எல்லோரும் வாழ வேண்டும் முனைவர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : எல்லோரும் வாழவேண்டும் ஆசிரியர் : முனைவர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2012 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+112 = 128 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 80/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்குமரன் நூலாக்கம் : திருமதி வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம் எண். 20/33, பி 3 பாண்டியன் அடுக்ககம், ஸ்ரீநிவாசன் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க் குலம் படிப்படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மைகளைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்மண் பதிப்பகத்iதத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங்கினேன். நீருக்கும் - நெருப்புக்கும், புதையுண்டும் - மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் - சிதைக்கப்பட்டவையும் போக எஞ்சிய நூல்களைத் தேடி எடுத்து வெளியிட்ட பழந்தமிழ் அறிஞர்களை வணங்கி எம் தமிழ்நூல் பதிப்புச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலமும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலமும் தமிழ்மொழி, தமிழின வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலமாகும். இந்த மறுமலர்ச்சி காலத்தில்தான் தமிழை உயிராகவும், மூச்சாகவும், வாழ்வாகவும் கொண்ட அரும்பெரும் தமிழரிஞர்கள் தோன்றி தமிழ் மீட்டெடுப்புப் பணியை மேற்கொண்டனர். எதிர்காலத் தமிழ் தலைமுறைக்கு அழியாச் செல்வங்களாக அருந்தமிழ் நூல்களை கொடையாக வழங்கிச் சென்றனர். இவ்வருந்தமிழ்க் கொடைகள் எல்லாம் தமிழர் இல்லந்தோறும் வைத்துப் பாதுகாக்கத் தக்க புதைபொருள் ஆகும். அந்த வகையில் அறிஞர்களின் செந்தமிழ் கருவூலங்களை எல்லாம் தேடி எடுத்து குலை குலையாய் வெளியிட்டு தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாக பதித்து வருவதை தமிழ் கூறும் நல்லுகம் நன்கு அறியும். எம் தமிழ்நூல் பதிப்புப் பணியின் தொடர் பணியாக தமிழ்ப்பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் நூல்களை வெளியிடும் நோக்கில் எம் கைக்குக் கிடைத்த சில நூல்களை முதல் கட்டமாக வெளிகொணர்ந்துள்ளோம். எதிர்காலத்தில் அவருடைய ஆக்கங்கள் அனைத்தையும் தேடி எடுத்து பொருள்வழிப் பிரித்து கால வரிசையில் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர் களுக்கும் பயன்படும் நோக்கில் திட்டமிட்டுள்ளோம். அகப்பகையும், புறப்பகையும் தமிழர் வாழ்வில் குடிபுகுந்து தமிழினம் நிலைக்குலைந்த வரலாறு கடந்தகால வரலாறு. தொன்மையும், பெருமையும் வாய்ந்த தமிழ்ப் பேரினம் தம் குடிமை இழந்து தாழ்வுற்று மருளும், இருளும் நிறைந்த மூட பழக்க வழக்கங்களால் தன்மானம் இழந்து தாழ்ந்து கிடந்த வரலாற்றை நெஞ்சில் நிறுத்துவோம். தமிழினம் மறுமலர்ச்சி பெறுவதற்கு தம் வாழ்வின் முழுபொழுதையும் செலவிட்ட அறிஞர்களை வணங்குவோம். இந்நூல்களை உங்கள் கையில் தவழ விடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். கோ. இளழகன் நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி’ ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `இன்றைய தமிழரது வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்கின்றது?’ ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும்’ `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள்’ என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள்’ என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம்’. நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார்.’ பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தhர். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு’ இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான்’ படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம்’, `நக்கீரர் கழகம்’, `மாணவர் மன்றம்’ முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர்’ என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈராஸ் பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர்’ என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது’ என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு’ என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான்’ பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார்’ என்று `என் கணவர்’ என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வி’யில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும்’ என்பது அவர் கொள்கையாக இருந்தது. “அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும்”. உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும்’ என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும்’ என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும்’ என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்கiள எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம்’, `தமிழ் இனம்’, `தமிழர் வாழ்வு’, `என்றுமுள தென்றமிழ்’, `புதிய தமிழகம்’ என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும்’ என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி’, `தமிழ்க் கலைகள்’, `தமிழர் நாகரிகமும் பண்பாடும்’, `தமிழக வரலாறு’ என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்கhக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும்’ அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர்’ என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு’ வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல்’, தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது’ `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும்’ என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும்’ என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம்’ என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும்’ என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `அவரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா?’ எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர்’, `மனிதரில் தலையாய மனிதரே’ எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் முன்னுரை இந்நூலில் பதினைந்து கட்டுரைகள் அடங்கியிருக்கின்றன. அவற்றுள் சொற்பொழிவுகள் சில: கட்டுரைகள் பல. `மதுரை எழுத்தாளர் மன்றத் தலைமையுரை’ ஒன்று; கங்கை கொண்ட சோழன் என்பது கங்கை கொண்ட சோழபுரத்தில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தலைமையில் செய்த சொற்பொழிவு; `மனிதனும் சமயமும்; என்பது இவ்வாண்டு பழனியாண்டவர் தேவஸ்தானச் சொற்பொழிவாகும். மற்றவை எல்லாம் கட்டுரைகள். பல பொருள் பற்றிய இக்கட்டுரைகள் தமிழ் மாணவர்க்கும் பொது மக்களுக்கும் பயன்படத் தக்கவை. இவை தமிழ்ப் பற்றையும் ஆராய்ச்சி உணர்வையும் பொருளறி உணர்வையும் ஊட்டவல்லவை. இவற்றை நூலாக வெளியிட முன்வந்த `வள்ளுவர் பண்ணை’ உரிமையாளர்க்கு எனது உளமார்ந்த நன்றி உரியது. மா. இராசமாணிக்கனார் நூல்கள் (கால வரிசையில்) 1. நாற்பெரும் வள்ளல்கள் 1930 2. ஹர்ஷவர்த்தனன் 1930 3. முடியுடை வேந்தர் 1931 4. நவீன இந்திய மணிகள் 1934 5. தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934 6. முசோலினி 1934 7. ஏப்ரஹாம் லிங்கன் 1934 8. அறிவுச்சுடர் 1938 9. நாற்பெரும் புலவர்கள் 1938 10. தமிழர் திருமண நூல் 1939 11. தமிழர் திருமண இன்பம் 1939 12. மணிமேகலை 1940 13. மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941 14. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941 15. பல்லவர் வரலாறு 1944 16. மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944 17. சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945 18 இரண்டாம் குலோத்துங்கன் 1945 19. கட்டுரை மாலை 1945 20. செய்யுள் - உரைநடைப் பயிற்சி நூல் 1945 21. முத்தமிழ் வேந்தர் 1946 22. காவியம் செய்த கவியரசர் 1946 23. விசுவநாத நாயக்கர் 1946 24. சிவாஜி 1946 25. சிலப்பதிகாரக் காட்சிகள் 1946 26. இராஜேந்திர சோழன் 1946 27. பல்லவப் பேரரசர் 1946 28. கட்டுரைக் கோவை 1946 29. சோழர் வரலாறு 1947 30. ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947 31. பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947 32. வீரத் தமிழர் - 1947 33. இருபதாம் நூற்றாண்டுப் ஸபலவர் பெருமக்கள் 1947 34. இந்திய அறிஞர் 1947 35. தமிழ்நாட்டு வடஎல்லை 1948 36. பெரியபுராண ஆராய்ச்சி 1948 37. கதை மலர் மாலை (மலர் ஒன்று0 1948 38. இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948 39. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி 1- 3) 1949 40. மேனாட்டுத் தமிழறிஞர் 1950 41. தென்னாட்டுப் பெருமக்கள் 1950 42. இந்தியப் பெரியார் இருவர் 1950 43. தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950 44. நாற்பெரும் புலவர் 195 45. மறைமலையடிகள் 1951 46. அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951 47. சங்கநூற் காட்சிகள் 1952 48. இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953 49. விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953 50. பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953 51. சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954 52. திருவள்ளுவர் காலம் யாது? 1954 53. சைவ சமயம் 1955 54. கம்பர் யார்? 1955 55. வையை 1955 56. தமிழர் திருமணத்தில் தாலி 1955 57. பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955 58. இலக்கிய அறிமுகம் 1955 59. அருவிகள் 1955 60. தமிழ் மொழிச் செல்வம் 1956 61. பூம்புகார் நகரம் 1956 62. தமிழ் இனம் 1956 63. தமிழர் வாழ்வு 1956 64. வழிபாடு 1957 65. இல்வாழ்க்கை 1957 66. தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957 67. வழியும் வகையும் 1957 68. ஆற்றங்கரை நாகரிகம் 1957 69. தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957 70. என்றுமுள தென்றமிழ் 1957 71. சைவ சமய வளர்ச்சி 1958 72. பொருநை 1958 73. அருள்நெறி 1958 74. தமிழரசி 1958 75. இலக்கிய அமுதம் 1958 76. எல்லோரும் வாழவேண்டும் 1958 77. தமிழகக் கலைகள் 1959 78. தமிழக ஆட்சி 1959 79. தமிழக வரலாறு 1959 80. தமிழர் நாகரிகமும பண்பாடும் 1959 81. தென்பெண்ணை 1959 82. புதிய தமிழகம் 1959 83. நாட்டுக்கு நல்லவை 1959 84. தமிழ் அமுதம் 1959 85. பேரறிஞர் இருவர் 1959 86. துருக்கியின் தந்தை 1959 87. தமிழகக் கதைகள் 1959 88. குழந்தைப் பாடல்கள் 1960 89. கட்டுரைச் செல்வம் 1960 90. தமிழகப் புலவர் 1960 91. தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963 92. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1964 93. தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965 94. சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969 95. பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970 96. கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977 97. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978 98. இலக்கிய ஓவியங்கள் 1979 பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள் 99. சிறுவர் சிற்றிலக்கணம் 100. பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும் 101. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி -2) ஆங்கில நூல் 102. The Development of Saivism in South India 1964 பார்வைக்குக் கிடைக்காத நூல்கள் 1. பதிற்றுப்பத்துக் காட்சிகள் 2. செந்தமிழ்ச் செல்வம் 3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 4. பள்ளித் தமிழ் இலக்கணம் 5. செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்) 6. செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்) ஒiii ஒiஎ முனைவர் மா. இராஜமாணிக்கனார் ஒஎ உள்ளுறை 1. எல்லோரும் வாழவேண்டும் 1 2. திருவக்கரை 7 3. கடவுள் வழிபாடு 12 4. பாடலியும் தமிழ் நூல்களும் 16 5. தமிழ் நாட்டு மறவர்கள் 22 6. கங்கை கொண்ட சோழன் 29 7. பழைய கற்காலம் 36 8. நஸ்ராம் பட்டினம் 42 9. நீத்தார் கடனும் தமிழர் மரபும் 50 10. மனிதனும் சமயமும் 58 11. மதுரை எழுத்தாளர் மன்றம் 66 12. மோரியர் படையெடுப்பு 74 13. பண்டைத் தமிழில் சிறுகதை 83 14. கட்டடக் கலை 92 15. பண்டை இந்தியப் பண்பாடு 101 1. எல்லோரும் வாழவேண்டும் ஓர் இனம் வாழும் நாட்டில் அவ்வின மக்கள் பேசும் மொழியே நிலை பெற்றிருக்கும்; அம்மொழியோ அம்மொழி பேசும் மக்களின் நாகரிகமோ பண்பாடோ கலப்பின்றி இருக்கும். ஆயினும், பிற மொழி பேசும் மக்கள் அந்நாட்டில் இடம் பெறுவராயின், அப் புதியவர் பேசும் சொற்கள் சிலவோ பலவோ நாளடைவில் நாட்டு மொழியில் இடம் பெறுதல் இயல்பு; இவ்வாறு குடி புகுந்த மக்களின் பழக்க வழக்கங்களுள் சிலவும் நாட்டு மக்களிடம் இடம்பெறும்; இவை வரலாறு கண்ட உண்மைகள். சங்க காலத்தில் நமது தமிழகம் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன் (தனித்) தமிழ் பேசப்பட்டு வந்த திருநாடாகக் காட்சி அளித்தது. பின்பு பிராக்கிருந்த மொழியும் வட மொழியும் பேசிவந்த வடநாட்டு மக்கள் தமிழகம் புகுந்தனர். அவர்கள் வைதிகர் (வேத நெறியினர்) எனவும், சமண நெறியினர் எனவும், பௌத்த நெறியினர் எனவும் மூவகையினராவர். இவர்கள் வைதிகம், பௌத்தம், சமணம் என்னும் மூவகை வடநாட்டுச் சமயங்களையும் சேர்ந்த துறவிகள்-பெரியவர்கள்; அவ்வச் சமய நூல்களைப் பழுதறப் படித்தவர்கள். இவருட் சிலர் தமிழ் நாட்டு மலைக் குகைகளில் வாழ்ந்தனர்; பலர் மடங்களை அமைத்துக்கொண்டு வாழலாயினர். “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.” என்ற பரந்த நோக்கத்தைக்கொண்ட தமிழ் வேந்தர், இச்சமயப் பெரியார்களை அன்போடு வரவேற்று, வேண்டிய உதவிகளைப் புரிந்தனர்; தத்தம் சமயக் கொள்கைகளை இந்நாட்டில் பரவச் செய்யத் துணைபுரிந்தனர்; சிறந்த விழா, நாட்களில் பெரு மண்டபங்களில் பேசுவித்தனர். தம் அரசர்களைப் போலவே பரந்த நோக்கம் கொண்ட தமிழ் மக்களும் அச்சமயப் பெரியர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டு வந்தனர்; நாளடைவில் அவரவர்க்கு விருப்பமான சமயத்தைத் தழுவினர். தமிழ்ச் சொற்களைத்தவிரப் பிறமொழிச் சொற்கள் ஒன்றையேனும் அறியாத குப்பன் அப்துல்லாவாக மாறினால், அவனை அறியாமலே அவன் புதிதாகத்தழுவிய இசுலாம் என்னும் சமயத்திற்குரிய அரபுச் சொற்களும் உருதுச் சொற்களும் அவன் பேச்சில் இடம் பெறுகின்றன. இசுலாம் அரபு நாட்டில் தோன்றியது. எனவே, இசுலாத்தின் உயிர் நூலான திருக் குர்-ஆன் அம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. அதனால் அச்சமயச் சொற்கள் அச்சமயத்தைத் தழுவிய குப்பன் பேச்சிலும் எழுத்திலும் இடம் பெற்றுவிடுகின்றன. மேலே கூறப்பெற்ற மூன்று சமயங்களும் வடநாட்டுச் சமயங்களாதலின், அவைபற்றிய நூல்கள் பாலிமொழியிலும் வடமொழியிலும் எழுதப்பெற்றிருந்தன. அவைபற்றி இந்நாட்டில் பேசிய முனிவர்களும் பெரியோர்களும் அம்மொழிச் சொற்களையே தம் பேச்சிலும் எழுத்திலும் கையாண்டனர். எனவே, அச்சமயங்களைத் தழுவிய தமிழ் மக்களும் நாளடைவில் அச்சொற்களைப் பயன்படுத்த வேண்டிய நிலையினர் ஆயினர். முருகன் கிறித்தவன் ஆனதும், `ஜான்’ எனப் பெயர் மாற்றம் பெறுவது போலத் தமிழர் பெயர்களும் அவ்வச் சமயத்திற்கு ஏற்ப மாறுதல் பெற்றன. ஒரே ஒரு சமயம் ஒரு நாட்டில் புகுந்தாலே அது செய்யும் மாற்றங்கள் பலவாகும். தமிழகத்தில் பல்வேறு சமயங்கள் புகுந்தன என்பதை அறியும் போது, அவை என்னென்ன மாறுதல்களைச் செய்திருக்கக்கூடும் என்பதை அறிவுடையோர் எளிதில் உணரலாம். பாலி மொழிச் சொற்களும் வடமொழிச் சொற்களும் தமிழிற் கலக்கத் தொடங்கிய காலத்தில் தொல்காப்பியம் என்னும் பேரிலக்கண நூல் எழுதப்பெற்றது. `வட சொற்கள் தமிழ்’ உச்சரிப்போடு தமிழ் நூல்களில் இடம் பெறுதல் வேண்டும்’. என்று தொல்காப்பியர் வரையறை செய்தார். தமிழ்ப் புலவர்கள் அம்முறையைப் பின்பற்றி வடசொற்களைத் தம் நூல்களிற் கையாண்டனர். எட்டுத்தொகை நூல்களுள் காலத்தால் முந்தியன என்று கருதப்படும் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து என்பவற்றுள் வட சொற்கள் அருகிக் காண்கின்றன. பின் செய்யப்பட்ட கலித்தொகையில் முன்னவற்றை விடச் சிறிதளவு வடசொற்கள் மிகுந்து காணப் படுகின்றன; பரிபாடலில் ஏனையவற்றினும் மிகுந்து காணப்படு கின்றன; அங்கும் சமயத் தொடர்பான இடங்களில்தான் இவ்வாறு மிகுந்து காணப்படுகின்றன; மேலும் பரிபாடலில் புராணக்கதைகள் பல இடம்பெற்றுள்ளன. பின் வந்த சிலப்பதிகாரம் என்னும் சமண காவியத்திலும் மணிமேகலை என்னும் பௌத்த காவியத்திலும் வட சொற்கள் முன்னவற்றை விட மிகுந்தே காண்கின்றன. இடைக்காலத்தில் சங்ககாலத்திற்குப் பிற்பட்ட சமய காலத்தில் மேலே சொல்லப் பெற்ற சமய அறிஞர்கள் பல நூல்களைத் தமிழில் தம் சமய வளர்ச்சிக்காகவே எழுதினர். வடநாட்டில் குப்தர் காலத்தில் தோன்றி வளர்ந்த பக்தி நெறி தமிழகத்தில் நன்கு பரவியது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் அதனைத் தமிழகத்தில் பரப்பிப் புகழ் கொண்டனர். அவர்கள் இயற்றிய திருமுறைகளிலும் அருட்பாடல்களிலும் வட சொற்களின் ஆட்சி வளர்ந்துள்ளது. அப்பொழுது நாடாண்ட பல்லவர்கள் வடமொழி வாணரைச் சமயச் சிறப்புக்கருதித் தமிழகத்திற் குடியேற்றினர்; பல கிராமங்களை வழங்கினர்; வடமொழிக் கல்லூரிகளை ஆங்காங்கு நிறுவினர். கோவில்களில் இவர்தம் செல்வாக்கு மிகுந்தது. தமிழ் யாப்பிலக்கணத்திலும் வடமொழி தழுவிய `விருத்தம்’ முதலிய புதிய செய்யுள் முறைகள் இடம் பெற்றன. பல்லவர்க்குப் பிற்பட்ட சோழப் பேரரசர் காலத்தில் வடமொழியில் உள்ள அணி இலக்கணங்களைத் தழுவித் தண்டியலங்காரம் போன்ற இலக்கண நூல்கள் வெளிப்பட்டன. வடமொழியில் எழுதப்பெற்றிருந்த சிந்தாமணி, சூளாமணி, யசோதரகாவியம், இராமாயணம் போன்றவை தமிழில் எழுதப் பெற்றன. வடநாட்டுச் சைவ குருமார்கள் சோழருடைய அரச குருமாராக அமர்ந்திருந்தனர். சமயத் தலைவர்களாக இருந்த இவ்வடமொழிவாணர்கள் செய்த சமயத் தொடர்பான நூல்கள் வடமொழிக் கலப்பையே கொண்டன. இதனால் தமிழில் செய்யப்பெற்ற சைவ சித்தாந்த சாத்திரங்களிலும் வடமொழிக் கலப்பு ஏற்பட்டது. வைணவப் பெரியார்கள் ஆழ்வார்களின் அருட்பாடல்களுக்குப் பாதி வடமொழியும் பாதி தமிழும் கலந்த மணிப்பிரவாளநடையில் விளக்கவுரை வகுத்தனர். கோவில் நிகழ்ச்சிகள் வடமொழியிலேயே நடைபெறலாயின. பிற்காலத்தில் சோழர்க்குப் பின்னர் ஆட்சி வேறுபாட்டால் இந்நாட்டில் தெலுங்குப் சொற்களும் கன்னடச் சொற்களும் ஓரளவு பரவின. கி. பி. 15-ஆம் நூற்றாண்டில் செய்யப் பெற்ற வில்லி பாரதத்திலும் திருப்புகழிலும் கணக்கற்ற வடசொற்கள் சேர்ந்துவிட்டன. முஸ்லிம்களின் ஆட்சிக் காலத்தில் அரபுச்சொற்கள், பாரசீகச்சொற்கள், உருதுச் சொற்கள் இந்துஸ்தானிச் சொற்கள் என்பன தமிழிற் கலந்தன. பரம சைவரான குமர குருபர அடிகளும் தம் பாடல்களில் `சலாம்’, `சொக்காய்’ போன்ற சொற்களை ஆண்டுள்ளார் என்பது இங்கு அறியத்தகும். முஸ்லிம்கள் இயற்றிய சீறாப் புராணம் முதலிய நூல்களில் இப்பன்மொழிச் சொற்களை நிரம்பக் காணலாம். கி. பி. 18-19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற செய்யுற் நூல்களிலும் உரை நடை நூல்களிலும் வட சொற்கள் மிகுந்து காணப்படுகின்றன. மறுமலர்ச்சி 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மறைமலை அடிகளால் இவ்வெள்ளம் சிறிது தடுக்கப் பெற்றது. தனித் தமிழ் உணர்ச்சி மக்களிடையே அரும்பத் தொடங்கியது. இவ்வெள்ளத்தை அடக்கப் பலர் முயன்றனர். தமிழ் இயக்கங்களும் நாட்டில் தோன்றின. நல்ல தமிழிலேயே பேசவேண்டும் என்ற உணர்ச்சியும் தோன்றியது. இதன் பயனாக, `அக்கிராசனர்’ என்பது `தலைவர்’ எனவும், `பிரசங்கியார்’ என்பது `சொற்பொழிவாளர்’ எனவும் மாறின. இவ்வாறு வடமொழி வெள்ளம் ஏறத்தாழப் பாதியளவு இன்று குறைக்கப்பட்டு விட்டது. தமிழ் இசை இயக்கம் நாட்டில் பரவியது. தமிழறிஞர்கள் தாய்மொழி வளர்ச்சியில் ஊக்கங்கொண்டனர்; ஊக்கங்கொண்ட இளைஞர்கள் தூய தமிழிலேயே பெயர்களை வைத்துக் கொண்டனர்; பொதுமக்களுக்கும் இத்தாய் மொழிப்பற்றை ஊட்டினர்; இன்றும் ஊட்டி வருகின்றனர். திரைப் படங்களிலும் நாடகங்களிலும் தமிழ் உணர்ச்சி காணப்படுகிறது; `தமிழ் வாழ்க’ என்ற முழக்கம் இருபது ஆண்டுகளாக ஒலித்து வருகிறது. இத்தகைய இடைவிடா முயற்சிகளால் இப்பொழுது இவ்வெள்ளம் படிப்படியாகக் குறைந்துவருகிறது. வடமொழியின் கூட்டுறவால், தமிழின் தூய்மை கெட்டது. கோவில்களில் தமிழ் இல்லை; திருமண நிகழ்ச்சிகளில் தமிழ் இல்லை; தமிழன் இறந்தபின் செய்யப்பெறும் இறுதி நிகழ்ச்சிகளிலும் தமிழ் இல்லை; தமிழன் பெயர்களிலும் தமிழ் இல்லை, அவன் பேச்சிலும், எழுத்திலும் பிறமொழிச் சொற்கள் மிகுந்து காணப்படுகின்றன. இக்குறைகள் படித்தவரால் உணரப்பெற்று இப்பொழுதுதான் மேலே குறிப்பிட்டவாறு படிப்படியாக நீக்கப்பெற்று வருகின்றன. இந்த நிலையில் வேறொரு மொழியான ஆங்கிலம் ஆட்சிமொழியாக இருந்து தமிழர் வாழ்வையே மாற்றிவிட்டது. அதனால் தமிழர் பேச்சு வழக்கே பாழ்பட்டு விட்டது, உணர்ச்சியுடைய தமிழர் விழிப்புற்றுத் தமிழிலேயே பேச முயன்று வருகின்றனர். இவ்வாறு தங்கள் தாய்மொழி இழந்த செல்வாக்கைத் தமிழர் புதுப்புத்து வரும் இக்காலத்தில், வேறொரு வட நாட்டு மொழியைத் தமிழர் கற்கவேண்டுமெனக் கூறுவதும் வற்புறுத்துவதும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஏற்றதன்று. ஒருமொழி உண்டாக்கிய கேடுகளை நீக்கிக் கொண்டிருக்கும் பொழுது, வேறொரு புதிய மொழி அரசியல் செல்வாக்கோடு தமிழகத்தில் இடம்பெறுதல், தமிழ் மொழிக்குப் பெருங்கேடு பயப்பதாகும். இதனை நன்கு உணர்ந்தே நற்றமிழ் அறிஞர்கள் 20-ஆண்டுகளாக இந்நுழைவை வன்மையாக எதிர்த்து வருகின்றனர். மொழி வரலாறு அறியாதவரும், கட்சிக் கடலில் மூழ்கியவரும் இவ்வுண்மையை உள்ளவாறு அறிய முயலாது, பிற மொழி நுழைவுக்கு வரவேற்புக்கூறுதல், தம் தாய்மொழியைத் தாமே கொலை செய்வதற்கு ஒப்பாகும். இந்நாட்டில் தமிழை இழித்து வடமொழியையும் பிறமொழியையும் உயர்த்திப் பேசுவோரும் இருக்கின்றனர். இவர்களுடைய பேச்சுக்களும் தமிழ் உணர்ச்சிக்கு மாறான செயல்களும் தமிழ் மக்கள் உள்ளங்களைப் புண்படுத்துகின்றன. இவர்கள் சமயப் பேர்வையைப் போர்த்திக்கொண்டு, ஏதுமறியாத தமிழ் மக்களையும் தந்நலவாதிகளையும் சமயவெறியர்களையும் கட்சிக்கடலில் ஆழ்ந்தவர்களையும் தமிழ்த்துரோகிகளாக மாற்றிவருகின்றனர். “இந்நாட்டு மொழி தமிழ்தானே; நாம் பேசுவதும் தமிழ்தானே; தமிழ் நாட்டில் தமிழ் வளர்ப்பது தானே முறை,” என்னும் உணர்ச்சியோடு இவர்கள் தமிழ் அறிஞர்களோடு மனமுவந்து ஒத்துழைப்பாராயின், சாதி வெறியை நீக்கப் பாடுபட்டிருப்பாராயின், சாதிக் குழப்பமும் மொழிக்குழப்பமும், ஒரு சிலரைப் பலர் வெறுக்கும் நிலைமையும் இந்நாட்டில் ஏற்பட்டிரா. உண்மையை உணர்ந்து, தமிழ்ப்பற்றுக்கொண்டு, சாதி வெறி அகற்றி, “எல்லோரும் வாழவேண்டும்” என்னும் அறநெறியில் அனைவரும் பாடுபடுவராயின், தமிழகம் எல்லாத்துறைகளிலும் சிறப்படையும். இத்தகைய நன்னோக்கம், சாமி-கட்சி-மொழிவெறி இன்றி, அனைவர் உள்ளங்களிலும் மலர வேண்டும் என்பது நல்லறிஞர் ஆவலாகும். 2. திருவக்கரை முன்னுரை தென் ஆர்க்காடு கோட்டத்திலுள்ள சிவத்தளிகளுள் திருவக்கரை ஒன்று. இது புதுச்சேரியிலிருந்து 18 கல் தொலைவில் உள்ளது. இதனைப் பார்க்க வேண்டுவது இன்றியமையாதது என்று புதுவைத் தொழிலாளர் இயக்கத் தலைவர் திருவாளர் சுப்பிரமணியம் அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். நான் அவருடனும் புதுவைக் கல்விக் கழகத் தலைவர், செயலாளர், உறுப்பினர் திரு செல்வத் தொகுப்பாளர் என்பாருடனும் தனி மோட்டார் வண்டியிற் சென்றேன். வண்டி, வழியில் இரண்டு சிற்றாறுகளைக் கடந்து ஆற்றங்கரைமீது நின்றது. நாங்கள் ஆற்றைக் கடந்து அக்கரையில் உள்ள திருவக்கரையை அடைந்தோம். திருவக்கரை மிகச் சிறிய கிராமம். அங்கு நான்கு அல்லது ஐந்து தெருக்களே உண்டு. ஆற்றைக் கடந்து கோவிலை அடையும் பாதை நெடுக அழிந்த கற்சிலைகளின் பகுதிகளும், கற்பாறைகளும், கற்சிலைகளும், மரம் போன்ற கற்பாறைகளும் சிதறிக் கிடக்கும் காட்சி, `திருவக்கரை பழமையும் பெருமையும் பெற்றிருந்த ஊர்’ என்பதை அறிவிப்பதுபோலக் காணப்பட்டது, கோவிலுக்கு முன் குருக்கள் இல்லம் இருக்கிறது. அவர் எங்களை அன்புடன் வரவேற்று எல்லா இடங்களையும் காட்டித் தாம் அறிந்தவரை சில விளக்கங்களைக் கூறினார். திருக்கோயில் இவ்வூரிலுள்ள திருக்கோயில் சம்பந்தப் பெருமான் பாடல் பெற்றது.அதனால் அது கி. பி. 7-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டb தன்பதில் ஐயமில்லை. அது ஏனைய சிவத்தளிகளைப்போலவே பெரிய கோவிலாக இருக்கின்றது. புறச் சுவர்கள் பழுதுபட்ட நிலையில் உள்ளன. திருச்சுற்றுக்கள் முட்செடிகள் முளைக்க இடம் தந்துவிட்டன. திருச்சுறைச் சுற்றுவோர் கால்களில் முள் தைக்கப் பெறாமல் உட்சென்று மீளுதல் அருமை. கோவிலினுள் நுழைந்தவுடன் இடப்புறம் காளிகோவில் ஒன்று இருக்கிறது. அதன் எதிரே மிகப் பெரிய உயரமான சிவலிங்கம் கொண்டுள்ள சிறிய கோவில் ஒன்று இருக்கிறது. அதன் எதிரே நூற்றுக் கால் மண்டபம் ஒன்று உள்ளது. உட்கோவிலுக்கு வலப்புறம் குண்டலிமாமுனிவர் சமாதிக்கோவில் உண்டு. அம்மன் திருமுன் (சந்நிதி) நூற்றுக்கால் மண்டபத்திற்கு எதிரே இருக்கிறது. உட்கோவிலுக்கு வெளியே வெளியே விறு கோவில்கள் சில இருக்கின்றன. கோபுரம் கோபுரம் ஏறக்குறைய 150 அடிக்கு மேற்பட்டது. அடிப்பகுதி கற்களாலும் கோபுரப்பகுதி முழுவதும் செங்கற்களாலும் ஆனவை. செங்கற்களை மறைத்திருந்த சுண்ணாம்பு பெயர்ந்து வீழ்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது செங்கற்களின் அடுக்குகளே கோபுரமாகக் காட்சி அளிக்கின்றன. ஆதலின், கோபுரத்தில் ஓவிய - சிற்ப வேலைப்பாடுகளைக் கண்டு களிகூர்தற்கு இடமில்லை. சில நிலைகளில் செங்கற்கட்டிகளாகிய கோபுரப் பகுதிகள் தம் நிலை தவறிச் சரிந்து கீழே விழக்கூடிய நிலையில் இருக்கின்றன. அவற்றைத் தாங்கும் பேறு பெறுபவர் யாரோ? அவை எந்தப் பெரியார் மீது விழக் காத்திருக்கின்றனவோ? அறியக்கூடவில்லை. காளியம்மன் கோவில் இது பார்க்கத்தக்க ஒன்று. இதற்கு முன்புறம் இரண்டு பெண்சிலைகள் ஓரளவு தலையில் புதையுண்டு நிற்கின்றன. வேறு இரண்டு, கோவிற் கதவின் இரு பக்கங்களிலும் இருக்கின்றன. இவற்றின் வேலைப்பாடு வியப்புறும்விதம் அமைந்துள்ளது. இவை நான்கும் நான்கு இடைப் பெண்களைக் குறிப்பன என்றும், இவர்கள் காளியால் சபிக்கப்பட்டவர்கள் என்றும் குருக்கள் கதை கூறினார். கோவிலுள் காளியம்மை நடனம் புரிகிற நிலையில் வேலைப்பாடு கொண்ட சிலை ஒன்று காணப்படுகிறது. அதற்கு இரு புறங்களிலும் மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி முதலிய மடந்தையர் எழுவரைக் குறிக்கும் சிலைகள் நிறுத்தப்பட்டுள. அக் காளியம்மை `வக்கிரன்’ என்னும் அசுரனை அங்குக் கொன்றதாக ஒரு கதை உலவுகின்றது. பெரிய லிங்கம் காளிகோவிலுக்கு எதிரில் சிறிய கோவில் ஒன்று உண்டு. அதில் உள்ள லிங்கம் தரையில் இருந்து ஆறடி உயரம் உள்ளது. அது வக்கிராசுரனால் வழிபாடு செய்யப்பட்டதாம். அதன் மேற்பகுதி குடிமல்லத்தில் உள்ள லிங்கத்தின் மேற்பகுதியை ஓரளவு ஒத்துள்ளது கவனிக்கத்தக்கது. அந்த லிங்கத்திற்கு எதிரே உள்ள நந்தி பாதியளவு தரையிற் புதையுண்டு கிடக்கிறது. இவ்விரண்டிற்கும் இப்போது வழிபாடு செய்வதில்லை. நூற்றுக்கால் மண்டபம்: இது மிகுந்த வேலைப்பாடு அமைந்த மண்டபம். இது ஆட்டங்கண்டு இடிந்து விழும் நிலையில் இருக்கின்றது. இம்மண்டபம் நாற்புறங்களிலும் உருளைகளையும் குதிரைகளை யும் கொண்டது. தூண்களின் அடிப்பகுதி சிங்கமும் பெற்று விளங்குகிறது. தூணுக்கு மேலே உள்ள பல நிலைகளில் அரை வட்ட வேலைப்பாடு இருத்தல் நோக்கற் பாலது. இவ்வேலைப் பாடுடைய தூண்களைக் கொண்ட கோயில்கள் பழமையானவை என ஆராய்ச்சியாளர் அறைவர். இவை பல்லவர் வேலைப் பாடுகளில் பழமையானவையாகும். உட்கோவில் கருவறையின் எதிரில் ஒரு சில அறை இருக்கின்றது. அதற்குள் இருந்த லிங்கமே இன்று அக்கருவறையில் இருப்பது என்று குருக்கள் கூறினார். சிவபிரான் பெயர் மதிமுடியார் (சந்திர மௌலீஸ்வரர்). மூல லிங்கத்தின் மூன்று முகங்கள் பார்க்கத் தகுந்தவை. பின்புறத்தில் முகம்இல்லை. வலக்காலைத் தூக்கி ஆடும் நடராசர் சிலை இருக்கிறது. கருவறையின் இடப்புறமிருந்து பார்த்து வருகையில் (1) நால்வர், (2) தென்முகக் கடவுள், (3) சோமாஸ்கந்தர், (4) திருமால், (5) மேலே குடையுடைய பிள்ளையார், (இக்குடை இங்குக் காணப்படல் ஆராய்ச்சிக்கு உரியது) (6) குண்டலிமாமுனி, (7) அகத்தியர், (8) சண்டேசுவரர், (9) மகிஷாசுரமர்த்தினி இவர் தம் உருவச்சிலைகள் சிறப்புற விளங்குகின்றன. எல்லாத் தூண்களிலும் அழகிய உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. அவை அனைத்தும் நடனம், இசை இவற்றிற் பங்கு கொண்டுள்ளமை, பழந்தமிழர் நடனக் கலையையும் இசைக்கலையையும் நமக்கு அறிவித்து ஊக்குவன போலக் காணப்படுகிறது. வெளித் தூண்களில் எல்லாம் உடற்பயிற்சிக்கு உரிய பலவகை விளையாட்டுகள், மாடுகளை ஏறி அடக்கல், ஒரே தட்டின்மீது நால்வர் நிற்றல் முதலியன செதுக்கப்பட்டுள்ளன. இவற்றால் பழந்தமிழர் உடற்பயிற்சி முறைகளில் கொண்டிருந்த கவலை நன்கு வெளியாகிறது. திருமுழுக்கு (அபிடேகம்) மண்டபத்திற்கும் வாயிற் காவலர் இருத்தல் வியக்கத் தக்கது இந்நிலை வேறு எங்கும் காண்டல் அருமை. குண்டலிமாமுனிவர் சமாதி இது சிறிய கோவில். இதன் கற்கள் சரிந்து விழுந்து கிடக்கின்றன. இதன் வெளிச்சுவர்மீது கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதன் மேற்கூரை செங்கற்களால் ஆனது. இது சமாதியைக் குறிக்கவே இவ்வாறு கட்டப் பட்டதென்பது குருக்கள் கருத்து. கருவறையில் லிங்கம் காணப்படுகிறது. அது வக்கரன் வழிபட்ட லிங்கம் போன்ற வடிவினது; ஆயின், சிறியது. கோபுரத்தின் மீது செடி வளர்ந்திருக்கிறது; பல வெடிப்புக்கள் உண்டாகியுள்ளன. வரதராசப் பெருமாள் கோவில் இது ஒரு சிறு கோவில். இதில் உள்ள பெருமாள் சிலை நின்ற கோலத்தில் இருக்கிறது. இக்கோவில் மேற்குப் பாத்திருக்கிறது. இதனுள் ஒரு வீரன் கையில் வில்லும் அம்பும் கொண்டு இருப்பதாகச் சிலை ஒன்று இருக்கிறது. அவனுக்கு இருபுறமும் இரண்டு பெண்கள் நிற்கின்றனர். அவ்வீரன் அரசனாகவும், இரு பெண்கள் அவன் மாதேவியராகவும் இருக்கலாம். பெருமாள் வலக் கையில் இருப்பது `பிரயோகச் சக்கரம்’ என்பது கவனிக்கத்தது. ஆயிரம் லிங்கம் ஆயிர (சஹஸ்ர) லிங்கங்கள் காணத்தக்கவை. இவை மிகச் சில கோவில்களிற்றாம் காணக்கிடைப்பவை. முருகன் கோவில் இங்கு முருகப் பெருமான் ஒரே மனைவியாருடன் கோவில் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர். அம்மன் கோவில் அம்மன் பெயர் அமுதாம்பிகை என்பது. இக்கோவில் மண்டபத் தூண்களில் எல்லாம் பலவகை நடனவகைகள் வியக்கும் வகையில் விளக்கப்பட்டுள்ளன. இரண்டு பெண்கள் சக்கரம் போலப் படுத்த நிலையில் நடமாடுதல், மேல் நாட்டார் கூறும் `பின்ஸ்’ நடனம்போல முழங்கால்களை மடக்கிக் கைகோத்து நடித்தல், வலக் காலைத் தூக்கியபடி நடித்தல், இடக்காலைத் தூக்கியபடி நடித்தல், இங்ஙனம் இரண்டு பெண்கள் கைகோத்து நடித்தல் முதலிய பலவகை நடன வகைகள் காணப்படுகின்றன. இந் நடிக மாதர் இக்காலத்துக் `கௌன்’ போன்ற உடை அணிந்துள்ளனர். ஆடவர் சட்டையும் சல்லடமும் அணிந்துள்ளனர். சுருங்கக் கூறின், திருவக்கரை சிறந்த சிற்பக்கூடம் என்னலாம்; பண்டைக் காலத் தமிழர் நடனக்கலையை நாட்டுக்கு உணர்த்தும் நடனக் கலைக்கூடம் என்னலாம்; பத்திக்குப் பெயர் பெற்ற இடம் என்னலாம்; இக்கோவிலுக்கு எதிரே ஏறத்தாழ 600 அடித் தொலைவில் கோவிலை நோக்கியபடி ஒரு பிள்ளையார் கோவில் இருக்கின்றது. அதைப் போலும் பெரிய பிள்ளையாரை நாங்கள் அன்று வரை எங்கும் பார்த்ததே இல்லை. அதன் உயரம் எட்டு அடிக்கு மேற்பட்டதாகலாம். குருக்கள் ஏணி வைத்தேறித் திருமஞ்சனம் செய்கிறார் என்பது தெரிகிறது. இந்த இடத்தில் மைதி தாண்டவம் புரிகிறது. மன ஒருமைக்கு ஏற்ற இடம் இத்திருவக்கரை என்னல் மிகையாகாது. சோழர் காலக் கல்வெட்டுக்கள் இங்கு இருக்கின்றன. 3. கடவுள் வழிபாடு கடவுள் உண்டா? நாற்காலியைப் பார்க்கும்போது அதைச் செய்த தச்சன் உணவுப் பொருள்களை உண்ணும் போது சமையல் செய்தவர் நினைவு நமக்கு வருகிறது. ஆடையைப் பார்க்கும்போது அதை ஆக்கித்தந்த நெசவாளியின் நினைவு நமக்கு உண்டாகிறது. இவ்வாறே ஒவ்வொரு பொருளையும் ஆக்கியவர் ஒருவர் உண்டு என்னும் நினைவு தோன்றுகிறது. சூரியன், சந்திரன், விண்மீன்கள், நிலம், நீர், தீ, காற்று, வானம் இவற்றைப் பார்க்கும் பொழுதும் எண்ணற்ற உயிரினங்களைப் பார்க்கும் பொழுதும் இவை அனைத்தையும் படைத்த ஒரு பேராற்றல் இருக்கவேண்டும் என்று எண்ணுவது இயல்பாகும். அப்பேராற்றல் அவரவர் விருப்பப்படி பெயரிட்டு அழைக்கப்படுகிறது. ஒரு பொருள் - பல பெயர்கள் அப்பேராற்றல் ஆணாகவும் பெண்ணாகவும், இரண்டும் அற்றதாகவும் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது; சைவர் அப்பேராற்றலைச் சிவன் என்று அழைக்கின்றனர்; வைணவர் திருமால் என்று பெயரிட்டுள்ளனர் முஸ்லிம்கள் அல்லாஹ் என்று அழைக்கிக்கின்றர்; கிறித்தவர் பரமபிதா என்று பகர்கின்றனர். சக்தி என்று சிலர் வணங்குகின்றனர்; முருகன் என்று பெயரிட்டுச் சிலர் வழிபடுகின்றனர்; விநாயகர் என்று பெயரிட்டுப் பின்னும் சிலர் அழைக்கின்றனர். இவ்வாறு பலரால் பல பெயர்களிட்டு அழைக்கப்பெறும் பேராற்றல் ஒன்றே ஆகும். கடவுள் உணர்ச்சி பழைய மனிதன் அறிவு வளர்ச்சி பெறாதவன். அவன் வீடுகட்ட அறியாதவன்; உழவு செய்யத் தெரியாதவன் மலைக்குகைகளிலும் மரங்களின் அடியிலும் வாழ்ந்தவன்; இயல்பாகக் கிடைத்த காய்கனிகளை உண்டு மகிழ்ந்தவன்; சிறிது அறிவு வளர்ந்த பிறகு பேசக் கற்றுக்கொண்டவன். பலர் சேர்ந்து வாழும் குடும்ப அமைப்பு பின்பு ஏற்பட்டது. அவன் முதலில் தன்னினும் வலிய உயிர்களைக் கண்டு அஞ்சினான்; அவைகளை வழிபடத் தொடங்கினான்; காலப்போக்கில் அவ்விலங்குகளும் உயிர்களும் அழிந்து ஒழிவதைக் கண்டான்; உலகத்தையும் தன்னையும் சூரியன் சந்திரன் முதலிய பொருள்களையும் ஒரு பொருள் உண்டாக்கியிருக்க வேண்டும் என்று எண்ணத் தொடங்கினான். அந்த எண்ணமே அவனைக் கடவுள் வழிபாட்டில் செலுத்தியது. வழிபாட்டு வளர்ச்சி மனிதன் அறிவு குன்றிய நிலையில் பாம்பு வணக்கத்தை மேற்கொண்டான்; பின்பு இறந்த முன்னோர்களை வழிபட்டான்; பேய் பிசாசுகளைக் கும்பிட்டான்; கிராமங்களை அமைத்து வாழத்தொடங்கிய பிறகு, கிராம தேவதைகளை வழிபடத் தொடங்கினான்; பின்பு அறிவு வளர வளர, இவையனைத்திற்கும் அமலான பரம்பொருள் ஒன்று இருத்தல் வேண்டும் என்று எண்ணி, அதனை வழிபடலானான். பலவகைக் கோவில்கள் “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்ற அநுபவ மொழிக்கு ஏற்ப, ஒழுக்கத்தால் உயர்ந்து மறைந்த பெருமக்களுக்கும், செயற்கரும் செயலைச் செய்து உயிர்விட்ட மேலோர்க்கும் சிறந்த பத்தினிகளுக்கும் கோவில் எடுப்பித்தான். இவ்வாறு நாட்டில் பலதரப்பட்ட கோவில்கள் உண்டாகிவிட்டன. துறவிகளின் உடலைப் புதைத்த இடங்களிலும் கோவில்கள் எழுப்பப்பெற்றன. இவ்வாறு உண்டான கோவில்கள் பல. பக்தி நெறி கடவுள், பரம்பொருள், செம்பொருள் என்று பல பெயர்களால் அழைக்கப்படும். சிறிய ஆற்றலைப் பெற்றிருக்கும் மனிதன் பேராற்றலைத் துணையாகத் தேடுவது இயல்பேயாகும். மனிதன் தனது ஒவ்வொரு செயலிலும் இறைவன் துணையை நாடுகிறான். கள்வனும் கடவுள் துணையை நாடுகிறான். மக்கள் வாழ்வு நிலையற்றது என்பதை உணர்ந்த நன்மக்கள் நிலையுற்ற பரம்பொருளின் துணையை நாடுகின்றனர். மனம் ஆற்றல் வாய்ந்தது. எண்ணங்கள் மனினைச் செயற்படுத்துகின்றன. அவை நல்லவையாயிருப்பின், செயல்களும் நல்லவைகளாக இருக்கும்; நாவிலும் நல்ல சொற்களே வெளிவரும். மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றும் ஒரு மனிதனுக்கு ஆக்கத்தையும் தரும்; அழிவையும் தரும்; எண்ணங்கள் நல்லவையாயிருப்பின், மனிதன் ஆக்கத்தைப் பெறுகிறான்; அவை தீயவையாயிருப்பின், அழிவைப் பெறுகிறான். `அவனே’, `இவனே’ என்று எண்ணுவதைவிடச் `சிவனே, சிவனே’ என்று எண்ணுவது நல்லது” என்பது தமிழ் நாட்டுப் பழமொழி. `சிவனே’ என்று எண்ணுவது மனத்தைத் தூய்மையில் நிறுத்தும். இந்த நினைவு பேச்சில் வெளிப்படும்போது பஜனை ஆகின்றது. பஜனையில் உடலும் செயற்படுகிறது. பரம்பொருளை மனம் நினைக்க, வாய் அதன் பல பெயர்களைச் சொல்ல, உடல் அசைய-மனம், மொழி மெய் என்னும் மூன்றும் பரம்பொருள் நினைப்பிலேயே நிலைக்கின்றன. இதுதான் பஜனை அல்லது வழிபாடு என்பதன் சிறப்பாகும். ஆஸ்திகள் - பக்திமான் எவன்? ஒருவன் அரைமணி நேரம் பஜனை செய்தால் மட்டும் போதாது; நல்ல கதைகளைக் கேட்பது மட்டும் போதாது; அவன் தன் மனச்சான்று கூறும் நல்லுரைப்படி நடக்க வேண்டும்; எப்பொழுதும் நல்லவற்றையே எண்ண வேண்டும்; நல்லவற்றையே பேசவேண்டும்; நல்லவற்றையே செய்ய வேண்டும்; தன்னைப்போலவே பிறரையும் மதித்து அன்புடன் நடந்துகொள்ள வேண்டும்; செல்வர்-எளியர், உற்றார்-மற்றார் என்னும் பேறுபாடு நினையாமல், எல்லோர் நலத்திலும் நாட்டமுடையனவாய்க் கருதும் மனப்பான்மை யுடையவனாய் வாழ்க்கை நடத்துபவனே உண்மையான பக்திமான்-ஆஸ்திகன் எனப்படுவான். பஜனை மட்டும் செய்துவிட்டு ஒழுக்கக் கேடனாய் நடப்பவனும், நல்ல கதைகளைக் கேட்டுவிட்டுச் சாதி வேறுபாடுகளைக் கவனிப்பவனும், தன் சாதி உயர்வுக்கே பாடுபடுபவனும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவனும், பேச்சாலும் செயலாலும் பிறரை வஞ்சிப்பவனும், பஜனை செய்வதாலும், நல்ல கதைகளைக் கேட்பதாலும், பிறர்க்கு அறிவுரை கூறுவதாலும், பக்திமான் ஆகமாட்டான். அவன் நாத்திகர் வரிசையில் முதலில் வைக்கத் தக்கவன். அவன் பஜனை செய்வதும் கதைகள் கேட்பதும் பிறர்க்குச் சொல்வதும் ஊரை ஏமாற்றவேயாகும். சொல்லும் செயலும் ஒத்திருப்பவனே ஆஸ்திகன்-பக்திமான். அவன் திருவடி நம் முடிமேல் பொருந்தட்டும். 4. பாடலியும் தமிழ் நூல்களும் சோணையாறும் கங்கையாறும் கலக்கும் இடத்தில் அமைக்கப்பெற்ற அரண்மிகு நகரம் பாடலி. அதனை அமைத்தவன் சைசுநாக வமிசத்தரசனான (பிம்பிராசன் மகனான) `அஜாத சத்ரு’ என்பவன். அவன் காலமுதல் அந்நகரம் மகத ராச்சியத்தின் தலைநகரமாக விளங்கியது. ஆனால் அஃது உலகப் புகழ்பெற்றது மோரியர் காலத்தேதான்; பின்னர்க் குப்தர் காலத்தேயும் புகழுடன் விளங்கியது. இந்நகரம் சுமார் கி. மு. 500-க்குச் சிறிது முன் கட்டப்பட்டதென உத்தேசமாகக் கோடல் தவறாகாது. சைசு நாக வமிசம் கி. மு. 400 உடன் அழிந்து விட்டதாக வரலாறு கூறுகிறது.1 பாடலியும் நந்தரும் சைசுநாக மரபினர் ஆட்சியை ஒழித்து மகத ராச்சியத்தை ஆண்ட முதல் அரசன் மஹாபத்ம நந்தன் என்பவன். அவன் கோசலை, அவந்தி முதலிய நாடுகளைப் பிடித்து மகத ராச்சியத்தை விரிவாக்கினான்.2 இவனுக்குப் பின் எண்மர் படலியை ஆண்டதாகக் கூறப்படுகிறது. `நவவந்தர்’ என்பவர் இவரே. இந்நவநந்தர் காலத்தில், பாடலி சிறப்புற்று விளங்கியதாகத் தெரிகிறது. இவ்வேந்தரைப் பற்றித் தமிழர் நன்கறிந்திருந்தனர் என்பது மாமூலனார் பாடல்களால் விளக்கமாகும். தமிழகத்து வணிகர் வேதகாலத்திலிருந்தே வடநாட்டாரோடு வாணிகம் செய்து வந்தனர் என்பது வேதங்களில் புகழ்ந்து கூறப்பட்டுள்ள `முக்தா’ (முத்தம், முத்து,) என்ற தமிழ்ச் சொல்லாலும், ஓடா (ஓடம்) முதலிய சொற்களாலும், அவர்கள் பலவற்றுக்கும் பயன்படுத்திய பொன், தந்தம் முதலியவற்றாலும் நன்கறியலாம்.3 பின்னர் இராமாயண காலத்தில் வடநாட்டார் தமிழகம் வந்ததும், பாரத காலத்தில் அருச்சுனன் பாண்டியன் மகளை மணந்ததும், சஹாதேவன் தமிழசரரிடம் திறைபெற்றுச் சென்றதும், பாரதப் போரில் மூவேந்தர் கலந்துகொண்டதும் போல்வன தமிழ் நாட்டுக்கும் வடநாட்டுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை நன்கு விளக்குவனவாகும், `வடுகர்’ எனவும், `வடவடுகர்’ எனவும், `வடுவர் தேயம்’ எனவும், தொகை நூற் பாடல்களில் வருஞ்சொற்கள் தமிழர், வடுகர் தேயத்தையும், அவர் நாட்டுக்கப்பாற்பட்ட வடவடுகர்4 (மகதராச்சியத்தார்) தேயத்தையும் நன்கறிந்தவர் என்பதும், இச் சொற்களைப் பிரிவாற்றாத் தலைவி கூறுவதாகவும், தோழி கூறுவதாகவும் பிறவாறும் வருங் குறிப்புக்களையும் நோக்க, அக்காலத் தமிழர் வடுகரோடும் வட வடுகரோடும் புரிந்து வந்த வாணிகம் இனிது விளங்குவதாகும். எனவே, நெடுங்காலமாக இங்ஙனம் வடநாட்டாருடன் நடைபெற்று வந்த வாணிக நந்தர் காலத்தும் நடைபெற்று வந்தது, மோரியர் காலத்தும் நடைபெற்று வந்தது என்பதில் வியப்பில்லை. இது நிற்க. “நீகண் டனையோ? கண்டார்க்கேட் டனையோ? ஒன்று தெளிய நசையினம் மொழிமோ; வெண்கோட் டியானை சோணை படியும் பொன்மலி பாடலி பெறீஇயர் யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே?”5 என வரும் செய்யுளில் பாடலி நகரம், சோணையாற்றின் அணித்தென்பதும், பொன் மலிந்தது என்பதும் காணத்தக்கன. தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலை மகளது வேறுபாடு கண்டு தோழி அவளை அகங்குழைய அணைத்து, “உன் தலைவர் நந்தன் செல்வம் பெறுவதாயினும் அங்குத் (வாணிகம் செய்யச் சென்ற இடத்தே) தங்கலர்; விரைவில் வருவார்; நீ கவலையுறாதே,” எனக் கூறு முகத்தான் நந்தன் செல்வச் சிறப்பைக் கூறுதல் கண்டு மகிழத்தக்கது. “நந்தன் வெறுக்கை பெறினும் மற்றவண் தங்கலர் வாழி தோழி.”6 `நந்தர் பல்புகழ் எய்தியவர்; போர்களில் சிறந்தவர்; அவர் காலத்தே அவர்தம் தலைநகராய பாடலி சீர் மிகுந்திருந்தது,’ என்னும் செய்தி கீழ்வரும் அடிகளால் அறியலாம்: “பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்”7 சீர் மிகு பாடலி ..................................................- கங்கையாற்றில் கரந்த செல்வம் இத்தகைய பாடலியை ஆண்ட முதல் நந்தனான மஹாபத்ம நந்தன் என்பவன் கங்கையாற்று நீரைத் தேக்கி இடையே மணலைத் தோண்டி, அங்குண்டான் குழியில், தான், பலவகையினும் சேமித்த பெருநிதியை ஐந்து பெட்டிகளில் (கோசங்களில்) இட்டு, அவற்றைப் புதைத்து மேலே ஈயத்தை உருக்கி வர்த்து மூடி விட்டான்; பின்னர் முன்போல நீரை ஓட விட்டான். (இவ் வேலையில் ஈடுபட்ட ஏவலர் இரகசியம் வெளியிடுரென்று எண்ணி அவர்ளைக் கொன்று விட்டதாகவும் கூறப்படுகிறது.) இதுவே, அகம் - 265 கூறுவதாகும். “தலைவனைத் தாழச் செய்தது, நந்தர் நீர் முதல் (அடியில்) கரந்த (மறைத்து வைத்த) செல்வமோ?” எனத் தலைவி தோழிக்குக் கூறினாள் என்பதே பொருந்துவது. இது கன்னட மொழியில் வரையப் பட்டுள்ள “சந்திரகுப்த சக்ரவர்த்தி” என்னும் நூலின் ஏழாம் பக்கத்தில் காணத்தக்கது. “பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை நீர்முதல் கரந்த நிதியங் கொல்லோ?” 8 இதன் பொருள்: பல்புகழ் நிறையப் பெற்ற வெல்லும் போரைச் செய்யும் நந்தர், தமது சிறப்பு மிகந்த பாடலியிடத்துக்கூடிக் கங்கை நீரின் அடியில் மறைத்து வைத்த நிதியோ (தலைவனைத் தாழச் செய்தது).” வேறு கருத்து இவ்வடிகளில் வரும் செய்தி, பாடலிபுரம் கங்கையாற்றில் அழிந்தது எனப் பொருள் படுவதாகக் கொண்டு, “இது பாஹியானுக்குப் பின்னும் (சுமார் கி. பி. 405) ஹிவான்சுவாங்கிற்கு முன்னும் (கி. பி. 635) நடந்ததாகும், அதனையே மாமூலர் குறித்தனர்” எனப் பண்டிதர் மு. இராகவையங்கார் அவர்கள் கூறினர். அம்முடிபே பொருந்துவதாக விஜயநகரம் அரசர்-கல்லூரிச் சரித்திரப் பேராசிரியராகிய திரு ஆ. ளு. இராமசுவாமி ஐயங்கார் அவர்கள் பேசியுள்ளார்.9 (சங்ககாலம் கி. பி. 5-ஆம் நூற்றாண்டு என்பதற் கமைந்த காரணங்களுள் இதுவும் ஒன்றாகும் என்றும் கூறியுள்ளார்). பாஹியான் இந்தியா வந்தது கி. பி. 5-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலாகும் (கி. பி. 399 - 414). 10 ஹிவான்சுவாங் இந்தியா வந்து இருந்தது 7-ஆம் நூற்றாண்டின் முதற்பாதியிலாகும். (கி. பி. 629 - 645).11 இவை இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் (கி. பி. 415 - 628) பாடலிக்குற்ற அழிவையே மாமூலனார் குறிப்பதாயின், `நந்தர் பாடலி’ எனக் கூறுவானேன்?. பாடலியை உண்டாக்கியவன் கி. மு. 550-இல் வாழ்ந்த சைசுநாக வமிசத்து அரசனான `அஜாத சத்ரு’ என்பது வரலாறு கண்ட உண்மை. அந்நகரம் உலகப் புகழ் வாய்ந்த நகரமாகப் பெருஞ் சிறப்போடு விளங்கியது சிறப்புற்ற மோரியர் காலத்திலும் குப்தர் காலத்திலுமே (கி. மு. 322 -கி. மு. 232; கி. பி. 300 - 500). பாடலியை உண்டாக்கியவன் பெயரைப் புணர்த்தி `அஜாதசர்து பாடலி’ என்றேனும், உலகப் புகழ் பெற்று இருந்ததற்குக் காரணர் என்ற காரணம் பற்றி `மோரியர் பாடலி’ என்றேனும், இன்னார் பாடலியாக இந்நகரம் விளங்கிய போது இவ்வழிவு ஏற்பட்டது என்பதைக் குறிக்க (குப்தல் காலத்தில் அவ்வழிவு ஏற்பட்டிருந்து அதனையே குறிப்பது மாமூலனார் கருத்தாயின்) `குப்தர் பாடலி’ என்றேனும் கூறியிருந்தால், அதற்கு மேற்கண்டவாறு பொருள் வலிந்து கொள்ளினும் பொருந்தும். மாமூலர் கி. பி. 5 - ஆம் நூற்றாண்டில் நடந்த அழிவைக் கூறுவதாயின், `குப்தர் பாடலி கங்கையாற்றில் அழிந்தது’ என்றல்லவோ கூறியிருத்தல் வேண்டும்? அங்ஙனம் கூறாமல் கி. பி. 5-அம் நூற்றாண்டில் நடந்த அழிவினை, அதற்குச் சுமார் 800 வருடங்கட்கு முற்பட்ட `நந்தர் பாடலி’ என `நந்தரைத் தொடர்பு படுத்துக் கூறி, அதன் செல்வம் கங்கையாற்றில் மறைந்தது என வற்புறுத்திக் கூறுவானேன்? மோரியரை (மௌரிய வமிசத்தவரை)ப் பற்றி விளக்கமாகக் கூறும் மாமூலனார், “பல் புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலி” எனத் தெளிவாக ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றிக் கூறியிருப்பதும் நாம் மேற்கூறிய வரலாற்றையே குறிப்பதாகும் என்பது ஈண்டு மீண்டும் உணரத்தக்கது. “நந்தர், பாடலியை ஆண்ட செய்தியை மட்டுமே தமிழர் உணர்ந்திருந்தனர்; பிற்காலத்தில் அந்நகரத்தைப் பற்றி ஏதுமே அறிந்திலர். எனவே, பிற்காலத்திய அழிவினை `நந்தர் பாடலி அழிந்தது’ எனக் கூறியிருத்தலும் இயலாதோ?” எனக் கடாவின், அஃதும் இயைவதன்று. என்னை? சந்திரகுப்தன் அமைச்சனான சாணக்கியன் தான் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில், “தமிழகத்திலிருந்து இரத்தினங்கள், சேரநாட்டு வைடூரியங்கள், கருநிறமுள்ள பாண்டி நாட்டுச் சால்வைகள், மதுரை மஸ்லின் துணிகள் முதலியனை சந்திரகுப்தன் பொக்கிஷசாலைக்கு அனுப்பப்பட்டன,”12 என்பதிலிருந்து, தமிழர் மகத நாட்டாரோடு வணிகம் புரிந்தமை நன்குணரலாம். சந்திரகுப்தன் கி. மு. 322-கி. மு. 298 வரை ஆண்டவன். அக்காலத்தில் வாணிகம் செய்த தமிழர், `பாடலியில் மோரியர் ஆட்சி நடந்தது’ என்பதை அறியாமல் இருந்தனர். எனக் கூற இயலாது. கூறின், அறிவுடை உலகம் நகைக்கும். எனவே, நாமறிந்தவரை, தமிழர் `நந்தர் பாடலி’யைக் கண்டிருந்தனர்; `மோரியர் பாடலி’யையும் கண்டிருந்தனர் என்பதை முறையே மாமூலனார் கூற்றைக் கொண்டும், சாணக்கியன் அர்த்த சாஸ்திரத்தைக் கொண்டும் நன்குணரலாம். மேலும், நந்தர்க்குப் பின்வந்த `மோரியர் தமிழகத்தின்மீது படையெடுத்தனர்’ என்பது மாமூலனார் பாக்களால் அறியலாம்.13 நந்தரைப் பற்றிக் கூறும் செய்யுளிலேயே மாமூலனார் மோரியர் படையெடுப்பையும் விளக்கமாகக் கூறுதல் கவனித்தற்குரியது. அம்மாமூலனாரே, `நந்தர் பாடலியின் செல்வம் கங்கையாற்றில் கரந்துள்ளது’ எனப் பிறிதோர் செய்யுளில் கூறியுள்ளார். மோரியரே தமிழகத்தின்மீது படையெடுத்தவர் என்பதைத் தமிழ் மக்கள் நன்குணர்ந்தனர் என்பது கீழ் வரும் பல புலவர் அடிகளால் அறியக் கிடக்கும் அருஞ் செய்தியாகும்: 1. “கனைகுரல் இசைக்கும் விரைசெலற் கடுங்கணை முரண்மிகு வடுகர் முன்னுற மோரியார் தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு”14 2. “மோகூர், பணியா மையின் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர்”15 3 “விண்பொரு நெடுவரை இயறேர் மோரியர் பொன்புனை திகிரி திரிதரக் குறைந்த”16 4. “வெண்வேல். விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர் திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த”17 இந் நான்கனுள் இரண்டாவதன்கண் வரும் `வம்ப மோரியர்’ என்ற தொடரைக் கொண்டு, மோரியர் தமிழகத்தின்மீது படையெடுத்திலர்; குப்தர் தங்களையும் மோரியர் எனக் கூறிக்கொண்டமையின், அவர்களைப் `புதிதாக வந்த மோரியர்’ என்று குறிப்பிட்டார்,” என மேற்சொன்ன அறிஞர் இருவரும் கொண்ட முடிபால், `நந்தர் பாடலி’யைக் `குப்தர் பாடலி’ என்றும் கூற நேர்ந்தது. 5. தமிழ் நாட்டு மறவர்கள் சங்ககால மறவர்கள் மறம் என்ற சொல்லுக்கு வீரம் என்பது பொருள். மறவர் என்னும் சொல், வீரர் என்னும் பொருள் தரும். எனவே, மறவர் என்பது பண்பு பற்றி வந்த பெயராகும். சங்ககாலப் போர் வீரர்கள் மறவர் என்றே அழைக்கப்பட்டனர். இவர்கள் குடி `மறக்குடி’ (வீரக்குடி) எனப்பட்டது. மறவர்கள் போருக்கு முன் மறவர்கள் பகைவர் நாட்டுக் கால் நடைகளைக் கவர்ந்தனர்; போரை அறிய முடியாத அவ்விலங்குகளைப் பாதுகாப்பது அறம் எனக் கருதினர். இம் முயற்சி வெட்சித்திணை எனப்படும். இதனை எதிர்த்து நிற்பவர்களும் மறவர்களே. எதிர்த்து நிற்றல் கரந்தைத் திணை எனப்படும். பின்பு அந் நாட்டின்மீது படையெடுக்கப்படும். அது வஞ்சித்திணை எனப்படும். தாக்கப்படும் நாட்டினர் எதிர்த்துப் போர் செய்தல் காஞ்சித்திணை எனப்படும். கோட்டையை வளைத்து உட்புக முயலுதல் உழிஞைத்திணை எனப்படும். கோட்டையில் உள்ளிருந்து எதிர்த்து நிற்றல் நொச்சித்திணை எனப்படும். பரந்த வெளியில் இருதிறத்தாரும் போர் செய்தல் தும்பைத் திணை எனப்படும். வெற்றி பெறுதல் வாகைத்திணை எனப்படும். ஒவ்வொரு போர் முயற்சியிலும் அவ்வம் முயற்சியை மேற்கொள்பவர் வெட்சி முதலிய பூக்களைத் தலையில் செருகிக்கொண்டு, அல்லது மாலையாக அணிந்து கொண்டு போரிடுதல் மரபு. இற்றைக்கு ஏறத்தாழ 2,300 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் போர் முறைகள் குறிக்கப்பட்டுள்ளன. அவை திடீரென்று தொல்காப்பியர் காலத்தில் ஏற்பட்டவை அல்ல; அவருக்கு முன்னரே, பன்னெடுங் காலமாக இத்தமிழகத்தில் இருந்தவை. எனவே, இப்போர் முறைகளை முற்றக்கற்ற மறவர்கள் கல் தோன்றி மண் தோன்றாக் கால முதல் தமிழகத்தில் இருந்துவரும் பழங்குடி மக்களாவர். தமிழ் மறவர் தமிழ் மறவர் முன்வைத்த காலைப் பின் வைக்காதவர்; போர் எனின், அகமும் முகமும் மலர நிற்பவர்; பாணனது துடியோசையைக் கேட்டாலும், போர் ஓசை என்றெண்ணித் துள்ளிக்குதிக்கும் உணர்ச்சி மிககவர்; போர் புரிந்து மார்பில் விழுப்புண் (சிறந்த காயம்) படாத நாட்கள் பயனற்ற நாட்கள் எனக் கருதும் மனப்பான்மையுடையவர்; போரில் புறங்காட்டி ஓடாதவர்; தங்கள் மறக்குடி மகளிரை முடியுடை மூவேந்தரே விரும்பினும், அந்த மணம் பெண்ணின் விருப்பத்திற்கு மாறுபட்டதாயின், இடங் கொடார்; அதன் பொருட்டு மன்னரையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் மிககவர். போரில் விழுப்புண்பட்டு இறந்த மறவர்க்கு மரியாதை செய்யப்படும். வீரர் ஒரு சிறந்த கல்லைத் தேர்ந்தெடுப்பர்; அதனை நன்னீரில் நீராட்டுவர்; அதன் மீது மறவனது உருவம் பொறிக்கப்படும். அவ்வுருவத்தின் கீழ் அவனது பெயரும், சிறப்பும் எழுதப்படும். பின்னர் அக்கல், அவன் இறந்த அல்லது அவன் உடலைப் புதைத்த அல்லது எரித்த இடத்தில் நடப்படும்; பிறகு, அதற்குப் பூசை நடைபெறும். மன்னனும் மறவரும் விழாக் கொண்டாடுவர். அவ்வீரன் தன் குடும்பத்தினருக்குத் தெய்வமாய் விளங்குவான். இறந்த வீரன் எதிர்கால இளைஞர்களுக்கு வீரத்தின் அறிகுறியாக விளக்கமுறுவான். இங்ஙனம் வீரர்க்குக் கல் எடுக்கும் வழக்கம் தொல்காப்பியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள மதுரைவீரன், சங்கிலி கருப்பன், கருப்பண்ணசாமி, ஐயனார் முதலிய சிறு தெய்வங்கள் பழைய போர் வீரர்கள் என்பதும், நாளடைவில், இவர்களைப் பற்றித் தெய்வீகக் கதைகள் புனையப்பட்டிருக்கின்றன என்பதும் ஆராய்ச்சி அறிஞர்கள் கருத்து. மறக்குடி மகளிர் தமிழகத்தில் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. ஒரு மறவர் குடும்பத்தில் வயது முதிர்ந்த தாயும், அவள் மகனுமே இருந்தனர். மகன் வயது முதிர்ந்த தன் தாயை விட்டுப் போர்க்களம் செல்ல விரும்பவில்லை. இதனை உணர்ந்த தாய் அவனை நோக்கி, “உன்னைப் பெற்ற தாயைவிட உனது தாய்நாடு உயர்ந்தது. அதனைக் காக்க வேண்டுவது உனது கடமை. ஆதலால், போருக்கு விரைந்து செல். போரில் இறக்க நேர்ந்தால் மார்பில் விழுப்புண்பட்டு இறந்து போவாயாக. வீட்டுக்கு வருவதாயின் வெற்றியுடன் வா” புறங் காட்டி வராதே,” என்று கூறி மகனை வாழ்த்திப் போர்க்களத்திற்கு அனுப்பினாள். அவ் வீர மகன் தன்னால் இயன்ற வரையிலும் கடுமையாகப் போர் செய்தான்; ,இறுதியில் மார்பில் புண்பட்டு வீழ்ந்தான். ஆனால் தன் மகன் முதுகில் புண்பட்டு இறந்தான் என்று கிழவி கேள்விப்பட்டாள். தள்ளாத அக் கிழவி சினத்தால் பொங்கினாள்; வீட்டிலிருந்த வாளைக் கையிலேந்தினாள்; “என் மகன் முதுகில் காயம்பட்டது உண்மையாயின், அவனுக்குப் பால் கொடுத்த என் மார்பை அறுப்பேன்,” எனச் சூளுரைத்தாள்; போர்க்களம் நோக்கி நடந்தாள்; தன் மகனது உடலைப் பார்த்தாள்; அவன் மார்பில் காயம்பட்டு இறந்தான் என்பதைக் கண்டாள்; அவளுடைய அகமும் முகமும் மலர்ந்தன; அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைவிட மிக்க மகிழ்ச்சி அடைந்தாள். மற்றொரு மறக்குடி மகள் முன்பு நடந்த போரில் தன் கணவனை இழந்தாள். மீண்டும் போர் தொடங்கியது. அப்பொழுது அவள் வீட்டில் அவள் மகன்-தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் - ஒருவனே இருந்தான். அவள் அச் சிறுவனை அன்போடு அழைத்தாள்; அவன் தலையைச் சீவினாள்; அவன் கையில் வேலைக் கொடுத்தாள்; “மகனே, நாட்டைக் காக்கும் போரில் உனது தந்தையார் உயிர் விட்டார். இப்பொழுது உன்முறை வந்திருக்கிறது. உன்னைப் பெற்ற தாய்நாட்டிற்காக, உன்னால் முடியும் வரையில் போர் செய்,” என்று கூறிப் போர்க்களத்திற்கு அனுப்பினாள். இத்தகைய மறக்குடி மகளிர் சங்க காலத்தில் பலராவர். அவர்களைப் பற்றிய பாடல்கள் சங்க நூல்களில் வீர ஒளியை வீசுகின்றன. இடைக் காலத்தில் சங்க காலத்திற்குப் பிற்பட்ட பல்லவர், சோழர் காலங்களில் மறக் குடியினர் மங்காமல் இருந்தனர். பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக, மன்னன் மணம் வேண்டித் தூது விடுவான். மறவர் அத் தூதர் முன் அவ்வரசனை இகழ்ந்து பேசி அனுப்பி விடுவர். இதற்கு மறம் என்பது பெயர். கலம்பகம் என்னும் நூல்களில் மறம் என்னும் தலைப்பில் இச் செய்தியைக் காணலாம். மறவர்கள் மார்பில் புண்பட்டு வீடு திரும்புவர். மறக்குடி மகளிர் மகிழ்ச்சிக் கண்ணீருடன் தம் கணவரை வரவேற்பர். ஒவ்வொரு மறக்குடி மனைவியும் தன் கணவனது புண்ணுக்குத் தன் மார்பால் வேது கொடுப்பாள். கணவர் பிரிவாற்றாத மறத்தியர் போர்க்களத்திலேயே தத்தம் கணவரது ஆவியற்ற உடலைத் தழுவி இறப்பதும் உண்டு. வீரக் கணவரை மனைவியர் வரவேற்கும் முறையும், பணி விடை செய்யும் முறையிம் கலிங்கத்துப் பரணியில் பரக்கக் காணலாம். “என் தகப்பனார் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த போரில் இறந்தார். அவருக்கு வீரக்கல் நடப்பட்டது. அதற்குப் பின்பு நடந்த போரில் என் கணவரும் உயிர் துறந்தார். பின்பு நடந்த போரில் என் தமையன்மார் உயிர் துறந்தனர். இன்று நடந்த போரில் என் மகன் உடம்பெல்லாம் அம்புகள் தைக்கப்பட்டு, முள்ளம் பன்றி போல இறந்து கிடக்கின்றான்,” என்று மறக் குடித் தாய் ஒருத்தி கூறி மகிழ்ந்தாள். “கல்நின்றான் எந்தை; கணவன் களப்பட்டான்; முன்னின்று மொய்யவிந்தார் என் ஐயர்-பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன் முன்னோடி எய்போல் கிடந்தாbன் ஏறு.” பிற்காலத்தில் தமிழரசுகள் வீழ்ச்சியுற்ற பிறகு, தமிழ் நாட்டில் நடைபெற்ற போர்கள் பலவாம். தமிழ் நாட்டு மறவர், படையெடுத்த முசுலிம்களோடும் ஐரோப்பியரோடும் பல போர்கள் செய்தனர். தமிழகத்துப் போர்வீரர்களுக்கெல்லாம் மறவர் என்ற பெயர் சங்க காலத்தில் பொதுவாக இருந்தது. ஆனால், பிற்காலத்தில் ஒவ்வொரு நாட்டு மறவர்க்கும் வேறு வேறு பெயர் வழங்கலாயிற்று. தொண்டை நாட்டில் நாயகர் எனவும், நடுநாட்டில் படையாட்சி எனவும், சோழ நாட்டில் கள்ளர் எனவும் பெயர்கள் தோன்றின. ஆனால் பாண்டிய நாட்டில் மட்டும் மறவர் என்ற பழைய பெயரே இன்றளவும் வழங்கி வருகின்றது. வீரம் செறிந்த மறவருள்-ஒவ்வொரு குடியினருள்ளும் இருத்தற் போல-தலை மக்களென்றும், பொது மக்களென்றும் இரு பிரிவுகளுண்டு. தலைமக்கள் தானைத் தலைவராகவும், முடி மன்னனால் சிறப்பிக்கப் பெற்ற சிற்றரசராகவும், பெருநிலக் கிழாராகவும் விளங்கினர். இராம்நாதபுர அரசர், சிவகங்கை அரசர் போன்றவர் அரச ரென்ற முறையில் மதிக்கப்படுவர். சிவகிரி சமீன்தார் போன்றவர் சமீன்தார் முறையில் மதிக்கப்படுவர். முத்து ராமலிங்கத் தேவர் போன்ற பெருமக்கள், பெருநிலக் கிழார் வரிசையில் மதிக்கப்படுவர். `தேவர்’ என்ற பட்டம் பழங்காலத்தில் அரசன் குடிமக்களால் நன்கு மதிக்கப்பட்hன். காக்கும் பொறுப்பை ஏற்ற அரசன் நாளடைவில் காத்தற் கடவுளான திருமால் போலவே கருதப் பட்டான். அக்கால முதல், அரசன் தெய்வத் தன்மை பொருந்தியவன் என்று பொருள்படும் முறையில் `தேவன்’ என்று வழங்கப்பட்டான். அரசனைக் குறிப்பிடும் இடங்களிலெல்லாம் அவன் இயற்பெயரோடு தேவன் அல்லது தேவர் என்ற பெயர் (`அர்’ விகுதி மமரியாதையைக் குறிக்கும்) சேர்த்தே வழங்கப்பட்டது. அரசர் பெயரோடு `தேவர்’ என்பது சேர்ந்து வந்தது. இதனைப் பிற்காலச் சோழர் கல்வெட்டுக்களில்தாம் முதன் முதற் காண்கின்றோம். இராசராச சோழ தேவர், இராசேந்திர சோழ தேவர், குலோத்துங்க சோழ தேவர், வீரபாண்டிய தேவர், குலசேகரப் பாண்டிய தேவர் என வரும் கல்வெட்டுத் தொடர்கள் இவ்வுண்மையை நன்குணர்த்தும். தமிழரசர் வேளாளர்களிடத்தும் பிற மன்னரிடத்தும் தம் ஆட்சிக்குட்பட்ட குறுநில மன்னர்களிடத்தும் பெண் கோடல் இயல்பு என்பதைக் கல்வெட்டுக்களால் அறியலாம். இம்முறைபற்றிப் பாண்டியர் மறவர் குலத் தலை மக்களிடத்து மணவுறவு கொண்டிருத்தல் இயல்பு. இராச ராச சோழனது தமக்கையரான குந்தவ்வையார் கணவர் வல்லவரையர் வாண்டிய தேவர் என்ற சிற்றரசர் என்பது. இங்குக் கருதத் தக்கது. எனவே, முடிமன்னரைப் பின்பற்றி அவர்களது விருதுப் பெயர்களைச் சிற்றரசரும், பிறரும் சூடிக்கொண்டாற்போலவே, அம்முடி மன்னரோடு மணவுறவு கொண்ட காரணத்தாலும், பிற சிறப்புக்களாலும் மறவர் குலத் தலைமக்கள் `தேவர்’ என்ற சிறப்புப் பெயரைப் புனைந்து கொண்டனர் என்று கருதுதல் பொருத்தமாகும். கள்ளர் மரபிலும் தேவர் என்ற பட்டம் உண்டு. உக்கடைத் தேவர், பெருநிலக்கிழார் என்பது இங்கு அறியத் தகும். காலப்போக்கில் தலைமக்களுக்கே இருந்த தேவரென்ற சிறப்புப் பெயர், அதன் வரலாறு மறைந்துவிட்ட காரணத்தால், அம் மரபைச் சேர்ந்த பொது மக்களுக்கும் வழங்கலாயிற்றுப் போலும்! முடிவுரை மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மறவர் சிற்றூர்கள் ஆங்காங்கு இருக்கின்றன. அவருள் சிற்றரசர், சமீன்தார், நிலக் கிழார் என்னும் தலைமக்கள் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளனர். அப்பெருமக்கள் தமிழை வளர்ப்பதிலும் புலவரைப் போற்றுவதிலும் கண்ணும் கருத்துமாய் இருந்து வந்திருக்கின்றனர். காலப்போக்கில் அவர்களது வளம் குன்றவே, அவர்கள் செய்து வந்த நற்பணிகளும் படிப்படியாகக் குறையலாயின. மறவர் பொதுமக்கள் சங்ககால மறவரது வீரத்தை இன்றளவும் பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஆயினும் இந்த நூற்றாண்டுக்கு ஏற்ற வளர்ச்சி-கல்வி,. கைத்தொழில், பயிர்த்தொழில், வாணிகம் முதலிய பல துறைகளிலும் வளர்ச்சி-அவர்களிடம் இல்லை. அவர்கள் பெரும்பாலராக வாழ்கின்ற சிற்றூர்களுக்கும் போக்குவரவுப் பெரும்பாதைகட்கும் தொடர்பு கூட இன்றளவும் இல்லாதிருத்தல் வருந்துதற்குரியது. அவர்கள் மிகவும் பிற்போக்கான நிலையில் இருந்து வருகின்றனர். மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த சமூகங்கள் வியத்தகு முறையில் உயர்வடைந்து வரும் இக்காலத்தில், பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் வீரத்தை விளக்கி வந்த சமூகம் மிக இழிந்த நிலையில் இருக்கிறது பெரிதும் வருந்துதற்குரியது. அச் சமூகத்தினர் தமது பழம் பெருமையை நன்குணர்ந்து வீறுகொண்டு எழுதல் வேண்டும்; எப்பாடுபட்டேனும் வருந்திக் கல்வி கற்றல் வேண்டும்; தொழில், வணிகம், அரசாங்க அலுவல் முதலிய துறைகளில் ஊக்கத்தோடு இறங்குதல் வேண்டும். பழந்தமிழ் வீரரின் நன்மரபில் வந்துள்ள இக்கால மறப்பெருங்குடி மக்கள் சமுதாயத்தில் சிறத்து விளங்கினாற்றான் தமிழ்ச் சமுதாயம் சீரும் சிறப்பும் பெற்றதாக விளங்கும். 6. கங்கை கொண்ட சோழன் முன்னுரை சங்க காலத்துக்குப் பிறகு தமிழகத்தின் பெரும்பகுதி ஏறத்தாழ 600 வருட காலம் (கி. பி. 300-900) பல்லவர் என்ற புதியமரபினர் ஆட்சிக்கு உட்பட்டது. பல்லவர் காலத்தில் சோழர்கள் கும்பகோணத்தை அடுத்த பழையாறை என்னும் இடத்தைத் தலை நகராகக் கொண்டு மிகச் சிறிய பகுதியை பல்லவர்க்கடங்கி ஆண்டு வந்தனர். இந்த மரபில் வந்த விசயாலயன் மகனான ஆதித்த சோழன் கி. பி. 880-க்குப் பிறகு பாண்டியனையும் பல்லவனையும் முறியடித்து, சோழப் பேரரசை ஏற்படுத்தினான். அவன் வழி வந்த இராசராசன் பெரிய நிலப் படையையும் கடற் படையையும் பெருக்கித் தென் இந்தியா முழுவதையும் தன் ஆட்சிக்குக் கொணர்ந்தான்; கடல் கடந்து இலங்கையையும் மாலத்தீவுகளையும் வென்றான். இராசராசன் போரில் சிறந்திருந்தாற் போலவே சைவ சமய வளர்ச்சியிலும் சிறந்து விளங்கினான்; தஞ்சையிலும் மிகப் பெரிய கோவிலைக் கட்டினான்; சைவத் திருமுறைகளை ஒழுங்கு படுத்தினான்; கோவில்களில் ஆடல்பாடல்களைப் பெருக்கினான் சிவபாத சேகரன் சைவ நன்மக்களால் பாராட்டப் பெற்றான். இராசேந்திர சோழன் சிவபாத சேகரனும் அருண்மொழித் தேவனுமான முதலாம் இராசராச சோழனுக்குத் தவச் செல்வனே இராசேந்திர சோழன். இவன் தன் பாட்டியாரான செம்பியன் மாதேவியாலும் அத்தையான குந்தவைப் பிராட்டியாலும் போற்றி வளர்க்கப்பட்டவன்; தமிழில் சிறந்த புலமை பெற்றுப் பண்டித சோழன் என்று பாராட்டப் பெற்றவன்; மதுராந்தகன் முதலிய விருதுப் பெயர்கள் பல உடையவன். இவன் தந்தையின் ஆட்சிக்காலம் முழுவதும் சிற்றரசனாகவும் சோழர் தலைவனாகவும் இருந்து அரசியல் அறிவும், போர்த் திறமையும் பெற்றவன்; தன் தந்தை பெற்ற வெற்றிகளுக்கெல்லாம் காரணமாக இருந்தவன். போர்ச் செயல்கள் இவன் இளவரசனாக இருந்த பொழுது செய்த போர்கள் பல. அக்காலத்தில் பாண்டியர், சாளுக்கியர், சிங்களவர் ஆகியோரை வென்று சோழப் பெருநாட்டை விரிவாக்கினான். இவன் பட்டம் பெற்ற பிறகு பாண்டிய நாட்டில் கலகம் ஏற்பட்டது. இராசேந்திரன் அங்குச் சென்று பாண்டியனைப் போரில் முறியடித்தான். அந்நாட்டை ஆளத் தன் மகனான சுந்தர சோழனை நிலை நிறுத்தி மீண்டான். பின்பு சேரநாட்டை வென்று பெரும்பொருளுடன் திரும்பினான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் செப்புகின்றன. இவனது ஒன்பதாம் ஆட்சி யாண்டில் இவன் சாளுக்கிய நாட்டின்மீது படையெடுத்துச் சாளுக்கியரை வென்றான் என்று திருவாலங் காட்டுச் செப்பெடுகள் செப்புகின்றன. கங்கை கொண்டான் இன்றுள்ள கங்கைகொண்ட சோழபுரம் என்னும் ஊர் உள்ள இடத்தில் இப்பெருமகன் ஒரு பெருநகரத்தை அமைக்க விரும்பினான்; அதனைக் கங்கை நீரால் தூய்மைப்படுத்த எண்ணினான்; பேரரசன் என்ற முறையில் தன் தானைத் தலைவனிடம் பெரிய சேனையை ஒப்புவித்து, கங்கையை நோக்கி விடுத்தான். அச்சேனை கோதாவரி ஆற்றைக்கடந்து வடக்கு நோக்கிச் சென்றது. வழியில் இருந்த சிற்றரசர் பலர் சோழன்மீது பொறாமை கொண்டு அப்படையை எதிர்த்தனர். சோழர் சேனை சக்கரக் கோட்டத்தை (மித்திய மாகாணத்தின் ஒரு பகுதி) வென்றது. கோசல நாடும் ஒட்டர தேசமும் வெல்லப் பட்டன. ஒட்டா தேசத்திற்கு (ஒரிஸ்ஸாவிற்கு) அப்பாற்பட்ட தண்டபுத்தி, தென்லாட தேசம், கிழக்கு வங்காளம் ஆகிய நாடுகளைச் சோழர் படை வென்றது. வங்க நாட்டை ஆண்டு வந்த மகிபாலன் முதலிய அரசர்கள் தோல்வியுற்றனர். இவ்வாறு நடந்த போர்களில் பெருஞ் செல்வம் சோழர் படையிடம் அகப்பட்டது. தோல்விவுற்ற வேந்தர் தலைகளில் கங்கை நீர் கொண்டுவரப்பட்டது என்று கன்னியாகுமரிக் கல்வெட்டுக் கூறுகின்றது. இங்ஙனம் பெரு வெற்றியோடு திரும்பிவந்த சோழர் சேனையை இராசேந்திர சோழன் கோதாவரி ஆற்றங்கரையில் நின்று வரவேற்றான் என்று திருவாலாங் காட்டுச் செப்பேடுகள் குறிக்கின்றன. இராசேந்திரன் தான் கட்டிய புதிய நகரத்தையும், வெட்டு வித்த பெரிய ஏரியையும், நகரின் நடுவில் எடுப்பித்த பெரிய சிவன் கோவிலையும் கங்கை நீரால் தூய்மை செய்தான்; நகரத்திற்குக் கங்கை கொண்ட சோழபுரம் என்று பெயரிட்டான்; ஏரியைச் சோழ சங்கம் என்று அழைத்தான்; எடுப்பித்த கோவிலுக்குக் கங்கை கொண்ட சோழேச்சரம் என்று பெயரிட்டான்; தன்னைக் கங்கை கொண்ட சோழன்,’ `கங்கை கொண்டான்’ என்று கல்வெட்டுக்களில் குறித்தான். கடாரம் கொண்டான் சோழர் ஆட்சிக் காலத்தில் சோழப் பெருநாட்டு வணிகர்கள் மலேயா நாட்டிலும், சுமத்திரா, ஜாவா முதலிய நாடுகளிலும், சையாம், இந்தோ சீனா முதலிய நாடுகளிலும் வாணிகம் செய்து வந்தனர். அவ்வாணிகர்களுக்கு அந்நாட்டு அரசர்களால் துன்பம் விளைந்ததோ அல்லது அந்நாட்டு வேந்தர்கள் இராசேந்திரனை மதிக்க வில்லையோ, உண்மை தெரியவில்லை, இராசேந்திரனது பெரிய கப்பற்படை அந் நாடுகளை நோக்கிப் புறப்பட்டது: வழியிலிருந்த மானக்கவாரம் (நிக்கோபர் தீவுகள்) கைப்பற்றப்பட்டது; பின்பு கடாரம் (இன்று `கெடா’ எனப்படுகிறது) முதலிய பல ஊர்கள் கைப்பற்றறப் பட்டன. இப்பகுதிகள் அக்காலத்தில் ஸ்ரீ விஜய நாடு எனப் பெயர் பெற்றிருந்தன. இக் கடல் வெற்றிக்குப் பிறகு இராந்திரனைப் `கடாரம் கொண்டான்’ என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. தென்னிந்திய வரலாற்றில் இங்ஙனம் கடல் கடந்த நாடுகளை வென்ற பேரரசன் இராசேந்திரன் ஒவருனே யாவன். ஆட்சி இறுதியில் போர்கள் இராசேந்திரன் மக்கள் மூவருள் இளவரசனாக இருந்தவன் இராசாதிராசன் என்பவனே. இவன் தந்தையின் ஆட்சி முடிவில் ஈழ நாட்டுடனும் பாண்டிய நாட்டுடனும் மலை நாட்டுடனும், சாளுக்கியருடனும் போர் நிகழ்த்தினான்; யாவற்றிலும் வெற்றி பெற்றான். கங்கைகொண்ட சோழபுரம் இந்த நகர அமைப்பை அறியத்தக்க பழைய சான்றுகள் இன்று இல்லை. கோவிலை யடுத்து இன்று மாளிகைமேடு என்று சொல்லப்படும் இடத்தில் `சோழ கேரளன்’ என்னும் அரண்மனை இருந்தது. அரண்மனை ஏவலாளர் தொகுதி ஒன்று இருந்தது. அத்தொகுதியின் பெயர் `திருமஞ்சனத்தார் வேளம்’ என்பது. மிகப்பெரிய கடைத்தெருவும் இருந்தது. இவை மட்டுமே கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றன. பண்டை நகரம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கே மூன்று கல் தொலைவில் மேற்கு வாசல் காளிகோவில் இருக்கிறது. வடக்கே இரண்டு கல் தொலைவில் வடக்கு வாசல் காளி கோவில் இருக்கிறது. கிழக்கே இரண்டு கல் தொலைவில் கிழக்கு வாசல் காளி கோவில் இருக்கிறது, தெற்கே இரண்டு கல் தொலைவில் தெற்கு வாசல் காளி கோவில் இருக்கிறது. இவற்றை நோக்கப் பழைய நகரம் ஏறத்தாழ 4 மைல் சதுர அமைப்புடையதாக இருந்தது என்று கருதலாம். பெரிய சிவன் கோவிலைச் சுற்றிலும் 2 கல் தொலைவு வரையில் பல சிற்றூர்கள் இன்று காணப்படுகின்றன. சுண்ணாம்புக் குழி, கணக்கு விநாயகர் கோவில், பொன்னேரி, பள்ளிஓடை, பாகல்மேடு, சலுப்பை, செங்கல் மேடு, முத்துசிம்பாமடம், சப்போடை, மண்மலை, மெய்க் காவல்புத்தூர், வீர சோழபுரம். வாணதரையன் குப்பம், குயவன் பேட்டை, தொட்டி குளம், கழனி குளம், உட் கோட்டை என்பன, ஏழுகல் தொலைவில் உள்ள பரணை மேடு என்னும் இடத்திலிருந்து பரணை கட்டி விமானக் கல் கொண்டு செல்லப்பட்டதாம். மாளிகைமேடு கோவிலை யடுத்துள்ள இடம் மாளிகை மேடு என்று சொல்லப்படுகின்றது. இவ்விடத்தில் இப்பொழுது வயல்கள் காட்சி அளிக்கின்றன. எங்கும் உடைந்த மட்பாண்டச் சிதைவுகள் நிரம்பிக் கிடக்கின்றன. அங்குள்ள செங்கல் 14 அங்குல நீளமும் 8 அங்குல அகலமும் 4 அங்குல உயரமும் உடையது. இங்குத் தோண்டி யெடுக்கப்பட்ட கல்தூண்கள் புதுச்சாவடி, குளத்தின் படிக்கட்டுகள் கட்டப் பயன்பட்டனவாம். இம்மேட்டின் கிழக்கே செங்கற் சுவர் நீளமாகப் போவதை இன்றும் காணலாம். பல இடங்களில் செங்கற் சுவர் தளம் காணப்படுகிறது. மாளிகை மேடு தெற்கு வடக்கில் ஒன்றரை மைல் நீளமும் கிழக்கு மேற்கில் ஒரு மைல் அகலமும் உடையது. அரண்மனையையும் கோயிலையும் இணைக்கும் சுரங்கம் ஒன்று இருந்தது. கோவிலுக்கும் மாளிகை மேட்டுக்கு மிடையில் உள்ள ஓடையில் செங்கற் சுவர்களையுடைய நிலவறைப் பகுதி காணப்படுகின்றது. கோவிலுக்கு ஒரு கல் தொலைவு வரை நான்கு பக்கங்களிலும் உறை கிணறுகள் இருக்கின்றன, பழைய செங்கற்களும் கருங்கற்களும் நிலத்திலிருந்து அகழ்ந்து எடுக்கப்படுகின்றன. சோழேச்சரம் இக் கோவில் அமைப்புத் தஞ்சைப் பெரிய கோவில் அமைப்பை ஒத்துள்ளது. இது தஞ்சைக் கோவிலைவிடச் சிறியது; ஆயினும் சிற்ப வேலையில் மிகச் சிறந்தது. இதன் திருச் சுற்று மதிலின் மேற்பகுதி வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. இங்கிருந்த கற்கள் கொள்ளிடத்தில் கீழ் அணைக்கட்டு கட்ட எடுத்துச் செல்லப்பட்டன. கீழைக் கோபுரம் ஒன்றே இப்போது இடிந்த நிலையில் காணப்படுகிறது. கோவில் திருமதில் கோட்டை போன்ற அமைப்புடையது. ஆங்காங்குக் கண்ணறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சுவர் பெரிய வண்டி செல்லும் அளவு அகலமுடையது. கோவில் விமானம் 170 அடி உயரமுடையது; 9 அடுக்குகளையுடைது. அவை மேலே செல்லச் செல்லச் சிறுத்துச் சரிவாக அமைந்துள்ளன. விமானத்தின் நான்கு பக்கங்களிலும் வாயில்களும் மாடங்களும் காணப்படுகின்றன. விமானம் முழுவதிலும் அழகிய சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. விமான உச்சியில் ஒரே கல்லால் ஆன சிகரம் இருக்கின்றது. அதன் கலசம் இப்பொழுது இல்லை. இங்குள்ள சிவலிங்கம் மிகப் பெரியது; இதன்மீது இடி விழுந்ததால் இரண்டாகப் பிளந்திருக்கிறது. தஞ்சைப் பெரிய கோவில் சிவபெருமானைக் பாடிய கருவூர்த் தேவரே இக் கோவிற் பெருமானை ஒரு பதிகத்தாற் பாடியுள்ளர். அப்பதிகம் 9-ஆம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. கோவிலில் இரண்டு அடுக்குத் திருச் சுற்று மாளிகை இருந்தது. அதன் பகுதிகள் சில இன்றும் காணப்படுகின்றன. உட்கோவிலின் நீளம் ஏறத்தாழ 340 அடி; அகலம் 100 அடி. 140 கற்றூண்களைக் கொண்ட மகாமண்டபம் பார்க்கத் தகுந்தது. நடு மண்டபத்துத் தூண்களுக்கு மேல் சண்டீசர் வரலாறு, தடாதகையின் திருமணம், அருச்சனனும் சிவனும் போரிடல், மார்க்கண்டன் வரலாறு இவற்றை உணர்த்தும் சிற்பங்கள் காட்சி யளிக்கின்றன. மகாமண்டபத்தில் ஒரே வட்டக் கல்லில் நவக்கிரங்கள் செதுக்கப்பட்டிருத்தல் காணத்தக்க காட்சியாகும். கோயில் வாயில்களில் ஏறத்தாழ 12 அடி கொண்ட வாயிற்காவலர் சிலைகள் 12 இருக்கின்றன. உட் கோவிலின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள சிற்பங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கத் தக்கவை. அவற்றுள் தலை சிறந்தது சிவபெருமான் சண்டீசற்குச் சண்டீசப்பதம் அருளும் காட்சியாகும். அழிந்துள்ள கோவிலில் இச் சிற்பங்கள் இன்று செய்தாற்போல் காணப்படுதல் கண்டு இன்புறத்தக்கது. இச் சிற்பங்கள் சோழர் காலத்தில் சிற்பக்கலை அடைந்திருந்த உயர்வை நமக்கு நன்கு அறிவுறுத்துகின்றன. சோழ கங்கம் இஃது இப்பொழுது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது; மேடாக இருக்கிறது. இஃது ஊருக்கு வடக்கே உள்ளது. இது தெற்கு வடக்காக 16 மைல் நீளமுடையது; உயர்ந்த கரைகளைப் பெற்றது. அக் காலத்தில் கொள்ளிடத்திலிருந்து ஒரு கால்வாய் வழியாக இந்த ஏரிக்கு நீர் பாய்ந்தது. மற்றொரு கால்வாய் வெள்ளாற்றிலிருந்து வந்தது. இக் கால்வாய்களின் கரைகள் இன்றும் காணப்படுகின்றன. அக்காலத்தில் இப்பெரிய ஏரியில் நீர் நிறைந்திருந்த காட்சி கடற் காட்சியை ஒத்திருந்ததெனலாம். குடும்பம் இராசேந்திரனுக்கு மனைவியர் பலர் இருந்தனர். அவருள் பஞ்சவன்மாதேவியார், திரிபுவனமாதேவியார், வீரமாதேவி, முக்கோக்கிழான் அடிகள் என்பவர் குறிக்கத் தக்கவர். இவன் மக்களுள் இராசாதிராசன், இராசேந்திர தேவன், வீரராசேந்திரன் என்போர் சிறந்தவர். பெண் மக்களுள் அருள்மொழி நங்கை, அம்மங்காதேவி என்பவர் குறிக்கத்தக்கவர். சாளுக்கியர் உறவு கோதாவரி கிருஷ்ணையாறுகளுக்கு இடைப்பட்ட கீழ்க்கரைப் பகுதி வேங்கிநாடு எனப்பட்டது. அந்நாட்டரசனான விமலாதித்தனுக்கு இராசேந்திரன் தங்கையான குந்தவை திருமணம் செய்விக்கப்பட்டாள். அவளுக்குப் பிறந்தவன் இராசராச நரேந்திரன் என்பவன். இராசேந்திரன் தன் மகளான அம்மங்கா தேவியை நரேந்திரனுக்கு மணம் செய்வித்தான். இந்த இருவருக்கும் பிறந்தவனே முதற் குலோத்துங்க சோழன் என்பவன். சமயப்பணி இராசேந்திர சோழன் சிறந்த சிவ பக்தன்; பெரும் புலவன். இவன் ஆட்சிக் காலத்தில் சிவன் கோவில்களில் சைவத் திருமுறைகள் ஓதப்பட்டன. அதனை மேற் பார்க்கத் தேவார நாயகம் என்ற பெயரில் அரசாங்க அதிகாரி ஒருவர் இருந்தார் என்பது காஞ்சி-கைலாச நாதர் கோவில் கல்வெட்டு ஒன்றால் தெரிகிறது. இப் பெருமகன் காலத்தில் இராசராசேசுவர நாடகம். கோவிலில் நடிக்கப்பட்டது. இராசராச விஜயம் என்ற நூல் கோவிலில் படிக்கப்பட்டது, என்று கல் வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவை இரண்டும் இவனது தந்தையான இராசராச சோழனைப் பற்றியவை. முடிவுரை தமிழகத்தை ஆண்ட சோழருள் வடக்கே கங்கை வரையில் சென்று வெற்றி பெற்றவன் இராசேந்திர சோழனேயாவன். கடல் கடந்த நாடுகளில் வெற்றி முழக்கம் செய்தவனும் இப்பெருமகனேயாவன். இவனது வெற்றி தமிழர் வெற்றியாகும். இப் பெருமகன் அமைத்த கங்கைகொண்ட சோழபுரம்-பாண்டியர், ஹொய்சளர் படையெடுப்புக்களாலும், காலக்கேட் டினாலும் சோழர் வீழ்ச்சியாலும் நாளடைவில் பொலிவிழந்து இன்றுள்ள சிற்றூர் நிலையில் காட்சியளிக்கின்றது. 7. பழைய கற்காலம் பழைய மனிதன் இருப்பிடம் பழைய மனிதன் இந்தியாவில் முதன் முதலில் எங்குத் தங்கியிருந்தான்? குளிர் மிகுந்த இமயமலை போன்ற மலைகள்மீது அவன் தங்கியிருந்தல் இயலாது; கொடிய விலங்குகளும் இருளும் விடப் பூச்சிகளும் நிறைந்த காடுகளிலும் அவன் தங்கியிருத்தலும் இயலாது. பண்டைக் காலத்தில் கங்கை போன்ற பேரியாற்றுப் பள்ளத்தாக்குகள் சதுப்பு நிலங்களாக இருந்தன. இவற்றை நோக்க, பண்டை மனிதன் மலையடுத்த காடுகளுக்கும் கடலுக்கும் இடைப்பட்ட தக்கணப் பகுதியிலும் தென்னிந்தியப் பகுதியிலுமே வாழ்ந்தான் என்பது பொருத்த மாகும். மனிதக் குரங்குகள் என்று சொல்லப்படும் கொரில்லா, சிப்பான்ஸி, கிப்பன், உராங்குட்டாங்(கு) என்பவற்றின் மிகப் பழைய எலும்புக் கூடுகள் தென்னிந்தியாவில் கிடைத்தமையும் இவ்வூகத்தை உறுதிப்படுத்துவதாகும். இங்கு நிலம் கடல் மட்டத்தைவிட ஓரளவு உயர்ந்துள்ளது. பண்டை மனிதனைத் தாக்கக் கூடிய மிகக் கொடிய விலங்குகள் மிகப் பலவாக இருந்திருக்கக் கூடிய முறையில் அடர்ந்த காடுகள் இருந்தன என்று கூறச் சான்று இல்லை. பழைய மனிதன் புதர்களிலும் மரக்கிளைகளிலும் தங்க வசதி இருந்தது. இன்று போலவே இப் பகுதிகளில் தட்ப வெப்பநிலை பண்டை மனிதன் பொறுக்கக் கூடியதாயிருந்தது, அவன் உடையின்றி வாழ இவ்விடமே இன்றுபோல அன்றும் ஏற்றதாயிருந்தது. அவன் இருந்த சமவெளிப் பகுதி வேனுக்குத் தேவையான நீரை வழங்கி வந்தது. நீரை எடுத்து வைக்கும் பாத்திரங்களைக் கண்டறியாத அவன் ஆறுகளுக்கு அண்மையிலேயே வாழ்ந்து வந்தான். பண்டை மனிதனின் எலும்புக் கூடுகளில் கிடைத்த பற்களைக் கொண்டும், அவன் பயன் படுத்திய கற்கருவிகளுள் விலங்குகளைக் கிழிக்கத் தக்க கருவிகள் காணப்படாமை கொண்டும், பழைய கற்கால முற்பகுதியில் வாழ்ந்த மனிதன் முதலில் இறைச்சி தின்னாதவனாக இருந்தான் என்பது தெரிகிறது. அவன் வாழ்ந்த பகுதிகளில் பழங்களும், கிழங்குகளும் மிகுந்து காணப்பட்டன. அவையே அவனுக்கு நெடுங்காலம் உணவுப் பொருள்களாக அமைந்தன. பழைய கற்காலச் சான்றுகள் பழைய கற்காலம் என்பது, பதப்படுத்தப்படாத கற் கருவிகளைப் பழைய மனிதன் பயன்படுத்திய காலமாகும். அக்காலம் பல்லாயிரம் ஆண்டுகளைக் கொண்டது என்று ஆராய்ச்சியாளர் கூறுவர். அக்கால மக்கள் பயன்படுத்திய கருவிகள் கர்நூல், குண்டூர், நெல்லூர், கடப்பை, செங்கற்பட்டு, ஆற்காடு முதலிய மாவட்டங்களில் கிடைத்துள்ளன. பலவகைக் கோடரிகள், ஈட்டிகள், குழிதோண்டும் கருவிகள், வட்டக் கற்கள், சுற்றிலும் கூரிய முனைகளைக் கொண்ட வட்டக் கற்கள் (விஷ்ணு சக்கரம் போன்றவை), இருபுறமும் கூர்மை அமைந்த நீண்டு ஒடுங்கிய கத்திகள், சுத்திகள், ஒருபக்கம் மட்டும கூர்மை பொருந்தி முட்டை வடுவில் அமைந்த கருவிகள், நிலத்திலிருந்து கிழங்கு முதலியவற்றைப் பெயர்த்தெடுக்கும் கருவிகள் முதலிய கற்கருவிகள் மிகப் பலவாகக் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இக்கருவிகள் செய்யத்தக்க கற்கள் சத்தியவேடு மலைகள், ஸ்ரீ பெருமாத்தூர் மலைகள், நல்ல மலை, நகரி மலைகளிலும், கடப்பை, கர்நூல் மாவட்டங்களிலுள்ள மலைகளிலும் கிடைக்கின்றன. வேட்டையாடுதல் பண்டை மனிதன் பழங்களையும் கிழங்குகளையும் தின்று வந்தான் என்று கூறினோம் அல்லவா? அவை கிடைக்கத் தவறிய காலங்களில் அவன் விலங்குகளைக் கொன்று உண்ணத் தொடங்கினான். விலங்குகளின் இறைச்சி முதலில் பச்சையாகவே உண்ணப்பட்டது. தொடக்கத்தில் அவன் தவளை போன்ற சிறிய பிராணிகளையே உண்டிருத்தல் வேண்டும். கொன்ற விலங்குகளின் இறைச்சியைக் கிழிக்கக் கற்கருவி கண்டறிந்த பின்பே, பண்டைய மனிதன் முயல், மான், ஆடு, மாடு போன்ற விலங்குகளின் இறைச்சியை உண்ணத் தொடங்கி யிருத்தல் வேண்டும். அவன் பழங்களையும் கொட்டைகளையுமே தனக்கு முக்கிய உணவுப் பொருள்களாகக் கொண்டு, இறைச்சியைத் துணை உணவுப் பொருளாகக் கொண்டான். மனிதனுடைய பல் அமைப்பு இன்றளவும் இந்த உண்மையைத் தான் உரைக்கின்றது. கற்கோடரிகளும், ஈட்டிகளும், வட்டக் கற்களும் விலங்குகளை வேட்டையாடவும் கொடிய விலங்குகளைக் கொல்லவும் பயன் பட்டிருத்தல் வேண்டும். பண்டை மனிதன் தெhடக்கத்தில் கொடிய விலங்குகளுடனும் விடப்பூச்சிகளுடனும் வாழ வேண்டிய துன்ப நிலை இருந்தது. அவன் அவற்றின் தாக்குதலிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள மேல் சொல்லப் பெற்ற கற்கருவிகளைப் பயன்படுத்தினான். ஆபத்துக் காலங்களில் மரக்கிளைகளின்மீது தங்கினான். இங்ஙனம் அமைந்த ஆபத்தான சூழ்நிலை அவனுக்குப் படிப்படியாக அஞ்சாமையை ஊட்டியது. அவன் தன் அறிவைப் பயன் படுத்தி, மேற் கூறிய கற்கருவிகளைக் கண்டறிந்தான்; படிப்படியாக வில்லையும் அம்பையும் பயன்படுத்தி, விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடத் தொடங்கினான். அவன் மரபினரே தென்னிந்தியக் காடுகளில் இன்று வாழ்ந்து வரும் வேடர்களாவர். நெருப்பு மூங்கில்கள் பெருங்காற்றில் ஒன்றோடொன்று உராய்ந்து தீப்பிடித்து எரிதல் ஓர் இயற்கை நிகழ்ச்சியாகும். இதனைக் கண்ட பண்டை மனிதன், இரண்டு மரத்துண்டுகளைக் கொண்டு நெருப்பை உண்டாக்கலாம் என்பதை அறிந்தான். பின்பு ஒரு மரக்கட்டையில் கூரிய கற்கருவிகளைக் கொண்டு சிறிய பள்ளத்தை உண்டாக்கி, அப்பள்ளத்தில் ஒரு குச்சியை விட்டுக் கடைந்து தீயை உண்டாக்க அறிந்தான். இங்ஙனம் உண்டாக்கப்பட்ட நெருப்பே ஆரியரால் வேத வேள்விக்குப் பயன் படுத்தப் பட்டது. சக்கி முக்கிக் கற்களைக் கொண்டு நெருப்பு உண்டாக்கும் முறை மூன்றாவதாகும். பழைய மனிதன் இம்மூன்று முறைகளையும் கையாண்டான்; கட்டைகளை எரித்து இரவில் வெளிச்சத்தை உண்டாக்கினான். தான் கொன்ற விலங்குகளின் இறைச்சியை அந்நெருப்பில் பதப்படுத்தி உண்டான்; பச்சை இறைச்சியைவிடப் பதப்படுத்தப்பட்ட இறைச்சி எளிதில் உண்ணத்தக்கதாக இருந்ததை அறிந்து மகிழ்ந்தான். நாடோடி வாழ்க்கை பழைய கற்கால மக்கள் வாழ்ந்த இடங்களில் கற்கருவிகள் காணப்படுகின்றனவே தவிர மட்பாண்டங்கள் காணப்பட வில்லை. எனவே, அவர்கள் ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்தனர் என்று கூறக் கூடவில்லை. உலகமெங்கும் இருந்து இம்மக்கள் நிலையாக எங்கும் வாழ்ந்த தில்லை என்பதை ஆராய்ச்சியாளர் ஒப்புகின்றனர். முதலில் தனித்தனியே வாழ்ந்த மக்கள் விலங்குகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும், இன உணர்ச்சியால் உந்தப்பட்டும் ஒன்று சேர்ந்து வாழலாயினர்; தங்கள் கருவிகள் செய்யத்தக்க பாறைகள் கிடைக்கத்தக்க இடங்களில் தங்கி வாழலாயினர். கர்நூல் மாவட்டத்திலுள்ள பில்லசுர்க்கம் குகையில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்தமைக் குரிய அடையாளங்கள் காணப்படுகின்றன. அங்கு மிகப்பழைய கால விலங்குகளின் எலும்புகளும் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட தாயத்துக்களும், இழைக்கப் பெற்ற எலும்புகளும் கண்டெடுக்கப் பட்டன. பழைய கற்காலத்தின் இறுதியில் வாழ்ந்த மக்கள் இன்றுள்ள வேடர்களைப் போலவும், மலைவாணர் களைப் போலவும் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் கூறலாம். பண்டை மக்கள் நாடோடிகளாக இருந்தமையால், இறந்தவரை விலங்குகளும் பறவைகளும் தின்னும்படி விட்டுவிட்டுச் சென்றனராதல் வேண்டும். புதிய கற்காலத்தில் கிடைத்த முதல் மண் பாத்திரம் இறந்தவர் உடலை அடக்கம் செய்யும் தாழியாகும். இதனை நோக்க, பழைய கற்கால மக்கள் இறந்தவரைப் புதைக்கவில்லை என்பதை அறியலாம். இவ்வாறு இறந்தவர் உடம்புகளை எறிந்து விடுதல் திபெத்தியரிடத்தும், பார்ஸிகளிடத்தும் இன்றும் காணலாம். உடை பண்டை மனிதன் முதலில் ஆடையின்றிப் பிறந்த படியே இருந்தான். அவன் வேட்டையாட அறிந்த பிறகு விலங்குகளின் தோல்களை ஆடையாகக் கொண்டான். இலைக் கொத்துக்கiள மாலைபோல் கட்டி இடையில் கட்டி வந்தான். மரப் பட்டையையும் ஆடையாகப் பயன் படுத்தினான். இங்ஙனம் பண்டை மனிதன் பயன்படுத்திய புலித்தோலும், மரவுரியும் இன்றளவும் சமயத்துறையில் தூயவையாகக் கருதப்படுகின்றன. மொழி முதல் மனிதன் பேச அறியாதவனாக இருந்தான்; பின்பு விலங்குகள் ஓசை இடுதலையும் பறவைகள் ஓசையிடுதலையும் கண்டு அவற்றைப்போல ஓசையிடலானான்; பின்பு தான் விரும்பிய பொருள்களைக் காட்டித் தன் கருத்தைச் சைகையால் அறிவித்தான்; அப்பொருள் கிடைக்காத பொழுது அவற்றின் உருவங்களை எழுதிக் காட்டித் தன் கருத்தைத் தெரிவித்தான்; இங்ஙனம் பலவாறு முயன்று இறுதியில் தன் கருத்தைத் தெரிவிக்கும் சொற்களைக் கண்டறிந்தான். நமது நாட்டு மலைப்பகுதிகளில் வாழும் சந்தாலியர், சவரர், கொண்டர் எனப்படும் இனத்தவர் பலரும் இன்று பேசிவரும் மொழியே பண்டை மக்கள் பேசியது என்று மொழி ஆராய்ச்சியாளர் மொழிகின்றனர். இம் மக்களே பழைய கற்கால மக்களின் வழி வந்தவர் எனவும், அப்பண்டை மக்கள் பேசிய மொழிகளிலிருந்து வந்தவையே இன்று இம் மக்கள் பேசிவரும் மொழிகள் என்றும் ஆராச்ச்சியார் கருதுகின்றனர். கலை பற்களைக் கொண்டு செய்யப்பட்ட தாயத்துக்கள் பில்லசுர்க்கம் குகையில் கிடைத்ததென்பது முன்பு சொல்லப்பட்டதன்றோ? அவற்றின் வேலைப்பாட்டைக் கொண்டு பழைய கற்கால மக்கள் ஓவியம் தீட்டவும் அறிந்திருக்கலாம், அவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாதலின் காலப் போக்கில் அழிந்திருக்கலாம், தக்கணத்திலும் தென்னிந்தியாவிலும் உள்ள மலைகளை நன்கு பரிசோதிப்பின் இம்மகளது கலைத் திறனை நன்கு அறிவிக்கும் அடையாளங்கள் புலப் படலாம் என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். சமயம் பழைய கற்கால மக்கள் இறந்தவர் உடல்களைப் புதைக்க வில்லை. இதனால் ஆன்மாவைப் பற்றியோ, மறு பிறப்பு உண்மையைப் பற்றியோ அவர்கள் அறிந்திருந்தனர் என்பதைக் கூறுவதற்கில்லை; இஃது எங்ஙனமாயினும், அவர்கள் இக்காலக் கிராம தேவதைகளை உணர்த்தும் `கதை’ (ஆயுதம்) முதலிய கல்லுருவங்களை வழிபட்டு வந்தனர் என்று கூறலாம். கிராம மக்களிடமும், இன்றுள்ள அநாகரிக மக்களிடமும் தேவர் வணக்கத்தை விடத் தேவதைகளின் வணக்கமே சிறந்திருப்பதை நோக்க, பழைய கற்கால மக்களிடமும் பெண்ணினமே சிறப்புற்றிருந்தது என்று கூறலாம். பெண்ணினம் சிறப்புற்ற மக்களிடமே தேவதைகள் வழிபாடு மிகுந்திருக்கும் என்பது வரலாறு கண்ட உண்மை. காலப்போக்கில் இப்பலவகைக் கிராம தேவதைகளும் காளியின் பணிப் பெண்களாக அல்லது காளியின் அம்சங்களாகச் செய்யப்பட்டு விட்டன. மக்களைப் பலியிடும் வழக்கம் கொண்டாரிடம் அண்மைக் காலம் வரை இருந்து வந்தது. வேத காலத்தில் மக்களைப் பலியிட்டு வேள்வி செய்தல் வழக்கிலிருந்தது. இவ்விரண்டையும் காண, பண்டைக் கற்கால மக்களிடம் இவ்வழக்கம் இருந்து வந்தது என்றே கூறலாம். எருமைப் பலியும் சவரர் வழக்கத்திலிருப்பதால், பண்டைக் காலத்தில் எருமைப் பலியும் இருந்தது என்று கூறலாம். கொண்டரும் சவரரும் தேவதை களுக்கு இப்பலிகளையிட்டு, மது அருந்தி ஒருவகைக் கூத்தில் ஈடுபடுதல் இன்றளவும் வழக்கமாய் இருக்கிறது. இப்பழக்கம் பழைய கற்கால மக்களிடமிருந்து இவர்களுக்கு வழிவழியாக வந்தது என்று கூறுதல் பொருத்தமாகும். 8. நஸ்ராம் பட்டினம் அல்லது புதையுண்ட நகரம் பழம் பொருள்கள் புதுச்சேரியிலிருந்து கடலூருக்குச் செல்லும் `பஸ்’ பாதையில் மூர்த்திக்குப்பம் என்னும் சிற்றூர் இருக்கின்றது. அதன் கிழக்கே கடலை அடுத்து மிகப் பரந்த மணல் வெளி காணப்படுகின்றது. அவ்வெளி ஏறக் குறைய அரைக்கல் அகலமும் முக்கால் கல் நீளமும் கொண்டதெனக் கூறலாம். அவ்வெளி சில இடங்களில் பத்துப் பதினைந்து அடிகள் உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்படுகிறது. அதனை அடுத்த இடங்களில் சவுக்கைத் தோப்பும், மேற் சொன்ன சிற்றூரைச் சேர்ந்த சுடுகாடும், பிற கொல்லை வெளிகளும் இருக்கின்றன. அக் கொல்லை வெளிகளில் மாங்கன்று தென்னம்பிள்ளை முதலியன பயிர் செய்யப்பட்டுள்ளன. அவற்றை நடுவதற்காகக் குழிதோண்டும் பொழுதெல்லாம் செங்கற்கள் இன்றும் வெளிப்படுகின்றன. ஓரிடத்தில் குட்டையொன்று தோண்டப் பெற்ற போது ஏழு சால்கள் கிடைத்தன. மண்ணுள் மக்கிக் கரிந்து அரிசி கருநிறத்துடன் காட்சியளித்தது. சுடுகாட்டின் ஒரு பகுதியைத் தோண்டிய பொழுது கட்டித்திற்குப் பயன்பட்ட நீள்சருதக் கருங்கற்கள் வெளிப்பட்டன. அக்கற்கள்மீது பிணம் வைத்துச் சுடுதல் இன்றும் பழக்கமாக இருக்கின்றது. பிறிதொரு கொல்லையில் நிலத்தைத் தோண்டும் பொழுது பலவகை உலோகங்களாலான நாணயங்கள் கிடைத்தன என்று அச் சிற்றூர் மாந்தர் செப்புகின்றனர். மேலோட்டமாகப் பார்க்கையில், எண்ணிறந்த பானையோடுகளும், பீங்கான் ஓடுகளும், பிற மட்பாண்டச் சிதைவுகளும், நாள்பட்ட இரும்புத் துண்டுகளும், பிறவும் தம் பழமையை அறிவிப்பன போலக் கண்ணெதிரிலே காட்சி அளிக்கின்றன. ஒரு குடியானவன் மண்ணுள் புதையுண்ட மண் விளக்கொன்றை எடுத்துச் சென்றனனாம். இங்ஙனம் பலர் பலவகைப் பொருள்களை எடுத்துச் சென்றதாக அண்மை யிலுள்ள சிற்றூரார் அறைகின்றனர். இக் குறிப்பிட்ட இடத்திற்கு எட்டுக்கற்களுக்கு வடக்கே வீராம்பட்டினம் என்றொரு பழைய ஊரும், நான்கு கற்களுக்குத் தெற்கே தேவனாம்பட்டினம் என்றொரு பழைய ஊரும் இன்றும் ஓரளவு சிதைந்த நிலையிலிருத்தல் போல, இம்மணல் வெளியிற் புதையுண்ட மாநகரம் நஸ்ராம் பட்டினம் என்னும் பெயருடன் ஒரு காலத்தில் சிறந்த நிலையிலிருந்தது என்று சிற்றூரார் செப்பி வருகின்றனர். எங்கள் செலவு இவ்விவரங்களை ஒருவாறு கேள்வியுற்ற யான், புதுவைக் கல்விக்கழகத்தலைவர் திருவாளர். இரா. தேசிகப் பிள்ளை (பி. ஏ.இ பி. எல்.) அவர்கள், செயலாளர் திருவாளர் இரா. திருநாவுக்கரசு அவர்கள், கழக உறுப்பினர் திருவாளர் கோ. நடராச சிராமணி அவர்கள், திருவாளர் சொ. செல்வத் தொகுப்பாளர் ஆகியவருடன் அப்பெருமை மிக்க மூதூரைக் காண விழைந்து, மூர்த்திக் குப்பத்தை அடைந்தேன். அங்கு என் உடன் வந்த அறிஞர்கட்குச் சிறந்த நண்பரும் பெருநிலக் கிழவருமாகவுள்ள திருவாளர்கள் சு. கிருஷ்ணசாமி கிராமணி அவர்களும், சண்முகக் கிராமணி அவர்களும், கனகசபைக் கிராமணி அவர்களும் எங்களைப் பெரிதும் வரவேற்று உண்டி முதலியன அளித்து, மாலை நான்கு மணிக்கு மேல் மாநகரம் புதையுண்டுள்ள மாண்புமிக்க மணல் மேட்டிற்கு மகிழ்வுடன் அழைத்தேகினர். நாங்கள் கண்டவை நாங்கள் அம்மணல் வெளியைக் கண்டதும் மழை கண்ட பயிர் போலானோம், எங்களுடன் வந்த வெள்ளிக் கண்ணன் என்னும் பண்ணையாள் உயர்ந்த மண்மேட்டில் ஓர் ஆள் அளவு பள்ளத்தைத் தோண்டினான். அங்கு ஏதும் கிடைத்திலது. என்றாலும் உற்சாகம் பெற்ற யாங்கள் மீண்டும் ஓரிடத்தைத் தோண்டினோம். தோண்டத் தோண்ட மண்ணும் வெளிப்பட்டது. அதனுடன் சிறு சிறு மண்டபாண்டச் சிதைவுகள் வெளிக்கிளம்பின. பின்னர் நாங்கள் அவ்விடத்தை விட்டுச் சுமார் 400 அடி மேற்கே சென்று மாங்கன்று வைக்கப் பெற்றுள்ள கொல்லையில் குறிப்பிட்ட ஒரு பகுதியைத் தோண்டினோம். ஆறங்குல ஆழம் தோண்டியவுடன் செங்கற்கள் காட்சியளித்தன. அவ்விடத்தைச் சுற்றிலும் அமைதியாகத் தோண்டிப் பார்த்த பொழுது, ஒரு நெடுஞ்சுவர் மடிந்து வடக்கு நோக்கிச் செல்லக் கண்டோம். அவ்விடத்திற்கு மேலே ஏதொரு கட்டிடமும் இருந்திலது என்று ஊரார் கூறுதல் நம்பத்தக்க தாயின், நாங்கள் கண்ட சுவரின் பகுதி ஒரு நெடுஞ்சுவரின் மேற் பகுதியாக இருத்தல் வேண்டும் என்று கருதுல் தவறாகாது. இதனிடையில் என்னுடன் வந்த நண்பர்களும் எங்கள் முயற்சியைக் கண்டு களிக்க வந்த சிற்றூரார்களும் அம்மணல் வெளியின் மேற் பரப்பைத் தம்மால் இயன்ற வரையில் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்தம் முயற்சியின் விளைவாகக் கிடைத்தற்கரிய மண்டபாண்ட ஓடுகளும், சாலின் சிதைவுகளும், ஓட்டின் சிதைவுகளும் சிலவகைக் கற்களும் பானையில் அடக்கம் செய்யப் பெற்றுக் கரிந்து கிடந்த அரிசி மணிகளும் பிறவும் கிடைத்தன. இவற்றுடன் மேற்சொன்ன திருவாளர் சு. கிருஷ்ணசாமி கிராமணியார் தாம் எடுத்து வைத்திருந்த, அம்மணல் மேட்டிற் கிடைத்த மூன்று நாணயங்களை உதவியருளினார். வேலைப்பாடு மிக்க மட்பாண்டச் சிதைவுகள் செந்நிறம், காவி நிறம், மங்கிய செந்நிறம், மஞ்சள் நிறம் ஆகிய பல நிறங்களைக்கொண்ட மட்பாண்ட ஓடுகள் எங்கட்குக் கிடைத்தன. அவற்றின் மேற்பகுதியில் பலவகைக் கீற்றுக்கள் குறுக்கும் நெடுக்குமாகக் காணப்படுகின்றன. ஓர் ஓட்டின்மீதுள்ள வேலைப்பாடு பிறிதோர் ஓட்டில்h காணப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. சில ஓடுகள்மீது படுக்கைக் கோடுகளே காணப்படுகின்றன. சிலவற்றின்மீது படுக்கைக் கோடுகளுடன் நேர்க்கோடுகளும் காணப்படுகின்றன. சிலவற்றின் மீது சாய்வுக் கோடுகள் காணப்படுகின்றன. வேறு சிலவற்றின்மேல் 120 டிகிரி உள்ள கோணத்தை இடையிலே பெற்ற கோடுகள் ஒன்றன் கீழ் ஒன்றாகக் காட்சியளிக்கின்றன. சிலவற்றின்மீது நாற்புறமும் மெடும் நடுவிற் குழியுமாகச் செய்யப்பட்ட வேலைப்பாட்டு முறை செறிந்து காணப்படுகிறது. சிலஓடுகள் மெல்லிய மூன்று கோடுகளோடு பொருந்தியுள்ளன. சால்களின் ஓடுகளின் மீதும் முறுக்குண்ட சங்கிலி போன்ற மேடு பள்ளங் கொண்ட வேலைப்பாடு காணப்படுகிறது. இவை அனைத்தின் உட்புறமும், வேலைப் பாடு இன்றி ஒருபடித்தாகவே விளங்குகிறது. இதுகாறும் கூறப்பெற்ற ஓடுகள் உள்ளும் புறமும் ஒரே நிறத்தைக் கொண்டவை. வேலைப்பாடற்ற மண்ணோடுகள் இப்பகுதியில் செந்நிறம், மங்கிய செந்நிறம், பழுப்பு நிறம், ஒரு பால் கருமை மறுபால் செம்மை, ஒரு பால் காவி மறுபால் பழுப்பு என்று கூறுமாறு பல நிறங்களைக் கொண்ட சிதைவுகள் கிடைத்துள்ளன. ஒன்று மட்டும் மேற்புறத்திலேயே மேற்பகுதி வெண்மையாகவும் அடிப்பகுதி செம்மையாகவும் அமைந்துள்ளது. இவை யாவும் உள்ளம் புறமும் எவ்வித வேலைப்பாடுமின்றித் தெளிவாக அமைந்துள்ளன. வேறு வகைப்பட்ட மண்பாண்டச் சிதைவுகள் பல வகைப்பட்ட களிமண் கலவைகளைக் கொண்டு திறம்படச் செய்யப்பட்ட பலவகைச் சிறிய மட்பாண்டங்களும் ஜாடிகளும் இருந்தன என்பதற்கு அறிகுறியாகச் சிதைவுகள் பல காணப்படுகின்றன. அவை வெண்மை, கருமை, பழுப்பு நிறம், பச்சை நிறம் முதலிய பல றிப்பட்டனவாகக் கிடைத்துள்ளன. அவற்றின் ஓசை வெள்ளி நாணயங்களின் ஓசையை ஒத்துக் காணப்படுகின்றன. அவற்றுள் பல ஓடுகளின் மேற்புறம் வழு வழுப்பாகவும், சிலவற்றின் மேற்புறம் சொர சொரப்பாகவும் இருக்கின்றன. களிமண் கலவை மிக உயர்ந்த முறையினது என்று கூறத் தக்க முறையில் இருக்கின்றது. ஒரு சிதைவின் உட்புறம் கால் அங்குல அளவைக் கொண்ட நேர்க்கோடுகளை உடையனவாகக் காண்கின்றன. அக்கோடுகட்கு இடைப்பட்ட இடம் பள்ளமாக இருக்கின்றது. சிதைந்த ஓடுகளின் கனம் கால் அங்குலத்திலிருந்து பலவாறு வேறுபடுகின்றது.; பீங்கான் சிதைவுகள் அரை அங்குலக் கனம் முதல் கீழ்நோக்கிச் செல்லும் கனமுடைய பீங்கான் சிதைவுகள் பலவாகும். அவை நீலம், பசுமை, காப்பி நிறம், வெண்மை, மங்கிய மஞ்சள், பசுமை, காவி முதலிய பல நிறங்களைப் பெற்றுள்ளன. அவற்றின் வேலைப்பாட்டை நோக்குகையில், சில ஓடுகள் மேற்புறத்தில் புள்ளிகள் உள்ளனவாகவும், சில மேற் புறத்தில் சில நரம்புகள் ஓடப்பெற்றன போலவும், வேறு சில சதுர வேலைப்பாடு கொண்டவை போலவும் பற்பலவாறு அமைந்துள்ளன. இப் பீங்கான்கள் காலத்தால் மிகவும் பிற்பட்டவையாகும் என்பது புதைபொருள் ஆராய்ச்சியில் தெளிவுறத் தெளியலாம். பல வகைக் கற்கள் எத்தகைய வேலைப்பாடும் செய்யப்படாத சிறிய வெண்ணிறக் கற்கள், செந்நிறக் கற்கள், ஆரஞ்சு நிறக் கற்கள் முதலியன கிடைக்கின்றன. அவை பட்டை தீட்டப்பெறின், சிறிது உயர்தரக் கற்களாக இருத்தல் கூடும் என்று கருத இடமுண்டு. இத்தகைய கற்கள் பல மணல் மேட்டின்மீதே சிதறிக் கிடத்தலை நோக்க, அம்மேட்டுள் மறைந்து கிடக்கும் மாநகரம் தொழில் வல்லார் பலரைத் தன்னத்தே கொண்டிருத்ததாகும் என்பதை ஒருவாறு உணரலாம். பழைமையை உணர்த்தும் மணிகள் நடுவில் துளையிடப்பட்ட கருப்பு உருண்டை மணியொன்றும், மங்கிய செந்நிறமுடைய துளையிடப்பட்ட நீண்ட மணியும் அம்மணல் மேட்டில் கிடைத்தமை சிறப்புறக் குறிக்கத்தக்கது. இவையிரண்டும் அரிக்க மேட்டில் கிடைத்த பலவகைத் துளையிடப்பட்ட உருண்டை மணிகளையும், நீண்ட மணிகளையும் ஒத்துள்ளன. மணல் மேட்டைத் தோண்டிப் பார்க்கின், இத்தகைய மணிகள் பல கிடைத்தல் கூடும். அரிக்க மேட்டிற்குச் சுமார் எட்டுக்கல் தொலைவிலுற்ற இவ்விடத்தில் இத்தகைய பண்டை மணிகள் கிடைத்திருத்தலை நோக்க, ஆனால் இம்மணல் மேட்டில் மட்டும் அரிக்கமேட்டில் கிடைக்காத பீங்கான் சிதைவுகள் இருத்தலையும் நோக்க, இம்மணல்மேடு அரிக்கமேட்டு நகருடன் அழியாதமல், பின்னர் பல நூற்றாண்டுவரை செழிப்புற்றிருந்து பின்னரே மண்ணுள் மறைந்திருத்தல் வேண்டும் என்று கருதுல் ஒருவாறு பொருத்தமுடையதாகும். சிதைவுண்ட இரும்புத் துண்டுகள் அங்குக் கிடைத்த இரும்புத் துண்டுகள் பலவாகும். அவை துருப்பிடித்துப் பழுதற்ற நிலையில் பலவாறு வெடித்துக் காணப்படல் அவற்றின் பழமையை மெய்ப்பிப்பதாகும். மிளகாய் உருவத்தில் மூன்று இரும்புத் துண்டுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒன்று காம்புடையதாகக் காட்சியளிக்கின்றது. அது நான்கு வெடிப்புகளையுடையதாய நுனி சிதைந்து காணப்படுகிறது. மற்றொன்று மேற் பாதியளவு சிதைந்து காண்கிறது. பிறிதொன்று மிகச் சிறந்த நிலையில் மொலிந்து காணப்படுகிறது. நாணயங்கள் மூர்த்திக் குப்பத்திலுள்ள திருவாளர் சு. கிருஷ்ணசாமி கிராமணியார் வாயிலாக எங்களுக்கு மூன்று நாணயங்கள் கிடைத்தன. அவற்றுள் ஒன்று ஒரு ரூபாய் நாணயத்திற்கும் அரை ரூபாய் நாணயத்திற்கும் இடைப்பட்ட அளவும் கனமும் உடையது. அதன் மேற்புறம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. முதற் பகுதியில் கிண்ணம் போன்ற ஒன்றன்மீது மெழுகுவர்த்தி நிற்பது போலவும், அதனையடுத்து இருபுறங்களிலும் வரவரக் குறைந்த உயரமுடைய மும்மூன்று மெழுகு வர்த்திகள் நிற்கின்றன போலவும் செதுக்கு வேலை செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதியில் லு போன்ற எட்டுக் குறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கீழ்ப் பகுதியில் உருது எழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளன. முதல் இரண்டு பகுதிகளைச் சிறு குறுக்குக் கோடுகள் கொண்ட நேர்க்கோடுகள் இரண்டு பிரித்துள்ளன. கீழ் இரண்டு பகுதிகளை நெருக்கமாக இடப்பட்ட இரண்டு நேர்க்கோடுகள் பிரித்துள்ளன. இம்மூன்று பகுதிகளைச் சுற்றி இரண்டு வட்டக்கோடுகளும், அவற்றிற்கு இடையே இக்கால நாணயங்களிலுள்ள சங்கிலிபோன்ற வேலைப்பாடு கொண்ட வளைவுக் கோடும் அமைந்துள்ளன. பின்புறத்தில் உருது எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மொகலாய காலத்து நாணயமொன்று கூறுதல் ஒருவாறு பொருந்தும். இது வெள்ளி நாணயமாகும். ஏறக் குறைய ஒன்றரைத் தம்பிடி அளவுள்ள செம்பு நாணயம் ஒன்று பார்க்கத்தக்கது. இன்று ஏறக்குறைய இக்காலத்து ஓராணா நாணயத்திலுள்ள வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது வியப்புக்குரியதே. இதன் மேற்புறம் ஏதோ ஒருவகைப் பூவேலைப்பாடு கொண்டதாகக் காணப்படுகிறது. அவ் வேலைப்பாட்டைச் சுற்றிலும் இரண்டு வரிசை சிறு சிறு வளைவுகள் காணப்படுகின்றன. இதன் பின் புறத்திலும் இம்மாதிரி வளைவுகள் உள்ளன. பின்புறத்தின் நடுப்பகுதியில் ஒருவட்டம் தெளிவுறக் காணப்படுகிறது. இவ்வட்டத்திற்குள் உருது எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வட்டத்திற்கும் மேல் உள்ள சங்கிலிக் கோடுகளுக்கும் இடைப்பட்ட இடம் முழுவதும் சித்திர நிலையிலுள் உருது எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதுவும் மேற்கூறிய முஸ்லிம்கள் நாணயமாகக் கருதப்படுகிறது. இக்காலத்துச் சிறிய வட்ட இரண்டணாவில் முக்கால் பங்கு அளவுள்ளது என்று சொல்லும்படி சிறிய தடித்த மட்ட வெள்ளி (ஈயம்?) நாணயமொன்று கிடைத்துள்ளது. அதன் மேற்புறம் )+( இக்குறியுடைய மூன்று காணப்படுகின்றன. பின்புறம் முக்கால் பகுதி அளவு வட்டப் புள்ளிகள் காணப்படுகின்றன. இச்சிறிய நாணயமும் குறுக்களவில் முதற்கண் கூறிய வெள்ளி நாணயத்தின் குறுக்களவை ஒத்துள்ளது; இதன் மதிப்பும் காலமும் அறியக் கூடவில்லை. இவை போன்ற நாணயங்களும், மிளகாய் விதைப் பணம் என்று சொல்லப்படும் பொற்பணங்களும் அவ்வப் போது சிலரிடம் கிடைத்தன என்று சிற்றூரைச் சேர்ந்த மக்களம் மணல் மேட்டை யடுத்துக் குடியுள்ள வேலையாட்களும் பிறரும் கூறுகின்றனர். முடிவுரை இதுகாறும் கூறியவற்றால், இம்மணல் மேட்டின் அருகில் புதையுண்ட மாநகரம் ஒன்று இருத்தல் வேண்டுமென்றும், அஃது அரிக்க மேட்டில் உள்ள மாநகரம் போன்ற பழமையுடையதாக இருக்கலாம்; ஆனால் முகலாயர் காலம்வரை அந் நகரம் தன் பண்டைய நிலையிலோ அல்லது கரையை அடுத்திருத்தலால் கடல் வாணிகத்தில் சிறந்த பண்டை நகரமாகவோ இருந்திருக்கலாமென்றும் ஒருவாறு முடிபு கொள்ளுதல் தவறாகாது. அம் மணல் மேட்டைப் புதைபொருள் ஆராய்ச்சியில் ஆன்ற அறிவுடையார் பார்வையிட்டுப் புதை பொருள்களைக் கண்டு நன்முறையில் ஆராய்ச்சி செய்வது, நம் தமிழகத்தின் வரலாற்றிற்குப் பெருந்துணை செய்யும் என்பதில் ஐயமில்லை. 9. நீத்தார் கடனும் தமிழர் மரபும் இந்தியாவில் வரலாற்று முறைப்படி ஆரியர் வந்த காலம் ஏறக்குறையக் கி. மு. 2,500 என்று ஆராய்ச்சியாளர் கூறுவர். அதற்கு முற்பட்ட இந்தியா முழுவதும் இருந்த மக்கள் திராவிடர் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளரும் மொழி ஆராய்ச்சி வல்லுநரும் ஒப்புக்கொண்ட உண்மையாகும்.1 ரிக் வேதத்தில் ஆரியரால் ஒதுக்கிச் `சிசினதேவ’ என்று இகழப்பட்ட சிவலிங்க வணக்கம் இன்றும் திராவிடர்க்கே உரியதாயிருத்தல் ஒன்றே-ரிக் வேத காலத்தில் பஞ்சாப் பிரதேசத்தில் ஆரியர் தங்கியிருந்த போது, சிவலிங்க வணக்கத்தராய்த் திராவிட மக்கள் இருந்தமை நன்கு வெளியாம். இன்று பஞ்சாப், சிந்து என்னும் மாகாணங்களில் புதையுண்டு அகப்பட்ட நகரங்களில் உள்ள சிவலிங்கப் பொருள்களாலும் பிறவற்றாலும் அவற்றுள் வாழ்ந்த மக்கள் திராவிடராக இருத்தல் வேண்டும் என்பது நடுநிலை ஆராய்ச்சியாளர் துணிவு.2 அஃது உண்மையாயின், அத்திராவிடர் நாகரிக காலம்-வேத காலத்துக்கு முந்திய கி. மு. 3,00 ஆகும். உடல் அடக்க முறைகள் சிந்து வெளித் திராவிடர், இறந்தபின் உடலை எரித்தும் புதைத்தும் வந்தனர் என்பது தெரிகிறது. சில வீடுகட்கு அடியில் உடற்சாம்பல் மண் சாடிகளில் அடக்கம் செய்யப்பட்டு இருந்தன.3 இறந்தவர் உடற்சாம்பலைப் பாத்திரத்துள் அடக்கித் தம் வீட்டடியில் புதைத்து வைத்தல் அக்கால மரபு போலும்! அங்ஙனம் புதைக்கப்பட்ட இடத்தின்மீது இறந்தவரை நினைந்து `படையல்’ இடல் மரபாக இருந்திருக்கலாம். என்னை? இன்றும் திராவிடர் (சிறப்பாகத் தமிழர்) இல்லங்களில் நடுவீட்டுப் படையல் இறந்தவர் பொருட்டுப் போடல் மரபாக இருந்து வரலால் என்க. புகைப்படம் பிடித்தல் முதலிய வசதிகள் இல்லாத அப் பழங்காலத்தில், இறந்தவர் நினைவைக் கொள்ள அவர் உடற்சாம்பலைத் தம் வீட்டடியிற் புதைத்து வைத்தல் இயல்பே அன்றோ? அங்ஙனம் புதைக்கப்பட்ட இடத்தண்டை இறந்தவர்க்குப் படையல் இட்டு வழிபடலும் குடிப் பிறந்தார் செயல்தானே? தமிழகத்தில் எரித்தல், இடுதல், குழி தோண்டிப் புதைத்தல், பள்ளங்களில் இட்டு மூடி வைத்தல், தாழியிற் கவித்தல் என்று ஐந்து வகைப் பழக்கம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. மணிமேகலையின்4 காலம் கி. பி. 2-ஆம் நூற்றாண்டு ஆதலாலும், அக்காலத்தே தமிழகத்தில் பல மொழி மக்களும் வாழ்ந்திருந்தனர் ஆதலாலும் இவ்வைவகைப் பழக்கங்கள் எவர் எவரைச் சார்ந்தவை எனத் திட்டமாகக் கூறல் இயலாது. எனினும், இடுகாடு-சுடுகாடு என்பன சங்க நூல்களில் பலபடப் பயிறலானும், இன்றும் தமிழர் இவ்விரு வழக்கங்களையே கொண்டிருந்தலானும், சுடுதலும் புதைத்தலும் தமிழர் பழக்கங்கள் என்னல் பொருந்தும். தாழியிற் கவித்தல் என்பது தமிழர்க்குச் சிறப்புடைய தொன்றாம். தாழி என்பது மண்ணாற் செய்த பெட்டி; மூடியுடையது. அதில் இறந்தவர் உடலை உட்கார வைத்து, மணலும் அரிசியும் பாதியளவு கொட்டி, அக் கலவைமீது இறந்தவர்க்கு உகந்த கூல வகைகள், பிற உணவுக்குரிய பொருள்கள் வைத்து, அவர் கையாண்ட கருவிகளும் வைத்து, தாழியை மூடி நிலத்திற் புதைத்துவிடல் மரபு. அதன்மீது கற்பாறையிட்டு மூடப்படும். அதன் மீது மேலும் மணலைப் பரப்பி உயர்ந்த வட்டப் பாறையால் மூடுதல் மரபு; அதனைச் சுற்றிலும் ஒரு முழ உயரமுள்ள கற்களை நாட்டுவர். இத்தகைய புதைக்கப்பட்ட இடங்கள் பல பாண்டிய நாட்டின்கண் புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியில் நிரம்ப இருக்கின்றன. பல தாழிகள் கண்டு எடுக்கப்பட்டன. இன்னும் எடுபடாமல் இருப்பவை பல. பெல்லாரி மாவட்டத்தில் மாத்திரம் இத்தகைய தாழிகள் 2,000-க்கு மேலாக அகப்பட்டன. இத்தாழிகளில் 4 அடி உயரமும், 3 1/2 அடி குறுக்களவும் உடையவையே பெரியவை. சென்னைக்கருகில் உள்ள பல்லாவரம் முதலிய இடங்களில் கால் பெற்ற தாழிகள் (ஒரு வகை உயர்ந்த களிமண்ணால் செய்யப்பட்டவை) அகப்பட்டன.5 இங்ஙனம் இறந்தவரை வைத்த தாழியுள் அவர் விரும்பிய - கையாண்ட பொருள்களை வைத்தல் என்பது வரலாற்றுக்கும் முற்பட்ட கற்காலத்திருந்தே இருந்து வரும் பழக்கமாக இருத்தலினாற்றான், இன்றும் தமிழர் இறந்தவர் ஆடைகளையும் அவர் விரும்பிய உணவுப் பொருள்களையும் நடுவீட்டில் வைத்துப் படைத்தல் தமிழர் மரபாக இருந்துவருகிறது. இஃதன்றிப் புதிய ஆடைகளை வாங்கும் பொழுதும் நற்காரியங்கள் நடைபெறும் போழ்தும் இறந்தவர்க்குப் படையலிட்டு வழிபடல் தமிழர் மரபாக இருந்து வருகிறது. கல் எடுப்பு விழவு இங்ஙனம் புதைக்கப்பட்டவர் பொருட்டும் எரிக்கப்பட்டவர் பொருட்டும் அவரவர் தகுதிக்கு ஏற்பப் புதைத்த இடத்திலும், எரித்துச் சாம்பலைப் புதைத்த இடத்திலும் கல் எடுப்பித்து, அதன்மீது இறந்தவர் உருவம், பெயர், இறந்த காரணம், புகழ் இன்ன பிறவற்றைப் பொறித்து, அக்கல்லுக்கு மயிற்பீலியும் மாலையும் இட்டுத் தத்தம் குடிமரபுக்கேற்றபடி வழிபடல் பண்டைத் தமிழர் மரபாக இருந்தது. “இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்” அரசர்க் கமைந்தன ஆயிரங் கோட்டம்”6 போரில் விழுப்புண் பட்டு இறந்த மறவர் (வீரர்) பொருட்டுக் கல்லெடுத்து விழாச் செய்தலும் தமிழர் மரபாகும். இப்பழக்கம் தமிழரிடைப் பெருவரவிற்றாக இருந்தது என்பதைத் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, முதலிய சங்க நூல்களால் நன்கறியலாம். இந்நடுகல் வீரரே நாளடைவில் சிறு தெய்வ வழிபாட்டுக்கு உரியர் ஆயினர். இறந்த வீரன் பரம்பரையினர் அவ்வீரனைத் தம் குலதெய்வமாகவும் பிறவாறும் வழிபடலாயினர். அப் பழக்கமே இன்று தமிழகம் முழுவதும் - கிராமந்தோறும் உள்ள ஐயனார் - வீரன் - முனியன் - சங்கிலி கறுப்பன் - மதுரை வீரன் - முனியாண்டி - மாயாண்டி முதலிய சிறு தெய்வ வழிபாடாகும். இவ்வுண்மை தெரியாது தமிழ் நூற் பயிற்சி இல்லாத பலர் சிறுதெய்வ வழிபாட்டை இகழ்ந்துரைக்கின்றனர். `நாங்கள் இன்ன போரில் இன்ன காரணத்திற்காக இறந்துபட்ட இன்ன வீரன் மரபினர்’ என்று தம் முன்னோர் பெருமை கூறிப் பெருமிதம் கோடற்கும், இறந்த வீரரைக் குறிக்கும் கல்லைக் காணுந்தோறும் ஏனைய தமிழ் மக்கட்கு நாட்டுப் பற்றும் வீரவுணர்ச்சியும் உண்டாதற் பொருட்டும், அரசரும் ஏனைய வீரரும் இறந்த வீரரைக் கனப்படுத்தும் பொருட்டும் எழுந்ததே `நடுகல் விழவு’ இங்ஙனம் நடப்பட்ட நடுகற்கள் அப்பழங்காலத்தே தமிழகம் முழுவதும் ஆங்காங்குப் பரவி இருந்தன என்பதைச் சங்க நூல்களால் நன்கு அறியலாம். `நீ போகும் வழியில் வீரன் கல்லைக் காண்பாய்; அதனை வழிபடாமற் போகாதே’ என்று ஒருவனுக்கு ஒரு பெண்மணி கூறுதல் புற நானூற்றில் காணலாம். `தெய்வமே ஆனான் திசைக்கு’ என்று இறந்த வீரனை ஏனையோர் கொண்டாடி விழாச் செய்தமையும் தமிழ் நூல்களில் பரக்கக் காணலாம். இனி, இங்ஙனம் போரில் இறந்த வீரர்தம் பத்தினி மார் அவர்தம் ஆவியற்ற உடலைத் தழுவிப் போர்க்களத்தே இறத்தலும் உண்டு; போர் செய்து இறத்தலும் உண்டு; தீப்பாய்ந்து இறத்தலும் உண்டு; அத்தகைய மங்கையர் நினைவுக்கு அறிகுறியாகக் கல் எடுத்துக் கோவில் கட்டி வழிபடலும் தமிழர்மரபாகும். `தீப்பாய்ந்த அம்மன் கோயில்’ என்பது இன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் பல இடங்களில் காணலாம். இத்தகைய கோவில்கள் தமிழ் நாடெங்கும் உண்டு. நாளடைவில் அக் கோவில்கள், `தீப்பாய்ந்த’ என்னும் தொடர் கொண்டு, திரௌபதி அம்மன் கோவில்களாக மாற்றப்பட்டுவிட்டன; வடநாட்டுப் பாரதக் கதையும் தமிழகத்தில் புகுந்துவிட்டது. இது, பிற்காலத் தமிழர் அறியாமை யால் போந்த தவறுகள் பலவற்றுள் தலையாயது. வீரத்தையும் கற்பையும் விளக்கி மாண்ட பத்தினிகளையும் தமிழர் சிறப்புச் செய்து வழிபட்டு வந்தனர் என்பதற்குக் கண்ணகிக்குச் சேரன் கோவில் கட்டினமையும் அப் பத்தினி விழாவிற்குப் பல அரசர்கள் வந்திருத்தமையுமே சிறந்த சான்றாகும். இதுகாறும் கூறியவற்றால், சாதாரணமாக இறந்தோர் - போரில் இறந்தவர் - தீப் பாய்ந்தோர் - கற்பினை விளக்கி மாண்டவர் முதலியோர்க்கு அவரவர் தகுதிக் கேற்பக் கல் எடுத்து விழாச் செய்தலும் கோவில் கட்டி விழாச் செய்தலும் பண்டைநம் மூதாதையர் கையாண்ட நாகரிகப் பழக்கம் ஆகும். அதன் உட்பொருளை ஆய்ந்து-அவர்தம் உயர் ஒழுக்கம் பாராட்டுந் தகைமையை உணர்ந்து பாராட்டி, அச்சிறு கோவில்களையும் நம் முன்னோர் மரபையும் காத்தலே அறிவுடைத் தமிழர் நீங்காக் கடமையாகும். நம் முன்னோர் வீரத்தையும் கற்பையும் சீரிய ஒழுக்கத்தையும் விளக்கும் பேரடையாளங்களாக உள்ள இச்சிறு கோவில்களை இன்றும் பழங்குடித் தமிழர் பாதுகாத்து வருதல் தமிழ்நாடு செய்த தவப்பேறே ஆகும். ஆயின், அம்மக்கட்குத் தமிழறிவு இன்மையால், உண்மை வரலாற்றை விளக்கி அவர்தம் சிறு தெய்வங்கள் வாயிலாகத் தமிழ்ப்பற்றையும் தமிழ்ப் பழங்குடிப் பெருமையையும் தமிழர் போர் வீரத்தையும் ஊட்டுதல் கற்றறிந்த தமிழர் - தமிழ் நாட்டுக்கு நன்மை செய்ய இருக்கும் பேரறிஞர் - பெருங்கடனாகும். கைம்மை நோன்பு கணவரையிழந்த பண்டைத் தமிழ் மாதர் (1) உடனே உயிர்விடல், (2) தீப்பாய்ந்து உயிர்விடல், (3) கைம்மை நோன்பு நோற்று உடலை வற்றச் செய்து மறு பிறவியில் கணவனை அடைய விரும்புதல் என்னும் மூவகைத் துறைகளைக் கையாண்டனர்.7 கோவலனைக் கொன்ற பாண்டியன் கண்ணகியால் உண்மை உணர்ந்து அரியாசனத்திலிருந்து வீழ்ந்திறப்ப, அவன் கோப் பெருந்தேவி அவனருகில் வீழ்ந்து உயிர் விட்டமை முதல் துறைக்குத் தக்க சான்றாகும்.8 பூதபாண்டியன் இறந்தவுடன் தன்னைத் தடுத்த சான்றோரை விலக்கி அவன் பெருந் தேவி நெருப்பில் வீழ்ந்து இறந்தமையே இரண்டாந் துறைக்குப் போதிய கரியாகும்.9 மேற்கூறப்பெற்ற அரசமாதேவியே பாடிய பாட்டில் மூன்றாம் துறைக்குரிய தமிழ் மாதரைப் பற்றிக் கூறியுள்ளான். மைம்மை நோன்புடைய பெண்டிர் இலை இடையே பயின்ற கையால் பிழிந்து கொள்ளப்பட்ட நீர்ச் சோற்றுத் திரளுடனே வெள்ளிய எள் அரைத்த விழுதுடனே புளியிட்டுச் சமைக்கப்பட்ட வேளையிலைக் கறியை உண்ணுதல் மரபு; பாயின்றிப் பருக்கைகளாற் பரப்பட்ட படுக்கையில் படுத்தல் மரபு. அல்லிக்காய் அரிசி உண்ணலும் மரபு. அம்மகளிர் பிடி (பெண் யானை) யினது அடி போன்ற சிறிய இடத்தினை மெழுகித் தம் கணவர்க்குப் புல்மீது உணவு பிடித்து வைத்த பிறகு உண்பர்.10 இறந்தவனுக்கு உணவு கொடுக்க வேண்டிச் சுளகுபோலச் சிறிய இடத்தைத் துடைத்து அதனைச் சாணி கொண்டு தன் கண்ணீரால் மெழுகினாள் ஒரு கைம்பெண் எனவரும் புறப்பாட்டுச் செய்தி உள்ளம் உருக்குவதாகும்.11 இங்ஙனம் வருந்தும் கைம்மை மகளிர், கணவர் இறந்ததும் வளையல்களைக் கழற்றி விடல் கைம்மைக்கு உரிய அடையாளமாகக் - கருதப்பட்டு வந்தது. அப்பழங் காலத்தே, இன்று ஆட்சியில் உள்ள `தாலி அறுத்தல்’ - `தாலி கட்டல்’ இல்லாமையால், வளையலே மங்கல அறிகுறியாகவும், அது கழற்றப்படல் அமங்கல அறிகுறியாகவும் கருதப்பட்டு வந்தது. 1. வெளிமான் (என்னும் வள்ளல்) இறந்தானாக, அவனுடைய நகரம், `தொடிகழி மகளில் தொல் கவின் வாடியது’ -புறம் 238 2. கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி’ 250 3. கொய்ம்மழித் தலையோடு கைம்மையுறக் கலங்கிய `கழிகல மகடூஉப் போல’ -புறம் 201 4. கண்ணகி, கொற்றவை வாயிற் `பொற்றொடி தகர்த்தாள்’ (சிலப்) இவற்றால், கணவனை இழந்த காரிகையர் அவ்விறப்புக்கு அறிகுறியாக எல்லா அணிகளையும் களைதல் உண்டு; அவற்றுள் தொடி (வளையல்) நீக்கலே சிறப்பு; ஒரோ வழித் தலை மொட்டை அடித்தலும் உண்டு என்பன போன்ற சுவை பயக்கும் விவரங்களை அறியலாம். மொட்டையடிக்கும் பழக்கம் கணவற்கென வாழ்ந்த மகளிர் பிற ஆடவர்க்குத் தம் எழில் விளங்கத் தோன்ற விரும்பாராதலின் உண்டான பழக்கமாகலாம். இவையன்றி வெள்ளை யாடை விதவையர் உடுத்தும் பழக்கமும் உண்டு. இது நூலுட் கூறப்படாவிடினும், இப்பழக்கம் திராவிடருடையதே ஆகும். என்னை? கம்பர் வாலி மனைவியான தாரையின் விதவைக் கோலத்தை விளக்கு கையில் அவள் வெள்ளை ஆடை உடுத்திருந்ததாகக் கூறுகிறார். இன்னும் தெலுங்கு நாட்டு விதவைப் பெண்டிர் அனைவரும் வெள்ளையாடை உடுத்தலைக் காணலாம்; பாண்டிய நாட்டுத் தமிழ்ப் பழங்குடிப் பெண்களுள் கைம் பெண்கள் வெள்ளையாடை உடுத்தல் காணலாம். பாண்டிய நாட்டுச் சைவ வேளாளர் இல்லங்களில் வெள்ளை ஆடை உடுத்தும் விதவையரைக் காணலாம். அப்பழங்குடிப் பெண்கள் எவ்வித அணிகளும் இன்றி இருத்தல் புறநானூற்றுத் தமிழ்க் கைம்பெண்டிரை நினைவூட்டுகின்றதில் வியப்பில்லை அன்றோ? முடிவுரை இதுகாறுங் கூறியவற்றால், 1தமிழர் இறந்தவர் உடலை எரித்தல், புதைத்தல் செய்தனர்; கல் எடுப்பு விழாச் செய்து நீத்தாராய (`தெய்வமே ஆனான் திசைக்கு என்றபடி ஆன) அவரைத் தம் குலதெய்வமாகவோ, வேறாகவோ வழிபட்டு வந்தனர்; படையல் இட்டனர்; இறந்தவர்க்குரிய ஆடை அணிகளைப் படைத்தனர்; புத்தாடைகளை வைத்துப் படைத்தனர்; இறந்தவரைப் பற்றி நினைக்குந் தோறும் அவர்தம் மேதகு குணங்களையும் செயல்களையும் எண்ணி இறுமாந்தனர்; உணர்ச்சி கொண்டனர்-என்பன போன்ற-முற்றும் தமிழ் மரபுக்கே உரிய (கலப்பற்ற) செய்திகள் அறியக் கிடக்கின்றன. இப்பழக்கங்கட்கு மாறான அனைத்தும் பிற்பட்ட காலங்களில் தமிழர் வாழ்க்கையிற் புகுந்தவை-தமிழர் மரபுக்கும் அறத்திற்கும் மாறானவை என்னலாம். 10. மனிதனும் சமயமும் மனிதன் பழைய மனிதன் முதலில் பேச இயலாதவனாக இருந்தான்; மலைக்குகைகளையும், மலங்களின் அடியையும் மரக்கிளை களையும் தான் வாழிடமாகக் கொண்டான். அப்பொழுது அவனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை. பிறகு அவன் பறவைகளின் ஓசைகளையும் விலங்குகளின் ஓசைகளையும் கேட்டுக் கேட்டு ஓசையிட அறிந்தான்; பின்னர்ப் படிப்படியாக ஓசைகளாலே தன் கருத்தை வெளியிடத் தொடங்கினான்; தான் விரும்பிய பொருளைச் சுட்டிக் காட்டினான். பொருள்கள் இல்லாத பொழுது அவற்றைக் குறிக்கும் ஓவியங்களை வரையத் தலைப் படடான். அவ்வோவியங்களே நாளடைவில் சொற்களைக் குறித்தன; பின்பு எழுத்துக்களைக் குறிக்கலாயின. இவ்வாறு மனிதனது பேச்சுக்கலை, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் படிப்படியான வளர்ச்சியைப் பெற்றது. பழைய மனிதன் இயற்கையாகக் காடுகள் பற்றி எரிவதைக் கண்டான்; மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்வதால் தீப்பொறி பறப்பதை உணர்ந்தான்; இவற்றைக்கொண்டு, தன் அறிவைப் பயன்படுத்தி மரக்கட்டைகள் கொண்டு தீ உண்டாக்குவதை அறிந்தான்; சக்கி முக்கி கற்களைக் கொண்டும் நெருப்பு உண்டாக்குவதை அறிந்தான். அவன் அறிவு வளர வளர, காய்ந்த விதைகளைக் கொண்டு எண்ணெயைத் தயாரித்தான்; அந்h எண்ணெயின் உதவியால் விளக்கு எரிக்க அறிந்தான்; நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், முத்துக் கொட்டை எண்ணெய் இவற்றைக் காலப்போக்கில் விளக்கு எரிக்கப் பயன்படுத்தினான். மண்ணெண்ணெய்யின் பயன் கண்டறியப்பட்ட பிறகு, மண்ணெண்ணெய் விளக்குகள் தோற்றமாயின. அறிவும் ஆராய்ச்சியும் பெருகப் பெருக, மின்சார விளக்குக் கண்டுபிடிக்கப்பட்டது. மலைக்குகைகளிலும், மரங்களின் அடியிலும் வாழ்ந்த மனிதன், மரக்கிளைகளையும் தழைகளையும் கொண்டு தான் வாழ்வதற்கேற்ற குடிசையை அமைத்தான்; பின்பு மரக் கதவுகளை அமைத்தான்; பிறகு மண் சுவர்களை எழுப்பினான்; அதன் பிறகு செங்கற் சுவர்களை அமைத்தான்; பின்பு கற்களைக் கொண்டு வீடுகட்ட அறிந்தான். இன்று சிமெண்ட், சுண்ணாம்பு இவற்றைக் கொண்டு வீடுகள் அமைக்கப்படுகின்றன. மனிதன் இவ்வாறே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு துறையிலும் அறிவு வளர்ச்சி பெற்று வந்திருக்கிறான். இந்த வளர்ச்சி அவனது அறிவு வளர்ச்சியையும் ஆராய்ச்சி வளர்ச்சியையும் பொறுத்ததாம். இப்படியே மனிதன் சமயத்துறையிலும் வளர்ச்சி பெற்றான் என்று சமய வரலாறு கூறுகிறது. சமய அறிவு சமயம் என்பதன் பொருள் யாது? சமைதல்-பக்குவப் படுதல்; சமைத்த உணவு - பக்குவப்படுத்தப்பட்ட உணவு; மனிதனது அறிவு. மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட வேறு ஆற்றலை எண்ணி எண்ணி அத்துறையில் பக்குவப்படுத்தலே சமய அறிவு எனப்படும். இச் சமயம் எவ்வாறு வளர்ந்திருக்கிறது? சமய வளர்ச்சி பழைய மனிதன் குகைகளில் வாழ்ந்த போதும், மரத்தின் அடியில் வாழ்ந்த போதும் அவனோடு வாழ்ந்த முக்கிய உயிர் பாம்பாகும். பாம்பு கடித்து அவன் இறந்தான்; அவன் மீண்டும் ஏழாததைக் கண்ட மனிதன் அதனிடம் அச்சம் கொண்டான்; பயத்தின் காரணமாக அதனிடம் பக்தி செலுத்தினான்; `பயபக்தி’ என்பது உலக வழக்கு. பயத்தின் அடிப்படையிலிருந்து எழுவதுதான் பக்தி. தனக்குத் தீங்கு வருமோ என்ற அச்சத்தாலும், தான் மேற்கொள்ளும் ஒரு வேலை வெற்றி பெறாது ஒழியுமோ என்ற அச்சத்தாலுமே மனிதன் தான் நினைக்கும் கடவுளிடம் பக்தி செலுத்துகிறான். இதனை இன்றும் சமுதாயத்தில் பார்க்கின்றோம். உலகில் உண்டான பலவகை வணக்கங்களுள் முதலில் உண்டானது பாம்பு வணக்கமேயாகும். இஃது உலகம் முழுவதும் பரவியிருந்தது. இன்றும் பெரும்பாலான மக்களிடம் பரவியிருக்கின்றது. பழைய மனிதன் இறந்த மக்களின் ஆவிகளை எண்ணி அஞ்சினான்; அந்த ஆவி மீண்டும் வந்து உடம்பில் பொருந்தும் என்று நம்பினான்; அதனால் பெரிய தாழியைச் செய்து அதன் ஒரு பகுதியில் ஆவியற்ற உடலையும் மறுபகுதியில் அந்த மனிதன் பயன்படுத்திய ஆயுதங்களையும், உணவுப் பொருட்களையும் வைத்து நிலத்தில் புதைத்தான். இவ்வாறு புதைக்கப்பட்ட தாழிகள் தமிழகத்தில் எண்ணிறந்தவையாகும். ஆவிகளைப் பற்றிய அச்சத்தால் உண்டானதே நீத்தார் வழிபாடு என்பது. இந்த நீத்தார் வழிபாடு இன்றளவும் தமிழர் குடும்பங்களில் இருந்து வருதல் கண்கூடு. எல்லாச் சமயத்தாரிடத்தும் இவ்வழிபாடு இருந்து வருகிறது. மக்கள் நிலையாக ஓரிடத்தில் தங்கி ஊர்களை அமைத்து வாழத் தொடங்கிய பிறகு உண்டான வழிபாடுகள் பல. ஊரில் மக்கள் அஞ்சத்தக்க நிலையில் இருந்த கொடிய ஆடவரும் பெண்டிரும் இறந்த பிறகு, அவர்கள் ஆவிகள் ஊராரைத் துன்புறுத்தாதிருக்க அவர்களுக்குக் கோவில்கள் எழுப்பப் பெற்றன. ஒழுக்கத்திற் சிறந்த பெருமக்களுக்கும், சிறந்த பத்தினிப் பெண்களுக்கும், கன்னிப் பெண்களுக்கும் கோவில்கள் அமைந்தன. இந்த உண்மையை மணிமேகலை என்னும் காவியத்தாலும் அறியலாம். பேராற்றலைப் பற்றிய உயர்வு மதின் அறிவு இவற்றோடு அமைதியுறவில்லை. தான் வழிபட்ட பாம்பு இறந்ததை அவன் கண்டான்; தன்னைப் போன்ற மனிதனது ஆவிமுடிவான பொருள் அன்று, பேராற்றல் வாய்ந்தபொருள் அன்று என்பதைக் காலப் போக்கில் அறிந்தான். எனவே, அவனது அறிவு மேலும் ஆராயத் தொடங்கியது. நாள்தோறும் காலையில் சூரியன் தோன்றுவதையும் மாலையில் மறைவதையும் எண்ணினான்; பருவகால மழையைஸய;ம வெய்யிலையும் எண்ணிப்பார்த்தான். ஒரு தலைவனை உடைய இல்லம் எவ்வாறு சில ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டு நடைபெறுகிறது, அவ்வாறு சூரிய சந்திரர் தோற்றங்களும், பருவங்களின் போக்கு வரவும் ஓர் ஒழுங்குக்கு உட்பட்டு இயங்குதலை உணர்ந்தான். குடும்பத்துக்குத் தலைவன் இருப்பது போல, உலகத்தையும் பிறவற்றையும் படைத்து அவற்றை ஒழுங்காக இயக்க ஒரு தலைவன் இருக்கவேண்டும் என்று எண்ணினான்; அந்தக் கடவுள் மனிதனாகிய தலைவனைப் போல இவ்வுலகில் காணப்படலாமையால், தான் கண்ணால் காணமுடியாது மேல் உலகில் இருப்பதாக எண்ணினான்; அந்த எண்ணம் வலுப்பட வலுப்பட, மேலே பல உலகங்கள் இருக்கின்றன என்றும், அவற்றில் இறந்தவர்கள் அனைவரும் இருக்கின்றனர் என்றும், மேலே உள்ள இறைவன் அவர்தம் செயல்களுக்கு ஏற்பப் பல்வேறு உலகங்களில் வாழச் செய்கிறான் என்றும் கருதினான். இக் கற்பனையிலிருந்து வந்தவையே மோட்சலோகம், நரகலோகம் முதலியன. கடவுள் பற்றிய கருத்துக்கள் பண்டைத் தமிழகம் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐவகை நிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. குறிஞ்சி நிலம் என்பது மலை நாடு. மலைகளுக்கிடையே சூரியன் தோற்றம் அழகிய காட்சியைத் தரும். நீலவானத்தில் தோன்றும் சூரியனது முதல் தோற்றம், மயில் வாகனனான முருகக் கடவுளாக உருவகப்படுத்தப்பட்டது என்பது பெரியோர் கருத்து. முருகன் மலைநாட்டுக் கடவுளாக வழிபடப்பட்டான். கொற்றவை (துர்க்கை) பாலைநிலத் தெய்வமாக வழிபடப் பட்டாள். கொள்ளை, திருடு முதலிய தொழில்களைச் செய்துவந்த பாலை நில மக்கள் துர்க்கையை வழிபட்டனர். அவள் மகனே முருகன் என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. பசும்புல் வெளிகளைக் கொண்டது முல்லை நிலம். அங்குப் பசுக்களும் கன்றுகளும் புல் மேயும். ஆனினங்களை மேய்த்துப் பிழைக்கும் இடையர் அந்நில மக்கள். அவர்கள் பச்சைப் புல்வெறி நிலத்தை உடைய திருமாலை வழிபட்டனர். அத்திருமால் இடையர் வீட்டிலே பிறந்ததாகவும் கதை எழுந்தது. வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருதத்தில் வேந்தனே கடவுளாக வழிபடப்பட்டான். கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தலில் கடல் தெய்வமாகிய வருணன் வழிபடப்பட்டான். இவ்வாறு ஐவகை நிலங்களில் ஐவகைக் கடவுளர் வழிபாடு பெற்றனர். மக்களுக்கு மேலும் அறிவு வளர வளர, இத்தெய்வங்களுக்கெல்லாம் மேம்பட்ட பேராற்றலைச் சிவன் என்று அழைத்தனர். சிவனைக் குறிக்கும் அடையாளமாக லிங்கம் கருதப்பட்டது. லிங்கம் உலகத் தோற்றத்தைக் குறிக்கும் அடையாளம் என்று பெரும் பாலான ஆராய்ச்சியாளர்கள் விரித்து எழுதியுள்ளனர். மிகச் சிலரே அது எரி வணக்கத்தைக் குறிப்பதாகக் குறித்துள்ளனர். உண்மை எதுவாயினும், ஆகுக. சங்க காலத்தில் சிவன் மகாதேவனாகக் குறிக்கப்பட்டான்; அதற்கு முன்னரும் வேதங்களிலும் மாபாரதத்திலும் இராமாணயத்திலும் பெருந்தேவன் என்றே குறிக்கப் பட்டுள்ளான். பல பெயர்களில் ஒரு பொருள் உலகத்தைப் படைத்துக் காத்து அழிக்கும் பேராற்றலைப் பல சமயத்தார் பல பெயர்களிட்டு அழைக்கின்றனர். சைவர் சிவன் என்றும், வைணவர் திருமால் என்றும், கிறித்தவர் பரமபிதா என்றும், முஸ்லிம்கள் அல்லாஹ் என்றும், கௌமாரர் குமரன் அல்லது முருகன் என்றும், சக்தி வணக்கத்தார் அம்பிகை அல்லது துர்க்கை என்றும் அப்பேராற்றலுக்குப் பெயரிட்டுள்ளனர். ஆனால் வேறு சிலர் சிவனுக்கு மனைவி மக்களைப் படைத்து விட்டனர்; விநாயகரை மூத்த பிள்ளை என்றும், முருகனை இளைவன் என்றும் கூறினர். இவ்வாறு கற்பனைத் திறம் மிகுந்த மக்களால் ஒவ்வொரு கடவுளுக்கும் குடும்பம் கற்பிக்கப்பட்டது. ஆண்கள் செல்வாக்குப் பெற்ற சமுதாயத்தில் ஆண் தெய்வங்களே மேலான தெய்வங் களாகக் குறிக்கப் பெற்றன. பெண்கள் உயர்ந்திருந்த சமுதாயத்தில் பெண் தெய்வங்களே உயர்நிலையில் வைக்கப் பெற்றன. மனிதன் தற்காப்புக்காகக் கொண்டிருந்த கருவிகள் வில், வாள், கதை முதலியன. அவை அவர்தம் கடவுளர்க்கும் கருவிகளாகக் கற்பனை செய்யப்பட்டன. அறிவு மேலோங்கி இருந்த மக்கள் இறைவனை அன்பு மயமாக வழிபட்டனர். பாமர மக்கள் தங்கள் உலக போகங்களுக்காகக் கடவுளை வழிபட்டனர், பெருமக்கள். “யாம் இரப்பவை. பொன்னும் பொருளும் போமும் அல்ல; நின் அன்பும் அருளும் அறமெனும் மூன்றே,” என்று வேண்டினர். இந்த நிலையையும் நாம் சங்க நூல்களில் காண்கின்றோம். நேர்த்திக் கடன் நோய் நீங்கினால் இன்னது செய்வேன். இத்துன்பம் தீர்ந்தால் இன்னது செய்வேன் என்று வேண்டிக்கொள்வது மிகப் பழைய காலம் முதலே இருந்து வரும் பழக்கமாகும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமேரியர்கள் காலத்திலும் கோவில்களில் மொட்டை யடித்தல் முதலிய நேர்த்திக் கடன்கள் செய்யப்பட்டு வந்தன. மக்கள் இக் கடன்களைச் செய்தலை இன்றும் காண்கின்றோம். மனிதனும் சமயமும் சமுதாயத்தில் மனிதர் அறிவு நிலை ஒன்றாக இல்லை, “தொட்டனைத் தூறும் மணற்கேணி; மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு,” என்பது பொய்யாமொழி. எனவே, சமுதாயத்தில் மிகவும் கற்ற மேதைகளும் உண்டு; சாதாரண படிப்பாளிகளும் உண்டு; சிறிதே கற்றவரும் உண்டு; கல்லாத பாமர மக்களும் உண்டு. கல்லாத பாமர மக்களின் தொகையே சமுதாயத்தில் மிகுதியாகும். எனவே, புதியன கற்றறியவோ, தாம் செய்வனவற்றைச் சரியா-தவறா, தேவையா-தேவையற்றனவா என்பதை அழுத்தமாக ஆராயவோ திறனற்ற பாமரமக்கள் தம் மனத்திற்குத் தோன்றியனவற்றையெல்லாம் வழிபாடுகளாகக் கொண்டுள்ளனர்; தாம் வழிபடும் கடளுரைப் பற்றித் தம் மனம்போன போக்கில் கதைகளைப் புனைந்து விட்டனர். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி வாழச் சமுதாயத்தில் ஒரு சிலர் தவறுவதில்லை. அவர்கள் மக்களின் அறியாமையையே தம் வாணிகத்தின் முதலாகக் கொண்டு சமய வாணிகம் செய்யலாயினர். அவர்கள் சமயத் தொடர்பான கதைகளைப் பெருக்கினர்; வேற்றைச் சமுதாயத்தில் பரப்பினர். பாமர மக்கள் அவற்றை யெல்லாம் உண்மையென்று நம்பினர்; குருக்கள் சொல்லிய வற்றிற்கெல்லாம் பணத்தை வாரி இறைத்தனர். குருக்கள்மார் நாளடைவில் சமயக் கொள்ளைக் கூட்டத்தராயினர். அறிஞர் முயற்சி சமயத்தின் பெயரால் இவ்வாறு கொள்ளை, நடந்ததை ஒவ்வொரு நாட்டுப் பெரியோரும் ஒவ்வொரு காலத்திலும் தடுக்க முயன்றனர். அங்ஙனம் தடுக்க முயன்றவருட் சிறந்தவர் இயேசுநாதர். அவர் தடுத்த தன் விளைவாகச் சிலுவையில் அறையப்பட்டார். நம் நாட்டுச் சித்தர்கள் இக்கொள்ளையை வன்மையாகக் கண்டித்தனர்; காசிக்கும், இராமேசுவரத்திற்கும் செல்வதால் ஈசனைக் கண்டுவிடலாம் என்ற எண்ணத்தைக் கண்டித்தனர்; சமயத்தின் பெயரால் உண்டான சாதி வேறுபாடுகளைக் கண்டித்தனர்; இவற்றால் மனிதன் அறிவு மழுங்குவதையும் சமுதாயம் அழுகுவதையும் சுட்டிக்காட்டினர். இராமலிங்க அடிகள், விவேகானந்தர், காந்தியடிகள் போன்ற பெருமக்களும் இவற்றைக் கடிந்தனர்; உண்மையான கடவுள் அன்பை வற்புறுத்தினர். சமய உண்மை எது? `மனிதன் நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்கு உரிய நல்ல கொள்கைகளின் திரட்சியே சமயம் என்று சொல்லப்படும்’ என்பது விவேகானந்தர் போன்றோர் கருத்து. நேர்மையான வாழ்க்கை எப்படி வாழ்வது? கடவுளிடத்தில் உண்மையான நம்பிக்கை உடையவன் எப்படி வாழ்வான்? அவன் கடவுளால் படைக்கப்பட்ட எல்லோரையும் தன் உடன் பிறந்தாராகக் கருதுவான்; அவர்கள் தமக்குத் தீமையே செய்யினும் தான் மட்டும் நன்மையே செய்வான்; பொய், புறங்கூறாமை முதலிய குற்றங்களிலிருந்து நீங்கியிருப்பான்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசான்; தன் மனச்சாட்சிக்கு மாறாக எதனையும் செய்யான்; எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற ஒன்றையே நினைப்பான்; மனிதரால் ஆக்கப்பெற்ற சாதி வேறுபாடுகளையும் சமய வேறுபாடுகளையும் மதியான்; `ஒன்றே குலம், ஒருவனே தேவன்,’ என்ற கொள்கையில் வாழ்வான். இவனே ஆஸ்திகன். இவனே மனிதருள் மாணிக்கம்; இவனே வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன். இவனே வாழ்க்கையில் வெற்றி பெற்றவன். “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.” -திருக்குறள் 11. மதுரை எழுத்தாளர் மன்றம் தலைமையுரை தமிழ் உள்ளம் படைத்த பெரியோர்களே, மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தலைவன் என்னும் முறையில், இன்று இங்கு நடைபெறும் முதல் ஆண்டு விழாவுக்கு, நிறைந்த தமிழ்ப் பற்றுடனும் உள்ளக் கிளர்ச்சியுடனும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் உளமார வரவேற்று, எனது தலைமையுரையைத் தொடங்குகின்றேன். தமிழ் “தமிழ் எழுத்தாளர்” என்னும் தொடரில் முதல் சொல்லாக இருக்கும் தமிழ் நமது தாய் மொழியைக் குறிப்பதாகும். உலகத்தில் இன்று மூவாயிரத்துச் சில்லரை மொழிகள் பேசப்படுகின்றன. உலகப் பழைய மொழிகளுள் காலத்தால் பழமையும் இலக்கியத்தால் பெருமையும் பெற்றவை ஆறு ஆகும். அவை கிரேக்க மொழி, எபிரேயமொழி, இலத்தீன் மொழி, சீனமொழி, வடமொழி, தமிழ்மொழி என்பன. ஏறத்தாழ இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்பே 1600 சூத்திரங்களைக் கொண்ட பெரிய இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தமிழில் செய்யப்பட்டது எனின், அந்நூலுக்கு அடிப்படை நூல்களாக எத்தனை இலக்கிய நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள். இவ்வாறு எண்ணும் போதுதான் தமிழின் பழமை நமக்கு நன்கு தெரியும். தெரியவே, நமது தாய் மொழியாகிய தமிழ் எக்காலத்தில் தோன்றியது என்று வரையறுத்துச் சொல்ல இயலாத நிலை உண்டாகின்றது. இவ்வுண்மையை எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கம்பர் நன்கு உணர்ந்துதான், “என்றுமுள தென்தமிழ்” என்று கூறிச் சென்றார். இந்த உண்மையை உணரத் தமிழராகிய நாம் பெருமிதம் அடைகின்றோம் அல்லவா? எழுத்தாளர் திருவை ஆள்பவர் `திருவாளர்’ என்பதுபோல எழுத்தை ஆள்பவர் எழுத்தாளர் எனப்படுவர். எழுத்துத் தோன்றிய காலம் முதலே எழுத்தாளர் இருந்தனர் என்னும் உண்மையை நாம் அறிவுகொண்டு அறியலாம். தமிழகத்தின் பொற்காலமாகிய சங்க காலத்திலேயே எழுத்தாளர் என்ற சொல் வாக்கு இருந்தமையைக் குறுந்தொகை என்னும் சங்க நூலால் அறிகின்றோம். மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனார் என்ற ஒருவர் அந்நூலில் குறிக்கப்பட்டுள்ளார். பிற்காலச் சோழர் காலத்தில் எழுத்தாளன் எழும்போதழகியான், எழுத்தாளன் வேலூர்கிழான், எழுத்தாளன் செம்பியதரையன் என்பவர் ருந்தனர் என்பதைக் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. இக்காலத்தில் இக்காலத்தில் எழுத்தாளர் என்னும் சொல், பொது மக்களுக்குப் புரியத்தகும் வகையில் சிறு கதை, பெருங் கதை என்னும் புதினம் (நாவல்) கவிதை, கட்டுரை என்பவற்றை எழுதுபவரைக் குறிக்கின்றது. இப்பொருளிற் பார்ப்போமாயின் பரமார்த்த குரு கதை என்னும் நூலை எழுதிய வீரமா முனிவர் காலத்தால் முற்பட்டவர் ஆவர். அடுத்து, சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த விநோத ரசமஞ்சரி என்னம் நூலை எழுதிய அஷ்டாவதானம் வீரா சாமிசெட்டியார், கமலாம்பாள் சரித்திரம் எழுதிய மாதவையா, பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய வேதநாயகம்பிள்ளை போன்ற சிலரைக் குறிக்கலாம். நாம் வாழும் இந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கவியரசர் பாரதியார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பி. சம்பந்த முதலியார், வடுவூர், கே. துரைசாமி ஐயங்கார், கோதைநாயகி அம்மாள், இரங்கூன் பொன்னு சாமிபிள்ளை, ஆரணி குப்புசாமி முதலியார் முதலியோர் சிறந்த எழுத்தாளராக வாழ்ந்தனர். பின்பு காலஞ்சென்ற கல்கி, வ. ரா, புதுமைப்பித்தன் என்போர் புகழ் பெற்று விளங்கினர். இன்றுள்ள எழுத்தாளருள் டாக்டர் மு. வரதராசனார் கி. வா. ஜகந்நாதன், மேதாவி, சிரஞ்சீவி, மாயாவி, பி. எம். கண்ணன், அகிலன், துறைவன், சோமு, நாரண துரைக் கண்ணன் குறிப்பிடத்தக்கவர். இன்றுள்ள கவிஞர் பலராவர். அவருள் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், வாணிதாசன், கண்ணதாசன், அழ. வள்ளியப்பா, முடியரசன், தமிழ் அண்ணல், சாமி பழனியப்பன், பெரி. சிவனடியான், முத்துக் கணேசன், வே. அண்ணாமலை முதலியோர் பாராட்டத்தக்கவர். பெருங்கதை என்னும் புதின எழுத்தாளருள் டாக்டர் மு. வ.கி.வா. ஜகந்நாதன், மாயாவி, அகிலன், பகீரதன் சிரஞ்சீவி, மேதாவி, ஜெகசிற்பியன், கலைமணிள, எஸ்.ஏ.பி.இ அரு. இராமநாதன், நாரண துரைக்கண்ணன், டி. கே. சீநிவாசன் இராதாமணாளன், ம. கி. தசரதன், அரங்கண்ணல், அறிஞர் அண்ணாதுரை, சாண்டில்யன் முதலியோர் பாராட்டத்தக்க எழுத்தாளர் ஆவர். சிறு கதை எழுத்தாளருள் கல்கி, அகிலன், விந்தன், சுகி, பெ. தூரன், கோமதி சாமிநாதன், எல்லார்வி, சாண்டில்யன் முதலியோர் குறிப்பிடத்தக்கவர். இலக்கிய எழுத்தாளருள் டாக்டர். மு. வ, டாக்டர் சேதுப்பிள்ளை, டாக்டர் அ. சிதம்பரநாதன், கா. அப்பாதுரை, கி. வ. ஜகந்நாதன், தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான், அப்துற்றகீம், சி. எம். இராமச்சந்திரன் செட்டியார், சிதம்பர ரகுநாதன் முதலியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். எழுத்தாளர் குறிக்கோள் தமிழ் எழுத்தாளர்களுக்குச் சில குறிக்கோள்கள் இருத்தல் வேண்டும். தங்கள் நூல்கள் பொது மக்கள் ஒழுக்கத்தை வளர்க்கத்தக்கனவாய் இருத்தல்வேண்டும்; அனைவரும் சமம்-எல்லோரும் வாழப்பிறந்தவர், ஒவ்வொருவரும் மனிதப் பண்போடு நடந்து கொண்டால் தான் சமுதாயம் இன்புற்று வாழமுடியும் என்பனபோன்ற அடிப்படைக் கருத்துக்களை மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைக்கவேண்டும்; நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் இனப்பற்றையும் ஊட்டுவனவாக அமைதல் வேண்டும்; கலை வளர்ச்சி, சமுதாயப் பணி, இவற்றில் பொது மக்களுக்கு நல்ல அறிவு, நல்ல ஒழுக்கம், நல்ல வாழ்க்கை இவற்றை வளர்க்கும் முறையில் எழுத்தாளர் படைப்புக்கள் இருத்தல்வேண்டும். இக் குறிக்கோள்களுடன் எழுதப்பெறும் நூல்கள் இந்நாட்டில் இறவாத புகழுடையனவாக விளங்குமென்பதில் ஐயமில்லை. இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதும் சிறந்த நோக்கமாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தகுதி தமிழ் எழுத்தாளருக்குத் தங்கள் தாய்மொழி தமிழ் தான் என்பதில் நம்பிக்கை இருக்கவேண்டும்; அதன் தூய்மையிலும் வளர்ச்சியிலும் கண்ணும் கருத்துமாய் இருத்தல் வேண்டும. உண்மையான தமிழ் மரபைச் சேர்ந்தவர்கள்-பொது மக்களுக்கென்றே எழுதுபவர்கள்-அப்பொழுது மக்களுக்குப் புரியாத பிறமொழிச்சொற்களைத் தம் நூல்களில் எழுதுவது தவறு. தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. அப்பொழுதுதான் அவர்கள் தமிழ் மரபை அறிய முடியும். அவர்கள் எழுதும் நூல்களில் தமிழ் மணம் கமழும். டால்ஸ்டாய் நூல்களில் ரஷ்ய மணம் கமழ்வதும், மாபசான்ட் நூல்களில் பிரெஞ்சு மணம் கமழ்வதும் நாம் அறிந்ததே. அத்தகைய மணம்-இலக்கிய வளம்-தமிழ் எழுத்தாளர் நூல்களில் கமழவேண்டும். ரோம் நாட்டு எழுத்தாளர்களைப் பற்றிக் குறிப்பிட்ட கார்டினல் நியுமன் என்ற அறிஞர், “சிசிரோ ஒழிந்த மற்ற எழுத்தாளர் அனைவரும் இலத்தீன் எழுத்துக்களை (மக்களுக்குப் பயன்படாத நூல்களை) எழுதினார்கள்; சிசிரோ ஒருவர் தாம் ரோமானியரை (ரோம் நாட்டு மக்களை வாழ்விக்கும் நூல்களை) எழுதினார்”, என்று கூறியுள்ளார். இப் பொன்னுரை தமிழ் எழுத்தாளர் உள்ளங்களில் நிலைத்து நின்று பயனளிக்கவேண்டும். தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் நாட்டு வரலாற்றை நன்கு அறிந்திருத்தல் வேண்டும். தமிழக அரசியல் வரலாறு, சமுதாய வரலாறு, பொருளாதார வரலாறு, சமய வரலாறு முதலிய வரலாற்றுத் துறைகளை நன்கு அறிந்தால் இச் சமுதாயத்தில் இன்றுள்ள மாறுபாடுகளை நன்கு உணரமுடியும். அந்நிலையில் சமுதாயத்திற்கு எவை தேவை என்பதை அவர்கள் உளிதில் உணரலாம். அவற்றிற்கு ஏற்பத் தங்கள் கவிதைகளையும் பிறவற்றையும் நல்ல முறையில் அமைக்கமுடியும். பிறமொழி இலக்கிய அறிவு மிகவும் இன்றியமையாதது. பிற மொழிகளில் உள்ள சிறந்த கருத்துக்களைப் பல தமிழ் நூல்களில் புகுத்த இவ்வறிவு பெரிதும் பயன்படும். அன்றாடம் உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளை அறிதலும் எழுத்தாளர் கடமையாகும். சுவை பயக்கும் பல செய்திகள் செய்தித்தாள்களில் வருகின்றன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு பல நூல்கள் எழுதலாம். தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருதவேண்டும்; சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூடநம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்க வழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருத்தல் வேண்டும். இந்தத் துறையில் அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கவிஞர் கண்ணதாசன், நாவலர் நெடுஞ்செழியன், அன்பழகன், கவிஞர் முடியரசன், சாமி பழநியப்பன் முதலியோர் குறிப்பிடத்தக்கவர். இத்துறையில் அஞ்சாது உழைக்கும் இப் பெரு மக்களுக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். இத்தகைய நெஞ்சழுத்தம் எழுத்தாளர் அனைவருக்கும் இருக்கவேண்டும். அப்பொழுது தான் மக்களுக்கு முற்போக்கு எண்ணங்கள் வளர்தல் கூடும். மூட நம்பிக்கைகளை மேலும் வளர்க்கும் எழுத்தாளர்கள் சமூகத் துரோகிகளேயாவர். தமிழ் நடை தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சிமொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்துவருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும்; அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுத வேண்டும். அதுதான் உயிர் உள்ள நடை’ என்று சொல்லிப் பாமரமக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடைபொது மக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக்கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொது மக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்துவிடலாகாது. இதுவே அறநெறிப் பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்பு கிறேன். `எளிய நடையில் எழுதுகிறோம்’ என்று சொல்லி எழுத்தாளர் சிலர் தம் நூல்களில் எழுதியுள்ள சொற்களைப் பாருங்கள். நிஷ்கிரிஷையாக, பிரமேயம், மனுஷ்யர், சௌஜன்யமாக, அசிரத்தை, ஸ்தம்பித்துப் போனான், பிரத்யேகமான, ரக்ஷித்து விடுவது, பிரஸன்னமாகி, அச்சானியம், வித்வாம்ஸனி (பாடுபவள்), வைஷம்யம், பிலாக்கணம் (பாடுவதுபோல் பாடி அழுதான்), குசலப்ரச்னம், அஜகஜாந்தரம், கிருஹதர்மிணி, கரஸ்பரிசம், கபளீகரம், மூர்த்தண்யமாக, விகசித்தது, தாம்பத்ய வாழ்க்கை, திரை அவர்களை ஸ்வாகதம்’ என்று வரவேற்றது, வியர்த்தமாயிற்று, ஆசுவாசப்படுத்தினான், சிசுருஷை, நிஷ்களங்கம், அசாத்திய (கோபம்), தர்மசங்கடம், சங்கோஜம், அர்த்தபுஷ்டி. மந்த ஹசித்தாள், பிரஸ்தாபித்தான், விரஸம், ரம்மியம், அசேதன வஸ்துக்கள், சங்கேதம், சாகசக்கியம், தார்க்கரணித்து, ஆதங்கம், நிபமாக, சகஜமாக, ஆதர்ச இல்லாள், சுபஸ்த மண்டுகம், மக்ணமாக, ஸ்மரிக்க, ஆட்சேபசம்க்ஷேபங்கள், உபயகுசலோபரி, சம்ரட்சிக்க, பிரேமாலிங்கனம், தாத்பரியம், ஆகாத்தியம், சிந்தாக்கிரந்தை யாய், விவாஹ ஆஹ்வான பத்திரிகை, ஆஸ்வாஸப் படுத்தினான், குசலம், ஸ்பஷ்டமாக. இச்சொற்கள் தமிழ்ச் சொற்கள் அல்ல. பொது மக்கள் வழக்கில் இல்லாதவை. இவை எழுதப்பெற்ற நூல்கள் எளிய தமிழ் நடையில் இருக்கின்றன என்று சொல்வது பொருத்தமாகுமா? இவ்வாறு எழுதுவது தமிழ்க் கொலை அல்லவா? தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதுவது அழகானது என்று சொல்லும் எழுத்தாளர்களும் இந்நாட்டில் உண்டு. மிகவும் தேவைப்பட்ட இடங்களில் பழக்கப்பட்ட இரண்டொரு பிறமொழிச் சொற்களைச் சேர்க்கலாமே தவி, மேலே கூறப்பெற்ற-பொதுமக்களுக்குப் புரியாத பிறமொழிச் சொற்களைப் புகுத்துவது பொறுக்கமுடியாத குற்றமாகும். இவ்வகை எழுத்தாளர்கள் தமிழர் விழிப்புணர்ச்சி பெற்றுவரும் இக்காலத்தில் தங்கள் நடையை மாற்றிக்கொள்வது நல்லது. எழுத்தாளர் வளர்ச்சி பன்றி பல குட்டிகள் போடுதல் போல நாட்டில் எழுதுகோல் பிடித்தவனெல்லாம் எழுத்தாளன் என வருதல் நன்றன்று. தொடக்கத்தில் சொல்லப்பட்டபடி நல்ல படிப்பாளி களும் தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப் பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர் என்று பெயர் பெறமுடியும். அத்தகைய எழுத்தாளர்கள் “தமிழர்” என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும்; பேரூர்களிலும் சிற்றூர்களிலும் எழுத்தாளர் மன்றங்களை நிறுவுதல் வேண்டும்; இந்தியாவின் பல பகுதிகளில் குடியேறி வாழும் தமிழர்களும் இத்தகைய மன்றங்களை அமைப்பது நல்லது. இம்மன்றங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று உறவாடி வளர்தல் வேண்டும். இந்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் மதிக்கத்தகும் முறையில் தமிழ் எழுத்தாளர் மன்றம் ஆக்கம் பெறுதல் வேண்டும். உலகப் பெரும் பரிசாகிய நோபல் பரிசைப் பெறத்தக்க நிலையில் தமிழ் எழுத்தாளர்கள் வளர்ச்சி பெறவேண்டும். இந்திய அரசாங்கம் நடத்திவரும் நூல் பரிவுரைக் குழு (சாஹித்திய அகடமி) பிறமொழி நூல்களை மொழிபெயர்த்து வெளியிடும்படி பரிவுரை வழங்குதல்போலத் தமிழ் எழுத்தாளர் நூல்களில் சிறந்தவற்றைப் பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கும்படி தூண்டல் வேண்டும். எழுத்தாளர் பெர்னார்டுஷாவைப் போலவும் நக்கீரரைப் போலவும் தன்னம்பிக்கையும் பெருமிதமும் உடையவளர்களாக விளங்குதல் வேண்டும். உண்மை கூறத் தயங்காத-தவற்றைக் கண்டிக்கத் தயங்காத நெஞ்சுறுதி பெற்றிருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் எழுத்தாளர்கள் தன்னம்பிக்கையோடு சமுதாயத்திற்கு உண்மையான தொண்டு செய்யமுடியும். திருவள்ளுவர் படை வீரரை `வில்லேர் உழவர்’ என்றும், பேச்சாளரையும் எழுத்தாளரையும் `சொல்லேர் உழவர்’ என்றும் கூறியுள்ளார். அச்சொல்லேர் உழவராகிய எழுத்தாளர்கள் மக்கள் மனமென்னும் வயலைத் தம் எழுத்து என்மை என்னும் கலப்பையால் உழுது, இனிய எளிய செந்தமிழ் நடை என்னும் எருவிட்டு நல்ல கருத்துக்களென்னும் விதைகளை விதைப்பாராயின், நல்ல பயன் விளையும். அந்நிலையில் அவர்களது வருவாயும் உயரும்; வாழ்க்கைத்தரமும் உயரும். `பொதுமக்களுக்குப் பயனுள்ள தொண்டு செய்கிறோம்’ என்னும் மன அமைதி அவர்களுக்கு உண்டாகும். இதுவே இறவாப் புகழை அடைய விரும்பும் உண்மைத் தமிழ் எழுத்தாளர்கள் மேற்கொள்ளத் தக்கவை. இத்தகைய உயர்நிலையில் தான் எழுத்தாளர்-சொல்லாளர் என்ற பெயர்களோடு பொருளாளர் என்ற பெயரும் எழுத்தாளரைச் சாரும். அந்நிலையில்தான் பொதுமக்களும் அரசினரும் எழுத்தாளர்களுக்கு உரிய மதிப்பைத் தருவர். அம்மதிப்பைப் பெற முயல்வதே எழுத்தாளரது தலை சிறந்த நோக்கமாக இருத்தல் வேண்டும். 12. மோரியர் படையெடுப்பு மோரியர் படையெடுப்பைப் பற்றிய செய்யுளடிகளை நன்கு ஆராயின், மோரியர்க்கு உதவியாக `வடுகர்’ என்பவரும், `கோசர்’ என்பவரும் ஆக இருவகைப் படை வீரர் இருந்தனர் என்பது பெறப்படுகிறது. இவ்விருவர் கொண்ட இருவேறு படைகளை மோரியர் முன் அனுப்பித் தாம் பிற் சென்றதாகப் பாடலடிகள் பறையறைகின்றன. அடிமைப்பட்ட நாட்டு வீரரை, அவரை ஆட்கொண்ட பிற நாட்டார் தாம் படையெடுக்கும் முன்னர்ப் புகவிடுதல் இன்றை வழக்கமாகவும் இருந்து வருதல் கண்கூடு. கமர ராச்சியத்து மோரியர் தாம் வென்றடக்கிய வடுக வீரரையும் கோசரையும் இம்முறையில் தம் தமிழகப் படையெடுப்புக்குப் பயன்படுத்தினர். வடுகர் வடுகர் என்போர் தமிழகத்துக்கு வடக்கே இருந்தவர். “பனிபடு சோலை வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேஎத்தர்”1 “கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர்”2 கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர்3 இன்னணம் பலவாறு வடுகர் இயல்புகள் தமிழ் நூல்களில் நன்கு குறிப்பிடப்பட்டுள்ளமையால், தமிழர் வடுகரோடு பழக்கமுடையவர் என்பதும், தமிழர் வடுகதேயம் தாண்டிப் பொருள்வயிற் பிரிதல் மரபென்பதும், பிறவும் நன்குணரலாம். இவ்வடுகர் வேங்கடத்துக் கப்பாற்பட்ட கன்னடரும் தெலுங்கருமே யாவர். கோசர் கோசர் இன்ன நாட்டவர் எனத் தெளிவாகத் தமிழ் நூல்களில் கூறப்பட்டிலர்; ஆயினும் சொற்படி நடப்பவர்;4 அவர் நாடு `நெய்தலஞ் செறு’ எனப்படுகிறது.5 அவ்விடம் தமிழகத்த தாயின், கோசர் மோரியரோடு தமிழகம் புகுந்தனர் என வரும் செய்யுளடிகட்கு முரண்பட்டதாகும். எனவே, போரில் அவர்தம் ஆற்றல் கண்ட தமிழ் வேந்தர் அவரைச் சேவகத்திற் பிற்றை நாளில் வைத்துக் கொண்டனர்; `அவர்கள் நெய்தலஞ்செறு’ என்ற இடத்தில் இருந்து வந்தனர் என்று ஒருவாறு கொள்ளலாம். கோசர், வடுகரைப் போலவே மோரியர் ஆட்சிக்கு உட்பட்டவராகத்தான் இருந்திருத்தல் வேண்டும். இன்றேல், அவர் மோரியர் படையில் இடம் பெறுதல் யாங்ஙனம் இயலும்? கோசியன்ஸ் என்னும் மேலை நாட்டவரே கோசர் என்பர் ஆராய்ச்சியாளர் சிலர். பாக்களில் வரும் `வடவடுகர்’6, `வம்ப வடுகர்’7 என்னும் தொடர்கள் இக்கோசரையே குறிப்பன என்பது சந்தர்ப்பம் நோக்கி அறிவுடையோர் அறியக்கூடும். இதனால், இவ்வீரர், டெக்கான் பிரதேசத்துக்கும் வடபாற் பட்டவர் எனவும், இவரைத் தமிழர் முன்னம் அறியாதிருந்தனர் எனவும் கூறலாம். இவ்வீரர் கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் கருதுதல் முற்றும் பொருத்தமானதேயாகும்.8 மோரியர் படையெடுப்பு வடுகர், கோசர் என்னும் படை வீரர் தவிர, மோரியர் படை ஒன்று தனியே இருந்தது. அப்படையில் தேர்கள் இருந்தன. எனவே, இத்தமிழகப் படையெடுப்பில் மோரியர் படை, வடுகர் படை, கோசர் படை என மூவகைப் படைகள் இருந்தன.9 (1) இம்மூவருள் முன்னுற வந்த கோசர். தமிழகத்தின் வடமேற்கு எல்லை வழியாக நுழைந்து, `துளு’ நாட்டையடைந்தனர்; அந்நாட்டரசனான நன்னனைக் காட்டிற்கு விரட்டினர்; அவனது பட்டத்து யானையைக் கொன்றனர்; துறு நாட்டைக் கைப்பற்றினர்; நன்னனது காவல் மிகுந்த `பாழி’ என்னும் இடத்தே `வடுகர்’ தங்கி விட்டனர்.10(2) நன்னனை வென்ற கோசர், சேரன் தானைத் தலைவனும் முதிரமலைத் தலைவனும் ஆன `பிட்டங்கொற்றனை’த் தாக்கினர்; போர் நடந்தது. முடிபு தெரியவில்லை.11 (3) பின்னர் `வாட்டாறு’ என்ற ஊரையும் `செல்லூ’ரையும் ஆண்ட `எழினி ஆதன்’ என்பானைக் கோசர் தாக்கினர். அவன் செல்லூர்க்குக் கிழக்கே கோசரோடு சண்டையிட்டு, வேல் மார்பில் தைக்கப்பெற்று மாண்டிருத்தல் வேண்டுமெனத் தெரிகிறது.12 (4) கோசர், சோணாடு அடைந்து அழுந்தூர் வேளான திதியனைத் தாக்கினர். அப்போது அவனைச் சேர்ந்த ஒரு வீரனது கண்ணைக் கோசர் அழித்தனர் என்பதை அவ்வீரன் மகளால் உணர்ந்த வேள், சினங்கொண்டு, போர் புரிந்து பகைவரைப் புறங்காட்டச் செய்தான்.13 (5) பின்னர் அக்கோசர் பொதியமலை அருகில் இருந்த மோகூரைத் தாக்கினர்; மோகூர் பணிந்திலது; அப்பொழுது `வடுகர்’ படையை முன்விட்டுப்பின் புதிதாக வந்த (வம்ப) பெரிய தேர்களையுடைய மோரிய வீரர் மோகூரைத் தாக்கினர்; முடிபு தெரிந்திலது.14 இப்படையெடுப்பில் மோரியர், தம் வரவிற்குத் தடையாக இருந்த மலையைக் குடைந்தோ, வெட்டியோ வந்திருத்தல் வேண்டும் எனத் தெரிகிறது.15 (6) இங்ஙனம் பொதியம் வரை வந்த இவ்வீரர் வடக்கு நோக்கிச் செல்லுங்கால், `இளஞ்சேட் சென்னி’ என்ற சோழமன்னன், தென் பரதவரான மோகூர் மன்னன் முதலியோரை வென்ற வட வடுகரை (கோசரை) வென்றான்.16 மேலும் இவன், `குறை வினையை முடிப்பதற்காக (அறை குறையாகப் பகைவரைத் தோற்கடித்து அத்துடன் விடாமல் அவர்களை முற்றிலும் தோற்கடிப்பதற்காக)ப் பாழி நகரை அழித்து, `வம்ப வடுகர்’ (புதிதாகக் குடிபுக்க வடுகர், கோசர்) தலைகளை அறுத்து அழித்தான்’ என அழகாகவும் தெளிவாகவும் அகநானூற்றுச் செய்யுள் கூறுதல் கவனிக்கத்தக்கது. இவ்வாறு `பாழியை’ வென்றகாரணம் பற்றி அச்சோழன். `செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி’ எனப்பட்டான்.17 மோரியர் தோல்விக்குக் காரணம் இவ்வாறு வலிமிக்க சோழமன்னன் போர் தொடுத்து வென்றமையாற்றான், மோரியர் படை நிலைகுலைந்து தனது கருத்து நிறைவேறப் பெறாமல், தமிழகம் விட்டு மீண்டிருத்தல் வேண்டும். சோழ மன்னன் எதிர்த்திராவிடின், தமிழகமும் மோரியர் ஆட்சிக்குப்பட்டிருக்கும். தமிழகத்தின் படை வலியையும் இயற்கை அமைப்பையும் பிறவற்றையும் அறியாத வட நாட்டினர் ஆதலின் மோரியர், துளுநாட்டை முதலில் வென்று, சேரநாடு சென்று சேரர் தலைவனைத் தாக்கி, வாட்டாறு சென்று, பின்னர்ச் சோணாடடைந்து திதியனிடம் தோல்வியுற்று, பிறகு தெற்கு நோக்கிச் சென்று தாம் பெற்ற தோல்விகட்கீடாகத் தென்பரதவரை வென்றிருத்தல் வேண்டும். அவரை வென்ற மகிழ்ச்சியோடு, தாம் முன்னர்த்தோற்ற சோது நாட்டுவழியே வருகையில் சோழனால் முறியடிக்கப்பட்டு, தமக்கு முதல் வெற்றி கிடைத்த துனுறாட்டை நோக்கி ஓடியிருத்தல் வேண்டும். சோழன், அங்கும் அவரைத் துரத்திச் சென்று, பாழியை அழித்து வடுகரை வென்றான். சோழனது வெற்றியால், மோரியர், `தமிழகப் படையெடுப்புப் போதும்’ எனச் சலிப்புற்றும் போயிருக்கலாம். இப்படையெடுப்பு, மோரியர்க்கு வெற்றியைத் தராமையாலும், தமிழகம் சுயேச்சையாக அசோகன் காலத்தே விளங்கினமையாலும், சோழனால் அவர்கள் இறுதியாகத் தோற்கடிக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்னும் சரியான முடிபுக்கு வரவேண்டியிருக்கிறது. பெரு வேந்தனான சோழன் இப்படையெடுப்பை எதிர்த்திராவிடின், தமிழகம் மோரியர் கைப்பட்டிருக்குமென்பதில் ஐயமில்லை. இப் படையெடுப்புச் சம்பந்தமாகப் பாண்டியர், சேரர் பெயர்கள் காணப்படவில்லை. இதற்கு, படையெடுத்தவர் தமிழகத்துக்கே புதியவர் ஆயினமையால், தம் மனம் போனபடி படையொடு சென்று எதிர்ப்பட்டாரை எதிர்த்து வென்றும் தோற்றும் இறுதியிற் பயனடையாது மீண்டனர் என்னும் சமாதானம் தவிர வேறு யாதுதான் இப்போதுள்ள நிலைமையிற் கூறல் இயலும்? பிற்கால ஆரியர், கோசர், வடுகர் கோசர், வடுகர், மோரியர் சம்பந்தமான செய்யுட்களை ஒருங்கு கூட்டிப் பார்த்து நுணுகி ஆராய்பவர் மேற்காட்டப்பெற்ற எமது முடிபை ஒருவாறு ஒப்புதல் கூடும். இப்படையெடுப்பில் தொடர்பு பெறாத பிற்கால ஆரியர், கோசர், வடுகர் எனத் தமிழ்ப் பாக்களில் கூறப்பட்டவர் வேறு. கோசரையும் வடுகரையும் கொண்டமோரியர் படை தமிழகத்துக்கு வடக்கே இருந்து வந்தது. கி. மு. 232-இல் அசோகன் இறப்ப, அவனுக்குப்பின் வடுகர் தம்மாட்சி பெற்றனர். எனவே, டெக்கான் பிரதேசம் முழுவதும் வடுகர் ஆட்சியில் இருந்தது. அப்போது தமிழகத்தின் வடக்கே வடஎல்லையில் வடுகர்படை இருந்தது. மோரியர் காலத்திய கோசர் சந்ததியார் எல்லைப் புறத்திலேயே நிலைத்துவிட்டனராதல் வேண்டும். அங்ஙனம் நிலைபெற்ற அச் சந்ததியார், வடுகர், கங்கைச் சமவெளியினின்றும் வடுகர் நாட்டில் தங்கிய ஆரியர் (வடமொழியாளர்) இவர்கள் பிற்காலத்தே மலையமான், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலியோரால் தாக்கப்பட்டிருத்தல் வேண்டும். என்னை? ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் காலம் சிலப்பதிகார காலம்; கி. பி. 150 - கி. பி. 175-க் குட்பட்ட காலம்.18 மோரியர் படையெடுமுப்பின் காலம் கி. மு. 298 - கி. மு. 272-க்கு உட்பட்ட பிந்துசாரன் ஆட்சிக் காலமாகும். எனவே, சுமார் 400 ஆண்டுகட்கு முற்பட்டவரும் பிற்பட்டவருமான கோசர், வடுகர் வேறு வேறானவர். இக்கருத்தினைச் சிறந்த சரித்திராசிரியராகிய டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் கூறுதல்19 இம் முடிபுக்கு அரண் செய்வதாகும். இதுகாறும் கூறியவற்றால், இம் `மோரியர் படையெடுப்பு’ என்பது, மோரியர் காலத்தேதான் நடந்ததென்பதும், மோரியர் என்பார் சந்திரகுப்தன் முதலாகக் கி. மு. 185 வரை ஆண்ட தசரதன் ஈறானவரேயாவர் என்பதும், வேறெக் காரணமுங் கொண்டு குப்தரைக் குறியாதென்பதும் அறியலாம். மோகூர்ப் படையெடுப்பிற்றான் `வம்பமோரியர்’ என்ற தொடர் ஒரே முறை வந்துள்ளது. `சோர்க்கு மோகூர் பணியாமையின், வம்ப (புதிய) மோரியர் துணைக்கு வந்தனர் என்பதே அச் சந்தர்ப்பத்தில் உள்ள செய்யுளடிகளின் கருத்தாகும். முன் படைக்கு எதிர்ப்புப் பலமாக இருப்பின், அதற்கு உதவியாகப் புதிய (வம்ப) படை வருதல் இயல்பேயன்றோ? அதுபோலக் கோசர்க்கு மோகூர் பணியாமையின், புதிய (வம்ப) மோரியர்படை வந்தது என்பதே கருத்து. இவ் வெளிய-சர்வ சாதாரணமாக பொருள் யாங்ஙனம் வேறுபட்டுக் `குப்தரை’க் குறிப்பதென்பது எமக்கு விளங்கவில்லை. `வம்ப மோரியர்’ - குப்தர் எனக் கொண்டால், `வம்ப வடுகர்’ என்பவர் யாவர்? `வடவடுகர்’ என்பவர் யாவர்? இவர்க்கெல்லாம் புதிய மரபை வீணே கற்பிக்க வேண்டிய துன்ப நிலைமை ஏற்படுமே! இது நிற்க. மோரியர் படையெடுப்பின் காலம் (கி. மு. 297-கி. மு. 274) மோரிய அரசருட் சிறப்புற்றிருந்தவர், முதல் மூவராவர்; சந்திரகுப்தன், பிந்துசாரன், அசோகன். சந்திரகுப்தனே மோரிய அரசை ஏற்படுத்தினவன். வட இந்தியா முழுவதும் அவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அவன் விந்திய மலையைத் தாண்டித் தென் இந்தியா மீது படையெடுத்து வந்தமைக்குச் சான்றில்லை. மேலும் தென் இந்தியாவுக்கு வர அவனுக்கு அவகாசம் இல்லையென்றே கூறலாம். என்னை? அவன் திடீரெனத் தோன்றி மௌரிய அரசை ஏற்படுத்தினான்; அங்ஙனம் ஏற்படுத்துதல் எளிதான செயல் அன்று; வடஇந்திய அரசர் பலரை வென்று வடஇந்தியா முழுவதையும் கைப்படுத்தி யாளவே பல ஆண்டுகள் சென்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. கிரேக்கரை வென்று உறவு கொண்டாடினவன் சந்திரகுப்தன். இவ்வாறு பல கடுமையான வேலைகளைச் செய்து முடிக்க வேண்டியிருந்தமையால், அவன் விந்தமலைக்குத் தெற்கேயும் வந்து நாடு பிடித்தான் என்பது நம்ப இயலாததொன்றாம். சந்திரகுப்தன் மகன் மகனான அசோகன் கலிங்கத்தை மட்டுமே வென்றனன் என்பதும், ஆனால் மைசூரின் வடபகுதி உட்பட முழு இந்தியாவையும் ஆண்டான் என்பதும் அவனுடைய கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றன. இவற்றால், சந்திரகுப்தன் மகனும் அசோகன் தந்தையுமான பிந்துசாரன் காலத்திற்றான் விந்தமலைக்குத் தென்பாற்பட்ட நாடு வெல்லப்பட்டாதல் வேண்டும். “பிந்துசாரன் பதினாறு அரசரைக் கொன்று கீழ்க்கடலுக்கும் மேல் கடலுக்கும் இடைப்பட்ட நாட்டை வென்றான்; அவன் `அமித்ரகதா’ (பகைவரைக் கொல்பவன்) எனப் பெயர் படைத்தவன்’ எனத் திபெத் வரலாற்று ஆசிரியரான `தாரநாத்’ கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. பிந்துசாரன் கொன்றான் எனக் கூறப்படும் பதினாறு அரசர் வடஇந்திய அரசராக இருந்திருத்தல் இயலாது. என்னை? சந்திரகுப்தன் பெருநாடு ஒற்றுமைப் பட்டிருந்தமையாலும், அவனையடுத்தே பிந்து சாரன் பட்டத்தை யடைந்தமையாலும் என்க. ஆதலின், தாரநாத் குறிப்பிட்டுள்ள நிலப்பகுதி `தக்கணம்’ ஆகவே இருத்தல் வேண்டும் எனக் கொள்ளலாம். அசோகன் தனது பதினமூன்றாம் பாறைக் கல்வெட்டில் கலிங்கப்போரைப்பற்றிக் குறிப்பிடுகையில், “முன்னர் வெல்லப் படாத ஒரு நாட்டை முதன்முறை வென்று அடிப்படுத்தல் கொலை, இறப்பு, சிறை ஆகிய துன்ப நிகழ்ச்சிகட்கு இடங்கொடுக்கும். இவை எனக்குப் பெருந்துன்பத்தை அளித்தன” எனக் கூறியுள்ளதை நோக்க, கலிங்கநாடு பிந்துசாரன் காலத்தில் வெல்லப் படவில்லை; அசோகன் காலத்தே தான் வெல்லப்பட்டது என்னும் உண்மை வெளிப்படுதல் காணலாம். எனவே, பிந்துசாரன் கலிங்கம் ஒழிந்த தக்கணப் பகுதியையே வென்றான் என்பது அறியத் தகும். கலிங்கத்துத் தென்பால் நெல்லூர் வரைப்பட்ட தக்கணப் பகுதி கடல் வரைக்கும் பரவி மோரிய ஆட்சிக்கு உட்பட்டிருந்ததாற் போலும் `தாரசாத்’ மேற்கூறியாங்குக் கூறிப் போந்தனன்! பழைய தமிழ் இலக்கியங்களாகிய அகநானூறு, புறநானூறு இவற்றில் மோரியல் தமிழகத்தின்மீது படை யெடுத்ததாகச் செய்திகள் காணப்படுகின்றன. அவற்றுட் சிறந்த குறிப்புக்கள் மாமூலனார் அகப்பாட்டுள் கூறுவனவேயாகும். அவர் பாடியுள்ள செய்யுள் ஒன்றில் பாடலிபுரத்து நந்தரைப் பற்றிய குறிப்பும் மோரியர் படையெடுப்பைப் பற்றிய குறிப்பும் சேர்ந்து காணப்படுதலால் நந்தருக்குப் பின் வந்த மோரியரே தமிழகத்தின்மீது படையெடுத்திருத்தல் கூடியதேஎன நினைக்க வழியுண்டு. இதனைத் `தாரநாத்’ கூற்றோடு ஒப்பிட்டு நடுவுநிலையினின்று ஆராய்வார்க்கு, ஓர் உண்மை புலப்படும். பிந்து சாரன், தமிழகம் தவிரத் தக்கணப் பகுதி முழுவதையும் வென்றான் என்பது. இஃது உறுதிப்படலால், அவனே இத்தமிழகத்தையும் வெல்ல முயன்றிருத்தல் கூடியதே எனத் துணிதல் தவறில்லையன்றோ? அதற்குரிய பிற காரணங்களாவன: மைசூரின் வட பகுதிவரை தக்கணப் பகுதியை வென்ற பிந்துசாரன், அதன் தென்பாற்பட்ட தமிழகத்தைக் கைப்பற்ற விரும்பினான் என்பதில் ஐயுறத்தக்க தொன்றுமில்லை. தக்கணப் பகுதியை வென்ற தையத்தினால், தமிழ் வேந்தரையும் வென்றுவிடலாம் என அவன் எண்ணி யிருத்தலும் கூடியதே. வடஇந்திய வீரரைக் கொண்ட படைபலம் மிக்கிருந்ததால், அதனைக் கொண்டே தமிழகத்தை வென்றுவிடக்கூடும் என அவன் நம்பியிருத்தலும் இயல்பே. மோரிய ரேசன் பெயரே தமிழ் நூல்களில் இன்மையால், பிந்துசாரன் தன் படையை ஏவியே (குலோத்துங்க சோழன் படையை மட்டும் ஏவிக் கலிங்கப் போரை நடத்தியது போல) தமிழகப் படையெடுப்பை நடத்தியிருத்தல் வேண்டும். இனி மோரியர் அரசாட்சி அசோகனுக்குப் பின் கி. மு. 184 வரை இருந்ததாயினும், அசோகனுக்குப் பிற்பட்ட மோரியர், அசோகனைப் போல விரிந்ததோர் பெருநாட்டை ஆண்டனர் எனக் கூறச் சான்றில்லை. அசோகனுக்குப் பின்பந்த அரசர் இரு பிரிவினராகி, ஒரு பிரிவினர் பாடலியைத் தலைநகராகவும், மற்றொரு பிரிவினர் உச்சைனியைத் தலைநகராகவும், கொண்டு மோரியப் பெருநாட்டைப் பிரித்து ஆளத் தொடங்கினர். அவர்கள் பலமற்ற அரசரானதால், விந்தமலைக்குத் தென்பாற்பட்ட ஆந்திரரும் கலிங்கரும் நாளாவட்டத்தில் தம் சுயேச்சையை நிலை நாட்டலாயினர். வேறு பல நாட்டினர் புதிது புதிதாக வட இந்தியாவிற் குடிபுகலாயினர். மோரியர் அரசு சுமார் (கி. மு. 322-கி. மு. 184 வரை) இருந்தது. அதில் முதல் மூவர் காலம் கி. மு. 322-கி. மு. 232 வரை என்னலாம். அதற்குப் பின் வந்த மோரியர் அசோகப் பெருநாட்டை அப்படியே வைத்தாண்டனர் என்பது கூற இயலாது என்பதை மேலே கூறினோமாதலாலும், முதல் மூவருள் சந்திரகுப்தன், அசோகன் இவ்விருவரும் தக்கணப் பகுதியை வென்றதற்குச் சான்று இன்மையாலும், பிந்து சாரனைப் பற்றித் தாரநாத் பலமாகக் கூறுவதாலும், கி. மு. 184-இல் அழிந்த மோரிய அரசு இன்றளவும் மீண்டு வாராமை யானும், தக்கணப் பகுதி முழுவதும் பிந்துசாரனே வென்று அடிப்படுத்தியவன் என்பதும், அவனே தமிழகத்தின்மீதும் படையை ஏவியவன் என்பதும் ஐயமற அறியக் கிடத்தல் காண்க. இப்பிந்துசாரன் காலம் சுமார் கி. மு. 297-கி. மு. 274 எனக் கூறலாம். எனவே, இக்காலத்தேதான் மோரியர் படையெடுப்புத் தமிழகத்தில் நடைபெற்றதென முடிபு கட்டுதல் பொருத்தமாகும். 13. பண்டைத் தமிழில் சிறுகதை முன்னுரை ஓர் உண்மையை வற்புறுத்துவதாய், மூன்று நான்கு பாத்திரங் களைக் கொண்டதாய், ஒன்று அல்லது இரண்டு நிகழிடங்களை யுடையதாய், குறுகிய கால அளவு நிகழ்ச்சியுடையதாய் எழுதப் பெறும் கதையே சிறுகதை என்று மேனாட்டு அறிஞர் கூறுகின்றனர். ஒரு சிறுகதை நம் மனத்தில் தங்கவேண்டுமாயின், அதனில் இரண்டு சிறப்புக்களில் ஒன்றேனும் இடம் பெற்றிருத்தல் வேண்டும். சிறுகதையில் ஒப்பற்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறல் வேண்டும்; அல்லது அதில் வரும் பாத்திரம் நாம் மதித்துவரும் ஒப்பற்ற பண்பு ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும். ஆங்கில எழுத்தாளரான ஸ்டீவன்சன் சிறுகதை அமைப்பதற்கு மூன்று வழிகளைக் கூறுகின்றார்: (1) ஒரு கருவைத் (ஞடடிவ) தேர்தெடுத்து அதற்கோற்ற பாத்திரங்களை அமைப்பது; (2) ஒரு பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து அதன்மீது நிகழ்ச்சிகளை அமைப்பது; (3) ஒரு சூழ்நிலையைத் தேர்ந்தெடுத்து அதற்குப் பொருத்தமான நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் தேர்ந்தெடுப்பது. இவற்றுள் முன்னதே மிகச் சிறந்தமுறை என்னலாம். நாவல் என்னும் புதினம் வேறு; சிறுகதை வேறு. வாழ்க்கையின் பெரும் பகுதியைச் சித்திரிப்பது புதினம்; வாழ்க்கையின் சிறு பகுதியை மட்டும் சித்திரிப்பது சிறுகதை. புதின ஆசிரியர் பாத்திரங்களின் பல்வேறு குணங்களைப் பெருக நினைத்துச் சித்திரிக்க முயலுவர்; சிறுகதை ஆசிரியர் அவற்றைச் சிறுகக் குறைத்துச் சித்திரிப்பர். புதினம் முடிவுபெற்ற வரலாறு; சிறு கதை வரலாற்றைக் குறிப்பால் புலப்படுத்தும் ஓவியமாகும். சிறுகதை புதினத்தின் துணுக்குகள் என்னலாம். இவை யாவும் மேனாட்டறிஞர் கருத்துக்கள். இவை பண்டைத் தமிழில் உள்ள சிறுகதைகளில் பொருந்தி இருக்கின்றனவா-இல்லையா என்பதை இக்கட்டுரையைப் படிக்கும் நன் மக்கள் கண்டறிவார்களாக! தொல்காப்பியத்தில் இன்றுள்ள தமிழ் நூல்களில் காலத்தால் முற்பட்டது தொல்காப்பியம். அதன் காலம் ஏறத்தாழக் கி. மு. 300 என்று சொல்லலாம், அது ஏறத்தாழ 1600 சூத்திரங்களைக் கொண்ட பெரிய இலக்கண நூல். அந்நூலில் செய்யுள் இயல் என்பது ஒரு பகுதி. ஆசிரியர் தமக்கு முன்னும் தம் காலத்திலும் தமிழிற் பலவகை நூல்கள் முன்னும் தம் காலத்திலும் தமிழிற் பலவகை நூல்கள் இருந்தன என்னும் உண்மையை அப்பகுதியிற் கூறியுள்ளார். அந்நூல்களுள் பெரிய காவியங்கள், சிறிய காவியங்கள், பிள்ளைத் தமிழ் போன்ற சிறு நூல்கள், நாடக நூல்கள், நாவல்கள் எனப்படும் புதினங்கள், சிறு கதை நூல்கள் என்பன குறிக்கத் தக்கவை. “பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென் றுரைவகை நடையே நான்கென மொழிப.” இச்சூத்திரத்துள் வரும், “பொருளொடு புணராப் பொய்ம்மொழி” என்னும் தொடருக்குப் பேராசிரியர், “ஒருபொருள் இன்றி பொய் படத் தொடர்ந்து சொல்வன. அவை, ஒரு யானையும், குதிரையும் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்னவாறு செய்தன என்று அவற்றுக்கு இயையாப் பொருள் படத் தொடர்நிலையான் ஒருவனுழை ஒருவன் கற்று வரலாற்று முறையான் வருவன,” என்று விளக்கம் கூறியுள்ளார். இவ்வுரை விளக்கத்தால் பஞ்ச தந்திரக் கதைகள், ஈசாப் கதைகள் போன்ற சிறுகதைகள் பண்டைத் தமிழில் இருந்தன என்று கொள்ளலாம். சிலப்பதிகாரத்தில் சிறு கதைகள் சிலப்பதிகாரம் ஒரு பெருங்காவியம். அதன்கண் இடம் பெற்றுள்ள பாத்திரங்களால் பல கதைகள் கூறப்பட்டுள்ளன, அடைக்கலக் காதையில் கவுந்தி அடிகள் அடைக்கலத்தின் சிறப்பை விளக்கக் கூறிய `குரங்கு தேவனான கதை’, கொலைக்களத் காதையில் பொற்கொல்லன் கூறிய `கள்வர் கதைகள்’ இரண்டு, வஞ்சினமாலையில் கண்ணகி கூறிய `பத்தினிப் பெண்கள் எழுவரின் கதைகள்’, மதுராபதி தெய்வம் கண்ணகியிடம் கூறிய `பொற்கைப் பாண்டியன் கதை,’ `கார்த்திகை என்ற பார்ப்பனியின் கதை’ `கண்ணகியின் முற் பிறப்பைப் பற்றிய கதை’ என்பன சிலப்பதிகாரத்தில் காணப்படும் சிறு கதைகள் என்னலாம். காவிய முறையில் சுருக்கிச் சொல்லப்பட்ட இக்கதைகள் விரித்து எழுதப்படின், படிப்பினைகொண்ட சிறு கதைகளாக அமையும் என்பதில் ஐயமில்லை. இங்குச் சான்றாக மூன்று கதைகளைக் காண்போம்: குரங்கின் கதை காவிரிப்பூம்பட்டினத்தில் சாயலன் என்ற வணிகன் இருந்தான். அவனும் அவன் மனைவியும் சமணப் பெரியோர்க்கு உணவு படைக்கும் விழுமிய தொண்டை மேற்கொண்டிருந்தனர். ஒரு நாள் தவங்களால் சிறந்த துறவி ஒருவர் அம்மனையுட் புகுந்தார். வணிகன் மனைவி அவரை முகம்மலர வரவேற்று அமுது படைத்தாள். அவர் உண்டு முடித்த பொழுது, பசியால் வாடிய சிறு குரங்கு ஒன்று அவ்வீட்டினுள் நுழைந்தது; ஒதுங்கி ஒதுங்கிச் சென்று அத்துறவியின் அடிகளைப் பணிந்தது; அவர் உண்டு எஞ்சிய உணவையும் பருகாதுவிட்ட நீரையும் மிகுந்த வேட்கையோடு உட்கொண்டது; தன்னை விரட்டாத அவரது பெருந்தன்மைக்கு நன்றியைத் தன் முகத்தால் தெரிவித்தது. அதன் உள்ளக்கிடக்கையை உணர்ந்த துறவி வணிகன் மனைவியைப் பார்த்து, “இக்குரங்கினை உன் மக்களைப்போல் பாதுகாப்பாயாக,” என்று கூறி அகன்றார். வணிகன் மனைவி அன்று முதல் அக்குரங்கினைச் சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தாள். சிறிது காலம் கழிந்து அக்குரங்கு இறந்தது. வணிகன் மனைவி துறவிகட்குத் தானம் செய்யும் பொழுதுதெல்லாம் அக்குரங்கின் பொருட்டு ஒரு பகுதியைத் தானம் செய்து, `அது நல்வினை அடைக’ என்று வாழ்த்தினாள். அவ்வறத்தின் பயனாக அக்குரங்கு வாரணாசியில் அரசன் மகனாகப் பிறந்தது; உருவிலும் திருவிலும் உணர்விலும் சிறந்தது; பலவகை அறங்களையும் செய்தது. முப்பத்திரண்டு ஆண்டுகள் அரசகுமரனாக வாழ்ந்த அக்குரங்கு இறந்தது; பின்பு ஒரு தேவனது வடிவத்தைப் பெற்றது. தான் அரசனாகப் பிறந்ததற்கும், பின்பு தேவனாக வடிவெடுத்ததற்கும் வணிகப் பெண்மணி செய்த தானச் சிறப்பே காரணம் என்பதை உலகறியச் செய்யவே, தேவன் பிறப்பிலும் ஒரு கை குரங்குக் கையாக வேண்டிப் பெற்றது; அக்குரங்கின் கையைக் கொண்டு தன் பிறவிகளை எண்ணியெண்ணி மகிழ்ந்தது. பொற்கைப் பாண்டியன் பண்டைக் காலத்தில் ஒரு பாண்டியன் மதுரையை ஆண்டு வந்தான். அவன் இரவில் நகர் சோதனை செய்வான். ஒருநாள் பிராமணர் வாழ்ந்த தெருவில் ஒரு வீட்டில் பேச்சுக்குரல் கேட்டது. பாண்டியன் அப்பேச்சைக் கேட்டான். வீட்டிற் குரியவன், “நான் காசி யாத்திரை செல்கிறேன்; நான் வரும் வரையில் நீ தனித்திருக்கவேண்டுமே என்று அஞ்சாதே; அரசவேலி உன்னைக் காக்கட்டும்”, என்று ஆறுதல் கூறினான். இச் சொல் கேட்ட பாண்டியன், அம்மறையவன் தன் ஆட்சியின்மீது வைத்திருந்து அழுத்தமான நம்பிக்கையைக் கண்டு மகிழ்ந்தான். அவன் அன்று முதல் பிறர்க்குத் தெரியாதபடி இரவு நேரங்களில் அவ் வீட்டைக் காவல் காத்து வந்தான். மாதங்கள் பல மறைந்தன. ஒரு நாள் இரவு அரசன் வழக்கம் போல் அவ்வீட்டின் அருகே வந்தான். உள்ளே புதிய குரல் கேட்டது. அப்புதிய ஆள் யார் என்பதை அறிய, அரசன் அவ் வீட்டுக்கதவைப் படபடவென்று தட்டினான். `யாரது?’ என்று உள்ளேயிருந்து உரத்த குரல் வெளிப்பட்டது. அவ்வாறு உள்ளேயிருந்து கேட்டவன் காசியாத்திரை சென்று மீண்ட மறையவனேயாவான். வீட்டுக்கு உரியவன் வந்து விட்டான் என்பதைப் பாண்டியன் உணர்ந்தான். இதற்குள் மறையவன் ஐயக்கண்கொண்டு தன் மனைவியைப் பார்த்தாள். அவள், “என்னை அரசவேலி காக்கும் என்று முன்பு சொன்னீர் அல்லவா? இப்பொழுது அதேவேலி எனது தூய்மையை உணர்த்தும்” என்று மொழிந்தாள். மன்னன் இதனையும் கேட்டான்; நடுநடுங்கினான்; கதவு தட்டியது தவறு என உணர்ந்தான். மின்னல் வேகத்தில் அவனுக்கு ஓர் எண்ணம் தோன்றிற்று. உடனே அவன் அத்தெருவிலுள்ள எல்லா வீடுகளின் கதவுகளையும் தட்டிவிட்டு மறைந்தான். மறுநாள் அத்தெரு மறையவர் மன்னனிடம் சென்று இரவில் நடந்த நிகழ்ச்சியைக் கூறி முறையிட்டனர்; கதவு தட்டிய கையை வெட்ட வேண்டும் என்று கூறினர். மன்னன் தான் செய்ததைக் கூறி, அவர்கள் முன்னிலையில், கதவு தட்டியது தனது கையை வாளால் வெட்டினான். திருவருட் செயலால் கை வெட்டப்பட்ட இடத்தில் பொற்கை காட்சியளித்தது. அதுமுதல் அப்பாண்டியன் பொற்கைப் பாண்டியன் என்று பெயர் பெற்றான். பொற்கொல்லன் கூறிய கதை கள்வன் ஒருவன் மதுரையில் இருந்த பாண்டியன் அரண்மனையுள் திருட விரும்பினான்; ஆயினும் அரண்மனையுள் நுழைவது எளிதன்று என்பதை நன்கறிந்தான். அதனால் அவன் அரசியல் தூதனைப் போல வேடம் தாங்கிப் பாண்டியன் அரண்மனை வாயிலில் பகற் பொழுதில் இருந்தான்; இரவில் பெண் வேடம் தாங்கி அரண்மனையுட் புகுந்தான்; விளக்கு நிழலிலே இளவரசனது பள்ளியறையுள் அஞ்சாது புகுந்தான். அப்பொழுது இளவரசன் உறங்கிக்கொண்டிருந்தான். அவனது மார்பில் வயிர மாலை ஒளிவிட்டுக் கொண்டிருந்தது. அவ்வொளி கள்வன் கண்களைக் கவர்ந்தது. அவன் அதைக் கவர விரும்பினான்; துணிந்து முன் சென்றான்; இளவரசனது கழுத்திலிருந்து அதனைக் கழற்றிவிட்டான். அவ்வமயம் திடீரென விழித்துக்கொண்ட இளவரசன் தன் மார்பைப் பார்த்தான்; வயிரமாலை காணப்படவில்லை. எதிரேயிருந்த கள்வனைக் கண்டான்; உடனே உடைவாளை உருவினான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்வாளின் உறையைக் கள்வன் வாங்கிக்கொண்டான். இளவரசன் கள்வனை நோக்கி வாளைக் குத்தினான். கள்வன் அவன் குத்துந்தோறும் உறையை நீட்டினான். அவ்வாள் அவ்வுறையுள் சென்று சென்று மீண்டது. இளவரசன் வாளைப் போட்டுவிட்டு, அவனை மற்போரால் அடக்க எண்ணிப் பாய்ந்தான். கள்வன் ஒரு தூணில் பின்புறம் மறைவது போலப் போக்குக் காட்டி, எவ்வாறோ மறைந்து விட்டான். இளவரசன் கள்வன் மறைந்திருக்கிறான் என்று கருதி ஒரு தூணின் மேல் பாய்ந்ததுதான் கண்ட பலன். இளவரசனது கண்முன் தோன்றித் தன் நுண்ணறிவால் சாகசம் செய்து மறைந்து அக்கள்வன் அகப்படவேயில்லை. அவன் களவு நூலைப் பழுதறக் கற்ற திறமைசாலி. மணிமேகலையில் சிறு கதைகள் மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் செய்த மணிமேகலை என்ற பெரிய காவியத்தில் வரும் பாத்திரங்ளால் ஆங்காங்குக் கூறப்பட்டுள்ள சிறு கதைகள் பலவுண்டு, அவற்றுள் கோதமை என்பவள் கதை, ஆபுத்திரன் கதை, ஆதிரை-சாதுவன் கதை, ககந்தன் கதை, அவனுடைய இரு பிள்ளைகளைப் பற்றிய கதைகள் என்பன குறிக்கத் தக்கவை. இங்குச் சான்றாக இரண்டு சிறு கதைகளைக் காண்போம். கோதமை கதை காவிரிப்பூம் பட்டினத்தில் பெரிய சுடுகாடு இருந்தது. அச் சுடுகாடு நாற்புறமும் உயர்ந்த மதிலால் வேலியிடப் பட்டிருந்தது. அதன் உட் பகுதியில் இறந்தவர்தம் தகுதிக்கு ஏற்பச் சிறியவும் பெரியவுமாகிய சமாதிகள் இருந்தன. அவை யாவும் சிறந்த வேலைப்பாடு கொண்டு விளங்கின. ஒரு நாள் இரவு சார்ங்கலன் என்ற பிராமணச் சிறுவன் அச் சுடுகாட்டை ஒரு நகரம் என்றெண்ணி உள்ளே நுழைந்தான்; ஆங்காங்குப் பிணங்கள் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தான்; அஞ்சி நடுங்கினான்; ஓடோடியும் இல்லம் சென்று தான் செய்த தவற்றைத் தாயிடம் கூறி விழுந்து இறந்தான். அவன் தாயாகிய கோதமை என்பவள், “எமது குடும்பத்திற்கு ஒரு மகனாக இருந்தவன் இறந்து விட்டானே! சம்பாபதி! நீதான் என் மகனை எழுப்ப வேண்டும்” என்று வேண்டினாள். சம்பாபதி என்னும் பெண் தெய்வம் அவள் எதிரில் காட்சியளித்தது, “இவனது அறியாமையே காரணமாக ஊழ்வினை இவனது உயிரை உண்டது. நீ இதுபற்றிக் கவலைப் படாதே”, என்றது. கோதமை, “என் கணவர் கண்ணில்லாதவர்; என் மகன் அவர்க்கு உதவியாக இருப்பான். ஆதலால் இவன் இன்னுயிர் தந்து என்னுயிர் வாங்குக”, என்று வேண்டிக் கொண்டாள். சம்பாபதி கோதமையைப் பார்த்து, `அம்மே, உடலை விட்டுப் பிரிந்த உயிர் செய் வினைகளுக்கு ஏற்ப வேறு பிறவி அடைதல் உறுதி. இறந்தவரைப் பிழைப்பித்தல் என்பது இயலாத செயல். ஒருவர் உயிர்க்குப் பதில் உயிர் கொடுப்பவர் இவ்வுலகில் உண்டு. அரசர் உயிர்க்குப் பதிலாக உயிர் கொடுப்பவர் பலர் உண்டு. ஆயினும், இச் சுடுகாட்டில் அரசர்க்கென்று ஆயிரக் கணக்கான கோட்டங்கள் அமைந்திருத்தலை நீ அறியாயோ?” என்றது. கோதமை நகரவில்லை. அவள் மறுபடியும் சம்பாபதியைப் பார்த்து, “தேவர்கள் வேண்டிய வரங்களைத் தருவார்கள் என்று நூல்கள் கூறிகின்றனவே! நீ என் மகனை எழுப்பவில்லையாயின், யான் இங்குத்தானே உயிரை மாய்ப்பேன்,” என்று மனம் வருந்திக் கூறினாள். உடனே சம்பாபதி எல்லாத் தேவரையும் கோதமை முன்பு வரவழைத்தது. அத்தேவர் அனைவரும் இறந்த வரைப் பிழைப்பித்தல் இயலாது என்று அழுத்தமாக அறைந்தனர். அப்பொழுதுதான் கோதமை உண்மை உணர்ந்தாள்; தன் மகன் உடலைச் சுடுகாட்டில் சேர்த்து வீடு திரும்பிளான்; மைந்தன் பிரிவாற்றாது வருந்திச் சில நாட்களில் உயிர் துறந்தாள். நாகர் தீவில் சாதுவன் காவிரிப்பூம் பட்டினத்தில் சாதுவன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆதிரை என்பவள். அவள் சிறந்த கற்பரசி. சாதுவன் தீய வழிகளில் தன் செல்வத்தை இழந்து ஏழையானான். அதன் பிறகே வேனுக்கு நல்லறிவு வந்தது. அவன் அயல்நாடு சென்று வணிகம் செய்து பொருள் ஈட்டி வர விரும்பினான். சாதுவன் கடல் வாணிகம் செய்யச் சென்ற வணிகரோடு அயல் நாடுகட்குச் செல்லப் புறப்பட்டான். அவன் ஏறிச் சென்ற கப்பல் காற்றினால் அலைக்கப்பட்டுக் கடலில் கவிழ்ந்தது. அவன், ஒடிந்த பாய்மரத் துண்டத்தைப் பற்றிக் கொண்டு நீந்தி, நாகர் தீவை அடைந்தான்; களைப்புற்று ஓரு மர நிழலில் உறங்கிக் கொண்டிருந்தான். அந்த நாகர் தீவில் ஆடையற்ற நாகரே வாழ்ந்து வந்தனர். அவர்கள் அநாகரிகர்; கள்ளையும் ஊனையுமே நம்பி வாழ்ந்தனர்; ஈவு இரக்க மற்றவர். அவருட் சிலர் உறங்கிக் கொண்டிருந்த சாதுவனைக் கண்டனர்; அவனைக் கொன்று தின்ன விழைந்தனர். சாதுவன் உறக்கம் நிங்கி எழுந்தான்; அவர்கள் தன்னைக் கொல்ல விரும்பியதை அறிந்தான்; நாகர் மொழியிலேயே தன் வரலாற்றை அக் கொடியோர்க்கு எடுத்துரைத்தான். அவன் தங்கள் தாய் மொழியில் பேசியதைக் கேட்ட நாகர் வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டனர்; அவனை அன்போடு அழைத்துச் சென்று தம் தலைவனிடம் விட்டனர். நாகர் தலைவன் அவனை வரவேற்றுப் பேசினான்; கள்ளையும் ஊனையும் ஒரு நங்கையையும் அவனுக்குக் கொடுக்கும்படி கட்டளையிட்டான். சாதுவன் அதைக் கேட்டு நடு நடுங்கினான். “பெண்டிரும் உண்டியும் இல்லையெனில் இவ்வுலகில் மக்கள் பெறும் பயன்தான் யாது?” என்று நாகர் தலைவன் கேட்டான். உடனே சாதுவன், “கள்ளும் இறைச்சியும் பெரியோரால் கண்டிக்கப் பட்டவை. நல்லவற்றைச் செய்யும் மக்கள் அடுத்த பிறவியில் நல்லுலகம் அடைவர்; தீயவற்றைச் செய்பவர் நரகம் எய்துவர். இஃது உண்மை என்று உணர்வதால் பெரியோர் தீயவற்றைக் களையும்படி அறிவுறுத்தினர்” என்று விளங்க வுரைத்தான். நாகர் தலைவன், “ஐயனே, நான் கள்ளையும் ஊனையும் கைவிடின் உயிர் வாழேன் ஆதலின், எனக்குப் பொருத்தமான அற வழியைக் காட்டு,” என்று வேண்டினான். சாதுவனும் இசைந்து, “கவிழ்ந்த கப்பலிலிருந்து எவரேனும் இத்தீவை அடைத்தால் அவரைக் கொல்லாது காத்தல் வேண்டும். தானே இறந்த உயிரின் ஊனைத்தவிர வேறு எதனையும் கொன்று தின்னலாகாது. இந்த அறத்தை நீங்கள் செய்யலாம்,” என்றான், நாகர் தலைவன், “இது என்னால் பின் பற்றத் தக்கது. இத்தீவுக்கு வந்த மக்களது செல்வம் என்னிடம் இருக்கிறது. அதனை நீ எடுத்துச் செல்,” என்று கூறிச் சாதுவனுக்குப் பெரும் செல்வத்தை அளித்தான். சாதுவன் அச்செல்வத்தை எடுத்துக்கொண்டு அப்போது அங்குவந்த கப்பலில் ஏறிக் கடல் கடந்து பூம்புகார் நகரை அடைந்தான். சிறந்த பத்தினியாகிய ஆதிரை தன் அகமும் முகமும் மலர அவனை வரவேற்றாள். சாதுவன் நல்லறம் செய்துகொண்டு பெரியோர் போற்ற அவளோடு இன்புற்று வாழ்ந்தான். முடிவுரை இத்தகைய சிறு கதைகள் பல பண்டைத் தமிழ் நூல்களில் பாங்குற அமைந்துள்ளன. கி. பி. 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டில் கொங்குவேள் என்பவர் உதயணன் வரலாற்றைப் பெருங்கதை என்னும் பெயரில் பாடியுள்ளார். `பெருங்கதை’ என்னும் பெயராலே, தமிழில் `சிறுகதை’ நூல்கள் பல இருந்திருத்தல் வேண்டும் என்பது பெறப்படுகிறதன்றோ? சங்க நூல்களை நன்கு ஆராயின், “சங்க காலத் தமிழில் சிறு கதைகள்” என்னும் அரிய நூல் ஒன்றை எழுதி முடிக்கலாம் என்பது திண்ணம். 14. கட்டடக் கலை சங்க காலத்தில் முருகன், கண்ணன், சிவன் முதலிய கடவுளர்க்கும் சிறு தெய்வங்களுக்கும் தமிழகத்தில் கோயில்கள் இருந்தன. “சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டம்” என்று சொல்லப்படுவதால், அக்காலக் கோவில்கள் அழியத்தக்க மண், செங்கல், சுண்ணாம்பு, களிமண் இவற்றாலான கட்டடங்களே யாகும். கடவுளர் இடத்திற்கும் மன்னன் வளமனைக்கும் கோவில் என்பதே பொதுப் பெயராக இருந்தது. எனவே, நாடாண்ட மன்னன் வாழ்விடமும் கோவிலைப் போலவே சிறப்புற்றிருந்ததை அறியலாம். கட்டட அமைப்பிலும் இரண்டும் சிறந்தனவாக இருந்திருக்கலாம். அக்காலக் கோவில் போன்ற கட்டடங்களைக் கட்டக் கட்டடக்கலை அறிஞர் இருந்தனர். அவர் நூலறி புலவர். (கட்டடக்கலை நூல் அறிந்த புலவர்) எனப்பட்டனர். அக்காலக் கட்டடங்கள், கட்டடக்கலை அறிஞரால் நாள் குறித்துத் திசைகளையும் அவற்றில் நிற்கும் தெய்வங்களையும் நோக்கி அமைக்கப்பட்டன என்பது, “ஒருதிறம் சாரா வரைநாள் அமையத்து நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத் தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து.” என்னும் நெடுநல்வாடை அடிகளால் அறியலாம். குறித்த காலத்தில் சிற்பநூல் அறிஞர் கயிறு கொண்டு திசைகளைக் குறித்து, அத்திசைகளுக்குரிய தெய்வங்களை வணங்கினர். பின்பு அரசனுக்கு ஏற்ற மனைகளையும் மண்டபங்களையும் அமைத்தனர்; அவற்றைச் சூழ மதிலை உயர்த்தினர். மதில் வாயில் மலையை நடுவில் பிளந்ததைப் போன்ற அகற்சியும் உயர்ச்சியும் உடையது. அவ்வாயிலுள் யானைப்படை கொடியோடு செல்ல வசதி இருந்தது. வாயிற்கதவுகள் இரும்பினால் இயன்றவை. வாயில் நிலையைத் தாங்கும் சுவர்மீது திருமகள் சிலையும் அதன் இரு பக்கங்களிலும் செங்கழு நீர்ப் பூக்களும் சுண்ணத்தால் அழகுற அமைந்திருந்தன. மழைநீர் கீழே இறங்கும்படி நிலாமுற்றத்தில் பொருத்தப் பட்டிருக்கும் குழை மீனின் திறந்தவாய் போல் இருந்தது. அரண்மனை அந்தப்புரச் சுவர்கள் உயர்ந்தவை; உயர்ந்த வேலைப்பாடு கொண்டவை; அவற்றின்மீது செஞ்சாந்து போன்று பூங்கொடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தூண்கள் கருமையும், திரட்சியும், பளபளப்பும் கொண்டு விளங்கின. சிலப்பதிகார காலத்தில் (கி. பி. 2-ஆம் நூற்றாண்டில்) அரசனது அரண்மனைச் சோதிடன், அறக்களத்து அந்தணர், கட்டடத் தொழில் நிபுணர் ஆகியோருடன் கட்டடத் தொழிலாளர் சென்று கண்ணகி என்னும் பத்தினிக்குக் கோவில் அமைத்தனர் என்ற செய்தி, “அறக்களத் தந்தணர் ஆசான் பெருங்கணி சிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள் பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டம்” என்னும் அடிகளால் தெரிகிறது. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலை வாழ்ந்த காலத்தில் சோழர் தலைநகரான காவிரிப்பூம் பட்டினத்தில் அரண்மனை இருந்தது. அவ்வரண்மனைத் தோட்டத்தில் வியத்தகு பொன் மண்டபம் ஒன்று காட்சியளித்தது. அது மகதநாட்டு மணி வேலைக்காரராலும் மகாராட்டிரத்தைச் சேர்ந்த பொற்கொல்லராலும் அவந்தி நாட்டுக் கொல்லராலும் யவன நாட்டுத் தச்சராலும் தமிழகத்துக் கட்டட வல்லுநராலும் அமைக்கப் பட்டது. மண்டபத் தூண்கள் பவளத்தால் இயன்றவை. போதிக்கைக் கட்டைகளில் பலவகை மணிகள் பதிக்கப் பெற்றன. மண்டபத்தின் ஒவ்வொரு கோணத்திலும் முத்துமாலைகள் தொடங்கவிடப் பெற்றிருந்தன. மண்டபத்தின் மேற்கூரை பொன் வேயப்பட்டது. அம் மண்டபத்தின் தரை சந்தனம் கொண்டு மெழுகப்பெற்றது. மணிமேகலை என்னும் காவியம் இவ்விவரங்களைக் கூறுகின்றது. இவ்விவரங்களால் நாம் அறியும் உண்மை யாது? பண்டைத் தமிழரசர் மகதம், மகாராட்டிரம், அவந்தி, யவனம் முதலிய அயல் நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதையும், அவ்வந்நாட்டில் ஒரு துறைத் தொழிலாளர் சிறந்திருந்தனர் என்பதையும், அச்சிறப்புடைத் தொழிலாளரைத் தமிழ் வேந்தர் கட்டட வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டனர் என்பதையும் இவ் விவரங்கள் தெரிவிக்கின்றன அல்லவா? எனவே, தமிழர் கட்டடக்கலையில் கொண்டிருந்த அறிவு பராட்டத்தக்கதன்றோ! கோவில்களும் அரண்மனைகளும் சுற்றுமதிலும் உயர்ந்து அகன்ற வாயில்களும், அவ்வாயில்கள்மீது உயர்ந்த மாடங்களும் பெற்றிருந்தன. வாயில்களில் கதவங்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றில் துருப்பிடியாமல் இருக்கச் செந்நிறம் பூசப்பட்டிருந்தது. மாடங்களில் அல்லது கோபுரங்களில் பல நிறங்கள் தீட்டப்பட்டிருந்தன. வணிகர்முதலிய செல்வப் பெருமக்கள் வாழ்ந்த வளமனைகளில் நிலா முற்றங்கள் இருந்தன. மாளிகைகளில் காற்றும் வெளிச்சமும் நன்கு வரத்தக்க முறையில் அகன்ற பெரிய சாளரங்கள் இருந்தன. நகரத் தெருக்கள் ஆற்றைப்போல அகலமாகவும் நீளமாகவும் அமைந்திருந்தன. நகரைச் சுற்றிலும் கோட்டை மதில் இருந்தது. அம்மதில்மீது பலவகை இயந்திரப் பொறிகள் அமைக்கப்பட்டிருந்தன. கோட்டை மதிலுக்கு அப்பால் ஆழ்ந்து அகன்ற அகழி இருந்தது. அகழியில் பலவகை முதலைகளும் மீன்களும் விடப்பட்டிருந்தன. இசையரங்கு, நாடக அரங்கு, நடன அரங்கு முதலியனவும் அக்காலத்தில் இருந்தன. அந்த அரங்குகளில் பலவகைக் காட்சிகளைக் காட்டும் திரைச்சீலைகள் தொங்க விடப் பெற்றிருந்தன. பொது மக்கள் இருந்து காட்சிகளைக் கவனிக்கத் தக்க நிலையில் அரங்கு சிறந்த முறையில் அமைந்திருந்தது. அரங்கின் அழகிய அமைப்பைச் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையால் அறியலாம். மதுரை நகரம் தாமரை மலர் வடிவத்தில் அமைந்தது என்று பரிபாடல் கூறுகின்றது. கோவிலை நடு நாயகமாக வைத்து அதைச் சுற்றியுள்ள தெருக்கள் ஏறத்தாழ வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. இன்றும் அந்த அமைப்பைக் கூர்ந்து நோக்கி உணரலாம். கழிநீர்ப்பாதை தரைக்கு அடியில் கட்டப் பெற்றிருந்தது. அப்பாதையில் யானை தாராளமாக நடந்து செல்லலாம் எனச் சிலப்பதிகாரம் செப்புகின்றது. கழி நீர் கோட்டையைச் சூழ இருந்த அகழியில் கலந்து வந்தது. மதுரைப் புறஞ்சேரியில் சமணர் பௌத்தர் அந்தணர் பள்ளிகள் இருந்தன. இவற்றுள் அந்தணர் பள்ளி மலையைப் பிளந்து உள்ளே குடைந்து அமைத்தாற் போன்ற கட்டட அமைப்பு உடையதாயிருந்தது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வுண்மைகள் சங்க காலத் தமிழர்களின் கட்டடக் கலையறிவை நன்கு அறிவிக்கின்றன அல்லவா? இடைக் காலத்தில் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகேந்திர வர்மன் என்ற பல்லவ அரசன், “அழிந்துவிடக் கூடிய மண், மரம், செங்கல், உலோகம் இவற்றால் கோவிலை அமைக்காமல், என்றுயீம அழியாத நிலையில் கடவுளர்க்குக் கற்கோவில்களை அமைத்தான்” என்று அவனது மண்டகப்பட்டுக் கல் வெட்டுக் கூறுகின்றது. இதனை நோக்க, ச;ஙக காலத்திற்குப் பிற்பட்ட பல்லவர் காலத்திலும் மண் செங்கல் முதலியவற்றாலான கட்டடங்களே மிகப் பலவாக இருந்தன என்பது தெரிகிறது. அக் காலத்தில் பாடல் பெற்ற கோவில்கள் ஏறத்தாழ 500 என்று சொல்லலாம். அவையனைத்தும் செங்கல் கட்டடங்களே. அவற்றுள் சில உயர்ந்த கோபுரங்களைக் கொண்டன. கோபுரங்களில் புராண இதிகாச வரலாறுகளைக் குறிக்கும் சுதை உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சில கோவில்களில் மேல் மாடங்கள் அமைந்திருந்தன. உயர்ந்த மேடைகள்மீது (செய் குன்றுகள்மீது) சில கோவில்கள் கட்டப்பட்டன. அவை பெருங் கோவில்கள் என்று பெயர் பெற்றன. சில கோவில்களில் கருவறை, நடு மண்டபம், முன் மண்டபம் ஆகிய மூன்றும் சேர்ந்த பகுதி உருளைகள் பூட்டப் பெற்ற தேர் போன்ற அமைப்புடன் கட்டப்பெற்றிருந்தன. திருச்சாய்க்காடு, மேலைக் கடம்பூர், திருவதிகை முதலிய ஊர்க் கோவில்கள் இத்தகைய அமைப் புடையவை. திருவதிகைக் கோவில் கருவறையின் மேல் தேர் போன்ற விமான அமைப்பு வியத்தகு முறையில் அமைந்துள்ளது. திருப்பெண்ணாகடம் சிவன் கோவில் விமானம் தூங்கும் யானை வடிவத்தில் அமைந்துள்ளது. கோபுரத்திற்கு நேர் எதிரில் முன் மண்டபத்தில் நுழைய மிகக் குறுகிய வழியும், ஆனால் பக்கவாட்டில் அகன்ற வாயிலும் அமைந்துள்ள கோவில்கள் சில. இத்தகைய கோவில்கள் கோச்செங்கட் சோழனால் கட்டப் பெற்றவை. இவையும் இவை போன்ற பெருங் கோவில்களும் வண்டிக் கூரைபோல் அமைந்த மேல் அமைப்புக்களை உடையவை. பல்லவர்கள் மலைச் சரிவுகளைக் குடைந்து சிறிய கோவில்களை அமைத்தனர். அவர்கள் அமைத்த குடை வரைக் கோவில் நான்கு அல்லது ஐந்து தூண்களைக் கொண்ட மண்டபம். மண்டபச் சுவரில் மூன்று அல்லது ஐந்து புரைகள் வெட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு புரையிலும் கடவுளர் சிலை தனியே வைக்கப்பட்டிருக்கும். பாறையிலேயே வாயிற் காவலர் உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். மாமல்ல புரத்தில் உள்ள ஒவ்வொரு இரதமும் ஒற்றைக் கற்கோவில் ஆகும். ஒரே கல்லைக் கோவிலாக அமைத்த பெருமை பல்லவர்க்கே உரியது. கல்லைக் கோவிலாக அமைப்பது எளிதான செயலா? ஒவ்வொரு வகைக் கோவிலும் ஒரு வகை விமான அமைப்புடையது. இக் கற்கோயில்கள் பல்லவர் காலக் கட்டடச் சிறப்பை அறியச் செய்வனவாகும். இவை பழைய செங்கற் கோவில்களைப் பார்த்து அமைக்கப் பெற்றவை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. பாறைகளைக் கற்களாக உடைத்து, அக்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப் பெற்ற கோவில்களும் பல்லவர் காலத்தில் உண்டு. இம் முறையில் அமைந்த சிறிய கோவிலை மாமல்ல புரத்துக் கடற் கரையில் காணலாம். பெரிய கோவில்களைக் காஞ்சியிற் காணலாம். காஞ்சி-கயிலாச நாதர் கோவில், கைகுந்தப் பெருமாள் கோவில், உலகளந்த பெருமாள் கோவில் முதலியன இம் முறையிற் கட்டப் பெற்ற பெருங் கோவில்களாகும். இவற்றின் விமானங்கள் அடியிற் பருத்து மேலே செல்லச் செல்லச் சிறுத்துச் செல்லும் பல சதுரங்களைக் கொண்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் முழு வளர்ச்சியை, பல்லவர்க்குப் பிறகு வந்த சோழர்கள் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலிலும் கங்கைகொண்ட சோழேச்சரத்திலும் காணலாம். பல்லவர் காலக் கோவில் தூண்கள் பலவகைப் பட்டவை. நாற்புறமும் ஒரே அளவுடைய சதுரத் தூண்கள் ஒரு வகையின; அடியிலும் மேலும் பருத்து இடையில் சிறிதளவு சிறுத்த தூண்கள் மற்றொரு வகையின; நிற்கின்ற சிங்க வடிவில் அமைந்த தூண்கள் பிறிதொரு வகையின; உட்கார்ந்துள்ள சிங்க வடிவில் அமைந்த தூண்கள் ஒரு வகையின. சதுரத் தூண்களும் நீள் சதுர அமைப்புடைய தூண்களும் சிம்ம விஷ்ணு, மகேந்திரவர்மன் காலத்தவை, உட்கார்ந்துள்ள சிங்கத் தூண்கள் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தவை என்று ஆராய்ச்சியாளர் அறைவர். சதுரத் தூண்களின் கீழ்ச் சதுரத்திலும் மேல் சதுரத்திலும் தாமரை மலர்களும் வட்டங்களும் செதுக்கப்பட்டிருக்கும். தூண்கள் பொருத்தப் பெற்ற மண்டப அல்லது வாயில் அடிப்பகுதியில் இரட்டைத் திருவாசி காணப்படும். அதனில் வளைவுக் கோடுகள் மகர மீன்கள் முதலியன செதுக்கப்பட்ட அமைப்புப் பார்க்கத்தக்கது. பல்லவர் காலக் கோவில்கள் சிறந்த முறையில் ஆட்சி செய்யப் பெற்றன என்பதை நோக்கவும், பல கோவில்களில் ஆடல் அழகிகளும் பாடல் அழகிகளும் பலவகைப் பணிமக்களும் இருந்தனர் என்பதை நோக்கவும், அவை அளவில் பெரியனவாகவும் பலவகை மண்டபங்களைப் பெற்றிருந்தன வாகவும் இருந்தன என்பது பொருத்தமாகும். எனவே, பல்லவர் காலத்தில் சில கோவில்களேனும் அளவில் பெரியனவாகவும் மண்டபங்கள் மாளிகைகள் போன்ற கட்டடங்களை உடையனவாகவும் இருந்தன என்று சொல்லலாம். இவற்றை நோக்க, சங்ககாலக் கட்டடக் கலை பல்லவர் காலத்தில் வளர்ச்சியுற்ற நிலைமையை நன்கு உணரலாம். சோழர் காலத்தில் என்றும் உள்ள இறைவனுக்கு என்றும் உள்ள கோவிலாக அமைக்க வேண்டுமென்று பல்லவர்க்குப்பின் வந்த சோழப் பேரரசர் விரும்பினர்; அவ்விருப்பப்படி பாடல் பெற்ற கோவில்களைக் கற்கோவில்களாக மாற்ற முனைந்தனர். அம்முயற்சி நானூறு வருட காலம் நடை பெற்றது. அம்முயற் சியில் பேரரசர், சிற்றரசர், அரசாங்க அலுவலர், அரசமா தேவியர், குடிமக்கள் ஆகிய அனைவரும் ஈடுபட்டிருந்தனர் என்பதைக் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. செங்கல்லால் கட்டப்பட்டிருந்த ஒவ்வொரு கோவில் பகுதியும் கருங்கல்லால் கட்டப்படலாயிற்று. பல்லவர் ஆட்சியில் இருந்தததைவிடச் சோழர் ஆட்சியில் கோவில் நிகழ்ச்சிகள் பெருகின. மாதந்தோறும் ஏதேனும் ஒரு விழா நடைபெற்றது. கோவிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவொற்றியூர்ச் சிவன் கோவில் போன்ற பெரிய கோவில்களில் பல மண்டபங்கள் புதியவனவாய்க் கட்டப் பெற்றன; கோவில்களை அடுத்து மண்டபங்கள் அமைப்புண்டன. கல்லூரிக் கட்டடங்களும் கோவிலுக்குள்ளேயே அமைந்தன. தில்லைக் கூத்தப் பெருமான் கோவில், காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவில் போன்ற பெரிய கோவில்களில் திருச்சுற்று மாளிகைகளும் கட்டப் பெற்றன. அவற்றில் சரசுவதி பண்டாரம் என்ற நூல் நிலையமும் வகுப்புகளும் நடைபெற்றன. திருமுறைகளைப் பாதுகாக்கவும் கற்பிக்கவும் ஓதவும் மண்டபங்கள் கட்டப்பட்டன; நடன மண்டபம், நாடக மண்டபம், இலக்கண மண்டபம் என்பனவும் அமைந்திருந்தன. புராணங்களைப் படித்து விளக்குவதற்காக மேடைகளும் மாளிகைகளும் கோவிலுள் அமைக்கப்பட்டன. திருவிழா நிகழ்ச்சிகளை மக்கள் கண்டு களிக்கவும் சமயச் சொற்பொழிவுகளை இருந்து கேட்கவும் தக்க முறையில் அகன்ற திருச்சுற்றுக்கள் இருந்தன. தஞ்சைப் பெரிய கோவிலையும் கங்கைகொண்ட சோழேச்சரத்தையும் நேரில் பார்ப்பவர் இவ்வுண்மைகளை உணர்வர். சோழர்கள் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலும் கங்கைகொண்ட சோழேச்சரமும் தாராசுரத்துச் சிவன் கோவிலும் திரிபுவன வீரேசுவரமும் சோழர் காலக் கட்டடக் கலைச் சிறப்பை நன்கு அறிவிப்பன ஆகும். உயர்ந்து அகன்று பகைவரைத் தாக்கும் நிலையில் அமைந்துள்ள மதில்கள் தஞ்சைப் பெரிய கோவிலிலும் க்ங்கை கொண்ட சோழேச் சரத்திலும் காணலாம். திருச் சுற்றுத் தரையிவிட உயர்த்திக் கட்டப் பெற்ற முன் மண்டபம், நடு மண்டபம், கருவறை இவற்றின் சுவர்கள், பதினான்கடி உயரமுள்ள வாயிற் காவலர் உருவங்கள், இருநூறு அடிக்கு மேற்பட்டு வானளாவ உயர்ந்து விளங்கும் விமானம், விமானத்திலுள்ள உருவச் சிற்பங்கள், விமானத்தை அடுத்துள்ள மாளிகை ஆகிய அனைத்தும் சோழர்காலக் கட்டடத் திறனை நன்கு விளக்குவனவாகும். தாராசுரத்துச் சிவன் கோவில் கட்டடக் கலைக்குப் பெயர் போனது. உருளைகள் பூட்டப் பெற்ற அமைப்புடைய கோவிலின் நடுப்பகுதி அற்புத வேலைப் பாடமைந்த தூண்களாலும் மண்டபங்களாலும் உருவச் சிற்பங்களாலும் பொலிவுற்று விளங்குகின்றது. தில்லை போன்ற பெருங் கோவில்களில் அம்மனுக்கென்று பெரிய தனிக் கோவில்கள் பெருங் கோவிலுள்ள அமைப்புண்டன. திருச்சுற்றின் அடிப் பகுதிக் கற்சுவரில் பலவகை நடன உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கங்கை கொண்ட சோழேச்சரத்தில் அமைந்துள்ள சிங்க முகக் கிணறு சோழர்காலக் கட்டடத்திறனைக் காட்டுவது. சிதம்பரம், மதுரை, குற்றாலம் முதலிய இடங்களில் சில கோவிற் பகுதிகள் பொன், வெள்ளி, செம்பு இவற்றாலாகிய கூரைகளையுடையன. `சிவாய நம’ என்னும் ஐந்து எழுத்துக்கள் எழுதப் பெற்ற பொன் தகடுகளைக் கொண்டு அமைந்தது தில்லையிலுள்ள பொன்னம்பலக் கூரை. மதுரையில் வெள்ளியம்பலம் அமைந்திருக்கிறது. பிற்காலத்தில் விசயநகர ஆட்சிக் காலத்தில் விமானங்கள் சிறுத்துக் கோபுரங்கள் உயர்த்திக் கட்டப்பட்டன. இந்த முயற்சி சோழரது இறுதிக் காலத்தில் தொடங்கப் பெற்றது எனினும், விசயநகர வேந்தர் காலத்தில் வளம் பெற்றது. சோழநாட்டிலுள்ள கோவிற் கோபுரங்களும், திருவண்ணாமலைக் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், இராமேசுவரம் கோவில் முதலிய வற்றின் கோபுரங்களும் அவற்றில் உள்ள பல கதைகளை விளக்கும் உருவச் சிற்பங்களும் விசயநகர வேந்தர் காலத்தவை. எழுநிலை மாடம், ஒன்பது நிலை மாடம், பதினொரு நிலை மாடங்களையுடைய கோபுரங்கள் தமிழர் கட்டடத் திறமைக்குத் தக்க சான்றாகும். சோழர் காலத்திலேயே தில்லை போன்ற பெரிய கோவில்களில் ஆயிரக்கால் மண்டபங்கள் அமைந்திருந்தன. பிற்காலத்தில் அவை பெருகின. மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள ஆயிரக்கால் மண்டபம் நாயக்க மன்னர் காலத்தது. குதிரை வீரர்களின் உருவம் செதுக்கப்பட்ட மிக உயர்ந்த கற்றூண்கள் நாயக்கர் காலத்தவை. அத்தூண்களை நிறுத்தி மிகவும் உயர்த்திக் கட்டப் பெற்றுள்ள கோவில் திருச் சுற்றுக்கள் நாயக்கர் காலத்தவை. திருமலை நாயக்கர் மகால், இராமேசுவரம் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், புது மண்டபம் என்பன நாயக்கர் காலத்துக் கட்டடக் கலை வளர்ச்சியை நன்கு உணர்த்துவனவாகும். திருச்சி மலைமீது கட்டப்பெற்றுள்ள தாயுமானவர் கோவில் சிறந்த வேலைப்பாடு கொண்டது. மலையைக் குடைந்து, மலைமீது கற்களைக் கொண்டுசென்று அரும் பாடுபட்டுக் கட்டப்பெற்ற அக்கோவில், தமிழரது கட்டடத் திறமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், குடைவரைக் கோவிலும் முன்புறம் கட்டப்பெற்ற கோயிலமைப்பும் பொருந்தியதாகும். இங்ஙனம் மலைமீதும் அடிவாரத்திலும் கட்டப்பெற்ற கோவில்கள் தமிழர்தம் கட்டடக் கலையறிவை நன்கு தெரிவிப்பனவாகும், தஞ்சை, திருவாரூர், பழையாறை, கங்கை கொண்ட சோழபுரம், மதுரை, காஞ்சி என்னும் இடங்களில் இருந்த சோழ பாண்டிய பல்லவ அரண்மனைகள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. ஆதலால் இடைக்கால அரண்மனைகள் எவ்வாறு கட்டப்பெற்றிருந்தன என்பதை நாம் அறிய முடியவில்லை. மிகவும் பிற்பட்ட காலத்தில் கட்டப்பெற்ற மதுரை திருமலை நாயக்கர் மகாலும், தஞ்சாவூர் அரண் மனையுமே பிற்காலக் கட்டடக் கலைச் சிறப்பை நமக்கு அறிவிக்கின்றன. தஞ்சை அரண்மனையின் மிக உயர்ந்த மதில், எழுநிலைமாடம், சங்கீத மகால், சரசுவதி மகால், ஆயுதசாலை, கொலு மண்டபம், இருட்டு மகால் முதலியன மகாராட்டிரர் கட்டடக் கலையறிவை நமக்கு உணர்த்துகின்றன. அகன்றும் உயர்ந்தும் விளங்கும் திருமலை நாயக்கர் மகாலிலுள்ள தூண்களும் சுவர்களும் மேல் தள அமைப்பும் நாயக்கர்காலக் கட்டடத் திறனை நமக்கு நன்முறையில் தெரிவிக்கின்றன. சோழபாண்டியர் அரண்மனைகளும் இருந்திருக்குமாயின், அவை நமக்கு உணர்த்தும் அரிய உண்மைகள் பலவாக இருக்கலாம். 15. பண்டை இந்தியப் பண்பாடு* I ரிக்வேதச் சுலோகங்களைச் செய்தவர்கள் பஞ்சாபில் சிந்துப்பிரதேச மக்களுடனும் ஈரானியருடனும் ஆப்கானி யருடனும் இருந்து வந்தனர். மத்திய ஆசியாவில் இருந்த ஆரியர்பால் குழப்பம் ஏற்படும் பொழுதெல்லாம் அவர்களுட் சிலர் அவ்விடம் விட்டுப் பல இடங்களுக்குப் போதல் இயல்பாக இருந்தது. அதனை, கிறிஸ்தவ சகாப்தத் தொடக்கத்தில் தெற்கு நோக்கி வந்த பாக்டிரியா கிரேக்கர், சாகர், பஹ்லவர், அப்ஹிரர், குஷாணர் முதலியோரைக் கொண்டு நன்குணரலாம். ரிக்வேதச் சுலோகங்களுட் பல, ஆரியர்க்கும் தாசர்க்கும் உரிமை கருதி உண்டான பேராட்டங்களைக் குறிப்பனவாகவே உள்ளன. அச்சுலோகங்கள் ஆரியர்-தாசர் என்னும் மாறான இருவரைப்பற்றியே பேசுகின்றன. இவ்விரு வகுப்பாரும் இரு வேறுபட்ட கூட்டத்தினராகவும் மதத்தினராகவும் இருந்தமையே போராட்டங்கட்கும் பகைமைக்கும் காரணமாகும். ஆரியர் கறுப்பர்க்கு இட்ட பெயரே `தாசர்’ என்பது. ஆயினும், அப்பெயர் நீண்டகாலம் இருந்திலது. அப் பெயர் நாளடைவில் நீக்கப்பெற்று, அவ்விடத்தில் `சூத்ரர்’ என்னும் புதிய பெயர் குடிகொண்டது. `ஆரியர்’ என்னும் சொல், மண்டையோட்டுக் கலையைப் (தாசரினும் பேறுபட்ட மனித இனம்) பற்றியது என்பது நன்கு கவனித்தற்கு உரியது. ஆரியர், தம்மை மனுவைப் பின்பற்றுபவர் எனக் கூறிக்கொண்டனர். `ஆரியர்’ என்பது தனிப்பட்ட ஒரு மனித இனத்தவரையே குறிக்கும் சொல். இந்திய எல்லைப்புற மாகாணம் ஒன்று `ஆரியனி’ எனப் பெயர்பெற்று இருந்ததாகவும், அதில் `ஆரியோய்-த்ரங்கி’ என்னும் கிரேக்க ஆசிரியர் குறித்திருப்பதாலும் இவ்வுண்மையை நன்குணரலாம். `ஆரியனி’ என்பது `ஆரியோய்’ என்பதிலிருந்து இடப்பட்டதாகலாம் என்பது தெளிவு. கி. பி. 9-ஆம் நூற்றாண்டு வரையில் `ஆரியர்’ என்னும் வகுப்பார் இருந்ததாக இராஜபுதன சாசனங்களால் அறிகின்றோம். ஆரியர் தம்மினும் வேறுபட்ட மக்களைக் குறிக்க வழங்கிய `தாசர்’ என்னும் சொல்லே ரிக்வேதத்தில் நிரம்பக் காணப்படுகிறது. `சூத்ரர்’ என்பது ஓர் இடத்திலேயே காணப்படுகிறது. ஆனால், இவ்விரண்டாம் சொல் அதர்வ வேதத்தில் மிகுந்த அளவு இடம் பெற்றுள்ளது. ஆரியர் அல்லது தாசர் என்பது போலச் `சூத்திரர்’ என்பதும் தனிப்பட்ட ஒரு வகுப்பாரையே (மனி இனத்தையே) குறிப்பிடுவது என்பது அறியத்தகும். மாசிடோனியச் சரித்திராசிரியர் `சூத்திரர்’ என்பவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். தாலமியும் குறிப்பிட்டுள்ளார். வடமொழி இலக்கணியான பதஞ்சலியும் `சூத்திரர்-தனிப்பட்ட வகுப்பார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இச்சொல், பிற்காலத்தில் அந்நியரைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. பதஞ்சலி, பல சூத்திரர் ஜாதிகளையும் வகுப்புக்களையும் குறிப்பிட்டதிலிருந்து இதனை அறியலாம். சாகரும் யவனரும் ஆரிய வேள்விகளைச் செய்வதோடு அமையாது. ஆரிய்h உண்கலத்து உணவையும் வெறுப்பின்றி உண்டுவந்தனர் என்றும் பதஞ்சலி பகர்ந்துளர். எனினும், அவர்களிடை வர்ணாஸ்ரம தர்மம் இல்லாததால், அவர்கள் `சூத்திரர்’ எனப்பட்டனர். ஆரியர் கலையை அறை குறையாகப் பின்பற்றினவரும் `சூத்திரர்’ எனவே ஆரியரால் சுட்டப் பட்டுள்ளனர். II ஆரியர் முதன் முதலில் இந்தியா வந்தபொழுது அவர்தம் பண்பாடு, (ஊரடவரசந) ரிக்வேதப்படி யாதாக இருந்ததென்பதைக் காண்போம்: சாணக்கியரும் தர்ம சாத்திரங்களும் விரித்துக் கூறும் வர்ணாஸ்ரம தர்மம் எந்த அளவு ரிக்வேதகால ஆரியரிடம் இருந்தது என்பதைக் காணல் வேண்டும். ரிக்வேதத்தில் உள்ள `புருஷ சூத்திரம்’ நான்கு வருணங்களையும் குறிக்கிறது. ஆனால் அக்காலத்தில் `சூத்திரர்’ என்னுஞ் சொல் ஆரியர்க்குள்ளேயே ஒரு வகுப்பாரைக் குறித்ததன்று; ஆரியர் அல்லாத மக்கள் அனைவரையுமே குறித்தது என்பது அறியத் தக்கது. `பிரம்மச்சரியம், க்ருஹபதி, முனி’ என்னும் ரிக் வேதச் சொற்கள் ஆசிரமங்களைக் குறிப்பன. மூன்றாம் சொல் இக்கால `வானப்பிரஸ்தம்’ குறிப்பதாகலாம். இவையன்றி, `யதி’ என்னும் பெயருடன் சில குறிப்புக்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இந்திரனால் ஏற்கப்படாதவை எனவே, அவை ஆரியர் பண்பாட்டுக்கு அப்பாற்பட்டன என்பது தெரிகிறது. அச்சொல் (யதி) ஆரியருடன் இந்தியாவில் வாழ்ந்து வந்த அசுரரது ஒரு வகுப்பைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ரிக் வேத காலத்தில் வருணங்களைப்பற்றிய கடுமையான கட்டுப்பாடு இல்லை என்பது மனத்தில் நன்கு இருத்தத் தக்கது. க்ஷத்ரியரும் வேதச் சுலோகங்கள் பாடலாம்-புரோகிதம் செய்யலாம் என்னும் வசதி இருந்தது. தம்மை `இராஜன்’ என்றும் `ரிஷி’ என்றும் கூறிக் கொண்ட விசுவாமித்திரர் சுலோகங்களே இதற்குச் சான்றாகும். ரிக்வேத காலத்திலும் அதன் பிற்பட்ட காலத்தும் ஆசிரமம் மிக்க குழப்பத்திலேயே இருந்தது. நான்கு ஆசிரமங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக ஒருவன் பின் பற்ற வேண்டுமா, வேண்டாவா, என்னும் முடிவுக்குத் தர்ம சாத்திரங்களும் வரக்கூடவில்லை. இந்தியாவில் ஆரியராற்றான் வர்ணாசிரம தர்மம் நுழைக்கப்பட்டது என்னும் ஒன்றே ரிக்வேதத்தால் நாம் உணர்வது. ரிக் வேதத்தை ஒருமுறை படிப்பின், சுயநலங்கொண்ட புரோகி வகுப்பாரது ஆதிக்கம் அதிகமாக இருந்தது என்பதை நன்கு அறியலாம் என்பது உண்மையே. எனினும், ஒரு கடவுள் உண்மையை அப்பழைய காலத்திலேயே ரிக்வேத ஆரியர் உணர்ந்திருந்தனர் என்பது சில சூத்திரங்களால் அறியக்கிடத்தல் இன்பம் தருவதாகும். அவர்கள் இறைவனை `அப்பன்’, உற்றான், உறவினன், அண்ணன்’ முதலிய பெயர்களால் அழைத்தனர் என்பது சுலோகங்களால் தெரிகிறது. இந்த ஒரு கடவுள் உண்மையே, பல்வேறு மதக்கோட்பாடுகள் உடையவரையும் ஒன்று சேர்த்து இன்றை இந்து மதத்தின் அடிப்படையாக இலங்குகின்றது. வருணன் சிறந்த கடவுளாகப் பூசிக்கப்பட்டான்,. வசிட்டர் முதலியோர் தங்கள் குறைகளை வெளியிட்டுப் பூசை செய்த உண்மை சில சுலோகங்களால் வெளியாகின்றது. `பரம்பொருளும் ஆன்மாவும் இரண்டு பறவைகள். அவை, இவ்வுலகம் என்னும் மரத்தின் மீது அமர்ந்துள்; ஒன்று இனிய பழத்தைத் தின்று துன்புறுகின்றது. மற்றொன்று அதனைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதனை மனிதன் காண்கையில் அவன் வருத்தம் மறைகின்றது,’ என்னும் பொருள்படும் சுலோகம் ரிக்வேதத்தில் உள்ளது. III ஆரியர் இந்தியாவில் தங்கியதால், ஆரியமதம் பழைய இந்திய மதத்துடன் கலந்து, இன்றைய `இந்துமதம்’ ஆக மாறிவிட்டது; இந்தியாவின் மூன்றில் இரண்டு பாகம ஆரியமொழிகள் பேசப்படும் நாடாக மாறிவிட்டது. தென் இந்தியாவில் தான் ஆரியர்க்கு முற்பட்ட திராவிடம் செல்வாக்குப் பெற்று உயிருடன் இருக்கின்றது. தென் இந்தியாவையும் தன் அடிப்படுத்த ஆரியப் பண்பாடு முயன்றதுண்டு. அசோலகன் திராவிடம் அல்லாத பாலி மொழியில் பௌத்த தருமத்தைச் சித்தல் துர்க்கம் (மைசூர்), கர்நூல், என்னும் இடங்களில் பொறித்தனன் என்பது, ஆரியமொழி அந்த இரண்டிடங்களின் அளவு தெள்கே பரவி இருந்ததை உணர்த்துகிறதன்றோ? அசோகனுக்குப் பின் கி. மு. 200 முதல் கி. பி. 450 வரை ஒருவகைப் பிராக்ருத மொழி இந்தியாவின் பெரும்பகுதியில் ஆட்சி மொழியாக இருந்ததென்பது தெரிகிறது. அது மத சம்பந்தத்துக்கும் மத நூல்கட்கும் பயன்பட்டது. இம்மொழியில் பொறிக்கப்பட்ட சாஸனங்கள் கன்னட நாட்டில் மட்டுமின்றித் தமிழகத்தின் நடுவிடத்திலும் காணப்படுகின்றன. அவை எல்லாச் சாதித் தமிழ் மக்களாலும் படிக்கப்பட்டிராவிடின், அவ்வந்நிய மொழியில் செதுக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டிராது.ஙீ பிரிட்டிஷ் இராச்சியம் பரவத் தொடங்கியதும் இந்தியாவில் ஆங்கிலக் கலையுணர்வு உயர்வு பெறலாயிற்று என்பதை எவரே அறியாதவர்? மதுசூதன டட், டோரு டட், சரோஜினி அம்மை போன்ற இந்தியர், தம் தாய்மொழியில் பாக்களைப் பாடாது ஆங்கிலமொழியில் யாத்தலே பெருமை என்று கருதி யாத்தனர் அல்லரோ? அதனால் அவர், நிலைத்த புகழை அடைந்தனர் அல்லரோ? இந்நிலையில், அப்பழைய காலத்தே ஆரியர் அல்லாதமக்கள் ஆரியமொழியாகிய சம்ஸ்கிருத்திலேயே தங்கள் கருத்தை வெளியிடத்தக்க மொழியாகப் பயன்படுத்தினர் என்பதில் வியப்பென்னை?* ஆரியர் நன்மையைத் தரும் உயர்ந்த கடவுளரை வணங்கிய பொழுது மங்கோலியரைச் சேர்ந்த `சால்டியர்’ தேவதைகளை வழிபட்டு வந்தனர்; மாந்த்ரீகம் வசியம் இவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர். இவை பற்றிய சுலோகம் ஒன்று அதர்வ வேதத்தில் உள்ளது. இது பாலகங்காதர திலகரால் சுட்டப்பட்டது. “தைமதா”, அலிகி, விலிகி, உருகுலா என்னும் நான்கு தெய்வங்களின் பெயர்கள் அச் சுலோகத்தில் காணப்படுகின்றன. `தைமதா-இது சால்டியரது `தைமத்’ என்னும் கடவுளாகும். `உருகுலா’-இது அக்கேடிய மொழியில் காணப்படும் சொல். விலிகி-இஃது அசிரியரது கடவுளான `பிலிஜி’ என்பதாகலாம் என்பர் திலகர். அநாரிய மூலத்தையுடைய சுலோகங்கள் பல ரிக் வேதத்திலும் உள்ளன. அவற்றுள் காணப்படும் சொற்களுள் ஒன்று `அப்ஸூ’ (ஹயீளர) என்பது. அது சால்டியச் சொல்லான `அப்சு’ (ஹயீணர) என்பது என்பர் திலகர். மற்றொரு சொல் `யஹ்வ’ என்பது. இதுவும் சால்டியச் சொல்லான `யஹ்வே’ என்னலாம். இவை அனைத்திலும் சிறந்த அநாரியச் சொல் `அசுர’ என்பது. ரிக் வேதத்தில் ஆரியர் கடவுளரான இந்திரன் `அசுரன்’ எனவும், மித்ரவருணன் `அசுரன்’ எனவும் படுகின்றனர். `அசுர’ என்பது ரிக் வேதத்தில் பரம் பொருளையும், மனிதருள் ஒரு பிரிவினரையும் குறித்ததெனல் உண்மை. `விரிகத்வராஸ், பிப்ரு’ என்னும் அசுர அரசரும் குறிப்பிடப்பட்டு உள்ளனர். அசுரர், ஒரு காலத்தில் அசிரியராக இருந்திருக்கலாம். ரிக் வேதக் கடவுளர் அசுர-ஹன் 9அசுரரைக் கொன்றவர்) எனப்படுகின்றனர். `nசுரரைக் கொன்றவன்’ என்னும் பொருளில் வரும் சுலோகங்கள் ஆரியராலும், உயர் பொருளில் வரும் சுலோகங்கள் ஆரிய மதத்தைத் தழுவிய அசிரியராலும் செய்யப் பெற்றன வாதல் வேண்டும். ஆரியமதம் தழுவிய அசுரர் இன்றுள்ள இந்து மக்கட்டொகுதியுள் கலந்து கரைந்து விட்டனர். தென் பீஹாரில் இன்றும் தம்மை `அசுரர்’ என்று கூறும் ஒரு வகுப்பார் இருந்து வருகின்றனர் என்பது இங்கு அறியத்தக்கது. அசுரர் இந்தியக் கலையறிவில் பங்கு கொண்டவர்-பண்பாட்டை வளர்த்தவர் என்பதில் ஐயமில்லை. இதனை விளக்க `அசுர மணம்’ ஆரிய மணத்துள் இடம் பெற்றுள்ளது ஒன்றே போதுமன்றோ? ஆபஸ்தம்பர் தமது தர்ம சாத்திரத்துள் இம் மணத்தை விளக்கியுள்ளார். பெண்ணுக்கு விலைதந்து அவளைப் பெறுதலே இம்மணத்தின் சிறப்பு. இம்முறை அசிரியரிடமும் பாபிலோனியரிடமும் இருந்தமை அறியத்தக்கது. அசிரியர் பெண்ணிடம் விலை தருவர்; பாபிலோனியர் பெண்ணின் தந்தையிடம் விலை தருவர். அதர்வ வேதம் மாந்தீரிகம், வசியம் பற்றிய-ஆரியர் மனத்துக்கு மாறான-சுலோகங்களைக் கொண்டது. இதனாற்றான் இது, ஏனைய மூன்று வேதங்களின் சிறப்பைப் பெறவில்லை. இந்நூலுள் உள்ளவை அநாரியர் பண்பாட்டை உணர்த்துவன. எனினும் இதனால், இப் பண்பாடுடைய மக்கள், வட மொழியையே தங்கட்கு உகந்த மொழியாகக் கொண்டிருந்தனர் என்பது நன்கு தெரிகிறது. `அர்வ வேதம்’ என்னும் சொல்லே சூத்திரங்கள் காலத்துக்கு (கி. மு. 300-க்கு) முன் கேட்கப்படவில்லை. ரிக் வேதக் கடவுளராய இந்திரன், வருணன் முதலியோர் அதர்வ வேதத்தில், தெய்வத் தன்மையற்றவராய்ப் பேய், பிசாசுகளைக் கொல்பவராகவே கூறப்பட்டுள்ளனர் என்பது கவனித்தற்கு உரியது. ஆரியர் பண்பாடும் சால்டியர் பண்பாடும் ஒன்றுபட்டதன் பயன் இதுவாகும். பல சுலோகங்கள் உயர்ந்த கருத்துக்களை உடையன; ஆயின, தம்முள் மாந்திரீகம் முதலியவற்றையும் கொண்டுள்ளன. IV வ்ரத்யரும் வ்ரிஷலரும் ஆரியர் பண்பாடு ஆரியரல்லாத வ்ரத்யர் (ஏசயவலயள), வ்ரிஷலர் (ஏசiளாயடயள) என்பவர் மீது சுமத்தப்பட்டதையும் நாம் அறிதல் நல்லது. முதற்கண் இவ்விருவரும் யாவர் என்பதைக் காண்போம்: வ்ரத்யரைப் பற்றிப் பல செய்திகள் பஞ்சமிம்ஸப்ராமணத்திலும் அதர்வ வேதத்திலும் நிரம்பக் கூறப்பட்டுள்ளன. அவருள் நால் வகுப்பார் இருந்தனர். அவ்வகுப்புக்களுள் முதல் மூன்றே முக்கியமானவை. அவை ஜேஷ்டர் (உயர்ந்தோர்). ஹீனர் (இழிந்தோர்), கர-கிர்ஸ் (விஷத்தை விழுங்குபவர்) என்னும் வகுப்புகளாம். இவர் தம் இறைவன் ஏக-வ்ரத்யன் எனப்பட்டான். அவ் விறைவற்கு மனைவி புரோகிதன் (பூசாரி), தலைப்பாகை என்னும் மூன்றுண்டு. இவை மூன்றும் எந்த ஆரியக் கடவுளுக்கும் இல்லை என்பது அறியத்தக்கது. மேலும் வ்ரத்யன், மனைவி, பூசாரி இம் மூவரும் புருஷ மேதத்துக்குத் தக்கவர் (பலியிடத் தக்கவர்) என்று யசுர்வேதம் கூறுகிறது. எனவே, வ்ரத்யரும் அவர்தம் தெய்வமும் ஆரியர் இனத்தவர் அல்லர் என்பது தேற்றமன்றோ? அதர்வ வேதம் `பவ, சர்வ, பசுபதி, உக்ர, ருத்ர மஹாதேவ, ஈசான்’ என்பவை ஏக-வ்ரத்யன்’ என்னும் தெய்வம் பழைய சிவனே ஆகும். ஆரியர் பண்பாட்டில் தோய்ந்த ஒருவனே பிற் காலத்தில் இந்தச் சில மூர்த்தத்தை இங்ஙனம் பல ரூபங்களாகக் கூறியிருத்தல் வேண்டும். வ்ரத்யரும் அவர்தம் வழிபாட்டு முறையும் மொஹெஞ்சொ-தரோவில் அகப்பட்ட 12-ஆம் எண்ணுள்ள படத்தைப் பார்த்தால், உண்மை விளங்கும். அதனில், நூல்களில் கூறப்படும் ஏக-வ்ரத்யன் என்னும் சரித்திரக் சான்று கொண்ட சிவன் யோகத்தில் இருத்தலைக் காணலாம். அவ்வுருவத்தின் ஆண்குறி மேல் நோக்கி இருக்கிறது. தலையில் கொம்புகள் உள; தலைப்பாகை உண்டு. முகம் மூன்றுண்டு. ஆனால், சிவன் `மும்முகத்தான்’ என்று யாண்டும் கூறப்படல் இல்லை; ஆயின், `மு-அம்பகன்’ (மூன்று அம்பிகைகளை உடையவன்) எனக் கூறப்பட்டிருத்தல் உண்டு. `அம்பிகை’ என்பது பெண் தெய்வம். இது ரிக் வேதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. பூதேவியின் மூன்று அம்சங்களாகக் காணப்படும் உருவங்கள் சிந்து வெளியில் கிடைத்துள்ளது. நிர்வாண கோலத்தோடு நடனம் செய்வதாக உள்ள நான்காவது உருவம் நடனமாதைக் குறிப்பிடலாம். இந்நதடன மாதே ஏக-வ்ரத்யனோடு சம்பந்தப்படுத்தப்பட்ட பெண் தெய்வமாக இருத்தல் வேண்டும். மேலாடை கொண்ட சிவனுருவம் கீழாடை இன்றி இருத்தல் கவனித்தற்குரியது. சிவன் குறி கொண்டு வணங்கப்பட்ட தெய்வம்; அவ்வணக்கம் ஹீனரால் (வ்ரத்யரில் ஒரு பிரிவினர்) பின்பற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறலாம். இத்தகைய சிவலிங்கமும் மனிதவுருவமும் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குடிமல்லம் கோயிலில் காணப்படுகின்றன. இந்த லிங்கம் ஆடை போர்க்கப் பட்டிருப்பினும், கீழாகவே போர்க்கப் பட்டிருக்கிறது. இது திகம்பர சமணர்தம் தீர்த்தங்கரரது கீழ் நோக்கிய குறியை நினைவூட்டுகிறது. இவ் வணக்கம் வ்ரத்யருள் மன்றாம் வகுப்பினரதாக இருக்கலாம். இந்த இருவகைப்பட்ட `லிங்க வணக்கம்’ சிந்து வெளிப் பொருள்களைக் கொண்டும் அதர்வ வேதத்தைக் கொண்டும் நன்கறியலாம். இந்த வ்ரத்யர் எங்கிருந்து வந்தவர்? `மகத்’ (பூசாரி) என்பது, ஏக-வ்ரத்யனுடன் சம்பந்தப்பட்ட ஒரு வார்த்தை. ஆனால் அச்சொல் மகத தேசத்தைக் குறிப்பதன்று. என்னை? ரிக்வேத காலத்தில்-சம்ஹிதை காலத்தில் `மகதம்’ ஆரியர்க்குத் தெரியாதாதலின் என்க. சகத்வீபத்தில் உள்ள `மகதத்தை’ இச்சொல் குறிப்பதாகலாம். அங்கிருந்துதான் `சூரிய வணக்கம்’ வந்தது. `ஆக்ஸஸ்’ யாறு பாயும் `சோக்தியானா’ப் பிரதேசமே `சகத்வீபம்’ என்பது. சகத்வீபம் விஷ்ணு புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. வ்ரத்ய-வணக்கம் பிராமண மதத்துள் ஐக்யப்பட்டு, சைவத்துள் வளர்ச்சி பெறுவதற்கு முன் இருந்த நிலைமையே அதர்வ வேதம் குறிப்பிடுகிறது எனல் தவறாகாது. வ்ரிஷலர் பண்பாடு வட இந்தியா முழுவதும் ஆரியர் பண்பாடு பரவிய போதிலும், கி. பி. 3-ஆம் நூற்றாண்டுவரை வட இந்தியாவின் கிழக்குப் பாகம் பிராமண மத மயமாகக் கூடவில்லை. கிழக்குப் பாகம் தனக்கெனப் பழமையான பண்பாட்டைப் பெற்று இருந்ததால், பிராமணர் பண்பாட்டை உள் நுழையவிடவில்லை. மநு-கௌடில்யர் நூல்களால் வ்ரிஷலர் பண்பாடு ஆரியர் பண்பாட்டுக்கு முற்றும் மாறுபட்ட தென்பதை அறியலாம். இந்த வ்ரிஷலர் பண்பாட்டின் ஓர் அம்சம் பிராமண மதத்துக்கு முற்றும் மாறுபட்ட ஸ்ரமணத்துவம் என்பது அறியத்தக்கது. `ஸ்ரமணர்’ என்பவர் பௌத்த-சமண ஆசீவகத் துறவிகள். ஒரு பௌத்த நூலில் ஒரு பிராமணனால் புத்தர் `முண்டகன்-ஸ்ரமணன்-வ்ரிஷலகம்’ என பெறுப்புடன் கூறப்படுகிறார். `வ்ரிஷலகம்’ என்பது பிரிவின் பெயர். கௌடில்யர் `முத்ரா-ராக்ஷஸம்’ என்னும் நூலில் சந்திரகுப்தரை `வ்ரிஷலகன்’ எனப் பன்முறை அழைத்ததாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் .. . ................ சுங்கர் ஆட்சி ஏற்படு முன் பிராமண மதம் அசர்களிடம் செல்வாக்குப் பெறவில்லை. இவர்க்கு முற்பட்ட மௌரியர், நந்தர், நாகர்-ஒருவரேனும் பிராமண மதம் பற்றிய விஷயத்தையேனும் செய்ததாகத் தெரியவில்லை. பிராமண மதத்தை அடியோடு எதிர்த்து நின்றது வ்ரிஷல மதமே (பௌத்த-ஜைன-ஆசிவக மதங்கள்) ஆகும். இம்மதக் கொள்கைகளையோ-கோட்பாடுகளையோ வேதங்களிலும் உப நிஷத்துக்களிலும் காணல் இயலாது. பிற் காலத்திற்றான் இவை பிராமணர் நூல்களுள் நுழைந்தன. மஹாபாரத்தில்-சாந்தி பர்வம் 175-ஆம் அத்தியாயத்தில் பிராமண ஆசிரம நிலையும், ஸ்ரமண நிலையும் நன்கு விளக்கப்பட்டுள்ளன. இங்ஙனம், `வ்ரிஷலகர் பண்பாடு ஆரியர் பண்பாட்டுக்கு நிகராக மிக முக்யமான அளவு இந்து மதத்தில் பங்கு கொண்டுள்ளது என்பதை எவரும் மறுத்தல் இயலாது. V ஆரியர் செல்வாக்கின் பயன் சாதிகள் இக்காலத்தில் இருத்தல் போல முன்னாளில் இருந்தில. பிரமசாரி என்பவன் ஒரு வேதத்தையும் அதன் சார்பான வேதாங்கங்களையும் கற்றல் வேண்டும். கிரகஸ்தன் என்பவன் விதிக்கப்பட்ட வேத வேள்விகளையும் ஸ்ரௌத விதிகளையும் செய்தல் வேண்டும். எனவே, இவ்விரு நிலைகட்கும் பிராமண ஆசிரியன்-பிராமண புரோகிதன் இவர்தம் உதவி வேண்டியதாயிற்று. இவரே பிராமண மதம் தழுவிய ஆரியர் ஆவர். ஆரியப் பார்ப்பனர் எப்போதும் தங்கள் மதத்திற்குப் பிறரை இழுப்பதில் ஊக்கங் காட்டி வந்தனர். இவ்வுண்மை ரிக் வேதத்திலிருந்து நன்கு வெளியாகிறது. பிராமண மதத்தைப் பரப்ப பௌத்த சமண முனிவர்களைப் போல வேதகால ரிஷிகள் முனைந்திலர். ஆயினும் அவர்கள் கூட்டங் கூட்டமாக நெடுங்தூரத்து இடங்கட்குச் சிறப்பாகத் தென் இந்தியாவிற்குச் சென்று வந்தனர். விந்திய மலைக்குத் தெற்கே சித்ரகூட மலைக்கும் கிருஷ்ணையின் கிளையாறான பம்பாவுக்கும் இடைப்பட்ட இடத்தில் இராமன், தண்டகாரண்யத்துக்கு வருமுன், ரிஷிகள் பல இடங்களில் வேள்விகளைச் செய்தனர் என்பது தெரிகிறது. அவ்விடங்களில் (ஆரியர் அல்லார்) இராக்ஷதர் என்னும் கூட்டத்தார் இருந்தனர். அவர்கள் பிராமண மதத்திற்கு விரோதிகளாக இருந்தார்கள். மற்றொரு வகுப்பார் பிராமணரோடு கூட்டுறவு கொண்டனர். இவ்விரு வகுப்பாரும் வரலாற்றுத் தொடர்புடையவர் (ழளைவடிசiஉயட கூசiநௌ) என்பதில் ஐயமில்லை. பாணினி, பர்ஸூ (பாரசீகர்), அஸுர (அசிரியர்) இவர்கட்குப் பின்-`இராசூஸர்’ என்பவரைக் குறிப்பிடுகிறார். வானரருடைய தலைவருள் வாலியும் சுக்ரீவனும் சிறந்தவர். பிற்காலத்தில் தார்வார் பிரதேசத்தில் அகப்பட்ட சாஸனங்கள் வானர அரச குடும்பங்களைப் பற்றிப் பேசலைக் காண்கிறோம். அவர்கள், தாங்கள் வாலி பரம்பரையினர் எனக் கூறியுள்ளனர். அவர் கொடி குரங்கு (கபி) முத்திரை உடையது. இராமாயண மஹாபாரதங்கள் கதைகளைப் போதிப்பன ஆயினும், அவற்றுள் வரலாற்றுத் தொடர்பான சில செய்திகளும் உள என்பதை மறுத்தல் ஆகாது. `பவரின்’ என்னும் பிராமண குரு கோதாவிரி ஆற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து 16 சீடர்களோடு இருந்தார். அவர் மூன்று வேதங்களில் வல்லவர். ஒவ்வொரு மாணவரும் பல சீடர்களைக் கொண்டனர். அவர்கள் அனைவரும் சடை வளர்த்துத் தோல் ஆசனங்கொண்டு ரிஷிகள் எனப்பட்டனர். இங்ஙனம் பல ரிஷிகள் தென் இந்தியாவில் பிராமண மதத்தைப் பரப்பினர். சாதிகளின் விரிந்த நிலைமை பண்டைக் காலத்தில் பிறப்பைக் கொண்டு சாதி வகுக்கப்படவில்லை. மஹாபாரதத்தில் சாந்திபர்வத்தில் ஒரு சுலோகம் உண்டு. அது, இழிபிறப்புடையோர் பலர் தம் கல்வி ஒழுக்கங்களால் உயர்ந்த ரிஷிகளாக மாறிப் பெயர் பெற்ற கோத்திரங்களைத் தாபித்தனர் என்பதைக் கூறுகிறது. வனபர்வத்தில் உள்ள சுலோகம் ஒன்று, வியாசன் மீன்காரிக்குப் பிறந்தான், பராசரன் சண்டாளப் பெண்ணிடம் பிறந்தான் என்பனவற்றைக் கூறுகிறது. இங்ஙனம், பண்டைக் காலத்தில் சாதிகள் பிறப்பை நோக்கிக் கொள்ளப்பட்டவை அல்ல; அவரவர் கல்வி ஒழுக்கங்களைக் கொண்டே கொள்ளப் பட்டவை என்பன அறியலாம். பிராமண ஆதிக்கம் கொண்ட இந்து சமூகம் அந்நியரை எங்ஙனம் நடத்தியது? சாந்திபர்வத்தில் 65-ஆம் அத்தியாயத்தில் மாந்தாதாவுக்கும் இந்திரனுக்கும் உரையாடல் நடந்ததாகக் கூறப்படுகிறது. மாந்தாதா (ஆரிய அரசன்), தன் நாட்டில் தாஸ்யர் (அந்நியர்) ஆக உள்ள யவனர், கிரதர், காந்தாரர், சீனர், சபரர், பர்பரர், சாகர் முதலியவரை எப்படி நடத்தல் வேண்டும் என்று இந்திரனைக் கேட்டான். இந்திரன், `அவர்கள் அனைவரையும் பிராமண மதவிதிகளைப் பின்பற்றிக் காரியங்களைச் செய்யுமாறு தூண்டிப் பிராமண மத ஆட்களாகச் சேர்த்துவிடுக’ என்று பதில் அளித்தான். `சாகரும் யவனரும் பிராமணர் கிரியைகளைச் செய்து ஆரியர் உண்கலத்திலிருந்து உண்ணலாம்’ என்று பதஞ்சலியும் கூறியுள்ளார். குவாலியர் சம்ஸ்தானத்தில் ஒரு கல்வெட்டுக் கிடைத்தது. அதில், பகபத்ரன் என்னும் அரசன் அவைக்குத் தூதனாக வந்த `ஹெலியொதோரர்’ என்னும் யவனன் வாசுதேவனுக்கு மரியாதை செய்யக் கருடக்கொடி எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் அவன் வைணவ இந்துவாக மாறினான் என்பதை அறியலாம். அவன் அதே சாஸனத்தில் தன்னைப் `பாகவதன்’ என்று கூறிக் கொள்ளலும் கவனிக்கற் பாலது. அப்ஹிரர், ஹர்ச்சரர் முதலிய கூட்டத்தார் இந்தியா வினுள் நுழைந்தவர். அவர்கள் அனைவரும் இந்து சமூகத்துள் கலந்து மறைந்தனர். இவ்விரு திறத்தாரும் பொற்கொல்லரும் வணிகருமாவர். சுத்தி இயக்கம் முகம்மதியரால் மதம் மாற்றப்பட்ட இந்துக்களை இந்துக்களாக்க 10-ஆம் நூற்றாண்டிலேயே தேவலஸ்மிருதி, அத்ரி ஸம்ஹிதை என்பவை வரையப்பட்டன. பிராயச்சித்தம் நடைபெற்று இந்துக்களாகப் பலர் மாற்றப்பட்டனர் என்பதை அக்கால முகம்மதிய சரித்திராசிரியர்களே குறிப்பிட்டுள்ளனர். பெண்களும் சுத்தி செய்யப்பட்டு மதம் மாற்றப்பட்டனர். கி. பி. 1398-1399-இல் பாமினி ராச்சியத்தின் மீது தவரிக் பிரிஷ்டஹ என்பவன் படையெடுத்துக் தோல்வியுற்றான். பிரோஜ்ஷா பஹ்மஒ என்னும் சுல்தான் இரண்டாயிரம் பிராமணப் பெண்களைச் சிறைப்பிடித்தான். உடனே இந்து அரசன் சமாதானம் செய்து, பெண்களை விடுவித்தான். அவர்கள் மீட்டும் இந்து மதத்துக்கு மாற்றப்பட்டார்கள். தேவலரும் விக்னேஸ்வரரும் (சட்டகர்த்தர்கள்) பிறரால் கெடுக்கப்பட்ட பெண்களையும் கருவுற்ற பெண்களையும் மதம் மாற்றலாமென முடிவு கூறியுள்ளனர். சுருங்கக் கூறின், அந்நியர் இந்து ஆகலாம்; இந்தியாவில் நுழைந்த அயல் நாட்டார் அனைவரும் அப்பழைய காலத்தே பிராமண மதத்தில் கலந்து இந்து சமூகத்தில் இரண்டறக் கலந்துவிட்டனர். தம்மளவில் உயர் நாகரீகத்தில் இருந்து பிறரை அநாகரிகர் என்று இழித்துரைத்த கிரேக்கரும் பௌத்தராகவோ வைணவராகவோ மாறினர் என்பது கவனித்தற்குரியது. இந்நிலைமை கி. பி. 7-ஆம் நூற்றாண்டுவரை, அஃதாவது, முகம்மதியர் இந்தியாவில் தலைகாட்டும்வரை இருந்தது. அவர்கள் வந்தபின் இந்துக்கள் முகம்மதியராக்கப்பட்டனர். ஆயினும் அம் முகம்மதியர் மீட்டும் இந்துக்கள் ஆக்கப்பட்டமை மேலே கூறப்பட்டது. எனினும், பிறவியிலேயே இந்து என்னும் இக்காலக் கொள்கை அக்காலத்தே இல்லை. குறிப்புகள் 1. C. S. Srinivasachari’s `A History of India‡ p. 24 (2 ed ). 2. V. A. Smith’s `Oxford History of India’ p. 58 (2 ed ). 3. P. T. S. Aiyangar’s `History of the Tamils’ pp. 21-26. 4. புறநானூறு, 378, மகதராச்சியம் கி. மு. 505 முதல் கி. பி. 500 வரை சிறப்புற்றிருந்ததென்பது வரலாறு கூறும் உண்மை. 5. குறுந்தொகை, 75 6. அகம், 251 7. அகம், 265 8. அகம், 265 9. Vide his “Studies in South Indian Jainism” [PP. 124, 125 10. Vide `The Travels of Fa - Hiam’ by James [Legge. 11. Vide `Yuan Chwang’s Travels in India’ by [Thomas Wattars. 12. P. T. Srinivasa Iyangar’s History of the Tamil’s PP. 141, 142 13. அகம், 251, 281. 14. அகம், 281. 15. ³, 251. 16. ³, 69. 17. புறம். 175 1. “Pre-Aryan & Pre Dravidian in India” P. 86;, origin Devolopment of the Bengali Language’ by S. K. Chatterji, P. 41-45; P. T. S. `S’ Stone Age in India, P. 43. 2. Sir John Marshall’s Religion of the Indus People’ in his first volume & Father Heras’s articles in the New Review, 1936. 3. `Pre-historic Civilization of the Indus Valley,’ P. 36-38. 4. மணிமேகலை, காதை 6, வரி 66-67. 5. P. T. S. Iyengar’s `Stone Age in India,’ P. 41, 42. (6) மணிமேகலை, காதை 6, வரி 57-59, 166. 7. மணிமேகலை, காதை 2, வரி, 42-45. 8. சிலப்பதிகாரம், காதை 20, வரி 79-81. 9. புறநானூறு, 246. 10. புறநானூறு 234. 11. புறநானூறு, 249. 1. அகம், 211 2. அகம், 107 3. நற்றிணை, 212 4. அகம், 196 5. நற்றிணை 15, 113 6. புறம், 378 7. அகம், 375 8, Beginnings of S. I. History pp. 94, 59 9. குறுந்தொகை, 73. 10. அகம், 375. 11. புறம், 169. 12. அகம். 90, 216. 13. புறம், 251, 281. 14. அகம், 196, 262. 15. புறம், 69, 251, 281, 175. 16. புறம், 205, 378. 17. அகம், 375, புறம் 378. 18. Sears of the Sangam Period/ pp. 121-122 19. Beginnings of S. I. History, 98-99. * இஃது 1939-ஆம் ஆண்டு பிப்ரவரிமாத இறுதியில் சென்னைப் பல்கலைக் கழகச் சார்பில்’ கல்கத்தாப் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியராக இருந்த டாக்டர் பண்டர்க்கர் செய்த சொற்பொழிவுகளின் சாரம். † இது தவறான கூற்று. மதுரை ஜில்லாவில் இரண்டோரிடங்களில் மலைக்குகைகளில் சைனர் அல்லது புத்தர்கள் வாழ்ந்தனர். அவர்கள் தம் வடநாட்டு மொழியில் செதுக்கிய சாஸனங்களைக் கொண்டு, அம்மொழி எல்லாத் தமிழ் மக்கட்கும் தெரிந்தமொழியாதல் வேண்டும் என்று முடிவு கட்டுதல் அடாது. தமிழகத்து அரசர் தந்த சாஸனமாயின், அப்பழைய காலத்தில் (கி. மு. 200-கி. பி. 450) தமிழிலேயே எழுதப்பட்டிருக்கும். அவை வேற்று மொழியில் இருத்தல் ஒன்றே தமிழரசர்க்கும் தமிழ் மக்கட்கும் அவற்றுக்கும் கடுகளவும் தொடர்பில்லை என்பதைக் காட்டுகிறது. தமிழ் நாட்டில் உள்ள முஹமதியர் உருதுவில் அல்லது அரபியில் கணக்கு எழுதி வைத்துள்ளமையால், தமிழர் அனைவரும் உருது அல்லது அரபி அறிந்தவர் என்று முடிவு கட்டுதல் எவ்வளவு தவறோ அவ்வளவு தவறாகும் இவ்வாபத்தான ஆதாரமற்ற முடிபுக்கு வருதல். * இந்நிலைமை, ஆரியரால் வென்று ஆளப்பட்ட இந்திய நிலப் பகுதியில் ஆரியரோடு வாழ்ந்த ஆரியரல்லாதவரால் கையாளப்பட்டது என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும். 5. P. T. S. Iyengar’s `Stone Age in India,’ P. 41, 42. 6. மணிமேகலை, காதை 6, வரி 57-59, 166. 7. மணிமேகலை, காதை 2, வரி, 42-45. 8. சிலப்பதிகாரம், காதை 20, வரி 79-81. 9. புறநானூறு, 246. 10. புறநானூறு 234. 11. புறநானூறு, 249. 1. அகம், 211 2. அகம், 107 3. நற்றிணை, 212 4. அகம், 196 5. புறம், 378 7. அகம், 375 8. Beginnings of S. I. History pp. 94, 59 9. குறுந்தொகை, 73. 10. அகம், 375. 11. புறம், 169. 12. அகம். 90, 216. 13. புறம், 251, 281. 14. அகம், 196, 262. 15. புறம், 69, 251, 281, 175. 16. புறம், 205, 378. 17. அகம், 375, புறம் 378. 18. Sears of the Sangam Period/ pp. 121-122 19. Beginnings of S. I. History, 98-99. * இஃது 1939-ஆம் ஆண்டு பிப்ரவரிமாத இறுதியில் சென்னைப் பல்கலைக் கழகச் சார்பில்’ கல்கத்தாப் பல்கலைக் கழக கரலாற்றுப் பேராசிரியராக இருந்த டாக்டர் பண்டர்க்கர் செய்த சொற்பொழிவுகளின் சாரம். + இது தவறான கூற்று. மதுரை ஜில்லாவில் இரண்டோரிடங்களில் மலைக்குகைகளில் சைனர் அல்லது புத்தர்கள் வாழ்ந்தனர். அவர்கள் தம் வடநாட்டு மொழியில் செதுக்கிய சாஸனங்களைக் கொண்டு, அம்மொழி எல்லாத் தமிழ் மக்கட்கும் தெரிந்தமொழியாதல் வேண்டும் என்று முடிவு கட்டுதல் அடாது. தமிழகத்து அரசர் தந்த சாஸனமாயின், அப்பழைய காலத்தில் (கி. மு. 200-கி. பி. 450) தமிழிலேயே எழுதப்பட்டிருக்கும். அவை வேற்று மொழியில் இருத்தல் ஒன்றே தமிழரசர்க்கும் தமிழ் மக்கட்கும் அவற்றுக்கும் கடுகளவும் தொடர்பில்லை என்பதைக் காட்டுகிறது. தமிழ் நாட்டில் உள்ள முஹமதியர் உருதுவில் அல்லது அரபியில் கணக்கு எழுதி வைத்துள்ளமையால், தமிழர் அனைவரும் உருது அல்லது அரபி அறிந்தவர் என்று முடிவு கட்டுதல் எவ்வளவு தவறோ அவ்வளவு தவறாகும் இவ்வாபத்தான ஆதாரமற்ற முடிபுக்கு வருதல். * இந்நிலைமை, ஆரியரால் வென்று ஆளப்பட்ட இந்திய நிலப் பகுதியில் ஆரியரோடு வாழ்ந்த ஆரியரல்லாதவரால் கையாளப்பட்டது என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும்.