தமிழ் இனம் வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : தமிழ் இனம் ஆசிரியர் : வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : முனைவர் க. தமிழமுது பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 14+90 = 104 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 97/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் & வி. சித்ரா நூலாக்கம் : வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், பி 3, பாண்டியன் அடுக்ககம், சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம் 044 2433 9030. முன்னுரை தமிழ் இனம் என்னும் பெயர் கொண்டு வெளிவரும் இந்நூல், `தமிழ் இனம் என்னும் கட்டுரையை முதற் கட்டுரையாகப் பெற்றுள்ளது. இதனை அடுத்து, தமிழர் பெற்ற தனிச் செல்வமாகிய அகப்பொருள் இலக்கணம் பற்றிய செய்தியும், திருக்குறள், எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை, பாரதம், மனோன்மணீயம் என்னும் இலக்கிய நூல்களைப் படிப்பவர்க்கு அறிமுகப்படுத்தும் கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சாக்கையர் கூத்துப் பற்றிய விளக்கமும் இன்று மலையாள நாட்டில் உள்ள சாக்கையர் பற்றிய செய்திகளும் `சாக்கையர் கூத்து என்னும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. இயல்பாக நடைபெற்றிருக்க வேண்டிய சமுதாய நிகழ்ச்சி தெய்வீகம் கற்பிக்கப்பெற்று, இதிகாசத்தில் வழிபாட்டுக்குரிய நிலையில் இடம் பெற்றுள்ள நிலையை விளக்க எழுந்ததே `ஐவருக்கு மனைவி என்னும் கட்டுரையாகும். இக்கட்டுரையில், வேதகாலம் முதல் இன்றளவும் ஒருத்தி பலருக்கு மனைவியாக இருந்தமைக்கும் இருந்து வருதற்கும் சான்றுகள் தரப்பட்டுள்ளன. இலக்கிய நயமும் ஆராய்ச்சித் திண்மையும் பெற்று விளங்கும் இக் கட்டுரைகள், தமிழ் இலக்கியச் செய்திகளை அறிவதற்கும் அவ்வத் தமிழ் நூலினைப் படிக்கவேண்டுமெனத் தூண்டுதற்கும் துணை செய்யும் என்று நம்புகிறேன். இதனை நன்முறையில் வெளியிட்டுதவிய காரைக்குடி - செல்வி பதிப்பத்தார்க்கு எனது நன்றி உரியதாகுக. மா. இராசமாணிக்கம் பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க்குலம் படிப் படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மை களைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு எம் தந்தையார் தமிழ்மண் பதிப்பகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங் கினார். என் தந்தையின் பதிப்புச் சுவடுகளைப் பின்பற்றி எம் பதிப்புப் பணியைச் செய்து வருகிறேன். தமிழ்ப் பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய ஆய்வுகள், சமயம் சார்ந்த ஆய்வுகள், வரலாற்றாய்வுகள், கோவில் ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள், மாணவர் நலன் குறித்து அவர் எழுதிய 110 நூல்களும் ஆய்வாளர்களுக்கும் மாணவர் களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க நூல்களாகும். இவற்றில் 18 நூல்களை 2012இல் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர் பணியாக 2014இல் 21 நூல்களை தமிழுலகம் பயன்படும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன். - க. தமிழமுது நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `ï‹iwa jÄHuJ thœÉš jÄœ v›thW ïU¡»‹wJ? ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும் `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள் என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள் என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம். நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார். பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தார். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான் படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம், `நக்கீரர் கழகம், `மாணவர் மன்றம் முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர் என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈரா பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர் என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான் பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார் என்று `என் கணவர் என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வியில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும். உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும் என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும் என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்களை எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம், `தமிழ் இனம், `தமிழர் வாழ்வு, `என்றுமுள தென்றமிழ், `புதிய தமிழகம் என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும் என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி, `தமிழ்க் கலைகள், `தமிழர் நாகரிகமும் பண்பாடும், `தமிழக வரலாறு என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்காக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும் அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல், தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும் என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம் என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும் என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `அவரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா? எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர், `மனிதரில் தலையாய மனிதரே எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் உள்ளுரை எண் பக்கம் 1. தமிழ் இனம் 7 2. தமிழர் பெற்ற தனிச் செல்வம் 15 3. திருக்குறள் 20 4. ஐந்திணை அமுதம் 31 5. கண்ணகி 39 6. சாக்கைக் கூத்து 54 7. சங்க காலத்து அன்னதானம் 59 8. குறிஞ்சிக்கலி 64 9. ஐவருக்கு மனைவி 78 10. வாணியின் காதல் 88 1. தமிழ் இனம் இனவாழ்வின் உயிர்நாடி ஒரு மொழி பேசும் மக்கள் தொகுதியை `இனம் என்னும் சொல்லால் குறிக்கலாம். இதன் படி, `தமிழ் என்னும் மொழியைப் பேசும் மக்களைத் `தமிழ் இனம் என்னும் தொடரால் குறிப்பது பொருந்தும். இவ்வொரு மொழி பேசும் மக்கள் இனம் வன்மை பெற்றதாக விளங்க வேண்டுமாயின், அவ்வினத்தைச் சேர்ந்த மக்கள் இயற்கையாய் அமைந்த `இன வாழ்வு உடையவராக இருத்தல் வேண்டும். அஃதாவது, அவ்வினத்தைச் சேர்ந்த அனைவரும் ஒரு தாய் ஈன்ற மக்களைப்போல வாழ வசதியிருத்தல் வேண்டும். உழைப்பால் எவரும் இனவாழ்வில் எத்தகைய உயர் நிலையையும் அடையத்தகும் வசதி அவ்வினத்தில் அமைந் திருத்தல் வேண்டும். இதனை மேலும் விளக்கிக்கூற வேண்டு மாயின், ஒரே மொழி பேசும் மக்கள் சேர்ந்து வாழும் இன வாழ்வில் பிறவி கொண்டு பிரிக்கப்படும் பாகுபாடுகள் இருத்தல் கூடாது. அவரவர்தம் முயற்சியால் உயர்ச்சி பெறலாம் என்னும் இனவாழ்விற்கு உயிர் நாடியான அடிப்படை இனவாழ்வில் அமைந்திருத்தல் வேண்டும். மேனாடுகளில் இனவாழ்வு இவ்வின வாழ்வின் உயிர்நாடி நன்கு அமையப்பெற்ற காரணத்தால்தான் மேல்நாடுகள் அறிவிலும் ஆற்றலிலும் நம்மால் எண்ணிப் பார்க்க முடியாத அளவில் முன்னேறி வருகின்றன. அந்நாடுகளில் பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. அதனால் செருப்புத் தைக்கும் சக்கிலி, தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் எளிய மகன், செங்கல் எடுக்கும் சிற்றாள், பயிர்க் கொல்லையைக் காக்கும் பணிமகன் போன்றவரும் உழைப்பால் உயர்ந்து அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தலைக் காண்கிறோம். அங்கு ஒவ்வொருவரும் அடுத்தவரைத் தம் இனத்தவராகவும் நாட்டவராகவும் கருதிப் பண்புடன் நடந்துகொள்ளும் பழக்கம் பெற்றுள்ளனர். இத்தகைய இன வாழ்வு நம் நாட்டில் இல்லாமைக்குக் காரணம் யாது? இந் நாட்டில் பலவகை உட்பிரிவுகள் உட்படப் பல்லாயிரக்கணக்கான சாதிகள் இருக்கின்றன என்று கூறுதல் தவறாகாது.1 எந்த நாட்டிலும் மக்கள் பல தொழில்களைச் செய்தல் இயல்பு. ஆயின், ஒவ்வொரு தொழிலைச் செய்வோரும் பிறவியிலே வேறுபட்ட சாதியினராகக் கருதப்படும் இழி நிலை பிற நாடுகளில் காணப்படாதது. ஆனால், இந்நாட்டில் தொழில் காரணமாக ஏற்பட்ட பெயர்கள் சாதிப் பெயர்களாக நிலை நிறுத்தப்பட்டன. வட இந்தியாவில் இந்நாட்டில் குடிபுகுந்த ஆரியர் சாதிப் பிரிவினை அறியாதவர். ரிக் வேத காலத்தில் அவர்களிடம் சாதிப் பிரிவுகள் இல்லை. ஆயின், பிற்பட்ட காலங்களில் அவர்கள் உயர்வு கருதிப் பிரிந்து வாழ்ந்தனர். கொடுக்கலும் வாங்கலும் படிப்படியாக நிறுத்தப்பட்டன. பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் முப் பிரிவினைகள் தோன்றின. அவர்களிடையே இருந்த பலவகைத் தொழிலாளர்கள் நான்காம் பிரிவினராயினர். நாளடைவில் ஆரியரால் ஆளப்பட்ட இந்நாட்டிற்குரிய மக்களும் சூத்திரராக்கப்பட்டனர். தமிழகத்துப் பிரிவுகள் இங்ஙனம் வட இந்தியாவில் உண்டான சாதிப் பாகுபாடுகள் அதே காலத்தில் தென்னிந்தியாவில் காணப்படா தனவாக இருந்தன. தமிழகம் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐந்து நிலங்களாகப் பிரிந்திருந்தது. குறிஞ்சி நிலத்து மக்கள் பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, கொடிச்சி, குறவன், கானவன் எனப் பெயர் பெற்றனர்; பாலை நில மக்கள் விடலை, காளை, மீளி, எயினன், எயிற்றி, மறவன், மறத்தி எனப் பெயர் தாங்கினர்; முல்லை நில மக்கள் தோன்றல், மனைவி, கிழத்தி, இடையன், இடைச்சி, ஆயன், ஆய்ச்சி எனப் பெயர்கள் வழங்கப்பெற்றனர். முல்லை நிலம் ஐந்து நிலங்களுக்கும் இடையே அமைந்திருந்த காரணத்தால், இடை நிலத்தார் என்னும் பொருள்பட முல்லை நில மக்கள் `இடையர் எனப்பட்டனர். மருத நிலத்து மக்கள் ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி, உழவன், உழத்தி எனப் பெயர் பெற்றனர். நெய்தல் நில மக்கள் சேர்ப்பன், புலம்பன், பரவன், பரத்தி, நுழையன், நுழைச்சி, அலவன், அலத்தி எனப் பெயர் பெற்றனர். இவ்வொவ்வொரு நில மக்களுள்ளும் தலை மக்கள், பொது மக்கள் என்ற இரண்டே பிரிவுகள் உண்டு. அரசனும் குடிமகனும் என்னும் பிரிவைப்போல இப்பிரிவுகள் அமைந்திருந்தன. அலுவல் முதலியனபற்றிய பிரிவுகள் ஆட்சி முறை அமைந்த பின்னரே நகரங்களிலும் சிற்றூர்களிலும், இக்காலத்தைப் போலவே, லுவல் காரணமாக அலுவற் பெயர்கள் வழங்கலாயின. அரசு செய்பவன் அரசன்; அரசன் மெய்க் காப்பாளராக இருப்பவர் அகம்படியர்; மறம்-வீரம், வீரத்தை உடையவர் மறவர்; படையை ஆட்சி புரிந்தவன் படையாட்சி; இவனே நாயகன் (நாயகர்) எனப் பெயர் பெற்றான். பறை - இச்சொல் மலையாளத்தில் `சொல்லுதல் என்ற பொருளைத் தரும்; அரசன் ஆணையை மாநகரத்தார்க்குப் பறையறைந்து சொல்லுபவன் பறையன்; வண்ணம்-அழகு; அழுக்கு ஆடைகளை அழுக்குப் போக்கி வண்ணம் செய்பவன் (அழகு செய்பவன்) வண்ணத்தான் அல்லது வண்ணான் எனப் பெயர் பெற்றான். சலவைத் தொழிலாளிக்கு `வண்ணத் தான் என்ற பெயர் வழக்கு இன்னும் மலையாள நாட்டில் உண்டு. `தாளாண்மை என்பது `முயற்சி என்னும் பொருளை உடையது. வறிய நிலத்தில் நீர் பாய்ச்சிப் பதப்படுத்திக் கலப்பை கொண்டு உழுது, எருப் போட்டு வயலைப் பக்குவப்படுத்தி விதைகளை விதைத்து. . . . . . . . . அறுவடை செய்யும் வரை உழவன் மேற்கொள்ளும் முயற்சி அளவிடற்கரியதன்றோ? அவனிடம் தாளாண்மை இல்லையாயின் ஓரினத்தின் வாழ்வே கெட்டுவிடுமன்றோ? இத்தகைய முயற்சியுடையவன் `தாளாளன் எனப் பெயர் பெற்றான். தாளாண்மையால் வந்த பொருளை அவன் பிறர்க்கு உதவும் நிலையில் வேளாளன் எனப்பட்டான். (வேளாண்மை-உதவி). உயிரைத் துரும்பாக மதித்துப் பல கல் தொலைவு ஆழந் தெரியாத கடலில் கட்டு மரங்களைச் செலுத்தி மீன் பிடித்து வாழ்ந்த மனிதன் `கடலரசன் எனப் பாராட்டப்பட்டான். அவனே கடற்கரையில் வாழ்ந்த காரணத்தால் `கரையான்-கரையாள்-கரையாளன் என்னும் பெயர்களைப் பெற்றான். பரவை-கடல்; பரவன்-கடலன்; கடலருகில் வாழ்பவன், கடலில் வாழ்பவன், கடலைக்கொண்டு வாழ்பவன் `பரவன் எனப் பெயர் பெற்றான்; மலையில் வாழ்ந்தவன் `மலையன் என்றும், காட்டில் வாழ்ந்தவன் `காடன், காடவன் என்றும், ஊரில் வாழ்ந்தவன் `ஊரன் என்றும், பெயர் பெற்றனர். ஊரையாண்டவன் `ஊராளி எனப்பட்டான். சேனைத் தலைவனான தமிழன் `நாயன் எனவும், `நாயகன் எனவும், தெலுங்கன் `நாயுடு என்றும், சேர நாட்டான் `நாயன் (நாயர்) என்றும் பெயர் பெற்றனர். பலவகை ஆடைகளுள் `தேவாங்கு என்னும் ஒருவகை ஆடையை நெய்தவர் `தேவாங்கர் எனப்பட்டனர். செக்காட்டி எண்ணெய் எடுப்பவன் `செக்ககன் எனப்பட்டான். கடலில் முக்கி (மூழ்கி)த் தொழில் செய்பவன் `முக்குவன் எனப்பட்டான் வேட்டையாடுபவன் `வேட்டுவன் எனப்பட்டான்; கஞ்சம்-பித்தளை; கஞ்சத்தால் வேலை செய்பவன் `கஞ்சான் எனப்பட்டான். இராசிகளைக் கணித்துச் சோதிடம் கூறியவன் `கணியன் எனப்பட்டான். வேல் ஏந்தி வெறியாடியவன் `வேலன் எனப் பெயர்பெற்றான்; பண் இசைத்துப் பாடினவன் `பாணன் எனப்பெயர் பெற்றான். செருப்புத் தைத்தவன் `செருமான் எனப்பட்டான். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்தவன் `குறிச்சியான் என்று அழைக்கப்பட்டான். ஒவ்வொரு தொழிலியற்றும் கூட்டத்தார்க்கும் ஒரு தலைவன் உண்டு; அவன் இடத்திற்கு ஏற்ப மூப்பன் என்றும், மூத்தன் என்றும், முதலி என்றும் பெயர் பெற்றான். வீரர்களின் போர்த்திறமையைப் பாராட்டி அரசர்கள் வீரர்களுக்கு `அரையன், `மாவரையன் என்னும் பட்டங்களை வழங்கியதும், அப்பட்டங்கள் நாளடைவில் `ராயன் என்றும், `ராயர் என்றும் `மாராயர் என்றும் வழங்கலாயின. `ஜனபா என்பது கோணிப்பை செய்வதற்குரிய ஒருவகைச் செடி. அச்செடிதரும் சணலைக் கொண்டு கோணி செய்பவர் `ஜனபர் (ஜனப செட்டிமார்) எனப்பட்டனர். இவ்வாறு அலுவல் பற்றியும், இடம் பற்றியும், சிறப்புப் பற்றியும் வந்த பெயர்கள் எண்ணில. இவற்றை மேலும் அறிய விரும்புவோர் தமிழிலக்கிய அறிவோடு சேர நாட்டுச் சாதிப் பெயர்களையும் அங்கு வழக்கிலுள்ள பிற பெயர்களையும் உணர்ந்து ஆராய்தல் நலமாகும்.2 பிற்காலத் தமிழகத்தில் இங்ஙனம் தொழில் பற்றியும், இடம் பற்றியும், சிறப்புப் பற்றியும், தோன்றிய பெயர்கள், நாளடைவில் எவ்வாறோ பிறவி பற்றியவை ஆகிவிட்டன. சாதிகளை ஒழித்துச் சமுதாயத்தை ஒரு நிலைக்குக் கொண்டுவர முயன்ற பௌத்த சமயமும், சமண சமயமும் நாட்டில் வீழ்ச்சியுற்றன. வடக்கே ஆட்சியிலிருந்த ஒரு குலத்துக்கொரு நீதி கூறும் மனுதர்ம சாத்திரம் தென்னாட்டிலும் கால்கொண்டது. மனுநீதி முறைப்படி இந்நாட்டை ஆண்டதாகப் பெருமை பேசிக்கொண்ட மன்னர்கள் தென்னிந்திய வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். நாயன்மார் காலத்திலும் ஆழ்வார்கள் காலத்திலும் சாதிவெறி தலைதூக்கியிருந்ததை நந்தனார் வரலாறும், யாழ்ப்பாணர் வரலாறும், திருப்பாணாழ்வார் வரலாறும் ஓரளவு தெரிவிக்கின்றன. சமணத்தையும் பௌத்தத்தையும் ஒடுக்க நேர்ந்த போராட்டத்தில் வைதிகர், சைவர், வைணவர் ஆகிய இந்துக்கள் (இந்து என்பது பிற்காலப் பெயர்) தம்முள் இருந்த சாதி வேறுபாடுகளை ஓரளவு மறந்திருந்தனர். மேற் சொன்ன இரண்டு சமயங்களும் ஒடுக்கப்பட்ட பின்பு, மீண்டும் இவ்வேறுபாடுகள் தலைதூக்கின. இச் சாதி வேறுபாடுகள் சோழப் பேரரசிலும் நிலைபெற்றன. சில சாதியினர் குடிமக்களுக்கு உரிய சில உரிமைகளை இழந்திருந்தனர் என்பதைக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஒரே இனத்தில் இழிநிலை தமிழினம் இவ்வாறு எண்ணிறந்த பிறவி பற்றிய சாதிகளாகப் பிரிக்கப்பட்ட காரணத்தால் நாளடைவில் வலிமையிழந்தது; இவ்வலிமையின்மையே தமிழ் மன்னர் ஆட்சி அழியவும் ஒரு காரணமாக இருந்தது. கோவிலுக்குள் இன்ன வகுப்பார் இறைவன் கருவறையில் போகலாம், இன்னவர் இடை மண்டபத்தில் இருக்கலாம், இன்னவர் முன் மண்டபத்தில் நிற்கலாம், இன்னவர் முன் மண்டபத்திற்கும் வெளியே நிற்றல் வேண்டும், இன்னவர் கோவிலுள் வரலாகாது, என்ற வரையறைகள் ஏற்பட்டன. பொதுமக்கள் வரிப்பணங் கொண்டு கட்டப்பட்ட கோயில்களில் பொதுமக்கள் நிலை இவ்வாறாயிற்று. அவரவர் தொழிலின்படி வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற மனுதர்ம முறைப்படி, மக்கள், இன்று நுகரும் உரிமைகளை இழந்து, வாழ்ந்தனர் என்று கூறுதல் மிகையாகாது. `கண்டால் தீட்டு, `தொட்டால் தீட்டு என்று சொல்லும் அளவிற்கு மனிதன் மனிதனை வெறுத்தான்; நாயினும் கீழாக மதித்தான். உயர் வகுப்பானைக் கண்டவுடன் மற்ற வகுப்பாருள் ஒவ்வொரு சாதியானும் இவ்வளவு தூரத்தில் விலகி இருக்க வேண்டும் என்ற நியதி ஏற்பட்டது. உயர் வகுப்பார் வாழும் இடங்களில் தாழ்ந்த வகுப்பார் வரலாகாது என்றும், அவர் வாழும் தெருக்களில் நடத்தல் கூடாது என்றும் கட்டளைகள் பிறந்தன. இங்ஙனம் பொது மக்கள் நடமாடும் கோவில் முதல் தெருக்கள் ஈறாக உள்ள எல்லாப் பொது இடங்களிலும், ஒரே இனத்தாருக்குள் எண்ணிறந்த பாகுபாடுகள் ஏற்பட்டன. இவ்வேறுபாடுகள், `இவரைவிட நாம் உயர்ந்தவர் என்று செருக்குக்கொள்ளப் பயன்பட்டனவே தவிர, இன வாழ்வு அமைதியாக நடத்தப் பயன்படவில்லை. உடம்பின் எல்லா உறுப்புக்களுக்கும் சமமாகச் செல்லவேண்டும் இரத்த ஓட்டம் தலைக்கும் கழுத்துக்கும் அதிகமாகச் சென்றும், இடைக்கும் கால்களுக்கும் வேண்டும் அளவு செல்லவில்லையாயின், அம்மனிதனுடைய தலையும் கழுத்தும் பருத்துக் காணப்படும்; இடையும் கால்களும் மிகச் சிறுத்துக் காணப்படும். இத்தகைய மனிதனைப் பிறர் பாராட்டுவரா? தம்முள் ஒருவனாக ஏற்றுக் கொள்வரா? சமய மாற்றம் இந்தப் பரிதாபத் தோற்றமுடைய மனிதனைப் போலவே பொதுவாக இந்திய இனமும், சிறப்பாகத் தமிழ் இனமும் காட்சி அளித்தன. இந்நிலையில் `பிறவியினால் உயர்வு தாழ்வு இல்லை என்று கூறிக் கொண்டு இசுலாம், கிறிதுவம் என்னும் சமயங்கள் இந்நாட்டுக்கு வந்தன. மக்கள் சிலர் மதம் மாறினர். தாகூர் கூற்று தமிழ் இனத்தவருள் இலட்சக் கணக்கான மக்கள் இங்ஙனம் மதம் மாறிய பிறகும், இந்து சமயத் தலைவர்கள் தமது சமயக் குறைபாடுகளை உணர்ந்து திருத்தம் செய்யவில்லை. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமலிங்க அடிகள் இச்சாதிகளைக் கண்டித்துள்ளார்; காந்தியடிகள் கண்ணீர் விட்டுக் கதறினார். தாகூர் வருந்திக் கூறியுள்ளதை இங்குக் காண்க: இந்து சமயம் தனது சாதிக் கட்டுப்பாட்டினால் வேறுபாடுகள் உண்டாக்கியதே அன்றி ஒற்றுமை உணர்ச்சியை உண்டாக்கவில்லை; சாதிகள் ஒன்று சேருவதைத்தடுக்க, ஒவ்வொரு சாதிக்கும் இடையே நீக்க முடியாத சுவர்களை எல்லைகளாக வைத்து விட்டது. இதனால் அது தன் மக்களுக்கு அமைதியையும் ஒழுங்கையும் கொடுத்ததே அன்றி, மக்கள் ஒருவரோடொருவர் கலந்து பழகி மன விரிவு கொள்ள வசதியளிக்கத் தவறிவிட்டது; இதனால் இந்து சமயச் சமூக அமைப்பு உயிரை இழந்துவிட்டது. அதன் பயனாக, இந்து சமூகம் சிதறுண்டு கிடக்கின்றது. தொழிலும் ஒவ்வொரு சாதிக்கு உரியது என்று கொண்டதனால், இந்நாட்டுத் தொழில் முறையும் கெட்டுவிட்டது. தொழில் திறமையைப் பொறுத்ததே யன்றி, ஒரு சாதியைப் பொறுத்தது அன்று. இதனால் தொழில் அறிவும், தொழில் திறனும் கெட்டுவிட்டன.3 இன்றைய நிலை ஆங்கிலக் கல்வியினாலும், பிற நாடுகளில் இத்தகைய சாதிகள் இல்லையென்ற உணர்வினாலும், மக்கள் ஓரளவு சிந்திப்பதாலும், முன்னிருந்த சாதிக் கொடுமைகள் ஓரளவு மறைந்து வருகின்றன. தீண்டப்படாத மக்கள் இன்று ஓரளவு முன்னேறியுள்ளனர். நாம் செய்ய வேண்டுவன தமிழினத்தின் உயிர் நாடிக்கே உலைவைக்கும் இச்சாதி வேறுபாடுகள் பிற நாடுகளில் இல்லாமையால், இயற்கையில் உண்டானவை அல்ல. எனவே, இவை செயற்கையில் உண்டானவை என்பது தெளிவு. இவ்வேறுபாடுகள் செய்துள்ள தீமைகள் பல. ஆதலின், இவற்றை இனவாழ்விலிருந்து அகற்றுவதே தமிழர் நல் வாழ்விற்கு அடிப்படையாகும். இதை எங்ஙனம் நடைமுறைக்குக் கொணர முடியும்? தமிழ் மக்கள் அனைவரும் இக்கேடுகளை நன்குணர்ந்து, சாதி வேறுபாடுகளை விட்டொழித்தல் நல்லது. கல்வி அறிவற்ற மக்கள் பெரும்பாலராக உள்ள தமிழினத்தில் இஃது எளிதில் நடைபெறாது. ஆதலால் பொறுப்புள்ள அரசாங்கம் சட்டத்தின் மூலமாக இவ்வேறுபாடு களைக் களைதலே பொருத்தமாகும். ஒன்றே குலம், ஒருவனே தேவன், என்ற திருமூலர் வாக்கு இத்தமிழ் நாட்டில் செயல் முறையில் வரும் நாளே, நமது தமிழகம் உருப்படத்தக்கப் பொன்னாளாகும். 2. தமிழர் பெற்ற தனிச் செல்வம் (அகப்பொருள்) தமிழ் இலக்கணம் தேனினும் இனிய நம் தமிழ்மொழி மிகப்பழையது. அது மிகப் பழங்காலந் தொட்டே வழங்கி வருவது. இங்ஙனம் பழமையும் பெருமையும் வாய்ந்த மொழியான தமிழ் நன்கமைந்த இலக்கண வரம்பையுடையது. நீராலும் நெருப்பாலும் அழிந்தனபோக இப்போது எஞ்சியுள்ள நூல்கள் சில. அவற்றுள் மிகப் பழமை வாய்ந்தது ஒல்காப் புலமை பெற்ற தொல்காப்பியர் இயற்றிய `தொல்காப்பியம் என்னும் இலக்கணமே ஆகும். அஃது எழுத்து, சொல், பொருள் என்னும் முப்பிரிவுகளை உடையது. பிற்காலத்தார் தமிழிலக்கணத்தை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐம்பிரிவுகளாகப் பகுத்து வழங்கினர். தொல்காப்பியர் காலத்தே `யாப்பு, அணி எனத் தனி நூல்கள் இல்லை. `எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று இலக்கணப் பிரிவுகளிலும் இறுதியாகவுள்ள பொருள் இலக்கணமே சாலச்சிறந்தது. `இறையனார் அகப்பொருள் என்னும் நூலில், எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருள் அதிகாரத்தின் பொருட்டன்றோ! பொருளதிகாரம் பெறேம் எனின், இவை பெற்றும் பெற்றிலேம், என்னும் வாக்கியம் காணப்படுதலை நோக்க, அக்காலத் தமிழர் பொருள் இலக்கணத்தை ஆராய்தற்கென்றே மற்றைய இரண்டு இலக்கணங்களையும் கற்று வந்தமை தெரிகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பொருள் இலக்கணம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் கூறுவதாகும். இன்பத்தைப்பற்றி இயம்பும் பகுதி `அகப்பொருள், `அகம் என்னும் பெயர்கள் பெறும். ஏனைய முப்பொருள்களைப் பற்றிக்கூறும் பகுதி `புறப் பொருள், `புறம் என்னும் பெயர்களைப் பெறும். இவ்விரண்டனுள் அகப்பொருளைப்பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் கருத்தாகும். உள்ளதும் இல்லதும் அகமாவது, ஒத்த அன்பும், ஒத்த குணமும், ஒத்த கல்வியும், ஒத்த உருவும், ஒத்த திருவும் பொருந்திய ஒருவனும்-ஒருத்தியும் தம்முள் தனிமையிற் கலந்து பின்னர்த் தம்முள் மணந்து கொள்ளுதலைக் கூறுவது. இப்பகுதியால் அக்காலத்திய தமிழர் கையாண்டுவந்த மணமுறையும் இல்வாழ்க்கைத் தத்துவங்களும், பிறவும் நன்கறியலாம். இப்பகுதியில் புனைந்துரைகளும் பல உண்டு. இறையனார் அகப்பொருள் உரை ஆசிரியர், இஃது...... இல்லது, இனியது, நல்லது என்று புலவரால் காட்டப் படுவதோர் ஒழுக்கமாதலின், இதனை உலக வழக்கோடு இயையான், என்று கூறியுள்ளார். உச்சிமேற்புலவர்கொள் நச்சினார்க்கினியர் என்னும் புலவர் இவர் கொள்கையை மறுத்து, இஃது இல்லதெனப்படாது உலகியலேயாம். உலகியல் இன்றேல், `ஆகாயப் பூ நாறிற்று என்றுழி, அது, சூடக் கருதுவாரும் இன்றி மயங்கக்கூறினான் என்று உலகம் இழித்திடப்படுதலின், இதுவும் இழித்திடப்படும், என்றார். இவற்றால், இப்பகுதி உலகியலும், புனைந்துரையும் கலந்தது என்பது வெளிப்படை. இனி இவ்வகப் பொருட் சுருக்கம் வருமாறு:- அகப்பொருட் சுருக்கம் பன்னிரண்டு வயதுடைய ஒரு மங்கை தன் தோழியருடன் ஒரு பொழிலிடத்தே மலர் கொய்து நீராடி விளையாட வருவாள்; பதினாறு வயதுடைய ஆண்மகன் ஒருவன் வேட்டை மேற்கொண்டு தன் படைசூழ அப்பெண் இருக்கும் பூம்பொழிலுக்கு அணித்தேயுள்ள காட்டுக்கு வருவன். இவ்விருவரும் இறை கூட்டுவிக்கத் தத்தம் குழுவினரைப் பிரிந்து ஓர் இடத்தில் சந்திப்பர். இவ்விருவரையும் `தலைவன்,-தலைவி என்று நூல்கள் கூறும். திடீரென ஒருவரை ஒருவர் கண்டு வியந்து தெளிந்து காந்தருவ முறைமையிற் கூடுவர். பின்னர், தலைவன் தோழியைத் தன் வயப்படுத்திக்கொண்டு, அவள் உதவியால் அடிக்கடி சந்தித்துப் பழக்கம் கொள்வன். நாளடைவில் இருவர்க்கும் உள்ள களவு ஒழுக்கம் சிலர்க்கும் பலர்க்கும் பரவி, ஊரில் அவர் தோன்றும்போது, தலைவியின் பெற்றோர் அவளை இற்செரிப்பர். தலைவியின் உடல் நாளுக்கு நாள் இளைத்தலைக் கண்ட செவிலித்தாய், அணங்கோ-பேயோ அவளை வருத்தியதாக எண்ணி, `வேலன் என்கிற பூசாரியைக் கொண்டு முருகனுக்குப் பூசைபோட்டு ஓர் ஆட்டைப் பலியிட நினைப்பாள். அதனை அறிந்த தோழி, ஆட்டைப் பலியிட வேண்டா; இவள் கொண்ட மெலிவுக்குக் காரணம் இதுவாகும், எனத் தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள தொடர்பைச் செவிலிக்குக் குறிப்பால் உணர்த்துவாள். இங்ஙனம் இவள் கூறும் முறை விசித்திரமானது. தலைவனிடம் செவிலி முதலியோர்க்கு அன்பு தோன்றுமாறு சில பொய்யுரைகளைக் கூறுவாள். தலைவி புனல் விளையாடுகையில் நீர்ச்சுழியில் அகப்பட்டாள்; அந்நிலையில் ஒரு தலைமகன் தோன்றி அவளைக் காத்தான். என்றும், தலைவி-மலர் பறிக்கையில் தனக்கு எட்டாத மலர் ஒன்றைப் பறிக்க விரும்பினாள். அவ்வமயம் ஒரு தலைமகன் தோன்றி அம்மலரைப் பறித்துத் தந்தான் என்றும், தலைவி எம்மோடு வந்த போது களிறு ஒன்று எதிர்ப்பட, அதைக்கண்ட தலைவி அச்சமுற்று அவனை அணைத்துக்கொண்டாள் என்றும் தலைவியின் களவொழுக்கத்தைச் செவிலிக்கு உணர்த்துவாள். இம்மூன்றும் முறையே, `புனல்தரு புணர்ச்சி, `பூத்தரு புணர்ச்சி, `களிறு தரு புணர்ச்சி எனப்படும். இதற்கு இடையில் தலைவன் தன் முயற்சியால், பொருள் ஈட்டிக்கொண்டு தலைவியின் தந்தையிடம் பெண்கேட்க வருவான். தலைவியின் பெற்றோர் மணவினைக்கு உடன் படுவாராயின் இல்லத்திலேயே நடைபெறும். பெற்றோர் மறுப்பின், தலைவன், தோழியின் உடன்பாட்டின்மீது தலைவியைத் தன் ஊர்க்குக் களவில் கொண்டு செல்வான். இஃது `உடன்போக்கு எனப்படும். தலைவனின் ஏற்றத்தையும், தலைவி அவன்பால் கொண்டுள்ள அளவற்ற காதலையும் உணர்வாராயின், பெற்றோர், அவர் பின் சென்று, அவரைத் தம் ஊர்க்கு அழைத்து வந்து, அவர்க்கு மணமுடித்தலும் உண்டு. இத்தகைய வழக்கம் கோயமுத்தூர், திருவாங்கூர், கஞ்சம் முதலிய இடங்களில் உள்ள மலைநாட்டு மக்களிடம் இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மணந்துகொண்ட தலைவற்குத் தலைவியைத் தவிரப் பரத்தையர் சிலரிடத்தும் பழக்கம் உண்டு என்று நூல்கள் கூறும். தலைவன் பரத்தையரோடு தொடர்புடையவன் என்பதைத் தலைவி உணர்வாளாயின், அது காரணமாக இருவர்க்கும் `ஊடல் உண்டாகும். இவர் தம் ஊடலைத் தணிக்கத் தூதர் சிலர் உளர். விருந்தினர் வரவைக்கண்டு தலைவன் தலைவியர் தம்முள் சமாதானம் செய்து கொள்ளலும் உண்டு. தலைவன் பரத்தையிற் பிரிவதேயன்றிக் கல்வி காரண மாகவும், வேந்தர்க்கு உற்றுழி உதவவும், அறச்சாலைகளைக் காக்கவும், தூதாகப் போவதற்கும், பிரிதல் உண்டு. இவற்றுள் ஒவ்வொன்றுக்கும் கால எல்லை உண்டு. பிரிவுக் காலத்தில் தலைவி கற்பொடு பொருந்தி ஆற்றி இருப்பாள். பிரிவு நீடித்த இடத்து அவள் வருந்துதலும் உண்டு. புலவர் இந்த அகவொழுக்கத்தை `ஐந்திணை யாக்கி விவரிப்பர். `திணை என்பது ஒழுக்கம். அவ்வொழுக்கம் நிகழும் இடமும் திணை என்னும் பெயராலேயே வழங்கப்படுகிறது. ஐந்திணையாவன: குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பன. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி; புணர்தலும் புணர்தல் நிமித்தமும் அதற்கு உரியவை. பாலைகுத் தன் நிலம்இல்லை. முல்லையும் குறிஞ்சியும் தன் முன்னிலை திரிந்து பாலையாகும். முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல் பிழந்து நடுங்குவதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும் -சிலப்பதிகாரம் பிரிதலும், பிரிதல் நிமித்தமும் அதற்கு உரியவை. காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை. கணவன் பிரிந்தவிடத்து மனைவி ஆற்றியிருத்தலும், அதன் நிமித்தமும் முல்லைக்கு உரியவை. வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம். ஊடலும் ஊடல் நிமித்தமும் அதற்கு உரியவை. ஒவ்வொரு திணைக்குரிய பெரும் பொழுது, சிறு பொழுது, தெய்வம், மரம், பறவை, உணவு வகை முதலிய பிறவும் இன்ன இன்னவை என நூல்கள் விரித்துக்கூறும். அவற்றின் விரிவைத் `தொல்காப்பியம், `நம்பியகப்பொருள் முதலியவற்றில் பரக்கக் காணலாம். தமிழர் தனிச்செல்வம் இவ்வழகு வாய்ந்த அகப்பொருள் தமிழுக்கே உரியது என்பதைப் பற்பல நூலாசிரியர் கூறியவற்றால் அறியலாம். ஆதலின், தமிழ் மொழிக்கே தனிச்சிறப்புத் தரும் இவ்வகப் பொருள் இலக்கண நூல்களையும் அவற்றுக் கியைந்த `கோவை என்னும் இலக்கிய நூல்களையும் தமிழர் கற்றுப் பெரும் பயன் பெறுவாராக. தஞ்சை வாணன் கோவை, பாண்டிக் கோவை, திருக்கோவை, கலைசைக் கோவை, வெங்கைக் கோவை, கோட்டீச்சரக் கோவை, நெல்லைக்கோவை, பழமலைக் கோவை, அம்பிகாபதிக் கோவை முதலியன அகப்பொருள் இன்பத்தை விளக்கும் இன்ப நுல்களாகும். 3. திருக்குறள் முன்னுரை திருக்குறள் இத்தமிழகத்தில் தோன்றிய நாள் தொட்டுப் பின்வந்த புலவர் பெருமக்கள் அனைவரும் அதன் கருத்துக்களைத் தாம் இயற்றிய பெருங்காப்பியங்களிலும், சிறு காப்பியங் களிலும், தோத்திர நூல்களிலும், புராணங்களிலும், உலா, பிள்ளைத் தமிழ், தூது முதலிய பிரபந்தங்களிலும் எடுத்தாண்டுள்ளனர். தமிழில் வேறு எந்த நூலுக்கும் இல்லாத இந்தப் பெருமை திருக்குறள் ஒன்றுக்கே பொருந்தியிருக்கிறது. உலகில் மக்களாகப் பிறந்தவர் பின்பற்ற வேண்டும் சிறந்த கருத்துக்களை யெல்லாம் கூறுவது திருக்குறள் ஒன்றே. பிள்ளைப்பேறு, பிள்ளையின் கல்வி, பிள்ளையின் இல்லறவாழ்க்கை, மனைவியின் கடமை, பிள்ளைக்குத் தந்தை செய்யும் கடமை, தந்தைக்குப் பிள்ளை செய்ய வேண்டும் கடமை முதலிய இல்லறம் பற்றிய செய்திகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறே, ஒருவன் சமுதாயத்தில் யாரோடு பழக வேண்டும், யாருடன் பழகுதல் கூடாது என்பன போன்ற சமுதாய வாழ்க்கை முறைகளும் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன. மனிதன் உழவனாகவோ வணிகனாகவோ அல்லது அரசாங்க அலுவலனாகவோ இருக்கவேண்டுபவனாவன். இவ்வொவ்வொரு துறையில் பழகும் மனிதனும் அறிந்திருக்க வேண்டும் அறிவுரைகள் திருக்குறளில் உண்டு. நாடாளும் வேந்தனுக்கு வேண்டும் இலக்கணங்களும், அமைச்சர் தகுதியும், பிற அலுவலர் இலக்கணங்களும் திருவள்ளுவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அருள் ஒழுக்கம் கொண்ட அந்தணர், முற்றும் துறந்த முனிவர், உலகைப் படைத்துக் காத்து அழிக்கும் கடவுள் முதலியோர் பற்றியும், அவர்களிடம் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பன போன்ற விவரங்களும் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தையும் நோக்கும்போது, திருக்குறள் மனிதனது வாழ்க்கையைச் சித்தரித்துக் கூறும் நூல் என்பதை எளிதில் உணரலாம். இந்த உண்மைகளை உளம்கொண்டு திருக்குறளை ஊன்றிப் படித்தல் வேண்டும். திருவள்ளுவர் காலம் `திருவள்ளுவர் தொல்காப்பியரை அடுத்து வாழ்ந்தவர். எனவே அவரது காலம் ஏறத்தாழக் கி. மு. மூன்றாம் நூற்றாண்டு என்று கூறலாம் என்று டாக்டர் சோமசுந்தர பாரதியார் கருதுகின்றார். திருவள்ளுவர் கி. மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தவர் என்று மறைமலையடிகள் குறித்துள்ளார். திருவள்ளுவர் கி. பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டினர் என்று பேராசிரியர் வையாபுரி பிள்ளை அவர்கள் கருதுகின்றனர். எட்டுத்தொகை நூல்களில் திருக்குறட் கருத்துக்களும் அடிகளும் சீர்களும் வந்திருத்தலைக்காண, திருக்குறள் இன்றுள்ள தொகை நூல்களுக்குக் காலத்தால் முற்பட்டிருத்தல் வேண்டும் என்று கருதுதல் பொருத்தமாகும். அங்ஙனம் நோக்கின், திருவள்ளுவர் கி. மு. முதல் மூன்று நூற்றாண்டுகளுள் ஒரு நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கூறுதலே பொருத்தமாக இருக்கும். மணிமேகலை காவியத்தில், தெய்வந் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற அப் பொய்யிற் புலவன் பொருளுரை தேறாய் எனவரும் அடிகளுள் திருக்குறட்பா ஒன்று இடம் பெற்றிருத்தலைக் காணலாம். மணிமேகலையின் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டாக இருத்தல் வேண்டும் என்பதைப் பல காரணங்களைக் காட்டி டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் நிறுவியுள்ளார்.1 மருதி என்ற பார்ப்பன மகளை நோக்கிச் சதுக்கப்பூதம் மேற்காட்டப்பெற்ற வரிகளைக் கூறுவதாகச் சாத்தனார் பாடியுள்ளார். ஒரு சாதாரண பார்ப்பனப் பெண் திருவள்ளுவரின் கருத்தை அறியவில்லையே என்று பூதம் கேட்பதாகப் புலவர் கூறியுள்ளார் எனின், அக்கால மக்களுட் பலர் திருக்குறளின் கருத்தை அறிந்திருந்தனர் என்பது வெளிப்படை. இங்ஙனம் ஒரு நூல் பொதுமக்கள் அறியத்தகும் நிலைக்கு வருதல் அப்பண்டைக் காலத்தில் மிகக்குறுகிய காலத்தில் இயலாது. அச்சு வாகனம் முதலிய வசதிகள் உள்ள இக்காலத்தில், ஒரு நூலின் கருத்துக்கள் விரைவில் சமுதாயத்தில் பரவிவிடும். இவ்வசதியற்ற பழங்காலத்தில் திருக்குறள் கருத்துக்கள் நாட்டிற் பரவக் குறைந்தது ஒன்றிரண்டு நூற்றாண்டேனும் சென்றிருத்தல் வேண்டும். இங்ஙனம் பார்ப்பினும், திருவள்ளுவர் கிறிதுவின் காலத்திற்கு முற்பட்டவர் என்று கருதுதல் பொருந்தும்.2 நூலாசிரியரும் உரையாசிரியரும் திருவள்ளுவர் காலம் ஏறத்தாழக் கி. மு. முதல் நூற்றாண்டு என்று வைத்துக்கொள்வோம். இவர் இயற்றிய திருக்குறளுக்கு உரை வகுத்தவர் பலராவர். அவருள் மணக்குடவர், பரிமேலழகர், பரிதியார், காலிங்கர் என்பவர் உரைகள் இப்பொழுது கிடைத்துள்ளன. இவற்றுள் மிகச் சிறந்தது பரிமேலழகர் உரை. இவ்வுரையாசிரியர் அனைவரும் கி. பி. 12-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர். பரிமேலழகர் கி. பி. 13-ஆம் நூற்றாண்டினர். எனவே இவர் அனைவரும் திருக்குறளுக்கு ஏறத்தாழ 1000 ஆண்டுகட்குப் பிற்பட்டவராவர். திருக்குறளைப் படிப்பவர் இதனை முதலிற் நினைவிற் கொள்ளுதல் வேண்டும். தமக்கு 1000 ஆண்டுகள் முற்பட வாழ்ந்த திருவள்ளுவர் இன்னது கருதியே இக்குறளைச் செய்தனர் என்று அறுதியிட்டுக்கூறுதல் இப்பிற்கால உரையாசிரியர்க்கு இயல்வதன்று. உரையாசிரியர்கள் தாம் கற்ற நூல்களையும் தம்கால சமுதாய வாழ்க்கையையும் உளத்திற்கொண்டு உரை கூறுதல் மனித இயல்பு என்பதையும் திருக்குறளைப் படிப்பவர் நினைவிற் கொள்ளுதல் வேண்டும். இங்ஙனம் கொள்ளின், உரையாசிரியர் உரை காண்பதில் தவறு செய்தல் இயல்பு என்பது தெற்றென விளங்கம். முன்னோரது உண்மைக் கருத்து விளங்காத பொழுது பின்னோர் தம் கருத்தினை ஏற்றிக் கூறுதலும் வழக்கம் என்பதை நாம் மறந்து விடலாகாது. உரையாசிரியர் தாம் பின்பற்றும் சமயத்துக் கேற்பவும் முன்னோர் செய்யுளுக்குப் பொருள் காணுதல் இயல்பு. சிறந்த சமணராகிய மணக்குடவர் சமணத்துறை பற்றியே திருக்குறளுக்கு உரை கண்டவர். பரிமேலழகர் வைதிக நெறியினர் என்பது அவர் உரையால் நன்கறியப்படும். பரிதியார் பழுத்த சைவ சித்தாந்தி என்னும் உண்மையை அவரது உரை உணர்த்தும். காலிங்கர் சமண சமயச் சார்புடையவர் என்று கருத அவரது உரை இடந்தருகின்றது. இவை அனைத்தையும் உளங்கொண்டு, படிப்பவர் இப்பலவகைப்பட்ட உரைகளையும் மிக்க கவனத்துடன் படித்துத் திருக்குறளுக்கு ஏற்ற உரை எது என்பதைக் கண்டறிதல் வேண்டும். ஐந்தவித்தான் ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி என்னும் திருக்குறளுக்கு-ஐந்தவித்தான் ஆற்றலை அறிதற்குத் தேவேந்திரன் செயலே ஏற்ற சான்றாகும் என்பது கருத்து. தான் ஐந்து அவியாது சாபம் எய்திநின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினானாகலின் இந்திரனே சாலுங்கரி என்றார், என்பது பரிமேலழகர் விளக்கம். அஃதாவது, இந்திரன் ஐம்புலனடக்கம் இல்லாதவன் என்றும், கௌதம முனிவன் ஐம்புலனடக்கம் உடையவன் என்றும், அதனால் ஐம்புலனடக்கம் இல்லாத இந்திரன் புலனடக்கமுடைய கௌதமனால் சபிக்கப்பட்டான் என்றும் பரிமேலழகர் கருதி, இவ்விளக்கம் தந்துள்ளார். உண்மையில் கௌதமன் ஐந்தவித்தவனா? கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள என்பது குறள். இங்ஙனம் ஐம்புலனுகர்ச்சிக்கும் நிலைக்களனாக உள்ள அகலிகையோடு இல்லற வாழ்க்கை நடத்திவந்த கௌதமன் `ஐந்தவித்தான் என்று கூறுதல் எங்ஙனம் பொருந்தும்? நூலறிவும் நுண்ணறிவும் உடையவர் இதனை ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும். எனவே, கௌதமனையும் அவனால் சபிக்கப்பட்ட இந்திரனையும் உளம் கொண்டு இக்குறள் உண்டாகியிருத்தல் இயலாது. பரிமேலழகர் இராமாயணத்துள் கூறப்படும் அகலிகை வரலாற்றை நினைவிற்கொண்டு இவ்விளக்கம் தந்தனரேயன்றி, இக்குறட் பொருளை ஆழ்ந்து சிந்தித்தனர் என்பது இவ்விளக்கத்தால் தெரியவில்லை. இந்திரன் கரியாதல் எங்ஙனம்? இக்குறளுக்கு மணக்குடவர், இந்திரன் சான்று என்றது, இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வார் உளரானால், அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியன் என்றவாறு, என்று விளக்கம் தந்துள்ளார். நிலவுலகில் ஐந்தவித்த பெரியோன் தோன்றுவானாகில், இந்திரன் இருக்கைமீதுள்ள பாண்டு கம்பளம் அசையும். அவ்வசைவை உணர்ந்த இந்திரன் உடனே எழுந்து நிற்பான்; நின்று உடனிருக்கும் தேவர்களை நோக்கி, பூவுலகில் ஐந்தவித்த பெரியோன் தோன்றியுள்ளதை எனது பாண்டு கம்பள அசைவால் உணர்கிறேன். அவனுக்கு மன வணக்கம் செய்வோம். என்பான். இச்செய்தி சமண சமய நூல்களிலும் பௌத்த சமய நூல்களிலும் கூறப்பட்டுள்ளது. ஆபுத்திரன் என்னும் ஐந்தவித்த பெரியோன்முன் இந்திரன் தோன்றி மரியாதை செய்தான் என்று மணிமேகலை கூறுகிறது. இக்கருத்தே மேற்சொல்லப்பட்ட திருக்குறளுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று கூறலாம். மற்றொரு குறள் தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. இக்குறளுக்குப் பரிமேலழகர், பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐந்து இடத்தும் செய்யும் அறத்தை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடை அறமாம் என்று கூறி, மேலும், அரசனுக்கு இறைப் பொருள் ஆறில் ஒன்று ஆயிற்று. இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பது அறிக, என்று உரை விளக்கமும் தந்துள்ளார். ஒருவனது வருவாயை ஆறாகப் பிரித்து அதில் ஒரு பகுதி அரசனுக்கும் மற்ற ஐந்தையும் மேலே சொல்லப்பட்ட தென் புலத்தார் முதலிய ஐவர்க்கும் பங்கிடல் வேண்டும் என்று திருவள்ளுவர் கருதியதாகப் பரிமேலழகர் பொருள் கூறுகிறார். மாதம் அறுபது ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் அரசனுக்கு வரியாகப் பத்து ரூபாயும், தென்புலத்தார்க்குப் பத்தும் தெய்வத்துக்குப் பத்தும், விருந்தினர்க்குப் பத்தும், சுற்றத்தார்க்குப் பத்தும், தனக்கும் தன் குடும்பத்தார்க்கும் பத்தும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரித்து வைத்துச் செலவு செய்வதே இல்வாழ்வான் கடமை என்று திருவள்ளுவர் கூறியிருப்பாரா? இல்வாழ்வான் பத்து ரூபாய் கொண்டு குடும்பம் நடத்துதலை இயலுமா? எண்ணிப் பாருங்கள். இல்வாழ்பவன் அரசனுக்குச் செலுத்திய வரிபோக, எஞ்சிய வருவாயில் தன்னைக் காத்துக் கொண்டு தென்புலத்தார் உள்ளிட்ட நால்வர்க்கும் செய்ய வேண்டும் கடமைகளைச் செய்தலே சிறப்புடையது என்பதன்றோ இத்திருக்குறளின் பொருள்? தன் வருவாயைப் பரிமேலழகர் கூற்றுப் படி செலவிடும் ஒரு மனிதனேனும் இவ்வுலகில் இருத்தல் இயலுமா? தென் புலத்தார் - பிதிரர்; பிதிரராவார் படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுள் சாதி. அவர்க்கு இடம் தென் திசை ஆதலின் தென்புலத்தார் என்றார், என்பது பரிமேலழகர் விளக்கம். தென்புலத்தார்- தன் குடியில் இறந்த பிதிர்கள் என்பது காலிங்கர் உரை. இவ்வுரையே பொருத்தமானது. தென்திசை எமதிசையாதலின், நம் குடும்பத்தில் இறந்தவர் தென்திசையில் இருப்பதாகக் கருதித் தென் புலத்தார் எனப்பட்டனர் என்று கொள்ளுதல் பொருத்தமுடையது. அதனால் படைப்புக் காலத்திலேயே படைக்கப்பட்ட கடவுட் சாதியினராகத் தென்புலத்தார் இருப்பின், அவர்கள் அயனால் காக்கப்படுவர். அவர்கட்கு இல்லறத்தான் செயத்தகுவது ஒன்றுமில்லை. எனவே, இவ்வுரை பொருந்தாது என்பது தெளிவு. துறவி தன் குடும்பத்தைத் துறந்த பொழுதே பற்றற்றவனாகிவிடுகின்றான். இல்வாழ்வான் ஒருவனே தன் முன்னோர் புகழையும் நினைவையும் நிலை நாட்டும் கடமையுடையவனாகிறான். `இந்த இல்லறத்தான் இன்னவனுக்கு மகன்; இன்னவனுக்குப் பெயரன் என்று உலகத்தார் சொல்லுதல் மரபாதலின், இல்வாழ்வான் தன் முன்னோர்களை அடிக்கடி எண்ணும் கடமை உணர்ச்சி உடையவனாக இருத்தல் வேண்டும் என்பதை வற்புறுத்தவே திருவள்ளுவர் முதற் கண் தென்புலத்தார் என்று கூறினார் என்று கொள்ளுதலே ஏற்புடையது. தெய்வம் அடுத்துவரும் `தெய்வம் என்னும் சொல்லுக்குப் பரிமேலகழரும் மணக்குடவரும் `தேவர் என்று பொருள் கொண்டனர். இச்சொல்லுக்கு `வழிபடு தெய்வம் என்று பரிதியாரும், `கடவுளர் என்று காலிங்கரும் பொருள் கொண்டனர். இங்ஙனம் நால்வரும் மூவகையான பொருள் கொண்டிருத்தல் படிப்பவரைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறதன்றோ? `தேவர் அமுதம் உண்பவர்; நம்மைப் போல உணவு உன்பவரல்லர். மேலும் இல்லறத்தான் தேவர்க்கு என்ன செய்யவேண்டும், ஏன் செய்ய வேண்டும் என்பதும் விளக்கப்பட வில்லை. வழிபடு தெய்வம் என்று கொள்ளினும், இல்லறத்தான் தன் வருவாயில் ஆறில் ஒரு பங்கு அதற்கு எங்ஙனம் செலவழித்தல் இயலும்? இல்லறத்தான் மனவழிபாடு கொள்வானாயின் அப்பூசனை சிறப்புடையதாகு மன்றோ? எவரை வழிபடுவதாயினும் பொருட் செலவின்றியே வழிபடலாமன்றோ? அதுவே சிறப்புடையது என்று நூல்கள் கூறும். காலிங்கர் குறிப்பிடும் `கடவுளர் என்னும் சொல்லும் மயக்கம் தருவதாக இருக்கின்றது. ஆனால் சமண சமயத்தவர் என்று கருதப்படும் காலிங்கர் கடவுளர் என்று கூறுதல், இக்காலத்தில் கண்ணுக்குப் புலப்படாத கடவுளர் என்ற பொருளில் இருத்தல் இயலாது என்று கருத இடமுண்டு. கடஸவள் என்னும் சொல் இப்பொழுது பரம்பொருளைக் குறிக்கின்றது. ஆனால் பண்டைக்காலத்தில் இச்சொல் முற்றத்துறந்த முனிவர்க்கும் வழங்கப்பட்டது. தென்னவற் பெரிய துன்னருந் துப்பிற் றென்முது கடவுள் பின்னர் மேய வரைதாழ் அருவிப் பொருப்பிற் பொருந என வரும் `மதுரைக்காஞ்சி அடிகளிலுள்ள `கடவுள் என்னும் சொல்லுக்கு `முனிவன் ஆகிய அகத்தியன் என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறியுள்ளார்; இத்துடன் அமையாது, கலித்தொகையில் உள்ள கடவுள் பாட்டைச் சுட்டிக் காட்டி, இருடிகளையும் கடவுள் என்று கூறியவாற்றானும் காண்க, என்று விளக்கம் தந்துள்ளார். இவர் சுட்டியுள்ள கலித்தொகைப் பாடலில் தலைவன் தலைவியை நோக்கி, உடனுறை வாழ்க்கைக் குதவி யுறையுங் கடவுளர் கட்டங்கினேன் என்று கூறுகின்றான். இங்குக் கடவுளர் என்ற சொல் முனிவரைக் குறித்தல் காண்க. இளங்கோ அடிகளும் முனிவர்களைக் கடவுளர் என்று கூறியுள்ளார். ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக் கந்தன் பள்ளி கடவுளர்க் கெல்லாம் -சிலப்பதிகாரம், நாடுகாண்காதை இங்ஙனம் கடவுளர் என்ற சொல் சிந்தாமணி, சூளாமணி, கம்பராமாயணம் முதலிய நூல்களில் முனிவர் என்ற பொருளில் ஆளப்படுகின்றது. தெய்வம் என்னும் சொல் வடமொழிச் சொல். தமிழில் கடவுளர் என்ற சொல் எப்பொருளில் (முனிவர் என்ற பொருளில்) வழங்கப்பட்டதோ அப்பொருளில் `தெய்வம் என்ற வடசொல்லும் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. முலைமறைக்கப் பட்டுநீ ராடாப் பெண்கள் முறைமுறையால் நந்தெய்வம் என்று தீண்டி என்னும் திருநாவுக்கரசர் திருத்தாண்டகத்தில் வந்துள்ள `நந்தெய்வம் என்னும் தொடர், `நம்முனிவர் என்னும் பொருளைத் தருகின்றமை காண்க. முதல் வரியில் குறிக்கப்பட்ட பெண்கள் சமண சமயத்துப் பெண் துறவிகள். அவர்களால் வணங்கப்பட்ட சமண முனிவர் என்பது பொருள். அதே பொருளைத்தான் மேற்சொன்ன திருக்குறளில் வந்துள்ள தெய்வம் என்னும் சொல்லும் குறிப்பதாகக் காலிங்கர் பொருள் கொண்டனர். உலகப்பற்றை அறவே வெறுத்த முற்றத்துறந்த முனிவர்க்கு வேண்டுங்கால் உணவு கொடுத்தற்கு இல்லறத்தாரைத் தவிர இவ்வுலகில் வேறு யாருளர்? இல்லறத்தார் தம்மைக் காத்துக்கொள்வதோடு துறவறத்தாரையும் காக்கக் கடமைப்பட்டவராவர் என்பது நாம் அனைவரும் அறிந்துள்ள உண்மைதானே! இப்பொருளை (தெய்வம்-முனிவர்) இங்கு ஏற்புடைத்தாதல் ஆராய்ந்து தெளியற்பாலது. தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்னும் திருக்குறளில் வரும் `தெய்வம் என்னும் சொல்லுக்குப் பொருள் யாதாயிருத்தல் கூடும்? இதனைச் சிறிது ஆராய்வோம். தெய்வம்-`பிறதெய்வம் என்று பரிமேலழகரும், `குலதேவதை என்று பரிதியாரும், `வேறொரு கடவுள் என்று காலிங்கரும் பொருள் கொண்டனர். இம்மூவர் உரையில் வந்துள்ள தெயவம், கடவுள் என்ற சொற்களுக்கு முனிவர் என்ற பொருள் உண்டு என்பது முன்னரே கூறப்பட்டது. ஆண்களைப்போலவே பெண்களும் முழுமுதற் கடவுளைத் தொழுதல் பண்டை இலக்கியங்களில் காணப்பட்டதோர் உண்மை. அங்ஙனம் கடவுளை வணங்கும் பெண்கள் கணவரை மதியாதிருந்தனர் என்று கொள்ளுதல் இயலுமா? பிற கடவுளரை மதியாது கணவனையே மதிப்பவள் என்று பொருள் கொண்டால், இப்பொருள் எவ்வாறு சிறக்குமென்பது விளங்கவில்லை. சில பெண்கள் தம் சமயத்தைச் சேர்ந்த துறவிகளை மிகவும் பாராட்டி அவர்க்கு அளவுக்கு மேற்பட்ட தொண்டுகளைச் செய்தல் இக்காலத்தில் நாம் காண்கின்றோம். கணவர் காலை பத்துமணியளவில் அலுவலகம் சென்ற பின்பும், அவர் மீண்டு மாலையில் மனைக்குத் திரும்பும் முன்பும் தம்மால் மதிக்கப்படும் துறவிகளிருக்கும் மடத்திற்குச் சென்று பொழுது போக்கிவிட்டு மாலையில் வீடு திரும்பும் மனைவியர் இக்காலத்தில் உண்டு. இச்செயலால் அப்பெண்டிர் தம் இல்லறக் கடமைகளில் ஓரளவு தவறுகின்றனர். இங்ஙனம் கடமை தவறுதலால் நாளடைவில் இல்லறம் நல்லறமாக இயங்க முடிவதில்லை. இக்குறைகளை நன்குணர்ந்த திருவள்ளுவர் இத்தகைய பெண்கள் தம் சமய முனிவரைத் தொழாமல் கணவனுக்கு உரிய கடமைகளைச் செய்திருத்தல் நலம் என்று கருதியே இக்குறளைச் செய்தார் என்று கொள்ளுதல் பொருத்தமுடையது. எனவே, இங்குத் தெய்வம் என்பது அவரவர் சமயத்தைச் சார்ந்த துறவிகளையே குறித்ததாதல் வேண்டும் என்று கொள்ளுதலே சிறப்புடைய தாகும். அறிஞர் இதனை மேலும் ஆராய்வாராக. இங்ஙனம் சங்ககாலசச் செய்யுட் பொருளையும் அக்காலச் சொல் வழக்காறுகளையும் நன்கு உளத்தில் பதித்துக்கொண்டு, அக்காலத்திலிருந்த சமண பௌத்தம் போன்ற சமய நூற்பொருள்களையும் நன்கு உளங்கொண்டு திருக்குறளுக்கு உரை காண்பதே கற்றறிந்தார் கடமையாகும். இதனை விரிப்பின் பெருகும். வள்ளுவரின் நுண்ணறிவு இக்கால மாணவன் `கிராப் வெட்டிக்கொள்வதிலும் அதனைச் சீவி ஒழுங்குபடுத்துவதிலும் எவ்வளவு கவனம் செலுத்துகின்றான் என்பதை நாம் நன்கறிவோம். இவ்வளவு அரும்பாடுபட்டுப் பாதுகாக்கப்படும் தலைமயிரில் இரண்டொன்று எக்காரணம் கொண்டேனும் தான் இருக்கும் இடத்தை விட்டு இறங்கிவிடுமாயின் (விழுந்துவிடுமாயின்), அதனை வளர்த்த மாணவன் அதன் பொருட்டுக் கவலைப் படுவதில்லை; தன்னால் அதுகாறும் பேணி வளர்க்கப்பட்ட அத்தலைமயிர் விழுந்துவிட்டதே என்று அவன் துக்கம் கொண்டாடுவதும் இல்லை. இஃது ஒரு காட்சி. நாம் வாழும் தெருவில் நமது மதிப்புக்குரிய பெரியவர் ஒருவர் இருக்கின்றார். அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர்; ஆதலின் நமது வணக்கத்திற்கும் பெருமதிப்புக்கும் உரியவராக விளங்குகிறார். அத்தகைய அவர் ஒருநாள் ஒழுக்கக் கேடான ஒரு செயலில் ஈடுபடுகிறார். இதனை நன்குணர்ந்த பிறகு நாம் அவரை முன்மாதிரி மதிக்க மனம் இடந்தருமா? நீங்களே எண்ணிப்பாருங்கள். அதுகாறும் பலரிடம் மதிப்புப்பெற்ற அவர், அப்பலராலும் மிக இழிந்தவராகக் கருதப்படுவர் என்பதில் ஐயமுண்டோ? அதுவரையில் அவர் நலத்தில் கவலைகொண்ட மக்கள், அவ்விழி செயலுக்குப்பின் அவரைப் புறக்கணிப்பர் அல்லவா? இது மற்றொரு காட்சி. மனிதன் தனக்குரிய நல்லொழுக்க நெறியிலிருந்து தவறுவானாயின் தலையிலிருந்து விழும் மயிருக்குச் சமமாகக் கருதப்படுவான் என்பது இவ்விரண்டு காட்சிகளின் திரண்ட பொருளாகும். இவ்விரண்டு காட்சிகளையும் கருத்திற் கொண்டே திருவள்ளுவர், தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்தம் நிலையின் இழிந்தக் கடை என்னும் குறட்பாவைப் பாடியருளினார். இஃது எவ்வளவு உயர்ந்த கருத்தினைப் புலப்படுத்துகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள். தலையிலிருந்து விழும் மயிர் நம் கண்களுக்கு அற்பமாகத் தோன்றினும், உலகத்திற்குச் சிறந்த உண்மையை உணர்த்துகின்றது என்பதைத் தம் நுண்ணறிவால் கண்ட வள்ளுவர் தம் பேரறிவினை என்னென்பது! முடிவுரை இங்ஙனம் பல குறட்பாக்கள் நமது வாழ்க்கையைச் செப்பம் செய்யத்தக்க ஆற்றல் பெற்று விளங்குகின்றன. ஆதலின், வாழ்க்கைப் பெருநூலாக விளங்குகின்ற இத்திருக்குறளை நாள்தோறும் படித்துத் தம் வாழ்க்கையைச் செந்நெறிப் படுத்துதல் தமிழ் மக்கள் கடமையாகும். இம் மாபெரும் புலவர் பெருமானைப் பெற்றெடுத்த தமிழன்னைக்கு நமது வணக்கம் உரியதாகுக! 4. ஐந்திணை அமுதம் ஐந்திணையாவன குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பன. இவை மலைநாடு, காட்டு நிலம், பாலைநிலம், வயற்பகுதி, கடற்கரை என `நிலவகை யாகவும், புணர்ச்சி, பிரிதல், இருத்தல், ஊடல், புலம்பல் என `ஒழுக்கவகை யாகவும் அகப்பொருளில் முறையே பொருள்படும். குறிஞ்சி நிலத்தில் புணர்ச்சி (களவு) நிகழும்; என்றால், ஏனை நிலங்களில் அது நிகழாதெனல் பொருளன்று; கருத்துமன்று. புலவர்கள் பழந்தமிழர் வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டப் பல காட்சிகளை அமைத்தனர். அக்காட்சிகளே மேற்கூறிய குறிஞ்சி முதலியன. மிகப் பழைய காலத்தில் தமிழர் கையாண்டுவந்த `மணமுறை இன்னது என்பதை அறிவிப்பதற்கே புலவர் அகப்பொருளை ஓர் ஓவியமாகச் சித்தரித்துக் காட்டுகின்றனர். இவ்வகப் பொருட் களவு, தலைவன், தலைவி, பாரங்கி, பாங்கன் என நால்வர் வயப்பட்டிருக்கும்போது களவு எனப்படும். இது தலைவியின் பெற்றோர்க்கு அறிவிக்கப்பட்டுப் பின் தலைவனும் தலைவியும் பலர் அறிய இல்வாழ்க்கை நடத்துவாராயின் அம்முறை `கற்பு எனப்படும். தலைவன் த லைவியை நடத்தும் ஒழுகலாறும், தலைவி தலைவனை நடத்தும் ஒழுகலாறும் கற்பிக்கப்படுதலின் `கற்பு எனப் பெயர் பெற்றது. குறிஞ்சிநிலக் கூட்டுறவு ஒருவனும் ஒருத்தியும் முதன்முறை ஒருவரை ஒருவர் கண்ட ஞான்றே கொள்ளும் அன்பும், அவ்வன்பின் பெருக்கால் உண்டாகும் கூட்டுறவும், அக்கூட்டுறவு பலநாள் தொடர்புற்றுக் களவில் நடப்பதும் `களவு எனப்படும். இதனைக் குறிஞ்சி நில ஒழுகலாறாக முன்னையோர் வகுத்தனர். தலைவனும் தலைவியும் உயிர் ஒன்றும் உடல் இரண்டுமாகக் களவில் வதிவர். தலைவிக்கும் தலைவனுக்கும் முன்னர் ஒருவிதத் தொடர்பும் இல்லை; அவன் பெற்றோர்க்கும் அவள் பெற்றோர்க்கும் எட்டுணையும் தொடர்பில்லை; ஒருவரை ஒருவர் பார்த்தும் அறியார்; இந்த நிலையில், இருவர் தம் உள்ளமும் ஒன்றாயின. இதுவே `குறிஞ்சி நிலக் கூட்டுறவு. இதனை, யாவும் ஞாயும் யாரா கியரோ? எந்தையிம் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெய்ந்நீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. -குறுந்தொகை, 40 என்னும் தலைவனது கூற்றால் உள்ளவாறு உணரலாம். மேலும், கொடுப்பினன் குடைமையும் குடிநிரல் உடைமையும் வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணா(து) எமியேந் துணிந்த ஏமஞ்சால் அருவினை -குறிஞ்சிப்பாட்டு, 30-32 என்னும் அடிகளாலும், உயிர்க்குப் பாதுகாவலாகிய அருவினை என்றே பண்டைத் தமிழர் தம் களவு ஒழுக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பது இனிது புலனாகும். பாலையின் பண்பு களவில் தலைவி தலைவனோடு உடன் போக்கு வைத்துக்கொள்ளும் போதும், தலைவனை விட்டுத் தலைவி பிரிந்திருப்புழியும் உண்டாகும் பிரிவு `பாலை எனப்படும். தலைவன் பிரிவால் தலைவி நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உற்றிருப்பாள். ஆதலின், இந்நிலைமை பாலை நிலத்துக்கு ஒப்பாக்கப்பட்டது. என் தலைவன் அடிக்கடி என் கண்களையும் தோள்களையும், என் கூந்தலையும் பாராட்டி நேற்றுவரை இவண் இருந்தான்; இன்று பிரிந்தான்; அவன் மரங்களற்ற பாலை நிலத்துக்குச் சென்றான். அந்நிலமோ, கடல்போலப் பரந்தது; பேய்த் தேரைத் தண்ணீர் என்று மான் அருந்தச் செல்லும் அமைவுடையது, என்று தலைவி வருந்துவதாகக் கீழ் வரும் செய்யுளால் உணரலாம்: கண்ணும் தோளும் தண்ணறுங் கதுப்பும் திதலை அல்குலும் பலபா ராட்டி நெருநலும் இவணர் மன்னே; இன்றே பெருநீர் ஒப்பிற் பேஎய் வெண்தேர் மரனில் நீளிடை மானசை உறூஉம் சுடுமட் டசும்பின் மத்தந் தின்ற பிறவா வெண்ணெ யுருப்பிடத் தன்ன உவரெழு களரி ஓமையங் காட்டு வெயில்வீற் றிருந்த வெம்பலை அருஞ்சுரம் ஏகுவர் என்ப தாமே தம்வயின் இரந்தோர் மாற்றல் ஆற்றா இல்லின் வாழ்க்கை வல்லா தோரே. -நற்றிணை, 84. இப்பாவால் உண்மைக் காதலியின் உள்ளம் இத்தன்மையது என்பது இனிது விளங்கக் காணலாம். முல்லையின் முறுவல் தலைவனது சிறு பிரிவில் மனைவி ஆற்றியிருத்தல் `முல்லை என்பது. ஏனைய நிலங்களைவிட முல்லை நிலம் அழகானது; முல்லை மலர் மாலைக் காலத்தே முறுவல் செய்வதே போலத் தலைவியை நோக்கி மலர்கின்றது. முல்லை நில மக்களாகிய கோவலர் தம் கன்று காலிகளை வீடுகட்கு ஓட்டிக் கொண்டுவரும் காட்சி கண்டு களிக்கத்தக்கது. வெளியிடம் சென்று மீளும் காலிகளும், முல்லையந் தீங்குழலும், முல்லை மலரும், தலைவிக்குப் பிரிந்து போன தலைவனை நினைப்பூட்டுகின்றன. அப்பொருள்களைக் காண்கையில் தலைவி தலைவனை நினைத்து வருந்துகின்றாள். தலைவி தோழியை நோக்கி, எல்லை கழிய முல்லை மலரக் கதிர்சினந் தணிந்த கையறு மாலையும் இரவரம் பாக நீந்தினம் ஆயின் எவன்கொல் வாழி தோழி! கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே. -குறுந்தொகை, 387. என்று கூறுவதாகவுள்ள செய்யுள் தலைவனது பிரிவால் அவட்கு உண்டான எளிய நிலையை எழிலுறக் காட்டுகின்றது. இங்ஙனமே, பிரிந்து மீளும் தலைவன் தன் பாகனை விழித்து, பாக, என் மகனுக்குக் கதைகள் கூறுபவளாகிய என் காதலிக்கு என் தோள்கள் (விரைய அவளை அணைத்தற்கு) வருகின்றன எனக் காக்கைகள் என் வருகையை முன்னரே உணர்த்தி யிருக்குமா? . . . . . . . . . . . . . . . . . தோள்வலி யாப்ப ஈண்டுநம் வரவினைப் புள்ளறி வுறீஇயின கொல்லோ? தெள்ளிதில் காதல் கெழுமிய நலத்தள்; ஏதில் புதல்வற் காட்டிப் பொய்க்குந் திதலை அல்குல் தேமொழி யாட்கே. -நற்றிணை, 161. என்று உள்ளத்தில் ஒருவராலும் உரைசெய்ய அரியதொரு காதற் பெருக்கால் வினாவும் வினாவினை நோக்குங்கால், தலைவன் தலைவிபால் கொண்டொழுகும் தலையளி இன்ன தன்மைத் தென்பது இனிது விளங்கும். இருவரும் ஒருவரை ஒருவர் காதல்கூர் கண்ணால் கவ்வ, அவ்வின்பப் பார்வையைக் கண்டு மகிழ்ந்து, முல்லை முறுவல் கொள்ளுவதை எவரே இல்லை என்பர்! நெய்தல் நெகிழ்ச்சி கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல். தலைவனது நீண்ட பிரிவால் தலைவிக் கேற்படும் மன நெகிழ்ச்சி நெய்தல் எனப்படும். பறவைகள் இல்லம் நோக்கித் திரைகடல் கடந்து மீள்வதையும் காலையில் சென்ற பரதவர் தம் தாளாண்மையாற் பெற்ற பொருளுடன் தத்தம் இல்லோர் மகிழக் கரைசேரும் காட்சியையும் காணும் தலைவிக்குத் தனிமையும், மதியும், கடலும், காரிருளும் பிறவும் கூற்றாய் அமைகின்றன. அவள் கணவனது நெடும் பிரிவால் நெகிழ்ச்சி அடைகின்றாள். அந் நெகிழ்ச்சியால், என் இயற்கை அழகு கெட்டது; தோள்கள் அழகிழந்தன; நெஞ்சம் துணுக்குறுகின்றது; கண்கள் துயின்றில; முகமோ வெளுத்துள்ளது. தலைவனோடு விளையாடியதன் பயனாக யான் இங்ஙனமே விளிவதோ? கடற் கழியில் வெண் குருகு கத்துகிறது; அலைகள் கரையைப் பொருகின்றன; குளிர்ந்த பூஞ்சோலையின் நறுமண மலர்களை அலைகள் சிதற அடிக்கின்றன. தொல்கவின் தொலைந்து தோள்நலம் சாஅய் அல்லல் நெஞ்சமொடு அல்கலும் துஞ்சாது பசலை யாகி விளிவது கொல்லோ? வெண்குருகு நரலும் தண்கமழ் கானல் பூமலி பொதும்பர் நாண்மலர் மயக்கி விலங்குதிரை உடைதருந் துறைவனொ(டு) இலங்கெயிறு தோன்ற நக்கதன் பயனே? -குறுந்தொகை, 381. என்று இவ்வாறு பண்டவன் பண்பும், இன்னல் தரும் தன் ஏகாந்தமும் எண்ணி எண்ணித் தலைவி ஏங்குதல் முதலியன `நெய்தல் நெகிழ்ச்சி யாகும். மருதத்தின் மாண்பு வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனப்படும். இதன் ஒழுக்கம் `ஊடல் என்பது; ஊடல் நிகழ்ந்த வழிக் `கூடலும் உண்டென்பது கூறாது அமையுமெனக் கொள்க. எனினும் இவ்வூடற்குக் காரணம் யாதென ஓர்வது உறுபயன் விளைப்பதாகும். குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல் நிலங்களின் அமைப்பும் தொழிலும் நோக்குவோர்க்கு ஆடவர்தம் அரிய நேரம் மிகக் குறுகியதென்பது தெளிவு. அந்நிலங்களில் உணவு தேடலிலேயே ஆடவனது பகற் போதெல்லாம் செல்லும் இயல்பினது. அவனைப் போன்றே, மகளிரும் தினைப்புனக் காவல், தயிர் கடைதல், விற்றல், மீனுப்புப் படுத்தல், உப்பெடுத்தல் முதலிய அருந் தொழிலில் ஈடுபடுவர். எனவே, இந்நிலங்களில் உள்ளோர் ஆண்டு முழுவதும் உழைத்து உண்ண வேண்டுபவராகின்றனர். ஆகவே, இங்குள்ள ஆடவர் அறநெறி தவறி நடக்கச் சிறிதும் வழியில்லை. ஆனால் மருத நிலத்தார் வாழ்க்கை இங்ஙனமன்று. வயல்வேலை ஆறு மாதமே; ஏனைய மாதங்களில் வேலையற்றுத் திரியவேண்டும் நிலையில் அமைகின்றனர். எனவே, அவர்கள் உல்லாச வாழ்க்கையை விரும்புதல் இயல்பே. அவர்தம் உல்லாச வாழ்க்கைக்கு உற்ற துணைவியராகப் `பரத்தையர் உறுதலும் இயல்பே. இப்பரத்தையர் (பாணர்-பாணிச்சியர் அல்லர்) ஆடல் பாடல்களில் வல்லுநராயிருத்தல் பின்னும் பாராட்டற்பாலது. எனவே, காமநிறை இழந்த ஆடவர் இப்பரத்தியரிடை வதிவதும், பின் இல்லம் போதலும் இயல்பு. இக்கூடா ஒழுக்கத்தைத் தலைவி அறிவாளாயின், அவள் தலைவனிடம் சிறு கோபம் கொள்வள். இதனை `ஊடல் என்றனர் முன்னையோர். இவ்வூடலைத் தலைவன் தக்க சமாதானங் கூறித் தணிவித்துத் தலைவியை மகிழச் செய்து அவளொடு கூடும் கூட்டம் `கூடல் எனப்படும். இதுவே இம் மருத நிலப் பண்பு. ஊடல் நிகழ்ந்த பின்னர்க் கூடல் நிகழுமாயின், அஃது எத்துணைப் பேரின்பம் பயப்பதென்பது பழைய பாக்களாலும் இல்லத்து நடைமுறையாலும் இனிதுணரலாம். பரத்தையர்க்கும் தலைவிக்கும், இக்காலத்தும் அவ்வப்போது மனவருத்த வாதங்கள் நிகழ்தல் யாண்டும் காணப்படல் போலவே, பண்டை மருத நிலத்துப் பயின்றிருத்தல் நூல்கள் வாயிலாக அறியக் கிடக்கின்றது. ஒரு பரத்தை, பாங்காயினார் கேட்பப் பின்வருமாறு கூறுகின்றாள்: புது வெள்ளம் வந்த பெரிய நீர்த்துறையை விரும்பிய யாம் எமது கூந்தலில் ஆம்பலின் புறவிதழ் ஒடித்த முழுப்பூவைச் செருகி அப்புனல் விளையாட்டைச் செய்யச் செல்வோம்; தலைமகள் அதனை அஞ்சினளாயின், வெய்யபோரில் தூசிப்படை அழியும்படி எதிர்த்து நின்ற பல வேல்களையுடைய `எழினி பகைத்துக் கவர்ந்துகொண்ட பசுக்கூட்டத்தை, உரியவர் ஒன்று கூடித் தடுப்பதுபோலத் தோழியர் குழத்துடன் தன் கொழுநனது மார்பை எமது கைக்கு அகப்படாதபடி காக்கட்டும். கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப் பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி யாமஃ தயர்கஞ் சேறும்; தானஃ(து) அஞ்சுவ துடைய ளாயின், வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி முனையான் பெருநிரை போலக் கிளையொடு காக்கதன் கொழுநன் மார்பே. -குறுந்தொகை, 80 இதனை நோக்கப் பரத்தையின் மனப்பான்மையும், அவள் தலைவனிடம் பெற்றிருந்த செல்வாக்கும் நன்கு விளங்கும். பரத்தையர் வெளியே வருகையில் தலைவி அவர்களைத் தலைவன் காணாதவாறு செய்யும் வழக்ம் உண்டென்பது பின்வரும் பாவால் புலனாகும். இப்பரத்தை பரந்த கண்களை யுடையவளாய் நறுநாற்றம் அளாவிய கூந்தலை உடையவளாய், ஒன்றை ஒன்று தாக்குறும் தொடைகளைப் பெற்றவளாய், தழைகளை ஆடையாக அணிந்தவளாய், விழாமுற்றத்தை அணிசெய்ய வருகின்றாள்: அவளால் கலக்குறா வகையில் நம் கொழுநனைக் காமின் என எச்சரிக்கின்றாள்: மடக்கண் தகரக் கூந்தற் பணைத்தோள் வார்ந்த வரலெயிற்றுச் சேர்ந்துசெறி குறங்கிற் பிணையல் அந்தழைத் தைஇத் துணையிலள் விளவுக்களம் பொலிய வந்துநின் றனளே எழுமினோ எழுமினெங் கொழுநற் காக்கம்! -நற்றிணை, 170 தலைவன் பரத்தையர் ஒழுக்கத்தில் இருத்தலையறிந்த தலைவி வருந்தி, இல்லறவியல் வழாது நடந்து வருதலையும் தாங்கள் விரும்புவது இன்னதென்பதையும், தலைவனைக் கண்ட தோழிகள் அவற்கு எடுத்தியம்புதல், நூல்களில் இன்பம் பயக்கும் பகுதிகளுள் ஒன்றாகும். விளைக வயலே வருக இரவலர் எனவேட் டோளே யாயே; யாமே பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் தண்டுறை யூரன் கேண்மை வழிவழிச் சிறக்க எனவேட் டேரமே -ஐங்குறு நூறு, 2. (தலைவியைத் தோழிகள் `யாய் என்னல் நூல் வழக்கம்.) இதனால் தலைவியின் இல்லறச் சிறப்பு இனிது விளங்கும். பரத்தையரை விட்டுத் தன்னிடம் வந்த தலைவனை நோக்கித் தலைவி, வேண்டேம் பெரும, நின் பரத்தை ஆண்டுச்செய் குறியோ டீண்டுநீ வரலே -ஐங்குறு நூறு, 48 என்னலாம் தொலைவ தாயினும் துன்னலம் பெருமபிறர்த் தோய்ந்த மார்பே. -ஐங்குறு நூறு, 63 எனத் தனது வெறுப்பைக் காட்ட, தலைவன் தான் அக் கூடா ஒழுக்கம் செய்திலன் என்று செப்புவன். அதற்குத் தலைவி நகைத்து, மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந! புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்ற தொளியே? சிறுவரின் இனைய செய்தி நகாரோ பெரும, நிற் கண்டிசி னோரே? எனப் பரத்தையர் கூட்டம் உண்மையை வலியுறுத்திப் பேசிக் கோபப்படுதல் ஊடலாகும். பின்னர்த் தலைவன் பலவாறு சமாதானம் கூறித் தலைவியைக் கூடுவன். பரத்தையர் கூட்டுறவு தலைவனுக்கிருந்ததேனும், அதனைத் தலைவியும் தோழியும் முற்றும் கேவலப்படுத்தினாரல்லர் என்பதும், தலைவன் தலைவியினிடம் என்றும் நீங்கா அன்புடைய னாயிருந்தான் என்பதும், தலைவன் இங்ஙனம் பரத்தையர் இல்லம் சேரல் மருதத்து மட்டுமே என்பதும் பண்டை நூற் பயிற்சியுடையோர் நன்கறிந்த செய்திகளாம். 5. கண்ணகி கண்ணகியின் மணம் பண்டைத் தமிழர் மணம் களவு-கற்பு என்னும் இரு பிரிவுகளைப் பெற்றது. தொல்காப்பியர்க்கு முன்னர்த் தோன்றிய ஆசிரியர்க்கு முன்னர் இத்தமிழரிடை இருந்த மணம் `களவு மணம் ஒன்றேயாம். அக்களவில் சில குறைபாடுகள் நேர்ந்த காரணமாகத் தமிழ்ப் பெரியோர் (ஐயர்; ஒழுக்கங்களால் வியக்கத்தக்கவர்) சில சடங்குகளை (காரணங்களை) ஏற்படுத்தினர். இதனைத் தொல்காப்பியர் கற்பியலில், பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்றார். எனவே, தொல்காப்பியர்க்கு முன்னரே `களவு-கற்பு என்னும் இரு மணமும் ஒரு மணமாய்த் தமிழகத்தே திகழ்ந்தன என்பதறிதல் அவசியமாகும். இக்களவு மணம் தமிழகத்தே பெரு வழக்குடையதாக இருந்ததென்பதும், களவு நடந்த பிறகே கற்பு மணம் பெரும்பான்மை நிகழும் என்பதும் பண்டை நூல்களைப் பழுதறப் படித்தவர் உணரக்கூடும். இக்களவு மணம் கடைச்சங்க காலத்தோடு-ஏன்? சிலப்பதிகார காலத்தோடு இறந்து விட்ட தென்னல் மிகையாகாது. அதன் பின்னர் எழுந்த கோவை நூல்கள் ஏட்டளவில் களவு மணத்தை இயம்பப் புறப்பட்டனவே அன்றி வேறல்ல. இதற்குப் பௌத்த-சமண-வைதிக மதங்கள் தமிழகத்திற் பரவியதே காரணம் என்க. மேற்கூறப்பெற்ற களவு-கற்பு என்னும் இருவகைக் கைகோளும் கண்ணகி மணத்தில் நடைபெற்றன என்பது ஈண்டறியத் தகுவது. உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும் கள்ளப் புணர்ச்சியம் காதலர்க் குரிய என்பது அகப்பொருள் இலக்கணம். இம்முறையில் உள்ளப் புணர்ச்சி கண்ணகிக்கும் கோவலற்கும் உண்டாயிருந்த தென்பது உணரத்தக்கது. கண்ணகியுடனிருந்த ஆயத்தார் கோவலனது பெருமையையும் அருமையையும் பலபடப் பாராட்டிப் பேசி வந்தனர் என்பதே இதற்குப் போதிய சான்று. அவனுந்தான், மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம் பண்தேய்த்த மொழியினால் ஆயத்துப் பாராட்டிக் கண்டேத்தும் செவ்வேளென் றிசைபோக்கிக் காதலால் கொண்டேத்தும் கிழமையான் கோவலனென் பான்மன்னோ -மங்கல வாழ்த்துக் காதை எனவரும் இளங்கோ அடிகளின் இன்னுரை நோக்குக. மேலும் கண்ணகி கோவலனையே மனத்துட் கொண்டிருந்தாள் என்பது கண்ணகியை மணத்திற்கு முன் வாழ்த்திய மாதர் வாய்மொழி யினின்றும் அடிகளின் அன்புரையினின்றும் தெளிவாதல் காணத்தக்கது. அவளுந்தான், போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்னும் தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்று மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் நாதலாள்; பெயர் மன்னும் கண்ணகியென்பாள்மன்னோ -மங்கல வாழ்த்துக் காதை இவற்றால் இருவரும் கற்பு மணத்திற்கு முன்னே `கனிந்த காதலர் ஆக-`உள்ளப்புணர்ச்சி உற்ற மெய்க்காதலராக விளங்கினர் என்பது தேற்றம். இனி, `இக்காதலர்க்கு வயதிவ்வளவு இருத்தல் வேண்டும் என்பது தொல்காப்பியம் கூறிற்றிலது. அதன் உரையாளரே காதலர் வயதை நிறுவுதல் காண்கிறோம். அவர்கள் சிலப்பதி காரத்தையே ஆதாரமாகக்கொண்டு வயதை நிர்ணயம் செய்தனர் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. சிலப்பதிகாரம் கண்ணகிக்கு 12 வயதும் கோவலற்கு 16 வயதும் எனக் கூறுகிறது. அக்கால ஆடவர் பெண்டிர் 12 வயதில் நல்ல உடற்கட்டுடன் இருந்திருக்கலாமெனத் துணிதல் வேண்டும். அவள் சிறுவயதினளே என்பதை அடிகள் நாடுகாண் காதை வரி 40-இல் முதிராக் குளவியள் என வற்புறுத்திக் கூறுதலும் காணத்தக்கது. மேலும், அழற்படு காதை ஈற்று வெண்பாவில் அடிகள் முதிரா முலை குறைந்தாள் எனக் கூறுதலும் கண்ணகியின் இளமையை நன்குணர்த்துகிறதன்றோ? இக்காலத்தும் தமிழகத்தே பன்னிரண்டு வயதுடைய பெண்கள் பெரிய பெண்களாக இருப்பதைக் கண்டோர், 2000 ஆண்டுகட்குமுன் பன்னிரண்டு வயதில் மணம் செய்துகோடல் இருந்திருக்கலாம் எனத் துணிவர் என்பதில் ஐயமில்லை. களவு மணம் நடைபெற்ற பின்னர்க் `கற்பு மணம் நடைபெறுதல் பண்டை வழக்கமென முற்கூறப்பட்டதன்றோ? அஃதே போல, ஈண்டுக் கண்ணகிக்கும் கோவலற்கும் கற்பு மணம் கவினுற நடைபெற்றது. மணச் செய்தி மாநகரத்தார்க்கு அறிவிக்கப்பட்டது. இங்ஙனம் அறிவிக்கப்பட்ட செய்தி வேறெந்நூலுள்ளும் காணப்பெறாத புதுமை வாய்ந்ததாகக் காணப்படுதல் கவனிக்கத்தக்கது. அஃதாவது, யானைமீது பெண்கள் பவனிபோந்து, `மாநகர்க் கீந்தார் மணம். இங்ஙனம் பெண்கள் யானைமீதமர்ந்து மணச்செய்தியை மாநகர்க் கறிவித்தல் வேறு தமிழ் நூல்களில் யாம் கண்டிலேம்*. இனித் திருமணச் சடங்குகளைக் காண்போம்: அகநானூற்றுச் சடங்குகட்கும் இச்சடங்குகட்கும் வேறுபாடு காணப்படுகிறது. பண்டைத் தமிழர் மணத்துள் பார்ப்பான் இல்லை. இங்கோ, (1) `மாமுது பார்ப்பான் காட்சியளிக்கிறான்; (2) `தீவலம் காணப்படுகிறது; (3) `பாலிகைகள் தோன்றுகின்றன.இம் மூன்றும் அகநானூற்றில் காணப்பெற்றில. அங்குச் செய்யுள் 86 கூறுவது: உணவுக் குவியல் கிடந்தது. நல்லோரையிற் பெண்டிர் சிலர் (புதல்வரைப் பெற்றவர்) அலரி கலந்த நீரால், கற்பின் வழாது நற்பல வுதவிப் பெற்றோன் பெட்கும் பிணையை ஆகென வாழ்த்தி மணமகளை நீராட்டிப் புத்தாடை உடுத்துப் பழைய மணல் நீக்கப்பெற்றுப் புதுமணல் பரப்பப் பெற்ற மணப்பந்தலில் (மணமகனுக்கருகில்) அமரச் செய்தனர். தலைவியின் பெற்றோர் கொளற்குரி மரபின் கொடுப்பத் தலைவனுடைய பெற்றோர் ஏற்றனர். இதனையே குறித்து 136-ஆம் செய்யுளும் செப்புகின்றது. இது கொண்டே காலஞ்சென்ற வரலாற்றுப் பேராசிரியரான பி. டி. சீநிவாச ஐயங்கார் அவர்கள் தமது `பழங்காலத் தமிழர் என்னும் மாண்புமிக்க நூலில், இப்பண்டைத் தமிழ் மணமுறையில் ஆரியக் கலப்புடையது ஒன்றுமில்லை; எரி வளர்த்தல் இல்லை; தீவலம் வருதல் இல்லை; தட்சிணைப்பெறப் புரோகிதன் இல்லை. இது முற்றும் தமிழர்க்கே உரிய தமிழ் மணம் என அழகாக (பக்கம் 80-இல்), அறைந்துள்ளமை அறியற்பாலது. இக்கண்ணகி-கோவலன் திருமணத்தில் `தாலி இல்லை என்பது நன்கறியத் தக்கது. `அகலுள் மங்கல அணி எழுந்தது எனவரும் அடியைக் கொண்டும் `மங்கல அணி-மங்கலிய சூத்திரம் வலஞ் செய்தது எனவரும் அரும்பதவுரை கொண்டும், சிலர் `தாலி உண்டு என்கின்றனர். `மங்கல அணி என்பது மாங்கலிய சூத்திரம் ஆயின், `மண அணி காண மகிழ்ந்தனர் என வருவதில் உள்ள `மண அணிக்குப் பொருள் யாது கூறுவர்? `மண அணி என்பது `திருமண வைபவம்; அதனைக் காணப் பெற்றோர் விழைந்தனர். என்பதே பொருள். எனவே, அணி, `அழகு, வைபவம், சிறப்பு என்பதே கடைந்தெடுத்த பொருளாகும். அரும்பதவுரை யாசிரியரே மனையறம்படுத்த காதையுள் வரி 63-இல், மறுவின் மங்கல அணியே அன்றியும் என வருவதில் உள்ள `மங்கல அணிக்கு `இயற்கை அழகு எனப் பொருள் கூறுதலும் நோக்கத்தக்கது. இதற்கே அடியார்க்கு நல்லால் `இயற்கை அழகு எனப் பொருள் கூறிப் பின்னர், `மங்கல அணி-மாங்கலியம் என்பாரும் உளர் எனக் கூறுதலும் கவனிக்கத் தக்கது. இஃதொன்றே, `மங்கல அணி - மங்கலியம் அன்று என்பது அடியார்க்கு நல்லாரது கருத்தென்பதை விளக்கப்போது மன்றோ? பின்னும், அந்திமாலைச் சிறப்புச் செய்காதையில், வரி 50-இல் மங்கல அணியிற் பிறிதணி மகிழாள் என வருமிடத்து, மங்கல அணி-இயற்கை அழகு என அரும்பதவுரையாளரே கூறுதலும் காண்க. மேலும் `அணியாள் என அடிகள் கூறாது `மகிழாள் எனக் கூறியிருத்தலும் கூர்ந்து நோக்கத்தக்கது. `பலவகை வாத்தியங்கள் எழுந்தன; அதனால் ஊரில் மங்கல அணி (திருமண வைபவம்) எழுந்தது (பொலிவுற்று விளங்கியது) என்பதே இதன் கருத்து. இன்றேல், அடியார்க்கு நல்லார், தமக்கு முன்னவரான அரும்பதவுரையாளர் கூற்றைத் தழுவாமல், மங்கல அணி ஊரெங்கும் எழுந்தது என்க எனக்கூறி வாளாவிட்டிருப்பரோ? தாலி வலம் வந்ததாயின், அஃது அடியார்க்கு நல்லார்க்கு ஒப்ப முடிந்த ஒன்றாயின், அவர் கூறாதிருப்பரோ? அரும்பதவுரையாளர் தம் காலவழக்கத்தினைச் சிலப்பதிகாரத் தொடர்க்கு ஏற்றினர் என்பதை அறிந்தே போலும் அடியார்க்கு நல்லார், மாங்கலிய சூத்திரம் என்னும் தொடரையே விட்டுவிட்டனர்! அரும்பதவுரையாசிரியர் கூற்றுப்படி `மங்கல நாண் வலம் வந்தது உண்மை ஆயின், திருமணச் சடங்குகள் யாவற்றையும் விடாமற் கூறும் இளங்கோவடிகள் `தாலி கட்டுதலைக் கூறாது விடுவரோ? எண்ணிப் பாருங்கள். `மங்கல அணி என வருமிடத்தெல்லாம் `இயற்கை அழகு எனப் பொருள் கூறிச் செல்லும் அரும்பத உரையாசிரியர் முதலில் மட்டும் `தாலி கூறினார் எனக் கோடல் பொருந்துவதாக இல்லை. அஃது `இடைச் செருகல் அல்லது ஏடெழுதினோர் செய்த தவறெனக் கோடலே பொருத்தமெனத் தோன்றுகிறது. அடிகள் காலத்தில் `தாலிகட்டுதல் வழக்கமாக இருந்திருக்குமாயின், அச்சிறப்புடை வழக்கத்தை அவர் விட்டிருத்தல் இயலாதன்றோ? அங்கு அவர் விட்டுவிட்டதாகக் கொண்டாலும், கோவலன் கொலையுண்டபோது அவள் புலம்பியதாகக் கூறும் அடிகளிலேனும் `தாலி யைப்பற்றிய குறிப்பு வந்திருக்க வேண்டுமே! கண்ணகி `தாலி யைக் கூறிப் புலம்பியதாகவும் தெரியவில்லையே! தாலி இருந்திருக்குமாயின், அவள் அதனையன்றோ அறுத்து மதுரைமீது எறிந்திருப்பாள்! இடமுலையைத் திருகவேண்டிய அவசியம் ஏற்பட்டிராதன்றோ? அவள் கணவனை உயிர்ப்பித்த இடத்தும் `தாலி பற்றிய பேச்சே இல்லை. மதுரையை அழல் கொண்ட பின்பு புறப்பட்ட கண்ணகி, மதுரை எல்லையில் கொற்றவை (துர்க்காதேவி) கோயில் முன் தன் வளையல்களைத் தூளாக்கி நடந்தாள் என்பதிலிருந்தேனும் உண்மை உணரலாமன்றோ? `தாலி இருந்திருக்குமாயின், அதனை அவள் கழற்றினாள் என இளங்கோவடிகள் கூறாதிருப்பரோ? கருத்துறு கணவற் கண்டபின் அல்லது இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன்எனக் கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்தும் -கட்டுரை காதை போயினாள் என வருவது காண்க. இறுதியில் அவள் சேர நாடு சென்று வேங்கை மரத்தடியில் இருந்தபோதும் `தாலி பற்றிய பேச்சே எழவில்லை. இதுகாறும் கூறியவற்றால், இளங்கோவடிகள் காலத்தில், கண்ணகி-கோவலன் திருமணத்தில் `தாலி கட்டும் வழக்கம் இல்லை என்பதே வலியுறுத்தப்படுதல் காண்க. இதனைச் சங்கச் செய்யுட்களைக் கொண்டும் நிறுவலாம். இதனை விரிப்பிற் பெருகும்*. கண்ணகி மணவினை நடந்த அன்றே அவளை மங்கல நல்லமணி ஏற்றினார் என்பது சிலப்பதிகாரம். இதுவே பண்டையமுறை என்பதை அகநானூற்று 86, 136-ஆம் பாக்களால் பாங்குற உணரலாம். கண்ணகி இல்லறம் கண்ணகியும் கோவலனும் நுகர்ந்த இல்லற இன்பம் அருகில் இருந்து கண்டவர் போல முற்றும் துறந்த இளங் கோவடிகள் மனமுருகக் கூறுந்திறம் படித்துப் படித்து இன்புறற் பாலது. மனையறம் படுத்த காதையுள் அகப்பொருட் செறிவனைத்தும் வரிதோறும் - சீர்தோறும் இலங்கக் காணலாம்; இருவரும் `கனிந்த காதல் என்னும் உண்மையையும் உணர்ந்து இன்புறலாம். வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத் தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத் தீராக் காதலில் திளைத்தனர் இருவர். என வரும் அடிகளின் பொருள் நுட்பமும் இவ்வடிகளைக் கூறிய ஆசிரியரது புலமைப் பண்பும் பொன்னே போலப் போற்றத் தக்கவை. அக் காதையின் அடியில் வரும் அடிகளது வெண்பாவினால் காதலரது ஒன்று கலந்த வாழ்க்கை நன்கு வெளியாதல் காண்க. தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனஒருவார் காமர் மனைவியெனக் கைகலந்து-நாமம் தொலையாத இன்பமெல்லாம் துன்னினார் மண்மேல் நிலையாமை கண்டவர்போல் நின்று. தனித்திருந்த தையல் கோவலன் மாதவிபால் பேரன்புகொண்டு மனைவியை அறவே மறந்து, மாதவியின் சேர்க்கையில் ஈடுபட்டிருந்தான். கணவனைப் பிரிந்த காரிகையோ அக்கால வழக்கப்படி-உண்மைத் தன்மை வாய்ந்தவள். ஆதலின்-துயில் கொண்டிலள்; அஞ்செஞ்சீறடி அணி சிலம்பு ஒளிந்தாள்; கொங்கை முன்றிற் குங்குமம் எழுதாள்; மங்கல அணி (இயற்கை அழகு) அன்றிப் பிறிதணியில் மகிழ்ச்சி கொள்ளவில்லை; காதணி தனது இருக்கையில் இராது தாழ்ந்து கிடந்தது; செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறந்தன; பவளவாள் நூதல் திலகம் இழந்தது; அவளது தவளவாள் நகையைக் கோவலன் இழந்தான். மையிருங் கூந்தல் நெய்யணி மறந்தது. இப்பரிதாப நிலைமை உண்மைக் காதலியிடம் இன்றும் காணப்படுதல் கண்கூடு. இப்பரிதாப நிலை-தனித்த தையல் நிலை-பரிதபிக்கத் தக்க காட்சி ஆகும். இங்ஙனம் கண்ணகி தனித்திருந்த போது இந்திரவிழா நடந்தது. அதுபோது கோவலன்-மாதவி இருவரும் இன்பக்கடலுள் திளைத்தனர். கண்ணகியோ தனித்துயர் உற்று உருவழிந்து வருந்தினாள். மாதவி கண்கள் கோவலனது சேர்க்கையால் செந்நிறமடைந்து நீர் உகுத்தன; கண்ணகியின் கண்கள் வருத்த மிகுதியால் நீரைச் சொரிந்தன. இந்நிலை நினைந்து நெக்குருகத் தக்கது. இந்நிலையில் கண்ணகி தீக்கனா ஒன்றைக் கண்டாள்; கண்டு நடுநடுங்கித் `தேவேந்தி என்னும் பார்ப்பனத் தோழியிடம் கூறி, மதுரையில் இனி நடைபெறப்போகும் செயல்களை விளக்கி வருந்தினாள். அந்நிலையில் தேவந்தி, கோயிலுக்குச் சென்று வழிபட்டுத் தோஷ நிவர்த்தி செய்து கொள்ள அழைத்தாள். ஆனால் கண்ணகி, பீடன்று (குலத்திற் பிறந்தார்க்குப் பெருமையன்று) எனக் கூறி மறுத்தாள். இவ்விடம் உன்னி உன்னிச் சுவைத்தற்குரியது. உடன் போக்கு இங்ஙனம் கண்ணகி கூறியிருந்தபோது கோவலன்-வெறுப்பால் மாதவியை விட்டு நீங்கிய கோவலன்-கண்ணகி பள்ளியறையுட் புகுந்து, அவளது வாடிய மேனியைக் கண்டு வருந்தி, . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . யாவும் சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக் குலந்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த இலம்பாடு நாணுத் தருமெ னக்கு -கனாத்திறமுரைத்த கதை என நன்முறையில் நவில, அப்பத்தினிப் பெண், முறுவல் நகைமுகம் காட்டி, சிலம்புள கொள்க என்றாள். இஃதொன்றால், அப் பெண்மணியின் பெருந்தகைமை இற்றென இனிது விளங்குகிறதன்றோ? பின்பு அவன் விருப்பப்படி கண்ணகி தன் தொன்முது நகரைப் பிரிந்து-தாய் தந்தையாரைப் பிரிந்து-உறவினரைப் பிரிந்து-யாவர்க்கும் தன் பிரிவை அறிவியாமல், கணவனுடனே கங்குற் போதில் புறப்பட்டாள் எனின், அவளது கற்பின் சிறப்பினை என்னென்பது! வழிநடக்குங்கால், நெடுந்தொலை நடந்தறியாப் பாதையாதலின், கண்ணகி அடிகள் வருந்தின. அதனால், முதிராக் கிளவியின் முள்ளெயிறு இலங்கக் கணவனை நோக்கி, மதுரை மூதூர் யாது? என நயமாக வினவினாள் என்பது, அவளது ஒழுக்க நிலைமையைக் குன்றின்மீதிட்ட விளக்கென ஒளிரச் செய்கிறதன்றோ? வழியில் இக்காதலரைக் கண்ட பற்றற்ற கவுந்தியடிகளும் கண்ணகிபால் பற்றுக் கொண்டனர் எனின், கண்ணகியின் ஒழுக்க நலனையும் குணநலனையும் எண்ணிப் பார்மின்! ஐயைக் கோட்டத்துள் சாலினி தெய்வ மாடுங்கால், கற்பரசியாய கண்ணகி, அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி விருந்தின் மூரல் அரும்பினன் ஆகிக் கணவன் நிழல் போலப் பின்புறத்தொடுங்கி நின்றாள் என்பதிலிருந்து, கணவன் நிழலே மனைவி என்னும் உயரிய இல்வாழ்க்கைத் தத்துவத்தைக் கூறாது, தன் செயலால் உணர்த்துகிறாள் என்பதை மறுப்பாரும் உளரோ? அதுபோது தெய்வமாடிய சாலினி அவளை மட்டும் குறிப்பிட்டு, இவளே, கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென்தமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய திருமா மணி - வேட்டுவ வரி எனப் பாராட்டுரை புகன்றாள் எனின், கண்ணகியின் பெருமையை யாதெனப் புகழ்தல் கூடும்! பிரிவுறு காட்சி இக்காட்சி ஒன்றே கண்ணகி வாழ்வில் இரண்டாந் தரத்தது. இதுவே நினைந்து நினைந்து இன்புறத் தக்கது; கோவலன் உள்ளக் கிடக்கையும் கண்ணகியின் கற்பு நெறியும் விளக்கமுறச் செய்யும் இன்பப் பகுதியாகும். கோவலன் சிலம்பு கொண்டு புறப்பட ஆயத்தமானவன், தனது தவற்றை உணர்ந்து உருகுந்திறம் உணரத்தக்கது. நல்ல ஒழுக்கத்தைக் கெடுத்த எனக்கு இனித் தீக்கதியின்றி நற்கதி உண்டாமோ? அதுதானுமன்றி, இருமுது குரவர்க்குச் செய்யும் ஏவலையும் பிழைத்தேன்; நினைக்கும் சிறுமை செய்தேன்; இவ்வழு வொழுக்கம் தவறானது என்பதைச் சிறிதும் எண்ணிலேன்; இத்தகைய கொடிய யான் உன்னிடம் வந்து `எழுக என்றதும், மறுமொழி ஒன்றும் உரையாமல் என்னுடன் வந்தனையே! என இரங்கிக் கூறினான். அப்போது அம்மடவாள், உமது பிரிவால் வருந்திய என்னை நும் பெற்றோர் வந்து கண்டனர்; யான் எனது அகவருத்தத்தைப் புறத்தே காட்டாது புன்முறுவல் பூத்தேன்; அது வறிதே தோற்றிய முறுவல் என்பதை அவர்கள் உணர்ந்து வருந்தினர். யான் உமது வார்த்தையைச் சிறிதும் மாற்றாத உள்ள வாழ்க்கையை உடையேன் ஆதலின், உம்முடன் உடன்பட்டுப் பெருவிருப்போடு வந்தேன், என இன்முறுவல் தோன்ற இயம்பினாள். அவ்வளவில் அவன் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கள வில்லை. அவன், உள்ளத்தில் ஒருவராலும் கரை செய்ய அரியதொரு பேருவகைக்கடல் பெருக, அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணை யாக என்னொடு போந்தீங்கு என்துயர் களைந்த பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்! நாணின் பாவாய்! நீணில விளக்கே! கற்பின் கொழுந்தே! பொற்பின் செல்வி! எனப் பலபடப் பாராட்டிச் சீராட்டி, நின் சீறடிச் சிலம்பில் ஒன்றுகொண்டு யான் விலைகூறி வருவேன். மயங்கா தொழிக, என மலர் முகத்துடன் கூறி, அவளைத் தழுவி, துணைவர் இல்லா அவளது தனிமைக்கு வருந்தியவனாய்க் கண்ணீர் தோன்ற விடாது கரந்தவனாய்ப் புறப்பட்டான். இக்காட்சியில் உண்மைக் காதலர் உள்ளக் கிடக்கை உள்ளவாறு உணரக் கிடத்தல் காண்க. வீர பத்தினி சிலப்பதிகாரத்தில் `துன்பமாலை என்னும் பகுதியில், கற்பின் அமைதிக்கு இலக்கணமாகிய கண்ணகி வீரக் கற்பரசியாக வெகுண்டெழுதலைக் காண்கிறோம். தன் கணவன் `கள்வன் என்று காவலன் கொலைபுரிந்தானாம்! என்ன அநீதி! என்று அலறியவளாய்ச் சென்ற கோலத்தை `ஊர் சூழ்வரி என்னும் பகுதி செவ்வையாகச் செப்புதல் காணத்தக்கது. அவளது துன்ப நிலையைக் கண்டு ஊரார் அழுது புலம்பினர் எனின், அவளது துன்ப நிலை எத்தகையதெனக் கூறுதல் இயலும்! இறுதியில் கண்ணகி, கணவன் உடலைத் தழுவ, அவன் உயிர்பெற்றெழுந்தான்; எழுந்தவன், நிறைமதி வாள்முகம் கன்றியது என்று கூறி, அவள் கண்ணீரைக் கையால் துடைத்தான். அவளோ அழுதேங்கி, நிலத்தில் வீழ்ந்து அவன் பாதங்களைத் தன் வளைக்கைகளால் பற்றினாள். அவன் நீ இவண் இரு எனக்கூறி மறைந்தான். ஈண்டு அவனது உள்ளப் பெருமையும், இவளது கற்பின் கவினும் நுணுகி ஆராயத்தக்கன: இறந்தெழுந்தவன் அவளது மலர் முகத்தைத் துடைத்தும், அவள் தன்னுயிரனையான் பாதங்களே பற்றெனக் கொண்டமையும் எண்ணி எண்ணி நயம் நுகரத்தக்கன. கணவன் மறைந்ததும் மருண்ட கண்ணகி, பின்னர்த் தெளிவுற்று, காய்சினம் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்; தீவேந்தன் தனைக்கண்டித் திறம்கேட்பல் யான் என்று கூறியவளாய், நெடுங்கயற்கண் நீர்சோரப் பாண்டியன் கோயிலை அண்மினாள்; அண்மி, வாயிலோனிடம் பகரும் மாற்றத்தில் அநீதியை அறவே வெறுத்த அவளது உள்ளப் பான்மையை உள்ளவாறு உணரக்கூடும்: அறிவரை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே! இணை அரிச் சிலம்பொன் றேந்திய கையள். . . . . . . . . . அறிவிப் பாயே அறிவிப் பாயே என அறைந்தனள். அவ்வளவில், அலறிய அக்காவலன் பாண்டியனை வாழ்த்திப் பணிந்து, கண்ணகி வந்தமையைக் கூறினான். அவன் கூற்றிலிருந்து கண்ணகியின் `காளிவரூபம் இற்றென இனிது காணலாம்: வந்திருப்பவள், அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள்; அறுவர்க் கிளைய நங்கை, இறைவனை ஆடல்கண் டருளிய அணங்கு, சூருடைக் கானகம் உகந்த காளி, தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்; செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் பொற்றொழில் சிலம்பொன் றேந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத் தாளே கணவனை இழந்தாள் கடையகத் தாளே! -வழக்குரை காதை இனி அரிவைக்கும் அரசற்கும் அங்கு நடைபெற்ற உடையாடல் கவனிக்கத்தக்கது. கண்ணகியின் சொல்லாற்றல்-வீரம்-உண்மை உணர்த்த அஞ்சாமை போன்ற அருங்குணங்கள் தெளிவுற விளங்கக் காணலாம். அவளைக் கண்டதும் பாண்டியன், நீருடைக் கண்களோடு வந்த நீயாவள்? என, அவள், தேரா மன்னா! எனச் சினத்துடன் விளித்துத் தான் பிறந்த சோணாட்டுப் பெருமையை முதற்கண் கூறிப் பின்பு தனது குடிப் பெருமை கூறி, அதன் பின்னர், மாசாத்து வாணிகன் மகனை யாகி. . . . . . . . . நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி எனத் தன்னை அறிவிக்குந் திறம் காண்க. கண்ணகி, மாசாத்து வணிகன் மகனை ஆகி-நின்பால் கொலைக் களப்பட்ட கோவலன் மனைவி எனத் தன்னை அறிவிப்பதில், தன் மாமனார் பெயர்-கணவன் பெயர் இவற்றை அழுத்தந் திருத்தமாக அறைந்துள்ளமை அறிக. இக்காலப் பெண்டிர் உயிர் போவதாயினும் மாமனார் பெயர், கணவன் பெயர் கூற மறுக்கின்றனர். இப்பண்பு அக்காலக் கண்ணகியிடம் அமைந் திருக்கவில்லை என்பது அறியத்தகும். கணவனைக் கொன்றமை நியாயமன்றோ? என்று அரசன் கேட்க, அதற்கு விடையளிக்காமல், கண்ணகி, என் காற்சிலம்பு முத்துடை அரியே எனக் கூறியது உன்னத்தக்கது. பாண்டியன் கூறிய சொல், `உண்மை உணர்ந்த பின்னரே சொல்லத் தகுவது என்பதே கண்ணகியின் கருத்து. அதனால் அவள், முதலில் உன் சிலம்பு தானா என் கணவனிடம் காணப் பட்டதென்பதைத் துணிந்தனையோ? என்று கேட்பதற்குப் பதிலாக, இங்ஙனம் நயமாய்க் கூறி, விசயத்திற்கு வந்து பாண்டியனை மடக்கியது எண்ணிக் களிக்கற்பாலது. உண்மையை இங்ஙனம் உணர்த்தித் தன் கணவன் தவறிலன் என்பதை மெய்ப்பித்த சமயம், மன்னன் மனம் நொந்து மாண்டான்; தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடுபவளைப் போலக் கோப்பெருந்தேவி குலைந்து நடுங்கி அவ்விடத்தே உயிர் விட்டாள். சீற்றம் தணியாச் சீறடி அரிவையான கண்ணகி கோப்பெருந்தேவியை நோக்கி, மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்; பட்டாங்கு யானுமோர் பத்தினியே ஆமாகில் ஒட்டேன் அரசோ டொழிப்பேன் மதுரையும் என்று சீறியவளாய்த் தனது இடமார்பத்தைத் திருகி மதுரைமீது எறிந்தாள். அவ்வளவில் மதுரை எரிவாய்ப்பட்டது. மதுரையைக் கண்ணகியின் `கற்பு உண்டது என்னும் இளங்கோவடிகளின் இன்னுரை இன்பம் தருவதாகும். மதுரைப் பத்தினிப் பெண்டிர் அனைவரும் கண்ணகியைச் `சிலம்பில் வென்ற சேயிழை எனப் புகழ்ந்தனர். இந்நிலையிலும் கண்ணகியின் சீற்றம் தணிந்திலது. `மதுராபதி என்னும் தெய்வம் கண்ணகி முன் நிற்கமாட்டாது பின்னிலையில் நின்று பேசிய தெனில், அவளது வீர சொரூபம் விளம்பற் பாலதோ? அத் தெய்வம் கோவலனது முன்னை வினையைக் கூறிக் பதினான்காம் நாள் நீலியைப் போலக் கண்ணகியும் மலையுச்சியிற் கணவனைக் காண்பாள் எனக் கூறியது. அது சென்ற பின்பு கண்ணகி, கருத்துறு கணவன் கண்டபின் அல்லது இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன் எனக் கூறிக் கொற்றவை வாயிலிற் பொற்றொடி தகர்த்து, மீண்டும் வருந்தி, கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன்; மேற்றிசை வாயில் வறியேன் பெயர்வேன் என்று துன்புற்றவளாய் வழிநடந்தாள். இந்நிலை எண்ணியெண்ணி இரங்கற்குரியது. அவளது மன நிலையில் ஒவ்வொருவரும் இருந்து நினைப்பின், இத்துன்ப எல்லையின் முகட்டினைச் சிறிது உய்த்துணரலாம். இது மனத்தை உருக்கும் இடமாகும். இங்ஙனம் மயங்கி மயங்கி வழி நடந்தவள் திருச் செங்குன்றூர் மலையுச்சி அடைந்தாள்; ஆண்டிருந்த குறவர் இவளை யாவள் என வினவ தீத்தொழிலாட்டியேன் யான், என்று கூறி ஏக்கமுற்று நின்றிருந்தாள். பதினான்காம் நாள் கோவலன் வந்து விண்ணக விமானத்தில் அம் மாபத்தினியை அழைத்தேகினான். கட்டுரை காதை ஈற்று வெண்பா ஒன்றில் இளங்கோ அடிகள் இவ்வீர பத்தினியின் கற்பின் பெட்பினைக் கூறுதல் கவனிக்கத்தக்கது: தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால்-தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து. கண்ணகி விழா மலையுச்சியிலிருந்து மாண்புறு கணவனைக் கலந்த காரிகையைக் கொண்டாடி குன்றமக்கள் குரவைக் கூத்தாடினர். அவர்கூற, தன்னாடடைந்த பத்தினிக்குப் பெருமைபுரிய விழைந்தான் சேரன் செங்குட்டுவன்; அவன் மாபத்தினியான இருங்கோ வேண்மாள், நம் அகல்நாடு அடைந்த இப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் என்று கூறினாள். செங்குட்டுவன் இமயஞ்சென்று கல் கொணர்ந்து, கண்ணகி உருவந்தீட்டிக் கோயில் கட்டி விழாச் செய்தான். அங்கு, கண்ணகித் தெய்வம் விண்ணிடைத் தோன்றி, தென்னவன் தீதிலன்; தேவர்கோன் தன்கோயில் நல்விருந் தாயினாள்; நானவன் தன்மகள்; வென்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன் என உரைத்து, விழா முடிவில், செங்குட்டுவன் வாழ்க! என்று ஆசீர்வதித்தது. அவ்வெல்லை, ஆரிய மன்னரும் சிறை நீக்கப் பெற்ற வேந்தரும் கொங்கரும் மாளுவரும் இலங்கைக் கயவாகு வேந்தனும் தத்தம் ஊர்களில் கோயில் கொண்டருள வேண்டுனெப் பத்தினிக் கடவுளைப் பரவ, தந்தேன் வரம் என அத்தெய்வம் வரம் தந்தது. இத்துணைப் பெருமையுற்ற தெய்வம் இத்தமிழகத்து வேறுண்டெனக் கேட்டிலேம். கண்ணகி-தன் கற்பின் கவினால் கடவுள் தன்மை எய்தினாள். கற்பின் உயர்வே உயர்வு! புலமையும் பெருமையும் இப்பத்தினி கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தாள் என்பது தெரிகிறது. யாப்பருங்கல விருத்தியுரை ஆசிரியர் `பத்தினிச் செய்யுள் இது என இரண்டோரிடங்களிற் சுட்டிக் காட்டுதலாலும், `பத்தினி என்னும் சொல்வழக்கு இன்றளவும் கண்ணகியையே குறித்து வருதலாலும், அச்செய்யுட்கள் இப்பெண் தெய்வத்தால் பாடப்பெற்றனவே எனத்துணிதலில் தவறில்லை. இன்றளவும் இம்மாவத்தினியின் `பத்தினி என்னும் நாமம் தமிழகத்து எல்லா மாதரிடமும் வழக்குப் பெற்றுள்ளது. என்னை? இவள் பத்தினியோ? சொன்னவுடனே பலித்துவிடுமோ? என ஏசுதலிலிருந்தே, பத்தினி-கண்ணகி; அவள் சொன்ன சொல் பலித்தது என்பது பொருளாதலின் என்க. தமிழ்ப் பற்றுடையோர் `நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்ச் செல்வத் தீந்தேனை நுகர்ந்து இன்புறுவாராக! 6. சாக்கைக் கூத்து முன்னுரை கோவலனும் கண்ணகியும் வாழ்ந்து மறைந்த காலத்தில் சேர நாட்டை ஆண்ட பெருவீரன் செங்குட்டுவன் என்பவன். அவன் தன் நாட்டுள் வந்து விண்ணுலகடைந்த கண்ணகிக்குக் கோயில் கட்ட விரும்பி, இமயத்திலிருந்து கல்லைக்கொணர வடநாடு சென்றான்; சென்று, தன்னை எதிர்த்த ஆரிய அரசரை வென்று, பத்தினியின் உருவத்தைச் செதுக்கத்தக்க கல்லை இமயமலையிலிருந்து கொண்டுவந்தான். அவன் வஞ்சிமாநகர் மீண்ட அன்று அவனது களைப்பைப்போக்க கூத்தச் சாக்கையன் நடனமாட வரவழைக்கப்பட்டான். சாக்கையன் ஆடிய கூத்து வந்த சாக்கையன் சிவபெருமான் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் கூத்தை ஆடிக்காட்டினான். சிவபெருமான் உமாதேவியை இடப்பாகத்தில் தாங்கியபடி ஆடிய கூத்து இது. சிவபெருமான் மாதொருபாதியன் ஆதலால், அவனது உடலில் வலப்பாதி ஆணுருவமாகவும், இடப்பாதி பெண்ணுருவாகவும் அமைந் துள்ளன. அவ்வமைப்பு நிலையில் சிவபெருமான் ஆடிய கூத்தையே சாக்கையன் ஆடிக்காட்டினான். அவன் ஆடிய பொழுது காலில் அணிந்திருந்த சிலம்பு ஓசையிட்டது; கையிலிருந்த பறை ஆர்த்தது; அவனுடைய கண்கள் சிவனுடைய மனக்குறிப்பை உணர்த்தின. அவனுடைய சிவந்த சடை, கூத்தின் அசைவால் நாற்றிசைகளிலும் அசைந்தாடியது. ஆனால் இடப்பாக மிருந்த உமையின் பாடகம் என்ற காலணி அசையவில்லை; சூடகம் துளங்கவில்லை;மேகலை ஒலிக்கவில்லை; மென்மார்பு அசையவில்லை. அவளது குழை என்னும் காதணி ஆடவில்லை; நீண்ட கூந்தலும் அவிழவில்லை. இங்ஙனம் உமையவளை இடப்பாகத்தில் ஏந்தி, திரிபுரம் எரித்த பின்னர் முக்கண்ணன் ஆடிய கொட்டிச்சேதம் என்னும் கூத்தை மேற்சொல்லப்பட்ட சாக்கையன் ஆடிக் காட்டினான். திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும் பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவுஞ் செங்க ணாயிரந் திருக்குறிப் பருளவுஞ் செஞ்சடை சென்று திசைமுக மலம்பவும் பாடகம் பதையாது சூடகந் துளங்காது மேகலை யொலியாது மென்முலை யசையாது வார்குழை யாடாது மணிக்குழ லவிழா துமையவ ளொருதிற னாக, வோங்கிய இமையவ னாடிய கொட்டிச் சேதம் (சிலம்பு, நடுகற் காதை, வரி-67-75) பறையூர்ச் சாக்கையன் இங்ஙனம் இக்கூத்தை ஆடியவன் பறையூரைச் சேர்ந்தவன் என்றும், அவ்வூர் நான்மறையோரைக் கொண்டதென்றும் சிலப்பதிகாரம் செப்புகிறது. பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தச் சாக்கையன் (சிலம்பு, நடுகற் காதை, வரி-76-77) செங்குட்டுவன் வஞ்சிமாநகர் வந்தவுடன் சொல்லியனுப்ப, அன்றே சாக்கையன் வந்தாடினான் ஆதலின், பறையூர் என்பது வஞ்சிமூதூர்க்கு அண்மையில் இருக்க வேண்டும். இதனை ஆராய்ந்து பார்த்த வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார், இப்பறையூர் இக்காலப் `பரூர் என்பது. இவ்வூரில் நடிப்புத் தொழிலையுடைய பிராமண சமூகம் ஒன்று நிலைபெற்று வாழ்கின்றது, என்று கூறியுள்ளார்.1 மலையாளத்தில் சாக்கையர் சாக்கையர் என்னும் பெயருடன் கூத்தாடும் பிராமண வகுப்பினர் நம் தமிழகத்தில் இல்லை; ஆயின், சேரநாடான மலையாளத்தில் இன்றும் இருந்து வருகின்றனர். மலையாளத் தில் கோவிற் பணி செய்பவர்கள் `அம்பல வாசிகள் எனப்படுவர். நம்பியாசான், புஷ்பகன் (பூப்பள்ளி), சாக்கியர், பிராமணி அல்லது தெய்வம்படி, அடிகள், நம்பியார், பிஷாரடி, வாரியர், நாட்டுப்பட்டான், தீயாடுன்னி, குருக்கள், பொதுவாள் என்னும் பிரிவினர் `அம்பல வாசிகள் என்னும் பொதுப் பெயரால் குறிக்கப்படுகின்றனர். அம்பலம் என்பது கோவில்; வாசி என்பதற்கு வாழ்பவர் என்பது பொருள். எனவே, அம்பல வாசிகள் என்பதற்குக் கோவிலால் வாழ்பவர் என்பது பொருளாகும். இவருள் அடிகள், சாக்கியர், நம்பியார், புஷ்பகன், தீயாட்டு நம்பியார் என்பவர் பூணூல் அணிந்தவர்; பிறர் பூணூல் அணியாதவர். உயர்வகுப்புப் பெண்ணுக்கும் தாழ்ந்த வகுப்பு ஆணுக்கும் பிறந்தவர் பிரதிலோமர் எனப்படுவர். தாழ்ந்த வகுப்புப் பெண்ணுக்கும் உயர்வகுப்பு ஆணுக்கும் பிறந்தவர் அநுலோமர் எனப்படுவர். இவ்விருவகையாலும் வந்தவர் மரபினரே அம்பல வாசிகளுள் பல இனத்தவர் என்று கொச்சிநாட்டு மக்கள் தொகை அறிக்கை கூறுகின்றது.2 சாக்கியர் (சாக்கையர்) மநு கூறியுள்ள சூதர்3 போன்றவர்.4 சூதர் பிராமண மனைவிக்கும் க்ஷத்திரிய கணவனுக்கும் பிறந்தவர். சாக்கையரும் சாக்கைய நம்பியாரும்; ஓரினத்தவர்5 எனினும், சாக்கையர் பூணூல் அணிவர்; சாக்கைய நம்பியார் பூணூல் அணியார். சாக்கைய நம்பியார் பெண்களே `நங்கையார் எனப்படுவர். சாக்கையர் நங்கையாரை மணப்பர்; ஆயின், சாக்கைய நம்பியார் சாக்கையர் பெண்களை மணத்தலாகாது. சாக்கையர் பெண்கள் தம் இனத்தவரையே மணக்கலாம்; அல்லது நம்பூதிரி ஆண்களுடன் `சம்பந்தம் முறையில் வாழ்க்கை நடத்தலாம். அவர்களுக்கு `இல்லோத்தம்மமார் என்பது பெயர். அவர்தம் அணிவகைகள் நம்பூதிரிப் பெண்கள் அணிவன போன்றனவே. சாக்கிய ஆடவர் நம்பியார் பெண்களை மணக்கலாம். சாக்கையருள் புரோகிதர் உண்டு. ஆயின், இறப்பு நிகழ்ச்சியிலும் பிறப்பு நிகழ்ச்சியிலும் பார்ப்பனப் புரோகிதன் இடம்பெறுவான். அவர்கள் பதினொருநாள் தீட்டுடையர். காயத்திரி மந்திரம் பத்துமுறை ஓத அவர்களுக்கு உரிமை உண்டு. சாக்கையர் கூத்து புராண கதைகளைக் கூறுதலும் நடித்தலுமே இவர்தம் தொழில். ஒரு கதையைக் கூறும்பொழுது இச்சாக்கையர் எண்ணற்ற உபகதைகளை விளக்கத்திற்காக இடையிடையே செருகுவர். கேட்போர் தம்மை மறந்து இருக்கத்தகும் நிலையில் கதைகளைக் கூறுவதிலும் நகைச்சுவை மிகுவிப்பதிலும் நடிப்பதிலும் இச்சாக்கையர் இணையற்றவர். வட திருவாங்கூரில் உள்ள ஒவ்வொரு சிறப்புடைக் கோவிலில் நடைபெறும் விழா நிகழ்ச்சிகளில் சாக்கையர் கூத்துச் சிறப்பிடம் பெற்றிருக்கும். அவர் கூத்தாடுமிடம் ஒரு தனிக் கட்டடமாகும். அதற்குக் `கூத்தம்பலம் என்பது பெயர். அவ்வம்பலத்தில் சாக்கையன் முக்காலிமீது அமர்வான். அவன் தலையில் விநோதமான சரிகைத் தலைப்பாகை காட்சியளிக்கும். ஓரத்தில் பல நிறங்கள் அமைந்த-அகலத்திற் குறுகிய-நீண்ட ஆடையை இடுப்பைச் சுற்றிலும் அணிந்திருப்பான். அவ்வாடை கணக்கற்ற மடிப்புக்களை உடையதாகவும் கண்கவரத்தக்கதாகவும் காட்சியளிக்கும். அவ்வாடை பற்றிய விளக்கத்தை வருணிக்க இயலாது. சாக்கையனுக்குப்பின் `நம்பியார் என்பவன் நின்றிருப்பான். அவனுக்குமுன் `மிளாவு (முழவு) என்ற வாத்தியம் வைக்கப் பட்டிருக்கும். அதன் ஓசை இடியோசையை ஒத்திருக்கும். கூத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும், சாக்கையன் பாடும் வடமொழிச் சுலோகத்தின் நடுவிலும் கடைசியிலும் நம்பியார் முழவைத் தட்டுவான். நம்பியார் இனத்தைச் சேர்ந்த பெண்மணி நங்கையார் எனப்படுவாள். அவள் தாளத்தைக் கையிற் பிடித்தபடி சாக்கையனுக்கு எதிரில் அமர்ந்திருப்பாள். அவள் அத்தாளத்தை வேண்டும் போது தட்டுவாள். அவையோர் அனைவரும் தலையசைத்தும் உடலசைத்தும் சாக்கையனாடும் கூத்தினையும்-பேசும் பேச்சினையும் கேட்டு மகிழ்ச்சி கொள்ளும்போதும் இந்நங்கையார் சிலைபோல அமர்ந்திருப்பாள். அவள் சிறிது புன்முறுவல் கொள்ளினும் கூத்து உடனே நிறுத்தப்படும். நங்கையாரும் தெய்வங்களைப்போல வேடம்புனைந்து அதே மேடையில் நடித்தலும் உண்டு.6 சாக்கையன் அவையில் உள்ளோரைக் குறிப்பிட்டும் இடையிடையே வேடிக்கையாகப் பேசுவான். ஆனால், அப்பேச்சு எவரையும் புண்படுத்தாது. எல்லோரும் அதனை இன்பமாகக் கேட்பர். சாக்கையன் வீமனைப்போல நடிக்கும்பொழுதும் பேசும் பொழுதும் அவையோர் வீமனே வந்து நடிப்பதாகவும் பேசுவதாகவும் எண்ணுவர். இந்த அளவு உண்மை நடிப்புச் சாக்கையனிடம் உண்டு. சோழநாட்டில் சாக்கையர் இச்சாக்கையர் சேரநாட்டோடு நிற்கவில்லை. சோழப் பேரரசனான முதலாம் இராசேந்திரன் காலத்தில், காமரசவல்லி என்னுமிடத்துச் சிவன் கோவில் விழாவில் நடித்த சாக்கையன் ஒருவனது கூத்தைப் பாராட்டி, அரசன் அவனுக்குச் `சாக்கை மாராயன் என்ற பட்டம் தந்த செய்தியை அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுகின்றது.7 நாம் சிலப்பதிகாரத்திலும் கல்வெட்டுக்களிலும் கண்டறிந்த சாக்கையரும் அவர்தம் கூத்து வகைகளும் இன்றளவும் மலையாள நாட்டில் இருத்தலைக் காண, மனம் மகிழ்ச்சி அடைகிறதன்றோ? 7. சங்க காலத்து அன்னதானம் சங்க நூல்களில் அன்னதானம் எங்ஙனம் பாராட்டப் பட்டுள்ளது என்பதைப் பற்றி இங்குக் காணுவோம்: சங்க நூல்களில் புறநானூறும் மணிமேகலையும் பற்றியே ஈண்டுக் குறிப்பிட விரும்புகிறேன். புறநானூறு நடந்ததை நடந்தவாறு கூறிய காலத்தது; மணிமேகலை உள்ளதும் இல்லதும் கூறப்பட்ட காலத்தது; மணிமேகலை, பௌத்தத்தைத் தமிழர் பாராட்டிய காலத்தது. புறநானூறு பல நூற்றாண்டு களில் இருந்த புலவர் பாடல்களைக் கொண்டது. மணிமேகலை கி. பி. 2-ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டது. எனவே, இவ்விரண்டையும் ஆராய்வதால் பழந்தமிழர் அன்னதான நிலையையும், பல மதங்கள் இருந்த காலத்துத் தமிழர் அன்னதான நிலையையும் உள்ளவாறு உணரலாம். பசிப்பிணி `பசிப் பிணியைப் போக்குவதே சிறந்த அறச் செயல் என்பது பண்டைத் தமிழர் கொண்டிருந்த முடிபாகும். இதனைப் பற்றிப் புறநானூறும் மணிமேகலையும் கூறுவனவற்றை நிரலே காண்க: புறநானூறு 160 - 164-ஆம் பாக்கள் பசிப்பிணியைப் படம் வரைந்து காட்டுகின்றன. பெருஞ்சித்திரனார் என்னும் பைந்தமிழ்ப் புலவர் தம் குடும்பத்தைப் பிய்த்துத் தின்ற வறுமை இற்றென எடுத்தியம்புதல் உள்ளத்தை உருக்குவதாகும்: பால் அற்ற வறிய மார்பைச் சுவைத்த என்மைந்தன் வீட்டறையுள் இருந்த பாத்திரங்களைப் பார்த்து அழ, தாய் அவனது அழுகையை மாற்றப் `புலி வருகிறது என அச்சத்தை உண்டாக்கியும், `மதியைப் பார் எனப் பராக்குக் காட்டியும், அவன் அழுகை தணியானாய்ப் புலம்ப, தாய் விழிநீர் வார, உனது வருத்தத்தை உன் தந்தையினிடம் காட்டு என்றனள். இந்நிலையில் நான் குடும்பத்தை விட்டு வந்தேன். (புறம்-160) பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர், என் வீட்டு அடுப்பில் காளான் பூத்தது. பசி அதிகரிப்பப் பாலின்மையால் தோலோடு திரங்கிப் பால் வருகின்ற கண்ணும் தூர்ந்த வறிய மார்பைச் சுவைத்துச் சுவைத்துப் பால்பெறாப் பாலகன் அழுவன். குழந்தை தாய்முகம் நோக்கி அழ, தாய் என்முகம் நோக்கி அழ, யான் நின்முகம் நோக்கி வந்தேன், என்று ஒரு வள்ளலைப் பார்த்துக் குறையிரத்தல் எத்துணைக் கொடியதாகக் காணப்படுகிறது! (புறம்-164) இப்பசிப்பிணியைப் பற்றியே மணிமேகலை நன்கெடுத்துக் கூறுகிறது. மணி பல்லவத் தீவில் தீவதிலகை என்பவள் மணிமேகலைக்குப் பசியின் கொடுமையைப் பற்றி விளக்குகையில், குடிபிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் நாளணி களையும் மாணெழில் சிதைக்கும் பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி என்னும் பாவி என்று உருக்கமாக உரைத்துள்ளாள். பசியின் கொடுமையைக் கோசிக முனிவன் நாயின் ஊனைத் தின்ன முயன்றான் என்பதாலும் அறியலாம். இக்கொடிய பசிப்பிணியைப் போக்கவல்லது உணவு ஒன்றே. அஃது ஆருயிரைத் தருவது. எனவே, அஃது `ஆருயிர் மருந்து எனப்படல் பொருத்தமே அன்றோ? சாத்தனார் (மணிமேகலை ஆசிரியர்) உணவை `ஆருயிர் மருந்து என எட்டு இடங்களில் ஆண்டிருத்தல் காணலாம். ஆருயிர் அளித்த மணிமேகலையையே, ஆருயிர் மருந்தே என அவள் பாட்டன் விளித்தல் பின்னும் பாராட்டற் குரியது. (காதை 28, வரி 160) உணவையும் நீரையும் `இம் மருந்து எனக் கோவூர் கிழார் கூறலும் கவனித்தற்குரியது. (புறம்-70) உண்டி பெறத் தக்கவர் சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் உளம்பட வாழ்நர்க்கு என்பது புறப்பாட்டு (28). காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் படிவ நோன்பியர் பசிநோய் உற்றோர் மடிநல் கூர்ந்த மாக்கள் யாவரும் என்பது மணிமேகலை (காதை 28, வரி 222-225). ஓடை கிழார் என்னும் புலவர், எம்போன்ற தகுதி வாய்ந்தவர்க்கு ஈவோர் பயன் கருதாது ஈவோர் ஆவர். எம்மை ஒழிந்த பிறர்க்கு ஈவோர் பயன் கருதி ஈவோர் ஆவர்,-எனக் கூறுதல் பன்முறையும் சுவைத்தற்கு உரியது. (புறம்-136) மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி நிலவரை இழிதரும் பல்யாறு போலப் புலவர் எல்லாம் நின்னோக் கினரே என இடைக்காடனார் இயம்புவது உள்ளத்தை உருக்குவ தாகும். (புறம்-42) கோடைக் காலத்துக் கொடுநிழல் ஆகிப் பொய்த்தல் அறியா உறவோன் என்று பெருஞ்சித்திரனார் (புறம்-237) தம் வள்ளலைப் பாராட்டுதலை நோக்க, உள்ளம் உவகை கொள்கின்றது. அறஞ்செய்யும் முறைமை கோவலன் மகளாகிய மணிமேகலை வாழ்ந்த காலத்தில் காவிரிப்பூம் பட்டினத்தில் சுதமதி என்ற பார்ப்பனப் பெண்ணும் அவள் தந்தையும் தெரு வழியே வந்தனர். அப்பொழுது பசு ஒன்று பாய்ந்து அவள் தந்தையின் வயிற்றைக் குத்தி விட்டது. குடல் வெளியே வரப்பெற்ற அம்மறையவன் அவளுடன் அருகிலிருந்த சமண மடத்திற்குச் சென்றான். வைதிக சமயத்தைச் சேர்ந்த அவனைச் சமணர் மடத்திற்குள் புகவிட வில்லை. அதனால் அவன் தன் மகளுடன் அழுதுகொண்டே தெருவில் தள்ளாடி நடந்தான். அப்பொழுது நண்பகல் வெயில் கடுமையாக இருந்தது. அவ்வமயம் சங்க தருமன் என்ற பௌத்த முனிவன் பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்தியவாறு அங்கு வந்தான். வெயில் கடுமையாக இருந்த அந்த நேரத்தில் அவன் முகம் குளிர்ச்சி பொருந்திய சந்திரனைப் போலக் காட்சியளித்தது. அவன் விழிகள் கருணையைக் கக்கின. அப்பெரியோன், உங்களுக்கு என்ன துன்பம் நேரிட்டது? என்று அன்புகலந்த அருள் மிகும்மொழிகளால் கேட்டு உண்மை உணர்ந்தான்; உடனே தன் கைப்பாத்திரத்தைச் சுதமதியின் கையில் கொடுத்தான்; அவள் தந்தையைத் தழுவி எடுத்துத் தன் உடலின்மீது சுமந்து சென்று புத்த முனிவர்கள் வாழ்ந்த மடத்தை அடைந்தாள். அங்கு இருந்த முனிவர்கள் அம்மறையவனை அன்போடு வரவேற்று அவன் நோயைக் குணப்படுத்தினர். அங்கையிற் கொண்ட பாத்திரம் உடையோன் கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன் பென்னிற் றிகழும் பொலம்பூ வாடையன் என்னுற் றனிரோ வென்றெமை நோக்கி அன்புடன் அளைஇய அருண்மொழி யதனால் அஞ்செவி நிறைத்து நெஞ்சகங் குளிர்ப்பித்துத் தன்கைப் பாத்திரம் என்கைத் தந்தாங்கு எந்தைக் குற்ற இடும்பை நீங்க எடுத்தனன் தழீஇக் கடுப்பத் தலையேற்றி மாதவர் உறைவிடங் காட்டிய மறையோன் சாதுயர் நீக்கிய தலைவன் தவமுனி சங்க தருமன் தாமெனக் கருளிய. . . . -மணிமேகலை, காதை 5 வரி 59-70 எனச் சுதமதி கூறுதல் அறம் செய்வோர் முறைமையை நன்கு விளக்குவதாகும். அறத்தின் அவசியம் உண்டி இல்லாத மக்கட்கும், தாமாக வேலை செய்து சோறுபெற இயலாத மக்கட்கும் அறம் செய்தலே சிறந்த கடனாகத் தமிழர் கொண்டிருந்தனர் என்பது, நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே; உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உருவெனப் படுவது நிலத்தொடு நீரே; நீரும் நிலமும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே என்னும் புறநானூற்றுச் செய்யுளாலும் விளங்கும். இதுவே `ஒப்பற்ற அறம் என்று மணிமேகலையில் அறவண அடிகள் அறைந்திருத்தல் அறியத்தகும். இதனைச் சாத்தனார் வற்புறுத்திக் கூறியிருத்தல் படித்து மகிழத் தகும். அறமெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள்: மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லதிது கண்ட தில்! இங்ஙனம் வற்புறுத்தப்படும் அன்னதானம் மணிமேகலை யிற் பல இடங்களிற் கூறப்பட்டுப் பளிக்கறையுள் மாணிக்க ஒளிபோல் விளங்குதல், பண்டைத் தமிழர் அன்னதானத்தைப் போற்றி வளர்த்த அருஞ்செயலை நமக்கு நினைவூட்டுவதாகும். இளமையும் நில்லா; வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா; புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்; மிக்க அறமே விழுத்துணை யாவது ஆதலின், அன்னதானம் பிற தானங்கள் அனைத்தினும் தலையாயது என்பது பெறப்படும். 8. குறிஞ்சிக்கலி குறிஞ்க்கலி, கலித்தொகை என்னும் நூலுள் குறிஞ்சி ஒழுக்கத்தைக் கூறுவது. இது கலியின் வகையாகிய கலிவெண்பா, ஒத்தாழிசைக்கலி, கொச்சகக்கலி முதலியவற்றால் ஆகிய 29 செய்யுட்களை உடையது. இச்செய்யுட்கள் பல பொருள் பற்றியன; பல துறைப்பட்டன. இவற்றுள் சில நாடக வழக்காகக் கொள்ளத்தக்கவை; சில உரையாடற்கு ஏற்றவை; சில உள்ள நிகழ்ச்சிகளை ஓவியமாக வெளியிடுந் தன்மைய. இவை நாடக வழக்கிற்கே பெரிதும் உரிமையுடையவை எனல் பொருந்தும்.1 பல செய்யுட்களின் நடை பழம் பாடல்களைவிட எளிமையும் இனனோசையும் உடையது. ஒரு முறைக்கு இருமுறை மூலத்தை நன்கு வாசிப்பின், பொருள் நன்கு விளங்கும். எனினும் இதற்குள்ள நச்சினார்க்கினியர் உரை பெரிதும் போற்றத் தக்கதே. ஒரு சில இடங்களில் பொருள் அமைதி கெட்டிருப்பினும்,2 பெரும்பகுதி நுட்ப அறிவோடு கூடியதே. ஏனைய தொகை நூல்களுள் குறிஞ்சித் திணையில் இடம்பெறாத கைக்கிளையும் பெருந்திணையும் இக் குறிஞ்சிக் கலியில் இடம் பெற்றிருத்தல் கவனித்தற்குரியது. களவுக் கூட்டம் ஏற்படும் முறையிலும் ஏனைய நூற் செய்திகட்கும் இந்நூற்செய்திகட்கும் ஓரளவு மாறுவாடு உண்டு. இப்பகுதியில் வள்ளைப் பாட்டும் வரைவுகடாதலும், கைக்கிளையும் பலமுறை (Repition) கூறப்பட்டுள்ளன. சுருங்கக்கூறின், இக்குறிஞ்சிக்கலிச் செய்யுட்கள் களவியல் சூத்திரங்களையும் பொருளியற் சூத்திரங்களையும் அகத்திணையியற் சூத்திரங்களையும் துணைக்கொண்டு எழுந்தவை என்னல் மிகையாகாது. இக்குறிஞ்சிக்கலிச் செய்யுட்கள் படிக்கப்படிக்க ஓரளவு இன்பம் பயப்பன; பல பாக்களில் பொருட் செறிவு உண்டு. 1. காதல் வழிபாடு தலைவி கூற்று (1) ஒரு தலைவன் என்னைக்கண்டு காதல் கொண்டான்; கொண்ட காதலைக் கூறானாய், என்னைத் தன் நோய் புலப்படப் பார்த்துப் பல நாளும் மீண்டான். பலநாளும் அவன் வந்துவந்து போததலைக்கண்ட யான், அவனைப்பற்றியே நினைவு கொண்டேன்; இரவில் உறக்கம் பெற்றிலேன்; அவனோ, தன் குறையைக் கூறிலன்; எனக்கோ அவனை நோக்கி, `நின் வருத்தத்திற்கு நானும் வருந்தினேன் எனக்கூற நாணம் இடம் தந்திலது. ஆயினும் இந்நிலை நீட்டிப்பின் அவன் இறந்துபடுவனோ என்று கருதி, நாணமற்ற செயல் ஒன்றைச் செய்தேன்: யான் ஒருநாள் ஊசலாடிக்கொண்டிருக்கும்போது, தலைவன் அங்கு வழக்கம்போல வந்தான். யான் நாணம் இழந்து, `ஐயனே, சிறிது பொழுது என்னை ஊசலாட்டுவாயாக என்றேன். அவ்வளவில் புத்துயிர்பெற்ற தலைவன், `தையால், நீ கூறியது நன்று என்று ஊசலாட்டினான். அப்பொழுது யான் கைந்நெகிழ்ந்து வீழ்ந்தேனாக அவன் கருதும்படி அவன் மார்பின்கண் வீழ்ந்தேன். அதனை அவன் உண்மை எனக்கருதி, என்னை விரைய எடுத்து அணைத்துக் கொண்டான். யான், `பிறர் காண்பார் என விரைய, `ஒண் குழாய், நீ போ, என்று கூறிக் கண்ணோட்டஞ் செலுத்தினான். அதனால் நான் மெய்ம்மறந்து அவன்மீது கிடந்தேன். (செ-1) (2) தோழி, இதனைக் கேள்: நாம் பண்டு சிற்றில் இழைத்துக் சிறுசோறு சமைத்து விளையாடியபோது, நம் சிற்றிலைக்காலால் அழித்துத் துன்பம் செய்த பட்டிமகன் ஒரு நாள் யானும் யாயும் வீட்டிலிருந்தபோது வந்தான்; `நீர் வேட்கை என்றான். அன்னை பொன்சிரகத்தில் நீர் தந்து என்னை அனுப்பினாள். யான் அவனுக்கு நீர் தந்தபோது, அவன் என் முன்கையைப்பற்றி நலிந்தான்; யான், `அன்னாய், இவன் செயலைக் காண் என்றேன், அன்னை அலறிப் படர்ந்தாள். யான் உண்மை கூறாது, `இவன் உண்ணுநீர் விக்கினான் என்றேன். அன்னை அவன் முதுகைத் தடவினாள். அப்போதவன் என்னைக் கடைக்கண்ணாற் கொல்வான்போல் நோக்கித் தன் மகிழ்ச்சியைப் புலப்படுத்தினான். (செ-15) (3) ஒருவன், `மெல்லிய தோளையுடையாய்! நின் அடியில் யான் உறைதற்கு நீ அருள்வாய் எனக்கூறி, எனது சடைமாலை ஒன்றைத் தன் விரலால் முறையாகச் சுற்றி, அதனை மோந்து பார்த்தான். என் கையைக்கொண்டு தன் கண்களை மறைத்துப் பெருமூச் செறிந்தான்; என் தொய்யில் எழுதிய நகில்களை இனியவாகத் தடவினான்; என் மெய்ம்முழுவதும் இன்பம்பெறத் தழுவினான்; அச் செயலால் யான் அவன் கைப்பட்ட வருத்தத்தைப் போக்கினேன். ஆதலின், இச்செய்தியை யாய் முதலியோரிடம் கூறி, அவனுக்கே என்னை மணம் புரியச் செய்வாயாக. (செ-18) இம்மூன்று செய்திகளாலும் தலைவனும் தலைவியும் நட்புப் பெறுதல்-நட்புப் பெறும் முறை-இருவர் கருத்தும் ஒருமைப்படல் இன்ன பிறவும் நன்குணரலாம். 2. நாடகக் காட்சி 20, 21, 22, 23, 26, 28, 29 முதலிய எண்ணுள்ள செய்யுட்களில் வருஞ் செய்திகள் சிறந்த நாடகக் காட்சிகளாக இடம்பெறத் தக்கவை. காட்டாக, 20-ஆம் செய்யுளை இங்குக் காட்டுவோம்: காமஞ்சாலா இளமைப்பெண் சிறந்த அழகுடன் காட்சி யளிக்கிறாள். அவளைக் கண்ட இளைஞன் ஒருவன், பூவும் மயிரும் தம்முள் மயங்கும்படி முடித்துக் கொண்டு இங்கு வருபவர் யார்? கொல்லிமலைப் பாவையோ? நல்லார் உறுப்பெலாங் கொண்டு வல்லான் வகுத்த அழகியோ? பெண்ணுருவம் கொண்ட கூற்றமோ? இல்லை. இவள் இவ்வூர் மகளாகவே காணப்படுகிறாள், இவளைக் காத்தவர் இவ்வாறு தனியே விடுதல் கொடிது என்கிறான். பின்னர் அவன் அவளை நோக்கி, நல்லாய், யான் கூறுதலைக் கேள் என்று அவளைத் தடுத்து, கண்டவர் காதல் கொள்ளும் பண்புடையாளே, உன்னுடைய அன்ன நடையும், மயிற்சாயலும், புறவின் மடப்பமும்-கண்டோர் கருத்தை ஈர்க்கும் என்பதை நீ அறிவாயோ? அறியாயோ? நிறத்தாலும் திரட்சியாலும் மூங்கிலை ஒத்தும் மென்மை யால் அணையை ஒத்தும், காமக்கடலை நீந்தத் தெப்பமாதலால் புணையைஒத்தும் விளங்கும் நின் தோள்கள்-நின்னைக் கண்டார்க்குத் துன்ம் செய்யும் என்பதை நீ அறிவாயோ? அறியாயோ? கோங்கின் இளமுகை போன்றதும், அடி வரைந்து கட்புலனான குரும்பை போன்றதும், மழை மொக்குகளைப் போன்றதும் ஆகிய நின் இளைய நகில்கள்-நின்னைக் கண்டார் உயிரை வாங்கும் என்னும் நிலைமையை நீ அறிவாயோ? அறியாயோ? எனக் கேட்கின்றான். அவள் பேசாது நிற்கின்றாள்; போக முயல்கின்றாள். அவ்வெல்வை அவன், பதில் கூறாது செல்பவளே, யான் கூறுவதைக் கேள்: நீயும் தவறிலை; உன்னைப் புறப்படச்செய்த நுமரும் தவறிலர்; மதம்பிடித்த யானையைப் பறையறைந்தபின் வெளிச் செல்ல விடுதல் போலப் பறைசாற்றியபின் உன்னை வெளியே வரவிடச் செய்யாத அரசனே தவறுடையான் என்று முடிக்கின்றான்; காட்சி முடிகின்றது. இத்தகைய இனிய காட்சிகள் இக்கலியில் பலவாகும். 3. உரையாடல் தோழியும் தலைவியும், தோழியும் தலைவனும், தலைவனும் தலைவியுமாக உரையாடும் செய்யுட் பகுதிகள் நிரம்பியது இக்குறிஞ்சிக்கலி. குரவை யாடுகையில் உரையாடலும் (செ. 3), வள்ளைப் பாட்டில் உரையாடலும் (செ. 4, 5, 6, 7) இன்பச் சுவை பயப்பன. செ. 25-இல் தோழிக்கும் தலைவற்கும் நடைபெறும் உரையாடல் நகைச்சுவை பயப்பது. செ. 26-இல் தலைவி தலைவன்மீது காமப்பழி சுமத்தலும், அவன் பதில் கூறலும், அவள் முடிவு கூறலும் கற்றோர் இதயம் களிப்பிக்கும். காட்டாக ஒன்று காட்டுதும்: (பாறையாகிய உரலில் மூங்கில் நெல்லையிட்டு யானைத் தந்தமாகிய உலக்கையால் குற்றிக் கொண்டே தோழியும் தலைவியும் பாடுதல்; இங்குத் தலைவி தலைவனை இயற்பழிக்கிறாள்; தோழி இயற்பட மொழிகிறாள்.) தலைவி; என்ன வியப்பு! சூள் பொய்த்த நம் தலைவன் மலையில் உள்ள அருவி நிறைய நீர் இருக்கிறதே! தோழி:- சூள் பொய்த்தவனோ? அவன் சூளில் பொய் தோன்றுமாயின், அது திங்களில் தீ தோன்றியது போலாம். தலைவி:- என்னிடம் கூறியபடி வாராதவன் மலையில் இளமழை ஆடுகின்றதோ? என்ன வியப்பு! தோழி:- வாராதிருப்பனோ? அவன் அருளிடத்தே கொடியது தோன்றும் என்பது, குளத்து நீரில் உள்ள குவளை வெந்தது போலாம். தலைவி:- என் உடலைச் சேராது துறந்தவனது மலை நீலமணி போலத் தோன்றுகிறதே, என்ன வியப்பு! தோழி:- தலைவன் நம்மைத் துறப்பவன் அல்லன். அவன் உறவில் கொடியவை தோன்றல் என்பது, ஞாயிற்றுள் இருள் தோன்றியது போலாம். (இவர்கள் இங்ஙனம் பாடிக்கொண்டே நெற்குற்றுதலைத் தலைவன் சிறைப்புறமாக இருந்து கவனிக்கிறான்; `நாம் இவளை மணக்கத் தாழ்த்தலால் வருந்தியன்றோ தலைவி நம்மை இயற்பழிக்கிறாள்; ஆதலின், உடனே விரைந்து மணமுடித்தல் நலம், என முடிவு செய்கிறான்; மணம் பேசவரும் அவனைத் தலைவியின் தந்தை ஏற்று, வேங்கை மரத்தடியில் அமர்ந்து மணம் பேசி முடிக்கிறான்.) இப்பகுதி உரையாடற்கே அன்றி, நாடகக் காட்சிக்கும் சிறந்த காட்டாகுமன்றோ? 4. சுவை பயக்கும் செய்திகள் கானவன் விட்ட கவண்கல் இரவில் யானையின் காலடி ஓசையைக் கேட்ட தினைப்புனக் கானவன், ஓசை வந்த திசை நோக்கிக் கவண்கல்லை வீசிவிட்டனன். அக்கல் வேங்கைப் பூக்களைச் சிதறல் செய்தது; கனிந்த ஆசினிப் பலாப்பழங்களை உதிர்த்தது; தேன் அடையைத் துளைத்தது; மாங் கொத்துக்களை உழக்கியது; வாழை மடலைக் கிழித்தது; இறுதியில் பலாப்பழத்துள் தங்கிவிட்டது (செ-5) யானையின் கனவும் நனவும் யானை புலியோடு போரிட்டு வென்றது; வென்ற வருத்தத்தோடே தூக்கத்தில் ஆழ்ந்தது; அதன் நனவே கனவில் தோன்ற வெருவி எழுந்தது; அருகில் மலர்ந்திருந்த வேங்கை மரத்தைப் புலியென நினைத்தது; கொண்டது சீற்றம்; அதனைத் தன் வலிய கொம்புகளாற் குத்தி அதன் எழிலைக் கெடுத்தது; சினம் தணிந்த பின்னரே தான் தாக்கியது மரம் என்பதை அறிந்தது; அறிந்ததும் நாணித் தலை கவிழ்ந்தது. (இத்தகைய குறிஞ்சி நில விலங்குகளின் செயல்கள் பல இப் பகுதியிற் கூறப்பட்டுள்ளன.) (செ. 10) சொல் நயம் (1) தோழி இரவில் வருந் தலைவனை வழியின் அருமை கூறிப் `பகல் வருக என்றல்:- ஐயனே, நீ இத்தலைவிபால் காதல் உடையை என்பதோ இனிது; ஆனால் இடி என்றும் மழை என்றும் பாராமல் அஞ்சத்தக்க இரவில் நீ வருதல் இன்னாது. இவள்பால் நீ அன்புடையை என்பதோ இனிது; ஆனால் முகில்கள் படியும் மலைக்கணவாய் வழியே நீ இரவில் வருதல் இன்னாது. நீ இவள்பால் அருள் உடையை என்பதோ இனிது; ஆனால் யானை உலவும் அரிய வழியில் நீ வேலேந்திவரல் எமக்கு இன்னாது. (செ. 13) (2) தோழி, இரவில் தலைவனது வருகை துன்பமானது என்று கூறி, விரைவில் மணஞ் செய்து கொள்ளுமாறு தலைவனைத் தூண்டுதல்:- தலைவி செய்த குறியிடத்தே நீ இராப் போதில் வரின், மலையில் நின்று புலியைக் கொள்ளும் அணங்கு என்று இவ்வூரார் கருதி நின்னை அஞ்சுவர். நீ செய்யும் கொம்போசை கேட்கின், கல்லெறியும் கவணையும், எரியும் கொள்ளியையும் வில்லையும் உடைய கானவர், யானை வந்ததென்று கருதி ஆரவாரம் செய்வார்கள். நீ குறியிடத்து வருங்கால், நின்னைக் கண்டு விலங்கு முதலியன அஞ்சி ஓடும் ஓசையாலே நின்னைப் புலி என்று இவ்வூர் எண்ணுமே! ஒப்பற்ற அறிவுடையாய், இக்களவு ஒழுக்கம் ஊரார் அறியின் தலைவி உயிரோடிராள்; அவளின்றி யான் வாழேன்; ஆதலின், நீ பலர் அறிய மணத்தலை விரும்புகிறேன். நீ அப்போது புதியவன் போல் வரும் நின் வரவையும், தலைவி, மனத்தில் தோன்றிய நாணினால் ஒடுங்கியிருக்கும் ஒடுக்கத்தையும் யான் காண அவாவுகிறேன். (செ. 16) தோழி தலைவனது துன்ப நிலையைக் கூறித் தலைவியை உடம்படுத்த முயலும் முறையும் அதற்குத் தலைவி கூறும் பதிலும் (செ. 24, 25) படித்துச் சுவைத்தற்கு உரியன. பெருந்திணைப் பேச்சு தலைவன்:- நின் உடல் புல்லற்கு இனிதாயிருந்ததாற் புல்லினேன். தலைவி:- தமக்கு இனியதென்ப தொன்றே கொண்டு, பிறர்க்கின்னாததைச் செய்வது இன்பந் தருமோ? தலைவன்:- தண்ணீரைப் பருகுவோர் தமக்கு இனியதென்று பருகுவரே அன்றி, அது நீர்க்கு இனியதெனப் பருகுவரோ? (செ. 26) நகைச்சுவை: தோழி, தலைவியிடம் தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறல்:- நேற்றிரவு நடந்த வேடிக்கையைக் கேள்: தலைவன் வரவை எதிர்நோக்கி யான் வெண் துகிலைப் போர்த்துக்கொண்டு நள்ளிரவில் குறியிடம் சென்று நின்றேன். மயிரற்ற தலையும் கருங்குட்டத்தால் குறைந்தகையும் காலும் உடைய-நாம் அறிந்த முடமாகிய முதிர்ந்த பார்ப்பான் அங்கிருந்தான். அவன் என்னை நோக்கி, `பெண்கள் நிற்கத்தகாத இந்நள்ளிரவில் வந்து இங்கு நிற்கும் நீ யார்? என்று முற்படக் கூறி, `சிறியவளே, நீ என்னிடம் அகப்பட்டாய், என்று கூறிப் பையெனப் பணிந்து, வைக்கோலைக் கண்ட முதிய எருதைப்போல என் பக்கத்தினின்றும் போகாதே நின்றான்; நின்று, `தையால், தம்பலம் தின்பாய் என்று தன் பையைக் குலைத்து, `நீ எடுத்துக் கொள் என்றான். யான் வாய்திறவாமல் நின்றேன். அவன் அஞ்சினான்; சிறிது எட்ட நின்று, `நீ பெண்பாற் பசாசு; யான் ஆண்பாற் பசாசு. எனக்கு அருள் செய். இல்லையேல் நீ பெறும் பலியை ஊராரைக் கொண்டு நிறுத்துவேன் என்று பல பேசினான். யான் உடனே ஒரு கையில் மணலை அள்ளி அவன்மீது விடாது தூவினேன். அவன் ஊரார் கேட்க அலறி ஓடினான். அக் காமுகன் நேற்றிரவு செய்த நாடகம் இதுதான். தலைவனைக் காணச் சென்ற இடத்தே அக்காமுகன் இருந்த தன்மை-புலியைப் பிடிக்க வைத்த வலையிலே குறுநரி அகப்பட்ட தன்மையாயிற்றன்றோ? (செ. 29) இத்தகைய சுவை பயக்கும் செய்திகள் இக்கலியில் மேலும் பல உள. அவற்றை நூல் கொண்டு உணர்க. 5. உவமைகள் குறிஞ்சிக்கலியுள் உள்ளுறை உவமங்கள் பல உள; ஒரு சில அணி வகைகள் உள; 124 உவமைகள் இருக்கின்றன.3 அவற்றுள் காட்டாக ஆறு தருதும். (1) சிவபெருமான் உமையம்மையோடு இருந்த கயிலையை ஐயிரு தலையுடைய அரக்கர் கோமான் பெயர்க்க முயன்று முடியாது கதறியது போல-யானை (புலியென நினைந்து) வேங்கை மரத்தைத் தன் கோட்டாற் குத்தி, அதனை மரத்தினின்றும் வாங்க மாட்டாது மலைப்பக்கமெல்லாம் கேட்கும்படி ஓசையிட்டு அலறியது. (செ. 2) (2) கற்புடை மகளிர் நாணி இறைஞ்சு நிலை போலத் திணைக்கதிர் முற்றித் தாழ்ந்து இருந்தது. (செ. 4) (3) எதிர் எதிராக இருக்கும் மலைகளிலிருந்து அருவி நீர், இடைநிற்கும் வேங்கை மரத்தின்மீது பாயுந்தன்மை-இரண்டு யானைகள் பூவொடு கூடிய நீரைத் தாமரை மலர் மீதுள்ள இலக்குமி மீது சொரிதலைப் போன்று இருந்தது. (4) யானையும் புலியும் சண்டையிட்டபோது வண்டு, வேங்கைப்பூங்கொம்பென்று கருதி வேங்கை யைச் சூழ்ந்தும், வேங்கைச் சினை என்று யானை முகத்தை அணுகியும் அலைந்து கொண்டிருந்த நிலைமை-போர் தொடங்கிய மன்னர் இருவரை நட்பாக்குவார், பலகாலும் இருவர்பாலும் போதலும் வருதலுமாகிய நிலைமைய ஒத்திருந்தது. (செ. 10) (5) வறுமையுற்ற அறிவுடையோர் தமது நிலைமையைக் கூறி உதவிபெற விழைந்து அணுகினார்பால் அதனைக் கூறத் தொடங்கிப் பின்னை அதனை முடியச் சொல்லமாட்டா திருப்பாரைப் போல-தலைவன் தோழியிடம் தன் குறையை அறிவிக்கச் சென்று, அதனைக் கைவிட்டு அவளைப் பலகாலும் பார்த்தான்; பின்னர் அவள் நோக்கத் தலைவன் மெத்தென தலையிறைஞ்சி நின்றான். (செ. 25) (6) தலைவன் அருள் பெறாத தலைவி:- (1) நீரற்ற வயலானாள். (2) பொருள் இல்லான் இளமை போன்றாள். (3) அறம் சாரான் மூப்பே போன்றாள். (7) தலைவன் அருள் பெற்ற தலைவி: (1) கார்பெற்ற வயலானாள். (2) அருள்வல்லான் ஆக்கம் போன்றாள். (3) திறம்சேர்ந்தான் ஆக்கம் போன்றாள். (செ. 2) 6. தெய்வங்கள் குறிஞ்சிக்கலியுள் கூறப்பெற்றுள்ள தெய்வங்கள்:- (1) சிவபிரான் உமையம்மை- இமயமலையில் இருத்தல்; இராவணன் கயிலையைப் பெயர்த்தல் (செ. 2) (2) தெய்வமகளிர்- இவர்கள் பந்தாடிய இளைப்புத் தீர மலையருவியில் நீராடல் உண்டு (செ. 4) (3) வரையுறை தெய்வம்- இதற்குப் பலியிடல் குறவர் மரபு. (செ. 3, 16) (4) முருகக் கடவுள்- குறவர் திணைநிலத் தெய்வம். குறத்தியர், தலைவனுக்கும் முருகற்குமாக ஏற்ப வள்ளைப் பாட்டுப் பாடல் மரபு. (செ. 7) (5) கஜலட்சுமி- இஃது ஏனைய தொகை நூல்களில் அருகியே காணப்படுகிறது. (செ. 8)4 (6) பிரமன்- இவன் `வல்லவன் (படைத்தல் தொழில்) எனப்படுகிறான். (செ. 20) 7. புராணக் கதைகள் (1) சிவபெருமான் இமயமலையை வில்லாகக் கொண்டது. (செ. 2) (2) இராவணன் கயிலையைப் பெயர்த்தது. (செ. 2) (3) வீமன் துரியோதனன் குறங்கினை (தொடையை) அறுத்து. (செ. 16) (4) கண்ணன் மல்லரை அடக்கி வென்றது. (செ. 16) 8. குறிஞ்சி நிலச் செய்திகள் 1. ஆடவர் சிறந்த வீரர்; வில்லையும் கவண் கயிற்றையும் கொள்ளியையும் இரவில் ஏந்தித் தினைப்புனம் காவல் செய்வர்; விலங்குகள் வரும் ஓசை அறிந்து, ஓசைவருந்திசையே கல் விடுவர் (செ. 5); தம் மகளிர் கற்புக்கடம் பூண்ட செய்தி யறிந்ததும் முதலிற் கறுத்துப் பின் உடம்படுவர் (செ. 3); தாம் விரும்பிய பெண்ணைப் பெறாராயின், ஊர் மன்றத்தில் மடலூர்வர் (செ. 22); வேங்கை மரத்தடியில் இருந்து மணம் பேசுவர் (செ. 5); கண் ஏணியை அமைத்து ஏறித் தேன் கூடுகளை அழித்துத் தேன் எடுப்பர் (செ. 3); புலியை வலை கட்டிப் பிடிப்பர் (செ. 29). 2. இளமகளிர் தெருவில் மணல்வீடு கட்டி ஆடுவர் (செ. 15); மரத்தாற் செய்த பாவையையும் பானையையும் கொண்டு விளையாடுவர்; தைந் நீராடும் வழக்குடையர்; நோன்பெடுத்து வீடுதோறும் சென்று ஐயம் ஏற்றும், அதனை இரந்தோர்க்கு ஈந்தும், சிறுசோறு சதைத்து ஆயத்தார்க் கீந்தும் களிப்பர். (செ. 23); இளைய நகில்மீது தொய்யிற் கொடி போன்று எழுதிக் கொள்வர் (செ. 18); தோளில் கரும்புபோல எழுதிக்கொள்வர் (செ. 28); இப்பழக்கமே பிற்காலத்தில் பச்சை குத்திக்கொள்ளும் பழக்கமாக மாறியதென்னலாம். மகளிர் பொன்னால் செய்த பலவகைப் பூக்களைச் செய்து கூந்தலில் அணிவர்; மகரவாயாகச் செய்த தலைக் கோலத்தைக் கூந்தலில் வைத்து அணிதலும், பொன்னைக் கூறுபடுத்தின வகிர்களைக் கூந்தலில் வைத்து, இடையிடையே தாழம்பூவின் போழையிட்டு அழகு செய்தலும் உண்டு (செ. 19); பிறர்க்குப் பொற்கரத்திலும் நீர் கொடுத்து உதவுவர் (செ. 15); பாறையில் உள்ள பள்ளத்தையே உரலாகவும், சந்தன மரத்தாற் செய்த உரலையும் பயன்படுத்துவர்; சந்தனமர உலக்கை, யானைக்கொம்பால் செய்த உலக்கை இவற்றை நெல் குற்றப் பயன் படுத்துவர்; சேம்பின் இலையைச் சுளகாகக் கொள்வர்; தலைவனைப்பாடி நெல் குற்றுவர் (செ. 4, 5, 6, 7); மணம் கைகூடின், வரையுறை தெய்வத்திற்குப் பலியிடுவர் (செ. 10); மெய்தொட்டுச் சூள் செய்வர் (செ. 27); வரையுறை தெய்வத்தை நினைந்து குரவையாடுவர் (செ. 3); ஞாழல் பூவைத் தலையில் சூடிக்கொள்வர் (செ. 20). 3. புலி யானையைக் கொல்லும் வன்மையுடையது; யானையின் செவி மறைவில் மறைந்து அதன் மேல் பாயும். (செ. 16) 4. யானை புலியோடு போர் செய்யும்; அதன் உருவம் போன்ற பூத்த வேங்கை மரத்தைக் கண்டு பொறாது. அதனைத் தாளில் குத்தி நெரிக்கும் (செ. 2); புலியை வென்ற வருத்தத்தோடு செல்கையில் வேங்கை மரத்தைத் தாக்கிச் சினந்தணியும்; கனவில் அப்புலியைக்கண்டு அஞ்சி எழுந்து, புலிபோல் பூத்திருக்கும் வேங்கை மரத்தை அழித்துச் சினந்தணியும்; பின்னர் அதனைக் காண்கையில் நாணமுற்றுத் தலை தாழ்த்துச் செல்லும் (செ. 13); தன் மேல் பாய்ந்த புலியின் மருமத்தில் கோட்டால் குத்தி அதனை வீழ்த்தும் (செ. 16); பிடி தன்பால் இருக்கையில் வேறு யானை வருமாயின், அதன் நுதலிங் கோட்டால் குத்தித் தாக்கும் (செ. 17); சூல்கொண்ட பிடிக்குக் கரும்பினை ஒடித்து ஊட்டும் (செ. 5); யானை அருவி ஒலியில் தூங்கும் (செ. 6). 5. காந்தள்: இதன் முகை இரத்தம்பட்ட யானைக் கொம்புபோல இருக்கும் (செ. 17). இது மழைக்காலத்தில் செழித்திருக்கும் (செ. 17). பூ மிக்க மணமுடையது (செ. 23); காந்தட்குலை அரவு உருவம் உள்ளது (செ. 9). 6. வேங்கை: இதன் அடி முழவுபோல இருக்கும் (செ. 8); வேங்கை மரம் புலியின் நிறம்போலப் பூக்கும் (செ. 2). 9. மக்கள் ஒழுக்க நிலை 1. காதல் கொண்ட கணவரை மணத்தலே குறிஞ்சி நிலப் பெண்கள் இயல்பு; வேறு மணம் பேசலை விரும்பார்; தம் களவைக் குறிப்பால் பெற்றோர்க்கு உணர்த்துவர்; அவர் உடம்படாராயின் தலைவனுடன் போய்விடுவர். தன் தோழியை வேறு ஒருவர்க்கு மணமுடிக்கக் கருதினர் பெற்றோர் என்பதை உணர்ந்த தோழி ஒருத்தி வருந்திக் கூறல் படித்து உணரத் தக்கது: (I) இவளைக் குளத்திலிருந்து காத்தவனுக்குக் கொடாது வேறொருவற்குக் கொடுக்க நினைந்தமை அறமன்று. இங்ஙனம் அறம் அல்லாததைச் செய்வதால், இனி இம்மலை நாட்டில் கிழங்கு கீழ்வீழா; தேன் அடைகள் உண்டாகா; தினைகளும் கதிர்விடா. (II) குறமகளிர் தத்தம் கணவரைத் தப்பாராய் அவரே தெய்வம் என்று வணங்கி எழுந்திருத்தலாலே, அவர்தம் ஐயன்மார் தாமும் வேட்டை தப்பார். (இனி அது தப்பும் போலும்) (செ. 3) 2. கொடிச்சியர் தம் கரமிரண்டும் கூப்பித் தம் குறைதீர முருகனை வணங்கல் மரபு. 3. தலைவனைத் தலைவி பழித்துக் கூறுங்கால், தோழி தலைவனை உயர்த்திக் கூறலும் (செ. 5), தோழி பழித்துரைக்குங் கால் தலைவி தலைவனை உயர்த்திக் கூறலும் (செ. 6) குறமகளிர் பெண் தன்மையை உயர்த்திக் காட்டுகின்றன. தலைவி, தலைவன் அறம்புரி நெஞ்சத்தவன்; தன் மலை நீரினும் சாயல் உடையோன்; நயந்தோர்க்குத் தேரைக் கொடுக்கும் வண்கையன்; அஞ்சுவது அஞ்சா அறனிலி அல்லன்; அவன் என் நெஞ்சம் பிணித்தவன் ஆவான் (செ. 6), எனத் தலைவன் இயற்பட மொழிதல் இன்பம் தருவதாகும். 4. காதலன் செய்யும் கொடுமையைத் தலைவி தோழிக்கும் சேரிக்கும் ஆயத்துக்கும் அறிவியாதிருத்தலும் உண்டு. தோழிக்கும் அறிவியாதிருத்தலே வியக்கற்பாலது. (செ. 8) 5. தலைவன் இயல்புகளைத் தோழி தலைவிக்குக் கூறுதல் சுவைதரத் தக்கது: என்னைக் குறையிரந்து நிற்கும் தலைவன் அதே சமயம் வலிய உலகத்தைப் பாதுகாப்பவன் போன்ற வலிமையும் உடையவன்; வல்லார் வாய்க்கேட்டு மெய்ப்பொருளை அறிந்தவன்போல, நன்மக்களைக் கண்டால் தோன்றும் மன அடக்கம் உடையவன்; வறியோர் வறுமையைக் கொடையிற் போக்கும் வலியன்; இத்தகைய பெருங்குண முடையான் என்னைக் குறையிரத்தலைக் காண். (செ. 11) இங்ஙனமே செ. 14 முதலியவற்றில் தலைவன் சிறப்பியல்புகள் தோழியாலும் தலைவியாலும் பல படப் பராட்டப்பட்டுள. இவை இக்குறமகளிர்தம் ஒழுக்க நிலையையும் அறிவு மேம்பாட்டையும் தலைவன் உயர்வையும் அளந்து அறிவிப்பன ஆகும். 6. தலைவி தோழிக்கு அறத்தொடு நின்று இறுதியில், நான், நம் குடிக்கு வடுவாகாமல் கற்புக் கடம்பூண்ட செய்தியை உரியவர்பால் உரை. நீ உரைப்பின், நிலையற்ற உலகில் நிலைநிற்பதோர் புகழ் நமக்குப் பொருந்தும், என்று கூறலை எண்ணிப் பார்மின்! (செ. 18). காதல்கொண்ட கணவனை மணத்தலே நிலையற்ற உலகில் நிலை நிற்பதோர் புகழாம்! ஆ! என்னே குறமகள் நுண்ணறிவும் ஒழுக்கமும்! 7. பொருந்தாக் காமமாகிய பெருந்திணையுள்ளும் தலைவி, மகளிரை வலிதிற் புணர்தலும் ஒரு மணம் எனத் தலைவன் கூறல் மெய்யாயின்-உலக ஒழுக்கமும் அத்தன்மைத்தாயின் - யான் மறுப்பதால் இவன் நலியுமாயின்-இவன் மனத்தில் `முற் பிறப்பில் யானும் இவளும் வேறல்லம் என்பதொன்று தோன்றுமாயின்-நாம் மறுப்பதில் என்ன பயன்? எனக்கூறி உடம்படுகிறாள். இப்பெருந் திணை தலைவியின் பேரறிவு காணத்தக்கது அன்றோ? (செ. 26) 10. தோழியும் தலைவியும் உரையாடல் தோழி: நங்காய், தன்னிடத்துப் பொருகின்ற யானை ஒத்த தன்மைகெட்டு மனமுடைந்து உள்ளே உருகுவான் போல ஒருவன் என்னை நோக்கிப் பலகாலும் வருகிறான். தலைவி: நீ தெருவில் கலங்குவோரைக் கண்டெல்லாம் கவலைப்படல்-காசியில் பிறர் வருத்தம் தம் வருத்தமாகக் கருதும் பெருமக்கள் செயலை ஒத்துளதே! தோழி: தலைவன் தன் நோய்க்கு நீயே மருந்து என்கின்றான். என் செய்வோம்? தலைவி: (நகைத்து) யென் செய்வோம் . . . . . . . . . . உலக ஒழுக்கத்தைத் தப்பி ஒருவன் தெருவில் நின்று கூறுங்கூற்றை உண்மை என்று கொண்டு, அதன் உண்மையை உணராமல் பேசல் நன்றென்று கூறக்கடவோம். தோழி:- நின் கருத்து இதுவாயின், ஒருவன் சாதல் எளிதென்று கூறக்கடவோம். தலைவி: குடிப் பிறந்தார்க்குரிய ஒழுக்கமற்ற நெஞ்சுடையார்க்கு இறத்தலே நன்றென்று கூறு. (செ. 24) இவ்வுரையாடலில் நகைச் சுவை, தலைவியின் கற்பொழுக்கம், உலக ஒழுக்கத்திற்கு அக்காலத்திலிருந்த மதிப்பு, குடி ஒழுக்கத்தைப் பாதுகாத்தல், பிறர்க்கிரங்கும் தோழியின் உயர்நிலை, இன்ன பிறவும் கண்டு களிக்கலாம். இவை போன்ற அரிய செய்திகள் பலவற்றை நூற்கொண்டு உணர்ந்து மகிழ்க. 9. ஐவருக்கு மனைவி பாரதச் செய்தி பாண்டவருள் நடுவனான அருச்சுனன் அம்பு எய்து வென்ற பாஞ்சாலியை, ஐவரும் மணந்து கொள்ள வேண்டுமென்று தருமன் கூற, துருபதன் கேட்டுக் கலக்கமுற்றான். அவ்வமயம் வியாச முனிவன் அங்குத் தோன்றிப் பாஞ்சாலியின் முற்பிறப்பு வரலாற்றைக் கீழ்வருமாறு கூறினான்: இப்பாஞ்சாலி ஒரு பிறப்பில் நாளாயணி என்ற பெயருடன் மௌத்கல்ய முனிவனை மணந்தாள். அம்முனிவன் இவளுடைய கற்பையும் கணவன் மாட்டு இருந்த அன்பையும் சோதிக்க விரும்பிக் குட்ட நோயாளனாக உரு மாறினான். நாளாயணி அந்நிலையிலும் அவனிடம் அளவற்ற அன்புடன் நடந்துகொண்டாள். அது கண்டு மகிழ்ந்த முனிவன். தன் மெய்யுருவைக் காட்டி உண்மையை விளக்கினான். `நீ விரும்பும் வரத்தைக் கேள் என்று முனிவன் கூறினான். நாளாயணி, `உன் அன்பு என்றும் நீங்காதிருத்தல் வேண்டும் என்று வேண்டினள். அவனும் அவ்வாறே வரங் கொடுத்தான். பின்பு கணவனும் மனைவியும் குன்றாகவும் ஆறாகவும், மரமாகவும் கொடியாகவும் வடிவு கொண்டு இன்புற்றும், இவ்வாறு பற்பல உருவங்கள் எடுத்து இன்புற்றும் மறைந்தனர். அடுத்த பிறவியில் நாளாயணி இந்திரசேனை என்னும் பெயருடன் பிறவி எடுத்தாள்; மௌத் கல்யனும் புதிய பிறவி எடுத்தான். ஆயினும் அவன் இல்லற வாழ்க்கைக்கு அஞ்சித் துறவறம் சேர்ந்தான். இந்திரசேனை தன்னை மணந்து கொள்ளுமாறு அத்துறவியை வேண்ட, அவன் சினந்து, `நீ என் தவத்திற்கு இடையூறு புரிவதனால் துருபதன் மகளாய்ப் பிறக்கக் கடவை; உன்னை ஐவர் மணப்பர், என்று சபித்தான். அவள் செய்வகை அறியாது சிவனை நோக்கித் தவம் புரிந்தாள். சிவன் அவள்முன் தோன்றினான். இந்திரசேனை, `எனக்கு ஏற்ற கணவனைத் தருக என்று ஐந்துமுறை அடுக்கிச் சொன்னாள். சிவன் `அப்படியே ஆகுக என்று வரம் கொடுத்தான். அது கேட்ட இந்திரசேனை மகிழாமல், ஒரு நாயகனைத் தரும்படி வேண்ட, சிவன், `நீ ஐந்து முறை வேண்டியபடி நான் உனக்கு ஐந்துதரம் அருளியது தவறாது. இவ்வரத்தின் பயனை நீ மறு பிறப்பில் நுகர்வாயாக; இக்கங்கையில் மூழ்கிவா; உன் எதிரில் தோன்றும் ஆடவனை என்னிடம் அழைத்து வா, என்றான். அப்பொழுதே ஒரு கணவனைப் பெறாமல், மறு பிறப்பில் கணவர் ஐவரைப் பெறவேண்டுமே என்ற கவலையுடன் இந்திரசேனை கங்கையில் முழுகி எழுந்தாள். அவளது கண்ணீர் கங்கையில் விழுந்து பொற்றாமரை மலராகக் காட்சியளித்தது. அப்பொழுது அங்கு வந்த தேவேந்திரன் அதனைக் கண்டு வியந்தான். அவனைக் கண்ட இந்திரசேனை அவனைத் தன்னுடன் வரும்படி அழைத்துச் சென்று, சிவபெருமான் திருமுன்பு நின்றாள். இந்திரன் சிவனை வணங்காது செருக்குடன் நடந்துகொண்டான். சிவன் சினந்து, அவனை ஒரு குகைக்குள் தள்ளிவிட்டான். அக்குகையில் வேறு இந்திரர் நால்வர் இருந்தனர். சிவபிரான் அவர்கள் ஐவரையும் வெளியே அழைத்து, `நீங்கள் ஐவரும் நிலத்தில் பிறந்து இவளுக்குக் கணவராகுக, என்று கட்டளையிட்டான். அதன்படி இந்திரர் ஐவரும் இப்பாண்டவராகப் பிறந்தனர். இந்திரசேனை பாஞ்சாலியாகப் பிறந்தாள். ஆதலால் பாண்டவர் பாஞ்சாலியை மணந்துகொள்வதில் தவறில்லை. இவ்வரலாறு கேட்ட பின்பு துருபதன் தன் மகளை ஐவருக்கும் மணமுடித்தான். இச் செய்தி வியாச பாரதத்திலும் வில்லி பாரதத்திலும் காணப்படுகிறது. உலக நடைமுறைக்கு மாறாக (இச் செய்தியில் காணப்படும்) முனிவன் செயலையும், சிவன் வரம் தந்த வரலாற்றையும் ஆராய்ச்சியாளர் சமயப் புனைந்துரை (Mythology) என்று ஒதுக்கிவிடுவர். பாஞ்சாலி ஐவர்க்கு மனைவியானாள் என்பது இவ் வரலாற்றால் அறியப்படும் உண்மையாகும். `இங்ஙனம் ஒருத்தி ஒரே சமயத்தில் பலரை மணந்து வாழ்தல் இலக்கியம் கண்ட உண்மையா? வழக்கில் உண்டா? என்பன கேட்கத்தகும் கேள்விகள் அல்லவா? இவற்றுக்கு விடை காண்டல் பாஞ்சாலி பற்றிய சிக்கலைத் தீர்க்க உதவி புரியும். இலக்கியச் சான்று இந்தோ-ஆரிய மக்களிடம் ஒரு காலத்தில் ஒருத்தி ஒரே சமயத்தில் பலரை மணந்து வாழ்தல் வழக்கில் இருந்திருத்தல் வேண்டும் என்பதற்கு மகாபாரதத்தில் வருகின்ற சில செய்திகளே சான்றாகும். பாஞ்சாலி பாண்டவரை மணப்பதற்கு முன்னரே ஜடிலகவுதமி என்ற பார்ப்பன மங்கை இருடிகள் எழுவரை மணந்து வாழ்ந்தாள்; மரிசா என்பவள் பிரசேதர் பதின்மரை மணந்து வாழ்ந்தாள்; யயாதியின் குடும்பத்தில் பிறந்த மாதவி என்பவள் அரசர் நால்வரை மணந்து வாழ்ந்து வந்தாள். மகாபாரதக் குறிப்புப்படி, இப் பழக்கம் ஒரு காலத்தில் பெருவழக்காக இருத்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது.1 வழக்கிலும் உள்ளது (1) நீலகிரியில் வாழும் தொதவர்களிடம் இப் பழக்கம் இருக்கிறது. ஒரு குடும்பத்திலுள்ள ஒருவனுக்கு மணமுடிக்கப் பட்ட மனைவி, அவன் உடன் பிறந்தார் அனைவர்க்கும் மனைவியாக இருந்து வருவது இன்று வரையிலும் காணத் தக்கது. சில சந்தர்ப்பங்களில் ஒருத்தி தன் இனத்தைச் சேர்ந்த பல்வேறு குடும்பத்தினரை மணத்தலும் உண்டு. மனைவி கருவுறின், அவளுக்கு ஏழாம் மாதம் நடைபெறும் சடங்கிற்குப் பொருளுதவி செய்யும் கணவனே, பிறக்க இருக்கும் குழந்தைக்குத் தகப்பன் என்று கருதப்படுவான். அச்சடங்கில் வில்லும் அம்பும் மனைவியின் கையில் அவன் கொடுத்தல் உண்டு. அங்ஙனம் கொடுப்பவனே குழந்தையின் தந்தை. உடன் பிறந்தார் அனைவர்க்கும் மனைவியாகும் ஒருத்திக்கு, அக்கணவருள் மூத்தவனே அம்பையும் வில்லையும் கொடுத்தல் மரபு. கணவன் உடன்பிறந்தாராக இல்லாதிருப்பின், ஒரு கணவன் வில்லையும் அம்பையும் கொடுக்குமாறு ஏற்பாடு செய்யப்படும். அங்ஙனம் கொடுத்தவன் அடுத்துப் பிறக்கம் குழந்தைக்கும், வேறு ஒரு கணவன் அம்பும் வில்லும் கொடுக்கும் வரையில், தந்தையாகக் கருதப்படுவான். இச்சமூகத்தில் பெண்கள் தொகை குறைவு. அதனால் இச்சமூகத்தில் இப்பழக்கம் ஏற்பட்டிருத்தல் வேண்டும்.2; மலையாளத்தில் (1) தென் மலையாள மாவட்டத்தில் ஐம்பதாண்டுகட்கு முன்னர் இப்பழக்கம் `தீயர் என்னும் வகுப்பாரிடம் இருந்து வந்தது.3 (2) தென் மலையாள மாவட்டத்தில் உள்ள `பாணர் என்னும் வகுப்பாரிடமும் இப்பழக்கம் இருந்து வருகிறது.4 (3) `கணியர் என்னும் வகுப்பாரிடமும் இப்பழக்கம் இருந்து வருகின்றது. மணம் செய்து கொள்ள விரும்பும் சகோதரருள் மூத்தவன் மணம் பேசி முடிக்கப்பட்ட பெண் வீட்டுக்குச் செல்வான்; அவளுக்கு மண ஆடை கொடுப்பான்; மறுநாள் அவளையும் அவள் பெற்றோரையும் உறவினரையும் தன் வீட்டுக்கு அழைத்து வருவான். அங்கு விருந்து ஒன்று நடைபெறும். மணப்பெண்ணும் அவளை மணக்க இருக்கும் சகோதரர் அனைவரும் ஒழுங்காக அமர்வார்கள். அப்பொழுது அவர்களுக்கு இனிப்புப் பொருள் கொடுக்கப்படும். அங்ஙனம் கொடுத்தல், அவள் அச்சகோதரர்க்குப் பொதுமனைவி என்பதைக் குறிப்பதாகும். அவ்வமயம் அக்கிராமத் தலைவன், அவள் அச்சகோதரர் அனைவர்க்கும் மனைவியாகிவிட்டாள் என்று அவையில் கூறுவன். பின்பு விருந்தினர் தத்தம் இல்லம் செல்வர். கணவருள் மூத்தவனும் மணமகளும் மணமகள் இல்லம் சென்று சிலநாட்கள் தங்கி மகிழ்வர். இவ்வாறே ஒவ்வொரு சகோதரரும் அப்பெண்ணுடன் அவள் வீடு சென்று சில நாட்கள் தங்குவர். `கணியர் சோதிடர் ஆதலின், எல்லாச் சகோதரரும் எப்பொழுதுமே வீட்டில் தங்கியிருத்தல் இயலாது; ஒவ்வொருவரும் பல ஊர்களுக்குச் சென்று மீள்வர். எனவே, பெரும்பாலும் வீட்டில் ஒரு சகோதரனே இருத்தல் வழக்கம். ஒருவனுக்கு மேற்பட்டவர் ஒரே சமயத்தில் இருப்பாராயின், ஒவ்வொருவரும் இத்துணை நாட்கள் அவளோடு வாழ வேண்டும் என்பதை அவர்களுடைய தாய் முடிவு செய்வாள் அம்முடிவுப்படி பிள்ளைகள் நடந்து கொள்வார்கள்.5 (4) மலையாள நாட்டில் `கம்மாளர் பூணூல் அணிவதில்லை. அவர்க்குள்ளும் ஒருத்தி பலரை மணக்கும் வழக்கம் இருந்து வருகிறது. மணமகன் வீட்டார் பெண்வீட்டாரிடம் இரண்டு முறை சென்ற பின் மணம்பற்றிய செய்தி முடிவுபெறும். உடனே, கணியன் வரவழைக்கப்படுவான். பெண்ணுக்கும் அவளை மணக்க இருக்கும் சகோதரருள் ஒருவனுக்கும் சாதகப் பொருத்தம் இருந்தால் போதும்; உடனே திருமணம் முடிவு செய்யப்படும். பின்பு பிள்ளைகளின் பெற்றோர் தம் இனத்தவரோடு பெண்ணுக்கு ஆடை வழங்குவர்; அச்சாரப் பணமும் தருவர். குறித்த நாளில் மணமக்களாகிய சகோதரர் அனைவரும் மணக்கோலத்துடன் கையில் தாழங் குடை ஏந்தி மணமகள் வீட்டிற்கு ஊர்வலமாக வருவர்; அங்குப் பெண்ணின் பெற்றோராலும் மற்றோராலும் வரவேற்கப்படுவர். பின்னர் மணப் பெண்ணும் மணமக்களும் மணப்பந்தலில் வரிசையாக அமர்வர். பெண்ணின் பெற்றோர் அவர்களுக்குப் பழங்களையும் சர்க்கரையையும் வழங்குவர். இச் சடங்கு `மதுரம் கொடுக்கல் எனப் பெயர் பெறும். பின்னர் அனைவரும் மணமக்கள் இல்லம் சென்று விருந்துண்பர். அப்பொழுது அங்கு மணமகளுக்கும் மணமக்களுக்கும் பால் வழங்கப்படும். இச்சடங்கு `பால் கொடுக்கல் என்று பெயர்பெறும். திருமண நாளன்று மூத்த சகோதரனே பெண்ணுடன் வாழ்வான். பிற சகோதரர்கட்குத் தனித்தனி நாள் ஒதுக்கப்படும். இக்கணவருள் எனனேனும் ஒருவன் எக்காரணம் கொண்டேனும் வேறொரு மனைவியைக் கொண்டு வருவானாயின், அவள் அவனுடைய பிற சகோதரர்கட்கும் மனைவியாக உரிமை உடையவளாவாள்.6 (5) கி. பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாயர்களின் வாழ்க்கையைக் கவனித்த சீசர் பிரெடரிக் என்ற வெனி நகர வணிகர் (இத்தாலியர்) கீழ் வருமாறு எழுதியுள்ளார்:- நாயர் பலர் கூடி ஒரு நாயர் பெண்ணை மனைவியாகக் கொள்கின்றனர். அவருள் ஒருவன் அவள் வீட்டுக்குச் சென்றதும், வீட்டின் வெளிக் கதவண்டை தன் வாளையும் செருப்பையும் தன் வருகைக்கு அடையாளமாக வைத்துவிட்டு உள்ளே செல்வான். இவற்றைக் கண்ட பிற கணவன்மார் அவ்வீட்டின்முன் வாரார். கி. பி. 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இப்பகுதியைப் பார்வையிட்ட ஹாமில்ட்டன் என்பவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:- ஒருத்திக்குப் பன்னிரண்டு கணவர் வரை இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் குறித்த நாட்களில் அவளுடன் வாழ்வர்; அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுப்பர். குழந்தை பிறந்ததும் அக்குழந்தை எவருக்குப் பிறந்தது என்று தாய் கூறுகிறாளோ, அந்தக் கணவன் அக்குழந்தையைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வான். கி. பி. 18-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் வந்த ப்ரோஸே என்ற யாத்திரிகர் பின்வருமாறு கூறியுள்ளார்:- நாயர்களிடம் விநோதமான ஒரு வழக்கம் இருந்து வருகிறது; அஃதாவது, ஒருத்தி பலருக்குப் பொதுமனைவியாக இருத்தல் என்பது. அக்கணவர் பலருள் பொறாமையோ பூசலோ இல்லாமல் இருத்தல் பாராட்டத்தக்கது. ஒருத்திக்கு இத்துணையர் தாம் கணவராக இருத்தல் வேண்டுமென்ற சட்டம் இல்லை. நான் பார்த்தவரையில் ஒருத்திக்கு அறுவர் அல்லது எழுவர் கணவருக்கு மேல் இல்லை. ஆர். கர் என்ற மேனாட்டறிஞர், மலையாளச் சட்டப்படி நாயர்கள் திருமணம் செய்து கொள்ளலாகாது. அதனால் பலர் கூடி ஒருத்தியை மனைவியாக ஏற்பாடு செய்துகொள்கின்றனர். பகல் பன்னிரண்டு மணியிலிருந்து மறுநாள் பகல் பன்னிரண்டு மணி வரை ஒருவன் அம்மனைவியோடு வாழ்கிறான். இவ்வாறே அக்கணவன்மார் தம்முள் ஏற்பாடு செய்துகொண்டு வாழ்கின்றனர், என்று குறித்துள்ளார்.7 இமயமலைச் சாரலில் இமயமலைச் சாரலில் வாழ்கின்ற மலைவாணர் பலரிடம் இதே பழக்கம் இன்றுவரை இருந்து வருகின்றது. இதுகாறும் கண்ட இலக்கியச் சான்றுகளாலும், வழக்குச் சான்றுகளாலும் ஒருத்தி ஐவரையோ, பலரையோ மணந்து வாழ்தல் தொன்றுதொட்டு வரும் வழக்கம் என்பதை அறியலாம். இதற்கும் சிவபெருமானுக்கும் கடுகளவும் தொடர்பில்லை, என்பது நன்கறியப்படும். உண்மை இங்ஙனமிருக்க, பாஞ்சாலி ஐவரை மணந்தமைக்குத் தெய்வீகத் தொடர்பு கற்பிக்கப்பட்டிருத்தல் வியப்பன்றோ? என்று சிலர் ஐயுறலாம். இடைச்செருகலும் கற்பனையும் இன்று பெரும்பாலான இனங்களைச் சேர்ந்த மக்களுள் ஒருவன் ஒருத்தியை மணந்து வாழும் முறையே வழக்கில் உள்ளது. ஆனால், இதே காலத்தில் ஒருத்தி பலரை மணந்து வாழும் முறையும் வழக்கில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகட்கு முன்-மக்கள் தொகையும் நாகரிக வளர்ச்சியும் மிகுதியும் ஏற்பட்டிராத காலத்தில், ஒருத்தி ஐவரோடு வாழ்ந்தமை வியப்பில்லை. ஆனால் ஒவ்வொரு சமூகத்தின் திருமணப் பழக்க வழக்கங்களை அறியும் வசதியற்ற இடைக்காலத்தில், பாரத வரலாற்றைப் படித்தவர், ஒருத்தி ஐவரை மணத்தல் விபரீதம் என்று கருதி, பாஞ்சாலி வரலாற்றில் வியாசனையும் சிவபெருமானையும் இந்திரர் ஐவரையும் புகுத்திக் கதை கட்டியிருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சி முறையில் கொள்வதால் இழுக்கொன்றுமில்லை. இங்ஙனம் பல நூற்றாண்டுகளாக இராமாயண பாரத நூல்களில் கணக்கற்ற இடைச்செருகல்கள் நேர்ந்துள்ளன என்பதை ஆராய்ச்சியாளர்கள் நன்கு விளக்கியுள்ளனர். இடைக்கால மக்கள் தம் கொள்கைகளை நிலைநிறுத்தற்கும், தம்மால் விளக்கம் கூற முடியாதவற்றுக்கும் ஒரு முடிவு காண்பதற்கும் தெய்வீக பாத்திரங்களை (Supernatural elements)¡ கற்பித்து மகிழ்ந்தனர். `தெய்வத்தால் இது நேர்ந்தது என்று கூறிவிட்டால், கதை கேட்கும் பொது மக்கள் சிந்தனைக்கு இடம் தராமல் அமைந்துவிடுதல் பெரும்பாலும் வழக்கமன்றோ? ஆராய்ச்சியாளர் கூற்று ஆசிய-ஆட்ரேலிய மொழிகளை ஆராய்ச்சி செய்த பேராசிரியர் ப்ரிலகி என்பவர், இந்து மதக் கதைகள் பலவற்றுள்ளும் மச்சகந்தி கதை போன்ற மாபாரதக் கதைகளை ஆசிய-ஆட்ரேலிய மொழிகள் பேசும் மக்களிடம் கேட்கலாம். இவை இப்பண்டை மக்களுடைய கதைகளெனக் கூற இடமுண்டு. பண்டை இந்தியச் சமூக மத விஷயங்களில் ஆசிய-ஆட்ரேலிய நாகரிகம் ஓரளவு குடிகொண்டுள்ளது உண்மையாகும், என்று கூறியுள்ளமை,8 இன்றைய மாபாரதத் திலுள்ள கதைகளுள் சிலவேனும் இந்த ஆசிய - ஆட்ரேலிய மக்களிடம் பன்னெடுங் காலமாக வழங்கி வந்தனவாக இருத்தல் கூடும் என்பதை நம்ப இடம் தருகிறது. வியாச பாரதத்தில் இன்று ஒரு லட்சம் சுலோகங்கள் உள்ளன. இவை நடையில் பல்வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்தனவாகக் காணப்படுகின்றன. எனவே, மூல நூல் மிகக் குறைந்த அளவிலேயே இருந்திருத்தல் வேண்டும், என்று சு. ஊ. டட் போன்ற ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளமையும் கவனிக்கத்தகும்.9 ஒருத்தி ஐவரையும் ஐவர்க்கு மேற்பட்டவரையும் மணந்து வாழ்ந்து வருகின்றமை மேற்கூரிய சான்றுகளால் நன்கு விளங்கும். இம்மணமுறைக்கும் சிவபெருமானுக்கும் யாதொரு தொடர்புமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும். இச் சமூக வரலாறு அறிந்திராத ஒருவர் பாஞ்சாலி வரலாற்றையும், அவளது முற்பிறப்பு வரலாற்றையும் தம் மனோ கற்பனையால் கட்டிவிட்டார் என்று கொள்ளுதலில் வியப்பில்லை. பாஞ்சாலி நெருப்பினின்றும் எழுந்தவள் என்ற கதையும் இக் கூற்றை மெய்ப்பிக்கும். மேலும், சங்க காலத்தில் பாஞ்சாலியைத் தெய்வமாகத் தமிழர் போற்றினர் என்பதற்குச் சான்று காண்பது அருமை. தீப்பாய்ந்த அம்மன் பண்டைக் காலத்தில் கணவன் இறந்தவுடன், அவன் பிரிவாற்றாது மனைவி தீப்பாய்ந்திறத்தல் பெரும்பாலும் வழக்கம்; சிறுபான்மை கைம்பெண்ணாக இருந்து அடுத்த பிறவியில் அக்கணவனோடு ஒன்றுபட வேண்டும் என்று நோன்பிருத்தலும் வழக்கம். காதலர் இறப்பின் கனையெரி பொத்தி ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது இன்னுயிர் ஈவர்; ஈயார் ஆயின் நன்னீர்ப் பொய்கையில் நளியெரி புகுவர்; நளியெரி புகாஅ ராயின், அன்பரொடு;; உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர் பத்தினிப் பெண்டிர் 10 இங்ஙனம் தீப்பாய்ந்து உயிர்விடும் பத்தினியைப் பண்டை மக்கள் பாராட்டிக் கல்நட்டுத் தெய்வமாக வழிபடல் மரபு. அவளைத் தீப்பாய்ந்த அம்மன் என்று அப்பண்டை மக்கள் குறித்தனர். அத்தீப்பாய்ந்த அம்மன் கோவில்கள் பல திரௌபதியம்மன் கோவில்களாக மாற்றப்பட்டன.11 திரௌபதியம்மன் கோவில் களில் தீப்பாய்தல் இன்றும் வழக்கில் உள்ளது. தருமராஜர் இவ்வாறே பௌத்த சமயம் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்த காலத்தில், பல சிற்றூர்களில் புத்தருக்குக் கோயில்கள் கட்டப்பட்ட. புத்தருக்குரிய பெயர்களுள் தருமராஜர் என்பதும் ஒன்று. அப்பெயரால் பல கோவில்கள் தமிழகத்தில் ஏற்பட்டன. பாரதக்கதை தென்னாட்டில் நன்கு பரவத் தொடங்கியபிறகு - பௌத்த சமயம் வீழ்ச்சியுற்ற பிறகு புத்தரான தருமராஜர் கோயில்கள், பாண்டவருள் மூத்தவனான தருமராஜன் கோவில்களாக மாற்றப்பட்டுவிட்டன.12 ஒவ்வொரு கொள்கையினர் நாடாண்டபொழுது அவரவர் கோயில்கள் எண்ணிக்கையில் மிகுதல் இயல்பு. வைணவர் ஆட்சிக் காலத்தில் சிவன் கோவில்களும், பௌத்த சமணர் கோவில்களும் திருமால் கோவில்களாக மாறினமைக்கும், அவ்வாறே சைவராட்சியில் பிற சமயத்தார் கோயில்கள் சில சிவன் கோயில்களாக மாறினமைக்கும் வரலாற்றில் சான்றுண்டு. சமய வெறி தலைதூக்கிய சமுதாயத்தில் இத்தகைய மாற்றங்கள் தோன்றுதல் இயல்பே யாகும். 10. வாணியின் காதல் முன்னுரை காதல் என்பது, மணம் செய்து கொள்ளாத ஒருவன் - ஒருத்தியிடைத் தோன்றும் உள்ள நெகிழ்ச்சி; இவ்விருவர் உள்ளங்களிலும் காதலர் மாறி இடம் பெறுவர். அஃதாவது, காதலன் உள்ளத்தில் காதலி இடம் பெறுவாள்; தன்னைக் காதலுனுக்கு அளிக்க வேண்டும் என்று காதலி நினைப்பாள். இவ்வாறே காதலிக்குத் தான் பயன்பட வேண்டும் என்று காதலன் நினைப்பான். சுருங்கக் கூறின், காதல் என்பது தன் உள்ளங் கவர்ந்த இளைஞனோடு ஒன்றி வாழத் தலைவியைத் தூண்டும் இயற்கை நிகழ்ச்சியாகும்; இங்ஙனமே இளைஞனையும் தூண்டும் இயற்கை நிகழ்ச்சியாகும். இதன் சிறப்பினைச் சங்க நூல்களில் பரக்கக் காணலாம். இக்காதலின் உண்மைத் தன்மையைப் பெற்றோர் பலர் உணராமல், பொய்யான கௌரவங்களை உளத்திற் கொண்டு, தம் மகள் விரும்பியவாறு மணம் முடிக்காமல், தாமே முயன்று வேறொருவனுக்கு மணம் முடித்தலும், தன் மனங்கொள்ளாத ஒருவனை மணக்க விரும்பாத பெண் தன் காதலனோடு ஓடி விடுதலும், அது முடியாத பொழுது தற்கொலை செய்து கொள்ளுதலும் சமுதாயத்திற் காண்கின்றோம். செல்வன் மகள் ஓர் ஏழையைக் காதலிக்கிறாள்; இவ்வாறே செல்வன் மகன் எளிய பெண்ணை காதலிக்கிறான். காதலுக்கு உள்ள நெகிழ்ச்சி காரணமே தவிரச் செல்வமோ, சமுதாயத்திலுள்ள உயர்வு தாழ்வுகளோ, பிறவோ அல்ல. இந்த உண்மையைப் பெற்றோர் உணர்வதில்லை. கை நிறைந்த பொன்னைவிடக் கண் நிறைந்த கணவனே மேல் என்பதுதான் பெண்ணின் கவலை. அப்பெண்ணின் மனநிலை பெற்றோர்க்கு அமைவதில்லை. அவர்கள் சூழ்நிலையையும் பதவியையும் பிற ஆடம்பரங் களையுமே கவனிக்கின்றனர். கல்வியறிவும் மன உறுதியும் உடைய பெண்கள் தங்கள் மனக் கருத்தைச் சிறிதும் மறையாமல் பெற்றோரிடம் கூறிவிடுவர். அறிவுடைய பெற்றோர் அவர் விருப்பப்படியே நடப்பர். அந்நிலையில் அவளது மணவாழ்வு மணமுள்ளதாக ஒளிரும். தாம், நினைத்தபடியே நடத்த வேண்டும் என்னும் பிடிவாத குணமுள்ள பெற்றோர், புதியவன் ஒருவனுக்குத் தம் மகளை மணமுடித்து விடின், அந்த மணவாழ்வு மணமற்ற மலர் போல ஒளி மழுங்கியதாக இருக்கும். அப் பெண் உணர்ச்சியற்றவளாய், நடைப்பிணமாய் வாழ்க்கை நடத்துவாளே தவிர, வாழ்வரசிக்குரிய பொலிவுடன் விளங்கமாட்டாள். இந்நிலை வரும்போது, திருமணத்திற்கு முன்னரே காதலனும் காதலியும், ஓடிவிடுவர்; சிலர் தங்களை மாய்த்துக்கொள்வர்; சில பெண்கள் தம்மளவில் தற்கொலை செய்து கொள்வர். அந்நிகழ்ச்சிகளை நாம் நமது நாட்டிற் காண்கிறோம். இலக்கிய அறிவும் பரந்த உலக அறிவும், எதனையும் எண்ணிப் பார்த்துச் செயலாற்றும் திண்மையும் பெற்றோர் பலரிடம் இல்லாமையே இச் சீர்கேடுகளுக்குக் காரணமாகும். தமது பெண் விரும்பும் காதலன் எச்சாதியானாயினும், எச்சமயத்தவனாயினும், அவனுக்கு மணமுடித்து வைத்தலே அறிவுடைப் பெற்றோர் கடமை. இக் கடமை யுணர்ச்சியைப் பெற்றோர் உணர்ந்து நடப்பாராயின், குடும்பத்தில் கணவன்-மனைவி போராட்டம், ஒழுக்கக்கேடு, கொலை, ஓடிவிடுதல் முதலிய இழி செயல்கள் மிகுந்த அளவு குறையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நிறைந்த கல்வியறிவும், பரந்த உலக அறிவும், உண்மை காணும் உள்ள உரமும், சமுதாய மூடக்கருத்துக்களுக்கு அஞ்சாத நெஞ்சமும் பெற்றோரிடம் தோன்றும் நாளில்தான் இக் குறைபாடுகள் நீங்க முடியும். ஒரு பெண் ஒரு இளைஞனைக் காதலிக்கிறாள். அவள் தந்தை அவளை வேறொருவனுக்கு மணம் செய்விக்க விரும்புகிறாள். இந்த ஏற்பாட்டைப் பெண் மறுக்கிறாள். அரசன் தந்தை வழி நிற்கும் படி மகளை வற்புறுத்துகிறான்-அஞ்சாத நங்கை அரசனை மறுத்துரைக்கிறாள். தந்தை மகளை வெறுக்கிறான், இறுதியில் காதல் வெற்றி பெறுகின்றது. இந்நிகழ்ச்சி பேராசிரியர், சுந்தரம் பிள்ளை எழுதியுள்ள மனோன்மணீயம் என்னும் நாடகத்தில் ஒரு பகுதியாக வருகின்றது. வாணி-நடராசன் சீவகன் பாண்டிய நாட்டு மன்னன்; குடிலன் முதலமைச்சன்; சகடன் என்பவன் பாண்டிய நாட்டுப் பிரபுக்களில் ஒருவன். அவன் மகள் வாணி என்பவள். அவள் சிறந்த படிப்புடையவள்; பேரழகு உடையவள்; வியத்தகு ஒழுக்கமுடையவள். இப் பெண்மணி பாண்டியன் மகளான மனோன்மணியின் உயிர்த்தோழி. இவள் நடராஜன் என்ற இளைஞன்மீது காதல் கொண்டாள். நடராசன் சிறந்த அழகன்; நற்குணங்களுக்கு உறைவிடமானவன்; எதனையும் எண்ணிப் பார்த்துச் செய்யும் ஆற்றலுடையான்; பொறுமையில் மிக்கவன். இவனும் வாணியும் அடிக்கடி தனியே சந்தித்துப் பேசுதல் வழக்கம். ஒருவர் உள்ளத்தில் மற்றவர் குடிகொண்டு விட்டனர். தந்தையின் இடையீடு சகடன் பணம் படைத்தவன்; பொய்யான கௌரவத்தை விரும்பியவன்; அதனால் குடிலன் மகனான பலதேவனுக்குத் தன் மகளை மணம் முடிக்க விரும்பினான்; இதனைத் தன் மகளிடமும் தெரிவித்தான். எதிர்ப்பாராத தந்தையின் முடிவைக்கேட்ட வாணி, இடியோசை கேட்ட நாகம் போல நடுங்கினாள். அவள் அஞ்சா நெஞ்சினள் ஆதலால் தன் தந்தையை நோக்கி, அப்பா, என் உள்ளங் கவர்ந்தவர் நடராஜன். ஆதலால், இனி ஒருவரையும் என் சிந்தையாலும் தொடேன். இது உறுதி, என்று ஆத்திரத்துடன் அறைந்தாள். அரசன் இடையீடு தந்தையான சகடன் அரசனைக் கொண்டு தன் மகளுக்கு அறிவுரைக் கூறத் துணிந்தான். அரசனான சீவகன், எடுப்பார் கைப்பிள்ளை; ஆழ்ந்த அறிவு இல்லாதவன்; எதனையும் எண்ணிச் செய்யும் ஆற்றல் அற்றவன். ஆதலால், அவன் சகடன் பேச்சைக் கேட்டு வாணியைச் சந்தித்தான். இவ்விருவருக்கும் நடைபெறும் உரையாடலே இக்கட்டுரையின் உயிர்நாடிப் பகுதியாகும். மன்னன்:- வாணி, நலத்திலும் குலத்திலும் சிறந்த குடிலன் மகனான பலதேவனை மணக்க மறுப்பது ஏன்? பித்தனை மணக்க விரும்புகின்றாயே! உன் செயல் நகைப்புக்கு இடமாகும். வாணி:- பெருமானே, நாட்டையாளும் மன்னனாகிய உன்னிடம் என் மன நிலையை விரித்துக் கூற, என்னிடம் இயல்பாக உள்ள நாணம் தடை செய்கிறது. ஆயினும், கூறுவேன் கேட்டருள்க: காதல் வயப்படாத திருமணம் வாழ்க்கையின் அழிவுக்குத்தான் காரணமாகும். மன்னன்:- பெண்ணே, நீ கூறுவது புதுமையாக இருக்கின்றது. பெற்றோர் தம் பெண்ணுக்கு மணம் முடித்துவைப்பர். அப்பெற்றோர் சொற்படி நடந்துகொள்வதே பெண்கள் கடமை; பெற்றோர்க்கு மாறாக நடப்பது அறமாகாது. வாணி:- ஐயனே, காதல் என்பது நாமாக ஆக்கிக் கொள்ளும் பொருள் அன்று. துன்பம் நிறைந்த இந்த உலகில் துன்புறும் ஆடவர் நெஞ்சம் குளிரச் செய்தும், தொழிலில் உண்டாகும் கவலையை ஆற்றியும், அவர்தம் நெறிமுறை காத்தும், முயற்சியில் சோர்கின்ற பொழுது ஊக்கம் ஊட்டியும், நற்றொண்டு செய்வது காதல். இக்காதல் இவ்வுலக இன்பத்துக்கு அளவுகோலாகும்; இல்லறம் என்பதற்கு நல்லுயிராகும். இரும்பும் காந்தமும் பொருந்தும் தன்மைபோல் இருவர் சிந்தையும் இயல்பாய் உருகி ஒன்றுபடுவதே காதலின் தன்மை. இக்காதல் ஒருவரால் ஆக்கப்படும் பொருள் ஆகாது. மன்னன்:- இவையெல்லாம் யானறியேன்; பிஞ்சில் பழுத்த பேச்சை விடு; மிஞ்சாதே: தந்தை சொற்படி நட. வாணி:- அங்ஙனம் நடவாவிடின்? மன்னன்:- என்றும் நீ கன்னியாயிருப்பாய். வாணி:- சம்மதம். மன்னன்:- கன்னியாயிருப்பாயின் உன் அழகு பாழாகும். அரைக்கில் அன்றோ சந்தனம் கமழும்? வாணி:- அச்சந்தனக் கட்டையைக் கரையான் அரித்தால் மணக்குமா? மன்னன்:- நீ பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று சாதித்தால் என் செய்வது? வாணி:- இப்பிடிவாதம் பெற்றோரிடமிருந்தால் பெண்கள் எவ்வாறு பிழைப்பர்? மன்னன்:- சகடன் சொற்படி நாம் திருமணத்தை நடத்துவோம். ஆயினும் உன் கருத்தையறிய ஐந்துநாள் தவணை கொடுக்கிறோம். வாணி:- பெருமானே, யான் இறப்பதாயிருந்தாலும் இத்திருமணத்திற்கு இசையேன். யான் மறுத்துக் கூறிய அனைத்தும் பொறுத்தருள்க. முடிவுரை ஐந்து நாட்களுள் சேரனுக்கும் பாண்டியனுக்கும் போர் மூண்டது. சூழ்ச்சியை அரசன் உணர்ந்தான். தன் மகளான மனோன்மணி காதலித்த சேர நாட்டு மன்னனுக்கே தன் மகளைப் பாண்டியன் மணம் புரிவித்தான். அவ்வாறே, வாணியின் விருப்பப்படியே நடராசன் அவளுக்கு மணமகனா னான். இப்பகுதியில் வாணியின் நுண்ணறிவும், களங்கமற்ற காதலின் உறுதியும் நன்கு அறிந்து மகிழ்தற்குரியனவாகும். காதல் பற்றிய அவளது அறிவுரை, நம் சமுதாயத்திலுள்ள பெற்றோர்களுக்கு நல்லறிவினைத் தருமா?  ஆசிரியரின் பிற நூல்கள் (கால வரிசையில்) 1. நாற்பெரும் வள்ளல்கள் 1930 2. ஹர்ஷவர்த்தனன் 1930 3. முடியுடை வேந்தர் 1931 4. நவீன இந்திய மணிகள் 1934 5. தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934 6. முசோலினி 1934 7. ஏப்ரஹாம் லிங்கன் 1934 8. அறிவுச்சுடர் 1938 9. நாற்பெரும் புலவர்கள் 1938 10. தமிழர் திருமண நூல் 1939 11. தமிழர் திருமண இன்பம் 1939 12. மணிமேகலை 1940 13. மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941 14. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941 15. பல்லவர் வரலாறு 1944 16. மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944 17. சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945 18 இரண்டாம் குலோத்துங்கன் 1945 19. கட்டுரை மாலை 1945 20. செய்யுள் - உரைநடைப் பயிற்சி நூல் 1945 21. முத்தமிழ் வேந்தர் 1946 22. காவியம் செய்த கவியரசர் 1946 23. விசுவநாத நாயக்கர் 1946 24. சிவாஜி 1946 25. சிலப்பதிகாரக் காட்சிகள் 1946 26. இராஜேந்திர சோழன் 1946 27. பல்லவப் பேரரசர் 1946 28. கட்டுரைக் கோவை 1946 29. சோழர் வரலாறு 1947 30. ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947 31. பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947 32. வீரத் தமிழர் - 1947 33. இருபதாம் நூற்றாண்டுப் ஸபலவர் பெருமக்கள் 1947 34. இந்திய அறிஞர் 1947 35. தமிழ்நாட்டு வடஎல்லை 1948 36. பெரியபுராண ஆராய்ச்சி 1948 37. கதை மலர் மாலை (மலர் ஒன்று0 1948 38. இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948 39. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி 1- 3) 1949 40. மேனாட்டுத் தமிழறிஞர் 1950 41. தென்னாட்டுப் பெருமக்கள் 1950 42. இந்தியப் பெரியார் இருவர் 1950 43. தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950 44. நாற்பெரும் புலவர் 195 45. மறைமலையடிகள் 1951 46. அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951 47. சங்கநூற் காட்சிகள் 1952 48. இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953 49. விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953 50. பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953 51. சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954 52. திருவள்ளுவர் காலம் யாது? 1954 53. சைவ சமயம் 1955 54. கம்பர் யார்? 1955 55. வையை 1955 56. தமிழர் திருமணத்தில் தாலி 1955 57. பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955 58. இலக்கிய அறிமுகம் 1955 59. அருவிகள் 1955 60. தமிழ் மொழிச் செல்வம் 1956 61. பூம்புகார் நகரம் 1956 62. தமிழ் இனம் 1956 63. தமிழர் வாழ்வு 1956 64. வழிபாடு 1957 65. இல்வாழ்க்கை 1957 66. தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957 67. வழியும் வகையும் 1957 68. ஆற்றங்கரை நாகரிகம் 1957 69. தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957 70. என்றுமுள தென்றமிழ் 1957 71. சைவ சமய வளர்ச்சி 1958 72. பொருநை 1958 73. அருள்நெறி 1958 74. தமிழரசி 1958 75. இலக்கிய அமுதம் 1958 76. எல்லோரும் வாழவேண்டும் 1958 77. தமிழகக் கலைகள் 1959 78. தமிழக ஆட்சி 1959 79. தமிழக வரலாறு 1959 80. தமிழர் நாகரிகமும பண்பாடும் 1959 81. தென்பெண்ணை 1959 82. புதிய தமிழகம் 1959 83. நாட்டுக்கு நல்லவை 1959 84. தமிழ் அமுதம் 1959 85. பேரறிஞர் இருவர் 1959 86. துருக்கியின் தந்தை 1959 87. தமிழகக் கதைகள் 1959 88. குழந்தைப் பாடல்கள் 1960 89. கட்டுரைச் செல்வம் 1960 90. தமிழகப் புலவர் 1960 91. தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963 92. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1964 93. தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965 94. சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969 95. பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970 96. கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977 97. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978 98. இலக்கிய ஓவியங்கள் 1979 பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள் 99. சிறுவர் சிற்றிலக்கணம் 100. பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும் 101. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி -2) ஆங்கில நூல் 102. The Development of Saivism in South India 1964 பார்வைக்குக் கிடைக்காத நூல்கள் 1. பதிற்றுப்பத்துக் காட்சிகள் 2. செந்தமிழ்ச் செல்வம் 3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 4. பள்ளித் தமிழ் இலக்கணம் 5. செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்) 6. செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்)