கம்பன் யார்? வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : கம்பன் யார்? ஆசிரியர் : வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : முனைவர் க. தமிழமுது பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 14+82 = 96 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 90/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் & வி. சித்ரா நூலாக்கம் : வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், பி 3, பாண்டியன் அடுக்ககம், சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம் 044 2433 9030. முகவுரை கம்பன் யார்? இக்கேள்விக்கு விடையளிப்பதே இந்நூலின் நோக்கமாகும். கம்பன் தமிழன்; கற்றறிந்த மேதை; உலகியல் அறிவிற் சிறந்தவன்; தன் காலத்திற்கு முன்பு தோன்றிய சங்க நூல்களையும், சமயநூல்களையும் பழுதறக் கற்ற பண்டிதன் ; பல்கலைப் புலமை நிறைந்தவன்; அரசியல் நுட்பம் வாய்ந்தவன்; உளநூற் புலமை மிக்கவன்; மக்கள் வாழ்விலும், இல்லற வாழ்விலும், மக்கட் பேற்றிலும் திளைத்தவன் இவ்வாறு கல்வியிலும், உலகியல் அறிவிலும் எல்லா நலத்துறைகளுலும் சிறந்த தமிழனே கம்பன் என்பதை விளக்குதலே இந்நூற் கட்டுரைகளின் நோக்கமாகும். கதைக்காகப் படிப்போர் படிக்கட்டும் ; வரலாற்றுக்கென ஆராய்வோர் ஆராய்க; நமக்குக் கம்பன் உள்ளமே தேவை. அவன் புலமையும் அனுபவ மொழிகளையும் அறிந்து மகிழ்வதே நமது நோக்கம். அவன் திருப்பெயர் வாழ்க! தியாகராசர் கல்லூரி மதுரை மா. இராசமாணிக்கம் பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க்குலம் படிப் படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மை களைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு எம் தந்தையார் தமிழ்மண் பதிப்பகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங்கினார். என் தந்தையின் பதிப்புச் சுவடுகளைப் பின்பற்றி எம் பதிப்புப் பணியைச் செய்து வருகிறேன். தமிழ்ப் பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய ஆய்வுகள், சமயம் சார்ந்த ஆய்வுகள், வரலாற்றாய்வுகள், கோவில் ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள், மாணவர் நலன் குறித்து அவர் எழுதிய 110 நூல்களும் ஆய்வாளர்களுக்கும் மாணவர் களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க நூல்களாகும். இவற்றில் 18 நூல்களை 2012இல் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர் பணியாக 2014இல் 21 நூல்களை தமிழுலகம் பயன்படும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன். - க. தமிழமுது நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `ï‹iwa jÄHuJ thœÉš jÄœ v›thW ïU¡»‹wJ? ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும் `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள் என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள் என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம். நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார். பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தார். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான் படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம், `நக்கீரர் கழகம், `மாணவர் மன்றம் முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர் என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈரா பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர் என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான் பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார் என்று `என் கணவர் என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வியில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர் வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும். உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும் என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும் என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்களை எப்படி அமைப்பது, பின் அத்தொடர் களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம், `தமிழ் இனம், `தமிழர் வாழ்வு, `என்றுமுள தென்றமிழ், `புதிய தமிழகம் என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும் என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி, `தமிழ்க் கலைகள், `தமிழர் நாகரிகமும் பண்பாடும், `தமிழக வரலாறு என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்காக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங் களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்க வழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும் அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல், தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும் என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம் என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும் என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `mtiu KGikahf¥ gl«ão¤J¡ fh£L« ü‰gh toÉyhd xUtÇ brhšy£Lkh? எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர், `மனிதரில் தலையாய மனிதரே எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் உள்ளுரை எண் பக்கம் 1. கம்ப ராமாயணம் 15 2. கம்பன் யார்? 21 3. கடவுட் கொள்கை 30 4. உரிமை வாழ்க்கை 38 5. அரசியல் நுட்பம் 42 6. இசைக்கலை 48 7. மக்கட் பேறு 54 8. காதலும் மோகமும் 61 9. ஊடலும் கூடலும் 66 10. செய்ந்நன்றியறிதல் 73 11. மாதர் இடை 79 12. காதல் மணம் 85 1. கம்ப ராமாயணம் பலவகை நூல்கள் இராமன் வரலாற்றைக் கூறும் முதல் நூல் வடமொழியில் எழுதப்பட்ட வான்மீகி இராமாயணம் ஆகும். அதைப் பின்பற்றி யும் பற்றாமலும் நாட்டில் எழுந்த இராமாயண நூல்கள் பல. இவற்றுள் ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு துறையில் புதியதாக இருக்கின்றது. இராமன் தசரதனுக்கு மகன், சீதை சனகனுக்கு மகள், இவ்விருவரும் ஒருவரையொருவர் மணந்துகொண்டனர் என்று வான்மீகி இராமாயணம் கூறும். ஆனால் இராமனும் சீதையும் தசரதனுடைய மக்கள்- இராமனும் சீதையும் உடன் பிறந்தவர்கள் என்று பௌத்த இராமாயணம் கூறுகின்றது. இராமாயண நிகழ்ச்சிகள் பல புத்த சாதகக் கதைகளில் வேறாக வருகின்றன. தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள் இருந்தாற் போல இராமனுக்குப் பதினாயிரம் மனைவியர் இருந்தனர் என்று சைன இராமாயணம் கூறுகின்றது. சனகன் தான் செய்த யாகத்திற்கு இராமன் துணையை வேண்டினான். இராமன் அவனுக்கு உதவி செய்து சீதையை மணந்தான் தசரதன் கட்டளைப்படி இராமன், இலக்குவன், சீதை என்ற மூவரும் காசியில் வாழ்ந்துவந்தனர். ஒருமுறை இம்மூவரும் சித்திரகூடம் சென்று விளையாடி இன்புற்றனர். அப்பொழுது நாரதர் அங்குச் சென்றார். அவரை அறியாத இராமன் அவரை உபசரிக்க வில்லை. அதனால் கோபம்கொண்ட நாரதர், இராவணன் என்ற வித்தியாதர வேந்தனிடம் சென்று சீதையின் பேரழகை வருணித்தார். இராவணன் சீதையை அடைய விரும்பினான்; மாரீசனோடு சித்திரகூடம் சென்று, சூழ்ச்சியால் சீதையை எடுத்துச் சென்றான். சுக்கிரீவன், அநுமான் முதலிய வித்தியா தரர்கள் இராமனுக்குத் துணையாகச் சென்றனர். வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் நடந்த போரில் இலக்குவன் வாலியைக் கொன்றுவிட்டான். பின்னர் நடந்த இலங்கைப் போரில் இராவணன் முதலியோர் இலக்குவனால் கொல்லப்பட்டனர். முடிவில் இராமன், அநுமான் முதலியோர் தீட்சை பெற்று முத்தியடைந்தனர். இலக்குவன் மட்டும் நரகத்தை அடைந்தான்...... அரக்கர்கள் வித்தியாதர மரபைச் சார்ந்தவர்கள். இராவணன் கழுத்தில் அவன் தாய் அணிவித்த முத்துமாலையில் அவனது முகம் ஒன்பது முறை பிரதிபலித்தது. அவ்வொன்பதுடன் இயற்கைத் தலையையும் சேர்த்து அவர் தசமுகன் என்று அழைக்கப்பட்டான். இராவணன் ஒரு சமண பக்தன்; மேருமலையிலுள்ள சமணர் கோவில்களில் வழிபாடு செய்து அற உபதேசம் பெற்றவன். அநுமானும் சமண பக்தனே. அவனுக்கு இராவணன் உதவியால் ஆயிரம் மனைவிமார் கிடைத்தனர். ...... சீதை இயற்கை நெறியில் சனகனுக்குப் பிறந்தவளே. அனுமான் அணுவாகவும் மகானாவும் உருவம் எடுக்கவல்லவன் ஆதலால் அணுமகான் எனப் பெயர் பெற்றான். அப் பெயரே அனுமான் என்று திரிந்தது. இவை சமண இராமாயண நூல்கள் கூறும் செய்திகள். xU ïuhkhaz üš Óijia ïuhtz‹ kfŸ v‹W TW«.* வான்மீகி இராமாயணம் வான்மீகி இராமாயணம் ஒவ்வொரு காண்டத்திலும் வேறுபாடுகள் நிறைந்துள்ளன. ஒரு காண்டத்தில் கல்கத்தாப் பதிப்பில் பதினைந்து படலங்கள் இருப்பின், பம்பாய்ப் பதிப்பில் பதினெட்டுப் படலங்களும், சென்னைப் பதிப்பில் இருபது படலங்களும் இருப்பதைக் காணலாம். இவ்வாறு ஒவ்வொரு காண்டத்திலும் ஒவ்வொரு பதிப்பிலும் உள்ள வேறுபாடு களைக்கண்டு வியப்பு ற்ற மேனாட்டு ஆராய்ச்சியாளர், இப் பதிப்புக்களையெல்லாம் ஒன்றாக வைத்துப் பொறுமையோடு ஆராய்ந்தனர்; இப்பதிப்புக்களை நன்கு ஆராய்ந்ததில், இன்றுள்ள இருபதினாயிரம் சுலோகங்களும் அனைத்தும் வான்மீகி பாடியவை அல்ல. அவர் பாடியனவாகக் கூறத் தக்கவை. ஏறத்தாழப் பன்னிரண்டாயிரம் சுலோகங்கள் என்ன லாம். எஞ்சிய எட்டாயிரம் சுலோகங்கள் வான்மீகியாருக்குப் பின்பு பல்வேறு காலங்களில் பல்வேறு புலவரால் பாடப்பட்டுச் சேர்க்கப்பட்டவை யாகும். வான்மீகி இராமாயணத்தில் இராமன் அரசகுமாரனாகவே கூறப்படுகிறான்; திருமாலின் அவதாரமாகக் கூறப்படவில்லை என்று தெளிவாக எழுதி யுள்ளனர். இவ்வரலாறு இந்தியாவில் நடந்ததா? கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்கீரிவன் சீதையைக் கண்டுபிடிக்கத் தன் வீரர்களை ஏவும்பொழுது, கிஷ்கிந்தையை நடுவிடமாகக்கொண்டு, அங்கிருந்து நான்கு திக்குகளிலும் போகும்படிதன் வீரர்க்கு அறிவுறுத்துகிறான்; ஒவ்வொரு திசையிலும் உள்ள மலைகள் ஆறுகள் காடுகள் தோட்டங்கள் நாடுகள் இவற்றை விவரித்துக் கூறுகின்றான். இவ்வாறு அவன் கூறும் விவரங்கள் பொருத்தமாக இருக்கின்றனவா என்பதை உலகப் படத்தை வைத்துக்கொண்டு ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து பார்த்தனர்; கிஷ்கிந்தையை நடுவிடமாகக் கொண்டு கூறப்படும் நாற்றிசைச் செய்திகள் பொருத்தமாக வரவில்லை என்பதைக் கண்டனர் சுக்கிரீவன் கூறியதாக வான்மிகி கூறும் விவரங்கள் பொருந்துமாறு இல்லை. எனவே, இராமாயண நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடைபெற்றன என்று கூறுதல் ஐயமே, என்ற முடிவுக்கு வந்தனர். வேதம்-வேங்கடராம ஐயர் என்ற அறிஞர் பலவாறு ஆராய்ந்து, இராமாயண வரலாறு கூறும் விவரங்கள், இன்றைய துருக்கி, காக்கஸ மலைப்பகுதி, அதனைச் கூற்றியுள்ள நிலப்பகுதி இவற்றுள் நடைபெற்றனவாக இருத்தல் வேண்டும், என்று முடிவு கட்டினர். இலங்கை எது? வட மொழியில் லங்கா என்பது தீவைக் குறிக்கும். ஆனால் அது இன்றுள்ள ஈழநாடுதான் என்று கூறத்தக்க சான்று எதுவும் இல்லை. எனவே, இராவணன் ஆண்ட இலங்கை எது என்பது இன்றளவும் ஆராய்ச்சியாளரால் முடிவு செய்யப்பட வில்லை. இவ்வாறு வான்மீகி எழுதிய இராமாயணத்திலேயே இடைச்செருகல்கள் பல; பல்வேறு இராமாயண நூல்களில் கூறப்படும் செய்தி வேறு பாடுகள் பல; நிகழ்ச்சி வேறுபாடுகள் பல வரலாறு நடந்த இடமே எது என்பது ஐயத்திற்கு இடமாக உள்ளது என்று அறிஞர் கூறுகின்றனர். இந்நிலையில் தசரதனுக்குப் பிறந்த இராமன் என்ற அரசகுமாரனைக் கம்பன் திருமாலின் அவதாரமாக ஆக்கிவிட்டான். இதற்குக் காரணம் யாது? நெடுங்காலமாக இராமன் வரலாறு அரசர் அவைக்களங் களில் நடிக்கப்பட்டுவந்தன. நாளடைவில் நாடக அமைப்பிற்கு ஏற்பப் பழைய கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இவற்றை உளங்கொண்டு, வான்மீகி உயர்ந்த லட்சியங்களை முன்னிறுத்தி, அவை விளங்கும் அழகிய சரிதமொன்றை இயற்றி னர். இதுவே இராமாயணம். ஆனால் இராம சரிதத் தொடக்கம் இவ்வாறிருப்பினும், பின்னர், கால-அடைவில், சமய நூலாகவும் பக்தி நூலாகவும் பரிணமித்துவிட்டது. ïuhk‹ kDZa Ãiy flªJ bjŒtkh»É£lh‹”.* கி. பி. நான்காம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்திலும் அதற்குச் சிறிது முன்னும் பின்னும் இதிகாசங்களும் புராணங்களும் விரிவாக்கப்பட்டன. அப்பொழுது அவதாரக்கதைகள் புதியனவாகச் சேர்க்கப்பட்டன. ஙீபழைய வீரர்கள் அவதார புருஷர்களாக ஆக்கப்பட்டார்கள் என்று ஆராய்ச்சி யாளர்கள் தக்க சான்றுகள் காட்டியுள்ளார்கள். இம் மாற்றங்களுக்குப் பின்னரே பொது மக்கள் இராமாயண வரலாற்றை விரும்பிக் கேட்கலாயினர். பின்னர் நாளடைவில் அவதார புருஷனாகக் கருதப்பட்ட இராமனுக்குக் கோவில்கள் தோன்றின. அஃதாவது, கி. பி. நான்காம் நூற்றாண்டிற்குப் பிறகு இராமன் தெய்வமாக வழிபடப்பட்டான். ஆழ்வார்கள் இராமவதாரத்தைச் சிறப்பித்துப் பாடினர். அவர்தம் அருட்பாடல்கட்கு மணிப்பிரவாள நடையில் (வடமொழியும் பாதியும் தமிழ் மொழி பாதியும் கலந்த நடையில்) விரிவான உரை எழுதப்பட்டது. இராமானுசர் காலத்தில் வைணவ சமயம் பல கோவில்களில் படித்து விளக்கப்பட்டது.இத்தகைய காலத்தில் -- கி. பி, பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் கம்பன் தோன்றினான். கம்பன் கால நிலை கம்பன் சோழப் பெருநாட்டில் பிறந்தவன். ஏறத்தாழக் கி. பி 9ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் 12-ஆம் நூற்றாண்டு வரையில் சோழப்பேரரசு தென்னிந்தியா முழுவதும் பரவியிருந்தது. சோழப் பேரரசர் கடல் கடந்த நாடுகளை வென்றனர். ஏறத்தாழ இந்த 400 வருட காலம் சோழப் பெருநாடு செல்வச் சிறப்புடன் விளங்கிவந்தது. செல்வப் பெருக்குக் பல தீமைகளையும் விளைத்தது. குடியும் ஒழுக்கக்கேடும் இருந்தன; போக பாக்கியங்கள் மிகுதிப்பட்டன. சமயவெறி தலைதூக்கியது; சாதிச்செருக்கு மிகுந்தது; சமுதாயத்தில் உயர்வு - தாழ்வுகள் மேடு - பள்ளங்கள் காணப்பட்டன. கல்வியில் பெரிய கம்பன் உலக அனுபவத்திலும் பெரியவ னாக விளங்கினான்; அவன் தன் முன் காணப்பட்ட மேற்சொன்ன வேறுபாடுகளை வெறுத்தான்; சைவ வைணவர்க்குள் இருந்த மனக்கசப்பை மாற்ற எண்ணினான்; அரசியல் இன்னின்னவாறு அமைதல் வேண்டும் என்று திட்டமிட்டான்; இத்தகைய (தன்னுடைய) கருத்துக்களை வெளியிட இராமாயணத்தை ஒரு கருவியாகக் கொண்டான். கம்பன் தமிழ்க் கடலை எல்லை கண்டவன்; உலகியல் அறிவு சிறக்கப்பெற்றவன்; தமிழகம் முழுவதும் சுற்றித் திரிந்தவன்; அரசன் முதல் ஆண்டி ஈறாக அனைவருடனும் பழகி அனுபவம் பெற்றவன். உளநூல் அறிவு, சமயநூல் அறிவு முதலிய பலதுறை அறிவில் மேம்பட்டவன். தன் காலத்தில் வாழ்ந்த செல்வர்தம் பெருமிதவாழ்வையும் அதனால் பேரரசு தளர்ந்து வருதலையும் அறிந்தவன். அக்கால மக்கள் களியாட்டங்களைப் பூக்கொய்படலம், புனல் விளையாட்டுப் படலம், உண்டாட்டுப் படலம் இவற்றிற் காணலாம். கம்ப ராமாயணம் கம்பன் காலத்தில் வைதிகச் சைவமும் வைணவமும் நாட்டில் பரவியிருந்தன. இராமன் திருமால் அவதாரம் என்று கருதப்பட்ட காலம் ஆதலால், கம்பன் பொதுமக்கள் நம்பிக்கைக்கு ஏற்றவாறு கதையை அமைத்தான்; தமிழ்நாட்டு இலக்கண மரபுக்கு ஏற்றபடியும், தமிழர் பண்பாட்டிற்குத் தக்கவாறும் சில நிகழ்ச்சிகளைப் புதியனவாகவும் திருத்தியும் அமைத்தான். அப்பெருமகன் கதையில் காணப்படும் கோசல நாடு தமிழ்நாடே; நகரப் படலச் செய்திகள் தமிழ்நாட்டு நகரச் செய்திகளே ஆகும் அவன் கூறும் கார்கால வருணனை போன்றவை சங்கத் தமிழ் நூல்களில் காணப்படும் பருவகாலச் செய்திகளின் சாரமே. அவன் கூறியுள்ள அநுபவங்கள் அனைத்தும் இந்நாட்டு அறிஞர் அநுபவங்களே, சுருங்கக் கூறின், இராமாயணத்தில் உயிர்நாடி யாக உள்ள கவித்துவம், சொல்லழகு, பொருளழகு, பொருள் ஆழம், வாழ்க்கை அநுபவங்கள், எக்காலத்தும் உண்மையாக உள்ள வாக்குகள், உயர்ந்த பண்பாட்டுக்குரிய செய்திகள் என்னும் அனைத்தும் நம் தமிழ்ச் செல்வங்களே ஆகும். இவற்றை நன்கு உணர்ந்து, இப் பெருநூலிலுள்ள இலக்கியச் செல்வத்தை நுகர்தலே நல்லறிஞர் கடமையாகும். 2. கம்பன் யார்? முன்னுரை கம்பன் தமிழ் நாட்டில் பிறந்தவன்; தமிழ்ப் பெரும் புலவன்; வாழையடி வாழையாக வந்த தமிழ் மரபில் பிறந்தவன் ஆதலால் அப்பெருமகன் தான் பாட மேற்கொண்ட இராம காதையில் பல இடங்களில் தனது தமிழ்ப் பற்றையும் தமிழ் நாட்டு பற்றையும் அறிந்து மகிழும் வண்ணம் அமைத்துள்ளான்; தமிழ் இலக்கணத்திற்கும் தமிழர் அறவாழ்வுக்கும் பொருந்தாத சிலவற்றை மாற்றித் தமிழர் பண்பாட்டிற்கேற்ப அமைத் துள்ளான். தமிழ்ப்பற்று அகத்தியர் வடநாட்டிலிருந்து தென்னாடு போந்து தமிழினை நன்கு கற்றுத் தமிழர்க்கு முதன் முதலில் தமிழ் இலக்கணம் செய்தார் என்று சான்றற்ற கதை ஒன்று இந்நாட்டில் வழங்கிவருகின்றது. ஏறத்தாழக் கி. பி. ஏழாம் நூற்றாண்டிலேயே இக்கதை தமிழகத்தில் வழங்கிவந்தது என்பதை இறையனார் களவியல் உரை கொண்டு உணரலாம். அகத்தியர் தலைச்சங்க முதல்வர் என்றும், அவர் செய்த இலக்கண நூல் அகத்தியம் என்றும் அவ்வுரை கூறுகின்றது. ஆயின், இத்தகைய பெருமையும் பழமையும் வாய்ந்த அகத்தியர் இலக்கணம் பற்றிச் சங்கத் தொகை நூல்களில் ஒரு குறிப்பும் காணப்படவில்லை. அவரைப் பற்றிப் பிற்காலத்திற் கூறப்படும் கதைகள் சங்க நூல்களில் யாண்டும் குறிக்கப்படவில்லை. எனினும், அகத்தியரால் தமிழ் சிறப்படைந்தது என்ற கதை எவ்வாறே கடைச்சங்க காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் பரவிவிட்டது. அதனற்றான் அவரைப் பற்றிய செய்தி இறையனார் களவியல் உரையில் காணப்படுகின்றது. இக்கதை கம்பனுக்கு உடன்பாடில்லை. தமிழ் மொழி என்று தோன்றியது என்பதை இதுகாறும் கூறினவர் எவரு மில்லை. ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே தமிழர் இந் நாட்டிலிருந்தனர்- சிறந்த நாகரிகத்துடன் விளங்கினர்-உள்நாட்டு வாணிகத்திலும் வெளிநாட்டு வாணிகத்திலும் சிறந் திருந்தனர் என்ற உண்மைகளை ஆராய்ச்சியாளர் அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆரியர் தென்னாடு வருதற்கு முன்னரே தமிழில் இலக்கண இலக்கியங்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பது தொல்காப்பியம் என்னும் பெருந்தமிழ் இலக்கண நூலைக் கொண்டு நன்குணரப்படும். இன்று ஆராய்ச்சியால் உணரப்படும் உண்மைகளைக் கல்வியிற் சிறந்த கம்பன் உணராமலில்லை. அப்பெருமகன், அகத்தியன், என்றுமுள தென்தமிழ் இயம்பி இசைகொண்டான் என்று கூறியுள்ளான். தமிழ் என்றுமுள்ளது. அதனை வடநாட்டிலிருந்து தென்னாடு போந்த அகத்தியன் பயின்று (இலக்கண நூல் செய்து?) புகழ் கொண்டான் என்று கம்பன் கூறியுள்ளானே தவிர, இவனே தமிழில் முதல் இலக்கண நூல் செய்தான் என்பவர் கூற்றைக் கம்பன் ஒப்புக்கொள்ளவில்லை என்பது இதனால் அறியப்படும். தமிழகப்பற்று கம்பன் தமிழ்நாட்டில் பிறந்தவன்; வளம் மிகுந்த சோழ நாட்டில் பிறந்து வளர்ந்தவன். செவிலித்தாய் என்ன ஓம்பும் தீம்புனற்கன்னி நாடாகிய சோழநாட்டு வளத்தை விழிகளாரப் பருகியவன். ஆதலால் அப்பெரும் புலவன், தான் கண்ணாற் காணாத கோசல நாட்டைச் சோழ நாடாகவே கருதிச் சிறப்பித் துள்ளான் என்பதைப் பால கண்டத்திலுள்ள நாட்டுப் படலம் நன்கு விளக்குகிறது. இன்று அயோத்தியையும் அதில் உள்ள நாட்டினையும் நேரில் கண்டு மீண்டவர் கூறும் விவரங் களையும் காண, கம்பர் பாடல்கள் அந்நாட்டு வளப்பத்தைக் கூறுவன அல்ல. காவிரி நாட்டு வளத்தையே கம்பன் கோசல நாட்டு வளமாக மாற்றிப் பாடிவிட்டான் என்னும் உண்மைகள் அறிவுடையோர்க்கு நன்கு புலனாகும். அப்பெரும் புலவன் கோசலநாட்டைக் குறிக்கையில், காவிரி நாடன்ன கழனி நாடு என்று கூறியுள்ளான். இஃது, அப் பெரும் புலவனது தமிழகப் பற்றை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உணர்த்துவதாகும். மேலும் கோசல நாட்டில் உள்ளனவாக அவன் கூறும் மருத நிலச் சிறப்பு, முல்லைநில மாண்பு, குறிஞ்சி நிலவளம் முதலியனவும் அவ்வந்நிலத்தார் செயல்களும் தமிழகப் பொருள் இலக்கணத்தை முற்றிலும் தழுவியனவாகும் என்பதைத் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்ற அறிஞர் நன்கு அறிவர். இவ்வாறே, கிஷ்கிந்தா காண்டத்தில் கூறப்பட்டுள்ள கார்கால வருணனை முழுவதும் தமிழிலக்கண இலக்கியங்களிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சாறேயாகும் என்பதையும் அறிஞர் எளிதில் அறியக்கூடும். கம்பன் செய்த மாற்றம் சனகன் வைத்திருந்த வில்லை முறித்த பிறகே இராமன் சீதையை நேரிற் கண்டு மணந்து கொண்டான் என்று வால்மீகி கூறியுள்ளார். காதலனும் காதலியும் ஒருவரையொருவர் நன்கு அறிந்த பின்னரே மணம் முடிப்பது தமிழர் மரபு. இதனை உளங்கொண்ட கம்பன், இராமன் சனகனது வில்லை முறித்ததற்கு முன்பே சீதையையும் இராமனையும் சந்திக்கச் செய்கின்றான். கோசிக முனிவனோடும் தன் தம்பியுடனும் இராமன் மிதிலையின் தெருக்களில் செல்கின்றான்; அரசர் தெருவில் சனகனது அரண்மனை மேன்மாடச் சுவர் மீது அன்னங்கள் விளையாடுகின்றன. அவற்றைப் பார்த்தபடி அம் மேன்மாடத்தில் சீதையும் அவளுடைய தோழிகளும் நிற்கின்றனர். அவ்வழியே சென்ற இராமன் தலை நிமிர்ந்து அன்னப் பறவைகளைக் காண்கிறான்; பின்பு சீதையாகிய அன்னத்தையும் கண்டு களிக்கிறான். அதே சமயத்தில் மாடத்தே நின்றபடி அன்னங்களின் விளையாட்டைக் கவனித்துவந்த சீதையின் பார்வை, தெருவிலே சென்றுகொண்டிருந்த இராமன் என்ற கட்டழகன்மீது செல்கின்றது. இருவர் பார்வைகளும் ஒன்றை ஒன்று சந்திக்கின்றன; இருவர் அகமும் முகமும் மலர்கின்றன; இருவர் உள்ளங்களிலும் ஒருவகைப் புத்துணர்ச்சி குடிகொள்கிறது; ஒருவர் உருவத்தை மற்றவர் விழியாரப் பருகின்றனர். அன்று இரவு இராமன் ஒரு முனிவர் ஆசிரமத்தில் தங்குகிறான்; தன் உள்ளத்தில் தோன்றிய காதல் என்றும் புத்துணர்ச்சியால் இரவு முழுவதும் சீதையைப் பற்றியே எண்ணமிட்டுக்கொண்டு இருக்கிறான். இவ்வாறே சனகன் அரண்மனையில் சீதையும் உறக்கமில்லாமல் இராமனைப் பற்றியே எண்ணி எண்ணி ஏங்குகின்றாள். பொழுது விடிகின்றது. இராமன் கோசிக முனிவனோடு சனகன் அரண்மனையை அடைகிறான்; அரசர் பலர் கண்டு வியப்பும் திகைப்பும் அடைய, வில்லை முறிக்கின்றான். வில்லை முறித்தவன் தான் நேற்றுத் தெருவில் போகக்கண்ட கட்டழகனே என்பதைத் தோழி வாயிலாக அறிந்த சீதை, உள்ளத்தில் ஒருவராலும் கரைசெய்ய அரியதொரு பேருவகை கொள்கின்றாள். இச்செய்தி வான்மீகி கூறாதது; கம்பர் தாமே படைத்து மொழிந்தது. இதனை விவரமாகக் கூறும் பகுதியே மிதிலைக் காட்சிப் படலம் என்பது. இவ்வாறு கம்பன் தான் தமிழனாதலால் தமிழ் அகப்பொருள் இலக்கணத்திற்கேற்ப, இப் புதிய காட்சியைப் படைத்து மொழிந்தனன் என்று சான்றோர் கூறுவர். வான்மீகி தாரை வாலி கொல்லப்பட்ட பிறகு சுக்கிரீவன் அரசனாகிறான்; கார்காலம் முடிந்தவுடன் தன் படைவீரரையனுப்பிச் சீதையைத் தேடச் செய்வதாக வாக்களிக்கிறான். கார்காலம் முழுவதும் அவன் குடித்தும் மாதரொடு விளையாடியும் பொழுது போக்குகின்றான். வாலியின் மனைவியாகிய தாரையோடு கள்ளுண்டு மதிமயங்கிக் கிடக்கிறான். இந்நிலையில் கார்காலம் முடிகின்றது. சீதையின் பிரிவால் வாடுகின்ற இராமன், சுக்கிரீவன் சொன்னபடி நடவாமையால் சீற்றங்கொண்டு, சுக்கிரீவனைப் பார்த்து வருமாறு இலக்குவனை அனுப்புகின்றான். இலக்குவன் மிகுந்த சீற்றத்தொடு கிஷ்கிந்தை நகருக்குள் நுழைகிறான். அவனது நோக்கத்தை அறிந்த அநுமான், தான் நேரில் செல்லாது, மது மயக்கத்திலே ஆழ்ந்துகிடந்த சுக்கிரீவனை எழுப்ப முடியாமல் தவிக்கிறான்; பின்பு தாரையை எழுப்பி இலக்குவன் கோபத்தோடு வருவதையும், அவள் சென்று அவனைத் தடுத்து நிறுத்தினால்தான் சுக்கிரீவன் பிழைப்பான் என்றும், இல்லையாகில் சுக்கிரீவன் கொல்லப்படுவதுடன் கிட்கிந்தையே நாசமாகும் என்றும் கூறினான். குடிவெறி தெளிந்த தாரை எழுந்து, தனது கூந்தல் புரள, வாயிலிருந்து சொள்ளு வடிய, அலங்கோல ஆடையுடன் இலக்குவனைத் தடுத்து நிறுத்தச் செல்கிறாள். இக்குறிப்பிட்ட நிகழ்ச்சி வால்மீகி இராமாயணத்தில் உள்ளது. இதே நிகழ்ச்சியைக் கம்பன் வேறுவிதமாகக் காட்டு கின்றான். அதனைக் காண்க:- இலக்குவன் கிஷ்கிந்தையை நோக்கி மிக்க சீற்றத்துடன் வருவதைக் கண்ட அங்கதன் சுக்கிரீவனிடம் செல்கிறான். அப்பொழுது, நளன் எனும் வானர வீரனால் செய்யப்பட்ட சிறந்த அரண்மனையில் மலர்களைப் பரப்பியமைக்கப்பட்ட அழகிய படுக்கையில் சுக்கிரீவன் படுத் திருக்கிறான். தொங்குகின்ற கூந்தலையும் பேரழகையுமுடைய மகளிர் அவன் கால்களைப் பிடிக்கின்றனர். சிந்துவாரமரம், சுகந்தக்கொடி, தேக்கமரம், அகில்மரம், சந்தன மரம், மயில்போலும் சாயலையுடைய மகளிரது தொங்குகின்ற கூந்தல், அக்கூந்தலிற்சூடிய நறுமணமுள்ள மலர்களின் தொகுதி என்னும் இவற்றில் ஊடுருவிவரும் இளங்காற்று அவன் மேல் வீசுகிறது. இனிக்கின்ற சிவந்த அதரத்தையுடையவர்களான பெண்களுடைய முத்துப்போல வெண்ணிறமான புன்சிரிப்பைச் செய்கின்ற கூரிய பற்களிலிருந்து சுரக்கின்ற தேன்போல் இனிய சாறு, பைத்தியத்தையும் மயக்கத்தையும், காமம், மதம், மறதி, சோர்வு, உறக்கம் முதலியவற்றையும் மிகுதிபடுத்துதலால் சுக்கிரீவன் மதங்கொண்ட யானைபோல் மயங்கிக் கிடக் கின்றான். அந்நிலையில் அங்கதன், இலக்குவன் வருகையை அவனிடம் கூறினான். இக்கூற்றுச் சுக்கிரீவன் செவிகளில் படவில்லை. பின்பு அங்கதன் அநுமானை அழைத்துக்கொண்டு, தன் தாயினிடம் சென்று செய்தியை அறிவிக்கிறான். கம்பன் தாரை தாரை, வான்மீகி கூறும் தாரையைப் போலக் குடிப்பவளல்லள். அவள் கம்பன் படைத்த தாரை; பெண்மைக்கு இலக்கணமாக இலங்குகின்றவள்; கணவன் இறந்தபின் கைம்மை நோன்பு நோற்கின்றவள் ; ஆதலால் அங்கதனும் அநுமானும் தொழத்தகும் நிலையில் விளங்குகின்றாள் அவள் தனி மாளிகையில் தன் பணிப்பெண்களோடு வாழ்கின்றாள். அப்பெருமாட்டி தன்னிடம் யோசனை கேட்கவந்த அங்கதனையும் அநுமானையும் நோக்கி, நீங்கள் உறுதி தவறினீர்கள்; இராமன் செய்த நன்றியை மறந்தீர்கள் ; நீங்கள் செய்துள்ள தீமை பயனளிக்க வந்ததனால், இவ்வாறு குணங்கெட்ட வரானீர்கள் என்று கடிகின்றாள். அப்பொழுது அநுமான், இலக்குவன் சிறந்த வீரன்; ஆயினும், அவன் மனம் மலர்போல மெல்லியது. பெண்பா லாகிய நீ சென்று சுக்கிரீவனது அரண்மனையின் வாயில் வழியில் நின்று விட்டால், மகளிரை எதிர்த்தல் முறையன்று என்று எண்ணி இலக்குவன் அவ்வழியைக் கண்ணெடுத்துப் பாராமல் விலகிச் செல்லுவான், என்று யோசனை கூறுகிறான். அந்த யோசனைப்படி தாரை நடக்கத் துணிகின்றனள். தன்னைப் பார்ப்பவரை அப்பாற் செல்ல விடாமல் கட்டுப்படுத்துகின்ற மெல்லிய தன்மையினையும், வெண்மை யான சந்திரன் போல் விளங்கும் புன்சிரிப்பையும், நுண்ணிய இடையையும், உயர்ந்து இளமை மாறாத மென்மையான நகிலகளையும், மயில்போலும் சாயலையும் உடைய தன் தோழிமாரை அழைத்துச் சென்று சுக்கிரீவன் அரண்மனை யிருக்கும் தெருவின் வழியைத் தாரை தடுக்கின்றாள். ஆரவாரிக்கின்ற காற்சிலம்புகள் போருக்குரிய பேரிகை வாத்தியங் களாகவும், கண்கள் வேற்படைகளாகவும், புருவங்கள் விற்படைகளாகவும் அமையும்படி மகளிராகிய சேனை சூழ்ந்த போது, இலக்குவன் கோபம் மாறுகிறது ; அவன் தன் முகத்தைத் திருப்பிக்கொள்கிறான்; அம்மகளிரைக் கண்ணெடுத்துப் பார்க்கவும் அஞ்சுகிறான்; தனது கையிற்பிடித்த வில்லைத் தரையிலே ஊன்றவைத்து மாமிமார் கூட்டத்தினிடையே வந்த மருமகன் போல, தலைகுனிந்து நிற்கின்றான். அப்பொழுது நீண்ட கண்களையும் தூயவுள்ளத்தையுமுடைய தாரை, தன் தோழிமார் கூட்டத்தினிடை ஒதுங்கி, கூச்சத்தால் நடுங்கிக் கொண்டு கீழ்வருமாறு பேசலானாள்: வீரனே, அளவற்ற காலம் தவம் செய்த சிறப்பால்தான் நாங்கள் உனது வருகை யைப்பெற்றோம். உனது வரவால் எங்கள் வினை ஒழிந்து உயர்வு பெற்றோம். நீ சீற் த்துடன் வருவதைப் பார்த்து வானர வீரர் அஞ்சுகின்றனர். இராமனை விட்டுப் பிரியாத நீ இங்குத் தனியேவரக் காரணம் யாது? இவ்வுரை காதில் விழுந்தும், இலக்குவன் உள்ளத்தில் அருள் பிறந்தது; கோபம் குறைந்தது; இதனைச் சொன்னவர் யார் என்று அறியத் தன் தலையை நிமிர்த்திப் பார்த்தான். வெண்மையான முழுமதி பகற்பொழுதில் நிலத்தில் வந்த தோற்றம் போன்ற ஒளி மழுங்கிய தாரையின் முகம் அவனுக்குத் தெரிந்தது. அவளது முகம் மங்கலக் குறியோடில்லை ; அவளது உடலில் நகைகள் இல்லை; வாழ்வரசிக்குரிய மலர்மலலை இல்லை; அவளது மார்பும் கழுத்தும் மேலாடையால் நன்றாகப் போர்த்தப்பட்டுள்ளன. பெண்களிற் சிறந்த அத்தாரையினது கைம்மைக் கோலத்தைக் கண்டதும், இலக்குவனுக்குத் தன் தாய்மார் நினைவு உண்டானது. உடனே அவன் கண்களில் நீர்த்துளிகள் வெளிப்பட்டன. ஆர்கொலோ வுரைசெய் தாரென் றருள்வரச் சீற்றம் அஃகாப் பார்குலங் முழுவெண் திங்கள் பகல்வந்த படிவம் போலும் ஏர்குலா முகத்தி னாளை இறைமுகம் எடுத்து நோக்கித் தார்குலாம் அலங்கல் மார்பன் தாயாரை நினைந்து நைந்தான். மங்கல அணியை நீக்கி மண வணி துறந்து வாசக் கொங்கலர் கோதை மாற்றிக் குங்குமஞ் சாந்தங் கெட்டாப் பொங்குவெம் முலைகள் பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த நங்கையைக் கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நின்றான். ---கிட்கிந்தைப் படலம் அவ்வளவில் இலக்குவன், என்னைப் பெற்ற தாய்மாரும் இத் தன்மையராகவே இருப்பர், என்று தன்னுள் கூறிக்கொள் கிறான். அவன் உள்ளம் தளர்ச்சி அடைகின்றது; செய்வகை தோன்றாது நீண்ட நேரம் நிற்கின்றான்; பின்பு ஒருவாறு தெளிந்து, தான் வந்த காரியத்தை இயம்புகின்றான். அவன் பேசிய பின்பு, பெண்ணரசியாகிய தாரை, ஐயனே, நீ கோபிக்க வேண்டா; அறிவு முதலியவற்றில் சிறியவர்கள் தீங்கு செய்தால் அவற்றைப் பெரியவனாகிய நீ பொறுத்தலே நேர்மை. சுக்கிரீவன் தான் கொடுத்த வாக்கினை மறக்கவில்லை; வானரப் படைகளைத் திரட்டுவதற்காகப் பல விடங்களுக்கும் தூதரை அனுப்பியுள்ளான்; அவை வருவதற்காகவே தாமதித்திருக் கிறான். நீங்கள் அவனுக்குச் செய்த உதவிக்குத் தக்கபடி அவன் உங்களுக்குச் செய்யும் பதில் உதவி இல்லை. நேர்மை பொருந்திய உள்ளமுடைய நீங்கள் சுக்கிரீவனுக்குச் செய்த பேருதவி என்றும் அழியாதிருக்கும்படி அவனை அரசனாக்கி விட்டீர்கள். அத்தகைய உங்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டிருக் கிறோம், என்று மிகவும் பணிவாகவும் அன்பாகவும் கூறினாள். அவ்வளவில் இலக்குவன் உள்ளம் அமைதியுற்றது. கம்பன் யார்? இப்பகுதியை இங்ஙனம் வால்மீகிக்கு மாறாகக் கம்பன் தீட்டக் காரணம் யாது? கம்பன் யார்? கம்பன் தமிழன். தமிழகத்தில் ஒரு தமிழனுக்கு-- அவனைப் பெற்றவள், வளர்த்தவள், அண்ணன் மனைவி, ஆசிரியன் மனைவி, அரசன் மனைவி ஆகிய ஐவரும் தாய்மாராவர் என்பது தமிழ்நூற்கொள்கை. இதனை நன்கு உணர்ந்தவன் கம்பன் ஆதலால் அண்ணன் மனைவியான தாரையை அவள் கொழுந்தனான சுக்கிரீவன் மனைவியாகக் கொண்டிருந்தான் என்ற வால்மீகியின் கூற்றைக் கம்பன் வெறுக்கிறான்; தமிழர் பண்பாட்டிற்கு இது புறம்பானது ; ஆதலால் இதனை மாற்றியமைக்கிறான். அநுமானும் தொழத்தகும் நிலையில் தாரையை ஒழுக்கத்திற் சிறந்த உத்தமியாக்குகிறான்; சுக்கிரீவன் முதலியோர் அவளைத் தாயென்று கருதிக் தொழும்படி செய்கிறான்; இலக்குவனுக்கும் தன் தாய்மார் நினைவு வரும்படி அவளது கைம்மைக் கோலத்தைச் சிறப்பிக்கிறான். இவ்வாறு கம்பன் தான் தமிழன் என்பதைப் பல இடங்களில் உணர்த்திச் செல்கின்றான்; தன் கடவுள் கருத்தை விளக்குகிறான்; தன் அரசியல் அறிவை அறிவிக்கிறான்; உரிமை வாழ்க்கை இன்னதென இயம்புகிறான்; பிள்ளைப் பேற்றின் சிறப்பு, இசைச்கலை, காதல் - மோகம், ஊடல் - கூடல், முதலிய இன்ப நிலைப் பகுதிகளை அழகுறக் காட்டுகிறான், சுருங்கக் கூறின், கம்பன் தன்னைப் பல கலை அறிஞனாகத் தனது பெருநூலிற் காட்டுகின்றான். அவன் பெரும் புலமையை இக் கட்டுரைகளிற் கண்டுகளிக்கலாம். இப் பெருந்தமிழ்ப் புலவனுடைய பொன்னார் திருவடிகட்கு நமது வணக்கம் உரியதாகுக! 3. கடவுட் கொள்கை அமிழ்தினுமினிய தமிழ் மொழியதனை வளர்த்த மாபெரும் புலவராய கம்பர் பெருமான் தாம் இயற்றிய இராம காதையின் கண் தம் அரிய சமயக் கருத்துக்களையும் கடவுட் கொள்கையையும் ஆங்காங்கே தெளிவுபடக் கூறியுள்ளார். எனினும், கம்பராமாயணத்தை ஊன்றிப் படியாதார்க்கு இவை யெளிதிற் புலனாகா என்பது தேற்றம். அரியும் சிவனும் ஒன்று கம்பர் முதன் முதல் தமது விரிந்த கடவுட் கொள்கையைப் பரந்த அறிவுடன் விளக்குகின்றார்; ஆற்றுப்படலத்தில் சரயு நதியின் பிறப்பைக் கூறுகையில், மழையே ஆறு தோன்றலுக்குக் காரணம் என்றார் ; மழை மேகபலத்தால் உண்டாவதென்றார்; வெண்ணிற் மேகம் கடல் நீரை உண்டு கரிய நிறத்தை அமைந்ததென்றார். அவர், நீற ணிந்த கடவுள் நிறத்தவான் ஆற ணிந்துசென் றார்கலி மேய்ந்தகில் சேற ணிந்த முலைத்திரு மங்கைதன் வீற ணிந்தவன் மேனியின் மீண்டவே. எனத் தெளிவாகச் கூறியுள்ளார். சிவபிரானைப் போலச் சென்ற வெண்ணிறப் புயல்கள் கடல் நீரைக் கொண்டதும் திருமால் போலத் திரும்பின என்பதே இப்பாவின் பொருள். எனினும், இச்செய்யுளின் உள்ளுறையே நாம் ஊன்றிப் பார்த்தற்குரியதாம். கடல்நீரைக் குடிக்கச் சென்றது வெண்மேகம்; அது நீரற்றது ; அதனால் உலகிற்குக் பயனில்லை. அத்தகைய வெண்மேகம் வானில் இருப்பின், மழையின்றி மாநிலத்தார் அல்லலுறுவர். ஆதலின், வெண்மேகம் அழித்தற் கடவுளாய சிவனாரை ஒத்தது. என்னே கம்பர் காட்டும் உவமையின் பெருமை! இவ்வுவமையால் கம்பர் நமக்குக் கூறுவதென்? அவர் கொள்கை தான் யாது? மேகம் என்பது ஒன்று. அஃது உருவத்தாலும் தொழிலாலும் வேறுபாடுடையதாக வெளித் தோன்றினும், மேகம் மேகமேயற்றோ? அத்தனைமையே போலச் சிவனும் அரியும் தொழில் கருதி உருவவேறுபாடுற்று நடிப்பவ ரல்லது உண்மையில் வேறு பட்டுத் தனித்திருப்பாரல்லர். அரியும் சிவனும் ஒன்றே என்று உணர்த்தக் கம்பரது விழுமிய உவமையே கொழுவிய சான்றாக நிற்க காண்கின்றோம். என் மதம் சிறந்தது; உன் மதம் தாழ்ந்தது எனப் பேசி எதிர் வழக்கிடுவோர்க்கும் பாமர மக்களுக்கும் கம்பர் அறிவுறுத்தல் அழகியதே, இராமன் கதையைக்கூறப் போந்ததே என் தலையாய நோக்கம் என்று எய்ய வேண்டா; சமயவாதிகளே! உங்களுக்கு உண்மைப் பொருளை உவமை முகத்தான் விளங்கச் செய்யவும் எனது கொள்கையைத் தெரிவிக்கவும் இக்காதையில் விழைந்தேன் என்று அறிவிப்பவராய்க் கம்பர், அடிக்கடி தம் காவியத்தில் கடவுள் கொள்கைளைக் கவின்பெறக் கூறிப் போகும் பெற்றி படித்து இன்புறத்தக்கது. ஆறுகளும் சமயங்களும் சரயு ஆறு இமயமலையில் தோன்றுகிறது. பரம் பொருளைப்போல அதன் வெள்ளம் முதலில் ஒன்றாக இருக்கின்றது; பிறகு பல சமயத்தவர் அறிவுக்கு உட்பட்டு அப்பரம்பொருள் பல படியாகச் சொல்லப்படுவதுபோலக் குளம், குட்டை, ஏரி, வாய்க்கால் ஆறு என்னும் இடங்களில் எல்லாம் பல படியாகப் பரவியது. இக் கருத்தைக் கம்பர், கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம் எல்லையின் மறைக ளாலும் இயம்பரும் பொருளீ தென்னத் தொல்லையில் ஒன்றே யாகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சி பல்பெருஞ் சமயஞ் சொல்லும் பொருளும்போற் பரந்த தன்றே. எனப் பாடியிருத்தல் படித்து இன்புறத் தக்கது. நாட்டில் பலவாறாகப் பிரிந்து பல துறைகளிலும் பரவிப் பாயும் வெள்ளத்தின் பிறப்பிடம் மலை. அங்ஙனமே உலகில் பலதிறப்பட்டு விளங்கும் சமய நெறிகளின் முதல் நிலை தோன்றியது இறைவனிடமே. வெள்ளம் பல கிளைகளாகப் பிரிந்து நிலத்திற் பாய்கின்றது. அவ்வாறே பல சமயங்கள் இறைவன்பால் தோன்றி உலகில் பரவியுள்ளன. பிரிந்த கிளையாறுகள் பாயும் நிலத்திற்கேற்ப ஆழமுள்ள விடத்தில் தேங்கும்; ஆழமற்ற இடத்தில் தேங்காமல் ஓடும். அதுபோல, அறிவுள்ளவர்மாட்டுச் சமயநெறி தேங்கி, வளர்ந்தோங்கும்; அறிவற்றவர்பால் தேங்கி வளராது. இங்ஙனம் பிரிந்து செல்லும் கிளைகள் பலவும் பாயும் நிலத்தின் தன்மையை அடைதல் இயல்பு. அஃதேபோல உண்மையான சமயநெறி மந்த புத்தி யுடைய மக்கள்பால் அகப்பட்ட அதன் உண்மைப் பொலிவினை இழந்து நிற்பதும் இயற்கை. பலவாக பிரிந்த கிளையாறுகள் முடிவில் கடலிற் சென்று கலக்கின்றன; மறைகின்றன. அவ்வாறே, உலகில் பலவாறாகப் பிரிந்த சமய நெறிகள் சென்றடைவது இறைவனிடமே. அவனிடம் தோன்றி அவனிடமே மறைகின்றன என்பதே கம்பர் கொண்ட கருத்தாகும். இதனால், அவர் மக்களுக்கு வற்புறுத்துவதுதான் யாது? கடவுள் உண்டு எம்மதமும் சம்மதமே என்ற கொள்கை உங்களிடம் இருக்கட்டும். அதனை மறந்து, உலகில் கடவுள் இல்லை என்று கூறுவோர் உளர். உண்டு என்று உரைப்போரும் உளர். ஆனால் இதில் எது உண்மை என்பதே ஆராயத்தக்கது. உலகத்தையும், படைப்பு பொருள்களையும், சுடுகதிர் தண்கதிர் இவற்றையும் காணின், இவற்றை இயக்கும் ஆற்றல் படைத்த ஒன்று இருக்க வேண்டுமென்று அறிகிறோம். எனவே, கடவுள் உண்டென்பது தெள்ளிதில் உணரப்படுகின்றது. உண்மையான தத்துவம் அறிந்த அறிஞர் இதனை மறுக்கார். இவ்வுண்மையைக் கம்பர் மிக அழகாகப் புலவர் வியக்கத் தகுந்தவாறு புலப்படுத்துகின்றார்; திருமணத்தின் பொருட்டுச் சீதையைப் பெண்கள் அழகுபெற அலங்கரித்தனர். சீதையின் இடைக்கு அழகு செய்ய அம்மாதர் விரும்பினர். அவர்களிற் சிலர், சீதைக்கு இடையில்லை என்றனர்; சிலர் உண்டு என்றனர். இடையின்றிப் பெண்ணெருத்தி இருக்க முடியா தென்பது ஒருதலை. ஆகவே, இவ்வுண்மையை உணர்ந்த பின்னர், அம்மகளிர் அறிவுபெற்றுச் சீதையின் இடையை அலங் கரித்தனர். மெய்யறிவு வாய்ந்த மேலோர், படைக்கப்பட்டுள்ள உலகத்தைக் கண்டு படைத்தவன் உளன் என்ற உண்மையை உணர்ந்ததே போன்று மகளின் தலை-கடைகளை நோக்க இடை உண்டு என்னும் உண்மையை உணர்ந்து, சீதைக்கு இடையுண்டு என்பதை நிச்சயித்து, அதனை அழகு பெறச் செய்தனர், என்று கூறும் கம்பர் மொழிகள் விழுமிய பொருள் அமைந்தவை அல்லவா? சில்லியல் ஓதிக் கொங்கைத் திரள்மணிக் கனகச் செப்பில் வல்லியும் அனங்கன் வில்லும் மான்மதச் சாந்தில் தீட்டி பல்லியில் நெறியிற் பார்க்கும் பரம்பொருள் என்ன யார்க்கும் இல்லையுண் டென்ன நின்ற இடையினுக் கிடுக்கண் செய்தார், --கோலங்காண் படலம் இங்ஙனம் மேலும் இரண்டொரு இடங்களில் கம்பர் தமது கடவுள் கொள்கையை இன்னபடியே குறித்துச் செல்கின்றார். கம்பர், பரம்பொருள் ஒன்று உண்டு; அஃது அலகிலா விளையாட்டுடையது; எங்கும் நிறைந்தது; அது தன்னை நம்பினோர்க்கு வெளிப்படுத்தும், நம்பாதாக்கு வெளிப்படுத் தாது. வீணான சமய மாறுபாட்டுணர்ச்சி வேண்டா; எம்மதமும் சம்மதமே; எம்மதத்தினும் உண்மை உண்டு என்பனவே கம்பர் கொண்ட கடவுட் கொள்கையாம். இதனை நமக்கு அவர் முதலிலேயே நமது மனத்திற் பதியச் செய்திருக்கிறார். பாயிரத்தின் கண்ணேயே இதனைக் காணலாம். உலகம் யாவையும் தாமுள வாக்கலும், நிலைபெ றுத்தலும், நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே, என்ற செந்தமிழ்ச் செய்யுள் ஒன்றே கம்பர் கொண்ட கடவுட் கொள்கையை வலியுறுத்தப் போதியாதாகும். பிற சமயத்தையோ சமயத்தார்களையோ வெறுத்தல் வேண்டா என்ற கொள்கையே கம்பர் வற்புறுத்துவதாம். பரந்த நோக்கம் எச்சமயமும் உண்மைச் சமயமே என்றும், சமயங்க ளெல்லாம் ஆண்டவனை அறியப் போந்தனவே என்றும், ஆதலால் மக்கள் இயல்பிற்கு ஏற்றவாறு பல சமயங்கள் இருத்தலில் குற்றமில்லை யென்றும், அதனால், சமய வாதங்களை அறவே ஒழித்துப் பரந்த நோக்கத்துடன் அமைந்து இருத்தலே அழகுடைத்து என்னும் கம்பர் உணர்ந்திருந்தார். இவ் வுண்மையை அப்பெருமான் இராமனைக் கண்ட காரிகையர் நிலையிலிருந்து வெளிப்படுத்துகின்றதை உன்னஉன்ன உவகை பெருகுகின்றது. தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமல மன்ன தாள் கண்டார் தாளே கண்டார்; தடக்கைகண் டாரும் அஃதே; வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்? ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரை ஒத்தார். --உலாவியற் படலம் சீராமன் உலாவி வருவதைக் கண்ட காரிகையர் அவனது திருவுருவத்தினைக் காண விழைந்தனர். அவர்கள் தத்தம் கண்களுக்கு முதலில் புலனாய உறுப்பினை நோக்கினர். அவர்களிற் சிலர் தோள் கண்டனர்; அதன் நிலையை முற்றிலும் அறிந்து வேறு உறுப்பினைக் காணமுடியாதவராயினர். இங்ஙனமே ஒவ்வொருவரும் ஒவ்வோர் உறுப்பினைக் கண்டு மேற்செல்ல இயலாதராயினர். அந்நிலை எவ்வாறு இருந்ததெனின், ஒவ்வொரு சமயமும் இறைவனின் ஒரு சக்தியைக் கண்டு மயங்கி நிற்கின்றதன்றி அப்பெருமானின் முழுத் தோற்றத்தையும் சக்தியையும் அறிந்தபாடில்லை என்ற உண்மையை ஒத்திருந்தது, என்று கம்பர் கூறும் விழுமிய பொருள் வியக்கதக்கதன்றோ? தோள் கண்டவர் தோளே அழகியது என்று கூறுதல் போல, ஒரு சமயத்தார் தாம் கண்ட உண்மையே மிகச்சிறந்தது என்று கூறுதல் தவறு என்றும், இராமனது ஒவ்வோர் உறுப்பும் எவ்வாறு கண்ணைக் கவரத்தக்கதா யிருந்ததோ, அவ்வாறே பரம்பொருளைக் காணப் போந்த ஒவ்வொரு சமயத்திலும் உண்மைப் பொருள் ஒளி விடுகின்றது என்றும், இராமன் உறுப்புக்கள் அனைத்தையும் பார்த்து முடிந்தால் இராமன் எழில் வலம் வெளிப்படுதல் போல, பல சமயங்கள் தோறும் கூறாநின்ற உண்மைத் தத்துவங்களை ஒருங்கு சேர்த்து ஆராய்ந்தால் உண்மைப் பரம்பொருளின் தத்துவத்தைக் கண்டறியலாமென்றும் கம்பர் கருதுவது கருத்தில் இறுத்ததத்தக்கது. என்னே கம்பரின் பரந்த சிந்தையும் விரிந்த நோக்கமும்! கம்பர் அறிவுரை இறைவன் ஒருவன் உண்டு. அவனை அடையப் பல சமயங்கள் உண்டு. அவை அமைத்தும் அவனை அடையவே துணை செய்கின்றன. ஆதலால் சமய வேறுபாடு மக்களிடைத் தலைக்காட்டலாகாது. இறைவன் உண்டா இல்லையே என்ற ஆராய்ச்சி பழமையானது; ஆயினும் இறைவன் இருப்பது உண்மை இந்த உண்மைகளை உணர்ந்து பல சமயத்தவரும் மன ஒற்றுமையோடு வாழ்தல் வேண்டும் என்பதே கம்பர் நமக்குக் கூறும் அறிவுரையாகும். இவ்வுண்மை நமது நாட்டுச் சமய வாதிகளும் சமய வெறியர்களும் உணர வேண்டுவது இன்றியமையாததன்றோ? இவ்வறிவுரைக்குக் காரணம் பல்லவர் காலத்தில் சைவமும் வைணவமும் சமண - பௌத்தங்களுடன் போராடி, அவற்றின் செல்வாக்கை ஒழித்தன. அதனால் பிற்காலச் சோழர் காலத்தில் சைவமும் வைணவமுமே தமிழகத்தில் செல்வாக்குற்றன. எனினும், சோழ மன்னர் அனைவரும் சிறந்த சிவனடியார்கள் ஆதலின், சைவமே நாட்டில் தனியாட்சி புரிந்ததென்னல் தவறாகது. சோழ அரசருள் இரண்டொருவர் வைணவத்தை மிகுதியாக வெறுத்தனர். அவருள் ஒருவன் அதிராஜேந்திரன், அல்லது வீரராஜேந்திரன் ஆவன். இவருள் ஒருவன் காலத்திற்றான் இராமாநுசர் சோழநாட்டை விட்டு ஹொய்சள நாட்டிற்கு ஓடும் துன்ப நிலைமை உண்டானது.1 மற்றொருவன் சேக்கிழார் காலத்தவரான இரண்டாம் குலோத்துங்கன். இவன் தில்லைக் கோவிந்தராசரைப் பெயர்த்து அப்புறப்படுத்தி விட்டான்.2 இரண்டாம் இராசராசன் 14ஆம் ஆட்சி ஆண்டில் திருக்கடவூர் கோவில் அதிகாரிகள், இக்கோவிரைக் கண்காணிக்கும் மாகேசுவரர்கள் வைணவரோடு தாராளமாகக் கலந்து பழகினால் அவர்தம் சொத்துக்கள் கோவிலுக்குப் பறிமுதல் செய்யப்படும் என்று தீர்மானித்தனர் என்று அக்கோவில் கல்வெட்டு உணர்த்துகின்றது.3 கம்பர் காலத்தில் சோழப் பேரரசனாக இருந்த மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியில் குகைகள் எனப்பட்ட ஒருவகை மடங்கள் இருந்தன. அவை திருமுறைகளில் வல்ல சைவத் துறவிகளைத் தலைவர்களாகப் பெற்றவை. திருமுறைகளைப் பாதுகாப்பதும் பிறர்க்குக் கற்பிப்பதும் சிவனடியார்களை உண்பிப்பதும் அக்குகைகளின் திருப்பணிகளாக இருந்தன.4 எவர் தூண்டுதலாலோ சோழநாட்டில் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியில் குகையிடி கலகம் ஏற்பட்டது.5 சைவத்தின்மீதோ அல்லது குகை அதிகாரிகள் மீதோ வெறுப்புக்கொண்ட சைவரல்லாதார் இக்கலகத்தில் ஈடுபட்டன ராதல் வேண்டும்.6 இச்சான்றுகளால், அக்காலத்தில் சைவர்க்கும் வைணவர்க்கும் இடையே இருந்த மனக்கசப்பை நன்குணரலாம். நூலறிவிலும், உலகியல் அறிவிலும் இணையற்று விளங்கிய கம்பர் பெருமான், இச்சமயப்போராட்டங்களை நன்கு உளங்கொண்டே சமரச முறையில் தம் கருத்துக்களை எடுத்துக் கூற இராமாயணத்தைக் கருவியாகக் கொண்டார் என்று கூறுதல் பொருந்தும். 4. உரிமை வாழ்க்கை முன்னுரை பிறரால் தனக்கொரு தீங்கும் நேராதென்னும் கவலையற்ற மனைநிலையே உரிமை (சுதந்திர) உணர்ச்சியின் மெய்த் தன்மையாகும். ஆனால் இந்நாளில் இளைஞர் தம் மனம் போனவாறு வாழ்வதையே உரிமை வாழ்வு என்று கருதுகின்றனர். பெரியவருட் பலர் தம் அலுவல்களில் பிறர் இடையீடின்றி வாழ்தலையே உரிமை வாழ்க்கை என்று நினைக்கின்றனர். இந்நிலையிற் கல்வியிற் சிறந்த கம்பர் பெருமான் கூறும் உரிமை வாழ்வைப் பற்றிய உண்மைகளை இங்கு காண்போம். கோசலத்தில் வாழ்க்கை கோசல நாட்டில் குற்றம் ஒன்றும் இல்லை; அதனால் எமன் இல்லை. எல்லோரும் தத்தம் மனத்தில் நன்கு சிந்தித்துச் செயல் செய்வதால், கோபம் என்பதும் இல்லை. நல்ல அறங்கள் செய்வது தவிர வேறு ஆற்றல் இல்லாதபடியால் உயர்வு தாழ்வு என்ற வேறுபாடு இல்லை, என்று கம்பர் அழகாக உரிமை வாழ்க்கையைச் சித்திரித்துக் கூறுகின்றார். கூற்றம் இல்லையோர் குற்றம் இலாமையால்; சீற்றம் இல்லைதம் சிந்தையிற் செய்கையால்; ஆற்றல் நல்லறம் அல்ல திலாமையால் ஏற்றம் அல்லது இழிதக வில்லையே, ---நாட்டுப்படலம் கோசல நாட்டு மக்கள் அரசனுக்கு விரோதமான குற்றம், நாட்டுக்கு விரோதமான குற்றம் ஒழுக்கத்திற்கு மாறான குற்றம், குடிக்கு மாறான குற்றம் முதலிய குற்றங்களில் ஒன்றையேனும் செய்திலர். ஆகவே, அவர்கள் எம பயத்திற்கு ஆளாகவில்லை குற்றத்தால் வருவது கூற்றம். குற்றமே இல்லாக் கோசல நாட்டில் கூற்றம் ஏது? கூற்றத்தின் பயம்தான் ஏது? எனவே, மக்கள் குற்ற மற்றவர்களாக விளங்கினமையின், அவர்கள் பிறவிப் பேற்றைப் பெற்றவர்களேயாவார்கள்; எனவே, மக்கள், தெய்வ பயம், மனித பயம் என்ற இரண்டினையும் கடந்ததொரு தனி நிலையில் வாழ்பவரானார்; இவ்வாழ்வே உரிமை வாழ்க்கை எனப்படும். சீற்றமில்லை தம் சிந்தையிற் செய்கையால் என்றதில் விழுமிய சகோரத்துவம் விளங்கக்காணலாம். சிந்தனை இன்மையால் சீற்றம் வருவதேயன்றி, சீற்றம் சிந்தனையோடு வராது. கோசல மக்கள் எக்கருமத்தையும் சிந்தனையுடன் செய்வதால் சீற்றம் வர ஏதுவில்லை. சீற்றம் இல்லாததால் பகையேது? எல்லோரும் சமத்துவம் எய்தி ஒன்றுபட்ட மனத்தினராய்ச் சமநிலையில் அமர்ந்து வாழ்வர். எனவே, நாட்டின் அழிவிற்கும் குழப்பத்திற்கும் மக்கள்மாட்டுச் சிந்தனையின்றித் தோன்றும் சீற்றமே காரணம். சிந்தனையோடு மக்கள் எச்செயலையும் செய்வராயின், சீற்றமே அந்நாட்டில் தலைகாட்டாதொழியும். கோசல மக்கள் சிந்தனையோடு எச்செயலையும் செய்து வந்ததால், சீற்றத்தை வென்றார்கள்; சகோதரத்துவத்தைப் பெற்றார்கள்; ஒருவரோடொருவர் ஒத்த மனத்தவராய் உடனுறைந்து வாழ்ந்தார்கள். இச் சகோதரத்துவமும் புறத்தேயிருந்து புகுத்தவல்லதன்று, நம்மாட்டே யிருப்பது ; நாமே புகுத்திக் கொள்ளக்கூடியது. சகோதரத்துவம் அவர்கள் தரவேண்டுவது, இவர்கள் தரவேண்டுவது என்பன வெற்றுரைகளே என்ப. கம்பர் கூறும் மூன்று நான்கடிகளால், கோசல மக்கள் உயர்வு தாழ்வு பெற்றிலர் என்ற உண்மைச் சமத்துவத்தைக் கூறிப்போந்தார். மக்கள் ஆற்றவல்ல செயல்களால் உயர்வு தாழ்வு ஏற்படுவது இயல்பு;ஆனால் கோசல மக்கள் ஆற்றும் செயலால் உயர்வு தாழ்வு ஏற்படவில்லை. ஏனெனில், யாவரும் நல்லறம் என்னும் ஒன்றையே ஆற்றியதால் உயர்வு-தாழ்வு தோன்றிலது. இதுவே மக்கள் ஒன்று பட்டு வாழ்வதற்குரிய தொழிலாம். எனவே, நல்லறமே செய்த மக்களிடை சமத்துவம் நிலவியிருந்தது என்க. ஆகவே, உலகியல் அறிவு சிறக்கப்பெற்ற மாபெரும் புலவராகிய கம்பர் பெருமான், உரிமை வாழ்க்கை என்பது யாதென்பதை நாலடி பாவினால் நலமுற நவின்றுள்ளதை நோக்க நோக்கக் கற்றோர் கழிபேருவகை கொள்வர். இராமகாதையைக் கூறுமுகத்தான், தாம் கருதிய உண்மைகளை இடங்களுக்கு ஏற்ப அமைத்து, நமக்கு நல்லறிவு கொளுத்திச் செல்கின்ற கம்பரது திறம் பாராட்டத்தக்கதே. பிறரால் நீங்கள் உங்கள் உரிமைகளை அமைவதாக நினைப்பது தவறு. பிறர் உங்களுக்குக் கொடுக்கவேண்டுவது ஒன்றுமில்லை. அமைத்தும் உங்களிடத்தே உள்ளன. உங்கள் ஒழுக்கத்தால் எய்தவல்லனவே சமத்துவம், சகோதரத்துவம் முதலியன. உங்கள் உரிமை - நீங்கள் அடைய விரும்பும் உரிமை - உங்களிடத்தே உள்ளது. அது, வெளியில் இருப்பதாக எண்ணித் தேடியலைய வேண்டா--அதன் பொருட்டு உங்கள் வாணாட்களை வீணாட்களாக்க வேண்டா என்று கம்பர் நமக்கு எச்சரிக்கின்றார். மேற்கூறிய செய்யுளோடு தழுவத்தக்க மற்றொன்றையும் புலவர் நமக்குத் தந்துள்ளார். அதனையும் நோக்குக. வண்மை யில்லையோர் வறுமை யின்மையால் திண்மை யில்லைநோர் செறுநர் இன்மையால் உண்மை யில்லைபொய் உரையி லாமையால்; வெண்மை யில்லைபல் கேள்வி மேவலால். --நாட்டுப் படலம் கோசல நாட்டில் வறுமை என்பது இல்லை; அதனால் ஈகை என்பதும் இல்லை கோசல நாட்டினர்க்குக் பகைவர் இல்லை; அதனால் அவர்கள் வீரமும் காணப்படவில்லை; பொய் என்பதும் அங்கு இல்லை; அதனால் உண்மை என்பதும் அங்குக் காணப்படவில்லை. எல்லார்க்கும் கேள்வியறிவு பொருந்தியிருந்தது; அதனால், அங்கு அறியாமை இல்லையாம். என்னே, கம்பர் காட்டும் உயரிய வாழ்வு! நாட்டில் வறுமை இல்லாமையே உரிமை வாழ்க்கையாகும். வறுமை இல்லாத போது ஈகை எங்கிருந்து தோன்றும்? நேரான பகைவர் இன்மையால், மக்களது வீரம் தோன்றவில்லையாம். கோசல மக்கள் குற்றம் செய்யாதவராதலின் அவர் மாட்டுப் பிறர் பகை கொள்வதெங்ஙனம்? பகை இருந்தாலன்றோ மக்கள் வீரத்தைக் காட்ட இயலும் ! பகையும் இல்லை; வீரமும் இல்லை. மக்களில் ஒருவரேனும் பொய் பேசுவதின்மையால் உண்மை என்பது இல்லாதாயிற்று. பொய் என்பது ஒன்று இருந்தாலன்றோ, அதனினும் வேறான மெய் என்பதை மக்கள் உணர்வர். பொய்யே இல்லாத நாட்டில் மெய் என்று எதைச் சுட்டிக் கூறக்கூடும்? எல்லோர்க்கும் அறிவு நிரம்பியிருந்ததால் அறியாமை அல்லாதொழிந்து ஆகவே ஒரு நாட்டு மக்கள் உரிமை வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டுமாயின், ஒருவரைச் சென்று இரைஞ்ச வேண்டா. பிறர் நமக்குக் கொடுப்பதன்று உரிமை வாழ்வு; அதை நாமே செய்து கொள்ளலாம். முடிவுரை மக்கள் அகத்திலும் புறத்திலும் யாதொரு குற்றமும் செய்யாதிருத்தல் வேண்டும்; அதனால் தெய்வ பயம், மனித பயம் என்றவற்றினின்றும் நீங்கப்பெறுவர். சீற்றத்தை அறவே ஒழிக்க வேண்டும்; அதனால் சகோதரத்துவம் எய்தியவராவர். யாவரும் நல்லறத்தை மேற்கொள்ள வேண்டும்; அதனால் மக்கள் சமத்துவம் எய்தியவராவர். இங்ஙனம் மக்கள் இருப்பின், அந்நாடே உரிமை பெற்ற நாடாகும். அந் நாட்டார் வாழ்வதும் உரிமை வாழ்வேயாகும். நம் இந்திய மக்களும் கம்பர் கூறும் உரிமை வாழ்வின் கருத்தினை உணர்ந்து அவர் கூறுமாறு நடந்தால் உரிமை என்பது தம்மிடத்தே உள்ளதென்பதை நன்குணர்வர். நாம் முதலில் குற்றமற்றவர்களாக இருத்தல் வேண்டும்; இரண்டாவதாக எதனையும் எண்ணிச் செய்யும் நற்பழக்கதைதை மேற்கொள்ளவேண்டும். அப்போது சீற்றம் முதலிய தீய பண்புகள் நம்மிடம் தலைக்காட்டா. எனவே, நமக்குள் இருக்கும் பலவித வேறுபாடுகள் நீங்கி நாம் இன்ப வாழ்வை எய்துதல் கூடும். 5. அரசியல் நுட்பம் புவியரசேத்தும் கவியரசாய கம்பர் பெருமான் தம் இராமகாதையின் கண் அவ்வவ்விடங்களில் சமயம் வாய்க்கும் போதெல்லாம் சிறிதும் மனஞ் சலியாது தாம் உணர்ந்த பல உயரிய கருத்துக்களை நமக்கு விளக்கிக் காட்டுகின்றார். கொடுங்கோல் அரசர் நாட்டை ஆளும் நாயகன் எவ்வித இலக்கணத்துடன் இருத்தல் வேண்டும் என்பதைக் கம்பர் விவரிப்பது வியக்கத் தக்கது. குடிகளைத் துன்புறுத்திப் பாக்குமரத்தைத் தூக்குமர மாக்கும் அரசர் அரசரோ? குடிகளின் பெண்டிரைக் கற்பழிக்க முயலும் காவலர் உண்மைக் காவலரோ? தம் மதத்தைப் பரவச்செய்யப் பிறமதத்தாரையும் அவர்தம் கோவில்களையும் பாழாக்கும் வேந்தர் உண்மை வேந்தரா? ஒற்றுமையின்றித் தம் குலத்துக்குத் தாமே தீமை விளைத்துக்கொண்ட ஐயசந்திரன் போன்ற தீய பண்புகள் நிறைந்த மன்னர் மன்னரோ? குடிகளை அச்சுறுத்தி அடக்கு முறையில் ஆளும் அரசர் உண்மை அரசரோ? அம்மம்ம! நாட்டுவரலாற்று நூலைப் படித்தா லன்றோ உண்மை விளங்கும்! அந்தோ! இத்தகைய கொடுங்கோல் மன்னரால் குடிகள் உற்ற துயர்ரான் கூறற்கெளிதோ? இத்தகைய அரசர் அரசரல்லர். இனி, கம்பர் கூறும் அரசனையும் அவரது அரசியல் நுட்பத்தையும் கவனிப்போம்: அளிப்பவன் கம்பர் தாம் கூறும் அரசியல் நுட்பத்தைத் தயரதன் மேல் ஏற்றிக் கூறுகின்றார் என்பது வெள்ளிடைமலை, அரசன் அளிப்பவனே அன்றி அழிப்பவன் அல்லன். துப்பாக்கி முனையிலும் மூங்கிற் கழிகளின் முனையிலும் குடிகளைத் துன்புறுத்தி ஆளும் அரசன் அரசனாகான். ஆள்பவன் அரசனாகான். காப்பவனே அரசன் என்பதே கம்பர் கொண்ட அரசியல் அறிவின் சாரம். அன்பு வழி காட்ட, அறம் துணை செல்லக் குடிகளுக்குத் தொண்டு பூண்டு ஒழுகுபவனே உண்மை அரசன். அவன் தன் கடமைகளை உள்ளவாறு உணர்ந்திருத்தல் வேண்டும்; அவற்றைக் கனவிலும் மறந்தானாகில் அவன் புவி யரசன்று, பூவரசே, குடிகளைக் காப்பதற்குரிய நற்குணங்களே முதலில் அரசன் பெறத்தக்கவை. இவை சிறிதளவும் குன்றாது நிறைவுற்று இருக்க வேண்டும். இன்ன குணங்களையுடையவனே உத்தம அரசன் என்ற கம்பர் கூற்று, கற்போர் மனத்தைக் களிப்புறச் செய்கிறது. ஆதிம் மதியும் அருளும் அற னும்அ மைவும் ஏதில் மிடல்வீ ரமுமீகையும் எண்ணில் யாவும் நீதிந் நிலையும் இசைநேமியி னோர்க்கு நின்ற பாதிம் முழுவதும் இவற்கேபணி கேட்ப மன்னோ. --அரசியல் படலம் தாயொக்கும் அன்பில்; தவமொக்கும் நலம்ப யப்பில்; சேயொக்கும் முன்னின் றொருசெல்கதி உய்க்கு நீரால்; நோயொக்கும் என்னில் மருந்தொக்கும்; நுணங்கு கேள்வி ஆயப் புகுங்கால் அறிவொக்கும் எவர்க்கும் அன்னான். --அரசியல் படலம் அன்பைச் செலுத்துவதில் தாய் இணையற்றவள். அரசன் குடிகள் மீது தாய்போல அன்பைச் செலுத்துகின்றான் எனின், அக்குடிகள் வாழ்வு பெருவாழ்வன்றோ? அவரவர் வேண்டிய வற்றை வேண்டியவாறே பெறத் தவம் உதவி செய்யும். அவ்வாறே மக்கள் வேண்டியவற்றை வேண்டியவாறே பெற மன்னன் துணை செய்வதால் அவன் தவத்தை ஒத்தவனாவான். ஆகவே, அரசன் இரண்டாவது பேறாகிய பொருளுக்கும் காரணன் ஆகின்றான். மூன்றாவதாக, தயரதன் சே யொக்கும் முன்னின்றொரு செல்கதி உய்க்கு நீரால் என்றார் கவி. ஒருவன் இம்மைப் பற்றைவிட்டு மறுமைக்குரிய நெறியிற் பழக மகன் உதவுகின்றான். ஆகவே. தந்தையின் செல்கதிக்கு வழிகாட்டியாயுள்ளவன் மகனே. அவன் போன்று, தயரதன் மக்கள் அறம் பொருள் இன்பத்தில் ஆழ்ந்துவிடாது மறுமைக்குரிய நிலைமையையும் அவர் செய்ய வேண்டிய சாதனங்களையும் அமைத்து வைத்துள்ளான். இந்நிலையில் அவன் குடிகளின் சேய்க்குச் சமமானவன் என்று கூறுதல் அமைவுடைத்து, நம் கம்பர் காட்டும் அரசியல் நுட்பம் சால அழகியதே! நான்காவதாக, தயரதன் நோயொக்குமென்னின் மருந்தொக்கும் என்கிறார். நோயை உண்டாக்குபவனும் அரசனே. அந்நோயை மருந்து போல் உதவிப் போக்குபவனும் அரசனே என்னே, கம்பர் காட்டும் அரச நிலை! அற்புதம்! அற்புதம் !! இந்நிலையில் வள்ளுவர் வாய்ச்சொல் ஒன்று நம் நினைவிற்கு வருகின்றது. அஃது, பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்னோய்க்குத் தானே மருந்து என்பது. சாதாரண நோய்க்கு மருந்து வேறு; இம்மாதரசிதன்னால் விளைந்த நோய்க்குத் தானே மருந்துமாகிறாள் என்னும் வள்ளுவர் வாய்ச்சொல்லையே சாறாக வடித்துக் கம்பர், நோயொக்கு மென்னின் மருந்தொக்கும் எனச் சுருங்ககூறி விளங்கவைத்துள்ளார். இக்கருத்தையும், கம்பர் கருத்தையும் ஒப்பிட்டால், தயரதன் குடிகளின் இன்பத்திற்கு ஆதாரமாய் விளங்கிய பரிசு நன்கு விளங்கும், எனவே, அரசனால் விளைந்த நோய்க்கு அவனே மருந்தாக அமைதல் அழகன்றோ? இதனினும் குடிகள் பெறத்தக்க பேறுதான் யாது? இன்பப்பேறு அரசன் நல்க, குடிகள் அதனை யடைந்து இன்புறுதல் எத்துணைச் சிறந்தது! ஆகவே, தயரதன் உலகத்து உயிர்களை அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு பேறுகளையும் அடைவிக்கின்றான். மேலும் நூல்களைக் கேள்வி மூலம் ஆராயுமிடத்து இன்றி யமையாத அவ்வவர் அறிவே போல் உடன்நின்று உதவுதல் வியப்பினும் வியப்பே! இதனைக் கம்பர், நுணங்கு கேள்வி ஆயப் புகுங்கால் அறிவொக்கும் எனத் தயரதனைப் பாராட்டும் பரிசு மகிழத்தக்கதே. தாயாயும் - தவமாயும், சேயாயும், அன்பர் தாமாயும், அவ்வவர் அறிவுமேயாயும் தயரதன் தன் குடிகளுக்கு மட்டுமே அமைந்திலன். உலக மக்கள் அனைவர்க்கும் அவன் அத்தன்மையனே என்பதைக் கம்பர் எவர்க்கும் அன்னான் என வற்புறுத்திக் கூறுகின்றர். இத்தகைய சிறந்த அரசினை ஏழை இந்தியா எக்காலம் பெறுமோ? குணத்தாலும் நலத்தாலும் உயர்ந்த தயரதன் வேந்தற்குரிய நாய்படையும் நல்லமைச்சும் வேண்டிலன். அவன் கை வேலே அவனுக்குற்ற துணை; அவன் அறிவே நல்ல அமைச்சு; அரசர்க்கு உளவு அறிய ஒற்றர் என்னும் கூட்டம் ஒன்று உண்டு. அதனையும் கம்பர் காட்டும் கருணைக் காவலன் பெற்றா னில்லை. உலகெங்கும் தயரதன் புகழே கூறுவாரன்றி இகழ்வோர் சிலராயின் ஒற்றர் எற்றுக்கு? எம் வேந்தன் ஒற்றர் பெற்றிலன். அமைச்சும் படையும் அவனுக்குத் தேவையில்லை; கைவில்லே அவனது துணை, அறமே அவனைக் காக்கும் கவசம்; மனுவினும் மிக்க நீதியுடையான், எனக் கம்பர் தாம் காட்டிய தயரதனைக் கோசிகன் புகழ்வதாகக் கூறி மகிழ்கின்றார். துனியின்றி உயிர்செல்லச் சுடராழிப் படைவெய்யோன் பனிவென்ற படியென்னப் பகைவென்று படிகாப்போன் தனுவன்றித் துணையில்லான் தருமத்தின் கவசத்தான் மனுவென்ற நீதியான் மகவின்றி வருந்துவான், --குலமுறை கிளத்துப் படலம் அரசன் இலக்கணம் அரசியலின் முற்றிய தத்துவத்தைக் கம்பர் காட்டியுள்ள விதம், கற்பவர் மனத்தைக் கனியச்செய்யும். அரசனும் குடிகளும் தம்முள் வேறுபாடு இரண்டறக் கலந்தனர் என்கிறார் கம்பர். உடலும் உயிரும் சேர்ந்து மனிதனாவது போன்று, குடிகளும் அரசனும் ஒன்று சேர்ந்து அரசியல் என்ற உருவத்தை அடைகின்றனர். அதனில் அரசன் உடல்; குடிகள் உடலில் தங்கப்பெற்ற உயிர். உயிர் இன்றேல் உடல் எது? அங்ஙனமே குடிகள் இன்றேல் கொற்றவன் ஏது? ஆதலின் அரசன் தன் உயிர் போன்ற குடிகளைக் காக்கக் கடமைப்பட்டவன் அவனும் குடிகளும் இரண்டறக் கலந்தனர் என்றால், அந்நாட்டில் இன்பமே இனிய நடம்புரியுமன்றோ? என்னே கம்பர் காட்டும் அரசியலின் உண்மைச் சிறப்பு! வயிரவான் பூணணி மடங்கல் மொய்ம்பினான் உயிரெலாந் தன்னுயிர் ஒப்ப ஓம்பலால், செயிரிலா வுலகினிற் சென்று நின்றுவாழ் உயிரெலா முறைவதோர் உடம்பு மாயினான். --அரசியற் படலம் உலகினில் நின்று வாழ் உயிரெலாம் உறையும் ஓர் உடம்பாயினான் என்பதே கம்பர் காட்டும் விழுமிய அரசியல் தத்துவம் செங்கோலாலும் தண்ணளியானும் ஆகிய மன்னன் இருக்கத்தக்க மாண்பு நிலை இதுவேயன்றோ? வேந்தன் உடலானது பற்றி, தன் அழிவிற்கு வழி தேடாது, உய்வதற்கு வழிதேடக் கடமைப்பட்டவனாகின்றான்; எனவே, அவன் குடிகளின் நன்மதிப்பைப் பெற வழி தேடுகின்றன். அவனன்றோ உண்மை அரசன்! வேந்தன் உடலாயும் குடிகள் உயிராயும் அமைகின்ற வாய்மையை வசிட்டனும் இராமனுக்கு உரைக்கின்றான். வறிஞனும் அரசனும் வறிஞன் தன் சிறு வயலில் ஒவ்வொரு பயிராய்ப் பார்த்து வளர்க்கும் பெற்றிபோலத் தயரதன் வையத்து மாந்தரை ஒன்று சேர்த்துப் பாராமல் தனித்தனியே கண்காணித்துவருவதைக் கம்பர் கூறுவது கருதாற்பாலது. வையக முழுவதும் வறிஞன் ஓம்புமோர் செய்யெனக் காத்தினி தரசுசெய் கின்றான் என்ற கம்பர் கூற்றுப் படித்து இன்புறத்தக்கதன்றோ? வறிஞன் தன் வயலில் உள்ள ஒரு பயிர் அழியினும் தனக்கு நட்டமாக எண்ணுவான். அதுபோலவே, தயரதன் மக்களுள் ஒவ்வொருவரையும் ஊறு அடையாவண்ணம் காத்துவந்தான், என்று கம்பர் கூறுதல் எண்ண எண்ண உவகை அளிக்கின்றது. 6. இசைக்கலை இசையின் சிறப்பு இசைக்கலையும் அதன் பெருமையும் பெரும்பாலர் உணர்ந்திருப்பார். இசையின் அருமையையும் பெருமையையும் ஓர்ந்தே, தமிழர் இசைத்தமிழை முத்தமிழுள் நடுநாயகமாக வைத்துளர். தமிழ் இலக்கிய நூல்கள் இசைத் தமிழிலேயே உள்ளன. இசை, கல் மனத்தையும் கரைந்துருகச் செய்யும் பெற்றி வாய்ந்தது. கற்றோரும் மற்றோரும் இசையின் வயப்பட்டேதீர்வர். அன்பைப் பெருக்கி ஆருயிரை வளர்ப்பது இசை. இசையைக் கேட்டு இன்புறா உயிர்கள் இலை என்றே கூறலாம். விலங்குகள், பறவைகள், செடிகள், பாம்பு முதலான உயிர்கள் இசையில் இன்பமடைகின்றன. பால் வேண்டி அழும் பசுங்குழவியும் இசை வயப்பட்டுப் பாலையும் பசியையும் மறந்த கண்கள் செருக மகிழ்ச்சி அடைகின்றது. இசையின் வயப்படாதார் அன்பற்றவர் என்றே கூறுதல் அமையும். இசை, வாழ்க்கையின் இன்பத்தை வளர்ப்பதாகும். தமிழ் நூல்களில் இசை இசையைப் பண்டைத் தமிழ் மக்கள் போற்றி வளர்த்தனர் என்பது பண்டை இலக்கியங்களால் அறியப்படும் உண்மை. அரசன் முதல் ஆண்டி ஈறாகவுள்ள மக்கள் இசையை வளர்த்து வந்தனர். சில மலர்கள் தம்மீது வண்டுகள் தங்கி இசை பாட மலரும் என்னும் உண்மையை முல்லை, வரி வண்டூத வாய் நெகிழ்ந்தனவே என்ற குறுந்தொகை அடிகள் நினைவூட்டு கின்றன. உலக நிகழ்ச்சிகள் கண்ணன் கதையில் இருந்து பசுக்களும் எருதுகளும் கன்றுகளும் இசைவயப்படுவன என்பது தெரிகிறது. மாலைப் போது குறுகியவுடன் பல்வேறு இடங்களில் மேயும் பசுக்களை ஒன்று சேர்க்கக் கண்ணன் தன் புல்லாங்குழலை எடுத்து ஊதுவான். குழலோசைக் கேட்டதும் அவை ஒன்று கூடிக் கண்ணனை அடைகின்றன. கண்ணன் இசையில் வல்லவன்; இசை இன்பத்தில் ஈடுபட்டவன். வண்டியில் பூட்டப்பட்ட மாடுகள், ஏற்றக்கிணற்றில் வேலை செய்யும் மாடுகள், உழு தொழில் செய்யும் மாடுகள் இனையன, அவற்றோடு தொடர் புடைய மக்கள் பாடும் தெம்மாங்கு முதலிய பாட்டுக்களைக் கேட்டுக்கொண்டே தங்கள் உழைப்பையும் துன்பத்தையும் மறந்து, இன்பத்தில் ஆழ்ந்த உள்ளத்தோடு உழைக்கின்றதைக் காணாதார் யார்? பிடாரன் பாம்பின் புற்றினருகிற் சென்று மகுடி ஊதுகிறான். அவ்வின்னோசை, புற்றில் உள்ள பாம்பினை வெளியே கொண்டு வருகின்றது. பாம்பு பிடாரனுக்குமுன் இசையில் மயங்கிப் படமெடுத்து ஆடுகின்றது. அவ்வமயம் அவன் அதனைப் பிடித்துக்கொள்கிறான். இவ்வாறு கொடிய விட நாகமும் இசைக்குக் கட்டுபடுகிறதெனின், இசையின் பெருமையை என்னென்பது! தேவார ஆசிரியரும் பிற சைவப் பெரியார்களும் இசை பாடி இறைவனை மகிழ்வித்தனர். இறைவனையே இசை வடிவத்திற் கண்டனர். இயலவன் இசையவன்; பண் அவன் என்றெல்லாம் நாயன்மார்கள் இறைவனைப் பாராட்டியுள்ளனர். ஞான சம்பந்தர் தாளமிட்டுப் பதிகங்களை பாடி இறைவனைத் தலந் தோறும் சென்று வணங்கினார். அப்பர் சுவாமிகளும் சுந்தரரும் அப்படியே இசைபாடி இறைவனைப் போற்றினர். பெண்களும் இறைவனுடைய பல தன்மைகளைப் பாடிக்கொண்டே கழல், பந்து, அம்மானை முதலிய ஆட்டங்களை ஆடினர் என்று சம்பந்தர் பாடல் தெரிவிக்கின்றது இவ்வாறே இளம்பெண்கள் பூக்கொய்தல், சுண்ணம் இடித்தல் முதலிய பல வேலைகளைச் செய்து கொண்டே இறைவன் சிறப்புக்களை எடுத்துப்பாடி மகிழ்தல் பண்டை வழக்கம் என்பதைத் திருவாசகப் பாடல்களும் உணர்த்துகின்றன. மாடுகளை மேய்த்து வந்த ஆனாய நாயனார் புல்லாங் குழலில் ஐந்தெழுத்தினை ஓதி இறைவனை அடைந்தாகப் பெரிய புராணம் பேசுகின்றது. திருநீலகண்ட யாழ்ப் பாணரும் திருப்பாணாழ்வாரும் யாழ் மீட்டியும் பாடியும் பேறு பெற்றவராவர் என்று நூல்கள் கூறுகின்றன. திருமாளிகைத் தேவர், சேந்தனால் முதலிய பெரியோர்கள் இசைபாடி ஆண்டவனை வழுத்தினர். அவர்தம் அருட்பாக்கள் திருவிசைப்பா என்ற பெயரில் ஒன்பதாந் திருமுறையாக வழங்கப்படுகின்றன. ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய சீவக சிந்தா மணியின் கதாநாயகன் சீவகன். அவன் ஆண்களைப் பார்க்க லாகாதென்றிருந்த சுரமஞ்சரி என்ற பெண்ணைக் கிழவேடத்துடன் சென்று, இசை பாடி வென்றான். அவன் இசையைக் கேட்டதும் பெண்கள், வேடன் பறவைபோல் கத்தும் ஓசையைக் கேட்டு மயங்கிக் கூட்டமாக ஓடி வரும் மயில்களைப் போல் ஓடி வந்தனராம். கள்ள மூப்பி னந்தணன் கனிந்த கீத வீதியே வள்ளி வென்ற நுண்ணிடை மழைம லர்த்த டங்கணார் புள்ளு வம்ம திமகன் புணர்த்த ஓசை மேற்புகன் றுள்ளம் வைத்த மாமயிற் குழாத்தி னோடி யெய்தினார் எனக் கவி கூறுவது கருதத்தக்கது. கம்பரும் இசையும் இத்தகைய பெருமை வாய்ந்த இசைசைப் பற்றி நம் கம்பர் பெருமான் யாது கூறுகின்றார் என்பதைக் கவனிப்போம். நாட்டுப் படலத்தில் மருத நிலத்திலும், நெய்தல் நிலத்திலும் எழுகின்ற இசைகள் ஒன்றுபடுவதை அங்குள்ள உயிர்களே யன்றி, குறிஞ்சி, முல்லை நிலங்களில் உள்ள மக்களும் மற்றைய உயிர்களும் அநுபவித்து உறங்கும் திறத்தினைக் கூறும் செய்யுள் இன்பம் பயக்கின்றதைக் காண்க: கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில் கன்று றக்கும் குரவை கடைசியர் புன்ற லைப்புனங் கரப்புடைப் போதரச் சென்றி சைக்கு நுளைசைசியர் செவ்வழி. மருதநிலத்தில் உழத்தியர் பாடும் குரவைப் பாட்டு, முல்லைநில இடையர் இசைக்கும் குழலின் இசையோடு தழுவி, அவர் முன்றிலில் கட்டப்பட்டிருக்கும் கன்றுகளைத் தூங்கச் செய்யும் ; நெய்தல் நிலத்து வலைச்சியர் பாடுகின்ற செவ்வழி என்ற பண்ணில் பாடும் பாட்டைத் தினைக்கொல்லையில் காவல் காக்கும் குறிஞ்சி நிலப்பெண் கேட்டு இன்றுயில் கொள்வாள்; அதனால் தினைப்புனக் காவல் அழிகின்றது; கதிர்களைக் கிளிகள் கொள்ளை கொள்கின்றன. இத்தகைய விழுமிய பொருள்வாய்ந்த செய்யுளைக் கம்பர் - இசைக் கல்வியை நன்குணர்ந்த கம்பர் - தம் அரிய அநுபவத்தால் நமக்குக் கூறிவைத்தது போற்றத் தக்கதே. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலங்களும் ஒன்றை ஒன்று அடுத்து இருப்பன; மருதநிலத்தில் பாடும் இசை, முல்லை நிலத்து இசையோடு ஒன்றுபடுகின்றது. மருதநிலத்தில் உழத்தியர் பாடுவர். முல்லையில் இசைக்கப்படுவது குழல். இவை இரண்டும் ஒன்றுபட்டன என்றால், உழத்தியர் குரலோசை குழலோசையோடு ஒன்றாயது என்பதன்றோ பொருள்? குரலிசையும் குழலிசையும் ஒன்றுபடுதலே சிறப்புடைத்து என்பதனை அன்றோ கம்பர் நமக்கு உணர்த்துகின்றார்! அவ்வோசை ஒன்றுபட்டு ஒலித்த இனிமையால் கன்றுகள் உறங்கினவாம். கன்றுகளே உறங்குமாயின், மக்கள் இனிமை யெய்தி உறங்கக் கேட்பானேன்! நெய்தல் நிலத்துப் பாடும் வலைச்சியர் குரலோசை குறிஞ்சிநிலத் தினைப்புனத்தில் காவல்காக்கும் குறப்பெண்களை உறங்கச் செய்தது என்றார். இங்ஙனம் அன்றோ இசை அமைதல் வேண்டும்! வலைச்சியரும் உழத்தியரும் இவ்வாறு இசையில் வல்லவராயிருந்தனர் எனின், அந்நாட்டு உயர்தரப் பெண்கள் எங்ஙனம் இருந்தனரோ? என்னே கம்பர் நமக்குத் தரும் இசைவிருந்து! பாடகர், இனிய மதுவையுண்டு, தமது சிறிய யாழ் இசைத்துத் தெள் விளி என்னும் பண்ணைப் பாடிக்கொண்டு வைகறையில் தெருவழியே செல்வார்கள். அப்பாடலே கோசல நாட்டு மகளிரைத் துயிலினின்றும் எழுப்புவதாம். ஆடவர்க்கு முன் எழவேண்டியவர் பெண்டிர் என்ற கொள்கையை மறவாக் கம்பர், அவ்விசை பெண்டிரை எழுப்பியது என்றார். இசையைக் கூறப்போந்த கம்பர் பெண்டிர்தம் பெருநிலையும் வற்புறுத்திக் கூறுதல் படிப்போர் உள்ளத்தை மகிழ்விக்கற தன்றோ? வைகறையில் இசையைக் கேட்டு எழுவதால் தூய மனநிலை இசை இன்பத்தில் ஈடுபடுகின்றது; இறைவனை நினைத்து வழுத்த ஏதுவாகின்றது. என்னே கம்பர் காட்டும் இருபொருள் அழகு! தெள்விளி சிறியாழ்ப் பாணர் தேம்பிழி நறவ மாந்தி வள்விசி கருவி பம்ப வயின்வயின் வழங்கு பாடல் வெள்ளிவெண் மாடத் தும்பர் வெயில்விரி பசும்பொற் பள்ளி எள்ளருங் கருங்கண்தோகை இன்றுயில் எழுப்பு மன்றே பாடற்பண்பு மிதிலைக் காட்சிப் படலத்தைக் கூறப்போந்த கம்பர், இசையைப் பெருமைப்படுத்தும் இடம் பெற்றமைக்கு மகிழ்ந்து, தம் எண்ணத்திருந்ததைத் தெள்ளிதில் தெரிவித்துவிட்டார்; இசைபயில் சாலைகளும் நாடக மேடைகளும் மிதிலையில் உண்டு என்றார். நரம்புக் கருவிகளை மீட்டும் வகையும் - பாடும் வகையும் - பாடுவார் கவனிக்க வேண்டுவதையும் இயம்பி யுள்ளார். வள்ளுகிர்த் தளிர்க்கை நோவ மாடகம் பற்றி வார்ந்த கள்ளென நரம்பு வீக்கிக் கண்ணொடு மனமுங் கூட்டி தெள்ளிய முறுவல் தோன்ற விருந்தென மகளி ரீந்த தெள்விளிப் பாணித் தீந்தேன் செவிமடுத் தினிது சென்றார் யாழின் நரம்புகளைத் தம் கூரிய நகங்கள் வாய்ந்த தளிர்போன்ற கைகள் நோகும்படி வலித்துச் சுருதி சேர்த்து, தாம் பாடும் பாடலின் பொருளை மனத்தில் அநுபவித்து, அவ்வாறு அநுபவிப்பது அவர் கண்களில் தோன்றவும், இளநகை உண்டாயதால் பல்லொளி சிறிது விளங்கவும், தெள்விளி என்னும் இசையில் அமைந்த பாட்டாகிய தேனை இராம லக்குமணருக்கும் கோசிகனுக்கும் விருந்தாகத் தந்தார்; அவர்கள் செவியார உண்டு இனிது போனார் என்று கம்பர் நமக்குத் தரும் விருந்து மருந்தினும் மாண்புடையத்தே! சுருதி சேர்த்தல் - பாடும் பாட்டின் பொருளை உள்ளவாறு உணர்தல் - உணர்ந்ததை உருக்கமாய் அநுபவித்தல், அநுபவித்தலால் உண்டாகும் இன்பம் கண்களில் தோற்றுவித்தல் - இசை அனைத்தும் இசை பாடுவோரிடம் தோன்றவேண்டுவன என்பதைக் கம்பர் நமக்கு உணர்க்துகின்றார். ஆடற் பண்பு பாடலின் அருமையைக் கூறிய கம்பர் ஆடலின் அருமையையும் அழகுபட அறைந்துள்ளார். நடன மாதர் குரல் ஓசையும் வீணையின் ஒலியும் மத்தளத்தின் ஒலியும் ஒன்றோடு ஒன்று பொருந்தியதைக் கம்பர் அவை, ஒன்றை ஒன்று தழுவித் தூங்கின என்றார். அவ்வளவில் நம் கண்களும் தூங்குகின்றன. நெய்திரள் நரம்பில் தந்த மழலையி னியன்ற பாடல், தைவரு மகர வீணை தண்ணுமை தழுவித் தூங்கக் கைவழி நயனஞ் செல்லக் கண்வழி மனமுஞ் செல்ல ஐயநுண் ணிடையார் ஆடும் நாடக அரங்கு கண்டார் என்ற கம்பர் செய்யுள் கற்பவர் மனத்தைக் கவரத் தக்கதாயுள்ளது. நெய் பூசிய நரம்பிலிருந்து எழுகின்ற இனிய குரலில் மழலைச் சொற்கள் அமைந்த பாடல், வருடப்படுகின்ற மகரவீணையோடும் மத்தளத்தோடும் பொருந்திக் கலந்து தூங்கியது; அவர் புரண்டன; அக்கண்களைப் பின்பற்றி அவர் மனமுஞ் சென்றது; இங்ஙனம் நடன மாதர் ஆடிய நாடக மேடைகளைக் கண்டு மூவரும் சென்றனர். நடனம் ஆடுகையில் பாடும் பாடல் - வீணையொலியோடும் மத்தள ஒலியோடும் ஒன்றுபடல் வேண்டும்; கை, பாட்டின் பொருளுக்குத் தக்கபடி அபிநயிக்க வேண்டும்; அக்கையைத் தொடர்ந்து கண்கள் புரளவேண்டும்; கண்கள் வழி மனமும் செல்ல வேண்டும்; இவையே உண்மையான இசைக்கல்வியாளர் கவனிக்க வேண்டுவன. இவற்றையே கம்பர் வற்புறுத்துகின்றார் முடிவுரை கம்பர் இராம காதையைக் கூறுமுகத்தான் நமக்கு அறிவிக்கும் இத்தகைய அரிய செய்திகள் பல. அவற்றில் இஃதொன்றாகும். இராம காதை ஒன்றையே கவனியாது, நம்மையும் இடையிடையே கவனித்து நற்செய்திகளை எடுத்துக்கூறும் கம்பர் மாட்டுத் தமிழ் உலகம் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டதாகும் அன்றோ? 7. மக்கட் பேறு குழந்தை இன்பம் குடும்பம் என்னும் தருவிற்குத் குழந்தையே கொழுங் கனியாகும். எத்துணைத் துன்பங்கள் இருப்பினும் அவை குழந்தையைக் காணும்போது வெயிலவனைக் கண்ட பனிபோல அகல்கின்றன. குழந்தை தீய குணங்களால் பற்றப்படாது, அன்று மலர்ந்த செந்தாமரை மலர்போன்ற இனிய முகத்தையும், புன்முறுவலையும், மாசற்ற மனத்தையும் கொண்டுள்ளது; தவழ்நடை பயின்றும், மழலைச் சொற் பழகியும், மனங்கரையச் சிரித்தும் ஈன்றோர்க்கு மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. ஆதலின் இல்வாழ்வார்க்குச் சிறந்த பேறு மக்கட் பேறேயாம். இச் செல்வத்தைப் பெறாதான் எப்பேற்றைப் பெற்றிருப்பினும் பெறாதவனே ஆகின்றான். பெறுமவற்றுள் யாமறிவ தில்லை; அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற என்னும் வள்ளுவர் வாய்ச்சொல் உன்னற்பாலது. குழந்தை தன் சிறு கையால் அளாவிய கூழ் அமிழ்தினும் இனிமை யுடைத்து; குழந்தை தம் உடலைத் தீண்டலால் பெற்றோர் உடற்கின்பம் பெறுகின்றனர்; அதன் மழலைச் சொல்லைக் கேட்டலால் செவிக்கின்பம் எய்துகின்றனர். குழலும் யாழும் இனியவெனக் கூறா வண்ணம் மென்கனிவாய் மழலை மொழிந்தும் உடற்கின்பம் மருவ ஓடி மேல்விழுந்தும் விழையும் அமிழ்தின் மிகவினிமை விளைய நுகரும் சுவையடிசில் செழிய சிறுகை யாலளைந்துஞ் செய்தாள் மோகம் ஈன்றோரை என்னும் சிவப்பிரகாசர் செந்தமிழ்ப் பா (பிரபு லிங்க லீலை) ஈண்டுச் சுவைத்தற்குரியது. அரசன் முதல் ஆண்டி ஈறாகவுள்ள அனைவரும் மக்களை விரும்பு கின்றனர். மக்கட்பேற்றால் பெறும் இன்பம் அனைவர்க்கும் ஒருபடித்தேயாம். செல்வன், இடம், பொருள், ஏவல் இனையன பெற்றிருப்பினும், மக்கட்பேறு இலனாயின், யாதும் பெறாதவனேயாவன். துறவோரும் ஒருங்கே அவாவும் மக்களைப் பெறுதலால் உண்டாகும் இன்பம் செப்புந்தரமன்று. பாண்டியன் அறிவுடை நம்பி புகல்வது காண்க: படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே. ---புறநானூறு குழந்தை இல்லா இல்லம் பயனற்றதென்பதைக் காலஞ்சென்ற பெரும் புலவர் மீனாட்சி சுந்தரனார் தாம் இயற்றிய மாயூரத் தலபுராணத்தில், பண்ணிலாப் பாடல் போலும் பரிவிலா நட்புப் போலும் உண்ணிலா நெய்யி லாமல் உண்டிடும் அடிசில் போலும் பெண்ணிலாச் சயனம் போலும் பெயரிலா வாழ்க்கை போலும் கண்ணிலா வதனம் போலும் கான்முளை இல்லா இல்லம் எனப் கவின்பெறப் பாடியுள்ள திறம் படித்தின் புறத் தக்கது: இவ்வுண்மையை நன்கு உணர்ந்தவனாதலின், பாண்டு மன்னன், மனைவியரைக் கூடலாகாதெனச் சாபம் பெற்ற பின்னர், மக்கட் பேறின்மையைக் குறித்துக் கவல்கின்றான். அவன் மக்கட்பேற்றின் மாண்பினைக் கூறுவதாக வில்லிபுத்தூரர் கூறுந்திறம் படித்து மகிழத் தக்கது. கல்லா மழலைக் கனியூறல் கலந்து கொஞ்சும் சொல்லால் உருக்கி அழுதோடித் தொடர்ந்து பற்றி மல்லார் புயத்தில் விளையாடு மகிழ்ச்சி மைந்தர் இல்லாத வர்க்கு மனைவாழ்வின் இனிமை என்னாம்? மெய்தானம் வண்மை விரதந் தளல்வேள்வி நாளும் செய்தாலும் ஞாலத் தவர்நற் கதிசென்று சேரார்; மைதாழ் தடங்கண் மகவின் முகமன்னு பார்வை எய்தா தொழியிற் பெறுமின்பம் இவணு மில்லை -சம்பவச் சருக்கம் ஒவ்வொரு புலவரும் மக்கட் பேற்றினை இடத்திற்கேற்ப பாராட்டிப் பாடியிருத்தலை நோக்க, மக்கட் பேற்றின் மாட்சி இத்தன்மைத்தென இனிது புலனாகும். நளவெண்பா பாடிய புகழேந்தியாரும் இதை விட்டிலர். குற்றமில் காட்சிக் குதலைவாய் மைந்தரை அழைத்துக்கொண்டு நின்தாய் வீடு செல்க என்ற கொழுநனை நோக்கித் தமயந்தி, மக்களைப் பெறலாம்; கணவனைப் பெறலாகுமோ? நின்னை விட்டுப் பிரியேன்என,கணவனினும் மக்களையே பாதுகாத்தல் சிறந்தது என்பதைக் கூறுமுகத்தால் நளன் மக்கட் பேற்றின் பெருமைய்ப் பேசியது உள்ளக் கிளர்ச்சியை உண்டாக்குவ தாகும். பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனும்மற் றென்னுடைய ரேனும் உடையரோ-இன்னடிசில் புக்களையும் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய் மக்களையீங் கில்லா தவர்? சொன்ன கலையின் துறையனைத்துந் தோய்ந்தாலும் என்ன பயனுடைத்தாம் இன்முகத்து - முன்னம் குறுகுதலைக் கிண்கிணிக்காற் கோமக்கள் பால்வாய்ச் சிறுகுதலைக் கேளாச் செவி. கம்பரும் மக்கட்பேறும் இங்ஙனம் பல்லோராலும் பாராட்டப்பட்டுள்ள மக்கட் பேறு நம் கம்பர் பெருமானால் பாராட்டப் படாதிருந்தலும் கூடுமோ? அரசியல் முதலிய மாபெருந் துறைகளில் எல்லாம் கை போய புலவர், இல்வாழ்விற்குரிய இப்பேற்றினை அறிந்து மகிழாதவரோ? இல்லை! இல்லை !! அவரும் இது பற்றித் தம் பகுதியைக் கூறியே முடிக்கின்றார்; தயரதன் வாயிலாகத் தாங்கொண்ட மக்கட் பேற்றின் மாண்பைக் கவினுறக் காட்டி மகிழ்கின்றார்: மக்கள் அன்பு தயரதன் பல்லாண்டுகளாகத் தவித்து அரிதின் பெற்ற தவப்புதல்வர் நால்வருள் அவன் அன்பிற்குப் பாத்திரனான இராமனைக் கோசிகன் அழைத்துச் செல்ல விரும்பினான்; விரும்பி, நின் மக்கள் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி, என முனிவன் கூறியது, யமனே வந்து உன் உயிரைக் கொடு என்று கேட்டதுபோல இருந்தது என்று கூறிக் கம்பர் கவல்கின்றார். தயரதன் வருந்தியதைவிடப் பதின்மடங்கு கம்பர் வருந்துதலே நயமுடைத்து; உயிரீர்க்கும் கொடுங்கூற்றின் உளையச் சொன்னான் என்றார். அத்துடன் விட்டனரா கம்பர்? அவன் துயரத்தை உவமைகளால் விளக்குதல் பின்னும் அழகியது. எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல் மருமத்தின் எரிவேல் பாய்ந்த புண்ணிலாம் பெரும்புழையிற் கனல்நுழைந்தால் எனச்செவியில் புகுத லோடும் உண்ணிலா வியதுரம் பிடித்துந்த ஆருயிர்நின் றூச லாடக் கண்ணிழந்தான் பெற்றிழந்தான் எனவுழந்தான் கடுந்துயரம் கால வேலான். --கையடைப்படலம் பின்னர் ஒருவாறு தெளிந்த தயரதன் அரச மாதவனை நோக்கி, இவன் படையூற்றம் இலன்; சிறியன்; பாலன்; பணியிதுவேல், யான் காப்பென்பெருவேள்விக் கெழுக என்றான் என்று கம்பர் கூறுவது, கம்பர் தயரதனைப் புத்திர வாஞ்சையால் குமரனாக்கிவிட்டனரோ என ஐயுற்று மகிழ வேண்டுபவராக இருக்கின்றோம். இவன் இங்ஙனம் தான் வருவதாகக் கூறவே, மாதவன் புருவம் நெற்றி முற்றச் சென்றன. அது கண்ட வசிட்டன் தயரதற்கு ஆறுதல் கூற, அரசன் இராம லக்குமணரைக் கோசிகன்பால் விட ஒருவாறு இசைந்தனன்; இசைந்து இருவரையும் கோசிகன்பால் விடுகையில், கோசிகனை நோக்கி, நற்றாதையும் நீ, தனித்தாயும் நீ இவர்க்கு என்று குழந்தை மனத்தவனாய்க் கூறுந் திறம் நம்மைக் குழையச் செய்கிறதன்றோ? தயரதனைக் குழையச் செய்யும் கம்பர் குழைகின்றார்; நாமும் குழைகின்றோம். என்னே கவியரசரின் தனிப்பெரும் ஆற்றல்! சீதையை மணந்து மிதிலையினின்றும் இராமன் தயரதனோடும், சேனைகளோடும் வருகையில் சமதக்கினி முனிவரின் மகனான பரசுராமன் திடீரெனத் தோன்றினன்; அவ்வளவே: தயரதன் நடுக்கங்கொண்டான்; பரசுராமன் தான் கைக் கொண்ட வில்லை வளைக்குமாறு இராமனை அறைகூவக் கேட்ட தயரதன் குற்றுயிராயினான்; சிவன் வில்லை இறுத்த இராமன், இவன் வில்லை ஓடியானோ! v‹gijí« X®ªây‹; kfd‹ò fiuòu©nlhl, ‘guRuhk‹ ïuhkid ahJ brŒtndh! என அஞ்சியவனாய் அம்மறைவனைப் பணிந்து, உமக்குச் சிவனும்அயன் அரியுமலர் சிறுமானிடர் பொருளோ? இவனும்என துயிரும்உன தபயம்இனி என்றான் எனக் கம்பர் கூறிக் குறுநகையும் கொள்ளல் பாராட்டற்பாலது. பரசுராமன் தந்த வில்லை இராமன் தாங்கியதும் தயரதன் மயங்கி வீழ்ந்தான். சீராமனோ புன்முறுவலோடு வில்லை வளைத்து அந்தணன் ஆணவத்தை அடக்கினான். அவ்வளவில் மதியிழந்து, தன் வாயிழந்து அருந்தவன் மறைந்தான். அவன் மறைந்த பின்னர், வையம் காக்கும் தயரதன் மூர்ச்சை தெளிந்து எழுந்தான்; மைந்தனது மாண்புறு வெற்றியை யறிந்தான்; கரையிடற்கரியதோர் உவகைக் கடலெனப் பொங்கினான். பின்னர் அவன் யாது செய்தான்? பரிவறு சிந்தையப் பரசு ராமன்கை வரிசிலை வாங்கியோர் வசையை நல்கிய ஒருவனைத் தழுவிநின் றுச்சி மோந்துதன் அருவியங் கண்ணெனும் கலச மாட்டினான். --பரசுராமப்படலம் என்று தயரதன் கொண்ட மகிழ்ச்சியைத் தாம் அடைந்தது போலக் கம்பர் அகமகிழப் பாடியுள்ளமை பாராட்டத் தக்கது. தயரதன் பல்லாண்டுகள் பிள்ளையின்றி அரிதன்பெற்ற இராமனை நோக்கிப் பிறந்த அன்று போல மகிழ்ந்தான். சிவன் வில்லை இறுத்துச் சீதையை மணந்த அற்றை ஞான்றும் அகமகிழ்ந்தான்; காவலரைக் கலக்கி அட்டகாசம் செய்து வந்த பரசுராமனைப் பங்கப்படுத்திய இற்றைஞான்றும் அகமிக மகிழ்ந்தான் எனின், மக்கட் பேற்றால் தயரதன் பெற்ற பேறு யாதென இயம்புவது! சீராமன் பரசுராமன் வில்லை ஓடித்ததுமுதல் தயரதன் இராமனைச் சில சந்தர்ப்பங்களில், பூண்ட போர்மழு வுடையவன் நெடும்புகழ் குறுக நீண்ட தோளைய! என விளித்து மகிழ்தலை மேற்கொண்டான். பின்னரும் இராமனுக்கு முடிபுனைய நாளைக் குறிமின் என்று கணித மாக்களை நோக்கித் தயரதன், வடிமழு வாளவற் கடந்த மைந்தற்கு முடிபுனை கடிகைநாள் மொழிமின் என்றனன் என்பதாகத் தயரதன் மறந்தாலும் தாம் மறவாமல் அவன் கூறியதாகக் கம்பர் கூறி மகிழ்தலே நாம் வியந்து பாராட்டற் பாலது. சீராமனுக்கு முடிசூட்ட நினைந்திருப்பதைத் தயரதன் வசிட்டன் முதலானவர்க்குக்கூற; வசிட்டன், அரச! சீதை அம்மை பூமாதினும் நல்லள், புவிமாதிலும் நல்லள், கலை மாதினும் நல்லள். இராமன் மன்னுயிர்க் கினியன்; கற்றோரும் மற்றோரும் அவனையே உண்ணு நீரினும், உயிரினும் உயர்வாய் உன்னுவர்என்றான். மண்ணினு நல்லன்; மலர்மகள் தன்னினும் கலையூர் பெண்னினு நல்லள் பெரும்பெயர்ச் சனகியோ நல்லள்; கண்ணினும் நல்லள்; கற்றவர் கற்றிலா தவரும் உண்ணு நீரினும் உயிரினும் அவனையே உவர்பார் --மந்திரப்படலம் 8. காதலும் மோகமும் காதல் - மோகம் காதலும் மோகமும் ஒன்றென நினைப்போர் பலர். அவர்தம் கருத்துத் தவறு என்பதைக் கம்பர் தெளிவாகத் தம் இராம காதையில் கூறியுள்ளார். காதல் என்பது தான் விரும்பிய ஒரு பொருளுக்குத் தன்னை அளிக்கவேண்டும் என்னும் ஊக்கம். காதலின் கிளர்ச்சியே அதன் நோயாய்த் தோன்றுகிறது. தன்னை அளித்தாகின்றவரையில் அந்நோய் தீராது. மோகம் என்பது பிறரைத் தான் அடையவேண்டும் எனும் முயற்சி. இதற்கு முடிவேயில்லை. எத்துணை பெற்றாலும் அம்மோகம் தணிந்திலது. காதல் நோய்க்கு மருந்தில்லை; மோக நோய்க்கு முடிவில்லை என்பதே கம்பர் கொண்ட கருத்தாகும். பிரையும் விடமும் சீதையைக் கொண்டு காதலையும் சூர்ப்பநகையைக் கொண்டு மோகத்தையும் கம்பர் விரிக்கின்ற திறம் வியக்கத் தக்கது. தென்றற் காற்றும், இருளும், மதியமும் இருவரையும் வருத்தின என்றாலும் நோய் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக வருத்தியது. காதல் நோயால் சீதை நலிந்தாள். அவள் கண் வழிப்புகுந்த காதல் நோய், பாலில் இட்ட பிரைபோல எங்கும் (அவளது உள்ளத்தில்) பரந்தது எனக் காதல் பரவும் தன்மையைக் கூறினார்; சூர்ப்பநகைக்குற்ற காமக்கனல், கொடிய நாகத்தின் விஷம் ஏறியதுபோல் பரந்தது என்றார். இதனால் காதல் நோய் நுண்மையது; அஃது அமைதியாகப் பிரைபோலப் பரவும்; மோகநோய் விஷம் ஏறுவதைப்போல் விரைவாக ஏறும் என்பன தெரிகின்றன அல்லவா? மாலுற வருதலு மனமு மெய்யுந்தன் நூலுரு மருங்குல்போல் நுடங்கு வாள் நெடுங் காலுறு கண்வழி புகுந்த காதனோய் பாலுறு பிரையெனப் பரந்த தெங்குமே --மிதிலைக் காட்சிப் படலம் சூர்ப்பநகைக்கு மோகநோய், அழிந்த சிந்தைய ளாயயர் வாள்வயின் மொழிந்த காமக் கருங்கனல் மூண்டதால் வழிந்த நாகத்தின் வன்றொளை வாளெயிற்(று) இழிந்த கார்விடம் ஏறுவ தென்னவே - சூர்ப்பநகைப் படலம் அம்பு பாய்வதிலும் வேறுபாடு சானகியின் காதல் நோயைக் கண்ணுற்ற மன்மதனும் கருத்தோடு ஒரு சரத்தை அவள்மீது எய்தான். அச்செயல் எரிகின்ற நெருப்பில் விறகிட்டதை ஒத்திருந்தது. தாடகை மார்பில் இராமன் விட்ட அம்பு தைத்தாற்போலச் சூர்ப்பநகை நெஞ்சில் மன்மதன் விட்ட அம்பு, ஊடுருவிச் செல்ல அவள் உயிர்வருந்தினாள் என்று காதல் நோய்க்கும் மோகத்திற்கும் உள்ள ஏற்றத்தாழ்வைக் கம்பர் அழகாகச் சித்திரிக்துக் கூறுகின்றார். காதல் நோய் கொண்டவர்பால் மன்மதனும் இரக்கம் காட்டுகின்றான்போலும்! மோகநோய்ப் பட்டார்பால் அவன் கணைகள் ஊடுருவிச் செல்கின்றன. நோமுறு நோய்நிலை நுவல கிற்றிலள் ஊமனின் மனத்திடை யுன்னி விம்மினாள் காமனும் ஒருசரங் கருத்தின் எய்தினன் வேமெரி யதனிடை விறகிட் டென்னவே. ---மிதிலைக் காட்சிப் படலம் தாட கைக்கொடி யாள்தட மாப்பிடை ஆட வர்க்கர சன்அயி லம்புபோல் பாட வத்தொழில் மன்மதன் பாய்கணை ஓட வுட்கி உயிருளைந் தாளரோ. --சூர்ப்பநகைப் படலம் உள்ளத்திலும் வேறுபாடு சீதை, தனக்கு வெப்பந்தந்த தண்மதியைப் பார்த்து, குளிர்ச்சியான கடலில் தோன்றிய சந்திரனே! நீ எத்துணைதான் என்னை வருத்துவதாகத் தோன்றினும், யாரையும் நீ இதுகாறும். கொன்றதில்லை; ஆதலால் கொடியவன் அல்லை; இறத்தலைப் போக்கும் இனிய அமிர்தத்தோடு வந்த நீ கொல்வது எங்ஙனம் அமையும்? அதுவுமன்றி நீ ஒரு பெண்ணோடு பிறந்துள்ளாய் என்றால், பின், நீ என்னைச் சுடத்தான் செய்வையோ! எனத் துதித்தாள். இவ்வாறு சந்திரனைப் பெருமைப் படுத்திப்பேசியது அவள் கொண்ட காதல் நோய்க்கு இலக்கணம். சூர்ப்பநகையோ, தனக்கு அதிகமாக மோக வெப்பத்தைத் தந்து வாட்டிய சந்திரனைத் தின்ன இராகு என்னும் பாம்பினைக் கொண்டுவரத் துணிந்தாள். இதனால் காதல் நோய்க்கும் மோக நோய்க்கும் உள்ள வெப்பத்தின் அளவு கணித்தறியப்படும் அல்லவா? காதல் கொண்டவள் தன் காதலனுக்குத் தன்னை அளிக்கத் தக்க உபாயங்களைச் செய்வாள். அக்காதலன் தன்னைத் துறந்தால் அதன்பொருட்டு நைவாள்; ஆயினும் அவனுக்கொரு தீங்கும் செய்யாள். மோகம் கொண்டவளோ, ஆடவன் தன்னை மறுத்தால், அவனுக்கு ஏதேனும் இடையூறு செய்து தன் பகைமையைத் தீர்த்துக்கொள்ளுவாள். திங்களைக் கண்ட சீதையின் நினைவும் சூர்ப்பநகையின் நினைவும் கண்டு ஆராயத் தக்கனவே. சீதை கூறுகின்றாள்: கொடியை யல்லைநீ, யாரையுங் கொல்கிலாய் மடிவில் இன்னமு தத்தோடும் வந்தனை பிடியின் மென்னடைப் பெண்ணொடென் றாலெனைச் சுடுதி யோகடற் றோன்றிய திங்களே. --மிதிலைக் காட்சிப் படலம் சூர்ப்பநகை கூறுகின்றாள்: அணவில் திங்களை நுங்கவ ராவினைக் கொணர்வெ னோடி யெனக்கொதித் துன்னுவாள் --சூர்ப்பநகைப் படலம் சூர்ப்பநகை இராமனைக் கண்ட இரவு உறக்கம் அற்றவளாய் மோகக்கனலில் வெந்துகொண்டிருந்தாள். அப்போது அவள் கார்மேகம் ஒன்றைக் கண்டாள்; அது இராமனின் உருவம் என எண்ணி அதனைத் தன் மார்பு பொருந்தத் தழுவினாள். என்னே அறியாமை! மோகக் கனல் செய்யும் மூடச் செயல் இது. ஆகக் கொங்கையின் ஐயனென் றஞ்சன மேகத் தைத்தழு வும்மவை வெந்தன. --சூர்ப்பநகைப் படலம் சீதையே தன் மெல்லிய தனங்களை நோக்கி, இளைக்காமல் மென்மேல் பருக்கின்ற என் கொங்கைகளே! நீங்கள் விம்மிப் பருத்து என்ன பயனைப் பெற்றீர்? எழுகின்ற சந்திரனை நிகர்க்கும் ஒளியுள்ள முகம் உடையவனும் ஒருவராலும் வளைக்க இயலாத வில்லைக் கையாண்டவனுமாகிய வள்ளல் இராமனது மார்பின் உள்ளே குடைந்து போய்ச் சேருவதற்கு வேண்டிய தவங்களைச் செய்யுங்கள் என்று தன் தனங்களுக்குப் புத்திமதி கூறுகின்றாள். இது அல்லவோ அறிவுடைமை! இளைக்கலாத கொங்கைகாள்! எழுந்து விம்மி என்செய்தீர்? முளைக்கலா மதிக்கொழுந்து போலும்வாண் முகத்தினான் வளைக்கலாத விற்கையாளி வள்ளல்மார்பின் உள்ளுறத் திளைக்கலாகு மாகிலான செய்தவங்கள் செய்யினே - கார்முகப் படலம் ஆசை - மோகம் முடிவாகக் கம்பர் சீதை - சூர்ப்பநகை இருவர் தம் விரகதாபத்தையும் நுணுகி ஆராய்ந்து, இருவர் தம் மனத்திலும் இயங்கிய விகாரத்தின் தன்மையைக் கூறி, ஆசை நோய்க்கு மருந்துமுண்டாங்கொலோ மோகத் துக்கோர் முடிவு முண்டாங்கொலா என்று கூறி முடிக்கின்றார். காண்க: வாச மென்கல வைக்களி வாரிமேற் பூசப் பூசப் புலர்ந்து புழுங்கினள்; வீச வீச வெதும்பினள் மென்முலை ஆசை நோய்க்கு மருந்துமுண் டாங்கொலோ! --மிதிலைக் காட்சி படலம் சூர்ப்பநகையைப் பற்றிக் கூறுகின்றார்: ஆகக் கொங்கையின் ஐயனென் றஞ்சன் மேகத் தைத்தழு வும்மவை வெந்தன; போகக் கண்டுபு லம்புமப் புன்மையாள் மோகத் துக்கோர் முடிவுமுண் டாங்கொலோ! --சூர்ப்பநகைப் படலம் 9. ஊடலும் கூடலும் ஊடல் - கூடல் உத்தம இலக்கணங்கள் அமைந்த காதலர் தம்முள் ஊடல் முன்னும், கூடல் பின்னும் நிகழ்வது இயல்பு. இவ்வுண்மையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் இன்புற இயம்புகின்றன. இதனை நமது வாழ்க்கையிலும் காணலாம். இக்காலக் காதலிமார் ஊடினால், உண்மையறியா ஆடவர் பலர் அக்காதலியரை அடித்துத் துன்புறுத்துவர். இஃது அறியாமையேயன்றி வேறன்று. காதலியர் ஊடுதல், கூடுதலில் இன்பம் பயக்கும். ஒரு காரணத்தைக் கற்பித்து அதனால் தலைவி சீற்றங் கொள்ளலும், தலைவனை வெறுத்தலும் ஊடலாம். அவ்வேளை, தலைவன் இதம் பல கூறி, அவள் ஊடலைத் தீர்ப்பான்; உதையும் படுவான். ஆனால் அது குற்றம் அன்று. இங்ஙனம் நிகழ்வன காதலில் நிகழும் குறும்புகள். இவை கூடலுக்கு இன்பம் தருவன. இவ்வுண்மையைக் காதலர் சோதித்து இன்பத்தை நுகர்வாராக. ஊடல், கூடல் என்பன பற்றிப் புவியரசேத்தும் கவியரசாய கம்பர் பெருமான் யாது கூறியுள்ளார் என்பதைக் காண்போம். ஊடல் விளைக்கும் தொல்லை ஒரு பெண் தன் காதலன் பால் ஊடல் கொண்டவுடனே தான் அணிந்துள்ள நகைகளைக் கழற்றிச் சாளர வழியே வீதியில் எறிந்து விடுகின்றாள். பின்னர் அவள் சீற்றத்தைத் தணிக்கத் தலைவன் படும்பாடு சொல்லத்தரமன்று. தலைவி ஊடல் தீர்ந்ததும், இருவரும் மாறி மாறிச் சந்தனக் குழம்பைப் பூசிக்கொள்ளுகின்றனர். அது அளவு கடந்து வழிந்து, வீதியில் தேங்கிக் கிடக்கும். ஒவ்வோர் இல்லத்திலும் இந்நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் நடத்தலால், வீதியில் மாலைகளும் சந்தனச் சேறும் ஒவ்வொரு நாள் காலையிலும் காணலாம். காலையில் குதிரைமீது செல்லும் மக்கள் இவற்றால் இடர்ப்படுவர். வீதியிற் கிடக்கும் ஊடிநீத்த மாலைகள் குதிரையின் கால்களில் அகப்பட்டுச் சுற்றிக் கொள்வதால், அவை மேற்செல்ல முடியாது தவிக்கின்றன. குதிரை வீரர் கீழிறங்கி நடந்து செல்ல முயல்கின்றனர். ஆனால் அவர் விருப்பமும் நிறைவேறல் எளிதன்று. ஏன்? வீதியில் தேங்கிக் கிடக்கும் சந்தனக் குழம்பு அவர்களை வழுக்கிவிழச் செய்கின்றது. ஊடல்கொண்ட மகளிர் தாம் சூடியிருந்த மலர் மாலைகளைத் தெருவில் எரிகின்றனர். அவை நடனம் ஆடுகின்ற மகளிரின் காற்சிலம்புகளில் மாட்டிக்கொண்டு பந்தப்படுத்தி, அச்சிலம்புகளை இலயத்திற்குப் பொருந்த ஒலிக்கவொட்டாது செய்கின்றன. புலவி (ஊடலை) கொண்ட பெண்மணிகள் தங்கள் மார்பிற் பூசியிருந்த சந்தனச் சேற்றை வழித்துத் தெருவில் எரிகின்றனர். அச்சந்தனச் சேறு தெருவில் ஓடுபவர்களை வழுக்கி விழச் செய்கின்றன. இவ்வாறு காதலர் முன்னாள் இரவு ஊடினும் கூடினும், மறுநாள் காலை அவ்வீதி வழியே செல்வோர்க்குத் துன்பமே, என்று காதலர் செய்தியைக் கம்பர் குறுநகையோடு நமக்கு கூறுகின்ற நயம் பாராட்டத்தக்கது. ஆடுவார் பொருவினூ புரத்தை யார்ப்பன சூடுவார் இகந்தஅத் தொங்கல் மாலைகள் ஓடுவார் இழுக்குவ ஊடல் ஊடுறக் கூடுவார் வனமுலை கொழித்த சாந்தமே. --நகரப் படலம் ஊடலும் கூடலும் ஊடல் கொண்ட மாதர், காதலர் எத்துணை வேண்டினும் சிறிது நேரம் தம் ஊடலைத் தீரார்; ஊடல் தீர்ந்து கூடல் வயப்பட்ட மாதர், ஆடவர் கரங்களில் கொடிகள் போல் துவள்வர் என்ற உண்மையைக் கம்பர் உவமை வாயிலாக் காட்டும் திறம் கவனிக்கத்தக்கது: வலிபொருந்திய திண்ணிய தோள்களையும், மிக்க ஒளி விளங்குகின்ற மேனியையும், மலர்ந்த பூமாலைகளையும் ஆடவர் இடத்தில் கூடினரான மயில்போன்ற சாயலையுடைய மாதர்போலச் சில கொடிகள் அசைந்து துவண்டன; சிவ பூங் கொம்புகள் ஊடல்கொண்ட மாதர்கள் போல் கைக்கெட்டாமல் நின்றன, என்று கூறுமுகத்தான் யாம் முற்கூறிய உண்மையைப் புலவர் புகன்றுள்ளார். உலந்தரு வயிரத் திண்டோள் ஒழுகிவாள் ஒளிகொள் மேனி மலர்ந்தபூந் தொடையல் மாலை மைந்தர்பால் மயிலின் அன்னார் கலந்தவர் போல ஒல்கி ஒசிந்தன; சிலகை வாராப் புலந்தவர் போல நின்று வளைகில பூத்த கொம்பர். --பூக்கொய் படலம் இனி, தலைவி ஊடல் கொள்ளவிருக்கும் காரணங்கள் யாவை எனக் கம்பர் கூறுகின்றார் என்பதைக் காண்போம்: சீராமன் திருமணத்திற்காகத் தயரதன் அயோத்தி விட்டுப் பரிவாரத்துடன் மிதிலை நோக்கிச் செல்கையில், வழியில் தங்குகிறான். அங்கு, அப்பரிவாரத்தில் உள்ள காதலர் புரியும் திருவிளையாடல்களைக் கம்பர் கூறிப் பெண்கள் ஊடலுறும் காரணங் களையும் கூறுகின்றார். ஒருத்தி, தன் காதலனுக்குப் பின்புறமாக அவன் அறியாவண்ணம் சென்று அவன் கண்களை மூடுகின்றாள். கண்களை மூடியது இன்னார் என்பதை அறியாத் தலைவன், யார் அது? என்று வினவுகின்றான். அவ்வளவே: தலைவிக்கு அக்கேள்வியில் ஐயம் பிறக்கின்றது. நம்மையன்றி இவன் கண்களை மூடவல்லவர் யார் இருக்கின்றார்? ஒருவரும் இல்லையே! m§‡d« ïU¡f, ït‹, ‘ah®? என்று கேட்கவேண்டிய தேவை இல்லையே! இவன் கண்களைப் பொத்தும் உரிமை எனக்கன்றி வேறு ஒருத்திக்கும் உண்டு போலும்! நன்று! நன்று இதென்ன வித்தை! என்று நினைந்து, அது பற்றி அவனிடம் ஊடல் கொள்ளுகின்றாள். இவ்வா றெல்லாம் தலைவி ஊடல் கொள்ளுதலைக் காண்க, என்று கம்பர் குறுநகையோடு நம்மை நோக்கி நவில்கின்றார். போரென்ன வீங்கும் பொருப்பன்ன பொலங்கொள் திண்டோள் மாரன் அனையான் மலர்க்கொய்திருந் தானை வந்தோர் காரன்ன கூந்தற் குயிலன்னவள் கண்பு தைப்ப, ஆரென்ன லோடும் அனலென்ன வெதும்பு கின்றாள், --பூக்கொய் படலம் இளநீர்க்காய் விளைத்த ஊடல் ஒரு தலைவன் இளநீர்க்காய் ஒன்றை நோக்கி, அம்மா! இது மங்கையர்தம் கொங்கைகளை ஒத்திருக்கின்றது, என்று வியப்புற்றுக் கூறுகின்றான். அவ்வளவில் தலைவி சினங் கொண்டு, இவ்விளநீர்க்காய் எந்த மாதர்களுடைய கொங்கை களை நிகர்க்கும்? என்று விம்மிக் கொதித்து முகம் வியர்க்கப் பெருமூச்சு விடுகின்றாள்; என்னே! இவன் நமது கொங்கையைச் சுட்டிக் கூறாது, பொதுப்பட மாதர் கொங்கைகள் என்று சொல்லுகிறான். மாதர் என்னும் பன்மைச் சொல் இவன் வாய்வழி வரலாமோ? இவன் மாதர் பலரிடம் நட்புக் கொண்டுளன் போலும்! இதனை நாம் அறியாமற் போனோமே! என்று மனம் புண்ணாகின்றாள். தலைவன் மாதர் கொங்கை எனப் பொதுப்படக் கூறின், இவள் சீற்றம் கொள்ளக் காரணம் இல்லை; இருப்பினும் இவள் அறியாமையால் சீற்றமும் ஐயமும் கொள்கின்றாள் மாதர் இயல்பு அஃது என்று கம்பர் கூறுகின்றார். செம்மாந் தெங்கின் இளநிரையொர் செம்மல் நோக்கி, அம்மா! இவைமங் கையர்கொங் கைகளாகும் என்ன, ‘எம்மாதர் கொங்கைக் கிவையொப்பன? என்றொர் ஏழை விம்ம வெதும்மா வெயரா முகம்வெய் துயிர்த்தாள். பூக்கொய் படலம் மாதர் ஊடல் கொள்ளம் பரிசைக் கூறிய கம்பர், அம்மாதர் ஊடல் தீர்ந்து காதலர்பால் காதல் விஞ்சி, அவரை அடைய அவர் செய்யும் முயற்சியையும் முறுவலோடு விளக்குகின்றார். குயிலைத் தொழுதல் தன் தலைவனோடு ஊடல் கொண்ட ஒருத்தி, அவனைச் சேர விரும்பியவளாய் தான் பறித்துக் கொள்ளக்கூடிய மலர்கள் பல இருந்தும், அவற்றைப் பறியாமல், எட்டாதிருந்த மலரைப் பார்த்து, இதனைப் பறித்துக்கொடு என்று குயிலைக் கரங்குவித்து வேண்டுகின்றாள். தான் படும் துன்பத்தைப் பொறாத தலைவன் போந்து மலர் பறித்துத் தன்னுடன் கூடுவான் என்பதே அவள் விருப்பம். கூடலுக்கு மாதர் செய்யும் சூழ்ச்சிகளில் இது ஒன்றாகும். மைதாழ் கருங்கண்கள் சிவப்புற வந்து தோன்ற நெய்தாவும் வேலானொடு நெஞ்சு புலந்து நின்றாள் எய்தாது நின்றம் மலர்நோக்கி யெனக்கி தீண்டக் கொய்தீதி யென்றோர் குயிலைக்கரங் கூப்பு கின்றாள். --பூக்கொய் படலம் மைதீட்டப்பெற்ற கரிய கண்களில் செந்நிறம் மிகவும் தோன்றும்படி நெய் பூசப்பெற்ற வேலேந்திய கணவனோடு மனத்தில் ஊடல் கொண்டிருந்த ஒருத்தி, தன் கைக்கு எட்டாதிருந்த மலரைப்பார்த்து, அதன்மீது கொண்ட விருப்பத்தால் இஃது எனப்ழுத் கிடைக்கும்படி பறித்துக்கொடு என்று குயிலைக் கைகுவித்துத் தொழுதாள். கிளியை விடுத்தல் மற்றொருத்தி, தன் நாயகன் தன்னைப் பணிந்த போதெல்லாம் ஊடல் தீராது, பின்பு அவன்மேல் விருப்பம் மேலிட்டவளாய், அவனையடைய வழியறியாமல் தயங்கு கின்றாள். தலைவன் இருக்கும் இடத்திற்குத் தன் கிளியைப் பறக்கவிட்டு அதனைத் தொடர்பவள் போல் அவன் இருக்கும் இடத்தை அடைகிறாள். மாதர் மடமையை நோக்குங்கள்! கணவன் பணியும்போது மிடுக்குடன் இருக்கும் மாதரார், பின் அவனையடையத் தாமே சூழ்ச்சி செய்து போகும் விந்தை சால அழகுடையதே! யாழொக் குஞ்சொற் பொன்னனை யாளோர் இகல்மன்னன் தாழத் தாழாள் தாழ்ந்த மனத்தாள் தளர்கின்றாள் ஆழத் துள்ளுங் கள்ள நினைப்பால் அவனின்ற சூழற் கேதன் கிள்ளையை யேவித் தொடர்வாளும். -பூக்கொய் படலம் கூடல் உணர்ச்சி ஒருத்தி, தன் தலைவனை அழைத்துவரத் தோழியை ஏவுகிறாள். தோழி மீண்டு வராமையைக் குறித்து மனம் புண்ணாகிறாள். மலர்ப்படுக்கையில் படுத்துள்ள வேறொருத்தி, தன் தலைவனின் பெயர்களைச் சொல்லும் கிளியை மன மகிழ்ந்து தழுவுகிறாள். ஒருத்தி, தனக்குத் துணையாயிருக்கும் கிளியைத் தழுவி, என் ஆவி போன்ற நாயகனை நீ அழைத்துவர வில்லை. நீ இருந்து எனக்கு என்ன பயன்? துன்பம் செய்வதில் நீ எனக்கு அன்றிலையே ஒப்பாய், என்று அழுது சீறுகிறாள். தன் கணவனோடு ஊடல் கொண்டு அமளியில் அவனுடன் இருந்த ஒருத்தி, ஊடல் தீர்ந்து கூடல் கொள்ள விரும்புகிறாள். அதனைக் கணவன் உணர்ந்தானில்லை. தான் இன்னும் தூங்கவில்லை யென்பதையும், உரையாடுவதற்கு ஏற்றவளாய் இருக்கிறாள் என்பதையும், அரைத் தூக்கத்தில் சோம்பல் முறிப்பவளைப் போல் பாவனை செய்து, இப்போது எத்தனை நாழிகை சென்றன? எனக் கேட்கிறாள். தலைவி ஒருத்தி, தன் கணவனை இறுக அணைத்து மலையும் உருவழியும்படி திண்ணியதாகவுள்ள அவன் மார்பில் தன் நகில்கள் ஊடுருவிச் சென்றனவோ என அவளது முதுகைப் பார்த்தாள் என்று கூறு முகத்தான் ஊடல் தீர்ந்து கூடும் மாதர் காதலிடத்துக் கொண்ட கரைகடந்த காதல் நுண்மையைக் கவின்பெறக் கம்பர் காட்டுகின்றார். இறுக அணைத்தலே காதல் இன்பத்தில் கூடும் தலைவன் தலைவியர் செய்யத்தக்க இன்பச் செயல். கொலையுரு அமைந்தெனக் கொடிய நாட்டத்தோர் கலையுரு அல்குலாள் கணவற் புல்குவாள் சிலையுரு வழிதரச் செறிந்த மார்பிற்றன் முலையுரு வினவென முதுகை நோக்கினாள். --உண்டாட்டுப் படலம் மற்றொரு தலைவி, தன் ஊடலைத் தணித்துக் கணவனைக் கலந்தணைய விரும்பியவளாய்ப் பொய்யாகச் செய்யும் உறக்கத்தில் கனவு கண்டதாகப் பாவித்து, அதன் உதவியால் கணவனை அணைத்துக் கொண்டாள், இஃது ஊடல் கொண்ட மாதர் கூடல் கொள்ளற்குச் செய்த சூழ்ச்சியே! இதனைக் கம்பர் குறுநகையுடன் கூறும் திறம் வியக்கத்தக்கது. துனியுறு புலவிளைக் காதல் சூழ்சுடர் பணியெனத் துடைத்தலும் பதைக்குஞ் சிந்தையாள் புனைகுழல் ஒருமயில் பொய்யு றங்குவாள் கனவெனு நலத்தினாள் கணவற் புல்லினாள். --உண்டாட்டுப் படலம் ஊடியபின் கூடலே இன்பத்திற்கு ஏற்றதாகும். ஊடல் இல்லாக் கூடல் கூடலாகாது. ஊடுதல் காமத்திற் கின்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் என்ற வள்ளுவர் வாய்ச் சொல்லும் இதற்குச் சான்றாதல் கண்டு களிக்க. 10. செய்ந்நன்றியறிதல் முன்னுரை பெறலருங் குணங்கள் தம்முட் செய்ந்நன்றி யறிதலும் ஒன்றென ஆன்றோர் கூறியுள்ளனர். செய்ந்நன்றியறிதலிற் தலைசிறந்தவர் கன்னனும் கும்பகர்ணனுமே யாவர் என்பது சான்றோர் கருத்தாகும். ஆனால் இராமகாதையைத் தமிழிற் பாடிய கம்பருமே மேற்கூறப் பெற்ற கன்னன் - கும்பகர்ணன் இருவரோடு வைத்துக் கூறத்தக்கவர் ஆவார். சடையப்ப வள்ளல் சடையப்ப வள்ளல் என்பவர் வெண்ணெய் நல்லூரில் வாழ்ந்து வந்த தாளாண்மையிற் சிறந்த வேளாண் மரபினர். அப்பெருந்தகை தம்மை நாடி வந்த எந்நாட்டு வறிஞர்க்கும் ஈதலில் தவறாதவர். அப்பெரியாரே நம் புலவர் பெருமானாய கம்பரை இளமை முதலே பேரன்புடன் பாதுகாத்தவர். கம்பரைச் சோழவேந்தனிடம் அறிமுகப்படுத்தி, அவரது அளப்பரும் புலமையைத் தமிழ் நாட்டில் நிலவச் செய்தவரும் அவரே யாவர். அவ்வள்ளலே கம்பர் இராமாயணம் பாடி முடித்தற்கும் பெருங் காரணமாயிருந்தனர் எனின், அவர் கம்பர்பால் வைத்த அன்பின் திறத்தினை யாதென்றறைவது! நன்றி மறவாமை அண்ணல் தமக்குச் செய்த நன்றியை மறவாது உளங்கொண்ட கம்பர், ஒருவராலும் பெறுதற்கரிய பேற்றைத் தாம் செய்யும் பதில் உதவியாக அண்ணலுக்கு அளித்துளார்; உலகம் உள்ளளவும் கம்பர் பெயரும் அவர் பாடிய இராமகாதையும் நிலை நிற்பதேபோல வள்ளல் அறச் செயலும் அருங்குணமும் இராம காதையில் ஒளிருமாறு செய்துள்ளார். அண்ணல் செய்த உதவியைவிடப் பன்னூராயிரம் பெரிதெனக் கருதுமாறு, கம்பர் தம் பதில் நன்றியை அண்ணலுக்கு எவ்வாறு அளித்துளர் என்பதை ஈண்டுக் காண்க: பயன் தவறாத சொல் கம்ப ராமாயணம் வேள்விப் படலத்தில், கோசிகன் இராமனுக்குப் படைக்கலம் அளித்தமை இன்னபடி இருந்த தெனக் கூறுகின்ற கம்பர், ஊழி பெயரினும் தாம் சொன்ன சொற்களைச் சோரவிடாத பெருமை வேளாளர்க் குரியது; எம் அண்ணல் சடையப்பர்க்கும் அஃதே, என உவமை முகத்தால் விளக்குகின்றார். விண்ணவர் போய பின்றை விரிந்தபூ மழையி னாலே தண்ணெனுங் கான நீங்கித் தாங்கருந் தவத்தின் மிகக்கோன் மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்தெனச் சடையன் வெண்ணெய் அண்ணல்தன் சொல்லே யன்ன படைக்கலம் அருளி னானே. --வேள்விப் படலம் மண்ணுலகத்தாரது வறுமை என்னும் நோய்க்கு மருந்துபோன்ற வெண்ணெய் அண்ணலது சொல்லுக்கு நிகரான அம்புகளைக் கோசிகன் சீராமனுக்களித்தான், என்று கூறிக் கம்பர் மகிழ்கின்றார். சடையப்பர் வழங்கும் சொற்கள் வாய்மையுடையன; அவை சிறிதும் கெடாமல் கருதிய பயனைத் தருவன; இத்தகைய வள்ளல் சொற்களுக்கு நிகரான அம்புகளை முனிவன் கோசலக் குரிசலுக்கு நல்கினான் - என்னும் கூற்றில், கம்பர், சடையப்பருடைய சொல் வாய்மை தவறாதது என்பதை வலியுறுத்துதல் காண்க. புகழும் நிலவும் அடுத்தபடியாக, அண்ணல் வறுமைப் பிணியைப் போக்கும் திறத்தால் உண்டாகும் புகழ் உலகம் எங்கும் பரவியதாம். அங்ஙனமே வெண்ணிலா உலகெலாம் பரவியது எனக் கம்பர் வெண்ணிலா, தன் விரிகதிர்களை விரித்த மாண்பினுக்கு வள்ளல் புகழை உவமையாகக் கூறுதல் எத்துணைப் பொருத்தம் உடைத்து! ஏற்ற இடங்களில் வள்ளல் பெருமையை அமைத்துப் பாடும் பெருமை பெற்றவர் கம்பலல்லரோ! தம்மைக் காத்த வேந்தரைப் புகழேந்தியாரும் வில்லிபுத்தூராரும் தாம் பாடிய நூல்களிற் பாடியுள்ளரேனும், உயர்வு நவிர்ச்சியணி தோன்றவைத்தே பாடியுள்ளனர். கம்பரோ, அங்ஙனமின்றி, வள்ளலது ஏற்றத்தை உள்ளவாறே உரிய இடங் களிற் பாடியுள்ளார். வள்ளலைச் சிறப்பிக்க, இயலாதவொன்றைப் புதிதாய்ப் புகுத்தக் கம்பர் விழைந்தாரில்லை; விழைய இடமுமில்லை; பூணுக்குப் பூண் எதற்கு? வண்ண மாலை கைபரப்பி உலகை வளைந்த இருளெல்லாம் உண்ண எண்ணித் தண்மதியத் துதயத் தெழுந்த நிலாக்கற்றை விண்ணு மண்ணுந் திசையனைத்தும் விழுங்கிச் கொண்ட விரிநன்னீர்ப் பண்ணை வெண்ணெய்ச் சடையன்றன் புகழ்போ லெங்கம் பரந்துளவால் --உண்டாட்டுப் படலம் விண்ணையும் மண்ணையும் எல்லாத் திசைகளையும் தன்னுள் அடக்கிக்கொண்ட விரிந்த நன்னீரையுடைய பண்ணைகள் வாய்ந்த வெண்ணெய் நல்லூரில் வாழும் சடையன்றன் புகழ்போலத் தண்மதியின் கிரணங்கள் எங்கும் பரவின எனக் கம்பர் கூறும் உவமையும் பொருளும் எண்ணி யெண்ணிக் களிக்கதக்கன அல்லவா? இதனால் வள்ளலது புகழின் விரிவு அங்கைக் கனியெனத் தெள்ளிதின் விளங்கு கின்றமை காண்க.நிலாத் தோன்றுவதற்கு முன்னர் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது-அது போல வள்ளலுக்கு முன்னர் வறுமை நோய் உலகெங்கணும் பரவியிருந்தது; நிலாத் தோன்றிய பின்னர் இருள் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது-அதுபோல வள்ளல் தோன்றியபின் வறுமைப் பிணி ஒழிந்தது. நிலா வெளிச்சம் உலகெலாம் பரவி மக்களை இன்புறுத்துவதுபோல-வள்ளலது வள்ளற்றன்மை உலகெங்கும் பரவி மக்களை இன்புறச் செய்கின்றது என இத்துணை ஆழ்ந்த கருத்துக்களைக் கம்பர் ஒரு சிறு கவியில் செறிய வைத்துள்ள திறத்தினைக் காண்க. அண்ணலது அருட்செயல் வானர வீரர்கள் கடலில் அணையைக் கட்டுகையில் உயர்வெற்புகளைத் தூக்கி வானரத் தச்சனாகிய நளன் என்பானிடம் வீச, அலைப்புண்டு வந்த அப்பருப்பதங்களை நளன் அஞ்சேல் எனச்சொல்லி, அவற்றைத் தாங்கி முறையாகவும் அமைதியாகவும் அடுக்கினன். அங்ஙனம் நளன் செய்தமை, தஞ்சமென்றடைந்தோரைத் தாங்கித் தக்கவாறு பாதுகாக்கும் அண்ணலது அருட்செயலை ஒத்திருந்தது எனக் கம்பர் கூறுவது சால அழகியதன்றோ? மஞ்சினில் திகழ்தரு மலையை மாக்குரங்(கு) எஞ்சுறக் கடிதெடுத் தெறியவே, நளன் விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணெயில் தஞ்சமென் றோர்களைத் தாங்கும் தன்மைபோல். --சேதுபந்தனப் படலம் வள்ளலும் வறுமைப்பிணியும் மேகநாதன் வானரசேனையை நாக பாசத்தாற் பிணித்துவிட்டனன். அந்நாகபாசம் கருடனைக் கண்டதும் இற்று ஒழிந்தது. அஃது வடமொழி வறிஞரையும், தென்மொழி வறிஞரையும் பிடித்திருந்த வறுமைப் பிணி வெண்ணெய்வாழ் அண்ணலைக் கண்டதும் இற்றொழிந்ததை ஒத்திருந்தது என்று கம்பர் கூறும் உவமையையும் பொருளையும் எண்ணிப் பாருங்கள். இதனால், வள்ளலின் வள்ளல் தன்மை குன்றின் மீதிட்ட விளக்குப்போல ஒளிர்கின்றதன்றோ? கம்பர் வீணாகச் சடையப்பரை ஏன் இக்காதையில் இழுக்கின்றார் என்று நாம்எண்ணிச் சலிப்படையாவாறு, உவமை வாயிலாகச் சடையரின் அரிய குணத்தையும் செயலையும் கூறித் தமது செய்ந்நன்றியறிதலையும் விளக்குவது கம்பர்மாட்டமைந்த தனிப்பெரும் ஆற்றலேயன்றோ! வாசங் கலந்த மரைநாள நூலின் வகையென்ப தென்னை மழையென்(று) ஆசங்கை கொண்ட கொடைமீளி அண்ணல் சரராமன் வெண்ணெ யணுகும் தேசங் கலந்த மறைவாணர் செஞ்சொல் அறிவாளர் என்றிம் முதலோர் பாசங் கலந்த பசிபோல் அகன்ற பதகன் துரந்த உரகம் --நாகபாசப் படலம் இக்கவியால் அண்ணலது ஈத்துவக்கும் தன்மையும், வடமொழி, தென்மொழிப் புலவர் என்ற வேறுபாடின்றி வழங்கும் ஈகைக் குணமும், தாளாண்மையிற் சிறந்த வேளாண் மக்களின் மாண்பும் இவையென இனிது விளங்கும். எவர்க்கும் எட்டாத நிலை இறுதியாகக் கம்பர், தம்மை வளர்த்து உயர் நிலைக்குக் கொணர்ந்த வள்ளலாலை உலகறிய உயர்ந்த நிலையில் - எவர்க்கும் எட்டாத உயர் நிலையில் - அழகுற வைத்துப் பெருமைப்படுத்தியுள்ளார். இராமனுக்குக் கோசலத்தின் மௌலி சூட்டிய மாண்புறு விழாவில் இராமனைத் தாங்கும் அரியணையை அநுமன் தாங்கினான்; அங்கதன் உடைவாளேந்தி நின்றான்; பரதன் கொற்றக்குடையைக் கவித்து நின்றான்; இலக்குவனும் சத்துருக்கனனும் கவரி வீசி நின்றனர்; வாசனை கமழும் கூந்தலையுடைய சானகி உவகையோடு அருகிருந்தனள். இந்நிலையில், வெண்ணெய் அண்ணலின் மரபில் வந்த வேளாண்குடிப் பெருமக்கள் மணி முடியை எடுத்துத் தம் இசைவோடு தர - அதனை வசிட்டன் வாங்கிச் சீராமனுக்குச் சூட்டினன் என்று, கம்பர் அழகினும் அழகுபடக் கூறியுள்ளார். இவர் கூற்றில் விழுமிய வேளாளர் சிறப்பு நன்கு விளங்கக் காணலாம். அரியணை அநுமன் தாங்க, அங்கதன் உடைவா ளேந்தப், பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி வீச, விரைசெறி குழலி யோங்க, வெண்ணெயூர்ச் சடையன் றங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புடைந்தான் மௌலி. --திருவபிடேகப் படலம் இங்ஙனம் ஈடும் எடுப்பும் இல்லாதவோர் வகையில் தம் வள்ளலைக் கம்பர் புகழ்வதைக் காண, அவர் வெண்ணெய் அண்ணலிடம் கொண்டிருந்த பெருமதிப்பு இத்தன்மையதென விளங்குகிறதன்றோ? இனி, நீர் சீராமனுக்கு முடி சூட்டலாம் என்று வசிட்டனுக்கு அநுமதி கொடுத்தற்கேற்ற பெருமை பெற்றவர் சடையப்பரின் முன்னோர் என்று கூறுமுகத்தான், வேளாளரே அரசனுக்கு உயிர்போன்றவர் என்னும் உண்மையைக் கம்பர் விளக்குகின்றார். இக்கருத்தைக் கொண்டே ஔவையாரும் குடி உயரக் கோன் உயரும் என மொழிந்தார். மேழி பிடிக்குங் கையே ஆழி வேந்தரை யாக்குங்கை என்பது அரசியலின் அடிப்படையான தத்துவம் அன்றோ? 11. மாதர் இடை முன்னுரை இயற்கைப் பேரழகிலும் மாதர் தம் இன்ப உருவ அழகிலும் இயற்கையின்பத்தையும் இறைவன் தோற்றத்தையும் கண்டுகளிக்கும் பேறு பெற்றவர் புலவரே. அவர்கள் இயற்றிய நூல்களை நுண்ணறிவோடு ஆராய்ந்து படிப்போரே அதன் இன்பத்தை நுகரமுடியும் கம்பராமாயணத்தில் இத்தகைய இன்ப நுகர்ச்சிக்குரிய கவிகள் பல உள. செய்திகளை விளக்க மாகச் சித்தரிக்குக் கூறுவதில் நிகரற்றவராகப் பெயர்பெற்ற கம்பர் பெருமான் மாதர் இடையைப் பலவிடங்களில் புனைந்துரைக்கும் காட்சி கவனிக்கத்தக்கது. ஆடு மகளது இடை கோசல நாட்டில் காலை நேரத்தில் ஆடல் புரியும் மதங்கிளைப் பற்றிக் கூறுமிடத்தில் கம்பர், நாளுக்கு நாள் தனத்தின் பாரத்தால் அவளது இடை மெலிந்துபோகின்றது எனக் கூறி இரங்குகின்றார். இதை நோக்க நமக்கும் இரக்கம் மிகுகின்றது. இஃதன்றி, நாடக மேடையில் மடந்தையர் ஆடுவார். அவர்களது பார்வை காமுகர்களது நெஞ்சை வருத்தவே, ஆடுபவளது இடையைப்போன்று பார்ப்பவர் உயிர் தேய்வடையவதும், அவளது நகிலைப்போல் ஆசை வளர்வதும் நேர்கின்றன, எனக் கம்பர் கூறுவதும் நமக்குப் பின்னும் நகைப்பும் இன்பமுமே தோன்றுகின்றன. ஆடுபவளது இடை தனத்தின் பாரத்தால் தேய்கிறது. அதுபோலவே பார்ப்பவர் உயிர் ஆசையின் பாரத்தில் தேற்கிறது. என்னே, கம்பர் கூறும் உவமை! அரங்கிடை மடந்தையர் ஆடு வாரவர் கருங்கடைக் கண்ணயில் காமர் நெஞ்சினை உருங்குவ மற்றவர் உயிர்கள் அன்னவர் மருங்குல்போல் தேய்வன வளர்வ தாசையே. --நகரப் படலம் வண்டுகளும் இரங்கும் இடை ஆடலருமையைக் கம்பர் அமைத்துப் பாடிய பாடலில், உண்டோ இல்லையே என்ற ஐயத்திற்கு இடமான இடையை யுடைய நடன மாதர் என்று நடன மாதர் இடையைக் கூறி வியக்கின்றார். மற்றோர் இடத்தில், அழகிய பாக்குமரச் சோலையில், குற்றமற்ற பவளம்போலச் சிறந்த நிறமுள்ள காய்களையுடைய மரகத ரத்தினம் போலப் பசிய நிறமுள்ள பாக்கு மரங்களில் ஊஞ்சல்கள் பூட்டப்பட்டுள்ளன. அவ் வூஞ்சல்களில் பெண்கள் அழகாக ஆடிக்கொண்டிருந்தனர். அவர்தம் அழகைக்கண்டு ஆடவர் உள்ளம் காதல் மிகுதியால் அவர்களை விடாது தடுமாறியது. இவ்வாறு மகளிர் ஊசலில் வீற்றிருந்து விசையாக ஆடியபொழுது, அவ்வதிர்ச்சியால் அவர்தம் உடம்பில் அணியப்பட்டிருந்து பூமாலைகளில் மொய்த்துக்கொண்டிருந்த வண்டுகள் மேலெழுந்து பேரொலி செய்தன. இச் செயல், அம்மாதரது மெல்லிய இடை இந்த விசையைப் பொறாதென்று இரக்கமுற்று வாய்விட்டு அரற்றுவதுபோல் இருந்தது, என்று கம்பர் கூறும் அழகினை நோக்குக. இதனால், வண்டுகளும் கண்டு இரங்கும் தன்மைத்து மாதர் இடை என்பது புலனாகின்றது. மகளிர் ஆடுதலால் ஊஞ்சல் முன்னும் பின்னும் மேலும் கீழும், போவதும் வருவதுமாக இருக்கின்றது. இது, மாறிமாறி மேல்கீழாய் ஓடியோடி வருவதும் போவதுமாகக் குற்றமிகுந்த பிறப்பின் செயலை ஒத்திருக்கின்றது எனக் கம்பர் கூறுதல் கவனிக்கத்தக்கது. மாசற்ற உயிர் பிறவி எடாது; மாசுற்ற உயிர் பல பிறவிகள் எடுக்கும் என்பது கம்பர் கருத்தாதல் தெளியலாம். பூசலின் எழுந்த வண்டு மருங்கினுக் கிரங்கிப் பொங்க மாசறு பிறவி போல வருவது போவ தாகிக் காசறு பவளடச செங்காய் மரகதக் கமுகிற் பூண்ட ஊசலின் மகளிர் மைந்தர் சிந்தையோ டுலவக் கண்ர்ர். --மிதிலைக்காட்சிப் படலம் சீராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டனர்; காமுற்றனர். இருவரும் தம் தனி நிலை தீர்ந்து ஒன்று சேர்ந்தனர் - என்று கூறுமிடத்தில் கம்பர் இடையில்லாச் சீதை எனக் கூறுகின்றார். நுண்ணிய இடையுள்ளவள் என்பது கருத்து. மருங்கிலா நங்கையும் வசையில் ஐயனும் ஒருங்கிய இரண்டுடற் குயிரொன் றாயினார். --மிதிலைக்காட்சிப் படலம் இடையும் பரம்பொருளும் சீதைக்கு மணக்கோலம் அணிந்த மங்கையர், பலவேறு வழிகளால் தேடிப்பார்க்கும் பரம்பொருளைப்போல் யாவருக்கும் இல்லை என்றும் உண்டு என்றும் நின்ற இடை, நகைகள் முதலியவற்றின் பாரத்தால் துன்பமடையும் படி செய்தார் என்று கவி கூறுவது, பாவை இடையைப் பரம்பொருள் நிலையோடு ஒப்பிட்டவாறாகும். பல்லியல் நெறியிற் பார்க்கும் பரம்பொருள் என்ன யார்க்கும் இல்லையுண் டென்ன நின்ற இடையினுக் கிடுக்கண் செய்தார் --கோலங்காண் படலம் கடவுள் இல்லை, உண்டு என்று பலவாறு கூறி முடிவில், உண்டுஎன்ற முடிவிற்கு வருகிறதைப்போல, இடை உண்டு என்ற முடிவிற்கு மாதர் வருகின்றனர்; அத்தகைய ஐயத்தை விளைவிக்கும் இடைக்கு அணி செய்தனர். இதுவரை, இடையைப்பற்றி நகைப்போடு கூறிவந்த கம்பர், இங்கு இடையைக் கூறுமுகத்தான் கடவுள் நிலையையும் தெளிவுபடக் கூறியுள்ளமை பாராட்டற்பாலதன்றோ? கொடியிடை பின்னும் ஓர் இடத்தில் மாதர் இடையை வஞ்சிக் கொடிக்கு ஒப்பிடுகின்றார் புலவர். வஞ்சிக் கொடி ஒல்கி ஒசியும் தன்மையுடையது. இடையும் அன்னதே என்று கம்பர் கூறுகின்றார். வஞ்சிபோல் மருங்கு லார்மாட் டியாவரே வணங்க லாதார்? --பூக்கொய் படலம் முறிந்து விடுமோ இது என்னும் அச்சத்தைக் கண்டவர் அடையும்படி நுண்மையாயிருக்கின்ற இடை என்று கம்பர் பின்னோர் இடத்தில் கூறுகின்றார். அச்சநுண் மருங்கு லாள் --உண்டாட்டுப் படலம் பின்னொருகால், இல்லாதிருந்தும் இருப்பதாகப் பொய்யைச் சொல்லிக் கொண்டு அலைகின்ற இடுப்பையுடைய ஒருத்தி எனக் கம்பர் குறிக்கின்றார். தான் இடையையுடை யவளாக அவள் பொய் சொல்வதாகக் கூறும் திறம் வியக்கத் தக்கதே! பொய்த்தலை மருங்குலாள் --உண்டாட்டுப் படலம் துடி இடை இராமனைக் கண்ணுற்ற மிதிலை நகர் மாதரில் ஒருத்தியைப் பற்றிக் கம்பர் கூறுகையில் உடுக்கை போல் இடை மெலிந்து மென்மையான இடுப்பை உடையாள் என்கிறார். ஆகவே, இடைக்கு உடுக்கை உவமையா யிற்று. தொய்யில் வெய்ய முலைத்துடி போலிடை. --உலாவியற் படலம் மற்றோர் இடத்தில் சீதையைக் குறிக்கையில், (நகில்களின் பாரத்தால்) தேம்புகின்ற சிறிய இடையையுடைய சீதை என்று கூறியுள்ளார். தேம்பு சிற்றிடைச் சீதை --உலாவியற் படலம் பின்னர், இராமன் இலக்குவனோடும் சீதையோடும் காடேகியத்தைக் குறிக்கையில் கம்பர், பொய்யோ என்று ஐயுறத்தக்க இடையையுடைய சீதையோடும் இளையானோடும் சென்றான் என்கிறார். இடையிருப்பதே ஐயம் என்பதே இதன் பொருள்; அதாவது, அவ்வளவு நுண்ணிய இடை என்பது பொருள். பொய்யோஎனும் இடையாளொடும் இளையானொடும் போனான். --கங்கைப் படலம் மருங்கிலா நங்கை மூக்கறுபட்ட சூர்ப்பநகை மோகம் ஆறாதவளாய் இராமனை நோக்கி, உனக்குச் சீதையுள்ளாள். இலக்குவனுக்கு ஒருத்தியும் இல்லை. ஆதலால் என்னைச் சேர்த்துவிடு. மூக்கறுபட்ட என்னை எவ்வாறு மனைவியாகக் கொள்வது என இலக்குவன் தயங்கினால், இடையென்பதே இல்லாதவளோடு (சீதையோடு) நீ நெடுங்காலம் கூடி வாழ்வதை அவனுக்கு எடுத்துச் கூறிச் சமாதானம் செய்வாய் என்றாள் என்னே, சூர்ப்பநகை கூறும் சமாதானம்! சீதைக்கு இடை இல்லை என்றே அவள் நம்பினாள் போலும்! .........இளையவன்தான் அரிந்த நாசி ஒருங்கிலா இவளோடும் உறைவனோ என்பனேல், இறைவ ! ஒன்றும் மருங்கிலா தவளோடும் அன்றோநீ நெடுங்காலம் வாழ்ந்த தென்பாய். --சூர்ப்பநகைப் படலம் பின்னர்ச் சீதையின் உருவெளித் தோற்றத்தைக் கண்ட இராவணன் கூறுவதாகக் கம்பர் கூறுவது கவனிக்கத்தக்கது : புடை பெயர்ந்து தோன்றும் தனங்களையும் அல்குலையும் சேர்ந்து நிற்கும் சீதையின் இடை கண்டிலேம்; மற்றவை யெல்லாம் கண்டோம் எனக் கதறுகிறான் இராவணன் என நகைத்துக் கூறுகிறார் கம்பர் இதனாலும் இடையின் நுண்மை தெரிகின்றதன்றோ? புடைகொண்டெழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும் இடைகண்டிலம் அல்ல தெல்லா வுருவும் தெரிந்தாம் --மாரீசன் வதைப்படலம் இவற்றால், சிறிய இடையே மாதரைச் சிறப்பிப்ப தென்பதையும் நுண்ணிடையுடைய மாதரே உத்தம இலக்கணம் அமைந்தவர் என்பதையும் கம்பர் அறிவிக்கின்றார். கம்பர் மேலும் பல்வேறு இடங்களில் இடையின் தன்மையைக் கூறிச் செல்கின்றார். இவ்விடங்களைப் படித்து இன்புறல் கற்றறிந்த மாந்தர் கடன். 12. காதல் மணம் புதியது புகுதல் இராம காதையை முதன்முதல் வடமொழியில் எழுதிய வர்வன் மீகியாவர்.அவரைப்பின்பற்றித்தமிழ்bமாழியில்கம்பநாடர்இராமகாதையைப்படினாரெனினும்,இடங்களுக்கேற்பத்தம்விழுமியbகாள்கைகளையும்,உண்மைகளையும்nவளாண்சிறப்பையும்தமிழர்bநறியையும்,பிறவற்றையும்கூறிப்போந்தார்.இரhம காதையில் தமிழர் மணமுறை வாடை வீசும் இடம் மிதிலைக்காட்சிப் படலமே ஆகும். இராமனது திருமணத்தைக் கூறிப் போந்த வான்மீகி, இராமன் அரக்கியைக் கொன்று மறையவன் வேள்வி காத்து, அகலிகையின் சாபம் தொலைத்து, நேரே மிதிலையிற் சென்று விட்டான். கோசிகன் இராம லக்குமணரைச் சனகனுக்குக் காட்டி,. அவர்கள் வரலாற்றைக் கூறி, வில்லைக் கொணரச் செய்தான் என்றார். எனவே, வான்மீகி இராமாயணத்தில், மணத்தின் முன்னர்ச் சீதை இராமனைக் காணவில்லை என்பதும் பெறப்படுகின்றன. கம்ப நாடரோ, தாம் வளர்த்த சீதையையும், இராமனையும், வான்மீகியைப்போல் திருமணத்திற்கு முன் இருளில் வைத்திலர். திருமணத்திற்கு முன்னரே - வில் இறுத்தற்கு முன்னரே, காதலர் ஒருவரை ஒருவர் சந்திக்கச் செய்தார்; இருவர் மனத்தையும் ஒன்றுபடச் செய்தார்; ஒருவர் மற்றவர் உள்ளத்தில் மாறிப் புகும்படி செய்தார்; திருமணம் வரையில் இருவரையும் காதல் நோயால் மெலிவுறும்படி செய்தார்; பின்னர்க் காதல் மணத்தைக் கவின்பெற நடத்திக்காட்டுகின்றார். இத்தகைய மணமுறை பண்டைத் தமிழகத்தில் பழக்கத்தில் இருந்தது என்பது தமிழ் நூல்களை ஆராய்ந்தோர் கண்ட உண்மை. எனவே, கம்பர் தமது நாட்டுத் தமிழர் மணத்திற்கிணங்க, இராமனையும் சீதையையும் சிறக்கவைத்துள்ளார் என்பது எவரும் மறுக்க இயலா உண்மையாகும். இனிக் காதலர் சந்திப்பும் திருமண முடிவும் காண்போம்: காட்சி கோசிக முனிவனோடு இராம லக்குமணர் மிதிலையின் இயற்கை அழகையும், செயற்கை அழகையும் கண்டுகொண்டு சென்றனர். அவ்வாறு போகும்பொழுது, பல இடங்களைக் கண்டு சென்றவர், ஜனகன் அரண்மனை அணுகியதும், சற்றே நிற்கலாயினர். அவர் நிற்க நேர்ந்த காரணம் என்னை? கம்பர் அருகிருந்து கண்டவரேபோல் கூறுகின்றார்: கன்னிமாட முற்றத்தில் ஆண் அன்னமும், பெண் அன்னமும் ஆடிக் கொண்டிருந்தன. அவற்றைக் கண்ணுற்றுச் சனகன் மாமகள் - பொன்னின் ஒளியும் மலரின் மணமும் உண்கின்ற தேனினது இனிய சுவையும், பொன்னுக்கும், மலருக்கும், தேனுக்கும் இயற்கையாக அமைந்திருப்பது போல் செவ்விய தென் மொழியாகிய தமிழ்க் கவியில் பொலியும் இன்பமே போன்றவள் (சீதை) நின்றிருந்தாள். அவளைக் கண்டு, அங்கு மூவரும் நின்றனர். பொன்னின் சோதி போதினாற்றம் பொலிவே போல் தென்னுண் டேனிற் றீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம் கன்னிம் மாடத் தும்பரின் மாடே கழிபேடொ(டு) அன்னம் ஆடும் முன்றுறை கண்டங் கயனின்றார். --மிதிலைக்காட்சிப் படலம் அன்னங்கள் முன்றிலில் ஆடி இராவிடின், இராமன் அயல்நிற்க வேண்டிய நிமித்தமில்லை ஆயினும், அவன் ஆடிய அன்னத்தைக் கண்ணுற்று நின்றானோ? விடை பகருதல் எளிதே. ஆடும் அன்னத்தைக் காண்பதேபோல், மிதிலை அன்னத்தை தென் சொற் கவியின்பமாய சானகியையே இராமன் கண்ணுற்று நின்றான். தென்சொற் கவி இன்பமாய சீதை, தன்பால் அன்புடைய தாதியர் முதலிய மங்கையர், மானே, தேனே, அரிய அமிர்தமே என்று தம் தளிர்போன்ற சிவந்த கைகளால் அவளுடைய அடிகளை வணங்கி, அவள் செல்லுமிடத்து எல்லாம் எதிரே மலர்களை அடர்த்தியாகக் தூவி, வரிசையாய் நெருங்கிவர, பூவிலே தங்கும் இலக்குமியைப்போல நடமாடி விளங்கு கின்றாள் எனக் கம்பர் சீதையின் எழில் நலத்தை நாம் என்றும் மறவாதவாறு வருணித்துள்ளார். தந்நே ரில்லா மங்கையர் செங்கைத் தளிர்மானே, அன்னே, தேனே, யாரமிர் தே,யென் றடிபோற்றி முன்னே முன்னே மொய்ம்மலர் தூவி முறைசாரப் பொன்னே சூழும் பூவின் ஒதுங்கிப் பொலிகின்றாள். --மிதிலைக் காட்சிப் படலம். உள்ளப் புணர்ச்சி இங்ஙனம் நின்ற சீதை இராமனைக் கண்ணுற்றாள், இராமனும் அவனைக் கண்ணுற்றான். சானகி இராமனை நோக்கிப் புன்னகை புரிந்தாள் என்று தெரிகின்றது. எங்ஙனம் எனின், அன்று மாலை இராமன், வாள்நி லாமுறுவல் கனிவா யமுதங் காண லாவதோர் காலமுண்டாங்கொலோ? என்று சீதையை நினைத்துப் புலம்புகின்றான் ஆதலின் என்க. இராமனும் புன்முறுவல் பூத்தனன் என்பது பெறப்படுகின்றது. எங்ஙகனமெனின், சீதை இராமனை நினைந்து காதல் நோயால் புலம்புகையில், ‘முந்தியென் உயிரையும் முறுவல் உண்டதே! என இரங்குகின்றாள். எனவே, காதலர் இருவரிடமும் முறுவல் தோன்றி மகிழ்ச்சியை ஊட்டியுள்ளது என்பதை அறிகின்றோம். கண்ணுக்கும் கருத்துக்கும் இயைந்த காதலர் முகத்தில் முறுவல் தோன்றுவது இயல்பே அன்றோ! இவ்வாறு, கண்ணால் களவு செய்து முறுவல் புரிந்த இருவரும் எதிரெதிர் நோக்கிய தன்மை இன்னபடி இருந்தது என்று கம்பர் தம் அகத்தால் சித்தரித்துக் கூறுகின்றார்: எண்ணுவதற்கரிய நலங்கள் வாய்ந்த சீதை இவ்வாறு நின்றிருந்த பொழுது, ஒருவர் கண்ணோடு மற்றவர் கண்கள் ஆர்வத்தால் கவ்வி ஒன்றை ஒன்று உண்டு விழுங்கியதால் அவர்களது உணர்வும் தனித்தனி நிலையில் நிற்பதற்கு ஆற்றாவாய், ஒன்றாய்க் கலந்து விடும்படி அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். எண்ணறு நலத்தினாள் இணைய நின்றுழி கண்ணொடு கண்ணினைக் கவ்வி யொன்றை யொன்(று) உண்ணவு நிலைபெறா துணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். -மிதிலைக் காட்சிப் படலம் என்று கம்ப நாடார் கூறுவதை எண்ண எண்ண மெய்க் காதலின் தத்துவம் இற்றென இனிது விளங்கும், இந்நாடகக் காட்சியைக் கண்ணுறப் பேறு பெற்றிலேமேயாம் என அறிஞர் ஏங்குவர் எனல் பொருந்தும். காதலின் கருத்தைக் கூறும் கம்பர் திறமே போற்றற்குரியது. கம்பர் பெருமான் காதலர் பார்வையின் குறியும் வேகமும் இத்தன்மையதென்று அடுத்த செய்யுளில் விரிக்கின்றார். சீதை பார்த்த பார்வை யென்னும் கூர்மை பொருந்திய இரண்டு வேல்களும் வலியமைந்த இராமனது இரு தோள் களிலும் தைத்தன. ஒலிக்கின்ற கழல் கட்டிய வீரனுடைய சிவந்த கண்களும் அணங்கை ஒத்த சீதையின் தனங்களில் தைத்தன என்ற கூற்று தமிழ் அகப்பொருள் துறையைத் தழுவியது என்று கூறத் தமிழ் அறிஞர் தயங்கார். கம்பர் தமிழ் அகப்பொருள் சுவையை அவளும் இராமனும் அனுபவித்ததாக் கூறுவது மகிழச்சியை உண்டாக்குகின்றதன்றோ? நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேலிணை ஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன; வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும் தாக்கணங் கனையவள் தனத்தில் தைத்தவே. --மிதிலைக்காட்சிப் படலம் இங்ஙனம் கண்ணோடு கண்ணினைக் கவ்வி, உணர்வும் ஒன்றிட எதிரெதிர் கண்ணுற்று, பருகிய பார்வை என்னும் கயிற்றால் கட்டி, ஒருவருடைய உள்ளத்தை மற்றவர் உள்ளம் இழுத்தலால், கட்டமைந்த வில்லை ஏந்திய அண்ணலும், வாள் போன்ற கண்களை உடைய நங்கையும் இருவரும் மாறிமாறி மற்றவர் இதயத்தில் குடிகொண்டனர், என்பது கம்பர் அடுத்துக்கூறும் செய்தியாகும். பருகிய நோக்கெனும் பாசத் தாற்பிணித்(து) ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால் வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும் இருவரும் மாறிப்புக் கிதயம் எய்தினார். என்ற கம்பர் வாக்கில் மெய்க்காதலின் உண்மை நிகழ்ச்சியைத் தெளிவாகக் காணலாம். உண்மைக் காதலர் மாறிமாறி மற்றவர் இதயத்தே குடிகொள்வர். அவர்களே மெய்க்காதலர். அவர்களே தூய மனநிலையில் ஒருவரை ஒருவர் சந்தித்து இரண்டறக் கலப்பவர். இவ்வுண்மையே, அகப்பொருள் இலக்கணத்துக் காதலர்மாட்டுக் காணப்படுவது. முதலில், கம்பர் காட்டும் காதலர் இருவர் கண்ணும் கண்ணும் கவ்வின; பின்னர், உணர்வும், உணர்வும் ஒன்றின; பின்னர், உள்ளமும், உள்ளமும் இழுக்க இருவரும் தம்தம் தனி நிலை நீங்கிச் சேர்ந்தனர். ஆகவே, எஞ்சி நிற்பது உயிர் மாத்திரமே. அத்திறத்திலும், அவர்கள் ஒன்றுபட்ட உடலுக்கு உயிரும் ஒன்றே ஆயினார், என்று கம்பர் முடித்துவிட்டார். மருங்கிலா நங்கையும் வசையில் ஐயனும் ஒருங்கிய இரண்டற்(கு) உயிரொன் றாயுனார். சீதை தனித்து வருந்துதல் கோசலக் குரிசில் சென்ற பின்னர், வைதேகி தன் உயிர் உடலில் தங்கபெறாது துடித்தனள். அவளது நிறை என்னும் அங்குசம் நிமிர்ந்து போயது. அவள் குரிசிலின் பின்னே போன மனத்தைத் தன்பால் மீண்டும் இழுக்க ஆற்றல் அற்றவளாய்க் காதல் நோயால் நலிந்தாள். அவ்வளவில் அந்தி நேரம் வந்தது. அஃது அவளுக்குப் பூதம் போன்று இருந்தது. குளங்களாய நெருப்பிலே காய்த்து, மலரின் மணமாகிய விஷத்தைப் பூசிக் கொண்டு, உலவுகின்ற தென்றல்காற்று என்ற வேல், அனங்கன் எய்த அம்புகளால் உண்டான புண்களில் பாய, அதனால் நலிகின்ற உணர்வும் அழகும் உருகிச் சோர்கின்ற சீதையின் உயிர் உண்ணும்படி விளங்கிய மாலைவானத்தை நோக்கி ‘ïakdJ cUt« ïJjhndh? என்றாள். கயங்கள் என்னும் கல்தோய்ந்து கடிநாண் மலரின் விடம்பூசி இயங்கு தென்றல் மன்மதவேள் எய்த புண்ணின் இடைநுழைய உயங்கு முணர்வும் நன்னலமும் உருகிச் சோர்வாள் உயிருண்ண வயங்கு மாலை வானோக்கி இதுவோ கூற்றின், வடிவென்றாள்! --மிதிலைக்காட்சிப் படலம் இங்ஙனம் காம வேதனையால் அந்திக்கு ஆற்றாளாகிய புலம்பிய வைதேகி, இருளைக் கண்டதும் மிக்க சோர்வடைந்தாள். (கோசலக் குரிசிலின்) கரிய நிறத்தை என்போல் எல்லோரும் எண்ணுவதால், அவ்வெண்ணத்தின் தொகுதிதான் இங்ஙனம் இருளாகப் பாரந்ததோ! என்று வியர்ந்தாள். பின்னர், அன்றில் கூவுதற்கு ஆற்றாளாகி, மன்மதன் என்னைத் துன்புறுத்த உன்னை ஏவினானே; அல்லது யான் செய்ததீவினையே அன்றில் என்னும் உருவோடு வந்தனையோ? என்று கூறிவருந்தினாள்? இருள் சென்ற பின்னர், தண் கதிரவன் இன்புறத் தோன்றினான். இன்புறத் தோன்றிய மதியைத் தன்னைத் துன்புறுத்தக் தோன்றியதாக வைதேகி நினைத்தனள். அதற்கு அவள் ஆற்றாளாகி, அதிகப்படும் இருளாக வந்து உலகை விழுங்கி மேன்மேலும் பருக்கின்ற பெரியதோர் நெருப்பி னிடையே முளைத்த வெண்ணெருப்பே! நீ நீங்காத அழகு உடைய அவருக்கு (இராமனுக்கு) நிறத்திலே தோற்று ஒருபுறம் ஒதுங்கி ஏங்கிக்கிடக்கும் அலைகளை வீசும் கடலுக்கும் எனக்கும் கொடியை ஆனாயே? ஏன் இது? என்னும் பொருளை அமைத்து, நீங்கா மாயை யவர்தமக்கு நிறமே தோற்றுப் புறமேபோய் ஏங்காக் கிடக்கும் எறிகடற்கும் எனக்குங் கொடியை யானாயே! ஓங்கா நின்ற இருளாய்வந்(து) உலகை விழுங்கி மேன்மேலும் வீங்கா நின்ற கருநெருப்பின் இடையே எழுந்த வெண்ணெருக்பே. --மிதிலைக்காட்சிப் படலம் இவ்வாறு புலம்பிய சானகி, அன்னப் பறவை நெருப்பில் பட்டதுபோல் மலர்கள் அடர்ந்த சயனத்தில் புரண்டாள். இங்ஙனம் பலவாறு காதல் நோயால் நைந்து கூறிய வைதேகியின் நிலையை அருகே இருந்து கண்டவர்போல் கம்பர் இரக்கங் கொண்டு இயம்பும் கருத்து இனிமையை ஊட்டுகின்றது. ஆகையால், காதலால் விளையும் நோய்க்கு மருந்தும் உண்டோ? எனக் கம்பர் கழிவிரக்கங் கொள்கின்றார்: வாச மென்கல வைக்களி வாரிமேல் பூசப் பூசப் புலர்ந்து புழுங்கினள்; வீச வீச வெதும்பினள் மென்முலை; ஆசை நோய்க்கு மருந்துமுண் டாங்கொலோ. என்று காதல் நோய்க்குக் காதலரே மருந்தன்றி மலர்கள் முதலானவை மருந்தல்ல என்பதைக் கூறி, சீதைக்கு உபசாரம் செய்த தொழியாரை நோக்கி நகுகின்றார். இராமனது துன்ப நிலை சீதையின் செய்தி இங்ஙனமாக, இராமன் கன்னியைக் கண்ட அன்றிரவு கண் துயின்றிலன். அந்நிலையைக் கம்பர் பிரான், இருள் கனியும் போல்பவன் கங்குலும் திங்களும் தனியும் தானுமத் தையலும் ஆயினான். என்று குறுநகை தோற்றக் கூறுகின்றார்; இரவுண்டு, மதி உண்டு, தனிமையுண்டு, தானுண்டு என்றிருந்தான் இராமன். அப்போது அவன் தன் அகத்தே குடிகொண்ட சானகியின் தோற்றம் முகத்தெதிர் தோன்றக் கண்டான்; கண்டு, வானத்திலிருந்து பிரிந்த மின்னலின் உருவானது இங்ஙனம் பெண்ணின் நல்லழகைப் பெறுவது கூடுமோ? நான் அவ்வுருவத்தைக் கண்ணினுள்ளும் கருத்தினுள்ளும் காண்கின்றேன். இரண்டிற்கும் வேறுபாடு உணர்ந்திலேன் என்று கூறி அயிர்த்தான். பின்னரும் இராமன் அவள் என்பால் அருள் இலாளாயினும், என் மனத்தில் அவள்மீது உண்டான காதலாலும், யாவரும் அஞ்சுதற்குக் காரணமான காமநோயைத் தருகின்ற விடம் போன்ற தன் விழிகளால் அவள் என்னை விழுங்கி இருப்பதாலும், தெளிவற்ற இவ்வுலகில் சராசரப் பொருள்கள் அனைத்தும் எனக்கு அவளது அழகிய உருவாகவே தோன்றலாயின என்று மெய்க் காதலின் தத்துவத்தைக் கம்பர் இராமன் வாயிலாக நமக்கு விளக்குகின்றார். அருளி லாள்எளி னும்மனத் தாசையால் வெருளி நோய்விடக் கண்ணின் விழுங்கலால் தெருளிலாவுல கிற்சென்று நின்றுவாழ் பொருளெ லாமவள் பொன்னுரு வானவே. --மிதிலைக்காட்சிப் படலம் இச்செய்யுளில், இராமன், அருள் இலாள் என்று சீதையைக் கடிகின்றான். இஃது அர்த்த மற்ற தொடரே ஆகும். காதல் நோயால் நலியும் ஆண், பெண் புலம்பும் பழக்கமான சொற்களே இவை, சானகி எவ்வித அருளை இவன்மாட்டு அந்நிலையில் செய்தல் கூடும்? மணமாகாத முன்னர் இவனண்டை வந்து அவள் எங்ஙனம் அருள் சுரக்கக்கூடும்? இங்ஙனமே மறுநாள் சீதையும் பிதற்றுகின்றாள்; மதனன் தன் நீண்ட வெற்றி வில்லால் என் நெஞ்சு அழியும்படி, பஞ்சை அழிக்கும் தீயைப்போல் என் ஆவியைப் பற்றக்கொடிய பாணங்களை எய்ய, அதனால் துன்புறும் மாதரை உய்ய வந்து அஞ்சல், அஞ்சல் என்று அபயம் அளிக்காத ஆண்மை என்ன ஆண்மையோ? என்று தன்னை ஆட்கொள்ளாதிருக்கும் இராமனைக் கடிந்து கூறுகின்றாள். பஞ்சரங்கு தீயினாவி பற்றியோடு கொற்றம்வாய் வெஞ்சரங்கள் நெஞ்சரங்க வெய்யகாமன் எய்யவே சஞ்சலங்க லந்தபோது தையலாரை உய்யவந்(து) அஞ்சலஞ்சல் என்கிலாத ஆண்மைஎன்ன ஆண்மையோ? --கார்முகப் படலம் தாமரைப் பொய்கையிடையிருந்து மண்டபத்தில் வீற்றிருந்த வைதேகி, அங்கு இராமன் எதிர்வந்து தோன்றவில்லை என்று பழி கூறினளோ? இஃது காதலர்பால் தவழும் வெற்றுரைகளே. இந்நிலையில் வைதேகி, வளர்ந்து உயர்ச்சி பெற்ற தன் கொங்கைகளை நோக்கி, இளைத்தலின்றி மிகக்கொழுத்த கொங்கைகளே! நீங்கள் பருத்து விம்மி, என்ன பயனைப்பெற்றீர்? சந்திரன் போன்று முகத்தையுடையவரும் யாவராலும் வளைப்பதற்கு முடியாத வில் ஒன்றினைக் கையில் தாங்கிய சிங்கம் போன்றவருமாகிய அப்பெருமகனது மார்பில் பொருந்தி அனுபவிக்கின்ற நலம் உங்களுக்கு வேண்டுமானால், இவ்வாறு பருப்பதை விட்டு அதற்குவேண்டிய தவங்களைச் செய்யுங்கள், என்று கூறுவது, காதல் இன்பத்தைப் பெருக்கச் செய்கின்றது. இணைக்கலாத கொங்கைகாள்; எழுந்து விம்மி என்செய்தீர்? முளைக்கலா மதிக்கொழுந்து போலும் வாண்முகத்தினான் வளைக்கலாத விற்கையாளி வள்ளல்மார்பின் உள்ளுறத் திளைக்கலாகு மாகிலான செய்தவங்கள் செய்ம்மினே! --கார்முகப் படலம் முடிவுரை திருமணத்தன்று முன்னாள் இரவிலும் காதலர் இருவரும் தனித்தனி இருந்து நோயால் நலிந்தனர். நம்பியும் துயிண்றிலன், நங்கையும் துயின்றிலள். மறுநாள் திருமணம் இனிது நிறைவேறச் சீதை அவைக்கண் வந்தாள். ஆங்கே இருவரும் தத்தமக்கு இருந்த அன்பைக் கண்பார்வையால் அறிவித்துக்கொண்டு உள்ளம் மகிழ்ந்தனர். பின்னர்த் திருமணம் திருவுடன் நடந்தேறியது. கம்பன் திருப்பெயர் வாழ்க  * பேராசிரியர் எ. வையாபுரிப் பிள்ளை, கம்பன் காவியம், பக் 22-25 * பேராசிரியர் எ வையாபுரிப் பிள்ளை, கம்பன் காவியம், பக். 18 † Both the Ramayana and the Mahabharata were finally recast at this Period with many new Stories and legends added, So as to fascinate the Ignorant masses. That their authors had a motive to dicredit Budhism is seen from a Passage in Ramayana. “In Ramayana, Rama is made to say that Buddha is a thief, the Tathagata is a Nastik or Atheist.” The Meazzace of Hindu Imperialism, pp 103-104; and C. V. Vydia, Epic India, p. 377. ** பேராசிரியர் எ. வையாபுரிப் பிள்ளை, கம்பன் காவியம் பக். 25 1. Cholas I, p. 354. 2. 363 of 1907. 3. 257 of 1925   4. 471 of 1912, 233 of 1917 முதலியன, 5. A. R. E. 1913, p. 112. 6. “Guhai--idi--kalaham must have been instigated by the Brahmanas against the non -- Brahmanical saiva mathas. It is not likely that these latter were altogether suppressed; for, in the time of Rajaraja III and subsequently they flourished under the patronage of the ruling chiefs and private individuals”, A.R.E. 1913, p. 112.