நாற்பெரு வள்ளல்கள் முனைவர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : நாற்பெரு வள்ளல்கள் ஆசிரியர் : முனைவர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2012 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+64 = 80 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 50/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் நூலாக்கம் : திருமதி வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், எண். 20/33, பி 3 பாண்டியன் அடுக்ககம், ஸ்ரீநிவாசன் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க் குலம் படிப்படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மைகளைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்மண் பதிப்பகத்iதத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங்கினேன். நீருக்கும் - நெருப்புக்கும், புதையுண்டும் - மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் - சிதைக்கப்பட்டவையும் போக எஞ்சிய நூல்களைத் தேடி எடுத்து வெளியிட்ட பழந்தமிழ் அறிஞர்களை வணங்கி எம் தமிழ்நூல் பதிப்புச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலமும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலமும் தமிழ்மொழி, தமிழின வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலமாகும். இந்த மறுமலர்ச்சி காலத்தில்தான் தமிழை உயிராகவும், மூச்சாகவும், வாழ்வாகவும் கொண்ட அரும்பெரும் தமிழரிஞர்கள் தோன்றி தமிழ் மீட்டெடுப்புப் பணியை மேற்கொண்டனர். எதிர்காலத் தமிழ் தலைமுறைக்கு அழியாச் செல்வங்களாக அருந்தமிழ் நூல்களை கொடையாக வழங்கிச் சென்றனர். இவ்வருந்தமிழ்க் கொடைகள் எல்லாம் தமிழர் இல்லந்தோறும் வைத்துப் பாதுகாக்கத் தக்க புதைபொருள் ஆகும். அந்த வகையில் அறிஞர்களின் செந்தமிழ் கருவூலங்களை எல்லாம் தேடி எடுத்து குலை குலையாய் வெளியிட்டு தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாக பதித்து வருவதை தமிழ் கூறும் நல்லுகம் நன்கு அறியும். எம் தமிழ்நூல் பதிப்புப் பணியின் தொடர் பணியாக தமிழ்ப்பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் நூல்களை வெளியிடும் நோக்கில் எம் கைக்குக் கிடைத்த சில நூல்களை முதல் கட்டமாக வெளிகொணர்ந்துள்ளோம். எதிர்காலத்தில் அவருடைய ஆக்கங்கள் அனைத்தையும் தேடி எடுத்து பொருள்வழிப் பிரித்து கால வரிசையில் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர் களுக்கும் பயன்படும் நோக்கில் திட்டமிட்டுள்ளோம். அகப்பகையும், புறப்பகையும் தமிழர் வாழ்வில் குடிபுகுந்து தமிழினம் நிலைக்குலைந்த வரலாறு கடந்தகால வரலாறு. தொன்மையும், பெருமையும் வாய்ந்த தமிழ்ப் பேரினம் தம் குடிமை இழந்து தாழ்வுற்று மருளும், இருளும் நிறைந்த மூட பழக்க வழக்கங்களால் தன்மானம் இழந்து தாழ்ந்து கிடந்த வரலாற்றை நெஞ்சில் நிறுத்துவோம். தமிழினம் மறுமலர்ச்சி பெறுவதற்கு தம் வாழ்வின் முழுபொழுதையும் செலவிட்ட அறிஞர்களை வணங்குவோம். இந்நூல்களை உங்கள் கையில் தவழ விடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். கோ. இளவழகன் நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமை யாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர் களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வி யறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி’ ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `இன்றைய தமிழரது வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்கின்றது?’ ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும்’ `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள்’ என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள்’ என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம்’. நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார்.’ பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தhர். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு’ இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான்’ படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம்’, `நக்கீரர் கழகம்’, `மாணவர் மன்றம்’ முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர்’ என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈராஸ் பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர்’ என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது’ என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு’ என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான்’ பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார்’ என்று `என் கணவர்’ என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியு மென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வி’யில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும்’ என்பது அவர் கொள்கையாக இருந்தது. “அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும்”. உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும்’ என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும்’ என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும்’ என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்கiள எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம்’, `தமிழ் இனம்’, `தமிழர் வாழ்வு’, `என்றுமுள தென்றமிழ்’, `புதிய தமிழகம்’ என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும்’ என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி’, `தமிழ்க் கலைகள்’, `தமிழர் நாகரிகமும் பண்பாடும்’, `தமிழக வரலாறு’ என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்கhக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும்’ அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர்’ என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு’ வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல்’, தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது’ `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும்’ என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும்’ என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம்’ என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும்’ என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `அவரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா?’ எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர்’, `மனிதரில் தலையாய மனிதரே’ எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் ஆக்கியோன் அறிவிப்பு இந்நூல் தந்நலங் கருதாத் தனிப்பெரு வள்ளல்களாய்த் தமிழ் நாட்டிற் பெருமையுற்று விளங்கிய பாரி, ஆய், அதியன், குமணன் என்போரது வரலாற்றைக் கூறுவது. இது புறநானூற்றைப் பெரும்பான்மை தழுவியும், அகநானூறு நற்றிணை முதலிய பிற இலக்கியங்களைச் சிறுபான்மை தழுவியும் ஆராய்ந்து எழுதப் பெற்றதாகும். இதில், பண்டைத் தமிழ் வேந்தர், வள்ளல்கள், குடிகள், பரிசிலர், புலவர் என்போர்தம் நாகரிக வாழ்க்கையும் குணாதிசயங்களும், நிலப் பகுதிகளின் தோற்றம், இயற்கை வனப்புஇன்ன பிறவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூல், இறுதியில் அருபதங்கட்குப் பொருள் பெற்றுள்ளது. இச்சிறிய வொரு நூலைப் பரிசோதித்து மதிப்புரை அளித்துதவிய தமிழ்ப் பேராசிரியர் பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கட்கு எனது நன்றி என்றும் உரித்தாகுக. இளங்கோ இல்லம், தமிழன், வண்ணை. மா. இராசமாணிக்கம் தமிழ்ப் பேராசிரியர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் நிருபம் பழனி விலாசம், தண்டையார்ப்பேட்டை, 15-2-’30. அன்புள்ள நண்பரே, தமது ‘நாற்பெரு வள்ளல்கள்’ என்னும் நூலினைப் படித்துப் பார்த்தேன். தமிழகத்திலே வரையா வள்ளன்மையுடன் விளங்கி, இணையின்றுயர்ந்த புகழால் என்றும் பொன்றாதுநிற்கும் பாரி, ஆய், அதியமான் அஞ்சி, குமணன் என்போரின் வரலாறுகளைச் சங்க இலக்கியங்களின் ஆராய்ச்சி கொண்டு இனிதுரைக்கும் இந்நூல் உயர்வகுப்பு மாணவர்கள் விரும்பிக் கற்றற்குரியதாகும், நீங்கள் இதுபோலும் பல ஆராய்ச்சி நூல்கள் எழுதுமாறு செந்தமிழ்த் தெய்வத்தின் திருவருளைச் சிந்திக்கின்றேன். ந. மு. வேங்கடசாமி நாட்டார் பொருளடக்கம் 1. வேள் பாரி 1 2. வேள் ஆய் 16 3. அதியமான் நெடுமானஞ்சி 26 4. வள்ளல் குமணன் 44 குறிப்புரை 60 நாற்பெரு வள்ளல்கள் 1. வேள் பாரி 1.தமிழ் நாடும் வேளிரும் அமிழ்திற் சிறந்த தமிழ் மொழியதனை வளர்த்தவர் சேர சோழ பாண்டியரென்னும் முடியுடை மூவேந்தரன்றி, வேளிர் என்ற ஒரு வகுப்பாருமிருந்தனர். வேளிரைத் தென்னாட்டு மூவேந்தர் பெரிதும் ஆதரித்தனர். வேளிர் மகளிரையும் மூவேந்தர் மணம் புரிந்து கொண்டனர். இவ்வாறு ஆட்சி புரிந்த வேளிர் வரையாது வழங்கும் வள்ளன்மையாலும், அரசரால் பெற்ற வரிசைகளாலும், தண்ணளியாலும், வலிமையாலும், பண்டு தொட்டே நம் தமிழ் நாட்டில் பெரும்புகழ் பெற்று விளங்கினர். இவர்களைப் பாடாத புலவர் இலர் என்றால், இவர்தம் பெருமை பகரவும் எளிதோ! இவ்வேளிரும் இவர்தம் மக்களும் தமிழ்ப்புலமை பெற்று விளங்கினர். இத்தகைச் சிறப்புடை வேளிர்களில் மிகச் சிறந்தோராகக் கருதப்படுபவர் எழுவர். அவர்கள், பாரி, ஓரி, மலையன், எழினி, பேகன், ஆய், நள்ளி என்பவர்கள். இவ்வேளிர்களுடைய வரலாறுகள் ‘இதுமுதல் இதுவரையில்’ என்ப தாக வரையறுத்துக் கூறத்தக்க ஆதாரங்கள் இன்மையால், புலவரால் பாடப்பட்ட செய்யுட்களிலிருந்தே ஒருவாறு இவர் தம் வரலாறு களை அறியவேண்டும். இவ்வெழுவரில் ஒருவனும், புலவர்க் கெளியனாய் விளங்கியவனும், யாவராலும் போற்றப் படுபவனுமான வேள் பாரி என்பவனது வரலாற்றை ஈண்டுக் கூறுவோம். 2.பறம்பு நாடு “புரசைப் புறத்தினிற் சேரனுஞ் சோழனும் போர்புரிய இரியச்சயங்கொண்ட போழ்தினில்யாமினியீங்கிவனைப் பரிசுக்கு நல்ல கவிபாடி னால்வரும் பாக்ய மென்றே வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்டலமே.” -பாண்டி மண்டல சதகம் இச்செய்யுளால் வேள் பாரி பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன் என்பது அறியப்படுகிறது. அவனுக் குரிமையாயிருந்த நாடு பறம்பு நாடு எனப்படும். ஆதலின், பறம்பு நாடு பாண்டிய நாட்டைச் சேர்ந்ததாகும். பறம்பு என்னும் அழகிய மலை அந்நாட்டில் உள்ளது. அஃது இக்காலத்தில் பிரான்மலை என வழங்குகின்றது என்பர் சிலர். பறம்பு நாடு வளத்தில் மேம்பட்டிருந்தது இனிய பூஞ்சுனைகளையும் பூஞ்சோலை களையும் மிகுதியாகக் கொண்டது. இயற்கை அமைப்பால் அப்புறம்பு நாடு பல புலவர்கட்குப் பொழுது போக்கை உண்டு பண்ணி வந்தது என்னலாம்: அப்புறம்பு நாடு தன்னகத்தே முந்நூறு ஊர்களைக் கொண்டதாகும். அந்நாட்டிற்கு நடு நாயகமாக இருந்தது பறம்புமலை. மூங்கில்களும் பலா மரங்களும் இனிய பூஞ்சுனைகளும் மிகுதியாக இம்மலையில் உண்டு. பறம்பு மலைமீது ஒரு பேரரண் உண்டு. அவ்வரணில் வேள் பாரி என்பவன் தன் குடிகளோடு வாழ்ந்து வந்தான். இயற்கை அமைப்பாலும் செயற்கை அமைப்பாலும் அவ்வரண் பார்ப்போர் உள்ளத்தைக் கவரும் கட்டழகு வாய்ந்தது. குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐந்திடங்களில் விளையும் பொருள்களையும் அவ்வரணுள் காணலாம். அதனை நவமணித்திரள் நிறைந்த நற்பெட்டி யென்னலாம். அவ்வரண் அரசனது அழகிய அரண்மனையையும், ஆயுதச் சாலைகளையும், பொக்கிஷச்சாலை களையும், குடிகளின் இல்லங்களையும், சிங்கார மண்டபங்களையும், பலா மரத் தோப்புக்களையும் தன் அகத்தே கொண்டது. என்றும் வற்றாததும், இனிமை பயப்பதுமான குளிர்ந்த நீரையுடைய பூஞ்சுனையொன்று அவ்வரணுள் இருந்தது. அவ்வரண் அதிக காவலைக் கொண்டது. 3. வேள் பாரி வேள் பாரி கடையெழு வள்ளல்களில் ஒருவன்; ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்டவன். அவன் நல்லொழுக்கம் வாய்ந்தவன்; குடிகளை அன்போடும் அருளோடும் காத்து வந்தவன்; இரப்போரைக் காணச் சகியாதவன்; எவர் எதை வேண்டி வரினும் ‘பெறுக,’ என்று அன்போடு கூறி அவர் வேண்டியதை அளிப்பவன். அவனைப் பாடாத புலவர் இல்லை. சுந்தரமூர்த்தி நாயனாரும் தமது தேவாரத்தில், “கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறினுங் கொடுப்பாரிலை,” என்று கூறியுள்ளார். கொடையிற் சிறந்து விளங்கிய வள்ளல்கள் பலர் இருந்தும், அப்பெரியோர் பாரியை உதாரணமாகக் காட்டியதேன்? அவன் அக்காலத்து வள்ளல்கள் அனைவரினும் மேம்பட்டு விளங்கியதாலன்றோ? “புலங்கந் தாக இரவலர் செலினே வரைபுரை களிற்றொடு நன்கல னீயும் உரைசால் வண்புகழ்ப் பாரி.” -அகநானூறு என்று நல்லிசைப் புலமை வாய்ந்த மெல்லியரான ஒளவையாரால் புகழ்ந்து பாடப்பெற்றவன் அவ்வேள் பாரி. அவன், பைந்தமிழ்ப் பாவலர் போற்றும் கபிலர் என்னும் புலவர் பெருமானின் ஆருயிர் நண்பன். அதனால், அவன் ஒழுக்கத்திலும் குணத்திலும் மேம்பட்டவன் என்பது வெள்ளிடை மலை. அப்பாரி, வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் ஆரமும் தேரும் வாளும் உடைய குறுநில மன்னவன். அவன் நாட்டையும் பொருளையும் படையையும் அதிகம் பெற்றிலனாயினும், அவனது வள்ளன்மை மூவேந்தர் வள்ளன்மையினும் தலைமையுற்று விளங்கியது. அவன் மனைவியானவள் கணவன் கருத்துக்கிசைந்த காரிகை. வேள் பாரிக்குப் பெண்மக்களிருவர் இருந்தனர். அவர்கள் கல்வியில் கலை மகளையும் அழகில் அலை மக்களையும் பொறையில் மலை மகளையும் ஒத்திருந்தார்கள். அவர்கள் தங்கள் இளமையிலேயே கபிலர் பெருமானிடங் கல்விகற்று, கவி பாடும் ஆற்றலையும் பெற்றுச் செந்தமிழ்ச் செல்வியராய் விளங்கினார்கள். பாரி, மனமொத்த தனது இல்லாளுடனும், பெண்களுடனும், உயிர் நண்பரான கபிலருடனும் இருந்து காலங்கழித்து வந்தான். 4. முல்லைக்குத் தேர் நல்கியது உம்பர் காவனைய கையனாகிய வேள்பாரி ஒரு நாள் தனது பொற்றேர் ஊர்ந்து வேட்டைக்குப் புறப்பட்டான். பறம்பு மலையை யடுத்து பெரிய காட்டில் பல வகைப்பட்ட கொடிய விலங்குகள் அடிக்கடி மலை நாட்டாரைத் துன்புறுத்துவ துண்டு. மலைச் சாரலின்கண் வாழும் மக்கள் வளர்த்துவந்த ஆடுமாடுகளை அடிக்கடி புலி முதலிய விலங்கினங்கள் கவர்ந்துகொண்டு போவதுண்டு. தன் நாட்டுக் குடிகளுக்கேற்படும் இன்ப துன்பங்களுக்கு அரசன் உரிமை யுடையவன் அன்றோ? அதனால், தன் குடிகளுடைய துயரைப் போக்கக் கருதியே பாரி வேந்தன் வில்லும் வாளும் ஏந்தி, விலங்குகளை வேட்டையாடச் சென்றான். வள்ளல் பல்வகை மிருகங்களை அம்பெய்து கொன்றான்; தன்மனம் மகிழுமாறு அன்று வேட்டையாடினான். ஆடிய பின்னர், அவன் தன் தேர்மீது இவர்ந்து வந்துகொண்டிருந்தான் அவ்வாறு அவன் வருகையில், தன் நாட்டு வளப்பத்தைக் கண்டு மகிழ்பவன் போல், இருபுறங்களிலும் ஊன்றிய பார்வையுடனிருந்தான். அவன் ஓர் இடத்தில் முல்லைக்b காடியொன்று, படர்வதற்கு ஏற்ற கொழு கொம்பு இல்லாது, வெயிலாலும் காற்றாலும் துன்புறுவதைக் கண்டான். உடனே அவ்வள்ளல் அம்முல்லையருகில் தன் தேரை நிறுத்தினான்; கீழறங்கினான்; முல்லை படும் துன்பத்தைக் கண்டான்; அவனது மனம் மயக்கங் கொண்டது; கண்களில் நீர்த்துளிகள் துளித்தன. பிறர் துயரம் காணச் சகியாத அவன், “அந்தோ ! இக்கொடியை இதுவரை யாவரும் கவனிக்கவில்லையோ! செடி கொடி முதலியவைகட்கும் உயிர் உண்டென்று கூறுகின்றனரே! இக்கொடி படர்தற்கேற்ற கொழு கொம்பு இல்லாது இவ்வாறு வாடுகின்றதே! என் செய்வேன்!” என்று இரக்கமுற்றவனாய்க் கொம்பொன்றைத் தேடிஅங்கும் இங்கும் அலைந்தான்; கொடி படர்தற்கேற்ற கொம்பு கிடைக்கப் பெறாது, மனம் வருந்தினான். “யான் என் செய்வல்! ஏற்ற கொம்பு ஒன்றும் கிடைக்கவில்லையே! இதன் வாட்டத்தைக் கண்டும், இதற்கு உதவி செய்யாது யான் செல்லுதல் அழகோ! அவ்வாறு யான் சென்றாலும், என் மனச்சாட்சி என்னைச் சுட்டெரிக்குமே! பிறர்துயரங்காணச் சகியாத தன்மை வாய்ந்த யான், இச்சமயத்தில் இம் முல்லைக்கொடிக்கு ஏற்ற உதவி செய்ய வகையறுயாது தயங்குகின்றேன்!” என்று கூறி வருத்த முற்றான். பின்னர் ஏதோ யோசித்தவன்போல, அவன் களிப்புற்று, “ஆ! மறந்தேன்! எனது பொற்றேரை இம்முல்லைக் கொடி படர்வதற்கு ஆதரவாக விட்டுவிட்டுச்செல்வேன்; இதுவே சரியானது,” என்று கூறிக்கொண்டான். உடனே அவன் சிறிதும் யோசியாது, தன் பொற்றேரைக் காற்றால் அலைப்புண்ட அம்முல்லைக் கொடிக்கு அருகில் நெருங்க விட்டான்; ஆடிக்கொண்டிருந்த கொடி இனிதாய்ப் படருமாறு தன் தேர்மீது அதனை எடுத்து விடுத்தான். தேரை முல்லைக்கு நல்கியதால் அவன் அவ்விடத்தி னின்றும் புறப்பட்டு, வெயிலால் மண்டை வெடிக்கவும், கால்கள் கொப்பளிக்கவும் நடந்து சென்று தன் அரண்மனையை அடைந்தான். அவ்வள்ளல் பெருமான் செய்த இவ்வரிய செயல் பல நூல்களில் பல அறிஞராற் பாராட்டப்படுகின்றது. இதனை, “சீறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பறம்பிற் கோமான் பாரி”.-சிறுபாணாற்றுப்படை “பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும் பிரும்பப் பாடா தாயினும், கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி.” -புறநானூறு என்னும் பண்டைச் செய்யுளடிகளால் அறியலாம். 5. கபிலர் புகழ் மொழிகள் கபிலர் வேள் பாரியின் அருங்குணங்களைக் கண்டு அவ்வப்போது புகழ்பவர். அவர் ஒருகால் பாரியினது வள்ளன்மையைப் புகழ்பவராய், “நல்லன என்றும் தீயனவென்றும் சொல்லப்படுவன சூடும் மலர்கள்; அவையிரண்டினும் வேறான எருக்கம் பூக்களாயினும், ஒருவ னுடையனவற்றைத் தெய்வங்கள் விரும்பேமென்று சொல்லாவாம். அதுபோல, அறிவில்லாதாரும் அற்ப குணமுடையாரும் சென்றாலும், பாரி அவர்கட்குப் பொருள் ஈதலில் தவறான். இவ்வுலகத்தைக் காப்பதற்கு மாரியுண்டு. அங்ஙனம் இருக்கச் செவ்விய புலமை வாய்ந்த அறிவுடையோர் ‘பாரி, பாரி’ என்று சொல்லி, அவனது பல புகழையும் வாழ்த்தி, அவ்வொருவனையே புகழ்வர். இதனால் மாரியினது வள்ளன்மையைவிடப் பாரியினது வள்ளன்மை மிகச் சிறந்ததென்பது வெள்ளிடைமலை. பறம்பு நாட்டில் மிக்குள்ள மரங்கள் சந்தன மரங்களே. அவற்றைக் குறத்தியர் எரிக்கின்றனர். சந்தன மரங்களை எரித்தலால் உண்டாகும் புகை, அருகேயுள்ள வேங்கை மரத்திற் படியும். இத்தகைய வளம்பொருந்திய பறம்பு நாட்டைப் பாரி, பாடுவார்க்குப் பரிசிலாகக் கொடுத்து விட்டனன். இவனது பரந்த சிந்தையையும் விரிந்த நோக்கத்தையும் நற்குண நற்செயல்களையும் என்னென்பது!” என்று தமக்குள் கூறிவியந்தார். அவர் ஒருநாள் ஒரு விறலியைச் சந்தித்தார். அவள் விரைவாகச் சென்றுகொண்டிருந்தாள். கபிலர் அவளை நோக்கி, “ஒளி தங்கிய நுதலையுடைய விறலி, உயர்ந்த பறம்பு மலையினது காவலனும், அவனுடைய மலையினது சிகரந் தோறும் இழிதரும் நீரினும் மிக்க இனிய மென்மையுடைய வனுமான பாரி பக்கலிலே நீ பாடிச் செல்வாயாக; அவ்வாறு செல்வாயாயின், எம் மன்னர் பெருமானிட மிருந்து சிவந்த அணியைப் பெறுகுவை; வேண்டும் பரிசிலை யடையலாம்,” என்று பாரியினது வள்ளன்மையைச் சீர்தூக்கிப் புகழ்ந்தார். விண்ணவரும் மண்ணவரும் புகழ்ந்து போற்றும்படி பாரி தனக்கு உரியனவாயிருந்த முந்நூறு ஊர்களையும் தன்னைப் பாடி வந்த இரவலர்க்கே அளித்து மகிழ்ந்தனன். பிறர்க்கு நன்மை புரிவதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்த வேள் பாரியின் புகழ் சொல்லவும் எளிதோ! 6. மூவேந்தர் முற்றுகை பொறாமை என்பது மக்கள் மனத்தே உண்டாகும் ஒரு தீய எண்ணம். அஃது அறியாமையால் உண்டாவதேயன்றி, வேறன்று. கற்றோராயினும் கல்லாராயினும், வறிஞராயினும் செல்வராயினும் இத்தீய எண்ணம் இலாதார் சிலரே. பிறரது செல்வப் பெருக்கைக் கண்டு, அவர்மீது பொறாமை கொள்பவர் பலர். பிறரது கல்வியறிவைப் பார்த்துத் தம்மினும் மேம்பட்டவராய் அவர் விளங்குதலைக் காணச் சகியாதார் பலர். பிறர் தமது கொடைத் திறத்தால் எய்தும் புகழைக் கண்டு, அவர் மீது பொறாமை கொள்பவர் சிலர். வேந்தராயினும், முற்றும் துறந்த பெரியாராயினும், இப்பொறாமை என்னும் கொடிய பேய் அவர்களைப் பிடித்துத் தன் ஆட்சியைச் செலுத்துகின்றது. தமிழ் நாட்டில் ஆண்டுவந்த சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடைத் தமிழ் வேந்தர் மூவரும் இப்பொறமை என்னும் பேய்க்கு ஒருகால் வசமாயினர். அவர், வேள் பாரியின் வள்ளன்மையால் உண்டான குற்றமற்ற புகழைக் கேட்க ஆற்றாராயினார். பாரியின் புகழ், காற்றானது உலகு முழுதும் பரந்து செல்லுதல் போலத் தமிழ்நாடெங்கும் பரந்தது. யாவரும் அவனது கொடைத் திறத்தை வியந்தனர். குறுநில மன்னர் அவனைப் போற்றிப் புகழ்ந்தனர். பொறாமை கொண்ட முடியுடை மூவேந்தரும் ஒன்று சேர்ந்து தத்தம் தானையோடு சென்று பாரியைப் போரில் வென்றுவிடத் துணிந்தனர். அவர்கள், கடல்போன்ற தம் சேனைகளோடு பறம்பு நாட்டை அடைந்தார்கள்; பறம்பு மலையரணை முற்றுகை யிட்டார்கள். இச்செய்தி பாரிக்கு எட்டியது. வள்ளன்மையிற் சிறந்த வேள் பாரி மூவேந்தர் செய்கைக்கு வெகுண்டிலன்; அவர்களை எதிர்த்திலன்; தனது அரணுக்கு ஏற்ற பாதுகாவலை வைத்துத் தன் அரண்மனையின் இனிதிருந்தான். அரணில் உள்ளார்க்கு வேண்டிய உணவுப் பொருள்கள் யாவும் அரணுள்ளேயே இருந்தமையால், பாரியும் அவனுடைய குடிகளும் துன்பமின்றி இன்பத்துடன் இருந்தார்கள். சில மாதங்கள் சென்றபின்னர், அரணுள் இருந்தவர் களுக்கு உணவுப்பொருள்கள் குறைந்தன. அவ்வமயம் புலவர் பெருந்தகை யான கபிலர், தாம் வளர்த்துவந்த எண்ணிறந்த கிளிகளைத் தினந்தோறும் அரணுக்கு வெளியே விட்டு வந்தனர். அவை விளை நிலங்களுக்குச் சென்று நெற்கதிர்களைக் கொண்டு மீண்டன. அவற்றை அரிசி மணிகளாக்கி, அரணில் இருந்தோர் உண்டு வந்தார்கள். இவ்வாறு பல நாட்கள் கழிந்தன. கபிலர் முதலாக அரணுள் அகப்பட்டோர், ‘இனி உணவின்றி வருந்த நேரினும் நேரும்,’ எனப் பயந்தனர். மூவேந்தரும் பாரியை வெல்ல இயலாது மனஞ்சலித்தனர். அவ்வெல்வையில், புலவர் பெருமானாய கபிலர், அரண் சுவர்மீது நின்று, முற்றுகையிட்டிருந்த மூவேந்தரை நோக்கி, “தமிழ் வேந்தரே, பாரியின் அரணை வீணே முற்றுகையிட்டுச் சலித்தீர். அவனது பறம்பு இரங்கத் தக்கது. அஃது உழவரால் உழுது விளைக்கப்படாத நான்கு விளை யுளையுடையது. அவற்றுள் முதலாவது, சிறிய இலைகளை யுடைய மூங்கில் நெல்லாகும்; இரண்டாவது இனிய சுளையையுடைய பலாவினது பழமாகும்; மூன்றாவது, கொழுவிய கொடியையுடைய வள்ளிக்கிழங்காகும்; நான்காவது இம்மலையரணில் மிக்குள்ளது தேன். பாரியினது புறம்பு மலை, அகல நீள உயரத்தால் வானிடத்தையொக்கும். இம்மலையில் உள்ள பைஞ்சுனை வானத்தின்கண் உள்ள மீனையொக்கும். இத்தகைய இயற்கை வளங்களைப் பெற்ற பாம்பு மலையில் உள்ள வேள் பாரியை நீவிர் வெல்லுதல் எளிதன்று. பெருமையைக் கொண்ட முரசினையுடைய நீவிர் மூவேந்தரும் முற்றுகை யிடினும், மிகுந்த யானைப்படை தேர்ப்படை உடையீராயினும், உம்முயற்சி யால் இம்மலையரணைக் கொள்ளமாட்டீர்; நுமது வாள் வலியால் எம்மரசன் தளரான். அதனை யான் நன்கு உணர்வேன். யாழை வாசித்து நும் விறலியர் பின்வர ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் அவனிடம் நீவிர் சென்றால், அவன் உங்கட்கு நாட்டையும் மலையையும் பரிசிலாகத் தருவான். அவ்வாறு செய்யாது, எத்தனை காலம் முற்றுகையிட்டிருந்தும், பயன் அடைய மாட்டீர். மறுவலும் கூறுவேன்; கேளும்: இப் பறம்பு நாடு முந்நூறு ஊர்களை உடையது. இது குளிர்ந்த நல்ல நாடு; அம்முந்நூறு ஊர்களையும் பரிசிலர் பாடிப் பெற்றனர். அப்பரிசிலர் போல நீவிரும் பாடுவீராயின், நுமக்கு பறம்பு மலையன்றிப் பாரியும் நாமும் உள்ளோம்.” என்று பாரியது வள்ளன்மையையும், மலை நாட்டு வளத்தையும் கூறி முடித்தனர். அவர் கூறியவை உண்மையெனவே மூவேந்தரும் உணர்ந்தனர்; ஆயினும், பாரியை எவ்வாற்றானும் கொல்ல வேண்டும் என்ற துணிவு கொண்டனர்; தங்களிடம் குடிகொண்டிருந்த பொறாமை காரணமாக, ஏதோ ஒரு சூழ்ச்சி செய்து பாரியைக் கொன்றுவிட்டனர். இரவலர்க்கு இனியனாய் விளங்கிய வேள் பாரி, அறிவிழந்து பொறாமையின் வாய்ப்பட்ட மூவேந்தரால் மாண்டதைக் கண்ட அவனது ஆருயிர் மனைவியும் உயிர் நீத்தாள். 7. கபிலர் புலம்பல் பாரிக்கு உயிர் நண்பரான கபிலர், தமது நண்பனும் கொடை வள்ளலுமான வேள்பாரி உயிர் நீத்ததைக் கண்டு பெரிதும் வருந்தினார் அவர் அவன் புகழைக்கூறிப் புலம்பு பவரhய், “அழகிய வேள் பாரியின் பறம்பு மலையில் உண்டாகும் தேறல், பாரி போலவே இனிமையானது; அவன் இறந்ததால் அது கழிந்தது; பறம்பு மகளிர் மிக்க அழகுடையவர்; குளிர்ந்த கண்ணையுடையவர்; இனிய முறுவலையுடையவர்; நெடுவரையேறி முன்பு வேந்தனது கலிமாவை எண்ணுவர்; எம் வேந்தன் இறந்துபட்ட இப்போது ஈத்திலைக் குப்பையேறி உமணர் உப்புச் செலுத்தும் சகடத்தை எண்ணுவர் நோவேன்யான்! என் வாழ் நாட்கள் கெடுவனவாக; புதுவருவாய் இடையறாது வரும் அகன்ற நாடு பகைவர் கொள்ளலாயிற்றே; “சனி மீன் புகைகளோடு கூடிப் புகைந்தாலும், எல்லாத் திசைகளிலும் புகை தோன்றினும், தென்றிசைக்கண்ணே உள்ள வெள்ளி போக்கு உறினும், வேள்பாரியின் நாட்டு வளம் வற்றாது; வயல்களில் விளைவு அதிகமாக உண்டாகும்; புட்பங்கள் அலரும்; பெண்கள் வருத்தம் இன்றிக் குழவிகளைப் பெறுவார்கள்; மழை ஒரு போதும்அவனது நாட்டில் பிழைக்காது. பாரியது வள்ளன்மையன்றோ இவற்றிற்குக் காரணம்! இத்தகைய மன்னன் மாண்டனனே! எட்டாம் பக்கத்துப் பிறை போலும் வளைந்த கரைகளையும் தெளிந்த நீரையும் உடைய சிறய குளம் பாதுகாப்பார் இல்லாமையால் உடைந்துவிடும் போலும்! கூரிய வேலையும் திரண்ட தோளையும் உடைய வேள் பாரியின் குளிர்ந்த பறம்பு நாடு இனிச் சீர் கெட வேண்டுவதே. பாரியது பெருமையை யான் என்னென்று இயம்புவேன்! நிழல் இல்லாத நெடிய வழியில் நின்ற தனி மரம்போல முரசையுடைய அரசரினும் மிகுந்த இரவலர்க்கு வழங்கும் வண்மையையுடையன் பாரி; அவனது நாடு முன்பு, மெல்லிய தினையாகிய புது வருவாயையுடையது; வேங்கை மரங்களையுடையது; கதிரினது அடியும் தலையும் ஒழியாமல் மிகக் காய்க்கும் பயிர்களை வயலிடங்களில் உடையது. வரகு அதிகமாக விளைவதும் அவரைக் கொடிகள் அதிகமாக உள்ளதுமாகிய இந்நாடு இனிக் கெடும் போலும்!” என்று நாட்டையும் பாரியையும் நினைந்து மனம் வருந்திப் புலம்பினார். 8. கபிலரும் பாரி மகளிரும் பாரி இறந்ததும் கபிலர் இறந்திருப்பார். ஆனால், பாரி அவரை அங்ஙனம் செய்யவிடாமல் தடுத்தமையாலும், பாரியின் மகளிரிரு வரையும் காப்பாற்றுவார் இன்மையாலும், அவர்களை மணஞ் செய்து தரும் வரையில் தாம் உயிருடன் இருத்தல் வேண்டும் என்று அவர் தீர்மானித்துக்கொண்டார். அவர்களுக்குத் தக்க அறிவும் பெருமையும் உடைய கணவரைத் தேட நினைந்து அவர்களை அழைத்துக்கொண்டு பறம்பு நாட்டை விட்டுப் புறப்பட்டார் புலவர். அவ்வாறு புறப்படும் போது பாரியை நினைந்து புலம்பினார்; அவனது வள்ளன்மையை நினைந்து வருந்தினார்; பறம்பு அரணைத் திரும்பித் திரும்பிப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் ஆறாய்ப் பெருக, ஆற்றொணாத் துயரால் உள்ளத்தினின்றும் பொங்கி எழுந்த அன்புடைய பாடல்களால், பாரியையும் பறம்பு மலையையும் நாட்டையும் புகழ்ந்து கொண்டே சென்றனர். சென்று, ஓர் ஊரில் அன்றிரவு தங்கினர். அவ்விரவு நிலாத் தோன்றியது. அந்நிலவைக் காணப் பாரிமகளிர், தாம் அதற்கு முந்திய நிலாக்காலத்தில் தமது அரணுள்ளே தந்தையோடு இனிதே வாழ்ந்ததையும் அடுத்த நிலாக் காலத்துத் தங்கள் தந்தையை இழந்து தங்கள் பறம்பையும் இழந்து தமியராய்ப் பிறர் இருப்பில் தங்க நேர்ந்ததையும் எண்ணி எண்ணி வருந்தினார்கள். அவர்கள் மன முருகி, “அவற்றைத் திங்க ளவ்வெண் ணிலவின் எந்தையு முயையேம்; எங்குன்றும் பிறர்கொளார்: இவற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தரெங் குன்றுங் கொண்டார்; யாம் எந்தையு மிலமே,” -புறநானூறு என்று பாடிப் புலம்பினார்கள். பின்னர், கபிலர் அம்மகளிரை அழைத்துக் கொண்டு பலநாட்கள் வழி நடந்து, இளவிச்சிக்கோ என்னும் சிற்றரசனிடம் சென்றனர். அவன், நன்னன் என்னும் வேளிர் குலத் தலைவனது வழித் தோன்றல். அவன் கபிலரை வரவேற்றான். கபிலர் பாரி மகளிரை அவனுக்குக் காட்டி, “முகிலாலும் உச்சியறியப்படாத உயர்ந்த மலைக்குத் தலைவ, நினது குளிர்ந்த மலையின்கண் ஓங்கிய பசிய இலையயுடைய பலா மரங்களின் பழத்தைக் கவர்ந்துகொண்ட கடுவன், சிவந்த முகத்தையுடைய தனது மந்தியுடனே சேர்ந்து வாழும். அப்பலா மரங்களை மிக்குடையாய் நீ; நிணத்தைத் தின்றுகளித்த நெருப்புப் போலும் தலையையுடைய நெடிய வேலினையும், களத்தைத் தனதாக்கிக் கொண்டு வெகுளும் தறுகண் யானையையும், விளங்கிய மணிகளால் செய்யப்பட்ட வளைந்த ஆபரணத்தையும் உடைய விச்சிக்கோவே, மிக்க விளைவையுடைய நாட்டையுடையோய், போரில் பகைவேந்தரது மிடுக்கையடக்குபவனே, இம்மகளிர், கொடி முல்லை தன்னை நாத்தழும்பேறப் பாடாதிருந்தும், மணிகள் ஒலிக்கும் நெடிய தேரைக் ‘கொள்க’ என்று சொல்லிக் கொடுத்த வள்ளன்மையிற் சிறந்த வேள் பாரியின் பெண்கள்; யான் பரிசிலன்; அது வன்றியும், நிலைபெற்ற அந்தணன். நீயோ, பகைவரைப் போர் செய்யும் முறைமையாற் பொருது தாழ்விக்கும் மேன்மையுடையை. ஆதலால், நினக்கு யான் தருவதைக் கொள்வாயாக,” என்றார். பாரி மகளிரைத் தன்னை மணஞ் செய்து கொள்ளுமாறு புலவர் வேண்டுகின்றார் என்பதை உணர்ந்தான் இளவிச்சிக்கோ; மூவேந்தர்க் கும் பகைவனான பாரியினுடைய மகளிரைத் தான் மணந்தால், அதனால் என்ன தீமை விளையுமோ என்று பயந்தான். அவ்வேள், கபிலரை நோக்கி, “புலவீர், இப்பெண் மணிகளை யான் மணந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளேன்,” என்று உறுதியாய்க் கூறினன். கபிலர், உடனே அம்மகளிரை அழைத்துக்கொண்டு சென்று, கொடையாளிகளுள் ஒருவனான இருங்கோவேள் என்பவனை யடைந்தார். அடைந்த புலவர் அவ்வள்ளலை நோக்கி, “மாலையை யணிந்த யானையுடைய இருங்கோவே, நீ வடப்பக்கத்து முனிவ னுடைய ஓம குண்டத்தில் தோன்றித்துவராபதி யென்னும் படை வீட்டையாண்டு வள்ளன்மையிற் சிறந்த நாற்பத்தொன்பது தலை முறை தொன்று தொட்டு வந்த வேளிர்களுள் வைத்துப் போற்றற் குரியாய்! வெற்றிப் போரையுடைய தலைவ, புலிகடி மாலே, வானாற் கவிக்கப்பட்டுப் பெருங்கடல் சூழ்ந்த இப்பூவுலகத்தின்கண் அணுகுதற் கரிய வலியையுடைய பொன்னுண்டாகும் பெரிய மலைக்குத் தலைவ, வெற்றி வேலைத்தாங்கிய பகைவர் அஞ்சும் படைக்கும் கேடில்லாத நாட்டிற்கும் உரியவனே, என்னுடன் வந்துள்ள இம்மகளிர் யாரென்று வினவுவாயாயின், இவர்கள், ஊர்கள் எல்லாவற்றையும் இரப்போர்க்கு வழங்கித்தேரை முல்லைக் கொடிக்கு வழங்கியவனும், தொலையாத நல்ல புகழுடையவனும், பறம்பிற்குத் தலைவனுமான வேள் பாரி பயந்தபெண்கள். யான் இவர்கள் பிதாவின் தோழன். ஆதலால், இவர் எம் மகளிர் ஆவர். யான் இவரை நினக்குத்தர, நீ இவரைப் பெற்றுக்கொள்வாயாக,” என்று இருங்கோவேளது புகழையும் வேள் பாரியின் புகழையும் தாம் மேற்கொண்டுள்ள வேலையையும் கூறி, அப்பெண்களை மணந்துகொள்ளுமாறு வேண்டினார். இருங்கோவேளும், இளவிச்சிக்கோவைப்போல, மூவேந்தர்க்குப் பயந்தவனாய், அம்மகளிரை மணக்க உடன்பட வில்லை. அவன் உடன்படாததைக் கண்ட கபிலர் மனம் நொந்தார். அவர் மன வருத்தத்துடனே அவனை நோக்கி, “பெருமானே, புலவர் மனம் வருந்துமாறு அரசர் நடந்து கொள்ளல் ஆகாது. உன்னை யொத்த அறிவினையுடைய உனது குடியுள் ஒருவன், பெரும்புலவரான கழாத்தலையார் என்பவரை அவமதித்தான். அதன் காரணமாக, வெற்றி நிலை பெற்றுச் சிறந்த புகழோடு இருந்த சிற்றரையும் பேரரையம் என்னும் அவனது நாடு கேடுற்றது. என் வார்த்தையை நீ அவமதித்தலாகாது. இம்மகளிர் வேள் எவ்வி என்பானது குடியிலே படுவார்களாக. பின்னை இவர் கைவண்மையுடைய பாரி மகளிர் என்று சொல்லிய எனது அற்பவார்த்தையைப் பொறுப்பாயாக. பெரிய மலையிடத்து ஊர்களையுடைய நாட்டையுடையாய், யான் நின்பால் விடை கொண்டேன்,” என்று அகன்றார். பாரி மகளிரது மணத்தைப் பற்றிப் பலர் பல விதமாகக் கூறுகின்றனர்: கபிலர் அம்மகளிரைப் பார்ப்பாரது பாதுகாவலில் வைத்துத் தீயில் விழுந்திறந்தனர் என்பர் சிலர்; மூத்தவளான சங்கவை என்பாளை மலையனுக்கு மணஞ் செய்துகொடுத்த பின்னர், இளையவளான அங்கவையைப் பார்ப்பாரது பாதுகாவலில் விட்டனர் என்பர் சிலர்; இளையவளை அவ்வை மூதாட்டியார் தெய்வீகன் என்னும் சிற்றரசனுக்கு மண முடித்தனர் என்பர் சிலர். இவற்றை வைத்துக்கொண்டு நமது அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் எட்டியவாறு கதையை முடிப்போம்: கபிலர் பெருமான் அங்கவை சங்கவை என்ற இரு பெண்களையும் அழைத்துச் சென்று, திருக்கோவலூரைத் தலை நகராகக் கொண்டு அரசாண்டு வந்த மலையனை யடைந்தார். அவன் சிறந்த அரசன்; வென்றி மிக்க வேந்தன். அவன் பாரியினது பரந்த புகழைக் கேள்விப்பட்டிருந்தான். ஆதலின், அவன் பாரியினுடைய மூத்தமகளான சங்கவை என்பாளை மணந்துகொண்டான். அதன் பின்னர் கபிலர் இளையவளான அங்கவை என்பாளைப் பார்ப்பார் சிலரது பாதுகாவலில் வைத்தார். வைத்த பிறகு, “இனி இவ்வுலகில் இருந்து பயன் என்? வீடு பேற்றை யடைதலே தகுதி, ” என்று எண்ணினார். அவர் பெண்ணை நதியின் மத்தியில் தீயுண்டாக்கினார். அக்கினிப் பிரவேசமாகத் தயாராகவிருந்த “அவர், மலை நாட்டையுடைய பாரி, பெரிய கை வண்மையை யுடையாய், நீயும் யானும் கலந்த நட்பிற்குப் பொருந்த, யானும் நின்னுடன் கூட வருவதற்கு மனம் இல்லாமையாலே, ‘நீ ஈண்டுத் தவிர்க,’ என்று சொல்லி இவ்வாறு மாறுபட்டனை யாதலால், நீ எனக்கு உதவி செய்த காலங்களிலும் என்னை வெறுத்திருந்தாய் போலும்! இவ்வாறு யான் பொருந்தினவன் அல்லேனாயினும், இப்பிறப் பின்கண் நீயும் நானும்கூடி இன்புற்று இருந்தது போல, மறு பிறப்பினும் நின்னோடு கூடி வாழ்தலை ஊழ் கூட்டுக,” என்று மனமுருகப் பாடி, வடக்கிருந்து உயிர் நீத்தனர். 9. அங்கவை திருமணம் நல்லிசை மெல்லியரான ஒளவையார்* ஒருகால் திருக்கோவலூரை அடைந்தார். அவர், வேள் பாரி அடைந்த அகால மரணத்தையும் அவன் மகளிர் பட்ட துன்பத்தையும் அறிந்தார்; இளையவளான அங்கவையை யாருக்கேனும் மணமுடித்துக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்தார். ஒளவையார், அக்காலத்து அரசாண்டிருந்த தெய்வீகன் என்னும் அரசன் ஒருவனைத் திருமணத்திற்குச் சம்மதிக்கச் செய்தார். அத்திருமணத்தைச் சிறப்பாக நடத்தவேண்டுமென்று ஒளவையார் விரும்பினார். அதனால், அவர் சேர சோழ பாண்டிய மன்னர்க்குத் தனித்தனியே நிருபம் வரைந்தார். அவர்கள் பாரியின் பகைவராத லால், வாராதிருப்பரோ என்று எண்ணி, அவர்களை வருமாறு வற்புறுத்தினார். “சேரலர்கோன் சேரல் செழும்பூந் திருக்கோவ லூரளவுந் தான்வருக உட்காதே;-பாரிமகள் அங்கவையைக் கொள்ள அரசன் மனமியைந்தான் சங்கியா தேவருக தான்.” என்று அம்மையார் சேரனுக்கு நிருபம் எழுதி அனப்பினர். பின்னர் அவர், “புகார்மன்னன் பொன்னித் திருநாடன் சோழன் துகாதென்று தானங் கிருந்து-நகாதே கடுக வருக கடிக்கோவ லூர்க்கு விடியல் பதினெட்டா நான்.” என்று சோழ மன்னர்க்குக் கடிதம் வரைந்தனுப்பினர். அதன் பிறகு அம்மையார், “வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன் செய்யத் தகாதென்று தேம்பாதே-தையற்கு வேண்டுவன கொண்டு விடியல்பதி னெட்டாநாள் ஈண்டு வருக இயைந்து.” என்று மாட மதுரைப் பாண்டிய மன்னற்கு நிருபம் தீட்டி யனுப்பினர். மூnவந்தரும், ஒளவையாரின் அருட்பாடலைக் கண்டதும், அவ்வம்மையாரை நன்கு அறிவாராதலால், அவரது கட்டளைக்கு உட்பட்டுத் திருமணத்திற்கு வந்திருந்தனர். திருமணம் அணி பெற நடக்கையில் ஒளவையார் பல தெய்வீகச் செயல்களைச் செய்து காட்டினர். திருமணம் நடைபெற்றது. அங்கவை கணவனுடன் இனிது உறைவாளாயினள். இவ்வாறு, பாரி மகளிர் அல்லலுறா வண்ணம் கபிலர் ஒரு பெண்ணுக்கு மணம் செய்ததும், ஒளவையார் ஒரு பெண்ணுக்கு மணம் செய்ததும் போற்றற்பாலன. II. வேள் ஆய் 1. தோற்றுவாய் வேள் ஆய் என்பவன் பொதிய மலையின் தலைவன். அம்மலையை அடுத்த ஆய்குடி என்பதே இவனது ஊர். ஆய் என்றும், அண்டிரன் என்றும், ஆய் அண்டிரன் என்றும் இவன் வழங்கப்பட்டான். இவனது மலை வேற்றரசரால் தாக்க முடியாத அரண் வலியை உடையது. இம்மன்னவன் சுர புன்னை மாலையை உடையவன்; யாதொரு பிரதி பலனையுங் கருதாது இரவலர்க்கு ஈயும் நீர்மையுடையோன். இவனது நாட்டில் கவிரம் என்ற பெயருடையமலைப் பகுதியில் பல இனிய சுனைகள் இருந்தன; “தெனாஅது, ஆ அய் நன்னாட் டணங்குடைச் சிலம்பிற் கவிரம் பெயரிய உருகெழு கவாஅன் ஏர்மலர், நிறைசுனை யுறையும் சூர்மகள்.” -அகநானூறு என்னுஞ் செய்யுளடிகளால், அவற்றில் சூரரமங்கையர் வாழ்ந்ததாக ஐதீகம் இருந்ததென்பதும் அறியக் கிடக்கிறது. மேலும், இந்த ஆய் நாடு யானைக் கூட்டங்களால் நிறைந்தது. ஆய் பரிசிலர்க்கு யானைகளை வரிசை வரிசையாகத் தந்து வந்தான். இவன் ஒரு நாள் காட்டு வழியே செல்லுகையில், நீல நாகம் ஒன்று இவனைக் கண்டவுடன் தேவன் விரும்பத் தக்க ஆடை யொன்றினை விட்டு அகன்றதாகவும், அதனை இவன் எடுத்து வந்ததாகவும் சொல்லப் படுகிறது. அவ்வாறுகாட்டியையே நீல நாகத்தால் கிடைக்கப்பெற்ற சிறந்த ஆடையைத் தான் தனக்கென வைத்துக்கொள்ளாது, அதனைச் சிவபிரானே அணியத் தக்கவர் என்று கருதி, அப்பெருமானுக்குப் பெரு மகிழ்ச்சியுடன் அதனை இவ்வள்ளல் சாத்தினன் என்று தெரிகிறது. இதனை, “நீல நாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள் ஆர்வ நன்மொழி ஆய்.” - சிறுபாணாற்றுப்படை என்னும் செய்யுளடிகளால் நன்குணரலாம். இவனைப் பல புலவர்கள் பாடியுள்ளார்கள் என்றாலும், அப்புலவரினும் இவனைப் பெரிதும் புகழ்ந்து பாடியவரும், இவனது உயிர்த் தோழருமான முட மோசியார் பாடிய பாக்கnள பெரிதும் இன்பத்தைப் பயப்பனவாதலானும், ஏனையோர் செய்யுட்களையும் விரிப்பின் அதிகம் பெருகுமாதலானும், மோசியாரையும் ஒரு சிலரையும் பற்றியே பெரிதும் ஈண்டுக் கூறவோம். 2. ஆயும் ஓடைகிழாரும் ஆயின் கொடைச் சிறப்பைக் கேள்வியுற்ற ஓடை கிழார் என்னும் பைந்தமிழ்ப் பாவலர், ஆய் குடியை அடைந்தனர்; வேளைக்கண்டு, தம் வறுமை யினைத் தெள்ளிதிற் கூறினர். “பெரும், கிழிந்த ஆடையைப்பற்றி ஈரினது திரளோடு தங்குதல் மிக்க பேனாகிய பகையை ஒரு பகை என்று சொல்லுவேனே? உண்ணாமையால் உடல் மெலிந்து விழிநீர் சிந்தி அலமரும் எனது சுற்றத்தை வருத்தும் வறுமையை ஒரு பகை என்பேனோ? இத்தகைய எனது நிலையை அறியாராய், ‘நின் கைப்பொருளைத் தா,’ என்று சொல்லி, எனது துயரத்தை மென்மேலும் பெருக்கும் கொடிய ஆறலை கள்வர் அலைக்கும் பகையை ஒரு பகை என்பேனோ? இத்தகைய எனது நிலையை அறியாராய், ‘நின் கைப்பொருளைத் தா,’ என்று சொல்லி, எனது துயரத்தை மென்மேலும் பெருக்கும் கொடிய ஆறலை கள்வர் அலைக்கும். பகையை ஒரு பகை என்பேனோ? இத்தகைய பகையினை அறிபவன் ஆயேயெனக் கருதி,. எனது வாக்கினால் நினது பெயரை வாழ்த்தி, நினது புகழை விரும்பி, ஞாயிற்றால் சுடப்பட்ட சுரத்தின்கண்ணே நடந்து, உன்னிடம் வந்துளேன். இவ்வாறு வறுமையால் வாட்டமுறும் என் போன்றவர்க்கு இடுவோரல்லவோ பயன் கருதாது பிறர்க்கு இடுவோரென்றும், எம்மை நீக்கிப் பிறர்க்கு ஈவோர் அன்றோ பயன் கருதி ஈவோர் என்றும் கொள்ளப்படுவர்? நீ, நின் தகுதிக்கேற்ற பரிசிலை ஆராய்ந்து ஈவாயாக. குளிர்ந்த நீரை யுடைய துறையூரின் ஆற்றுத் துறை முன்னர் உள்ள நுண்ணிய மணலிலும் பல வாழ்நாட்களைப் பெற்று வாழ்தியென நின்னை வாழ்த்தி, நீ தந்த செல்வத்தை நாள்தோறும் மகிழ்ச்சியுடன் உண்போம்,” என்னும் பொருள்படத் தக்க செந்தமிழ்ச் செய்யுள் ஒன்றினைப் பாடினர். தமிழ் மொழியின் அருமையும் புலவர் பெருமையும் உணர்ந்து ஆய் பெருங்களிப்படைந்து, புலவர் மனம் வெறுக்குமாறு பரிசில் நல்கினான். புலவர் பேரானந்தமுற்று ஆயை வாழ்த்தி அகன்றார். 3. ஆயும் மோசியாரும் மோசியார் பாண்டிய நாட்டில் மோசி என்ற குடியில் பிறந்தவர்; அந்தண வகுப்பினர்; முடவராயினமையின், முட மோசியார் எனப் பெயர் பெற்றார். இவர் சோழன் கோப்பெருநற்கிள்ளி என்பானால் ஆதரிக்கப்பட்டவர். உறையூர் நாட்டில் ஏணிச்சேரி என்னுமிடத்தில் நெடுநாள் தங்கியிருந்தார். அதனால், இவர் உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் என்று பெயர் பெற்றார். இம்மோசியார், வரையாது கொடுக்கும் வள்ளலாகிய ஆயினது புகழைக் கேள்வியுற்று, ஆயிடம் சென்று அவனது நட்பைப் பெற விரும்பி ஆய் நாட்டை அடைந்தார். புலவரைக் கண்ட ஆய், முகமன் கூறி அவரை வரவேற்றான். ஆயினது நற்குண நற்செயல்களை முன்னரே கேள்வியுற்றவராதலின், புலவர் அவனை நேரில் கண்டதும் தாம் கேள்வியுற்றவை உண்மையெனவே அறிந்தார். அதனால், பெருமகிழ்வு கொண்டார்; தம்மையும் அறியாது தம் உள்ளத்தெழுந்து நன்மொழிகளால் ஆயை வாழ்த்தினார். “நின் மலையானது புலி இயங்கும் குகைகளைக் கொண்டது; உயர்ந்த சிகரங்களையும், ஏறி வருவதற்குக் கஷ்டமான வழிகளையும் உடையது. அவ்வழிகளில் ஏறுதலால் வருத்தமுற்று, உடல் வளைந்து, தத்தடி வைத்து நடக்கின்ற மெல்லிய நடையை யுடையவளும் வளையலை அணிந்த கையையுடையவளுமான விறலி என் பின்னே வர, பொன்னைக் கம்பியாகச் செய்தாற்போன்ற முறுக்கடங்கிய நரம்புகளை உடையதும், வரிப்பாட்டு ஸ்வரஸ்தானங்கள் தோறும் மாறி மாறி ஒலி செய்வதுமான யாழை, வழி நடத்தலாலே தளர்வுற்ற நெஞ்சத்தோடு ஒரு பக்கத்திலே அணைத்துக்கொண்டு, புகழ்தற்கு அமைந்த தலைமையயுடைய நினது நல்ல புகழை நினைத்து வந்தேன் யான், எனது இறைவ,’ என்று பாணன் கூறிய மாத்திரத்தே கன்றுகளுடனே உரல்போன்ற அடியினையுடைய யானைகளை அணியணியாகச் சாய்த்துக் கொடுக்கும் வளமை பொருந்திய மலையையுடைய நாடனே, பாணரும் புலவரும் கூத்தரும் நினது பொருள்களைத் தத்தமவென வளைத்துக் கொள்வார்களாயினும், நீ அவற்றை, ‘எம்முடையவை’ எனக் கூறி அவரிடத்தினின்றும் மீண்டும் பெறாத அருங்குணம் வாய்ந்தனை. அக்குணம் இனியும் அவ்வாறே நிலை பெறுக; பகைவரது மிக்க மாறுபாட்டை வென்றவனும், வலியையுடைவனும், யாவரும் ஒப்பப் புகழும் நாட்டை யுடையவனும், சிறப்புப் பொருந்தியவனுமான ஆயே, உன்னிடம் யான் வந்தது யானை வேண்டியன்று; குதிரை வேண்டியன்று; தேரை வேண்டியன்று; நின்னைக் காண வேண்டுமென்ற விருப்பத்தாற்றான்!” என்று அவனது ஈகைக் குணத்தையும் மலையின் பெருமையையும், தாம் வந்த நோக்கத்தையும் நற்றமிழில் நன்கெடுத்துக் கூறினார். வேள் ஆய் மோசியாரின் அருங்குணங்களை ஆய்ந்து பார்த்து, அவரிடம் பேரன்பு கொண்டனன்; அவர் வாக்கை nவத வாக்காக நம்பினன்; அவர் சொற்படியே எக்காரியத்தையும் செய்து வந்தனன். ஆயின் அருங்குணங்களைக் கவனித்த மோசியாரும் அவனிடம் நீங்கா நட்புக் கொண்டார்; ஆயைக் காணு முன்னர்ப் பல அரசரைத் தாம் பாடியதற்காகப் பெரிதும் வருந்தினார். ஏனெனில், பைந்தமிழின் பெருமையும், புலவர் அருமையும் ஆழ்ந்து நோக்குபவர் மிகச் சிலரே. அச்சிலர் நன்னடக்கையும் மாரி போன்ற ஈகையும் உடையவர்களா யிருத்தல் வேண்டும். அவர்களை எத்துணைப் பாடல்களாலும் பாடிப் புகழலாம்; அவற்றிற்கு அவர் அருகரே என்பது மோசியாரது எண்ணம் போலும்! “இமய மலை வானளாவியது; குவளை மலர்களையுடைய பல சுனைகளையுடையது; அச்சுனைகளின் பக்கலில் தகர மரங்கள் குளிர் நிழலைப் பரப்புகின்றன; அம்மலையில் உறையும் கவரிமான்கள் நரந்தையையும் நறிய புல்லையும் மேய்ந்து, முற்கூறிய சுனைகளுளொன்றில் நீரைக் குடித்துத் தகரமர நிழலிலே தூங்கும் இயல்பையுடையன. இத்தகைய நிகழ்ச்சியைக் கொண்ட இமய மலையை வடக்கேயும் தென்றிசைக்கண் ஆய் குடியையும் பெற்றிராவிடின், இவ்வகன்ற உலகம் கீழ்மேலதாகும். இத்தகைச் சிறப்புப் பொருந்திய வேள் ஆயையன்றோ யான் முன்னதாகப் பாடியிருத்தல் வேண்டும்! இவனைவிட்டு ஏனையோரைப் பாடினேனே பாவியேன்! அவ்வாறு பாடிய குற்றத்தால் எனது உள்ளம் அழிந்துபோவதாக! ஆயையன்றிப் பிறரைப் புகழ்ந்த நாவும் கருவியாற் பிளக்கப்படுவதாக! இவன் புகழையன்றிப் பிறர்புகழைக் கூறப் கேட்ட என் செவியும் பாழ்பட்ட ஊரில் உள்ள கிணறுபோலத் தூர்வதாக!” என்று கூறித்தம்மைத் தாமே நொந்துகொண்டார் புலவர். இதனால், ஆயிடத்து எத்துணைப் பேரன்பு மோசியார் கொண்டிருந்தனர் என்பது வெள்ளிடைமலை. மேலும், ஆயின் புகழ் அவன் காலத்தரசர் பெற்ற புகழினும் மேம்பட்டிருந்த தென்பது பிரசித்தம். இவ்வுத்தம வேளின் சிறப்புகளை இப்புலவர் பெருமான் திருவாக்காலேயே பின்னரும் அறியலாம். 4. மோசியாரும் மலை வளமும் ஒருநாள் மோசியார் ஆயின் ஆட்சிக்குட்பட்ட பொதிய மலையின் காட்சியைக் காணச் சென்றார். வானுற வோங்கி வளம்பெற வளர்ந்து நின்ற மரங்களின் வரிசையும், தெள்ளிய நீர் அருவிகளின் நீர்ப்பெருக்கும், வானத்தையளாவும் மலைத் தொடரும் ஆய் நாட்டை அணிபெறச் செய்தனவென்பது மிகையாகாது. இத்தகைய பொதிய மலையின் இயற்கைத் தோற்றமும் வளப்பமும் புலவர் மனத்தை ஈர்த்தன. புலவர் தம் வசமிழந்து, “ஆ! இம்மலைவானளாவியது. இம்மலை உச்சியில் முகில்கள் படி கின்றன. இங்குப் பலா மரங்கள் மிக்குள்ளன. பலாவின் கிளைகளில் மந்திகள் வசிக்கின்றன. அக்கிளைகளில் மந்திகள் வசிக்கின்றன. அக்கிளைகளில் பரிசிலரால் தூக்கிவைக்கப்பட்ட பிணிப்புப் பொருந்திய மத்தளங்கள் இருக்கின்றன. அவைகளைப் பலாப் பழங்களென்று எண்ணி மந்திகள் அவற்றின் கண்களைத் தட்டுகின்றன. தட்டியவுடன் மத்தள ஓசை உண்டாகிறது. அவ்வோசையால் அப்பலாவின்கண் வாழும் அன்னச் சேவல்கள் திடுக்கிட்டெழுந்து, மத்தள வோசைக்கு மாறாகக் கூவுகின்றன. இத்தகைய இயற்கை வனப்பினைக் கொண்டது இம்மலை. இச்சிறப்பு வாய்ந்த மலையை உடையோன் மலை போன்ற தோள்களையுடைய எம்வேள் ஆய். இம்மலையை ஆயிடத்துப் பாட வரும் விறலி அடையலாமே யன்றிப் பெருமை பொருந்தியஅரசர் அடைய முடியாது.” என்று பொதிய மலையின் பெருமையினைப் பாராட்டிக் கூறினார். இப்பாடலால், ஆய் என்பானது நாட்டின் வளமும் அவனது வலிமையும் புலப்படுதல் காண்க. அம்மலைச் சாரலில் கூட்டங் கூட்டமாக யானைகள் வசிப்பதைப் புலவர் கண்டார்; அவை எண்ணற்கியலா வகை மிக்கிருந்தனவாதலால், வியப்புக் கொண்டார். அவர், “களிறுகளை மிகுதியாகக் கொண்ட அழகிய இக்காடு, முகிலினம் சென்று உறங்கும் உயர்ந்த மலைக்குத் தலைவனும், சுர புன்னைப் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியினை உடையானும், கூர்மையான வாளினை உடையானுமான அண்டிரனது மலையைப் பாடி இக்களிறுகளைப் பரிசிலாகப் பெற்றதோ?” என்ற பொருளை வைத்து, “மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன் வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன் குன்றம் பாடின கொல்லோ களிறுமிக வுடையலிக் கவின்பெறு காடே!” -புறுநானூறு என்று பாடி வியப்புற்றார். பிறகு, புலவர் மலைநாட்டு மக்களான குறவரைக் கண்ணுற்றார். அவர்கள் செய்கையையும் யானைக் கூட்டங்களையும் சேர்த்துப் பின்வருமாறு கூறி, ஆய்வேளின் பெருமையினை நினைந்து வியந்தார்: “இக்குறவர் குறுகிய இறப்பையுடைய சிறிய வீடுகளில் வசிக்கின்றனர்; பலாவின் மதுவை வளைத்த மூங்கிற் குழாயில் வார்த்திருந்து, அது நன்றாக முதிர்ந்ததும் அதனைக் குடித்துவிட்டு, வேங்கை மரத்தையுடைய முற்றத்தின்கண் குரவைக் கூத்தாடுகின்றனர். இனிய சுளைகளையுடைய பழங்களைக் கொண்ட பலா மரங்கள் இம்மலை நாட்டில் அதிகமாகக் காணப்படுகின்றன. இத்ததைய வளப்பம் பொருந்திய மலை நாட்டை உடையவன் ஆய். அவன் கொல்லுகின்ற போரைச் செய்யும் தலைவன். அவன் இரப்போர்க்குக் கொடுத்த யானைத் தொகை, விண் மீன்கள் எண்ணிக்கையினும் மேம்படுமே யன்றிக் குறையாது. மணிகளாகிய ஆரத்தையுடைய ஆயே, நின்னையும் நின் மலையையும் பாடி வரும் பரிசிலர்க்கு இனிய முகத்தோடு மனம் உவந்து நீ கொடுத்த யானைகளை எண்ணின், அவை, நீ கொங்கரை மேற்கடற் கண்ணே ஓட்டிய நாளில் புறங் கொடுத்து விட்டுப் போன வேல்களினும் பலவாகின்றன. இவ்வாறு நீ எண்ணிறந்த யானைகளைப் பரிசிலாகக் கொடுத்தும், இன்னும் கணக்கற்ற களிறுகள் உன் வசத்தேயுள்ளன. இவை இவ்வாறு மிக்கிருப்பதற்குக் காரணம் என்ன? நினது நாட்டின்கண் உள்ள இளைய பெண் யானை ஒரு கருப்பத்துக்குப் பத்துக் கன்றுகளைப் பெறுமோ?” இவ்வாறு, புலவர் கோமான் மலை நாட்டு வளப்பத்தைக் கண்ணுற்றுக் களி கொண்டு, ஆயின் அரணை நாடி வருகையில் விறலி ஒருத்தியைச் சந்தித்தார். அவர் அவளை நோக்கி, “மெல்லிய இயல்பினையுடைய விறலி, நல்ல புகழையும், மழைபோன்ற வண்மையையும், அழகிய தேரினையும் உடைய வேள் ஆயைக் காண விரும்புவாயாயின், மாட்சிமைப்பட்ட நினது மணம் பெற்ற கூந்தல் பொதியமலைக் காற்றால் அசைய, பீலியையுடைய மயில் போலக் காட்சியுண்டாக நடந்து செல்வாய்” என்று கூறி அகன்றார். 5. ஆயின் கொடைச் சிறப்பு ஒரு நாள் புலவர் பெருந்தகை ஆயின் வள்ளற்றன்மையை மேலும் விளக்குவான் வேண்டி, “ஆய் வேட்டைக்குச் செல்வன்; வேட்டை முடிந்ததும் புலித்தோலை விரித்துத் தனக்கு வேட்டையாற் கிடைத்த முள்ளம்பன்றியின் தசை, சந்தனக்குறடு, யானை மருப்பு ஆகிய இவற்றைக் குவித்து வைத்துப் பாடி வரும் பரிசிலர்க்குக் கொடுக்கும் பான்மை உடையவன். இத்தகைய கொடைச் சிறப்புடையவன் அப்பெருவள்ளல்,” என்னும் கருத்தமைந்த கொழுவிய பாடலைப் பாடினர். பின்னர், “இப் பாரில் இம்மையில் அறங்கள் செய்தால், அவை மறுமைக்கு உதவுமென்று கருதிப் பொருளை விலையாகக் கொடுத்து, அதற்குப் பதிலாக அறத்தைக் கொள்ளும் அற வணிகன் அல்லன் அண்டிரன்; அவனது கொடை, ‘பெரியோர் செய்த வழி’ என்று யாவரும் கருதும்படி அந்நற்செய்கையளவில் பொருந்தியது,” என்ற பொருள் அமைத்து, “இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறைவிலை வணிகன் ஆஅயலன்; பிறரும் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப் பட்டன் றவன்கை வண்மையே.” -புறுநானூறு என்று பாடினர். 6. ஆயின் இறுதி நிலை இவ்வாறாகப் புலவர்களால் போற்றப்பட்டு வந்த வேள் ஆய், வறியார்க்கே தன் பொருள் அனைத்தும் நல்கி வறுமை அடைந்தான். சுருங்கக் கூறின், அவனது மனைவியரின் மங்கல நாணைத் தவிர, அவனிடத்து எஞ்சிய பொருள் ஒன்றுமில்லை. நாளடைவில் வறுமை மிகுந்தது. வறுமையால் வேள் ஆயின் நாடு அழகு குன்றியது. அரண் மனையில் வாழும் அவன் மனைவியர் மகிழ்ச்சி யற்றார்கள். அவன் முகமும் அகமும் பொலிவுடனே விளங்கின. ஆய், நற்காரியத் திற்றான் தன் பொருள்களைச் செலவழித்தானே யன்றி, வீண் காரியத்தில் பாழக்க வில்லை அன்றோ? ஆய்க்கு நேர்ந்த வறுமையை எண்ணி மோசியார் பெரிதும் துக்கித்தாரெனிலும், ஆசை உற்சாகப்படுத்த வேண்டி, “களாப்பழம் போலும் கரிய கோட்டை உடைத்தாகிய சிறிய யாழைக் கொண்டு பாடும் இனிய பாட்டில் வல்ல பாணர் பரிசில் பெற்றுப் போனார்களாக, களிறுகள் இல்லாத பக்கத்தையுடைய நெடிய தறியின்கண்ணே காட்டு மயில்கள் தத்தம் இனத்தோடு தங்கத் தக்கது ஆயின் கோயில். அக்கோயில் ஆயின் மனைவியர் மங்கல நாணன்றி மற்றைய அணிகலன்களை இழந்திருப்பதால், பொலிவழிந்து சாய்ந்ததென்று பிறர் சொல்லுவர்: நுகர்தற்கு இனிதான தாளிப்பையுடைய அமுதைப் பிறர்க்கு உதவாது, தம்முடைய வயிற்றையே நிறைத்துப் புகழைச் சம்பாதியாத பெருஞ் செல்வர்களின் மனைபோலப் பொலிவு அழியாமல் ஆயின் அரண்மனை அழகு மிகுந்து விளங்கும்” என்ற கருத்தைக் கொண்டு பைந்தமிழ்ப் பாவினைப் பாடினர். பின்னர்ச் சின்னாட்களில், தமிழ் மக்கட்குப் பெருந்தாய் போன்றவனும், மலை வளம் பெற்றவனும், சற்குணனுமான வேள் ஆய் மண்ணக வாழ்கை நீத்து விண்ணக வாழ்வை மருவினான். அவன் உயிர் துறந்த காலையில் விண்ணிலே பெரிய ஒசை யுண்டாயிற்று. அது கேட்ட மோசியார், “ஆ! திண்ணிய தேரை இரவலர்க்கீந்தவனும் குளிர்ந்த மாலையை உடையவனுமான வேள் ஆய் வருகின்றானென்று, ஒள்ளிய கொடியினையும் வச்சிராயுதத் தினையும் உடைய தடக்கை இந்திரனது கோயிலினுள்ளே முரசம் முழங்க வானத்தின்கண் ஒசை தோன்றிற்று,” என்ற பொருளமைத்து, “நிண்டே ரிரவலர்க் கீத்த தண்டா ரண்டிரன் வரூஉ மென்ன வொண்டொடி வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுட் போர்ப்புறு முரசங் கறங்க ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி னானே.” -புறநானூறு எனப் பாடினர். ஆயினது மரணத்தைக் கேள்வியுற்ற குட்டுவன் கீரனார் என்னும் புலவர் பெரிதும் வருந்தினர். அவர் ஆயின் நற்குண நற்செயல்களை நினைந்து நினைந்து ஆறாத் துயர் அடைந்தார். அப்புலவர், “களத்திற்கேற்ப நடக்கும் அசைந்த நடையை யுடைய குதிரைகளையும் யானைகளையும் தேர்களையும் அழியாத புது வருவாயைப் பெற்ற நாட்டையும் ஊர்களையும் பாடுவார்க்குக் குறைவறக் கொடுக்கும் ஆயாகிய அண்டிரன், தனது உரிமை மகளிரோடே காலன் என்று சொல்லப்படுங் கண்ணிலியால் கொண்டு செல்லப்பட்டுத் தேவருலகத்தை அடைந்தான் போலும்! பொலிவிழந்த கண்களை யுடையாராய்த் தம்மைப் பாதுகாப்போரைக் காணாது ஆரவாரிக்கும் சுற்றத் துடனே செயலற்று அறிவுடைப் புலவர் வறுமைப் பிணியால் வாடுங் காலம் வந்துவிட்டதே! இஃதொரு நிலை இருந்தவாறென்னை!” என்று கூறிப் புலம்பினார். III. வள்ளல் அதியமான் நெடுமானஞ்சி 1. அதியமான் தமிழ் நாடுகளில் ஒன்றாகிய சேர நாடு மலை வளம் பெற்றது. பச்சைப் பசேலெனப் பசுந்தாளாடை யுடுத்த பல குன்றுகளும், வான ளாவி நிற்கும் பல மரங்களில் வரிசையும், கானாறுகளின் நீர்ப் பெருக்கும், மலையருவிகளின் வளமும் அந்நாட்டை அணிபெறச் செய்தன. வாவிகளும் தடங்களும். அந்நாட்டைச் சுற்றிலும் மிக்கிருக்கும். வனப்புமிக்க அத்தடங் களின் கரைகளில் மழலை பேசும் தத்தைகள் ஒருபுறமாகவும், நடைபழகும் மயிலினங்கள் ஒரு வரிசையாகவும், இன்னிசை பாடும் குயிலினங்கள் மற்றொரு மருங்காகவும், அன்றலர்ந்த நறுமணம் நாறப்பெற்ற தண்மலர்களில் நிறைந்துள்ள மதுவை உண்டு மயக்கத்தால் ரீங்காரம் செய்யும் சுரும்புகள் ஒரு புறமாகவும் நிரம்பியிருக்கும் அற்புதக் காட்சியைக் காணலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த சேர நாட்டில் தகடூர் என்ற ஓர் ஊர் உளது. அந்நகரத்தில் எந்நாட்டு வளங்களும் நிறைந்து பொலிந்தன. அப்பதி தனது இயற்கை அமைப்பினாலும், செயற்கை அமைப்பினாலும், எந்நகரத்திலும் சிறப்புற்ற தென்றே கவிகள் கூறுவார்கள். மேலும், அந்நகரக் காட்சி, பல வுத்தமப் பாவலர்க்குப் பொழுது போக்கையும் இன்பத்தையும் இடையுறாது உண்டுபண்ணிய தென்னலாம். அக்காலத்தில் செல்வம், புகழ், கல்வி இவைகளில் மேம்பட்ட மக்களில் பெரும்பாலார் அந்நகரில் உறைந்தனர். இவ்வாறு சிறந்து விளங்கிய தகடூரை ஆண்டு வந்தவன் அதியமான் நெடுமானஞ்சி என்பவன். அவன் கட்டவிழ்ந்த நல்ல மலர்களாலாகிய குளிர்ச்சி பொருந்திய மாலையை உடையவன்; யாவரும் அஞ்சத்தக்க படையை யுடையவன். மேலும், அந்த அதியமான் போர் செய்கின்ற கருப்பு வில்லையுடைய வசந்த காலத்திற்குரிய மன்மதனைப் போன்ற சிறந்த அழகினை உடையவன்; பெரிய மலையைப் போலும் பரந்த மார்பினை உடையவன்; போர் செய்கின்ற கடல்போன்ற திரண்ட சேனையை உடையவன்; மாறுபட்ட மிக்க கோபத்தை யுடைய யானைபோலும் கோபத்தினை உடையவன். அவன் மேகத்தினும் பன்மடங்கு அதிகமாகக் கொடுக்கின்ற வளம் பொருந்திய கையை யுடையவன். அவ்வள்ளல் கருணைக்கு இருப்பிடமானவன்; நல்ல தருமமாகிய பயிரினது வேலியாக ஒப்பிடப் படுபவன். அவன் ஏனைய பகை அரசர்களாகிய யானைகளுக்கு ஆண் சிங்கம் போன்றவன்; சேரமானது உறவினன்; சிற்றரசரையும் பெருவேந்தரையும் அநேக போர்களில் வெற்றி கொண்டவன். அவன் பெயர் அதியமான் நெடுமானஞ்சி எனவும், நெடுமானஞ்சி எனவும், அஞ்சி எனவும் வழங்கும். 2. அஞ்சியும் பெருஞ்சித்திரனாரும் அஞ்சி என்பான் தகடூரை ஆண்டு வருங்கால், பெருஞ்சித்திரனார் என்னும் பைந்தமிழ்ப் புலவர் அவனைப் பாடிப் பரிசு பெற விரும்பினார். அவர் தம் ஊரை விட்டு தகடூரை அடைந்தார். அடைந்தவர், அஞ்சியைக் காணுதற்குப் பல நாள் காத்திருந்தனர். வறியார்க்கீதலே தன் தொழிலாகப் பெற்ற அக்கொடைவீரன், யாது காரணத்தாலோ, பரிசில் வேண்டிக் காத்திருக்கும் புலவர் பெருமானை நேரில் வந்து காணவில்லை. அவன் அவரது வருகையை யுணர்ந்து, தனது ஏவலர் மூலமாகப் பரிசிலைக் கொடுத்துப் புலவர்க்கீயும்படி செய்தான் புலவர், “ முற்றிய திருவின் மூவ ராயினும் பெட்பின் றீதல் யாம்வேண் டலமே.” -புறநானூறு என்ற மனப்பான்மை உடையவராதலின், அஞ்சியின் செயலை வெறுத்தார். அவர் பரிசில் கொணர்ந்தாரை நேக்கி, “யான் குன்றுகளும் மலைகளும் பல கடந்து, பரிசில் பெறும் விருப்பத்துடன் ஈண்டு வந்தேன்; என்னை எத்தன்மையன் என அறிந்தான் பகைவரால் தடுத்தற்கரிய அரசன்? என்னை அழைத்துவரச் சொல்லிப் பாராமலே தந்த இப்பொருளைப் பெறுதற்கு யான் ஓர் ஊதியமே கருதும் பரிசிலனல்லேன். எனது கல்வி முதலாகியவற்றை யறிந்து கொடுத்திடினும், கொடுப்பது தினைத் துணையாயினும் நல்லதாகும்,” என்னுங் கருத்துப்பட, “குன்று மலையும் பலபின் னொழிய வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென; நின்ற வென்னயந் தருளி யீதுகொண் டிங்கனஞ் செல்க தானென வென்னை யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன்? காணா தீந்த லிப்பொருட் கியானோர் வாணிகப் பரிசில னல்லேன்; பேணித் தினையனைத் தாயினு மினிதவர் துணையள வறிந்து நல்கினர் விடினே,” -புறநானூறு என்ற பைந்தமிழ்ப் பாடலைத் தமது பெருமிதம் தோன்றக் கூறி, அவ்விடம் விட்டகன்றார். 3. அஞ்சியும் ஒளவையாரும் சேர நாட்டில் தமிழ்ப் பழங்குடியாகிய பாணர் குடியில் ஒளவையhர் என்னும் நல்லிசைப் புலமை வாய்ந்த மெல்லியலார் பல நூற்றாண்டுகட்கு முன் பிறந்தார். அவர் இளமையிலேயே நற்றமிiழ நலமுறப் பயின்று, நல்லிசைப் புலவராய் விளங்கினர். அவர் பல திறப்பட்ட தமிழ் மன்னர்கள்பாற் சென்று கவி பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தனர். அவ்வம்மையார் அஞ்சியின் நற்குண நற்செயல்களைக் கேள்வியுற்றார். அவனைக் காண வேண்டும் என்னும் அவாப் பிடர் பிடித்துந்த, அவர் தகடூரை அடைந்தார். அடைந்த அம்மையார் அவனைக் கண்டு “பெரும, இரப்போர்க்கு ஈயும் மடவார் மகிழ் துணை நெடுமானஞ்சி, கடலால் சூழப்பட்ட இந்நிலவுலகத்தில் வறுமையால் வாட்ட முற்றோர்க்கு வேண்டுவ தருதி நீ எனக்கேட்டேன். யான் சேர நாட்டில் பாணர் குலத்திற் பிறந்தவள். என் பெயர் ஒளவை என்பது. யான் வறுமைப் பெருந்துயர் உழந்தேன். நீ மனம் உவந்து இயைந்ததொன்று இக்கணத்தளிப்பாய்,” என்று, தம் வறுமையினையும் அவனது பெருமையினையும் பல பாடல்களால் வெளிப்படுத்தினர். அஞ்சி என்பவன், அம்மையாரின் புலமையையும் ஒழுக்கத்தினையும் உய்த்துணர்ந்து பெருமகிழ்வு கொண்டனன்; அவருக்கு இன்சுவை அமுதை இன்போடு ஈந்தனன்; “பரிசில் கொடுத்துவிடின், இவர் இவண் விட்டேகுவர்,”என்று எண்ணி, அவரைப் பிரிய மனமற்றவனாய்ப் பரிசில் அளிக்காது தாழ்த்தினன். அம்மையார் சின்னாள் அவனது அரண்மனையில் தங்கியிருந்தனர். அவன் பரிசில் கொடுத்தானில்லை. அம்மையார் சினங் கொண்டார்; அஞ்சியை நேரிற் காணவும் பிரியப்படாது, அவனது வாயிற் காப்போனிடம்சில கூறி அகல வேண்டும் என்று விரும்பினார். அவர் அவனை நோக்கி, “வாயில் காப்போய், வாயில் காப்போய், ஈகைத் தன்மை யுடையோரது செவியிலே விழுமிய சொற்களை விதைத்துத் தாம் எண்ணிய பரிசிலை விளைக்கும் வலிமை உடையதாகிய நெஞ்சினையுடையார் பரிசிலர்; மேலும், அப்பரிசிலர் பரிசிலால் வாழும் இல் வாழ்க்கையையுடையார். அவர் இங்கு வந்தால் இவ்வாயிலை அடைக்காது வைத்துள்ள வாயில் காப்போய், விரைந்து செல்லும் குதிரையினை யுடைய குரிசில் நெடுமானஞ்சி தன் தரம் இத்தகைமைத்து என்று அறியானே? தன் தரத்தை அறியா விடினும், என் தரத்தையேனும் அறியான் கொல்லோ! இவ்வுலகம், அறிவும் புகழும் உடையோர் இறந்தாராக, வறிய இடத்தை யுடையதாகிவிட வில்லையே! ஆதலால், யான் இப்பொழுதே புறப்படுகின்றேன். எனது யாழ் முதலிய பொருள்களைக் கட்டித் தூக்குகின்றேன்! இவனை அறிந்தோ தமிழை ஓதினேன்! யான் எத்திசைச் செல்லினும், அத்திசைக்கண் சோறு உளது, யான் செல்வதாக நின் அரசற்குக் கூறுக,” என முனிவுடன் கூறிப் புறப்பட்டார். அம்மையார் புறப்பட்டதை உணர்ந்தான் அதியமான்; செய்தது பிழையென்று உன்னி, அரண்மனையை விட்டு வழி நடக்கும் அம்மையாரைத் தடுத்துப் பணிவுடன் தன்னை மன்னிக்கு மாறு வேண்டினன். பின்னர், அஞ்சி அம்மையாரைத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று அறுசுவை யுண்டி அன்புடன் அளித்துப் பரிசில் பல நல்கினான். அவனது தளராக் கொடைத் திறத்தைக் கண்ட ஒளவையார் அகமிக மகிழ்ந்தார்; “அந்தோ! அதியமானது கொடைத் திறத்தையும் தண்ணளியையும் அறியாது, யான் முனிவு கொண்டேனே!” என்று இரங்கினார். பின்னும் அவர், தம் உள்ளத்தோடு உரைப்பவராய், “அதியமான் அணிகலம் அணிந்த யானையையும் தேரையும் உடையவன்; அவன், ஒருநாள் அன்று; இரு நாள் அல்ல; பல நாளும் பயின்று பலரோடு சேர்ந்து செல்லினும், முதல் சென்ற நாளில் எத்தகைய விருப்பம் நம்மிடத்துடையவனாக இருப்பானோ, அத்தகைய விருப்பமே உடையவன். அவன் பரிசிலை நீட்டிப் பினும் நீட்டியா தொழியினும், யானை தனது தந்தங்களிடைnய வைத்த கவளம்போல, அப்பரிசில் நமது கையகத்ததே; அது தப்பாது உண்ணுதற்கு இச்சித்த நெஞ்சே, நீ பரிசிற்கு வருந்த வேண்டா; அவன் தாள் வாழ்வதாக!” என்று, அவனது மனப்பான்மையையும், அவன் பரிசில் தாராதொழியான் என்ற உறுதியையும், தாம் அவனிடத்துக் கொண்டுள்ள அன்பையும் வெளிப்படுத்தினர். ஒரு நாள் ஒளவையார் தகடூரைச் சுற்றிப் பார்த்து மலைவளப்பத்தைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது விறலி ஒருத்தி மத்தளத்தை யெடுத்துக் கொண்டு அவ்வழியே சென்றுகொண்டிருந்தாள். அவளைக் கண்ணுற்ற ஒளவையார், “சிலவாகிய வளையலை யுடைய விறலி, பலவேற் படையை யுiடய எம் அண்ணல் அதியமான் சேய்மைக் கண்ணா னல்லன். உலகம் முழுவதும் வறுமை உறுதலையுடைய காலமாயினும், நீ அவன்பாற் போவையானால், நின்னைப் பாதுகாக்க வல்லவன் அவன். அவனே சிறந்த கொடை வீரன்; தண்ணளி நிறைந்த அண்ணல்,” என்று கூறிப் போந்தார். இவ்வாறு ஒளவையார் அஞ்சியின் அரிய குணங்களை எந்நேரமும் நினைந்து நினைந்து, தம் உள்ளத்தினின்று ஊறி எழுகின்ற செந்தமிழ்ப் பாவால் செம்மையுற எடுத்துப் பாடும் தொழிலையே மேற்கொண்டிருந்தார். அந்த அஞ்சியை விட்டுச் செல்ல அவர் மனம் இடந் தரவில்லை; அம்மையாரை விட்டுப் பிரிய அஞ்சியும் உடன்பட்டானில்லை; அவர் இல்லாத அவைக்களம் தாமரையற்ற தடாகம் போலும், கண்ணில்லாத வதனம் போலும் பொலிவற்று விளங்கும் என்று எண்ணினான். ஒளவையாரும் தம் புலமையாலும், ஒழுக்கத்தாலும் அஞ்சியின் அன்பைக் கவர்ந்தார்; அவனுக்கு உயிருக்குயிரே போன்ற அமைச்சராகவும் விளங்கினார். 4. அஞ்சி நெல்லிக்கனி பெற்று ஒளவையாருக் கீதல் ஒளவையார் பாடும்இனிய பாடல்களைக் கேட்டுப் போரனந்த முற்றிருந்த அஞ்சி, ஒரு நாள் ஒரு மலைப் பக்கத்துக்குச் சென்றிருந்தான்; அம்மலையில் கரு நெல்லி மரம் ஒன்றைக் கண்டான். அம்மரத்தில் பழுத்த நெல்லிக்கனி ஒன்று இருந்தது. அதனை அவன் அரிதின் முயன்று பெற்றான். பெற்ற வேந்தன், “இதனை உண்போர் நெடுங்காலம் உயிர் வாழ்வர் என்று சொல்லக் கேட்டுளேன். என்றாலும் இதனை உண்டு நெடுங்காலம் உயிர் வாழ எனக்கு விருப்பமில்லை. உலக மக்களுக்குப் பெரிதும் பயன்படுவாரே இக்கனியை யுண்டு நீடு வாழ்வது தகுதியே யன்றி, உலகிற்கு ஒரு சிறிதும் பயன் படாத நாயேன் இதனை உண்டு நீண்ட காலம் நடைப் பிணமாகத் திரிவதிற் பயன் என்ன? இதனை யாருக்கு ஈயலாம்? சரி; தமது நா வன்மையால் அரிய பெரிய பாக்களை இயற்றி உலகைத் திருத்தும் ஒளவையாருக்கே ஈவோம்; அவரே இதனை உண்ணத் தக்கவர், ” என்று தனக்குள் கூறி முடிவு செய்து கொண்டான்; பின்னர், தன் அரண்மனையை அடைந்து ஒளவையாருக்கு அக்கனியின் ஆற்றலைக் கூறாமலே கொடுத்தான். ஒளவையார் அதனைத் தின்றார். உண்போர்க்கு உடனே வலிமையைத் தரத்தக்க கனியாதலால், அதனை உண்டதும் அம்மையார் தாம் ஏதோ புதிய பலம் பெற்றதாக எண்ணினர்; பின்னர் உண்மையை உணர்ந்தனர். தன்னினும் தம்மை மேலாக மதித்த அஞ்சியின் அருங்குணத்திற்கும், செயலுக்கும் வியந்தார். அவர் அஞ்சியை நோக்கி, “வென்றி யுண்டான தப்பாத வாளை யெடுத்துப் பகைவர் போர்க் களத்திலே பட வென்ற வீர, கழலை விடப்பட்ட வீர வளை பொருந்திய மன்ன, பெரிய கையினையுடையாய், கோமானே மாற்றாரைப் போரின்கண் கொல்லும் வீரச் செல் வத்தினையும் பொன்னாற் செய்யப்பட்ட மாலையினையும் உடைய அஞ்சி, நீ இளம்பிறையைச் சடையிலே தாங்கியவனும் நீல மணி பேhலும் கரிய மிடற்றினையுடையவனுமான சிவபெருமானைப் போல நிலை பெற்று வாழக் கடவாய்! பெரிய மலையிடத்து விடரின்கண் தோன்றிய அரிய கருநெல்லியின் இனிய பழத்தைப் பெற்றும், அதனை உண்டு அதனாற் பெறும் பயனையும் பொருட்படுத்தாது, அப்பேற்றினை எமக்குக் கூறாது உண்ட அளித்தனை! நினது செயல் சாலவும் வியக்கத் தக்கதே!” என்று அருளோடு கூறி மகிழ்ந்தார். மேலும், அம்மையார் அவனைப் புகழ விரும்பி, “மன்ன, நீர்த் துறையில் படிகின்ற யானையின் கோடுகளைச் சிறார்கள் கழுவுகிறார்கள். அச்செயலால் அந்த யானை எவர்க்கும் எளிதென்று கூற முடியுமோ? முடியாது. அதுபோல, எங்கட்கு எளியனாய் விளங்கும் நீ, நின் பகைவர்க்கு எளியனாவையோ? பெரும் நீ நின் பகைவர்க்கு இன்னாய்,” என்று, அவனது எளியனாந் தன்மை வீரம் முதலியன விளங்கப் பல கவிகள் பாடினர். அஞ்சி என்பான் அவற்றைக் கேட்டு, இன்புற்றிருந்தான். 5. ஒளவையாரும் தொண்டைமானும் அஞ்சி தகடூரை ஆண்டு கொண்டிருந்தகாலை, தொண்டைமான் என்னும் அரசன் காஞ்சி நகரத்தை ஆண்டு வந்தான். அம்மன்னனும் படைவலி பெற்றவன். அவன் அஞ்சியைத் தன்னினும் மெலியான் என்று எண்ணி, அவன்மீது போருக்கெழ விரும்பினன். அச்செய்தியை உணர்ந்தான் அஞ்சி. “நமது நாடு கானரணும் உடையதென்பதை அக்கயவன் கருதவில்லை போலும்! அவற்றைக் கருதாவிடினும், நம்முடைய தோள்வலியும் வாள் வலியும் கருதினனோ? அவற்றையும் அவன் கருதவில்லை எனத் தெரிகிறது. அவன் தன்னுடைய பேதமையினல் நம்மை எளியனாகக் கருதி விட்டனன் போலும்! நன்று நன்று! அவன் நம்மீது போருக்கு வந்தால் தோல்வியுறுவான் என்பது திண்ணம். அவனைப் போருக்கு வாராது தடுப்பதே சிறந்தது. நமது ஆற்றலையும் படை வலியையும் அவன் உணர வேண்டும். அவனுக்கு அவற்றை உணர்த்த வல்லார் நம்மிடம் யாவர் உளர்? நன்றி! நல்லிவை மெல்லியரான நம் ஒளவைப் பிராட்டியாரையே காஞ்சிக்கு அனுப்புவோம்,” என்று துணிவு கொண்டான்; தன் எண்ணத்தை அம்மையாருக்கு அறிவித்தான். அம்மையாரும் அவன் கருத்திற்கு உடன்பட்டுக் காஞ்சி நகரை அடைந்தார். தொண்டைமான் ஒளவையாரை அன்புடன் வரவேற்றான்; அறுசுவை உண்டியை அன்போடு அளித்தான். ஒளவையார் தூதராக மட்டுமன்றி நல்லிசைப்புலவராயும் விளங்கினமையால், தொண்டைமான் அவரிடத்துப் பேரன்பு கொண்டான். அவன் அம்மையாரை அழைத்துச் சென்று, அரண்மனைக் காட்சியைக் காட்டினன்; பின்னர், தனது படை வலியை அம்மையாருக்கு உணர்த்த விரும்பி, அவரைப் படைக்கலக் கொட்டிலுக்கழைத்துச் சென்றான் ஆண்டு நிரை நிரையாகப் பலவகைப் போர்க்கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. அவை, வெகு சாக்கிரதையாகவே பாதுகாக்கப்பட்டு வந்தன. தொண்டைமான் தன்னிடத்தே படை வலி அதிகம் இருப்பதாக எண்ணி மமதை கொண்டுள்ளான் என்பதை உணர்ந்த அம்மையார், அவனது செருக்கை அடக்க விரும்பினர். ஆதலின், அவர் அவனை நோக்கி, “வேந்தே, இக்கொட்டிலிலுள்ள ஆயுதங்கள், போர்த் தொழில் இன்மையால் பீலியணிப்பட்டு மாலை சூட்டப்பட்டுத் திரண்ட வலிய காம்பு அழகுறச் செய்யப்பட்டு நெய் பூசப்பட்டுக் காவலையுடைய இவ்வரண்மனைக்கண் உள்ளன. செல்வம் உண்டாயின் உணவு கொடுத்தும், இல்லையாயின் தனக்கு உள்ள தனைப் பலரோடுங் கூடவுண்டுங் காலங் கழிக்கும் வறியோரது சுற்றத் தலைவனாகிய தலைமையுடைய எம் வேந்தன் அதியமானுடைய கூரிய ஆயுதங்கள் போரில் பகைவரைக் குத்துலால் கங்கும் நுனியும் முறிந்து, கொல்லன் வேலை செய்யும் கொட்டிலிலே உள்ளன.” என்ற கருத்தையமைத்துப் பாடினர். அப்பாட்டில் அவர், அயனை இகழ்ந்தது போலப் புகழ்ந்ததும், தொண்டைமானைப் புகழ்ந்தது போல இகழ்ந்ததும், குறிப்பால் அஞ்சியினது வீரம் தொண்டைமானது வீரத்தைவிடச் சிறந்தது என்பதைத் தெரிவித்ததும் நோக்கற்பாலன. இவற்றால், அம்மையாரின் சமயோசித அறிவும், தளராமனமும், தைரியமும், அவர் அஞ்சியினிடத்துக் கொண்டிருந்த கரை கடந்த அன்பும் புலப்படுகின்றன. ஒளவையார் உரைத்தவை கேட்டனன் தொண்டைமான். அவன் அவரை நோக்கி, “ஒளி தங்கிய நுதலினையுடைய விறலி, என்னோடு போர் செய்ய வல்லவர் உளரோ நுமது பெரிய இடமகன்ற நாட்டின்கண்?” என்று வினவினன். அது கேட்ட ஒளவையார், “அரசே, நீ போர் செய்யக் கருதுவையாயின், எமது நாட்டின் கண்ணே அடிக்குங்கோலுக்கு அஞ்சாது எதிர் மண்டும் பாம்பு போன்ற இளைய வீரரும் உளர்; அவரே யன்றி, காற்றடித்தால் மன்றின்கண் தூங்கும் பிணிப்பப் பொருந்திய முழவினின்று எழும் ஓசையைக் கெட்ட மாத்திரத்தே, அது போர்ப்பறை என்று எண்ணி மகிழும் என்னுடைய தலைவன் அதியமான் நெடுமானஞ்சியும் உளன்.” என்று பெருமிதத்தோடு கூறினர். பின்னர், அம்மையார் அவனிடம் விடை பெற்றுத் தகடூரை அடைந்தார்; காஞ்சியில் நடந்த செய்தியை அஞ்சிக்குத் தெளிவுற எடுத்துக் கூறி இருந்தார். 6. கோவலூர்ப் போர் மேற்கூறிய செய்தி நிகழ்ந்த சிறிது காலத்துக்குப் பின்னர், திருக்கோவலூரை ஆண்டு வந்தமலையமான் திருமுடிக்காரி என்பான் பல சிற்றரசர்களைப் போரில் வென்று, தன்னை வெல்ல வல்லார் ஒருவரும் இலர் என்று மமதை கொண்டிருந்தான். அதனை உணர்ந்தான் நெடுமானஞ்சி; அவனது செருக்கை அடக்கவும் தனது புகழைப் பரப்பவும் விருப்பங் கொண்டான்; நால்வகைப் படைகளையும் திரட்டினான்; திரட்டி, இரைவேட்ட பெரும்புரிபோலப் பகைவர்மீது போர் செய்யச் சென்றான்; திருக்கோவலூர் மதிலை வளைத்தான்; அந்நெடுமானஞ்சி தனது மதிற்புறத்தே போர்செய்ய வந்துள்ளான் என்பதை உணர்ந்தான் காரி. உணர்ந்ததும், அவன் வெந்தறுதண் வெகுளியினால் வெய்துயிர்த்தான்; “ஆ, ஆ! இந்த அஞ்சிக்கும் இவனது தண்டினுக்கும் எளியேனோ யான்!” என்று வெகுண்டு கூறி, தடம் புயங்கள் குலுங்க நக்கான்; பின்னும், “நன்று நன்று! “முழைக்கணிள வாளரி முகத்தெளி தெனக்களிறு முட்டியெதிர் கிட்டி வருமோ? வெகு நன்று! எனது வலியை முற்றும் உணர்ந்தும், இந்த அஞ்சி யென்பவன் யாதும் அறியாத பிறர் போல என்னை எதிர்க்க வந்தது வியக்கத் தக்கதே! என்னை நினைப்பளவில் வெல்லல் எளிதென்று எண்ணினன் போலும்!” என்று கூறித்தனது சேனைத் தலைவனை நோக்கி, “வேழம், தேர், பரவி, வெம்படைஞர் என்றினைய நம் படையொடு விரைந்து சென்று அஞ்சியை அஞ்சாது எதிர்த்துச் சமர் தொடங்குக,” என்று கூறினன். பின்னர், தானும் போர்க்கோலங் கொண்டு, தன் புரவி மீதிவர்ந்து சென்று, கடும்போர் புரிந்தான். அஞ்சியும் தனது தோள் வலியையும் வாள் வலியையும் காட்டினன். பகைவர் சேனையாகிய ஆழ்ந்த கடலிலே அஞ்சி யென்னும் மரக்கலம் ஓடிற்று. அஞ்சி பகை வீரர்களை வீழ்த்துருட்டினான்; யானைகளையும் தேர்களையும் அடையப் பிடித்தடித்துச் சேனையைச் சின்னபின்னமாக்கினான்; தேர் மேலும், மா மேலும், வெண்கோட்டுக் கார் மேலும், காலாட்கள் மேலும், அம்புகளைக் கண்டு விலகியோடாத வீரர் மேலும் வெஞ்சரங்களை அஞ்சாது பொழிந்தான். அஞ்சியின் போர்த் திறத்தைக் கண்டு காரி பெருவியப் பெய்தினன். அவனது படைநிலை கலங்கியது, வீரர் மனங் கலங்கினர். இக்காட்சியினைக் கண்ட ஒளவையார் ஒருபுறம் மகிழ்ச்சியும் ஒரு புறம் துக்கமும் அடைந்தார்; அஞ்சியது போர்த் திறத்தைக் கண்டு களித்தார். அஞ்சியோடு வீணே போர் செய்து தன் படையை நாசமாக்கும் காரியினது அறியாமைக்குப் பெரிதும் மனம் வருந்தினார்; அஞ்சியது ஆற்றலை அவனுக்கு எடுத்துக் கூறிப் போரை யொழித்து அஞ்சிக்கு அடங்கிப் போமாறு கூற விரும்பினார். அவர் காரியையும் அவன் படையையும் நோக்கி, “எம் வேந்தன் போர் செய்தற்குப் புடை பெயர்ந்து உலாவி, விரும்பி உறை கழித்த வாட்கள், பகைத்தாரது உடலின் தசையின் கண்ணே முழுகிப் பதிந்து வடுப்பட்டு வடிவிழந்தன. அவன் வேல்கள், குறும்பர் சேர்ந்த அரண்களை வென்று, அப்பகைவரது நறிய மதுவையுடைய நாட்டை அழித்தலாற் சுரையோடு பொருந்திய கரிய காம்புடனே ஆணி கழன்று நிலை கெட்டன. அவன் களிறுகள் கணையமரத்தால் தடுக்கப்பட்ட கதவைப் பொறாது பகைவரது அரணை அழித்தலால், பெரிய தந்தங்களிற் கட்டிய பூண்கள் கழலப்பெற்றன. அவன் பரிகள், பரந்து வந்து போர் செய்த வீரரது பொன்னாற் செய்யப்பட்ட பசிய மாலையையுடைய மார்பு உருவழியும்படி ஓடி உழக்குதலால் இரத்தக் கறைபட்ட குளம்புகளை உடையவாயின. அஞ்சியோ, நிலவுலகத்தைத் தன்னுள்ளே அடக்கும் கடல் போன்ற படையை உடையவன்; பொன்னால் இயன்ற தும்பைக் கண்ணியையுடையவன்; கழல் வடிவாகவும், கிண்ணி வடிவாகவும் செய்து செறித்த கணைகள் துளைத்த கேடயத்தை உடையவன். போர்க்களத்தில் அவனால் வெகுளப்பட்டோர் பிழைத்தல் எங்கேயுளது! நெல் வளம் மிகுந்த உங்களுடைய ஊர்கள் உங்கட்கு உரியனவாக வேண்டுமென்று உன்னுவீர்களாயின், அவனுக்கு நீங்கள் திறை கொடுக்க வேண்டும். அவ்வாறு திறை கொடுக்க மறுப்பீர்களாயின், அதற்கு அவன் உடன்படுபவன் அல்லன். அவனது வீரத்தை யான் எடுத்துக் கூறியும் நீங்கள் தெளியீர்களாயின், நீங்கள் உங்கள் உரிமை மகளிரது தோளைப் பிரிந்துறைதல் வியப்பன்று ஆதலின், அதனை யோசித்துப் போர் செய்யுங்கள்! இன்னும் வேண்டுமாயினும், எங்கள் மாபெரு வேந்தனாகிய அஞ்சியின் ஆற்றலை அறைகுவன்; கேண்மின்: ஒரே நாளில் எட்டுத் தேரைச் செய்யும் தச்சன், ஒரு மாதம் பலருடன் கூடிக் கருதிச் செய்யப்பட்டதொரு தேர்க்காலை யொப்பன் எங்கள் மன்னன்,” என்று இவ்வாறாக அஞ்சியின் தனிப்பட்ட ஆற்றலையும், அவன் படை வலியையும் தெளிவுறப் பகைவர்க்கு எடுத்துக் கூறினர். அம்மையார் இத்துணை எடுத்துரைத்தும், காரி போர் செய்தலில் பெருவிருப்பங் கொண்டவனாதலின், போரை நிறுத்தாது பொருதான்; மிகைபடக் கூறி என்? காரியின் படை அழிந்தது. காரியும் அஞ்சிக்கு அஞ்சி யோடினான். கோவலூர், அஞ்சா நெஞ்சம் படைத்த அஞ்சியின் ஆட்சிக்குட்பட்டது. அவனது போர்த் திறத்தைக் கண்ணுற்ற பரணர் என்னும் பெரும் புலவர் அவனைப் பலவாறு புகழ்ந்து போற்றினர். அம்மையாரும் அகமகிழ்ந்து அஞ்சியை நோக்கி, “உன்னுடைய முன்னோர் தேவர்களைப் போற்றி வழிபட்டனர்; அத்தேவர் களுக்கு வேள்விக்கண் ஆவுதியை அருத்தினர். அவற்றால், அவர்கள் பெறுதற்கரிய கரும்பை விண்ணுலகினின்றும் மண்ணுலகிற்குக் கொணர்ந்தார்கள்; கடலுக்குட்பட்ட இவ்வுலகின்கண்ணே ஆஞ்ஞா சக்கரத்தை நடாத்தினார்கள். நீயோ, பொன்னாற் செய்யப்பட்ட வீரக் கழல் புனைந்த காலினையுடையை; பெரிய பனம்பூ மாலையை யணிந்துள்ளாய்; பூ நிறைந்த காவினையுடையை; ஈரம் புலராத புலாலையுடைய நெடிய வேலினையுடையை; பிற வேந்தரது கொடி முதலிய அடையாளங்களைப் பெற்றுள்ளாய்; நாடு தலையுடைய ஒருநாளும் நீங்காத அரசவுரிமையைத் தப்பின்றாகப் பெற்றுள்ளனை; இவற்றுடன் அமையாது, புதிய போரை விரும்பி ஏழு அரசரோடு பகைத்து, அவருடன் போர் செய்து வெற்றி பெற்றாய்; அவ்வாறு வெற்றி பெற்ற அந்த நாளினும், பாடும் புலவர்க்குப் பாட முடியாத அடங்காப் புகழையுடைய வனானாய்; நீ மாறுபாடு மிக்க கோவலூரை அழித்த இற்றை நாளும் நினது வலி மிக்க தோளைப் பரணன் தன் புலமைப் பெருவலியாற் பாடினன்;” என்று கூறி, புலவராலும் பாடிப் புகழ முடியாத அஞ்சியது ஆற்றலையும், பகை வென்ற திறத்தையும், பரணரது கவி பாடும் ஆற்றலையும் ஒருங்கே வைத்துப் புகழ்ந்துரைத்தார். இவ்வாறு அஞ்சி கோவலூரை வென்று, தனது அரசாட்சிக்குட்படுத்திய பின்னர், ஒளவையாருடன் மீண்டு, தனது அரசிருக்கையான தகடூரை அடைந்தான். 7. புத்திரப் பேறு அரசனுக்கு இருக்கவேண்டிய அருங்குணங்கள் அனைத் தினையும் பெற்ற அண்ணலாகிய அஞ்சி, புத்திரப் பேறின்றிப் பெரிதும் வருந்தினன். குடும்பம் என்னும் மரத்திற்குக் குழந்தை கொழுங்கனியன்றோ? எத்துணைத் துன்பங்கள் இருப்பினும், குழந்தையைக் கண்ட அளவில் அவை வெயிலவனைக் கண்ட பனிபோல நீங்குகின்றன. இல் வாழ்வானுக்கு இம்மைச் செல்வங்களிற் சிறந்தது மக்கட்பேறொன்றே. அப்பேற்றினைப் பெற்றவன் இம்மை மறுமை இன்பங்களைப் பெறுகின்றான். இத்தகைய இன்பம் உயிர்கட்கெல்லாம் ஒரு தன்மையாகவே அமைந்திருக்கிறது. “பெருமவற்றுள் யாமறிவ தில்லை; அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற” -திருக்குறள் என்ற நாயனார் வாக்குச் சிந்திக்கற்பாலது. குழந்தையில்லா மனை பாழிடமே யாகும். குழந்தைகளின் சிறிய கைகளால் துழவப்படும் சோறானது, சுவையில் தேவாமிருதத்தைவிட மிகவும் இனிமையைப் பயப்பதாகும். தாய் தந்தையர் தம் குழந்தைகளுடைய மெய்யைத் தீண்டுதலால் உடற்கின்பம் பெறுகின்றனர்; அவர்களுடைய மழலைச் சொற்களைக் கேட்பதால் செவிக்கின்பம் பெறுகின்றனர். இவ்வாறாய புதல்வர்கள் இல்லா மனை, குபேர சம்பத்துடன் இருப்பினும், குட்டிச்சுவரேயாம். துறவிகளும் மக்கள்மேல் உள்ள காதலைத் துறக்க வல்லாரல்லர்; எனின், அக்குழந்தைகளைப் பெறுதலால் உண்டாகும் இன்பத்தைச் சொல்லவும் வேண்டுமா? “ படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக் குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, இட்டும், தொட்டும், கல்வியும், துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும், மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத் தாம்வாழும் நாளே” -புறநானூறு “ பண்ணிலாப் பாடல் போலும், பரிவிலா நட்புப்போலும், உண்ணிலா நெய்யி லாமல் உண்டிடும் அடிசில் போலும், பெண்ணிலா இல்லம் போலும், பெயரிலா வாழ்க்கை போலும், கண்ணிலா வதனம் போலும் கான்முளை யில்லா இல்லம்,” -மாயூரத்தல புராணம் இவ்வாறு மக்கட்பேறு மிகச் சிறந்ததாக விருக்க, இப்பேற்றினை நெடுங்காலம் பெற்றானில்லை அதியமான். ஆனால், ஒளவையார் அவனை வந்து அண்டிய பின்னர், அவனது மனைவி கருவுற்றாள். அவள் சூல் கொண்டிருக்கையில், அஞ்சி கோவலூரை எதிர்த்தான். வென்றி கொண்டு வேந்தன் மீண்டும் தகடூரை அடைந்தபோது அரசி ஆண் குழந்தை யொன்றினைப் பெற்றிருந்தாள். அந்நற்செய்தியைக் கேட்டான் வேந்தன்; நகரில் நுழைந்தவுடன் போர்க் கோலத்துடனே ஒளவையாரோடு அந்தப்புரஞ் சென்றான்; சென்று, பிறந்திருந்த ஆண் குழந்தையை கண்டான்; உள்ளத்தில் ஒருவராலும் கரை செய்ய அரியதொரு பேருவகை கடல் போலப் பொங்க, அகமலர முகமலர்ந்தான். வேந்தன் ஏவலரை நோக்கி, “சிற்றசர் பன்னிரண்டாண்டு கப்பங் கட்டாதொழிக; எங்கும் இரு நிதியை வாரி வாரி யாசகர்க்குக் கொடுங்கள்; ஆலயங்களில் விழாக்கள் நடை பெறுக,” என்று கூறி, மீண்டும் தன் மகவைப் புத்திர வாற்சல்யம் மிக்கவனாய் ஆர்வத்தோடு நோக்கினான். குழந்தை வெகு அழகாக இருந்தது. ஒளவையார் அக்காட்சியினைக் கண்டு களித்தார். அவர் செந்தமிழ்ச்சுவை தங்கிய தமது வாயைத்திறந்து, “கையின்கண் உள்ளது வேலே; காலின்கண் உள்ளது போர்க் கோலங் கொண்ட போது அணிந்த வீரக்கழல்; உடம்பில் உள்ளது வேர்ப்பு; கழுத்தில் உள்ளது ஈரம் புலராத பசிய புண்; பனந்தோட்டையும் வெட்சி மலரையும் வேங்கைப் பூவுடனே கலந்து தொடுத்து உச்சியில் சூடிப் பகைவரை வெகுண்டு பார்த்த இவன் கண், தவப்புதல்வனைக் கண்டும் சிவப்பு நீங்கினதில்லை; ஆதலால், இவனைச் சினப்பித்தார்கள் பிழைப்ப துண்டோ!” என வியந்து கூறி, மகிழ்ச்சியடைந்தார். குழந்தை பிறந்த செய்தி நகரமெங்கும் பரவியது. அந்நகரவாசிகள் அதனைக்கேட்ட மாத்திரத்தில் தங்களுக்கே தனயன் பிறந்தாற் போலப் பெரு மகிழ்ச்சி யடைந்தார்கள். அன்று முழுவதும் யாவரும் களிப்பென்னும் கடலில் ஆழ்ந்தனர்; “நம் அரசன் நீடு வாழ்க! அவனது தோன்றலும் நீண்ட ஆயுளைப்பெற்று விளங்குக!” என்று வாயார வாழ்த்தினார்கள். அமைச்சர் கற்கண்டும் கனிகளும் கலந்து நகரத்தார்க்கு வழங்கினர். அன்று நல்ல முகூர்த்தத்தில் அறிவோர் குழந்தைக்குப் பொகுட்டெமினி என்ற நற்பெயரை இட்டனர். அரசனும் அடங்கா மகிழ்வு கொண்டான். 8. மா பெரும் போர் அஞ்சிக்கு அஞ்சிப் புறங்கொடுத்து ஓடிய காரி என்பவன், தன் நண்பன் சேரமான் பெருஞ் சேரலிரும் பொறை என்பானோடு சேர்ந்து, ஒரு பெரிய சேனையுடன் அஞ்சியை எதிர்க்கத் துணிந்தான். அவ்வமயம் சேரமான் கொல்லி மலை நாட்டை ஆண்டு வந்த ஓரி என்பானை முதலில் வெல்ல நினைத்தான். அதனை உணர்ந்த ஓரி, தன் நண்பனான அஞ்சியைத் தனக்கு உதவிபுரிய வேண்டினன். அஞ்சியும் அதற்கு உடன்பட்டு, சோழ பாண்டிய மன்னரையும் உடனழைத்துச் சென்று, சேரமானைத் தாக்கினன்; கொடும்போர் நிகழ்ந்தது. முடியுடை மூவேந்தரும் மூன்று குறுநில மன்னரும் அப்போரில் ஈடுபட்டிருந்தால், சாதாரணப் போராயிராது, அது மாபெரும் போராகவே இருந்தது. முடிவில் சேரமான் அஞ்சியையும் இருபெரு வேந்தரையும் ஒருங்கே வென்றான். சோழ பாண்டியர் தத்தம் நாடு நோக்கி ஓடலாயினர். அஞ்சி, சேரமானுக்கு அஞ்சித் தகடூர் கோட்டைக்குள் புகுந்து கொண்டான். சேரமானும் அவனை விடாது பின்பற்றிச் சென்று, தகடூரை முற்றுகையிட்டhன். அஞ்சாத நெஞ்சம் படைத்த அஞ்சி எக்காரணத்தாலோ சேரமானை எதிர்க்கத் தயங்கினன். அதுகண்ட ஒளவையார் அவனுக்குப் போரில் உற்சாகம் உண்டாக்க எண்ணினார். அவர் அவனை நோக்கி, “வேந்தே, மலைச்சாரலில் உறையும் வலிமை யுள்ள புலி சீறின், எதிர்த்து நிற்கவல்ல மானினம் உளவோ? ஞாயிறு கொதித்து எழுந்தால், மயங்கிவானிடத்தும் திசையின் கண்ணும் செறிந்த இருள் உண்டோ? பாரத்தின் மிகுதியால் நிலத்திற் பதிந்த சகடத்தின் ஆழ்ச்சியைப் போக்க மணற் பரக்கவுங் கற்பிளக்கவும் நடக்க வல்ல மனச்செருக் குடைய கடாவிற்குச் செல்லற்கரிய துறையும் உண்டோ? அவைபோல, நீ அமர்க்களம் புகுந்தால், இம்மண்ணுலகில் உனது நாட்டைக் கைப்பற்றி ஆரவாரிக்கும் வீரரும் உளரோ?” என்று கூறினர். அம்மையாரின் மொழியை வேத வாக்கிய மென்று கருதும் மனப்பான்மையுடைய அஞ்சி, அவர் உரைத்தவை கேட்டு, மனத் தெளிவும் உற்சாகமும் கொண்டு, போருக் கெழுந்தான்; பகைவரின் சேனையைச் சின்னபின்னப் படுத்தினான். சேரமானது குதிரைவீரர்களிற் பலர் உயிர் தப்பினாற் போதுமென்று ஓட்டம் பிடித்தனர். அஞ்சியின் சேனையும் சேரமானால் அலைக்கழிக்கப் பட்டது. அஞ்சி, சிறிது நேரம் கடும் போர் புரிந்தான்; முடிவில் பகைவர் படைகளால் புண்பட்டான். தம் வேந்தர் பெருமான் போர்க்களத்தில் புண்பட்டு வருந்தி நிற்றலைக் கண்டார் ஒளவையார். அவர் முன் சென்று அவனை நோக்கி, “பெரிய தகைமையை உடையாய், நீ சீரிய புண்பட்ட படியால் உன்னால் பலர் மாண்டனர். திண்ணிய பிணிப்பையுடைய முரசம் இழுமென்னும் ஓசையுடையதாய் ஒலிக்க, மேற்சென்று போரை வெல்லுதல் இனி எங்கேயுளது?” என்று அவனது போர்த் திறத்தைக் கொண்டாடினர். அது கேட்ட அஞ்சி மகிழ்வெய்தி, பின்னும் போரை விரும்பியவனாய் எதிர்த்தான். அவ்வமயம் சேரமான் விடுத்தபடை யொன்று அஞ்சியின் மார்பிற் பாய்ந்தது. அந்தோ! இரவலர்க்கு வரம்பு மீறி அளித்து வந்தவனும், வீர லட்சுமி தங்கப் பெற்ற தோள்களை யுடையவனும், நற்குண நல்லொழுக்கம் வாய்ந்தவனும், ஒளவையாரது ஆருயிர் நண்பனுமான அதியமான் நெடுமானஞ்சி மண்ணுலக வாழ்வை நித்து விண்ணுலக வாழ்வை எய்தினான். 9. ஒளவையார் புலம்பல் அஞ்சி! இறந்து பட்டதைக் கண்ட ஒளவையார் ஆற்றொணாத் துயர் அடைந்தார்; அவனது அரும் பெருங்குணங்களைக் கூறிப் புலம்பினார். “எம் வேந்தன் சிறிது மதுவைப் பெறினும், எங்கட்குக் கொடாது உண்ணான்; இப்போது அவ்வாறு எங்கட்குக் கொடுப்பது கழிந்ததே! பெரிய அளவினையுடைய மதுவைப் பெறின், அதனை எங்களுக்குக் கொடுப்பான்; யாங்கள் உண்ட பின்னர் எஞ்சியதையே அஞ்சி நுகர்வான்; அது கழிந்ததே! சோறு சிற்றளவினை உடையதாயினும், பல கலந்களில் வைத்துப் பலரோடும் உண்பன்; அது கழிந்ததே! மிக்க அளவினையுடைய சோற்றின் கண்ணும் வெகு பேரோடு உண்பான்; அது கழிந்ததே! என்போடு கூடிய ஊன்றயடியுள்ள இடம் முழுவதும் யாங்கள் உண்டுகளிக்க எங்களுக்கு அளிப்பான்; அது கழிந்ததே! எங்களுக்கு மாலை சூட்டும்போது புலால் நாறும் எங்கள் தலையைத் தான் கொண்ட அன்பு பெருக மணநாறும் தனது கையால் தடவுவான்; அது கழிந்ததே! அஞ்சியது மார்பகத்தே தைத்த வேல் அவனது மார்பளவில் மாத்திரம் தைத்ததன்று அஃது அரிய தலைமையை உடைய பாணரது மண்டையின் துளையில் உருவியும், அவரால் காப்பாற்றப்படும் சுற்றத்தாரது விழிப்பாவையை மழுங்கச் செய்தும், அழகிய சொல்ல ஆராயும் நுண்ணிய ஆராய்ச்சியாளரது நாவின்கண் விழிந்தும் சென்றது. எமக்குப் பற்றாகிய எம் இறைவன் எங்குள்ளானோ! இனிப் பாடுவாரும் இல்லை; பாடுவோர்க்கு ஒன்று ஈவாரும் இல்லை. குளிர்ந்த நீர்த்துறையில் பூக்கும் பகன்றைப்பூ, பிறரால் சூடப்படாததுபோல் பிறர்க்கு ஒரு பொருளைக் கொடாமல் இறக்கும் உயிர்கள் மிகப் பல,” என்று கூறிப் புலம்பினர். பின்னும், அம்மையார் அவன் இறந்ததற்கு ஆற்றாது புலம்புபவராய், “அஞ்சியின்றிக் கழிகின்றகாலையும் மாலையும் இனி இல்லாது போகக் கடவன; யான் உயிர் வாழும் நாளும் எனக்கு இனிப் பயன்படர்மையால், அஃது இல்லாதொழி யட்டும்;” என்று கூறிப் புலம்பினார். பின்னர், அதியமானது உடல் எரிக்கப்பட்டது, அவ்வமயம் ஒளவையார், “ஈமத்தீ, எம் வேந்தனது பூத உடலைச் சிதைக்காமல் அவியினும் அவிக; அல்லாமல் சிதையும்படி ஓங்கி எரியினும், எரிக; ஆனால், கதிரவனுக்கு ஒப்பான அவன் புகழ் உடம்பு ஒரு காலத்தும் அழியாது” என்று அஞ்சியினது,” என்று அஞ்சியினது புகழை மேம்படுத்திக் கூறி வியந்தார். 10. பொகுட்டெழினி பட்டம் ஏற்றது ஒளவையார் முதலிய பெரியோர்கள் அஞ்சியது மகனான பொகுட்டெழினிக்கு முடிசூட்ட ஒரு நன்னாளைக் குறிப்பிட்டனர். குறித்த தினத்தில் தகடூரை நன்றாக அலங்கரித்தனர்; வீதிகளில் பூரண கும்பங்களும் பொற் பாலிகைகளும் பாவை விளக்குகளும் வைத்தார்கள்; குலைக் கமுகும், குலை வாழையும், கரும்பும், வஞ்சிக் கொடியும் பூங் கொடியும் ஆகிய இவற்றைக் கட்ட வேண்டிய இடங்களிற் கட்டினார்கள். தூண்களில் முத்து மாலைகளைக் கட்டினார்கள்; வீதிகளிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புது மணலைப் பரப்பினார்கள்; துகிற் கொடிகளை மாடங்களிலும் வாயில்களிலும் கட்டினர்கள்; தெய்வங்கள் உளையும் கோவில்களிற் செய்யவேண்டிய காரியங்களை ஏற்பச் செய்தார்கள். குறித்த நல்லோரையில் பெரியோர் பொகுட்டெழினியை மங்கல நீரால் ஆட்டினர்; அரசன் அணிய வேண்டிய ஆடையாபரணங்களை அணிவித்தனர்; பூமாலைகளைப் புனைந்தனர்; கலவைச் சாந்தங்களைப் பூசினர். இவ்வாறு அரச கோலத்தோடு விளங்கிய பொகுட்டெழினி அரச மண்டபத்தை அடைந்தான். பின்னர், செய்யவேண்டிய சடங்குகள் முறையே செய்யப்பட்டன. ஒளவையார் முதலிய பெரியோர் மணிகள் பதித்த முடியை எடுத்து வாழ்த்தி, பொகுட்டெழினியின் முடிமீது வைத்து ஆசீர்வதித்தனர். பல்லிசை வாத்தியங்கள் முழங்கின. நான்மறைக் கிழவர் ஆசி கூறினர். பொகுட்டெழினி செங்கோலைக் கையில் ஏந்தினன். அவ்வமயம் ஒளவையார், பொகுட்டெழினியால் குடிகள் சமாதானத்தையும் களிப்பையும் அடைவார்கள் என்ற கருத்தை வைத்து, அரசனை நோக்கி, “உயர்ந்தாய், நீ திங்களாகிய நாள் நிறைந்தமதியை ஒப்பை. ஆதலின், நின் நிழற் கண் வாழும் குடிகட்குத் துன்பமாகிய இருள் எவ்விடத்துள்ளது!” என்று அவனது நற்குண நற்செயல்களைக் குறிப்பாக வெளிப்படுத்திப் புகழ்ந்தார். பெரியோர் ஆசியாலும், இறைவன் இன்னருளாலும் பொகுட் டெழினி நற்குண நற்செயல்களையுடையவனாய் வறியோர்க்கு வழங்கிச் செங்கோல் மன்னனாய் அரசாண்டிருந்தான். IV. வள்ளல் குமணன் 1. குமணன் கொங்கு மண்டலம் என்பது தமிழ் நாட்டில் உள்ள மண்டலங் களில் ஒன்று. அது சேலம், கோயமுத்தூர், நீலகிரி ஜில்லாக்கள் சேர்ந்த நாடாகும். கோயமுத்தூரைச் சேர்ந்த உடுமலைப் பேட்டைத் தாலுகாவில் குதிரை மலை என்னும் ஒரு மலை உள்ளது. அதற்கருகில் குழுமம் என்னும் ஓர் ஊர் உளது. குதிரை மலை சுமார் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன்னர் முதிர மலை எனப் பெயர் பெற்றிருந்தது. குழுமம் என்னும் பதி, குழுமூர் என்ற பெயருடன் இருந்தது. குழுமூரும் அதனைச் சார்ந்துள்ள முதிர் மலையும் சில அரசரால் ஆளப்பட்டு வந்ததாகச் சங்கநூல்களால் தெரிகிறது. வருடங்கள் ஆக ஆக, ஊர்களின் பண்டைப் பெயர்கள் மாறுதல் இயல்பேயாதலால், முதிர மலை என்பது குதிரை மலை என்றும் குழுமூர் என்பது குழுமம் என்றும் வழங்கப்படுகின்றன என்பதில் ஐயம் ஒன்றுமில்லை. “அலங்குளைப் புரவு யைவரொடு சினைஇ நிலைந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது” -புறநானூறு கொடுத்த சேரமான்பெருஞ்சோற்றுஉதியன் சேரலாதன் இந்நாட்டை ஆண்டு வந்ததாகத் தெரிகிறது. “பல்லான் குன்றிற் படுநிழற் சேர்ந்த நல்லான் பரப்பிற் குழுமூர் ஆங்கண் கொடைக்கடன் என்ற கோடா நெஞ்சின் உதியன்” -அகநானூறு ஆண்டிருந்த நாட்டை, அவனுக்கு அனேக ஆண்டுகட்குப் பின்னர், இற்றைக்குச் சற்றேறக் குறைய ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்குமுன்னர், குமணன் என்னும் மன்னவன் ஆண்டு வந்தான். அம்மன்னன், வரையாது கொடுக்கும் வள்ளற்றன்மையிற் சிறந்தவனென்றே கூறுதல் அமையும்; தமிழருமையினையும் புலவர் பெருமையினையும் நன்குணர்ந்து பரிசில் நல்கும் பான்மை யுடையவன். 2. பெருஞ்சித்திரனார் புகழ் மணம் பெற்ற குமணன் கொங்கு நாட்டில் முதிர மலைநாட்டை ஆண்டு வருகையில், சோழ நாட்டில் பெருஞ்சித்திரனார் என்னும் பெயர் வாய்ந்த நல்லிசைப் புலவர் ஒருவர் இருந்தார். இயற்கையில் அன்னவர் இப்பெயர் பெற்றனரோ, அன்றி இது செயற்கையில்வந்த பெயரோ, அறியோம். உலகத்து இயற்கைப் பொருள்களைத் தன் கண் முதலான புலன் அறிவுகொண்டு பல திறப்பட்ட வண்ணங்கள் கலந்து தூரிகையால் படத்தில் பன்னாளும் வருந்தி ஓர் ஓவியத்தைத் தீட்டும் சித்திர காரியைப் போன்றுஉலகில் தோன்றும் மலை கடல் முதலிய பெருந்தோற்ற முதற்கொண்டு அணுவளவான சிறு தோற்றமீறாக உள்ள எல்லாவற்றையும், தமது மன அறிவைக் கருவியாகக் கொண்டு ஆராய்ந்து, உள்ளமாகிய படத்தில் தீட்டி, சமயம் வாய்த்தபோது அக்காட்சியிலே தோய்ந்து கிடந்த உணர்ச்சியை வடிவமாக்கி, நற்றமிழை நலமுறப் பயின்ற நாவால் பைந்தமிழ்ப்பாவாகப் பாடுவதில் மிக்க சமர்த்தரானது பற்றியே, இப்புலவர் பெருமானுக்கு இப்பெயர் வந்ததோ என எண்ண வேண்டி இருக்கின்றது. இவர், இளமைப் பருவத்திலேயே ஒரு நல்லாசிரியரை யடுத்து நலமுறப் பயின்றனர்; முருகு விரித்தொளிரும் தமிழ் மலரைத் தம் அகத்தே வைத்தனர்; சொற்சுவை பொருட்சுவையோடு கவிபாடும் பேராற்றல் பெற்றனர். இப்பெருமான் தம் முதிய தாயாருடனும் மனைவியாருடனும் வாழ்ந்துவந்தார். நாளடைவில் புலவர்க்குப் பல மக்கள் உண்டாயினர்கள். மக்கட் பேற்றினைப் பெற்ற புலவர் பொருட் பேற்றினைப் பெற்றரில்லை. இஃது உலக இயற்கையே அன்றோ? மலரவன், மலையிட்ட செல்வத்தார்க்கு மகிழ ஓர் மகவும் தாரான்; ஆனால், குடிக்கக் கூழ் இலார்க்குக் குறைவின்றி மக்களைத் தருவான். Òபுலவர் நாளடைவில் வறுமை நோயால் வாடத் தலைப்பட்டனர். கல்வியறிவு பெற்ற மக்கள் பொருள் இன்றி வாடலும், அது பெறாத மக்கள் பொருள் பெற்று வாழ்தலும் கண்கூடாகக் காண்கின்றோம். கல்விக்குத் தலைவி கலை மகள் ஆவள். பொருட்குத் தலைவி அலை மகள் ஆவள். கலை மகள் அலை மகட்கு மருகியாவாள். ஒரு குடும்பத்தில் மாமியும் மருகியும் ஒன்றுபட்டு வாழ்தல் அரிதன்றோ? அலை மகள் ஒருவனைப் பற்றியிருந்தால், அவனிடத்துக் கலை மகள் நெருங்குவதைக் காணோம். ஆனால், அரிதாக இவ்விரு மகளிரும் சிலரிடத்தே ஒன்றி வாழ்கின்றனர். மாமியும் மருகியும் மனம் ஒன்றுபட்டு வாழ்கின்றசில குடும்பங்களை நாமும் கண் கூடாகப் பார்க்கின்றோமன்றோ? இக்காரணத்தாலோ, அன்றி எக்காரணத்தாலோ, புலவரிடம் அலை மகள் அண்டவில்லை. புலவர் குழந்தைகள் பசியால் பெருந்துயர், உழந்தார்கள். சிறிதளவு சோற்றைக் சமைத்தால், அது பிள்ளைகட்கே போதுவதில்லை. இங்ஙனம் பிள்ளைகள் படும் பாட்டைக் கண்டு சகியாத புலவர் மனைவியார், தம் கணவரைத் தம் நீர் விழியால் நோக்கப் புலவர் வானத்தை நோக்குவார். ஒரு நாள் புலவர் பெருந்தகை ஓர் இடத்தமர்ந்து சிந்திக்கலானார்: “என்னே நமது ஊழ்வினைப் பயன் இருந்தவாறு! நாம் யாரிடம் சென்று பொருள் கேட்பது? உலகில் செல்வராயினோர் பலர் உளர் என்றாலும், அவர் யாவரும் அறிவுடைச் செல்வராகாரே! அறிவுடை மக்களிடத்தே சென்றாலன்றோ அவர் நமது பெருமையையும் வறுமையையும் நன்கு உணர்ந்து பரிசில் நல்குவர்? புல்லறிவாளர் செல்வரேயாயினும், அவரிடம் செல்வதால் நாம் பெறும் பயன் என்? “செல்வம்வந் துற்ற காலைத் தெய்வமுஞ் சிறிது பேணார் சொல்வனவறிந்து சொல்லார்சுற்றமுந் துணையு நோக்கார் வெல்வதே நினைவ தல்லால் வெம்பகை வலிதென் றெண்ணார் வல்லினை விலைவுமோரார் மண்ணின்மேல் வாழுமாந்தர்” -வில்லி பாரதம் “திருவளர்க்கும் தீந்தமிழாகிய தேனினும் இனிய பாக்களைத் தமிழின் அருமையும் புலவரது பெருமையும் கணித்தறிய வல்ல பேராற்றல்வாய்ந்த வள்ளல்களிடத்தன்றோ பாட வேண்டும்? அவர்களிடம் சென்றால் நம்மைப் பிணித்து வருத்தும் வறுமையும் நீங்கும். அவ்வாறு செல்வோம் என்றாலும், கொடையிற் சிறந்த வள்ளல்கள் இல்லையே! என் செய்வோம்? ஆ! நல்லயோசன! தற்போது யாவரும் சிறப்பித்துக் கூறும் தகடூர் மன்னன் அதிகமான் நெடுமானஞ்சியிடம் செல்வோம். அவனே நமது வறுமையை அகற்றும் பெருமைவாய்ந்தவன்,’’ என்று துணிவு கொண்டு, பல நாட்களாக நடந்து வருந்தி, முடிவில் புலவர் தகடூரை அடைந்தார். எக்காரணத்தாலோ, நெடுமானஞ்சி புலவரைக் கண்டு வரவேற்கவில்லை; ஒரு நாள் தன் ஏவலர் மூலமாகப் புலவர்க்குப் பரிசில் அனுப்பினன். புலவர் அதனைப் பெற மறுத்து, முனிவுடன் அவ்வூரை விட்டு அகன்றார். அகன்றவர், கொங்கு நாட்டில் உள்ள குமணன் வள்ளற்றன்மையிற் சிறந்தவன் என்பதைக் கேள்வியுற்று, குழுமூரை அடைந்தார். 3. புலவரும் குமணனும் குமண மன்னவன் பெருஞ்சித்திரனாரை முகமன் கூறி வரவேற்றான். குமணனது எளிய தன்மையையும் புலவரை உபசரிக்கும் புனித விதத்தையுங்கண்ட பெருஞ்சித்திரனார், உள்ளத்தில் ஒருவராலும் கரை செய்ய அரியதொரு பேருவகை கடல்போலப் பொங்க, குமணனை நோக்கி, “மன்னவனே, என்னைய இரவலர்க்குத் தாய் வீடு போன்ற நினதுமுதிர மலையும், தாயை யொப்ப அன்பினைச் செலுத்தும் காருண்ய வள்ளலான நீயும் இருக்க எங்கட்கென்ன குறை! நீ சுகமே வாழக் கடவாய்! ” என்று புகழ்ந்து ஆசீர்வதித்தார். பின்னர், குமணன் புலவர்க்கு அறுசுவை உண்டி அன்புடனளித்தான்; புலவரது பைந்தமிழ்ப் வியந்து, அவருக்குப் பரிசில் தரின் தன்னைவிட்டு கண்டு வியந்து, அவருக்குப் பரிசில் தரின் தன்னைவிட்டு நீங்குவரென நினைத்துப் பல நாள் பரிசில் நல்காதிருந்தான். புலவரோ, தாம் குமணனது மாளிகையில் சுகமாயிருக்க, தம் தாயாரும் மனைவி மக்களும் எப்பாடு படுகின்றார்களோ என்ற ஏக்கமே பெரிதுங்கொண்டார். ஆதலால், விரைந்து ஊர்செல்ல விரும்பங் கொண்ட புலவர், தமது, உள்ளக் கருத்தைக் குமணனுக்குக் குறிப்பாகத் தெரிவிக்க நினைத்தார். அவர் குமணனை நோக்கி, “முரசு அறையவும் வெள்ளிய சங்கு முழுங்கவும் வேந்தரோடு போர் செய்தவனும், நெடிய மலைக்கண் ஒலிக்கும் வெள்ளிய அருவிகல்லை உருட்டியோடும் பறம்புநாட்டிற்கு வேந்தனும் ஆன வேள் பாரி மாண்டனன். உயர்ந்த உச்சியையுடைய கொல்லி மலைக்குத் தலைவனான வேள் ஓரி உயிர் நீத்தனன். காரி என்னும் பெயருடைய குதிரையைச் செலுத்திப் பெரிய போரை வென்றவனும் மாரி போலும் வன்மையையும் மிக்க போரினையும் உடையவனும் ஆன மலையன் மண்ணுலக வாழ்வை விட்டான். செலுத்தப்படாத உயர்ந்தகுதிரை யென்னும் மலையையும், கூரிய வேலையும், கூவிளங்கண்ணியையும், வளைந்த ஆரத்தையும் உடைய எழினி விண்ணுலகிற் கெழிந்தனன். மிக்க குளிர்ந்த மலையின்கண் இருள் செறிந்த பெரிய முழையினையும் மலைதற்கு அரிய வலியினையும் பெற்ற பெரிய மலை நாடனான பேகன் வானவர் உலகிற் புக்கனன். திருந்திய சொல்லையுடைய மோசியாரால் பாடப்பெற்ற வேள் ஆய் அண்டினன் ஆண்டவன் தாளை. ஆசையுற்றுத் தன்னை நினைத்து வருவோரது வறுமையைப் போக்க வல்ல ஈகையையுடைய நள்ளி என்பான் பூதவுடம்பை நீத்துப் புகழுடம்பெய்தினன். “இவ்வாறாக வள்ளல்கள் இறந்து பட்டார்கள். அவர்கட்குப் பின்னர், கண்டார்க்கு இரக்கம் வரப்பாடிவரும் புலவருக்கும் பரிசில் நல்க யான் ஒருவன் உளன் என்பதாக நீ யிருப்பதால், நின்பால் பரிசில் பெற வந்தேன். குமண, உனது மலையின் வானளாவிய மூங்கில்கள் அதிகமாக உண்டு; சுரபுன்னை மரங்களும் அதிகம்; அவற்றுடன் பல மரங்களும் ஓங்கிவளர்கின்றன. குரங்குகள் நினது மலையில் அதிகமாக வாழ்கின்றன. நின் மலையில் உள்ள பலாப் பழத்தைப்பறித்த கடுவன், பஞ்சுபோன்ற மயிரையுடைய தலையைப் பெற்ற மந்திiயக் கையாற் குறி செய்து அழைக்கும் பான்மையுடையது. நீ புது வருவாய் இடையறாது வரும் நல்ல நாட்டினையும் பெற்றுள்ளாய். முதிர மலைக்குத் தலைவ, உலக முழுவதும் விளங்குகின்ற புகழினையும், அழகுடன் அமைக்கப்பெற்ற தேரினையும் உடைய வள்ளால், நீ எடுத்த வேல்புகழ் மேம்பட்ட வண்மையுடனே பகைவரிடத்து உயர்க,” என்று கூறினர். Òபுலவர் மீண்டும் குமணனை நோக்கி, “கூர்வேலேந்திய குமண, வெற்றிப் புகழ் கொண்டவசையில்லாத சிறந்த குடியிற் பிறந்து இசையுடன் விளங்கும் ஏந்தலே, நின்னைப் பாடிய யான், நீ களிப்பின்றிக் கொம்புகளையுடைய களிற்றைத் தரினும் வேண்டேன்; நீ மனம் உவந்து சிறிது பொருளைத் தரினும் அதைப் பெரிதாக எண்ணி மகிழ்வேன். என் தாயாரும் மனைவி மக்களும் படும் துன்பத்தைச் சற்றே கூறுவேன்; கேட்பாயாக: என் அன்னையார் பெரிதும் வயது முதிர்ந்தவராதலால், இன்னும் தம்முயிர் போகவில்லை என்று சொல்லிக்கொண்டு, வாழும் நாட்களோடு பலவாறு வெறுத்துத் தாம் பிடித்த ஊன்றுகோலையே காலாகக் கொண்டு, நடக்கவும் சத்தியற்று, நரை மயிர் உடையவராயும் கண்கெட்டவராயும் உணவில்லாத வராயும் வருந்திக்கொண்டிருக்கிறார். என் மனைவியோ, பசந்தமேனி உடையவள்; வறுமையால் பெரிதும் மெலிந்துள்ளாளாதலால், பால் அற்ற தனங்களையுடையவள்; மேலும் குழந்தைகள் வறுவிய அத்தனங்களை மெல்லதால் வலி பொறுக்க மாட்டாது வருந்துகின்றாள். உணவிற்கு வழியின்றி, குப்பையில் தானாக முளைத்த கீரையினது முன்பு கொய்யப்பட்ட கண்ணிலே கிளைத்த முதிராத தளிரைப் பறித்து உப்பின்றியே நீரை உலையாகக்கொண்டு அடுப்பில் ஏற்றிக் காய்ச்சி மோர் இல்லாமலும் சோறு இல்லாமலும் வெறுங்கீரையையே உண்டு உயிர் வாழ்கின்றாள் மாசு படிந்த கிழிபட்ட கந்தை உடுத்தியுள்ளாள். இத்தகைய நிலையில் உள்ள அவளும், குழந்தைகளும், என் அன்னையாரும், எனது சுற்றமும் மனம் மகிழ்ந்து நின்னை வாழ்த்தும்படி எனக்கு நீ மனம் உவந்து பரிசில் தந்து அனுப்புவையாயின், நன்று, நீ மன மகிழ்ந்து தரும் பரிசிலையே யான் விரும்பிகின்றேன்,” என்று கன்னெஞ்சமும் கரையும்படி வெகு அழகாகத் தம் வறுமையை வர்ணித்தார். பின்னரும், அப்புலர் கோமான் வள்ளைலை நோக்கி, ‘கதிரவன் வெப்பத்தால் கரிந்த புல்லையுடைய காடு தளிர்க்கும்படி மழைத் துளியைப் பொழிந்தாற்போல, புலவர்களது பசியால் வாடும் உடம்பும் குடரும் குளிரும்படி, பொன் வட்டில்களில் தாளிப்பையுடைய கொழுவிய துவையலுடன் நறுநெய் யடிசிலை யிட்டு ஊட்டி, ‘புலவர்கள் கேடின்றி வாழ்வார்களாக,’ என்று வாழ்த்தி, அவர்கள் மனம் மகிழும்படி, பொன் அணிகளை ஓம்பாது கொடுத்துத் தன் நண்பரிடத்துச் செய்யும் அன்பினும் பன்மடங்கு அதிகமான அன்பினை எங்கள்பால் செலுத்துகின்றான் முதிரமலைத் தலைவனாய குமண வள்ளல்,’ என்று பலரும் சொல்ல, அது கேட்ட யான் விரைவுடன் நின்பால் வந்தேன். என் மனையில் உண்ணப்படும் பொருள் ஒன்றும் இன்னையின், அற்ப மயிர் முடியையுடைய எனது புதல்வன் பாலில்லாத வறுவிய தனங்களைப் பல முறையும் சுவைத்துப் பால் பெறானாய் அழுகின்றான்; பின்னர், கூழையும் சோற்றையும் வேண்டி விரைந்து உள்ளே சென்று, ஒன்றும் இல்லாத மட்பாண்டங் களைத் திறந்து திறந்து பார்த்துக் கண்பிசைந்து அழுவன். அவனைப் பார்த்து அவன் அன்னை, ‘புலி வருகிறது!’ என்று அவனுக்கு அச்சத்தை உண்டாக்கி, அவனது துயரைப் போக்க முயல்வாள்; சிறுவன் தணியாததைக் கண்டு மனம் வருத்திய வளாய் அவனை நோக்கி ‘மைந்த, நின் பிதாவைநினைந்து, வெறுத்தநின் மன நிலை காட்டுக,’ என்று கூறுவள். இங்ஙனம் வருந்தும் என் மனைவியும் மக்களும் மகிழுமாறு பரிசில் தந்து விரைவுடன் என்னைப் போக விடுவாய்,” என்றார். மேலும், புலவர் சிகாமணி முதிர மலைத் தலைவனை நோக்கி, “வென்றி மிக்கோய், கடல் குறையும்படி நீரை முகந்து சூல்கொண்டு, வேண்டும் இடங்களிற் பெய்யும் மழை நீங்கிய கோடை காலத்தில் உலகத்துஉயிர்கள் எல்லாம் சென்று உண்ணுதற்குக் கங்கையாற்றின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாற்பேhல, நீ எங்கட்கும் பிறர்க்கும் உபகாரத் தலைவனாய்த் தோன்றி விளங்குகின்றனை. ஆதலால், வழிபறிப்போர் இரவலரை அடித்துத் துன்புறுத்திச் செல்லா வண்™மும், அக்கொடியிவரிடம் இருந்து தப்பித்துக் கொண்டோடவும் தக்கதாக நீ எனக்குக் கொம்புகளையுடைய யானை யொன்iறத் தருவாயாக. நின்னால் கொடுக்கப்படும் பொருளைக்கண்டு அவர்கள் களிப்புற்றுத் தம் வறுமையைத் தொலைக்கத் தக்க பரிசிலை நல்குவாய். பனை போன்ற கையையும், வளைந்து முதிர்ந்த தந்தங்களையும் உடைய யானையை யான் விரும்புகின்றேன்; அதன்மீதமர்ந்து, அதன் நெற்றிப் பட்டம் விளங்கவும், பக்க மணிகள் மாறி மாறி ஒலிக்கவும், தலைமை தோன்றச் செல்வவிரும்புகின்றேன்; குமண வள்ளலே, என் வறுமை பின்னே நின்று துரத்த, உனது புகழ் முன்னே நின்று ஈர்த்துக்கொண்டுவர, வந்தேன். வந்து, உனது பெருமையினைக் குறித்தும் பாடிய எனது பைந்தமிழ்ப்பாக்களை ஏற்றுக் கொள்வாயாக; எனது திறனையும் உனது தகுதியினையும் அளந்து அவற்றிற்குத் தக்கவாறு பரிசில் அளிப்பாயாக; பெருமனே, எந்நாளும் எனது மிகுதியைக் கண்டு அரசர் நாணும்படி இவண் விட்டுப் பெயர்ந்து போவேன்; உன் வாட்போரின் முயற்சியையும் சீர் மிக்க செல்வத்தையும் படையையும் பலவாறு புகழ்வேனாக,” என்று வள்ளலின் பெருங்கொடைத் திறம் முதலியவற்றைத் தீங்கவியால் புகழ்ந்து பாடி வாழ்த்தினார். புலவர் பெருந்தகை பெருமையோடும் பொறுமை யோடும் பகர்ந்தனவெல்லாம் நன்றாகக் கேட்டகுமணன் அவர்பால் பெரிதும் இரக்கமும் அன்பும் கொண்டனன்; வீட்டில் அவரில்லாதபோது நிகழும் சம்பவங்களை அகத்தாற் சித்திரித்துக் கூறம் பான்மைக்கே பெரிதும் மகிழ்ந்தான். அரசன் உடனே தன் ஆதனத்தினின்றும் எழுந்து, புலவர்க்கு வேண்டிய வரையில் பட்டாடைகளையும், பொன்னையும், மணியையும், முதிர மலை விளைபொருள்களையும் சிறந்த களிற்றினையும் அவர் மனம் மகிழும்படி தந்தான். குமணனது கொடைத் திறத்தைக் கண்ட சித்திரனார் சித்தரப் பதுமைபோல அசைவற்று நின்றார்; அவன் தந்த பொருள்களை விருப்புடன் ஏற்று, அகம் களிக்கவும் முகம் மலரவும், உடம்பு பூரிக்கவும், குமணனைப் பலவாறு வாழ்த்தி, அவனிடம் விடை பெற்றுத் தம் ஊரை நோக்கி நடக்கலானார். 4.குமணன் காட்டிற் புகுதல் பெருஞ்சித்திரனார் குமணனிடம் பரிசில் பெற்றுச் சென்று பின்னர், நாட்டில் பெருங்குழப்பம் உண்டாயது. குமணனுக்கு இளங்குமணன் என்னும் ஒரு பின்னோன் இருந்தான். அவன் கல்வியறிவற்ற மூடன்; ‘கண்டதே காட்சி; கொண்டதே கோலம்,’எனத் தன் மனம் போனவாறு நடப்பவன். அவன், தன் முன்னோன் வருவோர்க்கெல்லாம் வரையாது கொடுப்பதைக் கண்டு வருந்தினான்; “தன்னிடம் உள்ள பொருள்களைத்தையும் வறியவர்க்கே வழங்கிய பின்னர், துன்பம் அடைபவன் இவனேயன்றோ? இவனுக்குப் பின்னர் பட்டமேற்பவன் யான் அன்றோ? இவன் இறக்குந் தறுவாயில் அரசாங்கத்தில் பொருள் இன்றியிருந்தால், வருந்துபவன் யான் அல்லனோ? எதிர்காலத்தைக் கருதி எதையும் இக்குமணன் செய்பவனாகக் காணவில்லையே!” என்று எண்ணினான். அவன், தான் எண்ணியதைத் தன் முன்னோனிடம் கூறினன். தரும குண வள்ளலான குமணனோ, அவனது புன்சொல்லைக் கேட்பவன்? தனது இயல்பான குணத்துடனே குமணன் நடந்து வந்தான். அதைக் கண்ட இளங்குமணன் அண்ணல்மீது வெறுப்புற்றான்; அவனைக் கொன்றுவிடுவதே சரி என்றும் தீர்மானித்தான். அம்முடிவை யுணர்ந்த வள்ளல், இளங்குமணனுக்குப் பயந்து காட்டிற்கு ஓடிவிட்டான்; ஓடி, ஒரு குகையில் உறையலானான். மன்னவன் மறைந்த வரலாற்றைக் கேட்ட அவன் நாட்டுக்குடிகள் பட்ட துயரம் கூற முடியாது. குமண மன்னவன் காட்டிற்கேகிய செய்தியை உணர்ந்த அம்மாநகர் மக்கள், “மண்செய்த பாவ முளதென்பார் மாமலர்மேற் பெண்செய்த பாவ மதனிற் பெரிதென்பார் புண்செய்த நெஞ்சை விதியென்பார் பூதலத்தோர் கண்செய்த பாவங் கடலிற் பெரிதென்பார்.” -கம்ப ராமாயணம் “அந்தோ! தர்மம், தயை, பிழை பொறுத்தல், அடக்கம், வாய்மை முதலிய நற்குண நற்செயல்களுக்கு உறைவிடமானவனன்றோ குமணன்? “தாயொக்கு மன்பிற் றவமொக்கு நலம்பயப்பில் சேயொக்கு முன்னின் றொருசெல் கதியுய்க்கு நீரால் நோயொக்கு மென்னின் மருந்தொக்கும் நுணங்கு கேள்வி ஆயப்பு குங்கா லறிவொக்கு மெவர்க்கு மன்னான்.” -கம்ப ராமாயணம் “இத்தகைய அரசனைப் பிரிந்து நாம் எவ்வாறு உய்வோம்? கொடுங்கோல் மன்னவனான இளங்குமணனிடமிருந்து நாம் எவ்வாறு கவலையின்றி வாழ்வோம்? கருணையே ஓர் உருவென வந்த குமணனைக் காட்டிற்கு ஏகச் செய்த இக்கொடும்பாவியிடமிருந்து சுகத்தை எப்படி எதிர் பார்ப்பது? மூத்தவனை நீக்கி இளையவன் பட்டம் அடைதல் எங்ஙனம் ஏற்கும்”? என்று பலவாறு குமணனது புகழையும் இளங்குமணனது துரோகத்தையும் கூறிப் புலம்பினர். சிலர், காடு சென்று குமணனைக் கண்டு, அவனுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் தினந்தோறும் கொடுத்து வந்தனர். அதை உணர்ந்த இளங்குமணன், “என் தமையனது தலையைக் கொண்டு வருவோர். நற்பரிசில் பெறுவர்,” என்று பறை யறைவித்தான். எனினும் ஏன்? குணக்குன்றாய குமணனைக் கொல்ல யார்தாம் இசைவர்? 5.பெருந்தலைச் சாத்தனார் சோழ நாட்டைச் சேர்ந்த ஆவூர் என்னும் கிராமத்தில் மூலங்கிழார் என்னும் வேளாளர் ஒருவர் இருந்தார். அவர் நல்லிசைப் புலமை வாய்ந்த பெருந்தலைச் சாத்தனாரின் தந்தையாராவர். சாதாரணமாக இருக்கவேண்டிய தலையைவிட அவரது தலை சற்றுப் பெரியதாயிருந்தமையின், அவர் அப்பெயர் பெற்றார். சாத்தனார் தக்க வயதடைந்ததும், ஒரு குல மகளை நாடி மணந்து கொண்டார்; மக்கட்பேற்றினையும் பெற்றார். பெருஞ் சித்திரரைப் போன்றே இவரும் வறுமைப் பிணியால் வாட்டமுற்றார். ‘வள்ளல்களை நாடிச் சென்று பரிசில் பெற்று வருவோம்,’ என யெண்ணிச் சாத்தனார் தம் ஊரை விட்டு ஒரு காட்டு வழியே நடந்து சென்றார். செல்கையில் குமணனிடம் பரிசில் பெற்றுக் களிற்றின் மீதிவர்ந்து வரும் பெருஞ்சித்திரனாரைக் கண்டார். சாத்தனாரைக் கண்ட புலவர் களிற்றினின்றும் கீழிறங்கித் தம் இருகரங்களாலும் சாத்தனாரைத் தழுவிக் கொண்டார். சாத்தனார், “புலவீர், களிறேது? எவ்வள்ளலிடஞ் சென்று மீள்கின்றீர்?” என்று சித்திரனாரை வினவினர். சித்திரனார் புலவரை அன்புடன் நோக்கி, “சாத்தரே, கொங்கு நாட்டில் முதிர மலைத் தலைவனும் வள்ளற்றன்மையிற் சிறந்தவனுமான குமண மன்னவனைப் பாடிப் பரிசில் பெற்று மீள்கின்றேன். இக்களிறு அவன் ஈந்ததே. நீர் விரும்பி அப்பெரு மானிடம் சென்று, உமது வறுமையைக் கூறுக; நும் மன மகிழுமாறு பரிசில் நல்குவன்,” என்று கூறி விடை பெற்றுச் சென்றார். 6. குமணனும் சாத்தனாரும் பெருந்தலைச் சாத்தனார் முதிர மலை நாட்டை அடைந்தார்; குமணன் காட்டில் வசிப்பதை உணர்ந்தார்; இளங்குமணன் முன்னோன் தலையை விரும்பியதையும் கேள்விப்பட்டார்; நேரே குமணன் இருந்த காட்டிற்கு ஓடினார்; வள்ளலைக் கண்டார். குமணன் புலவரை வரவேற்றான். Òபுலவர் அரசனை நோக்கி, “நல்ல போரைச் செய்கின்ற குமண, எனது இல்லத்தில் வறுமையின் கொடுமையால் சமைத்தலாகிய தொழிலைச் செய்தலையொழித்ததால் குமிழ்களையுடைய அடுப்பில் காளான் பூத்திருக்கின்றது. உணவின்மையின் பசியால் வருந்தி என் மனைவி மெலிந்தனள். அவளது தனங்கள் பாலை உடையனவாயிராமல் தோலாந் தன்மையுடனே மடிந்து கிடக்கின்றன. பசியால் வாடும் மைந்தன் பால் இன்றி வறுவிய அத்தனங்களைச் சுவைத்துப் பார்த்துப் பாலின்மையால் தாய் முகம் பார்த்து விம்மினன். அவளோ, விழிகளினின்றும் நீரை முத்து முத்தாகச் சொறிந்து, என்னை நோக்கினள். யானோ, கொடையிற் சிறந்த நின்னை நினைந்து வந்தடைந்தேன். நீயோ, சுரங்களுக்கு ஏற்ப நரம்புகளையமைக்கப்பட்ட திருத்திய நல்ல யாழையும் மார்ச்சனை நிறைந்த மத்தளத்தினையும் உடைய கூத்தரது வறுமையைப் போக்கும் வள்ளல்களது குடியிற் பிறந்தவன். எனது வறிய நிலையை யறிந்தாயாதலின், நீ வறுமையுற்ற இந்நிலையினும் உன்னிடமிருந்து பரிசில் பெறாது விடேன்,” என்னும் பொருள் பட, “ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பில் ஆம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப் பாஅ லின்பையிற் றோலொடு திரங்கி இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொ றழுஉந்தன் மகத்துமுக நோக்கி நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென் மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண! என்னிலை அறிந்தனை யாயி னிந்நிலைத் தொடுத்துங் கொள்ளா தமையலெ னடுக்கிய பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ் மண்ணார் முழளின் வயிரியர் இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே! ” -புறநானூறு என்ற பைந்தமிழ்ப் பாவொன்றினைப் பாடினர். தமிழின் அருமையும் புலவர் பெருமையும் அவர் பாடிய பாவினின்றும் பகுத்தறிந்த படை வேற் குமணன், அகம் மலர முகம் மலர்ந்தான்; புலவரைத் தன் இரு கரங்களாலும் சேர்த்து மார்போடு புல்லினான்; வறுமை செய்யும் துன்பத்தினையும் புலவர் பாட்டின் இன்பத்தினையும் எண்ணினான்; தீங்கவி பாடிய தெய்வப் புலவர்க்குத் தரத் தக்கது தன்னிடம் யாதுளது என்றெண்ணி ஏங்கினான். பின்னர் அவன் புலவரை அன்போடு நோக்கி, “புலவீர், பாவியேன் வேண்டும் பொருளெலாம் நயக்கும் பக்குவந்தன்னில் வந்திலீர்; காடுறைந்து கடுந்துயர் உழுக்கும் காலத்தில் வந்து கவல்கின்றீர். எனினும், என்? என் அருமைத் தம்பியான இளங்குமணன் என் தலையைக் கொய்து வருவோர்க்கு மிக்க பரிசில் நல்குவதாகப் பறையறைவித்துள்ளhன். ஆகலின், நீர் எமது தலையை யறுத்து, அதனைத் தம்பியிடங் காட்டிப் பரிசில் பெற்றேகுவீர்,” என்று முகமலர்ச்சியுடன் கூறினான். குணக்குன்றாய குமணன் கூறிய கூற்றைக் கேட்ட புலவர் கோமானது மனம் கரைந்தது. அவர் கண்களில் நீர் ஆறாய்ப் பெறுகிற்று; செய்வதின்ன தென்று தோற்றாது மயங்கி நின்றார். அப்போது குமணன், “புலவரே, ஏன் தயங்கவேண்டும்? என்றைக்கிருப்பினும் ஒரு நாள் இறக்க வேண்டுவதுதானே! என்றோ மரிப்பதினும் இன்றே மரிப்பது மேல். அதினும் சமயங் கிடைத்தபோது சாவது மேல். நான் உயிர் துறந்தால், என் தலை எதற்கு உதவப்போகின்றது? நரிகளும் நாய்களும் கூளிகளுமே பிய்த்துத் தின்னும்; அவை தின்பதற்கு முன் எனது தலையால் உமது வறுமை தீரப் பரிசிலைப் பெறுவீர். ‘தமிழ்ப் புலவரது வறுமையைத் தொலைக்கத் தலை யீந்தான் குமணன்,” என்ற நற் புகழ் ஏழையேன் பெறலாகாதோ? இம்மாய வுடலைச் சுமந்திருப்பதாற்றான் பயன் என்ன? இந்த யாக்கையோ, “ வினையின் வந்தது; வினைக்கு விளை வாயது? புனைவன நீங்கிற் புலால்புறத் திடுவது; மூத்துவிளி வுடையது; தீப்பிணி யிருக்கை; பற்றின் பற்றிடம்; குற்றக் கொள்கலம் புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை; அவலக் கவலை கையா றழுங்கள் தகலா வுள்ளந் தன்பா லுடையது.”-மணிமேகலை இவற்றை யெல்லாம் நீர் அறியாதவர் அல்லீர்; ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்,’ என்ற வண்ணம் என் தலையால் பரிசில் கிடைக்கும் இக்காலத்தை நீர் வீணாக்க வேண்டா; தலையின்றித் தம்பியிடம் சென்றால், பரிசில் பெறமாட்டீர். இதோ! எனது வாளைத் தருகின்றேன்; உமது வேலையை முடித்துக் கொள்ளும்,” என்று கூறி, தன் வாளைப் புலவர் கரத்தில் ஈந்தான். புலவர்க்கு ஒரு யோசனை தோன்றிற்று. அவர், “இத்தகைய பெருமைக் குணம் பொருந்திய அண்ணலது தலையை அப்பாதகன் இளங்குமணன் காண விரும்பினனே! இவனது தலையைக் கொய்து செல்வதைவிட இளங்குமணiன நற்போதனையால் நல் வழிப்படுத்தி உடன் பிறந்தார் இருவரையும், ஒன்று சேர்ப்பதே நமது சிறந்த கடமையாகும்,” என்று எண்ணினார். உடனே புலவர் அங்கிருந்து புறப்பட்டார். 7. இளங்குமணனும் சாத்தனாரும் புறப்பட்ட சாத்தனார் ஓடோடியும் சென்று இளங்குமணனை அடைந்து, அவனை நோக்கி நின்றார். இளங்குமணன் புலவரை நோக்கி, “பெரியீர், என் முன்னோன் தலையைக் கொணர்ந்தீரோ?” என்று வினவினன். புலவர் மிக்க சினத்துடனும் நயத்துடனும் இளவலை நோக்கி, “வேந்தே, அறிவிற் சிறந்த நினக்கு யான் ஒன்றும் சொல்லத் துணிந்திலேன். என்றாலும், நற்குண மன்ன, யான் அறைவதைக் கேள்: உலகில் ஒரு தாய்க்குப் பிறந்த மக்கள் ஒற்றுமையோடு வாழவேண்டுமென்பதை நீ அறிவை. உனது மரபரசனும் இக்குழுமூரில் ஆண்டவனுமான பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்பவன் பாண்டவர் கௌரவர் என்ற இரு திறத்தார்க்கும் நிகழ்ந்த போரில் சோற்றை வழங்கினான் என்பதை நீ கேள்வியுற்றிருப்பை. அப்போர் யாருக்குள் நிகழ்ந்ததென்பதை அறிவையோ? பாண்டுவின் மைந்தர் பாண்டவர், பாண்டுவின் முன்னோன் பிள்ளைகள் கௌரவர்கள். அவ்விரு திறத்தாரும் சகோதரர்களே யாவார்கள். அவர்களுள் துரியோதனன் கொடியவன்; எல்லாப் போகங்களையும் தானும் தன் தம்பியருமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினானே யன்றிச் சிற்றப்பன் மக்களான பாண்டவர்களுக்கு நியாய முறையாகச் சேரவேண்டிய நாட்டையும் கொடுத் தானில்லை. இதனாலன்றோ, அவனும் அவன் தம்பியரும் பாரதப் போரில் மாண்டனர்? இதனை நீ அறிந்தும், இவ்வாறு நாட்டைக் கவர்ந்தது முறையோ? நற்குணங்கள் பொருந்தி, சாந்தமே உருவாகவுள்ள குமணனை உன் உடன் பிறந்தானாகப் பெற முற்பிறப்பில் நீ எத்தவத்தைச் செய்தனையோ! அவனா லன்றோ உங்கள் குலத்தின் பெருமை அழியாமலிருக்கின்றது! அத்தகைய பெருமையிற்சிறந்த அண்ணலை அவதிப்பட விட்டு, நீ அரியாசனத் தமர்ந்தது சரியாமோ? நீசெய்த இக்கொடுஞ் செயல் உலகம் உள்ளளவும் மாறாதே? சற்குணப் பரதன் வரலாற்றினையும் நீ அறிவாயன்றோ? சீராமன் பரதனை நாடாளவேண்டும் என்று விரும்பியும், முன்னோன் இருக்கப் பின்னோன் பட்டம் அடைதல் முறையன்று என்பதை நன்குணர்ந்த உத்தம் பரதன் அரச போகங்களைனைத்தையும் துறந்து, சீராமன் நாட்டை மீண்டும் அடையும் வரையில் துறவி வேடத்துடன் இருந்தானல்லனோ? அத்தகைய சகோதர அன்பு வாய்ந்த அரசர் குலத்திலே பிறந்த நீ சகோதர அன்பில்லாதிருத்தல் மிகவும் வெறுக்கத் தக்கதாயுள்ளது, ” என்று முகவுரையாக இவையனைத்தையும் கூறிப் பின்னும் அவனை நோக்கி, “நிலையற்ற இவ்வுலகில் தம் பெயர் நிலை பெற்றிருக்கவேண்டுமென நினைந்தோர் தமது நற்செயல்களhல் நற்புகழை நிலை நாட்டி மாய்ந்தனர். மிக்க செல்வத்தையுடைய மக்கள் இரப்போர்க்குக் கொடாமையால், புகழுடம்பு எய்தாது ஒழிந்தார்கள். அவர்கள் உலகத்தோடு ஒத்துப் போதலை அறியாதவர்கள். தாள்வரையும் தாழ்ந்துள்ளவையும் ஓசை தருவனவுமான மணிகள் மாறி மாறி. ஒலிக்க, அழகிய நெற்றியையும் அசைந்து செல்லும் இயல்பினையும் உடைய யானைகளை இரக்கும் புலவர்க்கு அதிகமாகக் கொடுக்கும் அறிவில்லாத நல்ல புகழைப் பெற்று வலிய குதிரையையுடைய தலைவனை (குமணனைப்) பாடி நின்றேன். அத்தலைவன், ‘பயன் இன்றியே பாடிய இப்புலவன் பரிசில் இன்றி வாட்ட முறுகின்றனன்; வாட்டமுற்று இவன் திரும்பிச் செல்லல் நான் நாடிழந்து அனுபவிக்கும் துயரினும் அதிகமானதாகும்,’ என்று, தன் கூறிய அறிவால் எண்ணித் தன்னிற் சிறந்தது பிறிதொன்றில்லை எனத்துணிந்து, தனது தலையை வெட்டத் தன் கூரிய வாளை என்னிடம் தந்தான். போரிற் புறங்கொடாத தன்மையுடையானது அரிய செயலைக் கண்டு இல்லாளுடன் பேருவகையோடு நின்னிடம் வந்தேன்,” என்று கருக்கொடை கொண்டல் நீரைச் சொறிந்தாற் போன்று தீந்தமிழாலாய சொற்களைப் பொழிந்தார். 8. பிரிந்தோர் கூடல் பெருந்தலைச் சாத்தனார் உரைத்தவை எல்லாம் கேட்ட இளங்குமணன் நல்லறிவு பெற்றான்; முன்னோனது பரந்த சிந்தையையும் விரிந்த நோக்கத்தையும் எண்ணினான். தமயனுடைய அருள் வழியும் கண்ணும், புன்சிரிப்புத் தவழும் பொலிவு பெற்ற முகமும் அவன் அகக் கண் முன்னே தோன்றின. தான் செய்த துரோக சிந்தனையை எண்ணி உடல் நடுங்கினான்; விழி நீர் சிந்த ஓவென்றலறினான். அவன் புலவர் தாள்களைப் பற்றிக்கொண்டு, “பெரியீர், இன்னே எனது அண்ணலைக் காண விழைகின்றேன். வம்மின்,” என்று அரற்றினான். புலவர் பெருமகிழ்ச்சியடைந்து, இளங்குமணனை அழைத்துச் சென்று, குமணனிடம் விட்டார். பின்னோன் முன்னோன் கழலடிகளைப் பணிந்து போற்றி, தான் செய்த தவறுகளை மன்னிக்குமாறு வேண்டினன். குணக் குன்றாக குமணன், தன் இளவலை மார்புறத் தழுவிக் களித்தான். பின்னர் மூவரும் நாட்டையடைந்தனர். இளங்குமணன் குமண வள்ளலை அரியாசனத்தமர்த்தி, அன்று முதல் அண்ணல் ஏவற்படிநடந்து அகமகிழ்ந்தான். இரு சகோதரரையும் ஒன்றுபடச் செய்த பீடு மிக்க சாத்தனார், வேண்டும் பரிசில் பெற்று, இருவரையும் வாழ்த்தி, தம்மூர் போய்ச் சேர்ந்தனர். குமணன் இரவலர்க்கீந்து, என்றும் வற்றாத புகழை இத்தமிழ் நாட்டில் நிலை நாட்டி, விண்ணவரும் மண்ணவரும் போற்ற, சன்மார்க்கத்தில் ஒழுகி வாழ்ந்து, இறைவன் இணையடிகளைச் சேர்ந்தான். குறிப்புரை I. வேள் பாரி ஐந்திடங்கள் : - குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பன. குறிஞ்சி : - மலையும் மலை சார்ந்த இடமும்; விளை பொருள்-சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாகம், மூங்கில், மலைநெல், மூங்கிலரிசி, தினை. பாலை : - குறிஞ்சி, முல்லை முதலியவற்றின் இடையிடையே மருவியலிடம்; விளை பொருள் : -உழிஞை, பாலை, ஓமை, அருப்பை முதலான பலவகை மரங்கள். முல்லை : - காடும் காடு சார்ந்த விடமும்; விளைபொருள் :- கொன்றை, காயா, குருந்தம் முதலான மரங்களும்; வரகு, சாமை, முதிரை என்ற கூல வகைகளம். மருதம் : - ஊரும் ஊரைச் சார்ந்த விடமும்; காஞ்சி, வஞ்சி, மருதம் முதலிய மரங்கள் உண்டாகும்; செந்நெல் அரிசி, வெண்ணல் அரிசியுண்டாகும். நெய்தல் : - கடலும் கடலைச் சார்ந்த இடமும்; கண்டல், புன்னை, ஞாழல் (புலி நகக்கொன்றை) முதலிய மரங்களும்; நெய்தற்பூ, தாழம்பு, முண்டகப்பூ, அடம்பம்பூ முதலிய புட்பங்களும் இவ்விடத்துப் பொருள்கள். (நம்பி அகப்பொருள்-அ-இயல்) ‘புலம் கந்தாக. . . . . . . . . . . . . . . . . . பாரி.’-அறிவால் உழு துண்ணுதலையே பற்றிக்கோடாகக் கொண்டு, இரவலர்வரின், மலையையொத்த யானையோடு நல்ல பாணங்களைக் கொடுக்கும் எடுத்துச் சொல்லப்பட்ட வளமிக்க புகழையுடைய பாரி. (அகம்-303) உம்பர்காவனைய கையான்-(விரும்புவதைத் தருவதில்) வானுலகில் உள்ள கற்பக மரத்தினை ஒத்த கையையுடையான். (“உம்பர்கா வனைய கையான் உன்னுரை மறுத்தானாகில்” என்பன வில்லி பாரதம், கிருஷ்ணன் தூதுச் சருக்கும் செய்யுள் 157) செய்வல்-செய்வேன், இதில் அல்-தன்மை யொருமை எதிர் கால வினைமுற்று விகுதி. ‘சிறுவீ . . . . . . . . . . . . பாரி,’- சிறிய மலர்களையுடைய முல்லைக் கொடிக்குப் பெரிய தேரைக் கொடுத்த பறம்பு என்னும் மலையையுடைய அரசனாகிய பாரி. (சிறுபாணாற்றுப்படை, 89-91) ‘பூத்தலை யறாஅப் . . . . . . ,’-பூவைத் தனது தலையினிடத்து நீங்காத அலங்கரித்தாற் போன்ற முல்லைக்கொடி தன்னை நாத்தழும்பேறப் பாடாதிருந்தும், ஒலிக்கின்ற மணியையுடைய நெடிய தேரைக் ‘கொள்க,’ என்று சொல்லிக் கொடுத்த பரந்த மேம்பட்ட தலைமையினையுடைய பாரி. (புறம் - 200) வெள்ளிடை மலை : வெளியிடத்துத் தோன்றும் மலை : அது யாவர் கண்ணுக்கும் வெளிப்படையாகத் தோன்றும். விறிலி-பரிசில் பெறுவதற்குப் பாடு மகள். அவ்வெல்வையில்-அவ்வேளையில். இரங்கத் தக்கது. அஃறிணைப் பொருளான பறம்பு அரணும் இரவலர்க்கு இரங்கும் என்பதைக் குறித்தபடி. ஊழ்க்கும் - உதிர்க்கும் வான் மீன் - நட்சத்திரம் மறுவலும் - இரண்டாமுறையும் இரவலர் - யாசகர் தேறல் - தேன் நெடுவரை - உயர்ந்த மலை கலிமா - சுனைத்தலையுடைய குதிரை ஈத்திலைக் குப்பை - ஈந்திலைக் குப்பை; ஈத்து - ஈந்து என்பதன் வலித்தல் விகாரம் உமணர் - உப்பு விளைவிப்போர் சனி மீன் - சனிக்கிரகம் வெள்ளி - சுக்கிரன் பிழைக்காது - (பெய்தலில்) தவறாது எந்தை - எம் தந்தை (மரூஉ) கடுவன் - ஆண் குரங்கு மந்தி - பெண்குரங்கு தறுகண் - அஞ்சாமை துவாரபதி - இது பறம்பு நாட்டைச் சேர்ந்த ஒரு நிலப்பகுதியின் பெயர். படை வீடு - படைகள் தங்கத்தக்க விடம். புலி கடி மாலே - புலியைக்கொன்ற வேளினது சந்ததியில் தோன்றியவனே! வேள் எவ்வி – இவன் பழைய வேளிர் தலைவருள் ஒருவன், இவன் நாடு மிழலைக் கூற்றம் என்பது. தவிர்க - போதலை யொழிக. உட்காதே - நடுங்காமல், உட்காது இயைந்தான் என இயையும். புகார் மன்னன் - காவிரிப்பூம் பட்டினத்திற்கரசனான சோழன். இஃது அண்மை விளி. பொன்னி - காவிரி யாறு நகாதே - சிரிக்காமல் வையைத் துறைவன் - பாண்டியன் தென்னன் - பாண்டியன் II. வேள் ஆய் சுர புன்னை மாலை – புன்னைப்பூ வடிவாகப் பொன்னாற் சமைத்த மாலை; இஃது அடையாள மாலை. ‘தொனஅது . . . . . . . சூர் மகள்,’-தென்றிசைக்கண் உள்ள ஆய் என்பானது நன்னாட்டில் தெய்வத் தன்மை வாய்ந்த மலைத் தொடருள் கவிரம் என்னும் பெயருடையதும் அச்சத்தைத் தருவதுமாகிய மலையின் அழகு வாய்ந்த மலர் நிறைந்த நீர்ச்சுனையிற்றங்கும் நீரர மங்கையர்.(அகம். 198) ‘நீல நாகம் . . . . . . . . . . ஆய்,’-கரிய நாகமொன்று உரித்துக் கொடுத்த பிரகாசிக்கின்ற நீல ஆடையை ஆலமரத்தின் கீழ் எழுந்தருளிய சிவ பிரானுக்கு மனமுவந்து கொடுத்த வில்லைத் தாங்கிய சந்தனம் பூசிப் புலரும் திண்ணிய தோளினையும் கேட்போர்க்கு விருப்பத்தைத் தரும் நல்ல சொல்லினையும் உடைய ஆய். (சிறுபாணாற்றுப் படை, 96-99) ஆறலை கள்வர் - பாலை நில மாக்கள்; வழிப் பறித்தல் அவர்தம் தொழில். வரிப்பாட்டு - இசைப்பாட்டு தகர மரம் - ஒருவகை மரம் நரந்தை – நாரத்தை ஈர்த்தன - இழுத்தன (தம் வயப்படுத்தின.) III . அதியமான் நெடுமானஞ்சி தத்தைகள் - கிளிகள் சுரும்புகள் - வண்டுகள் ‘முற்றிய . . . . . . வேண்டலமே,’-நிறைந்த செல்வத்தையுடைய மூவேந்தராயினும், எம்மைப்பேணுதல் இன்றி ஈதலை யாங்கள் விரும்போம். (புறம். 205) முடவார் - இளம்பெண்டிர் குரிசில் - ஆடவரிற் சிறந்தவன் ‘முழைக்கண் . . . . . வருமோ?’-சிங்கம் இருக்கும் குகையில் தானே வந்து யானை அதனை எதிர்ப்பதுண்டோ? (அவ்வாறு எதிர்த்தால், யானை மடியும் என்றபடி) (கலிங்கத்துப் பரணி) சுரை - மூட்டு வாய் வேர்ப்பு – வேர்வு (வியர்வை நீர்) IV. வள்ளல் குமணன் ‘அலங்குளைப் . . . . . . வரையாது,’-அசைந்த தலையாட்ட மணிந்த குதிரையுடைய பாண்டவர் ஐவருடனே கோபித்து, நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொன்னாற் செய்யப்பட்ட தும்பைப் பூ மாலையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் போர் செய்து போர்க்களத்தில் இறந்தொழியும் வரையில் பெருஞ்சோறாகிய மிக்க உணவை இருபடைகளுக்கும் குறையாது. (புறம் - 2) சித்திரகாரி - படம் தீட்டுவோன் முருகு - வாசனை கூவிளங்கண்ணி - வில்வ மாலை கூசை - பழி வறுவிய - சத்து (பால்) இல்லாத ‘தாயொக்கு . . . . . . மன்னான்,’-அன்பினால் யாவர்க்கும் தாயை யொப்பான்; நன்மையைப் பயக்குந் தன்மையாலே குடிகள் செய்யும் தவத்தை யொப்பான்; தான் முன்னின்று அவர்கள் ஒப்பற்ற நற்கதியிற் செலுத்தி கின்றமையால், அவரவர்கள் புத்திரனை யொப்பான்; வியாதிகள் பொருந்துமாயின் அவற்றை யொழிக்குந் தன்மையால், மருந்தை யொப்பான்: நுண்ணிய கேள்விகளை ஆராய்ச்சி செய்யப் புகின், கருத்துகளுக்கிசையச் சந்தேக முதலியவை யில்லாமல் தெளிவிக்குந் தன்மையினால் அவர்கள் அறிவை யொப்பான். (கம்ப ராமயணம் - பால காண்டம்) *சங்க காலத்து ஒளவையார் * சங்க காலத்து அவ்வையார்