வழிபாடு முனைவர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : வழிபாடு ஆசிரியர் : வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : முனைவர் க. தமிழமுது பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+104=120 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா 110/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் & வி. சித்ரா நூலாக்கம் : வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், பி 3, பாண்டியன் அடுக்ககம், சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம் 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க்குலம் படிப் படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மை களைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு எம் தந்தையார் தமிழ்மண் பதிப்பகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங் கினார். என் தந்தையின் பதிப்புச் சுவடுகளைப் பின்பற்றி எம் பதிப்புப் பணியைச் செய்து வருகிறேன். தமிழ்ப் பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய ஆய்வுகள், சமயம் சார்ந்த ஆய்வுகள், வரலாற்றாய்வுகள், கோவில் ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள், மாணவர் நலன் குறித்து அவர் எழுதிய 110 நூல்களும் ஆய்வாளர்களுக்கும் மாணவர் களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க நூல்களாகும். இவற்றில் 18 நூல்களை 2012இல் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர் பணியாக 2014இல் 21 நூல்களை தமிழுலகம் பயன்படும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன். - க. தமிழமுது நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `இன்றைய தமிழரது வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்கின்றது? ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும் `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள் என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள் என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம். நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார். பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தார். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான் படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம், `நக்கீரர் கழகம், `மாணவர் மன்றம் முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர் என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈரா பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர் என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான் பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார் என்று `என் கணவர் என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வியில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும். உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும் என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரி களிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும் என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்களை எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம், `தமிழ் இனம், `தமிழர் வாழ்வு, `என்றுமுள தென்றமிழ், `புதிய தமிழகம் என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும் என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி, `தமிழ்க் கலைகள், `தமிழர் நாகரிகமும் பண்பாடும், `தமிழக வரலாறு என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்காக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும் அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல், தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும் என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம் என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும் என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `அவரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா? எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர், `மனிதரில் தலையாய மனிதரே எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் நூல்கள் (கால வரிசையில்) 1. நாற்பெரும் வள்ளல்கள் 1930 2. ஹர்ஷவர்த்தனன் 1930 3. முடியுடை வேந்தர் 1931 4. நவீன இந்திய மணிகள் 1934 5. தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934 6. முசோலினி 1934 7. ஏப்ரஹாம் லிங்கன் 1934 8. அறிவுச்சுடர் 1938 9. நாற்பெரும் புலவர்கள் 1938 10. தமிழர் திருமண நூல் 1939 11. தமிழர் திருமண இன்பம் 1939 12. மணிமேகலை 1940 13. மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941 14. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941 15. பல்லவர் வரலாறு 1944 16. மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944 17. சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945 18 இரண்டாம் குலோத்துங்கன் 1945 19. கட்டுரை மாலை 1945 20. செய்யுள் - உரைநடைப் பயிற்சி நூல் 1945 21. முத்தமிழ் வேந்தர் 1946 22. காவியம் செய்த கவியரசர் 1946 23. விசுவநாத நாயக்கர் 1946 24. சிவாஜி 1946 25. சிலப்பதிகாரக் காட்சிகள் 1946 26. இராஜேந்திர சோழன் 1946 27. பல்லவப் பேரரசர் 1946 28. கட்டுரைக் கோவை 1946 29. சோழர் வரலாறு 1947 30. ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947 31. பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947 32. வீரத் தமிழர் - 1947 33. இருபதாம் நூற்றாண்டுப் ஸபலவர் பெருமக்கள் 1947 34. இந்திய அறிஞர் 1947 35. தமிழ்நாட்டு வடஎல்லை 1948 36. பெரியபுராண ஆராய்ச்சி 1948 37. கதை மலர் மாலை (மலர் ஒன்று0 1948 38. இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948 39. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி 1- 3) 1949 40. மேனாட்டுத் தமிழறிஞர் 1950 41. தென்னாட்டுப் பெருமக்கள் 1950 42. இந்தியப் பெரியார் இருவர் 1950 43. தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950 44. நாற்பெரும் புலவர் 195 45. மறைமலையடிகள் 1951 46. அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951 47. சங்கநூற் காட்சிகள் 1952 48. இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953 49. விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953 50. பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953 51. சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954 52. திருவள்ளுவர் காலம் யாது? 1954 53. சைவ சமயம் 1955 54. கம்பர் யார்? 1955 55. வையை 1955 56. தமிழர் திருமணத்தில் தாலி 1955 57. பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955 58. இலக்கிய அறிமுகம் 1955 59. அருவிகள் 1955 60. தமிழ் மொழிச் செல்வம் 1956 61. பூம்புகார் நகரம் 1956 62. தமிழ் இனம் 1956 63. தமிழர் வாழ்வு 1956 64. வழிபாடு 1957 65. இல்வாழ்க்கை 1957 66. தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957 67. வழியும் வகையும் 1957 68. ஆற்றங்கரை நாகரிகம் 1957 69. தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957 70. என்றுமுள தென்றமிழ் 1957 71. சைவ சமய வளர்ச்சி 1958 72. பொருநை 1958 73. அருள்நெறி 1958 74. தமிழரசி 1958 75. இலக்கிய அமுதம் 1958 76. எல்லோரும் வாழவேண்டும் 1958 77. தமிழகக் கலைகள் 1959 78. தமிழக ஆட்சி 1959 79. தமிழக வரலாறு 1959 80. தமிழர் நாகரிகமும பண்பாடும் 1959 81. தென்பெண்ணை 1959 82. புதிய தமிழகம் 1959 83. நாட்டுக்கு நல்லவை 1959 84. தமிழ் அமுதம் 1959 85. பேரறிஞர் இருவர் 1959 86. துருக்கியின் தந்தை 1959 87. தமிழகக் கதைகள் 1959 88. குழந்தைப் பாடல்கள் 1960 89. கட்டுரைச் செல்வம் 1960 90. தமிழகப் புலவர் 1960 91. தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963 92. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1964 93. தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965 94. சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969 95. பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970 96. கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977 97. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978 98. இலக்கிய ஓவியங்கள் 1979 பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள் 99. சிறுவர் சிற்றிலக்கணம் 100. பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும் 101. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி -2) ஆங்கில நூல் 102. The Development of Saivism in South India 1964 பார்வைக்குக் கிடைக்காத நூல்கள் 1. பதிற்றுப்பத்துக் காட்சிகள் 2. செந்தமிழ்ச் செல்வம் 3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 4. பள்ளித் தமிழ் இலக்கணம் 5. செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்) 6. செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்) முன்னுரை சென்னை, திருச்சி வானொலி நிலையங்களில் யான் அவ்வப்போது ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பே இச்சிறு நூல். இந் நூலில் உள்ள கட்டுரைகளை நூலுருவாக்க இசைவளித்த சென்னை, திருச்சி வானொலி நிலையத்தாரின் அன்பினைப் போற்றி இதனை வெளியிடுகின்றேன். மா. இராசமாணிக்கம் உள்ளுறை எண் பக்கம் 1. வழிபாடு 1 2. முல்லைப் பாட்டு 8 3. சொல்லோசை 16 4. வஞ்சி மாநகர் 28 5. பல்லவர் வளர்த்த கலைகள் 37 6. கம்பன் 46 7. நாவல் 52 8. இன்றைய தமிழ் இலக்கியம் வசனம் 58 9. தென்னிந்தியச் சாசனங்கள் 65 10. அறம் அறிந்தோம் 72 11. திசைச் சொல் 80 12. இயற்கைக் காட்சி 89 13. தற்கால வாழ்க்கையில் மதக்கொள்கை 98 1.வழிபாடு இவ்வகன்ற உலகத்தையும், இவ்வுலகத்திலுள்ள உயர் திணைப் பொருள்களையும், அஃறிணைப் பொருள்களையும், சூரிய சந்திரர்களின் இயக்கத்தையும் பிறவற்றையும் பார்க்கும் பொழுது இவற்றைப் படைத்து இயக்கும் பொருள் ஒன்று இருத்தல் வேண்டும் என்னும் உண்மையறிவு அறிவுடையவர்க்குத் தோன்றுதல் இயல்பேயாகும். இங்ஙனம் எல்லாப் பொருள் களையும் உண்டாக்கி இயக்கும் காரணத்தால் அப்பொருள் பரம்பொருள்- அதாவது மேலான பொருள் என்று பெயர் பெறும். அவ்வொப்பற்ற பொருளையே நாம் பொதுப் பெயராய்க் கடவுள் என்கிறோம். மழை நீர் மலையிலிருந்து கீழிறங்கிப் பல இடங்களில் பலவாறு பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் அது பாயுமிடந் தோறும் தனித்தனிப் பெயர் பெறுகின்றது. அது போலவே பரம்பொருள் மக்கள் பின்பற்றும் சமயத்திற்கேற்பப் பரம பிதா என்றும், அல்லாஹ் என்றும், சிவன் என்றும், திருமால் என்றும் பலவேறு பெயர்களைப் பெறும். பலவேறிடங்களில் பரந்து பாயும் ஆறுகளனைத்தும் முடிவாகக் கடலையடைவது போல, பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களால் தோன்றியுள்ள சமயங்களின் முடிந்த கொள்கை, உயிர்கள் கடவுளை அடையவேண்டுமென்பதேயாகும். ஓன்றுபட்ட இக்கொள்கை எல்லாச் சமயங்களிலும் இருத்தலாற்றான் அவை அனைத்தும் இறைவனுடைய வழிபாட்டு முறையை ஒரு சிறந்த சாதனமாகக் கொண்டுள்ளன. வழிபாடு என்பது யாது? இக் கேள்விக்குப் பதில் காண்பதற்கு முன், உணவு என்பது யாது? என்னும் கேள்விக்கு விடை காண்பது நல்லது. உடலை வளர்க்க நாம் உட்கொள்ளும் சத்தான பொருளே உணவு எனப்படுவது. அது போலவே நமது உயிரைப் பலவகை அழுக்குகள் சேராமல் தூய்மையாக வைத்துக்கொள்ளவும், அதனை வளர்பிறைபோல் வளர்க்கவும் பயன்படும், சத்தான உணவு வழிபாடு என்பது. அஃதாவது, உடலை வளர்க்க உணவு தேவைப்படுவதுபோல உயிரை வளப்படுத்த வழிபாடு தேவைப்படுகின்றது. மேலும் வழிபாடு, பொன் நகைகளை அவற்றின் மாசினைப் போக்கித் தேசுறச் செய்து மெருகிடும் கருவிபோல உயிரோடு ஒட்டத்தக்க இயல்புடைய கோபம், பேராசை, பொருள்களின்மேல் பற்று, கீழ்மை, முதலிய அழுக்குகளையகற்றி உயிரைத் தன் உண்மை நிலையில் இருத்தச்செய்யும்; உள்ளத்தைத் தூய்மை ஆக்கும்; எண்ணம், சொல், செயல் என்னும் மூன்றையும் தூய்மையுறச் செய்யும்; உயர்ந்த எண்ணங்களையே எண்ணச்செய்யும்; உயர்ந்த சொற்களையே பேசச் செய்யும்; உயர்ந்த செயல்களையே செய்விக்கும். பாசி நிறைந்த குளம் போல மனம், கோபம் பொறாமை வஞ்சனை முதலிய தீய பண்புகளால் பற்றப் பட்டிருப்பது இயல்பு. பாசி நிறைந்த குளத்தில் நாம் ஒரு கல்லை எறிந்தால், கல் விழுந்த இடத்தைச் சுற்றிலும் உள்ள பாசி படிப்படியாக அகன்றுவிடும். ஆதனால் நீர் தெளிவடைந்து காணப்படும். அதுபோல வழிபாடு மனத்தைப்பற்றியுள்ள மாசுகளைப் பையப்பைய அகலச் செய்யும். மேற்சொன்ன குளத்தில் ஒரு கல்லை மட்டும் எறிந்து பிறகு வாளாயிருப்பின், அக்கல்லின் வீழ்ச்சியால் விலகிய பாசி மீண்டும் வந்து நீரை மூடிக்கொள்ளும். அதுபோலவே ஒரு நாள் வழிபாடு செய்து நாம் அடுத்தநாள் முதல் வாளாயிருப்பின், அவ் வொருநாள் வழிபாட்டினால் சிறிதளவு தெளிவடைந்த மனம் மீண்டும் தீய பண்புகளால் பற்றப்படும். ஆதலால் குளத்தில் தொடர்ந்து கற்களை எறிந்து பாசியை அறவே அகற்றுதல்போல நாம் தொடர்ந்து வழிபாட்டினைச் செய்து மனமாசுகளை அகற்றுதலே மனத்தையும் உயிரையும் தூய்மையாக வைத்திருக்கவும் வளர்க்கவும் ஏற்ற சாதனமாகும். நாடோறும் செய்யும் நற் செயல்களையும் தீச்செயல் களையும் நன்காராய்ந்து தீச் செயல்களுக்காக வருந்திய பரம் பொருளிடம் முறையிடுவது வழிபாடாகும். நல்லெண்ணம், நற்சொல், நற்செயல் இவற்றையுண்டாக்கும் மனத்திண்மையை அளிக்கும்படி அப்பரம்பொருளை வேண்டுவதே வழிபாடு. இங்ஙனம் நம் குறைகளை நீக்கவும் நம் தேவைகளை வேண்டவும் பரம்பொருளிடம் முறையிடுதலே வழிபாடு. இம் முறையைப் பின்பற்றித் திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற பெரு மக்கள் பரம்பொருளிடம் முறையிட்ட பாக்களின் தொகுதியே திருமுறைகள் எனப் பெயர்பெற்றன. வழிபாடு என்பதும் திருமுறை என்பதும், பிரார்த்தனை என்பதும் ஒன்று. சுய நலமே உருக்கொண்ட மனிதன், அந்நலத்திற்காக மட்டும் வழிபாடு செய்யலாம். புத்தர், இயேசுநாதர், முகமது நபி, காந்தி அடிகள் போன்ற பெருமக்கள் சுயநலத்தையும், பிறர்நலத்தையும் கருதி வழிபாடு செய்தனர். அவர்களிடம் காணப்பட்ட சுயநலம் முதலில் தம்மை வழிபட்டால் தூய்மைப்படுத்திக் கொள்வதென்பதே. தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்ட ஒருவனே பிறரைத் தூய்மைப்படுத்த வல்லவனாவான் என்பது உலகறிந்த உண்மை. தெருவைத் தூய்மைப்படுத்த விரும்புகின்ற மனிதனே, முதலில் நீ வாழும் இல்லத்தைத் தூய்மைப்படுத்து; பிறகு தெருவைத் தூய்மைப் படுத்த நினை, என்றார் அறிவிற் சிறந்த ஜேம் ஆலன். இங்ஙனம் புத்தர் முதலிய பெருமக்கள் முதலில் தம் மனத்தையும் உயிரையும் தூய்மை செய்து கொண்ட பிறகே உலக மக்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்த முயன்றனர். அவர்களுடைய உள்ளத் தூய்மை, ஆன்ம ஒளி, உள்ளம், உரை, உடல் என்னும் மூன்றிலும் காட்டிய தூய தன்மை ஆகியவையே உலக மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தன; அவர்கள் தம் பொன்னுரைகளைப் பின்பற்றச் செய்தன. அம்மக்கள் அப்பெருமக்கள் கூறிய சமயங்களை மனமுவந்து ஏற்றனர். சுருங்கக் கூறின், இன்று புத்தரது தூய உள்ளம் கோடிக்கணக்கான பௌத்தர்கட்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. இயேசு நாதரின் ஆன்ம ஒளியும் அவ்வாறே கோடிக்கணக்கான கிறித்தவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. இவ்வாறே நபி நாயகத்தின் தெளிவுரை கோடிக்கணக்கான முலிம்களின் வாழ்க்கைக்கமைந்த வழிகாட்டியாக இருக்கிறது. இப்படியே காந்தி அடிகளின் தூய வாழ்க்கை அவரை எல்லாச் சமயத்தாரும் போற்றத்தக்க நிலையில் அமைத்து விட்டது. இப் பெருமக்கள் ஒவ்வொரு சமயத்திற்குச் சிறப்பாக உரியவராயினும், பொதுவாக எச்சமயத்தவரும் உளமாரப் பாராட்டும் பண்பு மிக்கவராவர். இவ்வுயரிய பண்புக்குக் காரணம் அவர்களது உள்ளத் தூய்மை, சொல் தூய்மை, செயல் தூய்மையே ஆகும். இத் தூய்மைக்கு அடிப்படை யாது? அதுதான் அவர்கள் அழுத்தமாகக் கொண்ட வழிபாடு; எனவே வழிபாடு ஒருவனைத் தூய்மைப்படுத்துவதும் அவன் உயிரை வளப்படுத்த வல்லதுமாகும்; இவற்றுடன் அமையாது, கோடிக்கணக்கான மக்களையும் வழிப்படுத்தவல்லது. புதிய துடைப்பம் நன்கு பெருக்கும் என்பது ஒர் ஆங்கிலப் பழமொழி. சில நாட்கள் கழிந்தவுடன் அதன் தேய்வினால் அது நன்கு பெருக்குவதில்லை. அதுபோலவே உண்மை வழிபாட்டிற் சிறந்த அறிஞரால் தோற்றுவிக்கப்பட்ட வழிபாட்டு முறை முதலில் மக்கள் உள்ளங்களைக் கவர்ந்தது. பின் வந்த மக்கள் போதிய ஊக்கமின்றிப் பெயரளவில் வழிபாட்டு முறையைக் கைக்கொண்ட காரணத்தால், அவர்தம் உள்ளம் தூய்மையுற வில்லை. அதனால் அவர்தம் எண்ணங்கள் வேறாயின; சொற்கள் வேறாயின; செயல்களும் வேறாயின. உள்ளொன்று வைத்துக் புறமொன்று பேசுவார் மிகுதிப்பட்டனர். அதனால் சமுதாயம் சீர்கெட்டது. சமயத்தலைவர்களும் இந் நிகழ்ச்சி யிலிருந்து தப்பவில்லை. அவர்தம் சொல்லிற்கும் செயலுக்கும் வேறுபாடு காணப்பட்டது. கலைப் பீடங்களாகவும் சமய உயிர் நாடியாகவும் உள்ள மடங்களும் அவற்றின் கட்டுப்பாடுகளும் செயல்முறைகளும் சிதறின. மடத்துத் தலைவர்கள் மதத்திற்கும் தலைவர்கள்; அத் தலைவர்களுடைய சொல் வேறு, செயல் வேறுபட்ட காரணத்தால், அவர்களாட்சியிலிருந்த திருக்கோயில்கள் வெறும் காட்சிக் கூடங்களாக மாறின. மக்கள் கோவிலுக்குச் செல்லுவதும் தேங்காய் உடைப்பதும் கற்பூரம் கொழுத்துவதும் ஒரு கும்பிடு போட்டு வருவதுமே வழிபாடு என்று கருதப்பட்டு விட்டது. ஒவ்வொருவரும் அமைதியாக இருந்து ஆழ்ந்த சிந்தனையில் இறைவனை யெண்ணி முறையிடும் பண்டை வழக்கம் அற்றுவிட்டது; ஆழ்ந்த முறையீடு அற்ற காரணத்தால் வெளிப்பகட்டான வழிபாட்டு முறைகள் சிறப்படைந்தன. கண்ணொன்று காண கையொன்று செய்ய மனமொன் றெண்ண . . . . . . . யான் செய்யும் பூசை எவ்வாறு கொள்வாய் என்று பட்டினத்தடிகள் வருந்திக் கூறியது இங்கு நினைக்கத்தக்கது. ஆழ்ந்த வழிபாடு அற்றுவிட்ட காரணத்தால் மக்களுடைய உள்ளம் தீய பண்புகளிலிருந்து விடுதலை பெறமுடியவில்லை. தீய செயல்களிலிருந்தும் மனிதன் விடுதலை பெறமுடியாது தவித்தலைக் காண்கிறோம். இவ் விழி நிலை நீங்கவேண்டு மாயின், உள்ளத்தைத் தன் வயப்படுத்தும் வழிபாட்டு முறையை மக்கள் மேற்கொள்ளுதல் வேண்டும். கோவிலுக்குச் சென்று தனி இடத்திலமர்ந்து அல்லது அமைதி நிலவும் வேறிடத்திலிருந்தோ தன் குறைகளை நீக்குமாறும் பிறருடைய குற்றங்களை அகற்றுமாறும் பரம் பொருளிடம் முறையிடும் வழிபாட்டு முறையை மேற்கொள்ளுதல் நல்லது. பிறர் குற்றங்களை அகற்றுதல் வேண்டும் என்னும் உண்மை எண்ணம் மனிதன் உள்ளத்தில் தோன்றி விடுமாயின், மனித சமுதாயத்தில் ஒருவர் மீதொருவர் காட்டும் கோபம், பொறாமை, வஞ்சனை முதலிய இழிந்த பண்புகள் கதிரவனைக் கண்ட காரிருள் போலப் படிப்படியாக அகன்று விடும் அல்லவா? இங்ஙனம் பிறருக்காக மன்றாடி வழிபடுவோனையே தனக்கென வாழாப் பிறர்க்குரியாளான் என்று நம் முன்னேர் போற்றினர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்; வாடி வருந்தினேன்; என்று இராமலிங்க அடிகள் தமது வழிபாட்டில் கூறியிருத்தல் இங்கு எண்ணத்தக்கது. இத்தகைய தூய உள்ளத்தை உண்மையான வழிபாட்டு முறையாற்றான் அடைதல் கூடும். இத்தூய உள்ளமே அருள் உள்ளம் என்பது. இத்தகைய அருள் உள்ளம் பெற்றிருந்தமையாற்றான் புத்தர் தமது பிச்சைப் பாத்திரத்தைக் கவர்ந்து சென்ற கள்வனை ஆசீர்வதித்து நல்வழிப்படுத்தினார். இயேசுநாதர் நடக்க முடியாது தள்ளாடிய ஆட்டுக்குட்டியை எடுத்து அணைத்துக் கொண்டார். காந்தி அடிகள் இங்கிலாந்து சென்றிருந்தபோது நொண்டி நடந்த ஆட்டுக்குட்டியை அன்போடு தழுவித் தூக்கி சென்றார். அன்புணர்ச்சிக்கும் மேற்பட்ட இத்தகைய அருள் உணர்ச்சியை ஊட்ட வல்ல சிறந்த சாதனம் வழிபாடு அன்றோ? இவ் வழிபாட்டின் சிறப்பினையும் தமது சிறந்த அநுபவத்தையும் காந்தி அடிகள் வியந்து கூறியுள்ளார். அவர் கூற்றைக் கீழே காண்க: வழிபாடே என் வாழ்கையை உயர்த்திவருகின்றது. அஃதில்லாவிடின் நீண்ட காலத்துக்கு முன்னரே எனக்குப் பித்துப் பிடித்திருக்கும். எனக்கு உண்டான மனக் கலக்கங்களும் வேறு பல துன்பங்களும் நீங்கச் சிறந்த கருவியாக இருந்தது வழிபாடே முதலில் யான் வழிபாட்டிலும் கடவுளிடத்திலும் நம்பிக்கையற்றவனாய் இருந்தேன். அதன் பின்பே உடலை வளர்க்க உணவு எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியமே உயிரை வளர்க்க வழிபாடும் என்பதை உணர்ந்தேன். அந்நாள் முதல் இந்நாள் வரையில் நான் வழிபாடு செய்து வருகிறேன். உலகத்தை உய்விக்கத் தோன்றிய பெரியார்களான புத்தமகானும் ஏசுநாதரும் முகம்மது நபியும் வழிபாடு ஒன்றினாலேதான் அறிவு விளக்கம் பெற்றனர் என்பதை வரலாற்று மூலமாக நாம் அறிகின்றோம். இன்றும் கோடிக்கணக்கான மக்கள் வழிப்பாட்டால் தூய வாழ்வும் மன அமைதியும் பெற்று வாழ்ந்து வருகின்றார்கள். நான் வழிபாட்டைக் கைக்கொண்ட பின்பு என் மனச் சாந்தத்தை இழக்கவில்லை. வழிபாட்டில் இந்த முறையைத்தான் மேற்கொள்ளவேண்டும் என்னும் நியதியில்லை. அவரவர் மத ஒழுக்கத்துக்கு ஏற்ற முறையில் தூய மனத்தோடு வழிபாடு செய்தலே நன்று. நாள்தோறும் நமது அன்பை வெளியிட்டு வழிபாடு கூறுதல் நமது கடமையாகும். நீங்கள் நாள்தோறும் வழிபாடு செய்வீர்களானால், சிறந்த ஒழுக்கத்தையும் நிறைந்த அறிவையும் தூயவாழ்வையும் பெறுவீர்கள் என்பது காந்தியடிகள் வாக்கு. பாரதியார் பாடல்களும் இந்த உண்மையையே உணர்த்துகின்றன. 2. முல்லைப் பாட்டு முல்லை என்பது இல்லறம் நிகழ்த்துவதற்கு மீண்டு வரும்வரை ஆறுதல் அடைந்திருக்குமாறு போருக்கெனப் பிரிந்து செல்லும் தலைவன் மனைவியிடம் கூறிய சொல்லை, தவறாமல் ஆற்றியிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியார். இந்த இலக்கணத்திற்கியைய முல்லைப்பாட்டு 103 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. தலைமகன் போர் செய்தற்குப் பிரியக் கருதுகிறான்; இதனைக் குறிப்பினால் உணர்கிறாள் தலைவி. தலைவனது பிரிவை ஆற்ற இயலாத தலைவி வாட்டமடைகிறாள். அவள் வாட்டத்தைக் கண்ட தலைவன் ஆறுதல் கூறி வற்புறுத்திச் செல்லுகின்றான். தலைவியோ அதற்கு உடன்படாமல் வாடுகிறாள். அதையறிந்த முதுபெண்டிர், அவன் வினை முடித்து வருதல் உண்மை; நீ வருத்தம் நீங்குக, எனக் கூறித் தேற்றுகின்றனர். அவள் ஆறுதல் அடைகிறாள். பின்பு தலைவன் பாசறை அமைத்துப் போர் முடிந்து வெற்றி வீரனாய் வந்ததனைக் கண்டு தோழி முதலானோர் தம்முட் கூறிக்கொள்வது தலைவியின் செவிகளில் விழுகிறது. இச் செய்திகளையே ஆசிரியப்பா 103 அடிகளில் காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியுள்ளார். இது முல்லைப் பாட்டு எனவும் முல்லை எனவும் வழங்கும். காட்சி 1 1. நிகழ்ச்சிகள் தலைவன் போர் செய்தற் பொருட்டு, பிரிவினை ஆற்றாது வாடிய தலைவியை ஆற்றிப் பிரிகிறான் தலைவியாகிய கோப்பெருந்தேவி, பிரிந்த தன் தலைவன் வரவை எதிர்நோக்கி ஏங்கினாள்; அவன் வரப்பெறாமையால் துயர் மிகுந்து துயில்கொள்ளப்பெறாமல் துடித்தாள். அவளுடைய கண்கள் முத்துக்களைப்போன்று கண்ணீரை உதிர்த்தன. அம்பு தைத்த மயில் போன்று அவள் நடுநடுங்கினாள்; நெஞ்சம் துடித்தாள்; அணிகலன் நெகிழப்பெற்றாள். இவ்வண்ணம் அமைதியற்றும் நெட்டுயிர்ப்புக் கொண்டும் மயக்கமடைந்தாள். இந்நிலைகண்ட முதுபெண்டிர் மனம் வருந்தி அவளைத் தேற்றக்கருதிப் பல இனிய ஆறுதல் மொழிகளைக் கூறினார்; தலைவன் பிரியவேண்டி இன்றியமையா நிலையை எடுத்துக் காட்டினார், தலைவனுடைய புகழ், மானங் கருதிப் பணியாற்ற வேண்டிய கடமை, அரசியலை நடத்துவதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள பொறுப்பு, போருக்கெழுந்த மாற்றாரின் பெருமை முதலியவற்றை விளக்கினார். தலைவி முதுபெண்டிர் கூறிய வற்றினைச் செவிமடுத்தும் அன்பு மிகுதியால் கலக்கம் மிக்கு, இவை அரசற்கு வேண்டுமென்று மனத்திற் கருதாமல், தலைவனது பிரிவை ஆற்றவியலாமல் தேறும் திறமை அற்றவளானாள். அஞ்ஞான்று அம்முதுபெண்டிர் இவள் ஆற்றியிராள் என்று துணிந்து, ஆற்றாமை மிகுதியால் தேறுவதொழிந்த தலைவியை நோக்கி தலைவியே! படைத் தலைவர் ஏவலால், மழைபொழிந்த மாலைக் காலத்தே, நிமித்தம் பார்ப்போர் ஊர்ப்புறத்துள்ள பாக்கத்திற்குச் சென்று தாம் நாழியிற் கொண்டு போன நெல்லுடனே முல்லை மலர்களையும் தூவித் தெய்வத்தை வணங்கி நற்சொற் கேட்க நின்றார்கள். அங்கு இடைக்குல மகள் ஒருத்தி குளிரால் நடுங்குகின்ற தோளின் மேலே கட்டின கையளாய் நின்றிருந்தாள். சிறிய தாம்பாலே காலிலே கட்டப்பட்டிருந்த கன்றுகள் பாலுண்ண அவாக் கொண்டு தாய்வருமென்று எதிர்நோக்கி, சுழன்று சுழன்று வருந்திக்கொண்டிருந்ததை அந்த இடைக்குல மகள் கண்டாள். அக்கன்றுகளை நோக்கி, கோலையுடைய இடையர் பின்னே நின்று செலுத்த, நும்முடைய தாய்மார் நிரம்ப மேய்ந்து இப்பொழுதே வருவர் என்று கூறினாள். அந் நற்சொல்லை நாங்கள் கேட்டோம். அந் நன்மொழியின் கருத்தால், நின் தலைவன் பகைவரைவென்று அவரிடத்திற பெற்ற திரைப்பொரு ளுடனே, தாமெடுத்துக்கொண்ட வினையைமுடித்து மகிழ்ச்சி பெருக இப்பொழுதே வருவர் நீ நின்மனத் தடுமாற்றத்தால் உண்டான வருத்தத்தைப் போக்கிக்கொள் என்று கூறினார். இவற்றைச் செவியேற்ற தலைவி, இங்ஙனம் தலைவன் பிரிந்தாலன்றி இவ்வரசியல் நிகழாதென்று, நினைத்து, நெமிழ்ந்த வளையல்களைத் திருத்திச் செறித்து ஆறுதல் பெறுவாளாயினள். 2. கார்காலத் தோற்றம் சக்கரத்துடன் வலம்புரிச் சங்கையும் தாங்கும் பெரிய கைகளையும் திருமகளைத் தாங்கும் அகன்ற மார்பினையுடைய திருமால், மாவலி மன்னனிடம் குறள் வடிவிற் சென்று மூன்றடி மண் இரந்தார். மாவலி அதனை அளிப்பான் வேண்டி திருமாலின் அங்கையிலே நீர் வார்த்தபோது அவர் உலகத்தைத் திருவடிகளிலே அணைத்துக்கொண்டு நெடிய வடிவினராக நிமிர்ந்தார். அதுபோல ஒலி முழுங்குகின்ற குளிர்ச்சியையுடைய கடலினிடத்து நீரைக் குடித்த முகில் வலமாக எழுந்து உயர்ந்து மலைகளை இருப்பிடமாகக் கொண்டு சிறு பொழுதாகிய மாலைக் காலத்தே மழையைப் பெய்தது. இந்நிலையிலே மாளிகையினிடத்துப் பள்ளியறையில் பொற்பாவை ஏந்தி நின்ற தகளியிலே பெரிய விளக்கு நின்றெரிந்தது. தனக்கு உள்ள இடமெல்லாம் பொன்னாலும் மணியாலும் சிறப்புப்பெற்று உயர்ந்த ஏழு நிலையினையுடைய மாடத்தின் மூட்டு வாய்களின்றும் சொரிகின்ற மழை நீரருவிகளின் ஓசைகள் முழங்கின. இந்நிலையில் தலைவன் கூறிச்சென்ற பருவ காலம் வந்ததாகலின்அவன், பொய்யாமல் வருவான் என்னும் கருத்துடன் தலைவி அவன் வரவினையே கருதிப் படுக்கை இடத்தே கிடப்பாளாயினள். காட்சி 2 1. பாசறை அமைப்பு தலைவியின் நிலை அங்ஙனமாக, தலைவனாகிய அரசன் பகைமேற்சென்று காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டிடத்தே பாசறை அமைத்துஅதில் இருந்தான். அப்பாசறை அமைக்கக் காட்டிடத்தே கிடந்த பிடவம், பசிய தூறுகள் முதலிய பற்றைகளை வீரர்கள் வெட்டினார்கள்; பகைப் புலத்துக்குக் காவலாக இருந்த வேட்டுவச்சாதியினுடைய சிறுவாயில்களை உடைய அரண்களை அழித்தார்கள்; முள்வேலியாலான அரணைக் காவலாக வளைத்து அதன் நடுவே கடலைப்போன்று பரந்த பாசறையை அமைத்தார்கள். அங்கே ஒழுங்கான தெருக்கள் இருந்தன. தழை வேய்ந்த கூரைகள் உள்ள நாற்சந்தியான முற்றத்தே காவலாக நிறுத்தப்பட்ட யானை, கரும்பையும் நெற்கதிருடன் கலந்து கட்டிய இலையையும் அதிமதுரத் தழையையும் உண்ணாமல் அவற்றாலே தனது நெற்றியைத் துடைத்தும் அவற்றைக் கொம்பிடையே வைத்தும் நின்றது. அதனைக்கண்ட யானைப்பாகர் யானைப்பேச்சாகிய பலமொழிகளைப் பேசிக் கவர்பட்ட குத்துக்கோலாலே குத்திக் கவளத்தை உண்ணுமாறு செய்தனர். நெய் கொப்பளிக்கின்ற திரிக்குழாயையுடைய சிற்றாட்கள் நீண்ட திரியை எங்கும் கொளுத்தி ஒழுங்காய் விளக்குகள் அமைத்தனர். அவ்விளக்குகள் அவியுந்தோறும் இராப்பொழுதைப் பகற்பொழுதாக்கும் திண்ணிய ஆசினையுடைய, ஒள்ளியவாளைச் செருகிய, கச்சினைப் பூண்ட, கூந்தல் அசைந்து கிடக்கின்ற அழகினை யுடைய மங்கையர் தம் கைகளிலுள்ள பந்தங்களைக் கொளுத்தி வைத்துக்கொண்டு நின்றார்கள். மொழிவேறுபாடுடைய பல நாடுகளிலிருந்து வந்த பெரிய படை அப்பாசறையின்கண் சூழ்ந்திருந்தது. அதற்கு நடுவே எல்லாரும் உடம்பட்டு அரசினுக்கெனத் தனிக்கோயிலொன்றை வகுத்தனர். அது கால்களை நட்டுக் கயிற்றை வலித்துக்கட்டி அவற்றின் மீது துணிகளை விரித்துக் கூடாரம் அடித்த இருப்பிடமாக அமைந்தது. இத்தோற்றம் முக்கோல் அந்தணன் தனது முக்கோலில் காவிதோய்த்த உடையை இட்டு வைத்த தன்மையை ஒத்தது. அதன்புறத்தே வலியவில்லையும் பூந்தொழிலைத் தலையிலுடைய எறிகோல்களையும் கேடயங்களையும் ஊன்றி, குத்துக்கோலிலே தைக்கப்பட்ட பல நிறத் திரைச்சீலைகளை வளைத்து அழகுபடுத்தப்பட்டது. அதன் வாயிலின் முகப்பில் புலியைச் சங்கிலிகொண்டு பிணைத்து வைத்த வடிவினைச் சட்டை தரித்த வலிய யவனர் ஓவியமாகத் தீட்டியிருந்தனர். தலைப்பாகையும் சட்டையுமணிந்த மெய்காப்பாளர் அரசனைக் காவலாகச் சூழ்ந்து திரிந்தார்கள். நாழிகைக்கணக்கர் அரசனை வணங்கி வாழ்த்தி, நீரிலே காண்கின்ற நாழிகை வட்டிலில் சென்ற நாழிகை இத்துணை எனக் கூறினார். அரசரின் நிலை அழகிய மாணிக்க விளக்கு எரிய, கயிற்றில் திரைச் சீலையை வளைத்த புறவறைக்குள்ளே இருக்கும் படுக்கை அறையில் அரசன் படுத்திருந்தான். சட்டையிட்ட ஊமைகளாகிய காவலர் அரசன் பள்ளிகொள்ளுமிடத்தைச் சூழ்ந்து திரிந்தனர். தூயவெண்துகிலுடுத்த பெண்கள் ஆலத்தி விளக்கைக் காட்டி நின்றார்கள். இவ்வகையாக மணியோசை அடங்கிய நடுயாமத்து, மற்றைநாட் செய்கின்ற போரை நினைந்து அரசன் துயில் கொள்ளப்பெற்றிலன். பகைவரின்வாள் அழுந்துகையினால் புண்பட்ட வேழங்களையும் செஞ்சோற்றுக்கடன் கழித்து வெற்றியை உண்டாக்கிப் போரில் பட்ட வீரர்களையும் கூரிய முனைகளையுடைய அம்புகள் வந்து அழுந்தியதனால் புண்பட்டுப் புல் உண்ணாமல் வருந்தும் குதிரைகளையும் நினைத்துக் கண் உறக்கம் கொள்ளாமல் ஒருகையைப் படுக்கையின் மேலே வைத்து மற்றொரு கையில் கடகத்தை முடியோடு சேரவைத்துக் கண்ணியைத் தடவிக்கொண்டிருந்தான். காட்சி 3 வெற்றிப்பெற்ற தலைவன் மீட்சி மற்றைநாள் அரசன், பகைவரைக் கொல்லக் கருதிவைத்த வாளைப் பிடித்து வெற்றியை நிலைப்படுத்தினான்; பகையரசரின் நிலங்களைக் கவர்ந்து கொண்ட வெற்றியாலே வெற்றிக் கொடியை உயர்த்தினான்; ஊதுகொம்பும் சங்கும் முன்னே வெற்றியை முழங்க, திரண்ட சேனையுடன் நிரைந்த குதிரைகளைச் செலுத்தி விரைந்து வருவானாயினன். சிவந்த காட்டுப் பெருவழியிலே காயாமரம் கடுமையான பூக்களை உதிர்க்க, கொன்றைமரம் பொன்னிறப் பூக்களைச் சொரிந்தது. வெண்காந்தள் உள்ளங்கை போல் விரிய, தோன்றிமரம் உதிரம் போல் பூத்தது. வளைந்த கதிரினையுடைய வரகிடத்து முறுக்குண்ட கொம்பினையுடைய ஆண்மானுடன் பெண்மான் துள்ள அரசன் வேட்கை மிகுதியால் விரைந்து வந்தான். தான் கூரிய பருவம் பொய்யாமல் தலைவன் வருவான் என்னுங் கருத்துடன் அவன் வரவினையே கருதிக்கிடந்த தலைவியின் செவிகள் நிரம்பிக் குளிருமாறு மீண்டு வரும் தலைவனுடைய தேரிற்பூட்டிய குதிரைகள் ஆரவாரித்தன. சில குறிப்புகள் இந்த முல்லைப் பாட்டினால் அப்பழங்கால மக்களின் வழக்கங்கள் சிலவற்றை அறிதல் கூடும்:- 1. பெருமுது பெண்டிர் சகுணம் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது தெரிகிறது. 2. நாகரிகமிக்க இக்காலத்தே போர்க்களங்களில் அமைப்பது போன்ற முறையிற்றான் பழந்தமிழர்களிடையும் பாசறையின் அமைப்பு இருந்ததென்பது தெரிகின்றது. 3. யானை கவளமெடுக்காவிடின் இக்காலப் பாகர் ஏதோ சில மொழிகள் புகன்று உண்ணவைப்பது போன்றே அக்காலத்தும் யானைப் பேச்சை வடமொழியென அச்சொற்களுக்குப் பெயரிட்டுப் பாகர்கள் யானைக்குக் கவளமருந்த வழங்கி வந்தனர் என்பது தெரிகிறது. 4. பாசறையின் வாயில் முகப்பு-யவன ஓவியரைக் கொண்டு ஓவியம் தீட்டப்பட்டும், பலநிறத்திரைச்சீலைக் குஞ்சங் களுடனும் அழகுபடுத்தும் வழக்கம் அக்காலத்திருந்தது. 5. பாசறையில் பெண்கள் வாள் செருகிய வீராங்கனை களாகக் காவல் புரிந்தும், ஒளிதரும் பந்தங்கள் கொளுத்தியும், ஆலத்தி விளக்குக் காட்டியுமிருந்தது, இக்காலத்தைப் போன்று அப்பழங்காலத்தும் பெண்கள் போர் நிகழ்ச்சிகளிற் பங்கெடுத்துக்கொண்டனர் என்பது அறியக் கிடக்கின்றது. 6. பாசறையின் அரண்முறை இக்காலப் போர்ப்பாடி வீடுகளை ஒத்தது. ஆறு சூழ்ந்த காடு, பாடி வீட்டிற்குரிய இடமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்வியற்கை அரணுடன் நாற்புறமும் முள்வேலியை வளைத்து அரணமைக்கப்படுகிறது. இற்றைக்காலப் போர்ப் பாசறைகளைக் கண்டவர்கள் முள்வேலி வளைவைக் கண்டிருப்பர். இவ்வழக்கம் தமிழ்ப் பெருமக்களிடையே அக்காலத்தே இருந்து வந்தது. 7. அப்போதைக்கப்போது கால அளவு தெரிவதற்காக இப்போது கடிகாரங்கள் இருப்பது போன்று அந்தக் காலத்தும் நாழிகை வட்டில்களும் அவற்றைக் கவனித்து நாழிகை சொல்வோரும் இருந்திருப்பதின் மூலம் காலத்தைச் சரியாக கணிப்பதிலும் தமிழர்கள் சிறந்திருந்தனர் என்பது தெரிகிறது. 8. பள்ளியறையில் ஊமையரைக் காவலாராக வைக்கும் வழக்கத்தால், போர் மர்மங்கள் வெளிச் செல்லாமல் தடுப்பது அக்காலத்தே கைக்கொள்ளப்பட்டிருந்தது என்பது தெளியலாம். 9. பாசறையில் காவல் புரியும் மெய்காப்பாளர் தலைப் பாகை சட்டை முதலியன தரித்தவராகலின், போர் வீரருக்குரிய உடைகளும் ஒழுங்கான முறையில் அளிக்கப்பட்டிருந்தன என்பது புலனாகின்றது. 10. கார்கால நிலை வருணையும் காட்டு வழியின் காட்சிகளும் கூறப்பட்டிருப்பதன் மூலம் முல்லை நிலத்துக்குரிய தெய்வம், கருப்பொருள்கள் இன்னவை என்பது விளக்கமாகின்றது. 11. தலைவன் பாடிவீட்டில் கண் உறக்கம் கொள்ளாமல் தன் படைகளின் வருத்தத்தை நினைந்து உருகியதனால், அவன் தன் படைகள் மீது கொண்டிருந்த அன்பின் திறம் வெளியாகிறது. 12. தலைவி தலைவனுடைய பிரிவாற்றாமல் நடுங்கியதும், அரசியல் கடமை எண்ணி மனந்தேறி மீண்டு வருந்துணையும் ஆற்றியிருவெனக் கணவன் கூறிய சொல்லைத் தவறாமல் ஆற்றியிருந்ததும் மனைவியின் காதற் சிறப்பையும் கடமை உணர்ச்சியையும் விளக்குகின்றன. பொதுவாக அக்காலத் தமிழ் மகளின் கற்பு நெறியையும், நல்வாழ்வுப் பண்பையும், போருக்கெழும் அரசன் யவனர் உள்ளிட்ட பலமொழிகள் பேசிய படை வீரரைச் சேர்த்துக் கொண்டேகும் நாகரிக முறையினையும், குடிபடைகள்பால் அரசனுக்கிருக்கும் அன்பையும் பொறுப்பையும் இம்முல்லைப் பாட்டு மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. 3.சொல்லோசை முத்தமிழ் வளர்ச்சி தமிழ் நாட்டில்தான் முதன் முதலில் மக்கள் தோன்றினர் என்பது அறிஞர் துணிபு. மக்கள் கூடி வாழும் இயல்பினர். ஒருவர் கருத்தை மற்றவர்க்கு அறிவிக்கும் இன்றியமையாமை உடையவர். முதலில் மக்கள் தமது உள்ளக்கருத்துக்களைக் கை, கால், உடல் ஆகியவற்றின் அசைவுகளால் வெளிப்படுத்தினர். இந்தச் சைகை மொழியே முதன் முதல் தோன்றிய இயற்கை மொழியாகும். உடலுறுப்புக்களின் அசைவுகளால் உள்ளக் கருத்தை அறியும் நிலையை மெய்ப்பாடு என்பர் தொல்காப்பியர். இன்னும் உடலாட்டத்தால் உள்ளக் கருத்தை வெளியிடும் கூத்துக்களை (dance) நாம் கண்டு களிக்கின்றோம்; இக் கூத்துக்கள் ஒரு கதை தழுவி நடைபெறின், அவற்றை நாடகம் என வழங்குவோம். இத்தகைய ஒலியற்ற கூத்தியல் பைக் கூறும் தமிழே நாடகத் தமிழாகும். முத்தமிழில் முதலில் எழுந்தது நாடகத்தமிழே என்பது துணிவு. உடலுறுப்புக்களின் அசைவால் உள்ளக் கருத்தை வெளியிடுங்கால் சிறிது சிறிதாக வாய் ஒலியும் அவ் வசைவு கட்குத் துணைபுரியத் தொடங்கின. நாளடைவில் வாயொலிகளே கருத்து வெளியிடுதலாகிய தொழிலை நன்கு செய்தன; ஆதலின் உடலசைவுகள் சிறிது சிறிதாகக் குறைந்தன. இவ்வோசைகள் முதலில் பாட்டுவடிவைப் பெற்றிருந்தன என்பர் எபர்சன் முதலிய மொழியறிஞர்கள். இத்தகைய பாட்டுத் தமிழையே இசைத்தமிழ் என்றான் பண்டைத்தமிழ் மகன். நீளமான ஓசைகளால், அதாவது, பாட்டுக்களால் கருத்தை வெளியிட்டு வந்த தமிழ் மக்கள், சிறிது சிறிதாக அவ்வோசைகளின் நீளத்தைக் குறைத்தனர். குறைத்துக் குறைத்துச் சொல் வடிவாகப் பண்ணினர். அத்தகைய குறுகிய ஒலிகளாகிய சொற்கள் பலவற்றைச் சேர்த்து நீண்ட சொற்றொடர்களாக்கினர்; இச் சொற்றொடர்களால் தங்கள் கருத்தை வெளியிட்டனர். இத்தகைய சொற்றொடர்களாலாகிய செய்யுட்களே இயற்றமிழ் என வழங்கப் பெற்றன. இயற்றமிழின் சிறப்பு முத்தமிழிலும் இறுதியில் தோன்றியது இயற்றமிழ் என்பது தெளிவு; எனினும் இயற்றமிழில் ஏனையிரண்டு தமிழும் அடங்கும். செய்யுளைப் பொருள் உணர்வொடு பாடின் அஃது இயற்றமிழ் ஆகும்; ஓசையொடு பாடின் இசைத் தமிழாகும்; உணர்ச்சிக்கேற்ற உடலசைவுகளுடன் பாடின் நாடகத் தமிழாகும். இயற்றமிழ் இல்லாத இசை நாடகங்கள் இல்லை; இசையும் நாடகமும் இயலையே அடிப்படையாகப் பெற்றிருக்கின்றன. நால்வகைப் பாவொலிகள் இயற்றமிழ்ப் பாக்கள் நான்கு வகைப்படும்; வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவையே அவை. பா என்பது பரந்துபட்ட ஓசை. தூரத்திலிருந்து ஒருவன் பாடினால் அவன் பாடுவது இன்னபண், இன்னதிறம் என்று வேறுபடுத்தி அறிவதற்கு ஏற்ற பரந்துபட்ட ஓசையே பாவெனப்படும். இது நச்சினார்க்கினியர் கருத்து. இந் நால்வகைப் பாக்களுக்கும் தனித்தனி ஓசை நலம் உண்டு. ஓசை நலம் சொற்கள் ஒன்றோடொன்று சேரும் வகையால் உண்டாகும். எனவே சொல்லோசையே பாட்டோசை என்பது தெளிவு. செப்பலோசை பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா, இந்தப் பாடலைப் பாருங்கள்: இஃது ஔவையார் பாடியது; ஆனைமுகப் பெருமானிடம் பேசுகின்றார் ஔவையார்; நான் நான்கு தருகின்றேன்; நீ மூன்று தா; முத்தமிழுந்தா என்று செப்புகின்றார். பேசுவதுபோலவே இப்பாட்டின் ஓசை அமைந்துள்ளது. விநாயகரிடம் தான் ஒன்று செப்புவது போல் உள்ளது. ஆதலின் இது செப்பலோசை. இதுதான் வெண்பாவுக் குரிய ஓசை. அகவல் ஓசை அம்ம வாழி தோழி யிம்மை நன்றுசெய் மருங்கில் தீதில் என்னும் தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல் . . . . . . . . . . . . . . . இப்பாடலைப் பாருங்கள். இஃது ஆசிரியப்பா. தலைவி தன் தோழியை விளிக்கின்றாள்; கூப்பிடுகின்றாள்; அகவுகின்றாள். அகவுதல் என்றால் கூப்பிடுதல். கூப்பிட்டு அவளிடம் தன் கருத்தொன்றைச் சொல்லுகின்றாள். கூப்பிடுதல் போலவே இப்பாட்டின் ஓசை அமைந்துள்ளது; அதனால் இதனை அகவலோசை என வழங்குவர். ஆசிரியப் பாவிற்குரியது அகவலோசை. துள்ளலோசை செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையே முடுக்கிப்போய் இப்பாட்டைப் படியுங்கள்; இதன் ஓசையைப் பன்முறை படித்துக் காணுங்கள். இப்பாட்டிலுள்ள ஒவ்வொரு சீரும் துள்ளித் துள்ளிச் செல்வதுபோல் ஒலிக்கின்றதல்லவா? கன்றுக்குட்டி துள்ளுவது போல் சொற்கள் துள்ளுகின்றன. இதுதான் கலிப்பாவிற்குரிய ஓசை; துள்ளலோசை, தூங்கலோசை. தொடியுடைய தோண்மணந்தனன் கடிகாவிற் பூச்சூடினன் நறைகமழ் சாந்தநீவினன் செற்றோரை வழிதேய்த்தனன் நட்டோரை யுயர்வுகூறினன் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஆங்குச் செய்வகை யெல்லாஞ் செய்தன னாதலி னிடுக வொன்றோ சுடுக வொன்றோ படுவழிப் படுகவிவ் விகல்வெய்யோன் றலையே. இச்செய்யுளின் ஓசை மெதுவாய் நடக்கிறது. நடந்துகொண்டே சிலர் தூங்குவர்; அல்லது தூங்கிக்கொண்டே நடப்பர். அதுபோல் உள்ளது இப்பாடலின் ஓசை; அதனால் இது தூங்கலோசை. வஞ்சிப்பாவிற்கு உரியது தூங்கலோசையே யாகும். தூங்கல் என்பது தங்கித் தங்கிச் செல்லுதல், ஆதாவது, படிப்படியாகத் தாழ்ந்து செல்லும் ஓசை. பேச்சிலும் ஓசை செய்யுளில் மட்டுமா ஓசை நடமாடுகிறது? பேசும் பேச்சும் ஓசை பலவற்றைப் பெற்றிருத்தல் காணலாம். ஒருவர் வீட்டிற்கு அவர்தம் நண்பர் வந்தால் வாருங்கள் என்று அவர் அழைக்கிறார். மனதில் மகிழ்ச்சி பொங்கும் நிகழ்ச்சியுள்ள போது வாருங்கள் என்று அழைக்கும் அக்குரல் சற்று ஓங்கி, உயர்ந்து, தெளிவாக உள்ளது; மனதில் துன்பம் நிறைந்துள்ள போது அதே ஒலி மங்கி, தாழ்ந்து, தெளிவற்று இசைக்கின்றது; இன்பமும் துன்பமுமின்றி நடுநிலையாக மனம் உள்ளபோது அக்குரல் உயர்வும் தாழ்வும் இன்றி நடுத்தரமாக ஒலிக்கின்றது. இங்ஙனம் ஓங்கி உயர்த்தித் தெளிவாக இசைக்கும் ஓசையை எடுத்தல் என்பர் தமிழறிஞர்; மங்கித் தாழ்த்தித் தெளிவின்றி இசைக்கும் ஓசையை படுத்தல் என்பர்; உயர்வும் தாழ்வுமின்றி ஒலித்தலை நலிதல் என்பர். இம்மூவகை ஒலியையும் உரை நடையில் மட்டுமா காண்கின்றோம்? செய்யுளிலும் புலவர் இவ்வேறுபட்ட ஓசை நயங்களை அமைத்து உணர்ச்சி நயங்களை விளக்குவர். பல இடங்களிலும் அலைந்து திரிந்து தேடிக் கடைசியில் அசோகவனத்தில் கற்பினுக்கணியாம் சீதையைக் காண்கிறான் அநுமன்; தான் கண்ட காட்சியை இராமபிரானுக்கு எடுத்தியம்பு கிறான்; சீதையைக் கண்களால் கண்டேன்; அவள் கற்பினுக்கணி யாகவே காட்சியளித்தாள் என்று கூற நினைக்கின்றான்; சீதையை என்று சொல்லத் தொடங்கினால் அடுத்த சொல்லைத் தொடங்குவதற்குள் இராமன் படும் துன்பம் அளவின்ற மிகும்; சீதையை என்று அநுமன் தொடங்குகின்றான்; பின்னர்க் கண்டேன் என்பானோ, காணேன் என்பானோ என்னும் ஐயம் இராமபிரானை வாட்டி வதைக்கும். இவற்றையெல்லாம் அநுமன் முன்பே சிந்தித்தான்; இராமன் ஐயமும் துன்பமும் அகன்று மகிழும் வண்ணம், தன் உள்ளத்தில் உவகை பொங்கக் கண்டனன் என ஓங்கி, உயர்த்தித் தெளிவாக எடுத்துக் கூறுகின்றான். தாழ்ந்த குரலில். கண்களால் என இயம்புகின்றான்; இது படுத்தல் என்னும் ஓசை நயம். தனது இயல்பாம் கற்பொழுக்கத்தில் மாறுபாடின்றி விளங்கும் சீதையின் நிலையினை அநுமன் தனது இயல்பான குரலில், எடுத்தலும் படுத்தலுமில்லாத நடுத்தர ஓசையால் கற்பினுக் கணியை என்று இசைக்கின்றான்; இதுதான் நலிதல் என்னும் ஒலிநயம். கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால் என்பது கம்பர் காட்டும் உணர்ச்சி ஓவியம். இதனுள் மூவகை உணர் வொலிகளும் அமைந்திருத்தல் பாராட்டத் தக்கதொன்றாகும்; கம்பரது அரும் பெரும் புலமைப் பெற்றி இதனால் விளங்கு மல்லவா? சொல்லோசைக்கான நல்வழிகள் சொற்களின் ஓசை நலத்தைச் சிறப்பிக்கப் பண்டைப் புலவர் கையாண்ட வழிகள் பலப்பலவாகும். அவற்றுள் ஒரு சிலவற்றை ஈண்டுக் காண்போம்; செய்யுள் அடிகளிலுள்ள சீர்களின் முதல் எழுத்துக்கள் ஒத்து வருமானால் அச்செய்யுளின் ஓசை சிறந்திருக்கும். நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் முதல் எழுத்து ஒத்துவந்து விளக்குட் ஓசையின் பத்தை மோனை என வழங்குவர் யாப்பிலக்கணம் வல்லார். செய்யுளின் இறுதிப்பகுதி ஒத்துவந்தாலும் அச்செய்யுளின் ஓசை இனிக்கும். செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே இது பாரதியார் பாடல். போதினிலே, காதினிலே, பேச்சினிலே, மூச்சினிலே இவை எவ்வளவு இனிமையாக ஒலிக்கின்றன? இவ்வாறு இறுதிப் பகுதி ஒத்து ஒலித்துப் பயக்கும் இன்பமே இயைபு எனப்படும். இவ்வியைபின்பம் ஆங்கிலச் செய்யுட் களில் மிகுதி. Twinkle twinkle little star How I wonder what you are Star, are என்னும் இறுதிப் பகுதிகள் தமிழ் கூறும் இயைபு என்னும் சொல்லின்பத்தைத் தருகின்றன அல்லவா? ஆனினங் கலித்த அதர்பல கடந்து மானினங் கலித்த மலைபின் ஒழிய மீனினங் கலித்த துறைபல நீந்தி உள்ளிவந்த வள்ளுயிர்ச் சீறி யாழ் சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண! இப் பாடலைப் பாருங்கள்: ஆனினம், மானினம், மீனினம்-எவ்வளவு இனிமை? இரண்டாம் எழுத்து முதலானவை ஒத்து வந்ததாலன்றோ இவ்வினிமை. இந்த இன்பம்தான் எதுகை இன்பம் ஆகும். செய்யுளில் சில இடங்களில் ஓசை குறைந்திருக்கும். அங்குள்ள நெட்டெழுத்துக்களை மேலும் நீட்டி ஒலித்து இனிய இசையமைப்பர் நல்லிசைப் புலவர்கள். கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதும் எல்லாம் மழை கெடுப்பதும் எடுப்பதும் என்பன ஓசை குறைந்துள்ளன. இசையுணர்வு சான்ற வள்ளுவர் கெப்பதூஉம், எடுப்பதூஉம் என அங்குள்ள குறில்களை நெடிலாக்கி, மேலும் அவற்றை நீட்டி இனிய இசையமைக்கின்றார். இத்தகைய நீட்டத்தை அளபெடை என வழங்குவர். ஒருவகையான சொற்களே பன்முறை ஒரு செய்யுளில் அடுக்கி வருதலும் செவிக்கு ஓசையின்பம் பயக்கும். ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும் விளக்கினிற் சீறெரி ஒக்குமே ஒக்கும் குளக்கொட்டிப் பூவின் நிறம் துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் ஒக்கும் என்பதும், துப்பு, என்பதும், சொல் என்பதும் பன்முறை அடுக்கிவந்து இன்பந்தந்தன. இதனை இரட்டைத்தொடை என்பர் யாப்பிலக்கணக்காரர். சொற்பின் வருநிலையணி என்பர் அணியிலக்கணக்காரர். சொல் நயமும் பொருள் நயமும் சொல்லோசையின் நயம் மட்டுமா பண்டைப் புலவர்தம் பாடல்களில் நாம் காண்கின்றோம்? சொல் நயத்துடன் பொருள் நயமும் பின்னிப் பிணைந்து கூடி யியங்குவதை யல்லவா காண்கின்றோம்! ஓசை செய்யுளின் உடல்; பொருள் செய்யுளின் உயிர். இழுமென் மொழியால் விழுமியது நுவலின் என்னும் தொல்காப்பியம் செய்யுளின் உடல், உயிர் கூறவந்ததல்லவா? இழுமென்மொழி என்பது இனிய ஓசை. இது செய்யுளின் உடல். விழுமியது என்பது சிறந்த பொருள். இது செய்யுளின் உயிர். இவ்விரண்டும் கூடியியங்குவதே சீரீய செய்யுளாகும். இனிய கருத்துக்களை இனிய ஓசையிலும், இன்னாத கருத்துக்களை இன்னாத ஓசையிலும் புலப்படுத்தும் புலவர்களின் திறம் பாராட்டுதற் குரியதன்றோ? உணர்வுகளைச் சுவையென்னும் பெயரால் அழைத்தான் பண்டைத்தமிழ் மகன். மக்கள் மனத்தில் எழும் உணர்வுகள் சுவைகள் பலப்பல. அவற்றை எண் வகையுள் அடக்கிப் போந்தனர் நம் தமிழ்ப் புலவர்கள். வீரம், நகை, உவகை, வியப்பு என்பன இனிய உணர்வுகள்; அழுகை, இளிவரல், அச்சம், வெகுளி என்பன இன்னா உணர்வுகள். இவ்வுணர்வுகளை ஓவியத்தில் காட்டுதல் எளிது. காவியத்தில் தீட்டுதல் அருமை யினும் அருமை. செய்யுளின் பொருளை உணர இயலாத பாமரனும் பாவலன் தீட்டிய பாட்டோவியத்தின் ஓசையிலிருந்தே அப்பாட்டில் காட்டும் உணர்வினை நன்கு எடுத்துக் கூறுவான். சோழ வீரர் செல்லுகின்றனர். நாற்படைகளின் ஆரவாரம்; யானைப் படைகளின் முழக்கம்; குதிரைகளின் பேரொலி; தேர்களின் மணியொலி; வீரர்களின் வீர ஆரவாரம். இத்தகைய வீர உணர்வைப் பாட்டில் அமைக்கின்றார் பெரும் புலவர் சயங்கொண்டார். எடுமெடு மெடுவென எடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே விடுவிடு விடுபரி சூரிக்குழாம் விடுவிடு மெனுமொலி மிகைக்கவே இப்பாட்டே வீர கர்ச்சனை புரிகின்றது; பேராரவாரம் செய்கின்றது; பெருமிதத்துடன் நடக்கின்றது; இப்பாட்டில் வீரச்சுவை பெருமித உணர்வு பொங்குகின்றது. இதனைச் சொல்லியா தெரியவேண்டும்? பாட்டே அறிவிக்கின்றதல்லவா? ஒரு தலைவன் பதினாறாண்டு நிரம்பப் பெறாதவன்; தன் தோழர் பலருடன் வேட்டையாடச் செல்கின்றான்; நெடுநேரம் வேட்டையாடிக் களைக்கின்றனர்; தலைவன் தனியே யானையைத் துரத்தியடித்திச் சோலை ஒன்றில் நுழைகின்றான்; அங்குத் தாமரையை வென்ற முகமும், குவளையை வென்ற கண்ணும், காந்தளை வென்ற கைகளும் கொண்ட கொடியனை யாள் ஒருத்தி ஒரு மர நிழலில் ஒதுங்குகின்றாள்; பன்னிரண்டு வயதிற் சிறிது குறைந்தவள். இவ்வழகியைக் கண்டு காதல் கொள்கின்றான் தலைவன்; தான் நோக்குங்காலை அவள் நிலம் நோக்குகின்றாள்; தான் நோக்காக்காலை அவள் தன்னை நோக்கி மெல்ல நகுகின்றாள்; இதிலிருந்து அவளும் தன்பால் காதலுடையாள் என்பதை நன்கு உணர்கின்றான். இருவர் அன்பிற்கும் எல்லையில்லை. இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார். காதலின் பின் இருவரும் ஒருவரையொருவர் பாராட்டுகின்றனர். தலைவன் தலைவியை முன் பின் அறியான்; அவளும் அப்படியே. தலைவன் தாய்க்கும் தலைவி தாய்க்கும் எவ்வகை உறவுமில்லை. தலைவன் தந்தையும் தலைவி தந்தையும் எவ்வகை முறையும் உடையாரல்லர். அவ்வாறிருக்கவும் இருவர் நெஞ்சமும் ஒன்று கலந்தன. செந்நிலத்தில் பெய்த நீர் அந்நிறமாய் மாறி ஒன்றுபடும். அது போலவே இருவர் மனமும் ஒன்றுபட்டன. இதனைப் புலவர், தலைவன் வாயிலாகச் சித்திரிக்கின்றார்: யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்துறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சந் தாம்கலந் தனவே. இப்பாட்டில் காதற் பொருள் பொங்குகின்றது. பொருள் மட்டுமா காதல்? ஓசையுடன் படியுங்கள்: ஓசையும் காதல் ஓசை; வல்லெழுத்துக்கள் பெரும் பாலும் கலக்கவில்லை. மெல்லினமும் இடையினமுமாகிய எழுத்துக்களைக் கொண்டே இப்பாடல் மென்மையாக இனிமையாக அமைந்து காதலாகிய உவகைச் சுவையை இசைக்கின்றது. தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. என்பது வள்ளுவர் காட்டும் காதற் சித்திரம். இதிலும் காதலுக்குரிய மெல்லோசையமைந்து பாட்டு இனிக்கிறது. இவரே சில இடங்களில், வல்லோசையமைத்து வெறுப் புணர்வைப் புலப்படுத்துதலையும் காண்கிறோம். எற்றிற் குரியர் கயவர்ஒன்றுற்றக்கால் விற்றற் குரியர் விரைந்து. இப்பாட்டு வெறுப்புப்பாட்டு. கயவரை வெறுக்கும் இளிவரல் உணர்ச்சி பொருளால் மட்டுமன்றிச் சொல்லாலும், சொல் ஓசையாலும் வெளிப்படுத்து கின்றதல்லவா? பொருளில் ஓசையைப் பிணைத்தல் எப்பொருளின் இயல்பையும் பாட்டில் அழகுறப் புலவர் கூறுவர். பொருளுடன் அதற்குரிய ஓசையைப் பிணைக்கும் புலவரியல்பு போற்றற்குரியது. தலைவன் சில பெரியோர்களை அழைத்துக் கொண்டு தான் காதலித்த தலைவியை மணம் பேசச் செல்கின்றான். அவ்வியல்பைப் புலவர் கூறுகின்றார். நெறியறி செறிகுறி புரிதிரி பறியா அறிவனை முந்துறீஇந் தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவர் இனமாக சேய்உயர் வெற்பனும் வந்தனன்-இனியே. இப்பாடலைக் கவனியுங்கள். நெறியறி குறிசெறி எனவும் தகை வகை தொகை மிக எனவும் வரும் ஓசை வேறுபாடுகள்மணம் பேசச் செல்வோருடன் இயங்கிக்கொண்டு செல்லும் பலவகை மண வாத்தியங்களின் ஒலி போலல்லவா இசைக்கின்றன! தமிழர் தம் நிலைகண்டு இரங்குகின்றார் ஒரு புலவர். உணவில்லை, கதியில்லை-இத்துன்ப நிலைகள் யாவும் விரைவில் ஒழிய வேண்டும் என்று கருதுகின்றார். புலவர்கள் தாம் கருதியது முடிந்தது போலவே பாட்டில் அமைத்து விடுவார்கள். அவ்வியல்பில் இப்புலவரும் பாடுகின்றார். இலையே உணவிலையே கதிஇலையே எனும்எளிமை இனிமேலிலை எனவேமுர சறைவாய் முரசறைவாய். இதுதான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாட்டு. இல்லை என்ற சொல் இரவலனும் வெறுக்கும் சொல். அவ் ஒலியே துன்பத்தை விளைப்பது. துன்ப ஒலியை இன்ப ஒலியாக்கும் கவிஞர் இயல்பினை என்னென்பது! இன்னொரு புலவரைப் பாருங்கள்: ஓர் அழகி, பாம்பின் படமனைய இடையாள்: ஒரு கையால் மத்தளத்தை ஒலிக்கின்றாள்; மற்றொரு கையால் வாள் கொண்டு சுழற்றுகின்றாள். அவளது ஆடல் கண்ணுக்கு இனிமை தருகின்றது. அவளது மத்தள ஒலி காதுக்கு இனிமை தருகின்றது. அது தாம் தாம் என முழங்குகின்றது அம்முழக்கம் வெறும் தாம் தாம் அல்ல. அவை நமக்குப் பல உண்மைகளை எடுத்தியம்புகின்றன. அவள் கொங்கைகள் மலைதாம், மலைதாம், அவள் கண்கள் மலர்தாம், மலர்தாம், அவள் தோள்கள் வேய்தாம், வேய்தாம்-இவ்வுண்மைகளை நமக்கறிவிப்பதுபோல் அவளது மத்தளம் முழங்குகின்றது. இதோ அப்பாடல்: விடஞ்சூழ் அரவின் இடைநுடங்க மென்வாள் வீசி விரையார்வேங் கடஞ்சூழ் நாடன் காளிங்கன் கதிர்வேல் பாடும் மாதங்கி வடஞ்சூழ் கொங்கை மலைதாந்தாம் வடிக்கண் நீல மலர்தாந்தாம் தடந்தோள் இரண்டும் வேய்தாந்தாம் என்னும் தன்மைத் தண்ணுமையே. புலவரின் மத்தள ஓசையைக் கேட்டீர்களா? மத்தள ஓசையில் அவர் காணும் நயத்தை அறிந்தீர்களா? ஓசையும் பொருளும் இணைந்து இன்பந்தருதல் இதுவன்றோ? மேலே கூறிய இவையன்றித் தமிழில் உள்ள ஓசை நயங்கள் அளவிலவாகும். வண்ணம், சந்தம், சிந்து முதலிய ஓசை வகைகளும், குறிஞ்சி, முல்லை, மருதம் முதலிய பண்வகைகளும், குரல், துத்தம், கைக்கிளை முதலிய இசை வகைகளும் பிறவும் இன்பந்தரும் இசை வேறுபாடுகளாகும். தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி, திருப்புகழ், குறவஞ்வி முதலிய நூல்கள் இவ்விசைகளைக் கூறும் இனிய நூல்களாகும். இங்ஙனம் புலவர்கள் பலப்பல உணர்வுகளையும், கருத்துகளையும், சுவைகளையும், சொல்லோவியமாகத் தீட்டுகின்றனர்; அவற்றிற்கேற்ற சொல்லோசைகளையும் பொருளுடன் நுழைத்துக் காட்டுகின்றனர். பொருளும் ஓசையுமே பாட்டின் உயிரும் உடம்பும் என்பதை அவர்கள் மறவாது போற்றி வந்தனர் என்பது அறிந்து இன்புறுவோமாக! 4.வஞ்சி மாநகர் முன்னுரை தமிழ்மொழி பேசப்பெற்ற நிலப்பகுதி, ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன் வடக்கே வேங்கடத்தையும், தெற்கே குமரி முனையையும், கிழக்கே வங்கக்கடலையும், மேற்கே அரபிக்கடலையும் எல்லைகளாகப் பெற்றிருந்தது. அப்பொழுது தமிழகம் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என மூன்று பகுதிகளாகப் பிரிந்திருந்தது. சேரநாடு என்பது மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் அரபிக்கடலுக்கும் இடைப்பட்டு, வடக்கே ஏறத்தாழ மங்களூரையும் தெற்கே கன்னியா குமரியையும் எல்லைகளாக உடையது. அதாவது, இன்றைய திருவாங்கூர் கொச்சி நாடுகளும். மலையாள மாவட்டமும் சேர்ந்த நிலப்பகுதியே பழைய சேரநாடு என்பது. சேர நாட்டின் தலைநகர் வஞ்சிமாநகரம் என்று 1800 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட தமிழ் நூல்கள் கூறுகின்றன. அந்நகரைத் தலைநகராகக்கொண்டு சேர மன்னர்கன் பல நூற்றாண்டுகள் சேரநாட்டை ஆண்டுவந்தனர். சேரநாடு மலைநாடு. அங்கு மிளகு மிகுதியாக விளைகின்றது. காடுகளில், அகில், சந்தனம், தேக்கு முதலிய மரங்கள் உண்டு. சேரநாட்டில் யானைத் தந்தம் மிகுதி. இப்பொருள்கள் எல்லாம் சேர நாட்டிலிருந்து சீனம் முதலிய கிழக்கு நாடுகளுக்கும், அரேபியா, எகிப்து, கிரீ முதலிய மேல்நாடுகளுக்கும் ஏற்றுமதியாயின. அங்கிருந்து பட்டு, கண்ணாடிப் பொருள்கள், வாசனைப்பொருள்கள், பல வகை இயந்திரக் கருவிகள் முதலியன சேர நாட்டில் இறக்குமதியாயின. கி. பி. முதலிரண்டு நூற்றாண்டுகளில் இக்கடல் வாணிகம் மிக வுயர்ந்த நிலையை அடைந்தது. அந்த நூற்றாண்டு களில்தான் தமிழ்ச் சங்க நூல்கள் என்று சொல்லப்படும். சிலப்பதிகாரம், மணிமேகலை, சேரர்களைப்பற்றிய பதிற்றுப் பத்து முதலிய நூல்கள் புலவர்களால் பாடப்பட்டன. அக்காலத்தில்தான் மேனாமுகளைச் சேர்ந்த ப்ளினி, பெரிப்ள என்னும் நூலின் ஆசிரியர், தாலமி என்பவர்கள் மேனாட்டுக் கப்பல்களில் வந்து, கடல் வாணிகம் சம்பந்தமான பல செய்திகளைக் குறித்திருக்கிறார்கள். அவர்கள் அந் நூல்களில் தமிழ் நாட்டுத் துறைமுக நகரங்கள் இவை, ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் இவை, இந்த இந்த நாடுகளில் இந்த இந்த அரசர் ஆண்டு வந்தனர் என்பன போன்ற பல விவரங்களைக் குறித்துள்ளனர். அவை பெரும்பாலும் முன் சொன்ன தமிழ் நூல்களில் காணப்படும் விவரங்களோடு பெரிதும் ஒத்திருக் கின்றன. இவ்வாறு கடல் வாணிகத்தில் சிறந்து இருந்த தமிழகத்தின் ஒரு பகுதியாகிய சேர நாட்டின் துறைமுகங்களாக நாரா, திண்டி, முசிரி, வகாரே என்பன குறிக்கப்பட்டுள்ளன. நாரா என்பது சங்க நூல்களில் நறவு எனப்படும். திண்டி என்பது சேரநாட்டின் மற்றொரு துறைமுகமாகும். அது தொண்டி எனத் தமிழ் நூல்களில் கூறப்படுகிறது. அது இக் காலத்தில் கடலுண்டி அல்லது கொயிலாண்டி எனப்படுவது என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். முசிரி என்பது முயிறிக்கோடு அல்லது முயிறி என்று தமிழில் வழங்கப்பட்டது. வகாரே என்பது கோட்டயத்திற்கு நேர் எதிராக இருக்கும் கடற்கரைப்பட்டினமாகிய வைக்கரை. வஞ்சி மாநகரம் இதுவரை சேரநாட்டின் விளைபொருள்களையும் கடல்வாணிகத்தையும், துறைமுகப்பட்டினங்களையும் பற்றிக் கவனித்தோம். இனிச் சேரர் தலைநகரான வஞ்சி மாநகரத்தைப் பற்றித் தமிழ் நூல்கள் கூறும் விவரங்களைக் காண்போம்: வஞ்சிமாநகரம் கோட்டையைத் தன்னகத்தே கொண்ட அகநகரையும், கோட்டைக்கு வெளியே புறநகரையும் கொண்டிருந்தது. புறநகரில் அழகிய பூஞ்சோலைகளும் இயந்திரவாவிகளும், சைவ வைணவக் கோவில்களும், பௌத்த விகாரமும், சமணப்பள்ளியும் இருந்தன. அங்கு அருந்தவம் புரிந்த முனிவர்களும், மறை நூல்களைக் கற்று மன அமைதி கொண்ட அறவோரும், பண்டை நூல்களைக் கற்று அறநெறிப் படி நடந்த புலவர்களும் வாழ்ந்து வந்தனர். அப்புறநகரில் கிழக்குக் கோட்டைவாசல் பக்கத்தில் சமண முனிவர்கள் இருந்த கோவில் ஒன்று இருந்தது. அது குணவாயிற் கோட்டம் எனப்பட்டது. அதனில் சேரன் செங்குட்டுவனுக்குத் தம்பியாகும் சமணமுனிவரும் முத்தமிழ்க் காவியமாகிய சிலப்பதிகாரத்தைச் செய்த வரும் ஆகிய இளங்கோ அடிகள் வாழ்ந்திருந்தார். புறநகரின் மற்றொரு பக்கத்தில் ஒரு சோலையில் வேள் ஆவிக்கோ மாளிகை (அதாவது ஆவிக்கோ என்ற பிரபுவின் மாளிகை) ஒன்று இருந்தது. சேர அரசர்கள் அவ்வப்பொழுது அம் மாளிகைக்குச் சென்று தங்குவது வழக்கம். மேலும் அப்புறநகரில் தத்தம் மதக்கோட்பாடுகளைக் கூறவல்ல மதவாதிகள் பலர் வாழ்ந்துவந்தனர். அவர்களுள் (1) அளவைவாதி (2) சைவவாதி, (3) பிரமவாதி, (4) வைணவவாதி, (5) வேதவாதி, (6) ஆசீவகவாதி, (7) நிக்கந்தவாதி, (8) சாங்கியவாதி , (9) வைசேடிகவாதி, (10) பூதவாதி என்பவர் குறிக்கத்தக்கவர். அகழி புற நகருக்கும் அக நகருக்கும் இடையே கோட்டையைக் சூழ்ந்து ஆழமாக அகழி இருந்தது. அவ்வகழியில் பலவகை மீன்களும், கராம், இடங்கர் என்ற முதலையினங்களும் இருந்தன. தாமரை, குவளை, கழுநீர், ஆம்பல் என்னும் பல நிறப்பூக்கள் நீர்மேல் பரவப்பெற்றிருந்தன. அவ்வகழியில் அந்நகரிலிருந்து வீடுகளில் சிந்துகின்ற நிரை நிலத்திற்குள்ளாகவே மறைத்துக் கொண்டு வந்த கழிநீர்ப்பாதைகளும் இருந்தன. அப்பாதைகள் வழியாக வஞ்சி மகளிர் தமது கரிய கூந்தலை ஆட்டிய நறுமணக் கலவையை உடைய நீரும், இயந்திர வாவிகளில் ஆடவரும் மகளிரும் நீராடும்பொழுது அவர் அணிந்த சாந்து கழுவப்பெற்ற வாசனை நீரும், மன்னன் பிறந்த நன்னாளில் குடிமக்கள் ஒருவர் மேல் ஒருவர் வீசிக்கொள்ளும் நறுமண நீரும், சிறப்புடைய முனிவர் திருவடிகளைப் பக்தர்கள் தம் கைகளால் விளக்கிய நன்னீரும், தண்ணீர்ப் பந்தல்களில் இருந்த குடங்களிலிருந்து கீழே சிந்திய மணம் பொருந்திய நீரும், பல வகை வாசனைப் பொருள்களைச் சேர்த்து அரைத்தபொழுது சிந்தப்பட்ட நீரும் நாள்தோறும் அகழியிற் கலந்தன. அக்கலப்பினால் முதலை யினங்கள் மீதும், மீன் இனங்கள் மீதும் பொருந்தியிருந்த புலால் நாற்றம் மறைந்தது. இச்சிறப்புடைய அகழியை அடுத்து அந்நகரின் கோட்டை மதில் வானுற் ஓங்கி வளம்பெற உயர்ந்திருந்தது. கோட்டை கோட்டை மதிலின் மேல் போருக்குரிய பல வகை இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. கோட்டை மதில்மீது காவலர்கள் காவல் காத்து வந்தனர். வெள்ளி மலையை நடுவில் பிளந்தாற் போல வெண்மையான கோட்டை மதிலின் நடுவில் கோட்டைவாயில் உயர்ந்து காணப்பட்டது. கோட்டை வாயில்மீது சேரனது விற்கொடி பறந்து கொண்டிருந்தது. கோட்டை மதிலுக்கும் மக்கள் வாழ்ந்த தெருக்களுக்கும் இடையில் பசுமையான காவற்காடு இருந்தது. கோட்டையைக் காக்கும் வீரர்கள் அவ்விடத்தில் தத்தம் போர்க்கருவிகளுடன் இருந்தனர். தெருக்கள் காவற்காட்டை அடுத்து இருந்த தெருக்களில் கோட்டை வாயிலைக் காத்துவந்த காவலாளர்கள் வாழ்ந்தனர். அத்தெருக்கள்அகன்று நீண்டு இருந்தன. அடுத்துப் பலவகை மீன்களை விற்கும் பரதவரும், உப்பு விற்பவரும், கள் விற்பவரும், பிட்டு விற்பவரும், அப்பம் விற்பவரும், இறைச்சி விற்பவரும், வெற்றிலை விற்பவரும், பலவகை வாசனைப்பொருள்களை விற்பவரும் வாழ்ந்த தெருக்கள் இருந்தன. அடுத்து, மண்பாத்திரங்கள் செய்பவரும், செப்புப்பாத்திரங்கள் செய்பவரும், வெண்கலப் பாத்திரங்கள் செய்பவரும், பொற்கொல்லரும், பொன்னை உருக்கும் தட்டாரும், தச்சரும், மண் முதலியவற்றைக்கொண்டு பாவை முதலியவற்றைச் செய்யும் சிற்பத் தொழிலாளரும், கடவுளர் உருவங்களை எழுதவல்ல ஓவியரும், தோலைப் பதனிட்டு உறை முதலியன செய்பவரும், தோல் தையல் வேலை செய்யும் செம்மாரும் வாழும் தெருக்கள் இருந்தன. அடுத்து, பலவகை மாலைகளைக் கட்டுபவரும், சோதிடநூல் வல்லவரும், பலவகை இசைக்கருவிகளை இசைக்கவல்ல பாணரும் வாழ்ந்த தெருக்கள் விளங்கின. அடுத்து, வெண்மையான சங்குகளை அறுப்பவரும், முத்துக்களைக் கோப்பவரும் வாழ்ந்த தெருக்கள் இருந்தன. அவற்றை அடுத்து, அரசர்க்காடும் கூத்து, மற்றவர்க் காடும் கூத்து என்னும் இருவகைக் கூத்துக்களிலும் பண்பட்ட நாடக மகளிர் நலம் பெற வாழ்ந்த தெருக்கள்இருந்தன. அவற்றுக்கப்பால், நெல், கம்பு, வரகு, தினை, சோளம், சாமை, துவரை, மூங்கிலரிசி என்னும் எட்டுவகைத் தானியங்கள் வேறு வேறு பகுதியாகக் குறிக்கப்பட்ட தானியக் கடைத்தெரு இருந்தது. அடுத்து, அரசனை நின்று பாடும் மாகதரும், இருந்து பாடும் சூதரும் பலவகைப் பாடல்களுக்கும் தாளங்களுக்கும் ஏற்ப ஆடும் வைதாளிகரும் வாழும் தெரு இருந்தது. அடுத்து, போகவேட்கை மிகுந்து வந்த ஆடவருக்கு அதனைக் கொடுத்து அவர்களை அத்துறையில் எல்லை கடவாமற் செய்த பொது மகளிர் நிறைந்து வாழ்ந்த தெரு இருந்தது. அடுத்து, கண்களால் பார்ப்பதற்கும் அருமையான நுட்பமான நூலைக்கொண்டு பல நிற ஆடைகளை நெய்யும் தொழிலாளர் தெருக்கள் இருந்தன. பொன்னை உறைத்துப் பார்த்து அதன் மாற்றினை கூறுவோர் வாழும் வளமனைகளைக் கொண்ட தெரு அடுத்து இருந்தது. இரத்தினம், புஷ்பராகம், வைரம், வைடூரியம், மாணிக்கம் முதலிய பலவகை மணிகளை விற்கும் வாணிகர் வாழும் வளம்பெற்ற தெருவும், வேதங்களில் வல்ல அந்தணர் வாழ்ந்த தெருவும், அரச மரபினர் வாழும் அகன்ற பெருந்தெருவும் அமைச்சர்கள் வாழும் பெருந்தெருவும், சேனைத் தலைவர் முதலிய அரசாங்க அலுவலர் வாழ்ந்த தெருக்களும் இருந்தன. அடுத்து, புதியனவாகக் கொண்டு வந்த யானைகளையும் குதிரைகளையும் நடையில் சிறப்புறப் பழக்கும் யானைப் பாகரும், குதிரை ஆட்களும் வாழும் அழகிய தெருக்கள் இருந்தன. அங்கங்கு அம்பலங்களும், முச்சந்திகளும் நாற்சந்திகளும் இருந்தன. சோலை முதலியன மிக்க உயரத்திலிருந்து கீழே விழும்படி அமைந்த அருவி பொருந்திய கட்டு மலைகளும், பார்ப்பவர்க்கு மகிழ்ச்சியை யூட்டும் நறுமணச் சோலைகளும், சுவைமிகுந்த நீரினையுடைய பொய்கையும், அன்ன சத்திரங்களும், பொன்னால் அமைந்த அம்பலங்களும், சமய உண்மைகளை ஓவியங்களைக்கொண்டு விளக்கும் தவச்சாலைகளும் சிறப்புற்று இருந்தன. அரண்மனை சேர மன்னனது செழுமை மிகுந்த அரண்மனை பொருட் செல்வம் அனைத்தும் தங்கப்பெற்றதாக இருந்தது. அரண்மனை வாசல் மிக உயர்ந்து காணப்பட்டது. அரண்மனைக்குள் உயர்ந்த மாட மாளிகைகள் மிகுந்திருந்தன. அரசப் பெண்மணிகள் வாழும் அந்தப்புர மாளிகைகளும், அரசனைச் சார்ந்த பலவகைக் கட்டடங்களும், அரசனின் சபாமண்டபமும், கோவிலும், நாடக அரங்கும், பிறவும் பொலிவுற்று விளங்கின. இங்ஙனம் சிறப்புற்று விளங்கிய வஞ்சி மாநகர் எது என்பது அடுத்துக் கவனிக்கவேண்டும் செய்தியாகும்: (1) பல வளங்களும் நிறைந்த சேரர் கோ நகரமாகிய வஞ்சி மாநகரத்தைச் சுற்றிப் பெரியாறு ஓடிக் கடலோடு கலந்தது. அது சுள்ளி ஆறு என்றும், ஆன் பொருநை என்றும், வேறு பெயர்கள் பெற்றிருந்தது. கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள் நதிகள் எனப் பெண்பாலிலும், மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் நதங்கள் என ஆண்பாலிலும் வழங்குவது வடமொழி வழக்காகும். அதையொட்டியே மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகிக் கிழக்கு நோக்கித் திருநெல்வேலியில் பாயும் ஆற்றுக்குப் பொருநை என்றும், அதே மலைத்தொடர்ச்சியில் உற்பத்தியாகி மேற்கு நோக்கிப்பாயும் ஆற்றுக்கு ஆன் பொருனை என்றும் பெயர்கள் வழங்கலாயின, என்று நினைப்பது தவறாகாது. சேரநாட்டில் ஓடும் ஆறுகளை நோக்க, வஞ்சியைச் சூழ்ந்து ஓடிய ஆறு பெரியதாய் இருந்த காரணத்தால், பெரியாறு எனப் பெயர்பெற்றது என்பது பொருந்தும். (2) கோவலன் மதுரையில் கொலையுண்ட பிறகு கண்ணகி வையைக்கரை வழியே மேற்கு நோக்கிச் சென்று மலை நாட்டிலுள்ள திருச்செங்குன்று என்னும் மலைமீது ஏறி, அதன் மறுபுறம் சென்று, ஒரு வேங்கை மரத்தின் கீழ் நின்றாள் என்பது சிலப்பதிகாரக் கூற்று. ஐவகை ஆறு மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அண்மையில் மதுரை மாவட்டத்தில் வருஷநாடு ஆண்டிப்பட்டி மலைத் தொடரில் தோன்றுகிறது என்பதை அனைவரும் அறிவர். எனவே, கண்ணகி மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாண்டிச் சேரநாட்டிற்குச் சென்று மேலுலகம் சென்றாள் என்பதே பொருள். இது செங்குட்டுவன் மனைவி யாகிய இளங்கோ வேண்மாறாம் நம் அகல் நாடு அடைந்த இப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் என்று கூறியதிலிருந்தும் அறியலாம். (3) செங்குட்டுவன் வடநாடு சென்றபொழுது வஞ்சியை விட்டுக் கடற்கரை வழியே சென்று நீலகிரியை அடைந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வுண்மைகளை நோக்க, வஞ்சிமா நகர் சேரநாட்டில் மேல் கடற்கரையை அடுத்து இருந்ததாகக் கொள்ளல் பொருத்த மென்பது தோற்றுகிறது. (4) சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று மீண்ட அன்று மாலை பறையூரில் இருந்து சாக்கையன் ஒருவன் வந்து அரண்மனை அரங்கத்தில் சிவபெருமான் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் நடனத்தை ஆடிக்காட்டினான் என்பது சிலப்பதிகாரக் கூற்று. இப்பறையூர் இக்காலத்தில் சேரநாட்டில் பரூர் என்று வழங்கப்படுகிறது என்றும், அங்குச் சாக்கைக் கூத்தினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவையனைத்தையும் நோக்க, சேர நாட்டுக் கடற்கரை ஓரத்திலேயே பெரியாற்றங்கரையில் வஞ்சிமாநகரம் இருந்திருக்க வேண்டும் என்னும் எண்ணம் வலுப்படும். வஞ்சி மாநகருக்குக் கருவூர் என்னும் மற்றொரு பெயர் பண்டைக் காலத்திலேயே இருந்தது என்பது சங்கப் புலவவரான நக்கீரர் பாடலால் (அகம். 83) தெரிகிறது. அதே புலவர் முசிரி என்னும் துறைமுகம் சேரர்க்கு உரிய சுள்ளி என்ற பேராற்றங்கரையில் இருந்ததாகக் கூறுகின்றார் (அகம். 149). இன்றுள்ள பெரியாறு கடலோடு கலக்கும் இடத்தில் முசிரி இருந்தது என்பதை இச்செய்யுள் குறிப்பாகக் காட்டும். பெரியாறு கடலோடு கலக்கும் இடத்தைச் சுற்றியுள்ள நிலப் பகுதியை நன்கு ஆராய்ந்தால் உண்மை விளங்கும். அப்பகுதியை நன்கு ஆராய்ந்த காலஞ் சென்ற வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் ள. கிருஷ்ணசுவாமி ஐயங்கார் அவர்கள் கீழ்வருமாறு கூறுகின்றனர்: எர்ணகுளத்திற்கு வடக்கே தள்ளியும், பொன்னாணியி லிருந்தும் சற்றுத் தூரத்தில் உள்ள சேற்று வாய் என்னும் துறைமுகம் வரை பரவியும் கடலிலிருந்து சிறிது தூரத்தில் வடக்கு தெற்காக நீண்டு கிடக்கும் காயல் ஒன்று இருக்கிறது. அக்காயல் முழுவதிலும் பெரியாற்றின் முகத்துவாரத்திலிருந்து வடக்கில் ஏறக்குறைய 10 மைல் அளவு வரையிலும் சிறு கிராமங்கள் பல இருக்கின்றன. அவற்றில் பலவற்றின் பெயர்கள் முழுமையாகவோ பகுதியாகவோ கருவூர் என்று காணப் படுகிறது. பல ஊர்கள் கருர்ப் பட்டினம் என வழங்குகின்றன. அவற்றின் ஒரு கோடியில் திருக்கணா மதிலகம் என்று மலையாளிகள் அழைக்கும் இடம் ஒன்று இருக்கிறது. இது திருக்குண மதிலகம் அதாவது கிழக்குக்கோட்டை மதிலை அடுத்துள்ள மாளிகை எனப் பொருள்பெறும். இதுவே சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தங்கியிருந்த குணவாயில் கோட்டம் என்பது. வஞ்சிநகரக்கோட்டையின் கிழக்கு மதில் இவ்விடத்தில் இருந்திருக்கவேண்டும். அழிக்கோடு என்பது பெரியாறு கடலில் கலக்கும் சங்கம் அல்லது அழி முகத்தில் இருக்கும் ஊர் ஆகும். ப்ளினியும் பிறரும் குறிப்பிட்ட முசிரி இருந்த இடம் பெரும்பாலும் இதுவாக இருக்கலாம். இதிலிருந்து மேற்கில் வடசாயலாக இரண்டு மைல் தூரத்தில் திருவஞ்சிக் குளம் இருக்கின்றது. அங்குத்தான் சேரமான் பரம்பா எனப்படும் தூபி இருக்கிறது. அங்கிருந்து அதே திசையில் சிறிது தூரத்தில் இக்காலத்துக் கொடுங்கலூர்க் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலிருந்து சிறிது தூரத்தில் சதுக்கபூதத்தின் உருவச்சிலை இருக்கின்றது. இப்பரந்த இடம் முழுவதும் கருவூர் வடக்கு என்றும் கருவூர் தெற்கு என்றும் கொச்சி அரசாங்க நில அளவை உருவப் படங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இப்பரந்த இடம் வஞ்சி அல்லது கருவூர் எனப் பெயர் பெற்றிருந்தது என்பதும், அதன் ஒரு பகுதி கடலுக்கு அருகில் நேராகவோ, காயல்வழியாகவோ அதனுடன் தொடர்பு கொண்டிருந்தது பற்றியே கருவூர்ப் பட்டினம் என்று வழங்கியது என்பதும் தெளிவாகின்றன. பெரியாற்றினால் சூழப்பட்ட வஞ்சிமா நகரம் இருந்த இடத்தை இவ்வெல்லைக் குள்ளாகவே நாம் தேட வேண்டும். இன்றுள்ள பெரிய பாதை ஒன்று அழிக்கோடு இருக்கும் இடத்தில் பெரியாற்றிலிருந்து புறப்பட்டு இரண்டு கிளைகளாக வடக்கு நோக்கிச் செல்கிறது. அவற்றில் ஒன்று கரை வழியே நேர் வடக்காகச் செல்கிறது மற்றொன்று வடக்கிழக்காகக் காயல்கரை வழியே சென்று சிறிது துரத்திற்கு அப்பால் முக்கிய பாதையுடன் சேருகிறது. அம்முக்கிய பாதை சிறிது வடக்கில் சென்ற பிறகு மேலும் இரண்டாகப் பிரிகிறது. அவற்றுள் தலைப்பாதை, கரையை அடுத்தாற்போலக் கள்ளிக்கோட்டை வரை செல்லுகிறது. கிளைப்பாதை, பொன்னாணி காயலின் பக்கமிருந்து கிழக்கு நோக்கித்திரும்பி மேற்கு மலைத்தொடரை அடுத்த குன்று நிறைந்த பிரதேசத்தைக் கடந்து பாலக்காட்டுக் கரையில் வடபகுதி வழியாகச் சென்று நீலகிரி மலையை அடைகின்றது. பின் கூறப்பட்ட இப்பாதையே சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் சேனை சென்றதாகக் கூறப்படும் வழியுடன் பொருந்துகிறது. முடிவுரை இதுவரையில் சொன்ன விவரங்களை நோக்க, வஞ்சி என்பதும் கருவூர் என்பதும் வஞ்சிக்குளம் என்பதும் இவ்விட மாகவே இருத்தல் வேண்டும் என்று முடிவு கூறுதல் பொருத்தமாகும். 5.பல்லவர் வளர்த்த கலைகள் மனிதனது உள் உணர்ச்சியிலிருந்து பெருக்கெடுத்து வெளிப்படும் அறிவு ஆற்றலே கலை என்பது. இந்த ஆற்றல் அவரவர் திறமைக்கு ஏற்பக் காவியமாக வெளிப்படும்: ஒவியமாக வெளிப்படும்; கண்ணைக் கவரும் கட்டடமாகக் காட்சியளிக்கும். கருங்கல்லில் அழகு மிகுந்த உருவச் சிற்பமாக வெளிப்படும்; இசையாக வெளிப்படும்; நடனமாகக் காட்சியளிக்கும். இத்தகைய பல கலைகளில் இசை, நடனம், ஓவியம், சிற்பம் முதலியன நுண்கலைகள் எனப்படும். இக்கலைகளைப் போற்றி வளர்த்த நாடுகளே நாகரிக நாடுகள் என்று அறிஞர் கருதுகின்றனர். எகிப்து, பாபிலோனியா, சிந்துவெளி, ரோமப் பெருநாடு முதலிய பண்டை நாடுகள் இக்கலையை நன்கு வளர்த்தன என்பது, அங்கு இன்றளவும் கிடைக்கும் காட்சிப் பொருள்களால் அறியக் கிடக்கின்றது. இவ்வாறே இக்கலைகளை வளர்த்த பெருமை நமது தென்னந்திய அரசர்களுக்கும் உண்டு. ஏறத்தாழக் கி. பி. 300 முதல் 900 வரை தென்னாட்டிடன பெரும் பகுதியை ஆண்ட பல்லவர்கள் காலத்திலும், அவர்க்குப் பின் 1300 வரை ஆண்ட சோழர்கள் காலத்திலும், அவர்க்குப் பின் நாடாண்ட விஜய நகர அரசர்கள் காலத்திலும் இக்கலைகள் மிக்ச் செம்மையான முறையில் போற்றி வளர்க்கப்பட்டுள்ளன என்பது, அவர்கள் விட்டுச் சென்ற சின்னங்களைக் கொண்டும், இலக்கியங்களைக் கொண்டும் நன்கறியலாம். கி. பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மகேந்திர பல்லவன் முதலிய பல்லவர்கள் கலைவளர்ச்சியில் பெரிதும் ஈடுபட்டார்கள். இப்பிற்காலத்தில் காவியம், ஓவியம், இசை, நடனம், நாடகம், கட்டடம் முதலிய கலைகள் பெரும் சிறப்புற்றன. கல்வி வேதங்கள், உபநிஷத்துக்கள், 64 கலைகள் என்பவற்றையும் இவற்றுள் சிலவோ பலவோ கற்பிக்கவும் பல்லவர் தலைநகரமான காஞ்சியில் மிகப் பெரிய வடமொழிக் கல்லூரி ஒன்று இருந்தது. கதம்ப அரச மரபைத் தோற்றுவித்த மயூர சர்மன் குந்தள நாட்டிலிருந்து இக்கல்லூரிக்கு வந்து கல்வி கற்றவன் எனின், தென்னிந்தியாவிலே இது முதல் தரமான கல்லூரியாக இருந்திருத்தல் வேண்டும் அல்லவா? அரக்கோணத்தையடுத்த சோழிங்கர், பல்லவர் காலத்தில் கடிகாசலம் எனப்பட்டது. அங்கும் ஒரு கடிகை (கல்லூரி) இருந்தது என்பதை இப்பெயர் வலியுறுத்துகின்றது. காவேரிப் பாக்கம் பெருமாள் கோவிலையடுத்து ஒரு வடமொழிக் கல்லூரியும், கடலூரிலிருந்து புதுவைக்குச் செல்லும் வழியில் உள்ள பாஹூரில் ஒரு வடமொழிக் கல்லூரியும் இருந்தன. பாஹூர் கல்லூரியில் நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், மீமாம்சை, நியாயம், தருமசாத்திரம், புராணம், மருத்துவம், வில்வித்தை, இசை, பொருள் நூல் என்னும் 18 வகை வித்தைகளும், 14 கலைகளும் கற்பிக்கப்பட்டன என்பது பாஹூர்ப் பட்டயங்களில் குறிக்கப்பெற்றுள்ளது. கலைகளில் வல்ல பிராமணர்க்குப் பல்லவ வேந்தர் பல ஊர்களையும், நிலங்களையும் மான்யமாக வழங்கினர். அத்தகைய ஊர்களே பிரம்மபுரி, பிரம்மதேசம், புத்தூர், மங்கலம் எனப் பலவாறு பெயர்பெற்றன. பல்லவர் காலத்தில் திருப்பாதிரிப் புலியூரில் மிகப்பெரிய சமணமடம் ஒன்று சமயக்கலை வளர்ச்சியில் மிகுதியாக ஈடுபட்டிருந்தது. அங்குப் பாலி மொழியில் இருந்த சமண சமய நூல்கள் வடமொழியில் பெயர்த்து எழுதப்பட்டன. அந்த மடமும், காஞ்சியில் வேகவதி ஆற்றங்கரையில் இருந்த சமண காஞ்சியில் இருந்த சமணமடமும் பல்லவர் ஆதரவைப் பெற்றனவாகும். நாகை, போதிமங்கை, காஞ்சி என்னும் இடங்கள் பௌத்தர் கலைப்பீடங்களாகத் திகழ்ந்தன. சைவ நாயன்மார்கள் பாடியுள்ள திருப்பதிகங்களும், ஆழ்வார் பாசுரங்களும் பல்லவர் காலத்தில் பாடப்பட்டவையேயாகும். இவற்றை நோக்க, பல்லவர் காலத்தில் தமிழ்க் கல்வியும் சிறந்து விளங்கியது என்பதை அறியலாம். நந்திக்கலம்பகம் என்னும் நூல் மூன்றாம் நந்தி வர்ம பல்லவனது புகழைக் கூறுவதாகும். அவனது அவைப் புலவரான பெருந்தேவனார் என்பவர் பாடியதே பாரத வெண்பா என்பது. இவை அனைத்துமே நோக்க, பல்லவர் காலத்தில் வடமொழியும் தென்மொழியும் இவை பற்றிய இலக்கியங்களும் சிறந்த முறையில் வளர்ச்சி பெற்றன என்று கூறுதல் தவறாகாது. சிற்பக்கலை கி. பி. 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்லவப் பேரரசனாக இருந்த மகேந்திரவர்மனே நுண்கலைகளை வளர்த்த புகழுடையான். அவன் காலத்தில் மலைச்சரிவுகளைக் குடைந்து கோவில்கள் அமைக்கப்பட்டன. அவன் காலத்திற்கு முன்னிருந்த கோயில்கள் அழியத்தக்க மண், மரம், செங்கல் இவற்றால் ஆகியவை. என்பதனை, அவனது மண்டகப்பட்டுக் கல்கவட்டு உணர்த்துகிறது, என்றும் அழியாத கடவுளர்க்கு என்றும் அழியாத கற்கோயில்களே ஏற்றவை என்பது அவனது கருத்து, அவனால் அவன் காலத்தில் பல்லவப்பெரு நாட்டில் பல இடங்களில் குடைவரைக் கோயில்கள் தோற்ற மெடுத்தன. அக்கோயில்களைப் பல்லாவரம், தளவானூர், மகேந்திரவாடி, சீயமங்கலம், மண்டகப்பட்டு, திருச்சிராப்பள்ளி, சித்தன்ன வாசல், குடுமியான்மலை, முதலிய இடங்களில் காணலாம். மலைச் சரிவில், நான்கு தூண்களைக் கொண்ட ஒரு சிறு மண்டபமே குடைவரைக்கோவில் ஆகும். மண்டபச்சுவரில் கடவுளர் உருவங்களை வைப்பதற்குச் சிறு புரைகள் வைக்கப் பட்டிருக்கும். மண்டபத்தூண்களில் தாமரை மலர்களும், பிறவேலைப்பாடுகளும் செதுக்கப்பட்டிருக்கும். திருச்சி குடை வரைக் கோயிலில் கங்காதர உருவச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கற்சுவரிலேயே துவார பாலகர் உருவங்கள் செதுக்கப் பட்டிருக்கும். மகேந்திரனுக்குப் பின் வந்த நரசிம்மவர்மன் குடைவரைக் கோவில்களை அமைத்ததோடு, மிகச் சிறிய குன்றுகளையே கோயில்களாகச் செய்வித்தான். அவை மகாபலிபுரத்தில் உள்ள பஞ்ச பாண்டவர் ரதங்கள் எனப்படும், ஒற்றைக் கற்கோயில்கள். ஒரு சிறிய குன்றை ஒரு கோயிலாக மாற்றி அமைப்பது, எளிதான செயலன்று, அக்கோயிலில் பலவகைச் சிற்பங்களையும் செதுக்குவது என்பது மேலும் பாராட்டத்தக்கது. இத்தகைய சிற்ப நுட்பத்தைப் பஞ்சபாண்டவர் ரதங்களில் கண்டு களிக்கலாம். நரசிம்மன் காலத்துத் தூண்கள் அவனது பெயரைக் குறிக்கும் சிங்கத்தூண்களாகும். தூணின் அடியில் சிங்கம் உட்கார்ந்திருப்பது போல் காணப்படும். இரண்டாம் நரசிங்கவர்மன் காலத்தில் புதிய முறையில் கற்கோயில்கள் கட்டப்பட்டன. அதாவது கற்களை உடைத்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கோயில் கட்டப்பட்டது. மகாபலிபுரத்துக் கடற்கரைக்கோயிலும், காஞ்சி கயிலாசநாதர் கோயிலும் இவ்வகையைச் சேர்ந்தவை. கருவறைக்கு மேல் உயர்ந்த விமானம் எழுப்பப்பட்டது. கோயில் கோபுரம் சிறியதாயும் விமானம் மிக உயரமாயும் அமைந்த இக்கோயில் களைப் பார்த்தே 300 ஆண்டு கட்டுக்குப் பின்வந்த இராஜ ராஜசோழன் தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டினான். கைலாசநாதர் கோயிலின் கட்டடக்கலை வளர்ச்சியையே தஞ்சைப் பெரிய கோயில் உணர்த்துகின்றது என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இரண்டாம் நரசிங்கவர்மனது காலத்துத் தூண்கள் நிற்கும் நிலையில் உள்ள சிங்கத்தூண்களாகும். கயிலாசநாதர் கோயில் பல்லவர் காலத்துச் சிற்பக்கலைக் கூடமென்னலாம். கருவறையைச் சுற்றிலும் தனித்தனி அறைகள் வெட்டப்பட்டு ஒவ்வொன்றிலும் சிவபெருமான் நடன வகைகளம், அப்பெருமானைப் பிற தேவர்கள் போற்றும் காட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளன. பிராகாரச் சுவரில் தனித்தனிச் சிறு கோயில்களாக 58 செதுக்கப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் புராண இதிகாசக் கதைகளைக் குறிக்கும் சைவ சம்பந்தமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பரமேசுவரவர்மன் காலத்தில் கட்டப்பெற்ற காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயிலும் சிறந்த சிற்பக்கலைக் கூடமாகும். நிராகார உட்புறச் சுவரில் பல்லவர் வரலாறு முழுவதும் பல வரிசைகளில் சிற்பங்களாகப் பொறிக்கப் பட்டுள்ள காட்சியை வேறு எங்கும் காண இயலாது. இக்கோயில் சிற்பங்களைத் தவிரச் சிறந்த முறையில் உருவச் சிற்பங்களும் செதுக்கப்பட்டன; பாறைச் சிற்பங்களும் பொறிக்கப்பட்டன. மகாபலிபுரம்-ஆதிவராகர் கோயிலில் உள்ள மகேந்திரவர்மன்-அவன் மனைவியர் உருவச் சிற்பமும், அதற்கு எதிரிலுள்ள அவன் தந்தையான சிம்ம விஷ்ணு அவன் மனைவியர் உருவச் சிற்பமும் சிறந்த சிற்ப வேலைப்பாடு கொண்டவை. பகீரதன் தவம், துர்க்கை எருமைத்தலை அசுரனுடன் போர் புரிதல் முதலியன பாறைச் சிற்பங்களுக்கு ஏற்ற சான்றுகளாகும். யானை தூங்குவது போன்ற விமான அமைப்புடைய கோயில்களும் பல்லவர் காலத்தில் தோன்றி யவையாம். திருத்தணிகையில் உள்ள அபராஜித பல்லவன் காலத்துச் சிவன் கோயில் இதற்குச் சான்றாகும். ஓவியக்கலை ஓவியம் என்பது சித்திரம். ஓவியம் அமைக்காது சிற்பம் அமைக்க முடியாது. ஆதலால் சிற்பக்கலைஞர் ஓவியக் கலையிலும் ஓரளவு திறமை பெற்றிருத்தல் வேண்டும். இசை, நடனம் இவற்றைக் கற்பவரும் ஓவியக்கலையில் திறமை பெறவேண்டும் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. எனவே, ஓவியக்கலை, பிற நுண்கலைகளுக்கு மிகுதியும் தேவைப்படும் கலையாகும். இக்கலை பல்லவர் காலத்தில் உயரிய முறையில் நாட்டில் வளர்ந்து வந்தது என்பதைப் பல்லவர் காலத்து ஓவியங்களைக் கொண்டு அறியலாம். பல்லவர் அமைத்த குகைக் கோயில் பாறைச் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. அவை நாளடைவில் அழிந்து மறைந்தன. ஆயினும் காஞ்சி கயிலாசநாதர் கோயில். மாமண்டூர்க் குகைக்கோயில் முதலியவற்றில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்த அடையாளங்கள் இன்றளவும் காணலாம். சித்தன்னவாசல் ஓவியங்களே ஓரளவு பார்க்கத்தக்க நிலையில் இருக்கின்றன. சித்தன்ன வாசல் குடைவரைக் கோயிலில் நடுத்தூண்கள்இரண்டில் அக்கால நடிகையர் உருவங்கள் இரண்டு தீட்டப்பட்டுள்ளன. அவை சிறந்த வேலைப்பாடு கொண்டவை; கோயிலைக் காண வருபவரை மலர் முகத்துடன் வரவேற்பன போல அமைந்துள்ளன. அந்நடிகையரின் கூந்தல், தலையலங்காரம், ஆடையில் காணப்படும் இயற்கை மடிப்புகள், பலவகை அணி விசேடங்கள் முதலியன மிக நுட்பமாகவும், தெளிவாகவும் ஓவியங்களில் காட்டப்பட்டுள்ளன. வலப்புறத் தூணின் உட்புறப்பகுதியில் அரசன் அரசி, ஆகிய இருவர் தலைகள் மட்டும் தீட்டப்பட்டுள்ளன. அவர்கள் அணிந்துள்ள மணிமாலைகள், குண்டலங்கள், அரசனது மணிமகுடம் என்பன கண்கவர் தோற்றத்துடன் சித்திரிக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் மகேந்திரன் காலத்தவை என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். முன் மண்டபக் கூரையில் தாமரைக்குளம் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. அக்குளத்தில் தாமரை இலைகளும், மலர்களும் இடையிடையே மீன்கள், அன்னங்கள், எருமைகள், ஆகியவற்றின் உருவங்களும் வரையப்பட்டுள்ளன. கையில் தாமரை மலர்களைப் பிடித்துள்ள சமணர் இருவர் உருவங்களும், இடைக்கையில் பூக்கூடை வைத்துக்கொண்டு வலக்கையால் மலர்பறிக்கும் சமணர் ஒருவரது உருவமும் அழகாகத் தீட்டப்பட்டுள்ளன. குளத்தில் தோன்றும் அலைகள் மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. உள் அறையில் மேற் கூரையிலும் வதிகா, சூலம், தாமரை மலர், சதுரம் முதலியவைகளைக் கொண்ட அழகிய சித்திரம் காட்சி யளிக்கிறது. இசைக் கலை பல்லவ மன்னர் ஓவிய சிற்பக்கலைகளை வளர்த்தாற் போலவே இசை நடனக் கலைகளையும் பெருவிருப்பத்துடன் வளர்த்து வந்தார்கள். மகேந்திரவர்மனது குடுமியான் மலைக் கல்வெட்டு அவனது இசைப்புலமையை நன்கு உணர்த்தவல்லது. அவன் பலவகைப் பண்களையும், தாளவகைகளையும் விளக்கி முடிவில், இவை எட்டிற்கும் ஏழிற்கும் உரிய என்று முடித்துள்ளான். அதாவது, அவன் கல்வெட்டில் விளக்கிய பண்களும், தாளங்களும் எட்டு நரம்புகளையுடைய வீணைக்கும், ஏழு நரம்புகளுடைய வீணைக்கும் உரியன என்பது பொருள். இசை எனது செல்வம் என்று மகேந்திரன் தான் இயற்றிய மத்தவிலாசப் பிரகசனத்தில் குறித்துள்ளான். இரண்டாம் நரசிம்மவர்மனை வாத்திய வித்யாதரன் (இசைக்கருவிகளை மீட்டுவதில் வித்யாதரன்), ஆதோத்ய தும்புரு (ஆதோத்ய வீணை வாசிப்பதில் தும்புருவைப் போன்றவன்), வீணாநாரதன் (வீணைவாசிப்பதில் நாரதனை ஒத்தவன்) என்று கயிலாசநாதர் கோயில் கல்வெட்டுக்கள் பாராட்டி உள்ளதைக் காண, அம்மன்னனது இசைப் புலமையை நன்கு அறியலாம். அவன் கட்டிய கயிலாசநாதர் கோயிலில் கந்தவருவர்கள் பலவகை இசைக் கருவிகளைக்கொண்டு பாடுவதை உணர்த்தும் சிற்பங்கள் காண்கின்றன. நாயன்மார்களின் இசைப்பாடல்களும், ஆழ்வார்களின் அருட்பாடல்களும் பண், தாளம் இவை கொண்டு இசைக்கப் பட்டவை என்பதை நோக்க, பல்லவர் காலத்தில், இசைக்கலை மிகச்சிறந்த முறையில் வளர்க்கப்பட்டது என்பதை மிகத் தெளிவாக அறியலாம். பல்லவர்காலத் திருமுறைகளை ஆராயின், அக்கால இசைக்கருவிகள் பலவற்றின் பெயர்களை அறியலாம். அவற்றுள் யாழ், வீணை, குழல், முழவம், மொந்தை. மத்தளம், குடமுழா, முரசம், உடுக்கை, தாளம், துடி, கின்னரி, கொக்கரி, சச்சரி, தக்கை, தமருகம், தத்தலகம், கொடுகொட்டி என்பன குறிப்பிடத்தக்கவை. பல்லவர்க்கு முற்பட்ட சங்க காலத்திலிருந்தே வழிவழியாக வந்த யாழ்ப்பாணர்கள் பல்லவர் காலத்தில் தமிழிசையை நன்கு வளர்த்துவந்தார்கள். கோயில்கள் தோறும் பாடல் மகளிர் இருந்து இசைக்கலையை வளர்த்து வந்தனர் என்பதைத் திருமுறைகளைக் கொண்டும், ஆழ்வார் பாடல்களைக் கொண்டும் அறியலாம். நடனக்கலை மேற்சொன்ன சித்தன்னவாசல் நடிகையர் ஓவியங்கள் இரண்டைக் கொண்டே பல்லவர் காலத்தில் நடனமாதர் இருந்தனர் என்பதை உணரலாம். மகேந்திரவர்மன் தான் செய்த மத்தவிலாசப் பிரகசனத்தில், நடிப்பவரது நடனம் பார்க்க இன்பமாக இருக்கின்றது: தாளத்திற்கும் இசைக்கும் பொருந்த மெய்ப்பாடுகளை விளக்கி அவர்கள் நடித்தல் இன்பத்தை ஊட்டுகிறது என்று கூறியுள்ளான். இரண்டாம் நரசிம்மவர்மன் சிவபெருமான் ஆடிய நாதாந்த நடனம், குஞ்சித நடனம், லதாவிருச்சிக நடனம் முதலிய நடனவகைகளைச் சிற்பங்களாகக் காட்டியுள்ளான். வைகுந்தப் பெருமாள் கோவிலில் ஆடவரும், பெண்டிரும் நடனமாடுவதை உணர்த்தும் சிற்பங்கள் இரண்டு காண்கின்றன. காஞ்சி-முத்தீச்சுரர் கோயிலில் மட்டும் 42 நடிகையர் இருந்தனர் என்று கல்வெட்டுக் கூறுகின்றது. கும்பகோணம், திருவையாறு, காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம் முதலிய ஊர்களில் நடனமாதர் இருந்து நடனக்கலையை வளர்த்தனர் என்னும் செய்தி திருப்பதிகங்களிலும் குறிக்கப் பட்டுள்ளது. தேனார் மொழியார் திளைத்தங் காடித் திகழும் குடமூக்கில் (72,7) வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென் றஞ்சிச் சிலமந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்கும் திருவையாறே (130,1) என்னும் தேவார அடிகளைக் காண்க. நாடகக்கலை இசை, நடனம் ஆகிய இரண்டின் வளர்ச்சியே நாடகக்கலை. இதுவும் பல்லவர்களால் பாராட்டி வளர்க்கப்பெற்றது. சிறந்த வடமொழிப் புலவனான மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் என்னும் நாடக நூலை வடமொழியில் எழுதியுள்ளான். அதனில் காபாலிகன், காபாலினி, பௌத்த துறவி, பாசுபத சமயத்தான் ஆக நால்வர் நாடகப் பாத்திரங்களாக இடம் பெற்றுள்ளனர். இந்நூல் அக்காலச் சமயநிலைகளை ஓரளவு உணர்த்தும் வேடிக்கை நாடகமாகும். பாஷர் என்னும் வடமொழிப்புலவர் எழுதிய நாடகங்கள் நடிப்பதற்கேற்ற முறையில் சுருக்கி எழுதப்பட்டன. அவை பல்லவன் அவையில் நடித்துக்காட்டவே இங்ஙனம் எழுதப்பட்டன என்று அந்நாடக நூல்களின் இறுதியில் குறிக்கப்பட்டுள்ளன. இக் கூற்றிலிருந்தும் பல்லவர்கள் நாடகக்கலை வளர்ச்சியிலும் ஆர்வம் கொண்டிருந் தனர் என்பது அறியப்படும். முடிவுரை இதுகாறும் கூறப்பெற்ற சிற்ப-ஓவிய-கட்டட-இலக்கியச் சான்றுகளால், தென்னாட்டின் பெரும் பகுதியை ஆண்ட பல்லவ மன்னர்கள் கி. பி. 7, 8, 9ஆம்நூற்றாண்டுகளில் கல்வியாகிய அறிவுக்கலையையும், ஓவியம், சிற்பம், இசை, நடனம், நாடகம் எனப்படும் நுண்கலைகளையும் நன்முறையில் பாதுகாத்து வளர்த்து வந்தனர் என்னும் உண்மையை இனிது உணரலாம். 6.கம்பன் எழும்பூரிலிருந்து புகைவண்டியிலே புறப்படுங்கள். சிதம்பரம், கொள்ளிடம் நிலையம் வழியாகச் செல்லும் ரயிலில் பிரயாணம் செய்தால் மாயூரம் நிலையம் வரும். மாயூரத்திற்குப் பிறகு வண்டி நிற்கும் ஒவ்வொரு இடத்தையும் என்ன ஊர் என்று கேட்டுக்கொண்டே வாருங்கள். தேரழுந்தூர் என்று ஒரு இடத்தைச் சொல்லுவார்கள். அதுதான் திருவழுந்தூர். இராமாயணத்தை நமக்கு எழுதித்தந்த கம்பன் வாழ்ந்த ஊர் அதுதான். கம்பர் மேடு என்று அவ்வூரில் மேடு ஒன்றுண்டு. அதுதான் கம்பன் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இல்லம். கம்பன் தவழ்ந்து விளையாடிய மண்ணும் அதுதான். அவன் கல்வி பயின்ற பள்ளியும் அங்கேதான் இருந்திருக்கும். கவி இயற்றுவதில் வீரன் என்பதற்கு அறிகுறியாக நாட்டப்பட்ட வெற்றிக் கொடியும் அங்கேதான் பறந்தது. வெற்றித்தூண் நட்டு வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டு கவியுலகத்தை ஆண்டு வந்தமையால்தான் அவனைக் கம்பன் என்றே அழைத்தார்கள் போலும்! அந்த இடத்தில் இப்பொழுது வீடில்லை. ஆனால் அந்த மண் உண்டு. வெற்றிக்கொடி இல்லை. உடைந்த ஓடுகளின் பரப்பே எங்குங்காணப்பட்டன. அவனுக்கு ஒரு நினைவுச் சின்னம் வேண்டாமா? குடிசையில் பிறந்த கம்பன் சோழன் அவைக்களத்தில் அறிவுரை கூறுகின்ற அறிஞனாக அமர்ந்தான். கவி இயற்றுவதிவேல தன்னோடு வாதிட வந்த புலவர்கள் எல்லோரையும் வென்றான். அரசர்கள், புலவர்கள் எல்லோரும் புகழ வாழ்ந்தான். இடையறா உழைப்பும் ஊக்கமுமல்லவா அவனுடைய உயர்வுக்குக் காரணமாக இருந்தன. முயன்றால் நீங்களும் கம்பனாக ஆகலாம். சிறு வயதிலேயே வறுமையின் வாய்ப்பட்டு வந்தினவன் தான் கம்பன். தாய் தந்தையர்களால் வறுமையின் காரணமாக வெறுக்கப்பட்டான். வீட்டை விட்டு வெளியே ஓடினான். வேறு வழியில்லாமையால் வீடு வந்து சேர்ந்தான். தண்டக வனத்தில் வாழ்ந்த முனிவர்கள் இராமனை வரவேற்ற காட்சியைக் கம்பனே பாடுகின்றான். தாய் தந்தையர்களோடு பிணங்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிற்று ஒரு குழந்தை. பல நாட்கள் தாய் தந்தையர்களின் கண்களுக்கு அகப்படாமலே திரிந்தது. உணவின்றியும் வருந்திற்று. தாய் தந்தையர்களும் குழந்தையைத் தேடித் திரிந்து நொந்தனர் பசி முதலிய தொல்லைகளுக்கு ஆளான குழந்தை தன்னை அறியாமலே ஒருநாள் வீடு வந்து சேர்ந்தது. தாய் தந்தையர்கள் அன்போடு வரவேற்றார்கள். இவ்வாறுதான் இராமனை அன்போடு முனிவர்கள் வரவேற்றார்கள் என்று பாடுகிறான் கம்பன். இது கம்பனுடைய இளமை வாழ்வின் காட்சியல்லவா! நாடோடியாக ஆதரிப்பார் யாருமின்றித் திரிந்தான் கம்பன்; இறுதியாக அடைந்தான் திருவெண்ணெய் நல்லூரை. சடையப்ப வள்ளல் வேளாளர்களுள் மிகச் சிறந்தவர். அண்டினவர் களையாதிரிக்கும் அன்புடையவர்; தன்னை யடைந்த கம்பனையும் ஆதரித்தார்; சோறிட்டார்; அறிவின் கூர்மையை யறிந்து கல்வியறிவு பெறவும் வழி வகுத்தார். கம்பன் கற்றான் கணக்கற்ற நூல்களை; காவியச்சுவை கண்டான்; கருத்துக்களின் பெருக்கிற்கு இருப்பிடமானான்; கற்பனை ஊற்றானான். காவியம் எழுதும் கருத்தும் பெற்றான். வடமொழியில் வால்மீகியால் எழுதப்பட்ட இராமாயணம் தமிழ்நாடு முழுவதும் படிக்கப்பட்டு கேட்கப்பட்டு வந்தது. இராமன் கதையில் சிந்தனை சென்றது கம்பனுக்கு. நாளாக ஆகக் கம்பன் கருத்தைக் கவர்ந்தது இராமன் கதை. தனது அறிவாற்றலினையும் கற்பனைத் திறனையும் வார்த்து உருவாக அமைப்பதற்கேற்ற நூலெனக் கருதினான் இராமன் கதையை. இராமன் கதையைப் பாடி இராமாவதாரம் என்றும் அதற்குப் பெயரிட்டான். அதுவே இப்பொழுது கம்பராமாயணம் என அவன் பெயராலேயே வழங்கப்பட்டு வருகிறது. இராமன் கதையைத் தமிழ் நாட்டிற்கு ஏற்ற வகையில் விரிவாகவும் சுருக்கமாகவும் வேறாகவும் பாடியிருக்கின்றான். தமிழ்நாட்டுப் பெண்களின் இயல்பு கம்பன் கதை முழுவதும் கமழ்ந்து மணம் செய்கின்றது. சீதை அசோகவனத்தில் இராமனை நினைத்து வருந்துகின்றாள்: காய்கனிகளை இராமன் எவ்வாறு உண்கின்றானோ? யார் இவற்றைத் தேடி அவனுக்குப் படைப்பார்கள் என்று மனம் வெதும்புகின்றாள். காட்டில் வாழ்கின்ற அவனிடம் விருந்தினர்கள் வந்துவிட்டார்களானால் அந்த விருந்தினர்களைப் போற்று தற்குத்தான் இல்லையே என்று இராமன் எவ்வாறு வருந்து கின்றானோ என்பதை எண்ணிப் பெருமூச்சு விடுகின்றாள். விருந்தோம்பல் தமிழ்நாட்டு பெண்களுக்குத் தலைசிறந்த ஒழுக்கங்களுள் ஒன்று. அதனை இங்கே சீதையின் மூலமாகக் கம்பன் காட்டுகின்றான். இவ்வாறே தமிழ்நாட்டு மக்களின் பழக்க ஒழுக்கங்களையே அடிப்படையாகக்கொண்டு ஆக்கி அமைந்திருக்கின்றான் கதையை. தான் இந்த உயர்ந்த நிலையடைவதற்குக் காரணமாயிருந்த சடையப்பவள்ளலைக் கம்பன் மறந்தானில்லை; இராமனைப் பாடியது போலவே சடையப்ப வள்ளலையும் பாட நினைத்தான். தான் பாடிய இராமாயணத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடலாக வள்ளளைப்பற்றிப் பாடி ஆயிரத்துள் ஒருவராக அவரை ஆக்கினான்; அழியாக்கோயில் அமைத்து விட்டான் வள்ளலுக்கு. வேளாளர்கள் முடியினை எடுத்துத்தர முடியினைச் சூட்டினான் வசிட்டன் என்பதைக் கூறுகையில், வெண்ணெய் நல்லூர்ச் சடையன்றன் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மவுலி என்று கூறி முடிசூட்டுவிழாவில் வள்ளலை மறவாது முதல்வனாக்கி முடிசூட்டு விழாவும் செய்திருக் கின்றான். பிறர் செய்த நன்றியை மறத்தலாகாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கினான் கம்பன். கம்பனின் கற்பனைத்திறம் வேறு எந்த நூல்களிலும் காணாத இயல்பினது. கம்பனின் கருத்து மிக்க ஆழமுடையது. இயற்கையைப் பாடுவதிலே கம்பனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாவதுண்டு. இராமன் சீதை முதலியோரைக் கண்ணீர்க் கடலில் அழைத்து வருகின்றான். அயோத்தியிலிருந்து கங்கைக் கரையை அடைகின்றான். தோணியில் இராமன் முதலியோரை ஏற்றி ஆற்றில் விட்டுவிடுகின்றான். கம்பன் இந்தக் கரையிலேயே உட்கார்ந்துகொள்கின்றான். கங்கை அவன் கருத்தைக் கவருகிறது. அதிலுள்ள மீனும் அருகிலோடும் மானும் அவனுள்ளத்தைப் பிணிக்கின்றன. கதையை மறந்துவிடுகின்றான். இயற்கைக் காட்சியிலீடுபட்டு எண்ணற்ற பாடல்களைப் பாடுகின்றான். கவிவெறி தீரப் பாடுகிறான். வெறி தீர்ந்தபிறகு கண்களைத் திறந்து பார்க்கின்றான். படகிலே இராமன் முதலியோர் போவதைப் பார்க்கின்றான். நாவாய் இள அன்னத்தின் நடைபோன்ற இயக்கத்தை உடையதாய் வந்ததுஎன்று பாடி அவர்களைக் கொண்டுபோய்க் கரை சேர்க்கின்றான். கதையையும் மறந்து இயற்கைக் காட்சியில் ஈடுபட்டுப் பாடி மகிழ்ந்தவன் கம்பன். உலக அநுபவம் கம்பனுக்கு நிறைய உண்டு. உலகிலே கண்ட காட்சிகளைக் கதையிலே தக்க இடங்களிலே அமைத்துப் பாடுவதில் கம்பன் மிக வல்லவன். ஒரு வீட்டிலே திருமணம் நடந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். திருமணம் நடந்த பிறகு அந்தத் திருமணம் நடத்தி வைப்பதிலே ஈடுபட்டிருந்தவர்கள் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு நடந்த திருமணத்தைப்பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர் வரவில்லையே என்று ஒருவரைக் குறித்து ஒருவர் கூறுவார். அவர் வந்திருந்தார் என்பார் ஒருவர். நான் பார்க்கவே இல்லையே என்பார் மற்றொருவர். வந்திருந்தால் எனக்குத் தெரியாமலாயிருக்கும் என்பார் மற்றொருவர். இதுதான் திருமணம் நடந்த அடுத்தநாள் அல்லது அதற்கடுத்த நாள் நடைபெறும் பேச்சு. கம்பன் இந்தக் காட்சியைக் கண்டான். கதையில் காட்டுகின்றான். காணுங்கள்: இராமன் முடிசூட்டுவிழாவிற்கு உலகமக்கள் அனைவரும் வந்து சூழ்ந்தார்கள் அயோத்தியை. முடிசூட்டுவிழா நடை பெறாமையால் அனைவரும் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பினார்கள் தங்கள் தங்கள் நகருக்கு. கூடிய கூட்டம் நீங்கியபிறகு அந்நகரத்தார் சிலர் கூடி உட்கார்ந்துகொண்டு வந்திருந்தவர்களிலே யார் தொகை அதிகம் என்று கணக்கிடத் தொடங்கினார்கள் அரசர்களின் தொகைதான் அதிகம் என்றார் ஒருவர். வீரர்களின் தொகைதான் அதிகம் என்றார் மற்றொருவர். ஆண்களின் தொகையே அதிகம் என்றார் ஒருவர். மங்கையரின் தொகையை மிகுதி என்றார் மற்றொருவர். இவ்வாறாக ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டனர். கம்பனும் கணக்கிட்டான். முன்னர் எண்ணியவர்கள் அனைவரும் தவறாகக் கணக்கிட்டார்கள் என்று கருதுகின்றான். தானும் கணக்கிட்டு ஒவ்வொரு வகையிலும் கணக்கிலடங்காத மக்கள் வந்தார்கள் என்று தனது முடிவினையும் கூறுகின்றான். இவ்வாறு படிக்கின்றவர்கள் உள்ளத்தை அள்ளுதற்கேற்ற கருத்துக்களை அங்கங்கே அள்ளித் தெளிக்கின்றான் கம்பன். மகிழ்ச்சியான செய்திகளைப் பற்றியும் துன்பமான நிகச்சிகளைப் பற்றியும் கம்பன் பாடும்பொழுது அந்தந்த நிகழ்ச்சிகளிலே தொடர்பு உடையவனாகவே பாடுவான். இராமன் முடிசூடப்போகிறான் அரசவீதிவழியே. கம்பனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இராமனின் அழகை நின்று காண்கின்றான்; மாடிகளின் மீது சென்று காண்கின்றான்; மாடி வீடுகளிலுள்ள ஜன்னல்களைத் திறந்துவைத்துக் கொண்டும் காண்கின்றான் தாமரைப்பூக்கள் ஜன்னல்களிலிருந்து கூட முளைத்து மலர்ந்திருக்கின்றனவே என்று வியந்து பெண்கள் பார்த்ததாக நமக்குக் கதை சொல்லுகின்றான். ஒரே மகிழ்ச்சிப் பெருக்குத்தான் எங்கும். துக்க நிகழ்ச்சிகளைக் கம்பன் பாடும்பொழுதும் அப்படியே பாடுவன்; தன்னை மறந்து பாடுவான்; அழுது பாடுவான். இராமன் அயோத்தியை விட்டு வனத்திற்குப் புறப்படுங் காட்சி கம்பனின் கருத்தைக் கவர்ந்த காட்சி. பூனையிலிருந்து யானை வரை அழுதன என்று கண்ணீரைக் கடலாக ஆக்கி நமது பங்காக இரண்டொரு கண்ணீர்த்துளிகளையும் வாங்கி அந்தக் கடலோடு சேர்த்து விடுவான். சோகச் சுவையைப் பாடிய போதிலும் நகைச்சுவையைக் கம்பன் மறப்பதில்லை. நகைச்சுவை கலப்பதினாலே சோகச்சுவை குறைவதில்லை. இராமன் காட்டுக்குச் செல்வதை யறிந்து பசுக்கள் அழுதன, பசுக்கன்றுகள் அழுதன என்று பாடுகின்றான். ஏன் அவை அழுதன? பசுக்கள் அழுதமையால், பசுக்கன்றுகள் அழுதன என்று மற்றொரு கருத்தையும் தோற்றுவித்து நமது உள்ளங்களை அள்ளிக் கொள்ளுகின்றன. அன்று மலர்ந்த பூக்கள் அழுதன என்கின்றான். கதைப்போக்கில் இராமன் பிரிவால் பூக்களும் அழுகின்றன என்று பொருள் கொள்ளப் பேசுகின்றான். ஆனால் அவன் போக்கில், சொல்போக்கில் அன்று மலர்ந்தபூக்கள்; ஆகையால் தேனொழுக விடுகின்றன; ஆகவே அழுகின்றன என்று நம்மை யறியாமலேயே நாம் பொருள் கொள்ளவும் செய்து விடுகின்றான். குளத்திலுள்ள பூக்களில் வாழும் பறவைகளும் அழுதனவாம். அலைகள் அடிக்குந்தோறும் எழுந்து எழுந்து உட்கார்ந்து இரைவது, அழுவது போலத்தானே இருக்கும்! தேன் ஒழுகின்ற மலர்கள் நிறைந்த சோலைகளும் அழுதனவாம். தேனொழுகும் காட்சி கண்களிலிருந்து நீரொழுகும் காட்சிதான். இவ்வாறு சோகச் சுவையிலும் நகைச்சுவையைக் கலந்து சுவை கெடாது பாடுகின்ற பண்பு கம்பனுக்கு இயற்கையாக வாய்த்த பண்பு. கம்பனின் கதையைப் படியுங்கள். காவியத்தின் சிறப்பை உணருங்கள். கம்பன் காட்டுகின்ற திறமையைக் காணுங்கள். ஆயிரக்கணக்கான பாடல்கள் உங்கள் மனத்தில் புகுந்து வெளிவரப் பெற்றால் உங்கள் மனமும் அறிவும் மென்மையும் கூர்மையும் பெறும். பெரியோர்களாக வாழ ஆசைப்படுவீர்கள். இலக்கியம் மனதைச் செம்மைப்படுத்தும். கம்பன் இராமாயணம் அதைச் செய்யும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? 7. நாவல் நாவல் என்பது புதுமையாய்ப் புனைந்து உரைக்கப்படும் ஒரு நீண்ட கதை. இக்கதை உலகில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டே பெரும்பாலும் எழுதப்படும். சில கதைகள் கற்பனையாகவும் புனைந்து உரைக்கப்படும். வேறு சில கதைகள் மனித அறிவிற்கு அப்பாற்பட்ட தெய்வ சக்திகளின் நிகழ்ச்சிகளாகத் தீட்டப்படும். குடும்ப நிகழ்ச்சிகள், மதநிகழ்ச்சிகள், சமுதாய நிகழ்ச்சிகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டே பல நாவல்கள் எழுதப்படுகின்றன. ஒரு ஆண் அல்லது ஒரு பெண்ணினுடைய, சில ஆடவர் அல்லது சில பெண்களுடைய நற்குணங்களால் குடும்பத்திலோ சமுதாயத்திலோ உண்டாகும் மாறுபாடுகளை வெளிப்படையாக எடுத்துக்காட்டுவதே பல நாவல்களின் குறிக்கோள். சில நாவல்கள் தொடக்கம் முதல் கடைசி வரையில் பல செய்திகளை மர்மமாகக் குறித்துச் சென்று, முடிவில் மர்மங்களை வெளிப்படுத்திப் படிப்பவர்க்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஊட்டும். இவ்வகையில் துப்பறிவும் நாவல்கள் சிறந்தவை. சில நாவல்கள் குடும்ப நிலைகளைச் சித்திரித்துக் குடும்பத்தாரின் மனோபாவங்களை நன்கு வெளிப்படுத்தி அவற்றிற்கேற்ற செயல்களைக் காட்டிக் குடும்பங்களைச் சித்திரித்துக் காட்டும். வேறு சில நாவல்கள் நமது சமுதாயத்திலுள்ள ஏழை-பணக்காரன், தொழிலாளி-முதலாளி, படித்தவன்-படியாதவன் முதலிய பலவகை வேறுபட்ட நிலைகளையும் அவற்றால் உண்டாகும் மனித நிகழ்ச்சிகளையும் சித்திரித்துக்காட்டும்; சமுதாயம் இருக்கவேண்டும் நிலையையும் நன்கு வற்புறுத்திச் செல்லும். மதங்களிடம் பாமர மக்கள் கொண்டுள்ள அழுத்தமான நம்பிக்கையால் மதப் பிரச்சாரங் களாலும் மதத் தலைவர்களாலும் அப் பாமர மக்கள் எவ்வாறு நல்வழிப்படுகிறார்கள், அல்லது ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைச் சுவைபட விளக்கிச் செல்லும் நாவல்கள் சில. சில நாவல்கள் அமைதிக்கு இருப்பிடமாய் ஒரு குடும்பத்தாரின் நல்லியல்புகளை விளக்கி, குடும்பம் இருக்கவேண்டிய நிலையையும் விளக்கிச் செல்லும். இத்தகைய நாவல்கள் படிப்பவர்க்கு மிகுந்த பயனைத் தருவன. மனிதரின் தீய பண்புகளையே படம் பிடித்துக்காட்டி அத்தீய பண்புகளால் அம்மனிதர் அடையும் முடிவையும் சுட்டிச் செல்லும் நாவல்கள் சில. இவையும் மனிதர்க்குப் பல நீதிகளை ஊட்டும் நாவல்களாகும். இத்தகைய பலதிறப்பட்ட நாவல்களை எழுதி வெளியிட்ட வருள் ஆங்கில ஆசிரியர்களும், பிரஞ்சு ஆசிரியர்களும், அமெரிக்க ஆசிரியர்களும் தலை சிறந்தவராவர். ரெயினல்ட் என்பவர் மிகச்சிறந்த ஆங்கில நாவலாசிரியர். இன்றைய நாவல் உலகத்தில் மிக்க புகழ் பெற்றவராகத் கருதப்படுபவர் பெர்ல்-எ-பக் என்னும் அமெரிக்க நூலாசிரியர். இந்த அம்மையார் சீனத்தில் பல ஆண்டுகள் இருந்தவர். அதனால் சீனர் வாழ்க்கையைச் சித்திரித்துப் பல நாவல்களை எழுதியுள்ளார். இவருடைய நாவல்கள் உலக நாடுகள் அனைத்திலும் உள்ள அறிஞரால் பாராட்டப்படுகின்றன. இவருடைய நாவல் ஒன்று நோபெல் பரிசும் பெற்றது என்றால், இவரது நாவல்களின் சிறப்பை நாம் நன்கு அறியலாம். தொடக்கம் முதல் இறுதிவரைப் படிப்பவர்க்குப் பலவகைச் சுவைகளையும் ஊட்டும் இவருடைய நாவல்கள் இலட்சக்கணக்கில் விற்பனையாகின்றன. நமது இந்தியாவில் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்பவர் எழுதிய நாவல்கள் உலகப் புகழ் பெற்றவை. நமது தமிழ்நாட்டில் முதன் முதலாக எழுதப்பட்ட நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் என்பது. இதனை எழுதியவர் மாயூரம் முனிசீப்பாக இருந்த வேதநாயகம் பிள்ளை என்பவர். படிக்கப் படிக்கச் சுவை ததும்பும் இக்கதை நூல் இன்றளவும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. அ. மாதவய்யா என்வர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் தமிழ் நாவல் உலகத்தில் மிகச் சிறந்ததெனப் பாராட்டப்படுகிறது. இரங்கூன் பொன்னுசாமி பிள்ளை என்பவர் எழுதிய ஞானாம்பிகை முதலிய நாவல்களை குடும்பச் சித்திரங்களாகும். இவை குடும்ப வாழ்கையையும் குடும்பத்தார்க்கு இருக்கவேண்டிய குணங்களையும் மிகத் தெளிவாக விளக்குவன. கும்பகோணம் துரைசாமி என்பவர் எழுதிய கருங்குயில் குன்றத்துக் கொலை என்னும் நாவல் இனிய எளிய தமிழ் நடையில் இயன்றது. ஒரு குற்றமும் செய்யாத பிரபு ஒருவன் கொலைக் குற்றம் செய்ததாகக் கருதப்பட்டதால், அவன் தன் பெண் குழந்தையுடன் அமைதி நிலவும் காட்டிற்கு ஓடி, அங்குத் தங்கிப் பல ஆண்டுகள் வாழ்கின்றான். மங்கைப்பருவம் அடைந்த அவன் மகள் தந்தையின் மர்மவாழ்க்கையின் உண்மையை அறிய ஆவல்கொண்டு பலவாறு தந்தையை வேண்டி, இறுதியில் உண்மையை அறிகின்றாள். தன்தாய் உள்ள மாளிகைக்குச் சென்று அவளிடம் தோழியாக அமர்கின்றாள்; தன் தந்தை குற்றவாளியல்ல என்பதையும் உண்மைக் குற்றவாளிதன் தாயை மணக்க விரும்பிய பங்காளி என்பதையும் அறிகின்றாள்; பிறகு உண்மையைப் பிறர் அறியச்செய்து, தன் தந்தையையும், தாயையும் வாழ்க்கையில் ஒன்றுபடுத்துகிறாள். இக்கதைப் போக்குப் படிக்கப்படிக்க இன்பத்தைக் கொடுப்பது. தந்தை மகள்மீது வைத்தபாசம், மகள் தந்தைமீது வைத்துள்ள பாசம், உண்மைக் காதல் இவற்றின் தன்மைகள் இந்நூலில் அறிஞர் பாராட்டுக்குரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கில நாவலாசிரியரான ரெயினாட்ல் என்பவர் எழுதியுள்ள அந்தப்புர ரகசியம் போன்ற பல நாவல்களைத் தமிழில் மொழி பெயர்த்துப் புகழ் பெற்றவர் ஆரணி குப்புசாமி முதலியார். இவர் நம்நாட்டிற்கு ஏற்ப, ஆங்கிலப் பெயர்களைத் தமிழ்ப்பெயர்களாக மாற்றி, இந்தியநாட்டு நிகழ்ச்சிகளாகக் கதைகளை மாற்றி அமைத்துள்ளார். ரெயினால்ட் நாவல்களி லுள்ள பலவகைக் குறைகளையும் இவர் தம் நூல்களில் வெளிப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன் இவர் எழுதிய நாவல்கள் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கில் செலவாயின. குடும்ப நிகழ்ச்சிகளையும் தவறான முறையில் நடக்கும் துறவிகளின் செயல்களையும் படம் பிடித்துக் காட்டவல்லவை வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல்கள். மேனகா என்னும் நூல் ஓர் உத்தம மனைவியின் உயர்ந்த பண்புகளையும், அவளுடைய நாத்திமாருடைய தீய பண்புளையும் விளக்க வல்லது. திகம்பரசாமியார் என்பது சிறந்த துப்பறியும் நாவல். வடுவூர் துரைசாமி ஐயங்காரின் மாணவியரான கோதை நாயகி யம்மையார் இன்றளவும் எழுதி வருகின்ற நாவல்கள் சமுதாயத்தையும் குடும்பத்தையும் சித்திரித்துக் காட்டுவன. நம் தமிழ் நாட்டில் புகழ்பெற்ற நாவலாசிரியை இந்த அம்மையாரே ஆவர். சந்திரகாந்தா, இராஜாம்பாள் முதலிய நாவல்களை எழுதி அழியாப் புகழ் பெற்றவர் ரங்கராஜு என்பவர். மடாதிபதிகளின் ஒழுக்கக் கேட்டையும், சமுதாயச் சீர்கேடுகளையும் இவருடைய நூல்கள் படம் பிடித்துக் காட்டுவன. இக் கதைகள் திரைப்பட உலகிலும் பெயர்பெற்றுவிட்டன. மதத்தை மக்களிடையே நல்ல முறையில் பரவச் செய்வதற்காக என்று இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையுடைய மடாதிபதிகள், அச் செல்வத்தைத் தீய வழிகளில் எவ்வாறு செலவழிக்கக்கூடும் என்பதை ரங்கராஜூ நாவல்கள் விளக்குகின்றன. மடாதிபதி களின் ஒழுக்கக் கேட்டாலும், அவர்களுடைய செல்வ பலத்தாலும் சமுதாய ஒழுக்கம் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும் என்பதை இந்நாவல்கள் நன்கு உணர்த்துகின்றன. ஏறத்தாழ 1930 முதல் 1945 வரையில் தமிழ் நாவல் உலகம் உறக்கத்திலிருந்தது. தமிழின் மறுமலர்ச்சி இயக்கம் தோன்றிய பிறகும், மாதச் சஞ்சிகைகள் தமிழில் தோற்றம் எடுத்த பிறகும் தமிழ் நாவல்கள் எழுதும் வழக்கம் மிகுதிப்பட்டது. அதன் பலனாக பிரஞ்சு நாவல்கள் பலவும், வங்க நாவலாசிரியரான பங்கிம் சந்திர சாட்டர்ஜீ என்பவர் வங்க மொழியில் எழுதியுள்ள நாவல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. இவை சிறந்த கருத்துக்களையும் சமூக சீர்திருத்தக் கொள்கை களையும் கொண்டுள்ளவை. இக்காலத்திற்கு ஏற்ற சீர்திருத்தக் கொள்கைகளை அடிப்படையாக வைத்துப் பல நாவல்கள் சீர்திருத்த மனப்பான்மையுள்ள நூலாசிரியர்களால் எழுதப்படுகின்றன. அவை சீர்திருத்த மனப்பான்மைகொண்ட இளைஞர்கள் விரும்பிப் படிக்கின்ற நூல்களாக இருக்கின்றன. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் முதலிய நாவல்கள் தென்னிந்திய வரலாற்றை அடிப்படையாகக்கொண்டவை. அவை கல்கி ஆசிரியரால் எழுதப்பட்டவை. எளிய நடையையும் உயர்ந்த கருத்துக்களையும் அவற்றில் காணலாம். இத்தகைய வரலாற்று நாவல்கள் மிகப்பலவாக நம் நாட்டில் பெருகுதல் வேண்டும். தமிழ்ச்சங்க நூல்களிலுள்ள உயர்ந்த கருத்துக்களையும், தமிழ்ப் பண்பாட்டையும் இக்காலத் தமிழ் மக்களுக்கு நினைவூட்டும் வகையிலும் அவர்களை உண்மைத் தமிழ் மக்களாக இருக்கத் தூண்டும் வகையிலும் நாவல்கள், டாக்டர் மு. வரதராசனாரால் எழுதப்பட்டு வருகின்றன. செந்தாமரை, கள்ளோ காவியமோ, மலர்விழி முதலிய நாவல்கள் பலமுறையும் படிக்கத்தக்கவை. இவை மிக எளிய தமிழ் நடையில் உயர்ந்த கருத்துக்களைக்கொண்டு விளங்குகின்றன. சிறப்பாகத் தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவர்களும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் இந் நாவல்களைப் படித்துச் சுவைக்கின்றார்கள். தமிழ்ப்பண்பாட்டை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படும் இந்நாவல்கள் தமிழ் மாணவர்கள் உள்ளங்களைக் கவர்வதில் வியப்பில்லை அல்லவா? அயல்நாட்டுக் கதைகளைத் தழுவி எழுதப்படும் தமிழ் நாவல்களைவிடத் தமிழ் நாட்டுப் பண்பாட்டை அடிப்படை யாகக்கொண்டு எழுதப்படும் நாவல்களும், இன்றுள்ள சமுதாயச் சீர்கேடுகளை விளக்கி நலம் புரிய வழி கூறும் நாவல்களும் இப்பொழுது மிகுதியாக நாட்டுக்குத் தேவை. இந் நாவல்கள் எல்லோரும் படிக்கத்தக்க எளிய -ஆனால் பிழையற்ற நடையில் எழுதப்படுதல்வேண்டும். கருத்துக்களைக் கூறுவதோடு மொழிவளர்ச்சியிலும் துணைசெய்யும் நாவல்களே நாட்டுக்குத் தேவை. திரைப்பட வசனங்களும் பிழையற்ற முறையில் வெளிவரும் இக்காலத்தில், தமிழ் நாவல்கள் பிழையற்ற எளிய தமிழில் வெளிவருதல் மிகவும் அவசியமாகும். கூட்டங்களில் தமிழில் பேசியறியாத பள்ளித்தலைமையாசிரியர்களும், அரசியல்வாதிகளும் பிழையற்ற தமிழில் பேச ஆசைப்படும் இக்காலத்தில், நாவலாசிரியர்கள் தங்கள் நூல்களைப் பிழையற்ற தமிழ் நடையில் எழுதுவதே தம் தாய்மொழிக்குச் செய்யுந் தொண்டாகும். தமிழ்ச்சொற்களை மிகுதியாகப் பயன்படுத்த ஒவ்வொரு நாள் தாளும் விரும்பும் இக்காலத்தில், தமிழ் நாவல்கள் எளிய தமிழ் நடையில் எழுதப்படுதலை அறிவுடையோர் வரவேற்பர் அல்லவா? 8. இன்றைய தமிழ் இலக்கியம் வசனம் நாம் ஒருவரோடு ஒருவர் பேசும் பொழுது பயன் படுத்தும் நடை வசன நடை எனப்படும். அப்பேச்சு முறையில் எழுவாய், பயனிலைகளை ஒழுங்காக அமைத்து எழுதப்படுவதே வசனம் என்பது. எழுவாய், பயனிலைகள் முறைப்படியோ, மாறியோ அமையப் பல்வேறு இராகங்களில் அமைத்துப் பாடப்படுவது செய்யுள் அல்லது பாட்டு எனப்படும். பாட்டு பெரும்பாலும் படித்தவர்க்குத்தான் புரியும்; வசனம் என்பது, பொருள் எளிதில் புரியத்தக்கவாறு எழுவாய், பயனிலைகள் ஒழுங்காய் அமைய வாக்கியம் வாக்கியமாகச் செல்வது. அதனால் வசனம் பலரும் உணர்ந்து கொள்வது எளிது. மேலும் செய்யுள் செய்வது பலரால் இயலாது. பேச்சு நடையை இலக்கண அமைதிப்படுத்தி வரைவதே வசனம். ஆதலால், பெரும்பாலோர் வசனம் எழுத வாய்ப்பு உண்டாகின்றது. இதனாற்றான் சமுதாய வாழ்க்கையைப் பற்றிய - வாழ்க்கைக்கு மிகத் தேவையான அரசியல், விஞ்ஞானம் முதலிய பல கலைகளைப் பற்றிய செய்திகளும் உலக நாடுகளில் வசனத்திற்றான் எழுதப்பட்டுள்ளன. இவ்வுண்மையை நோக்க, வசனம் எந்த நாட்டு இலக்கியத்திலும், பெரும்பாலரால் விரும்பப்படுவது என்பதையும், இலக்கிய உலகில் உயிர்நாடி என்பதையும் நன்கு உணரலாம். ஆயினும், நமது தமிழ் இலக்கியவுலகில் செய்யுளே ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்கள் தனி ஆட்சி புரிந்து வந்தது. கடைக்கு அனுப்பப்பட்ட சீட்டும், கவியிலேயே எழுதப் பட்டது. அதுதான் சீட்டுக்கவி என்பது. இவ்வாறு புலவர்கள் வசனத்திற்குச் சிறப்பிடம் தராமல் செய்யுளுக்கே சிறப்பிடம் தந்த காரணத்தால் தமிழில் பழைய வசனகாவியங்கள் ஏற்படவில்லை. ஒரு சில நூல்களில் அவர்கள் எழுதிய வசனப் பகுதிகளும் ஏறத்தாழச் செய்யுள் நடையிலேயே அமைந்துவிட்டன. இலக்கண நூல்கட்கும் செய்யுள் நூல்கட்கும் உரை (அர்த்தம்) எழுதியபொழுதுதான், அக்காலப் புலவர்கள் வசனத்தைக் கையாண்டார்கள். அதனாலேயே வசன நடை உரை நடை எனப்பட்டது என்று சொல்லலாம். பாடப்படுவது பாட்டு என்று பெயர் பெற்றதுபோல, உரைக்கப்படுவது (பேச்சாகச் சொல்லப் படுவது) உரை எனப்பட்டது எனக்கூறுவது பொருந்தும். பழைய காலத்து வசன நடை இறையனார் அகப்பொருள் உரையிற் காணலாம். அதன் காலம் கி.பி-7ஆம் நூற்றாண்டு. அதற்குப்பிறகு கி.பி-9ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த புலவர் பலர் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களுக்கும், கலித்தொகை, சிந்தாமணி முதலிய இலக்கிய நூல்களுக்கும் உரை எழுதினர். அந்த உரைகள், அவ்வக் காலத்துத் தமிழ் வசன நடையை நமக்குத் தெரிவிப்பனவாகும். இந்த உரைகள் அனைத்தும் பொதுமக்களால் புரிந்து கொள்ள முடியாதவை. பொது மக்களுக்குப் புரியத்தக்கபடி எழுதப்பட்ட முதல் தமிழ் வசன நூல் பரமார்த்த குரு கதை என்னலாம். அது கி. பி-17 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த இத்தாலிய கிறிதுவப் பாதிரியாரான வீரமாமுனிவர் என்பவரால் எழுதப்பட்டது. அவருக்குப் பிறகு 19-ஆம் நூற்றாண்டில் இராமலிங்க சுவாமிகள் மறுமுறைகண்ட வாசகம் என்னும் சிறந்த வசன நூலை எழுதினார். ஆறுமுக நாவலர் பெரிய புராண வசனம், திருவிளையாடற் புராண வசனம், பாலபாட வரிசை எனப் பல வசன நூல்களை எழுதினார். தாண்டவராய முதலியார் என்பவர் பஞ்சதந்திரக் கதைகளை வெளியிட்டார். வீராசாமி செட்டியார் என்பவர் பல கட்டுரைகளை எழுதி விநோத ரச மஞ்சரி என்னும் பெயர் கொண்ட நூலாக வெளியிட்டார். இந்த நூல்கள் அனைத்தும் படிக்கப் படிக்க இன்பத்தைத் தருவன. இவற்றின் தமிழ் நடையும் சுவையுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தோன்றிய வசன நூல்களுள் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் கற்பவர் உள்ளத்தைக் கவர்வதாகும் நாம் வாழும் இந்த இருபதாம் நூற்றாண்டில் வசன நூல்கள் பெருகி வருகின்றன. இந்த நூற்றாண்டில் தோன்றிய தேசிய இயக்கம், சீர்திருத்த இயக்கம், மேனாட்டுக் கல்வி முறை ஆகிய மூன்றும் மக்களது மனப்பான்மையைப் பல துறைகளில் மாற்றி வருவதால், பலதுறை பற்றிய வசன நூல்கள் தமிழில் தோன்றலாயின; இன்றும் தோன்றி வருகின்றன. ஆங்கிலக் கல்வியும், தமிழ்க் கல்வியும் பெற்ற பலர் வசன நூல்களை எழுதியுள்ளனர்; இன்றும் எழுதி வருகின்றனர். இவை அனைத்தையும் கவனித்தால், இவற்றை-(1) இலக்கிய அமைதி கொண்ட வசன நூல்கள், (2) நாவல்கள், (3) சிறுகதைகள், (4) நாடகங்கள், (5) ஆராய்ச்சி நூல்கள் என ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1 இலக்கிய அமைதி கொண்ட வசன நூல்களில் அறிஞர் பலரால் பாராட்டப்படுவன மறைமலை அடிகள் எனப்படும் சுவாமி வேதாசலம் அவர்கள் எழுதிய நூல்களாகும். அவரது நடை பெரும்பாலும் தமிழ்ச் சொற்களாலேயே அமைந்த நடையாகும். அவரது நடையில் வருஷம், விவாஹம், ஹாரம் முதலிய சம்கிருதச் சொற்களையோ, பிறமொழிச் சொற்களையோ காண்பது அருமை இவ்வாறு பிற மொழிச் சொற்களை நீக்கித் தமிழ்ச் சொற்களாலேயே எழுதப்பட்ட அரவது நடை, தனக்கென்று அமைந்த தனிச் சிறப்புடன் சுவைக்கின்றது. உங்களுக்குப் புரியத்தக்கதாக அவரது நடைக்கு ஓர் உதாரணம் தருகின்றேன். இவ்வாறு என் இனிய நண்பன் பேசி முடித்த அளவில் என் விழிகள் கிறுகிறென்று சுழலத் தொடங்கின; என்னைச் சூழ இருந்த பொருள்கள் எல்லாம் சடுதியிற் சுற்றுவனவாயின; சூறைக்காற்றின் இடைப்பட்ட பஞ்சுபோல் ஒரு நிலையின்றி நான் இருந்தபடியே என் உடம்பும் ஆடி நின்றது. உடனே என் அறிவு கலக்கமடைந்து விழித்த கண் விழித்தபடியே நிற்க, மரம்போல் இருந்தேன். இன்று நமது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராசிரியராகவுள்ள ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் நடை தனிப்பட்ட தமிழ் நடையாகும். சில வரிகளைப் பாருங்கள்: ஒருநாள் ஒர் அரசிளங்குமரன் தன் தோழனைத் துணைக்கொண்டு கானகத்தில் வேட்டையாடச் சென்றான். அங்கு, அவன் விரும்பியவாறு வேட்டையாட வேங்கையும் வேழமும் அகப்படாமையால், எங்கும் அலைந்து திரிந்து அலக்கணுற்றான். பசியால் மெலிந்து, வெயிலால் உலர்ந்து, இருவரும் தளர்ந்து சோர்ந்தார்கள். சிறிய வாக்கியங்களில் உணர்ச்சி ஊட்டத்தக்க விறுவிறுப் பான நடை அமைத்து எழுதுவதில் தமிழ்ப்பெரியார் திரு. வி. கலியாணசுந்தர முதலியார் இணையற்றவர். சோழநாட்டின் வளம் என்னே! என்னே! சோழநாடு சோறுடைத்து என்னும் பழமொழியன்றோ இப்புனல்நாடு பெற்றிருந்தது? அச்சோற்றுக்கன்றோ இதுபோழ்து நம்மவர் வருந்துகின்றனர்? வெளிநாடுகளுக்கு ஓடுகின்றனர்? அங்கே மனிதவுரிமை இழந்து தவிக்கின்றனர். அன்று சோறளித்த சோழநாடு இன்று எங்கே? திரு. வி. கலியாண சுந்தர முதலியார் சிறந்த தமிழ்ப்புலவர்; தேசபக்தர்; சீர்திருத்த வாதி. இவரைப்போலவே காலஞ்சென்ற சி. சுப்பிரமணிய பாரதியாரும் பல நலங்களும் பொருந்தியவர். அரவது வசன நடையும் படிக்கத்தக்கதே: தமிழ்ப் பாடநூல்களை நல்ல வசன நடையில் எழுதிப் பெயர் பெற்றவர் காலஞ்சென்ற தமிழ்ப்பேராசிரியர் கா. நமசிவாய முதலியார் ஆவர். அவர் பாட நூல்கள் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் தமிழ்ப் பள்ளிக்கூட உலகத்தில் தனி ஆட்சி புரிந்தன. வி. கோ. சூரியநாராயண சாதிரியார், டாக்டர் உ. வே. சாமிநாதையர், சுத்தானந்த பாரதியார், கி. வா. ஜகந்நாதன், டாக்டர் மு. வரதராசனார் இவர்களுடைய வசன நூல்கள் இலக்கியச் சுவை மிகுந்த வசன நூல்கள் ஆகும். 2 அழகிய வசன நடையோடுகூடிய நாவல்களில் குறிப்பிடத்தக்கவை துரைசாமி என்பவர் எழுதிய கருங்குயில் குன்றத்துக் கொலை, பொன்னுசாமி பிள்ளை எழுதிய ஞானாம்பாள், வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய திகம்பர சாமியார் முதலிய நூல்கள், ரங்கராஜூ எழுதிய இராஜாம்பாள் முதலிய நூல்கள், இன்றைய உலகில் தமிழ்நடை சிறக்க நல்ல கருத்துக்களைத் புகுத்தி நாவல்கள் எழுதுவதில் மு. வரதராசனார் முன்னணியில் நிற்கிறார் என்பது அறிஞர்கள் கருத்தாகும். அவருடைய செந்தாமரை, கள்ளோ காவியமோ, மலர் விழி, பெற்றமனம், அல்லி முதலிய நாவல்கள் படிக்கத்தக்கவை. 3 சிறு கதை என்பது உள்ளதை ஒட்டியதாய் அல்லது உண்மையோ என மயங்கச் செய்வதாய் வரையப்படுவது. சிறு கதையில் ஒரு சிலரே காட்சி தருவர்; ஆங்காங்கு உணர்ச்சி பெருக, படிப்பவர் கருத்தினை இழுத்துச் செல்வது சிறந்த சிறுகதைக்கு இலக்கணமாகும். தமிழில் முதன் முதலில் சிறு கதைகள் எழுதியவர் வ. வெ. சு. ஐயர். அவருடைய கதைகள் இலக்கிய நயமும் மன எழுச்சியும் கொண்டவை. நகைச்சுவை மிகுந்த சிறு கதைகள் கல்கியால் எழுதப்பட்டுள்ளன. குடியின் கேடு, தீண்டாமை விலக்குப்போன்ற கதைகள் சாதாரண நடையில், ஆனால் உள்ளத்தில் பதியத்தக்க முறையில் சக்கரவர்த்தி இராஜகோபாலாசாரியாரால் எழுதப்பட்டன. புதுமைப்பித்தன், கி. வா. ஜகந்நாதன் முதலிய ஒரு சிலர் வரைந்துவந்த, வரைந்துவரும் சிறு கதைகள் மேனாட்டுச் சிறு கதை அமைப்பு முறையைத் தழுவியவை. இவை இக்காலத்தில் பெருகி வருகின்றன. பல மேனாட்டுச் சிறுகதைகள் இப்பொழுது தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன. இவை அனைத்தும் வரவேற்கத்தக்க வசன நூல்களே ஆகும். 4 கடிதங்கள்: இலக்கியத்தன்மை பொருந்திய கடிதங்கள் தொகுப்பு நூல்காளாக அயல் நாடுகளில் வெளியிடப் படுகின்றன. அம்முறையைப் பின்பற்றி, நமது இந்திய அரசாங்க முதல் அமைச்சராகவுள்ள பண்டித ஜவாஹர்லால் நேரு தம் மகளுக்குப் பல கடிதங்கள் எழுதினார். அவை உலக வரலாற்றை விளக்கிக்கூறும் கடிதங்களாகும். அவற்றைச் சென்னைக் கலைமகள் காரியாலயத்தார் தமிழில் மொழி பெயர்த்து நூலாக்கியுள்ளனர். அக்கடிதங்களின் மொழிபெயர்ப்பு நடை படிக்கத்தக்க நடையாகும். அடுத்து, எழில் என்ற மகன் தன் தாய்க்கு எழுதுவது போலப் பல கடிதங்கள் டாக்டர் மு. வரதராசனாரால் எழுதப்பட்டுள்ளன. அக்கடித நூலின் பெயர் அன்னைக்கு என்பது. தமிழன் இக்கால நிலை, முற்கால நிலை, தமிழரது இக்கால நிலை, முற்கால நிலை, தமிழரது இக்கால நிலை, முற்கால நிலை, அரசியல் செய்திகள், சமுதாய வளர்ச்சிக்குரிய செய்திகள் என்பன அக்கடிதங்களில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. சமீபத்தில் தமிழன் கண்ட மலேயா என்றொரு கடித நூல் வந்துள்ளது. திரு. அ. மு பரம சிவானந்தம் என்னும் தமிழ்ப்பேராசிரியர் மலேயாவிற் கண்ட விவரங்களை, அங்கு இருந்துகொண்டே, அன்றாடம், சென்னையில் இருந்த தம் மகளுக்குக் கடிதங்கள் மூலமாக விளக்கினார். அக்கடிதங்களின் தொகுப்பே நூலாக வெளி வந்துள்ளது. அக்கடிதங்கள் எளிய வசன நடையில் எழுதப்பட்டுள்ளன. நீங்கள் இம்மூன்று நூல்களையும் நன்றாகப்படித்து இன்புறலாம். 5 நாடகங்கள்: நாடகங்கள் தமிழில் மிகக் குறைவு. இக்குறையை முதலில் போக்கிய பெருமை திரு. வி. கோ. சூரியநாராயண சாதிரியாரைச் சேர்ந்தது. அவர் எழுதியுள்ள ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், முதலிய வசன நாடகங்கள் கற்றவர் மட்டுமே படிக்கத்தக்கவை. பொதுமக்களும் அநுபவிக்கதக்க முறையில் நாடக நூல்களை வரைந்து அழியாப்புகழ் பெற்றவர் திரு. ப சம்பந்தமுதலியார்ஆவர். அவர் கள்வர் தலைவன், மனோகரன் முதலிய பல நாடகங்களை நல்ல முறையில் எழுதியுள்ளார். நாடக பாவம் இந்நூல்களில் நிறைந்து காணப்படும். பேராசிரியர் கா. நமசிவாய முதலியார் அவர்கள் கீசகன், பிருதிவிராஜன் முதலிய நாடகங்களை எழுதியுள்ளார். பழைய சங்கத் தமிழ் நூல்களைத் தழுவிச் சங்ககால வள்ளல்கள் என்ற பெயரில் சிவ. குப்புசாமி பிள்ளை என்பவர் நாடக நூல்களை வெளியிட்டார். அவை செந்தமிழில் வரையப்பட்டவை. அவை பல பள்ளிகளில் இன்றும் மாணவரால் நடிக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் பள்ளி மாணவர்களுக்கு நடிப்பதற்கென்று பல நாடகநூல்கள் இல்லா திருத்தல் பெருங்குறையாகும். 6 ஆராய்ச்சி நூல்கள்: தமிழ் மொழி, நூல்கள், வரலாறு, சமயம் சம்பந்தமாகச் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக வெளிப்பட்டவையே தமிழாராய்ச்சி நூல்கள் என்பன. தஞ்சை சீனிவாசப் பிள்ளை எழுதிய தமிழ் வரலாறு, மு. இராகவையங்கார் எழுதிய சேரன்-செங்குட்டுவன் ஆழ்வார்கள் கால நிலை, ஆராய்ச்சித்தொகுதி, ரா. இராகவையங்கார் எழுதிய வஞ்சிமாநகர், தமிழ் வரலாறு, ந. மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய நக்கீரர், கபிலர், கள்ளர் சரித்திரம், சோழர் வரலாறு, வையாபுரிப் பிள்ளையவர்கள் எழுதிய தமிழர் பண்பாடு, தமிழின் மறுமலர்ச்சி சிந்தனைக் கட்டுரைகள், மறைமலையடிகள் எழுதிய மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், முல்லைப் பாட்டு ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி, சோமசுந்தரபாரதியார் எழுதிய தசரதன் குறையும் கைகேயி நிறையும், சேரர் பேரூர், சேரர் தாயமுறை, திருவள்ளுவர், ரா. பி. சேதுபிள்ளையவர்கள் எழுதிய ஊரும் பேரும் திருவள்ளுவர் நூல் நயம், சிலப்பதிகார விளக்கம், முதலியன படித்து மகிழத்தக்க ஆராய்ச்சி நூல்களாகும் நீங்கள் மேல் வகுப்புகளில் இந்த ஆசிரியர்களுடைய கட்டுரைகளையும் நூல்களையும் படிக்க வாய்ப்பு நேரும் நீங்கள் இனிய எளிய பிழையற்ற முறையில் தமிழ் வசனநடையை வளர்த்து நம் தமிழ்த்தாய்க்குத் தொண்டு செய்யுங்கள். 9. தென்னிந்தியச் சாசனங்கள் டாக்டர் பர்னெலின் தொண்டு உலகத்தில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் பலவகை நாகரிக வளர்ச்சியை யுடையவர்கள். அவர்கள் தனித்தனி மொழிகளைப் பேசுகின்றார்கள். ஆயினும் அவர்தம் எழுத்து முறைகளை நன்கு ஆராய்ந்தால் அவற்றின் பிறப்பும் வளர்ச்சியும் ஒன்று போலவே. இருக்கக் காணலாம். எகிப்து, சீனம், பாபிலோனியா முதலிய நாடுகளில் தோன்றிய நாகரிகங்கள் மிகப் பழையவை என்பது ஆராய்ச்சி யாளர் கருத்து. அவ்விடங்களில் கிடைத்துள்ள எழுத்துக்களின் வளர்ச்சிக் குறிகளையும் மெக்ஸிகோ, ஈடர் தீவு முதலிய இடங்களில் அநாகரிக மக்கள் பயன்படுத்தியனவாகக் கருதப்படும் எழுத்துக் குறிகளையும் நன்கு ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இவ்வெழுத்து முறைகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஒருபடித்தாகவே காணப்படுகின்றன என்ற முடிவுக்கு வந்தனர். (1) முதலில் பொருள்களை உணர்த்த உண்டான சித்திரங்கள், (2) சித்திரிக்கப்பட்ட ஓர் உருவத்தின் பெயரைக்கொண்ட அல்லது சந்தேகத்தால் நிச்சயிக்கப்பட்ட ஒரு பொருளையோ அல்லது தொழிலையோ குறிப்பதற்குப் பயன்பட்ட சித்திரங்கள், (3) பிறகு ஒலியைக்கொண்டு சொற்களைச் சில பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உருவங்களை அமைத்து எழுதுதல். இவை ஒலிக்குறிகள் எனப்படும். (4) இவற்றின் பின்னரே இன்றைய அகரவரிசையில் எழுதப்படும் எழுத்துக்கள் உருப்பெற்றன. மேற்கூறப்பெற்ற சித்திர எழுத்துக்களும் அவற்றின் வடிவ வளர்ச்சிக் குறிகளும் நமது இந்தியாவில் சிந்து மகாணத்தில் தோண்டி எடுக்கப்பட்ட மொகெஞ்சதரோ என்னும் இடத்திலும், பஞ்சாப் மாகாணத்தில் ஹரப்பா என்னுமிடத்திலும், கிடைத்துள்ள பொருள்களின் மீது பொறிக்கப்பட்டிருத்தல் காணலாம். எனவே, இவை நம் நாட்டுக்குப் புதியன அல்ல என்பதை உணரலாம். எல்லா இடங்களிலும் கிடைத்துள்ள சித்திர எழுத்துக்கள் முதலியவற்றின் வகைகள் இன்னவையென பிறமொழி நூல்களில் காணப்படவில்லை ஆனால் எழுத்துக்களின் இந்த வளர்ச்சி முறையினை நம் தமிழ் இலக்கண நூல்கள் பல நூற்றாண்டுகட்கு முன்னரே சொல்லியுள்ளன. நன்னூலுக்கு உரை வகுத்த மயிலைநாதர் இவற்றை (1) உருஎழுத்து, (2) தன்மை எழுத்து, (3) உணர்வெழுத்து, (4) ஒலி எழுத்து என்று குறித்துள்ளனர். யாப்பருங்கல விருத்தியில் இறுதிச் சூத்திர உரையில் ஓர் ஆசிரியனுக்குத் தெரிந்திருக்க வேண்டிய எழுத்து வகைகளைக் கூறுமிடத்தில் உரையாசிரியர், இவ்வெழுத்துக்களுக்குரிய சூத்திரங்களை மேற்கோளாக எடுத்துக் காட்டியுள்ளார். வரலாற்று உண்மைக்குப் பொருந்தியனவாக ஆராய்ச்சி யாளரால் ஒப்புக்கொள்ளப்பட்ட இந்திய எழுத்துக்கள் நால்வகைப்படும். அவை: 1 பிராமி, 2 கரோஷ்டி, 3 திராவிடி, 4 யவனானியா என்பன. இவற்றுள் 1 யவனானியா என்பது கிரேக்கரும் அவரைச் சார்ந்தவரும் பயன்படுத்தி வந்த எழுத்துக்களாகும். 2 கரோஷ்டி என்பது வடமேற்கு இந்தியாவின் ஒரு பகுதியில் ஏறத்தாழக் கி. பி. 4-ம் நூற்றாண்டில் வழக்கிலிருந்த எழுத்துமுறை. இவ்விருவகை எழுத்துக்களும் தென்னிந்தியாவில் காணப்படவில்லை. (3) பிராமி என்பது அசோகன் கல்வெட்டுக் களிலும் கி. மு. முதல் மூன்று நூற்றாணடுகளில் தென்னிந்தியக் குகைகளிலும் காணப்படும் எழுத்துக்களாகும். பிராமி எழுத்து முறை இரண்டு எழுத்துமுறைக்கும் மாறுபட்டது. அதனை நன்கு ஆராயின், அது தமிழுக்கென அமைக்கப்பட்ட மொழியாகலாம் என்று கருதுகின்றனர். உரு எழுத்து முதலிய நிலைகளைத்தாண்டி அகரவரிசை எழுத்துக்களைப் பெற்ற பிராமி லிபி சுமார் கி. பி. 3 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் புகுந்து, அந்நாட்டு நிலைக்கேற்பச் சிறிதுசிறிதாக வளர்ச்சியடைந்தது. அங்ஙனம் வளர்ச்சியடைந்த புதிய லிபி வட்டெழுத்து என்று கூறப்படுவது. அஃது ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் வழக்கிலிருந்திருத்தல்வேண்டும். தொண்டை நாட்டிலும், காவிரி வரையுள்ள தமிழகத்திலும் பல்லவராட்சி ஏற்பட்டபிறகு அவர்களால் போற்றிவளர்க்கப் பெற்ற பிராமி லிபியின் வழிவந்த கிரந்தமும் அதனையொட்டி வளர்ந்த கிரந்தத் தமிழும் வழக்காறு பெறத் தொடங்கின. அக்காலத்தில் பல்லவர் ஆட்சிக்கு உட்படாத பாண்டியநாடு, சேரநாடு, கொங்கநாடு ஆகியவற்றில் வட்டெழுத்து வழங்கி வந்தது. பல்லவர்க்குப்பின் கி. பி. 10-ஆம் நூற்றாண்டிலிருந்து 13-ஆம் நூற்றாணடு முடியத் தமிழகத்தின் பெரும் பகுதியை ஆண்ட சோழர்கள் காலத்தில் கிரந்தத் தமிழே தென்னிந்தியா முழுவதிலும் பெருவழக்குப் பெற்றது. ஆயினும் அக்காலத்திலும் சேர நாட்டில் வட்டெழுத்து வழக்கிலிருந்தது. பிறகு சேர நாட்டினர் கிரந்த எழுத்தைக் கையாளத் தொடங்கிய காரணத் தால் வட்டெழுத்து வழக்கொழிந்தது. சோழர்க்குப் பின்வந்த விஜயநகர அரசர்கள் நாகர எழுத்துக்களைத் தமிழ் நாட்டில் புகுத்தினர். தஞ்சையை ஆண்ட மகாராஷ்டிரர் காலத்திலும் நாகர எழுத்துக்கள் தமிழரிடை உலவின. இதுகாறும் கூறப்பெற்ற பிராமி லிபி, வட்டெழுத்து, கிரந்த லிபி, கிரந்தத் தமிழ், நாகரம் முதலிய லிபிகள் தென்னிந்தியாவில் தோன்றி வளர்ந்தன என்னும் உண்மையை உணர்த்தும் கருவிகள் யாவை? அசோகன் கால முதல் விஜயநகர ஆட்சி முடியும் வரை இத் தென்னாட்டில் பல்வேறு அரச மரபினரால் பொறிக்கப் பட்ட செப்புப் பட்டயங்களும் கல்வெட்டுக்களுமே பல்வேறு லிபிகளின் வளர்ச்சியினை நன்கு உணர்த்துகின்றன. நமது நாட்டு வரலாறு முதலிய அரிய செய்திகளைத் தம்மகத்தே கொண்ட கல்வெட்டுக்கள் ஆட்சி மாறுதலால். தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டன. ஆங்கில ஆட்சியேற் பட்ட பின்னர் அறிவும் ஆராய்ச்சியும் மிகுந்த மேனாட்டு அறிஞர்கள் 19-ஆம் நூற்றாண்டில் இந்நாட்டுப் பொருள்களைப் பார்வையிட்டனர். சிலர் வடமொழி நூல்களையும் தென் மொழி நூல்களையும் ஆராயத் தொடங்கினர். வேறு சிலர் ஒவ்வொரு மாகாண மொழியையும் உழைத்துக் கற்று ஆராய்ச்சி புரியத் தொடங்கினர். பிராமி வட்டெழுத்து முதலிய எழுத்துக் களைக் கற்ற அறிஞர் சிலர் தென்னிந்திய சாசனங்களைப் படிக்க முற்பட்டனர்; அவற்றைப் படி எடுத்தனர். அச்சிட்டு வெளிப்படுத்தினர். அவற்றிற் கூறப்பட்ட செய்திகளை ஆராய்ந்து இன்டியன் ஆண்டிகுரி முதலிய ஆங்கில சஞ்சிகைகளில் வெளிப்படுத்தினர். அந்நிலையில் அரசாங்க ஆதரவில் கல்வெட்டுத் தொகுதிகள் வெளிவந்தன. பர்னல் என்னும் ஆராய்ச்சியாளர் இங்ஙனம் இந்தியாவில் பலதுறை ஆராய்ச்சியில் மேனாட்டு அறிஞர்கள் முனைந்திருந்த 19 ஆம்நூற்றாண்டில் ஒரு சார் அறிஞர் மேற்கண்ட இந்திய லிபிகளைக் கற்று ஆராயத் தொடங்கினர். ஏறத்தாழ 1830இல் ஜி. பிரின்ஸெப் என்பவர் பண்டை இந்திய எழுத்துக்கள் என்னும் ஆராய்ச்சி நூலை வெளியிட்டார். டாக்டர் பாபிங்டன் என்னும் அறிஞர் தமிழ் எழுத்துக்களைப்பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். வால்டர் இலியட் என்பவர் 1836இல் பழை கன்னாட எழுத்துக்களைப்பற்றி ஆராய்ந்தார். இத்தகைய எழுத்து ஆராய்ச்சியும் பிற ஆராய்ச்சிகளும் நிகழ்ந்தபோது A. C. பர்னல் என்னும் அறிஞர் தென்னிந்தியாவுக்கு 1860இல் வந்தார். அவர் வடமொழி நன்கறிந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்னும் தென்னிந்திய மொழிகளைப் பயின்றவர். அவற்றுடன் இந்திய எழுத்துக்களைப்பற்றிப் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் அதுகாறும் வெளியிட்ட நூல்களையும் கல்வெட்டுக்களையும் பழுதறப் படித்தார். நைஜாம் மாகாணத்திலுள்ள அஜந்தா என்னும் குகைகளில் காணப்படும் எழுத்துக்களையும் கல்வெட்டுக்களையும் ஆராய்ந்தார். கேப்டன் H. ஆர்க்னெ என்பவர் எழுதிய பழைய-புதிய இந்திய எழுத்துக்கள் என்னும் நூலையும் எம். சாபா போன்ற பிரெஞ்சு நாட்டு ஆராய்ச்சியாளர் இந்திய லிபிகளைப்பற்றி எழுதிய பிரஞ்சு மொழி கட்டுரைகளையும் கருத்தூன்றிப் படித்தார். ஜே. ஆப்பர்ட், மாக்-முல்லர், கால்டுவெல், குண்ட்ர்ட், கிட்டெல், ஏடி, காம்பெல், சி. பி. பி. பிரௌன் போன்றார் வெளியிட்ட ஆராய்ச்சி நூல்களையும் அகராதிகளையும் பார்வையிட்டார். பழந்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்தையும் கற்றார். தமக்கு முன் இந்நாட்டில் வாழ்ந்து பல்லாண்டுகள் தமிழைக் கற்றுத் தேம்பாவணி என்னும் அரிய காவியத்தைச் செய்த பெகி என்னும் வீரமாமுனிவர் எழுதிய நூல்களையும் பழுதறப் படித்தார். அமராவதி, மகாபலிபுரம், தஞ்சாவூர், அஜந்தா முதலிய இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆங்காங்குள்ள கல்வெட்டுக்களைக் கவனித்துப் படித்துப் பல உண்மைகளை உணர்ந்தார். அவர்காலத்தில் தஞ்சை மகராட்டிரர் அரண்மனையில் சரபோஜி மன்னரால் சேமித்துவைக்கப்பெற்ற சரசுவதி மகாலில் இருந்த பல்வேறு பொருள் பற்றிய ஏட்டுச்சுவடுகளைச் சோதித்து விளக்கமான் நூற்பட்டியல் ஒன்றைத் தயாரிக்க அறிஞர் ஒருவர் தேவைப்பட்டார். 1871-இல் சென்னைக் கவர்னர் லார்டு நேப்பியர் என்பவர் பர்னல் அவர்களுடன் பழகி, அவரது அறிவு நுட்பத்தைக் கண்டு, அவரைத் தஞ்சைக்கு அனுப்பினார். பர்னல் அங்கிருந்து பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பனையோலைக் சுவடிகளை ஆராய்ந்தார். அவற்றை (1) வேதசம்பந்தமான நூல்கள், (2) சமயதத்துவம், (3) நாடகம், புராணம், தந்திரம், இசை, என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்து 1879இல் நூல் பட்டியலை முடித்துப் பல்லோர் பாராட்டுக்கு உரியவரானார். இண்டியன் ஆண்டிகுரி தோற்றுவிக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே (1872-இல்) டாக்டர் பர்னல் வட்டெழுத்துக்களை நன்கு ஆராய்ந்து அச் சஞ்சி கையில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். மூன்றாம் ஆண்டில் (1) தெனிந்தியாவில் பஃலவி மன்னரின் கல்வெட்டுக்கள் (2) கொச்சியில் தங்கிய யூதர்களின் முதல் ஒப்பந்தப்பத்திரம் என்றும் பொருள்களைப் பற்றி இரண்டு ஆராய்ச்சிக்கட்டுரைகள் வெளியிட்டார்; 4-ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் தொண்டாற்றிய மிகப்பண்டைய கிறிதவ கழகங்கள் என்னும் பொருளைப்பற்றி எழுதினார். 5-ஆம் தொகுதியில் (1) மலையாள கிறிதவர்கள் (2) ஜாவாவில் இலக்கியப்பணி என்பனபற்றிக் கட்டுரைகள் வரைந்தார். 6-ஆம் தொகுதியில் பிஷெல் என்னும் மேனாட்டார் ஆங்கிலத்தில் வரைந்த சாகுந்தலம் நூலினைப் படித்து அழகிய மதிப்புரை வெளியிட்டார். 7-ஆம் தொகுதியில் (1) யுவான் சாங்கால் குறிக்கப்பெற்ற சரித்திரபுரம் (2) நாகையிலுள்ள புத்தர்கோவில் (3) எல்லி என்பார் மலையாள மொழியைப்பற்றி எழுதிய நூலைப்பற்றிய குறிப்பு என்பனபற்றித் தம் கருத்துக்களை வெளியிட்டார். எட்டாம் தொகுதியில் மேனாட்டு அறிஞர்கள் வேதங்களைப்பற்றிக் குறித்த சில செய்திகளின் மேல் ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார். ஒன்பதாம் தொகுதியில் டாக்டர் கோல்ட்டக்கர் என்பாரைப் பற்றியும், மாக்முல்லருக்கு ஜப்பானில் கிடைத்த வடமொழி நூல்களைப்பற்றியும் சிறு குறிப்புக்கள் வரைந்தார். பத்தாம் தொகுதியில் சரசுவதி மகாலில் அவர் செய்த ஆராய்ச்சி பற்றிய குறிப்பு வந்தது. பதினோராம் தொகுதியில் பாபிலோனியாவிற் கிடைத்த இந்திய எழுத்துக்கள் என்பது பற்றிய கட்டுரை வந்தது. இதன் பிறகு அவர் எழுதிய கட்டுரை பின்வந்த தொகுதியில் காணப்படவில்லை. பதின்மூன்றாம் தொகுதியில் அவர் காலமானது குறிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் 1882-இல் அல்லது 1883-இல் காலமானவராதல் வேண்டும். அவர் இயற்றிய பெருநூல் இங்குக் குறித்த கட்டுரைகள் அல்லாது டாக்டர் பர்னல் எழுதிய ஆராய்ச்சி நூல் ஒன்று உண்டு. அந்நூல் தென்னிந்திய எழுத்துக்களைப் பற்றிய தாகும் (Elements of South Indian Poleography). இந்நூலில் அவர் கி. பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரையில் தென் இந்தியாவில் தோன்றிய கல்வெட்டுக்களை நன்கு ஆராய்ந்து எழுத்துக்களின் பலவகை வளர்ச்சி பற்றி விரிவாகக் கூறியுள்ளார். அந்நூல் முதலில் 1874-இல் வெளியிடப்பட்டது. முதற் பதிப்பின் பின் அவர் பல இடங்களுக்கு நேரே சென்று அறிஞர் பலர் கருத்துக்களை அறிந்து 1878-இல் விரிவான இரண்டாம் பதிப்பினைக் கொணர்ந்தார். அந்நூலில் தாம் அதுகாறும் படித்த பலதுறை ஆராய்ச்சி அறிஞர்களுடைய கருத்துக்களை நன்கு பயன்படுத்தியுள்ளார். அவர் பிராமி முதலிய ஒவ்வொரு வகை லிபியைப்பற்றி எழுதும் அத்தியாயத்தில் முதற்கண் அது தோன்றிய நாட்டு வரலாறு கூறி, பிறகு உண்டான எழுத்து மாற்றங்களைக் கூறியுள்ளார். அதாவது லிபி மாற்றத்திற்குப் பல்வேறு நாட்டு ஆட்சி மாறுதலே அடிப்படைக் காரணம் என்பதை நன்கு விளக்கவே வரலாறு முன்னர்க் கூறப்பட்டுள்ளது. இந்த அறிஞர் தொல்காப்பியர் குறிக்கும் புள்ளி பெறும் எழுத்துக்கள் பற்றியும், அவை பற்றிய வீர சோழியும், நன்னூல் சூத்திரங்களையும் குறித்துள்ளமை இவரது தமிழ்ப் புலமையை நன்கு விளக்குகின்றது. இப்பெரியாருடைய கட்டுரைகளும் தென்னாட்டு எழுத்துக்களைப் பற்றிய ஆராய்ச்சி நூலும், அறிஞரால் பொன்னேபோல் போற்றத்தக்கவை. இத்தகைய மேனாட்டுப் பெருமக்களுடைய உணர்ச்சி மிகுந்த உழைப்பின் பயனாக வெளிப்போந்த நூல்களால்தான் நமது தமிழகப் பெருமையும் பழமையும் உலகமறிய இடமுண்டானது. இவ்வாறு நம்மையும் நமது நாட்டையும் தம் உழைப்பால் உலகறியச் செய்த பர்னல் போன்ற பெருமக்கட்கு நமது நன்றி என்றும் உரியதாகுக. 10.அறம் அறிந்தோம் உலகில் மக்கள் பிறக்கின்றனர்; உண்பதும் உடுத்துவதும் உறங்குவதுமாகக் காலத்தை ஓட்டி இறக்கின்றனர். உணவும் உடையும் ஓய்வுக்கு வீடும் பெற நாள் எல்லாம் உழைத்து மன வளர்ச்சியில் விருப்பம் இன்றி, மனத் தூய்மைக்கு வழி இன்றி வாழும் வாழ்க்கையே பெரும்பாலோருடைய வாழ்க்கையாக இருக்கின்றது. வெறும் உடல் உழைப்பு மட்டும் இன்பத்தைத் தர முடியாது; ஆதலால் அவ்வித வாழ்க்கையில் துன்பமே மிகுந்து நிற்கிறது. அந்த வாழ்க்கையால் அவர்களுக்கும் பயன் இல்லை; மற்றவர்க்கும் பயன் இல்லை. ஏனோ பிறந்தார், எப்படியோ வாழ்ந்தார், இறந்தொழிந் தார் எனப் பிறர் சொல்லும்படி வாழ்வது மனிதர்க்கு அழகன்று. அவர்க்கு இயற்கையில் கிடைத்திருக்கும் அறிவு, பண்பு, ஆற்றல்-இவற்றைத் தகுந்த முறையில் பயன்படுத்தித் தம்மை உயர்த்திக்கொள்வதோடு பிறருக்கும் நன்மை செய்து வாழ்வதுதான் அறவாழ்க்கையாகும். அறம் என்பது என்ன? அது உலகம் முழுவதிலும் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கையில் பரவி நிற்கும் பொதுச் சட்டம்; பொது நியதி. அந்தச் சட்டத்தை யாரும் உண்டாக்கியதில்லை. மக்கள் சமூகமாகக் கலந்து ஒருவருக்கு ஒருவர் உதவியே வாழவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்திய இயற்கை உண்டாக்கிய சட்டம் அது. இந்தியாவிற்கு ஓர் அறம், அமெரிக்காவிற்கு ஓர் அறம் என்பது இல்லை. அறம் எல்லா நாட்டிற்கும் எக்காலத்திற்கும் பொதுவானது. அந்தப் பொதுச் சட்டத்தை அறிந்து, அதன்படி வாழ்பவர் நன்மையும் மன அமைதியும் பெறுவர். அதை மீறுபவர்களோ அளவில்லாத துன்பங்களால் அலைக்கழிக்கப்படுவர். இது உண்மை; உறுதி. பொதுச்சட்டமாக இருக்கும் அறத்தின் பல தன்மைகளையிம் பிரிவுகளையும், அவற்றை வாழ்க்கையில் கைக்கொள்ளும் வழிகளையும் கூறுவனவே அறநூல்களாகும். இன்று வரை எழுந்த அற நூல்களுள், திருக்குறளே மிகச் சிறந்தது என உலக மக்களால் போற்றப்படுகிறது. அந்த நூலில் அறம் மட்டும் கூறப்படவில்லை; பொருள், இன்பம் என்பவையும் கூறப்படுகின்றன. அரசியல், சமூகம், பொருளாதாரம் என இன்று கூறுகிறோமே, அவற்றைப் பொருள் என்பதில் அடக்கலாம். இவை யாவும் அற வழியில் அமைந்து நடைபெறவேண்டும் என்பதே திருவள்ளுவரின் நோக்கம். உலகப் பெரியார் அனைவரின் நோக்கமும் அதுவே. இன்பம் என்பது ஆணும் பெண்ணும் காதலால் உள்ளம் கலந்து பெறும் இன்பம். அதற்கும் அறமே துணையாக இருக்கவேண்டும்; அறவழியில் பெறும் இன்பமே காதலர்க்கும் மற்றவர்க்கும் பிற்காலத்தில் துன்பமாய் விளையாமல் நிற்கும் என்று வள்ளுவர் கருதினார். இக்கருத்தை உலகப் பெரியார் அனைவரும் கூறியுள்ளனர். சங்கப் புலவர்கள் வாழ்க்கையை அகம், புறம் என இரண்டாகப் பாடியிருக்கத், திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் என மூன்றாகக்கொண்டு நூல் இயற்றியுள்ளது ஏன் என்பர் சிலர். புலவர்கள் கவிதை பாடுவதற்காக வாழ்க்கையைப் பார்த்த முறை வேறு; வள்ளுவர் அறத்தை விளக்கி மக்களைத் திருத்துவதற்காக வாழ்க்கையை நோக்கிய முறை வேறு. இவர் கூறும் அறத்தையும் பொருளையும் புறத்திலும், இன்பத்தை அகத்திலும் அடக்கலாம். வட நூலார் இந்த மூன்றுடன் வீடு என்பதையும் சேர்த்து நான்காகக் கூறுவர். அறவழியில் எண்ணி, அற வழியில் எண்ணி, பொருள் சேர்த்து, இன்பம் அநுபவித்து, இவற்றின் பயனாக அடைவதே வீடு ஆதலால் வள்ளுவர் அதைப்பற்றித் தனியாகக் கூறாமல் விடுத்தார். உலக வாழ்வுக்குத் தேவையானவை இந்த மூன்றுமே. இவற்றைப் பற்றிக் கூறினால்தான் மக்களின் அறிவுக் கண் திறக்கும். நல்வாழ்வுக்கு வழி பிறக்கும். வீட்டைப் பற்றி வள்ளுவர் கூறாமலும் இல்லை. அறத்துப் பாலின் இறுதியில் நான்கு அதிகாரங்களில் அதைப்பற்றிய அவரது கருத்துரை அடங்கியிருக்கின்றது. மனிதர் செய்யும் செயல்களுக்கெல்லாம் காரணமா யிருப்பது அவர். மனமேயாகும். மனத்தில் தோன்றும் எண்ணம் செயலாக மலருகிறது. அங்கு எழும் விருப்பும் வெறுப்பும் பல்வேறு செயல்களுக்கும், செயலின் போக்குக்கும், காரணமா கின்றன. ஆகவே, செயல் நல்லதாகவும் மற்றவர்க்குப் பயன்படுவதாகவும் இருக்கவேண்டுமானால், மனம் தூய்மையாக இருக்கவேண்டும். அளவு மீறிய ஆசை, அடுத்தவன் வாழ்வதைக் கண்டு புழுங்கும் பொறாமை, பொங்கியெழும் கோபம், கடுகடுத்துப் பேசும் சுடுசொல்-இவற்றிற்கு இடம் தரக்கூடாது. இவை மனத்தைக் கெடுக்கும் தீமைகள், காற்றின் காரணமாக நம் வீட்டில் தூசி படிவதுபோல், நம் மனத்தில் இத்தீமைகள் இயல்பாக, எளிதாக இடம் பெற்றுவிடும். ஓவ்வொரு நாளும் அமைதியான இரவு நேரத்தில், தனியாக இருந்து, அன்று செய்த செயல்களில் நல்லவை எத்தனை, தீயவை எத்தனை என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அவற்றில் இத்தீமைகள் கலந்தனவா என்பதை ஆராய வேண்டும்; இவற்றை இனிமேல் நீக்கியே தீருவோம் என்னும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு நாள்தோறும் எண்ணி எண்ணிப் படிப்படியாக மனத்தைத் தூய்மையாக்கிக் கொள்ளும் முயற்சிதான் அறம் என்று கூறுகிறார் திருவள்ளுவர். மனத் தூய்மையில்லாமல், மற்றவர் பாராட்டவேண்டும், செய்தித் தாள்களில் பெயர் அடிபடவேண்டும் என்பதற்காகச் செய்யும் அறச்செயல்கள் எல்லாம் பயன் இல்லாதவை என்றும் அவர் கூறுகிறார். அறம் செயலில் இல்லை; மனத்தில்தான் இருக்கிறது எனக் கூறும் அவரது குறளைப் பாருங்கள்: மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்; ஆகுல நீர பிற அறத்திற்கு இதைவிடச் சிறந்த விளக்கம் வேறு என்ன இருக்க முடியும்? மனத்தூய்மை பெறுவதற்காகக் சிலர் மணம் செய்து கொள்ளாமல் தனிவாழ்க்கை மேற்கொள்ளுகிறார்கள். மணம் செய்துகொண்ட சிலரும் குடும்பத்தைத் தவிக்கவிட்டு ஆசிரமத்திற்கோ-காட்டிற்கோ போகிறார்கள். தேளுக்கு அஞ்சிப் பாம்பின் வாயில் அகப்படுவது போலக் குடும்பத்தில் உள்ள இயற்கையான பந்தங்களை விட்டு ஓடிய அவர்கள், வேறு வகையான பந்தங்களில் சிக்கிக்கொள்கிறார்கள். குடும்பத்தை விட்டு ஓடுவது எளிது: ஆனால் எல்லோருக்கும் அதனால் பயன் கிடைக்காது. ஊலக வாழ்க்கையின் தொடர்பை அறுத்துக் கொண்டு தனி வாழ்க்கை நடத்துபவர்களுக்கு உண்மையான ஞானம் உண்டாகாது என்று மார்க்க அரேலிய என்னும் அரசஞானி கூறியுள்ளார். பந்தங்களைக் கண்டு பயந்து ஓடுவதால் அவற்றை வெல்ல முடியாது. பகை வரை அழிக்க விரும்புகிறவன் அவர்களைவிட்டு வேறு எங்காவது ஓடுகிறானா? அவர்களுக்கு இடையில் வலிய நுழைந்து வாளோ, துப்பாக்கியோ எடுத்துக்கொண்டு போராடுகிறான்; வலிமை யிருந்தால் வெற்றிஅடைகிறான். அதுபோல, சிறந்த கல்வியறிவும், வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்து படிப்பினை பெறும் திறமையும் மனவலிமையும் இருந்தால், குடும்பத்தில் இருந்துகொண்டே பந்தபாசங்களை எதிர்த்து வெல்லலாம். திருவள்ளுவரும், அறம் என்பதே இல்வாழ்கைதான்; அறவழியில் இல்லறத்தை நடத்தி மனத்தூய்மை பெற்றுவிட்டால் வேறு வழிகளில்-துறவறம் முதலிய வழிகளில் சென்று பெறுவதற்கு என்ன இருக்கிறது என்னும் கருத்துப்பட, அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றும், அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன்? என்றும் கூறுகிறார். சமூகத்திலுள்ள ஏழை, குருடு, செவிடு முதலியவர்களுக்கு உதவுவதும், பொதுத்தொண்டு செய்வதற்காகவே. உள்ளத்துறவு பூண்டவர்களுக்குத் துணை புரிவதும் இல்லறத்தானின் கடமை என்று வள்ளுவர் கூறுகிறார்; அவன் பழிக்கு இடம் இல்லாமல் சேர்க்கும் செல்வத்தைப் பாலருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். கணவனின் வாழ்க்கையில் சம பங்குகொண்டு, வெறும் வேலைக்காரியாக இராமல் வாழ்க்கைக் துணைவியாக விளங்கிக் கற்போடு வாழும் பெண்ணின் பெருமையைத் திருவள்ளுவர் வாயாரப் பாடுகிறார்; அத்தகைய பெண்ணைவிடப் பெருந்தக் கோர் வேறு யாருமில்லை என்கிறார். அறிவும் அருமையும் பெண்பாலான என்றார் தொல்காப்பியனார். பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவிபேணி வளர்த்திடும் ஈசன் என்று பாடினார் பாரதியார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பெண்ணுடன் கூடியே ஆடவன் முழு மனிதத்தன்மையை அடையமுடியும் என்பதை வள்ளுவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். மனைவியோடு சேர்ந்து மக்களைப் பெறும் ஒருவன், அவர்களிடத்தில் அன்புகொண்டு, சிறிது தியாகமும் செய்து வாழ்கின்றான். இந்த அன்பின் தன்மையை வள்ளுவர் விரிவாகக் கூறுகிறார். வாழ்க்கையில் பெறும் உயரிய இன்பம் எல்லாம் அன்பினால்தான் கிடைக்கின்றன என்ளும், உடலும் உயிரும் சேர்ந்து மனிதப் பிறவியாக உருவெடுத்தது, பிறரிடம் அன்பு காட்டுவதற்காகத்தான் என்றும் அவர் கூறுகின்றார். அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு குடும்பத்தாரது முக்கிய கடமைகளில் ஒன்று விருந்து உபசரித்தல். இது அன்பினால் செய்யப்படும் செயலாகும். நண்பர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் வைக்கும் ஆடம்பர விருந்தை இங்கே குறிப்பிடவில்லை. விருந்து என்றால் புதுமை என்பது பொருள். ஊருக்கோ, நாட்டுக்கோ புதியவராக வந்தவரை, அன்போடு உபசரித்து, தம் நாட்டில், தம் ஊரில் இருப்பதுபோல அவர் உணரும்படி செய்வதுதான் விருந் தோம்பல் என வள்ளுவரால் சொல்லப்படுகிறது. இச்செயல் ஒரு சமூகத்தின் சிறப்பை, உயர்ந்த பண்பை-மற்றொரு சமூகத்தின் கண்முன் உயர்த்திக் காட்டும்; அல்லது ஒரு நாட்டின் பண்பை மற்றொரு நாட்டின் கண் முன் உயர்த்திக் காட்டும். இந்த விருந்தோம்பல் குடும்பத்தானாகிய தனி மனிதன், தன் சமூகத்திற்கும் நாட்டிற்கும் செய்யும் தொண்டாகி விடுகிறது. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு என்னும் குறளால் இதன் சிறப்பை வள்ளுவர் கூறுகிறார். இது நம்மிடம் தொண்டு மனப்பான்மையயை உண்டாக்கி, மனத்தூய்மைக்கு வழி செய்யும். எப்பொழுதும் இனிய சொற்களைப் பேசிப் பிறரை நம் வயமாக்குவது தொண்டின் முதற்படி உதட்டளவில் தேன் ஒழுகப் பேசி உள்ளத்தில் நஞ்சுவைத்துப் பழகுகிறவர்களும் இருக்கிறார்கள். உள்ளத்தில் ஊறும் அன்பு காரணமாக அங்கிருந்தே இனிய சொற்கள் வரவேண்டும். அவைகளில்தான் அறம் வாழ்கிறது என்பது திருவள்ளுவர் கருத்து: முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம் பணிவும் இன்சொல்லுமே ஒருவனுக்கு அணிகள் என்றும் அவர் கூறுகிறார். ஒருவன் செய்யும் பொதுத் தொண்டு பயன் அளிக்கவேண்டுமானால், அவன் ஒழுக்கம் தவறாதவனாக இருக்கவேண்டும். அண்ணல் காந்தியடிகள் அரசியல் தொண்டர்களுக்கு ஒழுக்கத்தை வற்புறுத்தியது இதனால்தான். ஒழுக்கம் உயிரைவிடச் சிறந்தது என்கிறார் வள்ளுவர். படிப்பு மறந்தாலும். மறுபடியும் படித்துக்கொள்ளலாம். ஒழுக்கம் தவறினால், போன நற்பெயர் திரும்ப வராது; வாழ்க்கை கெட்டழிவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்; நல்ல ஒழுக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்திருந்தாலும் அறிவில்லாதவனே என்று உறுதியாகக் கூறுகிறார்: உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் என்ற குறள் கவனிக்கத்தக்கது. இக்கால நாகரிகத்தில் முழுகிய பலர் ஒழுக்கத்தைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. இயற்கை விதித்த அறம்-ஒழுக்கம்; தன்னை மீறுபவர்களை இயற்கை சும்மா விடுவதில்லை; தண்டித்தே தீரும் என்பது வள்ளுவர் கருத்து. சமூகத்தில் சிலர் அதிகப்பண ஆசை கொண்டு செயல் புரிவதால் பலருக்குத் தீமை விளைகிறது. இந்த ஆசை நாணயமாக நேர்மையாக-நடப்பதால் நிறைவேறாது. ஆதலால் கள்ள வழிகளைக் கையாண்டு ஏராளமாகப் பணம் குவிக்கின்றனர். இரவில் கன்னக்கோல் வைத்துத் திருடும் திருடன் அவர்களைவிட நல்லவன் என்று சொல்லவேண்டும். அவர்கள் அளவின்றிப் பணம் சேர்த்து ஆடம்பரமாக வாழ்வதால் மற்றவர் படும் பாடு கொஞ்சமா? மற்றவரை வருந்தச்செய்து இவர்மட்டும் செல்வத்தில் புரள்வதும், தீயவழியில் செலவுசெய்வதும் முறையாகுமா? திருவள்ளுவர் இந்தத் தீச்செயலைக் கண்டிக்கிறார். ஒருவன் நடுவுநிலை தவறிச் சமூகத்கத்தின் பொதுச் செல்வத்திற்கு ஆசைப்பட்டால், அவன் குடும்பம் நாளடைவில் அழியும்; அவனுக்கும் பழிவந்து சேரும் என்று எச்சரிக்கிறார். நடுவுநிலை தவறாமல், நாணயமாகச் சேர்த்த பணத்தை ஊருக்கெல்லாம் உதவுபவனே பெரிய அறிவாளி; உத்தமன்; ஊர் நடுவில் இருக்கும் நல்ல தண்ணீர்க்குளம் போன்றவன் என்கிறார். நேர்மையின் அடிப்படையாக உள்ளது உண்மை. உள்ளம் அறிந்த உண்மைக்கு மாறுதல் இல்லாமல்-மனச்சாட்சியைக் கொல்லாமல் வாழ்ந்தால், வேறு அறமே செய்யவேண்டா என்று வள்ளுவர் கூறுகிறார் யாருக்கும் எப்பொழுதும் சிறிதளவேனும் தீமை செய்யாத சொல்லே உண்மையாகும் என விளக்கமும் தருகிறார்; மாசற்ற நன்மை செய்வது பொய்யேயாயினும் அது உண்மைதான் என்று கூறுகிறார். உண்மைக்கு அடுத்தபடியான சிறந்த அறம் கொல்லாமை என்பது வள்ளுவர் கருத்து. காந்தியடிகளும் இவை இரண்டைத் தானே போற்றினார்? உண்மையும் கொல்லாமையும் உலகில் செத்து வருகின்றன. இவை மீண்டும் கிளர்ந்து எழுந்தால், மனித இனம் வாழும்; இல்லையேல் அழியும். இதுவரைத் திருவள்ளுவரைப் பின்பற்றி, மனத்தூய்மையே அறம் எனவும், அத்தூய்மையைப்பெற இல்லறமே சிறந்தவழி எனவும், அதனைப் பெறும் முயற்சியில் கைக்கொள்ள வேண்டும் அறங்கள் யாவை எனவும் அறிந்தோம்; அறம் தெரிந்தோம்; வாழ வழிபெற்று மகிழ்ந்தோம். அறனறிந்தேம் ஆன்ற பொருள் அறிந்தேம் இன்பின் திறனறிந்தேம் வீடு தெளிந்தேம்-மறன் எறிந்த வாளார் நெடுமாற, வள்ளுவனார் தம்வாயால் கேளா தனவெல்லாம் கேட்டு 11. திசைச் சொல் உலகில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மொழிகள் வழங்குகின்றன. அவற்றுள் இலக்கண அமைப்பும் இலக்கிய வளமும், சொற் செறிவும் சான்று விளங்கும் தொன்மொழிகள் நான்கைந்தே எனலாம். இந்நாலைந்து மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்றாகும் என்பதைக் கால்டுவெல் ஐயர் முதலான மேனாட்டு மொழியறிஞர் பலரும் காரணங்காட்டி நிறுவிப் போந்தனர். தொல்காப்பியர் தமிழ்மொழிக்குச் சிறந்ததொரு இலக்கண நூல் எழுதியுள்ளார். இவர்தம் இலக்கணம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றனுள் அடங்கும். பிறகால இலக்கண ஆசிரியர்கள் பொருளில் அடங்கும் யாப்பு அணிகளைப் பிரித்துத் தனியே வேறிலக்கணங்களாக அமைத்து, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்திலக்கணங்களாகக் கூறிப்போந்தனர். மக்களின் சாதி வகை வளர்ந்தது போல் இலக்கணமும் வளர்ந்தது போலும்! எனவே, பிற்கால விரிவு முறை அத்துணைப் பொருத்தம் உடையது அன்று என்பது தெளிவாகும். எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றினுள்ளும் நடுவிலமைந்த சொல்லிலக்கணமே மிகவும் சிறப்புடையதாகும். சொல்லினுள் எழுத்தும் பொருளும் அடங்கியுள்ளமை யாவரும் அறிந்த உண்மை. அறம் பொருள் இன்பம் என்ற மூன்றனுள் நடுவணதாகிய பொருளே சிறப்புடையது. பொருளை ஒருவன் அடைந்தால் ஏனைய அறம் இன்பங்களையும் அவன் எளிதல் அடைவான். நடுவண்தெய்த இருதலையும் எய்தும் என்று அறிஞர் செல்வத்தின் சிறப்பினை விதந்து கூறுவர். இதுபோலவே எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றனுள் நடுவணதாகிய சொல்லான் ஏனையிரண்டினையும் பெறலாம். சொல்வளம் மிகுந்த மொழியே சிறப்புற்று விளங்கும் மொழியாகும். சொல்வளங்குன்றிய மொழிகள் நாளடைவில் சென்று தேய்ந்தொழியும். தமிழ்மொழி சொல்வளம் நிறைந்த பெருமொழியாகும். பிறமொழிகளின் உதவியின்றியே தமிழ்மொழி தனித்துச் சிறப்புடன் இயங்கும் ஆற்றல் பெற்றது. தெலுங்கு முதலானவை பிறமொழிகளின் உதவியின்றி இயங்கா. இவ்வுண்மையைக் கால்டுவெல் தமது ஒப்பிலக்கண நூலில் நன்கு எடுத்து நவின்றுள்ளார். அரசியல், வாணிகம், சமயம் முதலான காரணங்களால் நாளடைவில் சிறிது சிறிதாகப் பிறமொழிச் சொற்கள் தமிழ் மொழியில் கலக்கலாயின. முதலில் பேச்சு வழக்கில்தான் பிறமொழிச் சொற்கள் கலந்தன. புலவர் தாம் இயற்றும் நூல்களில் பிறமொழிச் சொற்கள் கலவாமல் கூடியவரை விலக்கியே வந்தனர். எனினும், பாமர மக்கள் மிகுதியாகப் பயின்றுவரும் பிறமொழிச் சொற்கள் சிறிது சிறிதாகப் பண்டிதர் வழக்கிலும் ஏறத் தொடங்கின. புலவர் தமிழ்ச் சொற்களை இலக்கண முறைப்படிப் பெயர் வினை இடை உரி என்னும் நால்வகைப் பாகுபாடு செய்திருந்தனர். செய்யுள்களில் பிறமொழிச் சொற்களைக் கலந்துபாடும் கட்டாயம் ஏற்பட்டவுடன் செய்யுட்குரிய சொற்களைப் புலவர்கள் மேலும் ஒரு நால்வகையாகப் பாகுபாடு செய்யும் நிலையை அடைந்தனர். இயற்சொல், திரிசொல், திகைச்சொல், வடசொல் என்பனவே அப்பாகுபாடு. தொல்காப்பியர் காலத்திலேயே இப்பாகுபாடு வந்துவிட்டது. இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே என்பார் தொல்காப்பியர். யானை வந்தது, மலை உயரமானது, கிளி அழகானது, அம்மா சமையல் கட்டுக்குப் போய் எனக்கு விரைவில் சோறுகொண்டு வா-இத்தொடர்கள் எளிதில் நமக்குப் புரிகின்றன அல்லவா? இவற்றிலுள்ள சொற்கள் எவ்வகையான மாறுபாடும் இல்லாமல் இயல்பாக இருப்பவை. இவ்வாறு இயல்பாக எளிதல் பொருளை விளக்கும் சொற்கள் இயற் சொற்கள் எனப்படும். தமிழ் நாட்டில் மக்கள் பேச்சுவழக்கில் உள்ள தூய சொற்களே இயற் சொற்களாகும். இச்சொற்களால் அமைந்த மொழி பாமரர்க்கும், பண்டிதர்க்கும், யாவர்க்கும் எளிதல் விளங்குவதாகும். ஆதலின் இந்நால் வகையுள் இன்றியமையாத சிறப்பு வாய்ந்தது இயற்சொல்லே என்பதில் ஐயமில்லை. இயற்சொல் தாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வாழாமை இசைக்கும் சொல்லே என்பது தொல்காப்பியம். இத்தகைய இயற்சொற்களால் இயன்ற செய்யுள் நூல்களும், உரைநடை நூல்களும் அனைவரும் அறிந்து இன்புறத் தக்கனவாகும். பண்டைச் சங்கச் சான்றோர் சிலர்தம் பாடல்களும், ஔவையார் முதலான இடைக்காலப் புலவர்தம் பாடல்களும், ஆறுமுக நாவலர், திரு வி. க, டாக்டர். மு. வ. முதலான பிற்காலப் புலவர்தம் உரைநடைகளும் இத்தகைய இனிய, தூய, எளிய இயற் சொற்களால் இயன்றவையாகும். இவை கற்போர் மனங்கவர்ந்து களிப்பூட்டும் இயல்பு வாய்ந்தவையாகும். பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா. என்னும் ஔவையாரது இயற்றமிழ்ப் பாடலின் எளிமையும் இனிமையும் நயமும் அறந்து இன்புறத் தக்கவையாகும். யானை வந்தது என்றால் பொருள் எளிதில் விளங்குகின்றது. இதனையே வாரணம் போந்தது என்றால் எளிதல் விளங்குகின்றதா? இதுபோலவே மலை உயரமானது என்பதை வெற்பு நிவந்தது என்றும், கிளி அழகானது என்பதை கிள்ளை வனப்பு மிக்கது என்றும், அம்மா சமையல் கட்டுக்குப்போய் விரைவில் எனக்குச் சோறு கொண்டுவா என்பதை அன்னாய், அட்டிற்புக்கு அடிசிற் கடிதிற்கொடுவா என்றும் கூறினால் பொருள் எளிதில் விளங்குகின்றதா? இவை பண்டிதர்க்கு விளங்குமேயன்றிப் பாமரர்க்கு விளங்கா. இவ்வாறு படித்தவர்க்கு மட்டும் விளங்கும்படி அமைந்துள்ள திரிபுடைய, மாறுபாடான, மயக்கம் தரும் தமிழ்ச்சொற்கள் திரிசொற்கள் எனப்படும். இவை பேச்சு வழக்கில் இல்லாதவை; புலவர்தம் செய்யுள் வழக்கிலேயே வருபவை; பண்டிதர்க்கு மட்டும் விளங்குபவை; பாமரர்க்கு விளங்காதவை. அன்னாய்! அட்டிற்புக்கு அடிசிற் கடிதிற் கொடுவா என்று ஓர் இளம்புலவன் தன் தாயிடம் பேசுவானானால் அவன் தாய் அதனை விளங்கிக்கொள்ள இயலுமா? அவன் தாயாரும் தமிழ்ப்புலமை மிகுந்தவராக இருந்தால் அல்லவா இத்திரிசொல் வழக்குப் பயன்படும்? இடைக்காலப் புலவர் சிலர் தாமியற்றும் பாடல்களைப் பிறர் எளிதில் உணர்ந்துகொண்டால் தமக்குப் பெருமையில்லை என்று தவறாகக்கருதி, வலிந்து திரிசொற்கள் பலவற்றைத் தேடிச் சேர்த்துச் செய்யுள் செய்து இன்புற்றனர். யானைப் பரிசல் பெற்றுவந்த பிற்காலப் புலவர் ஒருவர் தம் மனைவியிடம் அதனை அறிவிக்கத் தொடங்கி, திரி சொற்களால் கவி பாடும் தமது திறமையை அவள்பால்காட்டி, அவள் பொருளறியாது திகைப்பதைக் கண்டு இன்புறுகின்றார். இதோ இப்பாடல்:- இம்பர்வான் எல்லைஇரா மனையே பாடி என்க்கொணர்ந்தாய் பாணாநீ என்றாள் பாணி வம்புசேர் களபமென்றேன் பூசும் என்றாள் மாதங்கம் என்றேன்யாம் வாழ்ந்தோம் என்றாள் பம்புமத வேழமென்றேன் தின்னும் என்றாள் பகடென்றேன் உழும்என்றாள் பழனந் தன்னை கம்பமா என்றேன்நற் கனியாம் என்றாள் கைம்மாஎன் றேன்சும்மா கலங்கி னாளே நான் யானை வாங்கி வந்தேன் என்று மனைவியிடம் கூறாமல் யானைக்குரிய களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா ஆகிய திரிசொற்களைக் கூறி அவளைத் திக்குமுக்காடச் செய்து புலவர் இன்புறுகின்றார். பொருள் நயமே சிறப்புடையது என்பதை உணராது சொல் நயமே பெருமை தருவது என்ற குருட்டுக் கொள்கையே இத்தகைய பாடல்கள் தோன்றுவதற்கு அடிப்படையான காரணமாகும். இத்தகைய பாடல்களையும் பாமரரேயன்றிப் பொருள் உணர்வு நிறைந்த அறிஞரும் வெறுத்தொதுக்குவர். இயற் சொற்களைப்போலவே திரி சொற்களும் தூய தமிழ்ச் சொற்களேயாயினும் அவற்றைக் கூடியவரையில் குறைத்துப் பயன்படுத்தலே மிகவும் சிறப்புடையதாகும். தண்ணீரை ஜலம் என்றும், சோற்றைச் சாதம் என்றும், வணக்கம் என்பதற்குப் பதிலாக நமகாரம் என்றும் கூறுவதை நாகரிகமாகச் சிலர் கருதுவர். இந்த அநாகரிகம் வடமொழிக் கலப்பின் விளைவேயாகும். ஜலம், சாதம், நமகாரம் முதலானவை தமிழில் கலந்துவிட்ட வடசொற்கள். சோறு, நீர், கறி முதலான நாளும் பழகும் இன்றியமையாத சொற்களுக்கும் வடமொழியைக் கையாண்டு தமிழ் மொழியைக் கைவிட்டு வாழத்துணிந்தனர் தமிழர். வடமொழியை மட்டுமாகைய ண்டனர்! வந்த எந்தப் பிற மொழியையும் கையாண்டனர். இங்ஙனம் வந்த மொழியை ஏற்றுச் சொந்த மொழியைப் போக்கத் துணிந்த தமிழர் பண்பாட்டை நன்குணர்ந்த நாமக்கல் கவிஞர், வந்தஎந்தப் பிறமொழிக்கும் வரவு கூறி வகைசெய்து வாழ்வளித்து வரிசை யெல்லாம் தந்தவர்கள் தமிழரைப்போல் வேறு யாரும் தாரணியில் இணைசொல்லத் தகுவா ருண்டோ என்று தமிழர் பண்பைப் புகழ்வதுபோல் இகழ்கின்றார். ஐயர் என்ற சொல் தமிழ் உலகில் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களையே குறிப்பது போன்று, வடமொழி என்பது வடநாட்டு மொழியனைத்தையும் குறிக்காமல் இடுகுறிக் காரணப் பெயராய் சம்கிருதம் ஒன்றியையே குறிப்பதாகும். சம்கிருதச் சொற்கள் சம்கிருதத்திற்கே உரிய எழுத்தொலி யால் வழங்கப்படாமல் தமிழுக்கும் சம்கிருதத்திற்கும் பொதுவான எழுத்தொலியால் வழங்கப்பட்டன. வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே என்பர் தொல்காப்பியர். தொல்காப்பியர் ஏறத்தாழக் கி. பி. மூன்றாம் நூற்றாண்டினர் என்று கூறலாம். அவர் காலத்தில் தமிழ்நாடு பன்னிரண்டு நிலப்பகுதிகளாகப் பிரிந்திருந்தது. அவை தென்பாண்டிநாடு, குட்டநாடு. குடநாடு, கற்காநாடு, வேணாடு, பூமிநாடு, பன்றி நாடு, அருவாநாடு, அருவா வடதலைநாடு, சீதநாடு, மலாடு, புனல்நாடு என்பவை. பன்னிரு நாட்டினுள்ளும் ஒவ்வொரு நாட்டிற்கும் உரியனவாகச் சில சில சொற்கள் வழங்கி வந்தன. பிற எல்லாச் சொற்களும் செந்தமிழ் நாடு முழுமைக்கும் பொதுவான செந்தமிழ்ச் சொற்களாக இருந்தன. ஒவ்வொரு நாட்டிலும் அதற்கே உரியனவாக வழங்கிவந்த சொற்கள் அவ்வந்நாட்டுப் புலவரால் செய்யுட்களில் சேர்க்கப்படுதல் இயல்பேயன்றோ! பசு என்பது செந்தமிழ்நாட்டுப் பொதுச்சொல். இது தமிழ் நாட்டின் பன்னிரு பகுதியிலும் வழங்குவது. ஆனால் தமிழ் நாட்டின் ஒரு பகுதியான தென்பாண்டி நாட்டில் வாழ்வார் பசுவைப் பெற்றம் என்று வழங்கினர். இப்படியே தாயைத் தள்ளை என்று குட்டநாட்டார் வழங்கினர். தந்தையை அச்சன் என்றனர் குடநாட்டார். வஞ்சரைக் கையர் என்பது கற்கா நாட்டு வழக்கம். வேணாட்டார் தோட்டத்தைக் கிழார் என வழங்கினார். சிறு குளத்தைப் பாழி என்பர் பூழி நாட்டார். வயலைச் செய் என்பது பன்றிநாட்டு வழக்கு. அருவா நாட்டார் சிறு குளத்தைக் கேணி என்று வழங்கினர். புளியை எகின் என வழங்கினர் அருவா வடதலை நாட்டார். தோழனை எலுவன் என்றும் தோழியை இகுளை என்றும் சீதநாட்டார் வழங்கினர். மலைநாட்டார் நல்லநீரை வெள்ளம் என்றனர். தாயை ஆய் என்பது புனல்நாட்டு வழக்கு. அவ்வந்நாட்டுக்கேயுரிய இச்சிறப்புச் சொற்கள் அவ்வந்நாட்டுப் புலவர் பாடிய செய்யுட்களில் இடம் பெற்றன. இவற்றைக்கண்ட தொல்காப்பியர் செந்தமிழ் நாட்டின் பல திசைகளிலுள்ள பன்னிரண்டு தமிழ்நாட்டுப் பகுதியிலும் இருந்து இங்ஙனம் செய்யுள் வழக்கில் புகுந்த இச்சொற்களைத் திசைச் சொற்கள் எனப் பெயரிட்டு அழைக்கலாயினர். செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தும் தம்குறிப் பினவே திசைச்சொல் என்ப என்பது தொல்காப்பியம். செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம் என்பது செந்தமிழ் வழங்கும் தமிழ்நாட்டுப் பகுதி பன்னிரண்டனையும் குறிப்பதாகும். தொல்காப்பியர்க்கு ஏறத்தாழ 1500 ஆண்டுகட்குப் பின்னர் வந்த சேனாவரையர் முதலியோர் தொல்காப்பியத்திற்கு உரை வகுத்தனர். அவர்கள் இச்சூத்திரத்திற்கு, செந்தமிழ்நாடு என ஒன்று தனியாகக் கொண்டு அதனைச் சேர்ந்த 12 நிலங்கள் என்று பொருள் கொண்டனர். பிற்காலப் புலவர்களும் பாண்டியநாட்டைச் செந்தமிழ்நாடு என்று வழங்கினரேயன்றி இவ்வுரையாசிரியர்கள் கருதுவது போல வடபாண்டிநாடு என ஒன்று கொண்டு அதனைச் செந்தமிழ்நாடு என்று கருதினாரில்லை. ஆதலின் இங்ஙனம் பொருள் கொள்ளுதல் பொருத்தமாக இல்லை. தொல்காப்பியர்க்குப் பின் கடைச்சங்ககாலம் தோன்றி மறைந்நது. அதன் பின் கி. பி. 300-900 வரையில் பல்லவர் தமிழகத்தின் பெரும் பகுதியை ஆண்டனர். அக்காலத்தில் தமிழகத்திற்கு அப்பால் உள்ள ஆந்திரம், கன்னடம், துளுவம் முதலிய பல நாடுகளிலிருந்து மக்கள் தமிழகத்திற் குடியேறினர். இக்குடியேற்றத்தோடு தமிழகம், இலங்கை, சீனம் முதலிய பல நாடுகளுடன் வாணிகத் தொடர்பும் கொண்டது. பல்லவர்க்குப் பின் தமிழகத்தை ஒரு குடைக்கீழ் ஆண்ட சோழப் பேரரசர்கள் கிருஷ்ணையாறு வரைத் தங்கள் ஆட்சியைச் செலுத்தினர். அதற்கு அப்பால் இருந்த நாடுகளிலும் அவர்தம் செல்வாக்குப் பரவியது. கிழக்கிந்தியத் தீவுகளிலும் தமிழ் வணிகர் குடியேறி வாணிகம் செய்தனர். சீனம் முதலிய கடல் கடந்த நாடுகளும் வடஇந்திய நாடுகளும் தமிழகத்தோடு வாணிக உறவு கொணடிருந்தன. இங்ஙனம் ஏற்பட்ட வாணிக உறவினாலும், அரசியல் உறவினாலும், பண்பாட்டு உறவினாலும் பல நாட்டுச் சொற்கள் தமிழில் இடம் பெற்றன். கி. பி. 12-ஆம் நூற்றாண்டில் இலக்கண நூல் எழுதிய பவணந்தியார் இவற்றை உளங்கொண்டு தொல்காப்பியரால் குறிக்கப்பட்ட தமிழ்நாட்டுப் பகுதி பன்னிரண்டிலும் அவ்வவற்றிற்கு உரியவாய் வழங்கும் சொற்களே அன்றித் தமிழகத்துக்கு அப்பாற்கட்ட இலங்கை, ஜாவா, அரேபியா, சீனம், துளுவம்,. குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கௌடம், கோசலம் ஆகிய 17 நாடுகளிலிருந்து தமிழில் வழக்குப் பெற்ற சொற்களையும் திசைச் சொற்கள் என்று குறிப்பிட்டார். மாமரத்தைக் கொக்கு என்பது துளுவநாட்டிலிருந்து வந்து வழங்கும் திசைச் சொல். அகப்படுத்தலைச் சிக்குதல் என்பர் கன்டை நாட்டார். ஐயோ என்பதை அந்தோ என்பர் சிங்கள நாட்டார். அங்கே என்பதை அக்கட என்பர் தெலுங்கு நாட்டார். இத்தகைய சொற்கள் இலக்கியங்களிலும் பின்னர் வழங்கின. வேட்டையில் ஒரு கொக்குப்பட்டது - குற்றாலக்குறவஞ்சி. யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் - திருவாசகம். அக்கட இராவணற் கமைந்த ஆற்றலே - கம்பராமாயணம். நன்னூலாருக்குப் பிறகு இந்நாட்டில் முலிம் படையெடுப்பும் ஆட்சியும் உண்டாயின. தமிழ் மக்களில் சிலர் இசுலாம் மதத்தைத் தழுவினர். முலிம்கள் பயன்படுத்திவந்த அராபியச் சொற்கள், பாரசீகச் சொற்கள், உருதுச் சொற்கள், இந்துதானிச் சொற்கள் பலவாகும். அவற்றுள் சில தமிழில் வழக்குப் பெற்றன. ஆசாமி, இலாகா, கஜானா, கைதி, சலாம், சபாசு, சொக்காய், நகல், நபர், நாசூக், முன்சீப், வசூல் முதலியன அராபியச் சொற்கள். ஜமீன், சிபாரிசு, சிப்பந்தி, சிப்பாய், சுமார், பக்கிரி, மேஜை முதலியன உருதுச் சொற்கள். அசல், அந்தது, அபின், உஷார், கிச்சடி, குல்லா, குமாதா, சமக்காளம், ஜோடு, தபால், தர்பார், தொப்பி, பஞ்சாயத்து, பங்களா, மசால், மாகாணம், மாசூல் முதலியன இந்துதானிச் சொற்கள். இவற்றுள் சில இலக்கியங்களிலும் ஏறின. விஞ்சையர் மாகர் சபாசு என - திருப்புகழ் குறமகட்குச் சலாம் இடற்கு ஏக்கலுகுமரன். - முத்துக்குமாரசாமிப் பிள்ளைத் தமிழ். முலிம்களுக்குப் பிறகு போர்த்துகேசியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் முதலான ஐரோப்பியர்கள் இந்நாட்டில் குடியேறினர். அவர்களால் தமிழிற் புகுந்த ஐரோப்பிய மொழிச் சொற்கள் சில உண்டு. அலமாரி, சன்னல், சாவி, பாதிரி, முதலியன போர்த்துக்கீசியச் சொற்கள். ஆவுகா, ஒப்பித்தால் . . . . . . . . முதலியன பிரெஞ்சுச் சொற்கள். ஆங்கிலேயர் ஆட்சி நீண்டு நிலைத்திருந்த காரணத்தால் பல சொற்கள் தமிழ்ப் பேச்சு வழக்கில் இடம் பெற்றன; இலக்கியம் ஒழிந்த பிற எழுத்துக்களிலும் இடம் பெற்றுவிட்டன. சீக்கு, கோர்ட்டு, பீ, பென்ஸில், டிக்கட், ஆபீசு முதலியன ஆங்கிலச் சொற்கள். முடிவுரை இன்றைய தமிழ்மக்கள் பேச்சுவழக்கில் மேலே சொல்லப்பட்ட பலநாட்டுச் சொற்களும் இருக்கின்றன. இவை தமிழ்ச் சொற்களா, பிறமொழிச் சொற்களா என்று தெரிந்துகொள்ள இயலாத நிலையில் தமிழில் கலந்து விட்டன. வளரும் ஒரு மொழியில் இவ்வாறு பலநாட்டு மக்கள் கூட்டுறவால் பிறமொழிச் சொற்கள் வந்து கலத்தல் இயல்பேயாகும். 12. இயற்கைக் காட்சி உலகமக்களின் உயிர்வாழ்க்கை பலபல காட்சிகள் மலிந்த ஒரு நாடகமாகும் என்பது செகப்பிரியர் போன்ற பெரும்புலவர்கள்களின் துணிபாகும். செல்வம் நிறைந்த இன்பவாழ்வும், அது வொழிந்த துன்பவாழ்வும் ஆகிய இரண்டும் நாடகங்காணும் மக்கள் கூட்டத்தின் வருகையும் போக்கும் ஒப்பனவாகும் என்பது வள்ளுவர் கருத்து. கடவுள் நெறிமேற்கொண்டு துறவுள்ளத்துடன் வாழும் அடியார்களும் இக்கருத்தினரேயாவர். நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விழைகின்றேன் என்ற மணிவாசகர் மொழியும், உலகவாழ்வு ஒரு நாடகமாகும் என்னும் கொள்கையை வலியுறுத்துவதாகும். மக்கள் வாழ்வாகிய நாடகம் நிகழுதற்கு இயற்கை என்னும் மேடை இன்றியமையாததாகும். இயற்கை ஆற்றல் என்னும் துணையின்றி மக்கள் வாழ்வு சிறவாது, நம் பண்டைத்தமிழ்ப் புலவர்கள் இவ்வுண்மையை நன்குணர்ந்தவர்கள். இயற்கையின் எழிலையும் ஆற்றலையும் ஏனைய பண்புகளையும் கூர்ந்து நோக்கித் தேர்ந்துரைத்தனவே இலக்கியங்கள் எனப்பெற்றன. இன்று அறிவியல் வல்லுநர்கள் இயற்கையின் ஆற்றலைத் தேர்ந்துணர்ந்து மக்களின் புறவாழ்வு இன்பம் எய்தற்குரிய பலபல வழிவகைகளைக் கண்டனர். அவைகளே இன்று நாம் பெற்றிருக்கும் விஞ்ஞானச் சாதனங்களாகும். ஆனால் பண்டு புலமை மிக்கவர்கள் இயற்கையின் எழில் நலங்களை இனிது தேர்ந்து மக்களின் அகவாழ்வு இன்பம் எய்துதற்குரிய பல பல வழிகளில் ஓதிப்போந்தனர். அவையே நாம் இன்று பெற்றிருக்கும் தேனினுமினிய செந்தமிழ் இலக்கியங்களாகும். விஞ்ஞானம் புறவாழ்வைச் செம்மைப்படுத்தும்; உடல் வாழ்வதற்கு வேண்டிய இன்பத்தை அளிக்கும். இலக்கியம் அகவாழ்வைச் செம்மைப்படுத்தும்; உள்ளம் வாழ்வதற்கு வேண்டிய இன்பத்தை அளிக்கும். நவில்தோறும் நூல்நயம் என்று வள்ளுவர் கூறுவது இவ்வின்பத்தையேயாகும்-விஞ்ஞானம்-இலக்கியம் என்னும் இரண்டும் இயற்கையென்னும் அடிப்படையின் மேல் எழுந்த இரு பெருமாளிகைகள் எனலாம். இயற்கையின் அழகாற்றல்களை நுனித்தறியும் பண்பு மிக்க பண்டைப் பெரும் புலவர்களில் கபிலர் தலைசிறந்தவராவர். தமிழ் நாட்டு அந்தணர்குடியிற் பிறந்த இவர், தமிழ்ப் புலமை நிறைந்தவராய் விளங்கினார். பாரி என்னும் தமிழ்ப்பெரு வள்ளலின் அவைக்களப் புலவராய் இலங்கினார். பாரியும் கபிலரும் சிறந்த நண்பர்களாய் வாழ்ந்தனர். கபிலர் பாரியைத் தம் உயிர் நண்பராகக் கொண்டமைக்குக் காரணம் ஒன்றுண்டு. இயற்கையில் தோய்ந்திடும் பாரியின் உள்ளப் பண்பே அக்காரணமாகும். ஓரறிவுடைய இயற்கைப் பொருள்களாகிய மரஞ் செடி கொடிகள்பாலும் பாரி வள்ளல் கொண்ட உள்ள உருக்கமே கபிலரை அவனுக்கு நண்பராக்கியது. பாரி மறைந்த பின்பும் அவனது இப்பண்பு கபிலர் மனத்தை விட்டு அகலவில்லை. பற்றி நின்று வாழ்தற்குரிய கொழுகொம்பின்றி வழியிடை வாடிய கொடியைக் கண்டு உளமுருகித் தன் தேரையே அக்கொடி படர்தற்கு நிறுத்திய பாரியின் உயர் பண்பே கபிலர் அகக்கண்முன் என்றும் நின்று நிலவியது. விச்சிக்கோன்பால் சென்று பாரி மகளிரை மணந்துகொள்ள வேண்டியபொழுது, அவனுக்கு அம்மகளிரை அறிமுகப் படுத்துகையில் பாரியின் இப் பண்பினையே கூறக் காண்கிறோம். இவரே, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர் என்னும் கபிலர் திருவாக்குக் கற்பவர் உள்ளத்தை உருக்குவ தாகும். பாரியின் பறம்பு, முல்லையும் குறிஞ்சியும் நல்லியல் பழியாது திகழும் பெருமலையாகும். இம்மலை மீதுள்ள இயற்கை எழில் அனைத்தையும் பருகியவர் கபிலர். அவரறியாத விலங்கில்லை, மரமில்லை, பூவில்லை. குறிஞ்சிப் பாட்டில் அவர் கூறும் பூவகைகள் மரநூல் வல்லாரும் வியப்புறும் தன்மையின. செங்காந்தட் பூ முதல் மலையெருக்கம் பூ முடியத் தொண்ணுற் றொன்பது பூக்களைக் கபிலர் ஒரு சேரக் கூறியுள்ளார். அப் பூக்களின் இயல்புகளைக் கபிலர் நன்கறிந்தவர் என்பது, அப்பூக்களுக்கு அவர்தரும் அடை மொழிகளே அறிவிக்கும். வள்ளிதழ் ஒண் செங்காந்தள் எரிபுரை எறுழம் வான்பூங் குடறும் மணிப்பூங் கருவிளை பல்லிணர்க் குரவம் பல்லிணர்க் காயா தேங்கமழ் பாதிரி கொங்குமுதிர் நறுவழை மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் தூங்கிணர்க் கொன்றை சுடர்ப்பூந் தோன்றி. என்பன அவற்றுள் சிலவாகும். சில மலர்களின் வடிவங்களைத் தக்க உவமைகளால் விளக்குகின்றார் கபிலர். முல்லையரும்பு வெருகுப் பூனைக் குட்டியின் முள்ளெயிறு போல் இருக்கும். மூங்கில் முளை புள்ளிமான் கன்றின் செவிபோல் விளங்கும். தெறுழம்பூ யானை முகத்தில் உள்ள புள்ளிகள் போல மலரும். கபிலர்தம் மரநூலறிவும், விலங்கு நூலறிவும் இவ்வுவமைகளால் புலப்படும். புலவர்கள் இயற்கையில் காணும் காட்சிகள் பலப்பலவாகும். கேட்கும் இன்னியம் பலவாகும். பணச் செலவின்றியே பல பல நடனக் கலைகளை இயற்கைக் காட்சியில் கண்டு பண்டைப் புலவர் இன்புற்றனர். இயற்கையில் பாட்டுண்டு, கூத்துண்டு, முழவுண்டு, குழலுண்டு, யாழ் உண்டு-எல்லாம் உண்டு. கபிலர் கண்ட நாடகக் காட்சியொன்றை ஈண்டுக் காண்போம்: பாரி பறம்பு மலையில் மூங்கில் புதர்களும் உண்டு. வண்டுகள் மூங்கிலைப் பல இடங்களில் துளைத்துவிட்டன. மேல் காற்று வீசுகின்றது. அக்காற்று மூங்கிலில் உள்ள துளைகளின் வழியே செல்கின்றது. இனிய இசை எழுகின்றது. கபிலர் காணும் நாடக அரங்கில் எழும் முதல் இசை இக்குழலிசையே. பறம்பு மலையில் அருவிகள் பல. அவை கற்களை உருட்டிக்கொண்டு டம் டம் என்னும் பெரு முழக்கத்துடன் ஒழுகும். இதுவே அங்கெழும் முழவோசை. மான் கூட்டங்களின் ஒலி வங்கியம் என்னும் கருவியின் ஓசைபோல் இசைக்கின்றது. மலைப்பூஞ்சாரலில் வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. இது யாழ் ஒலியாக அமைகின்றது. அங்குப் பயில்கின்ற மயிலொன்று அசைந்தாடுகின்றது. கூத்தாடும் மகளென அது திகழ்கின்றது. மந்திகளாகிய அவையோர் மருண்டு நோக்குகின்றனர். வேய்ங்குழல், நீர்முழவு, வண்டுயாழ், மான் தூம்பு, இவ்வின்னிசைக் கருவிகள் இசைக்க, மயில் மகள், மந்தி மாந்தர் காண, நடனம் செய்கிறாள். இயற்கை நாடக அரங்கின் எழில் இதுவல்லவா! காற்றில்லாத புழுக்கறையில் இருந்து காணும் செயற்கை நாடகத்தால் விளையும் துன்பத்தையும், இவ்வியற்கை நாடகத்தால் விளையும் இன்பத்தையும் எண்ணிப் பாருங்கள். இந்நாடகத்தைக் கவியோவியமாகக் கபிலர் தீட்டுகின்றார்: ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கில் கோடை அவ்வளி குழலிசை யாகப் பாடின் அருவிப் பணிநீர் இன்னிசைத் தோடமை முழவின் துதைகுர லாகக் கணக்கலை இழுக்கும் கடுங்குரல் தூம்பொடு மலைப்பூஞ் சாரல் வண்டு யாழாக இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து மந்தி நல்லவை மருள்வன நோக்கக் கழைவளர் அடுக்கத் தியலியாடும் மயில் நனவுப்புகு விறலியில் தோன்றும் நாடன் இயற்கையில் நிகழும் காட்சிகள் மனத்திற்கு இன்பந் தருவதோடன்றி மக்களைச் செம்மைப்படுத்துவதற்கும் உறுதுணையாய் நிற்கின்றனர். தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியை எதிர்பாராத வகையில் சந்தித்தான். இருவரும் ஒரு வர்மீதொருவர் காதல் கொண்டனர். தலைவன் அவள்பால் களவொழுக்கம் நிகழ்ச்சி வருகின்றான். எதிர்பாராத வகையில் கிடைத்த அத் தலைவியை மணம் புரிந்து வாழாமல் களவொழுக்கத்திலேயே மயங்கி ஒழுகுகின்றான். தோழிக்கு இது பிடிக்கவில்லை; அவனை நல்வழிப்படுத்த நினைக்கின்றாள்-தலைவியைத் தலைவன் விரைவில் மணந்துகொண்டு பழியற்ற கற்பு வாழ்க்கை மேற்கொண்டு வாழவேண்டும் என்பது அவள் கருத்து. ஒரு நாள் தலைவனைத் தோழி பார்க்கின்றாள். உங்கள் மலையில் ஒரு நல்ல காட்சி கண்டேன், என்று அவன் பால் கூறுகின்றாள்-உன் மலைமீது வாழை மரங்களும், பலா மரங்களும் மிகுதியாகப் பழுத்து விளங்குகின்றன. அப்பழங்களில் முதிர்ந்த தேன் ஒழுகி மலைச்சுனையில் கலக்கின்றது. குரங்கு ஒன்று அங்கு வருகின்றது; தேன் என்பதை அறியாமல் அச்சுனை நீரைப் பருகுகின்றது; பருகி மயங்குகின்றது. அருகில் உள்ள சந்தன மரத்தில் ஏறி இனிது தங்க அதனால் முடியவில்லை. அங்கேயே தரையில் விழுந்து பூக்களாகிய இனிய படுக்கையின் மேல் உறங்குகின்றது. எதிர்பாராத இன்பத்தில் மயங்கி, மரமேறி இனிது தங்கவும் முடியாமல் கிடக்கின்றது அக்குரங்கு. இப்படியே உன் மலையில் பல விலங்குகள் எதிர்பாராத இன்பத்தில் மயங்கிக் கடமையை மறந்து கிடக்கின்றனவே-என்கின்றாள் தோழி; நீயாவது எதிர்பார்க்கும் இன்பத்தை விரைவில் எய்தவேண்டும் என்கிறாள். தலைவன் தன் தவற்றை உணர்கிறான்; எதிர்பாராது கிடைத்த தலைவியின் களவின்பத்தில் மயங்கி, மணந்து கொள்ளும் கடமையை ஆற்றாது நிற்கின்ற தன்னிலை, விளங்கு களின் நிலை போன்றல்லவா உள்ளது என்பதை உணர்கின்றான்; விரைவில் தலைவியை மணந்து கொள்ளுதற்குரிய ஏற்பாடு களைச் செய்யத் தொடங்கினான். இயற்கைக் காட்சியைக் காட்டித் தலைவனைத் தோழி திருத்தும் இயல்பு பாராட்டத் தக்கது. இவ்வோவியத்தைக் காவியமாகத் தருகிறார் கபிலர். கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலை ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த சுரற் பலவின் தலையோ டூழ்படு பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல் அறியா துண்ட கடுவன் அயலது கறிவளர் சாந்தம் ஏறல்செல் லாது நறுவீ ஆடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும் குறியா இன்பம் எளிதின் நின்மலைப் பல்வேறு விலங்கும் எய்து நாட குறித்த இன்பம் நினக்கெவன் அரிய அகம்-2. குறுந்தொகை என்னும் நூலில் கபிலர் காட்டும் இயற்கைக் காட்சி ஒன்றைக் காண்போம்: தலைவன் தலைவியை மணந்து கொள்ளாமல் காதல் வாழ்வு நடத்துகின்றான். இங்கும் தோழி தலைவனுக்கு வரைந்துகொள்ளும் உணர்வு தோன்றும் வகையில் அவனுக்குச் சில கூற எண்ணுகின்றாள், வேரில் பழுக்கும் பலா மரங்கள் நிறைந்த மலை நாட்டுத் தலைவனே! எங்கள் ஊரில் பார். சிறிய கொம்பில் பெரிய பலாப்பழம் தொங்குகிறது. இது போலவே தலைவியின் உயிர் மிகச் சிறியது. அவள் நின்பால் கொண்ட காமமோ மிகப் பெரியது. இதனை அறிந்து நட. என்கிறாள். வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட! செல்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னோரே? சாரல் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கியாங் குஇவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே என்பது தோழி கூறுவது. தோழி கூறும் உவமையைப் பாருங்கள்; கொம்பு மிகச் சிறியது. அதில் தொங்கும் பலாப்பழம் மிகப் பெரியது. இது போலவே தலைவியின் உயிரோ மிகச் சிறியது. அவள்கொண்ட காமமோ மிகப் பெரியது. பழம் மேலும் மேலும் முதிருமானால் கொம்பு அதனைத் தாங்க இயலாது முறியும்; அல்லது பழம் உதிர்வதன் முன் பிறர் கொள்ளுதலும் கூடும். இது போலவே தலைவியின் காமம் மேலும் மிகுமாயின் அவள் உயிர் நீங்குதலும் கூடும்; அல்லது அவளைப் பிறர் மணம் முடித்தலும் கூடும்; ஆதலின் இதனையறிந்து இவளை விரைவில் மணத்தற்கு வேண்டிய ஏற்பாடுகளை உடனே செய்வாயாக. சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்கும் நிலையை நீ காணவில்லை போலும்! கண்டிருப்பயானால் தலைவியின் நிலையை நீ உணர்ந்திருத்தல் கூடும். உனது ஊரில் கொம்பில் பழுக்கும் பலா இல்லையோ? வேரில் பழுக்கும் பலாமரங்கள்தான் உள்ளன போலும்! என்று அவனுக்கு அறிவிப்பாள் போல, வேரல்வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட என்று அவளை விளிக்கின்றாள். இருவகைப் பலாமரங்களின் இயற்கைக் காட்சிளைக் காட்டித் தோழி தலைவனுக்குச் சிறந்த அறம் புகட்டும் நயவுரை அறிந்து இன்புறுதற்குரியதல்லவா? இயற்கைக் காட்சிகள் மாந்தர்க்குக் கற்பிக்கும் பாடங்கள் பலப்பல-இவையாவும் கபிலர் தம் காவிய ஓவியங்களாகும். இனி, கபிலர் குறிஞ்சிக் கவியில் தீட்டும் இயற்கைக் காட்சி ஒன்றினைக் காண்போம்; எதிர்எதிரே இரு பெரிய மலைகள் ஓங்கி நிற்கின்றன. இருமலைகளின் உச்சியிலிருந்தும் அருவி ஒழுகுகின்றது. இடையே ஒரு வேங்கை மரம் நிற்கின்றது. அவ்வேங்கை மரத்தின் மேல் இரு அருவிகளும் வீழ்கின்றன. வேங்கை தழைத்துப் பூத்துத் திகழ்கின்றது. காலை வெயிலில் இக்காட்சி பொலிவுறுகின்றது. இருபெருமலைகளும் இரண்டு யானைகளைப் போல விளங்குகின்றன. அவற்றினின்றும் விழும் அருவி அவ்யானைகள் தம் தும்பிக்கையால் சொரியும் நீர்போல் தோற்றம் அளிக்கிறது. இடையில் பொன்னிறத்துடன் பூத்து விளங்கும் வேங்கை திருமகளெனக் காட்சி தருகின்றது. அவ்வேங்கை நிற்கும் பாறை தாமரைப் பூவெனத் திகழ்கின்றது. இங்ஙனம் இருமலைகளின் இடையில் வேங்கைமரம் நிற்க அதன்மேல் மலையருவி பாயும் தோற்றம், திருமகள் மேல் யானைகள் தூநீர் சொரியும் காட்சியினைத் தருவதாகக் கபிலர் கூறுதல் பாராட்டுதற்குரியது. இயற்கைக் காட்சியினைத் திருமகள் தோற்றமாகச் சித்தரிப்பதுடன் புலவர் நிற்கவில்லை. இக்காட்சி வாழ்க்கைக் குரிய ஒரு நிகழ்ச்சியினையும் குறிப்பாகப் புலப்படுத்துகின்றது. இது ஒரு தலைவனது மலைநாட்டில் நிகழ்ந்ததாகும். இத்தகைய மலைநாட்டையுடைய தலைவன் ஒரு தலைவியின் பால்கள் வொழுக்கம் நிகழ்த்தி வருகின்றான். அவளை மணந்து கொள்ளாமலே தலைவன் இவ்வாறு நடப்பது தோழிக்குப் பிடிக்கவில்லை. தோழி தலைவனை விளித்து, தனது வேண்டு கோளை அறிவிக்க விரும்புகிறாள், அவள் தலைவனை அவனது மலைநாட்டுக் காட்சின் மூலம் விளிக்கின்றாள். எதிர் எதிராக ஓங்கிய இரண்டு மலைகளும் தலைவன் தலைவி ஆகிய இருவர் தம் சுற்றத்தையும் குறிப்பால் புலப்படுத்துகின்றது. இடையில் உள்ள பாறை தலைவன் மனையாகும். இரண்டருவியும் வீழ்வது இரண்டு சுற்றத்தாரும் செய்யும் சிறப்பாகும், வேங்கை பூத்து நிற்பது, தலைவி அழகிய மகவைப் பயந்து பொலிவுடன் நிற்பதாகும்; இங்ஙனம் தலைவன் மனையில் தலைவி இல்லறம் புரிந்து, மகப்பெற்று, இரு சுற்றத்தாரும் சிறப்புச்செய்யுமாறு புகழுடன் வாழும் வாழ்க்கை எவ்வளவு நன்றாயிருக்கின்றது! அவ்வாறு வாழும் வாழ்க்கைக்கு முயலாது இவ்வாறு களவொழுக்கிலேயே நடத்தல் அழகன்று என்பதைத் தோழி தலைவனுக்குக் குறிப்பாக அறிவுறுத்துகிறாள். இத்தகைய குறிப்புரைகளைப் பண்டைப் பெருமக்கள் உள்ளுறை யென்பர். நாகரிகமாக உள்ளக் கருத்துக்களை வெளிப்படுத்தும் பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை நலத்தைக் கபிலர் இங்ஙனம் பல பாடல்களால் இயற்கைக் காட்சிகளின் மூலம் புலப்படுத்தக் காண்கின்றோம். இயற்கைக் காட்சிகள் ஐம்புலன்களுக்கும் இன்பம் பயப்பதோடு மட்டும் நிற்கவில்லை. மக்கள் வாழ்விற்குரிய அறிவுரைகளையும், அறவுரை களையும் குறிப்பால் புலப்படுத்தி நிற்பதையும் உணர்கின்றோம். நுண்மாண் நுழைபுலமிக்க கபிலர் இயற்கைப் பொருள்களை நன்கு ஆராய்ந்து, அவைதரும் புறக்காட்சியினையும் அகக்காட்சியினையும் பல பல வாழ்க்கைக் குறிப்புக்களுடன் புலப்படுத்தியிருத்தல் பாராட்டத் தக்கதொன்றாகும். 13. தற்கால வாழ்க்கையில் மதக்கொள்கை முதல் மனிதன் முதலில் மலைக்குகைகளில் வாழ்ந்தான். அப்பொழுது அவனுக்கு வீடு கட்டத்தெரியாது; கூட்டு வாழ்க்கை இல்லை; பயிரிடும் அறிவு இல்லை. பிறகு நாளடைவில் அறிவு வளர்ச்சி உண்டாக உண்டாகத், தனக்கொரு வீடு அமைக்கும் முறைபற்றி ஆராய்ந்தான்; முதலிற் கூரைவீட்டை அமைத்தான்; பிறகு ஓட்டு வீட்டை அமைத்தான்; பின்னர் மாடிகட்ட அறிந்தான்; இப்பொழுது ஒரே வீட்டில் பலமாடிகளை அமைத்து வாழ்கின்றான். இவ்வாறு அவன் அறிவு வளர, ஆராய்ச்சி வளர்ந்து; ஆராய்ச்சி பெருக, அறிவு பெருகியது. அறிவும் ஆராய்ச்சியும் ஒன்றை ஒன்று பிணைத்துக்கொண்டு இருப்பவை. பழைய மனிதன் சக்கிமுக்கிக் கற்களைக் கொண்டு நெருப்பை உண்டாக்கினான். காய்ந்த சுள்ளிகளை எரித்து இரவில் வெளிச்சத்தை உண்டாக்கினான்; பிறகு வேர்க்கடலை எண்ணெய், விளக்கெண்ணெய் இவற்றைப் பயன்படுத்தி விளக்கெரித்தான்; மண்ணெண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அதனைப் பயன்படுத்தத் தொடங்கினான்; மின்சாரத்தின் பயனை ஆராய்ந்து அறிந்த பிறகு, மின்சார விளக்குகள் எரியலாயின. விளக்கில் மனிதன் கொண்டுவந்த வளர்ச்சியைப் பாருங்கள். இந்த வளர்ச்சி மனிதன் அறிவு கொண்டு ஆராய்ச்சி செய்ததன் பயனாகும். முதலில் மனிதன் விலங்குகள்மீது பிரயாணம் செய்தான்; தன் பொருள்களை அவற்றின்மேல் ஏற்றினான்; பின்னர்த் தானே கைவண்டி செய்து தள்ளினான்; பிறகு அதனை விலங்கைப் பூட்டி ஓட்டினான். நீராவியின் சக்தி கண்டறிந்த பிறகு புகைவண்டி உருவானது. மின்சாரத்தின் சக்தி வெளிப்பட்ட பிறகு, மின்சார இரயில் உண்டானது; வானவூர்தி ஏற்பட்டது. இம்மாறுதல்கள் யாவும் ஆராய்ச்சியின் பயன்கள் அல்லவா? பழைய காலத்தில் மனிதன் வெளியூரில் இருந்த மற்றொருவனுக்குக் கடிதத்தை ஆள்மூலம் அனுப்பிவந்தான். அந்த ஆள் பல நாள் நடந்து சென்று, குறிப்பிட்ட ஊரை அடைந்து, கடிதம் கொடுத்து வந்தான். இதனால் நேரம் வீணாதல்-ஆள் கஷ்டம்-வீண் செலவு ஏற்பட்டன. இவற்றைப் போக்க, அறிவு முனைந்தது; ஆராய்ச்சி மிகுதிப்பட்டது. அந்த ஆராய்ச்சியின் பயனே இன்றுள்ள அஞ்சல் முறை. இதற்குப் புகைவண்டியும் வானஊர்தியும் இன்று பெருந்துணை புரிகின்றன. மின்சாரத்தின் பயன் கண்டறியப்பட்ட பிறகு உலகில் உண்டான மாறுதல்கள் பல. ஒரே ஊரில் வேறிடத்தில் உள்ள ஒருவருடன் நாம் நினைத்தவுடன் நேரிற் பேசமுடியுமா? பழைய காலத்தில் முடியாது; இப்பொழுது முடியும். எப்படி? நாம் டெலிபோன் கருவி மூலம் அவருடன் பேசலாம்; அவர் நம்மிடம் பேசலாம். நாம் சென்னையில் இருந்துகொண்டு டெல்லியில் இருப்பவருடனும் உடனுக்குடன் பேசலாம். இத்தகைய வியக்கத்தக்க மாறுதல்கள் ஆராய்ச்சியால் உண்டானவை அல்லவா? ஒருவரது பாட்டும் பேச்சும் எந்தக்காலத்திலும் நிலைத்திருக்கும்படியாக இன்று கிராமபோன் இயந்திரம் செய்துவிட்டது. மின்சாரசக்தியின் பயனால் ஒலித்தட்டுகளில் பாட்டும் பேச்சும் பதிவாகின்றன. அத்தட்டுகளை வேண்டும் போது கிராம போன் இயந்திரத்தில் வைத்து விசையைக் கொடுத்தால் பாட்டையோ, பேச்சையோ கேட்டு மகிழலாம். இப்பொழுது வானொலி, நாட்டில் மிகுந்த அளவு பயன் படுகின்றது. உலகத்தின் ஒரு மூலையிலிருந்து ஒருவர் பேசுவது எல்லா நாடுகளிலும் இருப்பவர்க்கும் வானொலி மூலம் கேட்கிறதே! பேசும் மனிதனது உருவத்தையும் நாம் பார்க்கும்படி விஞ்ஞானிகள் வசதி செய்துள்ளனர். இத்தகைய முற்போக்கு, அறிவும் ஆராய்ச்சியும் ஒன்றுபடுதலின் விளைவாகும். இரண்டாம் உலகப் போரைத் திடீரென்று நிறுத்தியது அணுக்குண்டு என்பதை நாம் அறிவோம். ஒரு சில அணுக் குண்டுகளால் ஒரு நாட்டிடையே அழித்துவிடலாம் என்பது இன்று மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. பறக்கும் குண்டுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இன்ன நாட்டின் மீது இது விழட்டும் என்று எண்ணிக் குறி பார்த்துவிடும் அணுக்குண்டு, பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள குறிப்பிட்ட நாட்டில் விழுந்து, அந்நாட்டை அழித்துவிடும் என்று விஞ்ஞானிகள் விளம்பு கின்றனர். அமெரிக்க விஞ்ஞானிகள் சந்திரனை ஆராய்ச்சி செய்கின்றனர்; சூரியனுக்கு அண்மையில் இருப்பதால், சந்திரன் மிக்க சூடுடையதாக இருக்கின்றது. அதனால் அங்கு மக்களோ பிற உயிர்களோ தோன்ற வழியில்லை. சுந்திரனில் காணப்படும் களங்கம் போன்ற பகுதிகள் அங்குள்ள உயர்ந்த மலைகளின் நிழலேயாகும் என்று அவர்கள் சந்திரனைப் பற்றி ஆராய்ந்து கூறுவன, நமக்குப் பெரு வியப்பை உண்டாக்குகின்றன. இந்த அளவிற்கு விஞ்ஞான ஆராய்ச்சி சென்றிருக்கிறது. ஆங்கில அரசு நமது நாட்டில் ஏற்பட்ட பிறகு, நமக்கு உலக நாடுகளைப் பற்றிய அறிவு வளரத் தொடங்கியது. உலகில் அன்றாடம் நடைபெறும் செய்திகள் எல்லாவற்றையும் செய்தித்தாள்களின் வாயிலாக இருந்த இடத்தில் இருந்தபடியே அறிய வசதி ஏற்பட்டுள்ளது. விரைந்து செல்லும் வானஊர்தியின் துணையைக் கொண்டு இன்றைய மனிதன் சில நாட்களில் உலகத்தையே சுற்றிவந்து விடலாம். இத்தகைய வசதிகளால் உலக நாடுகளின் அரசியல் உறவும் வாணிக உறவும் நமக்கு நெருக்கமாகிக்கொண்டு வருகின்றன. பல நாட்டு மக்களும்-அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவரா யினும்- நெருங்கிப் பழகவும், கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ளவும் வசதி ஏற்பட்டுள்ளது. இந்தியத் தூதரான திரு. கிருஷ்ணமேனன் அவர்கள் இன்று டெல்லியில் இருக்கிறார்; நாளை எகிப்திலிருந்து பேசுகிறார்; அடுத்த நாள் மாகோவிலிருந்து பேசுகிறார். இத்தகைய அரசியல் உறவும் வாணிக வளர்ச்சியும் விஞ்ஞானத்தின் பயன் என்று கூறவேண்டும். இன்று வரை உலகத்தில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியைக் கண்டோம். இனிச் சமயம் என்பது யாது என்பதைக் காணுவோம்; சமைந்தது-பக்குவப்படுத்தப்பட்டது சமையம் எனப்படும். அஃதாவது, மனிதனுடைய குணங்களையும் செயல்களையும் நெறிப்படுத்துவது சமையம் என்பது. மனிதனது நேர்மையான வாழ்க்கைக்குத் தேவையான கொள்கை களின் திரட்சியே சமயம் அல்லது மதம் என்று பெரியோர் கூறுவர். மனிதன் எத்தகைய அறிவும் ஆற்றலும் உடையவனா யிருப்பினும், அவனுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்ட பேராற்றல் ஒன்று உலகில் இருக்கின்றது என்பதை உணர்கிறோம். நாள்தோறும் கீழ்த்திசையில் கதிரவன் தோன்றுதலையும், மாலையில் மறைதலையும், இரவில் சந்திரன் ஒளிருதலையும், பருவகாலங்களில் மழை பெய்தலையும், இயற்கைப் பொருள் களான சூரியன் சந்திரன் முதலியன ஒரு நெறிப்பட்டு இயங்குவதையும் கண்டு அறிவுடைய மனிதன், இவற்றைப் படைத்து இயக்கும் பேராற்றல் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாக இருத்தல் வேண்டும் என்று நினைக்கிறான்; அப்பேராற்றலின் ஒரு பகுதி ஒவ்வோர் உயிரிடத்தும் இருக்கின்றது-அதனால் உயிரினங்கள் இயங்குகின்றன என்று எண்ணுகின்றான். கீழ்த்திசையில் தோன்றும் சூரியன் மறுநாட் காலை மேல் திசையில் தோன்றாமல் கீழ்த்திசையிலேயே தோன்றுவதையும், இவ்வாறே மாலையில் மேற்றிசையில் மறையும் சூரியன், மறுநாள் மாலை கீழ்த்திசையில் மறையாமல் மேற்றிசையிலேயே மறைவதையும் காண்கின்ற மனிதன், அதன் இயக்கம் ஒரு நெறிப்பட்டு நிற்பதை உணர்கிறான்; அந்த உணர்ச்சி அவனையும் ஒரு நெறியில் நிற்கத்தூண்டுகிறது. சூரிய சந்திரரைப்போலத் தானும் நெறிப்பட்டு நிற்பது, உலகத்தைப் படைத்துக் காக்கும் பேராற்றலின் நெறிப்படி நிற்பதாகும் என்று நம்புகின்றான்; இந்த நம்பிக்கையால் நன்னெறி ஒன்றைக் காண முயல்கின்றான். அம்முயற்சியால் உண்டாகும் பயனே மதம் என்பது. மனிதன் தன் அறிவினாலும் ஆராய்ச்சினாலும் சுக வாழ்க்கை வாழ அறிந்து கொண்டான். ஆயினும் அச்சுகவாழ்க்கை ஒரு நாள் முற்றுப்பெறுகிறது. அதாவது, அச் சுகவாழ்வை அளிக்கின்ற விஞ்ஞானியும் அதனை அநுபவிக்கின்ற சாதாரண மனிதனும் ஒருநாள் இறந்துவிடுகின்றனர். அறிவுள்ள மனிதன் அப்போது எண்ணத்தொடங்குகிறான். இயற்கை அற்புதங்களைக் கண்டறிந்து உலகத்தார்க்கு நன்மை பயக்கும் விஞ்ஞானியும் ஒரு நாள் மடிகின்றான்; எனவே, விஞ்ஞானியை விடப் பெரிய சக்தி ஒன்று இருக்கின்றது என்பதை உணர்கிறான்; அதன் அருளைப்பெற விரும்புகிறான். தான் செம்மையான வாழ்வு வாழ்ந்தால் அதன் அருளைப் பெறலாம் என்று நம்புகின்றான்; நேர்மையான வாழ்க்கைக்குச் சில கொள்கைகளை வகுத்துக் கொள்கிறான். அக்கொள்கைகளே சமயக்கொள்கைகள் என்று சொல்லப்படும். விஞ்ஞான வளர்ச்சி ஏற்படாததற்கு முன்பு ஒரு நாட்டார் மற்றொரு நாட்டாருடன் நெருங்கிப் பழக வாய்ப்பு ஏற்பட வில்லை. ஓவ்வொரு நாட்டாருடைய தேவைகள் வேறு வேறாக இருந்தன. அவ்வாறே சமயக் கொள்கைகளும் வேறுபட்டு இருந்தன. இவ்வேறுபாட்டால் பகைமையும் பூசலும் தலை விரித்தாடின. ஒரு சமயத்தார் மற்றொரு சமயத்தாரை அழித்தனர்; அடிமைப்படுத்தினர். ஆனால், இன்று எல்லாச் சமயத்தவரும் மனம் மாறி வருகின்றனர். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் பயன்களை எல்லா நாட்டு மக்களும் அநுபவிக்கின்றனர். இசுலாமிய நாடுகளான பாரசீகம் முதலியவற்றில் இங்குள்ளன போலவே புகைவண்டித் தொடரும் வானஊர்திகளும் பிறவும் இயங்குகின்றன. இவ்வாறே கிறித்தவ நாடுகளான ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் பௌத்த சமயநாடுகளான சீனம் முதலியவற்றிலும் இயங்குகின்றன. விஞ்ஞானி ஒருவன் குறிப்பிட்ட ஒரு நோய்க்குக் கண்டுபிடித்த மருந்து, இன்று உலகத்தார் அனைவரும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறே தபால், தந்தி, மின்விளக்கு, மின்விசிறி, தொலைபேசி என்று சொல்லப்படும் விஞ்ஞான சாதனைகள்யாவும் எல்லா மக்களுக்கும் பயன்படுகின்றன. இவற்றால் மனித சமுதாயத்தில் ஒரு சமமான வாழ்கைநிலை ஏற்படுகின்றது. இங்ஙனம் ஏற்படுவதால் அனைவரும் ஒன்று என்னும் உணர்ச்சி வளர்கின்றது. இந்த வளர்ச்சியால் சமய வேறுபாட்டு உணர்ச்சி படிப்படியாகக் குறைந்து வருகின்றது. இறைவனை வழிபடும் முறையில் வேறுபாடு உண்டே தவிரப் பிற நெறிகளில் வேறுபாடு குறைந்து வருகின்றது. உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்கைக்குரிய கொள்கை களாகும். இக் கொள்கைகளை உடையவரே நல்லவர் என்று எச்சமயத்தவராலும் பாராட்டப்பெறுவர். இக் கொள்கைகள் ஒவ்வொரு சமயத்தார்க்கும் உடன்பாடு ஆனவையே. எனவே, இக்கொள்கைகளை உடைய மனிதன் சமய உணர்ச்சி உடையவன், இவற்றின்படி வாழ்பவன், சமயவாழ்க்கை வாழ்பவன் என்று அறிஞரால் பாராட்டப்படுவான். ஒரு மாநாட்டில் பல சமயங்களைச் சேர்ந்த அறிஞர்கள் ஒன்று கூடுகின்றனர். தொழுகை நேரத்தில் மட்டும் அவரவர் தத்தம் முறையில் வழிபாடு புரிவர். பிறவற்றில் எல்லாம் அவர்கள் பெரும்பாலும் ஒன்றுபட்டே செயல்படுவதைக் காண்கிறோம். இத்தகைய உணர்ச்சியே இன்று விரைவாகப் பரவி வருகின்றது. விஞ்ஞான வளர்ச்சி உலக நாடுகளை நமக்கு அண்மையில் கொண்டுவந்துவிட்டது; ஒரு நாட்டாரை மற்றொரு நாட்டார் புரிந்துகொள்ளும்படி செய்திருக்கிறது; நம்மைப்போலவே அவர்களும் வாழப் பிறந்தவர்கள்-வாழ உரிமையுடையவர்கள் என்னும் உணர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது; அவரவர் சமயச் சிறப்புக்கொள்கைகள் எவையாக இருப்பினும், பொதுக் கொள்கைகள் அனைவருக்கும் ஏற்றவையே என்னும் உண்மையை விளக்கிவிட்டது. இத்தகைய அறிவு வளர்ச்சியால் தற்கால வழியில் சமயக்கொள்கைகள் ஏறத்தாழ உலக மக்களிடையே ஒன்றுபட்டு வருகின்றன. இந்த ஒருமைப்பாடு உலக அமைதிக்கு உவந்தது; மக்களது இன்ப வாழ்க்கைக்கு ஏற்றது. விஞ்ஞான அறிவு மேலும் வளர வளர, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் சிறந்த சமயக்கொள்கை உலகில் மலர்ந்து மணம் வீசும். அந்த நன்னாளே மக்கள் வாழ்வுக்கேற்ற பொன்னாளாகும்.