்கு வரிசையிற் பின் வருமாறு அமையும்: 1) தமிழ் 2) மலையாளம் 3) கன்னடம் 4) துளுவம் 5) குடகம் 6) தெலுங்கு திரவிடம் எனப் பெறும் எல்லா மொழிகளும் இன்று ஒரே பெயரால் வழங்கினும், தமிழொழிந்தவை யெல்லாம் சிறிதும் பெரிதும் ஆரியத் தன்மை யடைந்து விட்டமையால், அவற்றைத் தமிழும் திரவிடமும் எனப் பிரித்துக் கோடலே தக்கதாம். அவ்விருபாற்கும் தமிழியம் (Tamulic) என்பதைப் பொதுப் பெயராகக் கொள்ளலாம். தமிழினின்று திரிந்த திரவிட மொழிகளுள் மலையாளமும் ஒன்றாகக் கொள்ளப் பெறினும், அது நெருக்கத்திலும் தூய்மையிலும் பிற திரவிட மொழிகளிலும் வேறுபட்டு. தமிழுக்கும் திரவிட மொழிகட்கும் இடைப்பட்ட நிலையிலுள்ளதாகக் கொள்ளல்வேண்டும். தொன்றுதொட்டுப் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை சேரநாட்டுச் செந்தமிழாகவும், அதன்பின் 16ஆம் நூற்றாண்டு வரை கேரளநாட்டுக் கொடுந்தமிழாகவும், இருந்து வந்த மொழியைப் பிற திரவிடமொழிகளோடொப்பக் கொள்வது எவ்வகையினும் பொருந்துவதன்று. பொதுவாக, திரவிடம் தெற்கே செல்லச் செல்லத் திருந்தி விரியும் என்றும், வடக்கே செல்லச் செல்லத் திரிந்து சுருங்குமென்றும் அறிதல் வேண்டும். திரவிடமெல்லாம் ஒரு மொழி திரவிட மொழிகள் இன்று பதினான்கெனக் கணக்கிடப்பட்டிருப்பினும், அவையனைத்தும் ஒரு காலத்தில் ஒரே மொழியாய் வழங்கியமை பின்வரும் சான்றுகளால் உணரப் பெறும்: (1) திரவிட மொழிகளெல்லாம், முதற்காலத்தில், வேறுபாடின்றி அல்லது வேறுபடுக்கப்படாது தமிழம் அல்லது திரவிடம் என ஒரே பெயரால் அழைக்கப் பெற்றமை. (2) திரவிட மொழிகட் கெல்லாம் அடிப்படைச் சொற்றொகுதி பெரும் பாலும் ஒத்திருத்தல். (3) எல்லாத் திரவிட மொழிகட்கும் இலக்கண அமைதி ஒன்றா யிருத்தல். (4) திரவிட மொழிகளுள் ஒவ்வொன்றையும் செவ்வையாய் அறிய ஏனையவற்றின் அறிவு இன்றியமையாமை. (5) தெலுங்கு கன்னடம் மலையாளம் முதலிய திரவிட மொழிகள் ஒவ்வொன்றாய்த் தமிழினின்று பிரிந்துபோனமை வரலாற்றாலும் மொழி நூலாலும் அறியப் பெறுதல். (6) தமிழல்லாத பண்டைத் தாய் மொழிகளும் பிற்காலத்துப் பல்வேறு கிளை மொழிகளாய்ப் பிரிந்து போனமை. திரவிடத்தாய் திரவிட மொழிகட்கெல்லாம் தாய் தமிழே. இதற்குச் சான்றுகளாவன:- (1) தமிழின் தொன்மையும் அது குமரி நாட்டில் தோன்றியமையும். (2) தமிழின் ஒலியெளிமை. (3) வட மொழியும் பிற மொழியும் கலவாத் தூய்மையில் தமிழ் சிறந்திருத்தல். (4) தமிழின் சொல்வளம். (5) தமிழின் சொற் செம்மை. (6) திரவிடத்திற்குச் சிறப்பான இலக்கியம் தமிழிலேயே இருத்தல். (7) தமிழம் என்னும் பெயரே (த்ரமிளம்-த்ரமிடம்-த்ரவிடம்) திரவிடம் எனத் திரிந்தமை. (8) கடைச் சங்க காலத்தில் வேங்கடத்திற்குத் தெற்கில் தமிழே வழங்கியமை. தமிழின் திரவிடத் தாய்மையை, அதனின்று மிகமிகப் பிரிந்து போனதும் பெருநிலத்தில் வழங்குவதும் திரவிட மொழிகட்குள் பிறங்கித் தோன்றுவதுமான தெலுங்கொன்றன் வாயிலாய் அறியலாம். எ-கா : 1. மூவிடப் பெயர் தமிழ் தெலுங்கு யான்-நான் நேனு யாம் மேமு நாம் மனமு நீன்-நீ நீவு தமிழ் தெலுங்கு நீம், நீர் மீரு அவன் வாடு அவள் அதி அவர் வாரு அது அதி அவை அவி 2. ஆகு என்னும் வினைச்சொற் புடைபெயர்ச்சி தமிழ் தெலுங்கு பகுதி -ஆ, ஆகு அவு ஏவல் ஒருமை -ஆ, ஆகு கா, கம்மு ஏவல் பன்மை - ஆகுங்கள் கண்டி தன்மையொருமை இ. கா. முற்று -ஆயினேன் அயினானு இ. கா. பெயரெச்சம் -ஆன அயின, ஐன இ. கா. வினையெச்சம் -ஆய் அயி, ஐ நி. கா. வினையெச்சம் -ஆக கா, அவ எ. கா. வினையெச்சம் -ஆயிற்றேல் அயித்தே படர்க்கை எதிர்கால வினைமுற்று -ஆகும், ஆம் அவுனு உடன்பாட்டிடைச்சொல் -ஆம் அவுனு ஒன்றன்பால் எதிர்மறை வினைமுற்று -ஆகாது காது தொழிற்பெயர் -ஆதல், அவுட்ட, காவ ஆகுதல் (முதலியன) டமு (முதலியன) தமிழுக்குத் திரவிடத்துணை பண்டைத் தமிழகத்தின் பெரும் பகுதியைக் கடல்கொண்டமை காரணமாக, அப்பகுதியில் சிறப்பாக வழங்கிய உலக வழக்குற் சொற்களும் தொல்காப்பியத்திற்கு முந்திய இலக்கண இலக்கியக் கலைநூல்களும் மறைந்து போனமையாலும், அதன் பின்னரும் இயற்கையாகவும் செயற்கையாகவும் தமிழுக்கு நேர்ந்துள்ள பல இன்னல்களின் விளைவாகவும், பல தமிழ்ச் சொற்களும் சொல் வடிவுகளும் இன்று தமிழல்லாத திரவிட மொழிகளிலேயே வழங்கிவரக் காண்கின்றோம். எ-கா : சொல் சொல் வடிவு (தெலுங்கு) எச்சரிக்கை நன் (நான் என்பதன் வேற்றுமையடி) இற்றைத் தமிழிலில்லாது பிற திரவிட மொழிகளிற் சிறப்பாக வழங்கும் தென்சொற்கள், திசைச் சொல்லின் பாற்படும்; சொல்வடிவுகள் குடியேற்றப் பாதுகாப்பு (Colonical Preservation) என்னும் நெறிமுறைக் கெடுத்துக் காட்டாம். திரவிட மொழிகளுள், தமிழை வளம்படுத்தற்கும் தமிழ் இலக்கணச் சொல்லுறுப்புக்களின் பண்டை நிலையை அறிதற்கும் மலையாளம்போல் உதவுவது பிறிதொன்றுமில்லை. எ-கா : (1) கின்று என்னும் நிகழ்கால இடைநிலை கின்று என்னும் நிகழ்கால இடைநிலை, குந்து-வந்து என்று மலையாளத் திலும், (குந்நு)-குந்-உந்-ந் என்று தமிழிலும் திரியும். செய்கின்று-செய்குந்நு-செய்யுந்நு. (மலை.) எ-கா: செய்கின்றான்-செய்குத் தமிழ்) செய்குந்நான்-செய்யுந்நான்-செய்யுநன்-செய்நன்-(தமிழ்) `மகிழ்நன்', `வாழ்நன்' (வாணன்) முதலியன இங்ஙனம் திரிந்தவையே. (2) செய்யாதே என்னும் எதிர்மறை ஏவல்வினை செய்யாதே என்னும் எதிர்மறை ஏவல், மலையாளத்தில் செய்யருது என்னும் வடிவு கொண்டு நிற்கும். `செய்யருது' என்பது `செய்யரிது' என்பதன் திரிபு. `செய்யரிது' என்பது முறையே, செய்ய முடியாது, செய்யக்கூடாது என்னும் பொருளது, அருது (அரிது) என்பது மலையாளத்தில் தனிவினையாகவும் வரும். எ-கா : ஈ ஆள்க்கு வேறே பணி அருது=இவ் ஆட்கு வேறுவேலை கூடாது. `ஆர்க்கானும் கொடுக்கும் போழ் அருதென்னு விலக்கருது.' (பழமொழி) (3) யகரமெய்யீற்று இறந்தகால வினையெச்சம் தமிழ் வினைமுற்றுக்கள் முதற்காலத்தில் எச்ச வடிவில் வழங்கிப் பின்பு முற்றீறு புணர்ந்தனவாதலின், அவற்றைப் பகுக்கும்போதும் எச்சமும் ஈறுமாகவே பகுத்தல் வேண்டும். எ-கா: வந்து + ஆன் = வந்தான் உறங்கி + ஆன் = உறங்கியான் - உறங்கினான் பொலி. ஒ.நோ : யான்-நான், யமன்-நமன். `ஆய்', `போய்' முதலிய யகர மெய்யீற்று இறந்த கால வினை யெச்சங்கள் மலையாளத்தில் ஆயி, போயி என இகரவீற்று வடிவில் நிற்கும். ஆயி + ஆன் = ஆயியான் - ஆயினான் ஆயி - ஆய் + ஆன் = ஆயான் - ஆனான் இனி வடநாட்டு மொழியாகிய இந்தியிலும் பிற ஆரிய மொழிகளிலும், எழுவாயையும் பெயர்ப்பயனிலையையும் இணைக்கும் `இரு' என்னும் புணர்ப்புச்சொற்கும் Copula, மலையாளம் அடிகோலியது என்னலாம். எ-கா: மலையாளம் இந்தி ஆங்கிலம் இதுஎந்தாகுன்னு? யஃ கியா ஹை? What is this? இது ஒரு மரமாகுன்னு. யஃ பேட் ஹை. This is a tree. வடநாட்டு ஆரியமொழிகளின் திரவிட அடிப்படை ஆரியமொழிகளாகக் கூறப்படும் வடநாட்டு மொழிகளில், திரவிடச் சொற்கள் மட்டுமின்றித் திரவிட மொழியமைதியும் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. இதை இந்திவாயிலாற் காட்டுவல். (1) ஆயா, போலா என ஆவீறுகொண்டு இறந்தகாலம் காட்டும் இந்தி வினைமுற்றுக்கள் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தை யொத்தன. (2) ஆயியே, போலியே என `இயே' ஈறுகொள்ளும் இந்தி வேண்டு கோள் வினைகள், செய்யிய என்னும் வாய்பாட்டு வியங்கோள் வினை யொத்தன. (3) படே படே, சல்த்தே சல்த்தே என அடுக்கிவரும் இந்திச்சொல் லிரட்டைகள், பெரிய பெரிய, நடந்து நடந்து என வரும் அடுக்குத் தொடரை முற்றும் ஒத்தன. (4) வஃ கியா கர்த்தா ஹை? (mt‹ v‹d brŒ»wh‹?), ராமா பாத் காத்தா ஹை (இராமன் சோறு உண்கின்றான்) என அமையும் இந்திச் சொற்றொடர்கள் முற்றும் தமிழொழுங்கைப் பின்பற்றியன. ஆங்கிலத் தமிழமைதி யொப்புமை (1) தனிக்குறில் முன்னொற்றுயிர்வரின் இரட்டல். எ-கா: Thin+er=thinner, sit+ing=sitting. (2) நிகழ்கால வினையெச்சம் எழுவாயாதல். எ-கா: To err is human. எனக்குப் பாடத் தெரியும். (3) வினைக்காலங்களின் நால்வேறுபாடு. எ-கா : நிகழ்காலம் வருகிறான் - தனிப்பு (Indefinite) வந்து கொண்டிருக்கிறான் - தொடர்ச்சி (Continuous) வந்திருக்கிறான் - நிறைவு (Perfect) வந்து கொண்டிருந்திருக்கிறான்-நிறைவுத் தொடர்ச்சி (Perfect Continuous). கால்டுவெல் ஐயரின் சறுக்கல்கள் கால்டுவெல் ஐயர் தலைசிறந்த திரவிட மொழியாராய்ச்சி சொல் லாராய்ச்சி வல்லுனரேனும், தொல்காப்பியப் பயிற்சியும் சங்கநூற் கல்வியும் மொழியாராய்ச்சியும் அக்காலத்தன்மையாலும், எல்லாத் துறையிலும் ஆரியத் தலைமை எதிர்ப்பின்றியிருந்து வந்ததினாலும் தமிழின் தனித் தன்மையை யன்றித் தாய்மையையும் தலைமையையும் உணராது இலக்கண முள்ளிட்ட உயர்தரக் கலை நூல்கள் ஆரிய வழியினவென்றும், ஆன்மா பாவம் முதலிய பல கருத்துகளையுணர்த்தத் தமிழிற் சொல்லில்லை யென்றும் தமிழ்ப் பெயர் வேற்றுமை வகுப்பு சமற்கிருதத்தைப் பின்பற்றிய தென்றும் தமிழர் அல்லது திரவிடர் பொதுவாய்த் தாழ்ந்த நாகரிக நிலையினர் என்றும் கூறிப்போந்தார். இனி, திரவிட மொழிகளிற் செயப்பாட்டு வினையில்லையென்றதும், ஆரிய முறையை அவர் அளவையாகக் கொண்டதைக் காட்டும். தமிழின் பொது வியல்பு தமிழ் உலக முதற்றாய் மொழியாதலால், சீன மொழியின் அசை நிலைத் தன்மையையும், ஆரிய மொழிகளின் விகுதி நிலைத்தன்மையையும், சித்திய மொழிகளின் கொளுவு நிலைத் தன்மையையும், சேமிய மொழிகளின் உயிர்த் திரிவுத் தன்மையையும், ஆப்பிரிக்க மொழிகளின் பாலிசைவுத் தன்மையை யும், அமெரிக்க மொழிகளின் தொகுதி நிலைத் தன்மையையும் ஒருங்கே கொண்டுள்ளது. 2 சொற் பொருள் வரிசை சொற்கள், பொருட் டொகை பற்றி, 1. ஒரு பொருட்சொல் 2. பல பொருள் சொல் என இரு வகைப்படும். ஆயினும், ஒரு சொல்லின் முதற் பொருள் வழியாகப் பல்வேறு பொருள்கள் ஒவ்வொன்றாய்த் தோன்றுதற் கிடமிருத்த லால், ஒரு காலத்து ஒரு பொருட் சொல்லாயிருந்தனவும், பிற்காலத்துப் பல பொருட் சொற்களாகிவிடுகின்றன. ஒரு காலத்து ஒரு சொற்கு ஒரு பொருளே தோன்றுவது இயல்பாதலால், பலபொருட் சொற்களெல்லாம் முதற்கண் ஒரு பொருட் சொற்களாய் இருந்தனவே. சொற்களின் பொருள் வரிசை, அதாவது பொருள்கள் முன்னும் பின்னும் தோன்றிய முறை 1. tuyh‰W Kiw (Historical Sequence) 2., ஏரண முறை (Logical Sequence) என இருவகைப்படும். ஒரு சொல்லின் பொருள்களை, முதல் வழிசார்பு நூல்களில் அல்லது முன்னிடை பின்னூல் களில் அவை ஆளப்பட்டு வந்த வரன் முறைப்படியே ஒருங்குபடுத்துவது வரலாற்று முறையாம்; அஃதன்றி உத்திக்குப் பொருத்தமாக அவற்றை ஒழுங்குபடுத்துவது ஏரணமுறையாம். இந்தி போன்ற புதுமொழிகளிலும் ஆரியம் போன்ற முதுமொழிகளிலும் முன்னை அல்லது பண்டை இலக்கியம் அழியாதிருத்தலால் அதன்வாயிலாகச் சொற்பொருள்களின் வரலாற்று முறையை அறிதல் கூடும். ஆயின் பண்டை யிலக்கியம் முற்றும் இறந்துபட்ட தமிழ் போலுந் தொன் முதுமொழியில் அதனை அறியுமாறில்லை. ஆதலால், அத்தகைய மொழிச் சொற் பொருள்கட்கு ஏரண முறைதான் இயலும். ஒரு மொழியின் வளர்ச்சிக் காலத்துச் சொற்கட்கு ஒவ்வொன்றாய்த் தோன்றிய பொருட்கள், அவை தோன்றிய முறையே பிற்காலத்து உணர்த்தப்பெறா: அவ்வவ் இடத்திற்கேற்பவே உணர்த்தப்பெறும். ஒருவழங்கு மொழி என்றும் வளர்ந்து கொண்டேயிருப்பினும், அதன் பெருவாரிச் சொற்கள் ஒரு குறித்த காலத்திற்குள் அமைந்து விடுகின்றன. அதன்பின், தோன்றும் சொற்களும் பெரும்பாலும் புதுச் சொற்களாயிராமல் பழஞ்சொற்களினின்று அமையும் திரிசொற்களும் கூட்டு சொற்களுமாகவே யிருக்கின்றன, ஆதலால், முது பண்டயிலக்கியம் முற்றும் இறந்துபட்டதும். கருத்திற்கு மெட்டாக் காலந்தொட்டு வழங்கி வருவதுமான தமிழில், சொற்பொருள் வரிசை ஏரண முறைப்படி தான் அமைதல் இயலும். வரலாற்று முறை இயற்கையாகவும் ஏரண முறை செயற்கையாகவும் தோன்றினும் முன்னது உளநூன் முறைப்படி நிகழ்தலின் அவ் உளநூலைத் தழுவிய ஏரண முறையும் பெரும்பாலும் இயற்கை யொட்டியே இருக்குமென அறிக. இவ்வுண்மைகளை அறியாதார் தமிழிலும் சொற்பொருள் வரிசையை ஆங்கிலத்திற்போல் வரலாற்று முறையில் அமைக்க முயல்வர். இதன் புலிமையை எடுத்துக்காட்டாற் காட்டுதும். `பள்ளி' என்னும் சொற்குச் சென்னைப் பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ள பொருள்வரிசை வருமாறு: 1. இடம் 10. தூக்கம் 2. சிற்றூர் 11. விலங்கு துயிலிடம் 3. இடைச்சேரி 12. பள்ளிக்கூடம் 4. நகரம் 13. அறை 5. முனிவராச்சிரமம் 14. அறச்சாலை 6. சைன பௌத்தக் கோயில் 15. சாலை 7. அரண்மனை 16. வன்னியன் 8. (தச்சன்) வேலைக்களம் 17. பள்ளத்தி 9. மக்கட் படுக்கை 18. குறும்பர் (சிற்றரசர்) பின்னிணைப்பில் (அனுபந்தத்தில்) குறிக்கப்பட்டுள்ள இன்னொரு பொருள் (19) `கிறித்தவக் கோயில்', என்பது, இவற்றுள் முதலும் இறுதியும் (1, 19) வரலாற்று முறை தழுவியவை: ஏனைய ஒருமறையுந் தழுவியவல்ல. இம்முறைகேடு சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் சிறப்பியல்பாகும். இதுபோலுள்ள தமிழ் நூல்களுள் பழைமையான தொல்காப்பியத்தில், பள்ளி என்னும் சொல் இடம் என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. ``சொல்லிய பள்ளி நிலையின வாயினும்'' (தொல். எழுத்ததிகாரம், 100) என்பது காண்க. இதனால், இடம் என்னும் பொருள் முதலிலும், கிறித்தவம் தமிழ்நாட்டிற் புகுத்தப் பெற்றபின் தோன்றிய கிறித்துவக் கோயில், என்னும் பொருள் இறுதியிலும், வைக்கப்பட்டன. மேல் குறிக்கப்பட்ட பத்தொன்பான் பொருள்களொடு, பள்ளம், வீடு, கோயில், கல்லறை (சமாதி) என்பவற்றையுஞ் சேர்க்கலாம். கோயில் என்றது ஈண்டு எல்லா மதங்கட்கும் பொதுவான இறையகத்தை. கழா அக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் குழாஅத்துப் பேதைபுகல், (840) என்னும் குறட்கு ``சான்றோரவையின்கட் பேதையாயினான் புகுதல், தூயவல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளிக் கண்ணே வைத்தாற் போலும்'', என உறைத்தார் பரிமேலழகர். ``கழுவாக்காலென்பது இடக்கரடக்கு. அதனால் அவ்வமளியும்'' இழிக்கப்படுமாறுபோல இவனால் அவ்வவையும் இழிக்கப்படுமென்பதாம், என்பது அவர் சிறப்புக்குறிப்பு. இவ்வுரையில் பள்ளியென்பது படுக்கை அல்லது படுக்கைக் கட்டில் என்று கொள்ளப்பட்டது. சான்றோரைத் தேவருக் கொப்பாகக் கூறுவது இலக்கிய மரபாதலால், இங்குப் பள்ளியென்பது தெய்வத்தன்மையுள்ள இடத்தைக் குறிப்பதென்று கொள்வதல்லது இன்பந் தரும் இடத்தைக்குறிப்ப தென்று கொள்வது பொருந்தாது. ஆகவே, பள்ளி என்பதற்குக் கோயில் என்பதே பொருளாம். சான்றோர் கூட்டத்துள் ஓர் அறிவிலி புகுதல், ஒருவன் கழுவாத காலொடு கோயிற்குள் புகுவதொக்கும். என்பதே வள்ளுவர் கருத்தாதல் வேண்டும். குளித்து விட்டு அல்லது கை கால் கழுவிவிட்டுக் கோயிற்குள் புகுதல், இன்றும் பல்வேறு மதத்தார்க்கும் வழக்கமாயிருத்தல் காண்க, தேவரைப் புலவரென்று திருவள்ளுவர் குறிப்பிடுவதையும். ``அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்'' (நாலடி. 151) என்று கூறுவதையும் நோக்குக. ஆகவே, ஏற்கெனவே கோயிலைப் பொதுப்படக் குறித்த பள்ளியென் னும் பெயரே, பிற்காலத்துத் தமிழகத்துப் புதுவதாக ஏற்பட்ட சமண பவுத்த கிறித்தவ முகமதியக் கோயில்களையும் குறிக்க ஆளப்பட்டிருத்தல் வேண்டும். எதுபோலெனின், ஆரிய மறையையே முதன்முதற் குறித்த வேதம் என்னும் சொல், பிற்காலத்துக் கிறித்தவமறையையே சிறப்பாகக் குறித்ததுபோலென்க. வித்துக்கள் சேற்றிற் பதிந்து கிடத்தலைப் `பள்ளிக்கிருத்தல்' என்று நாஞ்சில் நாட்டார் சொல்வதால், பள்ளம் என்னும் பொருளும்; அரசியல் தீர்வை செலுத்தாதவன் வீட்டில் ஒரு சிறுகம்பு நட்டு அவன் அதைச் செலுத்தும் வரை மறியல் செய்தலைப் `பள்ளிகம்பு வைத்தல்' என அந்நாட்டாரே வழங்குவதால் `வீடு என்னும் பொருளும்; இறந்த அரசன் உடலை எரித்த அல்லது புதைத்த விடத்துக் கோயிற் கட்டுவதைப் பள்ளிப் படை என்று இலக்கியமுங் கல்வெட்டும் கூறுவதால், கல்லரை என்னும் பொருளும்; பள்ளி என்னுஞ் சொற்குக் கொள்ளப் பெற்றன. பள்ளி என்னும் சொல்லின் வேர் `பள் என்பதும், வேர்ப் பொருள் `பள்ளம்' என்பதும் ஆகும். பள்ளம் அல்லது தாழ்வான இடம் என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்டு, பள்ளமான இடத்தில் வேலை செய்யுங்குலத்தான், (கீழே) படுக்கை, (படுத்துத் தங்கும்) மனை, (தேவமனை யாகிய) = கோயில், (முதற் காலத்துக்கோவிலில் நடத்த பெற்ற, கல்விச் சாலை, (பலமனைகள் சேர்ந்த) ஊர், (மனையும் ஊருமாகிய) இடம் என்னும் எழு பருப்பொருள்களும் இவற்றுட் பலவற்றை நிலைக்களமாகக் கொண்ட இருபத்திரு நுண்பொருள்களும், பள்ளி என்னுஞ் சொற்குத் தோன்றியுள்ளன. இந்நுண் பொருட் பாகுபாட்டுப் பட்டி வருமாறு: 1. பள்ளம் அல்லது தாழ்வு: தாழ்வான வீடுகள் அமைந்த சிற்றூர் அல்லது முல்லைநிலத்தூர், முல்லை நிலத்தூர் போன்ற இடைச் சேரி, ஆழிடம். 2. பள்ளமான வயலில் வேலை செய்யுங்குலத்தார்: பள்ளத்தி, வன்னியன், வன்னியகுலச் சிற்றரசரான குறும்பர். 3. படுக்கை: மக்கட் படுக்கை, விலங்கு துயிலிடம், தூக்கம். 4. மனை (வீடு) வீடு, அறை, அரண்மனை, வேலைக்களம், அறச் சாலை, முனிவர் தவநிலையம், சாலை. 5. கோயில் கோயில் (பொது), சைன பவுத்தக் கோயில், கிறித்தவக் கோயில், முகமதியர் கோயில் (பள்ளி வாசல்) கல்லறை. கோயில் என்பது அரசன் மனை போன்ற தேவமனை என்றுமாம். 6. கல்விச் சாலை 7. ஊர் நகரம், பள்ளி என்பது ஒரு கோயில் அல்லது அரண்மனை யிருப்பது பற்றியும் ஒரு நகரைக் குறிக்கும். 8. இடம் இச் சொற் பொருள் வரிசை ஏரணமுறை தழுவியதாகும். இதில் இறுதியில் வந்துள்ளபொருள், சென்னைப் பல்கலைக் கழக அகராதியில் முதலிடம் பெற்றிருத்தல் காண்க, இங்ஙனம் தலை கீழாக மாறியது, மொழி வளர்ச்சிக் காலத்து இலக்கியம் முற்றும், மறைந்தபின் இடைக்காலத்து இலக்கியத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு, வரலாற்றுமுறை தழுவமுயன்றதன் பயனே. இனி, இப் பள்ளி யென்னுஞ் சொற்பொருள் வரிசையை வழுப்பட அமைத்ததோடமையாது, இச் சொல்லை வடசொல்லென்றுங் கூற துணிந்துளது சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியம். இச்சொல் தென்சொல் என்பதை, பள்ளம் அல்லது தாழ்வு என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்டு, இதனொடு தொடர்புற்ற ஏனைச் சொற்களைக் கண்டு தெளிக. அவையாவன: பள் - பள்ளம் - பள்ளன் = பள்ளமான வயலில் வேலை செய்பவன் பள் - பள்கு - பள்குதல் = பதுங்குதல், பள் - பள்ளை = குள்ளமான ஆட்டுவகை பள்ளையன் = குள்ளன் பள்ளை - பள்ளையம் = உண்கலம். பள்ளையம் போடுதல் = தெய்வத்திற்குப் படைத்தல் பள்கு - பளகு = குற்றம் (தாழ்வு) பள் - பண் = நீர்நிலை பண் - பண்ணை = குழி, நெற்குத்துமாறு நிலத்திற் பதித்த நடுப்பள்ளக்கல், நீர் நிலை, மரத்திற்கு அடியில் நீர் பாய்ச்ச அமைக்கும் பாத்தி, மரக்கலம், விலங்கு துயிலிடம். பண் - பணி, பணிதல் = கீழ்ப்படிதல், பணி = தொண்டு, வேலை, தொழில். பணி - பாணி, பாணித்தல் = காலந்தாழ்த்தல். பண் - படு = 1. (பெயர்) குளம், மடு. 2. (பெயரெச்சம்) இழிவான. படு - படுகர் = பள்ளம், வயல் மருதநிலம், நீர்நிலை, படு - பாடு - பாடி = தாழ்வான வீடுகள் சேர்ந்த முல்லை நிலத்தார் அல்லது இடைச்சேரி. பாடு - பாடை = கால்கழிகட்டில். படு - படை -படைத்தல் = உண்ணுமாறு கீழிடுதல் படுத்தல் = தாழக்கிடந்து தூங்குதல், படு - படை = படுக்கை, தூக்கம் படுதல் = விழுதல், சாதல், படுத்தல் = கொல்லுதல் படு - படை = கொல்லும் ஆயுதம் அல்லது சேனை. படு - படி, படிதல் = அடியில் தங்குதல், தங்குதல், கீழ்ப்படிதல் விழுந்து வணங்குதல், அமுங்குதல், தணிதல், குளித்தல், தூங்குதல். இதுகாறுங் கூறியவற்றால், தமிழில் சொற்பொருள் வரிசை ஏரணமுறைப் படிதான் இயலும் என்பதையும், பள்ளி என்பது பள்ளம் அல்லது தாழ்வு என்னுங் கருத்தை அடிப்படையாகக் கொண்ட தூய தென் சொல் என்பதையும், தெற்றெனத் தெரிந்து கொள்க. வட மொழியில் (சமற்கிருதத்தில்), ளகர மின்மையால், பள்ளி என்னுஞ் சொல் பல்லி என்றும் பல்லீ என்றும் வழங்கும். இவற்றுள் முன்னதற்கு, சிற்றூர், காடுவாழ் மரபினர் குடியிருப்பு, குடிசை, வீடு என்னும் பொருள்களும்; பின்னதற்கு சிற்றூர், குடிசை, வீடு, நகரம், ஒருகூடு முகத்தலளவு, சிறு வீட்டுப்பல்லி என்னும் பொருள்களும்; மானியர் உவில்லியம் சமற்கிருத - ஆங்கில அகராதியில் தரப்பட்டுள்ளன. இவ் இரு சொல் வடிவுகட்கும் வேராகக் காட்டப்பட்டுள்ள சொல் pall (பல்ல்) என்பது, இவ்வேர்ப் பொருளாகக் குறிக்கப்பட்டவை `போதல்' (to go), `இயங்குதல்' (to move) என்பன. இவ் வேரைக்குறிக்குமிடத்து; ஒரு கால் பின்வரும் சொற்கட்கு மூலங்காட்டும் பொருட்டுப்`பல்' என்னும் வேரையொட்டிப் படைக்கப்பட்டது! (``Invented after pal , prob. to explain the following words'') என்று மானியர் வில்லியம் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது, பின்வருஞ் சொற்கள், என்று குறிக்கப் பெற்றவை, பல்ல, பல்லக்க, பல்லி, பல்லிக்கா, பல்லீ என்பன, பல் என்னும் வேர்க்குக் குறிக்கப்பட்ட பொருளும், போதல் (to go) என்பதே. பல்ல = பெருங்களஞ்சியம், நெற்கூடு பல்லக்க = தக்காணத்தில் ஒரு மாவட்டப் பெயரின் பிற்பகுதி. பல்லிக்கா = சிற்றூர், சிறு வீட்டுப்பல்லி. பள்ளி என்னும் சொல், பள் என்னும் வேரினின்று திரிந்து பல பொருள்களைக் கொண்டிருப்பினும், சிறப்பாகப் படுக்கையை யுணர்த்து மென்பது, பள்ளி கொள்ளுதல், பள்ளி கொண்டான், பள்ளி கொண்ட பெருமாள், பள்ளி யெழுச்சி, பள்ளி மாடம், பள்ளி மண்டபம், பள்ளியந்துலா, பள்ளியம்பலம் முதலிய சொற்களால் அறியப்படும், படுக்கை என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டே பள்ளி என்னுஞ் சொல் முறையே, வீடு, கோயில், பள்ளிக்கூடம் முதலிய பொருள்களை உணர்த்தும். இங்ஙனமிருப்ப வும், இச் சொல்லை வடமொழியில் அதன் எழுத்து முறைக்கேற்பப் பல்லி என்றும் பல்லி என்றுத் திரித்துக்கொண்டு போதல் அல்லது இயங்குதல் என்னும் பொருந்தாப் பொருளை அதன் வேர்ப் பொருளாக பொருத்திக் காட்டுவது மட்டுமின்றி, பல்லி என்னும் ஊருயிரிப் பெயரையும் பள்ளி என்னுஞ் சொல்லொடு மயக்கி, அதனையும் வட சொல்லென ஏமாற்றுவது. அறிவாராய்ச்சி மிக்க இவ் இருபதாம் நூற்றாண்டிற்கு எட்டுனையும் ஏற்குமோ? கண்டு தெளிக. கடுகளவேனுங் கருத்துடையார். திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கம் மணி விழா மலர் 1958 3 வண்ணனை மொழி நூல் இன்று தனிக் கலையாக வழங்கியும் வளர்ந்தும் வரும் மொழிநூல் 18ஆம் நூற்றாண்டில் மேனாடுகளில் முளைத்தெழுந்த தேனும், அதற்கு வித்து தமிழ் நாட்டில் கி. மு. 7ஆம் நூற்றாண்டிற்கு முன்பே இடப்பட்ட தென்பது, ``எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே'' (தொல். 640) ``மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா.'' (தொல். 877) ``இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.'' (தொல். 880) ``வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.'' (தொல். 884) என்னும் நூற்பாக்களால் உணரலாகும். மேனாடுகளில் கடந்த முந்நூற்றாண்டுகளாக வளர்க்கப்பெற்றுவரும் மொழிநூல், தொடக்கத்தில், ஆங்கிலத்தில், (Science of speech, Science of Language, Linguistic science, Linguistics, Glottology, Philology) எனப் பல பெயர்களைப் பெற்றிருந்தது. இவற்றுள் (Linguistics, Philology என்னும் இரண்டே இறுதியில் நிலைபெற்றன. மொழிநூல், ஒரே சமயத்தில், வரலாறு தழுவியதாகவும் ஒப்புநோக்கிய தாகவும் பலகூறுகளாகப் பகுக்கப்படாததாகவும் உள்ளது. மாக்கசுமுல்லர் (Max Muller) விற்றினி (Whitney) செசுப் பெர்சென் (Jespersen) முதலிய மொழி நூற்பேரறிஞரெல்லாம் மேற்கூறிய மொழிநூற் பேரறிஞரெல்லாம் மேற்கூறிய முறையிலேயே மொழி நூலை வளர்த்து வந்தனர். ஆயின், அண்மையில், சில மேலைமொழி நூலறிஞர், சிறப்பாக அமெரிக்கர், மொழிநூலை, 1. வண்ணனை மொழிநூல் (Descriptive Linguistics) 2. வரலாற்று மொழிநூல் (Historical Linguistics) 3. ஒப்பியல் மொழிநூல் (Comparative Linguistics) என முக் கூறாகப் பகுத்து, அவற்றுள் வண்ணனை மொழிநூலையே சிறப்பாக வளர்த்து வருகின்றனர். இதன் பல குறைகள் உண்மைக்கு மாறாகவும் தமிழுக்குக் கேடாகவும் உள்ளன. அவையாவன: 1. வரலாறு தழுவாதது வரலாறு எக்கலைக்கும் அடிப்படையாய் மட்டுமன்றி முதுகந் தண்டாயு முள்ளதென்பது, உலகறிந்த உண்மை. கலைகளுள்ளும், மொழிநூல் வரலாற்றியலை இன்றியமையாது தழுவியதென்பது சொல்லாமலே பெறப்படும். ஆயினும், வரலாற்றுத் தொடர்பின்றி உண்மை தழுவாத உயிரற்ற நிலையில் வண்ணனை மொழிநூல் வளர்க்கப்பட்டு வருகின்றது. இது, அந்நூலாரின் முயற்சியின்மை, கலையுணர்ச்சியின்மை, நடுநிலையின்மை ஆகியவற்றுள் ஒன்றையே காட்டும். 2. ஆரிய அடிப்படை கொண்டது முந்தியல் செம்மொழியாகிய தமிழை ஆராயாமையால், மொழிநூல் திறவுகோல் தமிழிலேயே பொதிந்து கிடப்பதை அறியாது, திரிபில் திரிபும் செயற்கையில் செயற்கையும் ஆரியத்தின் முடியுமாகிய சமற்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு, மொழிநூற்செய்திகளையும் மொழிகளையும் மொழியுறுப்புக்களையும் முன் பின்னாகவும் கீழ் மேலாகவும் முறை பிறழக் கூறிவருவது வண்ணனை மொழி நூல். தமிழ் ஆரியத்தின் அடி என்பதை இன்னும் மேலையர் உணர்ந்திலர். 3. எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகளே என்பது தமிழ்போலும் இயன்மொழியை ஆராயாது ஆரியமாகிய திரிமொழி களையே ஆய்ந்ததினால், எல்லாமொழிச் சொற்களும் இடுகுறிகளே என்னும் தவறான முடிவிற்கு வந்துள்ளனர் இற்றை அமெரிக்க மொழி நூலாசிரியர். தமிழில் இடுகுறிச் சொல்லே இல்லையென்பதற்கு. ``எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.'' என்னும் தொல்காப்பிய நூற்பா வொன்றே போதிய சான்றாம். ``மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா.'' என்பது, சொல்வேர்ப் பொருள் பார்த்தவுடன் அல்லது மிகத் தெளிவாகத் தோன்றாது (சில சொற்களில்) எனப் பொருள்படுமேயன்றி, திரு. வையாபுரிப்பிள்ளை கூற்றுப்போல் தோன்றவே தோன்றாது எனப் பொருள்படுவதன்று. இயற்சொற்களில் தெளிவாகத் தோன்றும் வேர்ப்பொருள் திரிசொற்களில் மறைந்துபோம் என்னும் உண்மையைக் கீழ்க் குறித்த சொற்களினின்று அறிக இயற்சொல் திரிசொல் இடைகழி ரேழி வெண்ணெய் வென்ன (தெலுங்கு) Episcope Biscop மொழி தோன்றிய வகையை விளக்கி நிற்பது உலக முழுமையினும் தமிழ் ஒன்றே. 4. சொற்கள் தம்மளவிற் பொருளுணர்த்தாது அவற்றின் முறைப்பாட்டினாலேயே பொருளுணர்த்துவன என்பது, இது மொழி தோன்றிய முறையை அறியாமையால் நேர்ந்த தவறாகும். இக்காலத்தும், குழைந்தைகளும் நோயாளியரும் அயன்மொழித் துவக்க மாணவரும் சில வேளைகளில் ஒரு சொல்லாலேயே தம் கருத்தைத் தெரிவித்தல் காண்க. 5. ஆயிரம் ஆண்டிற்கொரு முறை நூற்றிற்குப்பத்தொன்பது விழுக்காடு எல்லாச் சொற்களும் மாறிவிடுகின்றன என்பது. எல்லா மொழிகளிலும், அடிப்படைச் சொற்கள் உட்பட, ஆயிரம் ஆண்டிற்கொரு முறை நூற்றுக்கு 19 மேனி எல்லாச் சொற்களும் வழக்கற்றுப் புதுச்சொற்கள் தோன்றுகின்றன என்று அமெரிக்க மொழி நூலார் கொண்டு, இவ்வடிப்படையில் சொன்மாற்றக் காலக்கணிப்பு (Glotto chrorology) என ஒரு கணிப்பு முறையும் வகுத்திருக்கின்றனர். அது வருமாறு:- ``ஒரு மொழி இருகிளைகளாகப் பிரிந்துவிடின், ஆயிரம் ஆண்டிற்குப் பின் ஒவ்வொன்றும் மூலச் சொற்றொகுதியில் நூற்றிற்குப் பத்தொன்பது இழந்துவிட்டு, எண்பத்தொன்றேகொண்டு நிற்கும். மூலச் சொற்கள் 200 ஆயின், ஒவ்வொன்றிலும் 162 எஞ்சிநிற்கும். ஆயின், ஒரே சொற்றொகுதியை இரண்டும் இழக்கும் என்று கருதக் காரணமில்லை, ஒன்று இன்னொன்று கொண்டு நிற்பதிலும் இழந்ததிலும் தனித்தனி நூற்றுக்கு 81 தாங்கி நிற்கும் என்பது பெரும்பால் நிகழக் கூடியது. இங்ஙனமாயின், ஒவ்வொன்றும் மூலப்பொதுச் சொற்றொகுதியில் 132 அல்லது நூற்றுக்கு 66 கொண்டு நிற்கும். இக்கணிப்பின் படி, இருமொழிகளில், அடிப்படைச் சொற்றொகுதியில் நூற்றுக்கு 66 இனச் சொல்லாயிருந்தால் அவை பிரிந்துபோய் ஆயிரம் ஆண்டாயிற்றென்றும், 44 இனச் சொல்லாயிருப்பின், பெரும்பாலும் ஈராயிரம் ஆண்டாயிருக்கு மென்றும், அறிந்து கொள்ளலாம்.'' இக்கணிப்பின்படி ஒவ்வொரு மொழியும் ஐயாயிரம் ஆண்டிற்குள் முற்றும் மாறிவிட வேண்டும். கி. மு. 7ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொல் காப்பியம் இற்றைக்கு 2500 ஆண்டுகட்கு முந்தியது. அதிலுள்ள உலக வழக்குச் சொற்கள் அத்தனையும் இன்றும் தமிழ் நாட்டில் வழங்கி வருவதோடு, ``அ இ உஅம் மூன்றுஞ் சுட்டு'' (தொல் - 31) ``நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி'' (தொல் - 43) ``பன்னி ருயிரும் மொழிமுத லாகும்.'' (தொல் - 59) என்பன போன்ற எத்துணையோ நூற்பாக்களும், இற்றை முறையில் அமைந்து எல்லாரும் எளிதுணரக்கிடக்கின்றன. இதனால், மேற்காட்டிய அமெரிக்கச் சொன்மாற்றக் காலக் கணிப்பு முற்றும் புரைபட்டதென்க. 6. எல்லா மொழிகளும் திருந்தியவையே என்பது ``இயன்மொழியென்றும் திரிமொழியென்றும், திருந்தியமொழியென்றும் திருந்தாமொழியென்றும், மொழிகட்குள் பாகுபாடில்லை. எல்லாம் திருந்தியவையே, சுருட்டு என்பது தெலுங்கில் சுட்டு என்றிருப்பின், அதற்கு அது சரியே. பொன் என்பது கன்னடத்தில் ஹொன்னு என்றிருப்பின், அதற்கு அது திருந்தியதே.'' இவ்வாறு கொள்வது வண்ணனை மொழி நூல். ``உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணிக்குப் பொல்லாப்பு.'' தெலுங்கு கன்னடம் முதலியவை தமிழின் திரிபு என்றால், தெலுங்கர்க்கும் கன்னடருக்கும் வருத்தம் பிறக்கும். ஆதலால், கோமுட்டிச் செட்டிபோல் இருசாரார்க்கும் பொதுவாகக் கூறுவது சிறந்தமுறை என்பது, வண்ணனை மொழி நூலார் கருத்து. இம்முறையொட்டிச் சில தமிழ்ப் பேராசியரும், திரவிடம் என்பது, தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய பல மொழிகளின் தொகுதிப் பெயர். அவையெல்லாம் ஓரினமொழிகள் என்று கொள்வதல்லது. தமிழ் பிற திரவிட மொழிகளின் தாயெனக் கூறுவது பொருந்தாது,'' எனக் கட்டுரைப்பர். தனிப்பட்டவர் செய்திகளில் ஒருவர், ஒருவர் குற்றங்குறைகளை மறைக்கலாமேயன்றி, ஒரு நாட்டு மக்களெல்லார்க்கும் பொதுவான மொழித் துறையிலும் கலைத்துறையிலும் குற்றங்குறைகளை மறைப்பது பண்பாடன்று. 7. இலக்கணத்தைப் பழிப்பது எல்லா முதுமொழிகளிலும் இலக்கண நூல்கள் அழகிய முறையில் அறிஞரால் இயற்றப் பெற்றுள்ளன. அங்ஙனமிருப்பினும், அவற்றின் அருமையறியாது, அவற்றை வரைதுறையின்றிப் பழித்து, மாணவரை மயக்குவனவும் பொருட்சிறப்பற்றனவும் ஓரீறு கொண்டனவும் ஒன்றை யொன்று பற்றுவனவுமான பல குறியீடுகளைப் புதிதாய்ப் படைத்து அவற்றைச் செவ்வையாய் விளக்கவும் இயலாது இடர்ப்படுவது, வண்ணனை மொழிநூலாசிரியர் வழக்கமாக இருந்து வருகின்றது. இது மிகப்பரந்த செய்தியாதலின், இதை விரிக்காது இம்மட்டில் நிறுத்துகின்றேன். 8. ஒலிக்குறிகளை (Phonetic Symbols) அளவைப் படுத்தாதது வண்ணனைமொழி நூலாரால் ஒப்புக்கொள்ளப்பெறும் பல எழுத் தொலி நூல்கள், வெவ்வேறு குறிகளைக் கையாண்டுள்ளன. அவற்றை இன்னும் ஒரு நெறிப்படுத்தியிலர். ஒருவர் எல்லா மொழிகளையும் தாய்மொழியாகவுடையார் போன்றே பேசவியலும் என்பது, வண்ணனை மொழி நூற்கொள்கையர் தருக்கு. ஆயின், இதுகாறும் ஒருவரும் அதனை மெய்பித்துக் காட்டியிலர். 9. கிளை வழக்கைப் பெருக்குவது இடவழக்கும் குலவழக்கும் பற்றி ஒவ்வொரு பெருமொழியிலும் சில கிளைவழக்குகள் (Dialects) ஏற்படுவது இயல்பே. ஆயின், ஞாலவியற் கிளைவழக்கு (Geographical Dialect) என்றும், ஊர்க்கிளை வழக்கு (Dialect of a village town or city) என்றும், கூட்டரவியற் கிளைவழக்கு, (Social Dialect) என்றும், குடும்பக் கிளை வழக்கு (Familly Dialect) என்றும், தனிப்பட்டவர் கிளைவழக்கு (Individual Dialect) என்றும், வண்ணனைமொழி நூலார் வரம்பின்றி வகுத்துக்காட்டுவது வியப்பினும் வியப்பே. 10. பேசுவதே மொழி என்பது பேச்சு வழக்கிலுள்ளதே உண்மையான மொழியென்றும், எழுத்து வழக்கிலுள்ளதெல்லாம் ஏட்டு மொழியேயென்றும், திருந்திய வழக்கென்றும் கொச்சை வழக்கென்றும் வேறுபாடில்லையென்றும், கொச்சை வழக்கு எவ்வளவு கேடாய்த் திரிந்திருப்பினும் அதெல்லாங் கொள்ளத் தக்கதே யென்றும், வண்ணனை மொழி நூலார் ஏனைத்திரிபுடை மொழிகட்குக் கூறுவது போன்றே இயன்மொழியும் இலக்கணச் செம்மொழியுமாகிய தமிழிற்கும் கூறுகின்றனர். பிற மொழிகட்கில்லாத செம்மையென்னும் வரம்பு தமிழுக்குண்மை யையும், இடைக்காலத்தில் தமிழ் ஆரியத்தால் அழிப்புண்டதையும், இக் காலத்தும் தமிழ் வளர்ச்சி பகைவரால் தடுப்புண்டு வருவதையும், அவர் அறியார். தமிழில் ஒருவன் எங்ஙனம் பிழைபடப் பேசினும், மேடையேறிப் பேசுங்காலும் ஏடெடுத்தெழுதும் போதும் இலக்கண நடையைக் கையாள வேண்டுமென்பது தொன்று தொட்டுவரும் மரபு. ``எப்படி எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே'' தமிழ்நாட்டில் மிகக் கொச்சையாய்ப் பேசப்படும் மாவட்டம் வடார்க்காடு. அங்கும் அங்கத்து நடையில் மேடையேறிப் பேசுவாரும் நூலெழுதுவாரும் ஒருவருமிலர். இத்தகைய வரம்புண்மையாலேயே தமிழ் இன்றுவரை இருந்து வருகின்றது. இடைக்காலத்தில், தமிழ் சிதைக்கப்பட்டமையாலும்; தமிழ்க்காவலரான புலவர் பிழைப்பற்றுப் போனமையாலும், நூற்றுக்கணக்கான அருந்தமிழ்ச் சொற்கள் மறைந்து வேற்று மொழிச் சொற்கள் வேண்டாது புகுந்து விட்டன. இதனால், முகில், எழிலி, மஞ்சு, கார், மால், வான் எனப் பலசொற்கள் இருப்பவும், மேகம் என்னும் வடசொல்லே வழங்கவும், முகில் என்னும் தன் சொற்கு மேகம் என்னும் அயற் சொல்லாற் பொருள் கூறவும் நேர்ந்து விட்டது. இது தமிழர் விரும்பி மேற்கொண்ட நிலைமையன்று. ஆண்கள் பெண்கள் என்னும் வழங்கு தமிழ்ச்சொற்கட்குப் பதிலாகப் புருஷர் திரீகள் என்னும் வழங்கா வடசொற்களைப் புகைவண்டி நிலையங்களிற் புகுத்தியிருப்பதும், வானொலி என்பதை ஆகாசவாணி என்று மாற்றியிருப்பதும், தமிழைக் கெடுத்தற்கும் அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்கும் சிறந்த எடுத்துக் காட்டுக்களாம். தமிழர் தக்க வழிகாட்டியின்றித் தாய்மொழியுணர்ச்சியற்றுப்போய், ஏற்கனவே காற்பங்கு வடசொற்களைக் கலந்ததொடு இன்று அரைப்பங்கு ஆங்கிலச் சொற்களையும் கலந்து, இடையிடை பாரசீகம் அரபி முதலிய பிற மொழிச் சொற்களையும் பெய்து, கலவை நடையாக வழங்கும் கசட்டு மொழி. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பண்படுத்திச்சீரியோர் வளர்த்த செந்தமி ழாகுமோ! வேலையில்லாத் திண்டாட்டம் மிக்க இக்காலத்தில், இளைஞர் சிலர் தம் தகுதியைப் பெருக்கி வருவாயை யுயர்த்த வையாபுரிகளை வழிபட்டு வடஅமெரிக்கா சென்று ஈராண்டிருந்து மீண்டு, ஆராய்ச்சியென்னும் பெயரால் அருந்தமிழைக் குலைத்து வருவது எத்துணை இரங்கத் தக்க செய்தி! அவர்கள் என்னும் சொல்லின் கொச்சை வடிவுகளான அவக, அவுக, அவிக, அவிய, அவியல் அவங்க, அவுங்க, அவிங்க, அவா என்பவற்றை யெல்லாம் அளவையாகக் கொண்டு ஆராய்வதினும், நகராண்மைக் குப்பையைக் கிண்டிக் கிளைப்பது நன்மைபயக்குமே! தமிழைத் தமிழ்நாட்டில் தக்கார் வாய்க்கல்லாது அமெரிக்கா சென்று ஆய்வதற்குத் தமிழொலிகளைத் தவறாக வையாபுரிகள் வாய்க் கேட்டுப் பதிவு செய்த ஒலிப்பெட்டிகளன்றி வேறு அங்கு என்னுள்ளது? உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆராயாது சில ஒலிக்குறிகளை மட்டும் அமெரிக்காவிற் கற்றுவந்ததினால் என்ன பயன்? அக்குறிகளை இங்கிருந்தே கற்கலாமே! தமிழர் பேசுவதெல்லாம் தமிழெனின், கூல், காலேஜ், கிளா. டிவிஷன், பீரியடு, ஹெட்மாட்டர், சார், (Sir) புக், நோட்புக், பேப்பர், பென், பென்சில், ரப்பர், பேக்கு, (bag) கார்டியன் லீவு, லேட் (Late), டிராயிங், சயன்சு முதலிய செயல்களெல்லாம் தமிழாதல் வேண்டுமே! அங்ஙனமாயின், தமிழ் ஆங்கிலத்தின் கிளைமொழியாவன்றோ மாறிவிடும்! அங்ஙனம் மாறாமை அனைவரும் அறிவர். ஆதலால், இடைக்காலத்திருண் நிலையில் ஏற்பட்ட கேட்டையும் அதன் வழிவந்த தீங்குகளையும் அறவே நீக்கி, தமிழைப் பண்டுபோல் தூய்மைப் படுத்துவதே, அறிவாராய்ச்சியும் உரிமையுணர்ச்சியும் மிக்க இற்றைத் தமிழர்க் கேற்றதாம். இனி, மலைவாணரான திரவிடரெல்லாம் பழங்குடி மக்களென்றும், அவர்கள் பேசுவன முந்திய மொழிகளென்றும், தமிழ் வல்லினம் வடமொழி ஐவருக்கமுதலொலிகளை யொத்ததென்றும், தமிழ் அரிவரி வடமொழி நெடுங்கணக்கைப் பின்பற்றியதென்றும், சில தவறான கருத்துகள் மேலை மொழி நூலறிஞரிடைத் தொன்றுதொட்டு இருந்துவருகின்றன. இவற்றையெல்லாம் மறுப்பின் மற்றொன்று விரித்தலாகும். ஆயினும், குறிஞ்சி நிலத்திலுள்ள மாந்தர் தமிழர் நாகரிக வளர்ச்சியின் முதல் நிலையை தாங்கி நின்ற காலம் முழுகிப்போன குமரிக்கண்டத்திலேயே கடந்து விட்டதென்றும், இற்றை நாவலந்தேய மலைவாணரெல்லாம் மலையடிவாரத்தில் மாடுமேய்த்தும் உழவுத்தொழில் செய்தும் வந்து அக்காலத்து அடிக்கடி நிகழ்ந்து வந்த போருக்கும் கொள்ளைக்கும் தப்புமாறு மலைமேற்சென்று வாழ்ந்தவர் வழியினரென்றும்; தமிழ் வல்லின வொலிகள் வடமொழி ஐவருக்க முதலொலிகளினும் மெல்லியவென்றும்; தமிழ் நெடுங் கணக்கே வடமொழி நெடுங்கணக்கிற்கு மூலமென்றும்; ஈண்டைக்கறிந்து கொள்க. இதுகாறுங் கூறியவற்றால், வரலாற்றைச் சிறிதும் நோக்காது, வட மொழியைத் தலைமையாகவும் திரவிடமொழிகளையெல்லாம் ஒன்றோ டொன்று சமமாகவும் கொண்டு, தமிழுக்குக்கேடு விளையுமாறு கொச்சைச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் அளவைப்படுத்துவதே வண்ணனை மொழி நூலின் இயல்பென்றும், இது தமிழைக் காட்டிக் கொடுத்துத் தந்நலம் பெருக்கும் வையாபுரிகட்குத் தலையாய வாய்ப்பென்றும், கண்டுகொள்க. 4 பொருட் பாகுபாடு பொருள்களைச் சினை, குணம், தொழில் முதலியனபற்றிப் பல வகையாக வகுத்துக் கூறல் பொருட் பாகுபாடாகும். இதுவே எந்தக் கலையறி விற்கும் ஆராய்ச்சிக்கும் தொடக்கமாம். ஒரு பொருளைப்பற்றிச் சிறப்பா யாராயுமுன், அது எந்த இனத்தைச் சேர்ந்ததென்று அறிந்து கொள்வது இன்றியமையாததாகும். தற்காலத்தில், பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சியில் மேனாட்டார் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், முற்காலத்திலோ இந்நிலையைக் கீழ்நாட்டார், சிறப்பாகத் தமிழர், அடைந்திருந்தனர். பண்டை தமிழர், பொருள்களெல்லாவற்றையும் மிக நுட்பமாக ஆராய்ந்து அவற்றை வகுத்துக் கூறல் ஓரினப்படுத்தல் வேறினப்படுத்தல் என்னும் மூவகையிலும் வகையீடு செய்தது மிகப் போற்றத்தக்கதாகும். 1. வகுத்துக் கூறல் (1) இருவகைப் பொருள்-இயங்குதிணை, நிலைத்திணை. எல்லாப் பொருள்களையும் இடம் பெயர்வதும் பெயராமையும் பற்றி இயங்குதிணை நிலைத்திணை என இரண்டாய் வகுத்துக் கூறினர். இவற்றை முறையே சரம் அசரம் என்றும் சங்கமம் தாவரம் என்றும் கூறுவர் வடநூலார். இயங்குதிணை உயிருள்ளது மட்டும். நிலைத்திணையில் உயிருள்ளதும் இல்லதும் அடங்கும். (2) மூவகைப்பொருள்-உயிர், மெய், உயிர்மெய். எல்லாப் பொருள்களும் தனியுயிர், தனியுடம்பு, உயிருள்ள உடம்பு என மூவகைப்படும். இவற்றை முறையே உயிர் மெய் உயிர்மெய் என்றனர் பழந்தமிழர். கடவுளும் பேயும் உடலைப் பிரிந்த ஆவியும் தனியுயிர்; பிணமும் உயிரற்ற அஃறிணை யுடம்பும் உயிரற்ற பொருளும் தனிமெய்; உடம்போடு கூடி வாழும் மக்கள் விலங்கு பறவை முதலியன உயர்மெய். உயிர்மெய் என்னும் சொல் இன்று வழக்கற்று, அதற்குப் பதிலாகப் பிராணி என்னும் வடசொல் வழங்கி வருகின்றது. பிராணனையுடையது பிராணி, உயிரையுடைய மெய் உயிர்மெய். உயிர் மெய் உயிர்மெய் என்னும் மூவகைப் பொருட் பெயர்களையே, மூவகை யெழுத்துக்களுக்கும் அவற்றோடொப்புமை கருதியிட்டனர் இலக்கணிகள் என்க. மூவகைப் பொருள்களிலும் உயிரும் உயிர்மெய்யும் இயங்கு திணையும் மெய்நிலைத்திணையுமாகும். உயிர் மெய்யைச் சுருக்கம் பற்றி உயிரி என்று கூறலாம். பிற்காலத்தில் மத நூலார் பொருள்களையெல்லாவற்றையும் கடவுள் ஆன்மா கட்டு என மூவகையாகப் பகுத்தனர். (3) அறுவகை யுயிர் எல்லா யுயிரிகளையும், ஐம்புலனும் பகுத்தறிவுமாகிய ஆறறிவு பற்றி, ஓரறியுயிர் முதல் ஆறறிவுயிர் வரை ஆறாகப் பகுத்திருந்தார்கள். ``ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப் படுத்தினரே'' (572) ``புல்லும் மரனும் ஓரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே'' (573) ``நந்தும் முரளும் ஈரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே'' (574) நந்து = நத்தை, முரள் = சங்கு. ``சிதலும் எறும்பும் மூவறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே'' (575) சிதல் = கறையான் ``நண்டும் தும்பியும் நான்கறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே'' (576) ``மாவு மாக்களும் ஐயறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே'' (577) ``மக்கள் தாமே ஆறறி யுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே'' (578) இவை தொல்காப்பிய நூற்பாக் (சூத்திரம்) கள். தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 2000 ஆதலாலும், அது ஒரு வழி நூலாதலாலும், ``நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே'' என்று கூறியிருப்பதாலும், மேற்கூறிய செய்திகள் தொன்று தொட்டு நெடுங்காலமாக வழங்கி அடிப்பட்ட வழக்கு களைக் கூறும் மரபியலிற் கூறப்பட்டிருப்பதாலும், தமிழரின் ஆறுயிர்ப் பாகுபாடு எண்ணுக்கு மெட்டாத தொன்மைத் தென்றறியலாம். இனி, ஒரறிவுயிரையும் மனிதரையும் இவ்விருவகையாகப் பகுத்தது மிக வியக்கத்தக்கதாகும். ``புல்லு மரனும் ஒரறி வினவே'' என்னும்போதே ஓரறிவுயிர் இரண்டாகப் பகுக்கப்பட்டுவிட்டது. இதனால், புல்லுக்கும் மரத்துக்கும் இடையில் உள்ள பூண்டு, புதர், செடி, கொடி முதலியவும் புல்லின் வகையாயடங்கும் என்பது புலனாகும். ஆனால், மூங்கிலானது உறுப்பால் புல்லாயும் உயரத்தால் மரமாயுமிருப்பதால், அது எவ்வகையுள் அடங்கும் என்னும் ஐயத்தை நீக்குவதற்கு ``புறக்கா ழனவே புல்லென்னமொழிப'' (தொல்.626) ``அகக்காழனவே மரமென மொழிப'' (தொல். 627) என்றனர். இவற்றுள், ``மொழிப'' என்று கூறியிருப்பதால் இவை முன்னோர் கூற்றென்றறிதல் வேண்டும். புறக்காழ் வெளிவயிரமுள்ளது, அகக்காழ் உள்வயிரமுள்ளது. ஆகவே, மூங்கில் புல்லின் வகையென்பது பெறப்படும். ஓரறிவுயிர் போன்றே மாந்தரையும் மக்கள் மாக்கள் என இரு வகையாகப் பிரித்தனர். மனித வடிவுகொண்ட மாத்திரத்திலேயே ஒருவன் மனிதனாகமாட்டனென்றும் அவன் மனிதனாவனென்றும் தமிழ் முன்னோர் கண்டுங்கொண்டு மிருந்தனர். அதனால், அறிவொழுக்கமுள்ளவரை மக்களென்றும் அவையில்லாதவரை மாக்கள் (விலங்குகள்) என்றும் கூறினர். இதை. ``மாவு மாக்களும் ஐயறி வினவே'' ``மக்கள் தாமே ஆறறி வுயிரே'' (தொல். ) என்னும் தொல்காப்பிய நூற்பாக்களாலும், ``செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்'' (குறள்.. ) ``மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி, யாங்கண்ட தில்'' (குறள்.. ) ``விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்'' (குறள்.. ) என்னும் குறட்பாக்களாலும் அறியலாகும். மக்களுக்கு நூலறிவில்லா விட்டாலும் ஒழுக்கத்திற்குக் காரணமான பகுத்தறிவிருந்தாற் போதுமென்பது முன்னோர் கருத்து. ஆகவே, மக்களுக்கு ஒழுக்கம் இன்றியமையாதது. மக்கள் என்னும் பெயருக்கு மகன் என்பதும் மாக்கள் என்னும் பெயருக்கு மா என்பதும் ஒருமையாகும். மகன் மகள் என்னும் ஒருமைப் பெயரும் மக்கள் என்னும் பன்மைப் பெயரும், மனிதப் பொருளும் முறைமைப் பொருளும் ஒருங்கு கொண்டிருத்தலின், அவற்றால் மயக்கமுண்டாகாமைப் பொருட்டு, மனிதப் பொருளையே தருதற்கு மாந்தன் என்னும் பெயர் பிற்காலத்தில் தோன்றினதாகத் தெரிகின்றது. மாந்தனுக்குப் பலர் பால் மாந்தர்; பெண்பால் மாந்தையாகத் தோன்றுகிறது. ``மாந்தர் மக்கள் என்னும் பெயரும்..... அப்பதிணைந்தும் அவற்றோரன்ன'' (தொல். 647) என்று மாந்தர் என்னும் பெயரை உயர்திணையாகத் தொல்காப்பியத்திற் கூறியிருத்தல் காண்க. (4) இருதிணை-உயர்திணை, அஃறிணை. தமிழிலக்கணத்தில், பொருள்களெல்லாம் உயர்திணை அஃறிணை என இருதிணையாக வகுக்கப்பட்டுள்ளன. இது தமிழரின் சிறந்த அறிவையும் நாகரிகத்தையும் காட்டுவதாகும். திணை = குலம். பகுத்தறிவுள்ள அல்லது ஒழுக்கமுள்ள மேன்மக்கள் உயர்திணை யாகவும், அவரல்லாத கீழ்மக்களும் உயிருள்ளனவும் உயிரில்லனவுமாகிய பிறபொருள்களும் அஃறிணையாகவும் கூறப்பட்டனர். ஒருவனுக்குப் பகுத்தறிவிருந்தும் ஒழுக்கமில்லாவிடின் அவன் உயர்திணையாகான். ஆகையால், பகுத்தறிவென்பது எப்போதும் ஒழுக்கத்தையும் தன்னுடன் உளப்படுத்தும். அல் + திணை = அஃறிணை, உயர்வல்லாத திணை அஃறிணை யெனப்பட்டது. ``உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே அஃறிணை யென்மனார் அவரல பிறவே (தொல்.) என்பது தொல்காப்பியம். இதில் மக்கள் என்னும் வகுப்பாரையே உயர்திணையாகக் கூறியுள்ளது. ஆனால், பிற்காலத்தில் 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய பவணந்தியார், ``மக்கள் தேவர் நரகர் உயர்திணை மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை'' என, உயர்திணையுடன் தேவர் நரகரையும் சேர்த்ததுமன்றி, தொல்காப்பியர் விளக்கிய கீழ்மக்களையும் உயர்திணையாகக் கூறிவிட்டார். உலகில் தோன்றிய மக்களே, இம்மையிற்செய்த நல்வினை மிகுதியால் மறுமையில் தேவராய்ப் பிறப்பரென்பதும், தேவருலகில் வீடு பேற்று முயற்சியே யில்லையென்பதும், கொள்கைகளாதலின் தேவப்பிறப்பு மக்கட் பிறப்பினுஞ் சிறந்ததன் றென்பதும், தேவரும் மக்களாயடங்குவர் என்பதும் பெறப்படும். ஆனால், நரகரோவெனின் முற்பிறப்பில் மிகுதியும் தீமைசெய்து அதனால் தண்டனை யடையும் கீழ்மக்களாதலின், அவரையும் உயர்திணையாகக் கூறியது தமிழிலக்கணத்திற்கே முற்றும் மாறானதாகும். இனி, `மக்கள் தேவர்', என்னும் நன்னூல் நூற்பாவில், `நரகர்' என்பதை நாகர் என்று மாற்றிக்கொண்டு, ``மக்கள், தேவர், நாகர்'' என்பவர் முறையே தமிழரும், ஆரியரும், நாகருமாவர் எனக்கூறிய தான்தோன்றித் தமிழ்ப் பகைவருமுளர். (5) அறுவகைப்பொருள் தமிழிலக்கணத்தில், பெயரியலில், மற்றொருவகையில் பொருள் களெல்லாம் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என அறுவகை யாகப் பகுக்கப்படடுள்ளன. இவற்றுள் பொருளென்றது இடம் பெயரக்கூடிய உட்புலப் பொருளை, சினை உறுப்பு. இனி, நூற்பொருள்களை, அகம் புறம் என்றிரண்டாகவும் முதல், கரு, உரி என மூன்றாகவும் வகுப்பது பொருளிலக்கண மரபும் அறம் பொருள் இன்பம் வீடென நான்காக வகுப்பது நீதிநூன் மரபும், பொருள் குணம் கருமம் பொது சிறப்பு ஒற்றுமை இன்மை என ஏழாக வகுப்பது தருக்க நூன்மரபுமாகும். இவற்றுள், அகம் என்பது காதல்; புறம் என்பது அஃதல்லாத பிற பொருள்கள்; முதல் என்பது காலமும் இடமும்; கரு என்பது ஓரிடத்தில் தோன்றும் பொருள்களும் காதலல்லாத வினைகளும்; உரி என்பது காதல் அல்லது காதற்பகுதி. பிறவற்றை வந்தவழிக் கண்டுகொள்க; இங்கு கூறின் விரியும். 2 ஓரினப்படுத்தல் ஓரினப்படுத்தலாவது வெவ்வேறினத்தைச் சேர்ந்த பல பொருள்களை ஓர் ஒப்புமைபற்றி ஒரினமாகக் கூறல். யானைக்கும் பன்றிக்கும் களிறு கேழல் என்பன பொதுப் பெயர்கள். இவ்விரு விலங்கும் ஓரினம் என்பது அவற்றின் வடிவாலும் நிறத்தாலும் விளங்கும். களிறு என்பது யானையால் பன்றிக்கும் கேழல் என்பது பன்றியால் யானைக்கும் ஏற்பட்ட பெயர். களிப்பது களிறு. களித்தல் மதங்கொள்ளுதல். மதங்கொள்வது ஆண்யானை. யானையோடொப்புமைபற்றிப் பன்றியின் ஆணும் களிறெனப்பட்டது. கிளைப்பது கீழ்வது கேழல், கிளைத்தல் நிலத்தை முண்டிப்போடுதல். பன்றியோடொப்புமைபற்றி யானையும் கேழல் எனப்பட்டது. யானைக்கும் ஒரு வகை வண்டிற்கும் தும்பி எனப்பெயர். தும்பை யுடையது தும்பி. தும்பு என்பது தூம்பு. தூம்பாவது உட்டுளையுள்ளது அல்லது குழாய். குழாய்போன்ற ஒரு முன்னூட்டி (proboscis) யானைக்கும் தும்பி யென்னும் வண்டுக்கு மிருத்தல் காண்க. யானைக்குத் துதிக்கையும் வண்டுக்குத் தேனுறிஞ்சும் நெடு மூக்கும் முன்னூட்டியாகும். யானையின் துதிக்கை தும்பிக்கை யெனப்படுகிறது. இது முதலாவது தும்பியின் கை எனப் பொருள்பட்டு, இன்று பொருள் மறைந்து, அக்கைக்கே சிறப்புப் பெயராய் அல்லது தனிப்பெயராய் வழங்குகின்றது. அரசு ஆற்றரசு பூவரசு என்னும் மரங்கள் ஒரே பெயரைப் பெற் றிருக்கின்றன. இம்மும்மரங்களும் நெஞ்சாங்குலைவடிவான (Cordate) இலையுடையனவாகும். அரசமரம் வெளிப்படையாகப் பூக்காதது. இதனால் அது பூவில்லாததென்றே கருதப்பட்டது. ``பூவாது காய்க்கும் மரமுள'' என்றார் ஓளவையார். பூப்பதாய் அரசு போன்ற இலையுடையது பூவரசு. அரசு போன்ற இலையுடையதாய் ஆற்றோரத்தில் வளர்வது ஆற்றரசு. (3) வேறினப்படுத்தல் வேறினப்படுத்தலாவது ஒரேயினத்தைச் சேர்ந்த பொருள்களை நுட்ப வேறுபாடுபற்றி வேறுபடுத்திக் கூறல். ``வண்டுந் தேனு ஞிமிறுஞ் சுரும்பு முமிழ்நற வருந்தி யுறங்கு செஞ்சடையோன்'' (55) என்பது கல்லாடம். ``வண்டு தேன் ஞிமிறு சுரும்பு வண்டின் வகைகள்'' என்றார். அதன் உரையாசிரியர். ``முதலையும் இடங்கரும் கராமும்'' (குறிஞ்சிப்பாட்டு, 267) என முதலை மூவகையாகச் சொல்லப்படுகின்றது. மூங்கிலில், உட்டுளையுள்ளது வேய் என்றும் உட்டுளையில்லாதது அமை என்றும் முள்ளுள்ளது கழை என்றும் முள்ளில்லாதது பனை என்றும் பிற பிறவாறும் கூறப்படுகின்றது. இவற்றுள், வேயும் அமையும் சிறு மூங்கிலும் கழையும் பணையும் பெரு மூங்கிலுமாகும். இப்போது வேய் துளைமூங்கிலென்றும் அமை கல்மூங்கிலென்றும் வழங்கு கின்றது. இலைகள் வடிவும் கனமும்பற்றி, இலை தாள் தோகை ஓலை என நால்வகையாகக் கூறப்படுகின்றன. இங்ஙனமே பிறவும், இதுகாறும் கூறியவற்றால், தமிழ் முன்னோர் மிக நுண்ணறிவுடையவரா யிருந்தனர் என்பதும் பொருள்களை நன்றாயாராய்ந்து அவற்றைப் பலவகையிற் பாகுபடுத்தினர் என்பதும், ஒரு பொருட் பல பெயர் களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நுட்ப வேறுபாட்டைக் காட்டுமென்பதும் அறியப்படும். 5 ``உலக வழக்கு கொச்சை வழக்கன்று'' இலக்கியமுள்ள எல்லா மொழிகளிலும் உலக வழக்கும் இலக்கிய வழக்கும் எனச் சொல்வழக்கு இருவகைப்பட்டுத்தான் இருக்கும். ஆயின் தமிழில் மட்டும் பண்டையிலக்கியமெல்லாம் செய்யுளிலேயே இருந்தமை யால், இலக்கிய வழக்குச் செய்யுள் வழக்கெனப்பட்டது. ``வட வேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிருமுதலின்'' என்று பனம்பாரனார் கூறுதல் காண்க. இதில் ``வழக்குஞ் செய்யுளும்'' என்று சுருக்கி கூறியது முறையே உலக வழக்கையும், செய்யுள் வழக்கையும். பொது மக்களும் புலமக்களுமாகிய எல்லார் வாயிலும் வழங்குதல் பற்றி, உலக வழக்கே வழக்கெனச் சிறப்பித்து கூறப்பட்டது. சிறுபான்மையரான புல - மக்களே பாடும் செய்யு ளிருத்தல் பற்றிச் செய்யுள் வழங்குச் செய்யுளென்றே குறிக்கப்பட்டது. ``பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முது சொலோ டங்கேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்'' (தொல்.) என்னும் தொல்காப்பிய நூற்பா உரைநடையிலிருக்க வேண்டிய மூலச் செய்யுளுரையும் கல்லா மக்களும் கூறும் விடுகதைகளும், பண்டை நாளிற் செய்யுள் வடிவிலிருந்தமையைக் குறித்தல் காண்க. உரையின் ஒருவகையே அருஞ்சொற்கட்குப் பொருள் கூறும் உரிச்சொற்றொகுதியும் (நிகண்டும்) திவாகரம், பிங்கலம் முதலிய உரிச்சொற் றொகுதிகள் இன்றும் செய்யுள் வடிவிலேயே இருத்தலை நோக்குக. உலகம் என்னும் இடவாகு பெயர் உலகத்திலுள்ள மக்களெல்லாரையும் பொதுவாக குறிப்பினும், சொல் வழக்கைப் பொறுத்தவரையில், நாகரிகத்திலும் அறிவிலுஞ் சிறந்த பண்புடை மக்களையே சிறப்பாகவுணர்த்தும் ``வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட்டாகலான'' (தொல். ) என்று தொல்காப்பியம் பிரிநிலை யேகாரங் கொடுத்து வரையறுத்துக் கூறுதல் காண்க. இங்ஙனமிருப்பவும், தமிழ்ப் பகைவரான ஆரியரும் அவர் வழிப்பட்ட மேலையரும் கோடன்மாரும் தமிழியல்பறியாத் தமிழ் பேராசிரியரும், கல்லா மக்களும், கீழ் மக்கள் வழங்கும் இழிவழக்கையும் (Slang), கொச்சை வழக்கையும் (Barbarism) உலகவழக்கொடு (Golleqsualism) சேர்த்தொன்றாக கொண்டு, தமிழ் மரபொடும் இலக்கண நூலாரொடும் முரண்படுவர். மனைவியைப் பெண்சாதி என்பதும், பீர்க்கங்காயை பீச்சங்கா என்பதும் இவைபோன்ற பிறவும் இழிவழக்காம். வந்தது என்பதை வந்துச்சு என்றும், வைத்திருக்கிறான் என்பதை வச்சிருக்கான் என்றும் வழங்குவது இழிவழக்காம். இத்தகைய வழக்குகளின்றி இலக்கண நடையிற் பேசுவதே உயர்ந்தோர் வழக்கான உலக வழக்கம். ஆயின், சில தென்சொற்கள் கற்றார்க்கேயன்றி மற்றோர்க்குப் பொருள் விளங்காதனவாகவும், அவற்றிற்கு நேரான வடசொற்களும் பிற சொற்களும் எளிதிற் பொருளுணர்த்துவனவாகவும் இருத்தலாலும், கருத்தறிவிக்குங் கருவியே மொழியாதலாலும், தூயநடை தமிழுக்கேற்காதெனின், சில தென் சொற்களை வழங்காமையாலேயே அவை அருஞ்சொற்களாக மாறின வென்றும், ஒருகாலத்தில் எளிய சொற்களாகவே அவை வழங்கிவந்தன என்றும், அவற்றின் வழக்கைப் புதுப்பிப்பின் மீண்டும் அவை எளிய சொற்களாக மாறிவிடுமென்றும், தமிழின் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் அதன் சொல்வளம் இன்றியமை யாததென்றும், வடசொற்கள் தேவமொழிச் சொல்லென்னும் ஏமாற்றினாலேயே தேவையின்றி வடவரால் புகுத்தப்பட்டன என்றும், அவற்றைத் தாராளமாக வழங்கினதினாலேயே தமிழர் தாய்மொழி உணர்ச்சி இழந்து பிற உரிமை யுணர்ச்சியும் தன்மானப்பண்பும் மிக்க இக்காலத்தில் தமிழைத் தூய்மையாக வழங்குதலே தக்கதென்றும், அதுவே தமிழன் முன்னேறும் வழியென்றும், பிறமொழிச் சொற்கள் தமிழர் தாமாக விரும்பிக் கடன் கொண்டவை அல்ல என்றும், தமிழின் தூய்மையைக் குலைப்பவரெல்லாம் வாள்போற் பகைவரும், கேள்போற் பகைவருமே யென்றும் கூறிவிடுக்க. இனி வடமொழித்துணையின்றித் தமிழைத் தனித்து வழங்க இயலாதென்றும், இருசார் பகைவரும் கூறிக் கலாய்ப்பர். உலகிலுள்ள மூவாயிரம் மொழிகளுள், தமிழ் ஒன்றே தேவமொழியென்றும் .................... வளம்படுத்திய மொழியென்றும் தம்பட்டமடித்துக் கொள்ளும் வடமொழியில் ஐந்திலிரு பகுதி தமிழேயென்றும், வடமொழியே தமிழ்த் துணையின்றி வழங்காதென்றும், இவ்வுண்மை அண்மையிலேயே வெட்ட வெளிச்சமாகு மென்றும், அவர் அறிவாராக. செய்யுள் வழக்கு, குறிப்பிட்ட சொற்களையும், சொல் வடிவுகளையுமே வழங்கி வருவதாலும், சுருங்கச் சொல்லல் என்னும் அழகைப் பெரிதாகப் பேணுவதாலும், உலக வழக்கினின்று மிகவும் வேறுபட்டதாகும். பண்டைச் செய்யுளிளெல்லாம் காடை, கவுதாரி என்னும் பறவைகள் குறும்பூழ், சிவல் என்னும் சொற்களாலேயே முறையே குறிக்கப்பெறும். செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செய்ம்மன், செயின் முதலிய செய்யுள் வினையெச்ச வடிவுகள் உலக வழக்கிலும் செய்து கொண்டு, செய்கிறதற்கு, செய்தால், செய்துவிட்டால் முதலிய உலக வழக்கு வினையெச்ச வடிவுகள் செய்யுள் வழக்கிலும் இடம்பெறுவதில்லை. முழுங்கு என்னும் வடிவே மூலமாயினும், அதன் திரிபான விழுங்கு என்பதை செய்யுட்கேற்றதாகக் கொள்ளப்பெறும். இங்ஙனமே மிஞ்சு என்பதினும் அதன் திரிபான விஞ்சு என்பதே சிறந்ததாம். கொண்டுவா என்பதன் திரிபான கொண்டா என்பது செய்யுளில் இடம்பெறாது; ஆயின் கொண்டா என்பதன் திரிபான கொணா, கொணர் என்பவை இடம்பெறும். மக்களை உயர்ந்தோர், ஒத்தோர், இழிந்தோர் என மூவகுப்பாராக வகுத்து அதற்கேற்ப ஈறுகொடுத்துப் பெயரையும் வினையையும் ஆள்வது முற்றும் உலகவழக்கேயன்றிச் செய்யுள் வழக்கன்று. ஒருமை பன்மை என்னும் எண் பகுப்பே செய்யுட் குரியதாம். பெயர் வினை இழிந்தோன் நீன், நீ, அவன் வா, வந்தான் ஒத்தோன் நீம், நீர் (நீயிர்) அவர் வாரும், வந்தார் உயர்ந்தோன் நீங்கள், அவர்கள் வாருங்கள், வந்தார்கள் ``ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய உயர்சொற் கிளவி இலக்கண மருங்கின் சொல்லா றல்ல.'' என்று தொல்காப்பியம் (சொல் - கிளவி - 27) தெளிவாகக் கூறுதல் காண்க. இனி வினையின் முக்கால வடிவும் ஆங்கிலத்திற்போல் தனித்தனி தனிப்பு (Indifinite), தொடர்ச்சி (Continuous), நிறைவு (Perfect), நிறைவுத் தொடர்ச்சி (Perfect Continuous) என்னும் நால்வகை கொண்டியங்குவதும், தமிழில் உலக வழக்கே அன்றிச் செய்யுள் வழக்கன்று. சிலர் செய்யுள் வழக்கையே அடிப்படையாகக் கொண்டு, உலக வழக்கிற்குச் சிறப்பாக உரிய கூறுகளையெல்லாம், பிற்காலத்தனவாகக் கூறுவர். அவர் மொழியியலை சிறப்பாகத் தமிழியலை அறியார். செய்யுள் வழக்கினும் உலக வழக்கே முந்தியதென்பதை அறிதல் வேண்டும். இறந்தகாலம் தனிப்பு -வந்தான் தொடர்ச்சி - வந்துகொண்டிருந்தான் நிறைவு - வந்திருந்தான் நிறைவு தொடர்ச்சி - வந்து கொண்டிருந்தான். நிகழ்காலம் தனிப்பு - வருகின்றான் தொடர்ச்சி - வந்து கொண்டிருக்கின்றான் நிறைவு - வந்திருக்கின்றான் நிறைவு தொடர்ச்சி - வந்து கொண்டிருந்திருக்கிறான் எதிர்காலம் தனிப்பு - வருவான் தொடர்ச்சி - வந்து கொண்டிருப்பான் நிறைவு - வந்திருப்பான் நிறைவுத் தொடர்ச்சி - வந்து கொண்டிருந்திருப்பான் இறந்தகால நிறைவுத் தொடர்ச்சி இன்று வழக்கு வீழ்ந்தது. எதிர்கால நிறைவும், நிறைவுத் தொடர்ச்சியும் ஐய இறந்த காலத்தையும் உணர்த்தும். ஆங்கில நிகழ்கால வினையெச்சத்திற்கு (Present Participle) ஒத்த செய்து கொண்டு என்னும் தமிழ்த் தொடர்ச்சி வினையெச்ச வாய்ப்பாடு, தொன்று தொட்ட வழக்கேயன்றி இடைக்காலத்ததோ, ஆங்கிலத்தைப் பின்பற்றியதோ அன்று. கொள் என்னும் தற்பொருட்டு (Reflexive) துணைவினை (Auxiliary Verb) எங்ஙனம் தமிழ் மரபினதோ அங்ஙனமே கொண்டு என்னும் தொடர்ச்சிகாலத் துணைவினையெச்சமும் தமிழ் மரபினதாம். தமிழிலக்கண நூலார் நிகழ்கால வினையெச்சமாகக் குறிக்கும் செய்ய என்னும் வாய்பாடு, தன் எழுவாய் வினையொடு முடியும் போது, ஆங்கிலப் பொருட்டு வினையெச்சத்தை (Infinitive Mood) யொத்து எதிர்காலத்தையுணர்த்துவதால், உண்மையில் எதிர்கால வினையெச்சமேயாம். செயின் (செய்தால்) என்னும் குறிப்பதே தக்கது. தனிப்பு என்னும் காலவகை வழக்குஞ் செய்யும் என்னும் இருவகை வழக்கிற்கும் பொதுவாம் நிறைவும் செய்யுட்கு ஏற்கும். (எ-கா) ``ஏது நிகழ்ச்சி யெதிர்ந்துள்ள தாதலின் (மணி - 3 : 4) எதிர்ந்துளது எதிர்ந்திருக்கின்றது. (நிகழ் கால நிறைவு) தொடர்ச்சி வினையெச்சம் பொருள் செய்யுளில் முற்றெச்சத்தால் உணர்த்தப் பெறும். எ-கா : ``ஆடினிர் பாடினிர் செலினே'' (புறம் - 109 :17) ஆடினிர் பாடினிர் = ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் இட வேற்றுமை உருபேற்ற தொழிற் பெயரும் இலக்கிய வழக்கில் தொடர்ச்சி வினைப் பொருளுணர்த்தும். எ-கா : தட்டுப்புடைக்கண் - தட்டுப்புடைத்துக் கொண்டிருந்த (கொண் டிருக்கின்ற, கொண்டிருக்கும்) போது. நிறைவுத் தொடர்ச்சி செய்யுளில் இடம் பெறாது. செய்யுள் வழக்கு உலக வழக்கின்று பெரிதும் வேறுபட்டும், தமிழ் தமிழ்த் தமிழ்ப் பெரும்புலவரும் மருளுமாறு தொன்முது தோற்றத்ததாயும், இருக்கவும், செக்கோசிலோவோக்கிய நாட்டு கொச்சைத் தமிழ்ப் புலவரான காமில் சுவெலபில் என்பார், ஆரிய முறையில் தமிழைச் சில்லாண்டு கற்றபின் தம்மைத் தமிழ்ப் பேரதிகாரியாகக் கருதி, நற்றிணையென்னும் பண்டை அகப்பொருட் செய்யுட்பனுவலையும், நாலுவேலி நிலம் என்னும் இற்றைக் கடுங்கொச்சைத் தமிழ் உரை நடை நாடகப் பனுவலையும் அடிப்படையாகக் கொண்டு நரி தன்வாலை விட்டுக் கடலாழங் கண்டாற் போல் தமிழின் தொன் மையை ஆய்ந்து அதன் தோற்றம் கி. மு 1500 என்று வரையறுத்திருப்பது, தன்னாராய்ச்சி இல்லாத தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்க்கு எத்துணை அறிவியல் உண்மையாகக் காட்சியளிப்பினும், முறைப்பட்ட மொழி யாராய்ச்சியாளர்க்கு எத்துணை நகையாட்பிற்குரிய பகடிக் கூத்தாம். இனி, செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி என்னும் தொல்காப்பிய நூற்பாவைப் (சொல் - எச்ச) பிறழவுணர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய (திரவிடம் என்னும்) கொடுந்தமிழ் மொழிகளின் கொச்சைச் சொற்களையே திசைச் சொல்லென்று, இலக்கண நூலார் கொண்டதாகக் கூறுவாருமுளர். கொடுந்தமிழ் மொழிகளின் பெரும்பாற் சொற்கள் கொச்சை முறையில் திரிந்திருப்பினும், அவையல்லாத, திருந்திய வடிவுச்சொற்களையே தேவையான இடத்துச் செந்தமிழர் மேற் கொண்டனர் என்பதை அறிதல் வேண்டும். ``தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பவற்றைப் பெற்ற மென்றும்'' குட்டநாட்டார் தாயைத் தன்னை யென்றும், நாயை ஞெள்ளை யென்றும்; குடநாட்டார் தந்தையை அச்சனென்றும்; சீதநாட்டார் ஏடாவென்பதனை எலுவனென்றும், தோழியை இகுளையென்றும், தம்மாமி யென்பதனை தந்துவை யென்றும்; பூமி நாட்டார் நாயை ஞமலி என்றும், சிறு குளத்தைப் பாழி யென்றும், அருவ நாட்டார் செய்யைச் செறு வென்றும், சிறு குளத்தை கேணி யென்றும்; அருவா வடதலையார் குறுணியை குட்டை யென்றும் வழங்குபவ.'' ``இனிச் சிங்களம் அந்தோ வென்பது; கருநடம் கரைய சிக்க குளிர என்பன; வடுகு செப்பென்பது; தெலுங்கு எருத்தைப் பாண்பு லென்பது; துளு மாமரத்தை கொக் கென்பது. ஒழிந்த வற்றிற்கும் வந்துழி காண்க என்றே நச்சினார்க்கினியர் திசைச் சொற்கு எடுத்துக் காட்டியிருத்தலையும், ஏனையுரை யாசிரியரும் அவரைப் போன்றே யன்றி வேணம் (வேண்டும்), லேது (இலது) பாளெ (வாழை) முதலிய கொச்சைத் திரிபுகளை எடுத்துக் காட்டாமையும் நோக்கித் தெளிக. மேனாட்டார் இற்றை அறிவியல் துறைகளைக் கண்டு நுட்பமாக வளர்த்து மேன்மேலும் முன்னேறி வருபவரே யன்றி, தொன்று தொட்டு வரும் மொழித் துறையில் பண்டைத் தமிழர் போல் தேர்ச்சி பெற்றவரல்லர். ஓரொலிக்குப் பலவரி வடிவும் ஒரு வரிவடிவிற்குப் பலவொளியும் கொண்டதும், உயிர் மெய்க்குத் தனி வரிவடிவில்லதும், தனியொலியை இணைவரியாலும் இரண்டிற்கு மேற்பட்ட தொகுதி வரியாலும் குறிப்பதும், ஒலிக்காத ஊமை வரிகளுடையதும், எத்தனை உயர்கல்வி கற்பினும் ஆசிரியன்துணை அல்லது அகரமுதலித் துணையின்றி ஒரு சொல்லைப் பலுக்கும் (உச்சரிக்கும்) முறை அறியவியலாததும் அவர் மொழியாகும். இற்றை அறிவியல்களை எல்லாம் கண்டதனாலும், மேன்மேலும் வியக்கவும் மருளவும் தக்க புதுப்புனைவுகளைத் தொடர்ந்து இயற்றிக் கொண்டே வருவதனாலும், எல்லாத் துறைகளிலும் வெள்ளையர் சொல்வதே விழுமிய உண்மையென இந்தியருட் பெரும்பாலோர் சிறப்பாகத் தமிழர் கருதுகின்றனர். தமிழ்மொழி அமைப்பையும் அதன் மரபையும் மேலையரின் மொழி யமைப்பு மரபுகளோடு ஒப்புநோக்கின், மொழித் துறையிற் கீழையரே இன்றும் மேலையர் என்பது விளங்கித் தோன்றும். பேதைமை என்பது கற்றோர் கல்லார் ஆகிய இரு சாரார்க்கும் பொதுத் தன்மையாகும். ஆதலால் பட்டக்கல்வி, கற்றமட்டில் ஒருவர் தம் பிறவிக் குணமான பேதைமை நீங்கப் பெறார். ஆகவே, கல்லாப் பேதையர் போன்றே கற்ற பேதையரும் உளர் என அறிக. சென்ற நூற்றாண்டுவரை, மொழிநூற்கல்வி கால்டுவெல் போன்ற நுண்மதியும் நடுநிலையும் சிறந்த பேரறிஞரால் நன்முறையில் வளர்க்கப்பட்டு வந்தது. இந்த நூற்றாண்டில் ஆரியத்தையே அடிப்படையாகக் கொண்டு தலைகீழாக ஆய்ந்த மேலையர், மொழி மூலத்தைக் காணாது முட்டுப்பட்டு, வரலாற்று முறைமை அடியோடு வண்ணனை முறையையே வளர்த்து வருகின்றனர். அதனால் தம்மையும் தம் மொழிகளையும் போன்றே பிறரையும் பிறர் மொழிகளையும் கருதி, இலக்கண அறிவும், மொழிப்பண்பாடும் புலமையும் இல்லாத பொதுமக்கள் தம்வாய் கோணியவாறெல்லாம் ஒலித்து பேசுங் கொச்சை வழக்கையே அளவை மொழியாகக் கொண்டு அதனையே உலக வழக்கெனப் போற்றிவருகின்றனர். இது தமிழிற்கு எள்ளளவும் ஏற்காதென்றும் உலகவழக்கு வேறு கொச்சை வழக்கு வேறென்றும் மொழித்துறையில் மேனாட்டார் இன்னும் தமிழரிடமிருந்தே அறிவுபெறற் குரியர் என்றும், தெற்றெனத் தெரிந்து கொள்க. 6 எல்லாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியா? மக்கள் அறிவடையும் வழிகள், கல்வி, கேள்வி ஆராய்ச்சி துய்ப்பு என நால் வகைப்படும். ஒருவர் பிறர் எழுதி வைத்ததைத் தாமாய்க் கற்றறிவது கல்வி; அங்ஙனமன்றி அறிஞரையடுத்துத் தமக்கு வேண்டியவற்றைக் கேட்டறிவது கேள்வி; இவ்விரண்டுமன்றி, ஒன்றைப் புதுவதாகத் துருவி யாய்ந்தறிவது ஆராய்ச்சி; இனி வாழ்நாளில் பற்பல வகையில் தாமே துய்த்து அறிவது துய்ப்பு, (அனுபவம்) இவற்றில் கல்வி என்பது இக்காலத்தில் கேள்வியையுந் தழுவும். ஆராய்ச்சி ஆராயப் பெறும் பொருள் நோக்கிப் பலதிறப்படும். அவற்றுள் சொல்லாராய்ச்சியும் ஒன்று. அது மொழியாராய்ச்சியுட்பட்டது. ஒரு மொழிக்குட்பட்ட சொல்லின் அல்லது சொற்களின் வரலாற்றை ஆய்வது சொல்லாராய்ச்சி; ஒரு மொழிக்குப் பிற மொழியோடு அல்லது மொழிகளோடு உள்ள தொடர்பை ஆய்வது மொழியாராய்ச்சி. மொழிகளெல்லாம் பெரும் பாலும் சிலவும் பலவுமாய்த் தம்முட் தொடர்பு கொண்டிருப்பதால், மொழி யாராய்ச்சியில்லாதார் செய்யும் சொல்லாராய்ச்சி கட்டுப்படுவதே. சொல்லாராய்ச்சி செய்ய விரும்பும் ஒருவர் முதற்கண், ஏதேனுமொரு மேலை மொழியில், சிறப்பாக ஆங்கிலத்தில், உள்ள மொழி நூல்களையும் சொல்லாராய்ச்சி நூல்களையும் சொல்லியலகராதிகளையும் கற்றல் வேண்டும். அங்ஙனம் கற்கும் போதே, மொழியொலியியல் (phonology), சொல் வடிவியல் (Morphology), பொருட்பாட்டியல் (Semasiology) முதலிய மொழி நூற்றுறைகளைச் செவ்வன் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். அதன்பின் சொல்லாராய்ச்சி செய்ய விரும்பும் மொழியின் இலக்கணத்தைக் கற்பதுடன், அதிலுள்ள சொற் குடும்பங்களையெல்லாம் தனித்தனியாகவும் தொகுதி தொகுதியாகவும் நோக்கி, அவற்றின் தொடர்புகளை அறிந்து கொள்ளுதல் வேண்டும். பின்னர் அம்மொழிச் சொற்களை அம்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பிற மொழிச் சொற்களோடும் அக்குடும்பத்தையடுத்த அயற் குடும்ப மொழிச் சொற்களோடும் ஒப்புநோக்கிக் காட்டல் வேண்டும். சொல் லாராய்ச்சிக்குச் சொல் வரிசைகளை ஒப்பு நோக்குவதினும், இலக்கண நெறி முறைகளை ஒப்பு நோக்குவதே மிகுதியும் வேண்டப் பெறுவதாகும். மொழிநூல் அல்லது சொல்லியல்நூல், கணிதம்போலத் தற்சார்புக் கலையன்று. அதற்குப் பிறகலையறிவும் இன்றியமையாது வேண்டப்பெறும். உளநூல் (Psychology) வரலாற்று நூல் (History), ஞாலநூல் (Geography), மாந்தனூல் (Anthropology), என்பன மொழி நூற்குப் பெரிதுந் துணை செய்யும். வணிகம் பற்றி ஒரு மொழியினின்று இன்னொரு மொழிக்கு வழங்குஞ் சொற்கட்கெல்லாம் வரலாற்றறிவும் ஞால நூலறிவும் இன்றியமை யாதன. எ-கா : துகி (தோகை), teak (தேக்கு). மேற்கூறியவாறு கருவி நூல்களுங் கலைகளும் கைவரப்பெற்றபின், எல்லா மொழிகட்கும் பொதுவான சொல்லியல் நெறி முறைகளையும், ஆராய்வான் எடுத்துக்கொண்ட ஒரு மொழிக்கேயுரிய சொல்லாக்க நெறி முறைகளையும் அறிந்து கொள்ளல் வேண்டும்.. ``எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன வாயினும்'' பல சொற்கு, ``மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா'' ஆதலின் அவை இடுகுறியெனக் கொள்ளுதல் கூடாது. சற்று ஆழ்ந்து நோக்கின் அவற்றின் வேர்ப்பொருள் மெல்ல மெல்ல மிளிர்ந்து தோன்றும். சில சொற்கள் காலக்கடப்பில் மிகமிகத் திரிந்தும் இனச் சொற்களை இழந்தும் வேர்ச் சொல் வழக்கற்றும் போனதினால், அவற்றின் வேர்ப்பொருள் எத்துணை ஆழ்ந்து நோக்கினும் தோன்றுவதில்லை. அவற்றுள் ஒரு சிலவற்றிற்கு, அயன் மொழியிலுள்ள இனச் சொற்கள் வேர் காட்டினுங் காட்டும். சுடலை, கொடுக்கு முதலிய பல சொற்களின் வேர்ப் பொருள் நோக்கிய மட்டில் தோன்றும், மரம் பொன் முதலிய சொற்களின் வேர்ப் பொருள் ஆழ்ந்து நோக்கினாலன்றித் தோன்றா. தமிழ், கருவி முதலிய சில சொற்களின் வேர்ப் பொருள் ஆழ்ந்து நோக்கினும் தோன்றுவதில்லை. பொருந்த புகவலாக ஒரு சொற்கு பொருட் காரணங்காட்டுவது பொருந்தாது. ஒரு சொற்குக் காட்டும் வேர் எல்லாத் தடைகட்கும் விடையமையுமாறு. உலகத்தோடும், கலைக ளோடும், மலையா திருத்தல் வேண்டும். அம்பு (வளையல்) என்னும் சொல்லின் வேர்ப் பொருள், amphi(around) என்னும் கிரேக்கச் சொல்லால் அறியப்படுகின்றது. தமிழுக்கும் கிரேக்க மொழிக்கும் உள்ள தொடர்பு என் 'Orgin of Culture' என்னும் ஆங்கில நூலில் விளக்கப்பெற்றுள்ளது. ஆண்டுக் காண்க. ஒரு சொல்லின் பொருட் காரணங் காணுதற்கு, முதற்கண், அச்சொல் லின் திருந்திய வடிவைக் கண்டுகொள்ளல் வேண்டும். மணத்தக்காளி என்பதன் திருந்திய வடிவு மணித்தக்காளி என்பது. தக்காளி இனத்திற் சிறியது என்பது அதன் பொருள். மணி என்பது ஒரு குறுமைப் பொருள் முன்னொட்டு. மணத் தக்காளி என்னும் தவற்று வடிவிற்கு, மணமுள்ள தக்காளி என்றுதான் பொருள்கூற முடியும். இங்ஙனமே சென்னைப் பல்கலைக் கழக அகராதியிற் கூறப்பட்டுள்ளது. ஒரு சொல்லின் திருந்திய வடிகைக் கண்டபின், அச்சொல்லாற் குறிக்கப்படும் பொருளின் சிறப்பியல்பை நோக்க வேண்டும். ஒரு பொருளின் சிறப்பியல்பு, அப்பொருள் முழுமையுந் தழுவியதாகவோ அதன் ஒரு மருங்கு பற்றியதாகவோ இருக்கலாம். பரிதி (வட்டமானது) என்பது முழுதுந் தழுவியது. வாழை (வழவழப்பானது) என்பது ஒரு மருங்கு (அடிமரம்) பற்றியது, வாழையினுஞ் சிறப்பாகத் தொடர்ந்து வாழ்வது மூங்கிலாதலால், வாழ்வது வாழை என்பது பொருந்தாது. பல குணங்கள் பல பொருட்கும் பொதுவாயிருத்தலின், சிறப்பியல் பென்றது, பெரும்பாலும் ஒரு சார் பொருள்கட்குச் சிறப்பாயிருப்பதே. எ-கா : வள்ளம், வள்ளி, வளை, வளையம், வளையல், வண்டு, வண்டி, வணர், வணக்கம், வட்டு, வட்டி, வட்டில், வட்டை. இவையெல்லாம் வளைந்தது அல்லது வளையமாயிருப்பது என்னும் பொருள் கொண்டவையே. குணம் என்பது தொழிலையும் தழுவும். எ-கா : கேழல் (நிலத்தை கிளைப்பது) ஒப்புமையும் ஒரு குணமே. எ-கா : நுணா (நுணல் போலுங்காயையுடையது). ஒரு சொல்லான் பல கருத்துகள் எழுப்பப் பெறலாம். அவற்றின் முன்மை பின்மைத் தொடர்பு அறியப்பட்ட பின்னரே, மொழிப்பொருட் காரணம் துணியப் பெறல்வேண்டும். சிலவிடத்துப் பல காரணங்கள் ஒத்த பொருத்தமுடையனவாகத் தோன்றும். அவற்றுள் மிகப் பொருத்தமானதை ஏரண முறையிலும் ஒப்பு நோக்கியுமே துணிதல் கூடும். எ-கா: விழா என்னுஞ் சொற்கு விழுத்தல், விழைதல் என்னும் இரண்டும் பொருட் காரணமாகத் தோன்றலாம். விழுத்தல் சிறத்தல், விழைதல் விரும்புதல், விரும்பிச் செய்வது என்னுங் காரணத்தினும் சிறப்புச் செய்வது என்னுங் காரணமே பொருத்தமாம். ``சிறப்பொடு பூசணை'' என்று வள்ளுவர் கூறியிருப்பதாலும் ``சிறப்புச்செய்தல்'' என்னும் வழக்குண்மை யாலும் பின்னதன் மிகுபொருத்தம் அறியப்படும். விழு - விழா, வேள்வியே விரும்பிச் செய்யப்படுவது. வேள்வியொடு செய்யப்படும் விழாக்கள், ஆகுபெயர் முறையில் வேள்வி யெனப்பெறும். இனி சொற்றிரிவு முறைகளையும் முற்பட அறிந்துகொள்ளல் வேண்டும். எ.டு: இரு குறில் ஒரு நெடிலாகத் திரியும் என்னும் திரிவு முறையால், அகல்-ஆல் (விழுதூன்றிப் படரும் ஆலமரம்), வணங்கு வாங்கு முதலியனவும்; டகரம், ரிகரமாகத் திரியும் என்னும் திரிவு முறையால், படவர்-பரவர், விடிச்சி-விரிச்சி (மறை பொருளை வெளிப்டுத்தலான பாக்கத்து விரிச்சி) முதலியனவும், ழகரம் டகரமாகத் திரியும் என்னும் திரிவு முறையால், புழல் புடல் (புழலை-புடலை), குழல்-குடல் முதலியனவும்; `இல்' ஈறு ஒரு குறுமைப் பொருட்பின் னொட்டு என்பதால், தொட்டி-தொட்டில் குடி-குடில் முதலியன வும்; அம் ஈறு ஒரு பெருமைப் பொருட் பின்னொட்டு என்பதால், மதி-மதியம் (முழுமதி), நிலை - நிலையம் முதலியனவும்; உகரம் அகரமாகத் திரியும் திரிவு முறையால், குடும்பு-கடும்பு, நுரை-நரை (வெண்மை) முதலியனவும்; உகர ஊகாரம் முறையே இகர ஈகாரமாகத் திரியும் தரிவு முறையால் புரண்டை-பிரண்டை, தூண்டு தீண்டு முதலியனவும்; விளங்குதல் காண்க. செந்தமிழ்ச் சொல்லியல் நெறி முறைகளும் (Principles of Etymology) சொற்றிரிவு முறைகளும் (Modes of Derivation) எத்துணையோ பல. அவையும் அவற்றின் வகைகளும் எனது `சொல்லாக்க நெறிமுறைகள்' என்னும் நூலிற் கூறப்பெறும். சொல்லாராய்ச்சி செய்வார் மேற்கூறியவாறெல்லாம் கற்றிருப்பதுடன் இறைவனால் இதற்கென அழைப்பும் (call) பெற்றிருத்தல் வேண்டும். அல்லாக் கால் உழைப்பெல்லாம் விழலுக்கிரைத்த நீராய்விடும். தமிழ்ச் சொல்லாராய்ச்சித் துறையில் தலைமையான அழைப்புப் பெற்றவர் கால்டுவெல் கண்காணி யாராவர். இக்காலத்தில் சிலர், மொழியாராச்சி செய்யாதும் மொழியாராச்சிக்கும் சொல்லாராய்ச்சிக்கும் வேறுபாடு தெரியாதும், சொல்லியல் நெறி முறைகளை யும், சொற்றிரிவு, முறைகளையும் அறியாதும், தாம் தலைமைப் பதவி பெற்றிருப்பது காரணமாகத்தருக்கி, எல்லாம் வல்ல சித்தரும் அனைத்து நூலுங் கற்ற அறிஞரும்போல் நடித்து பொய்யும் வழுவும் மலியச் சில சொல் லாராய்ச்சிக் கட்டுரைகள் வரைந்திருப்பதுடன், கால்டுவெல் ஐயர்காட்டிய வழி நின்று உண்மையான ஆராய்ச்சி செய்த பிறரை, நெறிப்பட ஆராயாதவர் என்று குறிப்பாகவும் வெளிப்படையாகவும் கூறியும் வருகின்றனர். எளிய சொற்கட்கு எவரும் வேர்ச்சொல் காட்டுவர். அரிய சொற்கட்குக் காட்டுவதே அரிது. சொல்லியல் நெறிமுறைகளை அறியாதார் கூறும் போலிச் சொல்லியல், பின்வருமாறு எழுதிறப்படும். (1) ஒலிமுறைச் சொல்லியல் (Sound Etymology) எ-கா: பாராளுமன்று - parliament. பாராளுமன்று என்பது பார் ஆளும் மன்று என்னும் முச்சொற்றொடர் parliament என்பது parler (speak) என்னும் பிரெஞ்சுச் சொல்லும் ment என்னும் ஆங்கில விகுதியும் சேர்ந்த ஒரே சொல் (2) உன்னிப்புச் சொல்லியல் (Guessing Etymology) எ-கா : அணில் = அழகு (அழகிய வரிகள்) உடையது. அணி = அழகுகலம் = கல்லாற் செய்யப்பட்டது, வேந்தன் = வெம்மையாய். அதிகாரஞ் செலுத்துபவன். வேம் = வேந்தன். (3) அறிவாகுலச் சொல்லியல் (Pedantic Etymology) எ-கா : கிளி = கிளைப்பது (பேசும் பறவை) மண் = மணப்பது (நாற்றமுடையது) (4) அடிப்பட்ட சொல்லியல் (Popular Etymology). எ-கா : நூல் (புத்தகம்) = இழைநூலும் எற்று நூலும் போலவது. (5) குறிக்கோட் சொல்லியல் (Tendentious Etymology) எ-கா : ஐயன் ஈ ஆரியன் (ஆர்ய) அச்சன் ஈ அஜ்ஜ (பிராகிருதம்) ஈஈ ஆர்ய வெறுக்கை (செல்வம்) = வெறுக்கப்படுவது. (6) வழூவுப் பகுப்புச் சொல்லியல் (Malanalytic Etymelogy) எ-கா : சாப்பாடு - சாவதற்கு ஏதுவானது (சாப்பாடு) (7) நகையாட்டுச் சொல்லியல். (Playful Etymology) எ-கா : தோசை இருமுறை `சை' என்று ஒலிப்பது தோ (உருது) = இரண்டு. இங்கு காட்டப்பட்டுள்ள எடுத்துகாட்டுக்களையெல்லாம் மறுக்கவும் விளக்கவும் புகின் விரியுமாதலின் அவற்றுள் நான்கை மட்டும் ஈண் டாராய்ச்சிக் கெடுத்துக்கொள்வல், (1) அணில். அணி = வரி, வரிசை, அணி - அணில் = முதுகில் மூவரிகளையுடையது. (2) வேந்தன் : வேய்தல் = மேலணிதல், முடிசூடுதல். வேய் = வேய்ந் தோன் - வேந்தன் = முடியணியும் உரிமையுள்ள சேர, சோழ பாண்டியருள் ஒருவன், வேள், மன்னன், கோ, வேந்தன் என்னும் நால்வகையரசர் பெயருள், வேந்தன் என்பது முடியணியும் உரிமையுள்ள மூவேந்தர்க்கே பொதுவாக வுரியதாம். இவ்வுரிமை கிறித்துவுக்கு முற்பட்ட காலமெல்லாம் கையாளப் பெற்று வந்தது. கொன்றை வேந்தன் (சிவன்) என்பது கொன்றை வேய்ந்தோன் என்றே பொருள்படுதல் காண்க. வேந்து என்னும் பாலீறில்லாப் பழவடிவமும் வேந்தன் என்று பொருள் படுவதே; செய்து என்னும் வாய்பாட்டு வினைமுற்றும் ஆதல் போன்று. (3) கிளி கிள்ளை :- கிள் - கிள்ளி - கிளி, கிள் - கிள்ளை, கிள்ளுதல் = கூறிய மூக்கால் கொத்துதல். மரங்களிலுள்ள காய்கனிகளைக் கிள்ளி வைப்பது கிளியின் இயல்பு. பழகாத கிளியை ஒருவன் பிடிப்பானாயின்; உடனே அகப்பட்ட உறுப்பைக் காயப்பட வலிதாய்க் கொத்திவிடும். `கிளி கொத்தின பழம்' என்பது வழக்கு பேசும் இயல்பு கிளிக்கில்லை. சொல்லிக் கொடுத்ததைச் சொல்லும் இயல்பே அதற்குண்டு. ``சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை'' என்பது பழமொழி. சொன்னதைச் சொல்லும் திறத்தில், கிளியினுஞ் சிறந்தது பூவையென அறிக. (4) அச்சன் :- அத்தன் - அச்சன் (ஆண்பால்) தந்தை. அத்தி - அச்சி (பெண்பால்) தாய், அக்கை. இவை தூய தமிழ்ச் சொற்கள். த - ச : போலி. ஒ.நோ : பித்தன் - பிச்சன். அத்தன், அச்சன் என்பன முறைப்பெயர். ஆரியன் என்பது ஒரு மக்களினப் பெயர்; அத்துடன் ஓர் ஆரியச் சொல். அத்தன், அச்சன் என்பனவும் அத்தி அச்சி என்பனவும்; முறையே ஆண்பாலீறாகவும் எண்ணிறந்த தமிழ்ப் பெயர்களில் தொன்றுதொட்டு வழங்கி வருகின்றன. எ-கா : தட்டாத்தி, வண்ணாத்தி கிள்ளிச்சி, வேட்டுவச்சி } பெண்பால் அரசன் என்னும் சொல்லே வடநாட்டில் அஜ்ஜ என்னும் பிராகிருதச் சொல்லாக வருகின்றதென்க. (1) பலமொழிகள் தம்முள் தொடர்பு கொண்டிருப்பதால் சொல் லாராய்ச்சிக்கு மொழியாராய்ச்சியும் வேண்டும். (2) சொற்கள் குடும்பம் குடும்பமாய் இயல்வதால், அவற்றைத் தொகுத்து நோக்கியே மூலங்காணுதல் வேண்டும்; என்னும் இரு நெறி முறைகளையுணர்த்துதற்கு, ஒரு சொற்றொகுதியை ஈண்டெடுத்துக் காட்டுவாம். மேலையாரிய மொழிகளிலுள்ள தமிழ்ச் சொற்களுள் ஒரு சில : குலவு - L. Curuo, to bend, E. Curve குரங்கு (வளைவு கொக்கி) குறங்கு (கொக்கி) D. King, Krink, a curl bend, crook E. Crank to bend, wind and turn E. Cringe A. S. Cringan, Crincan to bend with servility. கறங்கு (வளைவு, வட்டம்,காற்றாடி, சுழல்) - A. S. hring O. H. G. hing Icel, hringr, G. ring, D. King, Sw. ring, E ring. sw. Kring, about, around; Icel, Kringer, acircle, prov G. Krink, Kring, a ring, circle. குரவை - Gr. choros, a dance in a ring. L. chorus E. Chorus குருள் - D. Krullen, Dan Krolle, E. Crull, Curl, குருகு - A. S. Cran, D. Kraan, G. Krahu, Kranich; Icel, Trans, Dan trane. Armor. Karan, w. Garan, Gr. Geranos, L. Grus, E. Crane. கொக்கி - A. S. hoc. E. hook. D. hock, Icel. haki, G. haken, O. H. G. hako, L. G. hake. கொடுக்கு - Icel. Crokr, sw. krok, Don Crog, O. E. Crok, E. Croog, Dan Crog, D. Kruk, W. crwg, Gael, Crocan. O. F. Croc. ட.ர. போ ஒ.நோ : குடகு - coorg, அடைக்காய் areca கோணம் - Gr. Gonia, an angle. கோட்டை - L. Castrum. E. caster. மேற்காட்டிய தென் சொற்களும், மேலையாரியச் சொற்களும், சொல்லளவில் மட்டுமன்றி அடிப்பகுதியிலும் ஒலியும் பொருளும் ஒத்திருப்பதைக் காணலாம். அவற்றுள் மூலம் எவை, திரிபு எவை என்று கண்டுபிடித்தற்கு, அச்சொற்களெல்லாம் எம்மொழியில் ஒருங்கே வழிமுறைத் தொடர்புற்று ஒரு குடும்பமாக வழங்கிவருகின்றன என்று காணுதல் வேண்டும். அவை எம்மொழியில் எங்ஙனம் வழங்கி வருகின்றவோ அம்மொழியே அவற்றுக்கெல்லாம் மூலம் என்பது முடிந்த முடிபாகும். பல இடங்களில் ஒரு மரத்தின் இலையும் பூவும் காயும் கனியுமாகிய சினைகளே சிதறிக் கிடக்கு மாயின், அவை அண்மையிலோ, சேய்மையிலோ உள்ள ஒரு மரத்தினின்றே பறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இதற்கு மாறாக, அச்சினைகளிலிருந்தே அம்மரம் வந்ததென்று வலிப்பது உத்திக்கும் உண்மைக்கும் பொருந்தாத இடும்புக் கூற்றாகும். ஓர் ஊரிலுள்ள மக்கள் வேற்றூர் சென்று வாழின், தொன்று தொட்டு அவ்வூராரே எனத்தம்மைச் சொல்லிக்கொள்ள முடியாது. அங்ஙனம் சொல்லுதற்குத் தொன்றுதொட்டு வரும் உறையுள் உறவு, நட்பு, அயல் முதலியவற்றைக் காட்டுதல் வேண்டும். மேற்காட்டிய ஆரியச் சொற்கள் மேலை மொழிகளில் ஆங்காங்கே ஒன்றிரண்டாகச் சிதறிக் கிடப்பனவே யன்றி, தமிழிற்போல் மரபுத் தொடர்புற்ற ஒரு குடும்பமாக அல்லது குலமாக வழங்கி வருவனவல்ல. ஆரிய மொழிகளில் நூற்றுக்கணக்கான அடிப்படைச் சொற்கள் சொல்லாலும், பொருளாலும் தென் சொற்களை ஒத்திருப்பதால், அவற்றைத் தற்செயலாக நேர்ந்த ஒப்புமைகளெனத் தள்ளிவிடவும்முடியாது. அவற்றின் உண்மைத் தொடர்பைக் காட்டுதற்கு மொழி நூலொடு வரலாறு முதலிய பிற சான்றுகளுமுள. மேற்காட்டிய சொற்கட்கெல்லாம் மூலம் தென்மொழியே என்பது, பின்வரும் சொற்றொகுதியால் அறியலாகும். குல் என்பது வளைவுப் பொருள் தரும் ஒரு வேர்ச்சொல். அதனின்று, வளைவு கோணல் வட்டம் வளையம் உருட்சி திரட்சி, குழற்சி, சுழற்சி, சுற்றல் சூழல் முதலிய பல உளவியற்கருத்துள்ள பற்பல சொற்கள் தொடர்ந்து கிளைத்துள்ளன. அவை வருமாறு :- குல்-குலா-குலவு-குலாவு. குலவுதல் - வளைதல். குல்-குர்-குர-குரம்-வட்டமான குதிரைக்குளம்பு. குரல் - வளைந்த தினைக்கதிர். குரகம் - வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவை குரங்கு-வளைவு கொக்கி குரங்குதல்-வளைதல், குரவை-வட்டமாக நின்றாடுங் கூத்து-குரங்கு. குறங்கு-கொக்கி. குறங்கு-கறங்கு, கறங்குதல்-சுழலுதல், கறங்கு-காற்றாடி. கறங்கல்-வளைதடி, கூ. அ, திரிபு, ஒப்புநோக்க, முடங்கு. மடங்கு, குடும்பு-கடும்பு, குறகு-வளைந்த கழுத்துள்ள கருவி. குல்-குன்-குன்னா. குன்னாத்தல்-உடம்பு கூனிப்போதல். குனி, குனிதல்-வளைதல், வணங்குதல். குனிப்பு-வளைந்தாடுங்கூத்து. குனுகு, குனுகுதல்-கடுஞ் சிரிப்பில் உடம்பு வளைதல் கூனல்-வளைவு முதுகுவளைவு. கூனி-வளைந்தசிற்றிறால் கூனை-கூனுள்ள தோற்சால். குல் குளை-குளவி-கொடுக்குள்ள தேனீ. குளிகை-மருந்துருண்டை, வளைதடி, திரட்சி-குழல், குழலுதல்-சுருள்தல். குல் குண்-குண்டு-உருண்டை, உருட்சி, திரட்சி. குண்டம்-உருண்டு திரண்ட பன்றி, குண்டன்-உருண்டு திரண்டவன், வளைந்தது. குண்டுசட்டி-உருண்ட சட்டி. குண்டா-குண்டுசட்டி, குண்டை. உருண்டு திரண்ட காளை. குண்டுச்சட்டி. குண்டலம்-வட்டம், சுன்னம் குண்டான காதணி. குண்-குண-குணகு. குணகுதல்-வளைதல், குணங்கு. குணங்குதல், வளைதல். குணக்கு-வளைவு. குணலை-உடல்வளைவு, வளைந்தாடுங் கூத்து குணி-முடமானது. கணுக்கு-கதலணியும் உலோக வளையம். குணுக்குதல் வளைத்தல். குள்-குட்டு-முட்டை (தெலுங்குச் சொல்லான திசைச்சொல்) குடம்-உருட்சியானது, வளைவு, குட-வளைந்த. குடவு, குடவுதல்-வளைதல். குடக்கம் வளைவு, குடக்கி-வளைவானது. குடக்கியன்-கூனன். குடங்கு-குடங்குதல்-வளைதல். குடந்தம்-வளைவு, வணக்கம், வழிபாடு. குடந்தை-வளைவு. குடா-வளைவானது குடி-(வளைந்த) புருவம். குள்-குய்-குயம்-வளைந்த அரிவாள். குள்-கூள்-கூளி-வளைந்த வாழைப்பழம். கூள்-கூடு-வட்டமான நெற் களஞ்சியம். கள்-கொள்-வளைந்த காயிலுள்ள கரணம். கொள்-கொட்பு-சுழற்சி சுற்றுதல். கொட்டு-கொட்குதல்-சுற்றுதல். (கொட்கி)-கொக்கி-வளைந்த மாட்டுறுப்பு. (கொட்கு)-கொக்கு-வளைந்த கழுத்துள்ள ஒரு நீர்ப்பறவை வகை. கொக்கை-கொக்கி. கொட்டு-நெற்கூடு. கொட்டாராம்-களஞ்சியமுள்ள நிலம். கொட்டை-உருண்டை வடிவம், உருண்டு திரண்டவிதை, உருண்டைத் தலையணை. கொடு-வளைந்த. கொடுமரம்-வில். கொடுக்கு-வளைந்த முள்ளுறுப்பு. கொடுக்கன்-தேள். கொடுக்கி- தேட்கொடுக்கி (ஒருசெடி) கொடி-வளைந்த தண்டுள்ள செடி கொடிறு-குறடு, குறடு போன்ற வாயலகு. குல்-(கூல்)-(கொல்)-கோல்-உருண்டு திரண்ட கொம்பு, கோற்றொடி-திரண்ட வளையல், கோலி-உருண்டை. கொள்-கோள்-உருண்டையான (அல்லது சுற்றிவரும்) விண்மீன். கோளம்-உருண்டை. கோளா-உருண்டையான சிற்றுண்டி வகை. கோளம்-கோரம்-வட்டில் (வட்டமான கலம்) கோள்-கோண்-கோணுதல்-வளைதல் சாய்தல், கோணம்-சாய்வு, சாய்ந்த மூலை. கோணன்-கூனன். கோணல்-சாய்வு, நெளிவு. கோணை-சாய்வு, பிறழ்வு. கோணையன்-மதிபிறழ்ந்தவன், குதருக்கவாதி. கோண்-கோடு-வளைவு, கோடுதல்-வளைதல். கோடல்-வளைவு, வளைந்த இதழுள்ள காந்தட்பூ. கோடி-வளைவு. கோடை-காந்தள். கோட்டம்-வளைவு, மதிலாற் சூழப்பட்ட கோயில், நிலாவைச் சூழ்ந்த ஊர்கோள் கோட்டம்-கோட்டகம். கோட்டை-வட்டமான நெற்களஞ்சியம், மதிலாற் சூழப்பட்ட இடம், நிலாவைச் சூழ்ந்த ஒளிவட்டம். இக்குடும்பத்தைச் சேர்ந்த பிற சொற்களுமுள. விரிவஞ்சி இம்மட்டில் நிறுத்தப் பெற்றது. தமிழ்ப்பொழில் - துணர் 32 மலர் 1 ப-9-18. (1956, ஏப்பிரல், மே) 7 வடசொல் தென்சொல் காணும்வழிகள் வேத ஆரியருள் விரலிட்டெண்ணத்தக்க ஒருசிலர் கிமு 2000 போன்ற பண்டைக் காலத்தே தமிழகத்து வந்தமர்ந்ததாகத் தெரியினும், கடைக்கழகக் காலத்திலேயே வடமொழியால் தமிழ் தாக்குண்ட நிலைவிளங்கித் தோன்றிய தின் விளைவாக வடமொழி தென்மொழிப் போராட்டம் அல்லது வடசொல் தென்சொல் வேறுபாட்டுணர்ச்சி தொடங்கியிருக்கின்றது. ``இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென் நனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே'' (தொல்.) என்னும் தொல்காப்பிய நூற்பா (எச்சவியல்) தொல்காப்பியர் காலத்தில் (கி.மு 7ஆம் நூற்றாண்டு) வடசொல் வேறுபடுத்தியுணரப்பட்டமையை உணர்த்துமே யன்றி தூய தமிழரால் வெறுத்தொதுக்கப்பட்டமையை - உணர்த்தாது. சென்ற நூற்றாண்டின் முற்பகுதிவரை வடமொழியிலுள்ள சொற்க ளெல்லாம் பெரும்பாலும் வடசொல்லே என்னும் தவறான கருத்து, தமிழ ருள்ளத்திலும் நிலைத்திருந்தது. வடமொழியிலும் தென்சொற்களுண்மை கண்டு அவ்வுண்மையை முதன்முதல் வெளிப்படுத்தியவர் பண்டாரகர் (Dr.) குண்டர்ட்டு, கால்டுவெல், போப்பு என்னும் மேலையறிஞராவர். இவருள் இடைஞர், தலைசிறந்தவர். அவரும், தென் சொல்லை வடசொல்லினின்று பிரித்துணரும் வழிகளைக் கூறினரேயன்றி, வடசொல்லைத் தென்சொல்லி னின்று பிரித்துணரும் வழிகளை கூறினரல்லர். ஏனெனின் அது அவரது திரவிட ஒப்பியல் இலக்கணத்திற்குத் தேவையானதன்று. ஆயினும், அவர் தென்சொற்குக் கூறிய விதிகளைத் துணைக்கொண்டே வடசொற்கும் சிலவற்றை வகுத்துக் கொள்ளலாம். அவை வருமாறு. வடசொற்கள்: 1. மூலவடிவில் ஆரியவெழுத்தும் ஆரிய மெய்ம்மயக்கமும் அமைந்திருப்பன. 2. பண்டைத் தமிழில் வழங்காது பிற்காலத் தமிழில் வடமொழியி னின்று வந்து வழங்குவன. 3. தமிழில் வேரின்று ஆரியத்திலேயே வேர் கொண்டிருப்பன. 4. தமிழும் தமிழினின்று திரிந்த திரவிடமுமான எல்லா மொழிகளிலும் வழங்காது, அவற்றுள் ஒன்றால்மட்டும் வழங்குவன. 5. மேலையாரிய மொழிகளிலும் வழங்குவன. 6. ஆரியத்திற் சிறப்புப் பொருள் அல்லது சிறப்பு வினைத் தொடர்பு கொண்டிருப்பன. சில தென் சொற்கள் தமிழினும் வட மொழியிற் பெருவாரியாய் வழங்கு வதால் பெரும்பான்மை வழக்கு வடசொன்மைக்குச் சான்றாகாதென வறிக. மேற்கூறிய விதிகள் அல்லது நிலைப்பாடுகள் ஒன்றிற்கு மேற் பொருந்தியிருப்பின், அவற்றிலேமிகுதிக்குத் தக்கவாறு வடசொன்மை தேற்றமாம் ஆயினும், அவை கணித முறைப்பட்ட துல்லிப விதிகளல்ல. ஆதலால், பரந்தமொழி நூற்கல்வியும் நெடுநாட் சொல்லாராய்ச்சியும் சிறந்த நடுநிலையுமிலவேல், அவை பெரிதும் பயன்படா, உண்மையான தென் சொல்லைத் தென்சொல்லென்று கூறுவதும் நடுவின்மையில் எதிரிகள் கூறலாம். ஆயின் ஆழ்ந்த ஆராய்ச்சியும் தூயமனச் சான்றும் வலியுறுத்தி எவருக்கும் எள்ளளவும் அஞ்சவேண்டுவதின்று சிலர் அறிவாராய்ச்சி வலிமையின்றித் தம் பட்டம் பதவிச் சிறப்பால் ஒரு முடிபிற்கு வருகின்றனர், அது மிகத் தவறாம். பண்டைத் தமிழில் வழங்காது பிற்காலத் தமிழில் இருவகை வழக்கிலும் வழங்கும் வடசொற்களுள் `பசு' என்பது ஒன்றாகும். இது வடசொல்லென்பது வெளிப்படையாயினும், ஒரு சார் தமிழ்ப் பேராசிரியர் இதைத் தென்சொல் லென்பதால், மாணவரும் ஆராய்ச்சியில்லாதாரும் மயங்வதற்கு, இடனா வதுடன், அவரவர் விரும்பியவாறே பல வட சொல் தென்சொலெனவும் பல தென் சொல் வடசொலெனவும் பட்டு, உண்மையான ஆராய்ச்சி வலியற்றுப் போய் விடுகின்றது. பல அடிப்படைத் தென்சொல்லை வட சொல்லென்று கூறும் வடமொழியாளர் கூற்றும் வலியுற்றுவிடுகின்றது. பசுவைக் குறிக்கும் தூயதென்சொற்கள், ஆ (ஆன்) கறவை. குடஞ்சுட்டு, குரால், கோ, சுரை பெற்றம் (இருபாற்பொது) என்பன. இவற்றுள், கறவை என்பது பால் கறக்கப்படுவது. சுரை என்பது மடி பொருத்தது; குடஞ்சுட்டு என்பது ஒருகுடம் பால்கறப்பது; குரால் என்பது புகர் (கபில) நிறத்தது. பெற்றம் என்பது மிகப் பருத்துயர்ந்தது; ஆ, கோ என்பன பொதுப்பெயர். இவற்றுள் ஆ என்பது தமிழிலும் திரவிடத்திலும் மட்டும் வழங்கும்; கோ என்பது ஆரியத்திலும் வழங்கும். E. cow, A, sax, cu, G. kub, D. and Dam koe, Ice, ku, Sc, kye, skr. go, gaus. கோவை மேய்ப்பவன் அல்லது வளர்ப்பவன் கோவன், கோவன் - கோன் - கோனான். ஒப்புநோக்க ; ஆயன் - ஆவை வளர்க்கும் இடையன் பசு என்னும் வடசொல், பாசத்தினாற் கட்டப்படுவது என்னும் வேர்ப் பொருளது. பாசம் கயிறு, ஆரிய வேள்வியிற் கட்டப்படும் உயிரிகள், மாந்தன், ஆன், குதிரை, வெள்ளாடு, செம்மறியாடு என்னும் ஐந்தென்று அதர்வவேதம் (xi, 2, 9 etc) கூறுவதாக, மானியர் வில்லியம் தம் வட மொழியாங்கில வகராதியிற் காட்டுவர். (பக்-611) பசு என்பது முதற்காலத்தில், பொதுவாக, கட்டப்பட்ட ஒரு விலங்கை மட்டும் தனிப்படவும் தொகுதியாகவும் (இருபாற் பொதுப் பெயராகக்) குறித்து, பின்பு வேள்வியுயிரிப் பெயராக வழங்கி, அதன்பின் ஆவிற்குச் சிறப்பாக வழங்கி வந்திருக்கின்றது. ஆரிய வழக்கைத் தழுவியே, பசு என்னும் சொல் தமிழிலும், செய்யுள் வழக்கில் விலங்கு, காளை என்னும் பொருள்களில் வழங்கியிருக்கின்றது. ``பசுவேறித் திரிவானோர் பவன்'' (தேவா. 760, 4) என்னுமிடத்திற் காளையையும், ``பசுக்களைப் போலச் செல்லும் நடையால்'' (பதினொ. பட்டினத். திருவேகம். 32) என்னுமிடத்தில் விலங்கையும், பசு என்னும் சொல் குறித்தல் காண்க. ஆன் என்னும் தூயபெண்பாற் சொல், தமிழ் மரபிற்கு மாறாக, ``ஆன்முகத்தன் அடற்கண்நாயகன்'' (கந்தபு. பானுகோ. 95) என்னுமிடத்திற் காளையைக் குறிப்பதும் ஆரிய வழக்கைத் தழுவியே. பசு என்பது ஆவை மட்டுங் குறிப்பது உலக வழக்காகும். வேத ஆரியர் தமிழரோடு தொடர்பு கொண்டு சிவநெறிக்கொண் முடிபு (சைவசித்தாந்தம்) கற்ற பின்னரே, பாசம், பசு, பசுபதி என்னும் பெயர்கள், முறையே, தளை (மலம்), புலம்பன் (ஆன்மா). இறை என்னும் பொருள்களில் அணியியன் முறையில் ஆளப்பெற்றன. பசு என்னும் சொற்கு இனமாக, இலத்தீனில், Peck (Cattle) bous என்னும் சொற்களும், கிரேக்கத்தில் bous என்னும் சொல்லும் உள்ளன. இவற்றுள் பின்னிரண்டையும் Gaus என்னும் வட சொல்லோடிணைப்பர். மேலை மொழிநூலரும் அகராதியாளரும், இது அத்துணைப் பொருத்தமாகத் தோன்றவில்லை. ஆயினும் ககரத்திற்கும் பகரத்திற்கும் போலித் தொடர்பிருப்பதால், அதை முற்றும் மறுத்தற்கில்லை. Pecu என்னும் இயற் சொல்லினின்று திரிந்து பணத்தைக் குறிக்கும் Pecunia (money) என்னும் இலத்தின் பெயர்ச் சொல்லும், Pecuniary என்னும் ஆங்கிலப் பெயரெச்சமும், செல்வத்தைக் குறிக்கும் மாடு என்னும் சொல்லொடு ஒப்பு நோக்கற்குரியன. ``கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை'' (340) என்றார் திருவள்ளுவர். கோ (ஆன்) என்னும் தென்சொல் மேலையாரிய மொழிகளிலும் சென்று வழங்குவதும், pecunia என்றும் இலத்தீன் சொல் மாடு என்றும் தென்சொல் லொத்துச் செல்வத்தை யுணர்த்துவதும், பேராசிரியர் பி.டி.சீநிவாச ஐயங்காரும், பண்டாரகர் இராமச்சந்திர தீட்சிதரும் கூறியுள்ளவாறு, குமரிக்கண்டத் தமிழருள் ஒரு கூட்டத்தாரே மேலை நாடு சென்று ஆரியராக மாறி யுள்ளமையை உணர்த்தும். இதுகாறுங் கூறியவற்றால், பசு என்பது வடசொல்லேயென்றும், அதைத்தென் சொல்லென்பதால் பொய்யொடு கலந்த மெய்யும் பொய்யாகிப் பலதூய தென் சொல்லும் வடசொல்லாகத் தோன்று மென்றும், ஆதலால் அதனால் தீமையே யன்றி நன்மையில்லை யென்றும், பசும்புல்லைத்தின்பது பசுவென்பது சற்றும் பொருந்தாதென்றும், அறிந்துகொள்க. இனி, பாசம் என்னும் வடசொல், பசுமை, பசை, பாசி என்னும் தென் சொற்களுள் ஒன்றன் திரிபெனக் கொள்ள இடமிருப்பினும், இந்தியத் தோலாற் செய்யப்படும் பாதக்கூடு (boot) இந்தியக் காலணியாகாமை போன்றே, தென் சொல்லினின்று திரிந்து ஒரு சிறப்புப் பொருளை யுணர்த்தும் வடமொழித் திரிசொல்லும் தென் சொல்லாகாமை கண்டுகொள்க. தமிழ்ப்பாவை 4 ஆண்டுச் சிறப்புமலர் (மதுரை எழுத்தாளர் மன்றம்) 8 பாவை என்னுஞ் சொல் வரலாறு தமிழிலுள்ள இளமைப்பெயர்களுள் பார்ப்பு என்பது ஒன்றாகும். ``மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்(று) ஒன்பதும் குழவியோ டிளமைப் பெயரே,'' (1) ``அவற்றுள், பார்ப்பும் பிள்ளையும் பறப் பவற்றிளமை,'' (4) ``தவழ் பவை தாமும் அவற்றோ ரன்ன,'' (5) என்பன தொல்காப்பிய மரபியல் நூற்பாக்கள். பறவைக் குஞ்சும் சில ஊருயிரிகளின் (Reptiles) இளமையும் பார்ப்பெனப்படும் என்பது இவற்றால் தெரியவரும். சில விலங்குகளின் குட்டியும் பார்ப்பெனப்படும் என்று பிங்கல உரிச்சொற்றொகுதி கூறும். இது அத்துனைச் சிறப்புடைத்தன்று, தாயினால் மிகக் கவனித்துப் பார்க்கப்படு வதினால், பறவைக் குஞ்சு பார்ப்பு எனப்பட்டது. பார்த்தல் - பேணுதல், பேணிவளர்த்தல். பார்ப்பு என்னுஞ் சொல் பொருட்கரணியம் பற்றி, Nurs(e)ling என்று ஆங்கிலச் சொல்லை ஒத்ததாகும். சில ஊருயிரிகளின் இளமைக்கும் பார்ப்பு என்னும் சொல்லைத் தொல்காப்பியர் மாட்டெறிந்தா ரேனும், அது சிறப்பாகப் பறவையின் இளமைக்கே உரியதென்பதை, `சிறப்புடைப் பொருளை முற்படக்கிளதல்' என்னும் உத்தி பற்றி அதை முதற்கண் தனிப்படக் கூறியதாற் பெறவைத்தார். பார்ப்பு என்னும் சொல் பொருள் விரிபு முறையில் மக்கட்குழவி யையும் குழவி போன்ற பொம்மையையும் குறித்த போது ரகரங் கெட்டுப் பாப்பு, பாப்பா எனத் திரிந்தது. ஒ.நோ: கோர் - கோ, கோர்வை - கோவை. பாப்பா = 1. பறவைக் குஞ்சு 2. ஊருயிரியிளமை ``சிலம்பிக்குத் தன்சினை கூற்றம் நீள் கோடு விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் - வலம்படா மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன் பார்ப்பு நாவிற்கு நன்றல் வசை'' (சிறுபஞ்சமூலம். 9) E. Pupa = chrysalis. 3. மக்கட் குழவி. E. baeb, baby. 4. சிறுமி L. pup=Girl, pupa = girl. 5. விலங்கின் குட்டி, E. pup puppy = Young dog. 6. பொம்மை. L. Pupa= doll. of. Poupee = doll, playtning, toy; F. Poupette = doll, dim of pupa (girl). E. Puppet = Small figure representing human being E. Poppet = Small person. இட்டு என்பது, தமிழில் ஒரு சிறுமைப் பொருள் முன்னொட்டு, இட்டிடை=சிற்றிடை. இட்டேறி = சிறு வண்டிப்பாதை. இட்டு - of. ette, E. et, பாப்பா என்னுஞ் சொல் நாளடைவிற் பாவை என்று திரிந்தது. தெ. பாப்ப, க. பாப்பெ. ம.பாவ பாவை = 1. படிமை, பொம்மை ``மரப்பாவை நாணா லுயிர் மருட்டி யற்று'' (குறள். 1020) பொலம்பா லிகைகளும் பாவை விளக்கும் (மணி 1:45) 2. அழகிய உருவம். ``சித்திரப் பாவையின் அத்தக வடங்கி'' (நன். 40) 3. கருவிழியிற் பாவைபோல் தெரியும் உருவம். ``கருமணியிற் பாவாய் நீ போதாய்'' (குறள். 1125) 4. கருவிழி, L. pupillus, of. pupille, E. pupil. dim. of L. pupa. 5. பாவை போற் பூக்கு ங் குரவம்பூ. ``குரவம் பயந்த செய்யாப் பாவை'' (ஐங்குறு, 344) 6. பாவை போன்ற இஞ்சிக் கிழங்கு. ``செய்யாப் பாவை வளர்ந்து கவின் முற்றி'' (மலைபடு. 125) ``பாவை யிஞ்சியுங் கடவைச் சுண்ணமும்'' (பெருங், உஞ்சைக். 53:21 7. பாவை போல் அழகிய பெண். ``பாடக மெல்லடிப் பாவை'' (தேவா. 538:1.) 8. சிறுமி. 9. பாவை நடம். ``திருவின் செய்யோ ளாடிய பாவையும்'' (சிலப். 6:61). 10. பாவை நோன்பு. ``நம் பாவைக்குச் செய்யுங் கிரிசைகள்'' (திங். திருப்பா.2) 11. திருவெம் பாவை. 12. திருப் பாவை. ``தொல்பாவை பாடியருள வல்ல பல்வளையாய்'' (திங்திருப்பா. தனி) 13. தோற் பாவை. பாவை என்னும் நூல் உலக வழக்கிற் பாவாய் என்றுந்திரிந்து பெண்ணியற் பெயராகும். இது காறும் கூறியவற்றால் பாவை என்னுஞ் சொல்லின் சிறப்பையும், அது மேலையாரிய மொழிகளினுஞ் சென்று வழங்கும் பரப்பையும் கண்டுகொள்க. தமிழ்ப்பாவை எழுத்தாளர் மன்றம், 8ஆம் ஆண்டு சிறப்பு மலர் (1966-67) 9 திரு என்னும் சொல் தென்சொல்லா, வடசொல்லா? தமிழில் தற்பவமாக, அதாவது வடசொல் திரிபாக அல்லது சிதைவாக ஒரு சாராரால் கருதப்படும் சொற்களில் திரு என்பதும் ஒன்று. ``நிலந்தருதிருவிற் பாண்டியன் அவையத்து'' என்று தொல்காப்பியச் சிறப்புப்பாயிரத்திலும். ``திருவுடைத் திருமனைனயது தோன்று கமழ்புகை'' (379) ``விட்டோரை விடா அள் திருவே'' (358) ``திருளி லல்லது தொலைவில் லறியார்'' (20) என்று புறநானூற்றிலும். ``திருச் செற்றுத் தீயுழி யுரித்து விடும்'' (168) ``சேருந் திறனறிந் தாங்கே திரு'' (179) ``திரு நுதல் நல்லவர் நாணுப்பிற'' (1011) ``நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்'' (1072) என்று திருக்குறளிலும். ``இருநிலங் கடந்த திருமறு மார்பின்'' (20) என்று பெரும்பாணாற்றுப்படையிலும் திருநுதல் (2:41), திருத்தக்கீர் (11:111), திருஞெமிர கலம் (28:157), திருமொழி (10:12), திருமகள் (5:213), திருமால் (17) என்று சிலப்பதிகாரத்திலும், இங்ஙனமே பிற நூல்களிலும் திரு என்னும் சொல் பல்வேறு பொருள்களில் வழங்கப்பட் டுள்ளது. உலக வழக்கில், திருக்கலியாணம் திருக்கார்த்திகை திருக்குறள் திருக்கூத்து திருநாள் திருநீறு திருப்பனி திருப்பதி திருப்பதிகம் திருப்பாற் கடல் திருப்புகழ் திருமகள் திருமான் திருமங்கலம், திருமங்கலியம் திருமணம் திருமலை திருமால் திருமுகம் திருமுடி திருமுறை திருமுன் திருமேனி திருவடி திருவரங்கம் திருவருள் திருவள்ளுவர் திருவாக்கு திருவாசிகை திருவாடுதண்டு திருவாயமலர்தல் திருவிழா திருவிளக்கு திருவிளையாடல் திருவுளம் திருவேங்கடம் திருவோடு முதலிய நூற்றுக்கணக்கான சொற்கள் தொன்று தொட்டு வழங்கிவருகின்றன. தெய்வப் பெயர் அடியார் பெயர் தெய்வத்தின் அல்லது, தெய்வத் தொடர்புள்ள சினைப்பெயர் ஆடையனிப் பெயர் உளவுப் பெயர் வினைப் பெயர் இடப்பெயர் நூற்பெயர் முதலியன, தம் தூய்மையைக் குறித்தற்குத் திரு என்னும் அடைபெறுவது தொன்று தொட்ட வழக்காகும். எ-கா :- தெய்வப் பெயர் திருமுருகன் அடியார் ,, திருக்கண்ணப்பர், திருமழிசை யாழ்வார் சினைப் ,, திருச்செவி, திருக்கண் மலர் ஆடையணிப் பெயர் திருப்பரிவட்டம், திருமாலை, திருக்கைக்காறை உணவுப் ,, திருக்கன்னலமுது, திருப்படிமாற்று வினைப் ,, திருப்பள்ளி யெழுச்சி, திருவூறல், திருக்காட்சி, திருக்கை வழக்கம். இடப் ,, திருக்கற்றளி, திருமுற்றம் திருப்பரங்குன்றம் நூற் ,, திருமொழி, திருநெடுந்தாண்டகம், திருக்கடைக்காப்பு பொருட் ,, திருவலகு, திருப்படிக்கம், திருமுட்டு குணப் ,, திருக்குறிப்பு, திருக்கோலம் வாத்தியப் ,, திருச்சின்னம், திருத்தாளம் அரசர் தெய்வத் தன்மையுள்ளவராகக் கருதப்பட்டதினால், அவர் தொடர்புள்ள சொற்களும் திரு என்னும் அடைபெற்றன. எ-கா : திருவாய்க் கேள்வி, திருமந்திரவோலை, திருமாடம், திருமாடம், திருமுகக்கணக்கு, திருமுகக்காணம், திருவாணை, திருமூப்பு, திருவாண் டெழுத்திடுதல், திருநல்லியாண்டு, திருக்கைச் சிறப்பு. அடியார்கள் தெய்வத்தன்மையுள்ளவராதலின், அவர்களொடு தொடர்புற்றவற்றின் பெயர்களும் திரு என்ற அடைபெறும். எ-கா : திருக்குகை, திருக்கூட்டம், திருக்கோவை, திருமடம், திருத்தொண்டர், திருநாள், (திருநட்சத்திரம்), திருவேடம். திருமகன், திருமகள் முதலிய பெயர்களில் திரு என்னும் அடைமொழி பிரிக்க முடியாதவாறு பிணைந்துள்ளது. திரு என்னுஞ் சொல் மேற்கூறியவாறு அடைமொழியாய் மட்டுமன்றி, தனிச் சொல்லாகவும் வந்து, முறையே, செல்வம், சிறப்பு அழகு ஒளி செழிப்பு பேறு (பாக்கியம்) தெய்வத்தன்மை தூய்மை நன்மை நல்வினை கணியன் (சோதிடன்) மங்கலம் மங்கிலியம் ஒருவகைத் தலையணி மார்பில் தோன்றும் வீற்றுத் தெய்வம் முதலிய பொருள்களைத் தரும். இவற்றுள், செல்வம் என்னும் பொருளே முதல்தோன்றியதும் பிறவற்றுக்கெல்லாம் அடிப்படையுமாகும். ``பொருளல்லா தாரைப் பொருளாகச் செய்யும் பொருள் தில்லை பொருள்'' ``இல்லாளை இல்லானும வேண்டாள்மற் றீன்றெடுத்த செல்லா தவன்வாயிற் சொல்.'' (தாய் வேண்டாள் என்பவற்றால் கிறப்பும்) `அன்னமொடுங்கினால் ஐந்து மொடுங்கும்' என்றும் எளிய இனத்தாரைக் காரொக்கல் (கரிய சுற்றத்தார்) என்றும், ``தரித்திரம் மிக்க வனப்பினை யொடுக்கிச் சரீரத்தை யுலர்த்தா வாட்டும்'' என்றும் கூறுவதால் அழகும் ஒளியும்; ``திருவுடை மன்னரைக்காணில் திருமாலைக்கண்டேனே யென்னும்'' என்பதால் தூய்மையும் செல்வத்தாலுண்டாதல் காண்க. இங்ஙனமே பிறவும். திரு என்னும் சொல், முதலாவது பொருட் பெயராய்ப் பின்பு பண்புப் பெயராயும் வழங்கி வருகின்றது. இச்சொல்லின்று திருமை (கந்த. முதனாட்.35) திருவம் (சிலப்.12) முதலிய பண்புப் பெயர்களும், திருவன் (திவ். இயற். 2, 84) திருவாளன் (திவ். பெரியதி. 5, 5, 1) திருவாட்டி (திருக்கோ. 294 உரை) முதலிய உயர்திணைப் பெயர்களும் தோன்றியுள்ளன. திருவன் 0 1. செல்வன், பெருமகன் திருவாளன் 0=2. திருமால் திருவாட்டி = 1. செல்வி, பெருமகள்; 2. திருமகள்; 3. தேவி. திருவன் என்னும் பெயர் பெண்பாலில் திருவி என்றாகும். திரு என்னும் `சொல்லின் வேர்' உயிரெழுத்துகளில் ஈகாரம் அல்லது இகரம் அன்மைச் சுட்டும் கீழ்மைச் சுட்டும் பின்மைச் சுட்டுமாகும். அண்மைச் சுட்டை, இவன் இது இங்கு இவன் முதலிய சொற்களாலும்; கீழ்மைச் சுட்டை, இகம் இகு இழி இளி இறங்கு முதலிய சொற்களாலும். பின்மைச்சுட்டை இடை இடறு இணுங்கு இழு இரை இறை முதலிய சொற்களாலும் அறியலாம். (இதன் விரிவை எனது சுட்டுவிளக்கம் என்னும் சுவடியிற் கண்டு கொள்க.) இரை என்னுஞ்சொல்லுக்கு, ஒலித்தல் சீறுதல் மூச்சுவாங்குதல் வீங்குதல் முதலிய வினைப்பொருள்களும் ஒலி அஃறிணையுயிரிகளின் உணவு நாகப்பூச்சி முதலிய பெயர்ப் பொருள்களும் உள்ளன. இவற்றுள், மூச்சுவாங்குதல் வீங்குதல் உணவு நாகப்பூச்சி என்னும் பொருள்கள், இழுத்தல் என்னுங்கருத்தை அடிப்படையாகக் கொண்டன. மூச்சுழுத்தலுக்கும், மூச்சிழுக்கும் ஈளை (காச) நோய்க்கும் இரைப்பு என்றும் இழுப்புள்ள மாந்த நோய்க்கு இரைப்புமாந்தம் என்றும், இழுப்பை யுண்டாக்கும் எலிக்கு இரைப்பெலி என்றும் பெயர். இகரச் சுட்டடிப்பிறப்பினாலும் ரகரழகரப் போலியாலும் இழுப்புப் பொருளாலும் இரை என்னுஞ்சொற்கு இனமானதாகும். இரை என்னுஞ்சொல் முதலில் தகரமெய்பெற்றுத் திரை என்றாகும். திரைத்தல் இழுத்தல். வேட்டியை மேல் இழுத்துக் கட்டுதலைத் திரைத்துக் கட்டுதல் என்பது தென்னாட்டு வழக்கு. ஆடையை இழுத்திழுத்து வைத்தாற்போன்ற அலைக்கும், தோற்சுருங்கற்கும், ஒருபுறமாகவும் கீழாகவும் இழுக்கப்படுகின்ற படுதாவுக்கும், திரை யென்னும் பெயரிருத்தலை நோக்குக. ïiu>âiu, ஒப்பு நோக்குக: v©>nr‹. ஆடையாவது நீராவது திரையும் போது, திரைந்தவிடத்தில் திரட்சி யுண்டாவதால், திரைதலுக்குத் திருஞதல் என்னும் பொருளும் உண்டாயிற்று. பால் திரஞதலைத் திரைதலென்று கூறுவதை நோக்குக. திரள் என்னுஞ் சொல்லும் திரை என்பதினின்று திரிந்ததே. அலையானது ஓரிடத்திலில்லாமல் இடைவிடாது அலைந்து கொண்டிருப்பதால், அலைதல் வினை அலையைக் குறிக்கும் திரை என்னும் சொல்லின் திரிபான திரி என்னுஞ் சொல்லாற் குறிக்கப்பட்டது. திரு என்னுஞ்சொல் மேற்கூறிய திரை திரள் திரி என்னும் மூன்று சொற்கும் சொல்லாலும் பொருளாலும் இனமாகும். திரை போல் ஓரிடத்தி லில்லாமல் என்றும் அலைந்துகொண்டிருப்பது என்னும் பொருளிலாவது, மக்களால் திரட்டப்படுவது என்னும் பொருளிலாவது, செல்வத்திற்குத் திரு என்னும் பெயர் தோன்றியிருக்கலாம். ``ஆறிடு மேடு மடுவும்போ லாஞ்செல்வம்'' ``அகடுறயார்மாட்டு நில்லாது செல்வஞ் சகடக்கால் போல்வரும்'' என்று கூறியதனாலும், செல்வம் என்னும் பெயருக்குச் செல்வது என்பது பொருளாதலாலும், செல்வம் நிலையற்றது என்றும், ஆக்கப்படுவதால் ஆக்கம் என்றும் தேடப்படுவதால் தேட்டு என்றும் செறிந்திருப்பதால் வெறுக்கை யென்றும் பெயர் பெற்றிருப்பதினால் செல்வம் திரட்டப்படுவது என்றும், இரு கருத்துகள் நம் முன்னோர்க்குத் தோன்றியிருந்தமை புலனாம். இவ்விரண்டிலொன்று திரு என்னுஞ் சொல் தோன்றுவதற்குக் காரணமா யிருந்திருக்கலாம். திரை என்னுஞ் சொல்லே செல்வத்தைக் குறியாமல், அதன் திரிபான திரு என்னுஞ் சொல் குறிப்பதேன் எனின், சொல்லின் பொருள் மாறும்போது சொல்லும் மாறவேண்டும் என்னும் சொல்லாக்கப் பொதுவிதி பற்றி யென்க. அல்லாக்கால் பல பொருள்கள் உடன்மயங்கிக் கருத்துணர்வு தடைப்படு மென்க. திரை என்பதிலிருந்து திரு என்பது தோன்றியிருத்தல் திருப்பாற் கடலிலிருந்து திருமகன் தோன்றினான் என்னுங் கதையை நிலையுறுத்தும். திரை = கடல். திரை = திருமகள். ``திரைகட லோடியுந் திரவியந் தேடு'' ``நீர்போயும் - ஒன்றிரண்டாம் வாணிகம் இல்'' என்பவற்றாலும், பட்டினப்பாலை சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய வற்றாலும், பண்டைக்காலத்திலும் நீர் வாணிகத்தாலேயே பெரும் பொரு ளீட்டப்பட்டமை அறியப்படும். கடல் போய் வந்த செல்வத்தை கடல் தந்த தென்று கூறுதல் பொருத்தமானதே. மேலும் செல்வத்தின் சிறந்த வகையான முத்தே பெரும்பாலும் கடலிலிருந்தெடுக்கப்படுவது இதனாலும் செல்வம் கடலில் பிறந்ததாகக் கூறலாம். செல்வத்தின் உருவகமே அல்லது ஆட்படையே (personification) திருமகளாதலின், அவள் திருமாலின் இருப்பிடமாகக் கூறப்படும் திருப்பாற்கடலினின்று தோன்றினதாகக் கூறப்பட்டாள் என்க. (வடமொழியிலுள்ள திரவியம் என்னும் சொல் திரவம் என்பதினின்றே தோன்றியது போலும்!) ஆகவே, திரு என்னுஞ் சொல், தனிமொழியாகவும் அடைமொழி யாகவும் முதலாவது செல்வப்பொருளிலும் பின்பு அதன் வழிப்பட்ட பல பொருள்களிலும் தொன்றுதொட்டு வழங்கிவரும் தனித் தமிழ்ச் சொல்லாதல் பெறப்படும். இலத்தீன் கிரேக்கு ஜெர்மானியம் முதலிய மேலையாரிய மொழிகளில் இச்சொல்லில்லாமையால், இது வடசொல்லன்று என்பதும் வெளியாம். ஆரியர் நாவலந்தேயத்திற்கு (இந்தியாவிற்கு) வந்தபின், வடமொழியிற் கலந்துபோன நூற்றுக்கணக்கான திராவிட அல்லது தென்சொற்களில் திரு என்பதும் ஒன்றாகும். திரு என்னும் தென்சொல்லே வடமொழியில் ஸ்ரீ என்றாகி, பின்பு சீ எனத் தமிழிற் சிதைந்து வழங்குகின்றதென்க. இப்போது தமிழ்நாட்டில் கள்ளிக்கோட்டையென மேல்கரைத் துறைநகராகிய கோழிக்கோட்டிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதியான துணி ஆங்கிலத்தில் கலிக்கோ (Calico) என்றும் பின்பு அதன் வழியாய்த் தமிழில் கலிக்கா என்றும் வங்காளத்தில் காளிக்கோட்டம் என்னும் நகர்ப் பெயர் ஆங்கிலத்தில் கல்குற்றா என்றும் பின்பு அதன் வழியாய்த் தமிழில் கல்கத்தா என்றும் வழங்குவதை நோக்குக. கோழிக்கோடு காளிக்கோட்டம் என்னுமிரண்டும் தனித்தமிழ்ச் சொற்களாகும். fŸ>fhs«>fhË. கள்=கருப்பு. கோடிய மதில் கோட்டம். கோடுதல் கோணுதல் அல்லது வளைதல். கோழிக்கோடு > Calica > கலிக்கா. காளிக்கோட்டம் > Calcutta > கல்கத்தா. திரு என்பது ஸ்ரீ என்று திரியவே, திருமான் என்பதை ஸ்ரீமான் சீமான் என்றும் திருமாட்டி என்பதை ஸ்ரீமாட்டி சீமாட்டி என்றும் சொல்லவும் எழுதவும் தலைப்பட்டனர். திருமான் என்பது திருமகன் என்பதன் மரூஉ. ஒ.நோ : bgUkf‹>bgUkh‹. பெருமானுக்குப் பெண்பால் பெருமாட்டியாதல் போல, திருமானுக்குப் பெண்பால் திருமாட்டியாகும். ஸ்ரீ என்பது திரு என்பதன் திரிபேயாதலால், ஸ்ரீ அல்லது சீ என்னும் அடைமொழி பின்வருமாறு தனித்தமிழில் எழுதப்படும். வடமொழி வடிவம். தென்மொழி வடிவம் ஸ்ரீ திரு மகா ராஜ ராஜ ஸ்ரீ மா அரசு அரசத்திரு ம. - - ஸ்ரீ பேர் அரசு அரசத்திரு ஸ்ரீலஸ்ரீ திருவத்திரு திருப்பெருந்திரு சீகாழி திருக்காழி சீகாளத்தி திருக்காளத்தி. திருநாவுக்கரசு திருமங்கையாழ்வார் முதலிய பெயர்களில் வரும் திரு என்னும் அடை ஆங்கிலத்தில் அடியார் பெயர் முன் சேர்க்கப்படும். St. (Saint) என்பதற்குச் சமமாய்த் தூய்மை குறிப்பதாயிருப்பதால், அடியாரல்லாத பிற மக்களைக் குறிக்கும்போது திருவாளர் திருவாட்டியார் என்ற அடைகளையே முறையே ஆண்பாற்கும் பெண்பாற்கும் வழங்குவது தக்கதாகும். திருவாளன்மார் திருவாட்டிமார் என்பன பலர்பால் அடைகள். சீகாழியைச் சீர்காழியென்று வழங்குவது சரியாய்த் தோன்றவில்லை. சிறு தனம் என்பது ஸ்ரீ தனம் எனத் தவறாய் வழங்குகிறது. இதுகாறுங்கூறியவற்றால், திரு என்பது தென்சொல்லே யென்றும் அதன் திரிபே ஸ்ரீ யென்றும் தெரிந்துகொள்க. 10 `உத்தரம்' `தக்கணம்' எம்மொழிச் சொற்கள்? (நமது பாவாணர் அவர்கள் தனித்தமிழ் இயக்கக் காவலர். தமிழுக்குத் தனித் தமிழில் அகரமுதலியை (டிக்சனரி) தொகுத்தளிக்கும் பொறுப்பை நமது அரசு இவரிடம் தான் ஒப்படைத்துள்ளது. இவரன்றி அப்பணிக்கு அறிஞர் யாருளர்? மன்றம் 1968 இல் இப்பெருமகனாரின் படைப்புக்களை வெளிக்கொணர உருபா 7500 கொண்ட தொகையை மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்களைக்கொண்டு அளித்துப் பெருமை கொண்டது) தமிழின் சொல்வளத்தை அறியாதார், வடமொழி கடன் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான தென் சொற்களையும் வடசொற்களென்றே மயங்கி வருகின்றனர். அத்தகைய சொற்களுள், உத்தரம், தக்கணம் என்பன இரண்டாம். திரவிடனின் முன்னோனான தமிழன் பிறந்தகமாகிய குமரிநாட்டில், முதற்கண் தோன்றிய நாற்றிசைப் பெயர்கள், தென், வடம், கீழ், மேல் என்பன. அவை 4ஆம் வேற்றுமைக்குரிய குவ்வுரு பேற்றுத் தெற்கு, வடக்கு, கிழக்கு (கிழ்க்கு) மேற்கு என்றாகி, பின்னர் ஆட்சி பற்றி முதல் வேற்றுமையாகவே வழக்கூன்றிவிட்டன. அவற்றுள், முன்னிரண்டும் நிலைத்திணைச் சிறப்பும், பின்னிரண்டும் நிலமட்டமும் பற்றியன. தென் என்பது தென்னை. தென்னுதல் கோணுதல், பெரும்பாலுந் தென்னிக் கொண்டிருப்பதால் தென்னை அப்பெயர் பெற்றது. தென்-தென்னை, தென்-தென்கு-தெற்கு. தென்னை இயற்கையாகத் தோன்றியது குமரிக்கண்டம். இக்காலத்தில் தென்னையின் பல வகைகள் இந்தோ மலையாவின் இயற்கையாக வளர்வதால் அந்நிலப் பகுதியே தென்னையின் பிறந்தகமாயிருக்கலாமென்று கருதப்படுகின்றது. ஆயின் அப்பகுதியும் குமரிக் கண்டத்தைச் சேர்ந்ததே யென்பதை அறிதல் வேண்டும். பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடைப்பட்ட எழு நூற்றுக்காவத நிலப்பரப்பிலிருந்த பல்வேறு நாடுகளைக் குறிக்குமிடத்து, அடியார்க்கு நல்லார் ஏழ்தெங்க நாட்டையே முற்படக் குறித்திருத்தலால், அந்நாடுகள் குமரிக்கண்டத்தின் தென்கோடியடுத் திருந்தமை பெறப்படும். தென்கோடியில் தென்னை சிறப்பாக வளர்ந்தத னாலேயே, தென்றிசை அப்பெயர் பெற்றிருத்தல் வேண்டும். இங்ஙனமே நாவலந்தேயத்தின் வடகோடியிலும் வடமரம் (ஆலமரம்) சிறந்து வளர்ந்ததனால். வடதிசை அப்பெயர் பெற்றது. வடநாவலப் பகுதியான வங்கத்தில் அது சிறப்பாக வளர்வதனாலேயே, மேலைப் பயிர் நூலாரும் அதற்கு ``வங்காள அத்தி'' (Ficushem-gllensis) என இலத்தீனப் பெயரிட்டிருக்கின்றனர். ஆலமரம் சூழ விழுதுவிட்டு வட்டமாக அகன்று வளர்வதால், வடம் எனப்பெயர் பெற்றது. வல்-வள்-வட்டு-வட்டம்-வடம். ஓ.நோ. பட்டம்-படம்=துணி. மானியர் வில்யம்சு சமற்கிருத-ஆங்கில அகர முதலியும், வட (vata) என்னும் ஆலமரப் பெயருக்கு வட்டம் என்பதையே பொருட் கரணியமாகக் கூறுகின்றது. வட்டம் - வ வட (வட்ட) வடமொழியென்னும் சமற்கிருதத்தில், வட்டம் என்பது வருத்த என்றேயிருக்கும்மென்பது கவனிக்கத் தக்கது. வட்டம் (தமிழ்) - வட்ட (பிராகிருதம்) - வ்ருத்த (சமற்கிருதம்) நில மட்டம் இற்றைத் தமிழ் நாட்டிற் போன்றே குமரிக் கண்டத்திலும், மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருந்ததனால், அவ்விரு திசைகளும் முறையே மேல் கீழ் எனப்பெயர் பெற்றன. உலகில் உயர்ந்த பனிமலை, ஒரு காலத்தில் கடற்கரையாய் இருந்தது. அன்று வடதிசை கடலால் தாழ்ந்தும், தென்திசை குமரிமலையால் உயர்ந்தும், இருந்தன. பின்னர் பனிமலையெழுந்த பின் இருதிசையும் சமமாயின. அதன் பின் குமரிமலை மூழ்கிவிடவே, வடதிசையுயர்ந்து தென்திசை தாழ்ந்தும் போயின. ஆதலால், வடதிசை உத்தரம் என்னும் பெயரும் தென்திசைக்குத் தக்காணம் என்னும் பெயரும் தோன்றின. அவற்றொடு ஏனையிரு திசைக்கும், கீழ் மேல் என்னும் பழைய கரணியம் பற்றியே குணம் குடம் என்னும் இரு பெயர்களும் உடன் தோன்றின. குள்-குழி. குள்-குண்டு=குழி, பள்ளம் குள்-குண்-குணம்=பள்ளம் குண்டுங்குழியுமாயிருக்கிறது என்னும் வழக்கை நோக்குக. குடு-குடுமி=உச்சி, மாடவுச்சி, தலையுச்சி உச்சிக்கொண்டை, உச்சிமுடி, மகுடம், மலையுச்சி, கொடுமுடி. குடு-குடம் =உயர்ச்சி, மேடு, குடநாடு=உயர்ந்த மலை நாடான சேரநாடு, மேல்நாடு. கிழக்கு மேற்கு என்னுஞ் சொற்களையொத்த, குணம் குடம் என்பனவும் குணக்கு குடக்கு எனக் குவ்வுருபேற்றன. தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலக முதன்மொழி யாதலால், சேய்மை அண்மை முன்மை ஆகிய மூவிடத்தையுஞ் சுட்டும் ஆ (அ) ஈ (இ) ஊ (உ) என்னும் முச்சுட்டும் முதன் முதல் மாந்தன் வாயில் தோன்றிய சுட்டொலிகளாக மட்டுமன்றி உயிரொலிகளாகவும் இருக்கின்றன. இதனாலேயே, அவை தமிழ் நெடுங்கணக்கில் முதலில் வைக்கப்பட்டிருப்பதுடன், இன்றும் ஆரியமொழி களிற்போல் மறையாதும் திரியாதும் இயல்பாகவே தமிழில் வழங்கி வருகின்றன. சுட்டுவகையிலும் அதன் வழிப்பட்ட மூவிடப் பெயர் வகை யிலும், தமிழ் (திரவிடம்) ஆரியத்திற்கு (சமற்கிருதத்திற்கு) முந்திய தென்றும், உலக முதன் மொழியொடு நெருங்கிய தொடர்புடைய தென்றும், கால்டுவெலார் தம் ஒப்பியலிலக்கணத்தில் ஆங்காங்கு மிகவெடுத்துரைத்துச் செல்லுதல் காண்க. முன்னிலைப் பெயர்: ஊன் - உன் (ஒருமை). ஊம்-உம் (பன்மை) உவன் உவள் உவர் உது உவை உங்கு என்பன முன்னிலைப் பொருள் களையும் இடத்தையுமே குறித்தலால், உகர அல்லது ஊகாரச்சுட்டு முன்மைச் சுட்டே. முன்மை சேய்மைக்கும் அண்மைக்கும் இடைப்பட்ட தாதலால், இடைமைச் சுட்டென்பது ஒரு மருங்கு பொருந்தும். ஆயின், சேய்மைக்கு வரம்பில்லையாதலால், முன்மை இடைமையாகலாம். இடைமை என்றும் முன்மையாகாது. முன்மை அண்மைக்குச் சற்றுச் சேய்மையாதலால் முன்மைச்சுட்டு, தமிழிற்சிறுபான்மை சிறு சேய்மையையும் வடநாட்டு மொழிகளிற் சேய்மையையும் உணர்த்தும். எ-கா : உங்கு = நீ (நீங்கள்) இருக்குமிடத்து தனயரைக் கண்டிரோ வுங்கணென்ன'' (சேதுபு 6:39) உதோள் - உதர் (இந்தி) = அங்கு. முன்மைக் கருத்தினின்று முற்செலவுக் கருத்துத்தோன்றும். எ-கா : உய் = முன்செல், முற்செலுத்து, உந்து = முன்தள். உகை = முற்செலுத்து. நிலமட்டத்திற்கும் நீர் மட்டத்திற்கும் மேற்பட்ட முற்செலவு பக்கவாட்டி லும் மேளோக்கியுமிருக்குமாதலால் முன்மைச்சுட்டு உயர்ச்சிக் கருத்தையுந் தழுவும். எ-டு: உக்கம் = கட்டித் தூக்குங்கயிறு உகப்பு = உயர்வு. உகள்தல் = குதித்தல். உகளித்தல் = குதித்தல். உளகத்தல் = எழுதல். உச்சம் = உயர்நிலை. உச்சி=உயரிடம். உத்தரம் = (1) முகட்டுக் குறுக்குப் பெருமரம் அல்லது இருப்புவிட்டம். (2) மேற்மடங்கல் = கூற்றுவன், கூற்றுவன் போல் அழிக்குந் தீ பட்டது. உத்தரமந்திரி = தலைமையமைச்சன். உப்புதல் = பருத்தெழுதல் உம்பல் = உயர்ந்தயானை உம்பர் = மேல், மேலுலகம், தேவர் உம்பன் = உயர்ந்தோன் உயர்தல் = மேலெழுதல், மேற்படுதல் உவண் = மேலிடம் உவணம் = உயரப் பறக்கும் கலுழன். உவணை = தேவருலகம். உறி = உயரக் கட்டித் தூக்குங்கயிறு அல்லது தொடரி. உன்னுதல் = உயரக்குதித்தல் ஊர்தல் = ஏறிச் செல்லுதல் ஊங்கு = உயர்வு, மேன்மை உத்தரம் = 1. பனிமலையால் உயர்ந்த திசையான வடக்கு (திவா) Uttara, mfn (compar fr. 1. ud; opposed to adbara. upper, higher, superior (e.g. ultare dantas, the upper teeth), RV; AV, TS: CHUP; Ragh, and c.; northern (because the northern part of India is high), AV; Mn; Susr.; pancat & c.'' என்று மானியர் வில்லியம்சு சமற்கிருத - ஆங்கில அகர முதலி கூறுதல் காண்க. 2. வடக்கில் தோன்றும் ஊழித்தீ (பிங்) உத்தர மடங்கல் = வடவனல் என்னும் ஊழித்தீ (திவா). குமரிநாட்டுக் காலத்தில் தமிழர் (நெய்தல் நிலப்பரவர்) கற்றுக் கடலோடிகளாயிருந்ததனால், வடமுனையில் அவ்வப்போது தோன்றும் ஒரு பல்வண்ணவொளியைக் கண்டு, அதற்கு அல்லது வடவனல் என்று பெயரிட்டனர்; அதையே ஊழியிறுதியில் உலகையழிக்கும் தீயாகவும் கருதினர். ``வடவா வனலு மடநடைப் பிடியும் அருமைப் பெயருங் குதிரையும் வடலை''(பிங். 988) ``வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து'' (அந்தகக். தனிப்) ``வெள்ளத் திடைவாழ் வடவனலை'' (கம்பரா. தைலமா. 86) ``கடுகிய வடவனலைத் தினைவைத்தது'' அனல் - அனலம் (கலிங்-402) ``அக்கடலின் மீதுவட வனல்நிற்கவில்லையோ'' (தாயு, பரிபூர் .9) மேலையர் வடவனலை, Aurora (down) Borealies (northern) என்று ஆங்கிலத்திலும், வழங்குவது முற்றும் பொருளொத்திருத்தல் காண்க. வடமொழியாளர் வடவை என்னும் தென்சொல்லை, வடவா, வடவா முகம், வடவாமுகாக்கினி, படபா, படபாமுகம், படபா முகாக்கினி என்று திரித்தும் விரித்தும், பெட்டைக்குதிரை முகத்தில் தோன்றிய நெருப்பென்று, பொருந்தாப் பொய்த்தலாகப் பொருள் கூறுவர். அதைத் தமிழர் நம்பிய பின்னரே ``வடவைக் கனன்மாவும்'' (தக்கயாகப் 694) என்று ஒட்டக்கூத்தரும் பாடநேர்ந்தது. இதனால், தமிழ்ச்சொல் திரிக்கப்பட்டதொடு தமிழர் மதியும் திரிக்கப்பட்டமை காண்க. j¡F=jhœî bj., க. தக்கு (taggu) அவர்க்குத் தக்குத் தொண்டை, அவர் தக்கிலே பாடுகிறார். என்னும் வழக்குகளை நோக்குக. தக்கு - தக்கணம் = நிலமட்டத்தில் தாழ்ந்த தென்றிசை, தென்னாடு (decan) தக்கணம் - வ. தஷிணம் வடமொழியாளர், தஷிணம் என்னும் சொல்லைத் தெற்கு என்னும் பொருளில், தஷிணாக்கினி, தக்ஷிணாயனம், தக்ஷிணாசலம் (பொதியம்), தக்ஷிண பாஞ்சாலம், தக்ஷிணாமூர்த்தி என ஆளுவர் ஆயின், தக்ஷிணம் என்னும் சொல்லிற்குத் தக்ஷ் என்பதை மூலமாகக் கொண்டு அதற்குத்திறமை யாயிரத்தல் அல்லது வலமையோடிருத்தல் என்று பொருள்கூறி, கிழக்கு நோக்கும்போது தென்றிசை வலப்புறமும் வடதிசை இடப்புறமும் இருப்பதால் தக்ஷிணம் என்னும் சொற்குவலம் என்றும் உத்தரம் என்னும் சொற்கு இடம் என்றும் பொருள் தோன்றினவென்று கரணியங் காட்டுவர். தக்ஷிணம் பரி = வலம் வா, வலஞ்சுற்று. ப்ரதக்ஷிண = வலம் வருகை, வலர் சுற்றுகை. தகுதியென்னுஞ் சொற்கு வல்லமையென்றும் பொருளிருப்பதால் தக்ஷ் என்னும் வடசொல் தகு என்னுந்தென் சொல்லின் திரிபாகவுமிருக்கலாம். ஒ. நோ. L. dexter = of or on the right-hand side. E. dexterous = deft, adroit, clever, using right hand by preference E; ME. deft = dexterous skilful. E. daft. ME. daffte = OE ged & fte (Goth gadaban to be fit) orig. Sense, fitting, suitable. தக்ஷ் என்னும் வடசொற்கும், (dextes) என்னும் இலத்தீனச் சொற்கும், மூலம் எதுவாயினும், உத்தரம், தக்கணம் என்னும் இரு திசைச்சொல்லும் தென்சொல்லேயென்பதற்குச் சான்றுகளாவன:- 1. உத்தரம் தக்கணம் என்பனவற்றொடு சேர்ந்து வழங்கப்பெறும் குணம் குடம் என்னும் திசைப்பெயர்கள், தூய தென்சொல். அவை வடமொழியில் இல்லை. அவற்றோடு சேர்ந்த ஏனையிரண்டும் தென்சொல்லாகவேயிருத்தல் வேண்டும். 2. உயர்ந்தோன் தாழ்ந்தோன் என்பன போல, உத்தரம் தக்கணம் என்னும் இரண்டும் ஒன்றிற்கொன்று எதிரான உறவியற் குறியீடுகள் (Relative terms). சமற்கிருதத்தில், உத்தரம் என்பதற்கு நிலவுயர்ச்சியையும் தக்ஷிணம் என்பதற்கு வலப்புறத்தையும், கரணியமாகக் காட்டுவது பொருந்தாது. 3. உத்தரம் என்னும் சொல்லிற்கு அடியான உகரச் சுட்டும், தக்கணம் என்னும் சொல்லிற்கு மூலமான தக்கு என்னும் முதனிலையும் தூய தமிழ். 4. குமரிநாட்டில் தோன்றிய தமிழ் சமற்கிருதத்திற்கு முந்தியது. 5. உத்தரம் தக்கணம் என்னும் நாட்டுப்பெயர்கள் அல்லது திசைப்பெயர்கள், தமிழரும் அவர் வழியினரான திரவிடரும் தொன்றுதொட்டு வாழும். நாவலந் தேயத்திலன்றி, வேறெவ்வாரிய நாட்டிலும் என்றேனும் வழங்கியதில்லை. கடவுள் வழிபாடின்றிக் கதிரவன் வணக்கத்தையே சிறப்பாகக்கொண்ட வேதஆரியர், இந்தியாவிற்குட் புகுந்தபின்னரே, காலைக் கதிரவ வணக்கத்தின் போது தக்கணம் வலப்புறமும் உத்தரம் இடப்புறமும் இருத்தல் கண்டு, அவ்விருதிசைப் பெயர்கட்கும் முறையே வலம் இடம் எனப் பொருள் கொண்டிருத்தல் வேண்டும். ``கிழக்கு'' முதலிய முன்றோன்றிய நாற்றிசைப் பெயரும் உலக வழக்கில் ஆழ ஊன்றிவிட்டதனால், `குணக்கு' (குணம்) முதலிய பிற்றோன்றிய நாற்றிசைப் பெயரும் செய்யுள் வழக்கென்னும் இலக்கிய வழக்கிலேயே இடம்பெறலாயின. உலக வழக்கிலின்மையாலும் பொய்யுடை வடவர் சொல் வன்மை யினாலுமே, உத்தரம் தக்கணம் என்னும் இரு தென் சொற்களும் வடசொல் லெனும் மயக்கத்திற்கு இடமாயினவென, இக்கட்டுரையினின்றும் தெற்றெனத் தெரிந்துகொள்க. முதல்தரம், கடைத்தரம், மேல்தரம், கீழ்த்தரம், நடுத்தரம், இடைத்தரம், சிறுதரம், பெருந்தரம், என்பன போன்றதே உத்தரம் (உயர்ந்த நிலை) என்னும் வழக்கும் புன்க வடமொழியாளர் இவ்வடிவை உறழ்தரம் (comparative degree) ஆக்கிக் கொண்டனர். அதனால் உத்+தர (led + tara) என்று பகுப்பர். அது கண்டு மயங்கற்க. முரட்டுக் குறுக்குப் பெருமரம் உத்தரம் என்று பெயர் பெற்றிருத் தலையும் நோக்குக. 11 `மதி' விளக்கம் சொல்லியல் (Etymology) மொழி நூலுள் (Philology) அடங்குமேனும், பல சொற்கள் பல மொழிகட்குப் பொதுவாயிருத்தலானும், ஒரு மொழிச் சொல் வெவ்வேறு வகையில் பிற மொழிச் சென்று வழங்குதலானும், மொழியாராய்ச்சி செய்யாதார் சொல்லாராய்ச்சியில் இறங்குதல் தகாது. மொழியாராய்ச்சிக்கு மொழி நூலிலக்கியக் கல்வி மட்டுமன்றி பல்வேறு மொழிகளின் இலக்கண அறிவும் சொற்றொகுதியறிவும் வேண்டும். பொருட்பாடு நோக்கிச் சொற்களை, (1) ஒரு பொருட் பல சொல் (Synonyms) (2) பல பொருளொரு சொல் (Homonyms) என இரு வகையாகப் பகுத்தனர் பண்டைத் தமிழ் இலக்கணியர். இவற்றை, முறையே, ஒரு பொருட்சொல், பல பொருட் சொல் எனக் குறுக்கியும் வழங்க லாம். ஒரு பொருட் சொல் என்பது ஒரேயொரு பொருளுள்ள சொல் என்றும் பொருள் படினும் ஒரு பொருட் பலசொல் என்பது ஒருமைக்கு ஏற்காமை யானும், இரட்டுறற் சொற்கள் பல இடம் நோக்கிப் பொருள் வேறுபா டுணர்த்தலானும், ஒரு பொருட்சொல் என்னும் குறியீட்டிற்கு இரட்டுறன்மை இழுக்காகாதென்க. இனி, பல பொருட் சொல்லும், (1) ஒரு பேர்ப் பல பொருட்சொல் (Homonymy) (2) பல பேர்ப் பல பொருட்சொல் (Polysemy) என இரு திறப்படும். கடு என்னும் சொல், மிகுதி, வன்மை, வலி, விரைவு, காரம், கொடுமை முதலிய பல பொருளை ஒரே பேர்ப் பொருளடியில் உணர்த்துதலால் ஒரு வேர்ப் பல பொருட் சொல்லும்; மாண்டான் என்னும் சொல், மாண், மாள் என்னும் இரு வேறு வினைப் பகுதிகளின் படர்க்கை ஆண்பால் இறந்தகால முற்றாதலின் பல வேர்ப் பல பொருட் சொல்லும்; ஆகும். ஒரு பொருட் சொல்லும் இங்ஙனமே ஒரு வேருடைமையும் பல வேருடைமையும்பற்றி இரு திறப்படும். ஆயின், அது இக்கட்டுரைக்குப் பயன்படாமையின் விளக்கப்பட்டிலது. மதி என்னும் சொல், பருத்தல், கடைதல், கொழுத்தல், மதங்கொள்ளுதல், மயக்கம், கள், யானை, நிலா, இனிமை, கருவாப்பட்டை, அளவு, மதிப்பு, அறிவு, அசைச்சொல் முதலிய பொருள்களில் ஒரு வேலை பல பொருட் சொல்லான தென் சொல்லும்; பெண்பால் அடை மொழியீறாகவரின், `மான்' என்னும் தம் ஈற்றினின்று திரிந்த வட சொல்லும் ஆகும். இவ்விரண்டிற்கும் எவ்வகை தொடர்புமில்லை. இவற்றின் வரலாறு வருமாறு:- முத்து-மத்து மத்தி-மதி. உ (அள்ளைத் திரிபு), முத்துதல்=சேர்தல். (சீவ 504), முகத்தொடு முகம் சேர்தல். பல பொருள்கள் அல்லது கூறுகள் ஒன்று சேரின் திரட்சியுண்டாகுமத லால், சேர்தற் கருத்தில் திரட்சி கருத்துத் தோன்றும். ``சேரே திரட்சி'' (தொல். சொல் 363). முத்து-முத்தை=திரட்சி (சூடா சோற்றுருண்டை). முத்தை - மொத்தை=பரும உருண்டை. மொத்தை - மோத்தை=பருத்த வெள்ளாட்டுக்கடா. முத்து - மொத்து - மொத்தம் திரட்சி, முழுமை. முத்து=திரண்ட விதை, மல ளிஞ்சிலில் விளையுங் கல், கொப்பளம். முத்து-முத்தம்=பெரிய முத்து, இச்சொல் வடமொழியில் முக்தயென்று திரியும். `அம்' பெருமைப் பொருள் ஈறு. முத்து-மத்து=திரண்ட தயிர் முதலியன கடை கருவி. மத்து-மத்தம் ஆய்மகள் மத்தம் பிணித்த கயிறு'' (கலித். 110) மத்து-மத்தி. மத்தித்தல்=கடையில். மத்தி-மதி. மதித்தல்=கடைதல், விரலால் அல்லது கையால் நசுக்கிப் பசைபோலாக்குதல். மதி-மசி. மசிதல்=பசைபோலாதல் (த. வி.) மசித்தல் = பசை போலாக்கு தல் (பி.வி.) மத்து, மத்தம் என்பன மந்த (Mantha) என்றும்; மத்தி, மதி என்பன மத் (Math) என்றும், மசி என்பது மஷ் என்றும், வடமொழியில் திரியும். மத்தம் = எருமைக்கடா. இச்சொல் வடமொழியில் மத்த எனத் திரியும். பொதுவாக, ஓர் இயங்குதிணை உயிரியின் உடம்பு பருத்தலால் கொழுத்தலும் மதங்கொள்ளுதலும் உண்டாகும். மதித்தல்= 1. பருத்தல், உப்புதல். 2. கொழுத்தல், செருக்குதல். '' மதித்தெதிர் தெவ்வா'' (இரகு. மீட்சி. 37). 3. மதங்கொள்ளுதல். '' மதித்த களிற்றினின்'' (கம்பரா. பஞ்சகே. 56) மதயானை. ``கோண் மதித்திடர் கிடர்தன'', (கம்பரா. நாகபாச 136) மதி- மதம் = மிகுதி, பெருமை, வலிமை, வளம், செருக்கு, மதநீர். மதம் - மதன் = மிகுதி, வலிமை, செருக்கு. மத்தம் = மதம். மத்தமா = யானை. மத்தம் - மதம் என்றுமாம். மத்தன் = கொழுத்தவன். ``மத்தனிராவணன் கொதித்தான்'' (இராமநா. உயுத். 44). மத்தம், மத்தன் என்பன மத்த என்று வடமொழியில் திரியும். மதம்-மதர். மதர்த்தல்=மிகுதல், செழித்தல், கொழுத்தல், மதங் கொள்ளுதல், செருக்குதல். பல பொருள்கள் அல்லது வழிகள் அல்லது கருத்துக்கள் கலத்தலால், கலக்கமும் மயக்கமும் உண்டாகும். மத்தித்தல்=கலத்தல், மருந்து கலத்தல். மத்தம் = மயக்கம். மத்தம்-மதம்-மதன்=கலக்கம். ஒ.நோ: குல-குலவு-கலவு, கலவுதல் = கலத்தல். குலவுதல்=கூடுதல். குல-கல-கலங்கு-கலக்கு-கலக்கம். முய-முயங்கு-முயக்கம். முயங்குதல்=தழுவுதல், கலத்தல். முய-மய-மயங்கு-மயக்கு-மயக்கம்=கூட்டம், கலக்கம். மயத்தல்=மயங்குதல். ``மயந்துளே னுலக வாழ்க்கையை'' (அருட்பா, அபயத்திறன். 14). மயக்கக் கருத்தினின்று, உணர்வின்மை (மூர்ச்சை), வெறி, கோட்டி (பைத்தியம்), காமம் ஆகியகருத்துக்கள் தோன்றும். மத்தம்=மயக்கம், குடி வெறி, கோட்டி, ஊமத்தை. மத்தம் - மத்தன் = மதிமயங்கியவன், கோட்டிபிடித்தவன். மத்தம்-மதம்=குடிவெறி, கோட்டி. மத்து=ஊமத்தை. மதத்தல்=மயங்குதல். மத்து, மத்தம், மத்தன் என்னும் இம்முச்சொல்லும் வட மொழியில் மத்த எனத் திரியும்; மத என்பது Mada எனத் திரியும். செருக்கு, யானை மதம் ஆகிய இரு கருத்தும் மயக்கக் கருத்தினின்று தோன்றியதாகவுங் கொள்ளலாம். ஓ-நோ: களி-களிறு. களித்தல்=கள்ளுண்டு வெறித்தல், மயங்குதல். நில வொளியால் கோட்டியுண்டாகுமென்று பண்டைக் காலத்தில் கீழ்நாட்டிலும் மேல் நாட்டிலும் ஒரு கருத்திருந்ததால், திங்களுக்கு மயக்கந் தருவது என்னும் பொருள்பற்றி ஒரு பெயருண்டாயிற்று. மத்து-(மத்தி)-மதி: அல்லது மதம்-மதி=திங்கள். Luna (Latin) = திங்கள், Lunacy (Eng.) = கோட்டி. மதி=மாதம் (மதியால் அளக்கப்படும் கால அளவு). மதி-மாதம்-மாஸ (வ). மதிப் பெயரினின்றே மாதப் பெயர் உண்டாகும். திங்கள்=மதி, மாதம். (Moon-month). மதி என்னும் சொற்கு வடமொழியில் திங்கட் பொருள் இல்லை. இயல்பாகத் தகரம் சகரமாகத் திரியுமேயன்றிச் சகரம் தகரமாகத் திரியாது. ஆதலால், மாதம் என்பது தென் சொல்லாதல் தெளிவு. ஆயினும், ஆரிய மயக்கால் தமிழர் பேதுறுவது அவர் பேதைமையே. ஏற்கெனவே திங்கட் சொல் மதியையும் ஒரு கிழமையையும் குறித்தலால், அதை மேலுமொரு பொருளில் வழங்கி மயக்குதல் வழுவாகும். மயக்கந் தரும் கள் அல்லது தேன் இனித்தலால், மயக்கக் கருத்தில் மதுக் கருத்தும் தோன்றும். மத்து-மட்டு=தேன், கள். மத்து-மது-மதுர்-மதுரி-மதுரம். மது-மதம்=தேன். ``மதங்கமழ் கோதை'' (சீவக. 2584). மது=தேன், கள், இனிமை, அதிமதுரம். மது-மதி=அதிமதுரம். மட்டு என்பது Madya என்றும், மது என்பது Madhu என்றும் வடமொழியில் திரியும். இனி, முத்து என்பதன் வல்வடிவான முட்டு என்னும் சொல், ஒரு பொருள் இன்னொரு பொருளை முட்டுதலால் அறியப்படும் இயக்க முடிவை அல்லது வழி எல்லையை உணர்த்துதலால், சேர்தல் அல்லது பொருந்துதற் கருத்தில் எல்லை அல்லது அளவுக்கருத்தும் தோன்றும். முகத்தாற் பொருந்துதல் முத்துதலும் தலையாற் பொருந்துதல் முட்டுதலும் ஆதலின், அவற்றின், மென்மை வன்மை குறிக்க, முறையே தகர டகரம் வந்தனவென அறிக. இங்ஙனமே முட்டியால் முதுகில் அறைதல் குத்துதலும் மண்டையில் அறைதல் குட்டுதலும் ஆதல் காண்க. ஆயினும், முதற்காலத்தில் தகரச் சொல்லே டகரச்சொற் பொருளையுங் குறித்தது. முட்டுதல்=முடிதல். முட்டு-மட்டு=முடிவு, எல்லை, அளவு மட்டு-மட்டம். (மத்து)-(மத்தி)-மதி. மதித்தல்=அளவிடுதல், உள்ளத்தால் அளவிடுதல், உயர்வாகக் கருதுதல், கருத்தாகக் கொள்ளுதல். மதிப்பு = ஏறத்தாழக் கணிப்பு (கணிசம்), உயர்வு. மதி=மதிப்பு, அளவிடப்பட்ட பண்டம் (ஏற்றுமதி, இறக்குமதி), அளந்தறியும் பகுத்தறிவு. அறிவுப்புலன். மதி - மதம் = கொள்கை, சமயம், நூற்கொள்கை. மதி என்னும் சொல் முன்னிலை படர்க்கை யசைநிலையாய் வருங்கால், அளவு என்னுங் கருத்தில் `அது போதும்' என்றேனும், அறிவு என்னும் கருத்தில் `அது அறிவாகும்' என்றேனும் பொருள்படும். பழஞ்சேர நாடாகிய கேரளத்தில், மதி என்பது `போதும்' என்னும் பொருளில் இன்று வழங்குகின்றது. மதம் (சமயம்) என்பது வடமொழியில் Mata என வழங்கும். அளவீடு என்னும் கருத்தொழித்து, இதுகாறுங் கூறிய எல்லாப் பொருள்களிலும், மதி என்பதனொடு தொடர்புடைய மத, மதம், மதன், மதர் முதலிய சொற்கள் - தமிழில் வழங்கி வருகின்றன. முழுகிப் போன குமரிக்கண்டத்தொடு பல உலக வழக்குச் சொற்களும், இறந்துபட்ட பண்டையிலக்கியத்தொடு பல செய்யுள் வழக்குச் சொற்களும், மறைந்து போனமையால், பல சொற் கோவைகளின் இடையிலிருந்த அண்டுகளை இன்று காட்ட முடியவில்லை. ஆயினும், தமிழ் குமரி நாட்டில் தோன்றி வடக்கே சென்று முன்னர்த் திரவிடமாகவும் பின்னர் ஆரியமாகவும் மாறிற்றென்றும், வடமொழி ஆயிரக்கணக்கான தென் சொற்களைக் கடன் கொண்டுள்ளதென்றும், அறிய வல்லார்க்கு நான் கூறிய யாவும் தெற்றென விளங்குதல் தேற்றம். மொழியாகவும் ஈறாகவும் வருங்காமான் என்று மருவும். எ-கா : மருமகன் மருமான், பெருமகன் - பெருமான் இங்ஙனமே திருமகன் என்பது மான் என்று திரியும். திரு என்பதை வடமொழியர் ஸ்ரீ என்று திரித்துக்கொண்டதால் திருமான் என்பது ஸ்ரீமான் என திரிந்தது இதனைச் சீமான் ``எழுத்தொடு புணர்ந்த சொல்லாக்கினர் தமிழர். திருவரங்கம்-ஸ்ரீரங்கம்-சீரங்கம் என்னும் திரிவை நோக்குக. சீமான் என்பதன் பெண்பால் `சீமாட்டி'யாதலால், ஸ்ரீமான் என்பதன் பெண்பால் ஸ்ரீமாட்டி'யும் திருமான் என்பதன் பெண்பால் `திருமாட்டி'யும் ஆதல் வேண்டும். திருவாட்டி என்பது திருவாளர் என்பதன் பெண்பால். மருமகள் என்பதன் பெண்பால் மருமகள் என்றும் பெருமான் என்பதன் பெண்பால் பெருமாட்டி என்றும் வழங்குதல் காண்க. ``கலை மருமாட்டி'' (திருவிளை, திருமன 62). ``பெருமாட்டி'' (திவா) பெருமாள்-பிரான் பெருமாட்டி-பிராட்டி இவை மரூஉச் சிதைவு. `வான்' என்னும் ஈற்றினில் `வத்', `வதீ' என்று முறையே ஆண் பாற்கும் பெண்பாற்கும் திரித்துக் கொண்டதுபோன்றே, `மான்' என்னும் ஈற்றினின்றும் `மத்', `மதீ' என்று திரித்துக்கொண்டனர் வடமொழியாளர். ஆதலால், பெண்பால் பெயர்க்குத் திருமதி என்று அடை கொடுக்காது திருமாட்டி என்று கொடுத்தல் வேண்டும். ஸ்ரீ ஸ்ரீமதீ என்பன வட சொல் வடிவுகள். ஸ்ரீமதீ என்பது எழுத்தெ புணர்ந்த சொல்லாகும்போது தி என்றாகும். இவ்வடிவை விலகி வேண்டும். 12 `உவமை' தென்சொல்லே ஆங்கிலக் கல்வியும் அறிவியல் ஆராய்ச்சியும் நம் நாட்டில் புகுந்து ஒன்றரை நூற்றாண்டும். தமிழ் தனி வளமொழியெனக் கால்டுவெல் கண்காணி யார் நாட்டி ஒரு நூற்றாண்டும் ஆகியும் இன்றும் தமிழின் தனித்தன்மையைப் பற்றிப் பல பேராசிரியரும் ஐயுற்று வருவதால் ஒவ்வொரு தமிழ்ச் சொல்லையும், வேரும் ஆக்கமும் காட்டி இன்னின்னது தென் சொல்லே யென நாட்ட வேண்டும் நிலைமை நேர்ந்துள்ளது. கண்ணுதற் பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்தஇப் பசுந்தமிழ் ஏனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ! என்று பரஞ்சோதி முனிவர் பாடுமாறு தமிழிலக்கணம், தனிப் பட்டதாயும் பிற மொழிகட்கில்லாத பொருளிலக் கணத்தைத் தன்னகத்துக் கொண்டு தலைமை வாய்ந்ததாயும் கி. மு. பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்பே குமரி நாட்டில் தோன்றி வளர்ந்த தொன்மையுள்ளதாயும், இருந்தும் அதன் குறியீடுகளில் ஒன்றாகவும் பொருட்படல இயற்பெயர்களுள் ஒன்றாகவும் உள்ள ``உவமை'' என்னும் சொல் வட சொல்லா தென் சொல்லா என்னும் ஐயுறவிற்கும் வடசொல்லே என்னும் வலிப்பிற்கும் சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் மிக்க இக்காலத்து இடந்தந்து நிற்பது மிக மிக இரங்கத் தக்க செய்தியாகும். உவமை யென்னுஞ் சொல் ஒப்புமை யென்னுஞ் பொருளது. இப் பொருள் அதன் முழுவடிவில் மட்டுமின்றி அதன் அடிவேரான உகரத்தி லேயே கருக்கொண்டுள்ளது. உகரமாகிய ஓரெழுத் தொருமொழி ஒப்புமைக் கருத்துக் கொண்டிருப்பதை உத்தியென்னுஞ் சொல்லால் உணரலாம் உத்தல் பொருந்துதல் உத்தி பொருத்தம் மதிக்கும் அறிவிற்கும் பொருத்தமான செய்தி உத்தி எனப்படும். அவ்வுத்தியை அறியும் அகக்கரணத்தையும் உத்தியென்பது ஆகுபெயர். நூலிற்கும் உரைக்கும் பயன்படும் உத்திகளான நெறிமுறைகள் முப்பத்திரண்டாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. இவ்வுத்தியை யுக்தி எனத் திரித்தாள்வர் வடநூலார். இரு கட்சியர் விளையாடும் எல்லா விளையாட்டுகளிலும் கட்சி யமைத்தற்கு இவ்விருவராய்ப் பொருந்தி வருவது உத்தி கட்டுதல் என்பர். கட்டுதல் என்னும் சொல் வழக்கே உத்தியென்னும் சொற்குப் பொருத்த பொருளுண்மையை உணர்த்தப் போதிய சான்றாகும். கட்டுதல் பொருத்துதல், கள்ளுதல், பொருந்துதல் கள்ள என்பது பொருந்த என்று பொருள்படும் ஓர் உவம உருபு ``கள்ளக் கடுப்ப ஆங்கவை எணுசு'' என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க. (1232) `கள்' என்னும் பகுதியினின்று பிறந்ததே களம் (கூட்டம், அவை) என்னும் தொகுதிப் பெயரும் கட்சி (கள் + சி) என்னும் பெயரும் இப்பகுதியதே. சென்னைப் பல்கலைக் கழக அகராதி விளையாட்டு - த்திச் சொல்லைத் தெலுங்குச் சொல்லென்று பிறழக் கொண்டதோடு, நூலுத்திச் சொல்லினின்று வேறுபட்ட தெனவுங் கூறியுள்ளது. உத்தி யென்பதனொடு தொடர்புற்ற உந்து என்னும் சொல் பொருந்துதற் பொருள்படுவது கவனிக்கத் தக்கது. ``தானந் தோறும் உந்திடுங்கரணம்'' என்பது சிவஞான சித்தியார். (4, 34) தமிழில் ஏறத்தாழ முக்காற் பகுதி உகரவடிவச் சொற்கள். உகரவடி சொல்லாக்கத்தில் (1) முன்னைத் திரிபு (2) அள்ளைத் திரிபு (3) பின்னைத் திரிபு என மூவகைத் திரிபடையும் உகரம் ஊகார ஒகர ஓகாரங்களுள் ஒன்றாவது முன்னைத் திரிபு; உகரம் அகரமாவது அள்ளைத் திரிபு; உகரம் இகரமாவது பின்னைத் திரிபு; முன்னைத் திரிபு என்றும் மோனையாகவே யிருக்கும். எ-கா : புழை - பூழை குட்டு - கொட்டு } முன்னைத் திரிபு முடங்கு - மடங்கு அள்ளைத் திரிபு புரள் - பிறழ் } பின்னைத் திரிபு இவற்றுள் பின்னிரண்டும் மோனையாகவும் தொடரும் அன்று, அள்ளை, மோனை, பின்னை மோனை எனப்படும். எ-கா : குளியம் - கூளி, கொள் கோள் - முன்னை மோனை பசுமை - பாசி பைம்மை - அள்ளை மோனை சிவன் செய்யான் சேயோன் - பின்னை மோனை குளியம் - உருண்டை, குழியம் - வளைதடி, கூளி - வளைந்ததாயுள்ள வாழை வகை, கொள் - வளைந்த காயுள்ள காணம், கொட்குதல் - வளைதல், சுற்றுதல் சுழலுதல், கோள் - வட்டம் - கதிரவனைச் சுற்றும் கிரகம், கோள், கோண் - கோடு, குள் - கூள். உகரச்சொல் முதலாவது முன்மைக் கருத்தையும், பின்பு அதன் வழியாகப் பின்மை உயர்ச்சி ஒப்புமை ஆகிய கருத்துகளையும் கொண்டுள்ளது. ஒப்புமைக் கருத்தில் உகரச் சொல் உ - ஒ - ஓ என மோனைத் திரிபடை யும். ஒத்தல் போதல், ஓவியம் ஒப்புமை பற்றிய வரைவுக்கலை ஓ + தல் = ஒத்தல். ஓ + இயம் = ஓவியம் ஒகரவடிவ பல மெய்களொடுஞ் சேர்ந்து பல ஒப்புமை அல்லது பொருந்தற் கருத்துச் சொற்களை உண்டுபண்ணும். ஒக்கல், ஒச்சை, ஒட்டு, ஒண்டு, ஒண்ணு, ஒத்து, ஒப்பு, ஒம்பு, ஒல்லு, ஒவ்வு, ஒற்று, ஒன்று, ஒன்னு ஆகிய சொற்களை நோக்குக. மொழி வளர்ச்சியில், சொற்கள் பல்குதற் பொருட்டு அறுவகைச் செய்யுள் திரிபுகளும் மூவகைப் புணர்ச்சி வேறுபாடுகளும் முக்குறைகளும், முச்சேர்க்கைகளும் முன்னோரால் கையாளப் பெற்றுள்ளன. முச்சேர்க்கை யாவன. முதற் சேர்க்கை இடைச் சேர்க்கை, கடைச் சேர்க்கை என்பன. ஒப்புமைக் கருத்துள்ள உகரச் சொல் கடைச் சேர்க்கையாக லகரமெய் பெற்றுப் பல்வேறு திரிபடைந்து பற்பல சொற்களைப் பிறப்பிக்கும். உல் - உள் உடு - உடன் உடு - ஒடு - ஓடு ஓடுதல் - ஒத்தல், பொருந்துதல் கூடுதல். ஓட என்பது ஓர் உவம உருபு. ``ஓடப்புரைய என்றவை எனுஅ'' என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க. (1232) ஓடாவி = ஒவியன். ஓடு - ஓட்டம், ஆட்டம் = ஒப்பு. குரங்காட்டம் ஓடுகிறான் என்னும் வழக்கை நோக்குக. ஓட்டை - உடன், ஒத்த. உல் - உர் - உறு - உறழ் உர் உரி - உரிஞ் - உரிஞ்சு உர் - உர - உரை - உராய். `உல்' அடியின் அள்ளைத் திரிபு உல் - அல். அல்லுதல் - பொருந்துதல், பின்னுதல் - முடைதல். அல் - அள் - அளை அள் - அண் அணவு, அணை அள் - அட்டு. அச்சு (ஒத்த பொருளமைக்குங் கருவி) அண் - அண்டு அத்து, அம் முதலிய சொற்களும் `அள்' அடியினின்று அமைந் தவையே, அத்துதல் - ஒட்டுதல், இணைத்தல். அம் - அமர். அமர்தல் - ஒத்தல், பொருந்துதல். `உள்' அடியன் பின்னைத் திரிபு உள் - இள். இண் - இணர், இணங்கு, இண. இள் - (இய்) இயை - இசை இள் - இழை இய் - எய் - ஏய். ளகர மெய்யீறு பல சொற்களில் யகரமெய் யீறாகத் திரியும். எ-கா : தொள் - தொய் - பொள் - பொய் - வள் - வய். வை - கூர்மை இழைதல் - உராய்தல், உளம் பொருந்துதல், ஒன்றிப் பழகுதல் எய்தல் - ஒத்தல் ``தேனெய் மார்பகம்'' (சீவக 2382) உகரச் சொல், முன்மைக் கருத்திலும் உயர்ச்சிக் கருத்திலும் வகரமெய்ச் சேர்க்கை பெறுவது போன்றே, ஒப்புமைக் கருத்திலும் பெறும் உவ், உவக்காண், உவை - முன்மைச்சுட்டு. உவ்வி (தலை) உவ, உவண், உவணை - உயர்ச்சிக் கருத்து (உவ்) - உவ (உவர்) - இவர் - ஒப்புமைக் கருத்து. இவர்தல் - ஒத்தல். உவமை என்னுஞ் சொல் ஒப்புமைக் கருத்துள்ள `உவ' என்னும் முதனிலையினின்று பிறந்ததாகும் உவத்தல் என்னும் தொழிற் பெயர்க்கு விரும்புதல், பிரியமாதல், மகிழ்தல் என்னும் பொருள்களும் உவகை என்னும் தொழிற் பெயர்க்கு அன்பு, காமம், இன்பச் சுவை (சிருங்காசரசம்) மகிழ்ச்சி என்னும் பொருள்களும், உவப்பு என்னும் தொழிற் பெயர்க்கு விருப்பம், மகிழ்ச்சி, பொலிவு, என்னும் பொருள்களும். பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளன. மனம் ஒத்திரா விட்டால், விருப்பமும் அன்பும் காமமும் இன்பமும் மகிழ்ச்சியும் எங்ஙனம் நிகழும்? இவற்றிற் கெல்லாம் அடிப்படை உளம் ஒத்தல் அன்றோ! `உவகை' உவப்பு முதலிய சொற்கள் போன்றே உவமை என்பதும் ஒரு தொழிற் பெயராகும். `உவ' பகுதி `மை' விகுதி. ஒப்பு நோக்க : இள + மை - இளமை பொறு + மை - பொறுமை. இளத்தல் = மென்மையாதல். ஒருவினைப் பகுதி பல விகுதிகளையேற்றுப் பலதொழிற் பெயர்களை ஆக்குதல் இயல்பாதலால். `உவ' என்னும் பகுதி (`தல்', `கை', `பு' உ, மை, மம், மானம்'' என்னும் பல விகுதிகளை யேற்று முறையே உவத்தல், உவகை, உவப்பு. உவவு, உவமை, உவமம், உவமானம், என்னும் பலதொழிற் பெயர்களைத் தோற்றுவிக்கும். இவற்றுள் முதல் நான்கும், உவமைப் பொருள் இழந்துவிட்டன, அல்லது அவற்றை அப்பொருளில் ஆளும் இலக்கியப் பகுதிகள் இறந்து பட்டன. `மம்' ஒரு தொழிற் பெயரீறு என்பது, உருமம், பருமம், முதலிய சொற்களால் உணரலாம். உருத்தல் வெப்பமாதல், உருமம் வெப்பமான நண்பகல். ``மம்'' ஈறு ``மை'' யீற்று திரிபெனக் கொள்ள இடமுண்டு. ஒ. நோ : செய்யாமை - செய்யாமல். செய்யாமை போனான், செய்யாமே போனான், செய்யாமற் போனான், என்னும் முத் தொடரும் ஒரு பொருளனவாதல் காண்க. ``மன்னுதிரு வண்ணா மலைச்சம் பந் தாண் பிற்குப் பன்னு தலைச் சவரம் பண்ணு வதேன் - மின்னின் இளத்த விடை மாதர் இவன் குடுமி பற்றி வளைத் திழுத்துக் குட்டா மலுக்கு'' என்னும் காளமேகர் பாடலில், குட்டாமல் என்பது குட்டாமலுக்கு என்று உருபேற்று வருவதால் `செய்யாமல்' என்னும் வாய்பாட்டு எதிர்மறை வினையெச்ச வடிவம், வினை எச்சமாய் ஆளப்படும். செய்யாமை என்னும் எதிர்மறைத் தொழிற் பெயரின் திரிபாயிருக்கலாம் என்று உய்த்துணரப் பெறும். அஃறிணைப் பெயர்களின் மகரவிறுதி னகரவிறுதியாவது பெரும் பான்மையாதலால் உவமம் என்னும் பெயர் உவமன் என்று திரியும். ஒ. நோ : பருமம் - பருமன் தடுமம் - தடுமன் } தொழிற் பெயர் திறம் - திறன் கடம் - கடன் } பிற பெயர் விழுமம் என்னும் தொழிற் பெயர் விழு + மம் என்றும், விழுமு + அம் என்றும் பிரித்தற்கு இடந்தரும். ஆயின் உருமம், பருமம் என்பன இடந்தரா, விழுத்தல் - சிறத்தல், விழுமுதல் - சிறத்தல். மானம் என்னும் சொல் தொழிற் பெயரீறாய் வருவதை, அடைமானம், கட்டுமானம், தீர்மானம், படிமானம், பிடிமானம், பெறுமானம், வருமானம் முதலிய தொழிற் பெயர்களின்று அறிக. உவமை என்னும் பெயரின்று உவமித்தல் என்னும் வினை பிறக்கும். ஒருமை என்னும் பெயரினின்று ஒருமி - த்தல் என்னும் வினை பிறந்திருத்தல் காண்க. உவமித்தல் ஒன்றனை ஒன்றிற்கு ஒப்பாகக் கூறுதல். இங்ஙனமே, உவமானம் என்னும் பெயரினின்று உவமானி - த்தல் என்னும் வினை பிறக்கும். தீர்மானம் என்னும் பெயரினின்று தீர்மானி - த்தல் என்னும் வினை பிறந்திருத்தல் காண்க. தீர்மானம் முடிபு. தீர்மானித்தல் முடிபு செய்தல் உவமானித்தல் உவமித்தல். உவப்பு உன்னும் சொல் முற்கூறியவாறு உயர்ச்சிப் பொருளையுந் தரும். உவ - உவர். இவர் - இவர்தல் = உயர்தல், ஏறுதல் உவ - உவப்பு. உயரம், உவ = உக - உகப்பு = உயர்வு உவ - உவண் - மேலிடம். உவண் - உவணை - தேவருலகம். ``உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை'' என்று தொல்காப்பியங் கூறுவதால் (1224) உயர்ந்த பொருளை ஒப்பாகக் கொள்வதே உவமையின் அடிப்படை நெறிமுறை என்று கொண்டு உவமைச் சொல்லிற்கு உயர்வுப்பொருள். கொள்வது பொருந்தாது. தொல்காப்பியம் உயர்ந்தது என்று குறித்தது `சிறந்தது' என்னும் பொருளது. சிறப்பு உயர்வு சிறப்பு. இழிவு, சிறப்பு என இருதிறப்படும். உயர்ந்த பொருளுக்கு மிகவுயர்ந்த பொருளையும் இழிதே பொருளுக்கு மிக இழிந்த பொருளையும் உவமங்கூற வேண்டும் என்பதே தொல்காப்பியர் கருத்து. எ-கா : ``ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால் பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்'' கங்கையாற்றிலும் சாக்கடை கலந்து கங்கை நீராம் என்னும் எடுத்துக் காட்டுவமையில் மேலோர்க்குக் கங்கையும் கீழோர்க்குச் சாக்கடையும் உவமமாதல் காண்க. வேற்றுமை குறிக்கும் சொல்வேற்றுமை என்றே பெயர் பெற்றாற் போல் ஒப்புமை பற்றிய அணியும் ஒப்புமை குறிக்கும் சொல்லா லேயே அழைக்கப் பெறுதலே முறைமையாம். வடமொழியில் ``உபமா'' உபமான என்னும் இருவடிவுகளே உள. இவை முறையே, உவமை, உவமானம், என்பவற்றின் திரிபுகள், உவமம், உவமன், உவமி, உவமானி என்னும் வடிவுகளும் சொற்களும் வடமொழியிலில்லை. அறியுங்கருவி அல்லது அளவைப் பெயர் `ஆன' என்றும் கூறின், அதனால் அறியப்படும் பொருளின் பெயர் `ஏய' என்று இறுவது வடமொழி மரபு. எ-கா: ஞான(ம்) - ஞேய(ம்) அனுமான(ம்) - அனுமேய(ம்) பிரமாண(ம்) - பிரமேய(ம்) இம்முறைப்படி உபமானத்தினால் அறியப்படுவது உபமேய(ம்) என்றாயிற்று. இது பிற்கால வளர்ச்சி மானம் என்பது தனி நிலையில் அளவு என்று பொருள்படும் தூய தென் சொல். படியை இன்றும் மானம் என்பர் வடார்க்காட்டார். ஆரியர் நாவாம்பொழிற்கு வருமுன்னரே. தமிழிலக்கணம் தென் மதுரையில் முழுவளர்ச்சியடைந்து விட்டதென்றும் தொல்காப்பியம் கி. மு. 7ஆம் அல்லது 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதேனும் அதில் கூறப்பட்டுள்ள இலக்கணம் (வடசொல் நீங்கலாகத்) தலைக்கழகக் காலத்தது என்றும் அதில் ஆளப்பெற்றுள்ள குறியீடுகள் எல்லாம் தென்சொல்லே என்றும் வடமொழி தென் மொழியினின்று கடன் கொண்டுள்ள சொற்கள் ஆயிரக் கணக்கினவாதலால், அவை வட மொழியிலுள்ள அளவானே அவற்றை ஆரியம் என மயங்கல் கூடாதென்றும் அறிதல் வேண்டும். சிலர் ஓரளவு வடமொழிகற்ற அளவானே தம்மை வடமொழி வல்லாரென்று பறை சாற்றிக் கொண்டு எள்ளளவும் ஆராய்ச்சியின்றி வடமொழியில் உள்ள சொற்களெல்லாம் வடசொல் என தாம் மயங்குவதோடமையாது மாணவரை யும் ஆசிரியரையும் அதிகாரிகளையும் மயக்கி வருகின்றனர். கல்வி வேறு ஆராய்ச்சி வேறு. சென்னையும் பெங்களூரும் போன்ற பன்மொழி வட்டாரங்களில் சில கூலிக் காரரும் பன்மொழி பேசுகின்றனர். அவரெல்லாம் மொழிநூலறிஞரோ! தமிழைச் செவ்வையாய் அறிதற்கு தமிழர் தெற்கினின்று வடக்குப் போந்தார் என்னும் வரலாற்றுண்மையறிவு இன்றியமையாத அடிப்படை யாகும். இஃதில்லார் தமிழின் தொன்னிலை அறிதல் தென்மலை காணப் பொன்மலை செல்வதே யொக்கும். இது காறுங் கூறியவற்றால் `உவமை' தென் சொல்லே யென்றும் அது உவ என்னும் முதனிலையடிப் பிறந்த தொழிற் பெயரென்றும் அதன் அடிவேர் உகரச் சொல் என்றும் அகன் கண்ணும் ஒத்தற் கருத்து கொண் டுள்ளதென்றும் அதனால் அது அதனின்று மோனை அள்ளை பின்னைத் திரிபாகத் தோன்றியுள்ள ஒத்தற் கருத்துச் சொற்களை யெல்லாம் தாங்கி நிற்கும் தனிப்பெரும் தூண் என்றும் அணிகட்கெல்லாந்தாயான உவமை யிலக்கணத்தையே அணியிலக்கணமாகவுங் கூறும் தொல்காப்பிய உவம இயல் வடமொழியில் பிற்காலத்து விரிவாகத் தோன்றிய அணிநூல்கட் கெல்லாம் மூலமென்றும் வரலாற்று அடிப்படையிலே சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் செய்தல் வேண்டுமென்றும் ஆராய்ச்சியின்றிக் குறடும் பேதையும் போலக் கொண்டது விடாமை ஆசிரியர்க் கழகன்றென்றும் அறிந்து கொள்க. தொல்காப்பிய இலக்கணத்தின் தொன்மையும் முன்மையும் தூய்மையும் தாய்மையும் ஆகிய எல்லா செய்திகளும் என் ``தொல்காப்பியக் கட்டுரைகள்'' என்னும் நூலில் விரிவாக விளக்கப்பெறும். உவமை தென் சொல்லே என்பதற்கு வேறு சில சான்றுகளுமுள. தமிழில் ``உவமை'' என்னும் சொல்லில் ``உவ'' என்பது வினைப்பகுதி; `மை' என்பது விகுதி; ஆகவே, `உவ' என்பதே உயிர்நாடியான உறுப்பு. `மை' விகுதி. வந்தமை. வருகின்றமை, என்பன போன்ற சொற்களில் தொழிற் பெயர் விகுதியாகவும், சிறுமை, பொறுமை என்பன போன்ற சொற்களில் தொழிற் பண்புப்பெயர் விகுதியாகவும், நன்மை, தீமை என்பன போன்ற சொற்களில் பண்புப் பெயர் விகுதியாகவும் இருக்கும். வடமொழியில் `உபமா' என்னும் சொல்லில் `உப' என்பது இடைச் சொல்லான முன்னொட்டு (உபசர்க்கம். Prefix) என்றும் `மா' என்பது அளவு குறித்த சொல்லென்றும் கொண்டு `உபமா' என்பதற்கு ஒத்த அளவு ஒன்றினைக் கொண்டு, ஒன்றை அளத்தல், ஒப்பு நோக்கு, ஒப்புமை, உவமை என முறையே பொருள் கூறப்படும். ஆகவே, `மா' என்பதே சிறந்த உறுப்பாம். இதனால் தமிழில் நிலைமொழி அல்லது பின் மொழிப் பொருள் சிறந்தும் வடமொழியில் வருமொழி அல்லது முன்மொழிப் பொருள் சிறந்தும் உள்ளன என்றும் தெளிவாம். உவமானம் என்னும் தமிழ்ச் சொல்லில் `மானம்' என்பது அடைமானம் (அடைவு) படிமானம் (படிவு) என்பவற்றிற் போல் ஒரு விகுதி. உபமான என்னும் வடசொல்லில், மான என்பது அளவு என்று பொருள் படுத்தப் படுஞ் சொல். இங்ஙனம் வேறுபட்டிருப்பதால், தமிழ் `உவமை' வேறு வடமொழி, `உபமா' வேறு என்று கருதற்க. இரண்டும் ஒன்றே. வடமொழியில் உள்ள சொற்களெல்லாம் வடசொல்லேயென்று காட்டுதற்கு, அதில் உள்ள தென் சொற்களெல்லாம் பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த்தலாக வும் பொருள் கூறுவதும், அதுவும் இயலாக்கால் இடுகுறி (ரூடம்) என்று முத்திரையிட்டு விடுவதும், வடநூலார் வழக்கம். வெள்ளையான சிறு தவச வகை யொன்றைக் குறிக்கும் சாமை என்னும் சொல்லைச் `சியாமா' என்று திரித்துக் கருப்பானது என்றும்; நன்றாய் எண்ணெயில் வெந்தபின் தின்னும் வடை வகை யொன்றைக் குறிக்கும் ஆமைவடை என்னும் சொல்லை `ஆமவட' எனத்திரித்து `நன்றாக வேகாதது' என்றும்; முகம் என்பதன் கடைப் போலியான முகன் என்னும் சொல்லை `மு. கன்' எனப்பிரித்து, தோண்டப் பெற்ற கிடங்கு போன்ற வாயையுடைய உறுப்பு என்றும், வடமுனையாய் தோன்றும் ஒருவகை நெருப்பைக் குறிக்கும் வடவை என்னும் சொல்லைப் `படபா' என்று திரித்து. அதனொடுமுகம் என்பதைச் சேர்த்துப் `படபாமுகம்' என ஆக்கி, ``பெட்டைக்குதிரைமுகம் போன்றது என்றும் பொருள் கூறுவார் வேறு என்தான் சொல்லார்! தொல்காப்பியத்திலும் தொன்னூல்களிலும் உவமை அணியிலக்கண முறையிற் கூறப்படாமல் பொருளிலக்கண முறையிலேயே கூறப்பட்டுள்ளது. தோழி, தலைவன் தலைவியொடு, சிறப்பாகத் தலைவனொடு உரையாடும் போது உள்ளுறையுவமம் ஏனையுவமம் என்னும் இருவகை யுவமை களையும் ஆளுவது மரபு. இவற்றை விளக்க எழுந்ததே உவமயியல், பிற்காலத்தில் வடநூலார் அணியிலக்கணம் வகுத்த போது தமிழிலக்கண உவமயியலை பயன்படுத்திக் கொண்டதுடன் உவமை என்னும் பெயரையும் `உபமா' எனத் திரித்துக் கொண்டனர். தொல்காப்பியம் பாணினீயத்திற்கு முந்தியதென்னும் உண்மை ஒப்புக் கொள்ளப்படாவிடினும், தொல்காப்பியம் கடைக்கழகத் தொடக்கத்தெழுந்த வழி நூலாதலால் அதற்கு முந்திய அகத்தியம் முதலிய நூல்கள் வடமொழி இலக்கணங்கட்கு முதனூல் என்பதை எவரும் மறுக்க முடியாது. மேலும் ஐந்திரம் பாணினீயம் முதலிய வடமொழி வியாகரணங்கள் எல்லாம் நன்னூல் போல் எழுத்தும் சொல்லும் ஆகிய இரண்டே கூறுவனவென்றும் தொல்காப்பியம் முதலிய தொன்னூல்கள் யாவும் எழுத்துச் சொற் பொருள் மூன்றையுங் கூறும் பிண்டங்கள் என்றும் வேறு பாடறிதல் வேண்டும். வடமொழியில், யாப்பிலக்கணம் சந்தசு அல்லது சந்தோபிசிதி என்னும் நூல்களிலும், அணியிலக்கணம் அலங்காரம் என்னும் நூல்களிலும் வேறாகக் கூறப்படும். தமிழிலோ, யாப்பும் அணியும் பொருளிலக்கணக் கூறுகள். அவை தனி நூற்களிற் கூறப்பட்டவிடத்தும், பொருள் இலக்கணக் கூறுகளாகவே என்றுங் கொள்ளப் பெறும். உவமை அணிகட்கெல்லாம் தாயாதலால், அணியிலக்கணம் உவமயியல் அடக்கமாம். தொல்காப்பியர் உவமவியலில் நால்வகை ஏனையுவமங்களும் ஐவகை உள்ளுறை உவமங்களும் கூறப்பெற்றுள்ளன; உவமை உறுப்புகள் மாணவர்க்கு எளிதாய் விளங்குவனவாதலால் கூறப்பெறவில்லை. ஆயின், எச்சவியலில் உவமத்தொகை கூறப்பட்டிருப்பதால் அதன் மறுதலையாகிய உவம விரியும் கூறாமல் கூறப்பட்டதாகக் கொள்ளப் பெறும். உவமம், உவமவுருபு பொதுத் தன்மை, பொருள் என்னும் நான்கும் உவமை உறுப்புக்களாம். இந்நான்கும் அமைவது விரியுவமை; உவம உருபு அல்லது உவமவுருபும் கொதுத் தன்மையும் குறைவது தொகையுவமை. வடமொழியில் இந்நான்கையும் முறையே, உபமான, உபம வாசக, சாதாரண தர்ம, உபமேய என்றும்; விரியுவமத்தைப் பூர்ணோபமா என்றும்; தொகை யுவமத்தை `லுப்தோபமா' என்றும் அழைப்பர். இவையெல்லாம் பிற்காலத்து வளர்ச்சியும் மொழி பெயர்ப்புமாகும். இது காறும் கூறியவற்றால் `உவமை' தென்சொல்லே என்றும் உவமயியல் தென் மொழியிலக்கண கூறே என்றும் தேர்ந்து தெளிக. தாழ்வுணர்ச்சி நீங்குக! தலை நிமிர்க! 13 திரவிடம் தென் சொல்லின் திரிபே அங்கம், வங்கம், கலிங்கம், திரவிடம் - `அம்' ஈறுபெற்றன. நாடுகளின் பெயர்கள் - கால்டுவெல் காட்டிய மேற்கோளும் தாயுமானவர் பாடிய பாடலும் தமிழ் திரிந்த வழியும் வழங்கிய முறையும். திரவிடம் அல்லது திராவிடம் என்னும் சொல் எம் மொழியது என்பது இன்றும் பலர்க்குத் தெரியாதிருப்பதானும், அண்மையில் அதுபற்றி ஓர் ஐயவினா தென்றலில் தோன்றியதானும் அம்மயக்கை அறவே அறுத்தற்கு எழுந்ததிக் கட்டுரை. நாட்டுப் பெயர்களும் மொழிப் பெயர்களும் பண்டைக் காலத்து `அம்' ஈறு பெற்றே வழங்கின என்பது, ``அங்கம் வங்கம் கலிங்கம் கௌசிகம் சிந்து சோனகம் திரவிடம் சிங்களம் மகதம் கோசலம் மராடம் கொங்கணம் துளுவம் சாவகம் சீனம் காம்போசம் பருணம்பப் பரமெனப் பதினெண்பாடை'' என்னும் திவாகர நூற்பாவும், சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம் வங்கம் கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே என்னும் பழஞ் செய்யுளும் உணர்த்தும். இம்முறை பற்றித் தமிழும் தமிழம் என வழங்கிற்று. இதனாலேயே, ஈறுகெட்ட மகர வீற்றுப் புணர்ச்சியாக தமிழப் பிள்ளை, தமிழநாகன், தமிழவனவன் முதலிய புணர் மொழிகளும் தோன்றின. நன்னூலார் இவற்றைத் தமிழ் என்னும் நிலைமொழி அகரச் சாரியை பெற்றுப் புணர்ந்ததென்றும், தொல்காப்பியர் அம்மொழி அக்குச் சாரியை பெற்றுப் புணர்ந்ததென்றும், கூறினர். இவர் கூற்றின்படி, கொங்கவண்ணான் என்பதைக் கொங்கு என்னும் நிலைமொழி அகர அல்லது அக்குச் சாரியை பெற்றுப் புணர்ந்ததாகவும், துளுவ வேளாளன் என்பதைத் துளு என்னும் நிலைமொழி அவ்வாறு புணர்ந்ததாகவும், கொள்ளவேண்டி வருமாதலின், அது பொருந்தாதென விடுக்க. தமிழ் என்னும் சொல் முதலாவது வடமொழியில் திரிந்த வடிவம் த்ரமிளம் என்பதே. ழகரம் வட மொழியிலின்மையாலும், உயிர்மெய்ம் முதலை மெய்ம்முதலாக்கி ரகரத்தை வழிச் செருகல் அம் மொழிக்கியல்பாதலானும், அச்சொல் அம்மொழியில் அவ்வடிவை அடைந்த தென்க. திரமிளம் என்பது தமிழ் எனத் திரிதலுமது என்று பிரயோக விவேக நூலார் (பக். 4) தலைகீழாகக் கூறிய கூற்றில், அவ்வடிவே ஆளப் பெறுதல் காண்க. கால்டுவெல். புராணங்களின் பழைய மலையாளமொழி பெயர்ப்பு களிலெல்லாம் இவ்வடிவே பெருவழக்காயிருப்பதாகக் குண்டர்ட்டுக் கூறுவதாகவும் அவர் எடுத்துரைப்பர். திரமிளம் என்னும் சொல்லிற்கு (1) பஞ்ச திரவிட தேசங்கள், (2) தமிழ் என இருபொருள் கூறும் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியும். திரமிளம் என்பது பின்பு த்ரமிடம் எனத் திரிந்தது. திமிடம் என்பதும் சிறிது காலத்தின் பின் த்ரவிடம் எனத் திரியலாயிற்று. இவ் விறுதி வடிவத்தின் நீட்சியே த்ராவிடம் என்பது. இது தமிழில் திராவிடம் என்றாகும். த்ரமிளம், த்ரமிடம், த்ரவிடம் என்னுஞ் ரகரஞ் செருகிய வடிவு களெல்லாம், வடமொழி வழக்கேயன்றிப் பிறமொழி அல்லது பிறநாட்டு வழக்கல்ல. பிறமொழிகளெல்லாம் தமிழிற் போல் ரகரமற்ற வடிவே வழங்கும். கி. பி. 7ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த இவென் திசாங் (Hwen Thsang) என்னும் சீன வழிப்போக்கர் குறிப்பில், சிமொலொ (Tchimo - lo) என்னும் வடிவம் உள்ளது. இதைத் திமல (Dimala) அல்லது திமர (Dimara) என்றும் படிக்கலாம் என்பர் கால்டுவெல். பாலிமொழியிலுள்ள மகாவமிசம் (mahavanso) என்னும் இலங்கை வரலாற்றில் தமிலொ' (Damilo) என்னும் வடிவம் உள்ளது. ஐரோப்பியர் பொதுவாகத் தமுல் (Tamul) என்றனர். அவருள் தேனிய விடையூழியர் - (Danish missionaries) மட்டும் தமுலிக்க மொழி (Lingua Darmulia) என அழைத்தனர். ஆங்கிலத்தில் `தமிழ் (Tamil) என்னும் வடிவம் வழங்குகின்றது. தமிழகம் என்னும் பெயர், மேனாட்டுப் பழைய தேசப்படங்களிலும் ஞாலநூற் சுவடிகளிலும் `தமிரிக்கெ' (Damirice) என்றும், திமிரிக்க (Dimirica) என்றும் வழங்கப்பட்டுள்ளது. முழுகிப்போன குமரிக்கண்டத்தில் கி. மு. (ஏறத்தாழ) ஐம்பதினாயிரம் ஆண்டுகட்குமுன் முளைத்தெழுந்ததும், திரவிட மொழிகட்கெல்லாந் தாயுமான பழந்தமிழ் ஒரு காலத்தில் பனிமலை (இமயம்) வரை பரவி யிருந்ததாலும், கி. மு. 1000 ஆண்டுகட்குப் பின்னரே தெலுங்கு முதலிய திரவிட மொழிகள் அதனின்று கிளைத்ததாலும், அவற்றுள்ளும் ஒருமொழியிலும் கி.பி. 9ஆம் நூற்றாண்டிற்கு முன் இலக்கியந் தோன்றாமையாலும், திரவிடம் என்னும் பெயர் தமிழையும் தமிழினத்தையும் தமிழ் நாட்டையுமே முதற்காலத்தில் குறித்து நின்றது. தமிழினின்று திரவிட மொழிகள் கிளைத்த பின்பும், திரவிடம் என்னும் சொல் தமிழைத் தனிப்படக் குறிக்கும் வழக்கும் கால்டுவெல் காலம் வரை தொடர்ந்து வந்திருந்ததாகத் தெரிகின்றது. பிள்னை லோகாரிய சீயர் (500 ஆண்டுகட்கு முன்) ``நெஞ்சுக் கிறாள்கடி தீபம் அடங்கா நெடும் பிறவி நஞ்சுக்கு நல்ல அமுதம். தமிழ நன்னூற் றுறைகள் அஞ்சுக் கிலக்கியம் ஆரண சாரம் பரச மயப் பஞ்சுக் கனலின் பொறிபர காலன் பனு வல்களே'' என்ற பெரிய திருமொழிச் சிறப்புப் பாயிரத்தில், தமிழ நன்னூற்றுறை களஞ்சுக்கு என்பதன் பொருளை விளக்குமிடத்து, திரவிட சாதிரம், எழுத்து சொல் பொருள் யாப்பு அலங்காரம் என்கிற விலக்கணமான பஞ்சல க்ஷணத் தோடே கூடியிறே நிற்பது என வரைந்திருக்கின்றார். 18 ஆம் நூற்றாண்டில் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்திருந்த தாயுமான அடிகள் பாடிய கல்லாத பேர்களே நல்லவர்கள் என்னும் செய்யுளில், ``வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வர வுந்திரா விடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்ல தமிழறிஞர் வரின் அங்ஙனே வட மொழியில் வசனங்கள் சிறிது புகல்வேன்'' என்னும் பகுதியில், திரவிடம் தமிழ் என்னும் இரு சொல்லும் ஒரு மொழி யையே குறிக்கின்றன. ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிரத் தெய்வப் பனுவல், தமிழ் வேதம், திரவிடவேதம், திரவிடப் பிரபந்தம் என்னும் பெயர்களால் வழங்குகின்றன. பாகவத புராணத்தில், சத்திய விரதன் என்னும் பெயராற் குறிக்கப்படும் ஒரு தமிழரசன் திரவிடபதி எனப்படுகின்றான். திரவிடம் என்னும் சொல்லுக்கு, தமிழ்நாடு என்னும் பொருளும் அகராதிகளிற் குறிக்கப் பட்டுள்ளது. ஆரியர் இந்தியாவிற் குடிபுகுந்து வட இந்தியா முழுதும் பரவிய பின் குமரிலபட்டர் காலம் (7ஆம் நூற்றாண்டு) வரை தென்னாடும், தென்னாட்டு மக்களினங்களும் அவை பேசிய மொழிகளும், தமிழின் தலைமைபற்றி, திரவிடம் என்றே அழைக்கப்பட்டு வந்தன. மனு, தம் (ஆரிய) அற நூலில் (10 : 43,44) ஆரியரல்லாத பல்வேறு இனத் தாரைக் குறிக்குமிடத்து தமிழரையும் தெலுங்கர் முதலிய திராவிடரையும் வேறுபடுத்தாது அவரெல்லாரையும் ஒருங்கே தழுவுமாறு - திராவிடர் என்னும் சொல்லையே ஆண்டிருக்கின்றார். விந்திய மலைக்குத் தெற்கில் வந்து குடியேறிய பிராமணரும், திராவிடப் பிராமணர் எனப்பட்டனர். இது நாடு பற்றியதேயன்றி இனம்பற்றியதன்று. மலேயாத் தமிழர், தென்னாப்பிரிக்கத் தமிழர் என்னும் வழக்கை நோக்குக. இம்முறை பற்றியே, தேவார மூவருள் ஒருவரான திருஞானசம்பந்தரும் திராவிட சிசு எனப்பட்டார். வட நாட்டு மொழி நூலறிஞர், முதற்கண், (ஆரிய) வேத காலத்து இந்திய வட்டார மொழிகளைச் சமற்கிருதத்திற்கு முந்தியுண்மை பற்றிப் பிராகிருதம் என அழைத்தனர். அவற்றில் அளவிறந்த ஆரியர் சொற்கள் கலந்து சிதைந்த வடிவிற் காணப்படுவது பற்றி, பிற் காலத்தார் அம்மொழிகளை வடமொழி (சமற்கிருத) வழியினவாகப் பிறழவுணர்ந்தனர். இதே காரணம் பற்றி, பழஞ்சேர நாட்டுத் தமிழ்த் திரிபாகிய மலையாளத்தை வடமொழியினின்று வந்ததாக இன்று சிலர் கூறுவது காண்க. கி. மு. 3ஆம் நூற்றாண்டினராகக் கருதப்படும் காத்தியாயனர், பைசாசி, சௌரசேனி, மாகதி, மகாராட்டிரி எனப் பிராகிருத மொழிகளை நான்காகவே கொண்டனர். திராவிடத்தை அவர் கொள்ளாதது அறியாமையோ புறக்கணிப்போ அறிகிலம். ஒருகால் மகாராட்டிரியில் அதை அடக்கினர் போலும். பிற்காலத் தாசிரியர் சிலர் திராவிடி என்பது ஒரு சிறுதரப் பிராகிருதம் என்றனர். ஆயின் 19ஆம் நூற்றாண்டிலிருந்த பாபு ராசேந்திரலால் மித்திரா என்னும் வங்காளர், அதை சூர சேனியோடொத்த பெரும் பிராகிருதம் எனக் கூறினர். தமிழினின்று முதலாவது பிரிந்த திரவிட மொழி. தெலுங்காகும். அது வட திசையில் தோன்றியமை பற்றி வடுகு எனப்பட்டது. குமரிலபட்டர் காலத்தில் தெலுங்கு தனித்துக் கூறப்படுமளவு வளர்ச்சியடைந்துவிட்டதனால், அவர் அதுவரை திராவிடம் என்னும் பொதுப் பெயராலேயே வழங்கிய செந்தமிழையும் கொடுந் தமிழ்களையும், தெலுங்கு தமிழ் மொழி என்னும் பொருள்பட ஆந்திர திராவிட `பாசை' என்றனர். தெலுங்கிற்குப் பின் தமிழினின்று பிரிந்த பெருமொழி கன்னடம் அதனால் வடகலை தென்கலை வடுகு கன்னடம் எனக் கம்பராமாயணச் சிறப்புப்பாயிரச் செய்யுளொன்றில் கன்னடமும் சேர்க்கப் பெற்றது. 12ஆம் நூற்றாண்டிற்குப்பின், மலையாளம், துளு, குடகம் முதலிய பிற கொடுந் தமிழ்களும் பிரிந்து போயின. சென்ற நூற்றாண்டில் கால்டுவெல் திரவிட மொழிகள் பதின்மூன்றெனக் கணக்கிட்டார். இன்றோ அவை பத்தொன்ப தெனப் பரோ, எமனோ என்னும் இரு மேலை மொழி நூல் வல்லாரால் கணக் கிடப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் இந்தியா முழுதும் திரவிடம் பரவி யிருந்ததென்பதற்கு - இன்றும் பெலுச் சித்தானத்தில் பிராகுவீயும், வங்காளத் தில் இராசமகாலும் வழங்கி வருவதே போதிய சான்றாம். ஆரியர் வந்து வட இந்தியா முழுதும் பரவியபின், விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள மொழிக ளெல்லாம் திரவிடம் என்னுங் கொள்கையிருந்தது. அதனாலேயே, தெலுங்கு, கருநாடகம், மராத்தி, கூர்ச்சரம், (குசராத்தி) திராவிடம் என்னும் ஐந்தும் பஞ்ச திராவிடம் என்று வட நூல்களும் கூறின. இப்பட்டியில் திராவிடம் என்னும் பெயர் தமிழை மட்டுங் குறித்தல் கவனிக்கத்தக்கது. திராவிட(ம்) என்பது சில வட நூல்களில் திராவிர(ம்) என்றும் திரிந்தது. டகரம் ரகரமானது போலி. இதுகாருங்கூறியவற்றால், தொன்று தொட்டுத் தமிழையே தனிப்படவும் தலைமையாகவும் குறித்து வந்த திரவிடம் என்னும் சொல், தமிழம் என்பதன் திரிபே என்பது, வரலாற்றுணர்ச்சி யுடையார்க்கெல்லாம் தெற்றென விளங்குதல் திண்ணம். ஆயினும், ஆனைக்கும் அடிசறுக்கும் என்னும் பழமொழிக்கேற்ப, கால்டுவெல் திரவிடம் என்னும் சொல்லே முறையே, (த்ரவிடம் - த்ரமிடம் - த்ரமிள தமிழ்) எனத் திரிந்ததென்று தலைகீழாகக் கொண்டார். ஆயின், கிரையர்சன் அதைத் திருத்தி உண்மையைக் கூறியது மகிழ்ச்சிக்குரியது. எனினும், இன்றும் சிலர் மயங்குவதற்குக் காரணம் வரலாற்றறிவின்மையே. ஆரியர் இந்தியாவிற் கால் வைத்து கி. மு. 3000 ஆண்டெல்லையென்றும், தமிழ் முழு வளர்ச்சியடைந்து முத்தமிழாய் வழங்கிய தலைக் கழகக் காலம் கி. மு. 10,000 ஆண்டெல்லையென்றும், அறியின், ஒருவரும் ஐயுறார் என்பது தேற்றம். வடமொழியில் நூற்றுக்கணக்கான தென் சொற்களிருந்தும் அவற்றை யெல்லாம் வடசொல்லெனக் காட்டுவதையே வடமொழி யகராதிகளெல்லாம் கோட்பாடாகக் கொண்டிருக்கின்றன. வடமொழி தேவமொழியெனும் மயக்கு புலவருள்ளத்திலு மிருந்ததினால் கம்பர் அதைத் ``தேவபாடை'' என்றார். தொல்காப்பியச் சொல்லதிகாரவுரையில் (401) தமிழ்ச் சொல் வடபாடைக்கட் செல்லாமையானும், வடசொல் எல்லாத் தேயத்திற்கும் பொதுவாதலானும் எனவுரைத்தார் சேனாவரையர். இத்தகைய நிலைகள், வடவர் திரவிடம் என்னும் சொற்குப் பொருந்தப் பொய்த்தலாகச் சில பொருட் காரணம் காட்டத் தூண்டின. த்ரு என்னும் வடமொழி வேர்துரத்துதற் பொருள் தருவதென்றும், ஆரியரால் தெற்கே துரத்தப் பட்டவர் திரவிடர் எனப்பட்டனர் என்றும் கூறுவர் ஒரு சாரார். திரவிடம் என்பது தெற்கு என்று பொருள்படுவதென்றும், தென்கோடி மாகாணத்தார் திரவிடர் எனப்பட்டனர் என்றும் கூறுவர் மற்றொரு சாரார். திரவிடம் தெற்கேயிருப்பதினாலேயே, திரவிடம் என்னும் சொற்குத் தெற்கென்னும் வழிப் பொருள் தோன்றிற்று. சிவஞான முனிவர் உள்ளதைக் கொண்டு நல்லதைப் பண்ணும் முறையில், துரத்துதல் அல்லது ஒட்டுதல் என்னும் வேர்ப்பொருளை ஒப்புக் கொண்டு, தீவினை யகற்றும் அற நூல்கள் தமிழிற் சிறந்திருப்பது பற்றி, தம் காஞ்சிப்புராணத்தில், எவ்வினையும் ஒப்புதலால் திராவிடம் என்றியல் பானட'' என்று பாடினார். த்ரு என்னும் வடமொழி வேர் `துர' என்னும் தமிழ் வேரின் திரிபே. இத்தமிழ் வேர் மேலையாரியத்தில் தியூத்தானியம் என்னும் கிளையிலும் சென்று வழங்குகின்றது. செருமன் : Treiben - பண்டை ஆங்கிலம் Drifen. ஆங்கிலம் : Drive, துரத்தல் என்பது ஓட்டுதல். ஆகவே, வடமொழியார் கூறும் இரு பொருளும், திரவிடம் என்னும் சொல்லை வடசொல்லாகக் காட்ட இயலாமை காண்க. இனி, ஒரு சில தமிழர், திரு + இடம் = திருவிடம் - திரவிடம் - திராவிடம் என வந்ததாகக் காட்டுவர். இவ்வரலாறு உத்திக்குப் பொருந்தாமையோடு சான்றும் அற்றது. ஒரு சார் இளம்புலவர், திரு + இடம் = திராவிடம் எனப் புணர்த்து, அன்று வருகாலை ஆவாகுதலும் செய்யுள் மருங்கின் உரித்தென மொழிப'' (258) என்னும் தொல்காப்பிய விதியையும், அது முன் வருமன் றான்றாந் தூக்கின் (180) என்னும் நன்னூல் விதியையும் துணையாகக் காட்டுவர். அது + அன்று என்பது, அதன்று என்று புணர்ந்து செய்யுளில் அதோ அன்று என்று அளபெடுத்த நிலையையே மேற் காட்டிய விதிகள் குறிப்பதால், அவர் கூற்று சற்றும் பொருந்தாததென விடுக்க. மேலும், அவர் கருத்துப்படி, திரு + இடம் என்பது திரீடம் அல்லது திரீயிடம் என்றே புணர வேண்டும் என்க. இதுகாறும் கூறியவற்றால், திரவிடம் என்பது தென் சொல்லே யென்று தெளிக. தமிழ் என்பது தூய்மையான தமிழையும், திரவிடம் என்பது தமிழினின்று திரிந்த தெலுங்கு, கன்னட முதலிய இனமொழிகளையும் இன்று குறிக்குமென்க. வடமொழியில் உயிர்மெய்ம் முதலை மெய்முதலாக்கி ரகரத்தை வழிச் செருகற்கு, படி - ப்ரதி, பவழம் - ப்ரவாளம் என்பன எடுத்துக் காட்டுகள். நன்றி : தென்றல் 19.9.1959 14 தமிழ் முகம் தமிழ், கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக அகப்பகையாலும் புறப்பகையாலும், மறையுண்டும் குறையுண்டும் வந்திருந்தும் ஐரோப்பாவி லும் இங்கிலாந்திலும் ஒருசில நடுநிலை மொழியாராய்ச்சியாளர் தமிழ் முகம் திரும்பி அதன் தொன்மையையும் முன்மையையும் வடமொழிக்குச் சொல் வழங்கிய வன்மையையும் உணர்ந்து, அதை உலகினுக்குணர்த்த முன் வந்திருப்பது மிக மகிழத்தக்கதே. ஆயினும்; ஏமாற்றுவதிலும் அறை போவதிலும் துறைபோய ஒருசில புறத்தமிழரும் போலித் தமிழரும், இன்றும், முகம் என்னும் சொல் வடசொல்லென்று வலிக்கத் துணிவது எத்தனை இரங்கத்தக்க செய்தியாம்! வடமொழிச் சொற்றொகுதிகளில் மட்டுமின்றி, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியிலும், பண்டாரகர் Dr. உ. வே. சாமிநாதையர் அவர்களின் குறுந்தொகையராய்ச்சிக் குறிப்பிலும், முகம் என்பது வட சொல்லெனக் குறித்திருப்பது, அதன் வடமொழி மூலக்கொள்கை விருப்பினர்க்குச் சான்றாய்த் தோன்றும். ஆங்கிலர் அவர்தம் தாய்மொழியாம் ஆங்கிலத்தில் ஆப்பிரிக்கமும் ஆத்திரேலியமும் போன்ற எத்துணைப் புன்மொழிச் சொற்கள் கலந்திருப்பி னும், அவை எம்மொழியின வெனத் தாமாகவே ஆராய்ந்து மகிழ்வொடு உண்மையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆயின், வடமொழியாளரோ, கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழரொடு தொடர்புகொண்டிருப்பினும், வடமொழியும் அதன் இலக்கண விலக்கியமும் தென்மொழியாலும் அதன் இலக்கணவிலக்கியத்தாலும் மிக வளம்படுத்தப்பட்டிருப்பினும், வடமொழியிற் கலந்துள்ள (ஆயிரக்கணக்கான அல்லாவிடின்) நூற்றுக்கணக்கான தென் சொற்களுள் ஒன்றுகூடத் தென்சொல்லென ஒப்புக் கொண்டிலர். ஆயினும், மகன் தந்தையைத் தந்தையென ஒப்புக்கொள்ளாவிடின், தந்தை தன் தந்தைமையிற் றிரியாமைபோல், தென்சொல்லும் தென் சொல்லென ஒப்புக்கொள்ளப்படாவிடினும் தன் தென் சொன்மையினின்று திரிந்துவிடா தென்க. வடமொழி எக்காரணம் பற்றியும் பிறமொழியினின்று கடன்கொள்ளா தெனக் கூறல் வேண்டுமென்பது வடமொழியாளர் வன்கோளாதலின், அது அறிஞர் ஆய்விற்குரியதென அப்பால் ஒதுக்க. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியும், வடநூலாரையே குருட்டுத்தனமாய்ப் பின்பற்றுவதானும், தமிழன்பராலும் தமிழ்மொழியறிஞ ராலும் தொகுக்கப் பெறாமையாலும், அதனையும் பொருட்படுத்தற்க. இனி, பண்டாரகர் சாமிநாதையரும், பண்டைத் தமிழிலக்கியப் பதிப்பீட்டு வகையில் தலைசிறந்த தொண்டாற்றினரேயன்றி தனித்தமிழ் விருப்பினரல்லர். வடமொழியுயர்வும் தென்மொழித் தாழ்வும் என்றும் நிலவவேண்டுமென்னும் கொள்கையினர்; வடசொற்களாலன்றி வடவெழுத்து களாலும் தமிழின் தூய்மையைக் குலைத்தவர்; தமிழை இலக்கியச் செம்மொழியாக கொள்ள இசையாதவர்; மொழிநூற்பயிற்சி சிறிதும் இல்லாதவர்; ஆதலின் அவர் கூற்றும் கொள்ளத்தக்கதன்றென விடுக்க. முகம் என்னும் சொல் தென்சொல்லேயென ஒன்பான் ஆண்டுகட்கு முன்னரே என் `முதற்றாய்மொழி'யில் விளக்கியிருப்பினும், அதனைப் பாராமையாலோ, ஆராய்ச்சியின்மையாலோ, வடமொழி வெறிபற்றிய தமிழ் வெறுப்பாலோ, அடிமைத் தனத்தினாலோ, `முகம்' வடசொல்லென இன்றும் ஒருசார் தமிழாசிரியர் வகுப்பிற் சொல்வதும், அதுகேட்டு மாணவர் மயங்குவதும், சில தேர்வாளர்மாணவர் போட்டித் தேர்வுகளில் முகம் எம்மொழிச் சொல் என வினவி உண்மையுரைப்பாரைத் தவறுவிப்பதும் வழக்கமாயிருந்துவருகின்றன. இது பலர்க்கும் இடர்ப்பாட்டை விளைத்தலின், இனிமேல் இப்பொருள்பற்றி ஐயுறவும் ஏமாற்றும் தருக்கமும் இல்லாதவாறு, முகம் என்பது தென்சொல்லேயென முடிந்த முடிபாக நாட்டுதற்கு எழுந்ததிக்கட்டுரையென்க. முகம் என்பது தென்சொல்லேயெனக் கோடற்கு மறுக்கொணாச் சான்றுகள் வருமாறு :- (1) தமிழில் மூலமும் பொருளும் முற்றும் பொருந்துதல் :- முகம் (முகு + அம்) = முன்பு, முன்னுறுப்பு, முன்பக்கம். முனை, நுனி, தோற்றம். முகப்பு, முகனை, முகச்சரக்கு, முகதலை, முகமண்டபம், முகமனை, முகவாசல், முகவுரை, உரைமுகம், துறைமுகம், நூன்முகம், போர்முகம் முதலிய வழக்குகளை நோக்கி முன்மைக் கருத்தே முகம் என்னும் சொல்லின் வேர்ப்பொருள் என்பது விளங்கும். உயிர்களின் (பிராணிகளின்) முன்பக்கத்திற் சிறந்த உறுப்பு தலையின் முன்புறமாதலின், அது முகம் எனப்பட்டது. உயிர்களின் இயல்பான இயக்கம் அல்லது தோற்றம் முன்னோக்கியே நிகழ்தலின் முன்மைக் கருத்தில் தோற்றக் கருத்துத் தோன்றிற்று. எ-கா : முகம் - தோற்றம் முகஞ்செய்தல் - தோன்றுதல் முகம்பெறுதல் - தோன்றுதல் முகு + உள் - முகுள் - முகிள் = அரும்பு முகிள் + அம் - முகிளம் = அரும்பு அரும்புதல் = தோன்றுதல் முகுள் - (முகுர்) - முகுரம் = தளிர் முகிள் - முகிழ் = அரும்பு. முகிளம் - முகிழம் = மலரும் பருவத் தரும்பு முகிழ்த்தல் - தோன்றுதல் ``மூவகை யுலகு முகிழ்த்தன முறையே'' (ஐந்குறுநூறு கடவுள் வாழ்த்து). முகு + ஐ - முகை = அரும்பு, முகைதல் - அரும்புதல். முகைத்தல் - அரும்புதல் முகு - முக்கு - மொக்கு = அரும்பு. மொக்கு - மொக்குள் = அரும்பு. முகம் என்னும் சொல்லில் முகு என்னும் பகுதியும், முகு என்னும் பகுதியில் மு என்னும் உயிர்மெய்யில் உ என்னும் உயிரும், உயிர்நாடியான உறுப்புக்களாம். முன், முந்து முதலிய சொற்களில் முகரமும், ஊங்கு, உங்கு, உங்ஙன், உது, உவன் முதலிய சொற்களில் ஊகார உகரங்களும், அடிப்படையாயிருந்து முன்மைக் கருத்தையுணர்த்துதல் காண்க. முகம் - முகர் - முகரை - மோரை. முகர் - முகரி - முன்புறம், தொடக்கம் முகம் - முகன் - முகனை - மோனை. முகு - முக - முகப்பு. (2) வடமொழியிற் கூறும் மூலமும் பொருளும் ஒரு சிறிதும் பொருந்தாமை : வடமொழியில் முகம் என்பது முக்ஹ (mukha) என்றே வழங்கினும், அதனை வடசொல்லாகக் காட்டல் வேண்டி, னகர (நகர) மெய்யை ஈற்றிற் சேர்த்து முக்ஹன் (Mukhan) என்னும் வடிவைப் படைத்து; அதில் `மு' என்னும் முதன்மையான பகுதியைப் பொருளற்ற முன்னொட்டாக (Prefix) த்தள்ளி, எஞ்சிய க்ஹன் (Khan) என்னும் கூற்றைத் தோண்டுதற் பொருள்தரும் வினைப்பகுதியாக்கி, தோண்டுதல், தோண்டப்பட்ட கிடங்கு, கிடங்கு போன்ற வாய், வாயுள்ள இடம் (முகம்) என, முறையே முகம் என்னும் சொற்குப் பொருளுரைப்பர் வடநூலார். இது பகுத்தறிவிற்குச் சற்றும் பொருந்தாமையொடு, ``ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று, சூழியனுந் தான் முந் துறும்'' என்னும் தெய்வத் திருமறைக்கேற்ப, மீண்டும் முகம் என்பது தென்சொல்லே யென்பதை வலியுறுத்தல் காண்க. முகம் - முகன் (கடைப்போலி). இனி, கன் என்னும் சொல்லும் தென்சொல்லே. கல் - கன். கல்லுதல் = தோண்டுதல். கன் - கன்னம் = தோண்டுதல், சுவரைத் துளைத்துத் திருடுதல். லகரம் னகரமாகத் திரிதல் இயல்பு. ஒ.நோ ; ஆல் - ஆன் (3ஆம் வேற்றுமையுருபு). மேல - மேன. (3) வடமொழியிலும் முக்ஹ என்பது முகம் என்னும் பொருளில் வழங்கல். எ-கா : முக்ஹ - கமல - முகத்தாமரை (தாமரை முகம்) முக்ஹ என்னும் சொற்கு வடமொழியில் வாய் என்பதே முதன்மைப் பொருளாக் கொள்ளினும், முகம் என்னும் பொருட்கும் வட்டஞ்சுற்றி வழியே வருதல் காண்க. (4) தொடர்புடைய தென் சொற்கள் : தலையில் முகம் முன்புறமாயிருத்தல்போல் முகத்தில் மூக்கு முன்னுறுப்பாயிருத்தலால், முன்மைக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட முகம் என்னும் சொல் தமிழில் மூக்கையும் உணர்த்தும். முகம் - முக, முகத்தல் = மூக்கால் மணம் நுகர்தல். முக - மோ - மோப்பு - மோப்பம் முகம் - முகர், முகர்தல் = மோத்தல். முகர் - மோர். முகு - முக்கு - மூக்கு மூக்கு - மூக்குப் போன்ற மூலை முக்கு - முக்கை = ஆறு திரும்பும் மூலை. (5) எதுகை வடிவான இனப்பொருட் சொற்கள் : முகு என்னும் அடிக்கு எதுகையான நுகு, புகு முதலிய அடிகளும், முன்மைக் கருத்தின் வழிப்பட்ட தோன்றற் கருத்தையுணர்த்துவனவாகும். நுகு - நுகும்பு = பனையின் இளமடல் நுகு - நுங்கு = இளம்பனங்காய்ச்சுளை அல்லது கொட்டை. நுகு - (நகு) நாகு = இளமை. புகு - பூ, பூத்தல் = தோன்றுதல். ``பூந்தலிற் பூவாமை நன்று'' பூ - போ - போத்து = இளங்கிளை. போத்து - போந்து = பனங்குருத்து போந்து - போந்தை = பனங்குருத்து. புகு - (பொகு) - பொகில் = அரும்பு பொகில் - போகில் = அரும்பு ழகரம் சில சொற்களில் ககரமாகத் திரியும். எ - டு : தொழுதி - தொகுதி. முழை - முகை. இங்ஙனமே, நுழு, புழு, முழு முதலிய ழகர உயிர்மெய்யீற்றுச் சொற்களும் ககர வுயிர் மெய்யீற்றினவாய்த் திரிந்திருத்தல் வேண்டும். முள் - முழு முகு, நுள் - நுழு - நுகு, முள் - முளை. முளைத்தல் = தோன்றுதல். நுழுந்து - இளம்பாக்கு. நுழாய் = இளம்பாக்கு. ஆயிரக்கணக்கான பழந் தென்சொற்கள் அழிந்து போயின்மையால், பல கருத்துகளை இணைக்கும் அண்டுகளை எல்லா மொழி முதல் அடிகட்கும் காட்டமுடிந்திலது. (6) வடமொழியிற் பிற சொல்லிருத்தல் : முகத்தைக் குறித்தற்கு ஆனனம், வதனம், முதலிய பிறசொற்கள் வடமொழியிலுள. (7) தென்மொழியிற் பிற சொல்லின்மை : தென்மொழியில் முகத்தைக் குறித்தற்குத் தொன்றுதொட்டு வழங்குவது முகம் என்னும் சொல் ஒன்றே. (8) தென்சொல் வளம் : இலை, தாள், தோகை, ஓலை என ஒரே, நிலைத்திணைச்சினையை நால்வகைப்படுத்தவும், வடு (மா), மூசு (பலா), கச்சல் (வாழை) என முக்கனிகட்கும் பிஞ்சுநிலையில் சிறப்புச்சொல் வழங்கவும் தெரிந்த மதிமான் பண்டைத் தமிழர்க்கு முகத்தைக் குறித்துச் சொல்லவில்லையென்பது, பகுத்தறிவுடையார்க்குக் கூறும் கூற்றன்று. (9) வடமொழியில் தென்சொலுண்மை : ஆயிரக்கணக்கான தென்சொற்கள் வடமொழியில் வெளிப்படையாய் வழங்கிவருவதால் வடமொழியில் தென்சொல்லைக் கடன் கொள்ளாதென்னும் பித்தர் கூற்றை எள்ளியிகழ்க. (10) மேலையாரியத்தில் முகம் என்னும் சொல்லின்மை : மேலையாரிய மொழிகளுள் ஒன்றிலேனும் முகம் என்னும் சொல் லின்மையால், முகம் என்பது தென்பாலி முகத்துத் தோன்றிய தென் சொல்லே யென ஓங்கி அறைக. ``பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே'' ``மெய்யுடை யொருவன் சொலகாட்டாமையாற் பொய் போலும்மே பொய்போ லும்மே.'' 15 வள்ளுவன் என்னும் பெயர் வள்ளுவன் என்னும் பெயர் ஒரு குலத்தையும், திருக்குறள் ஆசிரிய ராகிய திருவள்ளுவரையும் குறிப்பதாகும். இவற்றுள் குலத்தைக் குறிப்பதற்குக் காரணத்தையே ஆராய எழுந்ததிக் கட்டுரை. திருக்குறளாசிரியரைக் குறிப்பதற்குக் காரணம் அடுத்த இதழில் ஆராயப்படும். வள்ளுவன் எனும் பெயர் முதன்முதல் பறையருள் ஒரு பிரிவாராய் அரசன் ஆணையை அவரது நகர மக்கட்கு யானை மீதேறிப் பெரும்பறை (பேரிகை) யறைந்தறிவிக்கும் விளம்பரத் தலைவனைக் குறித்தது. இத் தலைவன் அரசாணையை மக்கட் கறிவிக்கும் அளவில் இற்றை விளம்பர மந்திரிபோல்வன். வள்ளுவர் பறையர் குலத்தொரு பிரிவினரென்பது, அவரது பறை யரையும் தொழிலாலும், வள்ளுவப்பறையன் என்றோர் சொல்லுண்மையாலும், இக்காலத்தும் அவர் பறையரினும் உயர்ந்தவராயிருப்பினும் பிற உயர் குலத்தாரால் இழிவா யென்னப்படுவதாலும் பறையர்க்குக் குருவாயிருப்ப தாலும் அறியப்படும். பண்டைக்காலத்தில் குலப்பிரிவினை பிற்காலத்திற்போல் மிகக் கொடிதாயிராமையானும், வள்ளுவர் அரசர் வினையைச் செய்துவந்தமை யாலும் அவர்க்கு இழிவிருந்திலது. இது முந்திய இதழிற் கூறிய பாணர் என்னும் கட்டுரையாலும் அறியப்படும். அச்சுவித்தை மிகச் சிறந்து பத்திரிகைகளாலும் துண்டறிக்கைகளாலும் விரைந்து செய்தி பரப்பும் இக்காலத்தும், வேத்தியல், பொதுவியல் ஆகிய இருவகைச் செய்திகளையும் பறையறைந்து விளம்பரஞ்செய்யும் வழக்கு வீழ்ந்திலது. பண்டைக்காலத்தில் பறையறைதலொன்றே செய்தி பரப்பும் சிறந்த வாயிலாகும். இதனால், பறையறைதல் என்னும் தொழிற் பெயருங்கூட விளம்பரத்தைக் குறிப்பதாகும். ``நாக்கடிப்பாக வாய்ப்பறையறைந்து சாற்றக் கேண்மின்'' என்றார் கபிலரும். பொது மக்கட்குப் பறையறைபவர் அல்லது விளம்பரஞ் செய்பவர் பறையரெனும் பொதுப் பெயராலும், அரசர்க்கு அவ்வினைகளைச் செய்பவர் வள்ளுவர் எனும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்பட்டனர். ஒரே வினையை, அது எத்துனை இழிந்ததாயினும், அரசர்க்குச் செய்பவர் உயர்வதும், பொது மக்கட்குச் செய்பவர் இழிவதும் எந்நாட்டிலும் இயல்பாம். உதாரணமாக, அரசர்க்கு மயிர்வினை செய்பவன் சாதாரண அம்பட்டரினும் உயர்வா யெண்ணப்படுவான். அவர் பொதுமக்கட்கு வினை செய்வதும், அங்ஙனம் செய்பவருடன் உறவு கலப்பதுமில்லை; தன்போன்ற பிற அரச அம்பட்டருட னேயே கொள்வினை கொடுப்பனையும் வைத்துக் கொள்வான். இங்ஙனமே பொதுக்குலமான பறையரினின்றும் வள்ளுவர் தனிக்குலமாகப் பிரிய நேர்ந்தது. பண்டை நூல்களில் வள்ளுவன் தொழில் அரசராணையைப் பறையறைந் தறிவிப்பதாகவே கூறப்பட்டுள்ளது. ``வள்ளுவர் முரசமூதூ ரறைகெனவருளினானே'' என்றார் சீவகசிந்தா மணியாசிரியர் திருத்தக்கதேவர் (செய். 2149). இதில் வள்ளுவர் என்பது இசைபற்றி வள்ளுவார் என நீண்டது. இனி வள்ளுவன் என்னும் பெயரின் மூலத்தை ஆராயினும் அது பறையறையும் தொழிலுக்கு ஏற்ற பொருளையே தராநிற்கும். வள்ளுவன் எனும் சொல் வள் என்னும் மூலத்தினின்றும் பிறந்தது. வள் என்பது பறைக்குவேண்டிய தோலையும் வாரையும் அவற்றாற் செயப்படும் பல பொருள்களையுங் குறிப்பதாகும். வள் - வார் (சூடாமணி நிகண்டு) வள் - வாளுறை (அகராதி நிகண்டு) வள் - கடிவாளம் (அகநானூறு. பா. 4) வள் என்னும் மூலம் புவ்வீறு பெற்றும் இப்பொருள்களை உணர்த்தும். ``வள்பு தெரிந்தூர் மதிவலவநின் புள்ளியற் கலிமாப் பூண்டதேரே'' என ஐங்குறு நூற்றில் (பா. 486) கடிவாளத்தையும், ``மாசறவிசித்த வார்புற வள்பின் .......... உருகெழு முரசம்'' (பா. 50) எனப் புறநானூற்றில் வாரையும் வள்பு என்னும் சொல் குறித்தது. வள் என்னும் மூலத்தினின்றும் பிறந்த வள்ளுரம் என்னுஞ் சொல் தோலின் இனப்பொருளான ஊனை (மாமிசத்தை)க் குறிக்கும். வள் என்னுஞ்சொல் உகரச்சாரியையும் அன் ஈறும் பெற்று வள்ளுவன் என்றாயது. வள்ளுவன் அரச சம்பந்தமானதொழிலைச் செய்பவனாதலின், பிங்கல நிகண்டில், ``வள்ளுவன் சாக்கை யெனும்பெயர் அரசர்க் குள்படு கருமத் தலைவர்க்கொன்றும்'' என்று கூறப்பட்டுள்ளது. இதில் `வள்ளுவன்' என்பதற்கு எதுகையாயும், சம்பந்தப்பட்ட என்னும் பொருளிலும் வந்த `உள்படு' என்னும் சாமானியத் தொடரை மிகச்சிறந்த பொருளாகக் கொண்டு `அரசர்க்குள்படு கருமம்' என்பது ஆங்கில நாட்டுச் சேம்பர்லேன் (Chamberlain) போன்ற ஓர் அதிகாரத்தைக் குறிக்குமென்பர். இது எமக்கு உடன்பாடன்று. இனிச் சார்பினாலும் வள்ளுவன் தொழில் யாங்கூறியதே என்பது போதரும், மேற்கூறிய சூத்திரத்தில் `வள்ளுவன்' என்பதை அடுத்து நிற்கும் `சாக்கை' யெனும் பெயர். வெற்றிக் காலத்திலும் அமைதிக்காலத்தும் அரசர்க்குக் கூத்தாடி மகிழ்ச்சியையுண்டுபண்ணும் வேத்தியற் கூத்தரைக் குறிக்கும். வள்ளுவரும் சாக்கையரும் தமக்குக் கீழ்ப்பட்ட பல துணை வரையும் தத்தம் தொழிற்கு முழுப்பொறுப்பு முடைமையான் கருமத் தலைவரெனப்பட்டார். 10ஆம் நூற்றாண்டிலியற்றப்பட்ட சீவக சிந்தாமணியில் வள்ளுவன் அரசாணையைப் பறையறைந்து விளம்பரஞ் செய்பவனாகக் கூறப்படுதலால், அதற்கு இரண்டொரு நூற்றாண்டிற்கு முந்திய பிங்கலத்திலும் அதுவேயாதல் வேண்டும். பண்டைக்காலத்திற் பாணர்க்கு இசைத்தொழிலே குலத்தொழிலாயினும், அவருட்பலர் அதில் பிழைப்பின்மைபற்றிப் பிறதொழிலை மேற்கொண்டது போல், வள்ளுவரும் அரச வினையில்லாரெல்லாம் கணி (சோதிட)த் தொழில் புரிந்து வந்தனர். சாதகங்கணித்தலும் குறிச்சொல்லுதலும் இக்காலத்தும் வள்ளுவர்க்குரிய. பண்டைக்காலத்திலேயே வள்ளுவர் நிமித்திகத் தொழிலுஞ் செய்துவந்தமையின், வள்ளுவர் எனும் பெயர் நிமித்திகன் எனும் பொருளை யுந் தழுவியது. (சிந்தாமணி 419). நிமித்திகன் நிமித்தம் (சகுனம்) கூறுபவன். வள்ளுவன் குறி சொல்லுவதனால், அத் தொழிற்கு வள்ளுவ சாத்திரமென்றும், அவனுக்கு வள்ளுவப் பண்டாரமென்றும் பெயர் உண்டு. பண்டாரமென்பது முற்காலத்தில் நூலகங்கட்கும் பல நூல் பயின்ற புலவர்க்கு அல்லது ஞானி கட்கும் வழங்கிய பெயர். அது பின்பு முறையே துறவுபூண்ட அறிஞர்க்கும் போலித் துறவிகளுக்கும், பெயராயிற்று. புறநானூற்றிற் சில பாடல்களில் நாஞ்சில் என்னும் மலைக்குத் தலைவனான ஒருவன் வள்ளுவன் என்னும் பெயராற் கூறப்படுகிறான். அவன் ஒருகாற் சேரனுக்கும், பின்பு பாண்டியனுக்கும் படைத்தலைவனாயிருந்ததாகத் தெரிகின்றது. அவன் 137ம் 140ம் 380 புறப்பாட்டுக்களில் பொருநன் என்று விளிக்கப்படுகின்றான். பொருநன் என்னும் பெயர் ஏர்க்களம் பாடுவோன், போர்க்களம் பாடுவோன், பரணி பாடுவோன் என்னும் மூவகைப் புலவருள் அல்லது பாடகருள் ஒருவரையாவது போர்வீரனையாவது குறிக்கும். இங்குக் கூறப்பட்ட நாஞ்சில் வள்ளுவன் ஓர் படைத்தலைவனாதலின் போர்த் தொழிற்பற்றியே பொருநன் எனப்பட்டான். வள்ளுவக் குலத்தானொருவனே ஓர் அருஞ்செயல்பற்றி அல்லது சிறந்த போர்த்தொழில்பற்றி நாஞ்சில் என்னும் மலையைக் கொண்ட ஒரு சிறு நாடு (சேரனால் அல்லது பாண்டியனால்) கொடுக்கப்பட்டிருக்கலாம். பண்டைக்காலத்தில் போர் வீரர் பெரும்பாலும் மறவரும் கள்ளருமாயிருந்தா ரேனும், பிற குலத்தாரும் அத்தொழிற்கு எத்துணையும் விலக்கப்பட்டில ரென்பது தேற்றம். ஆதலால் நாஞ்சில் வள்ளுவனை வள்ளுவக் குலத்தானாகக் கூறுவதற்குப் பெரிதுந் தடையில்லை. திருவிதாங்கூர்ச் சீமையைச் சேர்ந்த ஒரு நாடு வள்ளுவ நாடெனப்படுகின்றது. அது ஒருவேளை நாஞ்சில் வள்ளுவன் நாடாயிருந்திருக்கலாம். இனி, வள்ளுவன் என்னும் பெயரை வள்ளல் என்னும் பெயரின் மறுவடிவாகக் கொண்டு, அதற்கு உபகாரி என்னும் பொருளும் உரித்தாக்குவர். வள்ளல் என்னும் பெயரும் வள் என்னும் மூலத்தினின்றே பிறந்ததாயினும், அம்மூலம் உபகாரி யென்னும் பொருளில் வரும்போது, வள்ளல், வள்ளியன், வள்ளியான், வள்ளியோன், என்ற வடிவுகளை ஏற்பதல்லது வள்ளுவன் என்னும் வடிவை எவ்விடத்தும் ஏலாமையின், அது போலியுரையென மறுக்க. இதுகாறுங் கூறியவற்றால், வள்ளுவன் என்பது குலப்பெயரே யென்றும், அது நிமித்திகளையும் குறிக்குமென்றும், உபகாரி யென்றும் பொருளில் வாராதென்றும் அறிந்துகொள்க. 16 கழகமெல்லாம் சூதாடுமிடமா? `கழகம்' என்பது சிறப்பாகவும் பெரும்பான்மையாகவும் கற்றோர் கூட்டத்தையே குறிக்குமேனும், சிறுபான்மை சூதாடுமிடத்தையும் குறிக்குமாறு இலக்கியத்தில் ஆளப்பட்டிருப்பதால், இவ்விரு பொருள்களுள் எது சிறந்தது என்னும் ஐயமும், `கழகம்' சூதாடுமிடத்தைக் குறித்ததெவ்வாறு என்னும் கலக்கமும், சிலர்க்குத் தோன்றியுள்ளன. கழகம் என்னும் சொல்லின் வேரும் வரலாறும் தெரியின், இவ் வையமும் கலக்கமும் முற்றும் நீங்கிவிடும். குல் - குல - குலவு, குலவுதல் = கூடுதல். குல - கல. கல - கலவி. கல - கலவை, கலப்பு - கலம்பு - கலம்பம் - கதம்பம். கலம்பு -கலம்பகம் கல - கலங்கு - கலக்கு- கலக்கம் கல - கலகம், கலாம், கலாபம், கலாபணை. இருவர் அல்லது இரு கட்சியார் கலந்தே பொருவதால், கலத்தற் கருத்திற் போர்க்கருத்துத் தோன்றிற்று, கை கலத்தல் என்னும் வழக்கையும், பொரு, சமர் என்னும் சொற்களின் வேர்ப் பொருளையும் நோக்குக. மேற்காட்டிய சொற்றிரிவுப் பட்டியினின்று, கலத்தற்சொற்கு, இருபாற் கூட்டம், கலப்பு, கலக்கம், கலகம் என்னும் நாற்பொருள்கள் தோன்றியுள்ளமை காண்க. நீரும் மண்ணும் போலப் பல பொருள்கள் அல்லது கருத்துகள் கலப்பதே கலக்கம். குல் - குள் - கள். கள்ளுதல் = கூடுதல், பொருந்துதல் ஒத்தல். கள் - களம் = ஏர்க்களமும் போர்க்களமும் போலப் பலர் கூடுமிடம். களம் - களன் = அவைக்களம் களன் - கழனி = ஏர்க்களம் உள்ள வயல். களம் - களர் = அவை. களர் - களரி = அவை, கல்வி நாடகம் மல் வில் பயிலும் அரங்கு, வழக்கு மன்றம், தொழில் செய்யும் இடம். கள்ளம் = போல. ``கள்ள மதிப்ப வெல்ல வீழ'' (தொல். பொ. 289). குள் - குழு - குழம்பு - குழப்பு - குழப்பம். குழவி = திரண்ட அரை கல். கூடுதற் கருத்தில் திரட்சிக் கருத்துத் தோன்றும், ``சேரே திரட்சி'' (தொல். 846) கூறுதல் காண்க. குழு - குழூஉ. குழு - குழாம். குழு - குழும்பு. குழு - குழுமு - குழுவு, குழுமு - குழுமல், குழுமம், குழுவு - குழுவல், குழுமுதல் = கூடுதல், குழுவுதல் = கூடுதல், திரளுதல். குழுமு - கழுமு - கழுமல் = மயக்கம், நிறைவு, மிகுதி. குழு - கெழு - கெழுமு - கெழுவு. கெழுமுதல் = பொருந்துதல், கெழுவுதல் = பொருந்துதல், மயங்குதல், கெழுவு = நட்பு, `கெழுவி' ஓர் உவமவுருபு கெழு - கெழி = நட்பு குழு - குழை = திரண்ட காதணி. குழு - (குழகு) - கழகு - கழகம் = ஒலக்கம் (Durbar), புலவரவை, கலை பயிலிடம், படைக்கலம், மல் பயிலிடம், சூதாடுமிடம். குள் - (கூள்) - கூடு. கழகம் என்னும் சொல், கூடுதல் என்னும் பொருள்கொண்ட குழு என்னும் வேரடியாகப் பிறந்திருத்தலால், பொதுவாகக் கூட்டம் என்றே பொருள் படுவதாகும். அது, முதற்கண், சிறந்த கூட்டமாகிய புலவரவைக்குப் பெயரால் வழங்கிற்று. ``கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ''. என்னும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணச் செய்யுளில், `கழகம்' புலவரவையைக் குறித்தது. சங்கம் என்னும் வட சொற்கு நேர் தென்சொல் கழகம் என்பதே. பழம் பாண்டி நாட்டு முத்தமிழ்க் கழகங்களும் தமக்கு முந்திய தமிழிலக்கியத்தை ஆராய்ந்து வந்ததினால், கற்றோர் பயிலும் இடத்தைக்குறித்த கழகம் என்னும்சொல், நாளடைவில், கற்போர் பயிலும் இடத்தையும் குறிக்கத் தலைப்பட்டது. ``அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரையென்ப.'', ``அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப.'', ``அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரையென்ப.'', என்று இறையனாரகப் பொருளுரை. முறையே முத்தமிழ்க் கழகங்களையும் பற்றிக் கூறுதல் காண்க. இதனால், இளைஞர் கல்வி பயிலுமிடத்தை. ``கந்தனை யனையவர் கலைதெரி கழகம்'' என்றார் கம்பர் (கம்பரா. நாட்டுப். 48). இனி, ஈண்டைக் கழகம் என்னும் சொற்கு, விற்கலை மற்கலை முதலிய போர்த்துறை பயிலும் இடம் எனவும் பொருளுரைப்பர். அதுவே கம்பர் கருத்தாயின் போர்க்கலையையும் கல்வித் துறைகளும் ஒன்றாக அடக்கிக்கொள்க. திவாகரம், படைக்களம் மற்போர் முதலியன பயிலும் இடத்தையும் கழகம் எனக் குறிக்கும். ஏர்க்களத்திலும் அவைக்களத்திலும்போல் போர்க்களத்திலும் மக்கள் கூடுவதால், களம் என்னும் சொல் அம் மூன்றிடத்தையும் குறித்ததென முன்னர்க்கண்டோம். சூதாடுதற்கும் மக்கள் கூடுவதாலும், சூதும் ஒரு வகைப் போராதலாலும் கழகம் என்னும் சொல் மூன்றாவதாக அல்லது இறுதியாகச் சூதாடுமிடத்தையும் குறித்தது. சூதும் ஒரு வகைப் போர் என்பதைச் சூது பொருதல் என்னும் வழக்கினாலும், சூது போர்ச்சருக்கம் என்னும் வில்லி பாரதச் சருக்கப் பெயராலும், உத்தியாலும், அறியலாம். வேத்தவையிலுள்ளா ரெல்லாம் ஒவ்வொரு துறையில் தேர்ச்சி பெற்றிருப்பராதலின், ஓலக்கமும் புலவரவையின் அடங்கும். ஆகவே, புலவரவை, கல்வி பயிலிடம், சூதாடு மிடம் ஆகிய மூவேறு பொருளைக் கழகம் என்னும் சொல் குறிக்கும் என்பது தெளிவாம். ``பழகிய செல்வமும் பண்புக் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்.'' (937) என்னுங் குறளில், சூதாடுமிடத்தையும், ``கழகத் தியலுங் கவற்றி னிலையும்'' என்னும் புறப்பொருள் வெண்பாமாலைத் தொடரில் (358), சூதாட்டையும், கழகம் என்னும் சொற் குறித்தது. இங்ஙனங் குறிப்பினும் இது அருகிய வழக்கே, இற்றை உலக வழக்கிலும், நாட்டாண்மைக் கழகம், செந்தமிழ்க் கழகம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மாணவர் கழகம், எனக் கழகம் என்னும் சொல் சூதாடு களமல்லாத பிற களரிகளையே குறித்தல் காண்க. குழு என்னும் வேரினின்றே குழாம், குழுமம் முதலிய பல்வேறு தொகுதிப் பெயர்கள் தோன்றியிருப்பினும், அவையாவும் பருப்பொருளி லன்றி நுண்பொருளில் ஒத்தனவல்ல. குழு = சிறுகூட்டம் (Committee). குழூஉ = மறைபொருட் குறியீடு வழங்கும் தொழிற் குலம் அல்லது வகுப்பு. குழாம் = குழுவினும் சற்றுப் பெரிய கூட்டம் (Party). கோஷ்டி என்னும் வடசொற்கு நேரான தென்சொல் குழாம். பஜனைக் கோஷ்டி என்பதைத் திருப்பாட்டுக்குழாம் என்னலாம். குழுமல், குழுவல் = குழாத்தினும் பெரிய கூட்டம் (Gathering). குழுமம் = வணிகர் சங்கமும் தொழிலாளிகள் சங்கமும் போன்ற கூட்டம் (Guild). குழும்பு = யானைநிரை தோழமைக் கூட்டம் (Herd, Company). ``களிற்றுக் குழும்பின்'' (மதுரைக். 24). கழகம் = சங்கம் (Society Association). ஆகவே, குழு, குழூஉ, குழாம், குழுமம் என்பன முறையே ஒன்றி னொன்று பெரிய தொகுதிகளாம். கழகம் என்பது உயர்திணைக்கே யுரியதாய்ப் பெரும்பாலும் கல்விபற்றியதும் நிலையானதும் குழுமத்திற்குச் சமமானது மான கூட்டத்தையே குறிக்கும். இதனாலேயே, பண்டைத் தமிழ்ச் சங்கத்தைக் கழகம் என்றார் பரஞ்சோதி முனிவர். தலைக்கழகப் புலவர் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மர்; இடைக்கழகப் புலவர் ஐம்பத்தொன்பதின்மர்; கடைக் கழகப் புலவர் நாற்பத் தொன்பதின்மர். ஆகவே, கழகம் என்பது சிறு குழுவைக் குறிப்பதன்று. இனி சூதாடு கருவிக்குக் கழங்கு, கழங்கம் எனப் பெயரிருப்பதால், கழங்கம் அல்லது கழங்ககம் என்னுஞ் சொல் கழகம் எனத் தொக்குச் சூதாடு மிடத்தைக் குறித்ததோவென ஐயுறவும் இடமுண்டு. ஆயினும், ஆய்ந்து நோக்குவார்க்கு, மேற்காட்டிய வரலாறே உண்மையான தென்பது புலனாம். இதுகாறுங் கூறியவற்றால், கழகம் என்பது குழு என்னும் வேரடியாய்ப் பிறந்ததென்றும், கூட்டம் அல்லது கூடுமிடம் என்பதையே அடிப்படைப் பொருளாகக் கொண்டதென்றும், முதற்கண் கற்றோரவையை அல்லது கற்போர் கூட்டத்தைக் குறித்த பின்னர்ச் சூதாடுமிடத்தைக் குறித்ததென்றும், சங்கம் என்னும் வட சொற் பொருளில் தொன்று தொட்டு வழங்கிய தூய பழந்தமிழ்ச் சொல்லென்றும், பண்டையிலக்கியம் முற்றும் இறந்துபட்ட இக்காலத்தில் திருக்குறளைக் கொண்டு சொற்பொருள் வரிசையைக் காணமுடியாதென்றும், சொல்லாராய்ச்சியின் துணையினாலேயே அதைத் துணிதல் கூடுமென்றும், தெற்றெனத் தெரிந்து கொள்க. 17 இந்திப் பயிற்சி சென்ற சில்லாண்டுகளாக இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்றும்,தேசியமொழி (அதாவது இந்துதேசப் பொதுமொழி )யாக்க வேண்டுமென்றும் வடநாட்டாரும் தென்னாட்டில் வடமொழிப் பற்றுள்ள ஒரு சாராரும் செய்துவரும் முயற்சி முதலாவது கவனிப்பிற் கிடமின்றி எள்ளி நகையாடப்பட்டதேனும், இதுபோது, தென்றல் முற்றிப் பெருங் காற்றாவது போலும், துரும்பு பெருத்துத் தூணானாற் போலும், சிறு பொறி பெருந்தீ யானாற் போலும் மிக்குப் பெருகித் தமிழ் வளர்ச்சி தடைப்படுமாறு அத்துணை இந்திப் பயிற்சியைப் பன்னூறாண்டுகளாக வேற்றுக் கொள்கைகட் கடிமைப்பட்டுத் தாய்மொழிப்பற்று தினைத்தனையு மில்லாத தமிழ்மக்களிடை பரவியுள்ளது. ஏனைய நாட்டாரெல்லாம் தத்தம் தாய்மொழியை எத்துணையோ வளம் படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டாரோ ‘v§bfÊby‹ ஞாயி றெமக்கு என்றிருக்கின்றனர். ஆங்கிலத்திற்கும் பிறவற்றிற்கும் ஆயிரக் கணக்கான பொற்காசுகளை வலியக் கொட்டியளக்கும் தமிழரும் உளர். தமிழுக்குப் பெரும் பொருள் வழங்குந் தமிழரோ தமிழுல கனைத்தினும் ஒருவரிருவரே உள்ளனர். இந்து தேசத்தில் வடநாட்டார் மேனாட்டாரும் பிற்படும்படி தாய்மொழிப் பற்றில் தலைசிறந்துள்ளனர். தமிழ்மக்களோ மேலைக் கலைச்சுடர்கள் மிளிர்ந்தொளிரும் இவ் விருப தாம் நூற்றாண்டிலும் சுதந்தர வுணர்ச்சியினும் தாய்மொழிப் பற்றினும் செத்து விறைத்துச் சில்லிடத் துயிர்ப்பிக்கும் நிலையுமின்றி இராமன் ஆண்டா லென்ன, பரத னாண்டா லென்ன என்று கண்மூடித்தனமாய்க் காலங் கழித்து வருகின்றனர். இந்திப் பயிற்சியைப் பாடசாலைகளில் வலிந்து புகுத்த விரும்புவார் தம் கொள்கைக்குத் தேசியப் போர்வை போர்ப்பினும், அதற்குக் காரணம் அவர்க்குள்ள ஆங்கிலப் பகையும் வடமொழி வேட்கையுமே என்பது கூர்ந்து நோக்குவார் யார்க்கும் புலனாகாமற் போகாது. தமிழுணர்ச்சி சிறிதுமில்லாத தமிழ்மக்களிடை இந்திப் பயிற்சியைப் பரப்புவதினால், ஒருகால் தமிழ்க்குக் கேடாகப் பெரும்பான்மை (majority) மட்டும்பற்றி இந்தி கட்டாயப் பயிற்சித் தீர்மானம் ஈடேறவுங் கூடும். இதனால் இந்திப் பயிற்சியே வேண்டாவென்பதில்லை, அதன் கட்டாயப் பயிற்சியே வேண்டாவென்கின்றோம். பயனில் முயற்சியும் தீமை விளைக்கும் தீர்மானமும் வேண்டாவென்பதை அழுக்காறாக் கொள்ளார் அறிவுடையார். தமிழால் வளர்ந்து தமிழால் வாழ்ந்து தமிழுக்கே கேடுசூழும் தனியடியாரும் தொகையடியாரும் மிக்கிருக்கின்ற இக்காலத்துக் காற்றுடன் நெருப்புக் கூடிப் பகைமுயற்சி வலியுறா வண்ணம், தமிழன்பரும் தமிழை வளர்க்க மடிதற்றுத் தாமுந்துறும் கழகங்களும் தமிழைத் தழீஇக் காப்பாராக. முதலாவது இந்திப் பயிற்சி வேண்டுவதா என்றும், பின்பு அது கட் டாயமாய் வேண்டுவதா என்றும் நடுவு நிலையாய் ஆராய்தல் வேண்டும். ``காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண் உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண் குற்றமுந் தோன்றாக் கெடும்'' (அறநெறி.42) (1) கருத்தறிவிப்பு, (2) கல்வியறிவு, (3) அலுவற்பேறு, (4) மொழி நூற் பயிற்சி, (5) விருப்பம் என்னும் ஐந்து காரணம்பற்றியே மக்களால் மொழி அல்லது மொழிகள் பயிலப்படுவனவாகும். ஒருவன் தனித்திருந்தால் ஒரு மொழி வேண்டுவதில்லை. பிறருடன் கலந்துறைந்தால் தன் கருத்தைப் பிறர்க்கறிவித்தற்கு ஒரு தாய்மொழியேனுந் தெரிந்திருத்தல் வேண்டும். தென்னாட்டார்க்குத் தமிழ் மலையாளம் முதலிய தாய்மொழிக ளிருத்தலால் தம் கருத்தை யறிவித்தற்குப் பிறிதோர் மொழி வேண்டுவாரல்லர். கல்வி, அலுவல் என்ற இரண்டிற்கும் தமிழ் ஒருகால் முழுத்துணையா யிருந்து இதுபோது ஆங்கில ஆட்சியினாலும் விஞ்ஞானக் கலை வளர்ச்சியினாலும் குறைபாடுள்ளதாயிற்று. ஆயினும், இலக்கணம், இசை, நீதி, காவியம், இல்லற சித்தாந்தம், மருத்துவம் முதலிய பல துறைகளில் இன்னும் இம்மை மறுமைப் பயன்களுக் கேற்ற பெரும்புலமை யளிப்பதும், தனியாகவும் ஆங்கில வாயிலாகவும் பல அலுவல்கட்கு ஆதாரமுமாக வுள்ளது. இலக்கணம் நீதி என்ற இரண்டை நோக்கின் உலக முழுவதிலும் ஒப்புயர்வற்றதாகவும் விளங்குகின்றது! மொழிநூற் பயிற்சிக்கு உலகத்திலுள்ள மொழிகளெலாம் ஒக்க வேண்டுவவேனும், தமிழானது தன் தொன்மை, முதன்மை, தாய்மை, இயற்கையொலி, சொல்வளம், இலக்கியச் சிறப்பு முதலியவற்றால் இந்தியில் மட்டுமல்ல ஆங்கிலத்தினும் பன்மடங்கு சிறந்ததாகும். இந்தி கருத்தறிவிப்பு, கல்வி, அலுவல் என்னும் முக் காரணம்பற்றித் தென்னாட்டாருக்கு முற்றும் வேண்டுவதன்று, மொழிநூலறிஞர் உலக முழுவதினும் விரல்வைத் தெண்ணுமாறு அத்துணைச் சிலராவர். விருப்பம் பற்றி இந்தி கற்பவரும் சிலரே. ஆதலான் இவர்பொருட் டெல்லார்க்கும் பொதுவாய் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவது கல்வி முறைக்கும் நியாயத்திற்கும் மாறாகும். வடநாட்டு மொழிகளெல்லாம் பெரும்பாலும் வடமொழியைத் தாயாக வுடையன. தென்னாட்டிலும் தமிழொழிந்த பிற மொழிகள் வடமொழித் துணையைப் பெரிதும் வேண்டுவன. இந்தியும் மகமதியரிற் பெரும்பாலார் பேசும் இந்துத்தானியும் ஏறத்தாழ ஒன்றே. ஆதலான் வடமொழிக் கிளையாகிய இந்தியைப் பொதுமொழியாக்கத் தமிழரொழிந்த பிறரெல்லாரும் இசையினும் இசையலாம். ஆனால், வங்காளத்தார் அதனை முற்றிலும் வெறுக்கின்றனர். பிறர் பெரும்பாலாராதலின் அவர் கொள்கை வலியுறுவதாகக் கூறலாம். ஆனால், புதுமொழிப் பயிற்சி எங்கும் அளவிற் பலரேனும் சிலரேனும் ஒவ்வொருவர்க்கும் தனித்தனி வருத்தமன்றே. பலரானால் வருத்தங் கூடுவதும் சிலரானால் குறைவது மில்லையே. மேலும், தமிழ்நாடு சிறு நாடேனும் தலைநாடன்றோ? நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறும் திலகமுமே தெக்கணமு மதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும் என்று நம் சுந்தரம் பிள்ளையவர்கள் கூறியது சரித்திரமும் மொழிநூலும் நோக்கின் உயர்வுநவிற்சியன்றி உண்மை நவிற்சியே யன்றோ? உலகத்தில் மக்கள் சராசரி அந்தக்கரண வலி இரு மொழியே பயில உதவும். ஆயிரம் பாட்டிற்கு அடி தெரியும் என்றாற் போலும், ‘Jack of all trades, master of none’ என்றாற் போலும் நுனிப்புல் மேய்ச்சலாய் அரைகுறையாய்க் கற்பதானால் பலரும் பன்மொழிகள் பயிலலாம். ஆனால், அற்ப அறிவு அல்லற்கிடம் (Little knowledge is a dangerous thing’) என்றபடி அது துன்பந் தருவதேயன்றி இன்பந்தருவதன்று. ஒருவருடைய காரியசித்தி பெரிதும் அவருடைய சொல்வன்மையைப் பொறுத்ததாகும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பர். ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. (குறள்.642) என்றார் திருவள்ளுவர். ஒருவர் சாதுரியமாயும் மாதுர்யமாயும் பேசினால் கருதிய காரியங் கைகூடும்; பகைவரும் வயப்படுவர். திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும் பொருளும் அதனினூங் கில். (குறள். 644) விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். (குறள். 648) என்றார் திருவள்ளுவர். ஒருவர் கூற்று, திட்டம் (precision), இனிமை, தூய்மை (purity), பொருத்தம் (propriety), விரைவு முதலிய குணங்களைத் தழுவிச் சிறந்த சொற்களைக் கொண்டுள்ளதாயின், மிக வலியுறுகின்றது. ஒருவர் பன்மொழி வல்லுநரேனும் அரைகுறையாய்க் கற்ற ஒரு புதுமொழியிற் பிழைபடப் பேசுவாராயின் அவர் இகழப்படுவதைக் கண்கூடாகக் காண்கின்றாம். இளமை முதல் இங்கிலீஷ் பயின்று இங்கிலீஷ் அடிக்கடி பேசுகிற பெரிய பட்டதாரிகள்கூடச் சில வேளைகளிற் பிழை விடுகின்றனர். இங்கிலீஷ் நன்றாய்ப் பயிலின் தமிழிற்கும், தமிழ் நன்றாய்ப் பயிலின் இங்கிலீஷிற்கும் போதிய கால மில்லாது போகின்றது. இவ் விருமொழியும் வல்லார் தமிழ்நாட்டிலும் மிகமிகச் சிலரே. இங்ஙனமிருக்க இன்னொரு மொழியைக் கூட்டின், ஒருவன் உத்தியோக (25) வயதிற்கு முன் மும்மொழி பயில எங்ஙன் முடியும்? அந்தக்கரண வலி (உணர்ச்சிவலி, நினைவாற்றல்) யிருப்பினும் காலங்காணாதே. அரைகுறையாய் மும்மொழி பயில்வதினும் ஒரு சிறிதேனும் நிறைவாக இருமொழி பயிலல் ஏற்றமன்றோ! பெஸ்கி (வீரமாமுனிவர்), மாக்கசு முல்லர், போப், கால்டுவெல் முதலியோர் பன்மொழி பயின்றாரே யெனின், அவர்க்கிருந்த அந்தக்கரண வலி அனைவர்க்கு மில்லையே! இங்கிலீஷிற்குப் பதிலாக இந்தியை வைப்போமெனின் அஃது எவ்வதும் இயல்வதா? இங்கிலீஷானது இங்கிலீஷ்காரரின் உயர்வினால் உலகப் பொதுமொழியா யன்றோ ஆகிவருகின்றது! உலகில் 1/3 பங்கு ஆங்கில வயம். சர்வதேச சங்கத்தில் ஆங்கிலத் தலைமை. உலக வாணிகத்திற்கு உயிர்நாடிகளாகவுள்ள வழிகளும் துறைகளும் இங்கிலீஷ் காரருடையன. இங்கிலாந்து போன்றே ஏற்றமடைந்துள்ள பிராஞ்சு, செருமனி முதலிய பிற நாடுகளிலும் உண்டிச்சாலை (hotel), நூல்நிலையம் முதலிய பொதுவகங்களில் ஆங்கில மறிந்தவரே அலுவல் பெறுகின்றனர் என்று கூறுகின்றனர். ஐம்பெருங் கண்டங்களுள் ஒன்றாகிய அமெரிக்காவிற் பெரும்பாலார் தாய்மொழி ஆங்கிலமே. ஆங்கிலரும் அமெரிக்கரும் புது நிருமாண விஞ்ஞானக் கலையில் தலைசிறந்துள்ளனர். இதுகாலை இந்தியர்க்குத் தெரியாத விஞ்ஞானக் கலைகளெல்லாம் இங்கிலீஷில் எழுதப்பட்டுள. ஆடிக்காற்றில் அம்மியே பறக்கையில் ஆலிலை எந்த மூலை என்றபடி எத்துணையோ இலக்கியப் பெருமையும் மொழித் தலைமையு முள்ள வடமொழி தென்மொழி யென்னும் இரு பேரிந்தியத் தாய்மொழிகளே விஞ்ஞானக்கலை நூலின்மையால் இங்கிலீஷிற்கு எதிர்நில்லா வெனின் இனி ஒரு பெருமையுமில்லாத இந்தி எதிர்நிற்குமா? சூரியனுக்குமுன் மின்மினியும், யானைக்கு முன் பூனையும் போல்வதே யன்றோ? இந்தியினின்றும் தமிழுக்கு வந்ததெல்லாம் நியாயப் பிரகாசம் போன்ற இரண்டொரு நூன் மொழிபெயர்ப்பே. தருக்கமுறை யிரண்டனுட் சிறந்த வைசேடிகமுறை அகத்தியர் காலத்தே தமிழிலிருந்ததாகத் தெரிகின்றது. நியாயப் பிரகாசம் போன்ற இரண்டொரு வசன நூல்களை நீக்குவதினால் தமிழிலக்கியத்திற்கு யாதொரு குறைவுமின்று. தமிழிலக்கியம் என்று சொல்லப்படுவதெல்லாம் பண்டைச் சங்கநூல்களும் சங்கமருவிய நூல்களுமே. இன்றும் தமிழறிஞரிற் பலர் இந்திநூன் மொழிபெயர்ப்பு களையே அறிந்திலர். இந்தியில் மேலைக் கலைகளை யெல்லாம் மொழிபெயர்த்துக் கொள்வமெனின், அஃது எளிதில் இயல்வதா? எல்லாக் கலைகட்கும் ஏற்ற சொற்கள் இந்தியிலுண்டா? வடமொழித் துணைகொண்டு மொழி பெயர்த்துவிடினும், இந்திப் பயிற்சி மேனாட்டிற்குப் பயன்படுமா? இந்தியிற் பயின்று பின்பு ஆங்கிலத்திற் பயில்வோமெனின் ஒருவேலைக் கிருவேலையா? ஈனனுக் கிருசெலவு' என்றன்றோ ஆகிவிடும்! ஆங்கிலங் கற்றால் உலகனைத்தும் செல்லும். இந்தியோ இந்தியாவிற்குள்தான் செல்லும். மேலும், அவ்வக் கலைவல்லாரால் எழுதப்பட்ட மூலநூல்களைக் கற்க இடமிருக்கும்போது அவற்றை ஏன் மொழிபெயர்த்துக் கற்க வேண்டும்? ஆங்கிலத்திற் புதிது புதிதாய் நூல்கள் தோன்றிக்கொண்டே யிருக்கும். அவற்றை யெல்லாம் மொழிபெயர்ப்பதாயின் ஒரு மொழிபெயர்ப்பு இலாகாவே நிலையாக வேண்டுமன்றோ? எத்துணைக் காலமும் பொருளும் முயற்சியும் வீணாம்! இங்கிலீஷை யாம் உயர்த்துக் கூறுவதால் இங்கிலீஷ் காரரின் அரசாட்சியை விரும்பிக் கூறுவதாக எண்ணற்க. இங்கிலீஷ் அரசாட்சி ஒழியலாம். இங்கிலீஷ்காரரும் நீங்கலாம்; ஆனால், இங்கிலீஷ் நீங்குவதற்கோ எட்டுணையும் இடமின்று. ஒவ்வொரு மொழியிலுள்ள இலக்கியமும் அவ்வம் மொழியைப் பேசுவாரின் கருத்து களைத் தழுவியதாகும். இங்கிலீஷ்காரரிடம் சில தீக்குணங்களிருப்பினும் நாம் பின்பற்றக்கூடிய பல நற்குணங்களுள வென்பதை நடுவுநிலையுள்ள எவரும் மறுக்கொணாது. ஆராய்ச்சி, நடுவுநிலை, சமுதாய நிலை முதலிய வற்றில் அவர் தலைசிறந்தவராவர். j®°l‹(Thurston) எழுதிய தென் னிந்தியக் குலமரபு நூலும், கால்டுவெல் எழுதிய திராவிட ஒப்பிய லிலக்கணமும் அவர் ஆராய்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாம். ஆங்கிலர் நமது நாட்டிற்கு வந்து நம்மைப்பற்றியே நமக்கு அறிவிப்பது நமக்குப் பெரிதும் நாணைத் தருகின்றது. அங்ஙனம் அறிவித்தும் அவற்றை அறிந்தவர் ஆயிரத்திற் கொருவரே ஆவர். உண்மையான சரித்திரமும் மொழிநூலும் ஆங்கிலரே நமக்குணர்த்தினர். சுதந்தரம், சமத்துவம், சோதரத்துவம் முதலியவைபற்றிய பரந்த நோக்கும் திருந்தின வுணர்ச்சியும் ஆங்கில நூல்களாலேயே உண்டாகும். இந்தியருள் சீர்திருத்தம் விரும்புவா ரெல்லாம் ஆங்கில மறிந்தவராயும் விரும்பாதவரெல்லாரும் பெரும்பாலும் அறியாதவராயு மிருத்தல் காண்க. இந்தி நூல்களோ குலப் பிரிவினையும் பிறப்புப்பற்றிய ஏற்றிழி புங் கூறி மேன்மேலும் கேட்டிற்கே நேர்வழி காட்டுவவாகும். தட்பவெப்ப நிலை, தொழில், ஒழுக்கம், மனிதன் கட்டுப்பாடு முதலியவை பற்றி இடையில் ஏற்பட்ட குலங்கள் படைப்புக் காலந்தொட்டே யிருப்பனவாயின், மேனாடுகளில் ஏன் அவை யில்லை? பிரமாவுக்கு இந்தியாவிற்குள்தான் அதிகாரமோ? தாழ்ந்தோர் சிறிதும் தலையெடா வண்ணம் அவர்களை அமிழ்த்திக் கொல்லுகின்ற அநியாயக் கொள்கை களும், சரித்திரப் புளுகுகளும், குலப்புரட்டுகளும், மந்திர தந்திர ஏமாற்றங் களும் மலிந்துள்ள இதிகாச புராணக் குப்பைகளே இந்தியிலுள்ளன. ஆகையால், இதுபோது இந்தியப் பொதுமொழியாயும் உலகப் பொதுமொழியாயும் இருக்கின்ற ஆங்கிலத்தை அதற்றிவிட்டு இந்தியை ஏற்படுத்தல் கோளரியை நீக்கிவிட்டுக் குள்ளநரியை இருத்துவதையே ஒக்கும். இந்தி ஆணவத் தன்மை வாய்ந்து செவிக்கின்பம் பயப்பதென்று சிலர் கூறுகின்றனர். அஃது உண்மையே. ஆனால், அதன் ஆணவத் தன்மை எளிதாய் உச்சரிக்க வொண்ணாத செயற்கை யொலிகளாலாகி முயற்சி வருத்தத்தை யுண்டுபண்ணுவதால் அது குற்றமாகவு முள்ளது. இனி இனிமையோ பலவகைப்படும். மா, பலா, வாழை முதலிய பல கனிகளின் சுவையும் இனிமையே யாயினும் ஒவ்வொன்றன் இனிமையும் வெவ்வேறு வகைப்படும். அதுபோல மொழிகளின் இனிமையும் வெவ்வேறு வகைப்படும். இலத்தீன் இனிமை வேறு; இந்தியினிமை வேறு; தமிழினிமை வேறு. தமிழினிமையைத் திருக்குறள், திருக்கோவை, சிலப்பதிகாரம். மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் முதலிய நூல்களிற் கண்டுகொள்க. ஆண்டும் செவிப்புலன் நுணுகியார்க்கே சிறந்து புலனாம். தமிழின்பம் இயற்கையும் இந்தியின்பம் செயற்கையுமாகும். இந்திப் பயிற்சியைப் பரப்புவார் ஆங்காங்கு எளிய கட்டணப் பாடசாலைகளை ஏற்படுத்தித் தற்கல்விக் கேற்ற பல இந்தி நூல்களையும் உரையுடன் பல மொழிகளில் வெளியிட்டு எளிய விலைக்கு விற்று வருகின்றனர். இந்தியப் பற்றுள்ள தேசியத் தலைவர்களும் சுயராஜ்யம் விரைந்து வருமென்றும், வந்தவுடன் இந்தியே தேச மொழியென்றும், அதற்கு முன்னரே தாங்கள் இனிப் பேசுவதெல்லாம் இந்தியே யென்றும், இந்தியறியாதார் தங்கள் சொற்பொழிவுகளைக் கேட்டுணர முடியாதென்றும் ஆங்காங்கு நாக்கடிப்பாக வாய்ப்பறையறைகின்றனர். இதனை நம்பிப் பலர் இந்தி பயில்கின்றனர். வடமொழி யிறந்துபட்டதே என்று வயிறெரிகின்ற வடமொழி வெறியார்க்கு வடமொழிக் கிளையான இந்திப் பயிற்சி கோடை மழை போலக் குளிர்ச்சி தருகின்றது. இந்தி வாயிலாய் வடமொழியை உயிர்ப்பித்து மீட்டும் வளர்க்கலாமென்று அவர் பகற்கனாக் காண்கின்றனர். இந்திப் பயிற்சியால் தேசிய ஒற்றுமை உண்டாகு மென்று சில தேசியத் தொண்டர் ஏமாற்றுகின்றனர்; சிலர் ஏமாறுகின்றனர். தேசிய ஒற்றுமை கருதி இந்தி பயில்வது அவலை நினைத்து உரலை இடிப்பதா கின்றது. இந்து தேசத்திலுள்ள பிரிவினை குலமத வேறுபாட்டானும் பிறப்புப்பற்றிக் கற்பிக்கும் ஏற்றிழிபானு மன்றித் தேசப் பொதுமொழி யின்மையானன்று. இந்திப் பயிற்சி ஒருவேளை இன்றுள்ள பிரிவினையைப் பெருக்குமே யன்றிக் குறைக்கா தென்பது ஒருதலை. இனி, இந்தியால் தமிழ் வளர்ச்சியுறும் என்று ஏமாற்றுவாரும் உளர். ஒரு கிளைமொழி அல்லது சார்பு மொழியாயின் பிற மொழிச் சார்பால் வளரும். ஒரு தனித் தாய்மொழியோ பிற மொழிச் சார்பால் தூய்மை யிழக்கும். ஆங்கிலம் ஒரு சார்பு மொழியாயும் உலகப் பொதுமொழியாயு மிருத்தலின், அது பல மொழிகளினுங் கடன் கொள்வது இன்றியமை யாததாகின்றது. ஆங்கிலத்தின் பெருமைக்குக் காரணம் ஆங்கிலரின் ஆட்சி, வாணிகம், புது நிருமாணவன்மை முதலியவையே யன்றி அயன்மொழியிற் கடன்கோட லன்று. தமிழ், தெலுங்கு முதலிய இந்திய மொழிகள் கடன் கொள்வதினால் ஆங்கிலம் பெருமை யடைய முடியுமா? இக் காலத்தில் ஒரு வகுப்பார் விஞ்ஞானக்கலைத் தேர்ச்சியும் புது நிருமாணவன்மையும் பெற்றாலொழிய அவர் மொழி எங்ஙனம் பெருமை பெறக் கூடும்? புது நிருமாணவன்மையிற் சிறந்த பல வகுப்பார் மொழிகளுள்ளும் ஆங்கிலம் தலைசிறந்து விளங்குகின்றதே ! தெலுங்கு மலையாளம் முதலிய மொழிகள் வெறுமையாய் வழங்குவதற்கே பிறமொழித் துணையை வேண்டுகின்றன. சில மொழிகள் மொழியளவாய்த் தமித்து வழங்கினும் கலை வளர்ச்சிக்குப் பிறமொழித் துணை வேண்டுவ வாகின்றன. தமிழோ எதற்கும் பிற மொழித்துணை வேண்டாதவாறு அத்துணைச் சொல்வளமுடைத்தா யுள்ளது. ஆயினும், ஆங்கிலத்திற்குரிய பெருமை அதற்கில்லையே! இதுவரை யில்லாத பெருமையா இனிக் கடன் கோடலால் தமிழுக்கு வந்துவிடும்? இக்கால உயர்தரக் கல்வியெல்லாம் விஞ்ஞானக் கலையாக வன்றோ வடிவு கொண்டுள்ளது? விஞ்ஞானக் கலைகளை யெல்லாம் மொழி பெயர்த்துக் கொள்வமெனின், எந்த மொழியில்தான் (பிறமொழித் துணை கொண்டேனும்) அவற்றை மொழிபெயர்க்க முடியாது? மொழிபெயர்த்த வளவானே எம் மொழிக்கும் ஏற்றம் வந்துவிடுமா? ஆகையால், தமிழ் பெருமை பெறாததற்குக் காரணம் அதில் விஞ்ஞானக் கலை முதனூ லின்மையே யன்றி அதன் கடன் கொள்ளாமை யன்று. பாடசாலைகளிலுங் கல்லூரிகளிலும் மாணவர் பாடங்களுள் அயன்மொழி ஆங்கிலம் ஒன்றேயா யிருக்கும்போதே தமிழ்ப்பயிற்சி மிகக் குன்றியுளது. இனி இந்தியும் ஒரு பாடமாயின் தமிழ்ப்பயிற்சி மிகமிகக் குன்றும் என்பதற்கு ஐயமின்று. மேலும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள வடமொழிப் பற்றினரெல்லாம் இந்தியைத் தாய்மொழியெனக் கூறுவர். ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் இறந்துபட்ட வடமொழியே இன்றும் தம் தாய்மொழியெனக் கூசாது கூறுபவர், இதுபோது வழக்கிலுள்ள இந்தியைக் கூறாது விடுவரா? விடாரன்றே! ஆகையால், இப்போதுள்ள பிரிவினை இன்னும் வைரங் கொள்ளுமன்றோ? இனி, இந்தி அயலார் முக்கியமாய்த் தமிழர் எளிதிற் பயிலுமாறு அத்துணை இலக்கண நேர்மையுடையதுமன்று. அதன் மயக்குகளிற் சிலவாவன: 1. பால்கள் தமிழிற்போற் பொருள்பற்றி யில்லாமல் வடமொழி யிற்போல் ஈறுபற்றியே யிருக்கும். பெரும்பாலும் அ ஆ ஈற்ற ஆண் பாலென்றும், இ ஈ ஈற்ற பெண்பாலென்றுங் கூறப்படும். ஆயினும், ஹவா(காற்று), தவா (மருந்து), ஜுகாம்(சளி), இச்சா(விருப்பம்), துனியா (உலகம்), ஜாய்தாத் (சொத்து), தக்லிப் (கஷ்டம்), மௌத்( மரணம்), சபா (சபை), தாவத் (விருந்து), பாத் (வார்த்தை), தவியதா (தேகஸ்திதி), கபர் (சமாச்சாரம்), பூஞ்ச் (வால்), ஆங்க் (கண்) முதலிய எத்துணையோ சொற்கள் அ ஆ ஈற்றவேனும் பெண்பாலே. இ ஈ ஈற்ற ஆண்பாற் சொற்கள் சிலவே. இந்தியிற் சிலவிடத்துச் சொற்களி னீற்றிலுள்ள அகரம் ஒலிப்ப தில்லை. ஆண்டு ஒலிபற்றி மெய்யீறாயினும் எழுத்துப்பற்றி உயிரீறாகவே கொள்ளப்படும். ஆங்கிலத்தில் உச்சரிப் பொழுங்கின்மைபோல் இந்தியிற் பாலொழுங் கின்மையால் பல சொற்கட்குத் தனித்தனி பாலறிய வேண்டு வதாகின்றது. 2. பெயரெச்சமும் வினையெச்சமும் பால் எண் காட்டும். எ-டு: பெயரெச்சம் : அச்சா லட்கா : நல்ல பையன் அச்சீ லட்கீ : நல்ல பெண் பிள்ளை அச்சே லட்கே : நல்ல பையன்கள். வினையெச்சம் : கயா ஹை = போயிருக்கிறான். கயீ ஹை = போயிருக்கிறாள். கயே ஹைன் = போயிருக்கிறார்கள். 3. `வஹ்' என்னுஞ் சொல் ஒன்றே அவன், அவள், அது என்னும் மூன்று ஒருமைப்பாற் சுட்டுகளையும், வே என்னுஞ் சொல் ஒன்றே அவர்கள், அவை என்னும் இரு பன்மைப்பாற் சுட்டுகளையுங் குறிக்கும். 4. இறந்த கால வினைகளுள், செயப்படுபொருள் குன்றிய வினையானால் தமிழிற்போல் பால் எண்களில் எழுவாயைத் தழுவும். செயப்படுபொருள் குன்றா வினையானால் எழுவாயைத் தழுவாது செயப்படுபொருளைத் தழுவும். எழுவாய் `னே' விகுதி பெறும். எ-டு: மைனே ஏக் கோடா தேக்கா) - நான் ஓர் ஆண்குதிரையைப் பார்த்தேன். மைனே தஸ் கோடே தேக்கேன்) - நான் பத்து ஆண்குதிரை களைப் பார்த்தேன். இனி, செயப்படுபொருள் தொக்கு நின்றாலும், `கி' என்ற வேற்றுமை யுருபைக் கொண்டிருந்தாலும், இறந்தகால வினை (எழுவாய் எந்தப் பாலிட மானாலும்) எப்போதும் ஆண்பாற் படர்க்கை ஒருமையாகவே யிருக்கும். எ-டு: ஸீத்தானே தேக்கா = சீதை பார்த்தாள். ஹம்னே உஸ் ஸ்த்ரீகோ தேக்கா = நாங்கள் அப் பெண்ணைப் பார்த்தோம். 5. ஆறாம் வேற்றுமை யுருபாகிய `கா' என்பது பின்னால் வரும் பெயர்ச்சொல் ஆண்பாலாயிருந்து வேற்றுமையுருபு கொண்டிருந்தால் `கே' என மாறும். எ-டு: ராம் கே கர் மே இம் மாதிரியே பின்னால் வேற்றுமையுருபுடன் வரும் ஆண்பாற் பெயர்ச்சொல்லின் ஈற்றிலுள்ள `ஆ' வும், அப் பெயரைத் தழுவும் உரிச்சொல்லின் ஈற்றிலுள்ள `ஆ' வும் `ஏ' என மாறும். எ-டு: ராம் கே படே கோடே பர். இன்னுஞ் சில மயக்கங்களுமுள. இதுகாறுங் கூறியவற்றைத் தமிழ்மக்கள் செவ்வனே ஆராய்ந்து, எரிமடுப்பினும் இடம்பெயராத மாசுணம் போல் மந்தமாயிராது இனி மேலாயினும் புத்துயிர் பெற்றெழுந்து தம் தாய்மொழிக்குச் செய்ய வேண்டிய பணியை யறிந்து கடைப்பிடிப்பாராக.