கதை மலர் மாலை முனைவர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : கதை மலர் மாலை ஆசிரியர் : முனைவர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2012 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+80 = 96 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 60/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் நூலாக்கம் : திருமதி வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், எண். 20/33, பி 3 பாண்டியன் அடுக்ககம், ஸ்ரீநிவாசன் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க் குலம் படிப்படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மைகளைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்மண் பதிப்பகத்iதத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங்கினேன். நீருக்கும் - நெருப்புக்கும், புதையுண்டும் - மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் - சிதைக்கப்பட்டவையும் போக எஞ்சிய நூல்களைத் தேடி எடுத்து வெளியிட்ட பழந்தமிழ் அறிஞர்களை வணங்கி எம் தமிழ்நூல் பதிப்புச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலமும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலமும் தமிழ்மொழி, தமிழின வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலமாகும். இந்த மறுமலர்ச்சி காலத்தில்தான் தமிழை உயிராகவும், மூச்சாகவும், வாழ்வாகவும் கொண்ட அரும்பெரும் தமிழரிஞர்கள் தோன்றி தமிழ் மீட்டெடுப்புப் பணியை மேற்கொண்டனர். எதிர்காலத் தமிழ் தலைமுறைக்கு அழியாச் செல்வங்களாக அருந்தமிழ் நூல்களை கொடையாக வழங்கிச் சென்றனர். இவ்வருந்தமிழ்க் கொடைகள் எல்லாம் தமிழர் இல்லந்தோறும் வைத்துப் பாதுகாக்கத் தக்க புதைபொருள் ஆகும். அந்த வகையில் அறிஞர்களின் செந்தமிழ் கருவூலங்களை எல்லாம் தேடி எடுத்து குலை குலையாய் வெளியிட்டு தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாக பதித்து வருவதை தமிழ் கூறும் நல்லுகம் நன்கு அறியும். எம் தமிழ்நூல் பதிப்புப் பணியின் தொடர் பணியாக தமிழ்ப்பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் நூல்களை வெளியிடும் நோக்கில் எம் கைக்குக் கிடைத்த சில நூல்களை முதல் கட்டமாக வெளிகொணர்ந்துள்ளோம். எதிர்காலத்தில் அவருடைய ஆக்கங்கள் அனைத்தையும் தேடி எடுத்து பொருள்வழிப் பிரித்து கால வரிசையில் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர் களுக்கும் பயன்படும் நோக்கில் திட்டமிட்டுள்ளோம். அகப்பகையும், புறப்பகையும் தமிழர் வாழ்வில் குடிபுகுந்து தமிழினம் நிலைக்குலைந்த வரலாறு கடந்தகால வரலாறு. தொன்மையும், பெருமையும் வாய்ந்த தமிழ்ப் பேரினம் தம் குடிமை இழந்து தாழ்வுற்று மருளும், இருளும் நிறைந்த மூட பழக்க வழக்கங்களால் தன்மானம் இழந்து தாழ்ந்து கிடந்த வரலாற்றை நெஞ்சில் நிறுத்துவோம். தமிழினம் மறுமலர்ச்சி பெறுவதற்கு தம் வாழ்வின் முழுபொழுதையும் செலவிட்ட அறிஞர்களை வணங்குவோம். இந்நூல்களை உங்கள் கையில் தவழ விடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். கோ. இளவழகன் நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி’ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `இன்றைய தமிழரது வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்கின்றது?’ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும்’`பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள்’என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள்’என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம்’. நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார்.’பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தhர். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு’இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான்’படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம்’, `நக்கீரர் கழகம்’, `மாணவர் மன்றம்’முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர்’என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈராஸ் பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர்’என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது’என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு’என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான்’பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார்’என்று `என் கணவர்’என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியு மென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வி’யில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணை யானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும்’என்பது அவர் கொள்கையாக இருந்தது. “அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும்”. உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும்’என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும்’என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும்’என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்கiள எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம்’, `தமிழ் இனம்’, `தமிழர் வாழ்வு’, `என்றுமுள தென்றமிழ்’, `புதிய தமிழகம்’என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும்’என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி’, `தமிழ்க் கலைகள்’, `தமிழர் நாகரிகமும் பண்பாடும்’, `தமிழக வரலாறு’என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்கhக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும்’அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர்’என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு’வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல்’, தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது’`வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும்’என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும்’என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம்’என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும்’என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `அவரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா?’எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர்’, `மனிதரில் தலையாய மனிதரே’எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் பதிப்புரை இளமாணவர்கள் கதை கேட்பதில் இயற்கையான விருப்ப முள்ளவர்கள்.இளமாணவர்களின் இவ்வியற்கையை நோக்கின், அவர்கட்குக் கல்வியில் விருப்பத்தை உண்டாக்குதற்குக் கதைப் புத்தகங்களே சிறந்த கருவியாவன என்பது தெள்ளிதின் உணரப்படுகின்றது. இக்கருத்தே கொண்டு கழகச சார்பில் பல கதைப் புத்தகங்கள் இள மாணவர்கட்கேற்ற முறையில்வெளிவந்துள்ளன. இம்முறையில் “கதை மலர் மாலை”என்னும் இவ்வரிசையும் வெளிவருகின்றது. இதன் கண் உள்ள கதைகளெல்லாம் இளமாணவர்களின் மனநிலைக்கேற்றனவாக எளிய நடையில் அமைந்துள்ளன. கதைகளெல்லாம் ஒத்த அளவுள்ளனவாக அமைந்துள்ளன. ஒவ்வொரு கதையின் இறுதியிலும் கதையைப்படித்த மாணவர்களின் அறிவைத் தூண்டத்தக்க சில கேள்விகள் தரப்பட்டுள்ளன. சிறப்பாக இவ்வரிசை, 5-ம் வகுப்பு மாணவர்கட்கு மனப்படிப்பு. (ளுடைநவே சுநயனiபே)க் கேற்ற புத்தகமாக அமையப் பெரிதும் தகுதிவாய்ந்ததாகும். ஆசிரியர்களும் பெற்றோர்களும் இந்நூல் வரிசையை ஏற்றுத் தம்மாணவர்கட்கும் பிள்ளைகட்கும் பயனுறுத்துவ தோடு எம்மையும் இத்துறையில் மேலும் ஊக்குவார்களென்று எதிர்பார்க்கின்றேம். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் பொருளடக்கம் 1. தோட்டக்காரன் 1 2. குரங்கும் மீன் எண்ணெயும் 3 3. முதுமையில் இளமை 5 4. போகிப் பண்டிகை 7 5. உயிர்ப் படகு 9 6. நாயும் பாம்பும் 11 7. போர்வீரன் மகன் 13 8. கழுதைச் சவாரி 15 9. அறிவுள்ள நாய் 17 10. இளந் தாதி 19 11. தேன் துளி 21 12. மங்கல முடிபு 23 13. நாய் அளித்த விருந்து 15 14. தென் துருவம் 27 15. குரங்குகளின் குறும்பு 29 16. கடற் கண்ணிகள் 31 17. கிளியின் அறிவு 33 18. கழுதையின் வால் 35 19. அஞ்சாத இளைஞன் 37 20. கந்தனும் கண்ணகியும் 39 21. மாணவனும் மழையும் 41 22. மாணவர் பயணம் 43 23. புதிய நண்பன் 45 24. நல்ல வழியிற் செலவு 47 25. எதிர்காலப் போர்வீரன் 49 26. தன்னலம் இல்லாத சிறுவன் 51 27. தன்னலம் அற்ற தோட்டக்காரன் 53 28. பொய் பேசலாகாது 55 29. எலிக்குஞ்சுகள் 57 30. புகைவண்டி காத்த சிறுவன் 59 31. இறுதிக் கடமை 61 32. வெறிகொண்ட நாய் 63 33. துணிவுதற்ற இளைஞன் 65 34. காட்சிச் சாலை 67 35. பொய்ப்பரிசு 69 36. புதுவகைப் படகு 71 37. கடமை உணர்ந்த கற்பகம் 73 38. தியாக உணர்ச்சி 75 39. கட்டுமரம் 77 40. செல்வம் பெரிதா? கடமை பெரியதா? 79 கதை மலர் மாலை மலர் ஒன்று 1.தோட்டக்காரன் சேலம் நகராண்மைக் கழகப் பாடாசாலையில் கண்ணன் என்பவன் வாசித்துவந்தான். அவன் ஐந்தாம் வகுப்பு மாணவன். அவன் தகப்பனார் தம் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பகுதியை அவனிடம் ஒப்புவித்தார். அவன் அதைச் செப்பஞ் செய்து ஒழுங்குபடுத்தினான். கண்ணன் காலை மாலைகளில் தோட்ட வேலையில் ஈடுபட்டான்; மண்ணைத் தோண்டிப் பாத்திகளை அமைத்தான்; அப்பகுதிகளில் முளைக்கீரை, அரைக்கீரை, முள்ளங்கி, கத்தரிச்செடி இவற்றுக்கு உரிய விதைகளை விதைத்தான்; கிணற்றுத் தண்ணீரை நாடோறும் பாத்திகட்குப் பாய்ச்சினான். கண்ணன் இருபத்துநான்கு தொட்டிகளை வாங்கினான்; அவற்றில் மட்கிய குதிரை சாணி, ஆட்டுப் பிழுக்கை, மாட்டு சாணி, சாம்பல், மண் முதலியவற்றைக் கலந்து போட்டான்; ரோசா, சாமந்தி,சூரியகாந்தி, மல்லிகை, நீலாம்பரம், கனகாம்பரம் முதலிய மலர்ச் செடிகளை வைத்துப் பயிராக்கினான். கண்ணன் ஒவ்வொரு நாள் மாலையிலும் தோட்டத்திலேயே இருந்து தோட்டவேலையைப் பார்த்து வந்தான்; அவன், கண்ணை இமைகள் காப்பது போலத் தன் செடிகளைக் காத்துவந்தான்; தூக்கத்திலும் அவற்றைப்பற்றியே கனவு காண்பான். ஆண்டு முடிவில், பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் தோட்ட வேலை செய்திருந்த மாணவர் தோட்டங்களைப் பார்வையிட்டார். அவர், ‘கண்ணன் தோட்டமே எல்லாவற்றிலும் சிறந்தது,’என்று கூறினார்.கண்ணனே தோட்டவேலையில் முதல் பரிசு பெற்றான். அப்பொழுது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவு உண்டோ? கேள்விகள் 1. கண்ணன் பாத்திகளை எவ்வாறு கட்டினான்? 2. அவன் பாத்திகளில் எவற்றை விதைத்தான்? 3. அவன் தொட்டிகளில் வைத்த பூஞ்செடிகள் எவை? 4. தலைமை ஆசிரியர் கூறியது யாது? 5. கண்ணன் வேலைக்குக் கூலி கிடைத்ததா? 2. குரங்கும் மீன் எண்ணெயும் இந்தியாவின் உள்ள குரங்குகள் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட சில திங்களில் இறந்து விடுதல் வழக்கம். அந்நாட்டுக் குளிர் தாங்க முடியாமையே அவை இறப்பதற்க்குக் காரணமாகும். ஓர் ஆங்கிலேயர் இந்தியாவிலிருந்து குரங்கு ஒன்றைத் தம் தாய்நாட்டுக்குக் கொண்டு சென்றனர். அது அங்குக் குளிரால் துன்பப்பட்டு நோயுற்றது. ஆயினும் அந்த ஆங்கிலேயர் சிறந்த மருத்துவரைக் கொண்டு அதன் நோயைக் குணப்படுத்தினர். அவர் மருத்துவர் சொன்னபடி அக்குரங்கிற்கு மீன் எண்ணெய் கொடுக்கத் தீர்மானித்தார்; அவர் அதனைக் கொடுத்தபொழுது, குரங்கு சிறிது உட்கொண்டது. ஆனால், அஃது எஞ்சியதைக் குடிக்க மறுத்து விட்டது. ஆங்கிலேயர் அந்த எண்ணெய்ப் பாத்திரத்தைக் குரங்கிற்கு எதிரே இருந்த பலகையில் வைத்துவிட்டுச் சென்றார். அவர் அறைக் கதவை மூடிக்கொண்டு வெளியே போனார்; போய்க் கதவில் இருந்த துளை வழியே குரங்கின் செயலை நோக்கினார். குரங்கு உடனே அப்பலகையில் இருந்த பாத்திரைத்தை எடுத்தது; ஒரு துளியும் விடாமல் எல்லா மீன் எண்ணெயையும் குடித்துவிட்டது. அன்று முதல் அது சுறுசுறுப்புடன் காணப்பட்டது; வேறு வகை எண்ணெய்களையும் குடிக்க முற்பட்டது. அஃது ஒருநாள் தன் தலைவர் குடிக்க வைத்திருந்த உயர்ந்த மீன் எண்ணெனையும் குடித்துவிட்டது. அது முதல் அவர் அந்த அறையில் எண்ணெய் வகைகளை வைப்பதே இல்லை. கேள்விகள் 1. இந்தியக் குரங்குகள் இங்கிலாந்தில் இறப்பதன் காரணம் யாது? 2. ஆங்கிலேயர் தாம் வளர்த்த குரங்கிற்கு எதைக் கொடுத்தார்? 3. அதனை முதலில் வெறுத்த குரங்கு, பிறகு என்ன செய்தது? 4. அது முதல் அக்குரங்கு என்ன செய்து வந்தது? 5. அதன் அறையில் எண்ணெய் வகைகள் வைப்பதில்லை—-ஏன்? 6. நீ இக்கதையில் அறிவது யாது? 3. முதுமையில் இளமை இராபர்ட் என்பவர் சிறந்த கடற் போர்வீரர். அவர் தமது தாய்நாடாகிய இங்கிலாந்தின் மீது நீங்காத பற்று உடையவர். அவர் பல நாடுகளில்-பல இடங்களில்-பல காலங்களில் தம் நாட்டு வெற்றிக்காகப் போரிட்ட வீரர். சென்ற ஐரோப்பியப் பெரும்போர் தொடங்கிய போது அவர் மிக்க முதியவராக இருந்தார். அதனால் அவர் போர் செய்ய இயலாதவராக இருந்தார்; ஆயினும், அவர் ஓரிடத்தில் இருக்கவில்லை; ஜெர்மனியரோடு ஆங்கிலேயர் போர் நடத்திய இடங்கட்கெல்லாம் சென்றார். அவர் தமது, எண்பத்திரெண்டாம் வயதில் பிரான்ஸ், பெல்ஜியம் முதலிய நாடுகளில் பயணம் செய்தார்; ஆங்காங்கு இருந்த தம் வீரர்கட்குப் போரில் மனவெழுச்சியை ஊட்டினார்; தம்முடைய முன்னைய பழக்க வழக்கங்களை எடுத்துக் கூறினார்; வீரர்கள் உள்ளத்தில் நாட்டுப்பற்றை உண்டாக்கினார். அவர், போரில் சேராமல் இருந்த இளைஞருக்கு மனவெழுச்சி யுண்டாக்கிப் படையில் சேர்த்தார்; அவர்கட்குப் போர்ப் பயிற்சிகளை அளிக்க ஏற்பாடு செய்தார்; தம்மிடம் முன்னர் வேலை செய்திருந்தவர்களை எல்லாம் படையில் சேர்த்தார். அவர் இறுதியில் பிரான்ஸ் நாடு சென்றார்; அங்குத் தம் கீழ் இருந்து போர் செய்த இந்திய வீரர்களைக் கண்டு மகிழ்ந்தார். அவர்களும் தம் முதிய படைத் தலைவரைக் கண்டு மகிழ்ந்தனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சி நீடித்து இருக்கவில்லை. ஏனெனில், அவர் பிரான்ஸில் நோய்கண்டு திடீரெனப் போர்க்களத்திலேயே இறந்தார். அவர் தமது இறுதிக் காலத்தில் போர் வீரர்கட்கு இடையே இருந்தது போற்றத்தக்க தன்றே? கேள்விகள் 1. இராபர்ட் எப்படிப் பட்டவர்? 2. சென்ற பெரும் போரில் அவர் செய்த தொண்டு யாது? 3. அவர் எந்த நாட்டில் இறந்தார்? 4. அவர் தமது முதுமைப் பருவத்தில் பிரான்சுக்குப் போகவேண்டிய காரணம் யாது? 5. நீ இக்கதையில் அறிவது யாது? 4. போகிப் பண்டிகை கந்தன் மூன்றாம் வகுப்பு மாணவன். வள்ளி நான்காம் வகுப்பு மாணவி. கந்தன் வள்ளியின் தம்பி. இருவரும் போகிப் பண்டிகையன்று இரவு பழைய முறம் முதலியவற்றைக் கொளுத்த வேண்டும் என்று முதல் நாள் பேசிக்கொண்டனர். அவர்கள் தாயார் ‘நாளை இரவு நான் வெளியே சென்று திரும்பிய பிறகு பழைய பொருள்களைக் கொளுத்தலாம் ‘என்று சொன்னார். மறுநாள் இரவு தாயார் வெளியே சென்றிருந்தார். பிள்ளைகள் இருவரும் இரவு எட்டு மணிவரை தாயாரை எதிர்பார்த்தனர். தாயார் வரவில்லை. அதனால் அவர்கள் தாங்களே பழைய பொருள்களைப் போட்டுக் கொளுத்தலாயினர்; பழைய முறம், பழைய துடைப்பம், பழைய கூடை, பழைய சல்லடை, பழைய காகிதங்கள், பழைய செத்தைகள் முதலியவற்றை ஒன்றாக அடுக்கிக் கொளுத்தினர். நெருப்புக் கொழுந்துவிட்டு எரியலாயிற்று. பிள்ளைகள் கூத்தாடலாயினர். தீ மிகுதியும் எரியத் தொடங்கியது. அதனால், அவர்கள் சிறிது அச்சமும் கொண்டார்கள். நெருப்பை அணைக்க அவர்களால் முடியவில்லை. அந்நிலையில் வள்ளியின் பாவாடை நுனியில் திடீரொனப் தீப்பிடித்தது. வள்ளி ‘ஓ’என்று கூக்குரல் இட்டாள். கந்தன் உதவிக்குச் சென்றான். அவனுக்கு என்ன செய்வதென்பது விளங்கவில்லை. நல்ல காலம்! வீட்டுக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கந்தன் ஓடிக் கதவைத் திறந்தான். அவர்கள் தாயார் வந்துவிட்டார். அவர் வள்ளியைக் கண்டு அலறினார்; உடனே அவளைக் கம்பளத்தால் வரிய வரியச் சுருட்டித் தீயை அணைத்தார். வள்ளிக்குச் சில புண்கள் ஏற்பட்டன. அவள் போகிப் பண்டிகையன்று நல்ல பாடம் கற்றுக் கொண்டாள். அது என்ன பாடம்? கேள்விகள் 1. பிள்ளைகள் போகியன்று என்ன செய்ய விரும்பினர்? 2. தாயார் என்ன சொன்னார்? 3. தாயார் இல்லாத போது பிள்ளைகள் என்ன செய்தார்கள்? 4. வள்ளி அடைந்த துன்பம் யாது? 5. தாயார் எப்பொழுது வீட்டிற்கு வந்தார்? 6. அவர் வராவிடில் என்ன நடந்திருக்கும்? 7. வள்ளி கற்றுக்கொண்ட பாடம் யாது? 5. உயிர்ப் படகு இங்கிலாந்தில் ‘யார்க்ஷயர்’ என்று ஓர் இடம் உண்டு. அங்குள்ள கடற்கரையில் செம்படவர்கள் வசித்து வருகிறார்கள். ஒரு நாள் அவர்களில் சிலர் மீன் பிடிக்க சென்றனர்..அவர்கள் திரும்பிவரும் பொழுது வானம் இருண்டது; இடி முழக்கம் செய்தன. அலைகள் கொந்தளித்தன. மீன் படகுகள் கடலில் தத்தளித்தன. இடர் நேரங்களில் உதவக்கூடிய ‘உயிர்க்காவற்படகு’ கரையில் இருந்தது. அதனைக் கடலில் விட்டுச் செலுத்திச் சென்றால் மீன்படகில் இருப்பவரை மீட்டு வரலாம். ஆனால் இக் கொந்தளிப்பில் துணிந்து கடல் மீது செல்பவர் யார்? என்று கரையில் கூடியிருந்த மக்கள் பேசிக்கொண்டனர். அந்த சமயத்தில், ‘பேசுவதிற் பயன் இல்லை செய்கையே இப்பொழுது வேண்டுவது ‘என்று பதினாறு வயதுடைய இளமங்கை ஒருத்தி கூறினாள். உடனே எல்லாரும் அவளை உற்றுப் பார்த்தனர். அவள் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்தவள்; படகைச் செலுத்துவதில் பயிற்சி பெற்றவள். அவள் உயிர்க்காவற் படகை அவிழ்த்தாள். மற்றவர்கள் அவளுக்கு உதவியாக இருந்து, அப்படகைக் கடலில் மிதக்கவிட்டனர். இளமங்கை அதைச் செலுத்தினாள்; கடல் அலைகளோடு போராடினாள்; முடிவில், கடலில் தவித்துக்கொண்டிருந்த செம்படவரை அடைந்தாள். உயிர்க்காவற் படகு கரைக்கு வந்தது. செம்படவர் அனைவரும் அம்மங்கையை மனமார வாழ்த்தினர்; அவளது துணிச்சலைப் பாராட்டினர்; அவள் காப்பாற்றிய செம்படவர்தம் மனைவிமார் அம்மங்கைக்குத் தம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். கேள்விகள் 1. யார்க்ஷயர் என்பது யாது? எங்கே இருக்கிறது? 2. செம்படவர் ஏன் கரைக்கு வர முடியவில்லை? 3. கரையில் இருந்தவர் என்ன பேசிக்கொண்டனர்? 4. இளமங்கை என்ன சொன்னாள்? 5. அவள் என்ன செய்தாள்? 6. செம்படவர் யாரால் காக்கப்பட்டனர்? 7. நீ இக்கதையில் அறிவது யாது? 6. நாயும் பாம்பும் குமரன் தகப்பனார் தமது ஊரில் பெரிய பணக்காரர். அவர் நாய் ஒன்றை வளர்த்துவந்தார். ஒரு நாள் மாலை அவர் தோட்டத்திற்குச் சென்றார். நாய் அவரைப் பின்பற்றிச் சென்றது. அது மழைக்காலம் ஆதலால் எங்கும் தண்ணீர் தேங்கிக் குட்டைகளாவும் குளங்களாகவும் காட்சி அளித்தது. புற்கள் உயரமாக வளர்ந்து காற்றில் அசைந்து ஆடிக்கொண்டு இருந்தன. காற்று இன்பமாக வீசிக்கொண்டு இருந்தது. நாய் அப்புல்வெளியில் மகிழ்ந்து ஓடியது; குதித்துக் குதித்து ஓடியது. அப்பொழுது சில குழிமுயல்கள் வெளியே வந்து விளையாடிக்கொண்டு இருந்தன. நாய் அவற்றைக் கண்டது; அவற்றைப் பிடிக்க எண்ணி ஓடியது. நாயைக் கண்ட முயல்கள் திடீரெனத் தத்தம் வளைகளில் பதுங்கிக்கொண்டன. குமரன் தகப்பனார் மேலும் நடந்து சென்றார். நாயும் அவரைத் தொடர்ந்து சென்றது. அஃது ஓர் இடத்தில் அவரைத் தாண்டி முன் நோக்கி ஓடியது. புல் நிறைந்த ஒற்றை அடிப்பாதையில் அழகிய நீண்ட பாம்பு ஒன்றைக் கண்டது; அதனோடு விளையாட எண்ணித் தன் ஒரு காலைத் தூக்கியது. அவ்வளவே! பாம்பு படம் எடுத்துச் சீறி வந்தது. எதிர்பாராத காட்சியைக் கண்ட நாய் திடுக்கிட்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து குமரன் தகப்பனாரிடம் சென்றது. அது பாம்பின் படத்தையும் சீற்றத்தையும் கண்டு அஞ்சிவிட்டது. கேள்விகள் 1. குமரன் தகப்பனார் வெளிச்சென்றபோது அவர் பின்னே சென்றது எது? 2. அவர் போன இடத்துக்காட்சி எப்படி இருந்தது? 3. நாயின் முதல் முயற்சி யாது? 4. அஃது ஏன் கைகூடவில்லை? 5. அதன் இரண்டாம் முயற்சி யாது? 6. அஃது ஏன் கைகூடவில்லை? 7. அதற்குப் பிறகு நாய் என்ன செய்தது? ஏன்? 8. நீ இக்கதையால் அறிவது யாது? 7. போர்வீரன் மகன் கோபாலன் ஐந்தாம் வகுப்பு மாணவன். அவன் தகப்பனார் போர் வீரர். அவர் அரேபியாவுக்குச் சென்று பகைவரோடு சண்டை இட்டவர். அவர் தம் வேலையிலிருந்து விலகி ஓய்வு பெற்றுக்தொண்டார்; அவருக்கு மாதம் ஐம்பது ரூபாய் ஓய்வுச் சம்பளம் வந்துகொண்டு இருந்தது. அவர் தமது பழைய வாழ்க்கை நிகழ்ச்சியைப் பல கதைகளாகச் சொல்வது வழக்கம். அவர் அரேபியா, துருக்கி, எகிப்து முதலிய நாடுகளைப் பற்றியும் நாட்டவரைப்பற்றியும் பல கதைகள் சொல்வதுண்டு. போர் வீரர்களைப் பற்றிய வியப்பூட்டும் கதைகள் பலவும் சொல்வது வழக்கம். கோபாலன் அக்கதைகளைக் கேட்டுக் கேட்டுத் தெளிந்த அறிவை அடைந்தான். அவன் தானும் ஒரு போர் வீரனாக ஆதல் வேண்டும் என்று விரும்பினான். அதனால் அவன் நாள்தோறும் தனது வீட்டுத் தோட்டத்தில் உடற்பயிற்சி செய்யலானான்; மற்ற ஓய்வு நேரங்களில் தன் அறைக்குள்ளேயே வீரன் நடப்பதைப் போலவும், வீரன் பேசுவதைப் போலவும் செய்து பழகினான். ஒருநாள் அவனது பள்ளிக்கூடத்திற்குப் பள்ளிக் கண்காணிப்பாளர் வந்தார். அவர் கோபாலனைப் பார்த்து ஏதோ கேள்வி கேட்டார். கோபாலன் எழுந்து வீரனைப் போல நின்றான்; வீரன் பேசுவதைப் போல விடையளித்தான். கண்காணிப்பாளர் அவன் மீது அன்பு கொண்டார்; ‘தம்பி, நீ உனது எதிர்கால வாழ்வில் சிறந்து விளங்குவாய் ‘என்று கூறினார். கோபாலன் பெரியவன் ஆனதும் சிறந்த போர்வீரன் ஆனான். கேள்விகள் 1. கோபாலன் தன் தகப்பனாரிடம் கேட்டறிந்தவை யாவை? 2. அவன் யாரைப் போலச் செய்து பழகினான்? 3. கண்காணிப்பாளர் அவனிடம் யாது கூறினார்? 4. அவர் கூறியது உண்மை ஆயிற்று? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 8. கழுதைச் சவாரி முனியன் ஐந்தாம் வகுப்பு மாணவன். அவன் ஒழுங்காகப் பள்ளிக் கூடம் போவது இல்லை; பள்ளிக்கூடநேரத்தில் எங்கேனும் விளையாடுவான்; உணவு நேரத்தில் வீட்டுக்குச் சென்று மீள்வான்; மீண்டும் மாலை வரை விளையாடுவான்; சாயுங்காலம் வீடு திரும்புவான். அவன் ஒருநாள் தன் புத்தகங்களை எடுத்துக் கொண்டு ஆற்றோரம் சென்றான். ஆற்றில் வண்ணார் துணிகளைத் துவைத்துக்கொண்டு இருந்தனர். கழுதைகள் மேய்ந்துகொண்டு இருந்தன. முனியன் கழுதையைப் பிடித்து, அதன் மீது ஏறிக்கொண்டான். அக்கழுதை மிரண்டு ஊருக்குள் ஓடியது; முனியனால் கழுதையை அடக்கமுடியவில்லை.தெருச் சந்தியில் இருந்த போலிஸ்காரன் முனியனையும் கழுதையும் பிடித்துக்கொண்டான்; போலிஸ் நிலையத்தில் இருவரையும் அடைத்துவிட்டான். அன்று மாலை ஆறு மணி இருக்கும். முனியன் தகப்பனார் தன் மகன் காணப்படவில்லை என்று போலிஸ் நிலையத்தில் அறிவிக்க வந்தார். அதே நேரத்தில் வண்ணான் ஒருவன் தன் கழுதை காணப்படவில்லை என்று குறை கூறினான். போலிஸ் கண்காணிப்பாளர் முனியனையும் கழுதையையும் கொண்டு வந்து நிறுத்தினார். முனியன் தன் தகப்பனாரைப் பார்த்து வெட்கித் தலை குனிந்தான். வண்ணான் முனியனது குறும்பைக் கேட்டு நகைத்துச் சென்றான். முனியன் அந்த மானக் கோட்டை மறக்கவே இல்லை. அவன் மறுநாள் முதல் ஒழுங்காகப் பள்ளிக்கூடம் சென்று வந்தான்; பெற்றோர் மகிழ நடந்துவந்தான். சுருங்கக் கூறினான், கழுதை சவாரியால் அவன் நல்லறிவைப் பெற்றான் என்னலாம். கேள்விகள் 1. முனியன் எப்படிப்பட்ட மாணவன்? 2. அவன் ஒருநாள் எங்குப் போனான்? அவன் என்ன செய்தான்? 3. அவன் ஏன் போலிஸ் நிலையத்தில் அடைக்கப்பட்டான்? 4. அவன் எப்படி விடுதலை அடைந்தான்? 5. அவன் நல்லறிவு பெற்றது எப்படி? 6. நீ அவனைப்பற்றி என்ன நினைக்கிறாய்? 9. அறிவுள்ள நாய் மங்கலம் நான்காம் வகுப்பு மாணவி. அவள் தகப்பனார் பெங்களூரில் இருந்து சீமைநாய் ஒன்றை வாங்கிவந்தார். அந்நாய் சிறந்த அறிவுடையதாக இருந்தது. அது வீட்டை நன்றாகக் காவல் காத்து வந்தது; குறிப்பு அறிந்து நடப்பதில் சிறந்து காணப்பட்டது. ஒருநாள் மங்களம் தகப்பனார் மழையில் நனைந்து வீடு வந்து சேர்ந்தார். அவர் தம் நனைந்த குடையைத் தெருக் கூடத்திலேயே வைத்துவிட்டு உள்ளே சென்றார். நாய் அதனை நோக்கியது. பிறகு சிறிது நேரம் கழிந்ததும் மழை நின்றது. தகப்பனார் வழக்கம்போலத் தன் மனைவியை அழைத்துக்கொண்டு உலாவச் சென்றனர். அப்பொழுது மழை இல்லாததால், அவர் குடையை எடுத்துச் செல்லவில்லை. நாயும் வழக்கம்போல அவர்களோடு சென்றது. ஆனால், வழியில் திடீரென மழை வந்தவிட்டது. இருவரும் ஓர் ஆலமரத்தடியில் நின்றனர். ஒரு மணி ஆயிற்று. மழை நின்றபாடில்லை. அது கடுமையாகப் பெய்தது. வானம் இருண்டது; மின்னல் பளிச்சென்று தோன்றி மறைந்தது. இருவரும் மழையில் பெரும்பாலும் நனைந்துவிட்டனர். மழை நில்லாததால், அவர்கள் வீடு நோக்கிப் புறப்பட்டனர்; தம்முடன் வந்த நாயைத் தேடினர். அது காணப்படவில்லை. அவர்கள் சிறிது தொலை மழையில் நனைந்து சென்றனர். அப்பொழுது அவர்கட்கு எதிரே நாய் ஓடிவருவதைத் கண்டனர். ஆ! என்ன வியப்பு! அந்நாய் தம் குடையை வாயில் கௌவிக்கொண்டு வருவதைத் தகப்பனார் கண்டார். அவருக்கு உண்டான வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. அந்நாய் அறிவுள்ளது அன்றே? கேள்விகள் 1. நாய் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? 2. பெற்றோர்எங்கு அகப்பட்டுக்கொண்டனர்? அப்பொழுது நாய் எங்குப் போயிற்று? ஏன்? 3. நாயின் அறிவுள்ள செயல் யாது? 4. இக்கதையால் அறிவது யாது? 10. இளந் தாதி கலைமகள் பத்து வயதுடைய சிறுமி. அவன் ஐந்தாம் வகுப்பு மாணவி. அவள் வீட்டில் வேலைக்காரி இல்லை. அதனால் அவள் தன் தாயாருக்குத் துணையாக இருந்து வீட்டு வேலைகளைக் காலை-மாலைகளில் செய்துவந்தாள். அவள் அத்துடன் தன் சிறிய தம்பியைத் தூக்கிவைத்துக்கொண்டு இருப்பதும் வழக்கம். கலைமகள் காலை நான்கு மணிக்கு எழுவாள்; ஐந்துவரை தன் பாடங்களைப் படிப்பாள்; பிறகு ஏனங்களைத் துலக்கி, வீட்டைத் தூய்மை செய்வாள்; வெந்நீர் வைப்பாள்; எல்லோரும் நீராடியபின், காலை உணவுக்கு வேண்டியவற்றைச் செய்வாள். அவள் மாலை நேரங்களில் தன் தம்பியைத் தூக்கிக் கொள்வாள்; அவன் ஓர் ஆண்டுக் குழந்தை. அவன் தோட்டத்தைக் காட்டி அழுவான். கலைமகள் அவனை தோட்டத்திற்குத் தூக்கிச் செல்வாள்; மலர்களைப் பறித்துத் தருவாள். அச்சிறுவன் மலர்களைப் பார்த்ததும் அழுகையை நிறுத்துவான். மலர் மலர்ந்திருப்பது போல அவன் முகமும் மலரும். அவன் அழகிய படங்களைப் பார்த்தாலும் அழுகையை நிறுத்துவான். அவன் கலைமகள் மீது அளவற்ற அன்புடையவன். அவள் இல்லாத நேரம் அவனுக்கு துன்பமாகத் தோற்றும். அவன் மாலை ஐந்து மணி ஆனதும் அவளது வரவை நோக்கித் தெருவாயிலில் உட்கார்ந்திருப்பான்; அவளைக் கண்டதும் கைகொட்டி நகைப்பான். அவனைக் கண்டதும் கலைமகள் மகிழ்ச்சி அடைவாள்; அவனைச் சுமந்து திரிவதில் அவள் சலிப்படைவதே இல்லை. அதனால், அவளுடைய வகுப்புப் பெண்கள் அவளை ‘இளந் தாதி’என்று அழைத்தனர். கேள்விகள் 1. கலைமகள் எவ்வாறு தன் தாய்க்கு உதவியாக இருந்தாள்? 2. அவள், தம்பி செய்த தொண்டு யாது? 3. அவளை யார் ‘இளந் தாதி’என்று அழைத்தனர்? 4. அதன் பொருள் யாது? 5. நீ கலைமகளைப் பற்றி என்ன நினைக்கிறாய்? 11. தேன் துளி ஒரு நாள் கரடிக்குட்டி ஒன்று தேனீ பறப்பதைக் கண்டது. அது தேனீ தேன் கூடு கட்டும் என்பதை முன்னரே அறிந்திருந்தது போலும்! அதனால், அது அதனை விடாமல் தொடர்ந்து ஓடியது. தேனீ பறந்து சென்றது. கரடிக்குட்டி தரையில் ஒடியது. இவை இரண்டும் ஓட்டப் பந்தயம் நடத்துவன போலக் காணப்பட்டன. முடிவில் தேனீ ஒரு மரத்தடியில் நின்றது. அங்கு வேறுபல தேனீக்களும் இருந்தன. அவற்றைக் கண்டதும் கரடிக்குட்டி அம்மரத்திற்றான் தேன்கூடு இருந்தல் வேண்டும் என்று முடிவுசெய்தது. அதனால் அக்குட்டி மெல்ல அம்மரத்தின் மீது ஏறியது; நீண்ட தொலை ஓடிவந்த களைப்பால் மரத்தின் மீது ஏறக்கூடவில்லை. அதனால், அது தழைகள் அடர்ந்த கிளை மீது ஓரிடத்தில் அமர்ந்து களைப்பாறியது. ஆனால், அக்குட்டி உட்கார்ந்திருந்த இடமே தேனீக்கள் கூடுகட்டி இருந்த இடமாகும். குட்டி அதன் மீது உட்கார்ந்ததைக் கண்டு சினங்கொண்ட தேனீக்கள் பலவும் வந்து கரடிக்குட்டியின் முகத்தில் வன்மையாகக் கொட்டின. குட்டி அவற்றை அப்புறப்படுத்த முயன்றபோது நிலை தளர்ந்து, ‘தடா’லென்று கீழே விழுந்தது. அந்தோ! அக்குட்டி வலி பொறாது தான் இருந்த கிளையை நோக்கி அழுதது. அப்பொழுது அதன் பாரம் பொறாமல் இளகிய தேன் கூட்டிலிருந்து ஒரு துளி தேன் கரடிக்குட்டியின் வாயில் விழுந்தது. ஆ! அத்தேன் துளியைச் சுவைத்த குட்டி, தன் உழைப்புக்கு ஏற்ற பயன் கிடைத்தது என்று எண்ணி மகிழ்ந்தது. கேள்விகள் 1. கரடிக்குட்டி ஏன் தேனீயைத் துரத்திச் சென்றது? 2. கரடி ஏன் மரத்தின்மேல் ஏறியது? 3. அது ஏன் கீழே விழந்தது? 4. அதன் முயற்சி எவ்வாறு பயன் அளித்தது? 12. மங்கல முடிபு ஒரு முறை ஆங்கிலேயருக்கும் செர்மனியருக்கும் போர் நடந்தது. அப்போரில் மணமாகாத இளைஞர் பலர் ஈடுபட்டு இருந்தனர். மேரி என்பவள் ஓர் ஆங்கிலப் பெண்மணி. அவள் மணம் ஆகாதவள். அவள் ஓர் இளைஞனை மணம் செய்து கொள்ள எண்ணி இருந்தாள். அக்காதலன் போருக்குச் சென்றிருந்தான். மேரி தன் காதலன் வரவை நாடோறும் எதிர்பார்த்து இருந்தாள்; அவன் கேடின்றித் திரும்பி வரவேண்டும் என்று கடவுளைத் தொழுதுவந்தாள். ஒரு நாள் அவள் ஓர் ஆற்றங்கரைக்குச் சென்றாள். அங்குச் சில ஆங்கில வீரர் போர்க்கோலத்துடன் இருந்தனர். மேரி அவர்களுள் ஒருவனைக் கண்டு தன் காதலனைப் பற்றிக் கேட்டாள். அவ்வீரன், ‘உன் காதலன் சென்ற படை அழிந்துவிட்டது ‘என்றான். அம்மொழி மேரிக்கு மயக்கத்தை உண்டாக்கியது. அவன் இடியோசை கேட்ட நாகம் போல் ஆனாள்; தன் காதலன் இறந்த பிறகு தான் உயிருடன் இருத்தல் ஆகாது என்று எண்ணினாள்; உடனே அருகில் இருந்த ஆற்றில் குதித்தாள். அவள் குதித்ததைக் கண்ட ஒரு வீரன் அவளை மீட்கும் பொருட்டுத் தானும் குதித்தான்; அவள் கூந்தலைப் பற்றிக் கரைக்குக் கொண்டுவந்தான். மேரி ‘இதுவும் கடவுள் செயலே ‘என்று எண்ணி வீடு போய்ச் சேர்ந்தாள். அவள் அன்றுமுதல் தன் காதலன் உயிருடன் இருக்கிறான் என்பதை உறுதியாக நம்பினான். ஒரு நாள் அவள் இங்கிலாந்து மருத்துவ நிலையத்துக்குச் சென்றாள்; அங்கு மருத்துவம் பெற்று வந்த வீரர்களைப் பார்வை யிட்டாள். அவ்வாறு ஒவ்வொருவராகப் பார்த்து வந்தவள். ஒரு வீரனைக் கண்டதும், திடீரென கூவினாள். அவ்வீரனே அவள் கருத்தைக் கவர்ந்த காதலன். மேரி அவனைக் கண்டு மகிழ்ச்சி கண்ணீர் வடித்தாள். கேள்விகள் 1. மேரி, காதலனை நினைந்து என்ன செய்து வந்தாள்? 2. அக்காதலன் எங்குச் சென்றிருந்தான்? 3. அவள் ஏன் ஆற்றில் குதித்தாள்? 4. அவள் மருத்துவ நிலையத்துக்குச் சென்றதேன்? 5. அங்கு அவள் யாரைக் கண்டாள்? 6. நீ மேரியைப் பற்றி என்ன நினைக்கிறாய்? 13. நாய் அளித்த விருந்து இங்கிலாந்தில் உள்ள சிற்றூர் ஒன்றில் இருந்த நாய் ஒன்று காட்சிச் சாலையில் பரிசு பெற்றது. அப்பரிசின் தொகை ஐம்பது பவுன் ஆகும். அந்நாய்க்கு உரியவர் பெரிய பணக்காரர். ஆதலின், அவர் அந்த ஐம்பது பவுனையும் அவ்வூர் பிள்ளைகட்கு விருந் தளிப்பதில் விரும்பினார். பரிசு பெற்ற மறுநாள் அவர் மாளிகை அழகு செய்யப்பட்டு இருந்தது. வாயிற்படியில் நாய் நின்று கொண்டு இருந்தது. அதன் கழுத்தில் அந்த நன்னாளைக்கு உரிய பட்டுப் பட்டை ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அவரும் அதன் அருகில் நின்றுகொண்டிருந்தார். அவ்வூர்ச் சிறுவரும் சிறுமியரும் குறித்த நேரத்தில் வந்தனர். ஒவ்வொருவர் வரும்பொழுதும் நாய் வாயிலில் நின்று அவர்களை வரவேற்பது போலக் குரைத்தது. அது தன் ஒரு காலைத் தூக்கி ஒவ்வொருவர் கையையும் பற்றிக் குலுக்கி வரவேற்றது. ஒவ்வொருவர் முன்னும் ரொட்டித் துண்டுகளும் பிஸ்கட்டுகளும் வேறு சில தின்பண்டங்களும் வைக்கப்பட்டு இருந்தன. நாய், ‘எல்லோரும் உண்ணலாம் ‘என்பதை அறிவிப்பது போலக் குரைத்துத் தன் முன் வைக்கப்பட்ட தின்பண்டங்களைத் திண்ணத் தொடங்கியது. பின்னர் எல்லோரும் விருந்துண்டனர். விருந்துண்ட பிறகு, பணக்காரர் ஒவ்வொருவருக்கும் தம் நாயின் புகைப்படத்தைக் கொடுத்தார். அவர்கள் அப்படத்தை அன்போடு பெற்று மகிழ்ந்தனர்; இறுதியில் விருந்தினர் அனைவரும் நாயினிடம் விடைபெற்றுச் சென்றனர். நாய் அவர்கட்கு நன்றி கூறுவது போலத் தன் வாலை அசைத்துக் குரைத்தது. கேள்விகள் 1. பணக்காரர் விருந்திடக் காரணம் யாது? 2. நாய் எப்படி விருந்தினரை வரவேற்றது? 3. அது எப்படி விருந்துண்டது? 4. அது எப்படி நன்றி கூறியது? 5. விருந்தினர் விருந்தின் முடிவில் எதனைப் பெற்றனர்? 14. தென் துருவம் உலகத்தின் வடகோடி வடதுருவம் எனப்படும்; தென் கோடி தென் துருவம் எனப்படும். தென் கோடியைக் காண ஆங்கில அறிஞர் சிலர் புறப்பட்டனர். அவர்கட்குத் தலைவர் ஸ்காட் என்பவர். அவர்கள் கடலைக் கப்பல் உதவியால் கடந்தனர்; பிறகு கடல் நீர் உறைந்து கிடந்ததால், அவர்கள் பனிக்கட்டிகள் மீது நடந்து சென்றனர். அம்முயற்சியில் அவர்கள் பட்ட துன்பங்கள் பல. புயல் காற்றுப் பலமாக வீசியது; தாங்க முடியாத குளிர் ஒரு பக்கம்; பனிக்கட்டிப் பாறைகளைக் கடக்க வேண்டியவர்ஆனார். அவர்கள் இத்துணைத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு, குறித்த இடத்தை அடைந்தனர்; தங்கள் வெற்றிக்கு அறிகுறியாக அத் தென் துருவத்தில் பிரிட்டிஸ் கொடியை நட்டுப் பறக்கவிட்டார். பின்னர் அவ்வீரர்கள் தங்கள் வழியே திரும்பினர். அவர்கள் திரும்பி வரும்பொழுது ஒவ்வொருவராக நோய் கண்டு வழியிலேயே இறக்கத் தலைப்பட்டனர். அதனால் இறுதியில் இரண்டு பேரே எஞ்சினர். ஆனால் அவர்களும் உயிரோடு திரும்பிப்போகக் கூடவில்லை. அதனால் தலைவர் ஸ்காட் என்பவர் தாம் தென் துருவம் பயணத்தைப்பற்றிய குறிப்புகளை எல்லாம் எழுதி ஓரிடத்தில் கருத்தோடு வைத்துவிட்டார். பாவம்! அவரும் அத்துருவ நாட்டிலேயே காலமானார். பல நாட்களுக்குப் பிறகு அவர்களைத் தேடிச் சென்றவர்கள் ஸ்காட் எழுதியவற்றைக் கண்டனர்; ஆனால் தென் துருவத்தைக் கண்டுபிடித்த வீரர்களை உயிருடன் காணவில்லை. அவ்வீரர்கள் பனிக்கட்டிகள் மீது அடித்திருந்த கூடாரத்தில் பிணமாகக் கிடந்தனர். கேள்விகள் 1. வடதுருவம், தென் துருவம் என்பன யாவை? 2. தலைவர் ஸ்காட் என்பவர் யாவர்? 3. அவர்கள் பட்ட துன்பங்கள் யாவை? 4. அவர்கள் எதைக் கண்டுபிடித்தனர்? 5. ஸ்காட் என்ன எழுதி வைத்தார்? அதனைக் கண்டவர்கள் யார்? 6. ஸ்காட் முதலியோர் இறந்துவிடக் காரணம் யாது? 7. நீ இக்கதையால் அறியும் படிப்பினை யாது? 15. குரங்குகளின் குறும்பு ஓர் ஆங்கிலேயர் ஆப்பிரிக்காவிலிருந்து இரண்டு குரங்குகளை இலண்டனில் உள்ள தம் மாளிகைக்குக் கொண்டுவந்தார். அவர் அவற்றை அன்போடு வளர்த்துவந்தார். அவையும் அவருடன் அன்பு பூண்டொழுகின. ஆயினும், அவை தமக்கு இயல்பாக உள்ள குறும்புச் செயல்களை விட்டில. ஒருநாள் அவர் தமது அறக்கதவை மூடாமல் வெளிச் சென்றார். அப்பொழுது ஒரு குரங்கு அவரது மேசைமீது ஏறி உட்கார்ந்தது. மேசைமீது மைக்கூடு திறந்து வைக்கப்பட்டு இருந்தது. அதன் அருகில் வெண்ணிறத் தாள்கள் பல இருந்தன. கனவான் மையைத் தொட்டுத்தாளில் எழுதுவதைக் குரங்குகள் பார்த்துக்கொண்டிருந்தன. ஆதலால், ஒரு குரங்கு தானும் அவ்வாறு எழுத ஆசைப்பட்டது.அது உடனே தன் கைவிரலை மையில் தோய்த்துக் காகிதங்கள் மீது கிறுக்கியது. மை மேசைமீது பல இடங்களில் சிந்தியது. இச்செயலைக் கண்ட இரண்டாம் குரங்கு முன்ன தன் மீது சினங் கொண்டது; தன் தலைவருடைய காகிதங்களையும் மேசையையும் பாழாக்கிய அக் குரங்கை ஒறுக்க விரும்பியது. அதனால், அது மைக்கூட்டை எடுத்து அக்குரங்கின் முகத்தை நோக்கி வீசியது. அது நல்ல எண்ணங்கொண்டு செய்த அச்செயலால், சுவர், புத்தகங்கள், தலைவருடைய உடைகள் முதலியவற்றின் மீதெல்லாம் மை பட்டுவிட்டது. முதல் குரங்கின் உடம்பெல்லாம் மையாகி விட்டது. இவற்றை எல்லாம் மையாகி விட்டது. இவற்றை எல்லாம் மறைவில் இருந்து நோக்கிக் கொண்டிருந்த ஆங்கிலேயர் கைகொட்டி நகைத்தார். உடனே குரங்குகள் அறையை விட்டு ஓடிவிட்டன. கேள்விகள் 1. முதற் குரங்கு செய்த குறும்பு யாது? 2. இரண்டாம் குரங்கு ஏன் மைக் கூட்டை எறிந்தது? 3. அதனால் உண்டான தீமை யாது? 4. நீ எந்த குரங்கை விரும்புகிறாய்? 5. ஆங்கிலேயர் ஏன் கைகொட்டி நகைத்தார்? 16. கடற் கண்ணிகள் கடல் அலைகள் கொந்தளித்துப் பேர் இரைச்சல் இட்டன. வானம் இருண்டது. புயல்காற்றுக்கு அறிகுறியாகப் பெருங்காற்றுக் கிளம்பி வீசியது. அப்பொழுது கடற்கரை ஓரத்தில் இருந்த சிறிய குடிசைகளுள் ஒன்றில் ஓர் இளமங்கை அமர்ந்திருந்தாள். அவள் அருகில் கிழவன் ஒருவன் நோயுற்றுப்படுத்திருந்தான். அக்கிழவன், ‘ஐயோ! புயல் காற்று அடிக்கப்போகிறது. என் கடற்கண்ணிகள் பாழாகிவிடுமே! ’என்று கூறிக்கொண்டே புரண்டு படுத்தான். அப்பொழுது அம்மங்கை அவனை நோக்கி, ‘அப்பா, கவலைப்படதே. நான் சென்று அவற்றைக் கொண்டுவருவேன்’என்றள். பதினாறு வயதுடைய அம்மங்கை நேராகச் சென்று தன் தந்தையின் படகு இருந்த இடத்தை அடைந்தாள்; அதை அவிழ்த்துக் கடலில் விட்டாள். அவளது செயலைக் கண்ட மற்றவர் “நீ இக்கடலில் போவது தவறு. புயல் அடிக்கப்போகிறது”என்று அறிவு கூறினர். ஆயினும், மங்கை தன் படகை ஓட்டினாள்; பொங்கி எழுந்த அலைகளோடு போராடினாள்; தன் தகப்பன் மீன் பிடிக்க ஆங்காங்குப் போட்டிருந்த கடற்கண்ணிகள் எல்லாவற்றையும் எடுத்துப் படகில் வைத்துக்கொண்டாள்; கரை நோக்கித் திரும்பினாள். திரும்பும்பொழுது, வானம் இருண்டு முகில் கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று ‘தடதட’என்று இடித்துக்கொண்டன. காற்று ‘விர்’ என்று வீசியது. அலைகள் கொந்தளித்தன. ஆயினும், மங்கை அஞ்சாமல் தன் படகை அமைதியாகச் செலுத்திக் கரையை அடைந்தாள். அவளைப் போகவேண்டா என்று தடுத்தவர்கள் கைதட்டி அவளை வரவேற்றனர்; அவளது ஆற்றலைப் பாராட்டி மகிழ்ந்தனர். கேள்விகள் 1. மங்கையின் தந்தை மனக்கவலை யாது? 2. மங்கையின் வீரச்செயல் யாது? 3. புயல் காற்று வருமுன் காணப்படும் குறிகள் எவை? 4. நீ இக்கதையால் அறியும் படிப்பினை யாது? 17. கிளியின் அறிவு இட்டாலி நாட்டில் பல ஆண்டுகட்குமுன் நில அதிர்ச்சி உண்டானது. அதனால் ஒரு நகரமே அழிந்துவிட்டது. அந்நகர மக்கள் கட்டடச் சுவர்கட்கு அடியில் அகப்பட்டுக் கொண்டனர்; பலர் இறந்தனர்; சிலர் குற்றுயிரோடு தவித்தனர். இட்டாலிய வீரர்கள் கட்டிடச் சிதைவுகளை அப்புறப்படுத்தி, நகர மக்களைக் காப்பாற்றும் நற் பணியில் ஈடுபட்டனர். ஒரு வீட்டின் சிதைவுகளை அப்புறப்படுத்தும் பொழுது, ஒருவித மெல்லிய ஓசை கேட்டது. உடனே வீரர்கள் விரைவாகச் சிதைவுகளை அப்புறப் படுத்திப் பார்த்தனர்; ஒரு சுவரின் பகுதிக்கு அடியில் கிளிக்கூண்டு ஒன்றைக் கண்டனர். அதற்குள் இருந்த கிளி குற்றுயிரோடு கிடந்தது. அதுவே முன்னர் ஓசையிட்டது என்பதை வீரர் அறிந்தனர். அது வெளியில் எடுக்கப்பட்டதும் ‘டார்லிங்’என்று யாரையோ அழைத்தது. வீரர்கள் சற்றுநேரம் எண்ணிப் பார்த்தனர். பிறகு ஏதோ நினைத்தவராய் அங்குக் கிடந்த சிதைவுகளை மேலும் தோண்டி எடுத்தனர். ஆ! இறுதியில் அவ்வீரர்கள் எட்டு வயதுடைய சிறுமி மூர்ச்சையுற்றுக் கீழே கிடத்தலைக் கண்டனர். அவளைக் கண்ட கிளி ‘டார்லிங்’என்று அழைத்துக் கொண்டே அவள் மீது சென்று உட்கார்ந்தது. வீரர்கள் அச்சிறுமிக்கு உதவி புரிந்து மூர்ச்சை தெளிவித்தனர். இங்ஙனம் கிளியின் உதவியால் சிறுமி காப்பாற்றப் பட்டாள். தான் கிளியால் காப்பாற்றப்பட்டதை அறிந்த போது அச்சிறுமி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவுண்டோ? கேள்விகள் 1. நில அதிர்ச்சி என்பது யாது? 2. வீரர்கள் என்ன செய்தனர்? 3. கிளி எவ்வாறு காப்பாற்றப்பட்டது? 4. டார்லிங் எவ்வாறு மீட்கப்பட்டாள்? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 18. கழுதையின் வால் வண்ணான் வரதன் முடவன். அவன் ஆட்கள் சிலரை வைத்துக்கொண்டு துணிகளை வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தான். அவன்மீது இரக்கங்கொண்ட பலர் அவனிடமே அழுக்குத் துணிகளைப் போட்டுவந்தனர். அதனால், வரதனே அவர்கள் வீடுகட்குப் போகவேண்டியவன் ஆனான். அவன் ஒரு நல்ல கழுதையை வளர்ந்து வந்தான். அவன் அதற்குத் தீனி நிறையப் போட்டுக் கொழுக்க வைத்திருந்தான். அதனால் அது சுமை மிகுந்த பொதிகளைச் சுமந்து சென்றது. வரதன் ஒரு கையால் அதன் வாலைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையைத் தரையில் ஊன்றி ஒருவாறு தவழ்ந்து செல்வது வழக்கம். ஒரு நாள் வரதன் அழுக்கு மூட்டைகளைக் கழுதை மீது போட்டுக் கொண்டு ஊரை நோக்கி வந்து கொண்டு இருந்தான். அப்பொழுது திடீரென வானம் இருண்டது. முகிற்கூட்டம் ‘தடதட’ என்று இடித்துக் கொண்டன. பளிச்சென்று மின்னல் தோன்றியது. ‘சோ’என்று பெய்யத் தொடங்கியது. வரதன் கழுதையோடு ஆலமரத்து அடியில் ஒண்டினான். ஒரு மணி நேரம் கழித்து மழை நின்றது. பொழுதும் போய் விட்டது. இருள் எங்கும் கவிந்து கொண்டது. வழி எங்கும் சேறும் தண்ணீரும் நிறைந்திருந்தன. அந்தோ! வரதன் கழுதையின் வாலை உறுதியாகப் பிடித்துக் கொண்டு சேற்றில் தவழ்ந்து சென்றான். இருளில் வழி தெரியாமல் கழுதை ஒரு பெரிய பள்ளத்தில் விழுந்துவிட்டது. வரதன் அலறிக்கொண்டு பள்ளத்தில் உருண்டான். அவன் கழுதை வாலை விட்டுவிட்டான். நல்லவேளை! அவன் அலறிய ஓசை கேட்டுக் கழுதை அவனிடம் சென்றது. வரதன் அதன் வாலை இறுகப் பிடித்துக் கொண்டான். கழுதை தன் வலி கொண்ட மட்டும் முயன்று, அப் பள்ளத்திலிருந்து வெளியேறியது. வரதன் ‘பிழைத்தேன்’என்று கூறிப் பெருமூச்சு விட்டான். பயிற்சி 1. வரதன் வரலாற்றை சுருக்கி 16 வரிகளில் எழுது? 2. வரதனே தன் செய்தியைக் கூறுவது போலக் கூறு. 3. கழுதை தன் வரலாற்றைக் கூறுவது போலக் கூறு. 4. வரதன் நிலைமை—கழுதையின் உதவி—இடையூறு இவற்றைக் குறிப்புக்களாகக் கொண்டு இதனை மூன்று பாராக்களில் எழுது. 5. தவழ்ந்து, பெருமூச்சு, பிழைத்தேன், பளிச்சென்று, மற்றொரு, தட தட, அலறிக்கொண்டு-இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்து சொல். 6. மழையைப்பற்றி நீ அறிந்ததை 12 வரிகளில் எழுது. கேள்விகள் 1. வரதன் எதன் உதவியால் எப்படி வெளிச் சென்றான்? 2. ஒரு நாள் அவன் பட்ட துன்பம் யாது? 3. அவன் ஏன் குழியில் விழுந்தான்? 4. கழுதை அவனுக்குச் செய்த உதவி யாது? 5. நீ இக்கதையால் உணர்வது யாது? 19. அஞ்சாத இளைஞன் ஓர் ஆற்றங்கரையில் சிறிய பெல்ஜியப்படை ஒன்று இருந்தது. அதன் எதிர்ப்புறத்தில் பெரிய ஜெர்மன் படை ஒன்று போருக்குத் தயாராக இருந்தது. ஜெர்மன் வீரர் பெரிய பீரங்கிகளைப் போர் முனையில் வைத்துக் குறிபார்த்துக்கொண்டு இருந்தனர். அந்தப் பெரிய பீரங்கிகள் நீண்ட தொலை குண்டுகளைப் பொழியும் வலி உடையவை. அவை வேலை செய்யத் தொடங்கிவிடின், தம்மில் ஒருவரும் தப்ப முடியாது என்பதைப் பெல்ஜிய வீரர் நன்கு உணர்ந்தனர். அவர்கட்கு என்ன செய்வது என்பது தோன்றவில்லை. அப்பொழுது அவர்களுள் ஒருவன் ‘நான் இதைப் பார்த்துக்கொள்கிறோன்’என்று கூறினான். அவன் பதினெட்டு வயதுடைய இளைஞன். அவன் உடனே பதுங்கிச் சென்று, bஜர்மனியர்க்குப் பின் புறம் சென்றான்; அறுநூறு அடி தொலைக்கு அப்பால் இருந்த சுவர் மறைவில் நின்றான். அவ்வீரன் அங்கு இருந்துகொண்டு ஜெர்மன் வீரர்களைக் குறி பார்த்துச் சுட்டான். ஜெர்மன் வீரர் ஒவ்வொருவராக வீரன் குண்டுகட்கு இரைஆயினார். இறுதியில் இரண்டு ஜெர்மன் வீரரே எஞ்சினர். அவர்கள் பீரங்கியைப் பின்புறம் திரும்பிச் சுவரை நோக்கிச் சுட்டனர். அவ்வளவே; வீரனைக் காத்து நின்ற சுவர் ‘தடதட’என்று இடிந்து வீழ்ந்தது. வீரன் சுவரின் அடியில் சிக்கி மாண்டான். ஆயினும், ஏனைய பெல்ஜிய வீரர்கள் மிகுந்து இருந்த இரண்டு bஜர்மன் வீரர் மீதும் பாய்ந்தனர். அவ்விருவரும் தங்கள் பீரங்கிளை விட்டு ஓடிவிட்டனர். பீரங்கிகள் பெல்ஜியம் வீரர் வசம் ஆயின. கேள்விகள் 1. பெல்ஜிய வீரனது அருஞ்செயல் யாது? 2. அவன் எப்படி ஜெர்மனியரைக் கொன்றான்? 3. அவன் எவ்வாறு கொல்லபட்டான்? 4. நீ இக்கதையால் அறியும் நீதி யாது? 20. கந்தனும் கண்ணகியும் கண்ணகி மூன்று வயதுடைய சிறுமி. கந்தன் ஐந்து வயதுடைய சிறுவன். அவர்கள் இருவரும் எப்பொழுதும் சேர்ந்து விளையாடுதல் வழக்கம். கண்ணகி ஒருநாள் கந்தனுடன் தன் வீட்டுத் தோட்டத்திற்குச் சென்றாள். அத்தோட்டத்தில் ஒரு கிணறு புதிதாகத் தோண்டப்பட்டு மூன்றடி ஆழம் உடையதாக இருந்தது. இரண்டு பிள்ளைகளும் அக்கிணற்றண்டை உட்கார்ந்து “கூட்டாஞ் சோறு” சமைத்து விளையாடினர். பிறகு கற்களைக் கொண்டு ‘பொம்மை கொலு’வைத்து விளையாடினர்; பிறகு அக்கற்களை எடுத்துக் கிணற்றில் எறியத் தொடங்கினர். அவர்கள் இவ்வாறு விளையாடுகையில், கண்ணகி கிணற்றுச் சுவர் மீது ஏறி நின்றாள். அதைக் கண்ட கந்தன் அஞ்சி ‘ஆ!’என்றான். கண்ணகி திடுக்கிட்டு நடுங்கினாள்; அந்த அதிர்ச்சியில் கால் தவறிக் கிணற்றில் விழுந்துவிட்டாள். நல்ல காலம்! கிணற்றில் தண்ணீர் இல்லை. மேலும் அது பாதி அளவே தோண்டப்பட்ட கிணறு. ஆதலால், கண்ணகிக்குக் கேடு ஒன்றும் ஏற்படவில்லை. ஆயினும், அவளை எவ்வாறு கிணற்றிலிருந்து எடுப்பது என்பதே கந்தன் கேள்வி. அவன் தன் பெற்றோரை அழைத்து வர விரும்பவில்லை. ஏன் எனில், பெற்றோர் அவனை நையப் புடைப்பர் அல்லவா? அதனால், அவனே கண்ணகியைத் தூக்க விரும்பினான். கிணற்றின் சுவர் கரடுமுரடாக இருந்ததால், அவன் மெல்லக் கால்வைத்து இறங்கினான்; கண்ணகியைக் கை கொடுத்து மெல்லத் தூக்கினான். முடிவில் இருவரும் வீடு சேர்ந்தனர். அவர்கள் அன்று முதல் கிணற்றண்டை விளையாடப் போவதில்லை. கேள்விகள் 1. கண்ணகியும் கந்தனும் எந்தெந்த ஆட்டங்களை ஆடினார்கள்? 2. கண்ணகி எவ்வாறு கிணற்றுள் விழுந்தாள்? 3. கந்தன் அவளை எப்படிக் காப்பாற்றினான்? 4. அவன் ஏன் தன் பெற்றேரை அழைக்கவில்லை? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 21. மாணவனும் மழையும் இராமன் நான்காம் வகுப்பு மாணவன். அவன் பள்ளிக்கூடத்திற்கு ஒரு நாள் பள்ளிக் கண்காணிப்பாளர் வந்துபோனார். அவர் வந்ததை முன்னிட்டுப் பள்ளிக்கூடம் மறுநாள் மூடப்பட்டது. அந்தநாளில் நன்றாக வெளியே சென்று விளையாட வேண்டும் என்பது இராமனது எண்ணம். இராமன் அன்று மாலை மூன்று மணிக்கு வெளியே செல்ல நினைத்தான். ஆனால் மழை ஓயவே இல்லை. வானம் கார்முகில் களால் இருண்டது. கார்முகில்கள் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டன. ‘பளிச்பளிச்’என்று மின்னல் தோன்றியது. இராமன் சன்னல் வழியாகத் தெருவைப் பார்த்தான். தெருவில் நீர் நிறைந்து ஆற்று வெள்ளம் போலக் ஓடிக்கொண்டு இருந்தது. தெருவில் வருவார் போவார் நனைந்துகொண்டே ஓடினர். சாரல் மிகுதியாக அடித்ததால், குடை பிடித்திருந்தவரும் நனைந்தே சென்றனர். ‘சில்’என்று காற்று வீசியது. இராமன் வானத்தை அண்ணாந்து பார்த்தான். இடி ஓசை அவன் காதுகளைத் துளைத்தது; மின்னல் அவன் கண்களை மருட்டியது. அவன் தன் கட்டிலிற் போய்படுத்துக் கொண்டான்; போர்வை எடுத்துப் போர்த்துக்கொண்டான். இராமன், ‘இந்த மழை செய்வது பெருந் தவறு. எனக்கு விடுமுறை கிடைத்த இந்த நாளிலா இஃது இவ்வாறு பெய்வது. நான் வெளிச் சென்று விளையாட முடியவில்லையே!’என்று வாய்விட்டுக் கூறினான். அறைக்கு வெளியே இருந்த அவன் தாயார், ‘மகனே, மழையை நோவாதே. மழையே நமக்கு வேண்டியது; பயிர்கட்கு உயிர் போன்றது. இப்பொழுது பெய்யும் மழை நல்ல விளைச்சலை உண்டாக்கும்’என்றார். கேள்விகள் 1. இராமனுக்கு ஏன் விடுமுறை கிடைத்தது? 2. அவன் அன்று என்ன செய்ய விரும்பினான்? 3. அவன் எண்ணம் ஏன் கைகூடவில்லை? 4. அன்று மழை எவ்வாறு பெய்தது? 5. அவன் என்ன கூறிக்கொண்டான்? 6. அது கேட்ட தாயார் யாது கூறினார்? 22. மாணவர் பயணம் இலக்குவன் நான்காம் வகுப்பு மாணவன். அவன் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் தொகை நூறு. ஆசிரியர்கள் அந்த நூறு பேரையும் ஒரு ஞாயிற்றுக்கிழமை விடுமுறைப் பயணமாக அழைத்துச் செல்ல நினைந்தனர். அன்று காலை எல்லோரும் பள்ளிக்கூடத்தில் கூடினர். என்ன புதுமை! அன்று காலையில் திடீரென்று சூரியன் காணப்பட வில்லை. வானம் இருண்டிருந்தது. மழைத் தூரல் இருந்தது புகைவண்டி நிலையம் வரை மழைத்தூரலில் நடந்தே சென்றனர். ஒவ்வொருவரும் பள்ளிக்கூடக் கொடியைப் பிடித்துச் சென்றனர். சில மாணவர் குடையைப் பிடித்துச் சென்றனர்; குடை இல்லாதவர் நனைந்து சென்றனர். எல்லோருடைய கொடிகளும் நனைந்தன. ஒவ்வொரு மாணவனும் சிறிய ‘பொட்டணம்’ஒன்றை வைத்திருந் தான். அதில் அவர்கள் தாயார் இடைவேளைச் சிற்றுண்டிக்காகச் செய்து கொடுத்த உணவுப் பொருள் இருந்தது. மழையில் அப்பொட் டணம் நனையவே இல்லை. மாணவர்கள் அவற்றைக் கவலையோடு பாதுகாத்தனர். எல்லா மாணவரும் புகைவண்டி நிலையத்தை அடைந்தனர்; வண்டி மேடையில் வரிசையாக உட்கார்ந்தனர்; ஆவலோடு புகை வண்டியின் வரவை எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்பொழுது தலைமை ஆசிரியர் அவர்களைப் பார்த்து, ‘மழை பெய்யும் இந்த நாளில் நாம் பயணம் செய்யலாமா? அல்லது அதனை நிறுத்திவிடலாமா? ‘என்று கேட்டார். உடனே நூறு மாணவரும் ஒரே குரலில், ‘பயணம் செய்யலாம்’என்று கூவினர். கேள்விகள் 1. மாணவர் பயணம் எங்கிருந்து தொடங்கிற்று? 2. அவர்கள் முதலில் எங்குச் சென்றனர்? எப்படிச் சென்றனர்? 3. அவர்கள் எடுத்துச் சென்றவை எவை? 4. ஆசிரியர் மாணவரைக் கேட்டதென்ன? 5. மாணவர் யாது விடை கூறினர்? 6. நீ இக்கதையால் உணர்வது யாது? 23. புதிய நண்பன் சடகோபன் நான்கு வயதுடைய சிறுவன். அவன் கட்டிலின் மீது படுத்துக் கிடந்தான். அவன் கால்களில் வலித்த கட்டுகள் காணப் பட்டன. அவன் கட்டிலுக்கு அருகில் ஒரு மேசை இருந்தது. அதன் மீது மருந்துப் புட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. நாள்தோறும் மருத்துவர் வந்து பார்த்து மருந்து கொடுத்துச் சென்றார்; அவன் ஆறு மாதம் படுத்த படுக்கையாகவே இருந்தால்தான் கால்கள் குணமடையும் என்றார். அதனால் சடகோபன் படுத்த படுக்கையாகக் கிடந்தான். தகப்பனார் வேலை நிலையத்திற்குப் போன பிறகு, தாயார் சமையல் வேலையைப் பார்ப்பார். வீட்டில் வேறு எவரும் இல்லை. ஆதலால், சடகோபன் தனியே படுத்திருக்க வேண்டியவன் ஆனான். அவனுக்கு ஒரு நாள் ஓர் ஆண்டாகத் தோன்றியது. ஒருநாள் மாலை தகப்பனார் ஒரு வெள்ளை நாயைக்கொண்டுவந்தார். அவர் சடகோபன் எதிரில் வந்து நின்றார். சடகோபன் அவர் கைகளில் இருந்த அழகிய நாயைக் கண்டான். அவன் முகத்தில் ஒரு வித ஒளி உண்டானது. அவன் புன்சிரிப்புக் கொண்டான். நாயும் அவனை உற்றுநோக்கி வாலை ஆட்டியது. தகப்பனார் சடகோபனைப் பார்த்து, ‘தம்பீ, உன் தனிமையைப் போக்கவே இந்நாயை வாங்கி வந்தேன். இஃது எப்பொழுதும் உன் பக்கத்தில் இருக்கும். இதுவே உனது புதிய நண்பன். இஃது இனி உனக்குச் சொந்தம் ‘என்று சொல்லி, நாயைக் கட்டில் மீது விட்டார். நாய் சடகோபன் முகத்தண்டை சென்றது; பலநாள் பழக்கம் கொண்டே அவனது முகத்தை நக்கியது. சடகோபன் அதை எடுத்து அன்போடு முத்தம் கொடுத்தான். கேள்விகள் 1. சடகோபன் ஏன் படுத்துக்கிடந்தான்? 2. மருவத்துவர் என்ன கூறினார்? 3. தகப்பனார் எதை வாங்கி வந்தார்? 4. அவர் சடகோபனிடம் என்ன சொன்னார்? 5. நாய் சடகோபனிடம் எப்படி நடந்துகொண்டது? 6. நீ இக்கதையால் அறிவது யாது? 24. நல்ல வழியிற் செலவு மங்களம் ஐந்தாம் வகுப்பு மாணவி. அவள் நற்குணமும் நல்ல ஒழுக்கம் உடையவள். ஒரு நாள் அவள் வீட்டிற்கு அயல் ஊரிலிருந்து அவள் மாமா வந்தார். அவர் அவளுக்கு நான்கணா கொடுத்தார். அவள் அதை ஆசையோடு பெற்றுக்கொண்டாள். அவள் பள்ளிக்கூடம் போகும் வழியில் ‘பிஸ்கட்’கடை ஒன்று உண்டு. அதில் விதவதமான சுவையுள்ள பிஸ்கட்டுகள் புதியனவாக வந்திருந்ததை அவள் அறிந்திருந்தாள்; அதனால் நேரே அங்குச் சென்றாள். அப்பொழுது கடைக்காரன் கடையில் இல்லை. மங்களம் அவனை எதிர்நோக்கி அங்கு நின்றுகொண்டிருந்தாள். அந்நேரத்தில் பிச்சைக்கார முதியவள் ஒருத்தி அங்கு வந்தாள். அவள் மங்களத்தின் முக ஒளியையும் உடைச் சிறப்பையும் கண்டு நின்றாள்; ‘குழந்தாய், நான் நேற்று முதல் பட்டினியாகக் கிடக்கிறேன். காது அடைக்கிறது; கண் ஒளி மங்குகிறது; கால்கள் தள்ளாடுகின்றன. என்னைக் காப்பாற்று’என்று, இரண்டு கைகளையும் ஏந்தி நின்றாள். மங்களம் அக்கிழவியை உற்றுப் பார்த்தாள்; அம்முதியவள் உண்மை யாகவே துன்பப்படுவதை உணர்ந்தாள்; ‘நான் புதிய பிஸ்கட்டுகளை வாங்கித் தின்பதை விட, இக்கிழவியின் பசியாற்றுவதே ஏற்ற செயலாகும்’என்று எண்ணினாள். ஆயினும், மறு விநாடி அவள் பார்வை கடையில் இருந்த பிஸ்கட்டுகள் மீது சென்றது. அவள் சிறிது நேரம் அசையாது நின்றாள்; முடிவில் தான் வைத்திருந்த நான்கணா நாணயத்தை அக்கிழவியிடம் கொடுத்துத் திரும்பினாள். அப்போது அவள் மனம் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தது.—ஏன்? கேள்விகள் 1. மங்களம் நாண்கணாவைப் பெற்றதும் எங்குச் சென்றாள்? ஏன்? 2. பிச்சைக்காரி மங்களத்திடம் யாது கூறினாள்? 3. மங்களம் முதலில் என்ன எண்ணினாள்? 4. முடிவாக அவள் என்ன செய்தாள்? 5. அவள் மகிழ்ச்சியோடு திரும்பினாள்—ஏன்? 6. நீ இக்கதையால் அறிவது யாது? 25. எதிர்காலப் போர்வீரன் இலண்டன் நகரில் தாமஸ் என்னும் சிறுவன் ஒருநாள் தன் செவிலித்தாயுடன் கடைத் தெருவிற்குச் சென்றான். அங்குச் சுவர்கள் மீது ‘சண்டைக்கு ஆட்கள் தேவை, வீரர்கள் வருக! வருக! ‘என்று எழுதப்பட்டு இருந்த விளம்பரங்கள் ஒட்டப்பட்டு இருந்தன. தாமஸ் அவற்றைப் படித்துக் கொண்டே போனான்; அந்த வரிசையில் ஒரு பெரிய கட்டிடத்தைக் கண்டான்; அதன் முன்புறம் ஒரு பலகை தொங்கவிடப்பட்டு இருந்தது. அதன் மீது ‘இதுவே போர் வீரரைச் சேர்க்கும் இடம்’என்பது வரையப்பட்டிருந்தது. தாமஸ் தன் தாயை, ‘இதில் எழுத்தப்பட்டவற்றை விளக்கிச் சொல்’என்றான். அவள், ‘இப்பொழுது நமக்கும் செர்மனியருக்கும் சண்டை நடக்கிறது. நம் நாட்டைக் காக்க வீரர்கள் தேவை. அதனால் இங்கு ஆட்களைப் போர் வீரர்களாகச் சேர்க்கிறார்கள்’என்றாள். சிறுவன் ஒன்றும் பேசவில்லை. அவன் சிறிது தொலை சென்றதும் தாயை விட்டு நழுவினான்; வந்த வழியே ஓடிப் படைக்கு வீரரைச் சேர்க்கும் இடத்தை அடைந்தான்; அங்கு இருந்த அலுவலாளர் முன் நின்று வணக்கம் புரிந்தான்; ‘நான் போர் வீரனாகப் பதிவு செய்துகொள்ள வந்திருக்கிறேன்’என்றான். அவர் சிறுவனை ஏற இறங்கப் பார்த்தார். அவர் முகம் மலர்ந்தது. அவர், ‘தம்பீ, நீ மிகவும் சிறியவன். பெரியவன் ஆன பிறகு வா’ என்றார். தாமஸ், ஐயா, என்னைப் பறை அடிக்கும் பையனாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்’என்றான். அவர், ‘குழந்தாய், நீ அவ் வேலைக்கும் உரிய வயதை அடையவில்லை. நீ பெரியவனை பின்னர் வா. உன்னை உறுதியாகச் சேர்த்துக் கொள்வேன் ‘என்றார். தாமஸ் மிக்க மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான். கேள்விகள் 1. தாமஸ் வழியில் கண்ட காட்சி யாது? 2. தாய் அவனுக்கு என்ன கூறினாள்? 3. அவன் அலுவலாளரிடம் என்ன கூறினான்? 4. அலுவலாளர் என்ன விடை அளித்தார்? 5. தாமஸ் ஏன் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினாள்? 6. நீ இக்கதையால் உணர்வது யாது? 26. தன்னலம் இல்லாத சிறுவன் பரந்தாமன் எட்டு வயதுப் பையன். அவன் ஒரு நாள் இரவு எட்டு மணிக்குக் கடைத்தெருவில் நின்று போவார் வருவாரைக் காசு கேட்டு நின்றான். அவனை ஒரு செல்வி கண்டாள். அவன் அவளை வணங்கி, ‘அம்மையே, பசி வாட்டுகிறது ‘என்றான். செல்வி, “தம்பீ, உனக்கு வீடு இல்லையா? பெற்றோர் இல்லையா?” என்று கேட்டாள். பையன், ‘வீடு இருக்கிறது, பெற்றோரும் உளர் ‘என்றான். செல்வி, ‘நீ ஏன் பிச்சை எடுக்கவேண்டும்?’என்று கேட்டாள். பையன் கண்ணீரை ஆறாக ஒழுகவிட்டு, ‘அம்மையே, எங்கள் வீடு ஓர் அறைதான். அதில் என் பெற்றோர், என் தம்பியர் மூவர், ஆக ஐவர் இருக்கின்றனர். அவர்கட்கே இருக்க இடம் இல்லை. என் தகப்பனார்க்கு வேலை இல்லை; தாயார் கூலிவேலை செய்கிறார். அவர் தேடும் பொருள் என் தம்பியர்க்கே போதவில்லை. நானும் அங்கு இருந்தால் அவர்கட்குத் துன்பம் மிகுதியாகும். அதனாற்றான் நான் வெளியில் வந்துவிட்டேன்’என்றான். செல்வி, பையன் சொற்களை நம்பவில்லை. அவள் அவனுடன் அவனது இல்லம் சென்றாள்; பையன் கூறியவை உண்மை என்பதை உணர்ந்தாள்; அவனிடம் இரக்கம் கொண்டாள்; அவனைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். பையன் அன்று முதல் செல்வியிடமே இருந்து வளர்ந்துவந்தான்; பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கலானான்; செல்விக்குப் பிள்ளை இல்லாததால், அப்பையனே வீட்டுப் பிள்ளையாக வளர்க்கப்பட லானான். அவனது தன்னலமற்ற உணர்ச்சியே அவனை உயர்நிலைக்குக் கொண்டுவந்தது அல்லவா? கேள்விகள் 1. பரந்தாமன் ஏன் பிச்சை எடுக்கலானான்? 2. செல்வி ஏன் அவன் வீட்டுக்குச் சென்றாள்? 3. செல்வி அவனை ஏன் காப்பாற்றலானாள்? 4. இக்கதையால் அறியும் படிப்பினை யாது? 27. தன்னலம் அற்ற தோட்டக்காரன் சேலத்தில் இருந்த பெரிய மாந்தோப்பில் குப்பன் என்னும் பெயருடைய தோட்டக்காரன் இருந்தான். அவன் மிகவும் நல்லவன்; பிறர் துன்பப்படுவதைக் கண்டு பொறாதவன்; தன்னிடம் இருப்பதை எண்ணாது கொடுப்பவன். அவன் உடல் நலம் இல்லாததால் இரண்டுநாள் தோட்டவேலை செய்யப் போகவில்லை. அவனது தலைவரிடம் சொல்லி அனுப்ப ஆளும் அகப்படவில்லை. அதனால் சினங்கொண்ட தலைவர் அவனை வேலையிலிருந்து நீக்கிவிட்டார். ஐயோ! நற்குணமும் நல்ல ஒழுக்கமும் உடைய குப்பன் வேலை யில்லாமல் துன்பப்பட்டான்: தன்னிடம் இருந்த சிறு தொகையைக் கொண்டு சில நாட்கள் காலம் கழித்தான். ஒருநாள் அவனிடம் ஓர் அணாவே இருந்தது. அவன் அத்துடன் வெளிச் சென்றான்; எங்கேனும் வேலை கிடைக்குமா என்று அலைந்து திரிந்தான். அப்பொழுது வழியில் ஒரு பிச்சைக்காரன் மனமிரங்கத்தக்க நிலையில் இருந்து பிச்சை கேட்டுக்கொண்டு நின்றான். குப்பன் மனம் இளகியது; தன்னிடம் இருந்த ஒரே அனாவை அந்த ஏழைக்குக் கொடுத்து அப்பாற் சென்றான்; கால்கள் தள்ளாடின. அதனால் அவன் ஒரு வீட்டுத் திண்ணையிற் படுத்தான். குப்பன், ‘கடவுளே, இருந்த வேலையும் போயிற்று. இறுதியாக இருந்த ஓர் அணாவையும் பிச்சைக்காரனுக்குக் கொடுத்துவிட்டேன். நீதான் துணை’என்று வாய்விட்டுக் கூறினான். அவன் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த வீட்டுக்காரர், அவன்மீது இரக்கம் கொண்டார்; அவனுக்கு உணவளித்தார்; அவனை அன்று முதல் தமது தோட்டக்காரனாக அமர்த்திக்கொண்டார். குப்பன் கடவுளை வாழ்த்திக்கொண்டு நல்ல முறையில் காலம் கழித்தான். கேள்விகள் 1. குப்பன் ஏன் வேலையை இழந்தான்? 2. அவன் தன்னலம் அற்றவன் என்பது எதனால் தெரிகிறது? 3. அவன் எப்படி மீண்டும் வேலையைப் பெற்றான்? 4. அவன் யாரை வாழ்த்திக்கொண்டிருந்தான்? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 28. பொய் பேசலாகாது மோகனன் ஐந்தாம் வகுப்பு மாணவன். அவன் ஒருநாள் விளையாட்டுத் துப்பாக்கி ஒன்றை வாங்க விரும்பினான். அதற்கு அவனிடம் போதிய பணம் இல்லை. அதனால், அவன் தாயாரைத் துன்புறுத்தினான். தாயார், ‘நீ உன் கணக்குப் புத்தகத்தில் உள்ள முதல் இருபது பயிற்சிகளைச் செய்து காட்டு: நீ கேட்ட பணம் தருவேன்: நாடோறும் ஒரு பயிற்சி செய்து காட்டு’என்றார். மோகனன் ஒரு பயிற்சி செய்து ஓர் அணாவைப் பெற்றான். நாடோறும் ஒரு பயிற்சி செய்து நாடோறும் ஓர் அணாவைப் பெறுவது அவனுக்கு விருப்பம் இல்லை. அதனால், அவன் ஒரே நாளில் எல்லாக் கணக்குகளையும் போட்டுக் காட்டிப் பணம் பெற விரும்பினான். ஆனால், அவனால் ஒரு நாளைக்கு ஒரு பயிற்சிக்குமேல் செய்யவும் முடியவில்லை. அதனால், அவன் என்ன செய்வது என்று எண்ணினான். அவன் வகுப்பில் கமலநாதன் என்னும் மாணவன் ஒருவன் இருந்தான். அவன் அந்த இருபது பயிற்சிகளையும் செய்திருந்தான். அதனால் மோகனன், அவனது நோட்டுப் புத்தகத்தைத் தாயாரிடம் காட்டி, முழுப்பணத்தையும் ஒரே நாளில் பெற்றுவிட எண்ணினான். மோகனன், தாயாரிடம் சென்று எல்லாக் கணக்குகளையும் தான் போட்டுவிட்டதாகக் கூறிக், கமலநாதன் நோட்டுப் புத்தகத்தைக் காட்டினான். தாயார் ஐயப்பட்டு அந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கி ஆராய்ந்து பார்த்தார். அது கமலநாதனது நோட்டுப் புத்தகம் என்பதை அறிந்தார்; சினம் கொண்டார். தாயார், ‘மோகனா, வேறொருவன் வேலையை உன் வேலை என்று சொல்லாமா? நீ பொய் பேசியது முதல் தவறு; அத்துடன் என்னை ஏமாற்ற எண்ணியது இரண்டாம் தவறு. நீ மன்னிப்புப் பெறும்வரை என்னிடம் பேசலாகாது’என்று சினத்துடன் கூறினார். மோகனன் தன் தவற்றை எண்ணி வருந்தினான்; தன் தாயின் அடிகளில் விழுந்து மன்னிக்கும்படி மன்றாடினான். கேள்விகள் 1. மோகனன், தாயாரை எப்படி ஏமாற்ற முயன்றான்? 2. அவன் திருட்டு எப்படி வெளிப்பட்டது? 3. அவன் ஏன் அவசரப்பட்டான்? 4. நீ இக்கதையால் அறிவது யாது? 29. எலிக்குஞ்சுகள் இளங்கோ நான்காம் வகுப்பு மாணவன். அவன் தகப்பனார் சீமை எலிகள் இரண்டை வாங்கி வளர்த்து வந்தார். அவை குஞ்சுகள் இட்டன. இளங்கோ அந்த வெள்ளைக் குஞ்சுகளை அன்போடு பாலூட்டி வளர்த்தான். அவன் அவற்றை அன்போடு மடிமீது இருத்தி விளையாடி மகிழ்வான். அவையும்அவனிடம் மிகுந்த அன்பு கொண்டு இருந்தன. ஒருநாள் இளங்கோ காய்ச்சலால் வருந்தினான். கட்டிலை விட்டு இறங்கக் கூடாது என்று மருத்துவர் கூறினார். அதனால், இளங்கோ கட்டிலை விட்டு இறங்கக் கூடவில்லை. அவனுக்குத் தன் உயிர் போன்ற எலிக்குஞ்சுகளின் எண்ணமே மேம்பட்டிருந்தது. அவை அவனது அறைக்கு வெளியே சுவரில் இருந்த பலகைப் பெட்டியில் இருந்தன. அவன் தன் தாயாரைப் பார்த்து, ‘அம்மா, என் எலிக்குஞ்சுகளை என்னிடம் கொடுத்து விடுங்கள். நான் அவற்றைப் பார்த்துக்கொண்டு இருப்பேன்’என்றான். தாயார், ‘மகனே, அவை உன்னிடம் வரலாகாது. நான் அவற்றைப் பார்த்துக்கொள்கிறேன். நீ கவலைப்பட வேண்டா’என்று கூறினார். ஆனால், மறுமுறை அவர் கட்டிலண்டை வந்த போது, மூன்று எலிக்குஞ்சுகள் கட்டில்மீது இருத்தலைக் கண்டார்; இளங்கோ அவற்றை எடுத்து வந்ததாக எண்ணிச் சினம் கொண்டார். அப்பொழுது அவன், ‘அம்மா, இவற்றை நான் எடுத்துவரவில்லை. அதோ, பாருங்கள்: நான்காம் குஞ்சு எப்படி வருகிறது என்பதை’என்றான். ஆம். நான்காம் எலிக்குஞ்சு சன்னல் வழியாக இறங்கி வந்து கட்டில்மீது இருந்த மற்றக் குஞ்சுகளுடன் கலந்துகொண்டது. அவை தம் நண்பனைக் காணாமையால் துன்பப்பட்டன; இறுதியில் அவன் இருந்த கட்டிலுக்கே வந்துவிட்டன. கேள்விகள் 1. இளங்கோ ஏன் கட்டில் மீது படுத்திருந்தான்? 2. எலிக்குஞ்சுகள் எங்கு இருந்தன? 3. அவை எவ்வாறு கட்டில்மீது வந்தன? ஏன் வந்தன? 4. மருத்துவர் என்ன சொன்னார்? ஏன்? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 30. புகைவண்டி காத்த சிறுவன் வரதன் என்பவன் ஒரு சிற்றூர் மாணவன். அவன் தன் ஊரிலிருந்து அடுத்த ஊருக்குச் சென்று படிப்பது வழக்கம். அடுத்த ஊருக்கும் வரதன் வீட்டிற்கும் மூன்று கல் தொலைவு இருந்தது. வரதன் நாள்தோறும் பள்ளிக்குச் சென்று கருத்துடன் படித்துவந்தான். அவன் பள்ளிக்குப் போகும் வழியில் புகைவண்டிப் பாதை குறுக்கே போடப்பட்டிருந்தது. அங்கு ஓர் அழகிய நீரோடை கீழே ஓடிக்கொண்டு இருந்தது. தண்ணீர் கூழாங்கற்கள் மேல் ‘சலசல’என்று ஓடியது. வரதன் மாலை நேரத்தில் அங்குச் சிறிது தங்கிவிட்டு ஊருக்குப் போதல் வழக்கம். ஒருநாள் மாலை அந்த ஓடைக்கு அருகில் புகை வண்டிப் பாதைமீது மூன்று பெரிய புளிய மரக்கட்டைகள் போடப்பட்டு இருந்தன. வரதன் அவற்றைக் கண்டான்; தன் வலி கொண்ட மட்டும் அவற்றை அப்புறப்படுத்த முயன்றான்; ஆனால் முடியவில்லை. அவன் கவலைகொண்டான்; ‘புகை வண்டி வரும் நேரம் ஆயிற்றே; புகைவண்டி இக்கட்டைகள் மீது ஏறினால், கவிழ்ந்து விடுமே! ஏன் செய்வது!’ என்று ஏங்கினான்; ‘சரி. நான் இங்கு இருந்து இரயில் ஓட்டிக்கு முன்னறிவிப்புச் செய்வேன்’என்று தனக்குள் கூறிக் கொண்டான். வரதன் கட்டைகள் மீது நின்றான். அவன் கையில் பெரிய மரக்கிளை ஒன்று இருந்தது. புகை வண்டி அவனை நோக்கி விரைந்து வந்தது. வரதன் தான் பிடித்திருந்த கிளையை உயரத்தில் அசைத்தான். வண்டி நின்றது. உடனே புகைவண்டிஓட்டி சினத்துடன் கீழிறங்கி ஓடிவந்தான். ஆனால், அவன் புகை வண்டிக்கு நேர இருந்த இடையூற்றை அறிந்ததும், வரதனை அன்போடு தழுவிக் கொண்டான்; அவனுக்கு ஒரு ரூபாய் பரிசு கொடுத்துச் சென்றான். கேள்விகள் 1. வரதன் எங்குச் சென்று படிப்பது வழக்கம்? 2. அவன் மாலையில் வீடு வருகையில் என்ன செய்வான்? 3. அவன் ஏன் இரயிலை நிறுத்தவேண்டும்? 4. புகைவண்டி ஓட்டி ஏன் சினந்து வந்தான்? 5. அவன் சினம் மாறியதற்குக் காரணம் யாது? 6. நீ இக்கதையால் அறிவது யாது? 31. இறுதிக் கடமை முனியன் நான்காம் வகுப்பு மாணவன். அவன் தகப்பனார் புகைவண்டி நிலையத்தை அடுத்துள்ள இடம் ஒன்றில் இருந்துகொண்டு, இரயில் வரும்பொழுது கொடியைக் காட்டும் வேலையில் அமர்ந்து இருந்தார். அந்த வேலை மிகுந்த கருத்துடன் செய்ய வேண்டுவதாகும். அவ்வேலையைச் செய்பவர் சிறிது கருத்துக் குறைவாக இருந்தாலும், பெருத்த கேடு ஏற்பட்டுவிடும்; பச்சைக் கொடிக்கு மாறாகச் சிவப்புக் கொடியைக் காட்டினும், மாறிக் காட்டினும் உண்டாகும் துன்பமும் இடரும் பலவாகும். இத்தகைய பொறுப்பு வாய்ந்த வேலையை முனியன் தகப்பானார் மிகுந்த கருத்துடன் செய்து வந்தார். அவருக்கு ஒருநாள் வயிற்றுக் போக்குப் கண்டது; பலமுறை போக்குப் போயிற்று. அவர் கைகால்கள் வெலவெலத்தன. ஆயினும், என் செய்வது! அன்று அவர் மெல்ல நடந்து நடந்து தாம் வேலை செய்யும் இடத்தை அடைந்தார். அவர் அங்குச் சென்ற பின் ஆறு முறை போக்குக் போயிற்று. அவரது நிலைமையை வீட்டிற்கோ புகைவண்டி நிலையத் தலைவருக்கோ தெரிவிக்கவும் ஆள் அகப்படவில்லை. அந்தோ! அவர் சிறிது நேரத்தில் இறந்துவிடக் கூடிய நிலையில் இருந்தார். ஆ! அப்பொழுது புகைவண்டி வரும் ஓசை கேட்டது. அவரால் எழுந்திருக்கக் கூடவில்லை. Òபுகைவண்டியின் ஓசை அருகில் நன்கு கேட்டது. அவர் ஒருவாறு எழுந்து இடத்தை விட்டு வெளியே வந்து நின்றார்; தம் நிலையைத் தெரிவிக்கச் சிவப்புக் கொடியை அசைத்தார். அந்தோ! அவ்வாறு கொடி அசைக்கும் பொழுதே கீழே விழுந்து இறந்தார். கேள்விகள் 1. முனியன் தகப்பனார் பார்த்துவந்த வேலை யாது? 2. அவருக்கு என்ன நோய்கண்டது? 3. வேலைக்குப் போனவிடத்தில் அவருக்கு என்ன நேர்ந்தது? 4. அவர் ஏன் சிவப்புக் கொடியைக் காட்டினார்? 5. நீ இக்கதையால் அறியும் படிப்பினை யாது? 32. வெறிகொண்ட நாய் சென்னை இராயபுரத்தில் ‘இராபின் சன் பார்க்’என்னும் பெயருடைய பூம்பொழில் ஒன்று உண்டு. அங்கு மாலை நேரங்களில் ஆடவரும் பெண்டிரும் குழந்தைகளும் கூட்டங் கூட்டமாகச் சென்று பொழுது போக்குவர்; இரேடியோ மூலமாக நல்ல பாடல்களைக் கேட்டு மகிழ்வர். ஒருநாள் மாலை அப்பொழிலை அடுத்த தெருவில் “வெறி கொண்ட நாய்! வெறி கொண்ட நாய்!”என்று பலர் திடீரெனக் கூவினர். உடனே மக்கள் தெருவை விட்டு அகன்றனர்; வெறி கொண்ட நாயொன்று ஒருவனைக் கடித்து, குருதி ஒழுகும் வாயுடன் ஓடிவந்து கொண்டிருந்தது. அது, பூம்பொழிலின் ஓரத்தில் தங்களை மறந்து விளையாடிக்கொண்டிருந்த சிறு பிள்ளைகளைப் பார்த்தது. அது அவர்களை நோக்கி ஓடியது. அதனைக் கண்ட மக்கள், ‘ஐயோ! வெறி கொண்ட நாய் பிள்ளைகளைக் கடிக்கப் போகிறதே!’என்று கூறிக் கூக்குரல் இட்டனர். ஆயினும், ஒருவரும் முன் செல்லவில்லை. அப்பொழுது அவ்வழியே வந்த பிச்சைக்காரச் சிறுவன் அதை உணர்ந்தான். அவன் உடனே பிள்ளைகளுக்கு முன் சென்று நின்றான். நாய் சினத்தோடு அவன்மீது பாய்ந்தது. அவன் நாயின் தொண்டையை இறுகப் பிடித்தான். நாய் அவன் கையை அழுத்தமாகக் கடித்துவிட்டது. ஆயினும், அச்சிறுவன் அந்நாயை விடவில்லை. இப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கையில், விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள் ஓடிவிட்டார்கள். ஆடவர் பலர் சிறுவன் உதவிக்கு அந்நாயை அடித்துக் கொன்றனர். ஆயினும், அதன் கடியால் அவ் வேழைச் சிறுவன் இறந்தான். அவன் சிறு பிள்ளைகட்காகத் தன் உயிரை நீத்தான். கேள்விகள் 1. பூம்பொழில் என்பது யாது? 2. வெறிபிடித்த நாய் என்ன செய்யும்? 3. அது யாரை நோக்கி ஓடியது? ஏன்? 4. பிச்சைக்காரச் சிறுவன் அதை எவ்வாறு எதிர்த்தான்? முடிவென்ன? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 33. துணிவுற்ற இளைஞன் ஓர் ஆங்கிலக் கப்பல் அமெரிக்காவை நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. கப்பலில் இருந்த மக்கள் மகிழ்ச்சியாகப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தனர். சூரியன் தன் செந்நிறக் கதிர்களை வீசிக்கொண்டு நெருப்பு உருண்டை யாகக் காட்சி அளித்தான்: வானம் நீல நிறத்துடன் மாசற்று விளங்கியது. கடற் பறவைகள் இங்கும் அங்குமாகப் பறந்துகொண்டு இருந்தன. அலைகள் அமைதியாக மடிந்து மடிந்து சென்றன. இன்பத்தின் இடையில் துன்பம் தோன்றுதல் இயல்பு அல்லவா? திடீரென அக்கப்பல் முழுவதும் நீராவி சூழ்ந்துகொண்டது. ஒரு பெரிய எஃகுக் கம்பி கப்பலின் இயந்திரம் ஒன்றில் அகப்பட்டுக் கொண்டது. இயந்திரங்கள் சுழல்கையில் அக்கம்பியும் சுழன்றது. அது எந்த நேரத்தில் கப்பலின் அடிப்புறத்திற் பட்டுத் துளைத்துவிடுமோ என்று மாலுமிகள் அஞ்சி நடுங்கினார்கள். இயந்திரங்கள் உடனே நிறுத்தப்படல் வேண்டும். இன்றேல், அக்கம்பியால் பேரிடர் ஏற்படுவது உறுதி. ஆயினும், நீராவி நிறைந்த அந்த இயந்திரங்களிடம் எரிந்து கொண்டிருக்கும் அந்த இடத்திற்குச் செல்ல எல்லோரும் அஞ்சினர்; அக் கம்பியே இயந்திரத்தை அணுகியவரைக் கொன்று விடும் என்று அஞ்சினர். அவ்விடர் மிகுந்த வேளையில் ஓர் இளைஞன் நீராவிப் படலத்துள் பாய்ந்தான்; அவன் முகமும் கைகளும் நீராவியின் சூட்டால் கரிந்தன. அவன் தன்னை மறந்தவனாய், அந்த எஃகுக் கம்பியை வலிந்து இழுத்து வெளியே எறிந்தான்; இயந்திரங் களை நிறுத்தினான். அவன் சிறிது நேரம் வறிதேயிருப்பின், கப்பல் கடலுக்கு இறையாகி இருக்கும். கேள்விகள் 1. காலை நேரம் எவ்வாறு இருந்தது? 2. இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது யாது? 3. அதனால் என்ன இடர் ஏற்பட்டிருக்கும்? 4. இடலை நீக்கியவன் யாவன்? அவன் எப்படி நீக்கினான்? 5. நீ இக்கதையால் அறியும் நீதி யாது? 34. காட்சிச் சாலை கண்மணி ஆறு வயதுடைய சிறுமி. அவள் இரப்பரால் செய்யப் பட்ட குரங்கு ஒன்றைக் கடையில் வாங்கினாள்; பிறகு தன் தாயாருடன் விலங்குக் காட்சிச் சாலையைக் காணச் சென்றாள். சென்னை மூர்மார்க்கெட்டுக்குப் பின்னால் அக்காட்சிச் சாலை இருக்கிறது. ஆளுக்கு ஓர் அணாவைக் கொடுத்துத்தான் உள்ளே போகவேண்டும். அங்குச் சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள், யானை, ஒட்டகம், ஒட்டைச்சிவிங்கி, மான்கள், கரடிகள், வெண் கரடி, கழுதைப் புலி, காட்டு எருமை, குரங்குகள் முதலிய பலவகை விலங்குககள் இருக்கின்றன. கிளிகள், புறாக்கள், நெருப்புக் கோழி, காசோவரி, எமூ, வாத்துக்கள், நாரைகள், கொக்குகள், மைனாக்கள் முதலிய பலவகைப் பறவைகளும் இருக்கின்றன. ஒரு குட்டையில் நான்கு முதலைகள் விடப்பட்டுள்ளன. ஒரு புதிய கட்டிடத்தில் பல வகைப் பாம்புகள் உள்ளன. கண்மணியும் தாயாரும் இவற்றை எல்லாம் வியப்போடு பார்த்து வந்தனர். அவர்கள் குரங்குகள் இருக்கும் இடத்தை அடைந்தபொழுது நடந்த நிகழ்ச்சி ஒன்று உண்டு. ஒரு குரங்கு கண்மணியின் இடுப்பில் இருந்த குரங்குப் பொம்மையைப் பார்த்து ஓடிவந்தது; கம்பிகட்கு வெளியே தன் கையை நீட்டி அப் பொம்மையைத் தடவிக் கொடுத்தது. பிறகு அக் குரங்கு ஒரு கொட்டைய எடுத்துக் கடித்து, அதன் உள் இருந்த பருப்பை எடுத்துப் பொம்மையின் வாயில் வைத்தது. பொம்மை வாயைத் திறவாமல் இருந்ததைக் கண்டு, முகத்தைச் சுளித்துக்கொண்டது. கண்மணியும் அவள் தாயாரும் அக் குரங்கின் செயலைக் கண்டு வியப்படைந்தனர். கேள்விகள் 1. கண்மணி காட்சிச் சாலைக்குக் கொண்டுசென்றது யாது? 2. காட்சிச் சாலையில் உள்ள விலங்குகள் எவை? 3. அங்கு உள்ள பறவைகள் எவை? 4. அங்கு உள்ள பிற உயிர்கள் யாவை? 5. குரங்கு கண்மணியிடம் ஏன் வந்தது? 6. அஃது என்ன செய்தது? 7. அது முகத்தைச் சுளித்துக்கொண்டது ஏன்? 8. நீ இக்கதையால் அறிவது யாது? 35. பொய்ப்பரிசு குமரன் ஐந்தாம் வகுப்பு மாணவன். அவன் தன் வீட்டில் சில தொட்டிகளில் பூஞ்செடிகளை வைத்து வளர்த்துவந்தான். அவனைப் போலவே அவன் பள்ளிக்கூடப் பிள்ளைகள் பலரும் பூஞ்செடிகளைத் தொட்டிகளில் வைத்து வளர்த்துவந்தனர். குறிப்பிட்ட நாளில் எல்லாப் பிள்ளைகளுடைய தொட்டிகளும் பள்ளிக்கூடத் தோட்டத்தில் சேர்க்கப்பட்டன. அன்று மாலை அப்பள்ளிக் கூடத் தலைவர்கள் மூவர் வந்தனர்; எல்லாத் தொட்டிகளையும் பார்வையிட்டனர்; பரிசுக்கு உரிய தொட்டி மீது அதற்கு உரிய ஓர் அடையாளத்தை ஓர் அட்டையில் எழுதித் தொங்கவிட்டனர்; பரிசு மறுநாள் அளிக்கப்படும் என்று கூறிச் சென்றனர். மறுநாள் காலை பள்ளியில் யாரும் இல்லாத நேரத்தில் குமரன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; தன் தொட்டியில் அட்டை மாட்டப்பட்டிருக்கும் என்று எண்ணிப் பார்த்தான்; ஆனால், அவனது தொட்டிக்கு அடுத்த தொட்டியிற்றான் அந்த அட்டை மாட்டப்பட்டிருப்பத்தைக் கண்டான்; உடனே சட்டென்று அந்த அட்டையை எடுத்துத் தன் தொட்டியில் கட்டிவிட்டு ஓடிவிட்டான். அன்று மாலை, பள்ளிக்கூடத்தில் பெருங்கூட்டம் கூடி இருந்தது; தலைவர்கள் வந்து உரிய இடங்களில் அமர்ந்தனர். ‘குமரன் முதற் பரிசு பெற்றான்’என்று தலைவர்கள் கூறினர். குமரன் எழுந்து பரிசைப் பெற நடந்தான். எல்லோரும் கைகொட்டி மகிழ்ந்தனர். அவன் அப்பொழுது என்ன நினைத்தானோ, தெரியவில்லை. அவன் தலைவர்களைப் பார்த்து, ‘ஐயா, நான் திருடன். பரிசு பெற்றவன் நாராயணனே’என்று கூறி அழுது கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றான். கேள்விகள் 1. குமரன் செய்த திருட்டு வேலை யாது? 2. அவன் அதை ஏன் ஒப்புக்கொண்டான்? 3. பரிசு பெறத் தக்கவன் எவன்? 4. நீ இக்கதையால் அறியும் படிப்பினை யாது? 36. புதுவகைப் படகு இங்கிலாந்தில் உள்ள ஆறுகளில் பெயர் பெற்றது தேம்சு என்பது. ஒரு முறை அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது; கரைகள் மீது புரண்டது; அருகில் இருந்த குடிசைகள் அழிந்தன. ஆனால் ஒரு சிறிய வீடு மட்டும் அழிவுறும் நிலையில் இருந்தது. அந்த வீட்டு அறைகளில் தண்ணீர் வந்து விட்டது. அவ்வீட்டில் இருந்த பிள்ளைகள் துன்பப்பட்டார்கள். அவ்வீட்டில் ஆடவர் இல்லை. தன் சிறிய பிள்ளைகளை வைத்துக்கொண்டு ஒரு தாய் இருந்தாள். அவள் தண்ணீர் தரையில் தேங்கி இருந்ததால், சமையல் செய்யக் கூடவில்லை. அந்த இடத்தை விட்டுப் போகவும் முடியவில்லை. அவ் வீட்டிற்கு நெடுந்தொலைவுக்கு அப்பால்தான் மக்கள் இருந்தார்கள். பிள்ளைகள் பசியால் கூக்குரல் இட்டனர்; தாயாரும் தங்கள் தனிமையை நினைந்து கண்ணீர் வடித்தார். அப்பொழுது சாம்சன் என்னும் மூத்த மகன் தன் தாயாரைப் பார்த்து, ‘அம்மா, நான் மக்கள் இருக்கும் இடந்தேடிச் சென்று உதவியைப் பெற்று வருவேன்; நமது தண்ணீர்த் தொட்டியைப் படகாகப் பயன்படுத்துச் செல்வேன். நான் கேடின்றி வந்து சேருவேன்’என்று கூறிப் புறப்பட்டான். அவன் திரும்பி வருவான் என்று தாயார் நம்பவில்லை. தண்ணீர்த் தோட்டி சாம்சனனின் படகாக அமைந்தது. அவன் துணிவோடு வெள்ளத்தைக் கடந்தான்; அக்கரையில் இருந்தவர்களிடம் தன் வீட்டார் நிலையைக் கூறினார். அவனது புதிய படகையும் அவனது துணிவையும் கண்ட மக்கள் அவனைப் பாராட்டினர். உடனே ஒரு படகு சாம்சன் வீட்டிற்குச் செலுத்த பட்டது. சாம்சனின் குடும்பத்தினர் இடரற்ற இடத்திற்கு மாற்றப் பட்டனர். சாம்சன், ‘நாம் புதிய படகால் காப்பாற்றப்பட்டோம்’என்பதை அடிக்கடிச் சொல்லி மகிழ்ந்தான். கேள்விகள் 1. தேம்சு ஆறு எங்கே ஓடுகிறது? 2. அதன் வெள்ளம் செய்த வேலை யாது? 3. சாம்சன் கூறிய அறிவுரை யாது? 4. அவன் என்ன செய்தான்? 5. அவனால் குடும்பத்தார் எவ்வாறு காப்பாற்றப்பட்டனர்? 6. நீ இக்கதையால் அறிவது யாது? 37. கடமை உணர்ந்த கற்பகம் கற்பகம் பன்னிரண்டு வயதுடைய சிறுமி. அவள் தம்பிமார் மூவர்; கண் பார்வை கெட்டு மருத்துவ உதவி பெற்றுவந்த தந்தையார் ஒருவர். கற்பகம் இந்நால்வருக்கும் வேண்டிய உதவிகள் செய்வதும், உணவு சமைப்பதும், பின்னர்ப் பள்ளிக்குப் போவதுமே வேலையாக இருந்தாள். ஓர் ஆண்டிற்கு முன் அவள் தாயார் இறந்து விட்டார். அதுமுதல் கற்பகமே பிள்ளைகட்குத் தாயாகவும், தந்தையார்க்கு மகளாகவும் இருந்து உதவி செய்துவந்தாள். பன்னிரண்டு வயதுடைய சிறுமி இவ்வளவு வேலைகளையும் செய்வது வியப்பைத் தருவதன்றோ? அவள் வீட்டைத் தூய்மையாக வைத்திருந்தாள்; உணவுப் பொருள்களைத் திறம்படச் சமைத்தாள்: தந்தையார் கண்ணுக்கு வேண்டிய மருந்துகளைக் கடைக்குச் சென்று வாங்கி வந்தாள்; இரவில் தம்பியர் படுத்துக்கொண்ட பிறகு தன் பாடங்களைப் படித்து வந்தாள். கற்பகத்தின் பள்ளியில் போட்டித் தேர்வுகள் நடைபெற்றன. சமையல் வேலை, தையல் வேலை, பின்னல் வேலை, இவற்றில் கற்பகமே முதல் பரிசு பெற்றாள். அவள் அப்பரிசுத் தொகையாக வந்த ஐந்து ரூபாயைத் தன் தம்பியர் சட்டைகளுக்காகவே செலவழித்தாள்; அவர்கட்குப் புதிய சட்டைகள் தைத்துப் போட்டு மகிழ்ந்தாள். வீட்டு வேலைகள் மிகுதிப்பட்டன. வீட்டில் இருந்த பணமும் செலவாகி விட்டது. வீட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும்போல இருந்தது. உடனே கற்பகம் பள்ளி போவதை நிறுத்திவிட்டாள்; தான் வைத்திருந்த தையல் பொறியைக் கொண்டு அக்கம் பக்கத்து வீட்டார் துணிகளைத் தைத்துக் கூலி பெற்றுக் குடும்பத்தை நடத்தலானாள். அவளது பேரறிவையும் குடும்ப நிலையையும் உணர்ந்த பலர் அவளிடமே தங்கள் துணிகளைக் கொடுத்துத் தைத்துக் கொள்ளலாயினர். கேள்விகள் 1. கற்பகம் என்னென்ன வேலைகளைச் செய்து வந்தாள்? 2. அவள் தந்தையார் ஏன் வேலை செய்யவில்லை? 3. அவள் எப்பொழுது பாடங்களைப் படித்து வந்தாள்? 4. அவள் ஏன் பள்ளியை விட்டாள்? 5. அவளை மற்றவர் ஏன் போற்றினர்? 6. அவள் என்ன தொழிலைச் செய்து குடும்பத்தைக் காப்பாற் றினாள். 38. தியாக உணர்ச்சி சம்பந்தன் நான்காம் வகுப்பு மாணவன். அவன் தகப்பனார் ஒரு மளிகைக் கடையில் கணக்குப் பிள்ளையாக இருந்தார். அவர் திங்கள் ஒன்றுக்கு இருபது ரூபாய் பெற்றார். அதனால் சம்பந்தன் எளிய உடைகளையே உடுத்திவந்தான்: ஆயினும், பாடங்களைப் படிப்பதில் ஊக்கமுள்ளவனாக இருந்தான். அவன் வகுப்பில் கண்ணப்பன் என்றொரு மாணவன் இருந்தான். அவன் பெற்றோர் அற்றவன்; தாய் மாமன் வீட்டில் வளர்ந்து வந்தான்; கந்தல் உடைகளையே உடுத்திவந்தான். ஆயினும், வகுப்பில் முதல் மாணவன் அவனே. சம்பந்தன் கண்ணப்பனை அன்போடு நேசித்து வந்தான்; அவனது ஏழ்மையை எண்ணி எண்ணி வருந்தினான்; அவனுக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் தான் இல்லாததை எண்ணி மனம் வருந்தினான்; அவனைப் பற்றிப் பலமுறை தன் பெற்றோரிடம் கூறிவந்தான். சம்பந்தன் பொங்கல் திருநாள் அன்று கண்ணப்பனைத் தன் வீட்டிற்கு அழைத்திருந்தான்; கண்ணப்பன் தன் மாமனிடம் விடைபெற்றுக் கொண்டு சம்பந்தன் வீடு சென்றான். சம்பந்தன் அவனைக் கண்டதும் ஓடி வந்து மார்போடு அணைத்துக்கொண்டான்; அவனைத் தன் பெற்றோர்க்கு அறிமுகப்படுத்தினான். சம்பந்தன் உள்ளே சென்று ஒரு புதிய சட்டையை எடுத்து வந்து, ‘நண்பனே, இந்த நல்ல நாளில் இதை நீ அணிந்து கொள். என் தகப்பனார் எனக்கு ஒரு வேட்டியையும் ஒரே சட்டையையும் தான் வாங்கி வந்தார். நான் வேட்டியைக் கட்டிக்கொள்கிறேன். நீ சட்டையை அணிந்துகொள். மறுக்காதே, பெற்றுக் கொள்’என்றான். கண்ணப்பன் சிறிது தயங்கினான். உடனே, சம்பந்தன் பெற்றோர் வற்புறுத்த, அவன் அச்சட்டையை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டான். பெற்றோர் சம்பந்தனது தன்னல மற்ற உணர்ச்சியை எண்ணி எண்ணி மகிழ்ந்தனர். கேள்விகள் 1. சம்பந்தன் கண்ணப்பனை ஏன் விரும்பினான்? 2. கண்ணப்பன் எப்படிப்பட்டவன்? 3. சம்பந்தன் ஏன் கண்ணப்பனைத் தன் வீட்டுக்கு வரச் சொன்னான்? 4. சம்பந்தன் செய்த உதவி யாது? 5. கண்ணப்பன் சட்டையைப் பெறத் தயங்கினான் ஏன்? 6. நீ சம்பந்தன் பெற்றோரைப்பற்றி என்ன நினைக்கிறாய்? 39. கட்டுமரம் பாலசுந்தரம் எட்டாம் வகுப்பு மாணவன். அவன் ஒரு நாள் கடற்கரைக்குச் சென்றான். கரையோரத்தில் செம்படவன் கட்டுமரம் ஒன்று இருந்தது. அது பாதியளவு தண்ணீரிலும், பாதியளவு கரையிலும் இருந்தது. பாலசுந்தரம் அதில் உட்கார்ந்துகொண்டான்; துடுப்பை எடுத்துக் கெண்டான்; கட்டுமரத்தைக் கடலில் விட முயற்சித்தான்; முடிய வில்லை. பிறகு அவன் எழுந்து கீழிறங்கிவந்து, கட்டுமரத்தைத் தண்ணீரில் விட்டான்; விட்டுக் கடலிற் செலுத்தினான். கட்டுமரம் கடலிற் போகத் தொடங்கியது. சிறுவன் தனக்கு வரப்போகும் இடரை எதிர்நோக்காமல் மகிழ்ச்சியுடன் சென்றான்; கட்டுமரத்தைத் துடுப்பாற் செலுத்தக்கூடவில்லை. அது அலைகளின் அசைவுக்கு ஏற்றபடி போய்க்கொண்டு இருந்தது. பாலசுந்தரம் கரையிலிருந்து அரைக் கல் தொலைவு கடலில் வந்துவிட்டான். அப்பொழுதுதான் அவன் தன் நிலையை நினைந்து பார்த்தான்; தான் திரும்பிக் கரையைச் சேருவது எப்படி என்பது அவனுக்குப் புலப்படவில்லை. அவன் தன் அறியாமையை எண்ணி வருந்தினான். மாலை நேரமானதால் மீன் பிடிக்கச் சென்ற கட்டுமரங்கள் கரை நோக்கி வந்துகொண்டு இருந்தன. அவற்றுள் ஒன்று சிறுவனுக்கு அருகில் வந்தது. அதைக் கண்ட சிறுவன் கைதட்டி அழைத்தான்; அதனில் இருந்த செம்படவர்கள் சிறுவனைக் கண்டனர்; தங்கள் கட்டுமரத்தைச் சிறுவனுக்குப் பக்கத்தில் கொண்டுவந்தனர். அவர்கள் சிறுவனது குறும்பை அறிந்து சினம் கொண்டனர்; ஆயினும், அவனைக் கரைக்குக் கொண்டு சென்று அறிவு புகட்டி அனுப்பினர். பாலசுந்தரம் அன்று முதல் குறும்புச் செயல்களில் ஈடுபடுவதில்லை. கேள்விகள் 1. பாலசுந்தரம் கட்டுமரத்தை என்ன செய்தான்? 2. அவன் எவ்வளவு தொலைவு கடலிற் சென்றான்? 3. அவன் எப்பொழுது தன் தவற்றை உணர்ந்தான்? 4. அவனைக் காப்பாற்றியவர் யார்? 5. அவர்கள் அவனுக்கு என்ன சொல்லி இருப்பர்? 6. நீ இக்கதையால் அறியும் படிப்பினை யாது? 40. செல்வம் பெரிதா? கடமை பெரியதா? கோதைநாயகி பத்தாம் வகுப்பு மாணவி. அவள் பதினாறு வயதடைந்தவள். அவள் தன் அத்தை வீட்டில் இருந்தாள். அவள் அத்தை பணக்காரக் கைம்பெண். அவள் சிறு வயது முதல் கோதைநாயகியை வளர்த்துப் படிக்க வைத்தாள்; தன் சொத்தை அவளுக்கே தருவதாகவும் எண்ணி இருந்தாள். கோதைநாயகியின் தகப்பானருக்கும் அத்தைக்கும் நீண்டகால மனவருத்தம் இருந்துவந்தது. அதனால் அத்தை கோதைநாயகியைத் தகப்பனார் வீட்டுக்கு அனுப்புவதில்லை. கோதைநாயகி வயது வந்த பெண் ஆதலால், தன் தகப்பனார் மீது மிகுந்த அன்பு கொண்டாள்; அவரைக் காண வேட்கை கொண்டாள். அவரும் கோதைநாயகியைக் காண விரும்பினார். அப்பொழுது அவர் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். தன் அன்புக்குரிய மகளுக்கு ஒரு கடிதம் எழுதினார். கோதை நாயகி அக்கடிதத்தைத் தன் அத்தையிடம் படித்துக் காட்டிக் கண்ணீர் விட்டாள்; தன்னைப் போகவிடுமாறு வேண்டினார். உடனே அத்தையின் கண்கள் கோவைப்பழம் போலச் சிவந்தன. அவள் உதடுகள் துடித்தன.அவள்,‘பெண்ணே, உன் தகப்பனைப் போய்ப் பார்ப்பதாயின், உடனே இந்த வீட்டைவிட்டுச் செல். மறுபடியும் இங்கு வராதே. என் சொத்தை வேறு யாருக்கேனும் எழுதி வைத்துவிடுவேன்’என்றாள். கோதைநாயகி சினங்கொண்டு ‘அத்தை, உன் சொத்தைவிட என்னைப் பெற்ற தந்தையரே மேலானவர். நான் அவரைக் காணவேண்டும். கடமையே பெரியது. நான் போகிறேன்’என்று கூறி வெளிச்சென்றாள். கோதைநாயகி தன் தகப்பனாரைக் கண்டாள். அவள் சென்ற இரண்டாம் நாள் அவர் இறந்தார். கோதைநாயகி யாருமற்றவள் ஆனாள். ஆயினும், அவள் தந்தையாருடைய நண்பர்கள் அவளை ஒரு வேலையில் அமர்த்தினர். கேள்விகள் 1. கோதைநாயகி யாரிடம் வளர்ந்துவந்தாள்? 2. அவள் தகப்பானருக்கும் அத்தைக்கும் இருந்த உறவு எப்படி? 3. அத்தை ஏன் தகப்பனாரைப் பார்க்கக்கூடாது என்றாள்? 4. அவள் யாது கூறி அச்சுறுத்தினாள்? 5. அதற்குக் கோதைநாயகி அளித்த விடை யாது? 6. நீ இக்கதையால் அறிவது யாது? ககககக