அறிவுச் சுடர் வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : அறிவுச்சுடர் ஆசிரியர் : வரலாற்றுப் பேரறிஞர் மா. ஹிராசமாதிக்கனார் பதிப்பாளர் : முனைவர் க. தமிழமுது பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 14+98=112 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா 105/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் & வி. சித்ரா நூலாக்கம் : வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், பி 3, பாண்டியன் அடுக்ககம், சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம் 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க்குலம் படிப் படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மை களைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு எம் தந்தையார் தமிழ்மண் பதிப்பகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங் கினார். என் தந்தையின் பதிப்புச் சுவடுகளைப் பின்பற்றி எம் பதிப்புப் பணியைச் செய்து வருகிறேன். தமிழ்ப் பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய ஆய்வுகள், சமயம் சார்ந்த ஆய்வுகள், வரலாற்றாய்வுகள், கோவில் ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள், மாணவர் நலன் குறித்து அவர் எழுதிய 110 நூல்களும் ஆய்வாளர்களுக்கும் மாணவர் களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க நூல்களாகும். இவற்றில் 18 நூல்களை 2012இல் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர் பணியாக 2014இல் 21 நூல்களை தமிழுலகம் பயன்படும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன். - க. தமிழமுது நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை `இன்றைய தமிழரது வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்கின்றது? ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும் `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள் என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள் என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம். நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார். பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தார். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான் படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம், `நக்கீரர் கழகம், `மாணவர் மன்றம் முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர் என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈரா பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர் என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான் பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார் என்று `என் கணவர் என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வியில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும். உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும் என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும் என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்களை எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம், `தமிழ் இனம், `தமிழர் வாழ்வு, `என்றுமுள தென்றமிழ், `புதிய தமிழகம் என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும் என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி, `தமிழ்க் கலைகள், `தமிழர் நாகரிகமும் பண்பாடும், `தமிழக வரலாறு என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்காக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினை வூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங் களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்க வழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும் அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல், தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும் என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம் என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும் என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `mtiu KGikahf¥ gl«ão¤J¡ fh£L« ü‰gh toÉyhd xUtÇ brhšy£Lkh? எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர், `மனிதரில் தலையாய மனிதரே எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் உள்ளுரை பக்கம் 1. அறிவுச்சுடர் 15 2. மிர்சா கண்ட காட்சி 18 3. தன் உரிமை 21 4. பழிக்குப் பழி 25 5. வழி நடை இன்பம் 29 6. என்றும் இளமை 34 7. உண்மை 39 8. இரவின் இரகசியம் 44 9. பெண் கல்வி 49 10. அகமும் புறமும் 57 11. அரசியல் 63 12. `வில்லின் வாழ்க்கை(ஹ) 70 13. `வில்லின் வாழ்க்கை(க்ஷ) 80 14. அரிய சொற்பொழிவுகள் 98 1. அறிவுச் சுடர் 1.பெயர் பெறுதல் யாவரிடத்தும் பெயர் பெற விரும்புபவன் பிறரை மதித்தலில் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். எஞ்ஞான்றும் பிறரை அளவிட்டு மதிப்பிடுதலையே தொழிலாகக் கொண்டவன் மக்களால் வெறுக்கப்படுவான். அவன் உலகத்தவரால் பெருமதிப்பைப் பெறலாம்; அவன் வார்த்தை வேத வார்த்தை எனவும் கொண்டாடப்படலாம். ஆனால், அதே சமயம் அவன் அக்குறிப்பிட்ட மக்களாலேயே வெறுக்கப்படுதல் திண்ணம். தாம கார்லைல் பிறரை மதிப்பிடலில் சமர்த்தர்; அவரை யாவரும் கொண்டாடினர்; ஆனால், அதே சமயம் அனைவரும் அவரை வெறுத்தனர். அவரால் தாழ்ந்தவர் என மதிப்பிடப்பட்ட லாம்ப் (Lamb) உலகத்தவரால் பெரிதும் பாராட்டப்படுகின்றார். காரணம் யாது? அவ்வாசிரியர் உலகத்தாரோடு ஒன்றுபட்டவராய் வாழ்ந்து, பிறரை மதிப்பிடாது வாழ்ந்தமையே காரணமாகும். இதனால், பெயர் பெற அவாவுவோன் தாம கார்லைலைப் போல் இராமல், லாம்ப் என்னும் பேரறிஞர் போலப் பிறரை மதிப்பிடாது வாழ்தல் வேண்டுமென்பது புலனாகும். இம்முறையைக் கையாள்பவன் உலகில் வெற்றி பெறுவான்; சமூகத்தில் நல்வரவேற்புப் பெறுவான்; பிறரால் நன்கு மதிக்கப்படுவான். அவன் ஒருபோதும் பிறரை மதிப்பிடலில் தன் கவனத்தைச் செலுத்தலாகாது. செலுத்தின், அவன் விரைவில் சமூக உயர்ச்சியினின்றும் வீழ்ச்சி பெறுவான். அவன், தன் நிலைமை உயர உயர, பிறரை மதிப்பிடுங் குணமும் அருகிக் கொண்டே வரச்செய்தல் வேண்டும். ஆனால் இவ்வுயரிய குணத்தால் உயர்வைப் பெற்ற ஒருவன், தன் நிலையைச் சரிப்படுத்திக்கொள்ள எல்லோரையுமே புகழத் தொடங்கி விடுவானாயின், சமயத்துக்கு ஏற்றாற்போல மக்கட்கு ஏற்றாற்போல நடிக்க நாடுவானாயின், அக்கணமே அவன் அவ்வுயர் நிலையினின்றும் ஒழிந்தான் எனல் உறுதி. ஒவ்வொருவரிடத்தும் தான், நல்லவன் எனப் பெயர் பெறுதலையே பெரும் நோக்கமாகக்கொண்டு, ஆளுக்கேற்றபடி நடத்தலிலேயே தன் பெரும் பொழுதையும் செலவிடல், அவனை விரைவில் வீழ் நிலைமைக்குக் கொணர்ந்துவிடும். இங்ஙனம் யாவரிடத்து இனியனாயிருப்பதாகப் பாசாங்கு செய்தல் எவரையுமே திருப்தி செய்யாது கெடுத்துவிடும். அதன் பயனாக, ஒரு காலத்தில் யாவராலும் போற்றப்பட்டவன் பின்னர் யாவராலும் தூற்றப்படுவான். நூலாசிரியருள், மனித சமூகத்தை உள்ளவாறு உணர்ந்து மனிதர் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் விதமாக நூல் வரைந்தவரே பெயர்பெற்ற ஆசிரியர்களாக விளங்குகின்றனர். இத்தகையவரே ஷேக்பியர், டிக்கன் முதலிய ஆங்கில நூலாசிரியர்; கம்பர், இளங்கோவடிகள் முதலிய தமிழ் நூலாசிரியர். தம் நூலுள் பிறரைக் குறைகூறும்-மனிதசமூகத்தை வெறுத்துரையாடும் ஆசிரியர் பெயர் பெறுதல் அரிது! அரிது!! பிறரை மதிப்பிடும் குணங்கொண்ட ஆசிரியர், மிகச் சிறந்த முறையில் நூலியற்றி இருப்பினும், அந்நூலை மக்கள் விரும்பி வாசியார். ஷேக்பியர், கம்பர், காளிதாஸன் போன்ற மஹா கவிகளிடம் சில குறைபாடுகள் காணப்படினும், மனிதசமூகத்தை நேசிக்கும் பான்மை அவர் தம் நூல்களிற் பரிமளித்தலின், அவர்கள் உச்சி மேற்கொண்டு போற்றப்படுகின்றனர். ஒருவித நலனும் எய்தப் பெறுதவர், தம்மை அறியா தாரிடம் தாமே சென்று தம்மைப் பற்றி வாய்ப்பறை அறைந்து, தமக்குப் பெயர் உண்டாகி விட்டதாகத் தாமே தருக்குகின்றனர். இது தகாத-வீண் ஆடம்பரமான செயலன்றோ? இவ்வகையினர் சில நாட்களில் பொய்யரென நிரூபிக்கப்பட்டு அவமானம் அடைவர். இன்றைய உலகில் பொய்ப்பிரச்சாரத்தினால் பெயர் பெறுதல் என்பதே பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. உண்மையாகவே மனித உள்ளத்துடன் மக்கள் நன்மைக்கென உளங்குழைந்து உழைத்துப் பெயர் பெற்றவர், காந்தியடிகள் போன்ற மேலோர் சிலரே. ஆனால், அப்பெரியார்களைப் பின் பற்றுவதாகப் பறைசாற்றிப் பெயர் பெறுபவர் பலராகின்றனர். ஒழுக்கம், மக்கட்குழைத்தல், சமூகத்தினிடம் அன்பு முதலாய தூய குணங்களுள் ஒன்றுமின்றி வறட்டுத்தவளைகளைப் போலப் பிரச்சாரம் செய்து பெயர் பெறுபவர் பலராவர். இன்னணம் பெயர் பெறும் பொய்வீரரை-மக்கள் உள்ளத்தைக் கள்ளத் தன்மையிற் கவர்ந்த, கவருகின்ற, கவரும் கள்வரை-விரைவில் தடைப்படுத்தல் மனித சமூகத்துக்கு நலன் விளைப்பதாகும். இவர்களைத் தடுப்பதாயின், மக்கட் சமூகம் இப்பொய்ப் பிரச்சாரகரை நன்றாய் ஆராய்ந்தறிதல் வேண்டும்; அவர்தம் செயல்களையும் பேச்சுக்களையும் நன்கு கவனித்தல் வேண்டும்; மறைவாக இவர்களை ஆராய்தலும் அவசியமாகும். சுருங்கக் கூறின், மனித சமூக நன்மைக்கெனப் பாடுபடும் தியாகி, நூல்களை எழுதும் ஆசிரியன், உயிர்கட்கு உழைக்கும் உத்தமன் ஆகிய இவரே மக்கள் அகக்கோயிலில் அமரும் தகுதி வாய்ந்தவர் ஆவர். அவரே எஞ்ஞான்றும் பெயர் பெற்றவர்; இறந்தும் இறவாதவர். பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் மறவாமே நோற்பதொன் றுண்டு-பிறர்பிறர் சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்து யார்யார்க்குந் தாழ்ச்சி சொலல். என்னும் வெண்பா ஈண்டைக்குச் சிந்தித்தல் தகும். 2. மிர்சா கண்ட காட்சி மிர்சா என்பவன் பாக்தாத் நகரவாசி. ஒரு நாள் காலை அவன் வைகறைத் துயில் நீத்து, நீராடி, மலையுச்சி ஒன்றை அடைந்து ஜெபம் செய்யலானான். மனித யாக்கையின் நிலையாமையையும் அதன் பயனற்ற தன்மையையும் நினைந்து கொண்டிருந்தான். அவ்வமயம் ஞானியார் ஒருவர் ஆடு மேய்ப்பவன் கோலத்தில் அங்கு தோன்றினார்; தம் கையிலிருந்த சிறிய ஊதுகுழல் ஒன்றை வாயில் வைத்துத் தேவகானம் இசைத்தார். மிர்சா அக்கானத்தைக் கேட்டான்; ஐம்புலன்களும் செவிகளாக மாறின. தன்னை மறந்தான்; எழுந்து அந்த ஞானியாரிடம் சென்றான்; மிகுந்த பயபக்தியுடன் நின்றான். ஞானியார் அவனை அன்புடன் வரவேற்றார்; அவனை உயர்ந்த மலைச்சிகரம் ஒன்றன்மீது அழைத்துச் சென்றார்; இவ்வுச்சியினின்று நீ காண்பன யாவும் கூறுக என்றார். மலையுச்சியிலிருந்த மிர்சா, கீழ் நோக்கினான்; எதிர்ப் புறத்தே இருந்த இரண்டு பெரிய மலைகளுக்கிடையே பெரிய பள்ளத்தாக்கு ஒன்றிருந்தது. அதனில் பேரலைகள் மோதப் பெற்ற நீர்ப் பெருக்கம் காணப்பட்டது. அந்நீர்ப்பெருக்கத்தின் ஒரு கோடி, செறிந்த மூடுபனியிலிருந்து தோற்றமாகி மறு கோடியிலிருந்த மூடுபனிச் செறிவில் மறைந்தது. மிர்சாவுக்கு ஒன்றும் புரிந்தபாடில்லை. அருகில் இருந்த அருள் உருவங் கொண்ட ஞானியார், மகனே, இப்பள்ளத்தாக்கு துயரத்தின் அறிகுறியாகும்; அதனிற் காணப்பெறும் நீர்ப்பெருக்கம் மோக்ஷத்தின் ஒரு பாகமாகும். அதன் இரு கோடிகளும் பிறப்பு, இறப்பு என்பவற்றைக் காட்டுவன என்றார். மிர்சா, மேலும் அந்நீர்ப் பெருக்கத்தை உற்று நோக்கினான்; அதன் இடையில் பாலம் ஒன்று புலப்பட்டது. அப்பாலம் பழுதற்ற எழுபது கண்களையும் பழுதுற்ற முப்பது கண்களையும் பெற்றிருந்தது. திரளான மக்கள் அப்பாலத்தில் நடந்தவண்ணம் இருந்தனர்; ஆனால் அவருட் சிலரே அப்பாலம் முழுவதையும் கடந்தவராகக் காணப்பட்டனர். பலர், பாலத்தின் தொடக்கக் கண்களைக் கடப்பதற்குள் கால் இடறிக் கீழே ஓடிக்கொண்டிருந்த நீர்ப் பெருக்கத்துள் வீழ்ந்து மறைந்தனர். பாலத்தின் இடை வழியில் மிகச் சிலரே காணப்பட்டனர். பலர் ஏதேனும் ஒன்றை நாடி ஆவலுடன் பற்றும்போது கால் இடறிக் கீழே விழுந்து மறைந்தனர்; சிலர் கடவுளைத் தியானம் செய்துகொண்டிருக்கையிலேயே பாலத்தினின்றும் விழுந்து மறைந்தனர்; சிலர் கரை கடந்த களிப்பில் இருக்கும்போது கால் தவறி விழுந்து மறைந்தனர். இக்கொடிய காட்சியை அதிகப்படுத்தச் சிலர், கையில் கொலையாயுதம் ஏந்திப் பிரயாணிகளிற் பலரைக் கொன்று திரிந்தனர். பெரிய கழுகுகளும் பருந்துகளும் சிறிய இறக்கைகள் பொருந்திய சிறுவர்களும் பாலத்தின் மேற் பறப்பதாக மிர்சா கண்டான். மிர்சாவுக்கு யாவும் விளக்கமாயின: பாலம் மனித ஆயுளைக் குறிப்பது; அதன் எழுபது கண்கள் மனிதனுடைய எழுபது வயதைக் குறிப்பன; எழுபது வயதுக்கு மேற்பட்டவர் உலகில் மிகச் சிலரே ஆவர்; ஆனால் மக்கள், தொடக்கத்திலேயே இறத்தல் இயல்பாகக் காணப்படுகிறது. மனிதன் நினைத்ததை எய்துவதற்கு முன்னரே இறந்துவிடலும் இயல்பு. ஆயுளின் முடிவு இக்காலத்தேதான் வரும் என்று குறிப்பிட்டுக் கூறல் இயலாததாகலின், செபம் செய்யுங் காலத்திலும், வேலை செய்யும் காலத்தும், ஒன்றைப் பெற அவாவி முயலும் சமயத்தும் இறத்தல் இயல்பாக நடைபெறுஞ் செயலாகும். உலகில் அகால மரணமே மிகுதியாகக் காணப்படுவது. எனவே, நன்கு ஆராயின், மனித வாழ்க்கை முற்றிலும் வெறுக்கத் தக்கதே. மிர்சா, தான் கண்ட காட்சியால் மக்கட்பிறப்பையே வெறுத்ததைக் கண்ட ஞானியார், அவனிடம் இரக்கங்கொண்டவராய், மைந்தா, பள்ளத்தாக்கின் மறு கோடியில் காணப்படும் மூடுபனிக்கு அப்பால் காணப்படுவது யாதெனக் காண் என்றார். மிர்சா அவர் குறிப்பிட்ட இடத்தைப் பார்த்தான்: ஆ! பெருங்கடல் ஒன்று, மலை ஒன்றால் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது; அவற்றுள் ஒரு பிரிவே மிர்சாவுக்குப் புலனானது. அக்கடலில் அழகிய சிறு தீவுகள் அளவிலவாய்க் காணப்பட்டன; அவற்றுள் காணப் பெற்ற மக்கள், களிப்பென்னும் கடலுள் மூழ்கி இருந்தார்கள்; நாகரிக நல்லுடை உடுத்தியிருந்தார்கள்; தங்கள் பொழுதை இன்பமாகக் கழித்து வந்தார்கள். அவர்களது பேரின்ப நிலையைத் தானும் நுகர, மிர்சா அவாவினான்; தனக்கு இறகுகள் இருந்திருப்பின் தான் அத்தீவுகளுக்குப் பறந்து சென்றிருக்கலாமே என்று எண்ணி வருந்தினான். ஞானியார் மிர்சாவை நோக்கி, அப்பனே, மக்கள் இறந்த பின் அடைதற்குரிய தீவுகள் அவை. நற்பேறு பெற்றவரே அத்தீவுகளை அடைவர். மனித வாழ்க்கையில் ஒழுக்கத்தை விழுக்கலனாகக் கொண்டு நேரிய வாழ்வு நடத்துபவரே அத்தீவுகளை அடைதற்குரியர். எனவே, மனித வாழ்க்கை வீனது என்னும் தவறான எண்ணத்தை விட்டுவிடு. மனித வாழ்க்கையே இன்ப நிலையை எய்துவிக்கும் படியாகும் எனக் கூறினார். அப்பெரியாரது விளக்கவுரையால் மகிழ்ச்சி அடைந்த மிர்சா, மலையால் மறைப்புண்ட மற்றொரு பாகத்தைப் பற்றி அறிய அவாக்கொண்டு ஞானியாரைத் திரும்பிப் பார்த்தான். ஞானியார் காணப்பட்டிலர்; அவர் மட்டுமோ, அவரோடு மிர்சா கண்ட காட்சியும் மறைந்தது. 3. தன் உரிமை * ஒவ்வொரு துறையிலும் உழைத்துவரும் மனிதன் தன்னுரிமையை நெகிழ விடாது வாழ இடமுண்டு. நேரிய முறையில் அவன் நடப்பானாயின்- அவனைப் போலப் பிறரும் நடப்பாராயின், அவர்தமைப் பெற்றுள்ள நாடு பிற நாடுகளை விடச் சிறந்த நிலையில் ஒளிரும் என்பதில் ஐயமில்லை. மனிதன் பிறரிடமிருந்து உதவி பெறுதலை அறவே விட்டொழித்தல் வேண்டும். ஈண்டு உதவி பெறுதல் என்பது பிறர் தயவை நாடுதல் என்பதே ஆகும். பிறரால் உயிர் வாழ்வதை மறுத்து ஒருவன் தன் முயற்சியால் வாழக்கற்று வாழ்வை நடத்து வானாயின், மனித சமூகம் இன்றைய கேவல நிலையினின்றும் உயர்ந்து நிற்கும் என்பது திண்ணம். அந்நிலையில் ஒவ்வொருவனும் தன் கடமையை-தனக்குரிய வேலையைப் பிறர் தயவையோ, தாட்சணியத்தையோ எதிர் நோக்காது இயற்றுதல் கூடும். நேரிய முறையில் ஒவ்வொருவனும் தனக்குரிய வேலையைக் கடமை எனச் செய்வானாயின், அவனது உரிமை பாதிக்கப்படாதன்றோ? அவன் பிறர்க்கு அடிமையாக வேண்டும் அவசியம் ஏற்படாதன்றோ? ஒருவன், பிறரிடமிருந்து பெறும் உதவி ஒவ்வொன்றுக்கும் கட்டுப்பட்டவன் ஆகின்றான்; ஒரு பொதுச் செய்தியில், தனக்கு உதவி செய்தவன் கூறுவது முற்றும் தவறென்பதை நன்கு உணரினும், உதவி பெற்றவன், அவனை அவன் மறுத்துப் பேச இயலாது அடிமையாகும் பரிதாப நிலையை அடைகின்றான். அதனால் அவனது உரிமை பெரிதும் பாதிக்கப்படுகின்றது. அவன், எத்துணைப் பெரிய உதவியைப் பெறுகின்றனோ அத்துணை யளவு அவனது உரிமையும் பாதிக்கப்படுகிறது. எத்துணை முறை அவன் உதவி பெறுகின்றானோ அத்துணை முறையும் அவனது உரிமை பறிமுதல் செய்யப்படுகின்றது. அவன் தன் உள் உணர்வுக்குத் தவறெனப்படுகின்ற ஒன்றை-தனது வீழ்ச்சிக்கே மூலகாரணமான ஒன்றை-உதவி செய்தவன் தூண்டுதற்படி, தன் உரிமை இழந்து செய்யவேண்டும் பரிதாப நிலையை எய்துகின்றான். இங்ஙனம் தன்னை முற்றிலும் பிறர்க்கே அடிமைப்படுத்தி அவ்வடிமைத்தனத்தால் வாழ்பவன், தான் எவ்வகையிலும், சிறைப்பட்டோனை விடச் சீரிய நிலையில் இருப்பதாக எண்ணிவிடல் இயலாது. சிறைப்பட்டோன், தான் இருக்கும் சிறையினின்றும் வெளியேற முயற்சிப்பான்; அதன் பலாபலன்களை அவன் எதிர்நோக்கலும் உண்டு, நோக்காமையும் உண்டு. அங்ஙனம் அவன் முயற்சித்தலை எவரும் தூற்றுதல் செய்யார். ஆயின், பிறர்பால் உதவி பெற்ற ஒருவன், உதவி அளித்தோனுக்கு எதிராக நல்லதொன்றை நவிலினும், நன்றி கெட்டவன், உதவி கொன்றவன் என இழித்துரைக்கப்படுதல் கண்கூடு. அவன், உதவி அளித்தவன் இடும் கட்டளையை எக்காரணம் கொண்டேனும் மறுப்பின், மேலும் கடுமையாகத் தூற்றப்படுவது திண்ணம். மக்கட் சமூக நிலைமையை உள்ளவாறு உணர்ந்தவர் இதனைப் பொய்யென மறுக்கார். உதவி அளித்தவன் உளறல் அனைத்தும் உண்மை எனவே சாதித்துவரும் உரிமை அற்றவன், நாளடைவில் நடைப் பிணமாக- தன் உரிமை அணுவளவும் அற்ற நடைப்பிணமாக மாறிவிடுவதில் வியப்பென்ன? சிலர், தம் மூடத்தனத்தால் பிறர் பொருளைப் பெற்று வயிறு வளர்ப்பதையே வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அத்தகை இழிதகவினரைப் பற்றி நாம் பேச வேண்டா. அவர் தம்மை உயர்திணையாகக் கோடலும் தவறு. உதவி செய்வோன் காளையைக் கொணர்ந்து பசு எனினும், ஆம்; ஐயமில்லை, பசுவே எனப் பன்னிப் பன்னி உரைக்கும் பகுத்தறிவற்ற மாக்களைப் பற்றி நாம் கவலையுறல் வேண்டா. மாசற்றுத் துலங்கும் மதி தவழ் வானினை நோக்கி, ‘என்ன, மழை வரும்போல் தோன்றுகிறதே? என்று நண்பன் இயம்பின், ஆம், வரும்போல் தோன்றுகிறது எனச் சிறிதும் உரிமை என்பதின்றி ஒத்து ஊதும் பேதையரைப் பற்றிப் பேதுறல் வேண்டா. தாய் - தந்தையர்க்குப் பிள்ளைகள் நேரிய முறையில் தம் உரிமையை விட்டுக்கொடுத்தலும், மேல் அதிகாரிகட்குக் கீழ் அதிகாரிகள் விட்டுக் கொடுத்தலும், முதலாளிகட்குத் தொழிலாளிகள் விட்டுக்கொடுத்தலும் இவை போல்வன பிறவும் உரிமை இழத்தல் எனப்படா. நாம் இதுகாறும் உதவி பெறுபவன் இழக்கும் உரிமையைப் பற்றிப் பேசினோம். இனி, உதவி அளிப்பவன் தனது தகவறு செயலால் இழியும் நிலைமையைக் காண்போம்: அவன், முன்னரே தன்னிடம் உதவி பெற்றவராலோ, இனிப் பெறுபவராலோ எஞ்ஞான்றும் சூழப்பட்டிருக் கின்றான். அஃதாவது அவன், தம் உரிமை இழந்த தகுதியற்ற மனிதரிடையே வாழ்கின்றான். அவர்கள் தன்னை இந்திரன், சந்திரன் எனப் போற்ற-தான் கூறும் ஒவ்வொன்றுக்கும் ததாது கூற-இடையே முகமலர்ந்து இறுமாந்த நிலையில் இருக்கின்ற அவன், தன் அறிவீனத்தால் தன்னை உயர்ந்தவனாகவும் தான் கூறுவனவே சரி என்பதாகவும் கருதித் தருக்குகிறான். அடிமைகளிடையே தான் செலுத்தும் செல்வாக்கினைப் பிறரிடமும் செலுத்தக்கூடும் என்பதை நம்புகிறான்; தன்னைச் சூழ் இருக்கின்ற அடிமைக் கூட்டத்தில் தான் சிறந்து விளங்கலால், வெளி உலகினும் தான் சிறந்து விளங்குதல் கூடும் என அப்பேதையன் மனப்பால் குடித்து மகிழ்கிறான். அதனால், தன்னால் முற்றும் இயலாத ஒன்றை இயற்றித் தருவதாகவும் கூறிவிடுகின்றான்; அம் முயற்சியில் தான் தோல்வியுறும்போது தனது உண்மை நிலையை உணர்ந்து உள்ளம் உடைகிறான். செல்வர் இத்தகைய அடிமைக் கூட்டத்தார் இடையில் வாழ்தலும்-பொது வாழ்வில் செயலற்றுச் சீரழிதலும் யாண்டும் காணப்பெறும் துன்பக் காட்சியாகும். சுருங்கக் கூறின், தன்னுரிமை இழந்து பிறர் தயவில் வாழ்தலைவிட-பிறரிடம் ஒன்றைப் பெறுதலைவிடக் கேடு பயப்பது பிறிதொன்றில்லை. தன் உரிமை ஒன்றே நேர்மைக்கும் இன்பத்துக்கும் நேரிய வழியாகும். தன் உரிமை உடையவனே மனித வாழ்க்கை, உண்மை நட்பு இவற்றைப் பெற்று, அவற்றால் மன அமைதி, உடல் நலம், மகிழ்ச்சி இவற்றைப் பெறல் இயலும். உடல் உழைப்பின்றிப் பிறர் தயவில் வயிறு வளர்த்து அடிமையாக வாழ்க்கை நடத்துவதிலும் மெய் வருத்திக் கூலி வேலை செய்து தன்னுரிமையோடு வாழ்தல் இறைவனுக்குகந்த இன்ப வாழ்வாகும். 4. பழிக்குப் பழி* மனிதன் தன் மதிப்புக்குக் கேடு நேருங்கால் பொறுமை இழக்கிறான். தன் மதிப்புப் பிறரால் கெடுக்கப்பட்டது-அவமதிக்கப்பட்டது என்ற எண்ணம் தோன்றத் தோன்ற அவன் உள்ளம் உடைகிறது; பொறுமை தவறுகிறது; ஆவேசம் கொண்டவனைப் போல அவன் காணப்படுகிறான். தன்னை அவமதித்தோரை அவமதித்துத் தன் சீற்றத்தைத் தணிக்க முயல்கின்றான். அஃதாவது பழிக்குப் பழி வாங்கத் துணிகிறான். தன் மதிப்பு இழத்தலைப் பொறாத அவன், தன்னிலை இழந்து, இறைவன் அருளிய மன்னிப்பு என்பதை மறந்து மதங்கொள்கிறான். மன்னித்தலைக் கையாளாத அவன், நிலைக்கே நிலைக்களனாகிறான்; தனக்கு வரும் கேட்டை அறிந்தும் அவன் பழிவாங்க அவாவி நிற்றல், மன்னித்தலின் மாண்பறியா மனக்குறையே ஆகும். அவன் சிறிது நேரம் ஆழ்ந்து அமைதியாக யோசிப் பானாயின், பழிவாங்க நினைத்தல் என்னும் தீய நினைவு, தன்னை மமதை கொள்பவனாகவும் தன்னலங் கருதுபவனாகவும் செய்வதை நன்கு உணர்வான்; அக்கொடிய எண்ணம் அவனது வாழ்க்கை இன்பத்தை வதைக்கும் நச்சென்பதை நன்கறிவான்; மன அமைதியைக் குலைக்கும் மறு என்பதை அறிவான்; மன்னித்தல் ஒன்றே மாண்புறு செயல் எனத் துணிவான். பழிக்குப் பழி என்பது சரியாகவேனும் நிறைவேற்றக் கூடுவதோ? எனின், அன்று. தனக்குப் பிறன் இழைத்த தீமையின் அளவை அறிந்து அவ்வளவுடைய தீமையையே செய்வது பழிக்குப் பழி ஆகும். அங்ஙனம் ஆற்றல் ஆகுந் தரத்ததோ? ஆகுந் தரத்ததெனக் கொள்ளினும், இப் பழிக்குப் பழியால் முன்னரே ஏற்பட்டுள்ள பகைமை மீட்டும் வளர ஏதுவாகுமே யன்றிக் குறைதல் இயலாதன்றோ? எனவே, எம்முறையிற் பார்ப்பினும், பழிக்குப் பழி பாவம் பயக்கும் செயலே ஆகும். ஆதலின், அதன் தீமையை உணர்ந்து, மன்னித்தல் என்னும் அருஞ் செயலைக் கைக்கோடல் நன்று. அதனை இன்றே கைப்பற்றல் அதனினும் நன்று. ஏனெனின், பழக்கம் கொடிது. தீயதெனக் காணப்படுவதை உடனே அகற்றாது பழக்கமாகக் கொள்ளின், பின்னர் அப்பழக்கம் சுடுகாடு மட்டும் நிலைத்துவிடல் கூடும். ஆதலின், தீயதைத் தொலைத்து நல்லதைக் கைக்கொள்ள நாள் பார்க்க வேண்டா. நன்றும் இன்றே செய்தல் நன்று; அதுவும் இன்னே செய்தல் இனிது. நாம், பிறரிடம் பெற்ற அவமானத்தையே நாளும் நினைந்து நைவதை விட- அவ்வவமானத்திற்குப் பதில் அவமானம் செய்வதெப்படி என யோசிப்பதிலேயே நமது அரிய நேரத்தைக் கழிப்பதைவிட அக்குற்றம் செய்தோரை மன்னித்து மன அமைதி கொள்ளலே மாண்புடைத்தாகும். அறிஞன் ஒருவன், தனக்குப் பிறர் இழைத்த பழியைப் பெருந்தன்மையோடு மன்னித்து, அதனை அக்கணமே மறந்து, மன அமைதியோடு வாழ்வன்; அவன் தன் அரிய நேரத்தைப் பழிவாங்கும் பயனற்ற யோசனையிற் கழியான். அறிவற்ற மூடரே பழிக்குப் பழி வாங்கப் பதைப்பர்; தம் உயிர்போன்ற அரிய நேரத்தைப் பழிவாங்க எண்ணுதலிலேயே இழப்பர்; தம் மன அமைதியையும் பிற போகங்களையும் துறப்பர்; இறுதியில் மன ஏக்கத்துடன் மடிவர். அத்தகையர் மக்களினத்தில் மாக்கள் இனத்தவர் ஆவர்; அவர், மக்கள் சுகத்தையும் அமைதியையும் இழந்தவர் ஆவர். பழுக்குப் பழி வாங்கித் தம் பகைவர் படும் துன்பத்தைக் கண்டு களிக்கும் அக்கயவர் கொள்ளும் இன்பம் பொய் இன்பமேயாம். என்னை? அவ்வின்பம் சிறிது போழ்திருந்து மறைவதே யன்றோ? அதனால் அவர் பெறும் பேறுதான் யாது? அறிந்தும் அறியாமலும் குற்றம் செய்தல் மனித இயல்பென்பதை இனிதுணர்ந்தவன், மன்னித்தலின் மாண்பை அறிவான். ஒருவன் மற்றவனுக்குத் தனது அறியாமை மிகுதியால் தீமையைச் செய்தலும் கூடும் ; அவசரத்தில் நன்மை செய்தற்குப் பதிலாகத் தீமை செய்தலும் கூடும்; அசட்டையாலும் இக்கேடு நிகழும். இவற்றை எல்லாம் பொருட்படுத்தி, இவற்றுக்கெல்லாம் பழிவாங்கப் பதைத்தல் மதியுடைமை ஆமோ? இக் குற்றங்கட்கும் பிறவற்றுக்கும் மதிப்புத் தராமல் மன்னித்தல் மன அமைதிக் குரிய மருந்தாகும்; குற்றஞ் செய்தலினின்று காக்கும் காவலன் ஆகும். ஆயின், இம்மன்னித்தலை மனத்தில் நிலைபெற ஒட்டாது தடுப்பது- தான் என்னும் தருக்கே ஆகும். தன்னை ஒருவன் அவமதிப்பின் உலகம் முழுவதுமே தன்னைக் கேவலமாக நினைக்கும் என்னும் தவறான எண்ணம் ஒருவனுக்கு உண்டாகிறது. அவன் அவ்வெண்ணத்தால் தன் பகைவனிடம் பதைப்புக் கொள்கிறான்; பழி வாங்க முயல்கிறான். தன்னைப் பெரியவன் எனத் தவறாக எண்ணிய அவன்-உலகினர் முன்னர்ப் பகைவன் தன்னை அவமானப் படுத்தினான்; இனி உலகினர் தன்னைக் கேவலமாகக் கருதுவர் என்னும் தவறானதும் பொய்யானதுமான எண்ணங்கொண்ட அவன்-தன் மன அமைதியையும் களங்கமற்ற இயற்கை மனிதத் தன்மையையும் இழந்துவிடுகிறான். இதற்குத் தான் என்னும் தருக்கே காரணம் ஆகும். அவன் உலகினர் கொள்ளும் தவறான எண்ணங்களைச் சிறுதும் பொருட்படுத்தாமல், தன் உள்ளுணர்வு தெள்ளிதின் அளிக்கும் ஆணைப்படி மன்னித்தல், மன அமைதி, நேர்மையான நடை இவற்றை உடையனாயின், ஆ! அவன் பெறும் இன்பப் பேறு இயம்பும் திறத்ததோ! ஒருவன் பழிக்குப் பழி வாங்கும் நினைவை அறவே ஒழித்து, கைம்மேல் பயன் தராவிடினும் நேர்மையான முறையையே கடைப்பிடித்து, மன்னித்தல் என்னும் மாண்புடை அருஞ்செயல் ஒளிர வாழ்தல் வேண்டும். அவனது எண்ணம் இறைவனை இன்புறுத்துவதாகவும், எஞ்ஞான்றும் நிலையுள்ள நியாயப்படி நடப்பதாகவும், இறையருள் பெறத் தக்கதாகவும் அமைதல் வேண்டும். இந்நோக்கம் இன்றிக் கேவலம் புலன்கட்கு அடிமையாகிப் பழிக்குப் பழியே நினைக்கும் பாதகன் இம்மை இன்பத்தையும் இறைவன் அருளையும் மறுமைப் பேற்றினையும் இழந்தவன் ஆவான். கேவலம் உலகத்தவரை மதிப்பதிலும் மகிழ்விப் பதிலுமே தன் அரிய நேரத்தையும் ஐம்புலன்களையும் ஒருமைப்படுத்தும் வீணன் வீழ்ச்சியடைந்தவனேயாவன். இறைவனது மன்னிப்பை விரும்பிப் பெறாதவன் எவனும் இருத்தல் அருமையினும் அருமை. நம் குற்றங்களை மன்னிக்கும்படி இறைவனிடம் மன்றாடும் நாம், பிறர் நமக்குப் பேதைமையாற் செய்யும் குற்றங்களை மன்னித்தலன்றோ மாண்பு? பிறரை அவர் குற்றத்திற்காக மன்னிக்க மனமற்ற கொடியவன் இறைவனது மன்னிப்பைப் பெறான்; அவனது அருட்பொலிவினை எய்தான்; அவனது இன்பப் பேற்றில் கலவான்; இன்ப உலகில் உலவான். 5. வழிநடை இன்பம்* வழிநடை இன்பம் நுகர விரும்புவோன் வைகறையில் துயில் எழுதல் வேண்டும். வைகறையில் காக்கைகள் கண்விழித்துக் கரைதலையும், சேவல்கள் கூவலையும், மலர்கள் விரிய, மணத்தை உள்ளடக்கிக் காலைக் காற்று மந்தமாக வீசுதலையும் அவன் இருந்த நிலையில் நுகர்தல் கூடும். இரவு முழுவதும் இன்பத் துயிலில் இருந்த அவன் வைகறையில் மலர்முகத்துடன் எழுந்து வழி நடப்பனாயின், ஆ! அவனைவிடப் பேறு பெற்றவன் இப்பேருலகில் எவன் உளன்? வைகறையாமம் துயில் எழுதல் என ஆன்றோர் அறைந்தமை எஞ்ஞான்றும் இன்பப் பேறு நல்கற்குரியது என்பதை வழிநடை இன்பம் நுகர்பவனே உணர்வான். ஆங்கிலேயருள் பெரும்புகழ் படைத்த பெருவீரரான நெல்சன், டர்டீ போன்றவர் வைகறையில் துயில் எழுந்து வழிநடை இன்பம் நுகர்ந்தமை யாற்றான் அலகிலாப் புகழ் படைத்தனர். நந்தமிழகத்தே வைகறைத் துயில் எழுதல் என்பது மறை முழக்கம் ஆகும் ஆதலின் அதிகம் அறைதல் வேண்டா. எந்நாட்டுக் கவிகளும் வைகறையில் துயில் எழாதிரார். ஏன்? அறிவைப் பெருக்கும் இன்பசாதனம் அமைந்த அமயம் வைகறையேயாம் ஆதலின் என்க. வாணிபத்துக்காயினும், பிற தொழிலுக்காயினும், உடல் நலத்திற் காயினும் அறிவு நலத்திற்காயினும், இவ்வுலக நிலைக்காயினும், அவ்வுலக நிலைக்காயினும் வைகறைத்துயில் எழாமை மறுக்க முடியாத தவறாகும் என ஏ.ஜி.கார்டினர் கழறல் கவனிக்கத்தக்கது. டாக்டர் ஆர்னால்ட், பிஷப் செல்வின், டாக்டர் ஜான்சன் போன்றார் ஒரு சிலர் வைகறைத் துயில் எழுதல் என்னும் பழக்கம் அற்றார் ஆயினும், அப்பெரியார் எழாமை என்னும் குற்றத்தின்பாற்பட்டவரே ஆவர். அவர் அத்தூய பழக்கம் கொண்டவராய் இருந்திருப்பின், அவர் தம் செயல்கள், கட்டுரைகள் மேலும் சிறப்புடையன வாக மிளிர்ந்திருத்தல் கூடியதே என்பதை மறுப்பார் எவர்? இரவு முழுவதும் விளக்கெரித்து வேலை செய்யவேண்டிய வற்புறுத்தலுக்கு ஆளாகிய குறையால்தாம் வைகறையில் எழுந்து வழிநடத்தல் இயலவில்லை என ஏ.ஜி.கார்டினர் முறையிடுவதே வைகறையில் துயில் எழுதலின் இன்பத்தையும் வழிநடை இன்பத்தையும் பறையறைந்து பகர்வதாகும் அன்றோ? வைகறையில் துயில் எழுந்து வழி நடப்பவன் உள்ளத்தில் மகிழ்ச்சிக்குரிய கிளர்ச்சி உண்டாகும். அவன், மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சிகள் ஆங்காங்கு வழிநெடுகத் தோன்றி மறைதலைக் கண்டு களிப்பான். அவன் தன்னை மறந்து தன்னம்பிக்கை யோடும் உள்ளக் கிளர்ச்சியோடும் துள்ளி விளையாடிக் கொண்டே வழிநடப்பான்; ஒருகால் மன அமைதியும் மகிழ்ச்சியும் அடைவான்; தன் வழிநடை முழுவதும் அவன் ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு மாறிக்கொண்டே செல்வான். இத்தகைய அநுபவம், விரைவாக வழி நடப்பவர் நுகரல் இயலாது. அமைதியாகவும் மகிழ்ச்சியுடனும் வழிநடப்பவன் துணையின்றியே நடத்தல் வேண்டும். அத்தனி நிலையிற்றான் அவன் வழிநடை இன்பம் நுகர்தல் கூடும். அவனுக்குச் சுயேச்சை இன்றியமையாதது. அவன், பிறர் இடைமறுத்தல் இன்றித் தன் உணர்ச்சிகட்கு விருந்தளித்தல் வேண்டும்; தன் மனவுணர்ச்சிக்கு ஏற்றவாறு ஓர் இடத்தில் சிறிது தாமதித்தோ தாமதியாதோ செல்லல் வேண்டும். அவன் வழி நடக்கையில் புலன்கட்கு எட்டும் உண்மைகளை மனத்தில் பதித்தவனாய்க் காற்று வீசும் பக்கமே சாயும் கோரைப்புல் போல மனம் போன வழி நடத்தல் இன்பந்தரும் செயலாகும். இன்னணம் தனியனாய்ப் புலன்வழி நடக்கும் புனிதன் காணும் இன்பக் காட்சிகள்-எண்ணும் இன்ப நினைவுகள்-கட்புலனுக்குத் தோன்றி மறையும் இன்பத் தோற்றங்கள் இயம்பற்பாலவோ? அவன் தன் கட்புலனுக்கு விருந்தளிக்கும் விருப்பினன் ஆயின், அவன் அங்ஙனம் அளிக்கத்தக்க காட்சிகள் அளப்பில; வியப்போடும் உள்ளக் கிளர்ச்சியோடும் உவந்து காணும் காட்சிகள் பல. அவன் தனக்குள்ளாகவே, தனக்குத் தானாகவே பேசுவான்; சிரிப்பான்; ஆடுவான்; ஓடுவான்; அவ்வப்போது தன்னை மறந்து பாடுவான். தன்னை மறந்த அத்தூய நிலையில் அவனது பழுதுறு குரலும் கண்ணியம் வாய்ந்த கவினுறு குரலாக மாறுவதில் வியப்பென்னை? இவ்வாறு இன்ப நிலையில் ஈடுபடும் ஒருவன் செயல்கள் பித்தன் செயல்கள் போலப் பிறர்க்குத் தோற்றலாம்; சிலர் அவனைப் பித்தன் என்றே துணிந்து காவலரிடம் ஒப்புவிக்கலாம். எனினும், இங்ஙனம் நிகழ்தல் சிறுபான்மை. அதனை நினைந்து ஒருவன் தன் உணர்ச்சிகளை உள்ளடக்கல் இயலாது! இயலாது!! உள் அடக்கலும் தவறாகும்! தவறாகும் !! சாலையின் இருபுறமும் வானுறவோங்கி வளம் பெற வளர்ந்து காணப்பெறும் மரங்களின் மாண்புறு காட்சியும், அவற்றுக்கு அப்பால் எம்மருங்கும் பச்சைப் பசேல் எனக் கட்புலனுக்கு இடையறா இன்பத்தை அளிக்கும் பைங்கூழின் பண்புறு தோற்றமும், பைங்கூழுக்குப் பாய்ந்துகொண்டிருக்கும் சிறு கால்களின் நிலைத்த நீரோசையும், ஆங்காங்கு மரக்கிளைகளில் அகமலர முகமலர்ந்து அன்பும் அருளும் இணைந்த நிலையில் தம்முள் குலவி விளையாடும் பறவைகளின் பண்பட்ட ஒலியும், எம்மருங்கும் இனிதிருந்து இன்பநுகர்ச்சிக் குரிய நறுமணத்தை நாலாப் பக்கமும் நாறச் செய்யும் பூக்களின் பொலிவும், நீலப்பந்தரின் நிகரறு தோற்றமும், அப்பந்தரில் முளைத்த விண்மீன்களின் விளக்கமும், இவற்றுடன் கீழ்த்திசை வெளிச்சமும் இவை போல்வன பிறவும் கண்டும் கேட்டும் உள்ளத்தில் ஒருவராலும் கரை செய்ய அரியதொரு பேருவகைக் கடல் பெருக, இயற்கை என்னும் எழில் மிகு நங்கையின் மடிமீது அடி பெயர்த்து நடந்து விளையாடும் சிறுவனைப் போல அக்கவினுறு காலைப் போழ்தில் வழி நடப்பவன் காட்சி அளிப்பன். பெறற்கரிய இப்பேறு பெறுபவனே இன்ப நிலை இன்னதென்பதை அறிபவன் ஆவான். வழி நடப்பவன், மேலும் வழி நடந்து மலை வளத்தைக் குறுகுவனே ஆயின், அம்மம்மா! அவனது இன்ப நிலை இத்தகையதென இயம்பவும் படுமோ? மலைத் தொடரின் நீலத்தோற்றமும், அத்தொடர் மீது தோன்றும் மரச்செறிவின் பசுந்தோற்றமும், இவ்விரண்டும் கலந்த இன்பத் தோற்றமும், மலைக் கணவாய்களின் எழில் மிகு தோற்றமும், மலை முகடுகளின் மாண்புறு தோற்றமும், எவரும் என்மீது ஏறிக் கெடுக்க முடியாத நிலையில் நிமிர்ந்து நேரே நிற்கும் என்போல, இயற்கை அன்னையின் இன்ப மகனே! பிறர் உன்னை அடுத்துக் கெடுக்காதவாறு நேரிய வழி நில் என்றொரு வாசகம் வாய்திறந்து உணர்த்தாமல் உணர்த்தும் செங்குத்தான மலை முகுடுகளின் சீரிய காட்சியும், கானாறுகளின் களிப்புறு ஒசையும், மலையினின்றிழியும் மணமிகு நீரொலியும் இன்ன பிறவும் அவன் ஐம்புலன்கட்கும் அமுதம் அளித்தலை அறியாதார் யாவர்? இயற்கை அன்னையின் இன்பப் புதல்வன், அது காலை மலை மகன் ஆக மாறுவான்; அவன் மகிழ்ச்சி மீக்கூர, மலைகள் மீது அடி வைத்து ஏறுவான்; தவழ்வான்; மேலிருந்து கீழ் நோக்கி உருள்வான்; மலைப்பாங்கர் நிலவும் அமைதி நிலையைத் தன் இன்பக் குரலால்-இனிய பாடலால்-சிறிது அலமறச் செய்வான்; உலகப் போரினையும்-வாழ்க்கைப் போரினையும்-சமூகப் பூசல்களையும் பிற கொடுமைகளையும் அவ்வெல்லை மறந்தவனாய் மாண்புற விளங்கும் அம்மலை மகனினும் மணிமுடி தரித்த மன்னன் பேறு பெற்றவன் ஆவனோ? நிலையற்ற பொன்னும் பொருளும் போகமுமே இன்பமெனக் கொண்ட இறையனைவிட நிலையுற்ற மலை எழிலே எஞ்ஞான்றும் நுகரும் வழி நடப்பவன் வாய்ப்புடையன் அல்லனோ? நகரத்தின் நடுவில்-பலவகைத் துன்பங்களாகிய நரகத்தின் நடுவில் இருக்கும் வேந்தனை விட இறைவன் படைத்த இன்ப நகரமாகிய மலைப்பாங்கரில்-இயற்கை இருப்பிடமாகிய மலை முழையிற் சிறு போது தங்கும் தனிமகன் தவமகன் அல்லனோ? இவ்வாறு கதிரவன் கதித்தெழாக் காலைப் போழ்தில் கண்குளிரக் காட்சிகள் கண்டும் மனம் குளிர அக்காட்சி யின்பத்தை நுகர்ந்தும் இல்லந் திரும்பும் இன்பமகன் இறக்கு மளவும் இன்பமகனாகவே இருப்பான் என்பதில் ஐயம் உளதோ? கடுவினையும் கொடு நினைவும் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளா. எத்தகைய இழி செயலும் காட்சியும் அவன் புலன்களைப் பற்றா. அவன் என்றும் இயற்கை அன்னையின் இன்பப் புதல்வனாகவே இருந்து, இயற்கையிலேயே இரண்டறக் கலந்தவனாய் இனிது வாழ்வான். 6. என்றும் இளமை* மக்கள் அனைவரும் என்றும் இளமையோடு இருக்க இச்சைப்படு கின்றனர்; ஆனால், அதே சமயம் வளர்ச்சி பெறவும் விரும்புகின்றனர். அவர்கள் வளர்ச்சி பெறுவதே அன்றி அவ்வளர்ச்சி நோக்கி மகிழ்ச்சியும் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் மக்கட்கும் இவ்வுணர்ச்சியை ஊட்டுகின்றனர். உண்மையாகவே வயதேறுதல் வருந்தற்குரிய செயலே. அதனை எவ்வளவு சாமர்த்தியத்துடன் மறைக்க முற்படினும், அவ்வளர்ச்சியினின்று எவரும் நீக்கமுறல் இயலாது. வளர்கின்றவர் அறிவிலோ, ஆண்மையிலோ, அகங்காரத்திலோ பிறவற்றிலோ உயர்ந்தவராகத் தம்மைக் கருதக் கூடும்; அவற்றை மறைத்தலும் கூடும். ஆயின், தம் வளர்ச்சியினைப் பிறர் அறியா வண்ணம் தடுத்தல் முடியாது. அவர்கள் தமது இளமைப் பருவத்தினை-களங்கமற்ற தெய்வீகத்தன்மை பொருந்திய இளமைப் பருவத்தினை எண்ணிப் பார்க்குங்கால், தம் வயது வளர்தலை எண்ணி வருந்தாதிருத்தல் இயலாது. கடந்துவிட்ட இளமை எவ்வழியினும் மீட்டும் வராதென்பதை அவர்கள் எண்ணும்போது துண்ணெண நடுங்குவார்கள்; முதுமையும் நரையும் முடுகுவதை எண்ண எண்ண, அவர்கள் உள்ளம் உடைந்து வருந்துவார்கள். ஆயினும், வயதேறல் தக்கதொரு செயலென நினைப்பதில் முனைந்து நிற்பார்கள். வயதேறல் விரும்பத்தக்கதன்று என்னும் உணர்ச்சியில் ஆடவரைவிடப் பெண்டிர் உறுதியானவர். வளர்ச்சி பெறுதல் என்னும் வழி இன்ப உலகிற்குக் கொண்டு செல்லாது; இளமைப் பருவமும் குழந்தைத் தன்மையும் கொண்டவரே இன்ப உலகை எய்தற்பாலர் என்பதை அப்பெண்டிர் அழகுற அறிந்தவர். ஆயினும் பயன் என்? அவர்கள் வளர்ச்சியுறலை விரும்பிலர் ஆயினும் வயது வளர்ந்துகொண்டே போகிறது. அவர் அதனை மறைக்கக் கையாளும் செயற்கை முறைகள் யாவும் விழலுக்கிறைத்த நீர் ஆகின்றன. என்ன கொடுமை! வளர்ச்சி பெற்ற பொருள்கள் யாவும் தளர்ச்சியுற்று நசித்தல் உண்மை. மனிதன் எவ்வளவு உயர்வாக அவற்றைக் கருதியபோதிலும், அவை இறுதியில் பயனற்றுப் போதல் மறுத்தல் இயலா உண்மை. உலகத்துப் பொருள்கள் யாவும் நிலையற்றனவாகவே அமைந்துள்ளன. ஆயின், வயதில் வளர்ச்சியுறாமல் உணர்ச்சியில் வளர்ச்சியுறல் ஒன்றே-குழந்தைத் தன்மையாம் களங்கமற்ற உணர்ச்சி ஒன்றே-எஞ்ஞான்றும் அழிவுறாது நிலைபெற்றிருப்பது. இவ்வுண்மையை ஒவ்வொருவரும் உணர்தல் உறுபயன் விளைப்பதாகும். குழந்தைகள் இறைவனுக்கு உகந்தவர்கள்; அவர்கட்கும் பரமண்டலம் திறந்துவிடப்பட்டுள்ளது என்னும் நாசரேத்தூர் அடிகளின் நல்லுரையை இங்கு நினைவிற் கோடல் நலமாகும். வயதேறலை எவரும் எதிர்த்து நிறுத்தல் இயலாது ஆயினும், உடல் அதற்கேற்பத் தளரலைத் தடுத்து நிறுத்தலாம். அது நம்மால் ஆகத்தக்கதே. உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்னும் பெரியார் பொன்மொழியை உளங் கொண்டு உடலைப் பேணின், வயதேறினும் உடல் வன்மை தளராது. உடலை இங்ஙனம் உரமுடை நிலையில் நிறுத்தி, மனவலியைப் பெருக்குதல் மாண்புறு செயலாகும். ஒருவன் தான் நாடோறும் வயதில் முதிர்ச்சி பெறுவதை அறவே மறந்துவிடல் நலம்; என்றும் இளமையோடு இருப்பதாக நினைத்தலே நீடித்த வாழ்க்கை இன்பத்துக்கு நேரிது. அவன் தனது குழந்தைத் தன்மையைத் தன் உள்ளத்தே நிலைபெறச் செய்து, அதனை வளர்த்தல் வேண்டும். தான் குழந்தைப் பருவம் கடந்தவனாகத் தன்னைக் கருதுவானாயின் அவன் அன்றே அழிந்தவனாவான். அவன் குழந்தைத் தன்மையோடு உலகில் வாழப் பழகல் வேண்டும்; துன்பம் தரத்தக்க எண்ணங்களைத் தன் தூய மனத்துள் இறையளவும் நுழையவிடலாகாது; எஞ்ஞான்றும் இன்பமும் மன அமைதியுமே மனத்தை ஆட்சி புரியச் செய்தல் வேண்டும். குழந்தைகளோடு பெரும் பொழுதைக் கழித்தல் வேண்டும்; குழந்தைகளின் தீதறு செயல்களைச் செய்தலில் ஈடு படல் இன்பம் தருவதாகும். குழந்தைகளோடு பழகுவதில்-குழந்தைகளின் இன்ப விளையாடல்களைக் காண்கையில்-அவன் குழந்தைத் தன்மையை அடைதல் இயல்பு; அவன் உள்ளம் அன்பும் அருளும் பிணைந்ததாய் ஆனந்தக் கடலில் திளைக்கும். அந்நிலையில் அவன், தன்னை முதியன் என நினைக்கவும் முனிவன்; பிறர் தன்னை அப்படி நினைத்தலையும் முனிவன். இக்குழந்தைத் தன்மையினின்று மனிதன் மாறுவானாயின்-குழந்தையாகத் தன்னை நினைக்கக் கூசுவானாயின்- இளம் பிள்ளைகளோடு இருந்து இன்ப நிலையை நாடலில் நாணு வானாயின்-அவன், உணர்ச்சியின் வலி இழந்து, முதுமையுற்றுத் துன்ப நிலையை எய்தல் திண்ணம்! திண்ணம்!! நாம், குழந்தைத்தன்மை உடையவரே உலகில் நெடுங்காலம் வாழ்ந்துவரக் காண்கிறோம். காந்தி அடிகள் இன்ப நிலையில் இருந்துவரற்குக் காரணம் அவரது குழந்தைத் தன்மையே ஆகும். அவர் எங்கு செலினும் குழந்தைகள் அவரைச் சூழ்ந்துகொண்டு காந்தி-தாத்தா என மகிழ்ச்சியுறல் வழக்கமாக இருந்து வருகிறது. அவரும் அகமலர முகமலர அக்குழந்தை களோடு விளையாடல் காண்கிறோம். இத்தூய தன்மை வளரப் பெறுபவரே என்றும் இளமை எய்துவர். என்றும் மகிழ்ச்சிக் குறியுடன் இருத்தலே குழந்தைத் தன்மையாம். எத்தொழிலைச் செய்யினும் அதனை மகிழ்ச்சியுறச் செய்பவனே-அச்செயலில் இன்பம் நுகர்பவனே குழந்தைத் தன்மை எய்தியவன் ஆவன். பிரஞ்சு நாட்டுப் பெயர் பெற்ற ஓவியப் புலவனான கோராட் (corat) என்பவன் பாடிக்கொண்டே அதியற்புதமான ஒவியங்களைத் தீட்டினான் என்பதை அறிந்து கொள்ளல் ஈண்டைக்கு இன்பம் விளைப்பதாகும். இயற்கை இன்பத்தை நுகர்தல் குழந்தைத்தன்மை வளர வழியாகும். போது விரிந்து புது மணம் பரப்பும் பூங்காவில் வண்டுகள் இசைபயிலல் இன்பம் தரத்தக்கது. அக்காட்சியைக் காண்பவன் தன் குழந்தைப் பருவத்தை நினைய ஏதுவுண்டு. தான் சிறு பருவத்தே விளையாடிய சோலையும் மலர் பறித்த மலர்க்காவும் அவன் கண்ணெதிரே தோன்றிக் காட்சி யளிக்கின்றன. அந்நிலையில் அவன் தனது கடந்து மறைந்த இளமைப் பருவத்தை இன்பம் பெருக எண்ணிக் களிக்கிறான்; அவ்வளவில் தன்னை மறந்து மணமிகு மலர்கள் நிறைந்த அப்பூங்காவில் அடிபெயர்த்து உலவிய வண்ணம் அக்காவின் கவினைக் காண்கிறான். யாண்டும் நறுமணம்; யாண்டும் வண்டொலி; மாசற்ற மலர்களின் தோற்றம் அவனது மனத் தாமரையை மலரச் செய்கிறது. குழந்தைத் தன்மை என்னும் நறுமணம் அவ்வகத்தாமரை மலரினின்றும் வெளித்தோன்றிப் பரந்து, அவனது உடலாகிய மலர்க்காவினை மணக்கச் செய்கிறது. அப்பொழுது அவன் குழந்தையாக-மாசறு மகவாக-இறைவனது இன்பப் பிழம்பாகக் காணப்படுகிறான். இந்நிலையே இன்ப நிலை! என்றும் இளமையோடிருக்கும் இன்பத் தோற்றம்!!வாழ்க்கையின் வனப்புறு காட்சி!!! எதனையும் ஆராய்ந்தறியும் அவா, கேள்வி, முயற்சிபோல் வன இளமஉணர்ச்சிய ஊட்டிவளர்க்கும் சாதனங்கள் ஆகும். உலகிடைக் காணப் பெறும் பொருள்களை ஆராய்ச்சி செய்தல், அவற்றை ஆர்வத்தோடு காணல், அறியாதவற்றை அறிந்து கொள்வதில் ஆர்வங்கொள்ளல் இவை இன்றியமை யாதவை. மறைந்து கிடக்கும் உண்மையை ஆராய்ந்து கண்டறிவதில் உளதாகும் இன்பத்துக்கு நிகரானது பிறிதொன்றில்லை. மனிதன் தனக்கு வயதாகி விட்ட தென்னும் எண்ணம் எட்டுணையுமின்றி உழைத்த வண்ணமாகவே இருத்தல், என்றும் இளமையோடு இருத்தற்குரிய சாதனங்களில் ஒன்றாகும். நம் தமிழகத்தே தமிழன்னையின் தவப்புதல்வராக வாழ்ந்து வருகின்ற மஹோபாத்யாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் (83 வயது நிரம்பிய வர்கள்) தோற்றத்தில் முதியவர்களாகக் காணப்படினும், செயலில் இளைஞராகவே காணப்படுகிறார்கள். அவர்கள், குழந்தைகள் சிறிது நேரத்தையும் வீணாக்காது ஏதேனும் ஒன்றைச் செய்வதிலேயே இன்பம் நுகர்தல் போலப் பாழும் புறவுலகில் மனத்தினைச் செலுத்தாது, தழிழ்மொழி ஒன்றிலேயே கருத்தினைச்சலுத்திவருகின்றார்கள்;ஆதலின்,இளமைஉணர்ச்சியோடுஇன்றும்ஒளிர்கின்றார்கள்.தமிழகத்துள்ள அச்சான்றோரையே சன்றாகக்கொண்டு,‘ என்றும் இளமை என்பதன் bபாருட்சிறப்பு ஒர்ந்துணரல் –உணர்ந்து பின்பற்றல்-உறுபயன் உதவுவதாகும் 7. உண்மை* மனிதன் தன் குழந்தைப் பருவத்திலிருந்து இறக்கும்வரை எத்தகைய கொள்கைகளில் - நம்பிக்கைகளில்- எண்ணங்களில் வாழ்ந்து வருகின்றான்? அவன் அவற்றைப்பற்றித் தன் வாணாட்களில் ஒரு நாளிலேனும், ஒரு மணி நேரமேனும் சிந்திப்பதுண்டா? ïšiy!இல்லை!! அவன் தனது குழந்தைப் பருவத்தில் தனது அறிவுக்கு எட்டாத-தெய்வீகத் தன்மையெனக் கூறப் பட்ட பல செய்திகளைக் கேள்விப்படுகிறான். அவனது தூய உள்ளத்தில் இச்செய்திகள் புகுத்தப்படுகின்றன. தனக்குக் கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைதல், அச்சம், சாபம் முதலிய பலவும் அவனது களங்கமற்ற மனத்தைக் கவர்ந்து பாழாக்கி விடுகின்றன. அவன் மனம் சுதந்திரத்தை இழந்துவிடுகிறது; தன்னிடம் புகுத்தப்பெற்ற விஷயங்களை ஆராய்ச்சி செய்யச் சக்தியற்றதாகின்றது. ஆராய்ச்சி செய்யாதே; நம்பு. என்று பெரியோர் கூறிய சொல் தோன்றித் தோன்றி மனத்தை அடிமைப்படுத்திவிடுகின்றது. எனவே, மனிதன், உண்மை எது? உண்மை அல்லாததெது? என்பவற்றைத் தன் பகுத்தறிவால் ஆராய்ந்தறியத் துணிவின்றித் தவிக்கிறான். உண்மை ஒன்றே ஆன்மாவை இருள் மயமாகிய மனித வாழ்க்கை என்னும் பிராயாணத்திற் கடத்திச் செல்லும் ஒளியாகும். தன் பகுத்தறிவைக்கொண்டு ஆராய்ந்து, உண்மை இது, உண்மை அல்லாதது இது. எனத் துணிபவனே வீரன். அவன் கண்டறியும் உண்மையே அவனது பெருவாழ்வைத் தூய்மையுறச் செய்வது. உண்மையே மகிழ்ச்சிக்குத் தாய்; உண்மையே மனத்தை-வாழ்க்கையை-சமூகத்தை-ஏன்? உலகத்தையே தூய்மை செய்வது; நாகரிகம் ஆக்குவது; ஒளிரவும் செய்வது. இத்தகைய பெருமை வாய்ந்த உண்மையைக் காண மனிதனை முழுவுரிமையுடனும் விடுதல் வேண்டும். வேதத்தின் வார்த்தை; பூதத்தின் வார்த்தை; நூல்கள் கூறுகின்றன எனவும், பிறவாறும் விஷயங்களை மனத்துள் புகுத்தி, இவற்றை நம்பு; எதிர் மறுத்து உரையேல்; அங்ஙனம் உரைத்தல் பாவம் எனக் கூறி மனிதனுக்கு அச்சத்தை உண்டாக்கி, அவன் அறிவைக் குடத்துள் புகுத்திய விளக்கைப் போன்று ஓர் எல்லைக்குள் அடக்கிவைத்தல் எத்துணைப் பேதைமை! உண்மையைக் கண்டறிய அவாவும் ஒருவனை இங்ஙனம் தடுப்போன் மனித வர்க்கத்தின் விரோதியே ஆவன். இதை நம்பு; உனக்கு மோட்சம் கிடைக்கும் என்பவன், தன் போன்ற மக்கட் கூட்டத்தையே அழிக்கும் கொடியவனாவான். சுதந்திரம் இன்றி உண்மையை உற்றுணர்தல் இயலாது. சுதந்திரமாவது யாது? அது, வேற்றுமை இன்றி, யாவரிடத்தும் சிறுதும் அச்சமின்றி, விஷயங்களை ஆராயத் துணிதல் என்க. இங்ஙனம் ஒருவன் முழுச்சுதந்திரத்தோடு தனக்கு உண்மை யுள்ளவனாகித் தன்னிடத்தே நம்பிக்கையுடையவனாய் விஷயங்களை ஆராயின், உண்மை இன்னதென்பதை உணர்வான். இன்னணம் உண்மை காண்டலே மனிதனது முதற்கடமை; மனித சமூகத்தைத் தூய்மைப்படுத்துவதும் இது. இதுவே சுதந்திரம். இதனைச் செய்யாது, பிறர் சொற்களுக்குப் பயந்து விஷயங்களை ஆராயாமல் அவற்றைப் பின்பற்றுவோன் அறிவிலி என்பதில் ஐயமுண்டோ? வேத வார்த்தைகளாய் இருப்பினும், மனிதர் வார்த்தை களாய் இருப்பினும், மனிதன் நடுநிலையினின்றும் அவற்றை ஆராய்ந்து உண்மை கண்டு, கொள்ள வேண்டுவனவற்றைக் கொண்டு, தள்ள வேண்டுவனவற்றைத் தள்ளலே முறை. அச்சம், சாபம், விருப்பு, வெறுப்பு என்பவை இன்றி விஷயங்களை ஆராய்ந்து உண்மை காண்பவனே உண்மை மனிதன். அவன், தனக்கு உண்மை எனப்படாதவற்றை உதறித் தள்ளி விடுவான். அவை தன் முன்னோர் அபிப்பிராயம் ஆயினும் சரி; அவன் பொருட்படுத்தமாட்டான். அவனது மனச்சாட்சிக்கு உகந்ததல்லாத எதனையும் அவன் ஒப்புக்கொள்ளமாட்டான். அவனே மனிதவர்க்கத்திற் சிறந்தவன். ஓர் அசுரன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுள் ஒளிந்துகொண்டான் என்று கூறப்படுகின்ற கதையை நம் மூதாதையர் நம்பி இருந்தனர். அதனை இன்று நாம் நம்புகின்றோமா? இல்லை. ஏன்? நாம் பூகோள சாத்திரம் வாசித்திருக்கிறோம்; பூமி உருண்டை வடிவமுடையது என்பதை அறிந்திருக்கிறோம். பூமி தட்டையாகவோ பாயாகவோ ஒரு காலத்திலும் இருந்திராதென்பதை அறிவோம். எனவே, இஃது ஒரு பொய்க் கதை என்னும் எண்ணத்தைப் பெறுகிறோம். இங்ஙனம் ஒவ்வொன்றையும் நம் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து, உண்மையைக் கோடலே கற்றதனாலாய பயன் என்க. மூளை விருத்தி செய்யப்படல் வேண்டும்; சிந்தனா சக்தி பெருகுதல் வேண்டும்; பரந்த நோக்கத்தையும் விரிந்த சிந்தையையும் வளர்த்தல் வேண்டும்; பகுத்தறிவைக் கொண்டு ஒவ்வொன்றையும் ஆராய்தல் வேண்டும். எதையும் நம்பிவிடுதலோ, நம்பிப் பின்பற்றுதலோ பெருந்தவறு. இங்ஙனம் பகுத்தறியும் முறையால் மனிதன் சுதந்திர நிலையை அடைகிறான். வீணான விஷயங்கட்கு அவன் அச்சப்படுதல் இல்லை. பல நோய்கள் தன்னை அணுகாதபடி அவன் காத்துக் கொள்ளக்கூடும். தன் வாழ்க்கையை உயர்த்திக்கொண்டே போக இயலும். இதுவன்றோ உயரிய இலட்சியம்! உயரிய வாழ்க்கை! ஆனந்த நிலை! மனிதன் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து உண்மையைக் கண்டு நடப்பானாயின், உலகில் தீமை ஏது? பஞ்சமா பாதகம் ஏது? நரகம் ஏது? என்றும் எங்கும் இன்பமே அன்றோ? உலகெலாம் இன்பமான பேரொளியாய் இலங்குமன்றோ? உண்மையைக் காண்பவன் தெய்வங்கள் எனக் கூறப்படுவன வற்றுக்கும், மாகாத்துமாக்களுக்கும், பிறர்க்கும், நரகத்துக்கும் அஞ்சவேண்டுவதில்லை. அவன், அப்பரந்த உலகில் சுதந்திர வீரனாக விளங்குவான்; உலகத்தின் உண்மைத் தோற்றத்தினை உணர்வான்; தானே தனக்கு நிகர் என ஒளிர்வான். பகுத்தறிவுள்ள மனிதரை வசீகரிக்கத்தக்க மதம் உண்மையான விஷயங்கள் என்னும் செங்கற்கள்மீது கட்டப்பட்ட கவினுறு மாளிகையாகக் காட்சியளித்தல் வேண்டும். அம்மதத்தை மனிதன் தானாகத் தழுவ வேண்டுமே தவிர, மதம் மனிதனைத் தழுவுவதாக இருத்தல் கூடாது. குழந்தைகளைத் தங்கட்குத் தோன்றும் சந்தேகங்களைக் கேட்குமாறு பெற்றோரும் ஆசிரியரும் தூண்டுதல் வேண்டும். அவர்கள் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் கேட்கும் கேள்விகட்குப் பெற்றோரும் ஆசிரியரும் விடை பகர்தல் வேண்டும். ஒவ்வொரு வீடும்-ஒவ்வொரு பள்ளிக்கூடமும் மனத்துக்கு வேலையைத் தரும் பள்ளியாக அமைதல் வேண்டும். வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு காட்சியையும் சிறுவர்- சிறுமியர் விளக்கமாகக் காணுமாறு அவற்றின் மூடத் திரைகளைப் பெற்றோரும் மற்றோரும் நீக்குதல் வேண்டும்; உண்மை வாழ்க்கை இன்னதென்பதை இளைஞர்க்கு உணர்த்தல் வேண்டும். உண்மையே வடிவமாய் இலங்கும் இயற்கையைப் பரிசோதனை புரிய அவர்களை விடுத்தல் வேண்டும். இயற்கையே அறம்! இயற்கையே பொருள்! இயற்கையே இன்பம்! ïa‰ifna åL! என்பதை இளைஞர் இனிதுணருமாறு செய்வித்தல் வேண்டும். அன்பின் தோற்றுவாயாக இலங்கும் அன்னை, தன் மைந்தனுக்கு உண்மைக் கதைகளையும் உண்மைச் செய்தி களையும் எடுத்துக் கூறுவாளேயாயின், அம்மைந்தன் உண்மை அறிவோடு வளருவான்; எங்கும் உண்மையை ஆய்வான். பள்ளி ஆசிரியர் உண்மைச் செய்திகளையும் உண்மைக் கதைகளையும் உணர்த்துவாராயின், அச்சிறுவன் உண்மை நாடும் உத்தம மாணவனாக ஒளிர்வான். பின்னர், உண்மை மனிதத் தன்மையை எய்துவான்; உண்மை வாழ்க்கையைப் பெறுவான்; உண்மைச் சோதியில் ஒளிர்வான். அந்நிலையில் உலகமே உண்மையின் வடிவமாக அமையுமன்றோ? உலகில் உள்ள ஒவ்வொருவரும் இங்ஙனம் உண்மையை உணர்ந்து, பொய்யானவையும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதனவும hகிய செய்திகளை மனத்தினின்று வெளியேற்றிச் செவ்விய நடத்தை, பேச்சு, வாழ்க்கை உடையராய் வாழ்வாராயின், ஆ!இவ்வுலகமே சுவர்க்கமாக இலங்காதோ? 8. இரவின் இரகசியம்* நான் பிரான் தேசத்தின் தென்கிழக்கில் ரோன் நதி ஓரமாகப் பிரனி மலையைச் சார்ந்த பிரதேசத்தில் 1876-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனிப் பிரயாணம் செய்தேன்; நாயளவு இருந்த கழுதை ஒன்றினை வாங்கி, அதனுடன் பிரயாணம் செய்தேன். ஓர் இரவு மலைச்சிகரம் ஒன்றின்மேல் தங்கினேன். அங்கே தேவதாரு மரங்கள் அடர்ந்து இருந்தன. சிறிய நீரோடை ஒன்றில் கூழாங் கற்களின்மேல் சலசலவென்ற இன்னிசையோடு நீர் ஓடிக்கொண்டிருந்தது. மரங்களுக்கு இடையில் யான் தங்கியிருந்தது, ஓர் அறையுள் வசிப்பதுபோல இருந்தது. எனது கழுதையை மேயவிட்டுப் பின் நான் உணவை உட்கொண்டேன்; பின்னர் எனது கோணிக்குள் கால்களை விட்டுக்கொண்டு, எனது தொப்பியால் முகத்தை மறைத்துக் கொண்டு, நித்திரையில் ஆழ்ந்தேன். இராக்காலம் மிகவும் இன்பகரமான காலம் என்பதை நீங்கள் உணர்தல் வேண்டும். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல்தான் இன்பகரமான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நகரங்களில் அவியும் விளக்குகள் தம் ஒளி மழுங்கும்; மெய் வருந்தி உழைத்து வாழும் எளியவரும் இருப்பதில் திருப்தியாய் இனிது வாழும் மக்களும் துயிலில் ஆழ்வார்கள். இங்ஙனம் உலகெலாம் துயில, சிற்றினக் குடியர், குடித்ததெல்லாம் போதாதென்று பின்னுமொரு முறை மதுவைத் தம் வள்ளத்தில் சொரிந்து மகிழ்வர். விண்ணும் மண்ணும் பரந்த இருள் அவ்வேளையில் அச்சத்தை உண்டாக்கும் ஒரு நிலை பெற்றுள்ளது. என்னே இந்நிலை! அந்நடு நிசியிற்றான் மனிதனது அகங்கார மமகாரப் பூசலெல்லாம் அடங்கிக் கிடக்கின்றன. பொழுது புலர்ந்ததும் மக்களும் தங்கள் ஆரவாரத்தை ஆரம்பித்துவிடுவார்கள். இரவு இங்ஙனே நிலை பெற்றிருப்பின், மனிதனது அகங்கார மமகாரப் பூசலும் ஒழிந்துவிடும். ஆனால், இரவு இங்ஙனே நிலைபெற்றிருக்குமோ? அஃது எங்ஙனம் கூடும்? இயற்கை மாறுதற்படி இரவும் பகலும் தோன்றித்தானே ஆகவேண்டும்! பேயுங் கண்ணுறங்கும் நடுயாமத்தில் இயற்கையில் தோன்றும் மாறுதல்களையும் அற்புத நிகழ்ச்சிகளையும் யான் கண்ட அளவில் எடுத்தியம்பு கின்றேன். ஒரு கூரையின் அடியில் இருந்து இரவைக் கழிப்பது துன்பமான காரியமே. ஆனால், அதே இரவை வெட்ட வெளியில் மிகச் சுலபமாகவும் களிப்பாகவும் கழிக்கலாம். இன்பகரமான நட்சத்திரக் கூட்டமும், தேன் துளிபோலத் துளிக்கும் பனித் துளிகளும், இயற்கையின் விநோதமும் இரவை இன்பத்தில் கழிக்கச் செய்யும். சுவர்களுக்கிடையிலும் திரைகளுக் கிடையிலும் படுத்துறங்கும் மனிதர்கள் இராப்பொழுதில் பிணத்துக்குச் சமானமானவர்கள். ஆனால், வெட்டவெளி இடத்தில் படுத்துறங்கும் பான்மையாளன், யோகானந்த நித்திரை செய்யவே இயற்கை இடங் கொடுக்கும். அவன் இரவு முழுவதும் இயற்கை என்னும் பெண் நன்றாக மூச்சு விடுவதைக் கேட்பான். அவள் ஓய்வுகொண்டிருக்கும் அந்நிலையிலும் புன்சிரிப்புடன் விளங்குகின்றதை அவன் கண்டு மகிழக்கூடும். உலகமே-உலகத்திலுள்ள உயிர்களே-உறங்குகையில், இயற்கைப் பெண்ணும் இன்ப நித்திரையில் இருக்கையில், வெளி உலகத்தில் படுத்துள்ள மனிதன், இரவின் ஒப்பற்ற அழகையும் நிசப்தமான நிலையையும் அனுபவித்து ஆனந்தம் அடைவான். இத்தகைய இயற்கை இன்பத்தைவிட ஒரு மனிதன் கண்டு மகிழத்தக்க பொருள் உலகில் யாதுளது? ஆ! மற்றுமோர் இரகசியம்-வீடுகளுக்குள் விழுந்துறங்கும் மக்களுக்குத் தெரியாத இரகசியம் -பேயும் கண்ணுறங்கும் நடு யாமத்தில் இரண்டு மணி நேரத்தில் நிகழும் இன்ப ரகசியம் உண்டு. அவ்வேளையில் வெளியிடத்து உயிர்களைத் தட்டி எழுப்பும் இரகசிய நிகழ்ச்சி ஒன்று நடக்கின்றது. அச்செயலைச் செய்பவர் யார்? அவர் யாராயிருப்பினும் நமக்கென்ன? பின்னும் பார்க்கலாம்: அந்த அற்புத வேளையில் இயற்கையினிடத்து மாறுதல் ஒன்று உண்டாகின்றது. காக்கைகள் கண் விழித்துக் கரைகின்றன. ஆனால், காலத்தை அறிவிப்பதற்கன்று; உலகத்தை அசைக்கும் சக்தியைக் கண்டு ஆனந்தமுற்றதாற்றான். வெளியிடத்துறங்கிய கால்நடைப் பிராணிகளும் தூக்க மயக்கத்தினின்றும் துடித்தெழுகின்றன. ஆடு - மாடுகள் சிறிது புல் மேய்ந்து, மீண்டும் நித்திரையில் ஆழ்கின்றன. இருக்க வீடற்ற மலைநாட்டு மக்கள் அவ்விரகசிய வேளையில் எவ்வாறோ எழுகின்றார்கள்; தூக்கத்தால் மங்கிய தங்கள் கண்களைத் துடைத்துக்கொண்டு இரவின் இன்பத் தோற்றத்தினைக் கண்டு களிக்கின்றார்கள். உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்த இவ்வுயிர்களை யாரேனும் தட்டி எழுப்பினரா? என்ன ஆச்சரியம்! இயற்கை அன்னையாவது தன் மடியில் உறங்கும் மக்களைக் கிள்ளி விட்டனளா? ஒவ்வோர் இரவும் இவ்விரகசிய நிகழ்ச்சியைக் கண்டு களிக்கும் மலைநாட்டு மக்களும் இவ்வற்புதமான சக்தியின் காரணத்தை அறியக் கூடவில்லையோ? ஆம்; அவர்களும் இதன் இரகசியத்தை அறியாது விழிக்கின்றார்கள். இரவில் சரியாய் இரண்டு மணிக்கு இந்நிகழ்ச்சி ஏற்படுகிறது! இஃது ஓர் இன்பகரமான நிகழ்ச்சியே. இஃது இயற்கைத் தோற்றத்தினையும், அதன் வாயிலாக இறைவனது அரிய சக்தியையும் வெளிப்படுத்தி, மக்களை இன்புறச் செய்யும் நிகழ்ச்சியே அன்றி வேறன்று. இந்த இரகசிய வேளையில் நான் என்ன செய்தேன் என்பதை அறிய நீங்கள் விரும்புவீர்களல்லவா? கூறுவேன், கேளுங்கள்: இரகசிய வேளையில் யானும் மற்ற உயிர்களைப் போலவே எழுந்தேன். அப்போது எனக்கு நீர் வேட்கை அதிகமாய் இருந்தது. நான் வைத்திருந்த குளிர்ந்த நீரைக் குடித்தேன்; எனக்குக் குளிர் தெரியாமல் இருந்தது. வானத்தை நோக்கினேன். விண்மீன்கள் விளக்கமுற்றிருந்தன. பால் போல் வெளுத்த பட்டை ஒன்று நீலக்கூரையில் இடப்பட்டது போன்று இருந்தது. அவ்வேளையில் எனது கழுதை மேய்ந்து கொண் டிருந்தது. அது புல்லைக் கடிக்கும் அரவமும், எனக்கருகில் ஓடிக்கொண்டிருந்த நீரோடையின் நிலைத்த ஓசையும் தவிர வேறு ஓசை என் செவியிற் படவில்லை. அடிக்கடி இன்பகரமான குளிர்ந்த காற்று மலையுச்சியில் வீசிக்கொண்டிருந்தது. நான் அந்த இன்பகரமான வேளையில், நாகரிகம் என்னும் பேய் தலை விரித்தாடும் நகரங்களில் இல்லாது, மலை உச்சியில் மலைமகனாக இருக்க நேர்ந்ததைக் குறித்து இன்பமுற்றேன். இயற்கை அன்னையின் இன்பப் புதல்வனாக இருக்கவே யான் விழைந்தேன்; இன்றும் விழைகிறேன். அந்நிலையில் கச்சேரிகளில் காலை முதல் மாலை வரையில் ஓயாது வேலை செய்யும் உத்தியோகதர்களையும், நற்காற்றின்றிப் பள்ளியிற் படிக்கும் மாணவர்களையும், விளக்கை ஏற்றிக் கதவுகளை அடைத்துக்கொண்டு அறைகளில் படிக்கும் மாணாக்கரையும் நான் நினைக்க நேர்ந்தது. மலையுச்சியில் குளிர்ந்தகாற்றில் குதூகலமாயிருக்கும் நான், அவர்களை நினைக்க வருந்தினேன். நான் அன்றிரவு ஓர் உண்மையைக் கண்டுபிடித்தேன். அஃதாவது, ஆண்டவனால் உண்டாக்கப்பட்ட வெளியிடம் என்னும் வீடே மனிதனுக்கு இன்பத்தைப் பயக்கத் தக்கது என்பதே. மனிதன் நோயின்றியும் உடல் உரம் பெற்றும் கடவுள் நிலையை எய்த வேண்டுமாயின், வெளியிடமே அவனுக்கேற்ற தென்பது உண்மை. நான் எனக்குள் ஓர் இன்பத்தைக் கண்டறிந்தேன் என்று ஏன் சொல்லக்கூடாது? உங்களுக்கு இவ்வுண்மை இன்பமாகத் தோன்றாவிடினும், மலையுச்சியில் படுத்த எனக்கு இன்பந் தானே? அன்பர்களே, அந்நிலையில் யான் எதை விரும்பினேன்? என் அருகில் அமர்ந்து, சிறிதும் அசையாமல் என்னுடன் இருந்து, நான் காணும் இன்பத் தோற்றத்தைக் கண்டுகளிக்கத் தகுந்த துணை ஒன்று வேண்டுமென விரும்பினேன்; என் தனிமை அதனால் நீங்குமென்று நினைத்தேன். நான் இவ்வாறு எண்ணமிட்டுக்கொண்டிருக்கையில் மெல்லிய அரவமொன்று என் செவியைத் துளைத்தது; அது காக்கையின் கரைதல் என்று எண்ணினேன். வர வர அச்சத்தம் பலப்பட்டது. ஆ! என்ன இன்பமான குரல்! மலையடியில் உள்ள பாட்டையிற் செல்லும் பிரயாணி ஒருவன் பாடுவதாகத் தெரிந்தது. நிசப்தமான அவ்வேளையில் அவன் பாடிக் கொண்டு போனது இன்பமாகவே இருந்ததென்பதைச் சொல்லவும் வேண்டுமோ? பாடியவன் தனது உள்ளத்தினின் றெழுந்த உவகைப் பெருக்கால் பாடினானாதலின், அவனது பாட்டு செவிக்கு இனிமையாகவே இருந்தது. தூங்கும் நகரங்களில் நடு நிசியிற் செல்வாரும் வண்டிக்காரரும் இங்ஙனம் பாடுகின்றனர் என்று பிறர் சொல்லக் கேட்டுள்ளேன்; சிலர் வாத்தியங்களை முழக்குவரென்றும் கேள்வியுற்றுள்ளேன். அந்தப் போக்கையும் இங்கு பாடியவன் போக்கையும் கவனித்தால், முன்னதைவிடப் பின்னது சிறந்ததென்றே நினைக்கிறேன். ஏன்? முன்னது சிறந்த நிலையில் உள்ள பட்டணங்களிற் பாடுவது; பாடுபவன் விழித்தவனே அன்றிக் கேட்பவர் ஒருவருமிலர். இங்கோ எனின், பாடியவன் உளன்; நான்கு அல்லது ஐந்து ஆயிரம் அடிகளுக்கு மேலிருந்து கேட்பவன் யானுளேன். இஃது, இருமடங்கு இன்பத்தைத் தரத் தக்கதல்லவா? அதிகம் அறைவதேன்? கண்ணுள்ளோர் என்னைப் போன்று வெளியிடத்துத் துயின்று, இரவின் இன்ப இரகசியத்தைக் கண்டுகளிப்பாராக. 9. பெண் கல்வி* மனிதன் ஒவ்வொருவனுக்கும் தனிப்பட்ட அரசுரிமை உண்டு. அஃது, அற நினைவும் இலக்கிய உணர்ச்சியும் ஆகிய வற்றால் பெறத்தக்கது. அவ்வுரிமையே தூய்மை என்பது. இதனை உடையவன் எவனாயினும் அவன் அரசனே. நல்லறத்திலும் மெய்யன்பிலும் சலிப்புறாதவன் அவனே. அவனுக்கு நடுக்கம் இல்லை; நடு நிலைமை பிறழ்தல் இல்லை. உண்மையே அவன் அமரும் அரியணை; மாற்றவோ அழிக்கவோ ஒருவராலும் இயலாவகை அமைந்துள்ள தூய்மையே அரசு. இத்தகைய அரசுரிமை பெண்டிர்க்கும் உண்டு என்பதில் ஐயம் உண்டோ? மேதகு மாதர்க்குரிய இவ்வரசின் அரியதாந் தன்மையை அறிந்து வினைசெயின், அழகும் ஒழுக்கமும் ஒளிரும்; ஒளிர, அரிவையர் அடியால் அளந்தாளும் இடமெலாம் மலர்க்காவாகி, அக்காவினில் அவர் ஆற்றும் செயலனைத்தும் மணமிகு மலர்கள் மலர்ந்தனவெனக் கூறுமாறு சிறு குடில் முதல் பெருமனை ஈறாக யாவுமே அவர்தம் அரசால் அழகுற்று ஒளிரும். இந்நிலைக்கு மாதரை உய்க்கும் கருவி கல்வி ஒன்றே. அவர்க்குரிய கல்வியை ஆராயுமுன், அவர்தம் இயல்பினைச் சிறிதளவு ஆய்தல் தவறன்று. ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் அமைந்துள்ள தொடர்பு எத்தகையது? அறிஞர் இதைப்பற்றி யாது அறைந்துளர்? ஆராய்வோம். உலகப் புகழ்பெற்ற ஆங்கில மஹா கவியாகிய ஷேக்பியர் வரைந்த நாடகங்களில் நிறையிலும் நலத்திலும் கரையற்ற கருணையிலும், தம்மைத் துறந்து பணியாற்றலிலும் அரிவையர் ஆடவரினும் மேம்பட்டு விளங்குதல் காண்கிறோம்; கர்டீலியா, டெடிமோனா, இஸபெல்லா, ஐமொஜன், ரோஸிலண்ட், போர்ஷியா முதலிய மாதர் திலகங்கள் மங்கையர் திலகங்கள் அல்லரோ? ஷேக்ஷ்பியர், தாம் இயற்றிய ஒவ்வொரு கதையிலும் -ஆடவன் சிறுமையே அழிவிற்கும் அமைதியின்மைக்கும் காரணமெனக் கணித்திருத்தலைக் காண்க; மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் பெண் தெய்வங்களே காரணரெனக் கூறுதலையும் கூர்ந்து நோக்குக. அப்பெரும் புலவர் நமது கருத்தைக் தழுவியவர் என்பதை நாம் கூறுதல் வேண்டுமோ? இளங்கோ அருளிய நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் துன்பக்கதையாக முடிவெய்தற்கு வேசை லோலனாய கோவலன் காரணன் என்பதை அறியாதார் யாவர்? அஃது இன்பக் கதையாக இறுதி பெறுதற்கு அக்கோவலன் கோதறு பத்தினியான கண்ணகி என்பாள் தன் கற்பின் கவினே காரணம் என்பதையும் தெளியாதவர் யாவர்? காளிதாசன் வரைந்த சாகுந்தலத்தைச் சாந்தமாய் நோக்குக; துஷ்யந்தன் சிறுமையும் சாகுந்தலையின் பெருமையும் மலையிலக்கே. இங்ஙனம் ஒவ்வொரு மொழியிலும் வரையப்பட்ட நூல்களை ஆராயின், மாதர் அனைத்திலும் உயர்ந்தே காணப்படல் காணத்தக்கது. உலகத்தில் உயர்புகழை நிலைநாட்டி மறைந்த மாபெரு வீரர்களான ஜீலிய சீஸர், அலெக்ஸாண்டர், நெப்போலியன் போன்றாரைப் பெற்றவர் பேரறிவு கொண்ட மாதரசியர் என்பதை நினைவிற் கொள்க. அதே அமயம் கொலையாளியைப் பெற்றவளும் பெண் தான் என்பதையும் மறவற்க. இவ்விருவகை மாதர்க்கும் உளதாம் வேறுபாடு யாது? அவர்தம் பிள்ளைகட் குரிய வேறுபாடே தாய்மார்க்குரிய வேறுபாடாம். இவ்வொரு நிகழ்ச்சியினின்றேனாம் பெண் கல்வியின் அவசியம் அறிதற்பாலது. தாய், தன் மகனுடைய நன்மை - தீமைகட்குக் காரணமாகின்றாள்; மனைவி, தன் கணவன் இன்ப - துன்பங் கட்குக் காரணமாகின்றாள். எனவே, ஆடவர்-பெண்டிர் எல்லாத் துறைகளிலும் ஏறக்குறைய ஒன்றுபட்டவராக இருத்தல் வேண்டுமென்பது பெறப்படுகிறதன்றோ? வீரனுக்கு அவன் மனைவி தன் தளிர்க்கைகளால் போர்க் கவசம் பூட்டிப் போர்முனைக்கனுப்புவது பார்க்கத்தக்கதொரு காட்சியன்றோ? ஆ! அவள் அணியும் அக்கவசம், அவற்கு உள்ளத்தோடியைந்த ஆன்ம கவசம் ஆகின்றதென்பதை அறிக. அவள் அரைகுறை மனத்துடன் அணியும் கவசமே அவனை ஆயுள் இழக்கச் செய்வதென்பதையும் உர்க. எந்தை, முன் நடந்த போரில் இறந்துபட்டுக் கல் ஆனான்; கணவன் களப்பட்டான்; என் ஐயரும் நாட்டின் பொருட்டுப் போரிட்டுத் தங்கடனாற்றிக் கழிந்தனர்; என் மைந்தனோ எய்யப்பட்ட பன்றிபோல் இறந்து கிடந்தான் என்று கூறி உள்ளங்குளிரும் மாதரசியன்றோ வாழ்க்கைத் துணைவி! வீரமகள்! வீரத்தாய்! உடன் பிறந்த வீரச் சகோதரி! கன்னின்றான் எந்தை; கணவன் களப்பட்டான்; முன்னின்று மொய்யவிந்தார் என்னையர்-பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தானென் ஏறு. பெண்டிர் நாட்டுப் பற்றில் ஆடவரினும் ஆற்றல் பெற்றவராவர். பால் பருகிக்கொண்டிருந்த புதல்வரையும் போர்க்கோலமிட்டு முன்னணிக் கனுப்புதல் தாய்மார் இயல்பென்பதை நீவிர் படித்ததில்லையோ? -முந்தை முதல்வர்கல் தான்காட்டி மூதில் மடவாள் புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு. என வரும் வீர அடிகளைக் காண்மின்: படிமின்: மனத்தில் இருத்துமின். போரில் முன்புறம் அம்பு தைக்கப்பெற்றுக் கணவர் இறந்து கிடத்தலைக் கண்டு உவகையால் கலுழ்ந்த காரிகையர் எண்ணத் தொலைவரோ? அக்கணவர்தம் தலைகளைத் தழுவி உவகைக் கலுழ்ச்சியில் உயிர்விட்ட உத்தமிகள் எண்ணப்படு வரோ? இறந்த கணவரோடு எரி மூழ்கிய எழில் மடவார் இத்துணையர் என எடுத்தியம்பல் இயலுமோ? புறப்புண் எய்தி என் மகன் இறந்தனனாயின் அவனுக்குப் பாலூட்டிய மார்பகத்தை அறுப்பேன் எனச் சூள் உரைத்து வாளேந்திப் போர்க்களம் புக்கு, ஆண்டு அவன் மார்பிற் காயம்பட்டு மடிந்திருந்ததைக் கண்டு அளப்பரிய களிப்பெய்திய அரிவையர் தாம் இன்னவர் என இயம்புதல் இயலுமோ? இறந்துபட்ட வீரரைத் தழுவி அக்கணமே தம் ஆருயிரையும் அர்ப்பணம் செய்த அரும் பெண்டிர் இத்துணையர் எனல் இயல்வதொன்றோ? அம்மம்மா! அரிவையர் நாட்டுப் பற்றில்-வீரத்தில் ஆடவர்க்கு இம்மியளவேனும் இளைப்புற்றவரோ? இல்லை! இல்லை!! தீநெறியிற் புக்குத் தடுமாறிப் பொருளும் புகழும் இழந்து, நடுக்கடலுள் திசையறியாது அல்லலுறும் மரக்கலம் போலச் செய்வதறியாது தத்தளித்து, இறுதியில் இல்லம் போந்து, ...... ...... ...... யாவும் சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக் குலந்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த இலம்பாடு நாணுத் தரும். என்று வலியற்ற ஆடவன் அறைவதைக் கேட்டு, முறுவல் நகைமுகம் காட்டி, என் சிலம்புள, கொள்க என்றுரைத்த சேயிழை, வாழ்க்கைத் துணைவி ஆகாளோ? கூறுக. தான் நெறி தவறியது முதல் அதுகாறும் செய்த அழிவினை ஆழ்ந்து நினைந்து நினைந்து நெக்குருகி, தன் இல்லாளுக்கிழைத்த பெருந்துன்பத்தை எண்ணி எண்ணி, அத்துன்ப நிலையிலும் தன்னைப் போற்றிப் பணிந்து தனக்கு ஆதரவளித்த அவ்வருங்குண நல்லாள் கற்பின் பெட்பினை நினைந்து நினைந்து உள்ளம் உருக, விழிநீர் வார, குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும் அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணை யாக என்னொடு போந்தீங் கென்துயர் களைந்த பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்! நாணின் பாவாய்! நீணில விளக்கே! கற்பின் கொழுந்தே! பொற்பின் செல்வி! எனப் பலபட அகமலர முகமலர பாராட்டுரை கூறிய கோவலன் கொண்ட குலக்கொடி எத்தகையவள்? மாதரசி யின் மாண்பினை அறிய இஃதொன்று அமையுமன்றோ? வாழ்க்கையின் விளக்கு- வாழ்க்கைத் துணைவி என்பவற்றின் பொருள் இப்பொழு தேனும் இனிது விளங்குகிறதன்றோ? கணவன் பரத்தையர்மாட்டு வதிவோனாகி மனை எய்தும் போதெல்லாம் அவனது தீச்செயலைத் தக்க முறையில் தெளிவித்து அவனை நல்வழிப்படுத்தும் நங்கையர், வாழ்க்கையில் எத்தகைய இடம் பெறுவர்? எண்ணிப் பார்மின்: இம்மை மாறி மறுமை ஆயினும் நீயா கியரெங் கணவனை; யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே. - குறுந்தொகை 49 சாதல் அஞ்சேன்; அஞ்சுவல் சாவில் பிறப்புபிறி தாகுவ தாயின் மறக்குவென் கொல்லென் காதலன் எனவே - நற்றிணை, 397 தன்னைச் சிறிதளவும் கவனியாத கணவனிடம் பெண் கொண்டுள்ள பெருமதிப்பைப் பார்மின்: வெண்மணல் விரிக்கும் தண்ணந் துறைவன் கொடியன் ஆயினும் ஆக; அவனே தோழி! என் உயிர்கா வலனே - ஐங்குறுநூறு பெண்டிர் காரண காரியங்களைக் கணித்தறிவதில் காளையர்க்கு இளைத்தவர் அல்லர் என்பதை அனைவரும் அறிதல் வேண்டும். இத்தகை மடந்தையர் பலர் இலக்கியங்கள்தோறும் இடம் பெற்றுள்ளனர். எடுத்துக்காட்டாக ஈண்டு ஒருத்தியைக் காட்டல் குற்றமாகாது. வரத்தாலும் வலிமையாலும் சிறந்த இராவணற்கு அருமந்த வாழ்க்கைத் துணைவியாய் அமைந்து, இல்லறம் என்னும் நல்லறம் பேணித் தென்னிலங்கைத் தெய்வமாய்த் திகழ்ந்தவள் மாசறு கற்புடை மண்டோதரி. அவள், தன் கணவனையே கடவுள் என்றும் அவற்கு ஆற்றும் பணியே கடவுள் திருப்பணி என்றும் கருதி ஒழுகி வந்தாள். அம்மங்கை நல்லாள், தன் மைந்தனான மேகநாதன் இலக்குவன் கணைக்கு இலக்காகி இறந்தபோது புலம்பிய சொற்களில் அவளது தெளிந்த அறிவினைத் தெற்றெனக் காணலாம். அவள், இராவணன் அனுப்பிய சேனைகள் யாவும் இராமன் படைக்கு இலக்காகி அழிந்தனவே யன்றி மீண்டில. ஆ! அஞ்சினேன்! சீதை என்னும் அமிழ்தாற் செய்த நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இறப்பது திண்ணமே! எனத் துணிந்தாள்: பஞ்செரி யுற்ற தென்ன அரக்கர் தம் பரவை யெல்லாம் வெஞ்சின மனிதன் கொல்ல விளிந்ததே மீண்ட தில்லை; அஞ்சினே னஞ்சி னேனிச் சீதையென் றமிழ்தாற் செய்த நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளையித் தகையன் அன்றோ? இதுவரை கூறியவற்றால் பெண்டிர் வாழ்க்கைத் துணைவரே எனத் துணிதலில் ஐயமுண்டோ? அமைதியிலும் ஆற்றலிலும் பிறவற்றிலும் ஆடவர்க்கு அணுவளவும் பின்தாங்கல் இல்லாதவர் என்பது தேற்றமன்றோ? பெண்டிர்தம் தெளிந்த அறிவும் அமைதியும் பேரழகும் ஆற்றலும் பிறவாய நற்குணங்களும் இல்லந்தோறும் இன்புறுத்தலைக் காணாத கண் என்ன கண்? அப்பெற்றியைப் பிறர் கூறக் கேளாத செவி என்ன செவி? அவர்தம் தூய நிலையையும் அமைதியாய அரசினையும் போற்றாத நா என்ன நா? கூறுமின். இத்தகை இயல்புகள் பெற்றுள்ள பெண்டிர்-வாழ்க்கையின் விளக்கனைய பெண்டிர் பெறத்தக்க கல்வி எத்தகையதென யாம் கூறலும் வேண்டுமோ? மேற்கூறப்பெற்ற பெண்டிர் இக்காலக் கல்வியைக் கற்றிலர்; ஆயின், என்றும் இறவாத இயற்கைக் கல்வியைக் கற்றவர் என்னல் மிகையாமோ? இலக்கியக் கல்வியும் இயற்கைக் கல்வி (உலக ஞானம் கண் கூடாகக் கண்டறிதல்) யுமே அப்பெண்டிர் அடைந்திருந்தனர் என அஞ்சாது அறையலாம். இலக்கியப் பயிற்சி மாதர்க்கு இன்றியமையாதது; அதுவே அவர்தம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் செல்வமாகும்; அறிவினை வளர்க்கும் அருமருந்தாகும். எனவே, இலக்கிய நூல்கள் கொண்ட இடமாகிய இன்பப் பூங்காவில் மானனைய மங்கையரைப் புகவிடல் மாண்புறு தொழிலாகும். இதுவே ஆடவர் பெண்டிர்க்குச் செயத்தகும் உதவி ஆகும். பூங்காவில் புக்க மங்கையர் மணம் உள்ள மலர்களையே பறிப்பர் என்பதில் ஐயமும் உண்டோ? அமைதிக்கும் பெட்பு நிலைக்கும் பெண்ணரசுக்கும் ஆக்கந்தரும் இலக்கிய நூல்களையே பெண்டிர் விரும்பிக் கற்பர்; அன்பைப் பெருக்கி அருள் மயமாக்கும் அவ்விலக்கியப் பூங்காவே அவர் தம் வாழ்விற்கேற்ற தாழ்வறு தவச்சாலை; அவர்தம் சுவர்க்கம். அக்காவின் நறு மலர்களின் பயனை நன்முறையில் நுகர்ந்த மாதரசியினது மணம் அன்பு நிரம்பியதாய் அருள்மலர்ந்ததாய்க் காட்சி அளிக்குமென் பதில் ஐயமேது? ஆ? அம்மங்கை அந்நிலையில் அடிவைக்கும் இடமெல்லாம் அன்பு மயமாய், மூச்சுவிடும் வெளியெல்லாம் அருள்மயமாய் அழகு செய்யு மன்றோ? அந்நிலையிலன்றோ அவள் அருட் சக்தியாக விளங்குகின்றாள்! அப்பெண்மணியினைப் பெற்ற கணவனல்வனோ பேறு பெற்றவன்? மறுமையிற் காணப் பெறும் பேறனைத்தையும் இம்மையிலேயே அவனைப் பெறச் செய்யும் பெண் தன்மை யின் தனிப் பெருமைதான் என்னே! இங்ஙனம் அன்புக்கு நிலைக்களனாய் அருளுக்கு அடைக்கலம் அளித்து அணிபெற நிற்கும் அருங்குணக் கிழத்தி வாழ் இடம், கூரை இன்றி இருப்பினும் இன்பம் தரும் இனிய வீடு ஆகும். அவளே இல்லாள். இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை அல்லவா? இதுகாறும் கூறியவற்றால் பெண் எவ்வழியினும் ஆடவனைவிடத் தாழ்ந்தவள் அல்லள் என்பதும், அவள் அன்புக்கும் அருளுக்கும் அமைதிக்கும் நிலைக்களமானவள் என்பதும், கல்வி முறையால் மேலும் உயர்நிலை எய்திக் கணவற்கேற்ற காரிகையாய்க் கவினுறுபவள் என்பதும், அத்தகையவள் வாழிடமே வீடு என்பதும், அத்தகைமை யளைப் பெறுபவனே பேறு பெறுவன் என்பதும் அங்கைக் கனி அன்றோ? அறைமின். 10. அகமும் புறமும்* மனிதருட் பல வகையினர் உண்டு. அகமும் புறமும் ஒன்றேயாக விளங்குவோர் சிலர். அகத்தொன்றும் புறத்தொன்றுமாகப் பேசி நடப்பவர் பலர். உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோர் இவரே. இவருள் இரு வகையினர் உண்டு. புறத்தே வெகு கடுகடுத்த பேச்சும் அகத்தே அன்பு குழைந்த அருளும் உடையோர் ஒரு வகையினர். புறத்தே அறமொழியும் அகத்தே மறச் செயலும் உடையோர் பிறிதொரு வகையினர். இவ்விரு திறத்தினருள் கடையிற் கூறப்பெற்றவர் கடைப்பட்டவரே என்பதில் எள்ளத்தனையும் ஐயம் வேண்டா. முதலில் கூறப் பெற்றவர் நல்லினத்தாருடன் (அகத்தும் புறத்தும் நன்றே செய்பவர்) ஒருவாறு வைத்தெண்ணத் தக்கவரே ஆவர். இவ்வகை மாந்தருள் ஒருவன் செய்தியை ஈண்டுக் குறிப்பிடல் மிகையாகாது. அவனது செயல் நோக்கி அவனைக் கருமையில் (கடுகடுத்த தோற்றத்தில் காணப்படும் நல்லெண்ண முள்ள) மனிதன் என இக்கட்டுரையில் அழைப்போம்: கருமையில் மனிதன் பேசும்போதெல்லாம் கடுகடுத்த முகத்துடனே காணப்பட்டான்; மனித இனத்தையே வெறுப்பவனாகத் தோன்றினான். அவனுடன் பேசுவோர் இவன் மனிதர் சமூக விரோதி என்று துணியத் தக்க நிலையிற் பேசினான்; ஆனால், அவனது அகம் அருளால் ஆக்கப்பட்டிருந்தது; அன்பு ததும்பப்பெற்றது. எல்லோரும் இன்புற்று இருக்கும் நினைவே அன்றிப் பிறிதொன்று அற்றது. இங்ஙனம் அகம் வேறுபட்டும் புறம் வேறுபட்டும் இருந்தமையின், அவன் பேச்சுக்கும் அதன் பின்னர் நிகழ்ந்த செயலுக்கும் தொடர்பு அற்று இருந்தது. ஒருநாள் கருமையில் மனிதன் புகைவண்டிப் பிரயாணம் செய்தான். அவன் ஏறிய வண்டியில் சீன யாத்ரிகன் ஒருவன் இருந்தான். அவனுடன் கருமையில் மனிதன் கலந்து உறவாடினன்; அரசாங்கம் பிச்சைக்காரர்க்கு வேண்டிய விடுதிகள் கட்டி வசதிகள் செய்துள்ள இக்காலத்தில், அவர்கள் அவற்றை வேண்டாவென வெறுத்து வெளிப்போந்து, புகை வண்டிகளில் வந்தும் பிற இடங்களிற் சென்றும் குடி மக்களைத் துன்புறுத்திப் பிச்சை ஏற்றல் தவறாகும். அச்சோம்பேறிப் பிச்சைக்காரர் ஏழைத் தொழிலாளர்களின் உதிரத்தை உறிஞ்சும் மாக்கள் கூட்டமே ஆவர். அவர்கட்கு எத்தகைய உதவியும் செய்யலாகாது. அங்ஙனம் உதவி செய்தல் அவர்களைச் சோம்பேறிகளாகவே இருக்கும்படி நாம் ஊட்டி வளர்ப்பதாகும். நும் மனத்தை உருக்கத்தக்க பொய்க் கதைகளைக் கட்டுவதிலும் துன்பக் கடலுள் தவிப்பதாகப் பாசாங்கு செய்வதிலும் பிச்சைக்காரர்கள் இணையற்றவர்கள். அவர்கட்கு ஒரு செப்புக்காசும் உதவலாகாது என்று முகம் சிவக்க, கண்கள் தீ நாற, உதடுகள் துடிக்கக் கூறிக்கொண்டிருந்தான். இங்ஙனம் ஈவு இரக்கமற்ற முறையில் கருமையில் மனிதன் கழறிக்கொண்டிருந்த சமயம் அவனுக்கும் அவன் நண்பனுக்கும் முன் கோலூன்றிய முதியவன் ஒருவன் தோன்றினான். அவன் அவ்விருவரையும் நோக்கி, ஐயன்மீர், என் மனைவி இறக்குந் தறுவாயில் இருக்கின்றாள். குழந்தைகள் குடிக்கப் பாலின்றி, உண்ண உணவின்றித் தவிக்கின்றன. யானோ தண்டூன்றி நடக்கும் தள்ளாத பருவத்தினன்; குழந்தைகள் உணவின்மையால் தாய் முகம் நோக்கி அழுகின்றன; இறக்கும் எல்லையில் உள்ள அவளோ என் முகம் நோக்கி அழுதாள்; யானோ நும் முகம் நோக்கி வந்தேன். இது சமயம் என் மனைவி உயிருடன் உள்ளாளோ, இல்லாளோ அறியேன். குழந்தைகள் எந்நிலையில் உள்ளனவோ அறிந்திலேன். என் குடும்ப நிலையையும் எனது துன்ப நிலையையும் அருளே உருக்கொண்டன்ன நீவிர் கவனித்து, இயன்றதை இல்லை என்றுரையா இதயத்தோடு ஈந்தருள்வீராக என்று கண்ணீரும் கம்பலையுமாகக் குறையிரந்து நின்றான். அம்முதியவன் கூறியது பொய்யோ, மெய்யோ யாம் அறிந்திலேம். ஆனால், அக்கதை அதுகாறும் பிச்சைக்காரரை இரக்கமற்ற முறையில் தாக்கிப் பேசிக் கொண்டிருந்த கருமையில் மனிதன் உள்ளத்தை உருக்கிவிட்டது. அவன் முகம் வெளேரென வெளுத்தது; அவனது அருள்கொண்ட அகத்தை, முகம் கண்ணாடி போலக் காட்டியது. அவனது நா, அழு பிள்ளையின் அடங்கியது. இறக்குந் தறுவாயிலிருந்த எளிய மனைவியின் கணவனும்-உணவின்றிக் கதறிக் கொண்டிருந்த குழந்தைகளின் தந்தையும் ஆன அவ்வெளிய முதியோனுக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்யாதிருக்க அவனாற் கூடவில்லை. பொருள் உதவி செய்யாவிடில் அவன் மன அமைதியும் மகிழ்ச்சியும் அடையான் போலக் காணப்பட்டான். ஆனால் அதே அமயம், அவன் சற்றுமுன் பேசிக்கொண்டிருந்த செய்தி அவன் மனத்தில் மின்னலைப் போலத் தோன்றி மறைந்தது. அத்தோற்றம் உணர்ந்த அவன், எதிரே இருந்து யாவும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த நண்பனை நோக்கினான். அந்நண்பன் எதிரே பிச்சைக்காரரையும் அவர்க்கு அகங்குழைந்து ஆதரவு அளிப்பவரையும் இரக்கமற்ற முறையில் தாக்கிப் பேசிய தானே-அந்நண்பனுக்கு எதிரே முதியவற்கு உதவி செய்வதெனின்- ஆ! அதனை நினைத்தபோது அவன் உள்ளம் வெடித்து விடும்போல் இருந்தது. அவ்வேழைக்கு உடனே உதவி செய்யாதிருப்பினும் உள்ளம் வெடித்து விடும்போல் இருந்தது. பாவம்! அவ்வேழை முதியவன் பட்ட துன்பத்தினும் கருமையில் மனிதன் கண்டனுபவித்த துன்பமே கொடியது. நண்பனது துன்ப நிலையைக் கண்டு அகத்துள் நகைத்த சீன நண்பன் அவ்விருவர்மீதும் செலுத்திய பார்வையைச் சிறிதே அப்புறப்படுத்தினான். ஆ! கருமையில் மனிதன் அடைந்த ஆனந்தம் அளப்பரிது; முதியவற்குச் சைகை செய்தான்; முதியவனும் அவனை அண்மினான்; வெள்ளி நாணயம் ஒன்று அவன் தரப்பெற்றான். கருமையில் மனிதன் மனம் அமைதி யுற்றது. அவன் அமைதி கலந்த ஆனந்தத்தோடு பெரு மூச்சு விட்டான். அவ்வளவே: நண்பன் மீட்டும் தன் பார்வையை இருவர்மீதும் செலுத்தினான். அவ்வளவே: கருமையில் மனிதன் அகமும் புறமும் ஒன்றுபட்ட நிலையில் இருந்த கருமையில் மனிதன்-அகமும் புறமும் வேறுபட்டவனாய்ப் பிச்சைக்காரனைக் காணாத முன் இருந்த தொல்லை நிலையை எய்தினான். கடைப் புருவம் நெற்றி முற்றச் சென்றன; விழிகள் சினத்தாற் சிவந்தன; முதியவனை முறைத்து நோக்கினான்; இத்தகைய பொய்க்கதை கூறிக்கொண்டு இங்கு வராதே, போ எனக் கடிந்தான். முதியவன் மும்முறை வணங்கி மறைந்தான். தனது சொல்லுக்கு வேறான செயலைத் தன் நண்பன் கவனித்திலன் என்ற எண்ணத்தால் கருமையில் மனிதன் களிப்படைந்தான்; மீட்டும் பழைய முறையில் பிச்சைக்காரர் தம் இழிதகு செயலை இழித்துக் கடிந்தான்; அவர்தம் பொய்க் கதைகளை மெய்யென மதித்து உளங்குழைந்து உதவிபுரியும் மனவன்மையற்ற மனிதரைக் குறைத்துப் பேசினான்; பிச்சைக்காரர் கூறும் பொய்க்கதைகளைப் பொய்யெனக் கண்டறிவதில் தன்னினும் மிக்கார் இலர் எனத் தருக்கினான்; தான் ஒரு அதிபதியாக இருப்பின், பிச்சக்காரரை ஒழித்துவிடச் சிறிதும் தயங்கான் எனவும் கூறினான். ஆ! சோதனைக் காலம் தொடர்ந்துதான் வர வேண்டுமோ! இன்னணம் கருமையில் மனிதன் கதைத்துக் கொண்டிருந்த காலை ஆணழகன் ஒருவன் அங்கு தோன்றினான். அவன் ஒரு காலைப் போர்முனையில் இழந்த போர்வீரன்; யாதொரு வேலையும் செய்ய ஆற்றானாகிப் பிச்சை ஏற்றலையே உத்யோக மாகக் கொண்டவன். அவன் தோன்றி, அவ்விருவரையும் பழுதறப்பெற்ற கால்களுக்காக வாழ்த்தித் தன் துன்பக் கதையைத் தொடர்ந்து கூறலானான். கருமையில் மனிதன் இடைமறித்துக் கோபத்துடன் கேள்விகள் சில கேட்டான். பிச்சைக்கார னாயினும் போர்வீரன் போர்வீரன் தானே! அவனுக்குக் கோபம் பொங்கி எழுந்தது. நமது நாட்டைக் காக்கும் முயற்சியில் உறுப்பு இழந்த என்னை இங்ஙனம் கேள்விகள் கேட்பதோ, கேட்டு அவமதிப்பதோ நீதியாகுமா? என அவ்வீரன் உறுமினான். அவ்வுறுமல் கருமையில் மனிதனைக் களிப்பித்தது; அவனது முகத்தோற்றத்தை அறவே மாற்றியது; காலிழந்த அவ்வீரனுக்கு உடனே உதவி செய்யவேண்டும் என்னும் அவா அவனைப் பிடர் பிடித்து உந்தியது. அந்தோ! அவன் நண்பன் சனியனைப் போல எதிரில் வீற்றிருந்தான். சற்று முன்வரை எளியரைத் தாக்கிப் பேசிய தானே அந்நண்பற்கு முன் வந்த வீரற்கு உதவி செய்வதாயின், அந் நண்பன் தன்னைப் பற்றி யாது நினைப்பான் என்பதை எண்ணுந்தொறும் அவன் இதயம் வெடிக்கும்போல் இருந்தது. என் செய்வான், பாவம்! அகமும் புறமும் வேறு வேறெனக் காட்டிவிட அவன் மனம் துணியவில்லை. அப்பரிதாப நிலையில் அவனது நுண்ணறிவு அவன் உதவிக்கு வந்தது. அவன், அவ்வீரன் முதுகில் தொங்கவிடப்பட்டிருந்த குச்சிக் கற்றை ஒன்றைக் கண்டான்; அதனைத் தனக்குத் தரின், தான் ஒரு ஷில்லிங் தருவதாகச் செப்பினான். கேவலம் குச்சிக் கற்றைகட்கு ஒரு ஷில்லிங் என்பதைக் கேட்டதும் வீரன் உள்ளத்தில் உவகை கொண்டான்; கற்றையை இறக்கினான்; ஒரு ஷில்லிங் பெற்று மறைந்தான். கருமையில் மனிதன் மீட்டும் தன் பழங்கதையைத் துவக்கினான்; தான் அப்போர் வீரற்குத் தருமம் செய்யவில்லை என்றும் ஒரு ஷில்லிங் தந்து குச்கிக் கற்றையைப் பதிலாகப் பெற்றான் என்றும் அங்ஙனம் செய்தலே சிறந்ததென்றும் வெற்றுரையாடினான். ஆனால் விரைவில் அக்குச்சிக் கற்றையையும் அவன் இழந்து விடச் சந்தர்ப்பம் வந்தது. தனது மதியூகமான வாணிபத் திறமையைப் பற்றி அவன் பேசிக் கொண்டிருந்தபோது அழகி ஒருத்தி அவண் தோன்றினாள்; அவள் கைகளில் குழந்தை ஒன்று பேரழகுடன் ஒளிர்ந்தது. முதுகில் குழந்தை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அவ்வெளிய குழந்தைகளின் தாய், நெஞ்சை அள்ளும் பாக்களைப் பாடிக்கொண்டு அங்கு தோன்றினாள். அழகு வழிந்த அம்பெண்மணியின் தோற்றம்-அவள் ஈன்ற குழந்தைகளின் பேரழகு-அம்மூவரின் பரிதாப நிலைமை-இம்மூன்றும் ஒன்று பட்டுக் கருமையில் மனிதனைக் கலக்கிவிட்டன. அவன் தன்னையே மறந்தான்; பிச்சைக்காரருக்கு எதிர்ப்பாகப் பேசிய அனைத்தையும் அறவே மறந்தான்; எதிரே தன் நண்பன் இருப்பதையும் மறந்தான்; அப் பெண்மணிக்கு உதவி புரிய வேண்டுமென்ற அவா ஒன்றே அதுபோது அவனது வாழ்க்கை இலட்சியமாக இலங்கியது. அவன் ஆவேசம் கொண்டவனைப் போலத் தன் சட்டைப் பைகளில் கைகளை விட்டுத் தடவினான். கைகளில் பணம் இல்லை. அந்தோ! அவன் முகத் தோற்றம்-அவ்வநாதைப் பெண்மணியின் துயரம் துளும்பிய முகத் தோற்றத்தினும் பரிதாபமாகக் காணப்பட்டது. ஆ! தன்னிடம் இருந்த குச்சிக் கற்றையையேனும் அவளுக்குக் கொடுத்து உதவலாம் என்றெண்ணியபோது அவன் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. அவன் தன் ஆவலை உடனே தீர்த்துக்கொண்டான். நண்பனும் நகைதவழ் முகத்துடன் இந்நிகழ்ச்சிகளைக் கவனித்துவந்தான். இத்தகை மாந்தர் நல்லார் இனத்துள் வைத்தெண்ணப் படத் தக்கவர் என்பதில் ஐயப்பாடென்னை? 11. அரசியல்* அரசியல் விஷயங்களைக் கையாள்பவர், அவை மிகப் பழைய காலத்திலிருந்து வழி வழி வந்துகொண்டிருப்பவை என்றெண்ணலாகாது. பல, நாம் பிறப்பதற்கு முன் வந்திருக்கலாம். அதனாலேயே அவை வெகு காலமாய் இருப்பவை எனத் துணிதலாகாது. இவையன்றி, ஒரு காட்டில் வாழும் குடிகளைவிட அவர்க்கென அமைந்த சட்டதிட்டங்கள் உயர்ந்தவை அல்ல என்பதையும், பெரும்பாலும் ஒருவன் தனிப்பட்ட விஷயம் ஒன்றைத் தீர்க்கச் செய்த சூழ்ச்சியே பிற்றை நாளிற் பொதுச் சட்டங்களும் வழக்கங்களுமாக மாறி விடுகிற தென்பதையும் அறிதல் வேண்டும்; பண்டைக் கால வழக்கங்கள் என்று நம்பப்படுபவற்றை நிலைபெறச் செய்யவோ, அவை வீணானவை எனக் காணின் மாற்றவோ இயலும் என்பதையும் உணர்தல் வேண்டும். இன்று பழக்கத்தில் உள்ள தீயதை மாற்றி நல்லதாக ஆக்குந்திறன் நம்பால் உள்ளதென்பதை நம்புதல் வேண்டும். இங்கு கூறியவை அனைத்தையும் கற்றறிந்த முதியவர் நன்குணர்வர். ஆனால், காளையரோ யாவும் நிலைபெற்றன என்று எண்ணுகின்றனர்; முதியவர் எண்ணுதல் போல, அரசியல் அழிந்தழிந்து மாறுவதென்பதை இளைஞர் எண்ணுவதில்லை. அரசியலில் ஒருவர்க்கும் நிலைபெற்ற இடம் இல்லை; செல்வாக்கில்லை. அது வெள்ளமும் காற்றும் போல நிலையற்றது; ஓரிடத்திலிருந்து பிறிதோரிடம் மாறிக்கொண்டே இருப்பது. ஒரு காலத்தில் ஒரு நாட்டின் சமுதாயத்தைத் தம் வசம் செய்த அரசியல் தந்திரியார் மறு ஆண்டு இருந்த இடம் தெரியாமல் மறைவதைக் காணலாம். அவரிடத்தில் புதியவர் தோன்றவும் காணலாம். ஒரு காலத்தில் உலக முழுவதையும் தம் அரசியல் சாகஸங்களால் வசியப்படுத்திய-பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்த, லாயிட் ஜார்ஜ் இன்று அரசியலில் அநாதையாக இருப்பதை அறியாதார் உளரோ? மூன்றாண்டுகட்கு முன்வரை பிரிட்டிஷ் அரசியலில் முதலிடம் பெற்று ஈடும் எடுப்பும் அற்றவராக இருந்த இராம்சே மாக்டொனால்ட் இன்று எந்நிலையில் உள்ளார்? இவ்விருவர் நிலைமையே அரசியல் உலகம் காலத்தினும் கடுகி மாறுந் தன்மையுடைய தென்பதைக் கவினுறக் காட்டவில்லையா? எனவே, அரசியலில் இடம்பெறுபவர் மக்கள் மனத்தைக் கவர்ந்தவர் ஆதல் வேண்டும்; மக்கட்குகந்த சட்டதிட்டங் களையே செய்பவராதல் வேண்டும். கேவலம் தமக்குட்பட்டு அடிமையராய்ச் சிலர் கை உயர்த்த உளர் என்னும் இறுமாப்பினால் தாம் நினைப்பவற்றை எல்லாம் சட்டமாக்கி மக்கள்மீது சுமத்தும் மடையராக இருத்தல் கூடாது. உடல் வலியால்-ஓட்டுப் பலத்தால் மக்களை அடிமைப்படுத்துபவரை விரைவில் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தலாம். மன எண்ணத் தினது பலத்தால் ஒன்றைச் செய்பவரே அரசியலில் நீடித்த நிலைமை பெறுவர். என்றும் குடிகள் இதயமென்னும் இருக்கையில் தாம் குடிகொள்ளத் தக்க முறையில் ஒன்றைச் செய்பவரே அரசியல் நிபுணர் ஆவர். அங்ஙனம் செய்தலே அரசியல் அறிவு எனப்படும். அஃது அரசியல் தந்திரம் ஆகாது. அரசியல் உலகில் அவ்வப்போது மாறுதல் ஏற்பட ஏற்பட மக்கள் மனோநிலையும் மாறிக்கொண்டே வருகிறதென்பதை உணரலாம்; மக்கள் அரசியல் அறிவை அதிமாகப் பெற்று வருகின்றனர் என்பதே அதன் பொருள். அறிவு அதிகப்பட அவர்கள், தம் காலத்துள்ள சட்டங்கள் எத்துணைப் பயன்படுகின்றவை என்பதை எண்ணிப் பார்க்க வழியுண்டா கின்றது. சட்டங்கள் என்பவை நாணயங்கட்குச் சமம் என்பதை மக்கள் உணர்கின்றனர்; நாணயம் நல்லுருவுடன் வெளிப்பட்டுப் பயன்பட்டு நாளடைவில் உருத்தேய்ந்து நாணயச் சாலையை அடைவது போல மனிதரால் உண்டாக்கப்பட்ட சட்டங்கள் வெளிப்போந்து ஒரு காலத்தில் பயனளித்துப் பிறிதோர் காலத்தில் பயனற்றவை எனக் கண்டபோது உருக்குலைந்து மனிதர் உள்ளத்திலேயே புதைக்கப்படுகின்றன. அவை புதைக்கப் படுகின்ற இடத்திலிருந்தே புதிய-காலத்துக்கேற்ற-மக்கள் மன நிலைக்கேற்ற சட்டம் புதிதாகத் தோன்றுகின்றது. இதுவே அரசியலின் உண்மைத் தத்துவம். ï¤ j¤Jt¤ij v⮤J ÉF« vªj¢ r¡âí« bt‰¿bgWjš ïšiy!இல்லை!! ஈவர சந்திர வித்தியா சாகரர் என்னும் வங்காள மஹா பண்டிதர் ஒருவர் முதன் முதல் விதவையர் மறுமணம் செய்து கொள்ளலாம்; அதற்கு நூலிலும் ஆதாரம் இருக்கிறது என்பதை அறிவித்தபோது-அந்த நியாய அறிவிப்பு ஒருகால் மக்களால் பலமாக எதிர்க்கப்பட்டது; ஆயினும், வலியோடும் ஆத்ம உணர்ச்சியோடும் தோன்றிய விதவை மறுமண முயற்சி நாளடைவில் வெற்றி பெற்றது; வித்தியா சாகரரே பெரிதும் முயன்று சட்டம் கொணர்ந்தார். அதன் பயனாக இன்று நம் விதவைச் சகோதரிமார் ஓரளவு விடுதலை பெற்று, மறுமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியுற வாழ்தலை நாம் காண்கிறோம். இங்ஙனம் காலத்திற்கேற்பச் சட்டங்களைப் புதிதாகச் செய்தலும், பழையன பயனற்றன வெனக் காணப்படின் அவற்றை நீக்கலுமே உண்மை அரசியல் சீர்திருத்தமாகும். ஒவ்வொரு மனிதனும் நினைக்கின்ற-பேசுகின்ற நற்கூற்றும் நாளடைவில் உருப்பெற்றுச் சட்டமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. இது சரித்திரம் கண்ட உண்மை. எனவே, மனிதர் தம் உள்ளத்தில் அரசியலைப் பற்றிக் குடிகொண்டுள்ள எண்ணங்களே நாளடைவில் சட்டங்களாகவும் அரசாங்கத்துக்கு எதிராகச் செய்யும் போராட்டமாகவும் புறத்தே காட்சி அளிக்கின்றன என்பதை ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும். பணக்காரர் நலத்துக்கெனச் செய்யப்படும் எந்தச் சட்டமும் நிலை பெறாது. உண்மையாகவே அரசியலார் கண்ணுங் கருத்துமாக இருக்கவேண்டுவது பொதுமக்களைப் பற்றியே. பொதுமக்கள் முன்னேற்றம் பெறின், பொருளும் தானாகவே வளர்ச்சியுறும். பொதுமக்களின் மனத்தைப் பண்படுத்தி வளர்த்தலே அரசியலாரின் சிறப்புறு நோக்கமாக அமைதல் வேண்டும். பொதுமக்கட்குக் கல்விப் பயிற்சி ஏற்படுமாயின், சட்டதிட்டங்களும் பிறவும் செம்மையடைய வழியுண்டாகும். சட்டத்தையும் அதைக் காக்கும் அதிகாரிகளையும் விட மேலான இயற்கைக் காவல் ஒன்று நம்மைக் காத்து வருகின்றது. அஃதில்லாவிடின் நாடுகள் யாவும் ஒரு நொடியிற் பாழாகிவிடும். ஏன்? ஒவ்வொரு நாட்டிலும் மடையரும் அநுபவம் அற்றவருமே பலராவர்; அறிவாளிகளும் அநுபவம் அடைந்தவரும் சிலரே உளர். அறிவற்ற-அநுபவம் அற்ற மக்களைப் பெரும்பான் மையாகக் கொண்ட நாட்டில் கேவலம் அரசியற்சட்டம் ஒன்றும் செய்வதியலாது நாடு அல்லற்படும். பத்திரிகைகளைப் படித்து அவற்றில் உள்ளவற்றை அப்படியே மெய் என்று நம்பும் மூடர்களைப் பெற்ற நாடு பாழாகாது யாது செய்யும்? ஆதலின், அவ்வாபத்தினின்று நாட்டைக் காக்கவே இயற்கைக் காவல் மக்களைக் காத்து வருகின்றது. அக்காவலே-இயற்கை விதிகள். மனிதரை அறியாது அவருள் ஆழ்ந்து கிடக்கும் அவ்விதிகள் சிற்சில சமயங்களில் தலை காட்டும். ஒருவனுக்குள்ள அறிவும் குணமும் அவற்றுக்குரிய ஆற்றலை எவ்வகைச் சட்டத்தின் கீழும் வெளிக்காட்டியே தீரும். வெளிக்காட்ட இயலாத வேளைகளில் அவன் தன் உணர்ச்சியின் வன்மையை இரகசியமாகக் காட்டிவிடுவான். சட்டச்சார்பாக அன்றேல், அதற்கு மாறாகவும், மருந்தாகா இடத்து விடமாகவும், அறமுறையில் அன்றேல் மற முறையிலும்-அவனுடைய இயல்பாய அறிவும் குணமும் உணர்ச்சியும் வெளிப் போந்து தம் ஆற்றலை அறிவியாமலிரா. இத்தகைய இயற்கை விதியை இயல்பாகப் பெற்ற மனிதர் குறிப்பிட்ட ஒன்றில் பேரூக்கமும் ஆத்திரமும் கொண்டு கனன்றெழுவராயின், அவர்க்கெதிராக எந்த அரசியற் சட்டந்தான் யாது செய்ய இயலும்? அரசியல் அறிஞர் ஆழ்ந்துணர்தல் அவசியம். ஆனால், பணத்திற்கோ-பிறவற்றுக்கோ இத்தகைய உணர்ச்சியின் சக்தி இல்லை. ஆயினும் அதற்கென அமைந்த இயல்பான சக்தி ஒன்றுண்டு. அஃதாவது, அதற்கென அமைந்த இயல்பான மதிப்பை என்றும் மாறாமற் செய்துகொள்வது. ஒரு ரூபாய் எனின், அது, கூல வகையோ, பிற பொருளோ அதற்கீடான ஒன்றுக்குப் பதிலாகக் கருதப்படுகிறது. எனவே, சொத்துடையவன் சொத்து என்பதை நீக்கி விடின், சாதாரண மனிதனாகின்றான். அந்நிலைமையில் அவன் மேற்கூறப்பெற்ற இயற்கை காவலை உடையவனாய் இலங்குகிறான். சொத்தை மதிப்பிடிலோ, அஃது இத்தனை ஏக்கர் நிலம் அல்லது இன்ன. . . . . . பொருள் என்ற மதிப்போடு நின்றுவிடுகிறது. இன்று பணக்காரனாகிய இவனே நாளை ஏழையாகான் என்பது என்ன உறுதி? செல்வர், தேர்தலில் பல முறை தோல்வியுறுதலை நாம் காண்கிறோம். பணமிருந்தும் அவர் தோல்வியுறுவதேன்? குணத்திற்குள்ள மதிப்பபைத்தானே பணம் செலுத்தக் கூடும்? அது வேறென்ன செய்யும்? பொதுமக்களின் உணர்ச்சி பணத்தின் சக்திக்கும் விஞ்சியதாய் விடின், பணக்காரன் தேர்தலில் தோல்வியைத் தரிசிக்கவேண்டுபவன் என்பதில் ஐயமுண்டோ? இம்முறைப்படி ஆராய்ந்துபார்ப்பின், பொது மக்களது உணர்ச்சிக்கு முன்- இயற்கை விதிகட்குமுன்-பணக்காரன் வலியிழந்து தோல்வியுறல் போலவே, வலுப்பெறு சட்டமும் நேர்மையற்றதாயின் இறந்துபடும் என்பதில் ஐயமேது? பெரும்பாலான மக்கள் ஒதுக்கி வெறுக்கும் சட்டம் இருந்தாலென்? இறந்தாலென்? இம்முறையில் பொதுமக்கள் உணர்ச்சிபெற்று நடப்பராயின், அந்நாளே அவர் நாட்டு அரசியல் ஆண்மை பெற்றதாகும்! அன்றே அவர் தமக்கென நேர்மையான சட்டம் அமைத்தவர் ஆவர். அரசியலில் இரண்டு கட்சிகள் இருந்தே தீரும். ஒன்று அரசியலை நடத்துவது; மற்றொன்று அரசாங்கத்தாரை எதிர்ப்பது. எக்கட்சியிலும் மூடரும் கெட்டவரும் இருந்தே தீர்வர். அரசாள்பவருட் பலர் மூடரும் தீயருமாய் அமைவராயின் அப்பொழுதும் யாம் மேற்கூறிய இயற்கை விதியே பொது மக்களை அரசியலார் கொடுமையினின்றும் காப்பது. எந்தக் கட்சியும் தொடக்கத்தில் தீங்கை விளைக்கத் தோற்றுவிக்கப் பட்டது அன்று. ஆயின், நாளடைவில் அஃது ஆண்மையற்றவர் கையிலும் அறிவிலிகள் கையிலும் சிக்குண்டு தன் மதிப்பு இழந்து விடுகிறது; சில வேளைகளில் அக்கட்சித் தலைவர்களாலும் உறுப்பினராலும் நாசமடைகிறது. பொது மக்களைச் சுட்டிக் காட்டிக் கட்சியால் பெறும் நலன்களைத் தலைவர்களே நுகர்கின்றனர் என்பதில் எவர்க்கேனும் ஐயமுண்டோ? பொதுப்படக் கூறின், சமயோசிதமாகக் கட்சிகள் சேர்கின்றனவே அன்றி அறக் கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டு அவை எஞ்ஞான்றும் நிலைப்பதில்லையே! அங்ஙனம் அறக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கட்சி பிறந்திருப்பதாயின், அவ்வொரு காட்சியினராய தொழிலாளர்-முதலாளிகள், செல்வர்-வறியவர், கற்றவர்-மற்றவர் என்னும் வேறுபாடுகள் கிளம்புதல் எற்றுக்கு? எண்ணிப்பார்மின். அறத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் கட்சியும் நாளடைவில் நசிக்கக் காண்கிறோம். என்னை? அது நாளடைவில் அறவழி நில்லாது அவன் சொன்னான், இவன் செய்தான் என்று ஆட்களையே குறிப்பிட்டுத் தாழக் காண்கிறோம். இவ்வாறு தாழ் நிலை எய்துங் கட்சிக்கு இரங்குவார் யாருளர்? அது நாளடைவில் இருந்த இடம் தெரியாமல் மறைய வேண்டுவதாகிறது. என்றும் மக்கட்கு நிலையுள்ள நன்மைகளைச் செய்வதொன்றையே பெரு நோக்கமாகக்கொண்டு அந்நோக்கம் ஒன்றையே செய்து வராத குற்றத்தாற்றான் கட்சிகள் தோன்றித் தோன்றி மறைகின்றன. இதில் வியப்பென்னை? இங்ஙனம் சமய சஞ்சீவிகளாகத் தோன்றி மறையும் கட்சித் தலைவர்கட்கு இராஜ்ய தந்திரிகள் என்பது பெயராம். என்ன அழகு! இராஜ்ய தந்திரம் என அழைக்கப் படும் வசை ஒன்றே கட்சிகட்குப் போதுமன்றோ? சுயநல வெறியும், சமூகப் பூசலும், நல்லதில் நோக்கம் இன்மையும், மனவுறுதி இன்மையுமே இக்கட்சிகள் தோன்றவும் அழியவும் காரணங்களாகும். எந்தக் கட்சி அரசியலை நடத்தினால் என்? அஃது அனைவர் சுயவுரிமைக்கும் அழுத்தமாக உழைக் கின்றதா? கொடிய குற்றங்களைக் களைகின்றதா? பெருந்தன்மை பொருந்திய ஆட்சிமுறையை அமைக்கின்றதா? காவியங்கள் எழுதவைக்கின்றதா? கலை உணர்வைப் போற்றி வளர்க்கின்றதா? மதப்பற்றை ஊட்டுகின்றதா? கல்விச் சாலைகளைக் கவினுற அமைக்கின்றதா? சாதிரங்களையோ சரித்திரங் களையோ ஆராய்ச்சி செய்கின்றதா? ஏழைகளோடு உறவுதான் கொண்டாடு கின்றதா? அஃது எக்கட்சியாக இருந்தாலென்ன? அஃது அதிகாரத்துக்கு வந்ததும் நாட்டுக்கு என்ன நன்மைகளைச் சாதித்துவிடுகின்றது? சுருங்கக் கூறின், சாதிர ஆராய்ச்சியிலும் கலைகளின் வளர்ச்சியிலும் அறப் பாதுகாப்பிலும் பெறத்தக்க பேறொன்றும் இக்கட்சிகளின் வாயிலாக உலகத்தார் எதிர்பார்ப்பதற்கில்லை! இல்லை!! 12.`வில்’ லின் வாழ்க்கை* A. அமைதி இன்மையும் அமைதியும் இரண்டு பெரிய தொடர்மலைகட்கு இடையே ஒரு பள்ளத்தாக்கு இருப்பது இயல்பு. அத்தகைய பள்ளத்தாக்கு ஒன்றன் மேட்டுப்பாங்கான இடத்தே சிறியதொரு மாளிகை அமைந்திருந்தது. அங்கு மா அரைக்கும் இயந்திரம் ஒன்று இலங்கிற்று. அதன் உரிமையாளன் தனக்குப் புத்திரப் பேறு இன்மையின், ஓர் அநாதைச் சிறுவனை வளர்ப்பாக ஏற்றனன். அவன் வளர்ந்து பதினாறு வயதுடைய இளைஞன் ஆனான். அவன் பெயர் வில் என்பது. வில் என்னும் இளைஞன் இருந்த மேட்டுப்பாங்கான இடத்திற்கு மேல் செங்குத்தான பாறைகளைக் கொண்ட மலையுச்சி காணப்பட்டது. அவன் இல்லத்தைச் சுற்றிலும் பைன் மரக்காடுகள் செறிந்து இருந்தன. மலையினின்று உயர்ந்து மதிதவழ் வானினை நோக்கி அவை வளர்ந்துகொண்டு போன காட்சி, விண்ணாய விதானத்தைத் தாங்க இயற்கையில் அமைந்த தூண்கள் போலக் காணப்பட்டது. பைன் மரக்காடு கட்கு அடியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பள்ளமே காணப்பட்டது. அப்பள்ளத்தாக்கில் மேடுபள்ளங்கள் இருந்தமை இயற்கை அழகைப் பெருகச் செய்தது. வில் குடியிருந்த இடத்திற்குச் சிறிது மேற்புறம் சிறிய கிராமம் ஒன்று அமைந்திருந்தது. அக்கிராமத்துக் கோயிலுக்கே வில் முதலியோர் தொழுகைக்குச் செல்லுதல் வழக்கம். மேலிருந்து நோக்கும் ஒருவன், இயந்திரம் இருந்த இடத்திற்குக் கீழே சிற்றாறு ஒன்று நெடுகச் செல்லலையும், அது மலைப்பிரதேசத்தைத் தாண்டித் திரும்பும் இடத்திற்கு அப்பால் பெரிய சமவெளி இருத்தலையும் காண்பன்; இவையன்றி அங்குள்ள பள்ளத்தாக்கு, அடுத்தடுத்துள்ள இராச்சியங்கட்கு இடையில் அமைந்துள்ள வழி நடைப்பாதை என்பதையும், அக்கணவாயில் உள்ள பெருஞ்சாலையில் மக்கள் பிரயாணம் செய்தலையும், மலைநாட்டு மக்களையும் சமவெளி மக்களையும் ஒன்றுபடுத்தும் இயற்கைச் சாதனமே அப்பள்ளத்தாக்கு என்பதையும் அறிதல் கூடும். கோடைக்காலம் முழுவதும் பிரயாணிகள் பள்ளத்தாக்கின் பாதை வழியே நடமாடிக் கொண்டிருப்பார்கள். கோடைக்காலம் கழிந்தவுடன் மழைக்காலத்தில் ஒரு மனிதனும் அப்பாதை வழியே நடவான். மழைக் காலத்தில் மழை ஓசையும், ஆற்றின் நீர் ஓசையும், காற்றில் அசைந்தாடும் மரங்களின் ஓசையுமே அப்பள்ளத்தாக்கில் நிலவி இருக்கும். எங்கும் மூடுபனி கப்பிக் கொண்டிருக்கும். கருக்கொண்ட கொண்டல்கள்-கதிரவன், திங்கள், விண்மீன்கள் இவற்றை மறைத்து வானிடத்தைத் தமதாக்கிக்கொண்டு இடியிடித்து உறுமுங்காட்சி, ‘யாங்கள் ஒளிமிக்க சுடர்களையும் அடக்கினோம்; உங்களை அடக்கல் எம்மாத்திரம்? எனக்கூறி உறுமி, மக்களை அச்சுறுத்துவன போலக் காணப்படும். யாண்டும் கங்குல் என்னும் நங்கை காட்சி அளிக்கும் அவ்விருண்ட மழைக் காலத்தில் அவளது திருநுதற் பொட்டேபோல வில் இல்லத்து விளக்கு ஒளி செய்துகொண்டிருக்கும். உலகப் பற்றினைத் துறந்து மறுமை இன்பத்தில் மனத்தைச் செலுத்தும் மாண்புறு தவசிகட்கே உரிய இடமெனக் கருதப்படும் அம்மலைப் பாங்கரில், நாகரிகம் தலைவிரித்தாடும் நகரங்களின் பூசல்களும், கூச்சலும், குழப்பமும் காணக்கிடையா; போர்வீரர்களின் காலடிச்சத்தம் கேட்டல் அரிது. நாகரிக உடைகள் அணிந்த பள்ளி மாணவரை-உத்தியோகஸ்தரை-பிற மேதகு மக்களைக் காண்டல் அரிது! அரிது!! எத்தகைய மந்திரா லோசனை புரியும் அரசியல் நிபுணரையும் ஆண்டுக் காணல் இயலாது. ஆயின், பெருங்காற்றில் அலைப்புண்டு மரங்கள் ஒன்றோடொன்று மோதுறலால் உண்டாகும் ஜிவ் என்னும் ஓசையைக் கவனிக்கும் ஒருவன், அஃது மரங்களின் மந்திரா லோசனைச் சபையினின்றெழும் ஒலியோ என ஐயுறுவான். மலை முகடுகளில் பனிதோய்ந்து கிடக்கும் தோற்றம், ‘இது வெள்ளி மலையோ? என வியக்கத்தக்கதாக அமைந்திருக்கும். மலைத்தொடரினின்று இழியும் அருவிகள், மலையரசன் மருகராய சிவனார்தம் சீரிய சடையினின்றிழியும் கங்கைக் கால்கள் போலக் காட்சி அளிக்கும். மலையில் உள்ள காடுகளில் சில வேளைகளில் தீப் பிடித்தல் உண்டு. அக்காடுகள் தீயிடைப்படுங்கால், மலையின் ஒரு பகுதி செந்நிறமாகவும் தீப்பற்றாத மற்றைப் பகுதி இயல்பாகவே நீலநிறமாகவும் காணப்படுங்காட்சி-மாதொரு பாகன் மாண்புறு திருமேனியை நினைவுறுத்தும். அந்நிலையில் மலையுச்சிமீது தவழ் தண்ணளி தாங்கிய வெண்ணொளித் திங்களும் காட்சி அளித்தல் உண்டு. ஆ! அத்தோற்றம், உச்சியில் திங்களையும் ஒருபுறம் செந்தழற் கண்ணையும் (சூரியனையும்) ஒரு புறம் தண்மைதவழ் கண்ணினையும் (சந்திரனையும்) உடைய அருள் பழுத்த சிவனாரது சீரிய திருமுகம் போல் காணப்பெறுதல் கண்டு களிப்புறத் தக்கது. சுருங்கக் கூறின், ஒருவன் வில் வீட்டிலிருந்து இயற்கை என்னும் பெருந்தேவியின் திருக்கோலக் காட்சி அனைத்தும் கண்டு களிக்கலாம். இத்தகைய இயல்பனைத்தும் இலங்கப்பெற்ற மலைப்பாங்கரில் உள்ள பள்ளத்தாக்கின் மேட்டு நிலத்தே வாழ்ந்துவந்த வில், இயற்கை அன்னையின் இன்பப் புதல்வன் அல்லனோ? வில் ஒரு நாள் தன் வளர்ப்புத் தந்தையை நோக்கி எந்தாய், நம் அகத்தருகே அசைந்தாடும் அலைகளைக் கொண்ட யாறு யாண்டுச் செல்கிறது? எனக் கடாவினான். மாவரைப் போன், மைந்தா, இவ்யாறு தன் போக்கில் பல இயந்திரங்களைச் சுற்றச் செய்கிறது; பின், சமவெளி நோக்கிப் பாய்வதாகக் கூறப்படுகிறது. வயல்களை அணியணியாகப் பெற்ற அழகிய சமவெளியில் பாய்ந்து அதனை மேலும் வளமுறச் செய்கிறதாம்; பின்னர் நவநாகரிகம் நனி விளையாடும் நகரங்களினுள் நுழைந்து ஆண்டுள்ள மக்கட்குத் தன் நன்னீரை அவர் உண்ணவும் குடையவும் உதவி, இறுதியில் தாண்டும் தரங்கக் கருங்கடலுட் கலக்கின்றதாம். யான் இவ்யாற்றின் வழிச் சென்றிலேன்; ஈண்டு வரும் பிரயாணிகள் கூறியதையே நினக்கு யான் நவின்றேன்என நவின்றான். அதுகேட்ட மைந்தன் விளம்பொணா வியப்புற்றான். வியப்புற்று, எந்தை, கடல் என்றொரு சொல்லைத் தாங்கள் கழறியதைக் கேட்டேன். அக் கடல் என்பது யாது? என ஆவலோடு கேட்டான். தந்தை, “கடல்!-ஆ! அஃது ஆண்டவன் அளித்த அழகிய ஏரி. அதனிற்றான் உலகத்து யாறுகள் அனைத்தும் சென்று கலக்கின்றன. அஃது ஓர் உப்பு ஏரி. அஃது என் கையைப் போலச் சமமாகவும் குழந்தையைப் போலக் களங்கமற்ற தாகவும் இருப்பது. ஆனால், சூறாவளி சூழ்ந்து மோதுங்கால், அவ்வேரி தன் அலைகளைக் கிளப்புமாம். அது போழ்து அவ்வலைகள் நம் மலைகளைவிட உயர்ந்து தோன்றுமாம். அதுகாலை அக்கடல் நம் இயந்திரத்தைவிடப் பெரியனவாகிய கப்பல்களை விழுங்கிவிடுமாம். அஃதிடும் ஓசை நகரங்களை நடுக்கமுறச் செய்யுமாம். எருதினைவிடப் பன் மடங்கு பெருந்தோற்றமுள்ள மீன்கள் அக்கடலில் உள்ளனவாம். உலகத்தின் வயதை ஒத்த வயதும் நமது யாற்றளவு நீட்சியும் மனிதன் பெற்றுளது போன்று மீசையும் தலையில் வெள்ளி முடியும் கொண்ட பாம்பொன்று அக்கருங்கடலுள் உறைவதாகவும் உரைக்கப்படுகிறது என்று உரைத்தான். தந்தை உரைத்தவை அனைத்தையும் உற்றுக் கேட்டு உளமகிழ்ந்த தனயன், உலகத்தைப் பற்றியும் உயிர்களைப் பற்றியும் போர்களைப் பற்றியும் மக்கள் தொழில் முதலிய வற்றைப் பற்றியும் பற்பல கேள்விகள் பாங்குறக் கேட்டான். மைந்தன் கடாக்கட்கு மகிழ்ந்த தந்தை தான் அறிந்த அளவு ஒவ்வொன்றுக்கும் தக்க விடையளித்தான்; இறுதியில் சிறுவனை வெளியே அழைத்துச் சென்று, மலை உச்சியை அடைந்தான். அங்கிருந்து கீழ் நோக்கின், சமவெளியும் வெகு தூரத்தில் உள்ள நகரத் தோற்றமும் நன்கு காணலாம். அவர்கள் மலை உச்சியை அடைந்த சமயம் கதிரவன் குணதிசை மறையும் மாலைக் காலம். வானம் விளக்கமுற்றிருந்தது. அவ்வந்திப் போதில் எல்லாப் பொருள்களும் பொன்னொளி பெற்றுப் பொலிவுற்றிருந்தனபோல் எழிலொடு இலங்கிய சமவெளியின் காட்சியும் வெகு தூரத்திற்கு அப்பால் பச்சைச் சமவெளி நீல வானினைத் தொடும் நிகரறு தோற்றமும் அவனைப் பிரமிக்கச் செய்தன. அவன், தான் காண்பன `கனவோ என அயிர்த்தான்; அருகில் தந்தை நிற்பக் கண்டு நான் காண்பன கனவின் தோற்றங்கள் அல்ல என்பதைத் துணிந்தான்; துணிந்து, மீண்டும் தன் முன்னர்க் காணக் கிடந்த காட்சியைக் கூர்ந்து நோக்கினான். ஏதோ ஒரு சக்தி அவனையும் அவனது உள்ளத்தையும் உடலையும் தன் வயப்படுத்தியது. அவன் மூச்சு விட முடியாதபடி அவனது இதயத் துடிப்பு அதிகப்பட்டது. அவன் கட்புலனுக்கு முன் எல்லாப் பொருள்களும் சுழல்வதாகக் காணப்பட்டன. அவன், கைகளால் முகத்தை மூடிக்கொண்டு விம்மி விம்மி அழுதான். மாவரைப்போனுக்கு ஒன்றும் புரிந்தபாடில்லை. அவன், சிறுவனை அமைதியாக வீட்டினுள் அழைத்துச் சென்றான். அன்று முதல் அவ்விளைஞன், புதிய இளைஞனாக மாறினான். புதிய நம்பிக்கைகளும் விருப்பங்களும் அவன் மனத்தை இடமாகக் கொண்டன; ஓடும் ஆற்று நீர் அவனது உள்ளக் கிடக்கையைத் தன்னகத்தே தாங்கிச் சென்ற தென்னல் மிகையாகாது; வானுற ஓங்கி வளம்பெற வளர்ந்து வானினைத் தொட முயன்று காண்டுள்ள மரங்களை அசைந்தாடச் செய்யும் பெற்றி வாய்ந்த பெருங் காற்றின் ஓசை, இளைஞனை அவன் எண்ணங்களிலும் விருப்பிலும் முனைந்து நிற்குமாறு ஊக்குதல் போலக் காணப்பட்டது. பள்ளத்தாக்கில் கீழ் நோக்கிச் செல்லும் நடைப் பாதை அவனைப் பரிந்தழைத்து, வழி காட்டியாக முன் செல்வதுபோல வளைந்து வளைந்து காணப்பட்டது. இக்காட்சிகள் அவனைக் கொலை செய்து வந்தன. அவன் தன் தந்தையோடிருந்து காட்சி கண்ட கவினுறு மலையுச்சியில் நின்று மீண்டும் பன்முறை கவனிக்கலானான்: பாதையிற் செல்லும் வண்டிகளைத் தன் விழிகளால் பின் தொடர்ந் தான்; வானினில் வரிசை வரிசையாகப் பறந்து செல்லும் பறவைகளைத் தன் எண்ணத்தால் பின்பற்றினான்; இங்ஙனம் அவன் சமவெளியைப் பற்றியும் நகரங்களைப் பற்றியும் எப்பொழுதும் நினைத்தபடியே இருந்தான்; அவற்றைக் கண்டு இன்பமடைதலை அவாவினான்; தன் இருப்பிடத்தையும் தனிமையையும் அறவே வெறுத்தான்; தன்னைப் போலத் தனித்து வாழும் உயிரே உலகில் இராதென எண்ணினான்; தனது நிலைமை மிகவும் பரிதபிக்கத் தக்கது எனப் பாவம்! அவன் தனது அறியாமையால் நினைந்து நைந்தான். அதுபோழ்து மாவரைப்பவன் தன் வீட்டை அடுத்துச் சில குதிரைக் கொட்டகைகளையும் வழிபபோக்கர் தங்கச் சிறு விடுதி ஒன்றையும் நிருமித்தான். அவனது அவசியத்தை உணர்ந்த அப்பகுதி அதிகாரிகள் அவனை அவ்விடத்துத் தபால் அதிகாரி (Post master) யாக நியமித்தனர். அதுமுதல் `வில், விடுதியில் வந்து வில் அக்காட்சியை விரும்பிக் கண்டான். அத்தகைய அழகுடைக் காட்சியை அவன் அதற்கு முன் அறிந்திரான். சமவெளியைச் சந்தோஷத்துடன் கவனித்தான்; இயற்கைக் காட்சியை இதயம் குளிர விழிகளாற் பருகினான். தூரத்தில் காணப்பட்ட நகரங்களின் தோற்றமும், ஆறுகள் வளைந்து வளைந்து போகும் பான்மையும், பச்சைக் கம்பளம் பதமுற விரித்தாற் தாங்கும் பிரயாணிகட்கு வேண்டும் வசதிகள் செய்வதற்காக நியமிக்கப்பட்டான். அப்பிரயாணிகள் பல நகரங்களிலிருந்து வருபவர்கள் ஆதலின், வில் அவர்கள் பேசுவதை அருகிருந்து அறிவது வழக்கம்; நகரங்களைப் பற்றியும் பிறவற்றைப் பற்றியும் அவர்கள் பேசுவதைக் கவனிப்பான்; புதிய செய்திகள் பல அறிந்து மகிழ்வான். அவ்விளைஞனது எண்ணத்தை அறிந்துகொண்ட இரண்டொரு பிரயாணிகள், ஒரு முறை தங்களுடன் நகரங்கட்கு வருமாறு அழைத்தனர். அப்போது அவன் தன் இயலாமையை எண்ணி எண்ணிப் பெரு மூச்சு விட்டான்; தன் தந்தை தன்னை யாண்டும் செல்ல விடான் என்பதை அவன் நன்கறிந்திருந்தான். ஒவ்வொரு பிரயாணி விடைபெற்றுப் போகும்போதும் இளைஞன் மனம் வருந்துதல் வழக்கம். தான் இனி அப்பிரயாணியைக் காணல் இயலாதென்பதை எண்ணும் போழ்து அவன் இதயம் வெடிப்பதுபோல் தோன்றும். நகர மாந்தரது பழக்கம் ஏற்படாத முன் இருந்த துன்ப நிலைமை, விடுதி கட்டிய பின் வளர்ந்ததே அன்றி வேறில்லை. இரவெல்லாம் கனவு; பகலெல்லாம் நினைவு. அவன், பள்ளத்தாக்கை விட்டு ஒழிந்து நகர வாசம், சமவெளி வாசம் இவற்றைப் பெறவே பெரிதும் விழைந்தான். அந்நிலையில் நாட்கள் கடந்தன; மாதங்கள் மறைந்தன. ஓர் இரவு விடுதிக்கு ஒரு நடுத்தர வயதுடைய மனிதன் வந்தான். வில் வழக்கம்போல அப்பிரயாணிக்கு வேண்டிய வசதிகளைச் செய்தான்; அப்பிரயாணி தன்னிடம் பரிவுடன் பேசியதைக் கேட்டு அவனைச் சிறந்த மனிதனாகக் கருதி உறவாடினான். பிரயாணியும் இளைஞனை மதித்துப் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். இரவு இரண்டு மணி இருக்கும். வில் தனது உள்ளத்தில் ஊன்றித் தன்னை இரவும் பகலும் உறுத்திக்கொண்டுள்ள அவாவினை அமைதியாக அப்பிரயாணியிடம் அறைந்தான். பிரயாணி இளைஞனது உள்ளப்பான்மையை உணர்ந்தான்; புன்முறுவல் பூத்தான். அவன் இளைஞனை நோக்கி, நண்பனே, நீ மெய்யாகவே நூதன இளைஞனாகக் காணப்படுகின்றனை; நீ ஒருபோதும் எய்தல் இயலாப் பொருள்களைப் பெற அவாவுகின்றனை. இயற்கை அன்னையின் இருப்பிடமாகிய மலைப்பிரதேசத்தில் மலைமகனாக மாண்புற விளங்கும் நீ, நாகரிக நகரங்களை நாடுகின்றனை; உன்னைப் போலவே நகர மக்கள் நகர வாழ்க்கையை வெறுத்துப் பழுதறு பெருமைவாய்ந்த மலை நாட்டை அடைந்து, அமைதியாக வாழ அவாவுகின்றனர். சுருங்கக்கூறின், நீ நகரம் என நவிலும் ஒன்றை அவர்கள் நரகம் என்கின்றனர். அவர்கள் நரகம் என்பதனை நீ நகரம் என்கின்றனை. இஃதென்ன மதியீனம்! நீ, ஈண்டுள்ள தூய காற்றையோ, இயற்கை அழகையோ நகரில் காணல் இயலாது. நீ, உஷ்ணமடைந்த காற்றையே அங்குச் சுவாசித்தல் வேண்டும்; புழுதிக்கிடையேதான் நடத்தல் வேண்டும். அமைதி என்பது அணுவளவும் அற்ற பாழும் நகரங்களில் வாழ்பவர் தவக்குறை உடையோர் என்னல் தவறாமோ? நீ, அமைதி நிலவும் இந்த மலைப்பிரதேசத்தை நீக்கி நிம்மதியற்ற நகரத்தை நாடுதல்-மோட்சத்திலிருப்பவன் நரகத்தை விரும்புதல் போலாம் என்று அகங்குழைய உரைத்தான். அவ்வுரை கேட்ட இளைஞன், ஐயா, நீர் கூறவது முன்னர் இருந்திருக்கலாம். ஆனால், அந்நிலைமை இப்போதைய நகரங்களில் இல்லை எனக் கேள்விப்பட்டேன். இங்கு வந்து சென்ற பிரயாணிகள் பலர் நகரங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயங்களையே கூறினர். நீர் ஒருவரே அவர்க்கு மாறாக அறைந்தீர். நான் நாதியற்ற நாய் போல இம்மலையிடத்திலேயே இருந்து மறைதல் வேண்டுமென்பது உமது விருப்பமா? நான் இப்பரிதாப நிலையில் இறப்பதே நலம் போலும்! என வருந்திக் கூறினான். ஆயிரக்கணக்கானவர்கள் உன்னிலையை அடைய எண்ணி இயலாது ஏங்கி இறந்தனர். மேலும் பலர் அங்ஙனம் உளர். அவர்களில் ஒருவரேனும் இன்பம் எய்திலர் என்பதை நீ அறிக என்றான் அப்பிரயாணி. ஆ! அப்படியா! ஐய, அவர்களில் ஒருவரை இங்கு வரச் செய்து, அவரிடத்தில் நான் சென்று தங்கலாமே!என உவகையோடு உரைத்தான் உண்மையை உணரா இளைஞன். அவ்வமயம் நல்லிருள் தன் ஆட்சியை நடத்திவந்தது. இருவரும் பேசிக்கொண்டு இருந்து இடத்தின் கூரையிலிருந்து விளக்கொன்று எரிந்துகொண்டு இருந்தது. விண்மீன்கள் வானத்தில் விளக்கமுற்றிருந்தன. குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அப்பொழுது பிரயாணி வில்லை அழைத்துக்கொண்டு வீட்டின் வெளிப்புறம் சென்றான். சென்று, நீ எப்பொழுதேனும் உடுக்களை உற்று நோக்கியது உண்டோ? என்று வினாவினான். அவ்வப்போது கவனித்துளேன் என்றான் இளைஞன். அவற்றை என்னவென எண்ணினை? என்று பிரயாணி கடாவ இளைஞன், யான் பலபட எண்ணியதுண்டு என்று நகைமுகத்துடன் நவின்றான். பிரயாணி, இளைஞனே, உடுக்கள் நாம் வாழும் உலகத்தைப் போன்ற பல உலகங்கள் ஆகும். அவற்றுள் சில நம் உலகத்தை விடப் பெரியன; சில சிறியன. நம் கண்ணுக்கு ஒளிபோல் தோன்றி மறையும் கணக்கற்ற உடுக்கூட்டங்களும் பல உள. அவை அனைத்தும் பல்வேறு உலகங்கள். அவற்றில் இருப்பவை என்ன என்பதை நாம் அறியோம்; நாம் படும் இன்னல்கட்கு ஏற்ற இன்பச் சாதனங்கள் அங்கு உளவோ? அல்லது நம் துன்பங்கட்குக் காரணமானவைதாம் அங்கு உளவோ? நாம் அறியோம். அவற்றை அடையலாமென நாம் விரும்பினும் அடைதல் இயலாது. எத்தகைய சாதனத்தாலும் அவற்றை அடைதல் முடியாதெனத் தோன்றுகிறது. அவற்றை அடையப் பயணப்படினும் மனிதன் ஆயுட்காலமே போதாதெனத் துணிவுடன் கூறலாம். நாம் இன்பப்படும்போதும் துன்பத்தில் துடிக்குங்காலையும் போர் நடக்கும் சமயத்தும் உயிர்கள் கொலை செய்யப்படும் காலத்தும்-அஃதாவது, எப்பொழுதும் அவை நம் தலைக்குமேல் ஒளிவிட்டு ஒளிர்ந்துகொண்டு இருக்கின்றன. நாம் அணி அணியாக நின்று அவ்வுலகங்களை நோக்கித் தொண்டை கிழியக் கத்துவோமா யினும், நமது குரலோசை அங்கு கேட்கப்படாது. வானை ஊடுருவிப் பாய்வன போல உயர்ந்து காணப்படும் மலைச் சிகரங்களின்மீது ஏறி நிற்பினும், அணுவளவும் அவற்றை அடைந்தவர் ஆகமாட்டோம். நாம், இருக்கும் இடத்திலிருந்து அவற்றைக் காண்பதொன்றே செயற்பாலது. அவற்றையும் நம்மையும் நோக்க மலையும் எலியும் நினைவிற்கு வருகின்றன. அவை மலை என்பதையும் நாம் எலி என்பதையும் உணர்க. உதாரணமே விஷயத்தை விளக்கமுறச் செய்வது என்று பரிவுடன் பகர்ந்தான். இளைஞன் தன் தலையைக் கீழே தொங்கவிட்டா.; பிறகு நிமிர்ந்து விண்மீன்களால் விளக்கமுறும் வானினை நோக்கினான்; உடுக்கள் உருவத்தில் பருத்துக் காண்பனபோல நினைந்தான்; அவை மிக்க ஒளியுடன் ஒளிர்வதாகவும் எண்ணினான். நீர் கூறியவற்றை யான் உணர்ந்தேன். நாம் மெய்யாகவே பொறியுள் அகப்பட்ட எலிபோல் நீக்க முடியாத பரிதாப நிலையில் இருக்கின்றோம் என்று இயம்பினான். ஆம், நாம் எலி உருவத்திற்றான் உள்ளோம். பொறியில் அகப்பட்டுக் கொண்ட அணில் அதிலிருந்து விடுதலை பெற வீணே முயல்வதை நீ கண்டதில்லையோ? தனக்கு இயற்கை யாகக் கிடைத்த இடத்தையே இன்பமாக நினைந்து, தனக்கு இயற்கையிற் கிடைத்த கொட்டைகளைத் தின்றுகொண்டு அமைதியாக வாழும் அணிலை நீ கண்டதுண்டா? இவ்விரண்டில் எது அறிவுடையது என்று உனக்கு நான் உரைத்தல் வேண்டா என்று பிரயாணி கனிவுடன் கூறித் தன் பேச்சை முடித்துக்கொண்டான். 13.`வில்’ லின் வாழ்க்கை (B) `வில்லின் காதற் கதை பல ஆண்டுகள் கழிந்தன. மாவரைப்போனும் அவன் மனைவியும் இறந்தனர், வில் தனித்தவன் ஆனான். அவனுடைய பல திறப்பட்ட எண்ணங்களை நன்குணர்ந்த சுற்றுப்புறத்தார், அவன் தன் ஆதியை எடுத்துக்கொண்டு நகரவாசத்தை நாடிச் சென்று விடுவான் என நம்பினர்.ஆனால், அவர்கள் எண்ணியது தவறு. என்னை? வில் தனது மலைவாசத்தை விட்டு நகர்ந்திலன்; அதற்குப் பதிலாகத் தனது இல்லத்தையும் பிரயாணிகள் தங்கும் விடுதியையும் பலப் படுத்தினான். இரண்டு பணியாளரை அமர்த்தினான்; தனது காலத்தை இன்பமாகக் கழித்து வரலானான். அவன் நாளடைவில் தனது பகுத்தறிவினைப் பலப்படுத்தினான்; எதனையும் எண்ணி எண்ணி முடிவு கண்டான். தன்னைக் காண்பவரிடம் இனிமையாகவும் வேடிக்கையாகவும் பேசும் வன்மை பெற்றான். முப்பது வயதும் முறுக்கமைந்த உடலும் வசீகரத் தோற்றமும் கொண்ட வில் ஆறடிக்கு மேற்பட்ட உயரமுடையவன். அவனுடைய களங்கமற்ற மனநிலையையும் அதிலிருந்து சுரந்தெழும் தூய எண்ணங்களையும் அவற்றின் பிரதிபிம்பமாக வெளிவரும் பேச்சுகளையும் அப்பேச்சுகட்கு ஏற்ற நன்னடையினையும் கண்ட சுற்றுப்புறத்தார் அவன்மீது பேரன்பு கொண்டனர்; பிரயாணிகளும் மலை மகனான அவனைத் தவ மகனாகக் கருதிப் பாராட்டினர். வில், தன் கடமையான வேலைகளைச் செய்து முடித்த பின்னர் நாடோறும் மலைக்காட்சி, மலர்க்காட்சி, யாற்றுக்காட்சி, வானக்காட்சி முதலாய காட்சிகளைக் கண்டு மகிழ்வதிலும் அவற்றைப் பற்றிப் பலவாறு நினைந்து நினைந்து இயற்கையை வழிபடலிலும் தன் காலத்தைக் கழித்து வந்தான். வில் வசித்துவந்த பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் சிறிய கிராமம் ஒன்று இருந்தது. அக்கிராமத்தில் கோயில் குரு ஒருவர் இருந்தார். அவருக்கு அழகே உருவெடுத்தாற் போன்ற பெண் ஒருத்தி உண்டு. தந்தையும் தனி மகளுமே வாழ்க்கையை நடத்தி வந்தனர். அவள் வெளிப் போந்து உலவுங்காலை வில் கண்டு களித்தல் உண்டு. நாளடைவில் அவ்விருவர்க்கும் நட்புண்டாயது. வில் அவளது இல்லஞ் சென்று அவள் தந்தையாரான குருவிடம் நெடுநேரம் பேசி மீள்வது வழக்கம். மடந்தைப் பருவத்தின் முகட்டினைக் கண்ட அம்மங்கை நல்லாள் களங்கமற்ற மன நிலைமை வாய்ந்தவள். இயற்கையின் எழிலில் வளர்ந்தவள் ஆதலின், இயற்கை அழகோடு இலங்கினாள். விழிகட்கு வெப்பத்தை அளிக்கும் ஆடை ஆபரணங்கள் அற்றவள்; எளிய உடையும் எழில்மிகு தோற்றமும் பெற்றவள். இயற்கையையே பள்ளியாகக் கொண்டு இயற்கைக் காட்சி களையே நூல்களாகக் கொண்டு உண்மைக் கல்விகற்றவள்; மலை அடிவாரத்தில் வாழ்ந்த அவள் மலைமகள் ஆகவே காட்சி அளித்தாள். அவள் மீது அளவில் அடங்கா ஆசை கொண்டு மணக்க முன்வந்த வாலிபர் பலராவர். அவளோ எவரையும் மணந்துகொள்ள மறுத்துவிட்டாள். குரு இருந்த இல்லம் பழுது பார்க்கத்தக்க நிலையை அடைந்தது. அதுபோழ்து வில் அவர் இருவரையும் தன் அகத்தே இருத்திக்கொண்டான். இதனால், மார்ஜொரி என்னும் அம்மாதரசியின் நட்பு வில்லுக்கு நாடோறும் கிடைக்க வழி ஏற்பட்டது. ஆரம்பத்தில் உண்டான அறிமுகம் நாளடைவில் பிஞ்சு-காயாகி, காய்-பழமாகுதல் போலப் பல மாறுதல்களை அடைந்து இறுதியில் காதற் கனியாகக் காட்சி அளித்தது. இயற்கை அன்னையின் இன்பப் புதல்வனாய் விளங்கிய வில் தன் விருந்தினர் இருவருடனும் வெளியிடத்தே-இறைவனால் உண்டாக்கப்பட்ட நீல விதானத்தின் அடியிலே-நறுமணத்தை நாலாப் பக்கங்களிலிருந்தும் நல்கும் மணமிகு மலர்களைக் கொண்ட செடிகட்கு இடையில் அமைந்த வெளியிடத்தே- தென்றல் காற்றுத் தெளிவுற வீசும் இன்ப வெளியிலே-இருந்துண்டு மகிழ்தல் வழக்கம். மூவரும் விருந்துண்ணுங்கால் முக மலர்ச்சியுடன் பேசுபவர் இருவரே. அவர்தாம் கனிந்த காதலர். குருவானவர் அவ்வப்போது சில சொற்களைச் சொல்வது வழக்கம். அவர் தூய உளத்தராயினும் மலர்ச்சி கொண்ட முகத்தினர் அல்லர். மார்ஜொரி விருந்துண்ணும்போது பேசும் பேச்சுகள் வில்லின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும். அறிவு சான்ற அம்மலை மகன் தன்னை ஒத்த அறிவு சான்ற அம்மலைமகளை வியத்தல் இயல்புதானே! அவளுடைய களங்கமற்ற பேச்சுகள் அவனுடைய களங்கமற்ற உள்ளத்தில் புதைந்தன. அவன் அப்போது அகமலர முகமலர்தல் வழக்கம். அங்ஙனமே அவன் பேசும் தூய்மைப் பேச்சுகளைக் கேட்டு அம்மலைமகள் அகமகிழ்தல் உண்டு. ஆ! அந்நிலையில்-களங்கமற்ற அந்நிலையில்-உள்ளொன்று உளதெனின் அதுவே வெளியிலும் வெளிப்படுவதாகப் பேசும் அத்தூய நிலையில் அவ்விருவரும்-மேட்டுப் பாங்கான மலையின் இயற்கை எழிலினிடத்தே பேசி மகிழும் அவ்விருவரும்-இறைவன் இணக்கமுறப் படைத்த தேவதூதர் ஆகக் காணப்பட்டனர் என்னல் மிகையாகாது! மிகையாகாது!! வில் மார்ஜொரியைப் பன்முறை உற்று நோக்குவான். அவளது முகத்தின் இருபுறமும் கருங்கடல் அலைபோல் சுருண்டு சுருண்டு தாழக் கிடந்த கருங்கூந்தலின் தோற்றம் அவன் விழிகட்கு விருந்தளித்தது போலும்! அவளது மாசறு மணிமுகம் அன்று மலர்ந்த தாமரை மலரெனக் காட்சி அளித்ததுகொல்? அன்றேல் பாற்கடலிற் பரந்த அலைகட்கிடையே எழுந்த முழு மதியெனத் தோன்றியது கொல்? இருபுறமும் சுருண்டு தொங்கிய கூந்தற்கு இடையே பிறழ்ந்து கொண்டிருந்த அவள் கண்கள் கருங்கடல் அலைகட்கிடையே அலமரும் கயல்களை நினைவுறுத்தினவோ? யாம் அறியோம். அவளது மாசறு மதிமுகம் கண்ட பின்னர் வானின் வனப்போ, மலையின் மாண்போ, பிற காட்சிகளோ வில்லின் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதில்லை. அவை அனைத்தும் சேர்ந்து ஒருங்கு நிற்பினும் அவளது முகத்திற்கும் உடல் அமைப்பிற்கும் நிகர் ஆகா எனல் அவனது உள்ளத் துணிபெனில் தவறாகாது. என்னை? விண்ணினது நீலக் காட்சியை அவளது கூந்தல் அளித்தது. விண்மீன்களின் காட்சி அக்கூந்தலிற் செருகப்பட்டிருந்த வெண்மலர்கள் அளித்தன. முழு மதியின் பொலிவினை அவளது இன்முகம் ஈந்தது. இங்ஙனம் அம்மலைப் பாங்கரில் காணப்பெற்ற இயற்கை எழில் முழுவதும் அவளிடம் காணப்பட்டமையே அவனது உள்ளத்தின் மாற்றத்திற்கு உற்றதொரு காரணம் ஆகும். சுருங்கக் கூறின், இறைவனால் படைக்கப்பெற்ற பொருள்களின் அழகெலாம்-அவற்றினிடம் நாம் பெறத்தகும் இன்பமெலாம்-அம்மலைமகளிடமே இரண்டறக் கலந்திருந்தன என்று கூறுமாறு அவள் அழகின்-இன்பத்தின் உண்மைத் தன்மையாக-பிரதிபிம்பமாக விளங்கினாள் என்னல் எவ்வாற்றானும் மிகையாகாது. இறுதியாகக் கூறின், வில் இருந்த பள்ளத்தாக்கில் படர்ந்திருந்த அழகனைத்தும் அவளொருத்தியின் அழகினுக்கு அணுத்துணையும் இணை யாதல் அரிதென்னலாம். காற்றால் அலைப்புண்ட மரங்களின் ஓசை வில் லின் காதிற்கு விடமாகத் தோன்றியது. மார்ஜொரி பேசிய சொற்களின் ஓசை அவன் செவி வழியே நுழைந்து உணர்ச்சி உண்டாக்கியது. அவன் அவள் பேசியவை அனைத்தையும் கேட்டான்; அவள் விழிகளை நோக்கிப் பல செய்திகளை அறிந்துகொண்டான். என்னை? கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல என்பது தமிழ் மறை அன்றோ? உள்ளத்து உணர்ச்சியைத் தெள்ளெனத் தெரிவிப்பது பார்வையே அன்றோ? பார்வையின் பின்படர் செயலே அப் பார்வை என்னும் சூத்திரத்திற்கு அமைந்த விருத்தியுரை. அவளுடைய அன்பு ததும்பிய-எளிய-தூய வார்த்தைகள் அவன் உள்ளத்தில் ஆழ்ந்தன. அவற்றால், முன்னரே இயற்கை வழி நின்ற அவனது இதயம் மேலும் இயற்கை வழி நின்று வேரூன்றியது. அவள் வேறு, அவள் சொற்கள் வேறு எனக் கூற இயலாமையின், அவள் சொற்களை உள்ளத்தில் தாங்கிய வில் அவளையே உள்ளத்தில் வழிபட்டான் என்னல் தவறாமோ? அவளுடைய கட்டமைந்த உடல்அமைப்பும், பண்பட்ட குரல் ஓசையும், விழிகளினின்று காலும் ஒளியும், தாள ஓசையை வழுவாமற் பின்பற்றிப் பிணைந்து செல்லும் வாய்ப்பாட்டின் ஒலிபோல அவளுடைய தூய-எளிய-உண்மையை உள்ளடக்கிய சொற்களோடு பிணைந்து காணப்பட்டன. வில் அவளைப் பற்றிக் கொண்ட உணர்ச்சி அவனுடைய ஐம்புலன்களையும் ஒன்றச் செய்தன. அவன் உள்ளம் மகிழ்ச்சிக்கும் நன்றியறிதற்கும் நிலைக்களன் ஆயது. அவளைக் காண்பது அவனது களங்கமற்ற இளமைப் பருவத்தினை நினைவூட்டியது. அவளைப் பற்றிய நினைவு அவனது அகத்தாமரையை மணத்துடன் மலரச் செய்தது. அழகெலாம் ஒன்று திரண்டாற்போலத் தேன் துளி பெருக வைகறையில் மலரும் செவ்விதழ் கொண்ட தாமரை மலரினும் அவளைப் பற்றிய நினைவாகிய மலர் அவனுக்குப் புதியதோர் பேரின்பமாகிய மணத்தினை மனமகிழ்ந்தளித்தது. அஃறிணைப் பொருள்களாகிய மலர்கள் மனிதனை உயர் நிலைக்குக் கொண்டு செல்வது உண்மை ஆயின், உயர்திணை ஆகிய அவ்வுத்தமியின் தோற்றம்-பழக்கம் வில்லினை எண்ணரிய உயர்நிலைக்கு உந்திச் சென்றதென்னல் எவ்வாற்றானும் தவறாகாது. ஒரு நாள் வில் உணவுண்ட பின்னர், தேவதாரு மரங்களின் செறிவினூடே அடிபெயர்த்து ஆழ்ந்த சிந்தனை யுடன் நடக்கலானான்.அப்பொழுது அவனது உச்சி முதல் உள்ளங்கால் வரை சொல்லொணாச் சக்தி ஒன்று பரவி அவனது உருவத்தை ஒளிரச் செய்தது. அவனது முகம் மலர்ச்சியுற்றது. அம்மலர்ச்சியில் அவன் தன் எதிரே வானுற ஓங்கி வளம்பெற நிற்கும் தேவதாரு மரங்களை நிமிர்ந்து நோக்கினான். பின் தன் அடிச் சுவடுகளை எண்ணுவான் போலக் கீழ்நோக்கி அமைதியாக நடந்தான். அதுபோழ்து பாறைக் கற்களுக்கு இடையே ஓடும் மலையருவியின் சலசல என்னும் ஓசையைத் தவிர வேறொன்றும் கேட்கப்படவில்லை. அவன் அவ்வழகிய அருவியை ஆழ்ந்து நோக்கி அகமலர அடிபெயர்த்து நடந்தான்; அருவியைத் தாண்டிச் சிறிது தூரம் நடந்ததும் நிசப்தமான வானைப் பிளந்து சென்றதொரு பறவையின் பாங்குறு ஓசையைச் செவிமடுத்தான். அமைதி நிலவிய அவ்விடத்தே அப்பறவையின் அழகிய ஓசை அவன் உள்ளத்தைக் குளிரச் செய்தது போலும்! அவன் பறவையைக் கண்டிலனாயினும், மரவுச்சியை நோக்கிப் புன்னகை கொண்டான்; மேலும் நடந்து வெளியிடத்தை அடைந்தான். தலை நிமிர்ந்து, வானைத் தொட முயன்று கொண்டிருந்த மலை முகடுகளைக் கூர்ந்து நோக்கினான். அவை அவனது உள்ளக் கிடக்கையை உணர்ந்து புன்னகை பூத்தன போலக் காணப்பட்டன. வில் மேலும் வழி நடக்கலானான்; பண்டொரு நாள் தன் தந்தை தன்னை அழைத்தேகிய அழகிய மலையுச்சியை அடைந்தான்; ஆண்டிருந்த பாறை ஒன்றன் மீது அமர்ந்தான். ஆழ்ந்ததும் இன்பமயமானதுமான சிந்தனையில் ஆழ்ந்தான்; மலையுச்சிக்கப்பால் காணப் பெற்ற சமவெளியும் நகரங்களும் பிறவும் அமைதியாகக் காணப்பெற்றன; மலைப் பிரதேசமே அமைதிக்கு அரண் செய்தது. ஒரு சில பறவைகளே அங்குமிங்குமாகப் பறந்து ஓசை இட்டன. அந்நிலைமையில் ஆழ்ந்த சிந்தனையிற் கிடந்த வில், தலை நிமிர்ந்து தன் மனங்கவர்ந்த மங்கை நல்லாளது தூய பெயரை உரத்துக் கூறினான்; அவ்வோசை அவனது செவியுள் நுழைந்து சொல்லொணா இன்பூட்டியது. அவன் உடனே தன் கண்களை மூடினான். அவனது உள்ளங் கவர்ந்த உத்தமியின் உருவெளித் தோற்றம் தூய எண்ணங்களோடும் பேரொளியோடும் அவன் அகக் கண்முன் காட்சி அளித்தது. ஆற்று நீர் அழிவுறாது என்றும் நிலையுற்று ஓடிக்கொண்டிருக்கலாம்; பறவைகள் என்றும் பாட்டிசைக்கலாம்; விண் மீன்களைத் தொடுவனபோல் விசையுடன் வானிற் பறக்கலாம். அவை இருக்குமிடம் நீங்கியே இன்பம் பெறுகின்றன. ஆனால், வில் தன் இடமாகிய பள்ளத்தாக்கினை விட்டு அடியளவும் அசையாமல்- இருந்த இடத்திருந்தே தான் அடையவேண்டிய இன்பம் அடைந்தனன். அதனால், அவன் யாறு முதலியவற்றைவிடப் பேறு பெற்றவனே ஆவன் அல்லனோ? மறுநாள் விருந்துண்ணுங்கால் வில் தனது உள்ளக்கிடக்கையை விழைந்து விள்ள நினைந்தான்; நினைந்து அதற்குத் தோற்றுவாயாகச் சில சொல்லத் தொடங்கினான். மார்ஜொரி, யான் உன்னை நேசிப்பதுபோல எவரும் உன்னை நேசித்திறார் எனத் துணிந்து கூறுவேன். நான் ஒரு நூதன மனநிலை வாய்க்கப்பெற்றவன். இதனால் அன்பும் மனிதத் தன்மையும் என்னிடம் குறைவு என்பது கருத்தன்று. ஆனால் என் எண்ணங்கள் நூதனமானவை எனச் சுற்றுப்புறத்தார் கூறுதல் வழக்கம். அவர்கள், உன்னைத் தவிர யான் எவரையும் என் அகத்தில் சேர்த்ததில்லை என்பதை நன்கறிந்தவர்கள். அவர்கள், எனது இப்புதிய மாற்றத்தைக் கண்டு, அதைப்பற்றிப் பேசி நகையாடுகின்றனர். நீயோ என் வீட்டிற்கே வந்துவிட்டாய். ஏன். என் உள்ளத்திலேயே உருக்கொண்டனை. யான் இங்ஙனம் இயம்பல் நினக்கு வருத்தம் விளைக்கிறதோ? எனப் பரிவுடன் பகர்ந்து, வினவினான். மார்ஜொரி வாய் விண்டிலள். பேசு, மகளே! எனக் குரு கூறிப் புகைப்பிடிக்கலானார். வில் குருவே, அவள் இப்போது பேசவேண்டா. அவளைப் பேசுமாறு வற்புறுத்த யான் விழைந்திலேன். யானே இயல்பாக நாவடக்கம் உடையவன்; யான் இவ்வளவு பேசியது எனக்கே வியப்பாக உள்ளது. மார்ஜொரி ஒரு பெண்; மேலும் குழந்தைத் தன்மையள். நான் இவளைக் காதலிப்பதாகவும் எங்கள் இருவரிடையும் காதல் அரும்பு-போதாகி மலர்ந்துள்ளதாகவும், சுற்றுப்புறத்தார் செப்புகின்றனர். அஃது இன்னதென்று எனக்குப் புலனாகவில்லை. ஏனெனின், காதல் இன்னது என்பதே எனக்குத் தெரியாது. நான் ஒரு நூதன உணர்ச்சி உடைய மனிதன் ஆதலால் எதையும் கூற அஞ்சுவல். மார்ஜொரி என் உணர்ச்சிக்கு மாறுபட்ட உணர்ச்சி உடையளாயின், அதற்கு அறிகுறியாகத் தலை அசைத்தல் ஒன்றே சாலும் எனக் கனிவுடன் கழறினான். மார்ஜொரி வாய் திறந்திலள்; தலை அசைத்திலள். வில் கூறியன கேளாதவள்போல் வாளா இருந்தனள். வில், என்ன குருவே? என்றான். தந்தையார் தமது புகைப்பிடிக்கும் கருவியை வாயினின்றெடுத்தவராய், என் மகள் இப்பொழுது பதில் அளித்தல் அவசியம் எனக்கூறி, மகளைப்பார்த்து, என் செல்வமே, இப்புதியவர் உன்னை நேசிப்பதாக நேர்மையோடு கூறுவதைக் கேட்டனையா? நீ இவரை நேசிக்கின்றனையா? இல்லையா? இயம்பு என்றனர். கட்டழகி, நான் இவரை நேசிப்பதாகவே நினைக்கிறேன் என மெல்லிய குரலில் வாய்மலர்ந்தாள். உடனே வில், ஆயின் சரி; நான் விரும்பியதெல்லாம் இஃதொன்றே என வாய்விட்டுக் கூவினான்; கூவி, அவள் கையைப்பற்றித் தன் இரு கைகளிடையே சிறிது போழ்து வைத்திருந்து தன் அன்பின் பெருக்கினை அவளுக்கு அறிவித்தான். நீ இவளை மணந்துகொள்ளல் வேண்டும் என்று கூறிக்கொண்டே குருவானவர் புகைப்பிடித்தார். அது கேட்ட வில், மணத்தல் என்பது நேரிய செயல் என நீர் மெய்யாகவே நினைக்கிறீரா? என வியப்போடு கேட்டான். குரு, மணத்தல் இன்றியமையாதது என்று கூற, ஆயின், சரி என்றான் அழகன். இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன. வில்லின் உள்ளம் ஒருவராலும் கரை செய்ய அரியதொரு பேருவகைக் கடலுள் ஆழ்ந்து கிடந்தது. ஆயின், அவனது எல்லையற்ற மகிழ்ச்சியைப் பிறர் உணர்தல் அரிது. நாடோறும் அவள் எதிர்ப்புறம் இருந்து விருந்துண்டான். விழியால் விருந்துண்டான்; செவியால் விருந்துண்டான். அவள் தனது காதலை வெளிப்படுத்திய பின்னும், அவ்வுத்தமன் அப்பெண்ணரசியைத் தனி இடத்தே சந்தித்திலன்; பேசிலன். தந்தையாருடன் தனயை இருந்து விருந்துண்ணும் நேரங்களிற்றான் வில் அவளை விரும்பிப் பார்த்தல் வழக்கம்; பேசுதல் வழக்கம்; அவள் பேச்சினைக் கேட்டல் வழக்கம். இச்செயல் அவளைச் சிறிது மனம் வருந்தச் செய்திருக்குமோ எனின், யாம் துணிவுடன் கூறல் இயலாது. ஆயினும், அவள் வில்லின் உள்ளம் கவர்ந்த கள்வி என்பதனையோ, அவனைத் தன் உள்ளத்தடக்கிய உண்மைக் காதலி என்பதனையோ மறுத்தல் இயலாது! இயலாது!! ஒரு நாள் வில் உலவிவிட்டு வீடு நோக்கி மீள்கையில் மார்ஜொரி மலர்களைப் பறித்தலைக் கண்டான்; அவளை அண்மினான். அண்மி, மலர்கள் உனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன போலும் ! என்றான். அவள், ஆம். இவற்றை யான் எப்பொழுதும் என்னுடன் வைத்துக்கொள்ள விரும்புவேன். நீர் இவற்றை விரும்புதல்இல்லையோ?!என்றாள். வில் நீவிரும்புமளîயா‹விரும்புதšஇல்லை. இவற்றைப் பார்த்து மகிழ்தலில் எனக்குப்பெருவிருப்ப«. ஆனால், உன்னைப்போல மலர்களைப் பறிப்பதில் எனக்கு விருப்பமில்லை என்றான். என்ன? பறிப்பதில் விருப்பம் இல்லையா? என அப்பெண்மணி வியப்போடு வினவி, அவன் Kகத்தைnநாக்கினாள்.Éš’ அவளை நோக்கி, ஆம். மலர்கள், அவை மலருமிடத்தில் ïருப்பதேgர்வைக்குïன்பம்.mt‰iw¥ பறித்தவுடன் அவற்றின் அழகு அழிந்துவிடுகிறது. என்று உருக்கமாக உரைத்தான். மார்ஜொரி, அவற்றை என் மார்பிற் பொருத்தி மகிழ்வதில் எனக்கு விருப்பம் அதிகம்; அவை நன்கு மலர்ந்ததும் நம்மைப் பரிந்து அழைப்பன போலக் காணப்படுகின்றன. அவற்றைப் பறித்து, அவற்றை என் பள்ளியிற் கிடத்தி, அவற்றுடன் உறங்குதலில் எனக்கு விருப்பமதிகம் என்றாள். வில் வியப்புற்றவனாய், ஓ! அவற்றைப் பற்றி மீண்டும் நினையாதபடி இருக்க அவற்றைப் பறித்து உன்னுடையன ஆக்கிக் கொள்கின்றனை போலும்! இச் செயல் பொன் முட்டை கருதி வாத்தினை வதைத்த செயல்போல் உளது; நான் எனது இளமைப் பருவத்தில் செய்த பிள்ளைச் செயல் போலவும் காணப்படுகிறது. நான் அப்பிள்ளைப் பருவத்தில், மலையுச்சியை அடைந்து சமவெளிகளையும் நகரத் தோற்றத்தினையும் கண்டு கண்டு உவத்தல் வழக்கம்; அவ்விடங்களிலேயே சென்று தங்கிவிடவும் துணிந்ததுண்டு. நான் அப்படிச் செய்யாமல் இம்மலையிடத்தே இருப்பதாற்றான் இன்றும் மலை உச்சியினின்று அப்புதிய-அழகிய இடங்களைக் கண்டு நாளும் இன்பம் நுகர்கின்றேன். அவற்றை அடைந்திருப்பேனாயின், இன்று யான் நுகரும் இன்பத்திற்கே வழி இராது போயிருக்கும் அன்றோ? எனக் கூறி முடித்து, அவன் சிறிதும் நில்லாமல் விரைவாகத் தன் விடுதி நோக்கி நடந்தான். விருந்துண்ணும்போதும் வில் வாய் திறந்திலன். இரவில் விண்மீன்கள் விளக்கமுற்றிருந்தன; மலைக்காற்று மந்தமாக வீசியது; யாண்டும் அமைதி நிலவி இருந்தது. வில் தூக்கம் பிடியாதவனாய் எழுந்து விடுதியை அடுத்த தோட்டத்துள் உலவினான். அப்போது அவன் முகம் கவலை கொண்டதாகக் காணப்பெற்றது. மார்ஜொரியின் அறையில் விளக்கெரிவதை வில் கண்டான்; வானத்தை உற்று நோக்கினான். விண் மீன்களின் விளக்கமும் மங்கை நல்லாள் மலர் முகமுமே அவனைப் புனிதன் ஆக்கியவை. எனவே, அவன் அவ்விண் மீன்களையும் மார்ஜொரியையும் மனமார வாழ்த்தினான். உடுக்களும் உத்தமியும் அவன் வாழ்க்கையை மாற்றித் தூய்மைப்படுத்தி விட்டமையால், இனி உடுக்களிடமோ, உத்தமியிடமோ அவன் பெறத்தக்கது யாதுளது? அந்நிலையில் உடுக்களைக் காட்டி உபதேசம் செய்த பிரயாணியை வில் நினைந்தான்; அவன் அகமும் முகமும் மலர்ந்தன. தன் வாய்க்கெதிரே கைகளை வைத்துக்கொண்டு பெருத்த ஓசை இட்டான். அந்நள்ளிரவில் அமைதியான அம்மலைப் பிரதேசத்தில் அவ்வோசையை எவர் கவனித்திருப்பர்? மார்ஜொரியின் ஜன்னல் துணி சிறிது நீக்கப்பட்டு மீண்டும் மூடப்பட்டது. வீண் மீன்கள் பேரொளியுடன் ஒளிர்தல் போலக் காணப்பட்டன; வெண் மேகங்கள் விரைவாக ஓடலாயின. இவை அனைத்தையும் கண்டு களித்த வில் தனது பள்ளியுட் புக்கான். மறுநாள் மாலை மார்ஜொரி மலர்க்காவில் மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். வில் அவள் அருகில் நின்றான். அவன் ஏதோ ஒரு புதிய உணர்ச்சிகொண்டவன் போலக் காணப்பெற்றான். அவன் அம்மாதரசியை நோக்கி, நான் உன்னை மணப்பதாக எண்ணி இருந்தேன். ஆனால், நேற்று முதல் அவ்வெண்ணத்தை விட்டுவிட்டேன். மணம் நம்மிருவர்க்கும் ஏற்றதன்று என்றான். மார்ஜொரி வில்லின் முகத்தைப் பார்த்தாள்; அவன் முகமோ மாசற்றுப் புன்னகையுடன் காணப்பட்டது. அவள் தன் பார்வையைப் பூமியிற் செலுத்தினாள்; வில் அவ்வேளை ஒரு தேவதூதன் போலக் காணப்பட்டதை அவள் மறந்திலள். எனினும், அவன் அமைதியாக-ஆனால், அவளுக்குத் திடீரெனக் கூறிய மண மறுப்புச்செய்தி அவள் உடலை நடுங்கச்செய்தது. அந்நடுக்கத்தை அழகனும் கண்டான். வில் தன் கூற்றைத் தொடர்ந்து, நான் இங்ஙனம் தீர்மானித்ததை நீ வரவேற்பாய் என்று நம்புகிறேன். நாம் இருவரும் இன்றுள்ள நிலைமையில் நிலைத்திருப்பதே என்றும் அழியா இன்பத்தை நுகர ஏதுவாகும். மணம் முடிந்துவிடின், இன்றுள்ள அன்பு நிலைத்திராதென நினைக்கிறேன். என நன்முறையில் நவின்றான். மார்ஜொரி வாய் திறந்து, வீண் கதை எதற்கு? உமது கருத்து மணம் செய்துகொள்ளல் கூடாது என்பதுதானே! போதும். வேறு பேச வேண்டா. நான் இதுகாறும் தவறாகச் செலுத்தப்பட்டேன் என்பதை எண்ணவே நான் வருந்துகிறேன் எனக் கூறித் தன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டாள். வில் வருந்தினவனாய், நீ என்னை மன்னித்தல் வேண்டும்; என் கருத்தை நீ அறியவில்லை. உன்னை நான் நேசிக்கிறேன் என்பது உலகறிந்த செய்தி. ஆனால் ஒரு விஷயம் பற்றி மட்டும் என் மனவுறுதியை யான் மாற்றல் இயலாது. என்னை என் முன்னைய நிலையினின்று மேலான நிலைமைக்கு உயர்த்தியவை உனது நற்பழக்கமும் களங்கமற்ற பேச்சும் நடையுமே என்பதை யான் என்றும் மறவேன்! மறவேன்!! இவ்வுதவிக்கு யான் என்றும் நின்பால் நன்றியறிதலுடையேன். நீ என் அகத்திருந்தாலும் உன் வீட்டில் இருந்தாலும் சரி; நாம் இருவரும் அடிக்கடி கண்டு பேசிமகிழ்வோம். இங்ஙனம் அவ்வப்போது கண்டு பேசி மகிழ்வதால் உண்டாகும் இன்பம் உன்னை என் மனைவி ஆக்குவதில் இல்லை-இருத்தலும் இயலாது என்பதை நான் உணர்கிறேன். இதுவே எனது மனப்பூர்வமான எண்ணமாகும். ஆனால், நீ விரும்பின், நான் உன்னை மணந்துகொள்ளத் தடையில்லை என்றான். நீர் என்னை அவமதிக்கின்றீர் என்பதை அறிகிறீரா? என்று மார்ஜொரி பெறுமை இழந்தவளாய்க் கேட்டாள். அவள் முகம் வெளுத்தது; உதடுகள் துடித்தன. நானா? மார்ஜொரி, நானா? இல்லை! இல்லை!! நீ தவறாக எண்ண வேண்டா. உன்னிடம் எனக்குப் பெருமதிப்பு உண்டு. என் மனத்தில் கோயில் கொண்டுள்ள தெய்வம் நீ. நான் உன்னை அவமதிக்கச் சிறிதும் எண்ணிலேன். நான் ஒரு முறை கூறிவிட்டதை இனி நீயோ-யானோ மாற்றுதல் முடியாதென்று கருதுகிறேன். நீ விரும்பின் நான் நின்னை மணக்கத் தயார். ஆனால், நான் மீண்டும் உனக்குச் சொல்லுகிறேன்; மணத்தல் மாண்பிலாச் செயல். அதனால் நாம் அடைவது ஒன்றுமில்லை. அச்செயல் நமது இன்பத்தைத் துன்பமாக்குமே அன்றி, வேறன்று. இறக்குமளவும் நாமிருவரும் மனமொத்த நண்பராகவே நடப்போமாக. நான் எனது வாழ்க்கையில் பல மாறுதல்களைக் கண்டுள்ளேன். நீ என்னை முற்றிலும் நம்பி, யான் கூறுமாறு செய். மணமே சிறந்ததென நீ நினைப்பையாயின், கூறு: நான் உடனே உன்னை மணப்பேன் எனக் கனிவுடன் கழறினான் கட்டழகன். இருவர்க்கும் இடையே அமைதி நிலவியது. மார்ஜொரி வாய் திறந்திலள். வில் சிறிது சீற்றம்கொண்டான். அவன் மங்கையைப் பார்த்து, நீ உனது எண்ணத்தைக் கூற முடியாத அத்துணைச் செறுக்குடன் இருக்கின்றனை. நின் செயலுக்கு யான் வருந்துகிறேன்; நின்மீது இரக்கம் கொள்கிறேன். மனத்தில் உள்ளதை வெளிப்படுத்திப் பேசுவது நம் இருவர்க்கும் நலமாகும். என்னைப்போல இத்துணைத் தெளிவாக எந்த மனிதனும் தன் கருத்தை ஒரு பெண்ணினிடம் பேசியிரான். நான் கூற வேண்டியதைக் கூறி, அதனை உனது விருப்பத்திற்கு விட்டேன். நீ என்னை மணக்க விரும்புகிறாயா? அல்லது நான் நல்லதென நம்பும் எனது நட்பினை விரும்புகிறாயா? அல்லது என்னுடன் இதுவரையில் பழகியதே போதுமெனக் கருதுகிறாயா? கடவுள் பொருட்டேனும் வாய் மலர்ந்தருள்வாயாக! இவ்விஷயத்தில் பெண்ணாகிய நீ பேசுதலே முறை என உன் தந்தையார் கூறினதையும் நீ அறிவை எனக் கனிவுடன் கழறினான். அவன் கூற்றைக் கேட்ட நங்கை யாதும் நவிலாது அவ்விடம் விட்டு அகன்றாள். அவள் ஒரு வார்த்தையும் கூறாமல் அகன்றது வில்லுக்கு வியப்பையும் குழப்பத்தையும் உண்டாக்கியது. அவன் தோட்டத்தில் அடிபெயர்த்து உலவினான். ஒருகால் ஓரிடத்தில் நின்று மலையுச்சியையும் மரங்களின் வரிசையையும் காண்பான்; மற்றொருகால் உடுக்குலங்களை உற்று நோக்குவான்; பிறிதோர் அமயம் அருவியின் நீர் மடையண்டை அமர்ந்து அருவி நீரை ஆழ்ந்து நோக்குவான். அவன் தனது ஏகாந்த நிலைமைக்கு நேர் எதிராக மார்ஜொரி வந்து சேர்ந்ததை எண்ணி வருந்துவான்; மறு நிமிடம் அவள் தன்பால் கொண்ட பாசத்தை நினைந்து மகிழ்வான். இறுதியாக அவன், நான் எனது தனிமையையே பெருமிதத்துடன் விரும்புகின்றேன். எனது இயந்திரம் நிலைபெற்றுள்ளதைப் போல யான் இங்கு நிலைத்துவிட்டேன். நான் இந்நீர் மடையில் உள்ள என் அன்பிற்குகந்த மீன்களை நாடோறும் கண்டு களிக்கப் பேறு பெற்றுளேன்! இம்மலைப் பிரதேச வாழ்க்கையினையே - எனது தனிப்பட்ட வாழ்க்கை யினையே நான் பெரிதும் விரும்புகின்றேன் என்று தனக்குள் கூறி மகிழ்ந்தான். உணவுண்ணும் நேரம் உற்றது. மார்ஜொரி சிறிதும் மனத்தாங்கல் அற்றவள் போலக் காணப்பட்டாள்; உணவுண்ணு தலிலேயே கவனஞ் செலுத்தினவள்போல் தோன்றினாள்; வில்லினைக் கண்ணெடுத்துப் பார்த்திலள். அவள் தன் தந்தையைப் பார்த்து, எந்தையீர், நானும் தோழர் வில்லும் சில விஷயங்களைப் பற்றி உரையாடினோம். நாங்கள் இருவரும் தவறாகவே மணத்தைப் பற்றி எண்ணியிருந்தோம் என்பது வெளிப்பட்டது. இவர், எனது வேண்டுகோட்படி, என்னை மணப்பதை விடுத்து, என் நண்பராக இருக்கவே இசைந்தார். இம்முடிவு அமைதியான மனநிலையில் செய்யப்பெற்றதாகும்; குழப்பத்தின் காரணமாகவோ மனக்கசப்பின் காரணமாகவோ செய்யப்பட்டதன்று. இனி இவர் நமது இல்லத்துக்கு எப்பொழுது வேண்டுமாயினும் வரலாம்; பேசலாம். இவர் என்றும் நமது நண்பரே ஆவர். இவரது எதிர்கால வாழ்க்கை நன்னிலையில் இருப்பது அவசியம். ஆதலின், நாம் உடனே இவரைப் பிரிந்துபோவது நலம். இவருக்கும் அமைதி வேண்டற்பாலது என்று அமைதியாகவும் அழகாகவும் அறைந்தாள். அவள் பேசிக்கொண்டிருந்தபோதே வில் இடைமறுத்துச் சில கூற முயன்றான்; கனைத்தான்; தான் கூறிய கருத்தினைத் தன் தந்தையாரிடம் கூறாமல் அவள், தான் ஏதோ கூறி மணத்தைத் தடுத்துவிட்டதாகத் தன்மேல் பழியைப் போட்டுக்கொண்டதை மறுக்க நினைத்தான். அதனை அறிந்த அப்பெண்மணி அவனைச் சிறிது சினத்துடன் நோக்கிப் பேச ஒட்டாது தடுத்தாள்; தடுத்து, இச்செய்தியை எந்தையாரிடம் கூறும்படி என்னை விடுதலே உமக்கு அழகாகும் என்றாள். வில் வாய் திறந்திலன். அவளுடைய முகத் தோற்றமும் கடுத்த குரலும் அவனை வாய் திறக்க ஒட்டாது செய்தன. அவன், தான் உணரக்கூடாத வன்மையுடைய சக்தி ஒன்று அவளிடம் இருப்பதாக எண்ணினான். அவன் எண்ணியது முற்றிலும் சரியே. பெண்கள் இயல்பில் மென்மையர் ஆயினும் மனவுறுதியில் வன்மையர் அல்லரோ? குருவானவர் தன் மகளைத் தேற்ற முயன்றார். அவர், காதலர்க்குள் சிறு விளையாட்டுச் சண்டைகள் நடப்பது இயல்பு. ஊடல் நிகழ்தல் இயற்கை. ஆயின் அது, பொழுது மறையுமுன் மறைவதும் இயல்பு. நீங்கள் இருவரும் இன்பமாக ஒரு மனப்பட்டு வாழ்தலையே யான் விரும்புகிறேன் என்று உள்ளன்போடு உரைத்தார். ஆனால், வன்மனங்கொண்ட வனிதை தன் மனவுறுதியால்-பெண் தன்மைக்கு இயைந்த இனியமொழிகளால் தன் தந்தையாரைத் தன் மனப்படி நடக்கச் செய்தாள். அதன் பயனாக, அவ்விருவரும் அன்று மாலையே வில்லினிடம் விடைபெற்று மலையடிவாரம் சென்று விட்டனர். தன் அகத்தும் புறத்தும் இருந்து இன்பம் ஈந்துவந்த பெண்ணரசி திடீரென மறைந்ததும் வில் சொல்லொணாச் சோர்வு கொண்டான். அவன் மனம் மகிழ்ச்சி அற்றது. தனது தனிமை தாங்கொணா வெறுப்பளித்தது. இயற்கைப் பொருள்கள் அவற்கு இன்பமூட்டுதல் உண்மையாயினும், அவை அந்நிலையில் இன்பமூட்டலில் தவறின. என்னை? அவன் மனநிலையன்றோ இன்பத்துக்குக் காரணம்! அகத்தில் இன்பம் அற்றவனுக்குப் புறத்தில் இன்பம் தோன்றுதல் இல்லை அன்றோ? இன்பமும் துன்பந் தானும் உள்ளத்தோ டியைந்த வன்றே! என்பது கம்பர் அநுபவமொழி அன்றோ? அவன் மார்ஜொரியை அவளது நடத்தைக்காக வெறுத்தான். ஆனால் அதே அமயம் அவளது பேரழகினையும் களங்கமற்ற பேச்சினையும் பாராட்டி மகிழ்ந்தான். தனிநிலை இன்பத்தை நுகர்ந்துவரும் தனக்கேற்ற துணை அவள் இல்லை என்பது அவன் கருத்து. இருளில் இருப்பவன் வெளிச்சத்தை விரும்பினும் இருளில் இருந்த பழக்க மிகுதியால் வெளிச்சத்தை வெறுக்கும் ஒருவன் நிலையில் அவன் இருந்தான் எனல் மிகையாகாது. தனியனாய் இன்ப வாழ்க்கையை நடத்திவந்த அவன், மார்ஜொரியின் கூட்டுறவை வெறுத்தான்; அவளால் தனது தனிமைக்குக் கேடுவரும்-ஏகாந்த சுகத்துக்கு இன்னல் நேரும் என்றெண்ணியே அவனை மணக்க மறுத்தான். நாட்கள் செல்லச் செல்ல வில்லின் மனநிலை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு அடிக்கடி மாறிவந்தது. அவன் ஒருகால் மணம் மறுத்த தன் மணத்துணிவைப் போற்றுவான்; ஒருகால் மார்ஜொரியை இழக்க நேர்ந்த தன் ஆத்திர புத்தியைத் தூற்றுவான். இவை இரண்டனுள் முன்னர்க் கூறப்பெற்றதே அவனது உள்ளத்தில் ஊன்றியதொன்று என்னலாம். இரண்டாவது எண்ணம் தோன்றும்பொழுது அவன் மன அமைதி அற்றவன் போல எழுந்து, வீட்டில் கீழ்நோக்கி நடமாடுவான்; அப்பொழுது அவன் முகம் கறுத்துத் தோன்றுவதுண்டு. அவன் நரகத்தில் உள்ளானோ என்று நினைக்க வேண்டியிருந்தது. மன அமைதியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த வில்லினுக்கு இது பொறுக்க இயலாத துன்ப நிலையாக இருந்தது. அவன், இத்துன்ப நிலையை எப்படியேனும் ஒரு முடிவுக்குக் கொணர முனைந்தான்; முனைந்து ஒருநாள் மாலை மலை அடிவாரம் நோக்கி விரைவாக நடந்தான். அப்போது பழைய அமைதி நிலை அவனது அகத்தை அடைந்தது. அவன் விழி குளிர இயற்கைக் காட்சிகளைக் கண்டான்; நற்காற்று மணத்தோடு யாண்டும் வீசிக்கொண் டிருந்தது. மார்ஜொரியைத் தரிசிக்க வேண்டுமென்னும் உறுதியான எண்ணத்தோடு வில் விரைந்து சென்றான். அவள் தன்னை வரவேற்பளாயின் இம்முறை அவளை மணந்து கொள்ளவே மனங்கொண்டான்; மணந்து, துன்புற்ற தன் மனநிலையை இன்புறச் செய்ய எண்ணினான். அவள் மணக்க ஒருப்படாளாயின், தான் தன்னால் இயன்றளவு முயன்றும் முடியாமற் போனதை எண்ணி மன அமைதி கொள்வதாகத் துணிந்தான். இம்முறை அவள் தன்னை வரவேற்பாள் என்று அவன் நினைத்திலன். அவன் அவள் இல்லம் செல்லவும் நாணினான். ஆயினும், மனந்துணிந்து அவள் இல்லிற் புக்கான்; அழகே உருவெடுத்தாற் போன்று அச்சிறுகுடிலை அழகு செய்துகொண்டிருந்த மார்ஜொரி முகமலர்ச்சியுடன் வில்லை வரவேற்றாள். வில், நான் எப்பொழுதும் நமது மணத்தைப் பற்றியே நினைக்கவேண்டியவனாக ஆய்விட்டேன் என்று பேசத்தொடங்கினான். அவள், ஆம். நானும் அப்படியே. நான் உமது மதிநுட்பத்தை நினைந்து மகிழ்கின்றேன். நான் என்னை அறிந்திருப்பதைவிட நீர் என்னை நன்கறிந்துள்ளீர்; யாவும் நமது நன்மைக்கே நடைபெற்றன என்பதை இப்பொழுது யான் நன்கு உணர்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் வாய்மலர்ந்தாள். ஆனால், அதே அமயத்தில். . . . . என்று வில் பேச முயன்றதும், வனிதை இடை மறுத்து, நீர் சிறிது துன்பப் பட்டிருக்கலாம். ஓர் ஆசனத்தில் அமரும்; நல்ல பானம் கொண்டுவருவேன். இம்மாலைப்போது சிறிது உஷ்ணமாக உள்ளது. நீர் எனது இல்லத்திற்கு இசைந்து வந்தது உமக்கு மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும் என்பது எனது பெரு விருப்பம். நீர் அடிக்கடி-குறைந்தது வாரத்துக்கு ஒரு முறையேனும் இங்கு வருதல் வேண்டும்; என் நண்பர்களை அவ்வப்போது சந்திக்க நான் பெரிதும் விழைகின்றேன் என்று கூறிக்கொண்டே அவனுக்குகந்த பானம் ஒன்றைத் தந்து பருகச் செய்தாள்; அவள் கரத்தால் ஈந்த பானம் அவனது உடைந்த மனத்தை ஒன்று படுத்திற்று என்பதில் ஐயமுண்டோ? அவன் அவ்வமயம் அடைந்த அளவிலா மகிழ்ச்சியை அளவிட் டுரைக்கத்தான் படுமோ? இருவரும் நெடுநேரம் பேசிக்கொண் டிருந்து மகிழ்ச்சியுடன் பிரிந்தனர். மேற்கூறப் பெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் மூன்றாண்டுகள் கழிந்தன. அம்மூன்றாண்டுகளிலும் வில் பன்முறை மார் ஜொரி ணயக் கண்டு பேசியதுண்டு; ஆனால் மணம், காதல் என்னும் சொற்கள் இருவரிடத்திலிருந்தும் வெளி வந்தில. இருவரும் உயிர் நண்பரைப் போலவே உறவாடினர். வில் ஒரு வாரத்தில் இரு முறையும் அவள் இல்லம் போதல் உண்டு. அவளைக் காணவேண்டுமென்னும் வேட்கை மீதூர அவன் சிறிது தூரம் சென்று, பார்த்துவிட்டதாக எண்ணி மீள்தலும் உண்டு. மூன்றாண்டுகட்குப் பின்னர் மார்ஜொரி வேறு ஒருவரை மணந்து கொண்டதாக வில் கேள்வியுற்றான். ஆ! அவன் மனம் அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள்; ஆயினும், அவளது மணத்தைப் பண்டே மறுத்த தன் மதி நுட்பத்தை நினைந்து மகிழ்ந்தான் வில். எனினும், அவளது நினைவு மேன்மேலும் தோன்றத் தோன்ற உள்ளம் உடைந்தான்; உடலும் கரைந்தது. அவன் வெளியே மகிழ்ச்சியுடையவன் போலக் காணப்படினும் அகத்துள் மகிழ்ச்சி அற்றவனே என்பதில் ஐயம் இல்லை. அவனது உடல் இளைப்புறுதலைக் கண்டு வேலையாட்கள் கவலையுற்றனர். மார்ஜொரியினது மணம் நடைபெற்று ஒராண்டு ஆனது. அதன்பின் ஒருநாள் இரவு நடுநிசியில் குதிரை வீரன் ஒருவன் வில்லின் வீட்டுக் கதவினைத் தட்டினான்; `வில்லை நேரிற்கண்டு மார்ஜொரி மரணத் தறுவாயில் உள்ளதாகவும் அவனை உடனே கண்டு பேச விழைவதாகவும் கூறினான். வில் மனம் அப்போதிருந்த நிலைமையை அறையப்படுமோ? அவன் அந்நள்ளிருளில் காற்றாய்ப் பறந்தான்; மார்ஜொரியின் பக்கலை அடைந்தான். இருவரும்-கனிந்த காதலர் இருவரும் சிறிதுநேரம் இரகசியமாகப் பேசிக்கொண்டனர். பேச்சும் முடிந்தது; கருங்குழற் பேதையின் மூச்சும் முடிந்தது. வில் வாய்விட்டுக் கதறினான். 14.அரிய சொற்பொழிவுகள்* அறிவிலும், ஆற்றலிலும், அநுபவத்திலும், இராசதந்திரத்திலும், குடிகளை ஆளுந்திறத்திலும் மிக்கவரும் மஹா வீரருமாகிய முசோலினி, பல விஷயங்களைப் பற்றிப் பல சந்தர்ப்பங்களிற் கூறியுள்ளார். அவை நமக்கு நல்லறிவைக் கொளுத்திப் பல அரிய நுட்பமான விஷயங்களை அறிவிப்பனவாக உள்ளன. எனவே, அவை பின்னே குறிக்கப்படுகின்றன: நாம் நேற்றிருந்த நிலையைவிட இன்று மேலான நிலையில் உள்ளோம். நாம் இனி இட்டாலியர் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட வேண்டுவதில்லை; அதற்குமாறாகப் பெருமையோடு தலை நிமிர்ந்து இட்டாலியர் என்று கூறிக்கொள்ளலாம். நாம் மூவாயிரம் ஆண்டுகளாக நாகரிகத்திற் சிறந்து விளங்கும் ரோமராச்சியத்துக் குடிகள். நமது இராச்சியம் நாகரிக முகட்டை அடைந்திருந்தபோது ஏனைய சமூகங்கள் பிறந்திருக்கவில்லை என்பதை நீங்கள் அறிதல் வேண்டும். நமது நாடும், நமது சமூகமும் இன்று ஒழுங்கான முறையில் இருக்கின்றன; விரைவாக முன்னேறி வருகின்றன. நாம் வாழ்க்கையை ஒரு போர்க்களமாக மாற்றி இருக்கிறோம். வாழ்க்கையை வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமாயின், நாம், வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை எதிர்த்துப் போராடுதல் வேண்டும். அதற்கும் நாம் சித்தமாக இருக்கின்றோம். நம் கொள்கைகள் நம்மை அறை கூவி அழைக்கும் போதும் தேச சரித்திரத்தின் பெரிய மணி அடிக்கும் போதும் நாம் உயிர் விடவும் தயாராயிருக்கின்றோம். இக்காலத்தில் இருந்துவருகின்ற நாம் இன்னும் பத்து வருடங்கட்குள் நமது நாட்டில் உடல் அளவிலும் ஆன்ம அளவிலும் அடையாளங் கண்டுகொள்ள இயலாதவாறு அற்புதச் சீர்திருத்தங்கள் செய்தல் வேண்டும். ஏன்? அது நமது கடமை. இன்னும் பத்தாண்டுகட்குள் இட்டாலி அடியோடு மாறுதல் அடைந்துவிடும். நாம், பசிய வயல்களை மேலும் பசிய வயல்களாகவும், துறைமுகங்களை மேலும் உயர்ந்த துறைமுகங்களாகவும், படையை ஒழுங்கும் வீரமும் பொருந்திய படையாகவும் மாற்றுதல் வேண்டும். மேலும், நாம் இட்டாலியனையே அடியோடு மாற்றுதல் வேண்டும்;ஆனால் நேற்றிருந்த இட்டாலியனைப் போல அன்று. இப்போதைய இட்டாலியன், நாட்டு முன்னேற்றத்துக்கு முக மலர்ச்சியோடு உயிர்விடத் துணிந்துளான். அவன் ஸீஸர் காலத்து இட்டாலியனாக இலங்குகின்றான். இப்பொழுது நாம் படிப்பித்து வரும் எதிர்கால இட்டாலிய வீரர்கள், நம்மினும் மேலான நாட்டுப் பற்றோடு விளங்குவார்கள். ஏன்? நாம் இப்பொழுதே அவர்கட்கு நாட்டுப் பற்றை உண்டாக்கி வருவதாற்றான். சகோதரர்களே, நமது தாய்நாட்டைப் பொன் மயமான இட்டாலியாக்க நாம் பாடுபடுகின்றோம்; நாம் அதனைப் பொன்மயமாக்குதல் வேண்டும் என வீண் வார்த்தைகள் பேசவில்லை. நாம் நினைக்கின்ற ஒவ்வொன்றையும் செய்கையிற் காட்டி வருகின்றோம். இதுவே வேண்டற்பாலது. இதுவே இன்றைய இட்டாலியனுக்கும் நேற்றைய இட்டாலி யனுக்கும் இருக்கின்ற வேறுபாடு. எனினும், சதோதரர்களே, நாம் யாவும் செய்துவிட்டதாக எண்ண வேண்டா. இப்பொழுதுதான் வேலை ஆரம்பிக்கப்பட்டது. மேலும், இது தொடர்ந்து நடைபெறுதல் வேண்டும். நமது அரசியல் அசைக்க முடியாததென்பதை நாம் நன்கறிவோம். அதனை அசைக்கக் கூடும் என்று எண்ணுபவனைச் சென்ற நூற்றாண்டு மனிதன் என்றே கூறுவேன். இனி அவன் நமது போக்கைத் தடை செய்தல் இயலாது. நாம் முன்னேறிச் செல்வோம்; வெற்றி பெறுவோம். இட்டாலியின் நன்மைக்கென ஆயிரக் கணக்கான நம் பாஸிடு வீரர்கள் தங்கள் உயிரை மாய்த்திருக்கையில், நமது இயக்கம் அழிந்துவிடுமா? ஒரு நாளும் அழியாது. நாம் அழிவோம். ஆனால், பாஸிடு இயக்கம் அழியாது! அழியாது!! அஃது உலகம் முழுவதும் பரவினும், பரவும்; ஆனால், அழிவுறாது. தேச சரித்திரம் ஆண்மை உள்ளவனுக்கு உரித்தே அன்றிப் பயந்தவனுக்கன்று. அது வேலை செய்பவனுக்கு உரிமையானது; ஆனால் சோம்பேறிக்கன்று. அதனைக் கைப்பற்றித் தன் இஷ்டப்படி வளைப்பவனுக்கே அஃது உரிமையானது. இதுவே பாஸிடு இயக்கத்தின் கொள்கை. நம் கண்கள் மகிழ்ச்சியோடு நாளை வேலையைக் கூர்ந்து நோக்கும். இட்டாலிய மக்களே, நான் உங்களை என்றும் மேலான நிலைக்கு அழைத்தேகுவேன். நீங்கள் இதனை முற்றிலும் நம்புங்கள். கறுப்புச் சட்டை வீரர்கள் இரத்தத்தைச் சிந்தியதால், ஆல்ப் மலைத் தொடரிலிருந்து சிஸிலி வரையில், ஒரே நாடு-ஒரே சமூகம் என்னும் உணர்ச்சி இட்டாலியரிடையே ஏற்பட்டது; ஒற்றுமை, ஒழுங்கு, ஒழுக்கம் ஏற்பட்டன. இவையே நமது நாட்டை மேனிலைக்குக் கொண்டு வருவன. ஒழுங்குடன் இருத்தலில் விருப்பம், அழகிலும் வலிமையிலும் ஆர்வம், பொறுப்புள்ள வேலைகளை மேற்கொள்ளும் வீரம், உண்மையில் அவா, மக்களிடம் அன்பு, நாட்டினிடம் பற்று ஆகிய இவையே பாஸிடு இயக்கத்தின் இலட்சியங்கள் ஆகும். இவையே எந்த நாட்டையும் மேனிலைக்கு கொண்டுவருவன. எவன் தன் கொள்கையை நிரூபிக்கத் தன் உயிரையும் இழக்கத் தயாராயுள்ளானோ, அவனே உண்மை வீரன். தேச சரித்திரத்தைத் தன் விருப்பம் போலத் திருப்பி அமைத்தல் அவனால் இயலும். அயல் நாட்டான் ஒருவன் நமது நாட்டை ஆராய்ந்து பார்த்துப் பின்வருமாறு எழுதியுள்ளான்: இட்டாலியில் இலட்சக்கணக்கான மக்கள் கடலிலும் வானிலும் தரையிலும் கலாசாலைகளிலும் கோயில்களிலும் தொழிற்சாலைகளிலும் இட்டாலியையே அடியோடு மாற்ற அமைதியாக வேலை செய்து வருகின்றார்கள்; மிகப் பழமையான தங்கள் நாகரிகத்தைப் புதுப்பித்து வருகின்றார்கள். அவர்களது முற்போக்கான வேலையின் ஒலி வெகு தூரத்தில் படையெடுத்து வரும் வீரர்களின் காலடிச் சத்தம் போலக் கேட்கின்றது. சகோதரர்களே, இதனால் நீங்கள் மகிழ்ந்துவிட வேண்டா. நீங்கள் உங்கள் வேலைத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்துங்கள். பிறர் புகழ்தலைக் கேட்டுத் தலை நிமிர்த்த வேண்டா. வேலை நடைபெறட்டும். சமூகமே நாட்டு மக்களை நல்வழிப்படுத்துவது; அவர்கள் கடமையை எடுத்துக் கூறுவது; அவர்களிடையே ஒற்றுமையைப் பரப்புவது; நியாயத்தில் அவர்களின் உரிமைகளை அறிவிப்பது; கலையிலும், சட்டத்திலும், பிறவற்றிலும் சிந்தனையை வலுப்படுத்துவது. இத்தகைய சமூகம் உண்மையான பொருளில் மதிக்கப்படாதாயின், நாசமடையும். நாடு குழப்பத்தையும் அழிவையுமே தரிசிக்கும். சட்டங்கள் என்றும் நிலைத்திருப்பன என்றெண்ணுதல் தவறு. எல்லா அமைப்புகளும் அங்ஙனமே. மாந்தர் பாரம்பரை யினராக ஒரேவிதச் சட்டங்கட்கு அடிமைப்பட்டிருத்தல் வேண்டுமென்று எண்ணுதல் பெருந்தவறு. நிரந்தரமான சட்டம் ஒன்றுமில்லை; தெய்வத் தன்மை வாய்ந்த சட்டமும் ஒன்றில்லை. எல்லாம் மனிதன் செய்தவையே. ஆதலின், அவை கால-தேச- வர்த்தமானங்கட்கு ஏற்றவாறு மாற்றப்படலாம். முன்னைய அரசாங்கங்கட்கும் இன்றைய நமது பாஸிடு அரசாங்கத்துக்கும் உள்ள சிறந்த வேறுபாடு யாது? முன்னவை மக்கட்கு வேண்டியவற்றைக் காகித ஏடுகளில் முடிவு கட்டி இருந்தன; பின்னது அவற்றை வாழ்க்கையிற் புகுத்திவிட்டது. இவ்விருவித அரசாங்கங்களுள் எது சிறப்புடையது? நாம் பொதுப்பணத்தை யாவற்றிலும் மேலாகக் கருதுதல் வேண்டும். அது மழையைப் போல வானத்தினின்று இறங்குவதன்று; இயந்திரத்தைச் சுற்றுவதனால் வருவதுமன்று. அப்பணம் வெயிலில் மண்டை வெடிக்கவும் கால்கள் கொப்புளிக்கவும் நின்று வயல்களில் வேலைபுரியும் உழவர் களுடையது; இரத்த வியர்வை சொட்டச் சொட்டக் காற்றில்லாத் தொழிற்சாலைகளில் வேலை புரியும் ஏழைத் தொழிலாளருடையது. நாம் ஒவ்வொர் இட்டாலியச் சிறிய நாணயத்தையும் மேலானதாகக் கருதுதல் வேண்டும்; அதனை அவசியமான விஷயங்கட்கே செலவழித்தல் வேண்டும். இன்று ஒவ்வோர் இட்டாலியனும் தன்னாலேதான் நாடு மேனிலையை அடைந்து வருகிறது என்று எண்ணிக் கடுமையாக வேலை செய்து வருகின்றான். அதுவே நான் வேண்டியது; வேண்டுகிறது;இனியும் வேண்டுவது. பல துளி பெருவெள்ளம் ஆவதுபோல, எல்லா இட்டாலியரும் சேர்ந்து இட்டாலியச் சமூகம் என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர். ஒவ்வொருவரும் உயர்ந்தால், சமூகம் உயரும். சமூகம் உயர்ந்தால், நாடு உயரும். அனைவரும் ஒருமனப்பட்டு வேலை செய்யின், நாடு உயருமே அன்றித் தனிப்பட்டவனால் ஒரு நாளும் உயராது. நாம் இட்டாலிய மக்களை மனத்தூய்மையோடு காத்து வருகின்றோம். நாம் சுயநலத்தாலும் மூடக் கொள்கைகளாலும் எக்காரியத்தையும் செய்வதில்லை; மக்களின் தலைவர்களாக நம்மைக் கருதவும் இல்லை. நாம் அவர்களின் பொறுப்பை அறிவுறுத்தும் ஆசிரியராகவே இருந்து வருகின்றோம். அவர்கள் செவ்விய வாழ்வு நடத்தல் வேண்டுமென்பதே நம் பேரவா. உள்நாட்டுக் குழப்பங்களையும் பெருநஷ்டத்தையும் உண்டாக்கின அரசாங்கங்களையும் கட்சிகளையும் நாம் புதைத்துவிட்டோம்; அவை புதைத்த இடத்தே எழுப்பிய சமாதியின்மீது பாஸிடு கொள்கைகளைப் பொறித்துள்ளோம். அதனால், இவ்வியக்கம் என்றும் அழிவுறாது. இஃது இட்டாலியரை மேனிலைக்குக் கொண்டு வந்துகொண்டு இருக்கின்றது. நாம் இந்த நான்கு ஆண்டுகட்குள் நமது சமூகத்துக்குப் படை ஒன்றை உதவியுள்ளோம். ஆனால், அதைப் பற்றி நீங்கள் பெருமையாகக் கருத வேண்டா. உங்கள் உதவியும் உழைப்பும் இன்றி அது யாது செய்ய இயலும்? உங்கள் பேராதரவு இருப்பின், நமது நாட்டுப் படை நாட்டின் உயிர் நாடியாக விளங்கும். நாம் முதலாளிகட்கும் தொழிலாளிகட்கும் சமமான உரிமைகளையும் கடமைகளையும் அளித்துள்ளோம். இச்சம நிலை இல்லாததாலேதான் உலகில் உள்ள வல்லரசுகள் ஆட்டங்கொண்டிருக்கின்றன; நிலைமையைச் சீர்படுத்த முடியாது தத்தளிக்கின்றன. ஆனால், நாமோ, இட்டாலியிற் புதிய சகாப்தத்தை உண்டாக்கி இருப்பதால், இவ்வதிசய மாறுதலைச் செய்திருக்கின்றோம். எத்தகைய மகத்தான காரியத்தையும் செய்ய ஒருமைப்பட்ட மனமே அவசிய மானது. அம்மனம் நம்மிடத்தே இருத்தலால், நாம் ஒவ்வொரு காரியத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று வருகின்றோம். ஒழுக்கத்தின் விழுப்பத்தால், சுறுசுறுப்பு, வீரம், குதூகலம் முதலியன உண்டாகின்றன. இட்டாலியர் ஒழுக்கத்தோடிருப்பதால், இத்தகைய உயர் குணங்களைப் பெற்றுள்ளனர். இக்குணங்கள் மேலும் நிலை பெற்றிருக்க, வீரர்களே, நீங்கள் உங்கள் உதிரத்தையும் உயிரையும் இழக்கவும் தயாராக இருத்தல் வேண்டும். நீங்கள் சமூகத்தினிடமிருந்து தோன்றுகிறீர்கள்: சமூகத்தினிடமே முடிகிறீர்கள். அத்தகைய சமூகம் செல்வப் பெருக்குடையதாகவும் செழிப்புள்ளதாகவும் வன்மை யுள்ளதாகவும் இருப்பின், அதன் நன்னிலை மேலும் அபிவிருத்தி அடையும். அத்தகைய அபிவிருத்தி உங்களுடையதே அன்றோ? அங்ஙனமே, சமூகம் சீர்குலைந்து வறுமை மிகுந்து ஒற்றுமையற்று இருப்பின், அதன் நிலை மேலும் சீர்குன்றிப் போகும். அத்தகைய சீர் கேடும் உங்களுடையதே அன்றோ? இஃது ஓர் அசைக்க முடியாத சட்டமாகும். இஃது எல்லா நாடுகளிலும் எல்லாச் சமயங்களிலும் பொதுவானது. தொழிலாளிகளே, உங்கள் தொழில், வாழ்க்கையில் மிக உயர்ந்தது; பெருந்தன்மை வாய்ந்தது; சிறந்த மத சம்பந்தமானது. நீங்கள் வாழ்கையையும் ஆன்மாவையும் தேச சரித்திரத்தையும் விட்டு விலகியிருத்தல் இயலாதென்பதை அறியுங்கள். நீங்கள் அங்ஙனம் விலகி இருக்க எண்ணுதல் உங்கள் தாயைப் பிரிந்திருக்க எண்ணுதலை ஒக்கும். விலகி இருத்தலை நீங்கள் விரும்பினும், விரும்பாவிடினும், நாம் அனைவரும் இட்டாலியர் என்பதையும் இட்டாலி நம்மைப் புன்முறுவலோடு நோக்கி நிற்பதையும் உணருங்கள்; நமது பழம்பெருமையை இப்புதிய சகாப்தத்தில் நிலைநாட்டுங்கள். உங்கள் தொழில்களால் -உங்கள்உழைப்பால்-உங்கள் பெருமுயற்சியால் இட்டாலி, ஐரோப்பிய நாடுகளில் தலை சிறது விளங்குதல் வேண்டும். இப்புதிய இட்டாலியின்பொருட்டு நீங்கள் அமைதியான தொழிலாளிகளாக வேலை செய்யும்படி வேண்டிக்கொள்ளு கிறேன். ஒவ்வொருவரது முயற்சியும் நாட்டு நிலையை உயர்த்துவதாகும். நான் ஒரு தொழிலாளரின் மகன்; உண்மைத் தேச பக்தரின் மகன். நான் உங்களை நல்வார்த்தைகள் கூறி ஏமாற்றுபவன் அல்லேன். நான் கடுமையான ஒழுங்கோடு நடப்பவன்; உங்களையும் அங்ஙனமே நடத்துபவன்; உயிர் நண்பர்களையும் கொடிய விரோதிகளையும் ஒழுங்கோடு நடத்துபவன்; ஒழுக்கங்கெட்ட உயிர் நண்பனைவிட ஒழுங்கோடு நடக்கும் கொடிய பகைவனை யான் மனமார வரவேற்பவன். சுருங்கக் கூறின், இட்டாலிய நாடே எனது உயிர்; நான் பிறந்து வளர்ந்த தொட்டில்; என் இன்பப் பூங்கா. அதன் நன்மையே எனது நன்மை. அதன் முன்னேற்றத்துக்குப் பாடுபடுபவன் என் கொடிய விரோதியாயினும் என் உண்மைச் சகோதரனே. அவனே என் உயிர்த்துணைவன். நான்கு கோடி மக்களாகிய நாம் இக்குறுகியஆனால், மிகவும் அழகியதீபகற்பத்தில் வசித்து வருகின்றோம். இதில் மலைகளோ மிக்கிருக்கின்றன. அதனால், நாம் வசிக்கின்ற இடம் சிறியதாயுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள நாடுகளிலோவெனின், போதுமான ஜனத் தொகை இல்லை. நான்கு கோடி மக்கள் இச்சிறியதொரு தீபகற்பத்தில் இருப்பது வியக்கத்தக்கதே. இனி ஜனப் பெருக்கம் அவசியம் ஏற்படும். அப்பொழுது நாம் நமது நாட்டை விரிவுபடுத்த வேண்டி வரும்; நமது உயிரைத் துறந்தேனும், நாட்டை விரிவுபடுத்தியே ஆகல் வேண்டும். விரிவு என்னும் சொல் சிறப்பாக நாட்டு விரிவைக் குறிப்பதாயினும், பொதுவாக ஒழுக்கம், ஒற்றுமை, ஒழுங்கு இவற்றையும் குறிக்கின்றது. நாம் ஒவ்வொரு துறையிலும் விரிவடைந்தே யாகல் வேண்டும். நமது அரசாங்கம், இட்டாலியர் அயல் நாடுகளில் குடி புகுதலை அளவுப்படுத்தியுள்ளது. வெளிநாடு போகும் இட்டாலியர் ஒவ்வொருவரும் நம் சகோதரர் அல்லவா? ஆதலின், அவர் எங்கு செல்லினும், அவரது நன்மை - தீமைகள் நம்மவையே ஆகும். அவர் அரசாங்கத்தால் வெகு கவனத்தோடு பாதுகாக்கப்படுவார் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். நாட்டுப் பற்றும் இடைவிடா உழைப்பும் சலியா ஊக்கமும் மிகுந்த வீரமும் உடைய இட்டாலியச் சமூகத்தைக் கண்டு பிற வல்லரசுகள் பொறாமை கொள்கின்றன. அதனால், நாம் இடம் போதாது நாட்டை விரிவுபடுத்த முனைவோமாயின், பெரும்போர் நிகழ்வது நிச்சயம். எனினும், அதனை யான் மனமுவந்து வரவேற்கின்றேன். ஏன்? நமது நாடு எவ்விதத்தும் விரிவடைந்தே ஆகல் வேண்டும். வேறு வழி இல்லை. ஒன்று நாட்டை விரிவாக்கி நாம் வாழ்தல் வேண்டும்; இன்றேல், போர் முனையில் ரோம வீரத்தை விளக்கமுறச் செய்து மகிழ்ச்சியோடு மடிதல் வேண்டும். இரண்டில் ஒன்று விரைவிற் செய்தே ஆகல் வேண்டும். தெய்வங்கட்கு உகந்த இடமாகப் புலவர்கள் வருணிக்கின்ற இவ்விட்டாலி, உண்மையில் தெய்வீகத்தன்மை வாய்ந்ததே. அடைதற்கரிய நாகரிகத்தை உலகத்துக்குக் காட்டி நின்ற ரோம இராச்சியச் சிறப்பியல்புகள் நமது ஆட்சியில் புத்துயிர் பெறுகின்றன. அவை என்றும் அழியா. உலகம் அநாகரிக இருளில் ஆழ்ந்திருந்த காலை, இட்டாலி, பழுத்த நாகரிகத்தில் பெருமையுற்றிருந்தது. அத்தகைய இட்டாலி எவ்விதத்தும் விரிவடைந்தே தீரவேண்டும்; இட்டாலியச் சமூகமும் பெருகி வளர்தல் வேண்டும். பாஸிடு இட்டாலி ஒருபோதும் போரை விரும்பாது; ஆனால், வந்த போரையும் விடாது. நாம் உடன்படிக்கைகளை அவ்வப்போது புதுப்பித்து வருதலே நாம் போரை விரும்பவில்லை என்பதை நிரூபிக்கின்றது. போர் எனின், எத்தனை அரிய இட்டாலியச் சகோதரர்கள் உயிர் விட நேரிடும்! எவ்வளவு பணம் செலவாகும்! எவ்வளவு துன்பம் ஏற்படும்! எத்தனை குடும்பங்கள் ஆடவர் இன்றித் தவிக்கும்! போருக்குச் செலவழிக்கும் பணத்தை இட்டாலிய முற்போக்குக்குச் செலவழிப்பின், அம்முயற்சி எத்துனை நன்மை பயக்கும்! ஆனால், `போர் வேண்டா, என்று கூறிக் கொண்டிருக்கும் சர்வதேச சங்கம், `சில நாடுகள் ஆயுதங்களை வைத்துக்கொள்ளலாம்; சில வைத்துக் கொள்ளலாகாது என்று கூறுதல் எத்துணை அறிவீனம் ஆகும்? ஆயுதந் தாங்கியுள்ள நாடுகள் ஆயுதமற்ற நாடுகளை எதிர்க்காது, என்று எவரேனும் உறுதி கூற இயலுமா? இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டு, ஐரோப்பா 1950-ஆம் ஆண்டுக்குள் மிக்க அல்லற்படும். ஆனால், இட்டாலி அமைதியாக இருந்து, தனது முன்னேற்ற வேலைகளைக் கவனித்துக்கொண்டிருக்கும். அவ் வாண்டுக்குள் இட்டாலி பூலோக சுவர்க்கமாக விளங்கும்; கிழக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகள் தன்னைத் தரிசித்துச் செல்லும் சிறந்த நிலையில் இட்டாலி இலங்கும். இட்டாலிய இளைஞர்களே, வாழ்க்கையின் மலர்ச்சி யோடுள்ள நீங்களே நாட்டுச் செல்வர்கள்; இட்டாலியத் தாயீன்ற இன்பப் புதல்வர்கள். நாளை வரப்போகும் படையைவிட நீங்களே சிறந்த படை வீரர்கள். இந்நிமிட முதல் உங்கள் முழுக் கவனமும் இட்டாலியின் முன்னேற்றத்தில் முனைந்திருத்தல் வேண்டும். முயற்சி இன்றி,போர் இன்றிதேச சரித்திரத்தில் எவனும் இடம் பெறல் இயலாது; தேச சரித்திரமும் அமையாது. உங்களுக்கு முன் மகத்தான வேலைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை உற்று நோக்குங்கள். நீங்கள் அவற்றை விருப்புடனும் ஒழுங்குடனும் செய்து முடித்தல் வேண்டும். உங்கள் வேலைகள் முற்றுப் பெருமாயின், நமது தாய் நாடு, ஆ! காணத்தக்க ஒரு காட்சியாக இலங்கும்! நாம் அனைவரும், ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கிக் கட்டடம் கட்டுவதைப் போல, ஒவ்வொரு சீர்திருத்தமும் விடாமற் செய்து நவீன இட்டாலியைக் கட்டி வருகின்றோம் என்பதை நீங்கள் உங்கள் நினைவில் இருத்துதல் வேண்டும். “என் அரிய இளைஞர்களே, நாளை உங்கள் கடமைகளை மறவாதீர்கள்; அவற்றை மன மகிழ்ச்சியோடு செய்யுங்கள்; ‘இன்னும் வேலையுளதா? என்று கேளுங்கள். உங்கள் கடமைகளை நீங்கள் செய்து முடித்தல் வேண்டும். நவீன இட்டாலியின் முற்போக்குக்கிணங்க, நீங்களும் நவீன இளைஞர்களாக உங்களை மாற்றிக்கொள்ளுதல் வேண்டும். நவீன இளைஞர் யாவர்? கடமை, ஒழுங்கு, ஆர்வம், வாழ்க்கையில் இன்பம், இராச பக்தி, உண்மை, வீரம் இவற்றை அணிகலன்களாக உடையரே நவீன இளைஞர் ஆவர். சர்வகலாசாலை இளைஞர்களே, இட்டாலிய நாட்டு இளஞ்சிங்கங்களே, ரோம ராச்சியத்தைப் பரப்பிய ஆயிரக் கணக்கான வீரர்கள் சர்வகலாசாலை இளைஞர்களே. பாஸிடு இட்டாலியைச் சமீபத்தில் நிலை நாட்டியவர்களும் அம்முயற்சியிற் புன்முறுவலோடு இறந்துபட்ட வீரர்களும் சர்வகலாசாலை இளைஞர்களே. சர்வகலாசாலை இளைஞர் களே இட்டாலியின் நவீன உயிர்நாடியாக இருப்பவர்கள். உங்கள்மீதே நாட்டுப் பொறுப்பு சுமத்தப் பட்டுள்ளது. நாட்டை இந்நிலைக்குக் கொண்டுவந்தவர்கள் உங்கள் தோழர்களே. இப்பொழுது நாட்டை மேனிலைக்குக் கொண்டுவரக் கடமைப் பட்டவர்கள் நீங்களே. நேற்றைய தேசசரித்திரத்தையும் இன்றைய சரித்திரத்தையும் அறிந்துள்ள நீங்கள் நாளைய சரித்திரத்தைப் பொன்னெழுத்துக்களாற் பொறியுங்கள். உங்கள் வீரச்செயல்களால் இட்டாலிய தேச சரித்திரத்திற் பொற்காலத்தை* ஏற்படுத்துங்கள். நீங்கள் உள்ளவரையிலும், சர்வகலாசாலைகள் உள்ளவரையிலும் நமது சமூகம் இறவாது! இறவாது!! நமது சமூகம் அடிமையாவதும் இயலாது! இயலாது!! நாளை உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ போர் எழுமாயின், நீங்கள் சர்வகலாசாலைகளைக் காவி செய்துவிட்டுப் போர்க்களத்தில் முன்னணியில் மனமுவந்து நிற்பீர்கள் என்பதை நான் நன்கறிவேன். இளமை மிக்க அழகு வாய்ந்தது. அது, விஷயங்களை நன்கறியும் பேராற்றல் பெற்றது; உலகின் இயலை உள்ளவாறு அறிவது. அது பயமற்ற மனத்தை உடையது; இறப்பை மதியாதது. இத்தகைய வியத்தகு இளமை வாய்ந்த இட்டாலியர்களே, ஒளி ததும்பும் எதிர்கால நிலையில் இட்டாலி உயர்வதை நோக்குங்கள். இவ்விருபதாம் நூற்றாண்டு, ரோமாபுரியையும் அதனைத் தலைநகராகக் கொண்ட நமது தாய்நாட்டையும் ஆர்வத்தோடு கண் இமைக்காது நோக்கும்படி செய்யுங்கள். இட்டாலி வாழ்க! இட்டாலி வாழ்க!!  ஆசிரியரின் பிற நூல்கள் (கால வரிசையில்) 1. நாற்பெரும் வள்ளல்கள் 1930 2. ஹர்ஷவர்த்தனன் 1930 3. முடியுடை வேந்தர் 1931 4. நவீன இந்திய மணிகள் 1934 5. தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934 6. முசோலினி 1934 7. ஏப்ரஹாம் லிங்கன் 1934 8. அறிவுச்சுடர் 1938 9. நாற்பெரும் புலவர்கள் 1938 10. தமிழர் திருமண நூல் 1939 11. தமிழர் திருமண இன்பம் 1939 12. மணிமேகலை 1940 13. மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941 14. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941 15. பல்லவர் வரலாறு 1944 16. மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944 17. சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945 18 இரண்டாம் குலோத்துங்கன் 1945 19. கட்டுரை மாலை 1945 20. செய்யுள் - உரைநடைப் பயிற்சி நூல் 1945 21. முத்தமிழ் வேந்தர் 1946 22. காவியம் செய்த கவியரசர் 1946 23. விசுவநாத நாயக்கர் 1946 24. சிவாஜி 1946 25. சிலப்பதிகாரக் காட்சிகள் 1946 26. இராஜேந்திர சோழன் 1946 27. பல்லவப் பேரரசர் 1946 28. கட்டுரைக் கோவை 1946 29. சோழர் வரலாறு 1947 30. ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947 31. பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947 32. வீரத் தமிழர் - 1947 33. இருபதாம் நூற்றாண்டுப் ஸபலவர் பெருமக்கள் 1947 34. இந்திய அறிஞர் 1947 35. தமிழ்நாட்டு வடஎல்லை 1948 36. பெரியபுராண ஆராய்ச்சி 1948 37. கதை மலர் மாலை (மலர் ஒன்று0 1948 38. இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948 39. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி 1- 3) 1949 40. மேனாட்டுத் தமிழறிஞர் 1950 41. தென்னாட்டுப் பெருமக்கள் 1950 42. இந்தியப் பெரியார் இருவர் 1950 43. தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950 44. நாற்பெரும் புலவர் 195 45. மறைமலையடிகள் 1951 46. அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951 47. சங்கநூற் காட்சிகள் 1952 48. இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953 49. விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953 50. பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953 51. சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954 52. திருவள்ளுவர் காலம் யாது? 1954 53. சைவ சமயம் 1955 54. கம்பர் யார்? 1955 55. வையை 1955 56. தமிழர் திருமணத்தில் தாலி 1955 57. பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955 58. இலக்கிய அறிமுகம் 1955 59. அருவிகள் 1955 60. தமிழ் மொழிச் செல்வம் 1956 61. பூம்புகார் நகரம் 1956 62. தமிழ் இனம் 1956 63. தமிழர் வாழ்வு 1956 64. வழிபாடு 1957 65. இல்வாழ்க்கை 1957 66. தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957 67. வழியும் வகையும் 1957 68. ஆற்றங்கரை நாகரிகம் 1957 69. தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957 70. என்றுமுள தென்றமிழ் 1957 71. சைவ சமய வளர்ச்சி 1958 72. பொருநை 1958 73. அருள்நெறி 1958 74. தமிழரசி 1958 75. இலக்கிய அமுதம் 1958 76. எல்லோரும் வாழவேண்டும் 1958 77. தமிழகக் கலைகள் 1959 78. தமிழக ஆட்சி 1959 79. தமிழக வரலாறு 1959 80. தமிழர் நாகரிகமும பண்பாடும் 1959 81. தென்பெண்ணை 1959 82. புதிய தமிழகம் 1959 83. நாட்டுக்கு நல்லவை 1959 84. தமிழ் அமுதம் 1959 85. பேரறிஞர் இருவர் 1959 86. துருக்கியின் தந்தை 1959 87. தமிழகக் கதைகள் 1959 88. குழந்தைப் பாடல்கள் 1960 89. கட்டுரைச் செல்வம் 1960 90. தமிழகப் புலவர் 1960 91. தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963 92. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1964 93. தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965 94. சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969 95. பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970 96. கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977 97. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978 98. இலக்கிய ஓவியங்கள் 1979 பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள் 99. சிறுவர் சிற்றிலக்கணம் 100. பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும் 101. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி -2) ஆங்கில நூல் 102. The Development of Saivism in South India 1964 பார்வைக்குக் கிடைக்காத நூல்கள் 1. பதிற்றுப்பத்துக் காட்சிகள் 2. செந்தமிழ்ச் செல்வம் 3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 4. பள்ளித் தமிழ் இலக்கணம் 5. செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்) 6. செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்)