20ஆம் நூற்றாண்டு புலவர்ப் பெருமக்கள் முனைவர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : 20ஆம் நூற்றாண்டு புலவர்ப் பெருமக்கள் ஆசிரியர் : முனைவர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2012 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+64 = 80 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 50/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்குமரன் நூலாக்கம் : திருமதி வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம் எண். 20/33, பி 3 பாண்டியன் அடுக்ககம், ஸ்ரீநிவாசன் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க் குலம் படிப்படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மைகளைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்மண் பதிப்பகத்iதத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங்கினேன். நீருக்கும் - நெருப்புக்கும், புதையுண்டும் - மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் - சிதைக்கப்பட்டவையும் போக எஞ்சிய நூல்களைத் தேடி எடுத்து வெளியிட்ட பழந்தமிழ் அறிஞர்களை வணங்கி எம் தமிழ்நூல் பதிப்புச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலமும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலமும் தமிழ்மொழி, தமிழின வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலமாகும். இந்த மறுமலர்ச்சி காலத்தில்தான் தமிழை உயிராகவும், மூச்சாகவும், வாழ்வாகவும் கொண்ட அரும்பெரும் தமிழரிஞர்கள் தோன்றி தமிழ் மீட்டெடுப்புப் பணியை மேற்கொண்டனர். எதிர்காலத் தமிழ் தலைமுறைக்கு அழியாச் செல்வங்களாக அருந்தமிழ் நூல்களை கொடையாக வழங்கிச் சென்றனர். இவ்வருந்தமிழ்க் கொடைகள் எல்லாம் தமிழர் இல்லந்தோறும் வைத்துப் பாதுகாக்கத் தக்க புதைபொருள் ஆகும். அந்த வகையில் அறிஞர்களின் செந்தமிழ் கருவூலங்களை எல்லாம் தேடி எடுத்து குலை குலையாய் வெளியிட்டு தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாக பதித்து வருவதை தமிழ் கூறும் நல்லுகம் நன்கு அறியும். எம் தமிழ்நூல் பதிப்புப் பணியின் தொடர் பணியாக தமிழ்ப்பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் நூல்களை வெளியிடும் நோக்கில் எம் கைக்குக் கிடைத்த சில நூல்களை முதல் கட்டமாக வெளிகொணர்ந்துள்ளோம். எதிர்காலத்தில் அவருடைய ஆக்கங்கள் அனைத்தையும் தேடி எடுத்து பொருள்வழிப் பிரித்து கால வரிசையில் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர் களுக்கும் பயன்படும் நோக்கில் திட்டமிட்டுள்ளோம். அகப்பகையும், புறப்பகையும் தமிழர் வாழ்வில் குடிபுகுந்து தமிழினம் நிலைக்குலைந்த வரலாறு கடந்தகால வரலாறு. தொன்மையும், பெருமையும் வாய்ந்த தமிழ்ப் பேரினம் தம் குடிமை இழந்து தாழ்வுற்று மருளும், இருளும் நிறைந்த மூட பழக்க வழக்கங்களால் தன்மானம் இழந்து தாழ்ந்து கிடந்த வரலாற்றை நெஞ்சில் நிறுத்துவோம். தமிழினம் மறுமலர்ச்சி பெறுவதற்கு தம் வாழ்வின் முழுபொழுதையும் செலவிட்ட அறிஞர்களை வணங்குவோம். இந்நூல்களை உங்கள் கையில் தவழ விடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். கோ. இளவாகம் நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி’ ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `இன்றைய தமிழரது வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்கின்றது?’ ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும்’ `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள்’ என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள்’ என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம்’. நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார்.’ பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தhர். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு’ இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான்’ படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம்’, `நக்கீரர் கழகம்’, `மாணவர் மன்றம்’ முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர்’ என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈராஸ் பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர்’ என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது’ என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு’ என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான்’ பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார்’ என்று `என் கணவர்’ என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வி’யில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும்’ என்பது அவர் கொள்கையாக இருந்தது. “அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும்”. உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும்’ என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும்’ என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும்’ என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்கiள எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம்’, `தமிழ் இனம்’, `தமிழர் வாழ்வு’, `என்றுமுள தென்றமிழ்’, `புதிய தமிழகம்’ என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும்’ என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி’, `தமிழ்க் கலைகள்’, `தமிழர் நாகரிகமும் பண்பாடும்’, `தமிழக வரலாறு’ என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்கhக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும்’ அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர்’ என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு’ வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல்’, தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது’ `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும்’ என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும்’ என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம்’ என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும்’ என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `அவரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா?’ எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர்’, `மனிதரில் தலையாய மனிதரே’ எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் iஎ முனைவர் மா. இராஜமாணிக்கனார் எi முனைவர் மா. இராஜமாணிக்கனார் நுழையுமுன் எii எiii முனைவர் மா. இராஜமாணிக்கனார் நுழையுமுன் iஒ ஒ முனைவர் மா. இராஜமாணிக்கனார் நுழையுமுன் ஒi ஒii முனைவர் மா. இராஜமாணிக்கனார் முகவுரை நமது நாட்டில் புலவர் வரலாறுகள் தொன்று தொட்டு எழுதப்படவில்லை. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் புலவர்கள் வாழ்ந்திருந்தனர்; ஆனால் அவர்தம் வரலாறுகள் எழுதப்பட்டில என்பது நமக்கு ஈடு செய்ய முடியாத நஷ்டமாகும். இக்குறை இந்த நூற்றாண்டிலும் நிகழ்தல் ஆகாது என்னும் எண்ணத்தினால் ‘இருபதாம் நூற்றாண்டு புலவர்’ என்னும் தலைப்புடன் பல நூல்களை எழுதி வெளியிட விருப்பமுண்டு. அவ்விருப்பத்தின் பயனாக இந்த முதல் நூல் வெளியிடப்பெற்றுள்ளது. இதன்கண், இணையற்ற பெரும் புலவராக இருந்து பழந் தமிழ் நூல்களைப் பாங்குற ஆராய்ந்து அச்சிட்டு வெளிப்படுத்திய மஹாமஹோபாத்தியாய – டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களது வாழ்க்கை வரலாறு முதலிற் காணப்படுகிறது. அடுத்து, பெருந்தமிழ்ப் புலவரும் சிறந்த நூலாசிரியரும் உரையாசிரியருமாக விளங்கிப் பெரும் புகழ் படைத்த பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களது வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ளது. இப் பெருமக்கள் தமிழன்னையின் தவப் புதல்வர்களாக இருந்து, அப்பெருமாட்டிக்குச் செய்துள்ள அழியாத் திருப்பணிகள், மாணவர் உள்ளங்களில் தமிழ்ப் பற்றையும் தாய்மொழித் தொண்டில் ஆர்வத்தையும் உண்டாக்கவல்லவை. இந்நூல் தமிழறிஞர் அன்பையும் ஆதரவையும் பெருமாயின், அடுத்து புலவர் பலருடைய வரலாறுகள் இவ்வரிசையில் வெளிவர வசதி உண்டாகும். இம்முயற்சியைத் தமிழன்னை ஆசிர்வதிப்பாளாக! விவேகானந்தர் கல்லூரி, சென்னை. மா. இராசமாணிக்கம் முனைவர் மா. இராஜமாணிக்கனார் உள்ளுரை எண் பொருள் பக்கம் I. டாக்டர் உ. வே. சாமிநாதையர் 1. இளமைப் பருவம் 1 2. மஹாவித்துவான் மாணவர் 6 3. தமிழாசிரியர் 12 4. தமிழ்த் தொண்டு 17 5. நற்பண்புகள் 23 6. சொற்பொழிவு 30 II பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் 34 1. இளமைப் பருவம் 34 2. தமிழ்நூற் பயிற்சி 42 3. ‘பண்டிதர்’ பட்டம் 44 4. ஆசிரியர் பணி 48 5. தமிழ்த் தொண்டும் புகழும் 54 6 தலைமைப் பேருரை 59 I மஹாமஹோபாத்தியாய டாக்டர் உ. வே சாமிநாதையர்* 1. இளமைப் பருவம் முன்னுரை ஒரு நாட்டுப் பெருமக்கள் பலவகைப்படுவர். பொதுநலத் தொண்டிற்குத் தம் வாழ்நாளைக்கழித்து மறைபவர் ஒரு சாரார்; அரசியல் துறையில் அரும்பணி செய்து புகழ்பெறுபவர் பிறிதொருசாரார்; தம் தாய் மொழிக்குத் தாம் இறக்கும்வரை தொண்டு செய்து மறைபவர் ஒரு வகையினர். இவ்வகையில் தலைசிறந்தவர் டாக்டர் உ. வே. சாமிநாதையர். இப் பெரியார் வரலாறு, தமிழ் மாணவராகிய உங்கட்குத் தமிழ்ப் பற்றையும் தமிழ்த் தொண்டு செய்யும் ஆர்வத்தையும் வாழ்க்கையில் கைக்கொள்ள வேண்டும் நற்பண்புகளையும் ஊட்டவல்லது; ஆதலின் இவரது அரிய வரலாறு இங்குத் தரப்படுகின்றது; படித்துப் பயன்பெறுக. உத்தமதானபுரம் என்றும் வற்றாத பெருக்குடைய காவிரி தன் கிளையாறுகளுடன் சோழநாட்டை வளப்படுத்துகின்றது. சோழ நாட்டின் வடபகுதி தஞ்சாவூர் ஜில்லா என்பது. அந்த ஜில்லா ‘தென் இந்திய நெற்களஞ்சியம்’ என்று போற்றப்படுவது. காவிரியாறு கொண்டுவரும் வண்டல்மண் படிந்து செழிப்பாக்குவதால் நல்ல விளைச்சல் அங்கு உண்டாகிறது. தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள தாலூகாக்களில் பாபநாசம் தாலூகா ஒன்று. அந்தத் தாலூகாவில் காவிரியும் அதன் கிளையாறுகளாகிய அரிசிலாறு, குடமுருட்டியாறு, திருமலைராஜன், வீரசோழனாறு முதலியன பாய்கின்றன. அந்தச் செழிப்புள்ள நிலப்பகுதியில் உத்தமதானபுரம் என்று ஒரு சிற்றூர் இருக்கின்றது. அது உண்மையில் செழிப்புமிக்க சிற்றூர் ஆகும் அங்கே கல்வி, கேள்வி, ஒழுக்கங்களிற் சிறந்த பெரியோர் பலர் வாழ்ந்து வந்தனர். பெற்றோர் அங்ஙனம் வாழ்ந்த பெரியோர்களுள் வேங்கட சுப்பையர் என்பவர் ஒருவர். அவர் தமிழ்ப் புலமையும் இசைப் புலமையும் உடையவர்; உடையார் பாளையத்திலும் அரியிலூரிலும் அரண்மனைச் சங்கீத வித்துவானாக இருந்தவர்; சிறந்த சிவபக்தர். அவர் காலையில் நான்கு மணிக்கு எழுந்திருப்பார்; காலைக்கடன்களை முடித்துக்கொண்டு நீராடிச் சிவபூசை செய்வார்; பின்னரே பிற வேலைகளைக் கவனிப்பார். அவர் பலருக்கு இசை ஆசிரியராக இருந்து பாடம் கற்பித்துவந்தார்; புராணப் பிரசங்கம் செய்வதும் அவர் தொழிலாக இருந்தது. அவர் தமக்குக் கிடைத்த சிறிய வருவாயைக் கொண்டு சிக்கனமாகவும் தூய்மையாகவும் வாழ்க்கை நடத்தி வந்தார். அவரிடம் காணப்பட்ட உயர் குணங்களே உருப் பெற்று வந்தாற்போல அவரது மனைவியார் காணப்பட்டார். அந்த அம்மையார் பெயர் சரசுவதியம்மை என்பது. அவர் நற்குடியிற் பிறந்தவர்; பரம்பரையாக நல்லொழுக்கத்திற் சிறந்துவந்த பெற்றோரால் வளர்க்கப்பட்டவர்; இளமை முதலே குடும்ப நிலையை நன்கு உணர்ந்தவர். ஆதலின் அவர் தம் கணவரது வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்ய முன்னரே தக்க பயிற்சி பெற்றவர் ஆனார். அவர் கணவர் கருத்தைக் குறிப்பால் உணர்ந்து அவர் மனமகிழச் செய்து முடிப்பவர். அதனால் அவர் இருவரும் உடலும் உயிரும்போல ஒன்றுபட்டு இன்பமாக வாழ்ந்து வந்தனர். ஐயர் பிறப்பு வளர்ப்பு உயிர் ஒன்றும் உடல் இரண்டுமாக வாழ்ந்த அவர்கட்கு நெடுநாள்வரை பிள்ளைப் பேறு இல்லை. அவர்கள் தாங்கள் வழிவட்டுவந்த சிவபெருமானைப் பிள்ளைப்பேறு வேண்டி நின்றனர். 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி உத்திரட்டாதி நக்ஷத்திரத்தன்று* நமது சாமிநாதையர் பிறந்தார். அவர் பிறந்த அன்று பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அவர்கள் அவரைத் தங்கள் உயிரினும் மேலாகத் கருதி வளர்த்து வந்தனர். ஐயர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தார். தந்தையார் அவருக்குத் தம் தகப்பனார் பெயராகிய ‘வேங்கடராமன்’ இட்டு வழங்கினார். ஆயினும் வீட்டில் `சாமிநாதன்’ என்றே அவர் அழைக்கப்பட்டார். கிராமப் படிப்பு பழைய காலமுதலே நமது நாட்டில் திண்ணைப் பள்ளிக்கூடங்களே மிகுதி. அவற்றில் மாணவர் கற்கும் முறை இக்கால முறைக்கு முற்றும் மாறுபட்டது. அவர்கள் பனை ஓலைகளில் எழுத்தாணிகொண்டு எழுதுவார்கள்; பள்ளியில் புதிய மணலைப் பரப்பி அதன்மீது விரல்களால் எழுதிப் பழகுவர்; ஒருவன் பாடம் சொல்லப் பலர் அதனைப் பின்பற்றிச் சொல்லி பழகுவர். சட்டாம்பிள்ளை என்பவன் பிள்ளைகளை மேற்பார்ப்பவன். பிள்ளைகள் நாள்தோறும் அவனிடமே பாடம் ஒப்புவிப்பர். அவன் வகுப்பில் கெட்டிக்காரனாகவும் உடல் வன்மை உடையவனாகவும் இருப்பான். அவன் பிள்ளைகளை அடக்கி ஆள்வான். பள்ளிக்கூடம் ஆசிரியர் வீட்டுத் திண்ணையில் நடைபெறும். ஓரு பலகையில் பனை ஓலை ஏடுகள் (புத்தகங்கள்) வைத்து அடுக்கப்படும்; அவை கயிறுகள் கொண்டு தூக்கிச் செல்லப்படும். ‘சுவடித் தூக்கு’ என்பது அதற்குப் பெயர். பிள்ளைகள் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து சுவடித் தூக்குடன் பள்ளிக்கூடம் செல்வர்; தூக்கினைப் பள்ளிக்கூடத்தில் ஓரிடத்தில் மாட்டிவிடுவர்; பிறகு முறைப்படி இருந்து முதல்நாள் நடந்த பாடங்களைப் பாராமல் ஒப்புவிப்பர். அதற்கு ‘முறை சொல்லுதல்’ என்பது பெயர். ஆசிரியர் வீட்டிற்குள் இருப்பார். அவர் உள் இருந்தபடியே பாடங்களைக் கவனிப்பார். முறை சொல்லுதல் முடிந்த பிறகு மாணவர் குளம் அல்லது வாய்க்காலுக்குச் சென்று பல் விளக்கிக்கொண்டு பள்ளிக்கு மீள்வர்; வரும் பொழுது தத்தம் ஆடைகளில் புதிய மணலை எடுத்து வருவர்; வரும்பொழுது சரசுவதி தோத்திரம் போன்ற பாக்களைப் பாடிக்கொண்டே வருவர்; பள்ளிக்கூடம் வந்து சேர்ந்ததும் பழைய மணலை அப்புறப்படுத்திப் புதிய மணலைப் பரப்புவர். அதனில் எழுதிப் பழக வேண்டியவர் எழுதுவர்; மற்றவர் தம் பாடங்களைப் படிப்பர். ஓன்பது மணிவரை மாணவர் தத்தம் பாடங்களைப் படிப்பர். ஆசிரியர் அவர்களை ஒன்பது மணிக்குக் காலை உணவு கொள்ள அனுப்புவர் அவ்வாறு அனுப்பப்பட்ட பிள்ளைகள் வீடு சென்று பழைய அமுது உட்கொண்டு மீள்வர்; பன்னிரண்டு வரை பாடங்களைப் படிப்பர்; பழைய மாணவர் புதிய மாணவர்க்குப் பாடம் சொல்வது வழக்கம். மாணவர் பன்னிரண்டு மணிக்குப் பகல் உணவு கொள்வர், மாலை வகுப்பு மூன்று மணிக்குத் தொடங்கும். ஆறு அல்லது ஏழுமணிவரை அது நடைபெறும். பள்ளி முடிந்து பிள்ளைகள் வீடு செல்லும் பொழுது ஆசிரியர் பிள்ளைகளது நினைவு ஆற்றலைப் பெருக்குவதற்காக ஒவ்வொருவருக்கும் பூ, விலங்கு, பறவை, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றாகச் சொல்லி அனுப்புவர். பிள்ளைகள் அப்பெயர்களை மறவாமல் மறுநாள் வந்து சொல்ல வேண்டும். ‘மறுநாள் மறந்துவிடுவோமே’ என்ற அச்சத்தால் சில பிள்ளைகள் வீடு சென்றவுடன் அப்பெயர்களைத் தம் பெற்றோரிடம் கூறிவிடுவர்; மறுநாள் பள்ளிக்கூடம் வரும்பொழுது அவர்களிடம் கேட்டுக்கொண்டுவந்து ஆசிரியரிடம் கூறுவர். அக்கால மாணவர் தமிழ்க் கல்வியை முறையாகத் திண்ணைப்பள்ளியில் படித்து வந்தனர்; நிகண்டு முதலியவற்றை மனப்பாடம் செய்து விடுவர்; சிறிய தமிழ் நூல்களையும் நளவெண்பாப் போன்ற நூல்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பர்; தமிழ் நெடுங்கணக்கில் சிறந்த பயிற்சி பெற்று விடுவர். இத்தகைய பயிற்சி முடிந்த பிறகே பெரிய புலவர்களிடம் சென்று புலமைக்குரிய மேற்படிப்பைப் பல ஆண்டுகள் படித்துப் பெறுவர். இங்ஙனம் படித்து அழியாப் புகழ் பெற்றவரே சேக்கிழார், கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர், மஹாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை போன்ற பெரும் புலவராவர். ஐயரது கிராமப் படிப்பு இத்தகைய திண்ணைப் பள்ளி ஒன்று உத்தம தானபுரத்தில் இருந்தது. அதன் ஆசிரியர் கல்வியிற் சிறந்தவர்; ஒழுக்கத்தில் உயர்ந்தவர்; தெய்வபக்தி உடையவர். ஊரார் அவரிடம் மிக்க மரியாதையுடன் நடந்து வந்தனர். அவரிடம் படித்த மாணவர் கல்வி கேள்விகளிலும் நல்லொழுக்கதிலும் சிறந்து விளங்கினர். அப்பெரியாரிடமே சாமிநாதையர் தொடக்கக் கல்வியைக் கற்கலானார். அவர் திண்ணைப் பள்ளிக்கூடச் சட்டதிட்டங்களின்படி ஒழுங்காக நடந்துவந்தார்; நாள்தோறும் தம் பாடங்களைத் தவறாமல் ஒப்புவித்தார். அதனால் ஆசிரியர் அவரிடம் மிக்க அன்பு காட்டலானார். வளர்பிறைச் சந்திரனைப் போல ஐயர்க்குக் கல்வியில் ஊக்கம் வளர்ந்து வரலாயிற்று. புதிய ஆசிரியர் திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பு முடிந்ததும் ஐயர் தம் தந்தையாரிடம் சிலகாலம் தமிழும் இசையும் பயின்றார். அவர் தம் சிறிய தந்தையாரிடமும் பயின்றதுண்டு. பிறகு அரியிலூர்ச் சடகோப ஐயங்கார் என்ற புலவரிடம் தமிழ் நூல்களைக் கற்கலானார். இப் புலவர் சிறந்த கல்வி அறிவு வாய்ந்தவர்; பிள்னைகட்கு எளிய முறையில் அரிய செய்திகளைக்கூறி மகிழ்விக்கும் ஆற்றல் பெற்றவர், இவரிடம் ஐயர் சில தமிழ்நுல்களைப் பாடம் கேட்டார். பொம்மைகளைக் காட்டிக் குழந்தைகளைக் கவர்வதுபோலத் தமிழ்ச் செய்யுட்களின் நயத்தைக் காட்டி ஐயங்கார் ஐயரைத் தமிழ்நூற் சுவையை அநுபவிக்கக் தூண்டினார். ஐயரது உள்ளம், தமிழ்ச் செய்யுட்களைப் படிப்பது – பொருள் காண்பது – அழகை அநுபவிப்பது என்னும் இவற்றில் கட்டுண்டது. வேறு ஆசிரியர் சிலர் சாமிநாதையர் பிறகு தமிழ்ப்புலவர் சிலரிடம் பாடம் கேட்டார். அவர்களுள் கிருஷ்ண உபாத்தியாயர், வேலாயுத பண்டாரம், குன்னம் - சிதம்பரம் பிள்ளை, கார்குடி – கஸ்தூரி ஐயங்கார், விருத்தாசல ரெட்டியார் என்பவர் குறிப்பிடத்தக்கவர். ஐயர் கிருஷ்ண உபாத்தியாயரிடம் தெலுங்கு மொழி பயின்றார். ஐயர் ஊக்கம் மிகுந்தவர். ஆதலால் மேற் சொன்ன ஆசிரியரிடம் வந்து பழகிய புலவர்களிடம் தமிழ்ச்செய்திகள் சிலவற்றைத் தெரிந்து கொள்வார். அவர்கள் அனைவரும் ஐயரது தமிழ் ஆர்வத்தைப் பாராட்டி ஆதரவு நல்கினர். அக்காலத்தில் எல்லாப் புலவரும் எல்லா நூல்களும் படித்தவராக இல்லை. இக் காலத்திய வித்துவான் முதலிய பட்டத் தேர்வுகள் அக்காலத்தில் இல்லை. ஒவ்வொருவர் சில நூல்களிற்றாம் சிறந்த புலமை பெற்று விளங்கினர். அதனால் அக்காலத்தில் தமிழ்க்கடலின் ஆழத்தை ஒருவாறு அறிய விரும்பும் மாணவன் பல ஆசிரியர்களிடம் கற்கவேண்டியவனாக இருந்தான். ஐயர் இங்ஙனம் தம் பதினேழாம் வயதுவரை ஆசிரியர் பலரிடம் பல நூல்களைப் பாடம்கேட்டு முடித்தார். “இனி நீர் திரிசிரபுரம் மஹா வித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை அவர்களிடமே பாடம் கேட்க வேண்டும்” என்று ஆசிரியர் பலரும் கூறினர். மாணவர் விருப்பம் ஐயர் இளமை முதலே சிறந்த தமிழ்ப் புலவர்களிடம் நெருங்கிப் பழகிவந்தமையால் மஹாவித்துவான் பிள்ளை அவர்களின் அரும் பெரும் புலமையைப்பற்றி நிரம்பக் கேள்விப் பட்டிருந்தார். அக்காலத்தில் தமிழ் நாட்டில் இணையற்ற பெரும்புலவர் அவர் ஒருவரே. அவரிடம் பாடம் கேட்பதே பெரும் பாக்கியம் என்று பலர் சொல்வதுண்டு. அத்தகைய பெரியோரிடம் தாம் பாடம் கேட்டுப் பயன் பெறவேண்டும் என்ற விருப்பம் ஐயரைப் பற்றியது. அந்த விருப்பம் அவரது பிற்காலப்பெரும் புலமையும் புகழும் என்ற மரத்திற்கு ஏற்ற விதையாக அமைந்தது. 2. மஹாவித்துவான் மாணவர் தமிழ்நாட்டு மடங்கள் சைவ சமயத்தை மக்களிடைய பரவச் செய்வதற்காக நமது தமிழ் நாட்டில் பல மடங்கள் தோன்றின. அவற்றின் தொண்டைப் பாராட்டிப் பொதுமக்கள் அவற்றிற்குத் தங்கள் செல்வத்தை உதவினர். அதன் பயனாக அம்மடங்கள் பல நூறு வேலி நிலங்களையும் பல தோப்புகளையும் தோட்டங்களையும் பெற்றுச் செல்வநிலையில் உயர்ந்தன. அவை பல கோவில்களை ஆட்சிபுரியவும் தொடங்கின. மடத்துத் தலைவர் மிகச் சிறந்த படிப்பாளியாக விளங்கினார். அவரும் அவருடைய சீடர்களும் துறவிகளாக இருந்து, சமயத் தொண்டாற்றி வந்தனர். இங்ஙனம் சிறப்புற்று விளங்கிய தமிழ்நாட்டு மடங்களுள் சிறந்தவை திரு ஆவடுதுறை மடம், தருமபுரமடம், திருப்பனந்தாள் மடம் என்பன. திருஆவடுதுறை மடம் இது தஞ்சாவூர் ஜில்லாவில் நரசிங்கள் பேட்டைப் புகைவண்டி நிலயத்திற்கு அருகில் இருக்கின்றது. இது மிக்க பழைமை வாய்ந்த மடம். இதனில் பட்டம் பெற்ற மடாதிபதிகள் தமிழ்க்கல்வி சமயக்கல்வி, ஒழுக்கம் இவற்றில் சிறந்தவர்கள். அவர்கள் பல கோவில்களை மேற்பார்த்து வந்தார்கள். அவர்கள் தமிழ்ப் புலவர்களையும் சமயப் புலவர்களையும் ஆதரித்து வந்தார்கள்; பெரும்புலவர் ஒருவரை ஆதீனப் புலவராக நியமித்துத் தமிழர்க்குத் தமிழ் நூல்களைப் பாடம் சொல்லச் செய்தார்கள். அவர்களது முயற்சியால் மடத்தில் புலமை பெற்ற தமிழர் பலராவர். அவர்கட்கு மடத்திலேயே உணவு இலவசமாக அளிக்கப்பட்டது. சைவ சாத்திரங்களும் கற்பிக்கப்பட்டன. மாணவர் பலர் இலவசமாக உண்டி, உடை பெற்றுப் பல ஆண்டுகள் மடத்திலேயே தங்கிப் படித்துவந்தனர். இங்ஙனம் படித்துப் புலமை பெற்று நாட்டு மக்கட்குத் தமிழறிவையும் சமைய அறிவையும் ஊட்டிய புலவர்கள் ‘ஆதீன வித்துவான்கள்’ எனப்பட்டனர். அவர்கட்கு மடாதிபதி ஆண்டுதோறும் சிறப்பு நாட்களில் பரிசு வழங்குதல் வழக்கம். மஹாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை நமது சாமிநாதையர் தமிழ் கற்றுவந்த காலத்தில் திருஆவடுதுறை மடத்து ஆதீனப் புலவராக இருந்தவர் திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை அவர்கள். அவரை ஆதரித்த ஆதீனத் தலைவர் 16-ஆம் பட்டத்தில் இருந்த மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் என்பவர். அவர் நல்ல பரம்பரையைச் சேர்ந்தவர். அம்மடாதிபதி தமிழிலும் சைவ சாத்திரங்களிலும் வல்லவர். அதனால் அவர் தமிழ் நாட்டிலேயே இணையற்று விளங்கிய பெரும்புலவரைத் தம் ஆதீன வித்துவானாக அமர்த்திப் பலர்க்குந் தமிழ் அறிவை ஊட்டச் செய்தார். பிள்ளையவர்கள் பெயர் தமிழ் நாடெங்கும் பரவி இருந்தது. அவர் பல ஸ்தலபுராணங்களையும் அந்தாதி, உலா, பிள்ளைத்தமிழ் போன்ற பிரபந்த நூல்கள் பலவற்றையும் பாடித் தமிழகத்தில் அழியாப் புகழ்பெற்றவர். ஆதனால் தமிழ் நாட்டு வள்ளல்களும் பெருமக்களும் அவரை நன்கு அறிந்திருந்தார்கள். பிள்ளை அவர்கள் கல்விக்கடலாக விளங்கினாற் போலவே நற்குணங்கட்கும் இருப்பிடமாகக் காணப்பட்டார். பொறுமை, தெய்வபக்தி, உண்மை பேசுதல், ஒழுங்காக நடந்துகொள்ளுதல், உபகாரசிந்தை, அடக்கம் முதலிய நற்பண்புகள் அவரிடம் சிறந்து காணப்பட்டன. கல்விச்சிறப்பும் ஒழுக்க மேம்பாடும் அவரிடம் மிகுந்திருந்ததைக் கண்ட அறிஞர் அவரைப் பாராட்டி அவர் புகழை எங்கும் பரப்பலாயினர். ஆதீனத் தலைவர் அவரைத் தம் உயிர் போலக் கருதிப் பாதுகாத்துவந்தார்; அவரது வாக்கை வேதவாக்காகக் கருதி மதிப்புக் கொடுத்து வந்தார். பிள்ளையவர்களிடம் தமிழ்ப் புலமை பெற்றவர் பலராவர். அவர்களுள் ஒருவர் வல்லூர் - தேவராசப்பிள்ளை என்பவர். பிரதாபமுதலியார் சரித்திரம், பல அருமையான பாடல்கள் முதலியவற்றைச் செய்த முனுசீப் - வேதநாயகம் பிள்ளை மற்றொருவர் கும்பகோணம் அரசாங்கக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த பெரும் புலவர் தியாகராஜச் செட்டியார் வேறொருவர். இப்பெரும் புலவர் ஒவ்வொருவருக்கும் மாணவர் பலர் இருந்தனர். இவர் அனைவராலும் தமிழ் அறிவு நாட்டில் நன்கு பரப்பப்பட்டது. இவர்கள் எல்லோரும் பிள்ளையவர்கள் புலமையை நாடறியச் செய்தார்கள். அதனாற்றான் மூலை முடுக்குகளில் இருந்த தமிழ் மாணவர் பலரும் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்கவேண்டும் என்று ஆவர் கொண்டனர். ஆசிரியரும் மாணவரும் தும் தந்தையாருக்கு உதவியாக இருந்து சம்பாதித்துக் குடும்பத்தைக் காக்கவேண்டும் என்று ஐயருக்கு எண்ணம் உண்டாயிற்று. ஆனால் அதே சமயம் நாடு புகழும் பிள்ளையவர் களிடம் மாணவராக இருந்து தமிழ்ப் புலமை பெறவேண்டும் என்ற ஆர்வமும் வேரூன்றியது. தந்தையாரைப்போல இசைப் புலவராதல் நல்லது என்று பலர் கூறினர். முடிவாக ஐயர் பிள்ளையவர்களிடம் படிப்பதையே விரும்பினார்; அதனால் 1871-ல் தந்தையாருடன் மாயூரம் சென்றார்; அங்கு இருந்த பிள்ளை அவர்களை நேரிற் கண்டார். அப்பொழுது அவர் உள்ளம் துடிதுடித்தது. பல காலமாகத் தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்காகக் காத்திருந்த பக்தன்முன் தோன்றிச் காட்சி அளித்தாற்போலப் பிள்ளை அவர்கள் ஐயர்முன் காணப் பட்டார். ஐயர் கண்கள் ஆசிரியரிடம் சென்றன. அவரது உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி எழுந்தது. அதன் பயனாக அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளித்தது.. ஆசிரியர் பதினேழு வயதுடைய ஐயரைப் பார்த்தார்; அவருடைய அடக்கம், பணிவு, கற்பதில் ஆர்வம், முன்னுக்கு வரவேண்டும் என்னும் ஊக்கம் இவற்றை அவரது முதத்திலிருந்தும் அவர் நின்ற நிலையிலிருந்தும் அறிந்தார்; அவரைத் தமிழைப் பற்றிச் சில கேள்விகள் கேட்டார். அக் கேள்விகட்கு எல்லாம் ஐயர் தெளிவாகவும் மரியாதையாகவும் விடை அளித்தார். ஆசிரியர் உள்ளம் குளிர்ந்தது. அவர் ஐயரது தந்தையாரைப் பார்த்து, “மாணவர் எம்மிடமே இருந்து படிக்கட்டும்”, என்றார். தந்தையார் தம் குமாரரைப் பிள்ளை அவர்களிடம் ஒப்புவித்துக் கன்றினைப் பிரிந்து செல்லும் தாய்ப்பசுவைப்போல மன வருத்தத்துடன் திரும்பினார். ஆசிரியருடன் வாழ்க்கை பழைய இந்தியாவில் மாணவர் ஆசிரியருடனே பல ஆண்டுகள் இருந்து பாடம் படித்தனர். அதற்குக் ‘குருகுல வாசம்’ என்பது பெயர். அந்த வாழ்க்கையால் மாணவர் ஆசிரியருடைய நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வசதி இருந்தது; அவர் குடும்பத்தில் பழகிவந்தமையால் குடும்பநிலை பற்றிய அறிவு இளமையிலேயே பெற வாய்ப்பு இருந்தது; ஆசிரியர் மாணவர்க்கு ஆசிரியராகவும் தந்தையாரகவும் விளங்கினார்; ஆசிரியர் மனைவியார் தாயாராக விளங்கினார். இத்தகைய குருகுலவாசத்தில் நமது ஐயர் சேர்க்கப்பட்டது அவர் செய்த நல்வினைப்பயனே ஆகும். ஐயர் எப்பொழுதும் ஆசிரியருடன் இருந்து வந்தார். பிள்ளையவர்கள் இயற்றும் நூல்களைப் பல சமயங்களில் அவர்கள் சொல்ல ஐயர் பனையேட்டில் எழுதுவது உண்டு. ஆசிரியரிடம் செல்வர்களும் பெரும் புலவர்களும் வந்து செல்வது வழக்கம். அவர்களுடன் ஐயருக்குப் பழக வாய்ப்புண்டானது. அவர், அவர்களுடைய உரையாடல்களைக் கேட்டுக் கேட்டு உலகச் செய்திகள் பலவற்றை அறியலானார்; பிள்ளையவர்கள் தனித்திருக்கும் பொழுது அவரிடம் பாடம் கேட்டார்; மற்ற வேளைகளில் அவர் விருப்பப்படி நடந்துவந்தார். அவரிடம் பாடம் கேட்கத் தொடங்கிய நாள் முதல் ஐயரது தமிழ் அறிவு விரிவடையத் தொடங்கியது. கிராமத்தான் ஒருவன் நகரத்தைப் பார்க்கும் பொழுது அடையும் அறிவுப் பெருக்கம்போல அவரது தமிழ் அறிவு வளர்ச்சி பெறலாயிற்று. பிள்ளை அவர்கள் பாடம் சொன்னது நிதிக் குவியல்களை வாரி வழங்குதல்போல இருந்ததாம். ஆசிரியர் மஹாவித்துவான் அல்லவா? ‘தமிழ்க்கடல்’ ஆகிய அவர் எந்த நூலையும் சாதாரணமாகப் பாடம் சொல்லும் பேராற்றல் பெற்றவர். நல்லாசிரியர் வெளியிடும் தமிழ்க் கருத்துகள் அனைத்தையும் கூரிய அறிவுடைய மாணவர் உடனே உட்கொள்வர் அல்லவா? அவ்வாறே மிக்க மதிநுட்பமும் கற்பதில் ஆர்வமும் கொண்ட ஐயர், ஆசிரியர் அன்றாடம் கற்பிக்கும் பாடங்களை உள்ளத்தமைத்துப் பயின்று வந்தார். இதுதானே நன்மாணாக்கர் இயல்பு! ஐயரது தமிழ் அறிவு நாள் ஆக ஆக வளர்பிறை போல வளர்ந்துவந்தது. பிள்ளையவர்களிடம் ஐயருடன் இருந்து பாடங் கேட்டவருள் பழநிக் குமரத் தம்பிரான், குமாரசாமித் தம்பிரான், ஆறுமுகத் தம்பிரான் என்பவர் குறிப்பிடத்தக்கவர். அவருள் குமாரசாமித் தம்பிரான் திருப்பனந்தாள் மடாதிபதியானார்; ஆறுமுகத் தம்பிரான் குன்றக்குடி ஆதீனகர்த்தர் ஆனார். பெயர் மாற்றம் ஐயரது இயற்பெயர் முன் சொன்னபடி வேங்கடராமன் என்பது. பிள்ளையவர்கள் ஒருநாள் அவரைப் பார்த்து, “உமது பெயர் இதுதானா? வேறு பெயர் ஏதேனும் உண்டோ” என்று கேட்டனர். ஐயர், “வேங்கடராமன் என்பது என் மூதாதையர் பெயர். ஆனால் வீட்டார் சாமிநாதன் என்பதன் திரிபாக என்iனச் ‘சாமா’ என்று அழைப்பார்” என்றார். பிள்ளையவர்கள், “சாமி நாதன் என்ற பெயரே நன்றாயிருக்கிறது. நாம் அப்படியே அழைப்போம்” என்றார். அன்றுமுதல் ஐயர் ‘சாமிநாதன்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டார். அப்பெயரே உலகத்தார் பாராட்டத்தக்க நற்பெயராக அமைந்தது. வேலைக்கு மறுப்பு ஐயர் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டுக் கொண்டு இருந்தபொழுது, பிள்ளையவர்கள் மாணவரான தியாகராஜச் செட்டியார் அடிக்கடி மாயூரம் வருவதுண்டு. அவர் ஆசிரியருடன் இருந்து பாடம் படித்துவந்த ஐயருடைய நற்பண்புகளில் ஈடுபட்டார்; அவரைத் தம்மால் முடிந்தவரை வாழ்க்கையில் உயர்த்தவேண்டும். என்று விரும்பினார். 1873-ல் குப்பகோணத்தில் ஓர் உயர்நிலைப்பள்ளி புதிதாக ஏற்பட்டது.. அதனில் தமிழ் ஆசிரியராக ஐயரை அமர்த்தச் செட்டியார் விரும்பினார். செட்டியார் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தவர். அவருக்குச் சென்றவிடம் எல்லாம் சிறப்புண்டு. அவரிடம் பெருமக்கட்கு மதிப்புண்டு. அவர் சிபாரிசு செய்பவரைத் தமிழாசிரியராக நியமிப்பது அக்கால வழக்கம். அதனாற்றான் செட்டியார் ஐயரை வேலையில் அமர்த்த எண்ணினார். அக்காலத்தில் உயர்நிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்க்கு மாதச் சம்பளம் பதினைந்து ரூபாய். தமது குடும்ப நிலையை எண்ணி ஐயர் அப்பதவியில் அமர விரும்பினார். அவர் விரும்பி என்ன பயன்? பிள்ளை அவர்கள் அநுமதி தரவேண்டும் அல்லவா? அதனால் தியகராஜச் செட்டியார் ஆசிரியரிடம் சென்று செய்தியைத் தெரிவித்தார். உடனே பிள்ளையவர்கள், “இவருக்கு இப்பொழுது ஆசிரியர் பதவி வேண்டா; இன்னும் சிறிது காலம் கல்வி பயில்வதே நல்லது” என்று கூறிவிட்டார். ஆசிரியர் சொல்லைத் தட்டி நடவாத நற்பண்பு வாய்ந்த செட்டியாரும் ஐயரும் தம் எண்ணத்தை அப்பொழுதே மறந்தனர். ஐயர் ஆசிரியர்க்கேற்ற அருமை மாணவராக இருந்து, அருந்தமிழ்த்தேனை ஆர்வத்தோடு அநுபவித்துவந்தார். வேறு ஆசிரியர் ஐயர் ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் பிள்ளையவர்களிடம் மாணவராக இருந்து தமிழ்ப் புலமை பெற்றார். பிள்ளையவர்கள் 1876-ல் காலமானானர். அப்பொழுது ஐயர் அடைந்த துயரம் அளவிடற்கரியது. கண்கலங்கி நின்ற அவரைத் திருஆவடுதுறை ஆதினகர்த்தரான மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் தேற்றினார்; தம்மிடமே இருந்து தமிழ்ப் பாடம் கேட்குமாறு நல்லுரை பகர்ந்தார். நடுக்கடலில் திசை கெட்டு மயங்கிய கப்பலுக்குக் கலங்கரை விளக்கம் காட்சி அளித்தாற்போல ஐயருக்குத் தேசிகர் தேறுதல் காணப்பட்டது. அவர் ஒருவாறு ஆறுதல் அடைந்தார்; மடத்தில் இருந்து கொண்டே தேசிகரிடம் பாடம் கேட்கலானார்; ஓய்வு நேரங்களில் தேசிகர் கட்டளைப்படி தம்பிரான்கள் பலருக்கும் வேறு பலருக்கும் தமிழ்நூல்களைக் கற்பித்துவந்தார்; இங்ஙனம் நான்கு ஆண்டுகள் மடத்தில் வாழ்ந்து வந்தார். ஐயரிடம் படித்த தம்பிரான்களில் ஒருவரான சொக்கலிங்கத் தம்பிரான் என்பவர் திருப்பனந்தாள் மடாதிபதியானார். இப்பொழுது குன்றக் குடி மடாதிபதியாகவுள்ள ஆறுமுக தேசிகரும் ஐயரிடம் பாடம் கேட்டவரேயாவர். ‘மஹா வித்துவான்’ பட்டம் மடத்திற்குப் பெருமக்கள் பலர் வந்து போவதுண்டு. புலவர்கள் அடிக்கடி ஆதீனத்தலைவரிடம் வந்துபோவர். அவர்களுடன் ஐயர் நெருங்கிப் பழகி உலகச் செய்திகள் பலவற்றை அறிய வாய்ப்பு ஏற்பட்டது. ஐயர் கவிகள் புனைவதில் கருத்தைச் செலுத்தினார். அவர் பாடிய தனிச் செய்யுட்கள் நூற்றுக்கணக்கானவை.* அவருடைய பாக்கள் அறிஞரால் நன்கு பாராட்டப்பட்டன. சுப்பிரமணிய தேசிகர் ஐயரை மதுரைக்கு அழைத்துச் சென்றார்; அங்கு இருந்த புலவர் பெருமக்களுக்கு ஐயரை அறிமுகம் செய்துவைத்தார். இங்ஙனம் ஐயர் தமது 24-ஆம் வயதிற்குள் தமிழ்ப்புலவர் உலகத்தில் குறிப்பிடத்தக்க ஒருவராக விளக்கம் அடைந்தார். ஆதீனத்தலைவர் ஐயரது பெரும்புலமையையும் பாடம் சொல்லும் ஆற்றலையும் கவி புனையும் திறனையும் பாராட்டி அவருக்கு ‘மஹா வித்துவான்’ என்ற பட்டத்தை அளித்தார். 3. தமிழாசிரியர் கல்லூரி ஆசிரியர் பதவி தியாகராஜச் செட்டியார் கும்பகோணம் அரசாங்கச் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக இருந்தார் அல்லவா? அவர் 1880-ல் ஓய்வுபெற விரும்பினார். அவர் தமது பதவியில் நமது ஐயரை அமர்த்த ஆவல் கொண்டார்; அதனால் திருஆவடுதுறை மடத்தை அடைந்தார்; தமது கருத்தை ஆதீனத் தலைவரிடம் அறிவித்தார். ஐயரைவிட்டுப் பிரிய மனமற்ற ஆதீனத் தலைவர் அதனை மறுத்துவிட்டார். ஆனால் செட்டியார் அங்கு இரண்டுநாள் தங்கி ஆதீனத்தலைவருடன் சமயமறிந்து பேசத் தொடங்கி, “கும்பகோணம் பக்கத்தில்தானே இருக்கின்றது. தாங்கள் நினைத்தவுடன் ஐயர் இங்குவந்து போகலாமே. அவர் வாரந்தோறும் இங்குவந்து போக வசதியுண்டு. ஐயரைத்தவிர வேறு ஒருவரை எனது இடத்தில் வைக்க எனக்கு விருப்பமில்லை. இவர் அங்கு இருப்பது ஆதீனத்திற்கும் சிறப்பையே அளிக்கும்” என்று பக்குவமாகப் பகர்ந்தார். அத் தலைவர் மிக்க மகிழ்ச்சி அடைந்து, ஐயருக்கு நற்சாக்ஷிப் பத்திரம் ஒன்றை வரைந்து கொடுத்தார்; ஐயரை மனமகிழ ஆசீர்வாதித்துக் கும்பகோணத்திற்கு அனுப்பினார். செட்டியார் ஐயரைக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார்; ஆசிரியர்களுக்கு அவரை அறிமுகம் செய்துவைத்தார்; அதிகாரி செய்யுள் ஒன்று பாடும்படி ஐயருக்கு ஆணையிட்டார். ஐயர் அதிகாரி மனமகிழத் தக்க முறையில் உடனே ஒரு பாட்டைக் கட்டினார். அதனைப் படித்த அதிகாரி மனமுவந்து அவருக்கு ஆசிரியர் பதவியை அளித்தார். அன்று முதல் ஆசிரியர் பலர் ஐயரது பாடம் சொல்லும் முறையைக் கவனித்துவந்தனர்; ஐயர் இசையுடன் செய்யுட்களைப் பாடிப் பொருள் கூறும் திறமையை—மந்த அறிவுடைய மாணவரும் தெரிந்துகொள்ளக் கூடிய வகையில் பொருள்கூறும் ஆற்றலைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். ஆசிரியர் திறமை சாமிநாதையர் ஆசிரியர் பொறுப்பை நன்றாக அறிந்தவர்; பிள்ளைகள் குறைகளையும் நன்கு உணர்ந்தவர். அவர்கள் செய்யும் சிறு குற்றங்களை அவர் கவனிப்பதில்லை; அவர்களை அன்போடு தட்டிக்கொடுத்துப் பாடங்களை நடத்திச்செல்வார். அவரதுபோதனையில் பிள்ளைகள் பெரிதும் விரும்பும் வேடிக்கைகள் கலந்திருக்கும். அவர் பாடம் சொல்வதில் சமர்த்தர் என்று பெயர்பெற்றார். ஆதனால் மாணவர்கள் அவரிடம் அன்பு, மரியாதை, அடக்கம் காட்டி நடந்துகொண்டனர். வீட்டில் தமிழ்ப் பாடம் ஐயரது கற்பிக்கும் திறமை நகரத்திற் பரவியது. பொதுமக்கள் சிலர் அவரிடம் தமிழ் வாசிக்க விரும்பினர். ஐயர் தமது வீட்டில் அவர்கட்குத் தனியாகப் பாடம் சொல்லலானார். நுகரப் பெருமக்கள், உத்தியோகஸ்தர், பொதுமக்கள் ஆகிய மூவகைப்பட்டவரும் அவரிடம் பாடம் கேட்கலாயினர். இதனால் கும்பகோணத்தில் ஐயரது புகழ் நன்கு பரவலாயிற்று. இல்லற வாழ்க்கை ஐயர் அவர்கள் கும்பகோணத்திற்கு வந்த பிறகு அவருக்குக் குழந்தை ஒன்று பிறந்தது. வீட்டில் பெற்றோர் இருந்து வீட்டுக் காரியங்களைக் கவனித்துவந்தனர். ஐயருக்கு வீட்டைப்பற்றிய கவலையே இல்லை. அவர் தமிழ் நூல்களை நன்றாகப் படித்து வந்ததார்; தம்மை நாடினவர்க்குப் பாடம் சொல்லி வந்தார்; கல்லூரியில் தமிழாசிரியர் வேலையைத் திறம்படச் செய்து வந்தார். இங்ஙனம் சாமிநாதையர் 1903-ஆம் ஆண்டுவரை கும்பகோணத்தில் தமிழ்த்தொண்டு ஆற்றிவந்தார். சென்னை மாகாணக் கல்லூரி ஐயர் கும்பகோணத்தில் இருந்தபொழுதே சென்னை மாகாணக் கல்லூரி ஆசிரியர் சிலரது நட்பு அவருக்குக் கிடைத்தது. அவ்வாசிரியருட் சிறந்தவர் பூண்டி-அரங்கநாத முதலியார், எம். ஏ ஆவர். அவர் சிறந்த ஆங்கிலப் பேராசிரியர்; தமிழிலும் நல்ல புலமை படைத்தவர்; கச்சிக் கலம்பகம் என்ற நூலைப் பாடியவர். ஆதனால் தமிழ்ப் பெரும் புலவரான ஐயரை அவர் சிறந்த நண்பராகக் கொண்டார்; ஐயரைச் சென்னை மாகாணக் கல்லூரிக்கு மாற்றிக் கொள்ளும்படி பலமுறை வற்புறுத்தினார். ஐயரது தகப்பனார் சிறந்த சிவபக்தர்; ஆதலால் சிவக்ஷேத்திரமான குப்பகோணத்திலேயே தங்கி வாழ விரும்பினார். அவர் 1900-க்குமுன் காலமானார். ஐயர் அதன் பின்னரே 1903-இல் சென்னைக்கு வந்தார். ஆசிரியர் தொழில் ஐயர் கும்பகோணத்தில் ‘திறமை பெற்ற தமிழசிரியர்’ என்று பெயர் பெற்றவர். ஆதலின் சென்னை மாகாணக் கல்லூரியில் அவர் துன்பமின்றித் தம் தொழிலைச் செய்யலானார். இரண்டொரு சமயங்களில் மாணவர் சிலர் பாடம் கேட்பதில் கவனக்குறைவாக இருந்ததுண்டு. ஐயர் அவர்களைச் சமயம் பார்த்து நல்லூரை கூறி நயப்படுத்தினார். அவர் சாமர்த்தியமாகப் பேசுவதைக்கண்டே துஷ்ட மாணவரும் நாளடைவில் அடங்கினர். அவரது சிறந்த புலமையைக் கேள்விபட்டு மதிப்புக் கொண்ட மாணவர் சிலர். அவர் அழகாகவும் தெளிவாகவும் பாடம் சொல்வதில் ஈடுபட்டுப் பணிவு காட்டியவர் பலர். ஐயர் ஒவ்வொரு மாணவனுடைய ஊர், பெற்றோர் பெயர் முதலிய வரலாறுகளைக் கேட்பார்; தமக்குத் தெரிந்த அளவில் அத்தந்த ஊரைப் பற்றியும் அக் குடும்பங்களைப் பற்றியும் சில விவரங்களைக் கூறுவார். அவற்றைக் கேட்ட மாணவர், ‘இவர் சாதாரண மனிதர் அல்லர்; பல ஊர்களைக் சுற்றியவர்; பல செய்திகளை அறிந்தவர்’ என்று எண்ணி, அவரிடம் மிக்க மரியாதையுடன் நடந்து வந்தனர். ஒரு நாள் ஐயர் கம்பராமாயணத்தில் ஒரு பகுதியை — இராவணனுக்கு முன் அநுமன் தன் வாலைச் சுற்றி ஆசனமாக அமைத்து அதன்மேல் அமர்ந்த நிலையைக் கூறும் பகுதியை நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு மாணவன் பாடத்தைக் கவனிக்கவில்லை; தனது வலக்காலை இடத்துடை மேற் போட்டு, வல முழங்காலை இரண்டு கைகளாலும் கட்டி உயர்த்திக் கொண்டும் இடையிடையே காலை அசைத்துக் கொண்டும் இருந்தான். அதனைக் கவனித்த ஐயர், “மாணவர்களே, அநுமான் எவ்வாறு உட்கார்ந்திருந்தான் என்பதை நான் எங்ஙனம் தெளிவாகச் சொல்லமுடியும்? இந்த மாணவரைப் போல அநுமான் உட்கார்ந்திருந்தான் என்று சொல்லலாம்” என்று அந்த மாணவனைச் சுட்டிக் காட்டினார். மாணவர் அனைவரும் அந்த மாணவன் இருந்த நிலையைப் பார்த்துச் சிரித்தனர். அந்த மாணவன் மிகவும் வெட்கமுற்றான்; வகுப்பு முடிந்த பிறகு அவன் ஐயரைத் தனியே கண்டு மன்னிப்பு வேண்டினான். இங்ஙனம் ஐயர் சமயம் வாய்க்கும்போதெல்லாம் நயமாக அவரவர் தவறுகளை மறைமுகமாகச் சுட்டிக் காட்டித் திருத்திவந்தார். அவர் எவரையும் மனம் வருந்தப் பேசியதில்லை. தமிழ்த் தேர்வில் குறைந்த ‘மார்க்கு’ வாங்கினவரிடம் அவர் பேசுவது நயமானமுறை: “இந்தப் பணத்தை நிலத்தில் போட்டிருந்தால் பலன் கிடைத்திருக்கும்” என்று குறைந்த மார்க்கு வாங்கின ஒரு மாணவனைப் பார்த்து கூறுவார்; மற்றொரு மாணவனைப் பார்த்து, “நீ வடமொழி கற்றிருக்கலாம்” என்பார். இந்த வாக்கியங்கள் நேரடியாக மாணவரைப் புண்படுத்தவில்லை அல்லவா? ஆனால், சிந்தித்துப் பார்ப்பின், இவற்றின் பொருள் ஈட்டிபோல உள்ளத்திற் பாய்வதாக இருக்கும். ஸ்ரீ மீனாக்ஷி தமிழ்க் கல்லூரி நமது தமிழ்நாட்டில் ராஐh -– ஸர் - அண்ணாமலைச் செட்டியார் அவர்களை அறியாதார் இலர். அவர் பெரிய கோடீசுவரர்; சிறந்த வள்ளல்; கல்வி பரப்புவதில் தொண்டு பூண்டவர்; அருங் குணக்குன்று. அவர் சிதம்பரத்தில் ஒரு தமிழ்க் கல்லூரி ஏற்படுத்தினார்; அதனில் தமிழ்த் தொண்டாற்றும்படி ஐயரை வேண்டினார். 1919-.ல ஓய்வு பெற்றிருந்த ஐயர் அவ்வேண்டுகோளுக்கு இணங்கி 1924-ல் அங்குச் சென்றார்; மூன்று ஆண்டுகள் அங்குத் தங்கித் தமிழ்த் தொண்டு புரிந்தார். அப்பொழுது அவரிடம் பாடம் கேட்டவர் இன்றும் அவரைப் புகழ்ந்துவருகின்றனர். ‘அன்றாடம் தாம் நடத்த இருக்கும் பாடத்தை வீட்டில் ஒரு முறை பார்த்துச் செல்வது நல்லாசிரியர் தொழில்’ என்பது போதனா முறையின் சிறப்புவிதி. ஆதனை ஆங்கிலம் கற்ற ஆசிரியர் இன்றும் கையாண்டு வருகின்றனர். இந்த முறையைப் பெரும் புலவராகிய சாமிநாதையரும் கையாண்டனர். அவர் அங்ஙனம் வீட்டிற் பாராமலே திடீரென்று எந்த நூலையும் திறந்து பாடம் கற்பிக்க வல்லவர். ஆயினும் அவர் அம்முறையில் கர்வம் கொள்ளாது ஆங்கில ஆசிரியர் முறையைப் பின்பற்றி வந்தது பாராட்டத் தக்கது. அம்முறையை இன்று எல்லாத் தமிழாசிரியர்களும் பின்பற்றி வருகின்றனர். “ஐயர் அவர்கள் பாடம் சொல்வது போல் எல்லாப் பாட ஆசிரியரும் நயமாகவும் தெளிவாகவும் சொல்லின், எங்களை போலப் பாக்கியசாலிகள் யாருமே இரார். எங்கள் ஆயுட்காலம் முழுவதும் மாணவராகவே இருக்கலாம். அதனைவிட இன்பம் வேறு இல்லை என்று சொல்லலாம்” என்று சிதம்பரத்தில் ஐயரிடம் படித்த பழைய மாணவர் பலர் சொல்வது வழக்கம். இங்ஙனமே அவரிடம் படித்த கும்பகோணக் கல்லூரி மாணவராக இருந்த பலரும் சென்னை மாகாணக் கல்லூரி மாணவராக இருந்த பலரும் இன்றும் சொல்லி மகிழ்வர். 4. தமிழ்த் தொண்டு பழைய தமிழ் நூல்கள் ஐயர் திண்ணைப் பள்ளியில் பனைஓலைப்புத்தகம் கொண்டு படித்தவர் அல்லவா? அதனால் அவர் தம் காலத்தில் அச்சடிக்கப்படாமல் பனை ஏடுகளில் எழுதப்பட்டிருந்த நூல்களை நன்றாகப் படிக்க அறிந்திருந்தார். அவர் காலத்தில் பல நூல்கள் அச்சடிக்கப்படாமல் இருந்தன. அவை பழைய நூல்கள் ஆகும். அவை பல நூறு ஆண்டுகட்குமுன் இருந்த புலவர்கள் பாடியவை. அவை நாளடைவில் ஏடு எழுதுபவர் கவனக்குறைவாலும் அறியாமையாலும் பிழைகள் மலிந்து காணப்படும். ஐயர் அவற்றை அரும்பாடுபட்டுக் கவனித்துப் படித்து வந்தார். சிந்தாமணி கும்பகோணத்தில் ஐயர் இருந்தபொழுது சேலம் - இராமசாமி முதலியார் என்பவர் முனுசீபாக அங்கு இருந்தார். அவர் நல்ல தமிழ் அறிஞர்; தமிழ் வளர்ச்சியில் ஊக்கம் உள்ளவர். அவர் ஐயருடன் நெருங்கிப்பழகினார்; தம்மிடம் இருந்த சீவக சிந்தாமணி என்ற நூலின் படியை ஐயரிடம் கொடுத்துப் பிழையின்றி அச்சிடும்படி வேண்டினார். ஐயர் அதனை வாங்கிப் படித்தார்; பல ஊர்கட்கும் சென்று சிந்தாமணிப் படிகளை வாங்கிவந்தார்; தமக்குக் கிடைத்த படிகளை எல்லாம் நன்றாக ஆராய்ந்தார்; ஒவ்வொரு பாட்டிற்கும் சரியான மூலபாடம் கண்டார்; அந்நூலுக்கு இருந்த உரையை அழுத்தமாக ஆராய்ந்தார்; யாவற்யையும் காகிதங்களில் தம் கைப்பட எழுதி முடித்தார்; நூலுக்கு அழகிய முகவுரை, கதைச் சுருக்கம், அரும்பொருள் அகராதி முதலியவற்றைச் சேர்த்தார்; முன் சொன்ன முதலியார் பொருள் உதவியாள் நூலை நல்ல முறையில் 1887-.ல அச்சிட்டு வெளிப்படுத்தினார். அந்நூலைப் பார்த்த அனைவரும் ஐயரைப் பாராட்ட லாயினர்; வெளிஊர்களிலிருந்து பாராட்டுக் கடிதங்கள் வந்து குவிந்தன. பூண்டி – அரங்கநாத முதலியார் போன்ற பெரியோர் பலர் ஐயரைப் பெரிதும் விரும்பிப் பாராட்டினர். தக்க பெருமக்கள் நட்பும் ஐயருக்குக் கிடைத்தது. சிந்தாமணி அயல்நாடுகட்கும் அனுப்பப்பட்டது. அதனால் இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய நாடுகளிலும் ஐயரது புலமையின் பெருமை பரவத் தொடங்கியது. ஆராய்ச்சித் தொல்லை பனை ஓலைப் புத்தகங்கள் படித்த சிலர் வீடுகளிற்றான் இருக்கும். அவற்றைப் படித்தவர் காலமான பிறகு அவை வீட்டுப் பரணையில் போடப்படும். அவர்க்குப் பின்வந்தவர் அவற்றைக் கவனியாவிடில் அவை நாளடைவில் கரையானுக்கு இரையாகி அழியும். ஆங்கில ஆட்சித்தொடக்கத்தில் தமிழ்க்கல்வி குறைவுபட்டது. அதனால் பல நூல்கள் கவனிப்பார் இன்றி அழிந்தன; பல கரையானுக்கு இரையாகி அரைகுறையாகக் கிடந்தன; மிகச் சிலர் வீடுகளில் நல்ல நிலையில் இருந்தன; அவற்றுள்ளும் பிழைகள் மலிந்த படிகளே பல. அவை படிக்கப்படாமல் அழியும்; கவலையுள்ள எவரேனும் அவற்றைக் கேட்பின், நம்மவர் உடனே கொடுக்க மறுப்பது வழக்கம். அங்ஙனம் கேட்டும் கொடுக்கப்படாமல் அழிந்த நூல்கள் பல. ஐயர் ஏடுகள் தேடப் புறப்பட்டுப் பட்ட தொல்லைகள் பலவாகும். அவர் புகைவண்டிப் பிரயாணம் செய்தார்; சில கிராமங்களுக்கு வண்டிகள்மூலம் சென்றார்; பல கிராமங்கட்குக் கால்நடையாகச் சென்றார்; எங்கு எங்கு ஏடுகள் கிடைக்கும் என்று கேள்விப்பட்டாரோ, அங்கெல்லாம் சென்று பார்த்தார்; ஒரே வீட்டாரிடம் பல முறை சென்று கேட்டார்; கிடைத்த இடங்களில் மகிழ்ச்சி கொண்டார்; கிடைக்காத இடங்களில் பொறுமை கொண்டார். அவர், பாவம்! தமிழ்மீதிருந்த அளவிலாப் பற்றினால் பட்ட துன்பங்கள் பலவாகும். இங்ஙனம் அரும் பாடுபட்டுத் தேடித் திரட்டிய ஏடுகளை வைத்துக்கொண்டு ஐயர் இராப் பகலாகப் படித்துப் பாடங்களைச் சரி செய்வதில் தம் பெரும் பொழுதைப் போக்கினார்; சரிபார்த்தபிறகு முன் சொன்னாற்போலச் செய்யுட்களைக் காகித ஏடுகளில் பிழையின்றித் தாமே எழுதுவதிலும், பிறரைக் கொண்டு எழுதுவித்தலிலும் அக்குறிப்பிட்ட நூலுக்கு முகவுரை, கதைச்சுருக்கம், அரும்பத வுரை இவற்றை எழுதுவதிலும் பல ஆண்டுகள் கழித்தார். இங்ஙனம் அவர் அரும் பாடுபட்டுப் பொறுமையுடன் உழைத்து வெளியிட்ட நூல்கள் பல. அவற்றில் முதலில் வெளிவந்ததே முன்சொன்ன சீவக சிந்தாமணி என்பது. ஐயர் பதிப்பித்த நூல்கள் சீவகசிந்தாமணி என்பது வடநாட்டு அரசனான சீவகன் வரலாறு கூறுவது. அது நாலாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைக் கொண்டது; மிக்க இனிமையான காவியம். அடுத்து வெளியிடப் பட்டது பத்துப்பாட்டு என்பது. அந்நூலில் புலவர் பலர் பாடிய பத்துப் பெரிய பாடல்கள் உள்ளன. அவற்றால் பண்டைக்காலக் கடவுள் வழிபாடு, அரசர் போர்முறை, மக்கள் நாகரிகம் முதலியவற்றை நன்கு அறியலாம். ஐயர் அடுத்து வெளியிட்டது சிலப்பதிகாரம் என்பது. அது 1800 ஆண்டுகட்கு முன் வாழ்ந்த கோவலன், கண்ணகி வரலாற்றைக் கூறும் அரிய காவியம்; கற்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகிய நூல்; தமிழ்நாட்டுப் பழைய நிலையைப் படம் பிடித்துக் காட்டும் சிறந்த நூலாகும். நான்காம் நூலாகப் புறநானூறு என்பது வெளிவந்தது. அது அறம், பொருள், வீடு என்பன பற்றிப் பேசும் நானூறூ பாக்களைக் கொண்ட நூல். அப் பாக்கள் புலவர் பலரால் பாடப்பட்டவை. அவை 1800 ஆண்டுகட்குமுன் இருந்த தமிழ் அரசர் - தமிழ் வள்ளல்கள் - தமிழ்ப் புலவர் - தமிழ் வீரர் இவர்களைப்பற்றிய சுவையுள்ள குறிப்புகள் பலவற்றைக் கூறுவது. நமது பழைய தமிழ்நாட்டு நாகரிகத்தை நன்கு உணர்த்தும் நூல் என்று அதனைக் கூறலாம். அடுத்து வெளியிடப்பட்டது மணிமேகலை என்னும் காவியம் ஆகும். அது முன் சொல்லப்பட்ட கோவலன் மகளான மணிமேகலை என்பவள் வரலாற்றைச் கூறும் நூல்; எளிய அழகிய தமிழ் நடைகொண்ட பெருநூல். ஐயர் அதற்குக் குறிப்புரை, பல இடங்களில் விளக்கவுரை இவற்றை எழுதி வெளியுட்டார். அவ் வுரை நயங்களைப் பார்வையிட்ட பலர். அவரைப் பெரிதும் பாராட்டினர்; பாலக்காட்டு நகராண்மைக் கழகத் தலைவராக இருந்த இராவ்பஹதூர் சின்னசாமி பிள்ளை முதலியோர் ஐயரை ‘இக்கால நச்சினார்க்கினியர்’ என்று அழைத்து மகிழ்ந்தனர். பின்னர் வெளிவந்த ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல் என்பன குறிக்கத்தக்கவை, பதிற்றுப்பத்து என்பது சேர அரசர் பதின்மரைப் பற்றிய நூல். பரிபாடல் என்பது ஆற்றுப் பெருக்கம், தெய்வ வழிபாடு, ஸ்தலங்களின் பெருமை, மக்கள் பழக்க வழக்கங்கள் முதலியன கூறும் நூல். பின்னர் வெளிவந்த நூல்கள் பெருங்கதை, உதயணகுமார காவியம், பழைய திருவிளையாடற் புராணம் முதலியன பின்னர் வெளிவந்தன. அவர் வெளியிட்ட நூல்களைச் (1) சங்க கால நூல்கள் (2) பிற்காலக் காவியங்கள், (3) புராணங்கள், (4) தூது, உலா முதலிய பிரபந்த நூல்கள், (5) இலக்கண நூல்கள் எனப் பலவகையாக பிரித்துக் கூறலாம். வசன நூல்கள் ஐயர் இறக்கும்வரை – தமது எண்பத்தெட்டாம் வயதுவரை தமிழ் நூல்களை ஆராய்ந்துவந்தார்; பதிப்பித்துவந்தார். அவர் பதிப்பத்த நூல்கள் தமிழ் மொழிக்குச் செல்வம் போன்றவை –- உயிர் போன்றவை. ஐயர் இவற்றோடு நிற்கவில்லை. தாம் பதிப்பித்த பெரிய நூல்களின் விஷயத்தை எளிய உரைநடையில் சிறு நூல்களாக எழுதி வெளியிட்டார். அவை (1) சிலப்பதிகாரக் கதைச் சுருக்கம், (2) மணிமேகலைக் கதைச் சுருக்கம், (3) உதயணன் கதைச் சுருக்கம் என்பன. அந்நூல்கள் கல்லூரி வகுப்புகட்குப் பாட நூல்களாகப் பலமுறை வைக்கப்பட்டன. கல்லூரி மாணவரும் பொது மக்களும் அவற்றைப் படித்து மகிழ்ந்தனர். பத்துப் பாட்டு உரைநடை என்ற நூலும் வெளியிடப் பட்டது. ஐயர் தமது வாழ்நாளில் கண்ட அரிய நிகழ்ச்சிகளும் பிறர் சொல்லக் கேட்ட நிகழ்ச்சிகளும் பல நூல்கள் வடிவத்தில் வெளிவந்தன. அவை — (1) நான் கண்டதும் கேட்டதும், (2) பழையதும் புதியதும், (3) நல்லுரைக்கோவை (நான்கு பாகங்கள்) முதலியன. அவை மிக எளிய நடையில் எழுதப்பட்டன. நிகழ்ச்சிகள் படிக்கப் படிக்க இன்பம் ஊட்டுவன. ஐயர், தாம் நன்கு அறிந்த இசைப்புலவர் மூவர் வரலாறுகளைச் சுவைபட எழுதிhயுள்ளார். அவை —-– (1) கோபாலகிருஷ்ண பாரதியார், (2) கனம் கிருஷ்ணையர், (3) மஹா வைத்தியநாதையர் வரலாறுகள் ஆகும். தமிழ்ப் பொதுமக்கள் அந் நூல்களைப் படித்துப் பல அரிய நிகழ்ச்சிகளை அறிந்து மகிழ்ந்தனர்; எளிய நடையில் வசன நூல்களை வெளியிட்ட ஐயரை மனமாரப் பாராட்டினர். ஐயர் சென்னைப் பல்கலைக் கழகத்தார் அழைப்புக்கு இணங்கி இருபது ஆண்டுகட்குமுன், “சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்” என்னும் பொருள் பற்றிச் பேசினார். அப்பேச்சு ஓர் அரிய நூலாக வெளிவந்து. பதினைந்து ஆண்டுகட்குமுன் திருவள்ளுவர் கொண்டாட்டத்தின் போது ஐயர் பேசிய ஆராய்ச்சி மிகுந்த பேச்சு ஒரு சிறு நூலாக வெளியிடப்பட்டது. இந்த வசன நூல்கள் எல்லாம் அறிவுக் களஞ்சியமாக இருப்பவை; படிப்பவர்க்கு என்றும் நிறைந்த பயனை அளிப்பவை. இங்ஙனம் ஐயர் வசன நூல்களாலும் தமிழ் மொழிக்குத் தக்க தொண்டு செய்து அழியாப் புகழ்பெற்றார். அழியாப் புகழ் ஐயரது தமிழ்த்தொண்டு அரசங்கத்தாரால் பாராட்டப்பட்டது; அதன் பயனாக 1905-ல் ஆயிரம் ரூபாய்கள் பரிசளிக்கப்பட்டன; 1906-ல் அவருக்குப் ‘பெரும் பேராசிரியர்’ என்று பொருள்படத்தக்க ‘மஹாமஹோபாத்தியாயர்’ என்ற பட்டம் வழங்கப் பட்டது. பாண்டித்துரைத் தேவர் உண்டாக்கிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் ஐயர் வாழ்நாள் புலவராக இருந்துவந்தார். தமிழ் வள்ளலாகிய பாண்டித்துரைத் தேவரும், இராமநாதபுரம் சேதுபதிகளும் ஐயரிடம் மிக்க அன்பும் மதிப்பும் உடையவர். தஞ்சாவூர் - கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவரான திரு. உமாமகேசுவரம்பிள்ளை அவர்கள் ஐயர் அவர்களிடம் மிக்க ஈடுபாடு உடையவர். ஐயர் சிலமுறை கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாக்களில் தலைமைதாங்கிப் பேசியுள்ளார். மேலைச் சிவபுரி சன்மார்க்கசபை ஆண்டு விழாக்களில் ஐயர் மூன்று முறை தலைமை ஏற்றுப் பேசினார். அப்பொழுது சேது சம்ஸ்தானப் புலவரான ரா. இராகவையங்கார் அவர்கட்கு மஹா வித்துவான் என்ற பட்டத்தையும், மு. கதிரேசச் செட்டியார் அவர்கட்குப் பண்டிதமணி என்ற பட்டத்தையும் வழங்கினார். அவையோர் மகிழ்ச்சியுடன் அப்பட்டங்களை வரவேற்றனர். பாரத தர்ம மஹா மண்டலத்தார் ஐயரைப் பாராட்டி 1917-ல் ‘திராவிட வித்யா பூஷணம் ’ என்ற பட்டம் அளித்து மகிழ்ந்தனர்; 1925-ல் காஞ்சி- காமகோடி பீடத் தலைவராகிய சங்கராச்சாரியார் அவர்கள் ‘தாக்ஷிணாத்ய கலாநிதி’ என்ற பட்டத்தையும் அளித்துக் களித்தனர். அதே ஆண்டில் (சர். சி. பி. இராமசாமி ஐயர் தலைமையில் நடந்த) மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் ஐயருக்கு ஐயாயிரம் ரூபாய்கள் பரிசளிக்கப்பட்டன. 1932-ல் சென்னைப் பல்களைக் கழகம் ஐயர் அவர்கட்குத் ‘தமிழ் இலக்கிய அளிஞர்’ (டாக்டர் ஆப் லிட்டரேசர்) என்னும் பெரு மதிப்புக்குரிய பட்டத்தை அளித்தனர். கும்பகோணம் கல்லூரியிலும் சென்னைப் பல்கலைக் கழகக் கட்டடத்திலும் ஐயருடைய உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. 1935-ல் ஐயர் எண்பத்தொரு வயதினரானார். அவரது 81-ஆம் ஆண்டுப் பிறப்பு நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பல்கலைக் கழகக் கட்டடத்தில் டாக்டர் ஸர். உஸ்மான் அவர்கள் தலைமையில் விழாச் சிறப்பாக நடந்தது. ஸர். பி. டி. இராஜன் அவர்கள் பொதுமக்கள் சார்பாக 3000 ரூபாய்கள் அடங்கிய பையை ஐயருக்கு வழங்கினார். இறுதிவரை உழைப்பு ஐயர் அந்த விழாவன்று இளமைகொண்ட வீரராகக் காணப்பட்டார் அவரது முகம் மலர்ந்து காணப்பட்டது. அவர் அப் பெருங் கூட்டத்திற்கு முன் எழுந்து நின்று, “இப்பொழுது என் உள்ளம் மகிழ்ச்சிக் கடலுள் மூழ்கியிருக்கின்றது. மீண்டும் இளமை வந்தாற்போல ஊக்கம் பிறக்கின்றது. இன்னும் நான் செய்ய எண்ணியிருக்கும் தமிழ்ப் பணி இடையூறு இன்றி நிறைவேறும். தமிழர் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது” என்றார். ஐயர் இவ்வாறு சொன்ன நாள்முதல் இறுதிவரை தமிழ்ப்பணி இடையூறு இன்றி நடத்தி வந்தார். தமிழர் ஐயரை மறக்கவில்லை. அவர்கள் அவர் வெளியிட்ட நூல்களை வாங்கி மகிழ்ச்சியோடு படித்தனர்; அவரது தொண்டைப் பாராட்டி மகிழ்ந்தனர். ஐயர் சென்னை, அண்ணாமலை, மைசூர், காசி, திருவனந்தபுரம், ஆந்திரப் பல்கலைக் கழகங்களில் உள்ள தமிழ்க் குழுக்களில் உறுப்பினராக இருந்து தமிழுக்குத் தொண்டு செய்தார்; சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வுக் குழுவின் தலைவராகப் பல ஆண்டுகள் இருந்து தொண்டு செய்தார். அவர் வெளியிட்ட குறுந்தொகை என்னும் நூலுக்குச் சென்னைப் பல்கலைக் கழகம் 1500 ரூபாய்களை உதவியது. ‘கலைமகள்’ என்னும் மாதத் தாள் தோன்றிய நாள்தொட்டு ஐயர் அதனில் அரிய கட்டுரைகள் எழுதிவந்ததார்; ஆனந்த விகடனில் 1940 முதல் “என் சரித்திரம்” என்பதை எழுதிவந்தார். அதனில் 122 அத்தியாயங்களே வெளிவந்தன. அந்நூல் முற்றுப் பெற்றிருக்குமாயின், தமிழ்நாட்டு அரிய செய்திகள் பல வெளிவந்திருக்கலாம். எனினும் வெளிவந்த அத்தியாயங்கள் பாதுகாக்கத் தக்கவை. அவை ஐயருடைய வரலாறு மட்டும் கூறுவன அல்ல; தமிழ்நாட்டு வரலாற்றைக் கூறுவன என்னலாம். ஐயர் அவர்கள் தம் வரலாற்றைத் தம் இறுதிவரை எழுதிவந்தது குறிப்பிடத்தக்கது. 1942-ல் சென்னை நகரம் ஐப்பானியர் குண்டு வீச்சுக்குப் பயந்து காலி செய்யப்பட்டது. அப்பொழுது ஐயர் அவர்கள் திருக்கழுக்குன்றத்திற் சென்று தங்கினார். அங்கு அவரது உடல் நலம் குன்றி ஒருநாள் திடீரெனக் காலமானார். அவரது பிரிவு தமிழகத்துக்கு ஈடு செய்யமுடியாத நஷ்டமாகும். அடையாற்று நூல் நிலையம் அடையாற்றுப் பிரமஞான சங்கத்தைச் சேர்ந்த திருவாட்டி ருக்மணி தேவி அவர்கள் தமிழ்ப் பற்று உடையவர். அவர் ஐயரவர்களிடம் இருந்த ஓலைப் பிரதிகள் அனைத்தையும் தம் nம்ற்பார்வையில் வைக்கச் செய்தார்; அவற்றை ஆராய்ந்து வெளியிடத் தக்க புலவரை நியமித்துள்ளார். அச்சுவடி நிலையத்தின் மூலம் மூவருலா, கம்பராமாயணம் - பாலகாண்டம் முதலிய நூல்கள் அச்சாகி வெளி வந்துள்ளன. ஐயருக்குப் பிறகு இத் தமிழ் தொண்டினை ஏற்றுத் தம் பொருட்செலவில் நடத்தி வருகின்ற அம்மையார் அவர்கட்கு நமது நன்றியும் வாழ்த்தும் உரியவாகுக! 5. நற்பண்புகள் ஊக்கமும் உழைப்பும் ஐயர் அவர்கள் ‘உழைப்பின் பிறப்பு’ என்னலாம். அவர் ஊக்கம் மிகுந்தவர். நாட்டில் அவருடன் பிள்ளையவர்களிடம் படித்த மாணவர் பலர். ஆயின் அவர் அனைவரும் ஐயரைப் போல அழியாப் புகழ் பெற்றனரா? இல்லை. காரணம் என்ன? தமிழ்த் தாய்க்குத் தொண்டு செய்யாமையே காரணமாகும். நமது நாட்டில் நூற்றுக் கணக்கான தமிழாசிரியர் இருக்கின்றனர். ஆனால் அவருட் சிலரையே தமிழ் உலகம் அறிந்திருக்கிறது. பெரும்பாலோர் பள்ளி மாணவர்க்குத் தமிழ் கற்பிக்கின்றனர்; சில சந்தர்ப்பங்களில் சொற்பொழிவு ஆற்றுகின்றனர். அவர்கள் ஒரு தமிழ் நூலையேனும் ஆராய்ச்சி செய்து நாட்டில் என்றும் இருக்கத்தக்க நிலையில் நூல் எழுதுகின்றனரா? இன்னும் அச்சுவாகனம் ஏறாத எண்ணிறந்த தமிழ் நூல்களை ஆராய்ந்து பதிப்பிக்கின்றனரா? இல்லை. இக்கராணத்தினாலேதான் புலவர் பலர் பெயர்கள் நாட்டு மக்கட்குத் தெரிவதில்லை. அத்ததைய புலவராகச் சாமிநாதையர் இருந்திருப்பின், அவர் அழியாப் புகழ் பெற முடியுமா? ஊக்கமும் உழைப்புமே ஐயரை மேனிலைக்குக் கொணர்ந்தன. மேனாட்டுப் புலவர் எங்குப் பேசினும் தாம் பேசியதை எழுதி நூலாக்கும் பழக்கம் முடையவர். அவ்வுயர் பண்பு ஐயரவர்களிடம் இருந்தது. அதனாற்றான் ஐயர் பல உரைநடை நூல்களை எளிதில் வெளிப்படுத்தினார். அவை உலகம் உள்ளளவும் நாட்டு மக்கட்கு நற்பயன் அளிக்கும் என்பதில் ஐயம் இல்லை. நம் நாட்டுப் புலவர் அனைவரும் இம்முறையை கையாள்வதில்லை; காற்றுப்போக்கில் பேசிவிட்டுச் செல்கின்றனர். பண்பட்ட பெரும் புலவரும் தாம் பேசியவற்றை எழுதிவைப்பதில்லை. அவை எழுதப்படுமாயின் - நூல்கள் வடிவில் வெளிப்படுமாயின் - தமிழ்மொழிக்கு ஆக்கம் தரும் அல்லவா? அவற்றைப் படிக்கும் தமிழர் பயன் பெறுவர் அல்லவா? தமது ஒவ்வொரு சொற்பொழிவும் அறிவுக்களஞ்சியம் என்பதை அறிந்தும், தாம் பேசுவதற்கு முன்னரே, புலவர் தமது பேச்சை எழுதி முடிக்கவேண்டும். இவ்வாறு பேசும் பலவற்றையும் தொகுத்து நூலாக வெளியிடவேண்டும். அங்ஙனம் வெளியிடப்படும் நூல்கள் அழியாத தமிழ் இலக்கியச் செல்வமாக அமையும். ஐயரவர்கள் செயலிலிருந்தேனும் தமிழாசிரியர்கள் இதனை நன்கு உணர்ந்து இனியேனும் பின்பற்றி நாட்டுக்கு நன்மை செய்தல் நல்லது. காலத்தில் அருமை காலத்தின் அருமையை மேனாட்டார் நன்கு அறிந்தவர்கள். நம் நாட்டார் பலர் பொழுதினைக் கழிக்க வழிதெரியாது சீட்டு முதலிய ஆட்டங்களில் ஈடுபடுவர்; வேறு சிலர் விளையாட்டு வேடிக்கைகளில் தம் பெரும் பொழுதைக் கழிப்பர். இவர்கள் தங்கள் வாணாளை வீணாளாக்குபவர் ஆவர். ‘கடந்து சென்ற நேரம் அழுது புரண்டாலும் வராது’ என்பதை இவர்கள் உணர்வதில்லை. ஆனால் அறிஞர் இவர்க்கு நேர் மாறானர். அவர்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்கமாட்டார்; எப்பொழுதும் பயனுடைய வேலையையே செய்துகொண்டிருப்பர். அந்த அறிஞர் இனத்தைச் சேர்ந்தவர் ஆதலால் டாக்டர் சாமிநாதையர், ‘இன்ன நேரத்தில் இன்ன காரியத்தைச் செய்ய வேண்டும்’ என்பதைக் கடமையாகக் கொண்டிருந்தார். அவர் கலையில் ஐந்து மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்துக்கொள்வர்; பிறகு காலைப் பிரார்த்தனை செய்வார்; பின்னர்த் தேவார திருவாசகப் பாடல்களைப் படிப்பார்; அச்சகத்தில் இருந்து வரும் நூற் பகுதிகளைப் பார்த்துத் திருத்துவார்; பிறகு புதிதாக அச்சிட இருக்கும் நூலைச் சோதித்துக்கொண் டிருப்பார்; பத்து மணிக்கு நீராடிப் பூசை செய்து உணவு கொள்வார்; மாணவரைக் கொண்டு திருக்குறள் -– நாலடியார் போன்ற நீதி நூல்களைப் படிக்கச் செய்வார்; சிறிது நேரம் அயர்ந்து தூங்குவார்; ஒரு மணிக்கு எழுந்து ‘காபி’ அருந்துவார்; கம்பராமாயணத்தைப் படித்து ஆராய்வார் (அதனைப் பிழையறப் பரிசோதித்து வெளியிட வேண்டும் என்பது அவர் எண்ணம். ஆனால் அது முற்றுப் பெறவில்லை); பின்னர் மாணவர்க்கும் பாடம் சொல்லுவார். மாலையில் சரித்திரக் குறிப்புகள் எழுதுவார்; தம்மைக் காணவருபவருடன் பேசிக் களிப்பார்; பிறகு சந்தியா வந்தனம் செய்து முடிப்பார்; ஏழு முதல் எட்டரை வரை மாணவர்க்குப் பாடம் சொல்லுவார்; பிறகு உணவுண்டு தாயுமானவர் பாடல் முதலியவற்றைப் படித்து உறங்கச் செல்வார். நண்பர்களே, ஐயர் அவர்கள் மேற்கொண்டிருந்த ஒரு நாள் வேலைகளை நன்கு கவனியுங்கள். அவர் ஒரு மணி நேரத்தை யேனும் வீணாகக் கழித்தார் என்று கூறமுடியுமா? இவ்வாறு காலத்தின் அருமையை உணர்ந்து நடப்பவரே வாழ்க்கையில் வெற்றி பெறுவர் என்பது உறுதி. அன்பு கனிந்த உள்ளம் ஐயர் அவர்கட்குத் தமிழ் படிப்பவரிடம் மிக்க அன்பு உண்டு; தமிழ்ப் புலவர்களிடம் மிகுந்த பற்றுண்டு. தமிழ் ஆசிரியராக வரும் இளைஞரைக் காணின், அவர்கள் ஊர், பெற்றோர் பெயர் முதலியன கேட்டு அவ்வூர்களைப்பற்றித் தாம் அறிந்தன கூறுவார்; “ஓய்வு நேரத்தைத் தமிழ் நூல்களைப் படிப்பதில் செலவழியுங்கள்; ஆரவாரங்களில் காலத்தை வீணாக்காதீர்கள். உழைப்பும் ஊக்கமும் வேண்டும். உழைப்பினால் உயர்வைப் பெறலாம். நன்றாகத் தமிழ்த்தொண்டு செய்யுங்கள், உங்களைப் பலர் தூற்றுவார்; அவர்களைப் பொருட்படுத்த வேண்டா; ஓயாது உழையுங்கள்; நாளடைவில் பொறாமையாளரும் பகைவரும் மறைவர்; மனம் மாறுவர். உங்கள் காரியத்திலேயே கண்ணாக இருங்கள்” என்பது அவரது அறிவுரை. இது வாழ்க்கையில் வெற்றிபெறுபவர்க்கு ஏற்ற அறிவுரை அன்றோ? உழைப்புக்கு மதிப்பு சிறந்த தமிழ் புலவர்களிடம் ஐயரவர்கட்கு மதிப்புண்டு; அன்புண்டு. பெரும் புலவராகிய சோழவந்தான் - அரசன் சண்முகனார், மஹாவித்துவான் ரா. இராகவையங்கார், இராவ்சாஹிப் மு. இராகவையங்கார், மறைமலை அடிகள் (சுவாமி வேதாசலம்), பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் முதலிய பெரும்புலவர்களிடம் அளவற்ற அன்பும் மதிப்பும் கொண்டவர்; அவர்களது உழைப்பைப் பாராட்டிப் பேசுவது அவரது இயல்பு. அவர்களும் ஐயரை மனமாரப் பாராட்டிப் பேசுதல் வழக்கம். ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ அல்லவா? தமிழ் வளர்ச்சி பற்றிய கருத்து கீழ் வருவன ஐயர் அவர்கள் அவ்வப்போது வெளியிட்ட அரிய கருத்துகளாகும்:—- “தமிழ் நாட்டார் பேசும்பொழுதும் எழுதும் பொழுதும் தமிழ் மொழியையே பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் அறிந்தோருட் பெரும்பாலார் ஆங்கிலத்திலேயே நினைக்கிறார்கள். அவர்களால் ஆங்கிலச்சொற்கள் கலவாமல் பேச முடியவில்லை. இத்தகைய நிலை ஒரு பெருங்குறை அல்லவா? “புதிய இலக்கியங்கள் இயற்றுவதற்கு எத்தனையோ துறைகள் இருக்கின்றன. பல மொழிகளில் உள்ள விஷயங்களை அறிவதனhல் இத்துறைகள் இன்னும் விரிவடையும். நாளடைவில் மனிதர் வாழ்க்கைநிலை மாறுபடுகின்றது. அதற்கு ஏற்பக் கொள்கைகளும் மாறுபடுகின்றன. அக் கொள்கைகளுக்கு ஏற்ப இலக்கியங்களும் நல்வழியில் மாறவேண்டுவது இயல்பே ஆகும். “தமிழ் நூல்களை ஆழ்ந்து பயிலவேண்டும். பலமுறை பயின்றால்தான் உண்மை புலப்படும். முதலிலே கடினமாகத் தோன்றினாலும். பலகால் பயின்றால் வரவரத் தெளிவு உண்டாகும். ஒருநூலில் உள்ள சொற்சுவை, பொருட்சுவைகளை அநுபவித்துப் படிக்க வேண்டும். அவற்றைப் பிறரும் அறியும் வண்ணம் எளிய நடையிற் சொல்லவும் எழுதவும் வேண்டும். “பழைய நூல்களையும் உரைகளையும் தெளிவாக ஆராய்ந்து உண்மைக் கருத்தை அறிய வேண்டும். தெரியாத வற்றைத் தெரிந்தவையாகக் காட்டலாகாது. நாமே அதிகமாக அறிந்துவிட்டோமென்று அயலாரைத் தாழ்வாக நினைத்தலும் பேசுதலும் கூடா. பிறர் எழுதியுள்ளவற்றை அவமதியாமல், குணமான பாகங்களை அறிந்து உபயோகித்துக்கொள்ள வேண்டும். “தமிழ் கற்றவரிடம் முறையாகப் பாடம் கேட்க வேண்டும். கேட்டவற்றைச் சிந்தித்து முறையாகப் பாடம் சொல்லவேண்டும். அதைவிடப் பேருதவி வேறு இல்லை. எப்பொழுதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். “தமிழில் சொற்கள் இல்லாதபோது பொருள்களையோ எண்ணங்களையோ வெளியிடப் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம். தமிழில் தக்க சொற்கள் இருக்கும்பொழுது அவற்றையே பயன்படுத்தவேண்டும்.” நன்றி மறவாமை ஒருவர் தக்க சமயத்தில் செய்த உதவியை மறத்தல் ஆகாது; அதனை மனத்தில் நினைந்து சமயம் வாய்க்கும் போது நாம் பதில் உதவி செய்யவேண்டும். பதில் உதவி செய்ய முடியாவிடில் உதவி செய்தவரை மனமாரப் பாராட்டிக்கொண்டேனும் இருக்கவேண்டும். ‘இங்ஙனம் நன்றி மறவாமல் இருப்பவரே உலகில் நல்வாழ்வை எய்துவர். நன்றி கொன்றவர்க்கு உலகில் நல்வாழ்வு இல்லை’ என்பது நம் பெரியோர் கண்ட உண்மை. இதனை, “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்ற வள்ளுவர் வாய்மொழிகொண்டு உணரலாம். நமது சாமிநாதையர். இதனை நன்கு படித்தவர் அல்லவா? அவர் தியாகராஜச் செட்டியாரால் முதலில் தமிழ் ஆசிரியர் வேலை பெற்றார் என்பதை அறிந்தோம் அல்லவா? ஐயர் அதனை மறக்கவில்லை, அவர் அதனை மனத்திற்கொண்டு, சென்னையில் குடியேறியவுடன் தமது வீட்டிற்குத் ‘தியாகராஜ விலாஸ்’ என்ற பெயரையிட்டார்; தாம் அறிந்தவரை அவரைப்பற்றித் ‘தியாகராஜச் செட்டியார்’ என்னும் பெயர்கொண்ட நூல் ஒன்றை எழுதினார். அந்நூல் பி. ஏ. வகுப்பிற்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. ஐயர் செட்டியாரைப் பெயர் சொல்லிக் குறியாது, “செட்டியார் அவர்கள்” என்றே சொல்வது வழக்கம். ஐயர் செட்டியார் பெயரால், கும்பகோணம் கல்லூரியில் பி. ஏ. வகுப்பில் படிக்கும் சைவ மாணவருள் ஒருவர்க்கு ஆண்டுதோறும் உதவிக் சம்பளமாக 48 ரூபாய் கொடுத்துவர விரும்பினார்; விரும்பி இருபத்தைந்து ஆண்டுகட்கு மேலாகக் கொடுத்துவந்தார். அவருக்குப்பின் (1942-க்குப் பின்) அவரது திருக்குமாரராகவுள்ள திருவாளர் - கலியாணசுந்தரமையர் அவர்கள் அவ்வுதவியை ஆண்டுதோறும் இன்றளவும் செய்துவருகின்றனர். ஐயர் மறைவுடன் உதவித் தொகையை நிறுத்திவிடாது, அதனைத் தொடர்ந்து நடத்திவரும் அவர் குமாரரது பெருந்தன்மையை என்னென்பது ! ஐயர் தம் ஆசிரியருள் ஓருவரான அரியிலூர்ச் சடகோப ஐயங்கார் மனைவியாரான செங்கமலத் தம்மாளுக்கும் அவ்வப்போது வேண்டிய உதவிகள் செய்து அவரை ஆதரித்துவந்தார். ஐயர் அவர்கள் தம் குருநாதராகிய மஹாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை அவர்கள் வரலாற்றை இரண்டு பாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார். அஃது ஒன்றே அவரது ஆசிரிய அன்பினை வெளிக்காட்டப் போதியதாகும். அப்பெரியார் அத்துடன் - நிற்கவில்லை. அவர் பிள்ளையவர்கள் மனைவியாரான காவேரியாச்சி என்பவருக்கு அவர் ஆயுள்வரை மாதம் ஐந்து ரூபாய் அனுப்பிவந்தார்; பல சமயங்களில் வேறுவகையிலும் உதவிபுரிந்தார். பிள்ளையவர்கள் குடும்பம் அவர்கட்குப்பின் வறுமையால் வாடியபோது தாம் நூறு ரூபாய் போட்டு ஒரு பட்டியல் தயாரித்து இரண்டாயிரம் ரூபாய் வசூலித்தார்; அத்தொகையைப் பிள்ளையவர்கள் குமாரரான – சிதம்பரம்பிள்ளையிடம் சேர்ப்பித்தார். பிள்ளையவர்கள் கொட் பேரரான மீனாட்சி சுந்தரம் பிள்ளையைத் தமது 81-ஆம் ஆண்டுப் பிறப்பு விழா அன்று சென்னைக்கு வரவழைத்துத் தக்க மரியாதைகள் செய்து மகிழ்ந்தார். ஐயர் தம் காலம்வரை மஹாவித்துவானைப் ‘பிள்ளையவர்கள்’ என்றே குறிப்பிட்டுவந்தனர். அவர்களைப் பற்றிக் பிறரிடம் பேசும்பொழுது அவர் கண்களில் நீர் பெருகும். ‘ஐயர் அவர்களைப்போல ஆசிரியரிடம் பக்தி கொண்டவரே உலகில் சீரும் சிறப்பும் பெறமுடியும்’ என்று கண்டோர் கூறுவது வழக்கம். பேச்சுத் திறமை ஐயர் அவர்கள் நூற்றுக் கணக்கான மேடைகளிற் பல பொருள்பற்றிப் பேசியுள்ளார். அவர் பேச்சுச் சொல்வளம் நிரம்பியது; பொருள் ஆழம் பொருந்தியது; ஆனால் எளிய நடை உடையது. அவர் பேச்சில் பல புதிய செய்திகள் அடங்கியிருக்கும். அதனால் அவர் பேச்சை ஒரு முறை கேட்பவர் தொடர்ந்து அவருடைய பிற சொற்பொழிவுகளைக் கேட்க விரும்புவர். இங்ஙனம் அவர் பேச்சைக் கேட்டவர் மூலமாக ஐயர் பேசிய விஷயங்களைக் கேட்டறிந்த மற்ற மக்கள் அவரது பேச்சை நேரிற் கேட்க விரும்புவர். ஐயரது பேச்சில் வேடிக்கைக்கும் சிரிப்புக்கும் இடமுண்டு. நயம்படப் பேசுவதில் ஐயர் பெயர்பெற்றவர். நான் ஒரு முறை என் நண்பர் பார்த்தசாரதி நாயடு அவர்களை அழைத்துக்கொண்டு ஐயரவர்களிடம் சென்று பேசிக்கொண்டிருந்தேன். ஐயர், “இவர் யார்?” என்றார். “இவர் முத்தியாலுப்பேட்டை உயர் நிலைப்பள்ளித் தமிழ் ஆசிரியர். இவர் பெயர் பார்த்தசாரதி நாயடு” என்றேன். உடனே ஐயர், “அப்படியா! இவர் நான் பாராதசாரதியாக இருந்தாலும் பார்த்தசாரதி என்று நீங்கள் சொல்வதால் ஒப்புக்கொள்கிறேன்.” என்று கூறிப் புன்னகை புரிந்தார். ‘பார்த்தசாரதி’ என்பதில் உள்ள ‘பார்த்த’ என்ற சொல்லை வைத்துக் கொண்டு ஐயர் செய்த வேடிக்கை எவ்வளவு நயமுடையது, பாருங்கள்! ஐயரவர்களிடம் பேசுவது ஒரு போதும் வீண் பேச்சு ஆகாது. அவர் பேச்சில் சரித்திரம், ஊர்களைப்பற்றிய விவரங்கள், பழைய புலவர் - வள்ளல்களைப்பற்றிய குறிப்புகள், தமிழ் நூல்களைப் பற்றிய விளக்கங்கள் முதலியன வெளிவரும். அவர் பலரிடமிருந்து கேட்டறிந்த பல செய்திகளை எழுதி வைத்துள்ளார். சிறுவரிடமிருந்து கிடைக்கும் புதிய செய்திகளையும் குறித்து வைக்கும் இயல்புஉடையவர் எனின், பொதுச் செய்திகளை அறிய அவருக்கு இருந்த ஆர்வத்தை என்னென்பது ! இத்தகைய நற்பண்புகள் பல அவரிடம் காணப் பட்டமையால்தான் அவர் தமிழகத்தில் நிலைத்த தொண்டு செய்யலானார்; தமிழர் உள்ளத் தாமரையில் கோவில் கொண்டார்; அழியாப் புகழ் பெற்றார். 6. சொற்பொழிவு ஐயர் அவர்கள் செய்த சொற்பொழிவுகள் எண்ணிறந்தன. அவற்றுள் ஒன்று மாதிரிக்காக இங்குத் தரப்பட்டுள்ளது. இதனைப் படித்துப் பாருங்கள்; இச்சுவை கொண்டு, அவருடைய வசன நூல்களைப் படித்துப் பயன் அடையுங்கள். உங்கள் வாழ்வு தமிழ் வாழ்வாகும். இசை இன்பம் * இசையின் பெருமையை உணர்ந்தே தமிழ்ப் பெரியோர் முத்தமிழுள் இசைத் தமிழை நடுநாயகமாக வைத்துள்ளனர். இயற்றமிழாகிய இலக்கிய நூல்கள் செய்யுட்களால் இயன்றவை. அவை இசையுடனே பயிலப்படவேண்டும். நாடகத்திற்கு இசை இன்றியமையாதது என்பதை யாவரும் அறிவர். இலக்கிய இலக்கணப் பயிற்சி அவற்றை அறிந்தவரையே இன்புறுத்த முடியும். ஆனால் இசையோ கற்றார், கல்லார், விலங்கினங்கள், பறவைகள் முதலிய எல்லா உயிர்கட்கும் இன்பம் நல்கும். பண்டைத் தமிழ் நூல்களில் இருதிணை உயிர்களும் இசைவயப்பட்டு நின்றன என்று பல இடங்களிற் கூறப்பட்டுள்ளன. காட்டிலுள்ள மலர்கள் மலரும் பருவத்தில் வண்டுகள் சென்று அவற்றில் இருந்து ஊதும். மலரும் பருவத்தில் உள்ள புஷ்பம் ‘போது’ எனப்படும். அப்போதில் வண்டு இசைபாட அது மலரும். பாம்பு இசைக்கு அடங்கும் என்றும் கூறப்படுகிறது. மதம் பிடித்து அலையும் யானைகளும் இசையினால் அடங்கிவிடும்; பரிக்கோல், குத்துக்கோல் முதலிய ஆயுதங் களாலும் அடக்க முடியாத யானை வீணை இசைக்கு அடங்கியது என்று கலித்தொகையில் கூறப்பட்டுள்ளது. தினைக்கொல்லையைக் காத்தவள் ஒரு பெண், அவள் தெள்ளிய சுனையில் நீராடிப் பரண்மேல் நின்று இனிய காற்றில் தன் கூந்தலை ஆற்றிக்கொண்டு மிகுந்த களிப்புடன் அந் நிலத்திற்குரிய குறிஞ்சிப் பண்ணைப் பாடிக்கொண்டு நின்றாள். அப்பொழுது தினைக்கதிரை உண்பதற்காக அங்கே வந்த யானை ஒன்று அந்தப் பெண்ணின் இசையில் மயங்கிக் கதிரை உண்ணாமல், தான் கொண்ட பெரும் பசியையும் மறந்து மயங்கி நின்றதாம். இந்நிகழ்ச்சி அகநானூற்றில் கூறப்பட்டுள்ளது. உதயணன் சரித்திரமாகிய பெருங்கதையில், உதயணன் நளகிரி என்ற மதம் பிடித்த யானையை வீணை வாசித்து அடக்கி அதன்மேல் ஏறி ஆயுதங்களை அதனையே எடுத்துத்தர ஏவி ஊர்ந்தான் என்று ஒரு செய்தி காணப்படுகிறது. இசையினால் வணக்கப்பட்ட அந்த யானை, குருவினிடத்து மிகுந்த பக்தியுள்ள ஒரு மாணவன்போல உதயணனுக்கு அடங்கி நின்றதாம். பசுக்கள் இசை வயப்படும் என்பதைக் கண்ணன் கதை விளக்கும். கண்ணபிரான் பசுக்களைப் பல இடங்களிலும் மேயவிட்டு விடையாடிக் கொண்டிருப்பார்; மாலைக்காலத்தில் பசுக்களை ஆயர்பாடிக்கு ஓட்டிச்செல்ல வேறு ஏதும் செய்வதில்லை; குழலை எடுத்து ஊதுவார்; உடனே பல இடங்களிலும் நின்று மேய்ந்த பசுக்கள் எல்லாம் ஒருங்கே திரண்டு கண்ணன்பால் வந்து சேரும். வண்டிமாடு, ஏற்றக்காளைகள் முதலியவற்றை இயக்கும் பொழுது – தெம்மாங்கு முதலிய பாடல்களைப் பாடுவதையும் அவைகளைக் கேட்டு அவ்விலங்குகள் தம் வேலையை வருத்தமின்றி அமைதியாகச் செய்துவருவதையும் இன்னும் காண்கிறோம். அந்தத் தெம்மாங்கு தேன்பாங்கு போலும்! குழந்தைகள் அன்னையின் இனிய தாலாட்டிசையைக் கேட்டு அழுகை ஓய்ந்து உறங்குவதை எவர்தாம் அறியார்! வன்மனக் கள்வரும் தம் கொடுஞ் செயலை மறந்து இசைவயத்தர் ஆவர். பழைய தமிழ் நூலில் இத்தகைய செய்தி ஒன்றும் காணப்படுகிறது. பாலை நிலத்தில் வழிப்பறி செய்யும் கள்வர் வழி வருவோர் பொருளையும் உயிரையும் கவர்வர்; பொருள் இல்லை எனினும் வாளால் வெட்டப்பட்ட உடம்பு துள்ளுவதைப் பார்த்தேனும் களிக்கக் கொலை செய்வர். அக் கொடியவர்முன் பாடகர் பாலைநிலப் பண்ணைப் பாடினால், அக்கள்வர் தம் கையிலுள்ள ஆயுதங்களை நழுவவிட்டு, தங்கள் கொடுந்தொழிலை மறந்து அன்புற்று இசைக்கு உருகுவார்களாம். ஈசுவரனே இசையின் வடிவமாய் இருப்பவர் என்றும் இசையில் பிரியம் உடையவர் என்றும் பெரியோர்கள் சொல்லியிருக்கின்றார்கள் “ஏழிசையாய் இசைப் பயனாய்” என்று சமய ஆசிரியர் இறைவனைக் குறித்தனர். “இசை விரும்பும் கூத்தனார்” என்பதும் அவருக்குப் பெயர். ஈசுவரன் கையில் வீணையை வைத்து இன்புறுவதாகப் பெரியோர் கூறுவர். இத்தகைய மூர்த்தி ‘வீணா தக்ஷிணாமூர்த்தி’ என்று வணங்கப்படுவார். கண்ணன் புல்லாங் குழலுடன் விளங்கி இசை பரப்பியதை அறியாதார் யாவர்? இசை கடவுளுக்கு விருப்பமாவது அறிந்து பல தொண்டர்கள் இசையாலேயே இறைவனை வழிபட்டிருக் கின்றார்கள். நாயன்மார்களுள் ஆனாய நாயனார், நந்தனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் முதலியோர் இசையால் இறைவiன வழிபட்டுப் பேறு பெற்றார்கள். மதுரையில் பாணபத்திரர் என்னும் அடியார் யாழ்வாசித்துச் சிவபெருமானை வணங்கி வந்தார். திருமால் அடியாருள்ளும் திருப்பாணாழ்வார், நம்பாடுவான் முதலியோர் இசைபாடித் திருமாலை வழிபட்டார் கள். கடவுளைத் துதிக்கும் தோத்திரங்கள் எல்லாம் இசைப் பாட்டாக அமைந்து விளங்குதல் கடவுளுக்கு இசையில் உள்ள விருப்பத்தை விளக்கும் அன்றோ? தேவாரம், திருவாசகம் முதலிய திருமுறைகளும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தமும் திருப்புகழும் பிறவும் இசைப் பாட்டுகளால் ஆகிய நூல்களே. பழைய காலத்தில் தமிழ்ச் சங்கங்களில் மூன்று தமிழையும் ஆய்ந்து வந்தார்கள். இசைத் தமிழ்ச் சங்கங்களே தனியாக அமைக்கப்பட்டுப் பல இசை வல்லார்கள் இசைத் தமிழை வளர்த்து வருவதற்கு நிலைக்களனாக இருந்தன. கடைச்சங்கப் புலவருள்ளும் இசையையே சிறப்பாகப் பயின்று ஆராய்ந்து நூல்கள் இயற்றிய புலவர்களும் இருந்தார்கள். பல வாத்தியங்களில் பயிற்சியுடைய புலவரும் இருந்தனர். பழைய காலத்தில் இசைத் தமிழ் இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. அவை பெருநாரை, பெருங்குருகு, இசை நுணுக்கம், தாள சமுத்திரம், இசைத் தமிழ்ச்செய்யுள் துறைக்கோவை முதலியன. பழைய இசைத்தமிழ் இலக்கிய நூல்கள் சிலப்பதிகாரம், கலித்தொகை, பரிபாடல் முதலியனவாம். குறவஞ்சி, பள்ளு, சிந்து முதலிய பிற்கால நூல்களும் இசையைச் சேர்ந்தனவே. II பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் 1. இளமைப் பருவம் சோழநாடு தமிழகம் சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று மூன்று பழைய நாடுகளை உடையது. சேரநாடு என்பது கொச்சி, திருவாங்கூர்ச் சம்ஸ்தானங்களும் இன்றைய மலையாள ஜில்லாவும் சேர்ந்த மேல் கரைப் பிரதேசமாகும். பாண்டிநாடு என்பது இன்றைய மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களைக் கொண்ட கீழ்க்கரை நாடாகும். சோழநாடு என்பது திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஜில்லாக்களைக் கொண்டது. இவற்றுள் சேரநாடு மலைநாடு; பாண்டிநாடு நானில வளமே நிறையப் பெற்றது. காவிரியாறு சோழநாடு சமவெளிப் பிரதேசம். ‘பொய்யாதளிக்கும் பொன்னி’ என்று புலவர்களால் பாராட்டப்பெற்ற காவிரியாறு தன் துணை யாறுகளுடனும், கிளையாறுகளுடனும் அந்நாட்டை வளப்படுத்துகிறது. இது மேற்கு மலைத்தொடரில் தோற்றமாகிறது; மைசூர் நாட்டின் வழியே தமிழ்நாட்டை அடைந்து வங்கக் கடலில் கலக்கிறது. இதன் நீளம் 475 கல். இதன் பயனை அடைகின்ற நிலம் ஏறக்குறைய 40 ஆயிரம் சதுரக்கல் பரப்புடையது. இஃது எப்பொழுதும் நீருடன் காணப்படுவது; அதனால் ‘உயிர் ஆறு’ எனப் பெயர் பெற்றது. இது பொன்னைக் கொழித்து வருதலால் ‘பொன்னி’ எனப் பெயர் பெற்றது; சோழநாட்டு மக்களுக்குத் தனது நன்னீரால் நல்ல விளைச்சலைத் தந்து அவர்களைக் காத்தலால் ‘செவிலித் தாய்’ எனப் பெயர் பெற்றது. இதன் பெரிய கிளையாறு கொள்ளிடம் என்பது. அது ஸ்ரீரங்கத்தினிடம் காவிரியிலிருந்து பிரிந்து தஞ்சாவூர் ஜில்லாவிற் பாய்ந்து சீகாழிக்கு அருகில் கடலொடு கலக்கிறது. காவிரி பழைய காவிரிப்பூம்பட்டினத்தருகில் கடலுடன் கலக்கிறது. வெண்ணாறு, வெட்டாறு, அரிசிலாறு, குடமுருட்டி, வீரசோழன் என்பன காவிரியின் கிளையாறுகள் ஆகும். இவை அனைத்தும் தஞ்சாவூர் ஜில்லாவிற் பாய்ந்து அந்த ஜில்லாவை மிக்க செழுமையுடையதாகச் செய்துவருகிறது. நாட்டு வளம் இங்ஙனம் பல ஆறுகள் பாய்வதனால் அவை கொண்டு வரும் கரிசல்மண் நாட்டைப் பண்படுத்தி நல்விளைச்சலை நல்குகின்றது. நாடெங்கும் பச்சைப் பசேர் என்று பசுங் கம்பளம் விரித்தாற்போன்ற குளிர்ந்த காட்சியை அளிக்கும் வயல்களை ஒருபுறம் காணலாம். வானளாவிய மா – பலா- வாழைத் தோட்டங்களை மற்றொருபுறம் காணலாம்.. ‘நின்று தளரா வளர்ந்து தாளுண்ட நீரைத் தலையாலே தருகின்ற’ தென்னை மரச் சோலைகளை ஒருபக்கம் பார்க்கலாம். ஆறுகளே அன்றி, அங்கங்குக் குளங்களும் குட்டைகளும் வாய்க்கால்களும் இருந்து தோட்டங்களுக்கும் வயல்களுக்கும் மக்களுக்கும் நீரை உதவுகின்றன. கருப்பங் கொல்லைகள் முதல் தரக் கருப்பங் கழிகளுடன் ஒருபக்கம் காட்சி அளிக்கக் காணலாம். இத்தகைய பல வளங்களும் நிறைந்திருப்பதால் சோழவள நாட்டு மக்கள் சோற்றுப் பஞ்சம் இன்றி இன்பமாகப் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அதனாற்றான் ஒளவையார் ‘சோழவள நாடு சோறுடைத்து’ என்று பாராட்டினார். இக்காரணத் தாற்றான் சோழ மன்னர் ‘வளவர்’ எனப் பெயர் பெற்றனர். கிராமங்கள் சிறப்பாகத் தஞ்சை ஜில்லாவில் கிராமங்கள் பல. அவற்றுள் ஆற்றோரம் அமைந்துள்ள கிராமங்கள் இயற்கைப் பேரழகுடன் காணப்படும். ஆற்று நீரே அன்றி அதிலிருந்து வெட்டப்பட்டுள்ள கால்கள் வழியாகப் பாயும் நீர் பக்கத்தில் உள்ள கிராமத் தெருக்களின் பின்புறத்தில் செல்லும் காட்சி காணத்தக்கது. தெருவினர் அக்கால்வாயிலேயே தங்களுக்கு வேண்டும் நீரை எடுத்துக் கொள்வர்; நீராடுவர். அக் கிராமங்களைச் சுற்றிலும் வானளாவிய தென்னை, மா கமுகு முதலிய மரங்கள் காட்சி அளிக்கும்; வாழைத் தோட்டங்கள் வளம் பெற்று இருக்கும். அதனால் தூரத்திலிருந்து பார்ப்பவர்க்குக் கிராமங்கள் இருத்தல் தெரியாது. சோழ நாட்டுக் கிராமங்களில் பழைய கோவில்கள் உண்டு. அவை பெரும்பாலும் நாயன்மாராலோ -– ஆழ்வாராலோ பாடப் பெற்றனவாக இருக்கும். கிராம மக்கள் ‘வைகறைத் துயில் எழு’ என்ற மூதுரைப்படி எழுந்து ஆற்றிற்குச் செல்வர்; உழவர் கன்று காலிகளை எழுப்பி வயல்கட்குச் செல்வர்; ஆயர் மகளிர் தயிர் கடைவர். இங்ஙனம் ஒவ்வொருவரும் விடியற்காலையில் எழுந்து தத்தம் தொழில்களில் ஈடுபடுவர்; அவற்றில் ஈடுபடுமுன் நீராடுதலைச் சிறந்த கடமையாகப் பெரும்பாலான மக்கள் இன்றளவும் கைக்கொண்டுள்ளனர்; நீராடிய பிறகு கிராமக் கோவிலுக்கு முன் நின்று இறைவணக்கம் செய்த பின்னரே வீடு செல்வர். மக்கள் ஒழுக்கம் கிராமவாசிகள் எம் மரபினர் ஆயினும் சரி, அவர்களிடம் தொன்றுதொட்டு வருகின்ற நல்ல இயல்புகள் பலவற்றைக் காணலாம். அவற்றுள் ஒன்று வைகறையில் துயில் எழுதல்; மற்றொன்று கடவுள் சிந்தனை; அடுத்தது தமிழ் நூல்களை வாசித்தல். சைவராயின் தேவார, திருவாசகங்களைப் படிப்பர்; வைணவராயின் ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிரத் திவ்யப் பிரபந்த நூலை வாசிப்பர்; “‘அவனே, இவனே’ என்பதை விடச் ‘சிவனே, சிவனே’ என்பது நல்லதன்றோ?” என்று அடிக்கடி ஒருவருடன் ஒருவர் சொல்லிக் கொள்வர். கிராமவாசிகள் குழந்தை மனப்பான்மை உடையவர்கள்; நகரங்களில் நடைபெறும் நாகரிகச் சூழ்ச்சிகளை அறியாதவர்கள்; ஊரில் நடைபெறும் பெரும்பாலான வழக்குகளைத் தங்கட்குள் தாங்களே கூடி நீக்கிக்கொள்வர். ஒரு கிராமத்தில் ஒருவரேனும் நன்றாகத் தமிழ் வாசித்த பெரியவராக இருப்பர். அவரிடம் சமய நூல்கள், புராணங்கள் முதலியன இருக்கும். அச்சிடப்படாத பனை வோலைப் புத்தகங்களும் இருத்தல் கூடும். அப் பெரியவர் பனை வோலை நூல்களையும் நன்கு படிப்பார். ஊரில் உள்ள முதியவர்கள், மிராசுதார்கள், ஓய்வுள்ள பிறர் அப் பெரியவரைச் சூழ்ந்திருப்பர். எல்லாரும் சமய சம்பந்தமாகவும் இலக்கிய சம்பந்தமாகவும் ஒழுக்க சம்பந்தமாகவும் பல பொருள்பற்றிப் பேசுவர்; ஊருக்குச் செய்யவேண்டும் நல்ல செயல்களைப் பற்றியும் பேசுவர். நடுக்காவேரி இத்தகைய நல்ல கிராமங்களில் ஒன்று, நமது பெரும் புலவர் ந. மு வேங்கடசாமி நாட்டார் அவர்கள் பிறந்த நடுக்காவேரி. அச்சிற்றூர் திரு ஐயாற்றுக்கு அருகில் உள்ள வளம் மிகுந்த சிற்றூர்களில் ஒன்று. அங்கு வாழ்கின்ற மக்கள் பல இனத்தவர். அவர்களுட் பெரும்பாலோர் சமயத்துறையில் பற்றுடையவர்கள்; பெரியோர் வகுத்த நியாய வரம்பு கடவாதவர்கள்; தமிழ்க் கல்வியில் மிக்க ஆர்வம் உடையவர்கள். நாட்டார் மரபு அவ்வூரில் உள்ள மரபினருள் நாட்டார் மரபினர் ஒரு சாரார். நாட்டார் என்பவர் கள்ளர் மரபினர். கள்ளர் என்பவர் இத் தமிழ்நாட்டின் பல பகுதிகளைப் பேரரசராகவும் சிற்றரசராகவும் இருந்து ஆண்டவர். நடுக்காவேரிக்கு அருகில் உள்ள ‘செந்தலை’ முன் காலத்தில் ‘முத்தரையர்’ என்ற கள்ள அரசர்க்குத் தலைநகரமாக இருந்தது. புதுக் கோட்டைச் சீமையைச் சேர்ந்த கொடும்பாளூரை ஆண்டவரும் கள்ளர் மரபினரே ஆவர். பெரிய புராணத்துட் கூறப்படும் கூற்றுவ நாயனார் என்ற பேரரசரும் கள்ளர் மரபினரே. இன்று புதுக் கோட்டை அரசராக இருப்பவரும் அம் மரபினரே ஆவர். கள்ளர் வீரம் மிக்கவர்; அஞ்சா நெஞ்சினர்; ஆள்வினை உடையவர். அவர்கள் முன் சொன்னவாறு பேரரசராகவும் சிற்றரசர்களாகவும் இருந்தனர்; பல்லவர்-சோழர்-பாண்டியர் ஆட்சியில் சேனைத் தலைவராகவும் அரசியல் அலுவலாள ராகவும் இருந்து தம் போர்த் திறனையும் ஆட்சித் திறனையும் நன்கு வெளியிட்டனர். புகழ்பெற்ற வைணவப் பெரியாராகிய திருமங்கையாழ்வார் கள்ளர் மரபினர்; சோழர் சேனைத் தலைவராக இருந்தவர். சுருங்கக் கூறின், நமது பெரும் புலவர் பிறந்த கள்ளர் மரபு ஆண்மையும் அரசியல் அறிவும் வாய்ந்திருந்த பழந்தமிழ் மரபாகும். பெற்றோர் மேற்சொன்ன புகழ்மிக்க மரபிற் பிறந்து நடுக்காவேரியில் வாழ்ந்துவந்த அறிஞருள் முத்துசாமி நாட்டார் என்பவர் ஒருவர். அவரே நமது பெரும் புலவர்க்குத் தந்தையார் ஆவர். அவர் வாழ்க்கைக்குத் தேவையான அளவு நிலம் படைத்தவர்; அதனை உழுது பயிர்செய்து கௌரவமாகக் காலம் கழித்து வந்தவர். அவர் தம் பரம்பரைக்கு உரிய தமிழ் வீரமும் அரசியல் அறிவும் கருதியது முடிக்கும் ஆற்றலும் பெற்றிருந்தார்; அவற்றுடன் நல்ல தமிழ்ப் புலவராகவும் சோதிடப் புலவராகவும் விளங்கினார். அவர் சிவநேயம் மிக்குடையவர்; சைவ சமய நூல்களை நன்கு படித்தவர்; சிவத்தலயாத்திரை செய்தவர். அவருக்கு மனைவியாராக வாய்ந்தவர் கணவருக்கு ஏற்ற காரிகையார். அந்த அம்மையாரும் நல்ல குடும்பத்தில் தோன்றியவர்; சிவபக்தி மிக்குடையவர்; சமயத் தொடர்பான நோன்புகளைப் பின்பற்றுவதிலும் சமய சம்பந்தமான பிறவற்றிலும் பெரும் பற்றுடையவர்; கணவரை உயிர்த் துணைவராக எண்ணி, அவர் மனம் கோணாதவாறு இல்லறத்தை இனிதாக நடத்திவந்தார்; கணவர் குறிப்பறிந்து நடந்துகொள்வதில் திறமையுடையவராக விளங்கினார். அம்மையார் நல்லொழுக்கமும் கணவரது அறிவொழுக்கமும் ஒன்று சேர்ந்தன. ஆதலால், அவர்களது இல்லறம் நல்லறமாக நடைபெற்று வந்தது. நாட்டார் பிறப்பு இவ்வாறு கருத்து ஒருமித்து இன்பவாழ்க்கை வாழ்ந்து வந்த இருவர்க்கும் பிறந்தவரே நமது பெரும்புலவர்.1 அவர் பெற்றோர் அவருக்கு வேங்கடசாமி என்னும் திருப்பெயர் இட்டனர். வேங்கடசாமி என்பது நமது தமிழகத்தின் வட எல்லையில் இருக்கும் திருப்பதிமலையில் எழுந்தருளியுள்ள பெருமாள் பெயர். சிறந்த சிவபக்தராகிய முத்துசாமி நாட்டார் தம் மைந்தருக்குப் பெருமாள் பெயரை வைத்ததைப்பற்றி நீங்கள் ஆச்சிரியப்படுவீர்களா? சைவம், வைணவம் என்பன ஒரு தாய் பெற்ற இரண்டு குழந்தைகள் போன்றவை. சைவர் வைணவப் பெயர்களை வைத்து வழங்குதல் நெடுங்காலமாக இந்நாட்டில் இருந்துவரும் வழக்கமாகும். இது நம் தமிழ் மக்களுடைய பரந்த நோக்கத்தை நன்கு புலப்படுத்துவதாகும் அல்லவா? இளமைக் கல்வி நாட்டார் முதற்பிள்ளை ஆதலின் பெற்றோரால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்க்கப் பட்டார். அவர் சைவக் குடும்பத்துப் பிள்ளை ஆதலின், குழந்தைப் பருவமுதலே சமயப் பற்றுடன் விளங்கினார்; பெற்றோருடன் கோவிலுக்குச் செல்லுதல்; ஊரில் நடைபெறும் புராண இதிகாசக் கதைகளைக் கேட்டல் முதலியவற்றில் ஈடுபட்டார். அவர் ஆறு வயதில் திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். சுமார் 60 ஆண்டுகட்கு முற்பட்ட திண்ணைப் பள்ளிகள் எவ்வாறு நடைபெற்றன. என்பதை நீங்கள் அறியவேண்டுவது. அவ் விவரங்களை முன் சொல்லப்பட்ட ஐயரவர்கள் வரலாற்றிற் காணலாம். ஐயரவர்கள் கிராமக் கல்வியைப் பெற்றவாறே நாட்டார் அவர்களும் திண்ணைப் பள்ளியில் தமிழ்க் கல்வி பயின்றனர்; பின்னர் அவ்வூரில் இருந்த தொடக்கப் பள்ளியிற் சேர்ந்து ஆங்கிலம் ஒழிந்த பொதுக் கல்வியையும் கற்றனர். நாட்டார் அவர்களுடைய சிறிய தந்தையார் சொக்கலிங்க நாட்டார் என்பவர். அவரும் தமிழ்ப் புலவர்; இசை இலக்கணம் தவறாது பாடல்களைப் பாடுவதில் வல்லவர். நமது நாட்டார் அவரிடம் அவ்வப்பொழுது இசைப் பயிற்சி பெறலானார்; தகப்பனாரிடம் சிறிய தமிழ் நூல்களைப் பாடம் கேட்டுப் படித்துவந்தார். திருத்தமான பேச்சி முத்துசாமி நாட்டார் எப்பொழுதும் திருத்தமாகப் பேசும் பழக்கம் உடையவர். ஆதலின் அவரது அந்த நற்பழக்கம் நமது நாட்டாரிடமும் சிறுவயது முதற்கொண்டே காணப்பட்டது. அவர் திண்ணைப் பள்ளி மாணவராக இருந்தபொழுதே தமது பேச்சைப் பிழையின்றிப் பேசிவந்தார். மாணவர் பொதுவாகப் புத்தகங்களில் நல்ல தமிழ் நடையைப் படித்தாலும், பேசும்பொழுது பிழைபட்ட நடையிற்றான் பேசுவது வழக்கம். இது தவறு என்பதை அவர்கள் உணர்வதில்லை. ‘சுடுதண்ணி, பச்சைத்தண்ணி’ என்று அனைவரும் வீட்டில் பேசுவதைக் கேட்கலாம். ஆனால் நாட்டார் சிறுவராக இருந்தபொழுதே ‘வெந்நீர், தண்ணீர்’ என்று திருத்தமாகவே பேசிவந்தார். இங்ஙனம் அவர் சிறுவயதிற் கொண்ட நற்பழக்கம் அவரது வாழ்நாள் முழுவதும் நிலைத்திருந்தது. அஃது அவரது தமிழ் நடையை உயர்த்தக் காரணமாக இருந்தது. அவரிடம் பழகியவர்க்கு அது நல்ல பாடமாகவும் அமைந்தது. அது, மாணவராகிய நீங்கள் நன்கு கவனித்துப் பின்பற்ற வேண்டுவதாகும். நல்லார் இணக்கம் நாட்டாரது வீட்டுத் திண்ணையில் எப்பொழுதும் ஊர்ப் பெருமக்கள் கூடி அவர் தகப்பனாருடன் பல பொருள்பற்றிப் பேசிக்கொண்டு இருப்பர். நாட்டார் பள்ளி இல்லாத நேரங்களில் அவர்களுடன் இருந்து, அவர்கள் பேசும் உலகச் செய்திகளையும் சமய சம்பந்தமான செய்திகளையும் கருத்தூன்றிக் கவனிப்பார்; அவர்கள் பேச்சில் தமக்கு விளங்காத வற்றைப் பிறகு தம் தகப்பனாரைக் கேட்டுத் தெரிந்துகொள்வார். இந்த நல்வியல்பினால் அவரது பொது அறிவு நாளடைவில் வளர்ச்சி பெறலாயிற்று. இதிகாச-புராணங்கள் அவர் வீட்டுத் திண்ணையில் சில மாதங்களில் தொடர்ந்து பாரதம், இராமாயணம், கந்தபுராணம் முதலியன படிக்கப்பெறும். முத்துசாமி நாட்டாரோ பிறரோ ஒவ்வொரு செய்யுளுக்கும் பொருள் கூறிச் செல்வர். அந்த நல்லோரிடையே நமது நாட்டாரும் கலந்துகொள்வர். நூலைப் படிக்க ஆள் இல்லாதபொழுது நாட்டார் பயபக்தியுடன் அமர்ந்து செய்யுட்களை இசையாகப் படிப்பர்; தந்தையாரோ, பிறரோ பொருள் கூறுதலைக் கூர்ந்து கவனிப்பர். வில்விசயன், முருகன் போன்ற வீரர் வரலாறுகள் அச் சிறு பருவத்தில் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன;கம்பர் சித்தரித்த இராமன், பரதன் வரலாறுகள் அவர் மனத்தைக் கவர்ந்தன. சகோதர வாஞ்சையில் அவ்விருவரும் நடந்துகொண்ட முறை அவரது இளமை உள்ளத்தில் நன்கு பதிந்தது. அங்ஙனம் பதிந்த ஒன்றே அவரும் அவரது இளவலான கோவிந்தராச நாட்டாரும் மனமொத்து வாழக் காரணமாக இருந்ததெனல் மிகையாகாது. ‘சிறுவர் இளம் பருவத்தில் இத்தகைய உதாரண புருஷர் களுடைய வரலாறுகளைக் கேட்டு மனம் செம்மைப்பட வேண்டும் என்று கூறுவது இதனைக் கருதியே ஆகும்’ என்று பிற்காலத்தில் நாட்டார் அடிக்கடி சொல்வது வழக்கம். 2. தமிழ்நூற் பயிற்சி பயனற்ற வாழ்க்கை முதல் ஐந்து வகுப்புகள் படித்துக் கிராமப் பள்ளியிலிருந்து வெளியேறுவோர் பலர் பிறகு படிப்பதே இல்லை; பிழைப்புக் குரிய வேலைகளைச் செய்ய முற்படுவர்; ஓய்வு நேரங்களிலேனும் தமது நூலறிவை வளர்த்துக் கொள்ளலாம் அல்லவா? அவர்கள் அவ்வாறு செய்வதில்லை; அந்த நேரங்களில் பலர் கூடி ஊர் வம்பு அளப்பர்; சீட்டாடுவர்; கோழிச் சண்டை, காற்றாடிவிடுதல் முதலிய விளையாட்டுகளிற் காலங்கழிப்பர். நகரத்தில் இருப்பவரும் செம்மையுற்றவர்களாக இல்லை. வயிறு வளர்க்கத் தொழில் செய்ய வேண்டுவது அவசியமே. அது போலவே அறிவு வளர்க்கப் பல நூல்களைப் படிக்க வேண்டும், கற்றாரோடு பழகவேண்டும், நல்லோர் கற்றோர் பேச்சுகளைக் கேட்டுப் பயன்பெற வேண்டும் என்னும் எண்ணம் இல்லாமல் பொழுதைவறிதே கழிப்பவரே பலராவர். அவர்கள் அருமையாகப் பெற்ற மனிதப் பிறவியின் பயனை நுகராது வீணே பயனற்ற வாழ்க்கையினராக இருந்து காலங் கழிப்பவராவர். பள்ளிப் படிப்புக்குபின் நமது நாட்டார் சோம்பேறியாக இருக்கவில்லை. அவர் கிராமப் பள்ளியை விட்ட பிறகு தந்தையார்க்கு உதவியாக இருந்து உழவுத் தொழிலைக் கவனித்து வந்தார்; காலையில் எழுந்து ஆற்றில் நீராடுவர்; கோவிலுக்குச் சென்று இறைவழிபாடு செய்து மீள்வர்; சிறிது நேரம் தேவார திருவாசகம் படிப்பர்; பின்னர்க் காலை உணவு கொண்டு வயல் வேலைகளைக் கவனிக்கச் செல்வர்; நடுப்பகல் வீடு திரும்பி உணவுண்பர்; இரண்டு மணி முதல் நான்குமணி வரை தோட்ட வேலையில் ஈடு படுவர்; பிறகு வீடுதிரும்புவர்; தமது வீட்டுத் திண்ணையில் கூடும் அறிஞர் அவையிற் கலந்துகொள்வர்; இரவில் ஒன்பதுவரை தகப்பனாரிடம் தமிழ் நூல்களைப் பாடம் கேட்பர். நாட்டார் இந்தத் திட்டத்தை வரையறை செய்து கொண்டு இதன்பட நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தந்தையாரிடம் தமிழ்நூற் பயிற்சி தமிழை முறையாகப் படிப்பவர் முதலில் நிகண்டுகளை மனப்பாடம் செய்வர்; ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, நல்வழி, மூதூரை, நன்னெறி, நீதிநெறி விளக்கம் இவற்றை முறையாகப் படிப்பர்; பதம் பிரித்துப் பொருள் கூறுவர். இவை அனைத்தும் திண்ணைப் பள்ளியிலேயே நடைபெறும். நாட்டார் இவற்றைத் திண்ணைப் பள்ளியிலேயே நன்கு பயின்றவர். ஆதலால் மேற்கொண்டு அந்தாதி, கலம்பகம், பிள்ளைத் தமிழ், உலா, தூது முதலிய பிரபந்த நூல்களைத் தந்தையாரிடம் பாடம் கேட்கலானார். நாட்டார் கூரிய அறிவினர் ஆதலால் ஓர் அந்தாதி நூலைத் தந்தையாரிடம் பாடம்கேட்டு முடிந்ததும், மற்ற அந்தாதி நூல்களைத் தாமாகவே முயன்று படிக்கலானார்; பொருள் விளங்காத இடங்களில் தந்தையாரைக் கேட்டுத் தெரிந்து கொள்வார். இங்ஙனமே அவ்விளைஞர் பல அந்தாதிகள், பல கலம் பகங்கள், பல பிள்ளைத் தமிழ்கள், பல உலாக்கள், பல தூதுகள் முதலியவற்றைப் படித்து வரலானார். இச்சிறு நூல்களை முயன்று படிப்பவர் கடினமான பதங்கட்கு உரை எளிதிற் காண்பர்; கடின சந்திகளைப் பிரிக்கத் தக்க பயிற்சி பெறுவர். ஆதலின் பழந்தமிழ் ஆசிரியர்,, ‘தமிழ் மாணவர் இச்சிறு நூல்களை முதலிற் படிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினர். ஒரு கலம்பகத்தை முறையாகப் பாடம் கேட்ட அறிவைக் கொண்டு பிற கலம்பக நூல்களைப் படிக்கையில் பதம் பிரித்தல், பொருள் உணர்தல் என்னும் முயற்சியில் ஊக்கம் பிறக்கும்; பிறக்கவே உழைப்பு ஏற்படும். ‘பதம் பிரித்துப் பொருள் உணர்ந்தோம்’ என்று எண்ணும்பொழுது மாணவர் கொள்ளும் மகிழ்ச்சி சொல்லுந் தரத்ததன்று. நமது நாட்டார் நாள் தோறும் இந்த இன்பத்தை அநுபவித்து வந்தார். தமிழ் நூற்பயிற்சியில் அவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு அவரது தந்தையார் மிக்க மகிழ்ச்சி கொண்டு, அவரை மேன்மேலும் ஊக்கிவந்தார். தமிழ் கற்கும் மாணவர் முதலில் கற்கவேண்டும் இலக்கண நூல் நன்னூல் என்பது. அது கி. பி. 12-ஆம் நூற்றாண்டின் இறுதியிற் செய்யப்பட்டது. அதனைச் செய்தவர் பவணந்தி முனிவர் என்பவர். அந்நூலிற் கூறப்பட்டுள்ள செய்திகளின் சுருக்கமே நீங்கள் படிக்கும் இலக்கண நூல். நாட்டார் அந்ந நன்னூலைத் தந்தையாரிடம் பாடம் கேட்கலானார்; அந்நூலில் உள்ள எல்லாச் சூத்திரங்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவித்தார்; அவற்றின் பொருளையும் உதாரணங்களையும் பொருள் உணர்ச்சியுடன் படித்து முடித்தார். பிறகு நாட்டார் செய்யுள் இலக்கணம் செப்பும் ‘யாப்பிலக்கணம்’ என்ற நூலையும் நன்குபடித்து முடித்தார். அவர் இவ்வாறு இலக்கணநுல்களைப் பிழையறப் படித்து முடித்த பிறகு தகப்பனார் முன்னிலையில் நளவெண்பா, நைடதம் ஆகிய இரண்டையும் படித்து முடித்தார்; பின்னர்த் திருவிளை யாடற் புராணத்தைப் படிக்கலானார். நடுக்காவேரியில் நல்ல பெயர் நாட்டார் இங்ஙனம் தமது இருபது வயதுவரை உழவுத்தொழிலைக் கவனித்துக்கொண்டே தமிழ் நூற் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அவர் ஒருவருடனும் வீண்பொழுது போக்கவில்லை; பிறரை விளையாட்டுக்கேனும் பரிகசித்ததில்லை. அவரைச் சிறு வயது முதல் கவனித்து வந்த ஊரார், அவரது நல்லொழுக்கத்தையும் தமிழ் ஊக்கத்தையும் கண்டு மனமாரப் பாராட்டினர்; ‘முத்துசாமி நாட்டாருக்கு ஏற்ற பிள்ளை’ என்று வாயாரக் கூறி மகிழ்ந்தனர். அறிஞர் கூட்டுறவு நடுக்காவேரிக்கு நிலவரி மேற்பார்வையாளர் (ரெவின்யூ இன்ஸ்பெக்டர்), பள்ளிக்கூடக் கண்காணிப்பாளர் முதலிய அரசாங்க அலுவலாளர் அடிக்கடி வருவதுண்டு. அவர்கள் முத்துசாமி நாட்டாரை நன்கு அறிந்தவர்கள். அவர்கள் நமது வேங்கடசாமி நாட்டாருடன் கலந்து பேசுவதுண்டு; பல தமிழ்நூல்களைப் பற்றி பேசுவார்கள். பள்ளிக்கூடக் கண்காணிப்பாளரான ஐ. சாமிநாத முதலியார் என்பவர் நல்ல தமிழ்ப் புலவர். அவர் ‘சாவித்திரி வெண்பா’ என்னும் நூலைப் பாடியவர். அவர் 1904-ல் நமது நாட்டாரின் தமிழ் அறிவைப் பாராட்டி, “தம்பி, பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மதுரையில் தமிழ்ச்சங்கம் ஏற்படுத்தித் தனித் தமிழ்த் தேர்வுகள் நடத்த வசதி செய்திருக்கின்றார். நீங்கள் அத் தேர்வுகட்குச் சென்று சிறப்புப் பெறலாம்,” என்று கூறினார். அது கேட்ட நாட்டாருக்கு உண்டான மகிழ்ச்சி கூறுந்தரத்ததன்று. அவர் உடனே முதல் தேர்வுக்குத் தம்மைத் தயாரித்துக்கொள்ள முனைந்தார். 3. ‘பண்டிதர்’ பட்டம் பாண்டித்துரைத் தேவர் தமிழ்க் கல்வி மதுரையில் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்துத் தமிழை வளர்க்கப் புறப்பட்ட வள்ளலான பாண்டித்துரைத் தேவர் யாவர்? அவர் வரலாறு யாது? தேவர் பாலவநத்தம் ஜமீந்தார். பொன்னுச்சாமித் தேவர் குமாரர் ஆவர். அவர் 1864-ல் பிறந்தார்; சேது சம்ஸ்தானப் புலவரான முத்துசாமி ஐயங்கார் என்பவரிடம் தமிழ் நூல்களைக் கற்றுக் கவிபாடும் ஆற்றல் பெற்றார்; சொற்பொழிவு ஆற்றும் திறமையும் பெற்றார்; சைவ சித்தாந்தம் முதலிய பல சமயநூல்களையும் நன்கு படித்தார் மதுரையில் தமிழ்ச் சங்கம் தேவர் தமிழ் வளர்ச்சி குன்றியிருப்பதைக் கண்டார்; தமிழ்ப் புலவர் ஆதரிப்பார் அற்றுத் தவிப்பதை உணர்ந்தார்; பனை ஓலைகளில் உள்ள தமிழ்நூல்கள் கவனிப்பார் அற்று அழிவதை அறிந்தார்; தமிழர் தமிழை வளர்க்க வகை அறியாது தவித்தலை எண்ணினார். இக்குறைகள் நீங்க வழிகாண முற்பட்டார். அந்த அறிஞர் பல ஆண்டுகள் முயன்று, பெருமக்கள் பலரைச் சேர்த்து, பெரும்பொருள் திரட்டி மதுரையில் பெரிய கட்டடம் ஒன்றைக் கட்டுவித்தார்; அதனில் 1901-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆந்தேதி தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். அறிஞர் அவரையே சங்கத் தலைவராக வைத்தனர். தேவர் அச் சங்கம் என்றும் நிலைபெற்று நடைபெற மூலதனம் திரட்டினார்; தமிழில் பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் என்னும் மூன்று தேர்வுகளை ஏற்படுத்தி, அவற்றுக்கு மாணவரைத் தயாரிக்கத் தக்க வகுப்புகளை அமைத்தார்; அவ்வகுப்புகட்குத் தக்க ஆசிரியர்களை அமர்த்தினார்; தமிழ் நூல்நிலையம் ஒன்றைத் திறந்து வைத்தார்; அச்சகம் ஒன்றை அமைத்தார்; தமிழ் ஆராய்ச்சிக்காகச் ‘செந்தமிழ் என்னும் பெயருடன் மாதம் ஒருமுறை வெளிவரும் பத்திரிகையைத் தொடங்கினார். அதுவரை அச்சிடப்பெறாத தமிழ் நூல்களை அச்சிடத் தக்க ஏற்பாடுகள் செய்தார்; தமிழ் வகுப்பு மாணவர்க்கு உண்டியும் உறையுளும் இலவசமாக அளிக்க ஏற்பாடு செய்தார். அவர் தமிழுக்குச் செய்த இத்தொண்டுகளைத் தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் பாராட்டினர். தேவர் இராமநாதபுரத்தில் தமது பொருட்செலவில் ஓர் ஆங்கிலப் பள்ளியையும் தொடங்கி நடத்திவைத்தார். அப்பள்ளி இப்பொழுது இராமநாதபுரம் அரசரால் உயர்நிலைப்பள்ளியாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்த் தேர்வுகள் பாண்டித்துரைத்தேவர், பழைய பாண்டியர்கள் மூன்று தமிழ்ச் சங்கங்களை வைத்து வளர்த்தாற் போலத் தமிழ் தழைக்கச் சங்கத்தை நிறுவினார். அவர் எண்ணம் தூயது; தொண்டு தூய்மையானது; இந்நாட்டிற் பிறந்த ஒவ்வொருவர் கடமையும் அதுவேயாகும். ஆயினும் அவர் மற்றவரைப் போலக் கவலையின்றி இராமல், தாய்தொழி வளர்ச்சியில் ஈடுபட்டுப் பெருந்தொண்டு செய்தார். அவரது முயற்சிக்கு முன்னர்த் தமிழில் தேர்வுகளே இல்லை. ஆயின் அவர் அவற்றை ஏற்படுத்திய பிறகு தமிழர் ஊக்கம்கொண்டு தமிழை முயன்று படித்து ஆண்டு தோறும் அத்தேர்வுகளிற் கலந்துகொண்டனர். சென்னைப் பல்கலைக் கழகம் தனித்தமிழ் வித்துவான் தேர்வினை 1928-ல் ஏற்படுத்தியது. அதுவரை, தமிழ் மாணவர் மதுரைத் தமிழ்ச்சங்கதேர்வுகட்கே சென்று பட்டங்கள் பெற்றனர். வித்துவான் பட்டம் வந்த பிறகும் இன்றளவும் மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வுகள் சிறப்பாகவே நடைபெற்று வருகின்றன. இதனை நோக்க, அத்தேர்வுகளின் சிறப்பு நன்கு வெளியாகும். தேவர் அவர்கள் அத்தேர்வுகளை ஏற்படுத்தி இராவிடில், பண்டிதர், பால பண்டிதர் முதலிய புலவர்களை நம் நாட்டிற் காண இயலாது! இயலாது!! அவரால் தொடங்கப் பெற்ற “செந்தமிழ்” இன்றளவும் நடைபெற்று வருகின்றது. இங்ஙனம் சமய சஞ்சீவியாகத் தோன்றித் தமிழை வளர்க்கப் புறப்பட்ட பெரியார் பாண்டித் துரைத்தேவர்க்குத் தமிழராகிய நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம் அல்லவா? நாட்டாரும் முதல் தேர்வும் இங்ஙனம் தமிழ் வள்ளல்-பாண்டித்துரைத் தேவரால் ஏற்படுத்தப்பட்ட தமிழ்க் தேர்வுகளைப் பற்றித்தான் சாமிநாத முதலியார் நமது நாட்டாருக்குக் கூறினர். அவரும் முதல் தேர்வுக்குத் தம்மைத் தயார் செய்ய முற்பட்டார் என்பன முன்னர்க் கூறப்பட்டன அல்லவா? முதல் தேர்வு பிரவேச பண்டிதம் என்பது. அதற்கு உரிய பாட நூல்களில் சில நாட்டாரிடம் இல்லை. ஆயினும் கல்வியில் ஆர்வமுடைய அவர் வாளா இருக்கவில்லை; அவற்றை அரிதின் முயன்று பெற்று எழுதிக் கொண்டார். “மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்-செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினார்.” என்பது பெரியோர் அநுபவ வாக்கன்றோ? இந்த வாக்கிற்கு நமது நாட்டார் உதாரண புருஷராக விளங்கினார். தேர்வு பத்து மாதம் இருந்த பொழுது தான் சாமிநாத முதலியார் அவரிடம் தேர்வுகளைப் பற்றித் தெரிவித்தார். எனினும் குன்றா ஊக்கமும் சலியா உழைப்பும் உடைய நாட்டார் முதல் தேர்வுக்கு உரிய எல்லா நூல்களையும் அக்குறுகிய காலத்திற்குள் முயன்று படித்து முடித்தார்; தேர்விலும் செவ்வையாக விடை எழுதினார். ‘முயற்சி திருவினையாக்கும்’ அல்லவா? நாட்டார் முதல் தேர்வில் முதல் வகுப்பில் இரண்டாம் மாணவராகத் தேறினார்; இலக்கணத் தேர்வில் முதல்வராகத் தேறினார். ஆதலின் இரண்டிற்கும் உரிய பரிசுகளைப் பெற்றார். தமது கிராமத்துச் சிறுவராகிய நாட்டார் மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வில் சிறப்புறத் தேர்ச்சி பெற்றுப் பரிசுகளும் பெற்றார் என்ற செய்தி நடுக் காவேரியில் இருந்த பெரியோர்க்குத் தெரியலாயிற்று. அவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்து நாட்டார் வீட்டிற்கு வந்தனர்; முத்துசாமி நாட்டாரைக் கண்டு, “ஐயா, உங்கள் திருமகனால் நமது ஊர் சிறப்புற்றது. இனி அவனால் எதிர் காலத்திலும் நடுக்காவேரி தமிழ் உலகிற் பெயர் பெற்று இருக்கும்,” என்று கூறி, நமது நாட்டாரைப் பார்த்து , “தம்பி, உனது வெற்றிக்கு மகிழ்கின்றோம். உனக்கு எங்கள் வாழ்த்து உரிய தாகுக!” என்று மனமார வாழ்த்துக் கூறினர். பால பண்டிதம் தமிழ்ச் சங்கத் தேர்வுகள் 1905-ல் முதன் முறையாக நடைபெற்றன. நாட்டார் 1905-ல் முதல் தேர்வில் வெற்றிபெற்றது குறிக்கப்பட்டதன்றோ? அடுத்த தேர்வின் பெயர் ‘பால பண்டிதம்’ என்பது முதல் தேர்வு முடித்தவர் இரண்டு ஆண்டுகள் படித்தபிறகே பால பண்டிதத்திற்கு வரக்கூடும். அதற்கு உரிய பாட நூல்கள் முறையாகப் பள்ளியில் படிக்க இரண்டு வருடகாலமாகும். அங்ஙனம் படித்தற்குரிய பாட நூல்களை நாட்டார் ஒரே ஆண்டில் படிக்கத் துணிந்தார். அந்நூல்களை அவருக்குக் கற்பிக்க அவர் ஊரில் தக்க ஆசிரியர் இல்லை. எனினும் அதுபற்றி அவர் கவலைப்பட வில்லை; “நாம் இதுவரை படித்த தமிழ் நூல்களின் அறிவாகிய அடிப்படையைக் கொண்டு இந்நூல்களை முயன்று படிப்போம்” எனத் தமக்குள் முடிவு செய்து கொண்டார். அம்முடிவுப்படி நாட்டார் நாள்தோறும் பல மணிநேரம் படிப்பிற் கழித்தார். அவர் முன்னர் மேற்கொண்டிருந்த வயல் வேலை, தோட்டவேலைகளை விட்டார். தந்தையர் மைந்தரது கல்வி ஆர்வத்தைiத் தடைசெய்ய விரும்பவில்லை. அங்ஙனம் தடை செய்தல், “மகனைச் சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே” என்ற தமிழர் அறநெறிக்கு மாறாகும் அல்லவா? ஆதலின் அப் பெரியார் வெளி வேலைகளைத் தாமே கவனித்து வந்ததார்; தம் மைந்தர்க்குக் கல்வியில் மேன்மேலும் ஊக்கத்தை ஊட்டி வந்தார். சுடர் விளக்குக்குத் தூண்டுகோல் இருப்பின் மிக்க பிரகாசத்தை அளிக்கும். அது போல, இயல்பாகவே சுறுசுறுப்புடைய நாட்டாருக்குத் தந்தையார் அளித்து வந்த ஊக்கம் கல்வியில் மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கியது; ‘இத்தேர்விலும் சிறப்புறத் தேறிப் பரிசு பெற வேண்டும் ’ என்ற எண்ணத்தை அவருக்கு உண்டாக்கியது. எண்ணம் பலப்பட்டதால் உழைப்பு மிகுதிப்பட்டது. அவர் இராப் பகலாகப் உழைத்து எல்லாப் பாடநூல்களையும் படித்து முடித்தார்; 1906-ல் பால பண்டிதத் தேர்வுக்கு சென்றார். குறித்த காலத்தில் தேர்வு முடிவு வெளிப்படுத்தப்பட்டது. முதல் வகுப்பில் தேறிய மாணவர் நாட்டார் ஒருவரே; அங்ஙனம் தேர்ச்சிபெற்றதால் முதற் பரிசும் அவரே பெற்றார். நாட்டார் பெயர் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழில் வெளிவந்தது. அதனைக் கண்ட தமிழறிஞர் பலர் நமது நாட்டாரைப்பற்றி முதன்முதல் அறியலாயினர். தம் செல்வ மைந்தர் இரண்டாம் தேர்வில் மிக்க சிறப்புற்றதைக் கேட்ட பெற்றோர் அடைந்த பெருமகிழ்ச்சியை என்னென்பது! ஊரார் அடைந்த உவகைக்கோ அளவில்லை. பண்டித தேர்வு முதல் இரண்டு தேர்வுகளிலும் பெரு வெற்றி பெற்ற நாட்டார் இறுதித் தேர்வாகிய பண்டிதத் தேர்வினையும் ஓரே ஆண்டில் படித்து முடிக்கத் துணிந்தார்; அதற்குரிய தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களை நன்கு படித்தார்; சூத்திரங்களை மனப்பாடம் செய்தார்; உரையை நன்றாகக் படித்து உள்ளத்தில் அமைத்தார்; புறநானூறு முதலிய பழந்தமிழ்ச் செய்யுள் நூல்களைப் பழைய உரையுடன் நன்கு கற்றார்; தமிழ்ச் செய்யுள் செய்தலில் நல்ல பயிற்சி பெற்றார்; தர்க்க நூல்களை அழுத்தமாகப் படித்தார். அவர் இத்துணைப் பெரிய-கடினமான நூல்களை ஆசிரியர் உதவி இல்லாமலே படித்தார்; ஆசிரியர் உதவிகொண்டு இரண்டாண்டுகள் படிக்க வேண்டிய நூல்களை ஆசிரியர் உதவி இன்றி ஒரே ஆண்டில் படித்தார் எனின், அவரது அறிவு நுட்பத்தையும் அவர் மேற்கொண்ட பேருழைப்யையும் என்னென்பது! தங்கத்தோடா அதிகம் அறைவதேன்? நாட்டார் 1907-ல் பண்டிதத் தேர்வில் தாம் ஒருவரே முதல்வராகத் தேறினார்; அத் தேர்வுக்குரிய பரிசாகத் தங்கத் தோடாவைப் பெற்றனர், இச் செய்தி தமிழ் நாடெங்கும் பரவியது. நடுக்காவேரி மக்கள் தாங்களே பரிசுபெற்றாற்போல எண்ணிக் களிப்புக் கடலில் ஆழ்ந்தனர். முத்துசாமி நாட்டார் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை கூறுவர். யாவர்? உற்றார் உறவினர் நாட்டாரை வாழ்த்தி மகிழ்ந்தனர். அன்று முதல் நமது நாட்டார் ‘பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார்’ என்று குறிக்கப்பட்டனர். 4. ஆசிரியர் பணி திருமணம் நாட்டார் அவர்கட்கு அவரது 23-ஆம் வயதில் திருமணம் நடைபெற்றது. அவருக்கு மனைவியராக வாய்ந்த அம்மையார் அன்பு, அடக்கம், தெய்வபக்தி, விருந்தினரை இன்முகம்கூறி உபசரித்தல், கணவர் கருத்தறிந்து நடந்துகொள்ளல் முதலிய நற்பண்புகள் வாய்க்கப்பெற்றவர். அடக்கமே உருவாகக் கொண்ட நாட்டாருக்கு அத்தகைய மனைவியார் வாய்த்தது அவரது வாழ்க்கையைப் பயனுடைய தாக்கியது. அம்மையார் தம் கணவரது பெரும் புலமையை நன்கறிந்தவர்; தம் மாமனார் சிறப்பினை நன்கு தெரிந்தவர். தாம் புகுந்த குடும்கத்தின் பழைமையையும் சிறப்பினையும் தெளிவாக உணர்ந்தவர்; ஆதலின் அக் குடும்பப் பெயரைத் தம் இல்வாழ்க்கைச் சிறப்பினால் சிறப்பிக்கலாயினர். இப்ராஹிம் புலவர் நாட்டார் பண்டிதர் பட்டம் பெற்று ஊரில் இருந்தபொழுது திருச்சிராப்பள்ளி-ஹீபர் கல்லூரியில் தமிழ்ப் புலவராக இருந்தவர் பிச்சை இப்ராஹிம் புலவர் என்பவர். அவர் பெருஞ் செல்வர்; தமிழிற் சிறந்த புலவர். அவரது புலமைச் சிறப்பைக் கேள்வியுற்ற ஹீபர் கல்லூரித் தலைவர் அவரைத் தம் கல்லூரித் புலவராக வருமாறு வேண்டினார். புலவரோ பெரும் பணக்காரர்; அவர் தமிழாசிரியர் சம்பளத்துக்காக வர உடன்படவில்லை; ஆயின், “யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்” என்ற கொள்கைப்படி, தாம் சுவைத்த தமிழ்ச் சுவையை மாணவரையும் சுவைக்கச் செய்தல் நல்ல தமிழ்த் தொண்டாகும் என்று எண்ணியே கல்லூரிப் புலவராக இருக்க இசைந்ததார். அவர் கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்; அவர் இராமாயண பாடத்தைக் கல்லூரியில் நடத்தும்பொழுது வெளி மாணவரும் வந்து கேட்பது வழக்கம் எனின், அவர் பாடம் சொல்லிய திறனை என்னென்பது ! அவர் செய்யுட்களை இசையோடு பாடுவார்; பின்னர்ப் பதம் பதமாகப் பிரித்து பாடுவார்; நயமான பகுதிகளை விளக்குவார். அவரிடம் படித்த மாணவர் இன்றும் அவரைப் பாராட்டுதலைக் காணலாம், ஹீபர் கல்லூரியில் ஆசிரியர் இத்தகைய நற்புலவர் 1908-ல் சில மாதங்கள் விடுமுறைபெற நேர்ந்தது. அவர் தமது இடத்தில் இருந்து பொறுப்புடன் பணியாற்றத்தக்க ஒருவரைத் தேடினார். அப்பொழுது நமது நாட்டாரது பெரும் புலமையைப்பற்றிச் செந்தமிழிற் படித்த நினைவு எழுந்தது; உடனே நாட்டாருக்குக் கடிதம் எழுதி அவரைத் தம்மிடம் வரவழைத்தார்; “தம்பி, நான் வரும்வரை எனது இடத்தில் இருந்து தமிழ்ப் பணி ஆற்றுக” என்று கூறி, விடுமுறை பெற்றுக் கொண்டார். ‘நாட்டாரும் இசையில் வல்லவர்; எல்லாத் தமிழ் நூல்களையும் நன்கு படித்தவர்; மேலும் அவர் சங்கத் தேர்வில் தங்கத்தோடாப் பரிசு பெற்றவர்’ என்பதை மாணவர் உணர்ந்தனர்; அவரது கற்பிக்கும் ஆற்றலைக் கவனித்தனர்; அவருடைய திருத்தமான தமிழ்ப் பேச்சினைக் கேட்டனர்; அவருடைய தூய ஒழுக்கத்தைப் பார்த்தனர். அவர்மீது அளவற்ற மதிப்புக் கொண்டனர். அவர்களது அன்பு நாளாக ஆக வளர்பிறை போல வளரத் தொடங்கியது. நாட்டார் ஹீபர் கல்லூரி மாணவர் பிரசாரத்தினால் நகரப் பொது மக்களால் நன்கு அறியப்ட்டார். தாம் வேலையில் அமர்த்திய இளைஞர் நற்பெயர் பெறுதலைக் கண்ட இப்ராஹிம் புலவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். பெயர் பெறுதல் திருச்சிராப்பள்ளி பாடல் பெற்ற பழம்பதி. அங்குள்ள மலைமீது தாயுமானசுவாமி கோவில் கொண்டுள்ளார். அதனால் அந்தப் பதியில் சைவர் கழகங்கள் சில இருந்தன. நாட்டார் சைவர் ஆனதால் அக் கழகங்களிற் பேச அழைக்கப்பட்டார். நாட்டார் சைவத் திருமுறைகளையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் நன்கு படித்தவர் ஆதலால் கேட்போர் மனம் குளிரத் தெளிவாகவும் அழகாகவும் உருக்கமாகவும் பேசினார். அவர் சொற்பொழிவுகள் நகரச் சைவர்களிடையே மிகுந்த உணர்ச்சிளை ஊட்டின. அவர் வேறு பொதுக் கழகங்களிலும் தமிழ் மொழியைப்பற்றிச் சில சொற்பொழிவுகள் செய்தார். இவற்றால் பொது மக்கள் அவர் புலமையை உணர்ந்து பாராட்டலாயினர். பெரியோர் பலர் வாயிலாகவும் மாணவர் மூலமாகவும் கல்லூரி அதிகாரி நாட்டார் புலமையையும் பிற தகுதிகளையும் நன்கு அறிந்து இன்புற்றார். கோயம்புத்தூரில் ஆசிரியர் நாட்டார் ஹீபர் கல்லூரியில் சில மாதங்கள் வேலை பார்த்தபின், 1909-ல் கோயம்புத்தூர் செயின்ட் மிக்கேல் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தப்பட்டார். அவரது பெரும் படிப்புக்கு உயர்நிலைப் பள்ளி ஏற்ற இடமன்று. என்செய்வது! உலகத்தில் தகுதிக்கேற்ற பதவி கிடைப்பது அரிதாக இருக்கின்றது அல்லவா? நாட்டார் உயர்நிலைப் பள்ளி மாணவர் அறிவு நிலையை உண்ர்ந்து, அதற்கு ஏற்ற முறையில் இறங்கிப் பாடங்களை நடத்திவந்தார்; அந்தப் புதிய நகரத்திலும் சைவ சமயக் கழகங்களிலும் பொது நிலைக் கழகங்களிலும் பல சொற்பொழிவுகள் ஆற்றித் தம் புலமையைப் பொதுமக்கட்குப் புலப்படுத்தினார். அப்பொழுது அவருக்கு அறிமுகமான கோவை நகரச் செல்வர் சிலர் அவர் வாழ்நாள் முழுவதும் உற்ற நண்பராக இருந்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹீபர் கல்லூரிப் பேராசிரியர் 1910-ல் பிச்சை இப்ராஹிம் புலவர் ஹீபர் கல்லூரிப் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு அடுத்தபடி அந்தப் பதவியில் இருக்க முழுத் தகுதியும் உடையவர் நாட்டாரே என்பது அக்கல்லூரித் தலைவர் கார்டினர் துரையவர்கள் எண்ணம். அதனைக் கல்லூரி மாணவரும் நகரப் பெரியோர்களும் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். எனவே, நாட்டார் 1910-ல் ஹீபர் கல்லூரிப் பேராசிரியராக நியமனம் பெற்றார்; அதுமுதல் 1933-ஆம் ஆண்டு ஜூன் மாதமுடிய அக்கல்லூரியில் பேராசிரியராக இருந்து வந்தார். இங்ஙனம் ஒரே கல்லூரியில் நிலையாக 24 ஆண்டுகள் வேலைபார்த்த தமிழாசிரியர் சிலரேயாவர். தமிழ் வகுப்புகள் நாட்டார் மிகச் சிறந்த புலவர்-சிறந்த பக்திமான்-மிகுந்த ஒழுக்கமுடையவர் என்பனவற்றை நன்கு உணர்ந்த மாணவர் அவரிடம் மிகவும் அடக்கத்துடனும் அமைதியுடனும் இருந்து பாடம் கேட்கலாயினர். அவர் பாடம் நடத்தும் வகுப்பறையில் அவர்குரல் ஒன்றே கேட்கப்படும். மாணவர் அவரது செந்தமிழ் நடையிற் பெரிதும் ஈடுபட்டுக் கேட்டுக் கொண்டிருப்பர். “எங்கள் தமிழ் வகுப்புகளில் நாட்டார் அவர்கள் பாடம் நடத்தும் பொழுது ஊசி விழுந்தால் ஓசை கேட்கத் தக்கவாறு அமைதி நிலவியிருக்கும். அவர்களுக்குப் பெரும்பாலும் எல்லாப் பாடல்களும் மனப்பாடமாக இருந்தன. சோகரஸமான பாடப் பகுதிகள் இசையோடு படிக்கையில் அவர்கள் விழிகளில் நீர் ததும்பும். அப்பொழுது எங்களை அறியாது நாங்கள் சோக உணர்ச்சி பெறுவோம். எந்தெந்தச் செய்யுளை எந்தெந்த சந்தத்தில் பாட வேண்டுமோ, அவ்வவ்வாறு நாட்டார் அவர்கள் பாடிக் காட்டுவார்கள்; அவர்கள் பதம் பிரித்துப் படிக்கும்பொழுதே பொருள் தெரிந்து கொள்ளலாம். செய்யுட் களின் நயத்தை அவர்கள் தெரிவிப்பது நயமாக இருக்கும். எங்கட்குத் தமிழ் மொழியில் என்றும் நீங்காத பற்றை உண்டாக்கிய பெருமை அவர்களையே சார்ந்தது,” என்று, இன்று உயர் பதவிகளில் உள்ள அவர் மாணவர் கூறி இன்புறுதல் வழக்கம். அதிகாரிகள் அன்பு கல்லூரித்தலைவர், நகரப் பெருமக்கள் பலரும் மாணவரும் நாட்டார் அவர்களைப் பற்றிப் பல சந்தர்ப்பங்களில் பாராட்டிக் கூறிக் கேட்டவர் அல்லவா? அவர் நாட்டார் பாடம் நடத்தும் பொழுது மறைவாக இருந்து பலமுறை வகுப்புகளைக் கவனித்தார். வகுப்பு அமைதியாக இருந்ததும், மாணவர் ஆசிரியரை நோக்கி அவரது போதனையைக் கவனித்து இருந்ததும், ஆசிரியர் எடுப்பான இனிய குரலில் யாவரும் கேட்கும்படி பாடம் நடத்திய முறையும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. இவை அனைத்திற்கும் மேலாக நாட்டாரது நடை அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அத்தலைவர் நாட்டாரிடம் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நடந்துகொண்டனர். கல்லூரியில் இருந்த பிற பேராசிரியரும் நாட்டாரிடம் அன்பும் மரியாதையும் கொண்டனர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் திருச்சிராப்பள்ளியில் நாட்டார் தங்கியிருந்த இருபத்து நான்கு ஆண்டுகளுக்குள் அவர் எழுதியநூல்கள் பல. அவர் பல கழகங்களில் தலைவராகவும் பேச்சாளராகவும் இருந்து செய்த சொற்பொழிவுகள் பல. அவர் பல நூல்கட்கு உரை எழுதியுள்ளார். நாடெங்கும் நடந்த சமயக் கூட்டங்களிலும் தமிழ் வளர்ச்சிக் கழகங்களிலும் அவர் பேசியவை அவ்வப்பொழுது செய்தித் தாள்களில் வெளி வந்தன. செந்தமிழ் போன்ற மாதத்தாள்களில் அவர் எழுதிய கட்டுரைகள் எண்ணிறந்தன. இவை அனைத்தினாலும் அவரது பெயர் தமிழ் நாடு முழுவதும் நன்கு பரவியிருந்தது. சிதம்பரம் புகைவண்டி நிலையத்திற்கு எதிரே இன்று வானளாவிய கட்டடங்கள் காட்சி அளிக்கின்றன. அவ்விடம் அண்ணாமலை நகரம் எனப்படும். அதனில் செட்டிநாட்டு இராஜா-ஸர்-அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தம் பெயரால் பல்கலைக் கழகம் ஒன்றை நிறுவினார். அதனில் தமிழ் வித்துவான் வகுப்புகள் தொடங்கப் பெற்றன. நாடெங்கும் புகழ் பெற்ற நல்லாசிரியர்களைத் தேடி அமர்த்த முயற்சி நடந்தது. அதிகாரிகள் தேர்ந்தெடுத்த சிலருள் நமது நாட்டார் ஒருவராவர். ஆகவே, அவர் 1933-ல் ஆம் ஆண்டு ஜூலை முதல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரை யாளராக அமர்ந்தார். சிறந்த தமிழ்த் தொண்டு நாட்டார் போன்ற சிறந்த தமிழ்ப் புலமை உடையவர்க்குச் சாதாரண கல்லூரி ஏற்றதன்று; வித்வான் கல்லூரியே பொருத்தமானது. அவர்கள் அங்குத்தான் தம் புலமையை நன்கு காட்ட வாய்ப்பு ஏற்படும். அந்த வாய்ப்பு நாட்டாருக்குக் கிடைத்தது போற்றத்தக்கது. அண்ணாமலைப் பல்கலைக் கழகப் புலவர் வகுப்பு மாணவரும் பேறு பெற்றவரே ஆயினர். நாட்டார் தொல்காப்பியம் முதலிய பழந்தமிழ் இலக்கண நூல்களையும் புறநானூறு போன்ற சங்க நூல்களையும் நன்கு பயின்றவர். ஆதலால், அவை பற்றிய அவரது போதனை எல்லா மாணவரும் எளிதில் உணரத்தக்க தெளிவு வாய்ந்ததாக இருந்தது. சான்றோர் கூட்டுறவு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தமிழ் நாட்டுப் பெரும்புலவர் உறைவிடமாக இருந்தது. தமிழ்ப் பேராசிரியர் ச. சோமசுந்தர பாரதியார், மஹாவித்வான் ரா. இராகவையங்கார், பண்டித மணி மு. கதிரேசக் செட்டியார், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார், சர்க்கரை இராமசாமிப் புலவர் என்பவர்கள் தமிழகத்தில் பெயர் பெற்ற பெரும் புலவர்கள். அவர்கள் அந்தப் பல்கலைக் கழகத்தை அணி செய்துவந்தனர். அவர்கள் அறிவு, அநுபவம் நிறைந்த பெருமக்கள். அவர்களுள் ஒருவராக நாட்டார் இருந்தது முற்றும் தகுதியுடையதே ஆகும். புலவர் வகுப்புகள் புலவர் வகுப்பு மாணவர் நாட்டார் போதனையில் பெரிதும் ஈடுபட்டனர். எப்போழுதும் நகைக் சுவையையே உண்டாக்கும் ஆசிரியர் போலன்றி, நாட்டார் நவரஸங்களும் தோன்றுமாறு பாடம் கற்பிப்பவர் ஆதலின் மாணவர் அவரிடம் மிக்க அன்பும் மதிப்பும் உடையவராயினர். அவரது பெருந்தன்மை, பெரும்புலமை, வீண்பேச்சுப் பேசாமை, ஒழுக்கமுடைமை, தெய்வபக்தி முதலிய நற்பண்புகள் புலவர் வகுப்பு மாணவர்க்கு முன் மாதிரியாக விளங்கின. “எங்கள் மாணவர் பருவத்தில் நாட்டாhர் அவர்களது தமிழ்ப் பேச்சு நடையும் அவர்களது கற்பிக்கும் ஆற்றலும் ஒழுக்கமும் எங்கட்கு அவர்களிடம் மிகுந்த மதிப்பை உண்டாக்கின. இத்தகைய நல்லாசிரியர் கிடைத்தல் அரிது” என்று, நாட்டாரிடம் படித்து வித்துவான் பட்டம் பெற்ற பலர் இன்றும் கூறுதலைக் கேட்கலாம். இங்ஙனம் பாராட்டுப் பெற்ற நாட்டார் அவர்கள் 1940-ல் அப் பல்கலைக் கழக வேலையிலிருந்து ஓய்வுபெற்றுத் தஞ்சாவூரிற் குடிபுகுந்தனர். 5. தமிழ்த் தொண்டும் புகழும் தமிழ்க் கழகம் நாட்டார் தமிழாசிரியராக இருந்த முப்பது வருடகாலத்தில் செய்துள்ள தமிழ்ப்பணிகள் பலவாகும். அவற்றுள் திருச்சிராப்பள்ளியில் கழகம் அமைத்துப் தமிழ்ப்பாடம் கற்பித்தமை ஒன்றாகும். அவர் அமைத்த கழகம் அவர் வீட்டிற்கு எதிரில் இருந்த திருநாவுக்கரசர் மடத்தில் நடைபெற்று வந்தது. நாட்டார் அக்கழகச்சார்பில் இலக்கண வகுப்புகள், இலக்கிய வகுப்புகள், சைவ சித்தாந்த வகுப்புகள் நடத்திவந்தார். பள்ளிக்கூடத் தமிழாசிரியர், உத்தியோகஸ் தர்கள், வணிகர், ஓய்வு பெற்ற பெருமக்கள் முதலிய பல வகையினரும் அவ்வகுப்புகட்குச் சென்றனர். அவருட்சிலர் மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வுகட்குச் சென்று வெற்றி பெற்றனர்; வேறுசிலர் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வுக்குச்சென்று பட்டம் பெற்றனர். மதுரைத் தமிழ் சங்கம் நாட்டார் பண்டிதர் பட்டம் பெற்றதுமுதல் மதுரைத் தமிழ்ச்சங்கத்துடன் தொடர்பு கொண்டவரானார். அவர் அதன் புலவர் கூட்டத்துள் ஒருவரானார்; அங்கு நடைபெற்ற புலவர் தேர்வுகட்குத் தேர்வாளராக இருந்தார்; அச்சங்கம் நடத்தி வந்த செந்தமிழ் தாளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரைந்தார். கரந்தைத் தமிழ் சங்கம் இராஜ ராஜ சோழனது தலைநகரமான தஞ்சாவூரில் கருந்திட்டைக்குடி என்பது ஒரு பகுதி ஆகும். அதன் பெயர் ‘கரந்தை’ என மருவி வழங்கும். பாண்டிய நாட்டில் மதுரைத் தமிழ்ச்சங்கம் இருப்பது போலச் சோழ நாட்டிலும் ஒன்று இருத்தல் வேண்டும் என்ற நினைவால் அங்குத் தமிழ்ச் சங்கம் ஒன்று நிறுவப்பட்டது. அதன் பெயரே ‘கரந்தைத் தமிழ்ச் சங்கம்’ என்பது. அது நாட்டார் ஊருக்கு ஏறத்தாழப் பத்து அல்லது பன்னிரண்டு கல் தொலைவில் உள்ளது. நாட்டார் அச்சங்க வளர்ச்சியில் பெரிதும் ஈடுபட்டார்; பல ஆண்டுவிழாக் கூட்டங்களில் தலைமை தாங்கிப் பேசினார்; பல கூட்டங்களில் பேச்சாளராக இருந்து தொண்டாற்றினார்; அச்சங்கம் நடத்திவரும் “தமிழ்ப் பொழில்” என்னும் மாதத்தாளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அங்கு நடைபெறும் தமிழ்க் கல்லூரித் தலைவராக ஒரு வருடகாலம் இருந்து தொண்டு செய்தார். சைவசித்தாந்த மஹா சமாஜம் சென்னையில் நிறுவப்பட்டது சைவ சித்தாந்த மஹா சமாஜம். அதன் சார்பில் “சித்தாந்தம்” என்னும் மாதத்தாள் நடத்தப்படுகிறது. நாட்டார் அச்சமாஜ உறுப்பினருள் ஒருவர். அவர் சைவ சமயத்தைப்பற்றிப் பல கட்டுரைகள் சித்தாந்தத்தில் வரைந்தனர்; சமாஜத் தலைவராகவும் இருந்தனர்; அச்சமாஜம் ஆண்டுதோறும் கூட்டும் ஆண்டுவிழாக் கூட்டங்களிற் கலந்து கொண்டனர்; சமயச் சொற் பொழிவாற்றினர். சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம் திருநெல்வேலிச் சைவசித்தாந்த கழகம் தமிழ் நூல்களைத் திருந்திய முறையில் அச்சிடத் தொடங்கியது; கழகச் சார்பில் “செந்தமிழ்ச் செல்வி” என்னும் மாதத் தாளை நடத்தத் தொடங்கியது. நாட்டார் அப்பத்திரிகையின் தோற்றம் முதல் தம் இறுதிக்காலம்வரை (1944) அதனில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிவந்தார். அவை தமிழ் மாணவருக்கும் சமய உணர்ச்சியாளர்க்கும் பெரியோர்க்கும் பெருவிருந்தளிப்பன. பல்கலைக் கழக தமிழ்க் குழு சென்னைப் பல்கலைக் கழகத்தில், கல்லூரிப் பாடதிட்டங்களை வகுக்கவும் பாடநூல்களை வைக்கவும் பல குழுக்கள் உண்டு. அவற்றுள் தமிழ்க்குழு ஒன்று. அதனில் கல்லூரித் தமிழாசிரியர் பலரும் பிற தமிழ் அறிஞர் சிலருமாக இடம் பெற்றிருப்பர். அக் குழுவில் நமது நாட்டார் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்து நல்ல தமிழ்ப் பாடநூல்களைத் தேர்ந்தெடுக்க உதவிபுரிந்தார்; வித்துவான் தேர்வுக்கு உரிய பாடதிட்டத்தை அமைக்கவும் உதவி செய்தார். தேர்வாளர் பதவி நாட்டார் பல ஆண்டுகள் எப். ஏ., பீ. ஏ., தேர்வு கட்குத் தேர்வாளாரக இருந்தார்; 1932 முதல் 1934 முடியவும் 1942 முதல் 1944 வரையும் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வாளராகவும் இருந்தார்; 1933 முதல் 1940 வரை அண்ணாமலைப் பல்கலைக் கழக தமிழ்த் தேர்வு கட்குத் தேர்வாளராக இருந்ததார். தமிழ் ஆராய்ச்சி நூல்கள் நாட்டார் தமிழ்க் கல்வி ஒன்றே நிரம்பப் பெற்றவர்; எனினும் ஆங்கிலம் ஓரளவு கற்றுக் கொண்டவர்; தமக்குத் தேவையான ஆங்கில நற்செய்திகளைத் தம் இளவலான கோவிந்தராச நாட்டாரைக் கொண்டும் பிற நண்பர் - மாணவர்களைக் கொண்டும் மொழிபெயர்த்துக் கொள்வார். அவர் தம் ஓய்வு நேரங்களைத் தமிழாராய்ச்சியிற் செலுத்தினார்; அதன் பயனாகச் சில நூல்கள் வெளிவந்தன. சங்ககாலப் புலவராகிய நக்கீரர், பரணர் வரலாறுகள் எழுதப்பட்டன. அவ் வரலாறுகள் அக் காலத்தில் பிறரால் எழுதப்பட்டில. சங்கநூற் செய்யுட்களை நன்கு படித்து, அவற்றிற் கூறப்படும் நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி நல்ல செந்தமிழ் நடையில் எழுதப்பட்ட அந்த நூல்கள் நாட்டு அறிஞரால் நன்கு வரவேற்கப்பட்டன. நக்கீரர் என்ற நூல் மூன்று முறை எப். ஏ. தேர்வுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. பரணர் என்ற நூல் இரண்டு முறை பி. ஏ. தேர்வுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. சிலப்பதிகாரத்தின் கதாநாயகியான கண்ணகி தேவியின் வரலாறு உயர்நிலைப் பள்ளி மாணவர் படித்தறியத் தக்க எளிய நடையில் ‘கண்ணகி வரலாறும் கற்புமாண்பும்’ என்ற பெயருடன் வெளிவந்தது. அந்நூலைப் படித்துப் பாராட்டிய அறிஞர் அதனைப் பள்ளியிறுதித் தேர்வுக்குப் (ளுளுடுஊ) பாடநூலாக வைத்து ஆதரித்தனர். நாட்டார் கள்ளர் மரபினர் அல்லவா? அவர், கள்ளர் வரலாற்றை அம்மரபினர்க்கும் தமிழ் மக்கட்கும் அறிவிப்பது தமது கடமை என்று கருதினார்; அதற்காகப் பல நூல்களை ஆராய்ச்சி செய்தார்; ஆங்கில ஆராய்ச்சி நூல்களில் உள்ள குறிப்புகளைத் தொகுத்தார்; தமிழ் நாட்டுப் பல இடங்களில் வாழும் கள்ளர் மரபினர்தம் பட்டப் பெயர்களையும் அவற்றின் பொருள்களையும் ஆராய்ந்தார்; பின்னர் இனிய செந்தமிழ் நடையில் ‘கள்ளர் சரித்திரம்’ என்ற வரலாற்று நூலை எழுதி வெளியிட்டார். அந்நூல் அவரது புலமையையும் ஆராய்ச்சி அறிவையும் தமது மரபில் அவருக்கிருந்த பற்றையும் அம்மரபினர் முன்னேற்றத்தில் அவருக்கு இருந்த ஆர்வத்தினையும் நன்கு வெளியிட்டது. அந்நூலைப் படித்த அம்மரபினர் தம் பழம் பெருமையை உணர்ந்து தம் வாழ்க்கையைச் செப்பம் செய்யலாயினர்; தம் ‘குல விளக்கு’ என்று நாட்டாரைப் போற்றலாயினர். நாட்டார் சங்கநூல்களிற் குறிக்கப்பட்ட சேர, சோழ, பாண்டியர் வரலாறுகளை இனிய தமிழ் நடையில் எழுத விரும்பி, முதல் நூலாகச் சோழர் வரலாறு – முதற்பாகம் எழுதி வெளியிட்டார். அந்நூல் தென் இந்தியா வரலாற்று ஆசிரியர்க்குச் சிறந்த துணை நூலாக அமைந்தது. ஓய்வுபெற்ற பின்னர் நாட்டார் அவர்கள் தமது பெயரால் நூல் வெளியீட்டுக் கழகம் ஒன்றைத் தொடங்கி நடத்தலானார்; அதன் சார்பில் செந்தமிழ், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி முதலிய தமிழ் இலக்கியத் தாள்களில் வெளிவந்த தம் கட்டுரை களில் சிலவற்றை தொகுத்துச் சிறு நூலாக வெளியிட்டார். அந்நூல் எப். ஏ. வகுப்பிற்குப் பாடமாக வைக்கப்பட்டது. அந்நூற் கட்டுரைகள் பல பொருள் பற்றியன. அவை மாணவர்க்குச் செந்தமிழ் நடையையும் பலபொருள் அறிவையும் நன்கு ஊட்டவல்லன. உரையாசிரியர் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய மிகச்சிறிய நூல்கட்கும், இனிது நாற்பது - இன்னா நாற்பது முதலிய கீழ்க்கணக்கு நூல்கட்கும் நாட்டார் நல்லுரை வரைந்தனர். அவர் வரைந்த உரையோடு கூடிய நூல்கள் சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகத்தில் வெளியாகியுள்ளன. அக்கழகத்தாரே நாட்டாரைக் கொண்டு திருவிளையாடற் புராணத்திற்குச் சிறந்த உரை எழுதுவித்து வெளியிட்டுள்ளனர். வேலையிலிருந்து விலகிய பிறகு அப்பெரியார் தமிழ்ப் புலவர் பலரது வேண்டுகோளுக்கு இணங்கிச் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற பழந்தமிழ்க் காவியங்கட்கு உரை எழுதியுள்ளார்; தாம் காசநோயால் வருந்திக் கொண்டிருந்த பிற்காலத்தில் தம் நண்பர் கரந்தைக் கவியரசர் - வேங்கடாசலம் பிள்ளை அவர்களுடன் கூடி அகநானூறூ என்ற சங்கநூலுக்கு உரை எழுதி முடித்தார். மணிமேகலை அச்சாகி முடிவதற்குள் நாட்டார் அவர்கள் 1944 மார்ச்சு மாதம் தமது 60 ஆம் வயதில் காலமானது பெரிதும் வருந்தற்குரியதாகும். நாட்டார் குடும்பம் நாட்டார்க்கு மகனார் ஒருவரும் பெண்கள் இருவரும் ஆவர். இரண்டு பெண்களையும் மணந்த மருமக்கள் வித்துவான் பட்டம் பெற்றவர்கள். நாட்டாரது மூத்த மகளான பார்வதி அம்மையாரும் வித்துவான் பட்டம் பெற்றவர். இளையமகள் மணமான இரண்டாண்டுகட்குள் காலமானார். நாட்டார் மகனார் நடராசன் என்பவர் எம். ஏ. பட்டம் பெற்று உத்தியோகம் செய்து வருகின்றார். மக்களும் மருமக்களும் தமிழ்ச்சுவை அறிந்தவராதலின் நாட்டார் இல்லம் தமிழ்த்தாய் விரும்பி வசிக்கும் திருக்கோவிலாக விளங்கியது. அழியாப் புகழ் நாட்டார் சிறந்த கல்விமான்; கல்விக்கேற்ற நல்லொழுக்கம் உடையவர்; சிறந்த சைவசித்தாந்தி; ஆயினும் பரந்த சமயப் பொது நோக்கம் கொண்டவர்; தமிழுக்குத் தொண்டு செய்தல் ஒன்றே அவரது வாழ்க்கையின் குறிக்கோளாக இருந்தது. அவர் கோபம் கொண்ட நிலையை எவரும் பார்த்திரார்; கடுஞ்சொல், கூறத்தகாத சொற்கள் என்பன. அவர் உச்சரித்தறியார்; இன்சொல், இன்முகம், நல்லுரையாடல் இவற்றையே அறிந்தவர். அவரது அழுத்தமான தமிழ்க்கல்வி, சிறந்த ஒழுக்கம் ஆகிய இரண்டும் அவரைப் பொதுமக்கள் மதிக்குமாறு செய்தன. டாக்டர் உ. வே. சாமிநாதையார் அவர்கள் சிலப்பதிகாரம் முதலிய சங்க நூல்களை அரும் பாடு பட்டுப் பதிப்பித்தார். நாட்டார் அவற்றுள் சிலவற்றை எல்லோரும் எளிதில் படித்து இன்புறுமாறு எளிய உரை வகுத்து வெளியிட்டார். அகநானூறு, மணிமேகலை என்பன உரையற்ற நூல்கள். நாட்டார் அவற்றுக்கு உரைவகுத்து உதவியது நாம் செய்த பாக்கியமே ஆகும். தமிழ் நூல்கள் உள்ள வரையில் இந்த உரை நூல்களும் இருக்கும் ஆதலால், நாட்டார் அவர்கள் பூதவுடல் அழியினும் புகழ் உடல் ஒரு போதும் அழியாது! அழியாது!! தமிழன்னைக்குத் திருத்தொண்டு செய்த இப்பெருந் தமிழ்ப்புலவர் இருவரும் தமிழர் உள்ளமாகிய கோவிலில் நிலைபெற்று இருக்கத்தக்க வராயினார். இஃதன்றோ அழியாப் புகழ்! 6 தலைமைப் பேருரை * (நாட்டார் தமிழ்க்கழக ஆண்டு விழாக்கள் பலவற்றில் தலைமை தாங்கிப் பேசியுள்ளார். அவை அனைத்துமே படித்துப் பயன்பெறத் தக்கன. அவற்றுள் ஒன்று மாதிரிக்காக இங்குத் தரப்பட்டுள்ளது. இதனைப் படித்து இன்புறுக.) தமிழின்பால் உள்ள அன்பு மிகுதியால் இங்குக் கூடியிருக்கும் உடன் பிறப்பாளர்களே! உங்களால் இக்கூட்டத்திற்குத் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற யான் வழக்கம் போல் முன்னுரையாகச் சில பேசவேண்டும் என்றும் பேசுவேன் என்றும் நீங்கள் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் இயல்பே. இச்சங்கத்தின் பெயரையே பற்றுக் கோடாகக் கொண்டு, எனக்குத் தோன்றும் கருத்துக்கள் சிலவற்றை இப்பொழுது வெளியிட விரும்புகின்றேன். தமிழின் பெருமை இக்கழகம் ‘கம்பர் செந்தமிழ் சங்கம்’ எனப் பெயரிடப் பெற்று வழங்கி வருகிறது. செந்தமிழ் என்பது யாது? ஆன்றோர் பலரும் நம் தமிழ் மொழியின் பெயர் கூறும்பொழுது செந்தமிழ், பைந் தமிழ், இன்றமிழ், மென்றமிழ், வண்டமிழ், ஒண்டமிழ் என்று இங்ஙனம் சிறந்த அடைமொழிகளோடு சேர்த்துரைப்பது வழக்கமாக உள்ளது. அவ்வடைமொழிகள் எல்லாம் தமிழின் சிற்சில சிறப்பியல்புகளைக் குறிப்பனவாகவுள்ளன. ‘செந்தமிழ்’ என்பது ‘திருந்திய தமிழ்’ என்னும் பொருளுடையதாகும். தமிழ் மொழியானது நெடுங்காலத்திற்கு முன்பே திருத்தமான நிலையை அடைந்துளது. திருத்தமாவது, இலக்கண வரையறை செய்யப்பெற்றுப் பெரும்பாலும் அவ்விதிகளுக்கு இணங்கி நடைபெற்று வருவது. மொழியானது ஆதியில் வழக்கும் செய்யுளுமாக வளர்ச்சியுற்று வரும்பொழுது அவற்றின் சொற்கள் இடந்தோறும் நாள்தோறும் வடிவு திரிந்தும் பொருள் வேறுபட்டும் செல்வது இயல்பு; ஆதலின் அவற்றை அங்ஙனமே விட்டுவிடின் எண்ணிறந்த மாறுதல்கட்கு உட்பட்டு முன்பின் தொடர்பு இன்றி ஒழியும். இதனைக்கருதி அக்காலத்து நன்மக்களின் வழக்கினையும் செய்யுளினையும் நன்கு ஆராய்ந்து பேரறிஞர்கள் இலக்கணம் வருத்தனர். தென் இந்திய மொழிகளில் தமிழ் ஒன்றே நெடுங் காலமாக இலக்கண வரம் புடையது. அதனற்றான் அது எப்பொழுதும் உருச் சிதையாது வழங்கிவருகின்றது. இலக்கியம் தமிழ் மொழியிலே பண்டை இலக்கியங்களாக விளங்குவன கடைச் சங்க புலவர்கள் இயற்றிய (1) எட்டுத்தொகை,* (2) பத்து பாட்டு முதலியன. அவை இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்டவை. தொல்காப்பியம் என்னும் தமிழ் இலக்கணம் அவற்றிற்குப் பல நூறு ஆண்டுகட்கு முற்பட்டது. அந்நூல் வழக்கும் செய்யுளும் ஆராய்ந்து முந்துநூல் கண்டு இயற்றப்பெற்றது என்பது கூறப்படுகிறது. தொல்காப்பியர் தமக்கு முன்னர் இலக்கண ஆசிரியர் பலர் இருந்தனர் என்பதைத் தமது நூலிற் பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார். இவற்றை நோக்க, பழந்தமிழ் செந்தமிழாகத் திருத்தமுற்றதும் எத்தனையோ பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு என்பது பெறப்படும். கம்பர் பெருமை இனி, இச்சங்கத்தின் பெயரோடு தொடர்புற்றுள்ள கம்பர் என்னும் புலவர் பெருமானைப் பற்றிக் காண்போம்: அவர் பெயர் அறியாதார் நாட்டில் இலர். ‘கல்வியிற் பெரியர்’ என்றும், ‘கவிச் சக்கரவர்த்தி’ என்றும் யாவரும் அவரைப் பாராட்டுவர். அவரது கவிபாடும் ஆற்றலைக் குறித்துக் ‘கம்பன் வீட்டுக் கட்டுதறியும் கவிபாடும்’ என ஒரு பழமொழியும் வழங்கி வருகின்றது. அவரது இத்தகைய பெருமைக்குக் காரணம், அவர் இயற்றிய இராமாயணம் என்னும் ஒப்பற்ற பெருங்காவியமே ஆகும். கம்பர் தமிழ்ப் பற்று கம்பர் தம் தாய்மொழியாகிய தமிழில் பெரும் பற்றுக் கொண்டவர் என்பதை அவர் பாடிய இராமாயணச் செய்யுட்களால் அறியலாம். அகத்தியர் தமிழை வளர்த்தவர் என்ற கதையை மனத்திற் கொண்டு அவர் அம்முனிவரைக் குறிக்கும் இடங்களில், “தழற்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்” என்றும், “நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்” என்றும், “என்றுமுள தென்தமிழ் இயம்மி இயசை கொண்டான்” என்றும் கூறுகின்றார். அவர் “செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்றமிழ்” என்று தமிழின் இனிமையையும் திருந்திய தன்மையையும் பாராட்டு கின்றார்; கோதாவரியாற்றையும் பம்பைப் பொய்கையையும் வருணிக்கும் இடங்களில் செந்தமிழ்ச் சான்றோர் இயற்றிய கவிதைகளை உவமையாகக் கூறுகின்றார்; சீதாபிராட்டியையும் “செஞ்சொற் கவியின்பம்” என்று கூறி மகிழ்கின்றார். இவற்றிலிருந்து தமிழின் சுவையும் சான்றோர் கவியும் அவர் உள்ளத்தை எவ்வளவு கொள்ளைகொண்டு விட்டன என்பது புலனாகின்றது. தமிழ் நாட்டினிடத்தும் கம்பர்க்குள்ள பற்று மிகுதியாகும். அவர் கோசல நாட்டைக் கூறும் பொழுது, “காவிரி நாடன்ன கழனி நாடு” என்றும், கங்கை யாற்றைக் கூறும் பொழுது “தெய்வப் பொன்னியே பொருவுங் கங்கை” என்று கூறியுள்ளவை அவரது நாட்டின் பற்றை நன்கு விளக்குகின்றன அல்லவா? உலகிற் பல மொழிகளிலும் உள்ள காவியங்களைக் கற்றுணர்ந்த அறிஞர் சிலர் பிறவற்றை விடக் கம்பராமாயணமே சுவையில் விஞ்சியுள்ளது எனப் புகன்றுள்ளனர். இதனால், கம்பர் தமது காவியத்தால் தமிழுக்கு பெருமை தந்துளர் என்பது பொருந்தும் அல்லவா? ஒன்பது வகைச் சுவையும்* ஒருங்கு பெய்து வைத்த பாத்திரம் போன்ற கம்பராமாயணத்தைக் கற்றுக் கவிச் சுவையை நுகர்ந்து இன்புறுதலும், அதில் வந்துள்ள நன்மக்களின் பண்புகளை அறிந்து பயன் எய்துதலும் யாவர்க்கும் கடனாகும். சங்கங்கள் அன்பர்களே! இதுவரை செந்தமிழ் இன்னது என்பதையும் கம்பருக்கும் தமிழுக்கும் உள்ள இயல்பினையும், கம்பரது பெருமையையும் ஒருவாறு கூறினேன். இனிச் ‘சங்கம் ’ என்பது குறித்துச் சில செய்திகள் சொல்ல விரும்புகிறேன். பண்டை நாட்களில் சமயத்தைப் பரப்புதற்கும் மொழியை வளர்ப்பதற்கும் சங்கங்கள் இருந்தன. தமிழை வளர்ப்பதற் கென்று முன்பு மூன்று சங்கங்கள் நடைபெற்றன. அதனாலேயே நம் தமிழானது ‘சங்கத்தமிழ்’ என்றும் வழங்குகிறது. தமிழ்மொழி பழைய நாட்களில்தான் மிக உயரிய நிலையில் இருந்தது. பின்பு காலத்துக்குக் காலம் அதன் பொலிவு சிறிதே குறைந்து வந்தது. பாட்டுக்களின் உண்மைத் தன்மை குறைந்து எல்லாவற்றையும் மிகைப்படுத்திக் கூறுதல் என்ற பொய்ம்மை மிகுந்தது. நம் தமிழ் வளம்பெற வேண்டுமாயின், சங்ககாலப்புலவரது உண்மை யுரைக்கும் நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதற்குப் பழைய இலக்கிய இலக்கண ஆராய்ச்சி தேவையாகும். சில ஆண்டுகளாக ‘வித்துவான்’ தேர்வு, ‘பண்டிதர் ’ தேர்வு இவை குறித்துத் தொல்காப்பியப் பயிற்சியும் சங்க இலக்கியங்களின் பயிற்சியும் ஏற்பட்டுவருதல் மகிழ்ச்சிக்கு உரியது. எனினும் ஊர்தோறும் சங்கங்கள் நிறுவி, தமிழை வளர்த்தற்கு யாவரும் முயலுதல் வேண்டும். நம் முன்னோர்களைப் பற்றியும் மொழியைப் பற்றியும் பெருமிதமான உணர்ச்சி உண்டாகுமாறு பேசுவதும் எழுதுவதுமே தமிழர் செய்கையாதல் வேண்டும். கட்டுரைப் பயிற்சி ஒவ்வொன்றைப் பற்றியும் ஒன்றரைப் பக்கங்கட்கு மிகாமல் கட்டுரை வரைக:- I .1. பண்மைக் காலத் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் 2. ஐயர் பிள்ளையர்களிடம் பாடம் கற்ற வரலாறு 3. ஐயரது ஆசிரிய வாழ்க்கை 4. ஐயர் ஆற்றிய தமிழ்த் தொண்டு 5. ஐயருடைய நற்பண்புகள் 6. இசை இன்பம் II.1. சோழ நாட்டுச் சிறப்பு 2. நாட்டார் இளம் பருவம் 3. ‘பண்டிதர்’ பட்டம் பெற்ற வரலாறு 4. நாட்டாரது ஆசிரிய வாழ்க்கை 5. நாட்டார் ஆற்றிய தமிழ்ப்பணி 6. நாட்டார் நல்லியல்புகள் 7. அவர் பேசிய தலைமைப் பேருரை III. இவ்வரலாறுகள் புகட்டும் படிப்பினைகள் * ஐயரவர்களுடைய திருக்குமாரர் - திருவாளர் - கலியாண சுந்தரமையர் அவர்கள் இவ்வரலாற்றை நன்கு பார்வையிட்டுப் பல குறிப்புகளை உதவினார்கள். அவர்கட்கு ஆசிரியர் நன்றி உரியதாகுக. * ஜீவகன் நக்ஷத்திரமும் இதுவேயாகும். * **அவை விரைவில் வெளியிடப்பெறும். ** இது 16-5-1929-ல் சென்னையில் கோடைக்கால இந்திய இசைப் பள்ளிக்கூட ஆதரவில் செய்த சொற்பொழிவு. 1. 12-4-1884. **இது 1936-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21,23-ஆம் நாட்களில் குழித்தலை -– கம்பர் செந்தமிழ்ச் சங்கத்தின் 11-ஆம் ஆண்டு விழாவின் போது நாட்டார் அவர்கள் தலைமை தாங்கிப் பேசிய தலைமைப் பேருரை. * எட்டுத்தொகை -– தொகுக்கப்பட்ட எட்டு நூல்கள். அவை (1) நற்றிணை, (2) குறுந்தொகை, (3) ஐங்குறுநூறு, (4) பதிற்றுப்பத்து, (5) பரிபாடல், (6) கலித்தொகை, (7) அக நானூறு, (8) புறநானூறு என்பன. பத்துப்பாட்டு -– பத்துப்பாக்களைக் கொண்ட நூல், அவை (1) திருமுருகாற்றுப்படை, (2) பொருநர் ஆற்றுப்படை, (3) சிறுபாண் ஆற்றுப்படை, (4) பெரும்பாண் ஆற்றுப்படை, (5) முல்லைக் பாட்டு, (6) மதுரைக் காஞ்சி, (7) நெடுநல் வாடை, (8) குறிஞ்சிப் பாட்டு, (9) பட்டினப்பாலை, (10) மலைபடு கடாம். *ஒன்பது வகைச்சுவை -– நவரஸம். அவை - சிருங்காரம், ஆசியம், கருணை, கோபம், வீரம்,பயம், அருவருப்பு, அற்புதம் சாந்தம் என்பன.