அருவிகள் முனைவர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : அருவிகள் ஆசிரியர் : முனைவர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2012 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+88 = 104 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 65/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்குமரன் நூலாக்கம் : திருமதி வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம் எண். 20/33, பி 3 பாண்டியன் அடுக்ககம், பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க் குலம் படிப்படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மைகளைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்மண் பதிப்பகத்iதத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங்கினேன். நீருக்கும் - நெருப்புக்கும், புதையுண்டும் - மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் - சிதைக்கப்பட்டவையும் போக எஞ்சிய நூல்களைத் தேடி எடுத்து வெளியிட்ட பழந்தமிழ் அறிஞர்களை வணங்கி எம் தமிழ்நூல் பதிப்புச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலமும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலமும் தமிழ்மொழி, தமிழின வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலமாகும். இந்த மறுமலர்ச்சி காலத்தில்தான் தமிழை உயிராகவும், மூச்சாகவும், வாழ்வாகவும் கொண்ட அரும்பெரும் தமிழரிஞர்கள் தோன்றி தமிழ் மீட்டெடுப்புப் பணியை மேற்கொண்டனர். எதிர்காலத் தமிழ் தலைமுறைக்கு அழியாச் செல்வங்களாக அருந்தமிழ் நூல்களை கொடையாக வழங்கிச் சென்றனர். இவ்வருந்தமிழ்க் கொடைகள் எல்லாம் தமிழர் இல்லந்தோறும் வைத்துப் பாதுகாக்கத் தக்க புதைபொருள் ஆகும். அந்த வகையில் அறிஞர்களின் செந்தமிழ் கருவூலங்களை எல்லாம் தேடி எடுத்து குலை குலையாய் வெளியிட்டு தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாக பதித்து வருவதை தமிழ் கூறும் நல்லுகம் நன்கு அறியும். எம் தமிழ்நூல் பதிப்புப் பணியின் தொடர் பணியாக தமிழ்ப்பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் நூல்களை வெளியிடும் நோக்கில் எம் கைக்குக் கிடைத்த சில நூல்களை முதல் கட்டமாக வெளிகொணர்ந் துள்ளோம். எதிர்காலத்தில் அவருடைய ஆக்கங்கள் அனைத்தையும் தேடி எடுத்து பொருள்வழிப் பிரித்து கால வரிசையில் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர் களுக்கும் பயன்படும் நோக்கில் திட்டமிட்டுள்ளோம். அகப்பகையும், புறப்பகையும் தமிழர் வாழ்வில் குடிபுகுந்து தமிழினம் நிலைக்குலைந்த வரலாறு கடந்தகால வரலாறு. தொன்மையும், பெருமையும் வாய்ந்த தமிழ்ப் பேரினம் தம் குடிமை இழந்து தாழ்வுற்று மருளும், இருளும் நிறைந்த மூட பழக்க வழக்கங்களால் தன்மானம் இழந்து தாழ்ந்து கிடந்த வரலாற்றை நெஞ்சில் நிறுத்துவோம். தமிழினம் மறுமலர்ச்சி பெறுவதற்கு தம் வாழ்வின் முழுபொழுதையும் செலவிட்ட அறிஞர்களை வணங்குவோம். இந்நூல்களை உங்கள் கையில் தவழ விடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். கோ. இளவழகன் நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி’ ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `இன்றைய தமிழரது வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்கின்றது?’ ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும்’ `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள்’ என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள்’ என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம்’. நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார்.’ பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தhர். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு’ இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான்’ படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம்’, `நக்கீரர் கழகம்’, `மாணவர் மன்றம்’ முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர்’ என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈராஸ் பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர்’ என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது’ என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு’ என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான்’ பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார்’ என்று `என் கணவர்’ என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வி’யில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும்’ என்பது அவர் கொள்கையாக இருந்தது. “அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும்”. உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும்’ என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும்’ என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும்’ என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்கiள எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம்’, `தமிழ் இனம்’, `தமிழர் வாழ்வு’, `என்றுமுள தென்றமிழ்’, `புதிய தமிழகம்’ என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும்’ என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி’, `தமிழ்க் கலைகள்’, `தமிழர் நாகரிகமும் பண்பாடும்’, `தமிழக வரலாறு’ என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்கhக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும்’ அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர்’ என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு’ வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல்’, தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது’ `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும்’ என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவ தில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும்’ என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம்’ என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும்’ என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `அவரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா?’ எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர்’, `மனிதரில் தலையாய மனிதரே’ எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் நூல்கள் (கால வரிசையில்) 1. நாற்பெரும் வள்ளல்கள் 1930 2. ஹர்ஷவர்த்தனன் 1930 3. முடியுடை வேந்தர் 1931 4. நவீன இந்திய மணிகள் 1934 5. தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934 6. முசோலினி 1934 7. ஏப்ரஹாம் லிங்கன் 1934 8. அறிவுச்சுடர் 1938 9. நாற்பெரும் புலவர்கள் 1938 10. தமிழர் திருமண நூல் 1939 11. தமிழர் திருமண இன்பம் 1939 12. மணிமேகலை 1940 13. மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941 14. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941 15. பல்லவர் வரலாறு 1944 16. மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944 17. சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945 18 இரண்டாம் குலோத்துங்கன் 1945 19. கட்டுரை மாலை 1945 20. செய்யுள் - உரைநடைப் பயிற்சி நூல் 1945 21. முத்தமிழ் வேந்தர் 1946 22. காவியம் செய்த கவியரசர் 1946 23. விசுவநாத நாயக்கர் 1946 24. சிவாஜி 1946 25. சிலப்பதிகாரக் காட்சிகள் 1946 26. இராஜேந்திர சோழன் 1946 27. பல்லவப் பேரரசர் 1946 28. கட்டுரைக் கோவை 1946 29. சோழர் வரலாறு 1947 30. ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947 31. பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947 32. வீரத் தமிழர் - 1947 33. இருபதாம் நூற்றாண்டுப் ஸபலவர் பெருமக்கள் 1947 34. இந்திய அறிஞர் 1947 35. தமிழ்நாட்டு வடஎல்லை 1948 36. பெரியபுராண ஆராய்ச்சி 1948 37. கதை மலர் மாலை (மலர் ஒன்று0 1948 38. இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948 39. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி 1- 3) 1949 40. மேனாட்டுத் தமிழறிஞர் 1950 41. தென்னாட்டுப் பெருமக்கள் 1950 42. இந்தியப் பெரியார் இருவர் 1950 43. தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950 44. நாற்பெரும் புலவர் 195 45. மறைமலையடிகள் 1951 46. அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951 47. சங்கநூற் காட்சிகள் 1952 48. இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953 49. விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953 50. பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953 51. சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954 52. திருவள்ளுவர் காலம் யாது? 1954 53. சைவ சமயம் 1955 54. கம்பர் யார்? 1955 55. வையை 1955 56. தமிழர் திருமணத்தில் தாலி 1955 57. பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955 58. இலக்கிய அறிமுகம் 1955 59. அருவிகள் 1955 60. தமிழ் மொழிச் செல்வம் 1956 61. பூம்புகார் நகரம் 1956 62. தமிழ் இனம் 1956 63. தமிழர் வாழ்வு 1956 64. வழிபாடு 1957 65. இல்வாழ்க்கை 1957 66. தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957 67. வழியும் வகையும் 1957 68. ஆற்றங்கரை நாகரிகம் 1957 69. தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957 70. என்றுமுள தென்றமிழ் 1957 71. சைவ சமய வளர்ச்சி 1958 72. பொருநை 1958 73. அருள்நெறி 1958 74. தமிழரசி 1958 75. இலக்கிய அமுதம் 1958 76. எல்லோரும் வாழவேண்டும் 1958 77. தமிழகக் கலைகள் 1959 78. தமிழக ஆட்சி 1959 79. தமிழக வரலாறு 1959 80. தமிழர் நாகரிகமும பண்பாடும் 1959 81. தென்பெண்ணை 1959 82. புதிய தமிழகம் 1959 83. நாட்டுக்கு நல்லவை 1959 84. தமிழ் அமுதம் 1959 85. பேரறிஞர் இருவர் 1959 86. துருக்கியின் தந்தை 1959 87. தமிழகக் கதைகள் 1959 88. குழந்தைப் பாடல்கள் 1960 89. கட்டுரைச் செல்வம் 1960 90. தமிழகப் புலவர் 1960 91. தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963 92. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1964 93. தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965 94. சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969 95. பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970 96. கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977 97. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978 98. இலக்கிய ஓவியங்கள் 1979 பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள் 99. சிறுவர் சிற்றிலக்கணம் 100. பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும் 101. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி -2) ஆங்கில நூல் 102. The Development of Saivism in South India 1964 பார்வைக்குக் கிடைக்காத நூல்கள் 1. பதிற்றுப்பத்துக் காட்சிகள் 2. செந்தமிழ்ச் செல்வம் 3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 4. பள்ளித் தமிழ் இலக்கணம் 5. செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்) 6. செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்) பொருளடக்கம் I முன்னுரை 1 II நயாகரா அருவி 5 1. வட அமெரிக்கா 5 2. நயாகரா அருவி 11 III விக்டோரியா அருவி 20 1. ஆப்பிரிக்கா 20 2. தென் ஆப்பிரிக்கா 26 3. விக்டோரியா அருவி 33 IV சிவசமுத்திர அருவி 43 1. காவிரி யாறு 43 2. மின்சார உற்பத்தி நிலையம் 53 3. வளர்ச்சிக்குரிய திட்டங்கள் 56 V. குற்றால அருவி 61 1. அருவியின் சிறப்பு 61 2. குற்றாலப் பதி 70 3. குற்றாலம் பற்றிய இலக்கியம் 76 தொகுப்புரை அருவிகள் I முன்னுரை பொருள்களின் இயக்கம் நாம் உறக்கத்திலிருந்து எழும்பொழுது உடலில் அசைவு உண்டாகிறது. இதற்கு பின்பே, நாம் உறக்கத்திலிருந்து எழுகின்றோம் என்னும் உணர்ச்சி நமக்கு உண்டாகின்றது; அஃதாவது, அசைவு அல்லது இயக்கம் என்பது மன வுணர்ச்சிக்கு முன்னரே உண்டாகிறது. இந்த அசைவு இல்லாவிடில், உலகத்தில் எப்பொருளும் விளக்கம் பெறுதல் இயலாது. விதையின் அசைவு இல்லாமல் பயிர் இல்லை. காற்று வீசும் போது மரம் அசைகின்றது. இவ்வாறே பாய்மரக் கப்பலும் அசைகிறது. ‘ஒவ்வொரு பொருளும் இயக்கமுடையதாக இருக்கின்றது’ என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு நாற்காலியைப் பாருங்கள்: அதற்குரிய மரம் ஒரு காலத்தில் அசைந்துகொண்டிருந்தது. அம்மரம் பின்னர் வெட்டப்பட்டது; பலகைகளாக அறுக்கப்பட்டது; நாற்காலியாகச் செய்யப்பட்டது. அந்த நாற்காலியிலுள்ள ஒவ்வொரு பகுதியும் பல அணுக்களால் ஆக்கப்பட்டது. ஒவ்வொரு அணுவும் எப்பொழுதும் இயங்கும் இயல்புடையது. நாம் வாழும் இந்த நிலம் அசைவின்றி இருப்பது போலக் காணப்படுகின்றது. ஆனால் அது சூரியனைச் சுற்றிலும் மிக நீண்ட பிரயாணம் செய்துகொண்டிருக்கின்றது என்பதை நாம் அறிதல் வேண்டும். இங்ஙனம் பார்ப்பின், உலகத்தில் எப்பொருளும் அசைவின்றி இருக்கவில்லை என்பதை உணரலாம். நாம் நாள்தோறும் பார்க்கும் மரம் நம் கட்புலனுக்குத் தெரியாமல் தினந்தோறும் வளர்பிறை போல வளர்ந்துவருகின்றது. இவ்வாறு மலைகள், கட்டடங்கள் முதலியனவும் நிலத்தில் இருப்பதால், அவை நிலம் செய்யும் பிராயணத்தில் பங்கு கொண்டுள்ளன என்பதை அறிதல் வேண்டும். “மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பொருள்களை அப்புறப் படுத்துகின்றான்; ஒழுங்குபடுத்து கிறான். இவையே மனிதன் செய்யும் வேலையாகும்,” என்று ஆங்கில விஞ்ஞானி ஒருவர் கூறியிருத்தல் பொருத்தமான கூற்றாகும். உயிர்களின் வளர்ச்சி பிறந்த குழந்தை சில மாதங்களுக்குப் பிறகு தவழ்கின்றது; பின்னும் சில மாதங்கள் கழிந்ததும் தவழ்நடை பயில்கின்றது. முதலில் பேசாத அக்குழந்தை நாவினால் சில ஒலிகளை எழுப்புகின்றது; பின்பு அரைகுறையான சொற்களைச் சொல்லத் தொடங்குகிறது; இங்ஙனம் பயின்று பயின்று, பின்னர்த் தெளிவாகவே பேச முற்படுகின்றது; இவ்வாறே நடையிலும் முன்னேறுகின்றது. அதன் உறுப்புகளும் படிப்படியாக வளர்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன் பிறந்த குழந்தை, பத்து ஆண்டுகள் கழிந்த பிறகு ஆடி ஓடி விளையாடும் சிறுவனாக அல்லது சிறுமியாகக் காட்சியளிக்கின்றது. இவ்வாறே இன்று வைத்துப் பயிராக்கப்படும் தென்னம் பிள்ளை பத்து ஆண்டுகளுள் வானுற ஓங்கி வளம்பெற வளர்ந்து, தன் முடியால் பருகுதற்கினிய இளநீரையும், உண்பதற்குரிய தேங்காயையும் கொடுத்து நம்மை மகிழ்விக்கின்றது. இன்று பார்க்கும் கோழி முட்டையிலிருந்து சில நாட்களுக்குப் பிறது நமது பெருவியப்புக் கிடையே ஒரு குஞ்சு வெளிப்படுதலைக் காண்கின்றோம். இந்த அரிய நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அடிப்படை யாது? இயக்கம்: இயற்கையும் செயற்கையும் கண்ணன் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைப் படிக்க விரும்பு கிறான். அவ்விருப்பம் எழவே, அவன் அப்புத்தகம் உள்ள இடத்திலிருந்து அதனை எடுக்கின்றான்; அஃதாவது, கண்ணன் அப்புத்தகத்தை இயங்கச் செய்கிறான். அவன் ஏன் அதனை இயங்கச் செய்கிறான்? அவன் அதனைப் படிக்க விரும்புகிறான் என்பதே காரணமாகும். அவனுக்கு அதனைப் படிக்க வேண்டு மென்னும் விருப்பம் உண்டாகிறது. அந்த விருப்பத்துக்குக் கைகள் பணிகின்றன. அஃதாவது மனத்தின் விருப்பப்படி இயக்கம் தோன்றுகிறது. இவ்வாறு நம் விருப்பப்படி உண்டாகும் இயக்கங்கள் பல. நாம் கடுகளவும் விரும்பாமலும், நமக்கு தெரியாமலும் நமது உடம்பிற்குள் நடைபெற்றுவரும் இயக்கங்கள் பலவாகும். அவற்றுள். நாம் மூச்சு விடுதலும், உணவு செரித்தலும், உடல் வளர்ச்சியடைதலும் சிலவாகும். காற்றின் ஒழுக்கமும், ஓடைநீரின் இயக்கமும், விண்மீன்களின் இயக்கமும் பிறவும் எவ்வாறு நடைபெறுகின்றன? இக்கேள்விக்கு விஞ்ஞானி கூறும் விடை யாது? விஞ்ஞானிகள் கூற்று “மிகப் பழைய காலத்தில் அமைதியும் அசைவின்மையும் இருளுமே எங்கும் பரவியிருந்தன; அப்பொழுது* சூக்கும செய்நீர் ஒன்றே நிலவியிருந்தது; பின்பு அசைவு அல்லது இயக்கம் தோன்றியது; அதன் பயனாகச் சூக்கும செய்நீர் உயிர் பெற்றது; உலகம் உயிர்த்தெழலாயிற்று; சூரியனும் சந்திரனும் கிரகங்களும் தோன்றின; இருளில் ஒளி தோன்றலாயிற்று. இங்ஙனம் உலகம் தோன்றியிருத்தல் வேண்டும்” என்று விஞ்ஞானிகள் கூறுவர். “புலவன் கை அசைவினால் ஒரு நூல் வெளிப்படுதல் போல, நம் கட்புலனுக்குப் புலப்படாத ஒரு பேராற்றலின் விருப்பத்தினால் உலகில் இயக்கம் தோன்றியிருத்தல் வேண்டும்,” என்று அறிஞர் கூறுவர். இப்பேராற்றலைத்தான் நாம் கடவுள் என்கிறோம். இப்பேராற்றலின் முதல் இயக்கத்தினால் உலகத்தில் அனைத்தும் தோற்றம் எடுத்தன. இவ்வியக்கம் நிறுத்தப்பட முடியாது. இவ்வியக்கத்தின் வலிமையால் சுடுகதிரும் தண் கதிரும் விண்மீன்களும் விளக்கம் தருகின்றன. இவ்வியக்கம் தொடர்ந்து செல்லும் ஆற்றலும் ஆக்கவன்மையும் உடையது. ஒவ்வொரு அணுவிலும் மின்மினிப் பூச்சி போல ஒளிவிடும் மின் அணுக்கள். இறைவன் விருப்பத்தால் முதலின் தோன்றிய அசைவின் பயனாய்த் தோன்றுவன என்பதை உணர்தல் வேண்டும். விஞ்ஞானிகள் இந்தப் பேராற்றலின் இயக்கத்தை முதலில் நன்கு உணராமல், “உலகத்திற் காணப்படுவன* ‘உள்ளது சிறத்தல்’ என்ற முறைப்படி தோன்றின,” என்று கூறினர்; ஆராய்ச்சியறிவு மிகுதிப்பட்ட காரணத்தால் இப்பொழுது, ஙீ‘படைப்பாற்றலால் உள்ளது சிறத்தல்’ என்று கூறுகின்றனர். பேராற்றலது இயக்கத்தின் தன்மையைக் கண்டு விஞ்ஞானிகள் வியக்கின்றனர். கண்ணுக்குப் புலனாகும் இப்பரந்த உலகம் மிக முற்பட்ட காலத்திலிருந்தே ஒரு குறிநோக்கி எய்யப்பட்ட அம்புபோலக் குறிப்பிட்ட ஒன்றை நோக்கி இயங்குவதாக விஞ்ஞானிகள் விளம்புகின்றனர். வியத்தகு படைப்புகள் கட்புலனுக்குத் தோன்றும் பொருள்களின் இயக்கத்தை நாம் அறிவோம் அல்லவா? ஆற்றின் இயக்கத்தை அறியாதார் யார்? அத்தகை இயக்கங்களுள், உயர்ந்த மலையிலிருந்து அல்லது பாறையிலிருந்து பேரிரைச்சலுடன் கீழ்நோக்கி விழும் அருவியின் இயக்கம் வியக்கத் தக்க ஒன்றாகும். இந்நூலில் இத்தகைய வியத்தகு அருவிகளான நயாகரா அருவி, விக்டோரியா அருவி, சிவசமுத்திர அருவி, குற்றால அருவி என்னும் நான்கையும் பற்றிய விவரங்களைக் காண்போம். இவை முன் சொல்லப்பட்ட இயக்கத்தால் உண்டாகியுள்ள வியத்தகு படைப்புக்களாகும். இயக்கமும் மனிதனும் இறைவனது விருப்பத்திலிருந்து தோன்றிய இயக்கத்தால் உண்டான மனிதன், உயிர்ச் சக்தியாகிய இயக்கத்தை உறுதுணையாகக் கொண்டு, மிகத் தாழ்ந்த நிலையிலிருந்து படிப்படியாக முன்னேறி வருகின்றான். முதலில் மலைக் குகைகளில் வாழ்ந்த அவன், தனது இயக்கத்தினால் குடிசை வீட்டைக் கட்டினான்; பிறகு ஓட்டு வீட்டை அமைத்தான்; பின்பு மாடிவீட்டைக் கட்டினான். இவ்வாறே அவன் தனது இயக்கத்தால் ஒவ்வொரு துறையிலும் இன்றுவரை முன்னேறி வருகின்றான். புதுமை காணும் வேட்கை அவனுக்கு இயக்கத்தைக் கொடுத்து பல புதுமைகளைக் காணத் தூண்டியது. அவன் அத் தூண்டுதலால் உந்தப்பட்டு, உலகின் பல பகுதிகளுக்கும் செல்ல முற்பட்டான்; பல்லாயிரக் கல் கணக்கில் பரந்து கிடக்கும் கடலை அரும்பாடுபட்டுத் தாண்டினான்; வானத்தில் விண்மீன்கள் தோன்றுவது போலக் கடலில் காட்சியளித்த நூற்றுக் கணக்கான தீவுகளைக் கண்டறிந்தான்; ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பெருநிலப் பகுதிகளைக் கண்டுபிடித்தான்; உலகம் தட்டையானது என்று மக்கள் நம்பி வந்த காலத்தில், தன் உயிரையும் பொருட்படுத்தாது, உலகத்தின் இரு கோடிகளையும் கண்டறிந்தான். இவ்வாறு மனிதன் செய்துள்ள மாண்புறு செயல்கள் பலவாகும். II நயாகரா அருவி 1. வட அமெரிக்கா புதிய உலகம் இன்று வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று சொல்லப்படும் இரண்டு பெரிய கண்டங்கள் புதியனவாகக் கண்டுபிடிக்கப்பட்டவை. ஆதலால் அவை உள்ள பகுதி புதிய உலகமெனப் பெயர் பெற்றது. கி. பி. 1492ஆம் ஆண்டு கொலம்பஸ் என்னும் ஜினோவா வீரர் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து வட அமெரிக்காவுக்குக் கிழக்கிலுள்ள சில தீவுகளைக் கண்டுபிடித்தார்; அவற்றை இந்தியாவின் ஒரு பகுதியெனக் கருதினார்; அங்கு இருந்த பண்டை மக்களை இந்தியர் என்று அழைத்தார். அமெரிக்கோ வெஸ்பூச்சி என்னும் இத்தாலிய நாட்டுக் கப்பலோட்டி கொலம்பiஸப் போலவே அட்லாண்டிக் பெருங்கடலை நான்கு முறை (1497-க்கும் 1504-க்கும் இடையே) கடந்து, புதிய கண்டத்தைக் கண்டறிந்தார். கொலம்பஸ் 1492இல் அமெரிக்காவை அடைந் தாராயினும், அவருக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு அக்கண்டத்தைக் கண்டுபிடித்த இவ்வித்தாலியரே அஃது ஒரு புதிய கண்டமென்றும், கொலம்பஸ் கருதியபடி அஃது இந்தியா அன்று என்றும் உலகறியச் செய்தவர். ஆதலால், இவர் பெயரே அக்கண்டத்திற்கு இடப்பட்டு, அமெரிக்கா என்று அழைக்கப் பட்டு வருகிறது. குடியேற்றம் 17 ஆம் நூற்றாண்டில் வட அமெரிக்காவில் பிரஞ்சியர், ஸ்பானியர், ஆங்கிலேயர், ஸ்வீடிஷ்காரர், டச்சுக்காரர் என்போர் ஏற்படுத்திய குடியேற்றங்களில் சில, பிற்காலத்தில் அமெரிக்கா ஐக்கிய நாடுகளாகத் தோற்றம் எடுத்தன. இந்நிலப்பகுதிக்கு வடபால் மிகுதியாகக் குடியேறினர். அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குத் தெற்கே மெக்ஸிகோ நாடு ஏற்பட்டது. தென் அமெரிக்காவில் ஸ்பெயின் நாட்டு மக்கள் மிகுதியாகக் குடியேறிய பல நாடுகளை அமைத்துக் கொண்டனர். இவ்விரண்டு கண்டங்களையும் பனாமா கால்வாய் பிரிக்கின்றது. ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன்பு பெருங்காடுகளையும் கொடிய விலங்குகளையும் பண்டைக் குடிகளையும் கொண்டிருந்த அமெரிக்கா, ஐரோப்பாக் கண்டத்து மக்களின் இடைவிடா உழைப்பால் பல்வகை வளங்களும் பெற்றுப் பொன் கொழிக்கும் புத்துலகமாகக் காட்சியளிக்கின்றது; அமெரிக்க நாடுகள் அனைத்தினும் அமெரிக்க ஐக்கிய நாடுகளே எல்லா வளங்களும் நிரம்பப் பெற்றவை. நாகரிகத்திலும் முன்னணியில் நிற்பவை. உலகிற் சிறந்த குபேர நாடாக ஐக்கிய நாடுகள் விளங்கு கின்றன. அங்கு இயற்கைச் செல்வங்களாக மலைகளும் யாறுகளும், இரும்பு, பொன், வெள்ளி, நிலக்கரி, மண்ணெண்ணெய் முதலியனவும் மிகுதியாகக் கிடைக்கின்றன. இந்த இயற்கைச் செல்வங்களும், மக்களது இடையறா உழைப்பும் சேர்ந்து அந்நாட்டைப் பொன் கொழிக்கும் திருநாடாகச் செய்து விட்டன. நாடு கண்ட பேரறிஞர் இத்தகைய திருநாட்டிற்கு அடிகோலிய பெருமை முதலில் கொலம்பiஸச் சார்ந்தது; பின்பு அமெரிக்காவைச் சார்ந்தது. அவருக்குப் பின்பு, அடர்ந்த காடுகளுக்கிடையே பல துன்பங்களுக்கு ஆளாகி, அரும்பாடுபட்டு உள் நாட்டு நிலப்பகுதியை ஆராய்ந்து, ‘இது வாழத்தக்க பகுதி, இது வாழத்தகாத பகுதி, இங்கு இன்னின்ன பொருள்கள் இயற்கையாகக் கிடைக்கின்றன,’ என்பன போன்ற உண்மைகளை வெளிப்படுத்திய பெருமை உழைப்பால் உயர்ந்த வீரர்களுக்கு உரியது. இம்முயற்சியில் இவ்வீரர்கள் அடைந்த இன்னல்கள் பலவாகும். இவர்கள் சில இடங்களில் கொடிய விலங்கு களால் தாக்கப்பட்டனர்; வேறு சில இடங்களில் காட்டாறுகளைக் கடக்க முடியாது தவித்தனர்; மேலும் சில இடங்களில் அந்நாட்டுக்கே உரிய பண்டை மக்களால் தாக்கப்பட்டனர்; பல நாட்கள் உணவின்றித் தவித்தனர். இவ்வரிய முயற்சியில் வெற்றி பெற்றோர் சிலரே; வெற்றி பெறாது வழியிலேயே மாண்டோர் பலராவர். வட அமெரிக்காவின் கிழக்குக் கரையிலிருந்து மேற்குக் கரை வரையில் நடந்து சென்று மேற்குக் கரையைக் கண்டறிய முயன்றவர் பலராவர். இம்முயற்சியில் அவர்கள் பல நூறு கல் தொலைவு பிரயாணம் செய்ய வேண்டியவராயினர். ஆயினும் என்ன? “உழைப்பின் வாரா உறுதிகள் இல்லை” என்னும் பொன் மொழியின் உண்மையை உள்ளவாறு உணர்ந்த அப்பெருமக்கள், உள்ளக் கிளர்ச்சியுடன் எடுத்த வினையைத் தொடுத்து முடிக்க முற்பட்டனர். அங்ஙனம் வெற்றி கண்ட இருவரைப்பற்றிய விவரங்களை அறியின், இன்றைய குபேர நாட்டிற்கு அடிகோலிய பெரு மக்களின் அயரா உழைப்பை நாம் நன்கு உணரலாம். உழைப்பாளர் இருவர் வட அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டு மூன்று நூற்றாண்டுகள் ஆகியும், அதன் மேற்குக் கரை கண்டிறியாப்படாமலே இருந்தது. வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள ராக்கி மலைத்தொடரும், இருள் அடர்ந்த காடுகளும், அங்கங்கு வாழ்ந்த அமெரிக்க இந்தியர் தொல்லையுமே மேற்குக் கரையைக் கண்டறியத் தடையாக இருந்தன. கி. பி. 1803இல் அமெரிக்க ஐக்கியநாடுகளின் குடியரசுத் தலைவராயிருந்த *bஜப்பர்ஸன் என்பவர் மேற்குக் கரை கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அவர், படைத்தலைவர் லூவிஸ் என்பவரையும் தமது அந்தரங்கச் செயலாளரான படைத்தலைவர் கிளார்க்கு என்பவரையும் இம்முயற்சியில் ஈடுபடுமாறு வேண்டினார். அப்பெரியார் அவர்களை நோக்கி, “மிசௌரி என்னும் ஆற்று வழியே மேல் நோக்கிச் சென்று, அந்த ஆறு தோன்றும் இடத்தை அடைக; அங்கிருந்து ராக்கி மலைத்தொடரைக் கடந்து செல்லுக; பிறகு மேல்கடல் நோக்கிப் பாயும் ஓர் ஆற்று வழியே சென்று, மேல்கடலைக் கண்டு வருக. நீங்கள் செல்லும் பகுதிகளைப் பற்றிய எல்லா விவரங்களையும் தெளிவாக அறிந்து வருக,” என்று கூறி வழியனுப்பினார். பிரயாணத் தொடக்கம் கி. பி 1804ஆம் ஆண்டு மே திங்கள் 14ஆம் நாள் படைத் தலைவர் இருவரும் அமெரிக்க வீரரும் வழிகாட்டும் அமெரிக்க இந்தியர் சிலரும் ஆக ஐம்பதின்மார் மூன்று படகுகளில் ஏறிக்கொண்டு மிசௌரி ஆற்றின் போக்கை எதிர்க்துச் சென்றனர்; அதே ஆண்டு நவம்பர் முதல் நாள் *டகோட்டா என்று இப்பொழுது வழங்கும் நாட்டின் தென் பகுதியில் தங்கி மாரிக்காலத்தைப் போக்கினர்; மிசௌரி மிசிசிப்பியுடன் கலக்கும் இடத்திலுள்ள செயின்ட் லூயி என்னும் நகரத்திற்குத் தம்முடன் வந்தவருள் பதினான்குபேரை அனுப்பி, அங்கு இருக்கும்படி ஆணையிட்டனர். பின்னர்ப் படைத் தலைவர் இருவரும் அடுத்த ஆண்டு ஏப்ரல் திங்கள் எட்டாம் நாள் புறப்பட்டு மேற்கு நோக்கி சென்றனர். அவர்களுக்கு உதவியாகக் கனடாவைச் சேர்ந்த ஒருவனும், அவன் மனைவியும் உடன் சென்றனர். அப்பெண்மணி தன் சிறு குழந்தையைத் தன் முதுகில் கட்டிக்கொண்டு வழி நடந்தாள். அவள் தன் இளமைப் பருவத்தில் அக்காட்டுப் பகுதிகளில் தன் பெற்றோருடன் சுற்றித் திரிந்தவள். ஆதலால் அவள் மிகுந்த ஊக்கத்துடனும் உள்ளக் கிளர்ச்சியுடனும் வழிகாட்டிச் சென்றாள். அவளது உதவி பெற்ற படைத்தலைவர் இருவரும் தம் வீரருடன் அவள் காட்டிய வழியே சென்றனர்; தங்களுக்கு முன் எந்த வெள்ளையரும் காலடி எடுத்து வையாத நிலப்பகுதி களையும் காடுகளையும் கடந்து சென்றனர்; ஆங்காங்கு இருந்த அமெரிக்க இந்தியருடன் நட்புக்கொண்டாடினர்; பல இடங்களில் அவ்விந்தியரின் விருந்தினராகத் தங்கிச் சென்றனர்; சில இடங்களில் அவர்களோடு போராடி வெற்றிபெற்றுச் சென்றனர். கருங்கழுகு அருவி பிரயாணிகள் மேலும் மிசௌரி ஆற்றோரமே சென்றனர். மொந்தானா மாகாணம் என்று இப்பொழுது வழங்கும் பகுதியில் ஓரிடத்தில் மிசௌரி ஆற்றின் மிகப்பெரிய அருவி (நீர்வீழ்ச்சி) ஒன்றைக் கண்டனர்; அதனை இமை கொட்டாது வியப்புடன் நோக்கினர்; அவ்வருவியின் அடியில் மிகச் சிறிய தீவு இருத்தலைக் கண்டனர்; அத்தீவில் கழுகு கூடு கட்டி இருந்ததைப் பார்த்தனர். கூடு கட்டி இருந்த இடம், மனிதரோ, விலங்குகளோ போக முடியாதபடி நாற்புறங்களிலும் நீர் சூழ்ந்திருந்தது. படைத் தலைவர் இருவரும் அக்கழுகுக் கூண்டை நினைவிற் கொண்டு, அந்த அருவிக்குக் ‘கருங்கழுகு அருவி’ எனப் பெயரிட்டனர். மேற்கு நோக்கி படைத் தலைவரும் மற்றவரும் அரும்பாடுபட்டு ராக்கி மலைத்தொடரைக் கடந்து, சூலைத் திங்கள் 27ஆம் நாள் ஓரிடத்தை அடைந்தனர். அந்த இடத்தில் மூன்று சிற்றாறுகள் சேர்ந்து மிசௌரி என்னும், பேரியாறு ஆகின்றன. அவ்விடத்iதக் கண்டு மகிழ்ந்த அவர்கள், மேடு பள்ளங்கள் நிறைந்தனவும் அஞ்சத்தக்க காட்சிகளைக் கொண்டனவும் ஆகிய காடுகளைத் தாண்டி ஒரு சிறிய ஆற்றை அடைந்தனர்; தங்கள் படகுகளை அந்த ஆற்றில் விட்டு அவற்றில் ஏறிக்கொண்டனர். அச் சிற்றாறு அவர்களைப் பாம்பாறு என்னும் வேறோர் ஆற்றருகிற் சேர்த்தது. அப் பாம்பாறு மேற்கு நோக்கிப் பாய்ந்து பசிபிக் பெருங்கடலில் கலக்கிறது. ஆதலால் அவர்கள் அப்பாம்பாறு வழியே சென்று எளிதில் பசிபிக் பெருங்கடலை அடைந்தனர். சென்றவர் மீண்டனர் இவ்வாறு பல துன்பங்களை நுகர்ந்து பெரிய மலைத் தொடரையும், பெருங்காடுகளையும் கடந்து சென்று, பசிபிக் பெருங்கடலைக் கண்ட பிரயாணிகள், பெருமகிழ்ச்சி அடைந்தனர்; தங்கள் உழைப்பு, பயன் அளித்தது கண்டு உள்ளம் பூரித்தனர். அவர்கள் அங்குத் தங்கி மாரிக்காலத்தைக் கழித்தனர்; 1806ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 23ஆம் நாள் கிழக்கு நோக்கித் திரும்பினர்; தம்முடன் நெருங்கிப் பழகிய அமெரிக்க இந்தியர்வழி காட்டிக்கொண்டு வர, விரைந்து நடந்தனர். முன்பு பட்ட துன்ப அநுபவங்கள் இப்பொழுது அவர்களுக்குப் பெருந்துணை புரிந்தன. அவர்கள் முடிவில் செயின்ட் லூயி வந்து சேர்ந்தனர். முயற்சியும் உயர்ச்சியும் பசிபிக் பெருங்கடலைக் கண்டு மீள அவர்கள் ஏறத்தாழ 9,000 கல் தொலைவு பிரயாணம் செய்தனர். அவர்கள் இப்பிரயாணத்தில் அமெரிக்க இந்தியருடைய எதிர்ப்புக்களைச் சமாளித்தனர்; கதிரவன் ஒளிபடாத காடுகளில் கொடிய விலங்களுடன் போராடி வழி நடந்தனர்; வானளாவிய ராக்கி மலைத் தொடரைக் கடந்தனர்; ஆங்காங்குப் படகுகளிற் செல்லுங்கால் ஆற்று வெள்ளத்தைச் சமாளித்தனர். அப்பெரு மக்களுடைய துணிச்சல், துன்பங்களை இன்பமாகக் கருதும் மனப் பண்பு, எப்பாடுபட்டேனும் புதுமை காணவேண்டு மென்னும் வேட்கை முதலிய நற்பண்புகள் அவர் தம் பெயர்களை அமெரிக்க வரலாற்றில் பொறிக்கச் செய்தன. குடியரசுத் தலைவரான bஜப்பர்ஸன் அவர்களைப் பாராட்டினhர்; லூசியானா நாட்டின் வடபகுதிக்கு லூவிஸைக் கவர்னராக நியமித்தார்; கிளார்க்கை மிசௌரி மாகாணத்தின் கவர்னராக்கினார். இங்ஙனம் பொதுநலனுக்குத் தந்நலத்தைக் தியாகம் செய்த பெருமக்களாற்றான் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மலைத் தொடர்கள், ஆறுகள், ஏரிகள், அருவிகள் முதலியன கண்டறியப் பட்டன; அவற்றின் விவரங்களும் உலகிற்கு அறிவிக்கப்பட்டன. வட அமெரிக்காவில், உழைப்பால் உயர்ந்த இப்பெருமக்களால் கண்டறியப்பட்ட புதுமைகளுள் அருவிகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் உலகப் புகழ் பெற்ற நயாகரா அருவியைப் பற்றிய விவரங்களை இனிக் காண்போம். 2. நயாகரா அருவி நயாகரா ஆறு வட அமெரிக்காவில் ஐக்கிய மாகாணங்களையும் கனடாவையும் பிரிக்கும் முறையில் ஐந்து ஏரிகள் அமைந்திருக்கின்றன. அவை முறையே சுபீரியர் ஏரி, மிச்சிகன் ஏரி, ஹியூரன் ஏரி, ஈரி ஏரி, ஒன்டேரியோ ஏரி என்பன. இலட்சக் கணக்கான நீரூற்றுக்கள் மென்மையும் தெளிவும் கொண்ட நீரை முதல் நான்கு ஏரிகளிலும் சேர்க்கின்றன. கடல் போல் பரந்துள்ள சுபீரியர் ஏரியில் நீர் நிரம்பி வழிந்து ஹியூரன், மிச்சிகன் ஏரிகளில் பாய்கின்றது. இம்மூன்று ஏரிகளின் நீரும் ஒன்றாகி, ஈரி என்னும் ஏரியில் விழுகின்றது. இந்த நான்கு ஏரிகளின் நீர் நயாகரா என்னும் ஆறாகத் தோற்றமெடுத்து, ஒன்டேரியோ ஏரியில் கலக்க வடகிழக்கு நோக்கிச் செல்லுகிறது. இந்த ஆற்றின் கிழக்குக் கரை அமெரிக்க ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்தது; மேற்குக்கரை கனடா நாட்டைச் சேர்ந்தது. இந்த ஆற்றின் நீளம் ஏறத்தாழ முப்பத்து நான்கு கல். இந்த ஆற்றின் தொடக்கத்திலிருந்து இருபது கல் தொலைவு வரை ஆற்று நீர் மெதுவாகச் செல்வதால் கப்பல் போக்கு வரவு நடைபெற வசதியிருக்கின்றது. ஒன்டேரியோ ஏரியிலிருந்து ஏழுகல் வரையில் இந்த ஆறு மீண்டும் தன் கம்பீரமான நடையுடன் மெதுவாகச் செல்வதால், கப்பல் போக்குவரவு எளிதில் நடைபெறுகின்றது. இடைப்பட்ட ஏழு கல் தொலைவில் பல செங்குத்தான நீர் இறக்கங்களும் நீர்ச் சுழல்களும் உள்ளன. முதல் இருபது கல் தொலைவு வரையில் ஒரு கல்லுக்கு அரை அடி வீதம் ஆறு கீழிறங்கிப் பாய்கிறது; அஃதாவது, மேட்டுப் பகுதியிலுள்ள ஈரி ஏரியிலிருந்து பாயும் நயாகரா ஆற்று நீர்; செல்லச் செல்லப் பள்ளமாக உள்ள நிலத்தில் பாய்கின்றது. கடைசி ஏழுகல் தொலைவில் ஆறு மொத்தம் அரை அடி அளவே கீழிறங்கிப் பாய்கிறது. இடைப்பட்ட ஏழு கல்தொலைவில் குறிப்பிட்ட ஓர் இடத்திலிருந்து நயாகரா ஆறு கிழக்கிலும் மேற்கிலும் இரண்டாகப் பிரிந்து திடீரெனப் பாய்கின்றது. இங்ஙனம் அருவிகளாக விழுமுன் ஆற்றின் அகலம் இரண்டு கல்லிலிருந்து ஒரு கல் அளவிற் குறுகுகிறது. நயாகரா ஆற்றின், ஆறு சதவீத நீர் வலப்பக்கம் விழுகின்றது. அதுவே அமெரிக்க ஐக்கிய நாடுகளில் விழும் அருவியாகும். அஃது அமெரிக்க அருவி எனப்படுகிறது. ஆற்றின் எஞ்சிய நீர் இடப்பக்கம் கனடா நாட்டில் விழுகின்றது. அது குதிரை லாட வடிவில் வீழ்வதால் குதிரை லாட அருவி எனப் பெயர் பெற்றது. இவ்விரண்டு அருவிகளின் பொதுப்பெயர் நயாகரா அருவி என்பது. இவ்விரண்டு அருவிகளையும் முதன் முதல் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் பெல்ஜிய நாட்டுச் சமயப் பிரசாரகரும் புதிய இடங்களைக் கண்டுபிடிக்க முற்பட்ட வருமான லூயி ஹென்னிபின் என்பவரேயாவர். இப்பெரியார் 1697இல் நயாகரா அருவியைப் பற்றி விரிவான நூல் ஒன்றை எழுதியுள்ளார். ஆற்றின் காலம் இவ்வாறு உலகப் புகழ்பெற்ற நயாகரா அருவியைத் தோற்றுவித்துள்ள நயாகரா ஆற்றின் காலத்தை அறிய முற்பட்ட ஆராய்ச்சியாளர் பலராவர், மிகப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஏரிகள் உள்ள பகுதியில் அடிக்கடி உண்டாகி உருகிக் கொண்டிருந்த பனிக்கட்டி மலைகள் அந்நிலப்படுகையை அரித்துத் தண்ணீர் செல்வதற்கு ஒரு வழியை உண்டாக்கின. இங்ஙனம் உண்டாக்கப்பட்ட வழியிற் பாய்வதே நயாகரா ஆறாகும். இங்ஙனம் இந்த ஆறு தோன்றிய காலம் இன்னது எனத் திட்டமாகக் கூற முடியவில்லை; ஆயினும் இஃது ஏறத்தாழ இருபத்தையாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருத்தல் வேண்டும் என்று ஒருவாறு கூறலாம் என ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். போக்கு வரவு ஈரி ஏரிக்கும் ஒன்டேரியோ ஏரிக்கும் இடையில் ஒரு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாகவே போக்கு வரவு நடைபெறுகின்றது. இக்கால்வாய் அமைக்கப்படுவதற்கு முன் பழைய கால்வாய் ஒன்று இருந்தது. அதில் இருபத்தைந்து மதகுகள் இருந்தன. ஒவ்வொரு மதகும்270 அடி நீளமும் 45 அடி அகலமும் உடையது. கனடா அரசாங்கத்தால் கட்டப்பட்ட இரண்டாம் கால்வாய் 1931இல் படகுப் போக்குவரவுக்காகத் திறந்து விடப்பட்டது. இப் புதிய கால்வாயின் தென் பகுதி பெரும்பாலும் பழைய கால்வாயின் விரிவே என்னலாம். இக்கால்வாயின் வடபகுதி ஒரு புதுவழியே சென்று போர்ட் வெல்லர் என்னும் இடத்தில் ஒன்டேரியோ ஏரியுடன் கலக்கின்றது. இப்புதிய கால்வாய் 25 கல் நீளமுள்ளது. இதற்கு நான்கு தனி மதகுகள் உண்டு. அவை எண்ணூற்று இருபதடி நீளமும் எண்பது அடி அகலமும் உடையவை. ஓவ்வொரு மதகும் நாற்பத்தாறு அடி உயரமுள்ள தூக்குப் பலகையை உடையது. நயாகரா அருவி நயாகரா ஆறு ஈரி ஏரியிலிருந்து இருபது கல் தொலைவுக்கு மேல் வரும் பொழுது, இடையில் செங்குத்தான பாறை, ஆற்றின் போக்கை இரண்டாகப் பிரிக்கின்றது. இங்ஙனம் பாறையால் பிரிக்கப்பட்டு வலப்பக்கம் செல்லும் ஆற்றின் பகுதியில் முன் சொன்னவாறு முழு ஆற்று நீரில் ஆறு சத வீதமே பாய்கின்றது; எஞ்சிய பகுதி முழுவதும் ஆற்றின் இடப்பகுதியில் பாய்கின்றது. வலப்பக்கம் செல்லும் ஆற்றுப் பகுதி, மேலும் அம்மேட்டுப் பகுதியைச் சுற்றிச் செல்ல வழியின்றிக் குறிப்பிட்ட ஓரிடத்திலிருந்து நூற்று அறுபத்தைந்து அடிப் பள்ளத்தில் பேரிரைச்சலுடன் வீழ்கின்றது. அது விழும் இடத்தில் அதன் அகலம் ஆயிரம் அடி. இடப்புறம் செல்லும் ஆற்று நீரும் இவ்வாறே பாறையைச் சுற்றிச் செல்ல வழியின்றி ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து நூற்றறுபது அடி ஆழத்தில் விழுகின்றது. அது விழும் இடத்திலுள்ள பாறை குதிரைக் குளம்பின் வடிவத்தில் அடைந்துள்ளது. அப்பாறையிலிருந்து கீழ்நோக்கி விழுகின்ற நீரின் வளைவுப்பரப்பின் நீளம் இரண்டாயிரம் அடிக்கு மேற்பட்டதாகும். முன்னது அமெரிக்க ஐக்கிய மாகாண எல்லைக்குள் விழுவது; பின்னது கனடா நாட்டு எல்லைக்குள் விழுவது. முன்னது அமெரிக்க அருவி என்றும், பின்னது குதிரை லாட அருவி என்றும் பெயர் பெற்றுள்ளன. அமெரிக்க அருவி நீர் அளவில் குறைவாக இருப்பினும், அதனைத் தக்க முறையில் விழும்படி செய்திருக்கும் ஏற்பாடுகளால் அது மிக்க பயன் உடையதாக விளங்குகின்றது. கனடா நாட்டுப் பகுதியிலிருந்து பார்ப்பவருக்கு அமெரிக்க அருவி உச்சியிலிருந்து ஆயிரம் அடி அகலம் வரை ஒரே நேராகக் கீழ்நோக்கி விழுவது போலத் தோன்றும். ஆயின், உண்மையில் அது விழும் பரப்பு நடுப்பகுதியில் சிறிது பின்னோக்கியுள்ளது. குதிரை லாட அருவியின் சிறப்புக்கு அது கொண்டுள்ள பெரும் பகுதி நீரே காரணமாகும். இது மேல் வளைவிலிருந்து கீழ் நோக்கி விழும்போது உண்டாகும் நீரின் அமைப்பு, இதன் சிறப்புக்கு மற்றொரு காரணமாகும். இவ்வருவியில் பல அடி உயரம் காட்சியளிக்கும் வெண்ணிற நுரை உண்டாகின்றது. அருவியின் நிறமும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக இருக்கின்றது. காலத்துக்கு ஏற்றபடியும், காற்றடிக்கும் திசைக்கு ஏற்றபடியும் அருவியின் வடிவம் பாறையில் ஏற்பட்டுள்ள ஒரு சிறு பிளவினால் இவ்வருவியின் வடிவம் மாறலாம். அதன் பயனாக அமெரிக்க அருவிக்குச் செல்லும் நீரின் அளவு குறையலாம் என்று சிலர் கருதுகின்றனர். 1764ஆம் ஆண்டிலிருந்து மேற் சொல்லப்பட்ட சிறு பிளவில் உள்ள பாறை ஆண்டுக்கு ஐந்து அடியாகத் தேய்ந்து வந்தது. அத்தேய்வு மேலும் மிகாமல் வரவரக் குறைந்துகொண்டே வருகின்றது. எனவே, இதன் குதிரைலாட அமைப்புப் பெரிதும் பாதிக்கப் படாது என்று அறிஞர் கூறுகின்றனர். பிளவு மிகுதிப் படாமல் இருக்கவும், அமெரிக்க அருவிக்குச் செல்லும் நீர் குறையாம லிருக்கவும் இரு அரசாங்கங்களும் தக்க ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன. உயர்ந்த பெரிய பாறையைச் சுற்றி இரு பிரிவுகளாக நயாகரா ஆறு பிரிந்து செல்வதால், இடையிலுள்ள பாறைப் பகுதி ஒரு தீவாகக் காட்சியளிக்கின்றது. அத்தீவு *வெள்ளாட்டுத் தீவு என்று பெயர் பெறும். இரண்டு ஆற்றுப்பகுதி நீரும் கீழே விழுகின்ற இடங்களுக்கு இடைப்பட்ட தூரம் ஆயிரத்து முன்னூறு அடியாகும். குதிரை லாட அருவிக்குக் கீழ் இருநூற்றைம்பது அடி உயரமுள்ள செங்குத்தான பாறைச் சுவர்கள் இருக்கின்றன. அவற்றின் இடையேதான் அருவி நீர் பேரிரைச்சலுடன் பாய்கின்றது. அது பாயும் பகுதியில் பல நீர்ச்சுழல்கள் உண்டாகின்றன. அருவிநீர் விழுந்து செல்லும் பாதையில் சில சிறு தீவுகள் அடைந்திருக்கின்றன. அவை அருவிகளுக்கு அண்மையிலேயே இருப்பவை. வியத்தகு இவ்விரண்டு அருவிகளை அடுத்துள்ள தீவுகளையும் நயாகரா ஆற்றங்கரையோரமாக உள்ள அழகு வழியும் இடங்களையும் இரு நாட்டு அரசாங்கங்களும் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்துள்ளன. அமெரிக்க ஐக்கியமாகாணங்கள் அமைத்துள்ள பூங்கா †பிராஸ்பெக்ட் பூங்கா என்பது. இது 1885 முதல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. கனடா அரசாங்கம் குதிரை லாட அருவிக்கு அருகில் உள்ள எழில் நிறைந்த இடத்தில் இரண்டரைக் கல் நீளம் ஆற்றின் ஓரமாகவே ஒரு பூங்காவை அமைத்துள்ளது. அதன் பெயர் விக்டோரியா பூங்கா என்பது. இப்பெயர் இங்கிலாந்தை ஆண்ட விக்டோரியா அரசியாரின் நினைவாக வைக்கப்பட்ட பெயராகும். அது 1925 முதல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பூங்காவிலும் பல நிறங்களைக் கொண்ட ஒளி விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன. அவை நூற்று நாற்பத்து நான்கு கோடி மெழுகுவர்த்தி ஒளி உடையவை. அவை ஒவ்வொரு மாலையிலும் அருவிகளைத் தம் பன்னிற ஒளிகளால் அழகு செய்கின்றன. அமெரிக்க அருவியின் இடப்புறம் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களையும் கனடாவையும் இணைக்கும் சர்வதேசப் பாலம் ஒன்று ஏறத்தாழ நூற்றைம்பது அடி உயரத்தில் திறம்பட அமைக்கப்பட்டுள்ளது. இயற்கைத் தெய்வம் எழில் நடம் புரியும் இந்த அருவிகள் உள்ள இடத்திற்கு ஆண்டு தோறும் ஏறத்தாழ இருபது லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வருகின்றனர். அவர்கள் இயற்கையின் தோற்றத்தையும், அருவிகள் வாயிலாக இயற்கை யின் ஆற்றலையும் கண்டு கண்டு இன்பப் பேறு பெறுகின்றனர். இங்ஙனம் வருகின்ற மக்களுக்கு வசதியாக, அருவிகளின் அருகில் நின்று பார்க்க மேடைகள் அமைக்கப் பட்டுள்ளன. அருவியிலிருந்து மின்சாரம் இயற்கையன்னையின் இதயமாக விளங்கும் நயாகரா அருவியைப் பார்க்க செல்வோர் தொகை, அமெரிக்காவிலுள்ள வேறு எந்த இயற்கைச் காட்சியையும் பார்க்கச் செல்வோர் தொகையைவிட மிகுதியாகும். ஆதலால் அதன் கலையழகை காப்பாற்ற அவ்வருவிகளிலிருந்து இரு நாடுகளும் மின்சார உற்பத்திக்காக எடுத்துக்கொள்ளும் நீரின் அளவு, ஒரு சர்வதேச உடன்படிக்கைப்படி வரையறுக்கப்பட்டுள்ளது. கனடா ஒரு வினாடிக்கு முப்பத்தாறாயிரம் கன அடி நீரும், அமெரிக்க ஐக்கிய நாடுகள் இருபதாயிரம் கன அடி நீரும் எடுத்துக்கொள்ளலாம் என்று அவ்வுடன்படிக்கை கூறுகின்றது. ஐக்கிய மாகாணங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நீரிலிருந்து ஐந்து லட்சம் குதிரைச் சக்தி விசையுடைய இயந்திரங்கள் மின் சக்தியை உற்பத்தி செய்கின்றன. ஐக்கிய மாகாணங்களில் வாழும் மக்களுள் ஏறத்தாழப் பாதித் தொகையினருக்கு இங்ஙனம் உற்பத்தி செய்யப்படும் மின் சக்தியே பயன்படுகின்றது. இங்ஙனம் எடுக்கப்படும் மின் சக்தி 1879இல் முதல் முதலாகப் பிராஸ்பெக்ட் பூங்காவுக்கு வெளிச்சம் தரவே பயன்படுத்தப் பட்டது; 1881இல் வணிகர்கள் பயன்படுத்தவும் விற்கப்பட்டது. கனடாவுக்கு ஒதுக்கப்பட்ட நீரில் பதினாயிரம் கன அடி நீர் தவிர எஞ்சிய தண்ணீர் முழுமையும் மின் சக்தி எடுக்கவே பயன்படுகிறது. மூன்று மின் சக்தி நிலையங்கள் இப்பணியை ஆற்றுகின்றன. அம்மின் சக்தியின் பெரும்பகுதி அலுமினியம், குளோரின் திரவம், கால்சியம் கார்பைட் முதலிய பொருள்களை உண்டாக்கும் தொழிற்சாலைக்குப் பயன்படுகிறது. எஞ்சிய பகுதி பல நகரங்களுக்கு விளக்கெரிக்கவும், வேறு துறைகளுக்கும் பயன்படுகிறது. ஏறத்தாழ இருநூறு கல் வரையில் இம்மின்சக்தி கொண்டு செல்லப்படுகிறது. நயாகரா கோட்டை நயாகரா ஆறு தோன்றும் இடத்தில் உள்ள கிழக்குக் கரையில் பெரிய கோட்டை ஒன்று இருக்கின்றது. இஃது ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் பழமையுடையது. இது முதலில் பிரஞ்சுக்காரருக்கு உரியதாக இருந்தது. பின்பு ஆங்கிலேயருக்கு உரியதாயிற்று. அமெரிக்க சுதந்திரத்திற்குப் பிறகு இஃது அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இக் கோட்டையில் பிரஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் கட்டிய வரலாற்றுத் தொடர்புடைய கட்டடங்கள் இருக்கின்றன. ஏரிகளுக்குச் செல்லும் சிறப்புப் பாதையில் அமைந்திருத்தலால் இது வட அமெரிக்காவில் சிறப்புக் கோட்டையாக விளங்குகிறது. போர்க் காலங்களில் இது சிறந்த படைத் தளமாக விளக்கமுற்றது. நயாகரா அருவி (1) இங்கு நயாகரா அருவி என்பது ஒரு நகரத்தின் பெயராகும். இது நயாகரா ஆற்றின் மேற்குக் கரையில் குதிரை லாட அருவிக்கு எதிர்ப்பக்கத்தில் அமைந்திருக்கிறது. கனடாவைச் சேர்ந்த ஒன்டேரியோ மகாணத்திலுள்ள வெல்லாண்டு கவுண்டி என்ற பகுதிக்கு இது, முதல் துறைமுக நகரம். இதன் மக்கள் தொகை 1941இல் ஏறத்தாழ இருபதாயிரத்து அறுநூறாகும். இது புகைவண்டி நிலையம் அமையப்பெற்றது. அண்மையிலுள்ள சிறப்பு நகரங்களுடன் இதற்கு மின்சார ரயில்வேயின் தொடர்பு உண்டு. அருவியைப் பார்க்க வரும் மக்கள் தொகையால் இவ்வூர் சிறப்புப் பெற்றுள்ளது. இவ்வூரில் மின்சக்தியால் இயங்கும் தொழிற்சாலைகள் பல தோன்றியுள்ளன. டோரன்டோவுக்கும் பிற நகரங்களுக்கும் இங்கிருந்தே மின்சக்தி அனுப்பப்படுகின்றது. நயாகரா அருவி (2) இங்கும் இப்பெயர் ஒரு நகரத்தையே குறிக்கின்றது. இந்நகரம் நயாகரா ஆற்றின் வலக்கரையோரம் அமைந்துள்ளது. இஃது அமெரிக்க ஐக்கிய மாகாணங்களுக்கு உரியது. இதுவும் முன்னதைப் போலவே புகைவண்டிப் பாதையில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை ஏறத்தாழ எண்பதாயிரம். இந்நகரம் அமெரிக்க அருவிக்கு ஏழு கல் முன்னிருந்து அருவி வரையில் ஆற்றின் கரையோரமாக அமைந்துள்ளது. மேலே சொல்லப் பட்ட மின்சக்தியின் உதவியால் அங்குள்ள தொழிற்சாலைகளில் கோதுமை நொய், காஸ்டிக் சோடா, காகிதம், அலுமினியம், ரஸாயனக் கலவைகளால் ஆன பல பொருள்கள் முதலியன தயாரிக்கப்படுகின்றன. 1940ஆம் ஆண்டில் இப்பொருள்களின் மொத்த உற்பத்தி பத்துக்கோடி டாலருக்கு மேற்பட்டதாகும். 1916ஆம் ஆண்டிலிருந்து இந்நகர ஆட்சி அரசாங்க உயர் அலுவலர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1856இலிருந்து ரோமன் கத்தோலிக்கர்களால் நடத்தப்பட்டுவரும் நயாகரா பல்கலைக் கழகம் இங்கு இருக்கின்றது. நயாகரா அருவிக்கு அருகில் 1750இல் ‘சிறு நயாகரா’ என்ற பெயருடன் ஒரு கோட்டை கட்டப்பட்டது. 1806இல் போர்ட்டர் என்ற பெயர் கொண்ட நீதிபதி ஒருவர் அருவியின் கரையில் மான்செஸ்டர் என்னும் சிற்றூரை உண்டாக்கினார். 1835இல் நயாகரா ஆற்றின் குறுக்கே முதல் முதலாக ஒரு பாலம் கட்டப்பட்டது. அதற்கு இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. அப்பாலத்தைச் சுற்றிலும் ஒரு சிற்றூர் அமைந்தது. பின்னர் நாளடைவில் மான்செஸ்டர் என்னும் சிற்றூரும் தொங்கு பாலத்தருகில் உண்டான சிற்றூரும் ஒன்றாக இணைந்து, நயாகரா அருவி என்னும் நகரமாக மாறியது. கண்கவரும் காட்சி நயாகரா அருவியைப் பற்றிப் பல நூல்கள் வெளி வந்துள்ளன. ஓவியர், பாவலர், எழுத்தாளர், வரலாற்றறிஞர், பல்வேறு கலைகளில் அறிஞராயுள்ளவர் எனப் பல திறப் பட்டவர் நயாகரா அருவியைப் பற்றிய பல விவரங்களை எழுதியுள்ளனர். எவரும் இவ்வருவியை எளிதிற் சென்று காணலாம். நமது நாட்டு முதலமைச்சராக உள்ள பண்டித ஜவஹர்லால் நெஹ்ருவும் அமெரிக்க சென்றிருந்த பொழுது இவ்வருவியைத் தம் விழியாரக் கண்டு உள்ளம் பூரித்தனர். “இதன் அழகிய தோற்றத்தை நேரில் கண்டிராதவரும் இதன் சிறப்பைப் பற்றிய நுணுக்கமான வருணனை தெளிவான கருத்தினைத் தராது. நேரில் கண்டவருக்கோ, இவ்வருணனை பயனற்றதாகத் தோன்றும்,” என்று ஓர் எழுத்தாளர் இதனைப் பற்றி எழுதியுள்ளனர். அமெரிக்க அருவியின் வடகோடியில் ‘பிராஸ்பெக்ட் முனை’ என்று ஓரிடம் இருக்கின்றது. அங்கிருந்து நியூயார்க் மாகாணத்தையும் கனடாவையும் இணைக்கும் பாலம் வரையில் செல்லும் பொழுதுதான் இரண்டு அருவிகளின் கண்ணைக் கவரும் காட்சி தெளிவாகப் புலப்படும். பின்பு அப்பாலத்தின் வழியே சென்று கனடிய நாட்டில் குதிரை லாட அருவியை அடையும் போதும் அழகிய தோற்றம் காணப்படும். அமெரிக்கப் பகுதியில் பிராஸ்பெக்ட் முனையில் அல்லது ஹென்னிபின் முனையில் நின்று பார்ப்பினும், அல்லது இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட உயரிய இடத்திலிருந்து பார்ப்பினும், இரண்டு அருவிகளின் அழகிய பக்கக்காட்சிகளைக் கண்டுகளிக்கலாம். பாலத்தைக் கடந்து வெவ்வெறு இடங்களிலிருந்து பார்ப்பின், அருவிகள் இரண்டும் வெவ்வேறு தோற்றங்களைத் தந்து பார்ப்பவரை பரவசபடுத்தும். வீரச் செயல்கள் இவ்வருவிகளில் பல வீரச் செயல்கள் பலரால் செய்யப் பட்டுள்ளன. *சாம் பாட்ச் என்பவர் 1829இல் நயாகரா ஆற்றின் ஆழமான பகுதிகளில் இரண்டு முறை குதித்துப் பல விளையாட்டுக்களைச் செய்து காட்டியுள்ளார். ஆடவரும் பெண்டிரும் இவ்வருவிகளில் நீந்திச் சென்றுள்ளனர். சிலர் நீர்ச் சுழல்களின் வழியே நீந்திச் சென்றனர். 1860இல் ஏழாம் எட்வர்டு மன்னர் இவ்வருவிகளுக்கு வந்திருந்த பொழுது *பிளோண்டின் என்பவர் பாறைகளின் ஊடே கட்டப்பட்ட ஒரு கயிற்றின்மீது நின்று வியத்தகு வீரச் செயல்களைச் செய்து காட்டினார்; ஓர் உருளையுடைய தள்ளுவண்டி ஒன்றில் இள நங்கை ஒருத்தியை அமரச்செய்து, தம் கண்களைக் கட்டிக் கொண்டு அவ்வண்டிiய அக்கயிற்றின் வழியாகத் தள்ளிச் சென்றார். இவ்வற்புதச் செயலைப் படத்திற் கண்டு மகிழ்க. குறிப்புகள் * Ether *Evolution †Creative Evolution * Jefferson * Dakota * Goat Island † Prospect * Sam Patch * Blondin * Mungo Park * பிரயாணம் †Gambia * Pisania * Timbuktoo * Doctor Moffut † Kalahari Leeba † Leeyambee * Loanda * லிவிங்ஸ்டன் அவ்வருவியை முதன் முதலில் கண்டு பிடித்தது 1855 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 17ஆம் நாள் ஆகும். * Rhodesia † Rhodes Major Serfa Pinto † Rankin * Major Hill Gibbons * Rain Forest * Devil’s Cataract * Shimsa * Generating Stations † Receiving Stations ‡ Distributing Stations § ransmitting Stations * Pumping Stations † Mekedatu Project * Reservoir * Kilo Watt † Honnemaradu Project ‡ Hirebaskkar § Karegal √Talkalele ** “பயிலுமேல் நிலைகள் தோறும் பந்தடித் தாடு வாரை மயிலெனக் குயில்பின் காட்ட, மழலைவாய் இசையால் அஞ்சிக் குயிலென மயில்பின் காட்டக் குழைகளால் அளகக் கொத்தால் வெயிலொடு புயலும் காட்டி மீட்டுமீட் டழையா நிற்பார்.” திருநகரச் சருக்கம், செ.. 12 ** “.... .... ... முன்றிலிடைத் தாம்பைப் பிடிக்குந் தரம்போல வூருகின்ற பாம்பைப் பிடிக்கும் பிராயத்தாள்--பூம்பாவைச் சேய்க்குரைக்கும் உண்மையாள் சிற்றிலைச்சிற் றாறழிக்க தாய்க்குரைக்க வோடுந் தகைமையாள் -- வாய்க்குணவா யுண்ணுவதும் வெண்மணற்சோ றூட்டுவது போல்மார்க்கம் பண்ணுவது மெய்போலப் பார்த்திருந்து -- வண்ணமாய் பிள்ளைதனை ஊட்டியந்தப் பிள்ளையுண்ணாக் குற்றமெல்லாம் கிள்ளையுடன் ஏதோ கிளர்த்துவாள் --கிள்ளைபோற் பாவைதனைச் செஞ்சொற் பயில்விக்க வேணுமென்று பூவைதனை வேண்டிப் புகலுவாள் .....” ** “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்.” III விக்டோரியா அருவி 1. ஆப்பிரிக்கா இயற்கையமைப்பு உலகத்திலுள்ள கண்டங்களுள் மிகப்பெரியது ஆசியா. அடுத்துப் பெரியதாயிருப்பது ஆப்பிரிக்கா என்பது. இக்கண்டம் வடக்கே மத்தியதரைக் கடலையும், தெற்கே இந்திய, அட்லாண்டிக் பெருங்கடலையும், கிழக்கே இந்தியப் பெருங்கடலையும் எல்லைகளாக உடையது. இப்பெருங்கண்டத்தில், ஆட்லெஸ், குவென்சோரி, டிராக்கன்ஸ்பர்க்கு என்பவை முக்கிய மலைத்தொடர்களாகும். கிலிமாஞ்சாரோ, கெனியா, என்பவை மிக்க உயரமான கொடுமுடிகள். காங்கோ, நைல், நைஜர், ஆரஞ்சு, சாம்பசி என்னும் பேரியாறுகள் இக்கண்டத்தில் பாய்கின்றன. ஆல்பர்ட்டு, சாடு, எட்வர்டு, நியாசா, தாங்கன்ஈகா, விக்டோரியh என்னும் சிறப்புடை ஏரிகள் இங்கு அமைந்துள்ன. சகாராப் பாலைவனமும் கலஹாரிப் பாலைவனமும் இக்கண்டத்தில்தான் இருக்கின்றன. ஸ்டான்லி, விக்டோரியா என்னும் சிறப்புடை அருவிகளும் இக்கண்டத்தில் அமைந்துள்ளன. ஆப்பிரிக்கா கண்டத்தை மூன்று சிறப்புப் பகுதிகளாக பிரிக்கலாம். ஒரு பகுதி பாலைவனம்; மற்றொரு பகுதி புல்வெளி; பிரிதொரு பகுதி காடுகள். இக்கண்டத்தின் நடுப்பகுதி, கதிரவன் பெரும்பாலும் நுழைய முடியாத காடுகளைக் கொண்டது. இக்காட்டுப் பகுதிக்கு வடக்கிலும் தெற்கிலும் புல்வெளிப் பகுதிகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளே கால் நடைகளை மேய்ப்பதற்கும், பயிர் செய்வதற்கும் ஏற்ற இடங்களாகும், வட ஆப்பிரிக்காவில் மேற்குப் பகுதியில் சகாரப் பாலைவனமும், தென் ஆப்பிரிக்காவில் கலஹாரிப் பாலைவனமும் அமைந் துள்ளன. சகாராப் பாலைவனம் ஆப்பிரிக்காவின் பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியாக இருக்கின்றது. இதற்கு வடக்கேயுள்ள மத்தியதரைக் கடற்பகுதியும், கலஹாரிக்குத் தெற்கேயுள்ள கடற்கரைப் பகுதியும் செழிப்பான நிலப்பகுதிகளாகும். கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள இத்தியோப்பியா என்னும் பகுதி மேட்டுப் பகுதியாகும். மிக்க உயரமுள்ள மலையுச்சிகள் கிழக்கு ஆப்பிரிக்காவிலேயே இருக்கின்றன. இருள் கவிந்த கண்டம் வட ஆப்பிரிக்காவில் நைல் ஆறு பாயும் எகிப்து என்னும் நாடு வளமுடையது. அஃது ஏறத்தாழ ஆறாயிரம் ஆண்டுகளாக வரலாற்றுச் சிறப்புடையது. அதற்கு மேற்கேயுள்ள வட ஆப்பிரிக்காப் பகுதி முழுவதும் சகாராப் பாலைவனமாகக் காட்சியளிப்பதாலும், தெற்கில் கலஹாரிப் பாலைவனம் பரவியிருப்பதாலும், இவற்றைத் தாண்டி உள் நாட்டிற் புகுந்து ஆராய்ச்சி செய்ய ஐரோப்பியரால் முடியவில்லை. கண்டத்தின் நடுப்பகுதி அடர்ந்த காடுகளை உடையது. ஆதலால் அக்காடு களைத் தாண்டிச் செல்லவும் இயலவில்லை. கண்டத்தின் உட்பகுதியிலிருந்து தோன்றிக் கிழக்கிலும் மேற்கிலும் செல்லும் பேரியாறுகள் நீர்ச்சுழல்களையும் விரைவான நீரோட்டங் களையும் பெற்றுள்ள காரணத்தால், அவ்யாறுகளின் வழியாகக் கண்டத்தின் உட்பகுதிக்குச் செல்லவும் முடியவில்லை. இக்காரணங்களால் ஐரோப்பியர் இப்பெருங் கண்டத்தின் கரையோரப் பகுதிகளை மட்டும் அறிந்திருந்தனரே அன்றி, உட்பகுதியை அறியக் கூடவில்லை. இதனால் கண்டத்தின் உட்பகுதியைப் பற்றிய தெளிவான அறிவு அவர்களுக்கு இல்லாதிருந்தது. இதனாற்றான் அவர்கள் ஆப்பிரிக்காவை ‘இருள் கவிந்த கண்டம்’ என்று கூறிவந்தனர். இருள் நீக்கம் ஊக்கம், உழைப்பு, துன்பங்களை இன்பமாகக் கருதும் மனப்பண்பு, பொறுமை இவற்றை அணிகலனாகக் கொண்டு இரண்டு துருவங்களையும், பல்லாயிரம் கல் தொலைவு பரந்து கிடக்கும் கடற்பரப்பிலுள்ள கணக்கற்ற தீவுகளையும் கண்டறிந்து உலகத்தையே சுற்றி வந்த ஐரோப்பியர், ‘ஆப்பிரிக்கா இருண்ட கண்டம்’ என்று கூறியதோடு நின்று விடவில்லை; மேற்கு ஆப்பிரிக்காவையும் கிழக்கு ஆப்பிரிக்காவையும் தென் ஆப்பிரிக்காவையும் படிப்படியாக ஆராயத் தலைப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்காவைப் பற்றிய விவரங்களை உலகறியச் செய்த பெருமை *மங்கோ பார்க்கு என்பவரையே சாரும். இவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்; 1771இல் பிறந்தவர்; கற்றார் பேருரைகளைக் கேட்டுக் கலையுணர்ச்சி பெற்றவர்; மருத்துவத் துறையிலும், இயற்கைப் பொருள்களை ஆய்வதிலும், சிறந்த பயிற்சி உள்ளவர். இயற்கைப் பொருள்களை ஆராய்வதிலும், புதிய இடங்களைக்காண்பதிலும் இவர் உள்ளம் ஈடுபட்டது; அதனால் பல நாடுகள் செல்லும் கப்பல் ஒன்றில் மருத்துவராக வேலை பார்க்கத் தொடங்கினார். அக்காலத்தில் பல நாடுகளையும் கண்டறிய வேண்டும் என்று ஆவலோடு இங்கிலாந்தில் ஒரு கழகம் பணியாற்றிவந்தது. அக்கழகத்தார் ஆப்பிரிக்காவைப் பற்றிய உண்மைகளை அறியத்தக்கார் ஒருவரை அனுப்ப வேண்டுமென்று விழைந்தனர். அவர் விருப்பத்தை அறிந்த மங்கோ பார்க்கு, தாம் அப்பணியில் ஈடுபடுவதாகக் கூறினார். அவருடைய தகுதிகளை நன்கு உணர்ந்த கழகத்தார், அவர் தலைமையில் சிலரை அனுப்பினர்; “மேற்கு ஆப்பிரிக்கா விலுள்ள நைஜர் என்னும் பேரியாற்றின் போக்கையும், அப்பகுதியில் உள்ள மக்களுடன் தொடர்புகொண்டு வாணிகம் நடத்த வசதி உண்டா என்பதையும் ஆராய்ந்து வருக,” என்று கூறினர். பார்க்கின் *செலவு நாடுகாணும் முயற்சியில் ஈடுபட்ட மங்கோ பார்க்கு 1795ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து கப்பலில் புறப்பட்டார்; ஒரு திங்கள்வரை மேற்கு ஆப்பிரிக்காவின் கரையோரமாகச் சென்று, †காம்பியா என்னும் பேரியாறு கடலில் கலக்குமிடத்தில் தம் கப்பலை நிறுத்திக் கரையை அடைந்தார்; உள்நாடு செல்ல அப்பேரியாறே தக்க சாதனமாக இருப்பதை அறிந்து, அதன் வழியே ஏறத்தாழ இருநூறு கல் தொலைவு சென்று, *பைசானியா என்னும் நகரை அடைந்தார்; உள்நாட்டில் வழங்கும் மக்களின் மொழியையும், பற்பல இடங்களுக்குச் செல்லும் வழியையும் பலர் வாயிலாக உணர்ந்து கொண்டார்; சிறிது காலம் அங்குத் தங்கிச் சுதேசிகள் பேசிய மொழியை ஓரளவு கற்றார்; சுதேச மொழிகள் பலவற்றை அறிந்தவனும், ஆங்கிலம் அறிந்தவனுமாகிய நீகிரோவர் இருவர் துணையைக் கொண்டு உள்நாடு செல்ல முயன்றார். வழியில் பல ஊர்களில் இருந்த தலைவர்கள் பார்க்கை வரவேற்று, வேண்டும் உதவிகள் செய்தனர், சில இடங்களில் சுதேசிகள் எதிர்ப்புப் பலமாக இருந்தது. அதனால் பார்க்கு அவர்கள் அறியாதபடி இரவில் பிராயணம் செய்தார்; கொடிய விலங்குகள் வாழும் காடுகளைக் கடந்தார்; இறுதியில் ‘செனிகல்’ என்னும் ஆற்றின் கரையை அடைந்தார். அதன் எதிர்க் கரையைத் தாண்டிச் செல்லுதல் வேண்டும் என்று பார்க்கு விரும்பினார். அப்பகுதியிற் செல்லும் புதியவர் அப்பகுதிக்குரிய அரசனுக்கு பெருந்தொகை அளித்த பின்பே, அப்பகுதியினுள் நுழைய அநுமதிக்கப்படுவர். மங்கோ பார்க்கு அப்பெருந்தொகையைக் கொடுத்து அந்நாட்டைக் கடந்தார். அடுத்து இருந்த சில நாடுகளைக் கடந்து செல்லுகையில், ஒரு நாட்டு அரசன் அவர்மீது ஐயமுற்று அவரைச் சிறையில் அடைத்தான். பாவம்! நாடு காணச்சென்ற பார்க்கு-ஒரு குற்றமும் செய்யாத பார்க்கு-பல நாள் சிறையில் துன்புற்றார்; ஒரு நாள் இரவு அங்கிருந்து தப்பித் தம் குதிரைமீது ஏறிக்கொண்டு, அடுத்த நாட்டிற்குச் சென்றார். நைஜர் ஆறு இவ்வாறு சென்ற அவர், வழியில் நைஜர் என்னும் பேரியாற்றைக் கண்ணுற்றார்; பளிங்கு போன்ற அதன் நீரைத் தம் ஆவல் தீரப் பருகினார்; பரந்த வெறியில் தெளிவுடன் ஓடும் அப்பேரியாறு அவர் உள்ளத்தைக் கவர்ந்தது. அப்பகுதிக்கு உரிய அரசன் அவரை உடனே தன் நாட்டை விட்டு ஏகுமாறு கட்டளையிட்டான். பாவம்! பார்க்கு அவ்வாணைக்குக் கட்டுப் பட்டு மற்றோர் நகரம் நோக்கி வழி நடக்கலானார். அவர் காட்டு வழியே செல்லுகையில், அரிமா ஒன்று குறுக்கிட்டது. அதனை நேரிற் கண்ட பார்க்கு நடுநடுங்கினார். நல்ல காலம்! அவர் அவ்வரிமாவின் நோக்கிலிருந்து தப்பிப் பிழைத்தார். அவர் நைஜர் ஆற்றின் கரைமீதே சென்றார். அவரது குதிரை மேலும் நடந்து செல்ல முடியாமல் தவித்தது. அதனால் அவர் அதனை விட்டுவிட்டு வழி நடந்தார். அவர்க்குத் துணையாகச் சென்ற வழிகாட்டியும் அவரை விட்டுப் போய்விட்டான். அவர் அணிந்திருந்த உடைகள் கிழிந்துவிட்டன. அந்நிலையில் மாரிக்காலம் தொடங்கிவிட்டது. நைஜர் ஆற்றின் ஓரமாயுள்ள *டிம்பக்டூ என்னும் பெரிய நகரத்தை அடையவேண்டும் என்று பார்க்கு விரும்பினார். ஆயினும், பல இன்னல்களால் அவர் அப்பெருநகரை அடையக்கூடவில்லை. அதனால் அவர் தாம் வந்த வழியே திரும்ப வேண்டியவரானார். தாய்நாடு திரும்பல் திரும்பிச் செல்லும் முயற்சியிலும் அவர் பல இன்னல்களை அடைந்தார்; பலநாள் உணவின்றி நடந்தார். அவரிடமிருந்து பொருள்களைக் கள்வர் கவர்ந்துகொண்டனர். இவ்வாறு உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, வருந்திய நிலையில் அவர் பைசானியா நகரத்தை அடைந்தார். அங்கு அவரை முதலில் வரவேற்ற டாக்டர் லெயிட்லி என்ற வெள்ளையர் அவருக்கு வேண்டும் உதவிகளைச் செய்தார். உடலைத் தேற்றிக்கொள்ள விரும்பிய பார்க்கு, கப்பலேறி இங்கிலாந்து சென்றார். இதுகாறும் கூறப்பெற்ற இப்பிரயாணம் செய்து முடிக்க இரண்டரை ஆண்டுகளாயின. இரண்டாம் செலவு பார்க்கு சில ஆண்டுகள் ஸ்காட்லாந்திலேயே தங்கியிருந்தார். அவர் தமது முதல் அநுபவத்தை மனதிற் கொண்டு, தம் இரண்டாம் செலவு எளிதில் நடைபெறத்தக்க நிலையில் பல பொருள்களையும், போர் வீரர் பலரையும், தக்க துணைவரையும் சேர்த்துக் கொண்டு சென்றார்; முன் சென்ற வழியே சென்று, நாடு காண முனைந்தார், நைஜர் ஆற்றை நெருங்கிய போது, கடுங்காய்ச்சல் பலருக்கு கண்டது. அவருள் அவருக்குப் பெருந்துணைவராக இருந்த வீரர் சிலர் இறந்தனர்; பலர் நோயுற்றனர்; எஞ்சிய சிலருடன் மங்கோ பார்க்கு மேலும் தொடர்ந்து சென்றார். பார்க்கின் மறைவு மங்கோ பார்க்கு வீரர் சிலருடன் நைஜர் ஆற்றில் படகில் சென்றுகொண்டிருந்தார். ஓரிடத்தில் அந்நாட்டு முரடர் பலர் இரு கரைகளிலும் இருந்து பார்க்குக் குழுவினரைத் தாக்கினர். அச்சுதேசிகள் கவண் கற்களையும், ஏறி ஈட்டிகளையும் குழுவினர்மீது வீசினர். படகில் இருந்து அவர்களை எதிர்க்கப் பார்க்குக் குழுவினரால் முடியவில்லை. அவர்களிடமிருந்து தப்ப வேறு வழியின்றி அனைவரும் ஆற்றில் குதித்தனர். அந்தோ! அங்ஙனம் குதித்தவர் எவரும் கரையேறவில்லை. பார்க்கின் முடிவு இரங்கத் தக்கதன்றோ! மேற்கு ஆப்பிரிக்காவைக் கண்டறிய முயன்ற பார்க்கின் உள்ளத் துணிவையும், அவர் பட்ட இன்னல்களையும் , அவர் அடைந்த முடிவையும் அவரைப் பற்றிய வரலாற்றில் விரிவாகக்காணலாம். இப்பெருமகனது உழைப்பாலும், உயிர்த் தியாகத்தாலும் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பெரிய நகரங்களைப் பற்றியும், வாணிகம் செய்ய இருந்த வசதி பற்றியும் அப்பகுதியில் வாழும் பல்வேறு இன மக்களைப் பற்றியும் பல விவரங்கள் ஐரோப்பியருக்குத் தெரியலாயின. 2. தென் ஆப்பிரிக்கா டேவிட் லிவிங்ஸ்டன் மங்கோ பார்க்கின் தியாகத்தால் மேற்கு ஆப்பிரிக்கா பொதுவாக ஐரோப்பியருக்கும் சிறப்பாக ஆங்கிலேயருக்கும் விளக்க முற்றாற் போலவே, உலகப் புகழ் பெற்ற விக்டோரியா அருவி இருக்கும் தென் ஆப்பிரிக்காவைப் பற்றிய விவரங்கள் டேவிட்லிவிங்ஸ்டன் என்பவரது தியாகத்தால் வெளியாயின. இப்பெரியாரது வரலாறு நமக்குத் தென்னாப்பிரிக்காவைப் பற்றிய விவரங்களை நல்க வல்லது. ஆதலால் அதனை ஈண்டு சுருக்கமாக அறிதல் நல்லது. இளமையும் கல்வியும் லிவிங்ஸ்டன் 1813இல் ஸ்காட்லாந்தில் எளிய குடும்பத்திற் பிறந்தவர். அவர் தம் பெற்றோர் பொருளில் எளியவராயினும் சிறந்த ஒழுக்கமுடையவர். அதனால் லிவிங்ஸ்டன் இளமை முதலே நன்கு வளர்க்கப்பட்டார். வறிய குடும்பத்திற் பிறந்த காரணத்தால், அவர் இளமையிலேயே பாஞ்சாலையில் வேலை செய்ய வேண்டியவரானார். எனினும், படிப்பில் மிக்க ஆர்வம் கொண்ட அவர், வேலை செய்து கொண்டே பல நூல்களைப் படித்துவந்தார்; இரவில் எட்டு மணியளவில் பஞ்சாலை யிலிருந்து வீடு திரும்பிய பிறகும் நெடுநேரம் படிப்பது வழக்கம். கல்வி கற்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட தந்தையார், அவரைக் கிளாஸ்கோ பல்கலைக் கழகக் கல்லூரியில் சேர்த்தார். லிவிங்ஸ்டன் தம்வறிய நிலைக்கு ஏற்பச் சிக்கனமாக வாழ்ககையை நடத்திக்கொண்டு மிகுந்த ஊக்கத்துடன் படிக்க லானார்; கோடை விடுமுறை விடப்பட்டதும், பாஞ்சாலையிற் சேர்ந்து வேலை செய்தார்; இங்ஙனம் வேலை செய்து அடுத்த ஆண்டு செலவிட்டுப் படிப்பதற்கு வேண்டிய பொருளைச் சேர்த்துக்கொண்டார். இவ்வாறு அவர் பல ஆண்டுகள் உழைத்துப் படித்து மருத்துவப் பட்டத்தைப் பெற்றார். பணி செய்ய விருப்பம் வெளி நாடுகளில் மருத்துவராக இருந்து மக்கள் உடலினைக் குணப்படுத்துதல் வேண்டும். கிறிஸ்துவ சமய அறிவை ஊட்டி மக்களது அகத்தையும் தூய்மை செய்யவேண்டும் என்பது லிவிங்ஸ்டனது அவாவாக இருந்தது. இவ்விரண்டிற்கும் அவர் தகுதியுடையவரே என்பதை நன்கு உணர்ந்த இலண்டன் கிறிஸ்துவத் தொண்டர் கழகம், அவரை ஏற்றுக் கொண்டு. கிறிஸ்துவப் பாதிரியாராக ஆப்பிரிக்காவிற்கு அனுப்பியது. தென் ஆப்பிரிக்காவில் டேவிட் லிவிங்ஸ்டன் தென் ஆப்பிரிக்காவை நோக்கிக் கப்பலில் செல்லும்பொழுதே, “தென் ஆப்பிரிக்காவில் கரையோரப் பகுதியையே நம்மவர் அறிந்துள்ளனர். நான் தென் ஆப்பிரிக்காவின் உட்பருதிகளையும் சென்று காணவேண்டும்; அப்பகுதிகளில் பல இனங்களைச் சேர்ந்த மக்கள் அநாகரிக நிலையில் வாழ்கின்றனர் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் தம் அகத்தையும் புறத்தையும் தூய்மை செய்தல் எனது கடமை.” என்று மனவுறுதி கொண்டார். இவ்வுறுதியான எண்ணத்துடன் டேவிட் லிவிங்ஸ்டன் தென் ஆப்பிரிக்காவில் குருமன் என்னும் இடத்திலிருந்த கிறிஸ்துவத் தொண்டர் கழகத் தலைமை நிலையத்திற்குச் சென்றார்; அங்குச் சில நாட்கள் தங்கினார்; அப்பொழுது அங்கிருந்த *டாக்டர் மொப்பட் என்பவர் மகளாரை மணந்து கொண்டார். தொண்டின் தொடக்கம் சில நாட்களுக்குப் பின்பு (1852இல்) லிவிங்ஸ்டன் தம் மனைவியாருடன் பிரயாணத்தைத் தொடங்கினார். சில பொதிமாடுகளும், பண்டங்கள் வைக்கும் வண்டியுமே அவரிடமிருந்த சாதனங்கள். பொதிமாடுகள் ஆமை வேகத்தில் நடந்தன. அவர் பலமாதங்கள் வெயிலிலும் மழையிலும் வழி நடந்து வடக்கு நோக்கிச் சென்றார். வழியில் பெரும் பாலை நிலப்பகுதி அவரை வரவேற்றது. அதுவே †கலஹாரிப் பாலைவனம் எனப்படுவது. அப்பாலைவனத்தில் மணற் குன்றுகளும், பள்ளங்களும் காணப்பட்டன. பசுமை என்பது மருந்துக்கும் கிடைக்காத அக்கொடிய பாலைவனத்தை லிவிங்ஸ்டன் பொறுமையையும் மன ஊக்கத்தையும் கவசமாகக் கொண்டு கடந்தார். அருளே உருவாக வந்த அவரிடம், கொடுமையே உருக்கொண்டாற் போன்ற பாலைவன மக்கள் பேரன்புடன் நடந்து கொண்டனர்; அவருக்கு உதவியாகவும் இருந்தனர். பின்னர் லிவிங்ஸ்டன் பெச்சுவானா என்னும் நாட்டை அடைந்தார். அப்பகுதியை ஆண்டுவந்த பழங்குடி மன்னன் அவரை வரவேற்றான். லிவிங்ஸ்டன் அப்பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து பல கால்வாய்களை வெட்டி, ஆற்று நீரைக் கொண்டுவந்து நிலங்களைப் பண்படுத்திப் பயிர் செய்யும் முறையினை அப்பகுதியிலிருந்த மக்கட்குக் கற்பித்தார். இவ்வாறு அவரது தொண்டு தம் நாட்டுக்கு நலன் விளைப்பது கண்ட பழங்குடி மக்கள், அவரைத் தேவ தூதராகக் கருதினர்; அவரிடம் அன்பும் மரியாதையும் காட்டினர். இங்ஙனம் அவர்களிடம் மதிப்புப் பெற்ற பிறகே, லிவிங்ஸ்டன் அவர்களிடைக் கல்விப் பிரசாரமும் சமயப் பிரசாரமும் செய்யலானார். அந்நாட்டு மன்னனும், குடிகள் பலரும் கிறிஸ்துவர் ஆயினர். லிவிங்ஸ்டன் அக்கொற்றவன் ஆதரவில் அப்பகுதியில் சில ஆண்டுகள் கழித்தார். அங்கு அவருக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. வடக்கு நோக்கிப் பயணம் அதுவரையில் வெள்ளையர் எவரும் கண்டிராத உள்நாட்டுப் பகுதிகளைக் காணவேண்டு மென்னும் அவர் லிவிங்ஸ்டனை வடக்கு நோக்கிச் செல்லத் தூண்டியது. அதனால் அவர் தம் குடும்பத்துடன் வடக்கு நோக்கிப் புறப்பட்டார். அவருடைய பொருள்கள் பல எருதுகள்மீது கொண்டுசெல்லப்பட்டன. பல நாட்களுக்குத் தேவைப்பட்ட உணவு பொருள்கள், சமய நூல் உள்ளிட்ட பலவகை நூல்கள், சுதேசிகள் விரும்பத்தக்க விளையாட்டுப் பொருள்கள், மருந்து வகைகள், தற்காப்புக்கான துப்பாக்கிகள், துப்பாக்கி மருந்து முதலிய பொருள்களை எருதுகள் தாங்கிச் சென்றன. சுதேசிகள் ‘புது நாடு காண்போம்’ என்னும் உள்ளக் கிளர்ச்சியுடன் பொதிமாடுகளை ஓட்டிச் சென்றனர். சமவெளிப் பகுதி இங்ஙனம் வடக்கு நோக்கிச் சென்ற லிவிங்ஸ்டன் *லீபா, †லீயாம்பி என்னும் ஆறுகளைக் கண்டார்; அவற்றின் போக்கைக் கண்டறிந்தார்; அவை பாயும் நாட்டுப்பகுதிகளையும் பார்த்தறிந்தார். அந்த ஆறுகள் பாயும் சமவெளிகள் இயற்கை எழில் நிறைந்தது. அங்குப் பற்பல பயிர்களும் கனி தரும் தருக்களும் காட்சி அளித்தன. நறுமண மலர்கள் விழிகட்கு விருந்தளித்தன. பல நிறப் பறவைகள் வானில் வட்டமிட்டன. ஆறுகளுக்கு அண்மையிலிருந்த காடுகளில் கலைமான்களும், காண்டாமிருகங்களும், கருங்குன்றுகள் போன்ற கரிகளும் உலவியதை லிவிங்ஸ்டன் கண்டார். அந்தச் சமவெளிப் பகுதியில் பற்பல இடங்களில் பழங்குடி மக்கள் வாழ்ந்துவந்தனர். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தலைவன் இருந்தான். சில இடங்களில் பெண்ணரசியரும் இருந்தனர். இங்ஙனம் இருந்த ஆண்பால் தலைவர்களும், பெண்பால் தலைவர்களும் லிவிங்ஸ்டனைத் தத்தம் விருந்தினராக ஏற்று வேண்டிய வசதிகள் அளித்தனர். அடிமை வாணிகம் பழங்குடி மக்கள் வாழ்ந்த ஊர்களில் மக்களை விலைக்கு வாங்கி அயல் நாடுகளில் அடிமைகளாக விற்கும் வணிகர் கூட்டத்தை லிவிங்ஸ்டன் கண்டார்; “மனிதனை மனிதன் அடிமை கொள்வதா!” என்று அலறினார். அன்பும் அருளும் நிறைந்த அவரது உள்ளம் துடித்தது. அப்பெரியார் அவ்வணிகரது கொடுந்தொழிலை நயமாகக் கண்டித்து அறிவுரை புகன்றார். எனினும், தீத் தொழிலில் ஈடுபட்ட அவ்வணிகர்கள், கொடியோர் சிலரை ஏவி, அவர் உடைமைகளைப் பறிக்கத் தூண்டினர். ஆயினும் அன்பே உருவாய் அவரைக் கண்ட அத்தீயோர், செய்வது அறியாது விழித்தனர். அவர் தம் நிலையைக் கண்ட லிவிங்ஸ்டன், அவர்களிடம் அன்பாகப் பேசிப் பொதிமாடு ஒன்றைப் பரிசாக அளித்தார். அத் தீயோர் மனமகிழ்ச்சியுடன் அவருக்கு வணக்கம் கூறி மறைந்தனர். லிவிங்ஸ்டன் மேலும் வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர் இச்செலவில் பன் முறை கடுங்காய்ச் சலால் துன்புற்றார். சிறிது உடல் நலம் பெற்றதும், அவர் * லோண்டா என்னும் நகரத்தை நோக்கிச் செல்லலானார். அந்நகரத்திற்குத் தெற்கே இருந்த நிலப்பகுதி மிக்க வளம் பொருந்தியது. யாண்டும் புகையிலைப் பயிர் செழித்தோங்கி வளர்ந்திருந்தது. பலவகைப் பறவைகள் வான வுலகில் பறந்து கொண்டிருந்தன. பல இடங்களில் பல நிறமலர்கள் படர்ந்து கண்கொள்ளாக் காட்சியை நல்கின. ஆயின், இயற்கையழகு நிறைந்த அப்பகுதியில் பல சிற்றுர்கள் பாழ்பட்டுக் கிடந்தன. அச் சிற்றூர்களில் வாழ்ந்த மக்கள் அடிமை வாணிகரால் பிடித்துக் கொண்டு செல்லப்பட்டமையே, அவை பாழ்பட்டிருந்தமைக்குக் காரணமாகும். இயற்கைக் காட்சி லோண்டாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த லிவிங்ஸ்டன் வழியில் வானளாவிய மலைகளையும், இடை யிடையே குன்றுகளையும் கண்டார்; ஒவ்வொரு மலையிலும் வானுறவோக்கி வளம்பெற வளர்ந்திருந்த மரங்களை கண்டார். தளிர்விட்டுத் தழைத்தோங்கிக் கவிழ்ந்திருந்த பசுமரங்களின் தோற்றத்தாற் குன்றுக்கள் பசிய மலைகளாகக் காட்சி அளித்தன. அம்மலைகளிலிருந்து நீர்க்கோடுகள் கிழித்தாற் போலப் பூம்புனல் அருவிகள் பளிங்கு போலத் தெளிந்த நீருடன் விரைந்து வந்த காட்சி, லிவிங்ஸ்டன் உள்ளத்தை மகிழ்வித்தது. மலைவளம் சிறந்த அப்பகுதியில் இளங்காற்று மெல்லென வீசியது. கண் கொள்ளாக் காட்சியும், மெல்லிய இளங்காற்றும் உடல் நலம் குன்றியிருந்த லிவிங்ஸ்டனுக்கு உவப்பை அளித்தன. சாம்பசிப் பேரியாறு இங்ஙனம் செழுமை மிகுந்த நாட்டு வழியே இருந்த இயற்கைக் காட்சிகளைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்தவண்ணம் பிரயாணம் செய்த லிவிங்ஸ்டன். சாம்பசி ஆற்றின் கரையோர மாகச் செல்லலாயினர்; அங்ஙனம் சென்றவர், ஓரிடத்தில், நீலவானில் வெண்புகைப்படலம் போன்றும், பனிநீர்ப் படலம் பறப்பது போன்றும் அரியதொரு காட்சியைக் கண்டார்; அத்தோற்றம் எங்கிருந்து உண்டாயிற்று என்பதை அறிய விரும்பினார்; ஆற்றோரமாகவே சிறிது தூரம் நடந்து சென்றார். அவர் செவிகள் செவிடு படும்படி பேரோசை கேட்டது. அவர் மேலும் நடந்தார்; தமக்கு அரிய காட்சியையும், பேரோசையையும் நல்கியது ஓர் அருவியெனக் கண்டார். அவ்வருவியே விக்டோரியா அருவி என்பது. அவ்வருவி சாம்பசி ஆற்றைச் சேர்ந்தது.* பெயரும் புகழும் அதுகாறும் எந்த ஆங்கிலேயரும் பார்த்திராத பல இடங்களையும் பார்த்துப் பல விவரங்களை அறிந்து கொண்ட லிவிங்ஸ்டன், 1856ஆம் ஆண்டு (தாம் புறப்பட்ட பதினாறு ஆண்டுகளுக்குப் பின்பு) இங்கிலாந்தை அடைந்தார்; தாம் தென்னாப்பிரிக்காவில் கண்டறிந்த விவரங்களைக் கிருஸ்துவக் கழகத்தார்க்கு அறிவித்தார். ஆங்கில அரசாங்கமும் அவரது உழைப்பைப் பாராட்டி மகிழ்ந்தது. விடா முயற்சி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு லிவிங்ஸ்டன் மீண்டும் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார்; எட்டு ஆண்டுகள் அங்குத் தங்கிப் பல ஏரிகளையும் வளம் பொருந்திய வெளிகளையும் மலைப் பகுதிகளையும் கண்டறிந்தார்; பின்னர்த் தாய் நாடு மீண்டார். அப்பேரறிஞர் 1866 இல் மூன்றாம் முறையாக ஆப்பிரிக்காக் கண்டத்திற்குச் சென்றார்; தாங்கன்ஈகா ஏரியையும், அதனைச் சுற்றியுள்ள நிலப்பகுதியையும் நன்கு ஆராய்ந்தார். முதுமை எய்திய காரணத்தால் அவர் உடல் தளர்ச்சியுற்றது. அவரது மூன்றாம் பிரயாணம் தொடங்கி ஐந்து ஆண்டுகள் வரையில் அவரைப் பற்றிய செய்தி இங்கிலாந்திற்குச் தெரியவில்லை. அதனால் இங்கிலாந்திலிருந்த பல கழகங்களும், செய்தித் தாள்களும் அவரைப் பற்றி அறிய ஆவல் கொண்டன; அவரைக் கண்டறியப் பலரை ஆப்பிரிக்காவிற்கு அனுப்பின. அங்ஙனம் அனுப்பபட்டவருள் ஸ்டான்லி என்பவர் ஒருவர். அவர் பல இடங்களிலும் அலைந்து திரிந்து இறுதியில் ஒரு சிற்றூரில் லிவிங்ஸ்டனைக் கண்டுபிடித்தார். ‘லிவிங்ஸ்டன் உயிருடன் இருக்கிறார்’ என்பது ஸ்டான்லியின் முயற்சியால் தான் உலகத்திற்கு அறிவிக்கப்பட்டது. அழியாப் புகழ் ஸ்டான்லி ஆப்பிரிக்காவை விட்டுப் போன பின்பும், வயது முதிர்ந்த லிவிங்ஸ்டன் தமது ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்தார்; 1873ஆம் ஆண்டு இறைவனைத் தொழுதபடியே இவ்வுலக வாழ்வை நீத்தார். அவரது உடல் இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது; அங்குப் பிரிட்டிஷ் பெருமக்களின் உடம்புகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள ‘வெஸ்ட் மின்ஸடர் அபே’ என்னும் இடத்தில் மிக்க சிறப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. இங்ஙனம் லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்காக் கண்டத்தின் உட்பகுதிகளைக் கண்டறியத் தமது அரிய வாழ்க்கையையும் ஆருயிரையும் தியாகம் செய்தார். அப்பெரியார் ஆப்பிரிக்காiவப் பற்றி எழுதிய நூல்களே, அவருக்குக் பின்னர் மேலும் பலர் ஆராய்ச்சி செய்யப் பெருந்துணை ஆயின. லிவிங்ஸ்டன் பிரயாணம் செய்த இடங்களில் வெள்ளையர் புகுந்து பழங்குடி மக்களை அடக்கியும், நட்புக் கொண்டும் படிப்படியாகக் குடியேறி வாழலாயினர். இன்று ஆங்கிலேயர் பிரஞ்சுக்காரர் முதலியோர் ஆப்பிரிக்காவில் குடியேறிப் பல பகுதிகளைப் பிடித்து ஆண்டுவருகின்றனர்; அங்குக் கிடைக்கும் பொன் முதலிய எல்லாப் பொருள்களையும் அநுபவித்து வருகின்றனர். இத்தகைய குடியேற்றம் மங்கோபார்க்கு, லிவிங்ஸ்டன் இவர் தம் உழைப்புக்கு முன்பு ஏற்படவில்லை என்பதை எண்ணும் பொழுது, லிவிங்ஸ்டன் போன்ற பேரறிஞரது உழைப்பு அளித்த பயனை நன்கு உணரலாமன்றோ? லிவிங்ஸ்டனால் கண்டறியப்பட்ட விக்டோரியா அருவியைப் பற்றிய விவரங்களை அடுத்த பகுதியிற் காண்போம் 3. விக்டோரியா அருவி *ரொடீசியா மாகாணம் டேவிட் லிவிங்ஸ்டன் இருண்ட கண்டத்தை ஒளியுள்ள கண்டமாக்கிய பிறகு, ஆங்கிலேயர் ஆப்பிரிக்காவில் பல இடங்களில் குடியேறிப் பல மாகாணங்களை அமைத்துக் கொண்டனர். அங்ஙனம் அமைக்கப்பட்ட மாகாணங்களுள் ரொடீசியா மாகாணம் ஒன்றாகும். இம்மாகாணத்திற்றான் உலகப் புகழ்பெற்ற விக்டோரியா அருவி அமைந்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவிலுள்ள டிரான்ஸ்வால் பகுதிக்கும் மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள தாங்கன்ஈகா ஏரிக்கும் இடைப்பட்ட மேட்டுப் பாங்கான நிலப்பகுதியே ரொடீசியா என்பது. இந்நிலப்பகுதி வெள்ளையர் குடியேற ஏற்ற இடம் என்பதைக் கண்டறிந்து சொன்னவர் †ரோட்ஸ் என்பவர் ஆதலால், இந்நிலப்பகுதி அவர் பெயரால் ‘ரொடீசியா’ என வழங்கலாயிற்று. இம்மாகாணத்தில் உள்ள வெள்ளையர் தொகை நாற்பதாயிரம்; பிற மக்கள் தொகை பதினெட்டு லட்சம். இம்மாநிலம் இங்கிலாந்iதப் போல ஏறத்தாழ ஒன்பது மடங்கு பரப்புடையது. இம் மாகாணத்தில்தான் சாம்பசி என்னும் பேரியாறு பாய்கின்றது. இம்மாநிலத்தில் இரண்டாயிரத்து ஐந்நூறு மைல் நீளமுள்ள இருப்புப்பாதை போடப்பட்டுள்ளது. எண்ணாயிரம் கல் தொலைவு தந்திப் போக்குவரவு அமைந்துள்ளது. இம்மாகாண நகரங்களுள் ‘புலவயோ’ என்பது ஒன்று. அது கடல் மட்டத்துக்கு நாலாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. ரொடீசியா புல்வெளிகள் நிறைந்த நிலப்பகுதி ஆதலால் இங்குக் கால்நடைகள் மிகுதியாக வளர்க்கப் படுகின்றன. இங்குப் பருத்தி, புகையிலை, கோதுமை, ஐரோப்பிய நாட்டுப் பழங்கள் முதலியன நன்கு பயிராகின்றன. இங்குச் சுரங்கச் செல்வமும் உண்டு. இருபது ஆண்டுகளில் ஐம்பது லட்சம் பவுன் பெருமானமுள்ள தங்கத்தை இம்மாநிலம் ஏற்றுமதி செய்துள்ளது எனின், இந்நிலப்பகுதியின் பொன்வளத்தை என்னென்பது! மேலும் இப்பகுதியிலிருந்து செம்பு, ஈயம், வெள்ளி, நிலக்கரி முதலிய கனிப் பொருள்கள் ஆண்டு தோறும் வெட்டியெடுக்கப்படுகின்றன. சாம்பசி ஆறு ஆப்பிரிக்காவில் பாயும் ஆறுகள் பல. அவற்றுள் அளவில் நான்காவது ஆறு என்று சிறப்பித்துக் கூறப்படுவது சாம்பசி. இது கிழக்கு முகமாக இந்துப் பெருங்கடலை நோக்கிச் செல்லும் ஆறுகளுள் மிகப் பெரியது. இதன் நீளம் ஏறத்தாழ 2200 கல். இப்பேரியாறு ரொடீசியா மாகாணத்தின் வடகோடியில் தோன்றுகிறது. இவ்வாறு ஐயாயிரம் அடி உயரத்திலுள்ள காடும் மேடுமாகிய நிலப் பகுதியில் பாய்ந்து ஓடுகின்றது. ஆப்பிரிக்காவிலுள்ள பிற ஆறுகளின் நீரைப் போலவே இதன் நீர்ப்பெருக்கும் கரிசலான வரண்ட நிலத்திலேயே சுரக்கின்றது. உயர் நிலத்தில் பாயும் சாம்பசி சாம்பசி ஆறு முதலில் தென் மேற்காக நூற்று ஐம்பது கல் பாய்கின்றது; பின்பு நேராகத் தெற்கே பாய்ந்து வருகின்றது. அந்நிலையில் பல சிற்றாறுகள் இரு பக்கங்களிலிருந்தும் .இதனிற் கலக்கின்றன. பின்னர்ச் சாம்பசி ஆறு குறுகிய வடிவம் தாங்கி இயற்கைச் காட்சிகளுக்கு இடையே மிக்க விரைவுடன் பாய்ந்து வருகின்றது. இங்ஙனம் பாய்ந்து வரும் ஆறு திடீரென நூறு முதல் முந்நூற்றைம்பது கெஜம் வரையிலும் தனது பரப்பில் அகன்று செல்லுகின்றது. ‘காகஞ்சி’ என்னும் இடத்திற்கு அருகில் இந்த ஆற்றின் பற்பல நீரோட்டங்கள் ஒன்றுகூடி, ‘சௌபுமா’ அருவிகளாக விழுகின்றன. இங்கு இவ்வாறு இரண்டு மலைப் பாறைகளுக்கிடையே மிக்க விரைவுடன் பாய்கின்றது. நடுநிலத்தில் பாயும் சாம்பசி குவாண்டோ என்னும் இடத்திற்கு இப்பால் விக்டோரியா அருவி அறுபது கல் தொலைவிலுள்ளது சாம்பசி ஆறு பாய்கின்ற இவ்விடத்தில் பல நீருற்றுக்கள் பல திசைகளிலிருந்தும் வந்து கலக்கின்றன. இங்குச் சாம்பசியாறு நேரே செல்லாது கோண வடிவத்தில் சிறிது தூரம் சென்றும், நேர்வடிவத்தில் சிறிது தூரம் சென்றும் அழகிய காட்சியை அளிக்கின்றது. தாழ்ந்த நிலத்தில் பாயும் சாம்பசி நடு நிலத்திலிருந்து தாழ்ந்த நிலத்தில் பாய்ந்து செல்லும் சாம்பசியாறு படகுப் போக்குவரவுக்குத் தடையின்றி உதவிகின்றது. கோடைக்காலத்தில் இவ்யாற்றின் போக்கில் சிற்சில பகுதிகளில் வரட்சி தென்படுவதால் படகுப் போக்கு வரவு தடைப்படுவது உண்டு. மலைப்பாங்கான இடங்களில் பாறைகளைக் கடந்து தாவி வரும் இப்பேரியாறு, கடலை நெருங்க நெருங்கப் பற்பல கிளைகளாகப் பிரிந்து, கடலோரத்தில் பரந்த டெல்டாவை உண்டாக்குகின்றது; கடற்கறையருகில் நான்காகப் பிரிந்து கடலில் கலக்கின்றது. படகு போக்குவரவு ஆப்பிரிக்காவிலுள்ள பிற ஆறுகளைப் போலவே சாம்பசியாறும் இடையிடையே நீரருவிகளாலும், நீரோட்டங் களாலும், மணற்குவியலாலும் படகுப் போக்குவரவுக்கு ஏற்றவாறு அமையவில்லை, ஆயினும் ஏறத்தாழ 1620 கல் அளவு படகு போக்கு வரவு செய்ய இப்பேரியாறு பயன்படுகின்றது. இதன் துணையாறுகளும் இவ்வாறே படகுப் போக்கு வரவுக்குப் பயன்படுகின்றன. சுருங்கக் கூறின், சாம்பசி ஆற்றிலும், அதன் துணையாறுகளிலும் படகு வாணிகம் சிறப்புற நடைபெறுகின்றது. கண்டறிந்த பெருமக்கள் கி. பி 1851-53இல் டேவிட் லிவிங்ஸ்டன் என்பவரே முதன் முதலில் சாம்பசியாற்றின் போக்கை அறிந்து உலகுக்கு அறிவித்தவர். மேலும் *மேஜர் செர்பா பிண்டோ என்ற பெரும்படைத் தலைவர் 1878இல் சாம்பசியாற்றின் மேற்குத் துணையாறுகளையும் விக்டோரியா அருவியின் அளவுகளையும் கண்டறிந்தார். 1889இல் †ரான்கின் என்ற மற்றொரு பெரியார் சாம்பசியாறு கடலொடு கலக்கும் இடங்களை ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிட்டார். கி பி 1895-96இல் *மேஜர் ஹில் கிப்பன்ஸ் என்ற படைத்தலைவரும் அவர் தம் படைவீரர்களும் சாம்பசி நடுநிலத்தில் பாயும் இடங்களில் ஆராய்ச்சிகள் நடத்தினர். விக்டோரியா அருவி நயாகரா அருவிக்கு அடுத்த நிலையில் உலகச் சிறப்புப் பெற்றது விக்டோரியா அருவியேயாகும். இவ்வருவி சாம்பசி ஆற்றுப் போக்கின் நடு இடத்தில் 26டிகிரி கிழக்குத் தீர்க்க ரேகையும் 18டிகிரி தென் அட்ச ரேகையும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவிற்கும், பெல்ஜியன் காங்கோவுக்கும் இடையில் கேப்டவுனிலிருந்து கெய்ரோவுக்குச் செல்லும் புகைவண்டிப் பாதையில், கேப்டவுனிலிருந்து ஆயிரத்து அறு நூற்று நாற்பத்திரண்டு கல் தொலைவில் அமைந்திருக்கின்றது. இவ்வருவியை முதன் முதல் கண்டறிந்த பெருமை டேவிட் லிவிங்ஸ்டனையே சாரும் என்பது முன்னரே கூறப்பட்டதன்றோ? அவர், தம் காலத்தில் இங்கிலாந்தின் அரசியாராக விளங்கிய விக்டோரியா அம்மையாரைச் சிறப்பிக்கும் முறையில் இவ்வருவிக்கு விக்டோரியா அருவி என்று பெயரிட்டார். சாம்பசியாறு அருவியாக விழத்தொடங்கும் இடத்தில் இதன் அகலம் ஒரு கல் அளவுக்கு மேற்பட்டதாகும். அவ்விடம் ஒரு செங்குத்தான பாறையாக அமைந்துள்ளது. அப்பாறைமீது அமைந்துள்ள சிறு தீவுகளால் சாம்பசி ஆற்று நீர் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து நானூறு அடிக்குக் கீழே உள்ள பாறைப் பகுதியில் பேரிரைச்சலுடன் அருவியாக விழுகின்றது. ஆற்றின் வலப்பக்கத்தில் முப்பத்தாறு கெஜம் அகலமுள்ள சரிவான அருவி அமைந்துள்ளது. அதனை அடுத்துள்ள அருவி ஐந்நூறு எழுபத்து மூன்று கெஜம் அகலமுடையது. மூன்றாம் அருவி ஐந்நூற்று இருபத்தைந்து கெஜம் அகலமுள்ளது. நான்காம் அருவியின் அகலம் அறு நூறு கெஜம். இதன் பெயர் ‘வானவில் அருவி’ என்பது. மூன்றாம் அருவிக்கும் நான்காம் அருவிக்கும் இடையில் உள்ள தீவில் நின்றுதான் லிவிங்ஸ்டன் விக்டோரியா அருவியின் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு களித்தார். ஆதலின், அத்தீவு லிவிங்ஸ்டன் தீவு என்று அவர் பெயராலேயே வழங்கப்படுகின்றது. கவின்பெறு காட்சி நயாகரா அருவி திறந்த பரப்பில் விழுகின்றது. ஆயின், விக்டோரியா அருவி விழுமிடம் பாறைப் பாங்கானது. அருவிக்கு நேர் எதிரில் சிறிது தூரத்தில் பாறைக் குன்றுகள் உயரமான சுவர்களைப் போல் அமைந்துள்ளன. அவை நேரே செல்லும் அருவி நீரின் போக்கைத் தடை செய்கின்றன. பேரிசைச்சலுடன் நானூறு அடி உயரத்திலிருந்து கீழே விழுகின்ற அருவி நீர், எதிரிலுள்ள பாறைச் சுவர்களில் மோதுறுகின்றது. இங்ஙனம் மோதுறுகின்ற அருவி நீர் சிதறுண்டு முகிற் கூட்டங்கள் போலவும், நீர்த்திவலைப் படலங்கள் போலவும் பல நூறு அடி உயரம்வரை மேல் நோக்கி எழுந்து சிதறுகின்றது. இக்காட்சியை பல கல் தொலைவிலிருந்து பார்க்கலாம். சினங்கொண்ட அரியேறு பெரு முழக்கமிடுதல் போல, அருவி நீர் பாறையில் மோதுற்றுச் சிதறி மேல் எழும்போது உண்டாகும் பேரொலியைப் பல கல் தொலைவிலிருந்து கேட்கலாம். அருவி நீரின் இவ்விரு நிலைகளையும் நன்கு கவனித்த ஆப்பிரிக்கப் பழங்குடிகள், இவ்வருவிக்கு ‘முழக்கமிடுகின்ற புகைப் படலம்’ என்று கவி நயம்படப் பெயரிட்டுள்ளனர். விக்டோரியா அருவியைப் பற்றிய தமது அநுபவத்தை லிவிங்ஸ்டன் கூறியுள்ளது படித்து இன்புறத்தக்கது. “நான் இந்தச் செழுமை நிறைந்த நிலப்பகுதியிலுள்ள சாம்பசி ஆற்றின் கரையோரமாகவே சென்றேன். குறிப்பிட்ட ஓரிடத்தில், நீலவானில் வெண்புகைப் படலம் போன்றும், பனி நீர்ப் படலம் பறப்பது போன்றும் அரியதொரு காட்சி புலப்பட்டது, கதிரவனின் பொற்கதிர்கள் அப்படலங்களை ஊடுருவிச் செல்லும்போது, இயற்கையாகவும் செயற்கையாகவும் உள்ள பல நிறங்கள் தோன்றித் தோன்றி மறைந்தன. ஒரு சமயம் பளிச்சென்று செந்நிறம் தோன்றியது. உடனே அது மாறுபட்டுப் பொன்னிறமாயது. யான் வியப்புடன் அதனை நோக்கினேன். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்நிறமும் மாறிப் பசுமைக் காட்சியை நல்கியது. அதுகாறும் வரண்ட பாலைநிலத்தையும் இருள் கவிந்த காடுகளையுமே கண்டுவந்த எனக்கு. அத்தோற்றம் பெருவியப்பையும் உள்ளக் கிளர்ச்சியையும் ஒருங்கே அளித்தது.” “யான் என்னையும் மறந்து நின்றேன்; நான் என் கண்களையே நம்பக்கூடவில்லை; இவ்வியத்தகு தோற்றம் எங்கிருந்து உண்டாகிறது என்பதை” அறிய விரும்பினேன்; அவ்விருப்பத்தால் சற்று மேல் நோக்கி நடந்தேன். இங்ஙனம் யான் சென்ற பொழுது, என் செவிகள் செவிடு படும்படி பெரு முழக்கம் கேட்டது. அம்முழக்கதின் காரணம் அறியாது யான் திகைத்தேன்; திகைப்புடன் மேலும் சிறிது தூரம் விரைந்து சென்றேன். ஆ! நான் கண்ட காட்சி என்னென்பது! என் விழிகட்கு எதிரே பேரருவி ஒன்று காட்சி அளித்தது. அவ்வருவி ஏறத்தாழ ஒரு கல் தொலைவு பரந்து இருந்தது. ஆற்று நீர் ஏறக்குறைய நானூறு அடி உயரத்தினின்று கீழ் நோக்கி விழுந்து கொண்டிருந்தது. அங்ஙனம் விழுந்த தோற்றம், வெள்ளித்தகடு உருண்டோடிக் கீழ் நோக்கி விழுவது போன்று இருந்தது. “பேரொலி உண்டாவதற்கு என்ன காரணம் என்பதை யான் ஆராய்ந்தேன்; பரந்த அளவில் வரும் ஆறு மிகுந்த உயரத்திலிருந்து கீழ் நோக்கி விழுந்து பாறைகளுக்கு இடையே உள்ள குறுகிய இடத்தில் அகப்பட்டுப் பாய்ந்து செல்லுகின்றது. நீர் செல்ல வேண்டிய பரப்பளவு குறுகி விட்டதாலேயே பேரொலி எழும்புகிறது; பாறைகளில் மோதுவதலால் ஆற்று நீர்த்திவலைகள் ஆவி போலப் பறந்து செல்கின்றன என்னும் உண்மையை உணர்ந்தேன். கண் கொள்ளா இவ்வியத்தகு காட்சிiயக் கண்ட யான் கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லையில்லை”. வியத்தகு மாற்றம் விக்டோரியா அருவி நீர், முன்பு சொல்லப்பட்டவாறு நானூறு அடிக்குக் கீழ் உள்ள பாறைப்பகுதியில் விழுந்ததும், எதிரிலே உள்ள உயர்ந்த பாறைச் சுவர்களுக்கு இடையே பாய்ந்து செல்லுகிறது. அச்சுவர்கட்கு இடையில் ஆற்று நீர் செல்லும் பாதை சில இடங்களில் இருநூரு அடி அகல முடையது; சில இடங்களில் முன்னூறு அடி அகலமுடையது. ஆனால் நீர் மட்டத்திற்குக் கீழ் உள்ள பாறைச் சுவர்களின் உயரம் தெரியவில்லை. ஏறத்தாழ ஒரு கல் அகலமும் மிகுந்த ஆழமும் உடைய சாம்பசி என்னும் பேரியாறு கண் இமைக்கும் நேரத்திற்குள் இங்ஙனம் உருமாறிவிடுதல். இப்பேரியாற்றுப் போக்கில் ஏற்பட்டுள்ள வியத்தகு மாறுதலாகும். சாம்பசி ஆற்று நீர் அருவியாக விழுந்தவுடன் ஒரு திசையிலேயே அமைதியாகச் செல்வதை விட்டுப் பாறைகளின் இடையீட்டால் மோதிச் சிதறுண்டு மிக்க விரைவுடன் பல திசைகளிலும் பாய்ந்து ஓடத் தொடங்குகிறது; கரடு முரடான பாறைச் சுவர்களுக்கு இடையே அகப்பட்டு, அவற்றிலிருந்து தப்பி ஓட முயல்வது போல இப்பேரியாற்றுப் பெருவெள்ளம் பாறைகளுக்கு இடையே அமைந்த முன் சொல்லப்பட்டட குறுகிய பாதையில் கரை புரண்டு பாய்கின்றது. துன்பநிலை இங்ஙனம் அலைமோதிப் பாய்ந்து செல்லும் பெரு வெள்ளம் ஓரிடத்தில் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து, சிறிது தொலை சென்ற பின்னர் ஓர் உருவம் தாங்கிச் செல்கிறது. பாவம்! செல்வ வளத்துடன் வாழ்ந்த ஒருவன் காலப் போக்கில் வறுமையுற்று, பிழைப்புக்காகத் தகாத இடத்தில் வேலையில் அமர்ந்து அடக்க ஒடுக்கத்துடனும், குமுறிய உள்ளத்துடனும் இயங்குதல் போல, அமைதியும் அகற்சியும் பெற்றிருந்த சாம்பசி யாறு அருவியாக மாறியவுடன் பாறைகளுக்கு இடையே அமைந்த குறுகிய பாதையில் தன் தோற்றப் பொலிவினை இழந்து பெருமுழக்கத்துடன் செல்ல நேர்கின்றது. இத்துடன் இதன் ஒடுக்கம் நிற்கவில்லை, இது மேலும் ஒடுங்கிச் செல்லும் நிலைமை அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளது. முன் சொன்ன பாறைச் சுவர்களுக்கு இடையே அமைந்த குறுகிய பாதையை விடக் குறுகலான பாதையில் இப்பேரியாறு பாயும் துன்பநிலையும் ஏற்படுகின்றது. இங்ஙனம் குறுகிய வழியில் மிக்க ஆழத்துடனும் அமைதியின்மையுடனும் பாயும் சாம்பசி ஆறு, மற்றுமொரு பாறைமீது பாய்ந்து மோதுண்டு நீர்ச் சுழல்களை உண்டாக்கிக் கொண்டு, தாக்குண்ட அரியேறு பெருமுழக்கம் செய்வதைப் போலப் பயங்கர ஓசையோடு முன் நோக்கிப் பாய்கின்றது. ஆற்றுநீர் இங்ஙனம் பல குறுகிய பாதைகளில் செல்லும் போது, அப்பாதைகளின் அமைப்புக்கு ஏற்ப மேற்குப் புறத்திலிருந்து பாய்ந்து, திடீரெனத் திரும்பி மீண்டும் கிழக்குப் பக்கமாகப் பாய்ந்து, பள்ளத்தாக்கின் வழியே வளைந்து வளைந்து செல்லுகிறது. இங்ஙனம் சாம்பசி ஆறு ஏறத்தாழ நாற்பது கல் தொலைவு குறுகிய பாதை வழியே சென்று பாறைப் பீடப்பூமியை அடைகின்றது. இவ்வாறு பாறைகளுக்குகிடையே செல்லும் ஆற்று நீர் நாற்பது கல் தொலைவு வரை மக்களுக்குப் பயன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அருவியாக உரு மாறுவதற்கு முன் வரையில் சாம்பசி ஆறு நீர்ப்பாசன வேலைகளுக்குப் பெரிதும் பயன்படுகின்றது.; பரந்த நிலப்பரப்பை மிக்க வளமுள்ளதாக்குகின்றது. ஆயின், இஃது அருவியாக உருக்கொண்ட பின்பு, முன்பு சொல்லப்பட்டவாறு நாற்பது கல் வரையில் பயனற்றுப் போகின்றது. இப்பாதையில் ஆற்றின் குறுக்கே அறுநூற்று ஐம்பது அடி நீளமுள்ள பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் 1905ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது கேப்-கெய்ரோ இருப்புப்பாதையை இணைக்கின்றது. இப்பாலம் ஆற்று நீர் மட்டத்திலிருந்து நானூறு அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. மழைக் காடு விக்டோரியா அருவிக்கு மேற்கே பல கல் தொலைவு பரவியுள்ள கணவாயில் உயர்ந்து ஓங்கிய மரங்களும், மலர்களைத் தாங்கி மென் காற்றில் அசைந்தாடும் கொடிகளும் முட்செடிகளும் புல்பூண்டுகளும் காட்சியளிக்கின்றன. அவை அனைத்தும் விக்டோரியா அருவி தெளிக்கின்ற நீர்த்துளிப் படலத்தில் மின்னிப் பொலிகின்றன. இப்பகுதிக்கு * மழைக்காடு என்பது பெயராகும். இம்மழைக் காட்டில் மழைத்துளிகளை உதிர்க்கும் மரம் செடி வகைகளும், வேரோடு சாய்ந்த மரங்களும் காணப் படுகின்றன. மற்றும் உலர்ந்த வழுக்கற் பாறைகள் ஆங்காங்கே தோன்றுகின்றன. அப்பாறைகளின் ஊடே நடைபாதை செல்லுகின்றது. அப்பாதையிற் செல்லுங்கால் மழைக்காட்டின் நிகரற்ற அழகும், மலைமுகடுகளின் உயர்ச்சியும் வழிப்போக்கர் விழிகட்கு விருந்தாக அமைகின்றன. மழைக் காட்டுத் தரைப்பகுதி, கால் சேற்றில் அழுந்தக் கூடிய சதுப்பு நிலமாகும். அங்குக் குளிர் மிகுதி. அங்குச் செல்வோர் குளிரைத் தடுக்கத் தக்க உடைகளை எடுத்துச் செல்லுதல் வேண்டும். கண் கவரும் காட்சிகள் மழைக் காட்டின் மேற்குக்கோடியிலிருந்து விக்டோரியா அருவியின் ஒருபகுதியான *பேய் அருவியைப் பார்க்கலாம். அதன் நீர்த்துளிகள் மீன்களைப் போல் துள்ளி ஒளிரும். பேய் அருவியை அடுத்த பெரிய அருவியை இடப்புறத்தும், மழைக் காட்டை அடுத்த கருநிற முகட்டை வலப்புறத்தும் கண்டு மகிழலாம். பேய் அருவி என்பது சாம்பசியின் பிற அருவிகளைவிட மிக்க விரைவுடன் கீழ் நோக்கிப் பாய்கின்றது. மலைமுகட்டின் கோடிவரை திரை தள்ளி நுரை கக்கிப் பாய்கின்றது; மலை யிலிருந்து தெறித்து விழும்போது வெள்ளை வெளேரென்ற பல்லாயிரக்கணக்கான நீர்த்துளிகளை நாலா பக்கங்களிலும் பரப்புகின்றது. வெண்மையான நீர்த்துளிகள் மின்னுகின்ற இரத்தினக் கற்களைப் போலக் கதிரொளியில் காட்சி யளிக்கின்றன. அரைக்கல் தொலைவுக்கு அருவியின் நீரில் விரிந்து கிடக்கும் நுரையடுக்குகள் காணத்தக்கவை. விக்டோரியா அருவியின் நான்கு பிரிவுகளுள் பெரியதாக இருக்கும் அருவி அழகுக் காட்சியை நல்குகின்றது; பேரோசையை முழக்கி எழுப்புகின்றது; நீர்த்துளி பரந்த முகிற்படலத்தை உண்டாக்கின்றது. காட்சியழகு நிறைந்த மழைக் காட்டில், பார்ப்பவர் உள்ளத்தைக் கவரத்தக்க நூற்றுக்கணக்கான சிற்றருவிகள் பாய்கின்றன. இக்காட்டில் உள்ள ஆழமும் குறுகலும் உடைய கணவாயின் தோற்றம் அழகியது. இக்கணவாயிலிருந்து மலை முகட்டைப் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. அருவி வெள்ளம் நீர்மட்டம் மிகுதியாகவுள்ள காலத்தில் விக்டோரியா அருவி காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது. அதன் நீராற்றல் உள்ளத்தில் பேரச்சத்தை விளைவிக்கின்றது. அவ்வமயம் அருவியின் தோற்றமும் கணவாயின் தோற்றமும் கண்களுக்கு புலப்படுவதில்லை. நீர்மட்டம் குறைந்துள்ள காலத்திலும், அருவியின் நீர்ப்படலம் அருகிலுள்ள மழைக் காட்டின் காட்சியை மூடி மறைக்கின்றது. வெள்ளப்பெருக்கம் உண்டாகும் காலத்தில் காண்போர் மனக்குழப்பமும், மனக்குறையும் அடையும்படி அடர்த்தியான நீர்ப்படலம் வானவெளி எங்கும் பரவி நிற்கின்றது. இதனால் அருவியின் தோற்றத்தைக் காண்பது இயல்வதில்லை. வெள்ளப் பெருக்கு நேரும் காலத்தில் மலையருவியைக் கடந்து லிவிங்ஸ்டன் தீவுக்குச் செல்லுதல் இயலாது. கோடைக் காலத்தில் அத்தீவிற்குச் சென்று அருவியின் அழகைக் கண்டு அகமகிழலாம். இன்பக் காட்சிகள் பெரிய அருவிக்கு எதிரேயுள்ள மலைமுகடு எழில்மிக்கது. கரிய பழுப்பு நிறப் பாறைகள் தலை நிமிர்ந்து நிற்கின்றன; சில இடங்களில் கரிய நிறப் பாறைகள் தோன்றுகின்றன; முன் சொல்லப்பட்ட மழைக்காடு மரப்பச்சை போர்த்த வடிவத்தில் காணப்படுகிறது; இங்கும் அங்கும் ஊடு பாய்ந்து ஒளிரும் கதிரொளி வெண்ணிறத்தை வழங்குகிறது; நீர்த் துளிகளால் உண்டான பற்பல நிற மண்டலங்களாகத் தோன்றும் வானவில் மின்னுகிறது. இவை அனைத்தும் பார்ப்பவர் உள்ளங்களைப் பரவசப்படுத்தும் இன்பக் காட்சிகளாகும். IV சிவசமுத்திர அருவி 1. காவிரி யாறு காவிரியின் சிறப்பு வட இந்தியாவில் புகழ்பெற்ற ஆறு கங்கை. அது போலவே தென்னிந்தியாவில் காவிரியாறு தென்னாட்டு மக்களால் போற்றப்படுகிறது. இந்த ஆறு சோழ நாட்டின் வளத்திற்கே காரணமாக விளங்குகின்றது. இது குடுகு நாட்டில் பிறந்து, மைசூர் நாட்டில் தவழ்ந்து, கொங்கு நாட்டில் நடந்து, சோழ நாட்டில் பல கிளைகளாகப் பிரிந்து அந்நாட்டை வளப்படுத்தி, வங்கக் கடலில் கலக்கிறது; சோழநாட்டில் எங்கு நோக்கினும் ஆறுகள், வாய்க்கால்கள், நீர்நிலைகள் என்று சொல்லும்படி அந்நாட்டைப் ‘புனல் நாடு’ என்று புலவர்கள் போற்றும் படி செய்துள்ளது. இங்ஙனம் தம் நாட்டை வளப்படுத்தி வந்த காரணத்தாற் சங்ககாலச் சோழ மன்னர்கள், காவிரியைத் தம் ‘குலக்கொடி’ என்று கொண்டு போற்றி வந்தனர். இந்த உண்மையை, மணிமேகலை ஆசிரியராகிய சீத்தலைச் சாத்தனார், “பாடல்கால் சிறப்பில் பரதத்து ஓங்கிய கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி” என்று தம் மணிமேகலைக் காவியத்தில் பாராட்டியுள்ளதைக் கொண்டும், இளங்கோவடிகள், “சோழர் தம் தெய்வக் காவிரி” என்று தாம் பாடியுள்ள சிலப்பதிகாரத்தில் பாராட்டியிருத்தலைக் கொண்டும் நன்கு உணரலாம். மக்களது போற்றுதல் சோணாட்டு மக்கள் தமக்கு நீர் வளத்தைத் தந்து நிலவளத்தை உண்டாக்கித் தங்களை வையத்தில் வாழ்வாங்கு வாழ்விக்கும் இப் பேரியாற்றைத் தம் தாயாகவே கருதி வழிபட்டுவந்தனர்; ஆண்டுதோறும் ஆடிமாதம் பதினெட்டாம் பெருக்கன்று ஆண்களும் பெண்களும் காவிரிநீரில் நீராடி மகிழ்ந்து, மாவிளக்கு முதலியவற்றைப் படைத்துக் காவிரித் தாயை வணங்கினர். சோணாட்டுச் சிறுவரும் சிறுமியரும், தாய்மீது தவழ்ந்து விளையாடும் குழந்தைகளைப் போல, ஆற்று நீரில் குதித்தும் நீந்தியும் விளையாடியும் மகிழ்ந்தனர். இங்ஙனம் காவிரியாற்றுக்கு வழிபாடுசெய்தலும், புது வெள்ளத்தில் குதித்து விளையாடுதலும், இன்றளவும் நடை பெற்று வருகின்ற செயல்களாகும். தண்டமிழ்ப் பாவை “வெள்ளி என்ற விண்மீன் தான் நிற்பதற்குரிய வடதிசையி லிருந்து மாறித் தென்திசைக்கு சென்றாலும், மழைத்துளியை உணவாகக் கொண்டு வானைப் பாடி வாழும் வானம்பாடிப் பறவை உணவின்றி வருந்தும்படி வானம் வளம் சுரக்க மறுத்தாலும், நீர் வளம் சுரத்தலில் காவிரியாறு தவறாது,” என்று காவிரியாறு வற்றாது வளங்கொழிக்கும் இயல்பைச் சங்ககாலப் புலவராகிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் உளமாரப் பாராட்டியுள்ளார். முகில்கள் நிலை மாறினமையால் மழை பெய்யாது கோடைக் காலம் மக்களை மிகுதியாக வருத்தும் பொழுதும், காவிரியாறு தன் நிலைமாறாமல் பெருக்கெடுத்து ஓடி வளங் கொழித்து வந்தது. இவ்வுண்மையை, “கோள் நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை” என்ற சீத்தலைச் சாத்தனார் புகழ் மொழியிலிருந்து நன்கு அறியலாம். “நீர் உயர நெல்உயரும்; நெல்உயரக் குடிஉயரும்; குடிஉயரக் கோன் உயர்வான்” என்ற மொழிப்படி நீர் வளந்தான் மக்கள் வாழ்வை உணர்த்தக் தக்கது. மக்கள் வாழ்வு உயர உயர, நாகரிகம் படிப்படியாக வளரும். நாகரிகம் நன்முறையில் வளர்ச்சி பெறின், பண்பாடு வளரும். இங்ஙனம் பண்பாட்டை வளர்க்கும் பெருமைபெற்றது நீர்வளம். தமிழ்நாட்டின் இருதயமாக விளங்கும் சோழநாட்டைச் சோற்று வள நாடாக ஆக்கிய பெருமையை உணர்ந்தே, சீத்தலைச் சாத்தனார் காவிரித்தாயை, “தண்டமிழ்ப் பாவை” என்று வாயாரப் பாராட்டிக் கூறினர். பண்டைக் காலத்தில் இக்காலத்தில் காவிரியாறு தமிழ் நாட்டு எல்லைக்குள் வருவதற்கு முன்பு அதன் நீர் பல இடங்களில் தேக்கப்படுகின்றது. அதனால் இக்காலத்தில் ஓராண்டில் பலமாத காலம் காவிரி வரண்ட தோற்றத்தைக் கொடுக்கின்றது. ஆயின், பண்டைக் காலத்தில் இவ்யாறு கோடைக் காலத்திலும் வற்றாத பெருக்குடையதாக இருந்தது என்று புலவர்கள் பாடியுள்ளதை நோக்க, குடகு மலை முதல் சோழ நாடுவரை காவிரியாற்றில் அணைகள் இல்லை என்று கருத இடமுண்டாகிறது. “வாழி காவேரி” “காவிரியில் புதுப்புனல் பெருக்கெடுத்துப் பாய்ந்த பண்டைக் காலத்தில், உழவர்கள் ஆரவாரத்துடன் வயல் வேலைகளில் ஈடுபட்டனர். மதகுகளின் வழியே நீர் சலசல எனப் பாய்ந்தோடியது; நீர்ப் பெருக்கால் கரைகள் சிற்சில இடங்களில் உடைந்தன; அதனால், அவ்விடங்களில் ஆற்று நீர் பேரிரைச்ச லோடு பெருகிப் பாய்ந்தது. ஆண்களும் பெண்களும் புதுப்புனலாடி மகிழ்ந்தனர். இவ்வாறு உழவர் ஆரவார முழக்கமும், மதகுகளில் நீர் பாய்ந்த ஒலியும், உடைந்த கரையில் நீர் பாய்ந்த ஓசையும், மக்கள் புது வெள்ளத்தில் நீராடிய ஆர்ப்பும் கலந்து ஒலிக்கக் காவிரித்தாய் நடந்து வந்தாள், ” என்று இளங்கோவடிகள் தாம் பாடிய சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ் நூலில் காவிரியின் நீர்ப் பெருக்கால் உண்டான நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்; “உழவர் ஓதை மதகு ஓதை உடைநீர் ஓதை தண்பதங்கொள் விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி” - சிலப்பதிகாரம் பொன்னியாறு காவிரியாற்றில் பொன் துகள்கள் படிந்து வந்த காரணத்தால் காவிரிக்குப் ‘பொன்னி’ என்று அறிஞர் கூறுவர். செல்வத்தைப் பொன் என்று கூறுதல் மரபு. இம்மரபின்படி செல்வவளத்திற்குக் காரணமான காவிரியாற்றைப் ‘பொன்னி’ என முன்னையோர் அழைத்தனர் என்று கொள்ளுதலும் பொருத்தமாகும். நீரும் மணலும் இங்ஙனம் வற்றாத வளம் சுரந்து, சோணாட்டைச் சோழவள நாடாக்கிய காவிரியை அக்காலச் சான்றோர், தாம் அதனிடம் காட்டிய அன்பு மிகுதியால், ‘தெய்வக் காவிரி,’ ‘புண்ணிய நன்னீர்,’ ‘கங்கையிற் புனிதமாய காவிரி’ என்று பலவாறு பாராட்டியுள்ளனர்; அரசரையோ மக்களையோ வாழ்த்தும்போது, ‘காவிரி மணலினும் பலவாக நின் வாழ் நாட்கள் வளர்க’ என்று வழிவழியாக வாழ்த்திவந்தனர். இவ்வாறு காவிரியாற்று நீர் சோழநாட்டை வளம் பொருந்திய நாடாக்கியது; அவ்வளமை காரணமாகச் சோழர்க்கு ‘வளவர்’ என்று பெயர் வழங்கச் செய்தது. அதன் மணல் சோழரையும் சோணாட்டு மக்களையும் வாழ்த்தப் பயன்பட்டது. இவை இரண்டும் பண்டை இலக்கியங்களில் சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளன. காவிரியின் தோற்றம் காவிரியாறு குடகுநாட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த சையமலை உச்சியில் தோன்றுகிறது. இதன் தோற்றத்திற்குக் காரணமான நீருற்றுத் தடைப்படாமல் இன்றளவும் சுரந்து கொண்டே இருக்கின்றது. இந்த இடைவிடாச் சுரப்பே காவிரிக்கு ‘உயிர் ஆறு’ என்னும் பெயரை வழங்கியது. இவ்வூற்றைச் சுற்றிலும், முப்பதடி சதுரமான குளம் ஒன்று அடைக்கப்பட்டுள்ளது. அக்குளத்தில் எப்பொழுதும் இரண்டரை அடி நீர் மட்டும் இருக்கும்படியும், எஞ்சிய நீர் வெளியே செல்லுமாறு மடை அடைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளிச் செல்லும் நீரே காவிரியாக உருவெடுக்கிறது. இங்ஙனம் உருக்கொள்ளும் காவிரிக்குத் ‘தலைக் காவிரி’ என்பது பெயர். குளத்திற்கு மேல் கரையில் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டுள்ளது. அக்கோவிலுள் காவிரித்தாயின் சிலை உருவம் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் காவிரி ஆற்றை அம்மனாக உருவகப்படுத்தி வணங்குமிடம் இதுவாகும். இந்திய நாட்டு மக்கள் பலரும் தலைக் காவிரியில் மூழ்கிக் காவிரி அம்மனை வணங்கிச் செல்கின்றனர். துலா மாதம் எனப்படும் ஐப்பசித் திங்களின் தொடக்கத்தில் குடகுநாட்டு மக்கள் தலைக்காவிரியில் கூடி விழா அயர்கின்றனர்; காதோலை, கருமணி முதலிய மங்கலப் பொருள்களை நீரில் இடுகின்றனர். காவிரியின் போக்கு காவிரி பற்பல காடுகளைக் கடந்து மலைகளின் ஊடே பாய்ந்து பாக மண்டலம் என்னும் இடத்தில் கனகா என்னும் துணையாற்றைப் பெறுகின்றது. அங்ஙனம் துணையாற்றைப் பெறும் இடத்திலிருந்தே காவிரி சிறிது அகன்று, ‘ஆறு’ என்னும் உருவத்தினை அடைகின்றது. குடகு நாடு குறிஞ்சி நிலச் சிறப்புடையது. ஆதலால் காவிரி ஆறு மலைகளின் ஊடே பாய வேண்டுவதாக இருக்கின்றது. அந்நிலையில் இஃது இரு மரங்களிலும் உயர்ந்த பாறைகளுக்கு இடையே வளைந்தும் நெளிந்தும் பாய்கின்றது. இயற்கை அன்னை கொலு வீற்றிருக்கும் குறிஞ்சி நிலப்பகுதியில் இங்ஙனம் காவிரி வளைந்து நெளிந்தும் செல்லுதல் பேரழகைத் தருகின்றது. இவ்வாறு குறிஞ்சி நிலப்பகுதியில் ஒல்கி ஒசிந்து வரும் காவிரியாறு குடகு நாட்டை விட்டு மைசூர் நாட்டில் புகுகின்றது. மைசூர் நாட்டில் காவிரி மைசூர் நாட்டில் புகுந்த காவிரி சிறிது தொலைவு மலைப்பாங்கான பகுதியில் பாய்கின்றது; குறுகியபாறை களுக் கிடையே ஓடுகின்றது. அங்கு அதனுடன் ஹேமாவதி என்னும் துணையாறு ஒன்று கலக்கின்றது. சிறிது தொலைவிற்கப்பால் இலட்சுமணதீர்த்தம் என்னும் மற்றொரு சிற்றாறு காவிரியில் கலக்கின்றது. இச்சிற்றாறுகளின் சேர்க்கையால் காவிரியாறு அளவில் பெரியதாகிப் பாய்கின்றது. இம்முக்கூடலின் மறுமுனையில் கண்ணம்பாடி என்னும் அணை கட்டப் பட்டுள்ளது. இவ்வணைக்கட்டை அடுத்துப் பெரிய நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. அதன் பெயர் கிருஷ்ண ராஜ சாகரம் என்பது. இந் நீர்ந்தேக்கத்தால் மைசூர் நாடு பெற்றுவரும் பயன்கள் அளவற்றன. இவ்வணைக்கட்டு மைசூரிலிருந்து பதினொரு கல் தொலைவிலுள்ளது; ஒரு லட்சத்து இருபதாயிரம் சதுர மைல் பரப்புள்ள தரிசு நிலங்களைச் செழுமைப்படுத்துகிறது. மைசூரின் செழுமைக்கு இந்நீர்த்தேக்கமே சிறந்தகாரணமாகும். பிருந்தாவனம் கிருஷ்ண ராஜ சாகரத்தை அடுத்துப் பிருந்தாவனம் என்னும் பெரிய பூங்கா அமைந்துள்ளது. மைசூரிலிருந்து இப்பூங்காவுக்குச் செல்லும் பாதை செம்மையான முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. இப்பொழுது பிருந்தாவனம் அமைந்துள்ள இடம் மலேரியா நோய்க்குக் காரணமான சதுப்பு நிலமாக இருந்தது. கிருஷ்ண ராஜ சாகரம் அமைக்கப்பட்ட பிறகு இப்பகுதி மைசூர் அரசாங்கத்தின் பெருமுயற்சியால் கண்கவரும் பூங்காவாக மாறிவிட்டது. இப்பூங்காவின் முகப்பு வாயில் மிக அழகாக அலங்கரிக்கப் பட்டுள்ளது. பச்சைக்கம்பளம் பரக்க விரித்தாற் போன்ற இப்பூங்கா, முகப்பிலிருந்தது படிப்படியாகத் தாழ்ந்து கொண்டே போகும் முறையில் பல அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. இதன்கண் இரண்டு நடைபாதைகள் போடப்பட்டுள்ளன. தாழ்ந்து செல்லும் படிதோறும் நீர் ஓடி வருமாறு வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு படியின் கீழும் பலநிற மின் விளக்குகள் இருந்து ஓடும் நீரை ஒளி செய்கின்றன. ஒவ்வொரு நடைபாதையின் இரு மருங்கிலும் அழகிய செடிகள் வைத்து ஒரே அளவில் கத்தரிக்கப்பட்டுள்ளன. இவை விளக்கொளியில், மரகதத்தால் அமைக்கப்பட்ட திண்ணைகள் போலத் தோன்று கின்றன. இப்பூங்காவில் ஆங்காங்குப் பல நிறங்களை உடைய மலர்ச் செடிகளும், மரங்களும் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. மக்கள் இருத்தற்கேற்ற சிமென்டு இருக்கைகள் ஆங்காங்குப் போடப்பட்டுள்ளன. பகற்பொழுதில் சாதாரண சிமென்டுப் பலகையாக இருப்பது, இரவில் அதனைச் சுற்றி அமைக்கப் பட்டுள்ள விளக்குகளின் ஒளியால் கண்கவரும் தோற்றத்தை அளிக்கின்றது. பல நிற மலர்ச் செடிகளைக் கொண்ட பாத்திகள் பல நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இரவில் கண்ணுக் கினிய காட்சி வழங்குகின்றன. பூங்கா முழுவதும் மின் விளக்குகளின் உதவியால் பலநிற நீருற்றுக்களாக விளங்குகின்றன. அவை அடிக்கடி பல்வேறு நிறங்களை மாறிமாறித் தோற்றுவிக்கின்றன. அவ்வொளியில் காணப்படும் நீர்த்துளிகள் பலநிறமணிகளைப் போலக் காட்சியளித்துப் பார்ப்பவர் விழிகட்கு விருந்தாக அமைகின்றன. அணைக்கட்டுச் சுவரில் தரை மட்டத்துக்கு இருபதடி அளவில் காவிரி அன்னையின் சிலை வைக்கப்பட்டுள்ளது. அச்சிலை கருங்கல்லால் இயன்றது. நீலநிற விளக்குகளின் ஒளியில் அச்சிலை பேரழகுடன் தோற்றமளிக்கிறது. நீர்த்தேக்கத்தில் உள்ள காவிரி நீர் அணையை ஊடுருவிக் கொண்டு வந்து காவிரியன்னையின் உள்ளங்கையிலிருந்து எப்போழுதும் வெளிப்படுமாறு அமைத்துள்ள திறம் பாராட்டற்பாலது. கண்ணம்பாடிக்கு அப்பால் கண்ணம்பாடி அணையில் கட்டுப்படுத்தப்பட்ட காவிரி, பிறகு மிக்க விரைவுடன் பாய்கிறது. அங்ஙனம் பாயும்பொழுது இதன் வழியில் இடையிடையே சிறிய தீவுகள் அமைந்துள்ளன. அவற்றுள் பெரியது சீரங்கப்பட்டணம் என்பது. இப்பகுதியில் லோக பவானி என்னும் ஒரு சிற்றாறு காவிரியில் கலக்கின்றது. சிறிது தொலைவுக்கு அப்பால் கப்பினி என்னும் சிற்றாறு காவிரியில் கலக்கின்றது. பின்னர்க் காவிரி கிழக்காகத் திரும்பிச் சிறிது தொலைவு பாய்ந்து மீண்டும் தெற்கு நோக்கித் திரும்புகிறது. அங்ஙனம் திரும்பிப் பாயும் இடத்தில் கங்க நாட்டுத் தலைநகரமான வரலாற்றுப் புகழ்பெற்ற தாலக்காடு என்ற நகரம் அமைந்துள்ளது. சிவசமுத்திர அருவி தாலக்காட்டுக்கு அப்பால் சிறிது தொலைவில் காவிரியாற்றில் சுவர்ணாவதி என்னும் சிற்றாறு கலக்கின்றது. முன்பே பல துணையாறுகளின் வலிமையால் பெருக்குற்ற காவிரி, இப்புதிய ஆற்றின் கூட்டுறவால் மேலும் பெருக்குற்றுப் பாய்கிறது. குறிப்பிட்ட ஒரு இடத்தில் அதன் போக்கு ஓர் உயர்ந்த நிலப்பகுதியால் தடுக்கப்படுகிறது. அதனால் காவிரியாறு இரண்டாகப் பிரிந்து அம்மேட்டு நிலப்பகுதியைச் சுற்றிக் கிழக்கில் ஒன்றும் மேற்கில் ஒன்றுமாகப் பாய்கிறது. காவிரியாற்றின் இவ்விரு கிளைகட்கும் இடையில் அமைந்துள்ள மேட்டு நிலமே சிவசமுத்திரம் என்னும் தீவாகும். இத்தீவு கண்கவரும் மலைவனப்பு மிக்கது; பசுமையான காடுகள் நிறைந்தது; மூன்று கல் நீளமும், முக்கால் கல் அகலமும் உடையது. மரம் செறிந்த இதன் காடுகளில் கொடிய விலங்குகள் வாழ்கின்றன. இத்தீவில் ஒரு சிற்றூரே மக்கள் குடியிருப்பாக இருக்கின்றது. மேற்குப் பக்கத்து ஆற்றுப்பகுதி ககனசுகி என்று வழங்கப்படுகிறது. கிழக்குப் பகுதிக்கு பார்சுகி என்பது பெயர். காவிரியின் இவ்விரண்டு பிரிவுகளும் மூன்று கல் தொலைவு பாய்ந்து, அருவிகளாக உருமாறிக் கீழ்நோக்கி விழுகின்றன. இவ்வருவிகளின் தொகுப்புக்கே சிவசமுத்திர அருவி என்று பெயர் வழங்குகிறது. ககனசுகி காவிரியின் மேற்குப் பகுதியான ககனசுகி தன் போக்கில் இரண்டு கிளைகளாகப் பிரிந்து, எட்டிக்கூர் என்னும் தீவைப் படைத்து, ஏறத்தாழ முந்நூற்று எண்பதடி ஆழத்தில் உள்ள கற்பாறைகளின் மீது பேரிசைச்சலுடன் விழுகின்றது. இங்ஙனம் பாறை மீது விழுந்து தெறிப்பதால் உண்டாகும் நீர்ப்படலம் புகைப்படலம் போல வானவுலகிற் பரந்து நிற்கின்றது. இங்ஙனம் வானளாவித் தோன்றும் புகைப்படலத்தை நாம் நீண்ட தொலைவிலிருந்து பார்க்கலாம். ககனசுகி இரண்டாகப் பிரிந்து விழுவதால் இரண்டு அருவிகளின் காட்சியை நல்குகின்றது. சிவசமுத்திரத் தீவைக் கிழக்குப் பக்கமாகச் சுற்றி வரும் காவிரிப்பகுதியும் அருவியாகவே விழுகின்றது. இவ்வாறு காவிரியாறு மூன்றாகப் பிரிந்து, சிவசமுத்திரம் என்னுமிடத்தில் மூன்று அருவிகளாகக் கீழ் நோக்கி விழுகின்றது. ககனசுகி குறைந்த அகலமுடையது; விரைந்து செல்லும் நீரோட்டத்தை உடையது. பார்சுகி காவிரியின் கிழக்குப் பகுதியான பார்சுகி முன்னதைவிடச் சிறிது அகன்றது; அமைதியான நீரோட்டத்தை உடையது. இஃது அருவியாக விழுமிடத்தில் இதன் அகலம் ஏறத்தாழக் கால் கல் என்று சொல்லலாம். உருகிய வெள்ளி நீரின் தன்மையை அடைந்து கீழ்நோக்கி விழுவது போல, இவ்வருவி மலை முகட்டிலிருந்து கீழ் நோக்கி விழுகின்றது. கோடைக் காலத்தில் இது பல சிறிய அருவிகளாகப் பிரிந்து காணப்படுகின்றது. இவ்வருவி விழத்தொடங்கும் மலைப்பாறைமீது குதிரைலாடம் போன்ற ஆழமான பகுதி இருக்கின்றது. இதன் வழியாக பெரும்பகுதி நீர் ஒருங்கு சேர்ந்து கீழே பாய்ந்து மீண்டும் முப்பதடி இறங்கிப் பாறையின் அடிப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் கலக்கின்றது. பின்பு இது வடபுறமாகவே பல குறுகிய மலைக்குடைவுகளின் வழியாகப் பாய்கின்றது. இங்ஙனம் பாய்ந்து இறுதியில் மேற்குக் கிளையுடன் சேருகின்றது. இவ்வாறு ஓர் உருவம் தாங்கிய காவிரி கிழக்கு நோக்கிப் பாயத் தொடங்குகிறது. அருவிக்கு அப்பால் இவ்வாறு ஒன்று சேர்ந்த காவிரி, சாம்பசியாற்றைப் போலவே பற்பல குன்றுகளுக்கு இடையே வளைந்து நெளிந்தும் செல்ல வேண்டும் துன்பநிலை ஏற்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு இடத்தில் இவ்யாறு தன் உடலைக் குறுக்கிக்கொண்டு இரண்டு குன்றுகளுக்கு இடையேயுள்ள மிகக் குறுகிய வழியாகப் பாய்ந்து விரிவடைகின்றது. இவ்விடத்திற்கு அண்மையில் ஷிம்ஷா, அர்க்காவதி என்னும் இரண்டு ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இவற்றால் நீர்ப்பெருக்கமெடுத்த காவிரி, அகன்ற இடத்தில் பாய வழியின்றி, மலைச்சரிவுகளுக்கு இடையே ஏறத்தாழப் பன்னிரண்டு அடி அகலத்தில் பாய்கின்றது. இக்குறுகிய இடத்தில் ஒரு கரையிலிருந்து எதிர்க்கரைக்கு ஒரு ஆடு தாண்டிவிடலாம். ஆதலின் இவ்விடத்திற்கு மேக தாடு (ஆடு தாண்டும் காவிரி) என்று பெயர் ஏற்பட்டது. மைசூர் எல்லையைத் தாண்டிச் சேலம், கோயம்புத்தூர் எல்லைகளை அடையும் போதுதான் காவிரியாறு பரவிப் பாய வசதி ஏற்படுகின்றது. கொங்கு நாட்டில் மைசூர் நாட்டிற்கு வெளியே பாயும் காவிரி சேலம், கோயம்புத்தூர், மாவட்டங்களுக்கு எல்லையாக வளைந்து வளைந்து பாய்கின்றது. அந்நிலையில் பல ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. காவிரியாறு வழியில் ஹொகெனகல் அருவியாக மாறி, மீண்டும் ஆறாகப் பாய்கின்றது. பின்பு அதன் போக்கில் சின்னாறு, தோப்பூர் ஆறு என்னும் துணையாறுகள் கலக்கின்றன. சேலம் மாவட்டத்தில் சீதாமலை, பாலமலை என்னும் இரண்டு மலைத்தொடர்களுக்கு இடையே காவிரி பாய்கின்றது. இவ்விடத்திற்றான் மேட்டூர் அணை கட்டப் பட்டுள்ளது. இந்த அணைக்கு அப்பால் இவ்யாறு மலை நாட்டிலிருந்து சமவெளிப் பகுதியில் பாயத் தொடங்குகின்றது. அங்ஙனம் பாயும் பொழுது பவானி, நொய்யல், திருமணிமுத்தாறு முதலிய துணையாறுகள் காவிரியில் கலக்கின்றன. சோழ நாட்டில் குடகு நாட்டில் தோன்றிய காவிரி, மைசூர் நாட்டு வழியே கொங்குநாட்டை அடைந்து, சோழ நாட்டில் புகுகின்றது. இதுகாறும் பல துணையாறுகளைப் பெற்று நீர்வளத்துடன் வந்த காவிரி, திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் என்ற கிளை யாற்றைத் தோற்றுவிக்கின்றது. இங்ஙனம் கொள்ளிடம் பிரிவதற்கு முன்னுள்ள காவிரியாறு மிக அகன்று காணப் படுவதால், அகண்ட காவிரி எனப் பெயர் பெற்றுள்ளது. இவ்விடத்தில் காவிரியாற்று அகலம் ஏறத்தாழ ஒரு கல் என்று சொல்லலாம். இங்ஙனம் பிரிந்து செல்லும் காவிரியையும் கொள்ளிடத்தையும் உள்ளாறு என்ற வாய்க்கால் இணைக்கின்றது. இதனால் இங்கு ஒரு தீவு அமைந்துள்ளது. இத்தீவிற்றான் திருவரங்கம், திருவானைக்கா என்னும் பாடல்பெற்ற திருக்கோவில்கள் அமைந்துள்ளன. பல கிளையாறுகள் இங்ஙனம் உள்ளாறு காவிரியையும் கொள்ளிடத்தையும் இணைக்குமிடத்தில் காவிரிக்குக் குறுக்கே பெரிய அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதன் பெயர் கல்லணை என்பது. கல்லணைக்கு அப்பால் காவிரி பற்பல சிற்றாறுகளாகப் பிரிகிறது. அவற்றுள் வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அரிசிலாறு, வீரசோழனாறு, வடவாறு, பாமணியாறு, திருமலை ராஜன் ஆறு என்பவன குறிப்பிடத்தக்கவை. இவற்றிலிருந்து நூற்றுக் கணக்கான கல் தொலைவு கால் வாய்கள் வெட்டுப்பட்டுள்ளன. இங்ஙனம் காவிரி தன் நீரைக்கொண்டும் தன் கிளையாறுகளின் நீரைக் கொண்டும் தஞ்சை மாவட்டத்தின் பெரும் பகுதியை நீர் நாடாகச் செய்து, இறுதியில் வரலாற்றுப் புகழ் மிகுந்த காவிரிபூம்பட்டினம் என்னும் பண்டைச் சோழர் தலைநகர் இருந்த இடத்தில் வங்கக்கடலில் இரண்டறக் கலந்து விடுகிறது. 2. மின்சார உற்பத்தி நிலையம் கிருஷ்ண ராஜ சாகரம் கண்ணம்பாடி அணையினால் உண்டாகியுள்ள நீர்த்தேக்கத்தின் பெயர் கிருஷ்ண ராஜ சாகரம் என்பது. இது கிருஷ்ண ராஜேந்திர உடையார் என்ற மைசூர் நாட்டு மன்னர் ஆதரவினால் ஏற்பட்டது ஆதலால், அவர் பெயராலேயே வழங்கிவருகின்றது. இத்தேக்கம் 1911ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றுப் பதினாறு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இத்தேக்கம் கட்டி முடிக்க ஏறத்தாழ இருநூற்றைம்பது லட்சம் ரூபாய் செலவாயிற்று. இத்தேக்கம் கற்களாலும் சிமென்டி னாலுமே கட்டப்பட்டுள்ளது. இது எண்ணாயிரத்து அறுநூறு அடி நீளமும் நூற்று முப்பதடி உயரமும் உடையது. இதன் இடையிடையே மின்சாரத்தால் இயங்கக்கூடிய பெரிய கதவுகளைக்கொண்ட மதகுகள் அமைந்துள்ளன. இம் மதகுகள் வழியாகக் காவிரியாற்று நீர் மிக்க விரைவாகப் பாயும் காட்சி பார்க்கத்தக்கது. இத்தேக்கத்திலுள்ள நீர், மைசூர் நாட்டை வளப்படுத்துவதோடு, காவிரியாற்றில் வெள்ளம் இல்லாதபோது சிவசமுத்திர மின்சார நிலையத்தில் மின்சார உற்பத்தி தடைப்படாமல் பெருகவும் உதவி புரிகின்றது. மின்சார உற்பத்தி நிலையம் சிவசமுத்திர மின்சார நிலையம் சிவசமுத்திர அருவிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிலையத்தில் காற்றாடிகள் போன்ற அமைப்புள்ள உருளைகள் அமைக்கப்பட்டுள்ளன; அவை நீரின் உதவியால் விரைந்து சுழலுமாறு செய்யப் பட்டுள்ளன. அருவிக்கு மேற்கே இரண்டு கல் தொலைவில் காவிரியிலிருந்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அக்கால்வாய் வழியே இம்மின்சார நிலையத்துக்கு காவிரி நீர் கொண்டு வரப்படுகிறது. ஆற்றிலிருந்து கால்வாய் பிரியுமிடத்தில் ஒரு அணை கட்டுப்பட்டுள்ளது. அவ்வணை மின்சார நிலையம் அமைந்துள்ள நிலமட்டத்தை விட நானூறு அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. அதனால் அவ்வணையில் எப்போதும் நீர் தேங்கி மின்சார உற்பத்திக்குத் தடை உண்டாகாமல் இருக்க, அவ்வணை பெரிதும் பயன்படுகின்றது. முன்பு சொல்லப்பட்ட கால்வாயின் குறுக்கே மதகுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஓரடி முதல் மூன்றரை அடிவரை குறுக்களவுள்ள பதின்மூன்று குழாய்கள் மதகுகளில் பொருத்தப் பட்டுள்ளன. இக்குழாய்கள் ஏறத்தாழ இரு நூறு கெஜம் நீளம் மலைச்சரிவின் வழியே சென்று மின்சார நிலையத்தை சேருகின்றன. மின்சார நிலையம் உள்ள இடம் தரை மட்டத்தி லிருந்து மிக்க உயரத்தில் அமைந்திருப்பதால், அங்குச் செல்வதற்கு இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அப்பாதையில் மின்சார உதவியால் டிராலி வண்டிகள் இயங்கின்றன. அவை தேவையான பொருள்களை மேலே எடுத்துச் செல்லப் பயன்படுகின்றன. காவிரியாற்று நீரைக்கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம் நான்கு மாடிகளைக் கொண்டது; ஏறத்தாழ நூறு அடி உயரமுள்ளது. மேலே சொல்லப்பட்ட குழைகள் மூலம் கொண்டுவரப்படும் நீர், இந்நிலையத்திலுள்ள காற்றாடிகள்மீது மோதுகின்றது. அம்மோதலால் காற்றாடிகள் விரைவாகச் சுழல்கின்றன. அச்சுழற்சியால் உண்டாகும் காந்த சக்தியிலிருந்து மின்சக்தி உண்டாக்கப்படுகிறது. இம்மின்சக்திiயத் திரட்டப் பல இயந்திரங்கள் வேலை செய்கின்றன. திரட்டப் பட்ட மின்சக்தியைப் பல இடங்களுக்கு அனுப்பப் பல இயந்திரங்கள் தொழிற்படுகின்றன. இங்ஙனம் தோற்றுவிக்கப் படும் மின்சக்தியின் உதவியால் மைசூர் நாடு தொழில் துறையிலும் படிப்படியாக உயர்ந்துவருகின்றது. மின்சாரத்தின் பயன் சிவ சமுத்திர மின்சார நிலையத்திலிருந்து வெளிப்படும் மின்சக்தி மைசூர் நாட்டு வீடுகளிலும், தெருக்களிலும், கடைகளிலும், அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் விளக்கெரிக்கப் பயன்படுகின்றது. இஃதன்றி, இச்சக்தி பல தொழில்களை நடத்துவதற்கும் உறுதுணை செய்கின்றது. மின் சக்தியால் இயங்கும் இயந்திரங்களில் பஞ்சாலைகள் குறிப்பிடத்தக்கவை. பஞ்சாலைகளே அன்றிப் பட்டு நெசவும் மைசூர் நாட்டில் ஏறத்தாழ நாற்பதாயிரம் ஏக்கர் நிலம் கரும்பு பயிர் செய்வதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது. கரும்பைக் கொண்டு சர்க்கரை தயாரிக்கும் தொழில் அங்கு மிகுதியாக நடை பெறுகின்றது. இத்தொழிலுக்கும் மின்சக்தி உதவிபுரிகிறது. பத்திராவதியிலுள்ள பெரிய இரும்பு எஃகுத் தொழிற் சாலைகளுக்கும் மின்சக்தி பயன்படுகிறது. அவ்வூரிலுள்ள சிமிமென்ட் தொழிற்சாலைக்கும் மின்சக்தி உதவுகின்றது. சிவ சமுத்திர அருவி நீரால் தோற்றுவிக்கப்படும் மின்சக்தி சிறப்பாகக் கோலார் தங்கச் சுரங்கங்களில் உள்ள பற்பல இயந்திரங்களை ஒட்டுவதற்குப் பெருந்துணை செய்கிறது. மேலும் பற்பல ஊர்களில் மாவரைக்கும் இயந்திரங்களை இயக்குவதற்கும், சிற்றூர்களில் வயலுக்கு நீர் பாய்ச்சும் இயந்திரங்களை ஒட்டு வதற்கும், படக்காட்சிகளை நடத்துவதற்கும் மின்சக்தி பயன்படுகின்றது. 3. வளர்ச்சிக்குரிய திட்டங்கள் மைசூரில் மின்சக்தி வளர்ச்சி சிவசமுத்திர அருவியின் அருகில் ஏற்பட்டுள்ள காவிரி மின்சக்தித் திட்டமே இந்தியாவில் மிகப்பெரிய திட்டம் என்று அறிஞர் கூறுகின்றனர். இது 1898இல் ஏ.ற்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தினால்தான் உலகப்புகழ் பெற்ற கோலார்ப் பொன்வயல்கள் மின் சக்தி பெற்று மிளிர்கின்றன; பலதிறத் தொழிற் சாலைகள் பாங்குறப் பணி ஆற்றுகின்றன. சிற்றூர் முதல் பேரூர் வரையில் வாழும் மக்கள் மின்சக்தியைப் பல துறைகளிலும் பயன்படுத்தி மகிழ்கின்றனர். மின்சக்தி பெறும் பலவகைத் தொழிற்சாலைகளின் முன்னேற்றத்தினால் மைசூர் நாடு இந்தியாவின் கைத்தொழில் படத்தில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. இன்று ஒவ்வொரு சிற்றூருக்கும் மின்சக்தி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 1940ஆம் ஆண்டில் ஏற்பட்ட *ஷிம்ஷாத் திட்டம் (ஷிம்ஷா-காவிரியின் துணையாறு) இருபத்து மூவாயிரம் குதிரைச் சக்தியுடன் தொடங்கப்பட்டது. முன் சொல்லப்பட்ட காவிரி மின்சக்தித் திட்டமும் இந்த ஷிம்ஷாத் திட்டமும் படிப்படியாக வளர்ச்சியுற்று நாட்டு மக்களுக்கு மேற்குறித்த பல நலங்களை விளைவிக்கின்றன. பல வகை நிலையங்கள் மைசூர் அரசாங்கம் தன் நாட்டின் எல்லாப்பகுதிகளுக்கும் பயன்படத்தக்க முறையில் மின்சக்தி *தோற்றுவிக்கும் நிலையங்கள் பலவற்றை அமைத்துள்ளது; இங்ஙனம் தோற்றுவிக்கப்படும் மின்சக்தியைச் ஙீசேர்த்து வைக்கும் நிலையங்களை உண்டாக்கி யுள்ளது. இவ்வாறு சேர்க்கப்படும் மின்சக்தியைப் பல்வேறு இடங்களுக்கு ‡அனுப்பத்தக்க நிலையங்களையும் ஏற்படுத்தி யுள்ளது; மின்சக்தியைப் பல இடங்களுக்கு ங்பகிர்ந்து கொடுக்கும் நிலையங்களையும் உண்டாக்கியுள்ளது; 1947இல் தோற்றுவிக்கப்பட்ட மின்சக்தி ஒரு மடங்கு என்று கொண்டால், 1950இல் ஒன்றரை மடங்கு அளவுள்ள மின்சக்தி தோற்றுவிக்கப் பட்டுள்ளது. புதிய ஏற்பாடுகள் காலப்போக்கில் நாகரிகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதால், மின்சக்திக்கு மிகுந்த தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி, சராவதி முதலிய ஆறுகளில் மிகுந்த அளவில் மின்சக்தியைத் தோற்று விக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற, இத்துறையில் வல்ல அலுவலர் பலர் வேலையில் அமர்த்தப் பட்டுள்ளனர்.. மிக்க உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் ஆறுகளிலிருந்து நீரை எடுத்து வயல்களுக்கு அனுப்புவதற்காகப் பெரிய * நீரிழுக்கும் நிலையங்கள் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நர்சிபூர் அருகில் நீரிழுக்கும் நிலையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுவருகிறது. ஏறத்தாழ எழுநூறு சிற்றூர்களில் நில அளவு எடுக்கப் பட்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டு அரசாங்கத்தினிடம் அளிக்கப் பட்டன. அவற்றுள் சில சிற்றூர்த் திட்டங்கள் படிப்படியாக நடைபெற்றுவருகின்றன. சிற்றூர்களுக்குத் தேவைப்படும் மின் சக்தியைக் கொண்டுசெல்லும் செப்புக் கம்பிகள், அவற்றைத் தாங்கி நிற்கும் தூண்கள் முதலியவற்றை வாங்க ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. 1917ஆம் ஆண்டுக்கு முன்பு முந்நூறு அறுபது இடங்களுக்கு மின்வசதி அளிக்கப்பட்டிருந்தது; 1950ஆம் ஆண்டு முடிவில் நானூற்று அறுபத்தொன்பது இடங்கள் மின் வசதி பெற்றன. 1955க்குள் ஐந்நூறு சிற்றூர்களுக்கு மின்வசதி அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பங்களூரிலும் மைசூரிலும் உள்ள மின் சக்தி பெறும் நிலையங்களின் திறனை மிகுதிப்படுத்த அரசாங்கம் முனைந்து வேலை செய்கின்றது. †மேகதாடு திட்டம் காவிரி, ஷிம்ஷா மின்சக்தித் திட்டங்களால் மட்டும் மைசூர் நாட்டுக்குத் தேவைப்படும் மின்சக்தியை உண்டாக்க முடியவில்லை. எனவே, மைசூர் அரசாங்கம் மேதாடு திட்டத்தையும் ஹொன்னமராடு திட்டத்தையும் தயாரித்தது. மேகதாடு திட்டத்துக்கு ஐந்து கோடி ரூபாய் செலவாகும் என்று அறிஞர் மதிப்பிட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் மைசூர்-சென்னை எல்லைக்கருகில் இரண்டு சதுரக்கல் பரப்புடைய இடத்தில் இத்திட்டத்திற்குரிய நிலையம் நிறுவப்படும். 1924ஆம் ஆண்டு வரையிலும் சென்னை அரசாங்கத்துக்கும், மைசூர் அரசாங்கத்துக்கும் ஓர் உடன் படிக்கை ஏற்பட்டிருந்தது. அதன்படி சென்னை அரசாங்கம் மேகதாடு என்னும் இடத்தில் மைசூர் அரசாங்கம் மின்சக்தி எடுப்பதற்காக அவ்விடத்துக் காவிரி நீரில் தனக்குள்ள உரிமைகளை விட்டுக்கொடுத்தது. ஆயின், இரு அரசாங்கங்களின் நீர்ப்பாசனத் தொடர்பான சில உரிiமகள் இரு அரசாங்கத்தினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டன. சென்னை அரசாங்கத்துக்கு எவ்வளவு மின்சக்தி என்ன விலைக்குக் கொடுப்பது என்பது பற்றிப்* பின்னர்ப் பேசி முடிவு செய்துகொள்ளலாம் என்பதை இரு அரசாங்கங்களும் ஒப்புக்கொண்டன, ஆனால், மின்சக்தியைத் தோற்றுவிக்கும் உரிமை மைசூர் அரசாங்கத்துக்கே தரப்பட்டது. மின்சக்தி தோற்றுவிக்கும் நிலையத்துக்கு நீரை ஒழுங்கு படுத்தி அனுப்ப மேகதாடு அருவியின் மேல் பாகத்தில் ஒரு நீர்தேக்க சாதனம் அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த *நீர்த்தேக்கத்தை நூற்றைம்பது அடி உயரமாகக் கட்டவேண்டும் என்றும், அப்பொழுதுதான் பதினைந்தாயிரம் மில்லியன் கன அடி நீர் தாங்கிநிற்க வசதி இருக்கு மென்றும் அறிஞர் திட்டமிட்டுள்ளனர். அருகிலிருக்கும் மின்சார நிலையத்தி லுள்ள உருளைகளைச் சுழற்றுவதற்கு இத்தேக்கத்திலிருந்து ஒரு திறந்த கால்வாய் வழியாகத் தண்ணீர் அனுப்பப்படும். .இங்கு அமைக்கப்படும் மின்சார நிலையம் தொடக்கத்தில் பதினைந் தாயிரம் *கிலோவாட் மின்சக்தியைத் தோற்றுவிக்கும். †ஹொன்னமராடு திட்டம் ஹொன்னமராடு என்னும் இடம் ஜோக் மின் சக்தி உற்பத்தி நிலையத்திலிருந்து சராவதி ஆற்றின் கரையில் ஐந்து கல் தொலைவில் உள்ளது. இஃது இரண்டு பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட குறுகிய பள்ளத்தாக்காக அமைந்துள்ளது. இருபத்தை யாயிரம் மில்லியன் கன அடி நீர் கொள்ளும் ‡ஹிரேபாஸ்கர் அணையிலிருந்து ஆற்றின் கீழ்ப்பகுதியில் மூன்று கல் தொலைவில் ஹொன்னமராடு நீர்த்தேக்கம் கட்டப்படும். நூற்று அறுபத்தைந்து அடி உயரமுள்ள ஒரு நீர்த்தேக்கம் இங்குக் கட்டப்படின், அதனில் ஒரு லட்சம் மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கலாம் என அறிஞர் மதிப்பிடுகின்றனர். இத்திட்டம் நிறைவேறக் §கரெகல் அணைக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வணைக்கட்டு வழியே இப்போதுள்ள மின்சக்தியைத் தோற்றுவிக்கும் நிலையத்திற்குத் தேவையான நீர் திருப்பப்படும்; எஞ்சிய நீர் √தல்கலேல் பள்ளத்தாக்குக்கு மலைக்குடைவு வழியாகவோ அல்லது திறந்த கால்வாய் வழியாகலோ அனுப்பப்படும். இப்பள்ளத்தாக்கின் குறுக்கே ஒரு அணையைக் கட்டி, பருவகாலத்தில் பெருகும் வெள்ளத்தைச் சேர்த்துவைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் பயன்கள் (1) ஹொன்னமராடு நீர்த்தேக்கம் ஐந்துலட்சம் கிலோவாட் உற்பத்திக்குப் போதுமான பத்தாயிரம் மில்லியன் கன அடி நீரைச் சேர்த்துவைக்க உதவும். (2) முன்னரே அமைந்துள்ள மின்சார உற்பத்தி நிலையத்திற்கு ஆயிரத்து இருநூறடி, உயரத்திலிருந்து விழும் நீர், இப்புதிய திட்டத்தின் பயனாக, ஆயிரத்து நானூறு அடி உயரத்திலிருந்து விழும். முடிவுரை இங்ஙனம் மைசூர் அரசாங்கம் ஏறத்தாழ 1950இல் போட்டுள்ள இவ்விரு திட்டங்களும் இன்று செயலாற்றப் படுகின்றன. இத்திட்டங்கள் முடிவு பெறின், மைசூர் நாட்டின் கைத்தொழில் முன்னேற்றத்துக்கும், பயிர்த்தொழில் வளர்ச்சிக்கும், வீடுகளின் தேவைக்கும் வேண்டும் மின்சக்தி குறைவின்றி வழங்கப்படும். V. குற்றால அருவி அருவியின் சிறப்பு இதுகாறும் கூறப்பெற்ற உலகப்புகழ் பெற்ற நயாகரா, விக்டோரியா, சிவசமுத்திர அருவிகள் விழுகின்ற இடங்கள் காட்சிக்கு இனியவை; ஆயின், அவை மக்களுக்கு உடல் நலத்தையும் மன அமைதியையும் தருவனவாக அமையவில்லை. குற்றால அருவியோ எனின், தன்பால் நீராடும் மக்களுக்கு உடல் நலத்தை அளிக்கின்றது; சுறுசுறுப்பை மிகுவிக்கின்றது; பல நோய்களைத் தீர்க்கின்றது; இப்பண்புகளால் ஐரோப்பியர் களையும் இந்தியர்களையும் தன்பால் இழுக்கின்றது. இவை அனைத்துக்கும் மேலாக அருவியின் அடியில் பாடல்பெற்ற குற்றாலநாதர் என்னும் சிவபெருமான் கோயில் பல நூற்றாண்டு களாக இருந்து, மக்கள் உள்ளங்களைக் கவர்ந்துள்ளது. அருவியை வழங்கும் மலை பல நூற்றாண்டுகளாகத் தமிழ்ப் புலவர்களால் சிறப்பிக்கப்பட்டது. அதன் அடிவாரத்தில் உடல் நலம் பேணி மக்கள் வந்து இன்புறுதற்கேற்ற ஊர், பன்னெடுங் காலமாக அமைந்துள்ளது. இச்சிறப்புக்களை நோக்க, மேற்கூறப் பெற்ற மூன்று அருவிகளை விட, இக்குற்றால அருவி பல துளைகளில் சீரும் சிறப்பும் பெற்றதெனக் கூறுதல் மிகையாது.. குற்றாலப் பதி இக்கால மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி என்னும் மூன்று மாவட்டங்களும் சேர்ந்தது பண்டைப் பாண்டிய நாடு. பாண்டிய நாட்டில் கி. பி. 7ஆம் நூற்றாண்டு முதல் சிறப்பாக இருந்துவரும் சிவத்தலங்கள் பதினான்கு. அவற்றுள் குற்றால அருவிக்கு அண்மையிலுள்ள குற்றாலம் என்னும் சிவத்தலம் ஒன்றாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கை அழகுக்கு இடையில் அமைந்துள்ள காரணத்தால் மிகச் சிறப்பு பெற்றுள்ளது. இத்தலம் திருநெல்வேலி மாவட்டத்துத் தென்காசித் தாலுகாவில் தென்காசிப் பதிக்குத் தென்மேற்கே மூன்றரைக் கல் தொலைவிலுள்ளது; திருவனந்தபுரம் புகைவண்டிப் பாதையில் உள்ள தென்காசிப் புகை வண்டி நிலையத்திலிருந்து தென்மேற்கே இத்தலம் இருக்கின்றது. பல திசைகளிலிருந்தும் இத்தலத்திற்கு வரச் சிறந்த பாதைகள் அமைந்துள்ளன. குற்றாலத்திருந்து ஐந்து கல் தொலைவு வரை குற்றாலத்தை நோக்கி வரும் பாதைகள் இருபுறங்களிலும் மரங்கள் வளரப் பெற்றவை; கண்கவரும் தோற்றம் அளிப்பவை. பாதைகளின் இருபுறங்களிலும் மரங்கள் செறிந்த சோலைகளும், பச்சைக் கம்பளம் பரக்கப் போர்த்தாற் போன்ற வயல்களும். நறுமண மலர்களை நல்கும் நந்தவனங்களும், நீர் நிலைகளும் காண்பவர் மனத்தைக் கவரும். பாதையிலுள்ள மரக் கிளைகளில் குரங்குகள் தாவிக் குதித்து விளையாடும். குற்றாலத்தை நோக்கிச் செல்லச் செல்ல, இயற்கை அழகு படிப்படியாக மிகுந்து செல்வதைக் காணலாம். அருவியை வழங்கும் மலைவளம் குற்றால அருவியைத் தன்னகத்தே பெற்றுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, மேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள ஆரியன்காவுக் கணவாயிலிருந்து படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்து, குற்றாலத்துக்கு இரண்டுகல் தொலைவிலுள்ள ஐந்தருவி தோன்றும் இடம் முதல் ஐயாயிரம் அடி வளர்ந்து, குற்றலத்தைக் கடந்த தெற்கேயுள்ள பொதிகை மலையை நோக்கிச் செல்லுகின்றது. இங்கு மிக்க உயரமுள்ள சிகரம் ‘பஞ்சம் தாங்கி’ என்று பெயர் பெற்றுள்ளது. இதன் உயரம் ஐயாயிரத்து நூற்று முப்பத்தைந்து அடி. இக்கொடுமுடி, நாட்டின் பிறபகுதிகள் மிகக் கொடிய வற்கடத்தால் வாட்டமுறும் காலத்திலும் மலைப்பகுதியில் மழைக்குக் காரணமாக இருந்து வற்கடம் தோன்றாமல் மக்களைத் தாங்குவதால் ‘பஞ்சம் தாங்கி’ எனக் காரணப்பெயர் பெற்றது என்று மக்கள் கூறுகின்றனர். அருவியைத் தாங்கியுள்ள குற்றால மலை மூன்று கொடுமுடிகளை உடையது; ஆதலால் திரிகூட மலை என்று வழங்கப்படுகிறது. அழகும் செல்வமும் நிறைந்துள்ள மலையாதலால் இது ‘திருகூடமலை’ என்றும் பெயர் பெறும். திரிகூடமலை திரிகூடமலை சில இடங்களில் வானுற வோங்கியும், சில இடங்களில் படுத்தும், சில இடங்களில் பருத்தும், சில இடங்களில் மெலிந்தும் தொடர்ந்தும், ஒன்றன்பின் ஒன்றாய்ச் சேர்ந்தும், சில இடங்களில் பிரிந்தும் பலவகைத் தோற்றம் அளிக்கின்றது. இம்மலையில் தேக்கு, கோங்கு, அத்தி, புன்னை, ஆல், இலுப்பை முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. தென்னை, மா, பலா, வாழை, கமுகு, ஏலம், கிராம்பு, சாதிக்காய், சந்தனம் முதலிய மரங்களும் செடிகளும் தம் பழ வகையாலும், காய் வகையாலும் மலைப் பகுதியை மணம் பொருந்திய பகுதியாக மாற்றுகின்றன. மல்லிகை, முல்லை, மகிழ், செண்பகம், பாதிரி, வெட்சி முதலிய மலர்கள் மலர்ந்து நாற்புறமும் நறுமணத்தை வீசி மலைவளம் காண வருபவரை மகிழ்விக்கின்றன. மரக்கிளைகளிலிருந்து தொங்கும் பச்சிளங்கொடிகளும் மலர்க்கொடிகளும் விழிகட்கு விருந்தூட்டுகின்றன. மலையின் சமதளத்தில் பலவகைச் செடிகளும், சஞ்சீவி முதலிய மூலிகை களும் பரந்து கிடக்கின்றன. இயற்கை எழில் நிறைந்த இம்மலைப்பகுதிகளில் கரி, நரி, புலி, மான், மலையாடு, முள்ளம்பன்றி முதலிய காட்டு விலங்குகள் கவலையின்றித் திரிகின்றன; பல்வகைப் பறவையினங்கள் மலைக்காடுகளில் இசை பாடிய வண்ணம் இருத்தலைக் காணலாம். மழைப் பருவத்தில் மலைகளையும் மரங்களையும் ஊடுருவித் தண்ணீர் அருவிகளாய்க் குதித்து விளையாடிக் கால்களாகவும் ஆறுகளாக வும் பாய்கின்றன. இம் மாரிக்காலத்தில் மலையின் தோற்றம் கண் கவரத்தக்கது. மெல்லிய பஞ்சு போன்ற வெண்முகில்கள் பற்பல உருவங்களில் மலை முகட்டில் தவழ்ந்தும்., விண்ணிற் பறந்தும் விளையாடுவதைக் காணலாம். வெண்முகிலும் கரு முகிலும் முழவு கொட்டத் தம் அழகிய தோகைகளை விரித்து மயிலினங்கள் மழையை வரவேற்று ஆடுகின்றன. மந்திகள் குட்டிகளை வயிற்றிற் சுமந்துகொண்டு மரங்களிலுள்ள கனிகளைச் சூறை யாடித் தின்று எறிகின்றன. இத்தகைய காட்சிக் கிடையில் பொதிகை மலைப் பகுதியில் தோன்றும் ‘தென்றல்’ என்றும் இளங்காற்றுத் தவழ்ந்து விளையாடுகிறது. 1935ஆம் ஆண்டில் டாக்டர் வைட் என்னும் அறிஞர் இம் மலைப் பகுதியைச் சுற்றிப் பார்த்து ஆராய்ச்சி செய்து, “இம்மலைப்பகுதியில் இரண்டாயிரம் வகை மலர்ச் செடிகளும், இரண்டாயிரம் வகை பச்சிலைச் செடிகளும் மூலிகைகளும் கிடைக்கின்றன,” என்று கணக்கெடுத்துக் கூறியுள்ளார். குற்றால மலைப் பகுதியில் ஆரஞ்சு, தென்னை, கமுகு, வாழை, மா, பலா, கொய்யா, எலுமிச்சை முதலிய மரங்கள் பயிராகும் தோட்டங்கள் மிகுதியாக இருக்கின்றன. பல தோப்புக்கள் தனிப்பட்டவர்க்கு உரியவையாயும், சில அரசாங்கப் பாதுகாப்பிலும் இருக்கின்றன. குற்றhல மலையின் கவின் பெறு வனப்பும், கண் கொள்ளாக் காட்சியும் காண்பவர் ஒவ்வொருவரையும் கவிஞராக மாற்ற வல்லவை. உண்மைப் புலவன் இதனைக் காண்பானாயின், இவ்வளம்படு வனப்பில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்துத் தன் அநுபவங்களை உயிர்ப்புள்ள கவிகளாகப் பொழிவான் என்பதில் ஐயமில்லை. உலகப்பற்றை ஒழித்து மனத்தை ஒரு நிலைப்படுத்தி யோக சாதனை செய்வதற்கு இது மிகப் பொருத்தமான இடமாகும். இம்மலை வளத்தின் சிறப்பினைத் திருக்குற்றாலத் தல புராணத்திலும் திருக்குற்றாலக் குறவஞ்சி என்னும் நூலிலும் படித்து மகிழலாம். சிற்றாறு: தோற்றமும் போக்கும் குற்றால அருவியாக விழும் ஆற்றின் பெயர் சிற்றாறு என்பது. இந்த ஆறு திரிகூட மலையில் ஓரிடத்தில் தோன்றிக் கீழ் நோக்கி வருகின்றது. இங்ஙனம் வரும் வழியில் உயர்ந்த மலைப் பகுதியிலிருந்து முதன் முதலில் நூறு அடிக்குக் கீழே விழுகின்றது. நூறு அடி உயரத்திலிருந்து விழுவதால் இச்சிற்றாற்று நீர் மலர்களைப்போலச் சிதறி விழுகின்றது. இது தேன் போன்று மெல்லிய ஒழுக்குடையது; பார்க்க இனிமையாக இருப்பது; பக்கத்தில் தேன் கூடுகளை மிகுதியாக உடையது. இக்காரணங் களால் இவ்வருவிக்குத் தேன் அருவி என்பது பெயராயிற்று. இந்த அருவி மலையடி வாரத்திலிருந்து ஏறத்தாழ மூன்று கல் தொலைவில் அமைந்திருக்கிறது. இவ்வருவியைச் சூழ உள்ள இடம் இயற்கையன்னை கொலு வீற்றிருக்கும் இன்ப இடம் என்று கூறலாம். தேனருவிநீர் சிற்றாறாக ஒன்றரைக் கல்வரை மலைப் பகுதியிலேயே பாய்கின்றது; ஒன்றரைக் கல் தாண்டியதும் இவ்யாறு செண்பக மரங்கள் நிறைந்த காட்டு வழியே பாய்கின்றது; அங்கு ஓரிடத்தில் முப்பதடி உயரமுள்ள அருவியாக விழுகின்றது; அதனால் செண்பக அருவி எனப் பெயர் பெறுகின்றது; இவ்யாறு மேலும் கீழ் நோக்கி ஏறத்தாழ ஒன்றரைக் கல் தொலைவு பாய்கின்றது. அவ்விடத்தில் மாமரங்கள் அடர்ந்த காடு காணப்படுகின்றது. அக்காட்டிலுள்ள இவ்யாற்றின் துறை மாவடித் துறை எனப் பெயர் தாங்கியுள்ளது. மாவடித் துறையைத் தாண்டிச் செல்லும் சிற்றாறு இருநூற்று எண்பத்தெட்டு அடி உயரத்திலிருந்து அருவியாக விழுகின்றது. ஆயின், இஃது இருநூற்று எண்பத்தெட்டடி தொலைவும் ஒரே வீழ்ச்சியால் விழாமல், இடையில் முன்னோக்கியுள்ள பாறையில் விழுந்து, அதனால் பொங்கிப் பரந்து விரிந்து கீழ்நோக்கி விழுகின்றது. இங்ஙனம் பொங்கி மேலெழும் காரணத்தால் இத்துறை பொங்குமா கடல் எனப் பெயர் பெற்றது. கீழே விழுகின்ற அருவி வற்றாத வட அருவி எனப் பெயர் பெற்றுள்ளது. இந்த அருவியின் தோற்றமும் ஓசையும் உள்ளத்தை ஈர்ப்பவை; உலகக் கவலைகளைச் சிறிதளவு மறைத்து மன அமைதியைக் கொடுத்து, உயர் நிலையில் புகுத்த வல்லவை. ஐந்தருவி குற்றால அருவியிலிருந்து ஐந்தருவிப் பாதையில் மலைமீது அரைக் கல் தொலைவில் சிற்றருவி என்னும் பெயர் கொண்ட ஓர் அருவி இருக்கின்றது. அதற்கு மேற்கே இரண்டு கல் தொலைவில் சிற்றாற்றின் ஒரு பிரிவு ஐந்து அருவிகளாக விழுகின்றது. அதற்கு அவ்விடத்தில் ஐந்தருவி என்பது பெயர். ஆற்று நீர் ஐந்து அருவிகளாக விழுகின்ற காட்சி விழிகட்கு விருந்தளிக்க வல்லது. அங்குச் செல்லும் மக்கள் தங்கியிருக்க வசதியால் ஒரு பெரிய பாறை பந்தற் கூரைபோல் அமைந்துள்ளது. அருவியின் கீழ், மக்கள் வழுக்கி விழாமல் நீராட வசதி செய்யப் பட்டுள்ளது. மற்றோர் அருவி குற்றாலத்திற்குக் கிழக்கே முக்கால் கல் தொலைவில் மலைப் பகுதியிலிருந்து நீரோட்டம் அருவியாக விழுகின்றது. இதற்குப் பாசுபத சாஸ்தா அருவி என்பது பெயர். நீரருந்தும் காரணம் பற்றி இதற்குப் புலியருவி என்றும் பெயர் வழங்குகிறது. சாரற் காலத்தில் வட அருவியில், மக்கள் தொகை நிறைந்திருந் திருக்கும் காரணத்தால் பலர் இப்புலி அருவியில் நீராட வருவர். இவ்வருவி தரையில் ஆறாகப் பாயும் போது ‘அழகனாறு’ எனப் பெயர் பெறுகின்றது. புலியருவியில் மக்கள் நீராடுதற்கு ஏற்றவாறு சில வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள ஐயனார் கோவில் புதுப்பிக்கப் பட்டுள்ளது. அக்கோவிலைச் சுற்றியுள்ள இடம் கற்கள் பரப்பப்பட்டுச் செம்மையான மேடையாகச் செய்யப்பட்டுள்ளது. அருவி நீர் இரண்டாகப் பிரிந்து கோவிலையும் மேடையையும் சுற்றிச் செல்கின்றது. இரு பிரிவுகளிலும் கால்வாய்களின் போக்கில் படிகள் கட்டப்பட்டு நீராட ஏற்ற வசதி செய்யப் பட்டுள்ளது. இவ்வசதிகளைச் செய்த, பெருமகனார், ‘கலைத் தந்தையார்’ எனக் கற்றாற் போற்றப் பெறுபவரும், தமிழ் வளர்ப்பதையே தம் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளவரும் மதுரை மீனாட்சி பஞ்சு ஆலை உரிமை யாளருமாகிய கருமுத்து - தியாகராசச் செட்டியாhராவர். சாரற்காலம் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள பெரிய வெளியாகிய ஆரியன்காவுக் கணவாய் அண்மையில் இருப்பதால், அக்கண வாய்க்கு மேற்குப் பக்கம் எழுகின்ற தென் மேற்குப் பருவக்காற்றும் மழையும் அக்கணவாய் வழியே வீசிக் கிழக்குப் பக்கத்தில் இருக்கின்ற குற்றாலத்தில் இளங்காற்றாகவும் சிறு மழையாகவும் அமைகின்றன. இக்காற்றுச் ‘சாரற்காற்று’ என்றும், மழை ‘சாரல்’ என்னும் இளமழையும் வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் குற்றால மலையை அடுத்துள்ள பகுதியிற் கிடைக்கின்றன. இம்மாதங்களைச் ‘சாரற் காலம்’ என்றும் இப்பகுதியினர் வழங்குகின்றனர். இங்கு வீசும் தென்றற் காற்று, உடல் வெப்பத்தை மாற்றிக் குளிர்ச்சியைக் கொடுக்கும். குற்றால அருவி சாரற் காலத்திலும், ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலும் மிகுதியாக நீரைச் சொரியும், அருவி நீர் தன் போக்கில் மலைமீதுள்ள மூலிகைகளைத் தழுவி வருகின்றது. இதனால் அம் மூலிகைகளின் சத்துக்கள் நீரில் கலந்து கிடக்கின்றன. அருவி நீரின் விரைவு மின்சார அணுக்களைத் தோற்றுவிக்கிறது. இவையனைத்தும் ஒன்று சேர்ந்து அருவியில் நீராடுவோர்க்கு உடல் நலத்தை அளிக்கின்றன. சாரற் காலத்தில் அருவியில் நீராடுதல் சிறந்த பயனைத் தருகின்றது. உடலைப் பற்றிய நோய்களும் தோலைப் பற்றிய நோய்களும் நீங்குகின்றன; கடும்பசி உண்டாகின்றது; உடல் வலுக்கின்றது.; ஊக்கம் மிகுகின்றது. அருவியிலிருந்து உயிர்வாயு அம்சங்கள் மிகுதியாய் அடங்கிய ஒரு வகை இளங்காற்று வீசுகின்றது. அக்காற்று உடலுக்கு மிக்க நன்மையைத் தருகின்றது. உடல் மெலிந்தோரும், வலிமை குறைந்தோரும் சில நோய்களால் துன்புறுவோரும் சாரற் காலத்தில் மலைமீதும் நிலத்திலும் உள்ள பாதைகளில் உலாவி, அருவிகளில் நீராடி மகிழ்வர். இங்ஙனம் தொடர்ந்து சில நாட்கள் உலாவலையும் நீராடுதலையும் மேற்கொள்ளின், அவர்கள் உடல்நலம் பெற்றுத் திகழ்வார்கள் என்பது உறுதி. அறிஞர் பாராட்டு ஏறத்தாழ நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கிழக்கு இந்தியக் கம்பெனியார் நியமித்த மருத்துவக்குழு குற்றால அருவியைக் பற்றிக் கீழ்வருமாறு கூறியுள்ளது; “அருவிக்குள் நுழைந்ததும் முதன் முதல் ஒருவித நடுக்கம் உண்டாகின்றது. பின்பு இன்னதென்று விளக்கமுடியாத ஒருவித இன்பம் தோன்றுகிறது. அருவியின் விரைவு உடம்பில் தாக்குவதால் குருதியோட்டம் விரைவுப்படுகிறது; அதனால் உடம்பு முழுவதும் உணர்ச்சி பெறுகிறது; சோம்பலைக் கெடுத்து உள்ளக் களிப்பை மிகுவிக்கின்றது; பசியை உண்டாக்கிச் செரிமானத்தைச் சீர் செய்து பலவித நன்மைகளை உண்டாக்கு கின்றது. நாங்கள் அறிந்தவரையில் வேறு எவ்வித நீராடலும் இத்துணைப் பயன்களையும் ஒருங்கே பயப்பதில்லை மருத்துவ நலன் மிக்குள்ள இவ்வருவி நீரும், மனத்தை இன்புறுத்தும் தட்பவெட்ப நிலையும் சேர்ந்து இங்கு வருவார்க்குப் புத்துயிர் வழங்குகின்றன.” திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை வரைந்து, தமிழ் மொழியின் பழமையையும் பெருமையையும் உலகறியச் செய்த பிஷப் கால்டுவெல் என்ற பேரறிஞர், “உலகத்திலேயே மிகச் சிறந்த நன்னீர்க் கட்டம் குற்றாலத்தில் அமைந்திருக்கிறது. அருவிநீர் மூலிகைச் சேர்க்கையால் சிறப்புற்றதாகும்,” என்று இவ்வருவியைச் சிறப்பித்துத் தாம் வரைந்துள்ள திருநெல்வேலி மாவட்ட வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். அருவி விழுகின்ற இடத்தைச் சார்ந்துள்ள குற்றாலம் என்னும் ஊர் உடல் நலத்திற்கு ஏற்றது. அருவியில் நீராடல் உடலுக்கு நலம்பயக்கும் என்னும் இரண்டையும் முதன் முதலில் உணர்ந்தவர் கிழக்கிந்திய கம்பெனியாரே ஆவர். அக்கம் பெனியாரைத் தொடர்ந்து ஆங்கில அதிகாரிகள் பலர் அங்கு இல்லங்களை அமைத்துக்கொண்டு வாழலாயினர். பின்பு அவ்வதிகாரிகளைப் பின்பற்றி நம் பாண்டிய நாட்டுக் குறுநில மன்னர் பலர் வளமனைகளைக் கட்டினர்; ஆண்டுதோறும் சாரற்காலத்தில் மட்டும் அங்கு இருந்து இன்பம் துய்க்கும் வழக்கத்தை மேற் கொண்டனர்.. பின்னர் ஓய்வு பெற்ற அரசாங்க உயர் அலுவலர் சிலரும் குற்றாலத்தில் குடியேறினர். நீராட வசதி குற்றால அருவியின் இணையற்ற சிறப்பினை அறிந்து ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் குற்றாலத்திற்கு வருகின்றனர்.; அருவியில் நீராடுகின்றனர். இங்ஙனம் நீராட வருபவர் தொகை மிகுதிப்படவே, குற்றாலத்தில் அருவிச் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அஃது அரசாங்க அநுமதி பெற்ற சங்கம். அச்சங்கம் அமைவதற்கு முன் அருவிக்கூடம் வழுக்குப் படிந்து இருந்தது; அங்கு நீராடுவோர்க்கு ஏற்ற பாதுகாப் பில்லாமல் இருந்தது. அருவிச் சங்கம் ஏற்பட்டபின்பு பெருமக்கள் பலரது பொருளுதவியால் அருவியின் அடியில் ஒரு மேடை அடைக்கப்பட்டது; நீராடுவோர் பாதுகாப்புக்கென்று இருப்புக் கம்பிகள் போடப்பட்டுள்ளன; இவ் வசதிகளின் பயனாக, இப்பொழுது ஒரே நேரத்தில் ஏறத்தாழ நூறுபேர் மன அமைதியுடன் நீராட இடமிருக்கின்றது. பெண்கள் தனியாக நீராடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. நீராட வருவோர் ஆடை முதலியவற்றை வைத்துக்கொள்ளவும், நீராடிய பின்பு அவற்றை அணிந்து கொள்ளவும் அருவியின் அருகில் பல அறைகள் கட்டப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கியிருக்க ஒரு கல்மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. அருவியின் அடியில் மக்கள் நீந்தி விளையாடுவதற்கேற்ற ஒரு சிறு குளம் அமைந்துள்ளது. அருவி நீர் இதில் நிரம்பிச் சிற்றாறாக அடுத்துள்ள பாறைகளில் மோதியும் தவழ்ந்தும் பாய்கின்றது. இங்ஙனம் ஆறு பாயும் வழியில் மண்பண்டங் களும் படித்துறைகளும் அமைந்து, ஆற்றை அழகு செய்கின்றன. அருவியின் அருகில் கோவிலுக்குச் சொந்தமான மண்டபமும் சில அறைகளும், அவற்றுக்கெதிரே தீர்த்தவாரி மண்டபமும் அமைந்துள்ளன. இங்ஙனம் குற்றாலத்தை அழகுபடுத்திச் செல்லும் சிற்றாறு மேற்குத் தொடர்ச்சி மலையோரமாகவே மிகக் குறுகிய இடத்தில் பாய்ந்து செல்கின்றது. ஆற்றுநீர் பளிங்கு போல் தெளிந்து காணப்படுகிறது. ஆற்றின் அடிப்பகுதி பாறைக்கற்களும் கூழாங்கற்களும் நிறைந்தது. 2. குற்றாலப் பதி ஊரின் அமைப்பு அருவியைச் சார்ந்த மலையடிவாரப் பகுதியில் பாடல்பெற்ற திருக்குற்றாலநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. அதற்கு எதிர்ப்புரத்தில் தென்காசியிலிருந்து வரும் சாலை அமைந்திருக்கிறது. அச்சாலையில் சில கடைகள் அமைந் துள்ளன. கோவிலிலிருந்து ஐந்தருவிக்குச் செல்லும் நீண்ட பாதை அழகாகத் தோற்றமளிக்கிறது. அப்பாதையின் தொடக்கத்தில் இருபக்கங்களிலும் சிறந்த வளமனைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கு அப்பால் சில தெருக்கள் அமைந்துள்ளன. அன்றாடம் அருவியில் நீராட வரும் மக்களுக்குத் தேவையான பொருள்களை விற்கவும், உண்டிச்சாலைகளை வைத்து நடத்தவும் அங்குக் குடியேறிய மக்கள் வாழ்கின்ற தெருக்கள் சிலவாகும். மலைமீதுள்ள காடுகளைப் பாதுகாக்கும் அரசாங்க அலுவலர் குடியிருப்புகள் சில; கோவிற்பணியாளர் வாழ்கின்ற இல்லங்கள் சில. முப்பது ஆண்டுகளுக்குப் பின்பே இவ்வூர் இத்துணைத் தெருக்களையும் வீடுகளையும் பெற்றுள்ளது. தங்குதற்குரிய வசதிகள் அருவியில் நீராடும் பொருட்டு வருகின்ற மக்கள் தங்குவதற்குப் பல இடங்கள் இருக்கின்றன. கோவிலார் பல கட்டடங்களைக் கட்டி வாடகைக்கு விடுகின்றனர். திருவாவடுதுiற ஆதீனம், செங்கோல்மடம் இவற்றுக்குரிய மடங்கள் நீண்ட காலமாக இங்கு இருந்துவருகின்றன. புதிதாகக் கட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசர் மடமும் வருவோர் தங்க வசதியானது. சொக்கன்பட்டி சமீன்தார் கட்டிய சத்திரமும்., அதற்கு எதிரே உள்ள வலங்கைப் புலி விலாச மண்டபமும், இவற்றுக்கப்பால் உள்ள பதினாறு அறைகள் கொண்ட கட்டடமும், ஆற்றை நோக்கியுள்ள பிரயாணிகள் விடுதியும் வாடகைக்கு விடப்படுக் கின்றன. இவை தவிரச் சேனையர் மடமும் வேறுபல மடங்களும் இருக்கின்றன. சில வளமனைகளும் தனிச்சிறு கட்டடங்களும் வாடகைக்குக் கிடைக்கும். பிற வசதிகள் குற்றாலப் பதியில் பொதுமக்கள் நலனுக்காக ஒலிபரப்பியும் பல நூல்கள் கொண்ட படிப்பகமும் இருக்கின்றன. தெருக்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறிய அஞ்சல் நிலையம் இருக்கின்றது. கோவில் சார்பில் ஒரு படிப்பகமும் நடை பெறுகின்றது. தலச் சிறப்பு அருவிக்கு முன்பாகக் கோவில் கொண்டுள்ள குற்றால நாதர் முதலில் திருமால் வடிவத்திலிருந்தவர். “வைணவர்கள் அவருக்குப் பூசை இயற்றி வந்தார்கள். தென்னோடு போந்த அகத்தியர் இத் திருமாலின் மீது தம் கையை வைத்துச் சிவபெருமானாக்கி வழிபட்டனர்,” என்று இத்தல புராணம் கூறுகின்றது. வரலாற்று முறையில் நின்று பார்ப்பின், இது கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரால் பாடப்பட்டுள்ளது. சம்பந்தர் இங்குள்ள இயற்கை வனப்பில் ஈடுபட்டு உவகைப் பெருக்குடன் திருப்பதிகம் பாடியுள்ளார். அதே ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் தம் பாக்களில் வைப்புதலமாக இதனைப் போற்றியுள்ளார். கி. பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரரும் அவர் நண்பரான சேரமான் பெருமாளும் குற்றால நாதரை வழிபட்டனர் என்று பெரிய புராணம் பேசுகின்றது. அதே நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் “குற்றாலத் தெங் கூத்தா போற்றி” என்று விளித்துப் பாடியுள்ளார். கந்த புராணத்i ணதச் சேர்ந்த சங்கர சங்கிதையிலும் சனற்குமார சங்கிதையிலும் இவ்விடத்தின் சிறப்புக் கூறப்பட்டுள்ளது. பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபிரான் உமாதேவியாரைத் திருமணம் செய்யும் பொருட்டு இவ்விடத்துச் சிறப்பினை அகத்தியர்க்கு எடுத்துக் கூறினான் என்று தலபுராணம் கூறுகின்றது. இத்தலத்திலள்ள மரம் குறும்பலா என்பது. திரு ஞானசம்பந்த ணர் இதன்மீது ஒரு தனித் திருப்பதிகம் பாடியுள்hர். சைவ நாயன்மார் எவரும் வேறு எத்தலத்திலுள்ள தல விருட்சத்துக்கும் இவ்வாறு தனிப்பதிகம் பாடியதில்லை. சிவபிரான் திருமாலாயிருந்த காலத்தில் அவருக்கு ஈசான திக்கில் இக்கால ஐந்தருவிச் சாலையும் இலஞ்சிச் சாலையும் சந்திக்கின்ற இடத்தில் உள்ளது கூத்தர் கோயில், இக்கூத்தரைத் தான் மாணிக்கவாசகர் முதலியோர் பாடினர். சிவபெருமான் வீற்றிருக்கும் குறும்பாலாவின் அடி ஒரு தலமாகப் பண்டை யோரால் பாடப்பட்டது. பெருங் கோவிலில் உறைகின்ற இறைவன் பெயர் திருக் குற்றாலநாதர் என்பது. அவர் திரிகூடமலை அடிவாரத்தில் இருப்பதால் திரிகூடநாதர் என்றும் பெயர் பெற்றவர். இறைவியின் பெயர் குழல் வாய் மொழியம்மை. குழலின் ஒலிபோன்று இனிமை பொருந்திய சொல்லையுடைய அம்மை என்பது இப்பெயரின் பொருளாகும். கோவில் அமைப்பு குற்றாலநாதர் கோவில் சங்கு வடிவாக அமைந்துள்ளது. இக்கோவில் கிழக்கு மேற்காக முந்நூற்று எழுபத்தாறு அடி அகலமும் தெற்கு வடக்காக நாநூனூற்று ஏழு அடி நீளமும் கொண்டது; இந்த அளவுள்ள நிலப்பரப்பின் நடுவில் குற்றாலநாதர் கோவிலும், அவருக்கு வலப்பக்கம் அம்மன் கோவிலும், இடப்பக்கம் பராசக்தி கோவிலும் தனித்தனியாக அமைந்துள்ளன. இம் மூன்று கோவில்களுக்கும் பொதுவான திருச்சுற்று உண்டு. அதற்குச் சங்க வீதி என்பது பெயர். மகா சந்தனாதித் தைலம் திருமாலாக இருந்தவர் தலைமீது அகத்தியர் கையை வைத்து அழுத்திச் சிவலிங்கமாக்கிய காரணத்தால், குற்றால நாதருக்குத் தலைவலி உண்டாயிற்று என்று கொண்டு, அதற்காக நாடோறும் மகா சந்தனாதித்தைலம் தயாரித்து அத் தலைவரையைப் போக்க திருமுழுக்காட்டுவது வழக்கம். கோவிலில் இத்தைலத்தைத் தயாரிக்க தனியறை உண்டு. இந்தத் தைலம் பல மூலிகைகளையும் மருந்து சரக்குகளையும் சேர்த்து மருத்துவ முறைப்படி செய்யப்படுகிறது. இது தலைவலி வயிற்றுவலி முதலிய நோய்களை நீக்கவல்லது. இறைவனுக்குத் திருமுழுக்காட்டிய தைலம், படி இருபத்திரண்டரை ரூபாய் வீதம் விற்கப்படுகின்றது. வசந்த வீதி கோவிலைச் சுற்றியுள்ள பாதை ‘வசந்த வீதி’ எனப் பெயர் பெறும். இவ்வீதியில் சிறு கோவில்களும் மண்டபங்களும் இருக்கின்றன. சுற்றுக் கோவில்கள் திரிகூட மலைமீது செண்பக அருவிக்கு அருகில் செண்பகக் காட்டில் ஓர் அம்மன்கோவில் இருக்கிறது. இவ்வம்மன் பெயர் செண்பகதேவி என்பது. இவ்வம்மன் சிலை வசீகரத் தோற்றம் உடையது. குற்றால நாதர்க்கு விழாக்கள் தொடங்குமுன், அவ்விழாக்கள் நன்கு நடைபெற, இவ்வம்மனுக்குச் சித்திரைத் திங்கள் முழுமதியன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். சித்திர சபை திரிகூடநாதரைச் சுற்றியுள்ள கோவில்களில் சித்திர சபை குறிப்பிடத்தக்கது. இஃது இறைவன் நடனமாடும் ஐந்து சபைகளில் ஒன்றாகும். திருவாலங்காட்டிலுள்ள இரத்தின அம்பலம், தில்லையிலுள்ள பொன்னம்பலம், திரு ஆல வாயிலுள்ள வெள்ளியம்பலம், திருநெல்வேலியிலுள்ள தாமிர அம்பலம் என்னும் நான்குடன் குற்றாலத்திலுள்ள இவ்வோவிய அம்பலமும் சேர்ந்து ஐந்தாகும். மேலே கூறப்பெற்ற நான்கு அம்பலங்களிலும் விக்கிரகமாகக் காட்சியளிக்கும் கூத்தப் பெருமான், இங்கு ஓவிய உருவில் காட்சி அளிக்கின்றார். எழுவகைத் தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுர தாண்டவம் இங்கே நடைபெறுதாக ஐதிகம். இச்சித்திர சபைக்கு எதிரில் பெரிய தெப்பக் குளமும், அதன் நடுவில் உயர்ந்த கோபுரமுள்ள நீராழி மண்டபமும் அழகுடன் காட்சி அளிக்கின்றன. இவ்வோவிய அம்பலச் சுவர்களில் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கத்தக்க ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கோவில் கல்வெட்டுக்கள் இதுகாறும் கல்வெட்டு ஆராய்ச்சித் துறையாளர் குற்றாலத்தில் எண்பத்து ஒன்பது கல்வெட்டுக்களைப் படியெடுத்துள்ளனர். அவற்றுள் பதினான்கு கல்வெட்டுக்கள் சோழ வேந்தர் காலத்தவை; எழுபத்தைந்து கல்வெட்டுக்கள் பாண்டிய அரசர் காலத்தவை. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசனாக இருந்த முதற் பராந்தகன், பின்வந்த முதல் இராசராசன் ஆகியோர் கல்வெட்டுக்கள் சிறப்பானவை. இவற்றால் கி.பி. 10ஆம் நூற்றாண்டிலேயே குற்றாலநாதர் கோவில் சிறப்புற்றிருந்தது என்பதை நன்கு அறியலாம். கி.பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டியப் பேரரசனாக இருந்த மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் குற்றாலநாதர் கோவிலைக் கவனிக்க ஐந்நூற்றுப் பன்னிருவர் கொண்ட ஆலோசனை சபை ஒன்று இருந்தது. சடையன் மாறன் என்ற பாண்டியன் காலத்தில் ‘பாசுபதப் பெருமக்கள்’ என்ற பெயர் கொண்ட ஆலோசனை சபை இருந்ததாகக் கல்வெட்டுக் கூறுகின்றது. பின்வந்த மாறவர்மன் விக்கிரம பாண்டியன், சடையவர்மன் வீரபாண்டியன், சடையவர்மன் சுந்தரபாண்டியன், சடையவர்மன் பராக்கிரம பாண்டியன், வீரமார்த்தாண்ட பாராக்கிரம பாண்டியன், மாயவர்மன் குலசேகரன் முதலிய பாண்டிய மன்னர் கல்வெட்டுக்களும் இருக்கின்றன. சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தில் கோவிலை ஆட்சி புரிந்தவர் ‘திருக்குற்றாலச் சமுதாயத்தார்’ எனப்பட்டனர். குற்றாலத்துக்கு அண்மையில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பெயரால் சுந்தர பாண்டியபுரம் என்றோர் ஊர் அமைந்தது. இப்பாண்டியர் கல்வெட்டுகளிலிருந்து, பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் நடைபெற்ற போர்களைப்பற்றிய விவரங்களும், குற்றாலநாதர் கோவில் ஆட்சிப்பற்றிய விவரங்களும், பலவகை நிலங்களின் பெயரும், நில அளவைப் பெயரும் அரசாங்க அலுவற் பெயர்களும் அலுவலர் பெயர்களும், கோவிலில் நடைபெற்ற விழாக்கள், பூசைகள் பற்றிய விவரங்களும் பிறவும் அறிந்து மகிழலாம். சைவசமய குரவர் இயற்றிய திருப்பாடல்களைப் பாடவும், புராணம் பாடவும், இசைச்கலை வளர்க்கவும் கோவிற் பணிகளை நடத்தவும் அரசர்களால் நிலங்கள் மானியமாக விடப்பட்டுள்ளன. திருச்சுற்றிலுள்ள தனிக்கோவில்கள் பிற்காலத்தில் தோன்றிய பலரால் அமைக்கப்பட்டவை. அவர்களால் அவற்றின் வழிபாட்டுக்கு நிலமும் பொருளும் வழங்கப்பட்டன. அக்காலத் தமிழ் பெண்மணிகளும் அம்மன் திருமஞ்சனத்திற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். பக்திப் பெருக்கினால் பலர் திருவிளக்கேற்றல், அமுதளித்தல், திருமுறை ஓதுதல் முதலிய பலவகை அறங்களுக்காக நிலம், பொன் முதலியவற்றை உதவியுள்ளனர். சோழ வேந்தரும், பாண்டிய மன்னரும் இக்கோவிலில் கருவறை, நடுமண்டபம், முன் மண்டபம் முதலியவற்றை அமைத்துள்ளனர். கோவிற்பகுதிகளைப் புதுப்பித்துள்ளனர். இதுகாறும் கூறப்பெற்ற விவரங்கள் இக்கோவிற் கல்வெட்டுக் களிலிருந்து உணரப்படுவனவாகும். பின்வந்த சொக்கம்பட்டிக் குறுநில மன்னர்கள் பல திருப்பணிகளைச் செய்துள்ளனர். நகரத்தார் மரபைச் சேர்ந்த தேவகோட்டைச் செட்டியார்கள் பெரும்பொருள் செலவிட்டுக் கோவில் திருப்பணியைச் சிறப்புற நடத்தி முடித்தனர். பூசைகளும் விழாக்களும் குற்றாலநாதருக்குச் சித்திரைச் திங்கள் வசந்த விழாவும், புரட்டாசித் திங்கள் நவராத்திரி விழாவும், ஐப்பசித் திங்கள் கந்தசஷ்டி விழாவும் சிறப்புறக் கொண்டாடப்படுக்கின்றன. விழாக்காலத்தில் இறைவனும் இறைவியும் ஓவிய அம்பலத்தைச் சுற்றி உலh வருதல் வழக்கம். விழாக்காலங்களில் உலா முடிந்ததும் திருக்குற்றாலம் சந்நிதி பிரபந்த வித்துவான் மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர் மரபினர் கவி பாடுவர். அவர்களுக்கு இன்றும் கோவில் மரியாதை செய்யப்படுகின்றது. விழா நாட்களில் திருக்குற்றாலத்தில் இன்னிசை அரங்குகள், திருமுறை ஓதுதல், சைவப் பெருமக்களின் சொற்பொழிவுகள் ஆங்காங்கு நடைபெற்றவண்ணம் இருக்கும். இங்ஙனம் நடைபெறும் விழா நிகழ்ச்சிகளைக் குற்றாலத் தலபுராணத்தில் பரக்கக் காணலாம். 3. குற்றாலம் பற்றிய இலக்கியம் திரிகூட ராசப்பக் கவிராயர் முன் சொல்லப்பட்ட திருஞானசம்பந்தர் முதலிய சமய குரவர் குற்றாலம் பற்றிப் பதிகம் பாடினரேயன்றி இத்தலச் சிறப்பை விளக்கித் தனி நூல்கள் செய்யவில்லை. இந்நிலையில் கி. பி. 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திரிகூட ராசப்பக் கவிராயர் என்ற பெரும்புலவர் தோன்றினார். அவர் குற்றாலத் திருந்து இரண்டு கல் கிழக்கேயுள்ள மேலகரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர்; தாயுமான அடிகள் காலத்தவர்; மதுரையை ஆண்ட முத்து விசயரங்க சொக்கலிங்க நாயக்கர் பாராட்டுக்கு உரியவர். இப்பெரியார் குற்றாலத்தைப் பற்றிய பதினான்கு நூல்கள் பாடியுள்ளார். அவை திருக்குற்றாலத் தலபுராணம், திருக்குற்றால நாதர் உலா, திருக்குற்றாலக் கோவை, திருக்குற்றாலச் சிலேடை வெண்பா, திருக்குற்றால யமக அந்தாதி, திருக்குற்றால வெண்பா, திருக்குற்றால ஊடல், திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால பரம்பொருள் மாலை, குழல்வாய் மொழி கலிப்பா, கோமளமாலை, வெண்பா அந்தாதி, பிள்ளைத்தமிழ், நன்னகர் வெண்பா என்பன. இவற்றுள் இறுதியிலுள்ள ஆறு நூல்கள் வெளியிடப்படவில்லை; முதல் எட்டு நூல்களும் வெளியிடப் பெற்றுப் புலவர் பாராட்டுக்கு உரியனவாக இருந்து வருகின்றன. அவ்வெட்டு நூல்களையும் பற்றிய செய்திகளைச் சுருக்கமாக இங்குக் காண்போம். குற்றாலத் தலபுராணம் இந்நூல் இரண்டு காண்டங்களும் முப்பத்திரண்டு சருக்கங்களும், இரண்டாயிரத்து எழுபத்திரண்டு செய்யுட்களும் கொண்டது. இப்புராணத்தில் மலைமீதுள்ள சிற்றாறு பற்றிய விவரங்களும், அருவியிலிருந்து உருவெடுக்கும் சிற்றாறு பற்றிய விவரங்களும், திரிகூடமலை பற்றிய விவரங்களும் திருக்குற்றால நகரத்தைப் பற்றிய செய்திகளும், குற்றாலநாதர் கோவிலைப் பற்றிப் பல நூற்றாண்டுகளாகக் கூறப்பட்டுவந்த புராணச் செய்திகளும், பிறவும் விரிவாக இடம் பெற்றுள்ளன. குற்றால நகரத்தைச் சுற்றி மதிலும் அகழியும் இருந்தன. நகரத்தில் நடுநாயமாகக் குற்றலநாதர் கோவில் விளங்கியது. விழாக் காலங்களில் வசந்த வீதி தேரோடும் திருவீதியாக விளக்கமுற்றது. இவ்வீதியில் பெண்கள் நடனம் ஆடுதற்கான அரங்குகள் அமைந்திருந்தன என்னும் விவரங்கள் திருநகரச் சருக்கத்தில் இருத்தலைக் காணக் கவிராயர் காலமான கி. பி. 18ஆம் நூற்றாண்டில் குற்றாலம் ஒரு நகரமாகவே இருந்தது என்பது தெரிகிறது. நகரத்திலிருந்த மாடமாளிகைகளின் அழகும், உயர்ந்த மாடிகள்மீது மகளிர் பந்தடித்து விளையாடிய நிலையும் *பிறவும் ஆசிரியரால் திறம்படக் கூறப்பட்டுள்ளன. குற்றாலநாதர் உலா இந்நூல் குற்றாலநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவர் உலாவரும் சிறப்பைக் கூறுவது. இதன்கண் தலச் சிறப்பு, இறைவன் பெருமை, அகத்தியர் வரவு, செங்கண் மால் சிவனாக மாறுதல், திருவிழா, இறைவன் உலாக்கோலங் கொள்ளுதல், உலாவில் இறைவனுடன் வருவோர், இறைவனுக் குரிய சின்னங்கள், பலவகை வாத்தியங்கள், இறைவனைக் காணும் ஏழு பருவமங்கையர் நிலைகள் முதலியன இந்நூலில் நன்கு விளக்கப்பட்டுள்ளன. பருவமங்கையர் எழுவருள் பேதைப்பருவத்தாள் ஐந்து முதல் ஏழு வயதுக்கு உட்பட்டவள். அவள் இயல்பினை ஆசிரியர் விளக்கும் திறம், படித்து மகிழ்தற்குரியது.* பிற நூல்கள் குற்றாலக்கோவை ஏறத்தாழ நானூறு செய்யுட்களைக் கொண்டது; ஆனால் இன்று கிடைத்துள்ளவை ஐம்பத்தெட்டுச் செய்யுட்களே ஆகும்; செம்பாகமான முறையில் சொல் நயமும், பொருள் நயமும் அமையப் பாடப்பெற்றது. புராணக் கதைகளைக் கூறி, அவற்றின் வாயிலாக இறைவனைப் புகழும் முறையில் அமைந்திருப்பது குற்றாலச் சிலேடை வெண்பாவாகும். குற்றால யமக அந்தாதி என்பது பல புராணக் கருத்துக்களைத் திரட்டிக் குற்றாலப் பெருமானைப் புகழ்வது. குற்றால மாலை எளிய நடையில் அமைந்துள்ள பாடல்களைக் கொண்டது; பக்திப் பரவசத்தை உண்டாகக் வல்லது. குற்றால ஊடல் இருபது பாடல்களைக் கொண்ட சிறு நூல்; நகைச்சுவைமிக்கது. இறைவியும் இறைவனும் ஒருவரை யொருவர் குறை கூறி எள்ளி நகையாடி விளையாடுவதாக இந்நூல் செய்யப்பட்டுள்ளது. குற்றாலக் குறவஞ்சி தமிழ் இலக்கிய வரிசையில், சிறுபிரபந்த வகைகளுள் ஒன்றாக வைத்து எண்ணப்படும் குறவஞ்சி என்பது, மலைநாட்டு மகளான குறத்தி பற்றிய பாட்டாகும். இந்நூலுள் கூறப்படும் இருவேறு காதல் நிகழ்ச்சிகளிலும் குறத்தியே சிறப்பான இடம் பெறுகிறாள். ஆதலின், இந்நூல் குறவஞ்சி (குறத்திப்பாட்டு) எனப் பெயர் பெற்றது. நூலின் இரு பகுதிகள் நூலின் முற்பகுதியில் பாட்டுடைத் தலைவன் தன்னை ஒப்பனை செய்துகொண்டு புடை சூழ்வோருடன் ஊர்தி ஒன்றில் ஏறி உலாவருதலும், மகளிர் பலரும் அவனைக் கண்டு மயங்குதலும், குறிப்பிட்ட ஒரு தலைவி அவன் அழகில் ஈடுபட்டு அவனை விரும்புதலும், மலைநாட்டுக் குறத்தி மாத்திரைக் கோலும் மணிக்கூடையும் தாங்கிவந்து மங்கையின் மனக்கருத்iத வெளிப்படுத்தி அவள் எண்ணம் கைகூடும் எனக்குறி கூறுதலும், குறி கேட்டு மகிழ்ந்த தலைவி குறத்திக்குப் பரிசில் வழங்கலும் காணப்பெறும். பிற்பகுதியில், குறத்தியின் கணவனாகிய குறவன் அவளைத் தேடி வருதலும், பல இடங்களில் அவளைக் காணாது வருந்துதலும், இறுதியில் கண்டு மகிழ்தலும் சிறப்பாகக் காணப்பெறும். பாட்டுடைத் தலைவன்பால் தலைவி கொள்ளும் காதல், குறவன் குறத்தியின் காதல் என்னும் இரண்டிலும் குறவஞ்சி சிறப்பிடம் பெறுகின்றாள். இந்நூலின் இடையிடையே நாடகத் தமிழ் விரவியிருப்பதால், இது ‘குறவஞ்சி நாடகம்’ என்றும் பெயர் பெறும். நூற் பொருள் குற்றாலக் குறவஞ்சி என்னும் நூலில் திரிகூட நாதர் இடப வாகனத்தில் ஏறி உலா வருதலும், வசந்தவல்லி என்னும் இளமங்கை அவர்மீது காதல் கொள்ளுதலும், சிங்கி என்னும் குறத்தி வந்து அவளது கையைப் பார்த்துக் குறி சொல்லுவதும், சிங்கியின் கணவனான சிங்கன் என்பவன் அவளைத் தேடித் திரிந்து வருந்துவதும், அவளைக் குற்றாலத் தலத்தின் தெரு ஒன்றில் கண்டு மகிழ்வதும் இந்நூலில் செய்யுள் நயம் செறியப் பாடப்பெற்றுள்ளன. இறைவன் உலா வருதல் திரிகூடநாதர் உலா எழுவதற்கு முன்பு அவரது வாசற் கட்டியக்காரன் அவ்வுலாவை நகர மக்களுக்கு அறிவிக்கின்றான். தேவர்களும், திருவுடை மன்னர்களும், முனிவர்களும், முனிவிலாது தொண்டு செய்யும் அடியார்களும் தம் இரு பக்கங்களிலும் சூழ்ந்து வரத் திரிகூடநாதர் குற்றலாத் தெருக்களில் உலாவிவர எழுந்தருளுகிறார். யானை முகத்துப் பிள்ளையும், மயில் வாகனத்துப் பிள்ளையும் வெற்றிப்படை தாங்கிச் சேனை முகத்தில் வருகிறார்கள். பலவகை வாத்தியங்களின் முழக்கம் திக்குகளை அதிரச் செய்கின்றது. தொண்டர்கள் இசைக்கும் திருமுறையும் திருப்பல்லாண்டும் அமுதமழை பொழிகின்றன. உலாக்காணும் மங்கையர் மனநிலை திரிகூடநாதர் இங்ஙனம் உலா வருதலைக்கண்ட தையலார் பலர் அவரை விழிகளால் பருகுகின்றனர். அவரது ஒப்பற்ற அழகில் ஈடுபடுகின்றனர். ஒரு கைக்கு மட்டும் வளையலை அணிந்த பெண்கள், குற்றாலநாதர் உலா எழுந்த செய்தியைக் கேட்டதும், தமது மற்றொரு கையில் வளையலை அணிதலை மறந்து தெருவிற்கு ஓடி வருகின்றனர். அந்நிலையில் அவர்களைப் பார்த்துப் பிற பெண்கள் நகைக்கின்றனர். வேறு சில மங்கையர் உலாச்செய்தி அறிந்தவுடனே தம் ஒரு கண்ணுக்கு மை தீட்டி மற்றொரு கண்ணுக்கு தீட்ட எடுத்த மையைக் கையிலேந்தி உலாவைக் காண ஓடி வருகின்றனர். இங்ஙனம் வந்து நிற்கும் பெண்கள் இறைவன் பேரழகில் உள்ளத்தைப் பறி கொடுத்து மயங்குகின்றனர். வசந்தவல்லி வசந்தவல்லி என்பவள் ஓர் இளநங்கை; பேரழகு படைத்தவள். அவள் தெருவில் தோழியரோடு பந்தடித்து விளையாடிக்கொண்டிருக்கிறாள். அம்மங்கை இறைவனது ஒப்பற்ற அழகில் ஈடுபடுகின்றாள். அவ்வழகர் திரிகூடநாதர் என்பதை அறிந்து, அவர்பால் மாறாத காதல் கொள்ளுகிறார்; திரிகூடநாதரை அடைய விரும்பிக் கவலை கொள்ளுகிறாள்; திரிகூடநாதரின் பெருமைகளையும் சிறப்புக்களையும் தன் தோழியிடம் எடுத்துக் சொல்கிறாள்; அத் தோழியைத் தன் காதலர்பால் தூது சென்று வருமாறு வேண்டுகிறாள். சிங்கியின் தோற்றம் இச்சமயத்தில் கையில் மாத்திரைக்கோலும், இடுப்பில் மணிக்கூடையும் நெற்றியில் திருநீரும் அதன் இடையே திலகமும் தாங்கி அழகுத்தெய்வம் வருவது போலச் சிங்கி என்னும் குறவஞ்சி வருகின்றாள். அவளது நா திரிகூடநாதரின் புகழ் பாடிய வண்ணம் இருக்கிறது. அக்குறவஞ்சி கொங்கணம், ஆரியம், குச்சலம், கன்னடம், தெலுங்கு, கலிங்கம் முதலிய நாடுகளில் குறி சொல்லி வெற்றிக்கொடி நாட்டியவள்; நா வன்மை மிக்கவள்; கற்றுவல்ல பெரியோர் பலர் கூடியிருக்கும் அவையில் நின்று பேசும் துணிவும், அமையோரைத் தன் பேச்சுத் திறனால் வியப்பில் ஆழ்த்தும் வன்மையும் உடையவள்; கை பார்த்துக் குறி கூறும் திறமை படைத்தவள். சிங்கி மலைவளம் கூறல் குறி கூறும் குறவஞ்சி வருதலைக் கண்ட வசந்த வல்லி மனமகிழ்ந்து அவளை அழைக்கின்றாள்; குறத்தி வாழும் மலையின் வளத்தைக் கூறுமாறு வேண்டுகின்றாள். உடனே திரிகூட மலையின் வளமும், மலைவாழ் மக்களின் வாழ்க்கை வளமும் குறவஞ்சியின் வாயில் கவிதையாக எழுகின்றன. மலையிலிருந்து அருவி துள்ள விழுதல் போலக் குறவஞ்சியின் நாவிலிருந்து சொற்கோவை துள்ளி எழுகின்றது. திரிகூட மலையில் வாழும் சிறிய விலங்கினங்களின் வாழ்க்கையில் காதல் தவழ்ந்து விளையாடுவதைக் குறத்தி முதலில் எடுத்துரைக் கின்றாள். ஆண் குரங்குகள் பழங்களைப் பறித்துவந்து பெண் குரங்குகளுக்கு கொடுத்து அவற்றோடு கொஞ்சும். பெண் குரங்கு அவற்றைத் தின்னும்போது சிந்தும் பழங்களைப் பெறுவதற்காக ஆண் குரங்கு ஏங்கி நிற்கும்.* கேவலம் விலங்குகள் இவ்வாறு காதலுற்று வாழ்கின்றன எனின், அம்மலையில் வாழும் குறவர் வாழ்க்கை பற்றிக் கூறவும் வேண்டுமோ? தேனருவி திரை வீசிப் பாய்வதையும், தேனெடுத்தும், கிழங்கு கல்லியும், குறவர் உழைப்பு மிகுதியும் இன்றி மகிழ்வோடு வாழ்வதையும், சந்தனமும் குங்குமமும் அகிலும் மலையெங்கும் மணம் பரப்புவதையும், வரையாடுகள் கவலையறியாது துள்ளி விளையாடுதலையும் குறத்தி இனிமையுற எடுத்து இயம்பு கின்றாள். நாட்டு வளம் மலைவளத்தைக் கேட்ட வசந்தவல்லி அவளது நாட்டு வளத்தையும் நகர் வளத்தையும் உரைக்கும்படி வேண்டுகிறாள். எருமைகள் நீர் பருகும் துறையில் நின்று, தம் கன்றுகளை நினைந்து பால் சொரியும். அந்தப் பாலைப் பருகிய வாளை மீன்கள் கரையில் நிற்கும் பலாமரத்தில் பாய பலாப்பழம் ஒன்று உதிர்ந்து அருகிலுள்ள வாழைமரத்தின்மீது விழ, வாழைமரம் சாய்ந்து ஒரு தாழம்புதர்மீது விழும். அதனால் வாழை பரப்பிய குருத்திலே தாழம்பூ சோறு போல அமைந்து வருவோருக்கு விருந்து படைக்கும் நிலையிற் காணப்படும். இத்தகைய இயற்கை வளம் உடையது தனது தென்னரிய நாடு என்று குறத்தி தன் நாட்டு வளத்தைச் சிறப்பிக்கிறாள். அந்நாட்டில் ஓடக் காண்பது ஆற்று வெள்ளமே; ஒடுங்கியிருப்பது யோகியர் உள்ளமே; வருந்திக்கொண்டிருப்பவை கருக்கொண்ட சங்குப் பூச்சிகளே; மங்கையர் காலிற் கிடக்கும் கிண்கிணி ஒன்றே அங்குப் புலம்பிக் கொண்டிருக்கும். தன் நாட்டு மக்கள் நல்லறமும், புகழ் இவற்றையன்றி வேறு எதனையும் தேடுவதில்லை என்று குறவஞ்சி தன் நாட்டு வளத்தை நயமாக உரைக்கின்றாள். நகர வளம் குற்றால நகரில் பாயும் சிற்றாற்றின் தோற்றத்தையும் தேனருவித்துறை, செண்பக அருவித்துறை, வட அருவி முதலியவற்றின் சிறப்பையும், முனிவர் தேவர் மனிதர் முதலிய பலரும் இத்தலத்தில் திரிகூட நாதரை வழிபட்டு வரம்பெற்ற மேன்மையையும், சித்தர், யோகியர் முதலியோர் அங்கு வாழும் நிலைமையையும் குறத்தி கூறி நகரச் சிறப்பை நன்கு விளக்குகின்றாள். குற்றால நாதர்க்குரிய மலைவளமும் நாட்டு வளமும் நகர வளமும் குறவஞ்சிபால் கேட்டு மகிழ்ந்த வசந்தவல்லி, அப்பெருமானது சுற்றத்தையும் அவள் வாயிலாகவே அறிகின்றாள்; அறிந்த பின்பு தனக்குக் குறி சொல்லுமாறு குறத்தியை வேண்டுகிறாள். குறத்தி குறி கூறல் குறவஞ்சி கஞ்சியும் கூழும் வெற்றிலை பாக்கும் புகையிலையும் தருமாறு கேட்கிறாள்; அப்பொழுது நன்னிமித்தங்கள் தோன்றுவதை வசந்தவல்லிக்குக் காட்டுகிறள்; பின்பு தரையை நன்கு மெழுகிக் கோலமிட்டுப் பிள்ளையாரை எழுந்தருளுவித்து முப்பழமும் தேங்காயும் வைத்து அப்பம், சோறு முதலியன படைத்து நாழி நெல் அளந்து வைத்து, வழிபாட்டுக்கு உரியவற்றைச் செய்யுமாறு வேண்டுகிறாள்; பின்னர்த் தெய்வங்களை வழிபட்டு வசந்தவல்லியின் கையைப் பார்த்துக் குறி சொல்லத் தொடங்குகிறாள். “நினது கை பிறவா யாக்கைப் பெரியோனுடைய கையைப் பற்றும் தன்மையுடையது; நின் கையைப் பிடிப்பவர் எட்டுத்திக்கும் உடையவர். நீ பந்து விளையாடுகையில் மணியணி பூண்ட மன்னர் ஒருவர் உலா வந்தனர். அவரது சேனை கண்ட அச்சமே இப்பொழுது நின்னிடம் தோன்றுகிறது,” என்று சிங்கி செப்புகிறாள். இதைக் கேட்டவுடன் வசந்தவல்லி சீற்றம் கொள்கிறாள்; “தெருவில் வரும் சேனையைக் கண்டு அஞ்சியிருந்தால் இந்த மயக்கமும் கிறுகிறுப்பும் என்னிடம் தோன்றுமோ?” என்று கேட்கிறாள். குறத்தி புன்முறுவலோடு, “அம்மே! வாகனத்தில் வந்த கட்டழகர்மீது நீ காதல் கொண்டாய். உனது கிறுகிறுப்பெல்லாம் காதலின் விளைவே. நான் அதைக் கூற இதுகாறும் அஞ்சியிருந்ததேன்,” என்று நயம்படி மொழிந்தாள்.. வசந்தவல்லி பொய்க்கோபம் கொண்டவளாய்க் குறத்தியை நோக்கி, “நான் கன்னிப்பெண்; அங்ஙனமிருந்தும் இங்ஙனம் கூறினை; நீ கூறியது உண்மையாயின், அத்தலைவரது ஊரும் பெயரும் மாலையும் சொல்,” என்கிறாள். குறத்தி இவற்றை உடனே உரையாமல், சுற்றி வளைத்து இறுதியில் கூறுகின்றாள்; அவள் காதலர் திருப்பெயர் திரிகூடநாதர் என்பது என்று மொழிகிறாள். இப் பெயரைக் கேட்ட அளவில் வசந்தவல்லி நாணித் தலைகவிழ்கிறாள்; திரிகூடநாதர் தன்னை மணக்க வருவாரென்றும், தமது கொன்றை மலர் மாலையை அனுப்புவார் என்றும் குறவஞ்சி கூறியவுடன் தன்னை மறக்கின்றாள்; பெற்ற தாயையும், தந்தையையும் மறக்கின்றாள்; உலகத்தையே மறக்கின்றாள். இங்ஙனம் உள்ளம் பூரித்த வஞ்சிக்கொடி போன்ற வசந்தவல்லி குறவஞ்சிக்கு சிறந்த முறையில் பரிசளிக்கின்றாள். சிங்கன் வேட்டை குறவஞ்சியாகிய சிங்கி இவ்வாறு குறி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, அவள் கணவனான சிங்கன் அவளைத் தேடிப் புறப்படுகிறான். அவன் வேட்டையாடும் தொழிலினன்; ஆதலால் வில்லும் அம்பும் கண்ணியும் பிற படைகளும் தாங்கித் தன் தோழன் நூவனையும் அழைத்துக் கொண்டு வருகிறான். வழியில் பறவைகளைப் பிடிக்க, மலைச் சாரல்களிலும் அவ்விருவரும் கண்ணிவைத்துக் காத்திருக் கின்றனர். நூவன் மரத்தின் மேல் ஏறிப் பறவைபோலக் கூவுகிறான். அவ்வளவில் பறவைகள் வந்து கண்ணியில் அகப்படுகின்றன. ஆனால், சிங்கனின் உள்ளம் காணாமற்போன சிங்கியின்மீதே இருந்தமையால் கண்ணியில் பறவைகள் அகப்பட்டதை அவன் கவனிக்கவில்லை. எனவே அகப்பட்ட பறவைகள் கண்ணியோடு பறந்து மறைகின்றன. பறவைகள் இவ்வாறு தப்பிபோன செயல், நம்பினோரைச் சதிசெய்து வாழ முயல்பவரது செல்வம் மறைவதையும், வட அருவியில் முழுகியவர் பாவங்கள் கழுநீராய்ப் போவதையும் ஒத்திருக்கின்றது என்று சிங்கன் கூறுதல் நயமுடையது. இந்நிலையில் நூவன் சிங்கன் செயலைப் பழித்துரைக்கிறான். “வேட்டையாடுதலை நிறுத்திச் சிங்கியைத் தேடு,” என்று கூறுகிறான். சிங்கன் சிங்கியைத் தேடல் சிங்கன் நூவன் சொற்படி சிங்கியைத் தேடப் புறப்பட்டுத் திருக்கhளத்தி, திருவண்ணாமலை, திரு ஆனைக்கா, திரு ஆலவாய் முதலிய இடங்களில் அலைந்து, இறுதியில் குற்றாலத்திற்கு வருகின்றான். அவன் தோழனான நூவனும் அவனைப் பின் தொடருகிறான். குற்றாலத்திற் பலவிடங்களில் தேடியும் சிங்கியைக் காணப்பெறாத சிங்கன், அவளை நினைத்துப் புலம்பு கிறான். அவளுடைய அங்க அடையாளங்களைக் கூறுமாறு நூவன் வேண்ட, சிங்கன் அவ்வாறே கூறுகிறான்; அவளைக் கண்டறிந்து சேர்த்துவைத்தால் தனக்கு என்ன பரிசில் கிடைக்கும் என்று நூவன் கேட்கிறான். மந்திர வித்தைகள் அனைத்தும் அவனுக்குக் கற்பிப்பதாகச் சிங்கன் உறுதியளிக்கிறான். சிங்கனும் சிங்கியும் இவ்வாறு பேசியவண்ணம் சிங்கனும் நூவனும் ஒரு தெரு வழியே நடந்து செல்லுகின்றனர். அப்பொழுது, ‘முன்பு தேடி வைத்துக் காணாமற்போன பொருளைக் கண்டவர்போல’ச் சிங்கன் தன் உயித் துணைவியாகிய சிங்கியைக் காண்கிறான். அப்பொழுது காதலர் இருவர் முகங்களும் அன்பு மேலீட்டால் அன்று மலர்ந்த செந்தாமரை மலர்களைப் போல காணப் படுகின்றன. சிங்கி புதியனவாக அணிந்துள்ள அணிவகைகளைப் பார்த்துச் சிங்கன் ஐயுற்றுப் பல வினாக்களைச் சரமாரியாகப் பொழிகிறான். அவை யாவும் தான் சொல்லிய குறிக்குப் பரிசாகப் பல்வேறு நாட்டார் கொடுத்தவை என்று குற வஞ்சி விடையிறுக்கின்றாள். “காலுக்கு மேலே பெரிய விரியன் கடித்துக் கிடப்பானேன் சிங்கி சேலத்து நாட்டிற் குறிசொல்லிப் பெற்ற சிலம்பு கிடக்குதடா சிங்கா” என்பது போன்ற சுவை மிக்க வினாவிடை அவர்களிடையே நிகழ்கின்றன. பின்பு இருவரும் திரிகூடநாதரை வாழ்த்தி ஆடிப்பாடுகிறார்கள் முற்றிற்று